மலைநாட்டு மங்கை முதற் பதிப்பு - 1961-62 இந்நூல் 2007இல் நெய்தல் பதிப்பகம், சென்னை - 5. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. முன்னுரை வரலாற்று நாவலாசிரியர் என்ற முறையில் அசாமிய இலக்கியத்தில் ரஜனிகாந்த பர்தலாய்க்கு ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த இடமுண்டு. சென்ற (பத்தொன்பதாம்) நூற்றாண்டின் தொடக்கத்தில் பர்மிய ‘மான்’ இனத்தவர்களின் தாக்குதலுக்கு உட்பட்ட ‘கோச்’ ஆட்சியூழியில் அவருடைய முன்னோர்கள் கீழை அசாமிலிருந்து காமரூபப் பகுதிக்கு வந்து தங்கி வாழ்ந்தார்கள். அவருடைய நாவல்கள் பலவற்றிலும் இதே காரணமாகவே ‘மான் ’ஊழியின் ஆழ்ந்த இருட்படலங்களின் நிழற்கோடுகள் வந்து பரவியுள்ளன. ரஜனிகாந்தர் கோஹாத்தி (குவா ஹாட்டீ)யில் கிறித்தவ ஆண்டு 1868-ல் பிறந்தார். இங்கேதான் அவர் தம் நுழைவுத் (என்ட்ரன்ஸ்) தேர்வில் தேறினார். இதன்பின் அவர் கல்கத்தாவில் மெட்ரோபோலிடன் இன்ஸ்டி யூட்டில் (தற்போதைய வித்யசாகரர் கல்லூரியில்) சேர்ந்து எஃவ், ஏ. தேர்வில் முதல் வகுப்பில் தேறினார். 1889-ல் அவர் கல்கத்தா நகரக் கல்லூரியில் பி.எ. பட்டம் பெற்று அசாமுக்குத் திரும்பி, கோஹாத்தி டிப்புட்டிக் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு குமாஸ்தாவாக வாழ்க்கையைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் 1891-ல் சப். டிப்புட்டிக் கலக்டராகவும், 1901-ல் அடிஷனல் ஜாயிண்ட் கமிஷனராகவும் பதவி பெற்றார். அரசாங்கப் பதவியிலிருந்து அவர் 1918-ம் ஆண்டிலேயே ஓய்வு பெற முடிந்தது. ஆனாலும் இதற்கிடையே 1908-ல் கொஞ்ச காலம் அவர் நவக் கிராமத்தில் டிப்புட்டிக் கமிஷனராக வேலை பார்க்க நேர்ந்தது. உத்தியோக முறையில் பல இடங்களையும் சுற்றிப் பார்த்து வந்ததன் பயனாக, வாழ்க்கையின் பலதரபட்ட அனுபவங்களிலும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. மாணவர் பருவத்தில் பர்தலாய் வாசித்து வந்த ஆங்கில ஆசிரியர் ஸர் வால்ட்டர் ஸ்காட்டின் நாவல்கள் அவரிடம் இயல்பாய் அமைந்த அவரது முன்னோர்களின் பூர்வ வாசனை யைத் தூண்டி, அதே போன்ற நாவல்கள் இயற்றும் ஆர்வம் எழுப்பின. அத்துடன் அவருக்கு இயல்பாய் அமைந்திருந்த மக்கட் சமுதாயப் பாசத்துடன் அந்நாளைய இலக்கிய வாணரிடையே நிலவிய தேசீய போதமும் சேர்ந்து அவருக்கு ஒருபுறம் தேசத்தின் புராதன வரலாற்றுப் பண்பாட்டில் ஊன்றிய அறிவும், மற்றொரு புறம் மக்கட் கூட்டத்திலும் பாமர பொது மக்கள் வாழ்விலும் பரந்த ஒத்துணர்வும் தோற்றுவித்தன. இந்நிலையில் 1895-ம் ஆண்டில் எழுந்த அவரது முதல் நாவலே ‘மீரீ ஜீயரீ’- அதாவது ‘மீரி மகள்’ என்ற நூல் ஆகும். அது ‘மீரீ’ அதாவது ‘மிச்விங்’ என்ற பெயருடைய பூர்வ குடிகளின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட கதை. பர்தலாய் பர்மோட்டாவில் வாழ்ந்து வந்த சமயத்தில், சங்கர தேவர் என்பவர் மூலமாகப் பரப்பப் பட்டு வந்த வைணவ நெறியின் கொள்கை அவரை மிகவும் கவர்ந்தது. அதையே தன் ஓவியப் பின்னணித் திரையாக்கி, காமரூப நாட்டுச் சரித்திரத்தின் தனி அத்தியாயமான ஒரு பழைய வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு ‘மனோமதி’ என்ற நாவலை அவர் 1900-ம் ஆண்டில் வெளியிட்டார். அவரது இதயங் கவர்ந்த காமரூப வரலாற்றின் இன்னொரு அத்தியாயம் ஆஹோம் இராஜ்ய அரசாங்கத்துக் கெதிராகக் கிளர்ச்சி செய்த ஹரதத்தன், வீரதத்தன் என்ற வீரர்கள் பற்றியதாகும். இக் கிளர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட நிலப் பரப்பு முழுவதும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு அவரது உத்தியோகக் கடமைகளின் மூலமாகவே அவருக்கு ஏராளமாகக் கிடைத் திருந்தது. இப்பயணங்களின் அனுபவமே 1909-ல் இயற்றப்பட்ட ‘தந்துயா துரோஹம்’ என்ற அவரது நாவலுக்குரிய அடிப்படைச் சட்டமாய் அமைந்தது. இதே வரலாற்றுச் செய்தியை மூலமாகக் கொண்டு லட்சுமி நாத பேஜபருவா என்பார் ‘பதுமகுமாரி’ என்ற நாவலை ஏற்கனவே இயற்றியிருந்தார் என்பது இவ்விடத்தில் கவனிக்க வேண்டிய செய்தி ஆகும். இச்சமய முதல்தான் பர்தலாய் தம் முன்னோர்களின் வாழ்க்கைக் காலத்தோடு ஒன்றிக் கிடந்த ‘மான்’ ஊழியின் வரலாற்றைத் தமக்கேயுரிய ஒரு தனிப் பகுதியாக்கிக் கொண்டார் என்று கூறவேண்டும். அவ்வூழியின் பயங்கர சம்பவங்களின் எதிர் நிழல்களை நாம் அவரது பிற்கால நாவல்களிலே மீண்டும் மீண்டும் காண்கிறோம். ரங்கீலீ (1925),நிர்மல பக்தன் (1926), ‘தாமிரேசுவரி மந்திர்’ (1926) ரயதாய் லிகிரி (1926) முதலிய இந்த ஏடுகள் சரித்திரமே படிக்காதவர்கள் மனக் கண் முன்னும் சரித்திரத்தை ஒரு சித்திரமாக்கிக் கொண்டுவந்து நிறுத்தி விடும் தனிப்பட்ட தன்மை உடையவை ஆகும். ‘ராதா -ருக்மணி’ என்ற நாவல் மூலம் பர்தலாய் ‘மான்’ படையெடுப்பு ஊழிக்கு முற்பட்ட அசாம் வரலாற்றின் ஒரு ஒளிமிக்க நிகழ்ச்சியைக் கூட ஆதாரமாக்கி எழுதியுள்ளார் - மாயா மரியா வைணவ சம்பிர தாயத்தவர்களின் கிளர்ச்சி பற்றிய சம்பவமே அது. இது போலவே மணிபுரியின் கர்ண பரம்பரை வரலாற்றுச் செய்தியான ‘காம்பா -ஓ-தோய்பி’ என்பதனை யும் அவர் ஒரு நாவலின் உருவமாக்கித் தந்துள்ளார். ஆசிரியரது வரலாற்றார்வம் எவ்வளவு, மனித சமுதாய ஒத்துணர்வு எவ்வளவு என்பதை யெல்லாம் இச்செய்திகள் நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகின்றன. பர்தலாயின் வரலாற்று நாவல்கள் வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கிலேயே இழைத்து செல்லும் கட்டுப் பாட்டுக்கு உரியனவாயினும், இக்காரணத்தினால் அவருடைய படைப்புக் கலைத் திறத்துக்கு எத்தகைய தடங்கலும் ஏற்பட்டிருக்கவில்லை என்று துணிந்து கூறலாம். அத்துடன் அவரது முதல் நாவலாகிய மீரீ ஜீயரி அதாவது ‘மீரீ மக’ளில் வரலாற்றின் இந்தக் கட்டுப்பாடு ஒரு சிறிதும் கிடையாது. வேண்டுமானால் இது பற்றிய நாட்டமே அவர் உறக்கத்தைப் பாழடித்து விட்டது என்று மட்டும் கூற இடமுண்டு. இச்சமயத்திலே அவர் அசாமின் வரலாற்றாசிரியாரான ஸர் எட்வர்டு கேட் என்பாரின் வற்புறுத்தலின் பேரில் மீரீ மக்களின் மதச் சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் சில ஆய்வாராய்வுகள் நடத்தி வந்தார். கேட் பெருமகனாரின் தூண்டதலுரைகளே ‘மீரீ மகள்’ இயற்றுவதற்குக் காரணமாயமைந்திருந்தது என்பதை அவரே கூறியுள்ளார். இதன் பயனாகவே ‘மீரீமகள்’ என்ற நாவலின் ஆசிரியர் வரலாற்று ஆராய்ச்சி விளக்குபவராக அமையா விட்டாலும், மனித தத்துவ, சமுதாயத் தத்துவத் துறைகளில் கிட்டத்தட்ட ஒரு குட்டி ஆராய்ச்சியாளராகவே விளங்க நேர்ந்துள்ளது. உண்மையில் சமுதாய சாஸ்திரக் குறிப்பு களடங்கிய அவருடைய பணித்துறைக் குறிப்பேட்டிலிருந்தே ‘மீரீ மகள்’ ஜன்மம் எடுத்துள்ளது என்று கூறலாம். இந்த நாவல் 1894-இல் ஆசிரியர் நடத்திய ஒருபடகு யாத்திரையை மைய வரைச்சட்டமாகக் கொண்டே இயற்றப்பட்டது. இது பற்றித் தம் வாழ்க்கைக் குறிப் பேட்டில் அவரே கீழ் வருமாறு எழுதியுள்ளார். “அலுவல் பெட்டியிலிருந்த தாளும் பேனாவும் எடுத்து, தலையணையையே மேசையாகக் கொண்டு நான் எழுதத் தொடங்கினேன். என்னதான் எழுதுவது என்று சிந்தித்தேன். அப்போது நான் படகு யாத்திரையில் தான் ஈடுபட்டிருந்தேன். ஆதலால் முதல் முதலாக மீரீ மக்களின் படகு யாத்திரைச் செய்தியே நினைவில் மிதந்து வந்தது. அக்காட்சியுடன் காட்சியாகவே, வட எக்கீம்புரத்தின் இயற்கைத் தோற்றங்கள், சோவன் சிரீ ஆறு ஆகியவையும் மீரீ சமுதாயத்தின் மதச் சடங்கு முறைகள், அவர்களின் பழக்க வழக்கங்கள், மணவினைப் பாங்குகள், போக்கு வரவு நடவடிக்கைகள், சமுதாய ஆசாரங்கள் ஆகியவையும் இடையிடைக் காட்சிகளாக வந்தன. அவற்றோடு வழக்கு மன்றங்களினுள் வந்து வழக்காடிக் கொண்டு வரும் மீரீ இன இளைஞர், இள நங்கையரின் நினைவுச் சித்திரங்களும் வந்து தலை காட்டின. கூடவே விழாப் பாடல்களும் அகச் செவியினுள் முரல்வுற்றன. இவற்றைத் தீட்டப் பேனாவும் முனைந்தது. பேனாவுக்கு என்ன தெய்விக அகத் தூண்டுதல் ஏற்பட்டதோ, அந்தப் படகில் உலவிய நிலையிலேயே, இரண்டு நாட்களுக் குள்ளாக, ‘மீரீ மகள்’ என்ற நாவல் எழுதப் பெற்று முடித்து விட்டது.” இந்த நினைவுகள் இந்த நாவலில் ஆசிரியருள்ளத்தில் எப்போதும் நிலையாக உலவுகின்றன. இதன் கதைப் பகுதியும் சரி, வரலாற்றுப் பகுதியும் சரி- மீரீ மக்களின் வாழ்க்கையைப் போலவே தெள்ளத் தெளிவாக, எளிமையாக அமைந்துள்ளது. இந்நாவலில் கதையாசிரியர்கள் கையாளும் கதைச் சிக்கல்கள் எதுவும் கிடையா. மீரிமக்களின் எளிய இயற்கைக் குடியரசுச் சமுதாயத்திற்குரிய காதல் வீரக் காப்பியமாகவே இது இயல்பாக அமைந்துள்ளது என்பதே ‘மீரீ மகள்’ நாவலின் உளங்கவரும் சௌந்தரிய ராசியின் இரகசியம் என்னலாம். நாவல் போன்ற அகன்றதோர் இலக்கிய அருங்கலைப் படைப்பினை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு வடிவு பெயர்ப்பதென்பது எளிதான காரியமன்று. அதிலும் சமுதாயப் பின்னணியும் தாய்நில இயற்கை அழகு நயங்களும் மொழியுடன் மொழியாகப் பின்னி இழைந்துள்ள ஓரு மூல நாவல் வகையில், இம்முயற்சி இன்னும் சிக்கல் வாய்ந்ததாகும். குறிப்பிட்ட இந்நாவல் வகையில் மூல நூலுக்குரிய தனியழகையும் கவர்ச்சியையும் மொழிபெயர்ப்பு எந்த அளவில் புத்துயிர்ப் படுத்திக் காட்டியுள்ளது என்பது வாசகர்களின் மதிப்பீட்டுக்கே உரியது. இச்சமுதாய நாவலை இந்தியிலும் (தற்போது தமிழிலும்) மொழி பெயர்த்து அதற்குரிய இரசிகர் குழாத்தின் தொகையைப் பெருக்கி அந்த ஜனச முதாயத்திற்குரிய இச்சிற்றோருவியத்தைத் தமிழ் நாட்டு மக்கள் கண் முன் கொண்டு வந்த சாகித்திய அகாதெமியின் சேவை போற்றுதலுக் குரியதாகும். குவாஹா பல்கலைக் கழகம் , பிரிஞ்சி குமார் பருவா. குவாஹாடீ (அசாம்) 1. ஆற்றங்கரையிலே அசாம் நாட்டில் இலட்சுமிபுர மாவட்டத்தில் சோவன்ஷிரி என்ற ஆறு ஓடுகிறது. வடதிசையில் அது மீரீ, டப்ளா ஆகிய மலைத் தொடர்களிலிருந்து எழுந்து வடக்கு இலட்சுமிபுர வட்டார வழியாக வளைந்து சென்று நதியரங்கப் பகுதியின் அருகிலேயே கேர்க்கடியா ஆற்றில் வந்து கலக்கிறது. கேர்க்கடியா என்ற இந்த ஆறு ஒரு தனி ஆறு அன்று, பிரமபுத்திராவின் ஒரு கிளை மட்டுமே. தலையாற்றிலிருந்து பிரிந்து வந்து அது சோவன்ஷிரியுடன் இணைகிறது. இலட்சுமிபுரத்திலும் நதியரங்கப் பகுதியிலும் உள்ள பொது மக்களிடையே இந்த ஆறுகள் பற்றிய ஓர் இனிய கதை மரபு வழங்குகிறது. பிரமபுத்திர நயினார் தம்முடைய அழகுமிக்க, குணநலஞ்சிறந்த மனைவியாகிய சோவன் ஷிரியை வழி எதிர் கொண்டழைத்து இட்டுச் செல்வதாக அவர்கள் நம்புகிறார்கள். சோவன்ஷிரியும் கேர்க்கடியாவும் இவ்வாறு ஒருங்குகூடிச் செல்லும் இணையாற்றுக்கு லுயித் என்ற பெயர் வழங்குகிறது. இதுமேற்காகப் பாய்ந்து மீண்டும் பிரமபுத்திராவையே சென்றடைகிறது. சோவன்ஷிரி ஆறு பிரமபுத்திரா நதியின் அகலத்தில் ஐந்தில் ஒரு பங்குக்கு மேல் இராது. ஆனால் பிரம்மபுத்திராவின் நீரைவிட அதன் நீர்ப்பரப்பு மாசுமறுவற்றது. நதியின் தலைநிலத்தை நோக்கி முன்னேறிச் செல்லுந் தோறும் நீரின் தெளிவு மேன்மேலும் அதிகமாகிக் கொண்டே போகிறது. கண்ணாடியில் காண்பது போல நாம் படிகம் போன்ற அதன் நீர்ப்பரப்பினூடாக அடித்தடம் வரை தெள்ளத் தெளிவாகக் காணலாம். ஆற்றின் மணலுக்கிடையே அங்கங்கே தங்கப் பொடிகள் ஏராளமாக மின்னுவதுண்டு. முற்காலங்களில் இந்தச் சோவன்ஷிரி ஆறு அசாம் நாட்டின் முக்கிய ஆதாரமாக விளங்கியிருந்தது. ஆற்றின் மணலில் மட்டு மன்று, நீரிலேயே பொன் அணுக்கள் உள்ளீடாகக் கலந்துள்ளன. அசாம் மக்கள் முன்பெல்லாம் அரிப்புத் தொழில் மூலம் ஆற்றிலிருந்து தங்கம் எடுத்து வந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் அத்தொழிலை மேற்கொள்வதில்லை. ஏனெனில் இவ்வேலை மிகவும் கடினமானது. கிடைக்கும் ஆதாயமும் முயற்சியைப் பார்க்க மிகவும் குறைவே. வாழ்க்கைப் போராட்டத்தில் கடுந்தோல்வி கண்டவர்கள்தாம் இப்போதெல்லாம் இத்துறையில் கருத்துத் திருப்ப முடியும். அவர்களும் ஒரு மாதம் ஓயாத முயற்சியெடுத்துக் கொண்டால் தான் ஒரு கால் ரூபாய் எடைத் தங்கத்தைத் திரட்டி எடுக்க இயலும். மன்னர்கள் ஆண்ட முற்காலங்களில் அரிசி பருப்பு முதலிய தானியங்கள் மிகவும் மலிவாகக் கிடைத்தன. ஆகவே கால் ரூபாய் எடைத் தங்கத்தைக் கொண்டு ஒரு முழுக் குடும்பம் ஒரு மாதத்துக்கு வாழ்க்கை நடத்த முடிந்தது. ஆனால் இப்போதோ ஒரு தனிமனிதன் வாழ்வதற்கே மாதம் குறைந்தது ஐந்தாறு வெள்ளிகள் தேவைப் படுகின்றன. இந்நிலையில்தான் அசாம் மக்கள் வேறு வகையில்லாமல் பொன் திரட்டும் இந்தத் தொழிலை அறவே விட்டுவிட நேர்ந்தது. கண்கலங்கித் தன்னிடம் வரும் மக்களுக்கு சோவன்ஷிரி அன்னை இவ்வாறு கனகம் வழங்கிய காட்சி இன்று மலையேறி விட்டது. ஆயிலும் அன்னையின் நேசப்பண்பு வேறு பல வகையில் இன்னும் நீடித்து வருகிறது. மென்மையும் குளிர்ச்சியும் மிக்க அன்னையின் கரங்களில் செல்வமாக ஏந்தி வளர்க்கப் பட்டவர்கள் அசாமிய மக்கள். அவ் வன்னையின் புகழ் பாடுவதில் அவர்கள் இன்னும் ஒரு சிறிதும் சோர்வு பெற்று விடவில்லை. அன்னை உருவின் எழிலார்வளம் எல்லையற்றது. ஒன்றுக் கொன்று வீறுமிக்க பல அடர்பெருங் கானகங்களினூடாக அவள் வளைந்து குழைந்து நடமாடி வருகிறாள். வழியில் எத்தனை எத்தனையோ கிராமங்களினருகே அவள் வட்டமிட்டு, அக் கிராமவாசிகளுக்குக் குளிர் நறுந் தென்றலையும், தெளிந்த படிகம் போன்ற நன்னீரையும் வழங்குகிறாள். இவற்றின் மூலம் அவள் அவர்களின் உடலையும் உள்ளத்தையும் ஒருங்கே நன்னிலையில் வைத்துப் பேணி வளர்க்கிறாள். ஏனைய அசாமிய மக்களைவிட மீரீ மலைவாணர்களுக்குத் தான் தாயன்பின் பாசம் மிகுதி. கள்ளங்கபடமற்ற மீரீ வகுப்பினரிடையே சின்னஞ்சிறுவர் சிறுமியர் மட்டுமன்றி வயது வந்தவர்கள், கிழவர் கிழவியர் உட்பட, எல்லா மக்களுமே இப்பண்பில் தோய்ந்தவர்கள்தான். தாயைவிட்டு அவர்களால் ஒரு சிறிதும் பிரிந்திருக்க இயலாது. மலையின் குளிர்ச்சி பொருந்திய மடியிலிருந்து இறங்கி வந்துள்ள இந்த மீரீ1 இனமக்களுக்குத் தாயருகிலே இருந்தாலல்லாமல் எந்த வேலையிலும் மனம் நாட்டங் கொள்வதில்லை. `சரணபூசை'2 மூலம் மீரீ மக்கள் தங்கள் உடல் உயிர் இணைந்து ஒருங்கு வாழ்வதற்காக `இடி முகில்'3 தேவதைகளை மந்திரத் துதிப் பாடல்கள் பாடி வழிபடுகின்றார்கள். வள்ளல் முகில் வான் மின்னல் வானவரே! உமக்கு வெள்ளிப்பதம் நாலுடனே, வீறு கொம்பு பல்லுடனே துள்ளும் இளம் பன்றி தந்தோம், துணைதருவீர் எமக்கே! கொல்லு தலையிடி வயிற்று நோயகற்றிக் காப்பீர்!4 மற்றும் சோவன்ஷிரி அன்னையின் சீதளக் காற்றுப் படாவிட்டால், மீரீ மக்களுக்கு வாழ்க்கை தாங்க முடியாத ஒரு சுமையாய் விடும்! அவளது குளிர் நறுநீர் இல்லா விட்டால் அவர்களது நீர் வேட்கை என்றும் தணிவுறாது. சிறுசிறு படகுகளிலேறி அன்னையின் மடிமீது தவழா விட்டால், அவர்கள் உள்ளம் என்றும் குதூகலம் அடைய மாட்டாது. இக் காரணங்களை முன்னிட்டு மீரீ மக்கள் பெரும்பாலும் சோவன்ஷிரி ஆற்றிலிருந்து விலகி வாழ்வது கிடையாது. அவர்கள் அதன் இருகரைகளிலுமே தங்கள் கிராமங்களை அமைத்துக் கொள்கின்றனர். பல இடங்களில் ஒரு கரையில் மீரீ கிராமமும் அதற்கு நேர் எதிர் கரையில் காடுகளும் இருப்பதுண்டு. இத்தகைய காடுகளை வெட்டித்தான் மீரீ மக்கள் தங்கள் கிராமங்களை அவற்றினிடையே அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். மேலே குறிப்பிட்ட மாதிரியான மீரீ கிராமங்களில் ஒன்றின் மேல் புறமாக இரண்டு தினைவயல்கள்5 இருந்தன. இரண்டும் ஆற்றின் ஓரமாகவே அமைந்திருந்தன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பரண் கட்டப்பட்டிருந்தது. அவற்றுக்கிடையே உள்ள தூரம் ஓர் இருநூறடிக்கு6 மேலிராது. ஒன்றில் எட்டு அல்லது ஒன்பது வயதுக்கு மேற்படாத ஒரு சிறுமியும், மற்றதில் பதின்மூன்று அல்லது பதினான்கு வயதுக்கு மேற்படாத ஒரு சிறுவனும் இருவரும் கையில் கொட்டு தாளம்7 வைத்திருந் தார்கள். அவ்வப்போது கிளி குருவி8 முதலிய பறவைகள் வயல்களில் வந்து இறங்கின. சிறுவனும் சிறுமியும் தத்தம் கொட்டு தாளங்களை முழக்கி அவற்றை ஓட்டினர். மணி கிட்டத்தட்ட நாலு ஆயிற்று. செங்கதிர்ச் செல்வன் மேல்வான விளிம்பு நோக்கி மெல்ல மெல்லச் சாய்ந்து வந்தான். இளவெயிலின் கிரணங்கள் பட்டு, சோவன்ஷிரியின் நீர்ப்பரப்பு முழுவதும் பொன்மயமாக மின்னி மினுங்கத் தொடங்கிற்று. சிறுவனும் சிறுமியும் தத்தம் பரண்களில் தனியே இக்காட்சியில் கருத்தூன்றி இருந்தார்கள். அச் சமயம் திடீரென்று காட்டுப்பக்க மிருந்து ஒரு கரடி அத்திசையில் பாய்ந்தோடி வந்தது. அது கண்டு இருவர் உடலிலும் உயிர் துடித்தாடிற்று. பரபரப்புடன் அவர்கள் அஞ்சி ஓடினார்கள். ஓடி ஒரு நூறு அடி தூரம்9 கடப்பதற்குள், இருவருமே கால் தடுக்கி விழுந்தார்கள். சிறுவன் விழுந்ததுமே எழுந்துவிட்டான். அத்துடன் கரடி பின்பற்றி வந்து கொண்டிருக்கக்கூடும் என்ற அச்சத்தால் சிறுமியையும் அவன் ஓடிச் சென்று தூக்கி எடுத்தான். `பானேயீ! காயம் ஒன்றும் இல்லையே!' என்று அவன் கேட்டான். சிறுவனுடைய இந்தச் சொற்களைக் கேட்டுச் சிறுமி கலகல வென்று நகைத்தாள். `எனக்குக் காயம் கீயம் ஒன்றும் கிடையாது, ஜங்கி!' என்றாள் அவள். சிறுவன் பெயர்தான் ஜங்கி. சிறுமியின் பெயர், பானேயி. `பானேயி! இனி இங்கே தாமதிப்பது கூடாது. வா, போகலாம்!' என்று கூறினான் ஜங்கி. `ஆம். ஓடிவிடுவதுதான் சரி. பொழுதும் போய்க் கொண்டிருக்கிறது' என்றாள் பானேயி. மீரீ இனச் சிறுவனும் சிறுமியும் விரைவில் படகில் சென்று அமர்ந்தார்கள். `சுக்கான் கட்டையை என்னிடம் கொடு' என்று அவன் கேட்டான். ஆனால் நின்று கொண்டே அவன் தண்டெடுத்துப் படகை உதைக்கத் தொடங்கினான். சிறு படகின் முன் கோடிக்குச் சென்று நின்று கொண்டு அவள் அங்குள்ள தண்டெடுத்துத் துழாவினாள். துடுப்புக்களின் இயக்கத்துக்கேற்றபடி அவள் பாடத் தொடங்கினாள். 10தூரா தொலைக்கழைத்துப் போகாதேடா - அட,11 பொன்னு கண்ணாளா! தூரா தொலையெலாம் போகாதேடா! பாராய் மதயானை பதுங்கி வருகுதடா- அட, பொன்னு கண்ணாளா! வாராய் மதயானை வளைய வருகுதடா! இதன் பின் சிறுவன் பாடினான், தணியாத ஆற்றுநீர் கண்ணாடி போலேடீ - ஏடி12 கண்ணாட்டி, ஏடீ! தணியாத ஆற்றுநீர் கண்ணாடி போலே டீ! மணியான நன்கலம் தந்த நன்னீரே டீ - ஏடி, கண்ணாட்டி, ஏடி! மணியான பொன்கலம் தந்த பொன்னீரே டீ இவ்வாறு இனிய பாடல்களைப் பாடிக்கொண்டு வெளிச்சம் இருக்கும் போதே இருவரும் படகை மறுகரைக்கு உதைத்துச் சென்றார்கள். மீரீ இனச் சிறுவனும் சிறுமியும் படகிலிருந்து கரைமீது இறங்கினார்கள். அவரவர் வீடுகளை நோக்கிப் பிரிந்து செல்லும் நேரத்தில், பானேயி ஜங்கியைப் பார்த்தாள். `அடே ஐங்கி, அடே ஜங்கி! நாளை எங்கள் வீட்டில் ஒரே கோலாகலமாய் இருக்கும். நீ வரவேண்டும்' என்றாள். `நல்லது! கட்டாயம் வருவேன். பானேயி' என்று கூறிச் சென்றான் ஜங்கி. 2. இலட்சுமிபுர நகரத்திலே அன்று வைகாசி மாதத்தில் பெரிய விழா நாள். வீட்டுக்கு வீடு எல்லா வகைப்பட்ட அசாமிய மக்களும் இன்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் உள்ளங்களில் எழுச்சியும் மகிழ்ச்சியும் கரைபுரண்டோடுகின்றன. வீடுதோறும் உணவு தாம்பூலங்கள், வகை வகையான ஆடை அலங்காரங்கள், மேளதாளங்கள்தான். ஓர் ஆண்டு முழுவதிலுமுள்ள துன்ப எண்ணங்களையும் சோர்வுகளையும் எளிய அசாமிய சமுதாயம் அறவே மறந்து அவற்றை நினைவிலிருந்து ஓட்டிவிட்டது. எல்லாரும் தத்தம் பந்துக்களுடன் பின்னிப் பிணைகின்றனர். மூத்தவர் பெரியார்களை வணங்கிப் பூசித்துப் பணிவிடை செய்வதன் மூலம், அவர்களின் மனம் நிறைந்த நல்வாழ்த்துக் களைப் பெறுகிறார்கள். சின்னஞ் சிறுவர்கள் தத்தமக்கு ஒத்த தோழர்களுடன் அங்கங்கே கும்பல் கும்பலாகக் கூடிச் சிரித்து விளையாடி, இன்பம் கொள்ளை கொள்கிறார்கள். நல்ல குடும்பத்துப் பெண்கள் ஒன்று கூடிச் சோழியாட்டம் ஆடுகிறார்கள். அப்பெண்களிடையே மூன்று பேருக்கு அல்லது நான்கு பேருக்கு ஒருவராக இளைஞரான ஆண்களும் உட்கார்ந்திருக்கிறார்கள். தாயும் பிள்ளையுமான இருவர் எதிரெதிரான பலகை களிலமர்ந்து கட்ட ஆட்டம் ஆடுகிறார்கள். கவடி ஆடுவதில் பெண்கள் எப்போதுமே சமர்த்தர்கள். தாய் ஆறு காய்களில் ஒன்றைக் கையிலடக்கிக் கொள்கிறாள். இதனால் அவள் பத்து என்று சொன்னபடி பத்து விழுந்து விடுகிறது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளையும் சமர்த்துக்காட்டி அது போலவே கையடக்கித் தாயைத் தோற்கடிக்க முயல்கிறான். சிறுவனின் கண்ணும் கையும் போகிற போக்கு முழுவதையும் தாய் கவனித்தாள். அவனும் பத்துச் சொன்னபடி பத்துப் போடும் யுக்தி செய்வது கண்டாள். தாய் இப்போது முன் கூட்டித் தடை கூறினாள். `ஊகூம்! நீ காய் அடக்கி விளையாடுகிறாய்!' என்றாள். `சரி அம்மா, சரி! இது போகட்டும். இப்போது பார்த்துக் கொள். நான் நன்றாகக் குலுக்கி ஆடுகிறேன். காயடக்கி ஆடினேன் என்று அப்புறம் சொல்லாதே!' என்று அவன் பேசிக் கொண்டே பந்தயம் வைத்தாடினான். சிறுவன் பக்கம் இப்போது அதிருஷ்டம் இருந்தது. அவனுக்கு இருபத்தைந்து சென்று சேர்ந்தது. இதைப் பார்த்த தாயினால் காயடக்காமல் மேலே விளையாட மனம் வரவில்லை. வெளிக்கு அவள் காய்களைக் குலுக்கிக் காட்டினாலும், போடும் சமயம் ஒரு காயை அடக்கிப் பத்துச் சொன்னபடி பத்தே போட்டாள். தாயின் காரியத்திறமை கண்டு மகன் இப்போது தாயைத் தோற்கடிப்பதற்காக ஒரு புதிய உபாயத்தில் இறங்கினான். அவன் இப்போது ஆட்டக்கணிப்பிலேயே களவு நடத்த ஆரம்பித்தான். பத்துப் போடும் இடத்தில் பதினைந்தாகக் கட்டம் எண்ணினான். நான்கு கட்டம் செல்ல வேண்டிய இடத்தில் காய் ஆறாவது கட்டம் ஏறிற்று. தாய் உள்ளம் கிலேசம் உற்றது. ஆயினும் உடனே அவள் பிள்ளையின் சூதைக் கண்டு விட்டாள். மெல்லச் சிரித்தபடியே சிறுவன் மீது கைமடக்கி ஒரு குத்து விட்டாள். பையனும் கலகலவென்று சிரித்தான். `ஊகூம், இனி நான் விளையாடப் போவதில்லை, போ!' என்று கூறிவிட்டு அவன் அப்பால் சென்றான். இதன் பிறகு அங்குள்ள பெண்கள் இன்னொரு சிறுவனைச் சேர்த்துக் கொண்டு ஆட்டத்தைப் புதிதாகத் தொடங்கினார்கள். வெளியில் கூடியிருந்த மக்களிடையே ஆண்களும் பெண்களுமாக மூன்று நான்கு பேர்கள் சேர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருக் கிறார்கள். எந்த விளையாட்டிலும் சேரவும் முடியாமல், விழா நிகழ்ச்சிகளில் சென்று கலந்து கொள்ளவும் முடியாமல் ஒரு வேலைக்காரப்பெண் மனச் சோர்வுடன் தனித் தொதுங்கியிருக்கிறாள். பாவம், அவள் புகை குடிப்பதிலேயே முழுதும் ஈடுபட்டு அதிலிருந்து ஓய்வு பெற முடியாமல் இருந்தாள். ஆடவர்களிடையே ஒருவர் முகம் இளமைக் கவர்ச்சி யுடைய தாயிருக்கிறது. தாடியும் சற்று வளர்ந்திருக்கிறது. அவர் நல்ல சிவப்பு நிறம். அவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். கேலி நகையாட்டு உடையவர். அவர் இங்கிருப்பது சீட்டு விளையாடுவதற்காக அன்று, முழுதும் இன்பமாகப் பொழுது போக்கு வதற்காகவே. அவருக்கு நேர்மாறான சுபாவமுடையவர், அவருக்கு எதிரில் அமர்ந்திருக்கும் இன்னொரு ஆடவர் - அவர் நீண்ட முகத்தில் இப்போதுதான் புதிதாகக் கொஞ்சம் கொஞ்சம் தாடி தோன்றத் தொடங்குகிறது. இவரும் சுமுகமான குணமுடையவர்தான். அத்துடன் சீட்டாட்டத்தில் அவர் முழுதும் கை தேர்ந்தவர். சீட்டைக் கையில் எடுத்தாலே போதும், அவர் உடனே இந்த உலக முழுவதையும் மறந்து விடுவார். அதன் பின் அவருக்கு இருக்கக்கூடிய சிந்தனை ஒன்றே ஒன்றுதான் - எவ்வளவு சீக்கிரமாகச் சீட்டையடித்து வெற்றி முழக்குவது என்பதே அது! அவர் சீட்டுப் போடும் சமயத்திலெல்லாம் சீட்டை அப்படியே கிழித்தெறிந்து விடுபவர் போலத் தோற்றமளிப்பார். அத்துடன் தம்முன் இருக்கும் தாடிக்காரரைப் பார்த்து `அடே, ஆட்டத்தைக் கொலை பண்ணுகிறாய், கொலை பண்ணுகிறாய்' என்று அவர் கூவிளி கூட்டுவார். எதிரிலிருந்தவர் இந்தச் சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து ஒரு குலாம் சீட்டை எடுத்துப் போடுவார். பின் தம் எதிரியைச் சிரித்த முகத்துடன் பார்த்துக் கொண்டே, அவர் கவனம் மறுபடியும் சிதறி எங்கோ மேயப் போய்விடும். குள்ளமான வற்றி ஒடிந்த உடலுடைய இன்னொரு மனிதரும் சீட்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். அவர் கவனம் சீட்டாட்டத்திலேயே இலயிக்கவில்லை. தன் சீட்டுப் போடும் போது கூட அவர் `ஓ, இது என் ஆட்டந்தானோ?'என்று கூறியவாறு நெளிந்து கொண்டே சீட்டை எடுப்பார். அது அவர் ஆட்டந்தான் என்று யாராவது சொன்னால்தான் எடுத்த சீட்டுக் கீழே விழும். ஆஜானுபாகுவான இன்னொரு மனிதர் ஒருபுறம் தனியே ஒதுங்கி அமர்ந்திருக்கிறார். அவர் ஒல்லியான ஆளின் வார்த்தைகளை அவ்வப்போது செவி கொடுத்துக் கேட்டு வருவார். இன்பவாணரான சிவப்புநிற ஆளின் நகைத் துணுக்குகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். அவர் அத்துணுக்கு களைக் கேட்டுச் சிரித்தும், அவ்வப்போது பெருமிதமாகத் தாமும் சில சில சொற்களை வாய்விட்டுப் பேசியும் வந்தார். சிவப்பு நிறப் பேர்வழி அடிக்கடி தம் கையிலிருந்த சிறு சீட்டுக்களைக் கீழே போட்டு விட்டு, கீழே கிடக்கும் நல்ல சீட்டுக்களை மெள்ள எடுத்து மாறுபாடு தெரியாமல் எல்லா வற்றையும் முன்போல வைத்துக் கொள்வார். இவ்வேளையில் அவருக்கு அவ்வப்போது வெற்றியே கிடைத்து வந்தது. ஒன்றிரண்டு தடவை முகம் நீண்ட மனிதர் பார்வை அவர்மீது செல்லும், இருவரிடையே வாக்குவாதம் கூட ஏற்படுவதுண்டு. இவ்வாறாக விளையாட்டுடன் வம்பளப்பும், உல்லாசத் துடன் புகை குடிக்கும் அமைதியும் இன்னும் இவை போன்ற பல செய்திகளும் ஒன்றாகவே நடைபெற்று வந்தன. நகரின் சுற்றுப்புறமெங்கும் இடத்துக்கு இடம் வாலிபர்களும் இள மங்கையர்களும் கும்பல் கும்பலாகக் கூடி விழாக் கொண்டாடி வந்தார்கள். சிலர் மட்டைப் பந்து ஆடினார்கள். இலட்சுமிபுர நகரம் முழுவதுமே இன்பக் கொண்டாட்டங் களில் இலயித்திருந்தது. நகரத்துக்கு அப்பால் ஆற்றின் மறு கரையிலிருந்து கூடப் பலர் கூட்டம் கூட்டமாக இலட்சுமி புரத்தில் வந்து இறங்கினார்கள். அவர்கள், கையில் உடுக்கை தாளங்களுடன், நகரில் வீடு வீடாகப்பாடிக் கொண்டு சென்றார்கள். பெருவிழாவுக்கான இந்த நாளில் விழாப் பாட்டுப் பாடுபவர்கள் கும்பல் கும்பலாக வந்து கொண்டேயிருந்தார்கள். இலட்சுமிபுரம் முழுவதுமே அக் கூட்டங்களால் நிரம்பி விட்டது. கையில் உடுக்கையும் தாளமும் ஏந்தியவாறு மீரீ இளைஞரும் நங்கையரும் தொகுதி தொகுதியாக வீதி வழிகளிலெங்கும் திரிந்து வந்தார்கள். ஒன்றிரண்டு தொகுதியினர் பெரிய வீடுகளில் சென்று விழாக் கொண்டாடத் தொடங்கியிருந்தார்கள். அத்துடன் ரூபாய், அரை ரூபாய்களாகப் பணம் திரட்டுவதற்காக அவர்கள் பெரிய வீடுகளில் `தாக்குதல்கள்' நடத்தவும் தொடங்கினார்கள். இந்த மீரீ மக்களிடையே ஒருவன் எல்லார் கவனத்தையும் மிகவும் கவரத்தக்கவனாய் இருந்தான். அவனுடைய குழுவில் உள்ள வாலிபர்களிடம் நாலைந்து உடுக்கைகள், மூன்று நான்கு ஜோடி தாளங்கள், இரண்டு கொம்புகள் இருந்தன. குழுவில் நடனம் ஆடும் இளைஞைகளும் பலர் இருந்தனர். இந்தக் குழு ஒரு பெரிய வீட்டில் தாளமிட்டு விழா ஆட்டம் தொடங்கிற்று. முதலில் உடுக்கையாட்டம் நடந்தது - உடுக்கைகள் நாலு ஐந்து ஒரே சமயத்தில் முழங்கின. தாளங்களும் உடுக்கை களுடன் இணைந்து ரீங்காரம் செய்தன. இள நங்கையர்கள் அதற்கியைய ஆட ஆரம்பித்தார்கள். இதன்பின் உடுக்கை யடிப்பவர்களும் கொம்பு வாசிப்பவர்களும் தம்முள் இணைந்து குளிப்புத் துறையில் மணமகனும் மணமகளும் மாறி மாறிச் சுழன்று நீந்தி வருவது போலச் சுழன்றாடலாயினர். தனித்தனியே நங்கையர்கள் தெருநெடுக ஆடிக் கொண்டே திரிந்தார்கள். உடுக்கையடிப்பவர்கள் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக உடுக்கையை முழக்கியபடியே ஒருவருக்கொருவர் போட்டியிட்டு நடனமாடத் தொடங்கினார்கள். உடுக்கை தாளங்கள் ஒருவாறு ஓய்ந்தவுடனே, கேட்டு ரசித்து நின்ற பெரியவர்கள் `பெண்கள் இப்போது தனியாகக் கைத்தாளத்துடன் ஆடட்டும்' என்று உத்தர விட்டார்கள். இது கேட்டு உடுக்கை தாளங்கள் ஒருபுறம் ஒதுங்கின. யுவதிகள் இப்போது வரிசை கட்டினர். முதலில் ஒரு நங்கை கைகொட்டித் தாளமிட்டுப் பாடத்தொடங்கினாள். ரங்காநதி13 நீரோடை, ரங்காநதி நீரோடை மெலிந்து நலிந்து நுடங்குதே, மெலிந்து நலிந்து நுடங்குதே! அங்குல நாலு போய்நிரம்ப, அங்குல நாலு போய் நிரம்ப அது ஒருநாள் ஆகுமே, அது ஒருநாள் ஆகுமே! செண்பக மொட்டுப் போலக் கழுத்துச் செண்பகப் பூ போலப் பெண்ணே! சிறிய உடுக்கை போல் உன் இடை சிதைந்து மெலிந்து போயிடுமே! பம்பிப் படர்ந்து நீ ஆடாதே, பறந்து பறந்து நீ ஆடாதே, பசளை மொட்டு உன் மேனியெல்லாம் தளர்ந்து வாடிப் போயிடுமே! பாட்டுடன் பாட்டுக்கேற்றபடி அவள் நடனமுமாடினாள். அவளுக்குப் பின் மற்றொரு பெண் முன் வந்து பாடினாள். வந்துவிட்டாரடி, பெண்மயிலே! மன்னன் உன் வாசலில் வந்து விட்டார்! தந்தத்தால் பல்லக்கு இறக்கி வைத்துத் தாழ்ந்து வணங்கினர் ஆட்களெல்லாம்! பந்துபோல் குண்டலம்14 காதிலாடப் பாவையே வந்து நீ பாரடியோ, சந்தனப் பட்டு15 இரவிக்கையுடன் தளுக்குடன் வந்து நீ பாரடியோ! மூன்றாவது ஒரு பெண் இதனைத் தொடர்ந்து குரலெடுத்தாள் வட்ட வட்டச் சீப்பு, மரத்தாலே செய்த சீப்பு16 கண்ணாட்டி கொண்டைக்கு வரவிருக்குது யோகம்! கண்ணாட்டி கொண்டைக்கு வரவிருக்கும் யோகம், எட்டி எட்டிப் போச்சு, சீப்புத் தொலைஞ்சு போச்சு! இன்னும் ஒரு நங்கை இப்போது வந்து பாட்டுப் பாடினாள். ஆடவந்த கோமாட்டிக்கு ஆட்டிவைச்சுது காய்ச்சலாம்! ஆடவில்லை, கண்ணாட்டி! அவள் ஆடவில்லை, கண்ணாட்டி! தேடிக்கோழிப் பூசை வைத்தால் ஓட்டிவைக்கும் காய்ச்சலாம்17 ஆடவந்த கோமாட்டிக்கு இனி ஆடைகட்டும் மாய்ச்சலாம்! பாடி முடித்தபின் வாலிபர்களும் மங்கையர்களும் கைநீட்டிப் பணம் வேண்டுமென்று அடம் பிடித்தார்கள். பெரிய மனிதர்களில் ஒருவர் `ஓகோ, நீங்கள் பாக்கியில்லாமலா எல்லாம் முடித்து விட்டீர்கள்? எங்கே எல்லாரும் பாடி ஆடிவிட்டீர்களா, கூறுங்கள்! அதோ நிற்கும் இரண்டு பேரும் ஆட்டத்தில் கலந்து கொள்ளவேயில்லையே!' என்றார். `நாங்கள் ஆடிக் காட்ட வேண்டுமென்றால், எங்களுக்கு ஆளுக்கு ஐந்து ஐந்து ரூபாய் கொடுக்க வேண்டும்' என்று இருவரும் கூறிச் சிரித்தார்கள். பெரிய மனிதரில் வேறொருவர், `சரி சரி, கொடுப்போம். முதலில் ஆடல் நடக்கட்டும்' என்றார். மங்கையர் இருவருமே நெட்டையானவர்கள், ஆனால் ஒருத்தி சற்றுப் பொது நிறம், மற்றொருத்தி நல்ல சிவப்பு. முகம் மட்டும் இருவருக்கும் நல்ல அந்த சந்தமாக, கவர்ச்சி வாய்ந்ததாகவே இருந்தது. அவர்கள் அழகிய கொண்டைகளில் பூங்கொத்துக்கள் செருகியிருந்தனர். இருவரும் உயர்ந்த பளபளப்பான பட்டினாலான தோளணியும் அரைக் கச்சையும்18 அணிந்திருந்தனர். இரவிக்கைகளோ நல்ல வண்ண வண்ணமான `பிளானல்' துணியினால் ஆக்கப்பட்டிருந்தன. இரண்டு யுவதிகளும் முன்வந்த போதே, வாலிபர் களிடையிலிருந்து இருபத்தொரு வயதுடைய ஒரு கட்டிளைஞனும் கொம்பை ஏந்தியவாறு வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டான். அவன் தலைசீவி வகுப்பெடுத்து அதன்மீது ஒரு தலைப்பாகை கட்டியிருந்தான். கழுத்தில் ஒரு பொன் மணி மாலை ஊசலாடிற்று. இரத்தினம் பதித்த குண்டலங்கள் இரு காதுகளையும் அணி செய்தன. கோடு போட்ட சட்டையும் வேட்டியும் அவனுக்கு ஆடம்பரமான தோற்றம் தந்தன. அவன் அவ்வளவு நெட்டையாகவும் இல்லை, அவ்வளவு குட்டை யாகவும் இல்லை. முகம் சொடியுடையதாயிருந்தது. யுவதிகள் முன்வரும் போதே வாலிபன் கொம்பில் இசை எழுப்பிக் கொண்டு வந்தான். அந்த இசை யுவதிகளை உணர்ச்சி கொள்வித்தது. மூவரும் கொம்பை இசைத்துக் கொண்டே ஆடல் தொடங்கினார்கள். அவர்கள் ஆடலின் நேர்த்தியையும் துடிப்பையும் பார்க்க, வானிலிருந்து இரண்டு அப்சர மங்கைகள் கந்தருவ அரசன் சித்திர ரதனுடன் பூமியில் இறங்கி வந்தார்கள் என்னும்படி இருந்தது. யுவதிகளில் சிவப்பு நிறமுடைய அணங்கு பிறர் கவனிக்காத நேரமாகப் பார்த்து அடிக்கடி வாலிபனை நோக்கி புன்னகை பூத்த வண்ணமிருந்தாள். சிவப்பு நிறமான நங்கைக்கு இப்போது பதினாலு பதினைந்து வயது இருக்கும். அவள்தான் நாம் முன் அதிகாரத்தில் கண்ட பானேயி. கொம்பு இசைத்த வாலிபனும் வேறுயாரு மல்லன், சோவன்ஷிரி ஆற்றங்கரையில் பரண் மீது அமர்ந்து புனங்காத்த ஜங்கியே அவன். இருவரும் ஐந்து ஆண்டுகள் கடந்து நல்ல வாலிபனாகவும் யுவதியாகவும் வளர்ந்து மாறுதலடைந் திருப்பது காண்கிறோம். நடனம் முடிந்தது. பெரிய மனிதர்களுக்கு ஒரு ரூபாய் இழப்பாயிற்று. ஆடிப்பாடிய மீரீ யுவதிகள் சென்று விட்டனர். நகர மக்கள் உட்கார்ந்து நடனம் பற்றிய நிறைவு குறைவாராய்ச்சி களில் இறங்கினார்கள். `மிக நல்ல ஆடல்தான்!' என்றான் ஒருவன் ‘இல்லை மிக மோசமான நடனம்' என்றான் இன்னொருவன். இவ்வாறு கருத்துரைகள் வழங்கிக் கொண்டே, புகையிலையின் சில சுருள்களைக் காலி செய்து விட்டு, அனைவரும் தங்கள் தங்கள் வீடு சென்றார்கள். 3. மீரீ கிராமத்திலே...! கன்னிமனக் கதைபேசி நாணத்தாலே கடிதொதுங்கும் கடை நெடுங்கண் பார்வை வீச்சும், மன்னுமது கண்டிருக்கும் குறிப்புக் கொண்ட மாதனையாள் கடும்பார்வை வீச்சுத்தானும் பின்னும் இவைபோல்வன நின் இனிய மாயம் பிணை காட்சித் தடங்கள், பொலங் கிராமச் செல்வி! மன்னுயிர்க்கு மகிழ்வளித்து அம்மகிழ்வினூடே மயங்காத நல்லறிவும் காட்டி நின்றாய்! - (கோல்டு ஸ்மித் கவிதையின் மொழி பெயர்ப்பு)19 முன் அத்தியாயத்தில் விவரித்துள்ள நிகழ்ச்சிகள் கடந்து ஆறு மாதங்கள் உருண்டோடின. கார்த்திகை மாதத்தில் ஒரு வாரம் கழிந்து விட்டது. சோவன்ஷிரி நதிக்கரையிலுள்ள கிராமத்தில் இப்போது தான் விடியற் காலச் செவ்வொளி வீசுகிறது. இதற்குள் கிராமத்தில் எங்கும் விழா ஆர்ப்பாட்டம் தொடங்கிவிட்டது. இளைஞர் நங்கையர்கள் ஆடம்பரமாக உடைகள் அணிந்து கொண்டு, நெல், உப்பு, எண்ணெய், உளுந்து, அவரை முதலியவை அடங்கிய கூடைகளைச் சுமந்து செல்கின்றனர். வீட்டுக்கு வீடு தட்டங்கள், தாம்பாளங்கள் அடுக் கடுக்காக வரிசைப்படுத்தப்படுகின்றன. ஒரு பக்கமாகப் பத்துப் பன்னிரண்டுபேர் ஆறு பன்றிகளின் பாரத்தைச் சுமந்து கொண்டு வருகிறார்கள். வேறு இருவர் ஒரு பெரிய சட்டத்தில் இருபது கோழிகளை ஏந்தி வருகிறார்கள். வீடுகளிலிருந்து முதியவர்கள் கொப்பறைகள், குண்டாக்கள், குவளைகள் ஆகியவற்றை எடுத்து வருகிறார்கள். மகிழ்ச்சி யினாலும் கிளர்ச்சியினாலும் வாலிபர்கள், யுவதிகள் கூட்டம் தமக்குள் மோதிக் கொண்டு வாய்ச் சண்டை, கைச் சண்டை தொடங்குமளவுக்குக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. காலை வெயில் சுள்ளென்று அடிக்கத் தொடங்கிற்று. எல்லாச் சாமான்களும் அம்பலத்தில்20 கொண்டு வைக்கப் பட்டுள்ளன. அம்பலத்தை நோக்கி மெள்ள மெள்ள முதியோரும் இளையோரும், ஆண்களும் பெண்களும் வெள்ளம் போல் திரண்டு சென்று கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவர் அம்பலத்தினுள்ளே செல்கின்றனர். பலர் ஆங்காங்கே வெளியே கும்பல் கும்பலாகக் குந்தியிருக்கிறார்கள். மீரீ மக்களில் வயது சென்றவர்களில் மிகப் பலர் இராச்சேவைப் பக்தர்களாயிருப்பவர்கள்21 இவர்களிலும் தேர்ந்த பக்தர்கள் இளம்படிப் பக்தர்களிடமிருந்து வேறாகத் தனித்த ஆசனங்களில் அமர்கின்றனர். அவர்களிடத்திலிருந்து சற்று விலகி அவர்களுக்குரிய சாதுக்கள் வீற்றிருக்கின்றனர். அவர்கள் மார்க்கத்தைச் சேர்ந்த பொதுவர்களாகிய மற்றெல்லாரும் வேறொரு பக்கமாக ஒதுங்கியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தலைவராகத் தேவதாயி22 ஒரு தனியிடத்தில் அமர்ந்திருக்கிறார். எல்லாரும் இவ்வாறு தனித்தனி இருக்கைகளில் அமர்ந்தபின், தேர்ச்சி பெற்ற பக்தர்கள் எல்லாரும் தங்கள் சாதுவைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் சாது `ஓம்' என்ற ஓசை எழுப்பினார். உடனே இரண்டு பன்றிகள் கழுவிக் கொண்டு வந்து பக்தர்களிடையே இடப்பட்டன. வாலிபர்களும் யுவதிகளும் சமைப்பதற்கு வேண்டிய பொருள்களை யெல்லாம் கொண்டு வந்து அருகில் இட்டார்கள். எல்லாம் வந்து சேர்ந்த பிறகு, சாது ஒன்றிரண்டு தடவை சுற்றி அங்குமிங்கும் பார்த்து விட்டு, மீண்டும் `ஓம்' என்று முழங்கினார். உடனே அம்பலத்தினுள்ளிருந்த எல்லா வாலிபர்களும் யுவதிகளும் பயபக்தியுடன் பக்தர்களுக்கு முன்னால் சென்று முழந்தாள் மண்டியிட்டு அமர்ந்தார்கள். இதன்மீது பக்தர்கள் ஸ்ரீ குரு சங்கர மாதவர் பெயர்களை23 இதய பூர்வமாக மனத்தில் கொண்ட வர்களாய் வாலிபர்களையும் யுவதிகளையும் ஆசீர்வாதம் செய்தார்கள். `நன் மக்களே! இங்கே செவி கொடுங்கள்!' `ஸ்ரீ குருவின் பாதாரவிந்தத்தை நினையுங்கள்! `இன்று போல என்றும் ஸ்ரீ குருவின் பாதபூசை செய்வதற்குரிய சக்தியை நம்முடைய இந்த வாலிப யுவதிகளின் சமுதாயம் மேலும் எய்தப் பெறுவார்களாக! `இவர்கள் எல்லா நன்மைகளும் பெற்று நலமாக இருப்பார்களாக! இவர்கள் மனம் என்றும் புதுப்புது வண்ணமான இன்பங்களால் நிறைவு பெறட்டும்! `ஆண்டு முழுவதும் வயல் வரப்புகள் செழிக்குமாக! `மேகமும் மின்னலும் கொடுமைகள் செய்யாதிருக்குமாக! `ஸ்ரீ குருவின் பாதாரவிந்தங்கள் நமக்குக் குளிர்ச்சி தருமாக! `ஓம் ராம, ஓம் ஹரி!' ஆசீர்வாதம் இவ்வாறு முடிவுற்றது. இளைஞர் நங்கையர் குழாங்கள் எழுந்து நின்றன. பெரியோர் அனுமதி பெற்றதன் பின், அவர்கள் உணவு பானம் கொள்ளத் தொடங்கினார்கள். நிவேத்தியம் முறைப்படி செய்யப்பட்டது. ஒருபுறம் பக்தர்கள் குவளை குவளையாக அமுத பானம் தொடங்கினார்கள். ஆனால் பக்தர்கள் என்ற முறையில், அவர்கள் யாரும் தம் கைகளால் எதையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு பக்தினி உடனிருந்து அமுதபானம் செய்வித்தாள். இதற்குப் பின்தான் மற்றெல்லாரும் அமுத பானம் செய்தார்கள். அமுதபானச் சடங்கு இவ்வாறு முடிந்தது. அடுத்த நிகழ்ச்சி பக்திக் கீர்த்தனை ஆகும். அதன்படி சாது பாடத் தொடங்கினார். மரணமெனும் பேராற்றின் கரைதனிலே, இறைவா! மன்னுமுயிர் விளையாடிச் சிரிக்குதுபார், அந்தோ! கரணமிது தவறிவிடில் கதிமாறும் காட்சி காணில் அதை எவ்வாறு சகித்திடுவார், சொல்வீர்! தரணியிலே இவ்வுடலைக் காகங்கள், நரிகள் கழுகுகள் தாம் கொத்திமகா யாகமெனக் களிக்கும், அரணமிலாத் தசைக்கடையில் அமுதமெனப் பங்கிட்டு அருந்தும் அதுகண்டும் இனும் அடையீரோ சரணம்24 இவ்வாறாகக் கீர்த்தனம் முடிவுற்றது. அங்கொரு புறம் உணவு பானங்கள் தயாராகி வந்தன. பக்தர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்ற வாலிபர் - யுவதிகளின் கூட்டத்திலேயே நாம் மேலே குறிப்பிட்ட பானேயி - ஜங்கி ஆகிய இருவரும் இருந்தார்கள். ஆசீர்வாதம் பெறும் சமயம் அவர்கள் இருவரும் ஒன்றாகவே இணைந்து மண்டியிட்டனர். அச்சமயம் அவர்களை ஒருங்கிணைத்து இழைத்த சக்தி இன்னதென்று எம்மால் கூற முடியாது. அத்தறுவாயில் அவர்களிடையே என்ன பேச்சு வார்த்தைகள், கருத்துப் பரிமாற்றங்கள் நடந்திருக்கக் கூடும் என்பதையும் எவரும் கவனித்திருக்க முடியாது. ஆயினும் இந்த மகத்தான அரிய சந்தர்ப்பத்தில் இருவரையும் ஓருடல் போல இணைத்து இயக்கி, இருவரையும் ஒரே வரம் வேண்டி நிற்கும்படி செய்த ஒரு மாபெரிய இயற்கைச் சக்தி இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அதன் தன்மையை நாம் இன்னும் சரிவர அறிய முடியாது - அவர்களே கூட அதற்கு ஆட்பட்டனரேயன்றி அறிந்திருக்க முடியாது. கோத்திரச் சுற்றத்தினர் அனைவருமாகச் சேர்ந்து உணவு நிறைந்த அண்டாக்களை அடுக்கடுக்காகப் பக்தர்களுக்கு நடுவே கொண்டு வந்து வைத்தார்கள். எல்லாரும் பந்திகளில் அமர்ந்தார்கள், உணவு பரிமாறப்பட்டது. எல்லாருக்கும் நிவேதனத்தில் பங்கு கொடுத்தார்கள். தேர்ச்சி பெற்றவரும் பெறாதவருமாகப் பக்தர்கள் அனைவரும் ஆனந்தத்துடன் நிவேதனத்தைப் பருகுகிறார்கள். ஆனால் வாலிபர்களும் யுவதிகளும் இன்னும் பந்திகளில் உட்காரவில்லை. பக்தர்கள் நிவேதனம் பருகி முடியும் வரை அவர்கள் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டி யவர்களாயிருந்தனர். இவ்வாறு பக்தி கைங்கரியங்கள் அனைத்தும் முடித்து ஆசீர்வாதங்கள் வழங்கியபின், சுமார் ஒரு மணியளவில் பக்த - பக்தினி சமுதாயத்தினர் அனைவரும் தத்தம் வீடுகளுக்கு ஏகினர். இதன்பின் வாலிபர்களும் யுவதிகளும் சிரித்து விளையாடி மகிழ்வுடன் கூத்தாடிக் கும்மாளமிட்ட வண்ணம், பக்தர்கள் விட்டுப்போன உணவு பானங்களை அருந்த உட்கார்ந்தார்கள். வாலிபர்கள் ஒரு வரிசையில் அமர்ந்தார்கள். இளமங்கை யர்கள் தனியே இன்னொரு வரிசையில் அமர்ந்து உண்ணத் தொடங்கினார்கள். ஆனால் இவ்வாறு தனித் தனி வரிசையில் உண்ணும் சமயம்கூட, பானேயியும் ஜங்கியும் எப்படியோ தத்தம் வரிசையிலேயே நேருக்கு நேராகத்தான் அமர்ந்திருந்தார்கள்! உண்பதிலும் குடிப்பதிலுமே இங்ஙனம் பகல் முழுவதும் கழிந்தது. இரவு புகுந்தது. வாலிபர்களும் யுவதிகளும் கலம் கலமாகத் தேறல் அருந்தியபின் இங்குமங்கும் ஓடியாடித் திரிந்தார்கள். இறுதியில் தேவதாயி கைகால்கள் சுத்தி செய்து கொண்டு அம்பலத்தில் நுழைந்தார். வாலிபர்களையும் யுவதிகளையும் இளம் பக்தர்களையும் அவர்தம் பக்கமாக அழைத்துப் பின் அவர்கள் கேட்கப்பாடினார். தரமிசி துலாய ஐ திரமேகே திரமாஙாய அகபே கன்வங் ஆபுனே ரேயேபே ரேயாபாய!25 மீரி வாலிபர்களும் யுவதிகளும் அவர் பாடிய அதே குரலுடன் தாமும் சேர்ந்து அப் பாட்டைப் பாடினார்கள். தரமிசி துலாய ஐ திரமேகே திரமாஙாய அகபே கன்வங் ஆபுனே ரேயேபே ரேயாபாய! பாட்டு முடிந்ததும் உடுக்கைகள் உரத்த ஒலி எழுப்பின. தேவதாயியின் பாட்டுக்கு இடையிடையே வாலிபர் யுவதியர்கள் சமவெளி மக்களுக்குரிய சாந்தல் - தாப் நடனத்தையோ, சந்தால மக்களின் நடனத்தையோ ஒத்த ஒரு வகை ஆடலை உடுக்கை மெட்டுக்கேற்பப் புதுப்புது விதமாக ஆடினார்கள். அந்த ஆடலின் முடிவில் தேவதாயி மீண்டும் பாட்டு ஆரம்பித்தார். தரமிசி துலாய ஐ திரமேகே திரமாஙாய அகபே கன்வங் ஆபுனே ரேயேபே ரேயாபாய! நடனம் இரு தடவைகளும் அதன் பாடல் இரு தடவைகளும் நடைபெற்றன. ஆடல் பாடல் இத்துடன் முடிவுற்றது. தேவதாயி இப்போது பரண்மேலேறி ஒரு கை உயர்த்தி ஜபித்துக் கொண்டே மந்திரப் பாடம் தொடங்கினார். ஙக்கே ரூம்னே தாபே லிகரே....! அதாவது ஓ என்னைப் படைத்த தெய்வங்களே! நீ இவர்களுக்கு நேர் வழியை..... இந்த மந்திரப் பாடம் முடியுமுன் வாலிபர் யுவதியர்கள் குரலெழுப்பி மேலே கண்ட `தரமிசி' பாடலை ஒரு தடவை பாடி முடித்தார்கள். அதனையடுத்துத் தேவதாயியின் ஜபமந்திரமும் தொடர்ந்து முடிந்தது. ................காங்ரே ப காயகா! அதாவது ........... காட்டுவாய்! என ஜபமந்திரம் தெய்வங்களை வாலிப யுவதிகளுக்கு வழி காட்டும்படி வேண்டிற்று. இப்போது வாலிபர்கள் யுவதிகள் மீட்டும் முதற் பாடலைப் பாடினார்கள். தரமிஸி துலாய ஐ திரமேகே திரமாஙாய அகபே கன்வங் ஆபுனே ரேயேபே ரேயாபாய இப்போது வாலிபர்களும் யுவதிகளும் சரி, தேவ தாயியும் சரி - எல்லோருமே களைத்துப் போய் விட்டார்கள். எல்லாரும் எழுந்து மச்சுத் தட்டியின் மறைவில் வைக்கப்பட்டிருந்த அமிர்தத்தை எடுத்துக் கலங்கலமாகப் பருகுகிறார்கள். அமுதபானம் முடிந்ததும் மீட்டும் முன்போலவே அவர்கள் கூடியாடினர். இத்தடவை தேவதாயியே உற்சாகத்துடன் பாடத் தொடங்கினார். தாதாங் பனேங் பனேங் தாதிங் பேகாமா காமதாமா கலபி கலபி காமதாஙா நிதுஙா கலபி கலபி!26 வாலிபர்களும் யுவதிகளும் உடன்தானே ஒத்த குரலில் அதே பாட்டை அவருடன் படித்தார்கள். தாதாங் பனேங் பனேங் தாதிங் பேகாமா காமதாமா கலபி கலபி! காமதாஙா நிதுஙா கலபி கலபி! உடுக்கை தாளங்கள் முழங்கின. வாலிபர்கள் யுவதிகள் நடனமாடத் தொடங்கினர். புல்லாங்குழல்27 ஒலியும் தாள ஒலியும் கிராம முழுவதும் எதிரொலித்தன. இரவு நேரம் நெடுந்தொலை கழிந்தது. இவ்வாறு மீரீ மக்களின் ஆடல் பாடல் இசை மேள நிகழ்ச்சி தங்குதடை யின்றி முன்னேறிற்று. `சாங் தோப்'28 என்ற இந்த விழா முறையுடன் கூடவே தேறல் வெள்ளமும் பெருக்கெடுத்தோடிற்று. தேவதாயியின் திருமேனியில் தெய்வசான்னித்தியம் வந்து அயர்வு கொண்டது. வரவர அவர் காலடிகளின் விரைவுடன் விரைவாக, தேவதைகளின் பெயர்களும் அவர் தொண்டையிலிருந்து உரக்க உரக்க எழுந்தன. இரவு முற்றிலும் கழிந்து விடியற்கால ஒளி பரவத் தொடங்கிற்று. அவர் இப்போது மீட்டும் ஆவேசத்துடன் பாடினார். `பாங்கேயா ரேக ரேகே பாமியா ரேக ரேகே'29 இப்போது தெய்வதங்கள் தேவதாயியின் திருமேனி முழுவதிலும் புகுந்து அதை ஆட்டிப் படைத்தார்கள். `ரேகீரேகாம்' திருமலையிலிருந்து கார்ஸிங் - கார்ட்டான்30 என்ற தெய்வம் இறங்கித் தேவதாயி மேல் ஆவேச மாயிற்று. தேவதாயிக்கு இப்போது தற்போத உணர்வே இல்லை. வாலிபர் யுவதிகள் மண்டியிட்டு நின்று அவரிடம் செய்திகள் விசாரிக்கத் தொடங்கினார்கள். `சுவாமி! திருவாக்குக் கொடுங்கள், தங்கள் திவ்விய திருவாக்குக் கொடுங்கள் - இந்த ஆண்டு முழுவதும் வயல் வரப்புக்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கும்? நன்றாகத்தானே இருக்குமல்லவா?' தேவதாயி : இருக்கும். வா-யுவ : மேக மின்னல்கள் எங்களுக்கு எவ்விதத் தீங்குகளும் செய்யாதிருக்குமல்லவா? தேவதாயி: என் வந்தனை வழிபாடு குறைவற நடந்தால் எந்தவிதக் கொடுமையும் நேராது, எந்தவிதக் குறையும் இராது. வா-யுவ : கிராமத்தில் குளிர்--நோய்களால் எந்தவிதத் தாப தோஷங்களும் நேராதல்லவா? யாருக்கும் நோய் நொடி வராதல்லவா? தேவதாயி: நேராது. ஆனால் என் பூசனை நல்ல முறையில் நடப்பதாக வேண்டும். வா-யுவ: நடத்துவோம், அண்ணலே! கட்டாயமாக நன்முறையில் நடத்தி வைப்போம். நல்லது, இப்போது உறுதியாகத் தெரிவியுங்கள். வாலிபர் யுவதிகளாகிய நாங்கள் யாவரும், மக்களாகிய நாங்கள் அனைவரும், நல்ல நிலையில் இருப்போமல்லவா? தேவதாயி : (சிறிது தயங்கி) ஆமா....ம், இருப்பீர்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சம் தீங்குகளும் இருக்கும். வா-யுவ : சொல்லுங்கள், சுவாமி! என்ன தீங்குகள், சொல்லுங்கள். வாலிபர்கள் யுவதிகள் ஆகியோரின் இந்தக் கேள்விக்குத் தேவதாயி நெடுநேரம் வரை எத்தகைய மறுமொழியும் கூறாமல் மௌனம் சாதித்தார். கடைசியில் பேசத் தொடங்கிய போதும் வாலும் தலையுமில்லாமல் ஏதேதோ பிதற்றத் தொடங்கினார். வாலிபர் யுவதிகளில் ஒருவருக்குக் கூட அவர் வார்த்தைகளின் பொருள் விளங்கவில்லை. இந்த நிலையிலேயே தெய்வமும் அவரது திருமேனியை விட்டு இறங்கிவிட்டது. தேவதாயி எழுந்து உட்கார்ந்தாரானாலும், அவரால் எதுவுமே கூற முடியவில்லை. ஆடல் பாடல் இசைமேள அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது; பொழுதும் விடிந்தது, எல்லாரும் சென்று ஆற்றில் தோய்ந்து குளித்து விட்டு வந்து பிணி நீக்கத்துக்கான சிறப்புப் பூசை31 செய்வதில் ஈடுபட்டார்கள். இப் பூசையை ஒவ்வொரு வரும் தாம் நடத்தியும் பிறரை நடத்துவித்தும் உச்சி வேளைவரை கழித்தனர். இதற்குள் கார்ஸீங், கார்ட்டான், மத்தபே, சினேக், தஹமுக், தங்கங், லௌஜிலே இதாங், முக்லிங்-மிரேமா முதலிய எத்தனையோ தெய்வதங்களுக்குத் தேறல், பன்றி, கோழி ஆகியவற்றைப் பலியிட்டுப் பூசை செய்தபின் அவற்றை உண்டு அத்தெய்வங்கள் தங்கள் தங்கள் உரிமையிடங்களுக்குப் போய்விட்டனர். தேவதாயியும் பிரசாத அமுதுகள் உண்டு பருகி, ஐந்து ரூபாயும் ஒரு சோடி வேட்டிகளும் பெற்றுத் தன் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மற்ற மீரீ ஆண்களும் பெண்களும் அது போலவே தத்தம் வீடுகளுக்குச் சென்று விட்டனர். வாலிபர்கள் யுவதிகளின் விழா ஆட்டம் மட்டும் இன்னும் முடிவடையவில்லை. பொழுது இறங்கி வந்தது. பகல் ஓய்வுற்று வந்தது. அவர்கள் அம்பலத்தின் முன்னால் தம்மை மறந்த மகிழ்ச்சியில் மூழ்கி விழா ஆட்டத்துக்கான ஒட்ட சாட்டங்கள் தொடங்கினர். கும்பல் கும்பலாக அவர்கள் தனித் தனி கூடி நடனமாடினார்கள். அத்துடன் யார் யாருக்கு எந்த எந்தக் கும்பலில் சென்று ஆட விருப்பமோ, அந்த அந்தக் கும்பலிலேயே தாராளமாகச் சென்று சேர்ந்து ஆடினார்கள். பானேயியும் ஜங்கியும் ஒரே கும்பலிலேயே இடம் பெற்றிருந்தார்கள். இத்தடவை ஜங்கியே விழாக்கீதத்தை ஆரம்பித்தான். சென்றது, சென்றது சித்திரையே, வந்தது வைகாசி இத்தரையே! சந்தப் பூங்காவெங்கும் மல்லிகையே கமழ வந்தாய், என்றன் கன்னிகையே! அந்தம் உரைக்க நா ஓடுதில்லையே, சொந்தம் கொண்டாட ஓர் ஏதுவில்லையே! கந்த மலர் கொய்யக் கூடுதில்லையே, காதல் தலை வைக்கத் தோதுவில்லையே! ஜங்கியின் பாட்டு முடிந்தது. உடுக்கைகள் பேசின. பானேயியின் தலைமையில் யுவதிகள் ஆட்டம் தொடங்கினர். ஆட்டம் முடிந்ததும் பானேயி பாடினாள். வெட்டிய கத்திரிப் பிஞ்சுக்குள்ளே வெஞ்சுறா வீழ்த்திற்றாம் கிள்ளைப் பிள்ளை! கட்டிக்கரும்பேநீ தானும் இதற்குள்ளே காலையாக்கதே இம்மாலைக்குள்ளே! மற்றொரு கும்பிலிருந்து ஓர் இளைஞன் பாடற் குரல் கேட்டது. கனியிருப்பது வானத்திலே, நீ இருப்பது கொம்புநுனி கொம்பு வளைந்து விழுந்திடாதே, கொஞ்சிடும் சிட்டே, விழுந்திடாதே! தனியிருக்குதுன் சேவற்சிட்டு, தாங்காது இனியது தன் உயிரை தங்கிய கொம்பரும் தாங்காது, தாவிநீ வந்திடு சிட்டுப் பிள்ளாய்! அதே கும்பலிலிருந்து ஒரு யுவதி குரலும் வந்தது. ஆத்தி32 தழைக்குது வெந்தரிசுப் பாத்திக் குள்ளே33 உயிர் கட்டிக் கொண்டே! பார்த்து மகிழாதே, பச்சைப் புழு அதில் காத்துக் கிடக்குதுன் கண் மறைத்தே! இவ்வாறு ஆடலும் பாடலும் தொடர்ந்து கொண்டே இருந்தன; ஆடலுக்கும் ஒரு முடிவு இல்லை; பாடலுக்கும் ஒரு ஓய்வு கிடையாது. ஏனெனில் மீரீ இளைஞர் இயல்பாகவே உணர்ச்சிமிக்கவர்கள்; அமிர்தபானம் அவர்கள் உணர்ச்சிகளை இப்போது கிளறிக் கொந்தளிக்க வைத்திருந்தது. ஆடல் பாடல்களுக்கிடையே பானேயி தனித்திருக்கும் தருணம் பார்த்து ஜங்கி அவளை அணுகினான். `பானேயீ! எப்படியாவது கொஞ்ச நேரம் உன்னை நான் தனியே சந்திக்க முடியுமா? உன்னிடம் எனக்கு இரண்டொரு வார்த்தைகள் பேச வேண்டும்' என்றான். இது கேட்டுப் பானேயி, `நல்லது ஜங்கி! இப்போது நாம் இங்கேயே சுற்றுவோம். பிறகு சந்தர்ப்பம் பார்த்து நான் சோவன்ஷிரி ஆற்று மணல் பக்கமாகப் போவேன். அப்போது நீயும் அங்கே வந்துவிடு. நீ பேச விரும்புவதை அங்கே பேசிக் கொள்ளலாம்' என்றாள். பானேயியும் ஜங்கியும் இத்தனையும் ஒரு கணத்துக் குள் பேசி முடித்துவிட்டனர். அது பற்றி எவருக்கும் எதுவும் தெரியாது. இதன்பின் வாலிபர் - யுவதிகள் உணவு கொள்ளும் வேளை வந்ததும், பானேயி தான் சொன்ன தருணம் வாய்த்ததறிந்து தனித்து விலகி, சோவன்ஷிரி ஆற்றுமணல் பக்கமாகப் புறப்பட்டாள். ஜங்கியும், `சிறிது வீட்டுக்குப் போய் வருகிறேன்' என்று கூறிக் கொண்டே வீடு நோக்கிச் சிறிது தொலைவு சென்றான். ஆனால் வீட்டுத்திசையாக முன்னேறாமல் சோவன்ஷிரி ஆற்று மணல் பக்கமே திரும்பினான். மின்னல் வெட்டிச் செல்வது போல் அவன் சிறிது நேரத்துக்குள் பானேயியின் அருகில் சென்று நின்றான். பின்னாலிருந்து `பானேயி!' என்று அழைத்தான். பா : ஜங்கி! ஜங் : வந்து விட்டாயா? பா : ஆ, இதோ வந்திருக்கிறேனே! ஜங் : உன்னிடம் ஒரு வார்த்தை சொல்ல மனசுக்கு ஆசையாயிருக்கிறது. பா : அது என்ன வார்த்தை ஜங்கி! தாராளமாகச் சொல்லு! ஜங் : என்னிடம் உண்மையாகச் சொல், பானேயி, நீ என் மீது பிரியம் வைத்திருக்கிறாயா? பா : (சிரித்துக் கொண்டே) இது காரியமாகக் கேட்க இப்போது என்ன அவசரம் வந்து விட்டது, ஜங்கி! ஜங் : அதுக்குள்ளே உனக்குக் கோபம் வந்து விட்டதா? பானேயி! சரி, இனி உன்னிடம் எதுவும் கேட்கமாட்டேன். பா : (பின்னும் சிரித்துக் கொண்டே) கேட்டுக் கொள். என்னிடம் கேட்காமல் வேறு யாரிடம்....... ஜங் : அப்படியானால் நிச்சயமாகச் சொல். நீ என் மீது பிரியம் வைத்திருக்கிறாயா? பா : இது என்னால் கூற முடியாதது! ஜங் : அப்படியா; தெரிந்து கொண்டேன், பானேயி! உனக்கு என்மீது பிரியம் கிடையாதுதான். இல்லை யென்றால், இன்று ஆடலின் போது நீ திரும்பத் திரும்பக் கமுதனின் பக்கமே, பார்வை செலுத்திக் கொண்டிருப்பாயா? பா : ஐயையே! இதென்ன இப்படியெல்லாம் பேசுகிறாய்? ஜங்கீ : ஆம் : பானேயி! உனக்குக் கமுதன் மீதுதான் பிரியம் என்பதை நான் இன்று நன்றாய் உணர்ந்து கொண்டேன். சிறு போதிலிருந்தே இதுவரை நாம் இருவரும் ஒன்றாகத் தினைப்புனம் காவல் காத்து, ஒன்றாகக் கூடி விளையாடி வந்திருக்கிறோமே; கரடி புகுந்த சமயம் இருவருமே ஒன்றாக ஓடிவந்து, படகில் ஏறிப் பாட்டுப் பாடிக் கொண்டு சென்றோமே; இருவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றிய வண்ணமாக எங்கும் - திரிந்தோமே- இவற்றையெல்லாம் நீ ஒருவேளை மறந்து விட்டாய் போலிருக்கிறது! ஆனால் நான் ஒன்றையும் மறக்கவில்லை. உண்மையில் உன்னை நினைத்துக் கொண்டுதான் நான் இத்தனை நாளும் உயிர் தரித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் பானேயி, இப்போது நீ என்னை விரும்பவில்லை என்று கூறிவிட்டால், இனி எனக்கு உயிருடன் வாழ்வதில் எவ்வித ஆசையும் கிடையாது. `பானேயி, என் தாய் தந்தையர் என்னைச் சிறு போதிலேயே விட்டு மறைந்துவிட்டார்கள். குழந்தையாயிருக்கும் சமய முதல் நான் உன்னுடனேயே இணைபிரியாதிருந்து வளர்ந்து வந்திருக்கிறேன். உன்னையே என்னுடைய எல்லா உறவுமாக மதித்து வந்திருக்கிறேன். ஆனால் பானேயி, இந்த நிலையிலுங் கூட, உனக்கு என் மீது விருப்பமில்லாமலே போய்விட்டது!' ஜங்கியின் இந்த வார்த்தைகளைப் பானேயி அமைதியுடன் கேட்டுக் கொண்டு வந்தாள். ஆனால் மீரீ நங்கையின் உள்ளம் இப்போது புண்பட்டு விட்டது. அவள் உள்ளத்தில் அணையிட்டு வைத்திருந்த உணர்ச்சிகளெல்லாம், இப்போது அணை உடைத்து விட்ட வெள்ளம் போல் பீறிட்டு வெளி வந்தன. புண்பட்ட உள்ளத்துடன் அவள் செயலற்று நடந்தாள். ஆனால் சூதுவாதற்ற அந்த நங்கையின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடிற்று. ஜங்கி சட்டென அவள் பக்கம் திரும்பி அவளை நெஞ்சார அணைத்துக் கொண்டு, அவள் கண்ணீரைத் துடைத்தான். பானேயி இப்போது வாய்திறந்து பேசினாள். `ஜங்கி, நான் உன்னிடம் பிரியம் வைத்திருக்கிறேன்; உன்னைத்தான் மனமார நேசிக்கிறேன்; உன் உருவையே எப்போதும் என் கண்ணுக்குள்ளாக வைத்துப் பூசித்து வருகிறேன். நான் கமுதனை விரும்புகிறேன் என்று இன்று நீ கூறினாயே, அதில் எள்ளளவும் உண்மை இல்லை' என்றாள். ஜங் : பானேயி, நான் செய்த தவற்றை மன்னித்துவிடு. தவறாக எதுவும் நினைத்துக் கொள்ளாதே! என் அன்பே, என் உயிருள்ளளவும், உன்னையே மாறாமல் நேசித்துக் கொண் டிருப்பேன். பானேயி, நீ என்னை என்றும் கைவிட்டு விடாதே, என்னை விட்டுப் பிரிந்து விடாதே! என்னிடம் மனம் விட்டுச் சொல், நீ என்னைக் கலியாணம் செய்து கொள்வாயா? பா : தாய் தந்தையர் கலியாணம் செய்து கொடுத்தால், அப்போதுதான் நான் உன்னோடு வந்து விட முடியும். ஜங் : தாய் தந்தையர்கள் உன்னை எனக்குக் கொடுப்பார் களா, என்ன? எனக்கோ யாரும் இல்லை. கையில் ஒரு காசும் கிடையாதே! பா : முயற்சி செய்தால் காசு பணம் கிடைத்து விட்டுப் போகிறது! நீ மட்டும் கொஞ்சம் பணம் திரட்டும் வழிகளில் முயற்சி செய்! நீ அவ்வாறு பணம் திரட்டி, என் தாய் தந்தையரிடம் இருந்து என்னைப் பெறும் வரை நான் வேறு யாரிடமும் போகமாட்டேன். எப்போதாவது போவதானால் உன்னுடன் தான் போவேன். இன்று- சோவன்ஷீரியின் இந்த மணல் தடத்தில் இருந்து கொண்டு கார்ஸிங்- கார்ட்டான் சாட்சியாக நான் இதை உறுதியாகக் கூறுகிறேன். ஜங் : பானேயி, இன்று நீ எனக்கு ஒரு புதிய பலம் கொடுத்திருக்கிறாய். ஆகட்டும், பானேயி! இன்று முதல் நான் மனமார முயன்று உழைத்துப் பாடுபட்டுப் பணம் திரட்டி உன்னைக் கட்டாயமாகப் பெறுவேன். உன்னைப் பெற முடியாவிட்டால், இந்த உயிரையே வைத்துக் கொண்டிருக்க மாட்டேன். இந்த உரையாடலுக்குப் பின், இருவருமே இருதிசையில் திரும்பினர். ஆனால் இருவரும் திரும்ப வந்து அம்பலத்தில் விழாக் குழுவுடன் சேர்ந்து கொண்டார்கள். இத்தடவை பானேயியும் ஜங்கியும் எப்போதையும் விட மிகுதி உற்சாகத்துடன் நடனமாடினார்கள். இரண்டு நாள்களுக்குள் விழா ஒரு முடிவுக்கு வந்தது. 