அப்பாத்துரையம் - 42 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) பொது கட்டுரை முத்தாரம் வாழும் வகை ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 42 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசி ரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+288 = 304 விலை : 380/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல் elavazhagantm@gmail.com  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 320 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. கட்டுரை முத்தாரம் முதற் பதிப்பு - 1956 இந்நூல் 2004இல் வசந்தா பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. நட்பு ஃவிரான்ஸிஸ் பேக்கன்1 “தனிமையில் மகிழ்பவர் ஒன்று கொடுவிலங்கின் இயல்புடையவராய் இருத்தல் வேண்டும், அன்றேல் இறைபண்புடையவாயிருத்தல் வேண்டும்,” என்று அறிவுரை தீட்டியவர் உண்டு. பொய்மையும் மெய்ம்மையும் விரவிய இது போன்ற உரை வேறு இருக்க முடியாது. வாழ்க்கைமீது இயற்கையிலேயே வெறுப்பும் பகைமையும் உடையவர் விலங்கியல் பண்பினராய் இருக்க வேண்டும் என்பது பொருத்தமானதே. ஆனால், புறச்சமயத் தாரிடையே ‘கண்டிய’ இனத்தவனான எப்பிமெனிடிஸ், உரோம நாட்டு நூமா, விவிலியநாட்டு எம்பிடாக்னிஸ், டயானாவைச் சார்ந்த அப்பொலோனியஸ் ஆகியவர்களும், பண்டைய கிறித்தவத் திருக்கோவிலகஞ் சார்ந்த திருத்துறவோர், சமயத் தந்தையர் ஆகியவர்களும் இவ்வியல்பினரல்லர் என்பது உறுதி. அவர்கள் தனிமை என்ற முறைமையிலேயே தனிமையில் மகிழ்ந்தவரல்லர். அவர்கள் மனித வாழ்க்கையினும் உயரிய மற்றோர் உயர் பண்புத் திறத்துடன் ஊடாடுபவர். இங்ஙனம் ஊடாடும் நோக்குடனேயே அவர்கள் தம் உள்ளத்தில் 7 பிற தொடர்புகள் அகற்றி அதனைத் தனிமைப்படுத்தித் தூய்மை செய்து வைக்க நாடினர். இத்தகைய தனிமையில் இறைபண்பு நாட்டம் இருப்பதாலேயே, இறை பண்புக்கு இடமுண்டு. இதுவன்றித் தனிமையிலேயே பிறசார்பின்றி இறைபண்பு உண்டு என்று கூறுவது போன்ற பொய்ம்மை இருக்க முடியாது. பொதுவாக, தனிமை என்பது என்ன? அதன் முழு ஆற்றல் எத்தகையது? இவைபற்றிப் பொதுவாக மக்கள் மிகுதி அறிவ தில்லை. இதற்கு ஒரு தனிக் காரணம் உண்டு. மக்கட் குழுவெல்லாம் மக்கட்கூட்டுறவு ஆய்விட மாட்டாது. மனிதர் முகங்களெல்லாம் அகஉணர்ச்சியின் தோழமைத் துணைகள் ஆய்விடமாட்டா. இவை போலவே உரையாடல்களெல்லாம் அகநக நட்பாடும் நட்புரையாடல்கள் ஆகமாட்டா. அகத்தே அன்பில்லாத இடத்தில் உரையாடல்கள் வெறும் சலசலப்புக்களே. “பெரிதே நகரம்; அதன் தனிமையும் பெரிது,” என்ற இலத்தீனப் பழமொழி இதனை ஓரளவு வலியுறுத்துகிறது. எப்படியெனில், பெரிய நகரத்தில் நண்பர் அகல அகலப் பிரிந்துறைகின்றனர். எனவே, அணுக்கப் பண்பாகிற தோழமை அங்கே தழைப்ப தில்லை. ஆனால், இந்நிலை நகரில் மட்டுமல்ல; நண்பர்கள் இல்லாத இடம் எதுவானாலும், அது முழுதும் தனிமையின் அவலத்திற்குரிய இடமே. நட்பிலா உலகம் ஒரு பாலைப்பரப்பே ஆகும். புற இடம்போல அக இடத்திலும் இத்தகைய பாலைப் பண்பு உண்டு. எவனொருவன் உள்ளமும் உள்ள உணர்ச்சியும் நட்பின் தகுதிக்குப் புறம்பானதோ, அவனிடம் அது காரணமாகக் குடிகொண்ட தனிமையும் மனிதப் பண்பின் கூறன்று; விலங்குப் பண்பின் கூறே. நட்பின் பயன் யாது? பலவகை உணர்ச்சிகளால் நம் நெஞ்சகம் புண்படுகிறது. அதில் பலவகைப் புடைப்பு, நலிவுகள் ஏற்படுகின்றன. நட்பு இவற்றை அகற்றி அதனை எப்போதும் சமநிலைக்குக் கொண்டுவர உதவுகிறது. உடலுக்கு மிகுதி இடர்தரும் நோய்த் திறங்கள் முறிவும் தவக்கமுமேயாகும். உளத்தின் வகையிலும் இடர்தரும் நோவுகள் இவையே. உடற்கூறறிந்தோர் கூற்றுப்படி, நுரையீரற்பையைத் துழாய்விதை நெகிழ்விக்கும்; உயிர்ப்பையைக் கந்தகப்பூ தளர்த்தும்; மூளைக்கட்டை நீர்நாயின் நெய் பண்படுத்தும். ஆனால், உள்ளத்தின் பூட்டிறுக்கத்தை உண்மை நட்பன்றி வேறு எதுவும் நெகிழ்விக்காது. துயரங்கள், இன்பங்கள், அச்சங்கள், அவாக்கள், ஐயப்பாடுகள், கருத்துக்கள் ஆகியவை உள்ளத்தை அழுத்தி இன்னல் விளைவிக்கின்றன. சமயத்துக்குப் புறம்பாக, இவற்றை அகற்றவல்ல ஒரு பழிதுடைப்பாய்2 இயங்குவது நட்பே. நட்பின் இப் பயனை அறிந்து உலகின் மன்னரும் மண்ணாளும் மன்னரும் அதற்கு எத்தகைய மதிப்புத் தந்துள்ளனர் என்பது மிக வியப்புத் தருவதேயாகும். இத்தகையோர் தம் உயிர்ப் பாதுகாப்பு, தம் பெருமையின் பாதுகாப்பு ஆகியவற்றில் பிறரினும் எவ்வளவோ மிகுந்த அக்கறை உடையவர். ஆயினும் அவர்கள் இவற்றைக்கூடப் புறக்கணித்து நட்பை நாடினர். நட்பிற்கு அவர்கள் தந்த மதிப்பு அவ்வளவு உயரியது. அவர்களைச் சூழ்ந்துள்ள யாவரும் அவர்கள் பணியாளர்களாயிருப்பர்; அல்லது அவர்கள் மன்பதைக் குடிகள் ஆயிருப்பர். இத்தகையோர்களுக்கும் அவர்களுக்கும் இடையே யுள்ள செல்வ மதிப்பு நிலைசார்ந்த ஏற்றத்தாழ்வு எவ்வளவோ பெரிது. இவர்களுள் யாராவது ஒருவரைத் தம்முடன் சரிநிகராக உயர்த்தினாலன்றித் தம் தோழமைக்குத் தகுதியுடையவராக எவரையும் அவர்கள் பெறமுடியாது; நட்பின் பயனையும் இவ்வாறு செய்தன்றி அவர்கள் நுகர்தலரிது. ஆனால், நட்பினைப் பெறத் துணிந்து இவ்வாறு செய்வதென்றாலோ, அதனால் மன்னர் உயிர்ப்பாதுகாப்புக்கும் பெருமைப் பாதுகாப்புக்கும் ஏற்படும் இழுக்கங்கள் பல என்பது கூறாமலே விளங்கும். இந்நிலையிலும் மன்னர்கள் துணிந்து நட்பை நாடியுள்ளனர்! தற்கால மொழிகளில்3 இந்நண்பர்களை நாம் மன்னரின் இன்பக் கூத்தர் என்கிறோம். அவர்கள் உரையாடல் நயம் அல்லது தம் பொழுதுபோக்கு நாடியே மன்னர் அவர்களைத் தேர்ந்துள்ளதாக நாம் கருதுகிறோம் என்பதை இப்பெயர் காட்டுகிறது. ஆனால், பண்டைய இலத்தீன மொழிச் சான்றோர் இவர்களைத் தோழமை மன்றத்தார்4 என்றனர். இத்தொடர் அவர்கள் உண்மையியல்பையும் அவர்களை மன்னர் நாடிப் பெற்ற உள்ளார்ந்த நோக்கத்தையும் நன்கு எடுத்துக் காட்டுகிறது. மன்னரியல்பினை மனிதப் பண்புடன் இணைக்கும் இணைப்பு இதுவே என்பதை இத்தொடர் குறிக்கிறது. ஏனெனில் இந்நட்பை நாடிய பலரும் உள்ள உரமற்றவரோ, உணர்ச்சி மிக்கவரோ அல்லர்; மன்னராய் ஆண்டவருள்ளும் பலர் மதியாற்றல்மிக்க வரும், செயலாற்றல் சிறந்தவரும் ஆவர். இவர்கள் தம்முடன் பல சமயங்களில் தம் பணியாட்களை ஒருங்கிணைத்து, தாம் அவர்களை நண்பர் என்று கூறியதுடன் நில்லாது, அவர்களைத் தம்முடன் சரிநிகராக நடத்தி, அவர்களைத் தம் நண்பர் என்று பிறரையும் கூறவைத்தனர். பொதுமக்களிடையே ஒரு குடி மகனுக்கும் மற்றொரு குடிமகனுக்கும் உள்ள சரிநட்புப் போலவே, மன்னராகிய தமக்கும் அவர்களுக்கும் சரிநிலை நட்பு உரியதெனக் காட்டினர். உரோமப் பேரரசை இயக்கியாட்கொண்டவன் சுல்லா. அவன் தனக்கு இணையாகப் பாம்பியை உயர்த்தினான். இதனாலேயே பாம்பி வல்லாளன் பாம்பி ஆனான். அவன் சுல்லாவுடன் சரிநிகர் நிலைமட்டும் அடையவில்லை; அவனை விஞ்சிப் பெருமையடைந்தான். இஃது எங்ஙனமெனில், பாம்பி தன் நண்பனொருவனை உரோமப் போரரசின் கடல் கடந்த நாடொன்றின் ஆணையாளராக்க முனைந்தான். சுல்லா இதை எதிர்த்தபோது, அவன் சுல்லாவின் ஆணையை எதிர்த்துத் தாக்கியதுடன், “படி ஞாயிற்றின் அழகு கண்டு மக்கள் வாளா அமைவதில்லை; எழுஞாயிற்றின் புத்தழகிலேயே துணிந்து ஈடுபடுவர்,” என்று அதட்டிப் பேசினான். அவன் பேச்சு செயல்துறையில் வெற்றியும் பெற்றது. இது மட்டுமா? ஜூலியஸ் ஸீஸர் தன் பின்னுரிமையாளனாகத் தன் நண்பன் டெஸிமஸ் புரூட்டஸைத் தேர்ந்தெடுத்தான். தன் தமையன் மகனுக்குப் பின் தன் மரபுரிமைகள் யாவும் அவனுக்கே செல்லக்கடவதென இறுதிப் பதிவும் செய்தான். புரூட்டஸுக்கு ஸீஸர் தந்த இந்த உயர்வும் ஆற்றலும் ஸீஸர் உயிருக்கே வினையாய் வந்து விடிந்தன. எப்படியெனில், சில தீக்குறிகள் கண்டு ஸீஸர் தம் மன்றக் கூட்டத்தைக் கலைக்கவிருந்தார். தீக்குறிகள் மட்டுமன்றி, அவன் மனைவி கல்பூர்ணியா கனவுகளும் அவனை அத்திசையிலேயே ஊக்கின. ஆனால், புருட்டஸ் அவனை அவனிருக்கையிலிருந்து கைபற்றி இழுத்துத் தனியே இட்டுச் சென்று, “நண்ப, நம் கல்பூர்ணியா இப்போது தீக்கனவுகள் கண்டிருக்கிறாள். அவள் இன்னும் ஒரு நற்கனவு காணட்டும். அதுவரை மன்றம் நடைபெறட்டும்,” என்றான். இவ்வுரைக்கு ஸீஸர் இணங்கினான். இஃது அறிவின் திறத்தால் விளைந்த செயலன்று, நட்பின் திறத்தால் விளைந்ததே. ஏனெனில், ஸீஸர், அவனுடன் கொண்ட நட்பு அவன் அறிவின் ஆற்றல் கடந்தது. ஸீஸர் இஃதறிந்து அவனை எப்போதும் தன் ‘கூற்றணங்கு’ என்றே குறிப்பிட்டன ராம். அந்தோணியின் உரையைச் சான்று காட்டி ஸிஸிரோ தம் ‘ஃவீலிப்பிக்’கில் இதனைக் குறித்துள்ளார். மேலும் அக்ஸ்டஸ் கீழ்குடிப் பிறந்த மெஸீனாஸைத் தன் தோழனாக உயர்த்தினான். அகஸ்டஸ் தன் புதல்வி ஜூலியாவின் மணம் பற்றி அத்தோழனுடன் கலந்து கொண்டபோது, அவன், “ஒன்று ஜூலியாவை என் மகனுக்கு மணம் செய்துகொடு. அல்லது என்னைக் கொன்று விட்டு அவள் மணம் பற்றிய பேச்சுப் பேசு. இவ்விரண்டு வழியன்றி உனக்கு மூன்றாவது வழி கிடையாது,” என்று மிகுந்த இறுமாப்புடன் கூறினான்,... மற்றும் டைபீரியஸ் ஸீஸருக்கும் ஸெஜானஸுக்கும் உரிய நட்பினை ஒரு தெய்வீக நட்பு எனக்கொண்டு மன்றத்தார் அவர்கள் நட்பினுக்குச் சின்னமாக அவர்கள் சிலைகளை மன்றத்தில் எழுப்பினர். ஸெப்டிமஸ் ஸெவரஸுக்கும் பிளாட்டினஸுக்கு மிடையேயுள்ள நட்பு இதனினும் வியப்புக்குரியது. ஸெப்டிமஸ் தன் தலைப் புதல்வனை அழைத்து, பிளாட்டினஸின் புதல்வியை மணம்புரிந்து கொள்ளும்படி வற்புறுத்தினான். அத்துடன் தன் புதல்வன் மீது பிளாட்டினஸ் செய்யும் அவமதிப்பு முழுவதையும் அவன் உடனிருந்து ஆதரித்தான். மன்னன் தன் மன்றத்தாருக்கு வரைந்த முடங்கல் ஒன்றில், “எனக்கு அவனிடம் உள்ள நட்பின் அளவை வேறுவகையில் என்னால் அளவிட்டுக் கூற முடியாது. அவன் என் வாழ்நாள் கடந்து வாழ்க என்பதே என் விருப்பம்,” என்று எழுதினானாம்! மேற்கூறிய இம் மன்னர் பெருமக்கள் திராஜன் போலவோ, மார்க்கஸ் அரீலியஸ் போலவோ நல்லறவோர்களாக இருந்திருப்பார்களானால், இந்நட்புத் திறங்களை அவர்கள் அருள்திறத்தின் கூறுகள் என்று விளக்கி அமையலாம். ஆனால், அவர்கள் அறிவாற்றல் மட்டுமின்றிச் செயலாற்றலும், வீரவலிமையும், கண்டிப்பும் மிக்கவர்கள். அவர்கள் தன்மறுப்பாளர்கள் அல்லர்; செறிந்த தன்னல இறுமாப்புடையவர்கள். எனவே, இந் நட்புத் திறங்களால் அவர்கள் நாடியது தன்னல நிறைவே என்பது தெளிவு. அந்நிறைவை அவர்கள் பெருவிலை கொடுத்துப் பெற முடிந்தது. ஆயினும் அவர்கள் அதனைப் பெறத் துணிந்தனர்; உயிர்விடத் துணிந்தும் பெற முனைந்தனர். மன்னர் கோமான்களாகிய அவர்களுக்கு மனைவியர், மனக்கினிய மைந்தர், மற்றைய உறவினர் எண்ணற்றவர் இருந்தனர். ஆயினும், நட்பினால் பெறும் நிறைவை அவர்கள் எவர் உதவியாலும் பெறமுடியவில்லை. காம்மினியஸ் என்பவர் தம் பணிமுதல்வரான உரங்கொண்டான் சார்லஸ் கோமகனைப் பற்றி ஓர் அரிய செய்தியைக் கூறுகிறார். அவர் தம் உள்ளத்தின் மறை செய்தி களை எவரிடமும் கூறினதில்லையாம். அவர் உள்ளத்தை மிகுதி அரித்த மறைசெய்திகளை அவர் மிகுந்த முயற்சியுடன் அடக்கிவைப்பாராம். ஆனால், இம்மறையடக்கத்தின் வலிமை வாழ்வின் பிற்பகுதியில் தானாகத் தளர்ந்து விட்டதாம். அதன் பயனாக அவர் அறிவுநிலையேயிழந்துவிட்டாராம். இதே படிப்பினையைக் காம்மினியஸின் அடுத்த ஆண்டகையான பதினோராம் லூயியிடம் கூடக் காணப்படுகிறது. அவர் மறையடக்கமே அவரை வதைத்து உயிருடன் கொல்லும் ஓயாக் கூற்றுவனாயமைந்தது. இவ்வகையில் எளிதில் விளங்காத, ஆனால் பொருள் செறிவுள்ள ஆராய்வறிஞர் பிதகோரஸின் வாயுரை நல்விளக்கம் தருவதாகும். “உன் நெஞ்சை நீ தின்னாதே.” உண்மையில் தம் நட்பினுக்கே உள்ளந்திறந்து காட்டாதவர், தம் நெஞ்சைத் தாமே தின்னும் மானிட ஊனுணிகளேயாவர். நட்பின் முதன்மையான பயன் இதுவே. இப்பயன் பற்றி நான் முடிவாகக் கூறுவது யாதெனில், நண்பனிடம் மனந்திறந்து கருத்துப் பரிமாறிக் கொள்வதால் நேருக்குநேர் இரண்டு முரண்பாடான நல்விளைவுகள் ஏற்படுகின்றன என்பதே. அது இன்பங்களை இரட்டியாக்குகிறது. ஆனால், துன்பங்களைப் பாதியளவாகக் குறைக்கிறது. இன்பங்களை நண்பருடன் பரிமாறுகையில், அவ்வின்பத்தினும் மிகுதி மகிழ்ச்சி பெறாதவர் இல்லை. அது போலவே துன்பத்தைப் பரிமாறுகையில் அத் துன்ப உணர்வு குறைபடாதவரும் இலர். பொன்மாற்றுச் சித்தர் கூறும் மணிமந்திரத்தின் பண்பு நட்பினுக்கு உரியது. மணிமந்திரம் நேருக்குநேர் முரணான பயன்களையும் தருவது. ஆனால், எல்லாப் பயனும் நற்பயன்களே. உடல்வகையில் மட்டும் மணிமந்திரம் தரும் இவ்விளைவை, நட்பு உளவகையிலும் தருகிறது. நட்புக்கு உவமையாக மணிமந்திரத்தைக் கூட நாடவேண்டுவதில்லை. இயற்கை யுலகிலேயே இதற்கு நல்ல ஒப்புமை உண்டு. பொருள்களின் கூட்டிணைப்பில் அவற்றின் இயற்கை நற்பண்புகள் ஒன்றுபட்டு வலிவுறுகின்றன. அல்பண்புகள் தளர்வுறுகின்றன. நட்பின் திறம் உள்ளத்தில் இங்ஙனமே செயலாற்றுகிறது. நட்பின் இம் முதற்பயன் உணர்ச்சித்துறை சார்ந்தது. அறிவுத்துறை சார்ந்த இரண்டாவது பயனும் இதுபோல் உளநலம் பயப்பதே. உணர்ச்சித் துறையில் அது உட்புயல்களாகிய வெறிகள், சூறாவளிகளாகிய மயக்கங்கள் ஆகியவற்றை அகற்றித் தெளிவு தருவதுபோலவே, அறிவு மருட்சி, குழப்பம் ஆகியவை அகற்றி அறிவுத்துறைலும் தெளிவு அளிக்கின்றது. இத்தெளிவுக்கு நண்பன் தரும் நல்லறிவுரையும் உறுதியுரையும் மட்டுமே காரணமன்று. இவ்வறிவுரையைப் பெறுமுன்பே, நண்பரிடம் கருத்துக்களைக் கூறும்போதே, அத்தெளிவை நாம் பேரளவில் பெறுகிறோம். பல்வகைச் சிந்தனையலைகளால் குழம்பிய கருத்துக்கள், நண்பனிடம் ஒருவழி திறந்து கூறுவதன் மூலமே தெளிவு பெறுகின்றன. கூற நாடிய உடனே உருப்பெறா எண்ணங்கள் உருப்பெறுகின்றன; விளக்கமுறாக் கருத்துக்கள் விளக்கமுறுகின்றன; வகை பெறாத விளக்கங்கள் வகுக்கப் பெறுகின்றன. சொல்லுருவில் அவை வெளிவரும்போது மட்டுமே அவன் அதைத் தெளியக் காண்கிறான். ஒருநாள் முழுதும் தனிமையிலிருந்து ஆராய்வதைவிட ஒருமணி நேரம் நண்பனுடன் உரையாடுவதால் அவன் பெறும் தெளிவு மிகுதி. நண்பனின் நல்லுரை கேட்டு முன்பே அவன் தன் அறிவிலும் உயர் அறிவு பெற்றுவிடுகிறான். பாரசீக மன்னரிடம் தெமிஸ்டாக்ஸிஸ் கூறியபடி, கருத்துக்கள் மடித்துச் சுருட்டிவைத்த திரைச் சீலைகள் போன்றன. உரையாடல் அதனை விரித்தமைத்த திரைப்படம் போன்றது. உருவிளக்கமமைந்த சொற்கள் கருத்தில் சுருள் மடிப்புகளாகவே உள்ளன. எனவே நட்பின்பயனை பெறுவது நண்பன் மூலமாகமட்டும் அல்ல; நட்பினாலும் உண்டு. தலை சிறந்த நண்பனது நட்பு உயர் தனிச் சிறப்புடையது என்பதில் ஐயமில்லை. ஆயினும் நண்பர் தகுதிகடந்த தகுதியும் நட்பினுக்கு உண்டு. தான் வெட்டாத சாணையும் கத்தியை நன்கு வெட்டும்படி கூராகத் தீட்டும் தகைமை உடையதன்றோ? அதுபோலவே நண்பர் தகுதியற்றவிடத்தில் கூட, மனிதன் தன் அறிவை அந்நட்புத் திறத்தில் தீட்டிப் பயன் பெறுகிறான். சுருங்கக் கூறினால், தன் கருத்தைத் தன்னிடமே அடக்குவதைவிட, ஒரு சிலையினிடமோ, ஒரு படத்தினிடமோ கூற முடியுமானால், அங்ஙனம் கூறுவதுகூட மனிதனுக்கு நற்பயன் தரும் என்னலாம். நட்பின் இவ்விரண்டாவது பயனில் எல்லோருக்கும் பொதுவே எளிதாக விளங்கும் பகுதி நண்பர்களின் நல்லுரையேயாகும். ஹெராக்ளிட்டஸின் புதிர்போன்ற மெய்செறி உரைகளில் ஒன்று, “உலர்ந்த ஒளியே சிறந்த ஒளி”, என்பது. பிறரிடமிருந்து ஒருவருக்குக் கிட்டும் அறிவுரையே பற்றுச் சார்பற்ற அறிவுரை; தன் உள்ளந்தரும் தூண்டுதலினும் அது மேம்பட்டது என்பதனையே இது விளக்குகிறது. ஏனெனில், தன் அறிவுத் துணிபு எப்போதும் தன் பற்றுச்சார்புகளிலும் மரபுகளிலும் தோய்ந்திருத்தல் இயல்பு. தன் தூண்டுதலால் வரும் அறிவுக்கும், நண்பர் அறிவுரைக்கும் உள்ள வேறுபாடு நச்சுப் புகழ்ச்சிக்கும் மெய்யறிவுரைக்கும் உள்ள வேறுபாடேயாகும். தன் அறிவைப்போல் தனக்கு நச்சுப்புகழ்ச்சி செய்வது ஒருவனுக்கு வேறு எதுவும் இல்லை. நட்புரிமையால் நண்பர் இடித்துரைக்கும் கடிந்துரைபோல அதற்கு மாற்றாவதும் வேறு இல்லை. நண்பர் அறிவுரைகளும் இருவகைப்படும்: ஒன்று ஒழுக்கமரபு பற்றியது; மற்றது வாழ்க்கை நடைமுறை பற்றியது. முதற்பிரிவில் மனநலத்தின் சமநிலை பேணும் ஒப்பற்ற மருந்து நண்பன் எச்சரிக்கையே. இம் மருந்து அடிக்கடி கசப்பாகவும் காரமாகவும் இருக்கக்கூடும். இது பற்றிய ஒழுக்கமரபு சார்ந்த நாலுரைகள் உணர்ச்சியற்றவையும் கவர்ச்சியற்றவையும் ஆகும். பிறர் மரபு கண்டு திருத்தலாம் என்றாலோ, பிறர்வகையில் பொருந்துவது நம் வகையில் எப்போதும் பொருந்துவதாகாது. ஆகவே, இத்துறையில் ஏற்புடையதும் பயனுடையதும் ஆன ஒரே பொருள் நண்பர் உரைதான். பெருங்குற்றங்களையும், அவற்றினும் மிகுதியாக, பெருத்த முரண்பட்ட செயல்களையும் எடுத்துக்காட்டும் நண்பரில்லாக் குறையால் எத்தனைபேர் வாளா செய்து கழிகின்றனர்! அவற்றால் அவர்கள் பேருக்கும் வாழ்க்கை நலத்துக்கும் எத்தனை இழுக்கங்கள் ஏற்படுகின்றன! இவற்றின் பேரளவு காண்பவர்க்கு வியப்பைத் தருவதாகவே இருக்கும்! தூய திரு. ஜேம்ஸ் கூறுகிறபடி, இத்தகையோர் ஒரோவொரு தடவை கண்ணாடியில் தம் முகத்தைப் பார்த்துவிட்டு, பின் வளர்ச்சியடைந்து மாறுபடும் தம் வடிவுருவங்களைப் பற்றிய கருத்தற்றவர் போன்றவராகின்றனர்.5 வாழ்க்கை நடைமுறைப்பற்றிய பயனை இனிக் கவனிப்போம். நமக்குக் கண்கள் இரண்டு இருக்கின்றன. இரண்டு கண்ணும் பார்ப்பது ஒன்றைத்தானே என்று பலர் கருதக் கூடும். ஆனால், வேடிக்கை பார்ப்பவன் காணும் அளவே ஆட்டக்காரரும் பார்க்கின்றனர் என்றோ; கடுஞ் சீற்றங்கொண்ட ஒருவன் அறிவும் நெடுங்கணக்கை ஒருகால் ஒப்பித்துவிட்டுப் பின் சிந்திப்பவன் அறிவும் ஒன்று என்றோ; துப்பாக்கியை ஏந்தலாகக் கையில் வைத்துச் சுடுவதும், தோற்பட்டை யணைத்துக் காலூன்றிச் சுடுவதும் ஒரே ஆற்றலுடையவை என்றோ கருதுவது போன்ற ஆராயா முடிவைப் போன்றதே இக்கருத்து. உண்மை யாதெனில் ஒரு கண்காணும் ஒரு புறச்சாய்வை மறுகண் திருத்தி நடுநிலைப்படுத்துகிறது. இதுபோலவே, ஒருவன் வகுக்கும் வாழ்க்கைத் திட்டத்தை அவன் நண்பன் நல்லுரையே சரிசெய்கிறது. இன்னும் சிலர் ஒரே நண்பரிடம் அறிவுரை நாடாது, ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் அறிவுரையைத் தனித்தனி நாடுகின்றனர். இஃது அறிவுரையில்லாமையை விட மோச மாகவே இருக்கும். இவ் அறிவுரை பயன்படாதது மட்டுமல்ல; இதனால் புதிய இரண்டு கேடுகளும் உண்டு. ஒன்று அவன் பெறும் அறிவுரை அகவாய்மை உடையதாக இருக்கமாட்டாது என்பது. ஏனெனில், நண்பனைத்தவிர எவரும் தத்தம் நலம்பேணி அதற்கியையத் திரித்தன்றி அறிவுரை பகர்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும், நல்லெண்ணத்துடன் தரப்படும் அறிவுரைகளும் பகுதி பொருந்துவதாகவும், பகுதி முரண் பாடுடையதாகவும், தீங்கு தருவதாகவுமே இருக்கக்கூடும். ஒவ்வொரு நோய்க்கும் தனியுயர் சிறப்புடைய மருத்துவரை நாடி மருத்துவம் செய்து கொள்ளுபவனுக்கு அவ்வந் நோய்க் காலத்துக்குரிய தற்காலிக நலம்தான் விளையக்கூடும். நோயாளியின் பொது உடல்நிலையும், முன்பின் நோய் நிலைகளும் அறியாத அம்மருத்துவர்களால், உடல்நலத்தின் சமநிலையைக் கெடுக்கவோ, வாழ்வுநலங் குறுக்கவோ வழி ஏற்படாதிராது. அது போலவே மனிதனின் நிலையான உளநலமும் வாழ்க்கை நலமும் அறிந்த நண்பன் நல்லுரையன்றி, எவ்வளவு திறமையும் நல்லெண்ணமும் உடையவர் நல்லுரைகளும் நிலைத்த நீடித்த பயனுடையவை ஆகமாட்டா. துண்டு துணுக்கான அறிவுரைகள் அறிவைச் சிதறடிக்கவும் சறுக்கு நெறியில் கொண்டுய்க்கவும் பயன்படுமேயன்றி, நண்பரின் நிலையான அறிவுரைபோல் அமைந்து நேர்வழி காட்டமாட்டா. மனஅமைதி, அறிவுப் பயன் ஆகிய இவ்விரு பெரும் பயன்கள் மட்டுமல்ல; இன்னொரு நிறைபயனும் நட்பினுக்கு உண்டு. செயல் துறையில் நட்பு தரும் உதவி ஒன்றிரண்டல்ல; பல, மாதுளங்கனி தனித்தனி நறுஞ்சாறு பொதிந்த பல விதைக் கொத்துக்களை உடையதாயிருப்பது போல, நட்பு அவ்வச் சமயத்துக்கேற்ற பல செயலுதவிப் பண்புகள் உடையதா யுள்ளது. இப் பல்வேறுபட்ட பயன்களை நேரிடையாக அறிதலரிது. தனி மனிதன் தானே செய்யமுடியாத செயல்கள் எத்தனை உண்டு என்று கணித்துணர்ந்தால், அத்தனையும் நட்பினால் மட்டுமே பெறத்தக்கது என்று சுற்றுமுகமாகக் காட்டத் தக்கதாகவே அமையும். “தன்னுடைய மற்றொரு படிவமே தன் நண்பன்,” என்ற பண்டையோர் கூற்று எத்தனையோ செறிபொருள் உடையது. உண்மையில் நண்பன் தன்னினும் மிக்க தன் மறுபடிவம் என்னலாம். மனிதர் வாழ்வுக்கு ஓர் எல்லை உண்டு. இவ்வெல்லை கடந்த அவாவுடைய பொருள்கள் பல. இவை தமக்குரியதொரு வாழ்க்கைப் பணியாய் இருக்கலாம். ஒரு மகவின் வாழ்வாயிருக்கலாம். இத்தகைய அவாக்களின் குறையை எண்ணிச் சாகுமுன் பல தடவை உள்ளமழிபவர் உண்டு. உண்மையான நண்பரை உடையவர் இத்துறைகளில் கவலையற் றிருக்கலாம். தம் நலங்கள் தம் வாழ்வு கடந்து நிலவும் என்ற உறுதி அவர்களுக்கு ஏற்படும். இவ்வகையால் நண்பனையுடைய ஒருவனுக்குத் தன் அவாக்களை பற்றிய வரையில் இரண்டு உயிர்கள் உண்டு என்பது முற்றிலும் உண்மை. மேலும் மனிதன் வாழ்வு அவன் உடல் சார்ந்தது. அவ்வுடல் எப்போதும் ஓரிடத்தின் வரையறைக்குட்பட்டது. ஆனால், நட்புள்ள இடத்தில் அவன் உரிமைகள் யாவும் அவனுக்கும் அவன் நண்பனுக்குமாக இரட்டிப்பு உரிமைகள் ஆகின்றன. ஏனெனில், எல்லா உரிமைகளையும் அவன் தான் நேரில் வழங்குவதுபோல நட்பின் பேராண்மையால் நண்பன் மூலமாகவும் வழங்குகிறான். ஒருமனிதன் தானே தன்வகையில் கூறமுடியாதவை, செய்யமுடியாதவை, கூறினாலும் செய்தாலும் பொருத்தமாகாதவை எத்தனை இருக்கின்றன! தன் குணச்சிறப்பை ஒருவன் பண்புநயம்படத் தானே கூறமுடியாது; பாராட்டுக் கூறுதலோ கேட்க வேண்டியதில்லை. ஒருவன் தனக்கு வேண்டியவற்றைத் தன்மதிப்புடன் கோரவோ, குறையிருக்கவோ முடியாது. இதுபோன்ற நுண்நயமிக்க செய்திகள் இன்னும் பல இருக்கலாம். தன் வகையில் பண்பு நயம்படா இவையே: நண்பன் வகையில் பண்புநயச் சிறப்புடையவை ஆகத்தக்கவை. மற்றும் மனிதன் வாழ்வில் பல தொடர்புகள் உண்டு. அவற்றிலிருந்து விடுபட்டு அவன் செயலாற்ற முடியாது. தன் புதல்வனிடம் ஒருவன் தந்தையாக மட்டுமே பேசுதல் முடியும்; தன் மனைவியிடம் கணவனாக மட்டுமே உரையாட முடியும்; தன் பகைவனிடம் போட்டி மனப்பான்மையுடனேதான் சொல்லாடக்கூடும். ஆனால், இத் தனித்தொடர்புகளின் கட்டுப்பாடின்றி ஒருவனுக்காக அவன் நண்பன் செயலாற்ற முடியும். சுருங்கக் கூறுவதால், மனிதன் தன் தனிமுறையில் செய்யக் கூடாத செயல்கள் எத்தனையோ பல. நண்பனில்லாவிட்டால், வாழ்க்கை மேடையில் மனிதனுக்கு மிகுதி இடமில்லை. அவன் வாளா வெளிச்செல்ல வேண்டியவனே ஆவான். அடிக்குறிப்புகள் 1. Francis Bacon. 2. தீவினையின் விளைவான தெய்வப் பழியை அஞ்சுபவர் கீழ் நாடுகளில் குருமார்களை அடுத்து அவர்கள் தூண்டுதலால் அவர்கட்குத் தானம் வழங்கியோ, அத்துடன் பூசனைகள் நிகழ்த்தியோ கழுவாய் பெறுவர். இதுபோலவே பழங்காலக் கிறித்தவருள்ளும், கத்தோலிக்கருள்ளும் குருமார் தீவினை செய்தவர் உளந்திறந்து பழிகேட்டு மன்னிப்பு அல்லது கழுவாய் தருவர். நட்பு இது போன்ற ஆனால் இயற்கை சார்ந்த அகக் கழுவாய் தரும் என்பது கருத்து. 3. ஐரோப்பாவின் தற்கால மொழிகள் மேலைநாட்டுத் தாய்மொழிகளான ஆங்கிலம், ஃபிரஞ்ச், ஜெர்மன் முதலியவை. 15-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே இவை இலக்கிய மொழிகளாக ஆக்கப்பட்டன. இவற்றுக் கெதிரான பண்டை இலக்கிய மொழிகள் இலத்தீனும் கிரேக்கமுமே. 4. Participes Curorum. 5. விவிலியநூல்: தூய திரு ஜேம்ஸ் ஐ-28 2. மன்னர் மாண்புநலம் பென் ஜான்ஸன்1 மன்னர் தவிசும் செங்கோலும் எத்தகைய பளபளப் புடையவையாயினும், அவை விலங்குத்தளைகளே. எத்தகைய பூச்சுப் பொலிவுடையவையாயினும் அவை துன்பங்களே; இன்பங்களாகமாட்டா. இவ்வுண்மை உலகில் நன்கறியப்பட்டிருந்தால், இவற்றைப் பெறவோ பேணிக்காக்கவோ உலகில் இத்தனை போரும் பூசல்களும் வேண்டி வந்திருக்கமாட்டா. அத்துடன் மன்னர் ஆட்சிப் பகுதிகளே பலவாகவும், மன்னர் சிலராகவும் இருக்க நேர்ந்திராது. ஏனெனில், மன்னர் எனத் தக்கவர் கால்நடைகளைக் காத்துப் பேணும் காவலர்களேயாவர். நல்ல கோவலன் தன் மந்தையிலுள்ள ஆடுகளின் கம்பளிப் போர்வையைய அறுத்துச் செப்பம் செய்பவன்; அவற்றை ஒட்டக் கத்தரிப்பவன் அல்லன். கம்பளிச் செல்வம் வளர்ப்பவன்; கம்பளியைச் சூறையாடி ஆட்டைக் குறைப்பவன் ஆகான். தனி மனிதனாயிருந்தபோது அவனுக்குப் பகைவர் இருந்திருக்கலாம்; பொதுவுரிமை வேந்தனானபின் அவர்கள் அவன் மன்மக்கள் ஆவர். பொதுவுரிமை யரசுக்கு அவனே உயிர்; உயிர் உடலை வளர்ப்பதுபோல் அவன் அதனை வளர்க்கக்கடவன். பூண்டுகளையோ, பூஞ்செடிகளையோ வேருடன் பிடுங்கும் தோட்டக்காரன் வெறுக்கத்தக்கவன் என்று பேரரசன் அலக்ஸாண்டர் கூறுவது வழக்கமாம்! ஆவினத்திற் பால் கறப்பவன் குருதிவரக் கறக்கவும் செய்யக்கூடும். பால் கடைந்து வெண்ணெய் எடுக்கலாம்; ஆனால், மடுவைக் கடைந்து என்ன பெறக்கூடும்? பறவைகளின் சிறகு பிடுங்கிவிட்டால் அவை வளராது. குடிகள் வாழ்க்கை வருவாயை அரித்தெடுக்கும் மன்னன், இதுபோன்ற தீய மடமைச் செயல் செய்யுங் கொடுங்கோலனேயாவன். அவன் தன் கருவூலத்தை நிறைக்கலாம்; ஆனால் குடிகளை அழித்தல்ல. தன் செல்வம் பெருக்கலாம்; ஆனால், குடிகளின் வளம் குறைத்தல்ல. மன்னன் ஆற்றலுடையோன் என்று பெயரெடுப்பதினும், நடுவுநேர்மை யுடையோன் என்று பெயரெடுத்தல் சிறந்தது. மக்களைக் கொன்று வீரப்பட்டம் கட்டிக் கொண்ட ஓர் உரோமக் கொடுவேந்தர்போல் இருத்தல் கூடாது. மன்னன் அமைதியிடையே போர்நாட்டம் கொள்வது கூடாது. அதுபோலப் போரிடையே அவன் அமைதி நாட்டம் கொள்வதும் கூடாது. எதிரியிடம்கூட அவன் கொடுத்த சொல்லுறுதி பிறழ்தல் கூடாது. மன்னர் மன்பதையிடமே பற்று வளர்த்துப் பயிலுக. அவர்கள் நலம் பேணுவதிலேயே அக்கரை யுடையவனாகுக. வழக்குகளில் தெளிந்து குற்றங் காணாவிடங்களில் அமைந்து மெல்லத் தீர்ப்பளிக்க. தெளிந்த பட்டாங்கமான குற்றங்களைக் கூர்வாளென விரைந்த கடுமையுடன் பழியொறுக்க. சட்டங்களைத் தளர்த்தும்படியான செயல் செய்யற்க. கட்டளைகளை மீறாதே; ஆணைகளைத் தளர்த்தாதே. ஆட்சித்துறையிலும் சரி, அருள்துறையிலும் சரி, தண்ட லாளரைப் பொருள் குறித்தோ, சார்பு குறித்தோ அமர்த்தாதே. பல்லோர் வாக்கும்கொண்டு, பல்லாற்றானும், பலநாள் தேர்ந்து அவர்களை அமர்த்துக. பட்டம் பதவிகளை விற்காதே; விரைந்து கொடாதே. பரிசாகவே கொடு; பண்புடையோர் உரைநலங்கண்டு கொடு. இவற்றுள் தவறு நேர்ந்தால், காலங் கடந்தாலும் அத்தவற்றினை ஏற்கத் தயங்காதே; திருத்தி வழிப்படுத்தவும் மறவாதே. ஏனெனில் ஏமாறுவது எவர்க்கும் உண்டு; மன்னர்க்கு அஃது எளிது. மன்னரைக் கவர்ந்தொழுகும் சூழலாரின் பசப்புரைகளிடையே அதற்கு இடம் மிகுதி. மன்னரும் சரி, மன்பணியாளரும் சரி, ஒருநாள் இறைவன் திருமுன்பில் நிற்கவேண்டியவர்களே. அப்போது மன்னன் தன் செயலுக்கு மட்டுமன்றி, தன்னால் நம்பிக்கையுடன் அமர்விக்கப் பட்டவர் செயலுக்கும் பொறுப்பு ஒப்புவிக்க வேண்டிய வனாவான். மன்னர் இதனை மனங்கொள்ளல் வேண்டும். சமய முதல்வரிடம் கடவுட் பற்றில்லாவிட்டால், நடுவரிடம் கோடா நடுநிலை இல்லாவிட்டால், தண்டலாளர் தீர்ப்பு விலையுடையதாய்விட்டால், உலகில் சமயம் ஏது, நேர்மை ஏது? இவ்விரண்டும் இல்லாவிடின், மன்னர் தெய்வத்தின் கூறு என்பது வீணுரையாம் அன்றோ? கேள்விக்கும் வெவ்வினை யாளரை வீழ்த்துவதற்கும் உரியதாக டெல்ஃவீயிலுள்ள வாள்2 விளங்குவதன் கருத்து இதுவே. அடிக்குறிப்புகள் 1. Ben Jonson 2. ஆரிய இனத்தின் ஒரு கூறினரான கிரேக்கர் நடுநிலக் கடலுலகுக்கு வருமுன்னரே அவ்வுலகின் பண்டைப் பழங்குடியினரின் பழந் தெய்வப்பதிகளுள் ஒன்றாக விளங்கியது டெல்ஃவி என்னும் இடம். இங்குள்ள தெய்வத்தின் பூசகர் கிரேக்கர் காலத்தும் குரு மாராகவே தொடர்ந்து செயலாற்றினர். அக் கோயிலின் வாள் வேள்வியிலும், தலைமைக் குற்றவாளிகள் தண்டனையிலும் ஒருங்கே பயன்பட்டது என்பதே ஈண்டுக் குறிக்கப்படுகிறது. 3. தனிமையின்பம் ஏபிரகாம் கௌலி1 “தனிமையாயிருக்கும் நேரம்போலத் தனிமையுணராத நேரம் வேறில்லை,” - இவ்வாசகம் இன்று நமக்கு ஒரு மரபுரை யாய்விட்டது. அதைக் கூறாத மனிதர், கூறாத சிறுவர் இல்லை. இத் தொடர் பதினேழு நூற்றாண்டுகளாகப் பலர் நாவுகளில் நடமாடி வந்திருக்கிறது. ஆனால் இதனை முதல் முதல் கையாண்டவர் சீப்பியோ. அவர் சொல் வன்மையும் சொல் திறமும் மிக்கவர் என்பதனை யாவரும் அட்டியின்றி ஒத்துக் கொள்வர். அத்துடன் அறிவுத் திறம், தகுதி ஆகியவற்றிலும் மேம்பட்டவர். செயல்துறை வாழ்க்கையிலும் அவர் வெற்றி கண்ட பெரியார். மக்கள் கூட்டுறவில் தாம் கண்ட மனநிறைவு, பயன் ஆகியவற்றைவிடத் தனிமையில் அவற்றை மிகுதி கண்டுள்ளதாகவே அவர் இவ்விடத்தில் கருதுகிறார் என்பதில் ஐயமில்லை. அவர் இங்ஙனம் அணியழகு நோக்கியோ, தற்பெருமைக்காகவோ கூறினார் என்று நாம் கொள்ளவும் முடியாது. ஏனெனில் அவர் உரோம நாட்டை உலகின் ஒரு பாதியினை ஆளும் பேரரசாக்கியவர். ஆக்கியபின்பே அவர் தாமாக அப் பெருவாழ்வைத் துறந்து, நாடு கடத்தப்பட்ட ஒருவரைப்போல, ‘லிண்டர்னம்’ என்ற இடத்தருகிலுள்ள ஒரு காட்டின் நடுவில் தனியாக இல்லம் அமைத்து வாழ்ந்தார். அவர் தனிமை வாழ்க்கை உண்மையிலேயே அவர் புகழ் வாழ்வின் பெரும்புகழ் மகுடமாய் அமைந்தது. சீப்பியோவின் பெரும்புகழில் ஈடுபட்டு உள்ளார்ந்த பற்றுடன் ஸெனெக்கா என்ற அறிஞர் அவரைக் காணச் சென்றாராம். குளிப்பறை முதலிய அவர் வீட்டு வசதிகள் உரோமரில் கடைப்பட்டவன் கூட மதிக்கப் போதாதவை என்று அவர் கருதினார். “அந்தோ, சீப்பியோவுக்கு வாழும் வகை தெரியவில்லையே,” என்று அவர் வருந்தினதாக அறிகிறோம். ஸெனெக்கா போன்ற அறிஞர்கூட இங்கே தனிமையின் தன்மையை அறியவில்லை என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. இதில் வியப்பில்லை. சீப்பியோ புகழ்மிக்க தம் நல்வாழ்வில் பெற்ற படிப்பினையை ஃஆனிபல் போன்ற பெருவீரர்கள் பெற்றிருந் தால், அவர்கள் வாழ்க்கை எவ்வளவு பொலிவு மிகுந்திருக்கும்! “தனிமையை நேசிக்கும்படி “பேரவா” வாளரின் வரலாறு கூட நம்மைத் தூண்டவல்லது,” என்று மாண்டேன் கூறுகிறார். “பேரவாவினர் தோழமையைச் சிறிதும் பொறுப்பதில்லை”, என்பதே அவர் இதுவகையில் காட்டும் விளக்கம். இஃது ஓரளவு சரியே. பேரவாவினர் தம் இருபுறமும் உடனொத்த இகலின்றிச் செல்லவே விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் முன்னே புகழ்ப் பறைசாற்றிச் செல்லும் வள்ளுவனை வெறுப்பதில்லை. சிறப்பாகத் தம் பின் வரும் புடையர்குழு எத்தனை நெடுநீளமாயினும் அவர்கள் விருப்பத்திற்குப் போதியதாயிருப்பதில்லை. மேலும் பெரும்பான்மை மனிதர் போக்கு சீப்பியோவின் கருத்தை ஆதரிப்பதாக இல்லை. எப்போதாவது அவர்கள் கூட்டுறவில் லாமலிருக்க நேர்ந்தால் அவர்கள் கூட்டுறவில்லாமலிருக்க நேர்ந்தால், அவர்கள் காற்றில்லாக் கடலில் செயலற்றிருக்கும் பாய்க்கப்பல்போல் அலமருகிறார்கள். உண்மையில் பிறர் உயிர்ப்பன்றி அவர்களைச் செயலாற்றவைக்க எதுவும் இல்லை என்று கூறலாம். தமக்கென அவர்கள் ஒரு தனிச் செயலில் லாதவர்களாக இருக்கின்றார்கள். மனித இயல்பின் இக்கூறு மிகவும் வியக்கத்தக்கதாகவே இருக்கிறது. ஒவ்வொருவரும் தம்மைத் தாமே வேறு எவரையும்விட மிகுதி விரும்பவும் செய்கின்றனர். அதை ஒத்துக் கொள்ளவும் செய்கின்றனர். ஆனால், அதேசமயம் வேறு எவர் தோழமையையோதான் விரும்புகிறார்கள்; தம் தோழமையை வெறுக்கிறார்கள். இதே மக்கள் காதல் வாழ்வில் மட்டும் காதலுக்குரியவர் தோழமையை இங்ஙனம் வெறுப்பதில்லையே! ‘உன்னுடன் வாழ்வேன். உன்னுடன் இறப்பேன்,’ என்று கூறுகிறார்கள். காதலர் தவிர, உலகில் மற்ற எவரையும் எதனையும் வேம்பென, வீண் சுமையென வெறுத்தொதுக்கவும் முனைந்து விடுகின்றனர்! நமக்கினியது நம் உள்ளம்; ஆனால், அதனுடன் நாம் ஒரு மணிநேர உரையாடலைத் தாங்க முடியாது. இவ்வியத்தகு மனப்பான்மைக்குக் காட்டுல்லஸ் தம் காதலைப் பற்றிக் கூறும் செய்தி, ஒரு நல்ல உவமையாகத்தக்கது. “ஆராத வெறுப்பு எனக்கு உன்மீது, தீராத காதலும் உன்மீது. ஈரிடை வகையிதன் சூது தேரிலேன், தேருவன் ஈது: நேருறும் துயரம் என்மீது சாருதல் அன்றி மீளாது.” ‘விருப்பு மிகுதி யொருபுறம்; வெறுப்பு மிகுதி ஒரு புறம்’ என்ற இத்தகைய இருதலைக் காதற் பொறியிற் சிக்கித் தான் மனிதனும் இரங்கத்தக்க நிலையில் தன்னிடம் பற்றுக் கொண்டு, அதேசமயம் தன் தோழமைக்கஞ்சிப் பிறரைத் தேடித் திரிகிறான். உண்மை நிலை யாதெனில், தனித்திருந்து தன் வெறுமையில் மகிழவேண்டுமானால் அதற்கு ஒரு தகுதி வேண்டும். தற்செருக் குடையவனும் அங்ஙனம் மகிழ முடியாது. புற உலகப் பற்றில் உளத்தைப் பறிகொடுத்து விட்ட ஒருவனும் அங்ஙனம் மகிழ முடியாது. இவ்விருதிறத்தாருமே பெரும்பாலாராதலால், தனிமையில் மகிழத்தக்கவர் ஒரு சிறுபான்மையினர் மட்டுமே யாவர். அவர்கள் உலகை ஓரளவு அறிந்திருக்க வேண்டும். அதன் சிறுமையைக் காணும் அளவுக்கு அதனை அறிந்திருக்கவேண்டும். அதே சமயம் அச் சிறுமையை வெறுத்தொதுக்கும் அளவுக்கு அவர்கள் நற்பண்புடையவராகவும் இருக்க வேண்டும். ஒருவன் உள்ளத்தில் கீழ்த்தர அவாக்கள் இடம் பெறுமானால், அவன் காட்டின் தனிமையை நாடக்கூடாது; சந்தைக் கும்பலையே நாடக்கடவன். அத் திருட்டவாக்கள் நம்மை ஏமாற்றலாம்; நம் சட்டைப்பையைக் கத்தரிக்கலாம்; ஆனால், தனிமையில் அவை நம்மைக் கண்டாலல்லது கொள்ளைக்காரர்போலத் துணிந்து கட்டிப்போடவோ கொலை செய்யவோ மாட்டா. இங்ஙனம் தனிமை நாடுவோர் மனிதரிடமிருந்து தப்பிப் பேய்களிடம் சிக்குபவரேயாவர். பெற்றோரைக் கொலை செய்தவர்களை உரோமர்கள் தண்டிக்கும் தண்டனைமுறையையே அவர்கள் நிலை நினைவூட்டவல்லது. ஒரு குரங்கு, ஒரு நாய், ஒரு பாம்பு ஆகிய வற்றுடன் அவர்கள் குற்றவாளியையும் ஒரு பையிலிட்டுத் தைத்து விடுவராம்! தனிமையின்பந் துய்க்க விரும்பும் மனிதன் முதல் முதல் செய்ய வேண்டிய செயல், தன் புறப்பற்றுக்களையெல்லாம் களையவேண்டுவதே. அவாக்கள் தன்னைப் புறஉலகுக்கு அடிமையாக்கும்போது, ஒருவன் தனிமையில் விடுதலை யின்பம் பெறுதல் எங்ஙனம் கூடும்? இரண்டாவதாக தனிமை நாடுபவன், சிந்திக்கும் கலையைப் பயிலுதல் வேண்டும். நல்ல உரையாடலுக்கு எப்படி நீடித்த பயிற்சி வேண்டுமோ, அப்படியே நல்ல சிந்தனைக்கும் பயிற்சி வேண்டும். தெய்வக் கூறுடைய மனிதனின் தனிமையையும், விலங்குகளின் தனிமையையும், வேறுபடுத்துவது இச் சிந்தனைத் திறமே. மனிதன் உள்ளம் தனிப்பட்ட வலிமையால் இங்ஙனம் சிந்திக்கவல்லதாகாது. சிந்தித்தாலும் ஒழுக்கறாத் தொடர்ந்த புதுப்புதுச் சிந்தனைகள் ஏற்படமுடியாது. இத் திறத்தை வளர்க்கத்தக்க பொருள்கள் கல்விப் பயிற்சியும் அதற்கு ஊற்றான நூல்களுமேயாகும். இவை யில்லாவிட்டால், தனிமை வறுமைப்பட்டு வற்றித் துன்பம் உண்டுபண்ணும். இலக்கியத்தின் சுவையிலீடுபட்டுச் சிந்திக்கத் தொடங்கிய ஒருவனுக்குத் தனிமையில் நாட்கள் மட்டுமல்ல, வாழ்நாளே சிந்திக்கப் போதியதாகத் தோன்றாது. “வாழ்வே! அறிவிலார்க்கோர் ஊழிநீ, அறிஞருக்கொரு நொடியே!” பொது அரசியல் வாழ்வில் ஒரு நாட்டின் முதலமைச்சருக்கு எவ்வளவு அலுவல்கள் உண்டோ, அவ்வளவுக்கு மேலாக அறிஞனுக்குத் தன் தனிப்பட்ட வாழ்விலேயே அலுவல் உண்டு. முதலமைச்சருக்குத் தனித்து ஓய்வு கொள்ள நேரமில்லா திருக்கலாம். ஆனால், அறிஞனுக்கோ மக்கட் கூட்டுறவைப் பற்றிக் கவனிக்க நேரமில்லை. முதலமைச்சருக்கு ஒரு நாட்டு வாழ்வின் ஒரு பெரும் பகுதியையே கவனிக்க முடியும். ஆனால், அறிஞனோ கடவுள் படைப்பத்தனையையும் அதனுட் பட்ட இயற்கையையும் பற்றிக் கவனிக்க முடிகின்றது. ஆகவேதான் அடிக்கடி பலர், “எப்படி நேரத்தைப் போக்குவது என்று தெரியவில்லை,” என்று கூறக் கேட்கும்போது எனக்கு மிகவும் அதிர்ச்சி ஏற்படுகிறது. தொள்ளாயிரத்து அறுபத்துதொன்பது ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படும் மெத்துசலேம்2 அவருடைய தொள்ளா யிரத்து அறுபத்தொன்பதாம் ஆண்டில் இதைக் கூறியிருந்தால் கூட அது பொருத்தமற்றது. சிறு வாழ்நாளுடைய நமக்கு அது ஒரு சிறிதுகூடப் பொருந்தாது. ஏதாவது ஒரு நூல் துறையின் ஒரு பகுதியைக் கூட முற்றமுடியப் பயில நம் வாழ்நாள் போதாது வாளா இருக்கிறோம். அலுவலில்லை என்று கூறத்தக்க பேரளவு நீண்டவாழ்நாள் நமக்கு இல்லை. ஆனால், இக்கருத்து அறிஞருக்கு மட்டும்தானே பொருந்தும் என்று வினவப்படலாம். நூலும் இலக்கியமும் கண்டு பயன்பெறுபவர்கள் அவர்களே. ஆயினும் முழுதும் கல்வியற்றவரன்றி மற்ற எவரும் தனிமையை முழுதும் வெறுக்க வேண்டியதில்லை. மேலும் உலகைத் துறந்த முழுத் தனிமை மட்டுமன்றி, தற்செயலாக நிகழும் இடைக்காலத் தனிமையைப் பயன்படுத்தும் தேவை பெரும்பாலருக்குரியதே. இதனை நுகரமுடியாதார் வாழ்க்கையில் கடைப்பட்டவரே யாதல் வேண்டும். இடைக்காலத் தற்காலிகத் தனிமையை நல் ஓய்வாகப் பயன்படுத்த ஏதாவது ஒரு நல்ல கலை யீடுபாடு இருந்தால் போதும். இசை, ஓவியம் இயைபியல், வரலாறு ஆகிய எதுவும் இடை வேளைகளை இன்பத்துடனும் பயனுடனும் கழிக்கப் போதியவை. இச் சிறு இடைவேளைகளைக் கழிப்பதற்குக் கவிதை மிக அருமை யானதே யாயினும், அதனை நான் பரிந்துரைக்க மாட்டேன். அது பலரிடத்தில் இடைவேளையை இடையறா வேளையாக ஆக்கினா லும் ஆக்கிவிடலாம். கவிதையில் பற்றுடை யவனை மக்கள் திரளி லிருந்து பிரித்துக் காக்க எத்தகைய அடர்ந்த காட்டின் இடையீடும் வேண்டியதில்லை. காதலியிடம் கருத்தூன்றிய காதலன்போல, அவன் நாட்டினுள்ளேயே காட்டகத் தனிமை பெற்றுவிடுவான். I பல்கிளை நீண்ட தொல்குடி மரங்காள்! சில்குடி தழீஇய சிறுபுதர்க் குலங்காள்! வாழி! நும் பைந்தடம் பொழில்களில் கவிஞனும் சூழுறும் அஞ்சிறைக் குலங்களும் வைகி இடநலம் உணாநலம் எய்திஉட் கனிந்தே கடனனி பயின்றுபண் பாடுவர் சிறந்தே. II செல்வந் தீண்டாச் சீர்க்கலை மனையே! நல்வா னவர்தம் நகர்துறந் துனையே நாடினர் இன்ப வேனில்மா ளிகையெனத் தேடுநற் பண்புகள் தெவிட்டா துறுமென, விண்ணகத் தொளியின் வெப்பத்துக் கொளித்து மண்ணகத் தண்ணிழல் கண்ணுற விழைந்தே. III ஆயா மாடம் அமைப்பர் உயிர்முதல் தோயா மரங்களின் துணைகொடு தச்சர்; செயற்கைத் தச்சின் செயல்முனிந் தொதுக்கி இயற்கை அன்னை எழிலுற வகுத்தனள் வேயா மாடம், உயிர்தவழ் மரங்களின் மாயாத் தண்ணிழல் வளங்கொண் டெனக்கே. IV ஈண்டுறு மென்றழைப் பாயல் இவர்ந்தே வேண்ட லொன்றிலா உலைவி லுளமொடு வீசு தென்றலின் ஓசையும் மென்கிளை பேசும் ஓதையும் பிறங்கு புள்ளினம் ஆலும் பண்ணியல் மாற்றமும் ஆர்ந்துளேன், மேலும் வாளா தமைதரல் சாலுமோ? V குன்று வீழ்அரு விக்கரு காகவே ஒன்று வாள்அரு விக்கரை ஏகுவேன்; வெய்ய வன் ஒளி மின்னுறு மேல்அது, மெய்யி னின்னொளி வீசுறும் ஈங்குமே! மயங்கும் என்தலை கண்டு தயங்கியே வியங்கொள் வானவர் மென்னகை பூப்பரே. VI தத்தம் தோழமை தாம்விரும் பாதவர் சித்தத் தின்நிலை யாதெனத் தேருகேன்! தனிமை சார்ந்த இனிமை இடந்தனில் கனிவில் வெம்பழி காந்துறும் ஆணவம் ஆட்சி கொண்டிடும்; அல்லது நீள்துயர் மீட்சி யின்றி விரிதடங் கொள்ளுமே. VII தனிமையே! மக்கள் தம்முதல் தோழனே! தனிய னாம்நிலைக் கினிய னாயினாய்! ஒருவன் தோழமை ஒருத்தி கொண்டுபின் இருவரானதே இகலரவம்2 வந்து மூவ ராக்கிற்ற! மூவாத வெந்துயர் மேவ லாயிற்று மேதினி யோர்கட்கே! VIII எண்ணில் ஊழி யெலாம்இறை யண்ணல்நின் எண்ணு றாத்திருத் தோழமை தன்னையே தன்ன ருட்கிணை யாமெனத் தேர்ந்தனன், இன்ன ருட்பண்பு இணைந்த தனிமையே! எண்ப டப்பல வாம்கிளை யென்னினும் எண்பெ றாஅடி நன்மர மொன்றன்றோ? IX தேம்பும் மாந்தர் தெரிகிலார் உன்னையே, சோம்பும் பண்பினை என்று கருதுவார்; அடங்கொண் டோடி இடக்கும் மடநெஞ்சை மடக்கி ஆட்கொண் டியக்குதி, மாண்புறு கலைந யத்துடன் கடுகிச் செல்லவே; நிலையி தோர்கிலார் நீணினை வின்றியே. X வெப்ப நுண்திவ லைத்தி ரள்களால் செப்ப மார்அழல் ஊட்டுதீ யாடிபோல் சிதறிச் சிந்தும் அறிவின் கதிர்களை பதறி டாமல் ஒருமுகப் படுத்தியே ஆற்றல் மிக்க அறிவினால் உளம் ஏற்றம் தந்தொளி ஏற்றுதி எங்குமே. XI நீடு மித்தகு வாய்மை நிகழ்த்துமென் பாடு கண்டு நகைத்தியோ? பாரினில் பாரி தாய இலண்டன் நகரமே! நேரி தாக உரைத்திடில் நின்மடம் கண்டு நான்நகை யாடவும் செய்கிலேன், மண்டு நின்நிலை கண்டு பரிவனே! XIIகோடி மக்கள் உளாரெனக் கூறும்நின் பீடு காணுதி! நின்நகர்ப் பேரெல்லை நின்ற தீயோர் திரள்க ளகன்றுபின் துன்று மூடர் தொடக்கு மறுமெனில் சிறுந கர்ப்புறஞ் சேரியு மாகிலாய்! வெறுமை வாய்ந்த தனிமையே சாருவாய்! அடிக்குறிப்புகள் 1. Abraham Cowley 2. விவிலிய நூலில் குறிப்பிடப்படும் மனிதஇன முன்னோருள் மெத்துசலேயும் ஒருவர். தொடக்ககால மனிதன் சாவறியாதும் பின் படிப்படியாக வாழ்நாள் காலம் குறைந்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. 3. கடைசி நாலடி விவிலிய நூலின் (க்ஷiடெந) பழைய ஏற்பாட்டில் (Old Testament) குறிப்பிடப்படும் உலகத் தோற்றக் கதை (ளுவடிசல டிக ழுநநேளளை)யைக் குறிப்பது. முதல் மனிதன் ஆதாம். முதல் மாது ஏவா. இருவர் கலந்துரையாடியதன் பயனாய் இறைவனின் பகைவன் இகல் அரவ உரவில் வந்து பழிபாவ அறிவு தந்து தீமை பெருக்கினான் என்பது அக் கதைச் செய்தி. 4. வாழ்க்கை நிலையாமையும் செல்வ நிலையாமையும் ஏபிரகாம் கௌலி டோவரிலிருந்து கலேக்குச் செல்ல விரும்பும் ஒருவன்1 அச் சிறு பயணத்துக்காகப் பல வாரங்கள் அங்குமிங்கும் பரபரப் புடனும் சுறுசுறுப்புடனும் ஓடியாடி உணவுப்பொருள்கள் சேகரித்தும் மற்ற ஏற்பாடுகள் செய்தும் வருவானானால், அவனைப் பார்த்து, அவன் அறிவும் முன்கருத்தும் உடையவன் என்ற கூறுவீர்களா? அல்லது வகைதிரிபறியாத போலிப்பசப்பன் என்று கூறி நகையாடுவீர்களா? எவனாவது ஒருவன் தன் வாழ்நாளின் ஒரு பெரும்பகுதியை, மீந்த பகுதி வாழ்வுக்கு வேண்டிய தேவைகளையும் அவை போதாமல் இன்பநல வாய்ப்புக்களையும் உண்டுபண்ணுவதற்கான வகையில் கழிப்பானானால், அவனையும் எல்லா மனிதரும் - தேவரும்கூட - நகையாடி ஏளனம் செய்யாதிரார். பயணத்தின் குறுகிய எல்லை அறியாமல் இத்தகையோர் அதன் ஏற்பாடுகளில் அதற்குப் பொருந்தாத அளவு நேரமும் முயற்சியும் எடுத்துக் கொள்கிறார்கள் என்னலாம். ஏனெனில் கலே கடற்சந்து எவ்வளவு குறுகியதோ அவ்வளவு குறுகியதே நம் வாழ்வு - கருக்குழியிலிருந்து கல்லறைக் குழிக்கிடையே உள்ள அப் பாதை கடற்சந்து போலவே மிகக் குறுகி நெருங்கியது ஆகும். நாம் அனைவருமே (பின்டார் கூறியபடி) ஒருநாள் வாழ் உயிர்கள் போன்றவர்களே. இச் சிற்றெல்லைக்கேற்ற அளவிலேயே நம் அவாக்கள் அமையவேண்டுமென்று நம் பெருமான்2 வரையறை செய்தருளியுள்ளார். ஏனெனில் எந்தநாளும் நம் இறுதி நாளாயிருக்கக் கூடுமன்றோ? இதை எண்ணித்தான் நாம் ஒரு நாளைக்கு மேற்படாத அளவிலேயே இறைவனிடம் கூட உணவு கோருகிறோம்.3 பகலவன் கண்காண, நம் கடுஞ்சினமோ, நம் பேரவாவோ நிலவுதல் கூடாது. நமக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூட இறைவனுக்கு ஒருநாள் போன்ற அளவே. இதற்கேற்ப நேரெதிரிடையான வாய்மை ஒன்று உண்டு. அது யாதெனில் பேரவா வுடையவனுக்கு ஒருநாள் ஓராயிர ஆண்டுகளுக்கு ஒப்பாகும் என்பதே. ஏனெனில் தன் எல்லைகடந்த ஒருநாளும் ஓறாயிர ஆண்டும் ஒருவருக்கு ஒரு தன்மையுடையதே. பேரவாவுடையவன் முயற்சிகளைப் பார்க்க, ஆயிர ஆண்டு வாழ்வுடையவனாகவே அவன் தன்னை எண்ணிக் கொண்டிருக்கிறான் என்று தோன்றும். உண்மையில் அத்தனை நீண்டகாலம் வாழ்ந்ததாக அறியப்படும் ஊழிகால முதல்வர்கள்4 கூடத் தம் வாழ்வுக்கு அத்தனை பாரிய உணவுப் பொருள்களைச் சேகரித்துச் சேமிக்கவில்லை என்பது தெளிவு. தொள்ளாயிரம் ஆண்டு வாழ்ந்தார் கூட ஒரு சில நாட்களுக்கான உணவே முன்னேற்பாடு செய்தனர். அப்படியானால், உலகின் பழக்க வழக்கப் பண்புகளுள் ஏற்பட்டுள்ள மாறுபாட்டின் போக்குத் தான் என்னே? ஒவ்வொரு தனிமனிதன் வாழ்விலும் இப் போக்கை மக்கள் மேன்மேலும் பார்த்துப் பின்பற்றுவதாகவே காண்கிறோம். வாணாளின் அளவில் பாதி கழிந்தபின்பும் அதற்கான முன்னேற்பாடு கழிந்தபாடில்லை? இது போன்ற பகுத்தறிவுக்கொவ்வாத எந்தச் செயலையாவது விலங்குகளிடையே காணமுடியுமா? அறிவுக்கொத்த எந்தச் செயலையாவது உயிரினங்களிடம் நாம் கண்டால் கூட, நாம் ‘பகுத்தறிவு’ என்று கூறும் பண்பிலிருந்து அது தோற்றியிருக்க முடியாது என்றும், அது இயற்கை யுணர்ச்சி காரணமாக நிகழ்வது மட்டுமே என்றும் முடிவு கட்டிக் கூறுகிறோம். அப்படியானால், நம்மிடம் உள்ள தவறுகள் வகையிலும் அதே இயற்கை யுணர்ச்சியைக் காட்டிக் குறைகூறுவதுதானே முறை? நம் வாழ்நாட்களை எண்ணும் பழக்கம் நமக்கு இருக்கக் கூடுமானால் (எண்ணுவதாகத் தொழுகையின் போது மட்டும் குறிக்கிறோம்), அவ்வெண்ணிகைக்கு ஏற்றபடி நாம் பிற வாழ்க்கைச் செய்திகளைச் சரிசெய்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் எண்ணிமுடிக்க முடியாததனாலேயே, முடிவற்றதென எண்ணிவிடுகிறதாகக் கொள்ளலாம். இப்படி யானால் நம் கவலைகள் எல்லையற்றிருப்பதில் வியப்புக்கு இடமில்லை என்று கூறலாகும். ஃஓரேஸின் அறிவுரை இவ்வகையில் நல்ல பயனுடைய பொன்மொழிகளாய் அமைந்திருக்கின்றன. “வாழ்வு குறுகியது! அவாக்களையும் அந்த அளவில் குறுக்குக” என்பதே அவர் அறிவுரை. தாய் வாழை பயன்தருமட்டும் அப் பயன் தடைபடாதபடி அதன் கன்றுகளை நாம் கத்தரித்துவிடுவதுபோல, இவ்வவாக்களும் கத்தரித்து விடப்பட வேண்டும்... செனெக்கா இவ்வகையில் நமக்கு ஒரு வாழ்க்கை வரலாற்றை விளக்கமாக எடுத்துக் காட்டுகிறார். செனெகியா என்ற அவர் நண்பனொருவன் ஆதாயம் பெருக்கும் நோக்க முடன் பலவகை உழைப்புக்களில் சுறுசுறுப்புடன் முனைந்து பாடுபட்டுப் பெருஞ்செல்வம் தொகுத்தான். ஆனால் அதனிடையே, உண்டு மகிழ்ந்திருக்கும் வேளையில் அவன் உயிர்நீத்தான். “செல்வ வாழ்வென்னும் கடற் பெருக்கின் நடு அலைமுகட்டில் மிதந்து, காற்றின் உதவியால் பாய்முழுதும் விரித்து முழுவேகத்துடன் சென்று கொண்டிருக்கும்போதே அவன் கலங் கவிழ்ந்தது” என அவர் இந் நிகழ்ச்சியை விரித்துரைக் கிறார். அச்சமயம் அவர் மெலிபஸ் என்பவனைப்பற்றிய வெர்ஜிலின் உரையை மேற்கோளாகக் கொண்டு, “போ, மெலிபஸ், போய்ப் பார்! நின் பழத்தோட்டம் பழுத்துக் குலுங்குகிறது; பழக்கொடிப் பந்தர் பழுத்துக் குலுங்குகிறது! போய் அவற்றைப் பார்!” என்று உழைத்தவன் ஏமாற்றத்தைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கிறார். செனெகியோவின் செய்தியிலாவது நமக்குக் கண்டிக்கமட்டும் தோற்றுகிறது; இரக்கம் தோன்றுவதில்லை. திருத்தகை லூக்கில் (விவிலியநூலில்) குறிக்கப்பெறும் வறிஞனான செல்வம் செய்தி இதிலிருந்து சிறிது மாறுபட்டு - இவ்விடத்தில் விவிலிய நூற் கட்டளைப்படி நாம் இரங்குதல் கூடுமானால் - நம் இரக்கத்தைத் தூண்டுவதாயிருக்கிறது. ஏனெனில் இச்செல்வன் போதிய பணம் திரட்டி இடையில் நிறுத்தவில்லை. திரட்டிய தொகையால் மனநிறைவு பெற்று மகிழ்கிறான். பெற வேண்டிய பேறு, இனி இல்லை என்று இறுமாப்பு மகிழ்வுகொள்கிறான். அன்றே இறைவன் குரல் அவனிடம் கூறுகிறது. “அறிவிலியே, இன்றிரவே உன் உயிர்முதல் உன்னிடமிருந்து பிரிக்கப்படும். நீ சேர்த்துவைத்தவையெல்லாம் இனி யாருக்கு?” என்று... இறைவன் அடிக்கடி செல்வத்தினிடமிருந்து மனித வாழ்வைப் பிரித்துவிடுகிறார்; அடிக்கடி மனித வாழ்வினிடமிருந்து செல்வத்தைப் பிரித்து வைக்கிறார். இரண்டும் நிலையற்றன. அவற்றை நினைப்பதால் யாது பயன்? அடிக்குறிப்புகள் 1 டோவர் இங்கிலாந்தின் கடற்கரையிலுள்ள சிறு துறைமுகப்பட்டினம். கலே அதற்கெதிரில் உள்ள ஃபிரெஞ்சுக் கடற்கரைத் துறைமுகப் பட்டினம். இவற்றின் இடைவெளி இருபது கல் அகலமேயுள்ள ஒரு சிறு கடற்சந்து. 2 Saviour Lord Jesus Christ. 3. கிறித்தவர் நாள் வழிபாட்டு வாசகத்தை இது நினைவூட்டுகிறது. “எம்பெருமானே, இன்றை உணவு நீரருளியமைக்கு உமக்கு நன்றி செலுத்துகிறோம்.” 4. Patriarchs - - ஊழிக்கு முற்பட்ட மக்கள் பலநூறு, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்ததாக விவிலிய நூல் கூறுகிறது. 5. என்னைப்பற்றி ஏபிரகாம் கௌலி “தன்னைப்பற்றித் தானே எழுதுதல் ஒருவருக்கு எளி தன்று; அவர் தன்னைக் குறைத்து ஏதேனும் குறிப்பிட்டால், அது எழுதுபவரையே புண்படுத்தும்; புகழ்வாக எதையேனும் குறிப்பிட்டாலோ, வாசகரைப் புண்படுத்தாமலிராது. ஆனால், என்னைப்பற்றியவரை இந்த இருவகைத் துன்பங்களுக்குமே இடமில்லை. என் தோற்றமோ, உளப்பாங்கோ, என் வாழ்க்கை வளமோ இத்தகைய பெருமைகளுக்கு உகந்தவையல்ல. நான் இங்கே எழுத எடுத்துக்கொண்டதெல்லாம், என் கட்டுரை யாண்மையுடன் தொடர்புடைய செய்திகளைப் பற்றி மட்டுமே. இதனால் பெரும்பான்மை மக்களின் மதிப்பில் நான் தாழக்கூடுமேயன்றி உயரமுடியாது என்பதை நான் அறிவேன். பின்நோக்கி நான் என் வாழ்க்கையை நினைந்து பார்த்தால், என் நினைவு எட்டுகிறவரைக்கும், உலகத்தின் அருமை பெருமைகள், இயல்புகள் ஆகியவற்றுள் எதனையும் நான் புரிந்துகொள்ள முடியாத காலத்திலிருந்தே, எனக்கு அதில் ஒரு உள்ளார்ந்த வெறுப்புணர்ச்சி இருந்து வந்தது. சில பூண்டுகள் வேறு சில பூண்டுகளை அண்டமாட்டா தகல்கின்றன. இவை அவையறியாமல் நிகழ்பவை; அத்துடன் அச்செயலின் காரணத்தை மனிதனும் அறிவதில்லை. என் வெறுப்புக்கும் இதுபோல் காரணம் அறியக்கூடவில்லை. பள்ளியில் நான் சிறுவனாயிருந்த காலத்தில், மற்றப் பிள்ளைகளைப்போல நான் விடுமுறை நாட்களில் ஓடியாடித் தோழர்களுடன் விளையாடுவதில்லை. நேர்மாறாக அவர்களை விட்டொதுங்கித் தனியே சென்றிருப்பேன். என் பண்போடு ஒத்த நண்பர் யாராவது கிடைத்தால் அவருடன் செல்வேன்; அல்லது பெரும்பாலும் ஒரு புத்தகத்தைக் கையில் கொண்டு செல்வேன். மேலும் பள்ளிக்கூடக் கட்டுப்பாடு களைக்கூட நான் மதிக்க முடிவதில்லை. புத்தகமில்லாமலே பொது இலக்கண விதிமுறைகளை மனப்பாடம் பண்ணும்படி ஆசிரியர்கள் என்னிடம் இணக்கமாகச் சொல்லிப் பார்த்தார் கள்; பின் வற்புறுத்தினார்கள். ஆனால், அவர்கள் முயற்சி யொன்றும் என்னிடம் பயனளிக்கவில்லை. இருந்தபோதிலும், நான் என் வழக்கப்படி என் தனிப்பட்ட காட்சியறிவினாலும், வாசிப்பினாலும் அவற்றைப் பயின்றகொள்வது கண்டு, அவர்களும் என்னைத் தனியே விட்டுவிட்டார்கள். அந்நாளில் பெரும்பாலும் நான் கொண்ட கருத்துக்களையே இப்போதும் கொண்டிருக்கிறேன். இது எனக்கு வியப்பாயிருக்கிறது. நான் பதின்மூன்று ஆண்டினனாயிருக்கும்போது ஒரு ‘கலி’ப்பாடல் எழுதினேன். வேறு பல பாடல்களுடன் அது அப்போது அச்சேறியிருந்தது. அதன் தொடக்கம் சிறு பிள்ளைத் தனமானதே. ஆனால், நான் கீழேதரும் பிற்பகுதிபற்றி நான் இன்றுகூட நாணுறத் தேவையில்லை - காலங்கடந்த என் மன ஒருமையை இது காட்டும். ஐஓ அழுக்காறு கொள்ளா அளவில் சிறுமையும் இழுக்கா றெய்தா இயல்பிற் பெருமையும் இணைதரு நற்றிரு வேண்டுவன் ஒன்றே! பெருஞ்செயல் இசையினும் அருஞ்செயல் சிறுபுகழ், பெருகிய இசையினும் ஒதுங்குசிற் றமைதி, மறைவிலும் மன்னுரை நாடுவன் நன்றே! பல்லோர் உரையல; பண்புதேர் நண்பர் சில்லோர் அன்புரை தேடுவன் அன்றே! ஓ பகலெலாம் நூல்கள் பயில்வேன், தொழில்அல; அகலிருள் இரவெலாம் அசைவிலாத் துயிலே; நயப்பேன் வாழுதற் கொருசிறு குடிலே அரண்மனை யன்று; அகல் அவாப் பொருள் பல கருதிலன்; பயனுடை வாழ்வே கருதினன்; இயற்கையின் மாசிலா அமைதியின் படியே பொழிலது அமைப்பேன் புன்கலை மதியாது எழிலுறக் கலைஞரும் ஏங்குறும் படியே. ஓஐ உவர்க்கும் இக்கடு வாய்மையான் உரைப்பச் செவிக்கொளும் பார இலண்டன் சிரிக்கலாம்; சிறுநகை யானும் செய்குவேன் அல்லனோ? மடமைகொள் மாநக ரேநீ நகுதி; நின் மடமதி கண்டியான் மறுகுவன் அல்லனோ? ஓஐஐ தீய ரானவர் நின் எல்லை தீர்ந்துபின் பேய ரானவர் நின்புற மாயிடில், நீயும் நின்பெருங் கோடியும் என்னுறும்? சேரியொன்றெனும் பேரதும் இன்றியே தனிமை யன்றோரின் தடம்பதி மன்னுறும்? அந்நாளிலே எனக்கு இலக்கியத்தில் ஈடுபாடு உண்டு. இதனை மேற்கூறிய பாடல்களே காட்டும். அதன் முடிவில் வரும் கருத்து ஹோரேஸினிடமிருந்து மேற்கொள்ளப்பட்டதே. என்னிடம் இத் தனிப் பண்புகளை ஊட்டியது முதிராப் பருவத்திலிருந்தே இலக்கியத்தில் நான் கொண்ட அளவுகடந்த ஆர்வமே என்று கூறத்தகும். இளமரக் கொம்பரில் எழுதிய எழுத்துக்கள்போல அவை மரத்தின் பாரிய வளர்ச்சியுடன் வளர்ச்சியாகப் பாரித்து வளர்ந்து வருகின்றன. எனினும் முதலில் இவ்வார்வம் என் உளத்தில் எப்படி எழுந்தது என்பது என்னால் விடுவிக்க முடியாத ஒரு வினாவே. பாடலில் வரும் இன்னிசை எதுகை மோனைகள் முதலில் என் இளமூளையிலிடம் பெற்ற நிகழ்ச்சியை மட்டும் நான் மறக்கவில்லை. அவற்றின் கலகலப்பு என்றேனும் என் செவியைவிட்டகன்றாலல்லவா அவற்றை மறக்கமுடியும்? என் தாய் பெரும்பாலும் வழிபாட்டுப் பாடல் நூல்கள் தவிர வேறு நூல்கள் வாசிப்பதை நான் கண்டதில்லை. ஆயினும், எப்படியோ அவள் நூல்களிடையே ஒரு ஸ்பென்ஸரின் ‘வனதெய்வ அரசி’ கிடப்பது கண்டேன். அந்நூலில் எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படும் மாவீரர், அரக்கர், மாளிகை கள், கூடங்கள், வேதாளர், கூதாளர் பற்றிய இனிய காதை களில் நான் என் உள்ளத்தைப் பறிகொடுத்து, அறிந்தும் அறியாமலும், என் குழந்தை யுள்ளத்திற்கு எட்டியும் எட்டா மலும் படிப்படியாக அவற்றின் மணியோசை போன்ற மோனை எதுகைகளிலும், அவற்றின் இடைவிடாத பின்னிசைகள் போன்ற சந்த இனிமைகளிலும் நான் அளையத் தொடங்கிவிட்டேன். என் பன்னிரண்டாம் ஆண்டு முடியுமுன் அதனை நான் எத்தனை தடவை படித்திருப்பேன் என்று என்னால் கூற முடியாது. இங்ஙனம் குழந்தை அழப்படிப்பது எவ்வளவு இயல்போ அவ்வளவு இயல்பாகவே நான் கவிஞனாக வளர்ந்துவருகிறேன். இத்தகைய மாளா இலக்கியத் தழும்புகளுடன் நான் பள்ளிக்குப் பள்ளி கடந்து பல்கலைக்கழகத்துக்கும் அனுப்பப்பட்டேன். அப்போதுதான் அரசர் முதல் ஆண்டி வரை அதாவது தேக்குமரம் முதல் என் போன்ற நாணற் புதர்வரை, எதனையும் இருந்த இடத்தில் வாளா இருக்க விடாது வேருடன் பறித்துச் சுழற்றியடித்த அம்மாபெரும் புயல்* என் வாழ்வையும் தாக்கிற்று. ஆனால், புயலிலும் நல்ல இடத்தில் ஒதுங்கும் நற்பேறும் புயல்மீண்ட பின்னும் இடத்தில் நாட்டப் பெறும் நல்வாய்ப்பும் எனக்குக் கிட்டின என்னலாம். நான் ஒதுங்கிய இடம், மிகச் சிறியதோர் ஊர். நான் நாட்டப் பெற்றுள்ள இடம், நற்பண்பிற் சிறந்ததொரு மன்னிளங்கோவின்1 அவைக்களம். இவ்விடங்களில் என் வாழ்வின் முதல் திட்டத்திற்கு மாறுபட நான் நாள்தோறும் மக்கள் திரளினிடையிலும், முனைத்த பெருமக்களின் பேராரவாரத்தினிடையிலுமே வாழவேண்டியவனாயிருந்தேன் - அந்நாளைய ஃபிரஞ்சு, பிரிட்டிஷ் மன்னவைகள் அந்நிலையில்தான் இருந்தன. ஆயினும், என் ஊன்றிய இளமைக் கருத்தை நான் மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படவே இல்ல. அவை முன்னிலும் உறுதிப்படவே செய்தன. என்னிடம் இயல்பா யிருந்த அப்பண்புகளுக்கு இப்போது அறிவாதாரம் வேறு கிடைத்தது. பகட்டு வாழ்வின் பொலிவைத் தொலைவிலிருந்தே பாராட்டாத நான், அணுகி அதனைக் காணும் வாய்ப்புப் பெற்றபோது, அதனை விரும்பிவிடத்தக்க எதையும் அதில் காணமுடியவில்லை. அதன் பொலிவு பெறும் புறப்பூச்சென்றும், அது உண்மையில் போலிக் கலவைச்சரக்கு என்றும் நான் கண்டுகொண்டேன். இங்கும் நான் பலருடன் விரும்பிப் பழகினேன், பாராட்டினேன் என்பது உண்மை. ஆனால், என் அடிப்படைக் கொள்கையை இவ்வனுபவம் சிறிதும் மாற்றப் போதியதாக இல்லை. புயலிடையே பல கப்பல்கள் சேத மில்லாமல் செல்வது கண்டு, புயலில் செல்வது இடரற்றது என்று நான் கொண்ட புயலை விரும்ப முடியுமா? வீரரின் வீரத்துக்குப் புயல் ஒத்துக்கொள்ளலாம். மனிதரின் இன்ப நாட்டம் அதனை விரும்ப முடியுமா? எனவேதான் நாடு துறந்த ஒருவன் எத்தனை உயர் தோழமை விரும்ப முடியுமோ அத்தனை உயர் தோழமையிடையே, பெருமை, மதிப்பு ஆகியவற்றின் பெருஞ் சூழல்களிடையே, உயர்ந்த மாடிகளில் நறுமண இன்சுவையுண்டி குறைவற உண்டு, நல்லாடை உடுத்து நற்பணிகளி லீடுபட்டாலும், என் பழைய பள்ளிவாழ்வுக் காலத்தில் நான் இப்பாடலில் தெரிவித்துள்ள விருப்பத்தைச் சற்றும் மாற்ற முடியாதவனாகவே இருந்தேன். நன்று, தாவுமிந் நானிலந்தன் னொடியான் என்று மெய்யொத் தினிதுற வாழ்கிலேன் எனவே மன்னர்பெருமானின் புத்தாட்சியிலிருந்து நான் விரும்பக்கூடியதெல்லாம், ஒதுங்கிய நாட்டுப்புறப் பண்ணை ஒன்று தரப்பெற்று வாழ்வதே. இது அச்சூழ்நிலையில் கூடாததுமன்று. என்னைவிட மிகுதி தகுதியில்லாத எத் தனையோ பேர் இதனினும் பன்மடங்கு பெற்றுள்ளனர். ஆயினும் இதில் நான் முனையவில்லை. முன்னரே நான் திறம்பட வரைந்த முன்னறிவிப்புரை ஒன்று இதற்கு எதிரானதாயமைந்திருந்தது. அதன் கவிதை நலத்தையன்றாயினும் கருத்து நயத்தைக் கலையாரிறையே அமைத்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். “மன்னவையில், போரில் எங்கும் வளரும் இசைகூடாய்நீ! கன்னவிலும் பொருளகத்தில் வழக்குமன்றில் நாடாய்நீ! சின்னஞ்சிறு கவிதைகட்டிச் சிறுவாழ்வு வாழ்ந்துநீ புற்றில்வளர் சிற்றெறும்புபோல வாழ்” என்று பொறிமா தெனக்குப் புகன்றாள்; அதன்படியே பொலிவிலாஎன் வாணாள் போந்தது காண்! அவ்வவர்தம் நால்வாழ்க்கை அவ்வவரே தாம்தேர அவ்வவர்தம் இன்பம் அவ்வவர் தாம்ஆர செவ்விய காதல் சீர்கலைக்கே பிறந்து நொந்தேன். “வகுத்தான் வகுத்த வகுப்பெதிர்க்க வல்லார் யார்? வகுத்தபடி பிறந்துவாழ்ந்தேன்; இறப்பேன்மன்! வருபிறவி மருவிய நாண்மீன் தருமொளி சிறிதே காண்மின்! உருத்து வெஞ்சுடர் தாராது பெருகு செல்வாக்குப் பெற்றிலை நீயே! எனினும்நீ கவலல்கௌலி! அப்பெருந்திரு உளைஇகழ் அளவெதிர்நீ இகழ்தல் காண்பளால்! அவன்தரு பரிசெலாம் பெறுநர் அவங்கொள் அறிவிலார், பசப்பர், சிறுமையர், தவறியவஞ்சகர், கொலைஞர், கொள்ளையர், நீவாத வாய்மை யிலாதவர், கவையில் நச்சுவாழ்வாளர், கயவரே! உளங்கொண்டிவையே உள்ளழிதல் நீங்குவையே! இளங்கோ* முதல் எழிற் பாரதிதாசன்… வரை விளங்குபுலவோர் துளங்கொளி வுன்பாலதுவே! இங்ஙனம் விரும்பிய வாய்ப்புக்கள் வாயாவிட்டாலும் என் அவாவின் திட்டத்தை நான் விட்டுவிடவில்லை; ஊழ்மாதிடம் சரண்புகாமல், அவள் நல்லுரையையும் எதிர்பாராமலே, உடல் பொருள் ஆவி மூன்றும் துறந்து துணிந்து அம்முயற்சியில் நான் முனையாமலில்லை. ஆனால், தன் அமைதியை நாடுபவனைப் பார்த்துத் தெய்வம் எப்போதுமே சிரிக்கிறது. எனக்கு நேர்ந்த சிறு தொல்லை துயரங்கள் எண்ணில - என் வகையில் புதுமையான நோய்கள் இவற்றுட் சில. ஒரு பேரரசன் வாழ்வைக் கூட உவர்ப்பாக்க இவை போதியவை. ஆனால் இவற்றாலும் நான் தேர்ந்துகொண்ட வழியை மாற்றவோ நேர்ந்ததற்காக வருந்தவோ செய்யவில்லை. நீண்டநாள் காதலித்தபின் மனைத்துணை யாகவும் கொண்டுவிட்ட இக் காதலி எனக்குச் செல்வம் கொண்டுவராவிட்டாலும் கேடில்லை - நான் எதிர் நோக்கியபடி என்னுடன் அமைந்து வாழ்ந்ததே எனக்குப் போதியது. என்றும் உனைக் கை நெகிழவிடேன் இன்னினிய பெயருளெலாம் எனக்கினிய நற்பெயரோய்! துள்ளுறுதற் சார்வும் ஓய்வும் துளங்குகலை நூலும்; வயல், காடு, சோலை யவையுமெலாம் ஏலாதேன்ஆக! உயிர்எனதா யியங்கும்வரை. அடிக்குறிப்புகள் 1. இங்கே குறிப்பிடப்படும் மாபெரும்புயல் 1641-48 வரை நடைபெற்ற பிரிட்டனின் உள்நாட்டுப் போர் ஆகும். இதில் மன்னன் கட்சியுடன் மன்றக்கட்சி போரிட்டு இறுதியில் மன்னன் தலை கொலைஞன் கோடாரிக்குப் பலியிடப்பட்டது. பெருமக்கள் பலரும் பிற மன்னர் கட்சியினரும் பதவியும் செல்வமும் வாழ்வும் இழந்து தவித்தனர். 1660-ல் கிராம்வெல் ஆட்சிமுடிவில் மீண்டும் மன்னர் ஆட்சி இரண்டாம் சார்லஸால் கொண்டுவரப்பட்டது. கௌலி உள்நாட்டுப் போரில் ஓடி ஒதுங்கி, புது மீட்சியில் மீண்டும் வந்து வாழ்ந்தார். 2. இரண்டாம் சார்லஸ் மன்னன். 3. மேனாட்டின் புலவர் வரிசையில் தொல்பழம் புலவன் கிரேக்கக் கவிஞன் ஹோமர். புதுமைக்குக் ‘கௌலி’ தம்காலப்புலவர் பென்ஜான்ஸனைக் குறிக்கிறார். தமிழாக்கத்தில் ஹோமர், கௌலி யினிடமாக இளங்கோ, பாரதிதாசன் தரப்பட்டுள்ளனர். 