அப்பாத்துரையம் - 44 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) பொது போதும் முதலாளித்துவம் இருதுளிக் கண்ணீர் உலக இலக்கியங்கள் ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 44 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசி ரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+328 = 344 விலை : 430/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல் elavazhagantm@gmail.com  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 344 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. போதும் முதலாளித்துவம் முதற் பதிப்பு 1946-47 பொதுவுடைமை முதலாளித்துவத்திற்குச் சீட்டுக் கொடுக்க மக்கள் விரும்புகின்றனர். சீட்டுக் கொடுக்கப்போவதும் உறுதி, ஆங்கில ஆட்சிக்குச் சீட்டுக் கொடுத்தது போல். அத்துடன் நம் கடமை தீர்ந்துவிட்டதா? இல்லை. அடுத்து எப்படிப்பட்ட ஆட்சி வேண்டும்? மக்கள் வாழ்வு எப்படி அமைக்கப் பெறவேண்டும்? இக்கேள்விகள் எழுகின்றன. இவற்றிற்கு விளக்கமான விடைகளை விரைவில் வெளிவரும் பொதுவுடைமை என்ற நூலில் காணலாம். * மொழி பெயர்ப்பு பேராசிரியர் கா. அப்பாத்துரை ஆ.ஹ. * 1. முதலாளித்துவ நாகரிகம் பற்றிய ஆராய்ச்சி இன்று நம்மைச் சுற்றிலும் ஒரே குழப்ப நிலைமை காணப்படுகிறது. நடுக்கம் தரும் இடுக்கண்களே எங்கும் நிறைந்துள்ளன. ஒருபுறம் தொழிலில்லாத் திண்டாட்டம் பரவுகிறது. கோடிக்கணக்கான உழைப்பாளிகள் எல்லையற்ற வறுமைக் கடலுளாழ்ந்து தவிக்கின்றார்கள். என்றென்றைக்கும் அவர்கள் கட்டை வெட்டிகளாகவும், ஏற்றமிறைப்பவர்களாகவும் மட்டுமிருக்க வேண்டுமென்ற தலையெழுத்துக்கு ஆளாகி யுள்ளார்கள். ஓய்வின் ஆறுதலோ, ஊதியத்தின் ஆர்வமோ அவர்களை எட்டிப் பார்ப்பதற்கில்லை. ஆனால், அவர்களுக்கெதிராக மறுபுறமோ பணப்பைகள் மீது புரளும் ஒருசில சோம்பர்களடங்கிய சிறுகூட்டம்! அவர்களுக்குப் போதிய அளவைவிட எவ்வளவோ மிகுதியாக, செரிக்கக்கூடிய அளவுக்கும் எவ்வளவோ கூடுதலாக, பொருளும் மற்ற வாழ்க்கை வசதிகளும் குவிந்து கிடக்கின்றன. அவர்கள் செல்வம் உலகிற்கு மட்டுமின்றி அவர்களுக்கே ஒரு சாபக்கேடாய் கிடக்கின்றது. இவ்விரு திறத்தினர்களையும் வளர்ச்சியடையச் செய்து கொண்டிருக்கும் இன்றைய நாகரிகம் எங்கே போய் முடியுமோ? என்று பகுத்தறிந்து சிந்திக்கும் எந்த அறிஞரும் கேட்காதிருக்க முடியாது. தற்கால சமூக அமைப்பு முறையில் இத்தீங்குகளை மென்மேலும் வளர்க்க என்னதான் கோளாறு இருக்க முடியும்? இக்கோளாற்றை அகற்றும் வலியுள்ள மாற்று எதுவும் கிடையாதா? இவ்வினாக்களுக்குப் பல்வேறு வகையான விடைகள் தரப்படுகின்றன. ஒரு சிலர் இன்றைய முறையில் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சீர்திருத்தங்கள் செய்வதனால் இத்தீமைகளை ஒழிக்க முடியும் என்று கருதுகிறார்கள். ஆனால், வேறு பலர் கங்கு கரையற்ற தற்கால சமூகத்தின் இன்னல்களைக் கண்டு மனம் நொந்துள்ளனர். இம்முறையில் ஏற்பட்டுள்ள தீமைகள் பேரளவானவை. அவற்றை இம்முறை ஒரு சிறிதும் அகற்றும் ஆற்றலுடையதாக இல்லை. உண்மையில் இவ்வகையில் அது செயலற்றதாகவே இயங்குகிறது. ஏனெனில், இவை அவற்றின் உள்ளார்ந்த குறைபாடுகளின் விளைவே. எனவே இம்முறையை அதன் வேரோடும் கிளை இலை பூவோடும் ஒழித்து சமூகத்தையே மாற்றியமைத்தாலொழிய இத்தீமைகள் அகலமாட்டா என்று அவர்கள் கருதுகின்றனர். பின் கூறப்பட்ட இக்கூட்டத்தினருள் மிக உரத்துத் தம் கண்டனத்தைத் தெரிவிக்கும் தீவிரக் குழுவினரே சமதர்மிகள் (ளுடிஉயைடளைவள). அவர்கள் ஆற்றல் வளர்ந்து கொண்டே வருகிறது. வரவர மிகுதியான மக்கள் அவர்கள் வாதத்தால் மனம் மாறி அவர்களுடன் சேர்ந்து வருகின்றனர். இந்தச் சமதர்மிகளின் வாதங்களையே இச்சிறு நூலில் பெரும்பாலும் பின்பற்றிச் செல்லுகிறோம். நம் ஆராய்ச்சியின் முதலாவது படி இன்றைய சமூக அமைப்பு முறையின் தனிப் பண்புகளையும், கூறுபாடுகளையும் அறிய முயல்வதேயாகும். 2. முதலாளித்துவம் என்பது யாது? நம் தற்போதைய சமூக அமைப்பு முறை முதலாளித்துவம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. ‘முதல்’ ‘முதலாளித்துவம்’ என்ற சொற்களை நாம் அடிக்கடி சொல்லுகிறோம், சொல்லக் கேட்கிறோம். ஆகவே அச்சொற்களின் பொருளைத் தெளிவாகவும் திண்ணமாகவும் அறிய முயல்வோம். முதல் என்ற சொல்லின் பொருள் பொதுவாக நன்கு உணரப்படுவதொன்றேயாகும். நம் நண்பர் ஒருவர் ரூ.1000 முதலிட்டு ஒரு சிறிய கடை திறக்கிறாரென்று வைத்துக் கொள்ளுவோம். அந்த ரூபாய் ஆயிரத்தை நாம் ‘முதல்’ என்கிறோம். பொருளியல் நூலார் வருவாய் தருவதற்குரிய எல்லா வகை செல்வப் பகுதியையும் முதல் என்றே குறிக்கின்றனர். இயந்திரங்கள் தொழிற்சாலைகள் முதலிய யாவையும் முதலாளிக்கு ஊதியம் தர உதவுபவையேயாதலால் அவைகளனைத்தும் முதலுள் அடங்கும். ஆனால், முதலாளித்துவம் என்ற சொல் முதலினை, அதாவது உற்பத்தியின் கருவிகளைக் குறிக்க வழங்குவதன்று. உண்மையில் நேர்மாறாக அது சமூகத்தை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கும் ஒரு திட்ட அமைப்பேயாகும். ஒரு பிரிவு உற்பத்திக் கருவிகளை உடையது. அது - முதலாளி வகுப்பு எனப்படுகிறது. மற்றொரு பிரிவு உற்பத்திக் கருவிகளெதனையும் உடையதாயிராமல் உழைப்புத் தொழில் செய்பவர்களை மட்டுமே கொண்டது. இது உழைப்பாளர் வகுப்பு (ஞசடிடநவயசயைn ஊடயளள) எனப்படுகிறது. செல்வ உற்பத்திக்கு முதலும் உழைப்பும் பெரிதும் இன்றியமையாதவை. உற்பத்திக்குத் துணைக் கருவிகள் ஒரு புறமும் உற்பத்தி வகையில் அவற்றை ஈடுபடுத்தும் ஆட்கள் ஒருபுறமும் இருந்து தீர வேண்டும். ஆகவே, முதலாளித்துவ முறையின்கீழ் முதலாளியும் தொழிலாளியும் ஒத்துழைத்து உற்பத்தியை உண்டுபண்ணுவது இன்றியமையாததாகும். “கொள்கையளவில் தொழிலாளியும் தொழிலாற்றலை யுடை சுதந்திர மனிதனே; முதலாளியும் உற்பத்திச் சாதனங்களின் தொகுதியைப் பெற்றிருக்கும் சுதந்திர மனிதனே. இவ்விரு சாராரும் ஒருவருக்கொருவர் எதிரான இரண்டு பொருளியல் வகுப்பினர். இவ்விரு வகுப்புகளில் ஏதேனும் ஒரு வகுப்பு மற்ற வகுப்பின் ஊதியத்தைப் பயன்படுத்தினாலன்றி உற்பத்தி நிகழாது.”1 ஆனால் நடைமுறையில் நிகழ்வது என்னவென்றால் முதலாளியே தொழிலாளரின் உழைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறான். ஆகவே முதலாளிகள் வேலையளிப்போரென்றும் தொழிலாளிகள் வேலை செய்வோர் என்றும் கூறப்படுகின்றனர். தொழிலாளிகள் முதலாளிகளை வேலையிலமர்த்துவது முடியாததென்பது தெளிவு. ஏனெனில் தொழிலாளிகள் ஏழைகளாகவும் பெரும்பாலும் கல்வியறிவற்றவர்களாகவும் இருக்கிறார்கள். பேரளவில் ஒத்துழைத்துச் சங்கங்களமைத்தாலல்லாமல் தொழிலாளிகள் உற்பத்தியமைப்பை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் உடையவர்களாகமாட்டார்கள். அவ்வாறு ஒத்துழைத்துச் சங்கங்களமைப்பதும் எளிய காரியமன்று. ஆகவே, முதலாளி களைத் தொழிலாளிகளமர்த்துவதென்பது நடைமுறையில் எங்குமில்லாத ஒரு செய்தியாகும். நம் சமூக அமைப்பின் தற்போதைய முறை ‘முதலாளித்துவம்’ எனப்படும். ஆயினும் ‘பெர்னாட்ஷா’ கூறுகிறபடி இதனை முதலாளித்துவம் என்று குறிப்பதை விட ‘தொழிலாளித்துவம்’ என்று கூறினால் பொருத்தமாகவே இருக்கும் என்று சொல்லலாம். அவர் கூறுவதாவது: “முதலாளித்துவம் என்ற பெயர் தவறான எண்ணம் தருவதாக இருக்கிறது. நம் அமைப் பிற்கு சரியான பெயர் தொழிலாளித்துவம் என்பதாகும்!!”2 பெர்னாட்ஷா கூறுவது பொருத்தமானதே. ஏனென்றால் சமதர்மத்தைக் குறைகூற முதலாளித்துவம் என்ற பெயரைப் பலர் தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள். சமதர்மம் என்பது முதலாளித்துவத்துக்கு நேர் எதிரான சொல்லாகக் கொள்ளப்பட்டு விடுகிறது. “சமதர்மம் என்பது முதலாளித் துவத்தை அக்கு வேறு ஆணிவேறாகச் சின்னா பின்னப்படுத்த விரும்புகிறது என்று நாம் கூறும்போது, சமதர்மிகள் முதலீட்டையே அழிக்க முனைகின்றனர் என்றும், அதில்லாமலே காரியம் சாதிக்கலாம் என அவர்கள் நம்புகிறார்கள்”3 என்றும் மக்கள் எண்ணி விடுகின்றார்கள். இது முற்றிலும் பொருத்தமற்ற கூற்றாகும். முதலீடில்லாமல் நாம் ஒன்றும் செய்ய முடியாது. உற்பத்தியின் கருவிகளுள் முதலீட்டை அகற்றிவிட்டால் நமக்கு மீந்திருப்பவை தொழில், அமைப்பாண்மை (டீசபயnளையவiடிn) அற்ற இயற்கை வளம் ஆகிய இரண்டு மட்டுமே. இவற்றை மட்டும் கொண்டு மனிதன் நெடுந்தொலை முன்னேறிச் செல்ல முடியாது. மனித நாகரிகத்தின் தொடக்க காலத்திலிருந்து முதலீட்டின் தேவை மிகுதியாகிறது. பழங்காலச் செம்டவனுக்குக்கூடத் தனக்கு ஒரு வலையும் வலைக்கோலும் இருந்தால் அவற்றின் துணையுடன்தான் பிடிக்கும் மீனின் அளவை எவ்வளவோ பெருக்கிக் கொள்ளலாம் என்பது தெரிந்திருந்தது. மனித சமூகம் நாகரிகப் படியில் முன்னேறிச் செல்லுந்தோறும் முதலீட்டின் பயனும் பெருகிக் கொண்டே போகிறது. வரவர அதிகமாக மக்கள் அதனை நம்பியாக வேண்டியிருக்கிறது. ஆகவே, சமதர்மிகள் அழிக்க விரும்புவது முதலினையல்ல - முதலாளித்துவத்தையேயாகும் - ஏனெனில், முதலாளித்துவம் என்பது தொழிலாளித்துவத்துக்கும் வறுமைக்கும் இடப் பட்ட மறுபெயரேயாகும். முதலாளிகளும் அவர்கள் ஆதரவாளர்களும் பொதுமக்கள் அனுதாபத்தைத் தம் பக்கம் ஆக்கிக்கொள்ளப் பெரிதும் உதவுவது இச்சொற்பொருட் குழப்பமே. சமதர்ம வாதிகள் முதலையே அழித்துவிட விரும்புகிறார்கள் என்றும், எல்லா மக்களையும் தொழிலாளிகளாக்கிவிடப் பார்க்கிறார் களென்றும் அவர்கள் கூறுகிறார்கள். மக்கள் பலரும் தொழிலாளி களாயிருக்க விரும்பாதவர்களாதலால் அவர்கள் முதலாளித்துவத்தை ஆதரிக்க முற்பட்டுவிடுகிறார்கள். ஆனால், உண்மையில் சமதர்மம் அழிக்க விரும்புவது தொழிலாளித் துவத்தையேதான். அதுமட்டுமன்று. சமதர்மம் முதலை மிகப் பெரிய அளவில் சேர்க்கவும் முனைகிறது. தற்கால சமூக அமைப்பு முறையாகிய தொழிலாளித்துவ முறையைத் தவிடு பொடியாகத் தகர்த்துவிட வேண்டுமென்றும், அதன் அழிபாட்டின் மீது தொழிலாளிகளுமில்லாமல் முதலாளிகளுமில்லாமல் எல்லோரும் சமமாயிருக்கும் வகுப்புப் பாகுபாடற்ற ஒரு சமூகத்தை உண்டு பண்ண வேண்டுமென்றும் அது எண்ணுகிறது. 3. முதலாளித்துவத்தின் வளர்ச்சி முதலாளித்துவம் என்பது மேற்கூறியவாறு தொழிலாற்ற லுடையவரிடமிருந்து முதலுடையவர்களைப் பிரித்து வைக்கும் முறை ஆகும். வரலாற்றின் இடைக்காலத்தில்4 இந்நிலைமை ஏற்படவில்லை. 1750 முதல் 1850 வரை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டளவு வளர்ச்சியடைந்து வந்த தொழிற் புரட்சிக்குப் பிற்பாடுதான் அது சமூக அமைப்பில் குறிப்பிடத் தக்க ஒரு பண்பாயிற்று. இங்ஙனம் தொழிற்புரட்சிக் காலம் ஒரு வகையில் மாறுபாட்டுக் காலமாய் அமைந்தது. அக்காலத் திலேயே சமூகத்தின் மூலாதாரமான அடிப்படை மாறுதலடைந்தது. தொழிற்புரட்சிக்கு முன்னால் குடியானவர்களே - சுதந்திர உழவர்களே - நிலத்தின் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். பிற்காலத்தில் இவ்விரு சாராரும் இரண்டு வகையாகத் தங்கள் உற்பத்திச் சாதனங்களை இழந்தார்கள். முதல் வகை மிக முரட்டு முறை: ஏனெனில் அம்முறையில் உற்பத்திச் சாதனங்கள் அதன் சொந்தக்காரர்களிடமிருந்து வெளிப்படையாகவே பறிக்கப் பட்டன. இது உண்மையில் பழைய பிற்போக்கான காலத்திய முறையேயாகும். இங்கிலாந்தில் ஏற்பட்ட மனை வேலை இயக்கம் (நுnஉடடிளரசந ஆடிஎநஅநவே) இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு. பழைய நில ஆதிக்க ஆட்சிமுறை (குநரனயடளைஅ) சிதையத் தொடங்கியபோது ஆங்கிலக் குடியானவர்களுக்குத் தனிமையாகவோ பொது உரிமையாகவோ இருந்து வந்த நிலம், பயிர்த் தொழிலை ஒரு வேட்டையாகக் கொண்ட புதிய நில ஆதிக்க வகுப்பு ஒன்றினால் பறிக்கப்பட்டுவிட்டது. இதனை அடுத்து ஏற்பட்ட இரண்டாவது வகை கொஞ்சம் நாகரிகம் மிக்க முறை. ஆனால், குடியானவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து வகையில், அதுவும் முன்னையதை ஒத்ததே. தொழிற் புரட்சி காரணமாகப் பல அறிவியற் புதுமைகளும் தொழில் நுணுக்க முன்னேற்றங்களும் ஏற்பட்டன. பெரிய தொழிற் சாலைகள் எழுந்து குறைந்த செலவில் ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்து தள்ளின. இயல்பாகவே சிறு உற்பத்தியாளர்களின் பொருள் உற்பத்திக்கான செலவு தொழிற்சாலையின் உற்பத்திச் செலவைவிட எவ்வளவோ மிகுதியாயிருந்தது. இப்படியே சிறு உற்பத்தியாளர் வகுப்புக்குச் சாவு மணியடிக்கபடலாயிற்று. வர்த்தகக் களத்திலிருந்து தனிப்பட்ட உற்பத்தியாளர்கள் துரத்தியடிக்கப்பட்டுத் தொழிலாளிகளாக மாற்றமடைந்தனர். இங்ஙனமாக சமூகம் முதலாளி தொழிலாளி என்ற இரு வகுப்புகளாகப் பிரிந்தது. மில், ரிக்கார்டோ போன்ற பழம்பற்றாளர் சார்பான பொருளியலறிஞர் முதலாளித்துவம் கடவுளாலேயே அமைக்கப்பட்டதென்று நம்பினர். அவர்கள் செய்த பொருளியல் ஆராய்ச்சியெல்லாம் அம்முதலாளித்துவத்தில் தற்காலிகமாகக் காணப்பட்ட பண்புகளைப் பற்றியதே. ஆனால் இன்றிக்கும் வடிவில் முதலாளித்துவ முறை மிக்க அண்மைக் காலத்தில் ஏற்பட்டதுதான். நில ஆதிக்க முறை சிதைந்த பின்னரே அது தோன்றியது. வரலாற்று முறைப்படி பார்த்தால் இதற்கு முன்னிருந்த பழைய முதலாளித்துவம் உண்மையில் முதலாளித்துவ முறையின் குழந்தைப் பருவம் மட்டுமே. 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அது வாலிபப் பருவத்தையோ அல்லது முழுக் குழந்தைப் பருவத்தையோகூட அடைந்துவிட்டதாகக் கூற முடியாது என்பதைச் சமதர்மவாதிகள் வற்புறுத்தியுள்ளனர், வற்புறுத்து கின்றனர். அதன்பின் இது இவ்வளவு மிகக் குறைந்த காலத்திற்குள் வளர்ச்சி பெற்றுவிட்டது. இவ்வளர்ச்சிக்கான காரணங்கள்: புதிய வகை இயந்திரங்கள் மிக வேகமாகக் கண்டுபிடிக்கப்பட்டன; அதேசமயம் அவ்வியந்திரங்களை ஓட்டுவதற்குப் புதிய நீராவி அற்றல் கண்டுபிடிக்கப்பட்டது; இவற்றுடன் பொதுவாக, உற்பத்தி முறைகள் முன்னேற்ற மடைந்தன. இவற்றைச் சமதர்மிகள் வற்புறுத்திக் காட்டுகிறார்கள். இவற்றின் பயனாகச் சிறு அளவான பழைய உற்பத்தி மிகப் பெரிய அளவான புதிய உற்பத்தியாக மாறிற்று. எடுத்துக்காட்டாக, பழைய சுதந்திர நெசவாளி சொந்தக் கைத்தறியை வைத்துக்கொண்டு புதிய தொழிற்சாலையாகிய கருவியுடன் போட்டியிட முடியவில்லை. இங்ஙனம் போட்டிக்கு நிற்காத கருவியாகிய தறியை உடைய அவர்கள் கையிலிருந்த கருவியுரிமை நழுவிப்போவது இயல்பே. இதற்குமுன் தமக்குத் தாமே மேலாளாகவும், தம் கருவிகளுக்குத் தாமே உரியவர்களாகவும் இருந்து தாம் உற்பத்தி செய்யும் பொருளைத் தாமே விற்பனை செய்யும் வணிகர்களாகவுமிருந்து வாழ்ந்து வந்த இவர்கள், முதலாளிகள் என்ற ஒரு புத்தம் புதிய வகுப்பின் ஆதிக்கத்துக்கு உட்படவும், தமக்குச் சொந்தமில்லாமல் அவர்களுக்கே சொந்தமான கருவிகளைக் கொண்டு வேலை செய்யவும், தாம் உற்பத்தி செய்த பொருளைத் தாமே விற்பதற்கு மாறாகத் தம் வேலையின் கூலியை மட்டுமே பெற்று வாழவும் நேர்ந்தது!7 முதலாளித்துவம் முதன் முதலாக இங்கிலாந்தில் நிலையமைக்கப்பட்டு அங்கிருந்து உலகின் பிற பகுதிகளுக்குப் பரந்தது. எங்கும் அது பழைய முறை வாழ்க்கையை வென்றடக்கித் தன் முன் தோற்றோடியவர்களை மீளா அழிவுக்கு அனுப்பியது. சில ஆசிரியர்கள் முதலாளித்துவத்தின் தோற்றத்திற்குக் காலவரையறை தர முயன்றுள்ளார்கள். இங்கிலாந்தின் காசகம் (க்ஷயமே டிக நுபேடயனே) நிறுவப்பட்ட காலமாகிய 1694-ஆம் ஆண்டே அதன் பிறந்த நாளாக அவர்களால் கூறப்படுகிறது. வேறு சில ஆசிரியர்கள் இதுபோலவே 16-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த சமயப் போர்களிலிருந்து அதன் வளர்ச்சியைத் தொடங்கு கின்றனர். ஆனால், ஒரு சமூக முறை ஏற்படுவதற்குத் திண்ணமான கால வரையறை கூற முடியாது. அது ஒரு குழந்தை பிறப்பதுபோல் ஒரு நாளில் பிறந்து விடுவதன்று. மெள்ள வளர்ச்சி பெற்று உருவாவது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகக் கூறமுடியும். தொழிற்புரட்சியின் பயனாகவே அது ஏற்பட்டது. 4. முதலாளித்துவ சமூக அமைப்பில் மக்கள் தொகைக் கூறுபாடு மேலே குறிப்பிட்டபடி முதலாளித்துவ சமூகத்தில் இரண்டு தலைமையான வகுப்புகள் உண்டு. அவை முதலாளி வகுப்பும் தொழிலாளி வகுப்புமாகும். இந்த இரண்டு வகுப்பையும் கார்ல் மார்க்ஸ் தம் பொது உடைமை விளம்பர அறிவிப்பில் (ஊடிஅஅரnளைவ ஆயnகைநளவடி) இன்ப வாழ்வினர் (பூர்ஷ்வா - க்ஷடிரசபநடிளைநை) என்றும் உழைப்பாளிகள் (புரோலட்டேரியட் - ஞசடிடநவயசயைவ) என்றும் பெயரிட்டுக் குறிப்பிட்டார். சிற்சில இடங்களில் இவ்விரண்டு வகுப்புகளைத் தவிர வேறு வகுப்புகளும் இருக்கலாம். ஆனால் அவை கேடின்றி புறக்கணிக்கத்தக்க அளவுடையவையே. இன்ப வாழ்வினர் பெரும்பாலும் ஆதாயம், வட்டி, வாடகை ஆகியவற்றின் மூலம் வாழ்க்கை நடத்தும் வகுப்பினர். வேறு வகையில் சொல்வதானால் இவ்வகுப்பு உற்பத்திக் கருவிகளின் சொந்தக்காரரடங்கிய வகுப்பு ஆகும். ஆனால், உழைப்பாளிகளோ எவ்வகையான உற்பத்திச் சாதனங்களு மில்லாதவர்களாய் உழைப்பாற்றல் மட்டும் உடையவர்கள். இவ்வுழைப்பாற்றலை அவர்கள் இன்ப வாழ்வினருக்கு விற்று வாழ்கிறார்கள். இவ்விரண்டு வகுப்பேயன்றி மூன்றாவதாகவும் துணை இன்ப வகுப்பு (டுநளளநச க்ஷடிரசபநடிளைநை) என்றொரு வகுப்பு உண்டு. அது சிறு கைவினைத் தொழிலாளர், சுதந்திரக் கலைப் பணியாளர், சிறு பண்ணையாளிகள், வர்த்தகர்கள் ஆகியவர்களடங்கியது. மார்க்ஸ் தம் பொது உடைமை விளம்பர அறிவிப்பில் இதைப் பற்றிக் கூறாது விட்டு விட்டார். அது அவர் கொள்கையில் அவருக்குப் பின்னால் உருவான ஒரு பகுதி. இவ்வகுப்புச் சிறு அளவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு ஆதரவு தருகிறது. சிறு அளவான உற்பத்தியைச் சாகடித்துப் பேரளவான உற்பத்தியை விரும்பும் முறையான முதலாளித்துவத்தை அதுவும் ஆதரிக்கவில்லை. ஆனால் அது முற்றிலும் உழைப்பாளி மயமாகி விடவும் விரும்பவில்லை. இங்ஙனமாக அது எப்போதும் நிலை மாறிக்கொண்டே இருக்கிறது. “பெருத்த நெருக்கடிக் காலங்களில் அது உழைப்பாளிகளுடன் சேர்ந்து இன்ப வகுப்பினரை எதிர்க்கத் தொடங்குகிறது. இன்ப வகுப்பினர்களை எதிர்க்கும் சக்திகள் முதலாளித்துவ முறையின் அடிப்படையையே தகர்க்கப் போவதாகத் தோன்றியதும், அது கட்சி மாறி, மறுபக்கம் சேர்ந்து கொள்ளுகிறது.”8 துணை இன்ப வகுப்பு அழிந்து கொண்டு வரும் ஒரு வகுப்பு என்று மார்க்ஸும், எங்கெல்ஸும் கருதினர். இது அவர்கள் காலத்தைப் பற்றிய மட்டில் உண்மையே. ஆனால் பிற்கால நிகழ்ச்சிப் போக்கு வேறு திசை நாடிச் சென்றிருக்கிறது. தற்போது துணை இன்ப வகுப்பு ஒரு புதிய அரசியல், பொருளியல், முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜெர்மனியிலும் இத்தாலியிலும் பாஸிஸம் என்ற பெயருள் முதலாளித்துவத்தை மீண்டும் தவிசேற்றி யமைக்கும் முயற்சியிலீடுபட்டு உழைத்தது இந்தப் புதிய துணையின்ப வகுப்பேயாகும். ஆனால், பாஸிஸம் என்பது, அழிந்து கொண்டுவரும் முதலாளித்துவத்தின் கடைசி உருவமெனவே கொள்ளப்படுகிறது. அது சமதர்மம் வரும் நாளைச் சற்றுத் தாமதப்படுத்தலாம், அதனைத் தடுத்து ஒழிக்க முடியாது. இரவுக்குப் பின் ஞாயிறு எழுவதும் அவ்வளவு உறுதியென்று கூறலாம். 5. முதலாளித்துவத்தின் அடிப்படை தொழிலாளிகளைச் சுரண்டி வாழ்வது முதலாளித் துவத்தின் உள்ளார்ந்த பண்பு: அதன் அடிப்படையே அது தொழிலாளர்களைச் சுரண்டுவதென்பது இல்லாவிட்டால் அது ஒரே நாளில் வாடி அழிந்துவிடும். முதலாளிகள் உற்பத்திச் சாதனங்களை ஏகபோகமாகக் கைக்கொண்டு, உற்பத்தித் தொழிலை நடத்தத் தொழிலாளி களிடம் வேலை வாங்ககின்றனர் என்பது சமதர்மிகள் வாதம். இத்தொழிலாளிகள் தம் முயற்சியாலும் உழைப்பாலும் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தை உற்பத்தி செய்கின்றனர். ஆனால் உற்பத்தியாளர் செய்வது யாதெனில் உற்பத்தியான இச்செல்வத் தில் மிகச் சிறிய பகுதியை மட்டுமே தொழிலாளிகளுக்குக் கொடுத்து மீதியைத் தமக்கே வைத்துக் கொள்ளுகின்றனர். இங்ஙனம் முதலாளிகள் சுரண்டி வாழ்வதன் மூலம் நாளொரு மேனியாகக் கொழுந்து வரவரச் செல்வமிக்கவர்களாக வளர்கின்றனர். இவ்வகையில் முதலாளித்துவம் “சமூகத்தில் பல்வேறு தனி மனிதர்களின் செல்வ நிலையில் மிகுதியான ஏற்றத் தாழ்வு ஏற்படுத்துகிறது. ஒருபுறம் விதையாவது கதிரறுத்துக் குவிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாது சோம்பேறிகளாக வாழும் ஒரு பணக்கார வகுப்பையும், மற்றொருபுறம் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு இரவு பகலாய் உழைக்கும் ஏழை உழைப்பாளி வகுப்பையும் அது உண்டு பண்ணுகிறது. தம் உழைப்பிற்கு ஊதியமாக இவ்வேழை வகுப்புக்குக் கிடைப்ப தெல்லாம் வாரக் கூலிதான். இது அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் பாதுகாக்கக்கூடப் போதியதாயிருப்பதில்லை. முட்டுப்பட்ட காலங்களில் இதுகூட முடியாத காரியமாய் விடுகிறது. பொருளியல் நெருக்கடிக் காலங்களிலோ தொழிலாளிகள் வேலையில்லாதவர்களாய் தெருக்களில் திரிய வேண்டும், அல்லது கைகட்டிக் கொண்டு வீட்டுக்குள்ளிருக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.” இப்பிரச்சனையை மார்க்ஸ் புதிய வகையில் விளக்கிக் கூறுகிறார். தொழிலாளிகள் ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் உழைப்போம் என்று வரையறுப்பதாக வைத்துக் கொள்வோம். இவ்வரையறைப்படி இந்நேரத்தில் அவர்கள் செய்யும் வேலையின் மதிப்பு அவர்கள் பெறும் கூலிக்குச் சமமாயிருக்க வேண்டும். இங்ஙனம் வரையறுக்கப்படும் நேரத்தை மார்க்ஸ் “இன்றியமையா உழைப்பு நேரம்” (சூநஉநளளயசல டுயbடிரச கூiஅந) என்று குறிப்பிட்டார். இதுபோக மிகுதி யுழைத்தால் அந்நேர உழைப்பும் அதன் பயனும் முதலாளிகளால் சுரண்டப்படும் சுரண்டலின் அளவு ஆகும். இச்சுரண்டலின் மதிப்பை அவர் ‘மிகுதி உழைப்பு மதிப்பு’ (ளுரசயீடரள ஏயடரந) என்கிறார். சுரண்டலை மதிப்பிடும் ‘இம் மிகுதி உழைப்பு மதிப்’பிலிருந்தே ஆதாயம், வட்டி, தரகர் கழிவுத் தொகைகள் (ஆனைனடநஅநளே’ள ஊடிஅஅளைளiடிளே) ஆகியவை எல்லாம் எழுகின்றன. இம்மிகுதிச் செல்வம் தொழிலுற்பத்தியாளராலும் உற்பத்திக் கருவிகளின் ஏக போக முறையாளர்களாலும் கைப்பற்றிக் கொள்ளப்படுகிறது....... முதலாளித்துவ வர்த்தகமாகிய சதுரங்க ஆட்டமானது மேற்குறிப்பிட்ட பங்கு கொள்ளும் இனங்கள் தமக்கு முடியுமளவு பெரும் பகுதியைக் கைக்கொள்ளச் செய்யும் முயற்சியேயன்றி வேறன்று. முதலாளித்துவத் துறையில் போட்டி போட்டி என்று கூறப்படுவதன் முழு மறைபொருள் இதுவே. பல்கலைக் கழகங்களில் பெருமுயற்சியுடன் கற்றுத் தரப்படும் பொருளியலின் மயிரிழை நுட்பங்களும் சிக்கல்களும் இவ்வொன்றைப் பற்றியதே. பொது உடைமை விளம்பர அறிவிப்பின் மொழியில் கூறுவதானால் இன்ப வகுப்பினர் செய்யும் பெருங் கொடுமை சுரண்டலே - வெட்கமற்ற, நேரடியான, விலங்குத் தன்மை வாய்ந்த, வெளிப்படையான சுரண்டலே. காலப்பாதையில் முதலாளித்துவம் முன்னேறிச் செல்லுந்தோறும் சுரண்டலின் அளவும் வளர்ந்து கொண்டே தான் போக முடியும். ஏனென்றால், முதலாளித்துவத்தின் உயிர்நாடியான பண்பு போட்டியேயாகும். முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தியாளர் பலர். இவர்களனைவருமே விற்பனைக் களத்தைத் தாமே கைப்பற்றவும் தாமே ஆதாயம் பெறவும் முயற்சி செய்வார்கள். இப்போட்டியில் ஒருவர் வெற்றி காண வேண்டுமானால் அவரது சரக்கின் விற்பனை விலை மற்ற போட்டியாளர்களனைவரின் விலைகளைவிட மலிவாயிருக்க வேண்டுவது இன்றியமையாததாகும். விற்பனை விலை குறைவாக வேண்டுமானால் உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டும். இது பெரும்பாலும் கூலியைத் தாழ்த்துவதன் மூலமே சாதிக்கப் பெற்று வருகிறது. கூலிக் குறைவு என்பது பெரும்பாலும் நேரடியான குறைவாயிருப்பதில்லை. மறைமுகமாகவே குறைக்கப்படுகிறது. ஒன்று, குறிப்பிட்ட நேரத்தில் மிக மும்முரமாக வேலை செய்விப்பர், அல்லது நுணுக்கத் துறை முன்னேற்றங்களால் உற்பத்தியைப் பெருக்குவர். புதிய முறைகள் குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தியாகும் பொருள் களின் அளவைப் பெருக்குகின்றன. அதாவது தொழிலாளர் உழைப்பின் உற்பத்தியாற்றல் பெருகுகிறது. இவ்வுற்பத்தி யாற்றலின் பெருக்கமும் உற்பத்தி வேகமும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் உண்டுபண்ணப்பட்ட பொருளின் மதிப்பை உயர்த்துகிறது. எடுத்துக்காட்டாக, தொடக்கத்தில் உற்பத்தியான செல்வ மதிப்பு 5 கூறுகளானால் அதைப் பெருக்கும் முயற்சிகளின் பயனாகப் பிற்காலத்தில் அது 100 கூறுகளாகின்றது. முதலில் 5-ல் 2 பங்கு தொழிலாளர்களுக்குத் தரப்பட்டது என்று வைத்துக் கொள்ளுவோம். ஐந்தில் மூன்று பங்கு முதலாளிக்குச் செல்லும். நாளடைவில் 100 கூறுகள் உற்பத்தியாகும்போது தொழிலாள ருக்கு 20 கூறுகளே கூலியாகத் தரப்படுகின்றன. மீதி 80 கூறுகள் முதலாளிக்குரியதாகும். தொழிலாளர் தரப்பில் இயக்கங்கள் நடைபெற்றுக் கூலி உயர்ந்தால்கூட அது மிகவும் நுண்ணிய அளவிலேயே உயரும். 20 கூறுகள் என்பது 21 அல்லது 22 கூறுகள் ஆகலாம்; அவ்வளவு தான். இங்ஙனம் மிகுதி உற்பத்தி மதிப்பின் அளவு (அதாவது மொத்த உற்பத்தி மதிப்பிற்கும் கூலிக்கும் உள்ள வேறுபாடு) முதல் இடத்தில் 50-20 = 30 கூறுகளும் இரண்டாமிடத்தில் 100-22 = 78 கூறுகளும் ஆகும். இப்படியாகக் கூலி உயர்ந்தபோதும்கூட சுரண்டலின் அளவு வளர்ந்து கொண்டுதான் வருகிறது. வெறுக்கத்தக்க இப்பகற் கொள்ளையைக் கண்டு கசப்படைந்துதான் கார்லைல், லங்காஷையர் உற்பத்தியாளர் வகுப்பின் தனிக்குணச் சித்திரமாகத் தாம் வரைந்த ‘பிளக்ஸன்’ வாயிலாகத் தம் சொற்களை அமைத்து ‘பிளக்ஸன்’ தன் தொழிலாளிகளிடம் கூறுவதாகக் குறிப்பிடுகிறார். “பெருந்தன்மை வாய்ந்த என் நூற்புத் தொழிலாளர்களே! நாம் ஒரு லட்சம் பவுன் சம்பாதித்துவிட்டோம். அவைகளனைத்தும் என் செல்வம். நாள்தோறும் நீங்கள் பெறும் மூன்று வெள்ளி ஆறு காசு (3 ளுhடைடiபேள 6 ஞநnஉந) உங்களதே. அதை எடுத்துச் செல்லுங்கள். இதோ உங்கள் குடிச் செலவுக்கு நாலு காசு. நான் கூலியுடன் தரும் இதைக் கொண்டு என் பெயரை வாழ்த்திக் குடித்து மகிழுங்கள்!” முதலாளித்துவ சமூகம் முன் செல்லுந்தோறும் உற்பத்தி முறைகளில் பெருத்த முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன. தொழிலாளர் மேன்மேலும் மிகுதியான மதிப்புடைய செல்வத்தை உற்பத்தி செய்கின்றனர். ஆனால், வரவர அவர்கள் தம்மால் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மதிப்பில் குறைந்த பங்கே பெறுகின்றனர். இவ்வகையில் சுரண்டல் வளர்ச்சி யடைந்து கொண்டே போகிறது. முதலாளித்துவம் உழைப்பாளிகளின் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துள்ளதென்று பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள கருத்துச் சரியல்ல என்பது மேற்கூறியவற்றால் விளங்கும். உண்மையில் உழைப்பாளிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதினாலேயேதான் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. அப்படியானால் தொழிலாளிகளைச் சுரண்டுதல் வளர்ந்திருப்பது எத்துறையில்? “இது, சுரண்டல் எது என்ற கருத்தைப் பொறுத்தது. உற்பத்தியாற்றல் பெருகுந்தோறும் ஒவ்வொரு படியிலும் நடைமுறையில் ஏற்படும் வாழ்க்கைத் தர உயர்வுக்கும், ஏற்படக் கூடும் தர உயர்வுக்கும் உள்ள வேறுபாடே அச்சுரண்டலின் அளவு ஆகும். அதாவது சுரண்டல் என்பது தொழிலாளி பெறும் ஊதிய அளவைப் பொறுத்ததன்று - அவன் பெறவேண்டிய, ஆனால் பெறாதிருக்கும் ஊதியத்தின் அளவையே பொறுத்தது.” 6. முதலாளித்துவமும் பொருளாதார நெருக்கடிகளும் - உள்ளார்ந்த முரண்பாடு முதலாளித்துவ ஆட்சி அடிப்படையிலேயே போட்டி உணர்ச்சி வாய்ந்தது. முதலாளிகளக்குள்ளேயுள்ள போட்டி ஒருவர் குரல்வளையை ஒருவர் நெரிக்க முயலும் போட்டியாகும். ஒவ்வொரு உற்பத்தியாளனும் பெருத்த அளவில் உற்பத்திகளைச் செய்து பெருக்க எண்ணுகிறான். - ஏனெனில் தொழிலுற்பத்திச் சரக்குகளில் பல, ‘விலை குறைவு ஊதிய மிகுதி’ (ஐnஉசநயளiபே சுநவரசளே யனே னiஅiniளாiபே உடிளவள’) என்ற தத்துவப்படி உற்பத்தியாகின்றன. சரக்குகள் மிகுதியாய் உற்பத்தியாக ஆக, சரக்குகளின் அளவுக் கூறுக்குச் சரியான உற்பத்திச் செலவுக் கூறு குறைபடுகிறது. உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டே போகும் இப்போக்குடன் உற்பத்திக் கருவிகளின் வேலைப்பாட்டை முன்னேற்றும் முயற்சியும் உற்பத்தி ஆற்றல்களைப் பெருக்கும் முயற்சியும் ஒன்று கூடுகின்றன. இவ்வகையில் உற்பத்தி வளர்ந்து கொண்டே போகிறது. எல்லா உற்பத்தியாளனும் தான் உற்பத்தி செய்யும் அளவு எவ்வளவு மிகுதியோ, தான் உற்பத்தியிலீடுபடுத்தும் முறைகள் எவ்வளவு சிறந்தனவோ, அவ்வளவுக்குப் பொருள்களின் குறிப்பிட்ட கூறின் உற்பத்திச் செலவு குறையுமென்றும் அதனால் விற்பனைக் களத்தைக் கவரும் ஆற்றல் தனக்கு மிகுமென்றும் எண்ணுகிறான். இதன் இன்றியமையாத விளைவு யாதெனில் உற்பத்தி, தேவையின் அளவைப் பொருத்த அளவில் மிஞ்சி விடுகிறது. ஸ்பார்கோவும் ஆர்னரும் குறிப்பிடுவதாவது:9 “போட்டியிடும் உற்பத்தியாளர்களின் பூசல்களிடையே தேவையின் அளவு பெரும்பாலும் மிகுதியாக மதிப்பிடப்பட்டு விடுகிறது உற்பத்தியாளர்கள் தம் ஆலைகளில் முழு ஆற்றலையும் பயன்படுத்தி, அதன் விளைவாக ஆதாயத்துடன் விற்கும் அளவின் எல்லையை விட, மிகுதியாக உற்பத்தி செய்து விடுகிறார்கள். விற்பனையிலேற்படும் போட்டி, விலையை இறக்கி விடுகிறது. இறுதியாக விற்பனையாளர்கள், விற்பதைவிடச் சேகரித்து வைப்பதே மேலென்று எண்ணிவிடுகிறார்கள். ஆகவே தொழிற் சாலைகள் மூடப்படுகின்றன. பணியாளர்கள் வேலையில்லாது விடப்படுகின்றனர். சேகரித்து வைக்கப்பட்ட உற்பத்திச் சரக்குகள் படிப்படியாக விற்பனைக் களத்தில் செலவான பிறகுதான் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படுகிறது. தொடர்ச்சியாக ஆதாயமிக்க சில ஆண்டுகளில் உற்பத்தி மிகவும் ஊக்கப்பட்டு அதன் எல்லை கடந்த அளவினால் உற்பத்திப் பெருக்கம் என்று கூறப்படும் நிலை வந்துவிடுகிறது. எல்லாத் தொழில்களிலுமே இங்ஙனம் தேவைக்குமேல் உற்பத்தி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.” ஆயினும், பொருளியல் புலவர்கள் பொது உற்பத்திப் பெருக்கம் என்ற ஒன்று இயல்பாக என்றுமே ஏற்படாதது என்று கூறுகின்றனர். “மிகுதிச் சரக்குகளையும் முன்னிலும் நல்ல சரக்குகளையும் சமூகம் விரும்பி ஏற்கும் தேவையின் அளவு செயல் முறையில் எல்லையற்ற விரிவுடையதே. சராசரியாக மனிதன் எப்போதுமே தான் உற்பத்தி செய்யும் பொருள் களனைத்தையும் பயன்படுத்துவது கூடுமான ஒரு செயலே யாகும்” என்று அவர்கள் கூறுகின்றனர். புலவர்களின் இக்கூற்று உண்மைதான். ஆகவே முதலாளித்துவ சமூகத்தின் உண்மையான கவலை உற்பத்திப் பஞ்சம் என்று கூற முடியாது. அதோடு உற்பத்திப் பெருக்கம் ஒருபுறம் இருக்கும்போதே, பட்டினி கிடந்தும் உணவு போதாமலும் இறப்பது மற்றொருபுறம் நடை பெறுகிறது என்பது விளக்கப்பட வேண்டிய செய்தியேயாகும். ஒவ்வொரு உற்பத்தி முயற்சியாளனும் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காகக் கூலியைக் குறைக்க வேண்டி வருகிறது. ஆனால், கூலி குறைந்ததும் பொது மக்களின் பொருள் வாங்கும் ஆற்றல் தானாகவே குறைந்து விடுகிறது. அதன் விளைவாகப் பொருளும் உற்பத்தியாகி, தங்களுக்குத் தேவைப்படுவதாயிருக்கும்போதுகூட, மக்கள் அவற்றை வாங்க முடியவில்லை. அதனால் செலவுக்குறை (ரனேநச-உடிளேரஅயீவiடிn) ஏற்படுகிறது. சரக்குகள் இக்காரணத்தால் விற்பனையாகாமல் கிடக்கின்றன. சில உற்பத்தியாளர்கள் இதனால் தம் கடன்களைத் தீர்க்க முடியாமல் போகிறார்கள். இவர்கள் கடன் கொடுபடாது போகவே இவர்களுக்குக் கடன் கொடுத்தோர், தம் கடனுதவியாளர்களுக்கும் கடன் மீட்டுக் கொடுக்க முடியாமல் போகிறது. இங்ஙனமே ஒரு நச்சுச் சுழல் தொடர்கிறது. சேமநிலயங்கள் ஒவ்வொன்றாக இன்னலுட் படுகின்றன. மோசமான பொருளாதார நெருக்கடி விளைகிறது. இதுபற்றி பொருட்குவை ஆராய்ச்சி (குiயேnஉந) அறிஞர் கூறுவதாவது:- “பல வகையாகப் பின்னிக் கிடக்கிற பரந்த கடன்முறைவலையில் எத்தனையோ சிற்றிழைகள் ஒன்றுக் கொன்று ஆதரவாக நிலை பெறுகின்றன. இப்பின்னல் வலையில் எங்கோ ஓரிடத்தில் ஓரிழை அறுகின்றது. உடனே சில பெரிய பொருட்குவை நிலையங்கள் வீழ்ச்சியடைகின்றன. கடன் முறைக்கோட்டை தவிடு பொடியாகின்றது. விலைகள் தலைகுப்புற விழுகின்றன. பொருளாதார உற்பத்திகள் செயலற்று நின்றுவிடுகின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் அழிவெய்து கின்றனர். எங்கும் முன்னைய மகிழ்ச்சியில் மண் விழுந்து இருள் சூழ்கிறது. சில காலம் சென்றபின் சிறிது சிறிதாக நம்பிக்கை உயிர்க்கின்றது. மக்கள் நோக்கம் தெளிவடைந்து தொழிலுக்குச் சாதகமான நிலை ஏற்பட்டு என்றுமுள்ள நன்னிலை மீண்டும் எழுகின்றது. மருந்து உட்கொண்டு பிழைத்தெழுந்து உடல் நலம் பெறுபவன்போல் உலகம் நலமடைகின்றது. ஆயினும் இம் மருந்துக்கு ஏற்படும் செலவளவு வீணானதும் கணக்கிலடங் காததுமாகும்!”10 முதலாளித்துவத் தொழில்வளர்ச்சி கால வரலாறு முழுவதும் உண்மையில் தொழில் நிலைமையில் இத்தகைய ஒழுங்கான ஏற்றத் தாழ்வுகளே நிறைந்துள்ளது. உலக வர்த்தகக் களங்களில் செல்வ வளமிக்க பருவமொன்றிருந்தால் அதனையடுத்து வழக்கமாக ஒரு நெருக்கடி நிலைமை ஏற்படாதிருப்பதில்லை. முதன் முதல் பெருத்த நெருக்கடி ஏற்பட்டது 1825-ல். அதன் பின் 1836, 1847, 1857, 1866, 1873, 1877, 1890, 1900, 1907, 1921 ஆகிய ஆண்டுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டன. இறுதியாக 1929-ல் வந்த நெருக்கடி இவையெல்லாவற்றையும் விட மிகக் கடுமையா யிருந்தது. இத்தகைய நிலைமை ஏற்பட்டே தீரும் என்று மார்க்ஸ் முன்னமே கூறியுள்ளார் என்பதைக் ‘கோல்’ எடுத்துக் காட்டுகிறார். ‘விஞ்ஞானப் புதுமைகள் பெருக்கமடையுந்தோறும், தொழில் முறைப்படி முதலாளித்துவத்தினால் திறம்பட உற்பத்தி செய்யப்படக்கூடும் பொருள்களுக்கு, அதன் எல்லைத் திறத்திற்குள்ளாகச் செலவீடு கிடைக்காத காரணத்தினால், முதலாளித்துவம் தன்னைத்தானே முறியடித்துக் கொள்ளும்’ என்று அவர் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கண்டுணர்ந்தார். உற்பத்திக் கொப்பாக, செலவீட்டையும் விரிவுபடுத்தினாலன்றி, மூலப்பொருள் வளங்களாலும், உற்பத்திச் சாதனங்களின் பெருக்கத்தினாலும் தொழிலில்லாத் திண்டாட்டமும் பொருளியல் நெருக்கடிகளும் ஏற்படுவது உறுதி. வேண்டாத உற்பத்தியைப் பேரளவில் குறைக்க முற்பட்டால் மட்டுமே - அதாவது பல உற்பத்தி ஆலைகள் அழிக்கப்பட்டு, பல நிலையங்கள் ஒடுக்கப்பட்டால் மட்டுமே முதலாளித்துவ முறை திருத்தியமைக்கப்படக் கூடும். மேற்கூறியவைகளனைத்தும் போட்டியடிப்படையில் அமைந்த முதலாளித்துவத்தில் உள்ளூர ஊறிக் கிடக்கும் ஓர் அடிப்படை முரண்பாட்டின் பயன் ஆகும். முதலாளித்துவ முறை சமூக முறை அல்லது கூட்டு முறைப்படி உற்பத்தியில் முனைகிறது. அதைப் பயன்படுத்தும் துறையில் மட்டும் அது தனி மனிதர் போட்டிக்கும் சுரண்டலுக்கும் உடன்படுகிறது. இம்முரண் பாட்டின் வெளிச் சின்னமே இன்ப வகுப்பினருக்கும் உழைப்பாளி வகுப்பினருக்கும் இடையே நிகழ்ந்து வரும் போராட்டமாகும். இதில் இன்ப வகுப்பினர் தனிமனிதர் சொத்துரிமைக்கும், சுரண்டலுரிமைக்கும் போராடுகின்றனர். உழைப்பாளி வகுப்பு சமூக மயமாக்கப்பட்ட தொழிலுக்கும் கூட்டு உற்பத்தி முறைக்கும் போராடுகிறது. 7. முதலாளித்துவத்தின் கையாலாகாத்தனம் முதலாளித்துவம் என்றால் என்ன? அதன் முக்கிய கூறுகள் எவை? என்று ஆராய்ச்சி செய்தோம். இனி அதன் குறைபாடு களைப் பற்றி ஆராய்வோம். இப்போதிருக்கும் இச்சமூக அமைப்பு முறையை அறிஞர் நீக்குப் போக்கு இல்லாமல் முற்றிலும் கண்டிப்பது எக்காரணங்களால் என்று காண்போம். அதனைக் கண்டிப்பவர்களுள் தலைமையானவர்கள் சமதர்ம வாதிகளே. அவர்கள் கண்டனம் காரசாரமும் உணர்ச்சியும் உடையது. சமதர்மிகள் வாதம் இச்செய்தியில் அமைந்ததுபோல் வேறெங்கும் இவ்வளவு பொருத்தமானதாய் அமைந்ததில்லை என்றுகூடக் கூறலாம். ஆயினும், சமதர்மிகளில் பல திறத்தினர் முதலாளித்துவத்தின் பலதிறக் குறைபாடுகளை வேறு வேறாக வற்புறுத்துகின்றனர். “ஒரு கூட்டத்தின் கோட்பாட்டின்படி புல்லுருவித் தன்மை வாய்ந்த இடையீட்டாளன் அல்லது தரகனே சமூகத்துக்கு மிகவும் கேடுபயப்பவனெனப்படுகிறான். மற்றொரு கூட்டத்தார் சுரண்டும் முதலாளியே குடிகேடன் என்கின்றனர். மற்றொரு கட்சி தீம்பு முழுவதும் பங்கீட்டு முறையில்தான் இருக்கிறது என்கிறது. ஒழுக்கவாதி போட்டியினடிப்படையில் அமைந்த சமூகத்தின் தாழ்ந்த தர ஒழுக்க நிலைமைபற்றி மனம் வருந்துகிறான். கலைஞன் அவ்வுழைப்பு முறையின் பயனாயேற்படும் உற்பத்திப் பொருள்களின் கலைக்கு மாறான அழகின்மைப் பண்பை வற்புறுத்திக் காட்டுகிறான். சமதர்மிகள் முதலாளித்துவ அமைப்பில் கண்டிக்கும் கூறுகள் அதன் வகை முறைகளும் நுணுக்கத் திறங்களும் அல்ல என்றும் அதன் அமைப்புத் திட்டமே என்றும் தொடக்கத் திலேயே நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம். முதலாளித்துவ நாகரிகம் வெற்றிகரமாகச் செய்து முடித்த அருஞ்செயல்கள் பல. அது எடுத்துக் கொண்டுள்ள பணிகளும் அதன் பலன்களும் வியப்புக்கிடமானவை. ‘பொது உடைமை விளம்பர அறிவிப்பு’ இதனை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளுகிறது. அது கூறுவதாவது:- “இன்ப வகுப்பினர் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட அவர்களின் ஆட்சிக் காலத்தில், தமக்கு முன்னிருந்த அத்தனை முறைகளும் சேர்ந்து உருவாக்கிய உற்பத்திச் சாதனங்களைவிட மிகவும் பிரம்மாண்டமான அளவில் மிகுதியான உற்பத்திச் சாதனங்களை உண்டுபண்ணியுள்ளனர். இயற்கையின் சக்திகளை மனித சக்திக்கு உள்ளடக்கல், இயந்திர சாதனங்கள், தொழில், உழவுத் தொழில் ஆகியவற்றில் இயைபியல் (ஊhநஅளைவசல) அறிவை ஈடுபடுத்தல், நீராவிக் கப்பல், போக்குவரத்து புகைவண்டிப் பாதை, மின்சாரத் தந்தி, முழுமுழுக்கண்டங்களையெல்லாம் மனித வாழ்க்கைக்குப் பயன்படுவித்தல், ஆறுகளை வேண்டிய வழியில் செலுத்தல், மாயத்தால் உற்பத்தி செய்யப்பட்டனவென்னும்படி பெருவாரி யான மக்கள் தொகுதியை வளர்த்தல் ஆகிய இத்தனை உற்பத்தி ஆற்றல்கள் சமூக உழைப்பின் கருவில் இருந்தன என்று முந்திய தலைமுறையில் எவரும் கனவு கண்டிருக்கக்கூட முடியா தன்றோ?” அளப்பரிய இப்பெரு நன்மைகளை ஒத்துக் கொண்டும், அவற்றை முற்றிலும் மறைக்கத்தக்க அளவில் அதன் தீமைகள் எல்லையற்றவையும் கொடியவையும் ஆகும் என்று சமதர்ம வாதிகள் கருதுகின்றனர். முதலாளித்துவ நாகரிகத்தின் கண்டனங்கள் இரு பெருந் தொகுதிகளுள் அடங்கும். முதல்தொகுதி சமதர்ம வாதிகளின் எதிர்ப்பில் முக்கியமான எதிர்ப்பிலக்காகும். அது முதலாளிகள், தொழிலாளி எதிர்ப்பிலக்காகும். அது முதலாளிகள், தொழிலாளி வகுப்பைச் சுரண்டி வாழ்கின்றனர் என்பதே. இரண்டாவது கண்டனம் முதலாளித்துவ அமைப்பின் உற்பத்தி முறை, போதிய திறம்பட்ட முறையும் நேர்மையான ஒழுங்காட்சியும் உடையதன்று என்பது. சமதர்ம இயக்கம் இவ்விரண்டு தீமைகளையும் நீக்க முயல்கின்றது. “உற்பத்தியாளர்களைச் சுரண்டுவதற்கென அமைந்த, உற்பத்திக்கு உழைக்காத ஒரு வகுப்பிடம் ஆதிக்கம் இருப்பதைத் தவிர்க்க உறுதி கொண்டிருப்பதே சமதர்ம இயக்கத்தின் முக்கிய நோக்க மாகும். அவ்வியக்கத்திற்கு உயிர்ப்பும் ஊக்கமும் தருவது இப்பண்பே...........இரண்டாந்தரமான நோக்கம் ஒன்றும் அதற்குண்டு. வீணே பொருள்கள் அழிவதைத் தடுத்துச் சமூகத்திற்கு அதன் முயற்சிக்கேற்ற பயன் ஏற்படும்படி தொழில் முறையின் அமைப்புத் திறத்தை முன்னேற்றுவித்து அதன் நடைமுறையாட்சியையும் மேம்படுத்துவதே அவ்விரண்டாவது நோக்கம்.”14 மூலப் பொருளின் உற்பத்தித் திறத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். முதலாளித்துவம் இம்முறையில் முற்றிலும் படுதோல்வியடைந்துள்ளது. மறுக்க முடியாதபடி முக்கியத்துவம் வாய்ந்த எத்தனையோ பொருள்கள் முதலாளித்துவத்தால் ஏற்பாடு செய்யக் கூடாதவையாயிருக்கின்றன. ஏனெனில் “அப்பொருளை உண்டுபண்ணித் தந்தபின் அதற்காக மக்களிடமிருந்து பணமாக விலை பெறுவதற்கில்லை. எடுத்துக் காட்டாகக் கலங்கரை விளக்கங்களைக் கூறலாம் (டுiபாவ hடிரளநள) இவையில்லாமல் பெரும் கடற்பிரயாணம் செய்தலரிது. வர்த்தகக் கப்பல்கள் அவையில்லாவிட்டால் அஞ்சி அஞ்சித் தங்கி மெள்ளவேதான் பிரயாணம் செய்ய நேரிடும். அப்படியும் அவற்றுட் பல அழிவெய்தும். இவ்வழிவால் கப்பலில் செல்லும் சரக்குகளின் விலையும், அவற்றின் இயற்கை மதிப்பு விலையை விட எவ்வளவோ மிகுதியாய் விடும். ஆகவே கலங்கரை விளக்கங்கள் கடற் பிரயாணஞ் செய்பவர்கட்கு மட்டுமல்லாமல் பயணம் செய்யாதவர், செய்ய எண்ணாதவர் ஆகியவர்களனை வர்க்குமே பெரிதும் பயன் தருபவை. கலங்கரை விளக்கங்கள் இவ்வளவு இன்றியமையாப் பயனுடையவையாயிருந்தபோதிலும் முதலாளிகள் அவற்றை என்றும் செய்ய முயலமாட்டார்கள். கலங்கரை விளக்கக் காவலர், வருகிற போகிற கப்பல்களொவ் வொன்றினிடமிருந்தும் வரி பிரிக்கக் கூடுமேயானால், பிரிஸ்டல் கடல் முகத்தில் காணப்படும் விளக்கு வரிசைகளைப்போல் கடல்களில் கரைகள் நெடுகக் கலங்கரை விளக்கங்கள் ஏற்படுவது உறுதி. ஆனால், இங்ஙனம் வரி விதிப்பதென்பது முடியாத காரியம். கப்பல் மாலுமிகளின் பொருளை எதிர்பார்க்காமலேயே ஒரு சார்பற்ற நிலையில் எல்லாக் கப்பல்கள் மீதும் அவ்விளக்கங்கள் ஒளி வீசியாக வேண்டும். இந்நிலையில் முதலாளிகள் செய்யக்கூடுவதெல்லாம் கடற்கரைகளை ஒளியில்லாதிருக்கும்படி விட்டுவிடுவதே. ஆகவேதான் அரசியல் இவ்விடத்தில் தலையிட்டுச் செயலாற்ற நேரிடுகிறது.........இங்ஙனம் கடல் ஆற்றலை நம்பியிருக்கும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு உயிர் நிலையாயிருக்கிற இத்துறையில் முதலாளித்துவம் முற்றிலும் செயலாற்றாது போகின்றது, அரசியலே அதனைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்தியும் அதற்காகக் கப்பல் உடைமையாளர்கள் மீது வரி விதித்தும் வரவேண்டியிருக்கிறது.”15 இக்குற்றச்சாட்டுக்கு விடையாக முதலாளித்துவத் தரப்பினர் கூறுவதாவது, இத்தகைய பயனுடைய வேலைகளைத் தனிமனிதர் மேற்கொள்ளாவிட்டாலும் அரசியல் ஏற்றுக் கொள்ளுகிறது. ஆடம் ஸ்மித்கூட விலக்க முடியாத குறைந்த அளவு அரசியல் கடமைகளுள் இதனை உள்ளடக்கிக் கூறியிருக்கிறார். அவர் குறிப்பதாவது, “எந்தத் தனி மனிதனுக்கோ. தனி மனிதர் சிறு குழுவுக்கோ பொருள் வகை ஊதியம் தராத சில பொது ஊழியங்கள் சில பொது நிலையங்கள் ஆகியவற்றை அரசியலாரே நிறுவி நடத்த வேண்டும். ஏனெனில், பெரிய அளவில் சமூகத்திற்கு அதன் செலவு பன்மடங்கு மிகுதியாகப் பயன் தருமாயினும், எந்தத் தனி மனிதருக்கோ தனிமனிதர் குழுவுக்கோ அச்செலவுக்கேற்ற கைம்மாறு கிடைக்க முடியாது.”16 இவ்விடை அறிவுக்குப் பொருந்துவதாயில்லை. இக்கடமை அரசியலுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டிருப்பது உண்மையே. ஆனால், மாற்றிக் கொடுக்கப்பட்டதனால் அது நிறைவேற்றப் பட்டதென்று ஆய்விடாது. இவ்வகையில் கேட்கப்பட வேண்டிய கேள்வியாவது; அரசியல் இத்துறையில் தன் கடமையைச் சரிவர ஆற்றியுள்ளதா என்பதே. இதற்கு விடை: ஆற்றியுள்ளதென்று பெரும்பாலும் கூறுவதற்கில்லை. உடல் நலத்துக்குக் கேடு பயக்கும் சேரிகள் மிகுதியாய் இருப்பது, தனிமனிதர் நன்கொடை உதவிகளிருந்தும்கூட கல்வியில்லாமை மிகுதியாயிருப்பது முதலிய கோளாறுகள், முதலாளித்து அரசியல் இப்பெரு முயற்சிகளைத் திறம்படச் செய்ய முடியவில்லையென்பதைக் காட்டுகின்றன. இங்ஙனமாக ஒருபுறம் ஆதாயமில்லாத ஆனால் பயன்தரும் ஊழியங்கள் கவனிக்கப்படாதிருக்க, மறுபுறம் ஆதாயம் காட்டும் தொழில்களில் உழைப்புச் சக்திகளின் மட்டற்ற பெரு விகிதத்தினர் ஈடுபடுகின்றனர். இச்சில துறைகளுள் ஆயிர நூறாயிரக்கணக்கான ரூபாய்கள் முதலிடப்படுகின்றன. மற்றத் துறைகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை இத்துறைகள் இழுத்துத் தமதாக்குகின்றன. மேலும் நாட்டின் உடல் உழைப்புச் சக்திகள், மன உழைப்புச் சக்திகள் ஆகியவை இவற்றிலேயே கொண்டிணைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு சில சரக்குகளிலேயே மக்களின் தேவை எல்லையற்றதாயிருக்க முடியாதென்பதையும் அவை வரம்புடையவையாக இருக்க வேண்டுமென்பதையும் யாரும் கவனிப்பதில்லை. மேலும் மேலும் காசு பணம் அடித்துப் பெருக்கும் மாய மருந்தின் கவர்ச்சிக்குட்பட்டு ஏராளமான உற்பத்தி ஆதாரங்கள் சிதைக்கப்படுகின்றன. இம்மந்திர சக்திக்கு ஒரு தடவை அடிமைப் பட்டவரிடம் அது மேன்மேலும் வளர்வதன்றிக் குறைவதில்லை. கடைசியில் வெறுங்கையராய் தொழில் முறிவடைந்து பெரும் பொருளிழப்பும் கொடிய பொருளியல் நெடுக்கடியும் ஏற்படுவது வரை அது குறைவதில்லை. செயற் சுதந்திரம் (டுயளைளநண-குயசைந) என்ற தனிமனிதர் போட்டி உரிமைக் கோட்பாட்டினரின் கனவுலக ‘இந்திரபுரி’ இங்ஙனம் நனவுலகப் பாறைகளில் பட்டுத் துகள் துகளாகப் போகிறது. சமூகத்தின் பொருளியல் நிலையாகிய கட்டட முழுவதும் அழிந்து கிடக்கும் இவ்வழிபாட்டினிடையே இன்றைய உற்பத்தி முறையின் திட்டமற்ற தன்மையும் குழப்ப நிலையும் பட்டப் பகலாக விளக்கம் பெறுகிறது. மேலும், போட்டியினிடையே தேவையினளவை மதிப்பிட எவ்வகையுமில்லாது போகிறது. உற்பத்தியாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு உற்பத்திப் பொருள்களைப் பெருக்கி அவற்றை ஆதாயத்துடன் விற்றுவிடவும் செய்யலாம் என்று நம்பி வாழ்கின்றனர். வேலைகள் பல்வேறு உற்பத்தியாளர்களிடையே திட்டப்படி பங்கிடப்பட்டிருந்தால், ஒவ்வொரு உற்பத்தியாளரும் மொத்த உற்பத்தியில் எவ்வளவு பங்கு தாம் உற்பத்தி செய்தால் தமக்கு ஆதாயமுண்டென்று மதிப்பிட முடியும். ஆனால் அவ்விதத் திட்டமான பங்கீடு கிடையாது........................ ஆகவே போட்டிகளால் விலைகளில் பெரிய ஏற்றத் தாழ்வுகளும் வாழ்க்கையின் உயிர்நிலைத் தேவைகளில் கூடப் போட்டிச் சூதாட்டங்களும், வர்த்தக நிலைய முறிவுகளும், ஒழுங்கற்ற உற்பத்தியும், அதன் பயனாக உழைக்கும் வகுப்புக்கு உரைக் கொணாத் துன்பங்களும் ஏற்படுகின்றன. பொருள்களின் தேவை, தருவிப்பு (னநஅயனே யனே ளரயீயீடல) ஆகியவற்றினிடையே வேற்றுமைகளைச் சீர்படுத்தும் வகையில் இவ்வளவு குறைபாடு உண்மையில் இல்லையென்று முதலாளித்துவத்தின் ஆதரவாளர் கூறுவர். அவற்றிடையே விலைத் திட்டத்தைக் கொண்டு சமநிலை சரிப்படுத்தப்படுமாம். விலை குறைந்தால் அவ்விலைக்குரிய சரக்கு வேண்டுவதற்குமேல் உற்பத்தியாகியிருக்கிறதென்பதை அது காட்டும். உடனே உற்பத்தியாளர்கள் உற்பத்தியைச் சுருக்குவார்கள். ஏனெனில், அப்படிச் சுருக்காவிட்டால் ஆதாயம் குறைந்து சில நிலையங்கள் சிதையவும் நேரும். தருவிப்பு தேவைக்கு மிகவும் குறைவாயிருந்தால் விலை உயர்வு பெறும். ஆதாயம் மிகுதியாகி, உற்பத்தி மிகுதிக்கு ஊக்கமளிக்கும். இதனால் உற்பத்தி பெருக, மீண்டும் விலைகள் தாழும். இது விலை முறை உலக ஒழுங்கு. இதன்படி முதலாளித்துவ சமூகம் தேவைக்குப் போதிய தாளும் தாளுக்கேற்ற மையும் உற்பத்தி செய்வதாகக் கூறப்படுகிறது. மேலீடாகப் பார்த்தால் முதலாளித்துவ அறிஞரின் வாதம் சரியானதாகத் தோன்றும். ஆனால், நடப்புச் செய்திகளைக் கவனித்தால் அது உள்ளீடற்ற இன்பகரமான மயக்கமே என்பது தெரிய வரும். தேவை தருவிப்பு ஆகியவற்றினிடையே சீர்கேடு இல்லையென்றால் அடிக்கடி வர்த்தகத் துறையில் செயலற்ற நிலைகள், வர்த்தகங்கள் மந்தம், பணங்காசு மறைவு, தொழிற்சாலைகளடைப்பு, தொரிலாளிகள் பட்டினி ஆகியவை ஏற்படுவானேன்? வாயுரைக் கொள்கைகளை வைத்து முடிவு கட்டுவதை விடக் கண்கூடான நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு முடிவு கட்டுவதே உண்மையில் சிறப்புடையதாகும். ஆயினும் வெறும் கொள்கையில்கூட முதலாளித்துவ அறிஞர் வாதத்தில் கோளாறு உண்டு. அவர்கள் செலுத்தும் கவனம் முழுவதும் நீண்டகாலப் போக்குகளில் மட்டுமே. வேற்றுமைகள் சரிப்பட்டுவிட்டபின் ஏற்படும் இந்நீண்ட காலங்களுக்கிடையில் வேற்றுமைச் சீர் கேடுகளும் எதிர் விளைவுகளும் நிறைந்த இடைக்காலத்தை அவர்கள் கவனியாது விட்டு விடுகின்றனர். ஒரு சமதர்ம எழுத்தாளர் இவ்வகையில் கூறுவதாவது: “உற்பத்தி, விலை இவற்றின் ஏற்றத்தாழ்வு விகிதங்கள் தம்மைத்தாமே சரிப்படுத்திக் கொள்ளும் என்ற இயற்கை நியதி நிறைவேற முதலாளிகள் நடைமுறையில் அனுமதிப்பதில்லை. விலைகளின் வீழ்ச்சி எவ்வளவு கடுமையாக இருந்தபோதிலும் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய அளவிற்கு இருப்பதில்லை. ஆகவே விலைகள் பின்னும் ஆதாயந் தருவதாகவே இருக்கின்றன. நுணுக்கத் துறை வளர்ச்சித் திறங்களின் மிகுந்த ஆற்றல், விலை ஏற்றத் தாழ்வின் மூலம் ஏற்பட வேண்டிய விளைவைத் தடுத்துவிடுகின்றது. ஆகவே அரசாங்கங்கள் இச்சமயம் தலையிட்டுத்தான் பட்டினியைத் தவிர்க்க முயற்சிகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இவ்வரசாங்கங்கள்கூட இயற்கை அமைதியைக் கட்டுப்படுத்தச் செயற்கையாகப் பொருட் பெருக்கத்தைக் குறைக்க வேண்டியிருக்கிறது.” இவ்வளவோடு கதை முடிந்து விடவில்லை. திட்டமில்லா உற்பத்தியின் இயற்கைப் பலன் உற்பத்தியாளரிடையே ‘ஒருவர் குரல் வளையை ஒருவர் அறுக்கப் பார்ப்பார்களென்ற பழஞ்சொல்லை நினைவூட்டும், மோசமான போட்டியாகும். விளம்பர முறை இதுவகையில் ஒரு எடுத்துக்காட்டு. விளம்பரங்களில் ஒரு சிலவே தகவலறிவிப்பவையாயிருக்கின்றன. பெரும்பாலானவை போட்டி மனப்பான்மையுடன் முன்னுள்ள தேவைப் பொருள்களையே மீட்டும் வேறுருவில் தருவிக்கின்றன. கார்லைல் எடுத்துக்காட்டிக்கூறும் கதை ஒன்றில் லண்டன் ஸ்ட்ராண்டு பகுதியிலுள்ள ஒரு தொப்பி வர்த்தகன் மற்றப் போட்டியாளர்களைவிட நல்ல தொப்பிகளைச் செய்வதை விடுத்து அதற்கு மாறாக 7-அடி உயரமுள்ள பிரமாண்டமான தொப்பி ஒன்றைச் செய்வித்து அதனைத் தெருவழியே தள்ளிக் கொண்டுபோக ஒருவனை அமர்த்துகிறான். இத்தருணத்தில் அவர் கூறுவதாவது ‘முன்னையிலும் சிறந்த தொப்பி செய்க’ என்ற இயற்கையன்னையின் பணியை அவன் கைவிட்டு விட்டான். இயற்கை அமைதியுடன் நடந்திருந்தால் அவன் இதனையே செய்திருப்பான் என்பதில் ஐயமில்லை. ஆனால், இப்போது அவன் தன் அறிவுத்திறத்தையெல்லாம் ஈடுபடுத்துவது, தான் அவ்வண்ணம் செய்வதாகக் காட்டிக் கொள்வதிலேயே. அவனுக்கும் இப்போது போலி வர்த்தகமே உலகத்தை ஆட்டிவைக்கும் கடவுளாய் விட்டார் என்பது தெரிந்து விட்டது போலும்!” இவ்வழியில் 7-அடித் தொப்பி இயற்றும் முயற்சி, உற்பத்தியாளனின் அறிவுத்திறம், விளம்பரக்காரன் உழைப்பு ஆகிய யாவும் முற்றிலும், விழலுக்கிறைத்த நீர் ஆகிறது. வீணழிவு மட்டுமன்றி விளம்பரத்தினால் வரும் இன்னொரு கேடு அதன் மூலம் பத்திரிகை உலகின் மீது ஏற்படும் நேர்மையற்ற ஆதிக்கம் ஆகும். பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் விளம்பரங்களில்லாமல் வாழ முடிவதில்லை. விளம்பரங்களைத் தரமாட்டோம் என்று அச்சுறுத்துவதன் மூலம் பல பத்திரிகைகளின் கோட்பாடுகளும் நோக்களுமே மாற்றமடைந்துள்ளன. வீண் விளம்பரங்களோடு கூட அனாவசியமான வீண் வேலை இரட்டிப்புகள் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ளன. பக்கத்துக்குப் பக்கமாக இடப்படும் புகை வண்டிப்பாதைகள், சரக்குகளிருப்பில் இரண்டு தொகுப்பு வைத்திருத்தல். அதிகத்தளப்பரப்பு வைத்திருத்தல், சரக்குகள் கெட்டுப்போதல் முதலிய வகைகளில் எவ்வளவோ வீண் பொருளழிவு ஏற்படுகிறது. இவையனைத்தும் தங்குதடையற்ற தனி மனிதர் போட்டியுரிமையின் இன்றியமையாப் பயன்கள். அவற்றால் ஏற்படும் சமூக நஷ்டம் மிகப் பெரிது. சரக்குகளின் அளவை விடுத்து அவற்றின் தரத்தின் மீது கவனம் செலுத்தினால் தற்கால உற்பத்தி முறையில் தீமைகள் இன்னும் மிகுதியாகவே காணப்படும். ஒரே மனிதன் பல்வேறு துறைகளில் வெற்றி பெருவதானால், ஏமாற்றும் சரக்கு மாறாட்டமும் செய்யாமல் அங்ஙனம் செய்ய முடியாது. ஓர் உற்பத்தியாளன் இத்தகைய நேர்மையற்ற முறைகளைக் கையாளத் தொடங்கிவிட்டால், மற்றவர்களும் அவற்றையே கையாள வேண்டும். அல்லது தொழில் துறையை விட்டுச் செல்ல வேண்டும். மணல் கலந்த சர்க்கரை, அட்டைகள் உள்ளே வைக்கப்பட்ட மிதியடிகள் ஆகியவற்றைப் பற்றிய அனுபவம் நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது. ஓர் ஆசிரியர் குறிப்பிடுவ தாவது: “உணவுத் துறையில் அளவைப் பெருக்கிக் காட்டும் தந்திரமும், சரக்கு கலப்பட முறையும் பெருத்த ஆதாய மடைவதற்கான எளிய வழிகள் ஆகும். ஏனெனில், அவற்றைக் கடைசியாக வாங்கிப் பயன்படுத்துபவனுக்கு எதிர்க்கும் ஆற்றலும் இல்லை. சரக்கின் தரமறியும் அறிவும் கிடையாது................. உலகின் உணவுத் தொகுதியில் தனக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுக்கப் பெரும்பாலாகப் பெண்மணிகளே வருவர். இங்ஙனம் வரும் பெண்களுக்குத் தங்கள் வறுமை மிக்க குடும்பத்தில் வழக்கமாகக் கிடைக்கும் அனுபவமன்றி உணவின் உயர்வு தாழ்வு பற்றி வேறு எதுவும் தெரியாது.” சரக்குகளின் தரம் ஓரளவு நன்றாயிருக்கு மிடத்தில் கூட அவற்றின் கலைப் பண்பும் வனப்பும் சொல்லுந்தரமாயிருப்பதில்லை. மேற்குறிப்பிட்ட தீமையை மட்டிலும் முதலாளித்துவ அறிஞர்கள் ஒப்புக்கொள்ளாமலில்லை. ஆனால் ‘இது ஒரு சில துணிகரக்கொள்ளைக்கார மனப்பான்மையுடைய தீயவர்கள் வேலைமட்டுமே, அதோடு எங்கள் முறையிலேயே இதனைத் திருத்துவதற்கான கூறுகள் இருக்கின்றன,” என்று அவர்கள் கருதுகின்றனர். அது யாதெனில் ‘உற்பத்தியாளர்கள் விலை மட்டிலுமல்ல போட்டியாடுவது, தரத்திலும்தான். ஆகவே உற்பத்தியாளர்கள் மனதில் மேன்மேலும் நல்ல தரமான சரக்குகள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வர வளர இடமுண்டாகிறது. கடைசியாக அரசியலார் மேற்பார்வை, சரக்காய்வு, விளம்பரம் ஆகியவை இருக்கின்றன,’ என்பதே அவர்கள் விளக்கம். இத்தகைய திருத்தங்கள் நல்ல பயன் தரக்கூடும் என்ற நிலையிருப்பது உண்மையே - ஆனால், அப்பயன்கள் இருந்து வருகின்றனவா? தரத்தைக் குறைத்து அமோக ஆதாயம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை தன் நலத்துக்காகவாவது தரத்தைப் பாதுகாக்கும் உணர்ச்சியைவிட சிலரிடம் மேம்பட்டுவிட ஏதுவாகிறது. அரசியல் மேற்பார்வையும் வலுவற்றதாக்கி விடப்படுகிறது. ஏமாற்று வித்தைகளில் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு ஒழிக்கப்படுமுன் பல வித்தைகள் முளைத்து விடுகின்றன. அதோடு சூழ்ச்சியறிவில் தேர்ந்த வழக்கறிஞர் படைகளின் உதவியால் உற்பத்தியாளர் சட்டத்தை மீறவும் சட்டத்தின் உதவியைக்கொண்டே அதன் வலைகளிடையே தப்பிச் செல்லும் வழி கண்டு கொள்ளுகின்றனர். முடிவாக - இத்தீமைகள் வேறோடு நீக்கப்பட்டால், அரசியல் மேற்பார்வைக்காகச் செலவிடப்படும் நாட்டுச் சாதன ஆதாரங்களத்தனையும், நாட்டு வாழ்வுக்கு வேறு வகையில் பயன்பட மீந்து நிற்பவையாகும். இவ்வாதார முழுவதும் பொருளுற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டால் மக்களுக்கு இன்னும் நல்ல உணவும் இன்னும் நல்ல உடையும் கிடைக்க வழி ஏற்படும். மேற்கூறப்பட்ட வர்த்தகச் சூதாட்டத்தை மின்மினியாக்கும் தன்மையுடையது. பொருள் துறைச் சூதாட்டம், ‘வெப்லன்’ எழுதுவதாவது: “பழைய பண அடிப்படைப் பொருளியல் (ஆடிநேல நுஉடிnடிஅல) முறையிலும்; அதனோடிணைந்த பங்காளித்துவ முறைகள், தொழில் முயற்சிகளின் தனிஉடைமை முறை ஆகியவற்றிலும்; தொழில் உற்பத்தி நடைமுறைகளின் நிர்வாக நிர்ணய ஆதிக்கம் ஒருசில மனிதர் கையிலிருந்தது. அவர்கள் நலனும் நோக்கமும் பொதுமக்களின் பரந்த சமூகத்தின் நலன் நோக்கம் ஆகியவற்றிலிருந்து ஒரு படி வேறுபட்டது என்னலாம். ஆனால் அந்தப் பழைய பண அடிப்படைப் பொருளியல் முறையைவிடப் போதிய அளவு முதிர்ச்சியடைந்துள்ள பணமதிப்பு - அடிப்படைப் பொருளியல் (ஊசநனவை-நுஉடிnடிஅல) முறையிலும் அதனோடிணைந்த கொடுக்கல் வாங்கல் சக்தி வாய்ந்த மூல தன முறையிலும்; தொழில் துறையில் கொள்கை நிர்ணய உரிமையுடைய ஆதிக்க வர்க்கத்தினர், தங்கள் ஆதிக்கத்திலுள்ள நிலையங்களின் நலன்களிலிருந்து ஒருபடி வேறுபட்ட நலன்களை உடையவராகவும்; பொதுமக்கள் சமூகத்தின் நலன்களிலிருந்தும் மற்றும் ஒருபடி வேறுபட்ட நலன் உடையவர்களாகவும் இருக்கின்றனர். “நிலையங்களின் மேற்பார்வையாளர்களாகிய அவர் களுடைய தொழில் நோக்கம் உற்பத்திச் சரக்குகளின் நல்லுபயோகமுமன்று, அதன் விற்பனைகூட அன்று: தாங்கள் கையாண்டுவரும் முதலீட்டின் விலை மதிப்புக்களிடையே தங்களுக்குச் சாதகமாக ஏற்படும் உயர்வு தாழ்வு வேற்றுமைகள் மட்டுமே - அதாவது முதலீட்டின் உண்மையான சம்பாதிக்கும் ஆற்றலுக்கும் அவ்வாறு கொள்ளப்படும் மதிப்பீடான சம்பாதிக்கும் ஆற்றலுக்கும் உள்ள மாறுபாட்டளவே அவர்கள் தொழிலாதாயமாகும்.” அமெரிக்கத் தலைவர் ரூஸ்வெல்ட்கூடக் கீழ்வருமாறு தெரிவித்துள்ளார்: “சட்ட சபைகளையும் நகர சபைகளையும் கைக்கூலி முதலிய ஊழல்களால் கெடுத்து வாழ்பவனும், தன் கையில் சிக்கிய முதலீட்டுச் சீட்டாளர்களை (ளுவடிஉம-hடிடனநசள) உறிஞ்சி வாழ்பவனும் சூதாட்டக் களத்தில் பணம் பறித்துக் கொழுப்பவனை ஒத்த ஆன்மீக வளர்ச்சி நிலை உடையவரேயாவர்......... தரகு பெறுபவன்- மொழித்தரவுகளில் (ஏடிவநள) வாணிபம் செய்பவன் - பிணையப் பணத்தில் சூழ்ச்சியாள்பவன் - ஒழுக்கக் கேட்டுக்கு வகை செய்பவன் - அதற்கு ஆதரவு தருபவன் - வழிப்பறிக் கொள்ளைத் தலைவன் - மக்கள் உணர்ச்சி வழி அவர்களை ஊக்கிப் பயன் பெறுபவன், (னநஅயபடிபரந) - கூலிக்காக மக்களைத் துன்புறுத்திக் கொல்பவன் ஆகிய இன்னோர்களனைவரும் ஒருதரத்து ஊழல் பண்ணையில் முளைத்தவர்கள். மனிதத் தன்மையுடைய எவனும் இவர்களை வெறுக்காமலிருக்க முடியாது.” பயனற்ற அல்லது தீமை தரும் பல தொழில்களை வளர்த்துப் பெருக்கும் குற்றம் முதலாளித்துவத்திற்குரியது. அவற்றுட் சில நாட்டு மக்களின் மிகச் சிறந்த மூளைகளைப் பயன்படுத்துகிறது. ஆயினும் சமூகச் செல்வ வளர்ச்சிக்கு அது சிறிதும் உதவுவதில்லை. வழக்கறிஞர்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. உலகின் வழக்குகளில் 10க்கு 9 விழுக்காடு சொத்துரிமை பற்றியவையோ, அல்லது முதலாளித்துவத்தைச் சார்ந்த வேறு செய்திகள் பற்றியவையோதான். தனி உடைமை ஒழிக்கப்பட்டு விட்டால் இவ்வழக்கறிஞரின் தேவை மிகக் குறைந்து அவர்கள் உழைப்பு மற்ற ஆக்கத் துறைக்காரியங்களுக்கு உதவுமென்று சமதர்மிகள் நம்புகின்றனர். உற்பத்தித் திறமை பற்றியமட்டில் முதலாளித்துவத்தின் மீது சுமத்தப்படத் தக்க குற்றச் சாட்டுகள் இவை. சமதர்மிகளின் கண்டனத்தின் முதல் பகுதியாகிய இதனை விடுத்து அதன் இரண்டாம் பகுதிக்குச் செல்வோம். இது உழைக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கைச் சூழ்நிலைகள், இரு சாராரும் இணைந்து உற்பத்தி செய்யும் செல்வத்தில் அவர்களுக்குக் கிட்டும் பங்கு, அதன் பயனாய் அவர்கட்குக் கிடைக்கும் வாழ்க்கை வசதிகள் ஆகியவை பற்றியது. சமதர்மிகள் கண்டனத்தின் இவ்விரண்டாம் பகுதி முதற்பகுதியை விடக் காரசாரமானதும் விரிவானதும் ஆகும். நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி உழைக்கும் வகுப்பைச் சுரண்டி வாழ்வதே முதலாளித்துவத்தின் அடிப்படையாகும். தொழிலாளர்களில் பெரும்பாலோர் ‘கூலி அடிமைத்தனம்’ எனப்படும் நிலைமையில் உழல்கின்றனர். முதலாளித்துவத்தின் கீழ் உழைப்பாளிகளின் நிலையை இங்ஙனம் அடிமை நிலை என்று கூறுவது நேர்மையல்ல வென்றும், உழைப்பாளிகளின் தங்கள் வேலைகளை விட்டு விட்டு எங்கே செல்வதற்கும் யாரும் தடை செய்வதில்லை என்றும், ஆகவே அவர்கள் அடிமைகள் போன்றவர்களல்லர் என்றும் முதலாளிகள் கூறுவதுண்டு. ஆனால், சமதர்மிகள் இதற்குக் கூறும் விடை யாதெனில், ‘தொழிலாளிகள் கொள்கையளவில் சுதந்திர மனிதர்களே’ ஆனால் செயலளவில் அடிமைகள் நிலையிலிருந்து வேறுபட்டவர்களல்லர். ‘உழைப்புக்கான சாதனங்களனைத்தையும் கைப்பற்றியிருப்பதன்மூலம் முற்காலங் களிலுள்ள எந்த அடிமை - முதலாளிக்குமில்லாத கொடுங் கோன்மையுரிமை இன்றைய தொழில் முதலாளிக்கு ஏற்பட்டிருக் கிறது. தற்காலத் தொழிலாளியை அவன் முதலாளிக்கே வேலை செய்யும்படி கட்டுப்படுத்தச் சட்ட முறைப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் வாழ்க்கைச் சாதனங்கள் வகையில் முதலாளி அடைந்துள்ள ஏகபோக நிலைமை எந்தத் தாள் சட்டக் கட்டுப்பாட்டையும்விட வலுவானது. பழைய அடிமைத்தனத்திற்கும், புதிய அடிமைத்தனத்திற்கும் இடையே யுள்ள தலைமையான வேறுபாடு யாதெனில் தற்கால அடிமை முதலாளிக்குத், தன் அடிமைகளை பட்டினியில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமைப்பாடுகூட இல்லை என்பதே. வேலை தொடங்குவது எப்போது, எவ்விடத்தில் என்பதையும், யாரை வேலையிலீடுபடுத்துவது, யாரை நீக்குவது என்பதையும் எத்தகைய வேலை செய்வது என்பதையும் முதலாளியே அறுதி செய்தல் வேண்டும். முதலாளியன்றி வேறு எவரும் அறுதியிட முடியாது. கீர் ஹார்டி கூறுவதாவது: “உழைப்பாளி, தான் ‘ஒருபழைய அடிமை முறையைவிட்டு, ஒரு புதிய அடிமை முறைக்குத்தான் மாறியிருக்கிறோம், என்று கண்டு கொண்டு விட்டான். ரோம்கால அடிமை, முதலாளியின் தோல்வாரினது கசையடியைவிட இன்றைய வயிற்றுப் பசியடி எத்தனையோ கொடுமையானது. தொழிலாளருக்கு இன்று வேலை கோரும் சந்தர்ப்பம் இல்லை, யாரும் அவனுக்கு வேலைதர வேண்டிய கடப்பாடு உடையவர் அல்லர். அன்றி அவன் தானே தன் வேலையைச் செய்யவாவது சுதந்திரமுடையவனா என்றால், அதுவுமில்லை. ஏனெனில், உழைப்பதற்காதாரமான நிலமும் அவனிடம் இல்லை, அதற்கு வேண்டிய முதலுமில்லை. உணவு கிடைக்குமிடம் தேடிச் சென்ற பழங்கால நாடோடிகள்போல் எந்த நிமஷத்திலும் வேலையைவிட்டு வேலையுள்ள இடம் நாடிச்செல்ல அவன் சித்தமாயிருக்க வேண்டும். “அவன் பட்டினி கிடக்காலம் ஆனால், உணவு உற்பத்தி செய்ய முடியாது. அவன் ஆடையின்றி இருக்கலாம், ஆடை நெய்ய முடியாது, வீடற்றவனாயிருக்கலாம்- வீடுகட்டிக் கொள்ள முடியாது, வேலை செய்யும்போது அவன் வேலை செய்யும் தொழிற்சாலையின் நடைமுறை விதிகள்மீதும் அவனுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. எந்த வேலையைச் செய்ய வேண்டு மென்று உறுதி செய்வதும் அவனுக்கு அப்பாற்பட்டது. சொன்னதைச் செய்வதென்பதனுள் அவன் கடமைகள் தொடங்கி முடிவடைகின்றன. பக்கத்து இருக்கையிலுள்ள தொழிலாளியிடம் பேசுவதுகூட சட்டப்படி தண்டவரி சுமத்தப்படத்தக்க குற்றம் ஆகும். வேலை செய்யும்போது மகிழ்ச்சி தோன்றச் சீழ்க்கையடிப்பதுகூட முதலாளிக்குப் பிடிக்கா விட்டால் அதேவகைக் குற்றமாய் விடலாம். காலையில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அடிக்கும் மணியோசை அவன் வாயில் கடந்து உட்செல்ல வேண்டும் என்றும் இயந்திரங்கள் வேலை செய்ய வேண்டுமென்றும் எச்சரிக்கை செய்யும் ஓசை ஆகும். குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மணி ஓசையோ சங்கு ஓசையோ அவனை வெளிச் சென்று உணவுகொள்ள அனுமதியளிக்கிறது. தான் ஓட்டும் இயந்திரமும் அவனுக்கு உரியதன்று, அவன் கூலிக்கு அல்லது வாடகைக்கு வாங்கப்பட்ட ஒரு சரக்கு; யார் வாங்குவார்களோ என்று ஏங்கி, வாங்க ஆள் கிடைத்தபோது மகிழவேண்டிய நிலையிலுள்ளவன் அவன்” இவ்வடிமைத்தனத்தோடு கூடத் தொழிலாளிகளின் ஒரேபடித்தான இயந்திர உழைப்பால் ஏற்படும் மன முறிவு வேறு. தொழிற்சாலை வேலைத்திட்டம் என்பது மன எழுச்சியும் ஊக்கமுற்ற உயிரில்லாக் கட்டுப்பாடு, பல தொழிலாளிகளுக்கு அது ஒரு குறுகிய உலகமாய் விடுகிறது. உற்பத்திப் பெருக்கம் என்ற பலிபீடத்தின்மீது தனிமனிதன் சுதந்திரம் என்பது பலியிடப்படுகிறது. ஆட்ஸ்மித் கூறுவதாவது: “வாழ்க்கை முழுவதும் ஏதோ சிறிய எளிய வேலையிலேயே - அதுவும் ஒரேவிதான அல்லது கிட்டத்தட்ட ஒரேவிதமான பலனையே எப்போதும் மீண்டும் மீண்டும் தரும் வேலையிலேயே ஈடுபட்டிருப்பவனுக்குத் தன் அறிவைப் பயன்படுத்தவோ புதுமை காணும் ஆர்வத்தைத் தூண்டிப் பயிற்றுவிக்கவோ அல்லது ஏற்படும் தடங்கல்களை - தடங்கல்களே ஏற்படாததால் - அகற்றப் புதுவகைத் துறைகளைப் பற்றி முயன்று சிந்திக்கவோ தேவை ஏற்படாமலே போகிறது. இங்ஙனம் முயற்சியும் பயிற்சியுமில்லாக் காரணத்தால் முயற்சியாற்றலே நசித்துப் போகிறது. அவன் மனித முயற்சிகளற்று மனிதர் எவ்வளவு விலங்கு நிலைக்குச் செல்ல முடியுமோ அவ்வளவும் சென்று அறிவற்ற சடமாகின்றான். அவன் தொழிலில் அடையும் தேர்ச்சி இவ்வகையில் அவன் தன் அறிவுத்திறம், சமூக வாழ்வு, வீரம் ஆகிய பண்புகளைப் பறி கொடுத்துப் பெற்ற அற்பப் பொருளேயாகும்.” தொழிற்சாலைகளில் தொழில் நிலைமைகள் மிகவும் உடல் நலத்துக் கொவ்வாததாகவும் மிகவும் மனத்தாங்கல் தருவதாகவும் இருக்கிறது. மார்க்ஸ் தம் ‘டாஸ் கேப்பிட்டல்’ (முதலீடு) என்ற நூலில் கூறுவதாவது: “தொழிலாளர் தொழில் செய்யுமிடத்திலுள்ள சுகாதார நிலைமைகளை மட்டுமே இங்கே குறிப்பிட எடுத்துக் கொள்ளுகிறேன். செயற்கை நிலையாக ஏற்படும் காற்றின் வெப்பத்தாலும், தூசி நிறைவாலும், காது செவிடுபடும் சத்தத்தாலும், இவை போன்ற பிறவற்றாலும் ஐம்பொறிகளில் ஒவ்வொரு பொறிக்கும் ஒவ்வொரு வகையில் சம அளவான தீமையே ஏற்படுகிறது. சமூகக் கட்டுமுறையில் அமைந்த இவ்வுற்பத்திச் சிக்கன முறையானது செயற்கைப் பண்ணை களாகிய மூடுபெட்டியில் வளர்த்து உருவாக்கப்பட்ட முதலாளித் துவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டபின், தொழிலாளர்க்கு உயிர் நிலையான வாழ்க்கை வசதியையே திட்டமிட்டுக் கொள்ளையிடும் கொள்ளையாகிவிடுகிறது. வாழுமிடம், வெளிச்சம், காற்று, உடலுயிர்களுக்கு ஆபத்த வராமல் காக்கும் உரிமை ஆகிய எல்லாம் பறிக்கப்படுகின்றன. இவ்வுற்பத்தி முறை அவர்கள் உடல் நலத்துக்கும், உயிருக்கும் உலைவைப்பதாகிறது, உழைப்பவன் வசதிகளுக்காக இவ்வியற்கைக் கருவிகள்கூடக் கொள்ளை போகின்றன. உழைப்பாளியின் நரம்பு மண்டலத்தை இத்தொழிற்சாலை வாழ்வு அரித்தெடுத்து விடுவதுடன், தசை மண்டலங்களின் பல்வேறுபட்ட செயலாற்றலையும் நசிக்கச் செய்கிறது. உடல் வகையிலும், உள்ளத்துகையிலும் உழைப்ப வனாகிய அம்மனிதன் சுதந்திரத்தை அது அணுஅணுவாகப் பறிமுதல் செய்துவிடுகிறது.” இவையெல்லாவற்றையும்விடத் தீமை தருவது தொழிலாளிகள் செய்ய வேண்டும் தொழிலின் கடுந்தீவிரத் தன்மையாகும். இது அவர்கள் உயிரின் சத்தில் ஒவ்வொரு துளியையும் உறிஞ்சிவிடுகிறது. அவர்கள் வாழ்வின் வளத்தைத் தேய்த்து அவர்களை வெறும் எலும்புக் கூடுகளாக்குகிறது. தொழிற்சாலை இயந்திரங்கட்கும், சுரங்க விபத்துகளுக்கும் ஆளாகி, நூறாயிரக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றார்கள். அவர்களிலும் பல நூறாயிரக்கணக் கானவர்கள் காயமடைந்தும் நோய்ப்பட்டும் நலிகிறார்கள். இவ்விபத்துக்களைத் தடுக்கச் செய்யப்படும் முயற்சிகள், செலவு பிடிப்பவையானால் நிறைவேறாது தடுக்கப்படுகின்றன. ஆதாயத்துக்குத் தடையாயிருக்கும்போது ஏழை மக்கள் உயிர் என்பது ஒரு சிறு தூசியளவு மதிப்புத் தான் பெறுகிறது. தொழில் முதலாளியின் அணிவகுக்கப்பட்ட வழக்கறிஞர் படைகளுக் கெதிரில் அனாதையான ஏழைத் தொழிலாளி சட்ட மார்க்கங்களிலும், எவ்வகை நீதியும் பெறமாட்டாதவன் ஆகிறான். செல்வமிக்க முதலாளியின் செல்வத்தைப் பெருக்கமட்டுமே உதவுகின்ற அபாயகரமான இம்முதலாளித் துவ இயந்திரத்திற்கு ‘பல வாய்களுக்கு ஒரு கையாய்’ இருந்து உணவு தேடிய தொழிலாளர் பலர் காணிக்கையாகச் செலுத்தப்பட்டதனால் நூற்றுக்கணக்கான, குடும்பங்கள் பட்டினிக்கிரையாகின்றன. தொழிலாளியின் சூழ்நிலைகளில் காணப்படும் நிலைமையிது. ஆனால், முதலாளிகள் நாம் மேற்குறிப்பிட்ட மதிப்புரையை ஏற்பத்தில்லை. அவர்கள் கூறுவதாவது: தொழிலாளிகள் முதலாளிகளைச் சார்ந்து வாழ்கின்றனர் என்பது தவறு. அடிமை வாழ்வு என்று அவர்கள் வாழ்வைக் குறிப்பதற்கேயிடமில்லை. இருவரும் சம நிலையிலேயே தொடர்பு கொண்டுள்ளனர். தொழிலாளிகள் முதலாளிகளை எந்த அளவுக்குச் சார்ந்துள்ளனரோ அந்த அளவுக்கு முதலாளிகளும், தொழிலாளிகளைச் சார்ந்தே உள்ளனர்.” முதலாளிகளின் இவ்வாதம் ஒரு உயிர்நிலையான உண்மையைப் புறக்கணித்து விடுகிறது. தொழிலாளிகள் வேலை செய்யாத காலத்தில் தனித்து நின்று வாழுவதற்கான வழிகளில்லாதவர்கள். அவர்கள் பேரம் செய்யும் ஆற்றலை இது பெரிதும் குறைத்து விடுகிறது. இந்நிலையில் முதலாளிகள் தொழிலாளிகளைச் சுரண்ட முடிவதில் வியப்பென்ன இருக்க முடியும்? மனித இயல்பு இருக்கும் நிலையில் இது இயற்கையேயாகும். முதலாளிகள் மேலும் கூறும் செய்தி ‘வெளிச்சம், இயங்கும் இடம் ஆகிய வகையில் உடல் நலத்துக்கேற்ற குறைந்த அளவு இது என்று ஒவ்வொரு அரசாங்கமும் வரையறை செய்துள்ளதென்பதே: மற்றும் முதலாளிகளை எதிர்த்துக் கூட்டுப் பேரம் செய்து சரியான முன்னணியமைக்கும் வகையில் தொழிற் சங்கங்கள் அமைந்துள்ளன என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், கடுந்துன்ப நேரங்களில், தொழிற் சங்கங்கள் ஆற்று வெள்ளத்தில் அடிக்கப்பட்டுக் கொண்டிருப்பவனுக்குக் கிட்டிய துரும்பு போல் வலுவற்றதாய் விடுகின்றன. அத்தகைய வேளைகளில் தொழிலாளர் எதிர்ப்பின் பலனாகப் பல எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன என்பதும் மறுக்கக்கூடாத உண்மை ஆகும். அடுத்தபடியாக இருதரப்பாரும் இணைந்து உற்பத்தி செய்யும் உற்பத்திச் செல்வத்தின் பங்கீடு பற்றி, அதாவது, நிலம் உழைப்பு, முதலீடு ஆகிய மூன்று கூறுகளின் ஒத்துழைப்பினால் ஏற்படும் செல்வம் அல்லது, தேசீய வருவாயின் பங்கீடு பற்றிக் கவனிப்போம். முதலாளித்துவ நாகரிகத்தின் கீழ் தொழிலாளி களுக்குத் தேசீய வருமானத்தில் தங்கள் நேர்மையான பகுதியின் ஒரு சிறு அளவே கிடைக்கிறது. ஆகவே அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே வறுமைச் சேற்றில் கிடந்து உழலவேண்டிய வர்களாகிறார்கள். “முதலாளித்துவத்தின் கீழ் இக்குறை பாட்டுக்கு எதிராக உற்பத்தியாளரால் தரப்படும் வசதிகள் தொழிலாளர்களின் தேவையைக் கவனித்துத் தரப்படுபவையும் அல்ல; சமூகத்துக்குத் தொழிலாளிதரும் பொருள்களின் மதிப்பைக் கவனித்துத் தரப்படுபவையும் அல்ல; தொழிலாளர் உழைப்பாற்றல், விற்பனைக் களத்தில் வாங்கி விற்கும் ஒரு பொருளாயிருப்பதுடன், ஒவ்வொரு காலத்திலும் அதன்விலை, தேவை, தருவிப்பு, ஒழுங்குமுறையின்கீழ் (ருnநெச வாந டுயற டிக ளரயீயீடல யனே னுநஅயனே) அறுதியிடப்படுவதாகவும் உள்ளது. நாளடைவில் எந்தவகையான உழைப்பின் கூலியும், அதன் உற்பத்திச் செலவுக்கு ஒத்தே போகிறது. இவ்வுழைப்பும் அதே உழைப்புக்குச் சமமான நீராவியாற்றல் அல்லது நீராற்றல் ஆகியவற்றைப் போல் மனிதத் தொடர்பற்ற ஒரு பொருளாக மதிக்கப்பட்டு விடுகிறது. தற்போது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பொருளியல் கோட்பாட்டின் விளக்கப்படி சொல்வதானால், முதலீடு, நிலம், உழைப்பு ஆகிய மூன்று உற்பத்தி சாதனங்களில், உழைப்பு, மற்ற இரண்டுடன் ஒத்த ஒர சாதனமாக மட்டுமே கருதப்படுகிறது.’’ தொழிலாளர் துன்பமாவது அவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த செல்வத்தின் ஒரு கூறினையே பெறுகின்றனர் என்பது மட்டுமல்ல. இதைவிடக் கொடுமையானது உழைக்கும் வகுப்பில்கூட அவன் நிலைமை, இன்று எங்கோ, நாளை எங்கோ என்ற உறுதியற்ற தன்மையாய் இருப்பதே. “முதலாளியின் விருப்பு வெறுப்புக்கு ஒருபுறமும் தொழில் உலகப் போக்கின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஒருபுறமும் ஆக இருவகைப்பட்ட அடிமை நிலை காரணமாகவும் தம் தொழில் உழைப்புத் துறையிலிருந்து அதைவிடவும் கீழான ஏதேனும் ஒரு நிலைக்கோ அல்லது, தொழிலில்லாத் திண்டாட்டப் படைகளில் ஒருவனாகும் நிலைக்கோ போய்விட வேண்டி வருமோ என்றி இடைவிடாத அச்சம் காரணமாகவும் தொழிலாளி என்றும் கவலை நிறைந்தவனாகிறான்’ (பெர்ன்ஸ்டீன்). மேற்குறிப்பிட்ட கையழுத்த முறையை (கூhரஅb-சரடந அநவாடின) விட விஞ்ஞான நிர்வாக முறை சிறந்தது. தான் தொழிலாளர்கட்கு உற்பத்திச் செல்வத்தில் நேர்மையான பங்கு தருவதாக அது கூறிக் கொள்ளுகிறது. ஆனால் இம்முறையில்கூடத் தொழிலாளர் நேர்மையற்ற முறையில் நடத்தப்படுவதாக வற்புறுத்திக் கூறப்படுகிறது. தொழிலாளர் இங்ஙனம் எப்படியும் மிகச் சிறிய அளவு பொருள்தான் ஈட்ட முடிகிறது. அதனால் அவர்கள் இரங்கத்தக்க நிலையில் மிகத் தாழ்ந்த வாழ்க்கைத் தரத்திலேயே மனநிறை வுடையவர்களாய் வாழவேண்டியிருக்கிறது. அவர்கள் மிக மோசமான, உடல் நலத்துக்கு முற்றிலும் ஒவ்வாத, நடுக்கந்தரும் வறுமை வாய்ந்த வீடுகளில் வாழவேண்டும். மாஞ்செஸ்டர் தொழிலாளர் நிலமைபற்றி எங்கெல்ஸ் தரும் ஓவியம் இது:- “பெருந்திரளான இவ்வேழை மக்களைச் சமூகம் நடத்தும் வகை மிகவும் உள்ளத்தைத் துளைப்பதாயிருக்கிறது. அவர்கள் தாம் வாழ்ந்த நாட்டுப்புறத்தில் தாம் சுவாசித்த காற்றைவிடப் பன்மடங்கு நச்சுத் தன்மை வாய்ந்த காற்றையுடைய பெரிய நகரங்களுக்கு இழுத்துக் கொண்டுவரப்படுகின்றனர். அவர்கள் தங்குவதற்கென ஒதுக்கித் தரப்படும் நகரப் பகுதியிலும் அவர்களுக்குக் கிடைக்கும் கட்டடம் கட்டும் பொருள் வசதிக் குறைவு காரணமாக வீடுகளில் வேறெங்குமிருப்பதைவிட மோசமான காற்றோட்ட வசதியே கிடைக்கிறது. தூய்மையோடிருக்க உதவும் சாதனங்களெதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. தண்ணீர்கூடத்தான் அவர்களுக்கு அருமையாகிவிடுகிறது. ஏனெனில், பணம் கொடுத்தாலன்றிக் குழாய்கள் போட்டுக்கொள்ள முடியாது. ஆறுகளிலோவெனில் அவற்றிலமைந்த அழுக்கின் பயனாக, அவை அழுக்கேற்றப் பயன்படுமேயல்லாமல், அகற்றப் பயன்படமாட்டா. குப்பை கூளங்கள் கழிசடை நீர்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேறு சாதனங்கள் ஏதுமில்லாததால் அவற்றை அவர்கள் தெருவில் வீட்டின் முன் கொட்டிக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அவர்கள் வீட்டினுள்ளே உள்ள கழிசடை நாற்றம் போதாமல் தெருவின் முடை நாற்றம் பெரிதாயிருக்கிறது. இவ்வளவும் போதாதற்கு அவர்கள் அடிக்கடி ஓர் அறைக்கு 12 (ஒரு டஜன்) ஆட்கள் வீதம் ஆடு மாடுபோல் அடைந்து வாழவேண்டி யிருக்கிறது. அடிக்கடி அவர்கள், தங்குவதற்கு ஈரம் கசிந்த அறைகள், நிலவரைகள், பரணிகள் ஆகியவை தரப்படுகின்றன. இவற்றில் நிலக்கசிவைத் தடுக்கவோ, கூரை ஒழுக்கைத் தடுக்கவோ, வகை கிடையாது. அவர்கள் வீடுகட்டப்படும் விதத்தில் உள்வரக் கூடாதவை வருவது மட்டுமல்ல, வெளிச் செல்ல வேண்டுபவை - நாற்றம், நச்சுக் காற்று - வெளிச் செல்லவும் முடிவதில்லை. பாலத்திலிருந்து காணப்படும் இக்காட்சி நாடெங்கும் காணப்படும் காட்சியின் ஒரு கூறுமட்டுமே. அவர்கள் வீடுகளின் கீழ்ப்புறமாக இடுங்கிய நாற்றமிக்க கரி நிறக்கால்வாயாகிய ‘இர்க்’ ஓடுகிறது - அது அடித்துக்கொண்டு வரும் குப்பையும் கூளமும், ஆழம் குறைந்த அதன் வலது கரையோரத்தில் ஒதுக்கித் தள்ளப்படுகிறது. இந்த ‘இர்க்’ கால்வாயின் இரு கரைகளும் திட்டமிட்டு கட்டப்பட்டவையல்ல. உண்மையில் அவை ‘இர்க்’ அடித்துக் கொண்டுவந்து ஒதுக்கிய குப்பை கூளங்களால் உருவாகியவையே. வீடுகள் ஆங்காங்கு கந்தையின் முடிச்சுகள்போல் எழுந்து தோன்றும். மக்கள் வாழத்தக்க இடங்களின் கீழ்த்தர எல்லைகள் என இவற்றைக் கூறலாம். அவை உள்ளும் புறமும் ஒத்த அருவருப்பு உடையவை. “தற்கால சமூகத்தின் புத்துலக அடிமைகளாகிய தொழிலாளர் வறுமை நிலையைப் பார்த்தால், அவர்கள் சேரிகள், அவர்கள் பக்கத்திலுள்ள பன்றிக்கூட்டங்களை, விட நேர்த்தியாயில்லை யென்றால், அதற்காக அவர்களை யாரும் குறை கூற முடியாது. எனது இவ்வர்ணனை மிக்க கோரமானதேயாயினும், இச்சேரியின் அழுக்கு, அழிபாடு, வாழ்க்கைக்கு மாறுபட்ட நிலைகள், தூய்மையின் வாடைக்குமிட மில்லாமை, காற்றோட்டமின்மை ஆகியவற்றின் கோரத்தை ஓரளவேனும்-மனக்கண்முன் கொண்டுவர இவ்விரிவுறைகூட ஒரு சிறிதும் போதாதது ஆகும்.” இன்றைய சமதர்மிகள் பலரும் இதே போன்ற இருண்ட சித்திரங்கள் வரைந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலைகளின் தவறாத பயன் ஒன்றே - மனிதன் உயிராற்றல் இற்று விடுவதும், தொற்று நோய்களுக்கு அவர்கள் எளிதில் இலக்காகி இரையாவதுமே. இச்சூழ்நிலைகளால் தொழிலாளர் மன உணர்ச்சி நிலைகளில் ஏற்படும் தாக்குதல் உண்மையில் மிகவும் தீமையானதேயாகும். “மயக்கந்தருங் குடி வகைகளில் மட்டுக்கு மிஞ்சி யீடுபடும் கெட்ட குணத்துக்கு அடுத்தபடியாக ஆங்கில நாட்டுத்தொழிலாளரிடையே காணப்படும் பெருங்கேடு, ஆண் பெண் பாலரின் தொடர்பில் ஏற்படும் வரம்பற்ற தன்மையாகும். ஆனால் இதுவும் தன் சுதந்திரத்தைச் சரிவரப் பயன்படுத்துவதற் கான வாய்ப்புக்களில்லாமல் பாதுகாப்பின்றி விடப்பட்ட ஒரு வகுப்பில் அந்நிலையின் இன்றியமையாப் பயனாய் ஏற்படும் காரண காரியத் தொடர்பான இயற்கை விளைவே. இன்ப வகுப்பினர் உழைக்கும் வகுப்புக்கு அனுமதிக்கும் இன்பங்கள் இந்த இரண்டு மட்டுமே - அவர்கள் மீது சுமத்தும் கடமைகளும் கடுமைகளும் மிகப்பல. எனவேதான் வாழ்க்கை இன்பத்தில் தமக்கு அனுமதிக்கப்படும் இச்சிறு பகுதியையேனும் முழு அளவில், துய்க்க எண்ணி, அவர்கள் அதில் தம் முழு ஆற்றலையும் ஈடுபடுத்தி வரம்புக்கு மிஞ்சிய இன்பத்துள், அமிழ்ந்து தம் நிலையழிகின்றனர்.” இதே ஆசிரியர் மேலும் கூறுவதாவது. “சமூக அமைப்பு முறையில் உழைப்பாளிக்குக் குடும்ப வாழ்க்கை என்பது கிட்டத்தட்ட முடியாத காரியமாய் போய்விடுகிறது. இன்ப வசதிகள் எதுவுமற்ற வீடு...............