சா. ஜே. வே. செல்வநாயகம் சேகரம்

சா. ஜே. வே. செல்வநாயகம் சேகரம்

இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமானதொரு அரசியல் தலைவராக செல்வநாயகம் விளங்கியமையையும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாளாந்த நடவடிக்கைகளையும் இச்சேகரம் பிரதிபலிக்கிறது. இச்சேகரம் இலங்கையில் 1950 இலிருந்து 1970 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கியமான அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதோடு இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட போராட்டங்களுக்கு சாட்சியமாகவும் விளங்குகிறது. இச்சேகரம் செல்வநாயகம் அவர்களின் குடும்பம், பின்புலம் தொடர்பான ஆவணங்களையும் அவரது துணைவியார் எமிலி கிரேஸ் செல்வநாயகம் சேகரித்த நினைவஞ்சலி ஆவணங்களையும் கொண்டுள்ளது. மூன்று பிரதான வரிசைகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இச்சேகரம் 1933-1937, 1939-1940, 1944-1988 ஆகிய காலப்பகுதிகளுக்கான ஆவணங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் பெருமளவிலான ஆவணங்கள் 1960, 1970 காலப்பகுதியைச் சேர்ந்தவை ஆகும். தனிப்பட்ட ஆவணங்கள் கடிதத் தொடர்பு, தனிப்பட்ட பொருட்கள், நிதி மற்றும் தேயிலைத் தோட்டத்துடன் தொடர்புடைய ஆவணங்கள், ஏனைய ஆவணங்களை உள்ளடக்கியுள்ளன. தொழில்சார் ஆவணங்கள் அலுவலகக் கோப்புகள், கட்சி ஆவணங்கள், கடிதத் தொடர்பு, ஏனைய ஆவணங்களை உள்ளடக்கியுள்ளன. நினைவஞ்சலி ஆவணங்கள் சுவரொட்டிகள், செய்தித்தாள் துணுக்குகள், நினைவஞ்சலிக் குறிப்பேடு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. எண்ணிமப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் வரிசை 2: தொழில்சார் ஆவணங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவையாகும்.

Permalink: https://ark.digital.utsc.utoronto.ca/ark:61220/utsc35334

 நாட்டுடைமையாக்கப்பட்ட மற்றும் பொது உரிம தமிழ் நூல்கள்

நாட்டுடைமையாக்கப்பட்ட மற்றும் பொது உரிம தமிழ் நூல்கள்

நாட்டுடைமையாக்கபட்ட தமிழ் நூல்கள் சேகரமானது இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் இலக்கியம், நாட்டாரியல், இலக்கணம், வரலாறு, அரசியல், பண்பாடு, சமயம், கலை, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பன்முக பொருட்துறைகளை உள்ளடக்கிய முதன்மைத் தமிழ்ப் படைப்புகளைக் கொண்டுள்ளது. இது 650 உப நூற்றொகுதிகளையும் 1,100 படைப்புகளையும் (210,000 பக்கங்கள்) உள்ளடக்கியது. மேலும், இச்சேகரம் அகராதிகள், சொற்களஞ்சியங்கள், கலைக்களஞ்சியங்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றையும் கொண்டுள்ளது. தமிழ் முன்னோடி எழுத்தாளர்களான கவிஞர் பாரதிதாசன், அரசியல் எழுத்தாளர் வே. சாமிநாத சர்மா, இசை ஆய்வாளர் ஆபிரகாம் பண்டிதர், தொழில்நுட்ப எழுத்தாளர் அ. இராகவன் ஆகியோரின் முதன்மை ஆக்கங்களை இச்சேகரம் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு பெரும்பான்மையான இப்படைப்புக்களை பொது உரிமத்தில் வெளியிட்டுள்ளது. இந்நூல்களின் பல்வேறு பதிப்புகளை தமிழ்மண் பதிப்பகத்தினர் கடந்த 30 வருடங்களாகத் தொகுத்தும் பதிப்பித்தும் வருகின்றனர்.

Permalink: https://ark.digital.utsc.utoronto.ca/ark:61220/utsc35335

தமிழ் ஓலைச் சுவடிகள்

தமிழ் ஓலைச் சுவடிகள்

ஸ்காபரோ நூலக எண்ணிம தமிழ் ஓலைச் சுவடிகள் சேகரம், தற்போது 30 சுவடிகளை (2599 பக்கங்கள்) கொண்டுள்ளது. இவற்றின் மூலங்களை, ரொறன்ரோவினைச் சேர்ந்த முனைவர். பால சிவகடாட்சம் குடும்பம், பேரா. ரவி தம்பி மற்றும் ஜெயா குடும்பம், மருத்துவர். கிருபாகரன் குடும்பம் ஆகியோர் வழங்கி உதவினர். இலங்கையில் இருந்து கனடா கொண்டு வரப்பட்ட இந்தச் சுவடிகள் 1700களில் இருந்து 1900 காலப்பகுதியைச் சேர்தவை என முனைவர். பால சிவகடாட்சம் அவர்கள் மதிப்பிட்டுள்ளார். மேலும், முதற்கட்ட மீதரவுகளை உருவாக்கவும் அவர் உதவினார். பெரும்பான்மையான சுவடிகள் தமிழ் மருத்துவச் சுவடிகள் ஆகும். இலக்கியம், சோதிடம், மந்திரம், சமயம் உட்பட்ட விடயங்களை அடகிய சுவடிகளும் உண்டு.