4. பானேயியின் வீட்டிலே! விழா நாள்கள் கழிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஜங்கியுடன் உரையாடிய நாளிலிருந்து அவளுடைய பேச்சு நடையுடை பாவனைகள் எல்லாம் முற்றிலும் மாறிவிட்டன. அவள் முகத்தில் முன்னிருந்த களி கிளர்ச்சியோ, குதூகலமோ இப்போது கிடையாது. நேர்மாறாக அவ்வப்போது அதன் மீது கருமேகங்களின் வரிசைகள் போன்ற சாயைகள் படர்ந்து வந்தன. உண்மையில் தினைப்புனத்தின் பரணில் காவல் காத்துக் கரடியின் பயத்தினால் இறங்கி ஓடிய சிறுபோதைய நாளிலிருந்து, ஜங்கியிடமாக அவளுக்கு இன்னதென்று தெளிவு படாத ஓர் உணர்ச்சி எழுந்து வளர்ந்து கொண்டேயிருந்தது. குழந்தைப் பருவத்துக்குரிய அந்த நாட்களிலிருந்தே அவளுக்கு ஜங்கியைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே மிகுந்த ஆர்வம் இருந்தது. அவனுடன் ஆடிப்பாடிக் கூத்தாடுவதிலுள்ள இன்பத்தை யன்றி அவளுக்கு வேறு எதிலும் இன்பம் தோன்றவில்லை. ஜங்கியிடம் அவளுக்கு ஏற்பட்டிருந்த உணர்ச்சிகள் எப்படிப்பட்டவை, எவ்வகையானவை என்பதை அவளே அறியமாட்டாள். அது பற்றித் தன்னையே கேட்டு எத்தகைய ஒரு முடிவையும் அவள் நிர்ணயித்துக் கொள்ளவும் இல்லை. ஆம், கேட்டிருந்தாலும் எட்டு ஒன்பது வயதான ஒரு சிறுமி காதல் என்ற உணர்ச்சி பற்றி என்ன தெரிந்து கொள்ள முடியும்? அதே சமயம் அவளே ஒரு சிறிதும் அறியாதபோது நான் தான், வாசகர்களே, எப்படிக் கூறமுடியும்? இதுவரை எனக்கும் ஒன்றும் தகவல் கிட்டவில்லை என்றே கூற வேண்டும். திடீர்க் காதல்! இரண்டு சின்னஞ் சிறு குழந்தைகள் இருக்கு மிடத்தில் அது எப்படி அணுக முடியும்? அவளுக்கு ஒன்பது வயது என்றால் அவனுக்குப் பதினாலு வயதுதானே! அவர்களுக் கிடையே நாம் நாவலில் வருணித்துக் காண்கிற காதல் எப்படி ஏற்படக்கூடும்? ஜங்கியிடம் அதற்குரிய தகுதி உரிமைகள் ஏதாவது இருந்ததாகத் தடம் உண்டா? ஒரு சிறிதும் கிடையாது. எட்டு, ஒன்பது வயதுப் பிள்ளைகளுக்குத் தகுதி - உரிமைகள் பற்றிய வேறுபாடுகள் தெரியுமளவுக்கு மீரீ இனம் இன்று கூட அவ்வளவு முன்னேற்றப் பண்பு அடைந்து விடவில்லை. அப்படியானால் இவ்வுணர்ச்சி உண்மையில் யாதாக இருக்க முடியும் என்றுதான் நானும் கேட்டுக் கொள்ள வேண்டும். ஆழ்ந்து ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்ததில் எனக்குத் தோன்றுவது இவ்வளவுதான்; தனியே விடப்பட்ட ஒரு சிறுவன் அல்ல சிறுமி தன் வயதுக்கு இயற்கையான ஆட்டபாட்டக் கேளிக்கைகளை ஒருவருடைய தோழமையில் நடத்தினால் அந்தத் தோழருடன் என்ன வகையான உணர்ச்சிகள் கொள்வது இயல்போ, அதே உணர்ச்சிகள் தான் இவ்விருவரிடையேயும் இருந்தன. பானேயியும் ஜங்கியும் எப்போதும் ஒன்றாகவே சென்று கன்று காலிகளை மேய்த்து வந்தார்கள். எப்போதும் ஒன்றாகவே சோவன்ஷிரீ நதித் தடங்களில் ஓடி விளையாடி ஆடிப்பாடி வந்தார்கள். இருவரும் ஒன்றாகவே நதியில் படகு உகைத்தார்கள். மாசி விழாவிலும் வைகாசி விழாவிலும் அவர்கள் எப்போதும் இணை பிரியாமலே கேளிக்கை நடனங்களில் கலந்து கொண்டார்கள். அதுபோல இருவருமே ஒருங்கிணைந்து தான் நகரத்துக்குச் சென்று விழாவாடினார்கள். படகில் சென்றும் வந்ததனால், குழந்தைப் பருவத்திலிருந்தே இருவர் உள்ளத்திலும் ஒருவர் மீதொருவருக்கு நல்ல பாச மனப்பான்மை, இன்பத் தோழமைப் பாங்கு எழுந்து வளர்ந்து வந்தது. இந்த மனப்பான்மை ஆழவேர் கொள்வதற்கு முன்பே பானேயியும் ஜங்கியும் வேறு வேறு இடமாகச் சென்று பிரிந்திருந்தார்களானால், ஒரு வேளை இருவரிடையேயும் வேறுபாடுகள் வளர்ந்து ஒருவருக்கொருவர் சற்றுத் தொலைவான பாவம் ஏற்பட்டிருக்கவும் கூடும் - கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஒரு வேளை அதனால் ஒருவர் மற்றவரை மறந்து விடுவதற்குக் கூட வழி ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு நிகழ வில்லை - கடவுள் என்ன உட்கருத்துடன் அவர்கள் இருவர்களையும் சேர்த்து வைத்தார் என்பது நம்மால் அறிந்துகொள்ள முடியாத ஒன்று. எப்படியும் இதற்கிடையே அவ்விருவர் வாழ்விலும் வாலிபம் வந்து நுழைந்தது. இந்நிலை யிலும் அவர்கள் இருவரிடையே உள்ள பாச உணர்ச்சி முன்போலவே இருந்து வந்தது. அது மட்டுமன்று - வாலிபம் இடையே வந்துவிட்ட பிறகும்கூட, பானேயி சம்பந்தப் பட்டமட்டில், குழந்தை மனப்பான்மை எளிதில் விலகிப் போகவில்லை. குழந்தைப் பருவத்தில் ஜங்கியுடன் ஓடியாடித் திரிந்து கும்மாளமடித்தது போலவே, இப்போதும் திறந்த தலையுடன்34 அவள் ஓடியாடித் திரிந்தாள். எனவே அவர்கள் இருவரிடையிலும் நேசப் பிணைப்பு உள்ளத்தில் உறுதியாக வேரூன்றவில்லை. உண்மையில் தன் பெண்மை உள்ளத்தில் ஜங்கியிடம் இவ்வளவு பாசம் இப்போது ஏற்படுவானேன் என்பதையோ, அவன் வகையில் தன் உள்ளத்தின் உணர்ச்சிகளைக் கிளறிக் குடைந்த செய்தி யாது என்பதையோ, எவ்வளவோ முயன்று பார்த்தும் பானேயியால் கண்டுணர முடியவில்லை. இந்நிலைமை பானேயியிடம் மட்டுமல்ல, ஜங்கியிடம் கூட இருந்தது. அவன் உள்ளத்திலும், இது போல ஏதோ ஒன்று இருந்து குடைந்து கொண்டுதான் இருந்தது. ஆயினும் ஜங்கி ஆண், அவனிடம் ஆண்மைக்குரிய இயல்புகள் நிலவின. ஆதலால் நகரில் விழா நடந்த நாளைக்கு நெடுநாள் முன்பிருந்தே அவன் தன் உள்ளத்தை நன்கு உணர்ந்து கொண்டு விட்டான். நரசிங்கா-பிஹு விழாவில் சோவன்ஷிரி ஆற்று மணல் தடத்தில் ஜங்கி பானேயியிடம் தன் உணர்ச்சிகளை உள்ளம் திறந்து கூறிய அந்தக் கணத்திலேயே, பானேயியின் உள்ளத்திலும், ஒரு தீ கொழுந்து விட்டெரியத் தொடங்கி விட்டது. அதுவரை பல தினங்களாகவே, புதையுண்டு கருகிக் கொண்டிருந்த ஓர் அனற்பொறி, திடீரென்று காற்றுப் பட்டுப் `பக பக' எனச் சுவாலை யெழுப்பி எழுந்தாடத் தொடங்கியது போன்று அவள் உணர்ந்தாள். அதனாலே தான் சூதுவாதற்று நாணம் என்பது இன்னது என்றே அறியாத மீரீ இனச் சிறுமியாய் அந்நாள் வரை இருந்த அப்பெண், திடுமெனக் கார்ஸிங் கார்ட்டனைத் தனக்குச் சாட்சியாக வைத்து, தன் இதயத் தலத்தில் ஜங்கிக்கு இடம் தந்து, பெருமுயற்சியுடன் அவனுக்கு அதில் உறுதியான பிரதிஷ்டையும் செய்துவிட நேர்ந்தது - அவனுக்குத் தன் பாசம் பற்றிய உறுதியையும் அன்றே அவள் தந்து விட்டாள்! அந்த நாளிலிருந்தே அவள் காதலும் உரம் பெற்று வளர்ந்தது, அவள் உள்ளத்தில் ஆழ வேர்விடத் தொடங்கிற்று. தன் இதயத்தின் இறைவனோடு ஒன்றுபட்டு இனி வாழ முற்படும் நாள் எப்போது வரும், அது எப்படி வரும் என்று அன்று முதலே அவள் சிந்தனை செய்யத் தொடங்கி விட்டாள்! அந்த நாள் கழிந்த மறுநாளிலிருந்தே ஜங்கியும் முழு மூச்சுடன் வயல் வரப்பு வேலைகளில் ஈடுபட்டான். மற்றச் சமயங்களில் ஒரு நடவு35 விதை விதைக்கும் நேரத்தில், இப்போது அவன் முழுக்க முழுக்க மூன்று நடவுகள் விதைத்து முடிக்கத் தொடங்கினான்! காதலின் ஆற்றலே அவனுக்கு இத்தகைய புதிய பலம் தந்திருந்தது என்பதில் ஐயமில்லை! ஜங்கியிடம் பேசிய அந்த தினத்துக்குப் பிறகுதான் பானேயி தன் தாய் தந்தையர்களைப் பற்றி முதல் முதலாகக் கவலை மேற்கொள்ளத் தொடங்கினாள். தாய் தந்தையர் எப்படிச் சொல்வார்களோ, அப்படித்தான் செய்ய வேண்டுமென்று அவள் எண்ணினாள். விழா வேடிக்கைகளுக்குப் போவதை அவள் அறவே விட்டு விட்டாள். பெற்றோர்களுக்குத் தன்மீது திருப்தியும் சந் தோஷமும் ஏற்பட வேண்டும் என்பதில் அவள் இப்போது எடுத்துக் கொண்ட அக்கறை கொஞ்ச நஞ்சமன்று. பானேயியின் தாயின் பெயர் நிரமா; தந்தை பெயர் தாமேத். மீரீ இனத்திலேகூட அவர்கள் மற்றவர்களைவிட மிகவும் ஏழ்மை எளிமை நிலையில் உள்ளவர்கள். அவர்களுக்குப் பானேயியைத் தவிர வேறு பெண் குழந்தையோ ஆண் குழந்தையோ கிடையாது. அவர்கள் பாசத்துக்கெல்லாம் உரிய ஒரே வாரிசாக அவள் விளங்கினாள். இக்காரணத்தால், குழந்தைப் பருவத்திலிருந்தே அவள் மீது அவர்கள் தம் உயிரையே வைத்திருந்தார்கள். பானேயியின் சுபாவங்களில் திடீரென ஏற்பட்ட மாறுதல்களை அவள் பெற்றோர்கள் காணாமலில்லை. கண்டு அதிசயம் அடையாமலுமில்லை. இது வாலிபத்தின் வரவினால் தான் ஏற்பட்டது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்; உணர்ந்து அவளுக்குத் திருமணம் செய்யும் காலம் வந்துவிட்டது என்றும் அவர்கள் முடிவு செய்தார்கள். ஏற்கனவே சில நாட்களுக்கு முன் கமுதன் பானேயியைத் தனக்கு மணம் செய்து கொடுக்க வேண்டு மென்ற கோரிக்கையைக் கொண்டு வந்திருந்தான். அவன் அதே ஊரின் தலைவன்36 மகன். ஆனாலும் தாமேதும் நிரமாவும் இது பற்றித் தம்மிடையே எவ்வளவோ ஆய்வாராய்வுகள், வாக்குவாதங்கள் நடத்தினார்கள். இருவருமே எவ்வகையான முடிவுக்கும் வர முடியாமல் இருந்தார்கள். என்றாலும் இப்போது பானேயியின் மன மாற்றங்களைக் கண்டதும் அவர்கள் கருத்தும் மாறத் தொடங்கிற்று. உண்மையிலேயே பானேயியை விவாகம் செய்து கொடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டதென்று அவர்கள் தீர்மானித்தார்கள். அது மட்டுமல்ல, இவ்வளவு நாள் விவாகம் செய்து வைக்காமலிருந்ததுதான் பானேயியின் மனக்கவலைக்குக் காரணம் என்றும் கருதினார்கள். பரண் மீதுள்ள தம் மனையில்37 கணப்படுப்பருகில் உட்கார்ந்து கொண்டு ஒரு நாள் மாலை நேரம் முதியோராகிய பானேயியின் பெற்றோர் இருவரும் இது பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். பானேயி அச்சமயம் தண்ணீர் கொண்டு வருவதற்காக ஆற்றுத் துறைக்குப் போயிருந்தாள். நிரமா பேச்செடுத்தாள். `இப்போது பானேயி பெரியவளாய் விட்டாள். அவளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும்.' தாமேத் : ஆம், நானும் உள்ளுக்குள்ளாக இது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். பானேயியை யாருக்குக் கொடுக்கலாம்? நிரமா: ஏன் அந்த ஜங்கிப் பயல் இருக்கிறானே, அவன் பானேயிக்கு நல்ல ஜோடியாய் இருப்பானே! அவளுக்கு ஒத்த அவ்வளவு நல்ல ஜோடி வேறு எங்குமே இல்லையே! தாமேத் : அவனுக்கு யாருமில்லை; அநாதை. ஆகவே அவனுக்குப் பானேயியைக் கொடுப்பதில் எனக்குக் கொஞ்சமும் விருப்பம் கிடையாது. அந்த வக்கற்ற பிச்சைக்காரப் பயலுக்கு நம் மகளைக் கொடுப்பதில் என்ன பயன்? நிரமா: ஏன் நமக்கு வேறு பெண்ணோ, பிள்ளையோ தான் இல்லையே! அவன் நமக்கு ஒரு பிள்ளையைப் போல் இருந்து விட்டுப் போகிறான்! தாமேத் : பிள்ளையைப் போல் இருந்துவிட்டால் வயிறு நிரம்புமா?38 நிரமா : அப்படியானால் அவளை யாருக்குத்தான் கொடுக்க உத்தேசமோ? தாமேத் : என் கருத்து என்ன வென்றால், அவளைக் கமுதனின் கையில் ஒப்படைப்பது மிகவும் உசிதமாயிருக்கும் என்பதே. அவன் `நமேன்' கிராமத் தலைவன் மகன், கிராமத் தலைவனே ஒரு தடவை என்னிடம் இது பற்றி கேட்டான். அவனுக்குத்தான் என் புதல்வியைக் கொடுப்பேன். நிரமா : அப்படியானால் அவனுக்குக் கொடுப்பதற்கு முன்னால் பானேயியிடமே நான் கேட்டு விடுகிறேன். அவளிடமே கேட்டால் நல்லதல்லவா! தாமேத் : ஏன், என்ன இது? யாராவது தன் மகளிடமே, `உன்னை யாருக்குக் கொடுப்பதம்மா' என்று கேட்பார்களா? மகள், `நான் காட்டு மக்கள்39 வீட்டில் போய் இருப்பேன்' என்று சொல்லிவிட்டால், அங்கேயே போக விட்டுப் பார்த்திருப்பதா? நான் அவளைக் கமுதனுக்குத்தான் விவாகம் செய்து கொடுப்பேன். அவனிடம்தான் அவள் போக வேண்டும். கமுதன் தகப்பனிடம் நான் வாக்குக் கொடுத்தாயிற்று. நிரமா : சரி, அப்படியானால், அவ்வாறே நடக்கட்டும்! அவளைக் கமுதனுக்கே கொடுப்போம். தாமேத் : ஆம், அதுதான் என் எண்ணம்; நீயும் இன்று முதல் பானேயி கேட்கும்படி அவ்வப்போது இடைக்கிடையே கமுதனின் பேச்சை எடுத்துப்பேசி வா. அடுத்த மாதம் பிறந்ததுமே தாமதமின்றிக் கமுதன் மாப்பிள்ளை கழிக்க40 இங்கே வர இருக்கிறான். வயது முதிர்ந்த தாமேத் இந்தத் தீர்மானத்தைக் கூறி முடித்த கணத்திலேயே, பானேயி தண்ணீர் எடுத்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தாள். வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பே `அடுத்த மாசம் பிறந்ததுமே தாமதமின்றிக் கமுதன் மாப்பிள்ளை கழிக்க இங்கே வருவான்' என்ற தந்தையின் வாசகம் அவள் செவியில் பட்டுவிட்டது. பட்ட அந்தக் கணமே பேச்சின் போக்கையும் திசையையும் அவள் ஊகித்துக் கொண்டாள். அந்தக் கணமே சூதுவாதற்ற அந்தச் சிறுமிக்குத் தன் தலை மீது ஒரேயடியாக ஆயிரம் இடியேறுகள் சேர்ந்து வந்து விழுந்தாற் போலிருந்தது. `எது எப்படியானாலும் தாய் தந்தையர்களிடம் பேசி அவர்கள் மனத்தை மாற்றிவிட முயலுவேன்' என்று தீர்மானித்துக் கொண்டவளாய், அவள் தன் இதயத்தில் ஏற்பட்டுவிட்ட படுகாயத்தை இதயத்துக்கு வெளியே தெரிய வராமல் அடக்கிக் கொண்டாள். ஆனால் இன்னதென்று விளங்காத ஏதோ ஓர் உருவமற்ற உணர்ச்சியால், அவள் இதயம் துடி துடித்தது. இதயம் உள்ளுக்குள்ளாகவே கிடந்து அழுதது. 5. சோவன் ஷிரீ நதியின் நீர்ப்பரப்பிலே! மாலையிள வண்ணங்கள் தோய்ந்த பட்டுச் சேலையென நீர் மார்பில் அலைகள் பாய மேலைச் செவ்வான் நோக்கி மோனமாக வேலை கிழித்தேகுகின்ற அம்பி பாராய்! வேலை கிழித் தேகுகின்ற தடங்கள் எல்லாம் வியன் நங்கை புன்முறுவல் ஓட்டம் அன்றோ? -வேர்டஸ்வொர்த் கவிதை மொழிபெயர்ப்பு 41 பொழுது புலர்ந்தது. வானம் நிர்மலமாக அழகுக் காட்சி தந்து கொண்டிருந்தது. விடியல் வானின் சிங்காரச் சாயல் சோவன்ஷீரீ. ஆற்றின் நீர்ப்பரப்பின் மீதும் செந்நிழலாடின. நிழலாடிய அம்மார்பின் மீது தென்றல் மெல்ல வருடிக் கொண்டிருந்தது. அன்னை சோவன்ஷிரீ சரசர வென்ற ஓசையுடன் அழகு நடைபோட்டுக் கொண்டிருந்தாள். நதிக்கப்பால், மீரீ கிராமத்தின் உட்புறத்தே நெருப்பு அழல் பாய்ந்து கொண்டிருக்கிறது. வீழா முரசங்கள் ஒன்றிரண்டு முழங்கிக் கொண்டிருந்தன. இப் பக்கம் சோவன்ஷிரீ நதி மிகவும் அழகாய் இருந்தது. இரு கரையிலும் பச்சைப் புல் பட்டு விரித்திருந்தது. ஆங்காங்கே அழகிய மணல் தீரங்களும் காணப்பட்டன. சுமார் ஐந்து கல் அளவு தூரத்துக்குள்ளிருந்த மலையின் மனோகரமான காட்சி கண்ணுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தது. இவ்வெல்லாக் காட்சிகளின் மீதும் மாலை யிளந் தென்றல் தன் மோகனமான கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தது. சூரியன் இன்னும் மேற்கே அத்தமனகிரியில் விழுந்து விடவில்லை. ஆனால் இதற்குள்ளாகவே கிழக்கில் முழு நிலா பால் வார்க்கத் தொடங்கியிருந்தது. இந்நிலையில் சோவன் ஷிரீ ஆற்றின் சௌந்தரிய லாகிரி கணத்துக்குக் கணம் உள்ளத்தைக் கவரத்தக்க விதவிதமான அலங்காரங்களுடன் மாறிமாறிக் காட்சி தந்தது. இத்தகைய வண்ணக் காட்சிகளை நாம் வருணிக்க முயன்றாலும், அதற்கு எமது எழுதுகோல் இடம் தராது. அதற்குரிய ஆற்றலும் எம்மிடம் இல்லை. யாராவது இங்கே குறிப்பிட்ட பருவத்தில், குறிப்பிட்ட சமயம் பார்த்து `பதாலி பாம்'42 பகுதிக்குச் சென்று படகில் சோவன்ஷிரீ மீது தவழ்ந்து திரிந்தால், நாம் இங்கே வருணிக்காது விட்ட காட்சிகளை யெல்லாம் நேரே காணலாம். ஆயினும் அவற்றை வருணிப் பதற்குரிய கவித்துவ சக்தி அமைந்திருந்தால்கூட, அதை வருணிக்க ஒரு முழுப் புத்தகமே தேவைப்படும். உண்மையில் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சோவன்ஷிரீ ஆற்றுநீர்ப் பரப்பில் மாலை நேரத்தில் படகேறி உலவுவது என்பது கண்கொள்ளாக் காட்சி விருந்தேயாகும். இயற்கையின் சௌந்தரியம் அங்கே எவரையும் மோகலாகிரியில் மிதக்கச் செய்துவிடும். இத்தகைய மாயக் காட்சிகளைப் படைத்த கருணாகர மூர்த்தியாகிய பரமேசுவரனிடத்தில் காண்பவர் பக்தியை இது பன்மடங்காக வளரச் செய்துவிட வல்லது. எழுச்சி குன்றிய உள்ளம் படைத்தவர்கள்கூட இத்தகைய சந்தர்ப் பங்களில் எழுச்சிமிக்க கவிதையுள்ளம் பெற்றவர்களாகி, அக் கவிதையிலேயே தம்மை மறந்தவர்கள் ஆகி விடுவார்கள். இத்தகைய சமயத்தில்தான் - இத்தகைய மனமோகன மான சந்தர்ப்பத்தில்தான் - சோவன்ஷிரீயின் மறுகரையிலிருந்து ஒரு சின்னஞ்சிறு படகில் ஐந்து மீரீ இன இளம் பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து நங்கையர்கள் முகத்திலுமே ஆனந்தம் கூத்தாடுகிறது - ஐவர் இதழ்களிலுமே புன்னகை தவழ்கின்றது. ஐவரும் நேர்த்திமிக்க தூய ஆடைகள் தரித்துத் தோளணிகளும் மேகலையும் அணிந்திருக்கிறார்கள். படகு சின்னஞ்சிறிய படகு; மிகமிகச் சிறிய படகு. மற்றவர்களானால், ஐந்து பேரென்ன, மூன்று பேர்கூட அந்தப் படகில் ஒருங்கிருந்து செல்ல முடியாது. ஆனால் நாம் மேலே குறித்துள்ளபடி மீரீ இனத்தவர்மீது சோவன்ஷிரீ அன்னையின் பாசம் சொல்லுந்தரத்தது அன்று. இதனால் மீரீ மக்கள், மூன்று நான்கு வயதுப் பிள்ளைகள் முதற்கொண்டு, எவ்வளவு சின்னஞ்சிறிய படகிலும் ஏறிச் சோவன்ஷிரீ நதியில் பயமில்லாமல் செல்லுவது வழக்கம். இவ்வளவு இனிய மனோகரக் காட்சிகளிடையே இவ்வளவு அழகொளி வாய்ந்த இள நங்கையர்களை ஒருசேரக் காணும் எவரும் சுவர்க்கத்திலிருந்துதான் ஐந்து அப்ஸர மங்கையர் இந்தப் பூமியிலே விழா வார வந்திருக்கிறார்களோ என்று எண்ணாம லிருக்க முடியாது. அல்லது ஐந்து நீர் நங்கையர்கள், நீரிலிருந்தே தோன்றி, நீர்ப்பரப்பிலேயே ஆடிப்பாடி மகிழ வந்திருக்கிறார் களோ என்றாவது கருத வேண்டும். இதுவுமல்லாவிட்டால், சோவன்ஷிரீ அன்னையின் வயிற்றில் பிறந்த ஐந்து புதல்வி யர்களே அன்னை மடியிலிருந்து வெளியேறி, சிறிது வெப்பாற உலவ வந்தார்களோ என்று தோன்றலாம். இள நங்கையர்களில் இருவர் படகின் இரு கோடிகளிலும் இருந்து பயின் கட்டையை43 இயக்கிக் கொண்டிருந்தார்கள். மற்ற மூவர்களும் நடு மையத்தில் இருந்து பாடிக்கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருத்தி நட்ட நடுவில் நின்றுகொண்டு `ககனா'க் குழலில்44 விழாப்பாட்டுப் பாடிக்கொண்டிருந்தாள். அவள் கைகளிலும் இதழ்களிலுமிருந்து `ககனா' எவ்வளவோ மதுரமான இசையைப் பொழிந்து கொண்டிருந்தது. தவளை போல கோங்கோங் கென்று ஒலி செய்தவண்ணம் விழா இசை மெல்ல மெல்லக் காற்றில் அலையாடிற்று. ககனாக் குழல் மிகச் சாதாரணமான ஒரு கருவிதான் - அதிலிருந்தே இவ்வளவு தெய்வீகமான இசையை எழுப்பவல்ல மீரீ நங்கையர்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்! அவர்கள் கையும் மெய்யும்பட அக் கருவிதான் எவ்வளவு கொடுத்து வைத்ததாய் இருக்க வேண்டும்? ககனாக் கீதம் மூன்று நான்கு தடவை எழுந்தெழுந்து பரவிற்று. ஒருத்தி பாட மற்ற இருவரும் அதற்கேற்றபடி கையில் தாளமிட்டுக் கொண்டிருந்தார்கள். வாசகர்களே, ககனா வாசித்த அந்தப் பெண் யார் என்பது உங்களுக்குத் தெரிகிறதா? அவள்தான் நம்முடைய பானேயி. இந்த நங்கையர் ஐவரும் தங்கள் கையார்ந்த கழனியில்45 காவற் பணி முடித்துவிட்டுப் புலர் காலையிலேயே திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். வெறும் `ககனா' இசையில் அவர்களுக்கு முழு நிறைவு ஏற்பட வில்லை. `ரகமி' என்ற பெயர் கொண்ட யுவதி பானேயியை நோக்கி `பானேயி', ஒரு விழாப்பாட்டு பாடு என்றாள். பானேயிபாடினாள். நீரை எதிர்த்து நம் தோணி உகைத்து ஒரு நீள்வலை வீசினோம், கண்ணாளா! ஏட கண்ணாளா, ஒரு நீள்வலை வீசினோம், கண்ணாளா (ஒரு நீள்வலை) வேரை எதிர்த்து எழு நீரை அலைத்து இகல் வெம்புயல் வீசிற்று, கண்ணாளா! ஏட கண்ணாளா, இகல் வெம்புயல் வீசிற்று, கண்ணாளா (இகல் வெம்புயல்) தீர அடர்த்து அகல் வானம் உதைத்து அடம் தீர்ந்தது மாமழை, கண்ணாளா! ஏட கண்ணாளா, அடம் தீர்ந்தது மாமழை, கண்ணாளா (அடம் தீர்ந்தது) சீரை நனைத்து எழு வெள்ளம் மடுத்து உருள் தோணி கவிழ்ந்தது, கண்ணாளா! ஏட கண்ணாளா, உருள் தோணி கவிழ்ந்தது, கண்ணாளா (உருள் தோணி) பானேயி பாடி முடித்ததும் ரகமி எழுந்தாள். `பானேயி, இப்போது நான் ஒரு பாட்டுப் பாடுகிறேன், கேள்' என்று தொடங்கினாள். நீரை எதிர்த்து நம் தோணி அடர்த்தது நேராகக் கம்பனிக் கப்பலடீ! ஏடி தோழி பார்! நேராகக் கம்பனிக் கப்பலடீ! நேராகக் கல்கத்தா கொண்டு செல்வாயோ எம் நேரிழை தன்னை, ஏட கோபாலா! ஏட கோபாலா, எம் நேரிழை தன்னை, ஏட கோபாலா! இப்பாட்டு முடியும் முன்னே அதைக் கேட்டு ஐந்து பெண்களுமே கைகொட்டிச் சிரிக்கத் தொடங்கி விட்டனர். இதன்பின் கிரமாய் எனும் பெயருடைய நங்கை வாய் திறந்து பேசினாள். `ஏடீ பானேயி, ஏபானேயி! எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தானேடீ, அதற்குள் உனக்குத்தான் கலியாணம் ஆகப் போகிறதே! கமுதன் மாப்பிள்ளை கழிக்க வருகிறானாமே, அது மெய்தானே?' பானேயி : யார் கண்டார்கள்! எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. கிரமாய் : ஏண்டி, உனக்குப் பிடிக்கவில்லையா? உன் குழந்தை விளையாட்டுக்கும் கன்னி விளையாட்டுக்கும் ஒரே முடிவாக ஒரு முடிச்சுப் போட்டபின், நீதான் குழந்தை குட்டிகளுக்குத் தாய் ஆகப் போகிறாயே! அப்படியல்லவா? பானேயி : என்ன கேலியா பண்ணுகிறாய், கிரமாய்! நான் யாருடனும் போகப் போவதில்லை. இதோ கேள் என்பாட்டை! அருமையாகத் துளி துளியாய் ஆனை பிடியோடு அருந்துமாம் எருமைக் கடா கடாரியோடே பானைக் கணக்கில் உறிஞ்சுமாம்! ஒருவரோடும் போக மாட்டேன், என் கண்ணாட்டி, தோழீ! உரிமையாய் என் பிறந்த வீட்டில் உறைவேன் நான் தோழீ! பானேயி பாடி முடித்தவுடன் ரகமி பேச்சைக் கிளறினாள். `நல்லது, பானேயி! நாளை இல்லாவிட்டால் மறுநாள், அல்லது அடுத்தநாள்! எப்படியும் ஒருநாள் நீ போகத்தான் போகிறாய். அப்படிப் போகும்போது பெரும்பாலும் எங்களை மறந்து விடத்தான் போகிறாய். இன்று நீ பேசுகிற பேச்செல்லாம், அன்று வெறுங் கிளிப் பிள்ளைப் பேச்சாகத்தான் இருக்கப் போகிறது!' ரகமியின் இந்தப் பேச்சுக்குப் பதில் கூறப் பானேயி வாயை யெடுத்திருப்பாள். ஆனால் அதற்குள்ளாக வேறொரு படகிலிருந்து ஆண் குரலில் வேறு யாரோ பாடுவது கேட்டது. இளம் பெண்கள் ஐவரும் அதைக் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினார்கள். நீரை எதிர்த்து வீரமாக உகைப்பாள் தண்டு என் கண்ணின் மணி, நெடுந் தொலை செல்வாள், என்கண்மணி, நெடுந் தொலை செல்வாள், என்செல்வம்! நேரே எத்தனை தொலை செல்வாய், எத்தனை தொலை, என் கண்ணின் மணி நீள எத்தனை எத்தனை நாள், நிலைகாத்திருப்பேன், கண்ணின் மணி (நேரே எத்தனை...) நீரை எதிர்த்து வீரமாக உகைக்கும் தண்டு என் மெய்க்காதல் நெடுந்தொலை செல்லும் என் பாசம், நெடுந்தொலை செல்லும் என் உள்ளம்! நேரே வேதா எனக்குன்னை விதிக்கும் வரை என் கண்ணாட்டி! நெடுந்தொலை செலுமுன், மூவொரு நாள் நினைவின் சின்னம் தந்தருள்வாய்! (நேரே வேதா.... கண்ணாட்டி) `இந்தப் பாடலைப் பாடியது யார்?' - மீரீ இள நங்கையர்களின் உள்ளத்திலே இது பற்றியறியும் ஆர்வம் கிளர்ந்தெழுந்தது. `இந்தக் குரல் யாருடையது?' இதுவே ஒவ்வொருவரும் தம் உள்ளத்தில் எழுப்பிய வினா ஆயிற்று. ஆனால் பானேயி இந்தக் கேள்வியைக் கேட்கவும் கருதவில்லை, இதற்கு விடை கூறவும் வாய் திறக்கவில்லை. காலனுக்கும் காதலிக்கும் இடையே வழக்கமாகவுள்ள கம்பியில்லாத் தந்தி அவளிடம் பேசி விட்டது. இது யார் குரலாயிருக்கும் என்பதை அவள் நன்றாக அறிவாள் - ஆம், வேறு யார் குரலாயிருக்க முடியும்? அவள் இதயத்தின் செல்வம், அவள் கண்ணின் மணியான ஜங்கியினுடையதாகத் தான் இருக்க முடியும்! இங்ஙனம் முடிவு செய்துவிட்ட பின் அவள் நகைத்தவாறு மற்ற நான்கு பெண்களையும் நோக்கினாள். ‘உங்களுக்குத் தெரிய வில்லையா, இது யார் குரல் என்று? அடியே, இது ஜங்கியின் குரல், ஜங்கியின் குரல்! அவன் குரலேதான்' என்று அவள் வாய்விட்டுக் கூறினாள். இப்போது ரகமி பேசினாள். `ஆம், பானேயி! ஜங்கியின் குரலே நீ நன்றாக அறிந்து வைத்து இருக்கிறாய். இது ஜங்கிதான்' இந்த உரையாடலில் மேலும் முனையாமல் பானேயி இப்போது அவர்கள் கருத்தைத் திருப்பினாள். `இந்தப் பேச்சுக் கெல்லாம் இப்போது அவசியம் இல்லை, இதோ, நான் பாடுகிறேன்!' இவ்வாறு கூறி அவள் மேலும் பாடத் தொடங்கினாள். ஆற்று வெள்ளம் வேகமாகச் செல்லுதேடா, கண்ணாளா! வெகுவேகமாகச் சுழலுதேடா, கண்ணாளா! காற்று இரண்டு திசையும் சுற்றி வீசுதேடா, கண்ணாளா, இருதிசையும் சுற்றி மாறுதேடா, கண்ணாளா! வேற்று வாடை சென்றுஉன் உள்ளம் வேறுபடாதே, கண்ணாளா! சென்றுன் உள்ளம் மாறுபடாதே, கண்ணளா! பானேயி பாடி ஓயுமுன், முந்திக் கேட்ட அதே ஆண்குரல் மீட்டும் பாடத் தொடங்கிற்று. கவலை கொள்ளாதே - கன்னி மனமே, நீ கவலை கொள்ளாதே (கவலை) அவல விதி நமக்கு - உவலையே செய்யினும் உவகையதாம் வரை - காத்திருப்போம் (கவலை) அவதியில்லாமல் - தவலுறும் வாய்ப்பே கவர்ந் தின்புறும் வரை- காத்திருப்போம் (கவலை) பாட்டுடன் சேர்ந்து பாடிய இளைஞன் உகைக்கும் படகும் மீரீ இள நங்கையர்கள் இருந்த படகை நோக்கி அணுகிச் சென்று கொண்டிருந்தது. நம்பியைக் கண்டு நங்கையர் பேச்சுத் தொடங்கு வதற்கு முன்பே பானேயியின் பாடல் குரல் கொடுத்துவிட்டது. இப்படிப் புரட்டினாலும் விதி எனை அப்படி உருட்டினாலும் மெய்ப்படி பொடி செய்தாலும் விடுகிலேன் உறுதி, நாதா! செப்படிச் சதியினாலே, விதி எனைத் தப்பெண்ணங் கொள்ளச் செய்தால் அப்பொழுது என்னால் ஒன்றும் தவறில்லை, அறிதி நாதா! பானேயி பாடிக்கொண்டிருக்கும் போதே படகுகள் ஒன்றை ஒன்று நெருங்கி இணைந்தன. ஜங்கியைக் கண்டதுமே மற்ற நங்கையர் எல்லாரும் ஒரே குரலில் `ஓகோ, நீ தானா பாடியது,' என்று கேட்டனர். ஜங்கி : ஆம், நானேதான். ரகமி : இதுவரை நீ எங்கே போயிருந்தாய்? ஐங்கி : தாமேன் காமின் தடம் வரை. ரகமி : அங்கே என்ன வேலையோ? ஜங்கி : அங்கே ஒரு ஆளிடம் எனக்குப் பத்து ரூபாய் வரவேண்டியிருந்தது. அதை வாங்கப் போயிருந்தேன். பானேயி : அது கிடைத்ததா? ஜங்கி : இன்று கிடைக்கவில்லை, நாளை தருவதாகச் சொன்னான். பானேயி : இப்போது வீட்டுக்குத்தானே போக வேண்டும். ஜங்கி : ஆம். பானேயி : அப்படியானால் போகலாமே! ஜங்கி : பானேயி! பானேயி : ஏன், என்ன செய்தி, ஜங்கி? ஜங்கி : நான் இன்னும் மூன்று நாட்கள் இங்கே இருந்து விட்டுப் பின் `கூணாசூந்தி' கிராமத்துக்குச் செல்ல இருக்கிறேன். அங்கே என்னுடைய ஒரு சிற்றன்னை வீடு இருக்கிறது. அங்கேயே இருக்கப் போகிறேன். பானேயி : அப்படியானால் நீ இந்தக் கிராமத்தையே விட்டுவிட்டா போகிறாய்? ஜங்கி : ஆம், பானேயி! ஆனால் இடைக்கிடைக்கு இங்கே வந்து போய்க் கொண்டிருப்பேன். துலாயி : ஆம், அடிக்கடி வா, வந்து கட்டாயம் இங்கேயே தங்கவும் பார். நீ நிரம்ப நல்லவன். நாமெல்லாரும் சேர்ந்து எவ்வளவு உல்லாசமாக ஆடிப்பாடியிருந்தோம். அந்த நாட்களை நினைத்தாலே ஆனந்தமாயிருக்கிறது. ஜங்கி : என்ன செய்வது, துலாயி! எப்படியும் போக வேண்டியிருக்கிறது. பானேயி : ஜங்கி! ஜங்கி : ஏன், என்ன செய்தி, பானேயி! பானேயி : நீ போகு முன்பு என்னோடு ஒரு தடவை சந்தித்து விட்டுப் போ. உன்னுடன் சில செய்திகள் கூற வேண்டியிருக்கிறது. ஜங்கி : நல்லது பானேயி! இவ்வாறு பேசிக் கொண்டே செல்லுகையில், படகுகள் இரண்டும் கரை வந்து சேர்ந்தன. அதன்பின் எல்லாரும் அவரவர் வீடுகளுக்குச் சென்றார்கள். 6. வயல் வெளியிலும் மனையிலும் மறுநாள் பொழுது விடிந்தது. என்றும் போல் அன்றும் பானேயி வயல்காவல் வேலைக்குப் புறப்பட்டாள். முந்திய தினம் பேசியதன்படி, தாமேன்காமின் இடம் செல்வதற்காக ஜங்கி ஒரு படகு எடுத்துக்கொண்டு புறப்பட்டான். பானேயியின் வயல் வழியிலேயே இருந்தது. அவள் தனியே சந்தித்துப் பேசவேண்டுமென்று கூறியிருந்த தனால், அது பற்றிக் கேட்கலாம் என்று எண்ணினான். படகை அருகில் கட்டிவிட்டு அவன் கரையேறிப் பானேயி யிடம் சென்றான். கால இடம் இருவருக்கும் உதவியாயிருந்தது. அங்கே சுற்று வட்டார மெங்குமே எவரும் இல்லை. இருவரும் மனம் விட்டுப் பேச இதனால் நல்ல வாய்ப்புக் கிட்டிற்று. பானேயி : ஜங்கி, இனி நீ இப் பக்கம் வரமாட்டாயா? ஜங்கி : இடையிடையே வந்து போவேன். உன்னைப் பற்றிய செய்தி விவரங்களையும் அறிந்து கொண்டி ருப்பேன். பா : ஆம். அடிக்கடி வா. நீ போய் விடுவதனால், என் இதயமே சூனியமாய் விடும் என்று தோன்றுகிறது. ஜங் : நானும் வெற்று நெஞ்சோடுதான் அங்கே இருக்க வேண்டியவனாகிறேன். என்ன செய்வது? ஒருவேளை பிரமன் நம் தலையில் இன்பமான வாழ்வுக்கு வகையெழுதியிருக்க மாட்டான் போலிருக்கிறது. பா : ஜங்கி, ஏதாவது பணம் சேர்த்து வைத்திருக்கிறாய் அல்லவா? ஜங் : எல்லாம் சேர்த்து என்னிடம் நாற்பது ரூபாய் இருக்கிறது. இன்னும் ஆறு மாதத்தில் இன்னும் ஒரு நாற்பது ரூபாய் சேர்க்க முடியும். அதன் பின் வந்து உன் தாய் தந்தையரைக் கண்டு பேசுகிறேன். பா : ஜங்கி! அப்படியானால் நீ ஒரு செய்தி பற்றி இன்னும் கேள்விப்படவில்லை போலிருக்கிறது! ஜங் : அது என்ன செய்தி பானேயி, சற்றுச்சொல்லேன்! பா : அப்பாவும், அம்மாவும் என்னைக் கமுதனிடமே ஒப்படைத்து விடுவதென்று எண்ணிக் கொண்டி ருக்கிறார்கள். ஜங் : அப்படியானால் நீ என்ன செய்வாய்? பா : பேச்சு வார்த்தைகளால் அப்பா, அம்மா மனத்தை மாற்றி என் வசமாக்க முயற்சி செய்வேன். ஜங் : அவர்கள் சிறிதும் மனம் மாறாவிட்டால்? பா : அது அப்போதைக்குப் பார்க்க வேண்டிய செய்தி. ஆனால் நீ எப்போதும் என்னைப் பற்றிய விவரங்களை விசாரித்து அறிந்து கொண்டிருக்க வேண்டும், பார்த்துக்கொள். எப்போது என்ன நடக்கிறது என்பதை நன்கு பரிசீலித்து அறிந்து கொண்டேயிரு. ஏனெனில் நீ இல்லாத போது என்மீது ஏதாவது வலுக்கட்டாயம் செய்யப் பட்டால், அல்லது வலுக்கட்டாயமாக கலியாணம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டால், நான் நஞ்சைத்தின்று உயிரை விட்டுவிடுவேன். ஜங் : நல்லது பானேயி, அறிந்து கொண்டேன். நான் எப்போதும், உன் நிலைமைகளை அறிவதில் கண்ணும் கருத்துமா யிருப்பேன். அத்துடன், உனக்காக என்னுடைய உயிரை விடவும் எப்போதும் சித்தமாக இருப்பேன். இது மட்டுமன்று, வரப்போவது என்னவென்று எப்போதும் உறுதி கூறுவதற் கில்லை. ஒருவேளை உன்னுடைய வீட்டுக்கு வந்து உன்னோடு பேச முடியாமல் போகவும் நேரலாம். ஆகவே இங்கேயே இப்போதே உன்னிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன், இப்போது போய்.... பா : போய் வா.... இவ்வுரையாடலுக்குப் பின் இருவரும் பிரிந்தார்கள். துயரத்தின் வேகத்தால் இருவர் கண்களும் குளமாயின. ஜங்கி பிரிந்து மெல்ல மெல்லச் சென்று படகில் அமர்ந்தான். தான் போக வேண்டிய இடம் நோக்கித் திருப்பி படகைச் செல்ல விட்டான். சிறிது தொலை சென்றதும் ஒரு நீண்ட மூச்சு இழுத்து உச்ச சுரத்திலே சோவன் ஷிரீ அன்னையிடம் தன் மன வேதனையைத் தெரிவித்துப் பாடினான். நீரை எதிர்த்து வீரமாக உகைக்கும் தண்டு என் கண்ணின் மணி! நெடுந்தொலை செல்லும் என் பாசம், நெடுந்தொலை செல்லும் என் உள்ளம்! நேரே வேதா எனக்குன்னை விதிக்கும் வரை என் மெய்க் காதல், நெடுந்தொலை செலுமுன் மூவொடுநாள் நினைவின் சின்னம் தந்தருளே! (நேரே வேதா... தந்தருளே) பையப் பையச் சென்று படகு பானேயியின் கண் பார்வையிலிருந்து மறைந்தது. இதயத்தில் சூனியம் படர, கருகிய முகத்துடன் அவள் ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின் தொடர்ந்து இரண்டொரு சொட்டுக் கண்ணீர் வடித்து விட்டுத் தன் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டாள். இவ்வாறு நாள் முழுவதும் புனங் காவல் செய்து இறுதியில் வழக்கம்போல் வீடு திரும்பினாள். அங்கே வீட்டில் செல்லும்போதே, தாய் தந்தையர் வீட்டு வாசற்படியிலேயே அமர்ந்திருப்பதையும், அவர் களருகிலேயே கமுதனின் தந்தையாகிய நமேன் கிராமத் தலைவன் இரண்டு பெரிய பரிசு பொட்டலங்களுடன் உட்கார்ந்து அவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பதையும் கண்டாள். அவள் உடனேயே எல்லாச் செய்திகளையும் ஊகித்தறிந்து கொண்டாள். பாவம்! சூதுவாதற்ற அந்த மீரீ நங்கைக்கு அவள் வாழ்வே சூனியமானது போலிருந்தது. ஆனால் என்ன செய்வது? கண்களில் கண்ணீர் வடிந்தபடியே அவள் தூங்கி விட்டாள். பரிசுகள் ஒப்படைக்கப்பட்ட பின் நாமேன் கிராமத் தலைவன் எழுந்து சென்று விட்டான். தாமேதும் நிரமாவும் வீட்டினுள் சென்று முன் கட்டில் உட்கார்ந்தார்கள். நிரமா பானேயியை அழைத்தாள். `ஏன் பானேயி! உனக்கு இப்போது விளக்கு வைத்தவுடனே தூக்கம் வந்து விட்டதா என்ன? வா, இப்படி வா!’ என்று குரல் கொடுத்தாள். தனக்குள்ளே முனகிக் கொண்டே பானேயி எழுந்து அருகில் வந்து உட்கார்ந்தாள். அவள் வந்தவுடன் தாய் அவளிடம் பேசத் தொடங்கினாள். `குழந்தாய், பானேயி! நீ எல்லாம் அறிந்து கொண்டா யல்லவா? நீ கமுதனுடன் போக வேண்டிய ஏற்பாடு ஆகிறது. உன் தந்தைக்கு ஒரு சிறு சுமை இன்று கிட்டியிருக்கிறது, பார்!' என்றாள். பா : அம்மா, நான் யாருடனும் போக மாட்டேன். எப்போதும் இந்த வீட்டில்தான் இருப்பேன். நிர : ஒப்புக்குச் சொல்கிறாய்! சரி, இருக்கட்டும். குழந்தாய்! கமுதனை உனக்கு நன்றாகப் பிடித்திருக்கிறதா? பா : என்னால் ஒன்றும் சொல்ல முடியாதம்மா? நிர : அட அம்மாடி! சொல்ல முடியவில்லையா? அவன் தான் கிராமத் தலைவன் மகனாயிற்றே! பணமோ ஏராளம். அவன் வீட்டுக்குப் போய் நீ எவ்வளவோ இன்பமாக வாழப் போகிறாய்! பா : அம்மா எனக்குப் பணமோ, பகட்டோ எதுவும் வேண்டியதில்லை. நிர : அப்படியானால் நீ யாருடன் தான் போவாய்? பா : யாருடனும் போகமாட்டேன். நிர : கமுதனுடன் நீ போயாக வேண்டும். பா : நான் போகமாட்டேன், அவன் வீட்டுக்கு! நிர : பின் வேறு யார் வீட்டுக்குப் போவாய்? பா : நான் வீட்டிலேயே இருப்பேன். பானேயியின் இந்த வார்த்தைகளைக் கேட்டுத் தாய்க்கு மனதில் ஏதோ சந்தேகம் ஏற்பட்டு விட்டது. வயது சென்ற தாமேதுக்கும் கோபம் உண்டாயிற்று. தாமேத் சீறிப் பேசினான். `நீ சும்மா இரு, நிரமா! இவள் சுகத்தினால்தான் சுகம் வரப் போகிறதாக்கும்!' என்றான். பா : அப்பா, என் மேல் என் இவ்வளவு கோபமா யிருக்கிறீர்கள்? தா : மகளாய்ப் பிறந்தும், நீ ஏன் தாய் தந்தையர் சொல்வதை மதித்துக் கேட்கவில்லை? பா : எந்த வார்த்தையை, அப்பா, நான் இதுவரை மதிக்கவில்லை? தா : வாயை மூடு! நீ கமுதனிடம் போய்த்தான் ஆக வேண்டும்! பானேயி இதற்கு எவ்வகையான பதிலும் கூற முடியவில்லை. வயது சென்ற தாமேதின் கோபத்தால் வீடு முழுவதுமே கிடு கிடென்று ஆடிற்று. பானேயி உள்ளுக்குள்ளாக அழுதழுது தூங்கிப் போனாள். இந்த நிகழ்ச்சிக்கு ஆறேழு நாட்களுக்குப் பின் கமுதன் மாப்பிள்ளை மாதிரி பகட்டான ஆடையணி உடுத்து மாப்பிள்ளை கழிக்க வந்து சேர்ந்தான். வழக்க முறைப்படி எல்லாச் சடங்காசார வினைகளும் முடித்து, அவன் மாப்பிள்ளை கழிக்கும் முறையில் தாமேதின் வீட்டிலேயே தாவள மடித்துத் தங்கலானான். 7. இரண்டு மீரீ கிராமங்களிலே பானேயியிடமிருந்து விடை பெற்ற அன்றே ஜங்கி தன் சொந்த மீரீ கிராமத்தை விட்டு கூணாசூந்தி என்ற கிராமத்துக்குச் சென்று சேர்ந்தான். அங்கே அவன் தன் சிற்றன்னை வீட்டின் ஆதரவு பெற்றான். மீரீ இன வாலிபர்களிடையே ஜங்கி எல்லா வழியிலும் ஒரு சிறந்த இளைஞனாகவே கருதப்பட்டிருந்தான். அவன் குழல் வாசிப்பதைக் கேட்டு எந்த மீரீ இன நங்கையும் அவன் மீது ஆர்வம் காட்டாமல் இருக்க முடியாது. நங்கையர் குழாமே அவனுக்காக ஏக்கமுற்று வந்தது. எனவே வந்த மிகச் சில நாட்களுக்குள் அவன் கூணாசூந்தி கிராமத்திலுள்ள வாலிபர் - யுவதிகளுக்கிடையே ஒரு முதல்வனானான். விழா வந்த சமயம் ஜங்கி குழல் எடுத்துக் கொண்டு அதில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டான். அவன் கலந்து கொள்ளாவிட்டால் நாங்கள் பாடவேமாட்டோம் என்று கூடப் பெண்கள் கூறினார்கள். அதன் பின் இரண்டு மூன்று நாட்களுக்குள் இரண்டொரு பெண்கள் அவனிடம் மிக நெருங்கிய பாசமே காட்டத் தலைப்பட்டார்கள். ஆனால் இங்கே இவ்வளவு அன்பும், ஆதரவும் ஏற்பட்டபின்கூட ஜங்கியினுடைய இதயத்தில் பானேயியிடம் இருந்த பாசம் ஒரு சிறிதும் குறையவில்லை. அவ்வப்போது அவன் முகத்தில் துயர மேகங்கள் படர்ந்து வந்ததுண்டு. அத்துடன் பல தடவை அவன் சோர்வு மட்டுமீறியதனால், விழா முதலிய இன்பக் கேளிக்கைகளில் அவனால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. ஆயினும் அவன் போகா விட்டாலும், மற்ற வாலிப யுவதிகள் வந்து அவனை வலுக்கட்டாயமாகத் தங்களுடன் இழுத்துக் கொண்டு போய் வந்தனர். அந்தக் கிராமத்தின் இளநங்கையர்களுள் ஒருத்தி டாலிமி என்னும் பெயர் உடையவள். அவளுக்கு வயது ஏறத்தாழப் பதின்மூன்று, பதினான்கு இருக்கும். அவள் அந்தக் கிராமத் தலைவன் புதல்வி. மீரீ இள நங்கையர்களுக்குள்ளே எல்லாரை யும் விட மிக நன்றாக நடனமாடுபவள் அவள்தான். அதைப் போலவே ஜங்கி குழல் வாசிப்பதில் போட்டியற்ற வல்லாளனாயிருந்தான். இக்காரணத்தால் டாலிமியின் உள்ளத்தில் ஜங்கியிடம் ஒரு கவர்ச்சி அங்குரித்து வளர்ந்து வந்தது. இதனால் என்றாவது ஜங்கி விழாக் கேளிக்கைகளில் கலந்து கொள்ளாவிட்டால், அன்று டாலிமியின் ஆடல் பாடல்களில் சுரத்தே இருப்பதில்லை. ஜங்கி தன் இதய தேவியான பானேயி பற்றிய விவரங்களை அறிவதற்காகச் சோவன் ஷிரீ தீரத்திலுள்ள தன் கிராமத்திற்குப் போய்விடும் நாளெல்லாம், டாலிமியின் முகம் சுண்டிக் கறுத்துவிடும். இவ்வளவுக்கும் அவன் சோவன் ஷிரீ போய் வருவதன் இரகசியம் அவளுக்கு ஒன்றும் தெரியவராது. அவனை அவள் விரும்பினாளே தவிர, அவன் இதயத்திலுள்ள செய்திகள் எதையும் அவள் அறியவில்லை. ஆயினும் அவன் இதயத்தின் இயல்பை அவள் முற்றிலும் அறியவில்லை என்றும் கூறமுடியாது. ஒரு நாள் ஜங்கி நதித்துறையில் ஒரு படகில் ஏறியமர்ந்து வெறுப்பு மிக்க உள்ளத்துடன் மௌனமாக உட்கார்ந்து நீரோட்டத்தையே நோக்கிக் கொண்டிருந்தான். அப்போது அவன் கண்கள் இரண்டிலிருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது. அச்சமயம் கிராமத்தின் பக்கத்திலிருந்து டாலிமி இடுப்பில் குடத்தை வைத்துக் கொண்டு துறைக்கு வந்து, ஜங்கி இமை கொட்டாமல் நீரையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். டாலிமியின் உள்ளம் எப்போதுமே, மீரீ நங்கையர்களுக்கு இயல்பான கட்டற்ற எழுச்சியும் கேளிக்கை விளையாட்டு விருப்பமும் உடையதாயிருந்தது. எப்போதும் அவள் பேச்சில் கேலியும் குறும்பும் நிறைந்திருக்கும். இப்போதும் அவள் அம்முறையிலேயே இடுப்பிலிருந்த குடத்தை மெள்ளக் கீழே வைத்துவிட்டு, இரு கையையும் விரித்துக் கொண்டு ஜங்கியின் பின்னே சென்று அவன் கண்களைப் பொத்தினாள். ஜங்கி அவள் கைகளைத் தடவிப் பார்த்தான். ஆனால் எவ்வளவோ முயன்றும் அவள் யார் என்று அவனால் அடையாளமறிய முடியவில்லை. அவன் ஏலாமை உணர்ந்தபின் டாலிமி தானே கையை எடுத்துவிட்டுக் கடகடவென்று கேலியாகச் சிரித்தாள். ஜங்கி முகம் திரும்பி பார்த்தபோது, அது டாலிமீ என்று கண்டான். அவர்கள் கண்கள் சந்தித்தன. ஆனால் டாலிமீ கண்ட காட்சி இன்பக் காட்சியன்று. ஜங்கியின் கண்கள் செவ்வறலிப்பூக்கள்46 போலச் சிவந்திருந்தன. நெடுநேரம் அவன் அழுதிருக்க வேண்டும் என்பதைக் காட்டும் கண்ணீர்த் தடம் இன்னும் அரை குறையாக உலர்ந்திருந்தது. அவன் துயரங் கண்டு தானும் துக்கித்தவளாய், டாலிமி அவனிடம் உரையாடத் தொடங்கினாள். `ஜங்கி நீ, ஏன் அழுதுகொண்டிருந்தாய்?' ஜங் : நான் அழுவதை நீ எப்போது பார்த்தாய், டாலிமீ! டா : ஐயோ, ஏன் இப்படிப் பொய் சொல்கிறாய்? சொல்லமாட்டாயா, ஏன் அழுதாய் என்று? ஜங் : என்னால் சொல்ல முடியாது! டா : அந்தோ, நீ என்னை நம்பவில்லை போலிருக்கிறது. சரி! அப்படியே இருக்கட்டும்! இன்றிலிருந்து நான் உன்னுடன் விழாவில் நடனமாடமாட்டேன், பார். நீ வந்து கூப்பிட்டால் கூட நான் வரமாட்டேன்! ஜங் : டாலிமீ, கோபித்துக் கொள்ளாதே! என் செய்திகளைத் தெரிந்து கொள்வதால் உனக்கு என்ன இலாபம்? டா : எனக்குத் தெரிய வேண்டும். கொஞ்சம் தயவு செய்து சொல்லமாட்டாயா? ஜங் : சொல்வதால் உன் மனத்துக்குத் துயரம் தான் ஏற்படும். டாலிமீ, உனக்குத் தெரியும், நான் முதலில் சோவன்ஷிரீயிலுள்ள மீரீ கிராமத்தில் இருந்தேன் என்பது. டா : ஆம். அதை நான் அறிவேன். சரி, அங்கே பின் என்ன நடந்தது? ஜங் : அங்கே பானேயி என்ற யுவதி என்னிடம் நேசம் கொண்டிருந்தாள். ஜங்கி இதைக் கூறி முடிக்குமுன் டாலிமியின் முகம் ஒளியிழந்து கருகிற்று. ஆனால் ஜங்கி அவள் முக மாற்றத்தின் இரகசியத்தை உணரவில்லை. அவள் வெளிக்குத் தன்னைச் சமாளித்துக் கொண்டு, `பின்!' என்று மேலும் அவன் உரையாடலை ஊக்கினாள். ஜங் : பின், தான் என்னுடனேயே வர விரும்புவதாக அவள் உறுதி கூறினாள். அவ்வாறே ஆணையும் இட்டாள். ஆனால் அவள் தாய் தந்தையர் நான் ஏழை என்பதையும், எனக்கு யாரும் எதுவும் கிடையாது என்பதையும் உணர்ந்து என்னை வெறுத்து வேறு ஓர் இளைஞனைக் கொண்டு அவளுக்கு மாப்பிள்ளை கழிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். யார் கண்டார்கள்! அனேகமாக, இதற்குள்ளேயே என் தலைவிதி என் வாழ்க்கை மீது தீவைத் திருக்கக் கூடும்! டா : அவள் வேறு யாரையும் வரித்துக் கொண்டால், உன்னை வரிக்க வேறு யாரும் கிடைக்க மாட்டார்களா, என்ன? ஜங் : அவளைப் போன்றவர்கள் யாரும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அந்தோ, ஜங்கீ ! சூதுவாது தெரியாத மீரீ இளைஞனே! என்ன சர்வநாசம் பண்ணிவிட்டாய்! ஒருத்தி வகையில் ஏற்பட்ட உன் உள்ளத்தின் நிலைமையை இவ்வளவு அப்பட்டமாகக் கூறிவிட்டாயே, அப்படிக் கூறியதனால் இன்னொரு உள்ளத்தில் எவ்வளவு நெஞ்சைப் பிளக்கும் வேதனையை உண்டுபண்ணி விட்டாய் என்பதை நீ அறிவாயா? ஆனால் என் செய்வது! உன் கபடமற்ற இளமை அப்படிப்பட்டது. நாகரிக மனித சமுதாயத்தின் மொழிக்குரிய வக்கிரமான போக்குகளின் இரகசியத்தை நீ அறியமாட்டாய். உன்னுடைய எளிய மனத்துக்குப் பட்டது எதுவோ, அதையே சொல்லி விடுகிறாய்! எப்படியானாலும் உன்னால் எவருக்கும் செய்யக் கூடிய ஒரே துன்பத்தை நீ செய்து விட்டாய்! இனி அதற்கு நிவாரண மார்க்கம் எதுவும் கிடையாது. ஜங்கியின் கடைசி வாக்கியம் முடிந்ததும் டாலிமி வேறு எதுவும் பேசாமல், `இதோ நான் போய் வருகிறேன், ஜங்கி' என்று கூறிவிட்டுச் சென்றாள். ஜங்கியும், `போ, டாலிமி! போ' என்று இருந்து விட்டான். வாசகர்களே! இங்கு இப்போது இதோடு நிற்கட்டும். பானேயி அங்கே என்ன செய்கிறாளென்று பார்ப்போம். பானேயியினுடைய தாய்தந்தையர்கள் வலுக்கட்டாயத் துடனேயே கமுதனை மாப்பிள்ளை கழிக்கும் படி வீட்டில் தங்க வைத்து விட்டார்கள். ஆனால் பானேயி அந்த மாப்பிள்ளை யாளன் பக்கமாக ஒரு சிறிதும் கவனம் செலுத்தவில்லை. அவள் எப்போதும் அவனிடம் தூர தொலைவாகவே நடந்து கொண்டாள். இதனால் ஏற்பட்ட ஒரு விசித்திரப் பலன் யாதெனில், வாய் திறவாமலே அவள் ஒரு போர்க் கொடியை உயர்த்தி விட்டாள். தாய் தந்தையரிடமோ அவள் பேச்சுக்குப் பேச்சு எதிர்ப் பேச்சுப் பேச வேண்டி வந்தது. தாய் தந்தையர் அடிக்கடி நேரடியாகவும், அடிக்கடி தோழர் தோழியர் மூலமாக மறைமுகமாகவும் குறிப்பாகவும் அவளுக்கு ஆணையிட்டுப் பார்த்தார்கள்; உபதேசம் செய்து பார்த்தார்கள்; உலுக்கிப் பார்த்தார்கள்; சமாதானங்கள் கூறிப் பார்த்தார்கள். ஆனால் வாய் திறவாமலே அடம் பிடித்த பெண்ணின் போக்கை யார் என்ன செய்ய முடியும்? அவள் மனத்தை மாற்றுவதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பல. ஆனால் எதனாலும் ஒரு சிறிதும் பயன் ஏற்படவில்லை. அடிக்கடி தாய் தந்தையர்கள் தெரிந்து வேண்டுமென்றே கமுதனிடம் பானேயியைத் தனியே விட்டுவிட்டு நழுவிச் செல்வதுண்டு. ஆனால் பானேயியுடன் பேசுவதற்கோ, அருகே செல்வதற்கோ கூடக் கமுதனுக்குத் தைரியம் வருவதில்லை. இவ்வாறு வீட்டில் நாலு ஜீவன்களுக்கு இச்சூழல் ஒருங்கே உயிர் வேதனையைத் தந்து கொண்டிருந்தது. தனியே இருக்கும் சமயம் பானேயி என்றும் கன்னியாகவே இருந்து விடுவது என்றும், கமுதன் பக்கமே திரும்பக் கூடாதென்றும் மேன் மேலும் உறுதி செய்து கொண்டாள். ஏனெனில் இந்தக் கமுதனல்லவா, தன் அன்புக்குப் பாத்திரமான இதய நாதனை இல்லாததும் பொல்லாததும் சொல்லி வெளியேற்றினான்! அதோடு, `போனால் ஜங்கியுடன் போவேன். அதன்றி வேறு யாருடனும் போக மாட்டேன்' என்று அவள் சோலன்ஷிரீ மணல் தடத்திலிருந்து கார்ஸிங் - கார்ட்டான் சாட்சியாகக் கூறியிருக்கிறாள். கமுதனும் எளிதில் போய்விடும் பேர்வழியாய் இல்லை. ஒரு பெண்ணை வசப்படுத்த முடியாமல் போனால் தன்னை ஒரு வாலிபன் என்று கூறிக் கொள்வது வெட்கக் கேடானது என்று அவனுக்கு ஓர் உணர்ச்சி ஏற்பட்டிருந்தது. இது ஒன்றை வைத்தே அவன் தோழர் தோழியர் எல்லாரும் அவனை ஏளனம் செய்வார் களென்பதும் அவனுக்குத் தெரியும். பானேயி கமுதனுடன் தான் செல்ல வேண்டும் என்பதில் அவள் தாய் தந்தையர்களுக்கு விடாப்பிடி உறுதி இருந்தது. மீரீ இனம் எப்போதும் ஒற்றைப்பிடி உடைய எளிய மனம் கொண்டது. ஒரே வீச்சில் காரியங்களை நடத்திவிட வேண்டும் என்ற பிடிவாதம் அதற்கு இயற்கையானது. இதனால் யார் மனதில் என்ன கருத்து ஏற்பட்டதோ, அவர் அதிலிருந்து என்ன வந்தாலும் விலகிவிட இணங்குவதேயில்லை. ஒவ்வொருவரும் பதினாலு பிரமாண்டங்களிலும் வட்டம் சுற்றி வளைய வளைய வருவார்கள் - ஆனால் எங்கே சுற்றினாலும் தங்கள் உள்ளக் கருத்துக்கே திரும்பி வந்து, அதிலேயே ஊன்றி நிற்பார்கள். பஞ்சாயத்து முடிவுகளை அவர்கள் தலையிலும் கண்ணிலும் ஒற்றிக் கொள்வார்கள் - ஆனால் நடப்பது என்னவோ, தங்கள் முடிவுப்படிதான்! மாப்பிள்ளை கழிக்கும் விஷயம் கமுதனுக்கும் இந்நிலையில் என்னதான் ஆனந்தம் கொடுத்திருக்குமென்று வாசகர்களே யூகித்துக் கொள்ளவும். அவன் கிராமத்தில் எங்காவது புறப்பட்டுச் சென்றால் போதும் - யுவதிகள் அங்கங்கே நின்று ஒரு வெள்ளைக் காக்காய் பறப்பதைப் பார்ப்பதுபோல அவனைக் கூர்ந்து பார்த்தார்கள். திருமணஞ் செய்ய இருப்பவர்களுக்குப் பொருத்தமான பெயர் வைத்துக் கிண்டல் செய்வதில் மீரீ யுவதிகளுக்கு ஒரு தனித் திறமையும் தேர்ச்சியும் உண்டு. அத்துடன் அவர்கள் கணிப்பில் பானேயிக்குக் கமுதன் எந்த வகையிலும் ஈடானவனாகத் தோன்றவில்லை. கிராமத்தில் அவனைக் கண்டவுடனே ரகமி அவன் மீது பாட்டுப் பாடினாள். பெண்டாளப் போறவளைக் கண்டால் நடுங்குகிற முண்டாசுக்காரன் எங்கே காணோம் - மாப்பிள்ளைக் கொண்டாட்டக் காரனெங்கே காணோம் - அட கொள்ளிக்கட்டை பெற்றபிள்ளை கள்ளிக்கட்டை செல்லக்கண்ணு - என் கண்ணாட்டி கண்டால் விடுவாளோ - உன்னை என் கண்ணாட்டி கண்டால் விடுவாளோ? இன்னொரு பக்கம் கிரமாய் வேறு பாடத் தொடங்கினாள். பொறுக்கிச் சேர்த்த காசு - அதைப் பெருக்கித் தள்ளி வீசு - ஏடி கண்ணாட்டி - உன்னை நெருக்கிவார மாப்பிள்ளையை நெடுங்கிணற்றிலே தள்ளு - நிலையில்லாத நெடுங்கிணற்றிலே தள்ளு! பானேயியின் வெறுப்புடன் கூடிய அவமதிப்பு, யுவதிகளின் இந்தக் கேலி கும்மாளம் ஆகிய எதுவுமே கமுதனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. இறுதியில் அவன் தன் வாலிபத் தோழன் ஒருவனைப் பானேயியின் தாய் தந்தையர்களிடம் அனுப்பிச் செய்தி தெரிவித்தான். `இந்த மாதிரி மாப்பிள்ளை கழிப்பு நடந்தால் என்ன பயன்? என் காசு பணத்தை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டால், நான் வந்தபடியே காலைத் தட்டிக்கொண்டு போய் விடுகிறேன்' என்று அவன் அலுத்துக் கொண்டான். இந்த வார்த்தைகளைக் கேட்டு முதியவர்களான பெற்றோர்களின் உள்ளம் எவ்வளவோ புண்பட்டது. அவர்கள் பானேயியைத் தனியாக அழைத்துப் பேசினார்கள். `பானேயி, இதோ பார்! நீதான் எங்களுக்கு ஒரே பிள்ளை. எங்களுக்கு நீ இவ்வளவு துயரம் கொடுக்கலாமா?' என்று கேட்டார்கள். பா : நானா உங்களுக்குத் துயரம் கொடுக்கிறேன்! நீங்களல்லவா என்னைத் துன்புறுத்துகிறீர்கள். நான்தான் கூறிவிட்டேனே, நான் என்றைக்குமே கமுதனிடம் போகப் போவதில்லையென்று, இது உறுதி. தா : பின் யாரிடம் போவாய்? பா : ஜங்கிக்கு என்னை மணம் செய்து கொடுத்தால் அவனுடன் போவேன். இல்லையென்றால் என்றைக்கும் இப்படியே வீட்டில்தான் இருப்பேன். தா : அந்தப் பொறுக்கி நாய்க்கு எலும்புத் துண்டு கூடக் கிடையாது. அவனுடனேயா போவாய்? பா : ஆம், அவனுடன் தான் போவேன். நிர : பானேயி, நான் இனி உனக்குச் சாபமே கொடுக்க வேண்டி வரும், ஆமாம்! நாங்கள் பெற்றவர்கள், எங்கள் மனம் துயரப்படும்படி பண்ணினாயானால், உனக்கு ஒரு போதும் நன்மை உண்டாகாது. பா : நான் ஒருபோதும் ஒருவருக்கும் துன்பம் கொடுத்ததில்லை. தா : எனக்குத் தெரிந்தவரை எனக்குப் பிள்ளையே இல்லையென்பேன். ஒருத்தி நீ இருந்தாய், இப்போது செத்துப் போய்விட்டாய் என்று நினைத்துக் கொள்கிறேன். பா : நான் செத்துப் போனேனென்றால், செத்த இந்தப் பிணத்தை ஏன் விற்றுத் தின்ன முயல வேண்டும்? நிர : நீ சீக்கிரம் அடியோடு அழிந்து போவாய்! பா : சபி, அம்மா, சபி! எவ்வளவு சபிக்க வேண்டுமோ, அவ்வளவும் சபி. என் தலையில் என்ன எழுதியிருக்குமோ, அது நடந்துவிட்டுப் போகிறது. தா : வாயை மூடு! நான் இன்று இரவே உன்னைக் கையும் காலுமாகக் கட்டிக் கமுதனிடம் ஒப்படைத்து விடுகிறேன். வலுக்கட்டாயமாகவே அவன் உன் உறுதியைக் குலைத்தபின், நீயாக அவனுடன் போவாய்! மீரீ குடும்பமனை இக்குழப்பத்தால் கிடுகிடென நடுங்கிற்று. சற்றும் சளைக்காத வெள்ளை மனம் படைத்த நங்கையும் தாய் தந்தையரின் இக்கடும் கோபம் கண்டு விக்கி விக்கி அழத் தொடங்கினாள். 