மக்கள் கூட்டமாக நெருங்கி வாழ்வதால் புழுக்கமும் நச்சுக்காற்றும் நிறைந்த அறை ஆகிய இவற்றிடையே வீட்டு வாழ்வில் இன்பம் இருக்க முடியாது. கணவன் பகல் முழுவதும் வேலை செய்கிறான். பல இடங்களில் மனைவியும் மூத்த பிள்ளைகளும், தனித்தனி வேறிடங்களில் வேலை செய்கின்றனர். அவர்கள் காலையும் மாலையும் மட்டுமே சந்திக்கின்றனர் - அப்போதும் குடித்து அயர்ச்சி தீர்க்கும் அவாக்களுக்கிடையில். இச்சூழ்நிலையில் குடும்ப வாழ்க்கை ஒரு கேடா? இதுமட்டுமா? “நாம் தொழிலாளியை அவனது தொழில் சக்கரத்துடன் சேரவைத்து இறுகக்கட்டி விடுகிறோம். அவன் தன் சூழ்நிலைகளையும் நிலைமைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான எந்தவகையான வாய்ப்புகளும் அவனுக்குக் கிட்டமுடியாமல் அவற்றிலிருந்து அவனை விலக்கி வைக்கிறோம். பண்பாடுடைய மக்களின் உயர் எண்ணங்கள், பரந்த அனுதாபங்கள் ஆகியவற்றில் பங்குகொண்டு நல்வாழ்வடைதற் கான வகைகளையும் அவனுக்கு மறுக்கிறோம். நமக்காக உழைக்கும் உழைப்பின் மூலம் அவன் வாழ்நாளைக் குறுக்குகிறோம். தொழிற்சாலைகளில் மாட்டி அவன் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறோம். அதிக உழைப்பின் மூலம் அனாவசியமான நோய்களுக்கு அவனை ஆளாக்கி அவனை வதைக்கிறோம். ‘ஆன்மாவின் வேதனைகளுள் மிகக் கொடிதாகிய வறுமையின் அச்சத்தால் அவனை ஓயாது தண்டிக்கிறோம். அவன் ஓயாது ஒழியாது உழைத்தும் அவன் மனைவி, பிள்ளைகள் அவன் முன்னாகவே நோயுற்று வாடி மாண்டு மடிகின்றனர். இத்தனையும் அவன்மீது சுமத்தியபின் அவனைக் குறைகூறுகிறோம்! “அவனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையிருப்பதில்லை என்கிறோம். உழைப்பால் அடையமுடியாத நலனைச் சூதாட்டத்தில் அவன் தேடி ஏங்கி ஏமாறுவதைக் கண்டிக்கிறோம். இயற்கை வாழ்வில் கிடையாத ஆறுதலைக் குடியால் பெற விரும்புவதைப் பழிக்கிறோம். பழி பாவம் என்ற உயர்ந்த பாறையின் சரிவில் உருண்டுகொண்டு வரும் அவன் தன் பழிகள் மூலம் வறுமையைப் பெருக்கியும், வறுமையின் மூலம் பழிகளைப் பெருக்கியும் நச்சுச் சூழலில் பட்டுழன்று இறுதியில் இவற்றின் பயனாய் சமூகத்தில் ஒரு தொற்றுநோய் என மதிக்கப்படும்படி செய்து இழிவுபடுத்துகிறோம். இவ்வளவும் நம் நன்மைக்காகச் செய்தபின், நமது ஆன்மாவின் ஆறுதலுக்காக நமக்கினிதான ஒரு வேதாந்தம் ஏற்படுத்திக் கொள்ளுகிறோம். வாழ்க்கையில் நன்மை தீமைகளின் சந்தர்ப்பங்கள் அவனுக்கு இருந்தும் அவன் தீமைகளை நாடிய குற்றத்தாலேயே அவன் துன்புறுகிறான் என்று அவன் மீது தீர்ப்பளித்துக் கொள்கிறோம்: அல்லது இரங்கு கிறோம். அவனிடையேயும், அவன் தோழரிடையேயும் சென்று இரக்கத்தால் தூண்டப்பட்டு, சிக்கனம், மிதக்குடி, நன்னெறி, நல்லறிவு ஆகியவைபற்றி உபதேசிக்கிறோம். ஆயினும் அவ்வுப தேசத்தினிடையே கூட நம் நலனுக்கும் அவன் அழிவுக்கும் வேராயிருக்கும் உடலுழைப்பு பற்றியும் வற்புறுத்தாமல் நம்மால் பேச முடிவதில்லை. அவர்கள் உழைப்பின் மூலமே ஓடவல்ல உற்பத்திச் சக்கரத்தை அவர்கள் ஓயாது ஒழியாது ஓட்டினால் தான் அவ்வுழைப்பைச் சுரண்டி நாம் வாழ முடியும் என்பதை நம் நல்லெண்ணெப் பூச்சுக்களிடையேயும் நாம் மறப்பதில்லை. ‘நம் தர்ம கைங்கரியங்கள்’ இப்பழிகளைக் குறைக்க முற்படுவது உண்மையே. ஆனால், இது பெரும் பழி செய்து அதனுடனே நுண்ணிய சிறு திருத்தங்களையும் உடன் செய்வது போன்றதுமட்டுமே. சமூகம் இன்று மனமாரத் தன் மக்களைப் பட்டினியாக்க முயலவில்லை என்பது உண்மையே. பஞ்சமும் வறுமையும் தாண்டவமாடும்போது தக்க உதவிகள் செய்ய முயற்சிகள் எடுக்கப்படவே செய்கின்றன. இதற்காகப் பெரும் பொருட் செலவில் பல அமைப்புகள் நிறுவப்பட்டு பல மக்கட் பணியாளர் தம் உழைப்பையும் ஊக்கத்தையும் அவற்றிலீடு படுத்துகின்றனர். ஆயினும், தர்ம சிந்தனையின் பலன் பல இடங்களில் துன்பத்தை இன்னும் பெருக்கவே செய்கிறது. “அது அஞ்சி அஞ்சி இரக்கும் அடிமை மனப்பான்மையையே தொழிலாளியிடம் வளர்க்கிறது. அவன் குடும்ப மதிப்பைக் குறைத்துத் தன் மதிப்பை அழித்து விடுகிறது. தர்ம சிந்தனையாகிய போர்வையின்கீழ் வஞ்சகர் அவன் குடும்ப நிலைமைகளைத் துருவியறிந்து அவனைப் பாழ்படுத்த வகை செய்துவிடுகிறது.” உழைக்கும் வகுப்பின் துயர்களைத் தணிக்கவேனும் எத்தனையோ வகை முயற்சிகள் செய்யப்படுகின்றனவே என்று முதலாளிகள் கேட்பர். தொழிலாளர் நலன்களுக்கான சட்டப் பாதுகாப்புகளை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால், இவை துன்பங்களைக் குறைக்கப் பாடுபடுகின்றனவேயன்றித் துன்பத்தின் காரணங்களையறிந்து நீங்கும் நோக்கம் உடையவை யல்ல. துன்பம் அபாயகரமான அளவுக்கு அதிகப்பட்டுவிடாமல் காக்கவே அவை பயன்படுகின்றன. முதலாளித்துவம் எவ்வளவு காலம் நீடிக்குமோ, தொழிலாளர் கூலியானது தேவை - தருவிப்பு ஒழுங்குப்படி எவ்வளவு காலம் வரை அறுதியிடப்படுமோ, அவ்வளவு நாளும் வறுமை ஒழியாது, பெருகவே செய்யும். இங்ஙனம் எந்தக்கூறினை எடுத்துக்கொண்டாலும், முதலாளித்துவம் எத்தனையோ குறைபாடுகளும், குற்றங்களும் உடையதாயிருக்கிறது. ஆகவேதான், முதலாளித்துவம் சமூக அமைப்பில் ஏற்பட்ட ஒரு நோய் என்றும் தற்கால நாகரிகத்தின் ஒரு சாபக்கேடு என்றும் உண்மையிலேயே ஒழிக்கப்பட வேண்டிய ஒரு தீமை என்றும் முடிவு செய்ய வேண்டியதா யிருக்கிறது. 8. ‘முதலாளித்துவத்தின் திண்டாட்டம்’ முதலாளித்துவம் எத்தனையோ பொல்லாத தீங்குகள் நிறைந்தது. அவற்றின் பாரம் இப்போது அதனாலும் தாங்க முடியாததாயிருக்கிறது. அச்சுமை பொறுக்கக் கூடாமல் அது உள்ளூர ஏங்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் தோல்வி பெரும்பாலும் செல்வத்தையும், வருவாயையும் பங்கீடு செய்வதில் நேரிட்ட தோல்வியாகும். செல்வத்தின் உற்பத்தி பற்றிய பிரச்சினையை அது கிட்டத்தட்ட தீர்த்து வருகிறதென்றே கூறக்கூடுமாயினும் அதிலும், முழு நிறைவடையவில்லை. எப்படியும் முற்போக்கான நாடுகளில் உற்பத்தியாற்றல் முன் என்றுமில்லாத அளவில் எவ்வளவோ பெரிய வளர்ச்சிப் பெருக்கம் அடைந்துள்ளது, என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முதலாளித்துவம் இத்துறையில் அடைந்துள்ள வெற்றியைக் குறித்து, ‘ராபர்ட் ஓவென்’, ‘கார்ல்மார்க்ஸ்’, ‘எங்கெல்ஸ்’ முதலிய சமதர்ம எழுத்தாளர் வாயாரப் பாராட்டிப் புகழ்ந்துள்ளார்கள். பெரிய தொழில் முதலாளி மன்னர்களான ‘கிரிப்ஸ்’, ‘போர்டு’ ஆகியவர்கள் தொழில் வளமாகிய குன்றில் எவ்வளவு உயர்ந்த கொடுமுடிகளை அடைந்து அவ்வுயர்வையும் பாதுகாத்து வருகின்றனர் என்பது வியந்து பாராட்டுவதற்குரிய செய்தியேயாகும். ஒரு தனிப்பட்ட அமெரிக்க கழுத்துப்பட்டை உற்பத்தித் தொழிற்சாலை மட்டும் ஆண்டுதோறும் ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் 3 பட்டைகள் வீதம் செய்து தரமுடியுமாம்! இவ்வளவு தூரம் உற்பத்தி திறம்படப் பெருக்கமடைந்துள்ளது என்பதைக் காணலாம். தற்காலத் தொழில் வசதி வினியோக நிலைமைகளின் பயனாக உற்பத்தியை எந்தச் சமயத்திலும் ஒரு விநாடி முன்னறிவிப்பின்பேரில் எத்தனை மடங்கு வேண்டு மானாலும் எல்லையற்ற அளவுக்குப் பெருக்கிவிட முடியும் என்று 1937-ல் நடைபெற்ற உலகப் பொருளியல் மாநாட்டில் சேம்பர்லேன் கூறினார். இவையனைத்தும் நல்லதே, பாராட்டுவதற்குரியதே. ஆயினும், கடைசியில் அதுவே பல கேள்விகளாக விடுகிறது. இதிலிருந்து இயற்கையான கேள்வி ஒன்று எழுகிறது. இம்மாபெரும் உற்பத்திப் பெருக்கம் மக்கள் வறுமையைப் போக்க உதவிற்றா? பாமரர்களின் துயரங்களையும் திக்கற்ற தன்மையினையும், குறைக்க உதவிற்றா? காலடியில் கிடந்து நையும் கோடிக்கணக்கான ஏழை மக்களின் மிக அவசியமான தேவைகளை ஒரு சிறிதளவாவது நிறைவேற்ற உதவிற்றா? இவற்றிற்கு மறுமொழி தெளிவான பதில் ‘இல்லை’ என்பதே. மக்கள் இன்னும் பட்டினியாகவேயிருக்கிறார்கள். குளிர் மிகுந்த ஊதற் காற்றில் ஆடவரும் பெண்டிரும் ஆடையின்றி நடுக்கத்துடன்தான் செல்கின்றனர். முதலாளித்துவ நாகரிக நாடுகளில் இளைஞர்களுக்கு இன்னும் வயிற்றுக்கு உணவு காண்பதே ஒரு தீராத பெரும் பிரச்சினையாயிருக்கிறது. உயிர் வாழ்வது எப்படி என்ற கவலையே இன்னும் உலகின் சிறந்த மூளைகளை வதைத்து வாழ்வை அரித்துத் தின்கிறது. இவற்றுக்குக் காரணம் என்ன? உணவு, உடைகளோ ஏராளமாயிருக்கின்றன. மற்ற இன்றியமையாப் பொருள்களும், இன்பப் பொருள்களுங்கூட ஏராளமாகவே இருக்கின்றன. பசியால் நொந்தவர்களும், ஆடையற்றவர்களும் நிரம்ப இருப்பதால் இவற்றுக்கான தேவைகளும் மிகுதியாகவே உள்ளன. ஆயினும், இச்சரக்குகள் விற்கப்பட முடிவதில்லை. வாங்கப்படவும் முடிவதில்லை. தேவை மிக்கவர்கள் உண்ண உணவில்லாமலும் உடுக்க உடையில் லாமலும், இருக்கின்றனர். இவை ஏன்? இவற்றை வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லாத குறைதான். அவர்களிடம் தேவையிருந்தும் அத்தேவை (பணமின்மையால்) நிறைவேறுவ தில்லை. வாங்கும் விருப்பம் அவர்களிடம் உண்டு; வாங்கும் ஆற்றல் தான் கிடையாது. இதன் காரணம் உலகெங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் மிகுதியாய் இருப்பதே. முதலாளித்துவம் உலகில் கோடிக்கணக்கான மக்களை வீடற்றவர்களாகவும், நாடோடிகளாகவும் ஆக்கியிருக்கிறது. ஏனெனில், முதலாளித்துவ இயந்திரம் ஓடுவதற்கு தொழி லில்லாமை என்பது மிக அவசியமான ஒரு கருவியாகும்! ஆனால் இதே தொழிலில்லாத நாடோடிகளுக்குப் பொருள்கள் வாங்கப் பணமிருக்க முடியாதென்பது இயற்கை. பணம் வானிலிருந்து பொழிவதில்லை, மண்ணிலிருந்து முளைப்பதில்லை. எங்காவது தொழிலில்லாதவனுக்குத் தொழில் கிடைத்தால்தான் அதனைப் பெறலாம். இங்ஙனம் தொழிலில்லாதவர்களுக்கு வாங்கும் ஆற்றலில்லாது போகிறது. தொழிலுள்ளவர்களும், இவர்களைவிட மிக நல்ல நிலையிலில்லை. அவர்கட்குத் தரப்படும் கூலி அவர்கள் இன்றியமையாத தேவைகளுக்கு மட்டும் போதியது. அல்லது அதில் சற்று மீவது. எனவே மொத்தத்தில் மக்களுக்குப் போதிய வாங்கும் ஆற்றல் இல்லை. உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நிலையில் இல்லையென்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அடுத்தபடியான நேரிய கேள்வியாவது: ‘கூட்டு உழைப் பால் வரும் உற்பத்தியில் தொழிலாளிகளுக்கு ஏன் நேர்மையான பங்கு கிடைப்பதில்லை? பொதுப்படையாக முதலாளியே இவ்வகையில் குற்றஞ் சாட்டப்படுகிறான். அவனுடைய பேரவாவும், வரம்பற்ற பணப் பைத்தியமுமே இத்தீமையின் ஆணி வேர் என்று கூறப்படுகிறது. ஆனால், இதற்கான பழி முழுதும் முதலாளி மீதே சுமத்தப்பட வேண்டுமென்பதில்லை. ஏனெனில், ஒரு முதலாளி தானாக அதிகக் கூலி கொடுத்தானானால் விரைவில் அவன் கடையைக் கட்டவேண்டியதுதான். இந்நிலை தனி மனிதருக்கு மட்டுமல்ல. நாடுகளுக்கும் தான். ஒரு நாட்டின் உற்பத்தியாளர் மற்ற நாடுகளின் உற்பத்தியாளர்களது போட்டியைச் சமாளித்தாக வேண்டும். அதுமட்டுமன்று, எந்நாட்டினரும் தங்கள் தொழிலை அழிவினின்று பாதுகாக்க வேண்டுமானால் சர்வ தேசக் கூலியளவில் நின்றுதான் கூலி தரமுடியும். ஆகவே தாழ்ந்த கூலி கொடுக்கப்படுவது முதலாளிகளின் தனிப்பட்ட குற்றத்தினா லல்ல. முதலாளித்துவ முறைதான் அவர்களைக் குறைந்த கூலி கொடுக்க வற்புறுத்துகிறது. ஆதலால்தான் நாம் முதலாளிகளைக் குறை கூறுவதைவிட, முதலாளித்துவ முறையைக் குறைகூற வேண்டியவர்களாயிருக்கிறோம். முதலாளியிடம் இருக்கக்கூடிய குற்றமெல்லாம், அவன் பேராவலுக்கும், செல்வப் பித்துக்கும் அடிமையாயிருக்கக் கூடுமென்பதும், பணத்தினால் வரும் மதிப்பு, அதிகாரம் ஆகியவற்றின் ஆட்சிக்கு அடிமைப்பட்டு அவன் அவற்றின் பிடியிலிருந்து விடுபட முடியாதவனாயிருக்கக்கூடும் என்பதுமே. ஆனால், மனித இயற்கையின் இக்குறைபாடுகளை நாம் அனுதாபத்துடன் தான் கவனிக்க முடியும். ஒருபுறம் சரக்குகள் பெரிய அளவில் உற்பத்தி செய்யப் பட்டுக் குவிப்பதும், இன்னொருபுறம் அவற்றை வாங்கப் பொதுமக்களிடம் பணமில்லாதிருப்பதும் ஆகிய இந்நிலைமை களின் பயனாக உற்பத்தியான பொருள்கள் விற்கப்படாமல் போகின்றன. பண்டக சாலைகளில் பண்டங்களின் இருப்பு மிகுதியாகிறது. வர்த்தகர்களால் அவற்றை வெளியேற்ற முடியவில்லை. நாள் செல்லச் செல்ல இப்பண்டங்கள் பண்டகசாலைகளிலேயே கிடந்து மக்கி அழிவுறுகின்றன. புழு பூச்சிகள் தின்று அழிக்கின்றன. கெட்டும் அழுகியும் பெரும் பகுதி எறியப்பட வேண்டியதாகிறது. இவ்வழிகளில் இயல்பாய் அழியாதபோது வருந்தத்தக்க, வியக்கத்தக்க, திகைக்கத்தக்க வழியில் அவற்றை மனமார முதலாளிகளே அழிக்க நேருகிறது. சரக்குகள் ஆதாயமான விலையில் முழுதும் விற்கப்பட முடியாத அளவில் உற்பத்தியாய்விட்டன என்று முதலாளிகள் கண்டால் அவர்கள் அவற்றை மனமார அழிக்க முற்படுகின்றனர். இம்முறைக்கு மாற்றான மற்ற முறையை - விலை தாழ்த்தி விற்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஏனெனில் அதனால் அவர்களுக்கு மேலும் சங்கடங்கள் உண்டாகும். விலைகள் தாழ்ந்துபோவதை அவர்கள் விரும்புவதற்கில்லை. விலைகளை உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகக் கிட்டத்தட்ட பித்துக் கொள்ளிகள் செய்வது போலவே அவர்களும் கோடிக்கணக் கான ‘டன்’ பருத்தியைச் சொக்கப்பானை கொளுத்தவும், ஆயிர, பதினாயிரக்கணக்கான ஆரஞ்சுப் பழங்களைக் கடலில் அமிழ்த்தித் தள்ளவும் செய்கின்றனர். முதலாளித்துவத்தின் அறிவுக்கு முரண்பட்ட பரிதபிக்கத் தக்க நிலை இது. பசியால் வாடுகின்ற போதிய உடையற்ற மக்கட்கூட்டம் ஒருபுறம்; அத்துன்புற்ற ஆடவர் பெண்டிர் தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கு இன்பமும் மகிழ்ச்சியும் தரவல்ல ஏராளமான பயன்படும் பொருள்களை வீணாக அழிக்கும் கொடுமை மற்றொருபுறம், என்ற இந்நிலைமையைப் பார்த்தால் தற்போதைய சமூக அமைப்பு முறையில் அடிப்படையான கோளாறு இருக்கிறதென்று மிகத் தெளிவாக விளங்குகிறது. முதலாளித்துவத்தின் முரண்பாடு இத்துடன் நிற்கவில்லை. இன்னொரு மோசமான முரண்பாடு யாதெனில், எவ்வளவோ வேலை இன்னும் செய்யப்படாமல் கிடப்பதேயாகும். மூக்கைத் துளைக்கும் நாற்றமுடைய சேரிகள், மண் குடில்கள், இடுகலான சந்துகள், இட நெருக்கமிக்க திட்டைகள், அவற்றைச் சுற்றி இடைஞ்சல் தரும் சூழ்நிலைகள், இன்றும் நம் தற்காலத் தொழில் நாகரிகத்தின் ‘இருட் கூடங்கள்’ ‘தொற்று நோயிடங்கள்’ ஆகிய இவையனைத்தும் நல் சீர்திருத்த வேலைக்கு உரியவையாகக் கிடக்கின்றன. இவ்வளவு வேலை செய்யப்படாமலிருக்கும்போது உலக மக்களில் பாதிப்பேருக்கு மேல் வேலையில்லாம லிருக்கிறார்கள்! மக்கள் ‘தொழில் வேண்டும், தொழில் வேண்டும்’ என்று கதறுகின்றனர். அவர்கள் கைகள் வேலை செய்யத் தினவெடுக்கின்றன; ஆனால் தொழில் தருவாரில்லை! முதலாளித்துவம் இப்போது போக்கிடமற்றதாகவும் நம்பிக்கையிழந்ததாகவும் இருக்கிறது. அது இயற்கையான சாவு செத்து வருகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் (ரு.ளு.ஹ) கோடிக்கணக்கான ‘டன்’ கோதுமையைச் சுட்டுக் கருக்கிற்று. இங்கிலாந்தோ ஆயிரக்கணக்கான ஆரஞ்சுப் பழங்களைக் கடலில் தள்ளி அமிழ்த்திற்று. பிரேஃஜிலில் ஆயிரக்கணக்கான டன் காப்பிக்கொட்டையைப் புகைவண்டியியக்கும் பொறிகளில் எரிபொருளாய் பயன்படுத்தப்படுகிறதாம்! இந்நாடுகள் எவையும் தம் மக்கள் மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் என்றோ, வயிறு நிறைந்தும் போதிய ஆடை அடைந்தும் வருகிறார்கள். என்றோ கூறமுடியாது. தொழிலில்லாத் திண்டாட்டம் முதலாளித்துவ நாடுகளெங்கும் அமர்க்களப் பட்டு வருகிறது. எங்கள் நாட்டில் வேலை செய்ய வேண்டுவதில்லை என்றோ எங்களிடையேயுள்ள தொழிலில்லா மக்கள் இன்பமாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் என்றோ எந்த நாடும் தைரியத்துடன் துணிந்து கூற முன் வராது. எங்கும் சூழ்நிலைகள் கேலிக்குரியதாகவும் அதேசமயம் மிக வருந்தத்தக்க தாகவும் இருக்கிறது. திருமதி பார்பாரா ஊட்டன் கூறுவதாவது: “எப்பொழுதுமே பட்டினி கிடப்பதென்பது மனத்தை உருக்கும் காட்சி. அத்துடன் (அதற்கடுத்தபடியாக) போக்கிடமற்ற வறுமையிலிருப்பதும் செய்யத் தொழிலற்றிருப்பதும் பரிதாபத்துக்குரியவை. ஆனால், ஏராளமான செல்வப் பெருக்குக்கிடையே, அதை வைத்துக்கொண்டு பட்டினி கிடப்பதென்பது ஒரு பக்கம் கேலிக்கூத்தாகவும் மற்றொரு பக்கம் கோரமிக்கதாகவும் இருக்கிறது. செல்வப் பெருக்கத்தின் காரணமாகப் பட்டினி கிடப்பதென்பது இன்னும் மிகுதியாக வெறுக்கத்தக்கது. வெளிப்படையாகவே பல வேலைகள் செய்வதற்கு இருக்கும்போது வேலையில்லாமலிருப்பது இன்னும் எள்ளி நகையாடத்தக்கது. அதுவும், அவற்றின் இயந்திர சாதனங்களும் மூலப்பொருள்களும் பயன்படுத்தப்படாமல் கிடக்கும்போது வேலையில்லாதிருப்பது கேலிக்கூத்திலும் கேலிக்கூத்து, பரிதாபத்திலும் பரிதாபம்!” இவ்வளவு ஏறுமாறான முரண்பாடு நிரம்பவுள்ள ஒரு முறையில் உண்மையில் ஏதோ ஒரு பைத்தியக்காரத்தனம் இருந்துதானே ஆகவேண்டும்? இம்முறையின் பயனின்மையும் தோல்வியும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் எண்பிக்கப்பட்ட பின்னும் அம்முறையின் கீழ் நாம் வாழ ஒருப்பட்டால் அத்தகைய மடமையையும் அறியாமையையும் எண்ணி வருங்காலத்திலுள்ள நம் பின்னோர்கள் நம்மை நகையாடமாட்டார்களா? ஒட்டிய வயிறுகளுடன் மட்டற்ற சரக்கு உற்பத்தியையும் வேலை கிடைக்காது சோம்பியிருக்கும் ஆட்களுடனே செய்ய வேண்டிய பெரிய வேலைகளையும் கொண்டிருக்கும். இத்தகைய அதிருப்தி நிறைந்த முறையை ஒழித்துக்கட்டும் நாள் இன்னுமா வரவில்லை? இக்கேள்விகளுக்கு ஒரே ஒரு விடைதான் இருக்கமுடியும். அது ‘ஆம், வந்து விட்டது’ என்பதே. முதலாளித்துவம் தன் வேலையைச் செய்து முடித்துவிட்டது. இனி அதற்கு வேலை யில்லை. இனி நமது நன்மை அப்பழைய நண்பனிடம் ‘போதும் உம் தொடர்பு; போய்வருக!’ என்று வழியனுப்புவதே! 9. பின்னுரை ஒரு முறையின் குறைபாடுகளை எடுத்துரைப்பதே அதனைப் பழிக்கப் போதுமானது. ஆனால், அம்முறையை வேரோடு இலை தழை கொப்பு ஒன்றும் விடாமல் அகற்றி விடவேண்டும் என்ற உறுதியுடையவர்களின் வேலை அத்துடன் நின்றுவிடாது. அவர்கள் அகற்றி ஒழிக்க எண்ணும் முறையைவிட நல்ல திட்டமொன்றையும் உருவாக்க வேண்டும். பல மாற்று முறைகள் தரப்பட்டுள்ளன. ஆனால், கும்பல் கும்பலாகத் தரப்படும் மாற்று முறைகளிடையே ஒருவர் முடிவான ஒரு தீர்மானத்திற்கு வருவது அரிது. தரப்பட்ட மாற்று முறைகளான சமதர்மம், பொது உடைமை, மாற்றுடைமை (ளுலனேiஉயடளைஅ) சங்க சமதர்மம் (ழுரடைன ளுடிஉயைடளைஅ) முதலிய பலவற்றினிடையேயும் புகுந்து சுற்றித் தேர்வு செய்ய எவ்வளவோ காலமும் பொறுமையும் அழ்ந்த ஆராய்ச்சியும் சமநிலை மனமும் வேண்டும். இப்பகுதி ஆராய்ச்சி இச்சிறு நூலிலடங்குவதன்றாதலால் அதனை வேறு தனி நூலுக்குரியதாகவிட்டு வைப்போம். முற்றிலும் புறக்கணித்துவிட முடியாத இன்னொரு கேள்வி இவ்விடத்தில் எழக்கூடும். முதலாளித்துவ மதத்தின் புரோகித ஆட்சியாளர் இக்குறைபாடுகளை உணர்ந்துள்ளனரா? உள்ளனரானால் அவற்றை அகற்ற அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகள் எவை? அவற்றின் பலன் யாது? இதற்கு விடையாகக் கூறப்படுவது யாதெனில் முதலாளித்துவ இயந்திரத்தின் உயிர்நிலையே திடுமென மூச்சடைத்து நின்றுவிட்டதாலும்: மிகக் கவலைக் கிடமான நெருக்கடிகள் ஏற்பட்டு நீண்டகால விளைவுகள் அதன் பயனால் ஏற்பட்டுள்ளதனாலும்; கடைசியாக சமதர்மிகள் அதனை உரத்த குரலுடன் எதிர்த்து நின்று முழுமையும் கண்டித்துவிட்ட தனாலும், முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள்கூட அம்முறை யிலுள்ள பெருங்குறைபாடுகளை நன்கு கண்டுகொண்டனர். கட்டுப்பாடு, திட்டமமைத்தல் ஆகிய முறைகளின் மூலம் அக்குறைபாடுகளை அகற்றவும் அவர்கள் பெருமுயற்சி எடுத்துக்கொண்டனர். ஆனால், இம்முயற்சிகளனைத்தும் ஆவியாய் புகைந்துபோயின. இதுவகையில் ஜி.டி.எச். கோலினுடைய ‘பொருளியல் திட்டம் பற்றிய ஆராய்ச்சிகள்’ பொருளியல் திட்டம்பற்றிய ஆராய்ச்சிகள்’ என்ற நூலின் முடிவுரையிலிருந்து இவ்விடத்துக் கியைந்த சில உரைகளை அப்படியே இங்கே எடுத்துக் காட்டுவது பொருத்தமாயிருக்கும். அவர் கூறுவதாவது:- “ஆழ்ந்து ஆராய்ந்தால் நம் முக்கிய படிப்பினையாவது முதலாளித்துவம் இயற்கையிலேயே திட்டமிடும் ஆற்றல் அற்றது. நேர்மாறாக சமதர்மமோ திட்டமிட முடிவது மட்டுமல்ல, திட்டமிட்டே தீர வேண்டியது. முதலாளித்துவத்தின்படி உற்பத்தியை ஒழுங்கமைப்பவர்களின் குறிக்கோள் மக்கள் தேவையை நிறைவேற்றுவதன்று; ஆதாயம் அடைவதேயாகும். ஆகவே கைவசமுள்ள சாதனங்களைப் பயன்படுத்தும் வகையில் முதலாளிகள் கொஞ்ச தூரத்துக்குமேல் செல்லமாட்டார்கள். மேலும், சாதனங்களை ஈடுபடுத்துவதால் ஆதாயம் குறையு மென்று கண்டால், அவர்கள் அதை நிறுத்திக் கொள்வார்கள். ஆனால், சமதர்மிகள் கிடைக்கத்தக்க உழைப்பாளிகள், உற்பத்திக் கருவிகள் முதலிய சாதனங்கள் முழுவதையும் மனிதர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள். தற்போது தேவைகளை நிறைவேற்றுவதற்கு நம்மிடமுள்ள சாதனங்களைப் பார்க்கிலும் தேவை எவ்வளவோ எல்லையற்றுப் பெருக்கம் அடையத்தக்கவை. ஆதலால், பயன்படுத்தப்படத்தக்க எத்தகைய சாதனங்களையும் ஈடுபடுத்தாமலிருப்பதென்பது பொருளியல் வளர்ச்சிக்கு மாறானதாகும். இனி, ஓய்வு அல்லது இருக்கின்ற மூலப் பொருள்களே தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானது என்று ஏற்பட்டாலன்றி உற்பத்தி வளர்ச்சிக்கு ஓர் எல்லை காண முடியாது. சமதர்ம முறையில் தொழிலில்லாமை என்பதே கிடையாது என்பது மட்டுமன்று - தொழிலில்லாமை என்பதே என்றுமிருக்க முடியாது என்று கூடக் கூறலாம்.” ஜி.டி.எச். கோல் தரும் இறுதிப் படிப்பினையாவது: “அறிஞராக்கப்பட்டவர்களை இருபெரும் போர்ப்படை வீடுகளாகப் பிரிக்க நாம் விரும்பினாலல்லாமல் நாம் பொருட்பெருக்கத்திற்குத் திட்டமிடாமலிருக்க முடியாது. - இத்திட்டத்திற்கான முயற்சிகள் முதலாளித்துவ முறையை அழிக்காமல் அதை அப்படியே வைத்துக் கொண்டு நம்மால் செய்யப்படக்கூடியவையும் அல்ல.” அடிக்குறிப்புகள் 1. G.D. H. Cole: What Marx Really Meant P.47. 2. Bernard Shaw: The Inteligent Woman’s Guide P. 108 (Pelican) 3. Bernard Shaw: The Inteligent Woman’s Guide P. 103 (Pelican)4. உலக வரலாற்றை மேநாட்டார் நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். 1. வரலாற்றுக்கு முந்திய காலம், கி.மு. 1500 வரை. 2. பண்டைக்காலம் கி.மு. 1500 முதல் கி.பி. 1500 வரை. 3. இடைக்காலம் அல்லது இருண்ட காலம் கி.பி. 500 முதல் கி.பி. 1500 வரை. 4. தற்காலம் அல்லது நாகரிக காலம் கி.பி. 1500 முதல். இவற்றுள் பண்டைக்காலம் கிரேக்கர், ரோமர் தமிழர் ஆகியவர் நாகரிக ஒளி பரவியிருந்தது. தற்காலம் மேனாட்டு நாகரிக ஒளி பரவியிருக்கிறது. இடைக்காலம் ஐரோப்பாவில் நாகரிகமில்லாத காலம். இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் சமய புராண ஆதிக்கமும் பகுத்தறிவு விளக்கமின்மையும் நிறைந்திருந்த இக்காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் இருண்டகாலம் என்கின்றனர். வரலாற்றுக்கு முந்திய காலம் உலகில் நாகரிகமே ஏற்படாத காலம். ஆயினும் எகிப்து, திராவிட இந்தியா, பாபிலோனியா ஆகிய இடங்களில் பரந்த, மறைந்த ஒரு நாகரிக நிலையிருந்தது. 5. John Strachey: The coming Struggle for Power, Ch. 2.6. குநரனயடளைஅ: நில ஆதிக்க ஆட்சிமுறை. இது ஐரோப்பாவில் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி 1200 வரை தழைத்துப் பின் அழிந்த முறையாம். இதன்படி அரசனே எல்லா நிலங்கட்கும் உரிமையாளன். அவனுக்குக் கீழ் பல படியான பெருமக்கள் (டீஎநச டடிசனள & டடிசனள) ஒருவர் கீழ் ஒருவராக நிலத்தைப் பிரித்துப் பெற்றுப் பின் குடியானவர்களிடம் அதைப் பயிரிட விட்டனர். பெருமக்கள் ஜமீன்தார்கள் போல் குடியானவர்களை அடக்கி ஆண்டு போர்க்காலத்தில் மட்டும் தம் படைகளுடன் அரசனுக்கு உதவினர். பெருமக்களே ஆதிக்கம் வகித்த இம்முறையை நில ஆதிக்கமுறை என்கிறோம். நுnஉடடிளரசந ஆடிஎநஅநவே: மனைவேலி இயக்கம். இது இங்கிலாந்தில் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டது. 1348-ல் நிகழ்ந்த பெரிய பிளேக் நோயினால் உழவுத் தொழிலாளர் குறைந்து கூலி மிகுந்ததனால் நில முதலாளிகள் நிலத்தை வேலியிட்டு ஆடு மாடுகளின் பண்ணைகளாக்கிக் குடியானவர்களைத் தவிக்க விட்டனர். உழவு நாடாயிருந்த இங்கிலாந்து தொழில், வாணிக நாடாகத் தொடங்கியது இதனாலேயே. 7. W.H. Mallock: Acritical Excamination of Socialism, PP-2-3. 8. Cole: op. cit. P.107. 9. Jayaprakash: Why Socialism? P. 15. 10. Cole: Op: cit. PP. 51-22. 9. Spargo & Arner: Elements of Socialism, Ch. III. 10. Agger: Organized Banking, P.95, 11. Cole: What is Ahead of Us, ch.I 12. Mellor: Socialism, in Ercyclopedia of Religion and Ethics, Vol.XI. 13. Skelton: Socialism P. 16 14. Spargo and Arner: Elements of Socialism P.227. 15. Bernard Shaw: The Inteligent Woman’s Guide (Pelican) PP. 138-139. 16. Adam Smith: Wealth of Nations, bk. IV. ch. IX. 17. Stafford Cripps: Why this Socialism? P. 56. 18. Carlyle: Past and Present, P.122. 19. Charlotte P. Stetson, Women and Econamics. 20. See Spargo and Arner, Op. cit. PP.20-21. 21. Veblen:- Theroy of Business Enterprise, PP. 158-159. 22. Keir Hardie:- From Serfdom of Socialism, Quoted by Skelton in Socialism. 23. Adam Smith: Wealth of Nations bk V. Ch. I. 24. Ghent: Mass and class. 25. Spargo and Arer: Op. cit. P.14. 26. e.g. Simons: Packingtown. 27. Engels: Conditions of the Working class, P. 128. 28. G.D.H. Cole: Studies in Economic Planning. PP.262, 356. இருதுளிக் கண்ணீர் முதற் பதிப்பு - 1960 இந்நூல் 2004இல் வசந்தா பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. கடல் மறவர் பனிமீது படிந்த பாவையின் பரிசு பால் குழம்பில் குளித்ததுபோல, நிலவுலகெங்கும் வெண்பனியாடை போர்த்திருந்தது. பழய ஆண்டு துயின்றது. புதிய ஆண்டு இன்னும் பிறக்கவில்லை. அன்று கிறிஸ்துமஸ் விழா நாள்! கடிகாரத்தின்படி காலை ஏறிவிட்டது. ஆனால், குளிர் காலமாதலால் கதிரவனொளி இன்னும் பரவவில்லை. வெண்கரடி போலவும் வெள்ளானை போலவும் வெள்ளையான பிறவிலங்கு வடிவங்கள் போலவும் காட்சியளித்த கட்டடங்க ளிடையே தெருக்கள் ஆளற்ற பனிக்காட்டுப் பாதை போல வெறிச்சென்றிருந்தன. யாரும் நடமாடவில்லை. முன் ஒன்றும் பின் ஒன்றுமாக இரண்டு உருவங்கள் மட்டும் நகர்ந்து சென்று கொண்டிருந்தன. ஒன்றன் நடை பனியிடையே பனியாக மிதந்து சென்றது. அது ஒரு பெண். பின்னால் எட்டி நடந்தது ஒரு ஆண் உருவம். இருவரும் தொடர்பற்ற யாரோ இருவர் போலத்தான் சென்றனர். ஆனால், பெண் அடிக்கடி குனிந்து நிலத்தில் ஏதோ கையால் கீறிக்கொண்டே சென்றாள். ஆடவன் அதில் கருத்துச் செலுத்தவில்லை. அவள் யார் என்றும் கவனிக்கவில்லை. தற்செயலாக அவன் பார்வை நிலத்தில் ஒருதடவை படிந்தது. அவன் முகம் வியப்புக் குறி காட்டிற்று. கில்லியட்! ஆம். ‘கி-ல்-லி-ய-ட்!’ அது தன் பெயர்தான். அப்பெண் யார்? அவள் ஏன் தன் பெயரை எழுதவேண்டும்? அதுவும் பனியில்! அவன் விரைந்து முன் சென்றான், அவள் யாரென்று பார்க்க! அவள் சட்டென ஓடி எங்கோ மறைந்தாள். அவள் டெரூசெட் தான் என்று அவன் ஊகித்தான். அவன் இளைஞன்தான். ஆனால் பெண்கள் பக்கம் அவன் உள்ளம் என்றும் சென்றதில்லை. அவன் அறிந்த பெண்ணினத்தவள் அவன் அன்னை ஒருத்திதான். அவளைக் கூட அவன் மறந்து நெடுநாளாயிற்று. அவன் தனிவாழ்வு வாழ்ந்தான். ஆடவர்கூட அவன் பக்கம் நாடியதில்லை. ஆடவர், பெண்டிர் எவரையும் அவனும் இதுவரை சட்டை செய்ததில்லை. அவன் - நிலத்தில் உருண்டு புரண்ட ஒரு நல்விலங்கு. அவள் - வானத்தில் பறந்து திரிந்த ஓர் இசைப்பறவை. அவன் எல்லாருக்கும் பயன்படத்தக்க, ஆனால் எவர் உள்ளத்தையும் ஈர்க்காத எஃகு உருளை. அவளோ - கண்ணைக் கவரும் பத்தரை மாற்றுப் பசும்பொன். அவள் எங்கே ... ? அவன் எங்கே? ஆனால், அவளை அவன் அடிக்கடி கண்டிருக்கிறான். அவளைக் காண்பதிலேயே - தொலைவிலிருந்து கவனிப்ப திலேயே - அவன் இதுவரை உள்ளத்தில் அமைதியான மகிழ்ச்சி கொண்டிருந்தான். அவள் தன்னைப் பொருட்படுத்தினாள் - தன் பெயர் அறிந்திருக்கிறாள் - பெண்மையின் இளமைப் பருவத்துக்குரிய குறும்பிடையே தன் உள்ளக் குறிப்பை வெளி யிட்டுக் காட்டியிருக்கிறாள்! இவ்வெண்ணங்கள் வழக்கமான அவன் வரண்ட உள்ளத்தைக் கனிவுபடுத்தின. அவன் உள்ளத்தில் அவள் செயல் அவனையறியாமல் ஆழ்ந்து பதிந்தது. 2. கில்லியட் கில்லியட், ஸென்ட் ஸாம்ப்ஸன் ஊர் வட்டத்திலேயே வாழ்ந்தான். கெர்ஸ்னித் தீவு முழுவதும், ஆங்கிலக் கடற்கால் வாயிலுள்ள கடற் கால்வாய்த் தீவுகளெங்குமே, அவன் நன்றாக அலைந்து திரிந்து பழகியிருந்தான். ஆனால், கடலும் பாறையும் அவனுடன் பழகினவே தவிர, மக்கள் நன்கு பழகவில்லை. அவன் இருந்த வீடும் அவன் குடும்ப மரபும் இதற்குப் பெரிதும் காரணமாயிருந்தன. அவன் சிறு பிள்ளையாயிருக்கும்போது அவன் தாய் அவ்வூருக்கு வந்தாள். அவன் தந்தையார் என்பது அவனுக்குத் தெரியாது. தாயிடம் கில்லியட் நிறையப் பணம் இருந்தது. சிறு நிலப்பண்ணைகள் இரண்டை அவள் வாங்கினாள். அவள் கைத்திறத்தால் அவை வளமாயின. தவிர, ஸென்ட் ஸாம்ப்ஸன் துறைமுகத்தை அடுத்திருந்த ‘பூதேலா ரூ’ என்ற வீட்டையும் அவள் வாங்கினாள். அது கிட்டத்தட்ட நூறு நூற்றிருபது வெள்ளிக்கே அவளுக்குக் கிடைத்தது. ஏனென்றால் அது பேய் குடியிருந்த வீடு என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அத்தகைய வீட்டில் அவள் பிள்ளையுடன் அச்சமின்றிக் குடியிருந்தாள். பேய் அவளை ஒன்றும் செய்யவில்லை. அதனால் அவளும் ஒரு பேயாயிருக்க வேண்டுமென்று கெர்ஸ்னி மக்கள் தீர்மானித்தனர்! தாய் இறந்தபின் பிள்ளை தாய்மரபு கெடாமல் தனி வாழ்க்கை வாழ்ந்தது. பேயுறவு அவனையும் விடவில்லை. ஒரே ஒருதடவை சமயகுரு அவன் வீட்டில் சென்றிருந்தார். அவன் அறையில் வால்ட்டேர் எழுதிய நூல் ஒன்று இருந்தது. பேய்க்கும் கத்தோலிக் சமயத்துக்கும் தொடர்பு உண்டு என்று கடற்கால் தீவுகளிலுள்ள மக்கள் கருதியிருந்தனர். ஆனால், வால்ட்டேரோ கத்தோலிக்கரால் கூடப் பேயுடன் நேரடி உறவுடையவர் என்று கருதப்பட்டவர். அத்துடன் கடற்பாசி வகைகள் பற்றிய ஒரு நூலும், மருந்துச் சரக்குகள், கனிப்பொருள்கள் அடங்கிய கலங்களும் அவனிடம் இருந்தன. கந்தகப் புகையும், பல வகை ஆவிகளும் அவன் அறையில் அடிக்கடி நடமாடின. பேயின் தொடர்புடைய சூனியக்காரரின் சின்னங்களாக இவை கருதப்பட்டன. சூனியம் வைப்பதும், அதை அகற்றுவதும் பேயின் உதவிபெற்ற செயல்கள் என்று நாட்டுப்புற மக்கள் எண்ணினர். முன்னது நம்பிக்கை அடிப்படையானது! பின்னது சோதித்துப் பார்க்கத்தக்கது. கில்லியட்டின் சூனியத்தாலேயே தன் வீட்டுக் கிணற்றிலுள்ள தண்ணீர் கெட்டு வருவதாக ஒரு பெண் கருதினாள். அவனை இட்டுச் சென்று அவள் அதைக் காட்டினாள். அவன் சில கேள்விகள் கேட்டான். “கிணற்றருகே சாக்கடை செல்கிறதா?” “ஆம்” “அதை வேறுபுறம் வெட்டிவிட்டாலென்ன?” அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. “சாக்கடையின் போக்குக்கும் கிணற்றுத் தண்ணீருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? தொடர்பு இருந்தாலும் ஒரு பேயின் ஆற்றல் உதவி செய்தாலல்லாமல் அதை எப்படி காண முடியும்” என்று அவள் தனக்குள் கூறிக்கொண்டாள். கில்லியட் மறுமொழி கூறவில்லை. தானே சென்று அதை வெட்டித் திருப்பினான். தண்ணீர் இரண்டு நாளில் செம்மைப்பட்டது. “மாயத்தால் தானே அவன் கிணற்று நீரை மாற்றினான்; மாயத்தாலேயே அவன் அதைக் கெடுத்திருக்க வேண்டும்” என்பது இதன் மூலம் அவளுக்குத் தெளிவாயிற்று. பெண்களை விரும்பாதிருப்பதும், திருமணம் செய்யா திருப்பதும் பேய்ச் சூனியக்காரர்களுக்குரிய இலக்கணங்களுள் சில. இதையும் ஒரு பெண் தேர்ந்து பார்த்துவிட்டாள். “அயலில் குடியிருக்கும் அன்பரே! நீர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்றைக்குத்தான் ஒரு மனைவியைக் கட்டிக் கொள்ளப் போகிறீர்?” என்று அவள் கடிதம் எழுதினாள். இதற்கு அவன் “கடற்கரைக் குத்துக்கல் என்றைக்குக் கணவனை அடையும், அன்றே நானும் ஒரு மனைவியை மணப்பது உறுதி” என்று மறுமொழி எழுதியனுப்பினான். கடற்கரைக் குத்துக்கல் ஒரு பெண் பேய் வாழும் இடம். அதனருகே பல விலங்குகளின் ஒலிகள் கேட்கும்: விலங்குகள் அருகில் இருக்கமாட்டா. கில்லியட்டிடம் எல்லாருக்கும் அச்சம். ஆனால், அதேசமயம் அவன் தொட்டால், பலநோய்கள் நீங்கும் என்று அவர்கள் நம்பினர். அவன் தொட மறுத்தான். மருந்து கொடுத்தே நோய்களைக் குணப்படுத்தினான். இதனால் அவனை ஆட்கொண்ட பேய் நல்லபேயல்ல என்று மக்கள் உணர்ந்து கொண்டனர்! அவன் குடிப்பதில்லை; புகைப்பதில்லை; புகையிலை கூடத் தொடுவதில்லை. இதுவும் சூனியத்தின் அடையாளமாகவே கொள்ளப்பட்டது. ஏனென்றால் அவன் கோயிலுக்குப் போவதில்லை! பறவைகளிடமும் விலங்குகளிடமும் அவன் மிகவும் அன்பாயிருந்தான். ஆனால், இதுவும் பேய்களின் கட்டளைப் படிதான் இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. ஏனென்றால் அவன் மீன்களிடம் கருணை காட்டுவதில்லை. மீன் பிடிப்பதை ஒரு பொழுது போக்காகக் கொண்டிருந்தான். 3. டெரூசெட் டெரூசெட், லெத்தியரி என்ற கப்பலோட்டியின் ஒரே வளர்ப்புப் புதல்வி. அவளுக்குத் தாயும் தந்தையும் இளமை யிலேயே இறந்துவிட்டார்கள். சிற்றப்பனான லெத்தியரி அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து வந்தான். லெத்தியரி பத்து வயதிலிருந்தே கப்பலில் குற்றேவற் பையன் நிலையிலிருந்து படிப்படியாக எல்லாப் பணித்தரங்களிலும் வேலை பார்த்து உயர்வடைந்து, இறுதியில் மீகாமனானவன். ஐம்பதாண்டு கடும்பணியாற்றி வெற்றி பெற்ற பின், அவன் ஸெண்ட் ஸாம்ப்ஸனில் பிராவே என்ற பெயருடைய தன் இல்லத்தில் வந்து தங்கினான். கில்லியட்டின் இல்லமான பூ தேலா ரூவும் லெத்தியரியின் இல்லமான பிராவேயும் கடலில் உந்தி நிற்கும் ஒரு நிலமூக்கின் இருகரையிலும் ஒன்றை அடுத்து இருந்தன. லெத்தியரி என்றும் மணம் செய்யாமலே இருந்து விட்டான். அத்துடன் அறுபது வயதில்கூட அவன் இளமையின் முறுக்கும் சுறுசுறுப்பும் கனவார்வங்களும் மாறாமலே இருந்தான். கப்பலோட்டியாயிருக்கும்போது அவன் வாழ்ந்த எளிய உழைப்பு வாழ்க்கையை அவன் விடவில்லை. ஆனால் இப்போது அவன் பேரளவு பணம் சேர்த்து வைத்திருந்ததனால், அவ்வுழைப்பை வேறு வகையில் திருப்பினான். பணத்தை முதலிட்டுக் கப்பற் கழகம் நடத்துவதில் அவன் கருத்துச் செலுத்தத் திட்டமிட் டிருந்தான். கிலியட்டைப் போலவே லெத்தியரியும் சற்று பண்படாத உள்ளமுடையவன். அன்பும் தன் மறுப்பும் பண்பட்ட உள்ளங்களைவிட இருவரிடமும் மிகுதி. கெர்ஸ்னித் தீவைச் சுற்றிலும் ஸென்ட் ஸாம்ப்ஸன், ஸென்ட் பீட்டர்ஸ் போன்ற பல துறைமுகங்கள் இருந்தன. அதுபோலவே கப்பல்களுக்குக் காலனான கொடும் பாறைகளும் பல இருந்தன. நாள் தவறினாலும் வாரந்தவறாமல் அக்கடற்கரையருகே படகுகளும் கப்பல்களும், கடற்பாறைகளுக்கும் புயலுக்கும் இரையாகத் தவறுவதில்லை. இவ் அழிவுகளையெல்லாம் கவனித்து அப்பக்கங்களில் கடலோடிகளுக்குத் தோன்றாத் துணையாக லெத்தியரி இருந்து வந்தான். அவனால் உயிர் அளிக்கப்பெற்றுக் காப்பாற்றப்பட்டவர் பலர். லெத்தியரியின் ஆதரவுபெற்ற இளைஞருள் ராந்தேன் ஒருவன். பாரிஸிலிருந்த அவன் தாயும் பல தீய தொழில்களில் ஈடுபட்டு அதன் காரணமாக மீளாக் கடுஞ் சிறைப்பட்டனர். சிறுவன் ராந்தேன் பாரிஸ் தெருக்களில் அலைந்து கொண்டிருந் தான். லெத்தியரியின் கடற்பயணங்களின்போது, அவன் அச்சிறுவனைக் கண்டு இரங்கி, அவனைத் தன்னுடன் கொண்டு வந்தான். அவன் உடல் வலிமையும் அறிவுக்கூர்மையும் உடையவன். அவனிடம் லெத்தியரியின் பாசம் வளர்ந்தது. அவனை லெத்தியரி தன் கப்பற்றொழிலில் அமர்த்திப் படிப்படியாக உயர்த்திப் பங்காளி ஆக்கியிருந்தான். ராந்தேனும் நாள்தோறும் உழைத்து ஈட்டி அதில் சிறிது பணம் போட்டிருந்தான். ஆனால், திடுமென ஒருநாள் ராந்தேனைக் காணவில்லை. லெத்தியரியின் பணத்திலும் நாற்பதினாயிரம் வெள்ளி அவனுடன் மறைந்தன. லெத்தியரியின் செல்வ நிலைக்கு இது ஒரு பேரிடியாயிற்று. தளரா உள்ளமுடைய லெத்தியரி இதிலிருந்து தன் மதிப்பை மீட்கப் புதிய திட்டங்களிட்டான். அது பாய்க்கப்பல்களின் காலம். நீராவிப் படகுகள் அப்போதுதான் உலகில் தோன்றியிருந்தன. கப்பல், படகுத் தொழிலில் ஈடுபட்டவர் யாவரும் புதிய கப்பலை எதிர்த்தனர். சமயவாதிகள் தீயும் நீரும் கலந்த இந்நீராவிச் சக்தியை கடவுளுக்குப் பகைவனான பேய்மகன் ஆற்றல் என்று தூற்றினர். அதுமட்டுமன்று. அந்நாளைய அறிவியற் கழகங்கள் கூட இப் புது முறையைக் கண்டித்தன. கெர்ஸ்னியிலோ பழமையின் பிடி மக்களை இன்னும் மும்மடங்காகப் பிணித்திருந்தது. ஆயினும் லெத்தியரி துணிந்து புதிய நீராவி இயந்திரம் ஒன்று தருவித்தான். அதைச் செய்ய லெத்தியரியே திட்டம் தந்தான். ஃவிரஞ்சுப் பொறியாளன் ஒருவன் அதைச் செய்து கொடுத்தான். லெத்தி யரியே நேரில் இருந்து கப்பல் கட்டினான். பழமைப் புயலையும் புதிய கடற்புயலையும் ஒருங்கே சட்டை பண்ணாது எதிர்த்த வாரந்தோறும் ஸெண்ட் ஸாம்ப்ஸனிலிருந்து ஃவிரஞ்சுக் கடற்கரையிலுள்ள ஸெண்ட் மலோத் துறைக்கு நீராவிக்கப்பல் வாணிகச் சரக்குகளும் ஆட்களும் ஏற்றிச் சென்றது. விரைவில் கப்பல் கழகம் வளர்ந்தது. எதிர்ப்புகளும் பழைய கப்பல் தொழில்களின் எதிர்ப்பளவில் குறைந்தன. ராந்தேன் கொண்டு சென்ற பணம், புதிய முயற்சிக்கு வாங்கிய கடன் ஆகிய இரண்டுமே ஆதாயங்களால் அடை பட்டன. ஆண்டுக்கு ஆயிரம் பொன்னுக்குக் குறையாமல் லெத்தியரிக்குக் கிட்டிற்று. அவன் பெயரும் வெறும் லெத்தியரி என்ற நிலையிலிருந்து திரு. லெத்தியரி ஆக உயர்ந்தது. ‘உயர் திரு’ ஆகவும் தொடங்கியது. திருத்தகு, பெருமகனார், கோமகனார் ஆகிய படிகளும் வருங்காலத்தின் கருவில் காத்திருந்தன என்று பலர் கூறத்தொடங்கினர். புதிய கப்பலுக்கும் தன் வளர்ப்புப் புதல்விக்கும் லெத்தியரி ஒரே தெய்வ குரவரின் இரு பெயர்களை வைத்தான். டெரூசெட் என்பதன் மறுபெயரான டியூராண்டு கப்பலின் பெயராயிற்று. டெரூசெட் தனக்கு ஒரு புதல்வியென்று அவன் கருதினான். அவன் உயிர்கப்பல்மகவின் மீதும் பெண்மகவின் மீதும் ஒரு படியாகவே படர்ந்திருந்தது. கப்பல் மகவுக்குக் கணவனாகத் திரு. குளூபின் அமர்த்தப்பட்டான். ராந்தேன் தெறுதலைத் தனத்தை முன்கூட்டி அறிந்து அவன் எச்சரித்திருந்தான். ராந்தேனைப் போலவே அவன் உடல் வலிமையும் திறமும் உடைய கப்பலோட்டி, அத்துடன் தன் குடும்ப மதிப்பிலும் நேர்மைப் புகழிலும் அவன் ஓயாத அக்கரை செலுத்தியிருந்தான். எனவே லெத்தியரி தன் கப்பலுக்குரிய பொறுப்பை அவனிடம் விடத் தயங்கவில்லை. ஆயினும் குளுபினை விடத் தகுதி வாய்ந்த ஒரு ஆளை அவன் தேடாமலிருக்க முடியவில்லை. குளூபின் தன் கப்பல்மகவுக்கேற்ற மருமகன். ஆனால், தன் பெண்மகவுக்கேற்ற மருமகனல்ல. இரு மகவுகளையும் ஆண்டு இயக்கவல்ல ஓர் இளைஞனை அவன் உள்ளம் நாடிற்று. லெத்தியரியின் எளிய முரட்டு வாழ்க்கைக் கோட் பாட்டிற்கு ஒரே ஒரு விலக்கு இருந்தது. பெண்கள் எப்போதும் மென்மையான, அழகிய, தூய, வெண்ணிறக் கரங்கள் உடைய வராயிருக்க வேண்டுமென்று அவன் கருதினான். அத்தகைய கையைத் தேடியே அவன் இளமைக்காலக் காதல்கள் கருகின. இரண்டே இரண்டு பெண்கள் தான் அவன் குறிக்கோளுக்குரிய கைகளை உடையவராயிருந்தனர். ஆனால் ஒருத்தி குணங்கெட்டவள். மற்றொருத்தி குடிகெட்டவள். இருவரையும் அவன் வெறுத்து ஒதுக்கினான். காதலின் தோல்வி, புதல்வி வளர்ப்பில் அவன் ஊக்கத்தைப் பெருக்கிற்று. அவள் கையழகே அவனை அவளிடம் பாசம் கொள்ளச் செய்தது. அதை எவ்வகையிலும் பாதுகாக்க அவன் முனைந்தான். தோட்ட வேலையின் பயிற்சி தவிர, டெரூசெட்டை அவன் எதுவும் செய்ய விடுவதில்லை. கடலுடன் போராடும் விலங்காக அவன் வாழ்ந்தான். வானிற் பறக்கும் பறவையாக அவளை வளர்த்தான். வகைவகையான ஆடை அணிகள், கவலையற்ற இன்பக் கேளிக்கைகள், ஆடல் பாடல்கள் ஆகியவற்றில் குறைவற்று, டெரூசெட் மனித உருவம் படைத்த ஓர் இன்பப் பறவையாகவே வளர்ந்தாள். 4. கடலோட்டப் பந்தயம் கில்லியட்டிடம் கெர்ஸ்னி மக்கள் கொண்ட வெறுப்பு அண்மையில் ஒரு சிறிது மாறியிருந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் கடலோட்டப் பந்தயத்துக்கு இவ்வாண்டு ஒரு புது முறுக்கு ஏற்பட்டது. பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு டச்சுப் பாய்க்கப்பலே பரிசாகக் குறிக்கப்பட்டிருந்தது. பந்தயத்துக்கான படகு அடித்தளமில்லாத தட்டைப் படகு. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் சென்று படகு நிறையக் கல் ஏற்றிக்கொண்டு மீள வேண்டும். குறைந்த நேரத்திற்குள் மீள்பவனே வெற்றி பெற்றவனாவான். மிகப் பலர் போகும் பயணத்திலேயே சோர்ந்துவிட்டனர். மீதிப்பேரும் திரும்பு பயணத்துக்கு உடைந்தனர். கில்லியட் இப்படகின் பண்பறிந்து பாய்களின் தொங்கல்களைத் தளர்த்தியாகப் பிடித்துக் கொண்டான். இதனால் காற்றின் அளவுக்குத் தக்கபடி பாய்கள் விரிந்து சுருங்கின. போகும் பயணமும், வரும் பயணமும் வெற்றிகரமாக முடிந்தன. திரும்பு பயணத்தில் பந்தயத்துக்குக் குறிக்கப்பட்ட கற்களை மட்டுமன்றி, அவற்றிடையே கிடந்த ஒரு சிறிய பீரங்கியையும் விழாக்காலக் கேளிக்கைப் பொருளாக அவன் கொண்டு வந்தான்! பந்தயத்தில் குறிக்கப்பட்ட பாய்க்கப்பல் அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. அது உறுதிவாய்ந்த பழைய கட்டுமானமுடைய கப்பல் அதை ஓட்டும் திறமுடைய பழைய கப்பலோட்டி இறந்த பின், யாரும் அதை ஓட்டவோ வாங்கவோ முன்வரவில்லை. பயன்படுத்தத் தக்கவர் விலைக்கு வாங்காதது கண்டே, அதைப் பரிசுப் பொருளாக்கிப் பயன்படுத்தக் கூடியவருக்கு அளிக்க ஏற்பாடு செய்திருந்தனர். எனவே இப்பரிசு, பரிசு மட்டுமல்ல; கில்லியட்டின் தனிப்பட்ட அருந்திறத்துக்கும் அது ஒரு சான்றாயிற்று. கெர்ஸ்னி மக்களில் இன்னும் ஒரு சில பேய் பக்தர் இருந்தனர். அவர்கள் இந்தத் தனித் திறத்தைக்கூட அவன் தனித்திறம் என்று ஏற்க மறுத்தனர். “படகை மனிதன் ஓட்டவில்லை. பேய்தான் ஓட்டிற்று. படகில் ஏறுமுன் அதில் அவன் ஒரு மாத்திரைக்கோலை நட்டு வைத்திருந்தான்” என்று அவர்கள் கூறினர். மாத்திரைக் கோலை யாரும் காணவில்லை. கண்டிருக்கவும் முடியாது. ஆனால், நம்பிக்கை இதனால் மாறவில்லை. மாத்திரைக்கோல் மாயமாத்திரைக் கோலாக வல்லவா இருக்க வேண்டும் என்று அவர்கள் விளக்கங் கூறினர். 5. கனவுக் காதல் கில்லியட் செயல் வீரன்; ஆனால், வாய் பேசாதவன். அவன் உள்ளத்தின் காதலும் ஊமைக் காதலாகவே உள்ளுர முதிர்ந்து வந்தது. ஆனால், மற்ற செயல்களை வாய் பேசாமல் நிறைவேற்றி விடலாம். வாய் பேசாமலே கனவுலக எண்ணங்களை நனவுலகச் செயல்களாக்குபவர் உண்டு. கில்லியட் அத்தகையவன். அவன் ஒரு கனவாளன். ஆனால், காதல் கனவு நாகரிக சமூகத்தில் பேச்சு மூச்சின்றி எங்ஙனம் நனவாகும்? அவன் அடிக்கடி அவளைச் சந்திக்க விரும்பினான் - ஆனால், அவன் நாடியது, தான் அவளைக் காணவேயன்றி அவள் தன்னைக் காண்பதன்று. அவள் கால் பதிந்த இடத்தை அவன் கண்களில் ஒத்திக்கொண்டான். அவள் சென்ற திக்கை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு மிங்கும் நின்று அவள் வீட்டு வாயிலை, சாளரங்களை அவன் உற்றுக் கவனித் தான். பல மணி நேர முயற்சியின்பின் அவள் தலையணியின் தும்பு தெரிந்தால், பின்தானை அருகு தெரிந்தால், அவன் முயற்சிக்கு நிறைவு ஏற்பட்டு விடும். மறுதடவை காண அவன் நாள் கணக்கானாலும் பொறுத்திருப்பான். ஆனால், காட்சியை அடுத்துச் சந்திப்பு, சந்திப்பை அடுத்துப் பழக்கம், பழக்கத்தை யடுத்து நட்பு என்ற படிகள் அவனுக்கு எட்டாப் புதிய அனுபவங்களாயிருந்தன. அவன் வீட்டுத் தோட்டமும் அவள் வீட்டுத் தோட்டமும் அடுத்தடுத்தே இருந்தன. இடையே கொடி படர்ந்த ஒரு இரும்பு முள்வேலிதான் இருந்தது. வேலியின் இப்புறமிருந்த குத்துக் கல்லில் அவன் சென்று கல்லுடன் கல்லாய்க் காத்திருப்பான். மாலையில் அவள் உலவும்போது அவள் ஆடையின் சலசலப்பு அவன் உள்ளத்துக்குத் துடிப்பூட்டும், நிலவில் அவள் நிழலுருக் கண்டு அவன் மெய் மறந்திருப்பான். அவள் அடிக்கடி ஸ்காட்லந்து இசைக்கருவியொன்றைக் கைக்கொண்டு, ‘என்னினிய டண்டி’ என்ற பாடலைப் பாடுவாள். அவனும் அதை ஆர்வத்துடன் கேட்டுப் பாடப் பழகினான். சில சமயம் அவனும் அதே பாட்டைப் பாடுவது அவள் காதில் விழும். தன் குறும்புச் செயலை அவன் தவறாகக் கருதினான் என்று சிலசமயம் அவளுக்குக் கோபம் வரும்; சில சமயம் பழய குறும்புணர்ச்சி அவனைக் கண்காணாமலே நையாண்டி செய்யத் தூண்டும். உண்மையில் அவள் உடல் வளர்ச்சியடைந்த அளவு அவள் உள்ளம் வளர்ச்சியடையவில்லை. காதலின் இடத்தில் இன்னும் சிறுமியின் குறும்புதான் நிரம்பியிருந்தது. ‘என்னினிய டண்டி’யின் இசை சிலசமயம் லெத்தியரியின் காதிலும் படும். முதலில் அவன் அதனை இயல்பாக யாரோ பாடுவது என்று நினைத்திருந்தான். ஆனால், பல இடத்திலும் பல திசையிலிருந்து ஒரே குரலில் பாட்டு ஒலிப்பது கேட்டதும், அவன் அதைப் புரிந்து கொண்டான். ‘காதல் என்பது மறைந்து விளையாடும் விளையாட்டன்று; நேராகப் பெண்களிடம் சென்று காதலிப்பது நல்ல இளைஞர்களுக்கு அழகுமல்ல’ என்ற கோட்பாடுடையவன் லெத்தியரி. ஆகவே கில்லியட் காதலிப்பதானால், தன்னிடமே ‘நேரில் வருவதற்கென்ன? இப்படி பாடுவதால் என்ன பயன்?’ என்று அவன் முணுமுணுத்துக் கொண்டான். நேரில் வந்திருந்தாலும் உண்மையில் பயன் இருந்திருக்க முடியாது. மறைவாகச் செயலாற்றினாலும் எந்தப் பயனும் ஏற்பட்டிருக்க முடியாது. ஏனென்றால், டெரூசெட் உண்மையில் எந்த இளைஞனுடனும் தன் வாழ்வை இணைத்து விட எண்ணவில்லை. அவள் வாழ்க்கையைப் பொழுது போக்குப் போன்ற சிறுவர் விளையாட்டாக மட்டும் எண்ணினாள். ஆகவே தன்னை நாடி வந்தவர்கள் எல்லாரையும் அவள் குறும்பு செய்து நையாண்டி பண்ணினாள். லெத்தியரியும் எவரிடமும் பாசம் கொள்ளவில்லை. உண்மையில் அவன் விரும்பிய மருமகன் இலக்கணத்தை மகளும் அறியவில்லை; எவரும் அறியவில்லை. அம்மருமகன் நன்றாக உழைத்துப் பொருள் திரட்ட வேண்டும். அவள் வேலை செய்யாதபடி பார்த்து எல்லா வேலையையும் அவனே செய்ய வேண்டும். அவளைத் தான் பார்ப்பது போலப் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வளவும் போதாது. அவன் அவளுக்குக் கணவனாய், அவள் உடன் பிறந்தாளான டியூராண்டுக்கும் ஒரு திறமை வாய்ந்த மீட்காமனாய் இருக்க வேண்டும்! அவள் கணவனாயிளருக்கப் போதிய இளமையும், டியூராண்டின் மீகாமனாயிருக்கப் போதிய பயிற்சித்திறமும் அவனிடம் இருக்க வேண்டும். இந்த இலக்கணத்தை நினைத்துப் பார்த்தால் எந்த இளைஞனையும் அவன் டெரூசெட்டிடம் அணுக விடவில்லை என்பதில் நாம் வியப்படைவதற்கில்லை. வந்த ஒரு இளைஞனைக் கூட அவன் மறுத்து விட்டான்! ஆனால், அதேசமயம் காதலே இல்லாத கில்லியட்டின் உள்ளத்தில் டெரூசெட் காதலை எழுப்பினாள். திருமணத்தை நினையாத அவன் நெஞ்சத்தில் அவள் திருமண எண்ணத்தைத் தூண்டினாள். கில்லியட்டினிடம் அவள் தாய் இறக்கும்போது கொடுத்த ஒரு இரும்புப் பெட்டி இருந்தது. அதில் ஓர் இளம் பெண்ணுக்கு வேண்டிய ஆடை அணிமணிகள் யாவும் நிரப்பப்பட்டிருந்தன. அவற்றின் மீது ஒரு அட்டைத் துண்டில் “உன் மனைவிக்கு, நீ திருமணம் செய்து கொள்ளும்போது!” என்று அன்னை தன் கைப்பட எழுதியிருந்தாள்! கில்லியட் இப்போது அதை அடிக்கடி எடுத்துத் திறந்துப் பார்ப்பான். அவ் ஆடை அணிமணிகளை அவன் தன் மனக்கண்முன் டெரூசெட்டுக்கு அணிவித்து அழகு பார்ப்பான்! காதலின் ஆற்றல் பெரிது. படையின் ஆற்றல், நகர் காவல் படையின் ஆற்றல், வேவுப் படையின் ஆற்றல் ஆகிய எதுவும் அதற்கு ஈடல்ல. கில்லியட் அவ்வாற்றலால் டெரூசெட் என்ன நேரம் என்ன செய்வாள், என்ன நேரம் என்ன உடை உடுத்திருப்பாள் என்பதை அறிந்தான். அவள் விருப்பு வெறுப்புகள் யாவும் அவன் கற்றுணர்ந்தான். அவள் விரும்பிய மலர்கள், அவள் விரும்பிய காய்கறி கிழங்குகள் அவன் தோட்டத்தில் பயிராயின. யாரிடமிருந்து வந்தனவென்று தெரியாமலே டூஸ் கிரேஸ் என்ற பிராவேயின் பணிப் பெண்டின் மூலம் அவை பக்தனிட மிருந்து தெய்வத்திடம் சென்று சேர்ந்தன. 6. “உறங்கினவன் விழிப்பதில்லை” ஸென்ட் ஸாம்ப்ஸனில் சமய ஊர்வட்டத் தலைவராயிருந்த தூய திரு. ஜாக்கெமின் ஹேரட் என்பவர் வின்செஸ்டர் மாவட்ட முதல்வரின் துணைவராக உயர்வு பெற்றிருந்தார். அவரிடத்தில் புதிய ஊர்வட்டத் தலைவராக திரு. எபினிஸர் காட்ரே என்ற ஓர் இளைஞன் வரவிருந்தான். லென்ட் பீட்டர்ஸ் துறைமுகத்தில் சென்று மக்கள் அவனை வரவேற்கக் காத்திருந்தனர். ஆனால், அன்று கடலில் புயலும் பனியும் அடித்துக் கொண்டிருந்தன. இங்கிலாந்திலிருந்து புதிய தலைவரை இட்டு வரவிருந்த காஷ்மீர் என்ற கப்பல் வர நேரமாயிற்று. வழியில் புயலால் அழிந்து அமிழ்ந்த மற்றொரு கப்பலின் ஆட்களை மீட்பதில் ‘காஷ்மீர்’ ஈடுபட்டிருந்ததனால், வருகை தாமதப்பட்டு வெற்றியுடன் வந்தது. புதிய தலைவர் வந்து பதவி ஏற்ற சில நாட்களுக்குள் ஒருநாள் கில்லியட் கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்தான். ஸென்ட் சாம்ப்ஸன் துறைமுகத்தை அடுத்துத் தீவின் ஒரு நிலமூக்கின் நுனியில் காண்டாமிருகத்தின் கொம்பு போல ஒரு பாறை இருந்தது. வேலி இறக்கத்தின்போது அது கரையுடன் சேர்ந்தும், வேலிஏற்றத்தின் போது கரையிலிருந்து பிரிந்து கடலுக்குள் பாதிக்குமேல் அமிழ்ந்தும் இருந்தது. செங்குத்தாகப் பல ஆள் உயரம் உயர்ந்திருந்த அப்பாறையின் நடுப்பகுதி ஒரு சாய்வு நாற்காலிபோல அலைகளால் செப்பம் செய்யப் பட்டிருந்தது. அதைக் கண்ட எவரும் அதிலிருந்து கடற் காட்சி களைக் காண விரும்பாதிருக்க முடியாது. அந்த அவாவை இன்னும் தூண்டும் முறையில் அந்நாற்காலியைச் சென்றெட்டு வதற்கென்றே படியமைக்கப்பட்டதைப் போல் பாறையில் பல படிகள் அமைந்திருந்தன. மனிதர் கலையுடன் போட்டியிடும் இயற்கைக் கலைப் படைப்பாக அது தோற்றமளித்தது. ஆனால், வஞ்சகமிக்க எந்த மனிதரும் திட்டமிடாத வஞ்சகத் திட்டமும் அதில் அமைந்திருந்தது. எவரும் அதில் ஏறி உட்கார்ந்ததும், அலை தவழ்ந்து வரும் தென்றல் அவர்கள்மீது விசிறும். சங்கு சோழிகள் நீர் சுழன்று அவர்களுக்கு இசைபாடும். நீர்த்திவலைகளை அவர்கள்மீது தூவிக் கடல் அவர்கள் உடலில் மாறி மாறி வெதுவெதுப்பும் குளிர்ச்சியும் ஊட்டும். கடலின் தொலைக் காட்சிகள், வான விளிம்பில் மறையும் கப்பல்களின் பாய்கள், அவர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். இந்த இன்பங்களிடையே அவர்கள் மெய் மறந்திருப்பர், அல்லது தூங்குவர். ஆனால், அவர்களே அறியாமல் அலைகள் படிப்படியாய் எழுந்து வரும். காலடியில் நீர் வந்தபின் கூட அதில் இருப்பவர் நிலைமையை உணர மாட்டார். அவர் உணர்ந்தாலும் அப்போது பயன் எதுவுமில்லை. முன்னுள்ள படிகளில் இறங்கிச் செல்லமுடியாது. அவை கடலில் மூழ்கிவிடும். அதைத் தவிர வேறு இறங்கும் வழியோ அடையும் வழியோ கிடையாது. ‘நாற்காலி ஒரு நாற்காலி அல்ல, ஒரு மாயச்சிறை’ என்பது அப்போதுதான் இருப்பவர்களுக்குத் தெரியும். முதுகுக்குச் சாய்வாயமைந்த பின்புறப் பாறையோ இருபது முப்பது அடி உயரமுள்ளது. அது செங்குத்தாகவும் வழவழப்பாகவும் இருந்ததால் அலைக்குத் தப்பி அதில் ஏறுவதோ தொற்றிக் கொண்டு சிறிது மிதப்பதோ கூட முடியாது. நாற்காலியில் அகப்பட்டவர் அலைக்கு இரையாவது தவிர வேறு வழியிராது. அவர் கூக்குரலிட்டால் கூட, அவர் தவிர வேறு யாருக்கும் அது கேளாது. அப்பாறையைச் சுற்றிக் கடல் அவ்வளவு இரைச்சலிடும். யாரும் அவரைக் கண்டு காப்பாற்ற வரவும் முடியாது. மக்கள் கண்களிலிருந்து அப்பாறை கரையில் மற்றொரு பாறையால் மறைக்கப்பட்டிருந்தது. மேலும், எளிதில் எவரும் படகில் அந்தப் பக்கம் வர முடியாதபடி பாறையைச் சுற்றி அலைகளின் குமுறலும் வெள்ளத்தின் சுழற்சியும் மிகுதியாயிருக்கும். அப்பாறையின் பெயர் ‘கில்டால்மர்’ என்பது. பண்டைக் கெல்த்திய மொழிகளில் அதன் பொருள் “உறங்குபவன் மீண்டும் விழிக்கமாட்டான்” என்பது. கில்லியட் கடற்கரையில் உலவும்போது கடல் ஏறி வருவதை அவன் கவனித்தான். சற்றுமுன் யாரோ புதிய ஆள் கில்டால்மரை நோக்கிச் செல்வதை அவன் பார்த்திருந்தான். ஆள் திரும்பி வந்ததா அல்லவா என்பதை அவன் கவனிக்கவில்லை. ஆனால், போய்ப் பார்க்கவும் நேரம் தவறி விட்டது. கடல் பாறையைச் சூழ்ந்துகொண்டது. கில்லியட் உடனே சென்று தன் படகைக் கொண்டுவந்தான். கடலடித்தடத்தின் மேடுபள்ளங்கள் வளைவு நெளிவுகள் எல்லாவற்றையும் இளமை முதல் அறிந்தவன் அவன். ஆகவே, அவன் திறம்படப் படகைக் கில்டால்மருக்கு முன்புறமாகச் செலுத்தினான். இன்னும் நாற்காலியில் அமர்ந்த ஆள் அசையவில்லை. தனக்கு நேர்ந்த இடரை அவன் உணர்ந்ததாகவும் காணவில்லை. உண்மையில் அவன் கண்களை மூடிக்கொண்டே தான் இருந்தான். “யாரையா அது; சாகத் துணிந்த பேர்வழி?” என்று கேட்டான் கில்லியட். கண்கள் திறந்தன. ‘என்ன செய்தி?’ என்றான் அவன். “உன்னைச் சுற்றிப்பார், என்ன செய்தி என்று!” புதிய ஆள் பார்வை கடலில் விழுந்ததே அவன் உடல் நடுங்கிற்று. “ஐயோ, தெரியாமல் சிக்கிவிட்டேனே” என்றான். தண்ணீர் இதற்குள் படிகள் அனைத்தும் கடந்து விட்டன. இருப்பவன் காலை மேலே தூக்கிக்கொண்டான். இருக்கை வரையும் தண்ணீர் ஏறிவிட்டது. கில்லியட் படகைப் பாறைக்கு நேர் கீழே கொண்டு சென்றான். ஒரு காலைப்படகில் ஊன்றி, பாறைமீது படகு மோதாமல் ஒரு கையையும் அதைக் கொண்டு ஒரு காலையும் பிடித்துக்கொண்டான். பின் பாறை மீது இருப்பவனை நோக்கி “அஞ்ச வேண்டாம். என் படகில் குதித்து விடுங்கள்” என்றான். பிழைப்போம் என்ற நம்பிக்கையில்லாமலே அவன் கைகால்களை நீட்டினான். ஆனால், ஒருகால் கில்லியட்டின் பிடிக்கு அகப்பட்டது. கில்லியட் அவனைப் படகிற்குள் பிடித்திழுத்து அமர்த்திக்கொண்டு கரை சேர்ந்தான். அந்த ஆள் வேறு யாருமல்ல; புதிதாக வந்த ஊர்த் தலைவர் காட்ரேதான். அச்சந் தெளியத் தொடங்கு முன்பே அவன் ஓடினான். சிறிது தொலை சென்ற பின் அறிவு சற்றுத் தெளிந்து ஏதோ நினைத்துக் கொண்டு அவன் மீண்டும் கில்லியட்டிடம் வந்தான். முகம் நன்றிகூற விரும்பிற்று. ஆனால், நாக்குக் குழறிற்று. சட்டைப் பையில் கையிட்டு அவன் ஒரு புத்தகத்தை எடுத்து கில்லியட்டிடம் அளித்தான். அது ஒரு விவிலிய நூல். அவன்தான் புதிய தலைவன் என்பதை கில்லியட் இப்போது உணர்ந்தான். 7. குருட்டு நம்பிக்கையும் குருட்டு யோகமும் ராந்தேன் காணாமற்போய்ப் பத்து ஆண்டுகள் ஆய்விட்டன. பேய்க்கப்பல் என்று பழிக்கப்பட்ட டியூராண்டு, ஸென்ட் ஸாம்ப்ஸனின் வாழ்விலும் கடற்கால் தீவுகளின் வாழ்விலும் நன்றாகப் பழகி ஒரு நிலையான இடம் பெற்று விட்டது. லெத்தியரி இப்போது ஸென்ட் ஸாம்ப்ஸன் துறைமுக மக்களின் முழு ஆர்வத்துக்கும் உரியவனாய் விட்டான். ஏனென்றால் ஃவிரான்சு நாட்டுக்கும் கெர்ஸ்னிக்குமிடையே யுள்ள வாணிபம், போக்குவரத்து முழுவதும் இப்போது ஸென்ட் ஸாம்ப்ஸன் மூலமே நடக்கத் தொடங்கிற்று. ஸென்ட் பீட்டர்ஸ் அத்தீவின் தலைநகரமாயிருந்தும் அதன் மதிப்புக் குறையத் தொடங்கிற்று. இதை உணர்ந்த ஸென்ட்பீட்டர்ஸ் நகரத்தார் லெத்தியரின் நீராவிக் கப்பலைத் தம் துறைக்கு மாற்ற வேண்டுமென்று அவனிடம் வேண்டினர். அதற்காக அவன் அவாவைத் தூண்டவும் முனைந்தனர். ஆனால், லெத்தியரி தன் தாயக ஊர்ப்பற்றில் உறுதியாக நின்றுவிட்டான். ஸென்ட் ஸாம்ப்ஸன் மக்களிடையே இது அவன் மதிப்பை மிகவும் உயர்த்திற்று அவன் அவர்கள் முடிசூடாமன்னன் ஆனான். தொழில் துறையில் தோல்வியுற்றவர்கள் வெளிப்படையாக லெத்தியரியைப் பாராட்டினாலும், உள்ளூர அவன் கப்பலுக்கு ஏதேனும் கெடுதல் வருவது உறுதி என்று நம்பிக் காத்திருந்தனர். சமயவாதிகளும் இவ்வெண்ணத்துக்கு மறைமுக உதவியா யிருந்தனர். ஏனெனில், லெத்தியரியின் சமயத்துறை பற்றிய கட்டற்ற பேச்சு அவர்களுக்கு பிடிக்கவில்லை. லெத்தியரி சமயத் துறையினர் என்றால் வெறுப்பவன். இது துறவுக்கோலமுடைய கத்தோலிக்க குருமார் கடந்து, மற்ற இல்லறக் குருமாரிடமும் பரவியிருந்தது. நம்பிக்கையும் மதிப்புமற்ற அவன், அவர்கள் குற்றங் குறைகளை எளிதில் கவனிக்கவும் சுட்டிக் காட்டவும் முடிந்தது. இது அவர்களுக்குச் சினமூட்டியது. ‘பூசனை செய்யும் குருமாரெல்லாரும் பண்பில் பூனையைப் போன்றவர்கள்’ என்று வால்டேர் கூறுகிறார். லெத்தியரி இதை வாசித்தபோது, ‘அப்படியானால் அப்பூனைகளை வெறுக்கும் நாயின் பண்பு என்னிடம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்றான். குருமார் பொதுவாக அவன் புது நீராவி கப்பலை எதிர்த்தார்கள். இது, அவன் வெறுப்பை இன்னும் மிகுதி ஆக்கிற்று. ஊர்வட்டத் தலைவன் விவிலிய நூலுக்கு விளக்க உரை பகரும்போது நரகத்தின் கோர தண்டனைகளை விரித்துரைத்துக் கொண்டிருந்தான். கேட்பவர்கள் உள்ளத்தில் இவற்றின் படிப்பினைகளை உறுதிபடுத்த அவன் “கடவுளின் முழு நிறைவல்லமையை இவை காட்டவில்லையா?” என்று கேட்டான். லெத்தியரி ஒரு மூலையிலிருந்து “கடவுள் கருணையுடையவர் என்றல்லவா நான் நினைத்தேன்” என்றான். டியூராண்டின் வெற்றிகூட இந்நிலையில் கப்பல் தொழிலில் நீராவிக் கப்பலின் வெற்றியாக மாறவில்லை. பாய்க் கப்பல் கழகங்களுக்குச் செல்வர் முதலிடந்தர இன்னும் தயங்காது முன்வந்தனர். நீராவிக் கப்பலென்றால் இன்னும் தயங்கவே செய்தனர். ஒரு செல்வர் “நீராவிக் கப்பலா? அதில் ஒருநாள், இரண்டுநாள் பயணம் செல்வதற்குக் கேடில்லை, என்றேனும் ஒருநாள் தானே சாக வேண்டிவரும். ஆனால், முதலிடுவதனால், புகையிலும் கரியிலும் யார் முதலிடுவார்கள்” என்றார். லெத்தியரியின் வெற்றி நீராவியின் வெற்றி என்று எவரும் கொள்ளவில்லை. அவர் திறமையின் வெற்றி என்றும் எவரும் கருதவில்லை. அது அவருக்கு ஒரு நல்ல காலம்; அது அவர் குருட்டுயோகம் என்றுதான் பலரும் எண்ணினர். குருட்டுயோகம் என்று பிறர் நினைப்பதற்கேற்ப, ஒரு குருட்டு இடையூறு அதன்மீது தன் அம்பை எய்தது. 8. குளூபினின் மறை திட்டங்கள் செவ்வாய்க்கிழமைதோறும் டியூராண்டுடன் குளூபின் கெர்ஸ்னியிலிருந்து புறப்பட்டு மாலையில் ஸென்ட் மலோ போய்ச் சேர்வான். சரக்கிறக்கவும் ஏற்றவும் அங்கே இரண்டுநாள் தங்கிவிட்டு வெள்ளிக்கிழமை புறப்பட்டு மீண்டும் கெர்ஸ்னி வருவான். டியூராண்டின் தலைமை அலுவலகம் ஸென்ட் ஸாம்ப்ஸனில் லெத்தியரியின் வீட்டில் அவன் அறையாகவே இருந்தது. ஃவிரஞ்சுப் பக்கத்து அலுவலகம் ஸென்ட் மலோ விலுள்ள ஜீன் ஆபெர்ஜ் என்ற அருந்தகத்தி லமைந்திருந்தது. குளூபின் ஸென்ட் மலோவில் தங்கும் பொழுதைப் பெரும்பாலும் இங்கேயே கழித்தான். இரு நாடுகளின் சுங்கச் சாவடிக்காரரும் கரையோரக் கப்பலோட்டிகளும் வந்து கலக்கும் இடம் இதுவே. ஃவிப்ரவரி மாதத் தொடக்கத்தில் குளூபின், ஸென்ட் மலோ சென்றிருந்தபோது, அருந்தகத்தில் எத்திறத்தவர் களிடையேயும் ஒரே பேச்சுத்தான் ஊடாடிற்று. மூன்று பாய்களையுடைய கப்பலான தமோலிபாஸில் மீகாமன் ஜூலா சிலி நாட்டிலிருந்து வரவிருக்கும் செய்தியே அது. பத்து நாட்களுக்குள் அவன் திரும்பவும் தென் அமெரிக்காவிலுள்ள அந்நாட்டிற்குப் போவான் என்று தெரிந்தது. அடுத்த தடவை குளூபின் ஸென்ட்மலோ வந்தபோது கப்பலிலிருந்து இறங்கு முன்பாக கடல் தொலை நோக்கி மூலம் கரையைக் கவனித்தான். தொலையில் மீகாமன் ஜூலாவுடன் யாரோ ஒருவர் பேசியது தெரிந்தது. பேசியவர் கள்ள வாணிகத் துறை சார்ந்தவர் என்பது குளூபினுக்குத் தெரியும். அவன் எப்போதும் தன் நேர்மையுடைமையைப் பகட்டாக காட்டி வந்ததால், எத்தகையவருடனும் அச்சமின்றிப் பழக முடிந்தது. பிறர் எவரும் கவனிக்காமலே அவன் தன் திட்டங்களைத் தன் மனம்போல் இடைஞ்சலின்றி நடத்தவும் முடிந்தது. ஜூலாவைக் கண்டது முதல் அவன் முகம் வெளிப்படையாக எப்போதும் போலவே இருந்தாலும், அது ஒரு செயலற்ற திரைபோல், அதன் பின்னுள்ள சுறுசுறுப்பான திட்டங்களை மறைக்க மட்டுமே உதவிற்று. அவன் துப்பாக்கி செய்யும் கருமானிடம் சென்று “உன்னிடம் சுழல் துப்பாக்கி இருக்கிறதா?” என்று கேட்டான். கருமான் வாளா இருந்தான். “சுழல் துப்பாக்கி என்றால் என்ன என்று தெரியுமா?” “தெரியும். அது ஒரு அமெரிக்க ஆயுதம்.” “அது கிடைக்குமா?” “கைத்துப்பாக்கி கிடைக்கும். அது கிடையாது. அது இன்னும் வாணிகச் சரக்காகவும் வரவில்லை. ஃவிரஞ்சுக்காரர் அதை இன்னும் செய்வதில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் தருவித்துத் தரமுடியும்.” “அது ஆறு முறைகள் சுடுவதாயிருக்க வேண்டும்.” “சரி” “மிக நல்ல தரமாயிருக்க வேண்டும்.” “கொடுக்கிற பணம் எவ்வளவு நல்லதோ அந்த அளவு சரக்கின் உறுதிக்கும் நாங்கள் உத்தரவாதிகள். “எப்போது வர? எப்போது தருவீர்கள்?” “அடுத்த தடவை வரும்போது?” “ஓஹோ, என்னைத் தெரியும் போலிருக்கிறது, உங்களுக்கு. சரி வாங்கியது நான் என்று யாருக்கும் தெரிய வேண்டாம்.” குளூபினின் அடுத்த தனிப்பட்ட செயல் கப்பல் நடுக்கடல் சென்றபின் தொடங்கிற்று. அப்போது அவனுக்கு ஓய்வு கிட்டிற்று. அவன் தன் கப்பல் உள்ளறைக்குச் சென்று வழிப் போக்கர் பை ஒன்றை எடுத்து அதில் நீண்ட பயணத்துக்குரிய உணவுப் பண்டங்கள், கப்பல் நாழிகை வட்டில், கப்பலோட்டி களின் முடிச்சுகளிட்ட ஏறுவடம் ஆகியவற்றை அதில் வைத்துக் கட்டினான். பின் பையைக் கவண்கட்டி எறிவதுபோல எறியத் தக்க ஒரு கயிற்றில் கட்டினான். கெர்ஸ்னி சென்ற பின், அவன் துறைமுகத்திலிருந்து கையில் பையுடன் எங்கோ கிளம்பினான். நெடுநேரம் சென்று அவன் திரும்பி வந்தான். ஆனால், அப்போது அவன் கையில் பை இல்லை. மறுதடவை ஸென்ட்மஸோ வந்தபோதும், குளூபின் மீண்டும் துப்பாக்கி செய்யும் கருமானை அடுத்தான். அவன் குளூபினை நகரின் மிகப் பாழடைந்த பகுதியிலுள்ள ஒரு அரும்பொருள் விலையகத்துக்கு இட்டுச் சென்றான். அதன் பெயர் ஜாக்ரிஸேட் என்பது. ஜாக்ரிஸேட் வெளிப்படையாகப் பழம்பொருள் வாணிகக் களமாகக் காட்சியளித்தது. ஆனால், விலாசமுடைய உலகத்துக்கும் விலாசமற்ற உலகத்துக்கும் ஒரு பலமாக அது விளங்கிற்று. தங்க இடமற்ற ஏழைகள், விடுதலை பெற்ற குற்றவாளிகள், சிறு திருட்டு, வழிப்பறி செய்பவர், மோசடிக்காரர் ஆகியவர் ஒதுங்கி, குடிவரி கொடுத்தோ, கொடுக்காமலோ, வறுமையை மறைக்குமிடமாகவும் அது இருந்தது. அவ்விடுதியில் பொன் வெள்ளி மாற்றுச் சித்து வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவன் இருந்தான். சித்து வெற்றி பெறும் என்ற நம்பிக்கையால் ஏழையர்களிடமிருந்து பிழிந்த பணத்திலிருந்து விடுதித் தலைவி அவன் தொழிலுக்கு இடமும் உதவியும் கொடுத்தாள். வீட்டின் எரிக்கத் தக்கபொருள் எதையும் - நாற்காலிகள், பெட்டிகள், ஏணிகள், விட்டம், வரிச்சுல்கள் யாவும் - அவனால் உலோகப் புடங்களுக்காக எரிக்கப்பட்டு வந்தன. கருமான் வந்த செய்தி கூறவே, சித்தன் சுழல் துப்பாக்கி ஒன்றை எடுத்து வந்தான். அவன் அதற்கு ஆறு ஆங்கிலப் பொன் விலை கூறினான். கருமான் குறைத்துக் கேட்டும் அவன் இணங்கவில்லை. ஆனால், குளூபின் பேசாது அவனிடம் அவன் கேட்ட ஆறு பொன் கொடுத்துவிட்டு மீண்டான். 9. பேயடைந்த மாடம் பிளீன்மாண்ட் கெர்ஸ்னி ஒரு முக்கோண வடிவுள்ள தீவு. மூன்று மூலைகளிலும் நிலமுனை ஒவ்வொரு நில மூக்காக நீண்டிருந்தது. டார்டிவல் இம்மூலைகளில் ஒன்று. குளூபின் பிறந்து வாழ்ந்த இடம் இதுவே. இந்த இடம் கள்ளவாணிகக்காரருக்கு ஒரு சந்திப்பாகவும் அமைந்தது. அதற்கு வேண்டிய பல வசதிகளும் அங்கே இருந்தன. நிலமூக்கின் கோடியில் ஒரு அழகிய மாடம் இருந்தது. அது ஒரு சிறுகுடும்பம் வாழத்தக்கதாய் அந்தசந்தமாயிருந்தது. அதன் மூன்றுபுறம் கடல் மறுபுறம் ஒரு தோட்டப்பகுதி. தோட்டப்பகுதி பாழாய் கிடந்தது. மாடமும் பாழாகவே கிடந்தது. கடற்புறத்தி லுள்ள மூன்று மதில்களில் ஒரு மதிலில் கதவோ சாளரமோ எதுவும் இல்லை. முன்னாலுள்ள கதவும் சாளரங்களும் செங்கலால் அடைபட்டிருந்தன. மற்ற ஒரு பக்கத்தில் இரண்டு சாளரங்கள் இதுபோலவே செங்கலால் அடைபட்டிருந்தன. ஒரே ஒரு பக்கம், தென்புறம் மட்டும் பலகணிகளில் கதவுகள் அகற்றப்பட்டுத் திறந்த மேனியாய் இருந்தன. கிட்டத்தட்ட மாடத்தின் நாற்புறமும் கடல் இருந்தது. வேலி இறக்கத்தின்போது மட்டுந்தான் ஒரு சிறு இடைவழி இடுக்கு அதை நிலத்துடன் இணைத்தது. இம்மாடத்தின் பெயர் பிளீன்மாண்ட். யாரும் அதன் பக்கம் நாடுவதில்லை - அதன் பெயர்கூடக் கூறுவதில்லை. ஏனென்றால் அதில் பட்டப் பகலில் கூடப் பேய்கள் நடமாடியதென்று மக்கள் நம்பினர். இடமும் சூழலும் இந்நம்பிக்கையும் சேர்ந்து கள்ள வாணிகக்காரருக்கு அதை ஒரு முதல்தர மூலதளமாக்கிற்று. எப்போதாவது யாராவது உள்ளே நுழைவதை மக்கள் கண்டாலும் கூட, அவர்கள் அதை எவரிடமும் கூற மாட்டார்கள். கூறினாலும் எவரும் அதைப் புலம் விசாரிக்கத் துணியமாட்டார்கள். உண்மையில் புலிக்கும் சிங்கத்துக்கும் அஞ்சாத ஊர்காவலர்களும் படை வீரர்களும்கூடப் பேய் என்றால் எட்டிப் பார்க்கமாட்டார்கள். திருடர், கள்ளக் காதலர், கள்ளவாணிகக்காரர் ஆகியவர்களின் செல்வாக்கினாலேயே உலகில் பேய் பற்றிய நம்பிக்கை நீர் வார்த்து அழியாமல் பேணப்படுகிறது என்னலாம். ஆனால், அச்சமும் சில தரத்தவருக்கு ஒரு ஆர்வத்தை ஊட்டுவதுண்டு. பண்டைக்கால மனிதன் அச்சத்திடையே அன்பு செலுத்தினான். அச்சத்திடையேதான் அவன் இன்பமடைந்தான். ஆகவே, அஞ்சிய பொருளையெல்லாம் அவன் கடவுளாகக் கண்டு வணங்கினான். இன்னும் அதனாலேயே பக்தியை நாம் பயபக்தி என்கிறோம். அச்சத்தைப் போலவே துன்பமும் பலரால் விரும்பப்பட்டு இன்பமூட்டுவதுண்டு. சாவுக்காட்சி கொலைக் காட்சிகளையும், துயரக் கதைகளையும் நாடகங்களையும் நாம் காண விரும்புவது இதனாலேயே. இதே வகையான ஆர்வங்கலந்த அச்சம், அச்சங்கலந்த ஆர்வம் டார்டிவலிலுள்ள மூன்று சிறுவர்களை ஒருநாள் இயக்கிற்று. அவர்கள் தொலைவிலிருந்தே அஞ்சி அஞ்சி, பதுங்கிப் பதுங்கி, பீளீன்மாண்ட் பக்கமாக வந்தார்கள். அச்சம் கால்களைப் பின்னிழுத்தன. ஆர்வம் தலையை முள்தள்ளின. சிறுவரில் இருவர் கெர்ஸ்னிக்காரர். அவர்கள் திண்ணிய உடலுடையவர்கள். ஆனால் அச்சம் அவர்களைக் கோழைகளாக் கிற்று. மூன்றாவது சிறுவன் ஃவிரஞ்சுக்காரன், நோஞ்சலான உடலுடையவன்; ஆனால், அச்சம் அவன் ஆர்வத்தைத் தூண்டி அவனை வீரனாக்கியிருந்தது. அவர்கள் இரவெல்லாம் பதுங்கிப் பதுங்கி மாடத்தைச் சுற்றி வந்தனர். அவர்கள் முதலில் உள்ளே ஒரு பேயைக் கண்டார்கள். எப்படியோ மற்றொரு பேயும் உள்ளே வந்தது. பேய்கள் பேசின. பேய்கள் பேச்சுச் சிறுவர்களுக்கு எப்படி புரியும்! ஆயினும், ஒருவன் வெளிநாட்டுக்குப் போக விரும்பினான். அடுத்தவன் அவனை இவ்விடத்திலேயே காத்திருக்கும்படி கூறினான். முதல்வன் கையில் கொண்டுவந்த பயணப் பையை அங்கே விட்டு விட்டுச் சென்றான். பேய்களும் மனிதர்களைப் போலவே நடந்துகொண்டன. சிறுவர்கள் இவ்வளவு செய்தியும் கேட்டார்கள். ஆயினும் அவர்கள் தாம் கண்டது பேய்களே என்று கருதிச் சென்றனர். 10. கரை காவலன் எண் 618 ஸென்ட் மலோவையடுத்த கடற்கரையெங்கும் கள்ள வாணிகக்காரரும் சமயச் சட்டங்கள், அரசியற் சட்டங்கள் ஆகியவற்றுக்குத் தப்பியவரும் ஓடிவிடாமற் காக்கக் கடற்காவற்காரர் அமர்த்தப்பட்டிருந்தனர். பொதுவாக அக்காலத்தில் எங்கும் இந்நிலைமை இருந்தது. சிறப்பாக ஃவிரான்சில் அரசியலும் சமயமும் மக்கள் வாழ்வின்மீது இன்ன சமயம் என்றிராது விழும் இடி மின்னல்களாகவே இருந்தன. கத்தோலிக்கராயிருந்தால் ஒரு அரசாங்கத்துக்கு அஞ்சவேண்டும். புரோட்டஸ்டாண்டாயிருந்தால் மற்றொரு அரசாங்கத்துக்கு அஞ்சவேண்டும். பலர் இரண்டுக்கும் தப்பிப் பிழைக்க வேண்டும். ஃவிரஞ்சுப் புரட்சிக் கால முதல் அரசியல் கட்சிகளும் கொள்கைகளும் சமயத்தைப்போல் மக்களைப் பிரிவினை செய்து அலைக்கழித்தன. இத்தகைய வாழ்விலிருந்து தப்பியோடியவர்கள் பலர். தப்பியோடியவர்கள் அமைத்த நாகரிகங்கள்தான் புதிய அமெரிக்காவை வளர்த்தது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமய அகதிகள், அரசியல் அகதிகள், கள்ள வாணிக அகதிகள் ஆகியவர்கள் தப்பிப் பிழைத்தோடாமல் காக்கவே கடற் காவலர் அமர்த்தப்பட்டிருந்தனர். தப்பியோடுபவர்கள் நேரே கப்பலில் ஏறாமல், கடற்கரையிலுள்ள பாறைகளிலிருந்து படகில் சென்று கப்பலேறுவர். இதைத் தடுக்கும் எண்ணத்துடன் ஸென்ட் மலோவை அடுத்த பாறையொன்றின்மீது கரை காவலன் 618 நின்றிருந்தான். அவன் தொலை நோக்கி வழியாக வெளிநாடு புறப்பட்ட தமோலிப்பாஸை நாடிப் பார்வையைச் செலுத்தி யிருந்தான். கப்பலிலிருந்து ஒரு படகு பாறையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது எங்கே யாரை ஏற்றிக்கொண்டு போகிறதோ என்று அவன் தனக்குள் ஆராய்ந்து கொண்டிருந்தான். படகைச் சந்திப்பதற்காகப் பாறைக்கு வந்த வடிவம், அவன் பின்னால் பதுங்கி வருவதை அவன் அறியவில்லை! கப்பலைப் பார்த்தபடியே கரைகாவலன் - 618 பாறை கடலை எட்டிப் பார்க்கும் இடம் வரை வந்திருந்தான். அதற்குள் பின்னாலிருந்தவன் மெல்ல வந்து அவனைக் கடலினுள் தள்ளிவிட்டான்! கப்பலை உளவு பார்க்க வந்த பகைவன் ஒழிந்தான் என்று அவன் மகிழ்ந்தான். தன்னையே உளவு பார்த்து வந்த மற்றொருவன் தன்னை எதிர்க்கப் பின்னாலிருப்பது அவனுக்குத் தெரியாது. படகு அருகில் வந்துவிட்டது. இன்னும் சில கணங்களில் அவன் கப்பலேறி அயல்நாடு சென்றுவிடலாம். ஏற்கெனவே நிரம்பப் பணம் திரட்டியாய்விட்டது. இனி இன்னும் பெரும் பொருள் திரட்ட அவன் திட்டமிட்டான். பின்னாலிருந்து ஒரு குரல் ராந்தேன் என்று கூவிற்று! அவன் திரும்பிப் பார்த்தான். அது குளூபின் குரல்! முதலில் இன்னது செய்வதென்று அவனுக்கு விளங்கவில்லை. பின் எப்படியும் அவன் உளவுக்கு ஒரு முடிவு கட்டுவது என்று முனைந்தான். அதற்குள் குளூபின் கையிலிருந்த சுழல் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு “ஒரு அடி முன் வைக்காதே! அப்படியே நில்!” என்றான். அவன் நின்றான். “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். “உன்னிடம் என்னவெல்லாம் இருக்கின்றன? சொல்!” “நீர் யார் கேட்க?” “நான் சொல்கிறேன். வலதுபுறப் பையில் கைக் குட்டை. சாவிக் கொத்து. இடது பையில் கைத்துப்பாக்கி. ஒரு புகையிலைப் பெட்டி. அதில்... எழுபத்தையாயிரம் வெள்ளிக்கு மேற்பட்ட தொகை..... சரிதானா?” “ஆம்.” “அத்தனையும் கொடு.” “இது வழிப்பறிக் கொள்ளையா?” “கொடு என்றால் கொடு” “பாதி கொடுக்கிறேன். பங்கிட்டுக் கொள்வோம் குளூபின்!” “நான் வழிப்பறிக்காரனென்றா நினைத்தாய்?” “பின்!” “என் கப்பல் தலைவரிடமிருந்து நீ ஐம்பதினாயிரம் திருடிச் சென்றாய். வட்டி முதலுடன் அது எழுபத்தையாயிரம் ஆகிறது. அதையே அவர் சார்பில் கேட்கிறேன்.” புகையிலைப் பெட்டி எறியப்பட்டது. “முதுகுகாட்டி நில்” செய்யவே நேர்ந்தது, குளூபின் சொன்னபடி. ராந்தேனைக் குறி பார்த்துக்கொண்டே குளூபின் குனிந்து புகையிலைப் பெட்டியைத் திறந்தான். ஒரு பத்திருபது வெள்ளி மிகுதியாயிருந்தது. அதை எடுத்துக் கொண்டு பெட்டியை மூடினான். “திரும்பி நிற்கலாம்!” ராந்தேன் திரும்பினான். “இதோ, எனக்குச் சேரவேண்டியது எழுபத்தையாயிரம் தான், இதை எடுத்துக்கொள்” என்று சில்லறையைச் சுழற்றி எறிந்தான். ராந்தேன் முகஞ் சுளித்துக் கொண்டு சீறி அதைக் கடலில் வீசினான். “சரி, உன் விருப்பம் அது. இனி நீ போகலாம்.” என்றான் குளூபின். ராந்தேன் படகை நோக்கிச் சென்றான். குளூபின் பணத்துடன் வேறு திசையில் திரும்பினான். 