6. கவிதை ஸர் வில்லியம் டெம்பிள்1 மக்கள் வாழ்வு, சிந்தனை ஆகிய இரண்டையும் ஆட் கொண்டு ஈடுபடுத்தும் அடிப்படை நோக்கங்கள் ஆதாயம், இன்பம் ஆகியவை. இவற்றை உடையவர் முறையே ஊக்க முடையவர் என்றும், சோம்பர் என்றும் கருதப்படுகின்றனர். இந்நோக்க வேறுபாடுகள் வெறுஞ்சொல் வேறுபாடுகளா, உண்மையிலேயே பொருள் குறித்த வேறுபாடுகளா என்ற வினா எழுப்பப்படுவதுண்டு. இங்ஙனம் எழுப்புபவர், “ஆதாய நாட்டமும், ஆதாயமூலம் கிடைக்கக்கூடும் இன்ப நாட்டந்தானே; இன்பப் பொருளில் நேரிடையாகத் திளைக்கும் இன்ப நாட்டத் தானைப் போலத்தானே ஆதாய வாயிலாகத் தனக்கு இன்பம் விளைக்கும் பொருள்களில் ஆதாய நாட்டத்தான் திளைக் கிறான்,” என்று கேட்கிறார்கள். ஆனால், சொற்கடந்து சொற் பொருளை நுணுகித் தீட்டுவது சொல்லின் தன்மையை மீறுவதாகவே முடியும். எல்லையின்றி மிக நுண்ணியதாக நூற்ற நூல் ஆடையாகப் பயன்படாது, அறுந்து போய்விடும்; எல்லை யின்றி முனைபடத் தீட்டிய ஊசி முனை துன்னப் பயன்பட மாட்டாது, முறிந்துபோய்விடும். அது போலவே சொல்லின் நுட்ப வேறுபாடுகளை ஒருவர் பெருக்கினால் அதன் பருமதிப்புக்கு மாறாக அது பொருள் பட்டுவிடக்கூடும். ஒரு நாணயத்தின் மதிப்பு முனைப்பான அளவில் வேறுபட்டாலன்றி அதன் பொற்கலவை மதிப்பால் பாதிக்கப்படாதது போல, சொல்லின் பருப்பொருள் மதிப்பு அதன் நுட்ப வேறுபாடுகளால் பாதிக்கப்படமாட்டாது. எனவே, பொதுமக்கள் வழக்கடிப் படையாக நின்று பார்த்தால் ஆதாயம், இன்பம் ஆகிய இரண்டும் இருவேறு அடிப்படை நோக்கங்களே யாகும். ஆதாயம் நாடுவோர் ஊக்கமுடையவர்; இன்ப நாட்ட முடையோர் சோம்பர் என்பதும் உண்மையில் இவற்றின் வேறுபாட்டுத் தன்மையையே வற்புறுத்துகின்றது. இவ்விரு திறத்திலும் செயற்படும் அறிவில் முன்னதை மெய்யறிவு2 என்றும் பின்னதைச் சொல்திறம்3 என்றும் நாம் கூறுகிறோம். முன்னது பயனும், பயன்தரு பொருளும் நாடும் அறிவு. பின்னது சொல்லும் சொல்தரு பொருளும் இன்பமும் நாடுவது; ஆனால், இவ் விரண்டும் இணைய முடியாதவையன்று. ஒழுக்கஞானியின் உரைகள், சட்ட அறமுறை நூல்கள் ஆகியவை இன்பமும் பயனும் இரண்டும் தருகின்றன. இவ்விருதிறப் பயன்நிறைவு நோக்கியே பண்டையோர் இக் கவிதைகளைத் தெய்வத் தன்மையுடையது எனக் கருதி வந்தனர். கவிஞர்களுக்கான கிரேக்க மொழிப்பெயர் (போயேஸிஸ்) ‘படைப்பவர்’ என்ற பொருளையும், இலத்தீனப்பெயர் ‘கவிஞர்’, ‘முன்னறிவர்’ என்ற பொருளையும் குறிக்கின்றன. முதற்பொருள் படைக்கும் கடவுளுக்கு அடுத்ததாகவும் இரண்டாவது கடவுள் தன்மையுடைய அறிவர்களுக்கு அடுத்ததாகவும் அதனைக் கொள்கிறது. கவிதையின் பயன்களும் அதுபோலவே தெய்வத் தன்மை யுடையதாகவும், இயற்கைக்கு அப்பாற்பட்டதாகவும் கருதப்பட்டன. ஆயினும் எத்தகைய தெய்வப்பற்றும் இல்லாமலே என்போன்றவன் கவிதையில் ஈடுபடுதல் கூடாததன்று. நான் அதனைப் பாராட்டுபவர்களில் ஒருவன் - பூசனை செய்பவர் களுள் ஒருவனல்லன். தோற்றத்திலும் தன்மையிலும் அது மனிதத் தன்மைக்குட்பட்டதாக, ஆனால் அந்த எல்லையினுள் மிகச் சிறந்த, மிக அரியதோர் வாய்ப்புத் திறமாக நான் கருதுகிறேன். கவிதையின் பலன் எப்படித் தெய்வத் தன்மையுடைய தாயிருக்கிறதென்று கொள்ள முடியாதோ, அப்படியே அதன் காரணப் பண்புகளும் தெய்வத்தன்மை அஃதாவது இயற்கை மீறிய தன்மையுடையதாயிருக்க முடியாது. அதனால் ஏற்படும் புதுமை வியப்பு ஆகியவையும் ஓவியம் இசை முதலிய தொடர்புடைய மற்றக் கலைகளுக்குரிய உணர்ச்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவைகளல்ல. தவிர, கவிதையின் அருந்திறங்கள், கலைத்திறங்கள் போல மனிதனுக்குப் பெருமை தருபவை. அவற்றை இயற்கை கடந்த ஒரு தெய்வீக ஆற்றலுக்கு உரிமைப்படுத்துவதால், மனிதன் ஆற்றலருமையும் புறக்கணிக்கப் படுகிறது. கடவுளின் இயற்கை கடந்த ஆற்றல் இயற்கையில் தலையிடுகிறது என்பதால் பொருத்தமில்லாமையும் ஏற்படுகிறது. இக்கூற்று கடவுளாற்றலுக்கும் உண்மையில் ஓர் அவமதிப்பே. ஒரு சிலர் உண்மையிலேயே கவிதை மாயமந்திர ஆற்றல் உடைய தென்று கருதக்கூடியவர்களாயிருக்கக் கூடும். இத்தகையோர், கவிதை வானத்து நிலாவை மண்ணுலகுக்குக் கொண்டுவரும் என்றோ, இதுபோன்ற பொருத்தமற்ற செய்திகளையோ, தாம் காணாது, பிறர் கண்டதாகக் கூறியதைத் தலைமுறை தலைமுறை யாகக் கூறிவரலாம். கோள்மறைப்பு முதலிய செய்திகள் பொதுமக்கள்வரை வந்து எட்டுமுன், அதன் நேரக் கணிப்பறிந்த சில எத்தர்கள், அதனைப் பயன்படுத்தித் தம் கவிதைச் செப்பிடு வித்தையால் கோளினம் மறைப்பதாகக் கூறி, போலி வெற்றி நாட்டியிருக்கக்கூடும். இவையனைத்தும் அறியாதவரை அரையறிவுடைய போலிகள் ஏமாற்றிய ஏமாற்றமாகத் தொடங்கி, நாளடைவில் ஆராயாக் குருட்டு நம்பிக்கைகளாகி விட்டவையே. விர்கிலின் நாட்டுப்புறப் பாடல்களில் மாயமந்திரங்கள் வசியங்கள் முதலியவைபற்றிப் பலவிரிவுரைகள் தரப்படு கின்றன. அவற்றை வாசிக்கும்போதுகூட எனக்கு விர்கிலின் எளிய நம்பிக்கை பற்றி உள்ளூரச் சிரிப்புவராமலிருக்க முடியவில்லை. பொதுமக்களிடையே இந் நம்பிக்கைகள் பரவுவதற்கு இயற்கை செயற்கைக் காரணங்கள் பல உதவியிருத்தல் எளிது. கதையும் கவிதையும் மக்கள் மனத்தைப் பிணித்து இயக்கும் ஆற்றலுடையவை. மாய மந்திர வசிய நம்பிக்கைகளே மாயமந்திர வசியங்களாக இயலுந்திரம் உடையன. தவிர, பூண்டுகளிடையே மெய்யாக இயக்கும் ஆற்றலுடையவையும் உண்டு. உள்ளதாக நம்பப்படுவதால், நம்பிக்கையாற்றலுடையவையும் உண்டு. சமய உணர்ச்சி மிகுந்த நாட்களில் அவ்வுணர்ச்சிகளை அறிந்து, ஆனால் அதற்கு உட்பட்டுவிடாமல், காஸாபோன் (ஊயளயரbடிn) என்ற அருங்கலை அறிஞர், ஆர்வம் பற்றிய ஆராய்ச்சி ஒன்றை ஆய்ந்து வெளியிட்டுள்ளார். மக்கள் வாழ்விலும் சமயங் களிலும் பல பகுதிகளிலும் காலங்களிலும் காணப்படும் மாயக் கவர்ச்சியாற்றல்களுக்கு உண்மையான காரணங்களைத் தேடி அளித்த இவ்வாராய்ச்சியாளர் காரணங்களைத் தேடி அளித்த இவ்வாராய்ச்சியாளர் எல்லா ஆர்வங்களையும் கவர்ச்சிகளையும் ஆராய்ந்திருந்தால் நலமாயிருக்கும். ஆனால் நூலின் இரண்டாம் பகுதி எழுதப்படாமலோ, அல்லது எழுதப்பட்டு நண்பர்களால் ஒழுங்காகத் தெரிவிக்கப்படாமலோ வெளியிடப் படாமலோ போயிருக்க வேண்டும். மனித சமூகத்தில் உண்மை யான இயற்கைக் காரணமறியாது வசியம், சூனியம் முதலிய வற்றில் நம்பி அவற்றுக்காளாய் நலிவுற்று இறக்கும் எத்தனையோ தீங்கறியா ஏழை உயிர்கள் அந்நூல்மூலம் பாதுகாக்கப் பட்டிருக்கும். உலகில் நாகரிக முன்னேற்றம் ஏற்படுந்தோறும் இவற்றின் படுதீங்குகள் குறைந்தே வந்தாலும் இன்னும் *ஜெர்மனியிலும் ஸ்வீடனிலும் வேறு சில நாடுகளிலும் இவற்றின் தடங்கள் காணக்கூடியவையாகவே உள்ளன. விர்கிலின் நாட்டுப் பாடலில் புறக்கணிக்கப்பட்ட காதலி, தன் கவதை மாயங்களால் காதலனின் பழைய காதலுணர்ச்சியைத் தூண்டிப் புதிய காதற்போக்கை மாற்ற எண்ணுகிறாள். இதற்கு அவள் மாயமந்திரங்களை எதிர்பார்த்து நிற்பதினும் கவிதையை எதிர்பார்ப்பது தவறல்ல. ஏனெனில் மாயமந்திரங்கள் இவற்றைச் செய்யுமோ, செய்யாதோ; கலையும் கவிதையும், சிறப்பாகக் கவிதை, இதைக் கட்டாயமாகச் செய்யக்கூடும் என்று ஒத்துக்கொள்ளலாம். இத்தாலியிலும் கிரீஸிலும் மெய்ப் பொருள்களை விஞ்சி மக்களைக் கவரும் கலைப்படைப்புக் களை உண்டுபண்ணிய கலைஞர் பலரைப் பற்றிக் கேள்விப் படுகிறோம். சிலர் தம் கலைப்படைப்பில் தாமே ஈடுபட்டுக் காதல் கொண்டுள்ளனர். என்றும் அறிகிறோம். இதுபோலவே இன்பம், துன்பம், ஆறுதல், சீற்றம், இரக்கம் முதலிய எல்லாவகை உணர்ச்சிகளையும் உண்டுபண்ணவும் தூண்டவும் இசை பயன்படுத்தப்பட வல்லது என்பது எவரும் அறிந்ததே. இசை, ஓவியம், சிற்பம் முதலிய எல்லாத் துறைகளின் எல்லாப் பண்புகளும் இலக்கியத்தில் அடங்கியுள்ளன. அவற்றிலில்லாத வருணனை, நேரிடை வேண்டுகோள், நாடகம் முதலிய பண்புகளும் அதில் இடம்பெறுகின்றன. எனவே கவிதை இவற்றினும் அரிய இயக்கும் ஆற்றலுடையதாயிருப்பதில் வியப்புக்கு இடமில்லை. லாபினஸ் என்ற தம் எதிரியின்மீது வெறுப்பும் பழிவாங்கும் எண்ணமும் நிறையப்பெற்று அவரைக் குற்றஞ்சாட்டித் தண்டனைக்காளாக்கும் துணிவுடன் மன்றம் நுழைந்த ஜூலியஸ் ஸீஸர் சிசரோவின் பேருரை கேட்டபோது உடல் தசை முழுதும் துடிக்க, கோபம் மாறி மன்னிக்க நேர்ந்தது. வீரரும் சொல்லாற்றல் மிக்கவருமான ஸீஸரையே வெல்லும் ஆற்றல் சொற்கலைக்கு உண்டு என்பது இதனால் தெளி வாகிறது. கவிதையின் ஆற்றக் கூறுகளை மற்றக் கலைகளிலும் பேருரையிலும் தனித்தனி காணலாம். இக் கலைகளைத் தெய்வீக ஆற்றல் படைத்தது என்று பெரும்பாலும் யாரும் கூறுவதில்லை. ஆனால், இவையனைத்தையும் உட்கொண்டு அவை கடந்து செயலாற்றும் கவிதை உண்மையிலேயே மிகப்பெரிதாகத் தோற்றினதினாலேயே, அதனைத் தெய்வீக ஆற்றல் என்று கூற நேர்ந்தது. விர்கிலின் கவிதையை வாசித்தபின் அறிஞர் ஹார்வி அதன் உணர்ச்சிகளைத் தாங்க முடியாமல் படுத்துப் புரண்டு கொண்டு புறச்சமய நூலின் பேய் என்னைப் பிடித்துக் கொண்டு ஆட்டுகிறதே என்று கத்துவாராம். இதற்கும் புறச் சமயப் பேய்க்கும் உண்மையில் தொடர்பு எதுவும் இல்லை. ஏனெனில் ஷேக்ஸ்பியர் துயர் நாடகங்கள் வாசித்து அழாதவர் மிகக் குறைவு. பலர் அது வாசித்தபின் சில நாளேனும் வாய் விட்டுச் சிரிக்க முடியாதவராகின்றனர். அறிஞர் காசாபோன் வேறு எல்லா இன்பங்களையும் உதறிவிட்டு லக்ரீஷியஸை வாசிப்பதே பேரின்பமாகக் கருதுவாராம்! இவற்றால் கவிதையின் ஆற்றல் மிகப் பெரிது என்றும், அதனைத் தெய்வம், பேய்கள், மாயம் ஆகியவற்றுக்கு ஏற்றிவிடல் உண்மையில் அவ்வாற்றலின் வியப்புணர்ச்சியைக் குறைக்குமேயன்றிக் கூட்டாதென்றும் காண்கிறோம். முற்கால வீரக் கதைகளிலும் வீரரின் வீரத்திற் பெரும்பகுதியை அவர்கள் மனிதப் பண்பாக்காமல், மாயத் தெய்வீக ஆற்றல்களாக்கவே முனைந்தனர். இத்தெய்வீக ஆற்றல் களையே மனித ஆற்றல்களாக ஆக்கிக் காட்டி ஷேக்ஸ்பியர் போன்ற புலவர்கள் அவற்றின் உணர்ச்சியைப் பலபடப் பெருக்கியுள்ளார்கள். பண்டைய கிரேக்கரும் உரோமரும் கவிதையை ஒரு புறம் தெய்வங்களின்பாற் படுத்தினார்களாயினும், அந்தத் தெய்வங்களைக் கவிதையின் பண்புகளாலேதான் குறித்துக் காட்டினர். கவிதைக்குரிய தெய்வம் செங்கதிர்ச் செல்வன் அப்போலோ. அவன் கல்விக்கும் இசை முதலிய கலைகட்கும் உரியவனாயிருநதான். கதிரவனொளி இங்கே கலையொளி யாக உருவகம் செய்து காட்டப்பட்டது. கதிரவனொளி உலகின் பல் வண்ணப் புதுமைகளுக்கு மூலமாதல்போல, அப்போ லோவின் கலையொளி பல்வகைக் கலைப்படைப்புக்களுக்குத் தூண்டுதல் தந்ததென அவர்கள் எண்ணினர். கதிரவ னொளியின் புத்தார்வம் உலகப் பொருள்களின் பல் வண்ணப் புதுமை காட்டி நம்மை மகிழ்வித்தல்போல, கலைஞர் கவிஞர். ஆகியவர்களின் புத்தார்வம் பொருள்களில் உள்ளீடான புதுமைகளை நமக்கு எடுத்துக் காட்டி நம்மை மகிழ்விக்கிறது. கவிதையில் ஆர்வமும் அறிவும் ஒன்று கலக்கின்றன. ஆர்வம் கலைக்குரியது அறிவு வாழ்வுக்குரியது. ஆர்வம் கதிரவ னொளிபோல் வண்ணங் காட்டுகிறது. அறிவு அவ்வண்ணத்துக்கு உருவம் தரும் பொருண்மை போல, பொருள்களின் உருவமும் வேறுபாடும் தன்மையும் விளக்குகின்றது. பார்வைக்கு மாறு பட்டவை போன்ற இவ்விரு பண்புகளும் ஒன்றுபட்டிருப்பதே கவிதையின் வியத்தகு சிறப்பு ஆகும். அது வீறுடையதாகவும் அதேசமயம் நேர்மையுடையதாகவும்; புது வியப்புடையதாகவும், அதேசமயம் இனிமை பயப்பதாகவும்; உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவும் அதனுடன் வெறுப்பைத் தராததாகவும்; எழுச்சி தந்து இயக்குவதாகவும் அதுபோல அறிவமைதி யுடையதாகவும் இருத்தல் வேண்டும். சுருங்கச் சொல்லின் அது மலர் தரும் பூங்காவனம்போல் மணமும் அழகும் கவர்ச்சியும் தரு வதுடன், காய்கறி பழத்தோட்டங்கள் போன்ற இனிய பயனும் அளிக்க வேண்டும். பயனற்றதாகத் தோன்றும் இரும்புப் பாளங்கள் பழுக்கக் காய்ச்சப்பட்டுச் சம்மட்டிக் கூடங்களால் அடித்து நெளித்துத் துவைக்கப்பட்டு, உளி அரம் முதலியவற்றால் செப்பனிட்டுப் பயன் தரும் கருவிகளாக்கப்படுவது போலவே, மனித வாழ்க்கையின் செயலறிவுச் செய்திகள், கவிஞன் கற்பனை யார்வத்தில் பளபளப்பும் ஒளியும் பெற்று அவன் சொற்றிறத் தால் துவைத்து உருவாகி, கலை நுட்பங்களால் செப்பம் பெற்று வாழ்க்கையில் இன்பமும், பயனும் தந்து வழி காட்டும் நன்னூல்கள் ஆகின்றன. இன்பம் மட்டும் தரும் கவிதைகள் பல. இன்பமும் பயனும் அளிப்பவை சிலவே. ஆனால், இச் சிலவே உலகில் நின்று நிலவிப் பாராட்டுப் பெறுகின்றன. மனித வகுப்பின் அழியாச் செல்வமா யிருக்கின்றன. இவற்றின் அருமையை நோக்க முற்காலத்தவர் இவற்றைத் தெய்வீகத் தன்மையுடையவை என்று கொண்டதில் வியப்பிருக்க முடியாது. வகுத்துணர மாட்டாதவற்றையெல்லாம் நாகரிக இளமைக்காலத்திலுள்ள மனிதர் தெய்வீகம் என்ற முறையிலேயே மதித்துணர்ந்தனர். உலகில்2 எத்தனையோ மொழிகளில் எத்தனையோ கவிஞர்கள் உள்ளனர். ஆனால், இன்னும் முற்பட்ட கவிதையும் முதன்மை வாய்ந்த கவிதையும் கிரேக்க இலத்தீனக் கவிதைகளும் அவற்றுள் தலை சிறந்தவையான ஹோமர், விர்கில் ஆகியவர் களின் கவிதைகளுமே என்னலாம். ஃபிரெஞ்சு நாட்டவர் கவிதைகளுக்கு இலக்கண விதிகளமைத்து அவற்றை வலியுறுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாயுள்ளனர். ஆனால், அந்த விதிகளும் கிரேக்க இலத்தீன அறிஞரான அரிஸ்டாட்டில், ஹோரேஸ் ஆகியவர்களின் விதிக்கு ஒரு விளக்க உரையாக அமைந்துள்ளனவே தவிர வேறல்ல. அவ்விதிகளால் முன்னைய கவிதைகளைக் கடந்த அல்லது அவற்றுக்கு ஒப்பான கவிதைகள் ஏற்பட்டுவிட்டதாகவும் அவர்கள் கூற முடியாது. வேண்டு மானால், இவ்வகையில் அவர்கள் ஓர் ஆறுதல் பெறக்கூடும். கிரேக்க இலத்தீன மொழிகளிலும் இவ்விதிகள் அமைந்ததன்பின் சிறந்த கவிதைகள் ஏற்பட்டன என்று தோற்றவில்ல. கவிதை என்பது கட்டற்ற கற்பனை. அது தேடிக்கொள்ளத்தகும் கட்டுப் பாடுகளும் தானே வகுத்துக்கொள்ளும் கலைக்கட்டுப்பாடுகளே. கவிதைப் பண்புகளைக் கூறுபடுத்தி ஒழுங்கமைதிகளால் அவற்றின் அருமையை உணரலாமேயன்றி, அவற்றால் கவிதை படைக்க முடியாது. அங்ஙனம் செய்வது தேன்கூடு செய்து, தேனீயின் உறுளுப்புக்களைச் செய்து அதில் வைத்து ஒட்டி, நல்ல மலர்களையும் அருகில் வைத்துத் தேனை எதிர்பார்ப்பது போன்ற மடமையேயாகும். தேன் உண்டாவதற்குரிய அடிப்படை தேனீயின் உயிர் வாழ்க்கையும்; வயல், தோட்டம் எங்கும் திரிந்து அது மலர் வகைகளைத் தானே தேர்ந்து தேன் திரட்டும் வாய்ப்புமே. விதிகளால் எதிர்பார்க்கப்படும் நன்மை மோசமான கவிஞர்களைத் தடுப்பதே - சிறந்த கவிஞர்களை உண்டு பண்ணுவது அன்று! ஹோமரின் கவிதையைவிடப் பரந்துயர்ந்த கற்பனை யாற்றலுடைய கவிதையும், விர்கிலின் கவிதையைவிடக் கட்டுக்கோப்பும் கலைப்பண்பும் மிக்க கவிதையும் காண்டல் அரிது. உலகில் முதல் முதல் எழுதப்பட்ட நூல்கள் கவிதை நூல்களே. உண்மையில் பல பகுதிகளில் எழுத்து ஏற்படு முன்பே கவிதை உண்டாகியிருந்தது. ஸ்பெயின் மக்கள் முதல் முதல் அமெரிக்கா சென்றபோது அந்நாட்டுப் பழங்குடி களிடையே எழுத்து ஏற்படவில்லை. ஆனால் பல கவிதைகள் நடமாடின. அவை ஸ்பெயின் மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு இலக்கிய அன்பர்களால் உயர் நற்கவிதையாகவே பாராட்டப் பெற்றன. ஸிதியர், கிரேக்கர், ஜெர்மானியர் ஆகியவர்களிடையேயும் இதுபோலவே எழுத்துத் தோன்று முன்பே கவிதைகள் ஏற்பட்டிருந்தன. எழுத்தற்ற அகாதிர்ஸி என்ற வகுப்பார் தம் மரபுரிமைச் சட்டங்களை யாப்பிலேயே கொண்டிருந்தனர் என்று அரிஸ்டாட்டிலும்; ஜெர்மானியர் தம் வீர வரலாறுகளைப் பாடலிலேயே கொண்டிருந்தனர் என்று டாஸிட்டஸும் கூறுகின்றனர். ஃவினிஷியரிடமிருந்து கிரேக்கர் எழுத்து முறை கற்கு முன்னரே கிரேக்க குறித் தெய்வக் குருமார் பாட்டிலேயே குறி கூறி வந்தனர். கிரேக்கர்கள் கூடக் கிரேக்க மொழியில் உரைநடை எழுதத் தொடங்கியது பாரசீக அரசன் கைரஸ் காலத்திலேயே. இதற்கு முன்னுள்ள கவிதை யாவும் எழுத்திலாக் காலக் கவிதையே. ஹோமர், ஹெஸியட், தெய்வ நங்கையர் (ளுலbடைள), ஆர்ஃவியூஸ், லினஸ், மூசேயஸ் ஆகிய யாவர் பாடலும் எழுதாப் பாடல்களே. பாட்டெழுதுவது கடுமுயற்சியுடையதென்றும், உரை நடை எழுதுவது அதனினும் எளிது என்றும் நாம் கருதுகிறோம். ஆகவே, உரைநடைக்கு முன் பாட்டு எப்படி இயல்பாக எழுந்திருக்கக்கூடும் என்று நாம் வியப்படையக் கூடும். ஆனால், முதன் முதலில் பாட்டு எழுதியவர் நோக்கம் அறிந்தால், இவ்வியப்புக்கு இடமேற்படாது. முன்னோர் அறிவாளிகள் உரைகளை வாய்மொழி மரபாகப் பேணுவதற்கும் சட்டங்கள், சமய வழிபாடுகள் ஆகியவற்றை மனத்திற் கொள்ளுவதற்குமே முதலில் பாடல்கள் யாக்கப்பட்டன. எழுத்து ஏற்படுமுன் பாட்டு மனப்பாடம் செய்வதற்கும் மாறாமல் ஒப்பித்தற்கும் மிகவும் பொருத்தமாயிருந்திருக்க வேண்டும். இங்ஙனம் எழுத்தில்லாக் காலநிலையில் நினைவுச் சாதகமாக எழுந்த கவிதை, எழுத்து ஏற்பட்ட பின்பு அதன் இனிமை, சுருக்கம், உணர்ச்சி ஆகியவை நோக்கிப் பின்னும் வளர்க்கப்பட்ட தென்னலாம். நினைவூட்டினை மட்டுமே குறியாகக் கொண்டவை எழுத்து ஏற்பட்டபின் பெரிதும் உரைநடையிலேயே எழுதப்படத் தொடங்கின. தற்காலிக இன்பம் கருதியவையும் அங்ஙனமே உரைநடையாயின. தொடுக்கக்காலக் கவிதை புகழ்ச்சி, அறிவுரை, கதை, காதல், துன்பம், வசை ஆகிய நோக்கங்களுடையவையாயிருந்தன. முற்காலக் கவிதைப் பொருள்களுள் கதை ஒன்றே கவிதைப் போர்வை விடுத்துப் படிப்படியாக உரைநடைப் போர்வை யிலேயே உலவிப் புனைவியற் கதைகள் (சடிஅயnஉநள) ஆயின. முதல் நூற்றாண்டிலிருந்து உரோமப் பேரரசில் உட்பட்ட ஸ்பானியர், பிரிட்டானியர், காலியர் (பிரஞ்சு மக்கள்), ஜெர்மானியர் ஆகியோர்களின் தொடர்பால் இலத்தீன மொழியின் தூய்மையும் ஆற்றலும் கெட்டன. ஐந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட காத்தியர், விசிகாத்தியர் போன்ற நாகரிகமற்ற வடவர் படையெடுப்பால் ஐரோப்பாவில் இலத்தீன கிரேக்க வாழ்வும், கவிதையும் மங்கிமடிந்தன. அவை மீட்டும் தலைகாட்ட நீண்ட காலமாயின. நாகரிகமற்ற பண்டைக்காலத்தினரிடையே முதன் முதலில் ‘ரூண்’ என்ற எழுத்துக்கள் அவர்கள் தெய்வமாகிய எடினாலேயே அளிக்கப்பட்டன என்று கூறப்பட்டது. அவர்களிடையே வழங்கிய கவிதைகளும் அப்பெயரால் அழைக்கப்பட்டன. இலத்தீன், கிரேக்க கவிதைகள் யாப்பளவையின் மூலமாக மட்டும் இனிமைபயந்தன. காத்தியக் கவிதையோ மோனை, எதுகை (அடி எதுகை)களுடன், பொதுமக்களால் எளிதில் பாடத்தக்கவையா யமைந்தன. வீரப்பாடல்களிலும் வீரர் புகழ்ச்சிகளிலும் இவை மிகுதி வழங்கப்பட்டன. இலத்தீன கிரேக்க கவிதையின் நடை நயம், கருத்து நயம், உயர் கற்பனைகள் இவற்றுள் குறைவு. அவை கீழ்த்தர உணர்ச்சிகளையும் வெறிகளையும் எழுப்பவும், மந்திரம் சூனியம் ஆகியவற்றில் நம்பிக்கை யூட்டவுமே பயன்படுத்தப்பட்டிருந்தன. மாய மந்திரக் கதைகள் புனைவியல் வீரர் கதைகளை உருவாக்கின. வனதெய்வங்கள், குறளிகள், கூளிகள், பேய்கள், பிள்ளைப் பூச்சாண்டிகள் ஆகியவர்கள் பற்றிய கதைகள் எழுந்து சிலுவைப் போர்க்காலங்களில் கிறித்தவர், கிறித்தவரல்லாதவர் ஆகிய எல்லாரிடமும் ஆர்வமூட்டின. ஒருபுறம் புதிய கிறித்தவ சமயத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டே இக் கவிதைகள் மக்களை உணர்ச்சி வகையில் மக்களின் குழந்தைப்பருவ நிலையில் வைக்க உதவின. ஆனால் ஸ்பெயினில் டான்குவிக்ஸொட் இப்பேய் குறளிகள் உதவியில்லாமலே இதே வகைக் கதையார்வத்தையும், அதனுடன் நகைச்சுவை, வசைத் திறத்தையும் ஊட்டினான் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிர ஆண்டாக உரோம ஒளிவீழ்ச்சியின் பின் இத்தகைய இருண்ட நிலையில் நடமாடிய கவிதை 15-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கிரேக்க, இலத்தீன இலக்கிய மறு மலர்ச்சியால் மீண்டும் தலைதூக்கிற்று. ஆனால் ஐரோப்பிய மொழிகளில் முதலில் கவிதை காத்திய ஆடையிலேயே வெளிவரமுடிந்தது. கிரேக்க இலத்தீன யாப்புமுறை காத்திய மொழியின் மரபில்வந்த ஐரோப்பிய மொழிகளில் எளிதில் அமைவுபெற முடியவில்லை. காத்திய மரபின்படி அமைந்த எதுகை மோனை அடிகளிலேயே கவிதை தத்தித் தத்தி நடந்து கருத்துத் தெளிவுபெற்று, பண்டைக் கவிதைச் செவிலியின் கரம்பற்றி வளரத் தொடங்கிற்று. ஆனால், இங்கேயும் ஒரு புதிய தடைக்கல் ஏற்பட்டது. இலத்தீன் கிரேக்க கவிதை அந்நாளைய பலதெய்வ வணக்க அடிப்படையில் சமயக் கருத்துக்களை அணிமணியாகவும் புனை கதைத்தளமாகவும் கொள்ள முடிந்தது. புதிய கிறித்தவ சமயம் இப்பொய்யுரை புனைந்துரை களுக்கு இடந்தரவில்லை. ஸ்பென்ஸர் பழையமாதிரிப் புனை கதையிலேயே புதிய கருத்தும் அறிவுரையும் இணைத்துப் பாரிய கவிதை இயற்றினார். 17-ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய மொழியாளர் பண்டை நூல்களில் சிறுகச் சிறுகப் புதிய புனைந்துரை, வசையுரை ஆகியவற்றையே தம் கவிதையின் தலைமைப் பகுதியாகத் தேர்ந்தனர். தற்காலக் கவிதை முற்காலக் கவிதை மரபைத் தாண்டி வளர்ந்த துறை நாடகத்துறையே யாகும். இத்தாலி, ஸ்பெயின், ஃவிரான்ஸ் ஆகிய நாடுகள் பண்டைய மொழிகளைப் பின் பற்றிச் சிறந்தனவாயினும், இங்கிலாந்து ஒரு தனிப்போக்கு உடையதாய் அதன்மூலம் இத்துறையில் பண்டைய இலக்கியத்தையும் தாண்டியுள்ளது. இதனை முதலில் பயன் படுத்தியவரும் முழுவதும் பயன்படுத்தி வெற்றி கண்டவரும் ஷேக்ஸ்பியரேயாவர். பண்டை நாடகத்தின் சின்னஞ்சிறு சிறப்புக்களைத் தாண்டி, ஷேக்ஸ்பியர் ஒரு பாரிய உலகை நமக்குப் படைத்துக் காட்டியுள்ளார். பண்டை நாகரிகத்தைவிட இன்றைய நாகரிக வாழ்வு விரிவும் அகற்சியும் உடையது. எனவே பண்டைய இலக்கியம் இன்றைய இலக்கியத்திலும் உயர்வுடையதாக இன்று இருப்பினும், பல திசைகளில் இன்றைய இலக்கியம் புது வளர்ச்சி யடைந்தே வருகிறது. பண்டைய இலக்கியத்தின் தனிச்சிறப்பை அது எல்லாத் துறைகளிலும் பெறமுடியாவிட்டாலும், பல துறைகளில் அது வருங்காலத்தில் அதனைத் தாண்டிச் செல்லக்கூடும் என்று நம்பலாம். ஆங்கில நாடு தற்கால ஐரோப்பாவிலும் சில வகைகளில் பிற்பட்டேயிருப்பினும், இதற்கும் தனிப் பண்புப்புதுமை உண்டென்பதை ஷேக்ஸ்பியரின் மாபெருங் கவிதை காட்டும். ஆயினும் மொத்தத்தில் பண்டைய உலகில் கவிதைக்கு அரசியலார் காட்டிவந்த உயர்வு இன்று குறைந்துவிட்ட தென்று கூறாமலிருக்க முடியவில்லை. ஆயின் இதுவும் ஒரு நற்பண்பாகலாம். அந்த அளவுக்கு அது பொதுமக்கள் வாழ்வில் பரவக்கூடும் என்றே கூற இடமுண்டு. அடிக்குறிப்புகள் 1. ளுசை றுடைடயைஅ கூநஅயீடந. 2. றுளைனடிஅ. …றுவை. 3. கௌலி எழுதுவது 17-ஆம் நூற்றாண்டில், 300 ஆண்டுகட்கு முன் என்பது நினைவில் வைக்கத்தக்கது. 4. ஆசிரியர் உலகு என்று குறிக்குமிடங்களிலெல்லாம் அவர் கருதுவது மேலை உலகையே. 7. வசையுரையின் பொல்லாங்கு ஜோஸஃவ் அடிசன்1 கொடும்படை வால்ஷியர் குமுறுமுள்ளத்தர், கெடும்பு செய்தவர் நேடிக்காண்கிலார், நெடிய வன் பழி தீர்வகை கண்டிலர். - விர்கில் - டிரைடன் மொழிபெயர்ப்பு. மனிதருடைய நல்ல பெயரை மறைந்து நின்று வசையம்பு எய்து கெடுப்பவரின் உள்ளப்பண்பைவிடப் பெருந் தன்மை குன்றிய, கீழ்த்தரப் பண்பைக் காண்பது அரிது. நஞ்சிட்ட அம்புகள் ஊறு செய்வதுடன் அமைய மாட்டா! அம்புபட்ட காயம் கொல்லாது விட்டாலும், குணமடைய விட்டாலும், நஞ்சு அது குணமடைய விடாமல் கொன்றே தீரும். வசையம்பு இந் நஞ்சிட்ட அம்புபோலப் பழியில் பழி நாடி பழி முற்றுவிக்குந் தன்மையுடையது ஆகும். இது காரணமாகவே பிறருக்கு ஊறு செய்யும் இயல்புடைய வம்பரிடம் வசைத்திறமும் நகைத்திறமும் இருப்பதை நாம் விரும்புவதற்கில்லை. ஏனெனில் வம்பர்மனம் பிறரைப் புண்படுத்துவதில் அடையும் மகிழ்ச்சி வேறெதிலும் அடைவதில்லை. தனி ஒரு மனிதன் துயரம், உறவினன் ஒருவன் அடையுந் தொல்லை, குடும்பங்களின் அலைக்கழிவு ஆகியவை இத்தகைய வம்பரின் வம்பார்வத்தால் விளையத் தக்கவை. அம்பேறுண்டவர் பெரும்பாலும் அம்பையும் அம்பெய்தவனையும் காணக்கூடும். காணாவிடத்தும் பிறர் செயல் என்று பலரும் அறியக்கூடும். ஆனால், மறைந்து நின்று எய்யப்படும் வசையம்பானது எய்தவனை மட்டுமன்றிப் பலசமயம் அம்பையே மறைப்பதாகும். வசையெழுத்தாளர் பெருத்த வம்பராகவும் குறும்ப ராகவுமிருந்து, அறிவு, கலைத் திறமுடையவராகவும் இருந்தால் கூட, அவர்கள் செய்யும் தீமை தனிமனிதர் அல்லது தனிக் குழுவினருக்கு மட்டுமே. அவர்கள் தீயவராகவும் ஒழுக்கங் கெட்டவராகவும் இருந்தால், அவர்கள் வசையின் கேடு இன்னும் பெரிதாகும். ஏனெனில் அது சமூகத்துக்கு நன்மைசெய்யும் நற்பண்பாளர் உளப்பண்புக்கு ஊறு வருவிக்கும். பொதுவாக உலக மக்கள் யாரை வசைகளிலிருந்து விலக்கிவைக்க விரும்புவார்களோ, அவர்கள்மீதே அது பாயும். நல்லொழுக்கம், தகுதி,திறமை, புகழத்தக்க மற்ற எந்தப் பண்புகளும் அதற்கு இலக்குகள் ஆகும். இப்பண்புகளுடையார் அனைவரும் இதன் கோமாளித்தனத்துக்கு உரியவராய் ஏளனம் செய்யப்படுவர். எய்பவன் யார், செல்திசை யாது, விழுவது யார்மேல் என்றறியப்படாமல் இருட்டில் எய்யப்படும் அம்புகள் போன்ற இத் தீம்பான வம்பு வசையுரையின் கெடுதிகளை இவ்வளவென்று யாராலும் வரையறுத்துக் கூறமுடியாது. வேண்டுமானால் அவற்றுக்கு ஒரேஒரு எல்லைமட்டும் கூற முடியும். அவை தூய்மையுடையவர் உள்ளத்தில் உண்மையான, நிலைத்த வடு ஏற்படுத்த முடிவதில்லை. கருத்தியற்புனைவான ஊறுபாட்டையே அது தனக்கு இலக்கானவர் மீது உண்டுபண்ண முடியும். அதாவது அது பண்புடையோருக்கு மனத்துயர் தரலாம்; அவர்கள் பண்பழிக்காது. திருட்டு, கொள்ளை, கொலை ஆகியவற்றைப்போல் அது பொருளையோ உயிரையோ இழக்கச் செய்வதன்று. ஆயினும் பலர் பொருளோ உயிரோ கூட இழந்தாலும் இழக்க விரும்புவர்; மானத்தை இழக்க விரும்பமாட்டார். இவ்வகையில் ஊறுபாடு என்ற காரணத்தால் இதன் அழிவு குறைவாயினும், தீங்கு எவ்வகையிலும் குறைவு அல்ல. மேலும் தீங்கு என்பது தீங்கு செய்பவர் உள்ளக்கருத்தால் அளக்கப்படுவதன்று; தீங்குக்கு ஆட்பட்டவர் கருத்தாலேயே அளக்கப்பெறுவது. வசையம்பின் ஊறுபாட்டை ஒரு சிறிதும் வெளிக் காட்டாத பேராண்மையுடையவர்க்கும், அதனால் மறை வுள்ளத்தில் நோவு இல்லாமற் போகாது. இவ்வகையில், சாக்ரட்டீஸின் இறுதிக்கால நிகழ்ச்சிகளுள் ஒன்றில் அவர் வாழ்க்கை ஆய்வுரையாளர் எவரும் கருதாத ஒரு குறிப்பைக் காட்டும் நிகழ்ச்சி ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது என்று எண்ணுகிறேன். நச்சுக்கோப்பை பருகுமுன் இன்னுரையாடிக் கொண்டிருக்கும் நயநாகரிகமுடைய இந் நற்பண்பாளர் அவ்வின்னுரையிடையே உயிரின் அழியாமைபற்றிப் பேசப் புறப்பட்டு, தொடக்கத்திலேயே உயிரின் அழியாமை பற்றித் தமக்கு நம்பிக்கை இல்லை என்று குறிப்பிடுகிறார். நிகழ்ச்சிக் காலத்துக்குப் பொருத்தமற்ற இப்பேச்சுக்குக் காரணம் அரிஸ்டோஃவானிஸ் தம் நாடகங்களில் அவரைத் தாக்கி ஏளனம் செய்திருந்ததேயாகும். சாக்ரட்டீஸ் வாழ்ந்திருந்த போது அரிஸ்டோஃவானிஸின் ஏளனம் அவரைப் புண்படுத்திய தாகத் தெரியவரவில்லை. அத்தகைய வசை நாடகங்கள் பலவற்றை அவரே சென்று அமைதியுடன் பார்த்திருந்ததாக அவரைப் பற்றிய நூலாளர் உணர்த்தியுள்ளனர். ஆயினும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்து அவர் ஆழ்ந்த உள்ளத்தடத்தில் அரிஸ்டோஃவானிஸின் ஏளனம் அவரையும் அறியாமல் அவரை நுட்பமாக உறுத்திக் கொண்டேயிருந்தது என்றுதான் உய்த்துணரத் தகும். சாக்ரட்டீஸின் சான்றாண்மை இந் நுட்ப ஊறுபாட்டைக் கவனியாமல் புறக்கணித்து ஒதுக்கியிருந்ததேயன்றி வேறன்று. சிறு மனங்களில் அது வளர்ந்திருக்கக் கூடும். சான்றோர்கள்கூட வசையை உள்ளூர விரும்பவில்லை என்பதைப் பல வரலாற்றுச் சான்றுகள் காட்டுகின்றன. பேரரசர் ஜூலியஸ் ஸீஸரை மன்றத்தின் தளத்தில் காட்டுல்லஸ் தாக்கியபோது, ஜூலியஸ் ஸீஸர் அவரை வரவழைத்து மிகவும் நேச இணக்கத்துடன் நடத்தினாராம். இப்பெருந்தன்மையின் விளைவாகக் கவிஞர் காட்டுல்லஸ் அதுமுதல் அவருடைய மாறாத நண்பர் ஆகிவிட்டார். இதுபோலவே திருத்தூதர் மஃஜாரின் தன்மீது வசைபாடிய கவிஞன் கில்லெட்டைப் பெருமைப்படுத்தி உயர்வுபடுத்தியதனால், அவ் வசைப்பகுதி அகற்றிய இரண்டாம் பதிப்பை வசைக்காளான அத் தலைவருக்கே அவர் படையல் செய்தாராம். வசைக்காளான பெரியோர்களில் மேற்கூறப் பட்ட வர்கள் பெருந்தன்மையுடையவர்கள். சிறுமை மனம் படைத்த வர்களும் உண்டு. திருத்தந்தை செக்ஸ்டஸ் குவின்டஸ் அப் பதம் பெற்றபோது, நகரின் பழஞ்சிலை ஒன்றின்மீது யாரோ ஒரு நயநாகரிகக் குறும்பன் அழுக்குக் கந்தையாடைகளைச் சுற்றி உடுத்து, சிலையின் கீழே, “இச்சிலையின் ஆடைகளை வெளுத்த வண்ணாத்தியின் குடும்பம் இப்போது அரச குடும்பம் ஆக உயர்ந்து விட்டதால், இக் கந்தைகள் வெளுக்கப்படாமல் அணியப் பெறுகின்றன,” என்று எழுதியிருந்தான். திருத்தந்தை அப்பதம் பெறுமுன் அவர் தங்கை அத்தொழில் செய்திருந்தாள் என்பதையே அது ஏளனமாகச் சுட்டிக்காட்டிற்று. இதனைக் கேள்வியுற்ற திருத்தந்தை இவ் வசையுரைக் குரியவனை அறிவிப்பவர்க்குப் பரிசளிப்பதாக அறிவித்தார். உள்ளத்தில் வஞ்சமில்லாத வசைஞன், எழுதியவன் தானே என்று நேரில் ஒத்துக்கொண்டான். திருத் தந்தை தம் உறுதிகாத்து அவனுக்குப் பரிசு தந்தார். ஆனால் தம் பழிவாங்கும் சிறுமை காரணமாக, அவன் பிற்காலத்தில் அவ்வகை வசை இயற்றாமலிருக்கச் செய்ய எண்ணி அவன் நாவையும் இரு கைகளையும் துண்டித்து விட்டாராம். மேற்குறிப்பிட்ட எல்லாப் பேரரசர்களும், பெரியார்களும் வசைத்திறமுடைய கலைஞர்களை ஒரேவகையாக நடத்தவில்லை. ஆயினும் வசைக்கலைஞர் வசை அவர்கள் அனைவரையும் தாக்கித் தன் கடுமைக்கு ஆளாக்கியேயிருந்தது என்பதைக் காண்கிறோம். வேறு எதற்கும் அஞ்சாத, மதிப்புக்கொடாத அளவு அவர்கள் அதற்கு அஞ்சினர், மதிப்புக் கொடுத்தனர். இத்தகைய மறை ஊறு செய்யும் திறமுடையவன் என்று கருதப்படும் எவனும் நல்லோரால் நம்பத்தக்கவன் ஆக மாட்டான் என்று மட்டும் உறுதியாகக் கருதலாம். புகழை எதிர்ப்பது எளிது. நல்லோர் எதிர்க்க மாட்டார். இதில் எதிர்ப்புத் திறம் காட்டுபவர், திறம் இருந்தால் திருட்டு, கொள்ளை, கொலை ஆகியவற்றைச் செய்யக் கூசாதவரேயாவர். ஆனால், திருட்டு, கொலை, கொள்ளை ஆகிய தீங்குகளைச் செய்பவரைச் சமூகம் வாளாவிட்டிராது. அச்செயல்களின் தண்டனையிலிருந்து அவர்கள் தப்ப முடியாது. இதனால்தான் அவற்றைச் செய்யத் திறமுடையவர் எல்லாம் அவற்றைச் செய்யாதிருக்கின்றனர். ஆனால், இவற்றினும் கோழைத்தனமும் தீம்பும் மிக்க வசைத்துறையைக் கையாளுபவர் தம் செயலுக்குத் தண்டனை இல்லை என்ற நெஞ்சூக்கத்துடன் தான் அவ்வாறு செய்கின்றனர். இக் கோழைத்தனமான செயல் ஒழுக்க முறைக்கும், நாகரிகமுறைக்கும் ஒவ்வாத கீழ்த்தரப்பண்பு என்பதில் ஐயமில்லை. பல வசைப் பாடலாசிரியர்கள் குற்றமற்ற இளங் கன்னியர் வாழ்வு முழுவதையும் ஓர் குடும்பத் தொல்லைக்கு ஆளாகித் துன்பப்படுகிற தந்தையின் துன்பத்தைப் பெருக்கி இரக்கமின்றி அவரை அழிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். ஒரு தவறான சொல்லுக்காகக் குடும்ப வாழ்வின் அமைதியிலிருந்து பெண்கள் துரத்தப்படுவர். சிலசமயம் பல நற்குணங்களுடைய பெரியார் குணங்களில் ஒன்றே பொய்யாக்கப் பட்டு அவர்கள் சமூகத்தினால் பழிக்கப்பட நேருவதுண்டு. அவர்கள்பால் பலவகையிலும் நன்றி பாராட்டக் கடமைப்பட்ட உலகம் இத் தூண்டுதலால் அவர்களை இகழும்படியாய்விடும். இவற்றால் நற்பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் கூட்டுறவில்லாத அறிவும், அதன் பயனான வசைத்திறனும் மிக மிக வெறுக்கத்தக்க ஒரு பண்பு ஆகும். வசை நோக்கமில்லாத இடத்தில்கூட வசைத்திறம் தீமை பயக்காமலிருக்க முடிவதில்லை. பலவிடங்களில் செய்பவர் அறியாமல்கூடத் தீமைகள் நிகழ்ந்து விடுவதுண்டு. பகைமை யெதுவுமில்லாமல், உள்ளக் கனிவின்மையாலோ, அசட்டைத் தன்மையாலோ பிறர் நற்பெயரை, சிலசமயம் தம் உற்ற நண்பர் அல்லது உறவினர்கள் நற்பெயரைக்கூடக் கெடுக்கிறவர்களை நாம் காணலாம். இன்னும் சிலர் தம் திறத்தைக் கையாளும் இன்பம் ஒன்றினாலேயே இத்தகைய காரியம் செய்ய நேர்கிறது. இங்கே புகழ் ஒரு தீய ஆற்றற் பண்பால் இயங்குகிறது என்பது காணலாம். பொதுவாக, தீமை செய்யாத நற்பண்பாண்மையை விட அறிவுத்திறனை உயர்வாக மதிக்கும் வழக்கம் மிகத் தவறானது. ஆசிரியர் குறும்புத்தன்மை உடையவராயிருக்கு மிடத்தில், இவ்வழக்கம் அவருக்குத் தவறான போலிப்புகழ் உண்டுபண்ணி, பிறர் நற்புகழைக் கெடுக்க உதவுகிறது. எனவேதான் பிறருக்குத் தீங்குவிளையாத பண்பும், தன் அறிவையும் தீமைபயக்க வழங்காத பேராண்மையும், தன்னை யறியாது செய்யக்கூடும் தீமைகள் வகையிலும் விழிப்பும் தன்னடக்கமும் உடையவனாயிருப்பதும் அறிவைவிட விரும்பத் தக்கவை. உண்மையில் தன்னடக்க மில்லாதவன் பிறருக்குத் தீங்கு இழைக்க விரும்புபவன், அல்லது தீய பண்புடைய வனைவிட வெறுக்கத் தக்கவனே. ஏனெனில் பிந்திய தரத் தவர் தம் பகைவரை மட்டுமே தாக்குவர். தன்னடக்க மில்லாதவன் தன்னை யறியாமலே தன் நண்பர்களைக் கூடக் கெடுப்பவன் ஆகிறான். ஸர் ரோஜர் தரும் பழங்கதையில் தவளைகள் மீது கல்லெறியும் சிறுவரிடம் ஒரு தவளை கூறிய அறிவுரை இங்குக் கருதத்தக்கது. அறிவும் உணர்ச்சியு மற்ற அப்பிள்ளைகளின் விளையாட்டு தவளையினத்திற்குச் சாவைத் தருவது. அதுபோலவே இத்தகைய வசையறிஞரும், தன்னடக்க மின்றி வசைத்திறமுடையவர்களும் விளையாடும் வசை விளையாட்டு மனித இனத்துக்குச் சாவு விளை விப்பதாகும். அடிக்குறிப்பு 1. துடிளநயீh ஹனனளைடிn. 8. நல்லெண்ணங்கள் ஜோஸஃவ் அடிசன் “நரகத்தின் பாதை நல்லெண்ணங்களாலேயே நிறைந் துள்ளது.” நம் செயல்களை எல்லாம் நன்மையை நோக்கியும் கூடுமானமட்டும் மிகுதி நற்பயன்கள் தரும்படியும் இயக்குவதே சமயத்தின்1 பண்புத்திறமும் ஆற்றலும் ஆகும். மனிதர்கள் செயல் யாவும் கணக்கில் எடுக்கப்படும் நாளில், நம் செயல்கள் நம்மைப்பற்றிய நற்சான்று தரும்வகையில் அவற்றை நாம் இப்போதே அமைக்க வேண்டும் என்று சமயம் தூண்டுகிறது. நம் செயல்கள் அனைத்தையும் இந்த அடிப்படையில் ஒரு தன்மையாக உருவாக்க வேண்டுமானால், செயல்களை நல்லன, தீயன, இருநிலையுமற்றன என மூன்று கூறுகளாக நாம் பிரித்துணர்தல் வேண்டும். அதுபோல நம் நோக்கங்களையும் பகுத்தாராய்ந்து நம் செயல்களுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இத்துறையில் சமயம் தரும் பண்பின் திறமும் மறை ஆற்றலும் விளங்கும். நல்ல செயலுடன் நல்ல நோக்கங்களும் இணைந்தால் தான் நல்ல நிறைபயன் ஏற்படும். நடுநிலைச் செயலுடன் அது இணைந்தால் அது பொதுவாக நல்ல செயலாகிறது. ஆனால், செயல் தீயதாயிருந்தால் அது சிறிதளவேனும் பெரிதளவேனும் தீமையை மட்டுப்படுத்த மட்டுமே உதவும். இதற்கு நேர்மாறாக, தீய நோக்கம் மிகச் சிறந்த செயல்களைக் கூடத் தலைகீழாக்கிப் பகட்டி ஏய்க்கும் தீச் செயல்கள் ஆக்குகின்றன - உண்மையில் நற்செயல்களெனக் கீழ்த்தர நாகரிக மக்களும் போலி நாகரிக மக்களும்2 போற்றுவது இவற்றையே என்னலாம். நடுநிலைச் செயல்கள் தீய நோக்கத்தால் முற்றிலும் தீங்கு செய்பவையாகவும் தீச்செயல்கள் தீமையில் தீமையாகவும் மாறுகின்றன. நடுநிலை நோக்கமோவெனில் நற்செயலின் நன்மையைக் கெடுத்து விடுகின்றது; நடுத்தரச் செயலைப் பயனில் செய லாக்குகின்றது. இழிசெயலை இழிசெயலாகவே வலியுறுத்து கின்றது. மேற்கூறியவற்றால், உயர் நோக்கங்களில் பழகிய உள்ள முடையவரா யிருப்பதனால் சொல்லொணா நல்வினைகள் உண்டாகின்றன. நம் எண்ணங்கள், சொற்கள் செயல்கள் யாவற்றையுமே கடவுட் பற்று, உயிர்நிலை மேம்பாடு, மனித உலக நலன் ஆகிய ஏதாமொரு உயர்நோக்கத்துக்கு உட்படுத்துவதன் மூலம் அவ்வெண்ணங்கள், சொற்கள், செயல்கள் உயர்வுற்று மிகுபயன் விளைவிக்கின்றன. பணத்தைத் திட்டப்படுத்திச் செலவிடுவதால், அதன் விலைமதிப்பு பெருகுகிறது. அதுபோலவே நோக்க அடிப் படையான செயல்கள் திட்டப்படுத்தப்பட்ட செயல்களான படியால், எந்தச் செயலும் இதனால் வீணாகாமல், கூடிய மட்டும் பயன்தந்தே நிற்கின்ற நிலையை அடைகிறோம். மேலும் அது நம் நற்பண்புகளைப் பெருக்கி அல்பண்புகளை அருகுவித்து நமக்கு நிலையான பண்பாடு தருகிறது. குளித்தல், கைகால் கழுவுதல், ஆடை, உணவு முதலிய எண்ணற்ற துறைகளில் கட்டுப்பட்ட சமய வினைகளைப் புகுத்தியுள்ள யூதர் சமயத்தைப்பற்றி அக்கோஸ்டா என்ற யூதரிடம் லிம்பார்க் என்ற கிறித்தவ நண்பர் குறை கூறிய போது, அவர் கூறிய மறுப்பு இங்கே கவனத்தில் கொண்டு வருவதற் குரியது. “சமய வாழ்வின் முக்கிய பகுதியான ஒழுக்கத் துறையில் எப்போதும் பழகிப் பயிற்சிப் பழக்கம் உண்டாவதற்குரிய செயல்கள், நிகழ்ச்சிகள் மிகமிகக் குறைவே. மேலும் ஒழுக்கப் பண்பைச் செயல்துறையில் ஈடுபடுத்திப் பயிலக் காலம், இடம், ஆகிய தொடர்புகள் வந்து இணையும்நிலை ஏற்பட வேண்டும். அப்போதுதான் அதற்குரிய வாய்ப்புக் கிட்டும். ஆகவேதான் நல்லன, தீயன என்ற பாகுபாட்டுக்கு உட்படாமல், ஒழுக்கமுறைச் சார்பற்றவையாகிய பல சிறு செயல்களைத் தெய்வப் பற்றின் அடிப்படையில் கொண்டுவந்து, அவற்றின் மூலம் அப்பற்றடிப்படையான செயல்களின் பயிற்சியை நாங்கள் பெருக்குகிறோம். நல்லன என்பதற்காகச் செய்வதில் மன நிறைவு ஏற்படுவது போலவே, இறைவனுக்காகச் செய்யப் படுவன என்பதிலும் மனநிறைவு ஏற்படுகின்றது,” என்று அந்த யூதர் சமயவினை முறை (சரியை)களின் பயன்பற்றி விளக்கினார். நோக்கத்தொடர்பற்ற செயல்களுக்கும் நோக்கம் கற்பித்தால் அவை உயர்வும் பயனும் உடையவை ஆகும் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. வினைமுறைகளைச் சீர்திருத்தச் சமயவாதிகள் கண்டிக் கின்றனர். இதற்கும் காரணம் இல்லாமலில்லை. பழைய சமயங்கள் வினை முறைகளை மிகவும் பெருக்கின. நன்மை தீமைச் சார்பற்ற செயல்களை அவை நல்லனவாகக் கருதச் செய்ததனால், நல்லன தீயன என்ற உணர்ச்சிகள் மழுங்கின. ஒழுக்கச் சார்பற்ற அந்த வினைமுறைக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுதலே நல்ல செயல் என்றும், அதில் தவறுவதே கெட்ட செயல் என்றும், கூறி, போலிநன்மை போலித்தீமை ஆகியவற்றை ஒருபுறம் வளர்த்தன. அத்துடன் நல்ல நோக்கம், தீய நோக்கம் ஆகிய அடிப்படை ஒழுக்கப் பாகுபாட்டையும் அவை மறக்கடித்தன. செயல்முறைக் கட்டுப்பாட்டை ஒழுங்காகப் பின்பற்றும் மனிதன், தீய செயல்களையே செய்தாலும் நல்லவனாய்விடுவான் என்ற நச்சுக்கருத்தை இது ஆதரித்தது. சமயவாதிகளிடம் கடவுளன்பு அறிவார்ந்த நல்லாரிடம் மக்கட்பற்று ஆகிய இரண்டும் வேறுவேறு திசைகள் நோக்கினும் கிட்டத்தட்ட ஒரே பலனையே நாடுபவை என்று கூறலாம். சாக்ரட்டீஸீன் இறுதியுரைகளில் இதை நினை வூட்டும் செய்தி ஒன்று தொனிக்கின்றது. “என் செயல்களைக் கடவுள் ஏற்பாரோ, மாட்டாரோ, நானறியேன். ஆனால், இது எனக்குத் தெரியும். என்றும் எப்போதும் நான் அவரை மகிழ்விக்கவே முயன்றுள்ளேன். இம்முயற்சியே அவற்றை அவர் ஏற்கும்படி செய்யும் என்று நம்புகிறேன்,” இயேசு பிறப்பதற்கு ஐந்நூற்றாண்டுகட்கு முன்னிருந்த இப்பெரியாரின் இவ்வுரை களைப் படித்த பேராசிரியர் எராஸ்மஸ் கால எல்லையும் சமய எல்லையும் தாண்டி அவரைக் கிறித்தவ சமயத்தின் திருத்தொண் டராகக் கருத விரும்பியுள்ளார். திருத்தொண்டரை இறைஞ்சும் பிற கிறித்துவரைப் போல, “திருத்தூய்மை வாய்ந்த சாக்ரட்டீஸே! எங்கள் வழி தோய்ந்த உண்மைகளை உம் அருட்பண்பு காரணமாக இறைவன் திருமுன் வைத்து அவர் அருள் வழிப்படுத்துவீராக,” என்று வேண்டுகிறார். அடிக்குறிப்புகள் 1. ஆங்கில முதல் நூல்: கிறித்தவ சமயத்தின். 2. முதநூல்: புறச்சமய அதாவது கிறித்தவரல்லாத நாகரிகம். 9. நாடோடிகள் ஜோஸஃவ் அடிசன் அண்மையில் நான் என் நண்பர் ரோஜர் பெருந் தகையுடன் ஊர்ப்புற வெளியில் உலாவப் போயிருந்தபோது, அருகே நாடோடிக் குழுவரின் கும்பு ஒன்று தாவள மடித்திருப்பதைக் கண்டோம். என் நண்பர் ஊர் அமைதி காவலராதலால், அவர்களைக் கண்டதும் சட்டப்படி அவர்களைச் சிறைப்படுத்தித் தண்டித்தாலென்ன என்று எண்ணினார். ஆனால், இதை முறைப்படி செய்ய அவர் பணியாளும் கணக்கரும் அவருடன் இல்லை. அத்துடன் நினைத்த முதல்வேகம் அடங்கியபின் அவரிடம் அதற்கான துணிவும் மறைந்துவிட்டது. ஊர் நன்மையை நினைத்து இவர்களைப் பகைத்துக்கொண்டால், அமைதி காவலராகிய தம் வீட்டிலேயே ஆடும் கோழியும் திருடுபோகுமே என்று அவருக்கு எண்ண முண்டாயிற்று. இதனால் பொருள் இழப்பும் மனக்கவலையும் மட்டுமின்றி, தன் அமைதி காவலின் மதிப்புக்கே ஊறு நேரலாம் என்ற கருத்தும் மேலிட்டது. இக் காரணங்களால், அவர் மனத்துணிவு மாறினாலும், அவருடைய மனச்சான்று அவர்களைத் தான் தண்டியாமல் விட்டாலும் கண்டிக்கவாவது செய்யத்தான் வேண்டும் என்று தூண்டிற்று. ஆகவே அவர் என்னிடம் இம்மாதிரி நாடோடி களைப் பற்றிய தம் கருத்துக்களை எடுத்துக் கூறினார். “இவர்கள் ஊர்மக்களுக்கு எப்போதும் ஏதாவது சிறு தொல்லை விளைவியாமலிருப்பதில்லை. எங்காவது வெளியில் ஒரு கந்தை காயப்போட்டிருந்தால் போதும், அது அவர்கள் பையில் போய்ச்சேராமலிராது. ஆடு, கோழி, பன்றி ஏதாவது பண்ணையிலிருந்து தப்பித் திரிந்தால் அதை அவர்கள் மெல்லக் கைப்பற்றிக் கொள்வர். இத் தீமைகளைப் பேசாமல் விட்டுவிடாது யாராவது அவர்கள் மீது எதாவது நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால், அவர்கள் பொருள்களுக்கு மேலும் மேலும் தொல்லை வந்துகொண்டுதானிருக்கும். “இதுமட்டுமா? ஆண்டுதோறும் அவர்கள் கிட்டத் தட்ட இந்தப் பருவத்தில்தான் வருவார்கள். அவர்கள் வருகிற சமயம் வேலைக்காரர், வேலைக்காரப் பெண்கள் பெரும் பாலும் வீட்டுக்குள் தரிக்கமாட்டார்கள். இவர்களிடம் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த ஒன்றிரண்டு துட்டுக்களைக் கொடுத்துக் குறிகேட்கத் தொடங்கி விடுவார்கள். எத்தனை தடவை குறி கேட்டாலும் அவர்களுக்கு மனம் நிறைவதில்லை. இளைஞரும் கன்னியரும் தங்கள் வருங்கால வாழ்க்கைத் துணைவர் யார்; எப்படி இருப்பார்கள் என்பது பற்றியோ, தங்கள் நெஞ்சினுள் மறைத்து வைத்திருக்கும் காதல் பற்றியோ, இவர்கள் பசப்பி ஏய்ப்பதைக் கேட்கும் ஆர்வமில்லாமலிருப்பதேயில்லை. இவ்வார்வத்திடையே பலரிடம் நேரடியாக வாங்கும் துட்டோடு, வேறுவகையிலும் அவர்களுக்கு வருவாய் ஏற்பட்டு விடும். பலர் வீட்டுக்குப் போனபின்தான் தம் சட்டைப்பை அல்லது முன்தானை முடிச்சு கத்தரிக்கப்பட்டிருப்பதைக் கவனிப் பார்கள்.” நண்பரின் விரிவுரையை நான் ஆவலுடன் கேட்டிருந்தேன்; ஏனென்றால், எனக்கு இச் செய்திகள் உண்மையிலேயே புதிதாகத்தான் இருந்தது. இதுகண்ட நண்பர், “உங்களுக்கு வேண்டுமானால், ஒரு துட்டை விட்டெறிந்து இவர்களுள் ஒருத்தியிடம் உங்கள் வருங்காலக் குறியைக் கேட்டுப்பார்ப் போம்,” என்று என்னை அத் தாவளத்தின் பக்கம் இட்டுச் சென்றார். எங்களைப் பார்த்துப் புன்முறுவலுடன் நின்றிருந்த ஒரு குழுவப் பெண்ணிடம் நண்பர் சொற்படி துட்டோடு சேர்த்து ஒரு கையை நீட்டினேன். அவள் சொன்ன குறியை எனக்கு இங்கே எழுதக் கை நாணமடைகிறது. நான் அதில் நெடுநேரம் ஈடுபடாமல் நண்பர் பக்கமாகத் திரும்பினேன். ஆனால், அதற்குள் ஐந்தாறு பெண்கள் அவரைச் சுற்றிக்கொண்டு ஆளுக்கு ஒரு விரலாகப் பிடித்து அதன் மீதுள்ள வரைகளையும் புள்ளிகளையும் ஆராய்வதைக் கண்டேன். அவர் என்னைப் பார்க்காமலே “நீங்கள் அத்தனைபேரும் புளுகர்கள். ஒருவராவது என் வாழ்க்கைப்பற்றி எதுவும் கூறப்போவதில்லை ஏன் இந்த வீண் வம்பு,” என்று உரத்துக் கூறிக்கொண்டிருந்தார். ஆனால், பெண்கள் அவர் கையைப் பலபக்கமும் புரட்டிப் பிசைந்து கூர்ந்து கவனிப்பதை அவர் தடுக்கவில்லை. அதையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந் தார். ஒருத்தி, “ஐயா நீர் இன்னும் மணமாகாத காளை யல்லவா?” என்றாள். “அதுதான் எல்லாருக்கும் தெரியுமே, இது சொல்வதில் என்ன திறம்,” என்றார் ரோஜர் பெருந்தகை. இன்னொருத்தி, “உமக்கு ஒரு காதலி யிருக்கிறாள், அவள் காதல் வடமீன்போல மாறாதது. இன்றிரவுகூட நீர் அவளை உம் கனவில் காண்பீர்,” என்றாள் முதல் பெண். அவர் முகம் ஒரே புன்முறுவல் காட்டிற்று. ஆனால் நாக்குப் பசப்பிற்று, ‘இது முழுதும் புளுகு’ என்று. “அவள் கைம்பெண். செல்வ மிக்கவள். நீர் இதுபோலப் பசப்பித்தான் அவளையும் வசப்படுத்தியிருப்பீர்,” என்று மற்றொருத்தி கூறியபோது எல்லாரும் கொல்லென்று சிரித்தனர். ரோஜரும் உடன் சிரித்தார். அவர் சிரிப்பு அவர்களுக்கு அவர்மீது மேலும் உரிமை தந்தது. முதல்வள் அஃது அறிந்து, “அழகு நங்கைகளை உம் சிரிப்பு இனி நெடுநாள் ஏய்க்காது. விரைவில் நீர் ஒருத்தி வலையில் சிக்குவீர்,” என்றாள். அவர், “ஒருநாளு மில்லை, ஒருநாளுமில்லை,” என்று கூறியவண்ணம் அவள் கையில் மறைவாக ஒரு வெள்ளி வைத்தார். மற்றவர்களும் அதேபோல அவர் கையைப் பிடித்துப் பிசைந்து ஆளுக்கு ஒரு வெள்ளி பெற்றபின் எல்லாரும் கலகலவென்ற சிரிப்புடன் கண்ணால் அவருக்கு நன்றி தெரிவித்தனர். நண்பரும் என்னுடன் வந்து சேர்ந்தார். நண்பர் முகத்தில் இப்போது ஒரு குறுகுறுப்பு. அவர் நடையிலும் ஒரு விறுவிறுப்பு. நாடோடிகளைப் பற்றி அவர் தொடர்ந்து பேசினாரென்றாலும், பேச்சின் போக்கும், தொனியும் சிறிது மாறிற்று. “இவர்கள் எப்படியோ சில சமயம் வருங்காலத்தைக் குறிப்பாயறிந்து சொல்லி மக்களை நம்பவைத்து விடுகிறார்கள். எத்தனையோ நன்மக்கள் அவர்களைப் படிப்படியாக நம்பத் தொடங்கியுள்ளனர்,” என்றார். இச்சமயம் ஒரு நொண்டிக் கிழவன் தன் தடுமாறும் கையை நீட்டி இரந்தான். இயற்கையிலேயே இரக்க நெஞ்ச முடைய நண்பர் பையில் கையைவிட்டு ஒரு துட்டு எடுக்கப் போனார். ஆனால், பையில் இதற்காகவே உதிரியாகப் போட்டிருந்த பணங்களெல்லாம் செலவாயிருந்தன. அதிலிருந்த பணப் பையை எடுக்க அவர் முயன்றார். ஆனால் அதுவும் காணப்பட வில்லை. நாடோடிகள் பரிசுகளைப் பெற்றதுடன் நிற்காமல் சட்டைப் பையைக் கத்தரித்துப் பணப்பை, கைக்கடிகாரம் முதலிய யாவும் எடுத்துக்கொண்டனர் என்பது இப்போதுதான் தெரியவந்தது. நண்பர் முகம் சுண்டிற்று. அந்தோ, அவர் ஊர் காவலர். ஆனால் அவரே ஏமாந்தார். ஆயினும் என்முன் இதைக் காட்டிக்கொள்ளாமல், “ஓகோ, இன்று சட்டையை மாற்றிப் போட்டுவிட்டு வந்துவிட்டேன் போலிருக்கிறது,” என்று கூறி, “இரவலனே, உனக்கு இன்னொரு தடவை வேண்டியமட்டும் தருகிறேன்,” என்ற மொழிகளுடன் விரைந்தார். இந்நிகழ்ச்சியின் பின் இந்நாடோடிகளைப் பற்றி நான் மேலும் அக்கறைகொண்டு விரிவாக உசாவியும் ஆராய்ந்தும் பல செய்திகளை அறிந்தேன். வரலாற்றுத் தொடக்கத்திலிருந்து இவர்கள் எல்லா நாடுகளிலும் அவ்வக்காலங்களிலும் திரிந்துவந்திருக்கிறார்கள். பல மொழிகளும் அவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் மொழியும் பல மொழிக் கலவைதான். அவர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த அரசுகளுக்குள் ஒரு தனியரசாகவும் குடியரசுகளுள்ளும் ஒரு தனி உட்குடியரசாக வுமே இயங்குகிறார்கள். மனித உலகின் சட்டதிட்டங்கள், பழக்க வழக்கங்கள் அவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை. எந்த அரசும் அவர்களை வெல்லவும் முடியாது. காரணம் அரசுகளைவிட அவை மனித இயல்பின் குறைகளறிந்து அவற்றின் அடித் தளத்தின்மீது அமைக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் நாடோடித் தனம் நிலையான குடிவாழ்வுடைய எந்த நாகரிகத்தாலும் அவர்கள் தாக்கப்படாமலிருக்க உதவுகிறது. அதேசமயம் மக்கள் நம்பிக்கை, உணர்ச்சி, விழிப்பின்மை, அச்சம், சிறுவர் சிறுமியர் அனுபவமின்மை ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் தங்கள் கைம்முதலாக வைத்து ஆடி வெற்றி பெறுகின்றனர். ஹாலந்துப் பத்திரிகை ஒன்றில் அண்மையில் வெளி வந்த ஒரு நிகழ்ச்சி வரலாற்றுடன் இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். லெய்டனில் இருந்து ஆம்ஸ்டர்டாமுக்குச் செல்லும் படகொன்று புறப்பட்டு மெல்லச் சென்று கொண் டிருக்கையில் ஓர் ஏழைச் சிறுவன் அதில் ஏற முயன்று கரையோரம் ஓடிவந்து கொண்டிருந்தான். படகோட்டி அவனை ஏற்றிக்கொள்ள மறுத்தான் - ஏனெனில் அவனிடம் படகுச் சத்தம் தரக் காசில்லை. சிறுவனோ விடாமல் கெஞ்சிக் கெஞ்சிப் பின்தொடர்ந்தான். படகிலிருந்தவர்களிடையே ஃபிரஞ்சு, ஜெர்மன், டச்சு என்ற மூன்று மொழியாளர் இருந்தனர். அவனும் மூன்று மொழிகளிலும் அனைவரும் இரங்கும் அளவு கெஞ்சிக் கேட்டான். ஒரு செல்வ வணிகர் அவன் தோற்ற நடையிலீடுபட்டு இரங்கி அவனுக்கான கட்டணம் கொடுத்து அவனை ஏற்றிக்கொண்டனர். விரைவில் பிள்ளையற்ற அவருக்கு அவன் பிள்ளைபோலானான். அவன் பழைய வரலாற்றை அவர் கேட்டபோது அவன் உண்மையிலேயே அவர் பிள்ளை என்றும், அவனிடம் அவர் கொண்ட இரக்கம் உள்ளார்ந்த பிள்ளைப்பாசமே என்றும் உணர்ந்தார். சிறு பருவத்திலேயே பிள்ளை திருடப்பட்டதனால் தாய் வருத்தந்தாளாது மாண்டாள். பையன் நாடோடிக் குழுவருடன் சுற்றித்திரிந்து பல மொழி கற்று உலகியலறிவும் செயல்திறமும் பெற்றான். இப்போது செல்வமிக்க தந்தையை ஏற்பதில் அவன் மட்டற்ற மகிழ்ச்சியும் கொண்டான். வறுமையின் கோட்டங்கள் செல்வத்தாலும், ஆதரவின்மையின் கோட்டங்கள் நல் ஆதரவினாலும் முற்றிலும் திருந்தி, அவன் சமூகத்தின் ஒரு நல்லுறுப்பினனானான். நாடோடிகள் வாழ்வின் தனிச் சிறப்புப் பண்புகளுடன் சமூக வாழ்வின் வளமும் இங்ஙனம் அவன் வாழ்வில் ஒன்றுபட்டன. 10. குடும்ப வாழ்வின் நல்லின்பம் சர். ரிச்சர்டு ஸ்டீல்* கவலையருகிடை கலந்தின்பம் படரும்; தவழ்ந்து முத்தம் நாடும் மதலையர், பிந்துதந்தை வரவெதிர் கொள்வர், முந்துறு தாய்மையின் சிந்தைகள் எனவே. - டிரைடென். தம் செல்வத்தின் மதிப்பறியாத செல்வர் உண்டு. அது போலவே தம் இன்ப வளங்கள் அறியாத மக்களும் உண்டு. குடும்ப வாழ்வில் இருந்துகொண்டே தம் வாழ்வில் இன்பமில்லை என்று நினைப்பவர் பிந்திய வகையில் முக்கியமானவர். குடும்ப வாழ்வு வாழ்க்கையின் எல்லாவகை இன்பங்களையும் உட்கொண்ட ஒரு பண்ணை; அதேசமயம் அது வாழ்க்கையின் இன்னல்கள் அனைத்திலிருந்தும் ஒதுங்கி ஆறுதல் பெறும் ஒரு தண்ணிழற் சோலையாகவும் இருக்கிறது. இச் செல்வம் எய்தப்பெற்றும் அதன் வாய்ப்பு வளங்களின் செறிவாலும், சிக்கல் நிலை யாலும் பலர் அதனை முழுதும் பயன்படுத்த முடியாது போகின்றனர். அத்தகையோருக்கு நான் கீழே காட்டும் குடும்ப வாழ்வுக் காட்சி நல்ல தூண்டுதல் தரவல்லது என்று கருதுகிறேன். எனக்கு இதுபற்றிய எண்ணங்களைத் தூண்டிய நிகழ்ச்சி என் பள்ளித்தோழன் வாழ்வில் நான் அண்மையில் சென்று கண்ட காட்சியேயாகும். அவனும் அவன் குடும்பத்தினரும் இலண்டன் நகருக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம் அடிக்கடி என்னை அவன் மனைத்தலைவி இரவு உணவுக்கு அழைப்பதாக அவனிடமிருந்து அழைப்பு வரும். என்னைப் பற்றி என் நண்பன் தன் குடும்பத்தினருக்கு அடிக்கடி பேசிவந்திருந்ததால், விரைவிலேயே குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் நன்கு பழகிவிட்டனர். நண்பன் மட்டுமே எனக்குத் தோழனாயிராமல், ஒவ்வொருவரும் தனித்தனியே தோழராயிருந்தது போன்ற உணர்ச்சி கொண்டனர். குடும்பச் சிறுவரும் சிறுமியரும் என்னை வரவேற்கும் ஆர்வத்தில் நீ முந்தி நான் முந்தி எனப் போட்டி யிடுவர். போட்டியில் பிந்தி விட்டவர்கூட அதனால் சிறிதும் மனந்தளராமல் என் வரவைத் தந்தைக்கு அறிவிப்பதில் முந்த முனைந்தனர். என் வரவு இங்ஙனம் ஒரு சிறு குடும்பவிழா நிகழ்ச்சியாயிருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறுவர் போட்டியிட முந்தினர். ஒருநாள் ஒரு சின்னஞ்சிறு பிள்ளை என்னைப் பெருமிதத்துடன் இட்டுச் சென்றது. இது குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு வியப்புமிக்க நிகழ்ச்சியாயிருந்தது. ஏனெனில் அவர்கள் இரண்டாண்டு நகரத்துக்கு வரவேயில்லை. முந்திய தடவை வந்திருந்தபோது அச்சிறுமி கைக்குழந்தையாகவே இருந்தாள். ஆகவே இரண்டாண்டும் அச் சிறு குழந்தை தன் வளர்ச்சியிடையே என்னை மறவாதிருந்தது கண்டு அனைவரும் வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டனர். உணவு மேசையில் பேச்சுத் தொடங்கியது இதுபற்றியதாகவே இருந்தது. ஊர்க் கதைகள், ஊர் வம்புகள் ஆகியவை மேசைப் பேச்சில் மெல்ல இடம்பெற்றன. நான் நீண்டநாள் மணவினை வெறுத்த முதுகாளையா யிருந்தேன். என்னைப் பற்றிக் குடும்ப மேசைகளில் பல கதைகள் அளப்பது வழக்கமாயிருந்தது. ஊர் வம்பில் தொடங்கிய பேச்சு இங்கும் என்பக்கமாக நாடிற்று. என் பழைய பள்ளித் தோழருள் ஒருவர் புதல்வியை நான் மணக்கப்போவதாக ஒரு ஊர்ப்பேச்சு உலவிவந்தது. அதை வைத்துக்கொண்டு நண்பன் கயிறு திரித்தான். ஏன் பிக்கு (பிக்கர்ஸ்டாஃவ் என்ற அழகிய பெயரின் தேய்ந்து குறைந்த சுருக்கம் இது!) “பள்ளித் தோழர் பிள்ளையையே கட்ட நினைப்பதானால், என்னைவிட உரிமையுடைய பள்ளித் தோழன் வேறு யார் இருக்க முடியும். நம் மேரிக்குத்தான் பதினாறு வயது தொடங்குகிறதே. அவளைத்தான் நீ மணம் செய்துகொள்வதுதானே,” என்றான். உடனே நண்பன் மனைவி, “அவர் எப்போதோ மணம் செய்திருக்க வேண்டும். அந்தக் காலத்து அழகிகளையே விரைவுகாட்டி மணந்துகொள்ளாமல் அவர்களினும் சிறந்த அழகியைத் தேடியிருந்தவர், இந்தக் காலத்து அழகிகளை விரும்பவா போகிறார்?” என்றாள். நண்பனுடன் தனித்திருந்தபோது பேச்சு அவன் குடும்பம் பற்றியே தொடர்ந்தது. என் நண்பனுக்காக அவன் தற்போதைய மனைவியிடம் காதல் தூதுவனாக நான் சென்ற காட்சியை என் நண்பன் எனக்கு நினைவூட்டினான். என் காதலில் நான் எவ்வளவு வெற்றியடைந்தேனோ, அவ்வளவுதான் அவன் காதல் வகையிலும். முதல் முதலில் நானும் நண்பனும் அவளை நாடக மாளிகையில் இருந்தபோதுதான் கண்டோம். நான் நாடகத்தைப் பார்க்க முடியவில்லை. நண்பன் ஓயாது என்னிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனும் நாடகம் பார்க்கவில்லை. நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந் நங்கையையே பார்த்துக் கொண்டிருந்தான். தான் கண்ட அழகியை எனக்கும் காட்ட அவன் அரும்பாடுபட்டான் - என்னையும் படாதபாடு படுத்தினான். அதெல்லாம் எதற்காக என்று நாடகம் முடிந்த வுடன்தான் தெரிந்தது. அவள் யார், வீடு எது என்று அறிந்துவரும் வேலையை அவன் எனக்கு இட்டான். அவனுக்கு மனைவியாய் வரவிருந்த நங்கையை நான் எத்தனை தடவை சென்று கண்டிருக்கிறேன். அவள் என்னிடம் பேச மறுக்கவில்லை. ஆனால், நண்பனை மணம் செய்வது முடியாத காரியம் என்றும், எட்டாத இக்காரியத்தை விட்டுவிடும் படி நண்பனுக்குக் கூறுமாறும் அவள் திடமாகக் கூறிவிட்டாள். என் தோல்விக்கு என் திறமைக் குறைவுதான் காரணம் என்று நண்பன் நினைத்தானோ என்னவோ? பலதடவை சென்று ஒரே விடை கொணர்ந்த பின் இவனுடைய ஆளை - தன் தங்கை கணவனை அனுப்பினான். என்ன வியப்பு! திருமணமே விரைவில் நடந்து விட்டது. நண்பன் இந்தக் கதையைக் கூறி இப்போது கேலி செய்தான். பெண்கள் மறுப்பை அப்படியே ஏற்கும் வெள்ளை யுள்ளந்தான் என் காதலுக்கும் காதல் தூதுக்கும் ஒருங்கே தோல்வியாயிருந்தது என்று அவன் விளக்க வசை கூறினான். நான் அவன் விளக்கத்தையே எனக்குப் பாதுகாப்பாகக் கொண்டு இத்தகைய பொய்ம்மை பெண்களிடம் இருப்பதால்தான் நான் அவர்களுடன் என் வாழ்வைப் பிணைக்க மறந்துவிட்டேன் என்று கூறிச் சமாளித்தேன். நண்பன் காதல் தொடங்கியபோது இப்போதைய அவன் மனைவிக்குப் பதினைந்து ஆண்டு. இப்போது முதல் புதல்வி அவ் வயது தாண்டிவிட்டாள். ஆண்டுகளுக்கேற்ப அவள் இயல் பாகவே மேனி தளர்வடைந்திருந்தாள். நண்பன் அவள் உடல்நலம் பற்றிக் கவலை தெரிவித்தான். நான் அதையும் மணவாழ்வின் கண்டனமாகப் பயன்படுத்தினேன். மணவாழ்வில் கண்ட பலன் இதுதானே. “உடல் மிகுதி உழைப்பாலும் கவலைகளாலும் விரைவில் கேடுறுகிறது,” என்றேன். “குடும்ப வாழ்வின் அடிப் படையையே நீ அறியாததால்தான் இன்னும் உன் வற்றல் வாழ்விலும் வற்றல் கோட்பாடுகளிலும் பிடிவாதமா யிருக்கிறாய். அவள் இளமைப் பொலிவு குறைந்துவிட்ட தென்பதைத்தான் நீ காண முடியும். எனக்கு அன்றிருந்த அவள் பொலிவு குறையவேயில்லை. கூடித்தான் வந்திருக்கிறது,” என்றான். “மணவாழ்வின் பொய்ப்புளுகுகளுள் இது ஒரு துணிந்த புளுகுதான்,” என்றேன் நான். அவன் மீண்டும் விளக்கம் தரத் தொடங்கினான். “அன்ப! புற அழகு அழகுக் கோயிலுக்கு ஒரு நுழை வாயில் மட்டுமே. நான் என் காதலியை விரும்பி மணந்த போது அந்த அழகு குறைவற்ற முழு நிலவாகத் தான் இருந்தது. அதன் தண்ணொளியில் என் பழைய வாழ்வின் வடுக்கள் எதுவும் இல்லாமல் நான் புதுவாழ்வு பெற்றேன், ஆனால், புதுவாழ்வில் புதுக்கவலைகள் பிறந்தன. நான் நோயுற்றேன். அதன் தடம் அவள் முகத்தில் படர்ந்தது. அவள் என் நலனுக்காக அரும்பாடுபட்டாள். நான் மீண்டு நலம்பெற்றபின், அவள் அழகிடையே ஒரு தியாகத் தழும்பு ஏற்பட்டது. அது வெளி உலகுக்கு அவள் அழகைக் கறைப்படுத்துவதாகத் தோற்றக்கூடும். ஆனால், எனக்கு அது அவள் அன்புக்கு ஓர் அறிகுறி. இத் தழும்படுத்துப் பிற தழும்புகள், கவலைக்கோடுகள் எழுந்தன. அவை என் குழந்தைகளின் பிறப்பு வளர்ப்புகளையும் அவர்கள் நலனுக்காக எனக்கு முற்பட்டு அவள் உழைத்த உழைப்பையும் காட்டும் சின்னங்கள். அவள் கன்னியழகு மனையழகாயிற்று. பின் தாயழகாய் மலர்ந்தது. அதன் இதழ்கள் என் குடும்ப முழுமையிலும் மணம் வீசுகின்றன. ஆகவே அவள், அழகு குறைவதாகத் தோற்றுகிறதே தவிர, உண்மையில் வாடுகிற மகிழ மலர்போலப் புத்தழகும் புதுமணமும் பெருக்கவே செய்கின்றன. முன் அவளைப் பார்த்தால் எனக்கு ஒரு கிளர்ச்சியும் சலசலப்பும் ஏற்படும். கவலைகள் எல்லாம் மறப்பேன். இப்போதோ அவளைப் பார்த்தால் நான் இன்ப துன்பங்கடந்த ஒரு நிறை அமைதியைப் பெறுகிறேன்.” காதலறியாத என் கல்மனத்தின்மீது நண்பன் இத்தனை கருத்து விளக்கங்களையும் விடாது பொழிந்து கொண் டிருந்தான். அவன் இன்னும் என்னென்னவெல்லாம் பேசி யிருப்பானோ, எத்தனைநேரம் பேசியிருப்பானோ எனக்குத் தெரியாது. பேச்சிடையே எப்போதோ அவன் என்னைக் கவனித்திருக்கிறான். நான் கடுந்துயிலில் ஆழ்ந்துவிட்டது. கண்டு புன்முறுவலுடன் போய்விட்டானாம். நான் எழுந்து பார்த்தபோது அவனில்லை. மற்றொரு சமயம் நண்பன் வேறொரு பண்பாடினான். கவலையற்ற அவனுக்கு இப்போது ஒரு புதுக்கவலை தோன்றிற்று. அவள் ஒரு விலைமதிக்கமுடியாத முழுமணி. ஆனால் அவள் ஒரு இன்றியமையாத முழுமணியாய் விட்டாள். “சிறுவர் சிறுமியர் சதங்கை ஓசை கேட்கும்போதெல்லாம் அவன் உள்ளம் பதறும் - இவள் இல்லாவிட்டால் இவர்களை யார் பார்ப்பார்கள் என்று, அவள் உடல் தளர்கிறது, உள்ளம் மெலிகிறது, முகம் வாடுகிறது, கண்ணொளி மங்குகிறது. அந்தோ, காலம் என்னிடமிருந்து அவளைக் கவர்ந்து சென்றுவிட்டால் என்செய்வேன். நண்பனே, இந்தப் பெருங்கவலை என்னை வாட்டுகிறது. நான் உன்னைப்போல மணமாகாத காளையாயிருந்தேனில்லையே என்ற எண்ணம் இப்போது அடிக்கடி எனக்கு உண்டாகிறது,” என்று அவன் அங்கலாய்த்தான். அச்சமயம் ஒரு சிலம்பொலி கேட்டது. அந்தப் பெடையன்னம் தன் குஞ்சுகளுள் ஒன்றையிடுக்கிக் கொண்டு அங்கே வந்து நின்றாள். “என்ன, என்மீது குறைசொல்லத் தொடங்கிவிட்டாரா? அன்பரே, இவர் சொற்கள் எதையும் நம்ப வேண்டாம். அத்தனையும் இவர் உடல்நலத்தின் கோளாறுகள் தான். அத்துடன் இவர் வெறும் சோம்பல் பேர்வழி. பழைய பள்ளித்தோழர் வந்திருக்கிறாரே, அவருக்குத் தக்க பரிசு ஏதேனும் தர வேண்டாவா என்ற கவலை இருக்கிறதா பாருங்கள். நான் தான் அடுக்குப் பலகைகளையெல்லாம் புரட்டி இவருக்குத் தெரியாமல் ஒளித்து வைத்தவற்றையெல்லாம் தேடி எடுக்க வேண்டியிருக்கிறது,” என்று சொல்லிக்கொண்டு நல்ல ஃவிரஞ்சு இனிப்புத்தேறல் புட்டி ஒன்றையும், பூப்போட்ட பொன் விளிம்புடைய கோப்பைகள் இரண்டையும் எங்கள் முன் வைத்தாள். நண்பன் வெளியே போயிருக்கும்போது ஒருநாள் மனைவி இதுபோலக் கணவன் உடல்நலம் பற்றிக் கவலை தெரிவித்தாள். நாடகமேடைக்கு ஒருநாள் புறப்பட்டோம். நண்பன் வண்டியிலிருந்து அவளைக் கீழே இறக்கக் கையுதவப் போனான். அவள் உங்களுக்கு இப்போது பழைய வலு இல்லை. நம் நண்பர் என்னை இறக்கிவிடுவார் என்றாள். நண்பன், “ஐயோ, நண்பன் கன்னியரை இறக்கிவிடத் தயங்கியே கடிமணம் செய்யாதிருக்கிறான். நீயோ இப்போது நாலு பிள்ளைகளுக்குத் தாய். வேண்டுமானால் அவன் நம் மேரியை இறக்கிவிடட்டும்” என்றான். “ஆம். இருவரும் சேர்ந்தால்கூட என்னை இப்போது தூக்கமுடியாது,” என்றாள் அவள். இக்குடும்ப நாடகத்துக்கு மேடை நாடகம் எதுவும் ஈடில்லை என்பதை வாசகர்களே காணலாம். ஆனால், இந்த நாடகத்தை நுகர உள்ளங்கலந்த அன்பு, கள்ளமற்ற வாய்மை, பிறர் குறிப்பறியும் நுண்ணறிவு ஆகியவைதான் வேண்டும். இவை இருந்தால், குடும்பவாணர்களுக்கு இன்பத்தை நாடி வேறு எங்கும் செல்லவேண்டியதில்லை. அடிக்குறிப்பு 1. ளுசை சுiஉhயசன ளுவநநடந. 11. பிரிவுகாலக் காட்சி சர். ரிச்சர்டு ஸ்டீல் “இன்பத்தில் மிதந்து பண்பழியாமலும், துன்பத்தில் ஆழ்ந்து தட்டுக்கெடாமலும் இரண்டின் பண்புகளையும் மேற்கொள்வதே வாழ்விலும் சரி, கலையிலும் சரி, அழகும் கனிவும் தருவதாகும்.” - பிளினி நறுமணம் வீசும் காலைப்போதில் நான் இன்பமாக என் மாடி அறையில் உலவிக் கொண்டிருக்கும்போது, ஒரு வண்டி என் வீட்டின்முன் வந்து நிற்பதையும் அதிலிருந்து ஓர் இளைஞன் என்னை நோக்கி விரைவதையும் கண்டேன். அவன் என் நண்பன் புதல்வன். அவன் வயதில் அவன் தந்தை இருந்த காலமுதல் அவரை நான் நன்கு அறிவேன். ஆகவே, நான் ஆர்வத்துடன் அவனை முன்சென்று வரவேற்கப் போனேன். ஆனால், அவன் எதுவும் வாய் திறவாமலே என் கைகளைப் பிசைந்துகொண்டு கண்கலங்கி விம்மத் தொடங்கினான். ‘நண்பனுக்கு இன்னல் ஏதாவது உண்டா?’ என்றுதான் உள்ளம் உடனே துடித்தது. “அப்பா, அழாதே. அப்பா நலந்தானே! என்ன செய்தி?” என்றேன். “அப்பா நலமே. அம்மாதான்...” அதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை. அவன் தொண்டை கம்மிற்று. நான் வேறு சொல்லாடாமல் அவனுடன் வண்டியேறி னேன். வழியில் அவன் விட்டுவிட்டுக் கூறிய குறிப்புக்களால், தாய் உயிர்பிரியும் தறுவாயில் இருக்கிறாள் என்றும், மதகுருவின் இறுதி நன்மொழிகளுக்காகப் பெற்ற ஓய்விடையே, அவன் தந்தை துயர்கருதி ஓடோடி வந்ததாகவும் அறிந்தேன். தன் துயரிடை யேயும் தன் தந்தை துயரின் அளவறிந்து அதற்காக ஓடிவந்த பிள்ளையைக் காண எனக்குத் துன்பத்திடையிலும் மனநிறைவு ஏற்படாமலில்லை. நண்பன் மனைவியின் பிரிவினும் நண்பன் துயர் பெரிது; அதை ஆற்றுவதும் அரிது என்பதை நான் உணர்ந்தேன். பிரிந்து செல்பவர் மனநிலையைவிடப் பிரிந்து வாழவேண்டும் நிலையிலுள்ளவர் மனநிலை எவ்வகையிலும் குறைந்ததன்று. ஆகவே, என் நண்பனுக்குரிய கடமையைச் செய்வதில் நான் கருத்துச் செலுத்தினேன். சாவின் வாயிலில் நிற்கும் அப் பெண்மணியின் பெருமையையும் நற்பண்புகளையும் நண்பனின் நிலையே நன்கு எடுத்துக்காட்டிற்று. வாழ்நாள் முழுவதும் எல்லாத் துன்பங் களிலும் கணவனுக்கு ஆறுதல் தருபவள் மனைவி. அவள் பிரிவு கணவனுக்கு எத்தனைவகையில் ஆராத்துயரமாகத்தக்கது என்று கூறத் தேவையில்லை. தாயை இழந்த பிள்ளைகள் படுந்துயர், அப் பிள்ளைகள் என்றும் அறியமுடியாத நிலைமைகளை எண்ணி அவர்கள் சார்பில் தந்தை படுந்துயர் ஆகிய இவை அவள் பிரிவால் அவனுக்கு ஏற்கெனவே ஏற்படும் அவள் கையற்ற நிலையைப் பன்மடங்கு பெருக்குகின்றன. ஒரு துயர் உள்ளத்தைத் துளைத்து ஆறுமுன் மறுதுயர் தாக்குகின்றது. பிரிவு நேரத்தில் ஆடவனுக்குள்ள பேரிடர் பிரிவன்று, பிரிவுபற்றிய நினைவும் துயருமே. வாழ்நாள் முழுதும் பிரிவைத் தாங்கப் போகும் அவனுக்கு அந்நேரத்தில் அப்பிரிவைத் தாங்க, அதிலிருந்து மனதைச் சிறிது திருப்ப, அத்துயரில் அவன் தந்நிலை யழியாமலிருக்க, அவனுக்கு உதவி தேவையாகிறது. இயற்கையின் அன்புவலை பிரிவோர் துயரினும் பாரிய துயரைப் பிரிவுக்கு ஆளாகுபவர்கட்குத் தருகிறது. நண்பன் வீட்டில் நுழையுமுன்பே உள்ளிருந்து இருவர்க்கும் பழக்கமான மற்றொரு நண்பன் எதிரில் வரக் கண்டேன். அவன் முகமும் துயர் தோய்ந்திருந்தது. ஆனால், அவன் தன்னடக்க வலிமையும் ஆண்மையும் அவன் நிமிர்ந்த பார்வையில் காணப் பெற்றன. அவனைக் கண்டதே எனக்குச் சிறிது ஆறுதல் ஏற்பட்டது. ஏனெனில், என் நண்பன் துயரை நான் ஒருவனே ஆற்றுவது என்பது எவ்வளவு அருமை என்பது எனக்குத் தெரியும். பிறர் நோய் காணக்கூட அவன் பொறுக்க மாட்டாதவன். இப்போது அவன் முன்னிருப்பது சாவு, தன் உயிர்த் துணைவியின் சாவு. அதன்முன் அவன் கருதிய நைந்துலர்ந்த சருகுபோல் துடிதுடிக்காமல் இருக்க முடியாது. ஆனால், இப் பொது நண்பன் உணர்ச்சிப் பெருக்கத்துக்கு இடந்தராத அறிவுத்திறம் படைத்தவன் என்பதை முன்பே பல தறுவாய்களில் கண்டிருந்தேன். அவன் இந்த நேரத்தில் எதுவும் என்னுடன் கூறவில்லையாயினும், அவனைக் கண்டதே எனக்குச் சிறிது தெம்பு தருவதாயிருந்தது. துன்பத்திடையே பொதுநண்பன் சொற்கள் சிறிது ஆறுதல் தந்தேயிருக்க வேண்டும் என்பதை நான் நுழையும்போது இருந்த அமைதி நன்கு காட்டிற்று. ஆனால், வாயிலில் நுழைந்தவுடனே நண்பன் என்னைக் கட்டிக் கொண்டு கோவெனக் கதறினான். குழந்தைகள் ஒவ்வொருவரும் அவரவர் வயதுக்கும் அறிவுத் திறத்துக்கும் குணத்துக்கும் ஏற்ற அளவில் பலவாறாக எங்களிரு வரையும் சூழ்ந்து கலங்கினர். தாயின் படுக்கையருகிலிருந்து கொண்டு அவள் இறுதித் தேவைகளையே கவனித்துக் கொண்டிருந்த மூத்த புதல்வி சிறிது முகந் திருப்பிக் கண்ணீர் ஒழுக்கினாள். துயரம் இன்னதென்றறியாத சிறுவன் மூத்தோர் அழுவது கண்டு அழுதான். துன்பத்தை ஏற்று அமைதியுடன் இருந்த ஒரே ஆள் உயிருடன் போராடிக்கொண்டு உலகினின்று விடை கொள்ள முனைந்த தாய்மட்டுமே. பிறர் துயர் அவளை முற்றிலும் எட்ட வில்லையாயினும், அதை அவள் உணர்ந்து கொண்டாள் என்பதை அவள் நரம்புத்துடிப்புக் காட்டிற்று. அவள் தாயுள்ளம் அவர்கள் துயர்கண்டு கனிவுற்றிருக்க வேண்டும்; ஆனால் அந்தச்சமயம் பிரியும் அவளுக்கு அதுவே ஆறுதலாகவும் அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. துயர் அவளுக்குத் துயராக மட்டுமில்லை. அவள் அன்புக்குரிய சின்னமும் அதுவே. சாவுக்குமுன் ஏற்படும் தெளிவு இவ்விடத்தில் எல்லாரை யும் மலைக்கவைத்தது. நண்பன் கதறலும், என் குரலும் அவள் ஓய்ந்த நெஞ்சத்தை விழிப்பூட்டியிருக்க வேண்டும். அவள் என்புறமாகத் திரும்ப முயன்றாள். நான் அவள் பக்கம் விரைந்தேன். கண்களைத் திறந்து என்னை அவள் நோக்கிய நோக்கு அந்த நேரத்தில் என் வரவுக்காக நன்றி தெரிவிப்பது போலிருந்தது. அவள் உதடுகள் சிறிது அசைந்தன. நான் கூர்ந்து காது கொடுத்தேன். “இந்த நேரத்தில் உங்கள் நண்பரைத் தனியே விட்டுவிடாதீர்கள்” என்ற வாசகம் மிக மெல்லிய குரலில் வெளிப்பட்டது. அது கிட்டத்தட்ட அவள் இறுதி மூச்சின் வலிவாயிருக்க வேண்டும். அவள் கண் மேல்நோக்கியது. அதில் இன்னதென்று கூறவொண்ணாத அமைதியின் கனிவு சிறிது நேரம் ஒளி வீசிற்று. பின் அது சாவின் வண்ணத்தில் கலந்தது. அவ்விறுதிக் கனிவு அவள் குடும்ப வாழ்வின் நிறைபண்புக்கு ஒரு சான்று. கடமை நிறைவேற்றிய தன் உள்ளத்தை அவள் கடவுளிடம் ஒப்படைத்தாள். உயிர் அவள் உடலை விட்டேகிற்று. நண்பன் உறுதி அவன் உள்ளத்தைவிட்டு அகன்றது. அவன் அழவில்லை, கதறவில்லை. ஒரே ஒரு வேதனைக் குரல் அவனிடமிருந்து வெளிப்பட்டது. அவன் உணர்விழந்து சாய்ந்தான். கீழே விழாது நான் அவனைத் தாங்கிக் கொண்டேன். பிள்ளைகள் அனைவரும் கொண்ட திகிலை அளவிட்டுக் கூற முடியாது. தாயிறந்த துயரிடையே தந்தையையும் இழந்தோமோ என்று அவர்கள் கலக்கமுற்றனர். கல்லும் உறுதிகெடும் அந்த நேரத்தில் என் நண்பன் பற்றிய கவலை ஒன்றே எனக்கு நிலை தந்தது. நான் அவனைப் பக்கத்தறைக்கு இட்டுச் சென்று முகத்தில் நீர் தெளித்து விசிறி, அவனை உணர்வு நிலைக்குக் கொண்டு வந்தேன். அதன்பின் என் துயரால் அவன் துயரைச் சிறிது தணித்து அவன் எண்ணங் களைக் குழந்தைகள்பால் செல்லவிட்டேன். குழந்தைகள் துயரம் - பெரிய குழந்தைகளின் வாய்விடாத் துயரம் ஒருபுறம், சிறு குழந்தையின் துயரறியா மலைப்பு, மறுபுறம், இரண்டுமே - அவனுக்குப் புதுத் துயர் தந்து கவலையும் பொறுப்பும் ஊட்டி முதல் துயரைத் தாங்கும் வலுத் தந்தன. அவன் துயரமுற்றும் அச்சமயம் குழந்தைகள் பற்றிய துயரமாக உருகி ஓடின. அடங்கிக் குமுறிய துன்பவெள்ளம் பீறிட்டுப் பாய்ந்தோடிற்று. என் ஆறுதல் பெரும்பகுதி சொல்லில் அமைய முடிய வில்லை. நான் நண்பனுடனிருந்தேன். சிறு செய்திகளில் கவனம் திருப்ப முயன்றேன். அவனும் அறிவான், அது என் நட்பின் சூழ்ச்சி என்று. ஆனால் சூழ்ச்சிகள் என்று தெரிந்தும் அச்சமயம் அவன் பற்றும் பற்றுக்கோடு வேறு இல்லை. நீரில் தத்தளிப்பவன் துரும்பு என்று தெரிந்தும் அதனை எட்டிப் பிடிப்பதுபோல் அவன் என் நட்பின் சிறு சின்னங்களைப் பற்றித் தன் துயர்க் கடலில் மிதந்தான். நண்பர் பிரிவுத் துயரிலாவது பங்குகொள்ள முடியும், சிறிது ஆறுதல் கூற முடியும். அது கைகால் துண்டிக்கப் படும்போது படும் துயரம் போன்றது. ஆனால், பிரிவுற்ற வாழ்வின் நீடித்த துயரத்தை உறுப்பின்றி வாழும் உடலின் துன்பத்தை எவ்வாறு எளிதிற் பகிர்ந்துகொள்ள முடியும்? என் நண்பனது வாழ்நாள் முழுதும் அத் துயரம் எவ்வளவு ஆறினாலும் அதன் தடம் அவனை விட்டகலவில்லை. வெளிப்புண் ஆறினாலும் அகப்புண் மாறவில்லை என்பதை அவன் முகம் காட்டிற்று. பிற இன்பங்களில் மனத்தை ஈடுபடுத்துதல், வாழ்வின் அடிப்படைக் கடமைகளில் கருத்துச் செலுத்துதல், வாழ்வின் தொலை நோக்கம் ஆகியவற்றைப் பற்றிய மெய்யறிவு பெறுதல் இவையே அப் புண்ணை ஓரளவு ஆற்றவல்லது. இம் முயற்சி களில் ஈடுபட்டே நான் என் நண்பனைத் துன்பக் கேணியிலிருந்து கூடியமட்டும் நெடுந்தொலை விடுவிக்க முடிந்தது. கணவன் மனைவியர் ஒரே வாழ்க்கையை ஒருவரூடாக மற்றவர் துய்ப்பவர் ஆவர். ஒரு பொருளையே இரண்டு கண்கள் பார்ப்பது போன்றது அவர்கள் வாழ்வு. ஆகவே, ஒருவர் பிரிந்தால் ஒருவர் துயரம் பிரிவுத் துயரம் மட்டுமன்று. உலக வாழ்வின் ஒவ்வொரு பொருளும், செய்தியும் அவர்கள் தொடர்பை ஓயாது நினைவுபடுத்துவதுடன், காலற்றவன் ஓட்டம்போல் ஒவ்வொரு படியிலும் அப்பிரிவின் விளைவை அவர்களுக்கு உறுத்திக் காட்டிக் கொண்டேயிருக்கும். இவ்வுண்மையை மில்ட்டன் தன் காப்பியத்தில் நன்கு விளக்கிக் காட்டியுள்ளார். ஏவா வானுலகத்தின் இன்பங்களிடையே கூட, ஆதாம் இல்லாக் குறையால் எந்த இன்பத்திலும் துன்பத்தையே அடைவதாக அவர் சித்தரித்துள்ளார். நின்னுடன் உலவுறும் காலை, காலம் உன்னிலன், பருவமும் போதும் ஒன்றெனக் கருதினன்; கதிரவன் எழுந்திடும் போது வருசிறு பறவைகள் மகிழ்வுறப் பாடின. பனித்துகள் மீதொளி தெறிக்கும் பகலவன் தனித்தனி மலரிலும் தழையிலும் ஒளிர்ந்தான். மழையினில் மண்பெறு நறுமணம் உணர்ந்தேன் விழைவுறும் மாலையில் தென்றல் அயர்ந்தேன். இரவின்நல் அமைதியும் வானம் பாடியும் பரவிய நிலவும் பன்மணி மீனும் யாவும் ஒருதக உவகைத் திறமே மேவின. துன்பமும் இன்பமாய் மிளிர்ந்தது. அன்று மண்ணுல கவ்வா றிருந்தது; இன்றோ வானுலகு இன்ப மறுத்தது! காலையும் பகலும் கதிரவ னொளியும் மாலையும் இரவும் மழையும் நிலவும் பறவையும் மலரும் மணம்தரு பொருள்களும் பிறவுள அமைதியும் இன்பமும் யாவும் நீயிலை யாதலின் நீடுறு துன்பமே ஆயிலங் கிடுதல் அறிந்தனன், அன்பே! 12. விளக்குமாறு - ஓர் ஆராய்ச்சி1 ஜோனதன் ஸ்விஃவ்ட் அதோ மூலையில் கிடக்கின்ற தேய்ந்த கட்டையைப் பாருங்கள்; அது இப்போது யாராலும் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. ஆனால், ஒரு காலத்தில் அது தழைத்து வளரும் நிலையில் காட்டில் மரத்துடன் மரமாய், உயிர்ச்சாறு நிரம்பி யதாய், கப்பும் கவரும் விட்டு இலை தழைகள் போர்த்ததாய் இருந்ததை நான் அறிவேன். மனிதன் அதன் உயிரை வாங்கி அதைக் கடையாக்கினான். அதன் பின் இயற்கையுடன் போட்டியிட்டு, கப்புக் கிளைகளிலிருந்த இடத்தில் ஈர்க்கோலும் சுள்ளியும் வைத்துக் கட்டினான். உயிருள்ள உறுப்பு உயிரற்ற கட்டையாயிற்று. முன்பு அது தலை நிமிர்ந்து நின்று தனக்கும் பிறர்க்கும் பயன் தந்தது. பிற்காலத்திலோ அது காலை வானோக்கித் தலையை நிலத்திற் படியவைத்துத் தலைகீழாக வேலை செய்ய வேண்டியதாயிற்று. மரக்கிளை விளக்குமாற்றுக் கட்டையாயிற்று! அது மட்டுமா? மிகக் கீழ்த்தர வேலைக்காரிகள் முதல் அதன் காலைப்பிடித்துத் தலையை நிலத்தில் படிய வைத்துக் குப்பை கூளங்களிடையே அளைய வைக்கின்றனர். இறுதியில் அதன் முற்கால வாழ்வையோ, இடைக்காலப் பயனையோ கூடப் பாராமல், இப்படிக் குப்பையுடன் குப்பையாக எறிந்துவிடுகின்றனர், அல்லது தீயிலிட்டுக் கொளுத்தி விடுகின்றனர்! இவ் விளக்குமாற்றுக் கட்டையைப் பார்க்கும்போது என்னால் ஓர் ஆழ்ந்த பெருமூச்சு விடாமல் இருக்க முடிய வில்லை. “அந்தோ, உன் ஊழ் இருந்தவாறு என்னே! நீயும் மனிதனைப் போலவா போய்விட வேண்டும்?” என்று எண்ணாமலும் இருக்க முடியவில்லை. ஆம். இயற்கையின் திருக் கையிலிருந்து மனிதன் திண்ணிய உடலுடன், உறுதிவாய்ந்த உள்ளத்துடனுந்தான் வெளிப்பட்டான். அவன் தலைமயிர் அவனுக்குரிய மயிராக இருந்து மழமழப்புடன் தான் வளர்ந்து கொண்டிருந்தது. அறிவுடைய செடியினம் என்னும் படி இலை தழைகள் போல் முடி வளர்ந்து பளபளப்பாகத் தொங்கிற்று. அதில் அவன் நெய்யிட்டுப் பூசினான். அணிமணி முடிகள் அணிந்தான். ஆனால் அந்தோ மட்டற்ற குடி, மட்டுமீறிய இன்பவாழ்வு, செயற்கை வாழ்க்கை முறை ஆகியவற்றால், அரிவாளால் வெட்டப்படும் மரக்கிளைகள்போல, அம் முடிகள் உதிர்ந்தன. அவன் மொட்டையானான். இயற்கை யழிந்தது. செயற்கை தழைக்க லாயிற்று. பொய்ம்முடிகளும்* பொய்ம்மலர் களும் பொய் அணிமணி மூடிகளும் தோன்றின. இப்போது அவன் தலையில் அவன் முடி இல்லை. வேறு எந்த விலங்கின் முடியோ, அல்லது வேறு எந்த மனிதர் முடியோ இடம் பெற்றுவிட்டது! விளக்குமாற்றுக் கட்டையின் புதிய கிளைகளில் நிலத்திலுள்ள தூசி படிந்திருப்பது கண்டு, கலையின் செயற்கைத்திறம் இத் தலைமுடி மீதும் ஒருவகைப் பொடி* தூவிற்று. உயிருள்ளமரத்தின் இலை தழைகளும் அதன் நிறமும் அதற்கே உரியவை; அதிலேயே வளர்ந்தவை. ஆனால் விளக்குமாற்றின்மீதும் மனிதன் தலை மீதும் உள்ள தழைகிளைகள் அவற்றுக்கே உரியவையல்ல. அவற்றுக்கு நிறம் தரும் பொருள்களும் அவற்றிலேயே தோன்றியவையல்ல. விளக்குமாற்றுக் கட்டை எப்போதாவது நம்முன் வந்து, “இயற்கையில் என் மீது வளர்ந்த கப்புக்கிளைகளை விட இதோ என் மீது வைத்துக் கட்டப்பட்ட குச்சுக்கள் சிறந்தவை. இயற்கை மரத்தழைகளின் நிறத்தைவிட இதோ உயர்குல மாதர் அறைகளில் சிந்திய பொடிகள் தோய்ந்த என் தலைப்பின் நிறம் உயரியது,” என்று கூறினால் நாம் யாவரும் அலைக்கழித்து நகைக்கவே செய்வோம். ஆயினும், அதே செயலைச் செய்யும் ஒப்பனைக் கலைஞரை நாம் மதிக்கிறோம். என்ன ஓரவஞ்சம் நமக்கு! பிறர் குறைகண்டு நகைப்பதில் நாம் ஒப்புயர்வற்றவர்கள்; நம் குறை நமக்குத் தோன்றுவதில்லை. ஒருவேளை, “விளக்குமாறும் மனிதன் நிலையும் ஒப்புடையதல்ல; ஏனெனில் இயற்கையின் அமைதியை விளக்குமாறு தலை கீழாக்குகிறது; தலைகீழாக, கால்மேலாக அது இயங்குகிறது,” என்று நீங்கள் கூறக்கூடும். ஆனால், மனிதன் மட்டுமென்ன, இதற்கு மாறுபாடாகவா இருக்கிறான். அவன் விலங்கியல்பு அவன் அறிவுத்திறத்துக்கு மேம்பட்டு அதன் மேலேறித்தானே உலவுகிறது. அவனும் தலை நிலத்தில் புரள, தன் உயர்குறிக்கோள்களை நிலத்திலிட்டுத் துவைத்து, தன் கீழ்த்தர எண்ணங்களையும் தன் நலங்களையும் உயர்வாகக் கொண்டு தானே இயங்குகிறான்? இக் குற்றங்களை வைத்துக்கொண்டு அவன் பெருமையுடன் வீம்படித்துக் கொள்வதுதான் என்ன? குற்றங் குறைகளை, அகற்றிச் சீர்திருத்தம் செய்பவன், மூலை முடுக்குகளெல்லாம் தேடி மாசு போக்குபவன், பெருத்த இயக்கங்களைத் தோற்றுவிப்பவன் என்பதுதானே? இவை யனைத்தையும் விளக்குமாறும் செய்கிறது! ஆனால், அது பெருமையடித்துக் கொள்வதில்லை. மேலும் இறுதிநாட்களில் மனிதன் பெண்களுக்கு, அதிலும் அறிவும் அனுபவமும் குன்றிய பெண்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறான். (விளக்குமாறும் பெண்டிரிடம், பெரும்பாலும் பணிப் பெண்களிடம் கிடந்துழல்கிறது). முடிவு காலத்தில் மனிதனும் நிலத்தில் எறியப்படுகிறான் அல்லது எரியில் கொளுத்தப்படுகிறான்... (விளக்குமாறும் குப்பையில் புதைபடுகிறது, அல்லது எரிக்கப்படுகிறது)! அடிக்குறிப்புகள் 1. இக்கட்டுரை வசையெதிர்ப்பு நாடியது. ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கத்தை ஒட்டிப் பழமை, புதுமைக் கட்சிகள் இலக்கியத் துறையில் ஏற்பட்டன. ஸ்விஃவ்ட் அதில் ஈடுபட்டு ராபர்ட் பாய்ல் என்ற அறிஞரை எதிர்த்தார். அவர் ஆராய்ச்சித் திறம் பற்றிய கிண்டலே இக்கட்டுரை. இக்கட்டுரை எழுத நேர்ந்ததற்கான காரணமும் சுவைகரமானது. ஸ்விஃவ்ட் பார்க்லி பெருமாட்டியின் குடும்ப நண்பராகவும், குடும்ப மதகுருவாகவும் செயலாற்றி வந்தார். சமய, ஆன்மிக நூல்களைப் பெருமாட்டிக்காக அவர் வாசிப்பது வழக்கம். பெருமாட்டிக்காக ராபர்ட் பாய்லின் கட்டுரைகளைப் படிக்க நேர்ந்தபோது, அவர் விரைவில் அதை வெறுத்தார். அப் புத்தகத்தை எடுத்துச் சென்று அதில் இக்கட்டுரையை ஒரு தாளாகச் சேர்த்து அதனை வாசித்தார். பாய்லிடம் உள்ள பக்தியால் அம் மாது வியப்படையவில்லை. ஆனால், பிறர் முன்னிலையில் அதுபற்றிப் பேசியபோது, பாய்ல் அப்படி ஒரு கட்டுரை வரையவில்லை என்று அவர்கள் கூறினர். அதன்மீது புத்தகத்தை யாவருக்கும் பெருமாட்டி காட்டினாள். அதில் ஸ்விஃவிட்டின் கையெழுத்தைக் கண்டு அனைவரும் நகையாடினராம். 