8. இரவில் நள்ளிருள் ஜங்கி தன் கதையைச் சொல்லக் கேட்ட நாள் முதல், டாலிமிக்கு அவள் நெஞ்சில் யாரோ ஓர் ஈட்டியைக் குத்திவிட்டுச் சென்றது மாதிரியாயிற்று. ஜங்கி இத்தகைய உயிர் வேதனையான செய்தியைச் சொல்வானென்று அதற்கு முன் அவள் சிறிதும் எதிர்பார்த்தவளல்ல. ஜங்கி தன்னைக் காதலிக்காமலிருந்தால் கூட இருக்கலாம். ஆனால் காதல் கொள்ளாதது மட்டுமன்றி, தான் பார்ப்பதற்கும் அழகியல்ல, கேட்பதற்கும் இனிமையுடைய வளல்ல என்று கூறிவிடுவான் என்று எண்ணியதில்லை. அத்துடன் அவள் இதுவரை தானே சிறந்த அழகி யென்றும், மிகச் சிறந்த நடன நங்கை யென்றும் நினைத்து வந்திருந்தாள். சிறு பெண்களுக்கு இயல்பான முறையில் இந்த இரண்டு செய்திகளிலும் அவளுக்குச் சிறிது தற்பெருமை கூட இருந்தது. ஆனால் அதே டாலிமி இப்போது ஜங்கியின் சூதுவாதற்ற நேர் வாக்குகளைக் கேட்டுத் தன்னைச் சமுதாயத்திலேயே மிகக் கேவலமான மனிதர்களிலும் கேவலமானவளென்று கருதத் தொடங்கினாள். அந்த நாள் முதலே டாலிமி விழாவில் ஜங்கியுடன் நடனமாடுவதை நிறுத்திவிட்டாள். அதே நாளிலிருந்தே ஜங்கியிடம் மனம் திறந்து பேசுவதையும் கைவிட்டு விட்டாள். ஆனால் இதனால் டாலிமி இதுமுதல் ஜங்கியைத் தன் உயிர்ப் பகைவனாக நினைத்து விட்டாள் என்பது பொருளன்று. நேர்மாறாக அவனுடைய நேர்மையான பேச்சுக் காரணமாக, அவள் அவனைப் பகைவனாகக் கருதுவதற்குப் பதில், திறந்த உள்ளம் படைத்தவன் என்றே கருதத் தொடங்கினாள். அவன் உள்ளத்தில் முன்னொருத்தி ஆட்சி செய்தாள் என்றும், அந்த இடத்தைத் தான் என்றும் பெற முடியாதென்றும் அவள் எவ்வளவு உணர்ந்தாலும், அந்த அளவில் அவளுக்கிருந்த ஆசா பாசங்கள் ஆவியாய்ப் பறந்து விட்டனவே தவிர, அவள் பாசம் மாறவில்லை. அவள் ஜங்கியிடம் குடும்ப உறவுப் பாசத்தைத் துறந்துவிட்டு, பற்றற்ற உறவே வைத்துக் கொள்ளத் தலைப்பட்டாள். ஒரு நாள் அவள் இம்மாதிரி சிந்தனைகளில் ஆழ்ந்து அமர்ந்திருந்தாள். அப்போது அவள் முன்னே ஜங்கி அவள் வீட்டை நோக்கி வருவது தெரிந்தது. டாலிமி அப் போது வீட்டில் தனியேதான் இருந்தாள். தாய் தந்தையர்கள் வேறு வேலையாய்ச் சென்றிருந்தார்கள். ஜங்கி மெள்ள மெள்ள வந்து முற்றத் தளத்திலேயே உட்கார்ந்து கொண்டு, `டாலிமீ! உன்னுடைய தந்தை எங்கே போயிருக்கிறார்?' என்று கேட்டான். `ஜங்கி, அப்பா இன்று வீட்டில் இல்லை, மாலை யானதும் வருவார். அவரை ஏன் தேடுகிறாய்?' என்று கேட்டாள். ஜங் : டாலிமி, ஒரு காரியமாகத்தான். நாளை நான் சோவன்ஷிரீ போக விரும்புகிறேன். டா : ஏன்? ஜங் : டாலிமி, உன்னிடம்தான் நான் என் செய்திகள் எல்லாம் தெரிவித்திருக்கிறேனே! இப்போது ஓர் உதவி செய்வாயா? டா : என்ன உதவி, சொல்! செய்கிறேன். ஜங் : உன்னுடைய தந்தையிடம் மூன்று நான்கு படகுகள் இருக்கின்றன. நாளை சோவன்ஷிரீ போக ஒரு படகு வேண்டும். டா : படகு எதற்கு என்று நீ இன்னும் சொல்ல வில்லையே! ஜங் : உன்னை நான் ஒரு தங்கையாகவே மதித்து நேசிக்கிறேன். உன்னிடம் நான் எல்லாம் மனம் திறந்து சொல்லத்தான் போகிறேன், கேள். டா : அப்படியா? ஜங் : பானேயியினுடைய தாய் தந்தையர் அவளை வலுக்கட்டாயமாகக் கமுதனிடம் ஒப்படைத்துவிட இருக்கிறார்கள். தன்னை இட்டுக்கொண்டு ஓடிவந்து விடும்படி அவள் எனக்குத் தூதுச் செய்தி அனுப்பியிருக்கிறாள். டாலிமி, என் உயிரே போனாலும் நான் அவளைக் கைவிட முடியாது. உன் தந்தையிடம் நானே வந்து கூறுகிறேன். ஆனால் எனக்குப் படகு கொடுத்துதவும்படி நீயும் கூறுவாயல்லவா? டா : (திருப்பிய முகத்துடன்) ஆம், கூறுவேன். ஜங் : (டாலிமியின் கைகளைப் பற்றிக் கொண்டு) டாலிமீ! நீ உண்மையிலேயே என்னை ஒரு அண்ணன் போலத்தான் நேசிக்கிறாய். ஆகட்டும், டாலிமி! நான் போய் வரட்டுமா? டா : (முகம் திருப்பிக் கொண்டு) ஆம் போய்வா, ஜங்கி! ஜங்கி : இது என்ன டாலிமீ! நீ அழுகிறாயே! நீ ஏன் அழவேண்டும்? டா : பானேயியின் துயர் பற்றிக் கேட்டுத்தான் அழுகிறேன். இது கேட்டு ஜங்கி எழுந்தான். ஆனாலும் டாலிமியின் கண்களில் நீர் வருவதை இன்று கண்டு, அவன் இதயத்தில் கொஞ்சம் சந்தேக உணர்ச்சியே ஏற்பட்டது. அதே சமயம் எது எப்படியானாலும் டாலிமி மிகவும் கனிந்த இதய முடையவள் என்றும், அவள் உண்மையிலேயே ஒரு தங்கைபோல உதவும் பண்புடையவள் என்றும் மட்டும் அவன் உறுதியாக நம்பினான். இனி, இங்கே டாலிமியின் நிலைபற்றிக் காண்போம். வாசகர்களே, டாலிமியின் உண்மை மன நிலையை நீங்கள் அறிந்துதானே இருக்கிறீர்கள்! ஆகையால் அவள் ஏன் அழுதாள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. ஜங்கியின் காதல் இன்னும் பானேயியிடமே உறைந்து நிற்கின்றது என்பதை அவள் கண்டாள். அந்தக் காதல் வெள்ளத்தில் ஒரு சிற்றோடைகூட வேறு எந்தத் திசையிலும் ஒழுக முடியாது. இதையறிந்துதான் அவள் உள்ளார்ந்த ஆழ்ந்த மனவேதனை அடைந்தாள். அவள் எவ்வளவோ முயன்றும் அவ்வேதனையை அடக்கி வைக்க முடியவில்லை. அவள் இதய வேதனை வெள்ளம் தானாக உடைத்துக் கொண்டது - வேகமிக்க ஒரு நீரோட்டம் வெளியே பாய்ந்தது - அவள் அழ நேர்ந்தது! இதயத்தில் உயிர் வாதனை எவ்வளவு பெரிதாய் இருந்தாலும், அவள் காதலில் தன்னலத்தின் தடம் புகவேயில்லை. படகு உதவுவதனாலேயே ஜங்கிக்கு மன அமைதி கிடைக்கு மானால், அந்த உதவி மூலமே அவள், அவன் காதலில் ஏன் பங்கு கொள்ளக் கூடாது? அதுவுமல்லாமல், இந்த உதவி காரணமாகவே, அவன் தன் உள்ளத்தில் அவள் நினைவுக்கு ஓர் இடம் கட்டாயம் கொடுப்பான் - இவ்வாறு அவள் நினைத்தாள். இனி அங்கே பானேயியின் நிலையைப் பார்ப்போம். பானேயியின் நிலை என்ன ஆயிற்று? தந்தை அவளை வலுக்கட்டாயப்படுத்தி ஒப்படைக்கத்தான் துணிந்திருந்தான். ஆனால் கடவுள் சித்தம் வேறு வழியில் இருந்தது. அவன் ஒப்படைக்கச் சபதமிட்ட அன்றைக்கு அவன் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஏனென்றால் அதே நாளில் கமுதன் வேறு அலுவலாகப் பதாலிபாம் போக வேண்டிய தாயிற்று. அவன் இல்லாதிருந்த இரண்டு நாட்களுக்குள்ளாகப் பானேயி தாய் தந்தையரிடமிருந்து பிரிந்து போய் விடுவதென்ற திட்டத்தில் இறங்கிவிட்டாள். இதனால் தோழி தோழர்கள் தன்னை ஏளனமாகக் கருதக்கூடுமானாலும், அது அவ்வளவு கேடில்லை என்று அவள் முடிவு செய்து, தன் காதலனுடன் எப்படியும் போய்ச் சேர்ந்தே விடுவது என்று துணிந்தாள். அது மட்டுமா? `காட்டு யானைக்கோ, எருமைகளுக்கோ, நான் பயப்படப் போவதில்லை; காட்டுப் பன்றிகளுக்கும் அஞ்சப் போவதில்லை; கரடி, புலிகளுக்கும் நடுங்கப் போவதில்லை. எல்லாப் பயமும் துறந்துவிட்டு ஓடிப்போவேன்' என்று முடிவு செய்தாள். கால இடச் சூழல்கள் அவளுக்கு வாய்ப்பளித்தன. ரகமி அவளுக்கு உதவ முன்வந்தாள். அவள் மூலம் பானேயி ஜங்கிக்குத் தூதனுப்பினாள். ஜங்கி நள்ளிரவில் ஒரு படகெடுத்துக் கொண்டு துறையருகே வந்து சேர்ந்தான். வெளிக்குச் செல்வது போலப் பானேயி ஆற்றருகே சென்று படகில் ஏறிக் கொண்டாள். அவள் ஏறியதும் படகு அம்பு வேகத்தில் சோவன்ஷிரீ அன்னையின் நடு நீரோட்டத்துடன் ஓட்டமாக ஓடிற்று. ஜங்கியின் உறுதிவாய்ந்த கைகள் பயின் கட்டையைப் பிடித்துத் துடுப்புதைத்த வேகத்தில் இரவோடிரவாகப் படகு பறந்து சென்றது. வெளியே சென்ற பானேயி திரும்பிவர நேரமான தறிந்த கிழவன் தாமேதும் கிழவி நிரமாவும் கிராமத்தில் எங்கும் சென்று அவளைப் பற்றி ஊராரிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். இதனால் ஊர் முழுவதும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டன. மக்கள் நால்வழிகளிலும் தேடப் புறப்பட்டார்கள். ஆனால் பானேயியின் தடத்தை எங்கும் காணவில்லை. 9. நடுக் காட்டிலே! சோவன்ஷீரீ நதியின் மறு கரை முழுவதும் ஒரே காடு. கரையருகே இடையிடையே காடு நெருக்கமாக இருந்தது. அதில் எவரும் எளிதாகக் கடந்து செல்வது அரிது. அதே காட்டின் நடுவில் ஒரு குடிசை இருந்தது. அதனுள் ஓரிருவர் நடமாடினர். ஒரு வடிவம் ஆண், ஓர் இளைஞன்; மற்றது ஒரு பெண், ஓர் இளநங்கை. அவர்கள் யார் என்று வாசகர்களுக்குக் கூற வேண்டுவதில்லை; இளைஞன் ஜங்கி, இள நங்கை பானேயியே. பானேயியும் ஜங்கியும் படகிலேறி ஓடிச்சென்ற அந்த நள்ளிரவில், கிராமத்து மீரீ மக்கள் எல்லாருமே நாலா பக்கமும் சென்று கிராமத்தை அடுத்திருந்த பகுதிகள் முழுவதையும் மூலை முடுக்குகளெல்லாம் சென்று துருவித்துருவித் தேடினார்கள். இரவோ கருக்கிருட்டாய் இருந்தது. ஆகவே கொஞ்ச நேரம் தேடியதன்பின், எல்லாரும் வீட்டுக்குத் திரும்பிச் சென்று விட்டார்கள். ஆனால் பொழுது விடிந்ததுமே சோவன்ஷீரீ கிராமத்திலுள்ள மீரீகள் கிட்டதட்ட அனைவருமே திரண்டு, கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமாகப் பானேயியை எங்கும் தேடலாயினர். இதற்குள் படகில் சென்று கொண்டிருந்த பானேயிக்கும் ஜங்கிக்கும் இது பற்றிய துப்பு எட்டிவிட்டது. இனி படகில் செல்வது ஆபத்து என்று அறிந்து விடியற்காலத்திலேயே அவர்கள் படகைத் துடுப்பு பயின் கட்டைகளுடன் கட்டி சோவன்ஷிரீயில் மிதக்க விட்டபடி, காட்டிற்குள் புகுந்து விட்டனர். அந்தப் பகல் வேளை முழுவதையும் அவர்கள் காட்டிலேயே கழித்துவிட்டு மாலை வேளைக்குள் கூணாசூந்தி கிராமத்திலுள்ள காட்டில் புகுந்து அங்கே தங்கலாயினர். முன்பே செய்த ஏற்பாட்டின்படி, மிதந்து சென்ற படகை டாலிமியின் தந்தை சென்று கைப்பற்றிக் கொண்டான். சோவன்ஷீரீ கிராமத்து மீரீ மக்கள் பானேயியைத் தேடி மற்றக் கிராமங்களுக்கும் சென்றனர். கூணாசூந்தி கிராமத்துக்கும் சென்றார்கள். ஓரிடத்திலும் பானேயியைப் பற்றிய செய்தி கிடைக்க வில்லை. ஆனாலும் ஒரு செய்தி இதற்குள் அவர்களுக்குக் கிட்டிவிட்டது. ஜங்கியும் இப்போது கூணாசூந்தி கிராமத்தில் இல்லை. ஜங்கியே இந்தக் காரியத்துக்கு மூலபுருசன் என்பது இதனால் தெளிவாயிற்று. மேலும் ஏழு எட்டு நாட்கள் தேடிப் பானேயி பற்றிய புலம் எதுவும் கிட்டாது போகவே, அவர்கள் அவளை மீட்க முடியும் என்ற நம்பிக்கையையே கைவிட்டு விட்டார்கள். ஜங்கி, தான் சேர்த்திருந்த ரூபாய்களின் உதவியாலும் நல்ல உள்ளம் படைத்த டாலிமியின் துணையாலும், நாள்தோறும் மாலை வேளைக்குக் கிராமத்துக்குச் சென்று அரிசி, உப்பு, எண்ணெய் முதலிய வாழ்க்கைப் பொருள்கள் வாங்கி வந்து, கிட்டத்தட்ட ஒரு மாத காலம் காட்டிலேயே இருந்து கழித்தான். ஜங்கியும் பானேயியும் தம்மைக் கடவுளே ஜோடியாகப் படைத்திருந்தார் என்றும், கார்சிங் - கார்ட்டான் சாட்சியாகத் தம் காதலுறுதி செய்யப்பட்டதால், அம் முறையில் சதி பதிகளாகி விட்டதாகவும் எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்கள். தாய் தந்தையரால் கைப்பிடித்துக் கொடுக்கப்படா விட்டாலும்கூட, இக் காரணங்களால் ஜங்கியே தனது வீட்டுத் தலைவன், தன் இயல்பான கணவன் என்றும் அவள் உறுதியாக நம்பினாள். அவள் அன்பு முழுமைக்கும் ஜங்கி பாத்திரமாய் இருந்தான். இதனால் வீட்டுக்கு மட்டுமன்றி, வஞ்சனை, சூதுக்கு இடமில்லாத அந்த மீரீ நங்கையின் உள்ளத்துக்கும் அவன் தலைவனானான். அதிகமாக வாய் திறந்து பேசியறியாத சரள உள்ளம் படைத்த மீரீ நங்கை தன் உள்ளத்தையும் உயிரையும் பாச பந்தங்களையும் ஜங்கியின் காலடியிலேயே வைத்துக் கவலையற்றிருந்தாள். மாதம் ஒன்று கழிந்தது. ஏதாவது தீவுகளிலிருந்த மீரீ கிராமத்திலோ அல்லது கேர்க்கடியா அல்லது மாச்ச கோவாப் பகுதிகளுக்கோ சென்று அங்குள்ள மக்களுடன் இணைந்து வாழலாம் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். இத்தகைய எண்ணத்துடன் அவர்கள் இருவருமாகச் சேர்ந்து சமைத்து உண்டு, தணல் எழுப்பி அதனருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரெனக் காட்டுக்குள்ளிருந்து ஏதோ ஆளரவம் கேட்டது. இருவர் மனத்திலும் சந்தேகம் ஏற்படத் தொடங்கிற்று. ஆனால் அவர்கள் எச்சரிக்கையடையுமுன்பே, திடீரென்று கமுதனுடன் பத்துப் பதினைந்து மீரீ மக்கள் வந்து அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களிடையே இருந்த முதியவன் தாமேத் சட்டெனப் பானேயி கையை வந்து பிடித்துக் கொண்டான். கமுதனும் பானேயி அருகில் வந்ததும் ஜங்கியைக் கண்டு, `அடே நாயே, வெட்கமில்லை! திருட்டு நாய்!' என்று பலவாறாகத் திட்டிக் கைகளாலும் குத்தத் தொடங்கினான். நம்முடைய ஜங்கி கோழையல்ல. அவனும் மீரி இளைஞன் தான்; உருண்டு திரண்ட தசை முண்டுகள் அவனுக்கும் உண்டு. எனவே அவனும் கமுதனின் கழுத்தைப் பிடித்து நெரிக்கலானான். கொஞ்ச நேரம் இருவரும் கட்டிப் புரண்டார்கள். ஆனால் ஜங்கி கமுதனை வளைத்துப் பிடித்து தரையிலே தள்ளி அவன் நெஞ்சிலேறி ஒன்றிரண்டு உளிக்குத்துக்கள் விட்டான். ஆனால் இதற்குள் மற்ற மீரிகளில் சிலர் வந்து அவனைப் பிடித்து இழுத்து அப்புறப்படுத்தினார்கள். சிலர் அவனை அடித்தார்கள். சிலர் அவனைக் குத்தினார்கள். உயிருக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருந்த கமுதன்கூட இப்போது தேறுதலடைந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டான். இச்சமயம் அவன் நிலையறிந்த பானேயி, கோவெனக் கதறி, `ஐயோ, என் கண்ணாளனைக் கொன்று போட்டார்களே, என் கண்ணாளனைக் கொன்று போட்டார்களே!' என்று கூவிக் கொண்டு தன் நெஞ்சிலேயே தான் ஓங்கி ஓங்கிக் குத்திக் கொண்டு அரற்றி அழுதாள். அவள் அழுகைச் சத்தம் பரவி ஆகாயமெங்கும் முழங்கிற்று. உறுப்புக்களையெல்லாம் உடம்பில் ஒட்டிக் கொண்ட அட்டைகளாகக் கருதியவள்போல அவள் அவற்றைச் சந்து சந்தாகப் பிய்க்கத் தொடங்கினாள். ஜங்கியின் அடியுதைகள் எப்படியும் நீடிக்க வகை யில்லாமல் அவற்றை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் அடி உதைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, டாலிமியின் தந்தையின் தலைமையில் கூணாசூந்தி கிராமத்திலுள்ள மீரி மக்கள் அங்கே வந்து விட்டார்கள். வரும்போதே டாலிமியின் தந்தை அலறினான். `இது என்ன, உங்கள் மனம் போல அடி உதையா? இது என்ன இப்படி அடாத செயல் செய்கிறீர்கள்? அவன் அனாதை; யாரும் இல்லாதவன்; உங்களுக்கு அவன் உறவும் அல்ல. இந்த நிலையிலா இத்தனை பேர் சேர்ந்து அவனைத் தனியாய் இருக்கும் சமயம் இப்படி ஈவிரக்கமின்றி அடி உதை செய்வது? அத்துடன் எதிர்த்து எதுவும் செய்ய முடியாதவன் ஆயிற்றே! அவன் எதுவும் குற்றம் செய்திருந்தால்கூட, சட்டப்படி அவன் மீது வழக்கு வேண்டுமானால் தொடுத்துக் கொள்ளுங்கள். அதல்லாமல் அடி உதையில் இறங்க வேண்டாம். அது நல்லதன்று' என்று அவன் பேசினான். டாலிமியின் தந்தை இவ்வாறு கூறியவுடனே அடி உதைகள் நின்று விட்டன. ஆயினும் பானேயியைக் கமுதன் கையைப் பிடித்து இழுப்பதைக் கண்ட ஜங்கி வைரம் பாய்ந்த கம்பீரக் குரலில் அவனை நோக்கி முழங்கி எழுந்தான். `அடே கமுத்! உன் உடலில் உயிர் இருக்க வேண்டுமானால், பானேயியை நீ தொடாதே! அவளைப் பிடித்துக் கொண்டு போக வேண்டுமானால் அவள் தந்தை இருக்கிறார். அவர் பிடித்துக் கொண்டு போகட்டும்' என்றான். டாலிமியின் தந்தையும் ஜங்கி பக்கமாக நின்று, `அவன் கூறுவதே சரி' என்றார். எல்லா மீரிகளும் இப்போது ஒருங்கே திரண்டு கூணாசூந்தி கிராமத்துக்கு வந்து பஞ்சாயத்துக் கூடினார்கள். ஜங்கியின் கன்னங்கள் வீங்கியிருப்பதைக் கண்டு டாலிமி கண்ணீர் பெருக்கினாள். ஆயினும் விரைவில் அவளுக்குத் தன்னுடைய புதிய கடமை ஒன்று நினைவுக்கு வந்தது. அவள் பானேயியைத் தன்னுடன் கூட்டிக் கொண்டு சென்று அவளுக்கு உணவு தந்தாள். கூணா சூந்தி கிராமத்தில், மீரி மக்கள் ஆரவாரமாகக் கூடிப் பஞ்சாயத்து நடத்தினார்கள். எந்தவித ஒழுங்குமில்லாமல் ஆளுக்கொரு வகையாகப் பேசிக் கூப்பாடு போட்டதுதான் மிச்சம், எந்தவித முடிவுக்கும் அவர்களால் வர முடியவில்லை. 10. இலட்சுமிபுர நகரத்திலே! காலை எட்டு ஒன்பது மணி அடித்தது. இலட்சுமி புரநகரத்தின் நீதிமன்றத்தில் அதிகாலையிலேயே ஒன்றிரண்டு பணியாட்கள் வந்திருந்தார்கள். ஆனால் பலர் கும்பல் கும்பலாகக் கூடி, காலை விவரங்களைப் பற்றி அறிய அஞ்சல் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் ஒரு பெரிய மனிதர் வீட்டின் முன் உட்கார்ந்து பேசிக் கொண்டும், நகையாடிக் கொண்டும் நேரம் போக்கினார்கள். ஒன்றிரண்டு கனவான்கள் கார்த்திகை மாதத்தின் சாகுபடியின் விளைச்சல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு காலை எட்டு, ஒன்பது ஆகும் வரை கழிந்தது. எல்லாருமே அவசர அவசரமாகக் குளித்து முழுகிச் சரியாகப் பத்து மணிக்கு நீதி மன்றத்திற்கு வந்தார்கள். இலட்சுமிபுரத்தில் நீதி மன்றத்துக்கான கட்டடம் மிகச் சிறிதாகவே இருந்தது. ஆனாலும் அது நல்ல நாகரிகமாகவும் துப்புரவாகவும் அமைந்திருந்தது. பணியாட்களின் முயற்சியால் நாற்புறமும் சுத்தமாகப் பெருக்கி அணி செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்ப்பவர் எவர்க்கும் மனக்கிளர்ச்சி உண்டாகாமல் இராது. மணி பத்து அடித்தது. எல்லா அதிகாரிகளும் பணியாட்களும் எல்லா அலுவலர்களும் வந்து சேர்ந்தார்கள். படிப்படியாக அவர்கள் கும்பு கும்பாக ஆங்காங்கே கூடி அவரவர் மனம் போலக் குசுகுசுவென்று வம்பளப்புத் தொடங்கினார்கள். வீரமும் கம்பீரமும் கலந்த தோற்றமுடைய ஒரு பெரிய மனிதர் தணிந்த குரலிலேயே ஏதோ மகிழ்ச்சிகரமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தார். பேச்சுக் கிடையிலேயே ஒன்றிரண்டு வெற்றிலைகளைப் பாக்குகளுடன் மடித்துப் போட்டுக் கொண்டார். இவர் கனவானானாலும் சரள சுபாவமும், நல்ல எளிய நடையுடை பாவனையும் கொண்டவர். இரக்க உள்ள முடையவராகவும் சத்தியத்துக்குப் பயந்தவராகவும் உள்ளவர், சற்று வயதேறியவரான போதிலும்கூட அவர் பேச்சில் சுவை குன்றவில்லை. அவர் எப்போதும் இனிய சொற்களையே வழங்கினார். பேச்சுக்கு இடையிடையே அங்கங்கே இரகசியச் சூரணம் வைத்துப் பேசுவதிலும் அவர் சமர்த்தராயிருந்தார். இவருக்குப் பின்னால் இன்னொரு பெரிய மனிதர் இருந்தார். அவர் இடையிடையே சென்று வேலையில் ஈடு பட்டும், இடையிடையே வந்து பேச்சின் நடுவில் இரண்டொரு சொற்கள் கூறிச் சிரித்தும் வந்தார் - பிறர் சிரிப்பதற்காக வென்றே ஏதாவது சொல்லியும் வந்தார். இவர்களுக்குப் பின்புறமாகக் கல்விமிக்க வயது சென்ற ஒரு வக்கீல் இருந்தார். அவர் சமஸ்கிருதத்தில் ஒன்றிரண்டு சுலோகங்கள் படித்து அவற்றைப் பற்றி விஸ்தரித்துக் கொண்டிருந்தார். அவர் பேச்சில் எத்தனையோ அழகழகான புராதனச் செய்திகள் மிளிர்ந்தன. இவரும் பேச்சுக்கிடையே வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டார். ஒரு வயதான அலுவலர், நாற்காலியிலமர்ந்து, குனிந்த தலையுடன் வேலையிலாழ்ந்திருந்தார். அவர் நெற்றி மையத்தில் மிகவும் சௌந்தரியமும் கம்பீரமும் வாய்ந்த ஒரு பொட்டு இருந்தது. அவர் கழுத்தில் ஒரு மாலை அணிந்திருந்தார். அவ்வப்போது அவர் வேலையைச் சற்று நிறுத்தி வக்கீல் கனவானின் பேச்சிலும் கருத்துத் திருப்பினார். கச்சேரி கிட்டதட்ட நிரம்பிவிட்டது. இச்சமயம் ஒரு முசல்மான் அலுவலர் அங்கே வந்தார். அவர் வந்ததும் நல்ல ஒளி பொருந்திய காத்திரமுடையவராக விருந்த சபையின் தலைவரான ஒருவரும், கிச்சிலிப் பழம் போலவே காணப்பட்ட இன்னொரு கனவானும் ஒரே குரலில் `வாருங்கள் அண்ணா, வாருங்கள்! உங்கள் வருகை இல்லாமல்தான் இந்தச் சபை அரைகுறையாய் இருந்து வந்திருக்கிறது' என்றார்கள். முசல்மான் அலுவலரும் ஒரு சிறு புன்னகையுடன் உடனே ஆசனத்தில் அமர்ந்தார். கச்சேரியும் இப்போது நிறை கச்சேரியாய் விட்டது. இவ்வாறு நீதி மன்றத்துக்கு வெளியே குமாஸ் தாக்களும் பணியாட்களும் சிறுசிறு உரையாடலில் ஈடுபட்டிருந்தார்கள். இலட்சுமிபுரத்தின் நீதிமன்றத்துக் குரிய எல்லாக் குமாஸ்தாக்களும் பணியாளர்களுமே நல்ல சரளசுபாவம் உடையவர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் நல்லாதரவைப் பார்த்தால், அசாமிலேயே வேறு எங்கும் இவ்வளவு நட்புப் பாசத்தையும் நல்லிணக்க ஒற்றுமையையும் காண முடியாது என்று எவரும் கூறி விடுவார்கள்! ஆனால் இந்த ஒற்றுமை அரசாங்க காரியங்களுக்குக் குந்தகமாயிருந்ததாக எவரும் எண்ண முடியாது. ஏனெனில் அதுவகையில் சிறந்த கட்டுப்பாடு இருந்தது. அவ்வளவு கட்டுப்பாடு வேறு எங்கும் இருக்க முடியாது. மணி பன்னிரண்டரை ஆயிற்று. நகரத்தின் பெருந் தலைவர், தருமத்தின் திருவுருவம், நீதியின் பரிபூரண வடிவமாகக் குற்றவியல் துறை நடுவர் வந்தமர்ந்தார். நியாயாசனத்தில் அமர்ந்ததும், எல்லா அலுவலர்களும், வக்கீல்களும், குமாஸ்தா முதலியோரும் நின்று கொண்டே தங்கள் நியம வழக்கப்படி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பண்பாளரான நடுவரும் அவர்கள் வணக்கத்தை ஏற்றுப் புன்னகை செய்தார். வாசகர்களே, இப்படிப்பட்ட ஒரு நீதிபதி கிடைப்பது அரிது. அவர் காட்டிய ஆதரவு உண்மையில் எல்லாருக்குமே முழுத் திருப்தி அளித்தது. அவர் எவரிடமும் எத்தகைய உயர்வு தாழ்வும் காட்டுவதில்லை. கெட்டவருக்கு அவர் ஒரு எமன்; நல்லவருக்கு ஒரு நண்பன் - துயருறும் ஏழை மக்கள் இதய வேதனைகளை அறிந்தவர் அவர். மாவட்ட முழுவதும் பரவலாக உள்ள எல்லாக் காரியங்களையும் எப்போதும் கண் முன்னே கண்டு, எல்லாவற்றையும் தம் கைகளாலேயே செய்பவர் அவர். ஆம், இத்தகைய ஒரு நீதிபதி கிடைப்பதற்கு மிகவும் அருமையான வரேயாவர். அவரிடம் எல்லாருக்கும் பயம் உண்டு: எல்லாரும் அவரைக் கண்டு நடுங்கினார்கள். ஏழை எளியவர், துன்பப்படுபவர் என்பதற்காக அவர் அலுவலர்களிடம் தண்டம் விதிக்காமல் இருந்தவரல்லர். ஆனாலும் எல்லோருடைய இருதய சுபாவத்தையும் அவர் நன்கு துருவி அறிந்தவராயிருந்தார். இதனால் அவர் குணவான்கள் எல்லாரது குணங்களையும் மதித்து நடந்தார். நன்றாக உழைப்பவனின் உழைப்பைத் தம் கண்ணாலேயே கண்டு, அவர்களைத் தம் சொந்தப் பிள்ளைகளைப் போலக் கருதி அன்புடன் நடத்தினார். மலைப் பகுதியிலுள்ள மீரீ, தப்லா வர்க்கங்களுக்குரிய எல்லாப் பழக்க வழக்க முறைகளையும் அவர் நன்றாக அறிந்திருந்தார். மீரீ, தேவரி, தப்லா, ஆபர் ஆகிய பல்வேறு குழுவினரின் ஆசார விவகாரங்களைப் பற்றிய செய்திகள் யாவும் அறிந்தவர் அவர். நடுவரின் இந்த நல்ல செயல் முறைகளுக்கு அவர் குணம் மட்டும் காரணமாயில்லாமலிருக்கலாம். ஆனால் அவர் குணம் அவற்றுக்குரிய காரணங்களில் ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆனால் முக்கிய காரணம்யாதென்றால், இலட்சுமிபுரத்து மக்களுடைய நேர்மை வாய்ந்த எளிய மனப்பான்மையேயாகும். நம் தேசத்தில் நடுவர்கள் கெட்டவர்கள் என்று கூற முடியாது. ஆனால் அங்கங்கே நம் மக்களின் கருத்து மனப்பான்மைகள், வாக்கு நடைமுறைகள் தாம் பல இடங்களில் பல நல்ல நடுவர்களைக் கெட்டவர்கள் ஆக்கிவிடுகின்றன என்னலாம். நடுவர் ஆசனத்தில் அமர்ந்தவுடன் முதலில் சொத்து விவகாரம் சம்பந்தமான பத்திரங்கள் வந்தன. அவற்றைப் பார்த்து முடிந்ததும், படைத்துறைச் செய்திகள் வந்தன. அவற்றை எடுத்து முடிவு கூறிக்கொண்டிருக்கும் சமயத்தில் திடுமென இருபது இருபத்தொரு மீரீ ஆடவர்கள் சிறு பெண்களுடன் சேர்ந்து ஒரு கூட்டமாக நீதி மன்றத்திற்குள் நுழைந்தார்கள். பெண்களில் ஒரு யுவதி தேம்பித் தேம்பி அழுத வண்ணம் கைகளால் நெஞ்சில் அறைந்து கொண்டு பரிதாபமாக வந்தாள். அவளை ஒருவன் வலுக்கட்டாயமாகப் பற்றி இழுத்துக் கொண்டு வந்தான். இவ்வளவு இளவயதுடைய பெண் எக்காரணத்தினால் தன் உடலைத் தானே இப்படி வருத்திக் கொள்ளுகிறாளோ என்ற அதிசயத்துடன் நீதி மன்ற அலுவலர்கள் கூட ஆர்வத்துடன் இந்த அரிய காட்சியையே நோக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய மனிதர் முன்வந்து `உனக்கு என்ன அம்மா' என்று கேட்டார். அதற்குப் பதிலாக வேறு ஒருவர் எதிர் வந்து `அடேடே, இந்த யுவதிதானே சென்ற வருஷம் விழாவின் போது வந்து நடனமாடினாள்? அவளேதான்' என்றார். மற்றொருவர், `இதோ பாருங்கள்! சென்ற ஆண்டு குழல் வாசித்தானே, அதே மீரீ இளைஞன் அல்லவா இவன்! தம்பி, இப்போது உனக்கு என்ன வந்தது?' என்று கேட்டார். மீரீ மக்கள் ஒரு கும்பலாகக் குரலெழுப்பினார்கள். `இவளை இவன் கடத்திக் கொண்டு ஓடியிருக்கிறான், ஐயா!' என்று அவர்கள் கூவினார்கள். ஆனால் இந்தப் பேச்சை இடைமறித்து இன்னொருவன் `கடத்திக்கொண்டு போகவில்லை, அவளாகத்தான் வந்தாள்' என்றான். வாசகர்களே! இவர்கள் யார் என்பதை நீங்கள் இதற்குள் அறிந்து கொண்டிருப்பீர்கள். இவர்கள் கமுதன், தாமேத், டாலிமியின் தந்தை, பானேயி, டாலிமி முதலிய மீரீ மக்கள்! அவர்கள் முதலில் தங்களுக்குள்ளேயே பஞ்சாயத்துச் செய்ய முயன்று, அது முடியாததனால், நீதிமன்றத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் வக்கிர புத்தியுடைய மனு எழுத்தாளனின் மனுப்படி, ஜங்கி மீது திருட்டுக் குற்றம்தான் சாட்டப்பட்டிருந்தது. நடுவர் விசாரணை தொடங்கினார். வாசகர்களே! இருபக்கத்தின் வளைவு நெளிவான வாதங்களும் வெளியிடப் பட்டன. இரு பக்கத்தாரும் தங்கள் தங்களுக்கேற்ற சாட்சியங்களை வழங்கினார்கள். இருபக்கங்களிலும் எவரும் தாம் பிடித்த பிடியிலிருந்து விலகுவதாக இல்லை. மீரீ இனம் பிடிவாத இனம் என்பதை நாம் மேலே குறிப்பிட்டிருக்கிறோம். தன் கருத்தைத் தன் வயிற்றில் அடக்கிக் கொண்டே ஒவ்வொருவனும் பேச்சில் பதினாலு பிரமாண்டங்களையும் சுற்றி, நாலாயிரம் ஆட்டப் பாட்டங்கள் செய்வான். ஆனால் உண்மையில் அவன் தன் கருத்துக்கு இப்புறமோ அப்புறமோ ஒரு அடி எடுத்து வைக்க மாட்டான். ஒவ்வொரு பேச்சும் தான் அடக்கிக் கொண்டுள்ள பிடியை நோக்கியதாகவே இருக்கும். இதன்படி கமுதனும் தாமேதும் ஒரு பக்கத்திலிருந்து திருட்டு, கொள்ளை, ஏமாற்று, கள்ளக்கடத்துமானம் ஆகிய குற்றச்சாட்டுகளையெல்லாம் இணைத்துத் தொடுத்தார்கள். ஆனால் நடுவருக்கு இந்த ஏடா கோடங்களின் சூழல்களால் தலை சுற்றிற்று. இக் கூற்றுக்களிடையே எது உண்மை எது பொய் என்று அவரால் பிரித்தறியக்கூட இயலவில்லை. இறுதியில் அவர் கடத்துதல் வழக்கினை ஏற்று ஜங்கியின் பக்கமாகவே தீர்ப்புச் செய்தார். அதன்படி வழக்குக் குற்ற மனுவாகச் செயல்பட முடியாது. திருட்டுக்கான எந்தத் தெளிவும் இல்லை. உரிமை வழக்கு வேண்டுமானாலும் தொடுக்கலாம். அப்படி உரிமை வழக்கில் தீர்ப்பு ஏற்படும் வரை பானேயி தந்தையிடமே இருக்க வேண்டும். ஜங்கியோ, கமுதனோ, ஏன் தாய் தந்தையர்கள்கூட, அவளுக்கு எவ்வித தொல்லையும் கொடுக்கக்கூடாது என்று முடிவாயிற்று. பானேயியின் தாய் தந்தையர் இதன் பின்னும் நடுவரை அணுகி, நட்பு முறையிலேயே, `ஐயனே! நாங்கள் எல்லாவற்றையும் பஞ்சாயத்திலேயே முடிவுசெய்து கொள்வோம்’, என்று கூறிச் சென்றார்கள். முதியவனான தாமேத் பானேயியின் கையைப்பற்றி இழுத்துச் சென்றான். அவள் நெஞ்சிலடித்து அழுது கொண்டே போனாள். வழியில் தந்தை கத்தி முழங்கினான். அலுவலர்களில் இரண்டு மூன்று பேர் வாலிபர்களின் பக்கமாகத் தங்கள் கருத்தைத் தெரிவித்தார்கள். `இந்த இரண்டு பேரும் நல்ல சோடிகள்தான். தாய் தந்தையர்கள் இடையிட்டுத் தடை செய்தது தவறு. இடையே தலையிட அவர்களுக்கு என்ன உரிமை?' என்றார்கள். ஆனால் சில முதியவர்கள், `மீரீ மக்கள் தங்கள் பழக்க வழக்கப் படிதான் காரியம் செய்ய வேண்டும். தாய் தந்தையர்கள்யாரிடம் ஒப்படைத்தார்களோ, அவனுடன்தான் இவள் செல்லவேண்டும்' என்று தம் முடிவு கூறினார்கள். 11. மீண்டும் சோவன் ஷிரீ கிராமத்தில்! நடுவரின் ஆணைப்படி மீரி மக்கள் வெளியேறித் தங்கள் இடங்கள் நோக்கிச் சென்றார்கள். ஆனால் காதலன் காதலியாகிய சோடி பிரிய வேண்டியதாயிற்று. ஜங்கி கூணாசூந்தியில் உள்ள தன் சிற்றன்னை வீடு சென்றான். பானேயி தன் தாய் வீடு சேர்ந்தாள். மீண்டும் முன்போல அவள் தன்னைச் சிறு பருவத்திலிருந்தே வளர்த்தெடுத்த தாய் தந்தையர் ஆதரவிலேயே வாழலானாள். அவள் வீடு வந்து சேர்ந்ததும் அவளுடைய முன்னைய தோழிமார்கள் அவளைக் காண வந்தார்கள். ரகமியும் பாதையும் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டார்கள். `பானேயி! நீ ஏன் ஓடிப்போனாய், எங்கே ஒளிந்து கொண்டாய்? எங்களை முழுக்க முழுக்கவே மறந்து போய்விட்டாய் அல்லவா?' என்று அளந்தார்கள். அத்துடன் ரகமி அவளை முன்பின் பார்த்துச் சிரித்துக் கொண்டே `பானேயி நான் யாருடனுமே போக மாட்டேன் என்று கூறிக்கொண்டிருந்தாயே! இப்போது ஜங்கியுடன் மட்டும் காடு மேடாக ஒரு மாதம் எப்படிக் கழித்தாயடீ!’ என்று கேலி செய்தாள். நல்லதும் கெட்டதுமாக இவ்வாறு பலவும் பேசி அவர்கள் நாள் கழித்தார்கள். இன்னொருபுறம் கிராமத்தின் பழமைப்பட்ட முதியவர்களும் மதிப்புக்குரியவர்களும் வந்து போனார்கள். `அடி என் அம்மா! நீ இத்தனை ஆதாளியும் எதற்கடீ செய்தாய்? தாய் தந்தையர் சொல்லுக்கு இப்படி ஏன் ஏறுமாறாய் நடந்து கொண்டாய்? அவர்களைவிட அன்புடையவர்களாக யார் இருக்கிறார்கள்! நம்முடைய மீரீ இனப் பெண்கள்கூட இனி தாய் தந்தையர்கள் வார்த்தைகளை மீறவல்லவா தொடங்கி விடுவார்கள்! என் அம்மணி, நீ இருந்திருந்து எல்லார் மூக்கையும் சீவிவிட்டாயே, எல்லாருக்கும் அவமானமாகிவிட்டதே! போனது போகட்டும்! இனிமேலாவது தாய் தந்தையர் மனம் வருந்தாமல் நடந்துகொள். எங்கள் கண்ணின் பாவையல்லவா நீ! பெற்றோர் வார்த்தைப்படி நட!' என்று அவர்கள் புத்திமதி கூறினார்கள். எமன் பொறியில் மீண்டும் மாட்டிக்கொண்டோம் என்று பானேயி இப்போது உணர்ந்து கொண்டாள். இனி தன் காதல் துணைவனான ஜங்கியிடம் போகலாம் என்ற எண்ணம் வீண் கனவாகிவிட்டது என்பதையும் அவள் கண்டு கொண்டாள். தாய் தந்தையர் இனி தன்னை மீண்டும் கமுதனிடமே ஒப்படைக்கப் பார்த்தார்கள். ஆனால் அவள் மறுபடியும் தன் உள்ளத்தைக் கல்லாக்கி உறுதி எடுத்துக் கொண்டாள். `வரித்தால் புராரி அல்லா விட்டால் குமாரி' என்ற கௌரி சபதத்தை அவள் சங்கற்பம் செய்து, போனால் ஜங்கியிடம் போவேன், அது முடியாவிட்டால் எப்போதும் இந்த வீட்டில் நித்திய கன்னியாகவே - கலியாணம் செய்யாத விதவையாகவே - இருந்து விடுவேன் என்ற அடங்கொண்டாள். அதுவும் முடியாவிட்டால் `நஞ்சு கிஞ்சு' தின்று உயிரை விட்டு விடுவதாகவும் அவள் உறுதிக்கு உறுதி கண்டாள். நடுவர் ஆணைக்குக் கொஞ்சமாவது மதிப்புத்தர எண்ணிச் சில நாட்களுக்குப் பானேயிக்கு எந்தவிதமான தொல்லைகளும் தராமல் கிழத் தாமேதும் நிரமாவும் விட்டு வைத்திருந்தார்கள். ஆயினும் உரிமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் எண்ணம் அவர்களுக்குக் கொஞ்சமும் கிடையாது. எப்படியும் இனி சிறுக்கியின் மனம் மாறித்தான் தீரும். அவள் கமுதனுடன் போகச் சித்தமாய் விடுவாள் என்று எண்ணித்தான் அவர்கள் அப்படி வாளா இருந்தார்கள். அடித்துப் பிடித்தோ, திட்டியோ தொல்லை கொடுப்பதை எப்படியும் இனி செய்ய வேண்டாமென்று அவர்கள் எண்ணியிருந்தார்கள். இச்சமயம் கமுதன் என்ன செய்து கொண்டிருந்தான் என்று பார்ப்போம். இளைஞர் சமுதாயத்தில் கமுதனுக்கு இருந்த மதிப்பெல்லாம் போய்ப் பெருத்த அவமானமே ஏற்பட்டிருந்தது. ‘ஐயோ, என்ன அவகேடான வேளையில் நான் மாப்பிள்ளை கழிக்கப் புறப்பட்டேனோ, தெரியவில்லை!' என்று அவன் தன் மனத்துக்குள்ளே குறுகுறுத்துக் கொண்டான். கடவுள் என்னை ஜங்கியைப் போல ஒரு குணவானாக ஏன் படைக்கவில்லை! அவர் என்னை ஏன் இப்படி அவமானங்களுக்கு உள்ளாகும்படி செய்தார்?' என்று நினைத்து நினைத்து அவன் மனம் புண்ணானான். `என்னுடைய ரூபாய் எப்படியாவது என்னிடம் வந்தாக வேண்டும், அல்லது பானேயி என் வீட்டு மருமகளாகவாவது வரவேண்டும். இந்த இரண்டிலொன்று நடந்தாலன்றி நான் காலாறப் போவதில்லை' என்று நமேன்காம் சூள் எடுத்துக் கொண்டிருந்தான். கிராமத்தின் யுவதிகளிடையே ஒரு பகுதியினர் - மிகப் பெரும் பகுதியினர் - பானேயியின் பக்கமாகவே இருந்தார்கள். அவள் துக்கம் அவர்கள் துக்கமாயிற்று. அவர்கள் அவள் பெற்றோர்களையே பழித்தார்கள். வாயில் வந்தபடி தூற்றினார்கள். ஒரு சிலர் பானேயியைக் குறைகூறியவர்களும் உண்டு. ஆயினும் ரகமி கமுதன் மீது ஏசல் பாட்டுக் கட்டி விடுவதை விடவில்லை. அவனைக் கண்டவுடனே அவள் குரலும் எழுந்தது. பெண்டாளப் போறவனைக் கண்டால் நடுங்குகிற முண்டாசுக் காரனெங்கே, காணோம்! - மாப்பிள்ளைக் கொண்டாட்டக் காரனெங்கே காணோம் - அடி கொள்ளிக் கட்டை பெற்ற பிள்ளை கள்ளிக்கட்டை செல்லக்கண்ணு - என் கண்ணாட்டி கண்டால் விடுவாளோ? உன்னை என் (கண்ணாட்டி) இனி ஜங்கி இப்பால் என்ன செய்து கொண்டிருக்கிறா னென்று பார்ப்போம்! வாசகர்களே, இனி அவனையும் ஒரு தடவை சென்று பார்க்காமல் இருக்க முடியாது, வாருங்கள்! திரும்பிக் கூணாசூந்தி கிராமத்துக்கு வந்தபின் ஜங்கி, `இனி எனக்கு எவ்வித இன்பமும் இல்லை என்ற தலையெழுத்துத் தெரிந்து போய்விட்டது. பானேயி இனி எனக்குக் கிட்டப் போவதில்லை. அவளுக்காக உரிமை வழக்காட வேண்டுமானால், இருநூறு முந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் வேண்டிவரும். இவ்வளவு ரூபாய்க்கு நான் எங்கே போவது?' என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தான். இதையே எண்ணி எண்ணி அவன் உடல், உள்ளம் புண்ணாயின. ஆயினும் ஒரே ஓர் எண்ணம் அவனுக்கு ஒரு சிறிதாவது அமைதி தந்தது. பானேயி அவனை உளமார, உயிரார நேசித்தது உண்மை. இந்த நேசத்தின் ஆற்றலால் அவள் எவ்வளவு பெரிய இக்கட்டுகளையும் சமாளித்து, அவன் பக்கம் வர முயற்சி எடுக்காமல் இருக்கமாட்டாள். இந்த ஒரு எண்ணம்தான் அவனுக்கு எல்லையற்ற இருட்டில் மினுங்கும் ஒரு மங்கிய சிற்றொளியாய் ஆறுதல் தந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் டாலிமி ஜங்கியின் இந்த நிலை கண்டு உள்ளூர உருகினாள். ஜங்கி இழந்த இன்பத்திடையே அவளுக்கு ஒரு சிறிய நைப்பாசைகூட உள்ளத் தினுள்ளே எழாமல் இல்லை. `யார் அறியக்கூடும், ஒரு வேளை ஜங்கியை ஈசன் எனக்கே ஜோடியாகத் தான் படைத்தானோ, என்னவோ? ஒருவேளை எனக்காகக்கூட அவனைப் படைத்திருக்கக்கூடும்!’ இத்தகைய எண்ணங்கள் அவள் சூனிய இதயத்தின்மேல் நூலாம்படைகள் போலப் படர்ந்து வந்தன! ஒரு நாள் ஜங்கி தனியாயிருக்கும் சமயத்தில் அவள் அவனிடம் பேசினாள். `ஜங்கி! நம் கூணாசூந்தியை அடுத்துள்ள மீரீக்காடுகளில் அவர்கள் புகுந்ததைக் கண்டபோதே, நான் அப்பாவிடம் சென்று செய்தியைக் கூறினேன். அதனால் தான் அப்பா ஆட்களைத் திரட்டிக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தார்' என்றாள். இதைக் கேட்டதும் சூதுவாதற்ற நிலையிலேயே ஜங்கி பதிலளித்தான். `டாலிமி! நீ எனக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்தாய் என்பதை நீ அறியமாட்டாய். உன் தந்தை மட்டும் அன்று வந்திருக்காவிட்டால், அவர்கள் என் உயிரையே போக்கி விட்டிருப்பார்கள் என்று நீ அறிவாயா?' என்றான். ஜங்கியின் இந்த இதயங்கனிந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு, டாலிமியும் அக மகிழ்ந்து இன்பத்தில் திளைத்தாள். இவ்வாறு ஒரு மாத காலம் சென்றது. இந்த ஒரு மாத காலத்திலும் பானேயியின் மனத்தை மாற்றுவதற்காகத் தாமேதும் நிரமாவும் தாமே நேரிடை யாகவும், தோழியர் தோழர் மூலமாகவும் அவளுக்கு எவ்வளவோ நயமான வார்த்தைகளும் அறிவுரைகளும் சொல்லிப் பார்த்தார்கள். நயத்திலும் எதுவும் விட்டு வைக்கவில்லை. பயத்திலும் எதுவும் விட்டு வைக்கவில்லை. ஆனால் நம்முடைய வாய் பேசா மீரீ நங்கையின் மனம் ஒரு சிறிதும் அசையவில்லை, அவள் மனத்தில் கொண்ட சங்கற்பம் எள்ளளவும் மாறவுமில்லை. இடையிடையே நிரமா பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வது வழக்கம். அப்போது அவள், `குழந்தை, இதோ பார்! உன்னைப் பெற்று வளர்த்து உன்னைப் பருவப் பெண்ணாகும் அளவும் கண்ணில் இமையாகப் பார்த்தேன். இப்போது நீயே எங்களுக்குத் துயரம் தருகிறாயே!' என்பாள். `பேசாமல் கமுதனிடம் சென்றுவிடு, மகளே!' என்று முடிப்பாள். முதுமையுற்ற தாமேதும் அவ்வப்போது இடையிடையே சேர்ந்துகொண்டு பேச்சுக் கொடுத்தான். `பானேயீ! நீ சிறிதும் உலகம் தெரியாதவள். உனக்குக் கமுதனின் குணம் இன்னும் தெரியாது. என் குழந்தாய்! நான் உன்னை அவனுக்குக் கொடுக்கிறேன். கொடுத்த பின் நீ பேசாமல் அவனுடனே போ. ஒரு தடவை வாய் திறந்து `போகிறேன்' என்று சொல். நான் அடுத்த நாளே திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்' என்பான் அவன். இந்த எல்லாப் பேச்சுகளுக்கும் பானேயி ஒரே கட்டாக ஒரு வாசகம்தான் பதிலளித்தாள். `அம்மா! அப்பா! `உங்களுக்கு என்னிடம் ஒரு சிறிதளவு அன்பாவது இருந்தால், என்னை ஜங்கியிடமே ஒப்படையுங்கள். கமுதன் ஏற்கெனவே பணம் செலவு செய்திருந்தால்கூட, அதைப் பைசா பைசாவாக ஜங்கி தீர்த்துவிடுவான். அவனுக்குத் தனக்கென வேறு உறவே இல்லை. உங்கள் குழந்தையைப் போல உங்கள் வீட்டிலேயே வாழ்வு கழித்து அத்துடன் உங்களைத் தன் உழைப்பால் ஊட்டி வளர்ப்பான். அப்படி நீங்கள் என்னை அவனிடம் ஒப்படைக்க வில்லையானால், நான் எப்போதும் உங்கள் வீட்டிலேயே இருப்பேன். வேறு யாருடனும் செல்ல மாட்டேன். ஆகவே என்னை வீணாகத் தொல்லை செய்ய வேண்டாம்!' வாசகர்களே! நாம் மேலே மீண்டும் மீண்டும் உரைத்துள்ளது போல, மீரீ மக்கள் தாம் பிடித்த பிடியே பிடிப்பார்கள். யாரும் எக்காரணத்தாலும் தாம் கொண்ட கொள்கையிலிருந்து கடுகளவுகூட விலக ஒருப்படுவதில்லை. இந்த அடம் காரணமாகவும், இயல்பான மனித சுபாவங்கள் காரணமாகவும் சூதுவாதற்ற மீரீ மக்களின் குடும்பங்களிலே இம்மாதிரி அமைதியின்மைகளும் துயரங்களும் அடிக்கடி நிகழ்வதுண்டு. ஆனால் இவ்வாறு தம் வாக்கை நெகிழவிடாத தால், அனேக யுவர் - யுவதிகளின் நிலைதான் இவ்வாறு துயருக்குள்ளாகிறது. எங்கே உண்மையான காதல் இடம் பெற்றுவிடுகிறதோ, அங்கே பெரும்பாலும் இந்நிலைதான்! ஆம்! மீரீ நங்கை கற்புறுதியுடையவளாக இல்லா திருந்தால் கூட, முதலில் கண்டு பேசிக் காதலித்த இடத்தில் தாய் தந்தையரால் இத்தகைய தடை தடங்கல்கள் ஏற்பட்டால், வாதவழக்குகள் இல்லாமலே எல்லாம் ஒரு முகமாக முடிந்துவிடும் நிலைமை ஏற்பட்டுவிடுகிறது. இன்னும் ஒரு சில இடங்களில், ஆனால் மிகமிக அருகலாகவே, யுவதியின் விருப்பமும் தாய் தந்தையர் விருப்பமும் முற்றிலும் ஒத்துப் போய், எல்லாம் நலமாக முடிகிறது. இந்த அருமையான யோகம் ஏற்படும் இடங்களிலே, மீரீ இளைஞர் - நங்கையர் நிலை வானுலகத்துக் குரிய பேரின்ப நிலை என்றே கூறத்தகும். துன்பத்திலும் புயலின் குமுறலிலும் இவ்வாறு நாட்கள் கழிந்தன. இறுதியில் கிழத் தாமேதும் நிரமாவும் கமுதன் ஆலோசனையின் பேரிலும், கமுதன் தந்தையின் ஆலோசனையின் பேரிலும் முன்னிலும் வலுக்கட்டாயமாகப் பானேயியின் கைகால்களைக் கட்டித் திருமணம் இல்லாமலே கமுதனிடம் ஒப்படைப்பது என்று துணிந்தார்கள். எப்போதும் விழிப்புடனும் முன் கருத்துடனும் இருந்து வந்த பானேயிக்கு இந்தச் செய்தி தெரிய வந்ததுமே, அவள் இரவோடிரவாக வெளியேறி ஓடிப்போய் விட்டாள்! 12. கூணாசூந்திக் கிராமத்திலே! உனக்கே உரியவன் நான் ஓவியமே, உயிர்நாடி ஒவ்வொன்றும் உன்பெயரே கூறித்துடிப்பன, என் மனத்தே எழுகின்ற எண்ணமெல்லாம் உன்வண்ணம் மறுகி நலியுமிந்த நல்லிதயந் தன்னை நீ தனக்கே உரிய தெனத் தாங்கியணைத் தேந்திடுவாய்! தருநோய் அதுவன்றித் தனிமருந்து வேறிலைகாண்! இனக்கேடு அடைந்தாலும் இனமன்றி ஏதுதுணை? மனக் கேடடைந்த நெஞ்சம் மனங்கொண்டு அருள்மதியே’47 - ராபர்ட் பர்ண்ஸ் கவிதைத் தமிழ் ஆக்கம் மறுநாள் பொழுது விடிந்ததுமே மீரீ கிராமத்தில் எங்கும் ஒரே குழப்பமாயிருந்தது. பானேயியை மறுபடியும் காணவில்லை! மறுபடியும் மக்கள் நாலு திசைகளிலும் சென்று தேடினார்கள். ஆனால் எங்கும் பானேயியின் தடம் தென்படவில்லை. வயதில் இளையவர்கள் இப்போது கூணாசூந்தி கிராமத்துக்கே சென்றார்கள். அங்கே நேரே ஜங்கியின் சிற்றன்னை வீட்டுக்குச் சென்று பார்த்த பொழுது, ஜங்கி மட்டும் அங்கே இருப்பது கண்டு வியப்பு அடைந்தார்கள். மீண்டும் பல இடங்களிலும் சுழன்று அவர்கள் இறுதியில் வந்து ஜங்கியையே கைப்பற்றினார்கள். `நீதான் இந்த அவகேடுகளுக்கெல்லாம் மூடு. இப்போது கூறிவிடு, பானேயி எங்கே ஓடிப்போனாள்?' என்று கேட்டார்கள். இதைக் கேட்ட ஜங்கிக்குப் பெரும் கோபம் ஏற்பட்டது. `நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப என்னையே வந்து தாக்குகிறீர்கள். எல்லா அவகேடுகளுக்கும் மூடானவர்கள் பானேயியின் தாய் தந்தையர்கள் தான். அதோடு இந்தத் தடவை நான் ஒரு மாதமாக இங்கேயே இருக்கிறேன். எங்கும் போகவோ வரவோகூட முனைந்ததில்லை. பானேயி எங்கே போனாள் என்பது பற்றிய புலம் எதுவும் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? நான் இப் பொழுது என்ன செய்ய முடியும்? ஒருவேளை தாய் தந்தையரின் இரக்கமற்ற தன்மையைக் கண்டு அவள் ஏதேனும் நஞ்சை உட்கொண்டு உயிரையே விட்டுவிட்டாளோ என்னவோ, யார் கண்டார்கள்? இவ்வாறு ஏதேனும் ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பாளியானவர்கள் அவள் தாய் தந்தையர்கள்தான்!' என்றான். இதைக் கூறிய ஜங்கி, கூறியவுடன் தன் தலைமீது தானே ஓங்கி அறைந்து கொண்டு கதறியழத் தொடங்கினான். `ஆ, என் தலையெழுத்து! அந்தோ, என்ன அவகேடான வேளையில் நான் பிறந்தேனோ?' என்று அவன் கதறினான். ஜங்கியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு மீரீ மக்கள் திகிலடைந்தார்கள். இத்தடவை ஜங்கி எங்கும் போகவில்லை என்பதை அந்தக் கிராமத்து மக்களும் வலியுறுத்திக் காட்டினார்கள். துயரார்ந்த உள்ளங்களைச் சுமந்துகொண்டு சோவன் ஷீரீ கிராமத்து மீரீ மக்கள் திரும்பத் தம் கிராமம் வந்து சேர்ந்தார்கள். பானேயி மீண்டும் காணாமற் போய்விட்டாள் என்ற செய்தி விரைவில் டாலிமியின் காதுகளுக்கும் எட்டிற்று. மீண்டும் அவள் நெஞ்சு இரு திசைகளில் ஈர்க்கப்பட்டு அவதியுற்றது. ஆயினும் அவன் இப்போது மீண்டும் தன் காதலியைத் தேடச் செல்லாதிருக்க மாட்டான் என்று அவள் கருதினாள். மீரீ மக்கள் புறப்பட்டுச் சென்றபின் ஜங்கியின் மனம் ஏதேதோ சிந்தனையிலாழ்ந்தது. இறுதியில் என்ன நினைத்துக் கொண்டோ அவன் தன்னிடமுள்ள ரூபாய் பைசாக்களை யெல்லாம் திரட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டான். ஆனால் போகும் முன்பு டாலிமியிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் கூறிச் செல்வது நல்லது என்று எண்ணி அவளை நாடிச் சென்றான். டாலிமி அவனைப் பார்த்ததும், `ஜங்கி! பானேயி திரும்பவும் ஓடிப் போய்விட்டாள் என்றல்லவா நான் கேள்விப்பட்டேன்' என்றாள். `ஆம், டாலிமீ! நானும் அதுவே கேள்விப்பட்டேன்' என்று ஜங்கி விடை பகர்ந்தான். டா : இப்போது நீ என்ன செய்யப் போகிறாய், ஜங்கி! ஜங் : டாலிமி, நான் என் மனத்துக்குள்ளே ஒரு காரியம் எண்ணியிருக்கிறேன். அவளைத் தேடப் போகிறேன். ஈசன் என் தலையில் நல்லது எழுதியிருந்தால், அவளைத் தேடிக் கண்டு இங்கேயே அழைத்துக்கொண்டு வருவேன் (இவ்வாறு கூறுவதற்குள் கண்கள் குருதிக்குளமாயின, அவன் மேலும் பேசினான்). அவளை நான் காண முடியாவிட்டால், திரும்பி இங்கே வரும் உத்தேசம் இல்லை. இந்தத் தேசத்தை விட்டு வேறு எங்காவது போய் விடுவேன், அல்லது எங்கேனும் சென்று உயிர் விட்டு விடுவேன். ஜங்கியின் இந்த வார்த்தைகளினால், டாலிமிக்கு இருதயத்தில் அந்தரங்க வேதனை உண்டாயிற்று, ஆனால் அவள் அதை அடக்கிக் கொண்டு வெளிக்கு அமைதியுடன் பேசினாள். `நல்லது, ஜங்கி! நீ தேடப் போ. நீங்கள் சந்திக்கும்படி இறைவன் கடாட்சிக்கட்டும்! ஆனால் அவள் அகப்பட வில்லையானால் இங்கேயே திரும்பிவர வேண்டுகிறேன். ஜங்கி, நீ இல்லையானால் இந்த கிராமம் பூராவும் ஒரே சூனியமாய்விடும். ஆகவே ஜங்கி, எப்படியும் திரும்பிவா! வராமல் இருந்துவிடாதே! ஆம், கட்டாயம் வா!’ என்று கூறினாள். ஜங் : டாலிமி, உன்னிடம் என் செய்திகள் எல்லா வற்றையும் மனந்திறந்து கூறுகிறேன், கேள். என் தலையில் ஈசன் என்ன எழுதியிருக்கிறான் என்று என்னால் கூறமுடியாது. என்னுடைய குழந்தைப் பருவத்திலேயே, என் தாய் தந்தையர்கள் என்னை விட்டுச் சென்றார்கள். இந்த உலகத்தில் எனக்கு யாரும் கிடையாது. பானேயி ஒருத்தி என்னிடம் அன்பு காட்டினாள். அத்துடன் டாலிமீ, நீயும் ஒரு தங்கை போன்ற நேசம் காட்டியிருக்கிறாய். நான் போன பிற்பாடு உங்களிடையே என்ன கேளிக்கை கூத்து நடந்தாலும், அந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங் களிடையே என்னைக் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதை மறந்துவிட வேண்டாம், டாலிமி! அத்துடன் இது வரை எத்தனையோ தடவை உனக்கு நான் துயரம் உண்டு பண்ணியிருக்கிறேன். அதையெல்லாம் மன்னித்து மறந்து விடு. நான் எல்லாம் அடைந்து திரும்பிவரக் கொடுத்து வைத்திருந்தால், திரும்பி வந்து அண்ணன் தங்கை போல இங்கே ஓடியாடுவோம். டா : (கண்கள் ததும்ப) ஜங்கி! நீ இன்று ஏன் இவ்வளவு பேசுகிறாய்? போ, போய் நல்ல வழியாகப் பானேயியைக் கண்டுபிடித்து மகிழ்ச்சியுடன் திரும்பிவா! இம்மாதிரி இருவரும் உரையாடியபின் ஜங்கி புறப்பட்டான். ஆனால் அவன் முதுகு திரும்பியதே காதலின் திருவுருவமான அந்த மீரீ நங்கை குந்தியிருந்து தேம்பித் தேம்பி அழுதாள். ஆனால் அந்த நாள் முதல் அவள் கம்பீரமாகவும் வாழ்க்கையில் தொட்டும் தொடாமலும் நடமாடத் தொடங் கினாள். அவள் ஆசையாகிய பூங்கொடி வேரிலிருந்து வெம்பிப் பழுப்பேறி விட்டது! இந்தத் தடவை பானேயி போய்விட்ட தறிந்த அவள் தாய் தந்தையர் மனமாரத் துக்கப்பட்டார்கள். நிரமா இப்போது வயது சென்ற தாமேதின்மீதே சீறி விழுந்தாள். `நீங்கள்தான் இத்தனைக்கும் காரணம்! என் குழந்தையின் மனத்தை அறியாமல் பணத்தைப் பெரிதென்று நம்பினீர்கள்! அந்தோ, இப்போது என் குழந்தை பானேயி எங்கே போனாளோ? அடி என் குழந்தாய்! நீ திரும்பி வரமாட்டாயா? இனி உன்னை ஒருபோதும் துன்பப்படுத்த மாட்டேன். இனி உன்னை உன் இதயத்தின் செல்வமான ஜங்கியிடமே ஒப்படைப்பேன். உன் செல்வத்திடமே உன்னை அனுப்பி வைப்பேன். பானேயி, குழந்தாய்! நீ எங்கே இருக்கிறாய்? வா! ஓடிவா!' என்று அவள் புலம்பி அழுதாள். கிழட்டுத் தாமேதின் கல்மனம்கூட இந்தத் தடவை துக்கத்தால் கரைந்துருகிற்று. பானேயி திரும்பி வந்தால், அவளை ஜங்கிக்கே கொடுப்பேன் என்று அவனும் தன் மனத்துக்குள்ளாக உறுதி செய்து கொண்டான். இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னால் ஜங்கி தன் பகைமை, அவமானம், வெட்கம் எல்லாம் துறந்து விட்ட வனாய் கிழத் தாமேத், நிரமா ஆகியவர்கள் வீட்டுக்கு வந்தான். கிழவன் கிழவியர்க்குப் பணிவுடன் வணக்கம் செய்து, `அம்மா, அப்பா! நான் எக் குற்றமும் செய்யவில்லை. உங்கள் பெண் தன் சிறு பருவ முதல் என் மீது அன்பு செலுத்தினாள். அவளை என்னிடம் அனுப்பத்தயவு செய்வீர்களானால், அவள் கட்டாயம் சுகமாக இருப்பாள்,' என்றான். தா : ஜங்கி, என் மனம் நைந்து போயிருக்கிறது, நீ வேறு வந்து ஏன் தொல்லை கொடுக்கிறாய்? அவளை எங்கேயாவது ஒளித்து வைத்திருந்தால், கூட்டிக்கொண்டு வந்து விடு. உன்முன் இப்போது கார்சிங் - கார்ட்டான் சாட்சியாகக் கூறுகிறேன். அவளை நான் உனக்கே கொடுத்து விடுகிறேன்! நிர : ஆம் அப்பனே! எங்கே வைத்திருக்கிறாய், என் குழந்தையை? போய்க் கொண்டுவா. உனக்கே அவளைத் தருகிறோம். தாமேத் - நிரமா ஆகியோர் வார்த்தைகள் கேட்டு ஜங்கி மகிழ்ச்சி அடைந்தான். `ஈசுவரன் இப்போது என்மீது அருள் பாலித்து விட்டான்' என்று அவன் எண்ணத் தொடங்கினான். `பெற்றோர்களே! இத்தடவை பானேயியை ஓடும்படி நான் சொல்லவில்லை. ஆனால் அவள் எங்கிருந்தாலும் தேடி உங்களிடம் கொண்டு வருவேன். நீங்கள் என்னிடம் ஒப்படைத்தாலும் ஒப்படையுங்கள், ஒப்படைக்காவிட்டாலும் வேண்டாம். அத்துடன் தந்தையே, அவளை நான் எங்கும் காணாவிட்டாலும், அல்லது அவள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தாலும் அப்போது ஜங்கியின் பெயரும் அத்துடன் மறைந்துவிடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவளை அடையும் வரை எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டுதான் இருப்பேன்' இவ்வாறு கூறிக்கொண்டு உறுதியான குறிக்கோளுடன் ஜங்கி பதாலிபாம் நோக்கிப் புறப்பட்டான். 13. பானேயி கிராமத்திலிருந்து ஓடிச் சென்ற அன்று இரவு பானேயி கிராமத்துக்கு மறு திசையில் உள்ள காட்டில் தங்கினாள். விடியத் தொடங்கியதுமே காட்டைக் கடந்து வடக்கு நாடிச் சென்றாள். புலி கரடிகளுக்கு அஞ்சி அவள் அங்கங்கே தங்கித் தங்கி ஓடினாள். ஆனால் எங்கே செல்வது, என்ன செய்வது என்று அவள் சிந்திக்கவேயில்லை. சென்ற கால்கள் சென்று கொண்டே யிருந்தன. இப்படி மூன்று நாள் உபவாசத்தின் பிறகு ஒரு நாள் காலையில் அவள் இந்துக்கள் வசித்த ஒரு கிராமத்தைச் சென்றடைந்தாள். காட்டிலிருந்து வெளிவந்ததும் நேரே முதலில் கண்ட வீட்டில் சென்று மிகக் கனிவான குரலில் ஒரு மடக்குத் தண்ணீர் வேண்டுமென்று கேட்டாள். தண்ணீர் குடித்து விட்டு அங்கேயே இரவைக் கழிப்பதாகச் சொன்னாள். அந்த வீட்டுக்கு உடையவன் அந்தக் கிராமத்திலேயே எல்லாரிலும் பணக்காரன். அவ்விடத்தில் இரண்டு மூன்று இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். ஒருவன் ஆசிரியர் தொழிலுக் கான தேர்வுகூடத் தேறியிருந்தான். அவனுக்கு இருபத்தைந்து இருபத்தாறு வயதிருக்கும். அவன் பானேயியைக் கண்டான். அவள் மீரீ நங்கையாயினும் மிகவும் அழகுடையவளாகவே இருந்தாள். ஆகவே அவள் யார், அவளுக்கு ஊர் எது, எங்கிருந்து வருகிறாள், இவ்வாறு காடுகாடாய் ஏன் அலைந்து திரிகிறாள் என்ற செய்திகளை அவன் அறிய முயன்றான். இளைஞன் முற்றிலும் பட்டிக்காட்டான் அல்ல. அவன் எப்போதும் கால்களுக்குச் செருப்பு மாட்டிக் கொண்டிருந்தான். தலையை எப்போதும் நன்கு சீவி ஒதுக்கி நாகரிக நடை போட்டு வந்தான். நாகரிக மனிதருக்குரிய மற்றச் சின்னங்களும் அவன் மேனிமினுக்கில் காணப்பட்டன. கிராமத்திலேயே வாழ்ந்து வந்தாலும் மேல் நாட்டுக் குடிவகைகளில் அவன் ஈடுபட்டுப் பழகி வந்தான். நாகரிக சமுதாயத்தில் ஆங்காங்கே அவனுக்கு எல்லா வகையிலும் பெருமதிப்பு இருந்து வந்தது. பானேயி தண்ணீர் அருந்தி இளைப்பாறினாள். இருள் மெல்ல மெல்லச் சூழ்ந்து வந்தது. அப்போது இளைஞன் கையில் மதுப் புட்டியுடனும் குவளையுடனும் வெளி முற்றத்துக்கு வந்து, வேலையாளை உரக்க விளித்துப் புகையிலை கொண்டுவரும்படி பணித்தான். வேலையாள் புகையிலை கொண்டு வந்து கொடுத்தான். பின் அவன் புகையிலை குடித்தவாறே பானேயியிடம் `நீ பொயிலை குடிப்பில்லெ!' என்றான். பா : ஆம். வாலிபன் புகைக் குழாயில் புகையிலையடைத்துக் கொடுத்தான். பானேயியும் புகை குடிக்கத் தொடங்கினாள். அப்போது வாலிபன் புட்டியிலிருந்து குவளையில் மது ஊற்றிக்கொண்டே மீண்டும் `மதுகூடக் குடிப்பில்லே!' என்றான். தான் மூன்று நாள் பட்டினியாயிருந்ததால் உடலில் பலவீனம் அதிகமாகி, நரம்பு நாடிகள் எல்லாம் சோர்ந்து விட்டதைப் பானேயி நினைத்துப் பார்த்தாள். சிறிது மது அருந்தினால் தொண்டையில் கனிவும் உடம்பெங்கும் நரம்பு நாடிகளில் ஊக்கமும் ஏற்படும் என்பதை அவள் உணர்ந்தாள். இந்த எண்ணங்களுடன் அவள், `சரி' என்றாள். ஆனால் வாலிபனோ குவளை குவளையாக நிறைய மது ஊற்றி ஒன்றைத் தான் குடித்து ஒன்றை அவளுக்கு கொடுத்துப் பல குவளைகளைக் காலி செய்ய முற்பட்டான். மூன்று நான்கு குவளைகளான பின்னும் பானேயிக்கு உடம்பில் தெம்பன்றி வேறு எவ்வகையான மயக்கமோ, வெறியோ உண்டாகவில்லை. ஆனால் வாலிபன் அதி வேகத்தில் அமைதியிழந்து தள்ளாடினான். அவன் மயக்கத்திடையே அவனுக்கு இப்போது ஒரே எண்ணம்தான் மனத்தில் நிழலாடிற்று - பானேயி யுவதி என்ற எண்ணமே அது. அவன் கண்கள் மங்கி மங்கி மறுகின - ஆனால் அவன் அவளையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான். அவன் கண்களில் பானேயியின் அழகு சொலித்துக் கொண்டிருந்தது. அவன் அவளை நோக்கி வெறியுடனேயே பேசத் தொடங்கினான். `பார்க்கப் பாக்க நீ ரொம்ப சோரா இருக்கயே, ஏஎ!' என்றான். பா : அதுவா, இருக்கும், இருக்கும். வாலிபன் : வரவர வோங் அயகு அயகாகுக்கே! பா : ஆகா, இருக்கும், இருக்கும். வா : ஒன்கூடம் இருக்கும்லே! பா : என்ன இருக்கும், என்ன ஒளர்ரே! வா : ஓம் பேரு என்னா? பா : பானேயி! வா : ஆஆ, பேரு நல்லா இக்கே! பா : எல்லாம் நல்லாத்தான் இருக்கும்! ஆச்சு! பேச்சினிடையே வாலிபனுக்கு வெறி உச்ச நிலையடைந்து ஆவேசமாயிற்று. வாசகர்களே, எனக்கு இந்த வாலிபனைப் பற்றிக் கூற வெட்கமாயிருக்கிறது. தன் தீய எண்ணத்தை நிறைவேற்றலாம் என்ற நோக்கத்துடன் வாலிபன் பானேயியின் கையைப் பற்றி இழுக்கத் தொடங்கினான். ஆனால் நம் மீரீ நங்கை அழகும் குணமும் மட்டுமல்ல, உடலில் பலமும் மனத்தில் உறுதியும் உடையவ ளாயிற்றே! அவளை அவன் பலத்தாலோ நயத்தாலோ அசைக்க முடியவில்லை. அவள் கற்பு அவன் கலங்கிய கண்களின் முன் ஆடாது அசையாது சுடர் வீசிற்று. ஆசை நிராசையானதால் அவன் முகம் விளறிற்று. `பானேயி! நான் என்னென்னவோ நெனைச்சேன்' என்று பல்லிளித்தான். பா : சீ, வெட்கங் கெட்டவனே! நீ எண்ணுவதே மகாபாவம். வா : ஒன்னெ அடையறதுக்கு எத்தனெ பாவம் வேணுமானாலும் செய்வேங். நரகத்துக்குக்கூட போவேங். என் ஆசெயெக் கொஞ்சம்.... பா : சீ, நான் ஒரு மீரீப் பெண், உன் பிள்ளையைப் போல் வந்திருக்கிறேன். வேறு எதுவும் கருதாதே. வா : என் உசிரெல்லாம் பத்தி எரியுது. நீ அணைக் காட்டா நான் எரிஞ்சு போவேங்... வெறி ஆவேசமாய் அவன் எகிறிக் குதித்து அவள் மீது பாய்ந்து பற்றத் தொடங்கினான். ஆனால் மீரீ நங்கையின் இலட்சியம் எங்கே, இந்தப் பதர் எங்கே? அவள் பதறவில்லை, கூச்சலிடவில்லை; அவனை உதறித் தள்ளித் தன் கற்பைத் தனிக் கற்பாக்கிக் கொண்டாள். வெட வெடத்து நிற்கும் பதரிடம் அவள் தன் உள்ளம் திறந்து காட்டி, அவன் வியக்கும்படி செயலிலும் இறங்கினாள். `அடே, உனக்கு கண் இல்லையா? `நான் எதற்காக இத்தனை துயர்களைத் தாங்கித் தாய் தந்தையர்களைத் துறந்து வந்திருக்கிறேன், தெரியவில்லையா? `இந்த இரவில் உலகெல்லாம் துக்க மயமாகக் கண்டு, இடையே இந்த ஒரு இடத்தில் ஒரு சில மணி நேர ஓய்வு கொள்ளவல்லவா வந்தேன். ஆனால் அண்டி இடங் கொடுக்க வந்த நீயே, ஒண்டியான என்னை இப்படித் தாக்கத் தொடங்கி விட்டாய்! `இதை நினைத்துப் பார்! `நான் இனி புலியை நம்பலாம், கரடியை நம்பலாம். அவை என்னைத் தின்றுவிடும். என் பெயர் தின்றுவிடமாட்டா. ஆனால், உன்னை நம்ப வழியில்லை. இதோ போய் விடுகிறேன்!' இவ்வாறு கூறி அவள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, அவன் கண்மூடித் திறக்குமுன், இழந்த அறிவு திரும்புமுன் காட்டிலேயே புகுந்துவிடத் தொடங்கினாள்! வாசகர்களே! இந்த வாலிபனும்கூட முழுக்க முழுக்க இருதய மற்றவன் அல்ல. அவன் வெறி சற்றுத் தணிந்தது. பானேயியின் இறுதி வாசகங்கள், கொழுந்துவிட்டெரியும் அழல்போல் அவன் மூளையில் சென்று வீசி அவன் கண்களை மறைத்த படலங்களை நீக்கின. தான் செய்த செயல் எத்தனை நீசத்தன்மையுடையது என்பதை அவன் அப்போதுதான் கண்டான். உள்ளத்தின் உள்ளே துக்கம் பீறிட்டவனாய், `இனி இந்தக் குடிக்கு, இந்த வெறிக்கு நான் என்றும் ஆளாகமாட்டேன், இது சத்தியம்!’ என்றான்! மூளை தெளிவடைந்ததே அவன் பானேயி சென்ற திசை நோக்கிக் கூக்குரலிட்டான். `பானேயி, போய் விடாதே! இன்று ஓர் இரவு உண்டு பருகிச் செல், இனி உனக்கு நான் தொல்லைதர மாட்டேன். என்னால் முடியுமட்டும், உனக்கு உதவிகளே செய்வேன்!' என்றான். வாலிபனின் இந்த வார்த்தைகளின்மீது பானேயி திரும்பினாள். அத்துடன் இப்புது மாற்றத்துக்காக அவள் அவனைப் புகழவும் தயங்கவில்லை. அன்றிரவு அவன் வீட்டிலேயே உண்டு பருகி இளைப்பாறினாள். ஆனால் விடிந்ததும் விடியாததுமாக அவள் அவ்வீட்டை விட்டுக் காட்டிலே புகுந்தோடினாள். 14. ஜங்கி ஜங்கி பானேயியைத் தேடப் புறப்பட்டு நாலு நாட்கள் ஆயின. அவன் அவளைத் தேடாத இடமில்லை. காடு காடாக, ஊர் ஊராக, இரவென்றும் பகலென்றும் பாராமல், பசி தாகங்களைத் தாங்கிய வண்ணம் அவன் அலைந்து திரிந்தான். ஆயினும், அவளைப் பற்றிய ஒரு துப்புத் தகவலும் கிடைக்கவில்லை. அவ்வப்போது காட்டில் இருந்த வண்ணம் தன் உயிரை விட்டுவிடுவது தான் இனி நல்லது என்று நினைப்பான். ஆயினும் உண்மையில் சாகும் விருப்பம் நிலைப்பதில்லை. பானேயி என்னவானாள் என்ற தகவலை முதலில் அறியாமல் எதுவும் துணியக்கூடாது என்று கருதினான். ஒவ்வொரு நாழிகையும் இந்த எண்ணமே அவன் உயிருக்குப் பக்க பலமாயிருந்தது. இவ்வாறு நினைத்து நினைத்து இறுதியில் என்ன மாய சக்தியாலோ ஈர்க்கப் பெற்றவனாய், பானேயி ஓர் இரவைக் கழித்த அதே மனிதனின் வீட்டுக்கு அவனும் சென்று சேர்ந்தான். அங்கே சேர்ந்ததும், அவன் தேடிச் சென்ற யுவதியை ஒத்த ஓர் யுவதி இரண்டு நாட்களுக்கு முன்தான் அங்கே வந்து தங்கிச் சென்றாள் என்ற செய்தி தெரிய வந்தது. இரவு அவனும் அதே நல்ல வாலிபனுடனேயே தங்கினான். யுவதி இரவு அந்த வீட்டில் தங்கிய பின் எங்கே போனாளென்று அந்த வீட்டாராலும் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அவர்கள் சொன்ன செய்திகளால் பானேயியைக் காணமுடியும் என்ற அவனது ஆர்வ நம்பிக்கை மேலும் வலுக் கொண்டெழுந்தது. இரவு ஜங்கியும் அந்த வீட்டில் அந்த வாலிபனுடன் பேசித் தங்கியிருந்து விட்டு, விடிந்ததுமே வட திசையில் பவேலீசூக் என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டான். அது கடந்து கோகாமுக்குச் செல்லும் உத்தேசத்துடன் அவன் பாவேலீசூக்கின் காடுகளில் புகுந்தான். ஆனால் புகுந்தது தான் தாமதம்! எங்கிருந்து, எப்படி வந்தார்கள் என்று அறிய முடியா வகையில், காட்டு மீரீகள் ஐந்து பேர் அவன் மீது பாய்ந்து வளைத்துக் கொண்டார்கள். அவர்கள் அவன் வாயை அடைத்துக் கட்டிக் கைகளை அரையில் சேர்த்துப் பிணித்த வண்ணம் இழுத்துக் கொண்டு போனார்கள். வாசகர்களே, இத்தடவை ஜங்கியின் மனத்தில் என்ன எண்ணங்கள் எழுந்தோடின என்று என்னால் வருணிக்க முடியாது. `நான் என்ன பாவம் செய்தேனோ! இந்த மலை நாட்டு மீரீகள் கையில் சிக்கி இவ்வாறு கொண்டு போகப் பெற்றேனே' என்று அவன் அங்கலாய்த்தான். இரவாயிற்று, மலை மீரீகள் அந்த இரவை ஒரு மரத்தடியிலேயே தங்கிக் கழித்தார்கள். இரவு முழுவதும் அவனைச் சுற்றி நின்று காவலும் காத்தார்கள். அவன் கையிலிருந்த ரூபாய் பைசாக்கள் யாவும் அவனிடமிருந்து பறிக்கப்பட்டுப் போயின. மறுநாள் மலை மீரீகள் அவனை மலைமேல் ஏற்றிக் கொண்டு சென்றார்கள். போகும் வழிகள் பயங்கரமாயிருந்தன. வழியில் எத்தனையோ கானாறுகள் ஓடின. அங்கங்கே மூங்கில்களால் உடனுக்குடன் பாலம் அமைத்து அவர்கள் அவற்றைக் கடந்து சென்றார்கள். மலையின் மேல் சென்ற பின்னும் அவர்கள் மேலும் மேலும் உயரச் சென்று மேற்குத் திசை நாடித் திரும்பினார்கள். இவ்வாறு மூன்று பகல் மூன்று இரவுகள் உணவு நீர் இல்லாமலே கழிந்தது. ஐந்தாவது நாள் மலை மேலுள்ள ஒரு கிராமத்தை அவர்கள் சென்றடைந்தார்கள். இதுதான் மலை மீரீகளின் நாடாயிருக்க வேண்டுமென்று ஜங்கி ஊகித்தான். அங்கே சென்றபின், அந்த ஐந்து மீரீகளும் ஜங்கியின் கைக்கட்டுகளை அவிழ்த்து விட்டார்கள். அதன் பின் அவர்களில் ஒருவன் கைச்சாடை காட்டி அவனை ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றான். உயிருக்குப் பயந்து ஜங்கி வாய் திறவாமல் அவன் பின்னால் சென்றான். அந்த மலை மீரீ ஜங்கியைத் தன் பரண் - மனைக்கு48 இட்டுச் சென்று பிரிங் - பாராங் மொழியில்49 தன் வீட்டிலுள்ள மற்றவர்களுடன் ஏதேதோ பேசினான். பின் ஜங்கியைக் கைச்சைகை மூலம் உட்காரச் சொன்னதும், ஜங்கி உட்கார்ந்தான். காய்ந்துபோன மாமிசத்துடன் ஒன்றிரண்டு ஊசிப்போன உருளைக் கிழங்குகள் அவன் முன் பரிமாறப்பட்டன. அவன் மனம் இப்போது எவ்வளவு துயரைத் தாங்கிக் கொண்டிருந்தாலும், வயிற்றின் பசி அவனைப் பேயாட்டமாட்டி வைத்திருந்ததால், அவன் அவற்றில் கொஞ்சம் தின்றான். இரவு முழுவதும் அவன் கண்கள் மூடவில்லை. விழித்துக் கொண்டே அவன் தன் முன்னைய நிலைகள், இப்போதைய நிலை ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டேயிருந்தான். `அந்தோ, என் தலைவிதி இவ்வளவு மோசமாகவா இருக்கிறது. இந்த மலை மீரீகளின் கையிலா நான் சிக்க வேண்டும்!' என்று அவன் வருந்தினான். அதே சமயம் இப்போது பானேயி எங்கே, என்ன நிலையில் இருப்பாளோ என்ற கவலையும் அவனை அரித்துத் தின்னத் தொடங்கிற்று. இவையெல்லாம் நினைத்து நினைத்து அவன் உள்ளுக்குள்ளே முனகிக் கொண்டிருந்தான். இனி இறப்பதுதான் நல்லது என்று அவ்வப்போது தோன்றும். ஆனால் பானேயி இறுதியில் என்னவானாள் என்று தெரியாமல் அவன் இறக்கவும் விரும்பவில்லை. பாக்கியம் கெட்ட நம் மீரீ வாலிபன் அழுதழுது மனம் துடித்துக் கொண்டிருந்தான். நல்ல சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்து ஓடி விடுவேன் என்றும் அவ்வப்போது அவனுக்கு எண்ணம் தோன்றியது. மறுநாள் விடிந்தது, அந்த மலை மீரீயின் குடும்பத்தினர் அவன் துணிமணிகள் எல்லாவற்றையும் உரித்து, தங்களைப் போன்ற உடையை அவனும் உடுக்கும்படி தந்தார்கள். மூங்கிலால் செய்த ஒரு குல்லாய், மூங்கிலாலேயே ஆன ஒரு கோவணம்50 தலையில் இருந்து உடல்மீது கவித்த ஒரு பிரப்பங் கூடை உறை ஆகியவையே அவர்கள் உடை. தன் தலைவிதியைத் தானே நொந்து கொண்டு அவன் இந்த விசித்திர உடைகளை அணிந்து கொண்டான். இந்த உடை யாலும் அவர்கள் பேசிக் கொண்ட சாடைகளாலும் தான் அந்த மீரீ மனையில் அடிமை யாக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தான். இம்மாதிரி வாழ்க்கையில் நான்கு மாதங்கள் கழிந்தன. தன் தலைவிதியை நொந்து கொண்டு, அவன் மலை மீரீகளின் அடிமையாகவே நாட்கழித்தான். என்றாவது அவர்கள் காவலுக்குத் தப்பி ஓடிவிடும் வாய்ப்புக்கே அவன் காத்திருந்தும், அத்தகைய நல்ல வாய்ப்பு வராமலே போயிற்று. காட்டு மீரீகளின் உடையுடன் ஜங்கி ஒருநாள் தன்னை அடிமை கொண்டவன் வீட்டாருடன் உருளைக் கிழங்குப் புனத்தில் நிலங் கொத்திக் கொண்டிருந்தான். அச்சமயம் காட்டு மீரீகள் நாலைந்து மீரீப் பெண்களைக் கைது செய்து கொண்டு வருவதைக் கண்டான். இன்னொரு மலை மீரீயின் கிராமத் திலிருந்து கொள்ளையிட்டோ திருடியோ இவர்கள் கொண்டு வரப்பெற்றார்கள் என்று அவர்களைப் பார்த்தவுடனே ஊகிக்க முடிந்தது. அவனுக்கு ஏதோ ஒரு மனக் கிளர்ச்சி ஏற்பட்டு அந்தப் பெண்களைக் கூர்ந்து நோக்கினான். அந்தோ, அந்தப் பெண்களில் ஒருத்தியாகப் பானேயியே காட்சியளித்தாள். அவளைக் கண்டதில் அவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ, அதற்கு மேலாக அவளை அந்த நிலைமையில் பார்க்க நேர்ந்ததில் அவனுக்குச் சொல்லொணாத் துக்கமும் ஏற்பட்டது. ஆற்றுச் சமவெளியில் அழகழகான பட்டுப்பீதாம் பரங்களின் அலங்காரத்துடன் கண்கொள்ளாக் காட்சியாகத் தான் காண அவாவிய பானேயியை, இப்போது அவன் காட்டு மீரீப் பெண்களின் வேடத்திலேயே காண நேர்ந்தது! கழுத்தில் மலை மீரீகளின் பாசி சோழிக் கொத்துக்கள் தொங்கின. அரையிலே ஒரு கையகலம் கூட இல்லாத துண்டுதான் இருந்தது! மறுபுறம் பானேயியும் தன் ஜங்கியை இங்கே காட்டு மீரீ உடையில் கண்டு கடுந்துயர் அடைந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் தானாகப் பொங்கி வழிந்தது. ஆயினும், கண் நான்கு சந்தித்து விட்ட காரணத்தினால், அழுகைக் கண்ணீரிடையே சிறிது ஆனந்தக் கண்ணீரும் ஒழுகத்தான் செய்தது. ஜங்கி பானேயியுடன் வார்த்தையாடவே எண்ணினான். ஆனால் அவன் குறிப்பறிந்து யூக மிக்க நங்கை கண்ணால் அவனுக்குச் சாடை காட்டித் தடுத்தாள். அவனும் வாளா நின்றான். ஆயினும் விழிப்புடன் அவள் எங்கே கொண்டு செல்லப்படுகிறாள் என்று பார்த்துக் கொண்டான். அவளும் அதே கிராமத்தில்தான் தங்க வைக்கப்பட்டதைக் கொண்டு, இனி எப்போதும் அங்கேயே இருப்பாள் என்பதையும் உணர்ந்து, அவன் உள்ளம் மலர்ச்சியுற்றது. இவ்வளவு நாட்களுக்குப் பின் கடவுள் தங்கள்மீது கருணைக் கண் காட்டி விட்டார் என்று அவன் உள்ளுக் குள்ளே மகிழ்ந்தான். நேற்று வரை அவன் சபித்து வந்த காட்டு மீரீகளை இன்று அவன் தம்மைச் சேர்த்து வைத்ததற்காக உள்ளூர வாழ்த்தி நன்றி செலுத்தத் தொடங்கினான். ஆயினும் அவன் நினைத்தது போலப் பானேயியுடன் பேச இதற்குப் பின்னால்கூட வாய்ப்பு எளிதில் கிட்டவில்லை. இருந்த போதிலும் பானேயியும் அவனும் அடிக்கடி சந்திக்க முடிந்தது. இந்த வாய்ப்பை அவன் இழக்க விரும்பவில்லை. மாறாக அவன் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புப் பெறவும் தன்னாலியன்ற முயற்சிகள் யாவும் செய்யலானான். 15. கண நேரச் சூறாவளி காதலர் இருவரும் மலைமீது இரண்டு மாதங்கள் கழித்தனர். இந்த நாட்களில் ஒரு நாளில் ஜங்கியும் பானேயியும் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பம் கிட்டிற்று. பானேயி அச்சமயம் ஜங்கியிடம் பேசினாள். `ஜங்கி, பவேலீசுக்கிலிருந்து என்னைச் சில மீரீகள் பிடித்துச் சென்றார்கள். அவர்கள் தேசத்தில் நான் நான்கு மாதங்கள் இருந்தேன். அதன்பின் இந்த மீரீகள் அவர்களுடன் போர் செய்து அவர்களைக் கொன்றொழித்தனர். இப்போது நான் இருக்கும் வீட்டின் மீரீ என்னை வைத்திருந்த மீரீகளைக் கொன்று என்னை அடிமையாகக் கொண்டு வந்திருக்கிறான். சரி, நீ எப்படி இங்கே வந்தாய்?' என்றாள். ஜங்கி பேசினான், `பானேயி உன்னைத் தேடிக் கொண்டிருந்த சமயம், இவர்கள் என்னைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். சரி இங்கிருந்து ஒடிப்போக நமக்கு ஏதாவது உபாயம் அகப்படாதா?' என்று கேட்டான். பானேயி பேசினாள். `இந்தக் காட்டு மீரீகள் என்மீது எப்போதுமே கண்ணாயிருந்து வருகிறார்கள். ஓடிச் செல்வது என்பது மிக மிகக் கடினமே. எது எப்படியானாலும் ஏதாவது உபாயம் செய்து ஒருநாள் இரவு பேசாமல் என்னிடம் வரப் பார். சுவர்ப் பக்கம் பாதிக் கை உயரத்தில் காலால் ஒரு சிறு தட்டுத் தட்டினால், நான் அங்கே வருவேன். இருவரும் ஓடி விடுவோம்' என்றாள். ஆம், இரண்டு மாதங்கள் ஒருங்கே தங்கிய காலத்தில் பானேயியுடன் ஜங்கிக்குப் பேசக் கிடைத்த வார்த்தைகள் இவ்வளவே! ஆம், அத்துடன் ஓடி விடுவது என்ற கருத்தை இருவரும் கண்ணுடன் கண் ஜாடை பேசித்தான் அறிவித்தனர். இருவர் நிலையும் அவ்வாறு இருந்தது. இருவரையுமே மலை மீரீகள் கைதிகளாகவே வைத்து நடத்தி வந்தார்கள். இந்த இரு மாதங்களுக்குள் இன்னொரு செய்தியும் நடந்திருந்தது. பானேயி இருந்த வீட்டிலுள்ள `ரேபாங்' என்ற இளைஞன் மலை மீரீகளின் வழக்கப்படி பானேயியிடம் தான் கொண்ட காதலைத் தெரிவித்து, அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ளும் திட்டமும் தெரிவித்திருந்தான். ஆனால் அறிவிற் சிறந்த நம் மீரீ நங்கை இந்தத் தடவையும் மிகவும் உன்னிப்பாக நடந்து தன் கற்பைக் காத்துக் கொண்டு வந்தாள். ஒருநாள் இரவு பானேயி உறங்கிக் கொண்டே தன் நிலை பற்றித் தன்னை யறியாது புலம்பிக் கொண்டிருந்தாள். தாய் தந்தையர் நினைவு வந்ததோ, இல்லையோ, மீரீ நங்கையின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகிற்று. அழுதழுது தலையணையெல்லாம் நனைந்து விட்டது. எனினும் உறக்கத் தெய்வம் அந்நிலையில் அவளை மீண்டும் உறங்க வைத்திருந்தது. ஆனால் மூடிய கண்களுடன் அவள் ஒரு கனவு கண்டாள். அக்கனவில் அவள் தன் அருமைக்காதலன் கையுடன் கைசேர்த்துக் கோத்துக்கொண்டு ஓடியாடித் திரிந்தாள். தினைப்புனக் காவல் காலத்துப் பாட்டை இருவரும் பாடிக்கொண்டு, இருவரும் ஒன்றாகப் படகு உகைத்துச் சென்று, பின் விழா நடனமாடினார்கள். இச்சமயம் அவர்கள் கிராமத்தின் வயது சென்ற ஒரு மீரீ அவர்களை அழைத்து இருவரையும் மடிமீது சார்த்தி முத்தம் கொடுத்தான். `என் குழந்தைகளே! நீங்கள் இருவரும் எவ்வளவோ துக்கம் அனுபவித்து விட்டீர்கள், இனி நீங்கள் என்றும் பிரிய வேண்டிவராது. இப்போது உங்கள் துயரங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வந்துவிட்டது' என்று அந்த வயது சென்ற மீரீ கூறி அவர்களை மீண்டும் இருமுறை முத்திக் கொண்டான். அவளும் தன் காதலனை அருகில் பெற்று மிகவும் ஆனந்தம் கொண்டிருந்தாள். இந்நிலையில் ஒரு அழகான நடனக்குழு விழா நடனம் ஆடிவருவதைக் கண்டாள். இப்படிக் கனவு கண்டுகொண்டிருந்த சமயம் அவள் விழித்துக் கொண்டாள். ஆனால் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்திருந்த போது, உண்மையிலேயே தன் காதலன் தன் அருகில் வந்திருக்கக் கண்டாள். அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, `ஜங்கி, நீ எப்படி இங்கே வந்தாய்!' என்று கேட்டாள். `நான் இருக்கும் வீட்டுக்கு உரியவன் தூங்கியதும் நான் மெள்ளச் சந்தடி செய்யாமல் அடிமேல் அடிவைத்துப் புறப்பட்டு வந்தேன். பானேயி, என் கண்ணின்மணி, இங்கிருந்து மட்டும் ஓடிவிட்டால் பின் நமக்குத் தடை ஏதும் இல்லை. அங்கே நான் உன்னு டைய தாய் தந்தையரைச் சந்தித்தேன். இத்தடவை நான் உன்னை அவர்களிடம் இட்டுச் சென்றால், நம் இருவரையும் விவாகம் செய்து வைப்பதாக உறுதி பூண்டுள்ளார்கள். உன் தந்தை என்னையே மாப்பிள்ளை கழிக்கும்படி வீட்டில் ஏற்றுக்கொள்ளுவார். அத்துடன், என் உளங்கவர் கன்னி, என்னையே தன் வீட்டுப் பிள்ளையாகவும் ஏற்றுக் கொள்வார். ஆகவே முதலில் ஓடிவிடுவோம். பின் மற்றச் செய்திகளை யெல்லாம் பார்ப்போம். மற்றக் காரியங்களைப் பற்றிப் பின்னால், பேசுவோம்' என்றான் ஜங்கி. ஜங்கியின் இந்தச் செய்தி மீது பானேயி மீண்டும் அழத் தொடங்கினாள். `என்ன முட்டாள்தனம் செய்து விட்டேன்' என்று அவள் இப்போது தன் செயலைப் பற்றித் தானே தனக்குள் நொந்து கொண்டாள். ஓடிவந்த போது மட்டும் தான் கூணாசூந்தியில் ஜங்கியிடமே போய்ச் சேர்ந்திருந்தால், இதற்குள் தாய் தந்தையர் மன்னிப்பைப் பெற்று ஜங்கியையே மணந்திருக்கலாமே என்று அவள் அங்கலாய்த்தாள். ஆனால் எப்படியும் இப்போது அழுவதால் பயனில்லை. விரைந்து வெளி யேறும் செயல்தான் இனி புத்திசாலித்தனமானது என்று அவள் தேறினாள். இந்த எண்ணத்துடன் அவள் அழுத கண்ணைத் தானே துடைத்துக் கொண்டு படுக்கையினின்றும் எழ முனைந்தாள். ஜங்கி இப்போது தப்பும் வழி காணச் சுற்றும் முற்றும் பார்க்கத் தொடங்கினான். அவர்கள் திட்டத்தின் முதல்படி தொடங்குமுன் திடுமென எல்லாம் தகர்ந்துவிடும் சம்பவம் நிகழ்ந்து விட்டது. அவர்கள் எதிர்பாராமல் கண்மூடித் திறக்கும் நேரத்துக்குள்ளாக பேராங், கேதிங், தாமேங், லாய்பூ என்ற நான்கு மலை மீரீகள் குதித்தோடி வந்து இருவரையும் சூழ்ந்து பிடித்துக் கைகால்களைக் கட்டி விட்டனர். பானேயியும் ஜங்கியும் தலையிலடித்துக் கொண்டு அழுதரற்றினார்கள். அவர்கள் கதறலால் வானம் அதிர்ந்தது. ஆனால் வானம் அதிர்ந்தென்ன பயன்? மலைமீரீகள் உள்ளம் அதிரவில்லை. அசைய முடியாதபடி அவர்கள் இருவரையும் மலைமீரீகள் கட்டி உருட்டிப் போட்டனர். அந்தோ, கடவுளே! சர்வ வல்லவரே! இந்தக் களங்க மற்ற இதயமுடைய மீரீ நங்கையும், இந்த கபட மறியாத நெஞ்சங் கொண்ட மீரீ இளைஞனும் உனக்கு என்ன பாவம் இழைத்திருக்க முடியும்? அவர்கள் இவ்வளவு நாள் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தார்களே, அத்தனையும் வீணா? உலகைப் படைத்தவனே! அவர்களை இணைத்து வைத்தவன் நீயல்லவா, அவர்கள் ஒன்றுபடும் வழி நோக்கி அவர்களை வளையவளைய இட்டுக் கொண்டு வந்து இறுதியில் இப்படி ஒரு கணத்தில் சூறாவளியையும் இடி மின்னல்களையும் அவர்கள் மீது எழுப்பி விடுகிறாயே, இது எதனால்? ஆண்டவனே! உன் மகிமை பெரிது என்கிறார்கள். என்னால் அது எத்தகையது என்று அறியக்கூட வில்லையே! 16. பன்னிரு கிராமத்தார் பஞ்சாயத்து மலை மீரீ கிராமத்தில் அன்று பெரிய பஞ்சாயத்துக் கூடிற்று. மலைக் கிராமங்களிலிருந்து சுமார் அறுபது பேர்கள் அதில் வந்து கலந்து கொண்டனர். தலையில் மூங்கில் தொப்பி, வாயில் வேய்ங்குழல் போன்ற நீளமான புகைக் குழாய் - இவையே அவர்கள் ஆடையணிமணி அலங்காரங்கள். நாகரிகமற்ற இந்த மீரீ மக்கள் புகைக் குழாயில் புகையிலையை மட்டுமன்றி, மலைப்பகுதியிலுள்ள எத்தனையோ மரங்களின் இலைகளையும் கொத்தி இட்டு நிரப்புகிறார்கள். இரண்டு பன்றிகள் அடி முதல் முடி வரை மழுவால் துளைக்கப் பட்டு வடியும் குருதியுடனே தீயில் வதக்கப் பெற்று அவர்கள் முன்னால் வைக்கப் பெற்றுள்ளன. பஞ்சாயத்தார்கள் வடியும் குருதியுடன் துண்டு துண்டாக அவற்றை வெட்டித் தின்று கொண்டிருக்கிறார்கள். தின்று முடியும்வரை அவர்கள் பேசவேயில்லை. முடிந்த பிறகு கூடப் பேச முடியாமல் காட்டு மாடுகள் போலக் கைகால்களை விரித்துக் கொண்டு சாய்ந்து கிடக்கிறார்கள். பேசப்போகும் செய்தியும் முக்கியமானதென்றே தெரிகிறது - கூட்டத்தின் தொகையும் உணவின் ஆரவாரமும் இதை எடுத்துக் காட்டுகின்றன. மெள்ளப் மெள்ளப் பொழுது உச்சிவரை ஏறிற்று. ஆனால் உட்கார்ந்தவர்கள் உட்கார்ந்தபடியே இருக்கிறார்கள். ஒவ்வொரு கைப்பக்கமும் கூரிய வாள்கள் கிடக்கின்றன. வில் அம்பு முதலிய ஆயுதங்கள் ஒருபுறம் குவிந்துகிடக்கின்றன. அவர்கள் எதிரே அவர்களின் தேவதாயிகள் இரண்டு கோழி முட்டைகளைக் கையில் வைத்தாட்டிக் கொண்டு ஹு ஹு ஹு ஹா ஹா ஹா என்று பல்வேறு வகைகளில் தெய்வமங்களம் கோரிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குள் பேராங், கேதிங், தானேங், லாய்பூ ஆகியவர்களின் தலைமையில் ஒரு காட்டு மீரீக் கும்பல் பானேயியையும் ஜங்கியையும் கொண்டு வந்து பஞ்சாயத்தில் முன்னிலைப் படுத்தினார்கள். பாவம், இரண்டு மீரீக் காதலர்களும் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தார்கள். இருவர் இடுப்புக்களையும் சுற்றி இரண்டு கயிறுகள் கட்டப் பட்டிருந்தன. இரு கயிறுகளும் ஒருங்கே இணைக் கப்பட்டிருந்தன. இதனால் இருவர் கட்டுக்களும் ஒரே கட்டாக விளங்கின. அவர்கள் இருவரும் ஒருங்கே பன்னிரு கிராமத்துப் பெரும் பஞ்சாயத்தின் முன்வந்து விழுந்து மண்டியிட்டு நின்றார்கள். உடன் தானே மலைப் பஞ்சாயத்தாரின் மூன்றை முப்பத்து மூன்றாக்கும் வம்பளப்பு விதண்டாவாத மாநாடு தொடங்கிற்று. மலை மீரிகள் பேச்சை மீரீ வாலிப- யுவதி சோடியும், மீரீ சோடியின் பேச்சை மலை மீரீகளும் முழுக்க உணர முடியவில்லை. உத்தேசமாகவே பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. பன்னிரு கிராமத்தின் வயது சென்ற ஒரு மலை மீரீயே விசாரணையைத் தொடங்கி வைத்தான். `நீங்கள் திருடன் திருடிகள்தானா, இல்லையா?' என்று அவன் கேட்டான். ஜங் : ஒருபோதும் இல்லை. கிழவன் இப்போது ரேபாங், கேபாங் குழுவினரை அழைத்தான். அவர்கள் வந்து நின்றார்கள். அவன் அவர்களிடம் கேட்டான். `இவர்களை நீங்கள் எங்கே பிடித்தீர்கள்?' ரேபாங் : இருவரையும் ஒருங்கே எங்கள் வீட்டிலேயே கைப்பற்றினோம். பன்னிரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவன் : அடே திருடா, அடி திருடி! இப்போது என்ன சொல்கிறீர்கள்? ஜங் : நாங்கள் ஒன்றாய் இருந்ததினாலேயே பாவம் செய்தவர்கள் ஆகமாட்டோம். சிறு பருவத்திலிருந்தே நாங்கள் ஒரே கிராமத்தில் வளர்ந்தவர்கள், தோழமை கொண்டிருந்தவர்கள். இக்காரணத்தால் தான், ஒருவரை ஒருவர் சந்தித்தபோது, பேசத் தொடங்கினோம். ரேபாங் : நீ பேசுவதற்கு ஒரு இரவிலா என் வீட்டுக்கு வரவேண்டும். பன்னிரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவரை நோக்கி அவன் மீட்டும் பேசினான்: `பன்னிரண்டன் தலைவர்களே! இந்த வழக்கில் நீங்கள் தண்டனை கொடுத்துதான் ஆகவேண்டும். இவர்கள் பாவம் செய்ததுடன் மட்டும் விடவில்லை. பன்னிரண்டன் தலைவர் அவர்களிடமே பொய்யும் கூறுகிறார்கள்' என்றான். பன் - த : பொறுங்கள், பொறுங்கள்! இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக் கொண்டிருங்கள்! இந்தக் கொஞ்ச நேரத்துக்குள் மலை மீரீகளின் தேவதாயி இரண்டு கோழி முட்டைகளுடன் முன் வந்தான். அவன் பன்னிரண்டன் தலைவனைச் சிறிது நேரம் கூர்ந்து நோக்கினான். பின் அவனிடம் எதுவும் பேசாமலே, யுவ - யுவதிகளைக் கூர்ந்து நோக்கினான். அப்போது அவனுக்கு அவர்கள் மீது இரக்கம் ஏற்பட்டது. ஆனால் அதே கணத்தில் பேராங்கின் கண்கள் அவன் கண்களுடன் இணைந்தன. அச்சத்தால் அவன் புருவங்கள் துடித்தன. திடுமென அவன் பன்னிரண்டன் தலைவனை நோக்கிப் பேசினான்: `பன்னிரண்டன் தலைவரே! `இவர்கள் குற்றவாளிகள். `தெய்வ மங்களம் கூறுவது இதுவே!' என்றான். பன்னிரண்டன் தலைவன் இப்போது மீண்டும் - யுவ - யுவதியர் பக்கம் திரும்பி, `திருடன் - திருடியர்களே! இப்போது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்றான். இத்தடவை பானேயியோ ஜங்கியோ எதுவும் பதில் பேசவில்லை. பிசாசுகள் போன்ற இந்தக் காட்டு மிராண்டி களிடமிருந்து தங்களுக்கு எத்தகைய நல்ல விசாரணையோ, நியாயமோ கிடைக்காது என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். நம்பிக்கை யிழந்து அவர்கள் மௌனம் சாதித்து நின்றார்கள். ஆனால் இப்போதுகூடத் தம்மை அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது அவர் களுக்குத் தெரியாது. பன்னிரண்டன் தலைவன் இப்போது ஜங்கியின் திசையில் திரும்பிப் பேசினான். `திருட்டுப் பயலே! `நீ தேராங்கின் வீட்டுக்குள் புகுந்து திருடியிருக்கிறாய். அப்படியானால், உன் சாமர்த்தியத்தில் நம்முடைய பன்னிரண்டன் கிராமத்தார்களுக்குப் பன்றி, கடமா,51 கள், சோறு ஆகியவற்றைப் படையல் செய்தளிக்க முடியுமா? இந்தத் திருடியைப் பெறுவதற்காகத் தேவமணியும்52 தேவகடியும்53 காணிக்கையாக அளிக்க முடியுமா?' ஏற்கெனவே தன் கையில் இருந்த கொஞ்சக் காசு பணங்கள் கூட இந்தக் காட்டு மீரீகள் தன்னைக் கைப்பற்றிய போது பறிக்கப்பட்டு விட்டன என்பதை ஜங்கி எண்ணிப் பார்த்தான். இப்போது அவன் இருப்பதுவோ இன்னொருவர் வீட்டில், அதுவும் அடிமையாக! இந்த நிலையில் இவ்வளவு விலையேறிய பொருள்கள் எங்கிருந்து பெறுவது? இவ்வாறு நினைத்துக் கொண்டு, ஜங்கி இக் கருத்துபடச் சுருக்கமான பதில் சொன்னான். `நான் எங்கிருந்து பெறுவது?' பன்-த : எங்கிருந்தும் பெற முடியவில்லையென்றால் நாய்போல ரேபாங்கின் வீட்டிற்குள் புகுந்து ஏன் திருடினாய்? ஜங் : திருட்டு எதுவும் நான் செய்யவில்லை. செய்த அளவில்கூட என்னைப்போல `ஆற்று வெளி மீரீ'ப் பெண்ணுடன் தானே பேசினேன்? ரேபாங்கின் சொந்த இனத்தவர் எவருடனும் பேசவில்லையே! பன் - த : பன்னிரு கிராமத்தின் எல்லைக்குள் எல்லாம் பன்னிரு கிராமத்தாருடையதுதான். ஆகவே எல்லாத் திருட்டும் ஒன்றே. இதன் பின் பன்னிரு கிராமப் பஞ்சாயத்து நடவடிக்கைகள் ஏதோ `பிபிங் பிபிங்' என்றொலிக்கும் மொழியிலே, ஒன்றை முப்பத்து மூன்றாக்கும் வம்பளப்பு விதண்டாவாத நடவடிக்கையாக மாறிற்று. இறுதியில் ஆணை பிறந்தது. `திருடனும் திருடியும் பாவம் செய்திருக்கிறார்கள். `அவர்களைப் பேராற்றின் கரையில் இடுக!' ஆம்! என்னவாயிற்று? தீர்ப்புக் கூறப்பட்ட அந்தக் கணமே பிசாசுகள் போன்ற ஈன இரக்கமற்ற நாலு காட்டு மீரீகள் பானேயியையும் ஜங்கியையும் ஒரே கட்டாக வரிந்து வரிந்து கட்டத் தொடங்கினார்கள். துரதிர்ஷ்டம் வாய்ந்த காதலர்களின் அழுகைக் கூக்குரல்கள் வானைப் பிளந்தன. ஜங்கி தன் கழுத்தைத் தானே வெட்ட முற்பட்டான். பின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கட்டிய கைகளைக் கூப்பிக்கொண்டு பன்னிரண்டன் தலைவர் முன் மண்டியிட்டு இறுதி வேண்டுதல் விடுத்தான். `பன்னிரண்டன் தலைவரவர்களே! `என்னைக் கொன்று விடுவதற்கே உத்தரவு கொடுங்கள்! ஆனால் இந்தக் குற்றமற்ற சிறுமியையாவது உயிருடன் விட்டுவிடுங்கள். `அந்தோ, அந்தோ! என் கார்சிங் - கார்ட்டான் தெய்வங்களே! வந்து எங்களைக் காப்பாற்றுங்கள்! `பன்னிரண்டன் தலைவரவர்களே! என் குற்றமற்ற இந்தச் செல்வ நங்கையைக் கொல்லாதீர்கள்! பன்னிரண்டன் தலைவரவர்களே, அவள் வயிற்றில் மீரீ மரபுக்குரிய புதிய செல்வம் இருக்கிறது! `பன்னிரண்டன் தலைவரவர்களே! ஆற்று வெளிகளிலேயே எங்கள் துன்பங்களுக்கு ஓர் எல்லையில்லை. `பன்னிரண்டன் தலைவரவர்களே! இது என் இல்லாள். இவளைக் கொல்லாதீர்கள். `பன்னிரண்டன் தலைவரவர்களே! இவள் தாய் தந்தையரை விட்டு என்னுடன் புறப்பட்டு வந்தவள். `பன்னிரண்டன் தலைவரவர்களே! சோவன் - ஷீரீ ஆற்று மணலின் மீது நாங்கள் இருவரும் கார்சிங் - கார்ட்டான் சாட்சியாக கலியாணம் செய்து கொண்டோம். `பன்னிரண்டன் தலைவரவர்களே! இவள் வயிற்றிலுள்ள பாலகன் கொலையிலாவது ஈடுபடாமல் இருங்கள். `பன்னிரண்டன் தலைவரவர்களே! எங்களைக் கொல்வ தானால், உங்களுக்கு என்னதான் இலாபம் ஏற்படக் கூடும்? `பன்னிரண்டன் தலைவரவர்களே! என்னையும் இந்த என் கண்ணின் மணியையும் கொலை செய்யும் பாவத்திலிருந்து நீங்கள் தப்ப முடியாது. `இவளையாவது விட்டு விடுங்கள், விட்டு விடுங்கள்!' பன்னிரண்டன் தலைவன் மனம் ஒரு சிறிதும் மாறவில்லை. அவன் உறுதி குன்றாது பார்த்துக் கொண்டேயிருந்தான். காரணமில்லாமல், குற்றமில்லாமல் கொலைத் தண்டம் விதிப்பதற்குக் கூசாத அந்தக் காட்டு உள்ளங்களை, கடமாவும் பன்றிகளும் தேவகடியும் பெற்றால் தீர்ப்பு மாற்றும் நியாய சிந்தனை உடைய அந்த அரக்க உள்ளங்களை, தம்மிடையே கூட ஒருவர் செல்வத்தை ஒருவர் பெறுவதற்காக ஒரு கிராமத்தின் மீது ஒரு கிராமத்தார் இரவோடிரவாகத் தாக்கி ஆடவர்கள் எல்லாரையும் கொன்று, பெண்களையும், குழந்தைகளையும் கைது செய்து அடிமைகளாகக் கொள்ளும் அந்தப் பேய் உள்ளங்களை - ஜங்கி - பானேயியின் துன்பக் குரல்கள் எவ்வாறு கனியச் செய்ய முடியும்? பன்னிரண்டன் தலைவன் தன் தீர்ப்பின் மேல் தீர்ப்பளித்தான். `பன்னிரண்டன் தலைவர் தீர்ப்பு அசைக்க முடியாதது!’ என்று அவன் முடிவு கூறிவிட்டான். காதலர் இருவர் கைகளிலும் ஆணிகளை அறைந்து பேய்கள் போலக் காட்டு மீரீகள் அவர்களை இழுத்துச் சென்றனர். வழியில் ஜங்கி பானேயியை நோக்கி அழுது புலம்பினான். `பானேயி! நீ எனக்காகவே தாய் தந்தையரை விட்டு ஓடி வந்தாய். நான்தான் உன்னைக் கொன்ற பாவியானேன்!’ என்றான். இதைக் கூறுவதற்குள் அவன் கண்கள் கண்ணீரால் மூடின. நம் தூய உள்ளம் படைத்த மீரீ நங்கையின் கண்களும் தாரை தாரையாகக் கண்ணீர் பெருக்கின. இன்னும் கொஞ்ச நேரத்துக்குள் இந்தக் கண்கள் இவ்வழகிய உலகைக் காணும் பாக்கியம் இழந்துவிடும் என்று துரதிருஷ்டம் படைத்த அந்தத் துணைவர்கள் உணர்ந்தார்கள். அழுதழுது வீங்கிய முகத்துடன், எரிகிற உள்ளத்துடன் இறுதியாக அவர்கள் குரல்கள் இணைந்து ஒரு புலம்பல் பாடல் வடிவில் வெளி வந்தன. அழவேண்டாம், அழ வேண்டாம் கண்ணாட்டி, ஏடீஇ! அஞ்ச வேண்டாம், அஞ்ச வேண்டாம் கண்ணாளா, ஏடாஅ! நெஞ்சில் இனி சோகம் வேண்டாம் கண்ணாட்டி, ஏடீஇ! கொஞ்சமுமே தாபம் வேண்டாம் கண்ணாளா, ஏடாஅ! துன்பமெல்லாம் தீர்ந்ததிரப் பூலோகத்திலே! கண்ணாட்டி, ஏடீஇ! கண்ணாளா, ஏடாஅ! - இனி துய்க்க வேண்டும் ரேகாம் வாசம் மேலோகத்திலே! (அழ) பானேயியையும் ஜங்கியையும் மேலும் தொடர்ந்து பின்னால் நிகழும் பயங்கரக் காட்சியை வருணிக்க எனக்கு விருப்பம் இல்லை வாசகர்களே! மன்னிக்க வேண்டுகிறேன். 17. மீண்டும் சோவன்ஷிரீ அன்னையின் மார்பிலே!! பானேயி ஓடி மறைந்தும் ஜங்கி அவளைத் தேடப் புறப்பட்டுச் சென்றும், ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இந்த ஆறு மாதங்களும் சோவன்ஷீரி பகுதியில் அவர்களைப் பற்றி எத்தகைய தகவலும் கிடைக்கவில்லை. பானேயியின் தாய் தந்தையர்கள் அவளைப் பிரிந்த சோகத்தால் நாள்தோறும் மெலிந்து மெலிந்து துரும்பாகிவிட்டார்கள். அவ்வப்போது நிரமா தன் முட்டிகளால் மார்பில் இடித்து இடித்து அலறினாள். அவ்வப்போது அவள் தாமேதினைத் திட்டுவதையும், சபிப்பதையுமே ஆறுதல் முறையாகக் கொண்டிருந்தாள். இன்னொரு புறம் கமுதனுக்கும் தன் பணத்தைப் பெறவோ, பானேயியை அடையவோ இரண்டுக்கும் இடமில்லாமல் போயிற்று. அவன் தாமேதின் மீது வழக்குத் தொடர்ந்தான். வாசகர்களே! டாலிமி என்ன நிலையில் இருக்கிறாள் என்று சென்று பார்ப்போம். ஜங்கி திரும்பி வராதது கண்டும் ஆற்றமாட்டாமல் அவள் ஒவ்வொரு நாளும் காலை மாலை ஒவ்வொரு தடவையாவது ஆற்றுத்துறைக்குச் சென்று நாற்புறமும் துரித்து நோக்குவாள். அவள் புகைக் குழாயிலிருந்து அச்சமயம் அவள் பெருமூச்சு நீண்ட புகைக் கற்றைகளாக வெளிவரும். இவ்வாறு இரு கிராமங்களிலும் நாலு உயிர்கள் வதைக்கு ஆளாயின. ஒருநாள் கிழவி நிரமா தூங்கிக் கொண்டிருந்தாள். கனவில் அவள் கண்முன்னால் பானேயியும் ஜங்கியும் முன்னிலும் அழகான தோற்றத்துடன், முன்னிலும் நாகரிகமான உடையுடன் வந்து காட்சியளித்தார்கள். தன் கைகளை ஆட்டி ஆட்டி அவள் அவர்களை அழைத்தாள். ஆனால் அவர்கள் ஒருவர் கையை ஒருவர் பற்றியவாறு ஒரு மலை மேலே உலவிக் கொண்டிருந் தார்கள். `என் குழந்தைகளே, வாருங்கள்' என்று அவள் அவர்களைக் கூவி அழைத்தாள். `அம்மா! எங்களால் வர முடியவில்லையே! இங்கிருந்து இறங்கி வர வழி காணோமே!' என்று இருவரும் பதிலுக்குக் கூவினார்கள். கிழவி இதன்மீது மார்பிலடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள். இத்துடன் தூக்கம் கலைந்து விட்டது. அழுதழுது வீங்கிய முகத்துடன் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் சுற்று முற்றும் பார்த்தாள். பொழுது விடிந்து கிழக்கில் செவ்வானின் ஒளி படர்ந்திருந்தது. இடுப்பில் குடத்தை எடுத்து வைத்துக்கொண்டு கிழவி சோவன்ஷிரீத் துறையை நோக்கித் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றாள். தெளிந்த சோவன்ஷிரீ நீரினடியிலே ஏதோ இரு பொருள்களை நீரோட்டம் அடித்துக்கொண்டு செல்வதை அவள் கண்டாள். கிழவி தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பினாள். ஆனால் அவள் உள்ளம் ஏதோ குடுகுடுத்துக் கொண்டது. அவள் தான் கண்டதைத் தாமேதிடம் கூறினாள். தாமேத் கிராமத்து ஜனங்களைத் திரட்டிக் கொண்டு ஆற்றை அடைந்தான். நிரமா அவர்களுடன் சென்றாள். மிக மிக வயது சென்ற சோவன்ஷிரீயின் ஒரு பொற்கொல்லனும் உடன் தொடர்ந்தான். படகுத் தண்டுகளின் உதவியால் நீரோட்டத்தில் தாழ்ந்து சென்ற அப் பொருள்களை அவர்கள் பிடித்திழுத்துக் கரை சேர்த்துப் பார்த்தார்கள். அந்தோ, அவை இரண்டும் இரண்டு பிணங்கள்! ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி அவை ஒருங்கே வரிந்து பிணிக்கப் பட்டிருந்தன. இருவர் கழுத்தையும் ஒரே ஈட்டி குத்தித் துளைத்திருந்தது. இருவர் கைகளும் ஒன்றோடொன்று இரும்புச் சலாகையால் அது போலவே குத்தியிணைக்கப் பட்டிருந்தன. இதுபோல ஈட்டிகள் இருவர் நெஞ்சையும் இருவர் இடுப்புகளையும் துளைத்து இணைத்திருந்தன. கிழப் பொற்கொல்லன் இதைக் கண்டவுடனே, `அந்தோ, இது காட்டு மீரீகளின் கைவரிசையாயிற்றே!' என்று கூவினான். இரு பிணங்களையும் புரட்டிப் புரட்டிப் பார்த்ததில், ஒன்று பானேயியினது என்றும், ஒன்று ஜங்கியினது என்றும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் புலனாயிற்று. இது கண்டதே கிழவனும் கிழவியும் மூர்ச்சையுற்று நிலத்தின்மீது விழுந்தார்கள். அங்கிருந்த ஜனங்கள் அத்தனை பேரும் அழுதார்கள். பிணங்களை எல்லாரும் மாறி மாறி எடுத்தெடுத்து அணைத்துக் கொண்டு புலம்பினார்கள். ரகமியும் பாதையும் மாண்ட இருவர் முகங்களிலும் மலர்களை பறித்துத் தூவினார்கள். ஆனால் அவர்கள் கண்கள் தாரை தாரையாக நீரை ஒழுக்கின. கிராமத்து மக்கள் இரு பிணங்களையும் ஏந்திச் சென்று மீரீ மரபு வழக்க முறைகளின்படியே அடக்கம் செய்தார்கள். வாசகர்களே, இப்போது நாம் டாலிமியைக் கவனிக்க வேண்டும். இந்தச் செய்திகள் டாலிமிக்கும் எட்டின. மக்கள் எவருக்கும் தெரியாமல் ஒளித்து, ஒளித்து, மறைந்து, மறைந்து, அவள் தன் கண்ணீரை அழுது அழுது தீர்த்தாள். தண்ணீரைக் கொண்டு வரும் சாக்கில் அவள் அடிக்கடி சோவன் ஷிரீத் துறைக்குச் செல்வாள். சிற்சில சமயம் நீரின் ஆழத்தை. சிற்சில சமயம் ஆகாசத்தின் பரப்பை, வேறு சில சமயம் மீரீ - டப்ளா மலைச் சிகரங்களின் அடுக்கை அவள் பார்த்துக் கொண்டே நெடுநேரம் தன்னை மறந்திருப்பாள். இத்தடவை அவள் இதயத்தின் ஆசைக் கொடி வேரோடறுந்து நாற்புறமும் சிதறிவிட்டது. பானேயி, ஜங்கி ஆகியோரின் காதல் கொடி அமுதக் கனி ஈனவில்லை, விஷக் கனியே ஈன்றது! பண ஆசை என்ன செய்யும் என்பது பற்றிய மிக உறைப்பான பாடம் கிழத் தாமேதுக்கு இந்த வாழ்க்கை இறுதிக் காலத்திலேயே கிட்டிற்று. துர்ப்பாக்கியம் வாய்ந்த மீரீ இளநங்கையின் துயர் நிறைந்த கதைக்கு நாமும் இத்துடன் முற்றுப்புள்ளியிடத்தான் வேண்டும். இனி மேலாவது மீரீ இனம் நற் கொடி வளர்த்து நற் கனிகளை ஈன வேண்டுமென்று பிரார்த்திப்போமாக! (முற்றும்) எஎஎ அடிக்குறிப்புகள் 1. மீரீ மக்களிடையே வழங்கும் மரபுகளின்படி அவர்கள் ‘சதியா’வின் மேல்பகுதிகளில் ‘ஆபர்’ வகுப்பினருடன் தங்கி வாழ்ந்ததாகத் தெரியவருகிறது. அங்கே குடி குலங்களிடையே எப்போதும் சண்டை சச்சரவுகள் நிகழ்ந்து வந்தன. பின்னர் அவர்கள் சமவெளிகளை நோக்கி இறங்கி வந்தார்கள். ஆனால் ஆபர் வகுப்பினர் அவர்களை அத்துடன் விடவில்லை. அவர்கள் பின்தொடர்ந்து வந்தார்கள். ஆனால் ஏலம் கிராம்புப் பயிர்கள் தடையின்றி வளர்ந்திருப்பது கண்டு மீரி வகுப்பினர் நெடுந்தொலை சென்று விட்டதாக எண்ணி அவர்கள் திரும்பி விட்டார்கள். அதுமுதல் மீரி மக்கள் சமவெளிகளிலேயே தங்கி விட்டார்கள். இந்த மீரீ மக்களிடையே பத்து ஊர்ப் பிரிவு என்றும், பன்னிரண்டு ஊர்ப் பிரிவு என்றும் இரண்டு முக்கிய கிளைப்பிரிவுகள் இருந்தன. பன்னிரண்டு ஊர்ப் பிரிவுக்குள்ளேயும் சுதியா; தைதியால் முதலிய சிறு சிறு துணைக்கிளைப் பிரிவுகள் உண்டு. பத்து ஊர்ப் பிரிவிலும் இதுபோல ஆயோஙியா, மாயோஙியா, சாயோஙியா, தாமூகுரியா முதலிய சிறு துணைக்கிளைப் பிரிவுகள் உண்டு. இப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சமவெளிக்குரிய மீரீ மக்கள் ஆவர். ஆனால் இப்போதும் மலைகளின்மேல் மீரீ வகுப்பினரின் பல பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களிடையே காச்சீ, கான்சீ, சாரோக், சிலி முதலிய பிரிவுகளின் பெயர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். ஆசார உபசாரங்கள், பழக்க வழக்கங்கள், உணவு குடிவகைகள், வந்தனை வழிபாட்டுமுறைகள் ஆகியவற்றிலெல்லாம் இந்த மீரீ மக்கள் உண்மையில் ‘அங்கா’, ‘நகர்’ வகுப்பினர்களை மிகவும் ஒத்தவராகவே இருக்கிறார்கள். ஆயினும் சமவெளிக்குரிய நம் ‘மீரீ’ வகுப்பினர் கிட்டத்தட்ட ‘அசாமிய’ மக்களாகவே மாறியமைந் துள்ளார்கள். அவர்கள் பேச்சுத் தனிப்பட்ட மீரீ மொழிதான். ஆனால் அவர்கள் ஒருவர் விடாமல் அசாமி மொழியையும் பேசுகின்றனர். அவர்கள் ஆடையணிகள் கூட ‘அசாமிய’ மக்களை ஒத்தவைகளே. இது மட்டுமல்ல - அவர்கள் ‘இந்து’ மத வாழ்வைக் கூட முற்றிலும் தமதாக்கிக் கொண்டுள்ளார்கள். 2. சரண பூசை : பணம் இருந்தால் இதை யார் வேண்டு மானாலும் நடத்தலாம். ஒன்றிரண்டு ஆண்டுகள், சில சமயம் மூன்று நான்கு ஆண்டுகள் கழித்துக்கூட இதை நடத்துவதுண்டு. ஆயினும் ஒரு தடவை இந்தப் பூசையை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்ட பருவங்கள் தோறும் அதை எப்போதும் நடத்துவது வழக்கம். அதன் நோக்கம் சமுதாயத்திலே எல்லாருக்கும் நன்மை உண்டாக வேண்டும் என்பதே. இந்தப் பூசையின் போது மேகம், இடி, சந்திரன், நட்சத்திரங்கள், பூமி, தண்ணீர் ஆகிய இயற்கைச் சக்திகள் எல்லாவற்றுக்கும் சாராயம், பன்றி, கோழிகள் ஆகியவற்றைப் பலி தந்து வழிபாடு நடத்தப்படும். இவற்றுக்குரிய சடங்குகள் மிகவும் விரிவானவை. இடமில்லாத காரணத்தினாலேயே அவற்றின் வருணனை இங்கே தரப்படவில்லை. 3. முக்லீங்-மிரேமா: இவை இடி-மேகத் தேவதைகள். சோவன்ஷி? நதிக்கரையில் உள்ள மீரீ மக்களின் கிராமங்களிலே அடிக்கடி இடி விழுவதுண்டு. இடியின் கொடுங்கோபத்தையும் மேகங்களின் கோர முழக்கத்தையும் கண்டு நடுங்கி இயல்பாகவே வெள்ளையுள்ளங் கொண்ட மீரீ மக்கள் அவற்றைக் கண்டு நடுங்கி இயல்பாகவே வெள்ளையுள்ளங் கொண்ட மீரீ மக்கள் அவற்றைத் தேவதைகளென்றே மதிக்கின்றனர். உயிருள்ள ஒரு பன்றியைக் கழுவிக் குளிப்பாட்டி ஒரு தட்டத்தில் பிடித்து வைத்து, தலையில் ஒரு வெட்டு உண்டு பண்ணுவதன் மூலம் இரத்தம் ஒழுக விடுகின்றனர். குறிப்பிட்ட மந்திர உச்சரிப்புடன் இந்த இரத்தம் இடி-மேகத் தேவதைகளுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. -(மூல) ஆசிரியர் 4. மந்திரம் : இதன் பொருள் : (ஏ, இடியே! ஏ,மேகமே!) நாங்கள் நான்கு வெண்குளம்புகளும் கொம்புகளும் பல்திரளும் கொண்ட வளர்ந்த (ஐந்தாண்டுப் பன்றியைத் தருகிறோம். இதை உண்டு நீங்கள் எங்களை நலமுடன் காப்பீர்களாக! தலையிடி எமக்கு வராதிருக்க, வயிற்றுவலி வராதொழிக! எங்களை ஒற்றுமையுடன் இன்பமாகப் பேணுவீர்களாக!’ இப்பாட்டின் மூலத்தில் ‘பஞ்ச்சாலா’ (வளர்ந்த) என்ற பதத்தின் சொற்பொருள் ஐந்து ஆண்டுகளை உடைய என்பதானாலும் அதன் மெய்ப் பொருள் அதுவன்று; வளர்ந்த என்பதேயாகும். இரண்டு ஆண்டுப் பன்றியைப் பலி கொடுக்கும் போது கூட அவர்கள் கூறுவது ‘பஞ்ச்சாலா’ என்ற பதம்தான். மேலும் பன்றிகுக்குப் பற்கள் தான் உண்டு. கொம்புகன் கிடையாது. ‘கொம்புகள்’ என்ற பதம் பசு-காளையை நினைவூட்டுவதாகும். சமவெளியிலுள்ள மீரீ மக்கள் இந்து மதப் பழக்கங் காரணமாகப் பசு-காளைகளைப் பலியிடுவதையும் தின்பதையும் நிறுத்தி விட்டார்கள். ஆயினும் இக்காரணத்தால் மந்திரம் மாறிவிடவில்லை. தலையிடி மீரீ மக்களுக்கு மிகச்சாதாரணமாக வருகிற நோய். அவர்கள் மதுவை மிகவும் குடிக்கிறார்கள். வயிற்றுவலி என்றால் அவர்களுக்கு அச்சம் மிகுதி. 5. இந்தி: ஆஹு; இது இனவேனில் பருவத்தில் விதைப்பாட்டு ஜூன் ஜூலை மாதங்களில் அறுவடையாகும் ‘கதர்’, ‘ஆசு’ அல்லது ‘அசேனஜி’ தானியம். 6. பத்து அல்லது பன்னிரண்டு ‘நல்’; ‘நல்’ என்பது ஏறத்தாழ எட்டு முழம் (பன்னிரண்டு அடி) 7. இந்தி: ‘ஜாஞ்ஜ்ரீ’; அசாமி மூலம் ‘தகா’. இது ‘பிஹு’ப் பாட்டுடன் கையாளப்படும் ஒருவகை ‘ஜாஞ்ஜ்ரி’ (இந்தி மொழி பெயர்ப்பு) பழந்தமிழ் இலக்கியத்தில் ‘தட்டை’ என்று குறிக்கப்படும் கிளிகடி கருவி இது ஆதல் வேண்டும். ‘தழலும் தட்டையும் கிளிகடி கருவி’ என்பது பிங்கள நிகண்டு (477) 8. இந்தி : ‘பயா’, டுன்கீர்’ ஆகிய சிறு பறவைகள். 9. ஏழு எட்டு ‘நல்’ (ஒரு நல்: பன்னிரண்டடி) 10. மூல அசாமிய நூலில் பாடல்கள் மீரீ மக்கள் பேசும் மொழியிலேயே உள்ளன. வட இந்திய மொழிகளுக்கெல்லாம் மூலச்சொல் வளமாகிய பொதுப் பதங்களில் சில ஒலிபேதங்கள் இதில் உண்டு. நூலின் தமிழாக்கம் பாடல்களைத் தழுவித் தமிழ்ப்படுத்தியதாதலால், மீரீ வழக்குகளில் முக்கியமான ஒரு சிலவற்றை மட்டுமே தமிழாக்க அடிக்குறிப்பு விளக்குகிறது. (தமிழக்க ஆசிரியர்) 11. மீரீ மொழிச் சொல்: சேலோஙா : கண்ணாளன் என்ற பொருளில் வழங்குகிறது. 12. மீரீ மொழிச் சொல் : கனேங் : கண்ணாட்டி என்னும் பொருளுடன் வழங்குகிறது. 13. ரங்கா நதி (ரஙாநதி) என்ற ஆறு இலட்சுமிபுரர்நகரத்துக்கு மூன்று மைல் மேற்கே ஓடுகிறது. இதன் கரையோரத்தில் பல மீரீ மக்களின் கிராமங்கள் இருக்கின்றன. 14. இங்கே குண்டலம் என்பதற்குரிய அசாம் நாட்டு மீரீ மொழிச்சொல் ‘நரா-ஜாவே-பாயி’ என்பது. இது ‘தேன் நிறமான ஒளியூடுருவும் கண்ணாடி போன்ற இரத்தினக்கல்’ என்ற பொருள் உடையது ஆகும். இது அசாமின் வடகிழக்கிலுள்ள ‘மிசிமி’ மலைப் பகுதியில் கிடைக்கிறது. பழங்குடி மக்கள் இந்த இரத்தினக் கல்லையே குண்டலமாக அணிகிறார்கள் (இந்தி மொழிபெயர்ப்பாசிரியர்) தமிழிலும் ‘நறா’ தேன் எனப் பொருள்படுவது காணலாம். (தமிழ் மொழிப்பெயர்ப்பு) 15. சந்தனப்பட்டு என்று இங்கே தமிழில் குறிக்கப்படுவதனிடமாக மூல அசாமி மொழியில் கோமசேங் (மீரீ மொழியில் கோமேசேங்) என்ற சொல் வழங்குகிறது. பண்டு அசாமில் இப்பெயர் கொண்ட நேர்த்தியான உயர்ந்த துணி வழங்கி வந்தது. ஆனால் மேலை நாகரிக ஆதிக்கம் காரணமாக இவ்வழக்கு இப்போது அருகிவிட்டது. (மூல ஆசிரியரைப் பின்பற்றித் தமிழாக்க ஆசிரியர்) 16. இளநங்கையர் மட்டுமன்றி இளைஞர் உட்பட எல்லா மீரீ மக்களும் தம் தலையில் மரச் சீப்புக்களைச் செருகி வைத்துக் கொள்வது, வழக்கம் அவர்களுடைய காதல் வாழ்க்கையில் இச்சீப்புக்குளுக்குரிய மதிப்பும் அருமையும் மிகுதி ஆகும். 17. மீரீ மக்கள் நோய்ப்பட்டால் மருந்து சாப்பிடுவதில்லை. ‘தேவதாயி’ என்ற மீரீப் புரோகிதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட நோய் எந்தத் தெய்வத்தின் கோபத்தால் வந்ததென்பதைக் கேட்டறிந்து கொள்கிறார்கள். பின் அந்தத் தெய்வத்துக்குக் கள், பன்றி, கோழி முதலியவற்றைப் பலி கொடுத்துப் பூசை செய்கிறார்கள். (மூல ஆசிரியர்) 18. தோளணியும் அரைக்கச்சையும் (ரிஹா-மேகலா) அசாமியப் பெண்களின் முக்கிய அணி ஒப்பனைகள். (இந்தி மொழிபெயர்ப்பாசிரியர்) 19. இப்பாடல் ஆங்கிலத்தில் கோல்ட்ஸ்மித் (ழுடிடனளஅiவா) என்ற கவிஞரின் ‘பாழடைந்த கிராமம்’ என்ற பாடலின் சில அடிகளின் மொழிபெயர்ப்பாக இவ்வத்தியாயத் தலைப்பில் தரப்பட்டுள்ளது. இந்த ஆங்கிலப் பாடல் வரிகள் வருமாறு: The bashful virgin’s sidelong looks of love The Matron’s glance that would those looks reprove The were thy charms, Sweet Village! Sports like these with sweet succession Taught even toil to please. 20. இது மீரீ மக்கள் அனைவரும் சமய வழிபாட்டில் கூடும் இடம். மீரீ மக்கள் பரண்மீதமைந்த குச்சு வீடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் அம்பலமும் பரண்மீதே கட்டப்படுகிறது. 21. அசாம் பகுதியில் இராச்சேவை மிகவும் பிரபலமான சமய உட்குழு மரபு ஆகும். இந்தச் சம்பிரதாயத்தைச் சேர்ந்த மக்கள் தேர்ச்சி பெற்ற பக்தர்கள் என்று கூறப்படுகிறார்கள். இதில் எல்லா வகுப்பு மக்களும் உண்டு. இந்த மரபின் மூல வடிவம் எது என்பதுபற்றி இன்னும் சரிவர விவரம் தெரியக் கூடவில்லை. ஆனால் அவர்கள் ‘சேவை’ இரவிலேயே நடைபெறுகிறது. இரவிலேயே முடிந்து விடுகிறது. இந்தச் சேவையிடையே கோபீதரா, நாகா கீர்த்தனம், பூல கீர்த்தனம். திகம்பரி முதலிய பலவகைச் சடங்குகள் உண்டு. ஆனால் இவற்றின் பெயர்களை மட்டும் கேள்விப் படுகிறோமே தவிர, விவரங்கள் எதுவும் தெரியவில்லை. எப்படியும் இதுபோன்ற உட்குழு மரபுகள் எங்குமே இருப்பவை தாம். சில்ஹட் மாவட்டத்தில் ‘கிஷோரி பஜனம்’ என்ற ஒரு உட்குழு மரபினைப்பற்றிக் கேள்விப்படுகிறோம். பண்பட்ட மேற்கத்திய மக்களிடையே, ஐரோப்பாவில் ‘லாஸ்’ அல்லது ‘ஃப்ரீமேசன்’ என்ற பெயருடன் ஒரு வினை முறை இருந்து வருகிறது. சென்ற இரண்டாயிர ஆண்டுகளாக இது நம்மிடையே நடந்து வந்தபோதிலும் இந்த வினைமுறைகளின் இரகசியம் யாருக்கும் தெரியாது. எத்தனையோபேர் வித்துவான்களாகவும் பெரும் பணக்காரர்களாகவும் உள்ளவர்கள் ஏதோ ஓர் ஆர்வத்தால் தூண்டப்பட்டு இதில் தீட்சிக்கப்பட்டுச் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் அவர்கள் தீட்சை பெறாதவர்களிடம் தம் இரகசியங்களைக் கூறுவதில்லை. சொந்த மனைவி மக்களுக்குக்கூட அவர்கள் இந்த இரகசியத்தை வெளியிட்டுக் கூறுவதில்லை. ஏன் வெளியிட்டுக் கூறுவதில்லை, தாம் பின்பற்றும் ஞான ஒளியினை உலகில் பரப்புவதற்கு அவர்கள் ஏன் விரும்புவதில்லை என்பதை நம்மால் அறியக் கூடவில்லை. (மூல ஆசிரியர்) 22. மீரீ மக்கள் தம்புரோஹிதரை ‘மிபுவாங்’ அல்லது ‘தேவதாயி’ என்று அழைக்கின்றனர். டால்ட்டன், ஹண்டர் முதலிய ஆங்கில ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களில் தேவதாயிகள் பற்றிய அதிசய அதிசயமான கண்கூடான விவரங்கள் காணப்படுகின்றன. தேவதாயியாக வரவிருக்கிறவனிடம் குழந்தைப் பருவத்திலிருந்தே விசேஷமான சின்னங்கள் காணப்படும். அவனுக்குச் சரியான வயது வந்த சமயம் தேவதைகள் தங்கள் அருள்கடாட்சத்துக்கு அவனைப் பாத்திரமாக்கி, அவன்மீது முதல் தடவையாக ஆவேசிக்கிறார்கள். அப்போது அவன் ஓடிக் காடுகளில் ஒளிந்து வாழ்கிறான். அங்கே அவனுடைய தெய்வீகப் பைத்தியம் வளர்கிறது என்று கேள்விப்படுகிறோம். பின் எல்லாத் தேவதைகளையும் பிரத்தியட்சமாகக் கண்டு பழகிய பின் அவன் திரும்பவும் தன் வீடு வருகிறான். அந்நாள் முதல் அவன் மிபுவாங் அல்லது தேவதாயி என்று அழைக்கப்படுகிறான். (மூல ஆசிரியர்) 23. ஸ்ரீ சங்கர தேவரும் அவருடைய முக்கிய சீடரான மாதவதேவரும்தான் மஹா புருஷீய வைஷ்ணவ’ தருமத்தின் முக்கிய தலைவரும் அதன் சார்பில் சமுதாயச் சீர்த்திருத்தவாதிகளும் ஆவர். கி.பி.15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த இருசமயத் தலைவர்களுமே அசாமியப் பண்பாட்டுக்கும் அசாமிய இலக்கியத்துக்கும் மூலபுருஷர்கள் ஆவார்கள். இதனால் அசாமியர்களின் கண்டுக்களிப்புக்கூட, சங்கராப்தம் என்ற முறையில் இவர்கள் வாழ்விருந்தே தொடக்கம் நடைபெறுகிறது. (இந்தி மொழிபெயர்ப்பாசிரியர்) 24. இது பக்தி உட்குழுமரபின் யாக்கை நிலையாமைக் கீதம் ஆகும் இந்தி மொழிப் பிரதேசத்தின் நிர்க்குணமார்க்கம் இதனுடன் ஒத்ததாகும். இந்தி மொழிபெயர்ப்பாசிரியர். 25. இதுவே மீரி மக்களின் இனப்பாடல் ஆகும். ஆனால் இதன் பொருள் என்ன என்பது பற்றி மீரீ மக்களுக்கே தெரியாது. இதன் பொருள் தேவதாயிக்கு மட்டுமே தெரியவரும். (மூல ஆசிரியர்) 26. இது பல்லவி போல மீட்டும் மீட்டும் வரும் பாடலின் முதலடி ஆகும். இதன் பொருளும் இன்னதெனத் தெரியவில்லை. 27. இது பிடில்வகை. ‘சம்பேர்’ மக்களின் வீணை போன்றது. மீரீ மக்கள் இதை ‘நரசிங்காபிஹு’ என்ற இவ்விழாவில் கையாளுகின்றனர். 28. ‘சாங்தோப்’ அல்லது ‘தேவோதோப்’ என்ற வினைமுறை பாட்டு கீர்த்தனை, பல்லவி, நடனம், மேளம் ஆகிய அனைத்தும் கலந்த சமுதாயக் கேளிக்கை ஆடல் பாடல் ஆகும். மீரீ, நாகர்கள் முதலிய எல்லா மலைநாட்டு மக்களிடமும் இத்தகைய நடைமுறைகள் இருக்கவே செய்கின்றன. இது ஒரு மங்கள பிரார்த்தனை மரபு ஆகும். அசாமிலேயே மலைநிலங்களில் வழங்கும் ‘மாத் உனே’வின் அமைப்பு இதனை ஒத்ததேயாகும். (மூல ஆசிரியர்) 29. இந்த இரண்டு அடிகளும் கூடப் பல்லவியைச் சார்ந்தவையே. இவற்றுக்குச் சரியான அர்த்தம் தெரியவரவில்லை. ஆனாலும் மீரீ மக்களின் தர்ம சாஸ்திரப்படி ரேகீ-ரேகாம் என்ற ஒரு மலையின் பெயர் காணப்படுகிறது. அவர்களுடைய தெய்வங்கள் யாவரும் அம்மலையிலேயே வாழ்வதாகத் தெரிகிறது. இவ்வுலகில் நல்வினைகள் செய்து புண்ணியம் தேடியவர்களும் மரணத்துக்குப் பின் இம்மலைக்கே போகிறார்கள். இதுபற்றி ஹண்டர் இயற்றிய புள்ளி விவரக் கணக்குகள் (ழரவேநச’ள ளுவயவளைவiஉயட ஹஉஉடிரவேள) என்ற புத்தகத்தைக் காண்க. அவர் கூறுவதாவது: அவர்களுக்கு ஒரு தனிப்பிரதேசம் இருக்கிறது. அதுவே அவர்கள் தெய்வங்கள் எல்லாருக்கும் இருப்பிடம். அதற்குச் செல்லும் புண்ணிய யாத்திரிகர்கள் பின் திரும்ப மீள்வதேயில்லை. (கூhநல hயஎந ய சநபiடிn றாiஉh ளை வாந யbடினந டிக யடட வாநசை படினள யனே கசடிஅ றாடிளந bடிரசநே nடி யீடைபசiஅ சநவரசn) தேவதாயி இங்கே ரேகீ-ரேகாம் என்ற பெயர் கூறியுள்ளதனால், அம்மலையிலிருந்து அங்கேயுள்ள ‘பாங்கேயா’, ‘பாமியா’ என்ற இருதெய்வங்களும் இறங்கி வந்து அவர் உடலில் ஆவேசித்தன என்று ஊகிக்க இடமுண்டு. இந்தப் பல்லவிப் பகுதிக்கு நான் இந்தப் பொருள்தான் கொள்ள முடிகிறது. 30. இவர்கள் (கார்ஸிங்-கார்ட்டான் ஆகியோர்) ஆண் பெண்கள்; வினைக்குரிய தேவனும் தேவியும் ஆவார்கள். 31. பிணி நீக்கத்துக்கான சிறப்புப் பூசை என்பது மீரீ இனத்தவர் அனைவருக்குமுரிய முக்கிய வழிபாட்டுமுறை ஆகும். கிராம மக்கள் அனைவருமே ஒருங்கு சேர்த்து இதற்கான பணம் திரட்டுகிறார்கள். இங்கே வருணிக்கப்படும் ‘நரசிங்கா பிஹு’ என்ற விழாவேளைகளிலும் அடிக்கடி நீர்க்கோவை மகாமாரி முதலிய நோய்களின் போதும். இப்பூசை நடைபெறுகிறது. இப்பூசையில் மீரீ மக்கள் தங்கள் முக்கிய தேவதைகளுக்குக் கள்ளும், பன்றியும், கோழியும் படையல் செய்து வழிபடுகிறார்கள். 32. ஆத்தி என இங்கே தமிழில் குறிக்கப்படுவது பாபரீ என்ற பெயருடைய ஒரு மணமுள்ள கீரை வகைத் தாவரம் ஆகும். இத்தியில் இது கன்போடா என்றும் சமஸ்கிருதத்தில் ‘பர்பரீ’ என்றும் பெயர் பெறுகிறது. 33. வெந்தரிசுப் பாத்தி எனத் தமிழில் இங்கே குறிக்கப்படுவது ஆசாமில் மீரீகளால் ‘ஆராம்-பிரிக்’ எனப்படுகிறது. இலட்சுமிபுரத்திலுள்ள மீரீ மக்கள் காடுவெட்டித் திருத்தி அதில் தினை, கசகசா முதலியன பயிரிடுகிறார்கள். இத்தகைய புதுவல் நிலங்களில் மூன்று நான்கு ஆண்டுகளே நல்ல பயிர் தழைக்கிறது. அதன்பின் மண்உரம் கெட்டுப் பயிர் செய்வதற்குத் தகுதியற்றதாகிவிடுகிறது. இதனால் மீரீ மக்கள் அதைக் கைவிட்டு விடுகிறார்கள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலத்தைத்தான் ‘ஆராம்-பிரிக்’ என்று கூறுகிறார்கள். இதில் வளரும் இளம்புதர்கள் காய்ந்தபின் விறகாகப் பயன்படுத்தப் படுகிறன்றன. ஒரிசாவில் இத்தகைய நிலங்கள் ‘போடுகள்’ வயல் எனப்படுகின்றன. (மூல ஆசிரியர்) 34. பருவமடைந்தபின் பெண்கள் சேலைத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டு செல்வர். ஆகவே இங்கே திறந்த தலையுடன் என்பது ‘குழந்தைப் பருவ வழக்கப்படி முக்காடில்லாமல்’ என்று பொருள்படுகிறது. (தமிழாக்க ஆசிரியர்) 35. இங்கே ‘நடவு’ என்று தமிழக அளவாகக் கூறப்படுவது அசாமில் ‘பூரா’ எனப்படும். இது நான்கு பீகா அளவுடையது. 36. மீரீ மக்களின் ஒவ்வொரு வட்டாரத்திலும் அவ்வட்டாரத்தின் முக்கிய ஊரின் தலைவனே உரிமை செலுத்துகிறான். மீரீ மக்களிடையே இத்தலைவன் காம என்றும், அசாமினும் பிற பகுதிகளிலும் ‘சௌதரி’, ‘முக்கியா’ என்றும் அழைக்கப்படுகிறான். 37. மீரீ மக்கள் வீடுகள் ‘சாங்’ எனப்படுகின்றன. அவை பெரும்பாலும் பரண்மீதே கட்டப்படும். ஆனால் அசாமின் பல பகுதிகளில் தாழ்நிலங்களில் வாழும் மீரீ மக்கள் பலர் மீரீ மரபுக்குரிய இந்தப் பரண்மனைகளைக் கைவிட்டு நிலத்தின் மீதே வீடுகட்ட தொடங்கிவிட்டனர். அவர்கள் அசாமியருடன் அசாமியராக முற்றிலும் கலந்துவரும் நிலையையே இது வலியுறுத்திக் காட்டுகிறது. 38. மீரீ மக்கள் திருமணமரபின்படி, பெண்ணுக்குப் பெண்ணின் தந்தை அறுபது ரூபாய் முதல் இருநூறு, முந்நூறு ரூபாய் வரை வரதட்சணை பெறுவது வழக்கம். வரதட்சணை கொடுக்காத மாப்பிள்ளை அதற்கீடாக இரண்டு ஆண்டுகள் வரை மாமனார் வீட்டிலேயே தங்கி வேலை பார்க்க வேண்டும். இம்முறையைத்தான் ‘ஜோவார்யீ கட்னா’, அதாவது மாப்பிள்ளை கழித்தல் என்று அவர்கள் கூறுகிறார்கள். 39. மீரீ மக்களிடையே மலை மீரீகள் அல்லது காட்டுமீரிகள் தாழ்நிலமீரீகள் ஆகிய இருவேறான பிரிவினர் உண்டு என்பதை முதல் அத்தியாயத்திலேயே கூறியுள்ளோம். காட்டுமீரீகள் சின்ன ஆபர் வமிசக்கால் வழியினர். தாழ் நிலமீரீகளோ பெரிய ஆபர் வமிசக் கால்வழியினர். சாயே ஙியா, அயேஙியா, தாமுகியால், தடியா, தைதியால், மரய்யா முதலிய பல உட் பிரிவுகள் தாழ்நில மீரீகளிடையே உண்டு. 40. மாப்பிள்ளை கழித்தல் என்பது பற்றி அடிக்குறிப்பு 38 காண்க. 41. இங்கே தரப்பட்ட மொழிப்பெயர்ப்புக்குரிய ‘வேர்ட்ஸ் வொர்த்’ என்ற ஆங்கிலக் கவிஞரின் ஆங்கிலப் பாடல் வரிகள் வருமாறு: How richly glows the water’s breast Before us tinged with evening hues; While facing thus the crimson west The boat her silent course pursues! And see how dank the backward stream. A little moment past so smiling! 42. பதாலீ பாம் என்பது இலட்சுமிபுர வட்டாரம் சேர்ந்த ஓர் இடம் 43. பயின் கட்டை என்பது படகின் திசை திருப்புவதற்காகப் பின்புறம் இருக்கும் திருகுகட்டை போன்ற உறுப்பு. இதனைச் சுக்கான் என்றும் கூறுகிறோம். 44. ‘சுகனா’க்குழல் மீரீ பெண்கள் வழங்கும் புல்லாங்குழல் போன்ற ஓர் இசைக்கருவி. சிறு மூங்கில் குழாயின் ஓரத்தில் பட்டும் பவளமும் கோத்த ஒரு குஞ்சமிட்டு, அதனைத் துளையுட் செலுத்தி வாசிப்பதால் தவளைக்குரலொத்த இசை எழுகின்றது. மிக நல்ல பயிற்சியில்லாமல் இதை யாரும் வாசிக்க முடியாது. 45. கையார்ந்த கழனி: மீரீ நங்கையர் தம் குடும்பத்துக்குரிய கழனிகளிலும் வேலை செய்வர். அதோடுகூடவே ஒரு கால் நடவு நிலத்தைத் தாமாகப் பயிர் செய்து அதிலும் வேலை செய்வர். ‘கையார்ந்த கழனி என்பது இதுவே. இதன் விளைவைத் தனியாக வைத்து விற்றுத்தான் அப்பெண்கள் தமக்கு வேண்டிய எண்ணெய், செந்தூரம் முதலிய சிங்காரப் பொருள்களை வாங்கிக் கொள்வர். 46. செவ்வறலிப்பூ என்று இங்கே தமிழாக்கம் குறிக்குமிடத்தில் அசாமி மூலம் ‘ஓவ்’ என்ற மலர்ப் பெயர் குறிக்கிறது. 