11. டியூராண்டின் முடிவு தமோலிபாஸ் கப்பல் புறப்பட்டுச் சென்ற மறுநாள் டியூராண்டு கெர்ஸ்னியை நோக்கிப் புறப்பட்டது. இத்தடவை குளூபின், கப்பலுக்குச் சரக்குகள் ஏற்றுவதைக் கவனிக்கவேயில்லை. ஜீன் ஆபர்ஜில் அவன் இல்லாததால் சரக்குகள் ஏற்றப்படாமலே போயின. கப்பலில் மீகாமனுக்கடுத்த தலைமைப் பணியாள் தங்க்ரூவில் என்பவன். அவன் கெர்ஸ்னியிலேயே பிறந்தவன். நல்ல உயர்குடியைச் சேர்ந்தவன். கப்பலின் முழுப்பொறுப்பும் அவனுடையதாதலால் கப்பலைவிட்டு அவன் வெளியே செல்வதேயில்லை. அவனுக்கென்று பிறரறியாத ஒரு தனியறை இருந்தது. முழு ஓய்வுகிடைத்தபோது அவன் யாருமறியாமல் அங்கே சென்று தூங்குவான். குடி வகை கிடைத்தபோது அவ்விடத்திலேயே சிறிது குடியாறுதல் அவனுக்கு வழக்கம். ஆனால் இந்த ஒரு குற்றத்தை அவன் யாரும் அறியாமல் மறைத்து வைத்திருந்தான். கப்பல் புறப்படுமுன் தங்க்ரூவில் சிறிது ஓய்வு கொள்ளத் தன் அறை சென்றபோது, அங்கே ஒரு குடி வகைப் புட்டி இருந்தது கண்டான். அங்கே யார் வைத்திருப்பார்கள் என்று சிந்தித்தான். யார் வைத்தாலென்ன, ஒளித்து வைத்ததை ஒளித்தே குடிக்கலாம் என்று அவன் நினைத்தான். மறுநாள், கப்பலை அவன் சரியாக ஓட்டமுடியவில்லை. ஆனால், இது தெரியவிடாமல் அவன் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டினான். நாள்பட்ட தேர்ச்சியுடைய கப்பலோட்டிகள் எச்சரித்தனர், அன்று கடல் கொத்தளிப்பும் மூடுபனி மறைப்பும் உடையதா யிருக்குமென்று, ஆனால், மீகாமன் புறப்படவே துணிந்து கட்டளையிட்டான். பயணம் அமைதியாக, அமைதியான கடலிலேயே தொடங்கிற்று. கப்பல் பிரயாணிகளும் கப்பலோட்டிகளும் இன்பமாகப் பொழுதுபோக்கி உரையாடிக் கொண்டிருந்தனர். மூடுபனியைப் பற்றியும் கரையோரமுள்ள பலவகையான கொடும்பாறைகளைப் பற்றியும் கூட அவர்கள் காரசாரமாகப் பேசினார். மினிக்கியர் பாறைகள், சூவாஸ், மங்க், டக், சூவஸ்டு ஆகிய பெயர்கள், ஒவ்வொன்றிலும் எத்தனை பாறைகள், அவற்றின் பண்புகள் எவை என்பனவெல்லாம் பேச்சில் அடிக்கடி விவாதிக்கப்பட்டன. கடலாராய்ச்சியில் கப்பல் அறிஞர்கள் மூழ்கியிருந்தார்கள். திடீரென மீகாமன் முழங்கினான். தலைமைக் கப்பலோட்டியைப் பார்த்து, “அட குடிகாரா! கப்பலை எங்கே ஓட்டுகிறாய்?” அந்த முழக்கம் கேட்டுக் கப்பல் கலகலத்தது. தங்க்ரூவில் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு நின்றான். மீகாமன் கப்பலின் ஆணைச் சக்கரத்தைத் தானே மேற்கொண்டான். கப்பல் ஸென்ட்ஸாம்ப்ஸனை நோக்கிச் செல்வதற்கு மாறாக, ஜெர்ஸியை நோக்கிச் சென்று கொண் டிருந்தது. அவன் அதை நேர்வழிக்கு மீண்டும் திருப்பினான். அச்சமயம் கடலகமெங்கும் புயலின் எச்சரிக்கை அமைதி வடிவில் படர்ந்தது. ஜெர்ஸி அருகில் செல்லும் கப்பல்கள் எந்தத் திசையில் சென்றாலும் ஜெர்ஸித் துறைமுகத்தின் பாதுகாப்பை நாடி ஓடின. ஆனால் டியூராண்டு ஜெர்ஸிப் பக்கமிருந்து தலை திரும்பிச் சென்றது. முழு வேகத்துடன் கப்பல் இயந்திரங்கள் முடுக்கப்பட்டன. அந்தப் பழிகேடன் செய்து விட்ட தாமதத்தைச் சரிக்கட்ட முனைந்தான் மீகாமன். கப்பலின் போக்கில் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. ஆனால் நெருக்கடிக்கேற்ற அளவில் மீகாமன் செயல்வீறு உயர்ந்தது, மீகாமனின் அச்செயல்வீறு கண்டு எல்லாரும் வியந்து பாராட்டினர். அவன் இயந்திரத்துடன் ஒரு இயந்திரம்போல உழைத்தான். சிப்பந்திகள் ஒவ்வொருவர் செயலையும் அவன் கவனித்து நின்று அவர்கள் நாடி நரம்பாய் இயங்கினான். கப்பல் விரைந்து சென்றது. கதிரவன் வான விளிம்பை முற்றிலும் அணுகவில்லை. ஆனால், வானகத்தில் எவருக்கும் தெரியாத ஒரு சிறு வெண்புள்ளி மீகாமன் கண்ணுக்குத் தெரிந்தது. அது விரைவில் பெரிதாயிற்று. மேல்திசை வானகத்தை அது மறைத்தது. பின் வான விளிம்பெங்கும் பரந்தது. நடுவே ஒரு இடைவெளியில் மட்டும்தான் கதிரவனொளி தெரிந்தது. மற்ற இடமெங்கும் மூடுபனித் திரையின் மூடாக்கு நிலைத்தது. கப்பலோட்டிகளுக்கு மின்னல், இடி, புயல், காற்று எதையும் விட ஆபத்தானது இந்த மூடு பனிதான். அதில் சிக்காமல் மீகாமன் கப்பலை மீண்டும் திருப்பித் திருப்பிச் செலுத்தினான். ஆனால் இறுதியில் கப்பலிலேயே ஒருவரை ஒருவர் காண முடிய வில்லை. கீழே கடல் கொதித்தெழுந்தது. மேலே கார்முகில்கள், இடியும் மின்னலும்! நாற்புறமும் பனி மூடாக்கு! கப்பல் அவற்றினிடையே திசை தெரியாது விரைந்து சென்றது. திசை தெரியவில்லை. திசைகாட்டி புயலின் மின்னாற்றலால் திசை காட்டவில்லை. கடிகாரங்கள் நின்றன. நேரம் தெரியவில்லை. கப்பல் கண்ணைக் கட்டிக்கொண்டு இடர் நோக்கிச் சென்றது. பிரயாணிகளிடையே கெர்ஸ்னியிலுள்ள ஒருவன் இருந்தான். அவன் கெர்ஸ்னிக் கடற்கரையையும் பாறைகளையும் நன்கறிந்தவன். அவன் மீகாமனிடம் வந்து ‘மீகாமன் குளூபின்!’ என்று விளித்தான். “என்ன செய்தி” “ஹான்வேப் பாறையை நோக்கி நாம் செல்லுகிறோம் என்று எனக்குத் தோற்றுகிறது.” “நான் அப்படி நினைக்கவில்லை.” “எனக்குப் பாறை தெளிவாய்த் தெரிகிறது, கட்டாயம் கப்பல் செல்லும் திசையைச் சிறிது மாற்றக் கோருகிறேன்.” “எனக்குத் தெரியாதா ஹான்வே, அஞ்சவேண்........” மீகாமன் வாசகத்தின் கடைசி ஒலி ‘டாம்’ என்று முடியுமுன் ‘டாம்’ என்ற ஓசை இடியோசை போலக் கேட்டது. கப்பலின் அடித்தளம் பிளவுண்டது. ஆனால், கப்பல் தாழவும் இல்லை. முன் செல்லவும் இல்லை. பாறை ஆப்பறைந்தது போல் கப்பலினுள் பதிந்து கொண்டது. தண்ணீர் இலேசாகக் கப்பலினுள் வந்தது. ஆனால், பாறை கப்பலினுள் புகுந்து பதிந்திராவிட்டால் வேகம் இன்னும் மிகுதியாயிருக்கும். நீர் பாதிக் கப்பல் வரை வந்துவிட்டது. ஏவலாளர் உடல்களும் வெடவெடத்தன. ஆனால், மீகாமன் அமைதி பாறையின் அமைதியாயிருந்தது. கப்பலில் ஒரு படகு இருந்தது. அதை இறக்கும்படி கட்டளையிடப்பட்டது. நீ முந்தி, நான் முந்தியென அனைவரும் அதில் ஏறினர். கப்பல் உடைவதற்குக் காரணமாயிருந்த தங்க்ரூவில் ஏறத் தயங்கினான். மீகாமன் அவனையும் ஏறும்படி கட்டளையிட்டான். ஆனால் மீகாமன் படகில் வர மறுத்தான். படகில் பதின்மூன்று பேர் இருந்தனர். இன்னும் ஒருவர் வந்தால் அது கவிழ்ந்துவிடக்கூடும். அதனாலேயே மீகாமன் ஏறவில்லை என்று அவர்கள் எண்ணினர். ஆயினும், அவ் ‘வீர மீகாமனை’ விட்டுச்செல்ல அவர்கள் விரும்பவில்லை. அவனை விட்டுச் செல்வதைவிட அவனுடன் இறப்பது மேல் என்று கருதினர். ஆகவே, அவனை வற்புறுத்தினர். ஆனால், அவன் முடிவாக மறுத்து விட்டான். ‘கப்பலுக்கு நான் பொறுப்பு, அது அமிழ்ந்தபின் நான் வாழ மாட்டேன். அதனுடன் என் உயிர் முடியட்டும்’ என்றான். தங்க்ரூவில்லைத் தான் குற்றம் சாட்டவில்லை என்று கூறி அவர்களை மீகாமன் அனுப்பினான். கப்பலின் கணக்கு வழக்கு ஏடுகளையும் பத்திரங்களையும் படகில் கொண்டு செல்லும்படி ஒப்படைத்தான். படகு சென்றது. 12. இறுமாப்பும் ஏமாற்றமும் மீகாமன் முகத்தில் வீரமும் தியாகமும் நிழற்படும் என்றுதான் கப்பலோட்டிகள் எண்ணியிருப்பர். ஆனால், அதில் மகிழ்ச்சி தாண்டவமாடிற்று. அமைதி நிலவிற்று. வெற்றி எக்களிப்பு நடனமிட்டது! ஒரு முதல்தர நடிப்பில் அவன் வெற்றி பெற்றிருந்தான். வாழ்க்கை முழுதும் அவன் நடித்த ஆஷாடபூதி நாடகத்தின் முத்தாய்ப்பு அந்நாள். அவன் தியாகி என்று பெயரெடுத்தான்; வீரன் என்று பெயரெடுத்தான். மக்கள் உள்ளத்தில், டியூராண்டின் முதலாளி உள்ளத்தில், அழியா இடம் பெற்றான். நடிப்பு அவ்வளவு முதல்தரம். கப்பலின் பத்திரங்கள் முதற்கொண்டு அனுப்பிவிட்டான். ஆனால், அவன் சட்டைப் பையில், புகையிலைப் பெட்டியில் எழுபத்தையாயிரம் வெள்ளி இருந்தது. இதை எண்ணி அவன் சிரித்தான். அது ஒரு பேய்ச் சிரிப்பு! பிளீன்மாண்டில் அவன் பயணப்பை இருந்தது. அது ஹான்வேயிலிருந்து ஒரு கல் தொலைதான். முன்பே அவன் அத்தொலையை நீந்திக் கடந்திருக்கிறான். உலகில் அவன் இறந்ததாகக் கருதுவார்கள். பிளீன்மாண்டில் அவன் எத்தனை நாள் இருந்தாலும் உணவுண்டு. பேயாட்டத்துக்கு அஞ்சி யாரும் வரமாட்டார்கள். கள்ள வாணிகக்காரர் வந்து அவனை இட்டுச் செல்வர். பல தலைமுறைக்குப் போதிய பணம் பையிலிருக்கிறது. அவன் தன் வருங்கால வாழ்வின் வெற்றிக் கோட்டைகளை அச்செல்வத்தின் அடிப்படையில் கட்டினான். அதன் மீது அவன் மாய நடிப்புத் திறத்தின் வீரப் புகழ்க்கொடி பறந்தது! அவன் எக்களித்தான். ஆனால், இத்தனை எக்களிப்பிடையேயும் சடுதியில் ஓர் ஏமாற்றம் அவனை நோக்கிச் சிரித்தது. மூடுபனி அகன்றது. வெய்யில் இன்னும் எறித்தது. தான் வந்து சேர்ந்திருந்த பாறை ஹான்வேப் பாறை அல்ல. கொடும் பாறைகளும் அஞ்சும் காலகூடப் பாறை டூவ்ரே! ஹான்வேயிலிருந்து ஒரு கல் தொலையை அவன் நீந்தி விடலாம். டூவ்ரேயிலிருந்து கரை இருப்பத்தைந்துகல்! பிறரறியாமல் நீந்திச் செல்லும் எண்ணத்தில் மண் விழுந்தது. அது மட்டுமல்ல. இப்பக்கம் கப்பல் வருவதே அரிது. அதற்குப் பலநாள் காத்திருக்க வேண்டி வரலாம். அது வரையில் தங்குவது எப்படி - உணவுக்கு - குடிநீருக்கு என்ன செய்வது? ஒரு துண்டு அப்பம், ஒரு துளி தண்ணீர் இல்லாத இடத்தில் எழுபத்தையாயிரம் வெள்ளி இருந்து என்ன பயன்? அவன் உள்ளம் உடைந்தது. அவன் நடிப்புக் குலைந்தது. நெடுநேரம் சிந்தித்த பின் எப்படியாவது பாறையின் உச்சி சென்று அப்பக்கம் கடந்து செல்லும் கப்பல்களைச் சைகை காட்டி அழைப்பது என்று முடிவு செய்தான். டூவ்ரே இரண்டு வரிசையாக நீண்டு கிடந்தது. கப்பல் முட்டியது அதன் வெளி முனையிலேயே. இரண்டு வரிசைக்கும் இடையே இடுங்கிய கடற்கால் கிடந்தது. அதன் மறுகோடியில் இரு வரிசைகளையும்விடப் பலமடங்கு உயர்ந்த ஒரு பாறை இருந்தது. அதன் உச்சியில் முன் ஒரு மனிதன் உணவின்றிக் கிடந்து மாண்டு எலும்புக்கூடானான். அது முதல் அது மனிதப் பாறை எனப்பட்டது. இந்த மனிதப் பாறைக்கு நீந்திச் செல்லும் எண்ணத்துடன் குளுபின் கடலில் குதித்தான். குதித்த வேகத்தில் அவன் கடலின் அடித்தலம் வரை சென்றான். அதன்பின் அவன் நீர்ப்பரப்புக்கு வர இருந்தான். அதற்குள் யாரோ, எதுவோ, காலைப்பற்றி இழுத்தது. அவன் மீண்டும் கடலினுள் சென்றான். எழுபத்தையாயிரம் வெள்ளியை அரையில் சேர்த்த வண்ணம் அவன் கடலில் அமிழ்ந்து சென்றான். கடற்பரப்பில் அலைகள் பேய்ச் சிரிப்புச் சிரித்தன. 13. காதல்வீரன் பெற்ற கட்டளை “டியூராண்டு கடலில் உடைவுற்றது!” இச்செய்தி ஊரில் பெருங் கிளர்ச்சி உண்டுபண்ணிற்று. சிலர் இம்முடிவை விரும்பியிருந்தனர். அவர்கள் உள்ளுர மகிழ்ந்தனர். பெரும்பாலோர் வருந்தினர். ஆனால், லெத்தியரிக்கு அது இடியேறாயமைந்தது. அவன் வாழ்வின் ஆர்வம், நம்பிக்கை, உயிர்த்துடிப்பு யாவும் ஒரு நொடியிலகன்றது. அவன் தசைகள் தளர்ந்தன. உடல் சோர்ந்தது. டெரூசெட் அனுதாபத்துடன் அவன் கையைப் பற்றி ஆறுதல் கூற முயன்றாள். ஆனால், முதல் இடியை அடுத்து வேறு செய்திகள் வந்தன. அவை துன்பம் போக்கவில்லை. ஆனால், மரத்துப் போன உணர்ச்சிகளைக் கிளறின. கப்பலோட்டிகள் குளூபினின் வீர முடிவுபற்றி வானளாவப் புகழ்ந்தனர். பெருந்தன்மையுடன் கப்பலின் கணக்குக் குறிப்பேடுகளை அவன் தந்ததைக் குறிப்பிட்டனர். கப்பல் உடைந்தாலும் தாம் வரும்வரை மூழ்கவில்லை என்றும் கூறினர். அதற்குச் சில மணி நேரங்களுக்குப் பின் டூவ்ரேப் பாறை வழியாக ஷீல்டீல் என்ற கப்பல் வந்தது. டியூராண்ட் அடுத்த கடலெழுச்சி யால் பாறையிலிருந்து தூக்கி எறியப்பட்டு உடைந்ததென்றும், அதன் இயந்திரப் பகுதிகளும் நடுச்சட்டமும் உறுதியாயிருந்த தனால் உடையாமல், டூவ்ரே வரிசையின் இரு பாறைகளிடையே அவை சிக்கிக் கொண்டிருந்ததைத் தான் பார்த்ததாகவும் அதன் மீகாமன் கூறினான். ‘இரவினுள் யாராவது சென்றால் இயந்திரத்தைப் பழுதுபடாமல் மீட்கலாம்’ என்றும் அவன் சொன்னான். “யார் போவார்கள், இந்நேரத்தில்?” “போனாலும் ஒருவர் போய் என்ன பயன்? கப்பல் தச்சர்கள் பலர் அல்லவா வேண்டும்?” “இயந்திரம்தான் கப்பலில் விலையுள்ளது. அதை மீட்டால், கப்பலழிந்தாலும் அழியவில்லை என்றே கூறலாம்!” இவ்வாறாகப் பலர் பலவாறாகப் பேசினர். “டியூராண்டின் இயந்திரம் ஒரு இரவு முழுவதும் கெடாது இருக்கும் என்று நான் உறுதி கூறுவேன். ஆனால், அதை மீட்டுக்கொண்டு வரத்தக்க வீரன் உலகில் இருக்க முடியாது” என்றான், டியூராண்டின் ஒரு கப்பலோட்டி. லெத்தியரி, இப்போது முதல் முதலாக வாய் திறந்தான். “மீட்டுக்கொண்டு வரத்தக்க வீரன்மட்டும் இருக்கக் கூடுமானால்...” அவன் முடிப்பதற்குள், டெரூசெட் “அவனை நான் மணந்து கொள்வது உறுதி” என்றாள். கில்லியட் அருகில் நின்றிருந்தான். “இது உறுதி தானா, டெரு!” என்றான். அவள் வியப்புடன் ‘ஆம்’ என்று தலையசைத்தாள். லெத்தியரியின் கண்களில் ஒளி வீசிற்று. அவன் “அத்தகைய வீரனுக்குக் கட்டாயம் டெரூசெட் சொந்தமாவாள். கடவுளறிய இதை நான் உறதி கூறுகிறேன்” என்றான். அடுத்தகணம் கில்லியட் அங்கே இல்லை! 14. எங்கும் கில்லியட் மயம்! இரவில் முழுமதி வானில் ஒளி வீசிற்று. ஆயினும் கடலகத்தில் படகுகள் எதுவும் செல்லத் துணியவில்லை. டியூராண்டின் முடிவு அவ்வளவு அச்சம் ஊட்டியிருந்தது. அத்துடன் நண்பகலில் சேவல் கூவிற்று என்ற செய்தியும் பரவிற்று. இது தீமையின் அறிகுறி என்று கெர்ஸ்னி மக்கள் எண்ணினர். ஆனால், ஒரே ஒரு படகு இந்த இரவிலும் துணிச்சலாக நடுக்கடலை நோக்கி விரைந்து சென்றது. கரையை நாடி விரைந்து வந்த மீன் படவர் அதைக் கண்டு வியந்தனர். கடற்கரையில் மீன் படவர் சேரிகள்தோறும் கடலில் அதன் பாய்கள் கண்டு பெண்டிர் மூக்கில் கை வைத்தனர். ‘பேய் போல, கடலில் செல்வது அதுவும் நள்ளிரவில் செல்வது யார்?’ என்று அவர்கள் மலைத்தனர். பாறைகளின் பின் ஒரு பாய்க்கப்பல் செல்வது கண்ட பல ஊர்ப்புற மக்கள் அது பாய் என்று உணரமாட்டாமல் கடலகத்தில் ஒரு கரும் பூதம் உலவுகிறது. என்ற புரளியைக் கிளப்பினர். ஒரு காதலன் மன உறுதி, கெர்ஸ்னி மக்களை எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணிக் கற்பனை செய்யும்படி தூண்டிற்று. ஆனால், உண்மைச் செய்தி அவர்கள் கற்பனைகளை யெல்லாம் கடந்த ஒரு புதிர். தன்னந் தனியாக யார் உதவியுமின்றி, எவரும் தன் புகழில், வெற்றியில் பங்கு கொள்ள விடாமல், எவரும் தனக்கு முன் சென்றுவிடக் கூடாதே என்ற அவசரத்துடன் கில்லியட் டூவ்ரேயை நோக்கி - பாறைகளிடையே காலகாலன் என்று கருதப்படும் டூவ்ரேயை நோக்கி - கில்லியட் விரைந்து சென்றான். அவன் உணவு கொள்ளவில்லை, நன்கு உடுத்தவில்லை. அவ்வளவு படபடப்புடன் விரைந்து சென்றான், டெரூ செட்டைப் பெறுவதற்கான வீரச்செயல் செய்ய! தனி ஒருவனாய் டியூராண்ட் கப்பலின் இயந்திரத்தைத் தூக்கிக் கொண்டுவர! வேலையின் கடுமை அவன் அறியாததல்ல. பல மனிதர், பல கருவிகள் சாதனங்களுடன் செய்வதற்குக்கூட அரிய செயல் அது என்று அவனுக்குத் தெரியும். ஆனால், அச்செயலுக்கான பரிசு டெரூசெட் என்ற எண்ணம் அவன் துணிச்சலுக்கு இறக்கை தந்தது. அவன் அப்பரிசு பெற, கடலைப் பாயாகச் சுருட்டத் தயார்! வானத்தை வில்லாக வளைக்கத் தயார்! கடலையையும் அலையையும் அவன் கடந்து சென்றான் பாறையும் புயலும் அவனை அச்சுறுத்தவில்லை. டூவ்ரேயின் பாழ்ந்தடத்தைக் காணும்வரை அவன் ஓயவில்லை. அச்சுறுத்தும் அப்பாறைக்குச் சென்று அமைந்துதான் அவன் சிந்திக்கத் தொடங்கினான். 15. திட்டமும் ஏற்பாடும் தான் மேற்கொண்ட வேலையை வேறு எவரும் செய்ய முடியாது என்பதையோ, அதற்குத் தன்னைத் தூண்டிய பரிசு வேறு எவரையும் தூண்டியிருக்க முடியாது என்பதையோ, கில்லியட் அறிய மாட்டான். அறிந்தால் டூவ்ரேயை அடைய அவசரப்பட்டிருக்க வேண்டியதில்லை. கரையோரமான நேர் குறுக்கு வழியில் வந்திருக்க வேண்டியதுமில்லை. எவரும் தனக்கு முன்சென்று பரிசுக்குப் போட்டியிடக்கூடாதே என்று கவலைப்பட்டிருக்க வேண்டியதுமில்லை. அத்துடன் தன் அவசரத்தில் அவன் தன் பாரிய வேலைக்குரிய கருவிகளையும் ஆய்ந்து எடுத்துக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட வெறுங் கையுடனேயே வந்தான். நல்லகாலமாக அவன் கப்பலில் எப்போதும் இருந்துவந்த சில ஆயுதங்கள் அவன் எடுக்காமலே அதில் கிடந்தன. டூவ்ரேயின் இரு வரிசையான பாறைகளில் வலப்புறப் பாறை பெரிது. இடப்புறம் சிறிது. அவற்றின் இடைவெளி ஒரு இருபது இருபத்தைந்தடி அகலமேயிருக்கும். டியூராண்ட் பொங்கிவரும் கடலில், புயலின் வேகத்தில் தொலைவிலிருந்து வான வெளியிலேயே தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், அது பாறை வரிசைகளின் உச்சியை அடுத்த இடைப் பள்ளத்தில் உத்தரம்போல மாட்டிக்கிடந்தது. ஷீல்டீல் கப்பல் மீகாமன் கூறியபடியே இயந்திரம் ஒரு சிறிதும் உருக்குலையாமல் இருந்தது. ஆனால், கப்பலின் நடுச் சட்டம் தவிர மற்றப் பகுதிகள் நொறுங்கியும் முறிந்தும் கடலில் வீழ்ந்து போயிருந்தன. இயந்திரத்தின் புகை போக்கி அந்தரத்தில் நீண்டிருந்தது. துடுப்புக் கட்டைகள் சிறிது தாழ்ந்திருந்தாலும், பெருவாரி சேதமடை யாமல் இருந்தன. பல பாரக்கல் எடையுடைய இயந்திரத்தைக் கீழே எப்படி இறக்குவது? அச்சட்டத்திலிருந்து எப்படி பெயர்ப்பது? இவற்றைச் செய்யக் கருவிகள் வேண்டுமே! உளி, சுத்தி, ஆணி திருகி, முடுக்கி, ஆணிகள், பணிமரங்கள் இரும்பு ஆகியவற்றுக்கு எங்கே போவது? இவ்வளவும் செய்ய ஓராள் போதுமா? எத்தனை நாள் பிடிக்கும்? உணவுக்கு என்ன செய்வது? குடி தண்ணீருக்கு எங்கே போவது? காற்றுக்கும் மழைக்கும் எங்கே ஒதுங்கு வது? இரவு துயில்வது எங்கே? இவ்வண்ணம் எண்ணற்ற கேள்விகள் கில்லியட்டின் உள்ளத்தைத் துளைத்தன. இத்தனை வேலையும் கூடிய விரைவில் ஆகவும் வேண்டும். கப்பலை ஆங்கார வேகத்தில் அன்று அழித்த கடலும் புயல் காற்றும், இயந்திரத்தை நீடித்து நின்று அழிக்க முடியும். அதன் பளுவே காற்றடிக்கும்போது அதை விழச்செய்து விடலாம், கடலில் விழுந்தால் அதை மீட்பது அரிது. எப்படியும் வேலையில் இறங்கியாய் விட்டது. இனி இயந்திரத்தை மீட்க முடிந்தால், அதனுடன் ஊர்செல்ல வேண்டும். இல்லாவிட்டால் கடலுக்கும் புயலுக்கும் தன்னை ஒப்படைத்து விடுவது என்று அவன் துணிந்தான். சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்காலளவு என்பார்கள். சமுத்திரமும் அதனினும் கொடிய புயலும் அவற்றிலும் கடுமை வாய்ந்த அப்பாறையும் அவன் துணிச்சல் கண்டு கறுவுவது போல் தோற்றிற்று. அவனிடம் ஒரு கத்தியிருக்கிறது. கப்பலில் சில சுத்தி, ஒன்றிரண்டு ஆணிகள், முடிச்சிட்ட ஒரு ஏறுவடம் ஆகியவை இருந்தன. சில மாப்பண்டச் சில்லுகள் (பிஸ்கோத்துகள்) சிறிது தண்ணீர் இருந்தது. அவன் முதலில் உண்டு களையாறினான். பின் தங்கிடம் தேடினான். உயிரை வெறுத்து, அதேசமயம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அவன் நீந்தியும், வழுக்கலான பாறைகளில் நடந்தும், எங்கும் சுற்றிப் பார்வையிட்டான். தன் கப்பல் தங்குவதற்குரிய இடம் எது; கைப்பிடிக்கும், வேலைப் பாட்டுக்கும் உரிய பாறை விளிம்புகள் எங்கெங்கு உள்ளன; தங்க, இருந்து வேலை செய்ய, உணவு, கருவிகளை வைத்துக் காக்கத்தக்க இடம் எங்கே என்று தேடினான். மனிதப் பாறையருகிலுள்ள சிறிய குடாவளைவில் அவன் தன் பாய்க் கப்பலைச் சேர்த்தான். வரிசைப் பாறைகளில் உள்ள சிறு குகைகள் இரண்டில் ஒன்றைத் தன் கொல்லுலைக் கூடம் ஆக்கினான். மற்றொன்றினைச் சேம அறையாக்கினான். பெரிய டூவ்ரேயின் உச்சிக்குப் பெரு முயற்சியில் ஏறிப் பார்த்தான். அதனுச்சியில் பாறையின் முறிந்த பகுதிகளிடையே ஒரு ஆள் உடல் செல்லத்தக்க நீண்ட புழை கண்டு அதில் இரவு தங்கினான். இவ்விடத்தில் இதுவரை இருந்துவந்த பறவைகள் இரவில் நெடுநேரம்வரை அவனைச் சுற்றி வட்டமிட்டு அவனைத் துரத்தப் பார்த்தன. பின் தம் குடியிருப்பை மனிதனிடம் விட்டுவிட்டு அவை தம் குடியிருப்பை மனிதப் பாறைக்கு மாற்றின. கடலில் வேலியிறங்கிய சமயம் பாறைகளுள் படிந்தும் அலைகளில் ஒதுங்கியும் கிடந்த கப்பலின் கட்டைகள், கயிறுகள், சங்கிலிகள், நங்கூரக் குண்டுகள் ஆகியவற்றை அவன் சேகரித்தான். இயந்திரச் சட்டத்தில் தன் பளு தாக்காதபடி மெல்ல ஏறிச்சென்று அதிலுள்ள பொருள்களை அகற்றி அதன் பளுவைக் குறைத்தான். அவன் சேர்த்த கட்டைகளே அவனுக்கு விறகாயின. இரும்புத் துண்டுகளே தீக்குச்சிகளாயின. கப்பலில் தொங்கிய கயிறுகளை முறுக்கி வடங்களாக்கினான். கப்பல் சட்டத்தின் நடுப்பாலம் இரும்புக் கம்பியாலானது. அதைப் பிரித்தெடுத்து, அரமாகவும் ஆணிகளாகவும் சிறுகச் சிறுக மாற்றினான். பாறையில் சுழன்றடித்த காற்றை அவன் கொல்லுலைக் குகையில் நுழையாமல் மரத்தட்டிகளால் தடுத்து, சிறு புழைகள் வழியாக வரச்செய்து அதன் மூலமே ஊதுலை உண்டு பண்ணினான். ஒரு வார வேலைக்குப்பின் இயந்திரத்தை இறக்கும் திட்டம் ஒரு வகையில் உருவாயிற்று. எதிரெதிரயிருந்த பாறைகளின் இடுக்கில் கட்டைத் துண்டுகளை வைத்து அடைத்து அதில் ஆணிகள் அடித்தான். இவற்றின் உதவியால் இயந்திரச் சட்டத்துக்கு மேலும் கீழும் பல குறுக்கு விட்டங்கள் பூட்டினான். அவற்றில் கம்பிகளிட்டு வடங்களின் மூலம் இயந்திரத்திலும் சட்டத்திலும் மாட்டினான். எல்லாக் கப்பிகளின் வடங்களையும் ஒரே ஒரு கயிற்றால் இழுக்கும்படி அமைத்ததுடன், தன் பளுவுக்கு மேற்படாத பளுவுடனே இயந்திரம் இயக்கப்படும்படி பல நிலையான கப்பிகளையும் இயங்கு கப்பிகளையும் இடையிட்டு வைத்தான். ஒரு நாள் காலையில் உணவு இருக்குமிடத்தில் அவன் உணவைத் தேடினான். அதைக் கட்டோடு காணவில்லை. காற்று அதைக் கீழே தள்ளியிருந்தது. அதன் சிந்தல் சிதறல்களைப் பறவைகள் கொத்தித் தின்றுவிட்டன. தங்கிடத்தை அவன் பறித்ததற்கு மாறாக, அவை அவன் உணவைப் பறித்தன. அவன் இதுமுதல் சிப்பி, நண்டு, கடற்காளான் ஆகியவற்றையே தேடி உணவாகக் கொள்ள வேண்டியதாயிற்று. தண்ணீர், உணவை விடப்பெரிய பிரச்னை ஆயிற்று. கடல் நீரில் நனைந்து உடைகள் ஈரம் உலராதிருந்தன. ஈர உடைகளிடையே அதன் உப்பு, விடாயைப் பெருக்கிற்று. அச்சமயம் அவன் பறவைகளை நினைத்துப் பார்த்தான். அவை செல்லுமிட மெல்லாம் கூர்ந்து கவனித்துப் பின்பற்றினான். பாறையில் மழைநீர் தங்கிய இடத்தில் அவை நீர் குடித்தன. அவனும் அவற்றையே நாடிச் சென்று குடித்தான். இதற்குள் அவன் தாடி மீசை வளர்ந்து காட்டு மனிதன் போலத் தோன்றியதனால், பறவைகள் அவனைக் கண்டு அஞ்சாமல் பழக்கமாயின. அவனும் கடும் பசியிலும் அவற்றை உணவாக நாடாமல், அவற்றுடன் நேச உடன்படிக்கை செய்து கொண்டான். ஒருநாள் கடற்பாசி தேடிப் பாறைகளிடையே ஒரு குகையில் நெடுந்தொலை சென்றான். குகையின் கோடியிலுள்ள இடுக்கால் நீரின் கீழுள்ள ஒரு அழகிய குகைக் காட்சியைக் கண்டான். நீரின் கீழுள்ள ஒளிக்கதிர் பன்னிற வண்ணங்களாய் காட்சியளித்தன. குகையினுள் உட் குகை ஒன்று இருந்தது. அதில் ஏதோ ஒன்று, ஒரு மனித உருவம்போல் காட்சியளித்தது. தொலைப் பார்வைக்கு, குகை -கோவிலாகவும், உருவம் அமைந்த உட்குகை - அதன் மூலச் சிலையாகவும் தோன்றிற்று. தன்னுடைய பெரு வேலைக் கிடையில் இதை அவன் பொருட்படுத்தவில்லை. எல்லா வேலையும் முடிந்த பின் கில்லியட் தன் பாய்க் கப்பலைப் பாறைக்கிடையில் கொண்டுவந்து நிறுத்தினான். அவன் கப்பிகளின் மூலமும் வடங்கள் மூலமும் இயந்திரத்தை மெள்ளப் பாய்க் கப்பலின் மீது இறக்கினான். முன்பே இரண்டையும் அளந்திருந்ததனால், இயந்திரமும் சட்டமும் அதில் பொருந்தின. ஆனால், எதிர்பார்த்தபடி அவன் வெளியேவர முடியவில்லை. ஏனென்றால் அப்போது வேலியேற்றமாயிருந்தால், டியூராண்டின் புகைபோக்கி பாறையிலுள்ள மேலிட இடுக்கில் மாட்டிக் கொண்டது. தண்ணீர் மட்டம் தாழ்ந்த பின்பே அது இடுக்கிலிருந்து விடுபட்டு, அவன் வெளியேற முடியும். அதற்காக அவன் காத்திருந்தான். 16. புயலுடன் போராட்டம் இரவில்தான் இனி கடல் தாழும். காலையில்தான் புறப்பட முடியும். அதுவரை ஓய்வு கொள்வதென்று அவன் பாய்க் கப்பலிலேயே படுத்து உறங்கினான். நள்ளிரவு இருக்கும். ஏதோ ஒன்று உடலை நெட்டித் தள்ளிற்று. எழுந்து பார்த்தான். எங்கும் ஒரே நீலநிற ஒளி படர்ந்திருந்தது. அது கடல் நீரிலிருந்தே வந்ததென்று கண்டான். பட்டை பட்டையான ஒளிக்கீற்றுகளும் அவற்றினிடையே நிழற்பிழம்புகளும் நீர்ப்பரப்பில் தளதள வென்று பிறங்கின. இது கனவா, நனவா என்ற ஐயத்துடன் கில்லியட் மீண்டும் மீண்டும் கண்களைத் துடைத்துக்கொண்டு பார்த்தான். நனவுதான். ஆனால், அது ஒரு கோர நனவு என்பதை அவன் விரைவில் உணர்ந்தன். கடலில் இவ்வொளி, அடுத்துவரும் பெரும் புயலுக்கு அறிகுறி என்று அவன் அறிவான். கடலின் ஆற்றல் பெரிது; ஆனால், காற்றின் ஆற்றல் அதனினும் பெரிது. இரண்டும் சந்திக்கும் பரப்பிலே மனிதன் மிதப்பது இந்நிலையை நெருக்கடி ஆக்கிற்று. ஆனால் கடல், காற்று இரண்டும் கரையை அடுத்தே முழு உயிர் பெறுகின்றன. கரை பாறையாயிருந்தால்- டூவ்ரே போன்ற இடுக்கமான பாறையாயிருந்தால், நீரும் காற்றும் சேர்ந்த ஆற்றல் இன்னும் பன்மடங்காகப் பெருக்கம் அடையும். நேற்றுவரை இந்தப் புயல் வந்திருந்தால், இந்த ஆற்றலுக்கு டியூராண்டுதான் ஆளாயிருக்கும். அவன் பாறையின் குகைக்குள் பாதுகாப்பாக இருந்து தப்பிப் பிழைத்திருக்கலாம். பாய்க்கப்பல் மனிதப்பாறையின் பாதுகாப் பிலும், இருந்திருக்கும். ஆனால், அவன் இருபாறைகளின் இடுக்கில் பாய்க்கப்பலுடன் டியூராண்டுடனும் அகப்பட்ட இந்த நேரம் பார்த்து, அது தன்னை அழிக்கத் திட்டமிட்டிருக்கிறது என்று அவன் கண்டான். காற்றின் ஆற்றல் நீர்ப் பரப்பிலேயே பெருங் கொந்தளிப்பு உண்டு பண்ணும். நீர்ப் பரப்பிலும் எல்லா அலைகளும் குறுகிய பாறையிடுக்கில் நுழையும்போது தான் நீர் பேயாட்டமாடும். அதற்குத் தப்பிப் பிழைக்க அந்நீர்ப் பரப்பில் அலைகளின் வேகத்தைத் தடுப்பது ஒன்றுதான் வழி என்று கில்லியட் கருதினன். நீரிடுக்கினுள், அலைகள் மூன்று திசைகளிலிருந்துதான் வர முடியும். ஏனெனில், ஒரு திசையில் மனிதப் பாறை இருந்து அதை அடைத்து விட்டது. அம்மூன்று வாயில்களுள், தெற்கிலுள்ள பாறையின் முன்வாயில் வழி ஒன்று. இதுவே தலைவாயில். மனிதப் பாறையருகில் கிழக்கிலும் மேற்கிலும் பாறை வரிசையில் இரண்டு இடைவெளிகள் இருந்தன. இவ்வாயில்கள் அலைகளுக்குமட்டும் அடைபட்டு, தண்ணீர் உள்ளே வர இடம் உண்டு பண்ணிவிட்டால், அலையின் வேகம் உள்ளே வராது. அதேசமயம் நீரின் வேகமும் குறையும். இதற்கான ஏற்பாடுகளில் அவன் முனைந்தான். டியூராண்டின் சட்டங்களிலுள்ள பலகைகளை நீண்ட வரிச்சல்களாகப் பிளந்து அவற்றால் அவன் அலைமோது சட்டங்கள் உருவாக்கினான். ஆணிகள் மூலம் அவற்றை இரு பாறைகளின் வாயிலும் நீர்ப்பரப்புக்குச் சற்று மேலும் கீழுமாகப் பொருத்தினான். இரண்டு சட்டங்களால் முன்வாயில் அடைபட்டது. அதன் பக்கமாக முழு இடர் பாதுகாப்பு ஏற்பட்டது. கிழக்கு வாயிலிலும் அதுபோல் இரண்டு சட்டங்கள் அடைத்தான். மேற்கு வாயிலிலும் அடைக்க முற்பட்டான். இரண்டாவது வாயிலின் சட்டம் முடிப்பதற்குள் வானம் முழங்கிவிட்டது. முகில் வானை மறைத்து விட்டது. அடிவான எல்லைக்கு அப்பாலிருந்து புயல் உறுமிக்கொண்டு வந்து கடலில் அமளி செய்து பாறையைச் சுற்றி வட்டமிட்டது. அலைகள் மலைகளும் மலைக்கும் வண்ணம் எழுந்தலறிக் கொண்டு கடலிடுக்கில் திருவிளையாடல் தொடங்கின. ஆனால், தெற்கு வாயிலின் சட்டத்தில் மோதி அலைகள் நொறுங்கின. ஆற்றலழிந்து நீர் உள்ளே சென்றது. புயலும் அலையும் மீண்டும் மீண்டும் படையெடுத்தன. கில்லியட்டின் மரக்கோட்டை முன் காற்றின் சம்பம் சாயவில்லை. இரண்டு மூன்று நாழிகைக்குப் பின் மீண்டும் அமைதி ஏற்பட்டது. இவ்வமைதி திசைமாற்றத்துக்கான ஓர் ஓய்வு மட்டுமே என்று கில்லியட்டுக்குத் தெரியும். அடுத்த வீச்சு மேற்கிலிருந்து வந்தால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது; கிழக்கில் வந்தால் ஒரு சட்டம் அதைத் தடுத்து நிற்கக் கூடும்; கிழக்கிலேயே வரவிருந்தது என்று அவன் உய்த்துணர்ந்தான். ஆகவே, தான் செய்து முடித்த இரண்டு சட்டங்களில் ஒன்றைக் கிழக்கிலே மாட்டி ஒன்றை மேற்கில் முதற் சட்டமாக அடைத்தான். கிழக்கே கடலின் படையெடுப்புத் தொடங்கிற்று. இங்கே சட்டங்களின் உறுதி குறைவு. பாறைகளும் முன்னுள்ளவைபோல உறுதியல்ல. ஆயினும், தெற்கும் மேற்கும் அடிக்கும் காற்றைவிட இங்கே காற்றுக் குறைவு. சட்டங்கள் அதைத் தாங்கிக் கொண்டன. காற்று இறுதியில் மேற்கே அடிக்கத் தொடங்கிற்று. இவ்வாயிலில் சட்டம் ஒன்றுதான் இருந்தது. அது புயலின் தாக்குதலைத் தணித்தது. ஆனால், சட்டம் வளைந்து நெளிந்தது. புயலின் இடை ஓய்வில் கில்லியட் அவசர அவசரமாக தான் செய்த இரண்டாம் சட்டத்தை அண்டை கொடுத்தான். ஆனால், முதல் சட்டத்தைப் புயல் சிதைத்தபின் அதன் துண்டுகளே இரண்டாவது சட்டத்தைத் தகர்க்கும் உதை குண்டுகளாயின. இரண்டாவது சட்டமும் தளர்ந்தது. எந்த நொடியிலும் புயலின் தாக்குதல் தன்னை அழிக்கலாம். தான் அரும் பாடுபட்டு இறக்கிய டியூராண்டையும் அதைத் தாங்கிய பாய்க்கப்பலையும் மூழ்கடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. தன் கப்பல் அழிவதானால், தான் அழிந்தபின் அழியட்டும் என்று அவன் தனக்குள் உறுதி செய்து கொண்டான். கடைசிப் பேரலை ஒன்று பாய்க் கப்பலைப் பாறை மீது மோதிற்று. கப்பல் பாறையில் நேரடியாக மோதியதாகத் தெரியவில்லை. அதன் மீதிருந்த டியூராண்டின் சட்டமே மோதுதலின் பெரும்பகுதியை ஏற்றது, அதன் புறப்பகுதிகள் அகப்பகுதியிலிருந்து பிளவுபட்டு, கப்பலுக்குப் பாரமாய் தொங்கின. புயல் ஓய்ந்துவிட்டது. ஆனால், பாய்மரத்துக்கு எந்த நேரமும் இடர் நேரக்கூடும். இரண்டாகப் பிளந்த டியூராண்டின் பகுதி அதன் சமநிலையைக் கெடுத்தது. ஆகவே கில்லியட் அவசர அவசரமாகக் கைக்கோடரி எடுத்துப் பிளவுற்ற பகுதியை முழுதும் வெட்டிப் பிரித்தான். இதனால் தொங்கிக் கொண்டிருந்த பகுதிகள் கடலில் விழுந்தன. பாய்க்கப்பலின் பளுவும் குறைந்தது. இப்போத வேலை முற்றிலும் முடிந்துவிட்டது. புறப்பட வேண்டிய குறை ஒன்றுதான். ஆனால், காலையில் புறப்பட்டால் தான் கெர்ஸ்னியில் பகலில் சென்று சேரமுடியும். ஆகவே அதற்கிடையே உணவுதேடி அவன் புறப்பட்டான். இங்கே ஏற்பட்ட தடை, பயணத்தை இன்னும் ஒருநாள் சுணக்கிற்று. ஆனால், அது தடையாக மட்டு மில்லை. நற்பேறாகவும் அமைந்தது. 17. தீமையின் கருவில் நன்மை உணவில்லாமல், நண்டும் சிப்பியும் காளானும் உண்டு கில்லியட் பழகிவிட்டான். ஆனால், இப்போது சமைக்கத் தக்க உணவு எதற்கும் வழியில்லை. ஏனெனில், அவன் கொல்லுலை முழுதும் நீர் மாயமாய்ப் போயிற்று. இரண்டு நாளாகப் புயலில் நண்டும் சிப்பியும் கடல் பாறைகளை விட்டகன்று சென்று விட்டன. அவற்றைத் தேடி அவன் பாறையிடுக்கில் நெடுந்தொலை சென்றான். ஓரிடத்தில் காலடியிலிருந்து நீருக்குள் ஒரு பெரிய நண்டு ஓடிற்று. அதை அவன் தொடர்ந்து வேட்டையாடினான். அது நீரடியிலுள்ள ஒரு குகையில் சென்றது. நீருள் மூழ்கி அவனும் பின் தொடர்ந்தான். உள்ளே குகை நீர் மட்டத்துக்கு மேலே உயர்ந்திருந்தது. அதைக் கண்டதும் அதுமுன் வேறு ஒரு குகையின் கோடியிலுள்ள விளிம்பின் மூலம் அவனுக்குக் காட்சியளித்த அதே குகையே என்பது தெரிந்தது. அதன் அழகு முன்பே அவனைக் கவர்ச்சி செய்திருந்தது. இப்போது நேரிலேயே காண, அது கண்கொள்ளாக் காட்சியாகவே இருந்தது. சுற்றிலும் பாறையில் நீருக்கு வெளியே மங்கிய நீல நிறமும், நீருக்குள்ளாகப் பவளவண்ணமும் உடைய கொடிகள் ஒட்டிக் கொண்டிருந்தன. நீரின் அசைவால் அவை அடிக்கடி நிறமாற்றமடைந்தன. தள மட்டத்திலுள்ள கூழாங்கற்கள் உருண்டு திரண்டு பளபளப்பாய், குருதி நிறமாயிருந்தன. குகையினுள் குகையாயிருந்த பகுதியும் பெரிதாகவே இருந்தது. அதில் முன் பகுதியில் ஏதோ ஒன்று நண்டுப் புடைபோல் தென்பட்டது. தான் துரத்தி வந்த நண்டு அதில்தான் பதுங்கியிருக்கக்கூடும் என்று அவன் எண்ணினான். பசியார்வத்தால் அதைப் பிடிக்க அவன் துடித்தான். கையை உட்குகை வழியாகச் செலுத்தி அதில் துழாவினான். துழாவிய வுடன் கையில் ஏதோ கடித்தது மாதிரி இருந்தது. நண்டுதான் கடித்ததென எண்ணி அதைப்பற்ற முனைந்தான். அதற்குள் பனி போன்ற குளிர்ச்சியும் - மின் விளக்கு போன்ற மின்வெட்டும் பாம்பு போன்ற - நெகிழ்ச்சியுமுடைய ஏதோ ஒன்று அவன் கையைச் சுற்றிக்கொண்டது. கையை எடுக்க நினைத்தான்; எடுக்க முடியவில்லை. அத்துடன் அதேபோன்ற பிற வடிவங்கள் மூன்று அவன் தோள்களையும் கால்களையும் சுற்றின. மறு கையையும் ஒன்று சுற்றத்தொடங்கிற்று. கில்லியட் தலை சுழன்றது. அவன் கிட்டத்தட்டச் செயலற்றவனானான். குகையில் நுழையும்போது அவன் கத்தியை எடுத்து வாயில் கவ்வியிருந்தான். இப்போது அவன் வழங்கத் தகுந்த ஆயுதம் அது ஒன்றே. பிடிபடாத கையில் அதை எடுத்து ஓங்கினான். அவனைப் பிடித்த உருவம் சிலந்தி போன்ற ஒரு உருவம், உடல் சிலந்திபோலவே வெறும் தோலாயிருந்தது. தலையைச் சுற்றிப் பாம்புபோல ஐந்தடிவரை நீளமுள்ள எட்டு உடற் பகுதிகள் இருந்தன. இவை ஒவ்வொன்றிலும் இருபுறமும் ஊசிபோல் குருதியைக் குத்தி உறிஞ்சும் சிறு முட்கள் இருந்தன. இச்சிலந்தி மீன் சிலந்திபோல உடலைக் குடைவடிவில் சுறுக்கிப் பதுங்கியிருக்கும். இரைகளைக் கண்டால் மூன்று உடற் கூறுகளால் பாறையைப் பற்றிக்கொண்டு மற்றக் கூறுகளால் இரையைச் சுற்றி இழுத்து உறிஞ்சும். குறுதி முற்றும் உறிஞ்சியபின் இரை வெறும் சக்கையாக விழுந்துவிடும். கில்லியட் கத்தியை ஓங்கும்போது சிலந்திமீன் அவனைப் பாறையின் பக்கம் இழுக்கும் முயற்சியில் தலையை வெளியே சாய்த்தது. இது நல்லதாயிற்று. தலை தவிர மற்றுப் பகுதிகள் வெறும் தோலாதலால், கத்தியாலும் வெட்டப்படக்கூடியவை யல்ல; ஆனால், தலை கத்தியால் துண்டிக்கப்பட்டது. உடற் பகுதிகள் செயலற்றுச் சோர்ந்து விழுந்தன. கில்லியட் தப்பினான். அழகிய கோயில் போல இருந்த அந்தக் குகை உண்மையில் இந்தப் பேய் மீன் வாழும் கோயில்தான் என்று அவன் இப்போது கண்டான். சிலந்தி மீன் அல்லது பேய் மீனால் குறுதி உறிஞ்சப்பட்ட உயிரினங்களின் உடல்களும் உடற் கூறுகளும் எங்கும் கிடந்தன. ஆனால், நண்டுகள் அவற்றின் சதையை அரித்துத் தின்று விட்டன. அந்நண்டுகளையும் பேய் மீன் தின்றுவிடுவதால் தான் நண்டுகளையும் எளிதில் அங்கே காண முடியவில்லை. ஆனால் குகையின் உட்புறம் செல்லும்தோறும் நண்டுகள் பதுங்கி அவ்விரைகளைத் தின்பது கண்டான். குகையின் அரை ஒளிக்கும் அவன் கண்கள் இப்போது பழகிவிட்டன. அதனால், அவன் குகைக் கோடியில் தன்னை நோக்கிச் சிரிக்கும் ஒரு மனித உருவைக் கண்டான். அது உண்மையில் ஒரு முழு மனித எலும்புக் கூடு. அதன் சதைகள் முற்றிலும் அரித்துத் தின்னப்பட்டிருந்தன. அதைக் காண கில்லியட்டுக்கு அச்சமும் துயரும் மிகுந்தது. தானும் அம்மனிதன் நிலைக்கு மிகவும் அருகாமையிலேயே வந்திருந்ததை அவன் எண்ணித் திடுக்குற்றான். அவ்வுருவம் யார் என்று அறிய ஏதேனும் உடைகள் எச்சமிச்சம் இருக்கிறதா என்று பார்த்தான். எதுவும் காணவில்லை. ஆனால், அரையிலுள்ள தோல் கச்சை, நீரிலூறிக் கெட்டிருந்தாலும், அரையைச் சுற்றி அப்படியே தொங்கிக் கிடந்தது. கத்தியால் அவன் அதை வெட்டி எடுத்தான். அதன் நடுவில் சதுரமான கெட்டிப் பொருள் ஏதோ இருந்தது. அது ஒரு இரும்புப் பெட்டி. துருவேறி அது திறக்க முடியாததா யிருந்தது. அவன் அதைப் பாறையில் மோதி உடைத்தான். உள்ளே இருந்து சில வெண்காசுகள் விழுந்தன. எழுபத்தை யாயிரம் வெள்ளிகளுக்குச் சரியான மூன்று நோட்டுகளும் இருந்தன. அதிலிருந்த ஒரு சிறு துண்டில் குளூபின் என்ற பெயரும் இருந்தது. எலும்புக்கூடு குளூபினுடையதே என்றும், நீந்திப் பாறைக்கு வருமுன் பேய்மீனுக்கு அவன் இறையானான் என்றும் கில்லியட் அறிந்து கொண்டான். பேய்மீன் குகை அவனக்குக் காலன் குகையாக முதலில் தோற்றிற்று. இப்போது காலத்தின் பரிசும் அவனுக்குக் கிட்டிற்று. மறுநாள் அவன் காலையிலேயே பாய்க் கப்பலுடன் புறப்பட்டு கெர்ஸ்னி வந்து சேர்ந்தான். 18. கில்லியட்டின் தன் மறுப்புப் பண்பு ஸென்ட் ஸாம்ப்ஸனில் கில்லியட் சென்றபின், யாரும் அவன் பயணம் பற்றி எதுவும் நினைக்கவில்லை. அது ஒரு பித்தன் முயற்சி என்று கருதி அதை மறந்துவிட்டனர். லெத்தியரி எதிலும் பற்றின்றி அறையில் அடைபட்டுக் கிடந்தான். ஆனால் டெரூசெட் வாழ்வில் இப்போது புதிய மாறுதல் ஏற்பட்டிருந்தது. லெத்தியரிக்கு ஆறுதல் கூறப் பழைய ஊர்வட்டமுதல்வர் ஹெரடும் புதிய முதல்வர் காட்ரேயும் வந்திருந்தனர். ஹெரடு ஆறுதல் தரும் விவிலிய நூற்பகுதி ஒன்றை வாசித்தான். அதில் “ரெபக்கா கண்களை உயர்த்தினாள்; ஈசாக்கை அவள் கண்டாள்” என்ற பகுதியை ஹெரடு வாசிக்கும்போது டெரூசெட் கண்ணை உயர்த்தினாள். காட்ரே அவளைப் பார்த்தான். அவள் உள்ளத்தில் அவளை அறியாமல் அதுமுதல் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அவளையும் அறியாமல் அது சமயப் பற்றாக வளர்ந்தது. அவள் வாரம் ஒருமுறைகூடக் கோயிலுக்குப் போகாதவள், வாரம் இருமுறை செல்லத் தொடங்கினாள். விவிலிய நூலில் அக்கரையற்றவள், அது பற்றிய காட்ரே விளக்கவுரையை எழுத்துவிடாமல் கேட்டாள். வீட்டில் அதே பகுதியை மீண்டும் மீண்டும் படித்தாள். குளூபின் ராந்தேனிடமிருந்து பெற்ற பணத்தை லெத்தியரியிடம் கொடுக்கமாட்டான் என்பது ராந்தேனுக்குத் தெரியும். ஆகவே, லெத்தியரியிடம் குளூபின் பணம் பெற்ற செய்தியைக் கூறுவதே அவனிடம் பழி வாங்க வழி என்று அவன் எண்ணினான். ஆகவே, தொலை சென்றதும் இது செய்தியை லெத்தியரிக்கு எழுதியிருந்தான். அதை வாசித்த லெத்தியரி மீண்டும் அடக்க முடியாத ஆத்திரமும் கோபமும் கொண்டான். இதனால் அவன் உறங்க முடியவில்லை. பலகணி வழியாகக் கடற்காற்று வாங்கியவண்ணம் துறைமுகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் கண்களில் அவன் உயிரினும் அரிய டியூராண்டின் புகைபோக்கி தெரிந்தது. அவன் ஓடிச்சென்று பார்த்தான். இயந்திரமும் கப்பற் சட்டமும் அப்படியே இருந்தன. இதனை, இங்கே கொண்டுவந்தது அராபிக்கதைப் பூதம் எதுவோ என்று திகைத்தான். அது பூதமாயிராமல் மனிதனாயிருந்தால், கில்லியட்டே யாக வேண்டும் என்று கருதி, அவனை அழைக்கத் துறை முகத்தின் மணியை அவசர அவசரமாக அடித்தான். கில்லியட் இதேசமயம் உள்ளத்தை முழுதும் டெரூசெட்டின்பால் ஓடவிட்டுக்கொண்டு தோட்டத்தில் இருந்தான். வேலியின் மறுபுறம் எதிர்பாராவகையில் காட்ரேயும் அங்கே வந்தான். அவன் உறவினர் ஒருவர் இறந்து அவனுக்குத் திடுமெனப் பெருஞ்செல்வம் உரியதாயிற்று. மறுநாளே அவன் காஷ்மீரில் பயணமாகச் செல்ல வேண்டும். இதைக்கூறி டெரூசெட்டிடம் விடை பெறவே அவன் எண்ணினான். ஆனால், இறுதி விடைபெறும் சமயமாதலால் தன் உள்ளக் காதலை அவன் அவளிடம் கொட்டினான். அவளும் தன் உள்ளம் அவனிடமே ஈடுபட்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள். காதலரிருவரும் ஒருவருடன் ஒருவர் மாறா உறுதி கூறிக் காதலில் இணைந்தனர். லெத்தியரி மணியடித்ததைக்கூட அவர்கள் கவனிக்கவில்லை. கில்லியட்டின் உள்ளம் உடைவுற்றது. அவன் காதல் தெய்வம் அவனை அசட்டைசெய்து வேறிடத்தில் உள்ளம் பறிகொடுத்தது. அவன் அவள்மீது சினம் கொள்ளவில்லை. அவன் வாழ்வின் ஆர்வம் முழுவதும், அவன் தியாகம் முழுவதும் கசப்பாக மாறிற்று. ஆயினும், கசப்பிலும் காதல் அவன் உள்ளப் பண்பை உயர்த்திற்று. அவன் காதலர் நலனில் அக்கரை கொண்டு வெளியேறினான். லெத்தியரி, கில்லியட்டை ஆரத் தழுவிக்கொண்டான். செய்தி யாவும் கேட்டான். குளூபினின் மாயமுடிவுபற்றிய கதை கேட்டபின் அவன் மகிழ்ச்சி கரைகடந்தது. அந்நிலையில் அவன் “ஆகா, நான் விரும்பிக் காத்துக்கிடந்த என் மருமகன் நீயே; டெரூசெட் இனி உன் மனைவி; புதிய டியூராண்டுக்கும் நீயே மீகாமன்” என்றான். அவன் பயணக் கோலத்திலிருந்தான். ஆடை மாற்றவில்லை. அதையும் பாராமல் அவன் டெரூசெட்டை அழைத்து அவளிடம் “இதோ உன் கணவன். நாளை உன் திருமணத்திற்குத் தயாராயிரு” என்று ஆணையிட்டான். காட்ரே அருகிலேயே நின்றான். காதலர் உள்ளத் துடிப்பை லெத்தியரி அறியவில்லை. ஆனால், கில்லியட் அறிந்தான். தன் காதல் தெய்வம் தனக்குரியதாகாவிட்டாலும் அதன் வாழ்வு பாழாக அவன் விரும்பவில்லை. லெத்தியரி, மணவினைக்கான ஏற்பாடுகள் செய்யும்படி கில்லியட்டிடம் கூறினான். கில்லியட் ஏற்பாடுகள் செய்தான். ஆனால், மணமகன் பெயரைக் கில்லியட் என்று பதிவு செய்யவில்லை. காட்ரே என்று பதிவு செய்தான். அத்துடன் காட்ரே மறுநாளே வெளிநாடு செல்வதால், உடனே திருமணத்துக்குத் தனி இணக்கமும் பெற்றான். கப்பலில் ஏறுமுன் காட்ரேயுடன் டெரூசெட் கடற்கரை சென்றாள். அவள் தானும் தந்தையில்லம் விட்டு வருவதாகப் பிடிமுரண்டு செய்தாள். அவன் அவளைவிட்டுச் செல்வது தவிர வழிகாணாது திகைத்தான். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த கில்லியட் முன்வந்து, அவர்களைத் தானே மணம்செய்து அனுப்புவதாகக் கூறினான். காதலருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், அவர்கள் தம் நெருக்கடி நிலையில் அதை ஏற்றனர். திருமணம் உடனே கோயிலில் நிறைவேறிற்று. “லெத்தியரி உடல் நலமின்மையால் வர முடியவில்லை. எனவே கில்லியட் அவருக்குப் பதிலாகவே நான் வந்திருக்கிறேன்” என்று கூறி அவன் கையெழுத்தைத் தானே இட்டு அதற்கான சான்றுச் சீட்டும் கொடுத்தான். கில்லியட் தாய், அவனுக்கு வரவிருக்கும் மனைவிக்காகக் கொடுத்த பரிசுகளடங்கிய பெட்டியை அவன் மணமக்களுக்குப் பரிசாகக் கொடுத்தான். ‘இது உன் மனைவிக்கல்லவா கொடுக்க வேண்டும்’ என்றாள் டெரூசெட். “நான் இனி மணம் செய்யப் போவதில்லை” என்றான் அவன். காதலர் அவனுக்காக வருந்தினர். டெரூசெட் தான் பனியில் அவன் பெயர் எழுதி அவனை நையாண்டி செய்த குறும்பையும், டியூராண்டைத் தேட அனுப்பிய ஆவேச ஆர்வ உரையையும், நினைத்து வருந்தினாள். காட்ரே, தன்னை கில்டாமரிலிருந்து காத்தவன் வாழ்வைத் தன் கையால் அழிக்க நேர்ந்ததே என்று வருந்தினான். காஷ்மீர் கப்பலில் காதலர் கைகோத்துக் கொண்டிருந்தனர். கப்பல், கில்டாமர் கடந்து சென்றது. கில்டாமர் மீது கடல் பொங்கி வந்து கொண்டிருந்தது. அதில் தான் இருந்த இடத்தில் மற்றொருவன் இருப்பதையும், அவன் நெஞ்சுக்கு மேல் தண்ணீர் ஏறி விட்டதையும் கண்டு காட்ரே “ஆ” என்றான். டெரூசெட்டும் அவ்வுருவை நோக்கினாள். “ஆ! கில்லியட்” என்றாள். கவலையற்ற அவள் உள்ளத்தில்கூட அவன் தியாகமும் பெருந்தன்மையும் ஆழ்ந்து பதிந்தன. ‘ஒரு கடல்மறவன் பெற்ற கன்னி நான். மற்றொரு கடல் மறவன் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட கன்னியானேன்’ என்று அவள் பெருமூச்சு விட்டாள். கடல் மறவர் மரபுக்குத் தன் காதல் ஒரு களங்கமாயிற்று என்று காட்ரே எண்ணினான். அவ்வெண்ணம் அவன் கையினூடாகச் சென்று டெரூசெட்டின் கைகளை அழுத்திற்று. இரண்டு கண்ணீர் துளிகள் அவள் கண்களிலிருந்து காட்ரே தோள்களில் விழுந்தன. கிலியட்டின் ஒப்பற்ற தியாகத்திற்கு அவளின் அன்புக் காணிக்கை “இருதுளிக் கண்ணீர்.” 19. அறக்கோட்டம் கண்ட கண்ட இடமெல்லாம் கடவுளர் கோட்டங்களாகக் காட்சியளிப்பது காசிமாநகரம். அதன் முக்கியக் கலைக் கோட்டமாகத் திகழ்ந்தது அரசியார் கல்லூரி. மாதத்துக்கு ஒருநாள், ஆண்டுக்குச் சில நாட்கள் கல்லூரி ஒரு முதல் தரப் பணிமனையாகவே காட்சியளிக்கும். அந்நாட்கள்தாம் மாணவர்கள் சம்பளங் கொடுக்க வேண்டிய நாட்கள். கல்வியைப் பற்றிக் கவலைப்படாத மாணவர் பலர் அந்நாட்களில் கவலைப்படுவர், கல்விக்காகச் செலுத்த வேண்டிய கூலியைக் குறித்து! அது போலவே, ஆசிரியரும் ஆட்சியாளரும் மாணவர் கல்வியில் காட்டும் கருத்தையும் கண்டிப்பையும் விட, அந்தக் கூலியில் கருத்துச் செலுத்துவர்; கண்டிப்புக் காட்டுவர்! முற்பகல் பொழுது ஏறி உச்சியை அணுகி விட்டது. ஏவலாட்களின் விரைந்த நடை தவிர, புறவாரங்களில் வேறு எவர் நடமாட்டமும் கிடையாது. கதவுகளின் வழியாகவும், பலகணிகள் வழியாகவும், புற்றின் புழை வாயில்களில் எறும்புகள் போல, மாணவர் தலைகளும், உருவங்களும் முன்னும் பின்னும் அசைந்தாடின. வெண் பொற்காசுகளின் கணகண நாதத்தி லீடுபட்டுக் கலைக்கோட்டம் பகற் கனவு கண்டு கொண்டிருந்தது. சிறைக் கோட்டத்தில் கைதிகளை வரிசை முறையில் அழைப்பது போல, ஆசிரியர் ஒவ்வொருவராகப் பெயர் கூறி அழைக்கிறார். பணம் கொடுத்தவர் அமர்கின்றனர். கொடுக்காத வர்களிடம் கேள்விகள், குறுக்கு வினாக்கள் பாய்கின்றன. மாணவர் இன்று வராமலிருப்பது அருமை - இன்று சம்பளம் கொடுக்காமலிருந்தால் பெயரடிக்கப்படும். வராமலிருந்தால் வேறு தண்டனையும் உண்டு. பணம் கொடுக்க வேண்டிய கடைசி நாள் அது. அத்தகைய நாளுக்குரிய கண்டிப்பு ஆசிரியர் மூக்குக் கண்ணாடி கடந்து அவர் கண்களில் நிழல் வீசிற்று. பெயர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீறிட்டு முழங்கின. “அமர்காந்த்!” அரவமில்லை. ஆசிரியர் மீண்டும் முழங்கினார். “அமர்காந்த்!” மாணவர்களின் இருக்கைகளை நோக்கி அவர் கண்கள் சுழன்றன. “இன்று அமர் ஏன் வரவில்லை? இன்று கொடுக்கா விட்டால், பெயரடிக்க வேண்டுமே!” என்று அவர் கேட்டார். அவர் குரலில் இப்போது கண்டிப்பு மட்டுமல்ல, சிறிது கவலையும், ஓரளவு கனிவும் கலந்திருந்தன. ஏனெனில், அமர் பணந் தரமுடியாமல் ஓடிவிடக்கூடிய மாணவனல்ல. கோடி குவித்த செல்வர் வீட்டுப் பிள்ளை. அதேசமயம் மற்ற செல்வர் வீட்டுப் பிள்ளைகளைப் போல அவன் ஆகா வழியுமல்ல; படிப்பில் மசணையுமல்ல. ஒரு மாணவன் எழுந்து நின்றான். “ஐயா அமர் பணம் வாங்கத்தான் போயிருக்கக் கூடும். நான் போய்ப் பார்த்து வருகிறேன்” என்றான். அவன் அமர்காந்தின் நண்பன் சலீம். அவனும் செல்வர் வீட்டுப் பிள்ளைதான். படிப்பில் அமர்காந்த் அவனுக்குக் குரு. விளையாட்டிலும் பொழுதுபோக்கிலும் உலகியல் காரியங் களிலும் அவன் அமர்காந்துக்குக் குரு. புறவாரங்களில் எங்கும் தேடியாய் விட்டது. இனி வீட்டுக்குத்தான் போய்ப் பார்க்க வேண்டும். ஆனால் கல்லூரியின் புறவெளியில் மரநிழலில் யாரோ முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. அது யார்? ஆம், அது அமர்காந்த் தான். சலீம் கால்கள் விரைந்து அப்பக்கம் நாடின. “ஆசிரியர் அங்கே உன் பெயரை அழைக்கிறார். நீ இங்கே நிற்கிறாய். இன்னும் நேரம் தாழ்த்தினால், பெயரை அடித்து விடுவாரே!” என்றான் அவன். அமர்காந்த் ஒன்றும் மறுமொழி கூறவில்லை. ஆனால், கலங்கியிருந்த அவன் கண்களிலிருந்து கங்கையும், யமுனையும் பாய்ந்தன. சலீம் நெஞ்சம் துடித்தது. “சம்பளத்திற்காகவா நீ கண்ணீர் விட வேண்டும்? அமர்! உன்னிடம் இல்லாவிட்டால் என்ன? நான் கொடுக்க மாட்டேனா? என்னிடம் ஏன் கேட்கக் கூடாது?” என்று அவன் கெஞ்சலாகக் கேட்டான். அமர்காந்த் இப்போதும் வாய் திறக்கவில்லை. அவன் தொண்டை கம்மியிருந்தது. ஆனால், கலக்கம் தெளிந்துவிட்டது. என்பதைக் கண்கள் காட்டின. அவன் சலீமீன் கைகளைப் பற்றிக்கொண்டு “கேட்க முடியவில்லை. உனக்கு மட்டற்ற நன்றி” என்று தழுதழுத்துக் கூறினான். “என்னிடம் கேட்க ஏன் வெட்கம்? நான் உன் நண்பன், அயலான் அல்ல; மைத்துனன்கூட அல்லவே” என்றான். அமர்காந்த் இக்கேலிப் பேச்சின் பயனாகத் தன்னுணர்வு பெற்றுச் சிரித்தான். இருவரும் கைகோத்துக் கொண்டு வகுப்புக்குச் சென்றனர். அமர்காந்தின் தந்தை சமர்காந்த் ஒரு சேட். நகரின் தலை சிறந்த செல்வருள் அவர் ஒருவர். அவர் தந்தை குடிசையில் தான் வாழ்ந்திருந்தார். ஆனால், அவர் இன்று வாழ்ந்திருந்த இடமகன்ற மாளிகை அந்தக் குடிசையையும், அதனுடன் தோழமை கொண்ட பல நூறு குடிசைகளையும், தெருக்களையும் விழுங்கி, வானளாவிய மாடகூடங்கள் மூலம் ஏப்பமிட்டது. நகரின் பொது மக்கள் வாழ்வை, முழுதும் தம் காலடியில் போட்டு அடக்கியாண்ட ஒன்றிரண்டு செல்வருள் அவர் இடம் பெற்றிருந்தார். ஆயினும், இச்செல்வ வாழ்வினாற்கூட அவர் குடும்பம் வளம் பெறவில்லை. அவர் முதல் மனைவி அமர்காந்த் பிறந்த சில ஆண்டுகளுக்குள் உயிர்நீத்தாள். இரண்டாவது மனைவி செல்வர் மனையிற் பிறந்து, புதுச்செல்வம் ஆளவந்தவள். அவள் குடும்ப ஆட்சியில் அமருக்கு ஏற்பட்ட வறுமை ஏழைக் குடிசையிலுள்ள பிள்ளைகள்கூடக் காணாதது. ஏனெனில், அது அன்பு வறுமை. தந்தையோ, மனைவி மக்களைவிடச் செல்வத்திலேயே கருத்துச் செலுத்தியிருந்தார். குடும்பத்துக்காக அவர் செல்வம் ஒம்ப வில்லை. செல்வத்துக்காகவே குடும்பம் ஒம்பினார். பிள்ளைகள் வாய்திறந்து கேளாமலே அவர்கள் தேவைகளறிந்து வழங்குபவள் தாய். அமருக்குத் தாய் இல்லை. தந்தையிடம் எதையும் கெஞ்சிக்கேட்டுத்தான் வாங்க வேண்டும். மாற்றாந்தாயிடமோ கெஞ்சினாலும் கிடையாது. அமரோ, யாரிடமும் எதையும் கேட்கப் பழகிக்கொள்ளவில்லை. தாய் தந்தையர் அவனை அசட்டைசெய்து வெறுக்க வெறுக்க, அவன், அவர்கள் பணம் அவர்கள் போக்கு ஆகியவற்றை வெறுத்தான். அவர்கள் விருப்பமறிந்து நடக்க அவன் முயலவில்லை. அவர்கள் வெறுப்பறிந்து நடந்தான். அவன் வளர வளர, இந்த வெறுப்பும் வளர்ந்தது. தாய்க்கு அடுத்த உறவு தாரம் என்பது பழமொழி. அவ்வுறவுடைய ஒரு குழந்தை மனைவியும் அமருக்கு அம்மாளிகைக்குள்ளேயே இப்போது இருந்தாள். ஆனால் சமர்காந்த் பணத்தையே நாடிக்கொண்டே மருமகள், அந்தப் பணத்தின் எல்லைக்கோட்டைத் தாண்டாதவளாயிருந்தாள். அவள் பெயர் சுகதா. அவளுக்குத் தந்தை இல்லை. தாய் இரேணுகா ஆண்பிள்ளை இல்லாக் குறை தீர, அவளை ஆண் பிள்ளையாகவே - குடும்பக் கவலையும் பொறுப்பும் அறியாதவளாகவே - வளர்த்திருந்தாள். இன்பத்திலேயே திளைத்த அந்நங்கையும் மணமில்லாத, ஆனால், அழகுடைய ஒரு வாடா மலராக விளங்கினாள். மணமாகி ஆண்டுகள் இரண்டாயிருந்தன. அதற்கிடையில் அவள் இரண்டு தடவைதான் கணவன் வீட்டுக்கு வந்தாள். இரண்டு தடவைகளிலும் ஒன்றிரண்டு நாட்களே தங்கினாள். கணவன் வீட்டுடன் தனக்குத் தொடர்பு உண்டு என்று அவள் நினைத்திருந்தாளே தவிர, அவள் கணவனுடன் வேறு தொடர்பு நாடவில்லை. எவரும் அதுப்பற்றிக் கவலைப்படவும் இல்லை. அமரும், மனைவி என்றால் தந்தைக்கு ஒரு மருமகள் என்ற அளவிலேயே மதித்திருந்தான். அவன் மாற்றாந்தாய் இப்போது இல்லை. இதனால் அவனை வெறுத்த ஒரு ஆள் குறைந்தது. ஆயினும், தந்தையும் அவனும் இன்னும் தண்ணீரும் எண்ணெயும் போலவே வாழ்ந்தனர். மாற்றாந்தாய்க்கு நைனா என்ற ஒரு பெண் இருந்தாள். அவள் அமரைவிட ஏழாண்டு இளையவள். அமர்காந்த் தன் உள்ளத்தின் அன்பு முழுவதையும் இத்தங்கைமீதே கொட்டியிருந்தான். அவளும் அவன்மீது உயிராயிருந்தாள். அவள் அன்பு வெற்று அன்பு அல்ல. குழந்தையன்பின் எல்லையுட்பட்டதும் அல்ல. அவன் உள்ளத்தின் நிலையை அவள், அவன் முகக்குறிப்பாலறிந்து அவனை மகிழ்விக்க அரும்பாடுபடுவாள். அவனுக்கு விருப்ப மான தின்பண்டங்களைச் செய்து, பாசத்துடன் அவனை உண்ண அழைப்பவள் அவளே. அவன் தேவைகளை ஒன்றுவிடாமல் கவனித்து நிறைவுசெய்து மகிழ்வாள். அவள் அன்பில் தாய்மையின் பரிவும் பெண்மையின் கனிவும் கலந்திருந்தன. கல்லூரியின் சம்பள நாளை அமர் கவனிப்பதுமில்லை. யாரிடமும் பணம் கேட்பதுமில்லை. கையில் பணம் இருந்தால் கொடுப்பான். இல்லாவிட்டால் என்ன செய்வது என்பதை அவன் சிந்தித்ததே கிடையாது. ஆனால், நைனா அவனுக்காக அந்நாளைக் கணக்கிட்டு வந்தாள். அந்த நாள் வரும்போது அவள் யாரிடமோ, எப்படியோ பணம்பெற்று, சட்டைப் பையில் போட்டு வைத்திருப்பாள். இந்த மாதமும் அவள் வழக்கம் போலக் கணக்கு வைத்திருந்தாள். ஆனால், அவள் கணக்கு நாட்டு மாதத்தில்! பள்ளிக்கணக்கோ, ஆங்கில மாதப்படி! ஆங்கில மாதத்தின் நாட்களைத் தெரிந்து கொண்டு, அதை நாட்டு மாதப்படி அவள் கணக்கிட்டு வந்தாள். ஆனால், முந்திய பிரப்ரவரிக்கு இருந்த 29-நாட்களையே இந்த ஆண்டு பிப்ரவரிக்கும் அவள் கணக்கிட்டு விட்டாள். இதனால் ஒருநாள் பிந்திவிட்டது. அமர்காந்திடம் அன்று பணம் இல்லாததின் காரணம் இதுவே. அமர் கல்லூரியிலிருந்து வீடு வந்ததும் தன் அறையில் சோர்ந்து சாய்ந்தான். சலீம் பணம் கொடுத்துதவியது பற்றி அவன் நன்றியுடையவனாயிருந்தாலும், அவன் கைக்குப் பாரமாய் விட்டோமே என்று அவன் கவலைப்பட்டான். இதற்கிடையில் நைனா வந்து, “அண்ணா, நாளை தானே உன் சம்பள நாள்?” என்று கேட்டாள். அமர் “இன்றுதான் சம்பள நாள். உனக்கு அந்தக் கவலை இப்போது எப்படி ஏற்பட்டது?” என்று எதிர் வினவினான். கவலை ஏற்பட்ட வகையை நைனா விளக்க விரும்பவில்லை. ஆயினும் பேச்சைத் தொடர்ந்தாள். “சம்பளத்துக்கு உன்னிடம் பணம் இல்லை. என்ன செய்தாய்?” அமர் தன்னிடம் இல்லாதிருந்ததை ஒத்துக்கொண்டு, சலீம் கேளாது செய்த உதவியைப் பாராட்டினான். தன் கணக்கு எங்கோ எப்படியோ தவறி விட்டது என்பதை நைனா உணர்ந்தாள். ஆனால், சலீமின் கடனை எப்படியும் தீர்க்கச் செய்ய வேண்டுமென்று விரும்பினாள். அவள் உடனே “நீ ஏன் என்னிடத்தில் கேட்கவில்லை. இதோ பணம் இருக்கிறது. நாளை சலீமிடம் கொடு” என்றாள். “உன்னிடம் பணம் ஏது?” “அப்பாவிடம் உன் சம்பளத்துக்கு என்று கேட்டுத் தான் வாங்கினேன்” “அப்பாவிடம் எனக்காக நீ கேட்டிருக்கக்கூடாது. அவரிடம் கேட்டு வாங்கித்தான் படிக்க வேண்டுமென்றால், எனக்குப் படிப்பே வேண்டாம்” நைனா சிரித்துக்கொண்டு “தருவது அப்பா அல்ல, நான்தான்” என்று கூறி அவன் சட்டைப்பையில் பணத்தைப் போட்டாள். நைனாவிடம் அவன் என்றும் கோபம் காட்டியதில்லை. இன்று காட்டினான். அந்தப் பணத்தை எடுத்து வீசி எறிந்தான். வெள்ளிக்காசுகள் மூலைக்கொன்றாக உருண்டோடிச் சிதறின. பாவம்! நைனா ஒன்றும் கூறாமல் குனிந்து வெள்ளிகளைப் பொறுக்கலானாள். அவள் வாய்பேசாப் பொறுமை அவன் சீற்றத்தைத் தணிய வைத்தது. ஆனால், அதற்குள் சமர்காந்த் அந்தப் பக்கம் வந்தார். “என்ன திமிரடா உனக்கு? பணத்தை இப்படி வீசி எறிய! சம்பாதித்தாலல்லவா தெரியும் உனக்கு, அதன் அருமை?” என்று அவர் உறுமினார். அவன் முகத்தைச் சுளித்துக்கொண்டு, “உங்கள் பணத்தின் அருமை உங்களோடு இருக்கட்டும். எனக்கு வேண்டாம்” என்றான். “என் பணம் இல்லாமலா நீ சாப்பிடுகிறாய், படிக்கிறாய்? உனக்காகப் பணம் சம்பாதிக்க நான் பாடுபடுகிறேன். உனக்குக் கொஞ்சமும் நன்றியில்லை.” “என் நன்றியை நீங்கள் எதிர்பார்க்கவும் வேண்டாம். எனக்காக எந்தப் பாடும் படவேண்டாம். நான் உழைத்துப் பாடுபட்டுப் பொருள் சம்பாதித்துக்கொள்வேன். மண் வெட்டுவேன்; அல்லது இராட்டை சுற்றுவேன். உழைப்பவரைச் சுரண்டி ஈட்டும் சோம்பேறிச் செல்வம் எனக்கு வேண்டாம்.” அறையில் நூற்கும் வட்டும் இராட்டையும் இருந்த திசையில் இருவர் கண்களும் சென்றன. அவர் சிரித்தார். “மண் வெட்ட உனக்கு வராது. நூற்பு வட்டும் இராட்டையும் சுற்றும் ஏழைக்கு ஒருநாள் முழுதும் வேலை செய்தால் நான்கணாக் கிடைக்கும். அதைக்கொண்டு உன் இன்ப வாழ்வும் ஒய்யாரப் படிப்பும் எப்படிக் கைகூடும்? காந்தி பெயர் கூறிச் செல்வர் மதிப்புப் பெறத்தான் அவை உதவும், ஏழைகள் பிழைப்புக்கே அவை உதவமுடியாதே!’ அமர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. சேட்டுகளின் இவ்வேதாந்தம் அவன் கனவுக்கோட்டையை ஊறுபடுத்திற்று. “எனக்கு இன்ப வாழ்வும் வேண்டாம், ஒய்யாரக் கல்வியும் வேண்டாம். உழைத்த கூலி கொண்டு வாழும் வாழ்வும் கல்வியுமே போதும். தங்கள் பணம் இல்லாமல் வாழ நான் பழகிக்கொள்வேன்” என்றான். “நீ பக்கிரி மனப்பான்மை கொண்டிருக்கிறாய். ஏன், பக்கிரியாவது தானே?” என்று ஏளனமாகக் கூறிவிட்டு சமர்காந்த் வெளியேறினார். ‘காந்தி பக்கிரிதானே’ என்று எண்ணிக் கொண்டான் அமர். ஆயினும் இப்பேச்சு அவன் உள்ளத்தின் மேலாப்பைக் கலைத்துவிட்டது. “இனி தந்தை பணத்துக்கேற்ற வாழ்வு வாழவோ, அதற்குரிய கல்வி கற்கவோ கூடாது” என்று அவன் தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால், சொற்கள் வாய்மூலம் வெளிவந்தன. நைனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் மிரள மிரள விழித்தாள். ‘அண்ணன் ஏன் அப்பாவை எதிர்க்கவேண்டும், அப்பா ஏன் கோபிக்க வேண்டும்?’ என்று அவளுக்கு விளங்கவில்லை. ஆனால், அவன் கவலைப்படுவது கண்டு, அவள் கவலைப்பட்டாள். அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு “அண்ணா, அண்ணா! எழுந்திரு. சூடாகப் பக்கடா செய்து வைத்திருக்கிறேன். ஆறிவிடும். வந்து உண்” என்றாள். “நான் இனி இத்தகைய பண்டங்கள் தின்னக்கூடாது. இனி உழைத்துதான் சாப்பிடவேண்டும்.” “என்ன அண்ணா, இது. உனக்காகத்தானே நான் சமைத்தேன். நான் செய்த பண்டத்தை நீ ஏன் தின்னக் கூடாது?” “நீ சமைத்திருக்கலாம். ஆனால் இது அப்பா பணம்” “பிள்ளை அப்பா பணத்தைச் செலவு செய்யாமல் வேறு யார் பணத்தைச் செலவு செய்வது?” “அவர் பணம் உழையாது சம்பாதித்த பணம். உழைப்பவரைச் சுரண்டிச் சம்பாதித்த பணம். அதை நான் தொடமாட்டேன்.” நைனா காந்தியடிகளைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. செல்வர்கூட அவரை மதித்தனர். என்று அவள் அறிவாள். ஆனால், ‘காந்தீயம்’ என்பது என்ன என்று அவளுக்குத் தெரியாது. அமரின் தத்துவத்திலோ காந்தீயம் கடந்த பொதுஉடமைக் கருத்துகள் இருந்தன. அவள் உள்ளம் அதை அறியக்கூடவில்லை. சூடான பக்கடா வீணாக ஆறுகிறதே என்று மட்டும் அவள் கவலைகொண்டாள். இச்சமயம் சுகதா அழைப்பதாகப் பணிப்பெண் அமரிடம் வந்து கூறினாள். அவன் மனைவி அவனை அழைத்தது அதுதான் முதல் தடவை; அதற்குமுன் அவ்வப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் காண்பதுண்டு. அவசியமான பேச்சுகள் பேசியதுண்டு, அவ்வளவுதான். ‘போகவேண்டுமா, வேண்டாமா?’ என்று அவன் தயங்கினான். ஆனால் பணிப்பெண் அவனை இட்டுப்போகவே காத்திருந்தாள். அவள் பெயர் கௌசல்யா. அவளை எல்லோரும் சில்லூ என்று கூப்பிட்டனர். அவள் அறிவுமந்த முடையவள் அழவேண்டிய நேரம் சிரிப்பாள், சிரிக்க வேண்டிய நேரம் அழுவாள். நைனா நீங்கலாக, அமர் அன்பு செலுத்திய ஒரே ஆள் அவ்வீட்டில் அவளே. அவளிடம் அமர் கொண்ட பரிவில் பாசம் கலந்திருந்தது. அவள் அழைப்பைத் தட்ட மனமின்றி அவன் உடன் சென்றான். சுகதா முற்றிலும் அறிவற்றவளும் அல்ல; குடும்பப் பாசம் அற்றவளும் அல்ல. கணவனைப் பற்றி அவள் இதுவரை கவலைப்பட்டதில்லை; சிந்தித்ததுமில்லை. கணவனுக்கும் மாமனுக்கும் உரிய வீடு அது என்பதை மட்டும் அவள் அறிந்திருந்தாள். ஆனால், தந்தையும் மகனும் பேசியவகை அவளுக்குப் புதிதாயிருந்தது. அமர் பேச்சு இன்னும் புதுமையாக இருந்தது. புதுமையில் அவளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. சமர்காந்த் சுகதாவிடம் வந்து, “உன் கணவனை நீ தான் சென்று திருத்த வேண்டும். அவனுக்குக் குடும்பக் கவலை தெரியவில்லை. எனக்கு வயதாகிவிட்டது. இனி அவன் தானே என் அலுவலைப் பார்க்க வேண்டும். ஒருநாளைக்கு ஒன்றிரண்டு மணி நேரமாவது கடையிலிருந்து பழகினால் என்ன? நாள் முழுவதும் ஒன்று பள்ளியில் இருக்கிறான் அல்லது இராட்டை சுற்றுகிறான்” என்று கூறியிருந்தார். “நைனா உங்களுக்காகப் பாடுபட்டுப் பக்கடா செய்து வைத்துக் கொண்டிருக்கிறாள். ஏன் சாப்பிட வரவில்லை?” என்று தொடங்கினாள் சுகதா. “எனக்குப் பசியில்லை.” “நைனாவுக்குப் பசிக்காதா?” “அவள் சாப்பிடட்டுமே?” “நீங்கள் சாப்பிடாமல் அவள்தான் சாப்பிடமாட்டாளே!” அவன் பேசாதிருந்தான். “நீயும் அவளும் சாப்பிடுங்கள். எனக்கு வேண்டாம்” என்றான். “நைனா சாப்பிட்டாலும் நான் சாப்பிடப் போவதில்லை. அவளாவது அவள் அப்பா பணத்தைச் செலவு செய்து சாப்பிடப் போகிறாள். நான் நீங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தைத்தானே சாப்பிட முடியும்!” “நேற்றுவரை எப்படிச் சாப்பிட்டாய்?” “நேற்றுவரை நீங்கள் சாப்பிட்டீர்கள். நீங்கள் சாப்பிடும் இடத்தில் நானும் சாப்பிட்டேன். இனிமேலும் நீங்கள் சாப்பிடும் இடத்தில்தான் நான் சாப்பிடுவேன்.” “உனக்கு உன் அம்மா பணம் இருக்கிறதே?” “அம்மா வீட்டுக்குப் போனால்தான்...” “போவதுதானே!” “என் வீடு இதுதான், அம்மாவீடல்ல. அது தெரிந்துதான் நான் இத்தடவை திரும்பப்போக வில்லை.” அவள் வந்து பல வாரமாகியும் போகாமலிருப்பது அவனுக்கு இப்போதுதான் நினைவுக்கு வந்தது. அவள் மீண்டும் பேசினாள். “இரண்டு ஆண்டுகளாக நான் அம்மா வீட்டைத்தான் என் வீடு என்று நினைத்திருந்தேன். அம்மாவே ‘உன் வீடு, என் வீடு’ என்று பேசியது என் கருத்தை மாற்றிவிட்டது” “இனி நீ அம்மா வீட்டுக்குப் போகமாட்டாயா?” “நீங்கள் வந்தால், உங்களுடன் போவேன்” சுகதா வெறும் இன்ப வாழ்க்கைப் பிராணி என்றுதான் அமர் இதுவரை நினைத்திருந்தான். அவளிடம் இவ்வளவு பேச்சுத் திறமும் வழக்கறிஞர் மாதிரி வழக்காடும் திறமும் இருக்கும் என்று அவன் எண்ணியது கிடையாது. இத்திறம் அவனுக்கு வியப்பூட்டிற்று. வேறு பேச வகையின்றி “என்ன செய்யவேண்டும் என்கிறாய்” என்றான். “நைனாவைச் சாப்பிடச் சொல்ல வேண்டும்!” எனக்குச் சாப்பாடு போடவேண்டும்!” என்று கூறி அவள் சிரித்தாள். சிரிப்பு அவனை முற்றிலும் பரவசப்படுத்திற்று. அவன் தானே சென்று நைனாவை இழுத்துவந்தான். இருவருக்கும் சுகதா தின்பண்டங்களை வட்டித்தாள். நைனா அவளை இழுத்து உட்காரவைத்து, இருவரிடையிலும் இருந்து இரு தட்டுகளிலிருந்தும் தான் உண்டு மகிழ்ந்தாள். நைனாவின் கவலைகள் தீர்ந்தன. சுகதாவின் முகத்தில் வெற்றிக்களிப்பு முழுநிறைமதி எனக் களைவீசிற்று. கட்டுப்படாத குதிரைபோலத் திமிறிக் கொண்டிருந்த அமர், அதன் நிலவொளியில் செயலற்று உலவினான். அவனது புதிய கட்டுப்பாட்டில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. சுகதாவின் அன்பணைப்பில் அடங்கி அவள் விருப்பப்படியெல்லாம் குழைந்து நடந்தான். தந்தையின் கடையில்கூட அவன் இருக்கத் தொடங்கினான். அவ்வாண்டுத் தேர்வில் அமர் மெட்ரிக்குலேஷனில் முதல்வனாகத் தேறினான். சுகதா வழக்கம்போல ஒருநாள் கணவன் வீட்டில் இருந்துவிட்டு வந்துவிடுவாள் என்றே அவள் தாய் இரேணுகா நினைத்திருந்தாள். ஒருநாளில் வராதுபோகவே ஒவ்வொரு நாளும் நாளை வருவாள், மறுநாள் வருவாள் என்று காத்திருந்தாள். வாரம் பலவானபின் அவளால் இருக்க முடியவில்லை. முதல் வாரத்தில் சிறிது மகிழ்ச்சிகூட இருந்தது. ‘கணவன் வீட்டிலுள்ள பாசம் வளரத் தொடங்கிவிட்டது. இது நல்லதுதானே’ என்று அமைந்தாள். ஆனால், நாள் செல்லச் செல்லக் காணவேண்டும் என்ற ஆவல்- தன்னை மறந்து விட்டாளோ என்ற கோபம்- அங்கே என்ன நிலையில் இருக்கிறாளோ என்ற கவலை - இம்மாதிரி பல உணர்ச்சி அலைகள் அவள் உள்ளத்திலெழுந்தன. இறுதியில் அவள் தானே லக்னோவிலிருந்து புறப்பட்டு, காசி வந்து சேர்ந்தாள். சம்பந்தி வீட்டுக்கு நேரே வரவிரும்பாமல், கோயில் அற நிலையங்களுக்கு வரும் முறையில் வந்து, மகளையும் பார்த்தாள். “அம்மா, நீ என்னை மறந்தேவிட்டாய். புக்ககம் உனக்கு அவ்வளவு சர்க்கரையாய்ப் போய்விட்டது அல்லவா?” என்று தாய் கேட்டாள். சுகதாவுக்கு உண்மையிலேயே வெட்கமாய்விட்டது. ஆனாலும், முன்போல் அம்மாவிடம் ஆவலுடன் சென்று அவளைக் கட்டிக்கொள்ள முடியவில்லை. அயலாரிடம் கூறும் விளக்கந்தான் அவளுக்கும் தரமுடிந்தது. “நான் என்ன செய்யட்டும், அம்மா. இப்போது அங்கே இங்கே விலக வழியில்லாமல் ஆய்விட்டது.” “அப்படி என்னம்மா வேலை ஏற்பட்டுவிட்டது உனக்கு? இப்போது வீட்டுவேலைகளை நீயே செய்யத் தொடங்கி விட்டாயா?” “அதொன்றும் இல்லையம்மா. மாமாவுக்கும் அவருக்கும் ஏதாவது சச்சரவு ஏற்படுகிறது. அது முற்றிவிட்டால் என் நிலை என்ன ஆகும்?” மகளிடம் ஏற்பட்ட மாறுதல், அவள் பிரச்சினைகள் தாய்க்குப் புரியவில்லை. “என்ன சச்சரவு? அதனால் உனக்கு என்ன கவலை?” என்றாள். “அவருக்கு வட்டித்தொழில் என்றாள் வெறுப்பு. உலக வாழ்விலேயே பற்றுதலற்றவர்போல என்னென்னவோ பேசுகிறார். தந்தையையும் தொழிலையும் உதறிவிட எண்ணு கிறார். இப்படிப்பட்ட இடத்தில் என்னைத் தள்ளிவிட்டாய் என்று முதலில் நான் உன்னைத்தான் நோகத் தொடங்கினேன்; பின்னால் எப்படியும் நான்தானே சமாளிக்க வேண்டும் என்று கருதி அதில் முயன்றேன். ஆனால், இந்தப் பொறுப்பு எனக்கு ஓய்வொழிவு இல்லாமல் வேலை கொடுக்கிறது.” இரண்டு வாரத்தில் தாயைக் குற்றம் சொல்லும் அளவுக்கு மகள் வளர்ந்துவிட்டாள். தாய் உள்ளம் அவள் புதிய வாழ்வும் பாசமும் கண்டு சிறிது பொறாமை கூட அடைந்தது. ஆனால், தாய் அறிவு விரைவில் மாறுதலின் எல்லையை மதிப்பிட்டது. சுகதாவை ஊன்றிக் கவனித்தபோது அவளும் ஒரு தாயாகி விட்டாள் என்று தெரிந்தது. தாய் எவ்வளவு வற்புறுத்தியும் சுகதா புக்கம்விட்டு லக்னோ வர மறுத்துவிட்டாள். பிள்ளை, தாயைப் பிரிந்திருந் தாலும் தாய்க்குப் பிள்ளையை மறந்திருக்க முடியவில்லை. அவள் நிலையாகவே காசியில் வந்திருக்கத் திட்டமிட்டாள். தான் கோயில் குளங்களில் திருத்தொண்டு செய்துகொண்டு காசியில் இருக்க விரும்புவதாகவும், அதற்கு வசதியாக ஒரு சிறு வீடு அமர்த்தி வைக்கும்படியும் அவள் மருமகனுக்கு எழுதினாள். அது வகைச் செலவுக்காக அவள் ஆயிரம் ரூபாயும் அனுப்பினாள். அமருக்கு சுகதாவின் மீதுள்ள பாசம் சுகதாவின் தாய்மீதும் படர்ந்தது. அத்துடன் சுகதா சோம்பேறியான அவனைச் சுறுசுறுப்புடையவனாக்கி யிருந்தாள். அவன் நகரெல்லாம் தானே அலைந்து, சிறிய, ஆனால், வசதியுடைய ஒரு வீடு அமர்த்தினான். அதை அழகுபடுத்துவதற்குரிய இன்பப் பொருள்கள் வருவித்து அதைச் செம்மைப்படுத்த அவன் அருமுயற்சி எடுத்துக் கொண்டான். எல்லாம் முடிந்ததும் கடிதம் எழுதினான். இரேணுகா வந்து பார்த்தாள். வீடு மிகவும் பிடித்திருந்தது. அதுபற்றி எடுக்கப்பட்டிருந்த ஏற்பாடுகள் கண்டு அவள் திகைத்தாள். மருமகன் தன் ஆயிரத்துடன் மற்றும் ஓராயிரத்துக்கு மேல் போட்டுத்தான் இத்தனையும் செய்திருக்க வேண்டும் என்று அவள் கருதினாள். ஆனால், அமர்காந்த் மாமியை வரவேற்று முகமனுரைத்தபின், தன் செலவு கணக்கை அவள்முன் வைத்தான். ஐந்நூறு ரூபாய் தான் செலவாயிருந்தது. மீதி ஐந்நூரையும் அவன் அவளிடம் தந்தான். அவள் வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் எல்லை யில்லை. “பணம் உங்களிடமே இருக்கட்டும்” என்று அவள் அன்புடன் மறுத்தாள். “வேண்டும்போது நாள் வாங்கிக் கொள்ளமாட்டேனா? நீங்களே வைத்திருங்கள்” என்று கூறி அவன் வற்புறுத்திக் கொடுத்தான். அவனிடம் அவள் மதிப்பு மிகுந்தது. இயற்கையிலேயே இரேணுகாவுக்கு ஆண்குழந்தை இல்லை. சுகதாவை ஆணாகக் கற்பனைசெய்து வளர்த்திருந்தாள். அக்குறை இன்று அவளுக்குத் தீர்ந்தது. இடையே சுகதாவின் அன்பு குறைந்துவிட்டதே என்று அவள் வருந்திய வருத்தமும் தீர்ந்தது. அமர்மீது அவள் கொண்ட உரிமை அன்பு, சுகதா மீதுள்ள பாசத்தையும் புதுப்பித்து இரட்டைப் பாசமாக்கிற்று. அவள், சுகதாவிடம் முன்னிலும் உரிமையுடன் மனந்திறந்து பேசினாள். “உன் கணவனுக்கு எந்தக்குறையும் இனி வேண்டாம். நான் இனி இங்கேயே இருந்துவிடப் போகிறேன். அவனுக்கு வேண்டிய எதற்கும் தந்தையிடம் போகவேண்டிய தில்லை. நீயே கொடுப்பது தெரியாமல் கொடுத்துவிடு. அதற்காக என் பணத்தை உன் பணமாக எடுத்துச் செலவிடத் தயங்காதே” என்றாள். கேட்கத் தெரியாத அமருக்கு இப்போது கேட்கும் தேவை அற்றது, அவன் ஆடைகள் அவனையுமறியாமல் மாறின. அவன் செலவும் மதிப்பும் பெருகிற்று. அவன் கனவுகள் பல நனவாயின. நண்பர்களுடன் அவன் கலந்தான். காங்கிரஸ் கூட்டம், அறநிலையங்களில் அவன் பெயர் அடிபட்டது. சொற் பொழிவுகள் ஆற்றினான். அவன் வாழ்க்கைத்தரமும் மதிப்பும் உயர்ந்தன. பத்திரிகைகள் படிப்பதின் மூலம் அவன் உள்ளமும் கருத்தும் விரிவடைந்தன. ஏழைகள் வறுமை, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் துன்பங்கள் ஆகியவற்றில் அவன் கருத்துச் சென்றது. கல்லூரி ஆசிரியருள் ஒருவரான டாக்டர் சாந்தி குமாரும் சலீமும் அமர்காந்துடன் அடிக்கடி சேரிகளையும் பொது நிலையங்களையும் சுற்றி வருவதுண்டு. சாந்திகுமார் இங்கிலாந்தில் படித்தவர். சமூகச் சீர்திருத்தத்திலும் மக்கள் தொண்டிலும் பெரிதும் கருத்துடையவர். மணம் செய்து கொள்ளாமலே அவர் இத்தொண்டுகளைச் செய்து வந்தார். நண்பர்கள், நகரைவிட்டு வெளியே உலாவுவதற்கு ஒரு நாள் புறப்பட்டிருந்தனர். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத நேரம். பாதையின் ஒருபுறம் வயல்களும், மறுபுறம் ஊரடுத்த சாலையும் இருந்தன. சாலையோரத்தில் ஓரிடத்தில் சிற்றூர்வாசிகள் சிலர் கும்பலாகக்கூடி வயலின் பக்கமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் அச்சமும் கவலையும் குடிகொண்டிருந்தன. படைவீரர் சிலர் வயலின் பக்கமாக இருந்து ஒவ்வொருவராக வந்தனர். செய்தி என்னவென்று டாக்டர், கும்பலில் ஒருவனைக் கேட்டார். அவன் வாய் திறவாது படைவீரரைச் சுட்டிக்காட்டி நடுங்கினான். ஆனால் அதற்குள், விட்டுவிட்டு ஒரு பெண்ணின் அலறல் வயற்காட்டினுள்ளிருந்து கேட்டது. ஒவ்வொரு தடவையும் அலறலின் ஓசை கம்மிற்று. நண்பர் செய்தியை ஊகித்து வயற்பக்கம் திரும்பினர். படைவீரர் தடுத்தனர். டாக்டர் ஒருவனைக் கைமுட்டியால் தாக்கினார். அவன் எதிர்த்துத் தாக்கி அவரை வீழ்த்தினான். ஆனால், அமரும் சலீமும் தம் வளைகோற் பந்து மட்டையால் அவனைத் தாக்கினர். மற்ற படைவீரர் இதற்குள் நண்பரைச் சூழ்ந்தனர். டாக்டர் காயமடைந்து விழுந்தார். மற்ற நண்பர்கள்மீது படைவீரர் தாக்குதல் மும்முரமாயிற்று. டாக்டர் விழும்வரை பார்த்துக்கொண்டிருந்த சிற்றூர் வாசிகள் இப்போது ஒருங்கே கிளம்பி வந்தனர். விழுந்து கிடந்தவர் தவிர மற்ற படைவீரர் இப்புதுநிலையைக் கண்டதும் ஓடினர். மக்கள் உதவியால் நண்பர்கள் டாக்டரை ஒரு வண்டியில் வைத்து மருத்துவமனை செல்லப் புறப்பட்டனர். ஆனால் டாக்டர் “இந்தப் படைவீரரை விட்டுவிட்டா போவது? அவர்களையும் இட்டுச் செல்ல வேண்டும்” என்றார். அவர்கள் புறப்படும் சமயம் வயற்காட்டிலிருந்து அலங்கோலமாக ஓரிளமங்கை ஓடினாள். படைவீரர் கொடுமைக்கு அஞ்சியதுபோலவே, பிறர் பார்வைக்கும் அஞ்சினாள். தாறுமாறாகக் கிழிந்து குருதிக்கரைபடிந்த ஆடையால் முகத்தை மறைத்துக்கொண்டு அவள் அப்பால் ஓடினாள். இதைக்கண்ட சலீம் சிற்றூர் மக்களைப் பார்த்து “முதலிலேயே நீங்கள் இந்தப் பெண்ணின் மதிப்பைக் காக்கப் போராடியிருக்கலாம். படைவீரர் கொடுமையை விட உங்கள் கோழைமை எனக்கு வெறுப்பைத் தருகிறது’ என்றான். டாக்டர் “நம் போன்ற படித்தவர் அயல்மொழிகற்று அயலாட்சியை ஆதரிக்கும்போது, இந்த ஏழை மக்கள் என்ன செய்ய முடியும்?” என்றார். படைவீரர் காயங்கள் விரைவில் குணமடைந்தன. டாக்டர் ஒரு மாதம்வரை மருத்துவமனையில் இருக்க வேண்டியதாயிற்று. அமர் அடிக்கடி சென்று அவரைப் பார்த்தான். குணமானபின் டாக்டர் படைவீரர் பாடி சென்று காயமுற்ற படைவீரரை விசாரித்தார். படைத்துறைத் தலைவர் இதுகண்டு வெட்கி, அவரிடம் தம் வீரர் கயமைத்தனத்துக்கு மன்னிப்புக் கோரினார். இனி இத்தகைய செயல்கள் நிகழாமல் தடுப்பதாகவும் உறுதி கூறினார். ஊரெங்கும் இச்செய்தி பரந்தது. டாக்டர் புகழ் எங்கும் பரவிற்று. அமரின் நண்பர் குழு அதில் பங்கு கொண்டது. அமரின் குடும்ப அமைதியும் உயர்வாழ்வும் சமர்காந்துக்கு மிகவும் பிடித்திருந்தது. சுகதா, இரேணுகா ஆகிய இருவர் மூலம் அவர் விரும்பியபடியெல்லாம் அமரை ஆட்டி வைக்க முடிந்தது. அத்துடன் அவர் கைச்செலவில்லாமலே அவன் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இப்போது படைவீரர் நிகழ்ச்சியின்பின், அவன் புகழ் இன்னும் உயர்ந்தது. அது அவர் மதிப்பையும் தொழில் வளத்தையும் பெருக்கிற்று. ஆயினும், எதிர்பாராவகையில் இப்புகழே அவருக்கும் அமருக்கும் இடையே மீண்டும் சிறு தொல்லைகளை உண்டு பண்ணிற்று. முதலில் அமர், காங்கிரஸ் கூட்டமொன்றில் தீவிரமாக ஆட்சியாளரை எதிர்த்தும், ஏழைகள் நிலையை விரித்தும் சொற்பொழிவாற்றினான். செல்வர் வீட்டுப் பிள்ளையே இதனைச் செய்தது கண்ட போலீஸ் அதிகாரி சமர்காந்திடம் இதுபற்றி முறையிட்டார். சமர்காந்தின் தூண்டுதலின் பேரில் சுகதா மீண்டும் கணவன் போக்கில் தலையிட்டாள். அமர்காந்துக்குத் தன் பேச்சில் நாட்டுப்பற்றுத் தவிர வேறு எதுவும் இருந்ததாகத் தோற்றவில்லை. ஆனால், சுகதா அதுபற்றியெல்லாம் வாதிட விரும்பவில்லை. “அரசாங்கத்தை எதிர்ப்பது தப்பு என்று நான் சொல்லவில்லை. எதிர்ப்பவர் எதிர்க்கட்டும். உங்களுக்கு நான் ஒரு கால்கட்டு இருக்கிறேன். எனக்கும் இப்போது ஒரு கால்கட்டு வந்துவிட்டது. என்னை நினைக்காவிட்டாலும் என்...........” அமர் அவளை மேலும் பேசவிடவில்லை. “உன் குழந்தை என் குழந்தைதானே. சுகதா, நீயும் எனக்குக் கால்கட்டல்ல; உனக்கும் குழந்தைக்கும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நான் என்ன செய்யவேண்டுமென்கிறாய்?” பெண்கள் உரிமைபற்றி அமர் படித்திருந்தான். குழந்தைப்பேற்றால் அவர்களைத் தொல்லைக்காளாக்குவது ஆடவர் கொடுமை என்று புதிய எழுத்தாளர் கூறியிருந்தனர். ஆகவே, இளமையிலேயே சுகதா பேறுக்காளானது தன் குற்றம் என்று அமர் எண்ணி வருந்தினான். அவன் மனம் அவ்வளவு எளிதில் திரும்பியது கண்டு சுகதா மகிழ்வுற்றாள். “நீங்கள் இந்தக் காங்கிரசுக்காரர் பக்கமே போகவேண்டாம்” என்றாள். அமரின் உள்ளத்தில் மக்கள் தொண்டார்வம் வேரூன்றித் தான் இருந்தது. ஆனால், குடும்பக் கடமையார்வமும், சுகதாவின் தாய்மைக் கவர்ச்சியும் அதை வென்றன. அதேசமயம் சுகதாவின் உள்ளத்தில் அவன் பெருந்தன்மை ஒரு மாறுதலை உண்டுபண்ணிற்று. ‘அவர் தந்தையின் தொழிலை வெறுத்தார்; ஆனால், எனக்கு இணங்கி, அதைக் கடிந்து கொள்ளாமல் இருக்கிறார்; ஏழைகளிடம் அவருக்குப் பாசம்; ஆனால், என்னை எண்ணி, அதையும் கைவிடுகிறார்; என் கணவர் கருத்தும் செயலும் நேர்மையானவை’ என்ற எண்ணம் அவளிடம் வேர்க்கொண்டது. தன்னால் அவன் உள்நெஞ்சம் அடைந்த நைவையும் அவள் ஆற்றமுற்பட்டாள். படைவீரர் நிகழ்ச்சியில் துயருக்காளான பெண்ணிடம் அவள் இயற்கையிலேயே இரக்கம் கொண்டிருந்தாள். அச்செயலைப் புகழ்ந்து, “அப்பெண் யாரென அறிந்து கூறுங்கள். சமூகம் அவளை ஏற்காவிட்டால்கூட, நான் ஏற்று, என் வீட்டில் வைத்துக்கொள்கிறேன்” என்றாள். பிறக்கவிருக்கும் குழந்தை அவர்களை ஏற்கெனவே இணைந் திருந்தது. சுகதாவின் புதிய கருத்துக் கனிவு அவ்விணைப்பில் பின்னும் இனிமையை ஊட்டிற்று. அமர் ஒருநாள் கடையிலிருக்கும்போது பறட்டைத் தலையும் நீண்டு வளைந்த மீசையும் கறுத்தத் தடித்த உடலுமுடைய ஒருவன் பழக்கமானவன்போலக் கடையில் வந்து ஏறினான். தந்தையை விசாரித்து, அவர் இல்லை என்று அறிந்ததும், அவன் முதலில் தயங்கி நின்றான். பின் தன்னிடமிருந்த கெட்டிவளையல் ஒன்றை நீட்டி, என்ன கொடுப்பீர்களோ, விரைவில் கொடுங்கள்” என்றான். வந்தவன் காலேகான் என்பவன். தகாவழியில் துணிகரமாக அவனைப் போன்றவர் கைக்கொண்ட பொருளை, சமர்காந்த் போன்ற துணிகர வணிகர் பெற்றனர். இதனால் அவர்கள் தம் பெட்டியை நிரப்புவதுடன், அவனைப் போன்றவர்களையும் அவ்வப்போது போலீஸிடம் சிக்காது காத்து வந்தனர். அமர் பொருளை வாங்காமல் குறுக்குக் கேள்விகள் கேட்டான். காலேகான் ஒன்றும் ஒளிக்கவில்லை. தன் அவசர நிலையையும் கூறி, தடயம் நானூறு பொன் பெறுமானாலும் கொடுத்ததை அன்று பெற்றுப் போவதாகக் கூறினான். அவன் நூறு பொன்னிலிருந்து ஐந்து பொன்வரை இறக்கிக்கேட்டும் அமர் அதைத் தீண்ட மறுத்து, அவனையும் கண்டித்து அனுப்பினான். சமர்காந்தின் தொடர்புகளுள் இதற்கு நேர்மாறான மற்றொன்றும் அதே நாள் அமர் அறிவுக்கு எட்டியது. அது ஒரு பட்டாணிக்கிழவி சம்பந்தமானது. அவள் கணவன், சமர்காந்திடம் பணிபார்த்தவர். கணவன் இறந்து அவள் வறுமையின் பிடியில் அவதியுற்றாள். அவளுக்கு யாரும் உதவி கிடையாது. சமர்காந்த் அவளுக்குக் கணவன் இருக்கும்போது கொடுத்த தொகையிற் பாதி கொடுத்து வந்தார். சமர்காந்த் வர நேரமாகவே, அமர் தானே அத்தொகையைக் கொடுத்தான். அத்துடன் அவள் நடக்க முடியாதவளாயி ருந்ததனால், அவளை வண்டி வைத்து அழைத்துச் சென்று, வீட்டில் கொண்டுவிட்டான். பட்டாணிச்சிக்குச் சகீனா என்று ஒரு புதல்வி இருந்தாள். அவள் அந்த வறுமையிலும் எப்படியோ தானாகப் பின்னல் வேலை கற்று, அழகிய கைகுட்டைகள் பின்னியிருந்தாள். பட்டாணிச்சி அமரின் பெருந்தன்மை கண்டு அவனிடம் ஒரு கைக்குட்டையை அன்பளிப்பாகத் தந்து, “இதனை யாராவது வாங்கினால், ஏழைகளாகிய நாங்கள் பிழைப்போம். தவிர உன் பட்டாணி நண்பரில் யாராவது இருந்தால், என் சகீனாவை மணம் செய்வித்து உதவு” என்று கூறினாள். ஏழைகள் வறுமைபற்றி மேடையில் பேசிவந்த அமருக்கு, அது உண்மையில் தன் கற்பனை கடந்தது என்பது அவ்வீட்டின் காட்சியினால் தெரிந்தது. வறுமையை மறைக்க வறியோர் மேற்கொள்ளும் முயற்சியே அதன் கொடுமையை எடுத்துக்காட்டத்தக்கது. கொலை செய்தவனும் வஞ்சகனும் தம் கொலையையும் வஞ்சகத்தையும் மறைக்கப் பாடுபடுவதை விட, ஏழை தன் ஏழ்மையை மறைக்கப் பாடுபடவேண்டியிருப்பதை அவன் கண்டான். தன்னாலியன்ற மட்டும் ஏழைகளுக்கு உதவும் உறுதியுடனும், அதுபற்றிய மனக்கோட்டையுடனும், அவன் வீடு திரும்பினான். காலேகானின் செய்தி கேட்டதும் சமர்காந்துக்குக் கோபம் வந்தது. அவர் திருட்டுகளைக்கூட ஆதரிப்பது கண்ட அமருக்கு அதற்குமேல் கோபம் வந்தது. வட்டித் தொழிலால் ஏழைகள் கழுத்தை நெரிக்கும் முறையையே அவன் வெட்கக்கேடாக நினைத்தான். கல்விச்சாலைகளுக்குப் பணமில்லாதபோது, இவ்வட்டிக்கடை முதலாளிகள் ஏன் கோயில்களுக்குக் கொடுக் கிறார்கள் என்பதும்; ஏன் மதச் சடங்குகள், கிரியையகள், பூச்சுமெழுக்குகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் கள் என்பதும் இப்போது அவனுக்கு நன்கு விளங்கின. தந்தை மீது அவனுக்கு ஆத்திரம் பொங்கிற்று. மீண்டும் இருவரும் வாதப்போரிட்டனர். சகதா இத்தடவையும் அமரை மெல்லக் கண்டித்தாள். ஆனால், இப்போது அமர் முற்றிலும் பழய அமராயிருக்க முடியவில்லை. அவன் வாதாடினான். “இந்தத் தொழிலில் நான் இனி ஈடுபட முடியாது. நான் இம்மாளிகையில் வாழ்ந்து உயர்தர வாழ்வும் கல்வியும் நுகர்வதும் இத்தொழிலில்லாமல் முடியாது. எனவே நான் இனி ஏழை வாழ்வு வாழப் போகிறேன்” என்றான் அமர். சுகதா தன்னையும் தன் பிள்ளையையும் நினைவூட்டினாள். அமர் திடுக்கிட்டான். தான் வெளியேறினாலும் அவர்கள் வீட்டிலிருக்கலாம் என்றுதான் அவன் எண்ணினான். “நீங்கள் வெளியேறினால் நானும் வெளியேறுவேன். குழந்தையும் என்னுடன் தான் இருக்க நேரிடும்” என்ற அவள் குறிப்பு அவனைக் குலுக்கிவிட்டது. “நீ தாய் வீட்டில் போய் இரு” என்றான் அவன். “நீங்கள் போனால்கூட, நான் போக இணங்க முடியாது.” “ஏன்?” “மாமன் வீட்டில் இருப்பது ஆண்களுக்கு அழகல்ல. தாய் வீட்டிலிருப்பது பெண்களுக்கும் அழகல்ல. மேலும் என் தாய் தூண்டுதலால்தான் நீங்கள் அவரை எதிர்ப்பதாக மாமா நினைப்பார்.” பெண்கள் எல்லாரும் பிறருக்குமுன்பே வக்கீல் தொழில் படித்திருக்க வேண்டும் என்று அமர் நினைத்தான். அவனுக்கு வேறு வழி தோன்ற வில்லை. அவன் மீண்டும் பணிந்தான். “அப்பா வழி சரியோ, தப்போ? நான் இனி எதிர்க்கவில்லை. ஆனால், என்னால் கூடியவரை நான் மக்கட்சேவையில் ஈடுபடுவதில் உனக்குத் தடையில்லையே” என்று கேட்டான். அவள் மகிழ்ந்தாள். அவனை அணைத்துக்கொண்டாள். ஆனால், அவள் வயிற்றின் பாரம் அவ்வணைப்பைவிட அவன் மனத்தில் இரக்கப் பண்பை வளர்த்தது. அவன் முன்னிலும் பன்மடங்கு குடும்பத்திலீடுபட்டாலும், பொது வாழ்விலும் முன்போல் ஈடுபட்டான். அதற்காக எவரும் வருந்தவில்லை. ஏனென்றால், பொதுவாழ்வுப் பற்றுக் கடந்த குடும்பப்பற்று அவனை ஈர்த்தது. ஆனால், அக்குடும்பப் பற்றிலும் உள்ளூற ஒரு சமூகப் பற்றுத் தொக்கியிருந்ததென்பதை எவரும் அறியவில்லை. சுகதா வெறும் செல்லப்பிள்ளை என்று அவன் நினைத்திருந்தான். அவள் வாதத் திறமையை அவன் பிற்பட்டுத் தான் கண்டான். இப்போது அவளும் தியாகம், துணிச்சல், தன் மதிப்பு ஆகியவற்றின் ஒரு சின்னம் என்பதைக் கண்டான். தான் கற்றறிந்த உயர் குறிக்கோளைவிட அவள் கல்லாதறிந்த குறிக்கோள் உயர்ந்ததாகுமென்று அவன் மனத்துக்குப் பட்டது. தன் உயரம் பற்றிக் கர்வம் கொண்ட ஒட்டகம் மலையருகே வந்து தன் உண்மை உயர்வளமை அறிந்து அடக்கம் கொண்டது என்னும் பழமொழி அமருக்கு இலக்காயிற்று. மறுநாள் அமர் கடையில் அமர்ந்திருக்கும் சமயம் ஒரு ஐரோப்பிய மாதும் இரண்டு மூன்று வெள்ளையரும் அங்கே வந்தனர். சமர்காந்த் இல்லாதது கண்டு, சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் செல்ல இருந்தனர். இருவர் இறங்கியாயிற்று. ஒருவர் இறங்கவிருந்தார். அதற்குள் பிச்சைக்காரியாகவும் பைத்தியக்காரி யாகவும் அலைந்த ஒரு இளம்பெண் அவர்கள் அருகே பிச்சை கேட்பதுபோல வந்தாள். திடீரென அவள் கையில் உடைவாள் மின்னிற்று. வெள்ளையருள் ஒருவர் குத்துண்டு உடனே மாண்டார். மற்றொருவர் குத்துண்டு தள்ளாடியக் குற்றுயிராய் விழுந்தார். மூன்றாவது ஆளையும் ஐரோப்பிய மாதையும் அவள் குத்தத் தொடங்குமுன், அமர் தடுக்க முன் சென்றான். அவனை அவள் ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள். உடனே அவள் முகத்தின் கோர உருவம் மாறிற்று. கத்தியை வீசி எறிந்தாள். தானே தன்னைப் போலீஸிடம் ஒப்படைத்துக் கொண்டாள். அவள் வேறு யாருமல்ல. வயற்கரையில் படை வீரர் கொடுமைக்கு ஆளான நங்கையே? அவள் எதிர்பாராச் செயலும் எதிர்பாரா ஆற்றலும் எல்லாரையும் முதலில் வியப்புள் ஆழ்த்தியது. ஆனால், எவரும் அவளைக் கண்டிக்கவில்லை. வெள்ளையர் மீது பரிதாப்படவுமில்லை. அவள் செயலை எல்லோரும் போற்றினர். படை வீரர் நிகழ்ச்சி, டாக்டர் முதலிய நண்பர் செயல்கள் ஆகியவற்றைக் கேட்டது முதல், மக்களிடையே பெருத்த விழிப்பு ஏற்பட்டிருந்தது. அது இப்போது பெருக்கெடுத்தோடிற்று. கொலை செய்த நங்கையின் பெயர் முன்னி. அவள் திடீரென்று மக்கள் வணங்கும் வீரமாது ஆனாள். ‘அவளுக்கு என்ன ஆகும், அவள் பக்கம் நேர்மை கிடைக்குமா?’ என்பதே எங்கும் பேச்சு. போலீஸ் கோர்ட்டில் பலர் சான்று கூறினர். டாக்டர் தமக்குத் தெரிந்த விவரங்களை அப்படியே கூறினார். அவர் முன்னி சார்பாகப் பேசவில்லை என்று மக்கள் அவர் மீது சீறி எழுந்தனர். அமரோ அவளைத் தான் அங்கங்கே பார்த்ததுண்டு என்றும், அவள் நல் அறிவு நிலையில்லாதவள் என்றே தெரிவதாகவும் கூறினான். இது முற்றிலும் உண்மையல்ல. அவள் மீது கொலைக் குற்றமும் தண்டனையும் ஏற்படாமல் தடுக்கவே அவன் இவ்வாறு கூறினான். ஆனால், பொது மக்களும் இதையே விரும்பினதினால், அவனை யாவரும் போற்றினர். முன்னியின் வழக்கு காசி மாநகரின் மிகப் பெரிய வழக்காயிற்று. அதன் ஆரவாரம் மாவட்டம் கடந்து மாகாணச் செய்தித் தாள்களையும் நிறைத்தது. பலர் அவளுக்காக வழக்கு நடத்த முன் வந்தனர். கூலியில்லாமல் உழைக்க வழக்கறிஞர் போட்டியிட்டுக் கொண்டு வந்தனர். வழக்குக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அறச்செயல்களில் ஈடுபட்டிருந்த இரேணுகா அதன் தலைவரானாள். சுகதாவும் அமரும் டாக்டரும் பிற நண்பரும் உடனிருந்து ஏற்பாடுகள் செய்தனர். வழக்கு மூன்று மாதமாக நடைபெற்றது. வழக்கு மன்றத்தில் மக்கள் பெருந்திரளாக மொய்த்தனர். கடைசி நாளன்று கூட்டத்திடையே பட்டாணிச்சியும் சகீனாவும் இருந்தனர். சகீனா முன்னியைப் பார்க்க விரும்பியதால், அவள் தாய் அமரை அடுத்துத் தங்களை முன்னணியில் நிற்க வைக்கும்படி கோரினாள். அவன் இரேணுகாவுடனேயே அவளை உட்கார வைத்தான். பஞ்சாயத்தார் அன்று முன்னி குற்றவாளியல்ல என்று தான் கூறினர். தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. எங்கே தலைவர் அரசாங்க ஆளாதலால் வெள்ளையர் பக்கம் தீர்ப்புச் சொல்வாரோ என்று எல்லாரும் அஞ்சினர். ஆனால், தலைவர் மனைவியே மக்களின் ஒருவராய் மக்களிடையே இருந்தாள். அவள் சுகதாவின் பக்கம் இருந்து கொண்டு, “முன்னிக்கு விடுதலை கிடைக்கவில்லையானால், தலைவர் திரும்ப வீட்டுக்குள் வரப்போவதில்லை! இதை நான் உறுதி கூறுகிறேன்” என்றாள். அமர் நண்பன் சலீம், இம்முயற்சிகளில் பங்கு கொண்டிருந்தான். அவன் உணர்ச்சி வசப்பட்டவன். ஆத்திரப் போக்குடையவன். தலைவர் தீர்ப்பு ஒரு வேளை எதிராகக் கூடும் என்று கருதினன். அதைத் தடுக்க முடியாமல் போய் விட்டால், அவருக்கு நல்ல பாடம் படிப்பிக்க எண்ணினான். தீர்ப்பு எதிராயிருந்தால், ஒருவரை அமர்த்தி, தலைவர் மீது செருப்புமாரி பொழிவிக்க அவன் விரும்பினான். “இதை யார் செய்ய முன்வருவார்கள்” என்றான் அமர். “பணம் கொடுத்தால் அதற்கா ஆள் கிடையாது. காலேகான் என்ற ஒருவன்....” அமர் “காலேகான் திருடனாயிற்றே!” என்றான். சலீம், “அதுபற்றி உனக்குக் கவலை ஏன்? காரியம் ஆகட்டும். நீ பணத்துக்கு வழி பார்” என்றாள். பணம் பெறவே அமர் வீடு சென்றான். ஆனால், அன்றிரவு பார்த்து சுகதா பிள்ளைப்பேற்று வலியில் உழலத் தொடங் கினாள். சமர்காந்த் இன்று தம் முழுத் திறமையும் காட்டிப் பரபரப்புடன் செயலாட்சி செய்தார். மருத்துவ மாதையும் மருத்துவரையும் அழைக்க அமரை அனுப்பினார். அரசாங்க மருத்துவரை அமர் அழைத்து வருமுன் குழந்தை அழுகையொலி அவன் காதில் கேட்டது. பேற்றின்போது சுகதாவின் துடிப்பு, அலறல், அதன் பின் அவள் மெலிவு ஆகியவை அவன் இதயநாடிகளை அதிர வைத்தன. தனக்காக அவள் செய்த தியாகங்களால் அவன் மதிப்பையும் அன்பையும் அவள் பெருக்கினாள். அழகிய இளங் குழவியைக் கண்டதும் அவன் இன்பம் இன்னும் கரை கடந்தது. பிள்ளைப்பேற்று விழாவை சேட்டுகளின் வழக்கப்படியும் தம் குடும்ப மதிப்புக்கேற்றபடியும் தேவதாசியர் ஆடல்பாடல் களுடன் நடத்த சமர்காந்த் திட்டமிட்டாடர். புதுமைவாதிகள் இளைஞர் ஆகியோர் தேவதாசி முறைக்கு இத்தகைய ஆதரவு தரக்கூடாதென்று கண்டித்து வந்தனர். அமரும் இதே கருத்துக் கொண்டிருந்தான். ஆனால், அவன் உள்ளம் இப்போது எதிர்ப்புக்குச் சித்தமாயில்லை, அவன், முன்னி வழக்கைக் கூடக் கவனிக்கமுடியாமற் போயிற்று. குடும்பப் பொறுப்பு என்னும் நீரோட்டம் அவனை இழுத்துச் சென்றது. மறுநாள் விழாவுக்கு அவன் இரவில் நெடுநேரம் இருந்து பட்டியல் வகுத்தான். மறுநாள் முழுவதும் விழாவென்னும் சுழலிடையே அவன் பம்பரமாய் சுழன்றான். வழக்கை நடத்துபவருள் சுகதா, அமர், இரேணுகா ஆகியவர்கள் செல்ல முடியவில்லை. சலீம் செய்த ஏற்பாட்டை டாக்டர் சாந்திகுமார் கண்டித்தார். அத்துடன் “அவர் தீர்ப்பு முன்னி பக்கம்தான் இருக்கும். நான் சொல்கிறேன், பார். ஆயினும் அது எப்படியிருந்தாலும் நமக்கு வேலை இருக்கிறது. தீர்ப்பு எதிராயிருந்தால், முன்னிக்கு மக்கள் மதிப்புக்கேற்ப விடைகொடுத்தனுப்ப வேண்டும். கண்டனக் கூட்டம் நடத்த வேண்டும். தீர்ப்பு சாதகமாயிருந்தால், தக்க நல்ல வரவேற்புக்கூட்டம் அளிக்க வேண்டும்” என்றார். அவர் கூறி வாய்மூடுமுன் ஓர் இளைஞன் தோளில் ஒரு சிறுவனுடன் அவர் முன்வந்து நின்றான். “நான்தான் முன்னியின் கணவன். இது அவள் பிள்ளை. ஊர் நண்பர் சிலருடன் நகரில் சந்தைக்கு வந்தவள் திரும்ப வரவில்லை. கவலைப்பட்டேன். ஆனால் கூடச்சென்றவர் உண்மை கூறவில்லை. இவ்வூர் வழக்கைப்பற்றிக் கேள்விப்பட்டேன், அவள் செய்தியைச் சிலர் கூறினார்கள். ஊர் அவளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நான் ஏற்று அதன் பயனை அனுபவிக்கத் தயாராயிருக்கிறேன். உங்களைப் போன்ற பெரிய மனிதர் அவளைப் போற்றும்போது, என் குருதிப் பாசத்தை நான் விடமுடியுமா நான் பக்கத்திலிருந்து நீங்கள் பேசியது கேட்டேன். அவள் தண்டனை பெற்று விடுவாள் என்றுதான் எல்லாரும் கூறினர். நீங்கள் ஒருவர் விடுதலைபற்றி நம்புவது எனக்கு ஊக்கம் தருகிறது. அவள் விடுதலை பெற்றவுடன் வந்து அழைக்க வருவேன்” என்றான். “சமூகத்திலுள்ள மனிதர் அனைவரும் இவளைப் போற்றுகின்றனர். தனி மனிதர்கள் நல்லவர்களே. ஆயினும், அந்தச் சமூகம் இப்படிப்பட்டவர்களை ஏற்க முடிகிறதில்லை. நம் சமூகம் கெட்டது. அதில் நல்லவர்களுக்கு இடமில்லை” என்று எண்ணினார் டாக்டர். டாக்டர் எதிர்பார்த்தபடியே முன்னி விடுதலை பெற்றாள். மக்கள் ஆரவாரித்தனர். டாக்டரும் நண்பரும் கூட்டத்துக்கு அவளை இட்டுச்செல்ல ஏற்பாடு செய்தனர், அவள் மக்களைக் காணவே மறுத்தாள். இறுதியில் தானேவந்து மக்களிடம் “என்னை நீங்கள் போற்றுவது கண்டு நன்றி, ஆனால், உங்கள் போற்றுதலுக்கு நான் தகுதியற்றவள். நான் அதைக் கண்டு அஞ்சுகிறேன். என்னைப் பக்கத்து இருப்புப்பாதை நிலையம் அனுப்பிவிடுங்கள். என் பாழும் வாழ்வை அரித்துவாரத்தில் சென்று கழிக்க விரும்புகிறேன்” என்றாள். மக்கள் விருப்பத்திற்கெதிராக டாக்டர் அவளை அனுப்ப வேண்டி வந்தது. கணவனையும் பிள்ளையையும் பற்றிக் கூறியபோது அவள் அழுதாள்; ஆனால் அவர்களைப் பார்க்க நேரு முன் போகவேண்டுமென்றே விரைவுபடுத்தினாள். மோட்டார் புகைவண்டி நிலையம் நோக்கி விரைந்தது. வழியில் உடையவன் குழந்தையுடன் நின்று வண்டியை நிறுத்த வேண்டினான். அவள் வண்டியை இன்னும் விரைவாக ஓட்டும்படி கேட்டாள். “நான் முன்னியை இப்படி விட்டிருக்கமாட்டேன், நானிராமல் போனேன்” என்று இச்செய்திக்கு அமர் விளக்கம் கூறினான். குழந்தைக்கு இரேணுகாவின் பெயரை ஒட்டியே இரேணுகாந்த் என்ற பெயரிடப்பட்டுள்ளது. இரேணுகாந்தனின் மழலைப்பேச்சிலும் புன்சிரிப்பிலும் சுகதாவும் அமரும் ஒன்றுபட்டு உலகையே மறந்து ஈடுபட்டிருந்தனர். குழந்தைக்கு நீர் கோத்துக்கொண்டால், அல்லது சிறிது மந்தம் கண்டால், சுகதாவின் முகத்தில் கவலை நிழலாடும். அமரின் உள்ளத்தில் பீதிப்புயல் வீசும். இத்தகைய தறுவாயில் ஒரு நாள் பட்டாணிச்சி கோலூன்றி நடந்து அமர் வீட்டில் நுழைந்தாள். அமர் மூலம் அவள் இன்னார் என்று தெரிந்ததும் சுகதா வரவேற்றாள். அவள் அமரைப் புன்முறுவலுடன் நோக்கி “அப்பா, குழந்தை வந்தவுடன் ஏழைகளை மறந்துவிட்டாயாக்கும்! பிறந்த நாள் விழாவுக்கு எத்தனை பேரையோ அழைத்தாய். ஏழையை மட்டும் எண்ண வில்லை” என்றாள். அமர் உள்மனம் அவனைச் சுட்டது. பட்டாணிச்சி சகீனா அரும்பாடுபட்டுப் பின்னிய தலைக்குட்டை ஒன்றைப் பிள்ளைக்குப் பரிசளித்தாள். ஏழையின் அம் மனமார்ந்த அன்புச்சின்னம் அமரைப் பணிவித்தது. சுகதாவும் பிறந்தநாள் தின்பண்டங்களில் ஒரு பொட்டலம் எடுத்துக் கிழவியின் முந்தானியில் முடிந்தாள். சிற்றுண்டி தந்தாள். பின் குழந்தை உடல் நலம் பற்றிய பேச்சு எழுந்தது. தாய் தந்தையராகியும் அனுபவமற்ற இளைஞர்கள் கவலை கண்டு கிழவி அதற்கு என்ன மருந்து தரவேண்டும், என்ன உணவு தரவேண்டும் என்ற விவரங்கள் கூறினாள். அன்றே மருந்து கொடுத்தனுப்புவதாகக் கூறினாள். அமர் அவளுடன் தானே சென்று மருந்தை வாங்கி வந்தான். அப்போது அவள் வீட்டில் வறுமை முன்னிலும் கோரதாண்டவம் செய்வது கண்டான். அவளும் மீண்டும் ஒரு தடவை கைகுட்டை சகீனா திருமணம் ஆகியவற்றை நினைவூட்டினாள். பிள்ளைப் பாசம் அவளை மறக்கடித்தது பற்றி அமரும் வெட்கமடைந்து மன்னிப்புக் கோரினான். இரண்டையும் விரைவில் கவனிப்பதாக உறுதி கூறினான். பட்டாணிச்சி சில கைக்குட்டைகளையும் இவ்வேற் பாட்டுக்காகக் கொண்டு கொடுத்தாள். பட்டாணிச்சியின் மருந்தால் குழந்தையின் உடல் முற்றிலும் குணமாயிற்று. அன்றே சலீம், அமரை அழைக்க வந்தான். அவனிடம் அமர் பட்டாணிச்சி பற்றிய விவரங்களைக் கூறினான். சலீம் தனக்கு வழக்கமான குறும்புக் குரலில் “கைகுட்டை நன்றாயிருக்கிறது. ஆயினும் அதைக் கிழவி பின்னினாளா அல்லது இளமங்கை சகீனா பின்னினாளா என்று தெரியாமல் அதன் விலையை மதிக்க முடியாது. கிழவி பின்னியிருந்தால் அதன் விலை ஐந்து செப்புக் காசுகள், சுகீனா பின்னியிருந்தால் அதற்கு விலை ஐந்து வெள்ளிகள்” என்றான். “சகீனாதான் பின்னியிருக்கிறாள்” “அப்படியானால் எத்தனை கைக்குட்டை வேண்டு மானாலும் கொண்டுவா. ஐந்து வெள்ளி விழுக்காடு நானே கொடுக்கிறேன். பிறரையும் கொடுக்கச் செய்கிறேன்” அவன் அத்துடன் விடவில்லை. “அது சரி. நீ அப்பக்கம் அடிக்கடி போவது எனக்குப் பிடிக்கவில்லை. இந்த இந்து முஸ்லீம் சமூகங்கள் இருக்கின்றனவே, அவை இரண்டுக்குமே உள்ளத்தில் கருணையே இராது. ஆனால், ரோஷம் மட்டும் நிறைய உண்டு. ஏதாவது அவகீர்த்தி வந்தால், அவர்களை அது அவ்வளவாகப் பாதிக்கிறது. வீட்டுப்பிள்ளையாகிய உன் மதிப்புக் கெடும்” என்றான். “எனக்கு அத்தகைய போலி மதிப்பைப் பற்றிக் கவலை இல்லை” என்று அமர் அசட்டையாகக் கூறினான். “சகீனா வீட்டின் வறுமை இனித் தீர்ந்துவிடும்” என்ற நம்பிக்கையில் அவன் பட்டாணிச்சியிடம் முதல் கைக்குட்டையின் விலை தரச் சென்றான். வீட்டில் பட்டாணிச்சி இல்லை. கதவு மூடியிருந்தது. அவன் தட்டினான். சிறிது நேரத்தில் கதவு திறந்தது. ஆனால் உள்ளே ஒரே இருட்டாயிருந்தது. ஓர் இனிய பெண்குரல் “அது யார்?” என்று கேட்டது. அவன் குரல் அறிந்து “அம்மா வெளியே போயிருக்கிறாள்” என்றாள். “சரி நான் போகிறேன். ஆனால், வீட்டில் ஏன் இருட்டாய் இருக்கிறது, விளக்கு ஏற்றக்கூடாதா?” என்றான். “இருக்கிறது” “தீப்பெட்டி வேண்டுமா?” “அதுவும் இருக்கிறது” “பின் ஏன்...” மறுமொழி இல்லை. தயக்கம், தேம்பி அழும் குரல் கேட்டது. “ஏன் அழ வேண்டும் சகீனா! என்ன செய்தி” என்றான். “எனக்கு நல்ல ஆடைகள் இல்லை. எங்கள் வறுமையை நீங்கள் பார்க்க வேண்டாம் என்று எண்ணித்தான் விளக் கணைத்தேன்” என்றாள். “அவ்வளவுதானா? இதோ உனக்கு ஆடை வாங்கி வருகிறேன். அதற்கிடையே உன் முதல் கைக்குட்டையின் பணம் இதோ” என்று நீட்டினான். இருட்டில் ஒரு கை அதை வாங்கிக்கொண்டது. அப்போது மணி எட்டுக்கு மேலாய்விட்டது. அது நகரின் மூலையாதலால் கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன. அமர் விழித்தான். ஆடை தருவதாகச் சொல்லிச் சகீனாவை ஏமாற்றவும் அவன் விரும்பவில்லை. நேரே வீட்டுக்கு வந்து சுகதாவின் சேலைகளில் நான்கு எடுத்துக்கொண்டு சென்றான். சகீனா சேலைகளைக் கண்டு மலைப்படைந்தாள். அமரைக் கைகூப்பி “அண்ணலே, அம்மா முதலில் உங்களிடம் ஆளறியாமல் பேசியபோது அவள் மீது கோபம் கொண்டேன். தாங்கள் உண்மையில் அவள் கூறியதைவிட உயர்குணம் படைத்தவர்கள். உங்கள் அன்புக்கு நன்றி. ஆனால், நான் இத்தகைய சேலைகளை உங்களிடமிருந்து பெறக்கூடாது. அம்மாவும் ஏற்கமாட்டாள், ஆகவே, இதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்” என்றாள். அதைத் திரும்ப வாங்கும்போது அவன் முகம் சுண்டிப் போய்விட்டது. “இதைத் தருவதில் எனக்கு மகிழ்ச்சியிருந்தது. திரும்பப் பெறுவதில் எவ்வளவு துன்பம் என்பது உனக்குத் தெரியாது. உண்மையில் நான் வருவதுகூட எனக்குத் தீங்கு விளைக்கக்கூடும். நான் இனி இங்கே வரமாட்டேன்” என்றான். அவள் “அன்பரே, உம் குணத்தை நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனை நான் நன்கு அறிவேன். என் கெட்ட மதிப்புக்காகத்தான் அஞ்சுகிறேன். தாங்கள் வர வேண்டாம் என்று நான் கூறுவதால் தங்கள் நினைவு எனக்கு இராது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் எப்போதும் உங்களை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் இருள் சூழ்ந்த வாழ்வின் ஒளியாக உங்களைக் கருதுகிறேன்” என்றாள். சேலையுடன் சென்ற அமர் மீண்டும் அவ்வழி நாடவே யில்லை. பலநாள் சென்றும் அவன் வராததால் சகீனாவின் உள்ளத்தில் அவனைப் பற்றிய மதிப்பு உயர்ந்தது. அன்பு கலந்த அமர் உள்ளத்தில் தங்கை நைனா தவிர எவரும் இதுவரை இடம்பெறவில்லை. தாய், தந்தை அன்புக்குரிய இடத்தில் அவளே முழுதும் இடம்பெற்றிருந்தாள். சுகதா அழகு மிக்கவள். அவள் அறிவும் ஆற்றலும் அவன் மதிப்பைப் பெற்றன. குழந்தைப் பாசம் அவளுடன் அவனை இணைத்தது. ஆனால், சுகதா அவனைத் தன் குடும்பக் கோட்டையில் சிறைப்படுத்தி யிருந்தாள். அவன் அவள் வளர்த்த பச்சைக்கிளி, அதற்கு வேளாவேளைக்குப் பாலும் பழமும் கிடைத்தது. அடிக்கடி அவள் அதற்குத் தன்னைப்போல் பேச அரும்பாடுபட்டுக் கற்றுக் கொடுத்தாள். ஆனால், கிளிக்கு பச்சைப்பசுஞ் சோலையில் உலவும் இன்பம் கிடைக்கவில்லை. அமர் காதலில் தவழ விரும்பினான். ஆட்சிக்கு ஆளாக விரும்பாமல், ஆள விரும்பினான். சகீனா அழகில் மட்டமானவள், ஆனால், அவள் கைம்மாறு விரும்பாத அன்பு, தியாக உள்ளம், பெண்மையில் அவன் அறியாத மற்றொரு பாகத்தை அவனுக்குக் காட்டின. அவன் அவளைப் பார்க்கவில்லை. அவளிடம் பேசவில்லை. அவள் திசையைக் கால்கள் நாடவில்லை. ஆயினும், அவள் நினைவு அவன் உள்ளத்தை நிறைத்தது. ஆழ்ந்து வேரூன்றிய மரம் நீரூற்றாமலே வளர்வதுபோல, அவன் உள்ளத்தின் ஆழத்தில் பதிந்த காதல், நினைவூட்டும் பொருளின்றித் தழைத்து வளர்ந்தது. அவள் வாழ்வில் அவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. சகீனா வாழ்வில் இப்போது மாறுதல் ஏற்பட்டது. சலீம் வீட்டிலும் பிறசெல்வர் வீட்டிலுமிருந்து அவளுக்குக் கைக் குட்டை மட்டுமின்றி, குழந்தைகள் சட்டை, மேலங்கி பின்னும் வேலை நிறையக் கிடைத்தது. வறுமை மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து அவர்கள் வீட்டை விட்டு விடைபெற்றுச் சென்றது. வீடு முற்றும் பெரிதாகக் கட்டப்பட்டது. கட்டில்கள், படுக்கைகள், வாயில் திரைகள், துணிமணி, கலங்கள் வீட்டில் இடம் பெற்றன. அமர் வாழ்விலும் மாறுதல்கள் நிகழ்ந்தன. ஏழைகள் சேவை இப்போது கனவாகமட்டும் இல்லை. நனவாயிற்று. டாக்டர் சாந்திகுமாரின் சேவாசிரமத்தில் அவன் சம்பளமில்லாத ஆசிரியத் தொண்டருள் ஒருவனாய், முற்பகல் முழுதும் அங்கே கழித்தான். அவன் தொண்டார்வம் டாக்டரின் தொண்டார் வத்தையும் கடந்தது. டாக்டர் கல்லூரியில் பேராசிரியரா யிருந்து கொண்டே, சேவாசிரமும் நடத்தினார். கல்லூரிச் சம்பள உதவி இல்லாமல், வெறும் பொதுமக்கள் உதவியாலேயே அதை நடத்த முடியும் என்று அவர் துணியவில்லை. அமர், அவர் கல்லூரிப் பணியில் ஒரு காலும், தொண்டில் ஒரு காலுமாக இருப்பதைக் கண்டித்தான். அமரின் பணியும், புகழும், அவன் குடும்ப மதிப்பும் அவனை நகரின் பொதுமக்கள் தலைவனாக்கின. நகரசபைத் தேர்தலில் அவனைக் கேளாமலே அவன் நண்பர் அவனை நிறுத்தினார்கள். எதிர்த்தவர் பேர்போன வழக்கறிஞரானாலும் அவருக்குமேல் நாலுபங்கு வாக்குகள் அவனுக்குக் கிடைத்தன. அடுத்தபடி நகர் ஆணையாளர் பதவிப் போட்டியிலும் அவன் பக்கமே வாக்குகள் குவிந்தன. அவன் நகர ஆணையாளர் ஆனான். இச்சமயம் நெடுநாள் தந்தை மகன் இடையே இருந்து வந்த அமைதிக்கு மீண்டும் ஊறுவந்தது. அமர், வண்ணான் வீட்டு நாய் மாதிரி, வீட்டிலும் நிலைக்காமல் நீர்த்துறையிலும் நிலைக்காமல் திரிகிறான் என்று சமர்காந்த் சீறி விழுந்தார். பேச்சு வலுத்தது. “என் வேலையில் பங்குகூடக் கொள்ளாமல் நீ ஊர்வேலை செய்கிறாய். அதைக்கொண்டே நீ பிழைக்கப்பார். என் வீட்டிலிருந்துகொண்டு எனக்கெதிராக நடப்பானேன்” என்றார். அவன் உடனே சென்று சிறிய வீடமர்த்தினான். சுகதாவின் தன் மதிப்பும் இத்தடவை புண்பட்டது. அவள் இத்தடவை கணவனை அடக்கி இயக்கவில்லை. நேர்மாறாக அவனை ஊக்கி அவனுடன் வெளியேறினாள். அது மட்டுமன்று, தன் தாய்வீட்டுப் பணத்தை நாடியே தன்னை மாமன் இவ்வீட்டில் கொணர்ந்தார். ஆதலால், தன் நகைகளையும் அவள் கழற்றி எறிந்து வெளியேறினாள். அவள் உயர் குறிக்கோள் அமரைக்கூட ஒருகணம் வியப்படையச் செய்தது. அண்ணன், அண்ணி, குழந்தை இரேணுகாந்த், ஆகியோர்களிடமே உயிரை வைத்திருந்த நைனாவும் புறப்பட்டாள்! சமர்காந்தும் கோபத்தில் வெளிக்கதவை அடைத்துக் கொண்டு தன் அறையில் சென்று படுத்தார். வீடு வெறிச் சென்றிருந்தது. சில்லூ கூட அடிக்கடி சுகதா வீட்டுக்கு வந்துவிடுவாள். இச்செய்தி கேட்டு இரேணுகா ஓடிவந்தாள். அவள் எவ்வளவோ வற்புறுத்தி வேண்டியும் மருமகனோ, மகளோ அவள் வீடு செல்லவும், அவளிடம் பணம் பெறவும் மறுத்தனர். மறுநாள் அமர், சேவாசிரமம் சென்று வழக்கம்போல் திரும்பினான். வருவாய்க்கு என்னவழி என்று சுகதா சுண்டிக் கேட்டாள். “இதோ வழி பார்க்கிறேன்” என்று அவன் வெளியே புறப்பட்டான். இதுவரை முதலாளி இனத்தவனாயிருந்து குனியாது, நிமிராது, உயர்வாழ்வு கழித்த அவன் துணிமணி விற்பனையாளாக இருந்து தெருத்தெருவாகத் துணிவிற்றான். மக்கள் மலைப்புற்றனர். சிலர் கேலி செய்தனர். பல செல்வர் தடுத்தனர். ஆனால், அவன் செல்வரைத் திட்டிக் கொண்டே செயலாற்றினான், என்றாலும் செல்வர் ஆதரவு காட்டினர். வருவாய் சிறிதானாலும் அவனுக்குப் பெரிதாயிருந்தது. சுகதாவின் தியாகம், கணவன் தன்மதிப்பைவிட்டுச் செல்வதை விரும்பவில்லை. அவள் வழக்குமன்றத் தலைவர் மனைவியை அடுத்து, அவள் ஆதரவால் மாதம் 50 வெள்ளி ஊதியத்தில் ஓர் ஆசிரியை ஆனாள். இதன் உதவியால் அவள் ஓரளவு செல்வ வாழ்விலேயே வாழ முடிந்தது. அமர் ஏழை போல வாழ விரும்பினான். அவள் மறுத்தாள். அமருக்கு உள்ளம் சுட்டது. அதேசமயம் அவன் வெறுப்புத் தியாகமும் அவமதிப்பான செயல்களும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவள் சுகபோக அவா, உயர்குடிப் பெருமையை அவன் உளமார வெறுக்கத் தொடங்கினான். கணவன் மனைவியரிடையே பெரும் பிளவு ஏற்பட்டது. சமர்காந்த் குடும்ப இறுமாப்பினாலேயே மகனையும் மருமகளையும் துரத்தியிருந்தார். அவர் என்றும் வீட்டுணவின்றி விடுதி உணவு உண்ணுவதில்லை. இப்போது அவர் கடையையும் வெறுத்து அடைத்துவிட்டார். பழமும், பாலும் உண்டு நோய்ப்பட்டார். இதுகேட்டுச் சுகதா மனமிளகினாள். அங்கொரு வேளையும், தன் வீட்டிலொரு வேளையும், சமைத்துத் தொழிலும் ஆற்றினாள். ஆனால், அமர் தந்தை திசை நாட மறுத்து, தந்தையையும், அவர் போன்ற பணக்காரரையும் அவ்வாழ்வு வாழும் சுகதாவையும் வெறுத்து எப்போதும் வெடிமருந்து நிறைந்த ஒரு உயிர்வாணமாக இயங்கினான். புறவாழ்வு புயலாயினும் அமரின் அகவாழ்வில் சகீனா இன்ப ஓவியமாய்த் திகழ்ந்தாள். ஆனால், இத்துறையிலும் புயல் வீசத் தொடங்கிற்று. ஒரு நாள் பட்டாணிச்சி அவனிடம் வந்து சுகீனாவின் திருமணம் ஏற்பாடாகி வருகிறது என்று கூறினாள். தந்தையிடம் பரிந்துரைத்துப் பணம் வாங்கித் தருவானென்றே அவள் எண்ணினாள். ஆனால், அவன் காட்டிய மனக்கசப்பும் வெறுப்பும் அவளுக்கு இன்னதென்று புரியவில்லை. அவன் சரேலென்று சகீனா வீட்டிற்குச் சென்றான். வீட்டின் புதுமாறுதல் அவனுக்குத் தெரியாது. ஆயினும் விசாரித்தறிந்து கதவைத் தட்டினான். சகீனா அவனை எதிர்பார்த்தே இருந்தாள். கதவு தட்டியதும் திறந்ததும் ஒரே கணமாயமைந்தன. அவள் அவன் கையைப்பற்றிக் கொண்டு, “என்னை மறந்தே போனீர்கள். இதற்குதான் அன்பு என்று பெயரா?” என்றாள். “நீதானே வருவது நல்லதல்ல என்றாய்.” “ஆம், ஆனால், அது என் விருப்பமல்ல. உங்கள் நன்மையைக் கருதித்தான் சொன்னேன். ஆனால், சொன்னபடியே நீங்கள் நடப்பீர்கள் என்று நான் கனவிலும் கருதவில்லை. “சொன்னபடியே நடப்பவரைக் கண்டால் எவருக்கும் பிடிக்காதுதான்.” “அப்படியல்ல, அதனால் தான் என் உள்ளத்தின் நடு இடத்தில் நீங்கள் வீற்றிருக்கிறீர்கள்.” “அப்படியானால் உன் திருமணம் பற்றி இன்று கேள்விப்பட்டேன், அதன் பொருள்......” “பொருள் என்ன? ஏழை வாழ்வு ஏழையுடன் சேர்ந்தது. உங்கள் அன்பு வடிவம் என் உள்ளத்தில் இடம் பெறுவதை அது தடுக்காது.” “அது முடியாது சகீனா, நான் உலகத்தையே வெறுத்தாலும் வெறுப்பேன்; உன்னை நான் மணந்தே தீருவேன்.” அவள் முதலில் சிரித்தாள். பின் ஆழ்ந்து சிந்தித்தாள். “நீங்கள் உலகை வெறுக்கலாம். சுகதாவை?” “அவள் நான் வெறுக்கும் உலகின் ஒரு பகுதி. பணக்காரர் வகுப்பின் பெருமை அவளை ஆட்டுகிறது. அவளும் என்னை ஆட்டிவைக்க விரும்புகிறாள். என் வீட்டில் எனக்கு அன்பு கிடையாது, ஆர்வமில்லை. நான் உன்னுடன் எங்கேனுஞ்சென்று கூலிப்பிழைப்பு பிழைக்கத்தயார்.” “சுகதாவை நீங்கள் குற்றஞ் சொல்லக்கூடாது. அவள் உங்கள் நன்மையைத்தான் நாடுகிறாள். நான் கேள்விப்பட்டேன், நீங்கள் மூட்டை சுமந்து விற்கிறீர்கள் என்று. சுகதா உங்களைத் தடுக்க விரும்புவது இயற்கையே. அதை நான் கேட்டபோது வருந்தினேன். எனக்கு முடிந்திருந்தால் உங்கள் மூட்டையைச் சுமந்து கொண்டு உங்கள் பின்னால் வந்திருப்பேன்.” அவள் தூயகளங்கமற்ற அன்பும் பணிவும் அமர் உள்ளத்தில் மின்சாரம்போல் பாய்ந்தன. அவள் அவனை அணைக்கத் தாவினாள். அவன் பின்னடையவில்லை. அவளைத் தன் பிடியில் அணைத்துக்கொண்டே “நீ எனக்காகக் காத்திருந்தால், நான் உன்னுடன் வெளியேறத் தயார்” என்றான். இதற்குள் பட்டாணிச்சி வந்துவிட்டாள். அவள் பெண் புலியென அமர்மீதும் மகள் மீதும் சீறினாள். காலி, வீணன் என்று வைதாள். ஆனால், சகீனா அவளைச் சட்டைபண்ணாமல் அவனை வாயிற்படிவரையில் தொடர்ந்து “நாளை வாருங்கள்” என்று கூறியனுப்பினாள். அமர் உள்ளமும் உடலும் துடித்தன. அவன் சலீமிடம் சென்று தன் முடிவும் துணிவும் உரைத்தான். சலீமுக்கு இம்முடிவு பிடிக்கவில்லை. ஆனாலும் ஒன்றும் செய்யத் துளையாமல் பேசிக் கொண்டே மறைவாகத் தன் பணியாள் சமர்காந்தை வரவழைக்க அனுப்பினான். பட்டாணிச்சியும் மகளை வாயாற வைது அவளை வீட்டினுள் இட்டுப் பூட்டிவிட்டுச் சமர்காந்திடம் சென்று அமர் செய்தியை பன்மடங்கு பெருக்கித் தூற்றினாள். அவர் அமர்காந்த் சிக்கிய இக்காதல் மூலமே அவனை அடக்கித் திருத்த எண்ணியதோடு, பட்டாணிச்சிக்குப் பொருள் கொடுத்து அவள் வாயடைத்து விடவும் எண்ணினார். சலீம் வீட்டில் அமர்காந்தை அவர் சந்தித்துப் பேசினார். தந்தை மகன் வேறுபாடு, அகவேறுபாடாக விரிவுற்றது. அமர் “நான் உங்கள் வீம்பு வாழ்வும், போலி மதிப்பும் விரும்பவில்லை. பொம்மை மனைவிகளும் வேண்டாம். சகீனாவுக்காக மதம், உலக மதிப்பு, பணம் யாவும் இழக்கத் தயங்கமாட்டேன்” என்றான். சமர்காந்த் மனம் பிளவுபட்டது. ஆனால், அவன் மீது கோபம் கொள்ளவில்லை. அவன் வழி வேறு, தன் வழி வேறு என்பதை இப்போது முழுவதும் புரிந்து கொண்டார். “சரி, உன் விருப்பப்படி நட. ஆனால் இன்பத்திலும் துன்பத்திலும் நான் உன் தந்தை என்பதை மறக்காதே. என்னை நீ காண விரும்பா விட்டாலும்கூட எனக்கு எழுத மறக்காதே. உனக்குப் பணம் வேண்டும்போது கேட்கத் தயங்காதே. இப்போது பட்டாணிச்சி வாயடக்க என்னால் முடியாது. ஊர் முழுவதும் எழும் தீ உன்னைக் கவியுமுன் எங்காவது ஓடிப்போ” என்றார். ஊர்வாய் மறுநாளே அமர் குடும்பத்தின் மதிப்பைச் சுக்கு நூறாக்கிற்று. சுகதாவின் கோபம் வெறுப்பாக மாறிற்று. குழந்தையுடன் அவள் பழயபடி மாமன் வீட்டில் அடங்கிக் கிடந்தாள். சமர்காந்த் அறையைவிட்டு வெளி வருவதில்லை. நைனா ஒருத்தி மட்டுமே உள்ளத்தில் அண்ணன் நினைவு மாறாமல் அவனைப் பற்றிய தூற்றுதலிடையேகூட அவனை வெறுக்காமல் இருந்தாள். அண்ணன் அன்பையும் அவன் தூய உயர் கொள்கையையும் அவள் போற்றினாள். அமர் இப்போது நாடோடியாய் ஊர் ஊராய் அலைந்தான். இன்று கண்ட முகம் நாளைக் காட்சியில் மறைக்கிறது. இன்று இருந்த ஊரில் அவன் நாளை இல்லை. நாடும், காடும், ஆறும், மக்கள் முகங்களும் ஆற்றுவெள்ளம் போல் அவனைக் கடந்து செல்கின்றன. அலைந்து காலலுத்தது. தொலை செல்லுந்தோறும் சகீனா நினைவு உள்ளத்தை அறுத்தது. எந்த ஊரிலாவது தங்கி, வாழ்விடம் ஆக்கி, சகீனாவை அங்கே அழைத்து வந்து தனி வாழ்வு வாழ அவன் விரும்பினான். மாதம் மூன்றாகியும் எந்த ஊரும் பிடியாமல் அலைந்தான். இரவுகூடத் தங்காமல் அலைந்து ஒரு நாள் காலை அரித்து வாரத்துக்கு அருகிலுள்ள ஒரு ஊரை அடைந்தான். இமயமலையின் அடிவாரம் ஒரு பக்கம் அவன் காலடியிலிருந்து பல அடி கீழே கிடந்தது. அதன் அடர்த்தியான, மங்கிய புகைப்படலங்கள் போன்ற கொடுமுடிகள் ஒன்றன் மீதொன்றாக வடதிசை வானை மறைத்தன. மெல்லருவிகள் தென்றலின், இள மணம் உண்டு இசை பாடின. ஊர்வெளியில் கிணற்றருகில் ஒரு கிழவி நீர்க்குடத்துடனும் கயிற்றுடனும் வந்தாள். அமர் அவளிடம், “தாயே, நான் நெடுந்தூரம் அலைந்தலுத்தேன். ஒரு நாள் இங்கே தங்க இடங்கிடைக்குமா?” என்றான். “ஏன் கிடைக்காது, குழந்தாய். என்னுடன் வா. என் வீட்டிலேயே தங்கிச்செல்” என்றாள். அமர் அவள் தலையிலிருந்து குடத்தை இறக்கி வைத்தான். தானே நீர் இறைக்கத் தொடங்கினான். மற்றோர் இளம் பெண் அவ்விடம் வந்து “அத்தை, இது யார்? நம் வீட்டு மாப்பிள்ளையா?” என்று கேட்டுச் சிரித்தாள். கிழவி “ஆம்” என்றாள். இளமங்கை “மாப்பிள்ளை வேலை செய்யலாமா? நான் இறைக்கிறேன்” என்று கயிற்றை வாங்கினாள். இளநங்கை வேறு யாருமல்ல, காசியில் வெள்ளையர் பழிக்காளாகி அவர்களைக் கொன்று நகரமக்கள் உள்ளத் தலைவியான முன்னிதான். அவள் அரித்துவாரத்தில் பணியாளாயிருந்து அங்கும் கணவன் வந்து மன்றாடியும் அவனை ஏற்க மறுத்தாள். கணவன் பைத்தியம் பிடித்தவன் போலலைந்து மாண்டான். பிள்ளையும் தாயறியாது நலிந்து மாண்டது. இதையறிந்த முன்னி உயிரை வெறுத்து கங்கையில் சென்று குதித்துவிட்டாள். அவளைச் செம்மார் வகுப்பு இளைஞன் ஒருவன் கரையேற்றினான். அவன் அவளை மனமாரக் காதலித்தும் அவள் அசட்டையாயிருந்தாள். அவளுக்காகவே ஆற்றைக் கடந்து மருத்துவரை அழைக்கச் சென்றபோது அவன் படகு புயலில் அகப்பட்டுக் கவிழ்ந்தது. முன்னி புயல்களை எழுப்பியும் புயல் இடையே ஒரு மின்னற் கொடியாகச் செம்மாரர் சேரியில் தங்கினாள். அமருக்கு அவ்வூரும் அவ்வூர் மக்களும் பிடித்திருந்தன. அவ்வூர் மக்களுக்கும் அவனைப் பிடித்தது. முன்னியால் ‘அத்தை’ என்று அழைக்கப்பட்ட கிழவியின் பெயர் சலோனி. அவள் வீட்டிலேயே அமர் தங்கினான், அவன் அவளை ஒரு வேலையும் செய்யவொட்டாமல் எல்லாம் தானே செய்தான். குழந்தைபோல எல்லாரிடமும் பழகினான். எனவே அவள் அவனைத் தன் மகன்போலவே பாவிக்கத் தொடங்கினாள். முன்னிக்கு அவனை இன்னாரென்று அடையாளம் தெரியவில்லை. அவன் அறிந்து கொண்டான். அவன் அவள் வரலாறு கூறும்படி கேட்டான். அவள் அவனிடம் கூறினாள். ஆனால் அவன் தன் கதை கூறும்போது தான் யார் என்பது மட்டும் கூறாமல் தானும் காசிவாசியே என்றும், தான் தந்தை குடும்பத்தினர் வெறுப்பால் வந்திருப்பதாகவும் கூறினான். அவன் தனக்கு மேம்பட்ட குடியினன் என்பதை முன்னி அறியத்தவற வில்லை. ஆனால், அவனிடம் அவள் முதலில் மதிப்பும், பின் வரவரப் பாசமும் கொண்டாள். அவனும் தன்னிடம் ஈடுபடுவது கண்டு நாளடைவில் அவனைத் தான் பெறமுடியும் என்றே கனவு காணத் தொடங்கினாள். அமர், சேரியின் பிள்ளைகளுடன் பழகி அவர்கள் அழுக்கடைந்த தோற்றத்தையும் அதற்குரிய பழக்க வழக்கத்தையும் படிப்படியாக மாற்றினான். சேரியின் தலைவன் கூதட் என்பவன். அவன் கிழவனானாலும் புதுமை விருப்பும்; சமூகப் பழக்க வழக்கம், சமய ஆச்சாரம் ஆகியவற்றில் வெறுப்புமுடையவன். தன் வகுப்பினர் சமூகத்திற்கான அடிப்படைத் தொழில் செய்து பிறருக்குச் செல்வம் தந்தும், அவர்களால் தீண்டப் படாதவரென ஒதுக்கப்படுவது கண்டான். இக்கருத்துகள் நிறைவேற வழிகாணாமல் அவன் மனக்கசப்பும், வாழ்வில் வெறுப்பும் அடைந்தான். இந்நிலையை மறக்க அவன் குடியையே நம்பியிருந்தான். குடிவெறியில் அவன் பிறருக்குச் சிறிது தொல்லை கொடுத்தாலும், நல்ல நேரத்தில் அறிவமைதி யால் அதைக்கட்டுப் படுத்திக்கொண்டான். குடிக்குமுன் வீட்டினுள் சென்று பிறரிடம் சொல்லிவிட்டே குடிப்பான். கூதட் அவனை அவ்வூரிலேயே நிலையாக வைத்துக் கொள்ளும் விருப்பத்துடன் அவனைப் பிள்ளைகள் கல்விக்கான பள்ளிச்சாலை வைக்கும்படி கூறினான். முதலில் சலோனி அதற்காகத் தன் வீட்டையே கொடுத்தாள். கொஞ்சநாட் களுக்குள் வம்புசெய்து திரிந்த பிள்ளைகள் வாழ்வு மேம்பட்டது கண்டு, ஊரார் அனைவரும் பணம் திரட்டி பெரிய பள்ளி கட்டித்தந்தனர். கல்வி, நல்வாழ்வு, சமூகத் தொண்டு, நல்ல பழக்கவழக்கம் யாவும் பிள்ளைகளிடமும் பிள்ளைகள் மூலம் ஊராரிடையேயும் பக்கத்து ஊர்களிலும் பரந்தன. எவர் கூறியும் குடியை விடாத கூதட், அவன் பிள்ளைகளிடம் குடியர் வாழ்வு பற்றிய கதை கூறுவது கேட்டு நிறுத்தினான், இதுகண்டு ஊராரும் குடியை விட்டனர். அவன் கல்வி முயற்சியால் அக்கம்பக்க ஊர்ப்பிள்ளைகளும் கலந்தனர். அவன் புகழ் அவ்வாட்டாரம் எங்கும் ஏழைமக்களிடையேயும் சேரிகளிடையேயும் பரந்தது. அவன் அச்சேரி மக்கள் உள்ளத்தில் முடிசூடா மன்னனாகவும் பக்கவட்டாரங்களின் கலைத்தெய்வ மாகவும் விளங்கினான். கல்வியோடு குடிசைத்தொழில்களிலும் அமர் கருத்துச் செலுத்தினான். வீட்டுக்குவீடு நூற்பு வட்டு, இராட்டைகள் கொடுத்து நூற்கச் செய்தான். நூல்கள் வாங்கிக் கொண்டு புடவைகளைக் கொடுத்தான். தறிகள் அமைத்துச் சேலைகள் செய்ய ஏற்பாடு செய்தான். ஊர்மக்களிடையே சேமிப்புப் பணம் வளர்த்து, சிறு சேரிப் பொருளகங்கள், சீட்டுக்கோப்புகள், ஊர்முன்னேற்ற நிதிகள் வகுத்தான். அவன் புகழ் எங்கும் பரந்தது. ஆயினும் காசியில் சகீனா காதுக்கு மட்டும் எதுவும் எட்டவில்லை. ஒரு நாள் அவன்- சகீனா, சலீம், நைனா மூவருக்கும் கடிதங்கள் எழுதினான். சகீனாவின் கடிதத்தை சலீமின் கடிதத்துக்குள் வைத்து அனுப்பியிருந்தான். சலீம் கடிதத்துக்கு மறுமொழி எழுதினான். அதில் சகீனா தந்த மறுமொழியின் சுருக்கம் மட்டும் இருந்தது. சகீனாவை கடிதம் தரக் கண்டபோது அவள் உள்ளத்தைத் தெரிந்தறிந்தான். சகீனாவின் பேச்சு அதை உறுதிப்படுத்திற்று. “அவர்தான் என்னை மணப்பதாகக் கூறி என் அன்பை பெற்றார். நான் அவர் விருப்பத்தை மீறமாட்டேன். அவருக்காக உயிர் மானம் எல்லாம் விடவும் தயங்கவில்லை. ஆனால் நான் அவரைக் காதலனாகக் கருதவில்லை. நான் கண்ட மனித தெய்வம் அவர். அவர் வாழ்வில் ஏதோ ஒரு குறையிருப்பதனால்தான் அவர் என் போன்ற தகுதியற்ற ஏழையின் அன்பை நாடினார். நானாக அவருக்கு மறுப்பளிக்க மாட்டேன். ஆனால் சுகதாவை அவருடன் சேர்த்து அவர் வாழ்வை இன்பமாக்க முடியுமானால் என்னைப்பற்றி நான் கவலைப்படமாட்டேன். அமர் என் தெய்வமாதலால் யாரை மணந்தாலும் அவரை நான் வழிபடத் தடையிராது” என்றாள். சலீம், சகீனாவைப் பெண் தெய்வமாகக் கருதினான். எப்படியாவது அமர் வாழ்வை நிறைவுபடத்தி சகீனாவுக்கு அன்பு விடுதலை வாங்கித்தந்து அவளைத் தன் உள்ளக்கோவிலில் அணிய வேண்டுமென்று அவன் திட்டமிட்டிருந்தான். அதன் படியே சகீனாவின் உள்ளத்தையும் அவன் படம் பிடித்துக் காட்டி “அவளை நீ மணம் முடிக்க விரும்பினால், நான் அதற்கு உதவியாயிருப்பேன். ஆனால், அவள் வாழ்வை வேறு வழியில் அமைக்க நீங்கள் விரும்புவதாக அவளிடம் தெரிவிப்பதனால், அதனால் பெருந்தன்மை வாய்ந்த அப்பெண்ணரசியை நானே ஏற்கத் தவம் கிடக்கிறேன்” என்று எழுதியிருந்தான். நைனா அவன் கடிதத்தைச் சுகதாவுக்குப் படித்துக் காட்டினாள். அதற்கு அவள் மறுமொழி எழுதவோ, எழுதும்படி கூறவோ விரும்பவில்லை. ஆனால், நைனா தன் உள்ளத்தைப் பாகாய் உருக்கி அன்புக் கடிதம் வரைந்திருந்தாள். சுகதா மட்டும் இன்பவாழ்வும் விரும்பினதினால்தான், தான் வீட்டு வாழ்வில் தரிக்க முடியவில்லை என்று அவன் அதில் எழுதியிருந்தான். சுகதா அதை மறுக்கவுமில்லை; ஏற்கவுமில்லை. தன்னைப்பற்றி அமர் கொண்ட கருத்து சுகதாவின் வெறுப்பைக் கோபமாகக் கிளறியிருந்தது. “வேண்டாமென்று மனைவியை ஒதுக்கிவைப்பது போதாதாம். அதற்குக் குற்றமும் விளக்கமும்கூறி மேலும் அவமதிக்க வேண்டுமாம். ஆண்கள் குற்றம் செய்தால் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தண்டனை பெறக்கூடாது. பெண்களிடம் குற்ற மிருந்தாலும் தண்டிக்கலாம்; இல்லாவிட்டாலும் தண்டித்து அதற்கொரு குற்றவிளக்கம் செய்யலாம்” என்று அவள் உள்ளூர முணுமுணுத்துக்கொண்டாள். ஆனால், கூறப்பட்ட குற்றத்தை கோபம் அகற்றியேவிட்டது. அவள் ஆடை அணிமணி வெறுத்தாள். குழந்தையிடம் கொஞ்சுவதைக்கூட நைனாவிடம் விட்டுவிட்டாள். இவையிரண்டும் பெண் அடிமையின் சின்னங்கள் என்று இதற்கு அவள் விளக்கம் கூறினாள். பெண்கள் இயக்கம் பற்றிய நூல்கள் கட்டுரைகள் வாசித்தாள்; எழுதினாள். அவளே பெண்களுக்காகப் பொதுவாகவும், ஏழைப்பெண்களுக் காகச் சிறப்பாகவும் உழைக்கக் கருத்துக்கொண்டாள். கணவன் சமூகத் தொண்டை நோக்கித் தான் செல்லத் தொடங்கி யிருப்பதை அவள் கவனிக்கவில்லை. சமர்காந்தின் உள்ளத்திலும் அமர் போனபின் பெரிய மாற்றம் ஏற்பட்டது. வைதீக சாஸ்திரி ஒருவர் “என்ன கலி காலம் போங்கள்! உங்கள் பையன் ஒரு பட்டாணிச்சியிடம் அல்லவா காதல் கொண்டிருக்கிறானாம்” என்றார். தாம் நல்ல காலத்தில் வளர்த்த புராணப்பாடகர்கூடத் தம்மை இகழ்வது சமர்காந்துக்குப் பொறுக்கவில்லை. “போமையா போம். நீதான் புராணம் படித்தவராயிற்றே. இது ஒன்றும் புதிதல்லவே, உங்கள் கிருஷ்ணன் கோபிப் பெண்களை...” அவர் வாய்மூடுமுன் புராணிகர் ஓடிவிட்டார். பிறரும் அவர் அபாரக் கோபம் கண்டு வாய் மூடினர். வாழ்க்கை அவருக்குக் கசந்து போயிற்று. ஆனால், கசப்பு முதலில் விசித்திர வழிகளிலெல்லாம் பாய்ந்தது. ஆனால், கசப்பு முதலில் விசித்திர வழிகளிலெல்லாம் பாய்ந்தது. சமூகச் சீர்திருத்தமும், புத்தறி வியக்கங்களும் பரவுவது கண்டு சேட்டுகள், செல்வர்கள் ஒரு புறமும், புராணிகர், மதவாதிகள் ஒருபுறமுமாகப் புழுங்கினர். ஆகவே வியால்ஜி என்ற பழய புராணிகர் ஆதரவுடன் பண்டித மதுசூதன்ஜி என்ற புதுப் புராணிகரின் கதைக்கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது. சமர்காந்த் எவ்வளவு போடுகிறார் என்று பார்த்தபின் மற்ற சேட்டுகள் போட எண்ணினர். தலைவராக வந்தவரிடம் சமர்காந்த் எவ்வளவு செலவாகும் என்றார். அவர் பதினாறாயிரம் ரூபாய் என்று மதிப்பிட்டு “நீங்கள் எவ்வளவு கூடுதல் போட முடியுமோ அவ்வளவும் நல்லது” என்றார். சமர்:- நீங்கள் எவ்வளவு போடப் போகிறீர்கள்? தலைவர்:- நூறுரூபாய் போட இருக்கிறேன்? சமர்:- அவ்வளவுதானே இதற்குப் பலரிடம் போவானேன்? நானே மீதி முழுதும் போட்டுவிடுகிறேன். போங்கள். எதிர்பாராத இந்நிகழ்ச்சியால் யாவரும் திகைத்தனர். கோவிலில் கதைக்கச்சேரி முன்னிரவிலேயே தொடங்கிற்று. பண்டிதன் பேச்சில் புராணத்தோடுகூட சாதி மதத்துவம், வைதிகர்கள் சேவையின் பெருமை ஆகியவை விளக்கப்பட்டன. ஆனால், எவரும் புராணத்தைக் கவனித்ததைவிட வெளி வாயிலையே கவனித்துக் கொண்டிருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் எவராவது வந்துவிடக்கூடும் என்ற கவலையே அவர்கள் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது. திடீரென்று கூட்டத்தில் கலைசல் ஏற்பட்டது. அடிதடி ‘ஐயோ, ஐயோ’ என்ற கூக்குரல், போடா! பிடிடா! அடிடா! என்ற கூச்சல்! பெண்பிள்ளைகளின் அலறல்! கோயில் அமளி குமளிப் பட்டது. திடீரென்று அமளியில் ஒரு அமைதி ஏற்பட்டது. டாக்டர் சாந்திகுமார் கூட்டத்தின் நடுவில் வந்து நின்றார். அவரும் ஆவேசம் கொண்டவர் போல “பத்கர்களே நன்றாக அடியுங்கள். இன்று அடிப்பவரை அரசாங்கம் ஒன்றும் செய்யாது. கடவுளும் இதற்கு வெகுமதி கொடுப்பார். இன்று இப்புண்ணிய வேளையில் கொடுக்கும் ஒவ்வொரு அடிக்கும் வானுலகில் உங்களுக்கு ஒரு வீசை அல்வா தரப்படும். இன்று கொடுக்கும் ஒவ்வொரு குத்துக்கும் ஒரு முந்திரிக்கொத்துத் தட்டு தரப்படும்” என்று முழங்கினார். ஐந்து கணத்துக்குள் கோயில் வெறிச்சென்றாய் விட்டது. கதைக் கச்சேரியின் தடமேயில்லாமற் போயிற்று. மறுநாள் போலீஸ் பாதுகாப்புடன் கச்சேரி தொடங்கிற்று. கூட்டத்தில் நான்கைந்து பேருக்குமேலில்லை. சுண்டல் வாங்கவரும் பிள்ளைகளைக்கூட அன்று காணவில்லை. ஆனால், அதேசமயம் ஊர் வெளியில் காசிநவஜவான் சபாவின் ஆதரவில் டாக்டர் சாந்திகுமாரே கதைக்கச்சேரி தொடங்கினார். இங்கே புராணம் வேறுமாதிரியாய் இருந்தது. “கடவுள் ஒரு மனித இனத்தைத்தான் படைத்தார்; சாதியைப் படைக்கவில்லை. உயர்ந்தவர், புண்ணியவான்களுக்குக் கடவுள் அவ்வளவு தேவையில்லை; தாழ்ந்தவர் பாபிகளுக்குத்தான் தேவை. செல்வர் உள்ளத்தில், செருக்குடையவர் நெஞ்சில் ஈசன் ஒளி துலங்காது; பணிவுடையார் உள்ளத்தில், துன்பப்படுவர் உள்ளத்தில்தான் ஈசன் துலங்குவான்.” இத்தகைய உரை மணிகள் டாக்டர் சாந்திகுமாரின் புராணப் பேச்சில் உதிர்ந்தன. ஆனால் அவர், தான் வெறும் பேச்சாளர் மட்டும் அல்ல. ஒரு புரட்சித்தலைவர் என்பதைக் காட்டினார். “கடவுள் அன்பையே உணவாகக் கொள்பவர். உங்கள் அன்புக்குக் காத்திருக்கிறார். அடிபட்டும் உதைபட்டும் ஆண்டவனைப் பார்ப்போம் வாருங்கள், ஏழைமக்கள் உரிமைபெறப் போராடுவோம் புறப்படுங்கள், நாம் கடவுளைக் காணப் பெறாவிட்டால், நம் பிள்ளைகள் காணட்டும்; இப்போதே அணியணியாக வாருங்கள்” என்று கூறி அவர் நடந்தார். அவர் பின் ஆவேசம் கொண்ட மக்கள் அவரைப் பிடிக்க ஓடுபவர்போல் ஓடினர். கோயில் முன் புரோகிதர், சேட்டுகள் கூடினர். போலீஸ் அவர்களைச் சூழ்ந்து நின்றது. குண்டர்கள் இருபுறமும் அணிவகுத்து நின்று தடியைச் சுழற்றி நின்றனர். கூட்டம் வாயிலின் முன் வந்தது. பலர் அடிபட்டனர். கூட்டம் சிதறத் தொடங்கிற்று. டாக்டர் முன்வந்து நின்றார். தடியடியில் தயக்கம் ஏற்பட்டது. சமர்காந்த் சேட்டுகளுடன் நின்றார். தடியடி நின்று, துப்பாக்கிவேட்டுத் தொடங்கிற்று. டாக்டர் அடிபட்டு விழுந்தார். பலர் மாண்டனர். கூட்டம் வெருண்டோடிற்று. குண்டரும், போலீசும் - அடித்தும், சுட்டும் அவர்களை ஊரெங்கும் துரத்தினர். நைனா அன்று கதை கேட்கச் சென்றிருந்தாள். கூட்டத்தில் தப்பி வீடு வந்து, “அண்ணி பொதுமக்களைச் சுட்டுத்தள்ளுகிறார்கள் பாவிகள்” என்றாள். “சுட்டுத்தள்ளுவது உன் தந்தை தான்” என்றாள் சுகதா. “தந்தையா - என் தந்தையா?!” என்று மலைப்புடன் கேட்டாள் நைனா. சுகதா ஓடிச்சென்று கூட்டத்தைக் கண்டாள். மக்கள் ஓடுவதுகண்டு இரக்கமும், கோபமும் கொண்டாள். ஆண் பெண்களின் கோழைத்தனம் கண்டு புலியென வெகுண்டெழுந் தாள். நைனா ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். சுகதா தெருவில் ஓடும் கூட்டத்தின் முன் சென்று “ஏன் ஓடுகிறீர்கள், எதிர்த்து நில்லுங்கள், மக்களே! கடவுள் நம்மைச் சுடச்சொன்னால், நாம் அவருக்காகச் சாவோம்; துப்பாக்கி ஏந்திகளுக்கு அவர் அருள் பாலிக்கட்டும்; வாருங்கள். நானும் வருகிறேன். கடவுளைப்போய் கேட்போம். கோயிலில் அவர் இல்லாவிட்டால், மேலுலகம் சென்றே பார்ப்போம்” என்று வீறிட்டுக் கொண்டு முன் சென்றாள். அவள் கூட்டத்தை எதிர்த்துக் கொண்டு துப்பாக்கி வேட்டுகளை நோக்கிச் சென்றாள். ஒரு பெண்ணின் துணிச்சல் கண்டு யாவரும் மலைத்தனர். அவளைப் பாதுகாக்கச் சிலர் அவளைப் பின்பற்றினர். படிப்படியாக யாவருமே துணிந்து, படைஊர்வலம் செல்வதுபோல் திரண்டு சென்றனர். அணிகள் தெருக்களை நிறைத்துப் பல கல் தொலை நீண்டன. முன்னணி மீண்டும் கோயில்வாசல் முன் வந்தது. இருபுறமும் மீண்டும் தடியடிகள், துப்பாக்கிக் குண்டுகள் மழையாகப் பொழிந்தன. பலர் வீழ்ந்தனர். ஆனால், விழுந்த இடங்கள் படையணிகளில் நிரப்பப்படுவதுபோல நிரப்பப் பட்டன. கூட்டம் குண்டுகளுக்கு மார்பு தர முன் வந்தது. உறவினர் உற்றார் இறந்ததும், மற்றவர் வீறுடன் முழங்கிக் கொண்டு முன்னேறினர். சுகதா ஒப்பற்ற படைத்தலைவர்போல் அஞ்சாநெஞ்சுடன் அவர்களை முன்னின்று நடத்திச் சென்றாள். நிலையுணர்ந்த போலீஸ் படைத்தலைவர் இப்போது பின்சென்று சிலருடன் பேசினார். கோயில் வாசலில் காவல்செய்த கூட்டம் கலைந்தது. கோயில் திறக்கப்பட்டது. ஆவேசத்துடன் முன்வரும் கூட்டத்தின்முன் ஒருவன் முரசறைந்தான்; “கோயில் வாசல் திறந்து விடப்பட்டது. யாவரும் உள்ளே செல்லலாம்” என்று. “பகவான் வாழ்க, சுகதா வாழ்க, அறம் வெல்க, அன்னை சுகதாவெல்க” என்று கூட்டம் முழங்கிக்கொண்டு சென்றது. வெற்றிக்களிப்பு மாடமாளிகை முதல் ஏழைக் குடிசைவரை எதிரொலித்தது. அன்றுமுதல் சுகதா வேறுபுதிய சுகதாவாக மாறினாள். அவள் நகரின் முடிசூடா அரசியானாள். அவள் பெயரால் கழகங்கள், நூல்நிலையங்கள் தோன்றின. எல்லா அறநிலையங் களும் அவள் சொற்பொழிவை, ஆதரவை நாடின. மக்கள் டாக்டர் சாந்திகுமாரைக்கூட மறந்தனர். மருத்துவ விடுதியில் ஒரு மாதமாக மீண்டும் கிடந்த அவரை வந்து பார்ப்பவர் தொகை குறைந்தது. புதிய தலைவரின் புகழ் கண்டு டாக்டர் பொறாமை யடைந்தார். அது தன் பழய நண்பன் அமர்காந்தின் மனைவி என்ற ஒன்றுதான் அவருக்கு ஆறுதலாயிருந்தது. ஆனால் பழைய தலைவராகிய தன்னைப் பார்க்க வராததுகண்டு, அவர் உள்ளூற மனம் புழுங்கினார். ஆனால் டாக்டரிடம் மிகவும் ஈடுபட்ட நைனா, தனித்து அவரை அடிக்கடி பார்க்க வந்தாள். ஒரு தடவை சுகதா போனபோதும் அவள் உடன் சென்றாள். ஏழைகள் துயரை நேரே காணுந்தோறும் அமர் உரைகளும் அவன் முகமும் சுகதா கண்முன் நின்று அவளைக் கேலி செய்தன. அவள் உள்ளூற மாறிவந்தாள். நைனா அண்ணனைப் புகழ்ந்தால் அவள் இப்போது மிகுதி கடிவதில்லை. சமர்காந்துக்குக் குடும்பத்தில் இப்போது ஒரு கவலைதான் இருந்தது. அது நைனா திருமணம். பணத்தை விரும்பிய அவர், இப்போது ஒரு பணமூட்டைக்கே அவளைக் கட்டினார். அது தனிராம் என்ற செல்வச் சேட்டின் பிள்ளை மணிராம். தந்தை, நகரவையின் துணைத்தலைவர். மகன்- தந்தை செல்வத்திலும் பன்மடங்கு பணம் திரட்டி, நகரில் பொருளாட்சி செய்து வந்தான். அவன் ஏழைகளைத் துரும்பாகக் கருதி ஒடிப்பவன். பெண்களை அவன் மலராகக் கசக்குபவன். அவன் வாழ்வில் நைனா படும் துன்பங்கள் அவள் குடும்பத்துக்குத் தெரியாமல் இருப்பதற்காக, அவன் அவளைத் தாய்வீடனுப்பாமலே வைத்திருந்தான். அத்துடன் அவள் பணத்துக்காகவே அவன் அவளை மணந்திருந்தான். பணம் மணவினை மூலம் வந்துவிட்டதால், இனி அவள் தேவையில்லை. சுகதாவின் புகழால் நகரில் செல்வர் சுரண்டுதலுக்குப் பங்கம் வருவது கண்டு, அவன் அவளைப்போல் பேச்சாளர், கல்வி கற்றவர் ஆன பெண்ணை மணந்து, சமூகத்தை வசப்படுத்த எண்ணங்கொண்டிருந்தான். அத்தகைய ‘பெண் இரை’க்காக அம்மனிதப் பாம்பு காத்துக் கொண்டிருந்தது. சுகதா, நைனாவை ஒருநாள் பார்க்கச் சென்றாள். அவள் உடல்நலமில்லை என்று கூறி மணிராம் அவளை அணுகி, தன் செல்வ இறுமாப்பையும், இறுமாந்த திட்டங்களையும் அளந்தான். சுகதாவின் தற்பெருமை புண்பட்டது. அவள் பெண்களியக்கத்தில் பேசுவதுபோல் பேசிவிட்டுக் கோபத்துடன் மீண்டாள். தனிராம் இச்செய்தி கேட்டு மகன் மீது வெகுண்டான். அவளை அமைதிப்படுத்த நைனாவையே அனுப்பினான். சுகதா இச்செல்வருக்கு ஒரு பாடம் படிப்பிக்க விரும்பினாள். இப்போது அவள் டாக்டருடன் சேவாசிரமத்தை நடத்தி வந்தாள். இரேணுகா அதற்குத் தன் பெருஞ் செல்வத்தையே கொடுத்திருந்தாள். இருவர் முயற்சியாலும் அது ஒரு முதல்தர கல்லூரி ஆகியிருந்தது. கல்வித்துறையில் மட்டுமின்றி, தொழிற்துறை, ஏழைகளுக்கு வீடு, வாழ்வு வசதி ஆகியவற்றுக்கும் அவர்கள் திட்டங்கள் வகுத்திருந்தனர். அதற்காக அவர்கள் வாங்க எண்ணிய நிலத்தை நகர சபையின் துணைத்தலைவரான தனிராமும், தலைவரான ஹாஃலிஸ்ஹாலம் என்பவரும் தாமே குறைந்த விலையில் வாங்க முனைந்தனர். நகரசபைக்குழு அவர்கள் கையிலிருந்ததால், அவர்கள் அதை ஏழைகளுக்குக் கொடுக்க மறுத்தனர். இத்துறையில் பெரிய தொழிலாளர் வேலைநிறுத்தமும் புரட்சியும் நடத்தச் சுகதா உறுதிகொண்டாள். சுகதாவனி உறுதி முழுப்பயன் தந்தது. மக்கள் எழுந்தனர், தொழிலாளர் பின்பற்றினர். மறுநாள் உச்சிவேளைக்குள் நகர் அல்லோலகல்லோலப் பட்டது. சுகதா அன்று கைது செய்யப்பட்டாள். போலீஸ் தலைவர்- அமர்காந்தின் நண்பர். அத்துடன் அவர் மக்கள் இதயம் அறிந்து கடைமையாற்றுபவர். அவர் மோட்டாருடன் வந்து அவளை குழந்தை இரேணுகாந்துடன் ஏற்றிச் சென்றார். நைனா இறுதி நேரத்தில், குழந்தைக்கு ஊட்டுவதுபோல் அவளுக்கு உணவு ஊட்டிக் கண்ணீருடன் வழியனுப்பினாள். மக்கள் கடல் போல ஆரவாரித்து “வாழ்க அன்னை சுகதா, வெல்க வீர நங்கை சுகதா” என வானளாவ முழங்கினர். நைனா - சுகதாவின் அரும்பணி, தியாகம், சிறைப்பாடு ஆகியவைபற்றி அமருக்கு எழுதினாள். காசிமாநகர் நகரசபைத் தலைவரான ஹாஃவிஸ்ஹாலம், சலீமின் பெரியப்பா. அவர் உதவியால்தான் அவன் படித்தான். படிப்பில் அவன் அமரைவிடப் பிற்பட்டவனாயினும், அமரைப்போல் தாய்தந்தையர் பிடியை உதற முடியவில்லை. அவர்கள் ஆதரவு படிப்பின் குறையை வென்றது. அவன் ஐ.ஸி.எஸ். தேர்வுக்கு அமர்ந்து அதில் தேறினான். தன் நண்பன் அமர் இருந்த மாவட்டத்திலேயே அவனுக்குப் பணியும் கிடைத்தது. அவ்வாண்டு வடபுல முழுவதும் பஞ்சநிலையிலிருந்தது. அரித்துவாரப் பகுதியில் குடியானவர்கள் நிலமுழுவதும் ஆண்ட நில முதலாளி, வெறும் நில முதலாளி மட்டுமல்ல. அவர் ஒரு மடாதிபதி போன்ற மஹந்து. மக்கள் பொருளியல் வாழ்வுமீது மட்டுமின்றி, அவர்கள் குடும்ப வாழ்வின் எல்லாத் துறையிலும் அவர் ஆட்சி செலுத்தினார். குடியானவருக்குக் குடிக்கக் கஞ்சியில்லை. அக்காலத்திலும் அவர் சோறும் கறியும் பழவகைகளும் மலைமலையாகக் குவித்து வைத்துக்கொண்டு, அவர் புகழ்பாடும் பக்தகோடிகளுக்கு உணவும் உடையும் வாரியிறைத்தார். அமர் இதுவரை அயலாட்சியை எதிர்த் திருந்தான். செல்வரை, உயர்குடியினரை எதிர்த்தான். மதத்தலைவர்களை அவன் அறவோர் என்று கருதினான். ஆதலால், அவர்களை எதிர்க்காமல், அவர்கள் நல்லெண்ணம் பெற்றே உய்திபெற எண்ணினான். ஆகவே, அமருடன் வந்து உழைத்த இராமானந்த அடிகள் மஹந்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யும்படி கூட்டத்தில் பேசியபோது, அவன் மறுத்துரைத் தான். பொதுமக்கள் முனைப்பான கருத்துடைய இராமானந் தரையே பின்பற்றலாயினர். இதனால் அவன் மனக்கசப்படைந்து தன் அறையில் வந்து ஓய்வு பெற்றிருந்தான். அமர், மக்கள் பணியில் ஈடுபட்டுத் தன்னிடம் மிகுதிப் பற்றுடைய முன்னியைப் புறக்கணித்திருந்தான். அவன் மனக்கசப்பிடையே அவள்பால் அவன் கருத்துச் சென்றது. மூதாட்டி சலோனி, இருவரையும் இணைத்து வைத்தாள். அவள் கருத்துக்குச் சேரித்தலைவன் கூதடும் இணங்கினான். சமயத்தலைவரான மஹந்தை எதிர்ப்பது பாவம் என்றும், வேண்டுகோள் செய்து சரிப்படாவிட்டால் எதிர்ப்பது என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். கூதடும் அமரும் மஹந்தினிடம் சென்றனர். அன்று மஹந்து ஒரு திருவிழாவில் ஈடுபட்டிருந்தார். போன இருவருள் மடத்தின் எல்லையிலேயே ஒருவர் நிற்கவேண்டியதாயிற்று. ஏனென்றால் கூதடு தாழ்த்தப்பட்ட வகுப்பினன். சமயத் திருவிடத்தில் அவன் புக முடியாது. ஆயிரம் அரண்மனையின் செல்வம், படைபடையாகக் குதிரை, ஒட்டகை, யானை, துணிமணிகள் ஆகியவை எங்கும் சிதறிக்கிடந்தன. மஹந்தின் திருமுன்பு செல்ல அவர்கள் அரும்பாடுபட்டு இரவு முழுதும் காத்திருந்தனர். பார்க்க முடியாததனால் வேண்டுகோள் எழுதி அனுப்பி விட்டு மீண்டனர். சேரியில் இராமானந்த அடிகள் செய்துவந்த பிரசார வேகம் மஹந்தின் கவனத்தை ஈர்த்தது. அவர் அமரை நேரே வந்து பார்க்கும்படி எழுதினார். வந்தபோது அமரை மதித்துத் தேனொழுகப் பேசினார். ஆனால், அரசாங்கத்தார் இணக்கமளித்தபின்தான் சலுகையளிக்க முடியும் என்று கூறினார். அவர் இன்னுரை கேட்டு அமர் மகிழ்ந்து மீண்டு வந்தான். அவன் மதிப்பு உயர்ந்தது. அது கண்டு இராமானந்த அடிகளும் அவனுடன் வந்து சேர்ந்தார். இறுதியில் எல்லோரும் விரும்பியபடி முழுவரிக்குறைப்பும் வரவில்லை. பலர் எதிர் பார்த்தபடி அரையளவும் குறைக்கவில்லை. கால் அளவே குறைந்ததாக மஹந்து அறிவித்தார். இது அரசாங்கம் குறைத்துக்கொள்ள இணங்கிய அளவு மட்டும், மஹந்து தன் பங்கில் குறைவுசெய்ய விரும்பவில்லை. மேலும், பணியாளர் முடிந்தமட்டும் பிரிக்கத் தொடங்கினர். அமரும் இராமானந்தரும் இணைந்து புரட்சிக்குச் சட்டம் கட்டினர். அமர் பேச எழுமுன் நைனாவின் கடிதம் வந்தது. அதில் சுகதாவின் பெருந்தியாகம், அவள் சிறைப்பட்டது ஆகியவை வரையப்பட்டிருந்தன. அமருக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் பன்மடங்கு பெருகின. அவனை அறியாமலே அவன் ஆவேசத்துடன் பேசினான். பேசி முடியுமுன் மக்கள் உள்ளங்களில் புத்தூக்கமும் புதுவேகமும் எழுந்தன. இராமானந்த அடிகள் முதலிய பிற தலைவர்களும் அதே புயல் வேகத்தில் பாய்ந்து முன்சென்றனர். புதிய மாவட்ட முதல்வர் சலீமுடன், மாவட்டமுதல் நீதிபதி கஃச்னவீ, அமரின் புதிய போக்குப்பற்றி ஆராய்ந்தார். அமரை இதற்குமுன் இருவரும் வரவேற்றுப் பேசியிருந்தனர். அவன் முன்னேற்றக் கருத்துகளை அவர்களும் மதித்தனர். ஆனால் அவன் மக்கட்கிளர்ச்சி செய்வது அவர்களுக்குப் புதிதாயிருந்தது. அது அவர்களுக்குப் புரியவில்லை. இப்போது கஃச்னவீ அமரைக் கட்டாயம் சிறைசெய்ய வேண்டும் என்று விரும்பினார். அமர், சலீமின் நண்பனாதலால் சலீமே சென்று சந்தடியின்றி அமரை அழைத்துவரும்படி அவர் கூறினார். சலீமும் மோட்டாரில் சென்று அமரை அழைத்துவந்து சிறைப்படுத்தினான். வழியில் முன்னி அவர்களைக் கண்டாள். அமர், தன் சலவை ஆடைகளை வாங்கி அனுப்பும்படி அவளிடம் தெரிவித்ததிலிருந்து அவள் உண்மையை ஊகித்துக் கொண்டாள். உடனே அவள் சென்று ஊர்திரட்டி மோட்டாரை வழிமறிக்க முயன்றாள். அமர் அவர்களிடம் “நீங்கள் சட்டத்தை மதித்து உரிமைக்குப் போராடுங்கள். என் தொண்டை விடாது செய்யுங்கள்” என்று கூறிச் சென்றான். சலீமின் அடக்குமுறையை மக்கள் உக்கிரமாக எதிர்த்தனர். சலீமும் பொறுமையிழந்தான். சலோனி அவனையே அடக்கு முறையின் பொறுப்பாளனாகக்கொண்டு, அவன்மீது கல்மாரிவீசி வைதாள். அவன், அவள் கிழவி என்றும் பாராமல் அடித்துத் துன்புறுத்திக் குற்றுயிராக்கினான். அவள் உடலெல்லாம் நைந்திருந்தது. முகம் உப்பியிருந்தது. கால் எலும்புகள் முறிந்துவிட்டன. பலநாள் படுக்கையில் கிடந்து அவள் உயிருக்கு மன்றாடவேண்டி வந்தது. ஆயினும் படுக்கையிலும் சரி, அதிலிருந்து எழுந்து கட்டைக் காலுடன் தண்டூன்றி நடக்கும்போதும் சரி, சலீமைப் பழிப்பதும், அவன்மீது பழிவாங்கத் துடிப்பதும் அவள் உடலில் ஒட்டியிருந்த உயிரின் ஓரே வாதனையாயிருந்தன. சிறை வாழ்வில் அமர் வரையில் சுகதாவின் கருத்து மாறி வந்தது. ஒருநாள் அவள் அறைக்கு மற்றொரு பெண் கைதி கொண்டுவரப்பட்டாள். கைதி வேறுயாருமல்ல, முன்னியே. அவளும் அமரின்பின் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை புகுந்தாள். பின் காசிச் சிறைக்கு மாற்றப்பட்டாள். அவள் கதை கேட்ட பின், சுகதாவுக்கு, அமரை பற்றிய இன்னும் பல விவரங்கள் தெரிந்தன. அவன் சிறை வாழ்வு, முன்னி அவனை மனமாரக் காதலித்ததும் அவன் அகக்கனிவன்றி உடற் காதலிலீடுபடாதது ஆகியவற்றை அறிந்ததே, அவள் உள்ளத்தில் அமர் அமர்ந்த இடம் மேலும் உயர்வுற்றது. அவள் அவனுக்காகத் துடித்தாள். குடும்பத்தின் தியாகத்தீ சமர்காந்தின் துன்ப உள்ளத்தைத் துறவுள்ளமாக மாற்றியிருந்தது. அவர் தம் பெருமைகளை உதறிவிட்டுச் சுகதாவைப் பார்க்க வந்தார். சுகதாவின் தியாகத்தை அவர் பாராட்டிப் புகழ்ந்து, தன் கொடுமைகளுக்காக வருந்தினார். அவர் மனமாற்றமறிந்த சுகதா தானும் அமரிடம் கொண்ட புதுமதிப்பை வெளியிட்டு, “அவர் சிறையில் அவதியுறு கிறாராம். சலீமே இக்கொடுமை செய்கிறானாம். சென்று அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ய ஏற்பாடு செய்வீர்களா?” என்று கேட்டாள். “அதுவே என் திட்டமும், அதுபற்றிப் பேசவே வந்தேன்” “நீங்கள் போகிறீர்களா? எப்போது புறப்படுகிறீர்கள்.” “இதோ, சிறையிலிருந்து நேரே போகிறேன்.” சமர், அரித்துவாரம் சென்று அதன் அழிபாட்டைக் கண்டு மனம் வெதும்பினார். சலோனியின் நிலைகண்டு பின்னும் உளம் நைந்தார். ஏழைகள் துயரம் என்ன என்று இப்போது அவருக்குத் தெரிந்தது. சலீமை நேரே சென்று பார்க்க அவர் புறப்பட்டார். அதற்குள் சலீமுடன் சில குதிரை வீரர் ஊர் மக்களை அடித்துத் துவைப்பது கண்டார். சலீம், சமரையும் ஊர் மக்களுள் ஒருவராக நினைத்து அடிக்கப் போகும்போது, திடுமென ஆளடையாளம் கண்டு திடுக்கிட்டான். அடிதடியை நிறுத்தும்படி உத்தரவிட்டு “சேட் அவர்களே! நீங்களுமா இதில் கலக்கிறீர்கள்?” என்றான். “நான் மனிதனல்லவா? பணம் என் மனிதத்தன்மையை முன்பு மூடியிருந்தது. ஆனால், குடும்பத் தியாகத்தின் தீ - என் துயர்களின் உள்வெப்பு ஆகிய இரண்டிற்குமிடையில் அம்மூடாக்குக் கலைந்தது. ஆனால் நீ - அமரின் நண்பனாகிய நீ - சீர்திருத்த இளைஞனாகிய நீ - என்ன செயல் செய்கிறாய்?” என்று சமர் கேட்டார். மனமாறிய செல்வரும் மலைப்புற்ற இளமை அதிகாரியும் நட்புறவுடனே வாதாடினர். நீதி ஆராய்ந்தனர். பின் அளவளாவினர். சலோனி வீட்டுக்கு அவனை இட்டுச் சென்று காட்டி, அவள் கோபத்தையும் கண்டித்து, இருவரையும் நட்பாக்கினார். பின் அவர் தம் சாதி சமயக் கண்டிப்பை வெறுத்தவராய், சலீமுடன் உடனிருந்து உண்ணும் அளவுக்குச் சாதி கடந்த மனித அன்பு கொண்டு காசிக்கு மீண்டார். சலீம் ஏழையர் வறுமை நிலையை நேரில் கண்டாராய்ந்து அதற்காகத் தான் கோரும் பரிகாரங்களையும் வகுத்தெழுதி அரசியலாருக்கு அனுப்பினான். அதன் பயனாக அவன் பதவியிலிருந்து விலக்கப்பட்டு, கோஷ் என்ற ஒருவர் பதவி ஏற்றார். மக்கள் இதற்குள் சலீமிடம் பற்றுதல் கொண்டுவிட்டனர். தம்மை உதவியற்ற நிலையில் விட்டுச் செல்லாது, தம்முடனிருக்க வேண்டினர். அவன் அவர்கள் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தினான். அரசாங்கம் அவனையும் சிறையிட்டு முன்னியைப் போலவே காசிக்குச் சிறை மாற்றியது. சலீமின் தண்டனை கேட்ட சகீனா, தாயிடமிருந்து திமிறி விடுபட்டு, ஹரித்துவாரத்தில் மக்கள் தலைமை பூண்டு தியாகம் செய்து, கைதியானாள். சுகதா சிறைபட்ட அன்றிலிருந்து, ஏழையர் விடுதிக்காகக் கோரப்பட்டிருந்த இடத்தில் மறியல் நடைபெற்று வந்தது. அந்த இடத்தைப் பெற நினைத்துத் துணைத்தலைவர் தனிராமும் தலைவரான சலீமின் பெரிய தந்தை ஹாஃவிஸ் ஹாலமும் நகரவைக் குழுவை இயக்க அதை வாங்கிவிட்டனர். ஆனால், அவர்கள் அதில் கட்டடக் கடைகால் எடுக்க, அது மக்களால் அழிக்கப்பட்டது. அதற்கான சேமப் பொருள்களும் தவிடுபொடியாக்கப்பட்டன. சகீனா மக்கள் தொண்டில் காட்டிய துணிச்சல்கண்ட பட்டாணிச்சி, சுகதாவின் இடத்தில் நின்று தானே மறியலை நடத்தினாள். ஒரு கிழவி காட்டிய வழியில் இளநங்கையரும் வீரஇளைஞரும் பல்லாயிரக்கணக்கில் திரண்டனர். துப்பாக்கி வேட்டும் தடியடியும் நடந்தன. பலர் வீழ்ந்தும் கிழப் பட்டாணிச்சி ஒரு வீரன்போல உறதியாய் நின்றாள். அவள் தலையிலிருந்து குருதி ஒழுகிற்று. ஒரு கால் ஒடிந்தது. அவள் “வாழ்க ஆண்டவன், ஏழை அரசு ஓங்குக, செல்வராட்சி ஒழிக” என்று கூவி இறுதி மூச்சு வரை போராடினாள். மக்கட் கடல் பெருகி அவள் உடல் சுமந்து அடக்கம் செய்தது. அவ்வீரக் கிழவி விழுந்த இடம் தியாகக் கோயிலாயிற்று. எண்ணற்ற வீரர் சூழ்ந்தனர், மறியல் நீண்டது. கிழவியின் இடத்தில் இப்போது ஒரு கிழவர் - ஆனால் நகரின் செல்வக் கோமானான கிழவர் நின்றார். அவர்தான் சமர்காந்த். மக்கள் முதலில் தம் கண்களை நம்பவில்லை. ஆனால் அவர் பேசினார். “ஏழைகள் நலனைச் செல்வர் கெடுக்கின்றனர். இது அவர்கள் மடமை. குடிசைகளில் அழுக்கும் வறுமையும் நோயை வளர்க்கும். அந்நோய் செல்வர் மாளிகையையும் தாக்கும். செல்வர் உங்களுக்குச் செய்யும் கொடுமையால் உங்களை அழித்துத் தாமும் அழிகின்றனர். இனி உலகில் கொடுமைப் படுத்துவது மட்டுமன்று பாவம், கொடுமையைத் தாங்குவதும் பாவம்; என்ற எண்ணம் எழவேண்டும். அறிவில்லாச் செல்வரின் இறுமாப்புக் கோட்டையும் அறிவுடைய ஏழை, பணக்காரர் இருவரும் ஒன்றுபட்டு நின்று தகர்க்க வேண்டும்” என்று அவர் முழங்கினார். அவர் விரைவில் கைது செய்யப்பட்டார். அவரை அடுத்து அவர் சம்பந்தினி இரேணுகாவும் டாக்டர் சாந்தி குமாரும் போராட்டம் நடத்திச் சிறை சென்றனர். ஆனால், மக்கள் சோர்ந்தழியுமுன் மற்றொரு செல்வநங்கை - செல்வர் இறுமாப்புக் கோட்டையின் பூங்கொடி - எதிரியின் பாசறைக்குரிய இளஞ்செல்வம் - நைனா - இத்தடவை முன் வந்தாள். அவள் பேசிய சொற்கள் மிகச் சில. ஆனால், அது சொற்பொழிவல்ல, அன்புக் கட்டளை! “மறியல் செய்தது போதும், மக்களே! ஏழைகளாகிய நாம் பலர். நம் எதிரிகள் ஒன்றிரண்டு பேர். அவர்கள் நகரவைக் குழுவில் தான் இருக்கிறார்கள். நம் நன்மைக்காகவே, நாம் தேர்ந்தெடுத்தவர்கள் அவர்கள். அவர்களிடம் சென்று முறையிடுவோம். அவர்கள் நமக்கு நம் உரிமை தரும்வரை அங்கேயே நிற்போம். அவசியமாயின் அங்கேயே நின்று உயிர்ப்பலி கொடுப்போம்” என்று கூறி முன்சென்றாள். நைனா தன் தாய்க் குடும்பம் முழுவதன் தியாகத்தில் பழுத்துவிட்டாள்; வெளியே உலவப்போவதாகத் தன் கணவனிடம் கூறிவிட்டு வந்து தந்தையின் இடத்தில் நின்று கடமையாற்றினாள். அவள் பின் நகரமக்களே படைதிரண்டு அணி அணியாகப் பல கல்தொலை சென்றனர். படை நகரவையை அணுகிற்று. பணிமனைக்குப் பணிமனை, பணியறைக்குப் பணியறை, போலீஸ் - சேமப்போலீஸ் - படைத்துறை யாவும் தொலை பேசியில் குரல் பரிமாறின. அதற்கிடையே ஒரு கோர நிகழ்ச்சி நகரையே அதிரவைத்தது. தன் கொடுமைகளுக்கெல்லாம் பணிந்து வளைந்து நின்ற அப்பாவி மனைவியே தன்னை எதிர்த்துப் படைத்தலைவியானது கேட்டான், பாதகன் மணிராம். அவன் அவள் முன் கோபவெறியுடன் சென்று; அவளை அச்சுறுத்தினான், தடுத்தான், கைப்பற்றி இழுக்க முயன்றான். அவள் “இது வீடல்ல. நகர். நான் வீட்டில் உம் மனைவி. இங்கே நீர் நகரின் எதிரி. என்னைத் தீண்ட வேண்டாம்” என்றாள். அவனால் அவமதிப்புப் பொறுக்க முடியவில்லை. கையிலுள்ள கைத்துப்பாக்கி வெடித்தது. நைனா, அமைதித் தெய்வம், அடிவீழ்ந்து சாய்ந்ததுபோல் சாய்ந்தாள். கூட்டம் கொந்தளித்தது, மணிராம் மோட்டார் ஏறித் தப்பினேன் பிழைத்தேன் என்று ஓடினன். நைனாவின் பிணந்தாங்கிய வண்ணம், ஏழைகள் படை, கோர அமைதிப் படையாய், புயல் சுமந்து செல்லும் கடல் போலப் புரண்டு நகரவை நோக்கிற்று. நகரவையின் உறுப்பினர் உடலில் குறுதி ஓடவில்லை. யாவரும் ஒன்றும் தெரியாமல் விழித்தனர். தனிராம் வாய் திறந்தார். “அன்பரே, ஏழைகள் குறுதி குடிக்க உங்களைத் தூண்டிய இருவருள் நான் ஒருவன். நான் மாடிவீடு கட்ட எண்ணினேன். என் குடியை மண் ஆண்டது. இனி இதுவே உங்கள் விருப்பமானால், என்போல மக்கள் துயரால் வாழ்வு வாழ எண்ணிய தலைவரும் என்னை ஒத்த மனமாற்றம் பெறுவதானால், ஏழையர் மனையைத் தருவதாக இப்போதே போய் வாக்குக் கூறுவோம். இல்லையென்றால் இறைவன் தான் நம்மைக் காக்க வேண்டும்” என்றார். “இனி இறைவன்கூட நம்மைக் காக்கமாட்டார். அவர் ஏழையின் பொறுமையில் குடியிருந்தார். இப்போது அவர் கோர உருவில் நம்மீது பாய்கிறார்” என்றார் தலைவர் ஹாஃவிஸ் ஹாலம். நகரவைக் குழுவினர் குனிந்த தலையுடன் முன்னேறி, ஏழைப் படையணி முன் வந்து நின்றனர். “உடன்பிறந்தார்களே, உங்களைத் துயரப்படுத்தி உருக்குலைத்து வந்த எங்கள்மீது கருணை காட்டுங்கள். நீங்கள் போராடிய நிலம் இனி உங்களுடையது. இனி நீங்களே நகரின் மன்னர். உங்கள் உரிமைகள் எதிலும் நாங்கள் இனிக் குறுக்கிடமாட்டோம்” என்று மன்றாடினார் தனிராம். மக்களிடையே களிப்பு இல்லை. ஆனால், வெற்றியின் பெருமிதம் துயரை வீறுபடுத்தியது. “வாழ்க தியாக அணங்கு நைனா! வாழ்க அமர்காந்த்” என்று மூலையில் எழுந்தது ஒரு குரல். “வாழ்க நைனா! வாழ்க அமர்! வாழ்க சுகதா!” எனத் தியாகிகளின் பெயர்கள் மக்கள் உள்ளத்திலிருந்து எழுந்து முழங்கின. சிறையில் சுகதாவுடன் அமரும் வந்திருந்தான். ஆனால், இருவரும் சந்திக்கவில்லை. அமர் கடுங்கொலைக் குற்றவாளி களுடன் இருந்தான். பாரச் செக்குகளை ஒவ்வொருவரும் இழுக்க வேண்டியிருந்தது. அமரால் முடியவில்லை. ஆனால் பக்கத்திலிருந்த ஒருவன் அவன் வேலையையும் நொடியில் முடித்தான். அவன் தன் வேலையையும் முடித்து, முடியாதிருந்த கைதிகளின் வேலைகளையும் முடித்தான். அவன் திறமை, அவன் தியாகம், அமரை மலைப்படைய வைத்தது. மலையினும் பெரிதாயிற்று. காலேகான் ஏழை. உழைபப்பறியாதவன், கொலை, களவே, தொழிலாகக் கொண்டவன். ஆனால் முன் அமர் அவன் திருட்டைக் கண்டித்ததும், திருடிய பொருளை வாங்கி ஆதாயமடைய மறுத்ததும் மெள்ள மெள்ள அவன் உள்ளத்தை மாற்றியிருந்தன. ஆனால், திருட்டு, கொலை ஆகியவற்றை மீண்டும் மீண்டும் செய்து தேறிய அவன், மன மாறியதை யார் நம்புவார்? அதிலும் சிறையாளரா நம்புவர்? கொலைஞருடன் பழகிய அவர்கள் உள்ளங்கள் கொலைகாரர் உள்ளங்களினும் கொடிதாயிருந்தன. காலேகான் எல்லாருக்கும் உதவி செய்தான். மாலைப்போதானதால் வழிபாட்டுக்கு அமர்ந்தான். திருடும் போதுகூட அவன் வழிபாட்டுக்கு அமர்ந்தான். திருடும்போது கூட அவன் வழிபாட்டு வகையில் நல்ல முஸ்லீமாகவே இருந்தான். சிறையாளர் வந்ததும் எவரும் வேலையில் குறை வைக்காதது கண்டு பொருமினர், யாரையாவது புடைக்க அவர்கள் கைகள் துடித்தன. “கைதிக்குக் கடவுள் வழிபாடு வேறு?” என்று சீறி அவர்கள் காலேகானை அடித்தனர். பல அடிக்கொரு தடவை அவன் ‘வாழ்க ஆண்டவன்’ என்றான். ஆனால், அசையவில்லை. அடிமேலடி தொடர்ந்தது, குருதியாறு ஓடிற்று. சதைகள் சிதைந்து சிதறின. அவன் உணர்வற்று விழுந்தான். கைதிகள் கலவரம் செய்ய விரும்பினர். அமரும் குமுறி எழுந்தான். அச்சமயம் காலேகான் கண் திறந்தான். “இதுவரை அடைந்த தண்டனை மனிதர் தண்டனை. அது என் பாவம் போக்கிற்று. சிறையாளருக்கு நன்றி தெரிவித்து எனக்கு உய்தி தாருங்கள்” என்றான் அவன். அவன் கண்கள் அமரை நோக்கி மூடின. அமர் வாழ்வில் அன்று புதிய ஒளி தோன்றிற்று. ஏழையைப் படைத்த இறைவன்மீது அவன் சீற்றம் கொண்டிருந்தான். காலேகானின் அமைதி, பொறுமை, நம்பிக்கை அவனை வென்றது. மறுநாள் அனைவரும் விடுதலை அடைந்தனர். அரசாங்கமும் சலீமை மீண்டும் ஏற்றுத் தன் கோட்பாட்டை மாற்றிற்று. அமர், சகீனாவிடம், “இனி நீ என் தங்கை. நீ சலீமை மணந்து வாழ்க” என்றான். தங்கை பெரிதா? தாரம் பெரிதா? என்று கூறி அவளைத் தழுவிக்கொண்டாள் சுகதா. சமர்காந்தின் உள்ளம் இன்பத்தால் நிறைவுற்றது. தனது மகளின் வீரமரணமும், பட்டாணிச்சியின் தியாகமும், சம்பந்தி இரேணுகாவின் தன்னலமற்ற துறவுணர்வும் - மகன் - மருமகள் பெருந்தன்மையும், சலீம் - சசீனாவின் அன்புப் பிணைப்பும், குழந்தை இரேணுகாந்தின் மழலை மொழியும் அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. அவர் இன்பப் பெருக்கின் எடுத்துக் காட்டாய் அமைந்தது, அவர் கன்னத்தில் ஒளிவிட்ட “இருதுளிக் கண்ணீர்”. தமிழ் மொழியின் சிறப்பு, தமிழர் தம் கலையுயர்வு, பழந் தமிழ் நகரங்கள் முதலியவை பற்றிய அரிய ஆராய்ச்சி நூல். உலக இலக்கியங்கள் இந்நூல் 2002இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. தோற்றுவாய் அணுக்களின் திரளே அண்டம், சிற்றுருப்படியாகிய அணு வுக்கும் பேருருப்படியாகிய அண்டத்துக்கும் இடைப்பட்ட பலபடிக் கூட்டுறவுகளே பொருள்கள் யாவும். இது போலவே தனி உயிர் கீழ் எல்லையாகவும், தனி மனிதன் கீழ் எல்லையாகவும் கொண்ட பேரெல்லை யண்டங்களையே இயற்கை வாழ்வு என்றும், மனித உலகென்றும் கூறுகிறோம். தனி உயிருக்கும் இயற்கை வாழ்வுக்கும் இடைப்பட்டனவே உயிரினப் பாகுபாடுகளெல்லாம் தனி மனிதனுக்கும் மனித உலகுக்கும் இடைப்பட்டவையே ஊர், நகரம், நாடு, தேசம், நாகரிகம் ஆகிய எல்லைகளும், குடும்பம், வகுப்பு, இனம், தேசியம் ஆகிய எல்லைகளும், அடிப்படைத் தன்மை கீழ் எல்லையாகவும், பொதுக் குறிக்கோளும் வளர்ச்சியும் பேரெல்லை நோக்கி வளர்வதாகவும் உள்ளன. மனித உலக நாகரிகத்தில் தனி மனிதன் நலமும் வளர்ச்சியுமே வாழ்வின் அடிப்படை அதற்கான குறிக்கோளும் வகை முறையும் பே ரெல்லை வளர்ச்சி நோக்கிப் பலபடியான சிறு பிரிவுகளும், சிற்றெல்லைகளும் பாடுபடுவதே யாகும். மனித நாகரிகம் வளர்ச்சியடையுந்தோறும் அதன் எல்லை விரிந்து கொண்டே போகிறது. எல்லை விரிவடையுந்தோறும் நாகரிகம் வளர்ச்சியடைகிறது என்கிறோம். ஆனால், நாகரிக வளர்ச்சி எல்லை விரிவை மட்டும் பொறுத்ததல்ல; ஒவ்வோர் எல்லையிலும் தனிமனிதன் முன்னேற்றம் அடைவதற்கும், வளர்ச்சி பெறுவதற்கும் அவ்வெல்லை எங்ஙனம் தக்க கருவியாக அமையப் பெறுகிறது என்பதைப் பொறுத்ததே அது. எடுத்துக்காட்டாக, தனி மனிதன் வளர்ச்சிக்கு உதவாத வகுப்புப் பிரிவு, மொழிப் பிரிவு, இனப்பிரிவு, தேசப்பிரிவு, யாவும் போலிப் பிரிவுகள். தனிமனிதன் எவனையும் அல்லது எவளையும், அல்லது தனி மனிதர் குழு எதையும் புறக்கணித்து வளர்ச்சியடையும் எல்லை பகைமையை வளர்க்கும் எல்லைகளாகவே இயலும். அவை மணல் மீது எழுப்பிய கோட்டை கொத்தளங்களாகவே அமைய முடியும். எனவே, நாகரிகத்தின் அடிப்படைப் பண்புகளை மூன்றாக வகுக்கலாம். ஒன்று தனிமனிதன் நலன். இதனைப் பேணும் பண்பையே தேசியம் என்று கூறுகிறோம். இந்திய மொழிகள் பெரும்பாலான வற்றில் அது ‘தேச’ அடிப்படையாகத் தோற்றினும் அது தனி மனிதனை அடிப்படையாகக் கொண்டதே என்பதை அதன் மேனாட்டுச் சொல்லும்1 தமிழகத் தனிப் பண்புச் சொல்லும் (நாடு) காட்டும். முன்னது இயற்கை, பிறப்பு2 ஆகியவற்றை மூலப் பொருள்களாகவும், பின்னது அவா (நாடுதல்) என்பதை மூலப் பொருளாகவும் கொண்டது. இரண்டாவது நாகரிகப் பண்பு பேரெல்லையாகிய மனித இனமளாவிய கூட்டுறவுணர்ச்சிப் பண்பு அல்லது மனித தத்துவம்3 ஆகும். இவ்வகையில் எந்தப் பிரிவும் தத்தம் தனி மனிதர் வளர்ச்சிக்கு உதவுவதுடன் நில்லாது அத்துடன் குழு வளர்ச்சிக்கும், குழு, பெருங் குழுவுடன் போட்டியிட்டு வளர்வதற்கும், பெருங் குழுவின் வளர்ச்சிக்கும் உதவுவதாக வேண்டும். மற்றொரு குழு வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்கும் குழு வளர்ச்சி போலி வளர்ச்சியேயாகும். அது உலக நாகரிகத்துக்கே கேடு பயப்பது என்பது குறிப்பிடத்தக்கது. மனித நாகரிகத்தின் மூன்றாவது வளர்ச்சிப் பண்பு சரிநிகர்நிலை அல்லது ஒப்புரவு ஆகும். இதில் சரிநிகர் வளர்ச்சி, நேர்மை ஆகிய இரு கூறுகள் உண்டு. சரிநிகர் வளர்ச்சியில்லாத உடல் நோயுறுவதுபோல, சரி நிகர் வளர்ச்சி பெறாத குழு அல்லது இனம் அழிவுறும். கீழ்நாட்டு நாகரிகங்கள் மேல்நாட்டு நாகரிகங்களிலும் முற்பட்டவையாயிருந்தும் பின்னடைந்து சீர்குலைவதன் காரணம் அவை சரிநிகர் வளர்ச்சி பேணாமையே. இப் பண்பின் மற்றொரு கூறு நேர்மை வளர்ச்சி. அதாவது வளர்ச்சிக்கு உதவும் கூறுவளர்ச்சியில் முதன்மை உரிமையும், வளர்ச்சியில் முன்னடைய முடியாமலிருக்கும் கூறு, உதவி அல்லது சலுகை அல்லது அருள் நெறியில் முதலுரிமையும் பெறவேண்டும் என்பது. இதிலும் கீழ்நாட்டு நாகரிங்கள் அடிப்படையிலேயே தவறுடையன என்று விளக்கத் தேவையில்லை. உழைப்பவர் தாழ்ந்தவர், உழையாதவர் உயர்ந்தவர் என்ற அடிப்படையிலேயே இந்தியக் குழு வாழ்வு அமைந்துள்ளது. அறச்செயல் வகையிலும்கூட உழைப்பவர்கட்கு உதவுதல் அறம் எனக் கொள்ளப் படாமல் உழையாதவர்க்கும் உதவுதலே அறம் என்ற நச்சுக்கொள்கை இந்தியர் ஆன்மிக நெறியின் அடிப்படையா யிருந்து வருகிறது. உலகில் தனி மனிதனை வளர்க்கும் தேசியப் பண்பிலும் உலக வளர்ச்சிக்கு உதவும் மனிதப் பண்பிலும், சரிநிகர் நிலை நேர்மை பேணும் குடியாட்சிப் பண்பிலும், ஒப்பற்ற பங்குகொள்ளும் நாகரிகக்கூறு அல்லது கூறுகள் மொழியும் அதனைச் சார்ந்த இலக்கியமுமேயாகும். மனித நாகரிகத்தில் தேசம் என்ற பிரிவு ஏற்பட்டது அணிமைக் காலத்திலேயே. இக் காலத்தையே வரலாற்றுக் காலம் என்று கூறுகிறோம். ஆனால், வரலாற்றுக் காலம் என்ற சொற்றொடர் நம் அறியாமையை மூடிவைக்கும் ஒரு தொடர் ஆகும். இன்றைய உலக வரலாறு முழுவதும் நாகரிக உலகில் ஆரியர் நாடோடிகளாகப் பரந்து நாகரிகம் பெற்ற காலமுதலே தொடங்குகிறது. அதற்கு முற்பட்ட ஆரியச் சார்பற்ற நாகரிகங் களின் ‘வரலாற்றுக்கு முந்தி’ வரலாறு இப்போதுதான் - முப்பது நாற்பது ஆண்டுகளாகத்தான் உணர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. ஆரியருக்கு முற்பட்ட கால நாகரிகம் நாடு, நகர அடிப்படையில் அல்லது ‘நகர்-நாடு’4 அடிப்படையில் வளர்ச்சிய டைந்தது. நாகரிகம் என்ற சொல் ‘நகர்’ என்ற சொல்லின் அடிப்படையாகத் தோன்றியதன் காரணம் இதுவே. அந் நாளையில் ‘நகர் - நாடு’ கடந்தால் அடுத்த எல்லை உலகமே. நாகரிகம் வளர்ந்தால் அடுத்தபடி வளர்ச்சி பண்பாடு அல்லது உலகப் பண்பும் மனிதப் பண்புமே. மனித அல்லது சர்வதேச அடிப்படையில் வளர்ச்சியடைந்த இப் பண்டைய நாகரிகம் பெரும்பான்மையும் அழிவுற்றபின் அதனைச் சார்ந்து இன அடிப்படையிலும், இனங்கள் தங்கிய தேச அல்லது இட அடிப்படையிலும் வளர்ச்சியுற்ற ‘புதிய தேசிய’ நாகரிகங்களே5 ‘ஆரிய’ நாகரிகங்கள். ஆகவே, தேசப் பிரிவுகளுக்கு முற்பட்ட பிரிவுகள் நாடு நகரப் பிரிவுகள். இரண்டிற்கும் முற்பட்டனவே இன, வகுப்பு, குடும்பப் பிரிவுகள். இன, வகுப்பு குடும்பப் பிரிவுகளும் மொழியும் மனித நாகரிகம் தோன்றுவதற்கே முற்பட்டவை. மனிதன் ‘புல்லாகிப் பூண்டாகிப் புழுவாய் விலங்குகளாய்ப் பறவைகளாய்’ இருந்த ஊழிகளிலேயே மொழியும் இலக்கியத்துக்கு அடிப்படையான உணர்ச்சிகளும் உயிரின வளர்ச்சியில் தோன்றி வளர்ந்தன. மொழியும் இலக்கியமும் மற்றெல்லாப் பிரிவுகளையும் மற்றெல்லா நாகரிகக் கூறுகளையும் கடந்து மனித இனத்தை வளர்ப்பதன் காரணம் இதுதான். இலக்கியமும் இலக்கியத்துக்கு அடிப்படையான மொழிப் பண்பாடும் நாகரிகமும் தேசங்கடந்து, இனங் கடந்து, உலக மளாவிப் படர்ந்து வளர்பவை. ஆனால் அவை மொழி, மொழியின மாகிய ‘தேசியப்’ பண்பில் வேரூன்றியவை. அவ்வேரும் ஒவ்வொரு தனிமனிதன் மூளையையும் இதயத்தையும் நிலமாகக்கொண்டு அவற்றின் வளர்ச்சியையே தன் வளர்ச்சிக்கு உரமாகக் கொண்டது. அணுவினுள்ளும் அணுத் திரண்ட சிற்றெல்லை பேரெல்லை யாவற்றுள்ளும் உயிர்ப்பண்பாகிய ஒரு பேரூயிர் உள்ளும் புறமுமாய் ஊடுருவி நிற்கிறது என்பர் உயிர்நிலை (ஆன்மிக) ஆராய்ச்சியாளர். அதனை உணர வல்லாதவர்களும் உணரும் வகையில் அதே தன்மையில் நிற்பது மொழியும் அதன் உயிர்நிலை வடிவாகிய இலக்கியமுமே. அது தனிமனிதன் மூலப்பண்பாகவும் மனித வகுப்பின் குறிக்கோளாக வும் உள்ளது. மொழியுடன் வளர்கின்றது. மொழி கடந்து மொழி புகுகின்றது. ஆயினும், அருளற்றவனிடம் அருள்வராதது போல, தன்மொழிப் பண்பற்ற வனிடம் பிறமொழிப் பண்பும் சாராது. தன்மொழிப் பண்பு வளராதவனிடம் பிறமொழிப் பண்பும் ‘வளராது.’ தமிழ் இன்று மொழிகளுள் ஒரு மொழியாய் இருக்கிறது. தமிழகமும் இன்று நாடுகளுள் ஒரு நாடாய் இருக்கிறது. ஆனால் இந்த ‘அந்தஸ்தைக்’ கூடச் சிலபல தமிழரும், பலசிலர் பிறரும் அதற்களிக்கத் தயங்குகின்றனர். இன்றைய நிலையில் அது கடைப்பட்ட மொழியாகவும் நாடாகவும், அடிமையினத்தின் எஞ்சிய பகுதியாகவும் அடிமைகட்கும் அடிமையாகவும் இருப்பதால் அதனுடன் யாரும் உறவுகொண்டாட முன்வருவ தில்லை. அதன் தாழ்வு பிறருக்கு அருவருப்பையும், அதன் உயர்வு பிறருக்கு நெஞ்சுறுத்து கண்ணுறுத்துப் பகைமைகளையும் வருவிக்கின்றன. ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு பண்புண்டு என்று கூறிய கவிஞரை இந்தியத் தேசியம் ஏற்றாலும் அவ்வுண்மையை ஏற்கக் கூசுகிறது. இது தேசியத்தின் குற்றமுமன்று; தமிழன் குற்றமு மன்று; வரலாற்றின் குற்றமே மனித உலகிற்கு உலக நாகரிகத்தையும், வடஇந்தியா விற்கு இந்திய ஆரிய நாகரிகத்தையும், ஆரியமொழி எனப்படும் வடமொழி இலக்கியத்தையும், தென்னாட்டிற்கும் பிறநாடு களுக்கும் தாய்மொழி இலக்கிய வாழ்வையும், சமய வாழ்வையும் அளித்தது தமிழகம். இதனை வரலாறு ஏற்றாலும் வற்புறுத்த - மக்களுக்கு அறிவுறுத்த - விரும்பாமல் தயக்க முறுகிறது. இப் போலித் தேசியப்பண்பினால் வருங்கேடு தமிழகத்திற்கு மட்டுமன்று; இந்திய நாகரிகத்துக்கும் உலகத்துக்குமே என்பதை அறிஞர் உணரும் நாள் விரைவில் வரும். தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழமுடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணங் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலேயே ஆர்வம் ஏற்படாத இக் காலத்தில் உலக இலக்கிய வரலாறு எழுத முற்பட்டோம். இலக்கியம் கலைகளுள் ஒன்று. கலைகள் தொழிற்கலை, கவின்கலை என இருவகைப்படும். தொழிற்கலை உணவு உடை தேவைகளை நிறைவேற்ற உதவும் கலை. எனவே, இது வாழ்க்கையின் அடிப்படையும் வாழ்க்கைக்கான கருவியும் ஆகும். இது கைகால் முதலிய புற உறுப்புக் களாலேயே6 தொழிற்படுவது. ஆனால், ‘கவின்கலை’ வாழ்க்கையில் தொழில்போக எஞ்சிய நேரத்தை மேலாக்கத் துறையில் செலவுசெய்து இன்பமும் பயனும் நாடி உள்ளம், அறிவு, வாழ்க்கை ஆகியவற்றை மேம்படுத்தும் கலையாகும். இதில் தொழிற்படுபவை அக 7உறுப்புக்கள் ஆகிய புலன்களும், அகம் ஆகிய உள்ளமுமேயாகும். ஓவியம், சிறபம்7 குழைவுக்கலை8 இசை, இலக்கியம் ஆகியவை கவின்கலைகள், இவற்றுள் முதல் மூன்றும் கட்புலனுக்கும் மெய்க்கும் அகத்துக்கும் உணர்வூட்டுவன. இசை செவிப்புலனுக்கும் உள்ளத்தின் உணர்ச்சிக்கும் செயலாற்றலுக்கும் உணர்வூட்டுவது. இலக்கியமோ, வள்ளுவர் கண்ட பெண்மையின் “கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியும்” ஐம்புல உணர்வுடன் உள்ளத்தின் அறிவு, உணர்ச்சி ஆகிய எல்லா ஆற்றல் களையும் தூண்டி வளர்ப்பது. எனவேதான் அது ‘கவின்கலையின் கவின்கலை’ எனக் கூறத்தக்க சிறப்புடையது. கலைகளிடையே இலக்கியத்துக்கு மற்றொரு தனிச்சிறப்பும் உண்டு. அதுவொன்றே முழுவதும் மொழி சார்ந்த கலை. மற்றக் கலைகளில் முதற்காரணம் (மூலப்பொருள்) மை, கண், செங்கல், சுண்ணம் முதலியவை. துணைக்காரணம் (கருவி) மைக்கோல், தூவி, கரண்டி முதலியவை. செயற்காரணம் ஒன்றே உயிர்ப் பண்புடைய கலைஞனாக முடிகிறது. இலக்கியத்துக்கடுத்த இசையில்தான் மூலப்பொருளும் உயிர்ப்பண்பு சார்ந்த (ஒலியதிர்ச்சி யுடைய) நரம்பு, தோல், குழல் முதலிய பொருள்களாகின்றன. ஆனால், இலக்கியத்திலோ பின்னணி1 இயற்கையும் மக்கள் வாழ்வும், அதன் மூலப் பொருளோ மக்கள் வாழ்க்கையில் மலர்ந்த மலர்ச்சியாகிய தாய்மொழி. செயற்காரணமோ முழுதுற வளர்ச்சி யுற்ற மனிதனாகிய ‘கவிஞன்.’ கால தேசங்கடந்த ஒரு பொருளுக்குக் கூறப்படும் ஆக்கல், அளித்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களும் மனிதன் அறிவுக் குட்பட்ட பண்புகளுள் இது ஒன்றுக்கே உண்டு. கடவுள் படைத்ததாகக் கூறப்படும் உலகில் தவறு கண்டாலும் ஷேக்ஸ்பியர், திருவள்ளுவர் போன்றவர் படைத்த இலக்கிய உலகில் தவறு காணமுடியாது. பல நாடுகளின் பல இலக்கியங்களையும் பலவாகவே இந் நூலில் காட்டுகிறோமாயினும் அவற்றினூடாகப் பொது வளர்ச்சிப் பண்புகள் மிளிர்வதையும், அவை ஒன்றையொன்று தழுவியும், ஒன்றிடமிருந்து மற்றொன்று பண்பு மாற்றம் செய்தும் வளர்வது காணலாம். ஆயினும் ஒவ்வொரு மொழியும் ஒரு தனிப்பண்பை வளர்ப்பதன் மூலமே உலகிற்கு அது ‘கொடுக்கும்’ ஆற்றலைப் பெறுகிறது என்று காணலாம். பொருளுலகைப் போலவே இலக்கிய உலகிலும் கொடுக்கல் வாங்கல் குற்றமாகாது. ஆனால், வாங்கிய செல்வத்தால் மட்டும் ஒருவன் செல்வனாக மாட்டான். ஈட்டிய செல்வத்தால் மட்டுமே செல்வனாவான். அதைக் கொடுக்கும் அளவிலேயே அவன் புகழ் பெறுவான். ஒவ்வொரு மொழியிலும் தானாக ஈட்டிய பண்பே அதன் தேசியப் பண்பு. அது பிற மொழி களுக்கும் உலகுக்கும் கொடுக்கும் பண்பே அதன் உலகப்பண்பு அல்லது ‘சர்வதேசிய’ப் பண்பு ஆகும். இவ்விரு பண்புகளும் தமிழுக்கிருப்பதுபோல மற்றெம் மொழிகளுக்கும் இல்லை. ஆனால், தேசியப்பண்பைப் படிப்படியாக இழந்த தமிழனே தம்மினம், தம் தாய்மொழி மறந்த வடநாட்டுத் தேசியத்தையும் தம்மினம், தம் தாய்மொழிகளை மறுக்க முற்படும் தென்னாட்டுத் தேசியங்களையும் படைத்தவனாவான். அவன் படைப்பே இப்போது அவன் நாட்டிற்குள் வரும் ‘உடைப்பா’யியங்குகிறது. அவற்றிற்கு மேலும் இடங்கொடுத்தால் அவனும் அழிவான். அவன் படைத்த போலித் தேசியங்களும் அவனுடனே அழியும். தனக்காக வன்றாயினும் பிறருக்காகவேனும் அவன் தான் படைத்த படைப்பிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டும். அவன் தற்பண்பும் அவன் முற்காலத்தில் கொண்ட உலகப் பண்புமே இதற்கு வழியாகும். உலக இலக்கியத்தின் வளர்ச்சியில் கவிதை முற்பட்டும் உரைநடை பிற்பட்டுமே எங்கும் காணப்பெறுகின்றன. கவிதை யிலும் பண்சார்ந்த கவிதையாகிய இசையே ‘எழுத்தறிவுக்கு’ முற்பட்டதாகவும், நாடகம் அல்லது கூத்தே ‘மொழியறிவுக்கு’ முற்பட்ட இசையாகவும் இருந்தன. கூத்து, இசை, இயல் (கவிதை - உரைநடை - அறிவுநூல்) ஆகிய மொழியின் முத்திறப் பாகுபாடு உலகுக்கே உரியதாயினும் இதனைக் கண்டு வகுத்தவர் தமிழரே. ஆனால், தற்பண்பை ‘நீண்ட நெடுங்கால’மாகவே பேணாது வந்துள்ள தமிழர் கடைச்சங்க காலத்துக்கு முன்பே கூத்தையும் இசையையும் கைநழுவவிட்டனர். இயலிலும், இலக்கணத்திலும், பெரும்பகுதி 12ஆம் நூற்றாண்டுவரை பேணப்படாமல் இருந்து, அழிந்துவிட்ட நிலையை எய்தியுள்ளன. பழம்பொருளா ராய்ச்சியால் அவை இன்னும் கைவரப்பெறலாமென்றே நாம் நம்புகின்றோம். அதுவன்றித் தமிழ், தமிழிலக்கிய அறிவுடன் பிறமொழியறிவு, பிறமொழி இலக்கிய அறிவின் ஆராய்ச்சியால் பல முற்கால உலகப்பண்புகளும் அவற்றுடன் தொடர்புடைய பழைய தமிழ்ப்பண்புகளும் விளங்கக்கூடும். இவற்றுள்ளும் பல செய்திகள் பல மொழி வரலாறுகளிலும் ஆங்காங்குச் சுட்டப்பட்டுளளன. உலக இலக்கிய வரலாறுகளின் காலங்களையும் கூறுகளையும் அவ்வம்மொழி வளர்ச்சிப் படிகளாலேயே குறிக்கிறோமாயினும், ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் வகுத்துள்ள பிரிவு உண்மையில் உலக முழுவதுக்குமே சற்றேறக்குறையப் பொதுவில் பொருத்த மாயிருப்பதனால் அதனையே அடிப்படைப் பிரிவாகக் கொண்டுள்ளோம். இப் பிரிவுகள் வருமாறு; 1. வரலாற்றுக்கு முற்பட்ட அதாவது ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலம் அல்லது தொல்பழங்காலம் (கி.மு. 1000 வரை) 2. பண்டைக்காலம் (கி.மு. 1000 முதல் கி.பி. 500 வரையுள்ள 1500 ஆண்டுக்காலம்) ஆரியருக்கு முற்பட்ட பண்டை நடு உலக நாகரிகத்தின் அழிபாட்டில் எஞ்சிய கூறுகளைத் தம்மகங்கொடு வளர்ச்சி பெறத் தொடங்கிய புதிய பண்டைய ஆரிய நாகரிகங்களான உரோம, கிரேக்க, பாரசீக, இந்திய நாகரிகங்களும் ஆரியர் வரவால் அழிவுறாதெஞ்சியிருந்த பிற நாகரிகங்களும் வாழ்ந்த காலம் இதுவே. இக் காலத்தில் எஞ்சி நின்ற ஆரியச்சார்பற்ற நாகரிகங்கள் தென்னாட்டுத் திராவிட நாகரிகம் நீங்கலாகப் பாபிலோனிய யூத பினிஷிய நாகரிகங்கள் மட்டுமே. இக் காலத்தில் பொதுவில் ஆரியர் வரவால் தொல் பழங்கால நாகரிகத்தின் ஒளி முற்றிலும் கெடாத தனாலும், முற்கால ஆரிய நாகரிகங்கள் அவற்றின் கூறுகளைத் தமதாக்கிக் கொண்டதனாலும் அறிவியக்கப்பண்பு பின்பும் நின்று நிலவியதுடன் ஓரளவு வளர்ச்சியுமடைந்தது. 3. இடைக்காலம் அல்லது இருண்ட காலம் அல்லது புராண காலம் (கி.பி. 500 முதல் 1500 வரை) பண்டை உலக நாகரிகத்துடன் தொடர்பு கொண்டு நாகரிகமடையாமல் வடஐரோப்பாவிலும், வடஆசியாவிலும் நாகரிகமற்ற நாடோடி முரட்டு மக்களாய் இன்னும் திரிந்துவந்த ஆரியர்களின் இரண்டாம் படையெடுப்பு ஏற்பட்டு அறிவொளி மறைவுற்ற காலம் இதுவே. ஐரோப்பாவையும் தமிழகத்தையும் வெட்கித் தலைகுனிய வைக்கத் தக்க காலம் இதுவே யென்னலாம். ஆயினும், இதன் காலஎல்லை வடநாட்டில் கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி இன்னும் முற்றிலும் முடிந்தபாடில்லை. தமிழகத்திலோ இதன் சாயல் கி.பி. 1 ஆம் நூற்றாண்டிலிருந்து காணப்படலாமாயினும் முதல் 10 ஆம் நூற்றாண்டிலேயே முழு அளவில் தமிழ்ப்பண்பை மறைத்துப் பிடிக்க முடிந்தது. கம்பர் காலமுதல் அணிமை வரை அதன் இருட்டுக் காரிருட்டாய் அறிஞர் சுந்தரம் பிள்ளை, வள்ளலார் ஆகிய விடிவெள்ளிகளால் சிறிது விடியற்காலக் கருக்கொளியாய் வருகிறது. இக் காலத் தொடக்கத்தில் ஐரோப்பாவில் ஊணரும் காத்தியரும், விசிகாத்தியரும், டேனியருமாகிய செருமானிய ஆரிய இனத்தவரும் இந்தியாவில் ஊணர், குஷாணர், சாகர், மங்கோலியர் ஆகிய ஆரிய இனத்தவரும் படையெழுந்தனர். இவர்களுள் ஊணர்கள் எல்லா நாடுகளையும் அழித்தவர்கள். மங்கோலியர் ரஷியா, சீனா, இந்தியா, இஸ்லாமிய நாடுகளான ஈராக் (பாபிலோன்), பாரசீகம் ஆகிய நாடுகளின் வாழ்வில் தற்காலிகக் கூற்றுகளாகக் குறுக்கிட்டனர் என்பதை இவ்வெல்லா நாடுகளின் இலக்கிய வரலாறுகளில்கூட நன்கு காணலாம். ஊணரும், மங்கோலியரும் ஆரியரால்கூட வெறுக்கப்பட்டு, ஆரியர் அல்லர் என்று பலரும், ஆரியர் என்று சிலரும் கூறுகின்றனராயினும் தன்மையில் ஆரியராகிய காத்தியர், விசிகாத்தியர், செருமானியர் என்பவருடன் மாறுபட்டவரல்லர் என்பது குறிப்பிடத்தன்று நாகரிக மக்களுடன் தொடர்பு கொண்டிராத தன்மை மட்டுமே என்பதும் கவனிக்கத்தக்கது. முற்றிலும் செமானிய இனத்தவரான செருமன் மக்கள் நாகரிகமடைந்த பின் மற்ற எல்லாருடனும் ஒத்தும் உயர்வுற்றும் வளர்ச்சிபெற்றனர் என்பது காணலாம். இனப்பண்பு என்பது வளர்ச்சி காரணமான பண்பேயன்றிப் பிறப்புக் காரணமான பண்பு அன்று. 4. தற்காலம் அல்லது பகுத்தறிவு மறுமலர்ச்சிக் காலம் (கி.பி. 1500 முதல்) நில உரிமை ஆதிக்கம்10 சமய அதிக்கம்11 மூடக் குருட்டு நம்பிக்கைகள், அடிமைத்தனம் முதலிய இருண்டகால நூலாம் படைகள் அகற்றப்பட்டு ஐரோப்பாவில் பகுத்தறிவு மறுமலர்ச்சி ஏற்பட்ட காலம் இதுவே. மேலைநாட்டு நாகரிகமெனப்படும் இன்றைய புத்துலக நாகரிகம் உலகெங்கும் பரவத்தொடங்கிய காலம் இது. இவ்வறிவொளிக்குத் தூண்டுதலாயிருந்தும் தொல் பழங்கால நாகரிகத்துடன் தொடர்பு கொண்டு அதனைச் சிறிது காலம் பேணி வளர்த்த இலத்தீன் கிரேக்க நாகரிங்களே என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. 5 ஆம் நூற்றாண்டிலேயே இலத்தீன (உரோம) நாகரிகத்தாலும், 12ஆம் நூற்றாண்டில் அராபிய நாகரிகத்தாலும் ஐரோப்பா சிறிது மின்னொளி கண்டது. 15ஆம் நூற்றாண்டில் கிரேக்க இலக்கியத்தாலும், 19 நூற்றாண்டில் வடமொழி இலக்கியத்தாலும் அறிவொளி பகலொளியாகப் பரந்தது. இவையனைத்திலும் தொல்பழங்கால நாகரிகத்துடன் நேரிடையான தொடர்புடைய தமிழ் இலக்கிய அறிவும், திராவிட நாகரிக அறிவும் பரவும் காலத்தில் உலகின் இவ்வெள்ளொளி பட்டப்பகலொளியாய் வளரும் என்பது எம் நம்பிக்கை. தமிழகம் இன்று பழைமையும் புதுமையும் போராடும் போர்க்கள மாயிருந்து வருகிறது. இத்தகைய போராட்டங்கள் எல்லா நாடுகளிலும் உண்டாயினும், தமிழகத்தின் நிலை இவ்வ கையில் தனிப்பட்டது என்பதைப் பலர் கவனிப்பதில்லை. மேனாடுகள் புதுமையில் முன்னேறி நாட்டுடன் நாடு போட்டியிட்டு வருகின்றன. ஆனால், புதுமையுடன் பழைமை அங்கே போராடவில்லை. ஏனெனில், பழைமை என ஒன்று அங்கே கிடையாது. அவர்கள் மேற்கொள்ளும் பழைமை வெளிநாட்டு வரவென்பதை அவர்கள் அறிவதால், அவர்கள் தற்பண்பை அது கெடுக்கவில்லை. வேண்டிய அளவு அறிவுக்கொத்த நற்கூறுகளை மட்டும் கொண்டு, அதன் தீமைகளுக்கு அடிமைப்படாமல் வளர்ச்சியடைகின்றனர். ஆனால், கீழ் நாடுகளில் பொதுவாகவும், தமிழகம் நீங்கலான இந்தியாவில் சிறப்பாகவும் நாகரிக வளர்ச்சி குன்றிய இடையிருட்காலப் போலிப் பழைமையே உண்மையில் பழைமை என்று தவறாகக் கொள்ளப்பட்டு வருவதால் அப் போலிப் பழைமை புதுமையை எதிர்த்துப் போராடும் போராட்டத்தில், இந் நாடுகளிலெல்லாம் இப் போலிப் பழைமையே பழைமையாகவும், அதுவே தற் பண்பாகவும், தேசியப் பண்பாகவும் கொள்ளப்படுவதனால் புதுமை வெற்றி பெறினும் நிலைக்க முடியாதிருக்கிறது. பழைமைப் போர்வையில் போலிப்பழைமையே மேம்பட்டு வருகிறது. இந்தியாவிலோ வெனில், புதுமை முற்றிலும் சங்கு நெரித்துக் கொன்றடக்கப்பட்டு வருகிறது. புதுமையின் போர்வையில் சில சமயமும், பழைமையின் போர்வையில் பலவிடத்தும் இப் போலிப் பழைமை கூத்தாடுகிறது. தமிழகத்திலும் இப் போலிப் புதுமை யையும் பழைமையையும் பலர் திரித்துணராதிருந்தாலும் பழைமைப் புதுமைப் போராட்டத்தில் தற்பண்பு வாய்ந்த நற்பழைமை புதுமைக்கு ஆதரவு தருவதால் இங்குப் பழைமை அடிப்படையில் எழும் புதுமை (தேசியம்) பல எதிர்ப்புக்க ளிடையே கனிந்தெழுகின்றது. பழைமை புதுமைக்கு உதவும் புதிரைத் தமிழகத்திலின்றி எங்கும் காணமுடியாததன் விளக்கம் இதுவே. அது புதிர் போலத் தோன்றினாலும் புதிரன்று; இயற்கை அமைதியேயாகும். தமிழகத்தில் தேசிய வளர்ச்சி இன்று தமிழரும் அறியாத வகையில் பல துறையிலும் விரைந்து வளர்ச்சி பெற்று வருகிறது. அதற்குதவும் கூறுகளும் சூழ்நிலைகளும் பல தமிழ்ப்புலவர் தமிழ் மாணவர்களிடையேயும் பொது மக்களிடையேயும் தமிழறிவு, தமிழிலக்கிய அறிவு, தமிழார்வம் ஆகியவற்றைப் பரப்பி வருகின்றனர். வரலாற்றாராய்ச்சி, மொழியாராய்ச்சி, புதைபொருளாராய்ச்சி ஆகியவற்றின் தாக்குதலால் புதையுண்ட தமிழ் இலக்கியச் செல்வமும், பிறமொழி இலக்கியச் செல்வங்களும் பண்டை மொழிப்பண்பு நாகரிகப் பண்புகளும் விளக்கமுறுகின்றன. தவிர, ஆங்கிலங்கற்ற மாணவரிடையேயும், ஆங்கிலங்கற்ற வகுப்பனிரிடையேயும் உலக அறிவும், பொது அறிவும், ஆராய்ச்சியறிவும் பரந்து வருகின்றது. இவையனைத் திற்கும் மேலாக அரசியல் இயக்கங்களாலும், பத்திரிகைப் பெருக்கத்தாலும் பொதுமக்களின் ஏனோ தானோ என்ற அசட்டை மனப்பான்மை அகன்று அவர்கள் உள்ளத்தில் கருத்துகள் நடமாட இடமேற்பட்டு வருகிறது. இவையனைத்தும் வரவேற்கத்தக்க நல்வியக்கங்களே. ஆயினும் பல வகுப்பினரிடையேயும் பல தனியோடைகளாகப் பிரிந்து இயலும் இம் மரபுகளனைத்தும் ஒருங்கே சேர்ந்தாலன்றித் தேசிய வாழ்வில் முனைப்பும், தேசிய இலக்கிய வாழ்வில் புதுப் படைப் பாற்றலும் ஏற்பட முடியாது. தமிழர் நற்பண்பே அதற்குரிய வித்தாகவும், தமிழ்ப்புலவர், மொழியறிஞர் ஆகியவர்களின் இலக்கிய அறிவும், மொழியறிவும், நாகரிக அறிவுமே அதன் நிலமாகவும் உரமாகவும், ஆங்கிலங்கற்ற அறிஞரின் பொது அறிவே அது ஒங்கி வளர உதவும் வான வெளியாகவும் இருக்க முடியும். இம் மரபுகள் ஒன்றுபடத் தமிழகத்தின் வித்தும் நிலமுமா யியங்கும் தமிழ்ப்புலவர் நிலையும், தமிழர் நிலையும் உயர்ந்து அவர்களிடையே உலகப் பொது அறிவு வளர வேண்டியது இன்றியமையாதது. எனவே, பொதுவாகத் தமிழகப் பொது மக்களிடையேயும், சிறப்பாகத் தமிழ்ப் புலவர்களிடையேயும் உலகப் பொதுஅறிவைப் பரப்பும் முயற்சிகளுள் ஒன்றாகவே இந் நூல் எழுதப்பெறுகிறது. அத்துடன் பிறமொழி வாயிலாக அறிவு பெறுபவர்களும் அறிவின் தாய் நிலமாகிய தமிழறிவு குன்றியும் தமிழகப் பிற உலகத் தொடர்புகளைக் கவனியாதும் இருந்து வருகின்றனர். அவர்களிடையேயும் தமிழார்வத்தை மட்டுமன்றித் தமிழறிவையும் அவர்கள் பொது அறிவின் துணைக்கொண்டே தூண்ட இந் நூல் பயன்படும் என்று கருதுகிறோம். உலகில் அரசுகள் பல தோன்றி வளர்ந்து மறைந்துள்ளன. ஆனால், அரசுகள் மறைந்தாலும் நாட்டு வாழ்வு தொடர்ந்திருப் பதுண்டு. இதுபோல நாடுகள் அழிந்தாலும் நாட்டின் நாகரிகம் பிற நாடுகளின் நாகரிகத்துடன் ஒன்றுபட்டு வளர்ச்சி பெறுவதுண்டு. ஆனால், நாகரிகம் அழிந்தாலும் அழியாது புகழ்தருவது இலக்கியமே. ஆகவேதான், இலக்கியமும் மொழியும் நாட்டின் அருஞ் செல்வப் பெட்டகமாகப் பேணத்தக்கவை களாயுள்ளன. உலகின் ஒருபாதி ஆண்டும், முழுப்பகுதியிலும் குடியேற்ற வாணிக அரசு செலுத்தியும் வரும் ஆங்கிலேயர் “எம் பேரரசை இழக்கத் துணியினும் துணிவோம் எங்கள் ஷேக்ஸ்பியரையும், அவர் மொழியாம் ஆங்கிலத்தையும் இழக்க ஒருப்படோம்” என்று கூறுகின்றனர். நாட்டு வாழ்வு, மொழி வாழ்வு ஆகியவற்றின் முழு மலர்ச்சியான இவ் விலக்கியத்தின் வரலாறு அறிபவர் நாட்டை முழு அளவும் அறிந்தவர் ஆவர். நாடுகளை ஒருவர் நேரில் கண்டு பழகியறிதல் அரிது. ஒரு நாட்டிலக்கியத்தை ஒருவர் நேரில் படித்தறிதலே எளிதில் கூடுவது. ஆனால், பொது அளவில் வரலாற்று மூலம் உலகப் பேரிலக்கியங்களை அறிதல் எம் மொழி வளர்ச்சிக்கும் உதவுவதொன்றே. தமிழர்க்கும் தமிழின் சிறப்புப் பண்புகள், குறைபாடுகள் ஆகியவைபற்றிய ஆராய்ச்சிகளைத் தூண்டவும் இது பயன்படும் இக் கருத்துகளுடன் தமிழகத்துக்கு உலக இலக்கிய வரலாற்றின் இம் முதல் ஏட்டை உவந்தளிக்கின்றோம். அடிக்குறிப்புகள் 1. Nation. 2. Nature, Nativity 3. Humanity 4. City-State 5. Neo-Nationalistic 6. Limbs. 7. Architecture. 8. Sculpture. 9. Background. 10. Feudalism 11. Theocracy 1. பிரஞ்சு இலக்கியம் உலகில் மொழிகள் பல. அவற்றுள் திருந்திய மொழிகள் சில. இலக்கியச் சிறப்புடையவை பின்னும் அருகியவை. அவற்றையும் பண்டைய இலக்கியச் சிறப்புடைய தொன்மொழிகள், தற்கால வளர்ச்சியுடைய தற்கால மொழிகள் என வகுக்கலாம். தமிழ் தொன்மொழியாகவும் தற்கால மொழியாகவும் இயங்கும் தனிச் சிறப்புடையது. மற்றையவை ஒன்று, தொன்மொழிகளா யிருக்கக் கூடும். அன்றேல் தற்கால மொழிகள் ஆகும். கிரேக்கம், இலத்தீனம், வடமொழி ஆகிய மொழிகள் தொன் மொழிகளா யிருந்து இறந்து பட்டவை. பிரஞ்சு மொழி ஆங்கிலம், ஜெர்மன் முதலியவற்றைப் போலத் தற்கால மொழி ஆகும். ஐரோப்பிய மொழிகளுள் பிரஞ்சு மொழியின் இடம் மிக உயர்வானது. ஆங்கிலம், பிரஞ்சு, செருமன் ஆகிய மூன்றுமே இன்றைய நாகரிக ஐரோப்பிய உலகின் முதன் மூன்று மொழி களாகக் கருதப்படுகின்றன. உலகின் எல்லா மொழிகளிலும் எல்லா இலக்கியங்களிலும் எல்லாச் சிறப்புகளும் இருக்கும் என்று எதிர்பார்ப்பது இயல்பன்று; இருக்கவு மில்லை. ஆனால், நிறைவு குறைவுகளைச் சீர்தூக்கிப் பார்த்தால் உலக இலக்கிய வரலாற்றில் இடம்பெறுமளவு சில இலக்கியங்கள் பெருமையடைந்துள்ளன. பிரஞ்சு மொழிக்கும் இலக்கியத்துக்கும் இத்தகைய உயர் சிறப்பு உண்டு. மொழிகளில் பிரஞ்சு மொழி இனிமையும் நயமும் தெளிவும் உடையது. தமிழின் இனிமைக்கு அதன் இழுமெனும் மெல்லோசை காரணம் என்று அறிஞர் கூறுகின்றனரன்றோ! பிரஞ்சுமொழி வேறெம் மொழியினும் மெல்லோசை மிக்க தென்னலாம். தற்காலத் தமிழ்மொழியுடன் திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றிற் பயிலும் செந்தமிழ், சுருக்கமும் தெளிவும் மிக்கதாயிருப்பதைக் காண்கிறோம். பிரஞ்சுமொழி, செந்தமிழ் போன்றே தெளிவும் சுருக்கமும் நயமும் உடையது. இலக்கியத்தில் பிரஞ்சுமொழியின் தனிப்பெருஞ் சிறப்பு அதன் ஒப்புயர்வற்ற உரைநடை இலக்கியமாகும். மற்றெல்லா நாடுகளிலும் பாட்டின் அமைப்பில் செலுத்தப்படும் கவனமும் கலைநோக்கும் இம் மொழியில் உரைநடையிலேயே செலுத்தப் படுகிறது. எழுதும் உரைநடை மட்டிலுமின்றி, உரையாடலிலும் சொற்பொழிவிலும் இதே முறையில் பிரஞ்சு மொழி முதன்மை பெற்றிருக்கிறது. ஐரோப்பாவெங்கும் நாகரிகமிக்க மனிதர், சிறப்பாக நங்கையர் விரும்பிப் பயிலும் மொழி பிரஞ்சு மொழி யேயாகும். இப் பண்பின் பயனாக இன்னோர் அரிய சிறப்பும் பிரஞ்சு இலக்கியத்துக்கு ஏற்பட்டுள்ளது. இலக்கியத்தின் பெருமை நாட்டு மக்களின் வாழ்க்கையை உருவாக்குவதைப் பொறுத்ததாகு மானால், உலகின் வேறெம்மொழியையும் விட பிரஞ்சில் இலக்கியம் பொதுமக்களின் சமயம், அரசியல், வாழ்வியல் ஆகிய எல்லாத் துறைகளிலும் புகுந்து அதில் தன் பண்பைப் பொறித்ததுபோல் வேறெவ்விலக்கியத்திலும் பொறித்திருக்க முடியாது. வால்த்தேரின் பகுத்தறிவு1 ரூசோவின் வாழ்வியல் ஒப்பந்தம்2 எமிலியின்3 தற்சரிதை4 போன்ற நூல்கள் பிரஞ்சு மக்கள் வாழ்வைப் புதுக்கி வளர்த்துடன் நில்லாது உலகையே மாற்றியமைக்க உதவின. பிரஞ்சு இலக்கிய ஆசிரியன் வெறும் நூலாசிரியன் மட்டுமல்லன்; பிரஞ்சு நாட்டு வாழ்வையும் அதன்மூலம் உலக வாழ்வையும் படைக்கும் அல்லது மாற்றியமைக்கும் கலைப் படைப்பளனாகவே அவன் சிறந்து விளங்குகின்றான். பிரஞ்சு மொழியின் சிறப்பு உரைநடையிலேயே முதன்மை யுடையது என்பதனால் பாட்டில் சிறப்பில்லை என்று கொண்டு விடக்கூடாது. உலக இலக்கியத்தில் உரைநடையே அதற்கு ஈடும் எடுப்புமற்ற முதன்மை தருவது என்பதனால் மட்டுமே அது முதற்கண் கவனிக்கத் தக்கதாகின்றது. பாட்டிலும், நாடகத்திலும் இதே கலைத் திறனைக் காணலாம். 17 ஆம் நூற்றாண்டில் பேரரசன் பதினான்காம் லூயியின் காலத்தில் பிரான்சு அரசியலில் உலகின் முதல் வல்லரசாயிருந்தது போலவே இலக்கியத்திலும் முதல் வல்லரசாயிருந்தது. இக் காலத்துக்கு முன் இலக்கிய உலகில் ஸ்பெயினும், அதன்பின் இத்தாலியும் முதன்மை பெற்றிருந்தன. பழைய பிரஞ்சுப் புலவர் ஸ்பானிய இலக்கியத்தையும் இத்தாலிய இலக்கியத்தையும் பின்பற்றி யிருந்தனர். ஆனால் 17 ஆம் நூற்றாண் டுக்குப்பின் பிரான்சின் செவிலித்தாய்களாகிய அவ்விரு நாடு களேயன்றி செருமனியும், இங்கிலாந்தும், ரஷ்யாவும் பிரான்சின் இலக்கியச் செங்கோலுக்குத் தலைவணங்கின. உலகின் ஒப்பற்ற முதல்தர வீறுநாடகக்5 கவிஞரான ரஸீனும், களிநாடகக்6 கவிஞனான மோலியரும் பாட்டியலமைந்த கதை ஆசிரியனான லாபாந்தேனும்7 இலக்கிய ஆராய்ச்சியானனான பொலோ8வும் இக் காலத்தின் நான்கு இலக்கியத் தூண்களாவர். நாடகக் கலைவகையில் பிரஞ்சு இலக்கியத்தின் பண்பாடு கிரேக்க இலக்கியத்தைத் தழுவியது. கிரேக்கர் உருவமைதி, வடிவழகு ஆகியவற்றிலேயே முழுக்கவனம் செலுத்தியவர்கள். அதற்கியைய நாடகத்தில் மூவகை ஒருமைப்பாடுகள் வேண்டு மென்று அவர்கள் அமைத்தனர். அவை கால ஒருமைப்பாடு, இட ஒருமைப்பாடு, நிகழ்ச்சி ஒருமைப்பாடு என்பன9. இவற்றை பிரஞ்சுப் புலவர் செவ்வனே போற்றினர். ஆனால், இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியரும் இந்தியாவில் காளிதாசனும் போன்றவர்கள் முதலிரு ஒருமைப்பாடுகளையும் விலக்கி நிகழ்ச்சி ஒருமைப் பாட்டை மட்டுமே கொண்டனர். பிரஞ்சுமக்கள் கவிதை, கலைஞன் அளவு கோலுக்கடங்கி அவன் சீவுளியால் உருவமைந்த கவிதை. அதனைச் செந்நெறி யல்லது கலைநெறி இலக்கியம்10 என்னலாம். ஏனைய நெறி உருவினும் பொருளையும் உணர்ச்சியையும் பெரிதாகக் கொண்டு அதன் பயனாக அமைந்த இயற்கை வடிவமைப்பையே மேற்கொள்வது. இதனை உணர்ச்சிநெறி அல்லது வீறுநெறி11 என்னலாம். முன்னது பூஞ்சோலை அல்லது செய்கரை அமைந்த கால்வாய் போன்றது. பின்னது வளமிக்க காட்டையும் கானாற் றையும் போன்றது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கில இலக்கியமும் ஜெர்மன் இலக்கியமும் பிரஞ்சு இலக்கியத்தின் ஆட்சியில் நின்று அதனைப் பின்பற்றின. ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஷில்லர், கெதே போன்ற ஜெர்மன் கவிஞர் ஷேக்ஸ்பியரின் வீறுநடையை மேற்கொண்டனர். இங்கிலாந்திலும் வேட்ஸ் வொர்த், கால்ரிட்ஜ், கீட்ஸ் முதலிய ஏரிவட்டக் கவிஞர்12 இம் முறையைத் தழுவினர். பிரான்சிலும் மூன்றாம் நெப்போலி யனுக்குப் பின் விக்டர் ஹ்யூகோ13வின் தலைமையில் இந்த நெறியைப் பின்பற்றி ஒரு புத்தியக்கம் தொடங்கிற்று. பிரஞ்சு மொழியும் இலக்கியமும், ஐரோப்பிய நாகரிகப் பண்புகளும் இயக்கங்களும் வந்து போரிடும் போர்க் களங் களாகவும், கலக்கும் கலைக்கூடங்களாகவும் திகழ்ந்துள்ளன. பிரான்சின் பழைய பெயர் கல்லியா. மக்கள் கல்லியர்14. இவர்கள் வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து மக்களைப் போன்ற கெல்ட்டிய இனத்தவர்.15 மலையாள நாட்டினரையும் பர்மிய, மலாய் நாட்டி னரையும் போல இவர்கள் எளிய வாழ்வும் இன்ப நுகர்வும் நயமிக்க நடையுமுடையவர். ஐந்தாம் நூற்றாண்டில் முரட்டு வகுப்பினரான செருமானியரும் அதன்பின் வெறிமிக்க வீரரான டேனரும் நாட்டிற் பரந்தனர். ரோம ஆட்சியால் இலத்தீன மொழி எங்கும் இடம் பெற்று மேற்கூறியவற்றின் கூட்டுறவால் சிதைந்தது பிரஞ்சு மொழி யாயிற்று. பிரஞ்சுமொழியில் முதற்கால இலக்கியம் வீரப்பாடல்கள் உருவில் அமைந்தது. தமிழ்நாட்டுப் பாணர் போன்ற பாடக வகுப்பினர் பெரு மக்கள் மாளிகைகளில் சென்று பாடிய பாடல்கள் நாடோடிப் பாடல்கள்16 எனப்படும். அவை பெரும்பாலும் பிரஞ்சுப் பெரும்பாலும் பிரஞ்சுப் பெருவீரனான ரோலந்து பற்றியும், அராபியர் படையெடுப்பை ஐரோப்பாவில் தடுத்த பேரரசனாகிய சார்லிமேனைப் பற்றியும் புகழ்ந்து பாடுபவை. அடுத்தபடியாக கெல்த்தியர் பழங்கதைத் தொடராகிய ஆர்தரும் வட்டப் பலகையும்17 பாடப்பட்டது. இப் பாட்டுக்களில் கடவுட்பற்றும், பெண்கள், நலிந்தோர் ஆகியவர்களைக் காப்பதும் தூய வீரத்தின்18 பண்புகளாகக் கருதப்பட்டன. வீரப்பாடல்கள் தமிழ்நாட்டின் பாஞ்சாலங் குறிச்சிப் போர்ப்பாடல்கள் போன்றவை; ஆர்தர் கதை அல்லியரசாணி கதை போன்றது; அது பழைய இங்கிலாந்தில் (பிரிட்டனில்) ஆண்ட அரசனைப் பராவுவது. அஃது உரை நடையிலும் யாக்கப்பட்டது. ஆங்கிலத்தில் 16ஆம் நூற்றாண்டில் மேலரி19 அதனை உரைநடைக்காப்பியமாகவும், 19ஆம் நூற் றாண்டில் டென்னிஸன் செய்யுட் காப்பியமாகவும் அதனைப் புதுக்கியுள்ளனர். மூன்றாவது படி விலங்குக் கதைகள். இவை பலவகைப் பொருள் பொதிந்து அக்கால நிகழ்ச்சிகளை நயம்படப் பழிப்பவை. 16 ஆம் நூற்றாண்டில் கிரேக்க இலக்கியத்தின் தாக்குதலால் மொழிபெயர்ப்புகளும் கிரேக்க இலக்கியப் பண்பு தழுவிய நூல்களும் எழுந்தன. இதனை ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கம்20 என்பர். 17 ஆம் நூற்றாண்டில் அறிவியல்21 மெய்ம்மை விளக்கம்22 முதலியவையும் சமய மறுப்பு இயக்கம்23 பழஞ் சமய விழிப்பியக்கம்24 ஆகியவையும் சேர்ந்து உரைநடை இலக்கியத்தை முன்னுக்குக் கொண்டு வந்தன. மேற்குறிப்பிட்ட பதினான்காம் லூயி காலத்து இலக்கிய மன்னர்களையும் ரூசோ, வால்த்தேர் போன்ற புத்திலக்கியப் படைப்பாளர்களையும் விக்டர் ஹியூகோவையும் அல்லாமல் வேறு இரு துறைகளிலும் பிரஞ்சு இலக்கியம் உலகில் முதன்மை பெற்றுள்ளது. எழுதுவோன் உளப்பண்பாட்டை விளக்கும் இனிய கட்டுரைகள் வகையில் ஆங்கிலத்தில் சார்லஸ்லாமும் பிரஞ்சில் மோந்தேனும்25 போட்டியற்ற முடியரசர்களாவர். சார்லஸ் லாமுக்கு வழிகாட்டியவர் மோந்தேனேயாவர். அவர் கட்டுரைத் துறையின் ஷேக்ஸ்பியர் ஆவர். புனைகதை அல்லது புதினத்திலும் பிரஞ்சுமொழியில் பால்ஸக், டூமா26 விக்டர் ஹியூகோ போன்றவர்கள் ஒப்புயர் வற்றவர்கள். ஆங்கிலப் புனைகதைகள் கதையுறுப்பினர் பண்பு விளக்கத்திலும் உளப்பண்பு விளக்கத்திலும் கவனம் செலுத்து கின்றன. பிரஞ்சுப் புனைகதைகள் கதைப்போக்கிலும் கதை அமைப்பிலும் தலைசிறந்தவை. இலக்கியச் சிறப்பு, மொழிச் சிறப்பு ஆகியவற்றுடன் சட்டம், அரசியல் ஆகிய இரு துறைகளிலும் பிரஞ்சு மொழி நெடுங் காலமாய் முதன்மையுற்றிருக்கிறது. ஐரோப்பாவில் இதுவே அரசியல் பொது மொழியாகக் கொள்ளப்படுகிறது. தமிழ் மொழியுடன் பிரஞ்சு மொழி ஓர் அரிய பண்பில் ஒற்றுமை உடையது. தமிழர் வரலாற்றுக் காலத்துக்கு நெடுநாள் முன்பு தொட்டே இலக்கியத்தையும் மொழியையும் சங்கங்கள் அமைத்து ஆராய்ந்தனர். இம் மாதிரிக் கருத்துப்போலும் கருத்து வடநாட்டிலோ பிறநாட்டிலோ அன்றும் இன்றும் இல்லை! தற்கால உலகில் பிரான்சு ஒன்றில் மட்டும் நெடுநாளாகச் சங்கமூலம் மொழியையும் இலக்கியத்தையும் வரையறுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. அச் சங்கம் பிரஞ்சு நாட்டு இலக்கியக் கழகம்27 என அழைக்கப்படும். அடிக்குறிப்புகள் 1. Reason. 2. Contract Sociale. 3. Emile. 4. Confessions. 5. Tragedy. 6. Comedy. 7. La Fontaine. 8. Boileau 9. Unities of Time, Space and Action. 10. Classicism. 11. Romanticism 12. Lake Poets. 13. Victor Hugo. 14. Gauls. 15. Kelts. 16. Chanson. 17. King Arthur and his Round Table. 18. Chivalry. 19. Malory 20. Renaissance. 21. Science. 22. Philosophy. 23. Protestantism. 24. Counter Revolution or Neo-Catholic Movement 25. Montaine. 26. Dumas 27. Academy 2. கிரேக்க இலக்கியம் உலக நாகரிகத்துக்கு உறுதணையான ஊற்றாக் கருதப்படும் முதன்மைவாய்ந்த உயர்தனிச் செம்மொழி கிரேக்க மொழி. மேலைநாட்டு நாகரிகம் தழைத்துப் பூத்துக் காய்த்து வளர்வதற்கு உதவியாயிருந்த வேரும் உரமுள்ள நிலமும் கிரேக்க நாகரிகம், இலக்கியம் ஆகியவைகளே. எனவே, மேனாட்டினர் கிரேக்க நாகரிகத்தைப் பன்மடங்கு போற்றிப் பூசிப்பதில் வியப்பில்லை. காலமறியப்பட்ட உலக இலக்கியங்களில் பழைமையிலும் உயர்விலும் பண்பாட்டுச் சிறப்பிலும் கிரேக்க மொழி ஒப்பும் உயர்வும் அற்றது. அதன் முதற்பெருங் கவிஞரான ஹோமர் கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகட்கு முன் இருந்தார். அவ்விலக்கியம் உச்சநிலை அடைந்திருந்த காலம் கி.மு. 5 ஆம், நூற்றாண்டுகள். அது நலிந்து அழிவு நோக்கிச் சென்ற காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு. வடமொழி எனப்படும் சமற்கிருதத்தின் இலக்கியம் உண்மை யில் கிறித்து பிறந்த முதல் நூற்றாண்டில் தொடங்கி 10 ஆம் நூற்றாண்டில் நலியலாயிற்று என்பதைக் கவனித்தால் கிரேக்க இலக்கியத்தின் பழைமை விளங்கும். வடமொழியில் வேதம், உபநிடதம், பாரதம் ஆகியவை உயர் இலக்கியமல்ல. வரலாற்று முறையில் பழைமையும் பயனும் உடையவையன்றி வேறன்று. எனவே காலத்தால் ரிக்வேதம் கி.மு. 1500 - 1000 ஆண்டு பழைமை யுடையதாயினும் கிரேக்க இலக்கிய உயர்வு உடையதன்று. தமிழிலக்கியத்திலோவெனின், இன்றிருக்கும் உருவில் முதல் நூலாகிய திருக்குறள் கிறித்து பிறந்த முதல் நூற்றாண்டளவே பழைமையுடையது எனக் கொள்ளப்படுகிறது. வடமொழியின் முதலிலக்கியம் போலாது அது முழு முதிர்ச்சி வாய்ந்ததேயாயினும் கிரேக்க இலக்கியப் பழைமைக்கு ஒத்த பழைமையுடைய நூல்கள் கிட்டாத நிலையில் தமிழ் கிரேக்க மொழியுடன் பழைமை வகையில் போட்டியிட முடியாத நிலையை உடையதே. கிரேக்கநாடு அளவில் தமிழ் நாட்டின் அளவேயாகும். தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய மண்டலங்களும், அதன் வடக்கே தொண்டை மண்டலமும் அமைந்தது போலக் கிரேக்க நாடும் தொன்று தொட்டு இயோலியம், அயோனியம் (இதுவே தமிழில் யவனர் எனத் திரிந்து கிரேக்கரைக் குறித்தது), டோரியம் என முப்பகுப்புடையதாயிருந்தது. அதன் வடக்கில் திரேஸியா, பிரிஜியா முதலிய அரைக் கிரேக்கப் பகுதிகள் இருந்தன. கிரேக்கர்கள் தங்களை ஹெல்லனியர் என்றும் தம் நாட்டை ஹெல்லாஸ் என்றும் கூறினர். மொழியின் தன்மை கிரேக்க மொழி ஆரிய இன மொழிகளுள் ஒன்று. ஆரிய முதன் மொழியின் மெய்யெழுத்துப் பெருக்கத்தை வடமொழி பேணிற்று. கிரேக்க மொழியோ அதன் உயிரெழுத்துப் பெருக் கத்தைப் பேணிற்று. ஆகவே, உலகின் எல்லா மொழிகளிலும் வடமொழி மிகுதி மெய் எழுத்து உடையதாயிருப்பதுபோல் கிரேக்கமொழி மிகுதி உயிரெழுத்துக்களை உடையதா யிருக்கிறது. இம் மிகுதி பெரிதும் ஈருயிர் கலந்த இணையுயிர் களால் ஏற்பட்டது. தமிழிலும் வடமொழியிலும் ஐ (அஇ) ஒள (அஉ) என்ற இரண்டு இணைஉயிர்களே இருக்கின்றன. கிரேக்க மொழியில் இவை தவிர ஆஇ, ஆஉ, எஇ, ஏஇ, எஉ, ஏஉ, ஒஇ, ஓஇ, ஒஉ, ஓஉ முதலிய இணையுயிர்கள் உண்டு. வடமொழியினும் பரந்த வினைத்திரிபுகள் (காலம், பண்பு குறித்த மாற்றங்கள்; முற்று, எச்சம், வியங்கோள் போன்றவை) கிரேக்க மொழியில் உண்டு. வடமொழியும் தமிழ்மொழியும் புலவர்களால் திருத்த மடைந்தது போலக் கிரேக்க மொழியும் மிகப் பழங்காலத் திலேயே திருத்தமடைந்து இலக்கியப் பண்பாடு பெற்றது. எனவே, பண்டைய மொழிகளுடன் ஒப்பிட்டால்கூட கிரேக்கமொழி திட்பமும் நயமும் உடையதாயிருக்கின்றது. இலக்கிய மாண்பு கிரேக்க இலக்கியத்தின் தனிப்பெரும் சிறப்பு அது பழைமை யுடன்கூட அப் பழைமையிடையே எதிர்பார்க்க முடியாத உயர்வும் நிறைவும் உடையதாயிருக்கின்றது என்பதே. அஃதாவது பழைமையில் எப்படி முதன்மையோ அப்படியே இன்றைய மொழிகளை யெல்லாம்விட அது இலக்கிய உயர்வும் விரிவும் உடையது. தற்கால மொழிகளில் பெரும்பாலானவற்றில் பெருங் காப்பியம் குறைவு. வடமொழியில் உரைநடை இலக்கியம், வரலாறு, அறிவியல்நூல்கள் அருமை. தமிழில் இவையும் நாடகமும் மிக அருமை. கிரேக்க இலக்கியம் மிகப் புதுக்காலத் துறைகளான புதினம்1 சிறுகதை, கட்டுரை முதலியவை நீங்கலாக மற்ற எல்லாத் துறைகளிலும் நிறைவுடையது. பெருங்காப்பியம், சிறுகாப்பியம், உள்ளுணர்வுப்பா2 நாடகம் முதலிய பாட்டு வகைகளும், வரலாறு, மெய்ந்நிலை விளக்கம்,3 பேருரை4 அறிவியல் முதலிய உரைநடை வகைகளும் ஒருங்கே கிரேக்க இலக்கியத் திரையில் சிறப்புற மிளிர்கின்றன. இவற்றுள் ஒவ்வொரு துறையிலும் கிரேக்க மொழி இன்றும் உலகில் தனிச் சிறப்புடையதாய் இலங்குகிறது. இவையன்றித் தமிழ்ப்புலவர் அறிந்தறிந் தின்புறும் ஒரு சிறப்பு மேனாட்டினரால் இன்றும் முழுவதும் அறிந்து நுகரப்படாத சிறப்பு கிரேக்க இலக்கியத்துக்கு உண்டு. கிரேக்கர் தமிழரைப்போல இயற்கையை நுனித்தறிந்து அதன் தன்மைகளை ஆராய்ந்து அத் தன்மைக்கேற்ப இலக்கியம் யாத்தனர். இதனால் அவர்கள் ஓவியங்களும் செதுக்குங்கலையும் கட்டடக் கலையும் இலக்கியமும் வழுவிலாச் செவ்வுவருப் பெற்றிருந்தன. மேனாட்டினர் இதனை வியந்து பாராட்டுகின்றனர். ஆயின் இதன் காரணத்தை அவர்கள் அறிவதில்லை. தமிழர்போல் இயற்கையின் திணைநிலைகளை அவர்கள் உணர்ந்து அதன்நெறி வழாமல் நூல் எழுதினர். அதனால் முல்லை நில வாழ்வைத் தீட்டிய கவிஞன் முல்லை நிலக் கருப்பொருளுக்கும் உரிப் பொருளுக்கும் உட்பட்டே நூலியற்றினான். இதனால்தான் ‘முல்லைப்பாட்டு’ ஒரு தனி இலக்கிய முறையாக5 கிரேக்க இலக்கியத்தில் இடம் பெற்றது. தமிழர் இத் திணை நெறிகளைக் கிரேக்கரினும் விரிவாக நுணுகி ஆராய்ந்து அதன் இலக்கணத்தை ஒரு தனி அறிவியலாக்கியுள்ளார். ஆங்கில அறிஞர் இன்னும் இக் கருவூலத்தை அணுகாத நிலையில் இஃது இன்னும் தமிழ்ப் புலவர் பூசைப் பெட்டகத்தில் புதையுண்ட மந்திரச் சக்கரமாயிருந்து வருகிறது. இலக்கிய வளர்ச்சி கிரேக்க இலக்கிய காலம் கிட்டத்தட்ட கி.மு. 1000 முதல் கி.பி. 500 வரையுள்ள 1500 ஆண்டுக் காலமாம். இதனை முப்பெரும் பகுதியாக அறிஞர் வகுத்துள்ளனர். முதற்பகுதி தொடக்கக்காலம். இது கி.மு. 475 வரையுள்ள காலம். அடுத்தது கிரேக்க நாகரிகம் தழைத்தோங்கியிருந்த கட்டிளமைக் காலமாகிய பொற்காலம். இது கி.மு. 300 வரை என்னலாம். அதன்பின் நலிவு காலமாகிய பிற் காலம். கிரேக்க மொழியின் முதற் பெருங் கவிஞர் ஹோமர் ஆவர். தமிழின் முதல் நூல் ஆன திருவள்ளுவர் குறள் அத் துறையில் (ஒழுக்கமுறை நூல் துறை) ஒப்புயர்வற்றிருப்பதுபோல் இவர் ‘இலியடும்’ பெருங் காப்பியத் துறையில் ஒப்புயர்வற்றதாய்க் கருதப்படுகிறது. தமிழில் குறள் போன்ற முழு முதல் நூல் தொடக்க நிலையிலுள்ள நூலாயிருக்க முடியாது அல்லவா? அதற்கு முன்னும் பேரிலக்கியம் இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர் கருதுவது இயல்பு. அதுபோல் ஹோமருக்கு முன்னும் இலக்கிய வாழ்வு இருந்திருக்க வேண்டும் என்று கருதி ஆராய்ந்து தேடிய அறிஞர் பலர் ‘பருவகாலக் கவிதைகள்’ ஹோமருக்கு முந்திய காலத்தவை என்று கண்டிருக்கின்றனர். இவை முதலில் இயற்கைத் தோற்றங் களை உருவகித்துப் புனைவியல் (கற்பனைக்) கவிதைகளாகவும், பின்னர் அக் கற்பனையில் ஆழ்ந்து அமிழ்ந்து பகுத்தறிவைப் பறிகொடுத்துத் தெய்வங்கள் கதைகளாகிய புராணக் கதைகளா கவும் இயங்கின. ஹோமர் பெயரால் இரு பெருங் காப்பியங்கள் இயங்கு கின்றன. ஒன்று இலியட் இது இலியம் என்ற பண்டைப் பெயர் கொண்ட ‘ட்ராய்’ நகரில் நிகழ்ந்த பத்தாண்டு முற்றுகைப் போர் பற்றிய கதையை விரிவாக ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களில் கூறுவது. அடுத்தது ஒடிஸி என்பது. இது முதற் கதையின் தலைமையான உறுப்பினருள் ஒருவனான ஒடிஸியஸ் அல்லது உலிஸெஸ் தன் நாடு திரும்பும் வழியில் கண்ட மயிர்க்கூச்செறி விக்கும் நிகழ்ச்சிகளைக் கூறுவது. இவ்விரு நூல்களும் இந்திய உலகின் இராமாயண பாரதங்கள் போன்ற சிறப்புடையவை. ஹோமரின் காவியம் 12 அசைகளையுடைய அடிகளாலான தாய், வீறும் அமைதியும் பெருமிதமும் கொண்ட நடையை உடையது. போரும் காதலும் மாறிமாறி இடம் பெறினும் போரே முதன்மை இடம்பெறுகிறது. பலவகை மெய்ப்பாடுகளையும் உளப்பாடுகளையும் ஒருங்கே தீட்டும் திறனிலும் கவிதை அகலத்திலும் உயர்விலும் ஹோமர் உலகின் ஒப்புயர்வற்ற முதல் கவிஞர்களான ஷேக்ஸ்பியர், தாந்தே, காளிதாசன், இளங்கோ முதலிய புலவர்களிடையேயும் சிறப்புமிக்கவராகக் கருதப் படுகிறார். அவரது ஒடிஸி மயிலிராவணன் கதை, விக்கிர மாதித்தன் கதை, அருச்சுனன் யாத்திரை போன்ற நிகழ்ச்சித் தொடர்ச் சித்திரம். ஹோமருக்குப்பின் முதற்காலத்தில் ஸைமனிடிஸ், பின்டார் முதலிய உள்ளுணர்வுக் கவிஞர்கள்6 தோன்றினர். இவர்கள் யாழில்7 வைத்தும் பாடத்தக்க இனிய பாடல்கள் இயற்றினர். முன்னவர் பாக்கள் கனிவும் அவலச் சுவையும் மிக்க இரங்கற்பாக்கள். பின்னவர் பாக்கள் விழாக் காலங்களில் தேவர் பெருஞ் செயல்கள், வீரர் வீரம் ஆகியவற்றைப்பாடும் வீரப்பாடல்கள். இவை ஆடற் பாட்டுகள்8 எனப் பெயர் பெற்றன. இரண்டாவது பகுதியான பொற்காலத்தில் நாடகங்கள், வரலாறுகள், பேருரைகள், மெய்விளக்க நூல்கள் ஆகியவை தழைத் தோங்கின. கிரேக்க நாடகம் அந் நாட்டின் குறிஞ்சி நிலத் தெய்வமாகிய டயானியஷியஸின் வெறியாட்டு விழாவின் ஆடல் பாடலில் தோன்றியது. தமிழர் குறிஞ்சித் தெய்வமான முருகன், வேலன்மீது வெறியாடுவது போல டயானிஷியஸ் தானாகவே ஒரு தலைவன்மீது வெறிகொண்டு தன் பீடும் பெருஞ்செயலும் கூறி ஆடுவான். பின்னாளில் ஆடுபவனான தலைவனுடன் பாடப் பாடகர் குழு9 அமைந்தது. அதில் ஒருவன் தலைவனுடன் பேசலானான். பின் வேறுபலர் சேர்ந்து நாடகமாடினர். கிட்டத்தட்ட இதே முறையில் தமிழ்நாட்டில் தோன்றியதே சாக்கையர் கூத்து என்ற பழந்தமிழ் நாடகம். இஃது இன்றும் மலையாள நாட்டில் நடைபெறுகிறது. கிரேக்க நாடகம் வீறு நாடகம்10 என்றும் களி நாடகம்11 என்றும் இருவகைகளா யியன்றது. பின்னது மக்கள் வாழ்க்கைக் குறைகளை ஏளனம் செய்து நகையின்பமும் சீர்திருத்தப்பயனும் ஒருங்கே தருவது. வீறு நாடகத்தில், ஈஸ்கிலஸ், ஸோபாக்ளிஸ், யூரிப்பிடிஸ் ஆகிய மூவர் முதன்மையுடையவர். கிரேக்கர் சமய நம்பிக்கை யிலாழ்ந்து தன்னம்பிக்கையற்று நின்ற நிலையை ஈஸ்கிலஸ் குறிக்கிறார். அவர் நாடகங்கள் உணர்ச்சி மிக்கவை. காண்பவருக்கு அச்சம், வியப்பு, பெருமிதம் தோற்றுவிப்பவை. ஆனால், தேவர்களே அதில் பேரிடம் பெற்றனர். அவர்கள் மாந்தரிடம் பழிக்குப்பழி வாங்குவர்; அவர் சிறுபிழைக்குப் பெருந்தண்ட மிறுப்பர். ஈஸ்கிலஸ் நாடகங்கள் பெரும்பாலும் முக்கோப்பு, நாற்கோப்பாகக் கோர்க்கப் பட்டவை. அஃதாவது சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டும் ஒரே தொடர்கதை கூறுவது போல மூன்று நான்கு நாடகங்கள் ஒரே தொடர்ந்த நிகழ்ச்சியைக் கூறும். ஸோபாக்ளிஸ் தேவர் செயல் விடுத்து மக்கட் பண்பை விளக்குபவர். இவர் நாடகங்கள் ஷேக்ஸ்பியர் நாடகங்களில்கூடக் காணுதற்கு அரிய கட்டமைப்பு உடையவை. மக்கட் பண்போ வியத்தில் அவருடைய அரசன் ஈடிப்பஸ், நங்கை, அந்திகோனே. வீரன் அஜாக்ஸ் ஆகியவர் சித்திரங்கள் உலக இலக்கியத்தில் அழியா இடம் பெற்றவை. ‘ஈடிப்பஸ் அரசன்’ ‘அந்திகோனே’ என்பவை அவரின் சிறந்த நாடகங்கள். யூரிப்பிடிஸ், நாடகப் பண்பில் ஸோபாக்ளிஸுக்கு இளைத்த வராயினும் சொல்வளமும் பரந்த அறிவும் உடையவர். களிநாடகத்தின் ஒப்புயர்வற்ற கலைஞர் அரிஸ்தோ பானிஸ். இவர் அக்கால அரசியல் நிகழ்ச்சிகளையும் வாழ்க்கைக் கூறு களையும் எள்ளி நகையாடியவர். இவர் நூல்களில் முந்தியவற்றில் வசையின் கொடுங்கோன்மை மிகுதி. பிந்திய வற்றில் வரவர நகைச்சுவையும் நகையும் மிகுதி. நாடகங்கள் ‘தவளைகள்’ ‘பறவைகள்’ என ஏளனப் பெயர்கள் கொண்டவை. பெருமித நாடகக் கவிஞர்களான ஈஸ்கிலஸ், ஸோபாக்ளிஸ் ஆகிய தம் தோழர்களைக் கூட இவர் நகையாடி ஏளனம் செய்தனர். உரைநடையில் காலத்திலும் சிறப்பிலும் வரலாறு முதுலிடம் பெற்றது. ஹெரோடோட்டஸ், துஸிடைடிஸ், ஸெனோஃபான் முதலிய மும்மணிகள் கிரேக்க வரலாற்றுக் களஞ்சியங்கள். முதல்வர் ஈஸ்கிலஸைப் போல் விதியில் நம்பிக்கை மிக்கவர். பழங்கதைப் புராணங்களை இவர் வரலாற்றுடன் குழப்பாது பிரித்தறிந்த வராயினும் அவற்றையும் கூறும் பொறுப்புணர்ச்சி உடையவர். துஸிடைடிஸ் தம் காலப் போர் முதலியவற்றைக் காரண காரியத் தொடர்புடன் கூறிய முதல் அறிஞர். ஸெனோ ஃபான் தற்கால அரசியலாளர் சர்ச்சில் போன்று தாமே படைஞராயிருந்து தாம் ஈடுபட்ட போர்களைப்பற்றி எழுதியவர். பேருரைகளில் மற்றை நாளில் மட்டும் அன்றி இன்றும் சிறப்புடையவராய் விளங்குபவர் டெமாஸ்தெனிஸ். உலகை வென்ற அலெக்ஸாண்டரை நாவால் கண்டித்து வெல்ல முயன்ற நாவலர் இவர். பேரறிஞருள் உலகுக்குத் கிரேக்க நாடு தந்த முப்பெரு மாணிக்கங்கள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்பவர் கள். இவர்களுள் காலத்தால் முந்தியவர் சாக்ரடீஸ், சாக்ரடிஸின் மாணவர் பிளேட்டோ. பிளேட்டோவின் மாணவர் அரிஸ்டாட்டில். சாக்ரடீஸ் பேரறிஞர். ஆனால், தாமே ஒன்றும் எழுதவில்லை. இறுதியில் வந்த அரிஸ்டாட்டில் தற்கால முறையில் தெள்ளத் தெளிந்த உரைநடையில் ஆராய்ச்சித் துறையும் பகுத்தறிவுப் பாதையும் வகுத்தவர். இவரே அறிவியலின் தந்தை எனப்படுபவர். அலெக்ஸாண்டரின் ஆசிரியராகும் நற்பேறு பெற்றவர். இடை யிட்ட பிளேட்டோ இலக்கிய உலகிலும் அறிஞர் உலகிலும் ஒப்பப் பெரும்புகழ் பெற்றவர். அறிவுநூல் துறையில் முதலிடம் பெற்ற குடியரசு12 என்ற அவர் நூல் இலக்கியத்தில் அதனினும் உயர்ந்த இட முடையது. உரைநடையைக் கவிதையளவு உயர் கலையாக்கியவர் அவர். கிரேக்க நாகரிகத்தின் பிற்காலம் ரோமர் பேரரசின் பரப்பால் அரசியல் நிலையில் அழிந்தது. ஆனால், உலகை வென்ற உரோமர் கிரேக்க நாகரிகத்தின் அடிபணிந்து அதன் புகழைப் பெருக்கினர். ஆயினும் அப் புகழ்தானும் அதன் உள்ளார்ந்த உயிர்ப்பண்பைக் காக்க முடியவில்லை. கிரேக்க நாகரிக அழிவினின்றே பின்னாளைய ஐரோப்பிய நாகரிகங் களனைத்தும் பிறந்தன. கிரேக்கர் இன்று தம் பழம் பெருமைக்குப் பெயரளவில்கூட உரியரல்லாத நிலையிலிருக்கின்றனர். கிரேக்க நாகரிகம், மொழி, இலக்கியம் ஆகியவற்றின் முன்னைய நிலை, இற்றைநிலை ஆகியவை பலவகையில் தமிழ கத்தை நினைப்பூட்டு பவையாகும். கிரேக்க நாகரிகம் இறந்துபட்டது. ஆனால், உலகோர் அதன் புகழுடம்பைப் போற்றினர். தமிழ் நாகரிகம் நலிந்தும் இறந்துபடவில்லை. ஆனால், உலகோர் அதன் புகழைக் கவனியாம லிருக்கின்றனர். கிரேக்க இலக்கிய வாழ்வு காலன்வாய்ப்படினும் இலக்கியம் காலன்வாய்ப்பட வில்லை. தமிழிலக்கியத்தின் பெரும்பகுதி காலன்வாய்ப்பட்டும் இலக்கிய வாழ்வு காலங் கடந்து வாழ்கிறது. கிரேக்கர் புகழையும் வடமொழிப் புகழையும்கூட உலகொப் பினும், தமிழ்ப்புகழ் தாயற்ற நிலையிலிருக்கிறது. ஆயினும் கிரேக்கர் புகழும் வட மொழிப் புகழும் அந் நாகரிகங்களைப் பிழைப்பிக்க உதவா. தமிழ் வாழ்வோ தமிழர் முயன்றால் பழம்புகழ் புதுப்பிக்கப் பெற்றுப் புதுப்புகழாகலாம். தமிழர் ஆராய்ச்சிக்கு எட்டாத் தமிழின் பல சிறப்புக்களை அறியக் கிரேக்க இலக்கியம் உதவக்கூடியது. தமிழை வளப்படுத்தும் முறையில் தமிழறிஞர் சிலரல்லர். பலர் அறிந்தாராய்ந்து பயில வேண்டிய ஒருமொழி கிரேக்க மொழி என்பது உறுதி. அடிக்குறிப்புகள் 1. Novel. 2. Lyric. 3. Philosophy. 4. Oratory. 5. Pastoral. 6. Lyric Poets. 7. Harp. 8. Odes. 9. Chorus. 10. Tragedy. 11. Comedy. 12. Republic. . 3. ஜெர்மன் இலக்கியம் தற்கால ஐரோப்பிய மொழிகளுள் ஆங்கிலம், பிரஞ்சு ஆகியவற்றுடன் ஒப்பாக முதன் மொழியாய்க் கருதப்படுவது ஜெர்மன் மொழி. ஆங்கிலம் பிரஞ்சு ஆகிய மொழிகளின் தலைமை ஓரளவேனும் அந் நாடுகளின் பேரரசுப் பரப்பு, குடியேற்றப் பரப்பு ஆகியவற்றின் பயன் ஆகக்கூடும். ஜெர்மன் மொழியின் தலைமையோ பெரிதும் அறிவியல், கலை, இலக்கியத் துறை விரிவையே பொறுத்ததாகும். இன்று வாணிக முறையில் உயர்தரக்கல்வி வேண்டுவோர் ஆங்கிலத்தையும் கலைத்துறை பயிலுவோர் பிரஞ் சையும் அறிவாராய்ச்சித் துறைகளில் பயில்வோர் ஜெர்மனையும் கட்டாயமாகப் படித்தாக வேண்டும். உலகின் அறிவு நூல்களின் மொழிபெயர்ப்புக் களஞ்சியமான ஆங்கிலத்தில் கூடப் புற்றீசல் போல் நாள்தோறும் கிளம்பும் ஜெர்மன் அறிவியல் நூல்களை மொழி பெயர்த்துத் தள்ள முடியவில்லை என்றால் அந் நாட்டின் அறிவியல் முன்னேற்றத்தை அளவிடக்கூடுமோ? இன்றைய விஞ்ஞானத் துறைகளில் பலவற்றை முறையாகத் தோற்றுவித்த பெருமை கிரேக்கருக்குரியது. அடுத்தபடி அழகுக் கலை, மொழியியல் முதலிய புதுத் துறைகளை வகுத்த பெருமையும் பழந்துறைகளாகிய இசை, மெய் விளக்கம் முதலியவற்றில் புத நெறியும் புரட்சிகரமான முன்னேற்றமும் உண்டு பண்ணிய பெருமையும் ஜெர்மனிக்கே உரியது. இலக்கியத்திலும் கழிந்த மூன்று நூற்றாண்டுகளுக்கிடையே ஷேக்ஸ்பியருக்கு ஒப்பான ஆழமும் உயர்வும் அகலமும் ஒருங்கே கொண்ட இலக்கியப் படைப்பாளர் ஜெர்மன் கவிஞரான கெதே ஒருவர்தான். மொழியில்பு ஜெர்மன்மொழி ஆரியமொழி இனத்தைச் சேர்ந்தது. ஜெர்மன், டச்சு, டேனிஷ், நார்விஜியன், ஆங்கிலம் ஆகிய தற்கால மொழிகளும் இறந்துபட்ட பண்டை மொழிகளாகிய ஜஸ்லான் டிக்கும், காத்திக்கும் சேர்ந்து ஆரிய இனத்தின் பெருங்கிளை யாகிய ஜெர்மானிய உட்குழுவாகும். இதனோடொத்த மற்றப் பெருங்கிளைகள் கெல்த்தியம், இலத்தீனம், கிரேக்கம், பாரசீகம், இந்திய ஆரியம் என்பவை. ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மனின் தனிச்சிறப்பு அதன் தூய தாய் மொழிப் பண்பாடேயாகும். ஜெர்மன் மொழியில் எந்தப் புதுக்கருத்தையும் பெரும்பாலும் பிறமொழிக் கலப்பில்லாமலே தூய ஜெர்மன் சொற்களாலோ, சொற்கள் அருமையாய்விட்டால் சொற்றொடர்களாலேயோ தான் குறிப்பர். கீழ்நாட்டில் இதே இயல்பைச் சீனமொழியில் காணலாம். ஆரியமொரிகளில் பேரளவில்’ தூய ஆரியமொழி என்று கொள்ளத்தக்க ஜெர்மன் மொழியின் இவ் வியல்பு தமிழில் தனித் தமிழ்ப் பண்பாடு பேணு பவர் கொள்கைக்கு நல்ல வலியுறுத்தல் ஆகும். ஜெர்மன்மொழி வல்லோசை மிக்கது. மேலண்ணந்தழுவும் எழுத்துக்கள் (ஷ்ஃ, க் என்பவை போன்றவை) அதில் மிகுதி வழககானவை. இவை மொழிக்கு உறுதியும் வன்மையும் தருவதாகக் கருதப்படுகின்றன. இலக்கியப் பரப்பு ஜெர்மானியக் குழுவில் கிழக்கு ஜெர்மானிய மொழியாகிய பண்டைய காதிக் கி.பி. முதல் நூற்றாண்டிலேயே இலக்கிய வளம் பெற்றது மேற்கு ஜெர்மானிய மொழியாகிய ஜஸ்லாண்டிக்கில் 9 ஆம் நூற்றாண்டிலேயே வீர காவியமாகிய ‘ஸாகா’1க்கள் மலிந்து இலக்கிய வளம் ஏற்பட்டது பழைய ஆங்கிலம் அல்லது ஆங்கிலோ சாக்ஸனியம்கூட 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே ‘பெயோவுல்ஃப்’ என்ற காவியமும் ‘கேட்மன்’ போன்ற கவிகளும் 10 ஆம் நூற்றாண் டுக்குள் நல்ல உரைநடையும் பெற்றிருந்தன. ஆனால், ஜெர்மன் மொழி இலக்கியத் தோற்றத்தில் மிகவும் பிற்பட்டேயிருந்தது. இலக்கியத்தில் மட்டுமன்றி, கலை, அறிவாராய்ச்சி, அறிவியல் துறை ஆகிய எல்லாத் துறைகளிலும் முதல் தோற்றம் இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி முதலியவற்றிலேயே ஏற்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஜெர்மனி இலக்கியத்தில் இந் நாடுகளைப் பின்பற்றியே வளர்ந்து வந்தது. ஆனால், 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 18, 19 ஆம் நூற்றாண்டு களில் ஜெர்மனி மற்ற நாடுகளுடனொத்து விரைவாக வளர்ந்ததுடனில்லாது, அவற்றின் வளர்ச்சிகளனைத்தையும் தன்னகத்தே கொண்டு அவற்றுக்கு வழிகாட்டியாகவும் அமைந்தது. இலக்கிய வாழ்வில் ஜெர்மனிக்கும் மற்ற நாடுகளுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை நோக்க ஜெர்மனி பெயரி நாடு அன்றாயினும், ஐரோப்பிய நாடுகள் பலவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிலப்பரப்பு, மக்கள் தொகை, பண்பாட்டு வகை வேறுபாடுகள் ஆகிய வகைகளில் எவ்வளவோ விரிவுடையது. இவ்வளவு வேறுபாடுகளிடையே யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மாறாக ஜெர்மனியில் மொழி ஒற்றுமை இருப்பது காரணமாக அதன் இலக்கியம் மிகவும் அகல முடை யதாக இருக்கின்றது. ஆங்கில இலக்கியம், பிரஞ்சு இலக்கியம் முதலிய இலக்கி யங்கள் அவ்வப்போதுதான் பிறநாட்டு இலக்கியங்களுடன் தொடர்பு கொண்டன வாயிருக்கும். அவை பெரும்பாலும் நாட்டு வாழ்வின் எல்லைக்குள் நின்று நாட்டிலக்கியம் (தேசிய இலக்கியம்) ஆகவே இருக்கும். ஆனால், ஜெர்மன் இலக்கியம் என்றும் ஐரோப்பாவின் வாழ்வு, அதன் இயக்கங்கள் ஆகியவை அனைத்துடனும் தொடர்பு கொண்டுள்ளது. எனவே, ஆங்கிலம்போல ஜெர்மன் மொழி உலக மொழியாகா விட்டாலும், ஜெர்மன் இலக்கியம் ஐரோப்பிய இலக்கியமாகவும் உலக இலக்கியமாகவும் இயங்குகிறது. ஜெர்மன் மொழி ஜெர்மனிக்கு மட்டுமன்றி ஆஸ்திரியாவுக்கும் பால்ட்டிக் நாட்டு மக்கள் பலருக்கும் பொதுத் தாய்மொழியாயிருப்பது இந் நிலைக்குப் பேருதவியாயிருக்கிறது. ஆங்கில நாட்டில் பைரன் போன்ற ‘தனி மனிதப் பண்பு’ மிக்க கவிஞர்கட்கு இடமில்லை. நாட்டு வாழ்வு நாட்டின் இலக்கி யத்திற்கு ஓரளவு கோட்டையாய் அமைகிறது. ஜெர்மனியின் அரசியல் வாழ்வு அடிக்கடி மாறுபட்டுச் சீர்குலைவதன் பயனாய், அதன் இலக்கியம் அவ்வம் மனிதர் பண்பிற்கும் அவ்வப் பகுதிப் பண்பிற்கும் ஏற்பப் பலதிறத் தனிப்பண்புகள் உடையதாயிருக் கிறது. நாட்டு வாழ்வுக்கும் இலக்கிய வாழ்வுக்கும் நடுநாயக இடங்களாகச் சில நகரங்களை மற்ற நாடுகளில் குறிப்பிடலாம். ஜெர்மனியில் மாகாணந்தோறும் பல நடுநாயக இடங்கள் உண்டு. நம் நாட்டுப் புலவர்கள் தம் நாட்டுக்கு வெளியில் கண் ணோக்குச் செலுத்துவதில்லை என்று கூறுவதுண்டு. உண்மையில் எல்லா நாட்டிலுமே இஃது ஒரளவு பொதுக்குறை என்று கூறி விடலாம். தமிழ்ப்புலவர் வடமொழிப் போக்கையும் ஆங்கிலப் போக்கையும் கவனிப்பதில்லை என்று கூறுபவர் ஆங்கிலப் புலவரும் வடமொழிப் புலவரும் தமக்கு அயலான மொழிப்போக்கைக் கவனிப்பதில்லை என்பதை எண்ணிப் பார்க்கக் காணோம். ஜெர்மன் மொழிப் புலவர்கள் மட்டிலும் இதுவகையில் விலக்கு என்னல் வேண்டும். தம் நாட்டுக்கு வெளியில் ஐரோப்பாவில் மட்டுமன்றி எவரும் கருதாத கீழ்நாடுகளிலும் அவர்கள் கண் ணோக்குச் சென்றுள்ளது. ஷேக்ஸ்பியர் ஆராய்ச்சியில் அவர் தாயக நாட்டுக்கே வழிகாட்டிய பெருமை bஸ்ரீர்மனியினுடையது. இந்தியாவின் காளிதாசர், பாரசீகத்தின் ஹபீஸ் போன்ற கவிஞர்களை ஜெர்மன அறிஞர்களும் கவிஞர்களும் அறிந்து பாராட்டிய துடன் மொழி பெயர்க்கவும் பின்பற்றவும் செய்துள்ளனர். கிரேக்க வரலாறெழுதும் ஜெர்மன் அறிஞர் ஒருவர் கிரேக்க நகராண்மை வளர்ச்சியை விளக்கும்போது தொலைதூர மொழியாகிய தமிழில் ஒளவையார் யாத்த ஒரு வெண்பாவை (வையக மெல்லாம் கழனியா தானேற்றான் கச்சி யகம்) மேற்கோள் காட்டுவது எவ்வளவு அகன்ற நோக்கைக் காட்டுகிறது என்று கூறத் தேவையில்லை. பழங்கால இடைக்காலங்கள் மொழியறிஞர் ஜெர்மன் மொழியின் வளர்ச்சியில் மூன்று கூறு காண்கின்றனர். அவை பழைய ஜெர்மன், இடைக்கால ஜெர்மன், புது ஜெர்மன் என்பன. ஜெர்மன் மொழி தற்கால வடிவம் பெற்றது புது ஜெர்மனியிலேயேயாயினும் வளர்ச்சி முறையில் முதலி ரண்டுமே அதன் இலக்கிய இளமைக் காலத்தை உணர உதவுவன. பழைய ஜெர்மன் 8 ஆம் நூற்றாண்டு முதல் கிட்டத்தட்ட 1050 வரை நிலவிய மொழி நிலையையும், இடைக்கால ஜெர்மன் 1350 வரை இருந்த நிலையையும் குறிக்கும் இக் காலங்களில் எழுதா வழக்காகப் பாடப்பட்டு வந்த சில நாடோடிப் பாடல்களும்2 நாட்டுப்புறப் பாடல்களும்3 பைபிள் கதைகள், கிறித்தவ சமயத் தொண்டர் வரலாறுகள் ஆகியவைகளுமே இலக்கியமா யமைந்தன. பிரஞ்சு, ஆங்கில இலக்கிய வழக்கைப் பின்பற்றி ஆர்தர் கதைத் தொகுதியைச் சேர்ந்த கதைப் பாடல்களும், பிரஞ்சு வழக்கைத் தழுவி நகைச்சுவையும் வசையும் வாய்ந்த ‘ரேனார்ட் ஃபுக்ஸ்’ போன்ற செய்யுள் நூல்களும் இவற்றைத் தொடர்ந்து எழுந்தன. 11 ஆம் நூற்றாண்டில் ஐஸ்லாந்து ஸாகாக்களையும் ஜெர்மனியிலேயே வழங்கிய அவற்றை ஒட்டிய கதைகளையும் இணைத்து நீப்யூங் கென்லீட்4 என்ற வீரகாவியம் ஒன்று எழுதப்பட்டது. இந்தியாவில் பாரதம் போன்று இது ஜெர்மனியரின் நாட்டுப் பழங்காவியமா யிலங்குகின்றது. இடைக்காலத்திலேயே வேரூன்றிய இன்னோர் இலக்கி யத்துறை கவிஞன் உணர்ச்சிகளை வெளிப்படக் கூறும் உணர்ச்சிப் பாடல்கள்5 ஆகும். இத் துறைப் பாடலுக்கு ஜெர்மானியர் ‘சிறுபாக்கள்’6 என்ற அழகிய பெயர் தந்துள்ளனர். இத் துறையில் சிறந்த கவிஞர் வால்ட்டர்7 இயற்றிய சிறுபாக்கள், காதலின் இன்பதுன்ப நிலைகள், நாட்டுப்பற்று, சமயம், அரசியல் ஆகிய எல்லாவற்றையும் பொருளாகக் கொண்டவை. தற்கால இலக்கியத் தோற்றம் ஜெர்மனியின் தற்கால இலக்கிய வளர்ச்சியை ஆறு கூறுகளாகப் பிரிக்கலாம். அவை முதிராப் பருவ மாறுபாட்டுக் காலம்8 1350-1600, மறுமலர்ச்சிக் காலம்9 1600-1740, புயல்-எதிர்ப்புயல் காலம்10 1740-1832, செவ்வியல் காலம்11, முனைப்பியல் காலம்12, அண்மைக் காலம் என்பவை. புது ஜெர்மன் பிறப்புக் காலமாகிய மாறுபாட்டுக் காலம் இடைக்கால ஜெர்மன் இலக்கி யத்தின் சிறப்புக்கள்கூட அழிவுற்ற நிலையிலேயே தொடங்கிற்று. சிறுபாக்கள் உணர்ச்சியற்று வெறும் விரிவுரைகள்13 ஆயின. ஆயினும் நாட்டுப்புறப் பாடல் துறை இச் சமயம் செழித்து வளர்ந்தது. உரைநடையில் நகைச்சுவை மிக்க சிறு கதைத் துணுக்குகள்14 இக் காலத்தின் சிறப்பியல்பு ஆகும். 16ஆம் நூற்றாண்டில் பழைய கிறித்தவ சமயமுறையாகிய கத்தோலிக்க நெறியையும் அதன் தலைவராகிய திருத்தந்தை15 யையும் எதிர்த்து மறுப்பு நெறி16 எழுந்தது. இம் மறுப்பியக்கம்17 கண்ட முதல்வர் மார்ட்டின் லூதர். இவர் ஜெர்மன் மொழியில் அழகிய பாசுரங்கள் எழுதியதுடன் பைபிளையும் மொழி பெயர்த்தார். ஆங்கிலப் பைபிளைப் போல இதுவும் உயர் இலக்கியப் பண்பாடுடையதாயிருந்தமையால் நாட்டு வாழ்வில் வேரூன்றிய இலக்கியமாகத் திகழ்ந்தது. லூதருக்கு முன்னமேயே கடவுளை நேரிடையாக உள்ளுணர்வாலறிய முற்படும் யோகநெறி18 எக்கார்ட், ஸுஸோன் டாங்கர் ஆகியவர் நூல்களில் இடம் பெற்றன. இக் காலத்தில் சமயப் பூசல்கள் காரணமாக எழுந்த சமயவாத நூல்களில் நிக்லஸ் மானுவேல் என்ற கத்தோலிக்கரின் வசைப்பாவும் அடுத்த தலைமுறையில் அவருக்கு ஈடு செய்த மறுப்பு நெறியினரான ஜோன்ஸ் பிஷர்ட்டும் சிறந்தவராவர். மறுமலர்ச்சியிக்கம் இத்தாலியில் 15ஆம் நூற்றாண்டில் மலர்ந்து பிரான்சிலும் இங்கிலாந்திலும் 16 ஆம் நூற்றாண்டில் வளர்ந்தோங்கிற்று. ஜெர்மனியை அது 17 ஆம் நூற்றாண்டு வரையில் தாக்கவில்லை. அப்போது “30 ஆண்டுப் போரால்” அது முழுப்பயனெய்தாது நின்றது. அவ் வியக்கத்தின் நடுநாயக இடமாயிலங்கியது ஹுடெல் பெர்க் நகர். ஸிங்க்ரெஃப்19என்பவர் தலைமையில் தோன்றிய இவ் எழுச்சியின் பயனாக ஸ்பானியரது `டான் குவிக்ஸோட்’ புனைக்கதையைப் பின்பற்றியும், ஆங்கில `ரானின்ஸன் குரூஸோ’ வைப் பின்பற்றியும் புனைகதைகள் எழுதப் பட்டன. புயல்: எதிர்ப்புயல் ஜெர்மன் இலக்கியம் உலக இலக்கிய வரலாற்றில் இடம் பெறத் தகுதி பெறத் தொடங்கியது புயல்-எதிர்ப்புயல் காலத்திலே தான். புயல்-எதிர்ப்புயல் என்பது ‘பழமை பெரிதா, புதுமை பெரிதா’ என்பதுபற்றி அந்நாளில் பல நாடுகளிலும் எழுந்த போராட்டத்திற்கு ஜெர்மானியரிட்ட புனைப்பெயர் ஆகும். ஜெர்மனியில் பிறநாடுகளைப் பின்பற்றும் போலி வளர்ச்சியை முறித்துப் புதுவது புகுவதை வற்புறுத்துவது இவ் வியக்கமே. இதன் முதற்பெருங் கவிஞர் கிளாப்ஸ்டாக்19 என்பவர். இவர் 1715 முதல் 1769 வரை வாழ்ந்தவர். இவர் எழுதிய நூல்களுள் தேவ தூதன்20 என்ற பெருங்காப்பியமும் கலிப்பா போன்ற நடையுடைய ஆட்டப் பாக்களும்21 தலைமையானவை. இவர் எழுதிய நாடகங்கள் அவ்வளவு சிறப்பு உடையவை அல்லவாயினும், பண்டைக்காலப் பண்பாட்டில் மக்கள் மனத்தைச் செலுத்த உதவின. இம் மனப் பான்மை பழம்பாவியக்கம்22 என்ற ஓரியக்கத்தைத் தோற்றுவித்தது. புயல்-எதிர்ப்புயலாளரின் நெறிமுறைகளை வகுத்துரைத்தவர் ஜெர்மன் கருத்துரையாளர்23ஆன எஃப் ரேய்ம் லெஸ்ஸிங் (1729-1821) ஆவர். ஜெர்மன் இலக்கியத்துக்கு உலகு மதிப்பு இவர் காரணமாகவே முதலில் ஏற்பட்டது. இவர் காலத்தில் பாக்கள், நாடகங்கள் ஆகியவற்றின் அமைதிகளும் இலக்கண ஒழுங்குகளும் சிறப்புடையவையா, உணர்ச்சி, மெய்ப்பாடு, உளப்பாடு (பாவம், ரசம்) ஆகியவைகள் சிறப்புடையவையா என்ற கடா (பிரச்சினை) எழுந்தது. முந்திய வற்றை உயர்வாகக் கொண்டவர் செவ்வியலாளர்24; பிந்தியவற்றை உயர்வாகக் கொண்டவர் முனைப்பியலாளர்25. லெஸ்ஸிங் செவ்வியலையே ஆதரித்தாராயினும் அது கிரேக்கரின் உள்ளுணர்வுமிக்க செவ்வியல், வெறும் இலக்கண் அமைதியிலும் பொது அறிவிலும்26 அமைந்த போலிச் செவ்வியலன்று. அமைதி தவறாத பிரஞ்சுப் போலிச் செவ்வியல் நாடகங்களைவிட, அமைதி தவறினும் உள்ளுணர்வு நிறைவுடைய ஷேக்ஸ்பியர் நாடகங்கள் உயர்வுடையவை என அவர் காட்டினார். ஷேக்ஸ்பியர் பாமுறையைப் பின்பற்றி ஐஞ்சீரடியாலாம்27 செந்தொடைப் பாக்களில்28 இவர் நாடகங்கள் எழுதினார். யூத மெய்விளக்க அறிஞரான29 மோஸஸ் மென்டேல்ஸோனும் ‘லயக்கூன்’ என்ற பாட நூலின் ஆசிரியரான விங்கிள்மனும்இவர் இலக்கிய நண்பர்கள். பாட்டோ ‘பண்குழைவுபட்ட சிலையோ’ எனத் தயங்குமாறு ‘குழை பாவை’க் கலையையும்30 செய்யுளையும் மயங்க வைத்த சிறப்புடையதென ‘லயக்கூன்’ பாராட்டப்படுகிறது. ஆங்கிலப் புனைகதையாளரான ரிச்சர்ட்ஸனைப் பின்பற்றி ஸி.எம். நீடார்டு என்பவர் ‘அகதான்31 என்ற ஜெர்மனியின் சிறந்த முதல் புனைகதையை இயற்றினார். ஜெர்மன் கவியரசர் கெதே (1789-1832) கவிஞர்களில் சிலர் காலத்தின் செல்வராகவும் வேறு சிலர் முக்காலத்துக்கும் பொதுவானவராகவும் இருப்பர். தமிழில் கம்பர் முந்திய வகையினர். வள்ளுவர் பிந்திய வகையினர். இவ்விரு வகையையும் ஒன்றுபடுத்தியவர் கெதே. அவர் இளமைக்காலப் பாடல்கள் இளங்கோ, கீட்ஸ் (ஆங்கிலக் கவிஞர்) ஆகியவர்கள் பாடலை ஒத்த உணர்ச்சி ஆழமுடையவை. ஆனால் ஷேக்ஸ்பியர், மில்ட்டன் ஆகிய இரு ஆங்கிலக் ஆழமுடையவை. ஆனால் ஷேக்ஸ்பியர், மில்ட்டன் ஆகிய இரு ஆங்கிலக் கவிஞரைப்போல் அவர் தம் வாழ்க்கைப் போக்கில் கவிதையிலும் வளர்ச்சி யடைந்தனர். அதுமட்டுமன்று. அவ்வக் காலப்போக்கையும் பளிங்குபோல் தம்மகத்தே காட்டி முக்காலக் கவிஞர் மட்டுமாயிராமல் அவ்வப் பகுதியின் தலைசிறந்த கவிஞராகவும் இருந்தார். இலக்கியத்தில் அவர் கைபடாத துறை இல்லை உரைநடையில் புனை கதைகள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், தன்வரலாறு, செய்யுளில் சிறுபா, காவியம் நாடகம் ஆகிய எல்லாத் துறைகளிலும் அவர் பயின்று அவ்வத் துறையில் ஜெர்மன் இலக்கியத்தின் உச்சியையும் உலக இலக்கிய உயர்வையும் சென்றெட்டினார். அவர் இலக்கிய வாழ்வின் தொடக்கம் புயல்-எதிர்ப்புயல் காலத்தது. அதன் முழுமுதல் கவிஞராய்ப் புகழ்பெற்றபின் 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் எழுந்தத செவ்வியல் இயக்கத்தில்32 ஈடுபட்டு அதன் ஒப்பற்ற கவிஞரானார். பின் புதியதாய் எழுந்த ஜெர்மனியின் தலைசிறந்த இயக்கமான முனைப்பியலியக்கத் தோடொட்டி33 அதிலும் தலைமை நிலை எய்தினார்.புயல்-எதிர்ப்புயல் காலத்தின் சிறந்த இலக்கியம் ‘எவர்தர்ஸ் லெய்ட்ன்’ என்ற புனைகதையும் ‘கிளாவிகோ’ ‘ஸ்டெல்லா’ முதலி நாடகங்களும் ஆகும். கிளாவிகோ ஒன்றே கிரேக்கத் துன்பியல் நாடகங்களையும் ஷேக்ஸ்பியர் நடுக்காலத் துன்பியல் நாடகங் களையும் போலத் துன்பியல் முடிபுடையது. இதன் பிற்பாடு எழுதப்பட்ட நாடகங்களில் துன்பியல் முடிபுகளை, ஷேக்ஸ்பியர் பிற்கால நாடகங்களை ஒப்ப, அவர் வேண்டுமென்றே மாற்றி இன்பியல் முடிபாக்கினார். கெதே எழுதிய “சிறுபாக்கள்” கவிஞன் உணர்ச்சியை நேரிடையாகக் காட்டாமல் இயற்கையோடு ஒட்டிக்காட்டும் இயல்புடையவை. `டீ கெஷ் விஸ்டர்’ என்ற அழகிய ஓரங்கநாடக மொன்றும் நாட்டுப் பாடல்கள் பலவும் இக் காலத்தில் கெதேயால் இயற்றப்பட்டன. இத்தாலி நாட்டின் பண்பாட்டில் ஈடுபடத் தொடங்கிய பின் எக்மாண்ட், இபிஜீனியா, டாஸோ ஆகிய மூன்று நாடகங்களும் கெதேயால் முடிக்கப்பட்டன; ஷேக்ஸ்பியரைப் போல் சில நாடகங்களுக்குச் செய்யுளைவிட உரைநடையே சிறந்ததென இவர் எண்ணியிருக்க வேண்டும். இபிஜீனியாவை மாறிமாறிச் செய்யுளிலும் உரைநடையிலும் எழுதி இறுதியில் உரைநடையிலேயே முடித்தார். டாஸோ கதைப்பகுதி குறைவாகவும் உள்ளுணர்வாராய்ச்சி மிகுதியாகவும் உள்ளது. ஐரோப்பாவின் பிற்கால உணர்வாராய்ச்சி34 நாடகங்களுக்கு இது வழிகாட்டியாயிருந்தது. ‘வில்லெம் மைஸ்டர்’ என்ற புனைகதை கெதேயின் ஒப்புயர் வற்ற புனைகதையாகும். பொதுப்படக் கெதேயின் இலக்கியம் உலகுக்கே பொது இலக்கியமாயினும், இவ்வொன்று ஜெர்மனிக்குத் தனி உரிமை தரும் பண்பாடுடையதாகக் கருதப்படுகிறது. செவ்வியலாளரை எதிர்த்த முனைப்பியலாளர் இதனை ஜெர்மனியின் தலைசிறந்த நூல் எனப் போற்றினர். இதன் பண்டைக்காலப் பண்பாட்டோவியம் ஆங்கிலப் புனைகதை அரசர் ஸ்காட் முதலி யோருக்கு வழிகாட்டிற்று. இதனிடையே ஷேக்ஸ்பியர் ஹாம்லெட் நாடகம் பற்றிய திறம்பட்ட கருத்துரை ஒன்றும் கெதேயால் தரப்படுகிறது. கெதேயின் ஒப்புயர்வற்ற நாடகம் ‘ஃபாஸ்ட்’ என்பது. இது உண்மையில் அவர் வாழ்நாள் தொடக்கத்துடன் தொடங்கி இறுதியிலேயே முடிக்கப்பட்ட அவர் வாழ்நாள் தொகுப்பு நூலாகும். இதனை உண்மையில் அவர் மூன்று வேறு வேறு வகையில் எழுதியுள்ளார். முதல்வகை35 உணர்ச்சிக் காலத்தில் எழுதப்பட்டது. இதனையே கவிதை வகையில் தலைசிறந்ததெனக் கருத்துரை யாளர் கருதுகின்றனர். இதன் முதற் பகுதியும் இரண்டாம் பகுதியும் பல அறிவாராய்ச்சிகளுடனும் கட்டுரைகளுடனும் சேர்த்து எழுதப்பட்டன. ‘ஹெர்மனும் டாரதியும்’ ஷில்லருடன் சேர்ந்து கெதே முற்றிலும் ‘செவ்வியல்’ இலக்கண அமைதியுற எழுதிய நாடகம் ஆகும். இவை தவிர இறுதி நாட்களில் கவிதைச் சுவை சொட்டும் உரைநடையில் தம் இளங்கால வாழ்வைப்பற்றித் தாமே டிஃடுங் உண்ட் வார்ஹைட்36 என்ற ‘தன்வரலாற்று நூல்’ வரைந்தார். பாரசீகக் கவிஞர் ஹபீஸைத் தழுவி மரியான் வான் வில்லினர் என்ற காதற் கதையும் எழுதினர். கெதே எல்லாக் கவிதைத் துறையிலும் இலக்கியத் துறையிலும் வல்லவரா யிருந்ததுடன் பிறர் கொள்கையையும் கால மாறுதலையும் எளிதில் ஏற்று அவற்றைத் தமதாக்கும் ஆற்றலுடையவர். பிறநாட்டுக் கவிஞர்களைப் பாராட்டி அவர்களை ஜெர்மனிக்கு அறிமுகப்படுத்தியவர். அவர் கவிஞராயிருந்துகொண்டே ஒரு சிற்றரசரிடம் அமைச்ச ராயமர்ந்து நற்பெயருடன் பணியாற்றியதும், அந் நாளைய மெய்விளக்க அறிவு, அறிவியல் ஆகியவற்றில் ஈடுபட்டு அவற்றிலும் புது நூல் எழுத முனைந்தும் அவர் உள்ள விரிவுக்கு ஒரு புதுவகைச் சான்று ஆகும். கெதேயின் நண்பரும் அவருக்கடுத்தபடி ஜெர்மனியின் தலைசிறந்த கவிஞரும் ஷில்லர்37 ஆவர். இவர் வாழ்வில் வறுமை யுடனும் இலக்கியக் கருத்துரையாளர் எதிர்ப்புடனுட்ம போரா டியவர். கெதே ‘செவ்வியல் நெறி’ தழுவப பெரிதும் காரணமா யிருந்தவரும் அவரே. அவர் செவ்வியல் நாடகம் ‘வாலன்ஸ்டைன்’38 ஜெர்மனிக்கும் கெதேக்கும் அவர் திறமையைக் காட்டிற்று. நட்பு முறையிலேயே கெதேயுடன் போட்டியிட்டு அவர் இயற்றிய நாடகம் மெஸ்ஸினால்39 என்பது. கெதேயைப் போலவே முனைப் பியலாளர்களுக்குச் சற்று விட்டுக்கொடுத்த நிலையில் ‘வில்லியம் டெல்’ என்ற நூல் கெதே உதவியுடன் எழுதப்பட்டது. ஜெர்மன் இலக்கியத்தில் கெதேயும் ஷில்வரும் ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியரும் மில்ட்டனும் போன்ற முதல் இடம் உடையவர். முனைப்பியல் இயக்கம் முனைப்பியல் இயக்கம் தொடங்குமுன் பேரிஃக்டர், ஜீன் பால், ஹோல்டரின் முதலிய கவிஞர்கள் செவ்வியல் நெறி அமைதியை மீறி வந்திருந்தனர். செவ்வியலின் திணை, காலக் கட்டுப்பாட்டை எதிர்த்து முனைப்பியல் இயக்கக் கோட்பாட்டை ஷ்லெகெல் துணைவர்40 வரையறுத்தனர். ‘டிக்’, ‘நோவாலிஸ்’ என்ற புனைபெயர்கள் பூண்ட ஹார்டன்பர்க் துணைவர் இருவரும் இதன் தலைவர்கள். இவ் வியக்கம் ஹீடல்பர்க் நகரைத் தலைமையிட மாகக் கொண்டது. இவ் வியக்கத்தின் உணர்ச்சிப்பாட்டாளர்41லெர்னர்க்ளிஸ்ட், வான் அர்னிம் ஆகியவர்கள். முனைப்பியலாளர் கோட்பாடு 1830-க்கு மேல் தளர்ச்சி யுடைந்தது. ஐரோப்பாவெங்கும் 1830-க்கும் 1848-க்கும் இடையில் நடைபெற்ற புரட்சிகள் ‘இள ஜெர்மனி’ இயக்கத்தைத் தோற்று வித்தன. இதன் தலைசிறந்த கவிஞன் ஹென்ரிச் ஹீன்42. நாடோடிப் பாக்கள், கடல் வாழ்வு குறித்த பாக்கள் எழுதுவதில் இவர் ஈடும் எடுப்பும் அற்றவர். இள ஜெர்மன் இயக்கத்துக்குப் பின் ஜெர்மனி, இயக்க, எதிர் இயக்க அலைகளில் ஈடுபட்டே வந்திருக்கிறது. 19 ஆம் நூற்றா ண்டின் நடுவில் முனைப்பியலாளரின் உணர்ச்சிப் பாட்டு மட்டும் தொடர்ந்து எழுச்சியுடன் பாடப்பட்டது. இவ் வியக்கம் ஸ்வேபிய இய்ககம் எனப்படும். இதன் தலைசிறந்த கவிஞர் ஊலன்ட்43 ஆவர். இதே காலத்தில் 1848 புரட்சியை ஒட்டிப் புரட்சி இயக்கம் ஒன்றும் எழுந்தது. ஜெர்மனியின் மிகச்சிறந்த பெண்பாற் கவிஞரான ஆனெட் வான்ராஸ்ட் இக் காலத்தவர். 19 ஆம் நூற்றாண்டில் ‘மணிக்கதை’44 ஜெர்மனியின் தனிச் சிறப்புக்குரிய இலக்கியமாயிற்று. கெல்லர், ஸ்டார்ம் முதலியவர்கள் கதைகள் தலைசிறந்தவை. ஜெர்மனியின் முதன்மையான மெய்விளக்க அறிஞர் கான்ட், இவர் கெதே காலத்தவர். ஹெஜெல், ஷேபனர் முதலியோர் இவர் பின் வந்தவர். இவர்களைப் பின்பற்றி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இலக்கிய எழுத்தாளர் பலர் வாழ்க்கையில் வெறுப்புக் காட்டத் தொடங்கினர். ஹாக்னர், நீட்ஸ் போன்றவர் மீண்டும் நாட்டில் உணர்ச்சியைத் தட்டி எழுப்பினர். இலக்கியம் வாழ்வின் வாய்மையைக் கடை பிடிக்க வேண்டும் என்ற ‘மெய்ந்நிலை’க் கோட்பாடு 20 ஆம் நூற்றாண்டுக்குள் இலக்கியத்தில் முன்னிடம் பெற்றது. ரஷ்ய, வேனிஷ், இலக்கியப் போக்கு இதனை வற்புறுத்திற்று. 20 ஆம் நூற்றாண்டில் மீண்டும் முனைப்பியல் நோக்கி ‘மெய்ப்பாட்டு’க் கோட்பாடு45 தலைதூக்கிற்று. இது கவிதைப் புலனுக்கு நேர் விருந்தாய்க் காட்சிப் பொருளைக் கட்புலப்படுத்த விழைந்தது. தற்போது ‘மெய்ந்நிலை’ எழுத்தாளர் பக்கமே இலக்கிய வளர்ச்சி இருந்து வருகிறது. உலக இலக்கியத்தின் தலைமை நிலை தற்போது படிப் படியாய் வடக்கு நோக்குகின்றது. ரஷ்யா, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகள் ‘மெய்ந்நிலை’ நாடகம் புனைகதை ஆகியவற்றில் நெடுந்தொலை சென்றுள்ளன. ஆயினும் உலகப் போர்க் குழப் பத்திற்குப்பின் ஜெர்மனி தன் தளரா ஊக்கத்துக்கு மேலும் சான்று தரக்கூடும். அழிவுப்போரினின்று விலகி ஆக்கக் கலைப்போரில் அது உலகில் மீண்டும் முதலிடம் பெறும் என்று எண்ணலாம். அடிக்குறிப்புகள் 1. Sagas. 2. Volker Wanderung. 3. Ballads. 4. Niebiungenleid. 5. Lyrics. 6. Monnesong. 7. Walther. 8. Transition Period 9. Renaissance Period. 10. Storm and drang. 11. Classical Period. 12. Romantic Period 13. Mester Gesang. 14. Sewanke. 15. Pope. 15. Protestantism. 16. Reformation. 17. Mysticesion. 18. Zinegref. 19. F.G. Klopstock. 20. Der Messiah 21. Odes. 22. Bardic Movement. 23. Critic. 24. Classicists. 25. Romanticists. 26. Common-sense. 27. Lambic Pentameter. 28. Blank Verse. 29. Philosopher 30. Seulpture. 31. Agathon. 32. Classical Movement. 33. Romantic Movement 34. Psychological. 35. Ur Faust. 36. Dichtung and Wahrheit. 37. Schiller. 38. Wallenstien. 39. Die Braut van Messinal. 40. Schlege Brothers 41. Lyricists 42. Henrich Heine. 43. Uhland. 44. Short story. 45. Impressionism. 4. சீன இலக்கியம் 1. நாட்டின் தனிச்சிறப்புகள் பெயரளவில் எல்லா நாட்டையும் போலச் சீனத்தையும் ஒரு நாடு என்று கூறினாலும் உண்மையில் அதை ஒரு கண்டம் என்றோ, ஒரு தனி உலகம் என்றோகூடக் கூறலாம். சீனம் மூவாயிரங் கல் நீளமும் மூவாயிரங் கல் அகலமும் உடையது. பரப்பளவில் இந்தியாவைப்போல மும்மடங்கு கொண்டது. மக்கள் தொகையில் இந்தியா உலகில் ஐந்தில் ஒரு பங்கு; சீனம் நான்கில் ஒரு பங்கு பரப்பில் அது ரஷ்யாவுக்கடுத்த பெரிய நாடு; மக்கள் தொகையில் எல்லா நாடுகளிலும் முதன்மை உடையது. பரப்பு, மக்கள் தொகை ஆகியவற்றில் எப்படியோ அப்படியே மொழிப்பரப்பு, பழமை, வாழ்வுக்காலம், இலக்கியப் பரப்பு ஆகிய எல்லா வகையிலும் அது பிற நாடுகளின் அளவைக் கடந்து பெரும் பேரளவுடைய தாயிருக்கின்றது. சீனநாடு உலகில் தொன்மைமிக்க நான்கு பகுதிகளில் ஒன்று அதனை ஒத்த பழமையுடைய மற்றப் பகுதிகள் எகிப்து, ஆசிரியா, திராவிடம் (அதாவது திராவிட இந்தியா) ஆகியவைகளே. சீன வரலாற்றின் தொடக்கக் காலம் கி.மு. 3000 ஆகும். கி.மு. 3000 முதல் இன்றளவும் தொடர்ச்சியாய் 5000 ஆண்டுகளாகச் சீனம் தொடர்ந்த ஆட்சிமுறை, உயர் நாகரிகம், இலக்கிய வளம் ஆகிய வற்றை உடையதாயிருந்து வருகிறது. திராவிட இந்தியா ஒன்று நீங்கலாக இவ்வளவு பழமைக்கால முதல் இன்றளவும் தழைத்து வரும் நாகரிகம் உலகில் வேறெதுவும் கிடையா தென்னலாம். திராவிடமாவது இந்தியப் பரப்பு முழுவதிலு மிருந்து படிப்படியாகத் தேய்வுற்றுத் தென்கோடியில் ஒரு சில கோடி மக்களளவிலேயே உயிர்ப்புடன் நிலவுகின்றது. ஆனால், சீனம் அன்று முதல் இன்ற ளவும் தனிப்பரப்பும் விரிவும் குன்றாது இன்றும் உலகின் முதன் மொழியாய் இயங்குகிறது. உலகமொழியென்று கூறப்படும் ஆங்கிலத்தைப் பேசுவோர் தொகை 20 கோடியே என்பதையும், சீனம் பேசுவோர் தொகை அதன் இரட்டிப்புக்கு மேற்பட்டது (50 கோடி) என்பதையும் மறக்கலாகாது. சீனம் போலவே இந்தியாவும் ஒரு கண்டம் அல்லது ஓர் உலகமாய் இலங்கினும், இந்தியா பல இனம், மொழி, நாகரிகம், சமயம் ஆகியவற்றால் உருக்குலைந்து ஒரு நாடு என்னும் தன்மை இழந்து நிற்கிறது. சீனாவோ 50 கோடியும் ஒரு மொழி பேசுவதாய்க் கிட்டத்தட்ட ஒரே சமயப் பரப்புடையதாயிருந்து வருகிறது. 2. சீனமொழி இயல்பு சீனமொழி பலவகையில் உலகின் மற்ற மொழிகளினின்றும் அடிப்படைப் பண்புகளில் மாறுபட்டது. அதன் சொற்கள் முழு வதும் ஓரசை (அதாவது ஒரு நேரசை)ச் சொற்களே. அஃதோடு இச் சொற்கள் வேற்றுமை, வினைத்திரிபு ஆகிய எவ்வகை மாறுபாடு மில்லாமல் இருக்கின்றன. எனவே, சீன மொழியில் இலக்கணத்துக்கே இடமில்லாமல் போயிருக்கிறது. சொற்கள் திரியாத இந் நிலையை மொழி நூலார் பிரிநிலை என்பர். வடமொழி போன்ற பிற மொழிகளின் நிலை திரிபியல் நிலை ஆகும். எழுத்து வகையிலும் சீனம் மிகப் புதுமை வாய்ந்தது. மற்ற மொழிகளில் ஒவ்வோர் ஒலியையும் குறிக்க ஓர் எழுத்து இருக்கும். எனவே, நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்கள் வரம்புக்குட்பட்ட வையாயிருக்கின்றன. ஆங்கிலத்தில் 26 எழுத்தும், உருதுவில் 36 எழுத்தும், வடமொழியில் 51 எழுத்தும், தமிழில் 31 எழுத்தும் இருக்கின்றன. ஆனால், சினத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் கிட்டத்தட்ட ஓர் எழுத்து வேண்டப்படுகின்றது. ஆகவே, பள்ளிப் புத்தகங்கள் இயற்றுவதற்குக்கூட 9000 எழுத்துக்கள் வேண்டும். மொத்த எழுத்துக்கள் 40,000க்கு மேற்பட்டவை. இவ் எழுத்து முறை சீனத்தில் கி.மு. 3000 முதலே இருந்து வருகின்றது. கி.