2. துடியேவாயn ளுறகைவ. 3. பொய்ம்முடிக் கற்றை அணிவது 18-ஆம் நூற்றாண்டில் பெரு வழக்காயிருந்தது. 4. தலைமயிருக்கான சுண்ணப் பொடி (ழயசை ஞடிறனநச). 13. இராக்காலச் சிந்தனைகள் ஆலிவர் கோல்ட்ஃச்மித்1 மணி இரண்டடித்துவிட்டது. கரண்டு கரண்டு எரிந்த விளக்கொளி துள்ளிக் குதித்து அடங்கிவிட்டது. காலந் தவறாது குரலெழுப்பி வந்த இரவின் காவலர்கூடக் கண்ணயர்ந்து கடமை மறந்தனர். அயரா உழைப்பு அயர்ந்து உறங்குகிறது; அமைந்த வாழ்வினரும் அயர்ந்து தூங்குகின்றனர். இருளின் எல்லையற்ற பேரரசில் வாடை தங்குதடையின்றி ஆணை செலுத்துகிறது. கொலைஞர், விருந்தயரும் இன்பவேடர் ஆகியவர்களுடன்கூட முறிந்த வாழ்வினரும் முனைந்த சிந்தனையாளரும் மட்டுமே விழிப்புடன் தோழமை கொண்டுள்ளனர். என்ன உலகம் இது! வாழ்வை அழிக்கும் குடிக்கு அடிமைப்பட்டவர், குடித்து முடியாத கோப்பையை வீசி எறியும் ஓசை; வாழ்பவரை அழிக்க வகைதேடும் கள்வர் இருளினூடாகப் பாய்ந்து செல்லும் ஓசை; தன்னை அழிக்கத் துணிந்த தற்கொலையின் துணிவற்ற இறுதி மூச்சின் ஓசை ஆகிய இவையன்றி இரவின் அமைதியை எதுவும் கலைக்கவில்லை. எங்கும் ஒரே அமைதி நிலவுகிறது! நான் மட்டும் ஏன் இன்னும் பழைய ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருக்க வேண்டும்? அல்லது பின்னிருந்து தாக்கும் இக்கால அறிவுலகப் பித்தருக்கு மறுப்புத்தர ஏன் அகர வரிசை களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? போதும், எனது தனிமையின் தனிமை, எல்லையற்ற தனிமையில் உலவி என் தனிமைக்கு விருந்தளிக்க நாடுகிறேன். எல்லாப் பாதையும் இப்போது ஆளற்ற பாதைதான். கணந்தோறும் ஆடை மாற்றும் கட்டழகியர் சற்றுமுன் வரை இங்கே உலவினர்; அவர்கள் கடைசியாக உடுத்த ஆடையும் நெகிழ, எங்கோ உறங்குவர் இப்போது! அழுதாற்றும் குழந்தைபோல ஆர்ப்பரித்த தெருவீதி இப்போது அழு தமைந்து ஓய்ந்து உறங்கும் குழந்தைபோல என்முன் காட்சி தருகின்றது. உறங்கும் குழந்தையின் திறந்தவாயில் ஈப்புகுந் தால் அது அறியமுடியாது. ஆனாலும் அதன் கையும் முகமும் அதனை அடித்துவிரட்ட முயலவே செய்யும். துயிலும் வீதியில் நுழையும் என்னையும் வீதி அறியாது. ஆனால் இருள் மருட்டுகிறது; இருளின் பனித்த வாடைக் கைகள் என்னைப்பற்றித் தள்ளப்பார்க்கின்றன! “தெரு நங்கையே! நான் உன் தனிமையைக் குலைக்கமாட்டேன். நான் அப்பாற் சென்றுவிடுகிறேன்!” ‘வாழ்வாவது மாயம்’ என்று பாடியவர் இத்தகைய நேரத்தில்தான் பாடியிருக்க வேண்டும். அந்தப் பாட்டுக்கு விளக்கம் தரும் காட்சி இதோ என் கண்முன் படர்ந்து கிடக்கிறது. ஒளி புக அஞ்சிய இடங்களிலெல்லாம் இருள் புகுந்து படர்ந்துள்ளது. ஓசை புகாத இடமெல்லாம் அமைதி சென்று பரவியுள்ளது. வானத்து ஒளி விளக்கங்களும் மறைந்துவிட்டன. தொலைவில் தெரியும் பால விளக்குக்கூட இருளைக்கண்டு அஞ்சி மங்கிய மஞ்சள் நிறத்துடன் மறுகுகின்றது. மணிப்பொறி களின் மணி ஒலிகள் கம்முகின்றன. ஆங்காங்கே கேட்கும் ஆந்தையின் அலறல், காவல் நாய்களின் உறுமல் ஆகியவை என்னைக் கண்டு கறுவும் இரவின் குரல்களாகவே தோற்று கின்றன. மனித வாழ்வின் பெருமைகள் மங்கி மறைவுறும் நேரம் இது - என்றோ ஒருநாள் அவை மங்கி மறையக் கூடும் என்பதற்கான எச்சரிக்கையோ இது, என்று எண்ணாமலிருக்க முடியவில்லை. சின்னஞ்சிறு துளிகள் பெருவெள்ளமாகும். சிறிய வாழ்வு வளர்ந்து பெருவாழ்வு ஆகும். சிறுமை யென்பது பெருமையின் ஒரு சிறு கூறு மட்டுமே. ஆகவே இச்சிறு ஓய்வும் வரப்போகும் ஓர் எல்லையற்ற பெரிய ஓய்வின் கூறுதான் - அதற்கான எச்சரிக்கைதான் என்று கூறலாம் அல்லவா? இது பெரிய நகரம்*தான். இதன் செல்வம் பெரிது தான். இதன் வெற்றிகள் கடல்கடந்த வெற்றிகள்தான். ஆனால், இதுபோன்ற எத்தனை நகரங்கள் தோன்றி வளர்ந்து மங்கி மறைந்திருக்கின்றன, வரலாற்றில்! எத்தனை மாந்தர்கள் அவற்றின் மாயக் கோட்டைகளுக்குள் இருந்து இன்பம் நுகர்ந்தும் துன்பத்துடன் மல்லாடியும் நாட்கழித்தனரோ? ஆயினும் இன்ப வேடரின் இன்பத்துக்கும் ஓர் எல்லை இருந்தது; துன்பவாணர்களின் துன்பத்துக்கும் ஓர் ஓய்வு கட்டாயம் கிட்டியது! மாடமாளிகைகள் குட்டிச்சுவர்களாகியுள்ளன; வானை முட்ட ஓங்கிய கூட கோபுரங்கள் மண்ணில் சாய்ந்துள்ளன. மன்னரும் மாந்தரும் மண்ணுள் ஒரு பிடி மண் ஆயினர். நாம் மட்டும் என்ன மாயாவிகளா? நம் நகர்மட்டும் என்ன காலவெள்ளத்தில் மிதக்கப் போகிறதா? நாம் என்றும் உள்ளவர்கள் என்று எண்ணுகிறோம். ஆனால் எண்ணும் நேரம் பகல் நேரம்! சிறு பகலின் ஓய்வின் பின்வருவது இச் சிற்றிரவு! நம் வாழ்வுப் பெரும்பகலின் ஓய்வினையடுத்தும் ஒரு பேரிரவு வரக்கூடியதே. ஒவ்வொரு தனி மனிதர் வாழ்விலும் இப்பேரிரவு வரக் காண்கிறோம். பொது மனித வாழ்வில்மட்டும் அது வராது என்று எப்படிக் கூற முடியும்? வரும் என்பதைத்தானே மண்ணிற் புதையுண்டு, நாம் அகழ்ந்து காணும் நகரங்கள் காட்டுகின்றன. அந்நகர்களின் ஓய்வை நாம் காண்கிறோம்; நம் ஓய்வையன்று. இது போலவே நம் நகரின் பேரிராக்கால ஓய்வை யாரோ காண்பர் - நாம் காணமுடியாது. யாரும் காணாவிட்டால் கூட, அப்படி ஓர் இரவு இல்லை என்று ஆய்விடுமா? இந்த நகரின் துயிலை இன்று தற்செயலாக நான் காண்கிறேன். நான் விழித்திருந்து காணாவிட்டால், அது துயிலவில்லை என்று கூறமுடியுமா? எத்தனையோ பண்டைய ‘இலண்டன் மாநகர்’கள் காலவானில் ஓங்கி நின்று நிலவின. அவற்றின் வெற்றிகள் திக்கெட்டும் எட்டின. ஓசை கேளாத காதிலும் தொலைவில் சென்று அவற்றின் இசை முரசங்கள் கேட்கும் என்றுதான் அந் நகரவாணர் எண்ணினர். ஆனால், ஓசையும் இசையும் கால எல்லையில் மாய்ந்தன. பல நகரங்கள் இருந்த இடமே தெரிய வில்லை; பேர்கூட நமக்கு வந்தெட்டாதழிந்தன எத்தனையோ? இன்னும் பலவற்றின் அழிபாட்டில் என் போன்ற பழமைபித்தர் உலவுகின்றனர் நாகரிகத்தின் எல்லைகடந்து உலவும் அவர்களே நாகரிகத்தின் முழுஉருவம் காண்கின்றனர். “இதோ தெரிகின்ற புதர் அடர்ந்த மேடுதான் அவர்கள் கோட்டைவாயில்; நெருஞ்சி படர்ந்து பாம்பும் பல்லியும் பழகும் அந்தப் பாழும் பரப்புத்தான் அவர்கள் அரசியல் மாமன்றம்” என்று கூறுகின்றனர் அத்தகைய உலாவாளர். “பேரவா அவர்கள் உள்ளத்தின் வலுவைக் கெடுத்தது. மட்டற்ற இன்பம் அவர்கள் நரம்புநாடிகளை நலிவித்தது. அடிமைப்படுத்திய ஆற்றல் அடிமைப்பட்டு அழிந்தது. உழைத்தவருக்கு வறுமையும், உழை யாதவருக்குச் செல்வமும் அளித்த அரசுகள், நாகரிகத்துக்கு உழையாத காட்டு மிராண்டிகளை இருகை நீட்டி அழைத்தன. வீரர்களை அடக்கி வீம்பர்களுக்கு இன்பமளித்த நாகரிகங்கள், வீர மழியாத வீம்பர்களுக்கு இரையாயின.” இவையே உலாவாளர் தரும் சிந்தனைகள், படிப்பினைகள். “நாகரிக அரசுகள் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளை ஏன் அடித்துவிரட்ட முடியவில்லை? அவர்கள் விரட்டவே செய்தார்கள் என்று அறிகிறோம். ஆனால், விரட்ட விரட்டக் காட்டு மிராண்டிகள் விடா முயற்சியுடன் மீண்டும் மீண்டும் தாக்கினர். அழிக்க அழிக்க அவர்கள் மீண்டும் அழிவுப் போருக்குத் துணிந்துவந்தனர். நாகரிகம் அழியும்வரை நாகரிகமற்றவர் போராடினர்! நாகரிகம் அழிந்தது. “நாகரிக சமூகத்தில் இல்லாதவரை அடிமைப்படுத்த முடியும். இது நாகரிகத்தின் கோளாறு. ஆனால், நாகரிகத் துக்குப் புறம்பேயுள்ள இல்லாதவர் சமூகம் அதற்குப் பழிவாங்காதிராது. நாகரிக சமூகத்தில் வீரரைக் கோழைகள் ஆள முடியும். இது நாகரிகத்தின் உள்ளார்ந்த நலிவு. ஆனால் அத்தகைய சமூகத்தை நாகரிகமற்ற வீரர் என்றும் அழிக்க முடியும். அடிமை வீரரைக் கொண்டு நாகரிகமற்ற, ஆனால் தன்னாண்மையும் முழு விடுதலையுரிமையும் வாழ்க்கைப் புத்தார்வமும் உடைய வீரரை எதிர்த்து நிற்கமுடியாது. இது மட்டுமா? மடியில் கனம் இருப்பவர்க்குத்தான் அச்சம் வேண்டும். நாகரிகம் அந்த அச்சத்தைத் தருகிறது. நாகரிகமற்றவர்க்கு அச்சம் தேவையில்லை. துணிச்சல் எளிது. நாகரிக மக்கள் தற்காப்பில் மட்டுமே நிற்கமுடியும். நாகரிகமற்றவர் தாக்க முனையலாகும். தற்காப்புக்கு ஓயா விழிப்பு வேண்டும். எந்த நேரம் செயல் நேரம் என்பது தெரியவராது. தாக்குதல் செய்பவரோ விரும்பியகாலம் தாக்கி, அதுவரை முன்னேற்பாடும் முன் ஒருக்கமும் செய்து கொள்ளலாம். “நாகரிக சமூகத்தில் படைகள் உண்டு. ஆனால், சமூகம் வேறு, படைவீரர் வேறு. சமூகத்தின் படிகள் பல; அதில் சமத்துவம் நிலவாது. வீரர், உழைப்பாளிகள் தாழ்ந்தும், கோழைகள் சோம்பர் உயர்ந்தும் இருப்பர். நாகரிகமற்ற சமூகத்துக்கோ, படைவீரர் கிடையாது. சமூகமே படைவீரர் சமூகம். உழைப்பவர், வீரர் ஆகியவர்களன்றி எவரும் அதை ஆளமாட்டார். ஆகவேதான் சரிசமநிலையும் மனிதப்பண்பும் உடைய நாகரிகமற்ற காட்டு மிராண்டிகள், உயர்வு தாழ்வும் இயற்கையுடன் முரண்பட்ட படிமுறைகளும் உடைய நாகரிக சமூகங்களை ஓயாது அழிக்க முடிகிறது.” ஆராய்ச்சியாளர் தரும் இப் படிப்பினைகளை உலகம் கவனிப்பதில்லை. பகலொளி அவர்கள் கண்களை மறைக் கிறது. இருள் பகலொளி காட்டாத காட்சிகளைக் காட்டிப் பகலொளி நாகரிக மக்கள் எண்ணாத எண்ணங்களை நெஞ்சத்தில் எழுப்புகின்றது. பகலின் புறப்பூச்சு மெழுக்கும், மூடாக்கும் அகலும் நேரம் இரவுதான். இதோ மாட கூடங்கள் நிறைந்த இந் நகரில் வீடற்றவர்களும் இருக்கி றார்கள் என்பதையும் - ஆடையணிகளை வரிந்து வரிந்து மாட்டிக் கொள்ளும் மக்கள் உலவும் இந்நகரில் உடலை மறைக்கவும் குளிரைக் காக்கவும் கந்தலாடைகூட இல்லாத மக்களும் இருக்கிறார்கள் என்பதையும் காட்டும் காட்சிகள் காணப் பெறுகின்றன. பகலில் ஒழுக்கம் தவறாதவர்களெனக் காட்டிக் கொள்ளும் எத்தனை பேரின் ஒழுக்கச் சீர்கேடு இரவின் இருளில் தங்கு தடையின்றி உலவுகிறது. பகல்கால இலக்கியங்கள், ஒழுக்க நூல்கள் கள்ளும் களவும் கொள்ளையும் தகாத குற்றங்கள் என்று ஒதுக்கிக் காட்டியுள்ளன. ஆனால், அவற்றை அவை ஒழித்துவிடவில்லை. பகலொளியில் மறைந்து உள்ளாழ்ந்து கிடந்த அவை இரவில் தத்தம் உருவில் நடமாடுகின்றன. பகல் தன் கண்ணை மூடிக்கொள்வதால் அவை இல்லாமலா போகின்றன? உண்மையில் அவை இல்லாமல் போக வேண்டு மென்றா பகல் விரும்புகிறது? இயற்கையின் சேமப்பண்ணை யாகிய இரவுக்கு அவற்றை ஒப்படைத்து வளர்த்து, பகல் அதனை வேண்டுமட்டும் அறுவடை செய்கிறது. தான் விதையாமல், இரவை விதைக்கவிட்டு, தான் அறுவடை செய்ய நாடுகிறது பகல். ஆனால், இரவின் பழி பகலை ஒழிக்கக் காத்து நிற்கிறது. பகலின் குறைபாடுகளை உணரவேண்டுமென்று நினைப்பவர் இரவுக்குத்தான் வந்து ஆராய வேண்டும். அதோ பேய்கள் போல திரிகின்றனவே ஆண் பெண் குழந்தை உருவங்கள்! அவை யார் தெரியுமா? அவர்கள் இன்று அயலவர்கள், இந் நகரத்துக்கு மட்டுமல்ல, இந்நாட்டுக்கும் இவ்வுலகத்துக்கும் அயலார்களே. ஆயினும் அவர்கள் இந்நகரத் திலேயே பிறந்தவர் கள்தான். இந்த நகரத்திலேயே வாழ விரும்பியவர்கள்தான். ஆனால், அவர்கள் வாழ முடியாதவர்கள். அவர்கள் கொலைகாராயிருந் திருக்கலாம்; கொள்ளைக்காரர், திருடராயிருந்திருக்கலாம். திறமையும் வாய்ப்பும் இருந்தால், கொலையும் கொள்ளையும் திருட்டும் செய்தும்கூட அவர்கள் சீமான்களாயிருக்கக்கூடும். ஆனால் திறமையும் வாய்ப்பும் அவர்களுக்கு இல்லாமல் போயிற்று; அல்லது அவற்றின் விளைவை ஏற்றுத் துணிச் சலுடன் போராடி வெல்வோம் என்ற நம்பிக்கை இல்லாமற் போயிற்று. அத்துடன் அவர்கள் களவும் கொள்ளையும் விரும் பாதவராகவும் இருந்திருக்க வேண்டும். ஒழுக்கத்துடன் வாழ அவர்கள் நிலை ஒப்பவில்லை. ஒழுக்கங் கெட்டு வாழ அவர்கட்கு வகை இல்லை. இரந்து வாழ அவர்கள் தன்மதிப்பு இடந்தர வில்லை. பிள்ளைகளுடன் படுத்துருளும் அந்த மாது யார்? அவள் முன்பு நகரத்தின் ஒரு செல்வ அழகிதான். எல்லாரையும்போல் அவள் பகட்டாக வண்ண வண்ண உடையுடுத்தி, இளைஞர்கள் கண்ணைப்பறிக்க ஆடிப் பாடியவள்தான். அவள் பகலில் சறுக்கி இரவில் இந்நிலைக்கு வருவாள் என்று யார் கண்டிருக்கக்கூடும்? ஆனால், அனுபவமற்ற அவள் இளமைக் காதல் அவளைச் சமூகத்தைவிட்டுத் துரத்திற்று. அவளை நம்பவைத்து ஏமாற்றிய புல்லனுக்குப் பகலுலகில் வாழ்வும் வளமும் உண்டு. அவள் இரண்டும் இழந்தாள். அவள் பிள்ளை அவள் வயிற்றில் பிறந்த பழி சுமக்கிறது. அவர்கள் இரவின் பிள்ளைகள், அவள் இரவின் நங்கை, சிற்றிரவின் பழி சுமந்து செல்லும் இக் குழந்தைகளின் பழிகளெல்லாம் சேர்த்துப் பேரிரவு பழி வாங்குவது திண்ணம். அந்தோ! நான் பகலுலகில்தான் பிறந்தேன். எழுத் தாளனாயினும் பகலுலகில்தான் வாழ்கிறேன். ஆயினும் இந்த இரவினுடனும் இரவின் பிள்ளைகளுடனும் எனக்கு ஏதோ குருதி உறவு இருக்கத்தான் வேண்டும். அவர்கள் துன்பங்கண்டு அவர்கள் வருந்துவதைவிட நான் ஏன் வருந்தவேண்டும்? ஆனால், உண்மையில் என் நிலை அவர்கள் நிலையினும் மோசந்தான். வாழ்பவருடன் வாழ்ந்து அவர்களை எண்ணாமல், அவர்களை வேறோர் இனமாக, இருந்தும் இல்லாததும்போல் நடத்தத்தக்க உலகமாக என்னால் கருதவும் முடியவில்லை. இந்த உலகத்தை அறிந்து, அந்த உலகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் இந்தப் பழி கேடான ஆராய்ச்சியில்லாமல் அவர்களைப்போல் வாழ்வை மறந்திருக்கவும் முடியவில்லை. என்ன இரண்டுங்கெட்ட நிலை! ஆம். இது இரண்டுங்கெட்ட நேரம். அதோ கிழக்கு வெளுத்து வருகிறது. இரவின் ஈரக்குளிர் வாடை என் மூளைக்குள்ளும் சென்றுதான் இந்த எண்ணங்களை உண்டாக்கியிருக்கவேண்டும். காலை ஒளிசாய்ந்து பகல் விடுதிகளில் வெதுவெதுப்பான தேநீர் அருந்தித்தான் இவ்வெண்ணங்களை இரவின் மறதியில் கரைக்க வேண்டும். இருளின் ஆராய்ச்சிகூட அவலமுடையது. ஒளியின் மூடாக்கை வரவேற்கிறேன். அடிக்குறிப்புகள் 1. டீடiஎநச ழுடிடனஅiவா. 2. இலண்டன் மாநகரம். 14. நாடோடி நடிகன் ஆலிவர் கோல்ட்ஃச்மித் நேரப்போக்கு என்றால், உரையாடல் என்றால் எனக்கு எப்போதுமே விருப்பம்; அது எங்கே கிடைக்கும், அது வகையில் உதவுபவர் என்ன ஆடை உடுத்திருப்பர் என்பதை நான் பார்ப்பவனல்ல. சில நாட்களுக்குமுன் நான் திருத்தகை ஜேம்ஸ் பூங்காவில் உலாவச்சென்றேன். அது உலாவும் நேரமன்று, உலாவுபவர் உலாவிவிட்டு உணவுகொள்ள விரையும் நேரம் ஆனால், அப்போதும் விசிப்பலகையில் ஆங்காங்கே சிலர் உட்கார்ந்துகொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் உணவுக்கு எழுந்துச்செல்லத் தயங்கியவர்கள் போலக் காணப்பட்டார்கள். ஆனால், அவர்கள் உணவை நினைக்க விரும்புபவர்களல்ல; அதை மறக்க அரும்பாடு படுபவர்கள் என்பதை அவர்கள் முகங்கள் காட்டின. பெண்வேடமிட்டவன் முகக்தினூடாகத் தெரியும் ஆண் தோற்றம்போல, அவர்கள் வலிந்து மேற்கொண்ட மேளாப்புத் தோற்றத்தினூடாகப் பசித்துன்பத்தின் கோடுகள் தென்பட்டன. நான் சுற்றிச்சுற்றி வந்து ஆளற்ற மூலையில் ஆளற்ற ஒரு விசிப்பலகையில் போய் ஒரு கோடியில் அமர்ந்தேன். என்னைப் போலவே ஆளற்ற மூலையில் ஆளற்ற விசிப்பலகை யொன்றை நாடித் தேடுபவன்போல ஒருவன் சுற்றிச் சுற்றி வந்து இறுதியில் ஆளற்ற விசிப்பலகைகளை மெல்லக் கடந்து, நான் அமர்ந்திருந்த விசிப்பலகையின் மறுகோடியில் அமர்ந்தான். நான் அவனைப் பார்த்தும் பாராதவன் போல இருந்தேன். அவன் என்னைப் பார்த்துக்கொண்டே பாராதவன் போலிருந்தான். நெடுநேரம் வாளா இருந்தபின் அவன் செருமினான். சிறிதுநேரம் வாளா இருந்த பின் நானும் செருமினேன். அவன் ஆடை திருத்திக் கொண்டான் நானும் திருத்திக் கொண்டேன். தாமாகப் பேச விரும்பாத ஆங்கிலேயர் வழக்கமாகச் செய்யும் சிறு செயல்கள் நிகழ்ந்தபின், அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளியிடும் வண்ணம் நான், “மன்னிக்க வேண்டும், அன்பரே! தங்களை எங்கேயோ கண்டமாதிரி இருக்கிறதே,” என்று தொடங்கினேன். அவன் : ஆம் ஐயா, என்முகம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான், ஒட்டகைகள், உயிருள்ள முதலைகள் ஆகியவற்றின் காட்சி காணவரும் ஆங்கிலேயர்கள் யாவருமே அவற்றிடையே என்னையும் கண்டிருப்பார்கள். ஏனெனில் சென்ற பதினாறு ஆண்டுகளாக நான் அத்ததைய விழாக் காட்சிக் கழகமொன்றில் ஊமைக்கூத்துக் கோமாளியாக இருந்திருக்கிறேன். சென்ற பார்த்தலோமியோ விழாவன்று நானும் கழகத் தலைவனும் சச்சரவிட்டு பிரிந்தோம் - அவர் தம் பொம்மைகளை எல்லாம் குண்டூசி மெத்தை தைப்பவரிடம் பழவிலைக்கு விற்கப் போனார்! நான் இப்படி பூங்காக்களில் உலவிப் பசியை மறக்கும் வேலையிலமர வந்துவிட்டேன். நான் : ஐயா, தங்கள் நிலைகாண நான் உண்மையில் மிகவும் வருத்தமடைகிறேன். அவர் : அன்பரே, பிறர் உணர்ச்சியைத் தூண்டும் வேலையிலேயே முன்பு இருந்தவன் நான். இப்போதும் பாருங்கள், உங்கள் உணர்ச்சியைத் தூண்டிவிட்டேன். முன்பு பிறரிடம் மகிழ்ச்சி உணர்ச்சியைத்தான் தூண்டுவேன். அம் மகிழ்ச்சி கணீர் கணீர் எண்று ஒலிக்கும் காசுகளாக விழுந்து என் தலைவர் கையை நிறைத்து என்கைக்கும் ஒன்றிரண்டாக வரும். இப்போதோ வருத்தத்தைத்தான் தூண்டுகிறேன். அதற்கு விலை கிடையாது. இந்நேரத்திலும் கூத்தாடியின் நகைச்சுவை அவரை விட்டுப் பிரியவில்லை என்பது கண்டேன். அவர் மேலும் பேசினார். என் எண்ணங்களை அவர் ஊகித்துக் கொண்டார் என்று தோற்றிற்று. அவர் : துன்பத்தில் துவள்பவன் நானல்ல. ஆண்டுக்கு இருபதினாயிரம் வருவாய் வந்தால், மற்றவர்களைப்போல் என்னாலும் கிளர்ச்சியுடையவனாயிருக்க முடியும் ஆனால், அது பெரிதல்ல. இப்போதும் என் செல்வம் நான் மகிழ்ச்சி யாய் இருப்பதே. என்னிடம் மூன்று துட்டு இருந்தால், அதை மூன்று அரைத்துட்டுக்களாக்க நான் தயங்கமாட்டேன். அதே சமயம் என்னிடம் துட்டு இல்லையானால், பிறர் கொடுப்பதை வாங்கி உண்பதற்கு நான் தயங்குபவனல்ல. ஐந்து கொடுத்தவர் வருங்காலத்தில் ஐம்பது பெறுவர். ஒன்றும் கொடுக்காதவரும் ஐந்து பெற தடையில்லை. என் வயிறும் அதுபோலவே. ஏதோ கூடுதல் கொடுத்தாலும் பெற்றுக்கொள்ளும். குறைந்தாலும், இல்லாமற் போனாலும் என்மீது பழிவாங்காது. என் வயிறு என்னுடைய நண்பன். அவர் நகைச்சுவை இத்தடவை என் காசுப்பையை சுண்டிவிட்டது. “அன்பரே, உம் நண்பர் எனக்கும் நண்பர் தான். ஒரு கோப்பைத் தேநீரும் ஒரு துண்டு நேந்திரப்பழ அப்பமும் உண்போம் வாருங்கள்” என்று நான் அவரை அருகிலிருந்த விடுதிக்குள் அழைத்துச் சென்றேன். அவர் கூத்துக் கோமாளியாயிருந்து நான் ஒன்றிரண்டு துட்டுப் போட்டிருந்தால், துட்டுக்கு மாறாக எனக்கு கிடைக்கும் பயனைவிட, இன்று நான் விடுதியில் செலவு செய்து துட்டு விலை குறைந்ததாயில்லை. அது எனக்கு எதிர்பாராத நற்பயனையே தந்தது. அன்பர் பேச்சு நாடகத்தினும் எனக்கு இனித்தது. அவர்: அன்பரே, இந்த அப்பத்துக்கும் தேநீருக்கும் ஈடாக நான் எதுவும் உண்டதில்லை. என் உள்ளத்தில் இது உண்டு பண்ணும் கிளர்ச்சி மிகப் பெரிது. அதற்குக் காரணம் இல்லாம லில்லை. உண்மையில் காரணம் என்பதை விடக் காரணங்கள் என்று கூறலாம். ஏனெனில் அதற்கு மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று எனக்கு எப்போதுமே நேந்திரப்பழ அப்பம் என்றால் பிடித்தம்தான். இரண்டாவது இன்று எனக்கு மிகவும் பசி. பசிவந்திடப் பத்தும் பறந்துபோமாம். பசி தீரும்போது பத்தும் திரும்பிவரும் அல்லவா? அதிலும் எனது இன்றையப் பசி பதினொன்றாவதாக ஒரு பொருளிருந்தால், அதைக்கூடப் பறக்கடித்திருக்கும். மூன்றாவதாக - இதுதான் அன்பரே என் மட்டற்ற மகிழ்ச்சிக்கு உயிர்நிலையான முதற்காரணம் - இந்த உணவுக்கு நான் காசு கொடுக்கவில்லை. இது சும்மா வருகிறது. என்னால் வாய்விட்டுச் சிரிக்காமலிருக்க முடியவில்லை. நண்பருங் கூட உடனிருந்து சிரித்தார். என்னைச் சிரிக்க வைத்துவிட்டு நண்பர் தம் நண்ப ராகிய வயிற்றை அவசர அவசரமாகக் கவனித்தார். நானும் குறிப்பறிந்து இன்னும் இரண்டிரண்டு அப்பங்களாகத் தருவித்து, நான் மிகுதி எடுத்துக் கொள்ளாமலே அவர் பக்கம் ஒன்றொன் றாக நகர்த்தினேன். அவர் நண்பன் - வயிற்றுப் பசிதான் - என்னைக் கவனிக்கவில்லை. பசி தீரத்தீர நண்பர் கண்கள் மேசையிலிருந்து சிறிது சிறிது என்புறம் திரும்பிற்று. எல்லையற்ற மகிழ்ச்சி அவற்றில் ஒளிவீசிக் குதித்தாடின. மேலும் என் கலை யுணர்வுக்கு விருந்து கிடைக்கும் என்பதற்கு அது ஒரு அறிகுறியா யிருந்தது. அவர் மேலும் அப்பம் வருவிக்க வேண்டாம் என்று கையமர்த்தி, கடைசித்துண்டு வாய்கடந்து உட்செல்லுமுன்பே பேசத் தொடங்கிவிட்டார். அவர்: வறுமை! பசி! இந்த இரண்டுக்கும் ஈடான நண்பர் இந்த உலகத்திலேயே கிடையாது, அன்பரே! இந்த இரண்டுபேரின் துணையுமில்லாத சோம்பருக்கு நீங்கள் என்ன கொட்டிக் கொடுத்தாலும் - நேந்திரப்பழ அப்பமென்ன, பால் கட்டியும் முத்தமிழ்க் கட்டிகளும் வைத்தால்கூட அவர் களுக்குச் சுவையும் படாது; நன்றியுணர்வும் ஏற்படாது. அவர்களுக் கெல்லாம் இயற்கை ஒரு மாற்றாந்தாய். நாமே இயற்கையின் செல்வப் பிள்ளைகள். நமக்கு அவள் வறுமையையும் பசியையும் கேட்பதற்குமேல் கொடுத்து, என்றேனும் ஒருநாள் இப்படி வானுலக இன்பத்தை வரவழைத்துக் காட்டுகிறாள். இயற்கை யன்னையாகிய நம் தாய்க்கு நாம் எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் தகும்! “அதுமட்டுமா? நம் நாட்டின் பழத்தோட்டமாகிய கார்னவால் முழுதும் கடலிலமிழ்ந்து போகட்டுமே. நமக்கு வருத்தம் வேண்டியதில்லை. ஏனெனில் நமக்கு அத்தோட்டங் களில் ஒன்றுகூட உரியதன்று. எந்தத் தோட்டத்தில் பழங்களிருந் தாலும் நமக்கு வந்து சேரும்போது வரத்தடையில்லை. எந்தப் பொருளுக்கும் வேட்டுவைக்கப்பட்டாலும் நமக்கு இடி விழப் போவதில்லை. ஏனெனில் எதிலும் நமக்குப் பங்கு இருக்க முடியாது. இருக்கும் தோட்டமும் பங்கும் என்றாவது இன்னல டையுமோ என்ற ஏக்கத்தால் தூங்காமலிருக்க நமக்குத் தேவை யில்லை. பசிச் சோர்வினால் வருந்துன்பம் நமக்குப் பாதித் துயில் தரும். மீந்த பாதியை வட்டியும் முதலுமாக இப்படிக் காசில்லாமல் கிடைக்கும் அப்பமும் தேநீரும் தந்துவிடும். ஆனால், இன்று நான் தூங்கப் போவதில்லை. இந்த என் இன்பத்தில் பாதி உங்களுக்கு உரியது. என் வரலாற்றை நீர் அறிய வேண்டும், உங்கள் நண்பர் வெறும் கோமாளியல்ல என்று நீங்கள் ஆறுதல் பெறலாம். “என் தாய்தந்தையர் பெரும்புகழ் படைத்தவர்கள். நான் கோமாளியாக வாழ்ந்தாலும், என் தாய்தந்தையர் நான் இத்துறைக்கு வருவேன் என்று கனவு கண்டவர்களல்ல. அவர்கள் கோமாளிகளும் அல்லர்.” நண்பன் தொனியிலிருந்து அவர்கள் ஏதோ பெரு மக்களோ யிருந்திருக்க வேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால் நண்பனின் அடுத்த பேச்சு அந்த எண்ணத்தைக் கெடுத்தது. அவர்: அவர்கள் பதவி அதனிலும் எவ்வளவோ பெரிது. தந்தை ஒரு கூத்துக் கழகத்தில் முரசறை வள்ளுவராகவே இருந்தார். தாய், தானே பொதுமக்களைக் கூவி யழைத்துப் பாடும் பாடகியாயிருந்தாள். இவ்வளவு உயர் மரபைப் பெருமக்கள் காட்ட முடியுமா? நான் சிரிக்க முடியவில்லை, அவர் நடிப்பு முதல் தரமாயிருந்தது. கோமாளியைவிட முரசவள்ளுவனும் ஆட லணங்கும் எத்தனை உயர்வென்பதை அவர் குரலும் தொனியும் நடிப்பும் எனக்கு நன்கு எடுத்துக் காட்டி விட்டபிறகு, நான் அந் நடிப்பில் ஈடுபட முடியுமே தவிர, நகைச்சுவையில் எப்படிக் கருத்துச் செலுத்தமுடியும்? அவர்: எங்கள் முன்னோர்களிலேயே மிகப் பெரும் பாலானவர் முரசவள்ளுவராகவே இருந்ததாகத்தான் கேள்வி. நான் என் தாய் தந்தையருக்கு ஒரே செல்வப் பிள்ளை. என்னையும் முரசுமரபுக்கே உரிமையாக்கத்தான் அவர்கள் எண்ணியிருந் தார்கள். ஆனால், உயர் கூத்துக் கழகத்துக்கு ஒரு படியாகச் சிறு பொம்மையாட்டக் கழகத்தில் முரசறை வோனாக ஏற்படுத்தினர். அந்நிலையிலிருந்து உயர்த்துமுன் அவர்கள் காலமாயினர்; என் துறையில் எனக்கிருந்த திறமையும் புகழுமே என்னை வேறு துறைக்குச் செல்லவொட்டாமல் தடுத்தன. முரசறைவதனுடன் நில்லாமல் நான் மன்னன் சாலமன் மாண்புகளை விளக்கத் தொடங்கினேன். கோமாளியின் நகைத் திறமற்ற கூற்றுக்களுக்கு நகைத் திறமான விளக்கம் கூறத் தொடங்கிக் கோமாளியாகவே ஆய்விட்டேன். என் அடக்க முடியா நகைத்திறம் எனக்கு வாழ்வும் பேறும் தந்தது - வாழ்க்கை உயர்வைத் தடுத்தது. இப்போதும் நண்பன் நடிப்பார்வம் அவன் நகைத் திறத்தை மறைத்தது. அவர்: “முரசில் நான் எல்லாவகைப் பயிற்சியும் பெற் றிருந்தேன். போர் அணி, படை அணி முரசு முழக்கங்கள் எனக்குப் பாடமாயிருந்தன. சிலகாலம் போருக்குக் கூடச் சென்றிருந்தேன். ஆனால், முரசொலியினுக்குரிய இசையீடுபாடு எனக்கு இல்லாமற் போயிற்று. தான் சுவைக்காத தொழிலில் பிறருக்குச் சுவையூட்டமுடியாதென்று கண்டேன். போருக்குப் பிறரைத் தூண்டுவதை விட, நகைத்திறந் தூண்டுவதுதான் எனக்குப் பிடித்தது. ஆகவே பழைய கோமாளித்துறையை நாடினேன். “மேலும் தொழில் கோமாளித் தொழிலானாலும், படைத்தொழிலானாலும், என் குருதியே முரசுக்குடிமரபில் வந்ததல்லவா? இந்தக் குடிமரபுப் பண்புடையவன் அது இல்லாத வரிடம் வணங்கி ஒடுக்கி எப்படி நடக்க முடியும்? படைத்துறைக்கு முழுக்குப் போட எண்ணி விலகிக் கொள்ள மனுப்போட்டேன். நான் நெட்டையாகவும் உடல் வலுவுடையவனாகவும் இருந்த தால், மேலாட்கள் என்னை எளிதில் விலக்கிவிட விரும்ப வில்லை. பணம் கொடுத்துத்தான் விடுதலைபெற வேண்டுமென்று அறிந்து கொண்டேன். இச்சமயம் என் தந்தை உயிருடன் இருந்தார். அவருக்கு என் துயரங்களை ஒப்பித்து, அவர் மனத்தைக் கரையாதவண்ணம் கரைக்க முயன்று, காவிய முறையில் கடிதங்கள் எழுதினேன். ஆனால், காவியம் அவரைக் கரைக்கவில்லை. காவியத்தினும் சிறந்த குடி - இச்சமயம் அன்பர் தேநீர்க் கோப்பைக்கு ஒரு வணக்கம் செலுத்தினார். அவர் மரபில் ஊறியிருந்தது. குடிக்கும் மரபு பிறர் விடுதலைக்குக் காசு கொடுக்கும் மரபாக இருக்க முடியுமா? அவர் கடிதங்களுக்கு மறுமொழியே தராது போய் விட்டார். அதன்பின் எனக்கிருந்த ஒரே வழி சட்டத்தை இருகையிலும் பற்றிக்கொண்டு ஓடிவிடுவது தான் அதைத்தான் நான் செய்தேன். “சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப நான் பட்டபாடு கொஞ்சமல்ல. இறுதியில் காட்டுவழியில் சேற்றில் சிக்கிய ஒரு ஊர்ச் சமயகுருவைத் தூக்கிவிட்டேன். அந்தப் பாவி நன்றிகூடத் தெரிவிக்காமல் சென்றான். நான் விடவில்லை. அவன் வீட்டு வாயில்வரைத் தொடர்ந்தேன். ‘உங்களைச் சேற்றிலிருந்து தூக்கி விட்டேன், நீங்கள் நன்றிகூடத் தெரிவிக்கவில்லை. போகட்டும், என்னை வறுமைச் சேற்றிலிருந்து தூக்கிவிடுங்கள்’, என்றேன். அவர் வேறு போக்கின்றி என் குணங்குறைகள் பற்றிய நற் சான்றுகள் கோர முனைந்தார். எனக்கு நானே எல்லா வகை நற்சான்றுகளும் தந்தபின், அவர் என்னை வேலையாளாக எடுத்துக்கொண்டார். ஆனால், இரண்டு மாதத்துக்குமேல் அவரால் என்னை வைத்துக்கொள்ள முடியவில்லை. அவர் கஞ்சன். நானோ ‘தானே கொடாத இடத்தில், கேட்டு எடுத்துக்கொள்’ என்னும் கெட்ட பழக்கமற்றவன். நான் மிகுதி வேலை செய்வதில்லை. ஆனால், பிறரை வேலையில் நன்றாக ஊக்குவேன். எதையும் தொடுவதில்லை. உண்ணும் உணவு, குடிக்க ஏதேனும் இருந்தால் குடிவகைகள், ஆகியவற்றில் மட்டும் வஞ்சகம் கிடையாது. மதகுரு மட்டாக உண்ணு என்று மட்டற்று வாங்கிவைப்பார். மட்டாகக் குடி என்று குடிவகைகளைப் பதுக்கு வார். நான் அவர் உணவு உடைகளை மட்டாக்கிவிடுவேன். அவர் கடியவும் முடியாமல், பாராட்டவும் பெருந்தன்மையின்றி என்னை அனுப்பி விட்டார்.” இதற்குள் தேநீர்க் கோப்பை வெறுமையாயிற்று. அதை நிரப்பினேன். இந்தக் குடிதானே என்னால் கொடுக்க முடியும்! அவர்: “நெடுநாள் அரைப்பட்டினி கால்பட்டினியாய் உலவியபின் பழைய நாடோடிக் கழகமொன்று வரக்கண்டேன். அதில் சேர்ந்து நாடோடியாகவே திரிந்து வந்திருக்கிறேன். நாடோடி வாழ்க்கை எனக்குப் பிடித்தமாயிருக்கிறது. முழுப்பட் டினியை நான் வெறுக்கிறேன். அவ்வப் போது அரைப்பட்டினி. இடையிடையே முழு உணவு. வாய்ப்புக் கிடைத்த நேரம் தன்னை மறந்த குடி. இது போதும் இந்த உலக வாழ்வுக்கு.’ நடிப்புக்கலையில் தன் திறம் பற்றிப் பேசத் தொடங்கிய கோமாளி நண்பர் அக்கலையனுபவம் பற்றியும் அக் கலை யின் தன்மைகள் பற்றியும் விரிவுரை வகுக்கலானார். அவர்: “எல்லாரும் பேசுவதுபோல் பேசுவதும், எல்லாரும் நடப்பதுபோல் நடிப்பதுந்தான் நாடகக்கலை என்று பலர் எண்ணுகிறார்கள். இது தவறு. எல்லாரும் பேசுவதுபோல் பேசுவதைக் கேட்கவா ஆட்கள் பணம் கொடுத்துப் பார்க்க எண்ணுகிறார்கள். நடிகன் உணர்ச்சிகளைப் பெருக்கிச் செறிவாக்கிப் புதுக்கட்டங்களை வகுத்துப் புத்துணர்ச்சிகளைத் தூண்ட வேண்டும். இது என் பிறப்புரிமை - என் குடிமரபு உரிமையன்று, என்று தனி உரிமை - என்பதை நான் விரைவில் கண்டுகொண்டேன். “நான் சென்றபின் எங்கள் முதல் ஆட்டமே வெற்றி தந்தது. அதில் என் பங்கு பெரிது என்று நான் எண்ணிக்கொண்டேன். என் கட்டம் கதைநடுவே விளக்கணைப்பதுதான். வரவர இச் சிறு செயலில் என் முழுப்பெருமிதமே தோன்ற நடந்து கொண்டேன். வரவரக் காட்சி வெற்றி பெற்றது. எல்லாரும் தத்தம் திறமை வெற்றிக்கு உதவிற்று என்று மகிழ்ந்தனர். இறுதி நாளன்று நான் பெருவெற்றியை எதிர்பார்த்து நுழைவுச்சீட்டின் மதிப்பையும் இரட்டிப்பாக்கியிருந்தோம். ஆனால் எங்கள் தலைமை நடிகருக்கு அன்றைக்குப் பார்த்து உச்சநிலைக் காய்ச்சல் வந்துவிட்டது. இது கழகத்துக்கு இடிபோலிருந்தது. அவன் வேண்டுமென்றே நோயை அழைத்திருந்தால் எப்படிச் சீறுவரோ அப்படி அவன் மீது எல்லாரும் சீறினர். ஆனால் சீற்றத்தால் பயனென்ன? ‘நான் அப் பகுதியையும் சேர்த்து நடிக்கிறேன்’ என்றேன். “என் துணிச்சல் எல்லாரையும் மலைக்க வைத்தது. ஆனால் அவர்கள் மலைப்பு என் துணிச்சலைப் பெருக்கிற்று. நான் என் புதுநடிப்பை நாடகத்தில் மட்டுமன்றி, நடிகரிடமே தொடங்கினேன். என் நோக்கம் கழகத்தலைவரின் உண்கல, குடிகல ஆட்சியைக் கைப்பற்றுவதே. என் புது நடிப்பு இதில் உதவிற்று. நான் வேண்டியது உண்டேன்; குடித்தேன். யாரும் தடுக்கவில்லை. குடிவெறி மூளையையும் நரம்புகளையும் முறுக்கிவிட்டது. என் நினைவாற்றல் குடியாற்றலால் பெருகியது கண்டேன்.” “நடிகர் நோய்ப்பட்டதைக் கழகத்தார் ஒரு புது விளம்பர மாக்கினர். புது நடிகர் திறமை அம்பலப்படுத்தப் பட்டது. என் புத்தார்வம் மேலெழுந்தது. எதிர்பார்த்ததினும் மிகுதியாக நடித்தேன். என் வெற்றி கழக வெற்றியாயிற்று. ஆட்டம் முடிந்தபின் ஊர்ப்பெருமக்கள் என்னைப் பார்க்கவந்தனர்.” “முதல் புகழுக்கு நான் நன்றி தெரிவித்தேன்.” “அடுத்த பாராட்டுக்களுக்கு நான் தலையசைத்தேன்.” “பின் பாராட்டு எனக்குரிய திறையாயிற்று.” “நடிகனாக நான் நடித்த நடிப்பு நடிகரிடையேயும் வெற்றி தந்தது.” “விளக்கணைக்கும் சிறு நடிகனாக நகருக்கு வந்தேன். விளக்கொளியில் நடிக்கும் பெருநடிகனாகப் புகழுடன் வெளியேறினேன்.” நண்பர் பேச்சு நாடகத்தின் உச்சக்கட்டத்தை எட்டி விட்டோம் என்பதை அவர் நிமிர்ந்த பார்வையும், வெற்றிக் களிப்புடைய முகமும் காட்டின. சோகநாடகம் இனித்தான் என்பதையும் அது தெரிவித்தது. ஏறுமுகம் ஏறி, இறங்குமுகம் இறங்கிற்று. அவர்: “அன்பரே, புகழ் இனிதுதான். ஆனால், குடிபோல என்றும் இனிதல்ல. புகழின் உச்சி ஏணியிலிருந்து ஒரு பூவை என்னைத் தன் சிறுமதியால் தள்ளிவிட்டாள். இலண்டன் மாநகரில் நல்ல நாடகம் பார்த்தவளாம் அவள். ஒன்பது மாதம் இலண்டனில் வாழ்ந்த தகுதியுடன் அவள் அச் சிறு நகரில் வந்திருந்தாள். பட்டிக்காட்டு நாடகத்தை அவள் மதிக்க மாட்டாளாம். அவள் மதிப்புப்பெறக் கழகம் துடித்தது. இன்னும் ஒரு ஆட்டம், அவள் அழைக்கப்பட்டுள்ளாள் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால், அவள் இத்தகைய கீழ்த்தர ஆட்டங்களுக்கு வரவே மறுத்தாள். வராமலிருந்திருந்தால் கூட நன்றாயிருந் திருக்கும். வர மறுத்த அவள் வந்தாள். என் நடிப்பை அவள் பார்க்க மறுத்தாள். நான் என்ன நடித்தும் அவள் சிரிக்க மறுத்தாள் மற்ற யாவரும் என்னைப் பார்க்காமல், அவள் சிரிக்கிறாளா என்றுதான் பார்த்தனர். அவளைச் சிரிக்க வைக்க என்னால் முடியவில்லை. வேண்டுமென்றே பல்லைக் கடித்துக் கொண் டிருந்த அவள்மீது, எனக்குக் கோபம் வந்தது. கோபம் கலையைக் கொன்றது. “நான் வீழ்ச்சியடைந்தேன். “மீண்டும் கோமாளியானேன். “உணவும் குடியும் முன்போல் கிட்டவில்லை. கழகத் தலைவருடன் என் உரிமைக்குப் போராடினேன். இருந்தால் வானுலகத்தில் மன்னனாயிரு. அல்லது நரகத்தில் சென் றாவது மன்னர் பதவியை விடாதிரு’ என்னும் மில்ட்டனின் சைத்தான் வேதாந்தத்தைப் பின்பற்றி நான் கழகத்தை ஒழித்துக் கட்டி இப்படித் திரிகிறேன். கோமாளியாகக் கழகத்திலிருக்க மறுத்து அதையும் என் பழைய பிழைப்பையும் ஒழித்துவிட்டேன்.” நண்பர் கதையும் முடிந்தது. இதற்குள் விசிப்பலகையில் மற்றொருவர் வந்திருந்தார். அன்பர் வேறு எதுவும் என்னிடம் கூறாமல், அவர் பக்கமுள்ள இடத்தை நிரப்பத் திட்டமிட்டு எழுந்து சென்றுவிட்டார். நான் கொடுத்த சிறு தொகைக்கு இவ்வளவுபோதும் என்று நானும் அப்பாற் சென்றேன். நண்பர் நல்ல நடிகர்தான். ஆனால், அவர் நடிப்பு விரிவுரையும் ஒரு நடிப்புத்தானோ என்று என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவர் சிறிதும் சடைவின்றி என்னிடம் நடித்த நாடகத்தை அடுத்த விசிப்பலகையிலும் தொடங்கி விட்டார். 15. கிரீன்லந்துக் காவியம் டாக்டர் ஸாமுவேல் ஜான்ஸன்1 வேனிலும் தென்றலும் வீசா இடத்திலும் மேனிமிர் மாங்கொடி மேவுறா இடத்திலும் மங்கிய உறைபனி தங்குறும் நாட்டிலும் வெங்கொடு மின்னல் ஆர்த்தெழுந் திணையிலும் எவ்விடத் தினும்என் காதலும் கவிதையும் செவ்விட மாகத் திகழுறும் இனிதே. - ஃவிரான்ஸிஸ். பொறி புலன்களால் ஏற்படும் புற இன்பம் புற உலகச் சூழலையே பொறுத்தது. புற இன்பம் புறத் துன்பம் ஆகிய இரண்டனையும் புறச் சூழல்கள் மாறியன்றி மாற்ற முடியாது. வடபுலப் பண்ணைகளில் தென் இந்தியச் சோலைகளின் நறுமணத்தை யாராலும் உண்டுபண்ண முடியாது. புறத்தே நோவும் நோயும் நலிவிக்கும்போது, யாரும் அகத்தே ஏட்டு வேதாந்தத்தின் சோம்பலின்பத்தை நுகர முடியாது. அக இன்ப துன்பங்கள் இவை போன்றவையல்ல. புறச்சூழல்கள் எத்தகை யவையாயிருந்தாலும், அகப்பண்பு தேடிப் பெற்றவர்க்கு அவை ஒரேவகையான உணர்ச்சி தரத்தக்கவை. கலையும் இலக்கியமும் இவ்வகப்பண்பு சார்ந்தவை. ஆகவே அவற்றின் நறுமணத்தை எல்லாவகை நிலங்களிலும் எல்லா நாட்டிலும் காணலாம். சோலையில் அவற்றின் ஒரு பண்ணைக் கேட்கலாமானால், பாலையில் அவற்றின் மற்றொரு பண்ணைக் கட்டாயம் கேட்கலாகும். பிரிட்டனில் வாழ்வோர் உறைபனிக்காலத்தில் கீழ் நாடுகளின் பசுஞ்சோலைகளை எண்ணி இன்புறலாம்; அல்லது ஏங்கலாம். ஆனால், அதேசமயம் ஒளியற்ற, உயிர்த்தடமற்ற தொலை வடபுலங்களை யெண்ணித் தேறுதல் அடையலாம்; அல்லது அகத்துன்பம் அடையலாம். ஆனால், கலைத்துறையில் கீழ்நாடுகளிலும் சரி, நம் வடவுலகங்களிலும் சரி, தொலை வடபுலங்களிலும் சரி, எங்கும் காதலும் கவிதையும் ஒரேவகையில் இன்பந்தரவே செய்கின்றன என்று காணலாம். எவ்வளவு குளிர்பகுதியிலும் அதன் கனிவு குறைவதில்லை; எவ்வளவு வற்றற் பாலையிலும் அதன் இன்ப ஊற்றுக் குறைவதில்லை. மனிதவாழ்வே பெரிதும் எட்ட முடியாத அவ்வளவு கொடுங்குளிர்ப்பகுதி எல்லையிலுள்ள லாப்லந்து, கிரீன்லந்து ஆகிய இடங்களில்கூட, இயற்கையுடன் மல்லாடி அல்லாடும் மனிதன் காதல் புரிகின்றான்; காவியம் இயற்றுகின்றான்! கிரின்லந்தின் உறைபனிப்பாறைகளும் குகைகளும் அவ னுக்குக் கீழ்தேசங்களின் நிலாமுற்ற மாடங்களாகவே இயங்குகின்றன. கிரீன்லந்து மக்கள் நாடோடிகள், மட்டான குளிர்கால முழுதும் அவர்கள் அப் பரந்த பனிநிலத்தில் அலைந்து திரிவர். எப்போதும் அலைந்து திரியும் காரணத்தால் அவர்களிடையே யார் உறவு, யார் அயலார் என்ற வேறுபாடு கிடையாது. எல்லாரும் ஏதிலா அயலார்களே. கடுங்குளிர் மாதங்களில் மட்டும் அவர்கள் பெருங் குகைகளில் அரண் கொள்ளுவார்கள். சிறிது சமூகவாழ்வு பழகும் காலம் அதுவே. அக் காலங்களில் எங்கிருந்தோ வந்த ஓர் இளைஞன், எங்கிருந்தோ வந்து தங்கிய ஒரு மங்கையுடன் சிறிது உறவாடுவான். உறவு நீடிக்கலாம் அல்லது கிரீன்லந்தின் அகல் பரப்பில் அவர்கள் முன் சிதறி வந்தது போலவே சிதறிச் செல்லலாம். புல்லிய இப் புன்மலர்ச்சி வாழ்விடையேகூட ஒரு வீரக்காதல் காவியத்துக்குரிய நிகழ்ச்சி இடம்பெற்றது. அதன் புதுமணம், கிரீன்லந்து மக்கள் உள்ளத்தைக் கனிவித்துப் பழைய மணமாக ஊறி அந் நாட்டின் பழங்கதை, பழம் பாடல் ஆகியவற்றில் மிளிர்கின்றது. நிலைத்து வாழாதவர்க்கு இடப்பெயரும் தேவை யில்லை; ஆட்பெயரும் தேவையில்லை. ‘பச்சை மாநிலம்’ என்னும் *கிரீன்லந்துக்கு அப்பெயர் கொடுத்தவர் வெளியுலகத்தாரே - அது பனிஒளியின் தொலைநிறத்தைக் குறிக்கும், பசுஞ்சோலை களையோ பசும்புல் நிலத்தையோ குறிக்காது. அந்நாட்டு ஆடவர் பெண்கள் வெறும் ஆடவர் பெண்கள்தான் - யாருக்கும் பேர் கிடையாது. ஆயினும் கிரீன்லந்துப் பெருங்குகையில் எங்கிருந்தோ வந்து சந்தித்த ஓரிளைஞனும் ஒரு மங்கையும் தம் அழகாலும் காதல்நிறைவாலும் பெற்ற தனித்தன்மையைக் குறிக்க அந் நாட்டினர் அவர்களுக்கு முதல் முதலில் பெயரிட்டழைத்தனர் - ‘அனிங்கைத்’ அல்லது இளஞாயிறு என்றும் ‘அஜத்’ அல்லது இளம்பிறை என்றும் பெயர் வைத்தார்கள். வானகத்து இளஞாயிறும் இளம் பிறையுமே தம் மனித இன முன்னோர்கள் என்று கொண்டவர்கள் கிரீன்லந்து மக்கள். அம்முன்னோர் களின் முழுப்பொலிவுக் கூறுகளையும் உடைய இக்காதலரையும் அவர்கள் அப்பெயர்களால் அழைத்திருக்கக்கூடும்; அல்லது அவர்கள் புற அழகும் அக அழகும் தோன்ற அப்பெயர் மக்கள் உள்ளத்தில் எழுந்திருக்கக்கூடும். அனிங்கைத் ஒரு வேடன்; துடி துடிக்கும் இளமைப் பருவத்தினன்; அவன் குறும்புக்குப் பேர்போனவன்; பெண் களை மதிப்பதில்லை; பெண்கள் பக்கமாக அவன் கண் நாடுவது கூட இல்லை. அஜத்தின் அழகுபற்றிப் பல தடவை அவன் கேள்விப்பட்டான்; அவன் பொருட்படுத்தியது கிடையாது. கடுங்குளிர் மாதம் இப்படியே சென்றிருந்தால், பொருட் படுத்தவும் நேராது. இக் காதல் கதையும் நிகழ்ந்திராது. ஆனால், அனிங்கைத்துடன் தங்கிய குழு அஜத்தையும் அவள் குழுவையும் அழைத்து விருந்தாடிற்று. சிலபல தடவைகள் விருந்தில் அனிங்கைத் அஜத்தைக் கண்டான். முதல் தடவையே அவன் ஆணவச் செருக்கு முனைமுறிந்தது. அவன் அவள் பக்கம் நாடினான். அவளுக்குச் சிறு பணிகள் செய்ய முனைந்தான். ஆனால், இத்தகைய சிறுபணியை அவள் ஏற்க மறுத்தாள். அனிங்கைத் தன் சார்பில் அவளையும் அவள் குழுவை யும் வரவழைத்து, ஒரு திமிங்கிலத்தின் வாலைக் கொணர்ந்து விருந்தளித்தான். வாலின் மென்பகுதி அஜத்தின் முன் வைக்கப் பட்டது. இப்போதும் அஜத் முகத்தில் மகிழ்ச்சிக் குறியில்லை. ஆயினும் அந்நாள்முதல் அவள் வெண்மான்தோல் உடுத்தன்றி வெளிவராததை அவள் தோழர்கள் உன்னிப்பாகக் கவனித்தனர். கை நகத்திலும் புருவத்திலும் அவள் தீட்டிவந்த கரிய மை நாள் தவறாது புதுப்பிக்கப்பட்டு வந்தது. பவழமும் கிளிஞ்சிலும் அவள் கழுத்தகலாதிருந்தன - அவள் தலைமுடி வகை வகையாகப் பின்னப்பட்டுக் காட்சிக்கு விருந்தளித்தது. பிறர் கவனித்ததை அனிங்கைக் கவனிக்காதிருக்க வில்லை. அவன் தன் காதலை வெளிப்படத் தெரிவித்து அவள் போகுமிடங்களிலும் வருமிடங்களிலும் கட்டியங்கூறி வரவேற்றான். இருக்குமிடங்களில் அவள் மெய்க்காப்பாளன் ஆனான். அவன் அவள் மீது காதற்பாட்டுக்கள் பாடினான். அவள் வெண்பனி மேனி, வானிறக் கண்கள், மலைதவழ் முகில்போன்ற கூந்தல், நிலாப்போன்ற வெண்மானாடை, கரும்பவழம் போன்ற நகம் ஆகியவை வருணனைகளாயின. அவள் ஆடை மாற்றம் திங்களின் கலைமாறுபாட்டுடன் ஒப்பிடப்பட்டது. அவள் புன்னகை ஒளி உருகுபனியின் ஒளிக்கும், அவள் பல்லொளி மின் தவழ் முகிலின் வெண்மைக்கும் உவமைகளாயின. பனிவயல்களிடையேயும் பனிப்பாறைகளிடையேயும் அவன் அவளைப் பின்தொடர்ந்து சென்றான். பாறை களிடையே அவள் கைகளைப் பற்றி முத்தமிடும் பேறு அவனுக்குப் பரிசாகக் கிடைத்தது. குகைகளிடையே அவள் காலோய்ந்த சமயம் அவள் அருகிலமர்ந்து உரையாடி மகிழும் வாய்ப்பும், அவள் சோர்ந்தபோது சோர்வகற்றி அணைக்கும் இன்பமும் அவனுக்கு ஊக்கமளித்தன. அவள் சறுக்கினால், அவன் கைமீதுதான் சறுக்கினாள். அவள் சாய்ந்தால் அவன் மெய்மீதுதான் சாய்ந்தாள். அவன் அவ்வகையாக அவளைச் சூழ்ந்துநின்று காத்தான். “மண்மகன் அமராக்கின் கூரிய நகங்கள் உன்னைப் பற்றினாலும், நகங்கிழித்து மீட்பேன்; பாறையில் கரந்துறையும் பண்ணவர் பாய்ந்து வந்து பற்றினாலும், ஹஃவ்குஃவாக் கசங்களில் அழுத்தினாலும் துணிந்துவந்து மீட்பேன்,” என்று அவளிடம் அவன் சூளுரைத்தான். “என் அஜத்தை என்னிடமிருந்து பறிக்க முனைபவரை நான் கொன்றொழிப்பது மட்டுமல்ல மேலுலகிலும் என்னை எதிர்க்கமுடியாதபடி அவர்களை வில்லும் அம்பும் இல்லாது புதைத்து வைப்பேன்,” என்று அவன் காளையரிடம் உறுமினான். அவன் பாடல் அவனிதழில் மட்டுமன்றி அஜத் போன்ற பல நங்கையரின் காதலர் இதழிலும் தவழ்ந்தது. அவனைக் காதலனாக மட்டுமன்றிக் காதலுலகக் கவிஞனாகவும் அக் குகையமர்ந்த சமூகமக்கள் கொண்டாடினர். குகைவாழ்வு நிலையான வாழ்வு அல்ல. கடுங்குளிரால் இறுகிய பாறைகள் உருகியதும் குகைக்கும் குகைவாழ்வுக்கும் ஒரு விடிவு வந்துவிடும். ஆனால், அனிங்கைத் தன் காதல் குகைகடந்த காதலாயிருக்க வேண்டுமென்று விரும்பினான். அஜத்தோ காதலை ஏற்றாள். காதலனை ஏற்கத் தயங்கினாள். குகைக்காதல் மீட்டும் குகைக்காதலுக்குக் காத்திருக்கட்டும் என்று அவள் எண்ணினாள். அழகின் செருக்கு அவளை ஒரு வெற்றியுடன் அமைந்திருக்க விடவில்லை. அவள் மீண்டும் அனிங்கைத்தைக் காண விரும்பினதுண்டு. ஆனால், அதிலேயே வாழ்வுபோக்க விரும்பவில்லை. அனிங்கைத் அஜத்துடனே ஒரே படகிலேறிக் கடல் வேட்டையாடுவான். அவர்கள் பிடித்த மீன்கள் தனித்தனியே வைக்கப்படுவதில்லை. ஒன்றாகவே வைக்கப்பட்டு, ஒரு குடும்பச் சேமவைப்பெனப் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அவள் கண் ணோக்கி அவன் ஆடியவேட்டை அவள் வேட்டையாகவே கொள்ளப்பட்டது. பங்கிட்ட பின்பும் அவன் பங்கு அவனிடமே தங்கவில்லை. அவளுக்கு வகை வகையான மீன்கறிவகை, தோலாடைகள் பரிசுகளாக வழங்கப்பட்டன. அவன் காதலுடுத்து, காதல் உண்டு, காதலாடி அவள் தருக்கித் திரிந்தாள். அவன் அவள் அடிமையானான். ஆனால், அவள் அடிமைப்பட வில்லை. அவன் துணிவு அவன் குருதியோட்டத்தை விரைவு படுத்திற்று. பனிவயல் மீது அவன் கடற்குதிரைகளை வேட்டை யாடுவான். கடல்யானையுடன் போட்டியிட்டு நீரில் மூழ்குவான். சதையில் தைத்து முறிந்த வேலுடன் நீரில் மூழ்கிமூழ்கி யெழும் திமிங்கிலத்தின் முதுகிலேறி அவனும் அதனுடன் மல்லாடிக் குளிப்பான். இவ்வளவும் அவன் உயிர்ப் போராட்டம். அவை அவளுக்குத் துடிதுடிப்புத் தரும் இன்பக் காட்சிகளாயிருந்தன. இளஞாயிறு முதிர் ஞாயிறாயிற்று. குகையின் பாறைகள் உருகின. பருவ மாற்றத்துடன் மீனினம் கரைமாறிச் சென்றன. எல்லாரும் வெவ்வேறு திசையில் வேட்டை நாடிப் பிரிந்தனர். அனிங்கை அஜத்திடம், “அன்பு நங்கையே, என் கையைப்பிடித்து என்னுடன் வா. நான் உன் வாழ்க்கைத் துணையாயிருந்து உன்னை என் உயிர் போல்பேணுகிறேன்,” என்று அன்பழைப்பு அழைத்தான். அவள் மறுத்தாள். “வானத்து மதியமே, மறுக்காதே. நீரில் தோன்றும் நிமிர்ந்த ஞாயிற் றொளியே, என் வேண்டுகோளுக்கு இணங்கு,” என்று அவன் கெஞ்சிப் பார்த்தான். அவள் நகைத்தாள். “மீட்டும் நாம் சந்திப்போம். ஓரேயடியாகப் பிரியமாட்டோம்; போய்வா,” என்றாள். “இளங்கன்னியே, காளை அச்சமறியாது என்பர். நீயோ கன்னி. நான் திரும்புவது உறுதி. ஆனால், திரும்பும் வழியில் திடீர்ப்பனிமலை குறுக்கிட்டுத் தடுத்துவிடலாம்; உன்னை நாடி இராப்போது முழுவதும் வேறு குகைகளில் வாழ நேரலாம். நம் இளமைக் காலத்தில் எத்தனை இரவுகள் (ஆறுமாதக் காலங்கள்) இருக்க முடியும். இருவரும் ஒரே குகையில் வந்து சேருவதென்பது எப்படி அடிக்கடி நேரும்? ஆகவே எண்ணிப்பார். ஒருங்கு திரிவோம். ஒரு குகையில் கூடுவோம்,” என்று அவன் மீட்டும் மீட்டும் இறைஞ்சினான். “இரவும் பகலும் மாறி மாறிச் சிறிது சிறிது நேரம் இருக்கும் என்று சில கவிஞர் புனைந்து கூறுகிறார்களே, அந்த உலகிலா நாம் இருக்கிறோம். அணங்கு களை அகத்தில் இருக்கவிட்டு அடிக்கடி வந்து கலக்க. நம் உலக வாழ்வு புயல் வாழ்வு. அணங்குகள் புயலின் மின்னல்கள் புயலுடன் கூடியிருக்கும் மின்னலாக என்னுடன் இருந்துவாழ வருவாய்!” என்று அவன் கட்டுரைத்தான். அவன் காதல்கனிவு, அவன் கவிதை, அவன் வேண்டு கோள் யாவும் அவளுக்குப் பெருமை தந்தன. அவள் இதழில் புன்னகை அரும்பிற்று. ஆனால், அவள் உள்ளத்தின் ஆழத்தி லிருந்து பெண்மையின் பேதைமை, அழகின் செருக்கு அசைய மறுத்தது. அவள் அவனுடன் போக மறுத்தாள். ஆனால், அவன் அவளுடன் தங்கத் துணிந்தான். அவள் வேட்டையாடத் தேவை யில்லாதபடி அவன் தொலைதூரம் சென்று வேட்டையாடினான். அவள் தேய்ந்து சிறுத்த குகையிலேயே தங்கினாள். அவன் காதலுறுதி அவள் உள்ளத்தையும் நாளடைவில் சிறிது கனிவித்தது. அவள் குகையிலிருந்து வெளிவந்து அவனை அனுப்பினாள். சிலசமயம் குகையை விட்டு வெளியேறி அவனைச் சிறிது தொலை சென்று வழியனுப்பினாள். பின், கடலருகே அவன் படகேறும் வரை இருந்து படகு சென்று மறையும்வரை நின்று பார்த்துக் கொண்டிருந்து திரும்பினாள். இன்னும் சில நாளில் அவனுடன் செல்லக்கூட அவள் உள்ளம் தூண்டியிருக்கும்! ஆனால், இறுதியாக அவன் விடைகொள்ளும்போது அவள் படகுவரை வந்து தானே படகில் முதலில் ஏறித் தண்டெடுத்து வலித்துப் பின் இறங்கினாள். அவனுக்கு விடை தரும்போது அவள் கைகள் அவன் கைகளைப்பற்றி அழுத்தின. அவள் இதழ்கள் அவன் இதழ்களை ஏற்று அவற்றினின்று எளிதில் பிரியாது இணைந்து தங்கியிருந்தன. இணைபிரிய விரும்பாத பிரிவாயிருந்தது அப் பிரிவு. இத்தடவை பிரிவு அவளைச் சுட்டது. அவனில்லா ஒவ்வொரு கணமும் அவன் நினைவாகவே அவள் இருந் தாள். அவள் வெண்மான் தோலாடை உடுத்தவில்லை; அது சுவரில் தொங்கிற்று. அவள் சடைகள் பின்னப்பட வில்லை; ஆடல் பாடலில் அவள் கலக்கவில்லை. அவன் கொடுத்த ஆடைகள் பல. அவை போதாமல் மென் தோல்கள், இறகுகள், நரம்பு நூல்கள், எலும்பூசிகள் பல அவன் அவளுக்குப் பரிசளித்திருந்தான். இப்போது அவள் துன்னினாள். தனக்கு ஆடைமட்டுமல்ல; அவனுக்கு வந்தபின் பரிசளிப்பதற்கான ஆடையணிகள் அவள் கைவிரல்களில் தொங்கின. அவன் கவலையற்று வாழ்ந்தவன். அவள் கண்களில் இப்போது கவலை தோய்ந்தது. அவன் நில நோக்கியதில்லை; தன்னை நினைத்ததில்லை. இப்போது அவள் வானோக்கி னாள்; வானத்துத் தெய்வங்களையும் மண்ணகத்துத் தெய்வங்களையும் வணங்கி வேண்டினாள், தன் காதலனை இடையூறின்றி அனுப்பித்தர வேண்டுமென்று! இடம்விட்டு இடம்பெயரும் பெரும் படகுகளைக் கிரீன்லந்தில் பெண்டிரே உதைப்பர். அணிங்கைத் தன் படகைத் தானே உதைத்தான். இதுகண்டு. இளைஞரும் பெண்டிருங்கூட நகைத்தனர். அவன் உள்ளம் சுருக்கென்றது. அவன் படகின்று குதிக்கத் துடித்தான். ஆனாலும் தன் குகையையடையா விட்டாலோ, தன் காதலிக்கு நீண்ட குளிரிரவில் விளக்குக்கு எண்ணெய் இல்லாமல் போய்விடுமே, குளிர்தாங்கக் கடற்சிங்கத் தோலில்லாமல் போகுமே என்ற கவலை அவனை மீண்டும் படகேற்றியது. அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் பாட்டு - அவன் துன்பங்களைப் பாட்டாகக் கொட்டினான். “வாழ்வே! நிலையற்ற, ஏய்த்து ஏய்த்து மனிதனைக் குலைக்கின்ற வாழ்வே! கடலில் மிதக்கும் பனிப்பாறையன்றி உனக்கு எதனை உவமை கூறுவேன். மலையென அது காட்சி யளிக்கின்றது, புயலிடையே, அலைமோதலிடையே! ஒளி வீசுகின்றது, கதிரொளியில் அதன் உச்சி கரையும்பொழுது, அடித்தளம் பாறைகளில் மோதி உடையும்பொழுது! அழிவில் தானா அழகு? காதலே, நீ இப்புயற்கடலிடையே ஓர் அழகிய சுழி - சுழியில் சுழலும் ஒரு பல்வண்ணக் குமிழி - காண்பவர் கண்ணைப்பறிக்கும் ஒளிவண்ணம் காட்டி, வானகத்து வில் வண்ணம் தோன்றச் சுழன்று சுழன்று சென்று, ஒளிவண்ணம் எல்லாம் ஒளிக்கும் வண்ணமாக்குகிறாய்! “அஜத்தின் அழகு என் கண்களில் படுமளவும் நான் கவலையற்ற இளமையில் காலந்தள்ளினேன். கடலின் ஆழம், புயலின் வலிமை, கடற்சிங்கங்களின் குகைபோன்ற வாய், பனிப் பாறைகளின் மாயங்கள் எவற்றுக்கும் நான் அஞ்சவில்லை. அவள் சிறுநகை மறைவுக்கு, அவள் சிறு சீற்றத்துக்கு, அவள் உள்ளத்தின் சிறுசிறு கோட்டங்களுக்கு - இன்று அஞ்சுகிறேன். “அஜத்! உன்னை நான் ஏன் சந்தித்தேன்; உன்னை ஏன் விருந்துக்கு அழைத்தேன்; உன் அழகு என்னை ஏன் கௌவிக் கொண்டது? “ஆனால் கௌவிக்கொண்டபின் எனக்கு வேறு நோக்கில்லை, வேறு இன்பமில்லை. என் உயிர், இன்பம், வாழ்வு யாவும் நீ. நீ உண்மையாய், உறுதியாய் இரு. அனிங்கைத் தன் உயிரல்லவென்று நீ நினைத்தால், என் உயிர் என்னிடம் இராது. மானை வேட்டையாடுவேன். மாபெருந் திமிங்கிலத்துடன் போராடுவேன். இருளும் பனியும் அயராதவரை நான் அயரேன்; கதிரவன் சோராதவரை சோரேன். ஆனால், நீ சோரின் நான் சோர்வேன். நீ புறக்கணிப்பின் நான் வாழேன்.” பாட்டு அவன் சோர்வகற்றிற்று. இளைஞர் மங்கையர் சிரிப்பும் அதன் வெற்றிமுழக்குக் கேட்டடங்கிற்று. இதேசமயம் அஜத் அனிங்கை நாடிக் காத்துக் கொண்டிருந் தாள். ஆடையணி ஒப்பனையில்லாத இந்த நேரத்திலும், முகத்தில் பொலிவில்லாத இந்த நேரத்திலும் கூட அவள் மதிமுகம் மற்ற இளைஞர்கள் உள்ளத்தில் புயல் விளைவியாமலில்லை. ஆயினும், அவள் போக்குக் கண்டு அவர்கள் விலகினர். ஆனால், ஒரு நாள் அவள் தன் தோலாடைகளை உலர்த்திக் கொண்டிருக்கும் போது, உயர் குடிச் செல்வனும் பெரும் பொருள் உரிமை யாளனுமான நார்ங்சக்கின் கண்களில் அவள் அழகு பட்டது. அவன் தாய் மான்தோல்களைத் தொலைநாடுகள் சென்று விற்ற அயல்நாட்டு வணிகன் மகள். அவனைப் பெற்றவுடனே அத்தாய் இறந்து விட்டாள். அவன் தந்தை ஆடவர் படகுகள் நான்கும், பெண்டிர் படகுகள் இரண்டும் உடையவன். அவனிடம் தொண்ணூறு மிடாத் திமிங்கில நெய்யும் பனியிற் புதைத்து வைத்த இருபத்தைந்து நீர்ச்சிங்கங்களும் சேம வைப்பாக இருந்தன. இரண்டு தலைமுறைகள் பகலொளியே இல்லாமல் போனாலும் வேட்டையாடாமல் அவன் காலங் கழிக்க முடியும். நார்ங்சக் அஜத்தின் அழகில் ஈடுபட்ட அன்றே அவளிடம் எத்தகைய காதல் மொழியும் ஆடாமல் செருக்குடன் ஒரு முழு வெண்மான்தோலை வீசிப்போட்டுச் சென்றான். அதையடுத்து ஒரு முழுப் பவளக்கொடி அவளுக்கு அனுப்பப்பட்டது. அஜத் இப்பெரும் பரிசில்கள் கண்டு திடுக்கிட்டாள். ஆயினும், அவள் அவற்றை ஏற்கவில்லை. அனிங்கைத்துக்காகவே அவள் காத்திருக்கத் துணிந்தாள். காதலை, செல்வர் காதல் கொண்டு பெற முனைய மாட்டார். விலைகொண்டே பெறுவர். நார்ங்சக் அவ்வகையில் தோற்றான். ஆனால், செல்வம் விலைகொடுத்து வாங்காத பொருளை அது விலைகொடுத்து வாங்கும் பிற கயமைப் பண்புகளால் சாதிக்கவல்லது. வஞ்சகத்தைப் பயன்படுத்தவும் அது முடியாவிட்டால், வன்கண்மையை வழங்கவும் அவன் திட்டமிட்டான். வஞ்சகமே பலன் தந்தது. அஜத் குறிகாரனை (அங்செக்சாக்) அணுகி அனிங்கைத் எப்போது வருவான்; தன் எதிர்கால வாழ்வு எப்போது விடியும் என்று கேட்டாள். குறிகாரனை நார்ங்சக் முன்பே பெருவிலைக்கு வாங்கியிருந்தான். அவனுக்குரிய நீர்ச்சிங்கங்கள் இரண்டும் வெண்கல் சாடி ஒன்றும் குறிகாரன் வகையாய் இருந்தன. அஜத்தும் சும்மா குறி கேட்க வில்லை. தானே துன்னிய சட்டை ஒன்றைக் கொண்டு வந்தாள். ஆனால், செல்வர் செல்வம் விலையுடையது; ஏழையர் செல்வம் விலையற்றது. ஏழையர் செல்வம் ஒழுக்கம் வகுக்காது; சமயம் வகுக்காது. செல்வர் செல்வம் ஒழுக்கம் வகுக்கும், சமயம் வகுக்கும். குறிகாரன் அனிங்கைத் இறந்துவிட்டானென்றும், அவள் நல்ல கணவனை மணந்து வாழ்வாள் என்றும் கூறினான். அஜத் இச்செய்தி கேட்டுத் துடித்தாள். அதேசமயம் நார்ங்சக் முன்னிலும் நெருக்கித் தன் காதல் பேரம் நடத்தி னான். அஜத் காதலுள்ளத்தில் குறிகாரணைப்பற்றிய ஐயுறவு எழுந்தது. அவள் மீண்டும் அவனிடம் சென்றாள். பின்னும் ஒரு சட்டை கொடுத்து, “அனிங்கைத் மீண்டுவிட்டால் இன்னும் சிறந்த பரிசு தருவேன். நன்றாகக் குறி பார்த்துச் சொல்லு,” என்றாள். செல்வர் செல்வம் வந்தாயிற்று. மேலும் வரக்கூடியது வரட்டுமே என்று குறிகாரன் குறியைத் திருப்பிச் சொன்னான். “அனிங்கைத்தை ஒரு திமிங்கிலம் வாலாலடித்து வீழ்த்திக் கொன்று விட்டதாக முன்பு கூறியிருந்தேன். ஆனால், அவன் சாகுமுன், திமிங்கிலத்தின் உயிரும் போய்விட்டது. அதிலிருந்து ஒழுகிய கொழுப்பை உண்டு அவன் தேறிவிட்டான். இன்னும் இரண்டு திமிங்கிலங்களைக் கொன்று எண்ணெய் வடித்துக் கொண்டு விரைவில் வருவான்,” என்றான். அஜத்தின் மூத்தோர் குறிகாரன் முதலில் சொன்ன தையே ஏற்றனர். நார்ங்சக்கின் செல்வம் அவர்கள் அவாக் களைத் தூண்டின. அவர்களையும் வாக்குறுதிகளால் அவளால் வெல்ல முடியவில்லை. அவர்கள் நார்ங்சக்கை மணக்கும்படி வற்புறுத்தினர். அஜத் அழுதாள், விழுந்தாள், புலம்பினாள், கெஞ்சினாள்! ஒன்றும் பயனில்லை. வேறு வழியின்றி அவள் இராக்காலத்தின் இருண்ட புயலிடையே தப்பியோடி மேட்டு நிலங்களிலுள்ள குகைகளில் ஒளிந்து திரிந்து அனிங்கைத்தின் வரவை நாடிக் காத்திருந்தாள். ஆடையணிகளில் கருத்தூன்றியிருந்த அவள் ஆடைகள் இப்போது ஒரே கந்தல் ஆகியிருந்தது. இன்பம் நாடிய அவள், இப்போது பழக்கொட்டைகளையும் பறவை முட்டை களையும் உண்டு கழித்தாள். எவர் கண்ணிலும் படாமல் அவள் பாறைகளோடு பாறையாக நாள்தோறும் கடற்கரையை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மலைமுகடொன்றிலிறங்கி வந்து பார்த்து வந்தாள். இறுதியில் ஒரு பெரும் படகு சரக்கும் ஆளும் ஏற்றி அசைந்தசைந்து வருவதைக் கண்டாள். ஆர்வத்துடனும் ஆவலுடனும் அவள் ஓடினாள். தன் மனமாற்றத்தையும் தன் காதலுறுதியையும் எடுத்துக்கூறி மகிழ்விக்கும் ஆத்திரத் துடன் ஓடினாள். ஆனால், அந்தோ! படகில் அனிங்கைத் இல்லை. படகிலிருந்தோரோ அனிங்கைத் இன்னுமா வரவில்லை என்று கேட்டார்கள். படகின் வேகம் காதலியை நாடி விரையும் அனிங்கைத் துக்கு ஆமை வேகமாகத் தோற்றியது. அவன் ஒரு சிறு மீன் படகில் ஏறி அதற்கு முன் விரைந்து கடற்பரப்பில் மிதந்து சென்றதைப் படகிலிருந்தோர் கண்டனர். கடலில் மீன் படகு நெடுந்தொலை செல்லாது என்று அவர்கள் கூறிப் பார்த்தனர். அவன் காதலார்வம் கூடாது, கூடும் என்ற ஆராய்ச்சி யிலிறங்க மறுத்தது. ஆனால், அவர்களும் நம்பினர், அத்தகைய உறுதி வெல்லுமென்று, நம்பியவர்களும் நம்பி ஏமாந்தனர். அஜத் ஏமாற்றமே உருவாகச் சமைந்தாள். பின் ஏதோ நினைத்துக் கொண்டவள்போலப் பாறைகளை நோக்கி ஓடப் புறப்பட்டாள். ஆயினும், அவள் குழுவினர் அவளைத் தம் குகைக்கு இட்டுச் சென்று, மீண்டும் நார்ங்சக்குடன் மணவாழ்வில் புகும்படி மெல்ல வற்புறுத்தினர். ஆனால், இரவில் அஜத் வெளியேறினாள். இரவில் வானத்தில் வடமுனை வடரொளி வானகமெங்கும் மின்னொளி போல் வீசிற்று. அவள் ஒரு மீன் படகை எடுத்து அதில் ஏறிக் கடலில் பாய்ந்து சென்றாள். அவள் துணிவைக் கண்டு மலைத்த சிலரிடம் அவள், “நான் அனிங்கைத்தைப் பின்பற்றி அவனைத் தேடிச் செல்கிறேன்,” என்றாள். கடலைக் கடக்கத் துணிந்தான் காதலன், இக்கரைவர கடலைக் கடக்கத் துணிந்தாள் காதலி, அக்கரைசெல்ல சிறு மீன் படகு! கடற்பரப்பு! உணவில்லை! இடைத்தங்க இடமில்லை பனிப்பாறைகள், திமிங்கிலங்கள் உண்டு கடலில். புயல்கள் கடலின் சரிவில் காத்திருந்தன. ஆயினும், என்ன! காதலர் காதல் உந்தச் செல்லும் படகு, மீன் படகானாலும் காதலில்லா உலகு கடந்து காதலுலகுக்காகக் கடக்க முடியாது. அனிங்கைத்தும் அஜத்தும் இறந்து விட்டார்கள் என்று கிரீன்லாந்து மக்கள் நம்பவில்லை. ஆனால், அவர்கள் முடிவு பற்றிய ஒருமித்த முடிவும் இல்லை. அனிங்கைத் பாறைகளில் ஆள் உருக்கொண்டு இன்னும் அஜத்தைத் தேடுகிறான் என்றும், அஜத் கடல் நங்கையாய் அனிங்கைத்தை இன்னும் கடலில் தேடுகிறாள் என்றும் கூறுகின்றனர் சிலர். சிலரோ இருவரும் விண்மீன்கள் ஆயினர் என்றும், சிலர் இரவேயில்லாத ஒழிவற்ற மாலை இளவெயில் - இளநிலாவுலகில், நெய்யறா விளக்கு, தேனாறாக் கலம், உணவறாத் தட்டம் ஆகியவற்றிடையே வாழ்கின்றனர் என்றும் கருதுகின்றனர். ஆனால், காதலர் எல்லாரும் இப்போது அனிங்கைத்தையும், அஜத்தையுமே தங்கள் குறிக்கோள் காதலராகக் கொள்கின்றனர். காதலியர் கடலில் துன்னூசியும் நூலும் இடுகின்றனர், அஜத்துக்காக; காதலர்கள் பாசறைகளில் வேல் நுனி இடுகின்றனர், அனிங்கைத்துக்காக! அடிக்குறிப்புகள் 1. னுச. ளுயஅரநட துடிhளேடிn. 2. ழுசநநn டுயனே. 16. மூவாமுதுமை1 சார்லஸ் லாம்2 வாசக அன்பரே, என்னைப்போலவே நீரும் வாழ்க்கையின் பொன்னிலவுக்கால முழுவதும், அதாவது இளமை முழுவதும், ஒரு பணிமனையில் சிறைபட்டுக் கிடந்து; அங்கே எந்த மேம்பாட்டுக்கும் இடமில்லாமல் வாழ்நாளின் நடுப்பகுதி முழுவதும் அச்சிறைவாழ்வே வாழ்வாக நீடிக்கப் பெற்று, ஓய்வு, விழாநாள் ஆகியவை எல்லாம் குழந்தைப் பருவ நினைவுகளாக மறந்தநிலையில், பருவமெய்துமுன்பே நரைதிரைக்கு ஆளாகி விடும் அரிய பேற்றினைப் பெற்றிருக்கக் கூடுமானால், அப்போது தான் அவ்வாழ்வினின்று விடுதலை பெறுவது என்பது எனக்கு எப்படி இருக்கும் என்று உமக்கு ஓரளவு விளங்கும். ஆம். ‘மின்ஸிங்லே’னிலுள்ள என் பணிமனையில் எனக்கே உரியதாய் இருந்த என் இடத்தில் நான் அமர்ந்து முப்பது கடந்து ஆறு ஆண்டுகள் ஆய்விட்டன. அந்தப் பழைய நிகழ்ச்சி அந்நாள் என் வாழ்வில் ஒரு பெருத்த மாறுதலாகத்தான் இருந்தது என்பதில் வியப்புக்கு இடமில்லை. அன்று எனக்குப் பதினான் காண்டு ஆகியிருந்தது. அதுவரை நான் பள்ளிப்பிள்ளை. வாரத்தில் ஓய்வுநாட்கள் வேறு, ஒழிவு நாட்கள் வேறு. பள்ளி நாட்களில்கூட ஒழிவுநேரமும் விளையாட்டு நேரமும் எத்தனை! படிப்பினிடையே விளையாட்டு, விளையாட்டினிடையே வேடிக்கை! ஆனால், அந்நாள் இதையெல்லாம் முழுவதும் மாற்றிவிட்டது. ஓய்வுநாள், ஒழிவுநாள், விளையாட்டு, வேடிக்கை, எல்லாம் பழங்கதையாயின. நாளைக்கு எட்டு, ஒன்பது, பல சமயம் பத்து மணி நேரம் பணிமனை மேடையில் ஆணிவைத் தடித்தது போல அமர்ந்திருக்கவேண்டி வந்தது. ஆயினும், இப்புதுமை வாழ்வே பழமை வாழ்வாக நாளடைவில் பழகிப்போயிற்று. காலம் எல்லாவற்றையும் பழமையின் அமைதியில் கொண்டு சேர்த்துவிடுகிறது. கூண்டுகளில் அடைப் பட்ட கரடி புலிகளைப்போல, நானும் என் புதுவாழ்வில் பழக்கப்பட்டுவிட்டேன். முறைப்படி ஞாயிற்றுக்கிழமை எனக்கு வேலையில்லா நாளாகத்தான் இருந்தது. பிறருக்கு அது எப்படியோ ஓய்வுநாளாக அமைந்திருக்கவும் செய்தது. ஆனால், எனக்கு ஓய்வுநாள் மற்ற எந்தநாளில் வந்தாலும் பயன் இருந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் எனக்கு அவ்வகையில் பயனற்ற நாளாயிருந்தது. லண்டன் நகர்த் தெருக்களின் பரபரப்பு, தெருப்பாடகர்களின் ஆரவாரம், சந்தை இரைச்சல், விரித்துக் கிடக்கும் கடைச்சரக்குகளின் காட்சி இவைகள் எல்லாம் என் ஓய்வுக் காலத்துக்கேற்ற விருந்துகளாயிருந்திருக்கும். ஆனால் அந்தோ, ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் இவை இல்லாமற் போயின. மற்ற நாளெல்லாம் இவற்றிடையே நேரம் கழித்தவர் அவற்றை விட்டு ஓய்வுபெறுகின்ற நாள் அது. அன்று எனக்கு ஓய்வு கிடைத்தாலும் ஒன்றுதான்; கிடையாவிட்டாலும் ஒன்றுதான். ஞாயிற்றுக்கிழமையின் தோற்றம் - முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு வாய்மூடிச் செல்லும் முதியவர்கள்; களிப்பை வெளிக்காட்ட முடியாமல் கட்டுப்பட்டுச் செல்லும் இளைஞர்கள், நங்கையர்கள், சிறுவர்கள், சிறுமியர்கள்; இறுகச் சார்த்தப்பெற்ற கடைத்தெருக்கள் ஆகிய இவை என் ஓய்வு காலத்தை ஓயாக்காலமாக்கின. ஓய்வுநாள் இல்லாமலே பழகி ஓய்வுநாட் பழக்கமே எனக்கு விட்டுப்போயிற்று. ஞாயிற்றுக்கிழமைகளல்லாமல் ஈஸ்டர், கிறித்துமஸ் விழாநாள் விடுமுறைகள் உண்டு. கோடை விடுமுறை ஒரு முழுவாரம் இருந்தது. இவற்றுள் கோடை விடுமுறைவாரம் எனக்கு ஓர் ஆட்டை விருந்தாகத்தானிருந்தது. ஆயினும் அது ஒரு மின்னல்போல் வந்துபோயிற்று. அது விரைந்து கழிந்துவிடுமே என்ற கவலையில் ஆய்ந்தோய்ந்து களிக்கப் பொறுக்காமல், நான் கண்டகண்டபடி கண்ட வேடிக்கையில் விரைந்து நேரம் போக்கியதனால், ஏழுநாளும் ஏழுகணமாகப் போய்விடும். அதன் முடிவில் மனநிறைவு இராது; ஒரு கழிவிரக்கம், ஓர் ஏக்கம்மட்டும் இருக்கும். மீண்டும் வேண்டாவெறுப்பான, ஆனால், பழகிய அந்தப் பழைய சிறைவாழ்விலேயே சரண்புகுவேன். ஓயாத உழைப்பு; கடுமையான வேலை. ஆனால், நாளடைவில் எனக்கு வேலைசெய்ய வலுஇல்லாமற் போயிற்று என்ற ஒரு எண்ணமும் உள்ளூர என்னிடம் ஏற்பட்டு வளர்ந்தேவந்தது. எனக்குத் தெரிந்த இவ்வுணர்ச்சி என் முகத்திலுள்ள குறிகளால் பிற்காலங்களில் பிறருக்குக் கூடத் தெரியவந்திருக்க வேண்டும். என் ஊக்கம் குன்றிற்று. என் உடல் நலங்கூடப் படிப்படியாய்த் தேயத் தொடங்கிற்று. என்றைக் கேனும் ஒருநாள் கால்தடுக்கி, கைதடுக்கி, அலுவலகத்தில் ஒரு சுவைகேடான நெருக்கடிக்கு ஆளாகிவிடுவேனோ என்ற அச்சம் எனக்கு எழுந்தது. இதற்கிடையில் பணிமனை தரும் இராக்கால ஓய்வு கூட எனக்குக் கெட்டது. பகலெல்லாம் வேலைசெய்து தூங்கும்போதுகூட, இரவிலும் அதே வேலை செய்வதாகக் கனவு காண்பேன். கனவுலகில் இரவு முழுவதும் வேலை செய்து விட்டு, விழிக்கும்போது என்நிலை மாலையில் பணிமனை வேலை முடியும்போது இருக்கும் நிலையாகவே ஆயிற்று. இதனால் பகற் சோர்வுடன் இரவில் கனவுவேலை, கனவுச் சோர்வுடன் பகலில் பணிமனைவேலை என்று இப்படி இராப்பகல் என் நைந்த உடலுக்கும் மூளைக்கும் மேலும் மேலும் நைவு ஏற்பட்டு வந்தது. என் மூளை குழம்பிற்று. என் கண்கள் இருண்டன. என் காதுகளில் மௌனம் ஓர் இரைச்சலாகத் தோன்றிற்று. இரைச்சல் மௌனமாகத் தோற்றிற்று. ‘எங்கே பார்வைக் கேட்டாலோ, மூளைக் கோளாற்றினாலோ கணக்கில் தவறு செய்து நீக்கப்பட்டு விடுவேனோ? எங்கே மேலாட்கள் கேள்வியைத் தவறாகக் காதில்கொண்டு திண்டுக்கு முண்டு மறுமொழி கூறிவிடுவேனோ? எங்கே இப்படி ஏதாவது ஒரு குற்றத்துக்காக என்னை நீக்கிவிடுகிறார்களோ?’ இவை என் புதிய அச்சங்கள். என் பணிமனைத் தோழர்கள் என் தோற்றம், நிலைமை ஆகியவைப்பற்றி என்னிடம் பலவாறு கிளறிப் பேசுவார்கள். ஆனால், பணிமுதல்வர்கள்வரை அதனைக் கவனித்திருக்கக் கூடும் என்று நான் எண்ணவில்லை. எனினும், சென்ற ஆண்டின் இறுதி மாதத்தின் ஐந்தாம்நாள் - நான் என்றும் மறக்கமுடியாத ஒருநாள் அது - பணிக் கழகத்தின் சின்னப்பங்காளி இலே... என் தோற்றம்பற்றி நேரே என்னைக் குறுக்குக்கேள்விகள் கேட்டார். என் வலுக்குறைவை நான் ஒப்புக்கொள்ள வேண்டிய தாயிற்று. கேள்வியினிடையே சிறிது அமைதியிழந்த சமயத்தில் நான் உள்ளத்தில் ஒளித்துவைத்திருந்த அச்சத்தைக் கூட வெளியிட்டக் கூறிவிட்டேன். “எங்கே ஒருவேளை, வேலையை விட்டே நிலையாக விலகிக்கொள்ள மனுப்போட நேருமோ,” என்று நான் அஞ்சுவதாக அவரிடம் தெரிவித்துவிட்டேன். அவர் சில ஆறுதல் மொழிகள் கூறியதாக எனக்கு நினைவு. இதன்பின் ஒரு வார முழுதும் என் வாய் அடக்கமின்மைக்கு நான் மிகவும் வருந்தினேன். என் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டேன். தண்டனையைகூடச் சுட்டிக் காட்டிவிட்டேன். எனக்கெதிராக என் குற்றச்சாட்டை வைத்தே என்னைத் திடீரென்று நீக்கி விட்டால், என்னசெய்வேன் என்று கவலை கொண்டேன். என் கவலைகள், என் துன்பம் இரண்டிற்கும் அம்மாதம் 12-ஆம் நாள் மாலை ஒரு விடிவு ஏற்பட்டது. பகல் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல நான் எழுந்தபோது மேலிடத்தின் அழைப்பு எனக்கு வந்தது. இத்தடவை என்னை அழைத்தது மூத்த பங்காளி - நான் நடுக்கத்துடன் கவலைதேங்கிய முகத்துடன் சென்றேன். சின்னப்பங்காளி வழியில் நின்று என் கவலையைப் போக்க எண்ணியவராய் இன்முகத்துடன் முறுவல் பூத்தார். அந்நகையொளி என் நடுக்கத்துக்குச் சிறிது ஆறுதலாயிருந்தது. பெரிய பங்காளியாகிய பா... நான் வியக்கும்படி என்னைச் சரிநிகர் மதிப்புக் காட்டி வரவேற்று, இருக்கையிலமரச் சொன்னார். வயது மூத்த உறவினர்போல நலம் உசாவினார். பின் என் நீண்ட நாள் பணிமனை வேலைபற்றியும் என் நன்னடத்தை பற்றியும் நற்குணங்கள் பற்றியும் எனக்கே தெரியாத அளவில் பேசிப் பாராட்டினார். என் கவலைகளகன்றன. ஆனால், இன்னும் நான் இதன் பொருள் என்ன என்று காணமுடியாமல் மலைக்கவே செய்தேன். ‘இறுதியில் பணியாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிலாவது விடுதலையளிப்பது அவசியம் எனக் கழகத்தார் கருதுகின்றனர்’ என்று கூறிய போதுதான் கவலையகன்று அமைதி குடிகொண்ட என் நெஞ்சில் புதிய நம்பிக்கை துடிக்கத் தொடங்கிற்று. கழகத்தினர் பக்கமாகப் பெரிய பங்காளி திரும்பிக்கொண்டு இறுதி வாசகத்தைக் கூறினார். மற்றப் பங்காளிகள் தலையசைத்து இசைவு தெரிவித்தனர். என் செல்வ நிலை பற்றியும் அவர் கேட்டார். எனக்கும் ஒரு தன்மதிப்புக்கு இடம் இருக்கட்டும் என்று என் மட்டான - ஆனால் போதிய செல்வநிலைபற்றி விளக்கினேன். அவர் இன்னும் புன்முறுவல் பூத்து, “உமது போதும் என்ற மனம் உமக்கு ஒரு பொன் செய்யும் அருமருந்துதான். ஆனால், அது உம் தகுதியை மிகுதிப்படுத்தவே செய்கிறது. உம் உடைமையுடன் உடைமையாக, உம் நீண்ட நாள் வாய்பேசாப் பணிக்குக் கழகத்தினர் சார்பான நன்றியறிவிப்பின் சின்னமாய், உமக்குச் சிறிது உதவி செய்யும் கழகம் எண்ணியுள்ளது. விடுதலைக்குப் பின்னும் நீங்கள் கவலையின்றி வாழ உதவும்படி இப்போதைய உம் வருவாயில் மூன்றிலிரண்டு பங்கு உமக்கு உதவிச் சம்பளமாகத் தர எண்ணியுள்ளோம்,” என்று வாய்மலர்ந் தருளினார். இவ்வெதிர்பாரா நற்செய்தியால் எனக்கு ஏற்பட்ட என் நன்றியுணர்வு என் தொண்டையை அடைத்தது. இன்பத்தால் என் நாக்குக் குளறிற்று. அவர்களுக்கு அந்நிலையிலும் என் நன்றி யறிவிப்பை எப்படியோ கூறி அவர்களும் எப்படியோ உணர்ந்திருக்க வேண்டும். ஆனால், உலகறிய இப்போது நான் அதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் - நன்றியறிவிப்பின் காரணமாகவே அப் பங்காளி அன்பர்கள் பெயரைக்கூடக் கூறிவிடுகிறேன் - பால்டெரோ, மெரிவெதர், பொஸாங்குவெட், இலேசி ஆகிய பங்காளிகளின் இணைப்புக் கழகமே எனக்கு இப்பேருதவி செய்தது! தொடக்கத்தில் மலைப்பு, பின் பேரின்ப உணர்ச்சி. ஆனால் மாறுதல் மீண்டும் மாறுதல்தான். இன்பத்தை எவ்வாறு துய்ப்பது என்பதை நான் மறந்துவிட்டிருந்தேன். இன்பமெய்தியதாக எண்ணிக்கொண்டே இன்பத்தைக் காணமுடியாமல், நோக்க மில்லாமல் சிறிதுநாள் இங்குமங்கும் அலைந்தேன். ஒருநாள் ஓய்வை, ஒருவார ஓய்வைப் பரபரப்புடன் கழித்த நான் என்றும் ஒரே ஓய்வுநாளான இப்போது அதைக் கழிக்கப் பரபரப்புக் கொள்ளவோ, கவலைகொள்ளவோ முடியவில்லை. முன்பு இன்பத்தை நான் தேடினேன் - இப்போது இன்பம் என்னைத் தேடட்டும் என்று நான் இருந்தேன். முன்பு காலவேகம் கடக்க எண்ணினேன். இப்போது காலவெள்ளத்தில் மிதந்தேன். நான் செல்வநிலையில் ஏழையாயிருந்தேன். காலத்திலும் அப்படியே. இப்போது போதிய பொருட்செல்வம், போதியதற்கு எவ்வளவோ மிகையான காலச்செல்வம் அமைந்துவிட்டது. ஆனால், நுகர நேரமில்லாத நிலைமாறி, காலத்தை எப்படிக் கழிப்பது என்ற வினா எழுந்து விட்டது. எதிர்காலம் என் மனக்கண் முன் எல்லையற்றுக் கவர்ச்சியாய்த் தோற்றிற்று, இன்னும் ஒரு முழுவாழ்நாள் பல ஆண்டுகள் வாழலாம் என்ற நிலையில். ‘பல ஆண்டுகள்!’ இத்தொடர் கேட்டு வாசகர் மலைக்கலாம். ஐம்பதாண்டெல்லை கடந்தவன் இளைஞரைப் போலப் பல ஆண்டுகள் எப்படி எதிர்பார்க்க முடியும்? ‘பதினாலாம் ஆண்டில் பணி புகுந்து முப்பத்தாறு ஆண்டு சென்று விட்டால் ஐம்பது ஆகாம லிராதே!’ என்று கேட்கலாம். ஆனால் என் கணக்கு வேறு. நான் வாழ்ந்த ஐம்பதாண்டுகளில் எனக்கென நான் வாழந்த காலம் மிக மிகக் குறைவு. பெரும்பகுதி பிறருக்காக வாழ்ந்ததே - அதாவது பணிமனைக்காக மேற்கொண்ட சிறை வாழ்வே. என் வாழ்நாளி லிருந்து எனக்கென வாழாத இந்தக் காலத்தைக் கழித்துவிட்டால் நான் இளைஞன்தானே! இதனால்தான் உலகிற்கு நான் ஐம்பது ஆண்டினன் ஆனாலும் என் கணக்கில் பதினாலு பதினைந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டவன் அல்ல. பணிமனைவிட்டு நாட்கள் சிலவே ஆகின்றன. ஆனால் எல்லையற்ற காலத்தில் கட்டற்று எண்ண விமானத்தில் திரிந்த என் உள்ளத்திற்கு அது எல்லையற்ற காலமாகவே படுகிறது. என் பழைய நண்பர்களுடன் - இன்னும் இறகு எழுதுகோல் ஓட்டி அலமரல் அடையும் என் பணிமனைத் தோழர்களுடன் சென்றுரையாடுவேன். அவர்கள் எவ்வளவோ அன்பாய்த் தானிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடன் முன்னைய தோழமைக் களிப்பு இப்போது கொள்ள முடிவதில்லை. இப்போதும் இருசாராரும் பேசிக் களிப்போம். ஆனால், முன்போலக் கூடிக் களிக்க முடிவதில்லை. அவர்கள் சிறைக்குள், நான் வெளியில் என்ற பிரிவினைக் கீறல் களிப்பென்னும் யாழிசையில் முறிவு காட்டிற்று. என் இடத்தில் மற்றொருவன், என் தலையணி தொங்கிய ஆணியில் மற்றொருவன் தலையணி - இது இயல்பாக நடைபெற வேண்டியது என்பது எனக்குத் தெரியும், ஆனால், எனக்கு இது பிடிக்கவில்லை... ஒன்றும் செய்யாது சும்மா இருத்தல் - இதுதான் எனக்கு இப்போது மிகவும் பிடித்தம். என் வாழ்க்கை வேலை முடிந்துவிட்டது. இனி என் வாழ்வு எனது இந்தச் சமயம் எனக்கு ஒரு குழந்தை பிறக்குமானால், அதற்குக் கூட நான் வேறு எந்தப் பெயரும் வைக்கமாட்டேன். `சும்மா’ என்று பெயர் வைப்பேன். அது ஒன்றும் செய்ய வேண்டாம். சும்மா இருந்து, சிரிக்கத் தோன்றிய நேரம் சிரித்து, அழத் தோன்றிய நேரம் அழுதால் போதும்! காலம் இப்போது அத்தகைய குழந்தையாகத்தான் எனக்கு இருக்கிறது. அடிக்குறிப்புகள் 1. கூhந ளுரயீநசயnரேயவநன அயn. 2. ஊhயசடநள டுயஅb 17. கவிஞர்களுடன் என் முதற்சந்திப்பு வில்லியம் ஹாஃச்லிட்1 1798, என்னால் என்றும் மறக்கமுடியாத ஆண்டு. பாதி வானவர் உருவின் கவர்ச்சி, பாதி விலங்குருவின் மருட்சியுடன் அந்த எண்ணுக்குரிய இலக்கங்கள் என்மனத் திரைமுன் உலவுகின்றன. என் தந்தை அப்போது ஷ்ராப்ஷயர் வட்டத் திலுள்ள வென் நகரில் மறுப்புச் சமயத்தாரின் சமய முதல்வரா யிருந்தார். அவருடனிருந்து, திருக்கூட்டத் தலைமைப் பணி யாற்றியவர் திரு. ரோ. திருக்கூட்டத் தலைமைப் பணியிலிருந்து திரு. ரோ. விலகி ஓய்வு கொண்டதனால், அவரிடத்திலிருந்து பணியாற்ற திரு. காலரிட்ஜ் எங்கள் வட்டாரத்தில் எதிர்பார்க்கப் பட்டார். அவர் முதமுதல் திருக் கூட்டத்தில் பேசவிருந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தியநாள் மாலையே, அவர் வருகை எதிர்பார்க்கப்பட்டது. வரவேற்பில் குறை ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற கவலையுடனும் அவரைக் காணும் அவா ஆர்வத்துடனும் நாங்கள் சென்றோம். தம் பின் தம் இடத்தில் பணியாற்ற வருபவரைச் சந்தித்து வரவேற்கும் முறையில் திரு. ரோவும் எங்களுடன் இருந்தார். வண்டி நிலையத்தில் நாங்கள் சென்று காத்திருந்தோம். வண்டியும் வந்தது. பலர் இறங்கி வந்தனர். நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இலக்கணங்களமைந்த எவரையும் காணாது விழித்தோம். அவ் விலக்கணங்களுக்குப் பெரிதும் மாறான ஒருவர்தான் எங்கள் கண்ணையும் கருத்தையும் தானே கவர்ந்ததுடன், யாரையும் எதிர்பாராமலே எங்களிடம் பேசி, எங்களிடம் தம்மையும் தம் பண்புகளையும் ஒரே மூச்சில் அறிமுகம் செய்து வைத்தார். அச் சந்திப்பை நான் என்றும் மறக்க முடியாது. திரு. காலரிட்ஜ் வழக்கத்துக்கு அப்பாற்பட்ட பருத்த உடலும் சிறிய வட்ட முகமும் உடையவராயிருந்தார். அவர் சட்டை கறுப்பு நிறம். அது அவருக்காகத் தைத்ததாகக் காணப் படவில்லை. அவர் பெருத்த உருவத்தை அது தன்னுள் அடக்க முடியாமல் திணறிற்று. அத்துடன் அது கட்டையாகவும் இருந்த தால் ஒரு வேட்டைக்காரன் சட்டைபோலவே இருந்தது. உடையும் தோற்றமும் இங்ஙனம் பொருத்தமற்றதாகத் தோற்றி னாலும், அவர் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. கூடவந்தவர்கள் எல்லாருடனும் அவர் தனித்தனி யாகவும் கூட்டாகவும் பிரிவு பிரிவாகவும் கலகலப்பாகப் பேசிக்கொண்டேதான் வந்தார். கால் நடந்ததோ இல்லையோ, வண்டியிலிருந்து இறங்கினாரோ இல்லையோ, ஓயாது அவர் கடகடவென்று பேசிக்கொண்டு தானிருந்தார். பேச்சும் என்ன பேச்சு! எங்கிருந்தாவது எதையாவது இழுத்து உவமையழகு, நகைச்சுவை, வீரச்சுவை ஆகிய எல்லாச் சுவைகளும் கலந்து அளந்து கொட்டிக் கொண்டேதானிருந்தார். கூடவந்தவர்களுடன் பேசிய பேச்சு நிற்கவேயில்லை. கண்கள் எங்களைப் பார்த்தன. அவ்வளவுதான். அவர்களிடம் பேசிய பேச்சே தொடர்ந்து எங்களிடம் பேசிய பேச்சாயிற்று. ஆயினும் பேச்சுடன் பேச்சாகவே தன்னையும் தன் பணியையும், எங்களைக் கண்டதனாலுண்டாகும் மகிழ்ச்சியையும், இன்னும் இவற்றுடன் இணைத்து எத்தனையோ பெரிய சிறிய செய்திகளையும் எடுத்துப் பொழிந்து கொண்டே வந்தார். அவர் பேச்சுக்கிடையே வேறு யாருக்கும் எந்தப் பேச்சுக்கும் இடம் கிடையாது. எல்லாரும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்! அவர் பேச்சுக்கு முடிவு அவரைவிட்டு சென்றுவிடுவது தான். ஆள் மாறும்; பழைய ஆள் போகும்; புது ஆள் வரும்; ஆனால், பேச்சுத்தொடரும். ஆளில்லாவிட்டால் கூட அவர் வாய்தான் ஓயும். உள்ளம் ஓயாது ஓடிக் கொண்டேயிருக்கும். ஏனெனில், அவர் ஒரு கவிஞர். கவிஞர் மட்டுமல்ல, அறிஞர்; அறிஞர் மட்டுமல்ல, சொற்பொழிவாளர். சமயத்தில் கூட, மறுப்புச் சமயக் கொள்கையில்கூட, அவருக்கு அக்கறை இருந்திருக்க வேண்டும்; ஏனெனில் அந்தச் சார்பிலேதான் அவர் திரு. ரோவின் பணியிடத்துக்கு உரியவராக வந்திருந்தார். நகரில் அவர் பேசாத நாளோ, நேரமோ கிடையாது. ஆனால், பேசாத இடங்களில்கூட, அவரைப் பற்றிய பேச்சுத் தான் மூன்று வாரத்திற்கு எங்கும் கேட்கமுடியும். திருக்கூட்டத் தலைவரைப்பற்றி அத் திருக்கூட்டத்துக்குக் குரியவர்தான் அக்கறை காட்டுவது வழக்கம். ஆனால், திரு. காலரிட்ஜ் எல்லா வகுப்பினரையும், எல்லாக் கூட்டத்தாரையும் ஒருங்கே தம்வயப்படுத்தினார். மக்கள் மட்டுமென்ன, கவிஞர்கள் ஆவிகள் நடமாடுவதாகக் கூறப்படும் வேல்ஸ்நாட்டு மலைகள் கூட இக்குரலுக்கு எதிரொலித்தது மாதிரி, இவ்வுயர் கவிஞனின் உரத்த குரல்கேட்டு அதிர்வுற்றது மாதிரி, என்றும் எதிரொலித்ததோ அதிர்வுற்றதோ இல்லை என்றுதான் எனக்குத் தோன்றிற்று. லெவலின்2 நாட்களுக்குப்பின் இத்தகைய உயர் வானக மறை உணர்வுகளை இவ்வாறு தூண்டியவர் யாரும் இருக்க மாட்டார்கள். அவர் கவிதைச் சிறகு பிற கவிஞர் கவிதைகள் சென்றெட்ட முடியாத உயரத்தில் பறந்து மண்ணுலகில் வாழ்பவரை அண்ணாந்து பார்த்து வைக்கவும், அதேசமயம் அவர் போக்கில் கலந்து மகிழ்விக்கவும் செய்தது. அவர் கூட்டுறவால் எல்லாரும் தம்மிடமும் உயர் கவிதைப்பொறி வந்து சுடரிட்டதாக உணர்ந்தார்கள். திரு. ரோவின் இடத்தில் அவர் அமர்ந்தது ஷ்ரூஸ்பரி நகரம். என் தந்தையின் தலைமையிடமோ வென் நகரம். அவரை வரவேற்றபின் ஷ்ரூஸ்பரி சென்றேன். போகும் வழியில் பச்சைப் பசேலென்று பரந்து அசைந்தாடும் இலைத்திரள்களினூடாக வேல்ஸின் நீனிற மலைச்சாரல்கள் என் கண்முன் நடமாடின. இடையிடையே செந்நிறத் தளிர்கள் தோன்றின; பழுப்பிலை கள் சலசலத்தன. அவற்றின் எழிலிசை என் அகச் செவிகளுக்குப் புதிததல்ல. ஆனால், அன்று அவ்விசையின் முழக்கம் வழக்கம் போல் என் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு மாறாக, அவற்றை அடக்கியாண்டன. ஏனெனில், அவை திரு. காலரிட்ஜின் கவிதை வடிவில் முழங்கின. இதற்குமுன் இயற்கையின் பல் வண்ண ஓவியத்தை நான் கண்டு களித்ததுண்டு. அவற்றைப் பிறருக்கு எடுத்துரைத்து அதே ஆர்வமூட்டும் வண்ணம் சொல்மாரி பெய்யமுடியும் என்று நான் எண்ணவில்லை. ஆனால், இன்று நான் அவ்வாறு சொல்லோவியம் தர முடிந்தது. ஏனெனில் திரு. காலரிட்ஜின் சொல்லோவிய வடிவிலேயே அவை எனக்குக் காட்சி தந்தன; அவற்றின் இசை முழக்கம் அவர் சொல்லோவியத்துடன் கலந்தே என் அகச் செவியை நிறைந்தது. அவற்றின் இசை கேட்கும்போது நான் ஊமையாய், எண்ண அலைகள் கூட இல்லாமல், பாதையில் மிதிபட்ட புழுபோல் அவ்வுணர்ச்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்தேன் - ஆனால், அவ் வடிமைப் பண்பே அவர் பண்பை என் உள்ளத்தில் ஆட்கொள வைத்து, என் பழைய அடிமைத்தனத்தை வேரறுத்து, என்னையும் கவிதையஞ்சிறகிலேற்றிக் கொண்டு சென்றது. என் இறந்தகால உணர்ச்சிகளை இவ்வுயரத்திலிருந்து நான் காணமுடிந்தது; கேட்க முடிந்தது. அதுமட்டுமல்ல. அவ்வடிமை யுணர்ச்சிகளுக்குக் கவிதை வடிவு கொடுத்து அவற்றில் பிறருக்கு இசையெழுப்ப என்னால் முடிந்தது. என் தந்தை வாழ்ந்த இடம் ஷ்ரூஸ்பரியிலிருந்து பத்துக்கல் தொலை இருக்கும். அதிலிருந்து பத்துக்கல் தொலைவில் திரு. ஜெங்கின்ஸின் இடமாகிய விட்சர்ச் இருந்தது. மறுப்பியல் கோட்பாட்டினர் குறிப்பிட்ட தொலையில் இங்ஙனம் இருப்பதும், அடிக்கடி அடுத்த இடத்தில் உழைப்பவருடன் உறவாடித் தம் தோழமைக் குழுவின் கூட்டுறவுச் சங்கிலியை வலுப்படுத்துவதும் வழக்கம். இதனால் என் தந்தையிடம் அவ்விருவரும், அவ்விருவரிடம் என் தந்தையும் அடிக்கடி போக்குவரவு வைத்துக்கொள்வர். இதே முறையில் திரு. காலரிட்ஜும், திரு. ரோவைப் போல் எங்களை வந்து பார்ப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆயினும் அதற்கிடையில் அவரை அவரிடத் திலே சென்று கண்டு அவர் கன்னியுரையைக் கேட்க வேண்டுமென்று நான் துடிதுடித்தேன். என் தந்தை மறுப்புக் கோட்பாடு தவிர வேறு எதிலும் இளமையில்கூட ஆர்வமற்றவர். ஆனால், அவர்கூட ஒரு கவிஞர், ஓர் அறிவுத்துறைப் புகழ்பெற்ற கவிஞர் சமயப் பணிக்கு, அதிலும் மறுப்புக் கோட்பாட்டுக்கு விளக்கந்தர முன் வந்தார் என்று கேட்டபோது அவர் பணியில் ஆர்வம் கொண்டார். சமய உரை என்றால் தோளசைத்து வேண்டா வெறுப்பாய், ஆனால் அவ்வெறுப்பை மறைத்துக் கொண்டு உணர்ச்சியற்றவகையில் கேட்கும் மக்களிடையே இப்போது இச்செய்தி புத்தார்வமும் கிளர்ச்சியும் ஊட்டியிருந்தது. இப்புகழ்ப்பேருரை கேட்கும் ஆர்வம் ஒருநாள் காலை விடியுமுன்பே என்னை எழுப்பிவிட்டது. விடியுமுன்பே புறப்பட்டுப் பத்துக்கல் தொலையும் நடந்தேன், அவ்வளவு தொலை அவ்வளவு விரைந்த கடுநடை நான் நடந்ததில்லை - இனியும் நடக்கப்போவதாகத் தோற்றவில்லை. அது நடக்கத் தக்க பருவமுமல்ல; அக் கடுங்குளிர் காலத்தின் உறைபனியும், மூடுபனியும் எல்லாரையும் வீட்டுக்குள்ளே கூடப் போர்வையின் உட்புறத்தைவிட்டு வெளிவராதிருக்கச் செய்யும். ஆனால், இவற்றிடையே நான் நடந்து சென்றேன்; அவாவுடனும் மகிழ்ச்சியுடனும் கிளர்ச்சியுடனும் நடந்துசென்றேன். கோவிலகத்தார் நூறாவது திருப்பாடல் பாடினர். அதன்பின் திரு. காலரிட்ஜ் எழுந்து தன் பேருரையின் மூலப் பாடத்தை வாசித்தார். அவர் பேருரையின் மாயத்தில் பாதி அவர் வாசிப்பிலேதான் அடங்கியிருந்தது. “மலைமீதேறி வழிபடச் சென்றார் எம்பெருமான், தானே, தன்னந்தனியே சென்றார்.” இந்த வாசகத்தை எல்லாரும் எத்தனையோ இடங்களில் எத்தனையோ தரம் கேட்டிருப்பார்கள். நானும் எத்தனையோ தரம் கேட்டிருப்பார்கள். நானும் எத்தனையோ இடங்களில் கேட்டுத்தானிருக்கிறேன். ஆனால், அன்றுதான் அச்சொற்களின் முழு உயிரை, அதன் முழுஓசை இயக்கத்தை நான் கேட்க முடிந்தது. “எம்பெருமான், தானே, தன்னந்தனியே” என்ற சொற்கள், ஒன்றையடுத்து ஒன்றாக, ஒன்றன் முழக்கம் மண் ணுலகத்திலிருந்து ஒருவரையழைத்துக்கொண்டு படிப் படியாக வானுலகில் இட்டுக்கொண்டு செல்வது போன்றிருந்தது. தாம் நிற்குமிடத்தை யாவரும் மறந்தனர் - காட்சித் திரையின்றி, ஒளி விளக்கப் பொறியின் உதவியின்றி, எல்லாரும் பாலஸ்தீன் மலைமீது இயேசுவாகிய எம்பெருமானைக் கண்டனர் - அவர் தன்னந் தனிமையை உணர்ந்தனர். அவர்களே கலீலிவாண ராயினர்! மக்கள் மண்ணுலகை மறந்தனர் என்பது மட்டுமல்ல; மண்ணுலகின் சமய உரை என்பதையும் மறந்தனர். வானுலகின் சமயம், கவிதை, அவர்கள் உள்ளங்கவர்ந்தது. உவமைகள், அடுக்குமொழிகள், உணர்ச்சியார்வமிக்க சொல்லோ வியங்கள் ஆகியவற்றின்மீது அவர் தாமும் மிதந்து பிறரையும் மிதந்து செல்லவைத்தார். அப்போது இளைஞராயிருந்த என்போன்றாருக்கு அவர் குரலோசை மனித உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்ததாகத் தோன்றிற்று. அது மனித உள்ளங்களின் ஆழ்தடங்களைச் சென்று தடவிற்று. மாண்திரு. ஜானின் அகக்கண்முன் இயேசுவின் காட்சி கண்டு பேசும் விம்மித வீறுமொழியிலேயே அவரும் பேசினார். மூலபாட வாசிப்பு முடிந்ததோ இல்லையோ, அவர் திடுமென அதன் உரை விளக்கத்தின் தலைப்புப்பகுதியைத் தொடங்கினார். அன்றைய தலைப்பு ‘போரும் அமைதியும்’ என்பது. கோவிலகமும் அரசும் ஒன்றுடன் ஒன்று இணைப்புள்ள கூறுகள் என்ற பொதுக்கொள்கையை அவர் மறுத்து, இரண்டும் ஒன்றுடனொன்று நேரெதிர் முரண்பாடுடையவை என்று வாசித்தார். கோவிலகம் அமைதியை நாடுகிறது. அரசுகள் போரை நாடுகின்றன. கிறித்தவ அரசு என்பது மனிதக் குருதியில் தோய்ந்து குருதி சொட்டும் துணியில் சிலுவைக்குறியை வைத்துப் போற்றுவதன்றி, வேறன்று என்று அவர் காட்டினார். போரின் தீவினைகளை எல்லாரும் காணும்படி நாட்டுப்புறக் காட்சிகள் பலவற்றைப் படம் பிடித்து எங்கள் கண்முன் வைத்தார். “இதோ எளிய வாழ்க்கை வாழும் ஆய்க்குல இளைஞன் - தன் மந்தையை ஒட்டிக்கொண்டு அவன் ஊர்ப்புறம் சென்று இனிய நீருண்டு மந்தையில் பாடி இளைப்பாறி, மாலையில் திரும்புகிறான். அவனைப் பார்க்க அவன் என்றும் கிழவனாக மாட்டான் என்று கூறுவர். ஏனெனில், அவன் வாழ்வில் கவலை, பேரவா, பொறாமை எதுவும் கிடையாது. அவன் வாழ்க்கை கோயிலறியாத ஒரு சிறு கிறித்துவ வாழ்க்கை. ஆனால், அதே இளைஞன்தான் இரண்டொரு ஆண்டுக்குள் போர் முடிந்தபின் - அது வெற்றியானாலும் தோல்வியானாலும் - கையொடிந்து, காலொடிந்து, இளமையில் முதுமையுடன், முடியாமைக்கு இலக்காய் நலிகிறான். இந்த இரு நிலைக்குமிடையே அவன் அடைந்த மாறுபாடுகள் என்ன? இந்தத் தீங்கறியாத தீங்கு செய்யாத இயற்கையின் செல்வனைத் திருடர் திருடுவதுபோல், நாட்டின் பெயரால், சட்டத்தின் பெயரால், போர்வீரர் கட்டித் தூக்கிச் சென்றனர். பாடிக்கொண்டு கன்று காலிகளின்பின் கவலையற்றுத் திரிந்தவனை, முரசடித்துக்கொண்டு சாவிடையே கொலைகாரனின் பின் வரத்தூண்டினார்கள். அவன் வாழ்வின் இருநிலைகளுள் எது கிறித்தவ நிலை? அன்பர்களே! இரண்டும் ஒரே கிறித்தவ நெறியாயிருக்க முடியும் என்று யாரே கூறுவர்? இயற்கை தரும் நறுநீர் குடித்தவனுக்குக் குடிவெறி ஊட்டிக் குடியை நம்பி வாழச் செய்வது கிறித்தவ நெறியா? இயற்கையின் காட்சிகளிடையே, கடவுளின் படைப்பிடையே திரிந்த நாட்டுப் புறச் செல்வனை வலுக்கட்டாயமாக நகர்களின் கழிசடைச் சேரிகளில் அடைத்து, படைகளின் புறஞ்சேரிகளில் வதைத்து, இப்போது பழைய இளமை, பழைய எளிய வாழ்வு, பழைய இயற்கை, பழைய நற்பழக்கங்கள் ஆகிய யாவும் விட்டுச் சமூகத்தின் ஒரு நோயாக ஆக்கியது கிறித்தவ நெறியாய் இருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்கள்! “நீங்கள் கிறித்தவர்கள் கிறித்தவர்களாகப் பிறந்த வர்கள். அடிக்கடி கிறித்தவ நெறியிலிருந்து சிறிது சிறிது நழுவினாலும், ஞாயிற்றுக்கிழமைதோறும் இயேசுவை நினைக்க, சறுக்கலில் பிழைக்க, உங்களை இன்னும் நல்ல கிறித்தவராக்கக் கோவிலகம் வருகிறீர்கள். உங்களிடம் கிறித்தவ நெறிபற்றிப் பேசி, இன்னொரு நாட்டை, இன்னொரு கிறித்தவக் கடவுள் படைத்த நாட்டை, இன்னொரு கிறித்தவ நாட்டைப் பகைக்கத் தூண்டும் கிறித்தவ நெறியை, கிறித்துவ நெறியின் பெயரால் நிலவும் கோவிலகத்தை நீங்கள் என்னவென்று கூறவேண்டும்? நீங்கள் கூறுகிறீர்களா? ஏன் கூறவில்லை?” பேச்சு படமாயிற்று. படம் விளக்கமாயிற்று. விளக்கம் சிந்தனையைத் தூண்டும் ஒரு பெரிய கேள்வியாயிற்று. சிக்கலான கேள்வி! அதற்கு விளக்கம் தேவையில்லை. ஆயினும், மக்கள் உள்ளத்தில் எழும் அக்கேள்விக்கான விடையை வலியுறுத்த அவர் மேலும் பேசினார். “கிறித்தவராகிய உங்கள் வாழ்வில் இயேசு அருகில் தான் நிற்கிறார். அவர் குரல் உங்களை மெல்ல அழைக்கிறது. ஆனால், சைத்தான் உங்கள் முன்நின்று உரத்த குரலுடன் பேசுகிறான். கடவுள் குரல் உங்களுக்குக் கேட்கவில்லை. சைத்தானின் குரல் உரத்த குரல். அவன் தோற்றம் புறக்கண்களைக் கவர்வது. அவன் கொலையையும் குடியையும் துன்பத்தையும் அழகுபடுத்தி உங்களை நம்பிப் பின்பற்ற வைக்கிறான். கொலை, வஞ்சகம் பகைமை, அடிமைத்தனம், வறுமை ஆகியவற்றின் கொடிய ஒரு கூட்டுக்குத்தான் அவனும் அவன் அடியார்களும் ‘போர்’ என்ற ஒரு மாறுபெயர் தந்து உங்கள் வாழ்வில் புகுத்தி யுள்ளார்கள். “உங்களுக்குப் போர்வேண்டுமா, கிறித்தவ நெறியின் அமைதி வேண்டுமா?” “கோவிலகமும், அரசும் ஒரே கடவுளின் இரு அமைப்புக்கள் என்று கூறி அரசுகளின் அட்டூழியங்களுக்கு ஆக்கந் தரும் பழைய கோவிலகம் வேண்டுமா? இரண்டும் வேறு வேறு. ஒன்றின் அழிவுப் பாதையிலிருந்து உங்களைக் காக்கும் நெறி மற்றொன்று என்று கூறித் தீமைகளிடையேயும் நன்மையை உலவவிடும் விடுதலைச் சமயநெறி வேண்டுமா? “எது வேண்டும் சொல்வீர்? கிறித்துவின் செல்வர்களே!” அவர் வாதங்களை நான் ஏற்றேனோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால், அவர் வாதங்கள் என் வாதங்கள் ஆயின. அவர் குரலோசை என் காதுகளில் முழங்கின. அவர் கண்ணொளி என்முன் ஓயாது நின்று நடமிட்டது. என் நாவின் மீதிருந்த தளை அறுபட்டது. நான் ஒரு கவிஞனாய்விட்டேன் என்று உணரத் தொடங்கினேன். நான் கிறித்தவ நெறியின் அடித்தளத்தைத் தேடி அலமர வில்லை; கிறித்துவைத் தேடினேன். கிறித்தவ நெறியின் மலையுச்சிமீது முகில் தளங்களில் விளையாடிக் கொண்டு அவர் அறிஞனாகவும், கவிஞனாகவும் என்முன் காட்சியளித்தார். கவிதைக் கண்ணால், அறிவுக் கண்ணால் பார்க்க வேண்டிய கிறித்துவை, வாழ்வின் தன்னலக் கண்ணால், வாழ்க்கைப் பிழைப்பின் குறுகிய நோக்குடன் பார்க்கும் குருமார்களின் பணியிருக்கையில் ஓர் அறிஞன், ஒரு கவிஞன் வீற்றிருந்தால் உலகியல் வாழ்வுக்கு வரும் பேரிடரையும் கண்டுகொண்டேன். அவர்கள் மக்கள் கண்முன் நேரில் கொண்டுவந்து, உலகை அவர் மயமாக ஆக்கிவிடுபவர்கள்! அடிக்குறிப்புகள் 1. றுடைடயைஅ ழயணடவைவ. 2. வேல்ஸ் நாட்டுக் கவிஞர் முனிவர் சித்தர் போன்ற மறைநிலைப் பண்புடையவர். லெவலின் பண்டை வேல்ஸ்நாட்டுக் கவிஞரில் தலைசிறந்தவர். வாழும் வகை இந்நூல் 2004இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. ஆள்வினை என்னிடமிருப்பதன்று என் செல்வம்; நான் ஈட்டுவதுதான் எனது. -கார்லைல். பொருள்களை உண்டுபண்ணும் தொழில்முயற்சி ஒன்றே உண்மையான முதலீடு. மக்கள் வாழ்க்கை வளத்தையும் நலத்தையும் பெருக்குவது அதுவே. உழைப்பு எதிலும் ஆதாயம் உண்டு என்பது ஸாலமன் அறிவுரை. அரசியல் பொருள்நூல் என்பது இதன் ஒரு விளக்கமன்றி வேறு என்ன? - ஸாமுவெல் லேங். இயற்கைத் தேவைகளை நிறைவேற்றக் கடவுள் பல பொருள் களைத் தந்துள்ளார்-உழவன் உழைப்பு, கலைத் தொழிலாளர் திறம், தொழிலாளர் வருந்தியாற்றும் பணி, இடந்தாண்டித் திரைகடந்து வாணிகன் செய்யும் வாணிபம் ஆகியவையே அவை. உலகத் தேவைகள், மாறுபாடுகள், வளர்ச்சிகள் ஆகியவற்றில் அக்கறையற்ற சோம்பலாளன் உயிரிருந்தும் இல்லாதவனே. அவன் செய்வதெல்லாம் சாகின்ற காலத்தைக் கொன் றொழிப்பதும், மண்ணின் விளவுண்டு மண்ணாவதுமே. புழுப்பூச்சிகள், கொடுவிலங்குகள்போல அவர்களும் வாழ்ந்து மடிகின்ற னர் - வாழும் காலத்தில் எதுவும் செய்வதில்லை. - ஜெரிமி டெய்லர். வாழ்வெனும் மாளிகையை எழுப்புதற்காம் பொருள்கள் தாழ்வின்றிக் காலமெனும் தடங்கிடங்கி லுண்டு பாழ்போகும் நாட்கள் இன்று நாளைஎன்ப தெல்லாம் ஊழ்வகுக்கும் மாளிகைக்கே உதவுகற்கள் ஆமே. -லாங்ஃவெல்லோ. நாகரிகம் ஆள்வினையுடன் தொடங்கிற்று. இன்றையத் தேவைக்கு முயலுவதுபோல், நாளையத் தேவையும் முன்கருதலாயிருக்கவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது அது பிறப்புற்றது. காசு பணம் புழங்கத் தொடங்கியது இதன் பின்னரேயாகும். செட்டான வாழ்வு என்பது தனிமனிதன் பொருளியல் வாழ்க்கைத் திட்டமே. குடும்ப வாழ்க்கைத் திட்டமும் பொருளியல் ஆட்சியும் அதன் பகுதிகள். இவற்றால் தனிமனிதர் வாழ்க்கைநலம் பேணப்படுகின்றன. அரசியலின் பொருளியல் திட்டமாகிய பொருளியல்நூல் இவ்வடிப்படையிலிருந்து நாட்டின் செல்வத்தை உண்டுபண்ணவும், வளர்க்கவும் முனைகிறது. தனிமனிதன் செல்வமும் சரி, நாட்டுப் பொதுச் செல்வமும் சரி, பிறப்பில் ஒருதன்மை யுடையவையே. இரண்டுமே உழைப்பின் பயனாகப் பிறப்பவை. சேமிப்பு மூலமும் சேகரிப்பு மூலமுமே அவை காக்கப் படுகின்றது. ஊக்கம் விடாமுயற்சி ஆகியவையே அவற்றைப் பெருக்க மடையச் செய்வன. நாட்டின் செல்வம் தனிமனிதனின் சேமிப்பே. நாடுகளின் வறுமை தனிமனிதனின் ஊதாரித்தனத்தின் விளைவால், முன்னது நாட்டு நலம் பெருக்குவது. பின்னது நாட்டில் நாளடைவில் அழிவுநோக்கிச் செலுத்துவது. ஆனால் செட்டான வாழ்க்கையுடைய ஒவ்வொருவனும் வேறு எத்தகைய நாட்டுப்பணியிலும் ஈடுபடாமலே நாட்டு நற்பணியாளன் ஆவான். செட்டாயிராமல் ஊதாரியாயிருப்பவன் வேறு எத்தனை வகையில் நாட்டுப்பணி செய்பவனானாலும் நாட்டுக்குப் பகைவன் ஆகாமலிருக்க முடியாது. தனிமனிதன் வாழ்க்கைச் சிக்கனத்தைப் பற்றி கருத்து வேறுபாடோ அதன் தேவைபற்றிய மாறுபட்ட கருத்தோ எங்கும் கிடையாது. இதை யாவரும் ஒத்துக்கொள்ளவே செய்கின்றனர். ஆயினும், அரசியல் சிக்கனங்களால் பொதுவாழ்க்கைத் திட்டம் பற்றிப் பேசநேர்ந்தால், எண்ணற்ற வாத எதிர்வாதங்கள் எழுகின்றன. யாதனப்பரப்பு எல்லை, தனிஉடைமைப் பெருக்கம், வரிச்சுமை எல்லை, ஏழ்மை வரிகள், முதலிய எத்தனையோ சிக்கலான வினாக்களில் சிக்குகிறோம். இவற்றுள் இந்நூலில் நாம் நுழைய வேண்டுவதில்லை. தனிமனிதன் வாழ்க்கைத் திட்டமாகிய அடிப்படை நிலைமையையே நாம் விரிவாக விளக்க எடுத்துக் கொள்வோம். சிக்கனம் என்பது மனிதனுடைய இயற்கையுணர்ச்சிகளுள் ஒன்றல்ல. செயலறிவு முதிர்ச்சி, முன்மாதிரி நிகழ்ச்சிகள், முன்னறி வாராய்வு ஆகியவற்றின் விளைவாகவே அது தோன்றுகிறது. கல்வி, அறிவு ஆகியவை அதற்கு வலுத்தருகின்றன. முன்னறிவும் ஆழ்ந்த சிந்தனைகளும் ஏற்பட்டபின்தான் மனிதர் செட்டாக இருக்க விரும்ப முடியும். எனவே, ஆடவர்களையும் பெண்டிரையும் செட்டுடையவராக்க மிகச் சிறந்தவழி அவர்களை முன்னறிவுடையவர்கள் ஆக்குவதே. சிக்கனமும் செட்டும் இயற்கையுணர்ச்சியல்ல என்பது மட்டுமல்ல; முழு உண்மை யாதெனில், சிக்கனத்துக்கு மாறாகிய ஊதாரித்தனம்தான் மனிதன் இயற்கையுணர்ச்சிக்குரியது என்றால் தவறாகாது. ஊதாரித்தனத்தில் ஈடும் தொடர்புமற்றவன் காட்டுமிராண்டிதான்-ஏனெனில் அவன் அகராதியில் நாளைக்கு என்பதும் கிடையாது, இன்றைக்கு என்பதும் கிடையாது; இப்போது என்பதுதான் அவன் வாழ்வு. முன்னறிவின் நிழல்கூட அவனை எட்டுவதில்லை. வரலாற்றுக்கு முந்தியகால மனிதன் ஒன்றும் மீத்துவைக்க வேண்டியவனாகவே இல்லை. அவன் வீடு குகைகள் அல்லது தழைமூடிய வளைகள். அவன் உணவு கடற்கரையில் ஒதுங்கிய கிளிஞ்சில்கள், அல்லது காடுகளில் உதிர்ந்த காய் கனி சருகுகள். படிப்படியாக அவன் விலங்குகளைக் கல்லெறிந்து கொல்ல முயன்றான். அவன் முதல்முதல் சேமிக்க எண்ணியது கல்லே. அவன், அவை வருமிடத்தில் காத்திருக்கப் பழகினான். அவன் முன்கருதலாக எதிர்பார்த்த முதல் நிகழ்ச்சி அதுவே. சேமித்த கற்களை அவன் எதிர்காலப் பயன்நோக்கிக் கருவியாக்கினான். கோலின் வளைவும் வலிவும் கண்டு அவன் வில் கண்டான்; கல்லின் வலுக்கண்டு அம்புகளுக்கு அவன் கல்முகப்புப் பொருத்தினான். உழைப்பு நோக்கமுடைய உழைப்பாயிற்று. அந் நோக்கத்தைக் கருவிகள் காட்டின. பழங்கால மனிதன் அறிவுக்கு அவன் மூளை அமைப்பாராய்ச்சியினும் அவன் கருவிகளின் ஆராய்ச்சியே தகுதிவாய்ந்த சான்று. தொடக்கக் காலத்து நாகரிகமற்ற மனிதனிடம் வேளாண்மை கிடையாது. உண்மையில், உணவுக்கான கூலமணிகளை விதையென அடுத்த ஆண்டுப் பயிருக்காகச் சேமித்து வைத்து வேளாண்மை செய்யும் வழக்கம், மனித நாகரிகத்தில் மிகப் பிற்பட்டு, மிகமிக அண்மையில், நிகழ்ந்த ஒன்றேயாகும். இதன்பின் நெருப்புக் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு நீண்ட நாட்களுக்குப்பின் கனிப்பொருள்களும், அவற்றிடையேயிருந்து இன்னும் நீண்ட காலத்துக்குப் பின் உருகக்கூடிய கனிப்பொருள் களாகிய உலோகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றாலேயே நாகரிகம் நெடுந்தொலை முன்னேற்றம் அடைந்துள்ளது. இவற்றின் பயனாகவே, கல் போன்ற திட்பமும் அதேசமயம் களிமண்போல விரும்பிய வடிவமும் பயனும்உடைய உலோகங் களாலான கருவிகளை அவன் ஆக்கமுடிந்தது. அதுமட்டுமன்று. கல்லை வேண்டிய வடிவில் உருவாக்கவும், மரத்தை வேண்டிய அளவில் சீவிக் குடையவும், மண்ணைப் பின்னும் செப்பம் செய்யவும் திட்பம் ஆக்கவும் அவன் இவ்வுலோகங்களையும் நெருப்பையும் பயன்படுத்தினான். நாகரிக முதிர்வில் ஏற்பட்ட சிக்கனத்தையும், அழிவுக் குறைப்பையும் இன்னும் பல செய்திகளில் காணலாம். கடற்கரையிலிருந்த நெய்தல் நிலத்தவர்கள் பெருங் கட்டைகளை உட்புறம் எரித்துக் கருக்கியே குடைந்து படகாக்கினர். இங்ஙனம் செய்தது உண்மையில் ஒரு பெரிய முன்னேற்றமே. ஏனெனில் இதற்குமுன் அவர்கள் தட்டையான பளுக் குறைந்த கட்டை களையே பயன்படுத்தினர். குடைவுமூலம் இருக்கப் பள்ளமும் பாதுகாப்புங் கிடைத்ததுடன், எடைமிக்க உறுதியான மரத்தையும் பயன்படுத்த முடிந்தது. ஆனால், எரித்துக் குடைவதற்கு மாறாக, கருவிகளின் உதவியால் செதுக்கியபோது, எரித்தல் தேவையில்லாததாயிற்று. குடைந்த பகுதியை அவன் விறகாக எரிக்க முடிந்தது. குடையாமல் தனித்தனி பலகையால் பொருத்தியபோது, சிக்கனம் பின்னும் பெருகிற்று. படகின் உள் அறைகளுக்குப் பாரிய கட்டை தேடித் திரிய வேண்டி வரவில்லை. செதுக்கிய மரத்தை வீணாக்கவேண்டிய நிலையும் இல்லாமற் போயிற்று. இரும்பு ஆணிகளாலும் நன்கு சீவியிணைக்கப்பட்ட பலகை களாலும் அமைந்த படகு அளவில் வளர்ந்து தோணியாய், மரக்கலமாய், இருப்புப் பாளங்கள் கோத்த கப்பலாய், தற்காலப் போரின் கடலகக் கோட்டைகளாயின. இப்போது பழைய படகு ஒரு சிறு நகரமாய், மக்களையும் போர்க்கருவிகளையும் ஊர்திகளையும் ஏற்றிச் செல்லும் சிறு மிதவை உலகமாய்விட்டது. நம் காலத்துக்கு முன்னிருந்தவர்கள் நமக்குப் பயன் தரும் பல்வகை உழைப்பிலும் உழைப்பினால் வந்த செயலடிப்படை யான உயர் அறிவிலும் ஈடுபட்டிராவிட்டால், நாம் இன்னும் நாகரிகமற்றவர்களாகவே இருந்துவர வேண்டியிருக்கும். நாம் வேளாண்மை செய்யும் நிலம் நம் முன்னோர்களால் இயற்கைக் காடுகளை அழித்து மீட்கப்பட்டவை. மனிதத் தேவைக்காக, அன்று அவர்கள் விளைவித்த பயிர்கள், அன்றைத் தேவையை மட்டும்தான் நிறைவேற்றின என்று கருதுதல் தவறு. அதன் தொடர்ச்சி மரபினால்தான் உலகில் நமக்கு இன்றுவரை விதை கிடைக்கிறது. நம் நெல்விதையும் கோதுமை விதையும் பண்டை மனிதன் முதன்முதல் வழங்கிய காட்டுப் புல்லரிசிகள் அல்ல; அவை நீண்டகாலம் மக்கள் பண்படுத்திய கூலமணிகளின் மரபில் வளர்ந்தவைகள். அத்துடன் முன்னோர்கள் இட்ட பயிரின் பசுமை மண்ணில் கலந்துதான் நம் நிலங்கள் உரம் பெற்று வேளாண்மைக்குரிய செழிப்புடையவையாயுள்ளன. வேளாண்மை மட்டுமல்ல. நாம் இன்று வழங்கும் கருவிகள் யாவும் முன்னோர்கள் கடுமுயற்சியாலும் நீடித்த செயல் அறிவினாலும் படிப்படியாகக் கண்ட மரபின் வளர்ச்சிகளே. கலைகள், இயல்கள், தொழில் திறங்கள் யாவும் அம் மரபின் தொடர்ந்த உயிர்ப் பண்புகளன்றி வேறல்ல. மனிதன் ஒரு தடவை செய்த எந்த நற்செயலும், எந்த உழைப்பின் பயனும் என்றும் வீண்போவதில்லை என்பதே இயற்கை நமக்கு அளிக்கும் பாடம். அழிபாடுகளில்கூட நாம் இப் படிப்பினையைத் தெள்ளத்தெளியக் காண்கிறோம். இன்று வாழும் நம் கலைகளும் கலைத் திறங்களும், புதையுண்ட அந்த மக்கள் வாழ்வின் மரபிலிருந்து வந்தவை என்பதை அவை தெள்ளத்தெளியக் காட்டுகின்றன. நினெவே, பாபிலோன், டிராய் ஆகிய நகர்கள் அழிந்து புதையுண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அவற்றின் கட்டடக் கலை, குழைவுக் கலை, சிறு கைத்தொழில் வேலைப்பாட்டின் திறம் ஆகியவை, இன்றுவரை நம்மிடம் தொடர்பறாமல் வந்துள்ளன. செய்தவன் அழிந்தபின்பும் செயலழிய வில்லை; செய்தவன் அழிந்தபின்பும் செயற்பண்பு நீடித்துச் செய்தவன் இனப் பண்பை வளர்க்கும் என்பது ஓர் இயற்கை அமைதி. புதையுண்ட அன்றைய வாழ்வு இன்றைய வாழ்வுக்கு எப்படி மூலமோ, அதுபோலவே அவ் வாழ்வுக்கு அதற்கு முன்னிருந்த வாழ்வும் மூலகாரணமாய், முன்னோடி மரபாயிருந்திருக்க வேண்டும் என்பதையும் நாம் காணலாம். வேளாண்மை, கலை முதலியவற்றின் மரபும் இவை போலுள்ள புறப்பொருள் மரபுகளும் நமக்கு முன்னோரிட மிருந்து வந்த மரபில் ஒரு பகுதி-ஒரு சிறு கூறேயாகும். நம் பிறப்புரிமையான உயிர்நிலை மரபு இவற்றினும் அழியாத செல்வம். அம்மரபு செய்பொருளின் மரபன்று, செய்பவன் மரபு; அதுவே உழைப்பாளர் உழைப்புத் திறம், அதனை இயக்கும் அறிவுத்திறம் ஆகியவற்றின் மொத்தத் தொகையாகிய இனப் பண்பு. இது நாம் தலைமுறைதோறும் கற்றுக்கொள்ளக் கூடியதன்று; தலைமுறைதோறும் முந்திய தலைமுறையினரால் கற்றுத் தரப்படுவ தாகவும், முன்மாதிரியாகச் செய்துகாட்டி உள்ளத்தில் படியவைக்கப் பெறுவதாகவும் அமைந்துள்ளது. இங்ஙனமே தொழிலும், கலையும், கருவிகளைக் கையாளும் திறனும் முறையும் அழியாது பேணப்படுகின்றன. இவை மனித நாகரிகத்தின் முக்கிய உறுப்புகளா யமைகின்றன. நம் இனப்பண்பும் நம் மனித உரிமைகளும் நம் முன்னோர் உழைப்பின் விளைவாகவே நம்மை வந்தடைகின்றன. ஆனால், நாமும் உழைப்பில் ஈடுபட்டாலன்றி அவற்றை நாம் நுகர்தல் முடியாது. இவ் வுழைப்பு கை காலுறுப்புகளின் உழைப்பாகவும் இருக்கலாம்; மூளை யுழைப்பாகவும் இருக்கலாம்; உழைப்பில்லா விட்டால் வாழ்வு பயன் படாது; அது உணர்விழந்த மூளையின் நிலைபோல, உயிரிருந்தும் உயிர்ப்பண்பில்லா நிலையாகவே இருக்கும். உழைப்பில் உடலுழைப்பு, மூளை உழைப்பு என்று வேறுபடுத்துவது உண்மையில் முடியாத காரியம். மூளையுழைப்பு இல்லாத உடலுழைப்போ, உடலுழைப்பு இல்லாத மூளையு ழைப்போ இருக்க முடியாது. ஏனெனில், மூளையும் உடலின் தொடர்புபட்ட ஓர் உறுப்பே யாகும். கைகால் உழைப்பு - உடலின் ஒரு தனி உறுப்பு மிகுதி ஈடுபட்ட உழைப்பாயிருப்பது போல, மூளையுழைப்பும் மூளை மிகுதி ஈடுபட்ட உடலுழைப்பே யாகும். மேலும், உடலுழைப்பில்கூட நல்ல உழைப்பின் பெரும்பகுதி மூளையுழைப்பே. செயல் முனைப்பு, பொறுமை, விடாமுயற்சி, பொதுநல அவா, உண்மையுணரும் ஆர்வம், பணி ஆர்வம், தற்சார்பு ஆகிய பண்புகள் உடலுழைப்பையும் உயர்மூளை உழைப்பின் நிலைக்கு உயர்த்துகின்றன. பெருந்தன்மையுடைய உள்ளம், சோம்பேறித் தேனீ போலப் பிறர் உழைப்பில் வாளா உண்டு வாழ விரும்பாது; உண்ணிகள்போல் பொது மக்கள் குருதி உறிஞ்சி உண்டு கொழுக்க நாடாது; சுறாமீன்கள்போல் தன்னினத்தில் ஏழை எளியார்களை விழுங்கிப் பிழைக்க எண்ணாது. நேர் மாறாகத் தொண்டாற்றிப் பொதுவாழ்வில் தனக்குண்டான கடப் பாட்டைப் பன்மடங்காக்கித் தன் பொதுநல உரிமையை மிகுதிப்படுத்தவே முனையும். இத் தொண்டுக்கு உயர்பதவி வேண்டுமென்பதில்லை. தோட்டி முதல் தொண்டைமான் வரை, உழவுசாட்டைக்கோல் முதல் செங்கோல்வரை எல்லா உழைப்பிலும் அதற்கான வாய்ப்புகள் ஏராளம். எல்லா உழைப்பிலும் கைகால் உறுப்புத்திறத்துக்கு மட்டுமன்றி, மூளைத் திறங்களுக்கும் உள்ளத்திறங்களுக்கும் நிறைய இடமுண்டு. உழைப்பு ஓர் இன்றியமையாத் தேவை மட்டுமன்று; அது ஓர் அரிய இன்பமும் ஆகும். இதற்குக் காரணம் நம் உடலின் அமைப்பே. உடலும், உடலுறுப்புகளும், மூளையும் உழைப்புக் கென்றே அமைந்தவை; உழைப்பில் உருவாகி, உழைப்பில் வளர்ந்து, உழைப்பினாலேயே பேணப் பெறுகின்றன. உழைப்பு, உழைப்பின் பயன் தருவதுடன், உடல் நலமும் இன்பமும் தரும்படியாக இயற்கை அதனை அமைத்துள்ளது. உட லமைப்பு இப்படி இல்லாதிருந்தால், உழைப்பு ஓர் இன்றியமையாத் தொல்லையாக மட்டுமே இருந்திருக்கலாம். நல் உழைப்பு செல்வம் தருவதுடன், உடல் வலிமையும், உடல் நலமும், உடல் வனப்பும் உண்டு பண்ணிக் கலை அமைதிக்கான அடிப்படை யாகிறது. உழைப்பில் தொடங்கிய கலைப்பண்பு, உணவு, பருகு நீர், உடை ஆகியவற்றுக்கும் பரவியுள்ளது. உணவும் நீரும் உடலை வளர்க்கும் இன்றியமையாப் பொருள்கள். ஆயினும், இயற்கை சுவையுணர்வு மூலம் அவற்றுக்குக் கலைப் பண்பு தந்துள்ளது. இதனை மனிதன் வளர்த்து அவற்றின் மூலமே நலம் பெருக்குகிறான். உடை தட்ப வெப்பச் சூழல்களிலிருந்து பாதுகாக்கும் இன்றியமையாத் தேவை நாடியே தோன்றிற்று. ஆனால், அதுவும் நிற அமைதி, உருவமைதி, பொருளமைதி சார்ந்து அழகுணர்ச்சிக்கும், தூய்மைக்கும் இடம் தருகின்றது. நம் உழைப்பும் கலையும் இயற்கைக்கு மாறுபட்டவையல்ல. நம் உழைப்பில் ஒரு தொடக்கப் பெரும்பகுதியை இயற்கை செய்துதந்து நம்மை ஊக்குகிறது. கலைப்பண்பிலும் அதுபோலவே, இயற்கை பாறைகளை ஆக்கி நீர்வளம் தந்து, பாறையிலிருந்து மண்ணும், மண்மீது மழையும் தருகிறது. செடி கொடி தழைகளும் கீழுயிரினங்களும் உரமூட்டி மண்ணைக்கிளறி மென்மையாக்கிவிடுகின்றன. இயற்கையும் உயிரினங் களும் செய்த இவ்வேலையையே மனிதன் தனித்தும், விலங்குகள் உதவியாலும், கருவிகளையும் இயற்கைச் சக்திகளையும் பயன்படுத்தித் தொடர்ந்து செய்கிறான். இங்ஙனமாக உணவு, உடை, கலைப்பண்பு யாவும் இயற்கையாலேயே தரப்படுகின்றன வாயினும் மனிதனாலேயே மனிதன் உழைப்பின் பயனாகவே பெறப்படுகின்றன. `தரும் செயல்' உடனடியாகப் `பெரும் செயல்' ஆகிவிடுவதில்லை. இயற்கையின் இயல்பு வளத்திலிருந்து மனிதனின் செயல்வளமாகிய நாகரிகத்துக்கு நம்மை இட்டுச்செல்லும் பாலம், மனித உழைப்பும், அவ்வுழைப்புடன் வரும் திருவாகிய அறிவுத் திறமுமே யாகும். உழைப்பின் பெருமைபற்றிய பழங்கதை ஒன்று உண்டு. முதுமையெய்திய ஒரு வேளாளன் இறக்கும் தறுவாயில் தன் மூன்று சோம்பேறிப் பிள்ளைகளையும் அழைத்து, மறையடக்க மான செய்தி யொன்றைக் கூறும் முறையில் ``நான் உங்களுக்கு நம் வயலிடத்தே ஒரு பெரும் புதையல் விட்டுச்செல்கிறேன். அதனை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்,'' என்று கூறினார். ``அது எங்கே இருக்கிறது? எங்கே இருக்கிறது?'' என்று பிள்ளைகள் பரபரப்புடன் கேட்டனர். ஆனால், கிழவன் வாய் பேசவில்லை. அவன் கண்கள் மூடின. இறுதிமூச்சு வாங்கும்போது அவன், ``தோண்டிப் பாருங்கள்,'' என்றான். கிழவன் முதுமையாலும் நோயாலும் படுத்தநாள் முதல் அவர்கள் வயல் தரிசாகவே கிடந்தது. சோம்பேறிப் பிள்ளைகள் உழவும் மரமடிப்பும் செய்ய விரும்பாமல், அதைப் பாழடைய விட்டிருந்தனர். மண்வெட்டியும் கடப்பாரைகளும் துருப்பிடித் திருந்தன. மண் கூடைகள் கரையான் பிடித்து அரித்திருந்தன. ஆனால் புதையலார்வம் மூவரையும் தட்டி எழுப்பிற்று. இன்ன இடத்தில்தான் புதையல் இருக்கிறது என்று தெரியாததால் வயல் முழுவதும் தோண்டவேண்டியிருந்தது. அவர்கள் பழைய மண் வெட்டிகள், கருவிகள் திருத்தினர், புதியன வாங்கினர். நான் முந்தி, நீ முந்தி என்று போட்டியிட்டு மண்ணை ஆழ்ந்து கிளறினர். பலநாள் இவ்வாறு உழைத்தும் புதையல் எவர் கைக்கும் கிட்டினபாடில்லை. ஆனால், பலநாள் உழைத்ததன் பயனாக உடலில் தெம்பு ஏற்பட்டது. உழைக்கும் பழக்கமும் உழைப்பார்வமும் தோன்றின. பலநாள் செய்த வேலையை முழுவதும் வீணாக்க விரும்பாமல், அவர்கள் வயலை உழுது விதைத்தனர். அறுவடையில் அயலார் வயல்களினும் அவர்கள் விளைச்சல் மிகப் பெருக்கமாயிருந்தது. ஊரார் வியப்படைந்து ``உங்களுக்கு எப்படி இந்த விளைச்சல் கிடைத்தது?'' என்று கேட்கலாயினர். சிறுவர் இப்போது தம் புதையல் எது என்பதை உணர்ந்துகொண்டனர். புதையலுக்காக அவர்கள் உழைத்த உழைப்பே அவர்களுக்குப் புதையலா யமைந்தது. உழைப்பை ஒரு சுமையாகக் கொள்பவரும் உண்டு; தண்டனை யாகக் கொள்பவரும் உண்டு; தன்மதிப்புக் கருவியாகக் கொள்பவரும் உண்டு; இன்பமாகக் கொள்பவரும் உண்டு; அதை வறுமையின் சின்னம் என்று கருதுபவரும் உண்டு; புகழின் மணிமுடி என்று கருதுபவரும் இல்லாமலில்லை. ஆனால், அதன் முழு இயல்பு யாதெனில், அது மக்கள் தேவையிலிருந்து முளையிட்டுப் புகழ்வான் நோக்கி வளர்வது; தேவைகளை நிறைவேற்றும் சாக்கில் இயற்கை அதன்மூலம் வாழ்வும் நாகரிகமும் வளர்க்கிறது. உழைப்பின்றி வாழ்வில்லை, நாகரிகமில்லை! கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய யாவும் உழைப்பின் பயன்தான். கூரறிவு என்பதும் கலை நுட்பம் என்பதும் அறிவாற்றல் என்பதும் நீடித்த உழைப்பு, பயிற்சி, ஆகியவற்றின் பயனேயன்றி, இயல்பாய் அமைபவையல்ல. அறிவுத் திறம் என்பது ஒன்று நீடித்த அல்லது கடுமையான உழைப்புக்கான தகுதியாயிருக்கக் கூடும்; அல்லது அதன் விளைவாயிருக்க வேண்டும். கடு உழைப்புக்கான தகுதிகூட உண்மையில் முன்னைய உழைப்பின் பயன் மட்டுமே. ஆகவே, உழைப்பின் வாயில் கடந்தல்லாமல் எவரும் செல்வமோ, வளமோ, கலையோ, அறிவோ பெறமுடியாது என்பது திண்ணம்.* உழைப்பின் இன்றியமையாச் சுமைபற்றி முணுமுணுப் பவரும் குறை கூறுபவரும் உண்டு. உழைப்புக்கும் நல்வாழ்வுக்கும் உள்ள தொடர்பை இவர்கள் அறியமாட்டார்கள். அறிவும் இன்பமும் உள்ளே பொதிந்த புறத்தோடு அது என்பதை அவர்கள் எண்ணுவதில்லை. உழைப்பை வெறுப்பவரினும் வறுமையை வெறுப்பவர் மிகுதி. ஆனால், வறுமையை விட உழைப்பிலா மடிமை மிகக் கொடிது. சோம்பேறியிடமே பேரவா, முன்கோபம், மன எரிச்சல், வன்கண்மை, கொடுமை ஆகிய எல்லாத் தீய குணங்களும் குடியேறுகின்றன. இவை யெல்லாவற்றாலும் விளையும் தீமைகள் சுற்றுமுகமாகச் சோம்பலின் தீமைகளே. உழைப்பு முழுப்பயன் தரவேண்டுமானால், நாம் திட்டமிட்டு உழைக்கவேண்டும். உழைப்பின் பயனை எதிர்நோக்கி, விரும்பும் பயனுக்கேற்ற வகையில் உழைக்க முனையவேண்டும். தேவைக்காக மட்டும் உழைப்பவரிடம் இவ்வறிவுப்பண்பு அமையமாட்டா. இன்றைய தேவை கடந்த நாளைத் தேவை, அதுவும் கடந்த நிலையான பயன், தனி மனிதன் கடந்த பொது மனிதவாழ்வு ஆகிய படிகளில் கடக்காமல் இம் முன் கருதலும், அறிவுத் திறமும், திட்டமும் அமையமாட்டா. ஆகவே, தேவைக்காக மட்டும் உழைக்காமல், உழைப்பார்வத் துடன் உழைப்பதே உயர் உழைப்பு. இறந்த காலம் நோக்கிய சோம்பல், நிகழ்கால நோக்கிய மடஉழைப்பு ஆகியவற்றைவிட எதிர்கால நோக்கிய அறிவு உழைப்பே வளர்ச்சிதரும். உயர்தர உழைப்புகளில் வெற்றி உழைப்பின் கடுமை, நீடிப்பு ஆகியவற்றை மட்டுமன்றி, அதில் வரும் தோல்விகளில் தளரா ஊக்கத்துடன் விடாது முயல்வதையே பொறுத்தது. தோல்வியால் விடாமுயற்சி யுடையார் மட்டுமே, தோல்வியிலிருந்து அறிவு பெறுவர். இது அடுத்த படிமுயற்சிக்குத் திட்டமும் போக்கும் வகுக்கப் பெரிதும் உதவும். தோல்வியில் தளராத ஊக்கம் உடையவர்கள் முயற்சியை, நாம் ஆள்வினை என்கிறோம். அதுவே ஆட்சி தரும் வினை; தோல்விகளை வெற்றியாக்கும் பண்பு அதுவே. ஆள்வினை வெற்றி நாடிய உழைப்பு அன்று; வெற்றிக்கான, வெற்றிபற்றிய அக்கறையற்ற உழைப்பு ஆகும். சில சமயம் பலநாள், பல தலைமுறைத் தோல்விக்குப்பின் வெற்றி உண்டாகலாம். ஆகவேதான் மிகச்சிறந்த நாகரிகத் தொண்டர்கள் தொண்டு, தம்மைக் கடந்து உலகையும், உலகு கடந்து வருங்கால உலகையும் பற்றி நிற்கிறது. தோல்வி இவ்வாறு தேசகாலம் கடந்து உதவுவது போலவே, வெற்றிகளும் பயன்படுகின்றன. தோல்விகள் வெற்றிக்குப் படிகளாவது போல், வெற்றிகளும் பிற்கால மாபெரும் வெற்றிகளுக்குப் படிகள் ஆகின்றன. ஆகவே ஆராய்ச்சி நோக்குடன் பார்ப்பவர்களுக்கு, தோல்விகளுக்கும் வெற்றி களுக்கும் இடையே மிகுதி வேற்றுமை இல்லை. இரண்டும் வெற்றிப் பாதையில் செல்வதால் ஒரு தன்மையுடையவை. நாகரிகத்தில் ஒரு படி வெற்றி அல்லது தோல்வி அடுத்த படி வெற்றி அல்லது அடுத்த வெற்றிக்குப் பயன்படுவதுபோலவே, அறிவியலிலும் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியும் அடுத்த படி வெற்றிக்கு அடிகோலி யுள்ளன. உழைப்பினால் பெருமையும் பீடும் பெற்றவர் பலர். பெருமை பெறமுடியாத இடத்தும் அதனால் மதிப்பு ஏற்படுவது உறுதி. மதிப்பு உண்டாகாதவரிடத்தும், தன் மதிப்புக் கட்டாயமாக ஏற்படும். இம் மூன்றில் முதலிரண்டையும்விட, மூன்றாவதே உயர்வுடையது என்று கூறத் தேவையில்லை. ஏனெனில், அது இல்லாவிட்டால் மற்ற இரண்டும் உயர்வு பெறமாட்டா. உழைப்பு எங்குமே தன் மதிப்புத் தருவதால், அதில் உயர் உழைப்பு தாழ் உழைப்பு இருக்க வழியில்லை; பயன் நோக்கித்தான் நாம் உயர்வு தாழ்வு கருதுகிறோம். ஆனால், அறிவியல் வளர்ச்சி இவ்வகையில் நமக்கு ஓர் எச்சரிக்கை தருகிறது. நமக்கு நீராவி இயந்திரம் கண்டளித்தவர் ஒரு கருமான். நூற்புக் கதிர் அளித்தவர் ஓர் அம்பட்டர்; ஊர்தி முற்றுவித்தவர் ஒரு தொழிலாளி. விலங்குகளும் உழைக்கின்றன; மனிதனும் உழைக்கின்றான்; இருதிற உழைப்புக்கும் இடையேயுள்ள வேறுபாடு யாது? விலங்கின் உழைப்பில் உடல் மட்டுமே ஈடுபடுகிறது. உளமும் அறிவும் பெரிதும் ஈடுபடுவதில்லை. இதனாலேயே அதன் உழைப்பில் வளர்ச்சியில்லை; தோல்வியும் தோல்வியால் பெறும் அறிவும், வெற்றியும் வெற்றியின் அறிவால் ஏற்படும் பெரு வெற்றியும் அதற்குக் கிடையாது. மனிதன் உழைப்பு உள்ளமும் அறிவும் ஒன்றிய உழைப்பு. பல உயர் உழைப்புக் ணகளில் உடலிலும் உள்ளமே பெரிதும் செயலாற்றுகிறது. நூல், ஓவியம், சட்டம் அமைத்தல் முதலியவை இத்தகைய உயர் உழைப்புக்கள். எனவே, மனிதன் உழைப்பு உடலினின்று உள்ளத்துக்கு, உள்ளத்தினின்று அறிவுக்குத் தாவுகின்றது. வெற்றி தோல்விகளினின்று புது வெற்றி ஏற்பட்டு, உழைப்பு வளர்கின்றது; அத்துடன், மனித நாகரிகமும் அறிவெல்லையும் வளர்கின்றன. விலங்கின் உழைப்புக்கும் மனிதன் உழைப்புக்கும் உள்ள மற்றொரு வேற்றுமை தன்மதிப்பில் அடங்கியுள்ளது. விலங்கு தேவைக்கு மட்டுமே உழைக்கிறது. இதனால் அதற்கு வளர்ச்சியில்லை; அதற்குத் தன்மதிப்பும் வளர்வதில்லை. உழைப்பின் பயன் அறிந்து மனிதன் தான் வளர்வதுடன் அவ் வுழைப்பை மதிப்பதன் மூலம் தன்னை மதிக்கிறான். உழைப்புள்ளம் உடைய எவனும் தனக்காக அல்லது தன் இனத்துக் காக மட்டுமே உழைப்பான். இவ்விரண்டும் தற்பற்று, இனப்பற்று அல்லது அன்பு காரணமானவை. தேவைக்காக உழைப்பவனே விலங்குகள்போலப் பிறருக்கு அடிமைப்பட்டு உழைக்க முடியும். மனிதருட் பலர் இங்ஙனம் விலங்குகள் போல் உழைக்கின்றன ரானாலும், விலங்குகள்போல அவர்கள் கவலையில்லாமல் அடிமை உழைப்பு உழைப்பதில்லை. கூலி பெறாத தொழிலாளர் கோபம், விலங்கிடம் இருப்பதில்லை; கூலி பெறாது மீண்டும் தொழில் செய்யும் தொழிலாளியும் கிடையாது. விலங்குகள் உணவுத் தேவை தீர்ந்தால் உழைக்கவும் மாட்டா. உணவுத் தேவை தீர்க்கப் பட்டால், உழைக்க மறுக்கவும் மாட்டா. விலங்குகளை மனிதன் அடிமைப்படுத்தி வாழமுடிகிறது. மனிதனையும் மனிதன் அடிமைப்படுத்தியதுண்டாயினும், அடிமைப் படுத்தியவர் நீடித்து வாழ்ந்ததில்லை என்பதை வரலாறு காட்டுகிறது. அடிமையாட்சி பேணியதாலேயே ஆற்றல் மிக்க உரோமர் வீழ்ந்தனர்; அடிமையாட்சி பேணியதனாலேயே கலைவளமிக்க கிரேக்கர் அழிவுற்றனர். உழைப்பு, மனிதன் விலங்கு நிலையில் இருந்தபோது தோன்றிற்று. ஆனால், அதுவே அவனைத் தெய்வநிலைக்கு உயர்த்தவல்லது. 2. சிக்கனம் தன்னை ஆளக் கற்கும் கல்வியே மிகச் சிறந்த கல்வி. - கெதே பெரும்பாலான மனிதர் நிகழ்காலம் நாடியே உழைக்கின்றனர்; சிலர் எதிர்காலத்திற்காக உழைக்கின்றனர். அறிவாளிகள் இரண்டையும் நாடுவர்; எதிர்காலத்துக்காக நிகழ்காலத்திலும், நிகழ்காலத்துக்காக எதிர்காலத்தை நாடியும் உழைப்பர். - ``வாய்மைபற்றிய உய்த்துரைகள்'' வெற்றியின் மறைதிறவு தன்னை மறுப்பதிலேயே உள்ளது....... தன்னைக் கண்டிக்கும் முறையே சிறந்த தற்பண்புப் பயிற்சி. தன்னடக்க மிருக்குமிடத்தில் கல்வியறிவின் பயன் கட்டாயம் இருக்கும். அது இல்லாமல் கல்வி சிறிதும் பயன்படாது. - திருமதி ஆலிஃவான்ட். ``இயற்கை மனிதனுக்கு நுண்ணறிவு அளித்துள்ளது. அதன்மூலம் எதிர்காலத்தை உற்றறியும் உரிமை மனிதனுக்கு உண்டு. இவ் வுரிமையின் பயனாக வருங்காலத்துக்கு முன்கூட்டி ஏற்பாடு செய்யும் கடமையும் அவனுக்கு ஏற்படுகிறது. இவ் வுண்மையை நம் மொழி நன்கு குறித்துக் காட்டுகிறது. சேமிப்பதால்தான் நலங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கவே நலம் என்ற கருத்துச் சேமம் எனக் குறிக்கப்படுகிறது. முன்கருதல் உடையவன் என்று ஒருவரை நாம் கூறும்போது அவர் முன்கருதலுடன் முன்கூட்டித் தன்னை வலுப்படுத்திக் கொள்பவர் என்றே நாம் கருதுகிறோம். முன்கூட்டிச் சேமப்படுத்திக்கொள்ளாத முன்னறிவு பயனற்றது,'' என்பது திரு. எட்வர்ட் டெனிசனின் அறிவுரை. மிகப் பெரும்பாலான மனிதர் எதிர்காலம் பற்றி முன்னொருக்கம் செய்வதில்லை; இறந்தகாலத்தை நன்கு ஆராய்ந்துணர்வதும் இல்லை; அவர்கள் நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே எண்ணுகின்றனர். நிகழ்கால வருவாயை நிகழ்காலத் திலேயே செலவுசெய்துவிடுவதால், அவர்கள் தம் எதிர் காலத்துக்கோ, தம் குடும்பத்தின் எதிர்காலத்துக்கோ வேண்டிய ஏற்பாடுகள் செய்வதில்லை. இவ் வகையில்தான் சமூகத்தில் இரு வகுப்புக்கள் ஏற்படுகின்றன-ஒன்று: சேமிப்பவர்கள், மற்றொன்று: வீண்செலவு செய்பவர்கள். ஒரு வகுப்புச் சேம மதியுடையது; மற்றது அது அற்றது; ஒன்று சிக்கனமுடையது; மற்றது சிக்கனமற்றது. சிக்கனமுடைய வர் நாளடைவில் முதலை ஆளும் முதலாளிகள் ஆகின்றனர். தொழில், வாணிகம், நிலையங்கள் அவர்கள் ஆட்சிக்கு உரியவையாகின்றன. மற்றவர்களோ தம் சுதந்திரமிழந்து அவர்கள் கீழிருக்கும் பணியாளரும் பணி உழைப்பாட்களும் ஆகி உழல்கின்றனர். தனிமனிதனிடையேயுள்ள இதேவகை வேறுபாடு நாடுகளிடை யேயும் உண்டு. தாம் உண்டுபண்ணும் பொருள்கள் யாவற்றையும் செலவழித்துவிட்டு, எதிர்காலத் தேவைகளையும் கவனிக்காமல், தொழில், வாணிகம் ஆகியவற்றுக்கான முதலீடும் இல்லாமல் இருக்கும் நாடுகள் உண்டு. ஸ்பெயின் நாடு இதற்கு ஒரு சான்று. அந் நாட்டின் செழிப்புமிக்க பகுதிகள் என்றும், மிகவும் விளைவு குன்றியவையாகவே உள்ளன. குவாடல்கிவர் ஆற்றுப் பள்ளத்தாக்கில் முன்பு செயலுள்ள பன்னி ரண்டாயிரம் சிற்றூர்கள் பொலிவுற்றிருந்தன. பிற்காலங்களில் அவை எண்ணூறாகக் குறைந்துவிட்டன. இவையும் நலிவுற்றே வருகின்றன என்பதை அவற்றில் நிறைந்துள்ள இரவலர் கூட்டம் காட்டுகிறது. ஸ்பானியரே இக் குறையை உணர்ந்துள்ளனர். அவர்களிடையே உலவும் ஒரு பழமொழி இந்த உண்மையை வலியுறுத்துகிறது. ``வானம் நன்று; நிலமும் நன்று; இரண்டுக்கும் நடுவே உலவுவதுதான் தீது'' என்று அது குறிக்கின்றது. உண்மையில், பொறுப்புள்ள வேலையிலோ, தொடர்ந்த உழைப்பிலோ ஸ்பெயின் நாட்டவர் விருப்பம் கொள்வதில்லை. அவர்கள் இரக்க வெட்கப்படுவதில்லை; ஆனால் உழைக்க வெட்கப்படுவர்; உழைப்பையே வெறுப்பவர், சேமிப்பில் கருத்துச் செலுத்துவர் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? செல்வ வளமும் நல்வாழ்வும் எவர் ஆற்றலுக்கும் உட்பட்ட ஒன்றே. அவற்றைப் பெறவும் காக்கவும் அவர்கள் மேற்கொள்ள வேண்டுவது ஈட்டும் முயற்சியும் சேமிக்கும் முயற்சியும் மட்டுமே. உழைப்புக்கு நல்ல கூலிபெறுபவர் மீத்துவைத்து முதலாளிகளாக முடியாதென்றில்லை. உலகின் பொருளியல் முன்னேற்றத்தில் தக்கதொரு பங்கு அவர்களுக்கு உரியதாகாமலும் போகவேண்டியதில்லை. ஆனால் இதற்கு உழைப்பு, ஊக்கம், சிக்கனம், நேர்மை, பொறுப்புடைமை ஆகியவை இன்றியமை யாதவை. ஆனால், உழைப்பும் ஊக்கமும் ஈட்டுவதில்மட்டும் இருந்தால் போதாது; செலவிடுவதிலும் இருக்கவேண்டும். உண்மையில் ஈட்டுவதற்கு வேண்டும் திறமையைவிடச் செலவிடுவதற்கு வேண்டும் திறமையே பெரிது. ஒருவன் செல்வம் அவன் ஈட்டும் திறத்தைவிட, அவன் செலவிடும் திறத்தையே மிகுதியும் பொறுத்ததாயிருக்கும். அவன் செலவுகள் பயனுடையவையா யிருக்க வேண்டுமானால், அவன் `குறைந்த செலவு, நிறைந்த பயன்' நாடவேண்டும். அதாவது கூடியமட்டும் குறைந்த செலவில், கூடியமட்டும் நிறைந்த பயனை நாடிச் செலவு செய்யவேண்டும். அத்துடன் மிக நிறைபயனுடைய இன்றியமை யாச் செலவு சேமிப்பே என்பதனை உணர்ந்து, அதற்குச் சிறிதள வேனும் இடமிருக்கும் வகையிலேயே அவன் செலவுத்திட்டம் வகுக்கவேண்டும். செலவுக்கு வேண்டிய திறன் இதுவே. அவன் வாழ்க்கைத்தரமும் மதிப்பும் உயர்வது இச் சேமிப்பையே பொறுத்தது. திட்டமிட்ட செலவு மூலமும் சேமிப்பு மூலமும் தொழிலாளி செல்வமிக்க முதலாளி ஆகமுடியும் என்பது மட்டுமன்று; மிகத் திறமைமிக்க முதலாளிகள் இங்ஙனம் திறமைமிக்க உழைப்பாளியாயிருந்து பணம் திரட்டியவர்களே என்றும் காணலாம். ஆனால், சேமித்து வைத்து முதலாளி களாய்த்தான் ஆய்த்தீர வேண்டுமென்றில்லை. முதலாளியாவது தான் மிக உயர்ந்த குறிக்கோள் என்றும் கூறமுடியாது. தொழிலாளி மனித இனத்தின் முதுகெலும்பு போல்பவனா யிருக்கலாம். முதலாளி அதன் சதையாயிருக்கலாம். அனால் அதன் நாடி நரம்புகள், தசை நார்கள், குருதி, உயிர் ஆற்றல் படைத்த மூளை ஆக இயங்குபவர்கள் உண்டு. அவர்களே அறிவும் அனுபவமும் உடைய தேர்ந்த உழைப்பாளிகள். திறல் உழைப்பாளிகள், எழுத்தாளர், கணக்கர், பணியாளர், பணி முதல்வர் ஆகியோரும், அறிவு முதலாளியாகிய ஆராய்ச்சி யறிஞரும் ஆவர். சேமிப்பவன் பணமாகச் சேமிப்பதுடன், அறிவுடையனானால் திறமை, அனுபவம், அறிவு ஆகியவற்றையும் பெருக்கி உயர்வுறலாம். முதலாளிகள் பெருஞ்செல்வம் ஈட்டி அதன் பயனாய் அடையும் பெருமையைவிட, அனுபவத்தின் காரணமாக அவர்களுக்கு இன்றியமையாச் சாதனமாகும் திறலுழைப்பாளி களும், அவர்களுக்கே ஆற்றல் வளர்க்கும் அறிவாளிகளும் அடையும் பெருமை மிகுதி. இப் பெருமையை அவர்கள் கையிலுள்ள பணமோ, பெறும் ஊதியமோ முழுதும் மதித்து விடாது. தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்தால், முதலாளிகள் ஆதாயம் குறையும். அவர்கள் வாழ்வுக்கே தடங்கல் ஏற்படும். முதலாளிகள் வேலை நிறுத்தம் செய்தால் தொழிலாளர் வாழ்வு தடைப்படும். ஆனால் அறிவாளிகள் வேலைநிறுத்தம் இருவரையும் செயலற்றவர்களாக்கிவிடும். தற்போது இந்நிலை உணரப்படாததன் காரணம் யாதெனில், அவ் விருசாராருக் குள்ளேயும் உள்ள அளவு ஒற்றுமைகூட இவ் இடை வகுப்பினரிடம் இருப்பதில்லை என்பதே. நல்ல நாகரிக சமுதாயத்தில் இது எப்போதும் வளர்ந்து விரிவடைந்துவரும் வகுப்பாதலால், இதில் எப்போதும் போட்டி மிகுதி. அப் போட்டி அதன் பொதுமதிப்பு வெளிப் படாமல் மறைக்கிறது. நல்ல தொழிலாளியே மிக நல்ல முதலாளியாக விளங்கமுடியும் என்பதைத் திரு. காப்டனின் ஓர் அனுபவம் நன்கு காட்டவல்லது. தம் நகரின் நகரவைச்செல்வர் சிலருடன் அவர் மற்றோர் ஊரிலுள்ள ஒரு பெரிய ஆலையைச் சுற்றிப் பார்வையிடச் சென்றார். அவ் ஆலையில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளிகள் உழைத்தனர்; பல நூறு இயந்திரத்தறிகள் வேலைசெய்தன; பார்வையிட்டபின் அவர்கள் ஆலை முதலாளி யுடனே திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு தொழிலாளி, கிட்டத்தட்டத் தோழமைக்குரலில் அவரைப் பெயரிட்டழைத்து வணக்கம் செலுத்தினார். முதலாளியும் அதே குரலில் அவனுக்கு எதிர்வணக்கம் செலுத்தினார். அவன் தொழிலாளியாயினும் நல்லாடை உடுத்தியிருந்ததை அதன் பின்புதான் கவனிக்க முடிந்தது. அவன் போனபின் முதலாளி திரு. காப்டனிடம் ``அன்பரீர், இவர் தொழிலாளியாயினும் என் நண்பர். நான் தொழிலாளி யாயிருக்கும் காலத்தில் இவர் என்னுடனிருந்து தொழில் செய்த தோழர்,'' என்றார். முதலாளி நண்பர் இருபத்தைந்து ஆண்டுகட்கு முன்னர் தொழிலாளியாகவே வாழ்க்கை தொடங்கினார் என்று கேட்க திரு. காப்டன் வியப்படைந்து, மேலும் அதுபற்றி உசாவினார். முதலாளி நண்பர் ``தொழிலாளிகள் பொதுவாக ஈட்டுவதிலும் சேமிப்பதிலும் சோர்வு உடையவரா யிருக்கின்றனர். இந்த நண்பரும் நானும் ஈட்டுவதில் ஊக்கமுடையவராகவே இருந்தோம். என்னைவிடத் தொழிலாளி நண்பர் ஊக்கமும் சுறுசுறுப்பும் உடையவர் என்பதை அவர் தோற்றத்திலிருந்து உணரலாம். ஆனால், அவர் சேமிப்பில் சோர்வுடையவர். நான் சேமிப்பில் ஊக்கம் காட்டியதனாலேயே, விரைவில் முதலீடு திரட்டமுடிந்தது. என்னைப் பார்த்தும் என் அறிவுரையைக் கேட்டும் அன்பரும் இப்போது விரைந்து முன்னேறிவருகிறார். இவ்வாலையிலேயே அவர் பங்குகள் எடுத்துப் பங்காளியாவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்,'' என்றார். பொருட்செலவுச் சிக்கனத்தைவிட காலச் சிக்கனம் மிக முக்கியமானது. காலம் பொன்னைவிட மதிப்புயர்ந்தது. பொன் போனால் ஈட்டிக்கொள்ளலாம். காலம் போனால் மீட்டுப்பெற முடியாது. காலம் என்பது வெறும் வினாடியும் நாழிகையும் நாளும் அல்ல. வெறும் வினாடியும் நாழிகையுமானால் சென்ற நாழிகைக்கு வரும் நாழிகை ஒப்பாக இருந்து ஈடுசெலுத்த முடியும். ஆனால் காலம், உடல் உயிர் ஆகியவற்றின் வாழ்நாளுடனும் பருவத்துடனும் கட்டப்பட்டிருக்கிறது. காலம் என்று முள்ளதும் நிலையானதும்தான். ஆனாலும் நிலையற்ற, உறுதியற்ற இவற்றுடன் கட்டப்பட்டிருப்பதால், விழிப்புடையவர்களுக் கல்லாமல் அது பயன்படமாட்டாது. இளமையின் ஓர் ஆண்டு முதுமையின் ஓர் ஆண்டுக்கோ, குழந்தைப் பருவத்தின் ஓர் ஆண்டு இளமையின் ஓர் ஆண்டுக்கோ ஈடாகமாட்டாது குழந்தைப் பருவத்தில் வரும் நோய் நொடி, உறுப்புக்கேடு, கோளாறுகள் இளமையிலும் முதுமையிலும் சரிப்பட முடியாது, அது இரு பருவங்களையும் கெடுக்கும், இளமையில் கல்லாத வனும், இளமையை வீணாகக் கழித்தவனும், மீண்டும் அப் பிழையை எளிதில் சரிசெய்ய முடியாது. இவையனைத்துக்கும் மேலாக, வாழ்நாள் முதுமை கழிந்துதான் முடியும் என்று எவராலும் கூறமுடியாது. காலத்தை நன்கு பயன்படுத்துபவன் மட்டும்தான் ஓரளவு நீண்ட வாழ்வு பெறும் வாய்ப்புக்கூடப் பெறமுடியும். காலம், பணம் தேடுவதற்கு மட்டுமல்ல. அதற்கான திறம், அறிவு, அதைக் காத்துப் பயன்படுத்துவதற்கான பண்பு, நல்ல பழக்கவழக்கப் படிமானங்கள் பெறுவதற்கும் பயன்படுத்தப்படத் தக்கது. அவ்வப் பருவத்தில் அவ்வப் பருவத்திற்கேற்ற பயிற்சிகளைத் தேர்ந்து செய்து கொள்ளல் வேண்டும். *``காலம் முன்குடுமியுடையது; பின்குடுமியற்றது. முன்னே பிடிக்கத் தவறினால், பின்னே பிடிக்கமுடியாது'' என்பது ஆங்கிலப் பழமொழி. காலம் நமக்காகக் காத்திருக்காது; நமக்காகத் தயங்கிநில்லாது; நாம் திரும்பியழைத்தால் வராது. நாம் அதை விரைந்து பற்றிப் பயன்படுத்தவேண்டும். போன காலத்தை நாடாமல், நடக்கும் காலத்தைப் பற்றிக்கொண்டு, வருங்காலத்திலும் கண்ணா யிருத்தல் வேண்டும். காலத்தைக்கொண்டு நல்ல செயல்கள், பெருந்தன்மையான செயல்கள் செய்து புகழ் சேமிக்கலாம். பணம் சேமிக்கலாம். கல்வி, உடற்பயிற்சி, தொழிற் பயிற்சி, அறிவியல் தேர்ச்சி, கலைத்தேர்ச்சி பெறலாம். ஆனால், அதனால் முழுப்பயன்பெற, அதனைச் சிக்கனப்படுத்தும் திட்டம் தேவை. 1எப்பொரு ளுக்கும் அதற்கேற்ற இடம், எவ்விடத்துக்கும் அதற்கேற்ற பொருள் என்பது இடவளர்ச்சிக்கான திட்டம். அதுபோல ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலக் கூறு, ஒவ்வொரு காலக்கூறினுக்கும் ஒரு செயல் என்பதே காலத்திட்டம் ஆகும். திட்டம் வரையறுத்தபின் அவ்வொழுங்கு பேணப்படல்வேண்டும். நாள்தோறும் தவறாமல் இதில் பழகவேண்டும். வாழ்க்கையின் அடிப்படை வேலை களில், பெண்டிர் இத்திட்டம் வகுப்பதனால்தான், ஆடவர் வாழ்வில் சிக்கனமும் நாகரிக அமைதியும் ஏற்படுகிறது. ஆடவருலகும் பெண்டிரைப் போலத் தொழிலுடன் தொழிலாகத் திட்டம் வகுத்துக்கொள்ளுமானால், குடும்ப வாழ்விலுள்ள செப்பம் உலக வாழ்விலும் ஏற்படும். இத்தகைய திட்டமும் திட்பமும் உடைய ஆடவரே உலக வாழ்வில் ஒட்பம் பெறுகின்றனர். சிக்கன வாழ்வின் வெற்றிக்குரிய நுட்பம் இதுவே. சிக்கனம் ஆதாயம் தருவது மட்டுமன்று, இன்பந் தருவது. அது கடுஉழைப்புத் தருவதல்ல; சிறிது முன்முயற்சி, பின்முயற்சிகளை எளிதாக்கும். மனிதன் கருவிகளும் பொறிகளும் இயந்திரங்களும் அமைத்தது இச் சிக்கனமுறையைப் பின்பற்றியே. உழைப்பிலே செலுத்தும் காலத்தைத் திட்டத்தில் செலுத்துபவன் குறைந்த காலத்தில் நிறைந்த பயன் அடை கிறான். மனிதன் வாழ்வு குறுகியது. ஆனால், திட்டத்தின் மூலம் நீடித்த வாழ்வின் பயனை அக் குறுகிய காலத்தில் பெறலாம். அத்துடன் திட்டமான வாழ்வு நாளடைவில் வாழ்நாளை நீட்டிப்பது உறுதி. விலங்குகள் பெரும் பாலனவற்றைவிட மனிதன் நீடித்த நாள் வாழ்கிறான். விலங்குகள் பெரும்பாலானவற்றின் தனிவாழ்வில் வரும் இடர்கள், உயிர்க்கேடான நிகழ்ச்சிகள் மனிதன் வாழ்வில் பேரளவு குறைவே. திட்டமான நல்ல நாகரிக வாழ்வில் சாவும் நோயும் இயற்கையான பொது நிகழ்ச்சிகளாயிருக்க முடியாது. அவை அருநிகழ்ச்சியாய் மறைந்துகொண்டே வரும். நோய், முதுமை, சாவு ஆகியவற்றைக்கூட அவற்றின் காரணம் அறிந்து மனிதன் திட்டமிட்ட வாழ்வால் படிப்படியாக விலக்கி இன்னும் நீடித்த வாழ்நாள் பெறமுடியும். மனித உலக நாகரிகம் உண்மையில் இன்னும் அத்தகைய திட்டம் வகுக்கவில்லை. கல் எறிபவன் எவ்வளவு ஊக்கி எறிந்தாலும், அது செல்லும் தொலைக்கும் உயரத்திற்கும் ஓர் எல்லை உண்டு. ஆனால், இவ் எல்லை கடக்க வழிகள் இல்லாமலில்லை. உயர் நிலத்தில் நின்று எறிபவன் இன்னும் உயரம் எட்ட முடியும். எறிந்த இலக்கு நோக்கி மீட்டும் மீட்டும் எறிவதனாலோ, கவண் முதலிய பொறிகளைப் பயன்படுத்துவதனாலோ, உயரத்தையும் தொலையையும் எல்லையின்றிப் பெருக்கமுடியும். மனித முயற்சியையும் வாழ்நாளையும் மனிதன் பேணிக் காக்க முடியும். அதனால் நிறை பயனையும் பெறமுடியும். ஆனால் இதற்கும் ஓர் இயற்கை எல்லை உண்டு. அவன் முந்திய செயலற்ற எல்லை அவன் தனியூழ் ஆகும். ஆனால், செயல்திறத்தின் எல்லையாகிய இது அவன் பேரூழ் அல்லது பொதுஊழ் ஆகும். ஆனால் ஒவ்வொரு தலைமுறையின் பொது ஊழ் எல்லையும் அடுத்த தலைமுறை நிற்கும் நிலத்தளத்தை உயர்த்துவதால் இப்பொது ஊழ் எல்லையும் வளரமுடிகிறது. மனிதன் கருவியறிவு அவன் ஊக்கத்தையும் இதுபோல வளர்க்க முடியும். தொடர்ச்சி, ஊக்கப் பெருக்கம் ஆகிய இவ்விரண்டின் உதவியாலேயே நாகரிகம் வளர்கிறது. தனிமனிதன் பொது இன ஊழின் வளர்ச்சியறிந்து திட்டம் வகுக்க முடியுமானால், அவன் நாகரிக முதல்வன் ஆவான். நாகரிகம் தனி மனிதனியல்புணர்ந்து திட்டமிட்டால், உலக வாழ்வின் எல்லையே அளவிறந்து பெருக்கமுறமுடியும். தொடக்க வளம் அல்லது முதலீடு, ஆக்கத்திற்கு மிகுதி உதவுவது என்பதில் ஐயமில்லை. ஆனால், அது இருந்தால்தான் ஆக்கம் உண்டு என்று எண்ணுவது தவறு. அதனினும் ஊக்கம் முக்கியமானது. அது தொடக்க வளமில்லாக் குறையையும் சரிசெய்யும்; அத்தொடக்க வளத்தையும் ஆக்கும். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு சிறிதளவாவது சேமிக்கும் சேமிப்பே அடிப்படை. அச்சேமிப்புக்குத் திட்டமிட்ட செலவும் செலவுக்கு ஈடான வருவாயாக ஊக்கமிக்க உழைப்பும் தேவை. வாரத்துக்கு ஒருவன் ஈட்டுவது நாலு பணமானால் அதில் கால்பணமாவது மீத்தல் அவசியம். செலவு எவ்வளவு அவசியமோ, அதனினும் மீத்தல் அவசியம் என்பதை ஓர்ந்து, அதற்கு முதலுரிமை கொடுத்தாலன்றி, இச் சிறு தொகையில் ஒரு சிறு நுண்தொகை மீப்பது அரிது. எவ்வளவு வருமானம் குறைந்தாலும் அதற்கேற்பச் செலவைக் குறைக்க முடியாதிருப்பதில்லை. எனவே மீத்த தொகைக்கு ஈடாகச் செலவுத் திட்டமமைப்பது முடியாத காரியம் ஆகாது. தொடக்க வளம் விரைவில் வாழ்க்கைத் தரத்தை விரைந்து உயர்த்துவதாதலால் அதற்காகத் தற்காலிகமாக வாழ்க்கைத் தரத்தைச் சற்றுக் குறைத்துக் கொள்வதனால் நிலையான கேடு ஏற்படாது. சிக்கன வாழ்வு பயனுடையது. இதனை யாவரும் அறிந்துள்ளனர். அது பயின்று மேற்கொள்ள கூடியதே. இதனையும் யாவரும் ஒத்துக் கொள்வார். பலர் அதைப் பயின்று மேற்கொண்டு நலமடைந்து வருவதையும் நாம் காண்கிறோம். அவர்கள் நமக்கு முன்மாதிரிகள். ஒருவரால் செய்ய முடிவதை மற்றவரும் முயன்றால் செய்ய முடியாதென்று கூறுவதற்கில்லை. இதுமட்டுமல்ல; அது மிகக் கடுமையான நற்பண்புமல்ல. அதனால் எவ்வளவோ தொல்லைகளிலிருந்து, கவலைகளி லிருந்து, மானக்கேடுகளிலிருந்து விடுதலை பெறலாகும். அதன் வழியில் இருக்கக் கூடும் தடங்கல் ஒன்றே ஒன்றுதான்; அதுவும் மிகவும் சிறியதொரு தடங்கல். அது, தற்காலிக இன்பத்தைத் தடுக்கிறது - நிலையான இன்பங்களையல்ல; அது சோம்பேறியின் தற்காலிக இன்பத்தைத் தடுக்கின்றது; ஆனால், சோம்பலையும் நிலையான தொல்லைகளையும் நீக்குகிறது. பல நேர்மையான இன்பங்களை, ஊதாரித்தனத்தாலும் வீண் செலவாலும் தடைப்பட்டுக் கெடும் பல இன்பங்களை அதனால் பெற வழியுண்டு. சிக்கன வாழ்வுக்கு உயர்தர வீரம் வேண்டுவதில்லை; பெருங் கோழையைத் தடுத்தால் போதும். உயர் அறிவு வேண்டு வதில்லை; மிகப் பொதுநிலையான அறிவு போதுமானது, மிக உயர் பண்பு தேவையில்லை; நடுநிலைப் பண்பு பயன் தந்துவிடும். அதுவே உயர் வாழ்வுக்கு வழி வகுக்கும் பெரும் பண்பு அன்று; ஆனால், மிக இழி வாழ்வுக்குச் செல்லாது தடுத்து, நாள்முறை வாழ்வை நல்வாழ்வாக்கும் மட்டான முதற்பண்பு ஆகும். அதற்குப் பெருந்துணிவும் வேண்டா; நீடித்த வீர உழைப்பும் வேண்டா. சிறிது சுறுசுறுப்பு; சிறிது பொறுதி; சிறிது முதல் தன்மறுப்பு ஆகியவை தொடக்கத்தில் இருந்தால், பின் சகடம் தானாகவே ஓடும். அது ஓயாது இழுக்கவேண்டும். தேர் அல்ல; தள்ளிவிட்டால் தன் இயல்பில் தானே நெடுந்தொலை ஓடும் சறுக்கு வண்டி அது. `தொடங்குக, பின் நீ மடங்க மாட்டாய்' என்பதே அதன் அழைப்புக் குரல். தொடக்க வெற்றியே அடுத்த முயற்சியைத் தூண்டப் போதியதாயிருக்கும். சேமிப்பின் சிறுமை கண்டு அதை ஏளனமாக நினைக்க வேண்டா. எவ்வளவு சிறு தொகை, இது இருந்து என்ன, போய் என்ன என்று நினைப்பவர்கள் பெரிதும் ஏமாறுவார்கள். ஏனெனில், தான் செலவு செய்யும் போது சிறிதாயிருக்கும் அதே தொகை சேமித்துவந்தவன் வாழ்வில் சிறு சேமமா யிராமல் பெருஞ் சேமம் விளைவிப்பதை நாம் கண்கூடாகக் காண்டல் கூடும். ஏழைத் தொழிலாளிகளுக்கென வகுத்தமைக்கப்பட்ட 1சேமவைப்புக்களில் உழைத்தீட்டியதன் ஒரு சிறு துணுக்கை இட்டு வைப்பதால் தற்காலிக இன்பத்தில் குறைபாடு ஏற்பட்டதாகவே தோற்றாது. ஆனால், அதுவே உறுதியான மாறா இன்ப அமைதிக்கு வழிவகுக்கும். பலரை அவர்கள் நிலையிலிருந்து நெடுந்தொலை உயர்த்த அது உதவியுள்ளது. சேமிப்பின் படிப்பினை பலர் நினைப்பதுபோல் `சிறுதுளி பெருவெள்ளம்' என்பது மட்டும் அன்று. ஏனெனில் பலர் தரும் சிறு தொகையைச் சேர்த்துத் `துயர் நீக்க உதவி' பெற்ற பல அலைக்கழிக்கப்பட்ட குடும்பங்கள், கொடுப்பவரே வியக்கும்படி யாகத் திரண்ட அப்பெருந் தொகையை ஒரு நாளில் கரைத்து, மீண்டும் முன்னிலையிலேயே இருப்பதைக் காண்கிறோம். சேமிப்பின் படிப்பினை சிறு துளி பெரு வெள்ளம் என்பதன்று என்பதைக் காட்ட இது போதுமானது. உண்மையில் அதன் மெய்ப்பயன் தன்மறுப்பு மூலம் வரும் தற்பற்றும், திட்டப் பழக்கமுமேயாகும். ஆக்கத்தில் சேமிப்பு சிறிய அழிவுக் காலப் பிளவுகளை நிலையான அழிவாக்காமல் நிரப்பி, ஆக்கப் பாதையைச் செப்பனிடுகிறது. அத்துடன் செலவைக் கட்டுப் படுத்தித் திட்டமிடுகிறது. சேமத் தொகையை வாழ்க்கை வளம் பெருக்கச் செலவிடும் வகைகளை இத்திட்டமே நாளடைவில் வகுக்க உதவுகிறது. சிறிது சேமிக்கப் பழகியவன் சேமச் செல்வத்தின் மதிப்பறிந்து, அதை ஆக்கமுறையில் செலவு செய்யவும் வகை காண்கிறான். சேமிப்பின் மற்றொரு படிப்பினை, செலவு வாழ்க்கைக்காக, வாழ்க்கை செலவுக்கல்ல என்பதே. சேமிப்பற்றவர் பணம் செலவிடத் தகுந்தது என்று மட்டும் அறிவர். செலவு வாழ்க்கைக் காக என்பதை மறப்பர். செலவு இரு வகைப்படும். ஒன்று இன்றியமையாச் செலவு. இது வாழ்க்கைத் தரத்தின் அளவை, அதாவது வருவாயின் அளவைப் பொறுத்துத் திட்டம் செய்யத் தக்கது. சிறு வருவாயில் வாழ்க்கைப் பிழைப்பை மட்டும் அது குறியாகக் கொண்டது. வருவாய் மிகுந்தோறும் அது வாழ்க்கை வளத்தையும் இன்பத்தையும் நோக்கமாகக் கொண்டு பெருகும். ஆனால், மற்றொருவகைச் செலவு உண்டு. அது வாழ்க்கை வளத்துக்கு உதவும் ஆக்கம் தருவது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், வாழ்க்கைப் பிழைப்பு நோக்க மட்டும் உடைய கீழ்த்தர வாழ்வை வாழ்க்கை வளநோக்கமுடைய உயர்தர வாழ்வு முறைகளுக்கு உயர்த்துவதும் இதுவே. இச் செலவுவகைக்கு உதவுவது சேமிப்புப் பொருள் மட்டுமே. வருவாயின் பெரும்பகுதி வாழ்க்கைப்பிழைப்பு நோக்கமுடைய குறுகியகாலத் திட்டத்தில் செலவு செய்யப்பட்டபின், வாழ்க்கை வளத்துக்கான ஆக்கத் திட்டம் ஆகிய நீண்டகாலத் திட்டம் சேமிப்பின் சிறு தொகையினால் தொடங்குகிறது. சேமிப்பு சிறு தொழிலாளர்க்கும் சிற்றூதியமுடைய வர்க்கும் மட்டுமே உரியதன்று. சிறு தொழிலாளர் சேமிப்பு அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமானால், பெருஞ் செல்வர் சேமிப்பு அவர்கள் மேற் கொண்ட பொதுத்துறையை உயர்த்தும். ஏனெனில் பெருஞ் செல்வர் செல்வம், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் அவர்கள் தனி வாழ்க்கையை மட்டும் உயர்த்தும் ஆற்றல் இழக்கின்றது. அந்த எல்லை தாண்டி அவர்கள் உயரவேண்டுமானால், அவர்கள் பிறரையும் உயர்த்தியே உயரமுடியும். ஒரு சிறு கட்டடம் அதன் அடித்தளம் அல்லது அடிப்படைமீது ஒரு குறிப்பிட்ட எல்லை வரை உயரமுடியும். செங்கல் உறுதியாயிருந்தால் இவ் வெல்லை இன்னும் சற்று மிகுதியாயிருக்கலாம். கட்டுபவர் கீழிடத்தை உறுதிமிக்கதாயும் பளுமிக்கதாயும், மேலே செல்லச் செல்ல உறுதியும் பளுவும் குறைந்ததாயும் கட்டுமானம் ஏற்படுத்தினால், இன்னும் எல்லை உயரக்கூடும். ஆனால், எப்படியும் அடித்தளத்தின் அகலமும் அடிப்படை யின் நீள அகல ஆழமும் உயரத்துக்கு ஓர் எல்லை வகுத்துத் தீரும். அதற்கு மேல் உயர்ந்தால் அது கட்டடமாகாமல் தூண்போன்ற நிலையுடையதாய், பின்னும் உயர்ந்தால் அந்நிலையுமற்றுச் சாயும். சாயாது உறுதியாக்க அதன் அடிப்படையின் ஆழமும், அடித்தளத்தின் நீள அகலமும் பெருக வேண்டும். அல்லது அதனை அடுத்த கட்டடங்கள் அதனுடன் ஒப்பான உறுதியுடையதாக வேண்டும். அண்மையிலுள்ள கட்டடம் பிறருடையது என்று அதை வாளா விட்டு வைப்பவனுடைய கட்டடம் பழுதுபடுவதுபோல, அண்டை யிலுள்ளவர் வாழ்வைச் செப்பம் செய்து உயர்த்தாமல், ஒருவன் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வளர்ச்சி பெறுதல் முடியாது. சேமிப்பினால் வரும் மற்றொரு பயன் தற்சார்பு. இடுக்கண் வருங்காலத்தில் உயிர் நண்பனுதவியினும் சேமிப்பு ஒருவனுக்குத் தக்க பாதுகாப்பு அளித்துக் கைதூக்கி விடும். தாய் தந்தை, மனைவி மக்கள் அல்லற்படுங்காலையில், நோய்ப்பட்டகாலையில் ஒருவனது துயரறிந்து பிறர் உதவி செய்வார்களென்று எதிர்பார்ப்பது இழிவு. எதிர்பார்க்கவும் முடியாது. தன் துயரைப் பிறர் உணரவில்லை என்று அச்சமயம் மனிதன் வருந்துவது இயல்பு. ஆனால், இது அறிவின்மையாகும். ஏனெனில் சேமிக்க எண்ணாததன் மூலம் அவனே தன் கடமையைத் தானறி யாதவனாகிறான். தன்னைத் தான் மதியாதவன் பிறர் மதிப்பை எதிர்பார்ப்பது பேதமையன்றோ? சேமிப்பினால் தற்சார்பும் தன்மதிப்பும் வளர்வதனால், அதுவே உலகியல் சார்ந்த அளவில் சமூக ஒழுக்கத்தின் அடிப்படை ஆகிறது. இதனாலேயே ``பணமே அடிப்படைத் தற்பண்பு'' என்று புலவர் விளக்கவுரை தருகிறார். தவிரப் பெருந்தன்மை, வள்ளன்மை, நடுநிலை, நேர்மை ஆகிய பண்புகள் பணம் சார்ந்ததன்றாயினும், அவற்றின் செயலாற்றலும், விருப்பாற்றலும் பெரிதும் பணத்தைப் பொறுத்ததே. மேலும் சோம்பியிருந்து பணம் பெற்றவரிடம் இப் பண்புகள் வளர்வதை விட, தன் மதிப்புடன் உழைத்துச் சேமித்தவர்களிடமே அது ஒளி வீசவும் செய்யும். செல்வர் கொடை மதிக்கப் பெறாது; உய்த் தாராய்ந்தால், அவர்கள் கொடையும் புறவடிவில் கொடையா யிருக்கு மேயன்றி, உள்ளூரப் பல தன்னலக் கரவட எண்ணங் களையும் குற்றங் குறைப்பூச்சு மெருகுகளையும் கொண்டதாகவே இருக்க இடமுண்டு. தவிரச் சேமியாது செல்வம் பெற்றவரிடம் பேராவல், ஆதிக்க மனப்பான்மை ஆகியவை இடம்பெறும். சேமிப்பவரிடம் இவை பெரும்பாலும் எழுவதில்லை. விலங்கு நிலையிலிருந்து மனித நிலைக்கோ, அல்லது உயர் விலங்கு நிலைக்கோ மாறும் முதல் மாறுபாட்டுப் பண்பு தன்னைக் கடந்து தன் மனைவி பிள்ளைகள், தன் கணவன் அல்லது குடும்பத்தின் நலனில் ஒருவர் கொள்ளும் அக்கறையும் கவலையுமே. பல உயிரினங்களில்கூட இதைக் காணலாம். பெடைக்கு உணவு கொடுப்பதிலும், குஞ்சுகளின் கூட்டை மென்மையாக்கச் சிறுசிறு துரும்பும் நூலும் தேடிக் கொணர்வதிலும் சிறு பறவைகள் மேற்கொள்ளும் முயற்சி சேமிப்புப் பண்பின் முதல் தொடக்கமேயாகும். எனவே, இப் பண்பில்லாதவர் மனிதரில் தாழ்ந்தவர் மட்டுமல்ல; விலங்கு பறவைகளில் கூட உயர்தர உயிரினங்களின் பண்புகளிற் குறைந்தவர் ஆவர். அவர்கள் மனித உலகில் மதிப்புப் பெறாததில் வியப்பில்லை. உண்மை வியப்பு என்னவெனில், உழைப்பும் சேமிப்பும் செய்யாது ஈட்டிய பணம் மதிப்புப் பெறுவதுதான். ஆனால், இவ்வகையில் பணம் பெறும் மதிப்பு பத்தி, காதல், ஒழுக்கம் முதலிய எல்லாப் பண்புகளிலும் தீயோர் மேற் கொள்ளும் புற நடிப்பால் வரும் போலிப் பண்புகளை ஒத்ததே யன்றி வேறன்று. செல்வத்தின் மதிப்பு அது உழைப்பின் சின்னம் என்பதாலேயே. உழைப்பும் சேமிப்பும் தன் மறுப்பும் இல்லாத செல்வத்தை அவற்றின் சின்னமாகிய பணத்தைப் போல் வழங்குபவர், புறவேடம் பூண்ட போலிப் பத்தர், போலி ஒழுக்கம் உடையவர் போல்பவரே. திருடிய பணமும், உழைத்து ஈட்டாத பணமும் உலகில் மதிப்புப் பெறுவதே இதற்குச் சான்று. மணவாழ்வு மேற்கொள்ளும் விலங்கு, பறவைகூடத் தன் புதிய பொறுப்பைப் பேரளவு அறிந்து கொள்கிறது. தன் குஞ்சுகளைப் பாதுகாக்கத் தெரியாத, அல்லது முடியாத தாய்ப்பறவையை, தன் பெடை குஞ்சுகளைப் பேணக் கவலை கொள்ளாத பறவைச் சேவலைக் காண முடியாது. ஆனால், மனித இனத்தில் இத்தகைய உயிர்கள் இருக்கின்றன - நாகரிகம் உடையதெனத் தருக்கிக்கொள்ளும் மனித சமூகங்கள் இத்தகையவருக்கு இன்னும் இடம் கொடுக்கின்றன. மனிதன் சிந்தனையுடைய உயிர் என்பதற்கான முதற்சான்று, அவன் உழைப்பும் சேமிப்பும் மேற்கொள்வதேயன்றி வேறல்ல. அவன் சிந்தனை கெட்டவன் என்பதற்கான முதல் தெளிவு, உழைப்பும் சேமிப்பும் அற்ற செல்வத்தை மதிக்க நேருவதே. ஒருவர் செல்வத்தின் அளவு அவர் செல்வம் பெரிதா, சிறிதா என்பதல்ல; அது அவர் ஈட்டியதா, அவர் தன்மறுப்புடன் சேமித்து ஈட்டியதா என்பதேயாகும். ஈட்டாத செல்வம் பெறாத பிள்ளை, விலைகொடுத்துப் பெறாத பொருள் போன்றது. அவை அருமையும் பெருமையும் உடையவை ஆகமாட்டா. கவலையற்று மணவாழ்வை மேற்கொள்பவர் கீழ் மக்களானால், அப் பொறுப்புக்கஞ்சி மணவாழ்விலிருந்து தப்பி வாழ எண்ணுபவர் கீழ்மையும் கோழைமையும் வஞ்சகமும் ஒருங்கேயுடைய கீழ்மக்கள் ஆவர். மண வாழ்வின் பயன் சமூகம். சமூகத்தில் பிறந்துவாழும் உரிமைக்குச் சரியான கடமை மணவாழ்வின் பொறுப்பேற்றுச் சமூகக் கடமையில் பங்கு கொள்வதே. மணவாழ்வு மேற்கொள்ளாதவன் உரிமையில் பங்குபெற்றுக் கடமையாற்றாத கசடனேயாவான். அத்தகை யோரை உண்டுபண்ணும் சமூகமும் பண்பில் இழிந்து கெடுவது உறுதி. எல்லாரும் மணவாழ்வில் கடமை மேற்கொள்ளும் சமூகமே சிக்கனமும் ஆக்கமும் மிக்க சமூகம் ஆகும். பொருளியலில், சிக்கனம் என்பதற்கான 1ஆங்கிலச் சொல், வீடு என்று பொருள்படும் *2கிரேக்கச் சொல்லின் அடிப்படை யாகத் தோன்றியதன் காரணம் இதுவே. குடும்பம் ஒரு சிறு மனித, சமூகமாய், மனித சமூகத்தின் அடிப்படைக் கூறாய், அச் சமூகப்பண்புகள் எல்லாவற்றையும் வளர்க்கும் பண்ணையாய் அமைகிறது. அதன் பொருளாட்சியே சமூகம், நாடு, உலகம் ஆகிய பரந்த எல்லைகளின் பொரு ளாட்சிக்கு அடிப்படை என்பதை இச்சொல் வற்புறுத்துகிறது. பெண்கள், குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவது, கொடுமைச் செயல்களில் மிகக் கீழ்த்தரமானதென்று நாகரிக சமூகம் கருதுகிறது. சிக்கன மின்மை, சேமிப்பில் கருத்தின்மை ஆகியவையே உண்மையில் பெண் களையும் குழந்தைகளையும் கொடுமைப்படுத்தக் காரணமா யிருக்கும் அடிப்படைத் தீய பண்பு ஆகும். உண்மையில் இப் பண்புடையவரிடமிருந்தே, வெளிப்படையாகப் பெண்களைத் துன்புறுத்தும் பேய்ப்பண்பும், குழந்தைகளிடம் இரக்கமற்ற கொடுமையும், ஏழைகளைப் புறக்கணித்துத் தொல்லைப் படுத்தும் அழிவிறுமாப்பும் தோன்றுகின்றன. மேனாட்டார் வாழ்வு பொதுவாகவும், இங்கிலாந்து வாழ்வு சிறப்பாகவும், குடும்ப வாழ்வு அடிப்படையிலிருந்து விரைந்து விலகி, ஆகாயக் குறிக்கோளுடைய பேராவற்பித்தர் பண்பை நோக்கிச் சென்று வருகிறது. வாழ்க்கைத்தர உயர்வு பல தனி மனிதர் குடும்ப நலனைக் கெடுத்துச் சமூகத்தில் மிதக்கும் சோம்பரை உயர்த்துகிறது. வாழ்க்கையின் விரைவு, இவ் வாகாய இயந்திரத்தை இயக்குவதில் செல்வதால், வாழ்க்கை பற்றிய கவலைக்கு நேரமில்லாமல் செய்கிறது. அறிஞர் ஹியூம் அரசியல் பொது மன்றத்தில் ஒருநாள் ஆங்கிலேயர் வாழ்க்கை முறையின் போக்கு ஒரு பந்தய ஓட்டப் போக்காய், ஒரு சூதாடியின் போக்காயிருக்கிறது என்று கூறியபோது, அனைவரும் கொல்லென்று சிரித்தனர். ஆனால் அச்சிரிப்பு, மன்ற உறுப்பினர் சிந்தனையைக் காட்டவில்லை. அவர்கள் அரசியல் வேகம் அரசியல் அடிப்படைப் பண்புகளைக் கவனித்துப்பார்க்க விடவில்லை என்பதையே காட்டுகிறது. உழைப்பவர் செல்வம் உழைப்பவர் குடும்ப வாழ்க்கையை உயர்த்தவில்லை என்பது மட்டுமன்று, அந் நோக்கத்தையே மறந்துவிட்டது என்று கூறத் தேவையில்லை. சேமிக்கத் தேவையில்லை என்ற நிலை, ஒருவருக்கு இருக்கவே முடியாது; இருக்குமானால், பொருளின் தேவையை அல்லது அதன் மதிப்பை அவர் உணரவில்லை என்றே கொள்ளல் தகும். ஏனெனில், சேமிக்கும் தேவையற்றவர் திட்டமற்றவர். அவர் செலவுகள் திட்டமும் நோக்கமும் அற்றவை. பணம் இருக்கிற காரணத்தால் அவர் செலவு செய்வார். என்ன செலவு தேவை, என்ன செலவு தேவைப்படவில்லை என்ற பகுத்துணர்வு அவரிடம் இராது. கண்டகண்டபடி செலவு செய்வார். அச் செலவினங்களில் பெரும்பாலானவை பயனற்றவை மட்டுமன்று, தீமையும் தருபவையாகவே இருக்கமுடியும். சேமிக்க விரும்பாதவர் உழைப்பையும் நாடமாட்டார். அவர் உணவு செரிமானம் பெறாது. அவர் இன்பங்கள் உடல் நலம் அழிக்கும். அவர் நட்பு, தீ நட்பாயிருக்கும். அவர் கவலையற்றவராயிருப்பது போலவே, இரக்கம், பெருந்தன்மை, நேர்மை அற்றவராயிருந்து, சமூகப் பகைவராய்க் காலந்தள்ளி, சமூகப் பகைவரையே பெருக்கி வருவார். நல்ல சமூகத்தில் அவர் அறிவு பெறுவார்; பெறாத விடத்து அவருக்கு இடம் அளித்த சமூகமே அழிந்துபடுவது உறுதி. அறிஞர் ஜான்சன் வறுமையின் கொடுமை கண்டவர். இரக்கமும் பெருந் தன்மையுமுடையவர். நீண்ட அனுபவத்தின் பின்னரே செல்வர் இரக்கமற்ற தன்மையையும், சேமிப்பினால் வரும் தற்காப்பின் அருமையையும் கண்டவர். அவர், சேமிப்பை நல்லறிவின் புதல்வி, தன்னடக்கத்தின் தங்கை, விடுதலையின் தாய் எனப் பாராட்டியுள்ளார். ``பல நல்ல பண்புகளை அழிப்பது வறுமை; பல நற்பண்புகளை அது வலிவற்றதாக்கும். பல நற்பண்புகள் பிறக்கவிடாது. என்னிடம் கேட்டால், தீய பண்புக ளனைத்தையும்விடத் தீமை தருவது வறுமையே,'' என்று அவர் உழைத்துச் சேமிக்காதவர் வறுமையைப் பற்றி விளக்கியுள்ளார். உழையாத செல்வரைப்பற்றி அவர் கூறவில்லை - அவர்கள் தனிப்பட்ட செல்வம் உடையவர். ஆனால், அவர்களே சமூகத்தின் வறுமைக்குரிய சின்னங்கள் ஆதல் காணலாம். சேமிப்பின் நோக்கம் தன்னலம்தான். ஆனால் அது குறுகிய தற்பற்று அன்று. பொதுநலத்திற்கு இன்றியமையா அடிப்படைப் பண்பான பரந்துசெல்லும் தன்னலமேயாகும். இதற்கு மாறான பண்பு பொதுநல மல்ல; தன்னலமுமல்ல, ஏனெனில், அது சமூகத்தை முதலில் அழித்தாலும், பின் தன்னையு மழிப்பதே யாகும். திருட்டு, கொள்ளை, ஒழுக்கக்கேடு ஆகியவற்றைப்போல், பொதுநல அடிப்படையில்லாத தற்பற்று அதாவது போலித் தன்னலமும் சமூகப் பகைமைப் பண்புகளில் ஒன்று ஆகும். சமூக அடிப்படையான தன்னலம் வேறு. இப் போலிப்பண்பு வேறு. ஆகவே, சேமிப்பு நல்ல தன்னலத்துக்கும் நல்ல பொது நலத்துக்கும் அடிப்படையான இன்றியமையா முதற்பண்பு ஆகும். 