47. தமிழாக்கத்தில் தரப்பட்டதன் மூலமான ராபர்ட் பர்ண்ஸ் என்ற ஸ்காத்லாந்துப் பெருங்கவிஞரின் பாடற்பகுதி வருமாறு: Thine I am; my faithful fair, Thine, my lovely Nancy - Every pulse along my veins Every roving fancy Tothy bosom lay my heart There to throb and languish- Though despair had wrung its core That would heal its anguish! - Robert Burns 48. காட்டு மீரீகள் பரண்மீது கட்டிய மனையிலேயே வாழ்ந்தனர். நாட்டு மீரீகளில் பலர் இவ்வாறே வாழ்ந்தனர் என்பது முன் குறிக்கப்பட்டுள்ளது. (தமிழாக்க ஆசிரியர்) 49. காட்டு மீரீகளின் மொழிகள் பல. அவை மற்ற மீரீகளுக்கும் புரியாதவை (தமிழாக்க ஆசிரியர்) 50. தமிழாக்கத்தில் கோவணம் எனத் தரப்பட்டது இந்நாளில் தமிழரால் ‘லங்கோட்’ என்ற இந்திப் பெயரால் அழைக்கப்படுவது. பழந்தமிழ் நூல்களில் இதுவே கோவணம் எனப்பட்டது. 51. தமிழாக்கத்தில் கடமா எனப்படுவது கிழக்கு இமயமலைக் காடுகளிலும் லிதுவேனியா நாட்டுக் காடுகளிலும் மட்டுமே காணப்படும் காட்டுமான் அல்லது கவரிமான் என்ற ஓர் அபூர்வ விலங்கு (ழுயஎநரள ழுயரசரள) ஆகும். 52. தீபெத்தியரும் மலைமீரீகளும் டப்லாக்களும் வெண்சலவைக் கல்லால் பல வகை அணிமணிகள் அணிகின்றனர். இவையே தேவமணி எனப்படும். இவை அவர்கட்கு விலைமிகுந்த பொருள்கள் ஆகும். (மூல ஆசிரியர்) 53. தேவகடி பூசை மணி போன்றது. இது அவ்வளவு விலையேறியதாக நமக்குத் தோற்றவில்லையானாலும், அதற்காகப் போரும் படுகொலைகளும் செய்யத் தூண்டுமளவு மலைமீரீ மக்களிடையே அது விலைமதிக்கவொண்ணாப் பொருள் ஆகும் இந்து லேகா முதற் பதிப்பு – 1988 இந்நூல் 2003இல் தேன்மொழி பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. சின்னன் படிப்பு “என்ன மாதவா, இப்படி மீறிப் பேசுகிறாய்? இது நன்றாய் இல்லை. அவர் குணம் உனக்குத் தெரியும். வயது எழுபதாய் விட்டது. காரணவர். அவர் விருப்பம் போல நடந்தால் என்ன?” மாதவன்: நீ சும்மா இரு சாத்தரை அண்ணா! நான் ஒன்றும் மீறிப் பேசவில்லை. அவருக்குப் பணம் பெரிதென்றால், அவர் செலவுசெய்ய வேண்டாம். நானே சின்னனைக் கூட்டிக் கொண்டு போய்ப் படிக்க வைக்கிறேன். இதில் அவர் ஏன் தடை சொல்லவேண்டும். சாத்தரமேனவன்: எனக்கு என்னவோ அப்பா! இந்தக் குடும்பச் சண்டைகள் பிடிக்கவில்லை; வேண்டுமானால் உன் பெரியம்மாவிடம் கேட்டுப்பார். அவளும் அப்படித்தான் கருதுகிறாள்! பெரியம்மா என்று சாத்தரமேனவன் குறிப்பிட்டது தன் தாய் கும்மிணி அம்மையை. தன்னைப் பற்றிய பேச்சுக் கேட்டு அவளும் வாசற்படியண்டை வந்தாள். “வேண்டாம், மாது! சின்னனுக்கு இன்னும் வயது ஆகவில்லை. என்னைவிட்டு அவன் அவ்வளவு தொலை போய் இருக்கவும் மாட்டான். நீ வேண்டுமானால் சாத்தரையையோ, கோபாலனையோ கூட்டிக் கொண்டு போய் ‘இங்கிலீஷ்’ படிப்பித்துக் கொள்” என்றாள். “சாத்தரையையும் கோபாலனையுமா? இங்கிலீஷ் படிக்க அவர்களுக்கு வயது போதுமா?” என்று மாதவன் சிரித்தான். சாத்தரையும் சிரித்தான். அவனுக்கு வயது பதினெட்டு, இருபது தானாயிற்று! இச்சமயம் வேலையாள் ஒருவன் வந்து சங்கர அம்மாமன் கூப்பிடுவதாக அழைத்தான். மாதவன் எழுந்து சென்றான். மாதவன் பதினாறு வயது இளைஞன். பொன்னிற மேனி, பெண்மையுடன் போட்டியிடும் ஆணழகு வாய்ந்தவன். தந்தத்தால் கடைசல் பிடித்து, காதல் கண்களெனும் சீவுளியால் சீவியிழைத்த சிலையோ என்னும்படி அவன் உடல் திட்பமும் ஒட்பமும் வாய்ந்ததாயிருந்தது. இயற்கையாய் அமைந்த இந்த மெருகு, அவன் நாள் தோறும் செய்துவந்த உடற்பயிற்சிகளாலும், தூய இனிய பழக்க வழக்கங்களாலும், உருட்சியும் திரட்சியும் பெற்றிருந்தது. அவன் கைகள் உடலமைப்பு நூலுக்கு இலக்கியமோ என்னும்படி முட்டுவரை நீண்டிருந்தன. பூவள்ளி என்னும் மலையாள நாட்டுத் தரவாடு, செல்வமிக்க தரவாடுகளில் ஒன்று. மாதவன் தாய் பார்வதியம்மாவும் கும்மிணியம்மாவும் அந்தத் தரவாட்டின் காரணவரான பஞ்சுமேனவனின் மருமக்கள். மாதவன் தந்தை கோவிந்தப் பணிக்கரும் ஒரு நல்ல தரவாட்டுக்கும் தலைவர்தான். பூவள்ளியளவு அதற்கு நிலபுலமும் வருமானமுமில்லையானாலும், அந்த அளவு அதில் ஆள் பெருக்கமோ செலவோ இல்லை. இந்நிலையில் கோவிந்தப் பணிக்கர் தம்மகனைத் தம் செலவிலேயே இங்கிலீஷ் படிக்க வைக்க முடிந்தது. மாதவனும் ஒரு வகுப்பிலாவது தோற்காமல் பி.ஏ. வரைக்கும் படித்து முடித்தான். பி.ஏ. தேறியது சென்னையிலேயே. அங்கேயே பி.எல். வகுப்பிலும் படித்து, இப்போதுதான் தேர்வு எழுதிவிட்டு ஆண்டிறுதி ஓய்வில் தாயகம் வந்திருந்தான். திரும்பவும் சென்னைக்குப் போகும்போது சித்தி பிள்ளையாகிய சின்னனையும் கூட்டுக் கொண்டுபோய் இங்கிலீஷ் படிப்பிக்க வேண்டுமென்று அவன் விரும்பினான். அவன் விருப்பத்துக்கு யாரும் தடை சொல்லவில்லை. ஆனால் காரணவர் பஞ்சுமேனவன் இதை விரும்பவில்லை. மாதவன் அடம்பிடித்தான். இதுபற்றி எழுந்ததே மேற்கூறிய சச்சரவு. அம்மானிடம் மாதவன் சென்றபோதும் அவர் இதே பேச்சைத்தான் எடுத்தார். சங்கரமேனவன்: மாதவா, வா இப்படி. நம் மலையாள நாட்டில் காரணவர் வாக்குக்கு எதிர்வாக்குக் கிடையாது என்பது உனக்குத் தெரியாதா? நீ காரணவரை மீறிப் பேசுவதாகக் கேள்விப்பட்டேன். இது எனக்குப் பிடிக்க வில்லை. இதெல்லாம் உன்னை இங்கிலீஷ் படிக்க வைத்ததன் குற்றம்தான் என்று தோன்றுகிறது. மாதவன்: அம்மாமன் கூடவா இப்படிப் பேசகிறீர்கள்? காரணவர் சொல்வதற்கு எல்லாரும் மதிப்புக் கொடுக்க வேண்டியதுதான்! ஆனால் காரணவரும் எல்லா நன்மையையும் நினைத்தல்லவா நடக்க வேண்டும்? நான் இந்தத் தரவாட்டில் பிறந்தவன். என்னை இந்தத் தரவாட்டிலிருந்து யாவரும் இங்கிலீஷ் படிக்க வைக்கவில்லை. நல்ல காலமாக என் தந்தை காலத்துக்கேற்ற அறிவுடையவர். தம் தரவாட்டில் படிப்பிக்கப் பிள்ளை களில்லாததனால், என்னை அவர் தம் செலவிலேயே படிப்பித்தார். நம் தரவாட்டில் எத்தனை பிள்ளைகள் படிப்பில்லாமல் வளர்ந்துவிட்டார்கள். சின்னானவது படிக்கட்டுமே? சங் - மே: யார் வேண்டாமென்கிறார்கள்! ஆனால் காரணவர் வேண்டாமென்கிறபோது, நாம் அதில் ஏன் தலையிட வேண்டும்? என்றுதான் கேட்க விரும்புகிறேன். உனக்கு ஏன் இந்தப் பொல்லாப்பு? மா: காரணவர் ஏன் வேண்டாம் என்கிறார் என்று தான் நான் கோட்கிறேன். இந்தத் தரவாடு அவர் தேடிச் சேர்த்து வைத்துள்ள சொத்தல்லவே! கும்மிணியம்மாவும் அவள் குடும்பமும் இங்குள்ள வேலைக் காரர்கள் அல்ல! அவர்களுக்கும் உரிய சொத்துத்தானே இது? காரணவர் தம் பிள்ளைகளையெல்லாம் இங்கிலீஷ் படிக்க வைத்திருக்கிறார். உயர் பதவிகளில் ஏற்றி வைத்திருக்கிறார். ஆனால் கும்மிணிச் சித்தியின் பிள்ளைகளில் கலியாணிக்குட்டியையும் படிக்கவைக்கவில்லை. சாத்தரை, கோபாலன், மூரிக்குட்டன் யாரையுமே படிக்க வைக்கவில்லை. அவர் தாமாகச் சின்னன் படிப்புக்குத் தரவாட்டுப் பணத்தைச் செலவழிக்க விரும்பவில்லை யென்றால் கூடப் போகட்டும்! நான் செலவு செய்துமா படிக்க வைக்கக் கூடாது? தரவாட்டுப் பிள்ளைகள் படித்து முன்னேறக் கூடாது என்பதுதான் காரணவர் விருப்பமா? தரவாட்டிலுள்ள நீங்களெல்லாம்தான் இதைக் கேட்கவில்லை. நான் கேட்கிறேன். இதில் என்ன தவறு? மாதவன் உறுதியும் நேர்மையும் சங்கரமேனவன் மனத்தைச் சிறிது கலைத்தது. அவர் தொனியின் மாற்றம் இதைக் காட்டிற்று. ‘நீ சொல்வது தவறு என்று நான் கருதவில்லை. மாதவா! ஆனால் உன் செலவுக்கே உன் அப்பா அனுப்புகிறார். நீ சின்னனுக்கும் எப்படிச் செலவு செய்வாய்? தவிர, சரியாகவோ, தப்பாகவோ, பெரிய அம்மாமனுக்கு நீ கோபமூட்டிவிட்டால், அது பின் உனக்கே பெருந்தொல்லையாய் விடப்படாதே என்று பார்க்கிறேன். அதற்காகத்தான் சொன்னேன். எல்லாம் சிந்தித்துச் செய்! என்றார். மாதவனுக்கு இது சுருக்கென்று தைத்தது. ‘பெருந் தொல்லை’ என்று அம்மான் சொன்ன குறிப்பை அவன் உணர்ந்து கொண்டான். பெரிய அம்மாமன் காரணவர். அவர் பேர்த்தி இந்துலேகா மாதவன் உள்ளத்தில் இடம் பெற்றவள். அவனைப்பற்றி மாதவன் கனவு கொண்டு கெண்டிருந்தான். காரணவர் கோபம் இக் கனவுக்குத் தடையாய்விடக்கூடும் என்று எண்ணிய போது மாதவன் ஆர்வ உணர்ச்சி கூட ஒருகணம் சில்லிட்டது. ஆயினும் விரைவில் அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டான். தன் நன்மைக்காகச் சின்னன் வருங்கால வாழ்வைப் புறக்கணிக்க அவன் விரும்பவில்லை. “நான் என் முடிவை மாற்றிக்கொள்ள முடியாது, அம்மாமா! அனால் இயன்றமட்டும் பெரிய அம்மாமனிடம் இணக்கமாகச் சொல்லிப் பார்க்கிறேன்; கேட்டாலாயிற்று; கேட்காவிட்டால், என் முடிவுப்படி நடக்கப் போகிறேன்” என்றான் அவன். இச்சமயம் மாதவன் தாய் பார்வதியம்மா வெள்ளிக் கிண்ணத்தில் பால் கஞ்சியுடன் மாதவனை நோக்கி வந்தாள். ‘கொஞ்சம் பால்கஞ்சி குடித்து விட்டுப் பேசுடா, மாது. பால் கோபத்தைக் கொஞ்சம் தணிக்கும்!’ என்று கிண்ணத்தை அவன் பக்கம் நீட்டினாள் தாய். ‘நீ தருவது தண்ணீராயிருந்தால் கூட அது கோபம் தணித்துவிடும். அம்மா!’ என்று சிரித்த வண்ணம் மாதவன் கூறிக்கொண்டு கிண்ணத்தை வாங்கினான். சங்கரமேனான் பார்வதியைப் பரிவுடன் நோக்கினார். “பார்வதி, நீ செல்லங் கொடுத்துக் கொடுத்துத்தான் மாதவன் இப்போது எல்லாரிடமும் மட்டுமதிப்பில்லாமல் நடந்து கொள்கிறான்” என்றார். “என்ன அண்ணா, அப்படிச் சொல்கிறீர்கள். மாதவனைப் பற்றி இதுவரை யாரும் அப்படிச் சொன்னதில்லையே!” என்று பார்வதி புன்முறுவலுடன் கேட்டாள். மா: நீதான் சொல்லம்மா! சின்னனை இங்கிலீஷ் படிப்பிக்க வேண்டுமா? வேண்டாமா? பார்: அதெல்லாம் வலியம்மாமன் முடிவு செய்ய வேண்டிய காரியம், தமபி! பார், நான் என்ன சொன்னேன்! என்று கூறும் பாவனையில் சங்கர மேனோன் நிமிர்ந்து பார்த்தான். பின் பார்வதியிடம் விடைகொண்டு சென்றார். ‘சின்னன் உன் பிள்ளையாய் இருந்தால் நீ இப்படிச் சொல்லமாட்டாய், அம்மா!’ என்று குறும்புடன் கூறியபடி கைகழுவிவிட்டு, மாதவன் பெரிய அம்மானைப் பார்க்கப் பூவள்ளித் தலை மாளிகை நோக்கி நடந்தான். 2. பெண் உள்ளம் தூங்குகின்ற தெளிந்த நீர்ப்பரப்பில் எறிந்த சிறு கல்போல, சங்கர மேனோன் சொன்ன செய்தி மாதவன் உள்ளத்தடத்தில் சென்ற கால நினைவலைகளை எழுப்பிப் பரப்பின. ஒவ்வோர் அலையிலும் ஒவ்வோர் வண்ணமாக இந்துலேகாவின் எழிலுருவமும் வண்ணப் பண்போவியங்களும் நிழலாடின. இந்துலேகாவும் மாதவனும் கிட்டத்தட்ட ஒரே வயதுடையவர்கள் - இருவருக்கும் இடையேயுள்ள வயது வேற்றுமை மாதக்கணக்கோ, நாள்கணக்கோ கூட அல்ல; மணிக்கணக்குத்தான்! மாதவன் நிறம் தங்கமென்றால், இந்துலோகாவின் நிறம் மெருகிட்ட தங்கம் போன்றது. அவள் வழக்கமாகத் தூய வெண்பட்டாடை அணிந்து வந்தாள். மின்னல் கொடிபோன்ற அவள் எழில்வடிவத்தையும் முறுக்கு ஏறிய அவள் இளமைப் பருவத்தையும் அது நன்கு எடுத்துக் காட்டிற்று. ஆடையின் ஓரத்திலுள்ள பொன் சரிகை அவள் மேனியில் பொருந்திக் கிடந்த இடங்களிலெல்லாம், பொன் சரிகை எங்கே முடிந்தது. மேனி எங்கே தொடங்கிற்று என்று எவரும் கூறமுடியாது. அந்த அளவில் பொன் வண்ணமும் மேனி வண்ணமும் ஒன்றாக மயங்கின. காண்போர் கண்களையும் அவை மயக்கின. கேரளத்தின் பண்டைப் பெருமையும் மேனாட்டு நாகரிகத்தின் இன்றைய பண்பும் இந்துலேகாவிடம் ஒன்றுபட்டுத் தோன்றின. அவள் அணிமணிகளை மிகுதி விரும்பவில்லை. அவள் இயற்கையழகுக்கும் இளமைப் பருவத்துக்கும் அவை தேவைப்படவு மில்லை. ஆனால் அழகுக்கு அழகு செய்வதுபோல, இயற்கை யழகுடன் போட்டியிடும் செயற்கையழகு போல, பண்பு நயத்துடன் தேர்ந்தெடுத்து அணியப்பட்ட ஒருசில நகைகள் அவள் சுவைத் தேர்வின் திறத்துக்குச் சான்று பகர்பவையாய் இருந்தன. அவையே அவள் செல்வ நிலையையும் எடுத்துக்காட்டின. காதில் கோத்துள்ள தோடுகள், கழுத்தில் பொன் சங்கிலியில் கோத்த ஒரு பன்மணிப்பதக்கம். கைகளில் தஞ்சாவூர்த் தட்டாரின் தனிவேலைப் பாடமைந்த பொன்பூட்டு வளையல்கள், கைவிரல்களில் காந்தள் பூவிலேறிய பலநிற வண்டுகள் போலக் காட்சியளிக்கும் ஒன்றிரண்டு மோதிரங்கள்! இவையே இந்துலேகாவின் அணிமணிப் பூண்களாயிருந்தன. அவள் நீண்ட விழிகளின் ஒளி காதணிகளிலுள்ள வைரங்களின் செயற்கை ஒளியைக் கேலிசெய்தன. வெள்ளைக்காரப் பெண்களைப் போல அவள் உதடுகளுக்குச் சாயமிடமில்லை. ஆனாலும், அவன் ஆங்கிலம் படித்தவளாகையால், அவ்வாறு சாயமிட்டிருந்தாளோ என்று பலர் எண்ணியதுண்டு. இதழ்கள் அவ்வளவு இயற்கையாகச் செவ்வலரிப் பூக்களையும் மாதுளை மொட்டுக்களையும் பழித்த சிவப்புநிறம் தோய்ந்திருந்தன. பருவங்கவிந்த களை அவள் முகத்திலும், வயதுக்கு மேற்பட்ட அறிவு அவள் நெற்றியிலும் காட்சியளித்தன. கடைந்தெடுத்த உடலின் வடிவமைதியை அளப்பவை போல அவள் நீலநிறஞ்செறிந்த கூந்தல் முதுகு கடந்து புரண்டது. முழுவதும் பின்னலிலும் சுருளிலும் அடங்காமல் ஒருசில பூங்கொத்துக்களின் ஆணையை மேற்கொண்டவைபோல அவை ஆங்காங்கே ஒதுங்கி நின்றன. இளமையழகு அவள் அங்கமெங்கும் பரவிப் பொதுளிற்று. ஆனால் கன்னித் தாய்மையின் ஒளி, முகத்தில் தாண்டவமாடிற்று, அவள் தள தளப்பிலும் விம்மிய மார்பகங்களிலும் அது பொங்கி அவள் பெண்மைக்கு நிறைவளித்தது. இந்துலேகாவின் தாய் இலட்குமிக்குட்டியம்மை, காரணவன் பஞ்சு மேனவனின் ஒரே பெண்செல்வம். அவள் இளமையிலேயே கிளிமானூர் அரசருக்கு வாழ்க்கைப் பட்டவள். இந்துலேகாவுக்கு இரண்டரை வயதாக இருக்கும்போது அவ்வரசர் காலமானார். அதன்பின் அவள் தன் தாய் குஞ்சுக் குட்டியம்மையுடன் பூவள்ளியில் தங்கினாள். இந்துலேகாவின் தாய் மாமனான கொச்சு கிருஷ்ண மேனோன் கொச்சி அரசாங்கத்தில் திவான பேஷ்காராயிருந்தவர். திவான் பேஷ்கார் என்பது அமைச்சருக்கு அடுத்த உயர்பதவி. பல அரசியல் ஆடம்பரங்களுடன் மாதம் 800 வெள்ளி ஊதியத்துக்கு அவர் உரியவராயிருந்தார். அவர் இந்துலேகாவைத் தம்முடனே கொண்டு சென்று, தம் பிள்ளை போலவே செல்லமாய்ச் சீரும் சிறப்புமாக வளர்த்தார். தாய் மொழியாகிய மலையாளக் கல்வியிலும் ஆங்கில சமஸ்கிருதக் கல்விகளிலும் பள்ளி கல்லூரி போதா என்று வீட்டிலும் அவளுக்கு நல்ல பயிற்சி தரப்பட்டது. அரசர் மகளாகமட்டும் பிறந்திராவிட்டால், மலையாள நாட்டு இசை நாடக அரங்குகளில்கூட அவள் தன் புகழை நாட்டியிருக்கக் கூடும். கேரளத்தின் இசை நாடகக் கலைகளில் அவள் அவ்வளவு ஈடுபட்டுப் பயின்றாள். அம்பலத்திலும் அரங்கிலும் நடிக்காவிட்டாலும், பருவமடையுமுன்னே அம்மாமன் முன்னும் அவர் நண்பர்கள் முன்னும் அவள் நடித்திருந்தாள். அவர்களிடம் நுழைவுச் சீட்டும் வரிக்காசும் பிரிக்காமலே ஆடல் பாடல் நடிப்புகளில் தன் இளமைத் திறம் முழுவதும் காட்டியிருந்தாள். ஒரு பெண்ணை எவ்வளவு செல்வமாக வளர்த்தாலும், பெண்ணின் வளர்ச்சியுடன் வளர்ச்சியாக வளர்ப்பவர் உள்ளத்தில் பெண்ணின் திருமணம் பற்றிய கவலையும் வளராமல் இராது. வெள்ளைக்காரராயிருந்தால் கூட இந்த எண்ணம் சிறிது நிழலாடும். மலையாளிகள் வகையிலோ கேட்க வேண்டிய தில்லை. ஆனால் கொச்சு கிருஷ்ணமேனவன் இவ்வகையில் குறிப்பிடத்தக்க அளவில் ஒரு விதிவிலக்காய் இருந்தார். பெண்ணுக்கேற்ற கணவனைத் தேர்ந்தெடுப்பதும், திருமணத் திற்கு வேண்டிய காலத்தை உறுதி செய்வதும் அந்தப் பெண்ணையே பொறுத்த செய்திகள் என்ற சீரிய எண்ணம் - புதுயுகக் கருத்து - அவர் உள்ளத்தில் அரும்பியிருந்தது. பெண்ணுக்கு வயது பத்தாகுமுன்னேயே அந்தப் பேச்செடுத்தவர் பலர். பத்துக்கடந்தபின் அவர் கடமையையே பலர் சுட்டிக்காட்டினர். அவர் எவருக்கும் மறுமொழி கூறவே எண்ணவில்லை. “குழந்தை இந்துதானே! நாள் தவறாமல் அவளே தன் பொம்மைகளுக்குத் திருமணம் நடத்தி வருகிறாள். பொம்மையின் வயது அவளுக்கும் வரட்டும்” என்று கேலி பேசிவிட்டு அவர் வேறு பேச்சுத் தொடங்கி விடுவார். இந்துலேகாவுக்கு 15 வயதாயிருக்கும்போது ஒரு நாள் காரணவன் பஞ்சுமேனோன் மகனையும் பேர்த்தியையும் வரவழைத்திருந்தார். அப்போது மகனிடம் பஞ்சுமேனவன் இது பற்றிய பேச்செடுத்தார். “கொச்சு, இந்துவின் படிப்பை மட்டும் தானே நீ கவனிக்கிறாய்? அவளுக்கு வயதாய்விட்டதே! ‘சம்பந்தம்’ ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டாமா? இப்படிச் சும்மா இருக்கிறாயே!’ என்றார். ‘அவன் படிப்புக் குறையும் முடியட்டும், அப்பா!’ என்று ஆர அமர விடை கூறினார், கொச்சுகிருஷ்ணமேனோன். பஞ்-மே: சம்பந்த வயது கழிகிறது. இனியும் என்னடா படிப்பு? கொச்-கி-மே: தனக்கேற்ற தகுதியுடையவனைத் தேர்ந் தெடுக்கும் அறிவு படிப்பில்தானேஇருக்கிறது. அப்பா! பிள்ளையிடம் பேசுவது ஆழம்தெரியாத கசத்தில் காலை இடுவது போன்றது என்ற எண்ணத்துடன் பேச்சை நிறுத்தினார் பஞ்சு! கொச்சு கிருஷ்ணமேனவனுக்கு இந்துலேகா ஒருகண் என்றால் மாதவன் இன்னொரு கண். எந்தக் கண்ணிடம் அவருக்கு மிகுதி விருப்பம் என்பது அவருக்கே தெரிந்திருக்காது. தெரிந்திருந்தாலும் பார்வையை வேறு திசையில் திருப்பிக் காட்டும். அவர் கண்ணாடி ஒளியில் அதை யாரும் கண்டறிய முடியாது. இருவர் நட்பையும் அவர் விரும்பினாரா விரும்ப வில்லையா என்பதையே எவரும் கூறமுடியாது. ஒருவரைப் பற்றி ஒருவரிடம் கூட அவர் தன் கருத்தைக் கூறியதில்லை. ஆனால் ஒரேஒரு தடவை இந்துலேகா கேட்க மாதவனை அவர் ஒரு நண்பரிடம் பாராட்டிப் பேசினார். அப்போதும் அவர் இந்துவை மிகுதி நேசித்தாரோ, மாதவனை மிகுதி நேசித்தாரா என்பது விளக்கமாகத் தோன்றவில்லை. “இந்துவைப்போல, ஒரு பெண் குழந்தை எனக்குப் பிறக்கவில்லை யென்றால், மாதவனைப் போல ஒரு ஆண் குழந்தை வேண்டுமென்று நான் கட்டாயம் விரும்புவேன்” அவருக்கு இறுதிவரை இந்துவைப் போலப் பெண் குழந்தையும் பிறக்கவில்லை. மாதவனைப் போல ஆண் குழந்தையும் பிறக்கவில்லை. இந்து பதினாறாம் வயதை அடைவதற்குள் அவர் காலமானார். இந்துவின் தாய் இந்துவை அழைத்துக் கொண்டு பூவள்ளிக்கு வந்தாள். இந்துவுக்கென்று பூவள்ளியை அடுத்த பூவரங்கில் பஞ்சுமேனவன் ஒரு மாளிகை கட்டிக் கொடுத்தார். அவளுக்கு வேண்டிய புத்தகங்கள், அணிமணிகள், யாழ் முதலிய இசைக் கருவிகள் எல்லாம் தருவித்து அளித்தார். அந்த மாளிகையிலேயே அவள் இன்பமாய் பொழுதைக் கழித்தாள். இந்துலேகாவும் மாதவனும் கொச்சுகிருஷ்ண மேனவன் மடிமீது ஒன்றாய் ஏறி விளையாடிய போதிருந்தே அவர்கள் நட்பு வளர்ந்தது. அவர்கள் இருவரும் ஒன்றாக ஆடினர், பாடினர், உண்டனர். ஒன்றாக வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டனர். விளையாட்டில் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்தனர், ஒத்துழைத்தனர். கொச்சுக் கிருஷ்ணமேனவன் மேசையைச் சுற்றி அவர்கள் அடிக்கடி தொட்டி விளையாடினர்.. அவர் தோட்டங்களில் ஒளிந்து விளையாடினர், உலவினர். அவர்கள் சிலசமயம் ஒருங்கே யாழ்மீட்டிப் பாடினர். சில சமயம் ஒருவர் பாடத்தை இருவரும் படிப்பர். அல்லது ஒருவர் பாடத்தை மற்றவருக்கு ஒப்பிப்பர். இருவர் பள்ளிகளும் தேர்வுகளும் திடீரென்று என்றாவது ஆள் மாறினால்கூட, ஒருவர் மற்றவரின் தேர்வுக்கு எழுதி, தேறுதல் மதிப்பு வாங்கிக் கொடுத்திருப்பார்கள்; அந்த அளவு ஒருவர் அறிவு மற்றவரிடம் வளர்ந்து வந்தது! அடிக்கடி இருவரும் காவியங்களில் ஈடுபட்டு ஆய்வாராய்வுகள் நடத்தினர். இலக்கிய இலக்கணம், சமயம், அரசியல், நாட்டுப் பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றி அவர்கள் அடிக்கடி வாத எதிர்வாதம் செய்வர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் போட்டியிடுவர். அப்போட்டிகளில் ஒருதடவை கூட இந்துலேகா வென்றதில்லை. ஆனால் மாதவனும் ஒரு தடவை கூடத் தோற்றது கிடையாது. வெற்றி தோல்விகள் இல்லாமலே போட்டி பூசல்கள் வளர்ந்தன. போட்டி பூசல்கள் அவர்கள் பாசத்தையும் வளர்த்தன. அவர்கள் நட்பு எப்போது நேசமாக அரும்பிற்று, நேசம் எப்போது பாசமாகி நாட்போதாயிற்று, பாசம் எப்போது காதலாக மலரத் தொடங்கிற்று என்பதை இருவரும் அறியவில்லை. ஆயினும் பூவரங்குக்கு இந்து வருவதற்குள் இருவர் உள்ளத்திலும் காதல் வேரூன்றி விட்டது. இந்துலேகா என்ற பெயருக்கு நிலவின் கதிர் என்பது பொருள். அது அவள் அம்மாமன் அவளுக்கு இட்டபெயரே. குழந்தையின் பொன்னிற அழகிலும் இனிய புன்முறுவலொளி யிலும் அவர் முழுதும் ஈடுபட்டிருந்தார். ஆகவே தாம் படித்த ஒரு காவியத்திலிருந்து இந்த அழகிய பெயரைத் தேர்ந்தெடுத்து அதை அவர் அவளுக்கு ஆசையுடன் சூட்டியிருந்தார். அம்மாமன் அழைத்தபடியே எல்லோரும் அவளை அழைத்து வந்தார்கள். ஆனால் எக்காரணத்தாலோ எல்லாரும் அழைத்தபடி அழைக்காத ஒரே ஒரு ஆள் இருந்தது - அதுதான் மாதவன். அவன் அவளைத் தொடக்கத்திலிருந்தே மாதவி என்று அழைத்தான். அம்மாமன் புதுப்பெயர் சூட்டுமுன்னை அவள் தாய் தந்தையர் அவளுக்கு வைத்தருந்த பெயரே அது. அழகுக்கேற்ற பெயர் ‘இந்து’வாகவே யிருந்தாலும், அவளுக்கேற்ற பெயர் மாதவியாகவே அமைந்திருந்தது. இத்தனி வழக்குப்பற்றி இந்து சிலசமயம் மாதவனைக் கேள்விபட்டுக் கிளறுவதுண்டு. அப்போதெல்லாம் “இந்துவுக்கு ஏற்ற பொருள் மாதவிக் கொடிதானே” என்று அவன் தன் வழக்கத்துக்கு விளக்கம் கூறி விடுவான்! இந்து என்பது நிலா. மாதவி என்பது நிலவில் மலரும் மல்லிகைக் கொடி. இப்பொருத்த நயம் கண்டு இந்து மகிழ்வாள். இந்த பூவரங்கில் வாழ்ந்த காலத்தில் மாதவன் சென்னைக்குப் படிக்கச் சென்றுவிட்டான். கோடை விடுமுறைகளில் மட்டுமே அவர்கள் இப்போது சந்தித்தனர். ஆயினும் விடுமுறையின் பெரும்பகுதியை மாதவன் பூவரங்கிலேயே கழித்தான். அவர்கள் நீண்டபிரிவு அவர்கள் ஆர்வத்தை வளர்த்திருந்தது. பிரிவுகால ஆர்வ எண்ணங்கள், அவர்கள், உறவுகள் அதற்கு உரமிட்டன. சந்திப்பு இவற்றுக்கு நீரூற்றிப் புதுத்துளிர் பிறப்பித்தது. அவர்கள் இருவர் உள்ளங்களிலுமே காதல் என்னும் பயிர் இங்ஙனம் கொழுந்துவிட்டுத் தழைத்தது. இருவருமே தத்தம் உள்ள உணர்ச்சிகளை ஒருவர்க் கொருவர் வாய்விட்டுக் கூறியது கிடையாது. இள நட்புக்குரிய நாணம் இருவரையும் சில காலம் தடுத்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் முற்றிலும் அதை மறைப்பதற்கு ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தது. அது இருவரையும் இருவேறு வகையில் பாதித்தது. விடுமுறைகள் வரும்முன்பே வரப்போகும் மகிழ்ச்சியை மாதவன் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். அவள் இல்லாதபோதும் அவன் உள்ளத்தின் நினைவலைகள் அவள் உள்ளத்தைச் சுற்றி ஓயாது வட்ட மிட்டுக் கொண்டேயிருக்கும். இந்துவின் நினைவு எழும்போதெல்லாம் அவன் இன்பமயமான கனவுகள் காண்பான். பருவமலர்ச்சியுடன் இக்கனவுகளும் பருவ மலர்ச்சியுற்று வளர்ந்தன என்று கூறலாம். கலையில் வல்ல மாதவன் உள்ளத்தில் கலைச்செல்வியின் காதல் கருக்கொண்டு வளர்ந்தது. சட்டத் தேர்வுவரை கல்வியில் ஓரளவு கவனம் செலுத்தி வந்தான் மாதவன். அது முடிந்தவுடன் அவன் உள்ளம் மீண்டும் முழுவேகத்துடன் காதற் கழனிமீது பொங்கி எழுந்து அலைமோதத் தொடங்கிற்று. அவன் ஊண்மறந்து தாய் ஊட்ட உண்டான். உடைமறந்து உறவினர் நண்பர் கேலிகளுக்கு இரையானான். சிரிப்பதையும் சிந்திப்பதையும் அவன் அடியோடு மறந்துவிட்டான். அந்த, இன்பமாளிகைப் பூவரங்கு - அதிலே அடைப் பட்டிருந்தும் காதலொளி வீசும் தன் உயிரோவியம் இந்துலேகா - அவள்மீது அலை பாய்ந்து செல்லும் தன் இன்ப நினைவுகள் - இவைகளை மட்டும்தான் அவனால் மறக்க முடியவில்லை. அவன் சிந்தனைகள் பூவரங்கு மாளிகையையே சுற்றிச் சுழன்று அவன் கால்களை எப்போதும் அவ்விடமே இழுத்துச் சென்றன. கல்வியறிவுடன் மாதவனின் உலகியலறிவும் இப்போது வளர்ச்சி- யடைந்திருந்தது. இந்துலேகாவைப் பெற மன்னரும் இளங்கோக்களும் மண்டியிட்டு நின்றதை அவன் நன்றாக அறிந்திருந்தான். திருவாங்கூர் மன்னர் சார்பில்கூடப் பஞ்சு மேனனுடன் பேச்சு மொழிகள் கடிதப்போக்கு வரத்துக்கள் நடந்து வந்ததாகப் பூவரங்கத் தரவாட்டில் செய்திகள் உலவி வந்தன. அதற்கேற்பப் பஞ்சுமேனவனும் அடிக்கடி இதைக் குறிப்பிட்டு வந்தார். திருவனந்தபுரத்துப் பொன்னத்தம்பிரான் திருமனசுகூட நமக்குத் திருக்கைச் சார்த்து அனுப்பியிருக்கிறார். ஆர்ந்தமர்ந்து தானே அவருக்குக் கடிதம் எழுதலாம்! ஆனால் அதற்குக் கூட நேரமில்லாமலிருக்கிறது’ என்று அவர் அடிக்கடி பெருமிதம் கலந்து இறுமாப்புத் தொனியில் பேசவதுண்டு. மாதவன் உள்ளத்தின் காதல் அவன் முகத்தில் யாவரும் காணப் படர்ந்திருந்தது. அதை இந்துலேகா உணர்ந்துகொள்ள முடிந்தது. ஆனால் அவள் உள்ளத்தை மாதவன் அறிய முடியவில்லை. இந்நிலையில் மன்னர், இளங்கோக்கள் பேச்சுக் கேட்டு அவன் மனம் குழம்பினான். ‘பாழாப்போன பொன்னுதம்பிரான்கள்! பண்பு கெட்ட திருமனசுகள்! என்னுடைய மாதவியை என்னிடமிருந்து இதுகளா கொண்டுபோவது! என்று மலையாளத்து மன்னர்கள் மீது கூட அவன் மனம் பொங்கி எழுந்தது. ‘வாழ்ந்தால் இந்துவைப் பெற்று, இந்துவுடன் வாழவேண்டும். இல்லாவிட்டால் மாள்வதே மேல்’ என்று அவன் இளமை உள்ளம் வாழ்வு மாள்வுத் திட்டங் களிட்டது. மாதவன் பூவள்ளித் தரவாட்டுக்கே உரியவன். நிலபுல மற்றவனல்ல; ஏழையல்ல, ஆயினும் அவன் இந்துவின் வயதே உடையவன். இன்னும் கல்லூரி மாணவன். தவிர மலையாள நாட்டில் பூவள்ளித் தரவாட்டினரை ஒத்த உயர்குடிச் செல்வர், தம் பெண்களைத் தம்மோடொத்த குடியில் மணஞ்செய்து கொடுக்க விரும்பமாட்டார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். இந்நிலையில் கன்னியின் உள்ளம் தவிர அவனுக்குப் பற்றுக்கோடு பிறிதில்லை. அதன் உறுதி காணமாட்டால் அவன் கலங்கினான். தான் இந்துவைக் காதலிப்பதுபோல, அவளும் தன்னைக் காதலிக்கிறாளா? காதலிக்கக் கூடுமா? இக்கேள்விகள் அவன் கருத்தை அலைத்தன. அவனும் அவளுக்கு ஒரே விளையாட்டுத் தோழன், நீண்ட நாளைய விளையாட்டுத் தோழன்! அத்தோழமையில் அவனுக்குப் போட்டியில்லை. அவன் அவளைச் சந்திக்க வேண்டும் என்பதில் கொண்டிருந்த ஆர்வம். அவள் கூட்டுறவில் பெற்ற இன்பம், அவளைவிட்டுப் பிரியும்போது கொண்ட துன்பம், தயக்கம், ஆகிய யாவும் அவளிடத்திலும் இருந்தன என்பதில் அவனுக்கு ஐயமில்லை. தவிர இருவர் வாழ்க்கையையும் இணைத்து நிற்கும் கடந்த கால நிகழ்ச்சிகள் மறக்கக் கூடியவைகள் அல்ல! இவை அனைத்தும் அவனுக்குத் தெரிந்ததே. ஆயினும் யார் கண்டார்கள்? பெண் உள்ளத்தின் ஆழம் கண்டவர்கள் யாவர்? அவர்கள் மணிக்கணக்காக உரையாடுவர். உலகுபற்றிப் பேசுவர், வாழ்க்கையைப் பற்றிப் பேசுவர். கலைபற்றி உரையாடுவர். காவியம் பற்றி ஆராய்வர். காவிய ஆராய்ச்சி அவ்வப்போது காதலாராய்ச்சிக்குக் கூடத் தாவும். ஆனால் எத்தகைய பேச்சும் அவர்கள் நட்புறவுக்குத் தடையும் செய்ததில்லை. அதன் எல்லை கடக்கவும் இல்லை. மற்றெல்லாச் செய்திகளையும் போலவே இளமையுணர்ச்சிகளைப் பற்றியும் அவள் அவனுடன் மனம் விட்டுப் பேசுவாள். தன் மனத்திலுள்ள எதனையும் அவனிடம் அவள் மறைத்ததில்லை. எள்ளளவும் மறைக்க முயன்றதாகவோ, மறைக்க வேண்டுமென்று கருதியதாகவோ கூட அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் அவள் என்னதான் மனம்விட்டுப் பேசினாலும், எது பற்றிப் பேசினாலும், அப்பேச்சு அன்புக்குரிய ஓர் ஆணிடம் மற்றோர் ஆண். அல்லது ஆசைக்குரிய ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசும் பேச்சாகவே இருந்தது. பேச்சுக்கும் பேசுபவர் உணர்ச்சிகளுக்கும் எத்தகைய தொடர்பும் இருந்ததாக அவள் ஒருபோதும் காட்டிக் கொண்டதில்லை. பொய்மை காதலுக்கு ஒரு தடையானால், முழு மெய்யை அதனைவிடப் பெரியதொரு தடையே என்று அவனுக்கு இச்சமயங்களில் தோற்றிற்று. பத்தரைமாற்றுத் தங்கம் பணிக்குதவாது. அதுபோல, ஒரு சிறிதும் பொய்மை கலவாத நேசம் நண்பர் தோழமையாகலாம்; அண்ணன் தங்கை பாசமாகலாம்; காதலாகாது என்று அவன் காதல் தத்துவம் இழைப்பான். இந்துலேகா தன் சொந்தத் தங்கையாயிருந்தால் கூட, இதைவிட உளங்கலந்து பேசியிருக்க முடியாது. இதைவிடக் கள்ளங்கபடமற்ற உள்ளத்துடனும் உரையாடியிருக்க முடியாது. நூலாராய்ச்சிகளில் நுட்பங்கண்டவன், காவிய அணிகளில் தெளிவு கண்டவன் அவன். ஆனால் சிக்கலான இக்காதல் புதிருக்கு விடை காணமாட்டாமல் அவன் தத்தளித்தான். மற்றும், பெண்ணின் உள்ளத்தில் ‘காதல்’ இடம் பெற்றாலும், பெண் உள்ளத்தை ஆளும் பண்பு, பெண் வாழ்வில் செயல் வெற்றியடையும் பண்பு அதுவேதான் என்று கூறிவிட முடியுமா? பால் விரும்பாத பூனை, பழம் விரும்பாத குரங்கு, செல்வ அணிமணி விரும்பாத பூவையர் உலகில் உண்டா! இன்பத்தில் பிறந்து, இன்பத்தில் வளர்ந்து, இன்பத்தில் திளைத்து நின்றவள் இந்துலேகா, காதலை நாடாது, அல்லது காதலை ஒரு பொழுது போக்கு விளையாட்டாக மட்டுமே நாடி, செல்வ அணிமணிகளையோ பகட்டாரவாரத்தையோ, பதவி பட்டங்களையோ காதல் கடந்த வாழ்க்கை நோக்கமாக அவள் கொண்டிருக்கக் கூடுமோ? மாதவன் உள்ளத்தின் சிந்தனைச் சித்திரம் இது. இருகடல் அலைகளின் இடையேயுள்ள ஒரு துரும்பு பட்ட பாட்டை அதன் நிலைக்கு உவமை கூறலாம். உண்மையில் மாதவன் உள்ளத்தில் இந்துலேகா மீது எவ்வளவு பற்றுதல் இருந்ததோ, அதைவிடப் பன்மடங்காகவே அவளுக்கும் அவனிடம் பாசம் இருந்தது. மாதவன் உள்ளத்தில் அலைபாய்ந்த காதல் எண்ணங்கள் அவள் உள்ளத்திலும் ஆழ்தடம்வரை காதற் கருத்தலைகளையும் இன்பச் சுழிகளையும் எழுப்பியே இருந்தன. ஆனால் அவள் மனநிலையை அவன் அறியுமுன்பே, அவன் மனநிலையை அவள் அறிந்து கொண்டாள். அவன் உள்ளத்தில் அரங்கமாடி நிற்கும் உளப்பாடுகள் அவன் முகக்கண்ணாடியில் நிழலாடின. ஒவ்வோர் அங்க அசைவிலும் திரையாடின. அவள் பெண் மனம் அவன் வெண்மனத்தை ஊடுருவிப் பார்த்து, அவன் இதய முழுவதையும் அறிந்து கொண்டது. தன் காதலின் எதிரொலி அவன் உள்ளத்திலிருந்து இசைப்பது கேட்டு, அவள் அளவிலா இன்பமும், கரையிலா இன்ப அமைதியும் அடைந்தாள். ஆயினும் தான் அறிந்ததை அவன் உணராதவாறு அவள் அறிவு வேலியிட்டுத் தடுக்க முனைந்தது. பெண்டிர் காதலுக்காக வாழவும் அறிவர். அதற்காகமாளவும் அறிவார்கள். ஆடவரிடம் உணர்ச்சியின் மலர்ச்சியை உண்டுபண்ணும் காதல் பருவம், பெண்டிரிடம் அறிவு மலர்ச்சியை உண்டுபண்ணுகிறது. இந்து லேகா தன் காதலன் நலங்கருதியே தன் நிறை காதலை மறைத்து வந்தாள். மாதவன் படிப்பில் வெற்றியும் வாழ்வில் ஏற்றமும் பெற்றாலன்றி, அவன் தன்னை எளிதில் தன்மதிப்புடன் மணந்துகொள்ள வழி இராது என்பதை அவள் அறிந்தாள். ஆகவே காதல் உணர்ச்சியில் அவன் முழுதும் மிதந்து விடாமல் காக்க அவள் முயன்றாள். மாதவனை மயங்கவைத்த புதிர் இங்ஙனம் காதலின் புதிர் அல்ல, இந்துலேகாவின் காதல் நடிப்புப் புதிரே! மாதவன் தன் காதலை விரித்துரைக்க அடிக்கடி எண்ணுவ துண்டு. தன் காதல் துன்பத்தை எடுத்துரைக்கவும் முயலுவான். ஆனால் இந்துலேகா அவன் போக்கறிந்து பேச்சை வேறு பக்கம் திருப்புவாள். சிலசமயம் விளையாட்டைச் சாக்காக வைத்துக் கொண்டு மாதவன் அவளுக்குப் பூச்சூடுவான். பூச்சூடும் போதே பின்னிருந்து அவள் தோள்களை ஆர்வமீதூர அணைக்க அவன் கைகள் முனையும். அவள் அவன் உணர்ச்சியில் ஒரு பாதியை மட்டும் ஏற்றுக் கொண்டு, மறுபாதியைத் தடுத்து விடுவாள். புன்சிரிப்புடன் அவன் கையை மெல்லப்பற்றித் தோளிலிருந்து அகற்றுவாள்! “நாம் இனியும் விளையாட்டுப் பிள்ளைகல்ல, மாது! இப்போது நீ இளைஞனாகிவிட்டாய். நானும்.... பள்ளிச் சிறுமியல்ல. இந்நிலையில் இனியும் இப்படி நடப்பது நல்லதல்ல!” என்று அவள் நயமாகக் கடிந்து கொள்வாள். தன் எழுச்சியில் அவள் பாதி ஏற்றதை எண்ணி எண்ணி அவன் மகிழ்வான். ஆனால் அடுத்து அவள் கூறிய வேதாந்தத்தின் உட்பொருள் விளங்காது அவன் தடுமாற்றமும் ஏமாற்றமும் அடைந்தான். நட்பு, அண்ணன் தங்கை போன்ற பாசம் - இந்த எல்லை கடந்து இந்துலேகாவின் நேசம் செல்லவில்லையோ என்ற ஐயுறவு அவன் ஆர்வ உள்ளத்தை வாட்டிற்று. “நான் இளைஞன்தான். அது தெரிந்தும் பூச்சூட்டும்வரை பேசாதிருந்து விட்டுப் பின் வேதாந்தம் பேசுகிறாயே! இது ஏன்!” என்று அவன் அவளைக் கிளறினான். “பருவம் மாறினாலும் பழமைக்கு எப்போதும் மதிப்பு உண்டு. என் மாதவன் எப்போதும் எனக்கு என் மாதவனாகவே இருப்பான். எனக்கு மாதவன் மிக நெருங்கிய உறவு. அத்துடன் மாதவனைவிட எனக்கு நெருங்கிய நண்பர் வேறு யார்? மாதவனிடம் இத்தகைய சலுகை காட்டாமல், வேறு யாரிடம் காட்டப் போகிறேன்’ என்று அவள் நட்பையும் காதலையும் மீண்டும் ஒன்றாகக் குழப்பிவிடுவாள்! ‘ஏன்! நானே உன்னை மணந்து கொள்ளக்கூடாதா? என்று அவன் துணிந்து கேட்டான்! ‘எதுதான் கூடாது, மாது! நீ ஒரு அரசனாகக் கூட மாறலாம். நான் ஒரு பிச்சைக்காரியாகவும் ஆகக்கூடும்! ஆனால் இன்று இருப்பதையல்லவா பார்க்க வேண்டும்! நடக்கப் போவதை யெல்லாம் ஏற்கெனவே நடந்து விட்டதாக நினைப்பவனைப் பைத்தியம் என்றல்லவா கூறுவார்கள்?’ என்று அவள் திறமையாக வாயடி அடித்து விடுவாள். தன் காதல் உள்ளத்தை விவரித்து அவன் ஒரு கடிதம் எழுதி அவள் படுக்கையிலேயே வைத்துப் பார்த்தான். அதை அவள் வாசித்து மகிழ்ந்ததை அவன் அறியவில்லை. ஏனெனில் வாசித்ததாக அவள் காட்டிக் கொள்ள வில்லை. அதுபற்றி அவனிடம் எதுவும் பேசவும் இல்லை. நான் உனக்குத் தனிப்பட ஒரு கடிதம் எழுதியிருந்தேனே! அதை நீ எடுக்கவில்லையா? என்று கேட்டான். தன் வினாக்களுக்கு விரும்பிய விடைபெறாமல் மாதவன் மனத்தில் ஒரே புழுக்கமும் புகைச்சலுமாக இருந்து வந்தது. இந்து லேகாவை அவனால் விரும்பாமல் இருக்கவும் முடியவில்லை, வெறுக்கவும் முடியவில்லை. அவளை விட்டு நகரவும் முடியவில்லை, நெருங்கி உறவாடவும் முடியவில்லை. இந்நிலையில் அவன் இருதலைக் கொள்ளி எறும்பாக உழன்றான். பூவரங்கு மாளிகையின் மாடியில் நடுக்கூடத்தில் ஒருநாள் இந்துவும் மாதவனும் வட்டாட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். இந்துவின் கண்கள் வட்டிலும் அவள் உள்ளம் மாதவன் உள்ளப் போக்கிலும் இழைந்திருந்தன. ஆனால் மாதவன் கண்களும் மனமும் வட்டாட்டத்தில் இல்லை. இந்துவையே அவன் அடிக்கடி நோக்கினான். வட்டுக்கள் எங்கெங்கோ சுற்றின, அல்லது மாதவன் கையிலேயே இருந்தன. மாலை இளவெயிலுடன் கலந்து, சோலைமலர்களின் மணங்களுடன் அளைந்து, தாழ்வாரங்களின் இலாமிச்சை வேர்த்தட்டிகளைத் துளைத்துக் கொண்டு தென்றல் உள்ளே புகுந்தது. நங்கையின் அமைதி வாய்ந்த எழில் முகத்தில் அது குறும்பு நகையொளி பரப்பிற்று. ஆனால் நம்பியின் கொந்தளிக்கும் உள்ளத்தை அது பின்னும் குமுற வைத்தது. அவன் கைவிரல்கள் வட்டை நழுவவிட்டு வட்டேந்திய கைவிரல்களைத் துழாவின. அவள் குறும்புநகை நகைத்தாள். ‘ஏன் ஆடாமலிருக்கிறாய், மாது! என் குதிரை மலையேறிவிட்டது. நீ உன் காலாட்களை விட்டு அதை அடைக்கப்பார்! உன் குதிரை தப்பும் வழியையும் தேடு’ என்றாள். ‘என் காலாளும் குதிரையும் உன் காலாளும் குதிரையுமாகவே இருக்கட்டும்! எனக்கு இன்று ஆட்டமே பிடிக்கவில்லை’ என்றான் அவன். ‘ஏன்’ ‘என் மனம் ஆட்டத்திலில்லை!’ ‘அதைப்பிடித்திழுத்து ஆட்டத்துக்குக் கொண்டு வருவது தானே! தன் மனத்தை அடக்காத ஆண் ஒரு ஆணா!’ அவன் உள்ளத்தின் நிலையில், இது அவனுக்குச் சுருக்கென்று தைத்தது. ‘ஆம்! நான் ஆணல்லதான், மாதவிக்கு ஏற்ற மாதவனல்ல தான்!’ இப்போது இந்துவின் உள்ளம் கனிவுற்றது. ‘நான் ஒன்றும் குற்றமாகச் சொல்லவில்லையே, மாது! மனத்தை அடக்குவது ஆணுக்கு அழகு என்று தானே சொன்னேன்!’ “பெண்ணுக்கு!” ‘இப்போது தேவை ஏற்பட்டது ஓர் ஆணுக்குத் தானே! பெண்ணுக்கல்லவே!” ‘ஆம். என் மனம் என்னை மீறிச் சென்று விட்டது. அதை அடக்கும் திறம் எனக்கு இல்லை. ஒருவேளை மாதவிக்கு இருக்கலாம் என்று நினைக்கிறேன்! மனம் மீறிச் சென்றாலல்லவா, அதை அடக்கி ஆளும் திறம் தேவைப் படும். என் மனம் இதுவரை மீறிச் சென்றதில்லை!’ ‘கிடைக்காத ஒன்றில் நீ ஆசைப்படுவதில்லையா?’ ‘கிடைக்கும் என்று தெரிந்தாலல்லாமல் நான் மனத்தை எதிலும் செல்ல விடுவதில்லை! அது கிடக்கட்டும். ஒரு ஆட்டம் ஆடிமுடி. அதற்குள் நீ நாடுவது கிடைத்துவிடக்கூடும்!’ அவன் உள்ளத்தில் ஆசை மின்னல்வேகத்தில் தாவிற்று. தன் குறிப்பறிந்து இந்து பதில்சொல்லி விட்டாளா! அல்லது இதுவும் வழக்கமான அவள் வாயடியில் ஒன்றா! அவன் அவள் உள்ளக்குறிப்பறிய மேலும் பேசினான். ‘நான் நாடுவது என்ன என்று உனக்குத் தெரியுமா?’ ‘தெரியாது, ஊகிக்கமுடியும். தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதன் முடிவை விரைவில் அறிய வேண்டும் என்று நீ துடிக்கிறாய். ஆனால் எனக்கு அது நன்றாகத் தெரியவரும். என் மாதவன் வெற்றி பெறுவான் என்பதில் உனக்கு உறுதி உண்டு’. ‘நான் ஆட்டத்தில் வெற்றியையும் நினைக்கவில்லை. தேர்வு வெற்றியையும் நினைக்கவில்லை. என் கவலைக்குக் காரணம் இவையல்ல!’ ‘சரி, அப்படியானால் அது பெரிய கவலையாகத்தான் இருக்க வேண்டும். இதோ இந்தப் படுக்கையில் சற்றுப் ‘புரண்டு, காளிதாசன் சாகுந்தலத்தில் மனம் செல்லுமா, பார்!’ ‘சாகுந்தலத்தில் அல்ல, சகுந்தலையில்’ என்று தனக்குள்ளே முணுமுணுத்தவாறு அவன் மலரணையில் சாய்ந்தான். அஞ்சல் ஆள் ஒரு பத்திரிகையைக் கொண்டுவந்து தாழ்வாரத்திலிட்டிருந்தான். இந்துலேகாவின் தோழி அம்மு அதை எடுத்துக் கொண்டு மாடிக்குவந்து, மாதவனிடம் அதைத் தந்தாள். அதை அவன் கண்கொண்டே பார்க்கவில்லை. கைவாங்கிக் கட்டிலின் கீழே எறிந்தது! அம்மு வெளியே வந்தபோது, இந்து, கால் முகம் கழுவிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள். ‘இன்றைய பத்திரிக்கை வந்ததாடி!’ என்று கேட்டாள். ‘வந்துவிட்டதம்மா! ஐயாவிடம் கொடுத்தேன். ஆனால் அவர் அதை வாங்கிக் கீழே எறிந்துவிட்டார். ஏதோ விசனமாய் இருக்கிறாப் போலிருக்கிறது’ என்றாள். இந்துவின் உள்ளம் பாகாய் உருகிற்று. அன்றைய பத்திரிகையில்தான் தேர்வு முடிவுவரும் என்பது இந்து லேகாவுக்குத் தெரியும். ஆகவே தானே போய்ப் பார்த்து முடிவு அறிவதென்று அவள் மாடி நோக்கி விரைந்தாள். ஆனால் தாழ்வாரத்தில் காலடி எடுத்து வைக்குமுன் ‘தந்தி, அம்மா தந்தி’ என்று தந்தி ஆள் வந்து குறுக்கிட்டான். அவள் ஆவலுடனும் பரபரப்புடனும் தந்தி வாங்கிப் பிரித்துப் பார்த்தாள். அவள் முகம் சொல்லொணா மகிழ்ச்சிக் கூத்தாடிற்று! மாடியின் படிகளை மூன்று நான்கு ஒரேபடியாக அவள் தாவியேறினாள். “மாது, மாதூ! கவலையைவிடு. நீ முதல் வகுப்பில் முதல்வனாகத் தேறிவிட்டாய் நீ வெற்றி பெறுவது பற்றித்தான் நான் உறுதியாய் இருந்தேன். என் நம்பிக்கை கடந்து நீ வெற்றி கண்டுவிட்டாய்! எழுந்திரு. எழுந்து அம்மா அப்பாவிடம், அம்மாமனிடம் எல்லாம்போய் இந்த மகிழ்ச்சியை அறிவித்து வா! நான் கூட உன்னோடு வருகிறேன். எழுந்திரு!” என்றாள். கொந்தளிப்பு இப்போது நங்கையிடம் இருந்தது. நம்பியிடம் சோர்வின் அமைதியே குடிகொண்டிருந்தது. அவன் கிடந்த கிடையிலிருந்து ஆடவில்லை, அசையவில்லை. வாழ்விழந்த வனிதை முகம்போல அவன் முகம் ஒளியிழந்து மறுகிற்று! அவன் நிலை காண இந்து வருந்தினாள். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. ‘என்ன மாது, நீ இப்படிப்பட்ட அசடாயிருப்பாய் என்று நான் ஒருநாளும் எண்ணவில்லை. பத்திரிக்கையில் வந்திருக்கிறது செய்தி. அதைப் பார்க்காமல் கீழே எறிந்துவிட்டாய்! நண்பர் யாரோ ஆவலுடன் தந்தி யடித்திருக்கிறார்கள். அதை நானே பார்த்து வந்து சொல்கிறேன். அப்போதும் இப்படி உணர்ச்சியற்றுக் குந்திக் கொண்டிருக்கிறாய்’ என்றாள். ‘தேர்வுமாச்சு, முதல் வகுப்புமாச்சு! எல்லாம் பாழாய்ப் போகட்டும்! அதன் மகிழ்ச்சி உனக்கிருக்கட்டும், எனக்கு வேண்டாம்!’ என்றான் அவன், மனக்கசப்புடன். அவள் அவனைக் கவலையுடன் பார்த்தாள். ‘சரி, என் மகிழ்ச்சி உன் மகிழ்ச்சியல்ல போலிருக்கிறது. போகட்டும், அதை என் மகிழ்ச்சியாகவே, என் அம்மாவிடமும், உன் அம்மா அப்பாவிடமும் நானே போய்ச் சொல்கிறேன். நான் போய்விட்டு வரும்வரை மட்டும் எங்காவது ஓடிவிடாதே. நான் ‘உன்னிடம் எவ்வளவோ பேசவேண்டும்’ என்று அவள் கூறி அகன்றாள்! மாதவன் வெற்றி மகிழ்ச்சியில் பூவரங்கும் பூவள்ளியும் முழுதும் ஈடுபட்டுக் கூத்தாடிற்று. அதில் கலந்து கொள்ளாத ஒரே ஒரு உயிர் உண்டு என்றால், அது மாதவன்தான். இப்போது மாதவன் - இந்துலேகா தொடர்பில் ஒரு தலைகீழ் மாறுதல் ஏற்பட்டுவிட்டது. இந்துலேகா மாதவனைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டாள். அவன் இல்லத்துக்கே சென்று அவன் தாய் தந்தையருடன் ஊடாடி உலவினாள். ஆனால் அவன் அவளே நினைவாக, ஆனால் அவளை எட்டிப் பார்க்காமலே ஒதுங்கிக் கிடந்தான். அவனிடம் மெல்லப் பேச்சுக் கொடுக்க, அவனைத் தன் மாளிகைக்கு, அல்லது தனியிடத்துக்கு இழுக்க அவள் எவ்வளவோ முயன்றாள். ஆனால் இப்போது அவன் முற்றிலும் அவள் மீதே எரிந்து விழுந்தான். அவன் மனநிலையை அவள் நன்கு உணர்ந்திருந்தாள். அதை இப்போது தெளிவுபடுத்தித் தன் உள்ள நிலை உணர்த்தவும் தடையில்லை. ஆனால் அவனது தற்போதைய நிலையில் செய்வகையறியாது அவள் திண்டாடினாள். அவன் பொறுமை எல்லை கடந்து விட்டது. அவன் வெறுப்பு உச்சநிலை யடைந்துவிட்டது. ‘பொன்னு தம்பிரான்கள், திருமனசுகள்!’ இதுகளுக்கு முன் நான் எங்கே?” இது அவன் பெருமூச்சு! ‘அண்ணனின் தேர்வு வெற்றியில் மகிழ்வதுபோல அவள் மகிழ்ச்சிக் கூத்தடிக்கிறாள். ஆனால் அவன் உள்ளம் தன் வாழ்க்கையை எங்கே முடிபோட எண்ணுகிறதோ!’ இது அவன் குமுறல்! அவளை நாடாதிருக்க, எண்ணாதிருக்க வழிவகைகள் என்ன? ஆண்மையின் கோட்டையை வானளாவ எழுப்பிப் பெண்மையின் தென்றலிலிருந்து தப்பி வாழ என்ன வழி? இதற்குரிய பெரிய திட்டங்களை அவன் உருவாக்க முனைந்தான். அவற்றின் முதற்படியாக, அவன் வேட்டையில் கருத்துக் கொண்டான். ஒரு சில நண்பர்களுக்கும் வேட்டைக் காவலருக்கும் செய்தி அனுப்பினான். அவன் துப்பாக்கியைத் துடைத்துச் செப்பனிட்டான். துப்பாக்கி பளபளப்பாகும் தோறும் உள்ளமும் ஆறுதல் பெறுவதாக அவன் கற்பனை செய்து கொண்டான். இரவில் அவன் உறங்கவே எண்ணவில்லை. துப்பாக்கி துடைப்பதிலும் குண்டுகளை எடை பார்ப்பதிலுமே இரவைப் போக்க எண்ணியிருந்தான். ஆனால் அவன் எண்ணம் தடைப்பட்டது. ‘அண்ணா, அண்ணா’ என்று ஒரு மெல்லிய குரல் கேட்டது. அது பெண் குரல். அவன் எட்டிப் பார்த்தான். இது இந்துவின் தோழி, அம்முவின் குரல்! மாலையில் மாதவனை எங்கும் காணமுடியாமல், இந்துலேகா தன் அத்தை வீட்டுக்கு ஆள் அனுப்பினாள். நண்பர்களிடமும் ஆளனுப்பினாள். மாதவனின் திட்டமுழுவதையும் இதனால் அவள் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவளுக்கு உள்ளூர இரக்கமும் அதனூடாக ஒருவகை மகிழ்வும் உறுதியும் பிறந்தன. ‘சரி, இனி என் மாதுவை நானேதான் தடுத்தாட் கொள்ள வேண்டும். பாவம், அவன் என்னையும் அறிந்து கொள்ளவில்லை, தன்னையும் அறிந்து கொள்ளவிலை!’ என்று அவள் தனக்குள்ளாகவே கூறிக்கொண்டாள். மாதவன் கட்ட எண்ணிய வெறுப்புக் கோட்டையைத் தாக்கி முற்று கையிட அவளும் எதிர்க்கோட்டை எழுப்பத் திட்ட மிட்டாள். தக்க ஏற்பாடுகளுடன் அவள் அம்முவைத் தூதாக அவனிடம் அனுப்பி வைத்தாள். ‘அண்ணா, அண்ணா!’ என்று கூப்பிட்டுவிட்டு அம்மு தயங்கி நின்றாள். அவன் பேசவில்லை, தலைவியிடம் இருந்த கோபத்தைத் தோழியிடம் காட்ட வேண்டுமா, வேண்டாமா என்று அவன் தயங்கிக் கொண்டிருந்தான். அவள் கையில் ஒரு பூமாலை இருந்தது. ‘இந்தப் பூமாலையை அம்மா உங்களிடம் கொடுத்து கொடுத்து...’ என்று கூறி அவள் தயங்கினாள். ‘மாலை எதற்காம்!’ ‘மாலையை உங்களிடம் கொடுத்து, உங்களை அணிந்து கொள்ளச் சொன்னார்கள். ‘என்னையா?’ ‘ஆமாம்! அவர்கள் உங்களுக்காகத்தான் தொடுத்ததாம்? இதைச் சொல்லும்போதே தோழியின் கண்களில் ஏளனம் தெறித்தது. மாதவனும் அதைப் புரிந்து கொண்டான். ஆனால் பணிப்பெண் தன் பேச்சை முடிக்கவில்லை. தொடர்ந்து பேசினாள். அதுமட்டுமல்ல. நாளைக்குக் கட்டாயம் பூவரங்குக்குக் காலையில் சிற்றுண்டி அருந்த வரும்படியும் கூறினார்கள்’ என்றாள். ‘நாளை விடிய ஒரு யாமத்துக்குள் நான் வேட்டைக்குப் புறப்பட்டுப் போய்விடுவேன். ஆகவே திரும்பிவந்த பின் வசதிப் பட்டால் வருகிறேன் என்று சொல், போ!’ என்றான் மாதவன். துப்பாக்கி துடைக்கும் வேலை முன்னிலும் சற்று மும்முரமாயிற்று. மணி ஒன்பது, பத்து அடித்தது! மீண்டும் ‘அண்ணா. அண்ணா’ என்ற குரல் கேட்டது. அவன் நிமிர்ந்தான். ‘விடிய ஒரு யாமத்திற்குள் அம்மா எண்ணெய்க் குளிக்காகக் குளத்துக்குப் போக இருக்கிறாளாம்! ஆகவே போகுமுன் கட்டாயம் பார்த்துவிட்டுப் போகும்படி வேண்டிக் கொள்கிறாள்’ என்றாள். ‘சரி’ என்று தலையசைத்து ஒரு சொல்லிலேயே பதிலளித்தான் அவன். ஆதவன் புறப்படுமுன் மாதவன் புறப்பட்டு விட்டான். அம்மு கூறியதை அவன் மறக்கவில்லை. ஆனால் மறந்தது போலவே நடித்தான். இந்துவின் மாடியை அவன் கண்கள் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் எட்டி நடந்தான். இந்து மாடியிலேயே அவனுக்காகக் காத்திருந்தாள். அவளும் இரவு முழுவதும் தூங்கவில்லை. அவன் துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்த போதெல்லாம், அவளும் ஒரு தொப்பி துன்னிக் கொண்டிருந்தாள். பாதி துன்னிய நிலையில், தொப்பியும் துன்னூசியும் அவள் கையிலே இருந்தன. மாதவன் மேலே பார்க்காமலே செல்வது கண்டு இந்துலேகா உள்ளூரச் சிரித்தபடி தானே கீழே இறங்கி வந்தாள். வேட்டைக்கான ஏற்பாடுகளைப் பற்றியும் துப்பாக்கியைப் பற்றியும் மாதவன் உடுப்பைப் பற்றியும் இந்துலேகா விதவிதமான கேள்விகளைக் கேட்டும் பேச்சை வளர்த்தாள். மாதவன் எவ்வளவு சுருக்காகப் பேசிவிட்டுச் செல்ல நினைத்தாலும், பேச்சு நீண்டு கொண்டே போயிற்று. அதற்குள் பொழுதும் விடியத் தொடங்கி விட்டது. மாதவன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு போக விரைந்தான். அவள் அச்சமயம் பார்த்து, ‘துப்பாக்கியை நான் சற்றுப் பார்க்கட்டும்!’ என்று கேட்டாள். மாதவன் துப்பாக்கியை அவளிடம் கொடுத்தான். அவள் சரேலெனத் துப்பாக்கியுடன் மாடியேறினாள். அதை மாடியறையில் வைத்துப் பூட்டிவிட்டுக் கீழே இறங்கி வந்தாள். அவள் செயலின் பொருள் புரியாமல் மாதவன் விழித்தான். ‘துப்பாக்கி எங்கே?’ என்றான். உங்கள் வேட்டைக்கென்று இரவு முழுவதும் நீங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தீர்கள். நானும் இரவு முழுதும் இருந்து, இந்த வேட்டைக்கென்று ஒரு தொப்பி துன்னிக் கொண்டிருந்தேன். தொப்பி இன்னும் முடியவில்லை. நாளை முடிந்து விடும். தொப்பியுடன் நாளைக்கே வேட்டைக்குப் போகலாம். அதுவரை துப்பாக்கி என்னிடம் பத்திரமாயிருக்கட்டும்’ என்று சிறிது அமைதியாகக் கூறினாள். ‘என் மனம்போல எனக்கு வேட்டைக்குப் போகக் கூட முடியாதா?’ என்று அவன் சிறிது கோபத்துடன் கேட்டான். ‘அப்படியானால் தொப்பியும் வேண்டாம். துப்பாக்கியும் வேண்டாம். இரண்டும் இல்லாமலே போங்கள்’ என்றாள் அவள். ‘நேரமும் ஆய்விட்டது. சரி! நாளைக்கே போகிறேன்!’ என்று அவன் நடந்தான். தன் திட்டத்தில் பாதி ஆய்விட்டது என்று இந்துவும் குளிக்கச் சென்று விட்டாள். ‘என் மனம்போல வேட்டைக்குக்கூட...’ இந்த வாசகத்தை நினைத்து நினைத்து அவள் உள்ளூரச் சிரித்துக் கொண்டாள். ‘வேட்டைக்குக்கூட என்ன, கண்ணை மூடக்கூட இனி உன் மனம்போல நடக்க முடியாதபடி செய்துவிடப் போகிறேன் பார்’ என்று அவள் உள்ளத்தினுள்ளே ஒரு குறும்புப் பெண் உருவம் ஒரு ஆண் அடிமையுருவிடம் கூறிக் கொண்டது. மாதவன் அன்றும் பூவரங்கின் பக்கம் செல்லவில்லை. ‘இந்து அவன் வரவுக்கே காத்திருந்தாள். அவனும் அவளை எண்ணிய வண்ணமே காலுக்கும் கண்ணுக்கும் தடைபோட்டுக் காத்திருந்தான். மாலை அனுப்புதல், விழித்திருந்து தொப்பி தைத்தல் ஆகியவற்றால், அவள் உள்ள நிலை அவனுக்கு இப்போது ஒருவாறு புலப்பட்டிருந்தது. ஆயினும் அவள் தன்னைக் காதலில் இழையவிட்டு வேடிக்கைதான் பார்க்கிறாள் என்று அவன் எண்ணினான். அவள் தன் வாழ்க்கையை அவன் வாழ்வுடன் இணைக்க எண்ணவில்லை என்று கருதினான். அவன் மனம் மேலும் கொதித்தது. மேலும் இரும்பாயிற்று. அன்று இரவு வழக்கமீறி அவன் மனம் அமைதியிழந்தது. நிலா முற்றத்தில் சொரிந்த பால் ஒளிஅவன் நாடி நரம்புகளை அலைக்கழித்தது. அவனால் இருப்புக் கொள்ள முடியவில்லை. முற்றத்திலேயே இறங்கினான். முன்னும் பின்னும் நடந்தான். இரவு நள்ளிரவு கடந்ததை அவன் அறியவில்லை. அவன் கால்கள் அவனை அறியாமல், பூவரங்கு மாளிகையின் பக்கம் சென்றதையும் அவன் அறியவில்லை. தண்ணிலவு காய்ந்து கொண்டிருந்தது. தண்ணிலவில் காய்ந்து கொண்டே அவன் சுழன்று சுழன்று உலவினான். இந்துலேகா பகலும் இரவும் அவனை எதிர்பார்த்து எதிர்பார்த்து, நள்ளிரவில், நிலாமேடையில் வந்து நின்றிருந்தாள். அவன் வரவும் போக்கும் கண்டு அவள் அவன் கவனத்தைத் தன் பக்கம் திருப்பச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘மாது, மாது!’ என்ற குரல் கேட்டு அவன் நிமிர்ந்தான். அவன் உள்ளம் துடித்தது. ஆனால் அவன் அறிவு அவனைத் தடுத்து நிறுத்திற்று. ‘ஏன்!’ என்று மட்டும் அவன் குரல் கொடுத்தான். ‘அங்கே பனியில் ஏன் உலவுகிறாய் மாது! இங்கே இப்படி வருவது தானே!’ என்றாள். அவன் உள்ளத்தில் தேக்கி வைத்திருந்த கோபதாபம் முழுவதும் இப்போது அவன் சொல்லிலும் செயலிலும் வந்து புகுந்தது. ‘நான் விளையாட்டுப் பிள்ளையல்ல. நீயும் பள்ளிச் சிறுமியல்ல. சமயமும் ஒரு பெண்ணின் மாடியேறி ஒரு ஆண் வரும் நேரமல்ல - இது நள்ளிராப் போது!’ என்றான். அவள் ஒன்றும் பேசவில்லை. பேசாமல் கீழே இறங்கி வந்தாள். அவள் அப்படி இறங்கி வருவாளென்று அவன் எதிர் பார்க்கவுமில்லை. இறங்கிவந்த சமயம் அவன் கண்களும் அப்பக்கம் சாயவில்லை. ஆகவே பின்புறமாக வந்து இந்துலேகா அவனைத் தன்மீது சாய்த்திழுத்து அணைத்துக் கொண்ட போது, அவன் திடுக்கிட்டான். அடுத்தகணம் அவன் தன் கண்களையே நம்ப முடியவில்லை! அவள் அவனைத் தன் கண்ணீரால் குளிப்பாட்டினாள். முத்தங்களால் உடலில் பூமாரி பெய்தாள். அவன் அரையில் கைகோத்தவண்ணம், பாதி இழுத்தும் பாதி தூக்கியும் அவனை மாடிக்கே இட்டுச் சென்று தன் மலரணையில் கிடத்தி, கையில் விசிறியுடன் அருகே வந்தமர்ந்தாள். “அந்தோ, மாது! உனக்கேன் இத்தனை வீண் கவலை? உன்னையே நான் என்றோ என் வாழ்க்கைத் துணைவனாக, ஏன் கணவனாகத் தேர்ந்தெடுத்து விட்டேனே! உனக்காகவே, உன்னுடனேயே நான் இருக்கிறேனே! அப்படியிருக்க, உனக்கு ஏன் இத்தனை ஐயப்பாடு? இவ்வளவு மனக்கலக்கம்?” என்றாள். அவன் ஐயப்பாடும் கலக்கமும் யாவும் ஒரே இன்பப் புயலாக இப்போது சுழன்றடித்தது. “இந்த இந்து உனக்கே சொந்தம்! மாதவி என்று நீ அழைத்தபோதே நான் மாதவனாகிய உனக்கு உரியவளாகி விட்டேன்” இந்தச் சொற்களுடன் தொடங்கி, கன்னியின் வாய்மொழியிலிருந்தே, அவள் உள்ளத்திலே இத்தனை காலம் அடங்கிக் கிடந்த காதல் வரலாறு முழுவதும் அவன்முன் திரை திரையாக அலை வீசின. அவையே அவனுக்கு அன்றுமுதல் இன்பக் கவிதையாய், கனவிலும் கிட்டுதற்கரிய நனவாரமுதமாய் அமைந்தது. உணர்ச்சிகளைத் துன்பக்கேணியில் கொட்டிவந்த மாதவன் இப்போது கரையில்லாத இன்பக் கடலில் திளைத்து மிதந்தான். உணர்ச்சிகளை அடக்க அரும்பாடு பட்டு நடித்த நங்கையும் நடிப்பை விட்டுவிட்டுக் கட்டற்ற காதலில் குளித்தாள். ஊடுவதற்கு நேரமில்லாத இடையறாக் கூட்டுறவில் அவர்கள் இருவரும் பல நாழிகை, பலநாள், பல வாரங்கள் ஓட்டினர். இறுதியில் ஒருநாள் நள்ளிரவில், முழுநிலாச் சான்றாக, கேரளத்தின் பண்டைப் பண்பாட்டின் மரபிலே, அவர்கள் இருவரும் ‘உயிர்பிரியினும் பிரியோம்’ என்ற மாறாத உறுதியுடன் தமக்கிடையே மணஉறுதி மொழி கூறிக் கொண்டனர். அந்த உறுதியின் இடையறா நினைவூட்டாக, இந்து அவனைக் கண்ணாளா என்றே அழைத்தாள். அவனும் அவளைக் கண்மணி என்றே அழைத்தான். அடிக்கடி இந்து அவனைக் குறிக்கும்போது நீ என்று தொடங்கி விடுவாள் - பின் தயங்கிப் புன்முறுவலுடன் நீங்கள் என்று தொடங்குவாள். ஆனால் புதிய பன்மையை அவள் முழுவதும் உச்சரிக்க மாதவன் விடுவதில்லை! அவர்கள் புதுத்தொடர்பு மெல்ல மெல்ல எல்லாருக்கும் தெரிந்த உருவாயிற்று. இருவரிடமுமே அன்பும் நேசமும் கொண்ட தரவாடு முழுவதும் அதை மனமுவந்து ஏற்றமைந்தது. காரணவர் பஞ்சுமேனவன் கூட இதற்குத் தடை ஏதும் சொல்லவில்லை. இதற்கு ஆர்வ ஆதரவு காட்டாவிட்டாலும், மற்றெல்லாச் செய்திகளிலும் அவர் இந்துலேகா விருப்பத்தில் குறுக்கிடாதது போலவே, இதிலும் குறுக்கிடாமல் வாளா அமைந்திருந்தார். சின்னன் படிப்புப் பற்றிய சச்சரவு இந்த அமைதியான சூழ்நிலையிடையே, ஒரு புது மாறுதலை மெல்லப் புகுத்தத் தொடங்கிற்று. 3. கோபப் புயல் செம்பாழியோட்டுப் பூவள்ளித் தரவாடு மலையாள நாட்டிலேயே ஈடும் எடுப்புமற்ற செல்வமும் புகழ்மரபும் உடையது. ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ நாற்பத்தெண்ணாயிரம் பறை நெல் விளையும் நன்செய் நிலங்கள் அதற்கு உரியனவாயிருந்தன. பதினெண்ணாயிரம் வெள்ளிக்குக் குறையாத வருமானம் உடைய தோட்டந் துறவுகளும் இருந்தன. பாட்டக் குத்தகை, ஏரிகுளம், காடு ஆகியவற்றின் குத்தகை முதலிய மேல்வரவினங்களும் குறைவில்லாதிருந்தன. பல தலைமுறைகளாகத் தரவாட்டின் காரணவர்களும் அவர்கள் பிள்ளைகளும் திவானாகவும் பேஷ்காராகவும் அமைதிக் காவலராகவும் அரசுரிமைக்குத் தகையாளராகவும் இருந்து, வருமானமும் செல்வமும் புகழும் திரட்டித் தரவாட்டை வளர்த்திருந்தனர். காரணவர் பஞ்சு மேனோன் ஆங்கிலப் படிப்பில்லாதவர். எவ்வகைத் திறமையுமற்றவர். ஆகவே வருமானம் செல்வம், புகழ் ஆகியவைகளில் தரவாட்டின் வளர்ச்சி ஓரளவு தடை பட்டிருந்தது. ஆயினும் ஈயாக்கஞ்சனான அவர் வரவினங் களைப் பெருக்க வகை தெரியாதவரானாலும் செலவினங்களைச் சுருக்கி, கிட்டத்தட்ட முன்னிருந்த வளத்தை நீட்டிக்கமுடிந்தது. அத்துடன் அவர் வழக்கமீறிய பழமை விரும்பியதாக இருந்ததால், பழைய மரபுப்புகழ் சிறிதும் குறையாமல் கண்காணிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து வந்தார். பெரும்பாலான மலையாளத் தரவாடுகளைப் போலவே பூவள்ளியிலும் செலவினங்களில் பெரும்பகுதி கோயில், குளம், மடம், தர்மசாலை ஆகிய இனங்களையே சார்ந்திருந்தது. குடும்பத்தைச் சார்ந்த பகவதி கோயிலில் மாதந்தவறாது விழாக்களும், வாரந்தவறாது சிறப்புக்களும் நாள் தவறாது ஆறுவேளை பூசைகளும் ஆரவாரச் செலவினங்களும் நடைபெற்று வந்தன. கோயிலிலும் தரவாட்டுக்குரிய இரண்டு தர்மசாலைகளிலும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பிராமணர்களுக்கும் மற்ற அகதிகளுக்கும் வயிறார உணவும் உடையும் பிற வசதிகளும் குறைவற வழங்கப்பட்டு வந்தன. கஞ்சனாயினும் பழமை விரும்பியான பஞ்சுமேனவன் இவற்றில் கைவைக்க விரும்பவில்லை. கைவைக்கவும் முடியாது. தரவாட்டின் அமைதியும் புகழும் மதிப்பும் அவற்றைப் பொறுத்தவையாகவே இருந்தன. தரவாட்டுத் திருமணங்களின் ஆரவாரச் செலவுகளும் இவை போலவே குறைக்கத் தகாதவையாயிருந்தன. ஆகவே பஞ்சுமேனவன் சிக்கனக் கத்தி மற்ற எல்லா இனங்களிலும் பாய்ந்தது. தரவாட்டைச் சேர்ந்தவர் களுடைய நடைமுறைக் குடும்பச் செலவுகள் தரவாட்டுச் சிறுவர் சிறுமியர் கல்விச் செலவுகள் முதலியவை முற்றிலும் நிறுத்தப் பட்டன. குடிவாரப்பணம், பாட்டப் பணம், வட்டி குத்தகைப் பணங்கள் முதலியன ஈவிரக்கமின்றி ஒட்டறுத்து வாங்கப்பட்டன. இதனால் தரவாட்டில் அதிருப்தி நிறைந்திருந்தது. ஆனால் முணுமுணுப்பு, சிறுபூசல்கள் என்ற நிலைக்குமேல், இது வளரவில்லை. இவைதோன்றும் சமயங்களிbல்லாம், அவற்றின் வேகத்துக்குமேல் பஞ்சுமேனோனின் கஞ்சத்தனமும் அடக்கு முறையும் வளர்ந்து வந்ததே இதற்குக் காரணம் என்னலாம். பஞ்சுமேனோன் கள்ளங்கபடமற்றவர். இயல்பாக நட்பும் பாசமும் உடையவர். இரக்க சிந்தனையுடையவர். ஆனால் இந்த இளகிய பண்புகள் எவருக்கும் தெரியாமல் அவருடைய முன் கோபமும் பிடிவாதமும் வீம்பும் ஆணவமும் கெடுத்தன. மேலும் பணத்தின்பால் படிந்த அவர் உயிர் அவாவும் கஞ்சத்தனமும், எப்படியாவது பொருள் திரட்டிக் குவித்திட வேண்டுமென்னும் ஆர்வமும், ஆரவாரச் செலவினங்களுக்கு ஈடு செய்ய மற்ற இனங்களில் வருவாய் பெருக்க வேண்டுமென்னும் கோட்பாடும் அவர் தீயபண்புகளையே வளர்த்தன. அவர் மீது தரவாட்டில் எவருக்கும் அன்போ, பாசமோ பரவாமல், அச்சமும் வெறுப்புமே பரவியிருந்தன. பஞ்சுமேனோன் வாழ்வில் நாள் தவறினாலும், கோபம் வரத் தவறியதில்லை. வயது ஏறுந்தோறும் உடல் தளர்வுறுந்தோறும், கோபத்தின் இந்தத் தோழமையும் பெருகியே வந்து கோபமில்லாத நாட்கள் அருமை என்ற நிலைபோய், கோபமில்லாத நாழிகையைக் கண்டுபிடிப்பது அரிது என்ற நிலையாயிற்று. தரவாட்டில் எவருமே - பெரியவர்கள் சிறியவர்கள், ஆடவர் பெண்டிர் - யாருமே அவர் விருப்பத்துக்குக் குறுக்கிட அஞ்சினார்கள். சின்னஞ் சிறுவர்முதல் அவரை அணுகுவதற்கே - அவர் முன்னிலையில் செல்வதற்கே நடுநடுங்கினார்கள். பஞ்சுமேனவன் கோபத்திலிருந்து தப்பியிருந்தவர், அதிலிருந்து ஒதுங்கியிருந்தவர், அதற்கு ஆளாகாதவர் ஆகியோரும் ஒருசிலர் இருந்தனர். தன் மனைவி குஞ்சுக்குட்டியம்மை, மகள் இலட்சுமிக் குட்டியம்மை ஆகிய இருவரிடமும் பஞ்சுமேனவன் குடும்ப பாசத்தில் சிறிதும் குறைவில்லாமலே நடந்து வந்தார். அவர்களுக் கென்று பூவள்ளியிலேயே தனியிடமும் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். இதனால் தரவாட்டின் பொது ஆட்சியிலுள்ள கடுமை அவர்கள் பக்கம் செல்லாமலே இருந்தது. மகன் கொச்சுகிருஷ்ணமேனோன், மாதவன் தந்தையாகிய கோவிந்தப் பணிக்கர் ஆகியோர் பஞ்சுமேனவன் கோபத்துக்கு ஆளானதே கிடையாது. அதுமட்டுமன்று, அவர் மதிப்புக்கும் அன்புக்கும் அவர்கள் ஒருங்கே பாத்திரமாயிருந்தனர். அதிலும் கொச்சுகிருஷ்ண மேனோன் முன்னிலையில், அவர் தன் கோபத hபங்களைக் காட்டுவதே கிடையாது. மகன் நல் லெண்ணத்தையும் நன்மதிப்பையும் பெறுவதில் தந்தை அவ்வளவு உன்னிப்பாயிருந்து வந்தார்! இதனால் தரவாட்டுக்குக் கொச்சுகிருஷ்ண மேனோன் வந்தபோதெல்லாம், குடும்ப உறுப்பினரும் குடிமக்களும் ஒருங்கே அச்சப்பேயினின்று முழுநிறை விடுதலை பெற்றனர். பஞ்சுமேனவனின் இயற்கைப் பாசம் முழுவதற்கும் உரியவளாக வளர்ந்தவள் இந்துலேகா. இந்தப் பாசத்துடன் கொச்சுகிருஷ்ண மேனோனிடம் அவா கொண்ட மதிப்பும் அச்சமும் பேரளவு பங்குகொண்டது. அவள் மீது காற்றடிக்க அவர் பொறுப்பதில்லை. அத்துடன் தன் கோப ஆட்சியின் சிற்றலைகூட அவள்பக்கம் சென்றுவிடக் கூடாதென்பதில் அவர் முன் னெச்சரிக்கை யுடைவராயிருந்தார். கொச்சுகிருஷ்ணமேனோனுக்குப் பின், இந்துலேகாவிடம் பஞ்சுமேனவன் பாசமும் மதிப்பும் பன்மடங்கு வளர்ந்தன. அவளுக்குத் தனியாகப் பூவரங்கு மாளிகை எழுப்பி, அதில் அவளுக்கு வேண்டிய வசதிகள் யாவும் குறைவின்றிச் செய்து வந்தார். மனைவி மூலமும் மகள் மூலமும் அவள் சின்னஞ்சிறு விருப்பு வெறுப்புகளை அறிந்து, அவற்றுக்கிசைய நடந்துவந்தார். தன்னைத் தானே முழுவதும் அடக்கிய பின்னன்றி, அவர் அவள் மாளிகைக்குச் செல்லவும் துணிவதில்லை. சென்றாலும் பாசப் பேச்சன்றி வேறெந்தப் பக்கம் குறுக்கிடாமல் அவர் தன் நாவடக்கிக் காத்து வந்தார். பஞ்சுமேனவனின் பழமைப் பாசம் இயல்பாக ஆங்கிலப் படிப்பையும் வெறுத்தது. ஆங்கிலம் படித்தவர் பண்புகள், நடையுடை பாவனைகள் ஆகிய யாவற்றையும் முற்றிலும் வெறுத்தது. இந்த வெறுப்புக்குக் கொச்சுகிருஷ்ண மேனோவனும் இந்துலேகாவும் மட்டுமே விலக்காயிருந்தனர். பழைமை விரும்பிகளும் விரும்பும் பல நற்பண்புகள் இருவரிடமும் இருந்ததே இதற்கு ஓரளவு காரணமாயிருந்திருக்கக் கூடும். அவர் இயற்கைப் பாசத்துடன் இவை இணைந்திருக்க வேண்டும். மாதவனிடமும் பஞ்சுமேனவன் கோபம் முற்றிலும் தலைகாட்டவில்லை. உள்ளூர அவனிடமும் அவருக்குப் பாசமும் மதிப்பும் அச்சமும் ஒருங்கே இருந்துவந்தன. அவன் திசையிலும் அவர் நாடாமலே இருந்துவந்தார். தரவாட்டுச் செலவில்லாமலே அவன் கோவிந்தப் பணிக்கர் செலவில் இங்கிலீஷ் படித்ததனால், அவன் திசையே நாடத் தேவை ஏற்படாமலும் இருந்தது. ஆனால் இந்தச் சுமுகமான சூழ்நிலையையே சின்னன் படிப்புப் பற்றி எழுந்த கருத்து வேறுபாடு படிப்படியாகக் கெடுத்தது. முதல் தடவையாக, மாதவன் வற்புறுத்த வற்புறுத்த, பஞ்சுவின் பிடிவாதம் வளர்ந்தது. பஞ்சு மறுக்க, மறுக்க மாதவன் எதிர்ப்பும் வேரூன்றிற்று. பெரிய அம்மாமனிடம் மாதவன் நேரில் சென்று பேசிய போது, மாதவன் அமைதியே உருவாகத்தான் தோன்றினான். ஆனால் காரணவர் தரவாட்டில் எல்லாரிடமும் எதிர்பார்த்த பணிவு, கெஞ்சுதல், காரணவர் வாக்குக்குக் கீழ்ப்படியும் பண்பு ஆகிய எதுவும் அவனிடம் இல்லை. அவனிடம் உரிமைப் பேச்ச இருந்தது. காரணவரின் அசைக்கமுடியாத முடிவுக் கெதிராக அவனிடமும் அசைக்க முடியாத உறுதி இருந்தது. இவை காரணவர் உள்ளத்தைக் கனியவைக்கத் தக்க பண்புகளாய் அமையவில்லை. அவர் இரும்புப்பிடி எஃகுப்பிடியாய் நிமிர்ந்தது. இறுதியில் அவர் முடிவு எதுவாயினும் அதற்குக் காத்திராமல், மாதவன் தன் முடிவையே அவரிடம் கூறிவிட்டு மீண்டான். தரவாட்டுப் பிள்ளைகள் கல்விச் செலவு தரவாட்டின் நேர்மையான செலவு. கோயில் குளத்தின் செலவுகள் வருமானத்தின் கூடுதல் குறைவுக்குத் தக்கபடி மாற்றக் கூடியவை. ஆனால் இது தரவாட்டின் வளர்ச்சிக்குரிய இன்றியமையாச் செலவு. ஆகவே நீங்கள் சின்னனை உங்கள் செலவில் அனுப்புவதே நன்மை. நேர்மை! அப்படி நீங்கள் அனுப்பா விட்டால், நான் என் செலவில் இட்டுச் செல்வதென்று உறுதி கொண்டுவிட்டேன். இதிலிருந்து நான் மீளப் போவதில்லை.” இந்த வாசகங்கள் காரணவர் பதவியின் மட்டு மதிப்பையே கீழறுத்து விட்டன என்று பஞ்சுமேனவன் நினைத்தார். அவர் முன் கோபம் என்றுமில்லா அளவுக்கு மேலெழுந்து பீறிட்டது. ஆனால் மாதவன் செயலுறுதியின் முன்பு அது ஏலமாட்டாக் கோபமாயிற்று. அது அவரைச் செயலற்றவராக வெறித்து நிற்கச் செய்து விட்டது. மாதவன் தன் முடிவை வீசி எறிந்து விட்டுப் போகும்வரை அவர் ஆகந்தான். துடிதுடித்துப் படபடத்தது. ஒரு வாக்குக் கூட அவர் நாவிலிருந்து எழவில்லை. அவர் உடல் அவர் வசத்தில் வருவதற்கே, உள்ளூரப் புகைந்து குமுறும் கோபம் வெளியே செயலுருவம் பெறுவதற்கே, அரை நாழிகை நேரமாயிற்று. ஆனால் அப்போதும் அந்தக் கோபத்தை அவர் வெளியிட்டுக் காட்ட அவர் அருகே யாரும் இல்லை. அவர் அன்று இருந்த நிலையறிந்து வேலைக்காரர், பணிப் பெண்கள் முதல் யாருமே அவர் திசையில் எதிர்ப்பட வில்லை. அவர் கண்களில் அகப்பட விரும்பவில்லை. தன் கோபக்கனலைக் காட்டுவதற்குரிய ஆளைத் தேடி அவர் கோபத்திலேயே அங்குமிங்கும் பாய்ந்தோடினார்! பஞ்சுமேனவன் கோபப் புயலுக்குத் தாக்குப் பிடிக்க அகப்பட்ட கருவிகள் இந்துலேகாவின் தாய் இலட்சுமிக் குட்டியம்மையும், அவளுடன் மறுமண உறவுகொண்டிருந்த கேசவன் நம்பூதிரியும் மட்டுமே. இலட்சுமிக் குட்டி அவர் மகள்; அவர் கோபத்துக்கு முன்அவள் ஒரு புல் போல நிலத்துடன் நிலமாகப் படிந்தாள். கேசவன் நம்பூதிரியோ ஒரு நாணல். அது கோபத்தின் பிடியில் மிகுதிபடாமலே கோபம் செல்லும் திசையி லெல்லாம் வளைந்து வளைந்து கொடுக்கும் இயல்புடையது. ஆனால் இன்று பஞ்சுவின் கோபத்துக்கு உருவம் கொடுக்க உதவியவர் இவ்விருவருமேயாவர்! ‘ஆ, இலட்சுமி, உன் தந்தைக்கு இந்தத் தள்ளாத காலத்தில் வந்த கேட்டைப் பார்த்தாயா!’ என்றார் அவர் இலட்சுமி குட்டியிடம். “என்ன அப்பா, அது! அப்படி என்ன வந்து விட்டது!” என்றாள் இலட்சுமிகுட்டி. பஞ்: என்ன வந்துவிட்டதா! என் மதிப்பு முழுதும் போய்விட்டது. அவமானம், பொறுக்க முடியாத அவமானம்! அந்தச் சின்னப்பயல் - தரவாட்டின் கோடாலிக்காம்பு - அவன் என்மீது பாய்ந்து என்னை அவமானமே செய்துவிட்டானம்மா! இலட்: யார் அது, அப்பா! பஞ்: வேறு யார்! உன் மகள் இந்துவைச் சுற்றிச் சுற்றிப் பல்லைக் காட்டிக் கொண்டு திரிகிறானே, அந்த மாதவன்தான்! இல: அப்படியா? அவன் அவ்வளவுக்கு வந்து விட்டானா? எல்லாம் நீங்கள் கொடுக்கும் இளக்காரம்தான்? மகளின் அனுதாபம் கோபத்தீயை முழுவேகத்தில் வெளிக் கொணர்ந்தது. அவர் நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கோப வெப்பத்தில் உருக்கி வார்த்து வீசினார். இதன் முடிவிலேயே கேவன் நம்பூதிரி அத்திசையில் வரநேர்ந்தது. அவரிடம் கதை மீண்டும் ஒரு தடவை பன்மடங்கு வேகத்துடன் ஒப்பிக்கப்பட்டது. இருவரும் என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்து நின்றனர். பஞ்சுவின் முதல் ஆவேசம், சிறிது அடங்கியிருந்தது. ஆனால் இந்த மௌனம் மீண்டும் கோப அலைகள் எழுப்பின. பஞ்: என்ன பேசாமலிருக்கிறாய், இலட்சுமி! இலட்: நான் என்ன சொல்ல இருக்கிறது அப்பா! தங்கள் விருப்பமே என் விருப்பம்! பஞ்: ஓகோ! அப்படியானால் என் அவமானம் உன் அவமானம் அல்லவா! உன்னை ஒருவன் அவமதித்தால் நான் பார்த்துக் கொண்டிருப்பேனா? கேசவன் நம்பூதிரி தான் பார்த்துக் கொண்டிருப்பாரா? கே-ந: இந்த அவமதிப்புக்குக் காரணவர் சரியான பாடம் படிப்பித்துத் தானாக வேண்டும்! பஞ்: அப்படிச் சொல்லுங்கள், நம்பூதிரி! நீங்கள் இருவரும் இந்துலேகாவுக்குத் தாய், தந்தை நிலையில் இருக்கிறீர்கள். உங்கள் முன்னிலையில் - நம் குடும்பத் தெய்வம் ஸ்ரீபோர்க்கலி பகவதி சான்றாகக் கூறுகிறேன் - இந்துலேகாவின் ஒரு சுண்டு விரலைக் கூட இந்தச் சண்டாளன் தீண்டமாட்டான், தீண்டப் படாது! இதை நான் பார்த்துக் கொள்கிறேன்! வானம் இடிந்தாலும், கடல் தூர்ந்தாலும், கிழக்கே எழும் சூரியன் மேற்கே எழுந்தாலும், என் இந்துவை இந்த மாதவச் சண்டாளப் பயல் மணந்துகொள்ள நான் ஒருபோதும் இணக்க மளிக்க மாட்டேன்; மணக்கவிட மாட்டேன்! இந்தப் பயங்கரச் சபதத்தின் வேகத்திலே பஞ்சுவின் கோபவேகம் முழுவது மட்டுமன்றி, அவர் முதுமையின் வேகமும் முற்றிலும் ஓய்ந்துவிட்டது. அவர் சபதமிட்டுக் கொண்டே தள்ளாடினார். கேசவன் நம்பூதிரி விரைந்து சென்று ஏந்திப் பிடித்திராவிட்டால், அவர் நிலத்தில் விழுந்து இன்னும் பேரிடருக்கு உள்ளாகியே இருப்பார். அவர் கைகால்கள் உதறின. முகம் வியர்த்தது. கால் நாழிகை நேரம் அவர் உணர்விழந்து பேச்சுமூச்சற்றவரானார். இலட்சுமிக்குட்டி ஓடிச்சென்று, தன் கைக்குட்டையை நீரில் நனைத்து முகத்தில் தடவினாள். வாயில் சிறிது காய்ச்சிய பால் ஊற்றிப் பருகவைத்தாள். அவர் கண்விழித்தார். கண்விழித்தபோது கோபம் முற்றிலும் ஓய்ந்திருந்தது. அவரை அப்போது பார்க்கப் பரிதாபமாகவே இருந்தது. ஒருகணம் அவர் தம் கோபத்துக்காக வருந்தினார். ‘இலட்சுமிக்குட்டி! இலட்சுமிக்குட்டி! ஐயோ, நான் கோபத்தில் என்ன செய்துவிட்டேன். மாதவன் என்னை இப்படிக் கோபமூட்டிவிட்டானே! சின்னஞ்சிறுசுகள், மீது நானும் கோபப்பட்டு விட்டேனே!’ என்றார். ஆற்றாமையால் அவர் மீண்டும் சோர்ந்து விழுந்தார். இத்தடவை அவர் நிலைபற்றி இலட்சுமிக்குட்டியும் கேசவன் நம்பூதிரியும் கவலைப்பட வில்லை. அவர்கள் அவரை மெல்லப் பஞ்சணையில் சார்த்திப் படுக்க வைத்தனர், விசிறிக்கொண்டு வீசினார். அவர் அமைதியாக உறங்கினார். பஞ்சுமேனவன் உறக்கம் விட்டெழுந்திருக்கும் போது இரவு பத்து நாழிகைக்கு மேலாய்விட்டது. ‘லட்சுமிக்குட்டி, இலட்சுமிக்குட்டி’ என்ற குரல் கேட்டு, இலட்சுமிக் குட்டியும் நம்பூதிரியும் ஓடிவந்தனர். அவர் இரவில் எழுந்திருக்கக் கூடும் என்று எதிர்பார்த்தே மகள் சூடான பால் கஞ்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாள். அதனுடன் அவர் மிகவும் விரும்பிய பாசிப் பயிற்றுக்கூட்டும் ஏற்பாடா யிருந்தது. பணிப்பெண் அவற்றைக் கொண்டு வந்தாள். குழந்தையை ஊட்டுவது போல இலட்சுமிக் குட்டியும் கேசவன் நம்பூதிரியும் அவரை ஊட்டினர். பசி ஆற ஆற, கோபத்தின் தடமும் ஆற்றாமையின் தடமும் அகன்றன. அவர் இயற்கையறிவு செயலாற்றத் தொடங்கிற்று. செய்த சபதத்தை இனி எப்படி நிறைவேற்றுவது என்ற கவலைதான் இப்போது பஞ்சுமேனவன் உள்ளத்தில் எழுந்தது. கஞ்சி குடித்துக் கொண்டே அதுபற்றிக் கேசவன் நம்பூதிரியுடன் உரையாடினார். ‘நம்பூதிரி! சபதம் செய்தது செய்துவிட்டேன். அதுவும் நம் ஸ்ரீபோர்க்கலி பகவதி சான்றாகச் செய்துவிட்டேன். இனி அதை நிறைவேற்றுவது என் கடமை. அதற்கு நீங்கள் தான் ஏதாவது வழி வகுக்க வேண்டும்’ என்றார். ‘கட்டாயம் வழிவகுக்க வேண்டும்’ என்று எதிரொலித்தார் நம்பூதிரி. பஞ்-மே: நேற்றுத் திடுமென மூக்கில்லாததோ, கண்ணில் லாததோ ஏதோ ஒரு நம்பூதிரிப்பாட்டின் கதை கூறினீர்களே! இந்துலேகாவைப் பற்றிக் கூட விசாரித்ததாகச் சொன்னீர்களே; அவர் ஆள் எப்படி! இந்துலேகா மனமார அவர்பக்கம் சாயும்படி செய்யமுடியுமா? பஞ்சுமேனவனை எப்படிச் சமாளிப்பது என்ற ஒரே கவலையில் இருந்த நாணல், தனக்குக் கிடைத்த இந்தச் சிறு கொம்பபைப் பற்றி நிமிர்ந்து நின்றது. அதிலேயே கொடிபோல் இழையத் தொடங்கிற்று. கே-ந: அவர் பெருஞ்செல்வர். அழகில் மன்மதன், ஆண்டே! இந்து லேகாவை அவர் கண்டவுடனே அவள் மையலில் அவர் விழுந்துவிடுவார். அதுபோல் இந்துலேகாவும் அவரைக் கண்டதும் ஏற்பது உறுதி. இந்து லேகாவின் பார்வையில் அவர்பட்டால் போதும். நம் காரியம் முடிந்தது மாதிரிதான். வெண்ணெய் இருக்கிறது, தீ இருக்கிறது. இரண்டையும் அருகருகே கொண்டுவந்தால் போதும். நெய்பற்றிக் கவலை வேண்டாம். பஞ்சுமேனவன் முகத்தில் களிப்பும் மகிழ்ச்சியும் துள்ளிக்குதித்தன. “ஆகா, திருமனசு. நல்ல யோக்கியமான ஆள். உங்கள் ஆலோசனையே ஆலோசனை. உங்கள் அறிவு யாருக்குவரும்” என்று கூறி, இலட்சுமிக் குட்டியை ஒன்று திரும்பிப் பார்த்தார். ‘பார்த்தாயா? எத்தகைய அறிவாளி நம் தரவாட்டுச் சம்பந்தத்துக்குக் கிடைத்திருக்கிறார்!’ என்று மகளை நோக்கிப் பாராட்டுவது போலிருந்தது அந்தப் பார்வை!’ அவர் கோபமடைந்தபின், முதல் தடவையாக இலட்சுமிக் குட்டியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. இந்துலேகாவைப் பற்றி அவள் தாயுள்ளம் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அவள் கவலைப்பட்டதெல்லாம் தந்தைக்காகத் தான். அது தன் கணவன் மூலமே தீர்ந்தது கண்டு அவள் கவலையின்றி மூச்சுவிடத் தொடங்கினாள். நாளையே - ஏன் இன்றைக்கே - இன்றிரவே - அந்த நம்பூதிரிக்கு இங்கே வரும்படி கடிதம் எழுதிவிடுங்கள். இந்துலேகாவைப் பற்றி நான் பேச்செடுத்ததாகக் கூற வேண்டாம். நீங்களாக எழுதுவதாக எழுதிச் சீக்கிரம் வரவழைத்து விடுங்கள். இந்துலேகாவை அவர் ஒன்று பார்க்கட்டும். அவர் பார்வையில் அவள் வடிவழகு விழட்டும். அப்புறம் இந்துலேகா உள்ளம் உருகுவதை நான் ஒரு தடவை காணவேண்டும். அது உருகுமல்லவா? இலட்சுமிக்குட்டி!’ ‘கட்டாயம் உருகும், உருகாமல் என்ன செய்யும் என்று ஒத்தூதினாள் இலட்சுமிக்குட்டி. பஞ்சுமேனவன் அன்றிரவு மீந்தநேர முழுவதும் காலை நேரத்தில் பாதியும் அயர்ந்து உறங்கினார். புயலுக்குப் பின் அமைதிநிறைந்த நிலவாக இலட்சுமிக்குட்டி, கேசவன் நம்பூதிரி இருவருக்கும் இராப்பொழுது கழிந்தது. இந்துலேகா மனசு எப்படி இருக்குமோ என்று இலட்சுமிக்குட்டிக்குச் சிறிது அச்சம் உண்டு. ஆனால் கேசவமேனோன் வீரபராக்கிரம உரைகள் விரைவில் அவள் தாயுள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த முடிந்தது. “பார் இலட்சுமி! உன் அழகெங்கே? நான் எங்கே? இன்று எனக்கிருக்கும் பஞ்சுக்கம்பெனி வரும்படிகூட நான் உன்னைத் தேடும்போது இருந்ததில்லையே! நீ என்னிடம் மசியவில்லையா! மூர்க்கில்லத்து நம்பூதிரிப்பாடு அழகன், மன்மதன். அவன் பணமோ திருவாங்கூர் பொன்னுதம்பிரானை விலைக்கு வாங்கப் போதும்! இந்த இரண்டிலும் இந்துலேகா என்ன, அவள் பாட்டி கூட மசிந்து கரைந்து போவாள்!’ என்றார் நம்பூதிரி. கள்ளங்கபடமறியாத இலட்சுமிக்குட்டி ‘பாட்டிகூட’ என்ற உயர்வு நவிற்சி கேட்டுச் சிரித்தாள். எதற்காகச் சிரித்தாள் என்றறியாமல் கேசவன் நம்பூதிரியும் கூடவே சிரித்தார்.! 4. காதலர் பிரிவு பஞ்சுமேனோன் சூளுரைகேட்டுத் தரவாடு முழுவதுமே கிடுகிடுத்தது. ஆனால் மாதவன் இள உள்ளம் இந்தப் பரபரப்பை ஒருசிறிதும் பொருட்படுத்தவில்லை. தன் உறுதியில் அவன் தயங்கவுமில்லை. ‘இன்றே சின்னனை அழைத்துக் கொண்டு நான் சென்னை புறப்படுகிறேன்’ என்று அவன் துணிவு கொண்டான். இந்தத் துணிவை அவன் முதன் முதலில் தன் தாய் பார்வதியம்மையிடம் கூறிவிட்டுத் தந்தையைக் காணச் சென்றான். கோவிந்தப் பணிக்கர், மகனை அன்பாதரவுடன் வரவேற்றார். ‘நடந்த செய்திகள் யாவும் நான் அறிவேன் மாது! இப்படி நடக்கும் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும். ஆனால் நீ உன் இளமை முறுக்கினால் அதை விரைவு படுத்திக் கொண்டாய். ஆனாலும் கேடில்லை. நான் முடிவை எதிர்நோக்கி ஏற்கெனவே அணைகட்டி வைத்திருக்கிறேன்’ என்றார். ‘அப்பா, என்னை மன்னிக்கவேண்டும். இவ்வளவு அறிவுடைய தந்தை இருக்கும்போது நான் பிழை செய்தால்கூட எனக்குத் தண்டனை கிடைக்காதென்று நினைக்கிறேன்’ என்று மாதவன் நயமாகப் புன்முறுவலுடன் கூறிய வண்ணம் தந்தையின் அருகே அமர்ந்தான். கோ-ப: தந்தைக்கு மகன் அன்பு போதும், மாதவா. புகழ்ச்சி தேவையில்லை. உனக்கு இப்போது செலவு அதிகப் பட்டுவிட்டதென்ற கவலை வேண்டாம். உனக்கு வேண்டிய பணத்துக்கெல்லாம் நான் ஏற்பாடு செய்துவிட்டேன். தேவைப் பட்டபோதெல்லாம் கேட்க, கடிதம் எழுதத் தயங்காதே! மா: அப்படியே, அப்பா! ஒரு நண்பரிடம் கேட்கும் உரிமையுடனே நான் எப்போதும் உங்களிடம் கேட்பேன். ஆனாலும் தாங்கள் செய்யும் உதவி என் தரவாட்டிலிருந்து வந்தால், தங்களுக்கு நான் இவ்வளவு தொல்லை தரவேண்டியதில்லை அப்பா! பிள்ளைக்குச் செய்வதிலுள்ள இன்பம் உனக்கு இப்போது தெரியாது. மாது, உனக்கு அது விரைவில் தெரியப் போகிறது. அதிருக்கட்டும்! நீ மறந்தாலும் நான் சில செய்திகளை மறவாமல் வைத்திருக்கிறேன். இன்று உன் பிறந்தநாள். அத்துடன் நீ, பி.எல். தேறியிருக்கிறாய். இந்த இரண்டு வகையிலும் உனக்குப் பரிசு தரவேண்டும் என்றிருந்தேன். இரண்டு பரிசுகளையும் ஒன்றாக்கி இதோ உனக்காக இந்தப் பொட்டலம் காத்திருக்கிறது பார்!’ என்று கூறி கோவிந்தப்பணிக்கர் ஒரு சிறுமடிப்பை நீட்டினார். மாதவன் புன்னகை தவழ்ந்த முகத்துடன் அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தான். அது பெரிய அளவான வைரங்கள் பதித்த ஒரு சோடிக் கடுக்கன்கள். மா: “அப்பா, தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நான் முற்றிலும் தகுதியுடையவன் அல்ல. ஆனால் இந்த அன்பும் ஆதரவும் அந்தத் தகுதியை விரைவில் உண்டு பண்ணிவிடும் என்றும் உறுதி கூறுகிறேன்.” கோ.ப: அப்படியானால் தகுதி இப்போதே வந்துவிட்டது. சரி, சாப்பாட்டு நேரமாய் விட்டது. வா, சாப்பிடலாம். ‘என்க்குச் சென்னைக்கு ஒரு கடிதம் எழுதவேண்டி யிருக்கிறது. அஞ்சல் நேரமாகிறது. எழுதி முடித்துவிட்டு ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்’ என்று கூறி மாதவன் தன் அறைநோக்கி நடந்தான். கடிதம் முடித்துவரும் வழியில், மாதவன்முன் அம்மு எதிர்ப்பட்டாள். அம்மா குளத்துறையில் குளிக்க வந்திருக்கிறாள். வசதிப்பட்டால் அந்தப்பக்கம் வரும்படி உங்களிடம் சொல்லச் சொன்னாள் என்றாள், அவள். மா: அங்கே வேறுயார் இருக்கிறார்கள்? அம்: வேறு யாரும் இல்லை. ‘சரி, நான் வருகிறேன்’ என்று மாதவன் அம்முவைத் தொடர்ந்து குளத்துறை சென்றான். காதலர் தனிச்சந்திப்பின் முதல் இன்பம் கழிந்த பின் இந்துலேகா மாதவனைக் கைகளால் சற்றுத் தொலைவில் தள்ளி, அவன் நிமிர்ந்த தோற்றத்தை ஏற இறங்கப் பார்த்தாள். அவள் எல்லையில்லா மகிழ்வடைந்தாள். அவள் கண்முன் நிறை மாதவன் இப்போது காதலில் அலைக்கழிக்கப்பட்ட பழைய மாதவனாய் இல்லை. உரிமைக் காதலனாக வாழ்க்கைக் கடலில் பாய இருக்கும் ஆடவனின் துணிவு, அவன் முகத்தில் ஒளிவீசிற்று. ‘நான் நாளையே சென்னை போகிறேன்’ என்றான் அவன். இந்: நான் கேள்விப்பட்டேன், ஆனால் பணிமனைகள் திறக்க இன்னும் இரண்டுவாரங்கள் இருக்கின்றனவே! இப்போதே ஏன் போகவேண்டும், இது பெரியப்பாவின் கோபத்துக்காகவா? மா: ஆம். இனி என் பொறுப்புப் பெரிது. நான் விரைவில் ஒரு நல்ல பணி ஏற்று, உரிமையுடன் உன்னை வந்து காணவருவேன். இது என் திட்டம். ஆனால் பெரியப்பாவின் சூளுரைக்குப் பின் உன் நிலை.... இந்: என்னைக் கேட்டுச் செய்த சூளுரையல்ல, என் கணவனைப் பாதித்த அளவிலேயே அது என்னைப் பாதிக்கிறது. உண்மையில் உங்களை வெளியேற்றிய கணமே அவர் என்னையும் வெளியேற்றிவிட்டார் என்றே எண்ணுகிறேன். நீங்கள் அவருக்கு என்ன தவறு செய்திருந்தாலும், அது என் தவறு! உங்கள் மீது அவர் கொண்ட கோபம் என்மீது கொண்ட கோபமே! உண்மையில் உங்களுடன் இப்போதே புறப்பட்டு வந்துவிடத் தான் நான் விரும்புகிறேன்! மா: நீ ஒரு பைத்தியம், மாதவி! நீ மணமாகாத பெண், எப்படி இப்போது வரமுடியும்! இந்: என்னளவில் என்று நான் என் உள்ளத்தில் கணவனைத் தேர்ந்து கொண்டேனோ, அன்றே நான் மணமானவள் தான். தவிர நாம் இருவரும் மணஉறுதி செய்து கொண்டது இங்கே யாரும் அறியாததல்ல. அதிருக்கட்டும். நான் துணிந்துவிட்டேன். நீங்கள் ஏன் என்னைக் கூட்டிக் கொண்டு போகப்படாது? மா: மாதவி, பெரியம்மாமன் ஒருவருக்காகத் தரவாடு முழுவதையும் நாம் ஒதுக்கிவிடவேண்டாம். தவிர, ஒரு மனைவியை வைத்துக் காக்கும் வருமானம் எனக்கு ஓரளவு வேண்டாமா? ஆகவே கொஞ்சம் பொறுத்துக் கொள். ஒரு மாதத்துக்குள்ளாகவே எனக்கு நல்ல பணி கிட்டுவது உறுதி. சென்னையில் என் பள்ளி முதல்வர் கில்ஹாம் துரை எனக்கு விரைவில் வேலை பெற்றுத் தருவதாக வாக்குறுதி செய்திருக்கிறார். ஆகவே விரைவில் எனக்கு வேலை கிடைத்துவிடும். வேலையிலமர்ந்தவுடன் வந்து, தரவாட்டாரிடம் பேசி உன்னை வினை முறைப்படி மணந்து இட்டுச் செல்வேன், இது உறுதி. இந்: சரி, என் மாதவன் விருப்பம் அதுவானால், அப்படியே ஆகட்டும். ஆனால் என்னளவில், மனைவியை விட்டுச் செல்லும் கணவனாகவே நீங்கள் செல்ல வேண்டும் கூடிய விரைவில் என்னை அங்கே தங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். மா: கரும்பு தின்னக் கைக்கூலியா தரவேண்டும். கண்ணு? நீ எதிர்பார்க்குமுன் இவ்வகையில் என் கடிதம் வரும். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது மாதவன் மடியிலிருந்து ஒரு தாள் மடிப்புக் கீழே விழுந்தது. இந்துலேகா அதை எடுத்துப் பிரித்தாள். ஒளிவிடும் சோடி வைரக் கடுக்கன்களைக் கண்டு வியப்புடன் ‘இது ஏது’ என்றாள். ‘நான் பி.எல். தேர்வுற்றதற்காக என் அப்பா இதை வாங்கி வைத்திருந்தாராம்! அத்துடன் அவர் என் பிறந்த நாளை நினைவுடன் வைத்துக் கொண்டிருந்து, அது இன்று ஆகையால், இரண்டின் நினைவாகவும் எனக்கு அளித்துள்ள பரிசு இது. இதை அறையில் சென்று போட்டுக் கொள்ளலாம் என்று எடுத்து வைத்தவன் மறந்தே போய்விட்டேன்’ என்றான். ‘ஓகோ! அப்பா பரிசா இது! அதை என் கையாலேயே போடுகிறேன்! என்று அவள் அவன் காதைப் பிடித்திழுத்தாள். கடுக்கனிட்டு, முடிகோதி அதற்கு ஒரு முத்தமளித்த அளவில் ‘இந்து, இந்து!’ என்ற குரல் கேட்டு மாதவன் சற்று விலகினான். வந்தது இலட்சுமிக்குட்டி. அவள் இந்துவைச் சாடினாள். ‘நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தால் காலையும் மாலையும் தெரிவதில்லை. அங்கே மாதவன் தன் அப்பாவைச் சாப்பாட்டுக்குக் காத்திருக்க வைத்துவிட்டு, அதை மறந்து இங்கே பேசிக் கொண்டிருக்கிறான்”! என்றாள். மாதவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்தரை! ‘ஐயையோ! என்ன பிழை செய்துவிட்டேன்! நான் பின்னால் வருகிறேன், இந்து!’ என்று கூறிவிட்டு விரைந்தான். கோவிந்தப் பணிக்கருக்கும் மாதவனுக்கும் இலைபோட்டு உணவு பரிமாறப்பட்டிருந்தது. கோவிந்தப் பணிக்கர் உண்ணாமலை மாதவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். சோறு ஆ, அலந்து போய்க் கொண்டிருந்தது. ‘ஏன் இவ்வளவு நேரம், குழந்தாய்!’ என்றார் கோவிந்தப் பணிக்கர். மா: நான் ஓராளுடன் பேசிக் கொண்டிருந்து விட்டேன். என் மறதியால் நீங்கள் காத்திருக்கும்படியாயிற்றே என்று வருந்துகிறேன். கோவிந்தப்பணிக்கர் சிரித்துக் கொண்டார். ‘வருந்துகிறோம்’ என்று கூறு, மாதவா? இது மாதவன் ஒரு ஆளின் குற்றமல்ல. கூட இருந்த இந்துலேகாவின் குற்றமும் அதில் உண்டு என்றார். மாதவன் வெட்கத்தால் தலைகுனிந்தான். இருவரும் உணவு முடித்து, அமர்ந்தனர். கோவிந்தப்பணிக்கர் மகனை ஆவலுடன் அருகிருத்தி அணைத்துக் கொண்டார். தந்தையும் மகனும் இருந்த இருப்பைப் பார்வதியம்மாவும் வந்து கண்குளிர நோக்கிச் சிரித்துக் கொண்டிருந்தாள். கோ.ப: பார்வதி, மாதவன் பிறந்தவுடன் என் ஆசை நிறைவேறிவிட்டது. இப்போது உன் ஆசையையும் மாதவன் விரைவில் நிறைவேற்றப் போகிறான். பார்: என் ஆசை வேறு, உங்கள் ஆசை வேறா? கோ.ப: தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறுவேறு அல்லவா? என் வேலையில் மாதவன் எனக்குத் துணை செய்ய முடியும்! உன் வேலையில் ஒரு இந்துலேகா தானே...? மா: இப்போதே ஏன் மனக்கோட்டை கட்டுகிறீர்கள், அப்பா! கோ.ப: உன்னைவிட இந்துவை நான் நன்றாக அறிவேன், தம்பி! நீ அவளையோ எங்களையோ விட்டுப் போகிறோம் என்று ஒரு சிறிதும் வருந்தத் தேவையில்லை. அவளைப்போல அறிவும் உறுதியும் உடைய பெண்ணை நான் பார்த்ததில்லை. பாவம்! அவள் குணமறியாமல் பஞ்சுப் பெரியப்பா தான் முன் கோபத்தல் ஒரு சூளுரைத்து எக்கச்சக்கத்தில் மாட்டிக் கொண்டார். பார்வதி: அம்மாமன் பெரிய பிடிவாதக்காரர். நான் அவர் சூளுரை கேட்டுத்தான் அஞ்சுகிறேன். கோ.ப: நீ பைத்தியக்காரி. மாதவன் மட்டும் போய் ஒரு பணியில் அமரட்டும. அது விரைவில் கிட்டும் என்பதில் எனக்கு ஐயமில்லை. மற்றக் காரியங்களை எல்லாம் இந்துவின் திறமைக்கே விட்டுவிடலாம். மா: அப்பா, நீங்கள் ஒரு கண்கண்ட தெய்வம். என் துணிவு, என் விருப்பம், எல்லாம் உணர்ந்து நீங்கள் அருள் திருவாக்குக் கூறிவிட்டீர்கள். இனி நான் சிறிதும் மனத் தளர்வில்லாமல் விரைந்து செயலாற்றுவேன். மாலையில் திரும்பத் தங்களைக் கண்டு விடைகொள்கிறேன். ஆனால் மாலையில் என்னை எதிர்பாராமல் நீங்கள் சாப்பிட்டு விடுங்கள். நான் மற்ற ஏற்பாடுகளைக் கவனிக்கிறேன். இவ்வாறு கூறிக்கொண்டு மாதவன் தந்தையிடமும் தாயிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றான். சின்னன் தந்தையாகிய சீனப்பட்டர் இச்சமயம் கோவிந்தப் பணிக்கரைக் காணவந்தார். கோவிந்தப் பணிக்கர் அவரையே மாதவன் தூதராக அனுப்பி, மாதவனும் சின்னனும் சென்னைக்குப் போக இருப்பதாகக் கூறி, அவர் இணக்கம் கோரிப் பெறும்படி தூண்டினார். சீ.ப: சின்னன் செலவுக்கு? கோ.ப: செலவு நானே பார்த்துக் கொள்கிறேன்? செய்தி மட்டும் கூறி, முடியுமானால் இணக்கம் பெறுங்கள். சீ.ப: ஆகா, நன்று நன்று காரணவர் இந்தச் செய்தி பரவுமுன்பே என்னை மதிப்பதில்லை. நேற்று என்னைக் கண்டும் காணாததுமாதிரி முகம் திருப்பிக் கொண்டு போனார். இப்போது எனக்கு நல்ல வாய்ப்பு. நானே செலவு செய்து சின்னனை அனுப்புவதாகச் சொல்கிறேன். கோ.ப: எதுவேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் பொய் சொல்ல வேண்டிய தேவையில்லை என்று கருதுகிறேன். சீ.ப: உங்களைப் போலப் பணமும் திறமையும் மதிப்பும் இருப்பவர்களுக்கு அது தேவையில்லை. எனக்கு இதுதான் ஒரு வாய்ப்பு. நான் அப்படித்தான் சொல்லப்போகிறேன். கோவிந்தப் பணிக்கர் சிரித்தார். சீனுப்பட்டர் உள்ளே நுழையுமுன்பே பஞ்சுமேனவன் ‘அது யார் அங்கே’ என்று கேட்டார். சீ.ப: நான்தான் சீனு. பஞ்.மே: இங்கே என்ன வேலை உங்களுக்கு? சீ.ப: ஒரு செய்தி சொல்ல வேண்டும். பஞ்.மே: என்ன அது! சீ.ப: நான் செலவுசெய்து சென்னைக்கனுப்பிய படிப்பிக்கப் போகிறேன். பஞ்.மே: சென்னைக்கோ பிடரிக்கோ எங்கே வேண்டுமானாலும் அனுப்பித்தொலை! அல்லது கழுவில் கொண்டு போய் ஏற்றிக்கொள்! சீ.ப: சென்னை பிடரியிலில்லை, அது ஒரு பெரிய பட்டணம். இங்கிலீஷ் கழுவல்ல. அது பெரிய உத்தியோகக்காரர் படிக்கும் படிப்பு! பஞ்.மே: எனக்கு உபதேசமாடா பண்ணுகிறாய், அதிகப் பிரசங்கி! ஆரடா அங்கே, இந்தக் கழுவேறிக் கோமட்டிப் பட்டரை வெளியில் பிடித்துத் தள்ளுடா! சீனப்பட்டர் தானே புறப்பட்டுவிட்டார். ஆனால் போகும்போதே. ‘பெண்களைக் கோமட்டிகளுக்குக் கொடுக்கிற தரவாடு இது என்று நான் இதுவரை அறியவில்லை’ என்று ஒரு வசை வீசிவிட்டுச் சென்றார். அவர் பின்னே ‘பஞ்சு’ வீசியெறிந்த கழி இரண்டாய் முறிந்தது. ஆனால் அது சீனப்பட்டர்மீது படவில்லை. சென்னை செல்ல இணக்க மேற்பட்டுவிட்டதாக சீனுப்பட்டர் எல்லோரிடமும் கூறிவிட்டார். மாதவனும் இந்துவிடமும் தாய் தந்தையரிடமும் விடை பெற்று, மறுநாள் காலை புறப்படும் புகைவண்டியிலேயே சென்னைக்குச் சென்று விட்டான். 5. மீண்டும் புயல் தரவாட்டில் வாழ்க்கை வசதிகளில் மிகக் குறைந்த குடும்பம் கும்மிணியம்மாவின் குடும்பமே. அவள் கணவன் சீனப்பட்டரிடம் காசுதவிர மற்றெல்லாம் நிறைந்திருந்ததாக எண்ணியே பஞ்சு அவருக்குத் தரவாட்டில் இடங்கொடுத்தார். ஆனால் காசில்லாதவர்களிடம் உள்ள பணிவு, நாநயம் எதுவும் அவரிடமில்லை. நாத்துடுக்கு, தெறிப்பேச்சு ஏராளம். இவை படிப் படியாய் பஞ்சுவின் வெறுப்புக்கு இடந்தந்தது. ஆனால் கும்மிணி அவரையே விரும்பி அவருடன் இழைந்து வாழ்ந்தாள்; குடும்பம் பெருகிற்று. சீனுப்பட்டர் பிள்ளைகளும் அவரைப் போலவே வாயடியும் கையடியும் வல்லவர்களாய், பஞ்சு தவிரத் தரவாட்டினர் எல்லார் ஒத்துணர்வுக்கும் விருப்பத்துக்கும் ஆளாயினர். சீனுப்பட்டர் குறும்புப் பேச்சு பஞ்சுமேனவனுக்கு இரவின் அமைதியை முற்றிலும் கெடுத்தது. ‘அந்தக் கோமட்டிப்பயல், என்னை இப்படி அவமதித்தான். அப்படிப் பேசினான்’ என்று இரவெல்லாம் ஒவ்வொருவரிடமும் சொல்லிப் பொழுதுபோக்கி, விடிய ஒரு யாமத்திலேயே கண்ணயர்ந்தார். எழுந்திருக்கும் போது விடிந்து பத்து நாழிகையாயிற்று. அவர் முதல்முதல் கேட்ட செய்தி மாதவன் சின்னனுடன் சென்னை போய்விட்டான் என்பதே! முற்றிலும் ஆறியிராத வெங்கனல் மீண்டும் பொங்கி எழுந்தது. ‘யாரடா, போக இணக்கமளித்தது? போ, போய் சீனனைப் பிடித்துக் கொண்டுவா’ என்று ஆளனுப்பினார். வெட்டக் கொண்டுவரும் ஆட்டை எதிர்பார்த்திருக்கும் கணியான் போல இருக்கை கொள்ளாமல் அவர் துடி துடித்தார். சீனு அகப்படவில்லை. சாத்தரையே அகப்பட்டான். பஞ்: ஏடா, கழுவேறி! சின்னனை யாரடா சென்னைக்குப் போகும்படி சொன்னது? சாத்: நான் அறிந்துதான்! பஞ்: நீ எப்படியடா சம்மதித்தாய்? சாத்: நீங்கள் சம்மதித்தபின் நான் எப்படி மறுக்க முடியும்? பஞ்: நான் சம்மதித்தேனென்று யாரடா சொன்னது? சாத்: அப்பா உங்களைக் கேட்டுச் சம்மதம் வாங்கியதாகக் கேள்விப் பட்டேன். பஞ்: அந்தக் கழுவேறி உன்னிடம் அப்படியா சொன்னான்? சங்: என் அப்பனும் கழுவேறியில்லை. என்னிடம் சொல்லியதும் கழுவேறியில்லை. அப்பா சம்மதம் வாங்கியதாகக் கோபாலன்தான் சொன்னான். பஞ்: அடே, கோபாலனைப் பிடித்து இழுத்துக் கொண்டுவா? கோபாலன் பஞ்சுவின் முன்வந்து நின்றான். பஞ்: உன் அப்பன் கோமட்டி உன்னிடம் என்னடா சொன்னான்? கோபா: என் அப்பன் கோமட்டியல்ல. பட்டர் கோமட்டியாயிருந்தால், பணக்காரராயிருப்பார். நீங்கள் அவர் கால் பிடித்துக் கெஞ்சியிருப்பீர்கள். பணமில்லாப் பட்டரானதனால் தான் இப்படிப் பேச முடிகிறது! ‘எனக்காடா புத்தி சொல்லுகிறாய்?’ என்று கோப வேசத்துடன் கைக்கழி முறியுமட்டும் அவர் அவனை அடித்தார். ‘தரவாட்டுப் பிள்ளைகளைப் படிப்பிக்க வேறு யாராவது பணம் செலவழிக்க வேண்டும். அடிப்பதற்கு மட்டுந்தான் காரணவரோ!’ என்றான் கோபாலன், அடியைத் தடுத்துக் கொண்டே! கழிமுறிந்த பின்னும் காலாலும் கையாலும், அடித்துக் கொண்டே, ‘பேசாதே, இன்னும் உதை கிடைக்கும்’ என்று பஞ்சு அவனை வாயிலை நோக்கித் தள்ளிக் கொண்டே சென்றார். கோபாலன் போகாமல் அவரை எதிர்த்துத் தள்ள முயன்று கொண்டிருந்தான். இத்தறுவாயில் சங்கரமேனோன் வந்து தடுத்திராவிட்டால், பஞ்சுவின் கோபம் அவர் மதிப்புக்கே கேடு செய்திருக்கும். அவர் கோபாலனை விடுவித்து வெளியேற்றி, சாத்தரையையும் வெளியே செல்லும்படி சமிக்கை செய்தார். பஞ்சு அன்று நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் கோபாலனையும் சீனுப்பட்டரையும் வரவழைத்துத் தன் கோபத்தைக் காட்டினார். கோபாலனிடம் பாட்டத்துக்கு விட்ட பாம்புகளை ஒழித்துத் தந்துவிடும்படி கட்டளையிட்டார். அவற்றை ஏற்கெனவே குடியானவர்களுக்கு வாரத்துக்கு விட்டாய்விட்டது என்று கோபாலன் கூறிச் சிரித்தான். அவர் கோபத்தில் அவனை அடிக்க எழுந்தார். அவன் ஓடினான். அவர் அவன் பின்னே ஓடினார். முதுமையின் தளர்ச்சியும் கோபமும் சேர்ந்து அவர் உடலைத் தள்ளாட வைத்தது. அவர் தடுக்கி விழுந்து முட்டில் காயமுற்றார். சங்கரமேனோன் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்திராவிட்டால், தரவாட்டுக்கே இடர் வந்திருக்கும். அத்துடன் சங்கரமேனோன் அவருக்குத் தக்கபடி பேசி கோபம் ஆற்றுவித்ததுடன், காலுக்கும் கட்டுக்கள் கட்டி மருந்திட்டார். சீனுப்பட்டரைப் பஞ்சு மீண்டும் சந்திக்க நேர்ந்தது. பேச்சு மீண்டும் வளர்ந்தது. ‘அடே, நீ இனி இந்தத் தரவாட்டில் காலடி வைக்கக் கூடாது. இந்த வினாடியே வெளியே போய்விடு’ என்றார். ‘அது கும்மிணியம்மாவிடம் கேட்டுச் செய்யவேண்டிய முடிவு!’ என்றார் சீனு. ‘சரிடா! என் அம்பலத்திலும் ஊட்டுப் புரையிலும் இனி நீ உணவு தெண்டிப் போகப்படாது!’ என்றார். ‘அது பிராமணர் சொத்து. பிராமணர் எல்லாரும் வருவதுபோல, எனக்கும் வர உரிமையுண்டு’ என்றார் சீனு. ‘அதெல்லாம் தெரியாது. உன்னை இனி எங்கே கண்டாலும் உதைக்க ஆள்விடுவேன்.’ பட்டர் மேலும் பேச வாயெடுக்குமுன், சங்கரமேனவன் பின்னாலிருந்து ஓடிப்போகும்படி சைகை செய்தார். அவரும் ஓடிவிட்டார். பஞ்சுவின் கோபம் இப்போது கோவிந்தப் பணிக்கர் மீது தாவிற்று. நொண்டிக் கொண்டே அவர் வீடு செல்லப் புறப்பட்டார். கோவிந்தப் பணிக்கர் ஒருவர்தான் இந்தப் புயலைச் சமாளிக்கத்தக்கவர் என்று தெரிந்து, சங்கர மேனோன் பஞ்சுவைத் தாங்கி ஏந்திய வண்ணம் அங்கே கொண்டு சென்றார். செய்திகளைக் குறிப்பாய் அறிந்த கோவிந்தப் பணிக்கர் பஞ்சுவை வரவேற்றார். தாமே மாதவன்மீது சீறி விழுவதாகப் பாவித்தார். பஞ்: என்னை ஏன் ஏமாற்றுகிறாய், கோவிந்தா! நீதான் மாதவனுக்குப் பணம் கொடுத்து அவனைக் கெடுக்கிறாய். சின்னன் செலவுக்கும் நீதான் கொடுக்கிறாய் என்று கேள்வி. கோ.ப: ஐயையோ, இது யார் சொன்னது! நான் மாதவனுக்கே இப்போது பணம் கொடுக்க மறுத்து விட்டேன். அதனால்தான் என்னிடமும் சொல்லாமல் போய்விட்டான். பயல்கள் திண்டாடட்டும் என்று விட்டு விட்டேன். பஞ்சு இதை முழுவதும் நம்பவில்லையானாலும், கோவிந்தப் பணிக்கர் நடிப்பில் இழைந்துவிட்டார். கோபத்தை மறந்து, மாதவனுக்கெதிராகக் கோவிந்தப் பணிக்கரைத் திருப்புவதில் கருத்துச் செலுத்தினார். கோவிந்தப் பணிக்கரும் அவர் போக்குப் போல் பேசவே, பஞ்சு ஓரளவு மனமகிழ்ச்சியுடன் பூவள்ளி திரும்பினார். இரவில் இலட்சுமிக்குட்டி அவர் காலுக்கு ஒத்தடம் கொடுத்தாள். கேசவன் நம்பூதிரியின் பேச்சும் அவருக்கு மீண்டும் புத்துணர்வூட்டிற்று. 6. புதிய திட்டம் சூளுரையை நிறைவேற்றும் புதிய வழியிலேயே பஞ்சுமேனவன் இரவு பகல்கள் இப்போது கழிந்தன. கேசவன் நம்பூதிரி அதற்குத் தூபதீபமிட்டுச் செயலாற்றி வந்தார். ஒரு நாளிரவு கேசவன் நம்பூதிரி வீட்டில் நுழையும்போது பஞ்சு வெளிக்கூடத்தில் அவரை எதிர்பார்த்திருந்தார். ‘வரவேண்டும் நம்பூதிரி, வர வேண்டும்! உங்களைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நம் மூர்க்கில்லந்து நம்பூதிரி வகையில் விவரம் ஒன்றும் காணோமே! என்ன செய்தி’ என்று பஞ்சு தொடங்கினார். கே.மே: ஆளனுப்பி நெடுநாளாயிற்று. நம்பூதிரி அங்கே ஊருக்கில்லையாம். நாலைந்து நாளில் வந்து விடுவரென்றும், வந்தவுடன் எழுதுவதாகவும் அவர் காரியக் காரரிடமிருந்து செய்தி வந்தது. இன்று நாளை பார்த்து விட்டு மீண்டும் ஆளனுப்ப எண்ணுகிறேன். அச்சமயம் இலட்சுமிக்குட்டி அவ்விடம் வந்தாள். பஞ்சு, அவனை நோக்கி, ‘இலட்சுமி, நீ இந்த விவரத்தையெல்லாம் இந்துவிடம் சொல்லி அவள் மனது அறிந்தாயா?’ என்றார். அவளுக்குச் செய்தி எதுவும் தெரியாததால் அவள் விழித்தாள். கே.ந: இதை நான் இலட்சுமிக்குட்டியிடம் கூறவில்லை. காரியம் முடியும்வரை யாருக்கும் வெளியிட வேண்டாம் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். அதனால் தான் இலட்சுமியிடம் கூடச் சொல்லவில்லை! பஞ்: அப்படியா? ஆனால் இலட்சுமிக்குட்டியிடம் எல்லாம் சொல்லுங்கள். இந்துவிடம் இலட்சுமிதான் பேசவேண்டும். கேசவன் நம்பூதிரி இலட்சுமிக்குட்டியிடம் திட்டத்தை முழுவதும் விளக்கினார் குழந்தை இந்துவின் வாழ்விலோ, வேறு எவர் செய்திகளிலோ சிறிதும் தலையிடாதவள் இலட்சுமிக்குட்டி அவள் எல்லாவற்றுக்கும் இசையத் தலையாட்டினாள். இச்சமயம் கேசவன் நம்பூதிரி பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. கேசவன் நம்பூதிரி அதைப் பிரித்து வாசித்தார். ‘இதுதான் நாம் எதிர்பார்த்த கடிதமோ?’ என்று கேட்டார் பஞ்சு. ‘ஆம்’ என்று கேசவன் நம்பூதிரி தலையாட்டினார். அப்படி யானால் எல்லாரும் அறிய உரக்க வாசியுங்கள்’ என்றார் பஞ்சு. “கேசவன் நம்பூதிரிக்கு மூர்க்கில்லத்து மனைக்கல் நம்பூதிரி. வணக்கம். கடிதம் கிடைத்தது; மட்டற்ற மகிழ்ச்சி, நான் நாளை காலைக் குளிப்புக்கு அங்கே வந்து சேருகிறேன். செறுசேரியும் என்னுடன் வருவார். எழுத்தில் கண்டதெல்லாம் வெறும் பலபடக் கேள்விப்பட்டேன். நேரிலே பார்க்க எனக்கு அடக்கமுடியாத ஆவல்.! ஆகவே மற்றவை நேரில் - “மூர்க்கில்லத்து மனைக்கல் நம்பூதிரி.” கடிதத்தில் கண்ட மூர்க்கில்லத்துமனை நம்பூதிரியின் ஆவல் பஞ்சுவுக்கு மிகுந்த எழுச்சி தந்தது. ‘வரட்டும், அந்தத் தங்கக் குடுக்கை! நம் தங்கப் பதுமையைப் பார்க்கட்டும். அப்புறம் தங்கக் குடுக்கை நமது தான்! என்று அவர் துள்ளிக் குதித்தார். பின், இந்துவின் உள்ளம் பற்றி அவர் சிறிது ஐயம் கொள்ளலானார். கேசவன் நம்பூதிரியோ, மூர்க்கில்லத்து மனையின் பாட்டில் இழைந்தார். ‘அது பற்றி ஐயம் வேண்டாம். நம்பூதிரியிடம் பணச்செல்வம் போலவே, அழகுச் செல்வமும் உண்டு. இந்துலேகா கண்டால் மயங்கி விடுவாள். சிறிதும் ஐயமில்லை’ என்றான். பஞ்சு இலட்சுமிக்குட்டியிடம் திரும்பினார். ‘இலட்சுமி, இந்துலேகா நீ சொன்னால்தான் ஆவலுடன் கேட்பாள். போய் அவள்மனதறிந்துவா!’ என்றார். ‘இந்துலேகாவிடம் நான் எப்படிப் பேசுவது’ என்றாள் இலட்சுமி. பஞ்: பார், பார்! பெண்கள் எதற்கும் பிகுத்தான் எண்ணு கிறார்கள். தான் பெற்ற மகளிடம் தனக்குப் பேசக் கூச்சமாம்’ கே: ஏன் நாமேபோய் பேசப்படாது! பஞ்: திருமனசு இலட்சுமிக்கு ஏற்ற சோடிதான்! குறும்பில் அவள் தேவலை! நாமாவது நேரே போவதாவது! கே: நாம் பார்த்தபின், இலட்சுமிக்குட்டியும் பார்க்கட்டுமே! பஞ்: அப்படியானால் சரி, இப்போதே புறப்படுங்கள். விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இந்துலேகா ஏதோ ஒரு நூலைக் கையிலேந்தி, அதை வாசிப்பதில் ஆழ்ந்திருந்தாள். பஞ்சுவும் கேசவன் நம்பூதிரியும் வருவதையே அவள் கவனிக்கவில்லை. ‘கண்ணு! என்ன இவ்வளவு நேரமாகியும் வாசித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார் பஞ்சு. இந்து மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். பெரியப்பாவையும் சிறியப் பாவையும் வரவேற்றாள். ‘கதையில் ஒரு சுவைகரமான கட்டம். அப்பா! அதனால் நேரத்தைச் சிறிது மறந்து இருந்துவிட்டேன். நீங்கள் இன்னும் தூங்கவில்லையா, அப்பா’ என்றாள். கே: குழந்தை, நீ தூக்கங்கெடுத்து இன்னும் வாசித்துக் கொண்டிருக்கலாமா? பஞ்: அதுதான் இக்காலக் கதையும் கட்டுக் கதைகளும் இளம் பிள்ளைகள் வாசிக்கக் கூடாதென்று பெரியவர்கள் சொல் கிறார்கள். அது பயனற்றது, உடம்பையும் கெடுத்துக் கொள்ளச் செய்கிறது. இந்: இது கதை கட்டுக் கதையல்ல அப்பா! காவியம், சாகுந்தல காவியம். பஞ்: அது இங்கிலீஷ் புத்தகமா? இந்: இல்லையப்பா, சமஸ்கிருத காவியம், காளிதாச மகாகவி இயற்றியது. மலையாள எழுத்திலேயே உள்ளது, பாருங்கள்! பஞ்: ஏனம்மா, இது இவ்வளவு சிறிய எழுத்து, கரிசல் தாளாயிருக்கிறது. இது படிப்பது கண்ணுக்குக் கெடுதலாச்சே! நான் பணம் கொடுக்கிறேன். எவ்வளவு வேண்டுமானாலும்! நல்ல புத்தகமாக வாங்கிக் கொள்ளேன்? இந்: இங்கிலீஷ் புத்தகங்கள் நல்ல தாளில் பெரிய அச்சுடன் கிடைக்கும். அப்பா! ஆனால் நம் நாட்டில் அதற்கு வேண்டிய அச்சுருக்களே கிடையாது. பஞ்: அதைப்பற்றிக் கவலை வேண்டாம். இந்தா! வேண்டிய பணம் தருகிறேன். அச்சுருக்குகளையும் வாங்கிக்கோ, நீயே நல்ல புத்தகமாக அச்சடித்துக் கொள். இந்துலேகா இதுகேட்டுத் தன்னையும் மறந்து சிரித்து விட்டாள். இச்சிரிப்பு இந்துவிடமிருந்தல்லாமல் வேறு யாரிடமிருந் தாவது வந்திருந்தால் தரவாடே கலகலத்திருக்கும்! ஆனால் இந்துலேகாவின் எந்தச் செயலும் பெரியவருக்குக் கோபம் உண்டுபண்ணுவதில்லை. அத்துடன் அன்று அவள் உள்ளத்தை எப்படியாவது வசப்படுத்துவதிலேயே அவர் முழு முனைப்பாய் இருந்தார். பஞ்: இந்தூ! நாங்கள் இருவரும் ஒரு காரியம் சொல்லத்தான் உன்னிடம் வந்தோம். உண்மையில் பண்டைத்தரவாட்டு முறைப்படி நடப்பதானால், காரியம் கடந்தபின் உனக்குத் தெரிவிப்பதே போதுமாயிருக்கும். ஆனால் இது காலம் கலிகாலமாயிற்றே! இப்போது உன்னிடம் சொல்லிவிட எண்ணுகிறோம். அப்படித் தானே, நம்பூதிரி! கே.ந: ஆம்! பஞ்: ஆகவே-நீங்கள் சொல்லுங்கள் செய்தியை, இந்துவிடம்! இந்: பண்டைத் தரவாட்டு முறைப்படி நடப்பதில் எனக்கொன்றும் தடை இல்லை அப்பா! கலி என்வகையில் தலையிட வேண்டாம். பழைய நடப்புப்படி தெரிவிக்க வேண்டும் போது தெரிவித்தால் போதும்! கே.ந: பார்த்தீர்களா, இந்துலேகாவின் மனத்தை? காரியம் நடந்த பிறப்hடு சொன்னால் போதுமாம், போவோம்! பஞ்: இது போதாது, நம்பூதிரி! காரியம் நடக்கும் போது ஏதேனும் தடைகள் வரப்படாது. இப்போதே சொல்லிவிடு, சொல்லிவிடு! இந்: பின்னால் தெரிவித்தால் போதும் என்கிறீர்கள். ஆனால் தடை வரப்படாது என்கிறீர்கள்! ஆர்தடுக்க முடியும்? கே.ந: நீ தடுக்க மாட்டாய். ஆனால்..... இந்: ஆனால் என்ன, அப்பா! பஞ்: செய்தியைச் சொல்லுங்கள் நம்பூதிரி, முதலில். கே.ந: இந்துலேகாவுக்கு நாங்கள் ஒரு சம்பந்தம் உறுதி செய்திருக்கிறோம். இந்: ஆர் உறுதி செய்தது! கே.ந: இந்துலேகாவின் பெரியப்பாதான்! இந்: சரி, உறுதி செய்துகொள்ளட்டும்! கே.ந: அது இந்துலேகாவுக்குச் சம்மதம்தானா என்றுதான் அறிய விரும்புகிறோம்! இந்: உறுதி செய்த காரியத்தில் சம்மதம் எதற்கு வேண்டும்? கே.ந: உறுதி செய்த காரியத்துக்கு இந்துலேகாவின் சம்மதம் உண்டோ என்று தெரிந்துகொள்ள விரும்புகிறோம். இந்: அப்படியானால் சம்மதம் தெரிந்தபின் அல்லவா உறுதி செய்ய வேண்டும்? கே.ந: சம்மதம் தெரியவந்த பின் உறுதி செய்ய வேண்டிய செய்தியல்ல இது என்று நினைத்துத் தான் உறுதி செய்தோம். இந்: என்ன விசித்திரம். சம்மதம் தெரிந்து உறுதி செய்ய வேண்டிய செய்தியல்ல என்று நினைக்கிறீர்கள். ஆனால் சம்மதம் கேட்கிறீர்கள். சம்மதமறிந்து உறுதி செய்ய வேண்டாத காரியத்தை உறுதி செய்தாய் விட்டது. பின் சம்மதம் ஏன்? பஞ்சுமேனவனுக்கு இச்சொற்கள் உண்மையிலேயே கோபமூட்டின - ஆனால் இந்துவின் இளநிலாப் போன்ற முகத்தோற்றம் அவள் கோபத்தைத் தடுத்தது. மாதவன் முகத்தில் கண்ட எதிர்ப்புப் பாவம் அதில் இல்லை. கரை கடவாத கடலில் அமைதியே அதில் இருந்தது. ‘நாம் கேட்க வந்தது தவறு, நம்பூதிரி. நாளை இலட்சுமிக் குட்டி பேசட்டும். பெண்மனத்தைப் பெண்மனம் தான் அறியும். வாருங்கள் போவோம்!’ என்று கூறிப் பஞ்சுமேனவன் வெளியேறினார். இந்துலேகாவின் பேச்சுத்திறம் கேசவன் நம்பூதிரியை மலைக்க வைத்தது. அதன்முன் பஞ்சு ஐந்து மடங்கி மீண்டது இன்னும் வியப்பைத் தந்தது. இது பற்றிய சிந்தனை அவர் படுக்கையமை தியைக் கெடுத்தது. அவர் படுக்கையில் இப்புறமும் அப்புறமும் புரண்டார். ‘திருமனசுக்கு உடம்புக்கு என்ன! என்னவோ மனத்தில் கிடந்து அலைக்கிறதே!’ என்று கேட்டாள் இலட்சுமிக்குட்டி. இந்துலேகாவைக் கண்டதும், அதன் பின் நடந்ததும் ஒரு சிறிய இராமாயணமாக விரித்துரைத்தார் கேசவன் நம்பூதிரி. இல: இந்துலேகா அறிவுடைய பெண். அவளை நீங்கள் இரண்டு பேரும்தான் ஒருபுறம் செல்லம் கொடுத்துக் கொடுத்துக் கெடுக்கிறீர்கள். இன்னொரு புறம் எக்கச்சக்கமாக வாக்குக் கொடுக்கிறீர்கள். நீங்கள் உறுதி செய்தாய்விட்டது என்று கூறுவானேன்! கேட்டு உறுதி செய்வது என்று சொல்வதுதானே! கே.ந: பார்த்தாயா! அதுதான் நீயே போய்க்கேள் என்று பெரியவர் சொன்னார். எங்களைப் போகச் சொல்லிவிட்டு இப்போது குறை கூறுகிறாய். சரி, நாளை நீயேபோய்ப் பக்குவமாய்க்கேள். இல: அதிருக்கட்டும்! இவ்வளவுநேரம் இந்து வாசித்துக் கொண்டிருந்தது இந்துவுக்கு ஆகாது. அதிலும் மண்ணெண்ணெய் விளக்கு. அது மிகவும் கெட்ட எண்ணெயாயிற்றே! வரட்டும் நாளைச் சென்று கண்டிக்கிறேன். கேசவன் நம்பூதிரிக்குச் சில அசைக்கமுடியாத நம்பிக்கைகள், அனுபவ முடிவுகள் உண்டு. அதில் மண்ணெண்ணெயின் தெய்வீகத் தன்மை ஒன்று. ஆகவே ‘மண்ணெண்ணெய் கெடுதல் தருவதல்ல. அது இல்லாமல் உலகமே நடக்காது’ என்று வாதிடத் தொடங்கினார். அவருக்குத் தொடக்கத்தில் செல்வநிலை மோசமாகத் தான் இருந்தது. ஆனால் இலட்சமிக்குட்டியைச் சம்பந்தம் செய்யும் சமயம் பஞ்சுகொடுத்த பரிசுப் பொருளை அவர் பஞ்சுக் கம்பெனிப் பாங்கில் இட்டிருந்தார். அவர் நல்லகாலம் பங்கு மதிப்புயர்ந்தது. போட்ட பணத்துக்குமேல் ஆதாயம் தந்தது. அவர் சிக்கனச் செலவுடையவரானதாலும் இலட்சுமிக் குட்டியும் அவர் அன்பு தவிர வேறு எதுவும் கோராததாலும், ஆதாயத்தையும் அவர் பஞ்சிலேயே இட்டார். இதனால் அவர் பஞ்சுக் கம்பெனியின் முதற்பங்குதாரர் ஆகிவிட்டார். பஞ்சுக்கம்பெனி ஆட்கள் அவரை ஒரு குட்டித் தெய்வமாக மதித்து நடத்தினார்கள். இதில் அவர் மிகவும் பெருமை கொண்டார். ஆனால் இயந்திரங்களைப் பற்றி, பஞ்சுக் கம்பெனியாட் களைப் பற்றி அவர் ஏதாவது கேட்டால் அவர்கள் சிரிப்பார்கள். இதனால் அவர் அது யாருக்குச் சொந்தமானாலும், அதன் சூத்திரம் வெள்ளைக்காரருக்குத் தான் தெரியுமென்று நம்பியிருந்தார். அவர் நம்பிக்கையைப் பல குறும்பர்கள் வளர்த்தார்கள். இயந்திரங்களை இயக்குவது பூதங்கள் என்றும், வெள்ளைக்காரர் பலியிட்டுச் சக்திபூஜை செய்தே பூதங்களை இயக்குகிறார் களென்றும், வேலை செய்தபின் பூதங்கள் புகைவடிவில் போவதற்கே ஆலை நடுவில் உயர்ந்த புகைக்குழாய்கள் வைத்திருக்கிறதென்றும் கதை அளந்தார்கள். அவர் மூடநம்பிக்கையைத் தெளிவுபடுத்த யாராவது முயன்றாலும், அவர்களே வெள்ளைக்காரர் பக்கமிருந்து அவர்கள் இரகசியத்தை மறைப்பவர்கள் என்று கருதினார் நம்பூதிரி. மனைவியுடன் மண்ணெண்ணெயில் தொடங்கிய உரையாடல் இவற்றின் மீதெல்லாம் சென்றது. இல: நீங்கள் சொல்வது அத்தனையும் சரி என்று எனக்குத் தோன்ற வில்லை. இந்து இங்கிலீஷ் படித்தவள்தான். அவளுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. இயந்திரங்கள், தொடர் ஊர்திகள் எல்லாம் நீராவியின் சக்தியால் ஓடுகிறது - அதில் பூதமுமில்லை. வேதமுமில்லை என்று அவள் கூறுகிறாள். கே.ந: இதெல்லாம் உன்னையும் என்னையும் ஏமாற்றுவது போல இந்தப் பிள்ளைகளையும் ஏமாற்ற வெள்ளைக்காரர்கள் செய்யும் சூழ்ச்சிகள். இல்லையென்றால் அவர்களும் சூத்திரமறிந்து சக்திபூசை செய்துவிடப் படாதே என்று தான் அவன் மூளை இப்படி வேலை செய்கிறது. பிள்ளைகள் கூறுவது உண்மை என்றால் அவர்கள் ஏன் இப்படி இயந்திரம் ஓட்டக் கூடாது, தொடர் ஊர்தி ஓட்டக்கூடாது? இதெல்லாம் அதுகள் ஏமாளித்தனம்! நான் ஒரு தடவை நேரில் பார்த்தேன். ஒரு பெரிய பங்களா, துரைமார் பங்களா, அதில் வானளாவ உயர்ந்த கோபுரம் - அதன் உச்சியில் ஏதோ கடபுடா, சடபுடா என்று தானே சுற்றுகிறது. நம்பூதிரி வருணித்த கோபுரம் உண்மையில் தோட்டத்து நீர் இறைக்கும் ஒரு காற்றாடி இயந்திரமே. ஆனால் இது அவர் அறியாதது. அவர் மேலும் பேசினார். “சூட்சுமமாக என்னிடம் அங்குள்ள வேலையாள் சொன்னான். இதுதான் வெள்ளைக்கார துரை சக்திக்குப் பலியிடும் இடம் என்று சுற்றும் இயந்திரத்துக்குக் கீழே பாதாளக்கிணறு. இதில் அமாவாசை பௌர்ணமி தோறும் இயந்திரத்தில் ஒரு ஆள் தலை தெரியுமாம்! தேவி குருதி குடிப்பாளாம்! தலையும் உடலும் நேரே பாதாளத்துக்குப் போய்விடுகிறதாம்! “இந்த இரகசியத்தை யாரிடமும் சொல்லப்படாதென்று அவன் எச்சரித்தான். துரைகளுக்கு அது தெரிந்தால், இரகசியம் அறிந்து கொண்டவர்களின் தலையை அந்த இயந்திரத்திலேயே வெட்டி விடுவார்களாம். “இதனால்தான் அந்தப் பங்களாவைத் தலைவெட்டிப் பங்களா என்கிறார்கள்!” இவ்வளவும் நம்பூதிரி இலட்சுமிக்குட்டியின் காதுக்குள்ளேயே பேசினார். சற்று உரத்துப் பேசிவிட்டால், எங்கே என் தலையும் தலைவெட்டிக் கோபுரத்துக்குப் போய்விடுமோ என்று அவர் அஞ்சினார். ஆனால் இவ்வளவுநேரம் கேசவன் நம்பூதிரியின் விளக்கத்தைக் கேட்க அங்கே யாரும் இல்லை - இரவின் இருள் பூதம்தான் கேட்டுக் கொண்டிருந்தது! ஏனெனில் இலட்சுமிக்குட்டி குறட்டைவிட்டு உறங்கினாள்! தனிமையின் அச்சத்தில் பஞ்சுக்கம்பெனி முதலாளி இலட்சுமிக்குட்டி போர்வைக்குள் புகுந்து கண்ணை மூடிக் கொண்டு உறக்க தெய்வத்தை வணங்கினார்! 