பி. முதல் நூற்றாண்டில் வடமொழியைப் பின்பற்றி ஒலி குறித்த எழுத்து முறையில் ‘சிறுபொறிப்பு’ என்ற எழுத்துமுறை வகுக்கப்பட்டது. தற்போது ஆங்கிலத்தில் வழங்கும் ரோமன் எழுத்துக்களும் பயன்படுகின்றன. 3. திராவிடமும் சீனமும் பழமை, காலநீட்சி, இன்றைய வாழ்வு ஆகிய வகைகளில் சீனத்துடன் ஒப்புடைய மொழி திராவிடம் ஒன்றே என்று கண்டோம். திராவிட மொழிகளுக்குரிய அடிப்படை ஒலிகள் இன்று தமிழிலுள்ள 31 எழுத்துக்கள் (உயிர் 12, மெய் 18, ஆய்தம் 1) குறிக்கும் ஒலிகளே. இவை கடு முயற்சியின்றி எழும் இயற்கை ஒலிகள் - உலக மொழிகளின் இளமைக்கால ஒலிகள், சீனத்திலும் கிட்டத்தட்ட இவ் வொலிகளே இடம் பெறுகின்றன. இன்று திராவிடச் சொற்களிடையே நிரையசை (இரு நேரசை)ச் சொற்களும் ஈரசை மூவசைச் சொற்களுமிருந்தாலும் அவை பிந்திய வளர்ச்சிகளே என்றும், பழைய உருவில் ஒரு நேரசையாகவே தோன்றுகின்றன என்றும் மொழிநூலார் கூறுவர். எனவே, பண்டைய தூய நிலையில் திராவிடம் சீனத்துடன் மிகவும் ஒப்புமை உடையது. திராவிடத்தில் வேற்றுமை உருபுகள் உண்மையில் தனிச் சொற்களே விகுதிகளும் அவ்வாறே. ஆகவே திராவிடம் பிரிநிலை மொழியன்று, சொல் அடுக்கி வரும் அடுக்கியல் மொழியே யாகும். மொகஞ்சதாரோவில் கண்ட பண்டை மொழியில் இவை பெரிதும் மாறுதலற்ற தனிச்சொற்களாகவே இருக்கின்றன என்று அறியப் படுகிறது. எனவே இவ் வகையிலும் பழந்திராவிடம் சீனத்துக்கு மிகவும் அண்மை ஒப்பு உடையதே. எழுத்து முறையில் ஒலிக் குறியீட்டு முறைக்கு முற்பட்டு உலகில் பட எழுத்துக்கள் நிலவியிருந்தன. எகிப்தின் பண்டைய எழுத்துக்கள் இத்தகைய பட எழுத்துக்களே.1 நாளடைவில் பட எழுத்துக்கள் வரி உருக்களாகத் திரிந்தன. மொகஞ்சதாரோ எழுத்துக்கள் இந்த நிலையிலுள்ள எழுத்துக்களே. தமிழரும் பிற திராவிட மக்களும் பண்டு வழங்கிய வட்டெழுத்தும் பிற இந்தி மொழி எழுத்துக்களும் (இன்றைய வட மொழி, திராவிட மொழி எழுத்துக்களும்) இப் பண்டைய திராவிட எழுத்துக்களிலிருந்து வந்தவையே. எனவே, இன்றைய நிலையில் திராவிட எழுத்து வேறுபடினும் பண்டைய நிலையில் சீன எழுத்துமுறைக்கு அருகாமையுடையவையே. பண்டைய சீன எழுத்துமுறை கல்வி வளர்ச்சியில் மிகவும் இடர்ப்பாடுடையதாயினும் நாட்டொற்றுமை வகையில் சீனத்துக்குப் பேருதவி செய்திருக்கிறது. சினத்தில் உண்மையில் ஒரு பகுதியின் பேச்சுமொழி மற்றப் பகுதியிலுள்ளவர் உணரமுடியாத அளவு வேறுபாடுடையதே. இதனால் சீனமொழி ஒன்று என்பதைவிடப் பல என்று கூடச் சொல்லலாம். ஆனால் எழுத்து ஒலியுடன் தொடர்பில்லாதிருப்பதால் பல்வேறு ஒலிப்பை உடைய பல பகுதிச் சொற்களுக்கும் வரிவடிவம் ஒன்றாகவே அமைந்துள்ளது. இதனால் பல பகுதியினரும் ஒருவருடனொருவர் பேச முடியாத போதிலும், ஒரே நூலை வாசித்தறிய முடிகிறது. இந் நிலைமை ஏற்பட்ட தனால்தான் சீனர் ஒரே இலக்கியமும் ஒரே நாகரிகமும் உடைய வராயிருக்க முடிகிறது. இந் நிலை திராவிடத்துக்கு ஒரு வகையில் படிப்பினை ஆகும். பண்டைத் திராவிடர் புத்தொதிகளையும் பலவகைப்பட்ட புதிய எழுத்து வடிவங்களையும் மேற்கொண்டதனாலேயே ஒரே மொழியாகிய திராவிடம், தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என வேறு வேறு மொழிகளாக இயங்குகின்றது. திராவிடம் சின மொழியைவிடப் பேச்சு நடையில் மிகுதி ஒற்றுமையுடையது. அயல்மொழிச் சொல், அயல்மொழி ஒலி விலக்கிப் பொது எழுத்துப் பேணின் திராவிடம் ஒரு மொழியாய், ஒரு நாட்டு நாகரிகமாய் இயங்கும் என்பது உறுதி. 4. சீனமொழியின் தூயநடை தமிழின் உள்ளார்ந்த ஒரு பண்பை மறக்கும் சில தமிழ்த் தோழர்களுக்குச் சீனமொழியின் சொல்வளம் ஒரு நல்ல படிப்பினை தரத்தக்கது. சீனமொழி எத்தகைய புதுக் கருத்துக்களையும் தூய சீனத் தொடர்களால் குறிக்கின்றது. அண்மைவரை புதுக்கருத்து க்களுக்கும் அறிவியல் துறைச் சொற்களுக்கும் இறந்துபட்ட இலத்தீனும் கிரேக்கமும் தேடித் திரிந்த ஐரோப்பியர்கூடச் சீன, ஜெர்மானிய மொழிகளைப் பின்பற்றுவதே சிறப்பெனக் கொண்டு வருகின்றனர். அணுகுண்டு2 சறுக்கி விமானம்3 பறக்கும் கோட்டை4 பொறித் துப்பாக்கி5 ஒன்றுபட்ட அரசு6ஆகியவை காண்க. சீன மொழியில் புதுத்தொடர்கள் யாக்கப்படும் வகை தமிழுடன் எவ்வளவு நெருக்கமுடைய தென்பதை அடுத்துவரும் பட்டிகையிற் காண்க. இயற்பெயர்கள்கூட முடியுமானால் மொழிபெயர்க்கவும், முடியாத போது சீன இயல் படுத்தப்பட்டு மொழிபெயர்க்கப் படவும் செய்கிறது. எடுத்துக் காட்டாக சர்ச்சில், ச்யூ. சி. ஆர் (ஒலிபெயர்ப்பு) கிருஷ்ணசிங் சியேன் - ஹா (கடவுள் - சிங்கம்) (மொழிபெயர்ப்பு) ஆகியவற்றைக் கூறலாம். புதுக்கருந்து சீனத்தொடர் சீனத்தொடரின் பொருள் 1. குடியரசு மின்க்-வோ மக்கள் நாடு 2. பல்கலைக்கழகம் தா-ஸ்வோ பெரிய பள்ளி 3. இருப்புப்பாதை த்ஹியே-லூ இரும்புவழி 4. புகைவண்டி ஸ்வோ-ச்ஹ சான் தீவண்டி நிறுத்தம் நிலையம் 5. ஊற்றுப்பேனா ச-லாயி-க்வயி-பி தானே வரும் நீர்க்கோல் 6. தொலைபேசி தியேன்-ஹவா மின்-மொழி 7. பொது உடைமை குங்-சான்-சுயி கூட்டுச் செல்வ முறை 5. சீன சமயமும் நாகரிகமும் சீன நாகரிகம் பழமையில் மட்டுமன்றி மேம்பாட்டிலும் மற்ற நாகரிகங் களுக்கெல்லாம் முற்பட்டது. முதலில் எழுதுவதற்குத் தாளையும் உடுப்பதற்குப் பட்டினையும் குடிவகையில் தேயி லையையும் கால்களுக்கு மிதியடிகளையும் புதையலையும், இருப்பதற்கு நாற்காலி, மேடைப் பலகைகளையும் முதலில் வழங்கியவர் சீனரே. இவையனைத்தும் கிட்டத்தட்ட கி.மு. 3000 லிருந்தே நடப்பிலிருந்தன. அச்சுத் தொழில் கி.பி. முதல் நூற்றாண்டில் தோன்றி கி.பி. 1000க்குள் நல்ல முறையில் வளர்ச்சி பெற்றிருந்தது. வெடிமருந்தின் பயன் 2000 ஆண்டுகட்கு முன்னிருந்தே தெரிந்திருந்தது. உலகின் சமயங்களுள் சீனநாட்டிலேயே பிறந்த சமயங்கள் இரண்டு. அவை கன்பூஸியஸ் நெறி, லயோட்சுவின் ‘தாவ்’ நெறி என்பன. இவ்விரு சமயங்களும் இந்தியாவில் புத்த சமண சமயங்கள் பிறந்த காலமாகிய கி.மு. 600 ஆம் ஆண்டிலேயே தோன்றின என்பர். கன்பூஸியஸ் சீன நாட்டின் பழைய பழக்கவழக்கங்களைத் தொகுத்து உலகியல் ஒழுக்கநெறியை வகுத்தார். சிறு தெய்வங்கள் எதனையும் அவர் ஏற்காதது மட்டுமன்று; கடவுள் வணக்கத் தைக்கூட வற்புறுத்தவில்லை. அரசியல் அமைதி, ஒழுக்கமுறை ஆகிய இரண்டையும் தெய்வத்தின் ஆணைபெற்ற முறைகள் எனக்கொண்டு அவற்றைப் பேணுவதையே அவர் சமயநெறியாய்க் கொண்டார். கி.பி. தொடக்க நூற்றாண்டுகள் வரை கன்பூஸியஸ் நெறியே சீனத்தில் பெரும்பாலோர் நெறியாகவும் அரசியல் நெறியாகவும் இருந்தது. அதன் பின்னும் அரசியல், பழக்க வழக்கங்கள் ஆகியற்றில் நாட்டு வாழ்வை உருப்படுத்த உதவிய கொள்கைகள் கன்பூஸிய ஸினுடையவையே. கன்பூஸியஸ் நெறி உலகியலையே வற்புறுத்தியது. உள்ஒளி, யோகம் ஆகியவற்றைத் ‘தாவ்’ நெறி வற்புறுத்தியது. நாளடைவில் சிறு தெய்வ வணக்கம், மாய மந்திரங்கள் ஆகியவற்றை இது ஆதரித்து மூடப் பழக்க வழக்கங்களுக்கு (இந்து மதத்தைப்போல்) உறைவிடமாயிற்று. சமயமுறை வகையில் இது கன்பூஸியஸை விடச் சிறுநடப்புடையதாயினும் கன்பூஸியஸ் நெறிபோலவே சீன வாழ்விலும் இலக்கியத்திலும் இடம்பெற்றது. சீன வாழ்வில் கி.பி. முதல் நூற்றாண்டில் புத்தசமயம் புகுந்தது. இன்று சீனப் பொதுமக்கள் பின்பற்றும் பெரும்பான்மைச் சமயம் இதுவே. ஆனால், சீன நாட்டுக்கு வந்த புத்தநெறி, புத்தர்காலத் தூய ஒழுக்கநெறி (ஹீனயான புத்தம்) அன்று. கி.பி. முதல் நூற்றாண்டுக் குள் இந்தியாவிலுள்ள தத்துவச் சிக்கல்கள், பல தெய்வ வணக்கம், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து கலங்கலாகிய நெறியே (மகாயான புத்தமே) சீனத்தில் புகுந்தது. சீனாவில் தூய புத்தநெறியோடு ஒப்புமை உடைய கன்பூஸியஸ் கொள்கையையும் பிற்காலப் புத்த நெறியுடன் ஒப்புமையுடைய ‘தாவ்’ நெறியையும் சீனம் மேலீடாக ஏற்கவும் அது இயைந்தது. 6. சீன இலக்கியத் தோற்றம் கி.மு. 3000 முதலே சீனரிடையே எண்ணும் எழுத்தும் இலக்கியமும் இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், கி.மு. 3000 முதல் கி.மு. 600 வரையுள்ள இலக்கியம் கன்பூஸியஸால் ஒருங்கே தொகுப்பட்டு விட்டனவாதலால் தனித்தனி அதன் பகுதிகளின் காலவரையறை அறுதியிடக் கூட வில்லை. எனவே கி.மு. 3000 முதல் கி.மு. 600 வரையுள்ள காலத்தை வரலாற்றுக்கு முந்திய காலம் என்னலாம். கி.மு. 600-ஐ ஒட்டி கன்பூஸியஸ், லயோட்க வாழ்ந்தனர். கி.மு. 600 முதல் கி.பி. 200 வரையுள்ள காலத்தைத் தொன்மைக் காலம் என்னலாம். கி.பி. 200 முதல் கி.பி. 1200 வரையுள்ள காலமே பலவகையில் சீன இலக்கியத்தின் சிறந்த காலமாகும். இதனை இடைக்காலம் என்போம். கி.பி. 1200 முதல் இன்றுவரை பிற்காலம் ஆகும். கன்பூஸியஸ் தம் காலத்திற்கு முன்னிருந்த இலக்கியங் களைத் தொகுத்தும் தம் கொள்கைகளை வகுத்தும் ஐந்து தொகுதிகள் வெளியிட்டார். இவை மாற்றத் தொகுதி (யி-கிங்), வினைமுறைத் தொகுதி (லி-சி), வரலாற்றுத் தொகுதி (ஷு-கிங்), பழம்பாடல் தொகுதி (ஷி-கிங்), தென்றலும் வாடையும் (சுன்-ட்சு) என்பவை. இவற்றுள் கடைசியான தென்றலும் வாடையும் மட்டுமே கன் பூஸியஸ் தாமே எழுதிய நூல்களைக் கொண்டது. மற்ற நான்கும் வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்தவை. முதல் இரண்டு தொகுதிகளும் கி.மு. 1000-க்கு முற்பட்டவை என்று கூறப்படுகின்றது. மாற்றத்தொகுதி மூன்றடிச் செய்யுட் களாலானது. கன்பூஸியஸாலும் சீனமக்களாலும் அது மிகவும் உயர்வாகக் கொள்ளப்படினும், கன்பூஸியஸ் காலத்திலேயே அதன் பொருள் விளங்காத நிலை ஏற்பட்டிருக்க வேண்டும். அந் நூல் முழுவதும் ஏதோ ஒருவகைக் குழூஉக்குறிச் சொற்களால் அமைந்து சித்தர் நூல்கள் போலப் பொருள் தெளியப்படாத மந்திரங்களாக விளங்குகின்றன. ஆனால், இதன் உரையாசிரியர்கள் மனம் போனவாறெல்லாம் வாலையும் தலையையும் ஒட்டவைத்துத் தத்தம் கால அரசியல் கருத்துக் களையும் கொள்கைகளையும் அதிலிருந்து வலிய வருவித்துக் கொண்டனர். தமிழில் திருமுரு காற்றுப்படை, கந்தரனுபூதி முதலிய நூல்களை மந்திரமெனக் கொண்டு இடைக்காலச் சமய வெறியர்கள் அதன் பகுதிகளுக்குத் ‘திருடரை வெல்ல, வழக்கு வெல்ல, மாரணம் செய்ய’ என்று தலைப்புக்கள் தந்த மனப்பான்மையையே இவை நினைப்பூட்டு கின்றன. வினைமுறைத் தொகுதி ஆசாரக்கோவை போலப் பழைய பழக்க வழக்கங்களை மிக விரிவாக எடுத்துக்கூறுகின்றது. சீனத்தில் தோட்டி முதல் தொண்டைமான் வரை அனைவரும் இந் நூலில் கண்ட முறையையே தம் நடையுடை தோற்றங்களில் இம்மியும் பிசகாதுகொண்டு ஒழுகுகின்றனர். ஒரு நூல் மக்கள் வாழ்க்கையைக் கட்டுபடுத்தக்கூடும் அளவுக்கு இது ஓர் எல்லைக்கோடு என்று கூறலாம். வரலாற்றுத் தொகுதி கி.மு. 2240 முதல் கி.மு. 600 வரையுள்ள சீன வரலாற்றை எடுத்துரைப்பது. இது வெறும் செய்திகள் கோப்பு மட்டுமன்று; பேரரசர்கள் அவ்வக்காலங் களில் வெளியிட்ட விளம்பரங்களையும் சுற்றறிக்கை களையும் ஆணைப்பட்டியல் களையும் உள்ளடக்கியது. கன்பூஸியஸின் அரசியல் கோட்பாடு களையும் இது ஆங்காங்கு எடுத்துரைக்கின்றது. சீன இலக்கியத்துக்குக் கன்பூஸியஸ் செய்த அரும்பணி பழம்பாடல் தொகுதியேயாகும். கன்பூஸியஸ் காலத்தில் உலகியல் காரியவாதத்தால் சீனவாழ்வு உணர்ச்சியற்று மரத்துப்போகும் காலத்துக்கு நெடுநாள் முன்பே இயற்றப்பட்ட இப்பழம் பாடல்கள் எளிமையும் உணர்ச்சிக்கனிவும் நயமும் உடையவை. பிற்காலச் சீனர் உயர்பாடல் என்றால் அரும் பொருளும் கடுமையும் உடையதாயிருத்தல் வேண்டும் என்றெண்ணியதற்கிணங்க உரையா சிரியர்கள் மேலீடான அதன் இயற்கை. அழகைக் கவனியாமல் மாற்றத் தொகுதியைப்போல இதிலும் ஆழ்ந்த மறைமுகமான கடும்பொருளைத் தேடி வலிந்து கொண்டனர். திருக்குறளின் தெள்ளத் தெளிந்த உயர்வுமிக்க முறைகளைப் பொருத்தமற்றவைக ளென எண்ணிப் பரிமேலழகர் போன்ற உரையாசிரியர் வடமொழி ‘சுமிருதி’ நூல்களின் விதண்டாவாதத்துட னிணைத்து அதற்குப் பொருள் விளக்கியதனை இம்முயற்சிகளுக்கு ஒரு சார் ஒப்புமை யாகக் கூறலாம். ‘தாவ்’ நெறிகண்ட லயோட்க கன்பூஸியஸுக்குச் சற்று முந்தியவராய் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்தவராயு மிருந்திருக்க வேண்டும். ஆனால், அவர் பின் வந்தவரால் அவர் கொள்கைகளை அறிகிறோமேயன்றி அவர் எதுவும் எழுதி வைக் காததால் இலக்கியத்தில் அந் நெறி நூல்கள் அடுத்தகாலப் பகுதியுட னேயே சேர்க்கப்பட்டதாகும். 7. தொன்மைக் காலம் (கி.மு. 600-கி.பி. 200) இக்காலத்தில் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டிய நூல் கன்பூஸியஸ் தொகுதிகளில் ஐந்தாவதாகிய தென்றலும் வாடையும் என்பதே. கன்பூஸியஸ் காலத்திலும் அதற்கு நெடுநாட் ஆற்றல்மிக்க பல குறுநில மன்னர்கள் கையிலேயே நாட்டின் ஆட்சி சிக்கி யிருந்தது. (லு என்ற) இத்தகைய குறுநில அரசு ஒன்றில் கன்பூஸியஸ் சிலகாலம் உழவுத்துறை அமைச்சராயிருந்து அரசருடன் மாறுபட்டு நாடு கடத்தப்பட்டுப் பலவிடங்களிலும் சிரிந்தவர். தென்றலும் வாடையும் என்ற நூலில் அவர் இவ்வரசின் வரலாற்றையும் அதனுடன் ஒட்டி அதன் வாழ்வுடன் தமக்கு ஏற்பட்ட தொடர்பு களையும் விரித்துரைக்கிறார். நற்பண்புகளைப் போற்றுதல் தென்றலைக் குறிக்கு மெனவும் அல்லாதவற்றை ஒறுத்தல் வாடை யைக் குறிக்குமெனவும் நூலின் பெயருக்கு விளக்கம் கூறப்படுகிறது. கன்பூஸியஸ் பின்வந்த பலர் கன்பூஸியஸின் இக் குறுநில வரலாற்றை முன்மாதிரியாகக் கொண்டு எண்ணற்ற குறுநில அரசு வரலாறுகளை எழுதிக் குவித்தனர். தென்றலும் வாடையும் என்ற நூலுடனேயே அவர் வழி நின்றவரான ட்சோ என்பவர் உரையும் (ட்சோ-சுவாங்) இணைக்கப் பட்டுள்ளது. நூற்செய்திகளை விளக்குவதனிடையே சுவைமிக்க வரலாற்றுச் செய்திகளை அவற்றிற்கு எடுத்துக் காட்டுகளாக அவர் கூறுகிறார். அவர் உரை நடை மிகவும் வனப்பு வாய்ந்தது. ‘சீன உரைநடை யிலக்கியத்தின் தந்தை’ என அவர் புகழப்படுகிறார். கன்பூஸியஸைப் பின்பற்றி அவர் நெறியை விளக்கியவர்களுள் மிகச் சிறந்தவர் (சீனரால் மெங்-ட்சு என அழைக்கப்படும்) மென்ஷியஸ் ஆவர். இவர் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கன்பூஸியஸுக்கு சீனர் எடுத்த கோயில்களில் கன்பூஸியஸுக்கு அடுத்தபடி இவர் பேரிடம் பெற்றுள்ளார். இவர் எழுதிய நூல்கள் “நான்கு ஏடுகள்” ஆகும். முதல் ஏடாகிய லுன்-யூ கன்பூஸியஸின் வாழ்க்கை வரலாற்றையும் ஒழுக்கமுறையினையும் விரித்துரைக் கின்றது. அரசியலில் மக்கள் கருத்தே கடவுள் கருத்து என்ற கொள்கை இதில் இடம் பெற்றுள்ளது. அமைச்சர்கள் அரசனுக்கு அஞ்சாது நல்லன வற்றை இடித்துக் கூறுபவர்களா யிருக்க வேண்டுமென்றும் அரசனும் அத்தகைய தன்மையாளர்களைத் தேர்ந்து அத்தகைய உரிமை தந்து ஆளவேண்டுமென்றும் குறிக்கிறார். ஆனால், தீமைக்கு மாறாக நன்மையே செய் என்ற லயோட்சுவின் நெறியை இவர் ஒறுத்தார். தீமைக்கத் தக்க மாறு நன்மையாயின நன்மைக்கு மாறு யாது என அவர் வினவுகிறார். திருவள்ளுவர், இயேசு ஆகியவரின் நெறிமுறையுடன் இவ்வொரு வகையில் கன்பூஸியஸ் மாறுபடுகிறார். லயோட்சுவின் கொள்கைகளை இலக்கிய வாயிலாகப் பரப்பியவர்கள் லியே-ட்சு என்பவரும் ஹான்-பொய்-ட்சோ என்பவரும் ஆவர். முன்னவர் கன்பூஸியஸின் உலகியல் அறிவு நெறியை ஏளனம் செய்தார். லயோட்சுவின் கொள்கைகள் என்று எதிப்பாளர்கள் கூறும் பல செய்திகளை முதன் முதலில் ஹான்-பெய்-ட்சோவினிடமே நாம் காண்பதால் இவர் லயோட்சுவின் நெறியை வாய்மொழி மரபால் அறிந்து எழுதியுதவியவர் என்று கூறலாம். இவர் உயர்ச்சி யாண்மையுடைய திறமைமிக்க கவிஞராதலால் இவர் மூலம் சமய முறையில் வலுப்பெறாத லயோட்சுநெறி இலக்கியத்தில் இடம்பெற இடமேற்பட்டது. ஹான் வழியின் முதற்பேரரசரின் பேரனான ஹைனான்டேவும் இத் திறத்தினர். கி.மு. 200 இல் புதிய சீனப் பேரரசன் ஒருவன் பழைய சீன நூல்களை யெல்லாம் அழித்தொழிக்க கச்சை கட்டினான். நூல்கள் பல எரிக்கப்பட்டன. புலவர் பலர் தூக்கிலிடப்பட்டனர். ஆயினும், பல புலவர் உயிரினும் உயர்வாகக் கண்பூஸியஸ் முதலியோர் வளர்த்த இலக்கியத்தைப் பேணிநின்றது இலக்கிய வரலாற்றின் பொன் நிகழ்ச்சிகளுள் ஒன்று. ஹான்வழியின் முதல் பேரரசர் மீண்டும் இலக்கியம் பேணத் தொடங்கிய போது புலவர்களும் நூல்களும் தம் ஒளிவிடம் விட்டு மீண்டும் ஒளி வீசின. அவர் நிறுவிய நூல் நிலையத்தில் 11,000 ஏட்டுப் படிகள் இருந்தனவாம். ஹான் மரபினர் காலத்திலேயே (கி.மு. 200 - கி.பி. 200) சீன வரலாற்றிலக்கியம் மிகச் சிறப்படைந்திருந்தது. சீன வரலாற்றுத் தந்தை எனக் கூறத்தகும் சு-மா-சியேன் இயற்றிய சீன வரலாறு கி.மு. 2697 முதல் கி.மு. 740 வரையுள்ள செய்திகளைக் கூறுகிறது. ஐரோப்பாவில் 18, 19 ஆம் நூற்றாண்டுகளிலேயே ஏற்பட்ட அறிவியல் வரலாற்று முறை7யின் பல கூறுகளை சு-மாவின் வர லாற்றில் காணலாம். அரசியல் நிகழ்ச்சிகள் மட்டுமின்றிக் கலை, இலக்கிய, சமய, வாழ்வியல் கூறுகளும் அதில் இடம்பெற்றன. நிகழ்ச்சிகள் காரிய காரணத் தொடர்புடன் விளக்கப்படுகின்றன. இவர் வரலாற்றைத் தொடர்ந்து பான்-குன் என்பவர் ஹான் மரபினர் வரலாற்றையும் 120 ஏடுகளில் எழுதி முடித்தார். ஹான் மரபினர் விளம்பரப் பட்டிகளை உருவாக்கிய அறிஞர் சா-வோ-ட்சோ, அவற்றில் குற்றம் வறுமையின் பயன் என்பது; வறுமையின் பயன் என்பது; வறுமை போதா வளத்தின் விளைவு; உணவின்மையால் பசியும், ஆடை போதாமையால் குளிரும் ஏற்படின் நாணயத்தையும் வாய்மையையும் எதிர்பார்த்தல் கூடாது என்பது போன்ற பொன்மொழிகளைப் பொறித்தார். கி.மு. முதல் நூற்றாண்டில், லூ-வென்-ஹு என்பவர் ஆங்கிலத்தில் ஸ்மைல்ஸ் என்பவரின் ‘தன்முயற்சி’ என்ற நூலுடன் ஒப்பிடக்கூடிய சிறந்த தன்முயற்சி பற்றிய நூல் ஒன்று இயற்றிப் புகழ் நிறுவினார். பழைய சீன எழுத்துக்களினிடமாகச் ‘சிறுபொறிப்பு’ ஏற்பட்டதும் இக் காலத்திலே. புத்தர் நெறி சீன வாழ்வில் புகத் தொடங்கியது கி.பி. 70 முதல் ஆகும். கி.பி. 200 முதல் 600 வரை சீன அரசியலில் ஆறு கால் வழியினர் ஒருவர் (பின் ஒருவராய் ஆண்டனர், சீன இலக்கியம் மிகவும் பிற்பட்டிருந்த காலம் இதுவே என்னலாம். புத்தசமய வரவு புது வரவானபோதிலும் அதனால் எவ்வித எழுச்சியும் ஏற்படு வதற்கு மாறாகப் பழைய புலமைகூடத் தற்சார்பிழந்தது. பழைய நூல்களிலிருந்து பாரிய தொகுப்புகள் உண்டு பண்ணுவதே புலமைக்கு அறிகுறியாக இக் காலத்தில் எண்ணப்பட்டது. இப் பகுதியின் தலைசிறந்த எழுத்தாளர் வங்-சூ ஆவர். இவர் அக் காலத்துக் கண்மூடிப் பழக்க வழக்கங்களைப் பகுத்தறிவுக் கண் கொண்டு ஆராய்ந்து கண்டித்தார். புத்த நெறி சார்ந்தவருள் தலைசிறந்த எழுத்தாளர் பாஃசியென் என்ற சீன புத்தத் துறவி. இவர் வடஇந்தியா வெங்கும் பயணம் செய்து குப்தர் காலத்திய இந்தியாவின் சமய அரசியல் நிலைகளை எடுத்துக் கூறினார். இவர் சிறந்த இலக்கிய எழுத்தாளராயினும் சமயப்பற்றுக் காரணமாகச் சமய அருஞ்செயல்களையும் புனைகதை களையும் அப்படியே வரலாறாக மாற்றியவர். புத்தநெறியின் அடுத்த புகழ்மிக்க சீன எழுத்தாளர் குமாரஜீவர் என்ற இந்தியப் புலவர். இவர் சீனத்தில் குடியேறிச் சின மொழி பயின்று சீனப் புலவர் உதவியுடன் புத்தசமய நூல்களைச் சீனத்தில் மொழிபெயர்த்தார். சீன மக்களிடையே ஒரு ‘குட்டிப் புத்தரா’கக் கருதப்பட்ட பெருமையை உடையவர் இவர். இக் காலச் செய்யுள்நடை ஐந்து அல்லது ஆறு (நேர்) அசைகளையுடைய அடிகளாலானது. கவிஞர்கள் இயற்கை அழகை உணர்ச்சியுடனும் நயத்துடனும் சித்திரித்தனர். தாய்நாட்டி னின்றும் தொலைசென்றவன் தாய்நாட்டைப் பற்றி எண்ணி ஏங்குதல், இளவேனிலையும், கதிரொளியையும் எதிர்பார்த் திருக்கும் அவா ஆகியவை கனிவுடன் பாட்டில் தீட்டப்பெற்றன. 8. இடைக்காலம் (கி.பி. 600-1200) கி.பி. 600 முதல் 900 வரையுள்ள ‘தாங்’ மரபினர் காலமே சீனக்கவிதை உச்சநிலை எய்திய காலமாகும். பாட்டின் உருவிலும் பொருளிலும் இக் காலத்தில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டன. 4 அல்லது 5 அசை அடிகளுக்கு மாறாக 7 அசை அடிகள் எழுந்தன. பாடல்களுள் ‘பிறந்த பொன்னாட்டார்வம்’ முன்னிலும் உள்ளுண ர்ச்சியுடன் பாடப்பட்டது. அத்துடன் பாரசீகக் கவிதையை நினைவூட்டும் தீந்தேறல் (மது) பாட்டுக்கள் சின இலக்கியத்தில் புத்தம் புதிதாகத் தோற்றமெடுத்தன. நாட்டுப்பற்றுப் பாடல் கவிஞர்களில் சிறந்தவர் ‘என் எளிய தாயகம்’ என்ற பாடல் இயற்றிய லியூ-யூ ஆவர். தீந்தேறல் பாடலில் ஒமார் கய்யாமை ஒத்த புகழுடைய சீனப் பெருங்கவிஞர் லி-தை-பை ஆவர். ஒமார் கய்யாமின் பாடலின் மறைபொருளும் ஆழமும் தை-பையின் பாடலில் இல்லையாயினும் மற்றப் பாரசீகக் கவிஞர்களில் காணப்படும் எளிமையும் நயமும் இனிமையும் அவரிடத்தில் உண்டு. இக் காலத்தில் பாஃசியேனைப் பின்பற்றிய சீன புத்த எழுத்தாளர் ஹியூன்-ட்சாங் ஆவர். இவர் வட இந்திய, தென் இந்திய சமயநிலைகளைத் தெள்ளத்தெளிய எடுத்துரைத்த பெரியார், சீன மொழி நடையில் இவர் பாஃசியெனுக்கு ஒப்பானவர் அல்லாராயினும் வாய்மையிலும் தெளிவிலும் அவரினுமிக்க வரலாற்றியல் பண்பு வாய்ந்தவர். மேலும், பாஃசியெனிலும் புலமைமிக்க இவர் அரசருடன் ஒப்ப ஹர்ஷன் முதலிய இந்தியப் பேரரசரால் வரவேற்கப்பட்டு நாலந்தா முதலிய இந்தியப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராய் ஆண்டுக்கணக்கா யிருந்தவராதலால் இந்திய நிலைமைகள் பற்றிய அவர் அறிவு மிகவும் ஆழ்ந்து பயனுடையது. ஆகும். வடஇந்தியா, திபெத், சீனா ஆகிய நாடுகளில் சென்று வடமொழியும் புத்தநெறியும் வளர்த்த பெருந்தலைவர் பலர் காஞ்சி நின்று போந்த தமிழர் என்பதையும் இவர் குறிப்புக்களால் அறிகிறோம். புதிய புத்த சமயத்தை முழுமனதுடன் எதிர்த்த ஷான்-வேங்-குங் கன்பூஸியஸ் நெறியின் கடைசிப் பாதுகாவலராகவும், பழைய சீனப்புலவரின் கடைசி முடிசூடா மன்னராகவும் கருதப்படுகிறார். கவிதை, கட்டுரை, மெய்விளக்க ஆராய்ச்சி முதலிய எல்லாவகை இலக்கியத் துறைகளையும் ஒன்றுபோலத் திறம்படக் கையாண்ட எழுத்தாளர் இவர். புத்தர் காலத்திய புத்தநெறி (ஹீனயான புத்தத்து)க்கு மாறாகப் பிற்கால இந்திய சமயம் (இந்துக்கள் நெறி), திபேத்திய லாமா சமயம், சின ‘தாவ்’ சமயம் ஆகியவற்றின் பல தெய்வ வணக்கம், ஏவல், சூனியம், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவற்றுடன் கலந்த பிற்காலப் புத்தர்நெறியே (மஹாயான அல்லது வடமொழிப் புத்தமே) சீனநாட்டில் புகுந்ததாதலால் ஷான்-வேன்-குங்வின் தாக்குதலுக்கு மிகுதியிட மேற்பட்டது. இவர் தோழரான லியூசுட்சுங்-யயுவான் இவரைப்போலவே கன்பூஸியஸ் நெறியில் ஆய்ந்த பற்றுடையவராயினும் மணலில் பொன் பொடி போல் புதைபட்டு மின்னும் பழம் புத்தநெறியின் கோட்பாடுகள் கன்பூஸியஸ் நெறிபோன்றே அறிவுத் தெளிவுடைய தெனக் கண்டு அதனை ஓரளவு ஒப்புரவுடன் வரவேற்றார். கி.பி. 900 முதல் 1200 வரை ஆண்ட சூங் அரசர் காலமே சீன இலக்கியத்தின் பொற்காலம் எனக் கருதப்படுகிறது. பாடற்று றையில் ‘தாங்’ மரபினர் காலத்துக்கும் வரலாற்றுத் துறையில் ‘ஹான்’ மரபினர் காலத்துக்கும் இது இளைத்ததேயானாலும், இத் துறைகளிலும் மற்றெல்லாத் துறைகளிலும் கிட்டத்தட்டச் சரிநிகர் ஒப்பான உயர்வு இக் காலத்துக்கு உரியதாகும். உரைநடையிலும் சரி, பாடலிலும் சரி, இலக்கணப் பிழைகளையும் விலக்கி, மக்கள் வாழ்வியலுடன் நடையிலும் பொருளிலும் நெருங்கிய தொடர் புடைய உயிர் ஆற்றல் இக்கால இலக்கியத்தின் தனிச்சிறப்பு ஆகும். 254 ஏடுகளாகப் பாரிய சீன வரலாறு எழுதிய சு-மா-குவாங் இக் காலத்தின் தலைசிறந்த வரலாற்றாசிரியர். சீனமொழியில் ஒப்புயர் வற்ற சொல்லாட்சி நடையாட்சித் திறமுடைய எழுத்தாளர் சு-துங்-போ. எத்தகைய உயரிய கருத்துக்களையும் நயமும் தெளிவும் சுருக்கமும் உடைய அம்மொழியில் வெளியிடமுடியும் என்பதனைத் தம் பாடலிலும் உரைநடையிலும் காட்டினார். சீன மொழியின் மேற்கோளுரை கள் பலவற்றுக்கு இவர் நூல்களே பிறப்பிடமாகும். அரசியலறிஞரும் படைத் தலைவருமான ஷேன்-க்லா இக் காலத்தின் முதன்மைவாய்ந்த இலக்கியக் கருத்துரையாளர். வாங்-அள்-ஷாவின் நூல்கள் அரசியலில் பல சீர்திருத்தங்களுக்கத் தூண்டுதல் தந்தன. ‘தாவ்’ சமயச் சார்பான பல பழக்கவழக்கங் களை இவர் கண்டித்தார். லி-இ முதலிய பல எழுத்தாளர் ஓவிய முதலிய கலைகளின் வரலாறுகளும் அவை பற்றிய கருத்துரை களும் தரு கின்றனர். இந்தியா, கொரியா முதலிய நாடுகளின் கலைகள்கூட அவர்கள் ஆராய்ச்சிகளில் இடம் பெறுகின்றன. 9. சின நாடகக் கலை சீன இலக்கியத்தில் நாடகக் கலை கிட்டத்தட்ட 2000 ஆண்டுத் தொடர்பான வளர்ச்சியுடையது. பிறநாடுகளைப் போல இங்கும் நாடகம் முதலில், சமய விழாக்களை ஒட்டியே ஏற்பட்ட தாயினும் சீனசமயம் நாட்டுப்பற்றை அடிப்படையாகக் கொண்டா தாதலால் தொடக்க கால முதலே நாடகம் இங்கே வரலாற்றுத் தொடர்பு பெற்றது. நாடகங்கள் மக்கள் பேச்சு மொழியாகிய உயிருள்ள நடையிலேயே எழுதப்பட்டன வாதலால் இலக்கியப் புலவர்கள் அதனை இலக்கியமாக நெடுநாள் கருதா திருந்தனர். ஆயினும், அரசியலார் இதனை நன்கு ஆதரித்து வந்தனர். கி.பி. 713ல் சீனப் பேரரசன் நடிகர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கத்துடன் பேரரசர் நாடகப் பயிற்சிக் குழாம் ஒன்று ஏற் படுத்தினான். இதில் பயின்றோர் ‘இலந்தையஞ் சோலை இளைஞர்’ என்ற பெயருடன் நாடகக்கலை வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டனர். நெடுங்காலமாக (கி.பி. 800 வரை) நாடகத்தில் இரண்டு உறுப்பினரே நடித்தனர். பிற உறுப்பினர் ஒன்று நடியா ஊமை நடிகராயிருந்தனர்; அல்லது அவரும் ‘திரைப்புறம்’ பேசினர். அவல நாடகம்8, கேலி நாடகம்9, களி நாடகம்10, குறைநிலைத் துன்ப நாடகம்11 ஆகிய நாடகத் துறைகள் யாவும் குறைவின்றிச் சீன நாடகத்தில் இடம் பெற்றவையாயிலும் சீனர் சமயக் கொள்கை காரணமாகத் துன்பமுடிவு நாடகங்கள்12 மட்டும் இடம் பெற வில்லை. இவ்வகையில் வட இந்திய நாடகப் போக்குடனும், ஒருசார் ஷேக்ஸ்பியர் கடைக்கால நாடகங் களுடனும் சீன நாடகம் ஒப்புடையது. பேச்சு, கதை நிகழ்ச்சி, பாட்டு ஆகிய யாவும் நாடக உறுப் புக்கள் எனக் கொள்ளப்பட்டதனால் அடிக்கடி அவை இடையே செருகி வளர்க்கப்பட்டன வாயினும் நாளடைவில் எல்லாம் சிதைந்தன. சீனநாடகம் இடைக்காலத்திலேயே தொடக்கமுற்றதாயினும் பிற்காலத்திலேயே சிறப்புப்பட வளர்ச்சியடைந்தது. 10. பிற்காலம் (1200-20ஆம் நூற்றாண்டு) ஐரோப்பாவில் துருக்கியர் படையெடுப்பின் மூலமே தற்கால நாகரிகத் தொடக்கமேற்பட்டது. சீனாவிலும் துருக்கி யருடன் தொடர்புடைய மங்கோலியர் படையெடுப்பாலேயே நாகரிக மாற்றம் ஏற்பட்டது. கி.பி. 1200 முதல் 1368 வரை மங்கோலிய மரபினர் ஆட்சி புரிந்தனர். அதன் பின் 1644 வரை மிங் மரபினரும் பத்தொன்பதாம் நூற்றாண்டிறுதி வரை மஞ்சூரிய இனத்தவரான ‘மஞ்சுக்’ கால்வழியினரும் ஆட்சி செலுத்தினர். அறிஞர் சுன்-யத்-தேசன் கருத்துப் புரட்சியாலும் மார்ஷல் சியாங்-கை-ஷேக்கின் செயல்முறை வெற்றியாலும் இருபதாம் நூற்றாண்டில் சீனக் குடியரசு ஏற்பட்டது. மங்கோலிய ஆட்சி அயலார் ஆட்சியாயினும் சீன வாழ் வுக்கும் இலக்கியத்துக்கும் அவ்வளவு தீங்காயமையவில்லை. உண்மையில் மங்கோலியப் பேரரசருள் தலைசிறந்தவனான குப்ளே-கான் தமிழ்நாடு, இத்தாலி, மேற்கு ஐரோப்பா முதலிய நாடுகளுடன் உறவுகள் கொண்டு உலகெங்கும் சீனத்தின் புகழை நாட்டினான். மேனாட்டில் வெனிஸ் நகரினின்று உலக சுற்றிய நாடுசூழ் அறிஞனான மார்க்கோ போலோ அவன் அளப்பரும் செல்வ நிலையை வானளாவப் புகழ்ந்துள்ளான். சீனம் பொன்னாடு (சுதே) எனப் புகழ் பெற்றது இக் காலத்திலேயே. சீன நூல்கள் அளவில் பெருகிக் கடல்போல் பரந்தது இக் காலத்திலேதான். பழநூல் தொகுதிகள் மலைமலையாக எழுதிக் குவிக்கப்பட்டன. 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இத்தகைய நூற்களஞ்சியம் ஒன்று 23,000 ஏடுகளை அடைந்ததாம். 16 ஆம் நூற்றாண்டில் மா-ட்வான்-லின் இத்தகைய பாரிய செய்தித் திரட்டு ஒன்றையும், 18ஆம் நூற்றாண்டில் புலவர் குழு ஒன்று 40 ஆண்டு உழைப்பின்பேரில் இயற்றிய 5020 ஏடுகளடங்கிய பல்பொருள் தொகுதி ஒன்றும் இப் பாரிய முயற்சிக்கு ஏற்ற குழவிகள் ஆகும். 11. நாடகங்கள் பல்பொருள் தொகுதிகளைப் போலவே நாடகங்களுமே பேருருக் (விசுவரூபம்) கொண்டன. இக் கால நாடகங்களின் தொகுதி ஒன்று ‘நூறு நாடகங்கள்’ என்று பெயர் பெற்றது. இவற்றுள் ஹானின் துயரங்கள், டோவ்-இயின் துயரங்கள் ஆகியவை பேர் போனனவ. மங்கோலியர் கால நாடகங்களில் நாடக யாப்புத் திறமும் நிகழ்ச்சித் திறமும் மேம்பாடடைந்தன. கதைகளைக் கூறுவதைவிட்டு ஆசிரியர் உரையாடலில் கவனம் செலுத்தினர். நசைச் சுவை சிறக்க அமைந்தது. சீன இலக்கிய முழுமையிலும் கதைகளில் ஒழுக்கப் படிப்பினை இடம் பெற்றுள்ளது. சீனர் ஒழுக்க முறையில் ‘பெற் றோரைப் பேணல்’ மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்படுகிறது. மிங் மரபினர் கால நாடகங்களில் இக் கருத்து முந்துறக் காணப் படுகிறது. இக் காலத்திய நாடகங்களுள் 600 நாடகங்களுக்குமேல் இன்னும் உள்ளன. அவற்றுள் தாய்ப்பற்றுப் பற்றிய பி-பா-சி இன்றும் நாடகரங்கில் பெரிதும் போற்றப்படுகிறது. நாடகங்கள் மங் கோலியர் காலத்தில் 4 அல்லது 5 அங்கங்களுடைய வையாயி ருந்தன. மிங் மரபினர் காலத்தில் அவை 30 அல்லது 40 அங்கங்களாக நீண்டன. மஞ்சு மரபினர் காலத்தில் (17-18 நூற்றாண்டுகளில்) ‘குருதி தோய்ந்த விசிறி’ ‘அழியா வாழ்க்கை அரண்மனை’ ஆகியவையும் ‘பலவீரர் கூட்டம்’ (சுன்-யின் ஹுயி) என்ற வரலாற்று நாடகமும் பேர்போனவை. அழியா வாழ்க்கை அரண்மனை ‘ரோமராணி’ கதையாகிய ‘கிளியொப்பாத்ரா’வை (ஷேக்ஸ்பியர் நாடகத்தை) நினைபூட்டவல்லது. பலவீரர் கூட்டக் கதையில் நூறாயிரம் அம்பு திரட்ட உத்தரவு பெற்ற படைத் தலைவன் அதற்கு மாறாக ஆயிரம் வைக்கோற்புரிவீரன் திரட்டி அப்போலி வீரர் மீது பகைவர் எய்த அம்புகளைக் கைக்கொண்டு அவர்களை எதிர்க்க உதவிய சுவை மிக்க கதை கூறப்படுகிறது. 12. புனைகதை சீனப் புனைகதைகள் பெரிதும் பழங்கால வரலாற்றுக் (காதல், வீரக்) கதைகளையும் எளியார்க்கன்பரான ‘ஜம்புலிங்க நாடான்’ போன்றவர் கதைகளையும் புலவர் துயர்களையும் பொருளாகக் கொண்டவை. புனைகதைத் துறையில் சீனரின் நாட்டுரிமை (தேசிய) இலக்கிய மாகக் கொள்ளத்தக்க பெருமையுடையது, ‘மூவரசர் வரலாறு’ என்பதே. மூன்றாம் நூற்றாண்டு வரலாற்றை ஒட்டி எழுந்த பதின்மூன்றாம் நூற்றாண்டுப் பெருங்கதை இது. வடமொழி மாபாரம்போல் இது அளவிலும் விரிவிலும் பெரிய அறிவுக் கள’சியமாகும். நூறு நாவல்களுக்குப் போதிய கதை நிகழ்ச்சிகள், கதைச் சித்திரங்கள், உறுப்பினர் தொகைகள் இதில் இடம் பெறு கின்றன. பால் ஸாக் என்ற பிரஞ்சுப் புனைகதை மன்னரைப் போல் இதுவும் தோட்டி முதல் தொண்டைமான் வரை எல்லாவகை வாழ்க்கைத் துறைகளையும் சித்திரிப்பது. இந்திய இதிகாசங்களைப் போலவே சீன இலக்கிய எழுத்தாளர் அனைவருக்கும் கதை நாடகம் முதலியவற்றுக்கு மூலக் கருவூலமாய் விளங்குவது இது. இதற்கடுத்தபடியான பருமையும் பெருமையும் உடையது. ‘செம்மாளிகைக் கனவு’ என்பது. இதன் கதையுறப்பினர் 400 தான், பக்கங்களும் 4000தான்! மூவரசர் வரலாற்றைப் போலவே இதுவும் எல்லாத்தர வாழ்க்கையையும் தீட்டுகிறது. ‘மேலைப் பகுதிப் பயணங்கள்’ என்பது புத்த நெறிச் சார்பு டைய கதை, கல் முட்டையிலிருந்து பிறந்த கற்குரங்கு, அது கடவுளை அவர் நிலையிலிருந்து நீக்கிக் கடவுளாக முயலுதல், புத்தர் அதற்கு அமைத்த புதுமையான தேர்வு முறை’ ஆகிய இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறுகின்றன. 17 ஆம் நூற்றாண்டில் பு-ஸு-ங்-லிங் அல்லது ‘புதுமைக் கதைகள்’ என்ற சிறுகதைத் திரட்டு எழுதப்பட்டது. இது சீன நாட்டுப் பழங்கதைகளைப் பழைய சீன உலகின் செவ்விய இனிய நடையில் தருகின்றது. இந் நூல் மேலை நாடுகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட பெருமையுடையது. ‘சிங்-ஹுவா-யுவான்’ என்ற நூல் வியப்பளிக்கும் புதுவகை மக்கள் வாழும் நாடுகளில் ஏற்படும் நிகழ்ச்சிகளைப் புனைந்து கூறுவதாகும். ஆங்கிலத் திலுள்ள ‘கல்லி வரின் பயணங்களை’ இது நினைவூட்ட வல்லது. 13. அண்ணமைக்காலம் (18-19-20 நூற்றாண்டுகள்) 18 ஆம் நூற்றாண்டில் சங்-கேங் என்பவர் அவர் காலத்தவர் களும் முற்காலத்தவர்களுமான கலைஞர், துறவியர் ஆகியவர் வாழ்க்கை வரலாறுகளை எழுதித் தொகுத்தார். 19 ஆம் நுற்றாண்டில் ஆங்கிலேய அரசியலார் பேரவாவால் சீனத்திலெழுந்த அபினிப் போரைக் கண்டித்து லின்-ட்சே என்பவர் விக்டோரியப் பேரர சிக்கு முடங்கல் வரைந்தார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சங்-கிதுங் கல்வி சமயம் ஆகியவற்றைப் பற்றிய சீர்திருத்தக் கருத்துக்களை எளிய இனிய நடையில் எழுதிப் பரப்பினார். சீனக் குடியரசை அமைப்பதில் பெரும் பங்கு எடுத்துக் கொண்ட அரசியலறிஞரான லியாங்-சி-சதவோ அண்மைக்கால சீன இலக்கியத்தில் முதலிடம் பெற்றத்தக்கவர். சீன இலக்கியத்தின் புதிய எழுத்தாளராயினும் அவ் விலக்கிய வாழ்வுக் கால முழு வதிலுமே மிகச் சிறப்புடைய தலைசிறந்த எழுத்தாளரில் அவர் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். தற்காலக் கருத்துக்களைக்கூடச் சீனமொழியின் தூய்மை கெடாமல் நயம்பட எழுதும் திறத்திலும் உணர்ச்சி யாற்றலிலும் இவர் ஒப்புயர்வற்றவர், இருபதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய அரசியலிலும் இவர் பங்கு கொண்டு முதல் உலகப்போரிறுதியில் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் சீனாவின் பேராளராய்த் தொண்டாற்றினார். சீனக் குடியரசிலும் இவர் ஒழுங்குமுறை அமைச்சராயிருந்தவர். 5000 ஆண்டுகட்கு மேலும் எதிர்ப்புக்கள் தாக்குதல்களுக் கிடையிலும் உயிர்ப்பாற்றல் கெடாது மீண்டும் மீண்டும் புத்தெழுச்சி பெற்றோங்கும் திராவிடத் தனிமொழியாம் தமிழைப் போல, சீன இலக்கியமும் 5000 ஆண்டு நீண்ட கால வாழ்விலும் சோர்வுறாமல் இன்னும் வளர்ந்து வருகிறது. அரசியல் கட்சிகள், வகுப்பு வேற்றுமைகள் ஆகியவைகள் ஒழிந்து நாட்டுப்பற்று, இனப்பற்று, தன்மதிப்பு ஆகியற்றைக் கைவிடாத சரிநிகர் உலக ஒற்றுமைக் கொள்கை ஏற்படு மானால், இவ் விரு நாட்டுக் கலைகளும் தம் அளவில் வளர்ச்சி யுறுவதுடன் அமையாது வன்மையில் தம்மிலும் குறைந்த மற்ற நாடுகளுக்கு வழி காட்டியாகவும் ஊக்கம் தரும் உரமாகவும் இயங்கும் என்பது உறுதி. அடிக்குறிப்புகள் 1. Heiroglphics. 2. Atom bomb. 3. Glider. 4. Flying Fortress. 5. Machine Gun 6. United Kingdom. 7. Scientific Method of History 8. Melodrama. 9. Farce. 10. Comedy. 11. Half Tragedies. 12. Ral Tragedies. 5. ரஷ்ய இலக்கியம் 1. உருவில் இளையாள் எனில் அளிவில் முதியாள் உலக இலக்கியங்களுள் ஐரோப்பிய இலக்கியங்களே மிகவும் பிற்பட்டுத் தோன்றியவை. அவற்றுள்ளும் மிகவும் பிற்பட்டுத் தோன்றிய புத்திலக்கியம் ரஷ்ய இலக்கிய மேயாகும். “உலகில் எங்கள் இலக்கியமே பழமையுடையது; எங்கள் இலக்கியமே பழமையுடையது” என்று பழமையிலேயே பெருமையை நிலை நாட்டக் கருதும் நம்மவர்க்கு, உலகின் இளமைமிக்க இலக்கியம் எம்முடையதே என்று ரஷ்யர் பெருமை கொள்வது வியப்புக்கிட மானதே. ஆனால், ஒருவகையில் இது நம் பழமை மயக்கமறுத்துக் கண்விழிப்பூட்டும் செய்தியேயாகும். பிந்திப் பிறந்த இலக்கியம் உயர்வில் முந்தி இடம் பெறக்கூடும் என்பதற்கு இந்திய மொழிகளுள் வங்காளியும், மேலைநாட்டு மொழிகளுள் ரஷ்ய மொழியும் சான்றுகளாகும். ரஷ்ய இலக்கியம் உருவாகி ஒன்றிரண்டு தலைமுறைகள் ஆகியிருக்கின்றன. ஆனால், அதற்குள் அது உலக இலக்கியங்களில் முன் வரிசையில் இடம்பெற்று விட்டது. இலக்கியத்தின் பல துறைகளில், சிறப்பாகப் புதிய துறையாகிய புனைகதை, சிறுகதை களில் அது உலகிற்கு வழிகாட்டியாய் விட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிற் சிறந்த எழுத்தாளர் பலர், ரஷ்யாவே தங்கள் கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளது என்று ஒப்புக்கொள்கின்றனர். ரஷ்ய இலக்கியம் பிறந்தது 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அது நல்லுருப்பெற்றது. 19 ஆம் நூற்றாண்டிலேயே. இவ்வளவு குறுகிய காலத்தில் உலகின் கவனத்தைத் தம் பக்கம் ரஷ்யர் ஈர்த்துவிட்டனரே! இவ் வியக்கத்தகு வெற்றியின் மறைதிறவு யாது? பழைமைச் சிறப்பு மலிந்தும் புதுவளர்ச்சி வகையில் ஊசலாடும் நம் தமிழர்க்கு இதை அறிவது பெரும்பயன் தரத்தக்க தன்றோ? தமிழன்னை பழையள் எனிற் புதியள், தாய் எனிற் கன்னித்தாய் என்று நம் தமிழர் போற்றுகின்றனர். ரஷ்ய மொழி பிறப்பில் இளையாள் எனில், அறிவாழத்தில் முதியாள் என உலகம் போற்றுகிறது. 2. ரஷ்ய வெற்றியின் படிப்பினை ரஷ்யர் வெற்றியின் மறைமெய்ம்மைகள் அவர்கள் மொழியின் உள்ளார்ந்த சிறப்பும், அவர்கள் உயர்மக்கட் பற்றும் பரந்த விடுதலை உணர்வுமேயாகும். ரஷ்யர் பிற மொழிகளைப் பின்பற்றியே வாழ நினைத்த காலத்தில் சிறந்த ரஷ்ய எழுத்தாள ரான துர்கெனிவ் கூறிய மொழிகள் இவ்வுண்மையை வலியுறத்தும். “ரஷ்யர் வாழ்வில் எங்கும் ஐயமும், துயரும், இருளும் சூழ்ந்துள்ளன. இவற்றுக் கிடையே எதிர்கால நம்பிக்கைக்கு இடமான ஒளி உண்டானால் அது எம்மரிய ரஷ்ய மொழியேயாகும்” என்று அவர் தம்மைத் தாமே ஆற்றிக்கொண்டார். அவர் கூறியது வெறும் மொழிப்பற்றின் காரணமாக அன்று என்பதைப் பல உலக அறிஞர்கள் ரஷ்ய மொழி பற்றிக் கூறும் கூற்று மெய்ப்பிக்கிறது. தேவோகு1 என்ற பிரஞ்சு அறிஞர் “ஐரோப்பிய மொழிகள் எல்லாவற்றிலும் வளமும் நிறைவும் உடையது ரஷ்ய மொழியே” என்று உரைக்கிறார். மேலும் லாமனஸாவ்2 என்ற ரஷ்ய எழுத்தாளர் கூறுவதாவது; “கடவுளை நோக்கி உரையாடுவோர் ஸ்பானிஷிலும், நண்பரிடம் உரையாடு வோர் பிரஞ்சிலும், பகைவரிடம் வாதிடுவோர் ஜெர்மனியிலும், பெண்களுடன் நல்லுரையாடுவோர் இத்தாலியிலும் பேசுதல் சால்புடையது என்பர். ஆனால், இவ்வெல்லா இடத்திலுமே ரஷ்ய மொழியை வழங்குதல் கூடும். ஏனெனில், அதில் ஸ்பானிஷின் பெருமிதமும், பிரஞ்சு மொழியின் நயமும், ஜெர்மனியின் திண்மையும், இத் தாலியத்தின் இனிமையும், கிரேக்க இலத்தீன் மொழிகளின் சொல் வளமும், சுருக்கமும் தெளிவும் ஆகிய யாவும் இயல்பாக அமைந்து ள்ளன” என்பதே அவர் கூற்று. இதே சிறப்புக்கள் இந்திய மொழிகளில் தமிழுக்கும் உரியவை என்பதை சர். சி.பி. ராமசுவாமி அய்யர், பி.டி. சீனிவாச ஐயங்கார், சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்), வின்ஸ்லோ, காந்தியடிகள், போப் முதலிய பிறமொழி வல்லுநர்களே ஒத்துக் கொண்டிருப்பதால் அறியலாம். தமிழின் உள்ளார்ந்த பெருமை இலக்கியத்தை மட்டும் சார்ந்ததல்ல; மொழியிலேயே இயல்பாய் அமைந்திருப்பது என்பதனால்தான் பல காலத்தில் இலக்கியம் அழிவுற்றபோதும் வேரினின்றும் புதுவளங் கொழிக்கும் மரங்கள் போல் அது புத்திலக்கியந் தோற்றுவித்திருக்கிறது என்று காணலாம். மொழியின் இவ்வடிப்படைத் தன்மையோடு ரஷ்யர் உள்ளத்தின் உயர்வும் ரஷ்யர் வெற்றிக்கு வித்தாயிற்று. ரஷ்யர் நாட்டுப்பற்று, குறுகிய நாட்டு வெறியும் அன்று; தன்மதிப்பற்ற அடிமைத்தனமும் அன்ற. உலகப்பற்றோடொத்த சரிநிகர் உணர்ச்சியே அவர்கள் நாட்டுப்பற்றாகிப் பழந்தமிழர்போல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கொண்டவர்கள் அவர்கள். ஆனால், தற்காலத் தமிழன் போலத் ‘தனக்கென ஊரில்லை. தம்மவர் மட்டும் கேளிரில்லை’ என்ற அடிமை மனப்பான்மை அவர்களிடம் கிடையாது. கூடப்பிறந்த உடன் பிறப்பாளர் தம்மவர் அல்லர்; கைகோத்து நிற்கும் கயவர்கூடத் தம்மவரல்லர்; கழுத்தை நெரிக்கும் பகைவர்தாம் தமக்குரிய உறவினர் என்றும் அவர்கள் கொள்ள வில்லை. இக் காரணத்தால் உலகில் நல்லதெனக் கண்ட எப் புதுமையையும் ரஷ்யர் தயங்காது ஏற்றுத் தமதாக வளர்த்தனர். எனினும் மொழியின் தூய்மையையும் அவர்கள் இதனால் கெடுக்கவில்லை. உள்ளார்ந்த தன்னம்பிக்கையிலும் மாறுபடவில்லை. உலகிலுள்ள மொழிகளில் எல்லாம் தமிழைவிடக் கூடத் தற்பண்பையும் தூய்மையையும் சற்றும் கெடாது காத்த மொழி ரஷ்ய மொழியே எனலாம். இத்தகைய தூய்மை விரும்பத்தக்கது தானா என்பதில் தயக்கம் காட்டுபவர் பலர் பிறநாடுகளிலும் இந் நாட்டிலும்கூட உண்டு. ஆனால், இத் தூய்மையின் ஒரு நற்பலன் ரஷ்ய மொழிக்கு உலகில் ஒப்புயர்வற்ற - போட்டியற்ற முதல் இடம் தந்திருக்கிறது என்பதை அவர்கள் கவனித்தால் அவர்கள் தம் கொள்கையை மாற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை. தமிழ் உட்பட ரஷ்யமொழி நீங்கலான எல்லா மொழிகளிலும் இலக்கிய நடை மொழி வேறு, பேச்சு நடைமொழி வேறு. பேச்சுநடையில் இலக்கியம், கவிதைகூட, எழுதவேண்டும் என்று பலர் அவாவுறுகின்றனர். ஆனால், மற்ற மொழிகள் அதற்கு அவ்வளவு இடம் தரவில்லை. ரஷ்ய மொழியில் உலகில் வேறெம் மொழியிலும் இல்லாத அளவு கவிதை உரைநடை இலக்கியம் ஆகியவற்றின் மொழிநடை பேச்சுமொழி நடைக்கு அருகாமையி லிருக்கிறது. அதன் பயனாகவே டால்ஸ்டாய் முதலிய எழுத்தாளர்கள் உரைநடையிலும் புரட்சிக் கவிஞர் நடையிலும் பேச்சு நடை. அப்படியே இலக்கிய நடை யாகவும் காட்சியளிக்க முடிந்தது. தமிழில் பிறமொழியாளரின் பிறமொழி ஆட்சி ஒன்றே ரஷ்யமொழியுடன் ஒத்த இத் தன்i மயைத் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் அழித்து வருகிற தென்னலாம். 3. ரஷ்ய இலக்கியத்தின் தனிச்சிறப்புகள் ரஷ்யர் கலை, இலக்கியம் ஆகியவற்றின் சிறப்புக்கள் பல. அவற்றுள் தலைமையானவை ரஷ்ய இலக்கியத்தின் வாய்மை, அகலம், நிறைவு ஆகியவையே. உலகில் பிறநாடுகளின் கலைவாழ்வையும் வரலாற்றையும் தனித்தனி விரித்துரைத்தல் கூடும். ஏனெனில், அவை பெரும்பாலும் தனித்தனி வளர்ச்சிகளாயிருக்கும். ஆனால், ரஷ்யர் வரலாற்றின் வாழ்வும் கலையும் பூவும் மணமும் போல இரண்டறக் கலந்தே நிற்கும். அவர்கள் சமய உணர்வுகூட மக்கள் உள்ளத்தின் ஒரு நிலையேயன்றி வானத்திலிருந்தோ, அல்லது கண்கட்டி உலகங் களிலிருந்தோ குதித்த மாயப்பிறப்பன்று. வாழ்க்கையை வாழ்க்கை யாகவும், உலகை உலகாகவும் கண்ட உலக இலக்கியங்கள், தற்காலத்தில் ரஷ்ய இலக்கியமும், முற்காலங்களில் கிரேக்க இலக்கியமும் தமிழ்ச் சங்ககால இலக்கியமும் மட்டுமேயாகும். ‘அருள்’ என்ற சொல் இன்று ஏதேல உலகியல் கடந்த நிலைமையைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. ஆனால், அது உண்மையில் மைம்மாறு கருதாத வரம்பற்ற அன்புநிலையே யாகும். இவ்வருளே ரஷ்ய இலக்கியம் உலக இலக்கியமாய் விட்டதன் காரணமான மூலப் பண்பாகும். அரண்மனை வாழ்வும், அங்காடி வாழ்வும் இன்பமும் துன்பமும், மனிதர் இயல்பும் விலங்கு பறவை இயல்பும் விலங்கு பறவை இயல்பும் ஆகிய இயற்கையின் எல்லாத் துறைகளிலும் உள்ளதை உள்ளபடி காட்டும் பண்பு, ரஷ்ய இலக்கி யத்தில் அமைந்ததுபோல் வேறெல் விலக்கியத்திலும் அமைந்த தில்லை. இதன் காரணம் ரஷ்ய எழுத்தாளர் உலகின் எவ்வு யிருள்ளும் உள்ளுணர்வுடன் கலந்து தன்னிலை மறந்து அதன் உள்ளீடான உளப் பண்பாட்டையும் வாழ்வையும் எடுத்துக்காட்டும் அருள்திறம் பெற்றவர்களாய் இருந்ததுதான். ரஷ்யப் பேராசிரியர் டால்ஸ்டாப் வாழ்க்கையிற் கண்ட ஒரு செய்தி இதனை நன்கு விளக்கும். கூதிர்ப் பருவத்தின் குளிர்மிக்க பனியிடையே சோர்ந்து வாடிய நிலையிலும் ஒரு குதிரை தன் தலைவனை எதிர்நோக்கி வண்டியை இழுக்காது நின்றதைக் கண்டு டால்ஸ்டாப் தம் நண்பர் துர்கெனிவிடம் அக் குதிரை மனத்தில் எண்ணும் எண்ணங்களைச் சித்திரித்து ஒரு சிறு நாடகமாக்கிக் காட்டினாராம். அதில் குதிரை தன் முன்னோர் பெருமை, தன் சிறுமை, தன் கடமை ஆகியவற்றைச் சிந்தித்து நின்றதாகக் குறித்தி ருந்தனர். அது கண்டு உருக்கமும் கனிவும் நகைத்திறமும் உடைய வராய் துர்கெனில் ‘குதிரையின் உள்ளமும் மரபும் உள்ளபடி நீங்கள் உணர்ந்து உரைப்பதை நோக்க, உங்கள் முன்னோர்களில் பலரும் குதிரைகளாகவே இருந்தனர் போலும்’ என்றாராம். ரஷ்ய இலக்கியம் பிந்தித் தோன்றியதாதலின் முதலில் மொழி பெயர்ப்பையே நாடிற்று பின் பிறநாடுகளில் அவ்வக் காலங்களில் தோன்றிய எல்லா இலக்கிய இயக்கங்களையும் பின்பற்றிற்று. ஆனால், பின்பற்றிய ஒவ்வோர் இயக்கியத்திலும் ஆசிரியருக்கு ஆசிரியராகுமளவு அது தன் ஒப்பற்ற தனிப் பண்பை அதனுடன் கலந்து உலகுக்குப் புத்துணர்வு வகுத்துத்தந்து வழிகாட்டிற்று பெயரளவில் கடனெனத் தாம் வாங்கிய கடனைப் பன்மடங்கு திருப்பித்தரும் இப் பண்பில் ரஷ்ய இலக்கியத்துடன் ஒப்புமை யுடைய மேலைநாட்டு இலக்கியம் ஜெர்மன் இலக்கியம் ஒன்றே. ஆனால், ரஷ்ய இலக்கியம் இவ்வகையில் ஜெர்மன் இலக்கியத்தைப் பலபடி தாண்டிச் சென்றிருக்கிறது; இன்னும் செல்லும் என்பதற்குத் தடையில்லை. தமிழிலும், வடமொழி இலக்கியங்களைப் பின்பற்றியதாகக் கொள்ளப்படும் இடைக்காலங்களில் (கம்பர், தலபுராண காலங் களில்கூட) உண்மையில் வாங்கியதைவிடக் கொடுத்ததே பன்மடங் கென்பதைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் காணலாம். இவ் விடத்தில் ரஷ்யர், அறிவியல் (விஞ்ஞான) வளர்ச்சி பற்றிக் கூறப்படும் ஒரு கூற்று, நாகரிகம், இலக்கியம் ஆகிய துறைகளுக்குப் பொருந்தும் என்பது நினைவூட்டத்தக்கது. “பிரஞ் சுக்காரன் ஒரு புதுமையைக் காண்பதில் கெட்டி; ஆங்கிலேயன் அதைத் தொழிலாக்கத்தில் பயன்படுத்துவான்; ஜெர்மன் அதை வாழ்க்கையோடொட்டவைத்து உருவமைத்து ரஷ்யனுக்கு விற்பான்; ரஷ்யன் விலைகொடுத்தும், கொடுக்காமலும் திருடியும் அதைப் பெற்றுப் புதிய உலசுமைக்கும் உலைக்கூட மாக்குவான்” என்பதே அக் கூற்று. 4. கருநிலைத் தோற்றம் தமிழகம், இந்தியப்பரப்பு ஆகியவை பிறநாடுகளிலிருந்து மலை முதலிய இயற்கையரண்களால் பிரிந்திருப்பது போல ரஷ்யா பிரிந்திருக்க வில்லை. மனித நடமாட்டத்திற்கு இடம்தரா வட மாகடல் நீங்கலாக மற்றப் பக்கங்களில் அதன் வாயில்கள் எங்குந் திறந்த வெளிகளே. ஆதலால் ஸ்காந்தநேவியர், பின்னியர், ஸ்லா வியர், மங்கோலியர் முதலிய பல இனத்தவர் வரவு படையெ டுப்புக்கு ஆளாய் அது அண்மைவரை அல்லலுற்றது. எனினும், அதன் அகன்ற பரப்பின் காரணமாக வந்தவர் பெரும்பாலும் பிற அயலார் தொடர்பற்று நாட்டுடன் ஒன்றுபட்டனர். ரஷ்ய மொழியின் தூய்மையும் அந் நாட்டின் எல்லையற்ற பரப்பாலேயே பாதுகாக்கப்பட்டது. 18,19 ஆம் நூற்றாண்டு வரையில்கூட ரஷ்யா ஐரோப்பாவில் பகுதி என்பதைவிட ஆசியாவின் ஒரு பகுதியாகவே இருந்துவந்தது என்னலாம். ஐரோப்பிய வாழ்க்கை முறை நாகரிகமும் ரஷ்யப் பேரரசர் பீட்டர், பேரரசி இரண்டாம் காதரின் போன்றவர்களால் வலியுறுத்திப் புகுத்தப்பட்டவையே யாயினும் நாளடைவில் நிலையான பயன் தந்துவிட்டன. ஐரோப்பிய நாகரிகம் ஐரோப் பாவில் அழிந்துவிட்டாலுங்கூட ரஷ்யாவில் அழியாது நிற்கும் என்று உறுதியாகக் கூறலாம். அது மட்டுமன்று; களங்கமற்ற ரஷ்யர் உள்ளத்தில் பகுத்தறிவாகிய உலைத் தீயில் பட்டு ஆசிய ஐரோப் பியப் பண்பாடுகள் யாவுமே துகள் நீங்கிப் பத்தரை மாற்றுடன் புத்துலக நாகரிகமாகப் புதியதோர் உலகைப் படைக்க உதவும் எனப்தில் ஐயமில்லை. ஒழுங்கான ரஷ்ய இலக்கியம் 18 ஆம் நூற்றாண்டில் பிற மொழித் தொடர்பாலேயே ஏற்பட்டதாயினும், அதற்கு முன் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு எழுதா இலக்கியமாகப் பொதுமக்களிடையே பல பழங்கதைகள் நிலவின. இவற்றுள் பல பாடல்களாகவும், உரைநடைக் கதைகளாகவும் அவ்வப்போது உருப்பெற்றன. இவற்றுட் சில ஐஸ்லாந்து, ஸ்காந்தினேவியா, பிராசு நாடுகளின் பழைய வீரப்பாடல்கள்3 போன்ற தொகுப்புக்கள் ஆயின. இவற்றை ரஷ்யர், ‘பைலிங்’ தொகுப்புக்கள்4 என்கின்றனர். பைலிங் தொகுப்பிற் சிறப்புமிக்கது. ‘இகோரின் படைமுயற்சி”5 என்பதாகும். இது போலாவ்ட்ஸ்கி என்ற புறச்சமயத் தலைவன்மீது இகோர் என்ற உரை ஸ்காந்தினேவிய வீரன் 1180 இல் நிகழ்ந்த போரைப்பற்றிய நடைக்காவியம் ஆகும். இது பெயரளவில் கிறித்துவ சமயச் சார்பானதாயினும் உண்மையில் பண்டைய ரஷ்ய மக்கள் வாழ்வின் துடிப்பையும் இயற்கை அமைதியையும் விளக்குவ தாகும். ஞாயிற்றின் ஒளி, ஆற்றினொழுக்கு, பனி போர்த்த வடகடல், மலை முதலிய இயற்கையழ குணர்ச்சிகள் நிரம்பிய இந்நூல் உரைநடை நூலாயினும் ரஷ்யர் உணர்ச்சிப் பாடல் செல்வமாகப்6 போற்றப்படுகிறது. ஆயினும், கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் வரை இது ரஷ்யரால் (தமிழ்ச்சங்க நூல்கள் போல்) மறக்கப்பட்டு, மறைந்த ஏடாகவே கிடந்து 1795லேயே கண்டெடுத்து அச்சிடப்பட்டது. 1812 இல் அது அரசியல் புரட்சியாளரால் எரிக்கப்பட்டதை நோக்க, அதனை அச்சிட்டுக் காத்தவர் ரஷ்யரால் பெரிதும் போற்றற்குரியவரே என்பது தெளிவு. செத்துப் பிழைத்த இப்பழம் புதையல் நீங்கலாக, அதனைத் தொடர்ந்து 7 நூற்றாண்டுகளாக மேலை ஐரோப்பியக் கதிரொளி ரஷ்யாவுக்கு எட்டவேயில்லை என்னலாம். 10 ஆம் நூற்றாண்டில் மாக்ஸிம் என்ற கிரேக்கத் துறவி இத்தாலி நகரமாகிய பிளாரென்ஸிலிருந்து மாஸ்கோ வந்து இத்தாலிய இலக்கியத்தின் பேரொளி விளக்கங்களை ரஷ்யாவுக்குத் தர முனைந்தார். ஆனால் ரஷ்யரின் எதிர்ப்புக்கு இரையாகி அவர் மாள வேண்டி நேர்ந்தது. 9ஆம் நூற்றாண்டில் ஸ்காந்தினேவியத் தொடர்பால் எழுந்த இவ் விலக்கியப் பொறி 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியராகிய தாத்தாரியர் படையெடுப்பால் சீர்குலைந்தது. அதனுடன் இதுவரை ரஷ்யர் அரசியலிலும் கலையிலும் தலைமையிடமாயமைந்த கீவின் தலைமை நிலையும் அழிந்தது. அதன்பின் மாஸ்கோ நகரில் குழுமிய பல ரஷ்ய இளவரசர் இடைவிடா முயற்சியால் 16 ஆம் நூற்றாண்டில் தாத்தாரியர் துரத்தப்பட்டு மாஸ்கோவில் புதிய ஆட்சிமுறை ஏற்பட்டும், அத் தாத்தாரியர் புகுத்திய பழமை மனப்பான்மையும் குருட்டுப் பழக்க வழக்கங்களும் நெடுநாள் அழியவில்லை. 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிரேக்க கத்தோலிக்கச் சமயத்தவர் உறவு ஏற்பட்டு, அதனால் இன்னொரு வகையில் பழமைப் பற்றும் கட்டுப்பாடும் வளர்ந்தன. சமயச் சடங்குமுறை நூல்கள் சிலவும் செய்தித் தொகுப்புரைகளுமே7 இக் காலத்தின் இலக்கியமாயின. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் (1689 முதல் 1825 வரை ஆண்ட) பேரரசன் பீட்டர், ரஷ்யாவை ஓர் ஐரோப்பிய நாடாக்கப் பெரும் பாடுபட்டார். இவர் ஐரோப்பிய நடையுடைகள், நிலையங்கள், வழக்கங்கள் ஆகியவற்றைத் தம் அரசவை மூலமும் சட்டங்கள் மூலமும் மக்கள் மீது சுமத்தினார். மேலைநாட்டு நூல்கள் பலவற்றை மொழி பெயர்த்தார். அவர் காலமுதல் அண்மையில் ஏற்பட்ட புரட்சிக் காலம் வரை பீட்டர்ஸ்பர்க் என்ற லெனின் கிராடே ரஷ்யாவின் கலைக் கோயிலாய் விளங்கிற்று. பீட்டரின் முயற்சிகள் இலக்கியத்தில் எத்தகைய அரிய செயலும் செய்ய முடிய வில்லையாயினும் அது, சமயத் தலைவர்களின் பல்லுடைபடும் பொருள் விளங்கா இலத்தீன், கிரேக்கத் தொடர்களிலிருந்து விடுதலையளித்து எளிய மக்கள் பேச்சுமொழி நடையொன்றை ஏற்படுத்திற்று. பீட்டருக்குப் பின் வந்த இரண்டாம் காதரின் (1762-1796) இன்னும் முற்பட ஐரோப்பிய இலக்கியத்தை ரஷ்யாவில் கொண்டுவர முயற்சி எடுத்துக்கொண்டார். வால்தேர், மாண்டிஸ்கூ, டிடரோ8 முதலிய அந்நாளை அறிஞருடன் அவர் கடிதப் போக்குவரவு செய்து அவர்கள் கருத்துக்களைப் பரப்ப முயன்றார். முற்போக்கான அரசியல் சீர்திருத்தக் கருத்துக் களடங்கிய அவர்களது ‘நபாஸ்’ என்ற அரசியல் தொகுப்பில் இவை இடம்பெற்றன. ஐரோப்பிய அரசி எழுதிய இந் நூல் மீது பிரான்சில் தடைஉத்தரவு பிறப்பிக்கப் பட்டதாம்! இஃது ஒரு வரலாற்றுப் புதிராயினும் இதனினும் வியப்புடைய புதிர் ஒன்று உண்டு. இவ்வளவு முற்போக்குக் கொள்கையுடைய அரசி செயலளவில் கொடுங்கோலர்களுடன் சேர்ந்து தம் நாட்டில் அடக்குமுறையே நடத்த வேண்டி நேர்ந்தது. 19ஆம் நூற்றாண்டு முழுவதும் இலக்கிய எழுத்தாளர்கள். மதிப்பு ரையாளர்கள் யாவரும் பழமைக்கட்சி, மேலைப் புதுமைக் கட்சி என இரு பிரிவு ஆகவே பிரிக்கப்பட்டிருந்தனர். தமிழுலகத்தில் சமயம் சாதிகள் காரணமாக எவரும் இலக்கியத்தை இலக்கியமாகக் கருதமுடியாதிருப்பது போலவே ரஷ்யாவிலும் அரசியல், சமூகவியல், கருத்தியல் கட்சி வேறுபாடுகள் காரணமாக இலக்கிய நோக்குச் சிதறிக் கிடந்துள்ளது. ரஷ்யர் தம் இலக்கியத்தின் தந்தை எனக் கொள்வது லாமனஸாவையே9. இவர் இலக்கியத்திலும் மற்றத் துறைகளிலும் பல திறப்பட்ட ஆற்றலுடைய முழு அகற்சியுடையவர். 1755 இல் இவர் ரஷ்யமொழி இலக்கணம் ஒன்று எழுதினார். ரஷ்யாவின் முதல் பல்கலைக்கழகமாகிய மாஸ்கோ பல்கலைக்கழகம் நிறுவ உதவியவரும் இவரே. பீட்டரின் மேலைநாட்டுக் கொள்கைகளை நிலைநாட்டி அவர் சிறப்பைப் பாடும் இவரின் பாடல்களே தற்கால ரஷ்ய இலக்கியத்தின் தொடக்கமாகக் கொள்ளப்படு கின்றன. ஆயினும், இவர் கலைப்படைப்பு கலை என்பதற்கில்லை உண்மையில் கலை யுலகில் ரஷ்யப் புது இலக்கியத் தந்தையர் என்று கொள்ளத் தக்கவர்கள் தெர்ழவின்10 (1743-1816) என்ற கவிஞரும், கராமெய்ன்11 (1765-1826) என்ற உரைநடை எழுத்தாளருமேயாவர். தெர்ழவின் இரண்டாம் காதரின் அரசியின் அவைப்புலவராயிருந்து அவர் பேரில் புகழ்ப்பாக்கள் பாடியவர். புதிய பிரஞ்சு வாய்வியல்12 புலவரைப் பின்பற்றி ரஷ்யர் பேச்சுமொழியிலேயே பாடல்கள் இயற்றிய முதற் கவிஞர் இவர் காரமெய்ன் இதே காலத்துச் சிறந்த உரைநடை ஆசிரியர். அவர் எழுதிய ரஷ்யநாட்டு வரலாறு அக் காலத்தின் தலைசிறந்த நூல் மட்டு மன்று; இன்று மதிப்பும் பயனும் உடையது. 5. புத்திலக்கியப் பிறப்பு காதரின் அரசிக்குப்பின் பட்டமேற்ற முதல் அலெக்ஸாண்டர் இலக்கியத்திலும், பத்திரிகைகளிலும் ஆர்வம் காட்டினார். அதன் பயனாக அவற்றின் மீதுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் ‘மாஸ்கோ ஜர்னல்’ ‘ஐரோப்பிய தூதன்’ என்ற பத்திரிகைகள் தழைத்தோங்கின. ஐரோப்பிய தூதனைத் தோற்றுவித்தவர் காரம்ஸீன்13. இவர் 12 ஏடுகளில் விரிவாக எழுதிய ரஷ்ய ஆட்சி வரலாறு பெயரளவில் வரலாறாய் இருந்தாலும், உண்மையில் ரஷ்யா பற்றிய ஓர் உரைநடைப் பெருங்காப்பியமாய் அமைந்தது ரஷ்யாவின் பெருமையை ரஷ்யருக்கு எடுத்துக் காட்டிய முதல்நூல் இதுவே. காரம்iஸீனைத் தொடர்ந்து மேலை ஐரோப்பிய இலக்கியங் களைப் பின்பற்றியும், மொழிபெயர்த்தும், தழுவியும் எழுதியவர் பலர். இவர்களிடையே பேஸில் ழுகாவஸ்கி14 (1789-1852) கிரைலாவ்15 (1769-1844). கிரிபாயெதாவ்16 (1798-1829) ஆகிய மூவரும் தலைமை வாய்ந்தவர்கள். ழுகாவ்ஸ்கி உலகிலேயே ஒப்புயர்வற்ற மொழியெர்ப் பாளராகக் கொள்ளப்படுகிறார். ஆங்கிலத்தில் கிரேயின் ‘இரங்கற்பா’ ஜெர்மனியில் ஷில்லரின் ‘ஆர்லியன்ஸ் நங்கை’ ஆகிய மொழி பெயர்ப்பதற்கரிய உணர்ச்சிப் பாடல்களையும் கிரேக்க மொழியின் பெருங்காவியமாகிய ஒடிஸியையும் மொழிபெயர்ப்பல்ல, புத்திலக்கியம் என்னும் முறையில் இவர் மொழிபெயர்த் துள்ளார். கிரைலாவும் கதைப்பாடல்கள் எழுத முனைந்து முதலில் பிரஞ்சுக் கதைப்பாடல் மன்னர் லா ஃபொந்தேயினுடைய கதைகளையும், பிறகு உலகப் பழங்கதையாளர் ஈஸப்பின் கதைகளையும் புத்தழகு பெற மொழிபெயர்த்தார். இதன்பின் எண்ணற்ற புதுக்கதைப் பாடல்களை இயற்றினார். கிரிபாயெதாவ் “அறிவுடையார் படும் அலைக்கழிவு” (கோரே உட்உமா) என்ற சமூகக் களிநாடகம்17 இயற்றினார். இத்துறை இலக்கியத்தில் இது இன்றும் ஒப்பற்ற நூலாகவே இருந்து வருகிறது. 6. இலக்கிய வளர்ச்சி-புஷ்கின் ஊழி ழுகாவ்ஸ்கியாலும் அவர் தோழர்களாலும் ரஷ்யா இலக்கிய உலகில் முதல்தர இலக்கியம் ஆயிற்று. இங்ஙனம் அன்றைய இலக்கியங்களுள் இடம் பெற்றதுமன்றி அவ்வுலகில் தனிப் புகழாட்சி செலுத்திவந்த பிரஞ்சு இலக்கியத்துடன் அதன் புகழ்த்தவிசுக்கு அது போட்டியிடவும் தொடங்கிற்று. 18 ஆம் நூற்றாண்டில் டால்ஸ் டாய், டாஸ்டோயெவ்ஸ்கி ஆகிய வர்கள் மூலமும் 20 ஆம் நூற்றாண்டில் கார்க்கி மூலமும் அது அப் போட்டியையும் தவிர்த்துக் கலையுலகில் பேரரசாட்சி நிறுவலாயிற்று. ஆயினும் இப்புகழ் அனைத்திற்கும் உயிர்நிலைநாடி. புஷ்கினே எனல் வேண்டும். புலவர்கள் தத்தம் நாட்டு வாழ்வில் எட்டமுடியாக் கொடு முடிகளாக விளங்கினர். ஆயினும் அவர்கள், திருத்தக்க தேவர், ஸ்பென்ஸர், வோட்ஸ் வொர்த் முதலிய நாட்டுக் கவிஞர்கள் போல் தம்தம் கவிதையால் பிற கவிஞருக்கு உயிரூட்டுவதில் பயன் பெறவில்லை. புஷ்கின் உலகக் கவிஞரல்லராயினும் நாட்டு வாழ்வில் உலகக் கவிஞரினும் வாழ்வொளி பரப்ப உதவிய நாட்டு எழுத்தாளர் ஆவர். புஷ்கின்18 வாழ்க்கை மிகவும் துன்பமயமானது; குறுகியதும் கூட ஆயின், அதற்குள் அவர் ரஷ்யருக்கு உயிர்நிலை இலக்கிய ஊற்றுக்களான பற்பல நூல்களை எழுதிக்குவித்தார். அவர் இயற்றிய பெருநூல்களில் சிறந்தவை யூகென் ஆனெகன்19 போரிஸ் கோடுனாவ்20 குழுவர்21 காக்கஸஸ் சிறையாளி22 ஆகியவை. இவற்றுள் ஆனெகன் ரஷ்யாவின் முதல் புனைகதை ஆகும். இதுவும் காக்கஸஸ் சிறையாளியும் பைரன் பாடல்களின் இயல்பை ஒத்தவை. இவற்றின் கதைகள் தமிழில் ‘சீவக சந்தாமணி’க் கதையையும் வடநாட்டு விக்கிரமாதித்தன் கதையையும் போன்ற வீரக்காதல் கதைத்தொடர் ஆகும். இவற்றின் கதை யுறுப்பின ரோவியமும் கருத்தோவியமும் பிற்காலக் கவிஞர் பலருக்குத் தூண்டுதலாயிருந்தன. குழுவரில் நாடோடிகளின் வாழ்க்கையின் மறைதகவின்மையும் ஆழ்ந்த மனித உணர்ச்சிகளும் நன்கு விளக்கமடைகின்றன. போரிஸ் கோடுனாவ் ஷேக்ஸ்பியரின் வரலாற்று நாடகங்களை ஒட்டியவை; அவற்றின் முதற்பொருள் காரம்ஸீன் வரலாற்றினின்று எடுக்கப்பட்டது சிறுநூல்களில் “அறிவ”னும்23 சிறுகதையில் “மீன் படவமும் மீனும்” என்ற கதையும் தலைசிறந்தவை. அவருக்குத் தனிச் சிறப்புத் தரும் துறை நாட்டுப்புறப் பாடல்களும்24 நாட்டுத் தெய்வக் கதைப் பாக்களுமே25யாகும். ‘போப்பும் அவர் ஆளான பல்டாவும்’, ‘இறந்த இளவரசி’26 ‘பொற் சேவல்’ ‘மாப்பிள்ளை’27 ஆகியவை இத்தரத்தன. புஷ்கின் தம் கால அறிஞரிடையே பெருமதிப்புடன் வரவேற்கப் பட்டாராயினும் ரஷ்ய நாட்டுக்கு அவர் செய்த பணியின் உண்மைப் பெருமை அவர் இறந்து நெடுநாட் பின்னரே உணரப்பட்டது. 1883இல் டால்ஸ்டாயுடன் ஒப்பான உலக எழுத்தாளரென மதிக்கப்படும் டாஸ்டா யெவஸ்கியின் தலைமை யிலேயே அவர் உருவச்சிலை திறக்கப்பட்டு அவர் நாட்டுக் கலைச் செல்வர்களின் வரிசையில் இடம் பெற்றார். புஷ்கினின் மாணவரும் அவர் அமைத்த இலக்கியக் கழகத்தின் உறுப்பினருமான லெர்மாண்டாவ், புஷ்கினை யடுத்து ரஷ்ய இலக்கியத்தில் தலைமைநிலை அடைந்தார். புஷ்கின் பாடல்கள் கரை நிறைந்தொழுகும் அமைந்த ஆற்றொழுக் கானால், லெர்மாண்டாவின் பாடல்கள் பாறைக்குப் பாறை குதித்தடித் தோடும் கானாறு ஆகும். புஷ்கின் ரஷ்ய இலக்கியத்தின் வாய்வியல்28 மரபினர். லெர்மாண்டாவ் அதன் புனைவியல்29 மரபினர். ஆனால், பிறநாட்டுப் புனைவியலாளர் போல் அவர் புனைவியல் உலகில் வாய்மைக்குப் புறம்பான அல்லது அப்பாற்பட்ட அல்லது மாய மருட்கையுடைய புனைவியலன்று கம்பனின் ஓங்கியடிக்கும் உயர்வு நவிற்சியோ, கீட்ஸ், டெனிசனின் மாயப் படைப்போ, கால்ரிட்ஜின் கண்கட்டு உலகோ அதில் கிடையாது. அவர் புனைவியல் திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியையும், ஓரளவு இளங்கோவையும் காளிதாசனையும் நினைவூட்டும் உலகியல் மெய்ம்மையில் வேரூன்றிய புனைவியலேயாகும். புஷ்கின் மறைவுபற்றிய புகழ்ப்பாடல்30 ‘பேய்’ என்ற காவியம். இஸ்மாயில் பேய்31 போயர் ஆர்ஷா32 ஸார் இவான் பாடல்33 ஆகியவை இவர் தலைமை வாய்ந்த செய்யுள் நூல்கள். 7. உரைநடை ஆக்கம் இதே காலத்துக்குரிய பிற இலக்கிய எழுத்தாளர் ‘பியெ லென்ஸ்கி, கொகால், துர்கெனெவ் ஆகியவர்கள். இவர்கள் காலமே உரைநடை இலக்கியத்தின் செழித்து வளர்ச்சிக் காலமாம். பிய லென்ஸ்கி34 ரஷ்யாவின் முதல் மதியுரைஞர். இவர் புஷ்கின், லெர்மாண்டால், ழுகாவ்ஸ்கி, கிரிபாயெதாவ் ஆகியவர்கள் இலக்கியங்களைப்பற்றிக் கூறிய மதிப்புரை நடுநிலைமையுடை யதாதலால் நிலையான மதிப்புரைக்கு வழிகாட்டியா யிற்று. புதிய எழுத்தாளரான கொகால், டாஸ்டோயெவஸ்கி ஆகியவர்களுக்கு அவர் ஆதரவளித்து வழிகாட்டியாகவும் விளங்கினார். ஆயினும், ரஷ்யக் கலையுலகின் இருபெரும் கட்சிகளுள் அதாவது பழமைப் பற்றாளர் அல்லது ஸ்லாவியப்பற்றாளர், மேலை நாட்டிலே பற்றாளர்35 ஆகியவர்களுள் இவர் பொதுவாகப் பழைமைப் பற்றாளரை எதிர்த்து மேலையியலாருக்கு முழு ஆதரவும் தந்தார். கொகால் தென் ரஷ்யாவிற் பிறந்தவர். இலக்கிய மொழி யாகிய பெரிய ரஷ்ய மொழியினின்றும் சற்று வேறுபட்ட சிறிய ரஷ்ய மொழியாகிய தம் தாய் மொழியிலேயே இவரால் தொடக்கக் கால நூல்கள் எழுதப்பட்டன. இவர் சிறந்த உரைநடை எழுத்தாளர். ஆனால் இரண்டுவகைகளில் இவர் நூல்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கின்றன. ஒன்று இவர் நூலில் தீட்டப்படும் கருத்துக்கள் முற்றிலும் ரஷ்யப்பண்பும் ரஷ்யமரபும் நிறைவுற்றவை. இக் காரணத்தாலேயே புஷ்கினைப்போல இவரும் பிற நாடுகளில் மிகுந்த புகழ்பெற முடியாத உள்நாட்டுப் புலவராய் விளங்கினார். இவரது இன்னொரு பண்பு உலகியல் கடந்து இயற்கைக்கு அப்பாற் பட்ட சிறு தெய்வ, பேய்உலகச் செய்திகளுக்கு இவர் முதலிடம் கொடுத்ததேயாகும். இதனால் இவற்றில் இவர் நம்பிக்கையை வளர்த்தார் என்று. கொள்ளக்கூடாது. இத்தகைய உளநிலைகளைக் கலையோவியத்துக்குப் பயன்படுத்தினார் என்று மட்டுமே கொள்ள லாகும். இவர் தலைசிறந்த காவியம் பேய்36 என்பதே. ஆனால், இக் கலையுலகப் பேய் மனித உணர்ச்சியுடையது. ஒரு பெண்ணைக் காதலித்துக் கனிவும் மனிதபாசமும் கொண்டு அச்சிக்கலால் அப்பெண்ணையும் பேயாகக் கூட்டிச் சென்றதை இது கூறுகிறது. ‘சோராச்சினெட்ஸ் விழா’, ‘தாராஸ் பலபா’ ‘வீய்’ ‘கவினோ வியங்கள்’ முதலிய பல சிறுகதைகளும் இவர் கலைப்படைப்பில் சேர்ந்தவை. நாடகத்துறையில் கொகாலின் ‘மேற்பார்வையாளர் தலைவர்’37 கிரிபாயெதாவின் ‘கோரேஉட்உமா’வுக்கு அடுத்த படியான சிறந்த களிநாடகம். ‘இறந்த ஆவிகள்’38 இவர் ஒப்பற்ற இலக்கியப் படைப்பு. இதன் கதைத் தலைவன் ஷேக்ஸ்பியரின் பால்ஸ்டாப்புக்கு ஒப்பான இறவாகக் கலைச் சித்திமாகக் கருதப்படும் தலைவன் ஆகும். துர்கெனிவின்39 வாழ்க்கையை ரஷ்ய இலக்கியப் போக்கின் ஒரு திரும்புமுகம் என்னலாம் உரைநடையில் எளிமைiய்க கொண்டு வந்தவர் காரம்ஸின். உரைநடை இலக்கியத்துக்கு அரிய கட்டுக்கோப்பமைத்து அதற்குக் காவியத்துக்குரிய அமைப்பைத் தந்தவர் துர்கெனிவ் துர்கெனிவ் அருமுயற்சியால் கண்ட இப் பண்பாட்டைத் தம் இயற்பணியாக்கி, எளிமைத்திறம் தோன்ற வைத்து, உலகில் ஒப்புயர்வற்ற உரைநடை இலக்கியம் அமைத்தவர் டால்ஸ்டாப் எனவே, டால்ஸ்டாயின் கலைப் பேரரசுக்குத் துர்கெனிவ் முன்முகப்பாய் அமைந்தவர் என்று கூறுவது தவறாகாது. துர்கெனியின் முதல் நூலாகிய கேளிக்கையாளர் ஓவியங்கள்40 என்பதே அவரை எடுத்த அடியில் புகழின் உச்சிக்குக் கொண்டு போயிற்று. இது வெறுங்கலை இலக்கிய மட்டுமன்று; சீர்திருந்தத இலக்கியமுங்கூட அமெரிக்காவிலும் ஐரோப்பா விலும் ஒழிக்கப்பட்ட அடிமைமுறை ரஷ்யாவில் 19 ஆம் நூற்றாண்டிலும் நீங்காதிருந்தது. அமெரிக்காவில் ‘டாம் மாமன் உள்ளறை41 அம் முறையை ஒழிக்கக் கருவியாயிருந்தது போல், ‘கேளிக்கையாளன் ஒவியங்’களும் இரண்டாம் அலெக்ஸாண்டர் அம் முறையை ஒழித்துச் சட்டமியற்றப் பெருந்தூண்டுத லாயிருந்தது. ஆனால், சீர்திருத்த நோக்கங் கொண்ட இதுபோன்ற நூல் ‘டாம் மாமன் உள்ளறை’ போன்ற பிறநாட்டுச் சீர்திருந்த இலக்கியம் போலல்லாமல் உயர்ந்த கலைப் படைப்பாகவும் அமைந்தது ரஷ்யாவின் கலைப் புதிர்களுள் ஒன்று, பொன்மலர் மணமும் பெற்றிருப்பதை யாரே விரும்பார்? இம் முதற் படைப்பால் பெற்ற புகழைத் ‘தந்தையரும் மகாரும்’ என்ற அடுத்த நூல் கெடுத்து அவரை நாட்டை விட்டு ஓட்டிற்று. காரணம் கலைக் குறைபாடன்று. அது அரசியலை எதிர்த்தது என்பதனாலேயே. ஆனால், அரசியலார் எதிர்த்த போதும் நாட்டு மக்கள் அதனைப் போற்றாதிருக்கவில்லை. வெறுத்தவரும் மறைவில் வாங்கி வாசிக்க விரும்புமளவு அது கலைச்சுவை அமைந்திருந்தது. ‘உரைநடைக் கவிதைகள்’ என்ற அடுத்த நூல் அதன் பெயர் காட்டுகிறபடியே உரைநடையில் கவிதையின் சிறப்பைத் தருவதாகும். ‘பெழின் சமவெளி’42 ‘பாடகர்’ ‘சாவு’ உயர்குடி மக்கள் குரம்பை43 ஆகிய அவர் நூல்கள் யாவுமே உரைநடைக் கவிதைகளாம். உரைநடையில் இவர் கவிதை உயர்வுக்கு இளவேனில் நீர்நிலைகளும்44 அமைப்பாதண்மைத் திறனுக்கத் ‘தந்தையும் மகாரும்’ எடுத்துக்காட்டுகள் ஆகும். பிந்தியது உலக இலக்கியத்தில் கிரேக்க நாடக ஆசிரியன் ஸோ போக்ளிஸ் நாடகத்துடனும் டால்ஸ்டாயின் மெய்ம்மை விளக்கத் துடனும்45 மட்டுமே ஒப்பிடத்தக்க கலைச்சித்திரம் எனக் கொள்ளப் படுகிறது. ரஷ்ய நாட்டு வாழ்வொழுக்கில் கலந்துகொள்ளாமல் அந் நாளைய இயக்கங்கள் யாவற்றையுமே நடுநிலையில் நின்று கண்டித்த சிலவகை இலக்கிய எழுத்தாளர் துர்கெனிவ் ஊழியில் இருந்தனர். டால்ஸ்டாயின் இலக்கிய அமைப்பாண்மைக்குத் துர்கெனிவ் வழிகாட்டியாயிருந்தது போல் அபர் அறத்துறைக் கோட்பாட்டுக்கு இவர்கள் வழிகாட்டியாயினர். இத்துறை யினருள் சிறப்பு வாய்ந்தவர் மைக்கேல் ஸால்டிகாவ்46. கிரைலாவ், கொகால், கிரிபோயெடாவ் ஆகிவர்களின் உயர்வுமிக்க நகைச்சுவை இவரிடம் வன்மை வாய்ந்த வாள்வீச்சை ஒத்த வசைத் துறையாயிற்று. ‘கோட்டங்களின் வாழ்வுச் சித்திரங்கள்47 சிறையாளிகள் முதலியவர்கள் வாழ்வினை அவர்கள் வாய்மொழி யாலேயே விளங்க வைக்கிறது. நகர மூலங்களிலிருந்தே எழுதப்பெற்ற ஒரு நகர வரலாறு என்பது ஸ்விப்டின் கல்லிவரின் பயணங்கள்48 போன்ற அரசியல் வசை நூல். சிறுவர் புதுமைக் கல்லிவரின் பயணங்கள் போன்ற அரசியல் வசை நூல். சிறுவர் புதுமைக் கவிதை வடிவில் ரஷ்யாவின் அரசியல் வாழ்க்கை வரலாற்றின் சிறுமைகளை இஃது எடுத்துக்காட்டுவது குளுபாவ் அல்லது மூடர் நகராட்சி49 போப்பின் ‘மூடஅரசு50 போன்றது. மூடர் நகரத்தாற் தமக்கேற்ற முழுமூடனைத் தேடி அரசாளச் செய்த முயற்சி. மூட அரசு என்ற பெயரில் வசையாக்கப்பட்ட நாடு ரஷ்யாவேயாகும். ‘பாம்பாதுரி51 என்ற நூலில் உயர்பணியாளரின் ஊழல்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன. சால்டிகோவ் துறையில் அவருடனொத்த மற்றோர் எழுத்தாளர் லெஸ் காவ். இவர் பழமைப் பற்றாளரை மட்டுமன்றிப் புதுமைப் பற்றாளரின் போலித் தனத்தையும் வெளிப்படுத்தியவர். 8. ரஷ்யாவின் பொற்காலம் ரஷ்ய இலக்கியமாகிய மாளிகையின் தலைவாயில் கோபுரம் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குரிய அதன் பொற்கால இலக்கியமேயாகும். இக் கோபுரத்திற்கு டால்ஸ்டாயும், டாஸ்டா யெவ்ஸ்கியும்52 இருபெரும் பொற்றூண்கள் போல்வர். டால்ஸ்டாயின் இலக்கியம் ரஷ்ய இலக்கியத்துள்ளும் ஒரு தனி இலக்கியமென்னத்தக்கது. அவர் வாழ்வு நீட்சி, நூற் பெருக்கம், பற்பல மாறுபாடுகள், எல்லையற்ற உலகச் செல்வாக்கு, கலையு லகில் அவர் நாட்டிய உயர்வு. அறிவுலகை அவர் கலக்கிய கலக்கு ஆகிய யாவும் ஒரு தனி வரலாற்றுக்கே உரியவை. டால்ஸ்டாயின் இலக்கியம் ரஷ்யா உலகுக்கத் தந்த செல்வம். ஆனால், ரஷ்யாவுக்கு அவர் வாழ்க்கையும் கோட்பாடுகளும் ஒரு புதிர். செல்வர் மனையிற் பிறந்து செல்வர் மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் விடமுடியாத அவர் புறத்தும் அகத்தும் அவற்றை எதிர்த்துப் போராடினார். இப் போராட்டத்தில் கலையும் தப்ப வில்லை. கலைஞரும் தப்பவில்லை. கலைஞரும் இலக்கிய மன்னருமாகிய அவர் கலையையும் இலக்கியத்தையுங் கூட வேம்பென வெறுத்தார். ஆனால், வாழ்வை வெறுப்பவரும் வாழ்வை விட முடியாதது போலவே நல்ல காலமாக வெறுத்த கலையையும் அவர் விடமுடியவில்லை. அவர் கலைவெறுப்பால் உண்மையில் நிகழ்ந்தது யாதெனில் கலையின் போலியுருவனைத்தும் போய் உள்ளார்ந்த உயர் கலையொளி ஏற்பட்டதேயன்றி வேறன்று. டால்ஸ்டாயின் கோட்பாடுகள் பிற்றைய நூற்றாண்டுகள் வரை பரந்து கார்லைல், ரஸ்கின், வெல்ஸ், ரோமன் ரோலண்டு, காந்தியடிகள் போன்ற, ‘ஆவிப் புரட்சியாளரை’ புதுமை அவாவும் பழமைப் பிணிப்பும் கொண்ட மாண்புடைப் பெரியாரை இயக்கின. ஆனால், அவர் ‘இமாலயத் தோல்வியுற்ற’ குறையுடன் அவர் அறிவுச் செல்வத்துக்கும் உரியவராக வந்த அவர்களிடையே எவரும் அவர் எல்லையற்ற கலை யகலத்தையும் உயர்வையும் சிறிதளவும் எட்டமுடியவில்லை என்று கூறலாம். டால்ஸ்டாய் (1828-1910) எழுதிய நூல்கள் பல; பலவகைப் பட்டவை; பல கொள்கைகளும் கோட்பாடுகளும் கொண்டவை. ஆனால், அவை தன் வாழ்க்கையின் வரலாறுகளேயாகும். அவற்றின் பரப்பும் மாறுபாடுகளும் வளர்ச்சியும் உண்மையில் அவர் மனத்திலும் வாழ்விலும் ஏற்பட்ட மாறுபாட்டுப் புயல்களின் பதிவுகளேயாகும். குழந்தைமை, சிறுமை, இளமை53 ‘நில உடைமையாளன் முற்பகல்54 ஆகியவை அவர் இளமைக்கால நுகர்வுகள், நடுப்பருவ வாழ்க்கை ஆகியவற்றின் அழியாச் சித்திரங்கள். ‘காஸக்கியர்’55 அவர் காக்கஸஃ புறத்தில் போர்வீரராயிருந்த போது கண்ட போர்வீரர் வாழ்க்கை பற்றியது. ‘இவ்வாழ்க்கை இன்பம்’ புதுமை வாழ்வின் இன்ப மலர்ச்சி. டால்ஸ்டாயின் முதற்காலப் பேரிலக்கியப் படைப்புகள் ‘போரும் அமைதியும்’56 என்பதும் அன்ன கரீனினா57 என்பதும் ஆகும். இரண்டாம் டால்ஸ்டாயின் இயற்கை உயர்குடி வாழ்வில் அவர் இயற்கையான வாழ்க்கைப்பற்று, அவாக்கள் ஆகியவற்றைத் திறம்படச் சித்திரிக்கும் பெருங்காப்பியங்களாகிய பெரும் புனை கதைகள். முந்திய நூல்களிலுள்ள இளமைத் துடிப்பு இவற்றில் மாறவில்லை. ஆனால், வாழ்க்கைச் சிக்கல்களை அறிந்தாராயும் உரமும், பிற்கால நூல்களில் காணும் கூரிய பகுத்தறிவொளியும் இதில் தொடக்கமுறுகின்றன. வாழ்க்கை, அரசியல், சமயம் ஆகிய இவற்றுள் இடம்பெறுவது பழமையே யாயினும், அப் பழமை தற்சோதனையாகிய நெருப்பிலிடப்பட்டு விட்டது. புதுமைப் புயலின் வித்துக்களும் விதைக்கப்பட்டு விட்டன. ‘போரும் அமைதியும்’ என்ற நூலில் அவர் போரெதிர்ப்புக் கொள்கையின் விதைகளும் ‘அன்னாகரீனினாவில்’ உயர்குல வாழ்வின் போலித் தன்மை மீதுள்ள அவர் எதிர்கால வெறுப்பின் விதைகளும் காணப்படலாம். அன்னாகரீனினாவுக்குப் பிற்பட்ட (அஃதாவது 1876க்குப் பிற்பட்ட) டால்ஸ்டாப் அதற்கு முன்னிருந்த டால்ஸ்டாயின் வேறுபட்ட மனிதர். இவ்வேறுபாடு கொள்கை பற்றியது. பழைய சமயம், பழைய அரசியல், பழைய வாழ்க்கைமுறை ஆகியவற்றை அவர் வெறுக்கத் தொடங்கினார். முதலில் உயர்குடி வாழ்க்கைமீது ஏற்பட்ட வெறுப்பு அவரைச் சமயத்துறையில் உந்திற்று. ஒரு மடத்துறவியாகும் எண்ணங்கொண்டார். ஆனால், மடங்கள், கோயில்கள், கோயில் நிலையம் ஆகியவை கிறித்து பெருமான் பெயரை வைத்துப் பிழைக்கும் போலிச் செய்திகளெனக் கண்டு ஒதுக்கி நேரிடையாக ஏசுவை விவிலிய நூலில் காணும் முயற்சியிலீடுபட்டார். இதுமுதல் அவர் உண்மையில் ஆத்திகரேயாயினும் கிறித்தவர் ஏற்ற சமய நிலைய ஆட்சியையும் அந் நிலையத்தார் கோட்பாடுகளையும் எதிர்த்ததனால், அவரைக் சிறித்தவர் நாத்திகர் என்றனர். அவர்நிலை போலிச்சமயத்தை எதிர்த்த உண்மைச் சமய அறிஞர் நிலையே. வடஇந்தியாவில் ராஜாராம் மோகன்ராய், தென் இந்தியாவில் மறை மலையடிகள் போன்ற உண்மைச் சமயத் தலைவராகிய ஆத்திகர் நெறியே இது. ஆயினும் போலிச் சமயத் தையே சமயமெனக் கொள்ளும் சுரண்டல் வகுப்பாரும் பாமர மக்களும் அவர் சமயத்தை ஒரு புதிய சமயமெனக் கொண்டனர்; நாத்திகம் எனவும் கூறினர். உண்மையைக் கூறுவதானால் இயேசுபெருமான் வாழ்க்கை எவ்வளவுக்கு ஆண்டவனின் ஒருசிறு பதிப்பாகுமோ, அவ்வளவுக்கு டால்ஸ்டாய் வாழ்க்கை இயேசு பெருமானின் ஒரு சிறு பதிப்பு என்பதற்கு ஐயமில்லை. அரசியலாளர்க்கு அவர் கோட்பாடு புதிரும் மாய் மின்மினியும் ஆகலாம். ஆனால், அவர்க்குரிய துறையாகிய சமயத்தில் அவர் தலைமை பெற்றிருக்க முடிந்தால், சமயம் பழை உலகத்தின் சப்பை எலும்புக்கூடாய் அழிந்து வருவதற்கு மாறாகப் புதுப் பிறப்டைய முடியும் என்பது உறுதி. டால்ஸ்டாப், காந்தியடிகள், ரோமென் ரோலண்டு போன்றார்களை அரசியலில் தள்ளும் சமயம் தன் வாழ்வுக்கு வந்த ஒளிகளை விலக்கி அழிவு தேடும் சமயமேயன்றி வேறல்ல. ஆனால், டால்ஸ்டாய் மரபினராகிய ‘ஆவிப்புரட்சி’ யாளரிடையே கூட விவிலியத்துக்கு எவ்வகையிலும் ஒப்பான உயர்வுடைய தெய்வநூல் எழுதிய ‘இரண்டாம் ஏசு பெருமான’ வேறு யாருமிலர். தம் ஆன்மிகப் புரட்சியை விளக்கி அவர் எழுதிய மெய்ம்மை விளக்கம்58 உலக இலக்கியத்தில் விவிலிய நூலின் ஜாப் ஏடு59 ஆர்ச், அகஸ்தினின் தன் விளக்கம்60 ஆகியவற்றுடன் மட்டுமே ஒப்பிடக்கூடிய நூலாகும். மக்கள் பேசும் மொழியை அப்படியே இலக்கிய மொழியாக்கிவிடும் திறம்; கலைஞர் கலை அமைப் புக்குக் கருவியாகக் கொள்ளும் மரபுகளை விலக்கியும் உள்ளர்ர்ந்த உளப்பண்பு அமைப்பால் எழுந்த உண்மைக்கலையமைக்கும் திறம்; மக்களிடையே பத்தன் என்ற பெயரும் புகழும் அடையும் எண்ணத் துடன் பத்திப் போர்வையிடும் போலிப் பத்தர்போலாது உண்மை யையே தெய்வமாக நாடித் தன் மாசுகளைத் தானே எதிர்த்துப போராட முனையும் உண்மைப் பத்தியும் மெய்ம்மை நாட்டமும் ஆகிய இவை இந் நூலின் ஒப்பற்ற சிறப்புக்கள். விவிலியத்தின் சில பகுதிகள் நீங்கலாகச் சமயத் துறையில் இதற்கு ஒப்புமை நாடுவோர் மாணிக்கவாசகர் திருவாசகம், சங்கராசாரியார் சிவானந்தலகரி ஆகிய இரண்டையன்றி வேறு எண்ணுதல் அரிது. இவ்வளவு ஆழ்ந்த சமயப் பற்றிடையேயும் ரஷ்ய இலக்கி யத்தில் உள்ளார்ந்த ஆய்வியல், பகுத்தறிவு டால்ஸ்டாயிடம் இடம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. ஆன்ற அறிவு, வாய்மை உருவுடைய ஒரு கடவுளன்றிக் கடவுளரோ சிறு தெய்வங்களோ, துறக்க நரக உருவங்களோ, இயற்கைக்கு மாறுபட்ட ‘தெய்வீக’ நிகழ்ச்சி நம்பிக்கைகளோ, அதில் இடம் பெறவில்லை. மெய்விளக்கம் போன்ற போட்பாட்டு விளக்கங்கள் ‘என் நம்பிக்கை’61 ‘தீமையின் தன்மை’62 முதலியவை இவை தவிர டால்ஸ்டாய் சமய ஆராய்ச்சி நூல்களும் சிறுவர்களுக்கும் பாமர மக்களுக்கும் அறிவுகொளுத்தும் எண்ணற்ற கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதினார். சிறுகதைகளில் ‘மூடன் ஐவான்’ ‘ஆண்டானும் அடிமையும்’63 ஆகியவை மிகச் சிறந்தவை. ‘ஹாஜி முத்தாத்’ ‘அலெஷா கார்ஷக்’ ஆகியவை பிற்காலப் புனைகதைகளில் சிறந்தவை. தவிர ‘இருளுலகின் ஆற்றல்கள்’64 ‘அறிவு விளக்கத்தின் பயன்கள்’ ஆகிய நாடகங்களும் எழுதினார். இவர் நாடகங்களில் நாடக அமைப்புக் குறைவாயினும் பிற நூல்களைப் போலவே உருக்கமான காட்சிகள், உயர்நடைக் கருத்துக்கள் ஆகியவை மிளிர்கின்றன. பிரஞ்சு இலக்கியத் தினின்று ‘பிரஞ்சுக்காரன்’65 ‘சூரத் காப்பிக்கடை’66 ‘எஸ்ஹர், டம்காசன், ‘உழைப்பு, பிணி, சாக்காடு,’ ஆகிய கதைகளையும் அவர் திறம்பட மொழிபெயர்த்தார். பொற்காலத் தேங்காயின் பெருமூடி டால்ஸ்டாயானால் அதற்கியைந்த மற்ற நிறைமூடி டாஸ்டாயெவ்ஸ்கி டால்ஸ்டாய் எவ்வளவு பெரியவராயினும் பழைய உலகத்தின் பெரிய மனிதர் மட்டுமே. ஆனால், டாஸ்டாயெவ்ஸ்கி புதுஉலகின் விடிவெள்ளி யாவார். டால்ஸ்டாயின் கலை அமைப்பை அவரிடம் காண முடியாது. ஆனால், டால்ஸ்டாயின் பாமர மக்கட் பற்றைவிட வெறியும் உணர்ச்சியுமிக்க மக்கட் பற்றை அவரிடம் காணலாம். டால்ஸ்டாப் இயேசு பெருமானை நாடியவராயினும் வணங்கா முடி மன்னன்; அவர் அருள் உயர்ந்த நிலையுடையவரது இரக்க உணர்ச்சி மட்டுமே. டாஸ்டாயெவ்ஸ்கி துன்ப வாழ்க்கை வாழ்ந்து துன்பப்பட்டவர். தாழ்த்தப்பட்டவர், பழி சூழப்பட்டவர் ஆகியவர் களை உடன்பிறப்பாளர்களாகக்கொண்டு அவர் களுக்காகப் போராடியவர். ஐரோப்பிய உலகில் டால்ஸ்டாயுடன் ஒப்புடைய வராகவும் டால்ஸ் டாயினும் சிறந்தவராகவுங்கூட மதிக்கின்றனர். ‘உயிரற்ற இல்லத்தினின்று எழுதப்பட்ட கடிதங்கள்67 சிறை யாளிகளின் துயரங்களையும் ஏழைமக்கள் ஏழ்மையின் துயர் களையும் பற்றியவை. ‘குற்றமும் தண்டனையும்’ தண்டனைகளின் கொடுமை, குற்றவாளிகளின் தன்மை, குற்றவாளிகளின் உள்ளப்பண்பாடு ஆகியவற்றை விளக்குவது. உள ஆராய்ச்சிப் புனைகதைகள் தனித்துறையாகத் தோற்று முன்பே எழுதப்பட்ட இந்நூல் அத்துறையாளர்களுக்கு ஒரு விவிலிய நூல் போன்ற முன்மாதிரி ஆகும் முட்டாள்68 என்பது ப்ரௌனிங்கின் பிபா செலவு69 என்பதைப் போல் நற்குண முடையவர் தீமை நிரம்பிய உலகிலும் நன்மைபரப்பி உதவுவதைக் காட்டுகிறது. ‘பேய்களால் ஆட்டப் பட்டவர்’70 என்பது புத்தர்போல் உயிர் என்பதொன்றில்லை ஒழுக்கமுமில்லை என்று கூறிய கட்சியார் சூழ்ச்சிகளைக் கண்டிப்பது. 