3. சேமவைப்பு ``வானகத்தை ஒரு திரையாகக் கொண்டு அதில் பயனுடைய வாசகம் ஒன்றை எழுதுவதானால், சேமவைப்பு என்ற ஒரு தொடரைப் பாரிய பொன்னிற எழுத்தில் அதன் நிறைபரப்பில் எழுதி வைக்கவே நான் விரும்புவேன். - தூய திரு வில்லியன் மார்ஷ் ``ஏழைகளுக்கு நாம் செய்யக்கூடும் ஒரே நல்லுதவி, அவர்கள் தம்மைத் தாமே உதவுவதன் சிறப்பை நாம் அவர்களுக்கு அறிவுறுத்துவதே.'' - சமய முதல்வர் சம்னர் ``சோம்பேறியே, எறும்பினத்தைப்போய்ப் பார்; அதன் வாழ்க்கை முறையையும் அறிவையும் கண்டு பின்பற்று; வேறு வழிகாட்டி, கண்காணிப்பாளர், ஆணையாளர் இல்லாமலே, அது கோடையில் உணவுதேடி, அறுவடையில் உண்டு உணவு மீத்து, குளிர்காலத்தில் ஓய்வுடன் உண்டு பெருகுகிறது.'' - விவிலிய நூல் பழமொழிகள். ``தன் பிள்ளைக்கு ஒரு தொழில் கற்பிக்காத தந்தை அவனுக்குத் திருட்டுத் தொழில் கற்பித்தவன் ஆகிறான்.'' - இந்திய அறிஞர். செல்வத்தின் ஆற்றல் பெரிதுதான். ஆனால் வறுமையின் ஆற்றல் அதனினும் எத்தனையோ மடங்கு பெரிது. வறுமையின் ஆற்றலிலிருந்து தப்பிப் பிழைப்பதற்காகவே நாம் செல்வத்தின் ஆற்றலைத் துணைக்கு அழைக்கிறோம். ஆனால், செல்வம் என்றும் நிலையாக வறுமையைப் போக்குவதில்லை. வறுமையின் கூறு செலவாகவும், செல்வத்தின் கூறு வரவாகவும் எப்போதும் இயங்கிவருகிறது. ஆயினும், இக்கூறுகள் ஒன்றுடனொன்று பின்னிக் கிடக்கின்றன. நல்ல செலவு வரவுக்கு வழிவகுக்கிறது. தீய வரவு செலவைப் பெருக்குகிறது. தனி மனிதன் வாழ்வின் நல்ல செலவு நல்ல வரவு உண்டுபண்ணிப் பொதுஇனவாழ்வு பெருக்குகிறது. தனி மனிதன் தீய செலவும் தீய வரவும் பொதுஇனவாழ்வை அழிக்கின்றன. ஆகவே சிக்கன வாழ்வு என்பது செல்வத்தைப் பெருக்கும் வாழ்வு மட்டுமல்ல; செலவைக் குறைக்கும் அல்லது குறுக்கும் வாழ்வும் அல்ல; அது நல்ல செலவையும் நல்ல வரவையும் பெருக்கி, தீய செலவையும் தீய வரவையும் ஒழிக்கும் வாழ்வேயாகும். மீத்துவைத்தல் தீய செலவை ஓரளவு தடுக்கிறது; ஆனால் நல்ல வரவுக்குக் கட்டாயமாக வழிவகுக்கின்றது. 1``ஒவ்வோர் இல்லத்திலும் மறைவாக ஓர் அறையில், அல்லது அடுக்குத்தட்டில் எங்கோ ஒரு கங்காளம் இருக்கத்தான் செய்யும்,'' என்று ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு. குடும்பத்தார் அதனைக் கூடியமட்டும் நினைவெல்லையில் நுழையவிட விரும்புவதில்லை. அத்துடன் தாம் மறக்க முடியாவிட்டாலும் அடுத்தவர் காணாது மறைக்கவாவது அரும்பாடுபடுவர். இக் கங்காளம் பெரும்பாலும் வறுமையின் உருவம் அல்லது நிழல் அல்லது அறிகுறியே. ஒருவர் செல்வம் எவ்வளவு உயர்நிலையுடையதாயிருந்தாலும், இந் நிழலுக்கு அது என்றும் எங்கும் எல்லாத் தறுவாயிலும் தப்பியிருக்க முடியாது. இந்த நிழல் எப்போதும் உலகின் ஒரு பாதி மீது விழுகிறது; அது ஒளி குன்றி இருள் சார்ந்து இருக்கிறது. மறுபாதி நிழலில்லாத தால் ஒளியுடையதாயிருக்கிறது. ஆனால், நிழலுடைய பாதியோ, ஒளியுடைய பாதியோ எப்போதும் நிலையாக இருப்பதில்லை. எங்கே நிழல் விழுகிறது, எங்கே ஒளி விழும் என்று கூறவும் முடியாது. இங்கே நிழல் என்பது வறுமை; ஒளி என்பது செல்வம். ஒளியிலுள்ள பாதி அதாவது செல்வர், வறுமையின் சாயல் தம்மீது தாவாமல் தடுக்கவே தம் முழு முயற்சியையும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. வறுமை நிழலிலுள்ளவர்களோ அந்நிழலை முடியுமானால் அப்புறப்படுத்தவும், முடியாவிட்டால் மறைத்து, அதன் விளைவுகளில் ஒரு பகுதியையேனும் விலக்கவுமே பாடுபடுவர். வறுமையென்னும் இக் கங்காளத்தின் நிழலுக்கு ஆளாகுபவர் பெரும்பாலும் சேமித்து வையாதவர்களே. வாணிகச் சூதாட்டமும் பங்குகளச் சூதாட்டமும் நிறைந்த பிரிட்டன் போன்ற நாடுகளில், அடிக்கடி பொருளியல் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. இச் சமயங்களிலெல்லாம் பல பணிமேலாட்களும் எழுத்துத் துறையாளரும் வேலையாட்களும் தொழில் இழக்கின்றனர். இந்நெருக்கடிகள் என்றுமிருப்ப தில்லை. எப்போதும் நீடித்துமிருப்ப தில்லை. ஆனால், நெருக்கடிக்காலம் எவ்வளவு குறுகியதாக இருந்தாலும் அது முடியும்வரை தொழிலாளி வாழ வேண்டுமே! இது முடியாமல் அவன் கொடிய வறுமை நிலைக்கு ஆளாகிறான். பொருளகக் கழகங்களும் இவ்வகையில் பெரிதும் உதவுவதில்லை. ஏனெனில் அவை உண்மையில் 2வரைநிலைக்கழகங் களைப் போன்றனவே. அவையும் நெருக்கடிகளால் விழுந்துபடத் தக்கவையாகவே உள்ளன. இவ்வகையில் மனிதனுக்கு உதவக்கூடிய சாதனம் மீத்து வைப்பு ஒன்றே. தொழிலாளருக்குச் சிறப்பாக இதைவிட நிலையான பாதுகாப்பு வலு வேறில்லை. திடீரென்று வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு ஆளானவர்களுக்கு அது இரண்டு வகையான நலங்கள் செய்கிறது. தொழில் மீண்டும் கிட்டும்வரை அவர்கள் வாழ்க்கையை முழு வறுமையிலிருந்து காப்பது அவற்றுள் ஒன்று. மற்றொன்று அவர்கள் அம்முழு வறுமை காரணமாக ஆத்திரமடைந்து குறைந்த மதிப்புடைய அல்லது விருப்பத்துக்கு மாறான தொழிலை ஏற்கவேண்டிய நிலை ஏற்படுவ தில்லை. வீழ்ச்சியின் தாக்குதலைக் காக்க அது ஒரு வான்குடையாகவும், மீண்டும் உயர்வு கிட்டும் வாய்ப்பைப் பாதுகாப்பதற்குரிய ஒரு கருவியாகவும் பயன்படுகிறது. ஒரு சிறிது பணம் இல்லாத காரணத்தால் சில சமயம் நிலையான பெருத்த வறுமை ஏற்படுவதுண்டு. உழவர் விதைப் பருவத்துக்கு முன்பு உணவுப்பொருள் வாங்கப் பணம் இல்லாமல், விதையை உண்டு, விதை யில்லாமல் அடுத்த பருவத்தில் அலமருவது காணலாம். கூடுதல் தொழிலூதியம் உள்ள இடத்துக்குப் போகப் பணமில்லாமல், குறைந்த ஊதியத்திலேயே உழலுவர். தொழிற் கருவிகளும் இடமுதலிய துணை வாய்ப்புகளும் இல்லாமல் பிறரிடம் பலர் ஆட்பட்டு வேலை செய்வர். செல்வத்துக்குரிய பொருளை உண்டுபண்ணும் தொழிலாளர் அதில் உரிய பங்குபெற முடியாமல், முதலாளிகள் திட்டப்படி அவர்கள் கொடுப்பதைப் பெறவேண்டிய நிலையி லிருப்பது பெரும்பாலும் அவர்கள் கைப்பண மில்லாமல் அன்றாட வாழ்க்கைத்தொழிலை நம்பியிருப்பத னாலேயே. மேலும் வாழ்க்கை வாய்ப்புக்களான கல்வி, பண்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றுக்கும் பணமில்லாமையால் நல்வாழ்வின் வாயிலுக்குள் நுழையமுடியாது அவலமுறுவர் பலர். இவற்றை யெல்லாம்விடக் கொடிய வறுமை, நோய்ப்பட்ட ஏழைகளுக்கு உண்டு. நோய் குணமடையும்வரை வாழ்வுக்கும் மருந்துக்கும் வகையில்லாமல் நோயுடனே உழைத்து அழிபவரும் நோயினால் திறமையும் உழைப்பும் இழந்து வாழ்விழந்து தவிப்பவரும் உண்டு. ஆகவே, செல்வம் வாழ்வு அன்றாயினும் செல்வமின்மை யால் வாழ்வு குன்றும் என்பது மறுக்கமுடியாது. செல்வமின்றி வாழமுடியாத வறுமை வாழ்வினருக்கு பணம் தந்து அவர்கள் வாழ்வை மலிவாக வாங்கி அதன்மூலம் அவ்வாழ்வினடிப் படையில் தாம் செல்வம் ஈட்டுபவரே முதலாளிகள். தம் வாழ்க்கைச் செலவுமட்டும் பெற்று, உழைக்கும் தற்கால `அடிமை'களே தொழிலாளிகள். பணம் இங்ஙனமாக மனிதவாழ்வின் முதல்தர சத்திகளில் ஒன்றாய் விட்டது. தன்னளவில் விலையில்லாத அப்பொருள், வறியவர் வறுமை காரணமாகவே, விலைமதிப்பற்ற உயிர்களையும் உயிர்வாழ்வுகளையும் விலைக்கு வாங்க உதவும் ஆற்றலுடைய தாகிறது. ஆயினும் அதன் அருமை தெரியாத ஏழைகளைப் போலவே, அதன் அருமை தெரியாத செல்வரும் உண்டு. பணத்தைக் குவித்துவைக்கும் கஞ்சர்கள் அதன் பயனை ஒரு சிறிதும் பெறுவதில்லை. பணத்துக்காக அவர்கள் பிறர் பகைமை, பொறாமை, பேராவலுக்கு ஆளாய் உயிரை இழப்பதைக்கூடக் காண்கிறோம். இன்னொருபுறம் பணத்தை வைத்து ஏழைத் தொழிலாளர் உழைப்புச் செல்வத்தை விலைக்கு வாங்கி, அவர்கள் வாழ்வாகிய உழைப்புச் செல்வத்தை வளர்க்காமல், உழைப்பில் செல்வம் பெருக்குபவரும் அக்கஞ்சரைப் போலவே பணத்தை நற்பயன் படுத்தாதவர் ஆவர். பணத்தால் வரும் நிலையான பயன் அதன்மூலம் மக்கள் தம்மை முதலில் உயர்த்தி, பின் தம் செல்வத்தால் பிறரையும் வளப்படுத்தி, அதனால் வரும் உண்மைச் செல்வமாகிய புகழைப் பெறுவதே. இப் புகழ் உண்மையான அன்புப் புகழாய், அதை உடையவனுக்குக் கிட்டத்தட்ட வரம்பிலா ஆற்றல் தருவதாகும். மீத்து வைப்பவர் மேற்கூறிய நோக்கத்துடனேயே பணம் திரட்டக் கடமைப்பட்டவர் ஆவர். மீத்து வைப்பின் முதல் படிவளர்ச்சி தன் உழைப்பு நிலைமையைப் பாதுகாத்துத் தன் வாழ்வின் விடுதலையைப் பேணுதல் ஆகும். அதன் இரண்டாவது படிவளர்ச்சி அவனைச் செல்வ னாக்கி, பிற மக்கள் வாழ்வில் அச் செல்வத்தை ஈடுபடுத்தி, அவர்களை உயர்த்தும் உரிமை உடையவனாக்கும். அவன் தன்னலங்கள் நிறைவு பெற்று, பொதுநலம் பேணிப் புகழ்பெறுவது மூன்றாவது படி. இம் மூன்று படிகளிலும் விரிவு பெறத்தக்க வகையில் பொருள் சேர்ப்பவரே செல்வர் என்று கூறத்தக்கவர். இவற்றில் முதல் படி பேணாதவர் அடிமைகளாய், நிலத்துக்குப் பாரமாய், அவதியுறுவர். முதற்படியுடன் நிற்பவர் தம் வாழ்வுக்குட்பட்ட சிறு எல்லையில் நல்ல தொழிலாளிகள் என்று கூறத்தக்கவர். இரண்டாவது படியில் நின்று பொதுநலம் நாடாதவர் செல்வராயினும் போலிச் செல்வரான முதலாளிகளே யாவர். இவர்கள் முதலாளித்துவம், பிற முதலாளிகளின் போட்டியினாலும், மக்கள் வாழ்வுப் பெருக்கத்தாலும் தானே அழிவதாகும். மூன்றாம் படி அடைந்தவர் உண்மைச்செல்வராய், தம் குடி, குலம், நாடு, உலகம் என்று படிப்படியாக விரிந்த எல்லைகளில் தம் செல்வம் பரப்பும் முதல்வராய் `வாழ்வாங்கு வாழ்பவர்' ஆவர். மீத்து வைப்பதற்குரிய வாய்ப்புக்களுள் தலைசிறந்தது சேம வைப்புகளே. செல்வத்தின் முதற்படியை எளிதில் அடைய இது ஒரு நல்ல துணையாகிறது. முயற்சியும் ஊக்கமும் உடைய ஏழையையும் தொழி லாளியையும் செல்வப் படிகளுள் முதற்படி யேற உதவுவது அதுவே. செல்வ நிலையங்களாகிய பொருளகங்களின் முதற்படியும், இன்றும் அதன் அடிப்படை ஆக்கக்கூறும் இதுவே. ஆயினும் சேமவைப்பு முறைக்கு ஏற்பட்ட தொடக்கத் தோல்விகளும் முறிவுகளும் பல. பிரிட்டனில் தென்கடற்குமிழி என்று பிற்காலங்களில் ஏளனமாகப் பழித்துரைக்கப் பட்ட தென்கடற் கழகம் முறிவுற்றது இத்தகைய இயற்கைத் தோல்விகளில் ஒன்று. சேமித்து வைப்பவர்களுக்கு இத்தோல்வி நெடுங்காலம் ஒர் அச்சுறுத்தாக இருந்தது. அறிஞர் காபட் இது காரணமாக அதை ஓர் எச்சரிக்கையாகவே ஆக்கி, சேமிப்புப் பழக்கத்தையே நையாண்டி செய்து தாக்கியுள்ளார். இது தவறு. ஆயினும் நல்லகாலமாக எவரும் காபட்டின் அறிவுரைக்குச் செவிசாய்க்கவில்லை. இன்று மீத்துவைக்கும் பக்கமும் சேமவைப்பும் பெருகி, அரசியல், அஞ்சல் நிலையம், பொருளகங்கள் ஆகிய பல அரங்கங்களில் அது ஓர் உறுப்பாயியங்குவதே இதற்கு ஒரு சான்று. தனி மனிதன் சேமிப்புக்குச் சேமவைப்புக்கள் ஒரு இன்றியமையாப் பாதுகாப்பு ஆகும். எத்தனையோ பேர் சேமிக்கத் தொடங்கி, தன்னடக்க மின்றி அதைத் தொடக்கத்திலேயே கைவிட வேண்டி வந்துள்ளது. சேமிக்கும் நேரத்தில் சேமிப்பதைவிடச் செலவழிக்கக் கைகள் விருவிருக்கும். பல சமயங்களில் சேமிப்பிலுள்ள பணம் பல செலவுகளை இன்றியமையாச் செலவுகளென எண்ணச் செய்யும். செலவு செய்வதிலும், பகட்டிலும், தற்காலிக வெளி மதிப்பிலும் மனிதனுக்குள்ள இயற்கைக் கவர்ச்சி சேமிப்பு நோக்கத்திற்கு எப்போதுமே பெருந் தடைகல்லாய் இருந்திருக்கிறது. தம் இயற்கை யார்வத்தைத் தாமே தடுக்கமுனைந்து, போட்டபின் எடுக்கமுடியாத பெட்டிகளை மனிதர் செய்தனர். அப்போது கட்டாயம் போட்டுத் தீரவேண்டும் என்ற கட்டுப்பாட்டைத் தாமே தம் மீது சுமத்திக்கொள்ள வேண்டியதாயிருந்தது. தன்னடக்கம் குன்றிய வேளைகளில் மீத்துவைப்பதைத் தடுக்கக் கடத்திப் போடும் பண்பு வழிசெய்யும். சில சமயம் செலவார்வம், போட்டால் எடுக்க முடியாத பெட்டியை உடைத்தாவது அதில் சேர்ந்த சிறு பணத்தை எடுத்துச் செலவு செய்யத் தூண்டும். ஆனால், செலவு செய்தபின் பெட்டியின் வெறுமை கழிவிரக்கத்தை உண்டுபண்ணாமலிராது. சிலர் மீண்டும் சேமிக்க முயல்வர். சிலர் தம்மை எதிர்த்தடக்கும் ஆற்றலும் நம்பிக்கையுமிழந்து மீத்து வைக்கும் பழக்கத்தைக் கைவிடுவர். சேமிக்கும் ஆர்வமுடையவர்களுக்கு அதற்கான ஆற்றலை உண்டு பண்ணி அச்சேமிப்பைப் பாதுகாத்து வளர்க்கவும், சேமிக்கவும் ஆற்றலுடைய வர்களுக்கு அச் சேமிப்பின் பலனைப் பெருக்கவும் தோற்றுவிக்கப்பட்ட வாய்ப்பே சேமவைப்பு. சேமகலத்தில் போட்ட பணத்தைச் செலவார்வத்தினால் உடைத் தெடுக்க நேருகிறது. ஆனால், இங்கே அதைச் சேமவைப்பில் சென்று எடுக்க வேண்டும். அத்துடன் சேமவைப்பிலிருந்து எடுப்பதால் எடுக்கும் பணம் மட்டுமல்ல, அதற்கு வரும் வட்டியும் இழக்கவேண்டும். இயல்பான செலவார் வத்தை இங்ஙனம் இயல்பான இன்னோர் ஆர்வமான ஆதாய ஆர்வம் தடுத்து நிறுத்திவிடுகிறது. போட்டால் எளிதில் எடுக்கமுடியாத வேறு பொருள்வைப்புகளும் உண்டு. நடைமுறை வைப்பு1 தவணை வைப்பு2 நிலவர வைப்பு3 பங்குவைப்பு4 ஆகியவை இத்தகையன. ஆனால் எல்லாவற்றிலுமே தடையுடன் தடையாக ஆதாய ஆர்வமும் பயன் அளிக்கிறது. ஆனால், சேமவைப்பு முதலிய வைப்புகளின் பயன் சேமிப்பு மட்டுமல்ல. உண்மையில் சேமிப்பு மட்டுமே. நோக்கமானால், ஆதாய ஆர்வத்தைத் தூண்ட வழியிராது. இந்த ஆதாயத்தைச் சேம வைப்பாளர் தம் கையிலிருந்தோ அல்லது சேமவைப்புத் திரளிலிருந்தோ கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது. அவர்கள் சேமவைப்பு, பின் திரளில் ஒரு பகுதியையும் மற்றவகை வைப்புகளின் மற்றொரு பகுதியையும், ஆதாயந் தரும் தொழில்களுக்கு முதலீடாகக் கொடுத்துதவி அவர்களிடமிருந்து வட்டி ஆதாயம் பெறுகின்றனர். இதன் திட்டமிடப்பட்ட ஒரு பகுதியே வைப்பீட்டாளன் ஆதாய ஆர்வம் தூண்டுகிறது. ஒரு வாரத்தில் முழுவதும் எடுபடாமல் கிடக்கும் தொகைக்கே இவ் வட்டி கொடுக்கப்படுமாதலால், வைப்பீட்டாளன் கூடியமட்டும் போட்ட சேமிப்பை எடுக்காமலிருக்கத் தூண்டப்படுகிறான். எனவே, சேமவைப்பு தனிமனிதன் சேமிப்புக்கும் அதன்மூலம் அவன் செலவினத்தின் திட்ட வகுப்புக்கும் அவன் வாழ்க்கை யுரிமைக்கும், வளத்துக்கும் உதவுவது மட்டுமன்று. அதேசமயம் அது சேமவைப்பு, நடைமுறை வைப்பு முதலிய வைப்பீட்டு முறைகளுக்கும் அடிப்படையாய், பொருளகத் தொழிலையும், அத்தொழில் வாயிலாக ஒரு நாட்டின் அல்லது உலகின் பல வாணிகத்தொழில் நிலையங்களையும், நாட்டின் பொருளியல் வாழ்வையும் திட்டமிட்டு வளர்க்க உதவுகிறது. சேமிப்பவன் இங்ஙனம் நாட்டுப் பொதுவாழ்விலும் உலகப் பொருளியல் வாழ்விலும் ஒரு சிறு கூறு பொறுப்புடைய பங்காளி ஆகிறான். பணம் உழைப்பன்று; எப்போதும் அது உழைப்பின் சின்னமாகவும் அமைவதில்லை. ஆனால், அது ஒருபுறம் உழைப்பின் பயனாய் வருவது. மற்றொருபுறம் உழைப்பவர்க்கு இயற்கை தரும் வாய்ப்புக்களுடன் சேர்ந்து அது வாய்ப்பைப் பெருக்கி இன்னும் மிகுந்த உழைப்புச் செல்வத்தைச் சமூகத்துக்கு அளிக்கவல்லது. உழையாதவர் கையில் வைத்திருக்கும் செல்வம் தானும் வளராது; எதையும் வளர்க்கவும் செய்யாது. உழைப்பவர் பக்கமாக அதைச் செலுத்தி வளர்க்க சேமவைப்பு முதலிய முறைகள் திட்டம் வகுக்கின்றன. உழையாதவன் பணமும் முதலீடாகக் கூடுமாயினும், உழைப்பவன் மீத்துவைக்கும் பணமே முதலீடும் ஆகி, திரும்ப அவன் உழைப்பை ஊக்கி வளர்க்கும் பண்பும் உடையதாகும். எனவேதான், உழைத்துச் செல்வம் திரட்டுபவர் உழையாது பெறுபவரைப் பார்த்துப் பொறாமைப் படத் தேவையேயில்லை. உழைப்பவர் பக்கம் செல்வம் திரண்டு வருவது உறுதி. உழைப்பிலாச் செல்வரிடம் செல்வம் செல்வது, உழைப்புடைய ஏழையரை நோக்கி அது சென்றுவிடுவதால் அது செல்வரிடம் தரித்திராமல் தரித்திரத்தை மீண்டும் உண்டுபண்ணும். செல்வம் பண்பன்று; ஆனால், செல்வம் பண்பை வளர்க்க இன்றியமையாதது. இவ்வகையிலும் உழையாதவர் செல்வத்துக் கும், உழைப்பவர், சிறப்பாக உழைத்து மீப்பவர் செல்வத்துக்கும் ஒரு வேறுபாடு உண்டு. உழையாதவர் செல்வம் பண்பை வளர்க்க உதவக் கூடுமாயினும், அது உழைப்பவரிடம் சென்றாலன்றி அது அப் பண்பு வளர்க்காது. மேலும் உழைத்து மீத்த செல்வர் உழைப்பாளியாகவும் செல்வராகவும் இருப்பதால், அவர்கள் செல்வம் பிற பண்பை வளர்ப்பதுடன், தம் பண்பையும் ஊக்கும். கொடுப்பவனுக்கும் பெறுபவனுக்கும் கல்வி வளர்ச்சி தருவதுபோல, பண்பும், பண்பு தரும் உழைப்புச் செல்வமும் இங்ஙனம் கொடுப்பவனுக்கும் வளர்ச்சி தந்து, பெறுபவனுக்கும் வளர்ச்சி அளிக்கிறது. கொடுக்கக் கொடுக்கக் கூடுவதன்றிக் குறையாமல் பெருகும் இவ் வரம்பற்ற வளமைக் காலத்தின் அருமை தெரியாமல், எத்தனை பேர் வாளா வீணாள் கழிக்கின்றனர் என்பது வியப்புக்குரிய செய்தியே! மீத்துவைக்கும் பழக்கத்தை ஒவ்வோர் இளைஞனும் ஒவ்வொரு நங்கையும் தம் வாழ்க்கைத் தொடக்கத்திலிருந்தே கைக்கொள்ளுதல் வேண்டும். நாள் அல்லது வாரம் தவறாமல் மீத்துவைக்க வேண்டும். மீத்துவைக்கும் தொகை மிகச் சிறியதா யினும், அதன் பயன் சிறிதாகாது. அத்துடன் வாரந்தோறும், மீத்துவைத்த தொகையை எடுக்காமல், அதை வளர்க்கவும் வேண்டும். செலவு செய்யாதவனுக்கு என்றும் செலவு செய்யும் உரிமையுண்டு. செலவிட்டபின் அவ்வாற்றல் இல்லை. சாக அஞ்சியவனுக்கு என்றும் சாவு, சாகத் துணிந்த வனுக்கு என்றும் சாவில்லை என்பதுபோல, செலவு செய்யத் துணிந்தவனுக்கு என்றும் வறுமை; செலவு செய்யாது மீப்ப வனுக்கு என்றும் செல்வம் என்பது மறுக்கவொண்ணாத உண்மை ஆகும். உலகில் எல்லாரும் மீத்துவைக்க முடியுமானால், இந்த உலகம் எப்படி மாறிவிடும் என்பதை நினைத்துப்பாருங்கள்! உலகில் இரவலர் இருக்கமாட்டார். மானக்கேடு இராது; அடிமைநிலை இராது; கல்வி பெருகும்; அன்பாட்சி வளரும்; மக்கள் வாழ்நாள் நீளும். மனிதன் விலங்குகளில் முதன்மையான விலங்காய்மட்டுமிராமல், இயற்கையின் செல்வனாய், கடவுட்படைப்பின் கருவூலமாய் விளங்குவான். உலகமெங்கும் மீத்துவைக்க நாம் உதவமுடியும், நாம் அதைப் பின்பற்றுவதனால், நம் பண்பாற்றல் ஒருவேளை உலகளவு ஒரே எட்டில் எட்டமுடியாதிருக்கலாம். ஆனால் அது தற்கால அளவில் உள்ள ஓர் எல்லை வேற்றுமை மட்டுமே; நிலையான அளவில் உள்ள கால வேற்றுமை அன்று. மீத்துவைப்பவன் கட்டாயம் தன்னை உயர்த்த முடியும். ஓரளவு தன் குடும்பத்தையும் உறவினரையும் உயர்த்த முடியும். இது நாளடைவில் வாய்ப்பு வளத்தையும் பண்பு வளத்தையும் பெருக்கி, அவன் சூழலில் பரந்து, அவன் ஊர், நாடு, உலகம் என்றோ; அவன் வகுப்பு இனம், பேரினம்; மனிதவகுப்பு என்றோ விரியாமல் போகாது. உலகப் பரப்பு, காலப் பரப்பு ஆகியவற்றிலுள்ள பொதுப் பலன் நீங்கலாக, தனி மனிதன் பண்பிலும் மீத்து வைப்பு, பெருநலன்கள் உண்டுபண்ணுகிறது. அது மனிதனுக்குத் தற்சார்பையும் தன்மதிப்பையும் முயற்சி ஊக்கத்தையும் வளர்ச்சியார்வத்தையும் உண்டுபண்ணுகிறது. தற்சார்பு தன்னிறைவாகிப் பின் தன்னைக் கடந்த பொதுநல உணர்ச்சிக ளாகப் பொங்கி வழிகிறது. பெருந்தன்மை, விட்டுக்கொடுப்பு, இரக்கம், தொண்டு மனப்பான்மை, தன் மறுப்பு, தன்னடக்கம், திட்டமிடும் அறிவுரம், வருங்கால நோக்கம், நுண்ணாராய்ச்சி அமைதியும் யாவும் மீத்துவைக்கும் பழக்கம் உடையவர்களுக்கு ஏற்படும் தனிப் பண்புகள் ஆகும். இத் தனிப்பண்புகளும் முற்றிலும் தனிப் பண்புகளாயிராமல் படிப்படியாகப் பொதுப் பண்புகளாக விரியத்தக்கனவே. பொருளகம் முதல் முதல் சேமவைப்பகமாகவே தொடங்கிற்று. முதன்முதல் சேமவைப்பகம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரிட்டனின் மிடில்செக்ஸ் மாவட்டத்தில் உள்ள டாட்டன்ஹாம் ஊர்வட்டத்தில், செல்வி பிரிஸ்கில்லா வேக்ஃவீல்டு என்ற பெண்மணி யாலேயே தோற்றுவிக்கப்பட்டது. அவள் நோக்கம் ஏழைச் சிறுவர்களிடையே தற்சார்புணர்ச்சியை வளர்ப்பதேயாகும். இதன் சிறு பெற்றி இன்னும் பலரை இத் துறையில் ஊக்கியது. 1799 இல் தூய திரு ஜோஸஃவ் ஸ்மித் என்ற சமயப்பணி முதல்வர் இன்னும் சற்றுப் பரந்த அடிப்படையில் ஒரு வைப்பகம் தொடங்கினார். அவர் பணம் திரளும் கோடைகாலத்தில் தம் வட்டத்துச் சமயக் குடிகளிடமிருந்து சிறுசிறு தொகையைக் கேட்டு வாங்கி, கிறிஸ்துமஸ் பண்டிகை விழாக் கொண் டாடும் சமயம் அதை அவ் ஏழைகளுக்குக் கொடுத்துவந்தார். அவர் நல்லெண்ணம் வாங்கியதைக் கொடுப்பதுடன் நிற்கவில்லை. ஒவ்வொருவர் வைப்புடனும் அதன் மூன்றிலொரு பங்குத் தொகையைத் தம் கைப்பொறுப்பாகச் சேர்த்து அவர்களுக்குத் தந்தார். வணிகர் பார்வைக்கு இது தற்கொலைப் பண்பாகவே தோற்றியிருக்கக்கூடும். சமய அருளாளர் பலர் பார்வைக்குக்கூட இது ஓர் அருளிரக்கப் பணியாகமட்டும் தோற்றி யிருக்கக்கூடும். ஆனால், இன்று அது வணிகத் துறையின் மாபெரு வளர்ச்சிக்கும் பொருளகத் துறைக்கும் வழிகாட்டியுள்ளது. தூய திரு ஜோஸஃவ் ஸ்மித்தின் அருளிரக்கத் தன் மறுப்புத் தொண்டின் வெற்றிதான் ஆதாய ஆர்வத்துக்கு முன்னோடி. ஆதாய ஆர்வம் சேமிப்பை வளர்க்கிறது என்பதை இவ் வருட்பணி காட்டியவுடனே, அருளிரக்க அடிப்படையும் தன்மறுப்பு அடிப்படையு மில்லாமலே அதைத் தூண்டும் நெறிமுறைகளை மற்றவர் சிந்திக்கத் தொடங்கினர். முதன்முதல் சேமவைப்புத் தொடங்கிய செல்வி வேக்ஃவீல்டு தம் பணி தூய திரு ஸ்மித்தின் கையில் மற்றொரு படி முன்னேறியுள்ளது என்பதைக் கண்டவுடன் தானும் மீண்டும் அதன் வளர்ச்சி மரபில் கலந்து மற்றும் ஒரு படி முன்னேற்றம் உண்டுபண்ணினார்; 1804 இல் அவர் அற நிலையப் பொருளகம் ஒன்று தொடங்கினார். அவர் முதல்வைப்பகம் ஏழைச் சிறுவரிடையே பணியாற்றியது. தூய திரு ஸ்மித்தின் வைப்பகம் ஊர் வட்டச் சமயக் குடியினரிடையே தொண்டாற்றியது. செல்வி வேக்ஃவீல்டின் இரண்டாம் முயற்சி அவர் குழுவினராகிய பெண்ணினத் தினிடமே வேலை தொடங்கிற்று. 1808-இல் இம் முயற்சிகளின் நற்றூண்டுதல் அரசியல் மன்றம்வரை எட்டிற்று. திரு விட்பிரட் என்பவர் தொழிலாளர் வகுப்பினருக்குத் தனிப்படத் தொண்டாற்றுவதற்கான ஒரு தேசீயப் பொருளக நிலையத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால் சேமவைப்பகத்தை ஓர் ஆற்றல்மிக்க முறையாக்கியவர் தூய திரு ஹென்ரி டங்கன் ஆவர். அவர் ஒரு சமய வட்ட முதல்வர். அவர் வட்டம் பிரிட்டனின் மிக வறுமைப்பட்ட ஏழையர்களடங்கிய டம்ஃவ்ரீஷயர் வட்டம். அதன் குடிகள் பெரும்பாலும் குடிசை வாணர்கள். அவர்கள் சராசரி வாரக் கூலி எட்டு வெள்ளிக்குக் குறைவு. அந்த மாவட்டத்திலேயே ஊதியத்திற்குரிய தொழிலோ, வாணிகத் துறையோ எதுவும் கிடையாது. உழவு ஒன்றே அவர்களுக்கு விட்டவழியா யிருந்தது. உழவுக்குரிய நிலக் கிழவராகிய வேளாண் செல்வர்கூட அங்கே கிடையாது; ஏனென்றால் அங்குள்ள உழவர் உழும் நிலங்களுக்கு உரியவர் யாவரும் அயல் வட்டங்களில் உள்ளவர்களே. அவர்கள் வாழ்க்கைக்கே வகையற்ற வர்கள்; அவர்கள் பிள்ளைகளின் கல்விக்கும், பெண்டிரின் நல் வாழ்வுக்கும் சமூகக்கலைப் பண்புக்கும் சிறிதும் இடமில்லா திருந்தது என்று கூறத் தேவையில்லை. ஆனால் இத்தகைய வற்றற் சூழலிடையேதான் முதல் வைப்பக மலர் தளிர்த்தது. மேலும் அக் குடிமக்களைத் திருத்தும் முயற்சியில் சமயத் தலைவர்களுக்கு இருந்த வாய்ப்பு இன்னும் குறைவு. மக்கள் வறுமையிடை யேயும் சமய வினைகளுக்கும், சமயம் வலியுறுத்தும் சிறிதளவு சமயக் கல்விக்கும் தம் உச்ச அளவு பங்கு ஏற்கெனவே கொடுத்துவந்தனர். இந்நிலையில் ஒரு சமய முதல்வரே ஒரு வைப்பகம் தொடங்கியது மிகவும் வியப்புக்குரிய தாகும். சமயச் சார்பான கருத்துரை, அறிவுரைகளில் பொது மக்கள் கருத்துச் செலுத்தமுடியாமைக்கு அடிப்படைக் காரணம், அவர்கள் வாழ்வின் தொல்லைகளும் வறுமையின் நச்சுச் சூழலுமே என்று கருதிய சமயமுதல்வர் தூய திரு டங்கன், மக்கள் நாள்முறை வாழ்க்கை அனுபவங்களில் கருத்துத் தூண்டினார். நல்வாழ்வு பற்றிய அக்கறை சமய ஆர்வத்துக்கே அடிப்படை என்பதை அதன் பயனாக அவர் கண்டார். ஊர் மக்களுடன் அவர்கள் வாழ்க்கை முறைகள் பற்றி உரையாடினார். ஒரு சிலர் தம் மீப்புப் பொருளால் மாடு, பன்றி, கோழி, தோட்டம் ஆகியவை வாங்கி, அதிலிருந்து காப்புச் செல்வமான சேம வைப்பன்றி, அதன் மூலமாக வருவாயும் பெற்றனர் என்பது கண்டார். சேம வைப்பினால் இத்தகைய இரட்டிப்புப் பலன் ஏற்படக்கூடும் என்று கண்டவுடன், அங்ஙனம் செய்யாதவரையும் செய்விக்கும் முறை ஒன்றை அவர் வகுக்கத் தொடங்கினார். இது தூய திரு ஸ்மித்தின் அறநிலையப் பொருளகத்தைப் போல் ஓர் அருளாளர் கொடையை நம்பி நடைபெறுவதாக அமைய வில்லை. சேமிப்பவர் பொருளைச் சேமித்து அதனை நிலையமோ, அல்லது நிலையச் சார்பில் அதனிடமிருந்து முதலீடு பெற்ற பிறரோ, சேமத் தொழில்களில் ஈடுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தொடக்கத்தில் இதற்காக நிலையமே கூட்டுறவுப் பண்ணை ஒன்று நடத்திற்று. இப் பண்ணையின் வருவாயில் பண்ணைத் தொழிலாளர் ஊதியம் போக, பங்கிட்டவரான சேமவைப் பாளர்க்கு வட்டியும், பிற பங்காளர்க்கு ஆதாயப் பங்கும் கிடைத்தன. நாளடைவில் எல்லாச் சேமவைப்பாளருமே கூட்டுறவுப் பண்ணையில் உறுப்பினராயினர். அதேசமயம் சேமிப்பவர் தொகையும் பெருகிற்று. இதன் பயனாகக் கூட்டுறவுப் பண்ணையுடன் வைப்பகப் பொருளகமும் தனிப்பட வளர்ந்தது. நான்கு ஆண்டுகளுக்குள் வாரம் எட்டு வெள்ளி சேமித்த நாட்டுப்புறச் சேமிப்பாளர்களின் சேமிப்புத் தொகை ஆயிரம் பொன் எல்லையை எட்டிற்று. தொழில் வளமும் ஆதாய வளமுமற்ற டம்ஃவ்ரீஷயர் வட்டத்தில் ஏற்பட்ட இவ் வெற்றி, மிகுதி வருமானமுள்ள பொறித்தொழிலாளர், கலைத் தொழிலாளர், சுரங்கத் தொழிலாளர், ஆலைத் தொழிலாளர் ஆகியவர் பெரு வெற்றிக்கு வழிகாட்டியாய் அமைந்தது. அறநிலையமாகத் தொடங்கப்பட்ட முயற்சி, முதல்தரத் தொழில் நிலையமாகத் தழைத்தோங்கி உலகெங்கும் பரந்தது. 1817இல் இதனை விரிவுபடுத்தித் தேசமுழுதும் பரப்புவதற்கான சட்டம் பிரிட்டிஷ் அரசியல்மன்றில் நிறைவேற்றப்பட்டது. சேமவைப்பகங்களின் பயனிறைவையும் இடர்காப்பையும் பெருக்கி அதைப் பரப்பும் வகையில் நாகரிக நாடுகளெங்கும் எத்தனையோ நல்ல நடைமுறைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பலதரப்பட்ட மக்கள் வகுப்பினரும் அதனைப் பயன்படுத்திப் பெருக்கி வருகின்றனர். அதில் தொழிலாளர்களுள்ளும் மிகப்பலர் பங்குகொண்டே வருகிறார்கள். ஆயினும் தொழிலாளர் வருமானத்தில் அவர்கள் மீத்துவைக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்ட பொருளில் ஒரு சின்னஞ் சிறு கூறே இன்றும் சேமவைப்பகம் சேர்கிறது. சேமவைப்பகம் மற்ற வகுப்பினரைக் காட்டிலும் தொழிலாளருக்கே பெரும் பயன்தருவது. தொழிலாளர் வகுப்பையே அதன் தனிப்பட்ட வகுப்புத்தரத்திலிருந்து அது உயர்த்திவிட வல்லது. ஆயினும் சேமவைப்பகத்தைப் பயன்படுத்துவதில் மற்ற வகுப்பினர்கள்தாம் முந்துகின்றனர். தொழிலாளர்கள் உலகெங்குமே பிந்தித்தான் நிற்கின்றனர் என்று கூறாமலிருக்கமுடியவில்லை. இதற்குப் பொதுவாக அவர்கள் கல்வியின்மையே காரணம் என்னலாம். அத்துடன், கல்வியில் இன்று, சேமவைப்பகம் பற்றிய விளக்கப் பகுதிகள் இடம்பெற வில்லை. சேமிப்புப் பண்பைக் கெடுக்கும் பல தீய பழக்கவழக்கங்கள் நிலவுவதுடன், அவற்றுக்கு மறைமுகமாகப் பிறவகுப்பினர் ஆதரவு நேருகிறது. தொழிலாளரைக் கைதூக்கி விடப் பாடுபடுவதாகக் கூறுபவர்கூட அவர்கள் வருவாயை உயர்த்துவதில் அவர்கள் முழுக் கவனத்தையும் செலுத்தி, அவர்கள் வாழ்க்கை உயர்வுக்கு அதைவிட முக்கியமான துறைகளில் அவர்கள் சிந்தனையை ஓடவிடாமல் செய்கிறார்கள். தொழிலாளிகளில் மிகக் குறைந்த ஊதியம்பெறும் உழைப்பாளிகள் மீத்துவைப்பதில் பின்னடைந்தால் அது ஓரளவு இயல்பு என்னலாம். ஆனால் உண்மையில் மீத்து வைப்பதில் பின் தங்குபவர்கள் ஓரளவு நல்ல ஊதியம் பெறுபவர்களே என்று கூறத்தகும். அவர்கள் தம் இன்றியமையாச் செலவுகளுக்கு மேற்பட்ட ஊதியத்தை மீத்துவைப்பதற்கு மாறாக, இன்பப் பொருள்களிலும் நாடகம், படக்காட்சி முதலிய இன்பக் காட்சிகளிலும் தேநீர், தேறல் முதலிய சிறுவெறி, பெருவெறிக் குடிகளிலும் அதைக் கழிக்கின்றனர். இன்றியமையாச் செலவுகளாகிய உணவு, உடை, உறையுள்களுக்கு மேற்பட்ட செலவு இன்பச் செலவுதானே என்பது அவர்கள் கருத்து என்பதில் ஐயமில்லை. இக் கருத்துத் தவறானதுமல்ல. ஆனால், இன்பத்தில் பயனுடைய இன்பமும், பயனில் இன்பமும், இன்பம்போல் தோன்றித் துன்பஞ் செய்யும் இன்பமும் உண்டு. தவிர, பயனுடைய இன்பத்திலும் தற்காலிகப் பயனுடைய இன்பமும் உண்டு. நிலையான பயனுடைய, அஃதாவது உழைப்புக்கு ஊக்கமும் முதலும் ஆக அமைந்து வாழ்க்கையை வளப்படுத்தும் இன்பச் செல்வமும் உண்டு. இந்த இன்பச் செல்வத்தையே கலைப்பண்பு என்கிறோம். நல்ல ஊதியமுடைய தொழிலாளிகள் தம் இன்றியமையாச் செலவுபோக மீந்த ஊதியம் இக் கலைப் பண்புடைய நிலையான பயனுடைய செலவிலோ, தற்காலிக நலனுடைய செலவிலோகூடச் செல்வ தில்லை. இவை பெரும்பாலும் பயனில்லாத் தற்காலிக இன்பத் திலோ, தற்காலிக இன்பந்தந்து நிலையான துன்பமளிக்கும் போலியாகிய இன்பங்களிலோதான் செலவாகின்றன. இன்பப் பொருள்களில் பல பயனிலாச் செலவின்பாற்படும். சிறுகுடி, பெருங்குடி, புகைபிடித்தல் ஆகிய யாவும் இத்தகு போலி இன்பங்களே. குடியை ஓரளவிலும் சிறுகுடியைப் பேரளவிலும் உணவின் ஒரு பகுதி என்று கொள்பவர் உண்டு. இன்பப் பொருள்களும் நாகரிகச் சமூகத்திற்கு இன்றியமையாதன என்று கொள்பவர் உண்டு. இவை சரி என்று ஒத்துக் கொண்டால்கூட, மீத்துவைக்கும் பொருளால் இவை திட்டம் பெற்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்பது ஒருதலை. நாகரிகத்துக்கு இன்றி யமையா இன்பம் என்பது வாழ்க்கைத்தர உயர்வுடையவர்க்கே பொருந்தும். கும்பி நிறையக் கூழ் உண்பது குறைந்த வாழ்க்கைத் தரத்தின் இன்றியமையா உணவு. அதே அளவு பாலும் பழமும் பிற பண்பமைந்த பண்டங்களும் உயர்தர வாழ்க்கைத்தரத்தின் இன்றியமையா உணவு. சிறுதரக்குடி ஆடல் பாடல் ஆகியவை இன்றியமையாக் கீழ்த்தர இன்பம். இன்னிசை, நாடகம், இலக்கியம், கலைத்தொழில் ஆகியவை இன்றியமையா உயர்தர இன்பம். பின்னது வாழ்க்கைத்தரம் உயர்ந்த பின்னரே இன்றியமையாததாகிறது-பயனும் தருகிறது. வாழ்க்கைத்தர உயர்வின்றி அவற்றில் செலவு செய்வது பயனில் செலவும் போலிச் செலவுமேயாகும். ஏனெனில், அவற்றால் ஏற்படும் கைவெறுமை இடர்காலங்களில் இன்றியமையாச் செலவுகட்கே திண்டாட்டம் தந்து, வாழ்க்கைத்தரத்தைப் பின்னுங் கீழ்ப் படுத்தவே உதவும். தொழிலாளர் வாழ்வைவிடப் படைவீரர் வாழ்வு இன்பத்தேவை மிக்கது என்பதை யாவரும் ஒத்துக்கொள்வர். ஒழுக்கத்துறையில் தொழிலாளரைவிடப் படைவீரர்கள் மிகக் குறைந்தே யிருப்பார்கள் என்று பொதுவாக நம்பப்படுவது முண்டு. ஆனால், மீத்துவைப்பைப் பற்றிய மட்டில் பிரிட்டனின் படைவீரர் மீத்துவைப்பு தொழிலாளர்களின், சிறப்பாக மிகுதி ஊதியம்பெறும் தொழிலாளரின் மீத்துவைப்பைவிட எவ்வளவோ கூடுதலாகத்தான் இருக்கிறது. பொதுவாக, பிரிட்டனில் படை வீரர் ஊதியத்தைவிடத் தொழிலாளர் ஊதியம் குறைந்ததா யில்லை என்பதை நோக்க, இது வியப்புக்குரியது என்றுகூடக் கூறலாம். தொழிலாளன் அடிக்கடி குழந்தை குட்டிகளைப்பற்றிப் பேசுவான். அவர்களின் இன்ப துன்பம் நாள்தோறும் அவனைப் பாதிக்கிறது. படைவீரர்களோ அவர்களை நெடுநாள் காணாத இடத்திலேயே கட்டுண்டு இருக்க வேண்டியதாகிறது. அப்படி யிருந்தும் தன் குடும்பத்தின் எதிர்காலம் பற்றிக் குடும்பநலன்களின் தொடர்புகுன்றிய படைவீரன் கவலையெடுத்துக் கொள்கிறான்; தொழிலாளி கவலையை ஒத்துக்கொள்வதாகக் காணோம். இது ஏன்? படைவீரன் வாழ்வில் அமைந்த திட்டமும், பயிற்சியும், கட்டுப் பாடுமே இம் மன வேறுபாட்டுக்குக் காரணம். படைவீரன் ஓய்வில் குடிக்கக்கூடும். ஆனால், அதற்கு ஒரு நேரம், ஓர் இடம், ஓர் அளவு, ஓர் எல்லை உண்டு. அவன் திட்டவாழ்வில் இன்றியமையாச் செலவுகளை நீக்கிவிட்டுப் பயனில் செலவுகளில் பணம், நேரம் வீணாக்க முடியாது. தொழிலாளிக்கோ தொழில் நேரம் தவறினால், வாழ்வில் வேறு திட்டமில்லை. இன்றியமையாச் செலவுகளைக் கூடச் செய்து தீர வேண்டும் என்று அவனை யாரும் கட்டுப்படுத்த முடிவதில்லை. அவன் தன் வயிற்றை நிரப்புவதன்றி, குடும்பவயிற்றை நிரப்புவதிலோ, தன் வயிற்றையும் இன்று நிரப்புவதன்றி, மறுநாள் நிரப்புவதிலோ கவலைப் படாமலே பழகிவிடுகிறான். கட்டற்ற செலவு செய்யும் வழக்கம் அவனிடம் இப்பழக்கத்தை வளர்க்கிறது. தொழில் தலைவர்கள் அவனைப்பற்றி மட்டும் அக்கறையெடுத்து அவன் குடும்ப வாழ்வைப்பற்றி அக்கறை செலுத்த முடியவில்லை. இந்த அக்கறை அவனுக்கும் இல்லாமற் போய்விடுகிறது. அத்துடன் தன் குடும்பத்தைச் சரிசெய்ய எண்ணாமலே கூலி உயர்வில் மட்டும் கருத்துச் செலுத்தும்படி பிற வகுப்பினர் அவனைத் தூண்டி விடுகின்றனர். போரினால் விளையும் கேட்டைவிடத் தொழில் முதலாளித்துவத்தினால் விளையும் கேடு இவ்வகையில் மிகுதியாகிறது. வீரர் தலைவரின் நாடு பிடிக்கும் ஆவலால் எழும் போர் மக்கள் வாழ்வு மலர்ச்சிக்கு வழி கோலுவதில்லை யானாலும், தனி மனிதன் விடுதலையார்வத்தை வளர்ப்ப தில்லை யானாலும், உடற்பயிற்சியையும் வாழ்க்கைத் திட்டத்தையு மாவது படைவீரர் மூலம் உலகுக்குத் தருகிறது. தொழில் முதலாளித்துவமும் அதன் கையாளான வணிக முதலாளித் துவமும் போர் வெற்றியார்வத்துக்கு ஒருபுறம் தூபமிடுகிறது. தொழிலாளர் வாழ்வில் திட்டமின்மையை வளர்க்கிறது. இவ்வகையில் முதலாளிகள் நேரிடையாகச் செய்யும் கெடுதியை விட, அவர்களை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் தொழி லாளர் தலைவர்கள் செய்யும் கேடுகள் குறைவல்ல. ஏனெனில் அவர்கள் கூலியுயர்வுக்காகப் போராட முழுத் தூண்டுதல் தந்து, வாழ்க்கைத் திட்டத்திலிருந்து அவர்கள் அக்கறையை அகற்றி விடுகின்றனர். எனவே தான் ஊதியம் உயரும்தோறும் தொழிலாளர் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு மாறாகத் தாழ்வுறுகிறது. அவர்கள் பகட்டு வாழ்வும், பகட்டு இன்பமும், வாழ்க்கைத்தரத்தை மறைக்கும் மாயப் போர்வையாய் அமைகிறது. படைத்துறை மக்களுக்கு உடற்பயிற்சியையும், உயர் பிரிவுகளில் நல்ல உளப்பயிற்சியையும் அறிவுத்திறத்தையும் தூண்டுவதாய் அமைந்துள்ளது. போரினால் விளையும் அழிவு களைக்கூட இந் நலங்களே நம் கண்ணிலிருந்து மறைத்து வருகின்றன. ஆனால், இயந்திர முதலாளித் துவம் தரும் மாயப்பயிற்சி மக்கள் உடலுக்கும் பயிற்சியில்லாமல், அவர்கள் அறிவுக்கும் பயிற்சியில்லாமல் விட்டுவிடுகிறது. அவர்கள் நல்லின்பங்களை நாடாமல், புல்லின்பங்களை நாடுவதற்கும்; நல்வாழ்வு நாடாமல், துன்பத்தை மறைக்கும் போலி இன்பங்களை நாடுவதற்கும் காரணம், இயற்கை உடல் உளப்பயிற்சியிலிருந்து அகற்றப்பட்டு அவர்கள் சிறைப்பட்டுக் கிடப்பதேயாகும். இயந்திரத் தொழிலின் பெருமை அதன் கூட்டமைதியும், அதன் சிறப்புத் தொழில் 1பயிற்சியும்தான் என்று கூறுவதுண்டு. இது சரியே. ஒவ்வொருவனும் ஒரு முழு மணிப்பொறியை ஆக்குவதில்லை. ஆனால், ஒவ்வொருவனும் கருவி மூலம் ஓர் உறுப்பைப் பேரளவில் விரைவுடனும் திறமுடனும் செய்து குவிக்கிறான். மொத்தத்தில் தொழில் சிக்கனம் ஏற்படுகிறது. ஆனால், இயந்திரச்சாலையின் இக் கூட்டமைதியை வியந்து பாராட்டுபவர், மனித சமூகத்தின் கூட்டமைதியை மறந்து விடுகின்றனர். மேலும் இயந்திரத்தின் ஒவ்வோர் உறுப்பும் ஒரு இயந்திரமாகாது. மனித சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பும், அதன் கடைசிச் சிற்றுறுப்பாகிய தனிமனிதனும் மனிதனே யாவான். இயந்திரத் தொழிலில் முன்னேறிய சமுதாயத்தில் இவ்வுண்மை மறக்கப்படுகிறது. அது தொழிலாளியை, ஒரு தொழிலாளியாகப் பயிற்றுவிக்கிறது. ஒரு மனிதனாகப் பயிற்றுவிக்க வில்லை. முதலாளியை, முதலாளியாகப் பயிற்றுவிக் கிறது. அவனையும் ஒரு மனிதனாகப் பயிற்றுவிக்கத் தவறி விட்டது. ஓரளவு மனிதத்தன்மை இவ்விரு கோடிகளுக்கும் இடைப்பட்ட நடுத்தர வகுப்பினரிடம் மட்டுமே தங்கி விடுகிறது. சமுதாயத்தின் கையும் காலுமான தொழிலாளிகள் சிறுக்க, வயிறாகிய முதலாளிகள் பெருக்க, மூளையும் நெஞ்சகமுமான நடுத்தர வகுப்பினர் மட்டுமே சிறுக்கவும் பெருக்கவும் செய்யாமல், நன்னிலையில் வாழ முடிகிறது. இன்று சேமிப்பின் பயனைப் பெறுபவர்களும், உணர்பவர்களும் இவர்களே. இன்றைய நடுதத்தர வகுப்பே கல்வி, கலை, கலைத்தொழில், அறிவுத்தொழில் ஆகியவற்றை இயக்கும் நாகரிக வகுப்பாய் இருப்பதன் காரணம் இது ஒன்றே. உழைப்புடன் மீத்துவைப்பும் நல்வாழ்வுத் திட்டமுமுடைய வகுப்பாய் அமைந்திருக்கிறது என்பதே. மற்ற இரு வகுப்புக்களும் இரு வகைகளில் சமூகத்தின் சுமைகளாகி வருகின்றன. பணத்தைச் செலவிடும் வகை தெரியாது அதை ஈட்டும் வகைமட்டும் தெரிந்த முதலாளி வகுப்பே இவ் வகையில் முழுதும் பொறுப்பற்ற வகுப்பு ஆகும். அவர்கள் தம் செலவைத் திட்டப்படுத்தி அறிவு, கலை ஆகியவற்றின் பயனறியவும், தொழிலாளர்களின் மீத்துவைப்புக்கும் நல்வாழ்வுக்கும் திட்டம் வகுக்கவும் தொடங்கினால், மனித சமுதாயமும் ஒரு நல்ல கூட்டமைதியுடைய இயந்திரமாய், நிறைந்த பயன் விளைவு தருவதாக அமையும். போரார்வம் கட்டாய ஆள்திரட்டியக்கமாக இன்று மாறிவருகிறது. ஆனால், கட்டாய ஆள்திரட்டார்வத்தை விடக் கட்டாய மீத்துவைப்பார்வம் எத்தனையோ மடங்கு பயன் தரத்தக்கது. ஆனால், இவ்வகையில் கட்டாயம் கூட மிகுதி தேவைப்படாது. கட்டாயம் மற்றத் துறைகளிலிருப்பதுபோல, இங்கே கசப்பாகவும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால், கட்டாய மில்லாமலே மீத்துவைப்பின் பயன்பற்றிய கல்வியும், அறிவுப்பரப்பும் அதனை எங்கும் நிலவச் செய்யப் போதியன. கட்டாயமுறை பின்பற்றப்பட்டால்கூட, அதன் தொடக்கப் பயன்கள் அக் கட்டாய முறையை விரைவில் ஒரு விருப்பார்வ முறையாக மாற்றி விடும் என்பதில் ஐயமில்லை. கட்டாயச் சேமிப்பியக்கம் வெற்றிதரும் என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது. பிரிட்டனில் அரசியலாரே படைத்துறையில் அதனை 1842இல் தொடங்கி வைத்து வெற்றிகரமாக்கியுள்ளனர். வாரம் ஏழரை வெள்ளியே ஊதியம் பெறும் படைத்துறை வீரர் திட்டப்படுத்தப் பட்ட தம் வாழ்வின் பயனாக, தம் உயர்தர ஆடையணி யுணவுச் செலவுக்குப் போக மீத்து வைத்துத் தம் ஏழை யுறவினருக்குப் பணம் அனுப்பவும் முடிகிறது. வாரம் இரண்டு மூன்று பொன் வருவாய் உடைய தொழிலாளர்கூட வாழ்க்கைத்தரத்தில் எவ்வளவோ குறைந் திருந்தும், மீத்துவைக்கவும் முடிவதில்லை; வாழ்க்கைத்தரத்தைக் குறைப்பதன்றிக் கூட்டவும் முடிவதில்லை. படைத் துறையினர் நல்வாழ்வில் தற்கால நாகரிக அரசியல்கள் காட்டிவரும் அக்கறை ஆக்கத்துறை வீரரான தொழிலாளர் நல்வாழ்வில் காட்டப் படவில்லை என்றால், அது மறுக்கக்கூடிய செய்தியன்று என்றே கூறவேண்டும். படைத்துறையில் கட்டாயமுறை கட்டாயமாக மட்டுமன்றி செயல்விளக்கமூலம் நல்ல அறிவுப்பரப்புத லாகவும் அமைகின்றது. தொழிலாளர் துறையில் கட்டாயமும் இல்லை; அறிவுபரப்புதற் பணியும் இல்லை. இடர் சேமவைப்பு1 பல நாடுகளிலும் பல துறைகளிலும் தொழிலாளர்க்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நற்பயனைப் பற்றி ஐயுறத் தேவையில்லை. ஆயினும் இது தொழிலாளரின் வாழ்வைக் காக்க அமைந்ததேயன்றி நல்வாழ்வை ஆக்கப் பயன்பெறாது. ஒரு தலைமுறை பாடுபட்டுத் தொழில் உலகைவிட்டு வெளியேறும் தொழிலாளி அதைத் தன் உறவினருக்கு விட்டுச் செல்லமுடியும். அல்லது தன் முதுமைக்கு அதனைக் காப்பாகக் கொள்ள முடியும். ஆனால், இவ் வாதம் கொள்கையளவில்தான் சரி. திட்டமற்ற தொழிலாளர் வாழ்விலும், திட்டமற்ற பயனிலா இன்பப் பழக்கத்திலும் ஊறிய தொழிலாளர் வாழ்வில் முதுமையிலும் அப்பழக்கம் குடியும் பிணியும் பெருக்கி மருந்துச் செலவுக்கு வழிசெய்கிறதேயன்றி வேறு பயன் தருவதில்லை. அவனுக்குப் பின் அவன் குடும்பம் அவன் அடைந்த துன்ப அளற்றில் அளைய அதைப் பயன்படுத்துகிறதேயன்றி, கல்வி, கலை, நல்லின்பங்களிலோ, அவற்றிலும் இன்றியமையா நல்லுணவு, நல்வீடு ஆகியவற்றிலோ, துப்புரவான வாழ்க்கைப் பழக்கங்களிலோ அதைச் செலவிடுவ தில்லை. தொழிலாளர் சமூகம் மனித சமூகத்திலிருந்து படிப் படியாக இறங்கி, மனித சமூகத்தின் ஒரு பழிகேடாகவும், அதற்கு நேரெதிரான இன்னொரு பழிகேடாக முதலாளி சமூகமும் போகும் நிலையை, இடர் காப்புவைப்பு மாற்றாது; சேமவைப்பு மட்டுமே மாற்றும். சேமித்த பயன் சேமிப்பைச் செலவிடும் வகையிலேயே அடங்கி யுள்ளது. சேமிப்பின் அருமை தெரிவதும் அப்போது தான். பில்ஸ்டனி லுள்ள ஒரு தண்டலாளர் அனுபவம் இதனை விளக்குகிறது. உறவினனான ஒரு தொழிலாளத் தோழனை அவர் வலுக்கட்டாயமாக வற்புறுத்திச் சேமிக்கும்படி செய்தார். அவனுக்கு அதில் ஆர்வமுமில்லை. பெருந் தொகை சேமிக்கவும் முடியவில்லை. சேமிக்கும் தொகையின் சிறுமைபற்றி அவன் மனக் கசப்பும் அடைந்தான். ஆனால், ஒரு சிறு தொகையேனும் ஒழுங்காகச் சேமித்ததுபற்றி அத் தண்டலாளப் பெரியார் தெரிவித்த மகிழ்ச்சியில், அவன் தேறுதல் பெற்றான். அவர் மகிழ்ச்சி ஒன்றையே குறியாகக் கொண்டு அவன் தொடர்ந்து சேமித்தான். இது பழக்கமாய்ப் போய்விட்ட பின், அச் சேமிப்பை ஒரு பொருட்டாக எண்ணவேயில்லை. அதில் சேரும் தொகை யையும் கணக்கிடவில்லை. ஐந்து ஆண்டுகளின் பின் தண்டலாளர் உறவினனை நோக்கி, ``அப்பனே, உன் தொகை இப்போது எவ்வளவா யிருக்கிறது?'' என்றார். தொழிலாளன் ``அத் தொகை சிறிதாகத் தான் இருக்கும். ஆயினும் அதைக் கொண்டு உங்கள் அன்புக்கு அறிகுறியான ஒரு பரிசாக வாங்கிக் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குத் தர எண்ணுகிறேன்,'' என்றான். ``அப்படி யானால் அது என் தொகை என்று சொல். அதனை நானே செலவு செய்து காட்டுகிறேன்,'' என்று தண்டலாளர் சொன்னார். அத் தொகை தொழிலாளனுக்கு ஒரு நல்ல வீடு, தோட்டம், அதற்கேற்ற தட்டு முட்டுப் பொருள்கள் ஆகியவற்றுக்குப் போதியதாயிருந்தது. தொழிலாளன் ஆர்வமும் ஊக்கமும் பெருகிற்று. அவன் அடுத்த ஆண்டு வருவாய் வளர்ந்தது. வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. அவன் பிள்ளைகள் கல்வி பெற்றனர். அவன் தொழில் துறையிலிருந்து தன்னை உயர்த்தித் தொழில் நுட்பத் துறைக்குப் பயிற்றுவித்துக் கொண்டான். அத்துடன், தண்டலாளர் நல்லெண்ணம் அதேவகைத் தொண்டார்வத்தை அவனிடம் வளர்த்தது. அவன் சமூகத்தின் மதிப்பையும் அன்பையும் பெற்றான். மற்றொரு பெரியார் தம் வாழ்க்கைத் தொடக்கத்தில் சேமிப்பின் பயனைத் தம் மனைவியிடமிருந்தே தாம் கற்றுக் கொண்ட சுவைமிக்க வரலாற்றை எடுத்துக் கூறுகிறார். அவரும் ஒரு தொழிலாளியாய் இருந்திருந்தார். அத்துடன் குடிப்பழக்கமே மிகுந்த தொழிலாளர் குடியில் பிறந்து, குடியை ஓர் இன்றியமையாத் தொழிலாளர் பண்பாக அவர் கொண்டிருந்தார். ஆனால், அவர் மனைவி சிக்கன வாழ்வுடைய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, பலருடன் பிறந்த ஒரு குற்றத்தாலேயே, தொழி லாளிக்கு மனைவியாயிருந்தாள். கணவன் ஒருநாள் அவள் சேமவைப்பகச் சீட்டைப் பார்க்க நேர்ந்தது. அதில் அவள் கணக்கில் இருபது பொன் இருப்பதைக் கண்டு அவன் வியப்படைந் தான். அவளிடம் `இது ஏது' என்று கேட்டபோது, அவள் சிரித்தபடி, ``நீங்கள் அருந்தகத்துக்குப் பணம் கேட்கும் போதெல்லாம், உங்களிடம் தரும் ஒவ்வொரு வெள்ளிக்கும் ஒரு செம்பு என் பிள்ளைகளுக்காக நான் வரிபோட்டுச் சேர்த்து வைத்திருக்கிறேன். திருமண நாள் முதல் நீங்கள் குடிக்கும் இன்பத்தில் எவ்வளவு சேர்த்துவைத் திருக்கிறீர்கள் என்று இப்போது என்னால் சொல்லமுடியும். இந்த இருபது பொன்னில் எத்தனை செம்புத் துட்டோ1 அத்தனை பொன் குடி இன்பம் உங்களுக்கு மிச்சம். அத்தனை செம்புத் துட்டுப் பிள்ளை யின்பமாவது எனக்கு வேண்டாமா?'' என்றாள். அப்போது அவளுக்கு ஒரே ஒரு பெண் குழந்தைதான் இருந்தது. அதன் வயது நான்கு ஆண்டு. தான் மீத்திருந்தால் பிள்ளையின் மாதம் ஒன்றுக்கு 100 பொன் மீத்திருக்கலாம் என்று எண்ண அவன் உள்ளம் கழிவிரக்கத்தால் வெதும்பிற்று. அதன்பயனாக அவன் சேர்த்த பணம் பிள்ளையின் மண வயதுக்குள், அதனை அதன் தாயின் தாயகக் குடும்பநிலைக்கு மீண்டும் உயர்த்தப் போதியதாயிருந்தது. மீத்து வைக்கும் வழக்கம் மனித சமுதாயத்தின் அடிப்படைப் பண்பு ஆய்விட்டால், முதுமை ஒரு பிணியாயிராது. அது இளமையின் உழைப்பைப் பயனுடைய உழைப்பாக்கும் அறிவு, கலை, அமைதி ஆகியவற்றின் பிறப்பிடமாய் மிளிரும்! மீத்துவைக்கும் பழக்கம் மனித சமுதாயத்தின் அடிப்படைப் பண்பு ஆய்விட்டால், முதலாளிகள் மேன்மேலும் ஈட்டிக் குவிக்கும் கொடுங்கோன்மையும் கடுங்கோன்மையும் அல்லது வன்கண்மை யுமுடைய பணப் பூதங்களாயிருக்க மாட்டார்கள். மனித சமுதாயத்தின் திட்டம் வகுத்து, மக்கள் வாழ்வை நீடிக்கவைத்து, நோய் நொடியற்ற உலகைப் படைக்கும் புத்தேளிராக, பகவராக விளங்குவர்! மீத்துவைக்கும் பழக்கம் மனித சமுதாயத்தின் அடிப்படைப் பண்பாய் விட்டால், தொழிலாளர் உலகு அறிவும் செயலும் அழகும் புகாத இருண்ட பேய் உலகாய் இராது. செல்வத்துக்கும் இன்பத்துக்கும் பிறப்பிடமான தலையூற்றாகவும்-தென்றல் தவழும் சோலையாகவும் மாறும்! இறுதியாக, மீத்து வைக்கும் பழக்கம் மனித சமுதாயத்தின் அடிப்படைப் பண்பாய் விட்டால், நடுத்தர வகுப்பினர் உயர்ந்தோரைப் போலி உயர்வுக்கும், தாழ்ந் தோரை மாளா அழிவுக்கும் ஆளாக்கி, இடை நின்று சுரண்டி வாழும் மனித விலங்குகளாயிராமல், புத்துலகச் சிற்பவேலைக்கேற்ற நற்கருவிகளாய் அமைவர்! 4. சிக்கனச் செலவு முறை மன உரத்துக்கும் சான்றாண்மைக்கும் இலத்தீன் மொழியில் ஒரே சொல் வழங்கப்பட்டிருப்பது காரணமில்லாம லில்லை. மன உரத்தினால் ஏற்படும் தன்னடக்கமே சான்றாண்மை. முதுமையின் துயர் இளமையின் விளைவே. -டிமயீஸ்தர். விலங்கைவிட மனிதனுக்கு இருக்கும் உயர்வுகளை அலசிப் பார்த்தால், அது ஒன்றே ஒன்றாக வந்துமுடியும் - அவன் தன் இனத்தின் செயலுடன் ஒன்றுபட்டுச் செயலாற்றுகிறான். தன் முயற்சியால் ஒவ்வொருவராலும் முடியாததைக் கூட்டுமுயற்சியால் அனைவரும் செய்து முடிக்கின்றனர். -ஜே. எஸ். மில். செல்லா உரிமைகள் எத்தனை பரக்கப் பங்கிடப்படு கின்றனவோ, அந்த அளவுக்கே நாகரிகத்துக்கு எதிர்காலப் பாதுகாப்பு ஏற்படும். நாட்டுப்புறத்தில் நிலம் கிட்டத்தட்ட சரிசமமாகவும் நகரப்புறத்தில் முதல் கிட்டத்தட்ட சரிசமமாகவும் பங்கிடப்பட்டால் நலம் விளையும். உரிமையுடையவர் அடாச் செயல் செய்யத் துணியார்; அமைந்து பொறுப்புடன் வாழ்வார். -டபிள்யூ. ஆர். ஃகிரே. துணிந்த காரியத்தை ஒரு தோல்விக்காகக் கைவிடாதே. -ஷேக்ஸ்பியர். இறக்கும்போது விட்டுச் செல்பவற்றுக்காக மட்டும் வாழ்வு நமக்கு அளிக்கப்பட்டிருக்கமுடியாது. -ஜோஸஃவ்மே. சிக்கனமாகச் செலவு செய்வதற்கான முறைகள் மிகச் சில, மிக எளியன. அதன் முதல் அமைதி வரவுக்கு மிகுதியாகச் செலவு செய்யாதே என்பதுதான். வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்பவன் கடன்பட்டு அழிவைத் தேடுபவன். நுனிக் கொம்பிலிருந்து அடிக் கொம்பை வெட்டும் தற்கொலைப் பண்பு அவன் பண்பு. வரவைச் செலவு செய்து விடுபவனும் வருங்காலம் பற்றி எண்ணாத விலங்கினும் கீழ்நிலைப்பட்ட பண்புடை யவனே. ஊதாரியாகச் செலவு செய்பவன் பித்தன் போன்றவன்; பித்தனிடமிருந்து அவன் உடைமைகளை அகற்றிவிடுவதுபோல, இயற்கை நாளடைவில் அவனிடமிருந்து எல்லா மனித உரிமைகளையும் விலக்கி வைத்துவிடும். எப்போதும் காசுகொடுத்துப் பொருள் வாங்கு; கடனாகப் பெற்றுக் கடன்படுவதற்கு வழி வகுக்காதே என்பதுதான் அடுத்த சிக்கனக்கட்டளை. கடன் வாய்மையைக் கெடுத்துப் பொய்மையை வரவழைக்கும். தற்சார்பையும் விடுதலை நிலையையும் அழிக்கும்; தன்மதிப்புப் போக்கும். மூன்றாவதாக, வரவிருக்கும் ஆதாயத்தை நம்பிச் செலவு செய்யாதே. எதிர்பார்த்த ஆதாயம் வராதுபோனால், செலவு ஈடுபடுத்த முடியாததாகவும் படுகடனுக்கு வழி வகுப்பதாகவும் அமையும். கடைசியாக, செலவு செய்வதற்கெல்லாம் கணக்கும் செலவு செய்யவேண்டுவதற்கெல்லாம் மதிப்புத் திட்டமும் வேண்டும். இவை செலவை ஒழுங்குடையதாகவும் பயனுடையதாகவும் ஆக்கும். ஒருவரது வரவை ஒருவரிடமும், செலவை மற்றொரு வரிடமும், கணக்கை இன்னொருவரிடமும் என்று விட்டு வைப்பது நல்லதன்று. வசதிக்காகப் பெரிய நிலையங்களில் விட்டுவைக்கும்போது அவற்றில் அவற்றிற்குரிய முதல்வர் அடிக்கடி கண்ணோட்டமாயிருக்க வேண்டும். வருவாயின் எத்தனை விழுக்காடு சிக்கனச் செலவிற்குரியது என்று வரையறுப்பது கடுமை. பேக்கன் வருவாயில் பாதியைச் செலவு செய்து பாதியளவு மீத்து வைப்பதே நல்ல சிக்கனம் என்று கூறியுள்ளார். இது சற்று மிகைப்பட்ட வரையறை என்பதில் தடையில்லை. மேலும் அவரே பிறருக்குத் தாம் அளித்த இந்த அறிவுரைப்படி நடக்கவில்லை. மேலும் செலவுக ளெல்லாம் முழுக்கச் செலவினங்களல்ல. வரவினத்துக்குரிய செலவுகளே உண்டு. சில செலவினங்கள் சூழ்நிலைக்குத் தக்கபடி அமைவன. எடுத்துக்காட்டாக, வீட்டுக் குடிக்கூலிச் செலவை எடுத்துக் கொள்வோம். நாட்டுப்புறத்திலிருப்பவர் தம் வருவாயில் பத்திலொரு பங்குக்குமேல் இவ்வகையில் செலவிடத் தேவையில்லை. ஆனால், இலண்டன் நகரில் இருப்பவர் ஆறில் ஒரு பங்குவரைத் தராமலிருக்க முடியாது. நாட்டுப் புறத்தில் வீட்டுக் குடிக்கூலி மிகுதியாகக் கொடுத்தால் அது பகட்டு வீண் செலவாக மட்டுமே உதவும். நகரத்திலோ வீட்டுக் குடிக்கூலியே ஒருவன் தன்மதிப்புக்கும் வாழ்க்கைத் தரத்துக்கும் உரிய சின்னம். எனவேதான் செலவு வரையறையும் விழுக்காட்டு வரையறையும் செலவு செய்பவன் நிலையை மட்டுமன்றி, செலவின் சூழலையும், அதன் பயனாக ஏற்படும் விளைவுகளையும் பொறுத்ததாகவே இருக்கும். திட்டமிட்ட சிக்கனச் செலவு ஏழைக்கு உயிர்த் தேவை. அவன் வாழ்விலிருந்து இரத்தல் நிலைக்கும் இரத்தல் நிலையிலிருந்து அழிவுக்கும் செல்லாது பிழைப்பதற்கு அது இன்றியமையாத் தடைக்கல்லாகும். மட்டான செல்வருக்கும் அது ஏழ்மை நோக்கிச் சறுக்காமலிருப்பதற்கும் செல்வநிலை நோக்கி முன்னேறுவதற்கும் இன்றியமையாததாகவே இருக்கிறது. ஆனால் மட்டான செல்வநிலையிலும், அதற்கு மேலும், சிக்கனத்தால் வேறு ஒரு பயனும் ஏற்படுகிறது. இதுவரை தன்னை அழிவினின்று காக்க உதவும் சிக்கனம், இப் படியில் பிறரைக் காக்கத்தக்க, பிறரால் அக் காரணத்தால் மதித்து வரவேற்கத்தக்க பண்பாய் அமைகிறது. திட்டச் செலவில் மீந்த பொருள்கொண்டு அவன் பிறருக்கு நேரிடை யாகவோ, சுற்றுமுகமாகவோ உதவும் வண்மை உடையவனாகிறான். ஊதாரி தனக்கு மிகையாகக் கிடைக்கும் பணத்தைத் தானே தனக்காகச் செலவிடுகிறான். செலவிட்டபின் அது அவனுக்கு உரியதன்று. அதனால் அவன் வாழ்வுக்கு ஏற்படும் நிலையான பயன் எதுவும் இல்லை. திட்டமிட்டுச் செலவு செய்கிறவன் மீத்துவைக்கும் சேமப்பொருள் அவனுக்கு எதிர்காலப் பாதுகாப்பளிக்கிறது. செலவழிக்காத பொருள் செலவு செய்யப்படும் வரை ஆற்றலுடையதாகவே இருக்கிறது. அதனைப் பின்னும் திட்டமிட்டே அவன் செலவு செய்வான். முதல் திட்டம் தன் வகைக்குப் பயன்பட்டது. அடுத்த திட்டமும் அதற்கே பயன்படுவதானால், மீப்பு பயனற்றதாகி விடும். மீப்பின் ஒரு பகுதியைத் தன் வாழ்க்கைத் தரம் உயர்த்த அவன் பயன்படுத்தலாம். இங்கும் வாழ்க்கைத் தரம் உயர்த்துவது என்பது என்ன? பிறருக்குப் பயன்படும் வாழ்வே உயர்தர வாழ்வு எனப்படுகிறது என்பதை உய்த்தாராய்ந்தால் காணலாம். நல்வாழ்வு வாழ்பவன் சுற்றுமுகமாகவேனும் சமூகத்திற்கு மிகுதி தொழிலும், மிகுதி ஊதியமும் தருபவன் ஆகிறான். ஆனால், நேரடியாகவும் அவன் சமூகத்திற் கெனச் செலவுத்திட்டம் வகுக்கலாம். இது தொடக்கத்தில் அவன் குடும்பத்திலிருந்து படிப்படியாகப் பிரியக்கூடும். சுற்றத்தார், ஊரார் நிலையை உயர்த்தும் சிறு செயல்களில் அவன் கருத்துச் செலுத்தக் கூடும். செயல்கள் சிறிதாயினும் அவற்றின் பயன் பெரிது என்பதை அவன் விரைவில் காண்பான். ஏனெனில் அது பொதுநல அடிப்படையானது. அவன் சிறு செயல்களில் அவனுக்கு ஏற்படுவது சமூகப் போட்டி யன்று; சமூக ஒத்துழைப்பு. அதனால் சமூகம் சிறிது முன்னேற்ற மடைந்தால்கூட, ஒத்துழைப்பு பெருகும். அவன் செல்வாக்குச்சூழல் பெருகும். பலவிடங்களில் செய்பவன் தன்னல வாழ்வுகூட இதனால் உயராமலிராது. விளக்கு எத்தனை பிற விளக்குகளை ஏற்றினாலும் தான் குன்றாது ஒளிர்வதுபோல, தான் அணைந்தாலும் ஏற்றிய விளக்கிலிருந்து மீண்டும் ஒளி பெறுதல் போல, பிறர் நலம் விழைந்து செலவு செய்பவன் செலவு பிறரை உயர்த்தி அதனுடன் அமையாது மீண்டும் திரும்பி வந்து உயர்த்தியவனையே உயர்த்திவிடும். பொதுநல முறையே உண்மையில் சிறந்த தன்னலமுறையும் ஆகும் என்பதை இதனால் அறியலாம். தன்னல அறிவற்ற தற்பற்று, சிற்றறிவும் சிறுதிறமும் உடையவர்களின் மாயமருட்சியன்றி வேறல்ல. தொடக்கத் தற்பற்று உண்மையில் பொதுநலத் தொண்டுக்குரிய ஒரு பயிற்சிப்பள்ளி; பொதுநலப்பற்றே உயர் தன்னலத் துக்குக் கடைக்கால் என்று காணலாம். ஏனெனில் சமூக அடிப்படையி லன்றி மனிதன் தனிவாழ்வுக் கோட்டையைத் திறம்பட எழுப்பமுடியாது. சமூகப் பொதுநலம் தற்பற்றின் கூட்டுணர்ச்சி மட்டுமேயாதலால் அது தற்பற்றுக்கு மாறானதுமன்று. அன்பாற் பிணைக்கப் பட்ட தற்பற்றே பொதுநலம். பொதுநலப் பற்றால் இணைக்கப்பட்ட தற்பற்றே சமூக வாழ்வுக்கு உரிய சீரிய பண்புடைய தற்பற்று. ஆங்கிலேயரிடம் சுறுசுறுப்பு, விடாமுயற்சி, கடுமையான உழைப்பாற்றல், தற்சார்பு ஆகிய குணங்கள் பெரும்பாலும் இயல்பாகவே அமைந்துள்ளன. அவர்கள் தற்பற்றுடையவர்கள். ஆனால், அவர்கள் தற்பற்றுத் தன்னுடன் நிற்பதில்லை; குடும்பமளாவிக் குடும்பப் பற்றாகவும் இருக்கிறது. இதனால் அவர்கள் தற்பற்று இன்னும் உயர்வடைந்துள்ளது என்பதில் ஐயமில்லை. குடும்ப மதிப்புணர்ச்சியே அவர்களைத் தற்சார்புடையவர்களாக்குகிறது. பிறரைச் சார்ந்து வாழவோ, பிறருக்கு அடிமைப்பட்டு வாழவோ, பிறர் தயவை, இரக்கத்தை எதிர்பார்த்து அல்லது பயன்படுத்தி வாழவோ ஒருப்படும் எந்த மனிதனையும் ஆங்கில இனத்தில் எளிதில் காணமுடியாது. ஆயினும், இச்சீரிய நற்பண்புகளுக்கு ஓர் எல்லை உண்டு. குடும்பப் பற்றுக்கு அப்பாற்பட்ட சமூகப் பண்பு அவர்களிடையே அரிதாயிருக்கிறது. அவன் பிறரைச் சார்வதில்லை, பிறரை அடிமைப்படுத்து வதில்லை; பிறர் தயவை எதிர்பார்ப்பதில்லை. தன் குடும்பப் பொறுப்பைப் புறக்கணித்து, குடும்பத்தினரைப் பிறர் பேணும்படி விட்டு விடுவதில்லை. அதேசமயம் அவன் தன்னையும் தன் குடும்பத்தையும் கடந்து சிந்திப்பது கிடையாது. தன் பண்புடையவர்களைத் தவிர வேறு எவரையும் மதிப்பதுமில்லை. இதனால் தற்சார்பு அற்றவரைத் தாங்கி உயர்த்த அவன் முனைவதில்லை. அடிமைப்படுபவரை அடிமைப்படுத்தவும் அவன் தயங்குவதில்லை. அடிமைப்படுபவர் அடிமைப்படுவது மட்டுந்தான் குற்றம்; அவர்களைத் தான் அடிமைப் படுத்துவது குற்றமில்லை என்று அவன் வாதிப்பான்; அல்லது உள்ளாரக் கருதுவான். தற்சார்பற்றவரைப் புறக்கணிப்பதே இயல்பு என்று அவன் கருதுவான். ஆங்கிலேயரளவு தற்பண்புகூட, அஃதாவது தற்பற்றுக் கடந்த குடும்பப்பற்றுக்கூட இன்னும் உலகில் மிக அரிய பண்பாகவே இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆகவே, குடும்பங் கடந்து சமூகத்தையே எட்டாத ஆங்கிலேயர் பண்பு, நாடு கடந்து உலகு செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆங்கிலேயர் அனைவரும் கிட்டத்தட்டக் கட்டுப்பாடாகக் குடும்பப் பண்பு அடிப்படையான நாகரிகம் உடையவராதலால், ஆங்கில நாட்டுக்குள் ஆங்கிலேயரின் இக்குறுகிய பண்பு வெளிப்படத் தோற்றுவ தில்லை. குடும்ப எல்லைக்குள் அடைபட்டுக் குடும்ப உலகில் வாழும் ஆங்கிலேயர்கள் குடும்பக் கண்கொண்டு குடும்பங்களைப் பார்த்துக் குடும்ப உலகில் அமைந்து வாழ்கின்றனர். ஆனால், வெளிநாடுகளில் சென்றதும் வெளிநாட்டினருடன் பழகத் தொடங்கியதும் அவர்கள் குறுகிய தன்னலச்சூழல் எவர் கண்ணையும் உறுத்தாமலிருப்பதில்லை. அவர்கள் ஒருவனுடன் பேசுமுன், அவனைத் தம்முடனொத்த மனிதனாகக் கருதி, அவன் திசையில் நோக்குமுன் அவன் தம் அகர வரிசைப்படி பண்புடையவனா என்று காணவேண்டும். அஃதாவது தம்குடும்ப எல்லை, தற்சார்பு எல்லையில் நிற்பவனானால், அவனுடன் அவர்கள் பழகமுடியும். அல்லாவிட்டால் பழகமாட்டார்கள். ஆங்கிலேயர் பண்பு கட்டுப்பாடுடையது. ஆகவே தான் அவர்கள் பண்பு பிறர் பண்புகளினும் உயர்வுடையதாயினும், ஒரு குறிப்பிட்ட எல்லையில் நின்று அதைத் தாண்டமுடியாது பின்தங்கிவிடுகிறது. ஃவிரான்சு நாட்டில் குடும்பப்பண்பை எட்டாத மக்களிடையே நல்லோரிடையே ஓரளவு சமூகப் பண்பைக் காணலாம். அறவோர் அருளாளரிடையே ஓரளவு உலகளாவிய நோக்கைக் காணலாம். ஆனால், ஆங்கிலேயனுக்கு நாடு என்பது குடும்பக் கோட்டைகளின் ஒரு கூட்டுறவு. அவ்வளவுதான். தனிமனிதர் குடும்பக் கோட்டைகளின் உரிமைக் காவலர்; அவ்வளவே. அவர்கள் உலக வாணிகம் செய்வர்; குடும்ப நலவாழ்வு மட்டும் நாடித்தான்! சமயப்பரப்புதல் செய்வர், அறநிலை பேசுவர், அருள்திறம் தீட்டிக் காட்டுவர். பிறநாட்டுச் சமயவாணர், அறவோர், அருளாளர் கண்களில் அவை தன்னல அடிப்படை, தனிக் குடும்பவாழ்வின் அடிப்படையின்மீது தீற்றிப் பூச்சுப்பூசப்பெற்ற சமயம், அறம், அருள் ஆகவே காட்சி அளிப்பதில் வியப்பில்லை. தாயகம், தாய்நாடு, நாட்டாட்சி என்பதற்கு ஆங்கில மொழியில் அமைந்த சொல் `குடும்பம்' என்பதே.1 இது வெறும் மொழி மரபன்று, பண்பு மரபே. உரோமப் பேரரசின் எல்லை அதன் வாள் என்றால், ஆங்கிலப் பேரரசின் எல்லை அவர்கள் குடும்ப வாழ்வு என்னலாம். உலகின் புரட்சியறிஞர்களுக்குப் புரட்சியார்வம் தந்து, புரட்சி நோக்கி அவர்களைத் தூண்டிய மூல அறிஞர் ஆங்கிலேயரே. ஆனால், ஆங்கில அறிஞர் அறிவு ஏட்டுடன் நின்றது. ஏடு கடந்த அளவில் அது தனி மனிதர் குடும்ப வாழ்வை வளப்படுத்தும் அளவுக்குச் சென்று தங்கிற்று. எல்லாக் குடும்பங்களும் கூடிய நாடாக அது மிளிரவோ அது கடந்து உலகமாக ஒளிவீசவோ இல்லை. ஆங்கிலத் தலையூற்று ஃவிரெஞ்சு நாட்டில் கானாறாயிற்று. பிறநாடுகளில் அது பெருவெள்ளமாய்ப் பரந்தது. ஆனால், இங்கிலாந்து `பல உயிரும் பல உலகும் படைத்தளித்துக் காக்கினும் ஓர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்,'' இருந்து வருகிறது. ஆங்கில மக்கள் குற்றங்கள் பெரும்பாலானவற்றையும் மக்கள் குற்றங்கள் பலவற்றையும் இவ்வடிப்படைக் கோளாறுகளிலிருந்தே உணரமுடியும். அவர்கள் குடும்ப நலனுயர்த்தும் அளவே சமூக நலனும் நாட்டு நலனும் உலக நலனும் பேணுவர். எதிர்காலக் குடும்ப நலன், சமூகம், நாடு, உலகம் ஆகியவற்றைப் பொறுத்ததென்பதை அவர்கள் காண மாட்டார்கள். பெரும்பாலானவர்கள் நிகழ்காலத்துக்கான ஒருக்கங்கள் செய்து அமைவதும் எதிர்காலம்பற்றி அக்கறை யில்லாமற்போவதும் இதனாலேயே. செல்வம் ஈட்டும்வரை அவர்கள் மட்டான வாழ்வு மேற்கொள்வர். அதன்பின் அதே வாழ்வைப் பேணும் பயிற்சி அவர்கட்குத் தரப்படுவதில்லை. அவர்கள் சேமிப்பும் அவர்கள் தொலைநோக்குடைய வராகவும் மட்டான செலவுடையவராகவும் இருக்கும்வரைதான். அதன்பின் அவர்கள் ஊதாரிகளாக, தான் தோன்றிகளாக மாறுகின்றனர். உழைப்பாளி, ஆனால் சிக்கனமற்றவன்; பணமீட்டும் ஆர்வ முடையவன், ஆனால் ஊதாரி; பெருஞ் செலவுசெய்பவன், ஆனால் உதவும் மனப்பான்மை யற்றவன் என்ற முரண்பட்ட நிலைகள் நாட்டில் வளர்வது இதனாலேயே. உயர் வகுப்பினர் தம் வருவாய்க்குத் தக்க உயர்வாழ்வு வாழத் தயங்கமாட்டார்கள். ஆனால், அது சமுதாயத்தை உயர்த்தவேண்டும் என்ற அக்கறை அவர்களுக்கு ஏற்படுவதில்லை. உயர்வகுப்பினராக விரும்புபவர் இதைப் பார்த்துத் தத்தம் வருவாய்க்கு மேல் செலவுசெய்து அவர்கள் நிலையை எளிதில் அடைய வழிதேடுகின்றனர். உயர் வகுப்பினர் பகட்டுவாழ்வு இங்ஙனம் அவர்களுக்கும் மிகுதி பலனில்லாமல், பிறருக்கும் அழிவுக்கு வழிகாட்டும் ஒரு தீய கவர்ச்சியாய் அமைகிறது. நாளடைவில் அவர்கள் வாழ்க்கை நோக்கம் பிறர் நல்வாழ்வாகவோ, தம் நல்வாழ்வாக வோ அமைவதில்லை. பிறரிடமிருந்து தம்மைப் பிரித்து, அப் பிரிவினை எல்லைக்கோட்டை நன்கு பாதுகாப்பதே அவர்கள் நோக்கமாக அமைந்துவிடுகிறது. இங்கிலாந்தில் நற்பண்பாளர், அறவோர், அருளாளர் நோக்குகளைக்கூடக் குடும்ப வாழ்வு அடிப்படையி லிருந்து அப்பாற் செல்லமுடியாதபடி தடுக்கும் எல்லைக் கோடு இதுவே. 