Permalink: https://ark.digital.utsc.utoronto.ca/ark:61220/utsc35338

 பிரெண்டா பெக் ஆய்வுத் தரவுகள்

பிரெண்டா பெக் ஆய்வுத் தரவுகள்

சமுக மானுடவியலாளார் பேராசிரியர் பிரெண்டா பெக் அவர்கள், தமிழ்நாட்டு நாட்டுப்புறவியல் ஆய்வினை தன் வாழ்நாள் பணியாக முன்னெடுத்துவருகிறார். அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட எண்ணிம வளங்களை பிரெண்டா பெக் சேகரம் கொண்டிருக்கிறது. தற்போது, இந்தச் சேகரத்தில், பிரெண்டா பெக் அவர்கள் வெளியிட்ட பொன்னிவளநாட்டின் வீரச்சரித்திரம் கதையின் சித்திரக்கதைகள் (காமிக்ஸ்), இயங்குபடங்கள், அவரது களப்பணியில் போது ஓலப்பாளையம் ஊரில் சேகர்த்த புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள் மற்றும் ஆவணங்கள், அவரது ஆய்வு வெளியீடுகள் சிலவும் உள்ளன. இது தற்போது தொகுக்கப்பட்டு வருகிறது. மேலதிக விபரங்களைப் பெற விரும்புகிறவர்கள், பின்வரும் மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொள்ளவும்: dsu.utsc@utoronto.ca.

Permalink: https://ark.digital.utsc.utoronto.ca/ark:61220/utsc34371

பொன்னிவளநாட்டின் வீரச்சரித்திரம்

பொன்னிவளநாட்டின் வீரச்சரித்திரம்

மானுடவியலாளார் பேராசிரியர் பிரெண்டா பெக் குறிப்பிடத்தக்க வகையில் பிரபலமான வாய்மொழி வரலாற்றை 50 வருடங்களாக ஆராய்ந்தவர். இப்பொழுது இந்த வரலாற்றை அவர் உலக வாசகர்களுக்கு உயிர் இயக்கமாகவும் ( animation ) அச்சு நூலாகவும் வண்ணப் படக்கதை நூலாகவும் வெளியிடுகிறார். இந்தியாவின் தமிழ்நாட்டு பாணர்கள் பாடிய அண்ணன்மார் கதை பல நூற்றாண்டுகளாக பொன்னிவள காவியம் என அறியப்பட்டு வருகிறது. பெரிய விவசாயக் குடும்பம் ஒன்று மூன்று தலைமுறைகளாக வாழ்நிலம் அமைப்பதற்கு பட்ட பாட்டையும் எதிர்கொண்ட பசி, துன்பம், போட்டிகள், மாயமந்திரங்கள் மற்றும் அரக்கர்களின் அக்கிரமங்கள் ஆகியவற்றையும் கூறுவதுதான் இந்தக் காவியம்.

Permalink: https://ark.digital.utsc.utoronto.ca/ark:61220/utsc35341

கொங்கு நாட்டுச் சேகரம்

கொங்கு நாட்டுச் சேகரம்

1964 இல் இருந்து 1966 காலப்பகுதியில், தமிழ்நாட்டில் ஓலப்பாளையம் என்ற ஊரில் களப் பணிகளை மேற்கொண்ட சமூக மானிடவியலாளர் பேரா. பிரெண்டா பெக் அவர்கள், ஆய்வு உதவியாளர் க. சுந்தரம் அவர்களின் உதவியோடு பல அருமையான மூல வளங்களை சேகரித்தார். கொங்கு நாட்டுச் சேகரம் அந்தக் களப் பணித் தரவுகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட புகைப்படங்கள், ஒலிப் பதிவுகள், ஆவணங்களின் எண்ணிம வடிவங்களைக் கொண்டுள்ளது. இந்தச் சேகரத்தை தொகுக்கும் பணி ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தைச் சார்ந்த முதுமுனை பட்ட ஆய்வாளர் சண்முகப்பிரியா அவர்களூடான ஒரு கூட்டுச் செயற்பாடு ஆகும். இந்தச் சேகரம் கொங்கு நாடு தொடர்பான நாட்டுப்புறப் பாடல்கள் (துதிப் பாட்டு, ஊர்த்தொகைப்பாடல், ஒப்பாரி பாடல், வீர பாடல் and பக்தி பாடல் ), நாட்டுப்புறக் கதைகள் (குலமரபுக் கதை, சாதியக் கதை, நீதி விளக்கக் கதை, நீதி விளக்கக் கதை, பழங்கதை) பழக்க வழக்கங்கள், வாழ்வோட்டச் சடங்குகள் தொடர்பான பல்வேறு மூல வளங்களைக் கொண்டிருக்கிறது. 1960 களில் தமிழ்நாட்டின் ஒரு சிற்றூர் பற்றிய ஒர் அரிய பல்லூடக ஆவணப் பதிவாக இந்தச் சேகரம் அமைகிறது.

Permalink: https://ark.digital.utsc.utoronto.ca/ark:61220/utsc35340