9. கவிதை மறுமலர்ச்சியும் புரட்சி ஊழியும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பழைய டால் ஸ்டாயன்றி வேறு புது எழுத்தாளர் இல்லையோ என்னும் நிலையில் இலக்கியம் சிறிது காலம் ஓய்வெடுத்து நின்றது. இந் நிலையில், கலைக்கே கலை71 அதாவது வாழ்க்கைச் சிக்கலில் ஒட்டாத கலைக்கட்சி ஒன்று ஏற்பட்டது. இதனை இமயப்பொகுட்டுக்கலை72 என்பர். இக் குழுவில் சேர்ந்தவர்களுள் நெக்ரஸாவ், மைக்காவ், ஃபெட், வொலான்ஸ்கி, கௌண்ட், அலெக்ஸிஸ், டால்ஸ்டாய் ஆகியவர்கள் முக்கியமானவர்கள். நெக்ரஸாவ் நாட்டுப்புற இயற்கைக் காட்சிகளை வரைவதில் சிறப்புடையவர். மைக்காவ் நாட்டுப்புற பாடல்களும் இத்தாலியர் பழ அமைப்பியல் பாடல்களும் பாடியவர். ஃபெட், ஷெல்லி பொன்ற வானம்பாடிக் கவிஞர். கௌண்ட் டால்ஸ்டாய் இயற்றிய ‘மும்மை நாடகங்கள்’73 உண்மையில் இனிய உணர்ச்சிப் பாடல் தொகுப்புக்களே. கிரிமியப் போர்க் காலத்தில் ரஷ்ய நாட்டுப்பற்றைத் தூண்டிய கவிஞர் நிகிடின். இவர்கள் தவிர நலிவுக்காலக் கவிஞர் என்று அழைக்கப்பட்ட பலரும்கூட உண்மையில் பர்னாஷ்ஷியர் போனற் ‘கலைக்கே கலை’க் கட்சியின் இயல்புடையவராவர். நாட்ஸன் (1862-87) 25ஆம் ஆண்டிலேயே மறைந்த வராயினும் நாட்டுப் பொதுமக்கள் வாழ்வுடன் ஒத்துணர்வு காட்டிய ஒப்பற்ற கவிஞராய் விளங்கினார். இவர் பாடல்கள் இவர் வாழ்நாளிலேயே பத்துத் தடவை பதிப்பிக்கப் பெற்று நூறாயிரக் கணக்கில் செலவாயினவாம். இதற்குள் ரஷ்ய அரசியல் வாழ்வில் ஆங்காங்குச் சிதறிக் கிடந்த முகில்கள் திரண்டு புரட்சிப் புயல் மழைகளாகவும் மின்சாரப் புயல்களாகவும் வரத்தொடங்கின. 1824இல் டிஸர்பர்க் கிளர்ச்சி தோற்றபின் 1880க்குப் பின் மறுமுறை கிளர்ச்சி ஏற்பட்டு இரண்டாம் அலெக்ஸாண்டர் உயிருண்டது. மீண்டும் சிலகாலம் எதிர்ப்பியக்கம் தாண்டவமாடியபின் 1905-ல் பேரளவில் முதல் ரஷ்யப் புரட்சி நடைbப்றறது. இது முழுவதும் வெற்றியடையா விடினும் ரஷ்ய வாழ்வை என்றென்றைக்கும் மாற்றிவிட்டது. எழுத்தாளர் இதற்குப்பின் வெறும் எழுத்தாளராய் இருக்கமுடியாத நிலை ஏற்பட்டது. ஒன்று புரட்சியை ஆதரிக்க வேண்டும் அல்லது பிற்போக்கினரை ஆதரிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இரண்டு வகையிலும் சார்ந்தவர் மிகச்சிலரே. அவர்கள் உண்மையில் பாராட்டப்படுவதும் குறைவு. புரட்சிப் போக்கிலேயே ரஷ்ய இலக்கியம் உலகிற்குப் புத்தொளி காட்டத் தொடங்கியது என்பது எதிர் பார்க்கத்தக்கது. புரட்சி இயக்கத்திற் சேராதவருட் சிறந்த எழுத்தாளர் செக்காவ், (1860-1904). ரஷ்ய எழுத்தாளர் உலகில் இவர் இடம் டால்ஸ்டாய், கார்கி ஆகிய இருவருக்கும் அடுத்ததாகும். இவர் நாடகங்கள் நகைச்சுவையும் அமைப்பாண்மையும் வாய்ந்தவை. ‘கடற்காக்கை’ (‘சைகா’), வன்யாமாமன்74 மூன்று உடன்பிறந்த நங்கையர்75 இலந்தைத் தோட்டம்76 என்பவை இவரின் சிறந்த நாடகங்கள். அரசவை மன்றத்தான்77 அஞ்சல்78 இளவரசி79 கட்சி80 குதிரைக் களவாணிகள்81 தூங்குகுமூஞ்சி82 ஆகிய புனைகதைகள் சிறுகதைகளும் இவர் பலவகைச் சிறப்பைக் காட்டுபவை. செக்காவைத் தொடர்ந்து புனைகதையில் புத்தெழுச்சி உண்டு பண்ணியவர்கள் மாக்ஸிம் கார்கி, ஆண்ட்ரீவ் ஆகியவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தலைசிறந்த கலைஞர் டால்ஸ்டாய். ஆனால், 20 ஆம் நூற்றாண்டில் அதே இடம்பெறத் தக்கவர் கார்கியேயாவார். இவர் முழுப்பெயர் அலெக்ஸி மாக்ஸிமோவிச் பெஷ்காவ் என்பது. இவர் 1869 இல் பிறந்தவர். வாழ்க்கையில் இவர் டாஸ்டோயெவ்ஸ்கிபோல் பல இன்னல்களை அடைந்தவர். ரஷ்யப் பொதுவுடைமை இயக்கத்திலும் பெரும் பங்கு கொண்டு அதன் முழுவெற்றி ஏற்படும்பரை பல தடவை தாய்நாடு விட்டோடியும் ஒறுக்கப்பட்டும் வந்தவர். ஆயினும், அவர் கலை, புரட்சி க்காரர் மட்டுமன்றிப் பிறரும் பாராட்டுவதாகவே இருந்தது. இவர் இளமைக்கால வாழ்க்கையின் இன்னல்கள் ‘இருபத் தாறு மனிதரும் ஒரு சிறுமியும்’ என்ற நூலில் அழியாச் சித்திரமாகத் தரப்பட்டுள்ளன. 1898 இல் இவர் முதல் கதைத்தொகுதி இரண்டு ஏடுகளாக வெளிடப்பட்டுக் கலையுலகில் அவருக்கு பெரும் புகழை உண்டு பண்ணியது. மார்க்ஸின் கொள்கைகளுக்காகப் போராடிய ழிஸ்ன்83 பத்திரிகையில் போமாகாடீவ், அம்மூவர்84 ஆகிய நூல்கள் வெளிவந்தன. ‘நா தே’85 அல்லது ஆழத்தின் ஆழம்’ என்ற அவரின் புகழ்மிக்க நாடகம் ஜெர்மனியில் அவர் பெயரை நிலைநாட்டிற்று. பெர்லினில் நூல் வெளிவந்தவுடனேயே அது 500 இரவுகள் தொடர்ந்து ஆடப்பட்டதாம். ‘புயல் தூதன் பாடல்’ அவர் கவிதை யாற்றலும் உடையவர் என்பதற்குச் சான்று. டால்ஸ்டாயின் புதுமை போர்த்த பழமை, டாஸ்டோ யெவ்ஸ்கியின் பழமை போர்த்த புதுமை ஆகிய இரண்டையும் நாடுபவர்கட்கு இளநகர்ச் செல்வர்86 (சிறு பூர்ஷ்வாக்கள்) என்ற பெயர் இட்டவர் இவரே. 1919இல் ‘டால்ஸ்டாப் பற்றிய நினைவூட்டுகள்’ என்ற நூலில் அவர் டால்ஸ்டாயின் கோட்பாடு அவர் வாழ்க்கையில் அடிப்படை மாறுபாடு எதனையும் உண்டாக் கவில்லை. என்பதாகக் குற்றஞ்சாட்டினார். அமெரிக்கர் குறுகிய மனப்பான்மையை ‘மஞ்சள் குறளியின் நகர்’ (1907) என்பதிலும், ‘ரஷ்யக் குடியானவர்’ (1922) என்பதில் குடியானவர் அடிமை மனப்பான்மையையும் சாடினார். ‘குழந்தைமை’87 ரஷ்யப் புரட்சி யாளரால் தங்கள் ‘விவிலியம்’ எனப் போற்றப்படுகிறது தாய், மெய்விளக்கம்88 செல்காஷ், மக்கர் அத்ரா, ஆகுரால்நகர், கோழெம் யாகின்89 ஆகியவை அவரின் சிறந்த புனைகதைகள். ‘மாடப்புறாவின் பாட்டு நாட்டு மக்களின் பாட்டாயிலங்குகிறது. முதல் உலகப்போர்க் காலத்தில் போர்பற்றிப் பாடிய புலவன் குப்ரின். 20 ஆட்ம நூற்றாண்டின் அடுத்த ஊழியில் கார்க்கியைப் பின்பற்றிக் கன்ட்ரீவும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடர்ச்சி யாக சின்னப் புலவர்90 என்ற மறைவியல் கவிதையாளரும் கங்கையும் யமுனையும் போல் தனித்தனி பிரிந்தும் ஒன்றாகவும் ரஷ்ய இலக்கிய ஒழுக்கில் ஒழுகி விடுகின்றனர். வாழ்க்கையில் தோற்றிய ரஷ்ய இலக்கியம் வாழ்க்கையுட னேயே வளருமாதலால் ரஷ்யப் புரட்சியூழியின் போக்கில் முன்னையிலும் பன்மடங்கு புதுநெறி வகுத்துச் செல்லும் என்று நம்பலாம். அடிக்குறிப்புகள் 1. Devogue. 2. Lomonosoff 3. Sagas or Chansons. 4. Byling Cycle. 5. Armament of Igor. 6. Treasure of Lyrical poetry. 7. Churnils. 8. Voltaire, Montesquieu, Diderot. 9. Lomonosoff. 10. Derzhavin. 11. Karamain. 12. Neoclassicess. 13. Karamzin. 14. Basil-Zhukovsky. 15. Krylov. 16. Griboy-edov. 17. Social Comedy. 18. Pushkin 1799-1837. 19. Eugen Oniegen. 20. Boris godunov. 21. Gypsies. 22. Prisoner of the Caucusus. 23. Propher. 24. Ballads. 25. Fairy tales. 26. Bead aritsa. 27. The Bridegroom. 28. Classic 29. Romantic. 30. Ode. 31. Ismail Bey. 32. Orsha the Boyer. 33. Song of Sar Ivan. 34. Bielensky. 35. Slovotulst & Wasternes. 36. The Demon. 37. Revisor or Inspector General 38. Dead souls 39. Turgeniev 1811-1883 40. Sportsman Sketches 41. Uncle Tom’s Cabin. 42. Bezhin Meadow. 43. Net of gentle-folk. 44. Spring waters. 45. Confessions. 46. Michael Soltykov 1826-1889. 47. Sketches of Provincial Life. 48. Gulliver’s Travels of Swift. 49. Glupov or Fools City. 50. Dunciad. 51. Pompadurai. 52. Tolstoy and Dostoyevsky 53. Childhood, Boyhodd and Youth. 54. Morning of a Land-owner. 55. Cosseks 56. War and Peace. 57. Anna Karinina. 58. Confessions. 59. Book of Job. 60. Apologia. 61. What I believe. 62. What is Evil 63 Master & Man 64. Powers of Darkness. 65. Francaise. 66. Coffee Club of Surat. 67. Letters from a Dead Home. 68. The Idiot. 69. Pippa passes. 70. The Possessed Devils. 71. Art for Art’s Sake. 72. Parnassians. 73. Trilogy. 74. Uncle Vanya. 75. Three Sisters. 76. Cherry Orchard. 77. Privy Councillor 78. Post. 79. Princess. 80. Party. 81. Horse Stealers. 82. Sleppy. 83. Zhizn. 84. Formor godiev, Three of them. 85. Na dne. 86. Petty Bourgeois. 87. Childhood. 88. Confession. 89. Kozhemyain. 90. Symbolie Poets. 6. உருது இலக்கியம் 1. உருது மொழியின் தோற்றம் உருதுமொழி இன்று இந்தியாவின் பெரும் பகுதியிலுள்ள முஸ்லீம்களால் தங்கள் நாகரிகத்தின் சின்னமான நாட்டுமொழி என்று கருதப்படுகிறது. உருது இலக்கியமும் இந்திய முஸ்லீம் புலவர்களின் முயற்சியால் வெளிநாட்டு முஸ்லீம் இலக்கியம் மொழியாகிய பாரசீகத்தின் முன்மாதிரியுடன் கட்டமைக்கப் பட்ட இலக்கியமே. ஆயினும், மொழியைப் பொறுத்தவரை, அது தோன்றக் காரணமாயிருந்தவர்கள் இந்திய முஸ்லீம்களல்லர்; வடநாட்டு உயர்குடியினரான இந்துக்களே. பிரிட்டிஷ் ஆட்சியில் எப்படி உயர் பணிகளில் பெரும் பாலும் உயர்குடி இந்துக்களே அமர்த்தப்பட்டனரோ, அது போலவே முகலாயப் பேரரசர் ஆட்சியிலும் உயர்குடி. இந்துக்களே வடநாட்டில் உயர்பணியாளராய் இருந்தனர். முகலாய அரசின் அரசியல் மொழியாயிருந்த பாரசீகத்தை இவ் இந்துக்கள் தமதெனப் பேணிக் கற்று, அதிலேயே பேசவும் எழுதவும் தொடங்கினர். தலைநகரான தில்லியில் பேசப்பட்ட நாட்டுமொழியுடன் பாரசீகச் சொற்களை அவர்கள் (இன்று வடமொழியும் ஆங்கிலமும் கலப்பது போலவே) கலந்து ஜபான்-ஈ-ரெக்தா (சிதறிய சொல் மொழி அதாவது பாரசீகச் சொற்கள் பரவிய மொழி) என்ற கலவை மொழியைத் தோற்றுவித்தனர். இதன் இலக்கிய வடிவமே உருது மொழி. 2. உருதுவும் இந்தியும் வடஇந்தியாவில் நாற்புறமும் புறக் கோடிகளில் வழங்கிய குஜராத்தி, மராத்தி, வங்காளி, பஞ்சாபி, சிந்தி முதலிய மொழிகள் பெரும்பாலும் எல்லை வரையறையுடையதாய் நிலமொழிகளா யிருந்தன. பின்னாளில் அவை எளிதாக இலக்கிய மொழிகளாகவும் வளர்ச்சியடைந்தன. ஆனால் வடநாட்டின் நடுப்பகுதி முழு வதிலும் ஒழுங்கான நில எல்லையோ, உருவோ, தொடர்ச்சியாக ஒரு பெயரோகூட இல்லாத பல மொழி வகைகள் நிலவின. இவை ஒவ்வொன்று ஒவ்வொரு காலத்தில் இலக்கிய வடிவடைந்ததும் இறந்துபட்டன. இந் நிலையில் இறந்துபட்ட மொழி வகைகள் மேலை நடுநாட்டு மொழிகளாகிய ராஜஸ்தானி, விரஜபாக்கா, கீழை நடுநாட்டு மொழிகளாகிய மைதிலி, பீகாரி முதலியவை ஆகும் இவற்றின் சிதறிய சிற்றிலக்கியங்களையே திரட்டிப் பழைய இந்திய இலக்கியமென இன்றைய இந்திப்புலவர்கள் கொள்கின்றனர். நடுநாட்டில் இலக்கியவடிவம் வளர்ச்சியும் பெற்ற மொழிகள் இந்தியும் உருதுவுமே. இவை இரண்டுக்குமே தெளிவான தாய் நிலப்பரப்புக் கிடையாது. ஏனெனில், இரண்டுக்கும் நிலைக் களனான பகுதி கங்கைச் சமவெளியின் மேற்குப் பகுதியும் (ஐக்கிய மாகாணங்களும்) நடு இந்தியாவும் தாய்நில மொழி தில்லியில் பேசப்பட்ட கலவை நாட்டு மொழியாகிய ஜபான்-ஈ-ரெக்தாவே. இதனுடன் பின்னும் மிகுதியான பாரசீகச் சொற்களும் பாரசீக இலக்கிய மரபுகளும் சேர்த்து உருவாக்கப்பட்ட முஸ்லீம் இலக்கிய மொழியே உருது. நேர்மாறாக இந்து தேசிய இயக்கத்தவர் இதிலுள்ள பாரசீகச் சொற்களைக் கூடியமட்டும் விலக்கி வட மொழிச் சொற்களையும் வடமொழி இலக்கிய மரபுகளையும். கூடியமட்டும் இன்றளவும் புகுந்தி விரிவுபடுத்திவரும் இந்து இலக்கிய மொழியே இன்றைய உயர் இந்தி அல்லது இலக்கிய இந்திமொழி ஆகும். 3. ரேக்தா, இந்துஸ்தானி, உருது 14ஆம் நூற்றாண்டுக்கு முன் வடஇந்தியாவில் நாட்டு மொழிகள் எதுவும் இலக்கிய வடிவடையவில்லை. இலக்கிய வடிவு பெற்ற மொழிகளும் வட நாட்டில் இறந்துபட்டதனால் அவை நாட்டு மொழித் த ன்மையை இழந்து வந்துள்ளன. அந் நூற்றாண்டில் ராஜஸ்தானியிலும் தில்லி மொழியிலும் விரஜாபாக்காவிலும் நாட்டிலக்கியம் பயிலப்பட்டது. இவற்றுள் தில்லி மொழியில் எழுதியவர் பேர்போன பாரசீக மொழிக் கவிஞரான அமீர் குஸ்ரு. இவர் நாட்டு மொழியில் இயற்றிய பல பாக்கள் இன்று இந்தி, உருது ஆகிய இரு மொழி யாளரிடையேயும் பரக்க வழங்குகின்றன. தில்லி மொழி ‘ரேக்தா’ ஆனபின் அதுவே ஆங்கிலேயரால் இந்துஸ்தானி என்றழைக்கப் பட்டது. அவுரங்கசீப் காலம் வரை அது வட இந்தியாவில் பேச்சு மொழியாகவே இருந்தது. இலக்கிய வடிவம் பெறவில்லை. முதன்முதல் இந்துஸ்தானி இலக்கிய வடிவமடைந்து உருது வாகத் தொடங்கியது வடஇந்தியாவிலன்று; தெக்காணத்தில் தெலுங்கு நாட்டிலுள்ள முஸ்லிம் அரசாகிய கோல் கொண்டாவிலும், கன்னட நாட்டில் அமைந்த முஸ்லீம் அரசாகிய பீஜப்பூரிலுமேயாகும். அங்கிருந்து அவுரங்கசீப் காலத்துக்குப் பின் (18 ஆம் நூற்றாண்டில்) அது தில்லி நகரடைந்து அங்கும், நாதர்ஷாப் படையெடுப்பின் பின் லக்னோவிலும், ஆங்கில ஆட்சியாளர் கல்வித்துறையை மேற்கொண்டதன் பின் (19 ஆம் நூற்றாண்டில்) கல்கத்தாவிலும் பரவி வளர்ச்சியடைந்தது. இலக்கிய இந்தி உருதுவின் கடைசி வளர்ச்சிக் காலத்தில் (19 ஆம் நூற்றாண்டில்) கல்கத்தாவிலிருந்தே உருவாயிற்று. புதிய தேசிய வாழ்வைப் பிறப்பித்த வங்கத் தாயே புதிய இந்தியின் தாயாகவும் உருதுவின் வளர்ப்புத்தாயாகவும் விளங்கிய தென்னலாம். 4. உருது இலக்கிய வரலாறு உருது மொழியின் இலக்கிய வளர்ச்சியை முதிரா வடநாட்டுக் காலம், தெக்காண காலம், தில்லி முதற் காலம், லக்னோக் காலம், தில்லி இரண்டாம் காலம், கல்கத்தா அல்லது அண்மைக் காலம், ஹைதராபாத் காலம் அல்லது தற்காலம் என ஏழு விரிவாக வகுக்கலாம். இவற்றுள் முதிரா வடநாட்டுக் காலத்தில் அமீர் குஸ்ரூவின் ஒரு நூலன்றி வேறு இலக்கிய வளர்ச்சி கிடையாது. ஆயினும், 1235இல் பிறந்து 1324 இல் இறந்த இவர் அடிமை, கில்ஜி, துக்ளக் என்ற மூன்று அரச மரபுகள் கண்டு, பதினொரு அரசர்கள் காலத்தில் வாழ்ந்து இவர்களுள் ஏழு அரசர்களுடன் தொடர்பும் உடையவராவர் என்பது குறிப்பிடத்தக்கது. வட மொழியிலுள்ள கிளி எழுபது (சுகசப்ததி) என்ற காப்பியத்தைப் பாரசீகத்தில் ‘தூதி கஹானி’ என்ற பெயருடன் எழுதியவர் இவரே யாவார். இவர் எழுதிய ஒரே நாட்டுமொழி நூலின் பாக்களே இன்று மொழி வேற்றுமையின்றி எல்லா நடுநாட்டு மொழியினராலும் வழங்கப்படுவது. 5. தெக்காண காலம் (15-18 நூற்றாண்டுகள்) கோல்கொண்டாவின் மன்னர் முகமது அலி குதுப்ஷா (1580-1621), அப்துல்லா குதுப்ஷா (1625-1656) ஆகியவர்களும் பீஜப் பூரின் மன்னர் இரண்டாம் இப்ராஹீம், அடில்ஷாவும் தாமே கவிஞர்களாகவும், கவிஞர் புரவலராகவும் இருந்தனர். இவர்கள் வழங்கிய மொழி தில்லிமொழியாயினும் தில்லியுடன் தொடர் பற்றுப் பழம்பசலியாய் விட்டது. இதனை இன்று தெக்கானி என்று வழங்குவர். அலீ குதுப்ஷாவின் காலப்புலவர் ‘நூரி’ தெக்காணியில் பாரசீக மரபுப்படி முதல் காப்பியம் (தீவான்) எழுதியவர் ஆவர். இதிலுள்ள பாடல்கள் 50,000 என்றும், அதில் பாரசீக மொழியில் வழங்கிய எல்லாப் பாடல் வகைகளும் உள்ளன என்றும் கூறப் படுகிறது. இப்ன் நிஷாதி என்ற மற்றொரு புலவர் பாரசீகக் காப்பியமாகிய ‘பசாத்’தினை ‘பூல்வான்’ என்ற பெயருடனும் ‘சுவாசீ’ என்பவர் அமீர் குஸ்ரூவின் பாரசீக மொழிபெயர்ப்புக் காப்பியமான ‘தூதிநாமாவை’ உருதுவில் மறு மொழிபெயர்ப்புச் செய்தார். மௌலானா வஜிஹ் மோனை எதுகை நயத்துடன் தெக்காணியில் முதல் உரைநடைக் காப்பியம் இயற்றினார். பீஜப்பூர் மன்னர் அவையின் புகழ் கேட்டுப் பாரசீகத்தின் பேர் போன கவிஞர் முல்லா ஜுஹூரி அவர் அவைக்கு வந்து, அவர் அவையின் பாரசீகக் கவிஞரா யிருந்து பாக்கள் இயற்றினார். அரசரே கவிஞராதலால் தெக்காணியில் ‘நௌரஸ்’ (ஒன்பது சுவைகள்) என்ற பெயருடன் ஒரு நூலியற்றினார். இவர் காலக் கவிஞர்கள் ‘அலிநாமா’ எழுதிய ‘நஸ்ரதி’, ‘யூஸுப் ஜூலைகா’ எழுதிய பிறவிக் குருடர் ஹோஷிமீ, பஹ்ராம்ஹு ஸ்நபானு என்ற காதை இயற்றிய ‘தௌலத்’ ஆகியவர்கள் ஆவர். 6. வலீயும் தில்லி இலக்கியமும் (1700-1830) தெக்காணத்தில் வழங்கிய உருது இலக்கிய மரபை வட இந்தியாவில் கொண்டு சென்று பரப்பி, வட இந்தியாவுக்கு நாட்டுமொழி இலக்கியப் பெருமை தந்தவர் ‘வலீயேயாவர். இவர் 1668 இல் ஒளரங்கபாதில் பிறந்தவர். இளமையிலேயே உணர்ச்சிப் பாடல்கள் (கஜல்), புகழ்ப் பாக்கள் (சுஸிதா) ஆகியவற்றைப் பாடித் தாம் கலைபயின்ற நகராகிய அகமதா பாதில் பரப்பியவர். 1700 ஆம் ஆண்டுக்குள் ஒளரங்கசீபின் படையெடுப்பால் தக்காண அரசியல் வாழ்வு சீரழியத் தொடங்கிற்று. அதே ஆண்டில் அவர் தில்லி சென்று தில்லியிலுள்ள பாரசீக மொழி மறைஞானக் (சூபி) கவிஞரை அணுகி அவர் மாணவரானார். அவர் இணக்கம் பெற்று இவர் ரேக்தா அல்லது நாட்டுமொழியில் பாரசீக மரபுப்படி வடநாட்டின் முதல் காப்பியம் இயற்றி வெளியிட்டார். தில்லியிலும் வட நாட்டிலும் இதன் புகழ் காட்டுத்தீயெனப் பரவிற்று. அதுவரை அரசியல் மொழியாக இருந்த பாரசீக மொழியையே பேணி, அதிலேயே இலக்கியம் வளர்த்த வடநாட்டவர் நாட்டு மொழி யாகிய உருதுவிலும் பேரளவில் இலக்கியம் வளர்க்கத் தலைப் பட்டனர். இக் காரணத்தால் “வலீயே உருதுவின் தந்தை” (பாபா ஆதம் ஈ உர்தூ) எனப் போற்றப்பட்டார். வலீயைப் பின்பற்றி உருதுக் கவிதை எழுதத் தொடங்கிய பாவலர்கள் நாகீ, மஜ்மூன் ஆப்ரூ, ஹாதிம் முதலியவர்கள். இவர்களுள் ஹாதிம் நகைச்சுவை காப்பியமாகப் புகை குடிக்கும் குழாய் (ஹுக்கா) பற்றி ஒரு பாவியல் இயற்றினார். ஆர்ஜூ என்பவர் பெரும்பாலும் பாரசீக மொழியிலேயே எழுதினும் புதிய உருதுக் கவிஞர்களுக்குக் கவிதை பற்றிய கருத்துரைகளை வழங்கி வழி காட்டியா யிருந்தார். மேலும், அந்நாள் வரையுள்ள பாரசீக உருதுக் கவிஞர்களைப் பற்றிய மதிப்புரை கலந்த வரலாறும் அவரால் எழுதப்பட்டது. தில்லியின் தலைசிறந்த கவிஞர்களுள் மீர்தகீ அவர் மாணவர். ஹாதிமின் மாணவரான சௌதாகவும் மீர்தகீயும் தில்லிக் கவிஞருள் தலைசிறந்தவர்கள் ஆவர். சௌதா புகழ்ப் பாடல்கள் (கசீதா), வசைப் பாடல்கள் (ஹிகா), பரிவுப் பாடல்கள் (மர்சியா), காதைகள் (மஸ்னவி) கருத்துரைப் பாடல்கள் (ரூபாயி) ஆகிய அனைத்தும் திறம்பட எழுதினார். ஆயினும், முதல் இருவகை களிலுமே அவர் மீர்தகீ போன்ற தலைசிறந்த புலவர்களையும் விஞ்சியவராகக் கொள்ளப்படுகிறார். இவர் பாரசீக மரபின் எல்லைகடந்து பல புதிய துறைகளையும் கையாண்டார். புகழ்ப்பாவிலும் வகைப்பாவிலும் ஸெளதாவுடன் ஒப்பான பெருமையுடைய மீர்தகீ உணர்ச்சிப் பாடல்கள் (கஜல்), பரிவுப்பாடல் (மஸ்னவீ) ஆகிய துறைகளில் அவரைவிட மேம் பட்டவர் ஆவர். இவர் உருதுமொழியில் எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்தார். மீர்தர்த் என்ற மற்றொரு புலவர் இளமையில் படைவீரராயிருந்து பின் இஸ்லாமிய மறைஞானக் கட்சி (சூபி)யில் சார்ந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும், அடியவர்களும் கொண்டு அதன் ஒரு பிரிவின் தலைவரானார். இவர் பாரசீக மொழியிலேயே சூபிக் கருத்துக்கள் பற்றிய பல நூல்கள் இயற்றி னாராயினும் உருதுவிலும் எளிய இனிய நடையில் ஒரு காப்பியம் எழுதிப் புகழ் படைத்தார். 7. லக்னோ இலக்கியம் நாதர்ஷா, அகமதுஷா, அப்துராணி ஆகியவர்கள் படை யெடுப்புகளால் தில்லி நகர் அரச வாழ்வு சீர்குலைவுற்றது. ஆர்ஜூ, ஸெளதா, மீர்தகீ ஆகிய புலவர்கள் ஒவ்வொருவராகத் தில்லி நகரிலிருந்து வெளியேறி பைஜாபாத், லக்னோ, முதலிய நகரங்களுக்குச் சென்றனர். லக்னோவில் இப்புலவர்கள் தம் துயர்நீக்கும் வள்ளல் ஒருவரை அடைந்து அங்கே வாழலாயினர். இவ் வள்ளலே நவாப் அஷப் உத்தௌலா ஆவர். தமிழ் நாட்டில் தமிழ்ப் புலவர்களுக்கு அரசியல் ஆதரவு குன்றிய காலத்தில் அவர்களை ஆதரித்த சீதக்காதி மரைக்காயரே போல், இவரும் உருது இலக்கிய வாழ்வுமீது புயல்வீசிய காலையில் அதற்கு உறுதுணையாய் நின்று அதனை ஆதரித்தார். லக்னோவில் வளர்ந்த பெரும்புலவர்கள் மீர்ஹஸன், ஸோஸ், மீர்தகீ மீர்ஹஸன் ஜூர் ஆத், மிஸ்கின், ஆதாஷி, நாஸிக் முதலியவர்கள் ஆவர். இவர்களுள் தலைசிறந்தவர் மீர்ஹஸன், ஹெளதா, மீர்தகீ மீர்ஹஸன் ஆகிய மூவரும் ஒரே நிலையில் வைத்து உருதுக்கவிதையின் மும்மணிகள் எனப்படுகின்றனர். இவர் கைவண்மை மிக்க கவிதைத் துறை காதை (மஸ்னவீ) ஆகும். பேநஜீர் என்ற இளவரசன், பத்ரீ முனீர் என்ற இளவரசி ஆகியவர்கள் பற்றிய இனிய காதற்கதை கூறும் நூலாகிய ‘ஸிஃரூல் பயான்’ என்பதும், ‘குல்வாரி ஈராம்’ என்பதும் இத் துறையில் இவரின் சிறந்த நூல்கள் ஆகும். பெண்கள் உலகு, பெண்கள் பேச்சநடை ஆகியவற்றைத் தனிப்படச் சித்திரித்துச் சிறப்படைந்த புலவர் ஸோஸ். இவர் பெண்கள் பேச்சு வழக்கை ஒரு மொழியாக்கி அதற்கு ரேக்தாவின் பெண்பால் சொல்லான ரேக்தீ என்ற பெயர் வழங்க வைத்தவர். ‘ஜூர் ஆத்’ தும் இதே வழக்கைப் பின்பற்றியவர். இவர் சிலேடை (இரு பொருள் சொல் வழக்கு) அணியை மிகுதி வழங்கினார். மிஸ்கீனும், மிர் ஆளீஸ், தாபீர் ஆகியவர்களும் பிரிவுப் பாடல்களிலும் ஆதாஷ், நாஸிக் ஆகியவர்கள் உணர்ச்சிப் பாடல்களிலும் வல்ல வர்கள். ஸுருர் எதுகை நயம்பட உரைநடையில் ஒரு காப்பியம் இயற்றினார். வஜீத் அலி ‘அக்தார்’ அவதி என்ற அயோத்திப் பேச்சுநடையில் மூன்று காப்பியங்கள் எழுதியுள்ளார். இது உலக நடை யாதலால் மொழி நூலாராயச்சிக்கும் பெரிதும் பயன்படுவது. 8. பிற்காலத் தில்லி இலக்கியம் நாதர்ஷா படையெடுப்பின் பின் முகல் பேரரசர் பெயர ளவிலேயே பேரரசராயிருந்தனர். ஆனால், அரசியல் புகழ் குறைந்தாலும் அவர்கள் கலைப்புகழ் ஓங்கி வளரவே செய்தது. இரண்டாம் ஷா ஆலம் (1761-1806) ‘அஃபதாவ்’ என்ற கவிதைப் புனைப்பெயருடன் பாநூல்கள் எழுதியதுடன் இலக்கிய இயக்கத்தை மீட்டும் தொடங்கினார். மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழகத்தில் பண்டைப் பாண்டியர் புலவர்களைக் கூட்டி இலக்கியக்கழகம் அமைத்ததுபோல் அவரும் உருதுக்கவிஞர் மாநாடு ஒன்று நடாத்திக் கழகமமைத்தார். அவருக்கடுத்த முகலரசர் இரண்டாம் பகதூர் ஷாவே கடைசி முகல் அரசர். இவர் பிரிட்டி ஷாரால் அரசிருக்கையிலிருந்து விலக்கப்பட்டு இரங்கூனில் சிறை வைக்கப்பட்டார்; இவ்வரசர் பெருமான் ‘ஸ்பர்’ என்ற புனை பெயருடன் தம் துயர வாழ்க்கையைப் பற்றிய கவிதையும் நூலும் இயற்றினார். அவர் நண்பர்களான ‘காய’மும் காலி’புமே தில்லியின் இறுதிப்புலவர்கள். இவர்களுக்குப்பின் கவிதை இலக்கியக் காலம் ஓய்ந்துவிட்டது என்னலாம். உருது இலக்கியத்திற்கு அரசர், சிற்றரசர் ஆதரவும் கிட்டத்தட்ட இஃதுடன் முடிவடைந்ததென்றே கூறவேண்டும். ஏனெனில், 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் அவ் வகையில் மீந்துள்ள ஒரே அரசர் ஹைதராபாத் நைஜாமேயாவர். 9. கல்கத்தாவும் உரைநடை இலக்கியமும் (19 ஆம் நூற்றாண்டு) கிட்டத்தட்ட 1800 ஆம் ஆண்டில் ஐரோப்பியர்களுக்கு இந்தியத் தாய்மொழிப் பயிற்சி தருவதற்காக வில்லியம் கோட்டைக் கல்லூரி திறக்கப்பட்டது. கல்லூரித் தலைவரான டாக்டர் கில்கி ரைஸ்ட் நாட்டு மொழிகளின் இலக்கியப் புலவர்கள் அனை வரையும் திரட்டிக் கல்விப் பயிற்சிக்கான புது நூல்கள் இயற்றுவிக்க ஏற்பாடு செய்தார். 1800 வரை இந்துஸ்தானியின் கவிதை இலக்கியம் உருது இலக்கியமாக மட்டுமே இருந்தது. உருதுவல்லாத இலக்கியம் அவ்வத் தாய்நில மொழியிலோ அவ்வவ்விடத்து இலக்கிய மொழி யிலோ எழுதப்பட்டது. இந் நிலையில் புதிதாக உரைநடை இலக்கியமமைக்குப் புகுபவர் அந்நாளைய உருதுவை வழங்குவதே இயல்பாக நடந்திருக்கக் கூடிய செய்தி. ஆனால், கில்கிரைஸ்ட் உரைநடையில் இந்துக்கள் மனத்தைக் கவரத்தக்க ஓர் இந்து இந்துஸ்தானி அல்லது உயர் இந்தியையும் முஸ்லிம்கள் மனத்தைக் கவர்வதற்காக ஓர் உயர் உருதுவையும் உண்டு பண்ணினார். பழைய உருது அல்லது இந்துஸ்தானியிலுள்ள பாரசீக அராபியச் சொற் களைக் கூடியமட்டும் நீக்கித் தூய பாரசீக அரபியச் சொற்களையும் முன்னிலும் மிகுதியான பாரசீக மரபுகளையும் சேர்த்து உயர் உருது உரைநடை யாக்கப்பட்டது. கல்கத்தாப் புலவர்களில் லல்லுலால் உயர் இந்தி இலக்கியம் படைத்தவர். லாகூர் நிஹால் சந்த் பெரும்பாலும் உருதுவே எழுதிய முஸ்லீமல்லாதார். இவரே பாரசீகக் காவியமாகிய ‘குல்-ஈ-பகாவ் வீ’யை ‘மஸ்ஹப்-ஈ-இஸ்க்’ என்ற பெயருடன் உரைடையிட்ட பாட்டுடைச் செய்யுளாய உருதுவில் எழுதியவர். கல்கத்தா எழுத்தாளருள் உரைநடை ஆற்றலில் சிறந்தவர். ‘ஆஃப் ஸோஸ்’. இவர் எழுதிய சிறந்த உரைநடை நூல் ‘ஆரைஷீமஃபில்’ என்பது. இது இந்தியாபற்றிப் பாரசீகத்தில் எழுதப்பட்ட ஒரு நூலின் மொழி பெயர்ப்பு. ஹைதரீ ஆரை ஷீமாஃபீல் என்ற பெயரையே கொண்ட புனைகாவியமும் பேர்போன ‘தோதாகஹானி’யின் உரைநடைப் பகர்ப்பு ஒன்றும் இவர் இயற்றினார். இவர்களன்றிப் பேராசிரியர் ஹஃபீஸ், மீர் அம்மன், இலா, இக்ராம்’ அலீ ஆகியவர்கள் இக் காலப் பெரும் புலவர் ஆவர். 10. தற்கால உருது இலக்கியம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய முஸ்லிம் களின் சமய, அரசியல், வாழ்வியல், கலைத்துறைகளில் பெருத்த மாறுதல்கள் ஏற்பட்டன. அவர்கள் வெற்றிக்குப் பேரளவு காரண மாயிருநத பெரியார், இஸ்லாமிய உலகின் பிற்போக்குக் கண்டு கொதித்தெழுந்து பல துறைகளில் சீர்திருந்த இயக்கங்களைத் தோற்றுவித்த ஸர் ஸையத் அகமத்கான் ஆவர். இவரது இயக்கம் வாஹாபி இயக்கம் எனப்படும். இதனை ஆதரித்தும் எதிர்த்தும் பலதிறப்பட்ட இயக்க அலைகள் எழுந்தன. ஆதரித்த பெரும் புலவருள் ஒருவர் மௌலானா அத்லாஃம் ஹுஸைன் ‘ஹாலி’ ஆவர். இவர் உருதுக் கவிதையிலும் நடையிலும் பெரிய புரட்சி உண்டு பண்ணினார். எளிய நடை பயின்றார். பிற உருதுக் கவிஞர்கள்போல் பாரசீக இலக்கிய உவமைகளை இந்தியக் கவிதைகளில் பன்னிப் பன்னிக் கூறாமல் நேரடியாக இந்திய இயற்கைக் காட்சிக்ள, சூழ்நிலைகள் ஆகியவற்றை விரித்துரைத்தார். உருதுவில் 6 அடி கொண்ட புதியதொரு பாவினம் (முஷத்தஸ்) யாத்து அதில் ‘இகலாமின் வளர்ச்சியும் தளர்ச்சியும்’ என்ற அழகிய நூல் இயற்றினார். ஸர் ஸையத் அகமத்கானின் வாழ்க்கையையும் இவர் திறம்பட எழுதியுள்ளார். உருதுவின் அண்மைக்காலப் பெருங்கவிஞர் ஸர் மகமது இக்பால் ஆவர் (1880-1938). இவர் பாரசீகம், உருது ஆகிவயற்றில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதியவர். இஸ்லாமிய உலக நாகரிகத்தின் சிறப்பை இந்தியாவுக்கும் உலகுக்கும் அறிவிக்க அரும்பாடு பட்டவர் இவரே. இவர் இயற்கை விரிவுரை, வாழ்க்கை ஓவியம் ஆகிய துறைகளில் உலகக் கவிஞர்களுடன் வைத்து எண்ணத்தக்கவர். தற்கால வடஇந்திய இலக்கியங்களுள் வங்கக் கவிஞரான தாகூருடனொத்த பெருங்கவிஞர் இவரொருவரே. இருபதாம் நூற்றாண்டின் சிறந்த உரைநடையாசிரியர் மௌலானா முகமத் ஹுஸைன் ஆஜாத் ஆவர். இவர் லாகூர் அரசியல் கல்லூரி அராபிப் பேராசிரியர். இவர் எழுதிய ‘உருதுப்புலவர் வரலாறும் மதிப்புரையும்’ என்ற நூல் அறிஞர் உலகின் அச்சாணியா யுள்ளது. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை வாழ்ந்த இன் னொரு கவிஞர் மீர்ஜாகான் தாக் ஆவர். இவர் இனிமையும் நளினமும் உடைய பாவியல் நடையுடையவர். 11. முடிவுரை உரைநடைமொழியில் கவிதை உருது, உரைநடை இரண்டினுக் கிடையேயும் வேற்றுமை மிகுதி இல்லை. இவ்வகையில் இந்தி உருதுவுடனும் மற்றெம் மொழியுடனும் மாறுபட்டுவிட்டது. உரைநடை வடமொழி கலந்த இந்துஸ்தானியிலும் கவிதை அவ் வுரைநடை இந்தியில் ஒருபாலும் பழைய பல்வேறுபட்ட இலக்கிய மொழிகளில் ஒருபாலுமாகச் சிதறி இயல்கின்றது. ஆயினும், பேச்சுநடை இலக்கியநடை ஆகியவை இரண்டும் இருவேறு பட்டுள்ள தன்மையில் உருதுவும் இந்தியும் ஒரு நிலைமை உடையதாகவே இருக்கின்றன. தென்னிந்திய மொழிகளை நீக்கிப் பார்த்தால் இந்தியாவில் கவிதை, உரைநடை ஆகிய இரண்டிலும் ஒன்றுபோல் நிறைவுடைய இலக்கிய மொழி உருது ஒன்றே வங்காளியும் இந்தியும் அதனை அடுத்த பெருமையே உடையவை. ஆயினும், அண்மை வரையில் இவ்விலக்கியத்தில் ஒரு பெருங்குறைபாடு இருந்துவந்தது. எழுத்தாளர்கள் பாரசீகச் சொல், பாரசீக மரபு, பாரசீக உவமைகள், பாரசீக நாட்டுக் காட்சி ஆகியவற்றிலேயே திளைத்து இந்திய மொழியில் வெளிநாட்டிலக்கியம் பேணினர். கண்முன் கண்ட இந்தி வாழ்வில் கவனம் செலுத்தவில்லை. ஆங்கிலக் கல்வி காரணமாக ‘ஹாலி’ ‘இக்பால்’ ஆகிய கவிஞர்கள் இச் செயற்கை முகமூடி அகற்றி விடுதலை ஒளி வீசினர். வருங்காலத்தில் உருது இந்தியாவின் பல்நிற நாகரிகத்தில் ஒரு தiலிமணியாய் இந்தியாவையும் இஸ்லாமையும் இணைத்து நிற்க உதவும் பெருமை உடையது. இஸ்லாமிய உலகுக்கு இந்தியாவையும் இந்தியாவுக்கு இஸ்லாமின் நாகரிகத்தையும் விளக்கும் இணையற்ற கலைக்கருவியாய் அது அமையும் என்று உறுதியாக நம்பலாம். 7. பாரசீக இலக்கியம் 1. வையகத் துறக்கம் ஷாஜகான் தான் கட்டிய பள்ளி ஒன்றன்மீது பூவுலகில் துறக்கமுண் டெனில், அது இதுவே என்று வரைந்தனராம். இலக்கிய நல்லன்பர் பாரசீக இலக்கியத்தின் மீதும் இலக்கிய உலகில் ஒரு துறக்கம் உண்டெனில் அவ்வையகத் துறக்கம் இதுவே என வரைய லாகும். உலக இலக்கியத்தை ஒரு இலக்கியக்காடு என்று கூறினால், பாரசீக இலக்கியத்தை அதனிடையே அமைந்த இலக்கியப் பூங்காவனம் என்று கூறலாம். உலகில் கவிஞர்களுக்கும் கவிதை வெறியூட்டத்தக்க கற்பனைக் களஞ்சியம் பாரசீகக் கவிதை, தண்ணிலவும் தென்றலும் நறுமலர் மணமும் தீந்தேறலும் மிக்கதாய்க் கவிதைமங்கையுடன் யாழிசை துய்க்கும் இன்பத்தை நினைவூட்டாத பாடல் பாரசீக மொழியில் இல்லை என்னலாம் இவ்வகையில் உமர் கையாமின் பாடல்கள் உலகெங்கும் புகழ் பரந்துள்ளன. புனைகதைகளுக்கும் பாரசீக இலக்கியம் ஒப்பற்ற களஞ்சியம். புனைகதையுலகிற்குப் புத்தர்கால இந்தியாவே தலை யூற்றாகக் கொள்ளப் படுகிறது. ஆயினும், காட்டுமலர்கள் போல் சிந்திக்கிடக்கும் இந்தியப் புனை கதைச் செல்வத்தை இன்பப் பூஞ்செண்டுகளாகவும், நறுமலர் மாலை களாகவும் தொடுத்து உலகுக்கு அளித்த பெருமை பாரசீகத்தினுடையதே. பொதுவாகப் பாரசீக நாட்டிலேயே தோன்றிய புனைகதைகளும் பல. உரைநடை இலக்கியத்திலும் பாரசீக இலக்கியம் சீன மொழியை ஒத்த இலக்கியப் பழமையுடையது. அறிவுக் களஞ்சியம்1 மருத்துவம், வானநூல், கணக்கியல் ஆகிய அறிவுத் துறைகளிலும் பாரசீகம் வெற்றி கண்டது. இவை தவிர 8 ஆம் நூற்றாண்டுக்குப் பின் இஸ்லாமிய சமயநூல்களிலும், அராபிய இலக்கியங்களிலும் பெரும்பகுதி பாரசீகர் கைத்திறத்தின் சான்றாகும். பிற்கால அரபு இலக்கியமும் மொழிவகையால் அரபு இலக்கியமாயினும் நாட்டுரி மையால் பாரசீகர் இலக்கியமே யாகும். பிற்கால வடமொழி இலக்கியம் மொழிவகையால் வடமொழி இலக்கியமாயினும் நாட்டுவகையால் தமிழ்நாட் டிலக்கியமேயானது இதனோ டொப் பிடத்தக்க செய்தி ஆகும். 2. பாரசீகமும் இந்தியாவும் பண்டைப் பாரசீக நாகரிகம் பெரிதும் இந்திய நாகரிகத்தின் வெளியுலகப் பதிப்பேயாகும். வேதகால வடநாட்டவர் தம்மை ஆரியர் என்று கூறிக்கொண்டது போலவே, பண்டைப் பாரசீகர் தம்மை ஈரானியர் என்று கூறிக்கொண்டனர். இச்சொற்கள் ‘ஆர்’ என்ற பகுதிபடியாக ஆன்றோர் என்ற பொருளும் ‘ஏர்’ என்ற பகுதி (இலத்தீனம் அரியோ-உழு) உழவர் என்ற பொருளும் உடையதாகக் கொள்ளப்படுகிறது. பண்டைப் பாரசீக மொழியில் எழுதப்பட்ட பழம் பாரசீகர் (ஈரானியர்) மறைநூல் அவெஸ்தா என்பது. இதுவும் இந்திய ஆரியர் இருக்குவேதமொழி, தெய்வம், கருத்து ஆகிய அனைத்திலும் ஒற்றுமை உடையவை. ஆயினும், இடைக்கால பாரசீக மொழி தமிழுடன் நெருங்கிய உறவுடைய தாயிருந்தது. எனவே, வடஇந்தியாவில் பண்டை ஆரியமும் திராவிடமும் கலந்து புதிய ஆரியமொழிகள் தோன்றியது போலப் பாரசீகத்திலும் கலப்பு ஏற்பட்ட தென்று தோன்றுகிறது. அவெஸ்தாவும் இருக்குவேதமும் பலவகையில் அடிப்படை ஒற்றுமை உடையதாயினும் குறிப்பிடத்தக்க வேற்றுமைகளும் உடையன. வடமொழியில் நல்தெய்வங்கள் பெயராகிய ‘தேவ’ அவெஸ்தாவில் தீத் தெய்வம்2 என்றும் வடமொழியில் தீத்தெய்வம் என்ற பொருளுடைய அகர (பாரசீகம்: அஹுர) பாரசீகத்தில் கடவுள் என்ற பொருளும் உடையவை. இருக்கு வேதம் சோமம், கரா ஆகிய குடிவகைகளைப் போற்றியது. சாதி முறையை ஆதரித்தது. அவெஸ்தா இரண்டையும் கண்டித்தது. இருக்குவேதம் பல தெய்வ வணக்கத்தை ஏற்றது. அவெஸ்தா கண்டித்தது. இவ்வேறு பாடுகளுக்குக் காரணமாயிருந்த பெரியார் ஜரதுஷ்ட்ரா ஆவர். இவர் காலம் கி.மு. 1200 என்று சிலரும், அதற்கு முன்பின் என்று சிலரும் கூறுவர். இந்திய (சோமபான) ஆரியருக்கு ஏற்பட்ட பிளவுக்கு அவர் சீர்திருத்தமே காரணம் என்று சில அறிஞர் கூறுகின்றனர். இது உண்மை யானால் அவர் காலம் கி.மு. 1500க்கம் முற்பட்டதாதல் வேண்டும். எப்படியும் சமயங்கண்ட உலகப் பெரியார்களில் காலத்தால் முற்பட்ட முதல் பெரியார் இவரே என்பதில் ஐயமில்லை. 3. பாரசீக வரலாறு பாரசீகர் கி.மு. 900 முதல் கி.மு. 400 வரை பேரரசாண்டனர். அப்பேரரசு எகிப்து முதல் சிந்து ஆறுவரை பரவியிருந்தது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டர் படையெடுப்பால் இப் பேரரசும் அழிவுற்றது. அதனுடன் பாரசீக இலக்கிய வாழ்வும் 500 ஆண்டுகள் செயலற்றுப் போயிற்று. கி.மு. 200 இல்ஸாஸானிய ஆட்சி முதல் ஜர துஷ்ட்ர சமயமும் இலக்கியமும் மீண்டும் தலையெடுத்தன. அவெஸ்தாவின் உரைகளாகிய ‘ஐந்து’ இக் காலத்தில் எழுதப்பட்டதனால் இக் காலப் பாரசீக மொழி ‘ஐந்து’ மொழி எனப்படுகிறது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் அரேபியாவிலிருந்து இஸ்லாம் சமயமும் ஆட்சியும் எகிப்து முதல் இந்தியா வரை பரந்தது. ஒரு வiகியல் வாளும் ஒரு கையில் குர் ஆனும் கொண்டு படையெடுத்த அராபிய முஸ்லிம்கள் முன், தமிழர்போலக் கலைப்பண்பாடும் விட்டுக்கொடுக்கும் இயல்பும் உடைய பாரசீகர் தம் சமயம், பண்பாடு ஆகியவற்றைக் காத்துக்கொள்ள முடியவில்லை. ஒரு சிலர் தாய்நாடு விட்டும் அவற்றைக் காக்கத் துணிந்து இந்தியாவிற்கு ஓடிவந்தனர். அவர்களே இன்றைய பார்ஸிகள். ஒரு நூற்றாண்டுக் காலம் அராபிய மொழி ஆதிக்கம் பாரசீக இலக்கிய வாழ்வை மீண்டும் ஒருமுறை செயலற்ற தாக்கிற்று. ஆனால், பாரசீகர் பண்டைப் பண்பாடு முற்றிலும் வீண்போக வில்லை. புதிய அரசியல் மொழியாகிய அரபை மேற்கொண்ட பாரசீக அறிஞர் விரைவில் அரவி இலக்கியத்தையும் இஸ்லாம் சமயத்தையும் தமதாக்கித் தலைமை நிலை கொண்டனர். இலக்கியத்திலோ அரபு மொழிச் செய்யுள் வகைகளில் தொடங்கிக் கவிதை விரைவில் தலை தூக்கிற்று. நாளடைவில் இலக்கியத் துறையில் பழைய சமய அறிவுத் துறைக் கருத்துக்கள் கலையுருவில் நாட்டுப் பழங்கதைகளாக எழுந்தன. பாரசீகப் பெருங்காப்பிய மாகிய ‘ஷாநமா’ இப்பழங்கதையின் புது வடிவமேயாகும். 4. மொழிப்பரப்பும் இலக்கியப்பரப்பும் வடஇந்திய இலக்கிய வரலாறு முற்றிலும் ஒரு மொழி வரலாறாயிராமல் பழைய வேதமொழி, புத்த சமணகாலப் பாள பாகத மொழிகள், இடைக்கால வடமொழி பிற்கால இந்தி வங்காள முதலிய மொழிகள் ஆகிய நான்கு தலைமுறை மொழிகளில் அமைந்திருக்கிறது. அதுபோலப் பாரசீக இலக்கிய வரலாறும், பழம்பாரசீகமொழி (ஈரானி), முற்காலப் பாரசீகம் (ஐந்து), தற்காலப் பாரசீகம் என மூன்று தலைமுறை மொழிகளில் அமைந்துள்ளது. இவற்றுள் தற்காலப் பாரசீக இலக்கியம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி குன்றிற்று. இந்தியாவில் மொகலாயர் ஆட்சிக் காலங்களில் அது அரசியல் மொழியாகவும் கலைமொழி யாகவும் இருந்தது. எனவே, இந்தியாவில் அது பின்னும் இரண்டு நூற்றாண்டுகள் வாழ்வு பெற்றது; (16-17 ஆம் நூற்றாண்டுகள்). பாரசீக இலக்கிய உலகின் விண்மீன்கள் எண்ணற்றவை யாயினும் அவர்களுள் தலைசிறந்தவராக ஏழு பேர் ஏழு கலை மணிகள் என்று சிறப்பிக்கப்படுகின்றனர். அவர்களுள் நாட்டுப் பெருங்காப்பியத்துறையில் ருதகியும் பிர்தாஸியும்; புனைவுக் கதையில் நிஜாமியும், மறைநிலைப் பாடலில் ரூமியும்; ஒழுக்கமுறை இலக்கியத்தில் ஸாதியும்; உணர்ச்சிக் கவிதையில் ஹபீஸும்; எல்லாத் துறைகளிலும் ஜாமியும் ஈடற்ற சிறப்புடையவர் எனப் பாரசீகரால் போற்றப்படுகின்றனர். பாரசீக இலக்கிய வளர்ச்சியை நான்கு படிகளாக வகுக்கலாம். முதலாவது இஸ்லாமியத் தோற்ற முதல் கஜினி முகமது ஆட்சி வரை (8-10 நூற்றாண்டுகள்); இரண்டாவது ஸெல்யூக் மரபினர் ஆட்சிக் காலம்; மூன்றாவது மங்கோலியர் படையெடுப்பும் ஆட்சியும் ஏற்பட்ட காலம்; நான்காவது அண்மைக்காலமும் இந்திய முகலாயர் ஆட்சிக்காலமும். தபாரி என்ற வரலாற்றிஞர்; இபன்குர்தாத்பிஃ என்ற நில நூலறிஞர்; அவிஸென்னா என்று மேனாட்டினர் வழங்கும் பேர் போன மருத்துவ, மெய்விளக்க அறிஞர்3 அபகவி இபன் சீனா; அக் கால இந்தியாவின் வரலாறு எழுதிய அல்பீருனி, குர் ஆன் பேருரையாளர் அல்பைஜானி ஆகியவர்கள் எழுதிய மொழி அரபாயினும் பாரசீக நாட்டினரேயாதலால் பாரசீக இலக்கிய வரலாற்றிலும் குறிக்கப்பட வேண்டியவராவர். 5. கஜினி முகம்மது காலம் வரை தற்காலம் பாரசீகமொழியில் முதன் முதல் கவிதை எழுதிய வர்கள் 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஹன்ஸாலாவும் மாமுதியும் ஆவர். ஜரதுஷ்ட்ரர் பிறந்த நகராகக் கூறப்படும் பல்க் நகரில் பிறந்த அபிஷுக்கர் பாரசீக மொழியில் புகழ்பெற்ற பாவினமாகிய நாலடிப்பா வண்ணத்தை (ரூபாஇயத்) முதலில் வழங்கியவர் ஆவர். இதன் முதலிரண்டடியும் ஈற்றடியும் ஒரே கடை எதுகையிலும் மூன்றாம்படி எதுகையின்றியும் நடைபெறும் பாரசீகத்தின் முதற்பெரு நாட்டுக் கவிஞனாகிய ‘ருதகி’ இக் காலத்தவரே. அரபி இஸ்லாமின் கடப்பாடுகளை உதறிவிட்டுப் பழைய பாரசீக (ஈரானிய)க் கதைகளுக்குப் புத்துயிர் தந்தவர் இவரே. கவிதை உலகில் ‘மது மாதர் கவின் கவிதை’ யாகிய மூன்றுக்கும் முதலிடமளித்தவரும் இவரே. இவர் எழுதிய வரலாற்றுச் சார்பான புனைகதைகள் கிட்டவில்லை யாயினும், அதன் பகுதி களும் வேறுபல எழுச்சிப்பாடல்களும்4 எஞ்சியுள்ளன. பிற்காலக் கிளிப்பிள்ளைத் தொடர்களும் எடுப்பான புனைவுரைகளும் இல்லாத இவர் தூயநடை வடமொழிக் காளிதாசனையும் தமிழ்ச் சங்ககாலக் கவிதையையும் நினைவூட்டவல்லது. தகீகி என்பவர் ருதகியினும் முனைப்பான நாட்டெழுச்சியாளர். அவர் “மாதர் கொவ்வை இதழ், இசை, செந்நிறமது” ஆகிய மூன்றுடன் ஒப்பாக “ஜரதுஷ்டிரர் கோட்பாடுகளையும்” சேர்த்து இலக்கிய உலகில் நான்மணிகள் என்று குறிப்பிட்டார். இவர் 1000 பாடல்களாக எழுதிய நாட்டு வரலாறே பிற்காலத்தில் பிர்தாஸியின் பேர்போன ஷாநமாவின் முதல் நூலாகும். முகமது கஜினியின் காலமே பாரசீக இலக்கியத்தின் பொற் காலம் ஆகும். ஆங்கிலப் பழங்கதை அரசன் ஆர்தர் தம்கால வீரப் பெருந்தகையார்களைத் தம் வட்ட மேடையைச் கற்றி திரட்டி னதாகக் கூறப்படுவதுபோல இவர் தங்காலப் புலவர்களை யெல்லாம் ஒரு வட்ட மேடையைச் சுற்றி அமர்வித்தார் என்று கூறப்படுகிறது. ஆயினும், இவர் காலத்தில் மிகச்சிறந்த புலவர்களுள் இருவர், அதாவது கவிஸென்னாவும் பிர்தாஸியும் இவரால் புறக்கணிக்கப்பட்டு பிற சிற்றரசர் ஆதரவு பெற்றதாய் அறிகிறோம். பாரசீக நாட்டின் பழங்காலக் கதைகளை ஒரே வரலாற்று வடிவில் தலைமுறை தலைமுறையாக வகுத்து (காளிதாசன் ரசுவம்சமும் சோழர் மாகீர்த்தியும் போல) வீரம் செறிந்த பெருங் காப்பியமாக அமைக்கப்பட்ட நூல் பிர்தாஸியின் ஷாநமா. பழங்கதைக்கால அரசன் முதல் தொடங்கி ஈரானிய மரபின் கடைசி அரசன் வரை 59 அரசர் பற்றிய செய்திகள் இதில் கூறப்படுகின்றன. ஈரான், தூரான் என்ற இரு பெருமரபினர் போராட்டம் இதன் நடுநாயகச் செய்தியாகும். ஸால் என்ற முதிய வீரன் துறவு (தியாக வாழ்க்கை) ரஸ்தம் வீரச் செயல்கள், தன் மகன் என்றறியாது ஸோரபை ருஸ்தம் கொன்ற அவலக்கதை ஆகியவை ஆங்கில முதலிய மேனாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உலகப்புகழ் அமைந்துள்ள பகுதிகள் ஆகும். இரண்டிண்டடி ஈற்றெதுகையுடன் அகவல் போன்ற பாவகையில் (மஸ்னவி) எழுதப்பட்ட ‘யூஸூப்பும் ஜூலைகாகவும்’ அவர் சிறுகதைக் காவியம் ஆகும். அவிஸென்னா அரபு மொழி இலக்கியத்துக்கும் மருத்துவம், மெய்விளக்கம் ஆகிய துறைகளுக்கும் உரியவராயினும் பாரசீ கத்திலும் ‘தானிஸ் நமாயி அலாயீ’ என்ற பல பொருட் களஞ்சியம் எழுதினர். இவர் எழுதிய நாலடிப்பா வண்ணங்கள் உமர் கய்யாமின் பாடல்களில் இடையிடையே சேர்ந்துள்ளன என்று கூறப்படுகிறது. இக் காலத்தில் பிற புலவர்கள் உன்ஸூரியும் பரூகியும் ஆவர். 6. ஸல்யூக் மரபினர் காலம் ஸல்யூக் மரபினர் கஜினி மரபினரை அழித்து, பாரசீகத்தையும் ஈராக்கையும் வென்று ஆண்டனர். இவர்கள் ஆட்சியில் அமைச்ச ராயிருந்த நிஜாம் உல்முல்க் பக்தாத் நகரில் ‘நிஜாமியா’ என்ற பெயருடன் ஒரு பல்கலைக்கழகம் நிறுவினார். இஸ்லாமியக் கலையையும், பாரசீகக் கலையையும் மங்கோலியர் அழிவினின்றும் காக்க இது பேருதவி செய்தது. அமைச் சராயிருந்த இவர் நல்லாட்சி முறையின் தன்மைகளை விளக்கி ‘ஸூஜாஸத்நமா’ என்ற அரசியல் நூல் எழுதினார். இக் காலத்தில் புதிய சமய இயக்கங்களும் அறிவியக்கங்களும் அரசியல் இயக்கங்களும் தோன்றின. ஷியாக் கிளைச் சமயத்தின் உட்கிளையாக எழுந்த இஸ்மாயிலிய (அரசியல் சமயக்) கிளையையும் மறைநிலைச் சமயத் துறையாகிய சூபி இயக்கத்தையும் ஆதரித்த பெரும் புலவர் நஸீரி குஸ்ரூ இக் காலத்தவர். இவர் இஸ்லாமிய உலகெங்கும் கற்றி இறுதியில் இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் தங்கினார். தம் பயணம், தம் சமயக் கருத்துக்களில் ஏற்பட்ட படிப்படியான மாற்றம் ஆகிய வற்றை இவர் ‘ஸபர்நமா’ என்ற நூலில் விளக்கியுள்ளார். இவை தவிர ‘தீவான்’5 என்ற மெய்விளக்க நூலும் ‘ரவ்ஷானாயீரமா’ `ஜாதுல் முஜபிரி’ ஆகியவையும் இவர் பல்துறைத் திறனுக்குச் சான்றாகும். இக் கால ‘ஆபி’ புலவர்களுள் அபுஸாயித், ஹாராட்டைச் சேர்ந்த அன்ஸாரி, ஸனாயீ, உமர் கய்யாம் ஆகியவர்கள் தலை சிறந்தவர்கள். ஸூபிக் கருத்துக்களை அகவல் (மஸ்னவி) பாவில் எழுதும் பழக்கத்தைக் கொணர்ந்தவர் ஸனாயீ. மெய்விளக்கக் கருத்துக்களைக் கதையுருவமாக்கும் சூபிகள் வழக்கத்தைத் தோற்று வித்தவரும் இவரே. (வடமொழி பிரபோத சந்திரோதயம் இம்முறை பற்றியது). இவரது ஹநிகத்துல் ஹகீகா (வாய்மையின் தோட்டம்) அத்தார், ரூமி முதலிய பெருங் கவிஞர்களுக்கு முன்மாதிரிகளாய் அமைந்த நூல் ஆகும். உமர் கய்யாமின் பெயர் பாரசீக உலகில் வானநூல், கணக்கியல் ஆகிய துறைகளுக்கே மிகவும் உரியதாகக் கொள்ளப் பட்டிருந்தது. ஆனால், சமயம், கவிதை, இன்ப வாழ்வு, துறவு ஆகியவற்றின் எல்லைகளில் விளையாடும் கனவுலகக் கவிதையாகிய அவரது பேர்போன நாலடிவண்ணம் இன்று இலக்கிய உலக முழுமையையும் திறைகொண்டுள்ளது. தமிழில் மூன்று கவிஞர்கள் இதனை மொழிபெயர்க்கப் போட்டி யிட்டுள்ளனர். ஆங்கிலத்திலும் அவ்வாறே. அல்ஜூர்ஜானி என்பவரது ‘விஸ்-உ-ரமீன்’ இக் காலத்திய சிறந்த புனைகதைக் காப்பியம். இவர் இயற்றிய பல்பொருள் களஞ்சியமும் ஒன்றுண்டு. ‘காபு’ இளவரசன் பேரனான காபு எழுதிய காபுஸ்நமா இன்றும் மேற்கோளாகக் காட்டப்பெறும் ஒழுக்கநூல் ஆகும். அலகஜலி என்பவர் அரபில் தாமே எழுதிய சூபி இஸ்லாமிய சமயநூலின் சுருக்கமாக ஹுஜ்ஜத் உல் இஸ்லாம் (இஸ்லாமின் சான்று) என்ற நூலை எழுதினார். வித்தியாபதி கதைகள் என்ற பழைய பஞ்சதந்திரக் கதை களைப் பாரசீகத்தில் மொழிபெயர்த்து எழுதியவர் நஸ்ருஇல்லா ஆவார். இது உண்மையில் ஐந்து அல்லது பஹ்லவியிலும் அதன்பின் அரவிலும் மொழிபெயர்க்கப்பட்டுப் பின் பாரசீகத்தில் மொழி பெயர்க்கப்பட்டதே. 16ஆம் நூற்றாண்டில் பாரசீகத்திலிருந்து இலத்தீனிலும் ஐரோப்பிய மொழிகளிலும் இது மொழிபெயர்க்கப் பட்டது. இக் காலத்தின் பிற்பகுதியில் சொல்லடுக்கும் எதுகை மோனையும் செயற்கை அணிகளும் நிறைந்த கஸீதாக்கள் என்ற புதுவகை நூல்கள் எழுந்தன. கஸீதா எழுதிய புலவர்களில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்நத அன்வாரி முதல்வர். அத் துறையில் சிறப்புக்குரியவர் ‘காகானி’. மக்காவுக்குத் தாம் செய்த பயணத்தை ஈராக்கின் வண்மை (துஃபதுல் ஈராக்கியம்) என்ற நூலிலும், தம் சிறை வாழ்வு பற்றி ‘ஹப்ஸீயா’ என்ற நூலிலும் எழுதியுள்ளார். செய்யுள் வகைப்பறிற் அஸிரு என்பவர் எழுதிய நூலிலும் சூஸானியின் வசைப்பாடல்களும் இத் துறையைச் சார்ந்தவை. இக் காலத்தின் இறுதியில் எழுந்த இருபெருங் கவிஞர்கள் கஞ்சாவைச் சார்ந்த நிஜாமியும் அத்தாரும் ஆவர். நிஜாமி பாரசீகத்தின் புனைகதை மன்னர். குஸ்ராவ் உஷிரீன், லைலா மஜ்னூன், பஹ் ராம்குர், ஹஃப்த் பைகர் (ஏழு கதைகள்) இஸ்கந்தர்நமா ஆகியவை இவரின் ஒப்புயர்வற்ற ஐந்து இலக்கிய மணிகள். லைலா மஜ்னூன் கதையை உலகில் அறியாதவர் இல்லை. அது ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட்டுடன் ஒப்புமையும் ஒப்பும் உடைய சிறந்த துன்பக் கதை. அத்தார் என்னும் பெயர் மருந்துக் கடைக்காரனைக் குறிக்கும். அவர் செய்துவந்த தொழிலாலேயே இக் கவிஞர் சிறப்பிக்கப் பட்டார். மங்கோலிய அரசன் செங்கிஸ்கான் கொடுமைக்கும் தப்பிய கவிதைக்குயில் அத்தார் ஒருவரே. மண்டி குல்தப்பர் (பறவைகள் பேச்சு), பண்ட்நமா (அறிவுரைக் கொத்து), முஸீ பத்நமா (ஊழ்வினை பற்றிய கதைகள்), ஷுதுர்நமா (ஒட்டகைக் கதை), புல்புல்நமா (குயில் கதை) ஆகியவை அவர் சிறந்த நூல்கள், சமயமும் அறிவுரையும் கதையும் பழமொழிகளும் விராவிய கூட்டுணவுகள் அவர் நூல்கள். 7. மங்கோலிய ஆட்சி மங்கோலிய ஆட்சிக் காலத்தின் தலைசிறந்த புலவர்கள் மறைநிலை இலக்கிய மன்னன் ரூமி, ஒழுக்கத்துறை இலக்கிய மன்னன் ஸாதி, பாரசீகத்தின் ஷேக்ஸ்பியர் எனப்படும் ஹபீஸ், பாரசீகப் பெருமை யனைத்தின் கடைசி நிறைமலர்ச்சி எனக் கொள்ளப்படும் ஜாமி ஆகியவர்கள் ஆவர். ரூமி இஸ்லாமியரால் ‘குர் ஆன் எழுதாத நபி’ என்று புகழப் பெறுபவர். அவர் எழுதிய ‘மஸ்னவீ இ மஸ்னவி’ பழம் பாரசீக மொழி நடையில் ஆறு பகுதிகளாக எழுதப்பட்ட பெரிய சமயநூல். சூபிகள் கருத்துக்கள், கதைகய், வரலாறுகள் எல்லாம் நிறைந்த பல்கலைக் களஞ்சியம் எனத்தகும் பெருமையுடையது அது. ‘ஹபீஸின் அகலமும் விரிவும் இவரிடம் இல்லையாயினும் அவரினும் உயரிய இன்னிசை ரூமியிடம் உண்டு’ என்பர் அறிஞர். ஸாதி, பாரசீகத்தின் வள்ளுவர் அல்லது டால்ஸ்டாய். அவர் வாழ்க்கையும் அறவுரைகளும் இயேசு வாழ்க்கையை நினை வூட்டுவன. எவ்வுயிரிடத்தும் எத்தகையாரிடத்தும் தடைப்படா அருளிரக்கம் இவர் நூல்களில் கண்ட தனிச்சிறப்பு. அவர் எழுதி யவை எல்லாம் இனிய புனைகதைகளாதலால் பொன்மலர் மணமும் பெற்றதென இனிமையும் அருளும் அவரிடம் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன. பூஸ்தான் (பழத்தோட்டம்), குலிஸ்தான் (ரோஜாத் தோட்டம்) இரண்டும் அவர் இன்னுரைப் பூங்கொத்துக்கள். நஜீர்உல்தீன் ஆசாரக்கோவை போன்ற அக்லாகிநஸீரியும் மியாருவ் கஷர் (கவிதையின் உரைகள்) என்ற செய்யுளிலக்கண நூலும் இயற்றினார். ஜக்கானி என்பவர் அக்லாஜியில் குறிப்பிட்ட அராபியர்களைக் கண்டித்து நகையாடும் முறையில் அக்லாகுல் அஷாரஃப் என்ற நூல் இயற்றினார். ‘முஷ்உகுரபா (பூனையும் எலியும்) என்ற இவர் வசைநூல், வசைநூலுலகில் ஸ்விஃப்டின் வசை நூல்களுடன் ஒப்பிடத் தக்கது. மொழியின் இனிமை, மனித வாழ்வின் ஆழத்தையும் அகலத்தையும் அளந்துணரும் திறன், உவமை நயம் ஆகியவற்றில் ஷேக்ஸ்பியர் போன்ற உலகக் கவிஞர் வரிசையில் சேர்க்கப்படத் தக்கவர் ஹபீஸ். அவர் சித்திரக்காப்பியம் (அஸிதா), நாலடிவண்ணம் (ரூபா-இயத்), அகவல் (மஸ்னவீ) ஆகிய எல்லாத் துறைகளிலும் சிறப்புடையார். ஆயினும், அவருக்கே உரிய ஈடும் எடுப்பும் அற்ற துறை எழுச்சிப் பாடல்6 துறை ஆகும். பாரசீகப் பெரும்புலவர் வரிசையில் காலத்தால் கடைசி யானவர் ஜாமி. ஜாம் என்ற இடத்தில் பிறந்தவர் என்பதனால் அவர் ஜாமி எனப் புனைப்பெயர் அடைந்தனர். இவரும் சூபி நெறியில் ஆழ்ந்த பற்றுடையவரே. ஹப்த் அவ்ரங்க் (ஏழு அரசிருக்கைகள்) என்ற நூல் தொகுதியும், அஷியாதல்லமா அத் என்ற உரைநூலும், சூபி முனிவர் வரலாறு ஒன்றும், பகாரிஸ்தான் (இளவேனில் உறைவிடம்) என்பதும் அவரின் சிறந்த நூல்கள். இறுதி நூல் ‘சாதி’யின் குலிஸ்தானைப் போன்றது. புலமையில் சிறந்த இக் கவிஞர் பாரசீகத்தில் இன்றும் எல்லாக் கவிஞர் திறமும் உடையவர் எனப் போற்றப்படுகிறார். ஆயினும், அவர் காலத்தில் வளர்ச்சி குன்றிவிட்ட தாதலால் புதுமை மணம் மங்கிச் சொல்லணிகளே மிகுந்துவிடுகின்றன. 8. அண்மைக் காலம் 15ஆம் நூற்றாண்டிக்குப்பின் பாரசீக அரசியல் முற்றிலும் சீரடைந்து விட்டதென்னலாம். அரவிய மொழி ஆதிக்கமும் அரசியல் ஆதிக்கமும் மட்டுமின்றி, மங்கோலிய ஆதிக்கமும் ஒழிந்தது. சமயத்தில்கூடப் பாரசீக நாட்டில் எழுந்த உள்நாட்டுச் சமயக் கிளையாகிய ஷியா நெறி ஸஃபாயி மரபினர் காலத்தில் அரசியலாளர் நெறியாய் மாறிற்று. அதன் முனைத்த முன்னணியான இஸ்மாயில் மரபினரே தவிசேறினர். அந் நெறிச் சார்பான இலக்கியம் ஆதரவு பெற்றது. ஆயினும், அரசியல் விடுதலைப் போரிடை யேயும் தளராதிருந்த இலக்கிய வீரம் அதன்பின் முற்றிலும் தளர்ச்சி யடைந்துவிட்டது. அண்மைக் கால இலக்கியம் உண்மையில் தமிழ்நாட்டு அறிவுப் புலவர், கவிராயர் நூல்கள் போன்ற இரண்டாத் தரத்தவையே. ஜாமைச் சார்ந்த ஹதிபியும் பிகானியும் இக் காலத்தின் குறிப்பிடத்தக்க புலவர். முன்னவர் புனைகதைகள் காவியம் எழுதினர். பின்னவர் ஹபீஸைப் பின்பற்றினர். கா ஆனி 19 நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்ற கவிஞர். இந்தியாவில் 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் பாரசீக மொழி இலக்கியம் ஒரு தனிக் கலையாக வளர்ச்சிபெற்றது. இந்தியாவின் சிறந்த பாரசீகப் புலவர்கள் டில்லியைச் சார்ந்த அமீர் குஸ்ரூவும், கிர்மானைச் சார்ந்த வாஜூவும் ஆவர். முன்னவர் இந்தியாவின் நிஜாமி ஆவர். நிஜாமியோடு எவ்வகையிலும் ஒத்த சிறப்புடையவர் என்று அவர் பாரசீகமொழி அறிஞரால் கொள்ளப்படுகிறார். குவாஜூ உண்மையில் பாரசீகத்திலுள்ளவரே. முகல் பேரரசர் ஆதரவை நாடி டில்லியிலிருந்து வாழ்ந்தவரே. இவர் நிஜாமைப் போன்ற பல புனைகதைக் காவியங்களும், புகழ் (கஸீதா)ப் பாக்களும், எழுச்சிப் பாடல்களும் பாடினார். பாரசீக இலக்கியம் பாரசீகராலும் இந்திய முஸ்லீம் களாலும் பாராட்டப்படுகிறதாயினும் வளர்ச்சி வகையில் ஓய்ந்து விட்டதென்றே சொல்ல வேண்டும். ஆயினும், பாரசீகநாட்டு வாழ்வில் அது மீண்டும் மறுமலர்ச்சி பெறும் என்று உறுதியாக நம்பலாம். அடிக்குறிப்புகள் 1. Encyclopaedia. 2. Ori 3. Philosopher 4. Odes. 5. Diwan 6. Odes. 8. கன்னட இலக்கியம் 1. முன்னுரை இந்திய மொழிகளுள் தமிழுக்கும் வடமொழிக்கும் அடுத்த படி பழமையான இலக்கியமுடையது கன்னடமே. கன்னடம் திராவிட மொழிக்குழுவைச் சேர்ந்தது. பண்பட்ட திராவிட மொழிகளாகிய தென்இந்திய மொழிகளுள் பழமையிலும், இலக்கியப் பரப்பிலும் அது தமிழுக்கு அடுத்தபடி யானது. நாட்டுப் பரப்பிலும் மக்கள் தொகையிலும், அது தமிழ், தெலுங்கு ஆகிய வற்றுக்கு அடுத்த மூன்றாம் இடம் உடையது. கன்னடம் என்பது கர்நாடகம் என்ற தொடரின் சிதைவு ஆகும். வடமொழியில் அது ‘கர்நாடகம்’ என்றே குறிப்பிடப் படுகிறது. கன்னடம் பேசும் மக்கள் தொகை ஒரு கோடி மைசூர்த் தனியரசு, ஹைதராபாத் தனியரசின் மேல் பகுதி, பம்பாய் மாவட் டத்தின் ‘தென் மராட்ட ‘வட்டங்கள், சென்னை மாவட்டத்தின் தென் கன்னட, பெல்லாரி வட்டங்கள் ஆகியவை கன்னட நாட்டை’ச் சேர்ந்தவை. 2. கன்னட நாட்டில் பிறமொழியகத் தொடர்புகள் கன்னட நாட்டு வரலாறு, மொழி, இலக்கியம், சமயம் ஆகியவற்றில் தெலுங்குநாடு, தமிழ்நாடு ஆகிய இரு பகுதிகளின் தொடர்புகள் பல. தென்மொழிக் குழுவுக்கே சிறப்பான எழுத்து க்களுள் வல்லின றகரம் அண்மைவரை தெலுங்கிலும் கன்னடத் திலும் இருந்தது. ழகரம் அண்மை வரை கன்னடத்திலிருந்தது. தவிர, 13ஆம் நூற்றாண்டு வரை தெலுங் கெழுத்துக்களின் உருவம் கன்னட எழுத்துக்களின் உருவினின்று வேறுபடாமல் ஒரு தன்னமை யதாகவே இருந்தது. கன்னட இலக்கிய வரலாற்றில் தொடக்கத்தில் சமண சமயமும், பின் வீரசைவ சமயமும் இறுதியில் வைணவ சமயமும் தலைமைநிலை பெற்றன. சமணர் சமயத்துக்கு முற்பட்ட இலக்கியம் காணப்படவில்லை. இச்சமய இயக்கத் தொடர்ச்சி வரிசை தென்மொழிகளின் வரலாற்றில் ஒன்றன்பின் ஒன்றாகவந்த சமய இயக்கங்களின் வரிசை முறையைக் காட்டுவதாகும். 3. தமிழிலக்கியமும் கன்னட இலக்கியமும் கன்னட இலக்கியத்தின் வீரசைவப் பகுதி சிறப்பாகவும் சமணப்பகுதி ஓரளவுக்கும் தமிழிலக்கியத்துடன் தொடர் புடையன. சைவ சமய நாயன்மார் அறுபத்து மூவரும் வீர சைவரால் பழஞ் சைவ நாயன் மார்(புராதனர்)களாகக் கொள்ளப் பட்டனர். அவர்களுள் சம்பந்தரைப் பற்றித் தமிழகத்தில் இல்லாத கதைகள்கூடக் கன்னட நாட்டில் வழங்குகின்றன. அறுபத்து மூவருள் சேர்க்கப்படாத மாணிக்கவாசகர் கன்னட வீரசைவரால் வீரசைவத் தொண்டர் 770 பேர்களுள் தலைசிறந்தவராகக் கொள்ளப்படுகிறார். இவர்கள் தவிர வீரசைவத்தின் சிறப்புத் தலைவர்கள் பசவர், சென்னபசவர், அல்லமர் முதலியவர் ஆவர். தமிழிலுள்ள குறள், நாலடியார், மூதுரை, நல்வழி முதலிய நூல்கள் கன்னட வைணவ இலக்கியத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இதைத் தவிரத் தமிழிலக்கிய நூலான பிரபுலிங் கலீலைக்கு முதனூல் கன்னடப் பிரபுலிங்கலீலையே என்பதும் குறிப்பிடத்தக்கது. கன்னட மொழி ஹனகன்னடம் (பழங்கன்னடம்), ஹொள கன்னடம் (புதுக்கன்னடம்) என இரு பிரிவாகப் கொள்ளப் படுகிறது. ஹளகன்னடம் செந்தமிழ் போன்ற பழமை வாய்ந்த மொழிநடை. பொது மக்கள் மொழியையே வீரசைவ இயக்கம் பின்பற்றியதால் எழுந்த புத்திலக்கிய மொழி புதுக்கன்னடம். கன்னடைப் புலவர் ஹளகன்னடத்தை விடாது ஆதரித்து இன்றும் அதில் சிறுபான்மையாக நூல்கள் இயற்றி வருகின்றனர். புதுக்கன்னடத்தைவிட ஹளகன்னடம் தமிழுடன் நெருங்கிய உறவுடையது. கன்னட இலக்கிய வரலாற்றைச் சமணகாலம் (9 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை), வீரசைவகாலம் (12 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை), வைணவகாலம் (16 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை), அணிமைக்காலம் (19-20 நூற்றாண்டுகள்) என வகுக்கலாம். 4. சமணகால இலக்கியம் (9-12 ஆம் நூற்றாண்டுகள்) கன்னட நாட்டில் கி.பி. 4-5 நூற்றாண்டுகளிலிருந்தே இலக்கிய வாழ்வு தொடங்கியிருக்க வேண்டும். ஆயினும், 9 ஆம் நூற்றா ண்டுக்கு முற்பட்ட இலக்கியம் எதுவும் கிட்டவில்லை. பிற்கால இலக்கிய உரையாசிரியர்களின் மேற்கோள்களாலும், குறிப்புக் களாலும் பல புலவர் பெயர்களும், நூற்பெயர்களும் அறியப் படுகின்றன. கன்னட நாட்டில் பேர்போன வடமொழிச் சமண ஆசிரியர்களான சமந்த பத்திரர், கவிபரமேஷ்டி, பூஜ்யபாகர் ஆகியவர்களும் கன்னட மொழியில் எழுதிவந்ததாக அறிகிறோம். ஆயினும், இன்று இலக்கிய உலகுக்கு எட்டியுள்ள முதல் கன்னட நூல் ‘கவிராஜமார்க்கம்’ என்ற யாப்பிலக்கண நூலேயாகும். இது நிருபதுங்கன் (814-877) என்ற இரட்டகூட அரசன் பெயரால் நிலவினும் அவன் அவைப்புலவர் ஒருவர் இயற்றியதேயாகும். குணவர்மன் (முந்தியவர்) எழுதிய நேமிநாதபுராணமும் ‘சூத்திரகன்’ என்ற நூலும் இந் நூற்றாண்டுக்குரியவை. பத்தாம் நூற்றாண்டில் மும்மணிகள் என்று கூறப்படும் குணவர்மன் (பிந்தியவர்) அல்லது பம்பன், பன்னன், இரன்னன் என்பவர்கள் வாழ்ந்தனர். பண்டைச் சமண சமயாச்சாரியாராகிய 24 தீர்த்தங்கரர்களுள் முதல்வரான இடபதேவர் வரலாறு கூறும். ஆதிபுராணமும், விக்கிரமார்ச் சனவிசயம் அல்லது பம்பபாரதமும இவர் இயற்றிய சிறந்த நூல்கள். இருமொழிக் கவியரசர் எனப் பட்டம் பெற்ற பன்னன் 14 ஆம் தீர்த்தங்கரர் வரலாறாகிய சாந்திபுராணம், ஜினாட்சரமாலை ஆகிய வற்றாலும், வளையல் செட்டி மரபினர் ஆகிய இரன்னன் அசித புராணம், சாகச பீமவிசயம் ஆகியவற்றாலும் புகழ் பெற்றவர்கள். சாவுண்டராயர் என்பவர் எழுதிய திரிசஷ்டி இலட்சண மகாபுராணம் அல்லது சாவண்டராய புராணம் கன்னடத்தின் முதல். முழு உரைநடை நூல் ஆகும். நாகவர்மன் (முந்தியவர்) சந்தாம் புதி என்ற சிறந்த யாப்பிலக் கணத்தின் ஆசிரியர். சோழர் படையெடுப்பால் 11ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியிலும் கன்னட நாட்டில், இலக்கிய வாழ்வு முற்றிலும் சீர்குலைந்தது. அதன் இறுதியில் தமிழகத்தில் தண்டியாசிரியர் காலத்தில் வடமொழி தமிழ் மொழி இரண்டிலும் எழுந்த சொல்லணிச் சித்திர அணிப் பித்துக் கன்னட நாட்டிலும் பரந்தது. சந்திரராசன் என்பவர், பல சந்தங்களுக்கு இடம் தருவதும் பொருளும் ஒலிப்பும் ஒத்தியைந்ததும் ஆன மதனதிலகம் என்ற அணி நூல் ஒன்று இயற்றினார். பல்லான அரசன் அவைப்புலவர் நாகசந்திரர் அவிநவபம்பர் எனப் புகழுப்படுபவர். அவர் எழுதிய பம்ப ராமாயணம் எனப்படும் இராமச்சந்திர சரித்திர புராணம் 12ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நூல் ஆகும். கதையளவில் இந்த இராமாயணம் வால்மீகி இராமா யணத்தை ஒத்தாயினும், சமண இராமாயணங்களை ஒட்டி இது பல நிகழ்ச்சிகளில் அதனின்றும் மாறுபட்டதாகும். கிட்கிந்தை மக்கள் குரங்குகள் அல்லர், குரங்குக் கொடியுடைய நன்மக்களே என்பதும்; இரவாணன் வான ஊர்தி செல்லும் திறமுடைய நல்லரசனே, பத்துத்தலை அரக்கன் அல்லன் என்பதும்; இராவணன், கரன் முதலியவர்கள் கொலை வேள்வியை எதிர்த்த சமணர்களே, அரக்கர் அல்லர் என்பதும் இந் நூலின் தனிப்பட்ட வேறுபாடுகள் ஆகும். பல்லாள அரசவைப் புலவருள் தமிழ்நாட்டு ஒளவை போன்ற காந்தியார் என்ற பெண்புலவரின் பெயரும் காணப் படுகிறது. நாகச் சந்திரன் - காந்தியார் பாட்டுப் போட்டி ஒளவை-கம்பர் போட்டிக் கதையை நினைவூட்டுவதாயுள்ளது. நாகவர்மன் (பிந்தியவர்) எழுதிய கர்நாடக பாஷா பூஷணம் கன்னட மொழியின் தலைசிறந்த இலக்கணங்களுள் ஒன்று. இவர் எழுதியயாப்பணி இலக்கணமாகிய காவியாலோகனம், மணி மேகலை போலப் புறச்சமயத்தை மறுத்துத்தன் சமயம் நிறுவும் சமய நூலான பிரமசிவாவின் சமய பரீஷையும் இதே ஆசிரியரின் ஆனின மருத்துவ நூல் என்னும் விலங்கு மருத்துவம்1 பற்றிய செய்யுள் நூலும் இக் காலத்திய பிற குறிப்பிடத்தக்க நூல்கள். இக் காலத்தில் சமணரல்லாதார் இயற்றிய நூல் ‘துர்க்க சிம்மனின் பஞ்ச தந்திரம்’ என்ற ‘சம்பூ’ நூலே. இது பிசாச மொழியில் (காஷ்மீர எல்லை மொழியில்) குணாட்யன் எழுதிய முதல் நூலின் மொழிபெயர்ப் பாகும். 5. வீரசைவ காலம் (12-18ஆம் நூற்றாண்டுகள்) வீரசைவ காலத்திலும் அதன்பின்னும் சமண நூல்கள் எழுதப் பட்டே வந்தன. 24 தீர்த்தங்கரர் வரலாறுகளும் அவற்றில் பேரிடம் பெற்றன. வீரசைவ இயக்க காலத்தில் இதுபோல் நாயன்மார் வரலாறும் வீரசைவத் தலைவர் வரலாறும் சிவபுராணக் கதைகளும் மிகுதியாக வழங்கின. சைவம், சமணம் ஆகியவற்றைப் போலவே வீரசைவமும் மிகப் பழைய சமயமே. ஆயினும், 1160 இல் காலசூரி மரபினனாகிய பிச்சள மன்னனை எதிர்த்துப் பசவரும் சென்னப் பசவரும் எழுப்பிய இயக்கத்தாலேயே அது புத்துயிர் பெற்றது. வடமொழியும் பழைய காவிய வழக்கும் கலந்த சமய இலக்கிய நடையைப் புறக்கணித்து வீர சைவ எழுத்தாளர் எளிய பேச்சுநடையில் எழுதினர். இது இச் சமயத்துக்கு மிகுதி ஆக்கம் அளித்தது. அரீசுவரர் அல்லது அரிகரர் என்ற புலவர் 1165-லேயே 63 தமிழ் நாயன்மார் வரலாறுகளை ‘ரகளே’ என்ற நாட்டுப் பாடல் உருவில் ‘சிவகணத ரகளே’ என்ற நூலாகச் செய்தார். முதல் நாயனார் புராணப் பெயரை ஒட்டி அது ‘கம்பியண்ணன ரகளே’ எனவும் பெயர்பெறும். ‘பார்வதி திருமணம்’ பற்றிய ‘கிரிஜா கல்யாணம்’ இவர் எழுதிய பெருங்காப்பியம். ஹம்பியில் கோயில் கொண்ட விரூபாக்கப் பெருமான்மீது ‘பம்பசதகம்’ என்ற நூறு பாடல்கள் இவரால் இயற்றப்பட்டது. இவர் சீகூரின் வைணவ அரசனைப் பற்றி அரிச்சந்திர காவியம் எழுதியது. குறித்து அவர் மாமன் வருந்தியதாகக் கூறப்படுகிறது. அவ் வருத்தம் தீர ‘சித்தராம புராணம்’ என்ற வீரசைவத் தொண்டர் வரலாறும் அவர் ஆசிரியர் அரீசுவரர் புகழ்பற்றிய’ அரிகர மகத்துவம்’ என்ற நூலும் எழுந்தனவாம். பேலூர்க் குளத்தை அமைச்சர் என்ற முறையில் கட்டியதனால் ‘கெரெய’ என்ற புனைபெயர் பெற்ற பத்மராசர் “தீக்ஷhபோதம்” என்ற “சமய வினா விடைப் பாடல்” (ரகளே) நூல் இயற்றினார். இவர் புதல்வரும் சிறந்த கவிஞர் ஆவர். தேவகவியின் ‘குசுமாவதி’ அழகிய நடையில் அமைந்த ‘சம்பூ’ நூல். கன்னடத்தின் தலைசிறந்த காதற் புனைவுக் கதைகளுள் இது ஒன்று. ஓவியங்கண்டு காதலித்த ஓர் இளவரசனும் இளவரசியும் இதன் கதைத் தலைவர் ஆவர். மேற்குக்கரை நாட்டில் ஒரு சிற்றரசாயிருந்ததாகக் கூறப்படும் சாமராசர் 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிய ‘சிருங்கார ரசம்’ பரிவாரத்துடன் கயிலை சென்ற ஒரு மன்னவன் கதையாகும். இது மேற்குக்கரை மன்னனாகிய சேரமான் பெருமானின் கதையை நினைவூட்டுவதாகும். 14ஆம் நூற்றாண்டின் சிறந்த புலவர்கள் பீமசுவியும் குப்பி நகரைச் சார்ந்த மல்லனார்யரும் ஆவர். பிமகவி பசவ புராணத்தின் ஆசிரியர். கன்னடத்தில் பெரும்பான்மை வழக்குடைய அறுசீர் விருத்தத்தில் (ஷட்பதி) இது எழுதப் பட்டுள்ளது. மல்லனார்யர் வீரசைவாமிர்தம், சிவபக்தர புராணம், பாவசிந்தா ரத்தினம் அல்லது சத்தியேந்திர சோழ கதை ஆகியவற்றின் ஆசிரியர். இறுதி நூல் பிள்ளை நாயனார் (திருஞான சம்பந்தர்) எழுதியதாகக் கூறப்படும் சத்தியேந்திர சோழன் கதையைத் தழுவியதாகக் கொள்ளப்படுகிறது. திருஞானசம்பந்தர் கதைகளில் கன்னட நாட்டில் பாண்டியன் பெயரைவிட மிகுதியாக இச் சோழன் பெயர் கூறப்படுகிறது. வீரசைவ காலச் சமண இலக்கியத்துள் 12 ஆம் நூற்றாண்டி னனாகிய நேமிச்சந்திரன் இயற்றிய ‘லீலாவதி கன்னடத்தின் முதல் புதுமைப் புனைகதை. ஆகும் 13 ஆம் நூற்றாண்டின் சன்னன் இயற்றிய ‘யசோதா சரித்திரம்’ தமிழ் யசோதரகாவியத்தை நினைவூட்டுவது. சிசுமாயனன் கன்னடத்தல் புகழடைந்த இலக்கியத் துறையாகிய ‘சாங்கத்திய முறையை (இசை நாடகப் பாடல்)த் தோற்றுவித்தவன். அஞ்சான சரித்திரம், திரிபுர தகனம் ஆகியவை அவன் எழுதிய இசைப் பாடல் நூல்கள். ஆண்டய்யா என்னும் புலவர் தம் நூலிலும், நூற்பெயரிலும் தூய கன்னட நடையைப் பின்பற்றியவர் வடமொழிக் கலப்பால் கன்னடத்தின் வளப்புக் குன்றியவருகிறதென இவர் அறைகூவினர். இவர் நூல்கள் ‘கப்பிகாரகாவ’ (கவிஞர் பாதுகாப்பு), ‘காவென கெல்ல’ (காமன் வெற்றி) என்பவை. ஆங்கிலத்தில் ‘பொன் கருவூலம்,2 என்ற அழகிய கவிதைத் திரட்டுக்கொப்பாகக் கன்னடத்தில் ‘காவிய சாரம்’ என்ற பாடல் திரட்டு அமைத்த பெருமை மல்லிகார்ச்சுனருக்குரியது. இன்றைய கன்னட இலக்கிய ங்களுள் தலைசிறந்த ‘சப்தமணி தர்ப்பண’த்தின் ஆசிரியரான கேசிராசர் இக் காலத்தவர். இரட்டகவி என்பவர் எழுதிய இரட்டசூத்திரம் கீழ்நாடு களிலேயே காணப்படாத அரிய அறிவுநூல். இது நில அதிர்ச்சி, இடி, வழி எதிர்ப்புகள், கோள் நிலைகள் ஆகியவை பற்றிய உண்மைகளை அக் கால நிலைக்கு ஏற்ப விளக்கப் புகுந்த அறிவு விளக்க நூல். குமுதேந்து ராமாயணம், கசேந்திர மணிதர்ப்பணம் என்ற இலக்கணம். அபிநவ சந்திரர் இயற்றிய குதிரை மருத்துவம் பற்றிய நூல் ஆகியவை இக் காலத்தில் குறிப்பிடத்தக்க நூல்கள். 6. வைணவ கால இலக்கியம் (18-19 நூற்றாண்டுகள்) தமிழ்நாட்டில் பிறந்த இராமானுசரும், வங்கநாட்டில் பிறந்த சைதன்னியரும் கன்னட நாட்டில் வந்து தங்கித் திருமாலிடங்கள் தோறும் சென்று நம் அன்பு நெறியைப் பரப்பியர் ஆவர். கன்னட நாட்டிலேயே பிறந்த மாத்துவர், முன்னவர் சீடராகவும், பின்னவர் ஆசிரியராகவும் அமைந்தவர். இம் முப்பெரு வைணவத் தலைவர்கள் தொண்டுக்கும் ஒருங்கே உரிய நாடு கன்னட நாடே. வைணவ இலக்கியத்தின் பெரும்பாலான நூல்கள் விஷ்ணு புராணம், பாகவதம், இராமாயணம் ஆகியவற்றின் மொழி பெயர்ப்புகளும் நாடோடிப் பக்திப் பாடல்களும் ஆகும் பாரத இராமாயணங்கள் சமணர் காலத்தில் பல தடவை மொழிபெயர்க் கப்பட்டாலும் வேத மொழியாளர் (இந்து சமயச்) சார்பாகவும், வைணவச் சார்பாகவும் அவை மீண்டும் பெயர்த்தெழுதப் பட்டன. 12 ஆம் நூற்றாண்டிலேயே உருத்திரபட்டர் என்ற வேதநெறிப் பிராமணர் விஷ்ணு புராணத்தைக் தழுவி ‘ஜெகந்நாத விசயம்’ இயற்றியிருந்தார். விசயநகரப் பேரரசின புகழ்மிக்க மன்னரான கிருஷ்ண தேவராயர் காலத்தில் மகாபாரதத்தின் 18 பருவங்களையும் நாரணப்பா, திம்மண்ணா ஆகிய இருவர் மொழி பெயர்த்தனர். முதல் 10 பருவங்களடங்கிய முற்பகுதியை எழுதிய முதற் புலவர் குமார வியாசர் எனச் சிறப்பிக்கப்பட்டார். இந் நூல் கடக் என்ற நகரில் எழுதப்பட்டதனால் கடகின பாரதம் எனப்படும். பிற்பகுதி நூல் கிருஷ்ணராய பாரதம் என்றழைக்கப்படுகிறது. கன்னடத்தில் முதல்தர மதிப்புடைய பாரதங்கள் பம்ப பாரதமும், ஜைமினி பாரதமுமேயாகும். பின்னது 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்குமிசன் என்பவரால் எழுதப்பட்டது. இதில் தலைமையான நிகழ்ச்சி தருமர் குதிரை வேள்வியே (அசுவமேத யாகம்) ஆகும் ஆயினும், பல துணைக் கதைகளும், நாடோடிக் கதைகளும் அதனிடையே இணைக்கப்பட்டுள்ளன. தமிழகம் பற்றிய பல செய்திகளும் இதில் காணப்படுகின்றன. தமிழகத்தின் தென்பகுதியில் பெண்கள் நாடு ஒன்று இருந்ததாக இதில் குறிப் பிடப்பட்டிருக்கிறது. அருச்சுனனின் பாண்டிய நாட்டு மைந்தனான பப்புருவாகனன் மணிப்பூரில் ஆண்டதாகவும், அவன் கையால் அருச்சுனன் முன் வினையீட்டின் (சாபப்)படி மாண்டு கண்ணனால் உயிர்ப்பிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இம் மணிப்பூர் தென் மைசூரிலுள்ள ஒரு நகரமெனக் கன்னட அறிஞர் கருதுகின்றனர். கிருஷ்ண தேவராயர் காலத்திலேயே ‘தோரவா ராமாயணம்’ ஒன்று, ‘குமார வால்மீகி’ என்ற புனைபெயருடைய புலவரால் இயற்றப்பட்டது. தோரவா என்பது அந் நூல் எழுதப்பட்ட இடமே ஆகும். 16 ஆம் நூற்றாண்டில் இலக்குவரும் சமணராகிய சாலு வரும் 17 ஆம் நூற்றாண்டில் சுகுமாரரும் வேறு இராமாயணங்கள் இயற்றினர். பாகவத புராண மொழிபெயர்ப்பும் பாகவதக் கதை நிகழ்ச்சி களை விரித்துரைக்கும் நூல்களும் எண்ணற்றவை. சாடு விட்டல நாதர் என்ற இயற்பெருடைய ‘நித்தியாத்ம சுகர்’ பாகவத புராண முழுவதையும் மொழி பெயர்த்தார். வேங்கய்யா ஆர்யா பாக வதத்தின் முதல் 10 கந்தங்களையும் சுருக்கி ‘கிருஷ்ண லீலாப்புதயம்’ என்ற நூலாக்கி அதனைத் திருப்பதியிலமர்ந்த திருமாலுக்குப் படைத்தார். ஆனந்த ராமாயணம், அனுமத் விலாசம், உத்தர ராமாயணம் ஆகிய இராமாயணக் கதை நூல்களும் இக் காலத்தில் எழுதப்பட்டன. பத்திச் கலைப் பாடல்கள் இக் காலத்தில் எண்ணற்றவை. பெருவாரியாக இவ்வகைப் பாடல்கள் பாடியவர்கள் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புரந்தர தாசர், கனக தாசர், 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வராசு திம்மப்ப தாசர் ஆகியவர்களே. மற்றும் விட்டல தாசர், வேங்கட தாசர், விசய தாசர், கிருஷ்ண தாசர், மாத்துவ தாசர் ஆகிய ‘தாச’ குழுவினர் பாடல்கள் இத்திறத் தவை. 18 ஆம் நூற்றாண்டினரான சிதானந்தர் இத் துறையில் பிறமொழியாளரும் சுவைக்கத்தக்க’ அரிபத்த ரசாயனம்’ என்ற இனிய பாடல் நூல் இயற்றினார். இப் பாடல்களுள் ஒன்றில் தெருவில் பொருள்விலை கூறி விற்பவர் பாணியில் பெருமாள் பெயராகிய ‘விலையிலாக் கற்கண்டின் புகழ்’ கூறப்படுகிறது. 17 18ஆம் நூற்றாண்டுகளில் சைமினி பாரதம் எழுதிய இலக்குமீகனுக் கொப்பான் புகழுடைய சமண சைவ சமயப் பெரியார் இருவர். சமணப் பெரியாரான பட்டா களங்கர் கன்னட இலக்கணத்தை வடமொழியில் சூத்திரமாக்கி வடமொழியிலேயே காண்டிகை விருத்தி உரைகளுடன் வழங்கினார். வீரசைவராகிய சடாட்சர தேவர் விருசபேந்திர விசயம், சபா சங்கர விலாசம் என்ற நூல்களையும், இராசசேகர விலாசம் என்ற கன்னடத்தின் ஒப்புயர் வற்ற பாடற் புனைகதை நூலையும் இயற்றினார். இராசசேகர விலாசத்தின் கதைத் தலைவர், ஞாசம்பந்தர் கதைகளில் இடம் பெறும் சத்தியேந்திர சோழனின் மகனும் அமைச்சன் மகனும் ஆவர். சோழன் மகன் இலங்கை மீது படையெடுத்து இலங்கை அரசன் மகளை மணந்தனன். அவன் வற்புறுத்தலால் அடங்காக் குதிரையேறிய அமைச்சன் மகனது குதிரையினால் ஒரு சிறுவன் மான, அது காரணமாக அரசன் மகனும், அமைச்சன் மகனும், அரசனும், சிறுவன் தாயும் மாள, சிவபெருமான் வந்து அனை வரையும் உயிர்ப்பித்ததாகக் கதை. தமிழ் மனுநீதிகண்ட சோழன் கதையை இது நினைவூட்டுவதாகின்றது. வைணவ இலக்கிய காலத்தில் சைவம் பற்றி எழுதிய இன்னொரு பேராசிரியர் நிசகுணயோகி ஆவர். இவர் வேதாந்தப் பாடலாகிய பரமார்த்த கீதை, அனுபவசாரம், பரமானுபவ போதம் ஆகிய வற்றையும், நாயன்மார்கள் பற்றிய முச்சீர்ப்பாடல் நூலான ‘புராதன திரிபதி’யையும் சிவநெறிப் பேரறிவுக் களஞ்சியமான கைவல்லிய பத்ததியையும் இயற்றினார். பேரறியப்படாத இன்னோராசியரால் முச்சீரிலேயே பிரமோத்தர காண்டமும் மைசூர்த் தளவாய் மரபினரான நஞ்சராசரால் சிவபத்தி மகாத் மியமும் எழுதப்பட்டன. மக்கள் சமயத்திலும் வாழ்வியவிலும் பகுத்தறிவுச் சீர்திருத்த ஒளி ஊட்டிய கவிஞர் சர்வக்ஞமூர்த்தி ஆவர். இவர் பாடல்கள் தமிழில் சிவவாக்கியர் பாடல்களையும் தெலுங்கில் வேமனர் பாடல்களையும் நினைவூட்டுபவை. பாடல்தோறும் இவர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இவர் முச்சீர் மணிகளில் மூன்றின் கருத்து கீழே தமிழ்வடிவில் தரப்படுகிறது. பறையன்மனை புகும்கதிரோன் ஒளிதீ தாகிப் பறையொளியாய் மாறிடுமோ? பறையனென்றும் மறையவனென்றும் பேதமே எவர்க்கும் இறையருளுண்டேல் உயர்வுண்டாம் சர்வக்ஞ. 1 நடமாடித் திரியும் தாய்நிலமும் ஒன்றே; விடாய்தீர்க்கும் நீர் ஒன்றே; வீட்டினுள்ளே அடுப்பதனில் எரிதழலும் ஒருதன்மைத்தே; எடுப்பதெங்கே குலம் சாதி காண்! சர்வக்ஞ. 2 பன்றியாய்ப் பிறந்திட்டான் பெருமாள்; ஈசன் சென்றிரந்தான் மனைதோறும்; விதியின் தாதை அன்றிழந்தான் தலையொன்றை; இவர்கட்கெல்லாம் அன்றெழுதி விட்டவன் யார்? காண்! சர்வக்ஞ. 3 7. தற்கால இலக்கியம் தற்கால இலக்கியத்தில் பெரும்பகுதி உரைநடையும் நாடகமும் புனைகதையும் ஆகிய புத்திலக்கியத் துறைகளேயாகும். இவை நாட்டிலக்கிய மாகாவிடினும், புதிய நாட்டிலக்கியம் உருவாக உதவுபவையே என்பதில் ஐயமில்லை. ஆங்கிலத்தினின்று ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பலவும் வங்கத்தின் தற்காலப் புனைகதை3 நூல்களும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. மைசூர் அரசர் கிருஷ்ணராய உடையார் காலத்தில் (1799-1868) அவர் ஆதரவிலேயே ‘கிருஷ்ணராய வாணிவிலாசம்’ என்ற பெயருடன் உரைநடைப் பாரத நூல் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இவை தவிர மைசூர் அரசர் காலத்திலேயே மைசூர் அரசர் வரலாறுகளும், குடகு அரசர் வரலாறுகளும் பல எழுதப்பட்டுள்ளன. இவற்றுட் சில மேனாட்டு வரலாற் றாசிரியர்கட்கு உதவியாயி ருப்பவை. கிருஷ்ணராய உடையார் காலத்துக்குப்பின் ஏற்பட்ட நிலை யான இலக்கிய மதிப்புடைய மொழிபெயர்ப்புகளுள் நரசிம் மாச்சாரியாரின் தமிழ்த் திருக்குறள், நாலடியார், மூதுரை, நல்வழி ஆகியவற்றின் மொழி பெயர்ப்பாகிய ‘நீதி மஞ்சரி’ குறிப்பிடத் தக்கது. 8. முடிவுரை இந்திய மொழிகளில் பரப்பிலும் பழமையிலும் பல சமயப் பெருக்கத்திலும் கன்னட மொழி தமிழ் மொழிக்கு அடுத்தபடியில் உள்ளது. நாட்டிலக்கியம் என்ற முறையில் தமிழிலக்கியம் நீங்கலாகக் கன்னட இலக்கியத்துடன் ஒப்பிடக்கூடிய பகுதி காளிதாசன் காலத்திய வடமொழி நூல்கள் சிலவே. கன்னட இலக்கியத்தின் குறைபாடுகள் கீழ்நாட்டு இலக்கியம், இந்திய இலக்கியம் ஆகியவற்றின் பொதுக் குறைபாடுகளே. ஆயினும், தமிழ் பேரளவுக்கும் கன்னடம் ஓரளவுக்கும் இவற்றி டையே தனித்தன்மை பெற்ற இலக்கியங்களே. வடமொழியுடன் ஒப்பிட்டால் இவ்வெல்லா மொழிகளிலும் நாடகத் துறை யில்லாதது ஒரு பெருங்குறைபாடே உரைநடை, வரலாறு ஆகிய துறைகளில் தாய்மொழிகள் மட்டுமன்றி வடமொழியும் குறை பாடுடையதே. புனைகதை, அறிவியல் ஆகியவைகள் புதுத்துறை களாதலால் இனித்தான் இவ்வெல்லா மொழிகளிலும் ஏற்பட வேண்டும் ஆயினும், வடமொழியினின்று மொழிபெயர்த்த கதை இலக்கியம் மற்றெல்லா மொழிகளின் மொழிபெயர்ப்பு களையும் விடக் கன்னடத்தில் இலக்கியச் சிறப்புடையவையாகவே அமைந் துள்ளன. ஒருசில புனைகதை முதனூல்களும் இம்மொழியில் உண்டு. அவற்றுள் ஒன்று விசயநகரப் பேரரசர் காலத்ததாகிய ‘தெனாலிராமன் கதைகள்’ ஆகும். இந்தியத் தாய்மொழி இலக்கியங்களுள் தமிழ் நீங்கலான யாவும் சமய விளம்பரமாகவும் சிறப்பாக வைஷ்ணவ வேத (பார்ப்பன) சமய விளம்பரமாகவும் அமைந்துள்ளன. ஆயினும், இவற்றுள் கன்னடம் நாட்டுப் பண்பாட்டுச் சிறப்பில் மிக்க தேயாகும். இன்று ஏற்பட்டுவரும் இந்தியத் தாய்மொழிப் புது மலர்ச்சி இயக்கத்தால் தமிழ், வங்காளி ஆகியவற்றுடன் ஒப்பாகக் கன்னடம் மேம்படும் என்று உறுதியாகக் கூறலாம். அடிக்குறிப்புகள் 1. Veterinary Science. 2. Golden Treasury. 3. Novels. 