1ஃவிரஞ்சுக்காரன் மற்றொரு ஃவிரஞ்சுக்காரனுடன் முன்பின் பழக்கமில்லாமல் பேசி உறவாடுவான். மற்றொரு ஜெர்மானியனுடனும் சீனனுடனும் அதேபோலத் தொடர்பு கொள்ளத் தயங்கமாட்டான். ஆங்கிலேயனோ மற்றோர் ஆங்கிலேயனுடன்கூட முன்பின் தொடர்பின்றி உறவாட மாட்டான். குடும்பப் பணியில் ஒத்த நலனுடையவன் என்று தெரிந்த பின் மட்டும் எந் நாட்டினனானாலும் தொடர்பு கொள்வான். ஆங்கிலேயன் கருத்தில் உலகம் நாடுகளாக, சமூகங்களாகப் பிரிக்கப்படவில்லை. உயர்குடி அஃதாவது தன்னை ஆண்டு பிறரை ஆளத் தகுதியுடையோர் குடி, தாழ்ந்த அஃதாவது அத் தகுதி அற்ற குடி என இரண்டு கூறுகளாகவே அவன் கண்களுக்கு உலகம் பிரிவுபடுகிறது. பணத்தின் பயன் யாது? உயர்குடி மரபினர் இது வகையில் கொண்ட கருத்தே படிப்படியாக மக்களால் இன்றும் பெரும்பாலாகக் கைக்கொள்ளப்பட்டு வருகிறது. வண்ணமிட்டுப் பூ வேலை செய்த கண்ணாடிப் பலகணிகள், வாய்ப்பான மாடகூடங்கள் ஆகியவை நிரம்பப்பெற்ற நல்ல மாடி வீடு; உயர்தர ஊர்திகள், குதிரைகள்; வகைவகையான உண்டி குடிவகைகள் நிரம்பிய விருந்து மேடை; விலையுயர்ந்த பட்டாடை உடுத்த அணங்குகள்; உயர் பொழுதுபோக்குக்குரிய இன்னிசை மேளங்கள்-இவையே பணத்தின் பயன் என்று உயர்குடி மரபு தன் சொல்லாலும் செயலாலும் தெளிவாகக் குறித்துக் காட்டுகிறது. இம் மரபு அவாவிய நடுத்தர வகுப்பினரும் வாழ வகையற்று இவ் வுயர்குடி வாழ்வையே வானுலக வாழ்வாகக் கருதிக் கனவுப்பால் குடித்து அலமரும் ஏழை மக்களும் அவ்வழி நின்று அதற்கு மறைமுக ஆதரவும் அடிப்படை வலுவும் தருகின்றனர். உயர்குடியாளரின் இப் போலிப்பண்பு போலி உயர் குடியாளராகப் பார்க்கும் நடுத்தரக் குடியில் இறங்குகிறது. அவர்களும் தொப்பியும் வல்லாவட்டும் கச்சையும் கட்டி உயர்குடியினரின் படை குடித் தலைவர்களாக அரையடிமை நிலைமையைப் பெருமிதத்துடன் ஏற்று மகிழ்கின்றனர். வாழ்க்கை நோக்கமற்ற உயர்குடியினராவதே அவர்கள் வாழ்க்கை நோக்கமாய் விடுகிறது. இவ் வாழ்வு விலங்கு வாழ்வைவிட மேம்பட்டதன்று என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. நடுத்தரக் குடியினர் கலைகள் இந் நோக்கத்துக்குச் சான்று-அவர்கள் புதல்வியர்மீது இந் நோக்கம் தாண்டவ மாடுகிறது. அவர்கள் பண்புடையாளர்களாகப் பயிற்சி பெறுகின்றனர்-பயிற்சிக்குரியதாக அவர்கள் கருதுவது உண்மையன்று, அறிவன்று-ஆடை யணிமணி, அதை அணிந்து நடக்கும் நடைநயம், அதற்கேற்ற பேச்சுநயம், பேச்சுக்கு இன்றியமையாப் பொது அறிவு-இவற்றுள் அப்பயிற்சி அடங்கி விடுகிறது. அவர்கள் பாட வேண்டும்; பிறரை மகிழ்விக்க அல்ல, பாடல் திறமையால் மதிப்புப் பெற! அவர்கள் இன்ப ஊர்திகளில் செல்ல வேண்டும்; செல்வது எங்கே, எதற்கு, ஏன் என்ற கேள்விகள் எழமாட்டா; பிறர் பார்த்து மதிக்க மட்டுமே அவ்வாறு செய்கின்றனர். நாடகம் பார்க்கவேண்டும். இசையரங்குகளுக்குச் செல்ல வேண்டும். அறிவுக்காகவோ இன்பத்துக்காகவோ அல்ல; பண்புடைய வர்களுடன் பழக, பண்புடையவர்களாகக் கருதப்பட! பண்புடையவர்கள் என்பது பணமுடையவர்கள் என்பதை நினைக்கும் போது, இது எத்தகைய போலி வாழ்வு என்பது தெள்ளத் தெளியப் புலப்படும். நடுத்தர வகுப்பினரின் இப் போலிப்பண்பு தாழ்ந்த வகுப்புக்களைச் சென்றெட்டுவதில்லை. எட்டுவதும் அவர்கள் நோக்கமல்ல. அப் பண்பின் மதிப்பு அது அவர்களைச் சென்றெட் டாததிலேயே அமைந்திருக்கிறது. நடுத்தர வகுப்பினரும் உயர்தர வகுப்பினரும் சேர்ந்தால்கூட மனித வகுப்பில் நூற்றுக்கு ஒரு சிலர் விழுக்காடே ஆவர். பெரும் பாலான மக்கள் இப் பண்பையும் இச் செல்வத்தையும் அடையாதிருப்பதனாலேயே இச் செல்வமும் பண்பும் மதிப்புப் பெறும் ஏனெனில் அவை போலிப் பண்பும் போலிச் செல்வமும் மட்டுமே. நடுத்தர வகுப்பினரின் இக் கலைத் தொண்டினால், பெரும்பாலான பொது மக்கள் என்றும் செல்வத்திலிருந்தும் பண்பிலிருந்தும் பிரித்து வைக்கப்படுகின்றனர். பொதுநல அடிப்படையி லமையாத மனித நாகரிகத்தின் குறைபாடுகள் இவைகள். உண்மையான பண்பு தன்னை உயர்த்தி, அதன் மூலம் பிறரை உயர்த்தும் தகுதி பெறுவதே யாகும். உண்மையான செல்வம் அவ் விரண்டுக்கும் பயன்படும் செல்வமேயாகும். தன்னை உயர்த்துவது உழைப்பன்றி வேறு எதுவுமில்லை. பிறரை உயர்த்துவது பண்பன்றி வேறு எதுவுமில்லை. உழைப்பு உண்மையான செல்வம். அதனைப் பொது நலத்துக்கு உரியதாக்குவது பண்பு. பண்பு உழைப்புக்குப் பின் வருவதன்று; உழைப்புடன் அதுவும் வளர வேண்டும். உழைக்கும்போதே உழைப்பாளி தன்நலத்துடன் பொதுநலத்தையும் பேணப் பயிலவேண்டும். உழைப்பைச் சற்றுக் குறைத்து மிகுதி பயன்பெறும் வழிகள் இல்லாமலில்லை. ஆனால், அத்தகைய வழிகளில் நல்லோர் மேற்கொள்ளத்தக்க வழிகளும் உண்டு; அறிவுடை நல்லோர் மேற்கொள்ளத் தயங்கும் வழிகளும் உண்டு; தீயோரன்றி எவரும் மேற்கொள்ளாத வழிகளும் உண்டு. திருடுதல், கொள்ளையடித்தல், வஞ்சித்தல், தகாவழி ஈட்டல், மானம் விற்றல் ஆகியவை இறுதியில் கூறப்பட்ட வழியின் பல படிகள். இவற்றுள் திருடுதலையும் கொள்ளை யடித்தலையும் சமூகமும் சட்டமும் கண்டிக்கின்றன. மற்றவற்றைக் கண்டிக்கமட்டுமே செய்கிறது. கண்டனம் நாக்கடிப்பேயன்றி வேறன்று. வஞ்சித்துத் தோல்வியடைபவனைச் சட்டம் தண்டிக்கும்; சட்டம் விட்டாலும் சட்டத்தினும் கடுமையாகச் சமூகம் தண்டித்து அழிக்கும். ஆனால் வஞ்சித்து வெல்பவனைச் சட்டமும் விட்டுவிடும்; சமூகம் அவனையே ஒழுக்கத்துக்கு உயர் சான்றாக ஏற்றுக் கொள்ளும். இக் கடைசிப் படியிலிருந்து ஒரு சிறிது உருமாறிய வழிகளிலேயே உலகின் பெரும்பாலான செல்வரும், செல்வ ஆட்சியாளரும் செல்கின்றனர். பிறரை அடிமைப்படுத்தி, சுரண்டி ஆளச் சமூகப் பழக்கங்களும் சட்டங்களும் அமைக்கப்பட்டு அவை சமய ஒழுக்கமாக, அரசியல் அமைதியாக இடம்பெற்று விடுகின்றன. உண்மைப் பண் புடையார், அஃதாவது அறிவுடை நல்லார் இவற்றுடன் ஓயாது போராடி வருகின்றனர்; போராடி வரவேண்டும். உழையாது செல்வம் ஈட்டுபவன் பொதுநல மறந்த தற்பற்றாளன். உழைத்து ஈட்டிப் பிறருக்கு உதவாதவன், பொதுநலம் பேணாதவன், உழையாது ஈட்டுபவர்கட்கு மறைமுக உதவி செய்பவனே ஆவான். ஆகவேதான் தற்பற்று எப்படி உலக வாழ்வின் அடிப்படையோ, அப்படியே பொதுநலமும் உலக வாழ்வின் அடிப்படையாகவே கொள்ளத் தக்கது. பணத்தின் பயன் தன் வாழ்வின் உயர்வுமட்டுமன்று, படிப்படியாக விரிந்து உயரும் சூழலுடன் கூடிய தன் வாழ்வின் உயர்வே யாகும். பிறருக்குத் தீங்கின்றித் தன் முன்னேற்றத்தில் முனையும் ஒவ்வொருவனும் தானறிந்தோ, அறியாமலோ நற்பண்பின் முதல்படியில் கால் வைத்தவன் ஆகிறான். அம் முதற்படியே வாழ்க்கைப் போராட்டத்தில் ஒரு செம்பகுதி என்னலாம். அவன் முன்னேற்றத்தால் ஓரளவு பொது முன்னேற்றம் தானாக எற்படுகிறது; அத்துடன் பொது முன்னேற்றத்துக்கு உதவ அவன் தகுதி பெறுகிறான். அவன் செயல் பொது முன்னேற்றத்துக்கு ஒரு முன்மாதிரியாக நின்று அதைத் தூண்டி ஊக்குகிறது. சீர்திருத்தத் துறையில் இம் முன்மாதிரிப் பண்பு தன்னிடமிருந்தே தொடங்குதல் சான்ற சிறப்புத் தருகிறது. தன்னைத் திருத்திக்கொள்ளாதவன் பிறரை எளிதில் திருத்த முனைய முடியாது. தன் முன்னேற்றத்திற் காகத் தன் பழைய பழக்கங்களை விட்டவன், சொல்லாமலே பிறரையும் அவ்வழி தூண்டி யவன் ஆவான். மனிதனுக்கு மனிதன் ஈட்டும் திறமையில் ஏற்படும் வேறுபாடு அவன் அறிவு, நடத்தை, ஊக்கம் ஆகியவற்றின் அளவைப் பொறுத்தது. ஆனால், செலவழிக்கும் திறனிலும் அவன் நல்லொழுக்கம், நல்லறிவு, முன்கருதல் ஆகியவற்றின் அளவைப் பொறுத்ததாயிருக்கும். ஈட்டுவதில் தற்சார்பற்றவன் அழிவான். செலவு செய்வதில் வீண் செலவு செய்பவனும் அப்படியே. செலவே செய்யாத கஞ்சன் வீண்செலவு செய்பவர்களுள் ஒருவனாகப் பொதுவாகக் கருதப்படுவதில்லை. ஆயினும் உண்மையில் வீண்செலவு செய்பவர்களுள் முதலிடம் பெறுபவன் அவனே. பொதுநலம், தன்னலம் ஆகிய இரண்டு துறைகளிலும் அவன் பணம் செலவாகிற தில்லை. அவன் பெரும்பாலும் சிறுகச்சிறுக உழைத்துப் பணம் ஈட்டியவனாகவே இருப்பான். தனக்காவது அவன் செலவுசெய்திருந்தால், குறைந்தது உழைப்புடைய ஒருவன் வாழ்வையாவது அவன் வளப்படுத்தி யிருக்கலாம். அதுவும் செய்யாததன் பயனாக, அவன் செல்வம் அவனுக்குப் பின் உழையாத மற்ற யாரோ ஒருவருக்குத்தான் செலவாகக்கூடும். அல்லது அது மண்ணுள் புதைந்து ஈட்டாத பணமாகவே இருந்து விடும். உழைப்பின் வெற்றி, செலவின் வெற்றி ஆகிய இரண்டிலுமே குருட்டுயோகம் என்று ஒன்று இருப்பதாகப் பலர் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு. ஒரு சில சமயம் தற்செயலான வாய்ப்புக்கள் ஏற்படக் கூடும். இது `குருவியும் இருந்தது, பனம்பழமும் விழுந்தது' என்பது போன்ற போலி வாய்ப்புகள்; அருகலான வாய்ப்புக்களுங்கூட. மனித நாகரிக முன்னேற்றத்தில் இத்தகைய வாய்ப்புகள் இடம்பெற்றதுண்டு. பழம் விழுவது கண்ட நியூட்டன் செய்தி இத்தகைய தற்செயல் வாய்ப்புக்களுள் ஒன்று. ஆனால், இவ்வாய்ப்புகளை வளப் படுத்துவது வாய்ப்புகளல்ல; அவற்றைப் பயனுடையதாக்க அறிவும் சூழலும் உதவுகின்றன. பழம் விழுந்தது தற்செயல் நிகழ்ச்சி. ஆனால், அதைக் கண்டவர் நியூட்டனல்லாது வேறு யாராயிருந்தாலும் நியூட்டனின் ஆராய்ச்சி ஏற்பட்டிராது. நியூட்டன்கூடப் பதினெட்டாம் நூற்றாண்டிலுள்ள நியூட்டனாயிரா விட்டால், இவ்வாராய்ச்சி வேறாயிருக்கும். பக்திச் சூழலிலீடுபட்ட நியூட்டனாயிருந்தால், பழம் கீழ்நோக்கி விழுவது கடவுளமைப்பு என்ற விளக்கத்துடன் ஆராய்ச்சி நின்றிருக்கும். ஆகவே, குருட்டுயோகம் அல்லது தற்செயல் நிகழ்ச்சி என்பவைகூட உண்மையில் திட்டமிடா அறிவுச்சூழல் மட்டுமே. இவையும் திட்டமிட்ட அறிவுச்சூழலுக்கு இணையா காது. ஆங்கிலமொழியில் தற்செயல் 1வாய்ப்புக்குரிய சொல்லுடன் ஒத்த தொடர்புடைய மற்றொரு சொல் துணிவு2 என்னும் பொருளுடையது. தற்செயல் வாய்ப்பைப் பயன்படுத்தும் பண்புகளுள் அது முனைப்பான ஒன்று என்பதில் ஐயமில்லை. அறிவு, விழிப்பு, முயற்சி ஆகியவை தற்செயல் வாய்ப்புக்களைப் பயன்படுத்துதல் இயல்பாயினும் துணிவுள்ளம் படைத்தவனே இடர்ப்படாது அதனை நெடுந்தொலை வெற்றிக்குக் கொண்டு செல்வான். ஆகவே வெற்றி திட்டமிட்டவனுக்கன்றி எளிதன்று; திட்டமிடாத தற்செயல் வாய்ப்புக்களுங்கூடத் திட்டமிட்ட வாழ்க்கைத் திட்பமும், தற்பண்பு முனைப்பும் உடையவர்களுக்கே பயன்தரும். சமூகத்துறையில் வெற்றிதரும் பண்புகளுள் பெரும் பயன்தரும் சிறுபண்பு ஒன்று உண்டு. அதுவே பொருள் இடம் காலம் சூழல் அறிந்து வினைசெய்யும் நுண்ணயம் ஆகும். இது இல்லாத இடத்தில் திறமையும் ஊக்கமும் விடாமுயற்சியும் அறிவும்கூடப் பலவகையில் சீரழிவுறும். விலங்குகளின் மூர்க்கமான எதிர்ப்பு உடல் வலுக்கடந்து செயலாற்றாது. அறிவுடைய மனிதனின் அறிவெதிர்ப்பும் சில சமயங்களில் இத்தன்மை யுடையதாகியது. ஆளறியாமல், இடம் காலமறியாமல், சூழல் அறியாமல் செய்யும் அறிவுடைய செயல்கள் இத்தகையவையே. பல சமயங்களில் மக்கள் நேரம், காலம், உழைப்பு, அறிவு ஆகிய யாவற்றையும் செலவழித்துச் செய்யும் ஏற்பாடுகள் கூட இந் நுண்ணியத்திறம் இல்லாமையால் அவர்களுக்குத் தடையாய்விடக்கூடும். தாம் முட்டிக்கொள்வதற் காகத் தாமே சுவரெழுப்பிய கதையாய் முடிகிறது அவர்கள் முயற்சி. இன்னும் சில சமயம் அளவறியாது செய்யும் பெருமுயற்சியே தோல்விக்குக் காரணமாவதுண்டு. டச்சு நாட்டான் ஒருவன் ஒரு படுகுழியைத் திறம்படத் தாண்டும் எண்ணத்துடன் மிக நெடுந்தொலை பின்னிருந்துவர முனைந் தானாம். ஆனால், தொலை அளவிறந்ததா யிருந்ததால், படுகுழியின் கரைவருமுன் அவன் கால்கள் ஓய்ந்து அவன் சிறிது இளைப்பாற வேண்டிவந்ததாம்! செயல்முறை வாழ்வில் செயலுக்கான ஏற்பாடுகளில் வளைந்து வளைந்து செல்பவனைவிட நேரடியாகச் செயல் செய்து வெற்றி பெறுபவனையே எவரும் விரும்புவர். செய்ய விரும்பும் செயல்பற்றியும், அதன் வகைதுறைகள் பற்றியும் சார்பு எதிர்வு ஆராய்ச்சி நடத்துவதை விடச் செயல் நோக்கத்துடன் விரைவில் எளிதாக முடிக்கும் வகைதுறையில் வேலை தொடங்கி முன்னேறுதல் சாலச் சிறந்தது. வெற்றியிலும் பணம் திரட்டுவதிலும்கூட மனிதன் ஆர்வம் பொதுவாக இயற்கையானது. இது வீண் ஆர்வமாய் அமைந்ததன்று. செயல் விருவிருப்புடையார்க்கே பணம் இங்ஙனம் எளிதில் திரளும். மயக்க தயக்கமில்லாச் செயல் விருவிருப்பையே பணம் திரட்டும் பண்பும், பணம் சேமிக்கும் பண்பும் குறிக்கின்றன. மனித வகுப்பும் சமூகமும் தனி மனிதனும் இப் பண்பை அடிப்படைப் பண்பாகப் போற்றிவருகின்றன. இப் பண்பு பேணுபவன் தனி மனிதன் என்ற முறையில் தன் வெற்றிக்கும் உயர்வுக்கும் அடிகோலுகிறான். அதேசமயம் தன்னைச் சார்ந்தோர் நிலையையும் தெரிந்தோ தெரியாமலோ, வேண்டு மென்றோ வேண்டாமலோ உயர்த்திச் சமூக வளர்ச்சிக்கும் உதவுகிறான். சமூகமும் வகுப்பும் அவனை இம் முயற்சியில் ஆதரிப்பது இயற்கை. சமூக ஆதரவு மனிதஇன ஆதரவாய் மனித இயற்கைப் பண்பாய் ஊறியுள்ளது. வாணிகத் துறையில் முன்னேறிய ஒருவர் அத்துறையில் பயிற்சி தொடங்குவோருக்கு வழிகாட்டியாக வரைவித்த தம் கல்லறை வாசகங்கள் வருமாறு:- ``காலம் பொன்னின் மதிப்புடையது. ஒவ்வொரு நொடியையும் ஒரு பொன்பொடியாகக் கணக்கிட்டுச் சேமிக்க. ``பிறர் உன்னிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறாயோ அவ்வாறு நீயும் நட. ``இன்று செய்வதை நாளைச் செய்வேன் என்று கடத்தாதே. ``நீயே செய்யக்கூடிய எதையும் பிறரைச் செய்ய விட்டு வாளா இராதே. ``உனதல்லாததில் விருப்புக் கொள்ளாதே. ``கவனத்துக்குரியதல்ல என்று எந்தச் சிறு செய்தியையும் ஒதுக்காதே. ``திரும்ப உள்வராத எதனையும் வெளியே செல்ல விடாதே. ``செலவு செய்யாதே, உற்பத்தி செய். ``உன் வாழ்வின் செயல்களில் கூடியமட்டும் முதல்தர ஒழுங்கு அமையட்டும். ``உச்ச அளவு நன்மையை உன் வாழ்நாளில் செய்யப் பயில். ``வாழ்க்கை வசதிக்குரிய எதனையும் விலக்கவேண்டாம்; ஆயினும் சிக்கனமும் எளிமையும் நிலவட்டும். ``வாழ்வின் கடைசி நொடிவரை உழைப்பாயாக.'' தனிமனிதன் சேமிப்புப் பெரும்பாலும் தனிமனிதன் வாழ்வுக்குத் தான் நேரடியாகப் பயன்படும். சமூகத்தை முன்னேற்றும் துறையில் அவன் முயற்சியின் பயன் சிறிதாகவே இருக்கும். இதுமட்டுமன்று. சமூகம் முன்னேறாமல், தனிமனிதன் முயற்சிகூட ஓர் எல்லைக்கு அப்பாற்பட்டு வளரமுடியாது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குக் கீழ்ப்பட்ட வாய்ப்பு உடையவர், அஃதாவது, ஏழையர்களிடையேயும் தனிமுயற்சி தொடக்க நிலை வெற்றிகூட நாடமுடியாததாகின்றது. தவிர வருவாய்க்கே வகை இல்லாதவர்களுக்கு, அஃதாவது தொழில் கிட்டாதவர்களுக்குத் தொழில் வகுத்துக் கொடுப்பதும் சமூகப் பொதுநலனேயாகும். இம் மூன்று காரணங்களால் தனிமனிதன் முயற்சிக்கு ஓர் எல்லை ஏற்படுகிறது. இது கடந்த பயன் நாடுவோர் பல தனிமனிதர் முயற்சிகளை ஒருங்கு திரட்டி ஒரு முயற்சியாகத் திட்டமிட வேண்டும். இத்தகைய முயற்சியையே நாம் 1கூட்டுறவுக் கழகம் என்கிறோம். மனித நாகரிகமே கூட்டுழைப்பின் பயனுக்கு ஒரு சான்று. ``விலங்குகளைக் கடந்த மனிதன் அடைந்துள்ள நலங்கள் யாவும் கூட்டுழைப்பின் விளைவே. தனித்தனியாக நின்று அவனால் செய்ய முடியாத பல செயல்களை அவன் பலர் ஒன்றாகச் சேர்ந்து செய்த கூட்டுழைப்பின் மூலம் தன் தோழர்களுடன் கூடி உழைத்துச் சாதித்துக் கொள்கிறான்'', என்று திரு. மில் சுட்டிக் காட்டுகிறார். சமூகத்துறை, கல்வி, சமயம், அரசியல் ஆகிய எல்லாத் துறை களிலுமே மனிதன் கூட்டுறவின் மூலமாகத்தான் நாகரிக வசதிகளுடனும், உயர் வாழ்க்கைத் தரத்துடனும் வாழமுடிகிறது. இவ் வுண்மை சிறப்பாகப் பொருளியல் துறையில் விளக்கம் பெறுகிறது. விலங்கினத்தில் ஒரே விலங்கே பெரும்பாலும் தன் உணவு, தன் உறையுள் முதலிய தன் வாழ்வுத் தேவைகள் யாவற்றையும் கவனித்துக்கொள்கிறது. ஆனால், மனித சமுதாயத்தில் எவரும் தம் உணவு, உடை, உறையுள் முதலிய பல்வகைத் தேவைகளுள் ஒரு சிறு பகுதியைக்கூடத் தாமே செய்வதில்லை. ஆயினும் ஒவ்வொருவரும் ஒரு தேவைக் கூற்றிலேயே பலர் தேவைகளைக் கவனிப்பதால் மொத்தத்தில் மனித வகுப்பு முழுவதன் தேவைகளையும் அவ் வகுப்பின் ஒரு சிலரே செய்து முடிக்க முடிகிறது. மனிதன் தேவைக்குமேல் பொருள்கள் குவிவதும் இதனாலேதான். தேவைகள் வளர்வதும் இதனாலேயேயாகும். கூட்டுறவின் பயனை உயர்தர வகுப்பு மிகுதி பயன்படுத்த முடியாது. ஏனெனில் அவர்கள் சிலர்; அதுவும் உழைப்பற்றவர். உழைப்பற்றவர் கூட்டுழைப்பின் பயனை எப்படிப் பெறமுடியும்? அவர்களிடையே உள்ள போட்டி அவர்களைப் பிரித்து வைக்கிறது. தங்கள் தங்கள் பொதுச் சிக்கல்களைத் தீர்க்கும் ஒரு துறையில் மட்டும்தான் அவர்கள் கூட்டுழைப்புச் செய்யமுடியும். தொழிலாளர்களோ கூட்டுழைப்பின் பயனை படிப்படியாகத் தான் உணர்ந்து வருகின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கும் வரை தொழிலாளரும் எளிதில் ஒற்றுமைப்பட முடியாது. ஆகவே, நடுத்தர வகுப்பினர் மட்டுமே கூட்டுறவின் பெரும் பயனை இன்று உலகில் துய்க்கின்றனர். அதன் பயனாக அவர்கள் அடைந்த முன்னேற்றம் மிகமிகப் பெரிது. மற்ற வகுப்பினர் பல தலைமுறையில் அடையும் முன்னேற்றத்தை அவர்கள் ஒரே தலைமுறையில் அடைய முடிகிறது. அவர்கள் நாகரிகமே வரவர மனித நாகரிகமாய் வளர்ந்து கொண்டு வருகிறது. தொழிலாளர் கூட்டுறவின் பயனை அறிந்து அதைப் பயன் படுத்தினால், நடுத்தர வகுப்பினரைவிட அவர்கள் வளர்ச்சியடைய முடியும் என்பதில் ஐயமில்லை. அவர்கள் உழைப்பால்தான் இன்று பொருள்கள் உண்டுபண்ணப்படுகின்றன. ஆனால், இவைகள் இன்று கூட்டுழைப்பல்ல; தனி உழைப்பு. ஏனெனில் அவர்கள் உழைப்பின் மூலப் பொருளுக்கு, உழைப்புக் கருவிக்கு உரியவர்களல்ல. அவர்கள் உழைப்பின் கூட்டுப் பயனை அவர்கள் பெறமுடியவில்லை. அவர்கள் சேமிப்பில் தங்கள் கூட்டுறவைக் கூட்டினால், அவர்கள் உழைப்பும் எளிதில் தங்கள் கூட்டுழைப்பாய்விடும். ஒவ்வொருவர் சிறுசிறு சேமிப்பும் கூட்டாகச் சேர்க்கப்பட்டால், விரைவில் அவர்கள் தொழிலை அவர்களே நடத்தத்தக்க முதலீடாய்விடும். இன்று அவர்கள் சேமிப்புப் பெரும்பாலும் குடி முதலிய வீண் இன்பங்களில் ஒரு பகுதியும், ஊதிய உயர்வுக்கான வேலை நிறுத்தங்களில் ஒரு பகுதியுமாகச் சிதறிவிடுகின்றன. பிரிட்டனில் மட்டும் வீண் செலவில் ஆண்டுதோறும் பத்துக் கோடிப் பொன்களும், வேலை நிறுத்தத்தில் பல கோடிப் பொன்களும் தொழிலாளரால் செலவு செய்யப் படுகின்றன என்று அறிகிறோம். இவ்வளவு பெரிய செலவீட்டில் ஒரு பகுதி அவர்கள் நல்வாழ்வுக்கான வீடு, புதுத்தொழிலுக்கு முதலீடான கட்டடம், இயந்திரசாலை ஆகியவற்றின் முதலிடப்பட்டால், தொழிலாளிகளே கூட்டுறவு முதலாளிகளாக முடியாதென்றில்லை. ஆய்வியல், பொறியியல் அறிஞர் அறிவு வகுப்பினர் தனி உடைமையல்ல. அவ் அறிவு மக்கள் வகுப்புக்களை மதிப்பதல்ல. உண்மையில் சேமிப்பும் கூட்டுழைப்பும் மட்டும் இருந்துவிடுமானால், தொழில் துறையில் தொழிலாளர்நிலை முதலாளி நிலையையும் அறிவு வகுப்பு நிலையையும்விட மேம்பட்டதாகும். ஏனெனில், அவர்கள் தொழிலறிவு தொழில்துறையினர் செயலாட்சிக்கும் அறிவாட்சிக்கும் உரிய நல்ல மூல முதலாகும். தொழிலாளிகளின் குறை முதலீடில்லாக் குறையும் நல்வாழ்க்கை வாய்ப்புகளில்லாக் குறையும் மட்டுமே. சேமிப்பும் கூட்டுறவும் இவ் விரண்டையும் அவர்களுக்குத் தரவல்லன. தொழிலாளர் கூட்டுறவாகச் சேர்ந்து கழகம் அமைப்பது என்பது இப்போது புதிய செய்தியன்று. அவர்கள் கூட்டுறவுக் கழகங்கள்1 எங்கும் பரந்துள்ளன. ஆனால், அவை முதலாளி தொழிலாளி போராட்டத்திற்கென மட்டும் அமைந்து, அஃதொன்றிலேயே கருத்துச் செலுத்துகின்றன. ஆக்கத் துறையில், நல்வாழ்வுத் திட்டத் துறையில், புதுத்தொழில் வளர்ச்சித் துறையில், தொழிலாதிக்கத் துறையில் அவற்றின் கவனம் திரும்புவதே கிடையாது. இதுமட்டுமன்று, தொழிலாளர் கூட்டுறவுகள் அடிக்கடி முதலாளியை விட்டுவிட்டுப் பிற தொழிலாளர்களை எதிர்ப்பதிலும் முனைந்துவிடுகின்றன. தொழிலாளரிடையே தலைமை வகித்துச் செயலாற்றுவிக்கும் பல கட்சிகள் அவர்களை இவ்வகையில் தூண்டு கின்றன. போராட்டங்களில் கலக்காதவர், பின் தங்கியவர், தயங்கியவர்கள் கூடத் தொழிலாளர்களால் தம் முதல் எதிரிகளாகக் கருதப்படும்படி தூண்டுதல் தரப்படுகிறது. இது தொழிலாளர் ஒற்றுமையை வளர்க்கும் செயலன்று; அதனைக் கருவிலேயே சிதைக்கும் செயல். மேலும், இத் தொழிலாளர் கூட்டுறவுகள் தொழிலாளர் கூட்டுறவில் சேர்ந்த தொழிலாளர் நலத்தை மட்டுமே எண்ணுகின்றன. ஊதியத்தை உயர்த்தும் முயற்சியில் தொழிலாளர் குறைப்புக்கு அவை மறைமுக ஆதரவு தருகின்றன. தொழிலாளர் வகுப்புக் கடந்து தொழிலாளர் இனத்தை இவை கவனிக்க முடிவதில்லை. ஊதிய உயர்வு காரணமாகவும் கூட்டுறவின் போராட்டம் காரணமாகவும் தொழிலாளர்களைக் குறைக்க முடியுமே தவிரப் புதுத் தொழிலாளர் அவ்வகுப்பில் எளிதில் இடம்பெற முடியாது. அன்றியும் திறத்தொழில்களில் புதியவர் வந்து தொழில் பழகும் வாய்ப்புக்கும், தொழிலாளர் இயக்கங்களும் தொழில் சார்ந்த சட்டங்களும் தடையாகவே அமைகின்றன. இன்றைய திறத்தொழிலாளர் பஞ்சத்திற்கு இது பெரிதும் காரணம் ஆகும். நாம் மேலே குறித்த கருத்துகள் செயல்முறையில் வெற்றிதராத கனவியல் கருத்துகள் அல்ல. செயல்முறைத் திட்டங்களே என்பதைக் கூட்டுறவியக்க வெற்றி காட்டுகிறது. பல துறையில் உழைப்பாளிகள் அதை மேற்கொண்டு பயன்பெறாம லில்லை. பிரிட்டனின் மீன் தொழில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கூட்டுறவடிப்படையிலேயே நடத்தப் பட்டு வருகின்றது. படகு கட்டுவதில், இயங்குவதில், தொழிற்படுத்திப் பயன் பெறுவதில் மீன்படவர் கூடி உழைத்தே பங்கு பெறுகின்றனர். கார்ன் வாலிலுள்ள வெள்ளீயச் சுரங்கத் தொழிலும் இங்ஙனம் தொழிலாளர் கூட்டுறவாலேயே நடத்தப் படுகிறது. ஆழ்நிலந் தோண்டுபவர் முதல் வெள்ளீயத்தை விற்பவர்வரை ஒரே கூட்டுறவாய் இயங்கி ஆதாயத்தைப் பிரித்துக்கொள்கின்றனர். தொழிலாளர் ஊதியத்திற்கிடமாக அவர்கள் பங்குவீதமே வரையறுக்கப்பட்டுள்ளது. ஃவினீஷியர் இத்துறையில் ஆதிக்கம் செலுத்திய பண்டைக் காலத்திலிருந்தே இம்முறை கையாளப்பட்டு இருக்கவேண்டும் என்று தோற்றுகிறது. முதல்முதல் கூட்டுறவியக்கம் ஆலைத்தொழில் முதலாளி களின் அழிவுப் போட்டியை எதிர்த்த தொழிலாளர்களாலேயே நடத்தப்பட்டது. 1795இல் தொடங்கப்பெற்ற ஹல் ஆலை எதிர்ப்புத் தொழிற் சங்கத்தின் அமைப்புரை வாசகம் இதனை எடுத்துக்காட்டுகிறது. ``மாவின் விலை யேற்றத்தினால் இந்நகரத்தின் ஏழைக் குடிகளாகிய நாங்களும் எங்கள் குடும்பங்களும் பெருந்துன்பங்களுக்கு ஆளாகி வருகிறோம். தற்போது விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் வருங்காலத்தில் மீண்டும் எங்கள்பால் இரக்கமற்ற ஆதாயப்போட்டி வணிகரிட மிருந்து எங்களை எச்சரிக்கையுடன் காத்துக்கொள்ள வேண்டியதன் இன்றியமையாமையை நாங்கள் உணர்கிறோம்,'' என்று அவ்வாசகம் தொடங்குகிறது. அவர்கள் செய்த முடிவு ஆள்வரி பிரித்து ஓர் ஆலை அமைத்துத் தமக்கு வேண்டிய மாவைத் தாமே உண்டுபண்ணிக் கொள்வதேயாகும். அவர்கள் கோரிக்கையை நகர்ப்பேரவை ஏற்று அவர்களுக்கு உதவித் தொகையும் அளித்தது. ஒவ்வொரு பங்குக்கும் ஒரு வெள்ளியாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டினிறுதியில் இக் கழகத்தில் 4,000 பங்காளர்கள் இருந்தார்கள். ஆலை முதலாளிகள் இக் கழகத்தைச் சட்டமூலம் ஒழிக்க முயன்றும் வெற்றிகாண முடியவில்லை. ஏனெனில் கழக உறுப்பினரனைவரும் பெரும்பாலும் அவ் வாலையில் தொழிலாளிகளாகவே இருந்து தாம் அரைத்த மாவைத் தாமே தம் விலைக்குப் பெற்று, அதில் வரும் ஆதாயத்தில் தாமே பங்கு பெற்றவர்களாக இருந்தனர். அஃதாவது அவர்கள் பிற முதலாளிகள் தொழிலுடன் சிறிதும் போட்டியிடும் தேவையில்லாமல், தாமே தம் முதலுக்குரிய முதலாளிகளாகவும், தாமே தம் தொழில் செய்யும் தொழிலாளி களாகவும், தாமே ஆதாயம் பெறுபவர்களாகவும், தாமே தொழிலின் செய்பொருளை வாங்கும் பொதுமக்கள் அல்லது பயனீட்டாளர்களாகவும் அமைந்தார்கள். முதலாளி, தொழிலாளி, பொதுமக்கள் என்ற வேறுபாடற்ற ஒரு சிறு சமுதாயமாக அது அமைந்து, அவ் வேறுபாடுள்ள உலகத்தில் அஃதற்ற ஒரு சிறு தனி உலகாய் அது இயங்கிற்று. ஹல் நகர் தொழிற் கழகத்தைப் பின்பற்றி அடுத்த நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பல நாடுகளிலும் கூட்டுற வியக்கம் பிரிந்துள்ளது. வீடுகட்டும் கழகங்களும் இதே முறையில் அமைந்து தொழிலை மட்டுமன்றி வாழ்க்கையையும் உயர்த்தப் பாடு படுகின்றன. சேமிப்பும் கூட்டுறவும் ஒருங்கு கூடினால், ஒரு புத்துலகத்தைக் காணமுடியும் என்பது உறுதி. 5. சிறு செயல்கள் ``மனைவி உடன்பிறந்த நங்கை புதல்வியென் றினைய பெண்மக்கள் இனியநல் நண்பன் ஆயிவர் செய்யும் சிறுசெயல்கள் ஆர்ந்து மேவின்ப வாய்ப்பே குடும்பநல் அமைதியாம்.'' - ஹானமார்ட் ``செலவுசெய்தல் எப்போது? சிக்கனம் எப்போது? விலைகொள்ளல் எப்போது? அறிதியெனில் வாழ்தி சிறுபொருள் சிறுபொருள் ஒழியவரே சிறுகச் சிறுக அழிபவரே.'' - எக்னிசியாண்டிக்கஸ் வாழ்க்கையெனும் பெருங்கடலுள் சிறு செய்திகளைப் புறக்கணிக்கும் வழக்கமே மனித வகுப்பினருள் பெரும்பாலோர் சென்று உடைபடும் பாறை என்னலாம். பல துளிகள் சேர்ந்து பெருவெள்ளம். அதன் எந்தத் துளியும் பெருவெள்ளத்தின் ஆற்றலுடையதாகாது. மனிதவாழ்வும் சிறு செய்திகளின் ஒரு தொடர் கோவை. வாழ்க்கை முக்கியத்துவ முடையதானாலும், அதன் கோவையிலுட்பட்ட எந்தச் சிறு செய்தியும் முக்கியத்துவ முடையதாகத் தோற்றமாட்டாது. மனிதன் வெற்றியும், வெற்றிக்கு அடிப்படையான இன்பமும் இச்சிறு செய்திகளின் போக்கைப் பொறுத்தது. தொழில்துறை வெற்றி, குடும்ப இன்ப அமைதி, அரசியலின் ஒழுங்கு யாவும் அவ்வத்துறையிலுள்ள சின்னஞ்சிறு நுண் செயல்களின் செவ்விய ஒழுங்கையும், திட்டத்தையும் உன்னிப் பான ஏற்பாட்டையும் பொறுத்தவையே. மேலும், இச் சின்னஞ் சிறு செயல்களைச் செய்வத னாலேயே கைத்திறமும் அறிவுத் திறனும் சிறுகச்சிறுகப் பெருகிக் கலைத்திறன், கலைப் பண்பு ஆகிறது. இச்சிறு அறிவுகளையும் சிறு திறங்களையும் தொகுத்துச் சேர்க்காத வர்கள் வாழ்க்கையில் தோல்வி யுறுபவர்கள். அவர்கள் தோல்விக்குப் பெருஞ் செயல்கள் காரணமல்ல; சிறுசெயல்களின் புறக்கணிப்பும் சிறு செயல் அறிவு, சிறு செயல் திறங்களைக் கோத்துச் சேர்க்காமையுமே காரணம் ஆகும். அவர்கள் உலகினர் இயல்பைக் குறை கூறலாம். ஊழ் என்ற ஒன்றைக் கற்பித்துக் குறைகூறலாம். கடவுளின் வன்கண்மையைக் குறைகூறலாம். ஆனால், உண்மையில் அவர்கள் எதிரி அவர்களே. அவர்கள் சிறு செயல்களின் விலைகாணாத அறியாமையே பொதுமக்களிடையே குருட்டு யோகத்தைப் பற்றிய நம்பிக்கை மிகுதி. எல்லாப் பொதுவான மூடநம்பிக்கைகளும் போலவே இதுவும் அறியா மையை அடிப்படையாகக் கொண்டது. குருட்டுயோகம் சிறு செயலில் குருடாயிருப்பவர்களுக்கு மட்டும்தான் கிட்டாது என்று காணலாம். சிறு காரியங்களில் கவனம் மிகுந்தோறும் இந்தக் குருட்டுயோக நம்பிக்கை குறைந்துகொண்டுதான் வருகிறது. ``குருட்டுயோக நம்பிக்கை வெற்றி எந்த நொடியிலாவது வந்து விடாதா என்று நம்பி நம்பிக் காத்து அலமருகிறது. ஆனால், உழைப்போ அதனை எதிர்பார்த்து உண்டுபண்ணிவிடுகிறது,'' என்று ஓர் அமெரிக்க எழுத்தாளர் கூறியுள்ளார். உழைக்கும் இயல்பும், உறுதியான நோக்கமும், சிறுசெயலில் கூரிய நோக்கும் உடையவர்களுக்கு வெற்றி என்பது கையில் வெண்ணெய் வைத்திருப்பவனிடம் வரவிருக்கும் நெய்யேயன்றி வேறன்று. குருட்டு யோகம் விடிந்த பின்னும் படுக்கையில் படுத்துப் புரண்டு கொண்டே எங்கிருந்தாவது அஞ்சல்வழி ஒரு செல்வக் களஞ்சியம் வந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். உழைப்பும் அதற்குள் இரண்டு மணிநேரம் தொழிலாற்றிச் சிறுகச் சிறுகத் தன் உடைமையைத் தானே உறுதியுடன் ஆக்குகிறது. முன்னது தற்செயல் பிறநிகழ்ச்சிகளை நம்புகிறது. பின்னது தற்பண்பைத் தளமாகக் கொண்டுள்ளது. முன்னது உலகின் போக்கில் தன்னை மிதக்கவிட்டு உதவியற்று நழுவுகிறது; பின்னது தற்போக்கிற்கு உலகைக் கொண்டுவந்து தற்சார்பை வலுப்படுத்துகிறது. ஒருவன் இன்பத்துக்கும் உடல் நலத்துக்கும் உரிய சிறு காரியங்கள் பல குடும்பத்தில் உள்ளன. இவை தூய்மை, ஒழுங்கு, அழகுணர்ச்சி, சிக்கனம் ஆகியவற்றின் பால்படுவன. நீர்நிலைகளைத் தூய்மையாக்கல், நீருள்ள கலங்களை எப்போதும் மூடிவைத்தல், உணவுகளை மிகுபக்குவம் குறைபக்குவ மில்லாமல் மட்டான நீர், தீ, காலம் ஆகியவற்றுடன் வட்டித்தல், ஆடைகளை மாற்றல், தூய்மையாக்கல், அழுக்கை ஒதுக்கி மாற்றல், தளம், கலம், கூரை ஆகியவற்றைக் காலா காலத்தில் தூய்மை செய்தல், தட்டுமுட்டுகளை அழகுணர்ச்சியுடனும், தேவையை எதிர்பார்த்தும் திட்டப்படுத்துதல், செயல்துறை காரியங்களில் சொல் சுருக்கல், இன்பச்சொற்கள் பெருக்கல், ஒருவருடன் ஒருவர் கனிவும் மதியும் மிக்க சொற்கள், செயல்கள் பெருக்கல், சிறு குற்றங்குறை பொறுத்தல், நயமாகத் திருத்தல், அடிப்படைச் செய்திகளில் கண்டிப்பு, தற்சார்புடன் பிறர்நலம் பேணல் ஆகிய எண்ணற்ற சிறு செய்திகளின் கூட்டு விளைவே குடும்ப அமைதியும், குடும்ப இன்பமுமாகும். இவற்றிடையேதான் உடல்நலமும் உளநலமும் பண்பும் வளர்ச்சி பெறும். வீட்டினுள் உலவும் காற்று எப்படி இருக்கிறது என்று கவனிப்பது, பார்ப்பதற்கு மிகச் சிறிய செய்தி. இதைப்பற்றி அக்கறை எடுப்பவர்களோ, இது பற்றிய விவரங்களை அறிபவர்களோ குறைவு. ஆயினும் நல்லுணவு, நன்னீர், நல்லுடை ஆகிய கண்கண்ட பிற செய்திகள் எவற்றையும்விடக் கண்காணாப் பொருளாகிய காற்றே நம் வாழ்வை முற்றிலும் உருவாக்குவது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை உணவு உட்கொள்ளுகிறோம். நாலைந்து தடவை நீர் உட்கொள்ளலாம். இவையும் பகலில்தான். ஆனால், அல்லும் பகலும் அறுபது நாழிகையும் விழித்திருக்கும் போதும், உறங்கும்போதும், உண்ணும் போதும், குடிக்கும்போதும் நாம் ஓயாது காற்றை உட்கொள்ளுகிறோம். உடம்பில் குருதியின் மாசு போக்கும் காற்றும் மாசுடையதாயிருந்தால், வரும் கேடு, இவ்வளவு என்று கூறவேண்டுவதில்லை. பெருநகரங்களில் காற்றில் மாசு மட்டுமன்றித் தூசும் நிறைய உண்டு. இவை மாந்தர் உடல்நலத்தை அறுக்கும் வாளாய், நகர மக்களுக்கு மருந்தால் எளிதில் குணம் அடையாத காசம், இருமல், உயிர்ப்பைக் கோளாறு முதலிய நோய்க் கூற்றுக்களை உண்டுபண்ணு கின்றன. மாடி வீடும், நல்லுணவும், உடையும் யாவும் உடைய செல்வர் குடிகளில்கூட இந்நோய் நீடித்து அழிவு தருவதன் காரணம் காற்றை அவர்கள் கவனிக்காததனாலேயே. தாள்களை வைத்துக் கோக்கும் குண்டூசி மிகச் சிறிய கிட்டத்தட்ட விலையற்ற பொருள். அதன் இன்றியமை யாமையோ மிகப் பெரிது! அதைக் கண்ட இடங்களில் போட்டு விட்டால், அல்லது சரியான நிலையில் குத்தி வைக்காவிட்டால், எத்தனை பெரிய தவறு, எத்தனை பெரிய தீங்கு விளையும்? ஒரு கூரறிவுடைய இளைஞனை ஒரு பெண் காதலித் திருந்தாள். அவனும் ஓரளவு அவள் அன்பில் ஈடுபட்டு அவள் வீட்டிற்கு விருந்தினனாகச் செல்ல இணங்கினான். அவள் அவனை வரவேற்கும் போது, தலைகோதாமல் வந்தாள். அவள் மேலாக்கில் குண்டூசி பாதி மாட்டி, பாதி மாட்டப் பெறாமல் இருந்தது. இளைஞன் இதை நன்கு கவனித்துக்கொண்டான். அவன் மீட்டும் அவள் பக்கம் நாடவில்லை. பெண்ணின் அக்காள் தங்கையர் அவள் குறையை ஊகித்து உணர்ந்து கூறியபோது, `ஓகோ, ஒரு குண்டூசிக்காக ஒரு பெண்ணை வெறுக்கும் இத்தகைய காதலன் ஒரு குண்டூசிகூடப் பெறப்போவதில்லை. எனக்கும் அவன் வேண்டாம்'' என்று கடிந்து விடையிறுத்தாள். நங்கையைப் பிறகு மற்றோர் இளைஞன் காதலித்து மணந்துகொண்டான். இளைஞனும் இன்னொரு பெண்ணைக் காதலித்து மணந்துகொண்டான். இரு நங்கையரும் தோழிகளாய் இருந்தவர்கள். ஆகவே, இருவரும் ஒருவரை மற்றொருவர் குடும்பத்துடன் அழைத்து விருந்து அளித்தனர். இருவரும் பொருள் நிலையிலும், கல்வியிலும், ஒரேயடியாயிருந்தும், ஒருவர் வீடும் விருந்தும் நாகரிகமும் எல்லார் மதிப்பையும் பெற்றது. மற்றவர் வீட்டு விருந்தோ விருந்தளித்தவரால்கூடப் பாராட்டிக்கொள்ள முடியாதிருந்தது. விருந்தின் முடிவில் முதல் நங்கை தோழியிடம், ``நீ எப்படி அம்மா உன் கணவருடன் சேர்ந்து இத்தகைய நல்ல மதிப்பைத் தேடிக் கொண்டாய்?'' என்று கேட்டாள். இரண்டாவது தோழி, ``அம்மா! நீ குண்டூசியில் காட்டிய அசட்டை மனப்பான்மையை எல்லாவற்றிலும் காட்டுகிறாய்; உன் கணவனும் அதைக் கவனியாத மனப்பான்மையை எல்லாக் காரியங்களிலும் உடையவராய் இருக்கிறாய். சிறு செயல்களை நான் கவனித்தவள்; அதனை நோக்கியே என்னை மதித்தவர் என் காதலர். இருவர் வாழ்விலும் இக் கவனிப்பு எல்லாவற்றையும் திட்டமமைத்து மாற்றிவிடுகிறது,'' என்றாள். முதல் நங்கையை மறுத்த இளைஞனே அவள் தோழியின் கணவனானான் என்று இங்கே கூறத் தேவையில்லை. குடும்பத் துறையைப் போலவேதான் தொழில் துறையிலும் சிறு கவனிப்பு நல்ல திறமைக்கு அடிப்படையாயமைகிறது. ஒரு பெரிய மருந்துக்கடைக்காரர் தமக்கு ஒரு கடையாள் வேண்டுமென்று விளம்பரம் செய்திருந்தார். இருபது இளைஞர்களுக்குமேல் வந்து குழுமிக் காத்திருந்தனர். ஒரு கால் பணம் பெறும் மருந்தைச் சிறு பொட்டலமாகக் கட்டும் வேலையை அனைவருக்கும் அவர் கொடுத்து, அதைத் திறம்படச் செய்த இளைஞனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இச் சிறு செயல்திறத்தின் மூலமே மருந்துக் கடைக்காரர் கடையாளின் வாழ்க்கைத் தொழில் திறமையைத் தேர்ந்தெடுத்தார். சின்னஞ்சிறு தவறுகளால் ஒரு பெருஞ்செல்வமும், ஒரு நாட்டுப் பெருவாழ்வும் அழிய நேர்ந்ததுண்டு. பொற்குவை ஏற்றிவரச் சென்ற ஒரு வணிகனின் கப்பல் புறப்படும்போது கப்பலில் சிறு பழுது ஒன்று இருந்தது. வந்தபின் செப்பம் செய்துகொள்ளலாம் என்று வணிகன் கப்பல் தொழில் தலைவனிடம் கூறிவிட்டான். கப்பல் சென்றது. பொற்குவை ஏற்றி மீண்டது. வரும்வழியில், பொற்குவையின் பளுவால், பழுது பெரிதாகிக் கப்பலும் பொற்குவையுமன்றி ஆட்களும் ஆழ்கடலுக்கு இரையாயினர்! ஒரு படைத்தலைவனின் தூதன், எதிரியின் படை வீட்டில் புலன்பார்க்கச் சென்றான். வெற்றிகரமாகப் புலன் பார்த்தறிந்தான். அதனைத் தன் தலைவனிடம் கொணர்ந்து தெரிவித்தால், தன் நாட்டுக்கும், படைக்கும், தலைவருக்கும், தனக்கும் வெற்றியும் புகழும் கிட்டும் என்னும் மகிழ்ச்சியில் அவன் தன் குதிரையின் நிலையைத் தேராமல் விரைந்து மீண்டான். குதிரையின் ஒரு காலின் இலாடத்தில் ஓர் ஆணி கழன்றிருந்தது. ஆணி கழன்றதால் இலாடம் பெயர்ந்தது. இலாடம் பெயர்ந்ததால், குதிரை சறுக்கி வீழ்ந்து மாண்டது. குதிரை மாண்டதினால், தூதர் விரைந்து செல்லமுடியாமல், எதிரிப் படைவீரர் கையிலகப்பட்டுச் சுடப்பட்டிறந்தார். செய்தியறியாமல் தலைவன் படைகளை இயக்க முடியவில்லை. எதிரி வெற்றி கண்டான். படைத்தலைவனுக்கும், நாட்டுக்கும், தூதர் பெயருக்கும் மாளாப்பழி கிட்டிற்று. ஓர் ஆணியின் தவறு எங்கே கொண்டுபோய் விடக்கூடும் என்பதை இது காட்டுகிறது. ஃவிரஞ்சுப் பொருளியலறிஞரான திரு. ஸே சிறு செயல்களின் பெருவிளைவுகள்பற்றிய ஒரு சுவையான நிகழ்ச்சியை எடுத்துக் கூறுகிறார். ஆடு, மாடு, கோழி, பன்றி ஆகியவற்றை வைத்துக் காத்த ஒரு பண்ணையில், பண்ணையின் ஒரு கதவில் தாழ் சீர்கெட்டிருந்தது. போகிறவர் போகும்போது கதவு தானாக முற்றிலும் பொருந்திக் கொள்வ தில்லை. இதனால் கோழிகள் அடிக்கடி அதன் வழியே சென்று தவறின. தாழைப் பழுதுபார்க்க அரைப்பணம், முக்காற் பணத்துக்குமேல் செலவாகாது. ஆனால், பெருஞ்செல்வமுடைய பண்ணை முதல்வன் இதனைப் பொருட்படுத்தவில்லை. ஆடுகள் போயின; பன்றிகள் போயின; அப்போது கீழ்த்தரத் தொழிலாளரிடையே பரபரப்பு ஏற்பட்டது. முதல்வன் விரைவில் சீர்செய்கிறேன் என்றான். அவன் சீர்செய்வதற்குள் ஒரு கொழுத்த முதல்தரப் பன்றியும், ஒரு பாற்பசுவுமே வெளியேறிவிட்டன. பண்ணையாட்கள் அத்தனை பேர்மீதும் முதல்வன் சீறி, ``பசுவையும் பன்றியையும் பிடித்து வந்துவிட்டு மறுவேலை பாருங்கள்,'' என்றான். சமையற்காரன் சமையலைவிட்டு ஓடினான். சலவைக்காரி சலவையை விட்டு ஓடிவிட்டாள். பசுவைக் கடந்து சென்று முன்னால் போய்ப் பிடிக்கச் சமையற்காரன் ஒரு கால்வாயைத் தாண்டினான். அவன் காலெலும்பு ஒன்று முறிந்தது. அவன் மருத்துவ நிலையத்தில் மாதக் கணக்காய் இருக்கவும், பின்னும் கால் ஊனமாயிருக்கவும் வழியாயிற்று. பால் கறந்துவிட்ட பசு தப்பி யோடியதுடன், வழியில் ஆட்டுக்குட்டி யொன்றை மிதித்து நொண்டியாக்கி விட்டது. சலவையைச் சலவைக்காரி விட்டுச்சென்றதால், துணிமணிகள் பற்றி எரிந்துபோய்விட்டன. இவையெல்லாம் போதாதென்று பசுவும் பன்றியும் காய்கறித் தோட்டங் களில் சுற்றி, அழிவுசெய்தன. அரைப்பணச் செலவைக் காலாகாலத்தில், செய்யாததால், பண்ணையின் பலமாத வருவாய் கெட்டுவிட்டது. வாழ்க்கை முழுவதிலும் இத்தகைய சிறுசெயல் வழுக்கள் தற்செயல் நிகழ்ச்சிகளல்ல; நாள்முறை நிகழ்ச்சிகள் என்பது ஊன்றிக் கவனித்தால் தெரியும். ஒரு துட்டு என்பது மிகச் சிறுதொகை. இரவலர் தவிர யாரும் அதைப் பொருட்படுத்த மாட்டார். அதனால் வாய்க்கத்தக்கபொருள்களும் கிட்டத்தட்ட விலையற்ற பொருள்களே. ஆயினும் அத்தகைய பொருள்களை வாங்கி விற்பவர் வருவாய் யாருக்கும் இருக்கமுடியாது. கிட்டத்தட்ட அதையே முதலாக வைத்துத் தொழில் செய்பவர் ஆதாய விழுக்காடும் யாருக்கும் ஏற்பட முடியாது. பெருந்தொகை முதலிடும் தொழிலில் நூற்றுக்கு ஒன்று, இரண்டு வருவாய் வருவதைப் பெருத்த ஆதாயமாகக் கொள்வர். துட்டுக்கு வாங்கி விற்பவர் துட்டுக்குத் துட்டு அல்லது நூற்றுக்கு நூறும், அதற்கு மேலும் ஆதாயம் பெறுவதைப் பொதுவாகக் காணலாம். துட்டுகள் சேர்ந்தே பொன்னாகிப் பெருகிப் பொற்குவையு மாகின்றன. குடிமக்கள் பலரின் சிறு வரியே அரசியலின் பெருஞ் செல்வமாகிறது. சின்னஞ் சிறுதுளிகள் பெருவெள்ளமாகவும், சிற்றோடைகள் பேராறாகவும் பெருகுதல் காண்கிறோம். பேரூதியம் பெறுபவர் சிறுதொகை மீப்பதால் பயனென்ன என்ற அசட்டை மனப்பான்மை யினாலேயே, பலர் வாழ்க்கை வளம்பெற முடியாதவராயிருக்கின்றனர். மணமான இளைஞர் ஒருவர் மீத்துவைப்புப் பற்றிய கவலையே இல்லாமல் செலவுபோக மீந்த பணத்தில் தன் மனைவிக்கு ஒரு கோப்பைச் சிறுகுடிக்குச் சிறிது தந்து தானும் மீந்த பணத்தில் ஒன்றிரண்டு கோப்பை அருந்துவது வழக்கமாயிருந்தது. முதலாண்டு மணநாள் விழா நாளில் காலையில் கணவன்மனைவியர் வீட்டிலிருந்து தம் சிற்றுண்டி அருந்தினர். அப்போது கணவன் மனைவியிடம், ``நம் ஊதியம் இன்னும் மிகச் சிறிதாகவே இருக்கிறது என்பதை இத்தகைய நாளில்தான் நான் நினைக்கவேண்டி யிருக்கிறது. சிறிது பொருள் இருந்தால் என்றும் இங்கே அடைபட்டுக் கிடக்காமல், இவ்விழா நாளில் நாட்டுப்புறத்தில் உலவி உங்கள் தாய்வீட்டிற்குச் சென்று, உங்கள் பெற்றோருடன் உண்டு களித்திருந்து வரலாம்,'' என்றான். கணவனின் நல்லெண்ணமும், நல்லவாவும் கண்டு களித்த மனைவி, ``ஏன், அப்படியே இன்றுகூடச் செய்யலாமே. நானே என் வீட்டுக்கு உங்களை அழைத்துச் சென்று விருந்து செய்விக்கிறேன்,'' என்றாள். ``நீயா? விருந்தா?'' என்றான் கணவன். ``ஏழையின் மனைவி யாகிய உன்னிடம் அதற்குப் பணம் எப்படி இருக்கும்?'' என்றான். அவள் பேசாது எழுந்துசென்று ஒரு பழங்காலுறையில் தான் இட்டுவைத்திருந்த காசுகளைக் கொட்டி எண்ணினாள். சரியாக 4 பொன், 11 வெள்ளி, 3 துட்டு இருந்தது. அவன் வியப்படைந்தான். அவளுக்கு ஒரு கோப்பைச் சிறு குடிக்கு அளித்த பணத்தை அவள் சிலசமயம் செலவு செய்து, சிலசமயம் வீட்டிலமர்ந்து உண்டு மீத்த பணம் அது. அம் மணநாள் விழாவில் கணவன் விருப்பம் ஈடேறிற்று. ``உன் பங்குச் சிறுகுடியை நீ இழந்தாய். இனி என் பங்கும் எனக்கு வேண்டாம்,'' என்று அவன் அத் தொகையை மீத்து வைக்கத் தொடங்கினான். அச் சிறு தொகை நல் வாழ்வாகத் தளிர்த்து, வாழ்வில் வட்டியும் குட்டியுமாகத் தழைத்தது. அது ஒரு நல்ல வீடு, நல்ல கடை, நல்ல தொழிற்சாலை, பண்டகசாலைகள், நாட்டுப்புறப் பண்ணை என வளர்ந்து, இறுதியில் கணவனை ஒரு நகர்ப் பேரவைத் தலைவராக்கிற்று. மனைவி, பெண்கள் தொகுதியின் சார்பில் நாட்டு மன்ற உறுப்பினராய்ப் புகழ் பெற்றாள். உருவான உண்மைச் செல்வம் மக்களின் நிலபுலன்களல்ல; பொருளகக் கணக்குத்தொகையுமல்ல; அவர்கள் பெறும் ஊதியமோ, அவர்கள் பகட்டாடையோகூட அல்ல. கஞ்சத் தனம்கூட உண்மையான செல்வம் தராது. ஏனெனில் அது செல்வம் வளர்ப்பதுபோலத் தோன்றி ஈட்டுபவனை அழிக்கும். வீண்செலவுகளில், நிலைத்த பயன்தராச் செலவுகளில் செய்யும் ஒவ்வொரு சிறு காசையும், சிறு காசெனச் செலவுசெய்து ஒழிக்காமல், மீத்துவைப்பதே உண்மைச் செல்வமாகும். இதுவே சிக்கனம்; இதுவே செல்வம். ஏனெனில், ஒரே செல்வமுடைய இருவர் அல்லது ஒரே ஊதியமுடைய இருவர் சிலநாட்களில் இப் பண்பு காரணமாக வேறுவேறு திசைகளில் செல்வது காணலாம். சிக்கன முடையவன் செல்வம் பெருகும். அது அற்றவனிடம் வறுமைதான் பெருகும். ஒரே ஊதியமுடைய இரு தொழிலாளிகளில் ஒருவன் கவலையற்ற நல்வாழ்வு வாழ்ந்தான். அடுத்தவன் கடன்பட்டு, உடல் கெட்டு, குடும்பநலன் சீரழிவுற்று நலிந்து வந்தான். ஒருநாள் நலிந்தவன் தழைப்பவனைப் பார்த்து, ``என்னளவே நீ ஊதியம் பெறுகிறாய்; நீ உன் வாழ்வை நல்வாழ்வாக்கி, அந் நல்வாழ்வுக்குச் செலவு செய்ததுபோக மீத்தும் வைக்கிறாயே; எனக்கு என்றன் வாழ்வுக்குக்கூட என் ஊதியம் போதமாட்டேன் என்கிறதே; இம்மறை வெற்றி நெறி யாது?'' என்று கேட்டான். நற்றோழன் அவனைப் பார்த்து, ``அன்பனே, என் மறைநெறி வேறு எதுவுமல்ல; சிறு துட்டை மதிப்பதே,'' என்றான். ``அது சரி; நானும் சிலசமயம் சிறுதுட்டுக்கு அலைந்து திரியத்தான் செய்கிறேன். சிறுதுட்டை நான் அவமதிப்பதில்லை. ஆனால், ஒரு சிறுதுட்டுக்கூட மீய மாட்டேன் என்கிறதே,'' என்றான். ``நான் விளக்கம் தரமுடியும் நண்பனே! ஆனால், நீ சினங்கொள்ளக் கூடாது. நீ உன் சிறு துட்டுக்களைக் கொடுத்துக் குடிக்கிறாய். நான் துட்டுக் கொடுக்காமல் குடிக்கிறேன். அந்த மீதம் என் நிலையை வளர்க்கிறது.'' ``ஓகோ, நீ யார் செலவிலாவது குடித்துத் திறமை காட்டி விடுகிறாயா?'' ``இல்லை; ஒருபோதும் இல்லை. காசு கொடுத்து வாங்கும் குடி காசைத் தொலைப்பது மட்டுமல்ல. உடல்நலம் கெடுகிறது; மனைவி மக்களைப் பகைக்க வைக்கிறது; மதிப்புக் கெடுக்கிறது. அது மேலும் குடியைத் தூண்டி ஒருவனைக் கடனாளி யாக்குகிறது. மனைவியை விரைவில் கைம்பெண்ணாக்கக்கூடச் செய்கிறது. நான் அக்காசையும் மீத்துக் காசு வேண்டாத பொருளாகிய தண்ணீரைக் குடித்து, உடல்நலமும், வாழ்வு நலமும் பெறுகிறேன்.'' நலிந்த நண்பன் வாழ்வைத் தோழன் அறிவுரை பொலியவைத்த தென்று கூறவும் வேண்டுமா? குடிகெடுக்கும் குடி ஒழிந்தது; பணம் மீந்தது; வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. குடிக்கும் இன்பத்தினும், குழந்தைகள் மழலை இன்பம், கல்வியின்பம் அவனுக்கு நல்லின்பமாகவும், நல்வாழ்வாகவும் அமைந்தது. ஊதிய உயர்வு, உரிமை ஆகியவற்றுக்காகப் போராடுதல் நன்றே. ஆனால், அங்ஙனம் போராடுபவர் பலர் அவற்றைப் பெற்றாலும் ஒன்றுதான்; பெறாவிட்டாலும் ஒன்றுதான் என்ற நிலையில் இருக்கின்றனர். முதலாளிகள் ஊதிய உயர்வு தரமுடியும்; ஆனால் தந்த ஊதியத்தைச் செலவிடும் வகையை யார் கற்றுத்தருவது? வீண் செலவைத் தடுப்பது யார்? வீண்செலவு செய்துவிட்ட பணத்தின் பயனாக அதன் தீவிளைவு களை அறியும் அறிவும் அவர்களிடம் வருவதில்லை; அவற்றை மீட்டும் பெருக்குவதன் விளைவுபற்றிய எச்சரிக்கையும் யாரும் தருவதில்லை. இதுபோலவே மக்கள் அரசியலாளர் உரிமைகளை வழங்கலாம். ஆனால், கடமைபேணி, இருக்கும் உரிமைகளைப் பேண முடியாதவர்களுக்கு, உரிமை வந்தென்ன, வராமலிருந் தென்ன? கடமை பேணி உரிமை பயன்படுத்துபவன் தன் உரிமையை யாரும் தராமலே பெறுவது திண்ணமன்றோ? ஊதாரி முதலாளி கடனாளியாய், மீத்து வைக்கும் தொழிலாளி அவனுக்குக் கடன்தந்து முதலாளியாக முடியா தென்றில்லை. கடமை பேணும் குடி கடமைபேணா ஆட்சியைக் கவிழ்த்து விடுவதும் நடைபெறாச் செய்தியன்று. சிக்கனம் நாடுபவனின் சிக்கனத் திட்டத்தில் முதல் சிக்கனத் திட்டமும் இன்றியமையா முதல் சிக்கனமும் சிக்கனப் பண்புவாய்ந்த மனைவியைத் தேர்ந்தெடுப்பதே. ஏனெனில், ஆடவன் எவ்வளவு சிக்கனமாக வாழ்ந்தாலும், இல்லத் தலைவியாகிய பெண் சிக்கனம் அறியாவிட்டால், அவன் சிக்கன முழுவதும் விழலுக்கு இறைத்த நீராய் விடும். ஒருவன் இல்வாழ்வும், இல்லத்தலைவியும் அவன் வாழ்வின் மூலதனமும், மூலமுதலும் ஆகும். அது கோணியிருந்தால், அவன் திறங்கள் எவையும் அக்கோணலை முற்றிலும் சரிசெய்ய முடியாது. மேற்குறிப்பிட்ட நலிந்த தொழிலாளனுக்குத் தழைக்கும் தொழிலாளன் குடியின் விளைவு ஒன்றை மட்டுமே எடுத்துக்கூற முடிந்தது. அவன் மனைவியைப்பற்றி அவனிடம் குறைகூறும் வன்கண்மை அவன் தோழனுக்கு இருக்க முடியவில்லை. தொழிலாளத் தோழன் திருந்தியபின், அவன் தொல்லைகள் பெரிதும் குறைந்தன. ஆனால், புதுத்தொல்லைகள் பெருகிக் கொண்டேயிருந்தன. தழைத்த தொழிலாளத்தோழன் தன் மனைவியைத் தூண்டி நண்பனையும் நண்பன் மனைவியையும் தன் வீட்டுக்கு விருந்துக் கழைத்தபின்தான் நண்பன் சீர்திருத்தம் முக்கியமான ஒரு படி முன்னேற்றம் அடைந்தது. தழைத்த வீட்டொழுங்கு அவனை வெட்கமடையச் செய்தது. தோழியிடம் கேட்டு அவன் மனைவிகூறும் குடும்பச் சிறு செய்திகளைக் கவனிக்கப் பழகிய பின்பே அவன் குடும்பவாழ்வு சீரடைந்தது. ஒரு நாளைக்கு ஒரு துட்டு1 மீத்து என்ன செய்ய முடியும்? மீப்பவர் அதைக்கொண்டு பலவும் செய்யலாம். அவரவர் தேவை, அனுபவம், முன்னறிவு ஆகியவற்றுக்கிசைய மீக்க விரும்பும் ஏழையருக்காக அறிஞர் திட்டம் வகுத்துக்காட்டியுள்ளனர். சேமநலக் கழகங்கள் ஒவ்வொன்றும் அத்தகைய திட்ட அடிப்படையிலேயே உழைக்கின்றன. நாள் ஒன்றுக்கு ஒரு துட்டுத் தருபவன் நலங்கோரித் தாம் திட்டமிட்டு அவனுக்காகச் செய்து தரக் கூடும் வாய்ப்புக்களை அவை வெளியிட்டுள்ளன. அவற்றுள் பலவகை உண்டென்றாலும், எல்லாமே மீக்கும் விருப்ப முடையவனுக்குப் பெருந்தூண்டுதலாயிராது. அவற்றுள் குறிப்பிடத்தக்க நலன்களை எடுத்துக்காட்டாகத் தரலாம். நாள் ஒன்றுக்கு ஒரு துட்டு மீப்பவன் அல்லது மீப்ப வனுக்காக, வாழ்க்கைக் காப்புக் கழகங்கள் அளிக்க முன்வரும் நலன்களாவன: 1. இருபத்தாறாம் ஆண்டிலிருந்து தொடங்கி மீத்தால் வாழ்க்கை முழுவதும் நோய் வந்த காலங்களிலெல்லாம் மருந்துச் செலவுக்கு வாரம் பத்து வெள்ளிவரைப் பெறலாம். இச்செலவு உண்மையில் நோயைத் தடுத்து அச்செலவைக் கழகத்துக்கும் குறைப்பது என்பது கவனிக்கத்தக்கது. 2. வாழும் காலம் அல்லது 60ஆம் ஆண்டு வரை இச் சிறுதொகை கொடுப்பதால் 60ஆம் ஆண்டிலோ அல்லது உயிர்பிரியும் எந்தச் சமயத்திலுமோ அவன் குடும்பத்துக்கு 50 பொன் தொகை கொடுக்கப்படும். கழகத் திட்டப்படி காப்பீடு முற்றிய ஒரு வாரம் அல்லது மாதத்தில் காப்பீடு செய்தவன் இறந்தால், காப்பீட்டின் முழுத்தொகையை அவனை இழந்துவிட்டவர் உதவியாகப் பெறலாம் என்பது கவனிக்கத்தக்கது. இதிலிருந்து விளங்கும் மற்றோருண்மை யாதெனில், மீப்பவர் பணம் முழுதும், நீடித்து வாழ்ந்து மீயாதவர் காப்புத் தொகைக்கும் ஈடுசெலுத்துகிறது என்பதே. மேற்கூறிய இரண்டு வகையிலும் காப்பகச்செலவு மீப்பவன் பணத்தின் பயனே என்பது குறிப்பிடத்தக்கது. 3. அறுபத்தைந்து வயதுவரை அத்தொகை சேர்ந்து அதன்பின் வாழும்நாள் முழுதும் ஆண்டுக்கு 26 பொன் அல்லது வாரம் 10 வெள்ளி பெறலாம். 4. பிறந்த நாளிலிருந்து குழந்தையின் சார்பில் தரப்படும் இச் சிறுதொகை அதன் பதினான்காவது ஆண்டில் 20 பொன் தரக்கூடியது. இது கல்விக்கு உதவும். இத்தொகை 25 வயதுவரைத் தரப்பட்டால் அதன்பயனாக 45 பொன் வரும். இது தொழிலுக்கு உதவும். 5. அறுபதிலோ திடீர்மறைவிலோ 100 பொன் வருவாய் தருவதுடன் இடையே வேண்டியபோது செலுத்தியதில் 5இல் 4-பங்கு பெறுமுரிமை இருக்கும். மேற்கூறிய ஒவ்வொன்றும் ஒரு துட்டின் விலை. ஐந்து துட்டுக்கு இவ்வைந்து வாய்ப்புகளுமே ஒரு சேரப் பெறலாம்! காப்புக் கழகத்தார் இப் பணத்தைச் சேமித்துமட்டுமே இத் தொகையைத் தரவில்லை. இத்தொகையை வாணிகத் தொழில் வளர்ச்சியிலீடுபடுத்தியோ அல்லது ஈடுபடுத்துபவர்களிடம் கொடுத்து ஆதாயத்தில் ஒரு பங்காக வட்டி பெற்றோதான் இத்தொகை சேர்த்துக் கொடுக்க முடிகிறது. எனவே, காப்புக் கழகங்களில் பணமீத்து வைப்பது வீட்டில் ஒரு பெட்டியில் போட்டு வைக்கும் மீப்பைவிட ஆற்றல் வாய்ந்தது. அது பிறருக்கும் நலம் செய்து தானும் நலம் பெறுவது. அதுபோல அது நன்மை தீமைகளில் கூட்டுப் பொறுப்புணர்ச்சி அடிப்படையுடையது. நீடித்த வாழ்வுடையவர் பலர் வருவாயின் சிறு பகுதி திரண்டு திடீர்ப்பிரிவு கண்டவர்க்கு உதவுகிறது. இக்காரணங்களால், காப்புக்கழகச் சேமிப்புப் பண்பு ஒரு தன்னலச் சேமவைப்பாக மட்டும் தோன்றினாலும், காப்புக்கழகத் தாரின் திட்டப்படி அது மிகச் சீரிய பொது நல அடிப்படை யிலேயே அமைந்துள்ளது. அதைச் செய்பவன் தன்னையறி யாமலே, தன் முயற்சி ஒன்றுமில்லாமலே, ஒழுக்கமேம்பாடும், பண்புமேம்பாடும் பெறுகிறான்; அவன் தன் குடும்பம் போற்றுகிறான்; குடும்பத் தற்சார்பு காக்கிறான். தன் வாழ்வுக்குப் பின்னும் தன் குடும்பத்துக்கான கடமையாற்றுகிறான். அது சமூகத்துக்கும், சமூகப் பொருளியல் இணைப்புக்கும் வழிவகுக்கிறது. தொழிலாளருக்கு ஒருவர் செய்யக்கூடும் பேருதவி சிக்கனம்பற்றிய அறிவுரை நல்குவதே. ஓர் ஆள் இருந்து சமயம் பார்த்து அறிவுரை நல்குவதினும், எப்போதும் கண்ணிற்பட அவை யெழுதித் தொங்க விடப்படுவதில் வாய்ப்பு மிகுதியுண்டு. அடிக்கடி காணும் பொருளை ஊன்றிக் கவனித்துப் பதியவைப்பதும், தற்செயலாக மன அமைதியும் ஓய்வும் இருக்கும்போது, காண்பதைப் பதிய வைத்துக்கொள்வதும் மனித இயல்பு. பிரிட்டனின் முயற்சியாளருள் முதன்மையுடைய திரு. பாக்ஸன்டேல் (ஆச. க்ஷயஒநனேயடந) என்பவர் இவ்வழியைப் பின்பற்றினார். அவர் தொழிற்சாலை, பண்டகசாலைகள் எங்கும், தொழிலாளர்கள், கணக்காளர்கள் வேலைசெய்யும் இடங்களிலும் உணவு, குளிப்பு முதலியவற்றுக்காகக் கூடுமிடங்களிலும் ``மனம் சோராதே,'' ``உழைப்பே செல்வம்,'' ``வருவாய் முழுதும் செலவழிப்பவன் இரவன்மைக்கு வழி தேடுகிறான்,'' ``கடன்படுகிறவன் அழிவை அழைக்கிறான்,'' ``போன காலம் மீளாது,'' ``உழைப்பு, மட்டான குடி, சிக்கனம் வாழ்வின் நற்பழக்கங்கள்''' என்பன போன்ற நல்லுரை விளக்கங்கள் எழுதித் தொங்க விடப் பட்டிருக்கும். சிலவிடங்களில் இன்னும் விரிவான விளக்கங்கள் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றின் மூலம் தொழிலாளர் வாழ்வை உயர்த்துவதை அவர் தம்மை உயர்த்துவதாகவே கொண்டார். அது தவறுமல்ல. கீழுள்ளவர் உயர்வது, மேனிலையிலி ருப்பவர்களுக்குப் போட்டி என்று பலர் நினைக்கிறார்கள். இது தவறு. அன்போடு உயர்த்துபவர் அவ்வுயர்வால் தாமும் உயராதிருப்பதில்லை. திரு. பாக்ஸன்டேல் நடத்திய தொழிற்கழகத்தின் பெயர் பாக்ஸன்டேல் கழகம் அன்று; பிக்ஃவோர்டு கழகம். அவர் வாழ்க்கை முன்னேற்றமே அவர் பண்பினிமையை எடுத்துக்காட்டுவது. அவர் லங்காஸ்டரில் ஒரு மருத்துவர் புதல்வர். பருத்தித் தொழிலில் ஈடுபட்டு ஒரு பருத்தி வணிகக் கழகத்தின் பேராளாய் லண்டன் மாநகர் வந்தவர். அத்தொழிலின் நெருக்கடி காரணமாக வேறு தொழிலில் ஈடுபட அவர் விரும்பினார். இச்சமயம் திரு. பிக்ஃவோர்டு என்பார் சரக்குப் பெயர்ப்புத் தொழிலில் (க்ஷரளiநேளள டிக ஊயசசநைச) முனைந்திருந்தார். ஆனால், முதலீடு இல்லாமல் அவர் வருந்தினார். திரு. பாக்ஸன்டேல் தம் முதலீடு மட்டும் தந்து உரிமைப் பங்காளியானார். தொழில் செயலாட்சி போதாதிருக்கவே அவர் அதைத் தாமே நடத்தினார். பேரளவில் போக்குவரவு ஊர்திகளைத் தாமே இயக்கி அதைத் திறம்பட நடத்துகையில், இருப்புப்பாதை புதிதாக வந்து நுழைந்தது. அவர் அத்துறையின் பெருஞ் செல்வரான பிரிட்ஜ்வாட்டர்க் கோமகனைப்போல் இப் புது முயற்சியை எதிர்க்காமல், அப் புதுநெறியுடன் தம் போக்குவரவுகளைச் சீரமைத்து இணைத்துப் படிப்படியாகத் தம் போக்குவரவை மாற்றி இருப்பூர்தியைப் போக்குவரவுக் கருவியாகக் கொண்டார். இருப்பூர்தியுடன் இணைந்து சரக்குக்கொண்டு சென்றதால், அவர் தொழிலும் மேம்பட்டது. இருப்பூர்தியிலும் அவர் பங்கு எடுத்து ஆதரவளித்ததால், புதிய தொழில் பங்காளிகள் அவரை முதல் இருப்பூர்திக் கழகத் தலைவராக்கினர். அவர் தம் பிள்ளைகள், தொழிலாளர்கள் நலனுக்காக `விரைந்து செல்வோர்க்குரிய நற்குறிப்புகளும் நல்ல குறிக்கோள்களும்' என்பன போன்ற நூல்கள் எழுதினார். ``ஈட்டும் ஒவ்வொரு வெள்ளியிலும் மூன்று துட்டு மீப்பவர் விரைவில் முன்னேறுவது உறுதி,'' ``பெரும் திறத்தை விட விடாமுயற்சி மிக்க பலன் தரும்,'' ``கடமைவிட்டு இன்பம் நாடுபவன் கடமையையும் இழப்பான், இன்பத்தையும் இழப்பான்,'' ``பிறர் குற்றம் மறைப்பது குற்றவாளியையும் கெடுக்கும், மறைப்பவனையும் கெடுக்கும்,''-இவை இந்நூல்களின் பொன்னுரைகள். 6. பணிமுதல்வரும் பணியாட்களும் ``வற்றி வறளும் உழைப்புற்று, வான்தொழில்தன் உற்றமெய்ந் நோக்கம் அறின்.'' - ஷேக்ஸ்பியர். ``விதிகளின் பிண்டம் அவ்விதிக் கட்டுமோர் ஒவ்வொரு சான்று.'' - ஜார்ஜ் ஹெர்பர்ட் உழைப்பு ஈட்டியதைக் கவனிப்பே பேணவல்லது; கவனிப்பின்றிச் சுறுசுறுப்பாயிருப்பவன் ஒரு கையால் ஈட்டியதை ஒரு கையால் வீசி எறிபவனாகிறான். உடைமை ஈட்டல், முதலீடு திரட்டல் இவை இப்போதே தொழிலா ளரின் ஆற்றலுக்கு உட்பட்டது. சட்டம் அதற்கு வாய்ப்புக்களளித்து, அதிலுள்ள தடைகளையும் அகற்றியுள்ளது. பாதி வாழ்நாளுக்குள் தன்னாண்மையுடைய முதலாளி களாவதற்கு அவர்கட்கு வேண்டியது நல்ல வழக்கமும் தன்னாட்சியுமே -டப்ள்யூ ஆர். கிரேக். தொழிலாளர் குடிமயக்கில்லாமல், சிக்கனமாகவும் செட்டாகவும் வாழும் வகையில் தொழிலாட்சியாளர் எவ்வளவோ உதவி செய்யமுடியும். தொழிலாளர் அடக்குமுறையாட்சியை எதிர்ப்பர்; கருணையாட்சியைக் கூட வெறுப்பர்; ஆயினும் துணையாட்சி அதாவது உதவியை ஏற்கவே செய்வார்கள். தொழிலாளர்மீது இவ்வகையில் தங்களுக்கு உள்ள செல்வாக்கைத் தொழில்முதல்வர் உணர்ந்தால், அவர்கள் தொழிலாளர் களுடன் தம் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது உறுதி. ஏனென்றால், முதலாளிகளுக்கு இதனா, அதன் பயன் மிகப்பெரிது. முதலாளிகள் தொழிலாளர் நல்வாழ்வில் ஒரு சிறிது அக்கறை காட்டுமிடங்களிலெல்லாம் அவர்களுடன் ஒரு சிறிது இன்னுரையாடு மிடங்களிலெல்லாம், முதலாளிகள் மதிப்பும் உயர்ந்து விடுகிறது. உழைப்பில் ஆர்வமும் பெருகுகிறது. சில சின்னஞ்சிறிய முன்கருதல் திட்டங்களால் இவ்வார்வத்தையும், இந் நல்வாழ்வு வாய்ப்பையும் எவ்வளவோ மிகுதிப் படுத்த முடியும். இவற்றுக்குச் சில எடுத்துக்காட்டுக்கள் தருவோம். சனிக்கிழமை நெடுநேரம் வேலை வாங்குமிடத்திலும், சம்பளம் நெடுநேரம் சுணங்கி இரவில் தரப்படுமிடத்திலும் சந்தைக்குச் சென்று வாரச்செலவுக்குரிய பொருள்கள் வாங்க முடியாமல் தொழிலாளர் குடும்பங்கள் அல்லற்படுவதுண்டு. வாரந்தோறும் மீத்துவைக்கும் பழக்கமுடைய தொழி லாளருக்கு இது பெருந்தடையன்று. ஏனெனில் சேமவைப்பில் முன்னெடுத்துப் பின் போட்டுவிடமுடியும். ஆயினும் பொதுவாகவே, முதலாளியும் இவ்வகையில் முன்கூட்டிப் பணம் தரவோ அல்லது வாரக் கணிப்பை மற்றொரு கிழமையில் தரவோ செய்யலாம். இதுபோலவே சம்பளம் கொடுப்பதைப் பொது அருந்தகத்தில் வைத்தோ, அதனருகிலோ கொடுப்பதால், தொழிலாளரின் பணம் வீடுபோய்ச் சேருமுன் அவர்கள் இயற்கைக் குடிக்கவர்ச்சி அதில் ஒரு பகுதியைக் கரைத்து விடக்கூடும். மேற்கூறிய சிறு எச்சரிக்கைகள் தவிர, வேறு ஆக்க வகையிலும் பணிமுதல்வர் தொழிலாளருக்கு உதவக் கூடும். தொழிலாளர், அவர்கள் பெண்கள், சிறுவர், சிறுமியர் யாவரும் தனித்தனி சிறு பொருள் மீத்துவைக்கும் படியான சிறுசிறு மீப்பகங்களை உண்டுபண்ணி, அவர்களிடம் மீத்துவைத்தல் போன்ற நல்ல பழக்கங்களை உண்டு பண்ணமுடியும். அவரவர் மீப்பகத்தின் கணக்குவழக்கு நடைமுறைகளில் அவ்வத்துறை யினரையே பழக்குவதும் நல்ல பலன் தரும். சிக்கனச் செலவுமுறை, பெரும் பயனளிக்கும் மாதிரி நற்செலவுமுறை ஆகியவற்றின் அறிவை அவர்களிடையே பரப்பலாம். இவற்றைப் பெருந்தலையீடு இன்றித் தொழிலாளர், முக்கியத் தொழிலாளரிடையே செய்வதன்மூலம் பல பெரிய முதல்வர்கள் தம் பணியாளரையும் உயர்த்தித் தம் நிலையத்தையும் வளப்படுத்தியுள்ளனர். உதவி, ஒத்துழைப்பு ஆகியவற்றைவிட, பணி முதல்வர்களிடம் ஒத்துணர்வு மிகவும் முக்கியமானது. உண்மையில் உதவி, ஒத்துழைப்பு ஆகிய இரண்டும் ஒத்துணர்வில்லாத இடத்தில் தலையீடாகவே கருதப்படவேண்டி யிருக்கும். அவ்விரண்டு துறைக்கும் ஒத்துணர்வு இன்றியமையா அடிப்படை ஆகும். பணிமுதல்வர், பணியாளர் ஆகியவரிடையே ஒத்துழைப்பின்மை, உதவி யின்மை ஆகியவற்றைவிட, ஒத்துணர்வின்மையே பெரிதும் எங்கும் காணப் படும் தீமை என்பது குறிப்பிடத்தக்கது. பணிமுதல்வரும் தொழிலாளரும் ஒரு நிலையத்தின் இரு கூறுகள் மட்டுமல்லர். இருசாராரும் சமூகத்திலேயே மிகுதி தொடர்பற்ற இரு வேறு வகுப்பினர் ஆவர். வேறு வேறு வகுப்புக்களிடையே ஒத்துணர்வு ஏற்படுவது எளிதல்ல. தோற்றம், நடை, உடை வேறுபாடுகளே மன வேறுபாட்டை உண்டுபண்ணப் போதியன. சொல், தொனி ஆகியவற்றில் எண்ணிச் செய்யாத சிறு செயல்கள் கூட வகுப்புக் கடந்து வகுப்பில் புகும்போது, பெருத்த மன வேறுபாட்டையும் சிக்கல்களையும் விளைவிக்கும். வகுப்புக்களிடையே தொடர்பு குன்றி வகுப்புக்கள் வேறுபட்டு மாறுபட்டு வாழும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இத்தொல்லை இன்னும் மிகுதி. ``ஒருவருடன் ஒருவர் அன்புடையவராவீர்களாக; உங்கள் அயலாரை நேசிப்பீர்களாக,'' முதலிய விவிலியக் கட்டளைகள் பார்வைக்கு எளியவை போல் தோற்றுகின்றன. ஆயினும், இச்சிறு கட்டளைகள் நிறைவேற்றப்பட்டிருந் தால், உலகில் முன்னேற்றத்துக்குத் தடையான எத்தனையோ சிக்கல்கள் தீர்க்கப்பட்டிருக்கும். குடும்பத்துக்குள்ளும் தனி மனிதரிடத்திலுமே நிறை வேற்றப்படாத இக் கட்டளை, பல்வேறு வகுப்புக்களாகப் பிளவுபட்டுச் சிதறுண்டு கிடக்கும் மனித சமூகத்தில் எப்படி முழுவதும் பின்பற்றப்பட முடியும்? முதலாளி தொழிலாளிக ளிடையில் இவ்வகுப்பு வேறுபாடு கிட்டத்தட்ட ஒரு நேர் எதிர் முரண்பாடாக வளர்ந்துள்ளது. அடிக்கடி ஒருவர் தம் நலனுடன் மற்றவர் நலன் பிணைக்கப்பட்டுள்ளது என்று நினைக்கத் தவறுகின்றனர் என்பது மட்டுமன்று; ஒருவர் நலன் மற்றவர் நலனுக்கு ஏறுமாறானது என்றுகூட எண்ணத்தொடங்கி விடுகின்றனர். தொழிலாளர் ஊதியக் குறைவே, முதலாளி ஆதாயம்; முதலாளி ஆதாயக் குறைவே தொழிலாளி ஊதிய மிகுதி என்று கருதிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது முதலாளி வளர்ச்சி முழுதும் சுரண்டலடிப்படையானதே என்று பலர் எண்ணுகிறார்கள். அவர்கள் ஊதியத்தின் ஒரு பகுதி இங்ஙனம் சுரண்டலா யமையக்கூடும் என்பது உண்மையே. திறமையற்ற முதலாளிகளும் அறிவு குறைந்த முதலாளி இயந்திரங்களும் திறமையற்ற இச் சுரண்டல் முறையையே நம்பியிருப்பதும் உண்மையே. ஆனால், சுரண்டல் முறை தற்கால ஆதாயம் தரலாம்; நிலையான ஆதாயம் தராது. ஆதாயத்துக்குச் சுரண்டுதலை ஆதாரமாகக்கொள்ளும் முதலாளியும், முதலாளித்துவமும் பிற முதலாளிகளின் சுரண்டல் போட்டி ஆகியவற்றுக்கு ஆளாய் அழிவதும், அழிவை வரவழைப்பதும் உறுதி. இத்தகைய முதலாளிகளின் குழுப் போட்டியில் வரவரக் குறைவுற்று அவ்வினம் அழிவுக்குப் படிப்படியாகச் செல்லும். ஆனால், தொழிலாளிகளுடன் ஒத்துணர்வு, ஒத்துழைப்பு, அவர்களுக்கு உதவி செய்தல் ஆகியவற்றின் மூலம் ஆதாயம் பெருக்கி, அவ்வாதாய உயர்வில் தொழிலாளிக்கும் பங்கு தரும் முதலாளி அழியமாட்டான். அவன் கீழுள்ள தொழிலாளிகள் வாழ்க்கை வளம் பெறுவதுடன், அவர்களைப் படிப்படியாகச் சிறு முதலாளிகளாக்கி, அதே சமயம் அவன் பெருமுதலாளி யாகவும் வளர்வான். தொழிலாளி நலம் பேணும் இத்தகைய முதலாளிகளின் குழு இங்ஙனம் பெருகுவதால், இத்தகைய முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து நாட்டு வளர்ச்சி, உலக வளர்ச்சி ஆகிறது. ஒத்துழைப்பு, உதவி, ஒத்துணர்வு ஆகியவற்றைவிட இரக்கம், ஈகை ஆகிய பண்புகளைப் பலர் உயர்வுடையவை என்று கருதுகின்றனர். முந்திய பண்புகளில் கொடுப்பவன் இழப்பது சிறிது. பிந்தியவற்றில் மிகுதி. இதுவே இப்பண்புகளை உயர்வுடையவை யாக்குவதாகப் பலர் எண்ணக் காரணம். ஆனால், பண்பின் உயர்வு அதை உடையவரின் இழப்புக்குச் சரியான தென்று கருதுவது போன்ற பேதைமை பிறிதில்லை. கொடுப்பவன் இழப்பதே உயர் பண்பு என்பது உண்மையாகக் கூடுமானால், நன்றியுடைய நல்லாருக்குக் கொடுப்பதினும் நன்றிகெட்ட தீயர்க்கும், குடியர்க்கும், கொலைகாரருக்கும் கொடுப்பது உயர்பண்பா யமையவேண்டும். அல்லது மனிதருக்குக் கொடுப்பதினும் குப்பையில் கொட்டுவது மேம்பட்டதாக வேண்டும். உண்மையில் கொடைப் பண்பின் உயர்வு கொடுப்பவர் இழப்பினால் மிகுதிப்படுமாயினும், அதனைப் பொறுத்ததன்று; பெறுபவர் நலத்தைப் பொறுத்ததே. பெறுபவர், கொடுப்பவர் இருவர் நலங்களையும் பெருக்கக் கூடுமானால் அது இன்னும் உயர்வுடையதே என்பதில் தடை யில்லை. இரக்கம், ஈகை ஆகியவற்றைவிட ஒத்துழைப்பு, உதவி, ஒத்துணர்வு ஆகியவை இத்தகைய உயர்வுடையவை. இரக்கமும் ஈகையும் உயர்ந்தோர் தாழ்ந்தோரிடம் காட்டுபவை; உள்ளத்தில் உயர்வுணர்ச்சி அல்லது செருக்குடன் காட்டப்படுபவை. ஒத்துழைப்பு, உதவி, ஒத்துணர்வு ஆகிய பண்புகளோ சமத்துவ அடிப்படையிலும், அன்பு அடிப்படை யிலும், மனிதருக்கு மனிதர், நண்பருக்கு நண்பராகக் காட்டப் படுவது. ஆகவே, சமயத்துறையினரும் ஒழுக்கத் துறையினரும் இப் பண்புகளை அத்தனை உயர்வாகக் கொள்ளாதுபோனால், அது அத்துறையினர் ஆழ்ந்த அனுபவ அறிவின் குறைவேயன்றி வேறன்று. மனித நாகரிகமுணர்ந்தோர் நாகரிகத்தின் அடிப் படைப் பண்புகளாக இவற்றைக் கொள்வது உறுதி; அவை சமயம், ஒழுக்கம் ஆகிய இரண்டுக்கும் மேம்பட்ட உயர் ஆன்மீகப் பண்புகளே யாகும். ஈகையினாலும் இரக்கத்தினாலும் உலகில் தீமைகள், வறுமை குறையமாட்டா; கூடவே வழியுண்டு. ஒத்துணர்வும் அன்புணர்ச்சியுமற்ற இப்பண்புகள் உண்மையில் ஏழைகளையோ, நல்லவர்களையோ சென்று எட்டுவதுகூட அரிது. வரையாது கொடுப்பவனிடம் ஏழையாக நடிக்கும் போலிகளே வந்து பொருள் தண்டிப் போவர். இரக்க உணர்ச்சிமிக்கவனிடம் நல்லோராக நடிக்கும் தீயோர்களும், அடிமை மனப் பான்மை யுடைய போலிகளுமே வந்து உதவி என்ற பெயரால் தம் புன்னலம் பெருக்கிப் போவர். இப் பண்புகள் உண்மையில் வகுப்பை வகுப்பு அடக்கியாளவும், வகுப்பு வேறுபாட்டை மிகுதியாக்கவும், உயர்வகுப்பு தாழ்வகுப்பு ஆகியவற்றின் இடையிலுள்ள தொல்லையைப் பெருக்கும் ஒரு நடுத்தர வகுப்பினரை உண்டுபண்ணவும் பயன்படுகிறதே யன்றி வேறல்ல. உலகின் பழைய நற்சமயங்கள் பலவும் இரக்கத்தையும் ஈகையை யும் நல்ல பண்புகளாகவும், கடவுட் பண்புகளாகவும் மதித்ததாலேயே மனித நாகரிகத்தின் அடிச்சேற்றில் அவை சிக்கித் தவிக்கின்றன என்னலாம். பணிமுதல்வர், பணியாளர் தொடர்பு ஆண்டான் அடிமைத் தொடர்பு என்று கருதப்படுவதைவிட, பொருளியல் போராட்டத்திடையே இரண்டு எதிரெதிர் ஆற்றல்கள் என்று கருதப்படுவதைவிட, தந்தை பிள்ளை அல்லது மூத்த இளைய உடன்பிறந்தார் போன்ற சமத்துவ அன்புறவு முறை என்று கொள்வது சால்புடையது. முன் பிறந்த தமையன் பின் பிறந்த தம்பியுடன் போட்டியிட நாடமாட்டான். அவனைக் கைதூக்கி விடவே நாடுவான். அங்ஙனம் கைதூக்கி விடுவதால்தான் அண்ணன், மற்றவன் தம்பி என்ற தொடர்பு என்றும் போய்விடவும் செய்யாது. இம்முறையிலேயே பணிமுதல்வர் தம் பணியில் பணியாளர் ஒத்துழைப்பைப் பெற்று அதே சமயம் அவனுடன் ஒத்துணர்வு காட்டி, அவன் வளர்ச்சியிலும் ஒத்துழைத்து உதவி நாடவேண்டியவன் ஆகிறான். வள்ளல்களின் வள்ளன்மை பணத்தில் தொடங்கிப் பணத்தினாலேயே முடிந்துவிடுகிறது. அவர்கள் உதவியில் தோழமை இல்லை. உயிரற்ற அவர்கள் பணம் வாழ்வை அளிக்காது. ஏனெனில் வாழ்வை அளிக்க வல்லது பணம் அன்று; பணத்தை ஈட்டிக் காத்துப் பயன்படுத்தவல்ல பயிற்சியே நிறை அளிக்கும். தொழில் தொடர்பு எல்லாம் பணத் தொடர்புதான் என்று பல தொழில்முதல்வரும் தொழிலாளரும் எண்ணுவதுண்டு. இத்தகையோர் வாழ்க்கை நெறிதான் தனக்கென வாழ்வது என்பதே. யார் கெட்டால் என்ன, வாழ்ந்தாலென்ன? நான் வாழ வகை தேடினால் போதும் என்பது அவர்கள் வாய் பேசாத உள் நோக்கம். குறுகிய முதலாளித்துவத்தின் இக் குறுகிய தன்னல நோக்கு எவ்வளவு தீங்கானது என்பதைக் காட்டும் நிகழ்ச்சி ஒன்று குறிக்கப்பட்டுள்ளது. ஒரு விடுதியில் ஒருவன் ஆழ்துயிலில் இருந்தான். தெருக் கோடியில் இரவில் நெருப்பு மூண்டுவிட்டது என்று கூவி எழுப்பினான். ``நெருப்பு அடுத்த வீட்டுக்கு வரட்டும். அது வரை என் தூக்கத்தைக் கலைக்காதே,'' என்று அந்தத் தன்காரியக் கயவன் கூறினானாம். குறுகிய தன்னலப் போக்கு இதைவிட உயர் பண்புடையதுமல்ல; இதைவிட அறிவுடையது மல்ல. மற்றுமோர் எடுத்துக்காட்டு இது: ஒரு பணிமுதல்வர் தம் பணியாட்களை நோக்கி, ``உங்களால் முடிந்தமட்டும் என்னிடம் பொருள்பெற நீங்கள் முயற்சி செய்யுங்கள்; என்னால் முடிந்தமட்டும் நான் உங்களிடம் வேலைவாங்கிக் கொள்கிறேன்,'' என்றாராம். இந்த வாசகத்தி னூடாக உள்ள உட்பொருளை அவர் உன்னிப் பார்த்திருந்தால், இன்னும் வேடிக்கையாயிருக்கும். ``என்னால் கூடிய மட்டும் குறைந்த கைப்பொருளை நான் தர முயற்சிசெய்வேன். உங்களால் முடிந்தமட்டும் குறைந்த வேலையை நீங்கள் முயலலாம்.'' இதன் பயன் இருசாராருக்கும் உலக நலனுக்கும் தீங்கானது என்று கூறத் தேவையில்லை. ஆயினும், முதலாளித் துவப் பொருளியலறிஞர் இவ்வளவு பச்சையாகக் கூறாவிட்டாலும், உண்மையில் இதே பொருளில் தான் தங்கள் அடிப்படைப் பொருளியல் நீதி வகுத்துள்ளனர் என்னலாம். ஏனெனில், தேவைக்கும் விளைவிப்புக்கும் உள்ள விழுக்காடே ஊதியத்தையும் விலையையும் உறுதிப்படுத்துகிறது என்று அவர்கள் கொள்ளுகின்றனர். இத் திட்டத்தில் தொழிலாளர் தொகை மிகுந்தோறும் அவர்கள் மதிப்பு அஃதாவது ஊதியம் குறைகிறது. மனிதர் தொகை மிகுந்தோறும் மனித வாழ்வின் மதிப்பும் குறைந்து விடுகிறது. மலிந்த பொருள் விலை குறைவதுபோல மனிதரும் பெருக்கத்தால் மதிப்பிழப்பர் என்ற இந் நிலை விரும்பத்தக்க நாகரிக நிலை அன்று என்று கூறத் தேவையில்லை. பணிமுதல்வர், பணியாளர் நோக்கமும் நலனும் வேறு படவே, இரண்டு வேறுபட்ட வகுப்புக்கள் தோன்றுகின்றன. இரண்டிற்கும் பொதுநோக்கம் இல்லாமல் போகிறது. பொது நோக்கமும் அன்பும் இல்லாத பங்காளித்துவ முறை ஒற்றுமையில்லாது உட்பகையும் பூசலும் உள்ள குடும்பம் போல் சீரழிவுறுவது உறுதி. பங்காளிகளான வகுப்புக்களிடையே போராட்ட மனப்பான்மை எழுகிறது. இதுவே வேலைநிறுத்தம் என்ற பெயருடன் முளைவிடுகிறது. பிரெஸ்டன், நியூகாசில், லண்டன், தென் வேல்ஸ் வேலை நிறுத்தங்கள் போன்ற கலப்பற்ற அழிவுப் போராட்டங்கள் இவற்றின் நேர் விளைவுகள் ஆகின்றன. மேற்கூறிய தீமைகள் எல்லாவற்றையும் போட்டியின் இயற்கை விளைவுகள் என்றும், விலக்கக்கூடாத தீமைகள் என்றும் பலர் தட்டிக்கழிக்க எண்ணுகிறார்கள். அவர்களுக்குப் போட்டி ஒரு நல்ல சாக்குப்போக்கா யமைகிறது என்பதிலும் எல்லாக் குறைகளையும் மூட்டை மூட்டையாகச் சுமத்தவல்ல பரந்த முதுகுடைய கழுதையாய் அது அமைகிறது என்பதிலும் ஐயமில்லை. ஆனால், போட்டி எப்போதும் ஒத்துணர்வற்றதாய், பகைமையுடையதாய், குறுகிய தன்னலமும் பொறுப்புணர்ச்சியும் உடையதாய் இருக்கவேண்டும் என்பதில்லை; நட்பு அடிப்படையிலும் இருக்கமுடியும். தன்னல அடிப்படையில்தான் இருக்கவேண்டுமென்பதுமில்லை; பொதுநல அடிப்படையிலும் அது இருக்கமுடியும். ஆதாய அடிப்படையில்தான் இருக்க வேண்டுமென்ப தில்லை; வேலைத்தரத்தின் அடிப்படை யிலும் பொருள் நேர்த்தியின் அடிப்படையிலும் இருக்கமுடியும். தன்னல அடிப்படையிலும் வெறுப்பு அடிப்படையிலும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; அன்பு அடிப்படையில், விட்டுக் கொடுப்பு அடிப்படையில், நேசபாச அடிப்படையிலேயே இருக்கமுடியும். போட்டி, போராட்டம் என்ற சொற்கள் தம் தனி இயல்பில் தீய பண்புகளல்ல. ஏனெனில் வாழ்க்கை முழுவதுமே ஒரு போராட்டம்தான்; நாகரிகமே ஒரு போட்டிதான். போராட்டம் இயற்கையோடு, இயற்கையின் செல்வங்களை மனித வகுப்பின் வழக்காட்சிக்காக உச்ச அளவில் மிகுதிப்படுத்துவதற்காக. போட்டி மனிதருக்கிடையே, உச்ச அளவு பங்கு யார் உதவு கிறார்கள் என்று காண்பதன் மூலம் தனி மனிதரும் மனித முயற்சியின் உச்ச அளவை எட்டி, மனித இனமும் பொதுவே தன் உச்ச அளவுத் தகுதியைச் சென்றடைவதற்காக இவ்வுயர் நோக்கங்களை மனிதன் மறவாதிருக்கும்வரை போராட்டங்களும் போட்டிகளும் விலக்கத் தக்கனவல்ல, மேற்கொள்ளத் தக்கவை; வெறுக்கத்தக்கவையல்ல, விரும்பத் தக்கவை; தடுக்கத்தக்க வையல்ல; வளர்க்கத்தக்கவை இந் நோக்கங்கள் மறக்கப்பட்டு மனிதன் விலங்கு நிலையிலும் கீழ்ப்படும்போதுதான் அப் பண்புகள் தீய பண்புகளாகின்றன. போட்டியிடுபவர்களும் போராடுகிறவர்களும் முதலாளிகள் மட்டுமல்ல; தொழிலாளிகளும் மற்ற எல்லா வகுப்பினரும்தாம் போட்டி யிலும் போராட்டத் திலும் முனைகிறார்கள். முதலாளி ஆதாயத்துக்காகப் போட்டியிடுகிறான் என்றால், தொழிலாளி தன் ஊதியம் பெருக்குவதற்காகப் போட்டியிடுகிறான். இது மட்டுமா? அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வி ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் ஆகிய யாருமே போட்டியிடத்தான் செய்கின்றனர். தத்தம் துறையில் உச்ச அளவு வெற்றி அல்லது புகழ் அல்லது வருவாய் பெறுவதற்காக! இங்கே வருவாய் முதல் நோக்கமாகவோ முதன்மை நோக்கமாகவோ கூட இருப்பதில்லை. ஏனெனில், வருவாய் மற்ற இரண்டையும் வளர்க்காது. மற்ற இரண்டும் தற்காலிகமாக வருவாய் தராது போயினும் நிலையாக அதைப் பேணி வளர்க்கும் தன்மை யுடையன. தொழில் துறையிலும்கூட ஆதாய நோக்கும் ஊதியநோக்கும் நிலையான முதல்நோக்கோ, முதன்மைநோக்கோ ஆகமாட்டா. வெற்றி, புகழ், சமூகப்பணி ஆகிய நோக்குக்கள் உயர் நோக்குக்கள். ஏனெனில், அவை ஆதாயத்துக்கு அடிப்படையான சமூகத்தை உயர்த்திப் பின் ஆதாயத்தை நிலையாக உயர்த்துகின்றன. நாகரிகத்துக்கும் மனித வளர்ச்சிக்கும் அடிப்படைப் பண்புகளான போட்டி, போராட்ட உணர்ச்சியைப் பழித்து அவற்றின் தலையில் மற்றத் தீமைகளையெல்லாம் போடுபவர், போட்டியை ஒழித்துவிடவும் கனவு காணலாம். ஆனால், போட்டியை ஒழித்துவிட்டால் சமூகம் அழியும்; நாகரிகம் வளர்ச்சி குன்றும். மனித இனம் படிப்படியாக விலங்கு நிலைக்குப் பின்னோக்கிச் செல்லும். இந் நிலையை வற்புறுத்தினால் பிறப்படிப்படையான வகுப்புகள் தோன்றிவிடும். இந்தியாவில் பிறப்படிப்படையான வகுப்புக்கள் பின்னும் சீர்கெட்டுச் சாதிமுறையாகியுள்ளன. உலக சமுதாயம் போட்டியும் நேர்மையும் இல்லாவிட்டால், எப்படி வருங்காலத்தில் கெட்டுவிடக் கூடும் என்பதை இந்தியாவின் இவ் விலங்குநிலை நாகரிகம் எச்சரித்துக் காட்டுகிறது. சாதிமுறை எந்த நாட்டிலேனும் தோன்றி விட்டால், அது அதன்பின் மனித உலகின் ஒரு நாடாயிராது; மனித சமுதாயத்தை அழிக்க வல்ல கோடரிக்காம்பாய் நிலவும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள பழித் தீங்கு உலகெங்கும் பரந்துவிடாமலிருக்க வேண்டுமானால், அன்பு, நேர்மை, சரிநிகர் வாய்ப்புக் கூட்டுழைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலமைந்த போட்டி பெருகவேண்டும். உலகில் இந்த நிலை பெருகுமானால், இந்திய நாகரிகம்கூடத் தன் அழிவுப் பாதையிலிருந்து திருந்தி மனித நாகரிகம் நோக்கி முன்னேற வழியுண்டு. போட்டியும் போராட்டமும் தடங்கல்களைக் கடக்கும் வகையில் மனிதனின் வலுவை வளர்க்கமுடியும். இயற்கையை மனிதன் வெல்லும் வழி இதுவே. இயற்கை மனிதனின் பகைவன் அல்ல. மனிதனுக்கு வெற்றியைத் தரும் வகைதுறையாக அதுவே மனிதனிடம் இப் பண்பை வளர்த்துள்ளது. உயிர் வளர்ச்சியில் இயற்கை மேற்கொள்ளும் முறை இதுவே. இம்முறை யின் பயனாகவே உயிர்களில் உயிராக, விலங்கினங்களில் விலங்கினமாக இருந்த மனிதன், மனிதனாய், மனித நாகரிகம் வளர்த்துள்ளான். இதன் மூலமாகவே அவன் இயற்கையின் செல்வனாய், இயற்கையுடன் இணைந்து வளரக் கற்றுக்கொண்டு வருகிறான். மனிதனின் சமூகச் சட்ட திட்டங்கள், அரசியல் அமைப்புக்கள் ஆகியவை இயற்கை யமைதியை எதிர்த்த வளர்ச்சிகளாயினும், அவையும் இயற்கைக்கு உட்பட்டு இயற்கை யடிப்படையிலேயே அமைந்து, இயற்கையை வெல்லவும் வென்ற வெற்றியை நிலையாகப் பேணிக் காக்கவும் மனித இனத்துக்கு உதவும் ஒரு துணை இயற்கையாகவே அமைந்துள்ளன. மனிதன் பழக்கவழக்கங்கள் அவனுக்குத் துணை இயற்கையாய் விடுகின்றன (ழயbவை ளை ளநஉடினே யேவரசந) என்ற பழமொழி இதனாலேயே எழுந்துள்ளது. இயற்கையுடன் போட்டி யிட்டுப் பெற்ற இந் நற்பழக்கவழக்கங்கள், சட்டதிட்ட அமைப்புக்கள், நிலையங்கள், முறைகள் ஆகியவை உண்மையில் அவனுக்கு இயற்கையின் குறை நிரப்பும் நிறை மகுடமாகவே இயங்குகின்றன. இயற்கையுடன் போட்டி இறுதியில் அதனுடன் கூட்டுழைப்பாயியங்குவது போலவே, மனிதருள் ஒருவருடன் ஒருவர், வகுப்புடன் வகுப்பு, நாட்டுடன் நாடு இயங்கும் போட்டியும் இறுதியில் ஒத்துழைப்பாய் அமையத்தக்கது. இதற்கு ஒத்துணர்வு தொடக்கத்திலிருந்தே உதவிதரும் உயிர் நிலைப் பண்பு. குடும்பப்பற்று, வகுப்புப்பற்று, சமூகப்பற்று, நாட்டுப்பற்று, உலகப்பற்று ஆகிய யாவும் இவ்வொத்துணர் வடிப்படையாய் எழுந்து படிப்படியாக விரிந்து செல்லும் அன்புநோக்கின் பலதரப் படிகளேயாகும். ஓடுகிற நீர் தேக்கப்பட்டால், அது அணை அளாவி உயரும். அதன் ஆற்றல் பெருகும். ஓடுகிற நீர் செய்ய முடியாத அருஞ்செயல்களை அது செய்யமுடியும். அது மட்டுமல்ல. விரும்பிய, திட்டமிட்ட வகையில் அது தொழிலாற்றச் செய்யவும் முடியும். உயிர் இயற்கையின் ஓட்டத்தை இதே வகையில் தேக்கிப் பயன் காண்கிறது. உயிர் உயிரினவிலங்காய், மனிதனாய், சமூகமாய் இதே வகையில் இயற்கையின் ஆற்றலை இயற்கை கடந்த ஆற்றலாய் வளர்க்கிறது. சோம்பல் இயற்கையின் முதலாற்றல். உழைப்பு அதனை வெல்லும் இயற்கையின் துணையாற்றல். இருள் இயற்கையின் முதலாற்றல். ஒளி அதனை வெல்லும் துணையாற்றல். கொடுமை, தன்னலம், அறிவு இயற்கை யின் முதல் ஆற்றல் பண்புகள். அன்பு, பிறர் நலம், ஆக்கம் இவற்றின் அடிப்படையிலிருந்தே வளர்ந்து இவற்றை அடக்கியாளும் இயற்கையின் உயர்ந்த துணை ஆற்றல்கள்.* 1உயிரிலா உலகின் மாறுபாடற்ற குருட்டமைதிகள் இயற்கையின் முதலாற்றல் சார்ந்தவை; அவற்றின் கூட்டிணைப் பால் ஏற்படும் இயங்குகருவிகள், பொறிகள் மனிதன் அமைத்த துணையாற்றல்கள். வல்லமைப் போட்டி இயற்கையின் ஆட்சி; அன்புப் போட்டி, ஒத்துழைப்பு, சாவு கடந்து தொடர்புண்டு பண்ணிக் கால இட எல்லை தாண்டவல்ல நாகரிகக் கருவிகள். நிலையங்கள், அமைப்புக்கள் மனிதன் அமைத்த துணை இயற்கையாற்றல்கள். இவையனைத்தும் மனிதன் உழைப்பால், அறிவால், கூட்டுமுயற்சியால், தலைமுறைகடந்த ஒத்துணர்வால் அமைவதாகும். மனித சமுதாயம் இயற்கையை நிறைவுபடுத்துகிறதாயினும், அது இயற்கையால் ஒரே ஒரு வகையில் ஆட்கொண்டு இயக்கப்பெறுகிறது. அது உழைப்பு ஒன்றிலேயே அடங்கியுள்ளது. உழைப்பின்றி உடல் இயங்காது; வளராது; அறிவு உண்டாகாது. இயற்கையை மனிதன் முற்றிலும் வெல்லவில்லை என்று காட்டும் சின்னமும், இன்னும் இயற்கை யுடன் நேரடியாகப் போராடுபவன் தனி மனிதனே என்று காட்டும் குறியீடும் உழைப்பேயாகும். உழைப்பைப் புறக்கணித்த சமூகம் பொரு ளீட்டுதலை மறந்த பொருள்நிலையம் போல விரைவில் அழியும். உழைப்பின் மூலம் இயற்கையினின்று வந்த செல்வங்களை, உழைப்பே பேணவும் வளர்க்கவும் முடியும். உழைப்பில்லாத அறிவும் செல்வமும் கலையும் ஈட்டாத செல்வம்போல் அழியும். பேணப் பெறாது; வளராது. கருவிகள், பொறிகள், இயந்திரங்கள் ஆகியவை உழைப்பை அழிக்க வில்லை. உழைப்பின் பயனைப் பெருக்குவது மட்டுமே அவற்றால் ஏற்படும் பயன். முன் நேரடியாக உழைத்தவன் இப்போது கருவிகளி னுதவியுடன் அல்லது இயந்திர உதவியுடன் உழைக்கிறான். இயந்திரம் இயற்கையுடன் போராடுகிற தென்றால், இயந்திரத்தை இயக்க மனிதன் போராடியாக வேண்டும். அவன் உழைப்புப் பெரும்பயன் பெறுவது நோக்கி, அவன் உழைப்பைச் சிறிது குறைத்துக்கொள்ளலாம். ஓய்வு தந்தும் நல்லுரையைத் தந்தும் உழைப்பு ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளலாம். சோம்பியிருக்கவோ, மட்டற்ற அளவு உழைப்பைக் குறைக்கவோ செய்தால் இயற்கை அவனைத் தண்டிக்காமலிராது. உடல் வளர்ச்சி அதனால் குன்றும்; வாழ்நாள் குன்றும்; அறிவு வலுவிழக்கும். ஆகவே இயந்திரத்தினால் உழைப்பில் கிடைத்த உழைப்பாதாயத்தை மனிதன் ஓரளவுக்கு ஓய்வு ஆகப் பயன்படுத்தலாமானாலும், வளர்ச்சிக்குரிய புதிய உழைப்பு களிலும், அவ்வாதாயத்தை ஈடுபடுத்தி யாகவேண்டும். அவன் பழைய தேவைகளை இயந்திரங்கள் எளிதில் நிறை வேற்றினால், அவன் உழைப்பை ஈடுசெய்வதற்கான புதிய தேவைகளை உண்டுபண்ணியே ஆகவேண்டும். இப்புதிய தேவைகளையும், அவற்றின் விளைவுகளையுமே நாம் நாகரிகம் என்கிறோம். இதுவே மனித சமூகம் தன் வாழ்வில் பொது இன நலத்துக்காக மீத்துவைக்கும் சேமவைப்பு ஆகும். முதலாளிகள் தொழிலாளிகளுக்கு உதவுவதன் மூலம் முதலாளி தொழிலாளி என்ற இரண்டு வகுப்புக்கும் பொதுவான மனித இனத்தின் வளர்ச்சிக்குரிய சேமவைப்பும் செல்வ ஆற்றலும் பெருகுகின்றன. மனித இனம் உழைப்பைக் குறைத்து விளைபொருளைப் பெருக்குவதன்மூலம் மீத்த உழைப்பை வாழ்க்கை வளத்துக்கும் சேமவைப்புக்கும் ஈடுபடுத்த முடியும். இவ்வகையில் தொழிலாளி முதலாளிகளிடையே தன்னலப் போட்டி கிடையாது. அது இருவரையும் வளர்க்கத்தக்க அன்புப் போட்டிக்கு, அஃதாவது கூட்டுழைப்புக்கு உரியது. மேலும் போட்டியுணர்ச்சி மனிதன் அடிப்படையுணர்ச்சி யாயினும், அவனுக்கு அது ஒன்றே தனி உணர்ச்சி அல்ல. அது விலங்கு நிலையிலிருந்தே அவனிடம் அமைந்த உணர்ச்சி. அத்துடன் பேரவா, தன் மதிப்பு, மான உணர்ச்சி, அன்பு, தன்மறுப்பு முதலிய எத்தனையோ பண்புகள் அவன் வாழ்வையும் உள்ளத்தையும் உயர்த்துகின்றன. இவை தொழிலாளர், பணிமுதல்வர் வேறுபாட்டை அடிப்படையிலிருந்தே வேறுபடுத்துவன. மேலும் உழைப்பின் மரபைத் தொழிலாளி விட்டு விட்டால் எவ்வளவு கேடோ, அதைவிட அதை விட்டுவிட்ட முதலாளிக் குள்ள கேடு குறைவன்று. பட்டினியால் தொழிலாளி தேய்வதுண் டென்றால், நோயால், வலுவின்மையால், அறிவு, வீரம் ஆகிய பண்பின்மை யால், குறுகிய வாழ்வால் முதலாளி தேய்வது அதனினும் பெருகிய வழக்கு. ஆகவே, தொழிலாளியின் தற்காலிக நலத்துக்கு முதலாளியின் உதவியும் தொடர்பும் உதவுவது போலவே, முதலாளியின் நிலைத்த நீடித்த நலங்களுக்குத் தொழிலாளியின் தொடர்பு இன்றியமையாததாகும். மனித இனத்தில் உழைப்பின்மையால் உறுதியிழந்த முதலாளிவகுப்பு மக்கள் தொழிலாளி வகுப்பு, அறிவு வகுப்பு ஆகியவற்றுடன் தங்குதடையின்றிக் கலப்பதனாலேயே இழந்து வரும் ஊக்கத்தையும் உறுதியையும் நலன்களையும் ஈடுசெய்யமுடியும். மேற்கூறியவற்றால் பணியாளர், பணிமுதல்வர் தொடர்பு ஆண் பெண் தொடர்பு, இளைஞர் முதியோர் தொடர்பு ஆகியவை போலக் கூட்டு நிறைவுடையதன்றித் தனி நிறைவோ எதிரெதிர் நிறைவோ உடையதன்று என்று காணலாம். 7. பெருஞ்செலவுப் பெரியார்கள் கடன்பட உடம்படேல்! கருதும் இருபதில் இடம்பட வாழாதார் எழுபதில் வாழ்வரோ! மடம்படத் தம்மை இன்பத்திற் கீவார் திடம்படார் மீட்பதற்கே. - ஜார்ஜ் ஹெர்பர்ட் நூறாண்டு வருந்தினாலும் ஒரு காசு கடன் தீராது. - ஃபிரஞ்சுப் பழமொழி. கைப்பொருள் மதிப்பே மதிப்பு; கடன் பொருள் மதிப்பு அவமதிப்புத் தரும் -ஜெரால்டு. கணக்கில்லாதான் வாழ்வு கடும்புயல். பொலோன் நகர் செல்லுவோன் இதைக் கருத்தில் கொள்ளவேண்டும், கணக்கறிவார் வாழும் நகரம் அது -சிட்னி ஸ்மித். கடன் ஈன்றுதரும் பழிகள் எத்தனை? பொய்கள், இளிவரல்கள், மானக்கேடுகள், கவலைகள், மாறாட்டங்கள்! கவலையறியா முகத்தில் அது எத்தனை கவலைக்கோடுகள் உண்டுபண்ணுகின்றது? குற்றமற்றவர்களை முகத்துடன் விடாது அது நெஞ்சிலே பொருத்திவிடும்! -ஜெரால்டு. மிகச் சிறந்த ஆராய்ச்சிக் கோட்பாடுகளையெல்லாம் தெளிந்தாய்ந்தபின், நான் கொண்டுள்ள முடிவு இது. கடன் வாங்குவோரினம், கடன் கொடுப்போரினம் என்று மனித வகுப்பில் இரண்டு பேரினங்கள் உண்டு. வெள்ளையர், கருப்பர், சிவப்பர், கரத்தியர், கெலட்டியர் என்ற எல்லாத் திறப் பாகுபாடுகளும் இம்முதற் பெரும் பிரிவினுள் அடங்கும். கடன் வாங்கும்போது எத்தகைய பெருந்தொல்லைகளை நாம் நலிந்து மேற்கொள்ளப்போகிறோம் என்று எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை. கடன்பட்டவர்க்கு அது கழுத்திற் கட்டிய ஒரு பாறாங் கல்லாய் அமைகிறது-அது அவன் உள்ளத்தைப் பேயாட்டமாட்டி வைக்கிறது. அது அவன் குடும்ப அமைதியை, சமூக மதிப்பைக் குலைக்கிறது. பெருவருவாய் உள்ளவர்கள்கூட, அதன் சுமை தீருமட்டும் நெடுங்காலம் தம் பொருளைத் தாம் நுகர முடியாமல், வாழ்ந்தும் வாழ் விழந்தவராய் நலியவேண்டி வருகிறது. ஒரு தடவை கடன் பட்டுவிட்டால், கடன் பெருகிக்கொண்டே போகும். மீப்பதற்குக் கூட வழியிராது. பல இடங்களில் இன்றைய வரவை இன்று செலவழிக்க முடியாமல் பழைய கடனுக்கு ஈடாக்கி அல்லல் படுவதும், பழைய கடனை ஒழிக்க அல்லது மறைக்கப் புதுக்கடன் வாங்குவதும் உண்டு. சிறு தொல்லையிலிருந்து விடுதலைபெறப் பெருந்தொல்லை வாங்கி இப்படியே அவர்கள் தீயிலிருந்து பெருந்தீக்குச் சென்று அழிவை அரவணைக் கிறார்கள். கடன்பட்டார் வாழ்வுபோலக் கடைப்பட்ட நரகவாழ்வு இல்லை என்னலாம். கவலையற்ற சாவுகூடப் பலருக்குக் கிடைப்பதில்லை-சாவின் பின்பும் கடன் செத்தவர் புகழை, மானத்தை, அவர்கள் மரபைச் சீர்குலைப்பதுண்டு. கடன்படுவது வறுமை காரணமாக என்று கூறுவதற் கில்லை. பெரும்பாலான கடன்காரர் செல்வர்களே என்னலாம். அவர்கள் தம்மைச் செல்வர்களாகக் காட்டிக்கொண்டு சமூகத்தின் கண்முன் தம் மதிப்பைக் காக்க எண்ணியே வருவாய்க்கு மேற்பட்டுச் செலவுசெய்து கடன் படுகின்றனர். இக்காரணத்தாலேயே இன்று நிலக்கிழவர்களுள் பெரும் பாலாரின் நிலங்கள் ஈடு அல்லது குத்தகையிலேயே இருக்கின்றன. ஈடு, குத்தகை மீட்காமல் போகும் நிலயங்களைப் பற்றிக் கூறவேண்டிய தில்லை. வரவர நில உடைமையர் நிலமிழந்து நில உழைப்பாளர் ஆகின்றனர். ஈடு, குத்தகையாளர் நில உடைமையராய் வருகின்றனர். பகட்டான வாழ்க்கையின் மூலம் மக்களைப் போலி வாழ்வு வாழச்செய்வது பெரும்பாலும் பட்டணங்கள் அல்லது மாநகரங்களே. இப் பகட்டு ஆடையில் மட்டுமல்ல. வாழ்க்கை முழுவதிலுமே பரந் துள்ளது. தெருக்கள், பூங்காக்கள், கோயில்கள் எங்குமே இதன் விளைவு களைக் காணலாம். மக்கள் பண்பு இப் பகட்டால் அளக்கப்படுகிறது. இப்போலி அளவைப்பெறப் பலரும் பணத்தைக் கடன் வாங்கிச் செயற்கை வாழ்வு வாழ்கின்றனர். இதனால் வீழ்ச்சியுற்ற குடும்பங்கள் ஒருபுறம், முறிவுற்ற வாணிக நிலையங்கள், கழகங்கள் வேறொரு புறம் காண்கிறோம். அத்துடன் இதன் தீங்கு முடியவில்லை. நேர்வழி விட்டுக் கோணல்வழி சென்று இதற்கான பணம் தேடியவர்கள் குற்றவாளிக் கூண்டுகளில் பணமோசடி, ஏமாற்று முதலிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி நிற்கின்றனர். வறுமையச்சம் செய்யும் கொடுமைகள் பல. `இது என்னாலாகாது, என்னிடம் இவ்வளவு பணமில்லை' என்று சொல்லும் தீரம் உடையவர் எத்தனை தொல்லைகளிலிருந்து விடுபடுவார். இவன் ஏழை என்ற ஒரு தீமையிலாச் சொல்லுக்கு அஞ்சுபவர், அவ்வச்சம் காரணமாகப் பின்னால் எத்தனை எத்தனை சொற்களுக்கும் ஆளாகிறார்கள். மனித சமூகத்தில் எப்படியோ மனிதர் அறியாமலே தற்பண்பு, தன்னலம் ஆகியவற்றுக்கெதிரான ஒரு சதித் திட்டம் நிலவுகிறது என்று கூறலாம். ஏனெனில் சமூகம் தற்சார்பை அரிக்கிறது. போலிப்பசப்பு ஒற்றுமையை ஆதரிக்கிறது. ஒவ்வொருவரும் பிறர் கண்களால் பார்த்து, பிறர் உள்ளங்களால் சிந்திக்கப் பழகுகின்றனர். எதிர்காலம் நாடுகின்ற புதுக் கருத்துக்களுக்கும் தீட்டிக் கொடுக்காமல், இறந்தகாலம் நோக்கிய இறந்துபட்ட பழக்க வழக்க நம்பிக்கைகளுக்கு வணக்க வழிபாடு செய்கிறோம். அறியாமை, வலுக்கேடு ஆகியவற்றிற்கஞ்சி நாம் தனித்து நிற்க விரும்பாமல், தாமாகச் சிந்திக்காமல், செயலாற்றாமல், கூட்டாக நின்று, கூட்டாகச் சிந்தித்துச் செயலாற்றுகிறோம். கட்டற்ற தனிச்செயல், தனிச் சிந்தனை வெளியில் அடியெடுத்துவைக்க அஞ்சுகிறோம். நம் இயற்கை யுணர்ச்சியில் வேரூன்றிநிற்க அஞ்சுகிறோம் பிறர்மீது சார்ந்து பிறர்; மரக்கிளையின் கனிகளை நமதாகக் காட்ட விழைகிறோம். மனித வாழ்வு முழுவதையும் செயற்கைப் போலியாக்கும் இதே சமூகப் பண்புகள்தாம் கடன் படுவதற்கும் தூண்டுதல் தருகின்றன. இச் சமூகப் போக்கின் தீமையிலொன்று வகுப்பு உயர்வு தாழ்வுப் படிகள். குடும்பச் செய்திகளில்கூட ஒவ்வொருவனும் அவனவனுக்குரிய வகுப்பின் விருப்பத்துக்கும் தூண்டுதலுக்கும் உட்பட்டே செயலாற்று கிறான். பழக்கவழக்கங்களுக்கும் அவன் மிகவும் அஞ்சி அடங்கி ஒடுங்க வேண்டியவனாயிருக்கிறான். இதனையே சமூகவியலாளர் `கிரண்டி அமைதி' எனக் குறித்துள்ளார்கள். இதன்படி ஒவ்வொருவர் உணவு, உடை, வாழ்க்கைமுறை யாவும் அவ்வவர் வகுப்பின் தரத்துக்கு ஒத்ததாயிருந்தாக வேண்டும். அதனுடன் முற்றிலும் ஒத்தவர்களே மதிப்பு வாய்ந்தவர்களாக வும் ஒவ்வாதவர்களே மதிப்பற்ற அல்லது மானமற்றவர்களாகவும் உலகம் என்ற பெயரைத் தனக்குச் சூட்டிக்கொண்டுவிடும் சமூகத்தால் கருதப்படு கின்றனர். சமூகம் இம் மதிப்புடைமையையே தன் தலைமையான குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதை நோக்கிச் சமூகம் வகுப்பையும், வகுப்பு தனிமனிதனையும் இயக்குவதுடன், இக்குறிக்கோளை நோக்கி ஆட்டு மந்தையின் ஆடு போல இயங்கமுடியாதவர்கள் அல்லது இயங்காதவர்களை அவை ஒருங்குசேர்ந்து தாழ்த்தி அழிக்கின்றன. அவர்கள் இயங்க முடியாதவர்களானால் சமூகம் அவர்களைப் படிப்படியாகக் கீழ்வகுப்புக்களுக்குத் தாழ்த்திச்சென்று படிப்படியாக அழித்துவிடப் பார்க்கிறது. ஒவ்வொரு வகுப்பும் தன் கீழுள்ள வகுப்புக்களைவிடத் தன் வகுப்பையும் தன் வகுப்பைவிடத் தனக்கு மேற்பட்ட வகுப்புக்களையுமே மதித்து ஆதரித்துப் பேணுவதனால், மேல்வகுப்பிலிருந்து தம் வகுப்புக்கு வருபவர்களைவிடக் கீழ்வகுப்பிலிருந்து உயர்ந்து தம் வகுப்புக்கு வருபவர்களையே வெறுக்கிறது. அதே சமயம் வகுப்புக்கேற்ப இயங்காதவர்கள் அல்லது இயங்க மறுப்பவர்களைப் படிப்படியாகத் தாழ்த்தாமல் எல்லா வகுப்புக்களும் சேர்ந்து புறம்பாக்கவே முயலுகின்றன. அத் தனிமனிதர் சமூகத்தின் இச்செயலை வெல்ல மாட்டாதவ ரானால், அவர் சமூகத்தின் கடைப்பட்ட ஐந்தாம் படிக்குத் தாழ்த்தப்படுவார். வென்றுவிட்டவரானால், அப்போதும் சமூகம் அவரைச் சமூகத்துக்குப் புறம்பாக்கத் தவறுவதில்லை. ஆனால், இத்தகையவர்களைக் கீழே தள்ளமுடியாதத னால், மேலே தள்ளி எல்லா வகுப்புக்களுக்கும் மேம்பட்ட தனிப்படி நிலையைத் தந்து, அவர்களைப் பெரியோர்கள், தெய்வக்கூறுகள், முனிவர்கள் என்ற நிலையில் ஒதுக்கிவைக்க முனைகிறது. சமூகத்தில் ஒருவன் தன் வாழ்க்கைப் பயணத்தை எந்த வகுப்பி லிருந்து தொடங்கினாலும், மிகமிகச் சிறுபான்மையான உச்ச, அடிவகுப்புக்களில் தொடங்காத வரை, பெரும்பாலும் தனக்கு மேலும்கீழும் வகுப்புக்களை உடையவனாகவே இருப்பான். எனவேதான் வகுப்பு வேறுபாடும், வகுப்புப் போராட்டமும், வகுப்பு மனப்பான்மையும் மேல் மட்டங்களிலும், கீழ்மட்டங்களிலும் நிலவுவதைவிட, நடுமட்டங்களி லேயே மிகுதியாகக் காணப்படுகின்றன. நகர்ப்புறங்களிலும் சிற்றூர்ப் புறங்களிலும் இத்தகைய சிறு சிறு வகுப்புக்கள் தனித்தனி நின்று ஒன்றை ஒன்று வெறுத்துப் பகைத்து எதிர்த்துப் போராடி, ஊர் நகர் ஒற்றுமையையும் அமைதியையும் ஓயாது குலைத்து வருவதைக் காணலாம். தலைக்கோயில் உள்ள நகரங்களில் இத்தகைய படிப்படியான ஆறு ஏணிப்படி வகுப்புக் களுக்குக் குறையாமல் இருந்து வாழ்வை ஒரு போராட்ட முறையாக ஆக்குவதுண்டு. ஒவ்வொரு வகுப்பும் தன் கீழுள்ள வகுப்பினர் தம்மிடையே புகாமல் காக்கத் தம்மைக் கோட்டை கட்டிக் கொண்டு, அதேசமயம் மேல்வகுப்பில் யார் முந்தி நுழைவது என்பதற்காகத் தமக்குள் ஓயாது போட்டிப் பூசலிட்டு வருவர். மேல்வகுப்பில் புகுந்தபின்னும் அவர்கள் பழைய தோழர் தம்முடன் அவ் வகுப்பில் வந்துவிடாமல், அப் புதுவகுப்பின் கோட் டையைக் காக்கத் தம் தம் உடல் பொருளாவி மூன்றையும் ஈடுபடுத்தத் தயங்குவதில்லை. வகுப்பு முன்னணி நோக்கி நெருக்கித்தள்ளி முன்னேறும் இப் போட்டியில் சமூகத்தின் ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகிய எதுவும் கவனிக்கப் படாது. கூட்டமில்லாத விடத்தில் மற்றொரு வனைத் தொடாதவன் கூட்டத்தில் ஆண், பெண், குழந்தைகுட்டி முதியோர் என்று பாராமல் இடித்தும் உதைத்தும், மிதித்தும் துவைத்தும், திட்டியும் பூசலிட்டும் முன்னிடம் பெறத் தயங்க மாட்டான். சமூகத்திலும் முன்னணிக்குச் செல்வோர் அதற்காகப் பொய், புலை, வஞ்சகம், அடிமைத்தனம், செருக்கு, களவு, கொலை, கொடும்பழி ஆகிய எந்தத் தீமைகளுக்கும் அஞ்சுவது மில்லை, தயங்குவதுமில்லை. அவர்கள் வெற்றியடைந்து முன்னேறினால் எவரும் அவரைக் குறைகூறவும் துணிய மாட்டார்கள். குறை கூறியவர் களும் தண்டிக்கவே பெறுவார்கள். ஏனென்றால் எந்தவகையில் வெற்றி பெற்றாலும் புதிய மேல்வகுப்பு ஆதரவு செய்யும். பழைய கீழ்வகுப்பு ஏற்றுக் கொள்ளவும் செய்யும். படியில் உயர்வதற்கு முக்கிய கருவி பணமே. ஒன்று பணம் ஈட்டவேண்டும்; அல்லது பணம் ஈட்டியதாகப் பாவிக்க வேண்டும். பிந்தியதே பலருக்கும் எளிது. ஆகவேதான் சமூகப்போட்டியின் தலையான அடிப்படைப் பண்பு நடிப்பும் பசப்புமா யிருக்கிறது. கடன் வாங்கியோ, திருடியோ பட்டுப் பகட்டுடை யணிந்தாகவேண்டும். உண்மையில் பட்டல்லாவிட்டாலும் பட்டுப்போல் பகட்டும் போலிப் பட்டுகளையும் போலிப் பகட்டுக்களையும் தேர்ந்து வழங்கியாகவேண்டும். இது மட்டுமோ? இப் பசப்பு அடிப்படையாகச் சிறு சிறு பொய்கள், ஏமாற் றுகள், சொல்மாறாட்டங்கள் பழக்கமாகின்றன. பெரும் பொய்களும் குற்றங்களும் குற்றமென்று தெரிந்தே பின்பற்றப் படுவதனால் எளிதில் பழகிவிடுவதில்லை. தவிர அவை செய்பவனையறியாது வளர்ந்து அவன் செயல்உரிமையை அழித்து அவனைப் பொறியுட்படுத்துவதில்லை. ஆனால் பசப்பினால் வரும் குற்றப் பழக்கம் சிறுகச் சிறுக முளையிட்டுத் தளிர்த்துப் பழகிவிடுவதுடன், வளரும்தோறும் உள்ளத்தில் உரம்பெற்று வேரூன்றிவிடுகிறது. எண்ண உரிமை, சொல்லின் வாய்மை யுரிமை, செயலுரிமை எல்லாவற்றையும் அவை அழித்துத் தீயவழியின் பொறியில் மனிதரை விலக்க முடியாத வகையில் கொண்டு மாட்டிவிடுகிறது. சமூகப் பசப்பின் காரணமாக இவ்வகையில் தம்மை யறியாமலே வெம்பழிக்கு ஆளாய், கடன், கொலை, வஞ்சம், சூது ஆகியவற்றில் உழன்று இறுதியில் தற்கொலைக்கு ஆளாக நேர்ந்தவர் பலர். சமூகப் பசப்பினால் ஏற்படும் வகுப்புவேறுபாட்டு உணர்ச்சியும் நடை உடை பகட்டும் ஆடவர்களைவிடப் பெண்டிரை மிகுதி ஆட்டி வைக்கிறது. சமூகமதிப்பு ஒன்றே அவர்கள் நோக்கமாகவும் அதன் போட்டி ஒன்றே அவர்கள் வாழ்க்கை முறையாகவும் ஆகிவிடுகிறது. இதில் அவர்கள் தாமும் உழன்று, தம் கணவர், உடன்பிறந்தார், காதலர் முதலிய எல்லாரையும் உட்படுத்துகின்றனர்; இது காரணமாகக் குடும்பவாழ்வின் அடிப்படைப் பாசங்களையும் அழித்துக் கொள்பவர் உண்டு. செல்வரிடம் தொடங்கும் இத்திறங்கள் படிப்படியாக ஏழைகளிடமும் இறங்கிவந்து வாழ்வைப் பாழ்படுத்துகின்றன. நகர வாழ்வு நரக வாழ்வாகவும், நாட்டு வாழ்வு காட்டு வாழ்வாகவும் மாறுகின்றன. பெண்கள் கடன்பட்டால் அவர்கள் பெண்மையின் உரிமையை இழக்கின்றனர். அவர்கள் தன்மதிப்பும் அவர்களைச் சார்ந்தோர் தன்மதிப்பும் குடிமதிப்பும் கெடுகின்றன. எனவேதான் குடும்பவாழ்வில் ஆண் கடன்படுவதிலும் பெண் கடன்படுவதைத் தடுப்பது இன்றியமையாத தாகிறது. மனைவியர் செலவுகளைக் கவனிக்காத பலர் வாழ்வில் அக் கடன் இறப்பில் செருகிய கொள்ளிபோல் விரைவில் அவர்களின் அழிவை அம்பலப் படுத்தி விடுகிறது. தனிமனிதர் மட்டுமன்றிக் குடும்பமும், குடும்பம் மட்டுமன்றிச் சமூகமும், நாடும், இனமும் பகட்டாரவாரச் செலவிற்கும் கடனுக்கும் இரையாவதுண்டு. குடும்பம் கடன்படுவதற்குரிய முக்கிய காரணம் திருமண விழாவும் பிற குடும்ப விழாக்களுமேயாகும். மணவிழா குறிப்பாக மணத்துணைவர் இருவரின் புதுவாழ்வுத் தொடக்க விழாவாக நிகழ்கிறது. அவ் வாழ்வுத் தொடக்கத்தில் அவர்கள் வாழ்க்கையின் கடுந்தேர்வுகளில் மிகுதி கருத்துச் செலுத்த முடியாது. அச்சமயம் ஓய்வும் சேமித்த சிறிது பணமும் நல்ல திட்டமுடைய துணைவர்க்குக்கூட இன்றியமையாத் தேவை. தம் செல்வநிலை தாண்டி மட்டுமீறிய செலவுடைய மணவிழா வினால், செலவு செய்யுங் குடும்பமும், அங்ஙனம் செலவுசெய்யத் தூண்டும் சமூகமும் நாளடைவில் அதனால் அல்லற்பட்டு அவதியுறா திருக்க முடியாது. குடும்பங் கடந்த சமூகவிழாக்களிலும், சமய விழாக்களிலும் சமூகம் அறிவைப் பறிகொடுத்துப் பணத்தையும் அரும் பொருள்களையும் அழிப்பதுண்டு. வாழ்க்கை ஆக்கத்துடன் கூடிய இன்பங்கள் எத்தனையோ இருக்கும்போது, இன்பமும் வாழ்வும் வளர்க்கத்தக்க எத்தனையோ ஆக்க வேலைகள் கவனிக்கப்படா திருக்கும்போது, பகட்டின்பத்திலும் மூட நம்பிக்கை, மடமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வெறி விழாக்களிலும் பொருளைக் கொட்டுவது சமூக வளர்ச்சியைக் கெடுக்காமலிராது. வளராத சமூகம் அழிவுநோக்கிச் செல்லவும் நெடுங் காலமாகாது. ஏனெனில் வாழ்வு என்பது இன்றியமையாச் செலவுக ளுடையது. வளர்ச்சிக் கான முறையில் அது திருப்பப்படாவிட்டால், அது தன்னையே தின்று அழிவை நோக்குவது உறுதி. வறுமையின்முன் காதலும் இன்பமும் கரையும் என்று கூறுவதுண்டு. கடன் வறுமைக்கு வழிவகுத்துக் குடும்பத்தில் காதலை அழிக்கும்; சமூகத்தில் அமைதியையும் நல்லெண்ணத்தையும் போக்கும். பெண்களுக்குக் கூறியவை முற்றிலும் சிறுவர் சிறுமியருக்கும் பொருந்தும். சிறுமைப் பருவத்திலேயே பெருஞ் செலவும் கடன் பழக்கமும் அவர்கள் வாழ்க்கைப் பண்பில் தோய்ந்து போய்விடும். அவர்கள் பிற பல நற்பண்புடையவர் களாய், புகழும், மதிப்பும் பெறலாம். ஆயினும், அவர்கள் தனிப்பட்ட வாழ்வில், அவர்கள் துன்பமுடைய வர்களாவார்கள். கடன்பட்ட பெரியார் வாழ்விலும் நல்லோர் வாழ்விலும் இந்த விதைநிலத்தின் நஞ்சு அல்லல் விளைவிப்பதைக் காணலாம். சமூகம், குடும்பம் ஆகியவற்றிலுள்ள கோளாறுகளின் பயனாகவே, பெரியார் பலருடைய வாழ்வுகளிலும் கடன்பட்டோர் துயரங்களைக் காணமுடிகிறது. பெருமைக்கும் கடனுக்கும் ஏதாவது இன்றியமையாத் தொடர்பு உண்டோ, அல்லது இரண்டு பண்புகளும் ஒன்றுதானோ என்று வியப்புற வேண்டிய அளவுக்குப் பெரியோர்கள் கடன்பட்டோர்களாக வாழ்ந்துள்ளனர். சிறியோர் சிறு கடனாளிகளானால், பெரியோர் பெருங் கடனாளிகளாயிருக்க வேண்டும் போலும்! நாடுகளிலும் சிறு நாடுகள்தாம் கடனில்லாமலோ, சிறு கடனாளிகளாகவோ உள்ளன. பெரு நாடுகள் தம் பெருமிதக் கடன்தொகைகளைக் காட்டிப் பெருமை கொள்கின்றன. இப்பெருமைக்குக் காரண மில்லாமலில்லை. அவை பெருமையின் சின்னங்கள் என்பதில் தடையில்லை. அவர்கள் பெரியோர்களாகவோ பெரு நாடுகளாகவோ இருப்பதால்தான் அவர்களை மதித்து அத்தனை பெரிய கடன்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆயினும் அவை முன்னையப் பெருமையின் சின்னங்களாகலாமேயன்றி, வருங்காலப் பெருமைக்குரிய அறிகுறிகள் ஆக மாட்டா. ஏனெனில் அக் கடன்சுமை அவர்கள் வருங்கால வாழ்வை, வருமானத்தைக் குறைத்து அரித்துத் தின்னாம லிருக்கமுடியாது. பெரியோர் பெருமை பணம் சார்ந்ததாயிராமல், அறிவு, கலை, சமூகப்பணி ஆகிய துறைகளைச் சேர்ந்தவையா யிருந்தால், அப் பெருமைகள் கடன் வாங்கும் ஆற்றலைத்தான் தருமேயன்றி, தீர்க்கும் ஆற்றலை வளர்க்காது. அவர்கள் கவலை வெளியில் தோன்றாமல் சிலபல நாள் இருக்கலாம். ஆனால், அது அவர்களை உள்ளூர அரித்துவிடும். அக் கவலைகளை அவர்கள் மறந்து, வாழலாம்; அல்லது அவற்றின் வகையில் அவர்கள் உள்ளம் மரத்துவிடலாம். ஆனால், அவை அவர்கள் வாழ்வை இன்ப மற்றதாக ஆக்காதிராது. உலகம் கடன்படுவதற்கு எல்லா உதவியும் செய்கிறது. அது கடன்படுபவனை-பட்டவனை ஏழை என்று கூறி இரக்கம் காட்டுகிறது. கொடுத்த கடனைக் கேட்பவனை வன்கணாளன் என்று கருதி, கடன்தர முடியாதவன் பக்கமே ஒத்துணர்வும் இரக்கமும் கொள்கிறது. உழைத்து ஊதியம் பெறும் தொழிலாளி யைவிட, அல்லது ஊதியம் போதாது என்று போராடும் உழைப்பாளியைவிட, உழையாது இரக்க அடிப்படையில் இரக்கும் இரவலனிடம் அது மிகுதி பரிவும் ஆதரவும் காட்டுகிறது. அதே சமயம் இரப்பவனைவிடக் கடன் கொடுப்ப வனிடம் அது இன்னும் மதிப்பும் பரிவும் கொள்கிறது. வாங்கிய கடனைக் கொடுக்காதவனிடம் அது கொள்ளும் பரிவுக்கு எல்லையில்லை. திரும்பக் கொடுக்கமுடியாத கடனை ஏன் வாங்கினான் என்று அது கண்டிப்பதேயில்லை. ஏனென்றால், கடன்படுவதற்கான அடிப்படைக் காரணம், சமூகப் பசப்பு, பகட்டு வாழ்வுப் போட்டி; இவை சமூகத்தில் பெரும்பாலார் குறையாத லால், சமூகம் இதுவகையில் கண்டிப்பாயிருக்க முடிவ தில்லை. சமூகத்தைப் பின்பற்றி அரசியலும், அரசியலைப் பின்பற்றிச் சட்டங்களும் கடன்பட்டவர் பக்கமே இருக்கின்றன. ஆயினும் அது கடன்பட்டவர்களுக்கு முழுவிடுதலையும் தருவதில்லை-இதுவே வியப்புக்கிடமான செய்தி! ஆனால், முழு விடுதலை கொடுத்தால் யார் மீண்டும் கடன் கொடுப்பார்கள்? முழு விடுதலை தராதது, கடன் கொடுப்பவர் பேரிலுள்ள பரிவினாலன்று: கடன் பழக்கத்தினைப் பேணவேண்டும் அவசியத்தி னாலேயே யாகும்! கடன்படுவது கண்டிக்கத்தக்கது: ஆயினும் கடன்பட்டவன் பரிவுக்கு உரியவனே. கடன்படுவதற்குக் காரணமான பசப்பிற்காக அவன் எத்தனை ஒளிப்பு மறைப்பு, அச்சம், வஞ்சகங்களைக் கையாளவேண்டியிருந்ததோ, அதினும் மிகப்பலவான ஒளிப்பு மறைப்பு, அச்சம், வஞ்சகங்கள் கடன்பட்டதை மறைக்கவும் மறக்கவும் அவனுக்குத் தேவைப்படுகின்றன. பொதுவாக, சமூகம் கடன்பட்டவரிடம் பரிவும், கொடுத்தவரிடம் வன்கண்மையும் கொள்கிறது. ஆனால், இது உணர்ச்சியில் மட்டும்தான். செயலில் கடன்பட்டவன் பக்கம் எவரும் நாடுவதில்லை. நெருங்கிய நண்பர்கள் கூட அவனைக் கை நெகிழவிடுகின்றனர்-எங்கே கடன் கேட்டு விடுவானோ என்று. கடன் கொடுத்தவர்களை அவன் காணாது ஒதுங்குகிறான்-கொடாதவர்கள் அவனைக் காணாது ஒதுங்குகின்றனர். தொடர்பற்ற ஏதிலார்களோ அவனை வெறுக்கின்றனர். அவன் வாழ்வில் உதவியில்லை. தொழிலகங்களில் அவனுக்கு மதிப்புமில்லை; வரவேற்புமில்லை. அவன் பிறர் மதிப்பும் இழந்து, தன்னைத் தானே மதிக்கும் தன்மதிப்பும் இழக்கிறான். கேட்க நாக்கூசுகிறது, பார்க்க முகம் கவிழ்கிறது. அவன் தன் துயர்களை எந்த நண்பனுடனும் பகரமுடிவதில்லை-அவன் துயர்களுக்கு வேண்டுவதும் ஆறுதலல்ல; பொருளுதவி, அதுமட்டுமல்ல. இத்தகை யோருக்கு உதவ முன்வருபவர்களுக்கும் தொல்லை வளரும். ஏனென்றால், பொருளுதவி அவர்கள் கவலைதீர்க்காது வளர்க்கும். வாங்கியவர் துயரம் கொடுத்தவர்களையும் தழுவும். இந்நிலையில் கடன்பட்டார் மண்ணுலகிலே நரகத் துன்பம் அடைவது உறுதி. பெரியாரான சிலர் வாழ்வே ஓரளவு உள்ளூர நரகமாயினும், அவர்கள் பெருமை பாராட்டும் உலகுக்கு வண்ணப்பூச்சிட்ட நரகாகக் காட்சி யளிக்கிறது. வீரத்துடன் போராடி மாளும்தியாக வீரனின் முடிவு அவனுக்குச் சாவாயினும், பார்ப்பவர்க்கும் கேட்பவர்க்கும் அது உயர் பெருமித உணர்ச்சி தருவதுபோல, இக் கடனும் கடன்பட்டவர் வாழ்வைக் கருக்கிவிடினும் உலகிற்கு ஒளிவீசவல்லதாயுள்ளது. ஏழைகளுக்குக் கடன் கொடுத்து அவர்கள் வாழ்வை வளப்படுத்த வேண்டும் என்ற அவாவுடன் அரசியல் சார்பிலும் பொதுநல நிலையங் களின் சார்பிலும் பல முயற்சிகள் எடுத்துக்கொள்ளப் பெறுவதுண்டு. கடன் உதவிக் கழகங்கள், சிறு கடனுதவிக் கழகங்கள் இவற்றின் பயனாக ஏற்பட்டவை. ஏழைகளைப் பற்றியவரை இவை பெரிதும் பயன்பட்ட தென்று கூறமுடியாது. ஏனெனில், ஏழைகள் தாமாக மீத்துவைக்கும் பழக்கம் பெறாதவரை, அவர்கள் பணத்தின் அருமை தெரிந்து திட்டமிட்டுச் செலவு செய்யவோ, வளம் பெருக்கும் முறையில் செலவு செய்யவோ பயிற்சி யுடையவர்களாக மாட்டார்கள். கடனுதவி கடன் வாங்கும் பழக்கத்தைமட்டுமே வளர்க்கிறது. வாங்கிய பணத்தை வழக்கம் போல வீண் செலவுகளிலேயே அவர்கள் செலவு செய்து தீர்த்துவிடுகின்றனர். கழகங்கள் இன்னின்ன செலவுகளுக்குத்தான் செலவு செய்யலாம் என்று வரையறைப்படுத்தினாலும், அந்தச் செலவுகளையும் அவர்கள் ஒழுங்காகச் செலவு செய்யவோ, செலவு செய்த கடனை அடைப்பதற்காக மீத்துவைக்கவோ பழகுவதில்லை. கட்டாய மாகக் கொடுக்கவேண்டும் வட்டித்தவணை முதல் தவணை களைச் செலுத்துவதில் அவர்கள் படும் தொல்லை கடன்படுபவர் தொல்லையிலிருந்து மாறுபட்டதன்று. கடன் வாங்கிய தொகை பத்துப்பொன் என்றும் வட்டிவிகிதம் நூற்றுக்கு ஐந்து என்றும் வைத்துக்கொள்வோம். கடன் வாங்கியதுமுதல் வட்டியும் முதலும் அடைபடுவதுவரை வாரந்தோறும் பத்து வெள்ளி கொடுக்கத் திட்டமிடப்படுகிறது. இந்தப் பத்து வெள்ளிகளிலிருந்து முதல் வட்டிதான் கழிக்கப்படுகிறது. வட்டி முழுதும் கொடுக்கப்படும் வரை முழுத்தொகைக்குமே வட்டி கழிக்கப்படுகிறது. வட்டி முடிந்தபின்னும் தொகை கொடுபடாமலிருப்பதால் முதலில் கடைசித் தவணை முடியும் வரை வட்டி கணக்கிடவே படுகிறது. இவ்வகைக் கணக்குமுறை கொடுக்கும் முதலாளிக்கு ஆதாயமே தவிர, அவனால் கடன் வாங்கிச் செலவுசெய்து கெடும்படி தூண்டப்பெறும் ஏழைத் தொழிலாளிக்கு எத்தகைய நலனும் ஏற்படமுடியாது. ஏழையைச் சுரண்டும் கவர்ச்சி கரமான புதுமுறையாக இது செயலாற்றுகிறதேயன்றி வேறன்று. முதன் முதலில் வட்டிவிகிதம் நூற்றுக்கு ஐந்து என்ற பெயரில் தொடங்கி இறுதியில் நூற்றுக்கு நூறு வட்டி வாங்கும் சூழ்ச்சியாகவே இது முடிகிறது. பசு ஈன்ற குட்டியைத் தின்பதற்கு மாறாக, பசுவின் வயிற்றில் வைத்து அதை ஒருபுறம் வளரவிட்டுக்கொண்டே, ஒருபுறம் அதைத் தின்று பெருக்கவிடும் கதையாகவே இதனைக் கருதலாம். கடன் வாங்கும் பழக்கம் பொதுமக்களிடம் ஊறியிருப்பது மட்டுமன்று; அறிவிலும் ஆக்கப்பணியிலும் சிறந்த அறிஞர் களையும் தலைவர்களையும் அது விட்டுவிடவில்லை. உண்மையில் பொது மக்களைவிட அவர்களே எளிதில் அதற்குப் பலியாகிவிடக் கூடியவர்களா யிருக்கிறார்கள். பொது மக்களிடையே வாணிக நோக்கும் உலகியல் நோக்கும் உடையவர்களே பெரும்பாலும் பணத்தை மதித்துக் கடன் படாமலும், கடன்பட்டாலும் அதில் சிக்கி யழியாமலும் தம்மைக் காத்துக் கொள்ளும் பண்பை வளர்த்து வருகிறார்கள். பிற பொதுமக்கள் இதில் கவனக்குறைவாகவே இருக்கிறார்கள். அறிஞர், கலைஞர், பொதுநலத் தொண்டர் ஆகிய பெரியார்கள் தன்னலமும் உலகியல் நோக்கும் அற்றவராயிருப்பதுபோலவே, அடிக்கடி பணத்தினை மதிக்காதவராகவும், எளிதில் கடன்படுபவ ராகவுமே அமைகின்றனர். அறிஞர்களைவிடக் கலைஞர்களே இத் துறையில் எளிதில் சிக்கி அழிகிறார்கள். உணர்ச்சி சார்ந்த அவர்கள் வாழ்வும், அழகு நோக்குடைய அவர்கள் கலையும் அவர்களை இன்பப் பகட்டிலும், பெருஞ்செலவு வாழ்விலும், கவலை களைப் புறக்கணித்தோட்டும் பழக்கத்திலும் தோய வைக்கிறது. அவர்கள் கலையின் பெருமை கடன்பட்ட வரியை மிகைப்படுத்தி, கடன்படு வதையே ஒரு நற்பண்பாக மக்களால் கணிக்கப்பட வைக்கிறது. இது முற்றிலும் உண்மையல்ல. ஆயினும் பொதுவாகக் கடன்படுபவர் பழியின் ஒரு பகுதியை இக் கலைஞர் குறைத்துக்கொள்ளமுடிகிறது. `வணிகரறிவைவிட உயர் அறிவுடையவர் அறிஞர்' என்று அறிவுத்துறை பற்றி மிகப் பெருமையாகப் பேசிக்கொண்டவர் அறிஞர் ஃவிரான்ஸிஸ் பேக்கன். ஆனால், அவர் வாழ்விலேயே அவர் அதனை மெய்ப்பிக்கத் தவறிவிட்டார். இளமைக் காலத்தில் அவர் வருமானம் செலவு ஆகியவற்றைச் சரிசெய்ய முடியாமல் எவ்வளவோ தொல்லைப் பட்டார். முதுமையிலோ தொல்லைகள் பெருகின. அவர் புகழும் வளர்ந்துகொண்டே வந்தது. அவர் வருவாயும் அப்படியே. ஆனால், செலவு வருவாய்க்குள் என்றும் கட்டுப்பட்டிருக்க முடியவில்லை. இதனால் கடன் பெருகிற்று. மேலும் மேலும் பணத்தேவை மிகுந்தது. கடன்காரர்கள் பெருகி அவரைச் சூழ்ந்து ஓயாது நச்சரிக்கத் தொடங்கினர். ஒருநாள் அவர் அவர்களை வெளியே காக்கவைத்திருந்துவிட்டு நெடுநேரம் சென்றபின் வந்து, ``ஐயன்மீர், உங்கள் நலம் என் அழிவா யிருக்கிறது. நீங்கள் இருப்பது நான் வெளியே போவதைத் தடுக்கிறது,'' என்று கூறி அனைவரையும் சிரிக்கவைத்துத் தம் இக்கட்டிலிருந்து அன்றைக்குத் தப்பினாராம்! கடன் தீர்க்க இறுதிக் காலத்தில் அவர் பின்பற்றிய வழி கைக்கூலி வாங்குவதாக முடிந்தது. தம்காலப் பேரறிஞராகிய அவர் இதனால் குற்றஞ் சாட்டப்பெற்றுத் தண்டனை பெற வேண்டியதாயிற்று. பேக்கனைவிட மன்னிக்கமுடியாத குற்றவாளி வில்லியம் பிட் ஆவர். பேக்கன் அறிஞர்; பிட்டோ பொருளியலறிஞர். நாட்டின் பொருளியல் துறை நெருக்கடியை மற்ற எவரையும் விடத் திறம்படத் தீர்த்துவைத்துப் புகழ் பெற்றவர் அவர். ஆனால், அவரால் தம் வாழ்வின் பொருளியல் நெருக்கடிகளைச் சிறிதும் தடுக்கமுடியவில்லை. பொருளக வல்லுநராகிய காரிங்டன் ஒருமுறை அவர் தனிப்பட்ட செலவினங்களை ஆராய்ந்து பார்க்க முற்பட்டாராம். அவர் வீட்டில் இறைச்சிக்கறி வாரம் ஒன்றுக்கு ஓர் அந்தர் ஆகியிருந்ததாம். பணியாட்கள் ஊதியம் முதலிய வீட்டுச் சில்லறைச் செலவுகள் ஆண்டுக்கு 2,300 பொன் ஆயினவாம். அவர் ஆண்டு வருமானம் என்றும் 6,000 பொன்னுக்குக் குறைந்ததாயிருக்கவில்லை. ஐம்பெருந் துறையின் காவலனாக அவர் இருந்ததால் இன்னும் 4,000 பொன் வந்தது. ஆயினும் இப் பெருஞ் செலவின் காரணமாக, அவர் மறைவின் போது அவர் பிரிவு விழாவைக் கறைபடுத்தும் அளவு கடன்காரர் வந்து சூழ்ந்தனர். நாட்டுக்கு நற்பணி செய்த அந் நல்லார் புகழ் காக்க, அரசியலார் 40,000 பொன் தந்து அக் கடனாளிகளின் கூக்குரலை அடைத்தனர். கடன்பட்ட பெரியோர்களிடையே ஒரு முடிசூடா மன்னன் என்று கூறத்தக்கவர் ஷெரிடன். அவர் வரவுக்குமிஞ்சிச் செலவுசெய்து கடன்பட்ட கடனாளியல்லர்; கடன் வாங்கிச் செலவுசெய்த கடனாளி. அவர் வாங்கிய கடன்கள் மிக மிகப் பெரிய தொகைகள். அந்தப் பெருந் தொகைகள் எப்படி, எங்கே செலவாயின; என்னவாயின என்று எவரும் அறிந்தது கிடையாது. அந்தக் கடனாளிகளுள் எவரும் கொடுத்த கடனில் ஒரு துட்டுக்கூடத் திரும்பப்பெற்றதும் கிடையாது. ஆயினும், எப்படியோ கடன்கொடுப்பவர் கொடுத்துக் கொண்டுதா மிருந்தனர்; பலர் முன்கடனிருக்கப் பின்னும் கடன்கொடுக்க முன்வந்தனர். வாங்கிய கடன் தொகைகளெல்லாம் அவர் கையில் கோடைகாலப் பனிபோல் மாயமாய்க் கரைந்தன. அவர் முதல் மனைவியின் முழுச்சொத்தும் 1600 பொன் அளவுடையது. அவர் மணவிழாவை ஒட்டி `பாத்' நகருக்குச் சென்ற பயண உலாவில் முதல் ஆறுவாரச் செலவுக்கு அது சரியாய்ப் போயிற்றாம். இலக்கியத் துறையில் அவர் இறங்கியதே கடன் தொல்லையைப் போக்கத்தான். ஆனால், இலக்கியப் புகழ் கடனைப் பெருக்கவும், அவரைக் கடன்வாங்கும் கலையில் தேர்ந்த கலைஞனாக்கவும்தான் பயன்பட்டது. தம் நாடகங்களால் வளர்ந்த டுரூரிலேன் மாளிகையில் தம் பங்குகளை அவர் 15,000 பொன்னுக்கு விற்று, அத்துடன் இரண்டாம் மனைவியின் செல்வமாகிய 5,000 பொன்னையும் சேர்த்து ஸரெயில் ஒரு பண்ணை வாங்கினார். அது, அவர் அடுத்த ஆண்டுக்குக் கடனுக்கு இரையாயிற்று. கடனாளிகளிடமிருந்து தப்பி மறைய அர் மூளை செய்த கற்பனைகள் அவர் நாடகக் கற்பனைகளைவிடப் புதுமையானவை. ஆனால், நாடகக் கற்பனை அவருக்கு எத்தனை மதிப்புத் தந்ததோ, அவ்வளவு இக் கடனாளர் கற்பனை அவர் அவமதிப்பை அம்பலப் படுத்திற்று. ``ஷெரிடனை நான் தெருவில் கண்டு தலையின் குல்லாவை அசைத்து வணக்கம் செய்தால், அவ் வணக்கத்தின் மூலம் எனக்கு 50 பொன் இழப்பு ஏற்படும்; அவருடன் நின்று பேச நேர்ந்துவிட்டால், அதனால் என் கைப்பொறுப்பு 100 பொன் ஆகிவிடும்,'' என்று அவர் கடன் படும் திறம்பற்றி ஒரு நண்பர் கூறினாராம். ஷெரிடன் ஒப்பற்ற கலைஞன். கடன் தொல்லைகளைத் தீர்க்கக்கூட, அவர் கலைத்திறனைப் பயன்படுத்தியதாக அறிகிறோம். ஒரு கடன்காரன் அவரைப் பார்க்க ஒரு குதிரைமேலேறி வந்தானாம். ஷெரிடன் அவனை வரவேற்று, ``ஆ! குதிரை மிக நன்றாயிருக்கிறதே, இது நன்கு ஓடுமா பார்ப்போம்,'' என்று கூறி அதில் ஏறினார். கடனாளி தன் குதிரையின் புகழ் கேட்டு மயங்கி நின்றிருந்தான். ஆனால் கடனாளியின் குதிரைமேலேறியே அவர் அவனைவிட்டுத் தப்பியோடிவிட்டார்! மற்றொரு சமயம் அவர் வெளியே புறப்படுமுன் அவரைக் கண்டுவிட வேண்டுமென்று பல கடனாளிகள் வந்து காத்திருந்தனராம். அவர் அனைவரையும் முன்கூடத்தில் வந்து காத்திருக்கச் செய்துவிட்டு, தெருப்பக்கக் கதவுகளைச் சார்த்தும்படி காவலருக்கு ஆணையிட்டுப் பின் குதிரைமீதேறிக் கடந்து சென்றுவிட்டாராம்! தம் புகழையும், மதிப்பையும் அவர் இங்ஙனம் கடனுக்குப் பலியிட வேண்டி வந்தது. பால்காரன், கறிக்கடைக்காரன், அப்பக்கடைக்காரன் எல்லாரும் கடை வாணிகத்தைக்கூடப் புறக்கணித்துவிட்டு ஷெரிடன் வீட்டு வாயிலில் காத்துக் கிடந்தனர். திருமதி ஷெரிடன் வீட்டில் அடுப்பில் தேநீருக்காக நீர்கொதிக்க வைத்துக்கொண்டிருப்பார். தேயிலைக்கும் பாலுக்கும் சர்க்கரைக்கும் முட்டைக்குமாகப் பணியாட்கள் எங்கும் கடன்கேட்டுத் திரிவார்கள். அவர்கள் கடனாக இவற்றைப் பெற்றுவருமுன் அடுப்பில் விறகு எரிந்து சாம்பலாய்ப் போய்விடும். ஒருதடவை வேலைக்காரி கறிக்காரனிடமிருந்து கறிவாங்கி அடுப்பில் வேகப்போட்டு விட்டு, மாடியில் திருமதி ஷெரிடனிடம் பணம் பெறப்போனவள் நெடுநேரம் திரும்பி வரவில்லை. கறிக்காரன் அடுப்பண்டை சென்று கலத்தில் அவியும்படி போட்ட கறித்துண்டையே எடுத்துக்கொண்டு போகவேண்டியதாயிற்று. வாழ்விலேயே இத்தனை கடனவதி இருந்தால், இறுதி எப்படி இருக்கும்? நண்பரும் தோழரும் ஒவ்வொருவராக அவரை விட்டகன்றனர். உணவுக்கும் வழியில்லாமல் நோய்க்கிரையாய், மருந்து என்று அவர் நீரைப்பருகி நாட்கழித்தார். கடன்காரர் அவர்மீது முறைமன்ற ஆணைகள் வாங்கிக்கொண்டு நடவடிக்கைக்குக் காத்திருந்தனர். ஆனால் சிறைக்கு இட்டுக் கொண்டுபோகக் காவலர் அஞ்சினர். போகிற வழியிலேயே இறந்துவிடுவாரோ என்ற நிலையில் அவர் உடல் இருந்தது. ஷெரிடனின் இம்மரபு வரிசையிலேயே கலைஞர்களில் பெரும் பாலானவர் அமைந்துள்ளனர். சமயத் தனிமுதல்வர் (கார்டினல்) டிரெட்ஸ் தம் உடைமைகளை யெல்லாம் விற்றும் கடன் தீர்க்கமுடியாது துயர்ப்பட்டு இறந்தார். லமார்ட்டின் பல நூறாயிரக்கணக்கான செல்வங்கள் வரப்பெற்றும், இறுதியில் கைஏந்தி இரக்க வேண்டிய தாயிற்று. வெப்ஸ்டர் என்ற அமெரிக்க அரசியல்மன்ற உறுப்பினர் கைக்கூலியை நம்பியே வாழ்ந்தார். வானநூலறிஞரான கெப்லர் தம் வருவாய்க்கு மிஞ்சிச் செலவு செய்ததால், சாதகம் எழுதிப் பிழைக்க வேண்டியதாயிற்று. அறிவியல் துறையைச் சேர்ந்தவர்கள், கலைஞரைப் போலவோ, பிற தனி மனிதரைப்போலவோ, பகட்டாக வாழவேண்டிய நிலையிலில்லாதவர்கள். அப்படியிருந்தும் அவர்கள் பொருளியல் துறையில் அமைதியற்ற வாழ்வும் அல்லலும் உடையவராகவே இருந்து வந்துள்ளனர். இத்தாலியின் மாபெருங் கலைஞருள் ரஃவேல், மைக்கேல் ஏஞ்சலோ முதலியவர்கள் கலைஞர் மரபின் இவ்வறுமைக்கும் கடனுக்கும் தப்பியவர் களாயிருந்தனர். அவர்கள் வாழ்க்கைத் திட்டமிட்ட செல்வர்கள். கலையை அவர்கள் தம் ஆக்கத்துக்கன்றிப் பிழைப்புக்குப் பின்பற்ற வேண்டியவர்களா யில்லை. ஆனால், இவர்கள் கலைமரபுக்கு விதிவிலக் குகள் மட்டுமே. இங்கிலாந்திலும் ஷேக்ஸ்பியர் ஒப்பற்ற கலைஞரா யினும், வறுமையிலும் இன்ப வாழ்விலுமே வாழ்க்கை தொடங்கினவரா னாலும், விரைவில் தம் வாழ்வில் சிக்கனம் கண்டவராயிருந்தார். இச் சிலர் நீங்கலாக மற்றக் கலைஞர், கவிஞர் யாவரும் கடன்பட்ட வாழ்வின் கரைகாணாத் துன்பக்கடலில் உழன்றவர் களாகவே இருந்துவந்துள்ளனர். ஹெப்டன் என்ற இத்தாலியக் கலைஞர் தம் நாட்குறிப்பில் ஒருநாள் இந்தப் புதுமை வாய்ந்த குறிப்பை வரைந்துள்ளார்: ``இன்று நான் எனக்கு வெண்ணெய் விற்பவனிடமிருந்து 10 பொன் கடனாகப் பெற்றேன். அந்தோ, அவன் இருபத்துநான்கு ஆண்டுகளுக்குமுன் ஒரு பெருமகன் ஆதரவுரை யுடன் என்னிடம் இலவச மாணவனாக அனுப்பப்பட்டவன். மட்டாக வரையக் கற்றபின் அவன் கலைத்துறையை விட்டுவிட்டு, வெண்ணெய் வாணிகம் மேற்கொண்டான். அத்துறை வருவாய் அவனை இன்று தன் கலை ஆசிரியருக்குத் திரும்பி வாங்கமுடியாத இந்தக் கடனைத் தரத்தக்கவ னாக்கியுள்ளது. அவனுக்குக் கலை கற்பித்த என் நிலை, கூறுந்தரமன்று.'' சிக்கன வாழ்வுடைய கவிஞர் எவரையும் தாம் கண்டதில்லை என்று கவிஞர் கூப்பர் கூறுகிறார். அவர் அக் கவிஞர் பட்டியலில் தம்மையும் சேர்த்தே கூறுகிறார் என்பதில் ஐயமில்லை. ``ஒருதடவை சிக்கனத்தின் இன்றியமை யாமையை உணர்ந்து, செலவைக் கூடியமட்டும் வெட்ட முயன்றேன். இதன் பயனாக மூன்று மாதச் செலவைப் பன்னிரண்டுமாத வருவாய்க்குள் அடக்க முடிந்தது.'' அவர் சிக்கனம் இது. அவர் பொது வாழ்வு எப்படி யிருந்திருக்கும் என்பதை இது நன்கு காட்டுகிறது. இதை அவரே அறிந்து நயம்படவே கூறியுள்ளார், கலைஞர் ஆதலால்! ஆனால், குறையை அழகுபட எடுத்துக் காட்டிய கலை, அதனை அகற்ற உதவ வில்லை. அது வாழ்க்கைப் பயிற்சி, குடும்பப் பயிற்சியின்றி எளிதில் அமையமுடியாது என்பதை விளக்க இக்கடன்பட்ட பெரியோர் வாழ்வையும் சொற்களையும்விட நல்ல விளக்கம் வேண்டியதில்லை! கிரீன், பீல், மார்லோ ஆகிய கவிஞர்கள் கலைஞர்க்குரிய எல்லாக் குற்றங்களுக்கும் உரிய கொழுகொம்புகள்! இன்பவாழ்வு, பெருஞ்செலவு, வரம்பிலா நடை, கடன்படல், சட்ட மீறுதல் எல்லாம் அவர்கள் வாழ்க்கை விளையாட்டுகள். கவிஞர்கள் போற்றிய கவிஞராகிய ஸ்பென்ஸர் ஒரு நேர உணவுக்கு வழியில்லாமல் ஆதரவற்றுத் தெருவில் மடிய நேர்ந்தது. கலைஞர்கள் துயருக்கு அவர்களே காரணமாவர் என்பதை ஸ்டீல், கோல்டுஸ்மித் ஆகியவர்கள் வாழ்க்கைப் போக்குக் காட்டுகிறது. ஸ்டீல் கடன்படாத நாளில்லை. ஆயினும் அவர் இன்பப் பகட்டுக்களை நாடாம லிருந்தது கிடையாது. மட்டான வருவாயுடைய ஓர் அரசியற் பணி அவருக்கு அளிக்கப்பட்டது. அதனை அவர் எப்படிப் பயன்படுத்தி யிருக்கலாம்! ஆனால், எப்படிப் பயன்படுத்தினார்! அந்தச் சிறு அலுவலகத் துக்கு அவர் இரண்டு அல்லது நாலு குதிரை பூட்டிய வண்டியில் மன்னர்கோ மன்னர்போலப் போகத் தொடங்கினார். மற்றச் செலவுகளும் இதற்கொப்ப அலுவலகத் தேவைக்குமேல் வளர்ந்தன. கோல்டுஸ்மித் வறுமைக் கடலில் கடனே புணையாகக்கொண்டு நீந்தினார். ஒரு கடனிலிருந்து எந்த வகையிலாவது மீள நேர்ந்தால், உடனே அடுத்த கடனை அணைக்க அவர் தவறியதில்லை. ஒருவர் வீட்டாசிரியராக அவர் முதல்முதல் ஒரு மட்டான தொகையைக் கையேற்றார். அதனை அவர் உடனே செலவு செய்தார்-ஒரு குதிரை வாங்குவதற்காக! அவரைச் சட்டத் தேர்வுக்கு அனுப்பி முன்னேறுவிக்க அவர் உறவினர் எண்ணி, தமக்குள்ளே பணம் சேர்த்து 50 பொன் திரட்டி உதவினர். அவர் சட்டக் கல்லூரிக்குப் போகும் வழியிலேயே குடித்துச் சூதாடி அதைத் தீர்த்துவிட்டார்! கடன் வாங்குவதை ஒரு கலையாக்கியவர் ஷெரிடன் என்றால், வறுமையை ஒரு கலையாக்கியவர் கோல்டுஸ்மித் என்னலாம். கையில் ஒரு காசின்றி அவர் ஐரோப்பாவில் ஒரு நாடு குறையில்லாமல் சுற்றிவந்து விட்டார். கையில் ஒரு யாழுடன் பாடி இரந்துகொண்டே அவர் பயண முடித்தார். ஆனால், போன இடத்திலெங்கும் நண்பர்களைக் கண்டால் திருப்பித் தராத நாகரிகக் கடன் வாங்கி, அதை உடனே அழிக்கவும் தவறிய தில்லை. சிக்கனமற்றவராயிருப்பதுடன் அவர் அமையவில்லை. சிக்கனமற்ற பலருக்கும் அவர் ஒரு வள்ளலாய் உதவி, சிக்கனமற்ற ஏழை வள்ளன்மைக்கு ஓர் இலக்கானார். எடின்பர் நகரத்தில் மருத்துவக் கல்விப் பயிற்சிக்குச் சென்ற அவர், மற்ற ஒரு நண்பன் கடனுக்குப் பிணையமாய் நின்று, அது காரணமாகப் பல்கலைக் கழகப் பயிற்சியிலிருந்து விலக்கப் பட்டார். கடன் வாங்கவும் கடன் இரக்கவும் இங்ஙனம் தயங்காத அவர், தமக்கு நண்பர் உதவிய போது மட்டும் அதை ஏற்க மனம் ஒப்பவில்லை என்பது புதுமை யாகவே இருக்கிறது. நல்ல காலணியில்லாமல் அவர் வெளியே செல்லமுடியாது அடைத்துக் கிடந்தபோது, புதுக்காலணியை அவரறியாமல் வாயிற்படியில் இட்ட நண்பன் செயல் அவர் மான உணர்ச்சியைக் கிளறிற்றாம்! அவர் காலணியற்ற நிலையில் அப் புதிய காலணியை வீசி எறிந்து விட்டாராம்! கடன்பட்ட பெரியாருள் கடனைத் தீர்க்கப் போராடிய வீரர் ஸ்காட். அவர் கடன் அவர் பெருந்தன்மையின் பயன்மட்டுமே. அவர் இறக்கும்வரை அதைத் தீர்க்க ஈயாய் எறும்பாய் உழைத்தார். பெரும் பகுதியைத் தீர்த்தும் விட்டார். மீந்த பகுதியும் அவர் மருமகனால் தீர்க்கப்பட்டது. ஆனாலும் முழுக்கடனும் தீராத வருத்தத்துடனேயே மான உணர்ச்சிமிக்க இப்பெரியார் உயிர்விட வேண்டிவந்தது. கலைஞர் ஓரளவு குறைகளை உடையவரானாலும், அதை நீக்க அரும்பாடுபட்ட கலைஞர் இவர். தொடக்கத்திலிருந்தே இப் பண்பை அவர் பேணியிருந்தால், அவர் தம் வாழ்வில் முழுவெற்றி பெற்றிருக்கக் கூடும். மொத்தத்தில் கடன்படுவது பெருமைக்கு அறிகுறியல்ல. ஆனால், அது பெருமையையும் குலைக்கக்கூடிய ஒரு வழு என்பதில் ஐயமில்லை. அது பெருமையை அழிப்பதல்ல; ஆனால், பெருமைக்குரியார் வாழ்வைக் குலைத்து, அவர்கள் அரும்பணிக்குக் குந்தகமாயிருப்பது. பெரியார் ஆகும் வாய்ப்புடையவர் மிகச் சிலர். அவர்கள் குறை உலகுக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு. பெரியவர்களுக்குக்கூட எச்சரிக்கையா யிருக்கும் குறை ஏனையோரால் புறக்கணிக்கத் தக்கதன்று. பெரியார்களும் தம் பெருமையி னால் உலகம் அடையவேண்டும் பெரும்பயனையும், தம் அமைதியையும் இதே எச்சரிப்பினால் பெரிதும் பெருக்க முடியும். 8. செல்வமும் அறமும் ``உலவு நீயார்? உன்செல்வ மேதெனில் நிலவு டாண்காஸ்டர் வாணன்நான் இராபர்ட்டு செலவு செய்தன எல்லாமென் செல்வங்கள் பலர்க்கும் ஈவன என் கையுறை ஈயாது இலகு மஃதெலாம் இலம்பாடு; இஃது உணர்தியே!'' - கல்லறை வாசகம், 1579 ``உடையை செல்வம் எனில்நீ வறியை, கொடும் பொற்பாளம் தாங்கும் கழுதைபோல் வடுக்கொள் முதுகு வண்சுமை சுமந்து நெடுநீள் வழிசென்று பெறுவை நீ விடுதலை!'' - ஷேக்ஸ்பியர் ``ஈட்டுவோர் ஈட்டிப் பெறும் ஒரு வெள்ளியின் இரப்போர் இரந்து பெறும் செம்பினிதே'' - டக்ளஸ் ஜெரால்டு சிக்கனமுடையவனிடத்திலேயே வண்மையை எதிர்பார்க்க முடியும்; தன் எதிர்காலத்தையும் தன்னைச் சார்ந்தோரையும் எண்ணித் தன் சிறு தன்னலத்தை விட்டுக் கொடுக்காதவன் எப்படிப் பிறரை எண்ணித் தன்கைப் பொருளைத் தரும் பண்பு உடையவனாக முடியும் என்று எதிர்பார்க்கலாம்! சிக்கனமில்லாத ஒருவன் எப்போதாவது ஏதாவது கொடுக்க நேர்ந்தாலும், அது பகட்டு, வஞ்சகம், புகழ்விருப்பம், தன்னலம் முதலிய ஏதாவது ஒன்றன் மறைபண்புடனேயே இயலும். சிக்கனம் அப் பண்புக்கு உரியவனுடன் நின்றுவிடும் பண்பு அன்று. அவன் உறவினர், நண்பருடனும் நின்றுவிடுவதன்று; அப்படி நின்று விட்டால், அது சிக்கனமன்று; கஞ்சத்தனம். மிகுதி செலவு செய்பவன் எப்படிப் பொருளின் அருமை தெரியாத வனோ, அப்படியேதான் செலவே செய்யாதவனும் அருமை தெரியாதவனாவான். நேர்மையான சிக்கன முடையவர் களே தம் தேவையும் தம்மைச் சார்ந்தோர் தேவையும் நிறைவேறி, பின் சிக்கனத்தின் பயனைக்கொண்டு மருத்துவ விடுதிகள், கல்வி நிலையங்கள், துணையகங்கள் முதலிய அறநிலையங்களுக்கான பொருள் காப்பீட்டில் கருத்துச் செலுத்துகின்றனர். இவ் வகையிலேயே உலகில் ஹோவேர்டுகள், கிளார்க்ஸன்கள், ஸேவியர்கள் ஆகிய உலகநல உதவியாளர்கள் தோன்றி யுள்ளனர். இவ்வகையிலேயே ஒழுக்கத்திற் சிறந்த பல உரவோர்களும் நாட்டுப் புகழ் நாட்டிய நற்றலைவர்களும் சிறந்துள்ளனர். செல்வம் பெருக்கிப் புகழ்ஒளி நாட்டிய இப் பெரியார்களின் பண்பு பொதுமக்களிடமும் சிறு தொழிலாளிகளிடமும் சிக்கனவாழ்வுடன் சிறுநலம் செய்யும் பண்பாகக் கனிகின்றது. பேரொளி விளக்கம் பெரிது. சிற்றொளிகளோ சிறு விளக்குகளாயினும் பெரிதும் இனிமை பெருக்குவன. முன்னது பிறர்க்கு வழிகாட்டுவதனாலேயே சிறந்தது. பின்னது பரந்து செயல்பட்டு உலகோம்புகிறது. சிறு நலங்கள், கொடுப்பவன் வாழ்வையும் உயர்த்திப் பெறுபவன் வாழ்விலும் மலர்ச்சி உண்டுபண்ணுகிறது. ``மக்கட்கு மக்கள் இனியர்; ஏழ்மையில் தொக்க எளியோர் ஆயினும் துஞ்சா நல்குர வயர்வோர் ஆயினும், `இடையிடை ஒல்குநல் ஓய்வினில் ஓரொரு நற்செயல் செய்தே, சிலர்பலர் வாழ்வின் செம்மை பெய்தேம்' என்னும் பெற்றியில் மகிழ்ந்தே, உதவி வேண்டினர்க் குதவுவர்; அதனால் பொதுவின நெஞ்சம் போதென் மலரும்.'' துணையற்றார்க்கு உதவி ஒருவர் கடமையாற்றினார் என்னும் சொல் முரசறைந்தாற்போல உலகில் எளிதில் பரவும். சொல்லினும் கடந்து சொல்லாத பண்பு ஒளிவீசும். ஓசை, ஒளி ஆகிய இரண்டு அலைகளின் வேகம், எல்லை ஆகியவற்றைவிடக் கருத்தலைகளின் வேகமும் எல்லையும் மிகுதி. தனிமனிதர் செயல் தனிமனிதர் உள்ளத்துக்கு நிறைவளிப்பதுடன் நிற்கவில்லை. தனிமனிதர் பொதுமனித சமூகத்தின் ஓர் உறுப்புமட்டுமே. ஆகவே, அது பொதுமனித உள்ளமாகிய சமூக உள்ளத்தையும் நிறைவு படுத்துகிறது. பொதுமனித உள்ளமே கடவுள். அதை நிறைவுபடுத்தி அதில் அருளலைகளை இயக்கும் பண்பே கடவுட் பண்பு. தனிமனிதன் என்ற முறையில் இப் பண்பு மனித இயல்பு. சமூக உறுப்பினன் என்ற முறையில் இது அவன் உயர்கடமை; மனிதஇன மேம்பாட்டிலும் முன்னேற்றத்திலும் அவனுக்கு உரிய அவன் பங்கின் சின்னம்! பிறருக்கு உதவிசெய்ய ஒருவன் செல்வனாயிருந்தாக வேண்டும் என்பதில்லை. எத்தனையோ ஏழைகள் செல்வரைக் காட்டிலும் முனைத்த பொதுநலத் தொண்டுகள் ஆற்றியுள்ளனர். ஜான் பௌண்ட்ஸ் செல்வரல்லர்; ஆனால், 1கந்தலர் பள்ளிகளை நிறுவியவர் அவரே. அவர் தம் செலவுகளை மட்டுப்படுத்திக்கொண்டு தாம் மீத்துவைத்த பணத்திலிருந்தே மாணவர்களுக்கு உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்துவந்தார். அவர் தம்மிடம் வந்த மாணவர்களைச் சேர்த்து அவர்களுக்காகச் செலவுசெய்தவர் மட்டுமல்லர். உருளைக்கிழங்கு வேவல்களை அளித்துத் துணையற்ற பிள்ளைகளைப் பள்ளிப்பக்கமாக இழுத்துவந்து சேர்க்கவும் அவர் பாடுபட்டார். தாமே அவரவர்களுக்குக் கற்பித்துத் தம் முன்மாதிரியின் மூலமே அவர்களைப் பயிற்றுவித்து உயர்த்தி, தம்மைப்போலவே மக்களுக்கு உழைக்கும் பண்பாளராக அவர்களை உலகுக்கு அனுப்பி யுதவினார். ஞாயிற்றுப் பள்ளிகளை நிறுவிய ராபர்ட் ஒக்சும் பௌண்ட்சைப் போலவே ஏழைதாம். நியூட்டன், வாட், ஃவாரடே போன்ற அறிவியலாரும், சேவியர், மார்ட்டின், கேரி, லிவிங்ஸ்டன் முதலிய சமயப்பணியாளரும் இதுபோல ஏழ்மையின் செல்வர்களே யாவர். அன்பு, வண்மை ஆகியவற்றுக்கான ஒரு நல்ல விளக்கச் சான்றாக அறிஞர் டானின் வாழ்க்கையை வால்ட்டன் தாம் இயற்றிய அவர் வாழ்க்கை வரலாற்றில் எடுத்துக்காட்டுகிறார். தூயதிரு பாலின் துறவகத்தில் டான் சேர்ந்த உடன், அவருக்கு அவர் தேவைக்குத் தாராளம் போதுமான ஒரு தொகை வழங்கப்பட்டது. அவர் அதைத் தமக்கு வழங்கப்பட்டதாகக் கருதாமல், மனித இனத்தின் உதவிக்காகவும் அச்செல்வம் தந்த உயர்திருவாளராம் இறைவன் புகழ் பரப்புவதற்குமே தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கருதினாராம். ஏழையர் உதவிக்கு முதலிலும் இறைவழிபாட்டுக்கு அடுத்தும் கணக்கிட்டுச் செலவு செய்ததுபோக மீந்ததனுள் தம் செலவை அடக்கி அதிலும் ஏதேனும் ஆண்டுக்கு மீந்துவிட்டால், அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி ஏழைமக்களையும் வாழ்த்துவது அவர் வழக்கம் என்று அறிகிறோம். அறிஞர் டானின் கொடைப்பண்பு தம் கையறியாக் கொடை மட்டுமன்றித் தம் நெஞ்சறியாக் கொடையாகவும் இருந்தது. எவரும் அறியாமலே அவர் பொருள் பல ஏழை மக்களைச் சிறைவாழ்வின் பிடியிலிருந்து விடுவித்தது; கல்வியில்லாதிருந்த பல ஏழைச் சிறுவர்களை அது பள்ளிக்கு அனுப்பிற்று. இவை தவிர நம்பகமான பணியாள் அல்லது நண்பர் ஒருவரை அமர்த்தித் துன்பம் நேர்ந்தவிடமறிந்து உதவியளிக்கும்படி அவர் ஏற்பாடு செய்திருந்தார். டானின் உள்ளார்ந்த தம் நெஞ்சறியாப் பெருமிதத்துக்குச் சான்றாக, வால்ட்டன் கூறும் செய்தியாவது:- தாம் செல்வ நிலையிலிருக்கும்போது வரையிலாது வழங்கித் துன்பத்துள் சிக்கிய ஒரு நண்பருக்கு, டான் ஒரு நூறு பொன் உதவித் தொகையாக அனுப்பிவைத்தார். பெருந்தகையாகிய அவர் தமக்கு உண்மையில் அத் தொகை தேவையில்லை என்று நன்றியுடன் திருப்பியனுப்பிவிட்டார். அதற்கு மறுமொழியாக டான் ``அன்புடையீர், தம் இயற்கைத் தேவைகள் குறைந்தவை; இயற்கையின் செல்வராகிய தமக்கு இறைவனே அவற்றை அருளவல்லவன் என்பதை நான் அறிவேன். ஆனால், இயற்கை தமக்கு வண்மையுடன் வழங்கிய காலத்தில் தாம் எத்தனையோ நல் உள்ளங்களுக்குக் களிப்பூட்டினீர்கள். அத்தகைய தம் உள்ளத்திலும் சிறிது களிப்பூட்டுவதற்காக நான் இச் சிறுதொகையை அனுப்பியுள்ளேன். பெற்று என்னை மகிழ்விக்கக் கோருகிறேன்,'' என்று கூறியனுப்பினாராம். இச் சொற்கள் அத் தொகையை அந் நண்பர் அகமகிழ்வுடன் ஏற்கும்படி செய்தன. இச்செயல் பற்றி வால்ட்டன் தரும் விளக்கமாவது: ``வறுமையைப் பொறுமையுடன் தாங்கி அதனை வெளிக்காணாமல் மறைக்கும் வறியவர் இயல்பைப்போலவே, வண்மையை ஒரு கடமையாக ஏற்று மறைவில் செய்து அது புறந்தோன்றாமல் மறைக்கும் பண்பையும் பண்பாளருக்கு இயற்கை அளித்துள்ளது.'' செல்வத்தின் ஆற்றலை நாம் வானளாவப் பாராட்டி உண்மையான அதன் ஆற்றலைக் கெடுத்துவிடுகிறோம். செல்வத்தின் தனி ஆற்றல் தீமையை நன்மையாக்குவதினும் நன்மையைத் தீமையாக்குவதே பெரும் பான்மை. நற்பண்பாளர் பண்புடன் சேர்ந்த செல்வமே ஆக்கும் திறமுடையது; பிற செல்வம் அழிக்கும் திறன் உடையதே. இதனை நன்கு அறியாத காரணத்தினால்தான் அறத்துறைக்கென்று மக்களிடம் பெரும் பொருள் திரட்டிச் செலவிட்டுப் பலர் பகட்டாரவார அறம் வளர்க்கின்றனர். கொடுப்பார் பல்லாயிரக்கணக்கில் கொடுக்க லாம். செலவாவதும் பல்லாயிரக்கணக்கில் செலவாகலாம். ஆனால், பண்புடையார் பண்பு செயலாற்றாதவிடத்து அறத்தின் மணம் இராது. இவ் வறப்பண்பின் மணம் இல்லாமல் சமூகம் நாகரிகமடையவோ வளரவோ முடியவும் செய்யாது. தனிமனிதரை இயல்பாகக் கவர்கின்ற மட்டில் குடி, மீதூண், தன்னடக்க மின்மை, கட்டுப்பாடின்மை ஆகிய தனிமனிதப் பண்புக் குறைகளை அகற்றி, சமூக உறுப்பினர் என்ற முறையில் அவர்களுக்கு இருக்கவேண்டிய நல்ல சமூகப் பண்புகளை நினைவூட்டும்வகையில் செல்வம் பயன்படாது; பண்புடையார் பண்பு மட்டுமே பயன்படும். செல்வம் இப் பண்புடையார் கைப்பட்டாலல்லாமல், அது சமூகச் செல்வமாய், சமூகம் வளர்க்கும் செல்வமாய் இயங்காது. தனிமனிதன் செல்வமாய், தனிமனிதன் குறைகேடுகளை வளர்க்கும் திருவிலாச் செல்வமாக மட்டுமே அது அமையும். சமூகத்துக்கன்றித் தனிமனிதனுக்கு உதவமுடியாத செல்வத்தின் இப் பண்பறிந்தே பெருஞ்செயல் செய்த பேரருளாளர் செல்வத்தைக் கூடியமட்டும் தமக்குச் செலவு செய்யாதிருந்தனர் என்னலாம். உரோமப் பேரரசின் ஒரு பெரும்பகுதியில் கிறித்துவ சமயக் கொடியை நாட்டிய தூய திரு பால் தம் பணித்துறையிலிருந்து ஒரு செப்புக்காசும் எடுத்துச் செலவழிக்க ஒருப்படாது, கூடாரம் செப்பம் செய்தே பிழைத்துவந்தது இதனாலேயே. பண ஆற்றலைப்போல மட்டுமீறித் தவறாகப் பாராட்டப்பெறும் ஆற்றல் வேறு எதுவும் கிடையாது. சமூகத்தில் முன்னணியிடம்பெற இதுவே போதியது என்ற எண்ணத்துடன் உழைப்பவர் பலப்பலர். அவர்கள் தாராளமாகப் பணத்தை வாரி வழங்கலாம். ஆனால், அவர்கள் பணச்செருக்கே அப் பணத்தின் உண்மையான நல் ஆற்றலையும், மதிப்பையும் கெடுத்து விடுகிறது. சிலர் தாராளச்செலவு அவர்கள் நயவஞ்சகத்தின் விளைவு என்பதை அவர்கள் வாழ்க்கைப் போக்கே எடுத்துக் காட்டிவிடுகிறது. இத்தகையோர் குடியொழிப்புக்கும் குடிமறுப்புக் கோட்பாட்டுப் பரப்புக்கும் பணம் வழங்குவர். அவர்கள் மறைவில் குடிப்பர், அத்துடன் குடியாதரவுத் தொழிலால் வருவாய் பெருக்கி அதனையே குடியொழிப்புக்குக் கொடுக்கும் பொல்லாக் கொடைப்பண்பு உடையவராயுமிருப்பர். அவர்கள் கோயில்களுக்கும் அறநிலையங்களுக்கும் வழங்குவர். அவர்கள் வாழ்விலும் செயலிலும் இறைப்பண்பையோ, அற நோக்கத்தையோ மருந்துக்கும் காணமுடியாது. இச்செயல்கள் கயவர்களால் பாராட்டவும் படலாம். ஆனால், அவை பயன்படாது. அவை இடம்பெறுவது இறைவன் திருவேட்டுக் கணக்கில் அன்று; பேயரசன் திருவேட்டுக் கணக்கிலேயே! ``குடிகேட்டைப் பற்றிக் குளறிப்பேசும் குடியரையும், நயவஞ்சகத்தைக் கண்டிக்கும் நயவஞ்சகரையும் நாம் அறிவோம்,'' என்று குறிக்கிறார், மன்னர் ஜேம்ஸ். உருவமில்லாத கடவுளைச் சிற்றுருவங்களில் அடைத்து வழிபடுவது அறியாமை. ஆனால், உருவ வணக்கங்களினும் கொடியது கடவுளைப் பொன் வெள்ளியாக, செல்வமாக எண்ணிப் பூசிப்பது. யூதர்கள் பொன் னாலாகிய ஆன்கன்றை வழிபட்டனர். கிரேக்கர் ஜூபிட்டரின் பொற்சிலையை வணங்கினர். நூறாயிரம்பொன் உடையவனைப் போற்றும் பண்பு உலகெங்கணும் உள்ளது. ஆயினும், மக்கட் பண்புகளுள் மிக இழிந்த பண்பு செல்வத்தைப் பூசிக்கும் பண்பே என்னலாம். செல்வம், உடைமை, விலைமதிப்பு இவற்றைக்கொண்டு தம்மையோ மக்களையோ விலையிடுபவர் கயமையின் எல்லையிலுள்ளவர்களே. ஆயினும், உலகில் பெரும்பாலார் இதைக்கொண்டே மக்களை மதிக்கின்றனர். `அவன் மதிப்பு என்ன' என்றால், எவரும் `அவன் இத்தனை ஆயிரம் உடையவன், இத்தனை வேலி ஆள்பவன் அல்லது இத்தனை ஊதியம் பெறுபவன்,' என்றுதான் கூறுகின்றனர். இதற்குமாறாக, அவன் நல்லவன், அன்புடையவன், ஒழுக்கமுடையவன் என்று பாராட்டுபவர் மிக அரியர். ஒருவன் பத்து நூறாயிரம் உடையவனாயிருந்தால், போதும். அவன் எவ்வளவு சிறுமையுமுடையவனாயிருந்தாலும் சரி, கவர்ச்சியற்றவனா யிருந்தாலும் சரி, அவனைப் பார்க்க மக்கள் வந்து குழுமுவர். அவன் செல்வம் சூதாட்ட மாளிகையினால் வந்ததா, குடிவகைக் குத்தகையால் வந்ததா, கூத்தியர் மாளிகைகளால் வந்ததா என்று எவரும் பார்க்க நாடுவதில்லை. இப் பணக்கிறுக்கு, செல்வத்தின் மாயக் கவர்ச்சி; மனித உலகின் பொதுக்குறை; ஆயினும் ஆங்கில மக்களிடம் இது சிறக்க மலிந்துள்ள பண்பு. இச் செல்வச் செருக்கே நாட்டின் பொதுக்கடன் அளவுபற்றி ஆங்கிலமக்கள் பெருமைப்படச் செய்கிறது. நாட்டிற்குப் பெருமைதரும் பண்பைத் தனிமனிதரும் பேணுவதில் வியப்புக்கிடம் ஏது? ``செல்வம் மட்டும் மனிதரை மனிதர் மறக்கும்படி தூண்டியிரா விட்டால், உலகில் இன்று நடைபெறும் தீமைகளில் பாதித் தீமைகளுக்கு இடமே ஏற்பட்டிராது,'' என்று திரு. கிரிஃவித்ஸ் கூறுகிறார். வேல்ஸ் நாட்டில் மண்ணில் புதையுண்ட திருக்குவைகள் மூலம் பொன்னும் வெள்ளியும் எங்கும் பொங்கி வழிந்தபோது, செல்வர் செல்வத்திற் புரண்டனர். தொழிலாளர் கள் கையில்கூட வெள்ளிகள் கணகணவென் றொலித்தன. ஆயினும் அச் செல்வத்தால் நாட்டில் பொதுநிலையங்கள், நூலகங்கள், பூங்காக்கள், கலையகங்கள் பெருகிவிடவில்லை. தொழிலாளர் வாழ்வின் தாயக வளங்கள் பெருகிவிடவில்லை. செல்வர் செல்வமும் நிலையாகிவிடவில்லை. அத்தனை ஆதாயமும் வீண்போயிற்று. ஏன்? செல்வர் ஆதாயம் நாடினர்; தொழிலாளர்நலம் நாடவில்லை. தொழி லாளரும் தம்போன்ற மனிதரென அவர்கள் எண்ணவில்லை. தம் வாழ்க்கைத் தேவைக்குப்போக மிஞ்சியதை வீண்செலவு செய்வது ஒன்றே தம் உரிமை என்று எண்ணினர். தொழிலாளரும் வந்தது வரவு, வராதது செலவு என்றிருந்தனர். தம் வருங்கால வாழ்வு, தம் சமூகம் ஆகியவற்றை மறந்தனர். செல்வர் செல்வப் பெருக்கு நாடினர், செல்வத்தின் பயன் அறியாமல்! தொழிலாளர் வாழ்க்கை நாடினர், வாழ்க்கை வளம் யாதெனக் காணாமல்! ஏழைகளை இவ்வகையில் ஒருவேளை மன்னிக்கலாம். அவர்கள் வாழ்வுக்கே அலந்தவர்கள். அவர்களுக்குக் கல்வியில்லை. அவர்கள் பிள்ளைகளுக்கும் கல்விதர முடியவில்லை. தம் வாழ்க்கைத் தேவைக்குத் தாளமிடும்போது, பிறர் நலம்பற்றி எண்ண அவர்களுக்கு நேரமில்லாம லிருக்கலாம். ஆனால், செல்வர்களும் இதே நிலையில் இருப்பானேன்! செல்வம் பெருக்கிய அவர்கள் தம் பிள்ளைகளுக்குச் சரியான கல்வி கற்பிப்பதில் கருத்துச் செலுத்துவதில்லை. செலுத்தினாலும் தாம் பெருக்கிய பணத்தைக் கொண்டு தம்மைப்போல் பணம் பெருக்கும் பண்பை வளர்க்கும் ஒரு நிலையிலேயே கல்வி கற்பிப்பர். எனவேதான் செல்வம் அதைச் சேர்க்காததனால் ஏழைகளைத் தண்டிப்பதுபோல, இயற்கைப் பண்பு நாடாததற்குச் செல்வரையும் தண்டித்து ஒறுக்காம லிருப்பதில்லை. செல்வமுடையவர் பெருமை முழுவதும் அவர்கள் வாழ்வுடனோ அல்லது அவர்கள் செல்வத்துடனோ கழிந்து விடுகிறது. பிறர்க்குப் பயன்படாத அந்தப் புகழை, செல்வத்தைப் பூசிப்பவர்கூட நெடுநாள் போற்றமுடியாது. போற்றுபவர்களும் மிகவும் இழிதரத்தவரே. உண்மைப் புகழ் போற்றுதலைப் பொறுத்ததன்று. பயனைப் பொறுத்தது. பயனில் செல்வர் தொகை பெரிது. ஏழையர் வாழ்வுக்கும் அவர் வாழ்வுக்கும் வேற்றுமை மிகுதி காணமுடியாது. முடியரசும் உயர் குடியரசும் மட்டும்தான் செல்வராட்சி என்று கூறுவதற்கில்லை. குடியாட்சிகூடச் செல்வப்பற்றுக் காரணமாகச் செல்வராட்சியாகவே இயல்கின்றது. பல இடங்களிலும் அது மக்களாட்சியாக மலர்வதில்லை. இதற்குக் காரணம் யாதெனில், செல்வத்தில் பற்றுடைய ஏழையர் செயல்களும் செல்வர் செயல்களை ஒத்த பயனில் செயல் களேயாம் என்பதே. செல்வத்தைப் பயன்படுத்துவதிலும் பிறருக்கு நலம் செய்வதிலும் நாட்டமற்றவர் செல்வரானாலும் ஏழை யானாலும் அவர்கள் ஆட்சியும் செயலும் செல்வத்தைப் பூசிப்பவர் ஆட்சியும் செயலுமாகவே அமைய முடியும். உரோமர்களிடையே அருளாளர் என்று போற்றப்பட்ட பெரியார் கேட்டோவும், முடியரசை வெறுத்தெதிர்த்து சீசரை ஒழித்த வீரன் புரூட்டஸும் வட்டித் தொழிலாளராகவும் அடிமையாளிகளாகவுமே இருந்தனர். புரூட்டஸ் நூற்றுக்கு 48 வீதம் வட்டிக்குக் கடன் கொடுத்துவந்தார். அமெரிக்காவின் விடுதலை வீரர் வாஷிங்டன் தம் இறுதிப்பத்திரத்தில் தம் அடிமைகளைத் தம் மனைவிக்கு எழுதிவைத்தார்-அவர்களுக்கு விடுதலை அளிக்கும் எண்ணம் அவருக்கு வரவில்லை! செல்வத்தின் பயனின்மையைச் செல்வமவாவும் குடியாட்சியாளரை விடச் செல்வத்தில் புரண்ட முடியரசர் நன்கு உணர்ந்துகொண்டனர் என்னலாம். துருக்கிப் பேரரசன் சாலடின் சிரியா, அரேபியா, பாரசிகம், மெஸபொட்டேமியா ஆகிய நாடுகளையெல்லாம் வென்ற புகழ் வீரன். அவன் காலத்தில் வீரத்திலும் புகழிலும் செல்வத்திலும் அவனுக்கு மேம்பட்டவர் கிடையாது. ஆயினும், அவன் ஆணைப்படியே அவன் இறந்தபோது அவன் கடைசி ஆடையை அவன் ஆட்கள் ஈட்டியில் மாட்டி உயர்த்திப் பிடித்துக்கொண்டு எங்கும் சுற்றி, ``இதோ பாருங்கள் நாட்டுமக்களே! சுல்தான் சாலடின் வென்ற நாடுகள், ஆண்ட ஆட்சி, ஈட்டிய பெருஞ்செல்வம், பெரு வீரம் யாவற்றிலும் இப்போது மீந்துள்ளது இந்த ஆடை ஒன்றுதான். இதோ அவர் இறுதிச்செல்வம் பாரீர்!'' என்று கூறிச் சென்றனராம். நல்ல இஸ்லாமியன் என்ற முறையில் பேரரசன் மக்கள் வீணே பேரரசு, செல்வம் ஆகியவற்றில் மயங்கிவிடாமல், நல்ல இஸ்லாமிய ராக வாழும்படி கூற இங்ஙனம் தன்னையே ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் காட்டினான். `டான் ஜோஸே டி சாலமாங்கா' ஸ்பெயின் நாட்டில் புகைவண்டித் துறைக் குத்தகையால் பெரும்பொருளும் செல்வாக்கும் ஈட்டிய பொருள்மன்னர். இளமையில் அவர் கிரானெடாப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது கந்தலாடையுடனேயே காலங்கழித்தவர். அச்சகத்திலுழைத்து நாட்டின் பொருளியலமைச்சராகி அதன் பின்னரே பொருளீட்டுந்துறையில் அவர் சிறந்தார். அந் நிலையில் அவர் தம் தாயகப் பல்கலைக் கழகத்தினருக்குத் தம் வாழ்க்கைப் படிப்பினையை அறிவிக்கையில் கூறியதாவது: ``இப் பல்கலைக் கழகம் என்னைக் கலை நோக்கி நாட்டம் செலுத்துவித்தது. இடையே பொன்னின் மாயக்கவர்ச்சியில் நான் வாழ்வைக் கழித்து விட்டேன். ஆயினும், பழைய கலைநாட்டம் என்னிடம் அழிந்துவிடவில்லை. மற்றுமொரு தடவை நான் வாழ்க்கை தொடங்கி னால் நான் பொன்னின் கவர்ச்சியை நாடமாட்டேன். கலையின் கவர்ச்சியையே நாடுவேன். உங்களுக்கு நான் எடுத்துக்காட்டும் வாழ்க்கைப் படிப்பினை இதுவே,'' என்று கூறினார். உண்மையில் செல்வத்தின் பயன் வாழ்வையும், வாழ்வை வளப்படுத்தும் கலையையும் வளர்ப்பது என்பது தவிர வேறன்று. செல்வத்துக்கும் இன்பத்துக்கும் இன்றியமையாத் தொடர்பு இருக்கிறது என்று கருதுவதற்கில்லை. வேண்டுமானால் இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தொடர்பு இருக்கிறது என்றுகூடக் கூறலாம். செல்வம் ஈட்டியவர் வாழ்வில் இன்பமிக்க காலம் செல்வம் ஈட்டிய பின்னுள்ள காலமல்ல. வறுமையுடன் போராடிச் செல்வம் ஈட்டத் தொடங்கிய காலமே. அப்போது, பல நல்ல பண்புகளை வளர்க்கும் வாய்ப்பும் அவர்கட்கு இருந்தது. செலவிறுக்கம் சிக்கனமாக வளர்ந்திருக்க லாம். துன்பம் அவர்களைத் தன்னலமறுத்துப் பிறர்க்கென வாழப் பழக்கியிருக்கலாம். இவ் வாய்ப்பு முழுதும் பயன்படுத்தப்பட்டாலும் படாவிட்டாலும், வறுமையின்போது அவை ஓரளவு துன்பச்சூழலில் இன்பந்தராதிருக்க முடியாது. ஆயினும், செல்வம் வந்தபின் இந்த இன்பத்தை அவர்கள் இழந்து விடுகின்றனர். வறுமை, செல்வம் ஆகிய இருநிலைகளிலும் இயற்கை நன்மை தீங்குகளைச் சமமாகவே பகிர்ந்தளித்துள்ளது. வறியவனுக்கு உணவு உடை போதிய அளவு கிடைப்பதில்லை. ஆனால், அவன் உணவு செரிக்க வைக்கும் ஆற்றலும் பசியும் குளிர் வெப்புத் தாக்கி உழைக்கும் ஆற்றலும் உடையவனாயிருக்கிறான். செல்வன் மட்டுக்குமிஞ்சிய ஊணுடை இன்பப் பொருள்கள் நுகர்கிறான். ஆனால், அவனுக்குப் பசிச்சுவை, உடல் வலு, உடல் நலம், உழைப்பாற்றல் குறைந்து விடுகின்றது. வாத முதலிய நோய்கள் அவன் செல்வத்திற்கீடான பழிகளாகிவிடுகின்றன. இயற்கையின் இந் நடுநிலைப் பண்பறிந்தவர் வறுமை, செல்வம் ஆகிய இருநிலைகளிலுமே ஆவனகொண்டு அல்லன நீக்கி நலம் பெருக்கிக்கொள்வர். இதனை அறியாதவிடத்தில்தான், ஏழை செல்வர்களைக் கண்டு பொறாமைப்படவும், செல்வர் ஏழைகளைக் கண்டு பெருமைப்படவும் செய்வர். பெரும்பாலும் ஏழைகளே செல்வரைக் கண்டு பொறாமை கொள்வர். ஆனால், செல்வத்தில் திளைத்த பலர் ஏழைகளைக் கண்டு பொறாமைப் படுவதும் இல்லாததன்று. பெருஞ்செல்வ னொருவனிடம் நாள்கணக்கில் அரைப் பட்டினியா யிருந்த ஓர் இரவலன் சென்று, ``ஐயா, ஒரே பசியாயிருக்கிறது. செல்வச் சீமானே, சிறிது உணவு கொடுங்கள்,'' என்றானாம். செல்வன் உணவு கொடுத்து விட்டு, ``இரவலனாகிய நீ என் நிலைகண்டு பொறாமைப்பட வேண்டியதைவிட, நான் உன் நிலைகண்டு பொறாமைப்பட வேண்டியவன்,'' என்றான். இரவலனும் மற்ற நண்பர்களும் இதுகேட்டு வியப்படைந்து விழித்தனர். உடனே அவன், ``ஏழையின் பசித்துன்பத்தை நான் நினைத்தால் போக்க முடியும். இதோ இப்போதே போக்கியும் விட்டேன். ஆனால், அவன் நினைத்தால்கூட அவன் பசிச் செல்வத்தை எனக்குத் தரமுடியாதே! என் செல்வத்தில் பாதியை நான் துணிந்தால் அவனுக்குத் தந்துவிட முடியும். ஆனால், அதற்கு மாறாக அவன் பசியில் பாதியைத் தா என்று கேட்டால், அவனால் தரமுடியாதே!'' என்று விளக்கினான். செல்வனின் புறச்செல்வங் கொடுக்கத்தக்கது, பறிக்கத்தக்கது; ஏழையின் அகச்செல்வம் கொடுக்கத் தக்கதன்று, பறிக்கத்தக்கதுமன்று என்பதை இந்நிகழ்ச்சி நன்கு எடுத்துக் காட்டுகிறது. செல்வங் கண்டு பொறாமைப்பட்டு ஏழைகள் செல்வத்தின்மீது மட்டும்தான் பொறாமை கொள்கின்றனர். செல்வத்தை ஈட்டுவதிலும் பேணுவதிலும் உள்ள தொல்லை தொந்தரவுகளை எண்ணிப் பார்த்தால், அவர்கள் பொறாமைப் பட ஏது இராது. டான்ஸிக்குக் கோமகன் ஒரு தடவை உயர்தர அருந்தகத்தில் தனிக்கூடத் தமர்ந்து