9. தெலுங்கு இலக்கியம் 1. தோற்றுவாய் தெலுங்கு மொழி இன்று சென்னை மாகாணத்தில் ராயலசீமா, வடசர்க்கார் ஆகியவற்றிலும் ஐதராபாதிலுள்ள தெலிங் காணத்திலும் பேசப்படுகிறது. இதன் பரப்பு நூறாயிரம் சதுர மைல்களும், மக்கள் தொகை இரண்டரைக் கோடியும் ஆகும். இரண்டாயிர ஆண்டுகட்கு முன் இப்பகுதியில் ‘ஆந்திரர்’ என்ற மரபினர் பேரரசாட்சி செலுத்தினர். மூன்றாம் நூற்றாண்டி லிருந்து பல்லவப் பேரரசரும், ஆறாம் நூற்றாண்டிலிருந்து சாளுக்கியரும் பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து சோழப் பேரரசரும், பதின் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து காகாத்தியரும், ஆந்திர சோடரும், 16ஆம் நூற்றாண்டிலிருந்து விசயநகரப் பேரரசரும் இப்பரப்பில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் தெலுங்கிலக்கியத்துக்குப் பேருதவி செய்தவர்கள் விசயநகரப் பேரரசரும், சாளுக்கியரும், காகாத்தியரும், ஆந்திர சோடரும் குறுநில மன்னர்களுமே யாவர். தெலுங்கு, இலக்கிய வளமுடைய பண்பட்டதிராவிட மொழிகளுள் ஒன்று. ஆந்திர ஆட்சிக் காலத்தில் தெலுங்கு எந்த நிலையிலிருந்ததென்றே அறியக்கூடவில்லை. ஆந்திர மரபினர் புத்த சமயத்தினராதலின் அவர்களைப் பற்றித் தெலுங்கிலக்கிய வாழ்வில் இடமேயில்லாது போயிற்று. அவர்கள் வட நாட்டினர் என்று பலர் கூறுவர். ஆனால், சோழர், பல்லவர், கங்கர் (மைசூர் நாட்டார்) ஆகியவர்களுடன் அவர்கள் தொடர்பு கொண்டவ ராதலால் தென்னாட்டவரே என்று துணிதல் சாலும். அவர்கள் அரசியலிலும் சமய வாழ்விலும் மேற்கொண்ட மொழி வடமொழியின் சிதைவு எனக் கொள்ளப்படும் பாளி. அவரை வட நாட்டினர் என்பவர் அதுவே அவர்கள் தாய்மொழி என்பர். அவர்கள் காலத்தில் நாட்டு மொழியில் பாளிச் சொற்கள் பேரளவில் கலந்தன. பின்னாட் களிலும் சமய மொழியாக வடமொழி பேரளவில் வந்து கலந்தது. இவற்றின் பயனாய் இன்றைய தெலுங்கில் 100க்கு 80 விழுக்காடு சொற்கள் வடமொழி மயமானவை. பொதுமக்கள் பேச்சு மொழியில் மட்டுமே இன்று தெலுங்குச் சொற்களை மிகுதியாகக் காணலாம். சொற்கள் மிகுதியும் வடமொழியா யிருப்பதாலும் இலக்கியம் வடமொழிச் சார்பாயிருப்பதாலும் இருமொழிப் புலவரான தெலுங்குப் பண்டிதர்கள் தெலுங்கைத் திராவிட மொழி என ஏற்கத் தயங்கி, அது வடமொழிச் சிதையின் சிதைவு (விக்ருதி) என்கின்றனர். ஆயினும், மொழியின் இன்றியமையா அடிப்படைச் சொற்கள். இலக்கண அமைதி ஆகியவற்றை ஆராய்ந்த மொழி நூலார் அதனை ஆரியங்கலந்த திராவிட மொழியே. எனக் காட்டுகின்றனர். வடமொழிப் பற்றாளர் தெலுங்கு மொழியின் பெயரைக்கூட ஆரியச் சார்பாக்க எண்ணி ஆந்திரம் என வழங்குவர். தெலுங்கு என்ற சொல், தேன்போலும் இனிமையுடையது எனப் பொருள்படும்; தெனுகு என்ற சொல்லில் திரிபு என்னலாம். தமிழ் (இனிமை), கன்னடம் (கன்னல் = கரும்பு) ஆகியவற்றின் பெயர்ப் பொருளுடன் இது இயைந்திருப்பது கவனிக்கத்தக்கது இப் பெயரும் மூன்று இலிங்கங்களை எல்லையாகவுடைய நாடு’ எனப் பொருள்படும் த்ரிலிங்கம்’ என்பதன் மரூஉ என்று கூறுவதுண்டு. மலையாள மொழிக்கு எழுத்தும் இலக்கணமும் இலக்கியமும் யாவும் எழுத்தச்சனே ஆக்கினான் என்று சிலர் கூறிவந்ததுபோல, தெலுங்கு மொழிக்கும் இலக்கணமும் இலக்கியமும் நன்னயனே 11ஆம் நூற்றாண்டில் படைத்தளித் தான் எனபவர் தெலுங்குப் பண்டிதர். ஆனால், ஆராய்ச்சியாளர் இதனை ஒப்புக்கொள்ளத் தயங்குவர். தமிழிலும் கன்னடத்திலும் புத்த, சமயண, சைவ இலக்கியங்கள் தழைத்திருந்தது போலவே தெலுங்கிலும் தழைத் திருந்திருக்க வேண்டும் என்றும், பிற்கால வைணவ சமயம், பிராமணிய (இந்து) சமயம் ஆகியவற்றின் தாக்குதல்களால் அவை அழிந்துபட்டிருக்க வேண்டும் என்றும் அவர்ள கருதுகின்றனர். இதற்கேற்பத் தெலுங்கிலக்கியத்தின் தொடக்க காலத்தில் உள்ள சைவ, வீர சைவ நூல்கள் பல இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. நன்னயனுக்கு முன் ஜைமினி பாரதமென்ற சிறந்த சமய பாரத மிருந்ததாகவும், அதர்வணன் என்ற சமணரால் இயற்றப் பட்டதொரு தெலுங்கிலக்கண நூல் இருந்ததாகவும் அறிகிறோம். தவிர, இலக்கிய காலத்திலேயே உயர் வகுப்பினர், புலவர் ஆகிய வரிடையே வழங்கிய ‘மார்க்கி’ இலக்கியத்துடன் கூடவே ‘தேசீ’ என்ற வடமொழிச் சார்பற்ற மக்கள் (திராவிட) இலக்கியமும் நிலவிற்று. இவை ஊர்ப்புற நாடகங்கள் (யக்ஷகானம்), நாட்டுப் பாடல்கள் (பாடலு) ஆகிய வடிவில் அமைந்தன. தாலாட்டுப் பாட்டுக்கள் (லாலி பாட்டலு), காதற்பாட்டுக்கள் (ஜாவளிலும்), தொழிலாளர் பாட்டுக்கள் (கூலி பாட்டலு), களியாட்டப் பாடல்கள் (ஆட்டபாட்டலு), பழமொழிகள் (சமிதெலு), கதைப் பாட்டுக்கள் (கதலு) என நாட்டுப் பாடல்கள் பலவகையானவை. யாப்பு முறையிலும் வடமொழிச் சார்பற்ற யாப்பு முறைகள் தேசீ இலக்கியத்தில் வழங்கின. ஆசிரியப்பா (துவிபதி), நாலடிப்பா (சதுஷ்பதி) ஆகிய திராவிடப் பாமுறைகளை ‘வேமனர்’ என்ற மக்கட் பெருங் கவிஞர் கையாண்டு அவற்றுக்கு இலக்கிய வாழ்வும் இலக்கியப் பெருமையும் கொடுத்துள்ளார். நன்னயரேகூட பல ‘தேசீப் பாமுறைகளை (தருவாஜம், அக்கரம், சீசம்) திறம்படக் கையாண்டுள்ளனர். இத் தேசீப்பா முறைகள் வடமொழி விருத்தங் களை ஒவ்வாறு தமிழ்ப்பா முறைபோல் மோனை (யதி), எதுகை (ப்ராசம்) உடையவை. கால அறுதி உடைய தொடக்கக்கால இலக்கியமெதுவும் நமக்குக் கிடைக்கவில்லையாயினும், 9, 10ஆம் நூற்றாண்டு களுக்குரிய கல்வெட்டுக்கள் நமக்குக் கிட்டுகின்றன. இவற்றில் காணப்படும் செய்யுள்களின் நடையால் அவற்றுக்கு முன்பும் இலக்கியம் இருந்தது என்றும், மொழி வடமொழி கலந்த தாயினும், தமிழ், கன்னடத் தொடர்பும் திராவிடப் பண்பும் கெடாதிருந்தது என்றும் அறிகிறோம். பேரளவான தமிழ், கன்னடத் தொடர்புடைய தேசீ (தூய தெலுங்கு)ச் சொற்களும் வழக்குகளும் இவற்றில் இருக்கின்றன. தற்காலத் தெலுங்கை ஆந்திரம் என வழங்கும் அறிஞர், இன்றைய தெலுங்கிலிருந்து மாறுபட்ட இப்பழங்காலத் தெலுங்கை ‘தெலுங்காந்திரம்’ எனக் குறிப்பிடுகின்றனர். பிற்காலத் தெலுங்கில் ‘ட’ என எழுதப்பட்ட தமிழ்ச் சிறப்பெழுத்தான ‘ழகரம்’ (தெலுங்குய) இங்கே பெருக்கமாக வழங்கப்படுகிறது. ஆனால் இலக்கிய காலத்தில் இது அழிந்துபட்டது. மற்றொரு தமிழ்ச் சிறப்பெழுத்தான வல்லின றகரம் (தெலுங்குமு) இன்றுவரை புலவர் நடையிலும் இலக்கியத்திலும் உளதாயினும், பள்ளிக் கல்வியிலும் புதிய எழுத்தாளர் நடையிலும் கைவிடப்பட்டு வருகிறது. தொடக்கக் காலத்தை விட்டு இலக்கிய காலத்தின் வரலாற்றை நான்கு கூறுகளாகப் பகுக்கலாம். அவை புராண காலம் அல்லது மொழி பெயர்ப்புக் காலம் (12-16 ஆம் நூற்றாண்டுகள்), செயற்கைக் காப்பியகாலம் அல்லது பிரபந்த காலம் (16 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்); நலிவுக்காலம் (16-19 ஆம் நுற்றாண்டு நடு வரைக்கும்), தற்கால மறுமலர்ச்சிக்காலம் (1850 முதல்) என்பன. 2. புராண (மொழிபெயர்ப்புக் காலம் 12-16ஆம் நூற்றாண்டுகள்) நன்னயரின் பாரத மொழிபெயர்ப்புடன் தெலுங்கு இலக்கியம் இலக்கிய உலகில் திடுமெனக் குதித்துவிடுகிறது. எல்லாவிதமான இலக்கியச் சிறப்புக்களும் உடைய இத்தகைய நூல், ஓர் இலக்கியத்தின் தொடக்கத்திலேயே ஏற்படுமா என்ற வினா இங்கே எழுகின்றது. நன்னயருக்கு முன்பே இலக்கிய வளர்ச்சி யிருந்து அவ்விலக்கியம் அழிந்துபட்டிருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நன்னயருக்கு முற்பட இருந்திருக்கக்கூடும் இலக்கியம் தேசீ நெறியாதலால் அது இம் ‘மார்க்கி’ இலக்கிய வளர்ச்சிக்கு உதவியிருக்க முடியாது. எனவே நன்னயரின் புது முயற்சியின் வெற்றி வேறு வகையில் விளக்கப்பட வேண்டும். ‘தெலுங்கிலக்கிய வரலாற்றில்’ பி. செஞ்சையா அவர்கள் கூறுவ தாவது: “மரங்கள் போன்ற உயிர்ப் பொருள்களில் பிறப்பு, வளர்ச்சி, நலிவு ஏற்படக்கூடும். ஆனால், செயற்கையாகக் கட்டப்பட்ட கோபுரத்தில் கட்டி முடிந்த வடிவுக்கு முன்னும் பின்னும் வளர்ச்சி இருக்க முடியாது. வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப் புகுந்த நன்னயர் அம் மொழியிலுள்ள முழு வளர்ச்சியுற்ற காவியத்தை அப்படியே தெலுங்கில் பெயர்த்து வைத்தார்.” தெலுங்கில் பாரதத்தை மொழிபெயர்த்த பெருங் கவிஞர்கள் நன்னயன் (11 ஆம் நூற்றாண்டு), திக்கணர் (13 ஆம் நூற்றாண்டு), ஏறப்ரகதர் (14ஆம் நூற்றாண்டு) ஆகிய மூவர். நன்னயர் அதனை உரையிடையிட்ட பாடல் (சம்பூ) வடிவில் எழுதினார். அவர் நடை எளிமையும் இனிமையும் பொருட் செறியும் உடையது, திராட் சாபாகமானது என்று புகழப் படுகிறது. பிற்காலப் புலவர்கள் அவர் நடையையும் சொல்மரபையும் தலைமேற் கொண்டு பேணினர். இவர் சைவ சமயத்தவராதலால் இலக்கியப்பற்றுடனேயே பாரதம் மொழிபெயர்க்கப் புகுந்தார் என்று தோற்றுகிறது. இவர் நூல் முற்றுப்பெறாது பாரதத்தின் 18 பருவங்களில் முதல் மூன்றுடன் நின்றது. இவரை ஆதரித்த அரசன் இராசராச நரேந்திரன் தமிழிலும் கன்னடத்திலும் பாரதம் படிக்கக் கேட்டுத் தெலுங்கிலும் அதனை ஆக்குவிக்க விரும்பினான் என்று அவர் குறிப்பிடுகிறார். பாரதம் மொழிபெயர்ப்பவர், அதிலும் சிறப்பாக ஆரணிய பருவம் தொடங்குபவர் கேடுறுவர் என்று புரோகிதர் கருதியதே நன்னயபாரதம் முற்றுப்பெறாததற்குக் காணரம் என்று கூறப் படுகிறது. அதற்கேற்ப நன்னயருக்கு அதை முடிக்குமுன் பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் குறிப்பிடுகின்றனர். திக்கணர் ஆரணிய பருவத்தில் நன்னயர் விட்ட இடத்திலிருந்து தொடங்காமல் அடுத்த பருவமாகிய விராட பருவத்திலிருந்தே தொடங்கிப் பதினைந் தாவது பருவம் வரை முடித்தார். திக்கணரைத் தொடர்ந்துவந்த மொழிபெயர்ப்பாளரான ஏறப்ரகதர் இருவர் நடையிலும் தேர்ச்சி பெற்றுத் தமக்கெனப் புதுநடையும் உடையவராதலால் நன்னயர் எழுதியது போலவே. ஆரணிய பருவமுடித்து, திக்கணர் இறுதிப் பகுதியில் அவர் நடையில் எழுதி. இறுதியில் தம் தனிநடையில் எழுதியதாகக் கூறப்படுகிறது. நன்னயர் நடையிலும் இவர் நடை ஓரளவு எளிமை குறைந்தது (கதளீ பாகம்) என்று கூறுவர். திக்கணர் தம் நூலின் முகப்பில் அவர் காலத் தகுதியற்ற கவிஞர்களைக் கண்டிக்கிறார். இவருக்குப் பின் இங்ஙனம் கண்டிப் பதும் இதுபோன்ற சில வழக்கங்களும் ‘காப்பு’ அவையடக்கம்’ போல ஒரு மரபுவழக்காய் விட்டது. திக்கணர் இயற்றிய மற்றொரு நூல், நன்னயரது போல உரையிடையிட்டதான நிர்வசனோத்தர ராமாயணம் என்பது. ஏறப்ரகதரும் பாரதமல்லாமல் ஹரிவம்சம் ஒன்றும் இயற்றினர். நன்னயர், திக்கணர், ஏறப்ரகதர் இம்மூவரும் தெலுங்கின் ‘கவிஞர் மூவர்’ ‘கவித்திரயம்’ எனப்படுகின்றனர். பிற்காலக் கவிஞர்கள் நூன் முகத்தில் இக் கவித்திரயத்துக்கே வணக்கஞ் செலுத்தினர். நன்னயர் திக்கணர் ஆகியவர் காலத்தில் இவர்களல்லாது முதன்மையாகக் குறிக்கத்தக்கவர்கள் பலகுரிக்கி சோமநாதர், நன்னெச்சோடு, கோனபுத்தராஜு ஆகியவர்களே. பலகுரிக்கி சோமநாதர் தெலுங்கு முதல் நூலான. பண்டிதாராத்ய சரித்திரம், பசவபுராணம் ஆகியவையும் அனுபவசாரம் என்னும் சமய அறிவுநூலும் இயற்றினார். நன்னெக்சோடு சோழப்பேரரசரின் கீழ் தென் தெலுங்க நாட்டில் ஆண்ட ஒரு சிற்றரசன். அண்மையில் இவர் இயற்றிய ‘குமாரசம்பவம்’ கண்டெடுக்கப் பட்டுள்ளது. தெலுங்கு இலக்கிய அறிஞர்களால் இது இன்று உச்சிமேற் கொள்ளப்படும் நூல், இதன் மொழிநடையும் சொல் தொகுதியும் பெரிதும் தமிழுடனும் கன்னடத்துடனும் தொடர்பு உடையது. இதனை நன்னயருக்கு முற்பட்ட நூலெனச் சிலரும், அன்றெனச் சிலரும் கொள்கின்றனர். பிந்திய கட்சியினர் இதில் வரும் தமிழ், கன்னடச் சொல்லும் நடையும் அக் காலத்தெலுங்கு நிலையைக் குறிப்பதாகக் கொள்ளாது, தமிழ், கன்னட மொழிகளிலிருந்து கலக்கப்பட்டவை எனக் கூறுவர். கோனபுத்தராஜு ராயசசீமாவிலாண்ட பிரதாபருத்திரரின் படைத் தலைவர். இவர் இயற்றிய இராமாயணம் மக்கள் மொழியிலும் நாட்டு (தேசீ) நடையிலும் எழுதப்பட்டுள்ளது. இதனை புத்தராஜு பெயரால் ரங்கநாதன் என்ற கவிஞர் இயற்றிய தாகச் சிலர் கூறுவர். தெலுங்கு நாட்டுப் பொதுமக்களிடையே பொதுவாகவும் ராயலசீமாவில் சிறப்பாகவும் எல்லாராலும் பாடிப் பயிலப்படும் மக்கள் நூல் இதுவே. இராமாயணத்தை நாட்டுப் பண்புக்கேற்பத் திராவிட மயமாக்கிய நூல் இது என்று டாக்டர் ஸீ ஆர். ரெட்டி அவர்கள் பாராட்டுகிறார். தென் இந்தியக் கதைகளும் வாழ்க்கை ஓவியங்களும் இதில் மிகுதி. இராவணன் பாதாள வேள்வி, மண்டோதரி, தாரா ஆகியவர்கள் வருணனை இதன் மிகச் சிறந்த பகுதிகள் ஆகும். பிரதாபருத்திரன் என்பவரது நீதிசாரம் அரசனொருவனால் ஆட்சிமுறை பற்றி இக் காலத்தில் எழுதப்பட்ட சிறந்ததொரு நூல். பெத்தணர் என்ற ஆந்திரசோடரும் இதுபோன்று நீதிசாரமுக்தாவளி என்ற ஒரு நூல் இயற்றினார். பதினாலு பதினைந்தாம் நூற்றாண்டுகளில் மிகச்சிறந்த புலவர் திருநாதர் (ஸ்ரீநாதர்) என்பவரே, இவர் மூவருடன் ஒப்புடை யவராகக் கருதப்படுகிறார். இவர் இயற்றிய சிருங்கார நைடதம் என்ற நூல், தமிழ் நைடதம் போலவே ‘நைடதம் புலவர்க் கௌடதம்’ என்ற வடமொழி நைடதப் புகழுக்குப் போட்டியாய் அமைந்துள்ளது. சிருங்கார தீபிகை என்ற யாப்பணி நூலும், காசிகாண்டம் முதலிய நூல்களும் இவரால் எழுதப்பட்டன. பல்நாட்டி வீரசரித்திரம் என்று நாட்டுப்பாடல் தொகை நூல் ஒன்றும், விதிநாடகம் என்ற நாடகமும் திருநாதராலேயே எழுதப் பட்ட தெனக் கொள்வர் சிலர். ஆனால், முன்னது ராயலசீமாவில் இயற்றப்பட்ட ‘தேசீ’ நெறிப் பாடல்கள் என்று தோற்றுகிறது. கோனபுத்தர் இராமாயணம், வேமனர் பாடல்கள் ஆகியவற்றுடன் அது பொதுமக்கள் உள்ளத்தில் இடம் பெற்றுள்ளது. கவிஞர் மரபில் இக் காலத்தில் பீமகவி என்ற முதல் தரக் கவிஞர் இருந்ததாக அறிகிறோம். பல நூல்கள் அவர் பெயரால் இயங்குகின்றன வாயினும், எவை அவருடையன என்று உறுதிகாண முடியவில்லை. இவற்றுள் இராமாயண பாரத மிரண்டுக்கும் பொருந்தும் படியான தொடர் சிலேடை நூலான இராகவ பாண்டவீயம், சதகண்ட ராமாயணம், சிவபுராணங்கள் ஆகியவை உள்ளன. சமண கோமட்டியான ராசண்ணா எழுதியதாகக் குறிக்கப்படும் கவிஜனாசிராம் என்ற நூலும் அவர் இயற்றிய தென்பர். தெலுங்கின் சிறந்த பக்தி காவியம் போதனர் இயற்றிய பாகவதமே. இவர் ஐதராபாதில் தற்காலம் வாரங்கல் என்று வழங்கும் ஓர் கல்லு நகரம் என்ற பழம்பதியில் பிறந்தவர். இராமாயண பாரத மொழிபெயர்ப்புக்கள் முதனூலைவிடச் கருங்கியிருக்க, இது முதனூலினும் விரிவாய் உள்ளது. வடமொழிக் கலப்பு மிகுதியேயாயினும் உணர்ச்சியும் எழுச்சியும் மிக்கதாய் இருப்பதனால் அவற்றினும் மக்களால் விரும்பிப் பாடப்படுகிறது. கஜேந்திர மோட்சம், உருக்குமணி கலியாணம் ஆகியவை பெருக வழங்கும் பகுதிகள். மருட்கைச்சுவை நிறைந்த போஜராச்சியம் என்ற கதை நூலும், கௌரண்ண மந்திரியின் நவநீதசரித்திரம் என்னும் சிறுகதை நூலும் வடமொழி கணித நூல்களான லீலாவதி, மகாவீராசாரியரின் கணிதநூல் ஆகியவற்றின் செய்யுள் மொழிபெயர்ப்புகளும் இக் காலத்துக்குரியன. 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பில்லை மரபின வீரபத்ரையா பல நூல்கள் எழுதியதாகக் கூறப்படினும் ஜைமினி பாரதம், சிருங்கார சாகுந்தலம் இரண்டுமே இன்று மீந்துள்ளன. இவர் கலை மகளையே காதலியாகக் கொண்டனர் என்று கூறப்படுகிறது. கலைமகள் என்ற பெயருடைய புலமையுடைய ஒரு மாதின் காதலில் இவர் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று இதனை இன்றைய அறிஞர் கொள்கின்றனர். இவர் எளிய இனிய கவிதை இயற்கை நயம் உடையது. 3. செயற்கைக் காவியம் அல்லது பிரபந்த காலம் (16-17ஆம் நூற்றாண்டுகள்) விசயநகரப் பேரரசர் தமிழ்நாடு, தெலுங்குநாடு, கன்னடநாடு ஆகிய மூன்று பகுதிகளையும் ஆண்டவர்கள். மும்மொழி இலக்கிய த்தையும் அவர்கள் ஆதரித்தனர். ஆயினும், தெலுங்கிலக்கியமும் வடமொழியுமே அவர்களால் சிறக்க ஆதரவுபெற்றன. இரண்டாம் கிருஷ்ணதேவராயர் தெலுங்கில் தாமே ஒரு கவிஞராயிருந்து பிற கவிஞர்களை ஆதரவு செய்தனர். அவர் எழுதிய காவியம் ஆமுக்த மால்யதம் அல்லது விஷ்ணு சித்துயம் என்பது. விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் புதல்வி நாச்சியார் திருவரங்கத்து அரங்கப்பெரு மானை விரும்பி மணந்த கதையே இது. இது சொல்லணிச் சித்திரம் நிறைந்த கடுநடை வாய்ந்தது. ஆயினும், இது பொருளாழமுடைய கருத்துக்கள் நிறைந்தது. மொழிபெயர்ப்புக்கால நூல்களுக்கும், பிரபந்தகால நூல் களுக்கும் இடையே வேறுபாடுகள் எண்ணற்றன. முந்தியவற்றில் சைவ வைணவ நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டனவாயினும், ஒருவரிருவர் நீங்கலாக ஆசிரியர்கள் வைணவத்தில் வெறுப் புக்கொள்ளாத சைவராகவே இருந்தனர். ஆனால், பிரபந்த ஆசிரியர்கள் முழுக்க முழுக்க இராமனுஜரின் கடு வைணவ நெறியின ணர். பத்தி நெறியில் தோய்ந்தவர்கள். நூல்கள் மொழி பெயர்ப்புக்களல்ல. பழைய புராணக் கதையை அவர்கள் கவிதையையும், கற்பனையையும் கோப்பதற்கு ஒரு சட்டமாக மட்டுமே கொண்டு வேண்டுமிடத்தில் கதையை மனம்போல் மாற்றி வருணனைகள், அணிகள் பெருக்கினர். தெளிவான கதையைவிட வர்ணனை, கதையுட் கதை, சொல்லணி பொருளணி வகைகள், சிக்கலான கட்டுக்கோப்பு ஆகியவற்றிலேயே அவர்கள் மிகுதி கருத்துச் செலுத்தினர். காவிய ஒழுங்கு வகையில் முற்கால எளிமையும் இயற்கைப் பண்பும் மறைந்தன. காவியம் முற்றிலும் புலமைக் காவியமாயும் செயற்கைப் பண்பு நிறைந்ததாகவும் ஆயிற்று. ஆயினும் புதுமை, ஓசையினிமை, அணியழகு ஆகியவற்றில் அவை ஒப்பற்றவை. பிரபந்தப் புலவர்களில் தலைமை வகித்தவர் அல்லசானி பெத்தண்ணா என்பவர். கிருட்டிணதேவராயர் காலத்திலும், அதனை ஒட்டிய காலத்திலும் இருந்த பெரும் புலவர்களாகிய எட்டுக் கவிமத யானைகளிடையே (அஷ்ட திக்கஜங்கள்) அவர் எல்லா வகையிலும் முதன்மையானவர். அவரது தலைசிறந்த நூல் சர்வோச்சிச மனுசரித்திரம் என்பது. இது மார்க்கண்டேய புராணத்திலுள்ள ஒரு கதையை விரித்து ரைப்பது. நடையில் நூலாசிரியர் திருநாதரையும், வருணனையில் பில்லலமர பினவீரபத்திரையா வையும் பின்பற்றினார். கிருட்டிணதேவ ராயரைப்போல வடமொழி கன்னடமொழிச் சொற்களைப் பெருவாரியாகப் பயன்படுத்தி இவர் தெலுங்குக் கவிதை நடைக்கு வீறும் இனிமையு மூட்டினர். அரசன் அரசியிடம் கொண்ட சிறு பூசலை நீக்க நந்தி திம்மய்யா என்ற புலவர் பாரிஜாதாபகரணம் எழுதியதாகக் கூறப்படுகிறது. இது நளினமான சொல்லொழுங்கும் தேமதுர ஓசையும் நிறைந்த காவியம். குசேலரொத்த குழந்தைச் செல்வமும் பொருள் வறுமையுமுடைய அய்யல ராஜுராமபத்திரகவி ஒரு புலவர் இடையீட்டின் மூலம் அரசனரையடுத்துப் பல புராணக் கதைகள் அடங்கிய சகலகதா சாரசங்கிரகம் என்ற நூலை இயற்றினார். தூர்ஜடி என்ற சைவப் புலவரால் கானஹஸ்தி மகாத்மியமும், மல்லணரால் ராஜசேகர சரித்திரமும் எழுதப்பெற்றன. சங்குசல நிருசிம்ம கவி என்பவர் அல்லசானி பெத்தண்ணாவின் பொறாமை யினால் அரசனையடைய முடியாமல் தம் கவிகர்ண ரசாயனம் என்ற நூலின் பாக்களை விலைகூறி விற்றனர் என்றும், அரசன் மகள் மோகளாங்கி அதனை வாங்கி அரசன் முன் பாடிப் புலவரை ஆதரிக்கத் தூண்டினள் என்றும் அறிகிறோம். குமாரி தூர்ஸ்ரீடியின் கிருஷ்ணதேவராய விஜயம் அப்பேரரசர் வெற்றிகளைப் புகழ்வது. கிருஷ்ணராசருக்குப் பின்னிருந்த புலவர்களில் பிங்களி சூரண்ணா, ராமராஜ பூசணர், தெனாலிராம கிருட்டினர் ஆகியவர்ள் முக்கிய மானவர்கள். சூரண்ணாவின் ராகவ பாண்ட வீயம் இராமாயண பாரதக் கதைகளை ஒரே தொடர் சிலேடையாகக் கூறும் திறத்தது. கவிதைச் செப்படி வித்தையாகிய இந்த துவந்த காவியம் உண்மையில் எளிய நடையில் அமைந்திருப்பது பின்னும் வியக்கத்தக்கது. அவரது காலபூர்ணோதயம் இந்திய இலக்கியத்தி லேயே அரிதான கதைப் புதுமை உடையது. கதைப் போக்கு உருவ ஒற்றுமையுடைய இருதிறக் காதலர் உருவ மயக்கத்தால் அமையுங் குழப்பதைப் பற்றியது. இவரது இறுதிக் காவியமாகிய பிரபாவதி பிரத்யும்னா இவரது தலைசிறந்த நூல் இதில் கதை புதிதன்றாயினும் நடை புதிது. கதையியக்கம் குறைந்த காவிய முறையில் நாடகப் பண்பு மூலம் இவர் வளர்ச்சியூட்ட விரும்பியவர். பூஷணரின் ‘வாகசரித்திரம்’ பெத்தண்ணாவின் மனுசரித்தி ரத்தையும் விஞ்சியதென அக் காலத்தில் கருதப்பட்டது. அவர் கதை புராணத்தில் கட்டுப்படவும் செய்யாமல் புதிதாகவும் அமையாமல் புராமணத்தில் நுட்பமாகக் கூறப்பட்ட பகுதியை மனம்போல விரித்துரைக்கப்படுவது. இவரும் எளிய நடையில் சிலேடையமைப் பதில் வல்லவர். பிங்களி சூரண்ணாவின் கதை யொழுக்குக்கு மாறான இவரது சிக்கலான விரிவுரை இவர் நடையைத் தடைப் படுத்துகிறது. ஆயினும் கவிதைப் படைப்பில் இவர் நூல் மிகவும் உயர்வுடைய கற்பனைமணியாகவே கொள்ளத்தக்கது. இவரது ஹரிச்சந்திர நளோபாக்கினியானம் அரிச்சந்திரன் நளன் ஆகிய இருவர் கதைகளையும் சிலேடையில் கூறும் துவந்துவ காவியம் ஆகும். தெனாலிராமகிருட்டிணர் பெயர் ஒரு விகடகவியாக மக்களிடைக் கதையில் வழங்குகிறது. ஆயினும், அவர் உயர்ந்த கவிஞராகவே இருந்தார். அவர் சிறந்த காவியம் பாண்டுரங்க மகாத்மியம் என்பது அப்பைய தீட்சதர் (சைவர்), தாத்தாச்சாரி (வைணவர்) ஆகிய இருவரும் இவர் காலத்தவர். இவர் விகட முற்றும் தாத்தாச்சாரியை எதிர்த்தடக்குவதில் பயன்படுத்தப் பட்டதே. பக்தியை இவர் மதித்தாலும் சமயவெறியையும் சமய வேடத் தையும் வெறுத்தவர். 4. நலிவுக்காலம் (17-18ஆம் நூற்றாண்டுகள்) 1565 இல் தலைக்கோட்டைப் போரில் விசயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பேரரசர் ஆதரவு தெலுங்கிலக்கியத்துக்கு அதன்பின் ஏற்படமுடியாது போயிற்று சிற்றரசர்களும் போர்களால் நலிவுற்றனர். செல்வர் ஆதரவு மட்டுமே மீந்தது. இலக்கணப் புலவரும் அணி அலங்காரப் புலவர்களும் தலையோங்கிக் காவிய வளர்ச்சி மிகவும் தடைப்பட்டது. அதனுடன் ஆதரவின்றி மாண்டது. எனவே, இக் கால இலக்கிய நூல்கள் இரண்டாந்தரமானவை யாகவும் புராணக்கதைகளை மறித்துப் புரட்டி எழுதப்வை யாகவுமே அமைந்தன. பிரபந்த காலத்திலுள்ள துவந்துவ காவிய முறை இப்போது பரலால் மேற்கொள்ளப்பட்டது. இக் காலத்தில் தொடங்கப் பட்ட இயக்கங்களில் தூய தெலுங்கியக்கம் குறிப்பிடத்தக்கது. தூய தெலுங்கில் ஒன்றிரண்டு பாட்டுக்கள் எழுதிக் காட்டும் வழக்கம் இதற்கு முன்பே இருந்தது. அவ்வப்போது சிதைவுறாத வடமொழிச் சொற்களை நீக்கி எழுதுவதும் உண்டு. ஆனால் தூயநடை இயக்கத்தார் இதோடு நிற்கவில்லை. அவர்கள் கூடிய மட்டும் வடமொழிச் சொற்களை முற்றிலும் விலக்கி எழுத முனைந்தனர். இத்தகையோருள் தலைசிறந்தவர் ‘பொன்னிகண்டி தெலகனார்யா’ என்பவர். ஐந்து காண்டங்களடங்கிய அவரது யயாதி சரித்திரம் இங்ஙனம் அமைந்தது. இந் நடையிலும் சீரிய காவியம் இயற்ற முடியும் என்பதை அவர் காட்டினார். இவரைப் பின்பற்றி எழுதத் தொடங்கிய பால பாஸ்கரர், கூசி மஞ்சி திம்மணர் ஆகியவர்கள் நூல்கள் இவரது வெற்றியை எட்ட முடியவில்லை. இவ் வியக்கத்தின் கோல்வி குறித்து, செஞ்சையா அவர்கள் கூறுவதாவது; “இந் நூல்கள் வெறும் தேர்வு முiறாகவே அமைந்தன. அவர்கள் வட்டவளைய நடை பண்டிதர்களுக்குக் கூட விளங்காதவையாயிருந்தன. எழுது வோர் திட்டத்தின் திறவுகோலைக் கொண்டன்றி அவை பொருள் தரமுடியாதன வாயின். ஆங்கிலத்திலும் தமிழிலும் பிறமொழிச் சொற்களை விலக்கும் முயற்சியும் தூயநடையிலெழுதும் முயற் சியும் நாட்டுப்பற்றை ஒட்டி எழுந்தன. தெலுங்கில் அங்ஙம;னறு. புதுமை வெளியர்களால் கற்பனையின்மையை மறைத்து மக்கள் கவத்தைக் கவரவே அது ஒரு கருவியாயிற்று.” இக் காலச் செப்பிடு வித்தைகளில் இன்னொன்று சில எழுத்து க்களை விலக்கியும் சில எழுத்துக்களே பயிலும்படியும் காவியங்கள் எழுதியதாகும். காணத பெத்தன சோமாயாஜி அரிச்சுவடியின் கடைசி (மெய்) ஐந்தெழுத்துக்களை வைத்துக் கொண்டு ‘ஸேஷ ஸைலேஷலீலா’ என்ற காவியமியற்றினர். வேறு சிலர் ஒரே மெய் எழுத்தைக் கொண்டும் நூல்களியற்றினர். இக் காலத்திய தெலுங்கிலக்கியத்தில் ஒரு பகுதி தெலுங்கு நாட்டுக்கு வெளியிலும் எழுதப்பட்டது. மைசூரிலும் தமிழகத்தில் தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களிலும் தெலுங் காட்சி, தெலுங்கர் குடியேற்றம் காரணமாகத் தெலுங்கிலக்கியம் எழுதப்பட்டது. தெலுங்ககத்துக்குப் புறம்பான இத் தெலுங் கிலக்கியம் தெலுங்கு நாட்டுக்கு அளித்த அரிய நன்கொடை உரைநடை இலக்கியமேயாகும் மைசூரில் வீரராஜு என்ற அரசர் உரைநடைப் பாரதத்தையும் அமைச்சரான நஞ்சராஜு இலிங்க புராணமும் ஹாலாசிய (மதுரை) மகாத்மியமும் இயற்றினர். தஞ்சை தெலுங்குலகுக்களித்த செல்வம் தியாகராஜரின் இசைப் பாடல்கள் ஆகும். தஞ்சையரசர் ஒருவரின் காதற்கிழத் தியான முத்துப் பழனி ராதிகாஸ்வந்தம் என்ற காவியமியற்றினார். மதுரையை ஆண்ட சொக்கநாதம் திருவரங்கமகாத்மியலு என்ற உரைநடைநூலும் படைத்தலைவன் (சாமந்த) கிருஷ்ணப்ப நாயக்கன் உரைநடை ஜைமினி பாரதமும் இயற்றினர். இந்த ஜைமினி பாரதம் தெலுங்கின் உயர்ந்த உரைநடை நூல்களுள் ஒன்றாகக் கருதப் படுகிறது. புதுக்கோடைப் பகுதியில் தெலுங்கின் முதல் அகரவரிசை யாகிய ஆந்திர பாஷார்ணவமும் பில்கணீயமும் இயற்றப்பட்டன. தமிழகத் தென் தெலுங்கிலக்கியத்தில் ‘தமிழ் விறலி விடு தூது’ போன்ற சிற்றின்ப ஆபாசம் நிறைந்த கவிதை மிகுதி. தமிழகத் தெலுங்கிலக்கியத்தின் இன்னொரு தனிப்பண்பு நாடகங்கள் மிகுதி எழுதப்பட்டதே. உரைநடை போல இவை உச்சநிலையடையவில்லை. இதற்குக் காரணம் மக்கள் நாடக வாழ்வுடன் அவை இணையவில்லை என்பதே. தெலுங்கு நாட்டில் உள்ள ஒருசில நாடகங்களுக்கும் இதே முடிபு அமையும். தெலுங்கிலக்கியத்தில் நாட்டு வாழ்வுடன் நெருங்கிப் பரந்த தொடர்புடையது தேசி இலக்கியமே. இதில் துவிபதம், சதகம் இசைப்பாட்டு ஆகிய துறைகள் இடம் பெற்றன. கேரளராஜுவின் இராமாயணம் போலத் திம்மலகவியின் பாரதமும், கோனேரி கவியின் பாகவதமும் பல்நாட்டி வீர சரித்திரமும் துவிபதமாக எழுதப்பட்டன. சதகங்கள் 12 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டுவரை பெருக்கமடைந்து கொண்டே வந்தன. பத்தி, அறிவுரை, நகைச்சுவை ஆசிய சார்புகளுடன் தெலுங்கில் 600 சதகங்களுக்குமேல் உள்ளன. பலகுரிகி சோமநாதரால் (1180) இயற்றப்பட்ட விருஷாதிய சதகமும் பெத்தணரால் இயற்றப் பட்டதாகக் கருதப்படும் சுமதி சதகமும் இவற்றுள் முக்கிய மானவை. தெலுங்கு நாட்டின் ‘மக்கட் கவிஞன்’ ஆனவரும் ஒப்பற்ற கவிகுலதிலகமும் ஆனவர் வேமனர். இவர் பிறப்பிடம் காலம் எதுபற்றியும் நாம் ஒன்றும் அறியக்கூடவில்லை. ராயலசீமாவி லுள்ள கொண்டவீடு அவர் பிறப்பிட மென்றும் 15 ஆம் நுற்றாண்டில் அவர் வாழ்ந்திருக்கலாம் என்றும் ஊகிக்கப் படுகிறது. இவர் பட்டினத்தடிகள் போன்ற பற்றற்ற துறவி. சமயங்கடந்த ஞான முடையவர் மக்களன்பிலும் நடுநிலை நெறியிலும் பிறழாதவர். இவர் பாட்டு ஒவ்வொன்றும் பாட்டினுள்ளேயே எடுத்த கருத்தை முடித்துவிடும். இவர் இயற்றிய வேமன சதகம் அனுபவங்களின் திரட்டான ஒப்பற்ற அறிவுநூல். அதேசமயம் அது ஒப்பற்ற இலக்கிய மாணிக்கம், திருவள்ளுவர், கன்ஃபூசியஸ் முதலிய உலக அறிஞர் உரைகளுடன் அவற்றைப் பல விடங்களில் ஒப்பிடலாம். பாட்டும் இசைப்பாடலும் கலந்துறழ்வன போன்ற நீண்ட பாக்கன் தண்டகங்கள் ஆகும். மோனை எதுகை நயம் நிறைந்து இறுதியில் வணக்கம் நீதி அடங்கிய இத்தகைய தண்டகங்களும் தெலுங்கில் உண்டு. 5. தற்காலம் அல்லது மறுமலர்ச்சிக்காலம் (19-20ஆம் நூற்றாண்டுகள்) இலக்கியம் மக்கள் வாழ்விலிருந்து தொடர்பற்று இயற்கை யூற்றையிழந்து நான்கு நூற்றாண்டுகள் தடுமாறிய பின் 1896 இல் அச்சகச் சாலை ஏற்பட்டதும் மேனாட்டு இலக்கியக் கருத்துக்களின் பயனாக, அது மீண்டும் தளிர்த்துத் தழைக்கத் தொடங்கிற்று. தொடக்கத்தில் கல்வியும் ஆராய்ச்சியும் மொழித்துறை, இலக்கியத் துறை விவாதங்களும் பின் புத்திலக்கியங்களும் தோன்றலாயின. பழநூலராய்ச்சியாளர் வழங்காது இழக்கப் பட்ட நூல்களைக் கூடியமட்டும் தேடிக்கண்டெடுத்து வருகின்றனர். தற்காலத் தெலுங்கிலக்கியத்தின் தந்தை என மதிக்கப்படுபவர் கந்துகூறி வீரேசலிங்கம் பந்துலு ஆவர். தற்கால இலக்கியத் துறைகளில் அவர் முன்னணியில் நிற்காத துறையே யில்லை என்னலாம். தெலுங்கிலக்கியத்துக்கு அவர் செய்த பணிகளுள் முதன்மையானது அவரால் திறம்பட ஆராய்ச்சி யுடன் எழுதப்பட்ட தெலுங்குக் கவிஞர் வரலாறு (ஆந்திர கவுலா சரித்திர) நூலேயாகும். பழங்கதைகளுடன் பயன்தரும் பல செய்திகளும் நிறைந்த இது போன்ற மற்றொரு நூல் குரு ஜாத ஸ்ரீராமமூர்த்தியின் கலிஜீவிதமுலு என்பதாம். வங்கூறி சுப்பாராவினால் தெலுங்கிலக்கிய வரலாறு (ஆந்திர சரித்திரம்) ஒன்றும் எழுதப்பட்டுள்ளது. இதே ஆசிரியர் களால் மக்கள் வழக்கிலுள்ள பாடல்களும் சதகங்களும் திரட்டப் பட்டுள்ளன. ஆர். சேஷகிரிராவ், கிடுகு ராமமூர்த்தி முதலிய அறிஞர் தமிழ் முதலிய மொழிகளுடன் தெலுங்கை இணைத் தாராய்ந்து திராவிட ஒப்பியல் மொழியாராய்ச்சி செய்துள்ளனர். டாக்டர் ஸி.ஆர். ரெட்டியின் ‘கவிதத்வ விசாரமு’ கவிதையின் பண்பு பற்றிய ஆராய்ச்சியாகும். பெயரளவில் தெலுங்கில் ஒன்றிரண்டு நாடகங்களும் தென்புல இலக்கியத்தில் ஒருசில நாடகங்களும் இருந்தன வாயினும் வடமொழி, ஆங்கில மொழிகளைப் போன்ற நாடக வளம் இக் காலத்திலேயே ஏற்பட்டு வருகிறது. பழைய புராணக் கதைகளின் அடிப்படையில் சாகுந்தலம், நாகார விஜயம், மல்லிகா மாருதம், வேணி சம்ஹாராம், விக்கிரமோர்வ சீயம் முதலியவை எழுதப் பட்டன. இத் துறையில் வேதம் வெங்கடராய சாஸ்திரியின் நாடகங்களும், கிருட்டிணமாச் சார்லுவின் சித்ரநளீயமும் சிறப்பு வாய்ந்தவை. வீரேசலிங்கம் பந்துலு, லட்சுமிநரசிம்மம் ஆகியவர் கள் சமூகச் சீர்திருத்தத்தில் முனைந்து சீர்திருத்த நாடகங்கள் எழுதினர். குருஜாத அப்பாராவின் கன்யா கல்கம் இவ்வகைப்பட்ட சிறந்த நாடகம். வரலாற்று நாடகங்களுள், மூ.க. சீனிவாசராவின் பிரிதிவி ராஜன், விஜயநகர வீழ்ச்சி ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. ரோஷனாரா, பிரதா பருத்ரா ஆகியவையும் இத் திறத்தவை. ஷேக்ஸ்பியர் நாடகங்களை வீரேசலிங்கம் மொழிபெயர்த் துள்ளார். புனை கதைத்துறை (நாவல்) புத்தம் புதிது. பங்கிம், ரோமெஷ் ஆகியவர்களின் வங்கப் புனைகதைகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ஆங்கிலப் புனைகதை1 தழுவி வீரேசலிங்கம் எழுதிய நூல் ராஜசேகர சரித்திரம் ஆகும். வசை நூல்களில் ஜக்க கவியின் ‘ராவண தோம்மீயமு’வும் நகைச்சுவை நூல்களில் பன்னு கண்டி லட்சுமி நரசிம்மத்தின் ‘சாட்சி’யும் குறிப் பிடத்தக்கவை. வீரேசலிங்கம் நூல்களும் சின்னையாகுசூரி உரைநடை நூல்களும் தற்கால உரைநடைக்கு இலக்காகத்தக்கவை. லட்சுமி நரசிம்ஹராவ், மாடபதி அனுமந்தராவ், அக்கிராஜு உமாகாந்தர் முதலியோர் சிறுகதை எழுத்தாளர்கள். 1933இல் பெர்ஹாம்பூரில் நிறுவப்பட்ட நவ்ய சாகித்ய பரிசத், சாகித்ய சமிதி இலக்கியக் கழகங்கள் இலக்கிய வளர்ச்சியில் முனைந்துள்ளன. புரோதத்தூர் கவிஞரான கதியராம வெங்கட சேசரின் சிவாஜி சரித்திரம் கூறும் சிவபாரதமும், ராணா பிரதாபசிங் சரித்திரமும் கவிதையில் புதுத்துறை வகுத்துள்ளன. இக் காலத்தில் கவிதையியக்கத்துக்கு ஆங்கில இலக்கியமும் வங்க இலக்கியமும் புறத்தூண்டுதலாயிருப்பினும் அது உண்மையில் நாட்டின் தேசியச் செல்வமான தேசீ இலக்கியத்தைப் புதுப்பித்து வளப்படுத்தும் முறையிலேயே நாட்டம் செலுத்துகிற தென்னலாம் இலக்கியத்துக்கான பொருளும் இப்போது பொதுமக்கள் வாழ்வாய் வருகின்றது. ராமிரெட்டியின் ‘கிருட்டீவலுடு’ உழவர் வாழ்வு பற்றிய பாடல். என் சுப்பாராவின் ‘வெங்கிப் பாட்டுக்கள்’ எளிய நடையிலும் எளிய உவமையணிகளுடனும் இயற்கை வாழ்வைச் சித்தரிக்கின்றன. பிறமொழிப் பண்பாடாகிய காடுகளில் நெடுங்காலம் திரிந்திளைத்த தெலுங்கு இலக்கிய நங்கை, இப்போது தன் நாட்டு வாழ்வையே தாயக மாக்கி அறிவுலகின் முற்போக்கில் சரிசம இடங்கொண்டு பங்குகொள்ள முயல்கின்றாள். அடிக்குறிப்பு 1. Viear of Wakefield. 10. வடமொழி இலக்கியம் 1. வடமொழியின் தனிச் சிறப்புக்கள் வழக்காற்ற உயர்தனிச் செம்மொழிகளிடையே உலகின் முதன்மையான மூன்று மொழிகளுள் வடமொழி ஒன்றாய் ஒளிபெறு கின்றது. அதனோடொத்த மற்ற இரு மொழிகள் பண்டைய மேனாட்டு மொழிகளாகிய கிரேக்கமும் இலத்தீனமுமே. இம்மூன்றனுள்ளும் கூட, கிரேக்க மொழியுடன் ஒத்த சிறப்பு வடமொழிக்குத் தரப்பட்டுள்ளது. வடமொழி சொல்வளமும் பொருள்திட்பமும் ஓசைநயமும் பெருமிதநடையும் உடையது. அதன் இலக்கியம் அளவிலும் பண்பிலும் உலக இலக்கியங் களிடையே கிரேக்க மொழியுடன் போட்டியிடத் தக்க பண்டைச் சிறப்புடைய தாய் விளங்குகிறது. நாடகத் துறையிலும் இலக்கண ஆராய்ச்சியிலும், அணியியல் அல்லது இலக்கிய ஆராய்ச்சித் துறையிலும் அது உலக இலக்கியத்தி லேயே முனைத்த பங்குகொள்வதாயுள்ளது. உணர்ச்சிப்பாத்1 துறையில் வடமொழி இலக்கியத்தின் அளவு குறைவாயினும் உலகின் மிகச்சிறந்த இலக்கியத்துடன் பண்பில் ஒப்பிடத்தக்கதா யிருக்கிறது. 2. வேதமொழியும், வடமொழியும் வேதமொழி, சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளும் இன்று வடமொழி என்ற பெயரால் குறிக்கப்படுகின்றன. ஆயினும் வட மொழியாளர் வேத மொழியைச் சமற்கிருதம் என்றோ, வேதமொழி நூல்களை இலக்கியம் (ஸாஹித்யம்) என்றோ அழைக்கவில்லை; வேத மொழி (வைதிகீ) என்றும் சமய நூல்கள் (சாஸ்திரங்கள்) என்றும் மட்டுமே குறித்தனர். கால, தேச, இனத் தொடர்பு நோக்கி இவ் இரண்டையும் கோவைப்படுத்தல் பொருந்துமே யாயினும், இத் தொடர்பு உண்மையில் இவை இரண்டனுக்கு மட்டுமன்றி எல்லா வடஇந்தியா மொழிகளுக்குமே உரியதாகும். இவையனைத் தின் வரலாற்றையும் இக் காரணத்தை முன்னிட்டுக் கோவைப் படுத்துவதானால், அது வடநாட்டு மொழிகளின் வரலாறு ஆகுமேயன்றி வடமொழி வரலாறு ஆகதென்னலாம். பண்டை மொழியாராய்ச்சி, சமய ஒப்புமையாராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே வேதமொழி பெரிதும் பயனுடையது. இலக்கியச் சுவைஞருக்கு இலக்கிய மொழியாகிய சமற்கிருதமே பயனுடையதாகும். 3. வடஇந்தியத் தாய்மொழி வாழ்வுகளும் வடமொழி வாழ்வும் வடமொழி இன்று பேசப்படும் மொழியன்று. அதன் இலக்கிய வாழ்வும் ஓய்ந்துவிட்டது. ஆனால் இலக்கிய வாழ்வு இருந்த காலத்திலும் கூட அது பேசப்பட்டதாகத் தெரியவில்லை. உலகில் புலவர் நாவில் ஊடாடியதன்றிப் பொதுமக்கள் நாவில் என்றும் எத்தேசத்தும் நடமாடாத மொழி வடமொழி ஒன்றே என்னலாம். அதனை இக் காரணம் கொண்டே தேவமொழி என அழைத்தனர். வேதமொழியும் வடமொழியைப் போலப் பேச்சு வழக்கிறந்த நூல்வழக்கு மொழியாயினும் அது பின்னதைப் போன்ற செயற்கை இலக்கிய மொழியன்று. அது உண்மையில் கி.மு. 1500 லிருந்து 800 வரை இந்திய ஆரியர் பஞ்சாபில் வாழ்ந்த காலத்தில் பேசிவந்த மொழியேயாகும். அவர்கள் கிழக்கே குருபாஞ்சால நாட்டிற்குப் பரவுவதற்குள் (கி.மு. 800 - 200) நூல்வழக்கு மொழியிலிருந்து பேச்சுமொழி நெடுந்தூரம் விலகிற்று. நூல்வழக்கு மொழி வேத மொழி யென்றும் பேச்சு வழக்கு மொழி ‘பாஷா’ என்றும் வழங்கின. மொழியறிஞரால் இது, ‘பிற்கால வேத மொழி’ எனப்படும் உபநிபடதங்கள் இதிகாச புராணங்கள் இதிலேயே இயற்றப் பட்டன. இவற்றினிடையே வேதமொழிக்குப் பாசுகராலும் பிற்கால வேதமொழிக்குப் (பாஷா) பாணினியாலும் இலக்கணம் வகுக்கப்பட்டது. பாணினியின் இலக்கணம் வேதமொழியினடிப்படையில் அமைந்த தனாலும், ஆரியர் கிழக்கே செல்லச்செல்லப் பேச்சு மொழி ஒருபுறமும் இலக்கியமொழி மற்றொருபுறமும் ஆக இருவேறு திசைகளில் வளர்ச்சி பெற்றதனாலும், கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்குள் பேச்சுமொழி பாகவதங் களாகவும், பாணினியின் இலக்கண அடிப்படையில் வளர்ந்த புதிய இலக்கிய மொழி சமற்கிருதம் ஆகவும் பிரிந்தன. சமற்கிருதம் பிறப்பிலேயே பேசப் படாத செயற்கை மொழியாயிருந்ததன் காரணம் இதுவே. 4. வடஇந்திய மொழிகளும் ஆரியமும் வேதமொழி, வடமொழி உட்பட வடஇந்திய மொழி களனைத்தும் இந்திய ஆரிய மொழிகள் எனப்படும். இந்தியா முதல் ஐஸ்லாந்து வரை பரந்துள்ள பத்து நூற்றுக்கணக்கான ஆரிய மொழிகளிடையே இவை ஒரு பகுதியேயாகும். இந்திய ஆரிய மொழிகளிடையே ஆரிய மொழிகளனைத்துக்கும் அடிப் படையான பல ஆதி ஆரியச் சொற்களும் கருத்துக்களும் பண்பாடுகளும் உண்டு. அதேசமயம் இந்திய மொழிகள் அனைத்துக்கும் பொது வான பல சொற்களும் பண்புகளும் கருத்துக்களும் உண்டு. இவற்றைப் பகுத்துணராமல் பலர் இந்திய ஆரிய மொழிகளில் கண்ட தெல்லாம் ஆரியமாகவே இருக்க வேண்டும் என்று கண்மூடி நம்பி வருகின்றனர். வடமொழி வேதமொழி ஆகியவற்றிலில்லாத தேசிச் சொற்கள் இன்றையத் தாய்மொழிகளில் உண்டு. இவை ஆரியருக்கு முற்பட்ட இந்தியப் பழங்குடியினங்களின் சொற்களாகவே இருக்கமுடியும் என்பதில் ஐயமில்லை. இவற்றில் சிலவும் வடமொழி வேத மொழிகளின் சொற்களில் சிலவும் திராவிடச் சொற்களே என அறிஞர் காட்டுகின்றனர். தவிர இதிகாச புராண காலங்களில் சிந்து நாடே ஆரிய பூமியாகவும், சிந்து, சரஸ்வதி ஆறுகளே புண்ணிய ஆறுகளாகவும் இருந்தன. இக் காலச் சமய நூல்களிலும் இலக்கணங்களிலும் கங்கைநாட்டு ஆரியத்தைக் கலப்பாரியம் என்றும் போலி ஆரியம் என்றும் கண்டித்தும் இழித்துரைத்தும் உள்ளனர். ஆனால் வடமொழிக் காலத்துக்குள் கங்கைநாடே (சிறப்பாகக் கங்கை யமுனை இடைநாடே) ஆரிய அல்லது புண்ணிய பூமியாகவும், கங்கையே புண்ணிய ஆறாகவும், இந் நாட்டில் வளர்ந்த இலக்கிய மொழியே சிறப்பான ஆலிhய மொழியாகிய வடமொழி (சமற்கிருதம்) ஆகவும் மாறின. தூய்மை மிகுந்த அல்லது கலப்புக் குறைந்த ஆரியமாகிய மேற்கு ஆரியம் புகழ் மங்கி மறைந்து தூய்மை குறைந்த அல்லது கலப்புமிகுந்த ஆரியமாகிய கங்கை நாட்டாரியப் பண்பாடும் மொழியுமே இன்றுவரை ஆரியப் பண்பாடும் மொழியு மாக இந்தியா வெங்கும் வழங்குகின்றது. மேறகூறியவற்றால் வேதமொழியிலும் பிற்கால வேதமொழியும், அதனினும் வடமொழியும் திராவிடக் கலப்பு மிகுதியுடையவை என்பது போதரும். திராவிடப் பண்புகள் மேன்மேலும் மேம் பட்டதனாலேயே தாய்மொழிகள் ஒரு சில நூற்றாண்டுக் கொரு முறை உருமாறி வந்துள்ளன. அவற்றில் இலக்கிய இலக்கண வாழ்வு இல்லாத காரணத்தாலேயே அவை காலத்துக்குக் காலம் ஒரே படிமுறையில் மாறுபடுவதன்றி இடத்துக்கிடமும் மாறுபட்டுப் பல மொழிகளாயுள்ளன. வாழ்க்கைத் தொடர்பற்ற செயற்கை மொழியாகிய வடமொழி யால் அவற்றைப் பிணைக்க முடியாது போயிற்று. வடஇந்திய ஆரியமொழிகள் ஆரிய அடிப்படையில் அமைந்த இந்திய (திராவிட) மொழிகளே என்பது இன்று தெளிவாக உணரப்படவில்லை யாயினும் எதிர்காலத்தில் நடுநிலையாராய்ச்சி இதனை வலியுறுத்திக் காட்டுவது உறுதி. உண்மையில் இந்தியா வருமுன்னரே கூடப் பாரசீகநாட்டிலேயே திராவிட ஆரியப் போராட்டமும் கலப்பும் தொடங்கிவிட்ட தென்னல் கூடும். பாரசீக ஆரியர்களின் தேவர் அகரராசுவும் அசுரர் தேவராகவும் கருதப்படும் முரண்பாடு இதற்குச் சான்று ஆகும். 5. வடமொழியின் திராவிடத் தமிழ்ப் பண்பாடுகள் வடமொழியின் சொற்களில் நூற்றுக்கு 80-க்கு மேற்பட்ட சொற்கள் ஆரியத்திற்குரியனவல்லவென்று திண்ணமாகக் கூறலாம். ஏனெனில் உலகில் இந்தியாவுக்கு வெளியேயுள்ள நூற்றுக்கணக்கான ஆரிய மொழிகளுடன் தொடர்புடைய பொதுச்சொற்கள் மட்டுமே ஆரியத்துக்கு உரியவை ஆகும். மேலும் ஆரியருக்கு முற்பட்ட உயர் நாகரிகம் திகழ்ந்த நாடுகளிலேயே ஆரியர் மொழிவளமும் பண்டைப் பெருமையும் அடைந்தனர். தெற்குலக நாகரிகங் களுடன் தொடர்பு கொள்ளும்வரை வடஐரோப்பிய ஆரியர் நாகரிகத்தில் மிகக் கீழ்ப்படியிலேயே இருந்தனர். இந்தியாவினுள்ளேகூட வட மேற்கிலிருந்து கிழக்காகவோ தெற்காகவே செல்லச்செல்ல நாகரிகம் உயர்வதையும், வடமொழிப் பண்பாடுள்ள இடத்திலிருந்து திராவிடப் பண்பாடு மேம்பட்டுள்ள இடம் நோக்கிச் செல்லுந்தோறும் தாய்மொழி இலக்கியம் பழமையும் உயர்வும் பெறுவதையும் காணலாம் எனவே. இந்திய ஆரியம் என்பது திராவிட, ஆரியம் அல்லது ஆரிய திராவிட மேயாகும் என்பதும், வடமொழி ஆரிய அடிப்படையிலமைந்த திராவிட மொழியேயாம் என்பதும் ஆய்ந்துணரத்தக்கன. வடமொழி இலக்கியம் தொடக்கக் காலத்திலிருந்து தமிழகத்தில் வளர்ச்சியுற்றது என்பதையும், தமிழகத்திலேயே நீண்டகாலம் நிலவித் தமிழகத்தில் மிகப்பெரிதும் வளர்ச்சியுற்றது என்பதையும் நோக்கத் திராவிட மொழிப் பண்பாடு மட்டுமன்றித் தமிழிலக்கியப் பண்பாட்டுத் தொடர்பும் வடமொழியில் மிகுதி உண்டு என்பது தேற்றம். 6. வடமொழி இலக்கியத்துக்கு முற்பட்ட காலம்: வேதமொழி வடமொழி இலக்கியத்துக்கு முற்பட்ட காலத்தில் வேதங்கள், பிராமணங்கள், ஆரணியகங்கள், உபநிடதங்கள், இதிகாச புராணங்கள், சுமிருதிகள், வேதாங்கங்கள், இலக்கணங்கள் ஆகியவை இயற்றப் பட்டிருந்தன. வேதகாலத்தில் எழுத்துமுறை ஏற்படாததால் பாடல்கள் வாய்மொழியாக ஒப்புவிக்கப்பட்டன. இதனாலேயே வேதங்கள் வாய்மொழி (ஆகமம்) எனப்பட்டன. இவற்றுள் பிற வேதங் களனைத்தும் இருக்கு வேதத்தின் திரிபுகளும் விளக்கங் களுமேயாகும். இருக்கு வேதம் இயற்கைப் பாடல்களின் திரட்டு ஆதலால், உலகின் நாடோடிப் பாடல் இலக்கியங்களுடன் ஒப்பிடத்தக்க கலைச்சிறப்புடையது. தவிர, பிற்கால வேதமொழி இலக்கியம் போல வரையறையின்றி இடைச்செருகலும் பெருக்கமும் குறுக்கமும் மாற்றமும் இதில் இல்லையாதலால் அக் கால நிலை களை அறிவிப்பதிலும் இது சிறந்ததாகும். வேதங்களில் யகர்வேதமும் பிராமணங்களும் உபநிட தங்களில் சிலவும் உரைநடையிலுள்ளன. உலகின் மிகப்பழமை யான உரை நடை என்று சிறப்பு இவற்றுக்கு உண்டு. ஆரணியகங்களும் உபநிடதங்களும் ஆரியப் புரோகிதருக்கு நாடெங்கும் எழுந்த எதிர்ப்பியக்கங்களைச் கருங்கிய அளவில் படம் பிடிப்பதாகும். பாரசீகத்தில் ஜர துஷ்ட்ரர் சீர்திருத்த இயக்கம் இதற்கு முன்னோடி யாகவும், இன்றுவரை தமிழ் நாட்டில் இயங்கும் தமிழ் இயக்கம் இதன் பின்னோடியாகவும் கொள்ளத்தக்கன. இவை இலக்கியமல்ல வாயினும் இலக்கிய அறிஞர்களால் வடமொழி யிலக்கியத்திலே காணக்கிடையாத எளிமையும் அறிவுத் திறமும் உடையவை. 7. ‘கதம்ப’ நூல்கள் பாரதம் 5000 பாடலில் தொடங்கி 100,000 பாடலாக விரிவடைந்த ‘காலங்கண்ட’ நூல். இதனை ஒரு புலவர் ஒரு காலத்தில் எழுதினார் என்பதில்லை. ஆயிரக்கணக்கான பேர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எழுதிச் சேர்த்துக் கூட்டியும் குறைத்தும் திரித்தும் வளர்த்த கதம்பம் இது. வேதங்களுக்குப் பிற்பட்டு 5 ஆம் நூற்றாண்டு வரையுமுள்ள எல்லா நூல்களுக்கும் இப் பண்பு பொருந்துவதாகும். புராணங்கள் சுமிருதிகள் இவ் வகையில் இதிகாசங்களைவிடச் சீர்கேடுடையவையாகும். பதினெண் புராணங்களில் சேராவிட்டாலும் அவற்றிலும் புகழடைந்துள்ள பாகவத புராணம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. இராமாயணம் ஒன்றுதான் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் ஒரே புலவனால் இயற்றப்பட்ட பிற்கால வேதமொழி நூலாகும். இதில்கூட முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் பின்னால் சேர்க்கப்பட்டன என்று தெரிகிறது. தவிர, கிடைக்கும் பதிப்புக்கள் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன. நூலினுள்ளேயே கூறப்பட்ட செய்யுள் தொகை, இயல் தொகை நூலுடன் ஒத்துவரவில்லை. ஆசிரியராகிய வால்மீகியின் கதையும், அவர் பாடல்களாகச் சிலவும் நூலில் வருவதிலிருந்து முற்கால வால்மீகி வேறு இன்றைய இராமாயண வால்மீகி வேறு என்ற அறிகிறோம். இன்றைய இராமாயண வால்மீகி, கி.மு. 2ஆம் நூற்றாண்டில் இருந்தவர். ஏனெனில், அந் நூற்றாண்டிலேயே கோசலத்தின் பழைய தலை நகரான சாகேதத்தைப் புஷ்யமித்திரசுங்கன் என்ற மன்னன் தன் தலைநகரமாக விரிவுபடுத்தி அதற்கு ‘அயோத்யா’ (வெல்லப்பட முடியாத நகரம்) என்று புதுப்பெயர் கொடுத்தான். இந் நகரே இராமன் ஆண்ட நகரமாக வால்மீகி இராமாயணத்தில் புனைந்து ரைக்கப்படுகிறது. இலக்கிய காலத்துக்கு முற்பட்டவராகக் குறிக்கப்படும் ஆசிரியர்களுள், மூவர் நூல்கள் ஆராய்ச்சியாளரால் ஏற்றுக் கொள்ளப்படாதவையாயுள்ளன. ஒன்று பரதர் நாட்டிய சாஸ்திரம். இன்றைய வடிவில் அது கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்பதில் ஐயமில்லை. ஆனால், இது தொடக்கத்தில் 36 செய்யுள் களாயிருந்து 37 இயல்களாகிப் பெருகிய நூல். இன்று இதுரு தென்னாட்டிலேயே வழக்கிலும் உள்ளது. முதலாசிரிய ராகிய பரதமுனிவர் கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குரியவர் எனக் கூறப் படுகிறது. இதுபோன்ற மற்றொரு நூல் சாணக்கியனின் ஆர்த்த சாஸ்திரம். சாணக்கியன் சந்திரகுப்தனின் அமைச்சன் என்று கூறப்படுகிறான். அப்படியாயின், இது கி.மு. 4ஆம் நூற்றாண்டுக் குரியதாகவேண்டும். ஆனால், சந்திரகுப்தன் காலத்தில் அவன் அவைக்கு வந்திருந்து இந்தியாபற்றி எழுதிய மெகஸ்தனிஸ், இவரைப்பற்றி ஒன்றும் குறிக்கவில்லை. முதன்முதலில் இவரைப் பற்றிய வரலாறு கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குரிய முத்ராராக்ஷஸ நாடகத்தில் தான் குறிக்கப்படுகிறது. நூலின் நடையும் பிற்காலத்தது. இக் காலத்த தென்று கருதப்படும் மற்றோர் ஆசிரியர் பாஸன். காளிதாசன் பாஸனைப் பற்றிக் குறிப்பிடுவதால் இவன் காளி தாசனுக்கு முற்பட்டவன் என்பதில் ஐயமில்லை. ஆயினும், இவன் கி.பி. 2-3 ஆம் நூற்றாண்டின னாகவே இருத்தலும் கூடும். அண்மையில் அறிஞர் டி. கணபதி சாஸ்திரியால் திருவனந்தபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட 13 நாடகங்களும் பல காரணங்கனால் பாஸனுடையவை என்று சிலரும், அன்று என்று வேறு சிலரும் வாதாடுகின்றனர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் மலையாள நம்பூதிரிகளால் எழுதப்பட்டவையே இவை என்பர் சிலர். எப்படி யாயினும் இது கி.பி. 4 ஆம் நூற்றாண்டுக் குரியவையல்ல வென்பதை இந் நூல்களின் நடையும் கருத்துக்களும் அவற்றின் தென்னாட்டு நாடக மரபுகளும் காட்டுகின்றன. வடநாட்டில் புத்த சமய நலிவுக்குப் பின் தோன்றிய புராணக் கருத்துக்கள் தென்னாட்டில் சங்க காலங்களிலிருந்தே காணப்படுகின்றன. ஆகவே, அவை தென்னாட்டு நூலாகக் கொள்ளப்பட லாமானால் கி.பி. 2-9ஆம் நூற்றாண்டுக்குட்பட்ட நூல்களா யிருக்கக் கூடும். 8. வடமொழியின் கருநிலைக்காலம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை வடமொழியின் கருநிலைக்காலம் என்னலாம். இக் காலத்திற்குமுன் புத்த சமயத்தினர் தொடக்கத்தில் பாளி மொழியிலேயே எழுதிவந்தனர். ஆனால், இதுபோது அவர்கள் புராண மொழியைப் பண்படுத்தி அதில் எழுதத் தலைப்பட்டனர். ஆயினும், இவர்கள் பாணினியை முற்றிலும் பின்பற்றாமல் தாய் மொழிகளிலிருந்து முற்றிலும் விலகிவிடாமல் இருந்ததனால் இவர்கள் கால மொழி முற்றிலும் வடமொழியாய் அமைந்து விடவில்லை. இதனை வடமொழி என்று கொள்பவர் இதில் பாளிமொழிக் கலப்பு மிகுதி என்று கூறுவதன் காரணம் இதுவே. வடமொழி இலக்கியத்திற்கு முன்மாதிரியாய் அமைந்த இப் புத்தகாலக் கருநிலை இலக்கியத்தின் முதற் கவிஞர் அசுவகோஷன் ஆவான். இவன் கி.பி. 1 அல்லது 2ஆம் நூற்றாண்டிலிருந்த புத்த அரசன் கனிஷ்கனின் அவைப் புலவன். (சிலப்பதிகாரத்திற் குறிக்கப் பட்ட கனகன் இவனே என்பர்). இவன் புத்தசரிதம், சௌந்த ரானந்தம் என்ற இரு காவியங்களும், மூன்று நாடகங்களும் எழுதியதாக அறிகிறோம். நாடகங்களின் சில பகுதிகள் மட்டுமே அண்மையில் கண்டெடுக்கப்பட்ட ஏடுகளில் கிட்டியுள்ளன. புத்தசரிதம் வடமொழியாளரின் காவியப் பண்புடன் முழுவதும் அமையப்பெற்ற பெருங்காவியம் ஆகும். அதே சமயம் காளிதாசன் நடையினும் எளிமை யுடையதாய்க் கிட்டத்தட்டப் புராண நடையிலேயே அது அமைந்துள்ளது. இந் நூல் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. தற்காலத்தில் ஸர். எட்வின் ஆர்னால்டு என்ற ஆங்கிலக் கவிஞர் இதனைத் தழுவி ஆசிய ஒளி1 என்ற ஆங்கிலப் பெருங் காவியம் எழுதியுள்ளார். தமிழில் கவிமணி புத்தேரி தேசிக விநாயகம் அவர்கள் இதனை வளர்ச்சிமிக்க கவிதை நடையில் மொழிபெயர்த்துள்ளார். இக் காலத்திலேயே காஞ்சிபுரம் இந்தியாவின் சமயப் போராட்டக் கனமாகவும் வடமொழிக் கலையின் வளர்ப்பிட மாகவும் ஆகியிருந்த தென்று மணிமேகலை மூலம் அறிகிறோம். கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் காஞ்சியில் வாழ்ந்த திங்நாகனின் தருக்க நூல்களும், பின்னாட்களில் காஞ்சியிலிருந்து சென்று வடநாட்டுப் பல்கலைக் கழகமாகிய நாலந்தாவில் தலைவரா யிருந்த தர்மபாலரின் புத்த சமய நூல்களும் ஆசியாவெங்கும் புகழ்பெற்றவை. வட நாட்டில் இதேபோல நாகானந்தன் நூல்கள் பெருமையுடையன. ஆனால், இலக்கியத்துறையில் இக் காலத்துக்குரிய சிறந்த நூல் கி.பி. 2 அல்லது 3ஆம் நூற்றாண்டுக் குரிய சூத்திரகன் என்ற அரசன் இயற்றிய மிருச்சகடிகா (மண் தேர்) என்ற நாடகம் ஆகும். இதன் கதைப் புதுமை, நிகழ்ச்சி யொழுக்கு, எளிய நடை, வாழ்க்கைத் தொடர்பு, பாமர மக்கள் வாழ்க்கையில் ஈடுபாடு ஆகிய பண்புகள் வடமொழி நாடகங்களில் மிகவும் அரிதான பண்பாடுகள் ஆகும். எனவே, மேனாட்டாசிரியர்கள் இதனைக் காளிதாசன் சாகுந் தலத்துக்கு அடுத்தபடி எடுத்துப் பாராட்டியதில் வியப்பில்லை. இது உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் அவர்கள் இதனை ‘மண்ணியல் சிறுதேர்’ என்ற பெயருடன் மொழி பெயர்த்துள்ளார். 9. வடமொழியின் பொற்காலம் (5-7ஆம் நூற்றாண்டு) காளிதாசன் வடமொழியின் முதற்கவிஞனான காளிதாசனே அதன் முதன்மை வாய்ந்த கவிஞனும் ஆவான். விக்கிரமாதித்தன் அரசவை யிலிருந்த நவமணிகள் அல்லது ஒன்பது புலவருள் அவன் முதல்வன் என்று மரபுரைக் கதைகள் கூறுகின்றன. ஆனால், இவ்வொன்பதின் மருள் சிலர் வேறு காலத்தவர் என்று அறிகின்றோமாதலால் மரபுரை வரலாறு வாய்மையுடைய தென்று கொள்வதற்கில்லை. மேலும், விக்கிரமாதித்தியன் விக்கிரம சகாப்தம் தொடங்கும் காலமாகிய கி.பி. 1ஆம் நூற்றாண்டினன் என்று சிலரும், கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் சந்திரகுப்தன் என்று சிலரும் கூறுகின்றனர். இவற்றுள் பிற்பட்ட காலமே பெரும்பாலும் ஏற்கப் பட்டது ஆகும். காளிதாசன் நடையும் மொழிப்பண்பும் இக் காலத்திற்கே பொருத்தமானவை. வடமொழியின் பொற்காலமாகவும் புதிய ஆரிய (பிராமண அதாவது இந்து) சமயத்தின் பொற்காலமாகவும் கருதப்படும் காலமும் இதுவே. இதிகாச புராணங்கள், சுமிருதிகள், பிற கதம்ப நூல்கள் முதலிய பிற்கால வேதமொழி நூல்கள் இன்றைய வடிவில் இறுதியுருவடைந்ததும் இப்போதுதான். வடமொழியின் சிறந்த இலக்கியத்துறைகளான நாடகம், பெருங்காவியம், சிறுகாவியம் அல்லது துறைப்பா ஆகிய மூன்றிலும் காளிதாசன் இயற்றியதுடன் மூன்று துறைகளிலும் வடமொழி நூல்களுக்கு முன்மாதிரியாக முதன்மை பெற்றான். குமாரசம்பவம், இரகுவம்சம் ஆகிய பெருங்காவியங்களும், மேகசந்தேசம் என்ற தூதுத்துறை இலக்கியமும், மாள விகாக்கினிமித்திரம், விக்கிர மோர்வசீயம், அபிஜ்ஞான சாகுந்தலம் ஆகிய நாடகங்களும் அவன் இயற்றியவை. பெருங் காவியங்களில் தலைசிறந்தது இரகுவம்சம். இது இராமாயணக் கதை உட்பட இராமன் அரசமரபின் வரலாறு கூறுவது. இந் நூல் பல அரசர் வரலாற்று வடிவில் அமைந்ததாயினும் காளிதாசனின் வர்ணனைச் சிறப்புக்களாலும், உணர்ச்சி வேறு பாடுகளாலும், பலவகைப்பட்ட பண்போவியங்களாலும் ஒரே தொடர்பான பல திரைக் காட்சிகளின் கோவைபோலத் தோற்றி இலக்கிய விருந்தாய் அமைந்துள்ளது. பார்வதி பரமசிவன் காதல் வாழ்வும், முருகன் பிறப்பும் கூறும் குமாரசம்பவமும் இயற்கைக்காட்சி வருணனைகள் நிறைந்தது. மேகசந்தேசம் தூது காவியங்களில் காலத்தாலும் தன்மையாலும் முதன்மையானது. இந்தியாவில் இத் துறைக் காவியங்கள் எல்லாவற்றுக்கும் இது முன்மாதிரியா யமைந்தது. காளிதாசனுக்கு உலகப்புகழ் தந்த நூல் சாகுந்தலமேயாகும். காவியங்களுள் நாடகம் சிறந்தது; நாடகங்களிலும் சாகுந்தலம் சிறந்தது; அதிலும் நான்காம் அங்கம் நான்காம் பாட்டுக்கு இணையில்லை. (“காவ்யேஷு நாடகம் ரம்யம், தத்ர ரம்யம் சாகுந்தலம்; தத்ரா பிசதுஷ்டோங்க: தத்ரச்லோகச்”) என்று வடமொழியாளர் இதனைப் புகழ்வர். காளிதாசன் நடை எளிமையும் இனிமையும் வாய்ந்ததாயினும் அணி நலன்கள் சிறந்து விளங்கு கிறது. அவன் பெருஞ்சிறப்பு உவமை (“உபமாகாளி தாசஸ்ய”) எனப்படுகிறது. சாகுந்தலம் இந்தியாவில் மட்டுமன்றி மேனாடு களிலும் புலவர்களால் உச்சி மேற்கொள்ளப்பட்டுப் பல மொழிகளிலும் மொழிபெயர்த் தாராயப்பட்டுள்ளது. தமிழில் பல மொழி பெயர்ப்புகள் உள்ளனவாயினும் வடமொழி தென்மொழி ஒப்புமை ஆராய்ச்சியுடன்கூடிய ஆசிரியர் மறைமலையடிகளாரின் மொழி பெயர்ப்பே தலைசிறந்ததாகும். காளிதாசன் பெரும் புகழைப் பயன்படுத்திப் பல நூல்களும் அவன் பெயரால் இயங்குகின்றன. அவற்றுள் சிறந்த ஒரு நூல். ஆறு பருவங்களை வருணிக்கும் இருதுசம்ஹாராம் என்ற சிறு காப்பியமே. 10. பாரவி கி.பி. 6ஆம் நூற்றாண்டில் காஞ்சியில் வாழ்ந்த ‘பாரவி’ விக்கிரமாதித்தன் நவமணிகளுள் ஒருவனாகக் கூறப்படுபவன். இவன் இயற்றிய பெருங்காவியம் கிராதார்ஜுனீயம் என்பது. இது அருச்சுனன் வேடவுருவில் சிவபெருமானைச் சந்தித்த பாரதக் கதைப்பகுதி கூறுவது. உவமையில் காளிதாசன் என்பது போலவே பொருளாழத்தில் பாரவி (“உபமாகாளிதாசஸ்ய, பாரவேர் அர்த்த கௌரவ.”) என்று வடமொழியாளர் கூறுவர். 11. பர்த்ருஹரி கிட்டத்தட்ட இதே காலத்தவனாகக் குறிப்பிடத்தக்க மற்றொரு புலவன் பர்த்ருஹரி. இவன் ஓர் அரசன் என்றும் மனைவி கற்பைச் சோதிக்கப் போய் சோதனையில் அக் கற்பரசியை இழந்து அவன் துறவியானதாகக் கதைகள் கூறும். இவன் எழுதிய நூல் வைராக்கியம் (துறவு அல்லது அறம்), நீதி (உலகியல் அல்லது பொருள்), சிருங்காரம் (காதல் அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுதிகளுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கூறாகப் பாடப்பட்ட திரிசதகம் (முந்நூறு பாடல்கள்) ஆகும். வடமொழியில் இத்தகைய திரிசதகங்கள் (முப்பால் நூல்கள்) பலவாயினும் இதுவே அவற்றுள் காலத்தாலும் சிறப்பாலும் முதன்மை வாய்ந்தது. 12. ‘முப்பால்’ நூல்கள்: வடமொழி தென்மொழி மரபுகள் முப்பால் பாகுபாட்டில் இது திருவள்ளுவர் திருக்குறளை நினைவூட்டுவது ஆயினும், தமிழர் முப்பாற் பாகுபாட்டுக்கும் வடவர் முப்பாற் பாகுபாட்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உண்டு என்பதை இந்நூல் காட்டும். வடமொழியாளரி டையே அறம் வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட துறவையும், பொருள் சூழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட உலகியல லையும், இன்பம் கீழ்த்தரமான சிற்றின்பக் கருத்துக்களையுமே குறித்தன. தமிழ் முறையிலோ மூன்றும் அன்பையும் அறிவையும் ஒப்புரவையும் அடிப்படையாகக் கொண்டவை. ஆயினும், முரண்பட்ட திறங்களான இம் முப்பகுதியிலும் திருவள்ளுவரைப் போலவே ஒத்த கவிதைச் சிறப்பு பர்த்ருஹரியிடமும் காணப்படுகிறது. 13. பட்டி காவியம் இதே காலத்துக்குரிய மற்றொரு புலவன் வலபி நகரில் (கூர்ச்சர நாட்டில்) வாழ்ந்த பட்டி என்பவன். இவன் நூல் இராவண வதம் அல்லது பட்டி காவியம் என்ற பெருங்காவியம். பிற்காலச் சொல்லணி, பொருளணி நயங்கள் குறைந்து புராண நடையில் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்தை இலக்கியப் பண்புகளிலும் சுவைகளிலும் ஈடுபட்ட நற்புலவர் புறக்கணிப்பது கண்டு இப்புலவன் அக் கதையைக் காவிய அளவில் சுருக்கி அத்தகைய அணி நலன்க ளுடன் அமைத்ததாகக் கூறப்படுகிறது. 14. தமிழ் வடமொழி முற்காலப் பிற்கால இலக்கியங்கள் முதிர்ச்சிக் காலம் (7-12ஆம் நூற்றாண்டு) காளிதாசன் கால வடமொழி இலக்கியம் ஓரளவு அதற்கு முற்பட்ட தமிழ்ச்சங்க கால இலக்கியப் பண்புகளை நினைவூ ட்டுவது. ஆனால், முதிர்ச்சிக்கால இலக்கியம் சிந்தாமணி கம்ப இராமாயண காலத் தமிழிலக்கியத்தை (5-12ஆம் நூற்றாண்டு) நினைவூட்டுவது ஆகும். முன்னது எளிய நடையும் இயற்கை யணியும் செறிந்த கலைக்கட்டுக்கோப்பும் உடையது. பின்னதோ பாரிய உருவும் தளர்ச்சியுற்ற விரிந்த கட்டுக்கோப்பும் கடுநடையும் செயற்கை வருணனையும் அணியும் சொல்லடுக்கும் உடையது. 15. ஹர்ஷன் 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடநாடு முழுவதையும் ஹர்ஷன் ஆட்சி செய்தான். இப் பேரரசன் புத்த சமயத்தினன் ஆயினும், பிற சமயங்களிலும் ஒப்பரவு காட்டினான். இவன் புலவர்களை ஆதரித்த துடன் தானே ஒரு புலவனாயு மிருந்ததாகத் தெரிகிறது. பிரிய தர்சிகை, ரத்னாவளி, நாகானந்தம் என்ற மூன்று நாடகங்கள் அவனால் இயற்றப்பட்டன. இரத்னாவளி உதயணனின் இரண்டாம் பணம் பற்றியது. நாகானந்தம் புத்த சமயச் சார்பான கதை. இந் நாடகங்களை ஹர்ஷன் பெயரால் அவன் அவைப் புலவனான பாணனே இயற்றினன் என்பர் சிலர். 16. மகேந்திர பல்லவன் வட நாட்டில் பேரரசனாக ஹர்ஷன் ஆண்ட அதே காலத்தில் தமிழகத்தில் மகேந்திர பல்லவன் என்ற பேரரசன் ஆண்டு வந்தான். ஹர்ஷனையே போரில் எதிர்த்து நின்ற புலிகேசி என்ற இடை நாட்டுப் பேரரசனை வென்றடக்கிய வீரன் இவன். இவன் சமண சமயத்தவனாயிருந்து திருநாவுக் கரசரால் சைவனாக்கப்பட்டான். சைவனாக்கப்படுமுன் புத்தர், பாசண்டர், காபாலிக சைவர் ஆகியவர் சமய வழக்கங்களைக் கடிந்து அவன் ‘மத்த விலாசப் பிரகசணம்’ என்ற வசைப்பண்பு வாய்ந்த களிநாடகம் ஒன்று இயற்றினான். இது அண்மையில் தமிழிலும் மொழி பெயர்க்கப் பட்டது. 17. பவபூதி முதிர்ச்சிக் காலத்தின் மிகச் சிறப்புடைய நாடகக் கவிஞன் 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பலபூதியே. வடமொழியாள ரிடையே இவன் பலரால் காளிதாசனுக்கு ஒப்பானவனாகவும் கொள்ளப்படு கின்றான். மகாவீரசரிதம், மாலதி மாதவம், உத்தரராம சரிதம் என்பவை இவன் எழுதிய நாடகங்கள். இவற்றுள் மாலதி மாதவம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட்டையும் பாரசீக லைலா மஜ்னூனையும் நினைவூட்ட வல்ல காதற்கதை. வடமொழியில் கற்பனைப் புதுமையுடைய ஒன்றிரண்டு நூல்களில் இது இடம் பெறுவது. பவபூதியின் மற்ற இரு நாடகங்களும் இராமாயணக் கதை பற்றி நாடகங்கள். முதலது அரசுரிமை விழா வரையுள்ள முழுக்கதையும், பின்னது சீதை பிரிவும் காடுறை வாழ்வும் கூறுவது. உத்தரராம சரிதமே இவரின் அருஞ் சிறப்புக்கள் யாவும் நிறைந்த உயர் நூல். வடமொழி நாடக இலக்கிய மாளிகையின் தலைக்கோபுரம் காளிதாசனானால், அதன் கடைக்கோபுரம் பவபூதி என்னலாம். காளிதாசனின் சிறப்பு மொழி எல்லை கடந்து உலகப் புகழ்பெற்றது. பவபூதியினதோ வடமொழி யெல்லையில் புகழ் நிறுவிற்று. நடைநயமும் மொழியினிமையும் இயற்கைவனப்பும் காளிதாசன் பண்புகள் பெருமித நடையும் சொல்முழக்கமும் வீறுமிக்க பண் போவியங்களும் கலைக்கட்டுக் கோப்பும் பவபூதியின் சிறப்புக்கள் ஆகும். பலபூதிக்குப் பிற்பட்ட நாடக ஆசிரியர்களிடையே காளி தாசனின் இயற்கைநாயமும் குறைவு; பவபூதியின் கட்டுக்கோப்பும் வீறும் மறைந்தன. சொல்லடுக்குகளும் செய்றகையணிகளும் சமயச்சார்பான விளம்பரங்களுமே அவற்றுக்கு உயிரியக்கம் தந்தன. 18. முத்ரா ராக்ஷஸம் 8ஆம் நூற்றாண்டில் விசாகத்தன் எழுதிய முத்ரா ராக்ஷஸம் வடமொழியில் வரலாறு தழுவிய நாடகமாகச் சிறப்படைந் துள்ளது. - சந்திர குப்தனின் அமைச்சனாகக் குறிக்கப்படும் சாணக்கியன் எதிர்ச்சூழ்ச்சிகளால் சிதறடித்து அவனைச் சந்திரகுப்தன் அமைச் சனாக்கும் திறத்தை விரித்துரைப்பது இந் நாடகம். நாட்டுப்பற்றும் அரசப்பற்றும் மாறா நட்புறுதியும் உடைய ராக்ஷஸனின் பண் போவியம் இந் நாடகத்தின் பெருஞ்சிறப்பு ஆகும். சாணக்கியனைப் பற்றிய செய்திகள் முதன் முதல் இந் நாடகத்திலேயே காணப்படு கின்றன. 19. பாஸன் நாடகங்கள் காளிதாசனுக்கு முற்பட்டவரான பாஸன் பெயரால் வெளியிடப்பட்டுள்ள திருவனந்தபுரம் நாடகங்கள் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் மலையாள நாட்டில் வழங்கியிருக்கலாம் என்று எண்ண இடமுண்டு. பாஸனே தென்னாட்டவனாயிருக்கக் கூடுமானால், அவன் காளிதாசனுக்கு முற்பட்டுச் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இருந்தவனாகக் கொள்ளுதல்கூடப் பொருந்தக் கூடியதே. ஆயினும், மலையாளத்தில் வடமொழி நாடகங்கள் எழுதப்பட்ட காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ஆதலால், இவை கி.பி. 9 ஆம் நூற்றாண்டுக்குரியவை என்பதிலும் பொருத்தம் உண்டு. இந் நாடகங்களில் உதயணன் கதையை அடிப்படையாகக் கொண்டவை, பாரதத்தை அடிப்படையாகக் கொண்டவை, இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டவை என மூன்று பகுதியும் உண்டு. மூன்றும் ஒரே புலவனால் இயற்றப்பட்ட வைதானா என்பதும் இன்னும் கொள்கை வேற்றுமைக்குரிய செய்தியாகவே இருந்துவருகிறது. இவற்றுள் உதயணன் கதையை அடிப்படை யாகக் கொண்ட வாசவதத்தை கனவு (ஸ்வப்ன வாசவதத்தம்), யௌகந்தராயணன் சூளுறவு (ப்ரதிக்ஞா யௌகந்தராயணம்) என்பவையே சிறந்தவையாகக் கொள்ளத்தக்கன. 9ஆம் நூற்றாண்டில் பட்டநாராயணன் என்பவரால் திரௌபதி குழல் முடித்தல் பற்றிய வேணீ சம்ஹாரமும; 10 ஆம் நூற்றாண்டில் இராசசேகரனால் கர்ப்பூரமஞ்சரி, வித்தசால பஞ்சிகை, பாலராமாயணம், பாலபாரதம் முதலியவையும்; தாமோதரமிச்ரன் எழுதிய மகாநாடகம் என வழங்கும் அனுமான் நாடகமும் பிற்கால வைணவர்களால் சமயச்சார்பு காரணமாகப் பெருவழக்குப் பெற்ற நாடகங்கள் ஆகும். 11 ஆம் நூற்றாண்டில் கிருட்டிணமிச்சரால் இயற்றப்பட்ட ‘பிரபோத சந்திரோதயம்’ ஆங்கில மொழியிலுள்ள இரட்சணிய யாத்திரிகம்1 போல் பண்புகளை உருவகப் படுத்திக் கதையாக்கிய வேதாந்தத் தொடர் உருவகக் கதைநாடகம். வடமொழியில் இப்புதுத்துறை புகுந்த நாடகம் இதுவே. 20. உலகப் புனைகதை இலக்கியமும் இந்தியாவும்: பஞ்சதந்திரம் உலக இலக்கியத்தில் வரலாற்று முறையில் இந்தியாவுக்குத் தனிச்சிறப்புத் தரும் துறை புனைகதை இலக்கியம் ஆகும். இத் துறையில் இன்று நமக்குக் கிட்டியுள்ளவை வடமொழி நூல்கள். அவையும் பெரும்பாலும் கதம்ப இலக்கியம்போலப் பலபடி திரிபுற்றுவந்த பிற்கால நூல்களே. ஆயினும், இவற்றின் மூல நூல்கள் வடமொழி காலத்துககு முற்பட்ட புத்தகாலத்தவை என்றும், பாளி, அர்த்தமாகதி, பைசாசமொழி ஆகிய பண்டைத் தாய்மொழி இலக்கியங்களாக அவை இயங்கின வென்றும் அறிகிறோம். இவற்றுள் புத்தரின் சாதகக்கதைகள் விலங்கு, பறவைகள் ஆகிய வற்றுக்கு மனிதப்பண்பும் பேச்சும் செயலும் தந்துள்ளன. இவற்றி லிருந்து ‘பஞ்சதந்திரக் கதைகள்’ உருவாயின. இன்று வட மொழியிலுள்ள உரையும் செய்யுளும் கலந்த பஞ்சதந்திரம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில்தான் இன்றைய உருவடைந்ததாயினும், கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலேயே ஏதோ உருவில் வழங்கியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில், இதுவே கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டுப் பாரசீகத்திலிருந்து அரபு, சிரியக், கிரேக்கம், இலத்தீனம் ஆகியவற்றிலும், தற்கால மேனாட்டு மொழிகளிலும் பலபடி திரிந்து பரந்தது. பிற்காலத்தில் இது நீதி உரைகளுடனும் வேறுசில கதைகளுடனும் ‘கீதோபதேசம்’ என்ற நூலாக இயற்றப்பட்டது. வடமொழிக்கு முற்பட்ட காலத்துக்குரிய மற்றொரு கதைத் தொகுதி குணாட்டியன் என்ற புலவனால் பிசாச மொழியில் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிற்குள் எழுதப்பட்ட ‘பிருகத்கதா’ ஆகும். இதன் சுருக்கமாக வடமொழியில் 11ஆம் நூற்றாண்டில் புப்தமித்திரர், சேமேந்திரர் என்ற புலவர்கள் நூல்கள் எழுதினர். சோமதேவர் என்பவர் இதன் கதைகளை வகுத்துக் கூட்டிக் குறைத்துக் கதை யோடைக் கடல் (கதாசரித் சாகரம்) என்ற பெருநூலை இயற்றினார். தமிழில் குணாட்டியர் நூலின் மொழி பெயர்ப்பான பெருங் கதையின் பகுதிகள் கிடைத்துள்ளன. சங்ககாலத் துக்கும் முற்பட்ட இடைச்சங்கக்காலப் பண்பாடு நிறைந்த இத் தமிழ் நூலின் காலம் தெளியப்படவில்லை. 21. பாணன் காதம்பரீ ஹர்ஷன் அவைப்புலவனான பாணன் ஹர்ஷ சரிதம் என்ற செய்யுட் காவியத்தையும், ‘காதம்பரீ’ என்ற உரைநடைப் புனை கதைக் காவியத்தையும் இயற்றிப் புகழ் அடைந்தான். காளிதாசன் கால இயற்கை நடையாகிய கௌட நெறியில் முதன்முதல் எழுதிய புலவன் இவனே என்னலாம். நைடதசரிதம் வரலாறு தழுவிய காவியமாயினும் அதில் வரலாற்றுச் செய்திகளை மறைத்துப் புனைந்துரையும் விரிவுரையும் சொல்லடுக்குகளுமே மிகுந்துள்ளன. கதைத் தொடர்பும் கட்டுக்கோப்பும் மிகமிகக் குறைவு. இக் குறைபாடுகள் அனைத்தும் காதம்பரீயிலும் உண்டாயினும் வட மொழியில் இதுவே இவ் விலக்கிய முறையில் முன்மாதிரியாய்க் கருதப்பட்டதால் பெருமையுற்றது. நீண்ட தொடர் மொழிகள், சமாசங்கள், வளைந்து வளைந்து செல்லும் வர்ணனைகள், சித்திர விசித்திரமான அணிகள் ஆகியவற்றின் விருந்து இந் நூல். “காதம் பரீச் சுவையறிந்தார்க்கு உணவுச்சுவை வேண்டாம்” என்ற வட மொழிப் பழமொழி இதன் தனிப்புகழுக்குச் சான்று. இவன் எழுதியதாக’ அவந்தி சுந்தரி கதா’ மற்றோர் உரைநடை நூலும் அண்மையில் வெளிவந்துள்ளது. பாரவி, தண்டி ஆகியவர்கள் வாழ்க்கைபற்றிய குறிப்புக்கள் இதில் காணப்படுகின்றன. 22. தண்டி: தசகுமார சரதிம்: அணிநூல்கள் பாணனைப் போலவே இருதுறைகளிலும் ஈடுபட்டு இரண்டிலும் பாணனைவிடப் பெருஞ் சிறப்புற்ற மற்றொரு புலவன் தண்டி. இவன் தமிழகத்தில் காஞ்சியில் வாழ்ந்தவன். பாரவியின் மரபில் வந்தவன் என்றுகூட அறிகிறோம். இவன் “காவியாதர்சம்” என்ற அணிநூலும் (அலங்கார சாஸ்திரமும்) தசகுமார சரிதம் என்ற புனைகதைக் காவியமும் இயற்றியுள்ளான். வடமொழியின் தலை சிறந்த அணிநூலாகிய காவியா தர்சமே அதன் முதல் அணி நூலாகவும் இருக்கக்கூடும். ஏனெனில், இவரே தமிழிலும் `தனி’ அணிநூலாகத் `தண்டியலங்காரம்’ இயற்றியவர் என்று கூறப் படுகிறது. ஆயினும். இவருக்கு முற்பட்டும் அணிநூல்கள் சில இருந்ததாக இவர் குறிக்கிறார். பாமஹன் என்ற அணிநூலாசிரியர் இவருக்கு முற்பட்டவர் என்று கூறுபவரும் உண்டு. தசகுமார சரிதம் வடமொழியின் புனைகதை நூல்களில், இலக்கியப் பண்புகளில் தலைசிறந்தது. முதிர்ச்சிக் காலத்தின் தொடக்கத்திலிருந்த இவர்தம் அணியிலக்கணத்தில் விதர்ப்ப, கௌட நெறிகளை வகுத்துக் கூறியும் முந்தியதையே பெரிதும் தழுவுகின்றார். தண்டி, பாமஹன் ஆகியவர்களைப் பின்பற்றி 12ஆம் நூற்றாண்டுக்குள் வாமனன், உத்படன், ருத்ரடன், ஆனந்த வர்த்தனன் ஆகிய பலர் அணிநூலாராய்ச்சியி லீடுபட்டனர். ஆனந்தவர்த்தனர் த்வனியாலோகத்தில் கவிதையின் உயிர்நாடி த்வளி அல்லது குறிப்பே என்று கூறினார். 23. சமயத்துறை உரைநடை வடமொழியில் உரைநடை தனி இலக்கியத் துறையாக வளர வில்லை. கதையிலக்கியத்தில் அது கவிதை போன்ற கடுநடை பேணிற்று. ஆனால், நல் இலக்கியம் என்று கூறமுடியாத சமயநூல் துறையில் ஒப்பற்ற உரைநடைத்துறையாளர் ஒருவர் எழுந்தார். இவரே கேவல அத்துவைத வாதியாகிய சங்கரர். இவர் வடமொழியில் நல்ல பேச்சாளர். இந்தியா வெங்கும் சென்று புத்தர்களையும் ஏனைய கோட்பாட்டினரை யும் வாதிட்டு வென்று தம் கோட்பாட்டை நிறுவினர். மலையாள நாட்டில் (காலடியில்) பிறந்து காஞ்சியில் வாழ்ந்த இவர் உபநிடதங்கள், பிரமசூத்திரம் முதலிய பல நூல்களுக்கு உரைகண்டார். இவ்வுரைகளில் அவரது ஒப்பற்ற மொழிப் புலமையும், சொல் திட்பமும், பொருள் நுணுக்கமும் வெளிப்படுகின்றன. 24. சங்கரர் பத்தி நூல்கள் சங்கரரே வடமொழிக் கவிதையிலும் ஒரு புத்தம்புதுத் துறை வகுத்தவர் ஆவர். தமிழில் 7-9 நூற்றாண்டில் பேரளவில் எழுந்த பத்தி நூல்களை ஒட்டி இவர் வடமொழியில் சியாமளா தண்டகம், சிவானந்தலகரி, சௌந்தர்ய லகரி ஆகிய இனிய பத்தி உணர்ச்சிப் பாக்கள் இயற்றினார். இவற்றுள் சியாமளா தண்டகம் நீண்ட யாப்பு முறையிலமைந்த இசைப் பாடல்கள். திருநாவுக்கரசர் தாண்ட கங்களை இவை நினைவூட்டவல்லன. இந் நூல்களில் சங்கரர் வடமொழியில் கடுமையான உரப்பொலி களை நீக்கியும், வட மொழியில் இதுவரை வழங்கப்படாத எதுகை மோனைகளைக் கையாண்டும் தமிழோசை அமையப் பாடியுள்ளார். கண்ணப்பர், சாக்கியர், சம்பந்தர் முதலிய தமிழ்ப் பத்தியியக்கத் தலைவர் களையும் இவர் புகழ்ந்து பாராட்டி யுள்ளார். 25. வேதாந்த தேசிகர்: ஹம்ஸசந்தேசம் தமிழகத்தில் சங்கரரின் பணியைப் பிற கோட்பாடுகளுடன் இணைத்தவர்கள் நீலகண்டர், ஹரதத்தர், இராமனுசர் ஆகியவர்கள். கன்னட நாட்டில் மாத்துவரும் வங்கநாட்டில் சைதன்னியரும் இதே பணியாற்றினர். தமிழகத்தில் இராமானுசரின் சீடரும் வட கலையைத் தோற்றுவித்தவரும் ஆன வேதாந்த தேசிகர் வட மொழியிலும் தமிழிலும் சிறந்த கவிஞர். இவரால் ஹம்ஸசந்தேசம் என்ற தூதுத் துறைக் காவியமும் ‘யாதவாப்பு யுதயம்’ என்ற காவியமும் பிரபோத சந்திரோதயத்தைப் பின்பற்றிச் ‘சங்கற்ப சூரியோதயம் என்ற நாடகமும் எழுதப்பட்டன. இவற்றுள் ஹம்ஸசந்தேசம் காளிதாசன் மேகசந்தேசத்துக்கு அடுத்தபடி யாயுள்ள தூதுத்துறை நூல். 26. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் (சம்பூ)-போஜன் வடமொழியில் மிகவும் பிற்பட்டுத் தோன்றிய மற்றொரு புதுத்துறை சம்பூ அல்லது உரையிடையிட்ட பாட்டுடைக் காவியம் ஆகும். தமிழகத்தில் சிலப்பதிகார மரபுரையன்றி இதுபற்றி எதுவும் நமக்குக் கிட்டவில்லை. ஆனால், மலையாள நாட்டில் இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வடமொழி நாடகங்களில் வழங்கப் பட்டன. மலையாளத்தில் காவியங் களிலும் 12-13ஆம் நூற்றாண்டில் இது பெருவழக்காயிருந்தது. வடமொழியில் இது 9 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி 12ஆம் நூற்றாண்டுகளில் சிறப்புற்றது. தொடக்கத்தில் அதாவது 9-10 ஆம் நூற்றாண்டுகளில் இத் துறையைக் கையாடியவர்கள் பெரிதும் சமணரேயாவர். அரிச்சந்திரனின் ஜீவந்தர சம்பூ, விக்ரம பட்டரின் நளசம்பூ அல்லது தயமந்தி கதா, சோமதேவ சூரியின் யசஸ்திலகசம்பூ அல்லது யசோதர மகாராச சரிதம், 11ஆம் நூற்றாண்டினரான ஸோட் டலரின் அவந்தி சுந்தரீகதா ஆகியவை இத் திறத்தவை. இத் துறை யிலக்கியத்தின் தலைசிறந்த நூல் போசன் என்ற அரசன் இயற்றிய இராமாயண சம்பூவேயாகும். இது தென்னாட்டில் போச சம்பூ என்ற பெயரால் சம்பூ இலக்கியத்தின் முன்மாதிரியாக வழங்குகிறது. வேதாந்த தேசிகர் விச்வகுணாதர்ச சம்பூ என ஒரு சம்பபூ காவியமும் இயற்றியதாக அறிகிறோம். 27. நலிவுக்காலம் (12ஆம் நூற்றாண்டுக்குப் பின்) இராமானுசரின் வைணவ இயக்கம் தமிழகத்திலிருந்து தொடங்கி இந்தியா முழுவதும் பரவிற்று. அதன் பயனாகத் தாய்மொழி யிலக்கியம் எங்கும் தலைதூக்கிற்று. வடமொழியி லக்கிய வாழ்வுக்கு இது ஒரு முற்றுப்புள்ளியாயிற்று. இதனை யுணர்ந்த இராமானுசர் சீடரான வேதாந்த தேசிகர் வடகலை தோற்றுவித்து வடமொழிக்குப் புத்துயிர் தர முயன்றாராயினும், அதனாலும், புத்திலக்கிய வளர்ச்சி ஏற்படவில்லை. தாய்மொழிக் கவிஞர்களே தம் புகழ்பரப்ப வடமொழியிலும் சில நூல்கள் எழுதலாயினர். இதுவும் வரவரக் குறைந்தது. 13 ஆம் நூற்றாண்டுடன் வடநாட்டிலும், 16 ஆம் நூற்றாண்டுடன் தமிழகத்துக்கு வெளியே தென்னாட்டிலும், 18 ஆம் நூற்றாண்டுடன் தமிழகத்திலும் வட மொழி இலக்கிய வாழ்வு ஓய்வுற்றது. 28. பிற்காலக் கதையிலக்கியம் நலிவுக் காலத்திலும் ஓரளவு வளர்ச்சியடைந்ததெனக் கூறத்தக்க இலக்கியம் தாய்மொழி யிலக்கியத்திலிருந்து வடமொழிக்கு மிகப்பிந்தி வந்த கதைத்துறையே. ‘பெருங்கதை’ இலக்கியத்தின் கதைகளைச் சுருக்கியும் விரித்தும் இலக்கிய நயம்படப் பல புதுக்கதைகள் நாளடைவில் எழுந்தன. கி.பி.11 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கிளி எழுபது (சுகசப்ததி) வழங்கி யிருந்ததாக, அறிகிறோம். இந்தியாவிலிருந்து பாரசீகம் சென்ற இக் கதை மீண்டும் ‘உருது’, ‘இந்தி’ முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக மொழிகளிலும் பரவிற்று. இதனைப் பின்பற்றி விக்கிரமாதித்தன் கதையெனத் தாய்மொழிகளில் வழங்கப்படும் 25 வேதாளக் கதைகள் (வேதாள பஞ்சவிம்சதீ), 32 பதுமைக்கதைகள் (சிம்ஹாசன த்வாத்ரிம்சிகா) ஆகியவை பெருவழக்காயின. இக் கதையிலக்கியங் களின் புகழலை களிலிருந்தே அராபிக் கதைகள், மேனாடுகளில் வழங்கிய பொக்காச்சியோ, சாஸர், பாந்தேன் கதைகள் எழுந்தன என்று அறிஞர் கூறுகின்றனர். 29. செயதேவர்: கீத கோவிந்தம் 13 ஆம் நூற்றாண்டில் வங்க நாட்டில் வடமொழியில் வைணவ இயக்க அலையில் ஈடுபட்டுச் சயதேவர் என்பவர் சங்கரர் புகழ்ப்பாக்களைப் பின்பற்றிக் ‘கீத கோவிந்தம்’ என்ற பத்திப்பாடல் நூலும் பிரசன்னராகவம் என்ற நாடகமும் இயற்றினார். இவர் பாடல்கள் பசனைகளுக்கும் கச்சேரிகளுக்கும் ஏற்ற பண்ணியலும் உணர்ச்சி யார்வமும் எழுச்சியும் உடையன. 30. விசயநகர காலம் 14 ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசை நிறுவ உதிவிய வித்யாரண்யரே வேதங்களுக்கு முதன்முதலாக உரை எழுதினர் என்பர். சிலர் அவ்வுரைகாரர் அவர் உடன்பிறந்தார் என்பர், வித்யாரண்யர் ஆதிசங்கரரின் கதையான சங்கரவிசயம் இயற்றினார். விசயநகர அரசன் புக்கனின் புதல்வனாகிய கம்பனன் மதுரையை சென்று ஆண்ட கதையை அவன் மனைவி கங்காதேவி மதுரா விசயம் என்ற காவியமாகவும், கிருட்டிண தேவராயர் நாச்சியார் என்ற பெண்ணாழ்வார் கதையையும் அச்சுதராயர் மனைவியாகிய திருமலாம்பா தன் கணவன் வாழ்வையும் திருமணத்தையும் பற்றிய வரதாம்பிகா பரிணயம் என்ற சம்பூநூலையும், தஞ்சையரசன் ரகுநாதன் மனைவி ராமபத்ராம்பா (17 ஆம் நூற்றாண்டு) அவர் வரலாறாகிய ரகுநாதாப்யுதயம் என்ற காவியத்தையும் எழுதினர். 15 ஆம் நூற்றாண்டில் இராமானுசதாசரால் இராமானுச சம்பூ எழுதப்பட்டது. 31. தமிழகக் காலம்: அப்பைய தீட்சிதர்; ஜகன்னாதர்; நீலகண்ட தீட்சிதர் நலிவுக்கால இலக்கியத்திடையே அனைத்திந்தியப் புகழ்பெற்ற பெருங்கவிஞர்கள் அப்பைய தீட்சிதர், ஜகன்னாத பண்டிதர், நீலகண்ட தீட்சிதர் ஆகியவர்களே. இவர்களுள் முதலிருவரும் நலிவுக்காலத்தின் ஒப்பற்ற அணியியல்துறைப் புலவர்கள். அப்பைய தீட்சிதர் தமிழகத்தில் திருவாவடுதுறை மடத்துப் புலவர்; 16 ஆம் நூற்றாண்டினர். அவர் அணி நூல்கள் சித்திரமீமாம்சையும் குவல யானந்தமும் ஆகும். ஜகன்னாதர் அடுத்த நூற்றாண்டில் தெலுங்க நாட்டில் பிறந்து வடநாட்டு முகலாய அரசரிடம் சென்று தங்கியவர். இவர் இஸ்லாமியப் பெண்ணை மணந்ததாகவும் கூறுவர். அப்பைய தீட்சிதரின் கோட்பாடுகளை எடுத்துச் சித்ரமீ மாம்சாகண்டனமும் ரஸகங்காதரம் என்ற நூலும் இயற்றினார். நீலகண்ட தீட்சிதர் 17 ஆம் நூற்றாண்டில் மதுரைத் திருமலை நாயக்கன் அமைச்சராயிருந்து புலவர்களை ஆதரித்த புலவர் பெருமான். அவர் அப்பைய தீட்சிதரின் உடன்பிறந்தாரின் பெயரன் ஆவர். நள சரித்திரம் என்ற நாடகம், நீலகண்ட விஜயம் என்ற சம்பூ காவியம், சிவலீலார்ணவம், கங்காவதரணம் முதலிய பல காவியங்கள் இவர் இயற்றிய நூல்கள். ராஜசூடாமணி தீட்சிதர், ராமபத்ர தீட்சிதர், நல்லா தீட்சிதர் ஆகியவர்களும் தமிழகத்தில் இக் காலத்தில் திகழ்ந்தவர்கள். ராஜசூடாமணி ருக்மணி கல்யாணம் என்னும் காவியமும் ஆனந்தராகவம், கமலினிகல ஹம்சம் முதலிய நாடகங்களும் அணிநூல் ஒன்றும் இயற்றினார். இராமபத்திரர் சிருங்கார திலகம், ஜானகிபரிணயம் என்ற நாடகங்களும், நல்லா தீட்சிதர் சுபத்ரா பரிணயமும் இயற்றினர். 32. 19ஆம் நூற்றாண்டு மலையாள நாட்டிலக்கியம் முத்துசாமி தீட்சிதரும் திருவாங்கூர் அரசரான சுவாதித் திருநாளும் வடமொழியில் நல்லிசைப்பாடல்கள் யாத்தனர். வடமொழி இலக்கிய வாழ்வு 19 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து ஓரளவு சுடர்விட்ட பகுதி மலையாளமே என்னலாம். 18 ஆம் நூற்றாண்டில் தேவராசன், யுவராசன் ஆகியவர்களால் பாலமார்த் தாண்ட விஜயம், ரஸஸதனம் ஆகிய நாடகங்களும், பத்தொன் பதாம் நூற்றாண்டில் நீலகண்டரது கல்யாண சௌந்திகம், பாஸ் கரனின் சிருங்காரலீலா திலகம் ஆகியவையும் இவ்விறுதிக் காலத்தவை. 33. முடிவுரை வடமொழி இலக்கியம் இங்ஙனமாக வடநாட்டில் 700 ஆண்டு தொடர்ந்த வளர்ச்சியும் பின்னும் பல நூற்றாண்டு தளர்ச்சியுற்ற வாழ்வும் உடையதாயிருந்து வந்துள்ளது. அளவிலும் சிறப்பிலும் உலகமொழி இலக்கியங்கள் பலவற்றுடனும் ஒப்பிடக் கூடிய சிறப்பு இதற்கு உண்டு. அதன் குறைகளுள் அது தாய் மொழியாயில்லாமல் தாய்மொழி வாழ்வைத் தகைந்தே வளர்ந்தது என்பதும், இராமாயண பாரத புராணங்களைப் புதுப்புது வடிவில் புதுப்பித்ததன்றித் தன்மயத்துவமும் புதுத்துறை வகுப்பும் அற்றது என்பதுமே தலைமையானவையாகும். ஆயினும் மொழித்திட்டம் ஆழ்ந்த கருத்துக்கள், கவிதைப்பண்பு ஆகியவற்றிலும் இந்திய நாகரிகத்தின் முற்றிய வளர்ச்சியை நிழற்படம் பிடிப்பதிலும் அது ஒப்பற்ற மதிப்புடையது. மொத்தத்தில் தாய் மொழிகளிடையே தமிழ்மொழி கொண்ட இடத்தினைத் தாய்மொழியல்லாத வட மொழி இடையிருட் காலத்தில், வடநாட்டில் என்றும் உடைய தாயிருந்து வந்துள்ளது. வருங்காலத்தில் வடமொழி இலக்கியம், புதிய வளர்ச்சி பெறும் என்று கூறவதரிது. ஆனால், அதன் பண்டையிலக்கியம், தமிழிலக்கியத்துடன் ஒன்றுபட்டு இந்தியாவின் நாகரிகச் சிறப்பைக் காட்டவும் இந்தியாவுக்கு வழிகாட்டவும் தமிழிலக்கியப் பகுதிகளில் கழிந்த பகுதிகளால் ஏற்பட்ட குறைபாட்டை ஓரளவு நிரப்பவும் ஆராய்ச்சியாளர் கட்கு என்றும் உதவும் என்பது உறுதி. அடிக்குறிப்புகள் 1. Lyrie. 2. Light of Asia. 3. Pilgrim’s Progress