ஒரு நண்பருடன் உண்டியயர்ந்திருந்தார். அவர் பெருஞ் செலவும் ஆரவார அமைதியும் நண்பன் உள்ளத்தைச் சிறிது அழுத்தின. அதைக் குறிப்பினாலுணர்ந்த கோமகன், ``அன்பரே, இந்த ஆரவாரச் செல்வ முழுவதையும் நான் எவருக்கு வேண்டுமானாலும் தரத்துணிவேன். ஆனால், அதற்கு ஒரே ஒரு கட்டுப்பாடு'' என்றார். நண்பன் துணிவுடன் ``என்ன அத்தகைய கட்டுப் பாடு?'' என்றான். ``இருபதடி தொலைவிலிருந்து துப்பாக்கியால் உம்மீது நூறு தடவை நான் சுடுவதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் என் செல்வமெல்லாம் பெறலாம்'' என்றார். ``உம் செல்வம் போன்ற எத்தனை மடங்கு செல்வந் தந்தாலும் இதற்கு இணங்கமாட்டேன்,'' என்றான் நண்பன். உடனே கோமகன், ``இச்செல்வத்தைப் பெற நீங்கள் இவ்வளவு துணிவுகொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால், இதனினும் எத்தனையோ கடுமையான இடர்களைத் தாங்கியே நான் அதை ஈட்ட முடிந்தது,'' என்று விளக்கம் கூறினார். செல்வமீட்டிய பலர் செல்வங் கண்டு பொறாமை கொள்பவர் அதனை ஈட்டுவதிலுள்ள இடர்களை மறப்பது போலவே, பெருநிலை யடைந்தவர்களின் பெருநிலையை மட்டும் எண்ணிப் பொறாமைப்படுபவர் அதற்குரிய அவர்கள் பெரும் பண்புகளை உன்னித்துப் பார்ப்பதில்லை. மார்ல்பரோ கோமகன் பெரு வெற்றிகள் கண்ட படைத் தலைவர் மட்டுமல்லர்; அதன் பயனாகப் பெரும் செல்வமும் திரட்டி வைத்துச் சென்றவர். ஆயினும், அவர் செலவுகள் சிக்கனத்தின் எல்லை கடந்து கஞ்சத்தனம் என்று கருதத்தக்கவையா யிருந்தன. மன்னர் வந்து போர்மன்றம் நடத்தியபோதுகூட அவர் தம் பாசறையில் நான்கு விளக்குகளுக்குமேல் ஏற்ற இணங்கவில்லை. நோய்ப்பட்ட போதுகூட அவர் ஊர்தியில்லாமல் நடந்தே சென்றார். ஆயினும் இப் பண்புகளெல்லாம் கஞ்சத்தனமல்ல, சிக்கனமே என்று கூறலாம். ஏனெனில் அவர் செலவு செய்ய வேண்டிய இடத்தில் தாராளமாகச் செலவு செய்யத் தயங்கவில்லை. தகுதியுடைய போர்வீரன் ஒருவன் தன் பதவிக்கு வேண்டிய கட்டளை பெறப் பணமில்லாதிருந்தது கண்டபோது அவர் ஆயிரம் பொன் தந்து உதவினார். பாலிங்புரோக்குக் கோமகனிடம் ஒருவன் மார்ல் பரோவைப் பற்றிக் குறைகூறியபோது, அவர் ``மார்ல்பரோ எவ்வளவோ பெரியவர். அவர் குறைகளைக் காணும் அளவு பெரிய கண் நமக்கு ஏது?'' என்றார். உண்மையான இன்பத்தின் தன்மையை மூர் கூறும் கதை ஒன்று நகைத்திறத்துடன் விளக்குகிறது. ஆட்சிச் செருக்கும் செல்வச் செருக்கும் உடைய கீழ்நாட்டு அரசன் ஒருவன் தீராத நோயினால் துன்புற்றான். அவன் மருத்துவன் குறையற்ற இன்பவாழ்வுடைய ஒருவனது உடுப்பை அணிந்து, அவன் உணவையும் உண்டால் நோய் தீரும் என்று கூறியிருந்தான். அரசனாணைப்படி வல்லுநர் குறையற்ற இன்பவாணனைத் தேடி உலகெங்கும் சென்றனர். அத்தகையவனை அவர்கள் அயர்லாந்து நாட்டில் கண்டனர். அவனுக்கு உடுக்க உடுப்பு இல்லை. அவன் பெரும்பாலும் உண்பதேயில்லை. இதை அறிந்த அரசன் தன் மிகுதிப்படி உடை, உணவு குறைத்து உடல்நலப்பட்டானாம்! ஏழ்மை தனிப்பட வெறுக்கத்தகுந்த ஒன்று அல்ல. குற்றமற்ற வறுமை குற்றமற்ற செல்வத்தைவிட அறிஞராலும் கலைஞராலும் போற்றவே படுகிறது. செல்வம் நாடித் தீங்கு செய்யாது, தன் நாணயத்தை விற்காது இருக்கும் ஏழை, செல்வர்களைவிட மதிப்புப் பெறுவது உறுதி. ஆயினும் நற்பண்புகள் ஓரளவு செல்வத்தின் துணைகொண்டே வளர்ந்து சமூகத்துக்குப் பயன்தரும். வறுமையிற் செம்மை, கவிஞர் புகழுக்கு மட்டும்தான் இலக்கு ஆகலாம். ஏனெனில், அது தனிமனிதன் பண்பாக நின்றுவிடுகிறது. அவ் வறுமையிற் செம்மை பண மீத்துவைக்கும் பழக்கத்துடன் சேர்ந்து செல்வத்திற் செம்மையானால்தான் அது சமூக ஒழுக்க முறையாகும். இச் சமூக ஒழுக்க முறையை நாம் அறம் என்கிறோம். அறம் தனிமனிதர் உயர்பண்பினால் ஆவது மட்டுமன்று; அது சமூகப் பண்புக்குரியது. ஆனால், சமூக உறுப்பினனுக்குரிய தகுதி தனி மனிதனிடமிருந்தாலன்றி அறம் அவனைத் தீண்டமுடியாது. அறநிலையங்களுக்காக எத்தனையோ பேரிடமிருந்து தனிப்பட்டவர் முயற்சியாலும், அரசியலார் முயற்சியாலும் எவ்வளவோ கோடிக்கணக்கான பொன் திரட்டப்பட்டு, ஆண்டுதோறும் செலவழிக்கப்படுகின்றது. ஆயினும் இப் பணமெல்லாம் துன்பத்தை ஒரு சிறிதும் குறைக்கக் காணோம். இதற்குக் காரணமென்ன? தன் மறுப்பு, மீத்துவைப்பு ஆகிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அப் பண்பு களைப் பெருக்கினாலன்றி, பொதுநல நோக்கும் அறச்செயலும் ஏற்பட முடியாது. துன்பப் படுபவனுக்குப் பணம் கொடுப்ப தாலோ, பணத்தினுதவியால் ஊணுடை கொடுப்பதாலோ, அவன் துன்பம் தீர்ந்துவிடமுடியாது. அவன் பண உதவியைக் கருவியாகப் பயன்படுத்தித் தன்முயற்சி, தன் மறுப்பு, பிறர்நலம் பேணல் ஆகிய நற்பண்புகளில் பயிற்றுவிக்கப்பட்டாலன்றி, அவன் துன்பத்தை எதிர்த்துப் போராடி இன்பம் பெற மாட்டான். அது மட்டுமன்று. அறச்செயலில் உதவுபவரும் அதைத் தொழிலாகக் கொண்டு ஊதியம் பெற்றுச் செயலாற்று பவராயிருந்தால் அவர்கள் செயல் ஒருநாளும் அறச்செயலாக விளங்காது. அவர்கள் தங்களிடமில்லாத இப் பண்பைப் பிறரிடம் எப்படி வளர்க்கமுடியும்? அந்த நோக்கம்தான் அவர்களுக்கு எப்படி உண்டாகும்? மூன்றாவதாக, பொருள் கொடுப்பவரும் திரட்டுபவரும் பொருளைக் கொடுத்துவிட்டுத் தம் கடமை தீர்ந்து விட்டதாக எண்ணியிருக்கின்றனர். அவர்கள் மீத்து வைத்தவரானால், பொதுநல நோக் குடையவரானால், தம் பணத்தை இப் பண்பு பேணுதற்கு உதவியாகப் பயன்படுவதில் அக்கறை காட்டுவார்கள். கொடுப்போர், உழைப்போர், பயன்பெறுவோர் இம் முத்திறத்தாரிடமும் தகுதியில்லாமையினால்தான் இன்றைய உலகின் அற நிலையங்கள் பணத்தைப் பாழாக்கும் நிலையங்க ளாகவோ, பலருக்கு நல்ல உதவி தரும் நிலையங்களாகவோ, சோம் பேறிகளைப் பேணி வளர்க்கும் நிலையங்களாகவோ மட்டும் இருக் கின்றன. பணம் கொடுப்பதுதான் ஈகை என்ற கருத்து, ஈகை அறம் ஆகியவற்றின் பண்பையே கெடுத்துவிடுகிறது. பணத்தைவிட அன்பாதரவு, தன்மறுப்பு, உள்ளன்பு, ஒத்துழைப்பு, பண்பாட்டுப் பயிற்சி, நல்ல முன்மாதிரி ஆகியவை அறச்செயலுக்கு முக்கியமானவை. கொடுப்பவன் நல்லெண்ணமும் ஏற்பவன் தன்முயற்சியும், தற்சார்பும், தன்மதிப்பும் இல்லாதவிடத்தில், ஈகை உண்மையில் சோம்பேறிகள், சுரண்டல் குழுவினரை ஆதரிப்பதற்காகத் தரப்படும் மறைமுகக் கைக்கூலியாகவே அமைய முடியும். பணம் கொடுப்பதுமட்டும் அறமாகாது. அது போலவே பண உதவியற்ற அறப்போதனையும் அறமாகாது. தூயதிரு ஸ்டோன் இவ் வகையில் சமயப் பணியாளர் பின்பற்றும் முறைகளை மிகவும் சாடியுள்ளார். `சமயப்பணியாளர் ஏழைகளின் குடிசைகளுக்குத் தம் சட்டைப் பையில் ஒரு விவிலிய நூலுடன் சென்றுவிடுகின்றனர். மறுபையில் ஓர் அப்பத்துண்டும் நல்ல தேனீர்ப் புட்டியும், ஒரு நல்லாடை அல்லது போர்வையும், ஒன்றிரண்டு வெள்ளியும் இல்லாமல் அவர்கள் போவதானால், அவர்கள் சமயப்பணி உள்ளன்பில்லாத சமயப்பணி; அது சமயப்பணியின் பெயரால் நடத்தும் கேலிக்கூத்தேயாகும். அறச்செயலை அறநிலையத்தின் கையில் விட்டு விட்டுச் சமயப் பணியாளர் வெற்றுரை பேசுவதில் பயனில்லை, அறம் என்ற பெயரால் அன்பு, அறிவுரை இல்லாத பணஉதவியும், சமயப்பணி என்ற பெயரால் உதவியில்லாத வெற்றறி வுரையும் ஏழைமக்கள் வாழ்வைக் கேலிசெய்யும் அறிவிலாக் கொடுஞ் செயலாகவே முடிகின்றன. உடலுக்கு உணவு, உடை, உறையுள்வாய்ப்பு, உளத்துக்கு அன்பாதரவுரை, அறிவுக்கு நல்வாழ்வுக்குரிய நல்ல அறிவுரை, பண்புப் பயிற்சி இத்தனையும் சேர்ந்தே உண்மை அறச் செயலும், உண்மைச் சமயப்பணியும் ஆகும். பழைய முறையிலுள்ள இப் போலி அறநிலையங்களுக்கும் போலிச் சமயப்பணிக்கும் மாறாக, உண்மையான சமூக நல அறப்பணி அணிமைக் காலங்களில் பலரால் செய்யப்பட்டு வருகிறது. இவர்கள் ஏழை தலையில் பணத்தை எறிந்து அவர்களைக் குறைகூறி வாழ்வதில்லை. அவர்களுக்கு நல்வீடு, நல் ஊணுடை வகுத்தளித்து, நல்வாழ்க்கைப் பயிற்சியளிப்பதன் மூலம், இக் கழகங்கள் அவர்களையும் பிறரைப்போலச் சமூகத்தில் சரிசம உறுப்பினராக்கப் பாடுபடுகின்றன. இதுவே உண்மைச் செல்வர் செல்வத்தின் பயன்; இது சமூகச் செல்வத்தையும் பெருக்கும் பண்பாய் நிலவவல்லது. இறக்கும் தறுவாயில் நல்லெண்ணமுடைய எத்தனையோ பேர் பெருஞ்செல்வத்தைப் பலவகைப்பட்ட அறச் செயல்களுக்கென நிறுவிச் சென்றுள்ளனர். ஆயினும் இவ்வற நிலையங்களால் இதுவரை ஏழைகளுக்கும், உலகுக்கும் நன்மை மிகுதி விளையாதது மட்டுமல்ல; தீமையும் மிகுதி விளைந் துள்ளது என்று கூறலாம். இது வகையில் ஏற்பட்டுள்ள குறை முழுவதும் கொடுப்பவர்களைச் சார்ந்ததல்ல; கொடுப்பவர், நடத்துபவர், ஏற்பவர் கூட்டுக் குறையே என்பதை மேலே விளக்கி யுள்ளோம். அணிமைக் கால அறநிலையங்களின் போக்கு இக்குறைகளை விளக்குவ துடன் அது நீங்கிவரும் வகையினையும் தெளிவாகக் காட்டும். இங்கிலாந்தின் ஊர்தி அமைப்புக்கள், துறைமுக அமைப்புக்களை உருவாக்கிய தொழிலாளர் மிகப் பெரும் பான்மையும் கடற்படைத் தொழிலாளர்களே. இவர்கள் கடும் உழைப்பாளிகள். அதே சமயம் அலைகடல் புயலிடையே வாழ்ந்ததால் உறுதியான உள்ளமும் அகன்ற நல்ல நெஞ்சீரமும் உடையவர்கள். மேலும் அவர்கள் தன்மறுப்பும் தன்மதிப்பும் மிக்கவர்கள். அவர்கள் கடல் வாழ்விலுள்ள துன்பங்கள் பல. அவற்றில் தேறிய அவர்கள், அவை போதாமல் இக் கடுந் தொழிலிலும் எத்தனையோ பேரிடையூறுகளுக்கு ஆளாகி யுள்ளனர். மாஞ்செஸ்டர், ஷெஃவீல்டு, லிங்கன்ஷயர் புகை வண்டியமைப்புக்களில் மட்டும் 22 பேரெலும்பு முறிவுகளும், 74 சிற்றெலும்பு முறிவுகளும் ஏற்பட்டன. சுளுக்கு, முடக்கு, ஊதுலை வெப்பால் கண் காது உறுப்புச் சிதைவுகள் வேறு நிகழ்ந்துள்ளன. இத்தீங்குகளுக்கு ஆளானவர் பலர் ஏழைத் தொழிலகம் சென்று வாழவிரும்பாதவர்கள். ஊர்தியமைப்பு களால் பெரும்பொருள் ஈட்டியவர் எத்தனையோ பேரிருந்தாலும் அவர்கள் இவ் வுழைப்பாளரின் உழைப்பருமையையும், அவர்கள் நிலையையும் எண்ணிப் பார்ப்பதில்லை. அத்துறைக் குத்தகையில் பல நல்ல தொழிலாளிகளுடன் பழகிய ஒருவர் திறமையான ஒரு பழைய தொழிலாளி வழிப்பாதை யருகில் கிடப்பது கண்டு, ``அன்பனே, ஏனிப்படிக் கிடக்கிறாய்?'' என்றார். ``ஐயா, நான் இனித் தொழில் செய்ய முடியாது. ஆகவே இங்கே வந்து ஓய்வுடன் சாகவந் திருக்கிறேன்,'' என்று தொழிலாளி கூறினான். அவர் ``ஏன்? ஏழையகங்களில் இடந் தேடித் தருகிறேனே!'' என்றார். அவன் ``ஐயா, அந்த இருண்ட குகைகளில் சாவதைவிட, இவ்வகல் வெளியில் சாவது மேலல்லவா?'' என்றான். இத்தொழிலாளர் களின் பண்பறிந்து உதவும் கடலகத்தாரில்லங்கள் (சூயஎல'ள ழடிஅந) அமைப்பதில் அவர்கள் உழைப்பைக் காசாக்கிய செல்வர் மிகுதியும் அசட்டையாக இருந்து வந்துள்ளனர். அணிமைக் காலத்தில் ஏற்பட்ட மேம்பட்ட நல்ல அறநிலையங்கள் வாழ்நாள் முழுவதும் தொழிலாளராயிருந்து பேரின்னல்களுக்காளானவர்கள் நன்கொடையாலேயே நிறுவப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது. ஃவிலாடெல்ஃவியா நகரத்தையே ஒரு வையகத் துறக்கமாக ஆக்கிய அறநிலையப் பெரியார் ஸ்டீஃவென் கிரார்டு வாழ்க்கை இதற்கு ஒரு சான்று. கிரார்டு கல்வி வசதியற்ற ஒரு பஞ்சைக் குடும்பத்திற் பிறந்து கப்பல்துறையில் குற்றேவல் சிறுவனாயிருந்தார். அவர் மணவாழ்வு முழுவதும் துன்பமயமாய் முடிந்தது. மனைவி அவருடன் ஒத்துவாழ முடியாது, இறுதியில் பித்துப்பிடித்து மருத்துவ விடுதியில் மாண்டாள். குடும்ப வாழ்வு வெறுத்துக் கப்பல் தொழிலாளராய், பணத்தின் இன்றியமையாமையறிந்து ஒரே மூச்சாய் உழைத்துப் பெரும் பொருள் திரட்டினார். தாம் பணமும் பணத்தால் ஏற்படத்தக்க வாய்ப்பும் இல்லாமல் பட்ட துயரைத் தம் பின்னோர் படக்கூடாதென்ற எண்ணத்துடன் அவர் தம் பொருளை அத்துறைக்குத் தந்ததுடன், அதை எவ்வாறு செலவு செய்வதென்றே திட்டமும் தாமே வகுத்தார். மேலும் ஃவிலாடெல்ஃவியாவில் மஞ்சள் காய்ச்சல் வீசியடித்து அழிவு செய்தபோது, பீட்டர் ஹெல்ம் என்ற மருத்துவப் பணியாளருடன் மருத்துவப் பணியகத்தின் மேலாட்சிப் பொறுப்பைத் தாமே எடுத்துக் கொண்டார். பொருளீட்டும் தொழிலில் தாம் கற்ற திறமுழுதும் இச் சமூகப்பணியில் அவர் காட்டினார். வெறும் மருத்துவ உதவியுடன் நில்லாமல், நோயாளிகளின் உடல்நலம், உளநலம், வாழ்க்கைநலம் ஆகியவற்றுக்கான யாவுஞ் செய்து, அவர் உலகின் கண்களையே நல்லறத்தின் புது விளைவில் திருப்பினார். இதே பணி விரிவடைந்து ஃவிலாடெல்ஃவியா நகரத்தாருக்கு அணியணியான அகல் தெருக்கள், நல்ல மாடிவீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிலகங்கள் யாவும் அமைந்த புத்துலக வாழ்வாக வகுத்தார். ஃவிலாடெல்ஃவியாவைப் போலவே ஸ்காட்லந்து மக்கள் பலரின் நல்வாழ்க்கை ஆர்வமிக்க பணியால் எடின்பர்க் ஒரு நல்லற நகராக இயங்குகிறது. 9. நல்வாழ்வுடைய இல்லங்கள் ``நாகரிகத்தின் மிகச் சிறந்த காப்பகம், வீடு!'' - பி. டிஸ்ரேலி. ``ஏழையர் கலைப்பண்பு தூய்மை'' - ஆங்கிலப் பழமொழி. ``அழுக்கு, அருவருப்பு ஆகியவற்றிடையே நற்பண்பு இயங்கமுடியாது. -கோமகன் ரம்ஃவோர்டு. ``உதவும் நற்பண்புத் தெய்வம் பலபல நிதமும் மாந்தர் துணைதர நிற்பன; பதனில் மாந்தர் அடிபட் டழிந்து, நோய் இதம்செய் நன்மருந் தாமவை பொன்றுவ!'' - ஜார்ஜ் ஹெர்பர்ட் உடல்நலமே உண்மைச்செல்வம் என்பது பழமொழி. உடல்நல மில்லாதவிடத்தில் செல்வம் முற்றிலும் பயனற்றுப் போவது காணலாம். பெருஞ்செல்வர் தம் செல்வ முழுதும் கொட்டி உடல்நலம் பெறத் துடிப்பதும் நாம் காணாததன்று. ஆயினும், பெருஞ்செல்வர் செல்வத் தாலும் கிடைத்தற்கரிய இவ் வுயர்செல்வம் உடலுழைப்பாளிகளுக்கும் உள உழைப்பாளி களுக்கும் வெவ்வேறு வகையில் எளிதாகக் கிடைக்கின்றது. உழைப்பால் மட்டுமே பெறத்தக்க இவ் அகச்செல்வத்தைப் பெருக்கும் வாய்ப்பளிக்க மட்டுமே புறச்செல்வம் தேவைப்படுகிறது. இப் புறச் செல்வமும் உழைப்பாளிகள் உழைப்பின் பயனாகவே வருவதாயினும், மனித நாகரிகப் போக்கில், உழைப்பாளிகளின் தவறுகளாலும் ஒற்றுமைக் குறைவாலும் உழைப்பற்ற ஒரு வகுப்பார் தோன்றி அதனைக் கைப்பற்றிச் செல்வராக முடிந்துள்ளது. மனிதர் புற உடலமைப்பும் அக உடல் அஃதாவது உளத்தின் அமைப்பும் உழைப்பு, இன்பம் ஆகிய இரண்டை எதிர்நோக்கியே அமைந்துள்ளது. உழைப்பு அதனை வளர்க்கிறது. இன்பம் நோக்கி அது வளர்கிறது. இந்த இரண்டுக்கும் இடைப்பட்டு, இரண்டுக்கும் அடிப்படையாக உதவுபவை உடல்நலமும், அதற்குரிய நல் வாய்ப்புக்களுமே யாகும். இவற்றை மனிதன் அறிவு கொண்டு அமைக்கலாம்; பொருள் அதைத் திறம்பட அமைப்பதற்கான ஒரு நல்ல துணைக்கருவி, அல்லது இயந்திரம் மட்டுமே. அதனை இத்தகையதொரு கருவியாகப் பயன்படுத்த முடியாதவர் அதன் பயன் அறியாதவர். செல்வரில் பெரும் பாலோர் அதனை வாழ்க்கை வளந்தரும் கருவியாகக் கருதாமல், வாழ்க்கையின் இன்றியமையாத் தேவைகளைத் தொழிலாளரிட மிருந்து விலக்கிக் கையடக்கியும், தொழிற்சாதனங்களைக் கையடக்கியும், அவர்கள் உழைப்பைக் கூடியமட்டும் குறைந்த விலைக்கு வாங்குபவராகவே அமைந்துள்ளனர். உழைப்பையும், உழைப்பின் பயனையும் உழைப்பாளி களிடமிருந்து செல்வர் வாங்கினாலும், அதனால் அவர்கள் உண்மையில் பயன்பெற முடிவதில்லை. அத்துடன் அவர்கள் தொழிலாளிகளையும் முழுதும் பயன்பெறவொட்டாமல் தடுக்கின்றனர். உழைப்பின் பயனாகத் தொழிலாளர்க்கு உடல்நலமும் இன்பநுகர்வுக்கான அடிப்படைப் பண்புகளும் ஏற்படுகின்றன. உடல்நலம் என்பது உடலுறுப்புகளின் சரிசம வளர்ச்சி. இவ் வளர்ச்சியினால் தொழிலாளிக்கு நீடித்த வாழ்வும் அக உறுப்புக்களாகிய அறிவுத்திறமும் வளர்ச்சியடைகின்றன. அறிவுழைப்பாளிகள் என்பவர்கள் பெரும்பாலும் சிறிது வாய்ப்புப் பெற்ற உழைப்பாளிகள் வகுப்பினரே யாவர். அவர்கள் அறிவுழைப்பு மேலும் அறிவுறுப்புக்களை வளர்க்கிறது. ஆயினும் சரிசம வளர்ச்சி வகையிலும் நீடித்த வாழ்நாள் வகையிலும் அவர்கள் உடலுழைப்பாளிகளுக்குப் பிந்திய நிலையுடை யவர்களே. புதிய அறிவாளிகள் அறிவு வகுப்பிற்கு வெளியே தொழிலாளர் வகுப்பிலிருந்தே அடிக்கடி தோற்றுவதன் காரணம் இதுவே. வாழ்நாள் நீட்டிப்பு இன்ப வாழ்வைப் பொறுத்தது. செல்வருக்குள்ள இன்பவாய்ப்பு தொழிலாளிகளுக்குக் குறைவேயானாலும், இன்பநுகர்வுக்கு அடிப்படையான உடல்நலம் அவர்களுக்கு இருப்பதனால், மொத்தத்தில் அவர்கள் செல்வரைவிட இன்பநுகர்வு உடையவரே யாவர். மீத்துவைப்பின் மூலமும், கல்வி மூலமும் அவர்கள் வாழ்வு செம்மைப்பட்டால், மனித இனத்தில் பேரளவான இன்பம் காண்பவர்கள் அவர்களே என்னலாம். வாழ்க்கையின் பலதுறைக் கடமைகள் யாவற்றையும் சரிசம அளவில் நிறைவுறப் பெற்றவனே உடல்நலமுடையவனாவான். அவனே முழுஅளவு இன்பத்தையும் நீண்ட வாழ்நாளையும் அறிவுத் திறத்தையும் உடையவனாதற் குரியவனும் ஆவான், ``இன்பம் வாழ்வின் நோக்கம் மட்டுமன்று; வாழ்க்கை நீட்டிப்பிற்குரிய இன்றியமையா மூல காரணமும் அதுவே.'' இன்ப மிகுதி உடையவனாகுந்தோறும் ஒருவன் வாழ்நாள் நீடிக்கும். இன்பங் குறையும் தோறும், துன்பங் கூடுந்தோறும் அவன் வாழ்நாள் குறுகும். ஆகவே, இன்பத்தைப் பெருக்குவது வாழ்வை நீட்டிப்பது; துன்புறுத்துவது வாழ்க்கையைக் குறுக்குவது ஆகும். வாழ்வின் அடிப்படைப் பண்பு துன்பமன்று; இன்பமே. துன்பமும் நோவும் வாழ்க்கையின் பொது இயல்பமைதியன்று; அதன் சிறப்பு விலக்கு ஆன வழுக்கள் மட்டுமே. வாழ்வு துன்பமயமானதன்று, இன்பமயமானது. அதைத் துன்ப மயமெனக் கருதுபவர்களும் ஆக்குபவர்களும் அறிவிலிகள். அதே சமயம் அறிவுடையவன் துன்பத்தைக்கூடத் தீமை என்று கருத வேண்டியதில்லை. இயற்கை, துன்பத்தை ஒரு தண்டனையாகத் தருவதில்லை. ஓர் எச்சரிக்கையாகவே தருகின்றது. இதனாலேயே துன்பமும் இன்னலும் அறிவைத் தீட்டுகின்றது, செயலறிவைப் பெருக்குகின்றது என்று அறிஞர் கூறுகின்றனர் இதற்கு நேர்மாறாக, இன்பம் தீமையைத் தருகிறது என்று கூறிய அறிஞரும் கலைஞரும் உண்டு. ஆனால், இங்கே கூறப்பட்ட இன்பம் முயன்று பெறாத, உழைப்பில்லாமல் பெற்ற போலி இன்பமட்டுமே. துன்பத்தின் எச்சரிக்கையைக் கேளாமல் செவிடாய், அத்துன்பத்தின் புறத் தோற்ற மயக்கையே இன்பம் எனப் பலர் கொள்வதுண்டு. அறிஞர் கண்டித் தொறுத்த இன்பம் துன்பத்தை மூடி வளர்க்கும் இச் சோம்பலின்பத்தையே. இயற்கையுட னொத்துவாழ் என்று துன்பம் நம்மை எச்சரிக்கிறது. இயற்கையுடனொத்த வாழ்வே உண்மை இன்பம் தரும். அறிவு இயற்கையின் மறைந்த அமைதிகளை நுணுகிக் காணச்செய்து இவ் வின்பங்களையும் இன்ப வாய்ப்பையும் பெருக்குகிறது. இவ்வறிவே புத்தறிவு அல்லது மெய்யறிவு எனப்பெறும். இதன் ஒளியே பண்பு. அது கலைப்பண்பாகவும் வாழ்க்கைப் பண்பாகவும் மலர்கிறது. தனிமனிதன் உடலும் உளமும் தனித்தனியாகவும் கூட்டாகவும் இந்த இயற்கையமைதியுடனொத்து இயங்கும்வரை, உடல்நலமும் உளநலமும் மட்டுமன்றி அறிவுநலமும் செழித்தோங்கும். இவ் வமைதியை உணரவே அவனுக்குப் பகுத்தறிவு வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வமைதிகளை மீறும் போதெல்லாம் அவனுக்குப் பலவகைத் தீங்குகளும் குறைகளும் ஏற்படுகின்றன. உடலுழைப்புமட்டும் செய்தால் அவன் வலுப்பெறுகிறான். நீடித்த வாழ்வு பெறுவதில்லை. அறிவுழைப்பு மட்டும் செய்தால் வலுவின்றி நீடித்த வாழ்வு பெறுகிறான்-ஆனால், வலுக்குறைவால் நோய்களுக்கு ஆளாகி அடிக்கடி நீடித்த வாழ்வின் பயனைக் கெடுத்துக்கொள்கிறான். இரண்டு உழைப்பும் இல்லாத சோம்பனாயிருந்தால், உடல் வலுக்குறைந்து பெருத்து, இன்ப நுகர்வாற்றலில்லாமல் நோய்களுக்காளாகிக் குறுகிய வாணாள் உடையவனாகிறான். குடி, அவனுக்கு நரம்புத் தளர்ச்சி, பசியின்மை, வலுவின்மை, நோய், நடுக்கு வாதம், திமிர்வாதம் முதலிய நோய்கள் தந்து அவனை வாட்டுகின்றது. மீதூணும் உழைப்புக்கு மேற்பட்ட மட்டிலா இன்பமும் திடீர் நோய்களும் திடீர் உயிர்நீப்பும் தருகின்றன. தனிமனிதன் உடலைப்போலவே, குடும்ப வாழ்வுக்குரிய வீட்டு வாழ்விலும் சமூக வாழ்வுக்குரிய நாட்டு வாழ்விலும் இயற்கையமைதி பேணுதல் நலன்களையும், அவற்றை மீறுதல் தீமைகளையும் தருகின்றன. வீட்டிலும் தெருவிலும் முழுமுழு வட்டங்களிலும், நீர், சாக்கடை தேங்கவிட்டால் நாற்றமும் உடல்நலக் கேடும் பெருகுகின்றன. வீட்டு நலத்தைக் கெடுப்பது வீட்டுச் சாக்கடை மட்டுமன்று; அடுத்த வீட்டுச் சாக்கடையும், தெருச் சாக்கடையும் அடுத்த தெரு, ஊரிலுள்ள நாற்றக் காற்றும் கூட ஊரும் தெருவும் வீடும் கடந்துவந்து தாக்கும் தன்மை யுடையன. ஆகவே வீட்டிலுள்ளார் வீட்டைத் தூய்மையாய் வைத்துக் கொள்வதன் மூலம் தனிமனிதர், வீடு ஆகியவற்றின் கடமையை மட்டுமல்ல, தெரு, ஊர், நாட்டுக் கடமையையும் ஆற்றுகின்றனர். இத்துடன் அவர்கள் கடமை முடிந்துவிடவி ல்லை. தெருவையும் ஊரையும் நாட்டையும் படிப்படியாகத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் பொறுப்பு ஒவ்வொரு வீட்டானுக்கும் உண்டு. வீட்டுப் பொறுப்பு அவன் தனிச் சமூகப் பொறுப்பும் தனிப் பொறுப்பும் ஆகும். ஊர்ப்பொறுப்பு, நாட்டுப் பொறுப்பு அவன் கூட்டுப் பொறுப்பின் தனி உரிமைப் பங்கு ஆகும். சாக்கடை மட்டுமன்று; துப்புரவின்மையையும் நோயையும் வளர்ப்பது; மிகுதி நெருக்கடியான வீடு, தெரு, ஊர் யாவும் நோய் நிலையை வருந்தி யழைக்கின்றன. வீட்டின் ஆட்கள் தொகைக்குப் போதிய அறைகளும், போதிய அகலமான அறைகளும் இல்லாமலிருந்தாலும், வீட்டின் உயரம் மிகக் குறைவாயிருந் தாலும், எல்லாரும் மூச்சுவிடப் போதிய காற்றும் காற்றோட்டமும் இராது. குளிர், மழை காலங்களில் அடைத்து, மற்றக் காலங்களில் திறக்கத் தகுந்த பலகணிகள், கதவுகள், சுற்று வழிகள், முற்றங்கள் இல்லாவிட்டாலும், கதவும் பலகணியும் பொருந்தச் சாத்திய காலங்களில் வெளிச்சம் தரும் கண்ணாடிக் கதவுகள், கண்ணாடி ஓடுகள், காற்றுப் புகும் காலதர்கள் ஆகியவை அமையா விட்டாலும் கேடுகள் ஏற்படுவது எளிது. இவை வீட்டு வாழ்வின் இன்றியமையா வாய்ப்புக்கள். இவற்றைச் செல்வர் வீட்டுக்கே உரியதெனத் தள்ளிவிடுதல் நன்றன்று. உண்மையில் செல்வர் வீட்டில் மட்டும் இவ் வாய்ப்புகள் இருந்தால் செல்வருக்குக் கூடப் போதாது. ஏனென்றால் அயலவர் வீட்டு நோய்நொடிகள் அவர்களையும் தாக்காதிரா. இயற்கையிலேயே பிறரை விட நோய்நொடிக்கு எளிதில் ஆளாகுபவர்களும் அவர்களே. ஆகவே, தன்னல அறிவு இருந்தால்கூடச் செல்வர் தம் வீட்டுடன் தம் செல்வத்தின் பயனைக் கட்டி வைத்தால், அவர்கள் வாழ்வு சீர்கேடே யடையும். தமக்காக வேண்டியாவது, அவர்கள் பிறர்க்கு உழைத்தாகவேண்டும். மிக அகலங் குறைந்த ஒடுங்கிய தெருக்கள், மிக நெருங்கிய வீடுகள் உள்ள தெருக்கள் ஆகியவையும் இது போலவே தீமை தருவன. ஒவ்வொரு வீட்டின் உயரத்துக்கேற்ப அதற்குக் கடைகால் ஆழமாகவும் உறுதியாகவும் இல்லாவிட்டால், அது விழுந்து வீட்டுக்கு உரியவர்க்கும் அயலார்க்கும் தீங்கு விளைவிக்கும். தவிர ஒரு வீட்டின் கடைகாலுக்கு வலுத்தருவது அயல்வீடுகளும், அவற்றின் கடைகால்களுமே. செல்வர் நகர் நடுவில் வீடுகளின் அண்டையில் வீடு கட்டும்போது வேண்டும் கடைகாலைவிட, நகர் ஓரங்களிலோ, தனி மதிலகத்திலோ வீடு கட்டினால் வேண்டும் கடைகால் இன்னும் ஆழமும் பக்க அகலமும் உடையதா யிருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது. ஆகவே, செல்வர் வாழ்வு தம் வீட்டைமட்டும் பொறுத்த தன்று. பிற வீடுகளின் உறுதியையும் அவர்கள் பயன்படுத்து கின்றனர் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடும். காற்றுக்கடுத்தபடியும் இடத்துக்கு அடுத்தபடியும் ஊரின் நீர்வசதி முக்கியமானது. வாழ்க்கைக்கு நீர் உயிர் போன்றது. ஆனால், அதே நீர் பலவகையில் வாழ்க்கைக்குக் கூற்றுவனாகவும் ஆகக்கூடும். வீடும் ஊரும் மணல்பாங்கான நிலத்தில் கட்டப் பட்டால், மழை நேரத்தில் அவை சரிந்துவிடும். நீரூற்று உள்ளே இல்லாத இடத்திலும், நீரூற்றுக்கு மேற்படக் கடும் பார்நிலம் உள்ள இடத்திலுமே வீடும் ஊரும் அமைதல் நன்று. இவற்றுள் இறுதியில் கூறிய இடமே தனிச்சிறப்பு உடையது. ஏனெனில், கடு நிலத்துக்குக் கீழ் நீரூற்று உள்ள இடத்திலேயே குடிப்பதற்குரிய தூய நறுநீர் நிலத்தினுள்ளிருந்து கிடைக்கும். அடுத்தபடியாக நல்ல நீர் ஆற்று நீரேயாதலால், ஊர் ஆற்றருகாய் இருப்பது பயன் உடையதாகும். இக்காலத்தில் இவ்வாய்ப்புக் குறைந்த இடத்திலும் குழாய் நீர் வாய்ப்பு அமைக்கப்பெறுகிறது. இவ் வசதி முன்னைய இரண்டக நிலையை மாற்றிவிடுகிறது. நல்ல வரட்சியுடைய நிலமே மக்கள்வாழ்க்கைக்கு மிகச் சிறந்தது. தொலைவிலிருந்து குடிநீர் வசதி அமைந்தபின் இத்தகைய நிலத்திலேயே ஊரமைத்து வாழமுடிகிறது. நிலமும் நீரும் காற்றும் துப்புரவாயிருக்கவேண்டுமானால் கழிவுநீரும் சாக்கடையும் தேங்கி நிற்காமல் தொலைவில் கொண்டுபோய், இயற்கையின் செயலால் தூய்மைபெற விடப்படவேண்டும். நகர்களில் பெரும்பரப்பான தொடுத்த குடியிருப்பு இருப்பதால், சாக்கடைகளை அப்புறப்படுத்தும் ஏற்பாடு மிகவும் கடுமையானது. நகரமைக்கும்போது இத் திட்டம் அமைத்தாலன்றி நகர வாழ்வு நலம்பெற முடியாது. மனிதன் வாழ்க்கைக்குக் தேவையான பொருள்களில் ஒருசில வற்றுக்கே விலை மதிப்பிட்டிருக்கிறான். இவ் விலை மதிப்பு அப் பொருளின் மதிப்பைப் பொறுத்ததுமட்டுமல்ல; அதன் அருமையையும் பொறுத்தது. எல்லா மக்களுக்கும் போதிய காய்கனிகள் எளிமையாய்க் கிடைத்தபோது, உணவு மதிப்பற்றதாகவே இருந்திருக்கவேண்டும். அது குறைந்தபின்பே வேட்டையாடியும் கடலில் மீன் பிடித்தும் பயிரிட்டும் உழைப்பினால் அதனை அருமையாகத் தேடத் தொடங்கினான். விலை இவ்வருமை காரணமாகவும், இவ்வுழைப்புக் காரணமாகவும் ஏற்பட் டதே. நீரும் காற்றும் இவற்றைவிட எவ்வளவோ இன்றியமையாதவை யானாலும், உழைப்பில்லாமல் இயற்கையின் வண்மையினால் கிட்டத் தட்டத் தங்குதடை யின்றிக் கிடப்பதனால், அவை மதிப்பற்றவைபோலத் தோன்றுகின்றன. பல இடங்களில் மனிதன் விலை மதிப்புடைய பொருள்களில் கவனம் செலுத்தி, விலையிலா நீரிலும் காற்றிலும் கவனம் செலுத்தாது போனதாலேயே, சமூகத்தில் பல நோய்களும், குறுகிய வாழ்நாளும், இன்னதென்று கணித்துணராத மனச் சோர்வும் உடையவனாய் நலிவுற்று வந்திருக்கிறான். கப்பலில் அடித்தளத்தில் மிகுதி ஆள் நெருக்கங் காரணமாக, ஒருவன் நச்சுக்காற்று முட்டி இறக்கும் நிலையடைந்தான். அவன் தோழர்கள் அவன் அகல்வெளியில் இறந்தால், எளிதில் உடலை நீரில் அடக்கம் செய்யலாம் என்று எண்ணி மேல்தளத்துக்குக் கொண்டு வந்து கிடத்தி அவன் சாவுக்குக் காத்திருந்தனர். ஆனால், அவன் சாகவே இல்லை. சிறிது நேரத்தில் எழுந்து நடக்கத் தொடங்கினான்! நாட்டுப்புற வாழ்வின் சிறப்பு அதில் கிடைக்கும் திறந்த தூய காற்றும், இயற்கை தரும் நல்லொளியுமேயாகும். சாக்கடைத் தொல்லை அங்கே பெரும்பாலும் இருப்பதில்லை. இருக்கும் சிறுசிறு அழுக்கும் கழிசடையும் திறந்த காற்று, வெயில் ஆகியவற்றால் அகல இடமிருக்கிறது. இயற்கைவாழ்வு வாழும் நாட்டுப்புற மக்கள் வாழ்வில் போலிப் பகட்டும் அதன் பயனான அக அழுக்குடன் கூடிய புறத்தூய்மையும் கிடையாது. புறப்பகட்டு வாழ்வுக்கு வேண்டிய பொருள்வேட்டையும் வாழ்வின் இன்பம்மறந்த பரபரப்பும் நாட்டுப்புறத்தை நாடுவதில்லை. இத் தீமைகள் நகரத்தில் பெருகுவதால், அதன் அகவாழ்வின் அமைதி கெட்டு, மக்கள் உடல்நலம் அழிகிறது. வாழ்நாள் குறுகுகிறது. இவற்றைப் பொதுவாகப் பலர் கவனிப்பதில்லையாயினும், கலைக்கண் கொண்டு பார்க்கும் கவிஞர்கள் இவ் வேறுபாட்டை நன்கு சுட்டிக்காட்டுகின்றனர். நகரில் எத்தனையோ அழகு மாடங்களும் இன்பப் பொருள்களும் இருந்தாலும், கவிஞர் அவற்றில் மிகுதி அழகைக் காணமுடிவதில்லை. நாட்டுப்புறக் காட்சிகளும் மக்கள் வாழ்வும் எளிமை வாய்ந்தவையாயினும், அவை அழகுப் பண்புடையவை ஆகின்றன. அறிவு நூலும் அதன் பயனான இயந்திரத் தொழிலும் மனித நாகரிகத்துக்குப் பல நன்மைகள் செய்துள்ளன. வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியுள்ளன. ஆயினும், அது விலைமதிப்புடைய பொருள்களின் ஆக்கத்தில் மட்டுமே ஆதாய நோக்குடன் பெரிதும் கருத்தூன்றியதனால், விலை மதிப்பற்ற நன்னீர், காற்று, நெருக்கமில்லா வாழ்க்கை, இன்ப வாழ்விற்கேற்ற அமைதி ஆகியவற்றைப் பெரும்பாலான மக்கள் வாழ்விலிருந்து வெருட்டியடித்து வருகிறது. இயற்கை அனுப்பும் தென்றலுக்கு, மின் விசிறியோ; நிலவுக்கு, மின்னொளியோ; மக்கள் மனப் பண்பமைந்த கலைத்தொழிலுக்கு, இயந்திரப் பொறித் தொழிலோ ஒருகாலும் ஈடாகமாட்டா. இவற்றுக்கு அவை துணையாக மட்டுமே செயலாற்ற முடியும். மருத்துவ முன்னேற்றங்கள் இயற்கையின் திறந்த காற்றும் பகலவ னொளியும் அருவி நன்னீரும் தரும் உடல்நல இன்பமைதிக்கு ஈடாகமாட்டா. மேலும் ஆதாயம் கருவியாக, இன்பம் நோக்கமாக இருக்கவேண்டும் வாழ்வில், இன்றைய நாகரிகம் இன்பம் கருவியாக, ஆதாய நோக்கம் கற்பிக்கிறது. இதனால் நகரங்கள் கெடுவதுடன் நாட்டுப்புறங்கள் கூடக் கெட்டே வருகின்றன. பாட்டுப் பாடி ஏற்றமிறைத்து, உழுது விதைத்து, அறுவடையைச் சமூக விழாவாகக் கொண்டாடிய தன்னாட்சி யுரிமையுடைய வேளாண் மகன் இன்று கூட்டுப் பண்ணைத் தொழிலாளியாய், ஊதியத்துக்குக் கடனாற்றும் ஓட்டாண்டியாய் விட்டான். கண்கவர் வனப்புடைய கட்டடங்கள் இன்று காண்பவர்களை மலைக்கவைக்கும் அல்லது பகட்டும் மாளிகைகளாகியுள்ளன. வயல் வெளிகளில் கிளர்ச்சியுடன் ஆடியோடி மாடு மேய்த்தவர்கள் இப்போது ஆலைகளில் அடைபட்டு இயந்திரத்துடன் இயந்திரமாகி யுள்ளனர். இன்றைய நாகரிக உலகம் பொருள்தேவனின் ஆற்றலைக் காட்டலாம்; மனித வாழ்வின் உடல்நல, மனநல, இன்ப மேம்பாட்டை மிகுதிப் படுத்தியுள்ளது என்று யாரும் கூறமுடியாது! இவற்றின் மூலகாரணமான குற்றம் அறிவியலன்று; ஆதாய நோக்கம், இயந்திரமன்று; மனிதவாழ்வு நோக்கம் இல்லாமையே! ஆராய்ச்சிக் குறைவன்று; மனித இனத்தில் தனிமனிதன் வாழ்வு, இன்பம், அடிப்படைத் தேவை, உடல்நலம், உளநலம் ஆகியவற்றின் பக்கமாகச் சாயும் ஆராய்ச்சி இல்லாமையே! இன்றைய பத்திரிகைகள் குடியாட்சிபற்றி வானளாவப் பேசுகின்றன; ஆனால், ஆட்சியாளர், உயர்குடி மக்கள், செல்வர் ஆகியவர்கள் வாழ்வில்தான் அக்கறை காட்டுகின்றனர்; பொது மக்கள், ஏழை மக்கள் வாழ்விலன்று. நகரத்தையே குறியாகக் கொள்கின்றன; நாட்டுப் புறத்தையன்று. ஆட்சியாளர் உயர்குடி மக்கள் கருத்துப் போக்கில் நின்று அரசியலிலும், பணம் பெறும் தொழிலிலும் அக்கறை காட்டுகின்றனரே யன்றி, மக்கள் சார்பான வாழ்வுக்கலை, நீடித்த வாழ்வு, உடல் நலம் ஆகியவற்றில் கருத்துச் செலுத்துவதில்லை. அரசியலாரும் பொருள் பொங்கும் உயர்தர மக்கள் குழுவில் செலுத்தும் கருத்தை ஏழை மக்கள் வாழ்வில் செலுத்த முடிவதில்லை. இந்நிலை மாறவேண்டுமானால், சமூக வாழ்வு தனிமனிதன் வாழ்வை உயர்த்துவதையும்; அவனுக்கு நல்வாழ்வு, நீடித்த வாழ்நாள், நோய் நொடியற்ற உடல்நலம், போதிய ஓய்வும் அமைதியும் உடைய இன்ப அமைதி ஆகியவற்றை உண்டு பண்ணுவதையும் நோக்கமாகக் கொள்ளத் தொடங்க வேண்டும். இன்றைய பரபரப்பும் துடிதுடிப்பும் மிக்க, உயர்வு தாழ்வு தொல்லைகள் செறிந்த மேனாட்டு வாழ்வில், சிறப்பாக உண்ணவோ வாழவோ நேரமற்று வெள்ளிக் காசைத் தேடியலையும் அமெரிக்க வாழ்வில், இந்நிலை இருக்கிறது அல்லது இருக்க வழியுண்டு என்று யாரே கூற முடியும்? தற்கால நாகரிகத்தின் இன்னொரு பெருங்குறை அன்பின்மை. தன்னலம், போட்டி, ஆதாயப் பெருக்கம் ஆகியவற்றைச் சுற்றியே தற்காலச் சமூகமும் குடும்பங்களும் அலைக்கழிவுறுகின்றன. இன்பம் என்பது இன்று பிறருக்கு இல்லாத வாய்ப்பைப் பெற்றுப் பிறர்நிலை எண்ணி இறுமாப்புக்கொள்வதும், பிறர் காண இறுமாந்து நுகர்வதுமே என்று கருதப்பட்டு வருகிறது. ஆதாய நோக்குடன் செல்வரும், ஆட்சித்திற நோக்குடன் அரசியலாரும், ஆட்சி எல்லைவிரிவு நோக்குடன் வல்லரசுகளும் வாழும் திறம்பட்ட ஒத்துழைப்பை யல்லாமல், மக்கள் வாழ்வில் ஒத்துழைப்போ, ஒருவருக்கொருவர் உதவியோ, இன்றைய சமூகத்தில் காணமுடியாத செயல்கள் ஆகி வருகின்றன. வீட்டின்பமும் குடும்ப அமைதியும் இன்று நாகரிக நோக்கமாகவோ சமூக வளர்ச்சியின் அடிப்படைக் கூறாகவோ இல்லை. உச்சநிலைச் செல்வரை நோக்கி, பகட்டான வாழ்வையும் சோம்பலின்பத்தையும் நோக்கி முன்னேறுவதற்கே குடும்பம், கல்வி, கலை ஆகியயாவும் இன்று கருவிகளாகக் கருதப் படுகின்றன. இன்றைய பொருளியல் வாழ்க்கைமுறை நகரங்களை மாடமாளிகைகளிடையே குச்சுக்கள், அகல் தெருக்களிடையே சந்துபொந்துகள், பூங்காக்களிடையே சாக்கடைக் குழிகள், கழிசடைகள், நச்சுக்காற்று, தூசி, புகையடர்ந்த காற்றுவெளி ஆகியவற்றையுடைய மீளா நரகங்கள் ஆக்கியுள்ளன. அதே சமயம் அது நாட்டுப்புற மக்கள் வாழ்க்கையின் ஆதாரங்களை அழித்து அந்த நகர வாழ்வின் நரகங்களை நோக்கி விரைந்தோடும் நிலையை, அல்லது அதை எண்ணி ஏங்கும் நிலையை அவர்களுக்கு உண்டுபண்ணியுள்ளது. மனிதன் இயற்கையை வென்றது, வென்று வருவது உண்மை; ஆனால், அவன் மனிதப்பண்புகளை இயற்கையற்ற அவன் செயற்கைவாழ்வு மறைத்து வருகிறது! மனிதன் செலுத்தும் ஊர்திகள் வானவெளி கடந்து விரைந்து செல்லலாம்; அவன் வாழ்வு குறுகிவருகிறது. அவன் கருவிகள் முன்னேற லாம்; அவன் பின்னேறியே வருகிறான்-கருவி முன்னேற்றம் அவன் உடலை முன்னேற்றவோ உளப்பண்பை உயர்த்தவோ இல்லை. மனிதன் அறிவும் ஆற்றலும் வளர்கின்றன-அவன் சமூகத்தின் சமநிலை வரவரக் கெட்டு வருகிறது. சமூகத்தின் ஒவ்வொரு வகுப்பும் சீரழிந்து மொத்தத்தில் சமூகப் புறத் தோற்றம் மட்டும் வளர்ந்து சமூகம் நலிகிறது. வீடு, ஊர், நகர் ஆகியவற்றின் தூய்மை மக்கள் வாழ்வின் புறத் தூய்மையையே பெரிதும் பேணவல்லன. இப் புறத்தூய்மை அகத்தூய்மையை ஆக்குவதே யாயினும், இவையன்றி நேரடியாகவே அகத்தூய்மைகள் அல்லது ஆக்கப்பண்புகளை வளர்க்கும் சூழ்நிலை களும் பயிற்சிமுறைகளும் உண்டு. நல்ல சமூகத்தில் சமூகக் குழுவும் நண்பர் தோழர் குழுவும் இத்தகைய சூழல்களை அமைப்பர். நல்ல கல்வி நிலையங்கள் இத்தகைய சூழல்களுக்கான பயிற்சிமுறைகளைத் தந்து தனிமனிதர் அகப்பண்பை உயர்த்தும். நல்ல அரசியல் இவ்விரண்டு சார்பிலுள்ள சூழல்களையும் தக்க சட்டதிட்ட முறைகளால் ஆக்கிப் பேணி வளர்க்கும். ஆனால், இம் மூன்றுக்குமே அடிப்படையான பண்புகளும், சமூகப் பண்புக்குத் தனி மனிதனைப் பேரளவு பயிற்றுவிக்கும் பண்புகளும் வீட்டினகத்தேயுள்ள குடும்பச் சூழல்களே. இக் குடும்பத்தின் புறத்தூய்மை, வளர்ச்சிக்குரிய பிற்கால மனிதர்களாகிய குழந்தைகளின் உடல் நலத்தைப் பேணுவது போலவே, அவர்கள் அகப்பண்பு வளர்ச்சிக்கும் பேரளவு காரணமாகின்றன. தாய் தந்தையர் பண்பு குழந்தையின் தொடக்கப் பண்புக்கான வித்தாகிறது. தாய் குழந்தையின் முதல் அறிவுக்கருவூலம், முதல் ஆசிரியர், முதல் தோழி ஆகிறாள். தாய்தந்தையர் கூட்டுறவும், உடன்பிறந்தார் கூட்டுறவும், உறவினர் பழக்க வழக்கங்களுமே குழந்தையின் முதற் சமூகமாகவும், தொடக்கப் பயிற்சிக்குரிய தொரு சிற்றுலகமாகவும் அமைகின்றன. அறிவுடைய தாய்தந்தையர் பிள்ளைகள் சூழ்நிலையில் நல்ல நூல்களை வைத்திருந்தால், நல்லறிவு தூண்டும் படங்களாலும் காட்சிப் பொருள்களாலும் வீட்டைச் செப்பம் செய்திருந்தால், குழந்தையினறிவு அப் பொருள்களையே கொழுகொம்பாகக் கொண்டு எளிதில் படர்ந்து வளரும். தாய்தந்தையர், உடன்பிறந்தார், அயலவர் வாழ்க்கை யிலுள்ள அமைதி, அன்புடைமை, ஒத்துழைப்பு ஆகியவை கல்லாமலே பிள்ளைகளின் வாழ்வில் படியும். பிறக்கும்போது மனிதன் தொடக்கக்கால மனிதனைப் போலக் காட்டுமிராண்டிப் பண்புடனேதான் பிறக்கிறான். குருதியுடன் இயற்கையாக அவனுக்குக் கிட்டும் மரபாற்றல் நாகரிகத்தை ஏற்கும் ஆற்றலன்றித் தானாக நாகரிகம் வளர்க்கும் ஆற்றலன்று. பிறர் வாழ்விலும் சூழலிலும் அவன் காண்பவை வளரும் அவனது பச்சை யுள்ளத்தில் பேரளவில் பதிகின்றன. தவிர, மூத்தோர் கற்பிப்பதும் பயிற்றுவிப்பதும் எச்சரிப்பதும் வழிகாட்டுவதும் ஓரளவு பிள்ளைக்கு வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் தந்து உள்ளத் திறங்களை உருப்படுத்துகின்றன. எனவே, மனிதனை நாகரிகப்படுத்தும் சூழல்களுள் முதலாவதும், முதன்மையாவதும் குடும்பமே. உருவான குழந்தை உள்ளத்தை தீட்டிக் கூர்மைப்படுத்த மட்டுமே பள்ளி ஆசிரியராலும் தோழராலும் முடியும். குடும்ப வாழ்வில் உருவான பரு அமைதி நுட்ப வகையிலன்றிப் பின்னால் மாறுவது அரிது. எனவே, குழந்தைகளுக்கு வீடு உண்ணுமிடமும் உறங்குமிடமும் மட்டுமல்ல; உண்மை அறிவுப் பள்ளியும் பண்பாட்டுப் பள்ளியும் அதுவேயாகும். பிள்ளையின் எதிர்கால உள அமைதி, இன்ப நுகர்வாற்றல், தற்பண்பு, தன்மதிப்பு ஆகிய யாவும் அவன் வீட்டுப்பண்பின் சின்னம்; வீட்டுப் பயிற்சியின் பயன். பிள்ளையின் உடல்நலம், புறத்தூய்மை, அறிவுத்திறம், அகப் பண்புகள் ஆகியவற்றுக்குத் தந்தையைவிடத் தாயும், ஆடவ உறவினரை விடப் பெண்ணுறவினருமே பெரும்பாலும் காரணர் ஆவார்கள். பெண்களிடம் இயல்பாகவே நவநாகரிகப் பண்புமட்டுமன்றிச் சிக்கனமும் தொழில் திறமையும் ஒழுங்கமைதியும் மிகுதி. இத் திறங்களை அவர்கள் நேரிடையாகச் செயற்படுத்துவதில்லை; செயற்படுத்த வேண்டுவதுமில்லை. வீட்டின் ஆட்சியை அவர்கள் திறம்பட ஆற்றினால், அதன் தாக்குதல் ஆண்கள் பண்பில் இளமையிலேயே படிந்துவிடும். ஆனால், பெண்களின் இவ்வியற்கைத் திறமையை நல்ல குடும்பங்கள் மரபுவரன்முறையாகப் பேணுதல் வேண்டும். இம்மரபுத் திறம் பண்படாத பெண்கள் இருக்கும் வீட்டைப் பார்த்தாலே, பண்பட்ட பெண்கள் இல்லாவிட்டால் என்ன குறைகள் நேரும் என்பது விளங்கிவிடும். பொருள்கள் ஒழுங்கில்லாமல் தாறுமாறாய்க் கிடக்கும். குப்பைக் கூளங்கள் மலிந்திருக்கும். எந்தப் பொருளும் பயன்படத்தக்க இடத்திலோ, நிலையிலோ இராது. தேவைப்படும் நேரம் தேவைப்படும் பொருள் காணப்படாது. தேவைப் படாத பொருள்கள் எப் போதும் இடத்தை அடைத்துக்கொண்டு கிடக்கும். தேவைப்படும் இடவசதி என்றும் எங்கும் இராது. இத்தகைய சூழலில் வளரும் ஆண் பெண் குழந்தைகள் மனித நாகரிகத்திற்கு முற்பட்ட விலங்கு நிலையிலேயே வளர்வர். இந்நிலை மாறி வீடு திருந்தி நாடு திருந்தவேண்டுமானால், முதல்முதல் அவ்வகைக்குப் பயிற்சி பெற வேண்டியவர் பெண்களே. ஆண் குழந்தைகள் கல்வி சற்றுப் பிந்தினால் கூடக் குடும்பத்துக்குக் கேடில்லை; பெண் குழந்தை களுக்குக் கல்வியும் நல்ல குடும்பங்களுடனும் நல்ல குடும்ப மரபில் பயின்றவர்களுடனும் பழக்கம் ஏற்படவேண்டுவது இன்றிய மையாதது. மனித நாகரிகத்தில் எத்தனை அடிப்படைப் பண்புகள், பழக்கங்கள், பயிற்சிகள், பெண்டிர் குடும்பமரபில் வருகின்றன என்பதை அறிந்தால், மனித இனம் வியப்படையாமலிருக்க முடியாது. பெண்டிரின் மின்னொளி படைத்த கண்கள், செந்தாமரை யிதழ்போன்ற கன்னங்கள், பவழ இதழ்கள் ஆகியவற்றைக் கண்டு அவர்களை வெறும் அழகுப் பொருள்களாகவோ அவர்கள் இன்னிசை, மென்னயப் பேச்சு, நெளிந்த நடை ஆகியவற்றில் ஈடுபட்டு அவர்களை வெறும் கவர்ச்சிப் பாவைகளாகவோ பலர் கருதி விடுகின்றனர். இவ்வழகும் கவர்ச்சியும் இயல்பாகவே அமைவதாகத் தோற்றினும், உண்மையில் நீடித்த இன மரபுப் பயிற்சியின் விளைவே யாகும். உடலின் இப் புறக் கவர்ச்சியிற் காணப்படும் இதே பயிற்சித்திறம் அவர்கள் அகப்பண்பையும் அதன்மூலம் புறச்சூழல்களையும் மாற்றியமைத்து நாகரிகப் பண்பாக்கும் தன்மையுடையது. அவர்கள் செய்யும் வேலையி லெல்லாம், அழகில் அவர்களுக்குப் பயின்று பழகிய அதே கருத்தைச் செலுத்தும்படி அவர்கள் தூண்டப்பட்டால், எல்லா வேலை களும் ஒழுங்குபட்டுச் சிக்கன முறையில் வளம்பெறும் என்பது உறுதி. தையல்காரர் ஓர் ஆடவன் அல்லது குழந்தையின் ஆடை யணியைத் துன்னுவதினும், அன்புள்ளமும் அகப்பண்பு நயமும் உடைய ஒரு தாய், அல்லது மனைவி அல்லது உடன்பிறந்த நங்கை துன்னும் ஆடையணியில் எத்தனையோ நயநுட்பமுடைய மேம்பாடு ஏற்பட வழியுண்டு. மருத்துவமனைப் பணியாட்கள் நோயாளியைப் பார்ப்பதைவிட, திறம்படத் தம் கணவர், குழந்தைகள், உடன்பிறந்தார், தாய் தந்தையரைப் பேணும் திறம் உடையவர்கள் ஆவார்கள். இதனை உணர்ந்தே அத்துறையில் பெண்டிர் பயன்படுத்தப்படுகின்றனர். பணிப்பெண்டிராக அவர்கள் செய்யும் செயலைவிடக் குடும்பப் பெண்களாக அவர்கள் செய்யும் பணி எத்தனை சீர்மையும் சிறப்பும் உடையதா யிருக்கக்கூடும்? பள்ளி ஆசிரியரைவிடத் தாய்மாரும் தங்கை மாரும் காதலியரும் எத்தனை மடங்கு சிறந்த ஆசிரியரும் வழிகாட்டிகளும் ஊக்கந்தரும் அன்பரும் ஆவர் என்பதைக் கூறவும் வேண்டுமோ? பசுமண் போன்ற நெகிழ்வும் பட்டிழை போன்ற நொய்ம்மையும் தொய்வும் உடைய குழந்தைகள் உள்ளங்களைப் பண் படுத்தும் தொடக்க ஆசிரியத் தொழிலில் வரவரப் பெண்டிர் இதனாலேயே பயன்படுத்தப்படு கின்றனர். குடும்பத்திலேயே தமக்குரிய இந்த இடத்தை அவர்கள் நன்கு நடத்தப் பயிற்றுவிக்கப் பெற்றால், மனித இனத்துக்கு அதன் பயன் இன்னும் சிறப்புத் தருமன்றோ? வீட்டாட்சியில் பெண்டிருடன் ஆடவர் போட்டியிட எண்ணினால் பல தலைமுறைப் பயிற்சிகூட அவர்களைச் செம்மைப்படுத்த முடியாது. அத் துறையில் அவர்கள் அறியாமையும் பண்பின்மையும் காண, ஆடவன் இன்னும் இவ்வகையில் காட்டுமிராண்டி மனிதன் நிலையில்தான் இருக்கிறான் என்பது விளங்கும். அவர்களின் இவ் வீட்டாட்சி முற்றிலும் வீட்டுக்கு உரியது என்று கூறுவதற்குமில்லை. நாட்டாட்சியின் பல துறைகளிலும் தொழில்துறைகளிலும் ஆடவருடன் பெண்டிர் திறம்படப் போட்டியிட முடிகிறது. இங்கெல்லாம் வீட்டாட்சித் திறம் பிற துறைகளில் செலுத்தப் பட்டு வெற்றி தருகிறது என்று காண்கிறோம். எனவே, வீட்டாட்சி என்பது ஆடவர் கருதுவது போலப் புறக் கணிக்கத்தக்க ஒரு சிறு செய்தியன்று. அது நாட்டாட்சிக்கும் நாகரிகத்துக்கும் உரிய ஒரு முன்மாதிரிக் கூடமேயாகும். பெண்டிர் அதனைச் சிறு எல்லையுள் நுண்ணயம்படச் செய்துகாட்டி ஆடவர் உள்ளத்தில் பரு வடிவில் அதன் பண்பு பெருக வகை செய்கின்றனர். இத்தகைய வழிகாட்டும் பண்பு இல்லா வீடு வீடன்று; மக்கள் தங்கி வாழும் ஒரு கட்டடம் மட்டுமே. தொழிலாளர்களில் உயர் ஊதியம் பெறுபவர்கூடத் தம் வருவாயில் குடிக்கும் பகட்டுக்கும் வெளியாரவார இன்பங் களுக்கும் செலவுசெய்யும் செலவில் மிகக் குறைவாகவே உடல்நலம், உளநலம் ஆகிய நற்பண்பு தரும் இனிய குடும்ப இல்ல அமைதிக்குச் செலவுசெய்ய முனைகின்றனர். இது அவர்கள் வருந்தத்தக்க அறியாமையைத்தான் காட்டுகிறது. வருவாயில் எத்தனை உயர்விகிதம் இல்ல அமைதிக்கும் இன்பத்துக்கும் செலவாகிறதோ, அந்த விகிதத்தில் அவர்கள் வாழ்க்கை இன்பகரமாய் அமைவதுடன் வாழ்க்கைத்தரமும் உயர்ந்து, வருவாயும் பெருக வழி ஏற்படுகிறது. தொழிலாளர்களுக்காகப் பாடுபடுவதாகப் பறைசாற்றும் இயக்கங்கள் ஊதிய உயர்வுக்கு மட்டும் போராடி நிற்பதும் அறியாது அல்லது அறிந்து செய்யும் வழுவேயாகும். ஏனெனில், தொழிலாளர்களிடம் மீத்துவைப்பு, வாழ்க்கைத்தர உயர்வு, இன்பம் ஆகியவற்றைப் பெருக்குவதன் மூலம் அவ்வியக்கங்கள் அவர்கள் ஊதியத்தை எளிதில் உயர்த்துவதுடன் நில்லாது, அவர்களையும் முதலாளிகள் வெட்கப்படும்படியான உயர்தர நல்வாழ்வு வாழச் செய்துவிடும். முதலாளிகளும் தொழிலாளர் இயக்கத்தாரும் அரசிய லாரும் தொழிலாளரை உயர்த்தவும் அதன்மூலம் அதே சமயம் தம்மை உயர்த்திக் கொள்ளவும் விரும்பினால், அதற்குரிய மிகச் சிறந்தவழி அவர்களுக்கு நல்ல இல்லம் அமைத்துக் கொடுத்து, கல்வி, குழந்தைவளர்ப்பு ஆகிய வசதிகளின் மூலம் நல்வாழ்வின் சுவையை ஊட்டுவதேயாகும். தவிர வீட்டமைதிக்குத் தெரு அமைதியும் நகரமைதியும், இவற்றிற்கு நாட்டமைதியும் அடிப்படைத் திட்டமிட்டுத் திருத்தப்படுவது பொருளியல் முறையில் எவ்வளவோ சிக்கனமானது. மோசமான வீடு, தெரு, நகர், சமூக சமய வகுப்புமுறை ஆகிய எல்லாத் துறைகளிலும் பழமையை வைத்துக் கொண்டு சிறுகச் சிறுகத் திருத்தும் முயற்சி தற்காலிகமாகச் சிறு திருத்தச் செயலாகத் தோற்றினாலும் என்றும் திருந்தாத நிலையான செலவாய்விடும். எத்தனை தொடக்கச் செலவு ஆனாலும் பழைய நோயடைந்த வீடு தெரு நகர்களையும், தீம்புமிக்க சமூக முறைகளையும் அழித்துப் புதிதாக நல்ல அமைப்பு ஆக்குதல் நீடித்த நிலையான ஆக்கம் தரும். பொதுவாகக் கடன்படுவதை நாம் கண்டித்துள்ளோம். ஆனாலும், இத் திட்டவகையில் தனிமனிதனோ, நிலையமோ, நாடோ கடன் படுவதுகூடத் தவறாகாது. ஏனெனில் அக்கடன் மிக விரைவில் பன்மடங்கு தீர்க்கப்பட்டுப் பின்னும் நிலையான ஆதாயம் தரும். 10. வாழும் வகை ``அயரேல் என்றும் எங்கும் எவரையும் உயர்குடிப் பிறப்பால் உயர்ந்தோர் என்றே உயர்குடி யதனில் பிறவா ராயினும் உயர்பண் புடையோ ராயின், அவரே மயர்வற உயர்குடி தோற்றுவிப் பவரே!'' - கவிஞர் சாசர். ``தத்தம் வினைமையின் தனையர், ஒவ்வொருவரும்!'' - செர்வாண்டிஸ் ``பணி செய்தியாயின், எளியோனாயினும் உயர்பண்புடையோ னிடமே பணிசெய்க. காலம் வருங்கால் அதற்குரிய கைம்மாறு உனக்குக் கட்டாயம் கிட்டும்.'' - ஜார்ஜ் ஹெர்பர்ட். ``தம் குறையைத் தாம் அறியமாட்டார் என மக்களைப் பலர் குறை கூறுவதுண்டு-தம் குறையைமட்டுமல்ல, தம் சிறந்த பண்புகளையும் எவரும் எளிதில் அறிவதில்லை. நிலத்தில் தங்கச் சுரங்கத்தின் நரம்புக் கால்கள் ஓடுவதுண்டு. நிலத்துக்கு உரியவரே அதனை அறியாதிருப்பர். அது போலவே மனித உள்ளத்தின் உள்ளார்ந்த மறைந்த நற்பண்புக் கோடுகளை அவற்றை உடைய மனிதரே அறியாதிருப்பர்.'' - ஸ்விஃவ்ட் ``கிட்டா தனஎன் உள்ளக் கிளர்ச்சியை எட்டா தொழிக.'' - ஸிப்பர் வாழ்க்கை-வாழ்க்கையை வாழ்ந்து முழுதும் நுகர்வது என்பது ஒரு கலை. நுண்கலைகளில் ஒன்றாக அதைக் கூறலாம். மனிதப் பண்பாட்டுக் கலைகளுடனும் அதனை ஒன்றுபடுத்த லாம். அதற்கு வாழ்க்கையின் அடிப்படைப் பண்பும் நோக்கமும் பற்றிய அறிவுவேண்டும். வாழ்க்கையின் நற்பண்புகளைப் பாராட்டி நுகர்ந்து சுவைத்து இன்பம் பெறும் சுவைத்திறமும் வேண்டும். இவற்றின் மூலமே வாழ்வின் ஒவ்வொரு கூறிலிருந்தும் அதன் முழுப்பயனைப் பிழிந்தெடுத்து முழு வாழ்வின் முழுப்பயனும் திரட்டியுருவாக்க முடியும். இம்முழுப் பயனின் மரபே மனித நாகரிகமாகவும் பண்பாடாகவும் பெருக்கமுறுகிறது. இன்பமாக வாழ்வது என்பது முடியாத காரியமுமல்ல; முயற்சி யின்றித் தானாக முற்றிலும் எளிதாக அமையும் காரியமும் அன்று. கவிதை, ஓவியம் ஆகிய கலைகளைப் போலவே அது இயற்கைப் பண்பினின்று எழுவது. ஆயினும் அவற்றைப் போலவே அதுவும் நீடித்த பயிற்சியினாலேயே பண்படுவது. திறமையுடையவர் நெடு நீண்முயற்சி யினால், அதனை நினைத்தற்கரிய பேரின்பமாக்கமுடியும். அதே சமயம் பெரும் பாலோரால் மட்டான அளவு முயற்சியினாலேயே அதனை வளருகிற ஓர் அருங்கலை ஆக்கக்கூடும். தாய்தந்தையர், ஆசிரியர், கலைஞர் உதவியால் அவ்வருங்கலை முழு நிறைவுபெற வழியுண்டு. மணிகளுள் அளவில் பெரிய மணி என்பது மிக அருமையாகத் தற்செயலாகவே வந்து எய்தக்கூடியது. வெறும் முயற்சியினால் அது எப்போதும் பெறக்கூடியது அன்று. இன்பம் இத்தகைய மணிபோலத் தற்செயலாகக் கிட்டக்கூடிய அரும்பண்பு என்று கூறமுடியாது. ஆயினும் அதே சமயம் அதைச் சிறு மணிகள்போல எப்போதும் எளிதில் கிடைப்பதென்றும் கூறுவதற்கில்லை. சிறப்பற்ற சிறு மணிகள் பலவற்றை அதனதன் தன்மையும் பயனும் நோக்கித் தனித்தனி தீட்டிச் சிறப்புடைய மணிகளாக்கி, அத் தன்மைகளும் பயன்களும் ஒருங்கே இணைந்து ஒரு தன்மைப்பட்டு ஒரு முழுநிறை பயன்தரும் முறையில் அவற்றை இசைவித்து ஆக்கிய ஒரு நிறை மணி போன்றது வாழ்வின் இன்பம். அது பல சின்னஞ்சிறு செய்திகளில் கருத்துச் செலுத்திப் பண்படுத்தி அவற்றை ஒருங்கே இணைத்துப் பயன்படுத்துவதனால் ஏற்படுவது. வாழும்வகை தெரிந்த ஒருவன், தெரியாத ஒருவன் ஆகிய இருவர் வாழ்வை இருபுறமும் எடுத்துக்கொண்டு ஆராய்ந்து ஒப்பிடுவதன்மூலம் வாழ்க்கை ஒரு கலை என்பதை நாம் தெளிவாகக் காணலாகும். காணும் திறமுடைய கண்ணும், அறியும் திறமுடைய உள்ளமும் உடையவன் கலைத் திறலாளன். அவனுக்கு இயற்கையும் வாழ்வும் என்றும் புதிது; என்றும் புதுப்புது அழகுடையது. அவன் நிகழ்காலத்தைக் கண்டு நுகர்கிறான்; அத்துடன் இறந்த காலத்தை அறிவுக்கண் கொண்டு துருவிப் பார்த்துணர்ந்து, உள்ளத் திரையில் உருவகப்படுத்தித் தட்டி எழுப்புகிறான்; வருங்காலத்தின் பொன்னொளியை ஆக்கத் திட்டமிட்டு, அப் புகழை நிகழ்காலத் திரையில் நிழற்படுத்திக் காட்டுகிறான். வாழ வகைதெரிந்தவனுக்கு வாழ்க்கை கடமையுணர்ச்சி யுடையது. அக் கடமைகளைத் தன் அகச்சான்றுக்கேற்ப நிறைவேற்றி அதன் மூலமே அவன் இன்பம் பெறுகிறான். அவன் தன்னையும் முன்னேற்றி, தன் கால மேடையிலுள்ள எல்லா மக்களையும் உயர்த்தித் தாழ்த்தப்பட்டவர் தாழ்வகற்றிக் கால எல்லை கடந்து புகழ் நாட்டுகிறான். அவன் என்றும் நற்காரியங் களிலேயே சுறுசுறுப்பாயிருப்பதால் வாழ்க்கை அவனுக்குப் பொருளுடைய தாகிறது. கடமையாற்றி இன்புறும் அவனுக்குத் துன்பமில்லை. ஏனெனில், வெற்றி தோல்வி எதுவரினும் கடமையாற்றிய அளவில் அவன் மகிழ்வான். சுறுசுறுப்பாயிருப்ப தால் துன்பப்பட்ட அவனுக்கு நேரமில்லை. நற்காரியமே செய்வதால், பின்னிருந்திரங்க வேண்டிய நிலையும் அவனுக்கு ஏற்படாது. அவன் இன்பங்கள் புதிய இன்பங்களுக்கு வழி காட்டுகின்றன. அவன் ஒவ்வோர் அறிவும் பகுத்தறிவுக்கு வழிகாட்டி அறிவை ஓயாது வளர்த்துப் புத்தார்வம் பெருக்குகிறது. அவன் செய்த நற்சிலைகள் அவனுக்குப்பின் அவனுக்குரிய புகழ்த்தூண்கள்; அவன் பின்னோர்களுக்கு அவன் நினைவே ஒரு முன் மாதிரியும் ஒரு வழிகாட்டியும் ஆகும். இதற்கு நேர்மாறாக, வாழ்க்கைக் கலை உணராதவன் உழையாத சோம்பலின்பம் நாடி, ஒன்று, இன்பமே பெறாது போகிறான்; அல்லது இன்பநுகரும் பருவமெய்து முன்பே இன்ப நுகரும் ஆற்றலிழந்து விடுகிறான். அவன் பணத்தைத் தேடிப் பெறும் முயற்சியில் பணங் கொடுத்து, அதைப் பெறமுடியாது உடல்நலமிழந்து விடுகிறான். பணத்தினால் வரும் நன்மை முற்றும் நுகர்ந்த பின்னும் அவன் வாழ்வு வெறுங் கூடான வெற்று வாழ்வாய் விடுகிறது. இன்பப் பொருள்கள், இன்பச் சூழல்கள் ஆகியவை அவனுக்கு இன்பந் தருவதில்லை. புறத் தென்றலின் இன்பம் நுகர முடியாமல் அவன் வயிற்றில் அகவளி துளைக்கிறது. இனிய சிற்றுண்டிகூட நாவிற் கசக்கிறது, பலர் தூக்கிச் சென்று அவன் மலையேறி யிறங்கியும் அவன் உடலுக்குத் தெம்பு வருவதில்லை. அல்லது இன்பம் நுகர்வதானாலும், அவ் இன்பம் அவனுக்குப் புளிப்புத் தந்துவிடுகிறது. ஒரே உலகில் ஒரே மனித உடலுறுப்புடையவராய், ஒரே வகை வேலை செய்பவரிடையேகூட மேற்குறிப்பிட்டபடி இருவகையான ஆட்களைக் காணலாம். ஒருவன் முகம் காண்பவரையும் மகிழ்விக்கிறது. மற்றவன் முகமோ கண்டவர் மகிழ்ச்சியைப் போக்கத்தக்கதா யிருக்கிறது. ஏன் இந்த வேற்றுமை? ஒருவன் சிறு துன்பத்தை வரவேற்று வென்று, இன்பத்தை ஈட்டினான். மற்றவன் இன்பத்தை நாடி அதற்கு அடிமைப் பட்டுத் துன்பத்தை விலைக்கு வாங்கினான். ஒருவன் திட்டமிட்டு வாழ்க்கைக்கேற்ப தன்னைச் சரிபடுத்திக் கொண்டு வாழ்க்கையைத் தன் நோக்கத்துக்குரிய கருவியாக்கினான். மற்றவன் வாழ்க்கையின் மேலீடான பசப்புகளை நம்பி அதன் அழிவாற்றல் சுழிகளுக்குரிய ஒரு கருவியாய் விட்டான். ஒருவன் தன் அறிவைப் பயன்படுத்தித் துன்பம் விலைகொடுத்து, தானும் இன்பம் பெற்றுப் பிறரையும் இன்புறுத்தி, துன்பமாகிய உறுதி யடிப்படைமீது இன்பமாளிகை கட்டி, இன்பமும் புகழும் ஒருங்கே பெற்றான். முன் துவர்க்கும் நெல்லி, நன்மருந்துமாகி, நல்லுணவுமாகி, உணவு உட்கொள்ள நற்றுணையுமாகிப் பின் இனித்தல் போல, வாழ்க்கை அவனுக்கு எல்லா நலன்களும் பொதிந்த தொடக்கக் கவர்ச்சியற்ற வெண்பொதியாய் விட்டது. மற்றவனுக்கோ அது நச்சுப்பொடி பொதிந்த கண்கவர் பொற்பூ வேலைப்பாடுடைய பட்டுப் பொதியாக அமைகிறது. வீடு வாழ்க்கையின் கலைக்கூடம். வாழ்வின் கலையை இவ்விடத்தில் மிகச் சிறந்த வடிவில் காணலாம். இக் கலை, உலகுக்குப் பொதுவானாலும் பிரிட்டானிய இனத்துக்குச் சிறப்பு என்னலாம். வீடு1 என்பதற்கான ஆங்கிலச் சொல்லும் இன்பவாய்ப்பு அல்லது இன்பநலம்2 என்பதற்கான ஆங்கிலச் சொல்லும் பிற மொழிகளில் எளிதாக மொழிபெயர்க்க முடியாத ஆங்கில மரபுச் சொற்கள் ஆகும். மேலும் வீடு என்பதற்கான சொல்லே இன்பக் குடும்பம் என்ற பொருளும் இன்பத்தாயகம் அல்லது தாய்நாடு என்ற பொருளும், உள்நாடு என்ற பொருளும் உடையதாயமைந்துள்ளது. வீட்டில்3 என்ற தொடரே `இன்ப வாய்ப்புடன்,' `வாய்ப்புக்குறையின்றி' என்ற பொருள்களும் உடையதாயிருக்கிறது. ஆங்கிலேயர் நாகரிகம் குளிர் மிகுந்த இடத்தில் தோன்றியதால் புறக்குளிர் அகற்றத்தக்க வெதுவெதுப் பான கணப்படுப் பருகில் பிறந்து வளர்ந்தது என்பதை இப் பண்பு சுட்டிக்காட்டுகிறது. வெப்ப நாடுகளில் தண்நறுஞ் சோலைப்புற இடங்கள், பொழில்கள் இன்ப நுகரும் வாய்ப்பிடங்களாகக் கருதப்படுவதுபோலக் குளிர் காப்பிடமாகிய இல்லமும் மேனாடுகளில் இன்ப வாய்ப்பகங்களாக இயங்கின. ஆங்கில மக்கள் வீட்டின்பம் விரும்பிகள்; எங்கே சென்றாலும் வீட்டை நோக்கி மனத்தைத் திருப்பி வைத்துக் கொண்டிருப்பவர்கள். புறஉலகில் திரிந்தாலும் அவர்கள் எப்போதும் தனித்தனி வீட்டக உலகின் பிண்டங்கள் ஆக இயங்குகின்றனர் என்று குறைகூறப்படுகிறது. அது குறையன்று, உண்மையே. ஆங்கில மக்கள் இயல்பு, அவர்கள் தனிப்பண்பு அது. அதன் அடிப்படையிலேயே அவர்கள் குறைகளும், நிறைகளும் வளர்ந்துள்ளன. அவர்களுக்கு அடுத்தாற்போல டோவர் கடலிடுக்கைத் தாண்டிக் கிடக்கும் ஃவிரான்சில் இதற்கு நேர் எதிர்மாறான புற இன்ப வாய்ப்பு நாகரிகத்தைத்தான் காண்கிறோம். ஆங்கில மக்களின் குடும்ப இல்லம் ஃவிரஞ்சு நாட்டின் அருந்தகம், விருந்தகம், ஆடலகமாகி விடுகிறது. இத்தாலியிலும் இன்னும் தென்புல நாடுகளிலும் அது தெருக்கூட மாகவும் ஊரம்பலமாகவும் தண்டலைத் தலங்களாகவும் நறும்பொழில்களாகவும் ஆற்று நீர் விளையாட்டுத் துறைகளாகவும் கடலகங்களாகவும் மாறிக் காட்சிதருகின்றன. ஆங்கில நாட்டுக்கும் வடபாலுள்ள ஜெர்மனி, நார்வே முதலிய நாடுகள் அக வாய்ப்பில் இன்னும் முனைந்து தனிமனித இன்ப ஆதிக்கப் பகுதிகளாக இயல்கின்றன. வடபுல நாகரிகங்கள் குடும்ப வாழ்விலிருந்தும் தென்புல நாகரிகங்கள் சமூக வாழ்விலிருந்தும் முளைத்துக் கிளைத்துப் படர்ந்துள்ளன என்பது தேற்றம். இன்ப வாய்ப்பு பல திறப்பட்டது. அது ஓரளவு சூழ் நிலையையும், ஓரளவு மனிதர் பண்பையும் பொறுத்தது. ஓரிடத்தார் இன்பவாய்ப்பு மற்ற இடத்தாருக்கு ஆகாமலும் ஒருவர் இன்ப வாய்ப்பு மற்றவருக்காகாமலும் அமைவது இயல்பு. அயலகத்திலிருந்து இங்கிலாந்து நாட்டகத்தே படையெடுத்து வந்த பண்டைய அரசன் வில்லியம் வெற்றியாளன் (முதலாவது வில்லியம்) உடலுக்குச் சட்டையையும் விரும்பவில்லை; வீட்டறை களுக்குக் கண்ணாடிப் பலகணியையும் நாடவில்லை. அரசி எலிஃசபெத் காலம் வரை அரசியர்கள் கூடக் காலுறைகளும் பட்டுக் காலுறைகளும் அணிந்ததில்லை. பட்டும் கீழ்நாடுகளி லிருந்து அதற்குமுன் வந்து இங்கிலாந்துக்கு எட்டவில்லை. இங்ஙனம் காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு, ஆளுக்கு ஆள் இன்ப வாய்ப்பு வேறுபடுகிறது. வகுப்புக்கு வகுப்பு வேறுபடுவதும் உண்டு. உயர் வகுப்பாரின் பட்டும் அன்னத் தூவியும் இலவம் பஞ்சும், நடுத்தர வகுப்பாரின் பருத்தியும் கம்பளியும் ஆகி, ஏழை மக்களின் வைக்கோல் சாக்கும் கந்தையடைப்பும் ஆகிய ஒரே இன்ப வாய்ப்பின் அறிகுறியா கின்றன. ஆனால், இன்ப வாய்ப்புகள் எத்தகைய மாறுபாடு களுடைய தாயினும், அதனை நாடுவோர் ஒழுங்கும் அமைதியும் விரும்புபவராகவும், சுறுசுறுப்பும் திறமையும் உடையவராகவும், மேம்படுவது உறுதி. ஏனெனில், இன்ப வாய்ப்புகளை எளிதில் பெற இவை உதவுவதுடன், இன்ப வாய்ப்புகள் மூலம் இப்பண்புகளும் வளர்கின்றன. தவிர, இன்ப வாய்ப்புகள் ஓய்வை இன்ப ஓய்வாக்கி அதன் நல்விளைவைப் பெருக்குகின்றன. அதன் முடிவில் உடலும் உளமும் உழைப்பயர்வின் பின் தேறுதலுற்று, முன்னிலும் பன்மடங்கு உழைப் பாற்றலும், சுறுசுறுப்பும், திறமும், உழைப்பார்வமும் பெறுகின்றன. உழைப்பும் ஓய்வும் மாறிமாறி வருவதனால், புற உறுப்பாகிய உடலும், அக உறுப்பாகிய மனமும் மிகுதி உணவுச் செரிமானம் செய்து, இன்பம் நோக்கியும் அழகு நோக்கியும் வளர்ச்சியுறுகின்றன. எனவேதான் உழைப்பைப் போலவே இன்பமும் ஓய்வும், அறிவும் இன்ப வாய்ப்புகளும் ஒருங்கே நாகரிக உயர்வின் சின்னங்களாகவும் அளவைகளாகவும் விளங்குகின்றன. இன்பம், ஓய்வு, அறிவு, இன்ப வாய்ப்பு ஆகியவை இல்லாத உடலுழைப்பாளிகளின் உழைப்பும், உழைப்பில்லாத முதலாளிகளின் பிறபண்புகளும் வளர்ச்சியற்றனவாய்க் கெட்டழிகின்றன. இரண்டும் கிட்டத்தட்டச் சரிசமமாயுள்ள நடுத்தர வகுப்பாராகிய திறலுழைப் பாளிகளும் அறிவுழைப் பாளிகளுமே நாகரிகத்தின் நடுநாயகமாய் விளங்குகிறார்கள். இன்ப வாய்ப்பை நாடுபவர்களே சிக்கனத்தையும் திட்டத்தையும் தேடுபவர் ஆவர். அவர்கள் இன்ப வாய்ப்பான ஆடை உடல்நலமும் உளநலமும் இயக்கநலமும் நடைநய எளிமையும் தரத்தக்கதா யமைகிறது. பயனுடைய சிறு நுட்பங்களை அழகு நுட்பங்களாக்கும் நயத்திறம் அவர்களுக்கே உரியது. உடுப்பின் கைவிளிம்பிலுள்ள வெட்டும் மடிப்பும் வேலைநேர வாய்ப்புக்குரியதாயினும், அதனை அவர்கள் ஓரழகு வாய்ப்பாக மாற்றுவர். அதன் உடற்பகுதியிலும் அப்படியே பெண்டிர் தம் உடற்பாதுகாப்புக்கென இயற்கையளித்த கூந்தலை வேலை வாய்ப்புக்காகப் பின்னிவிட்டபின், அது அவர்கள் அழகுக்கு அழகு தரும் பின்னலானது இவ்வாறே; வாளைப் பிடிப்பதற்கமைத்த கைப்பிடி வண்ண வடிவுக்கும் பூவேலைக்கும் உரிய உறுப்பாக மாற்றப்பட்டு விட்டது. இங்ஙனமே வாழ்க்கைப் போட்டி, போராட்டம், தற்காப்பு ஆகியவற்றில், ஏற்படும் உணர்ச்சிகளும் அச்செயல்கள் வேண்டாதபோது ஆடல் பாடல், வேட்டை முதலிய கலைக் களியாட்டங்களாகின்றன. அமைதி, ஒழுங்கு, இன்ப நலம் ஆகியவை வீட்டில் தொடங்கி வீட்டிலேயே பேணப்படுகிறது. வாழ்க்கை ஒரு போராட்டமானால் அப்போராட்டத்துக்குரிய படைக்கலச் சாலையும், மூலதளமும் பாதுகாப்புக் கோட்டையும் வீடே. அவ் வீட்டமைதி காக்கும் மூலதளப் படைத்தலைவர் பெண்டிரே. போரிடாதபோதும் மூலதளத்திலிருந்து போர்த் திட்டமிட்டுப் போர்க்காலங்களில் துணைப்படைத் தலைவருக்கும் படை வீரருக்கும் முதற் கட்டளைகளிடும் பெரும் படை முதல்வர்கள் அவர்களே. எனவேதான் மனித வாழ்வும் நாகரிகமும் கலையும் பெண்டிரைச் சுற்றியே உலவுகின்றன. ஆடவர் நாட்டரசர்; ஆனால் பெண்டிர் அவர்களை ஆளும் வீட்டரசியர். மற்ற அரசர் ஆடவர், புற உடலியக்குவர். பெண்டிர் அவ்வரசர் உட்பட ஆடவர் அனைவரின் உடலையும் உளத்தையும், அவற்றை இயக்கும் உணர்ச்சி நோக்கங்களையும் இயக்குபவர். செயலற்றவர் போலிருந்தாலும் அவர்கள் செயல் செய்யும் திறம் வாய்ந்தவர்கள். செயலற்ற செயல் மட்டுமன்று; பேசாத பேச்சு, தூண்டாத தூண்டுதல், குறிக்காத குறிப்பு, எண்ணாத எண்ண அலைகள் இவை பெண்டிரின் பெட்புக்கள். பெண்டிரைச் சூழ்ந்து இயங்கி யாவரையும் இயக்கும் நுட்ப அலை மண்டலங்கள் இவை. பெண் கண்காணா இவ்வலையியக்கங் களின் நடுவே காணப்படும் ஓர் ஒளிப்பிழம்பு மட்டுமே. பட்டின் பளபளப்பையும் மேன்மையையும் குழைவையும் பலரும் அறிவர். அதன் ஆற்றலை அவர்கள் எண்ணிக்கூடப் பார்க்கமாட்டார்கள். ஆனால், விமானக் குடை அமைப்போர் அவ்வாற்றலை அறிந்து பயன்படுத்துகின்றனர். பட்டு விலையுயர்வுடையது. ஆனால், பட்டிழை அதே அளவுள்ள பிற இழைகளைவிடப் பன்மடங்கு ஆற்றலுடையது மட்டுமன்று; அதன்பயன் நோக்க மலிவானது என்றுகூடக் கூறலாம். பட்டின் இத்தன்மை முற்றும் வாய்ந்தவர்கள் மாதர். அவர்கள் கைவிரல்கள் அழகிய சிறு வடிவுடையவை. அவற்றின் நுட்ப ஆற்றலும் பெரிது. ஆனால், அவற்றின் சிறப்பு அவற்றின் நுண்ணாற்றல் மட்டுமன்று; அவற்றின் அளவுக்கு அவர்கள் விரல்களின் பரு ஆற்றல்கூடப் பெரிது. ஆடவர் நலன் கோரி, ஆடவரால் ஆற்றமுடியாத நுட்பநலன் கோரி, அவர்கள் நுட்ப ஆற்றல் பேணுகின்றனராயினும்; பரு ஆற்றலில் போட்டியிட விரும்பினால், அதிலும் அவர்கள் தம் சிறு எல்லை கடந்து வெற்றியடைய முடியாதென்றில்லை. ஏனெனில், மென்மையிலும் பண்பிலும் தொடங்குபவர் வன்மை பெறமுடியும், வன்மையை வெல்லவும் முடியும்! வன்மையில் தொடங்குபவர் மென்மையை வெல்ல எண்ணக்கூட முடியாது.1 வீட்டின் சிக்கனம், வீட்டமைதி காத்து வீட்டின்பம் வளர்க்கிறது. புற உலகுக்கு இச் சிக்கனமும் அமைதியும் இன்பமும் நேரிடையாக எப்போதும் தெரிவதில்லை. வீட்டுக்குள் வருபவர் மட்டும்தாம் காண்பர். ஆனால், ஒரு தடவை வந்தவர் வீட்டாரை என்றும் மதித்து அவர்கள் வாழ்க்கைத் தரத்துக்கேற்ப அவர்களை நடத்தச் செய்யும் ஆற்றல் அவற்றுக்கு உண்டு. தவிர, வீட்டு ஆடவர் பிள்ளைகள் தம் வீட்டமைதி யின்பத்தின் ஒரு சின்னமாகவே புற உலகில் காட்சி தருகின்றனர். பெண்டிர் மிகுதி வெளி உலகுக்கு வருவதில்லை. தம் வீட்டுடனொத்த பண்புடைய இல்லத்திலன்றி அவர்கள் புகவும் மாட்டார்கள். ஆயினும் அவர்களுக்குப் புறஉலகு காட்டும், காட்ட வேண்டும் மதிப்பு அவர்கள் குடும்ப மதிப்புமட்டுமன்று. அதன் முழுநிறை மதிப்பாகிய இனமதிப்பு அல்லது நாட்டுமதிப்பே. உயர்ந்த நாகரிக மக்கள் பெண்ணின மதிப்பை மனித இனத்தின் மதிப்பாகவே கொள்வர். ஒழுங்கமைதியும் முறையும் இன்றி வீடும் நன்கு நடைபெறாது; அலுவலகங்களும் நிலையங்களும் நன்கு நடைபெறமாட்டா. எதற்கும் உரிய ஒரு நேரம், எந்த நேரத்துக்கும் உரிய ஒரு தொழில்; எந்த இடத்துக்கும் உரிய பொருள், எந்தப் பொருளுக்கும் உரிய இடம்; எந்த மனிதனுக்கும் உரிய ஒரு நேரத் திட்டம்; ஒரு தொழில் திட்டம்-இவையே நடைமுறையின் அமைதி. இவ்வெல்லாத் திட்டத்தையும் அளப்பது செலவே. செலவு வருவாயை ஆளவேண்டும். அஃதாவது, செலவினம் ஏதாவது ஓர் ஆதாயத்தை அஃதாவது தற்காலிக வருவாயைப் பெருக்க வேண்டும்; அல்லது மேம்பாட்டை அஃதாவது நிலையான வருவாயைத் தரவேண்டும். இவ்விருவகை வருவாயும் நிரந்திருப்பது இன்றியமையாதது. செலவின் இச் செவ்வியமுறை, திரிந்தால் அல்லது முறையேயில்லாத குளறுபடி மிகுந்தால், அழிவுப்பாதையில் வாழ்வு சரியும். இக் குளறுபடிக்கு முதல் முதல் வழிவகுப்பது ஆராயாச்செலவே. திட்டமற்றவன் கைவிரல்களுக் கிடையே பொருள் அவனறியாது மிக எளிதாகக் கசிந்தொழுகி மறைந்து மாய்ந்துவிடும். செலவின் மூலம் வருவாய் பெருக்குதல்வேண்டும். குறைந்த செலவின்மூலம் நிறைந்த வருவாய்க்கு வழிகோலவேண்டும். தற்காலிக வருவாயிற் கருத்துச் செலுத்துவது முதன்மை யானாலும், அதனைப் பெரிதும் பாதிக்காமலே நிலையான வருவாய் வளர்வதற்கு வழி வகுத்தல் வேண்டும். இவையே சிக்கனக் கலையின் உயிர்நாடிகள். பொருள்களைக் கையாள்வ திலும் இதே சிக்கனமுறை இருக்கவேண்டும். ஒழுங்கமைதி இல்லாத இடத்தில் தேவைக்கு மேற்பட்ட பொருள்கள் கொட்டிக் குவிந்து கிடக்கலாம். ஆனால், தேவைக்கு வேண்டிய பொருள், தேவையை நன்கு நிறைவேற்றும் பொருள் இராது. சிலசமயம் பொருள் இருந்தும் தேவைக்கேற்ற இடத்தில் இராது. அல்லது தேவை நேரத்துக்கு உதவாது. தேவைக்குக் குறைந்த அல்லது போதாத பொருள் இருக்கலாம். அப்போதும் நிலை அதுவே. குழவியில்லாத அம்மி, சாவி இல்லாத பூட்டு முதலியன நிறைய இருந்தாலும் பயன்படாது; இல்லாவிட்டாலும் பயன்படாது. பலர் ஒரு படுக்கை வேண்டிய இடத்தில் பல படுக்கை வைத்திருப்பார்கள். ஆனால், ஒன்றேனும் தூயதாய், கிழிசலற்றதாய் இராது. வேண்டாதவற்றைக் குறைத்து வேண்டியவற்றைப் பெருக்குவதும், மிகுதி வேண்டியவற்றைப் பெருக்கி மிகுதி வேண்டாதவற்றைச் சுருக்குவதும், காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ற தேவைகளை அவ்வவ் வகையில் அமைத்துக் கொள்வதும் வாழ்க்கை வளத்துக்கு மிகுதியும் இன்றியமையாதவை. ஒழுங்கமைதி விருப்பம் இயல்பாகவே அதற்கான உழைப்பையும் சுறுசுறுப்பையும் ஊக்கும்; திட்டம் வகுக்க அது தூண்டுவதால் காலந் தவறாமை, விடாமுயற்சி ஆகியவை அமையும். மேலும் ஒழுங்கமைதி விரும்புபவன் தேவையில்லா இடத்தில் கடுஞ்சொல் கூறமாட்டான்; எவரிடமும் அன்பாயி ருப்பான். தான் மகிழ்ச்சியடைவதற்குப் பிறர் மகிழ்ச்சியும் பேரளவு தேவையாதலால், பிறரை மகிழ்விக்கவும், பிறர் துன்பம் அகற்றவும் அவன் பாடுபடுவான்; நன்னடத்தையும் அவன் ஒழுங்கமைதியில் இடம் பெறும். ஏனெனில் அவன் நேரம், இடம் ஆகியவற்றையும் அதைப்போல ஆளையும் தகுதியறிந்து நடத்துவான். தான் பிறரை மதித்தாலன்றி, தனக்கு மதிப்புக் கிட்டாதென்பதை அறிந்து அவன் எவரையும் நன்மதிப்புடன் நடத்துவான். கடுஞ்சினமும் சிடுசிடுப்பும் வாழ்க்கைச் சிக்கன மன்று என்று கண்டு அவற்றை அவன் விலக்குவான். அருளிரக்கம், நன்னடத்தை ஆகியவற்றுக்கு எத்தகைய கைம்மாறும் செய்பவர்கட்குத் தேவைப்படுவதில்லை. நல்லது செய்த மனநிறைவும் மகிழ்ச்சியுமே, அவர்கள் உள்ளத்திற்கு நிறையின்பமும் அமைதியும் தரும். ஆனால், சிற்சில சமயம் அவற்றுக்கு ஆட்பட்டவர் மனத்தில் எழும் நல்லுணர்ச்சி எதிர்பாராக் கைம்மாறு தருவதும் உண்டு. தன் வேலையில் மிகவும் பரபரப்புடன் ஈடுபட்டிருந்த ஓர் அம்பட்டனிடம் அதைவிடப் பரபரப்புடனும் கெஞ்சுதலுடனும் ஒரு படைவீரன் வந்து, ``ஐயா! நான் என் ஓய்வு தவணை கடந்து நின்றுவிட்டேன்; வேலை செய்து முற்றிலும் களைத்தும் விட்டேன். உணவுக்கும் அலுவலிடத்துக்கு ஊர்தியில் செல்லும் வாய்ப்புக்கும் பணமில்லாவிட்டால், நான் இச் சோர்வுக் கிடையே கடுந்தண்டனையும் பெறுவேன். எனக்குச் சற்று உதவுவீர்களா?'' என்றான். அம்பட்டன் மறுசொல்லாடாமல், உடனே ஒரு பெரும்பொன்1 கொடுத்தான். வீரனுக்கு வந்த வியத்தகு நன்றியால் அவன் அம்பட்டனுக்குத் தன் துணைத்தொழில் ஆதாரமாயிருந்த கால்புதையல் மை செய்யும் முறையமைந்த தாளை அவனுக்கு ஈந்தான். அம்பட்டன் அதைக் கொண்டு அத்தொழிலில் முனைந்து ஐந்து நூறாயிரம் பொன் பெறுமானமுள்ள முதல்தரத் தொழில் முதலாளி ஆனான். அவனே லண்டன் நகரின் அவன்கால முதற் செல்வனும் உலக முதன்மைச் செல்வர்களுள் ஒருவனும் ஆன டேமார்ட்டின் கழகத்தின் முதல்வன் டே. வீட்டின் ஒழுங்கமைதி, தூய்மை, அழகு ஆகியவற்றையும் வீட்டிலுள்ளோர் பண்பையும் எடுத்துக் காட்டத்தக்க சிறு செய்திகள் பல உண்டு. பலகணி ஓரம் ஒரு பூவை வைத்திருப்பவன் அதன்மூலம் பிற பொருள்கள் அமைதியை நன்கெடுத்துக் காட்ட முடியும். பூ மணம் தருகிறது; தூய்மையை உண்டுபண்ணுகிறது. காட்சிக் கழகாயிருக்கிறது; உள்ளத்தில் மகிழ்வூட்டுகிறது. வீட்டின் நல்லமைதிக்கு அது ஒரு சின்னம். நேரமறியப் பயன்படும் ஒரு மணிப்பொறி வீட்டிலும், சட்டைப்பையிலும் மணிக்கை யிலும் இருப்பது அழகுமட்டுமல்ல; நேரம் தவறாமைக்கு ஒரு நினைவூட்டும் ஆகும். குறித்த நேரத்தில் செடி கொடிகளுக்கு நீரூற்றல்; அதன் வளர்ச்சியில் கருத்தூன்றி மகிழ்தல்; குறித்த சமயம் மணிப்பொறிக்கு விசைமுறுக்கல் ஆகிய செயல்கள் ஓய்வு நேரத்தையும் பயன்படுத்தும் நற்பழக்கத்தை ஊட்டும். பெரிய அலுவலகங்களில் பிறர் கீழ் ஆணைப்படி வேலை பார்க்கும் கடும் தொழிலாளர்கள் தாமாகச் செய்ய மறக்கும் இத் தொழிலைச் செய்பவன், தொழிலாளனானால் உயர்வதும், திறலுழைப்பாளி அல்லது முதலாளியானால் பின்னும் உயர்வு பெறுவதும் உறுதி. மலர்களைப் போலவே இசைக் கருவிகளும், இசையும், ஓவியங்களும், வாழ்க்கைப் பெரியார்களை நினைவூட்டும் நிழற்படங்களும், நிகழ்ச்சிப் படங்களும், இயற்கைக் காட்சிச் சித்திரங்களும் இனிமை, உயர் கருத்துகள் ஆகியவற்றை வீட்டின் சூழலுக்கு ஊட்டுவன. இது அதில் வாழ்பவர் வாழ்வுநலங்களைப் பெருக்குவதுடன் அச் சூழலில் பிறந்து வளரும் மதலையர்க்குத் தாய்ப்பாலுக்கடுத்த அறிவுப் பாலாகவும் பண்புப் பாலாகவும் அமைந்து, தொடக்கத்திலிருந்தே அவர்களைப் பண்பியல்பு உடையவராக்குகின்றன. அச்சுத் தொழில் கலைச் செல்வங் களையும் இலக்கியச் செல்வங்களையும் பரப்பி எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கச்செய்த நிலையிலும், அவற்றைப் பயன்படுத்தாது உலகில் வாழ்பவர் தாமரைக்குளத்தில் வாழும் தவளைகள் போன்றவரே யாவர். அவற்றின் விலை சிறிது; மதிப்பும் பயனும் பெரிது. மலர்கள் இயற்கை அளித்த செல் வங்களாவதுபோலவே, இவை சமூகம் அளித்த கலைச் செல்வங்கள் ஆகும். எதையும் நிறை பயனுடையதாக்கி எதிலிருந்தும் நிறைபயன் பெறும் பண்புடையார் வாழும் உலகு பொன்னுலகையும் கனவுலகையும் மெய்யுலகாக்கும் தன்மையுடையது. மண்ணும் அத்தகையார் நன்முயற்சியால் பொன்மயமாகும். அவர்கள் இயங்குமிடமெல்லாம் பிறரனைவரும் இன்பமும் ஒளியும் பெறுவதால், அவர்கள் மக்களுக்கிடையே ஒரு தண் கதிரவன்போல் விளங்குவார். அவர்கள் வாழ்விலே மக்கள் கனவியல் பண்புகளாகிய இறைவன் பண்புகளை, கண்கண்ட பண்புகளாகக் காண்பர். இறைவன் உண்மைக்குரிய மிக உயர்சான்று இத்தகையோர் வாழ்வே. அவர்கள் உளரா யிருப்பதாலேயே உலகம் உளது என்று கூறுதல் மிகையாகாது. அவர்கள் வாழ உலகம் வாழாமலிராது; அவர்களைப் பேணும் நாடு, உலக நாகரிகத்தை வளர்த்துப் புகழ்பெறும் நாடாக நின்று மிளிருவது உறுதி.