7. கண்ணழி மூர்க்கில்லத்துச் சூரிநம்பூதிரிப்பாடு மலையாள நாட்டின் குபேரர்கள் நம்பூதிரிகளே. அந்தக் குபேரர்களும் கண்டுவியக்கும் குபேரமனை கண்ணழி மூர்க்கில்லம். அதன் தலைவர் அபன் நம்பூதிரிக்கு வயது எண்பதுக்கு மேலாகிவிட்டது. படு நோயால் உடலும் கிட்டத்தட்ட உயிர்ப்பிணமாய் விட்டது. இந்நிலையில் அவருக்கடுத்த மூத்த பங்காளியான சூரி நம்பூதிரிப்பாடு அவர் பெயரால் முழு உரிமை பெற்றுச் செயலாற்றி வந்தான். சிறு வயதிலிருந்தே மனைக் காரியங்களில் ஈடுபட்டிருந்ததனால், அவனுக்குக் கல்வி வாய்ப்பு ஒரு சிறிதும் இல்லாமல் போய்விட்டது. ஆனால் கல்வியில்லாமலே செல்வச் செருக்கு மதிப்பைத் தந்தது. அவனுக்கு இச்சமயம் வயது நாற்பத்தைந்து. ஆயினும் பொது மனைவேலைகளில் ஈடுபட்டிருந்ததனாலும் பல பெண்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்றதனாலும் அவன் மணஞ் செய்து கொள்ளாமலே இருந்து வந்தான். அவனுக்கு இளையவர் இருவரும் திருமணம் செய்து கொண்டு வீடும் குடியுமாகவே வாழ்ந்தனர். ஆனால் காதலும் இன்பமும் குடும்பத்துக்கு வெளியேதான் கிடைப்பவை என்ற கோட்பாடுடையவன் அவன். அதன்படி கட்டற்ற காளையாகவே அவன் நாட்கழித்தான். அவனை அழகன் என்று எவரும் கூறமுடியாது. ஆயினும் அவன் குரூபியல்ல. அவன் உடல் வாட்டசாட்டமானது. பொன் நிறம் வாய்ந்தது. தங்குதடையற்ற இன்ப வாழ்வு அவன் மேனிக்குப் பளபளப்பும் தளதளப்பும் கொடுத்திருந்தது. இவை அவனை அண்டிப் பிழைப்பவர்களின் முகப் புகழ்ச்சிக்கு இலக்காகி, அவன் தற்பெருமையை வளர்த்தன. குண்டாகாரமான உடலுடைய அவனை வடிவழக னென்றும்; மன்மதனென்றும், படிப்பில்லாத அவனை அறிவு நுட்பம் உடையவனென்றும், கலைநயமுடையவனென்றும் கூறிப் பலர் ஏமாற்றி வந்தனர். அவன் இவற்றை மனமார நம்பி அங்ஙனம் கூறியவர்கள் வழி நின்று பணத்தை வாரியிறைத்தான். அத்தகைய பசப்பர்கள், எத்தர்கள் கூட்டம் அவனைச் சுற்றி எப்போதும் மொய்த்திருந்தது. பெண்களிடம் அவனுக்குள்ள மயக்கம் அறிந்து அவர்கள் அதை வளர்த்தனர். அவனைப்பெண் வழிகளில் இழுத்துவிட்டுப் பணம் பறித்தனர். பெண்ணின்பம், புகழ்ந்து பேசுபவர் கூட்டுறவு இந்த இரண்டும் கடந்து அவன் வாழ்வின் ஒரே செயல் மலையாள நாட்டு நாடகங்களாகிய கதைகள் சென்று பார்ப்பது அல்லது கதைகளிகள் நடத்துவதே. அவற்றில் அவனுக்கு இயல்பாகவே மிகுதி ஈடுபாடு உண்டு. அதைக் கலைத்திற அறிவு, சுவை நயம் எனப் புகழ்ந்து, அத்துறையில் போலி நண்பர்கள் அவன் நேரத்தையும் பாழாக்கி, பணத்தையும், கறந்துவந்தனர். கதைகளியும் கீழினப் பெண்டிர் கூட்டுறவும் வம்பர் சூழலும் சேர்ந்து அவனை ஒரு காமுகனாகவும் கோமாளியாகவும் ஆக்கியிருந்தன. மன்மதன் என்று அவனைப் புகழும் ஆண்களும் சரி, பெண்களும் சரி, அவனிடமிருந்து எளிதில் பெரும் பொருள் தட்டிப் பறிக்க முடிந்தது. இதற்கெனவே இரு பாலாருமடங்கிய ஒரு கீழினச் சதிக்கும்பல் அவனை எப்போதும் சுற்றிக் கொண்டிருந்தது. ‘தம்புரான் திருமேனி காணாமல் அடியேனால் ஒரு கணநேரம் இருக்க முடியவில்லை’ என்று கூறிய ஒரு பொது நங்கைக்கு அவன் உடனே ஒரு நூறு வெள்ளி அளித்தான்! ‘எனக்குப் பணமே தேவையில்லை. பாவம் செய்த உடல் என் உடல். அதைத் தம்புரான் பொன்னு திருமேனியுடன் சேர்த்துப் புண்ணியம் பெறும்பேறு கிடைத்தால், அதுவே அடியேனுக்குப் பேரின்பம்’ என்று கூறி மற்றொருத்தி எளிதாக இருநூறு வெள்ளி பெற்றாள். வீரர்கள் தம் வெற்றிச் செயல்களையும் வெற்றி விருதுகளையும் எடுத்துரைத்துப் பெருமையடைவது போல, அவன் தன்னிடம் ஈடுபட்டு மயங்கிய பெண்கள் செய்திகள், அவர்கள் பசப்புரைகள், அவர்கள் அழகு வருணனைகள் ஆகியவற்றையே பெருமையாகக் கொண்டு திரும்பத் திரும்ப எடுத்துரைத்து மகிழ்வான். கேட்பவர் நடிப்புக்கும் கும்மாளத்துக்கும் ஏற்ப இந்தக் கதைகளும் வாலும் தலையும் பெற்று வளரும். கேசவன் நம்பூதிரியுடன் கடிதத் தொடர்புகொண்டு பஞ்சுமேனவன் ஆர்வத்தைத் தூண்டியவன் இந்த நம்பூதிரியே. கேசவன் நம்பூதிரியின் முதற்கடிதம் வந்தபோது, அவன் அயலூரில் தனக்கறிமுகமான ஒரு எம்பிராந்திரியைக் காணச் சென்றிருந்தான். வழியில் அவன் செய்த ஒரு கோமாளித்தனமான காரியத்தை அவன் ஒரு புதிய வீரதிரப் பராக்கிரம மாக்கி, நண்பர் சூழலில் பெரிதாக அளந்தான். உள்ளூர அவனை நையாண்டி செய்து நகைத்து வேடிக்கை பார்க்கும் கும்பல் இதனால் வளர்ந்தது. அவன் கோமாளிப் புகழும் பெருகிற்று. தொழில் காரணமாக அவன் ஒரு வெள்ளைக்கார முதலாளியைக் காணவேண்டியிருந்தது. வெள்ளையன் மனைவியுடன் அவனை வரவேற்றான். சூரிய நம்பூதிரிப்பாடு வரவேற்ற முதலாளியைக் கவனிக்காமல், அவன் மனைவியான வெள்ளை மாதின் கட்டழகிலே ஈடுபட்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டான். இதில் வியப்பென்ன வெனில், சூரி இதற்காக வெட்கமடையவில்லை. இதையும் பெருமையாக அளந்தான். வெள்ளைமாது கணவன் முன்னிலையிலேயே தன் கைப் பிடித்துக் குலுக்கியதையும் சிரித்துப் பேசியதையும் அவள் தன்னிடம் கொண்ட காதலுக்கறிகுறியாக கருதி மகிழ்ந்தான். அது வெள்ளைக்காரர் வழக்கமே என்பதைக் காட்டாளாகிய அவன் அறிந்து கொள்ளவில்லை. அது மட்டுமன்று, வெள்ளை மாது அவனுடன் தனியே தோட்டத்தைக் கொண்டு சுற்றிக் காண்பித்தாளாம்! கணவன் முன்னிலையிலேயே அவனைத் தன்னருகில் இருத்திக் கொண்டு பேசினாளாம்! அம்மாது சூரியின் வைரமோதிரத்தை ஆசையோடு பார்த்ததனால், அவன் அதை அவளுக்குப் பரிசளித்து விட்டு அவள் தன்னை ஏற்றதாகக் கும்மாளமிட்டான். அவன் எத்தகைய பேயனென்று கண்ட வெள்ளையர் குறும்பாக அவன் கைக் கடிகாரத்தை ஆர்வத்துடன் பார்த்தாராம்! அவரும் தன்னிடம் மயங்கிவிட்டதாக நினைத்து, சூரி கைக்கடிகாரத்தை யும் அவருக்குப் பரிசளித்து விட்டு வெற்றியுடன் மீண்டானாம்! கண்ணழிமனையெங்கும் நண்பரிடையேயும் வேலைக் காரரிடையேயும் பெண்களிடையேயும் சூரிநம்பூதிரியின் கோமாளித்தனமே பேச்சாயிற்று! கேசவன் நம்பூதிரியின் முதற்கடிதம் சூரிநம்பூதிரியின் கண்படாமலே கிடந்தது. ஆனால் மறுகடிதம் வந்தபோது அவன் குளிப்பறையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தான். கடிதத்தை அவன் காரியக்காரன் தாச்சுமேனோன் வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தான். கடிதம் ஒரு பெண்பற்றியதென்று நம்பூதிரி கனவிலும் கருதியிருக்கவில்லை. ஆனால் பெண் என்ற சொல் காதில் விழுந்ததே, அவன் எண்ணெய்க் கிண்ணத்தைத் தடாலென்று தட்டிக் கொட்டிக்கொண்டு எழுந்திருந்தான். ‘அடே கோவிந்தா! அடே கோவிந்தா! ....அடே கோவிந்தா!” என்று கூவினான். கோவிந்தன் நம்பூதிரிப்பாட்டின் அடைப்பக்காரன். அவன் குறிப் பறிந்து நடக்கும் திறமையுடையவன். உலகமறிந்தவன். நம்பூதிரிப் பாட்டின் போக்கையும் நன்கறிந்து நடப்பவன். அவனது ஆழ்ந்த சூழ்ச்சி நயமும் நகைச் சுவையும் குறும்புத்தனமும் அவனை நம்பூதிரிப் பாட்டின் வலக்கை ஆக்கியிருந்தன. நம்பூதிரிப் பாட்டிடம் அவன் குறும்பும், நகைத்திறங்களும் பெரும்பாலும் சொல்லளவிலும் நடிப்பளவிலும் நின்றன. ஏனெனில் அவன் நம்பூதிரியிடம் உள்ளார்ந்த பற்றுதல் உடையவன். தலைவன் துன்பப்பட அவன் பார்க்க மாட்டான். அத்துடன் தலைவனுக்கிசைய நடக்கும் திறமையுடையவன். நம்பூதிரிப்பாட்டின் கூக்குரல் கேட்டு அவன் ஓடோடி வந்தான். ‘என்ன ஆண்டே! என்ன செய்தி? என்ன நிகழ்ந்து விட்டது?’ என்று கேட்டுக் கொண்டே வந்தான். “கோவிந்தா, கோவிந்தா! என்ன நேரம் வேளை தெரியாமல் எங்கோ போயிருக்கிறாய்? வர ஏன் இவ்வளவு தாமதம்?... சரி, சரி, போ. உடனே போ! விரைந்து ஒரே தாவில் தாவிப்போய், செறுசேரி நம்பூதிரியை நான் அவசர அவசரமாகக் கூப்பிட்டே னென்று சொல்லி, அவரைக் கையோடு அழைத்து வா!” என்றான். கோவிந்தன் செய்தி என்ன என்று கேட்க நிற்கவில்லை. ஓட்டோட்டமாக ஓடினான். சூரியின் நண்பர்களின் இயல்புக்கே முற்றிலும் மாறான நண்பர், செறுசேரி கோவிந்தன் நம்பூதிரி. அவருக்குப் பொருட் செல்வம் ஒன்றுதான் இல்லை. மற்ற எல்லாச் செல்வமும் நிரம்பி இருந்தது. மலையாள நம்பூதிரிகளின் நல்ல இயல்புகளுக்கு உயர்ந்த சான்றாக விளங்கக்கூடிய ஒரு மாணிக்கம் அவர். மலையாள சமஸ்கிருத இலக்கியங்களில் அவர் ஆழ்ந்த புலமையுடையவர். நற்குணமுடையவர். உலகியல் நடப்பும் காலத்துக் கேற்ற போக்கும் கொண்டவர். சூரியின் போக்குகளை அவர் உள்ளூர வெறுத்தவர். அது காரணமாகவே அவர்நட்பை என்றும் நாடாதவர். ஆனால் சூரியின் தம்பியான நாராயணன் நம்பூதிரி அவர் கெழுதகை நண்பர். தம்பியுடன் நட்பாடவரும் சமயங்களில் சூரி வலிந்து அவருடன் பழகி, அவர் நட்பை விரும்பிப் பெற்றான். நாராயணன் நம்பூதிரிக்கு அடிக்கடி சூரியின் தயவால் பல காரியங்களைச் செறுசேரி நிறைவேற்ற முடிந்தது. இதனால் வேண்டா வெறுப்புடனேயே சூரியின் நட்பைப் பேண வேண்டியதாயிற்று. முகப்புகழ்ச்சி என்பது செறுசேரிக்கு ஒரு சிறிதும்விருப்பமற்ற செயல். அது அவர் இயல்புக்கு முற்றிலும் மாறாய் இருந்தது. ஆனால் சூரி நம்பூதிரிக்கு அது தவிர வேறு எந்த மொழியும் புரியாது. ஆகவே அவர் அதிலும் வருந்திப் பழக வேண்டி வந்தது. ஆயினும் அவர் இயற்கையான சொல் நயம், வாய்த் திறம், நகைத்திறம் ஆகியவை அப்புகழ்ச்சியை வசைச் சுவை வாய்ந்த வஞ்சப் புகழ்ச்சியாக்கிற்று. மழுங்கல் மூளையுடைய சூரி அதன் உட்பொருளறியாமல் அதில் மயங்கி இழைவது வழக்கம். ஆனால் பேச்சின் உட்பொருளுடன் பேசும் ஆளின் உள்ளார்ந்த நற்குணமும் பெருந்தன்மையும் அறிந்தவன் கோவிந்தன். அவனுக்கு அவர் பேச்சு ஓர் இடையறா நல்விருந்தாய் இருந்தது. அவர் குறிப்புக்கு எதிர்குறிப்பாக அவன் அடிக்கடி தானும் புதைவான நகைச் சுவையுடன் பேசுவான். இருவர் கேலிகளுக்குமிடையே இறுமாந்து புகழ்த்தேன் குடிப்பான், சூரி நம்பூதிரிப் பாடு. கோவிந்தன் வரும் வேகத்தைக் கண்டு செறுசேரி வியப்படைந்தார். “என்ன கோவிந்தா! என்ன இவ்வளவு அவசர அவசரமாக வருகிறாய்? என்ன செய்தி?” என்று கேட்டார். நீங்கள் உடனே எழுந்தருள வேண்டுமென்று நம்பூதிரிப்பாடு கட்டளை யிட்டிருக்கிறார்? என்றான் அவன். செ.ந: அப்படியா? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? கோவி: எண்ணெய்க் குளிக்கு ஏற்பாடாகியிருக்கிறது. இப்போது தான் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்கிறார். செ.ந: அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம்? என்ன நேர்ந்து விட்டது? கோவி: ஏதோ செம்பாழியிடத்தில் பூவள்ளித் தரவாட்டில் கேசவன் நம்பூதிரியாம்! அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதைப் பார்த்தபின்தான் இவ்வளவு ஆர்பாட்டம்! செ.ந: கடிதம் எதுபற்றியதோ? பெண்பாலர் பற்றிய செய்தியாயிருந்தால் தான் நம்பூதிரிப்பாடு இப்படித் தலைகீழாய் நிற்பார்! கோவி: தாங்கள் நினைப்பது முற்றிலும் சரி. நம்பூதிரி என்னிடம் செய்தி எதுவும் சொல்லாவிட்டாலும் கடிதம் கொண்டு வந்தவன் மூலம் அறிந்தேன். பூவள்ளித்தரவாட்டிலே பெண் ஒன்று இருக்கிறதாம். சிந்துலேகா என்றோ, இந்துலேகா என்றோ பேராம்! அழகு இப்படி அப்படி அல்லவாம்! படிப்பும் இவ்வளவு அவ்வளவு அல்லவாம் - மலையாளம், தமிழ், சமஸ்கிருதம், இங்கிலீஷ் எல்லாம் தெரியுமாம்! நம் நம்பூதிரியை அழைத்து அதை வலிய அவருக்குச் சம்பந்தம் செய்துவிடப் போகிறார்களாம்! செ.ந: ஆகா! கோவி: என்ன, அவ்வளவு இலேசாகச் சொல்லிவிட்டீர்கள்? சம்பந்தம் செய்வதுமட்டுமா? பெண்ணை இங்கேயே கொண்டு வந்து விடலாம் என்று கூடச் சொல்கிறார்களாம்! செறுசேரி இதுகேட்டுத் தன்னை அடக்கிக்கொள்ள முடியாமல் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். அவர் எதற்காகச் சிரிக்கிறாரென்று தெரியாமலே, கோவிந்தனும் அவருடன் கூட விழுந்து விழுந்து சிரித்தான். செறுசேரி சிரித்தற்குப் போதுமான காரணம் உண்டு. அவர் இந்துலேகாவின் உயர்பண்பையும் உறுதியையும் அறிந்தவர். மாதவனையும் அவன் உயர்தகுதியையும் உணர்ந்தவர். இருவர் நட்பும் அறிந்து அவர்கள் மதிப்பைப் பெற்ற நண்பர். அண்மையிலே செம்பாழியிடத்தில் தம் நண்பரான சங்கரமேனோன் மூலம் அவர்கள் நிலைபற்றி அறிந்தவர். எனவே சூரியன் செய்தி கேட்டவுடன், வெள்ளை மாதுடன் அவர் நடத்திய கோமாளி நாடகம் அவர் மனக்கண்முன் வந்து தோன்றிற்று. அதை எண்ண எண்ண அவரால் சிரிப்பை அடக்க முடியாது போயிற்று. செறுசேரி வெரும்பரை சூரிநம்பூதிரிப்பாட்டுக்கு ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க முடியவில்லை. எண்ணெய் தேய்த்தவர் அதன்பின் எண்ணெய்க் குளி குளிக்கக்கூடப் பொறுக்க முடியவில்லை. ஒரு ஒய்யாரமான பொற்பூங்கொடி - இந்துலேகா - தனக்காக அங்கே துடித்துக் கொண்டிருப்பதாக அவன் மனம் கற்பனை கண்டது. தரவாட்டுக்கு உடனேயே பதில் எழுத வேண்டும் என்று அவர் ஒற்றைக் காலால் நின்றார். தன் ஆட்களில் ஒருவன் மூலம் வன்மை வக்கணை எதுவுமில்லாமலே மொட்டையாக அவன் ஒரு கடிதம் எழுதுவித்தான். ‘நம்பூதிரி உள்ளம் நம்பூதிரியின் வசமாக இல்லை. உடனே புறப்பட்டு வரத் துடிக்கிறார். ஆனால் ஊர்தி முதலிய ஏற்பாடுகளுக்காக ஓரிரவு காத்திருக்க வேண்டி வருகிறது. நாளை விடியற்காலமே புறப்பட்டுக் காலைக் குளிக்கு அங்கே வந்து விடுவார்’ என்று கடிதம் வரையப்பட்டது. ஓர் அஞ்சலாளனிடம் கடிதம் கொடுத்தனுப்பப் பட்டு விட்டது. தேய்த்த எண்ணெய் போயிற்றோ, இல்லையோ? மிடாவின் வெந்நீர் கொதிப்பு அதிகமோ, குறைவோ! எதையும் நம்பூதிரி கவனிக்க முடியவில்லை. வழக்கத்துக்கு மாறாக அரை நாழிகைக் குள்ளே குளி முடிந்து விட்டது. உணவும் அன்று வயிற்றிலேற வில்லை. ஆனால் அவன் தனிப்பட்ட காரியத்தில் காட்டிய அவசரத்தை மனைக்காரியத்தில் காட்ட அவனால் முடியவில்லை. காரியக்காரன் தாச்சுமேனோன் அவன் கையொப்பத்துக்காக ஒரு பெரிய கட்டுடன் வந்தான். ‘போடா, போ! வருகிற நேரத்தைப்பார்! இன்று எதுவும் முடியாது! நாளைவா!’ என்றான் சூரி. காரியக்காரன் விடவில்லை. போராடினான். ‘அவசர மானவை இவை. இவற்றிலாயினும் ஒப்பமிடுங்கள் என்று பாதியை எடுத்துவைத்தான். ‘மிக அவசரம்’ என்று ஐந்தாறு பிரித்து எடுத்தான். கடைசியில் மிக முக்கியமான வழக்குமன்றப் பத்திரம் ஒன்றில் மட்டும் கையொப்பமிடும்படி மன்றாடினான். அந்த ஒரு கையொப்பமிடுவது கூட அன்றிருந்த நிலையில் சூரிக்கு ஒரு பெரியமலையாகத் தோற்றிற்று. அப்பக்கம்வந்த நாராயணன் நம்பூதிரிதான் தமையன் கையைப்பிடித்து அதில் கையொப்ப மிட்டுக்கொடுத்தார்! அவர் கையொப்பமிட்டு முடிந்ததுமே கோவிந்தனுடன் செறுசேரி உள்ளே வந்தார். காணாமற்போன பிள்ளை எதிரே வரக்கண்ட தாய்ப்போல சூரி துள்ளிக் குதித்தான். மாப்பிள்ளையை எதிர்கொண்டழைத்து வரும் மாமன்போல அவரைக் கையால் பிடித்துக்கொண்டு உள்ளே இட்டுவந்தான். செறுசேரியை ஒன்றும் பேசவிடவில்லை சூரி, அவரைப் பரபரவென்று இழுத்தவாறு ஒரு நாற்காலியில் அமர்த்தினான். “கேட்டீர்களா செறுசேரி, செய்தியை? உங்களிடம் சொல்ல எவ்வளவு துடிப்புடன் காத்திருக்கிறேன். நீங்களோ என்றால் ஆனை நடை நடந்துவருகிறீர்கள்!” என்று தொடங்கினான். ‘நம்மிடம் மசிந்த பெண்கள் ஏராளம், ஏராளம்! இது உங்களுக்குத் தெரியுமே! அதுகளிலே ஒன்றல்ல இது. செறுசேரி! இது படித்தப்பெண் இங்கிலீஷ், சமஸ்கிருதம் தலைகீழாய்ப் படித்த பெண், கலிகால தமயந்தியே தான்! அது நம்மிடம் மசிந்திருக்கிறது. இனி நம்பூதிரிப் பாட்டின் பாடு யோகந்தான், போங்களேன்! இப்போ’ தான் கேசவன் நம்பூதிரி - பெண்ணின் தகப்பன் - பெண் மனம் அறிந்து கடிதம் அனுப்பியிருக்கிறார். பதிலும் எழுதிவிட்டேன்! போங்கள், சற்று முன்னேவந்து நீங்கள் எழுதினால் நன்றாயிருந்திருக்கும், இவ்வளவு பிந்தி விட்டீர்கள்!’ மழை பெய்து வெறித்தவுடன் செறுசேரியின் பேச்சு மின்னிற்று. ‘ஆகா! சரியான தமயந்திதான், சந்தேகமில்லை சரியான நளனைத் தேர்ந்தெடுத்துவிட்டாள். ஆனால் அன்னத்தைத் தூதனுப்பவில்லை. அப்பன் கடிதமே இங்கே அன்னமாகி யிருக்கிறது. எல்லாம் இனி உங்கள் பாடு நளச்சக்கரவர்த்தி பாடுதான், போங்கள்” என்றார் செறுசேரி. “தாங்கள் அழகுக்கு இந்துலேகா என்ன, சூரிய லேகா என்ன? எந்தலேகாவானாலும் தங்களிடம் வந்து ஒருநாள் மண்டியிட்டுத்தானே ஆகவேண்டும்? ‘தாங்கள் எப்போதும் பாக்கியசாலிதான். ஆனால் இந்தத் தடவை இந்துலேகாதான் பாக்கியசாலி என்று கூறவேண்டும்! உலகத்துக்கே உரிய ஒரு பொருளை அவள் ஒருத்தியே தட்டிவிடப் போகிறாளே!’ கலைநயம் குழைத்துப் பூசப்பெற்ற இந்த முதல்தரமான முகப் புகழ்ச்சிகளில் நம்பூதிரிப்பாடு சொக்கிப் போனான். ‘ஆகா, இந்துலேகா தமயந்தி, நான் நளன்? அவள் இந்திராணி, நான் இந்திரன்! அவள், தாரா, நான் சந்திரன்” என்று பல்லிளித்துக் கொண்டு புராண இதிகாச உலகில் உலவினான், சூரி. நண்பர்கள் ஒவ்வொருவர் உரையும் இந்துலேகா பற்றிய சூரியின் மனக்கோட்டையை வளர்த்தது. அக்கோட்டையின் கோபுர உச்சியில் நின்று கொண்டு சிங்காரக் காதல் மேகங்களிடையே அவன் தவழ்ந்து விளையாடினான். அன்று இரவு நெடுநேரம்வரை கண்ணழி மூர்க்கில்லத்தில் பாலும் தேனும் பழச்சாறும் வழிந்தோடின. அவற்றை உட்கொண்ட நண்பர் குழாம் அவற்றினும் இனிய பேச்சுகளில் சூரியை மிதக்கவிட்டது. சூரியின் பழைய காதற்கரைகள், அழகிகள் அவருக்காக அல்லல் பட்டரற்றி மொழிகள், பலவகை அரம்பையர், ஊர்வசிகள் மேனகைகள் அழகுபற்றிய தாரதம்மய ஆராய்ச்சிகள் ஆகியவற்றிடையே அவர்கள் நேரம் இனிது கழிந்தது. மாலையாயிற்று. கதிரவன் மேலைக்கடலுள் ஆழ்ந்தான். பேசிப்பேசி, சிரித்துச்சிரித்து எல்லாருக்கும் அலுத்துப்போய் விட்டது. ஆனால் சூரி ஒருவனுக்கு மட்டும் பேச்சில் சோர்வே தட்டவில்லை. அவனுக்கிருந்த கவலையெல்லாம் ஓரிரவு இன்னும் இப்படி இந்துலேகா இல்லாமல் போக்குவது என்பதே. அந்தச்சமயம் சூரி நம்பூதிரியின் கதகளிக் காரியக் காரன் வந்தான். மறுநாள் இராமப்பணிக்கர் கதகளிக்குச் சூரிநம்பூதிரி போவதாக முன்பே ஏற்பாடாகியிருந்தது. இதை நினைவூட்டிய போது சூரிக்குக் கோபமே வந்தது. ‘கதகளி அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம்’ என்றான். இராமப் பணிக்கர் பல நாளாகச் செய்த ஏற்பாடுகள், பயிற்சிகள் வீணாகுமே என்று காரியக் காரன் வாதாடினான். ‘அதற்கென்ன? இந்துலேகா வந்தபின், அவள்காணும் முதல் கதகளியாய் இது இருக்கட்டும்!” என்றான் சூரி. செறுசேரி இப்போது தலையிட்டார். ‘இல்லை, நம்பூதிரி இந்துலேகா உங்களைப்போலவே அங்கே படபடத்துக் கொண்டிருப்பாள். ஆனாலும் நாம் அவள் நம்மிடம்கொண்ட மதிப்பையும் அச்சத்தையும் அவ்வளவு எளிதாகக் கெடுக்கக்கூடாது. கடிதம் வந்தவுடன் புறப்படுவது என்பது எத்தனையோ பெண்களின் உள்ளங்கவர்ந்த ஆணழக ராகிய தங்களுக்கு அடுக்காது. ஒருநாள் பொறுத்துப்போவதே அவள் கருத்தில் உங்கள் மதிப்பை உயர்த்துமென்று நினைக்கிறேன். நாளை கதைகளி ஆகட்டும். அதற்கடுத்தநாள் போகலாம். பிறகு உங்கள் விருப்பம்?” என்றார். இனிப்பான இந்தப்புகழ்ச்சிக் குளிகை சூரியின் அடங்காத ஆவலைக் கூடச் சற்றுத்தடுத்து நிறுத்தப் போதுமாய் இருந்தது. பயணம் பற்றி அபன் நம்பூதிரியிடம் கூறிவரும்படி அவன் செறுசேரியை அனுப்பினான். ஆனால் திரும்பி வருவதற்குள் இந்துலேகாபற்றிய அடக்க முடியாத ஆவலே சூரி உள்ளத்தில் மின்னல் போல எழுந்தது. நாளையே புறப்பட்டுத் தானாக வேண்டுமென்று மீண்டும் அடம்பிடித்தான். கேசவன் நம்பூதிரிக்கு மறுநாளே வருவதாக எழுதிவிட்டதால், இந்துலேகா எதிர்பார்த்து ஏமாற்றமடைவாள் என்று புதுக்காரணமும் காட்டினான்! ‘கடிதம் எழுதிவிட்டாலென்ன, நாளை மறுநாள் தான் வருகிறோம் என்று மற்றொரு கடிதம் எழுதிவிட்டால் போகிறது!’ என்று குறும்புடன் மீண்டும் கிளறினார் செறுசேரி. கதகளி காரியத்தையும் நினைவூட்டி ஒருநாள் நேரம் அதில் கழியும் என்று ஆறுதல் கூறினார். கனிக்காகக் காத்திருந்தால் கனிந்த நிலையில் பழத்தைப்பக்குவமாகவே பெறலாம் என்று அழகு நியாயம் எடுத்துரைத்தார். ஆனால் சூரியின் நாடி நரம்புகள் இதற்குள் முற்றிலும் முறுக்கேறியிருந்தன. ‘கதகளி இரவோடிரவாக நடக்கட்டும். இரவில் நேரம் போக்க அது உதவும். விடியுமுன்பே புறப்படலாம்’ என்றான் அவன். பயண ஏற்பாடுகளுக்கான கட்டளைகள் பிறந்தன. ‘செறுசேரி, நீயும் என்னுடன் கட்டாயம் வர வேண்டும். மற்றும் இரண்டு பிராமணப் பணிப்பையன்கள், ஒரு காரியக்காரன், ஆறு பணியாட்கள் ஆகியவர் கூட இருந்தால்போதும். நம் இருவருக்கும் ஒரு பல்லக்குத் தான். நீங்கள் என்னுடன் பல்லக்கிலேயே பேசிக்கொண்டு வரலாம். ஆனால் திரும்பிவரும் போது இந்துலேகாவைக் கூடவே கொண்டுவர ஒரு பூம்பல்லக்கை இங்கிருந்தே கொண்டு செல்லவோம்’ என்றான். ‘இந்துலேகாவுக்கு இங்கிருந்தே பல்லக்குக்கொண்டு போவானேன். பூவள்ளியில் எத்தனையோ பல்லக்குகள் உண்டே! அவர்களே அவளைப் பல்லக்குடன் அனுப்பி விடுவார்கள்’ என்று கூறிச் சிரித்தார் செறுசேரி. வேலைக்காரரை ஏற்பாடுகள் செய்யவும் செறுசேரியைத் தூங்கவும் அனுப்பிவிட்டு கதகளி நண்பருடன் சூரி கதகளி அரங்கம் புறப்பட்டான். 8. சென்னைச் செய்தி சூரி நம்பூதிரியின் கடிதம் கிடைத்தவுடனே பஞ்சுமேனவன் கேசவன் நம்பூதிரியை அழைத்தார். மறுநாளே நம்பூதிரி வந்து விடுவதாகக் குறித்திருந்ததனால், வரவேற்புக்கும் விருந்துக்கும் வேண்டிய ஏற்பாடுகளை யெல்லாம் மின்னல் வேகத்தில் நடத்தும்படி அவர் கட்டளைகள் பிறப்பித்தார். அவற்றை மேற்பார்க்கும்படி கேசவன் நம்பூதிரியை அனுப்பி விட்டு, ஆர்வத்தால் தானும் சும்மா இருக்க முடியாமல் அங்குமிங்கும் ஓடி வேலை யாட்களை ஊக்கத் தொடங்கினார். அதே நாளில் சென்னைக்குச் சென்ற மாதவனைப் பார்த்துவிட்டு, இந்துலேகாவின் இளைய அம்மாமனான கோவிந்தன் குட்டிமேனோன் செம்பாழியிடத்துக்கு வந்தார். அவர் இந்துலேகாவை வளர்த்துப் பேணிய கொச்சுகிருஷ்ணமேனோன் தம்பி. கொச்சு கிருஷ்ணமேனோனைப் போலவே இந்துவிடம் அவர் மிகவும் அன்புடையவர். மாதவனுக்கும் இந்துலேகாவுக்கும் உள்ள நேசத்தைப்பற்றி அவர் கேள்வியுற்றிருந்தாலும் அதன் அளவை அவர் இன்றுதான் பார்க்க முடிந்தது. மாதவன் உடல் நலம்பற்றி அவர் அறிவித்தவுடன், சென்னை அரசியல் மனையில் 150 வெள்ளி ஊதியத்தில் அவனுக்கு ஒரு நற்பணி கிட்டியுள்ளதென்றும் அவர் அவளுக்குத் தகவல் தெரிவித்தார். அத்தகவல் கேட்ட ஆரணங்கின் முகம் அன்றலர்ந்த செந்தாமரைபோல மலர்ந்தது. அம்மாமன்முன் அம்மலர்ச்சியைக் காட்ட வெட்கமடைந்தவளாய், அவள் முகம்கோணி நின்றாள். அவளது இனிய “குழப்பத்தை மாற்றும் நோக்கத்துடன் கோவிந்தன் குட்டிமேனோன் வேறு பேச்சுத் தொடங்கினார். ‘சரி, நான் அனுப்பிய புனை கதையை வாசித்துவிட்டாயா, இந்து? அது நன்றாயிருந்ததா?’ என்று அவர் தொடங்கினார். இந்: ஆம், முடித்துவிட்டேன். அம்மாமா? புனைகதை மிகவும் சுவை மிக்கதாகவே இருந்தது. இந்து இரவில் நெடுநேரம் விழித்திருந்து வாசிப்பது குறித்து இந்துவின் தாய் இலட்சுமிக்குட்டி தமயனிடம் கூறியிருந்தாள். அவர் அது பற்றி மெல்லக் கிளறி அறிவுரை கூறினார். “உண்மையில் நான் இரவில் வாசிப்பதேயில்லை. அம்மாமா? ஆனால் தற்செயலாக ஒருநாள் நான் வாசிக்கும் சமயம் பெரிய அம்மாமனும் அப்பாவும் வந்தார்கள். என்றும் அப்படியே வாசிப்பதாகக் கருதி அம்மாவிடமும் சொல்லியிருக்கிறார்கள்’ என்றாள் அவள். கண்ணழி மூர்க்கில்லத்துச் செய்தியையும் கோவிந்தன் குட்டிமேனோன் கேள்விப்பட்டிருந்தார். அதுபற்றி இந்துவின் மனப்போக்கறிய அவர் இத்தறுவாயைப் பயன்படுத்தினார். ‘அவர்கள் உன்னை என்ன செய்தியாகப் பார்க்க வந்தார்கள், இந்து?” என்று கேட்டார். மலர்த்திருந்த செந்தாமரை அக்கேள்வி கேட்டவுடனே இதழ் கருகிய தாமரையாகத் தொடங்கிற்று. அதுவே அவள் மனநிலையை அவருக்கு விளக்கிற்று. ஆனால் இந்து செய்தியையும் கூறி, அச்செய்திக்கும் தனக்கும் யாதொரு தொடர்புமில்லாதது போலவே நடந்து கொண்டதாகவும், அப்படியே கருதுவதாகவும் தெரிவித்தாள். 9. அமளிகுமளி சூரிநம்பூதிரிப்பாட்டின் பரிவாரங்களுக்கு அவனைக் கிளறிவிட்டு வேடிக்கைப் பார்ப்பது இனிப்பாகத்தான் இருந்தது. ஆனால் அதன் விளைவு அவர்களுக்குப் படிப்படியாக உவர்ப்பாகவும், புளிப்பாகவும், கசப்பாகவும் மாறிற்று. இரவிலேயே பயண ஏற்பாடு செய்வது பற்றிப் பல வேலையாட்கள் முணு முணுத்தனர். விடியற் காலத்திலேயே எழுந்திருக்க வேண்டுமென்ற நினைப்பு நண்பர்கள் சிலருக்குப் பெருந்தொல்லை யாயிருந்தது. இன்னும் சில தோழர்கள் இரவிலேயே விழித்திருந்து கதகளி பார்க்க மனமில்லாமல் சலித்துக் கொண்டனர். கதகளியைத் திடுமென்று இரவிலேயே நடத்த வேண்டிய கட்டளை பெற்றவர்களைப் பற்றி இந்நிலையில் கேட்க வேண்டியதில்லை! சூரியின் விருப்பத்துக்கு என்றும் முகம்கோணாத கோவிந்தனுக்குக் கூட அன்று எரிச்சலாயிருந்தது. ஏனெனில் சூரி நம்பூதிரிக்குப் பகலும் இரவும் ஒன்றாய் விட்டதனால், அவன் உறக்கத்துக்கும் கேடு, ஓய்வுக்கும் கேடு என்ற நிலையாயிற்று. கதகளி ஆடியவர் பலர் அன்று தூங்கிவிழுந்து ஆடினர். சூரியின் மனம் மட்டும் வேறிடத்திலில்லையானால் இதை அவன் கவனித்திருப்பான், அவன் நாட்டம் அரங்கத்திலில்லை என்றறிந்து கதகளி பார்த்திருந்தவர்களில் பலர் மெல்ல நழுவிச் சென்று தூங்கிப்போய் விட்டனர். வேலைக்காரர்களும் அவன் கதகளிக்குத் திரும்பியது கண்டதே வேலையை அரைகுறையாக விட்டு விட்டு நின்றும் இருந்தும் கிடந்தும் உறங்கினர். நள்ளிரவு நேரம். கதகளி நாடகத்தில் இராதை கண்ணனை நினைத்து ஏங்கிப் பாடினாள். சூரிநம்பூதிரி அரையுறக்கக் கனவிலிருந்து திடுமென விழித்தான். இராதையின் ஏக்கம் இந்துலேகாவின் ஏக்கமாக ஒலித்தது! ‘ஆ! இந்துலேகா! ஏங்காதே, அழாதே! இதோ வந்து விட்டேன். இப்போதே புறப்பட்டேன்!’ என்றெழுந்தான்! ‘கதகளி போதும், பயணம் தொடங்கட்டும்! இப்போதே தொடங்கட்டும்!’ என்ற உத்தரவு பிறந்தது. ‘இராமா, கோமா எழுந்திருங்கள், பல்லக்கை எடுங்கள்! இராகவா, சங்கரா, ஏன் இவ்வளவு தூக்கம்? எழுந்திருங்கள்! மூட்டை முடிச்சுக்களைக் கட்டுங்கள்! சாமா, சோமா! ஆகட்டும், புறப்படுங்கள் நேரமாயிற்று!’ என்று மூங்கில் காட்டில் யானைபோலச் சூரி எங்கும் சுழன்று தூங்குபவரை எழுப்பிப் பயணத்துக்கு விரட்டினான். படிக்கட்டில் சாய்ந்து மயங்கிக் கிடந்தான் கோவிந்தன். சூரி அவனைப் பிடித்துத் தள்ளாததுதான் குறை! ‘கோவிந்தா, கோவிந்தா! இது என்ன தூங்கும் நேரமா? போ, போய்ச் செறுசேரியைக் கூட்டிக் கொண்டு வா! போ!’ என்று துரத்தினான். ‘அட கடவுளே! இந்த நடு இரவு தூங்கும்நேரம் அல்லவானால், உனக்கு எதுதான் தூங்கும்நேரமோ? நீ என்ன மனிதனா, பேயா!’ என்று வைதவண்ணம் கோவிந்தன் தள்ளாடித் தள்ளாடிச் சென்றான். பயண ஏற்பாடுகளில் சூரி பிறரை ஊக்குவதுடன் நிற்கவில்லை. தானும் பரபரவென்று சுழன்றான். கொஞ்ச நேரத்தில் அவன் அறை பட்டபாடு அதைக் காட்டிற்று. சரிகை வேட்டிகள் இருபது முப்பது; பட்டக்கரை மேல் ஆடைகள் நாற்பது ஐம்பது; பொன் அரைஞாண்கள், எட்டுபத்து; தங்கக் குமிழ்கள் இட்ட கட்டி வெள்ளிச் செல்லங்கள் ஏழெட்டு; வெள்ளி பொன் தந்தக் கைப்பிரம்புகள் பல; சரிகைப் பாகைகள், பொன்னூலுடுப்புகள், தங்கப் பூணூல்கள், தொப்பிகள்; வெள்ளி தங்கச் சங்கிலிகள், கைக்கடிகாரங்கள் முதலியன எங்கும் அடுக் கடுக்காகவும் சிதறியும் கிடந்தன. அவற்றினிடையே எதையும் தேர்ந்தெடுக்க மாட்டாமல் அவன் முன்னும் பின்னும் சுற்றிச்சுற்றி வந்தான். ஒவ்வொரு கணத்திலும் ஒரு நூறாக எல்லார் மீதும் வசைமாரிகளை அவன் கொட்டிக் கொண்டிருந்தான். செறுசேரி வழக்கமாகப் பத்துப் பதினொருமணிக்கு மேல்தான் உறங்கப் போவது வழக்கம் அன்று கண்ணழி மூர்க்கில்லத்தில் தங்கியதால் அந்தத் தறுவாயைப் பயன்படுத்தி தம் உயிர் நண்பனான நாராயணன் நம்பூதிரியுடன் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டார். அதனால், நள்ளிரவில்தான் அவர் படுக்கையில் வந்து உட்கார்ந்தார். உட்கார்ந்ததும் எழுந்து புறப்படுவதற்கான உத்தரவு கேட்டுக் கோபமும் குழப்பமும் அடைந்தார். அவர் கோபம் முதலில் கோவிந்தன் மீதேசென்றது. ‘நான் இப்போது தானேடா உறங்கப் போகிறேன். இன்னும் நடுஇரவாகவில்லை. அதற்குள் என்னடா பயணம்?’ என்றார். நான் என்ன விவயப்பமுடியும் அண்ணே!@நம்பூதிரியை வந்து பாருங்கள்? நடத்துகிற ஆர்ப்பாட்டங்களைக் காணுங்கள்! நீங்கள் ஒருவர் தான் இச்சமயம்வந்து அவர் மனத்தை மாற்ற முடியும்!’ என்றார் கோவிந்தன். புகழ்ச்சி விரும்பாதவர் தான் செறுசேரி. ஆனால் இந்தச் சமயம் அவர் கோவிந்தன் புகழ்ச்சியை ஏற்கத் தயங்கவில்லை. ‘ஆம்! இந்நேரத்தில் இந்தப் பயணத்தை நான் முடக்கிவிடவில்லை யானால், நான் செறுசேரியல்ல! எத்தனை பேருக்கு இந்த ஒரு காமாந்தகாரப் பேயினால் இப்போது தொல்லை!” என்று பேசிக்கொண்டே அவர் எழுந்தார். செறுசேரியின் வாத வேதாந்தங்கள் அன்று முறுக்கேறிய சூரியின் பித்துக்கொள்ளித்தனத்தைச் சிறிதும் தணிக்க முடியவில்லை. நேர்மாறாக அவன் செறுசேரியையே முடுக்கினான். ‘புறப்படுங்கள், செறுசேரி, புறப்படுங்கள்! எல்லாரையும் தட்டி முடுக்குங்கள். உங்கள் ஒருவரால்தான் முடியும். இதுகளை எல்லாம் கட்டியாள!’ என்றான் சூரி. கோவிந்தன் வாய்மொழியில் இனிப்பாயிருந்த புகழ்ச்சியே சூரியின் வாய்மொழியிலும் வெளி வந்தது! அது இப்போது அவருக்கு மிகவும் கசப்பாகத் தோன்றிற்று! சூரியின் முறுக்குமேல் முறுக்காகச் செறுசேரி காரியம் செய்யப் புறப்பட்டார். அதைக்கண்ட சூரிக்கு ஒப்பற்ற மகிழ்ச்சியுண்டாயிற்று. செறுசேரி நடிப்பு ஆழ்ந்த சூழ்ச்சித் திறத்தின் பயன் என்பதை அப்போது சூரியல்ல, எவரும் கண்டிருக்க முடியாது. ‘ஆம், இதோ! இப்போதே புறப்பட்டு விட வேண்டும்!’ என்று கூறிக்கொண்டு அவர் சூரியைவிட விறுவிறுப்புடன் முன்னும் பின்னும் ஓடினர். ஆடைகளை வரிந்து கட்டிக்கட்டி அவிழ்த்தார். பின் சூரிநம்பூதிரியின் ஆடையணிமணிகளில் கருத்துச் செலுத்தி அவற்றை மெய்மறந்து கூர்ந்து நோக்குவது போல் பாவனை செய்தார். இது இன்னும் சூரியின் மகிழ்ச்சியையும் தற்பெருமையையும் கிளறிற்று. தன் செல்வத்துக்கு அறிகுறியான பொருள்களைப் பிறர்கண்டு மலைப்பதைப் பார்ப்பதிலும், அவற்றின் அருமை பெருமைகளை ஒன்று பத்து நூறாக அச்சமயம் தான் அவர்களிடம் அளப்பதிலும் அவனுக்கிருந்த ஈடுபாடு மிகப் பெரிதாயிருந்தது. இதைச் செறுசேரி நன்கு அறிந்திருந்தார். அங்குள்ள பொருள்கள் ஒவ்வொன்றும் அவருக்குப் பல தடவை கண்டு பழக்கமானவையே. அவற்றில் ஒவ்வொன்றைப் பற்றியும் சூரிநம்பூதிரி அளக்கும் பழம் புராணங்களையும் புதுப்பித்துப் புளுகு மூட்டைகளையும் அவர் பல தடவை கேட்டிருந்தார். ஆயினும் அவற்றை அன்றே முதல் முதலாகப் பார்க்கும் ஆர்வத்துடன் அவர் இன்று அவற்றை நோக்கினார். முதல்முதலாகக் கேட்கும் ஆர்வத்துடனேயே அவற்றைப்பற்றிய கதைகளையும் கட்டுமானங்களையும் கேட்டார். முதல் முதலாக அவர் கவனத்தைக் கவர்வதாகத் தோற்றியது ஒரு வெள்ளி வெற்றிலைச் செல்லம். அவர் அதைக் கவனிப்பதைக் கண்டதும் சூரி அவர் பக்கம் திரும்பினான். “செறுசேரி, இந்த வெற்றிலைச் செல்லம் ஏது? இங்கே எப்படி வந்தது என்று அதிசயப்படுகிறீர்களா?” என்றான். ‘ஆம். நல்ல அழகிய வேலைப்பாடு, அத்தனையும் கெட்டி வெள்ளி. இப்பக்கத்துப் பணிதானா இது?!’ என்று செறுசேரி கேட்டார். சூ.ந: யார் சொலவது இப்பக்கத்துப்பணி என்று? இப்பக்கம் இம்மாதிரிப் பணி செய்ய யாருக்குத் தெரியும்? இது மைசூரில் செய்தது. மைசூர்க்காரன் ஒருவன் - ஒரு முதலை - எனக்கு அன்பளிப்பாக அனுப்பிக் கொடுத்தது இது. மலை வாரம் பாட்டத்துக்குக் கொடுத்த சமயம் இது வந்து சேர்ந்தது! செ.ந: என்ன மைசூர்க்காரனா? முதலையா? மனிதனல்லவா முதலை எப்படி அனுப்பிக் கொடுக்கும். சூ.ந: செறுசேரி நீங்கள் உலகம் தெரியாத ஓர் அப்பாவி! அது முதலையல்ல மனிதன்தான். பெயர் தான் முதலை கன்னயர்கள் அப்படியெல்லாம் வேடிக்கையாகப் பேர் வைத்துக் கொள்வார்கள். செ.ந: அது ஒரு வேளை முதலியார் என்ற தமிழ்ப் பெயராயிருக்குமோ? சூ.ந: ஆகா, இருக்கலாம். முதலையார் என்றும் சொல்வார்கள். முதலியார் என்றும் சொல்வார்கள். முகம் மட்டும் முதலை மாதிரி இருந்ததாகத்தான் நினைவு. செறுசேரி உள்ளூரச் சிரித்துக்கொண்டார். செல்லம் உள்ளூரிலேயே செய்வதென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அது திருவனந்தபுரத்தில் செய்ததென்று ஒரு தடவையும், மதுரையில் செய்ததென்று மற்றொரு தடவையும் சூரியே கதை கூறுவதை அவர் கேட்டதுண்டு. இதுபோலவே துப்பட்டிகள், கைக்கடிகாரங்கள், பதக்கங்கள், நிலைக் கண்ணாடிகள் முதலிய பல பொருட்களின் இராமாயண பாரதங்கள் சூரியால் விரித்துரைக்கப்பட்டன. ஒரு நிலைக்கண்ணாடியின் வருணணை முடிந்தது. செறுசேரி நிலைக்கண்ணாடியில் தன் முகத்தை முதல் தடவை பார்ப்பது போலப் பார்த்தார். கையால் முகத்தைத் தடவிக்கொடுத்தார். சட்டெனச் சிரித்தார். “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று ஆவலாகக் கேட்டான் சூரி. செறுசேரி இதற்காகவே காத்திருந்தார். அவர் நடிப்பு முழுதும் இந்த ஒரு கணத்துக்காகத் திட்டமிட்ட ஒரு ஏற்பாடு மட்டுமே. ஆனால் அவர் திடுமென எதுவும் விடை கூறவில்லை. மேலும் சிரித்து ‘ஒன்றுமில்லை’ என்று கூறி மோவாயை மீண்டும் தடவிக் கொண்டார். “ஏதோ நினைத்தேன். சிரிப்பு வந்தது அது என் சொந்தக் காரியம். தங்களிடம் சொல்ல வேண்டிய அவ்வளவு முக்கியமான செய்தியல்ல!” என்றார். செறுசேரி எதிர்பார்த்தபடியே சூரி அதை அந்த அளவில் விட்டுவிட முடியவில்லை. மறைவாகத் தோன்றிய எதையும் விளக்கமாக அறிய வேண்டுமென்ற அடக்கமுடியாத ஆர்வம் அவருக்கு எப்போதும் எதிலுமே உண்டு. ஆகவே ‘செய்தி எதுவானாலும் சரி’ என்னிடம் தாராளமாகச் சொல்லலாம்” என்று ஆர்வமீதூரக் கிளறினார். செறுசேரி வேண்டா வெறுப்புடன் வெளியிடுவதைப் போலப் பேசினார். ‘இப்போதைய பயணம் எதிர்பாராதது. முன்பே இது தெரிந்திருந்தால் பகலிலேயே முகம்பண்ணிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்தப் பயணத்தில் நாம் மாப்பிள்ளையுடன் செல்பவர்தானே! இப்படியே போனாலும் ஒன்றும் கெட்டுவிடாது. மாப்பிள்ளையைத்தானே இந்துலேகா பார்க்கப் போகிறாள் என்று எனக்கு நானே சமாதானம் கூறிக் கொண்டேன். சிரித்ததன் காரணம் இதுதான்’ என்றார் செறுசேரி. சூரிநம்பூதிரி முகம் பண்ணி வாரக் கணக்காரியிருந்தது. மாப்பிள்ளையைத்தான் இந்துலேகா பார்க்கப் போகிறாள் என்ற சொல் மின்னல் போல அவர் மருமத்தில் பாய்ந்தது. அவர் நிலைக்கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தார். தாடி மீசை காடாய் வளர்ந்திருந்தது. அது மட்டு மல்ல. அதன் பெரும் பகுதியும் நரை நிரம்பியிருந்தது என்பதை நிலைமையை இன்னும் மோசமாக்கிற்று. “செறுசேரி! நீங்கள் நல்ல முன்னாலோசனைக்காரர் தான். எனக்கும் நீங்கள் நல்ல எச்சரிக்கை தந்தீர்கள். நானும் முகம் பண்ணிக் கொண்ட பின்தான் புறப்படவேண்டும்” என்றான் சூரி. தன் முகமலர்ச்சிய செறுசேரி சற்று அடக்கிக் கொண்டார். ‘தன் கையாகவே செய்து கொள்ளலாமே அதை இப்போதுதானே! ஏனென்றால் இரவில் அம்பட்டனை வரவழைப்பதும் முடியாத காரியம்!’என்றார். தன் கைச்சவரம் சூரி பழகிக்கொள்ளாத ஒன்று ஆகவே விடியுமுன்பே அம்பட்டனை வரவழைப்பதென்று அவன் எண்ணினான். ஆனால் அம்பட்டர் வாழ்ந்த இடம் கண்ணழி மூர்க்கில்லத்திலிருந்து நான்கு நாழிகை தொலைவில் இருந்ததால், நள்ளிரவில் வரவழைப்பது எப்படியும் முடியாது. ஆகவே விடியற்காலமே அம்பட்டனுக்கு ஆளனுப்புவதென்றும், விடிந்த பின்பே பயணம் தொடங்குவதென்றும் சூரிநம்பூதிரியின் திட்டம் மாறிற்று. இப்புது முடிவு கண்ணழி மூர்க்கில்லம் முழுதும் நொடியில் பரந்தது. ‘செறுசேரி நீடூழி வாழவேண்டும்’ என்ற வேண்டுதலுடன் எல்லாரும் பாதி அயர்ந்த கண்களை முழுதும் அயரவிட்டனர். அடைப்பைக்காரன் கோவிந்தனோ பயணத்துக்காக எடுத்துவைத்த பாலிலும் பண்டங்களிலும் நிரம்ப எடுத்துக்கொண்டு வந்து செறுசேரிமுன் வைத்தான். ‘பாலருந்தி விட்டு நன்றாகத்தூங்குங்கள், ஆண்டே, நீங்கள் இருக்கும்வரை இனி எங்களுக்குக் கவலை ஏதும் கிடையாது’ என்று கூறிச் சென்றான். தன் ஆர்ப்பாட்டங்களால்தானே அயர்வுற்று, சூரி உறங்கினான். இந்துலேகாவின் அழகு சிலசமயம் அவன் துயிலில் அவனைத் தாலாட்டின. ஆனால் சில சமயம் சோகக்கனவில் அவன் தாடியும் மீசையும் அவன் முன் வந்துநின்று அவன் தூக்கத்தைச் சிறிது கலைத்தன. சூரியின் முதற்கடிதம் மட்டுமே செம்பாழியிடத்தில் பூவள்ளித் தரவாட்டுக்கு வந்து சேர்ந்தது. பயணத்தை ஒருநாள் ஒத்திப்போட்ட முடிவுபற்றிக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தாலும் அது உண்மையில் மறுநாள் காலையில்தான் சென்று சேர்ந்தது. அதிகாலையில் வருவதை எதிர்பார்த்து, அண்டா அண்டாக்களாக விடியற்காலமே வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்தது. இரவே மிடிக்கணக்கில் சோறும் கறியும் பருப்பும் வகைவகையாக வெந்து கொண்டிருந்தன. விடியுமுன் சோறு ஒருபுறமும் பருப்பு ஒருபுறமும், அப்பளம் ஒருபுறமும் குவியல் குவியல்களாகக் கொட்டிக் கிடந்தன. பூசும்நெய், மணப்பொடி, சீப்பு, கண்ணாடி, சந்தனம், வெண்சாமரம் முதலியவற்றுடனும், மல்லிகை, முல்லை, இருவாட்சி ஆகிய மாலைகளுடனும் சூரிநம்பூதிரிப்பாட்டையும் அவர் குழாங்களையும் வரவேற்கப் பஞ்சு மேனோனும் பூவள்ளித்தரவாட்டின் பல பெரியோர்களும் சிறியோர்களும் வேலையாட்களும் பூமுகத்தில்வந்து காத்திருந்தார்கள். நெடுநேரம் ஆள்வரும் அரவத்தையே காணவில்லை. சோறும் கறிகளும் பலவகையில் பாழாயின. வெந்நீர் ஆறி அலந்துபோயிற்று. விடியற்காலத்திலிருந்து எட்டு மணி, பத்து மணிவரை நின்று நின்று எல்லார் கால்களும் கடுத்தன. பலர் சூரியை வாயாரப்பழிக்கத் தொடங்கினர். வயதுசென்ற காரணவர் பஞ்சுமேனவன் மாப்பிள்ளை வந்தபின் அவருக்குப்பின்னால் குளிக்கலாம் என்று காத்துக் கிடந்தார். பத்துமணிக்குள் பசியாலும் வெப்பத்தாலும் அவர் சோர்வுற்றுச் சாய்ந்து விட்டார். அதன்பின் இனி எப்படியும் குளித்துவிடுவோம் என்று அவர் குளிப்பறை சென்றார். குளித்து வந்த பிற்பாடும் விருந்தினர் வராமல் சாப்பிட அவருக்கு மனம் வரவில்லை. மீண்டும் காத்திருந்தார். மணி பன்னிரண்டாயிற்று. விடியுமுன் கஞ்சியும், பதினொரு மணிக்குள் உணவும் சாப்பிட்டுப் பழகியவர் பஞ்சுமேனவன். பசியாலும் வெயிலாலும் நண்பகலுக்குள் அவர் துடிதுடித்தார். பன்னிரண்டு மணிக்குப்பின் பசி தாங்காமல் பஞ்சுமேனவன்போய் உணவு உட்கொண்டார். ஆனால் இந்துலேகாவின் திருமணத்திலேயே கண்ணும் கருத்துமாயிருந்த அவருக்கு அவ்வளவு பசிக்குப்பின்னும் ஆற அமர்ந்து முழுவயிறார உண்ணமுடியவில்லை. அரைகுறை உணவுடனே எழுந்துவந்து பின்னும் காத்திருந்தார். பஞ்சுமேனோனுக்கு காத்திருக்கக் காத்திருக்க ஆர்வம் குறைந்து எரிச்சலும் கசப்புமே தோன்றலாயின. அடுத்த நாள்தான் சூரி வருவார் என்ற கடிதம் வந்த போது அவர் மன வெறுப்பு உச்சநிலை அடைந்தது. ஆனால் கேசவன் நம்பூதிரி அவர் மனநிலைக்குத்தக்கபடி பேசி சோர்வகற்றினார். சூரி நம்பூதிரியின் பெருஞ் செல்வம், பகட்டாரவாரம், எடுபிடி ஆட்களின் தொகை ஆகியவற்றின் வருணனைகளால் காரணவர் ஆர்வத்தைப் புதுப்பித்து வளர்த்தார். ஆனால், அப்படியும் இறுதியில் பஞ்சுமேனோன் உள்ளம் உவர்ப்பு அடைந்தது. இந்துலேகாவின் உளப் பண்புபற்றிய எண்ணமும் கவலையும் இப்போது அவருக்கு எழுந்தது. ‘இந்துலேகா ஆங்கிலம் கற்றறிந்தவளாகையால் எவ்வளவு பணக்காரனானாலும் ஒரு நடுத்தர வயதுள்ள நம்பூதிரியை மணந்து கொள்வாள் என்று ஒருக்காலும் எதிர்பார்க்கமுடியாது’ என்று அவர் தனக்குள் திட்டமாய் எண்ணினார். ‘இந்துலேகாவே விரும்பினால் இது நடக்கட்டும். நான் ஒன்றும் வற்புறுத்தப்போவ தில்லை என்றும் ஒரு இடைக்கால முடிவு அவர் உள்ளத்தில் ஏற்பட்டது. பஞ்சமேனோன் உள்ளம் கிட்டத்தட்ட அவநம்பிக்கையின் அடித்தடத்தை எட்டும் சமயம் தொலைவிலிருந்து படை முழக்கமோ, விழா முழக்கமோ என்று தோற்றும் படியான ஓர் அரவம் கேட்டது. அருகே வரவர அதுதான் எல்லாரும் காலைமுதல் எதிர்பார்த்த சூரிநம்பூதிரியின் வரவு என்பது தெளிவாயிற்று. ஆனால் எதிர் பார்த்தவர் எவரும் அது இவ்வளவு கோலாகல முழக்கமாயிருக்கு மென்று கருதவேயில்லை. அவர்மீது அன்று காலை ஏற்பட்ட சிறுவெறுப்பை இம்முழக்கத்தின் எதிர்பாரா அதிர்ச்சி ஒரு கணத்தில் அகற்றிற்று. அவரைச்சென்று காணும் ஆர்வத்தில் பொதுமக்களும், அவரைச் சென்று வரவேற்கும் ஆர்வத்தில் பெரியவர்களும் வெளியேறி ஓட்டமும் நடையுமாக விரைந்தனர். கெட்டுவிட்ட ஏற்பாடுகளைச் சரிசெய்து புது ஏற்பாடுகளை விரைவு படுத்துவதில் வேலையாட்களும் மேலாட்களும் மும்முரமாயினர். ஆழ்ந்த உறக்கத்தில் திடீரென்று பூகம்பம் ஏற்பட்டால் எப்படி மக்கள் அதிர்ச்சியடைவார்களோ, அதே வகையில் அதிர்ச்சியுற்றனர், சூரிநம்பூதிரி பாட்டின் வரவால் ஏற்பட்ட முழக்கத்தைக் கேட்ட பூவள்ளி மக்கள். ஒரு கணத்தில் தெருக்களெங்கும் இருபுறங்களிலும் மக்கள் திரள் திரளாகக்கூடி ஒருவரை ஒருவர் நெரித்துக்கொண்டு, அங்கமிங்கும் திரிந்தனர். முன்னிற்பவர் தோள்களை அழுத்திக்கொண்டு ‘வந்துட்டாரா! நம்பூதிரிப் பாடு’ என்று பலர் பின்னாலிருந்து எட்டி எட்டிப் பார்த்தனர். இருபுறத்திலுமுள்ள வேலிகளைப் பிளந்து கொண்டு உற்றுப்பார்த்தனர் பெண்கள். சற்றுப்பெரிய வீடுகளில் பலகணிகளெங்கும் பெண்கள் முகங்களும் சிறுவர் சிறுமியர் முகங்களும் ஒன்றை ஒன்று நெருக்கிக்கொண்டு தெருப் பக்கம் நோக்கின. மாடிகள் உப்பரிகைகள் இருந்த இடங்களிலெல்லாம் பலர் ஏறிநின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பூவள்ளித்தரவாட்டின் இல்லங்களிலோ காட்சி பார்ப்பவர் கூட்டத்தை நெருக்கித்தள்ளிய வண்ணம் ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டியவர்கள் நாலாபக்கங்களிலும் ஓடினார்கள். சூரிநம்பூதிரியின் ஊர்வலம் எதிர்பார்த்தவர்களின் ஆர்வத்தைவிடப் பன்மடங்கு காட்சிக்குரிய பெருநிகழ்ச்சியாகவே இருந்தது. ஏனெனில் பூவள்ளிபோன்ற தரவாட்டுச் செல்வர்கள் கூடக் கனவுகாணாத பெருஞ் செல்வன் சூரிநம்பூதிரி என்பதை அந்த ஊர்வலமே காட்டிற்று. பல்லக்கு வெள்ளி, அதன் முகடு தங்கம்! அதைச் சுற்றிய திரைகள் அத்தனையும் பொன்சரிகை நிறைந்த பலநிறப்பட்டுக்கள்! முன்னும் பின்னும் படைவீரர்களைப் போல அணி அணியாகப் பலவகை ஆடையணிமணி புனைந்த வேலையாட்கள், பரிவாரங்கள் சென்றன. ஆட்களின் முன்னே சரிகைப் பட்டுக்கள் அணிமணிகள் அணிந்துசென்ற குதிரை வீரர்கள், ஆனைப்பாகர்கள்! குதிரைகளின் சேணங்கள் கூடச் சரிகை நிறைந்த வெண்பட்டுக்கள்! ஒன்றிரண்டின்மீது முழுவெள்ளியால் செதுக்கி இழைக்கப்பட்ட அம்பாரிகளில் மாவுத்தர்கள் பன்மணி பதித்த வெள்ளி அங்குசத்துடன் வீற்றிருந்தனர். கண்ணழி மூர்க்கில்லத்திலிருந்து புறப்படும்போது சூரிநம்பூதிரியின் பரிவாரங்களிடையே நிலவிய மனக்குறை, புறப்பட்ட சிறிது நேரத்துக்குள் முற்றிலும் அகன்றுவிட்டது. ஏனெனில் செறுசேரி உதவியுடன் கோவிந்தன் சூரிநம்பூதிரியின் உத்தரவு பெற்று, ஒரு சிலர் என்று முதலில் திட்டம் செய்யப்பட்ட பயணக்குழுவை ஒரு சிற்றரசின் பவனியின் அளவு பெருக்கினான். பரிவாரங்களாகச் செயல்பவர்களுக்கெல்லாம் உயர்ந்த ஆடையணிமணி விருந்துகளுக்கு ஏற்பாடு செய்தான். போகும் வழியிலும் காட்சியாளரிடையே பொன் வெள்ளி செப்புக் காசுகள் வீசப்பட்டன. இவற்றால் பரிவாரங்களிடையே மட்டுமன்றி, பார்வையாளரிடையேயும், ஆர்வவெள்ளம் பெருக்கெடுத் தோடிற்று, பார்க்க வந்தவரில் பலர் வழித்தங்கல் விருந்துகளிலும் வழியில் வீசப்படும் காசுகளில் பங்குகொள்ளும் அவாவுடன், பரிவாரங்களின் பின் செல்லலாயினர். இக்காரணங்களாலேயே செம்பாதியிடம் வருவதற்குள் பயணக்குழாம் ஒரு பெரிய ஊர்வலமாகி, இறுதியில் ஓர் ஆரவார விழாக்கூட்டம் ஆயிற்று. பல்லக்குத் தூக்குபவர்கள் கிளர்ச்சியுடன் பல வகைக் கூச்சல்கள் கிளப்பினர். யாரோ ஒருவர் தூண்டுதலால் கூச்சல்கள் சூரிநம்பூதிரியின் புகழ் ஆரவாரமாயிற்று. அதில் பல்லக்குக் காரர்கள் மட்டுமின்றி ஊர்வலத்தார் முழுவதும் பார்வையாளர் கூடக் கலக்கத் தொடங்கினர். பூவள்ளித்தர வாட்டினர் கேட்ட பேராரவார முழக்கம் இதுவே. ஊர்வலமும் பரிவாரமும் இவ்வளவானால், இவற்றுக்குரிய குபேர மன்னர் எவ்வாறிருப்பாரோ என்றறியும் ஆர்வம் மக்களிடையே எழுந்தது. பூவள்ளியில் பகவதி கோயிலிலும் ஊட்டுபுரைகளிலும் வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டு விசிறியுடன் ஓய்வு கொள்ளத் தொடங்கியவர்கள்கூட, தம் பெருந் தொந்தியைப் பொருட்படுத்தாது குளங்களின் கரைமதில்களில் வந்து உட்கார்ந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். பஞ்சுமேனவன் உள்ளம் இக்காட்சிகளால் பூரிப்படைந்தது. அந்தப் பூரிப்பு கேசவன்நம்பூதிரிமீது அவருக்கிருந்த சலிப்பை அகற்றி அவருடன் முன்னிலும் பன்மடங்கு அளவளாவும்படி தூண்டிற்று. அவரைத் தம்முடன் அழைத்துகொண்டு, அவர் வரவேற்பாளர் குழுவின் முன்னணியில் முதல் வரிசையில் சென்று காத்து நின்றார். பல்லக்கு தெருக்களில் நுழைய முடியாமல் கூட்டத்தை அப்புறமும் இப்புறமும் தள்ளி நெளிந்து நெளிந்து வந்தது. முன்னும் பின்னும் சென்ற ஆனைகுதிரைகளும் படைகள் போல அணி அணியாகச் சென்ற பரிவாரங்களும் இல்லாதிருந்தால் பல்லக்கு அத்திரளில் வழியுண்டுபண்ணி முன்னேறி யிருக்கவே முடியாது. சூரிநம்பூதிரியின் ஊர்வலம் அடுத்து வந்ததே தரவாட்டாட் களும் கூக்குரலிடத் தொடங்கியிருந்தனர். பூமுகத்திலிருந்து சிறிது தூரத்தில் வந்து காத்து நின்ற பஞ்சுமேனவனையும் கேசவன்நம்பூதிரியையும் கண்டதே சூரியின் ஊர்வலத்தின் முன்னணி இரு கிளையாகப் பிரிவுற்று அவர்களைக் கடந்து பூவள்ளி மனையகம் சென்றது. பஞ்சுமேனவனும் கேசவன் நம்பூதிரியும் நம்பூதிரிப்பாட்டின் பல்லக்கை எதிர்நோக்கி நின்றனர். பல்லக்கு கண் பார்வையில் விழுந்ததே, கேசவன் நம்பூதிரி தம் ஆட்களை ஊக்க, அவர்கள் வருக கண்ணழி மூர்க்கில்லத்துக் குபேரன், வாழ்க சூரி நம்பூதிரிப்hடு என்று கூவினர். அது கேட்டதே சூரிநம்பூதிரிப்பாடும் செறுசேரியும் பல்லக்கிலிருந்து இறங்கி அவர்களை நோக்கிவீறு நடை நடந்து வந்தனர். ஊர்வலத்தையும் சிவிகையையும் கண்டே வியப்படைந்த மக்கள், சூரிநம்பூதிரிப் பாட்டையும் தோழரையும் கண்டபோது சிறிதுநேரம் மலைத்துப் போய் நின்றனர். ஏனெனில் அவர்கள் முன் ஒரு முழுநிறை பொற்சிலையே ஊர்ந்து வருவது போலிருந்தது. உச்சி முதல் உள்ளங்கால்வரை பொன் சரிகையன்றி எதுவும் காணவில்லை. அதனூடாக நண்பகல் வெயிலில் மார்பும் வயிறும் கைகால்களும் நிறைத்துத் தொங்கிய பொன்னணிமணிகள் பகலவனுடன் போட்டியிட்டு ஒளி வீசின. சூரியைப் பார்க்க ஏற்கெனவே கூட்டத்தை நெருக்கித் தள்ளிய மக்கள் இப்போது ஒருவர்மேல் ஒருவர் தாவி அவரைப் பார்க்கப் போராடி ஆரவாரித்தனர். பலகணி உப்பரிகைகளில் நின்ற பெண்டிரும் பிள்ளைகளும் வைத்த கண் வாங்காமல் அந்தப் பொற் பிழம்பைக் கண்களால் பருகினர். ‘இந்துலேகாவுக்கு வந்த பாக்கியமே பாக்கியம்!’ ‘இலட்சத்துடன் கோடிவந்து குவிவதைப் பாருங்கள்!’ ‘ஏற்கெனவே அழகும் குணமும் செல்வமும் நிறைவுற்ற இந்துலேகாவுக்கு இனி வேறு என்னதான் வேண்டும்!’ என்று பெண்கள் பலவாறாகப் பேசிக் கொண்டனர். மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்ட தோற்றத்துடன் சூரிநம்பூதிரி இவற்றையெல்லாம் சுற்றிச் சுற்றிப் பார்த்த வண்ணம் ஆனை நடைபோட்டு, நடக்கும் மலை போல அசைந்து வந்தான். ஆனால் அவன் ஆர்வத்துடன் சுற்றிப் பார்த்தது வேறு எதையுமல்ல பலகணிகளில் தவழ்ந்த அழகு முகங்களையே! அந்த முகங்களில் ஒன்று, அந்த நீலவிழிகளில் ஒரு கொடி கட்டாயமாக இந்துலேகாவுக்குரியதாயிருக்கும் என்று அவன் மனப்பால் குடித்தான். 10. காதற் கடிதம் சூரிநம்பூதிப்பாடும் செறுசேரியும் பயண அலுப்புத் தீர்த்ததும் குளித்து விருந்துண்ணப் புறப்பட்டனர். வந்தவுடனேயே இந்துலேகாவைப் பார்க்கச் சூரிநம்பூதிரி துடித்தாலும், செறுசேரி அது தகுதிக் கேடான செயலாகு மென்றும், உணவுநேரம் கழிந்து வேண்டுமானால் பார்க்கலாம் என்றும் கூறியிருந்தார். பஞ்சுமேனவன், கேசவன் நம்பூதிரி முதலியவர்களும் நம்பூதிரிப் பாட்டுக்கு வேண்டிய வசதிகளைக் கவனிக்கச் சென்றனர். பூவள்ளித் தரவாட்டில் நம்பூதிரிப்பாட்டின் ஆரவார வரவேற்பைக் காண விரையாதிருந்தவர்கள் ஆடவர்களில் மாதவன் தந்தையும், பெண்டிரில் மாதவன் தாயும் இந்துலேகாவும் மட்டுமே என்னலாம். ஆனால் இந்து லேகாவின் உள்ள உறுதியறியாத பலர் அவள் பார்த்திருக்கக்கூடும் என்றே நினைத்திருந்தனர். இதில் ஒரு பேர்வழி அவள் பாட்டியான குஞ்சுக் குட்டியம்மை ஆவாள். நம்பூதிரிப்பாட்டின் செல்வப்பகட்டைக்கண்டு வயது சென்றவளான குஞ்சுக்குட்டியம்மா முற்றிலும் மலைப்பு அடைந்தாள். அவள் வாழ்நாளில் அவ்வளவு பெருஞ் செல்வர் உறவு தன்னை நோக்கி வலியவரும் என்று அவள் கருதியவளல்ல. இந்துலேகாவின் மனநிலையையோ, பண்பையோ ஒரு சிறிதும் அறியாத நிலையில், அவள் இந்துலேகாவை இந்த நற்பேற்றுக்காகப் பாராட்டவும் அவளுக்கு ஊக்குதல் தரவும் எண்ணிப் புறப்பட்டாள். பாட்டியிடமிருந்து இந்துலேகா இச்செய்தி கேட்டுக் கிளர்ச்சியடைய வில்லை. ஆனால் இதை அக்கிழவி முற்றிலும் உணர்ந்துகொள்ள முடிய வில்லை. விரைவில் சூரிநம்பூதிரி செறுசேரியுடன் அவளைக்காண வருவார் என்றுமட்டும் கூறிச்சென்றான். குஞ்சுக்குட்டியம்மாவையடுத்து லட்சுமிக்குட்டியம்மையும் இதே செய்தி கூறவந்தாள். ஆனால் அவள் மகள் நிலையறிந் திருந்ததால், அவளுக்குத் தகவல் கூறமட்டுமே வந்தாள். அவள் மனம் சென்னையில் மாதவனிடமே உள்ளது. கண்டு அவள் வருந்தவில்லை. மகிழ்ச்சியே அடைந்தாள். ஏனெனில் அவளுக்கு இந்துலேகாவிடம் மட்டுமன்றி மாதவனிடமும் பற்றும் ஆர்வமும் இருந்தது. ஆயினும் காரணவர் சூளுரைப் பற்றிமட்டும் அவள் பெரிதும் கவலைப்பட்டாள். இந்துலேகா பொதுவே நம்பூதிரிப்பாட்டின் வரவைக் கவனித்தவளே அல்ல அதுபற்றிக் கேள்விப்பட்ட போதும் அவள் சிறிதும் அதில் அக்கரை கொள்ளவில்லை. ஆனால் மாதவனுடன் தன்னுறவை அறிந்து இருவரையும் மதிப்பவரான செறுசேரி சூரியுடன் வருவது கேட்டு அவள் வியப்படைந்தாள். சூரிவருகையைத் தன் விருப்பத்துடன் நடந்த செய்தி என்று அவர் எண்ணியிருப்பாரோ என்ற சந்தேகம் மட்டுமே அவளுக்குக் கவலை தருவதாகயிருந்தது. நம்பூதிரிப் பாட்டைத் தான் வரவேற்கும் நிலையிலிருந்து அவர் உண்மையறிந்து கொள்வார் என்றுமட்டும் தேர்தலுற்றாள். சூரி வருமுன் இந்துலேகா தன் அறையில் சென்று உறங்கிவிட விரும்பினான். ஆனால் அதற்குள் அம்மு அவளிடம் இரண்டு கடிதங்களைக் கொண்டுவந்து கொடுத்தாள். அம்மாமன் கோவிந்தன் குட்டிமேனவன் அவற்றைச் சென்னையிலிருந்து பெற்று அனுப்பியதாக அறிவித்தாள். கடிதங்கள் இரண்டில் ஒன்று கோவிந்தன் குட்டி மேனவனுக்கு எழுதப்பட்டது. அது திறந்திருந்தது. மற்றது அவளுக்கே எழுதப்பட்டிருந்தது. முதல் கடிதமே அவளுக்குச் செய்தி முழுவதும் அறிவித்திருந்தது. “சிற்றப்பா இங்கிருந்து போன அன்றே அவருக்கு அரசியல் மனைப்பனி கிடைத்து விட்டது. இன்றே நான் வேலையில் சேர்ந்துவிட்டேன். நாளை மறுநாள் அல்லது நாலாநாள் நான் ஒருவார ஓய்வு எடுத்துக் கொண்டு அங்கே வரவிருக்கிறேன். எல்லாரும் நலமுடன் இருப்பதுகாண அவா! இத்துடன் உள்ள கடிதங்கள் இரண்டையும் முறையே அப்பாவுக்கும் மாதவிக்கும் கொடுத்தனுப்பக்கோருகிறேன். தங்கள் மாதவன்” தன் கடிதத்தை இந்துலேகா மனதுக்குள்ளேயே வாசித்தாள். அதிலும் செய்தி முன்னதேயானாலும், அதில் மாதவன் இதயந்திறந்த குரல் அவள் அகச் செவிகளுக்குக் கேட்டது. அவன் அன்புமுகம் அதனிடையிலிருந்து அவளைப் பார்த்து புன்முறுவல் செய்வது போன்றிருந்தது. அதை அவள் பல தடவை வாசித்து மகிழ்ந்தாள். அதை நெஞ்சோடணைத்தாள், அதன் மீது முத்தங்கள் பொழிந்தாள். பின் தன் இரும்புப் பெட்டியைத் திறந்து அதன் ஆழத்தில் பதிக்கப்பட்டிருந்த உள்ளறையில் அதை வைத்துப்பூட்டிப் பின் பெட்டியையும் பூட்டினாள். காதல் பித்துடையவருக்கேயுரிய இச்செயல்கள் அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி நிரப்பின - அதைத் தொலைக்காட்சி மூலம் மாதவன் கண்டிருக்கக் கூடுமானால், அது அவன் மகிழ்ச்சியைப் பன்மடங்கு பெருக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அக்கடிதம் கண்டதுமுதல் அவளுக்குக் கண்காணாச் சிறகு அமைந்து விட்டது போல் இருந்தது. ஏனென்றால் கால்கள் நிலத்தில் பரவாததுபோலவே அவள் நடந்தாள். அவள் உடலெங்கும் வில்பொறிகள் வைத்ததுபோன்றிருந்தது அவள் நடை. ஏனெனில் அவள் அங்கங்கள் அவ்வளவு தொய்வுற்றுத் துள்ளிக்குதித்தாடின. அவள் மாறுதலையும் அதன் காரணத்தையும் அவள் தாய் இலட்சுமிக் குட்டியம்மையும் அம்மாமன் கோவிந்தன் குட்டிமேனவனும் நன்கு உணர்ந்தனர். இருவரும் அவள் மகிழ்ச்சியில் பங்கும் கொண்டனர். ஆனால் மாதவன் தாய் பார்வதியம்மை நிலைமையை முற்றிலும் உணர்ந்துகொள்ள வில்லை. மாதவனைப்பற்றி அவள் கவலைக்கொண்டாள். சென்னையில் வேலையானால் அவன் தன்னை விட்டுப்பிரிந்து வாழ நேருமே என்றும் குமுறுகிறாள் இந்துலேகா அவளுக்குப் புதிய ஊக்கம் ஊட்டினாள். சென்னைக்கே மகனுடன் போய் வாழலாம் என்றாள். அத்துடன் தானும் உடன் வரப் போவதாகக் கூறித்தன் மனநிலையைக் குறிப்பாகத் தெரிவித்தாள். பார்வதியம்மாள் கவலை குறைந்தது. ஆயினும் இலட்சுமிக் குட்டியம்மாளைப் போலவே அவளும் காரணவர் சூளுரைப்பற்றிப் பெரிதும் கவலை தெரிவித்தாள். கோவிந்தன் குட்டிமேனோன் அவர்கள் கவலைமீது பால்வார்த்தார். “பஞ்சுமேனோனே கூறிவிட்டார். இந்துலேகா தானாக விரும்பினால் அல்லாமல், சூரிநம்பூதிரிக்கு அவளை நான் மணஞ்செய்து கொடுக்கப் போவதில்லை என்று என்னிடமும் கேசவன் நம்பூதிரியிடமும் அவ்வுறுதி கூறியுள்ளார்” என்றார். ‘அப்படியானால், அவரை அழைப்பானேன்?’ என்று இந்துலேகாவின் தோழி அம்மு கேட்டாள். ‘அவரையும் அவர் கோலாகலத்தையும் கண்டால் இந்துலேகா அவரை விரும்பக்கூடும் என்றே அவர் மனப்பால் குடிக்கிறார்’ என்றார் அவர். இந்து கேட்டுக் கொல்லென்று சிரித்தாள். பார்வதியம்மாவுக்கிருந்த கவலையில் ஒரு பெரும் பகுதி அகன்றது. இலட்சுமிக்குட்டியம்மாவுக்கு மட்டும் மனக்கவலை முற்றிலும் தீரவில்லை. ஆனால் அது மகளைப்பற்றியது. “இந்துலேகா மாதவனுடன் போவது உறுதி. அப்பா இதை எதிர்க்க முடியாது. ஆனால், பாவம். அவர் சூளுரை கூறி விட்டாரே! அது என்னாவது?” என்று அவள் உள்ளூரக் குழப்பினாள். 11. ஊரார் வாயுரைகள் சூரிநம்பூதிரியின் பெருஞ்செல்வம் பற்றியும் ஆரவார வரவேற்புப் பற்றியுமே செம்பாழியிடமெங்கும் பேச்சாயிருந்தது. நேரடியாகப் பார்த்தவர்கள் பாராதவர்களிடம் அவர் ஆடையணி மணிகளின் பொன்மய ஒளியையும், அவற்றின் ஆயிரப்பதினாயிரக் கணக்கான விலை மதிப்பையும் புகழ்ந்து பேசினார்கள். கண்ணழி மூர்க்கில்லத்தைப்பற்றி அறிந்தவர்கள் அந்தக் குபேர மனையின் கோலாகலம்பற்றி வகைவகையான கதை கூறினார்கள். மனையின் முற்றங் காக்கும் ஆனைக்குச் சூரி நம்பூதிரிப்பாடு கட்டித்தங்கத்தால் சங்கிலிப்பணி செய்துள்ளாரென்றும், திருவனந்தபுரம் பொன்னு தம்புரான் செல்வ முழுவதும் அவர் கைப்பிரம்புகளை விலைக்கு வாங்கப்போதா என்றும் அவர்கள் வாயார வருணித்து மகிழ்ந்தார்கள். சூரிநம்பூதிரியைப் பற்றிய பேச்சு இந்துலேகாவைப் பற்றிய பல கருத்துரைகளுக்கும் இடம் தந்தது. இவ்வளவு பெருஞ் செல்வத்தைப் பெற இந்துலேகா செய்த புண்ணியம் பெரிதென்றனர் சிலர். அவள் அழகுக்கும் குணத்துக்கும் இவை ஏற்றவையே என்றனர், வேறு பலர். அவள் கல்விக்கும் உயர்பண்புக்கும் இது கூடப் பெரிதன்று என்றனர் மற்றும் சிலர். ஆனால் மிகச் சிலர்தான் இந்துலேகாவின் அழகுக்கும் வயதுக்கும் சூரிநம்பூதிரியின் உருவமும் வயதும் ஒவ்வாதவை என்று சுட்டிக்காட்டினார். ஆனால் இந்தக் கருத்துரை புயலில் பற்றவைக்கும் நெருப்புக்குச்சிபோல வெளிவருமுன் அணைக்கப்பட்டது. ‘இந்துலேகா விரும்பாமலோ இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் சூரிநம்பூதிரி இங்கே எழுந்தருளியிருக்கிறார்?’ என்ற பேச்சு அக்கருத்துரையை ஒரு கணத்தில் அடக்கிற்று. இந்துலேகா என்ன, எந்தப் பெண்ணும் இவ்வளவு பணத்தைப் பார்த்தபின் சும்மாவா இருக்க முடியும்? அவர்கள் ஆடாவிட்டாலும் அவர்கள் சதை ஆடாமலா போகும்?’ என்று தத்தம் சிறுமையால் உலகையே அளந்தனர் பலர்! இந்துலேகாவின் உள்ளத்தின் உறுதியிலும் மாதவன் தகுதியிலும் தனி ஒருவராக ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பெருந்தகை சங்கர சாஸ்திரிகள் என்பவர். அவர் மாதவன் நண்பர். இந்துலேகாவையும் ஓரளவு அறிந்தவர். மக்கள் பேசிய பலபடியான கருத்துக்களைக் கேட்டு அவர் மனம் குழம்பிற்று. ‘இந்துலேகாவும் மற்றச் சாதாரணப் பெண்களைப் போன்றவளா? பணப் பகட்டினாலும் நைப்பாசையாலும் மாதவனுக்கும் இந்தப் பணம் படைத்த கோமாளிக்கும் உள்ள வேற்றுமையை அவள் உணராமலா போய்விடுவாள்?’ இவை போன்ற பல கேள்விகள் அவரை அரித்துத் தின்றன. இந்து லேகாவையே நேரே பார்த்து உண்மையறிந்து கொள்ளலாம் என்று அவர் புறப்பட்டார். இந்துலேகா அவ்வளவு எளிதாக சூரிநம்பூதிரியிடம் பற்றுக்கொள்ள முடியுமா? சூரிநம்பூதிரி எவ்வளவு பணக்காரானா யிருந்தாலும், இந்துலேகா போன்ற உயர் பண்புடைய நங்கைக்குத் தகுந்தவனாயிருப்பானா? இந்த இரண்டு கவலைகளும் அப்பாவி பஞ்சுமேனவனைக் கூட இன்னும் வாட்டிக் கொண்டிருந்தது. கேசவன் நம்பூதிரியிடம் அவர் இக்கேள்விகளை மீண்டும் மீண்டும் பன்னிப் பன்னிக் கேட்கலானார். “நம்பூதிரி, நான் செய்த சபதம் இந்துலேகாவை மாதவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்பதுதான் சூரிநம்பூதிரிப் பாட்டுக்கோ வேறு எந்தப் ‘பாட்டுக்கோ’ கொடுப்பேன் என்றல்ல. ஆகவே நீங்கள் நம்புகிறபடி இந்து லேகா அவரைத்தானாக விரும்பி ஏற்காவிட்டால், அவள் விருப்பத்துக்கு மாறாக அவளை நான் அவருக்குச் சம்பந்தம் செய்துகொடுத்து விட மாட்டேன் இது நினைவிருக்கட்டும்” என்றார். கே.ந: அதுபற்றியெல்லாம் காரணவருக்குச் சிறிதும் கவலை வேண்டாம் என்று நான் முன்பே சொல்லி யிருக்கிறேனே! நம்பூதிரிப்பாடு இந்துலேகாவைப் போய்ப் பார்ப்பதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள். அவள் அவர் செலவமிடுக்கிலும் பெருமிதத் தோற்றத்திலும் முற்றிலும் ஈடுபட்டு அவரிடம் தானாக மகிழ்ந்துவிடுவாள். இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம். ப.மே: சரி, அப்படியானால் சரிதான். ஆனால் இன்னொன்று. இந்த நம்பூதிரி ஒரு கோமாளியாகவல்லவா இருக்கிறார். அவருக்கு ஒரு நிலையான அறிவு இருப்பதாகக் காணவில்லையே. இத்தகையவர் என் இந்துவை நன்றாக வைத்துக் காப்பாற்றுவாரா என்று எனக்குக் கவலையாக இருக்கிறது. கே.ந: நன்றாகச் சொன்னீர்கள், ஐயா! அவரளவு அறிவும் உறுதியும் படைத்தவரை நான் எங்கே போய்க் கண்டு பிடிப்பது? அவர் மனையில் போய்ப் பார்த்ததாலல்லவா தெரியும்? அதில் எவ்வளவு காரியங்களை அவர் தாமே இருந்து நேரே கவனிக்கிறார் தெரியுமா? மலைவாரம் விசாரிப்பு, ஆனை விசாரிப்பு, வாரம்பாட்டம் விசாரிப்பு, பத்திர விசாரிப்பு, கணக்கு விசாரிப்பு ஆகிய எத்தனை காரியங்களை அவர் தம் ஒரே சிறு தலையில் சுமக்க வேண்டியிருக்கிறது? சூரியல்லாவிட்டால், அதை வேறு எவராலும் ஒருவராக இருந்து பார்க்க முடியாது! ஒரு பத்து இருபதுபேர் இருந்துதான் பார்க்கமுடியும்! அப்படிப்பட்டவர் அறிவு, திறமை, உறுதி ஆகியவைபற்றி யாரும் துளிகூடச் சந்தேகப்பட வேண்டியதில்லை. ப.மே: அப்படியா செய்தி. ஆனால் சரிதான். நான் இதை எல்லாம் கண்டேனா, கேட்டேனா? குழந்தையின் எதிர்காலம் பற்றிய கவலையினால் தான் இதெல்லாம் கேட்டேன். செ.ந: அதற்கென்ன, சம்பந்தமென்றால் எல்லாம் கேட்க வேண்டியது தான். சூரிநம்பூதிரியின் மனையில் எவ்வளவோ வேலைகள் அவருக்காகக் காத்துக்கிடக்கின்றன. அவரைக்காண எத்தனையோ செல்வர்கள் தவங்கிடக்கின்றனர். அவர் இந்துலேகாவை இவ்வளவு தூரம் தேடி வந்ததே நம் காரியம் பாதி ஆனதுபோலத்தான். அடுத்த பாதி இனிதானே வெற்றி கரமாக நடைபெற்றுவிடும். அதுபற்றி ஒரு சிறிதும் சிந்தனை இல்லாமல் நீங்கள் சென்று சிறிது ஓய்புக் கொள்ளுங்கள். பின் சூரியநம்பூதிரியுடன் இந்துலேகாவைக் காணச்செல்லலாம். இத்துடன் பஞ்சுமேனவன் மன அமைதியடைந்து சாய்விருக்கையில் ஓய்வாகப்படுத்தார். கேசவன் நம்பூதிரியும் மற்றக் காரியங்களைப் பார்க்கச் சென்றார். இந்துலேகாவுக்கு அன்றைய நாள் களிப்பு மிக்கதாகவே இருந்தது. அவள் மாதவன் என்று வருவான். என்பதை நாள் எண்ணிக் கவனித்துக் கொண்டும், அவன் கடிதத்தை மறுபடியும் மறுபடியும் எடுத்தணைத்து வாசித்து மகிழ்ந்து கொண்டும் இருந்தாள். இதனிடையே குஞ்சக் குட்டியம்மாவால் அனுப்பப் பட்ட வேலைக்காரி பாறு (பார்வதி) இந்து லேகாவிடம் வந்தாள். நம்பூதிரி வந்ததனால் உள்ள மகிழ்ச்சியில் அவள் இந்துலேகாவைப் பாராட்டவே வந்திருந்தாள்; அவள் எதிர்பார்த் ததைவிட இந்துலேகா கிளர்ச்சியுடன் புள்ளிமான்போல துள்ளிக்குதிப்பது கண்டு அவள் முகமலர்ச்சியுற்றாள். ஆனால் இருவர் மனத்திலும் இரு வேறு எண்ணங்கள் இருந்தன. ‘அம்மாவுக்கு விரைவில் சம்பந்தம் ஆகப்போவது அறிந்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அம்மா நீடுழி வாழணும்!’ என்றாள் பாரு. அவர் கருத்தறியாமலே இந்துலேகாவும் அவளைத் தானும் வாழ்த்த விரும்பினாள். ‘உன் சம்மதக்காரர் வந்து நாளாயிற்றே பாறு! அவர் எப்போது வர இருக்கிறார் என்று கேட்டாள். பாறுவின் முகம் சற்று வாட்டமடைந்தது. இந்துலேகாவுக்கு அவளிடம் மிகவும் பரிவு ஏற்பட்டது. ‘ஏனம்மா, உனக்கு என்ன குறை எற்பட்டிருக்கிறது. சொல்! நான் தீர்க்கிறேன்’ என்றாள். ‘சம்பந்தக்காரரைப்பற்றி நான் கவலைப்படவில்லை, அம்மா! அவர் எனக்கு ஒன்றும் செய்து போடுவதில்லை. எனக்கிருக்கும் ஒரே நகையான தாலியில் இரண்டுமூன்று உருக்கள் உருவி விழுந்துவிட்டன. அதைச் செப்பனிட்டுத்தர நான் வேறு யாரிடம் கேட்கமுடியும்? பெரியம்மாவிடம்தான் கேட்டேன்! அவர்கள் என்னவோ என்னைக் கவனிக்காமல் இருக்கிறார்கள். உங்களுக்குச் சம்பந்தமாகிற சமயத்தில் நீங்கள் பெரியம்மாவிடம் சொல்லி, எனக்கு அதைச் செப்பம்செய்து கொடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றாள் பாறு. இந்துலேகாவின் இயற்கை நற்குணமும் அன்றைய மகிழ்ச்சியும் சேர்ந்து அவளை இயக்கின. அவள் பெட்டி திறந்து ஒரு புத்தம் புதிய தாலியையே எடுத்து அவள் கழுத்தில் கட்டினாள். ‘போ, பாறு? நீ ஒரு தாலிக்காக இப்படிக் கவலைப்படத் தேவை யில்லை. இன்னும் உனக்கு என்ன குறையிருந்தாலும் என்னிடம் வந்து கேளு. வீணே மனதில் வைத்துக் குறைப்பட்டுக் கொண்டிராதே’ என்றாள். பாறுவின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவள் இந்துவை முன்னிலும் பன்மடங்கு மனமார வாழ்த்தினாள். அத்துடன் குஞ்சுக்குட்டியம்மாவிடமும் மற்றத் தரவாட்டுக்குரியவர்களிடமும் சென்று சின்னம்மையின் இந்தத் தாராள சிந்தனையையும் இரக்க மனத்தையும் பற்றிப் புகழ்பாடினாள். ஆனால் அவள் நல்லெண்ணமே இந்துலேகாப்பற்றிய ஒரு தப்பெண்ணத்தையும் எங்கும் பரப்ப உதவிற்று. இந்துலேகாவின் மகிழ்ச்சிக்கு நம்பூதிரியின் வரவுதான் காரணம் என்ற எண்ணம் பாறுவுக்கு ஏற்பட்டிருந்தது போல, இதைக் கேட்டவர்கள் அனைவரிடத்திலுமே பரவிற்று. ஏனெனில் மாதவன் கடிதத்தினால் மகிழ்ச்சி ஏற்பட்டது என்பது எவருக்கும் தெரியாது. இந்துலேகா சூரிநம்பூதிரிப்பாட்டை ஏற்பது பற்றி அவநம்பிக்கை கொண்டவர்களுக்குக் கூடப் பாறுவின் செய்தி நம்பிக்கை யூட்டும் சான்றாக மாறிற்று. இந்துலேகாவைக் காண விரும்பி சங்கரசாஸ்திரிகள் அவள் மாடி ஏற முனைந்தார். ஆனால் ஏறுமுன் குஞ்சுக் குட்டியம்மா அவரைச் சந்தித்தாள். சங்கர சாஸ்திரி மாதவன் நண்பர் என்பதை அவள் அறிந்திருந்தாள். இந்துலேகாவை அவர் கண்டால், ஒரு வேளை அவள் மனத்தை அவர் மீண்டும் கலைத்துவிடக்கூடும் என்று அவள் நினைத்தாள். ஆகவே அவள் அவருடன் நயமாகப்பேசி அவர் போக்கைத் தடுத்தாள். “சாஸ்திரிகளே! இந்துலேகாவையா பார்க்க விரும்பு கிறீர்கள்?’ என்று அவள் கேட்டாள். ச.சா: ஆம். கு.அ: நீங்கள் இப்போது போக வேண்டாம் நாளைப் பார்த்துக கொள்ளலாம். இந்துலேகா இப்போது சூரிநம்பூதிரி வருகையைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள். அவர் வரும் நேரமும் ஆயிற்று. ச.சா: அப்படியா, நல்லது! அப்படியானால் நம்பூதிரிப் பாட்டின் சம்பந்தம் உறுதியாய் விட்டதா? கு.அ: ஆம். அதற்கென்ன சந்தேகம். நம்பூதிரி இவ்வளவு தூரம் தானே விரும்பி வந்தவர் சம்பந்தம் செய்யாமல் எப்படிப் போவார்? ச.சா: நான் நம்பூதிரி செய்தி கேட்கவில்லை. இந்துலேகா இதை மனமகிழ்ச்சியுடன் ஏற்றுவிட்டாளா என்றுதான் கேட்டேன். கு.அ: என்ன சாஸ்திரிகளே! பால் வேண்டாத பூனை, பழம் வேண்டாத குரங்கு உண்டா? இவ்வளவு குபேரச் செல்வன் தானாக வரும்போது எந்தப் பெண் தான் அவரை மறுப்பாள்? அதிலும் இந்து அறிவில்லாத பெண்ணல்ல. ஆனால் உங்களுக்கு அந்தச் சந்தேகமே சிறிதும் வேண்டாம். இப்போது தான் தனக்குக் கிடைத்த நல்வாய்ப்பின் மகிழ்ச்சியால், தாலி இல்லை என்ற பாறுவுக்கு ஒரு புதுத்தாலி எடுத்துக் கொடுத்திருக்கிறாள்! அவள் கால்கள் இப்போதெல்லாம் நிலத்திலேயே பரவாது. அதனால்தான் இப்போது நீங்கள் அவளைப் பார்க்க வேண்டாம் என்று சொன்னேன். நீங்கள் எவ்வளவு பழைய நண்பரானாலும் அவளுக்கு இப்போது உங்களிடம் கூடப் பேச நேரம் இராது! சங்கர சாஸ்திரிகள் நாடி நரம்புகளெல்லாம் இந்தச் செய்தி கேட்டுத் தளர்ந்து போய்விட்டது. தற்செயலாக சாஸ்திரிகள் சந்தித்த இடமெல்லாம் அவருக்கு இத்தகைய செய்திகளே காதில் விழுந்தன. மனமுடைந்தவராய் அவர் தன் வீடு சென்று சோர்ந்து படுத்தார். படுக்கையில்கூட அவருக்கு உறக்கம் வரவில்லை. மாதவன் நம்பிக்கைக்கு இப்படிப்பட்ட குந்தகம் வந்துவிட்டதே என்று அவர் நல்ல உள்ளம் பாகாய் உருகுகிறது. 12. கோமாளியின் முதல்நாள் கூத்து விருந்துண்டு முடிந்தபின் சூரிநம்பூதிரிப்பாடு காலையில் அணிந்த பொன் அங்கியையே திரும்பவும் அணிந்து பஞ்சுமேனவன் மாளிகைக்கு எழுந்தருளினான். பஞ்சுமேனவன் அவரை அங்கிருந்த உயர்பீடத்திலமர்த்தி அருகில் நின்று முகமனுரைகள் கூறினார். நம்பூதிரியின் மனம் முழுவதும் இந்துலேகாவைப் பார்ப்பதிலேயே இருந்தது. ஆகவே அவன் தானாகவே அப்nப்ச்செடுத்தான். ‘இந்துலேகாவின் மாளிகை இதனுடன் இணைந்துள்ளது தானே?’ என்று கேட்டான். ‘ஆம். இதன் தென்மேற்குப் பக்கமாகச் சென்றால் அதன் வாயிலைக் காணலாம்,’ என்று மட்டும் பஞ்சுமேனவன் மறுமொழிகூறி நிறுத்திவிட்டுப் பின் பேசாதிருந்தார். ‘அப்படியானால் அங்கே புறப்படாலாமே!’ என்று சூரி தானாக வலிந்து தன் விருப்பம் தெரிவித்தான். இச்சமயம் கேசவன்நம்பூதிரி ஓடிவந்தார்! சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள். நான்போய் நீங்கள் வருவதாகச் சொல்லி வருகிறேன்! என்றார். கேசவன் நம்பூதிரி வந்ததுகண்ட இந்துலேகா சற்றுப் பர பரப்புடன் எழுந்தாள். ‘என்ன அப்பா? என்ன செய்தி?” என்றாள். கே.ந: ஒன்றுமில்லை, இந்து! அவர் உன்னைக்காண வேண்டுமென்று விரும்புகிறார். பெரியப்பாவுடன் இங்கு வரக் காத்திருக்கிறார்கள். கூட்டிக் கொண்டு வரலாமா? இந்: விரும்புகிறார் என்றால் யார்? கே. ந: இது தெரியாமலா என்னிடம் கேட்கிறாய், இந்து! கண்ணழி மூர்க்கில்லத்து நம்பூதிரிப்பாடு தான் விரும்புகிறார், வரச் சொல்லட்டுமா? இந்: வரட்டுமே! கே.ந: நம்பூதிரிப் பாட்டுக்குரிய முறையில் அவரை வரவேற்று அளவளாவும்படி நான் கூற வந்தேன். இந்: அதெல்லாம் நீங்களும் பெரியப்பாவும் செய்து கொள்ளுங்கள். என்னறையில் வருபவரை நான் அறிந்த அளவிலேயே நான் வரவேற்க முடியும். ‘சரி. அவ்வளவுபோதும்’ என்று கூறிவிட்டுக் கேசவன் நம்பூதிரி வெளியேறினார். கேசவன் நம்பூதிரி வரும் சமயம் இந்துலேகா உண்மையில் இன்ப மயமான ஒரு வேலையில் ஈடுபட்டிருந்தாள் மாதவனுக்கு அவள் ஒரு காதற் கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள். அதை முடிப்பதற்குள் கேசவன் நம்பூதிரி வரவே, அவர் போனபின் எழுத எண்ணியிருந்தாள். ஆனால் கோமாளி சூரிநம்பூதிரிப்பாடு வருவதை அறிந்ததே, அவர் வரவும் பேச்சும் கண்டு அதைப் பற்றியும் எழுதி அனுப்ப எண்ணி, கடிதத்தை அரைகுறையாக முடிக்காமலே மேசைக்குள் வைத்துப் பூட்டினாள். கேசவன் நம்பூதிரி கீழே சென்றதும் சூரியிடம் தனியாகப் பேசினார். இந்துலேகா இங்கிலீஷ் படித்த பெண்ணாதலால் ஆசார வழக்கமுறைகள் அறியமாட்டாள். அதை எதிர் பார்க்காமலிருக்க வேண்டுகிறேன் என்று கூறினர். சூரிநம்பூதிரி பெருமிதத்துடன் ‘இப்போது அது தெரியாவிட்டால் கேடில்லை. இனிமேலே அதை எல்லாம் நான் ஒழுங்காகப் பயிற்றுவித்துக் கொள்வேன். கண்ணழிமூர்க்கில்லம் வரட்டும். எல்லாம் சரியாய்ப்போய் விடும்’ என்றான். பொன் குமிழிட்ட மிதியடியுடன் பொன் தலையணி, பொன் அங்கியுமிட்டுப் பொன்னணிமணிகள் சார்த்திய ஓர் உருவம் சடசடவென்று மாடிப்படியேறிவருவது கண்டு இந்துலேகாவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆயினும் அவள் முகத்தில் எந்தவித பாவமும் காட்டாமல் கதவருகிலுள்ள ஒரு பலகணிப் பக்கம் வெறிதே நின்றிருந்தாள். நேரே கூடத்தினுள் நுழைந்து சுற்றிப்பார்த்து சூரிநம்பூதிரிப்பாடு சற்று ஒதுக்குப் புறமாக நின்றிருந்த அந்த எழில் உருவைக் கண்டதே சிறிதுநேரம் மலைத்து நின்றுவிட்டான். இந்துலேகாவும் தானாக எதுவும் பேசாமல் வேடிக்கைப் பார்க்கிறபாவனையுடனேயே நின்றிருந்தாள். ‘ஆகா, அழகு பிம்பம்! உயிருள்ள பொற்சிலை! மனித உருக்கொண்டே தேவாமிர்தம்!’ ‘என் பாக்கியமே பாக்கியம், காணக்கொடுத்துவைத்த நாள் இது’-என்று பல மொழிகளை மந்திரம் ஓதுவதுபோல அவன் நா முணு முணுத்துக் கொண்டது. சூரியின் பின்னால் வந்த கேசவன் நம்பூதிரி ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து போட்டு சூரியை அதில் அமரும்படி வேண்டினார். அவன் அமர்ந்துகொண்டே இந்துலேகாவையும் அமரும்படி சொன்னான். ‘பரவாயில்லை, நீங்கள் அமருங்கள்’ என்று கூறி அவள் நின்று கொண்டிருந்தாள். கேசவன் நம்பூதிரி ஏதோ வேலையாகச் சந்தித்துவிட்டாலும், அவளிடம் என்னபேசுவதென்று சிறிதுநேரம் சூரிக்கு ஒன்றும் தோன்றவில்லை. ‘நான் வரும்போது கீழே நீ இறங்கி வந்து பார்த்திருந்தாயோ! பல பெண்களிடையே இந்து முகத்தைப் பார்த்ததாக நினைவு’ என்று தொடங்கினான் நம்பூதிரி. இந்: இல்லை, நான் கீழே இறங்கியதேயில்லை. சூ.ந: இறங்கி வரவேயில்லையா? அது எதனால்? இந்: ஏன் இறங்கவேண்டும்? சூ.ந: நான் வருவது தெரியாதா? இந்: தெரியாதே! எப்படித்தெரியும்! சூ.ந: என் ஊர்வலத்தின் தாளமும் மேளமும் கேட்டு ஊர்முழுதும் வந்து கூடியிருந்தும், உனக்குமட்டும் எப்படித் தெரியாமல் போய்விட்டது! இந்: தாளமும் மேளமும் கேட்டால் குழந்தைகள், வேலையற்றதுகள் தானே சென்று பார்க்கக்கூடும்? இதற்குமேல் சூரிக்குப்பேச்சு ஓடவில்லை. எடுத்த பேச்சைவிட்டு விட்டுப் புதிதாக அவன் தொடங்கினான். சூ.ந: இந்துலேகாவின் அழகைப்பற்றிக் கேட்டுக் கேட்டு எனக்குச் சிலநாளாய் உறக்கம் கெட்டுப்போய் விட்டது. மனைக்காரியங்களில் கூட மனம் செல்லவில்லை. இந்: இந்துலேகா அப்படிப்பட்ட இராட்சசியல்லவே. நல்ல காரியங்களை எல்லாம் கெடுக்க! சூ.ந: கேட்டதைவிட அதிகம். எத்தனையோ அதிகம், இப்போது பார்த்ததில்! இந்: பாழாய்ப்போச்சு! அப்படியானால் கேட்காமலும் பார்க்காமலுமே யல்லவா இருந்திருக்கவேண்டும்! சூ.ந: நீ பேச்சிலும் மிகப் பொல்லாதவளாயிருக்கிறாய். உன்னுடன் பேசி வெல்லமுடியாது. இதெல்லாம் ‘இங்கிலீஸ்’ படித்ததனால் வந்த கேடு. இந்: கெட்டது, பொல்லாதது என்று தெரிந்தும் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து பார்க்க வர வேண்டும்! நம்பூதிரியின் முகம் அசடு தட்டிற்று. ஆயினும் சமாளித்துக் கொண்டார். ‘இந்துலேகாவுக்கு சமஸ்கிருத காவியங்களிலும் நல்ல விற்பத்தி உண்டென்று கேள்வி. அது உண்மை தானா!’ என்று புதுப்பேச்சுத் தொடங்கினார். இந்: ஏதோ சிறிது வாசித்திருக்கலாம். சூ.ந: நான் ஒரு சுலோகம் சொல்லுகிறேன். அதற்குப் பொருள்கூறு பார்க்கலாம். இந்: ஏதோ தெரிந்தால் சொல்லுகிறேன். சூ.ந: தெரியாவிட்டாலும் நான் சொல்லித்தருகிறேன். இந்: (சிரித்துக்கொண்டு) ஆகா, அப்படியே! சுலோகம் எதுவோ? சூரிநம்பூதிரிக்கு உண்மையில் ஒரு சுலோகம்கூட முழுமையாக நினைவுக்கு வரவில்லை. பத்துக்கணநேரம் திரும்பத் திரும்பமுயன்று இரண்டடியைத் தப்பும் தவறுமா உளறிக் கொட்டினான். அதன்பின் அவன் நினைவு ஓடவில்லை. ‘செறுசேரிக்கு நினைவு இருக்கும் செறுசேரியைப் பார்க்கிறேன்’ என்று எழுந்தார். ‘வேண்டாம். சுலோகம் இல்லாவிட்டால் கேடில்லை, சிரமப்பட வேண்டாம்! என்றாள் இந்துலேகா. ‘இல்லை. இந்துலேகாவிடம் முதல் முதல் சொன்ன சுலோகம் வெற்றிகரமாக முடியாமலிருக்கக் கூடாது. இதோ வருகிறேன்’ என்று கூறி அவர் கீழேநின்ற கேசவன் நம்பூதிரியைக் கைதட்டிக் கூப்பிட்டார். அவர் வந்தபின் அவரிடம் முதல்பதம் கூறி, அந்தச் சுலோகத்தைச் செறுசேரியிடம் சென்று எழுதி வாங்கி வரச் சொன்னார். கேசவன் நம்பூதிரி கீழே சென்று செறுசேரியிடம் செய்தி சொன்னார். ஆனால் முதல்பதம் அதற்குள் அவருக்கு மறந்து போய்விட்டது. திரும்பி வந்தார். முதலிரண்டடியையும் எழுதிக் கொண்டு சென்றார். செறுசேரி சுலோகம் முழுவதும் எழுதிக் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு வந்தார். இதற்குள் இந்துலேகா, தானே சுலோகம் முழுவதும் சொல்லிக் காட்டினாள். இதன்பின் இந்துலேகா நீண்டநேரம் இருக்கமுடியவில்லை. ‘எனக்குக் கோயிலுக்குப்போக நேரமாகிறது’ என்று கேசவன்நம்பூதிரியிடம் சொல்லி விட்டு அவள் கீழே இறங்கிச் சென்று விட்டாள். சூரி நம்பூதிரிப்பாடு இதனால் ஏமாற்றமடைந்து விழித்தார். எங்கே அவர் கோபப்பட்டு விடுவாரோ என்று கேசவன் நம்பூதிரி நடுங்கினார். ‘இந்த இங்கிலீஷ் படித்த பெண்களே இப்படித்தான். நேரத்திட்டம் வைத்துக்கொண்டு அதன்படி நடக்கிறார்கள். ஆனால் அவள் திரும்பி வந்துவிடுவாள். ஒன்பதுமணிக்குப் பாட்டும் வீணை வாசிப்பும் நடக்கும். அப்போதுவந்து கேட்கலாம். இப்போது போவோம்’ என்றார். சூரிநம்பூதிரியும் ஆறுதலடைந்து அவருடன் இறங்கித் தரவாட்டு மாளிகை சென்றான். இந்துலேகா கீழே இறங்கிப்போன சமயம் செறுசேரி கீழ்த்தளத்தில் இருப்பது கண்டாள். “நீங்களும் கூடவந்திருப்பது கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். ஏன் நம்பூதிரிப் பாட்டுடன் மேலே வரவில்லை!” என்று கேட்டாள். செ.ந: நானாக வந்திருந்தால் கட்டாயம் முதலிலேயே வந்து பார்த்திருப்பேன். அவருடன் அவர் ஆளாக வல்லவா வந்திருக்கிறேன். அவர் வரும்போது கூப்பிடவில்லை. பின்னால் வரலாம் என்று இருந்தேன். இப்போது எதிர்பாராது கண்டதும் மிகவும் மகிழ்ச்சி. அத்துடன் மாதவனுக்கு நல்ல பணி கிடைத்தது என்று கேட்டேன். அதற்கான என் பாராட்டு. இந்: நன்றி. மாதவன் பேர் கூறியவுடன் இந்துலேகாவின் முகத்தில் மகிழ்ச்சிக் குறி தோன்றிற்று. ஆனால் நாணமும் கூடவே வந்து புகுந்தது. செ.ந: மாதவன் இங்கே வருவது எப்போதோ? இந்: ஒரு வாரத்தில் வருவதாக எழுதியிருக்கிறார். இரண் டொரு நாளில் வரலாம். ஆனால் விரைவில் திரும்புவதாகவே ஏற்பாடு திரும்பும் போது.... அவள் தயக்கத்தில் விட்டதைச் செறுசேரி நிறைவு செய்தார். செ.ந: ஆம், திரும்பும்போது இந்துலேகாவும் கூடவே போகக்கூடும். அதுதானே! இந்: ஆம். அரை குறையாகச் சொல்வதை எல்லாம் பூர்த்தி செய்வதற்கு நீங்கள் இருப்பது எவ்வளவோ வாய்ப்பாகத்தான் இருக்கிறது! இருவரும் சிரித்தனர், சூரிநம்பூதிரிக்காக சுலோகங்கள் பூர்த்தி செய்ததை இந்துலேகா இவ்வளவு நயமாகக் கிண்டல் செய்வாள் என்று செறுசேரி எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த நயமே அவள் சூரியைப் போன்ற கோமாளிகளுக்கு எவ்வளவு எட்டா உயர்வுடையவள் என்பதைக் காட்டிற்று. ‘மாதவனிடம் நான் நலம் கோரியதாகக் கூற வேண்டு கிறேன். இந்து மாதவன் புதுமண விழாவில் கலந்து மகிழ எண்ணுகிறேன். அது முடியா விட்டாலுங்கூட, இப்போதே உங்கள் புதுவாழ்வுக்கு என் வாழ்த்துக்கள். நான் விரைவில் தங்களைக் காணுகிறேன்! என்று கூறிச் செறுசேரி விடைபெற்றுக் கொண்டார். இந்துலேகா கோவிலுக்குச் சென்றாள். மீண்டும் தனியே சென்றிருந்து செறுசேரியை சூரிநம்பூதிரியும் கேசவன் நம்பூதிரியும் இறங்கி வரும்போது கண்டனர். இந்துலேகா தன்னை மதியாததனால் சூரி முதலில் மிகவும் மன வருத்தம் அடைந்தாலும், ஒன்பது மணிக்கு அவளை மீண்டும் சந்திக்க எண்ணியதால் எளிதில் கிளர்ச்சி யடைந்திருந்தான். எனவே வழக்கமான தொனியில் பேசத் தொடங்கினான். ‘ஆகா, இந்துலேகாவின் அழகே அழகு. அவளைப் போல ஓர் பெண்ணழகியை நான் இதற்கு முன்னும் கண்டதில்லை. இனிமேலும் காணப்போவதில்லை. இது உறுதி! என்றான் அவன். கே.ந: ஏன்? இந்துலேகாவும் தான் சூரிநம்பூதிரியை ஒத்த ஆணழனை இதற்கு முன்னும் கண்டிருக்க மாட்டாள். இனிமேலும் காணப் போவதில்லை இது உறுதி. செறுசேரியின் புகழ்ச்சி இத்தடவை சூரிநம்பூதிரிப்பாட்டின் செவியில் ஏறவில்லை. அவர் கவனம் வேறு ஒரு திசையில் பலமாக ஈர்க்கப்பட்டிருந்தது. அப்பக்கமாகச் சென்று கொண்டிருந்த ஒரு நடு வயதுடைய பெண்மணியிடம் அவர் கண்கள் ஈடுபட்டிருந்தன. கேசவன் நம்பூதிரியின் விலாவைக் குத்திய வண்ணம் அவரிடம் அவள் பற்றிக் கேட்டார். ‘இந்தப் பெண் யார்?’ கேசவன் நம்பூதிரி இக்கேள்வியால் முற்றிலும் திடுக்கிட்டுப் போனார். ஏனென்றால் அப்பெண்மணி வேறுயாருமல்ல, அவர் மனைவி, இந்து லேகாவின் தாய் இலட்சுமிக்குட்டி. “காமுகனான இந்தப் பாவியை மகளுக்கு மாப்பிள்ளையாக வர வழைத்தேனே! அவன் என் மனைவியிடமே நோட்டம் செலுத்துகிறானே?” என்று அருவருப்புக் கொண்டார் கேசவன் நம்பூதிரி, ஆனால், அதேசமயம் அவருக்கு உள்ளூர அச்சமும், நடுக்கமும் ஏற்பட்டன. கேசவன் நம்பூதிரி தன்னம்பிக்கையற்றவர் உலகமறியாதவராதலால், தன் மனைவியின் உயர் பண்புகளையும் காணாதவர். சூரிநம்பூதிரியைப் போன்றவர் பணம் உண்மை யிலேயே எந்தப் பெண்ணையும் விலைக்கு வாங்கத்தக்கது என்று நம்பியவர். கேசவன் நம்பூதிரியின் குழப்பமும் அச்சமும் செறுசேரிக்கு வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவுமே இருந்தன. ‘இந்தக் கோமாளியை இந்துலேகாவுக்காக வரவழைத்த இந்த ஏமாளி அதற்காகச் சிறிது தண்டனை யடையட்டும்’ என்று அவர் தமக்குள்ளாகக் கூறிக் கொண்டார். கணவன் கண்முன்னாலேயே மனைவியின் அழகைப் புகழ்வதிலும் அவளைக் கூர்ந்து நோக்குவதிலும் சூரிக்குச் சிறிதுகூட நாணமோ, வெட்கமோ ஏற்படவில்லை. அந்த மாதுதான் சம்பந்தம் செய்யவந்த நங்கையின் தாய் என்பதைக்கூட அவன் எண்ணிப் பார்க்கவில்லை. இந்த நடவடிக்கைகளைக் கண்டிக்கவும் மாட்டாமல், சமாளிக்கவும் மாட்டாமல் அப்பாவி கேசவன் நம்பூதிரி அனலில் வாட்டப்பட்ட வாழைத்தண்டு போலப் புழுங்கினார். இலட்சுமிக்குட்டி பாடிக் கேட்க வேண்டுமென்று சூரி அடம்பிடித்தான். கேசவன் நம்பூதிரி வேறுவழியின்றி மனைவியைப் பாடச் சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால் இலட்சுமிக்குட்டி திறமையாக நிலைமையைச் சமாளித்தாள். ‘இந்துலேகா பாடும் சமயம் நானும் கூட இருப்பேன். பாடிக் கேட்கலாம்’ என்று கூறிச் சென்றாள். சிறிதுநேரம் கழித்து இந்துலேகாவின் தோழி அம்மு அப்பக்கம் வந்தாள். அவள் அழகிலும் அது போலவே ஈடுபட்டு, சூரிநம்பூதிரி இந்துலேகாவையும் இலட்சுமிக்குட்டியம்மையையும் முற்றிலும் மறந்தார். இந்துலேகாவுடன் பழகிய அம்மு, சூரியைப் போன்ற கோமாளிகளை எப்படி நடத்தவேண்டுமென்பதை நன்கு அறிந்திருந்தாள். அவரை எட்டவைத்துப் பேசிவிட்டு நழுவிச் சென்றாள். ஆழம் தெரியாமல் காலையிட்டுக் கொண்டோமே என்று கேசவன் நம்பூதிரி தனக்குள்ளாக மிகவும் வருத்தமடைந்தார். ஆனாலும் பஞ்சுமேனவன் முன்பு இதை அவராகக் காட்டிக் கொள்ள முடியவில்லை. வழக்கம்போல நம்பிக்கையூட்டும் போலி உறுதிக் குரலிலே பேசிவந்தார். ஆனால் பஞ்சுமேனவனுக்குச் சூரிநம்பூதிரிப்பாடடிடம் முழுதும் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது. இந்துலேகா அவனை விரும்பக்கூடும் என்பதற்கான அடையாளம் எதையும் அவர் காணவில்லை. அத்துடன் அவர் முன்னிலை யிலேயே கோமாளியாகிய சூரி, இலட்சுமிக்குட்டி, இந்துலேகா ஆகிய இருவர் அழகையும் ஒரே தொனியில் பாராட்டிப் பேசியிருந்தான். தாய் - பிள்ளை, மணமானமாது - கன்னி, குடும்பப் பெண் - பணிப்பெண் ஆகியவர்களே ஒரே தொனியில் பேசும் இந்தக் கீழினக் கோமாளியை நம்பூதிரிக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதற்காகவோ, குபேரச் செல்வன் என்பதற்காகவோ மதிக்க அவர் ஒரு சிறிதும் விரும்பவில்லை. மனத்தில் இக்கருத்துக்களை அடக்கியவராய் அவர் கேசவன் நம்பூதிரியிடம் பேசினார். “என்ன நம்பூதிரி! நம்பூதிரிப் பாட்டை இந்துலேகாவுக்குப் பிடித்திருக் கிறதா?’ என்று கேட்டார். கே.ந: முடிவாகத் தெரியவில்லை. பிடித்தமாகி விடக் கூடுமென்றே நினைக்கிறேன். ப.ம: இனி ஆகக்கூடும், போகக் கூடும் என்பது இருக்கட்டும். ஆகும் போது போகும்போது பார்த்துக் கொள்ளலாம். ஆன செய்தி கூறுங்கள். பிடித்தமாய் விட்டதா? கே.ந: ஆனதாகக் கூற முடியவில்லை, இதுவரை! ப.மே: சரி, ஆகும் என்று கருதுவதற்குத்தான் ஏதாவது அறிகுறி இருக்கிறதா? கே.ந: ஏன் இல்லை. அவர் குபேர சம்பத்தை நினைக்க வேண்டாமா? ப.மே: இந்துலேகா சம்பத்தை மதிக்கும் பெண் என்றா நினைக்கிறீர்? அப்படி மதிக்கும் பெண்கள் கூட இந்துலேகாவுக்கும் இலட்சுமிக்குட்டிக்கும் வேற்றுமை தெரியாத இந்தக் கயவனை எவ்வளவு பணமிருந்தாலும் மதிப்பார்களா? கே.ந: பெரிய இடத்திலுள்ளவர்கள் எதுவும் சொல்லலாம். உலகம் அவர்கள் சொல்வதைப் பொறுத்துக் கொள்ளத்தானே செய்கிறது? ப.ம: எதுவும் சொன்னால், எதுவும் கேட்கவும் வேண்டிவரும். எதற்கும் ஒரு வரம்பு உண்டு. பேசுவது காரணவர் என்று கேசவன் நம்பூதிரியால் நம்ப முடியவில்லை. அவர் அதிகாரம் செய்ததுண்டு. முன் கோபத்தில் சீறியதுண்டு. ஆனால் இவ்வளவு அடங்கிய கோபத்தையோ, கண்டிப்பையோ அவரிடம் பூவள்ளித் தரவாடு இதற்குமுன் கண்டதில்லை. சூரிநம்பூதிரிப் பாட்டைக் கண்ட பின், செல்வத்தின் மீது அவருக்கிருந்த மதிப்பு ஒருபடி குறைந்திருந்தது. இயல்பாக அவர் வாழ்வில் குஞ்சுக்குட்டி மேனவன், இந்துலேகா ஆகியவர்கள் பண்பாட்டில் காட்டியிருந்த உள்ளார்ந்த ஈடுபாடு ஒருபடி முளைப்பாக வளர்ந்தது. அவர் மாறுபாட்டையோ அதன் இயல்பையோ அறியாமலே, கேசவன் நம்பூதிரி பேச்சை நிறுத்தி விடை பெற்றுச் செல்ல விரைந்தார். ‘எப்படி நடக்கும் என்று நாளைப் பார்ப்போம் இன்று நேரமாயிற்று. நான் உறங்கச் செல்கிறேன் என்று கூறி அகன்றார். ‘இந்தக் காரியம் நடக்கும் என்று எனக்கு என்னவோ சிறிதும் நம்பிக்கை இல்லை’ என்று எரிந்து விழுந்தவராய்ப் பஞ்சுமேனவனும் வேறு திசையில் சென்றாh. மணி ஒன்பதை அணுகுந்தோறும் சூரிநம்பூதிரியின் உள்ளம் இலட்சுமிக் குட்டியம்மையையும் அம்முவையும் மறந்து மீண்டும் இந்துலேகாவை மணம் செய்யத் தொடங்கிற்று. இந்துலேகாவுக்கு ஒரு காதல் சீட்டு அனுப்ப வேண்டுமென்று அந்தத் திருவுள்ளத்துக்கு எப்படியோ எண்ணமுண்டாயிற்று. அவன் உடனே கோவிந்தனை அழைத்தான். ‘கோவிந்தா, செறுசேரியிடம் ஒரு காரியமாகச் செல்ல வேண்டும். அரம்பையைப் பற்றிய சமஸ்கிருதத்தில் ஒரு சுலோகம் உண்டு. அதை ஒரு ஓலையில் எழுதி வாங்கி வா’ என்றார். சிறிது நேரத்திற்குள் கோவிந்தன் ஓலைகளுடன் வந்தான். ‘கோவிந்தா, இந்த ஓலையை நீ எப்படியாவது இந்துலேகாவைக் கண்டு அவளிடம் கொடுக்க வேண்டும். சூரி நம்பூதிரிப்பாடு கொடுத்தனுப் பியதென்று சொல்ல வேண்டும் தெரிகிறதா?’ என்றான். கோவிந்தன் அப்பணியைத் தலைமேற்கொண்டு சென்றான். இந்துலேகா கோவிலிலிருந்து திரும்பி வந்ததே கோவிந்தன் அவளை அணுகினான். ‘சூரிநம்பூதிரிப்பாடு தங்களிடம் இந்தச் சீட்டைத் தரும்படி கூறினார்’ என்று கூறிச் சீட்டை நீட்டினான். இந்துலேகா அவனை நிமிர்ந்து சீற்றத்துடன் பார்த்தாள். ‘நீ யார்?’ என்று கேட்டாள். ‘நான் சூரிநம்பூதிரிப்பாட்டின் ஆள் அவர் அடைப்பக்காரன் கோவிந்தன்’ என்றான். ‘எனக்குச் சீட்டு அனுப்பும் உரிமை அவருக்குக் கிடையாது. இதை அவரிடமே கொண்டு கொடு. அதைப்பெற மறத்துவிட்டேன் என்று சொல்லு!’ என்று கூறிவிட்டு அவள் அறைக்குள் சென்று விட்டாள். சூரிநம்பூதிரியின் தூதனாகச் சென்று கோவிந்தன் எத்தனையோ காரியங்களை வெற்றிகரமாக நடத்தியிருந்தான். ஆனால் இத்தகைய கண்டிப்பான வீறமைதியை இதுவரை வேறு யாரிடமும் அவன் கண்டதில்லை. அரசி பேரரசிகளுக்குரிய வீறமைதியை இந்துலேகாவிடமே கண்டான். சீட்டை அவன் அரை வேட்டியில் சொருகிக் கொண்டு பேசாது திரும்பினான். அவனாகச் சூரிநம்பூதிரியிடம் எதுவும் கூறவில்லை. ஆனால் பலருடன் பேசிக்கொண்டிருக்கும் சமயம், சூரி சட்டென அவன் பக்கம் திரும்பினான். ‘என்னடா, கோவிந்தா! இந்துலேகாவுக்கு நான் அனுப்பிய சீட்டைக் கொண்டு கொடுத்து விட்டாயா?’ என்று கேட்டான். கோவிந்தன் என்ன சொல்வதென்று தெரியாமல் உள்ளூரக் குழம்பினான். ஆனால் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ள வில்லை. சட்டெனக் கொடுத்து விட்டேன் என்று கூறினான். ஆனால் தலைவனிடம் முழுதும் உண்மையை மறைத்துவிட அவன் மனச்சான்று இடம் தரவில்லை. அவன் தனியாய் இருக்கும் சமயம் அவனை அணுகினான். ‘உங்களிடம் தனியாக ஒன்று கூற விரும்புகிறேன். மன்னிக்க வேண்டும். சீட்டைக் கொடுத்து விடேன் என்று கூறினேன். அது பொய். எல்லார் முன்னிலையிலும் நடந்ததை அப்படியே கூற மனம் வரவில்லை. இந்துலேகா அதை வாங்க மறத்துவிட்டாள். அது மட்டுமல்ல. அதை அனுப்பும் உரிமை உங்களுக்கு இல்லை என்று கூடக் கூறிவிட்டாள்” என்றான். சூரிக்கு முகம் சற்றுக் கறுத்தது. ஆனால் அடுத்த கணம் அவன் முகமலர்ச்சியடைந்தான். “இந்துலேகா கிடக்கிறாள். அகம்பாவக்காரி எனக்கு உன்னைப்போல ஒரு உண்மையும் காரியத் திறமையும் உள்ள வேலையாள கிடைத்ததே பெரிது. எல்லார் முன்னிலையிலும் என்மானத்தைக் காப்பாற்றி அப்படிச் சொன்னது தான் சரி!” என்றான். கோவிந்தனுக்கு வந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை மாதக் கணக்காகத் தன் தலைவன் உள்ளம் கவர்ந்த இந்துலேகாவையும் ஒப்பிட்டுத் தன் தொடர்பின் உயர்வைத் தலைவன் பாராட்டியது வேலையாள் - தலைவன் என்ற முறையில் அவர்கள் தொடர்பில் ஒரு புது முன்னேற்றப் படியாகவே அவருக்குத் தோன்றிற்று. தலைவன் உலகுக்கு எவ்வளவு கோமாளியாய் இருந்தாலும், கோவிந்தனைப் பொறுத்த அளவில் அவன் தலைவனிடம் ஏற்கெனவே கொண்டிருந்த உறுதி மேலும் வலிமையடைந்தது. கோவிந்தன் பணித்திறமையை அன்றே சூரி நம்பூதிரி இன்னும் பல துறைகளில் காண நேர்ந்தது. இலட்சுமிக்குட்டியம்மாவிடம் சூரிநம்பூதிரி நெருங்கி உறவாடிய சமயம், அவன் தன் வெள்ளி வெற்றிலைச் செல்லத்தை அவளிடம் காட்டி யிருந்தான். அதை அவன் புகழ்ந்து பேசியபோது, அவளும் அதன் சிறப்பை ஏற்றாள். அதை நீயே எடுத்துக்கொள்’ என்று தன் மயக்கத்திடையே கூறினான். ஆனால் அவளோ ‘இவ்வளவு விலையேறிய பொருள் என் தகுதிக்கு ஒத்துவராது’ என்று நயமாகக் கூறினாள். சூரிநம்பூதிரி தன் இழிப்பண்புளுக்கேற்ப தீயவழிகளில் பணத்தை வாரி இறைப்பவனானாலும், உள்ளூர அவனைவிடக் கஞ்சனாக எவரையும் பார்க்கமுடியாது. தன் வலையில் விழாத இலட்சுமிக்குட்டியிடம் தன் மறதியினால் அந்தச் செல்வம் அங்கேயே கிடக்க நேர்ந்து விட்டதோ என்று அவன் ஐயுற்றான். ஏனென்றால் வெளியேவந்தபோது அவன் அந்தச் செல்வத்தைக் காணவில்லை அதுபற்றிக் கோவிந்தனிடம் கேட்டான். இவ்வளவுநாள் உங்கள் சோற்றைத்தின்று, உங்கள் பொருளை உங்களுக்குப் பயன்படாத இடத்தில் தவற விடுவேனோ, ஆண்டே! அதை அந்தக் கணமே எடுத்து என் பையிலிட்டுக் கொண்டேன் என்று எடுத்துக் காட்டினான். தகுதியற்ற தலைவனிடம் தகுதிமிக்க இந்த வேலையாள் கொண்ட பற்றுதல் இத்துடன் நிற்கவில்லை. இந்துலேகா நடந்து கொண்ட வகையைப் பார்த்தபின் அவனுக்குச் சூரிநம்பூதிரி நாடிவந்த காரியத்தில் தோல்வி மட்டுமன்றி, அவமதிப்பும் மனத்தாங்கலுக்கும் இடம் ஏற்பட்டுவிடுமோ... என்று அஞ்சினான். அவ்வாறு ஏற்பட்டால் அதைச் சமாளித்துச் சூரிநம்பூதிரிக்கு ஆறுதலும் தேறுதலும் தரும் வழிவகைகளை அவன் தானாகவே ஆராய்ந்து திட்டமிட்டுச் செயலாற்றிக் கொண்டிருந்தான். மணி ஒன்பதடிப்பதற்கு முன்பே இந்துலேகாவின் பாட்டுக்கச்சேரி கேட்க ஒருங்கியவராய் சூரியநம்பூதிரி பூவள்ளித்தரவாட்டின் ‘நாலுகட்டில்’ வந்து சேர்ந்தார். அங்கே ஒரேஒரு நாற்காலி இட்டிருந்தது. மற்றவை விசிப்பலகைகள். ‘இந்துலேகா கீழே பாயிலிருந்து வாசிக்கமாட்டாள். நாற்காலியி லிருந்துதான் வாசிப்பாள்’ என்று கேசவன் நம்பூதிரி விளக்கம் தந்தார். ‘இந்த இங்கிலீஷ் படிப்பு என்னென்ன வகையிலெல்லாம் நம் கேரளத்தின் பழைய ஆசாரங்களைக் கெடுக்கிறது சீ! இந்தப் படிப்பை இனி நம் பெண்களுக்கு அளிக்கக்கூடாது!’ என்று சூரிநம்பூதிரிப்பாடு அலுத்துக் கொண்டார். ஆனால் அன்று அவரும் கேசவன் நம்பூதிரியும் அடையவேண்டிய ஏமாறறங்கள் பலவாய் இருந்தன. ‘இந்துலேகா வழக்கமாக ஒன்பது மணிக்குப் பெரும்பாலும் பாடுவதுண்டு. மாடியில் ஏற்பட்ட மனமுறிவை மாற்றவே அவர் சூரியிடம் இதைக்கூறியிருந்தார். ஆனால் சூரி அதைக் கச்சேரி என்று கருதிக்கொண்டான். கேசவன் நம்பூதிரியும் அதை மறுக்கும் துணிவில்லாமல் தலையாட்டியிருந்தார். எப்படியாவது இந்து லேகாவிடம் கெஞ்சி வருவித்து விடலாம் என்றும், நாலுகட்டுக்கு வர, அவள் மறுத்தால் கூட மாடியிலிருந்த படியே பாடுவிக்கலாம் என்றும் அவர் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தார். ஆனால் எட்டடரை மணிக்கு அவளை பார்க்கச் சென்ற பொழுது, அவள் அதற்குள் வழக்கத்துக்கு மாறாக கதவு தாழிட்டு, விளக் கணைத்து உறங்கிவிட்டது கண்டு திகைப்புறார். ‘எங்கே, கேசவன்நம்பூதிரி! இந்துலேகா வரக்காணோம் போய் அழைத்துவாரும்’ என்று உத்தரவிட்டான் சூரி. கேசவன்நம்பூதிரி இப்போது தன் மனைவியின் உதவியை நாடினார். தன் கோழைத்தனத்தால் ஏற்பட்ட இக்கட்டை எடுத்துக்கூறினார். ஆனால் இந்துலேகாவைச் சென்று தட்டி எழுப்ப முடியாதென்று அவளும் மறுத்து விட்டாள். கேசவன்நம்பூதிரி பஞ்சுமேவனை அடுத்து நிலைமையை விளக்கினார். இந்துலேகாவின் மனமறிந்து நடப்பதன்றி வேறெ திலும் தாம் தலையிட முடியாதென்று அவரும் மறுத்துவிட்டார். தற்காலிகமாகவாவது தன் முழுத்தோல்வியை இனி வழுவறுத்துச் சூரிநம்பூதிரியிடம் கூறிவிட வேண்டுமென்று அவர் துணிந்தார். ஆனால் அப்போதும் அவர்வேலை எளிதாயில்லை. ‘இந்துலேகா தலைவலி காரணமாக எட்டரை மணிக்கே கதவடைத்து உறங்கிவிட்டாள். ஆகவே வர மாட்டாள்’ என்று அவர் சூரியிடம் தெரிவித்தார். சூ.ந: அப்படியானால், மாளிகையில் இருந்ததே பாடட்டுமே! நாம் அங்கே போய்க் கேட்கலாம்! கே.ந: அவளுக்குத்தான் உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று சொன்னேனே! கதவடைத்தாய் விட்டது. நன்றாக உறங்குகிறாள். சூ.ந: கதவைத் தட்டி இன்னும் ஒருமுறை கேட்பது தானே? கே.ந: கேட்டாய்விட்டது. உறங்குகிறேன். கதவு திறக்க முடியாது என்று கூறிவிட்டாள். இச்சமயம் செறுசேரி தலையிட்டார். “நாம்தான் நாளையும் இங்கேதானே இருக்கிறோம். ஏதோ சிறு தலைவலியாகத் தான் இருக்கும். நாளை சாப்பாட்டுக்கு மேல் பாடச் சொல்லித் தாராளமாய் கேட்கலாம். இப்போது நாமும் நேரத்தில் தூங்கினால் காலையில் நேரத்தில் எழுந்திருக்கலாமே!” என்றார். வேறு வழியில்லாமல் சூரி நம்பூதிரி இதனை ஏற்க வேண்டியதாயிற்று. எல்லாரும் படுக்கைக்குச் சென்றனர். சூரிநம்பூதிரிப்பாடும் கோவிந்தனுமே மீந்தனர். அவன் படுக்கைக்கு வேறிடம் ஏற்பாடு செய்ய யாரும் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே அவனுக்குக் கோவிந்தனே நாலுகட்டில் படுக்கைப் போட வேண்டியதாயிற்று. அரசு நிலையிலுள்ள தன் தலைவனுக்கு மாளிகையில் கூடப் படுக்கை ஏற்பாடு செய்யாததுப் பற்றிக் கோவிந்தனுக்குக் கோபம் வந்தது. ஆனால் சூரி அவனை அமைதிப் படுத்தினான். ‘நாம் வந்த காரியத்தைக் கவனிப்போம் இங்கே வந்ததே நம் மதிப்புக்கு அடுக்காது. ஆகவே மதிப்புப் பற்றிய பேச்சை இப்போது எடுக்க வேண்டாம்’ என்றான் அவன். குடும்ப வாழ்வு இன்னதென்று தெரியாதவன் சூரி நம்பூதிரி. சம்பந்தம் செய்து கொள்ளாதவன். ஆனால் அல்லியோ, வல்லியோ, முல்லையோ, மொக்கோ ஏதாவது சில பல பெண்கள் கூட்டுறவில்லாமல் ஒரு முழுப் பகல் நேரம் கூடக் கழித்தறியாதவன் அவன். பூவள்ளித்தரவாட்டில் இந்துலேகாவின் கனவன்றி வேறு பெண் தொடர்பில்லாது தனியே கிடக்க முடியாமல் அவன் தத்தளித்தான். மணி பன்னிரண்டாயிற்று. எல்லாரும் ஆழ்ந்த துயிலை அணைத்துக் கிடந்தனர். ஆனால் சூரிமட்டும் பல வகையிலும் மனம் குழம்பினான். படுக்கவும் முடியாமல் உறங்கவும் முடியாமல் முன்னும் பின்னும் காட்சிச் சாலையின் கொடு விலங்குகள் போல் நடைபோட்டுக் கொண்டிருந்தான். கோவிந்தன் அவன்நிலை கண்டு மனம் பதறினான் வெற்றிலைப் பெட்டியுடன் அவனை அணுகினான். “ஆண்டே, இப்படி உறக்கம் கெட்டிருந்தால் உடம்பு என்ன ஆகும்? எல்லாம் நாளை சரியாகவரும் விடியும்வரை அமைதியாக உறங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று பணிவுடன் கூறினான். சூரியின் அடங்கிய கோபம் முழுதும் வேலையாள் மீதே திரும்பிற்று. “வினாடி, இந்துலேகா இவ்வளவு அருகிலிருந்தும் அவளுடன் பேசாமல் எப்படி நான் இங்கே தூங்க முடியும் என்று நினைக்கிறாய்!” என்றான். கோ: ஆண்டே, அதிக ஆசையால் நாம் நம் மதிப்பை விட்டுக் கொடுத்துவிட்டோம். நீங்கள் வெறுப்பதாகக் காட்டியிருந்தால் இதுகள் நம்மிடம் வந்து தொங்கிக்கொண்டிருக்கும். நம் விருப்பப்படியெல்லாம் இதுகளை ஆட்டி வைக்கலாம். இப்போது நாம் வந்து தொங்கவேண்டியிருக்கிறது. அவர்கள் விருப்பப்படி ஆட வேண்டியதாயிருக்கிறது. சூரியின் கோபம் தணிந்தது. “நீ சொல்வது முற்றிலும் சரி. அதிலும் இந்த இந்துலேகாவுக்கு இங்கே இளக்காரம் மிகுதி. இங்கிலீஷ் படித்த பெண்ணானதால் அகம்பாவமும் ஆணவமும் ஏராளம். ஆசாரங்களே தெரியவில்லை. நம்பூதிரிகள் கண்டு வெடவெடக்க வேண்டிய மனையின் அரசனாகிய நான் இந்தத் தரவாட்டின் சின்னஞ்சிறு பைதல்களுடன் சரி சமமாகப் பழக வேண்டியதாயிற்று” என்றான். தங்கள் வெறுப்பைப் பிறர் மீது அவமதிப்பாக இந்தத் தொனியில் வேலையாளும் தலைவனுமாக நீண்ட நேரம் பேசி ஒருவருக்கு ஒருவர் ஆறுதலும் அத்துடன் புகிழ்ச்சியும் அளித்தனர். அச்சமயம் கோவிந்தன் வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொண்டே தலைவன் வகையில்தான் செய்திருக்கும் கண்கழிப்புத் திட்டத்தை விளக்கினான். ‘ஆண்டே, தங்களிடம் நான் தனிப்பட்ட முறையில் ஒரு காரியம் சொல்ல வேண்டும். கோபப்படாது கேட்டருளுவதானால் கட்டளையிடுங்கள், சொல்லுகிறேன்” என்றான். சூ.ந: ஆகா, எது வேண்டுமானாலும் சொல்லு. என் காலடியில் வந்து விழும் நண்பர்கள் எனக்கு எத்தனையோ பேர்தான் இருக்கிறார்கள். ஆனால் உன்னைப் போல எனக்கு உற்ற துணைவன் வேறு யார்? கோ: தங்கள் அன்புக்கும் மதிப்புக்கும் இந்த ஏழை தகுதியுடையவனாய் இருக்க வேண்டுமென்பதே என் வாழ்க்கைப் பேரவா. அதனாலேயேதான் சிலசமயம் தங்களிடம் கேட்காமலே நான் பல காரியங்கள் செய்து வருகிறேன். இந்துலேகாவுக்கு இங்கிலீஷ் படித்தவனாகவே ஒரு காதலன் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். உங்கள் சீட்டை வாங்க மறுத்தபோதே எனக்குத் தெரிந்துவிட்டது. தங்கள் பெருமையும் அருமையும் அறியும் தகுதி அவளிடம் இருக்காது என்று! நாளை அவளாகவோ அல்லது அவள் ஆளாகவோ மேலும் தொல்லை தராமல் அவளைத் தந்தாலாயிற்று. அவளுடன் நாளை இரவே போய்விடலாம். அதற்கு எல்லாம் திட்டமாயிருக்கிறது. ஆனால் அதில் ஏதாவது மீளம் மேடம் கூறினால். நாம் தயங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நாளையே போய்விட வேண்டும். ஏனென்றால் இந்து லேகாவுக்குப் பதில் வேறு ஆளைத்தேர்ந்து எடுக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். அதுவும் இந்தத் தரவாட்டிலேயே நம்மை அழைத்து ஏமாற்றியதற்கு அது ஒரு நல்ல தண்டனையாகவும் இருக்கும். இனி இப்படிச் செய்யக் கூடாதென்பதற்கு ஒரு படிப்பினையாகவும் இருக்கும்! சூ.ந: ஆகா, கோவிந்தன் அறிவே அறிவு. அப்படி யார் இவ்வளவு உடனடியாகக் கிடைப்பார்கள்? கோ: பஞ்சுமேனவனின் மருமகளாகவே இன்னொரு முதல்தரம் பெண் இருக்கிறது. இந்துலேகாவைப் போலவே அது அழகு. ஆனால் குணத்தில் இதுபோன்ற முசறு அல்ல. இங்கிரீசுகிங்கிரீசு எதுவும் கிடையாது. ஆண்டைக்கேற்ற ஆசார உபசாரங்கள் தாராளம். இதன் வெற்றிக்கு நான் பொறுப்பு. வேறு யாரையும் தாங்கள் தேடவேண்டாம். தேவைப்படுகிறது என்று தாங்கள் நினைத்த சமயம் உடனே கட்டளையிடலாம். மற்றவை தங்கள் திருமனசு! சூ.ந: ஆகா, ஆயிரம் கேசவன் நம்பூதிரிகள் உன்கால்தூசி பெறுவார்களாடா? சரி, அது நல்ல அழகியா? நேரே பார்க்கப் பேச முடியுமா? கோ: கண்டாலே நீங்கள் இந்துலேகாவை மறந்து விடுவீர்கள், இதில் எனக்கு ஐயமில்லை. அத்துடன் கேசவன் நம்பூதிரியுடன் வந்தாரே அந்த சீனிப்பட்டர் மகள்தான், பெயர் கல்யாணிக்குட்டி நீங்கள் கட்டளையிட்டால் போதும். நீங்கள் காண்பதுமல்ல உங்கள் வசமே பெண்ணைக் கொண்டுவந்து விட்டுவிடுவார்கள்! சூரிநம்பூதிரி இது கேட்டவுடனே துள்ளிக்குதித்து ஆடினார். நல்ல காலம்! இரவானதால் அதையாரும் பார்த்து விடவில்லை. பார்த்தால், முந்திய நாள் ஊர்வலக் காட்சிக்கு அது ஒரு கண்கழிப்பாய் இருந்திருக்கும் கொஞ்சம் வேகம் அடங்கியபின் கூட அவன் இந்தக் கோவிந்தன் திட்டத்தையே உடனே முடிக்கத் துடித்தான். ‘இன்று நடுஇரவாயிற்று, ஆண்டே! இன்று ஓர் இரவு பொறுத்துக் கொள்ளுங்கள். நாளையும் மாலைவரை இந்துலேகா மசிவாளா என்று பார்க்கலாம். மாலையில் அதில் தயக்கம் ஏற்பட்டால், இதை முன் இரவிலேயே முடித்து அவர்களை அதிர்ச்சியடையும்படி செய்துவிடலாம். இந்துலேகாவுக்குத் திட்டம் செய்திருந்த சிறப்பும் மேள தாளமும் எல்லாம் இந்தப் பெண்ணுக்கே செய்து விடலாம்! சூரிநம்பூதிரி இப்போது கோவிந்தனையே ஆர்வத்துடன் ஆவிசேர்த்துக் கட்டிக்கொண்டான். அவன் இயல்புகளை நன்கறிந்த கோவிந்தன் அந்த மகிழ்ச்சியிலேயே அவனை மிதக்க வைத்து உறங்கும் வரை இனிதாகப் பேசி விசிறிக் கொண்டிருந்தான். கால்மணி நேரத்திற்குள் இந்துலேகாவையும் புதிதாகத் திட்டம் செய்த கலியாணிக்குட்டியையும் மாறி மாறி எண்ணிக்கொண்டே அவன் உறங்கி விட்டான். 13. மறுநாள் கூத்து விடியுமுன்பே சூரிநம்பூதிரி உறக்கம் கலைந்துவிட்டது. அவன் கோவிந்தனைக் கூவி எழுப்பினான். வழக்கம் போலச் செறுசேரி நம்பூதிரியை அழைத்து வரும்படி ஏவினான். செறுசேரி எழுந்து குளிக்கச்சென்று விட்டதாக அவன் வந்து மறுமொழி தந்தான். இரவு கோவிந்தன் குறிப்பிட்ட திட்டத்தைச் சூரிநம்பூதிரிப் பாடு மற்று மொருமுறை விளக்கமாகக் கூறும்படி கோவிந்தனைப் பணித்தான். கோவிந்தனும் அவன் மனம் மகிழும்வண்ணம் கலியாணிக்குட்டியின் வயது, தோற்றம், குணம் ஆகியவற்றை விரித்துரைத்தான். ‘இந்துலேகா பதினாறாண்டுப் பருவ மலர், காதல் வாழ்வை உணர்ந்து அதில் ஈடுபட்டுவிட்டவள் அவள். ஆனால் கலியாணிக் குட்டி பதினாலே கடந்தவள். பருவத்தை இப்போதே எட்டி யுள்ளவள். அவள் இனித்தான் காதலை அறியவேண்டும், அதுவே அவள் கன்னிக்காதலாகவும் இருக்கும். அந்தக் கன்னிக் காதல் நம்பூதிரிப்பாட்டிடம் படர்வதால் அதனை நிலையாகத் தழுவிவாழும். இவ்வர்ணனைகள் நம்பூதிரிப்பாட்டினிடம் புத்தார்வத்தையும் புது மோகத்தையும் எழுப்பின. அதனால் அவன் செம்பாழி யிடத்துக்குத் தான் வந்த நோக்கத்தையே மறந்துவிட முனைந்தான். சூ.ந: ‘கோவிந்தா, நாம் இவ்வளவுதூரம் இந்த இந்துலே காவைத் தேடிவந்ததும் தவறு. வரவேண்டியது இங்கே இந்த மாற்றுக் கெடாத தங்கத்துக்காகத் தான். எனக்கு இந்துலேகா வேண்டாம். இந்துலேகாவைப் பஞ்சு என் கழுத்தில் கட்டி விட்டால்கூட, நான் ஒருகணம் மனமகிழ்ச்சியுடன் அமைந்திருக்க முடியாது. இந்தப்பெண்ணையே நான் அப்போதும் நாடுவேன். ஆகவே இப்போதே போய் இந்தப் பெண்ணைப் பார்த்தால் என்ன? கோவி: ஆண்டே, அந்தப் பெண்ணை இப்போதே பார்க்கத் தடையில்லை. ஆனால் நீங்கள் எனக்கு இரண்டு உறுதிகள் தரவேண்டும். சூரி நம்பூதிரி கோவிந்தன் உயர்ந்த பாசத்தை உணரும் ஆற்றல் உடையவனல்ல. அவன் பணம், பதவி உயர்வு ஆகியவற்றைத்தான் கேட்கிறான் என்ற எண்ணமே அவன் உள்ளத்தில் முந்திற்று. ‘ஒன்றென்ன, இரண்டென்ன...? உன்னை எவ்வளவு வேண்டு மானாலும் உயர்நிலைக்குக் கொண்டுவர நான் தயங்கமாட்டேன். எவ்வளவு பணம் கேட்டாலும் மகிழ்ச்சியுடன் தருகிறேன். கேள், இந்தக் காரியத்தை மட்டும் முடித்துவிடு’ என்றான் அவன். கோவிந்தன் ஒருசிறிது புன்முறுவல் பூத்தான். “ஆண்டே, எனக்கு உங்கள் அன்பு இருக்கும் போது அதற்கெல்லாம் என்னகுறை! நான் கேட்ட உறுதிகள் அத்தகையவை அல்ல. “நான் கூறும் இந்தத் திட்டம் உங்களுக்கும் எனக்கும் மட்டும் தெரிந்ததாக இருக்கவேண்டும். இதை நீங்கள் செறுசேரியிடம் சொல்லிவிடப் போகிறீர்கள்! அதுவகையில் நான் முன்கூட்டி உங்களைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். காரியம் முடியும்வரை அவரிடம் இதுபற்றி ஒரு எழுத்துக்கூடத் தவறி உங்கள் பேச்சில் வந்துவிடக்கூடாது. “இரண்டாவதாக, இந்துலேகாவின் முயற்சியை நீங்களாகக் கைவிட்டு விட வேண்டாம். அது நடக்காது போனால் இதை நான் முடித்து விடுவேன். அது முடிந்த பின்னால் கூட, நீங்கள் விரும்பினால் உங்களிடம் காலடியில் வந்து விழ எத்தனை எத்தனை பெண்களோ இருக்கிறார்கள். அது உங்களுக்குத் தெரியும். நீங்கள் எதை விரும்பினாலும் முடிக்க நான் இருக்கிறேன். ஆகவே பலபட மனதைத் தளர விடாதிருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்றான். சூ.ந: நீ சொல்லுகிறபடியே கட்டாயம் நடக்கிறேன். இனி எல்லாம் உன்வழி, உன் பொறுப்புத்தான். ஆனால் கலியாணிக்குட்டியை நான் இப்போதே பார்க்க வேண்டுமென்று மட்டும் ஆசையாய் இருக்கிறது. கோவி: ஓகோ! அதைத்தான் நான் இப்போதே செய்துவிட ஒத்துக் கொண்டேனே! அதற்கான ஏற்பாட்டை நான் இதோ கவனிக்கப்போகிறேன். நீங்கள் மட்டும் நான் சொல்லியதை மறந்துவிடாதேயுங்கள். சூ.ந: சரி, அப்படியே! போய் விரைவில் வெற்றியுடன் வா. கோவிந்தன் ஏற்கெனவே கலியாணிக்குட்டியையும் அவள் வீட்டாரையும் பற்றி நன்கறிந்து கொண்டிருந்தான். அக்கம் பக்கத்தாருடனும், வேலையாட்களுடனும் பழகிக் கொண்டிருந்தான். ஆகவே அச்சமயம் கலியாணிக்குட்டி குளத்துறையில் குளித்துக் கொண்டிருந்தாள் என்பதை அறிய அவனுக்கு நெடுநேரம் பிடிக்கவில்லை. அவன் திரும்பிவந்து நம்பூதிரிப்பாட்டை இட்டுக்கொண்டு குளத்தை நாடிச்சென்றான். நம்பூதிரிப்பாடு இச்சமயம் எளிய உடையே உடுத்தியிருந்த தனால் அவனை அயலார் எவரும் எளிதில் அறியவில்லை. அவர்கள் குளக்கரைக்குச் சென்ற சமயம் கலியாணிக்குட்டி குளித்து முடிந்துவிட்டது. உலர்வதற்காக அவிழ்ந்து தொங்கிய முடியுடனும் ஈர ஆடையுடனும் அவள் எதிரேவந்தாள். கோவிந்தன் தொலைவிலிருந்தே அவள்தான் கலியாணிக் குட்டி என்று சுட்டிக்காட்டினான். இந்துலேகாவின் அழகுடன் எந்தப் பெண்ணின் அழகையும் எவரும் ஒப்பிட முடியாது. அது தெய்வீகக் கலையழகாய், காண்போர் உள்ளத்தின் தூய்மைக்கேற்ற அளவில் அவருக்குக் குளிர் நிறை மதியம்போல இன்னமைதி யளிப்பதாய் இருந்தது. ஆனால் கலியாணிக்குட்டியின் அழகோ காண்பவர் உள்ளம் பிணிப்பதாய் இருந்தது. இந்துலேகாவின் பொன்னிறத்துக்குப் பதிலாக, அவள் தூய வெண்பொன் அல்லது வெண்சலவைக் கல் மேனியுடையவளாய் இருந்தாள். இந்துலேகாவின் வனப்பு முழுவடிவின் வனப்பு. ஆனால் கலியாணிக்குட்டியின் ஏழ்மை வாழ்வும் கடுஉழைப்பும் அவளுக்கு உறுதியான தசைப்பற்றுக் களையும் திரண்டுருண்ட உறுப்பமைதியையும் தந்திருந்தன. காமுகனான சூரிநம்பூதிரி கண்ட சமயத்தில் அவள் தோற்றம் இந்துலேகாவை அவன் மனத்திலிருந்து முற்றிலும் அகற்றிவிடப் போதிய தாயிருந்ததில் வியப்பில்லை. நம்பூதிரிப்பாட்டின் கோலாகல வரவைப் பார்த்து மகிழ்ந்திருந்த பெண்களில் கலியாணிக்குட்டி ஒருத்தி அவன் சம்பந்தம் பூவள்ளித் தரவாட்டுக்குக் கிடைத்ததில் பெருமையும், அது இந்துலேகாவுக்குக் கிடைத்ததில் ஒரு சிறிது பொறாமையும் கொண்டது. அவள் குடும்பம்! இந் நிலையில் தன்னைக் கூர்ந்து பார்ப்பது நம்பூதிரிப்பாடு என்று தெரிந்திருந்தால், அது அவரைக் காணப் பெற்றதில் பேரளவு மகிழ்ச்சியைக் கூடக் காட்டி யிருக்கும். ஆனால் பார்ப்பது யார் என்று தெரியாத நிலையில், அவள் சிறிது நாணமடைந்து, மீண்டும் குளத்துறைக்குள்ளேயே சென்று ஒதுங்கினாள். பார்த்தவர் போய் விடட்டும் என்று உள்ளே காத்திருந்தாள். அவள் ஒதுங்கிய இடம் பெண்கள் துறை. நாகரிக ஆடவர் எவரும் அதனருகே நாடமாட்டார். ஆனால் நம்பூதிரிப்பாடு அவளைக் காணும் ஆர்வத்தால் அவள் உள்ளே நுழைந்தபோது பின் தொடர்ந்து சென்று, அதன் நுழைவாயிலில் நின்று அவளையே பார்க்கலானான். கோவிந்தன் வெளியே வந்து விடும்படி அவனை வற்புறுத்தியபோதும் அவன் அவள்மீது வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே பின்னோக்கி வந்தான். இதனால் குளித்து விட்டு அவ்வழி திரும்பிய செறுசேரி மீதே அவன் வந்து மோதிக் கொள்ள நேர்ந்தது. தான் பெண்கள் துறைப்பக்கம் சென்றது, பின்னோக்கி வந்தது ஆகியவற்றைச் செறுசேரியிடம் எப்படி விளக்குவது என்று தெரியாமல் சூரி விழித்தான். ஆனால் கோவிந்தன் அவனுக்கு இங்கே உதவினான். ‘பெண் துறை என்று தெரியாமல் இருவரும் இப்பக்கம் வந்துவிட்டோம். உள்ளே பெண்களைக் கண்டதும் நான் பின் வாங்கினேன். ஆனால் நீங்கள் வருவது கண்டதே, உங்களை அவர் பார்க்காதிருக்கட்டும் என்பதற்காகவே பின்னோக்கி வரும்படி கூறினேன்’ என்றான். செறுசேரிக்கு இந்த விளக்கம் திருப்திகரமாயில்லை. அதைக் காட்டிக் கொள்ள விரும்பாமல், அவர் விடை பெற்றுச் சென்றார். ஆனால் சற்றுத் தொலைவில் நின்று செறுசேரியும் கோவிந்தனும் போனபின் கலியாணிக்குட்டி வெளிவருவதையும், சிறிது கலவரத்துடன் செல்வதையும் அவர் கண்டார். இந்நிகழ்ச்சியில் சூரிநம்பூதிரி, கோவிந்தன் ஆகிய இருவரும் சேர்ந்து நடத்தும் சூது ஏதோ இருக்கவேண்டும் என்றும் எண்ணினார். உண்மையை ஊகித்துணர அவருக்கு நெடுநேரம் ஆகவில்லை. ஊகித்தும் அவள் உள்ளம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. மாதவன்-இந்துலேகா உறவுக்கு இடையே வந்த இந்தச்சிறு தொல்லை இனி தலைகாட்டாது போய் விடும் என்று மதித்துக்கொண்டார். சூரிநம்பூதிரி தன் வாழ்வில் முதல் தடவையாக கோவிந்தன் அறிவுரையைப் பின்பற்றி நாவடக்கமும் உறுதியும் மாறாதிருந்தார். செறு சேரியிடமோ கேசவன் நம்பூதிரியிடமோ தன் திட்டம் அல்லது உள்ளக் கருத்துப்பற்றி ஒரு சொல்கூட பேசவில்லை. அதுமட்டுமன்று. அவர் சீனப்பட்டரைத் தற்செயலாகக் கொண்டு பேச்சுக்கொடுத்தபோது கூட, இந்துலேகாவின் செய்தியன்றி வேறெதுவும் பேசவில்லை. உண்மையில் பஞ்சுமேனவனுடன் போராடிவிட்டுச் சென்றவர் சீனப்பட்டர். இப்போதுதான் தரவாட்டினுள்ளே எட்டிப்பார்த்தார். ஆகவே நடப்பது எதையும் அவர் அறிந்திருக்கவில்லை. ‘நம்பூதிரிப்பாடு, இன்னும் ஒன்றிரண்டு நாளாவது இருப்பீர்களல்லவா?’ என்று தொடங்கினார் அவர். சூ.ந: நான் அவசரமாக நாளையே போகவேண்டும். ஆனால் இங்கே சம்பந்தத்தை நாளை வைத்துக்கொண்டார்களானால், நாளை இருந்து மற்றநாள்தான் போகவேண்டியதாய் இருக்கும். இன்றே நடத்தும்படி நெருக்கிக் கொண்டிருக்கிறேன். இந்துலேகாவின் செய்தி இவ்வளவு தூரத்துக்குப் போய் விட்டதா என்று சீனு தமக்குள் கூறிக்கொண்டார். நம்பூதிரிப் பாட்டின் இயல்பான உறுதித் தொனி அவரை அவ்வாறு எண்ணச் செய்தது. ‘இன்றே போவதாயிருந்தால் இங்கே இந்துலேகாவுக்கு வேண்டிய பல்லக்குச் சித்தமாயிருக்குமல்லவா! நம்பூதிரிப்பாட்டின் இக்கேள்வி பட்டரைப் பின்னும் திகைக்கவைத்தது ஆனால் அவர் அமைதியாகப் பேசினார். ‘பூவள்ளித்தரவாட்டில் பல்லக்குக்கு ஒன்றும் குறை கிடையாது. எந்நேரத்திலும் ஐந்தாறு சித்தமாகவே இருக்கும்’ என்றார். இந்துலேகாவுக்கும் நம்பூதிரிப்பாட்டுக்கும் சம்பந்தம் முற்றிலும் உறுதியாய்விட்டது என்றும், இந்துலேகாவை உடன் கொண்டுபோவதுகூட முடிவாயிற்று என்றுமே சீனுப்பட்டர் கருதிவிட்டார். ஓட்டைவாயரானஅவர் அறிந்ததை ஓரிருகணங்களில் தரவாடு முழுவதும் நம்பிற்று. ஏனென்றால் அவர் வீடுகளிலும் ஊட்டும் புரைகளிலும், கோயிலில் திண்ணையிலும் எங்கும் கண்டவருடனெல்லாம் அதை விளம்பரப்படுத்தி விட்டார். இந்தப் பேச்சுக்கள் சங்கர சாஸ்திரிகளின் காதுகளில் விழுந்து அவரை முன்னிலும் கலவரப்படுத்தின. முன்னாள் அனுபவத்தின் பயனாக, நம்பூதிரிப்பாட்டின் சாhபில் இந்துலேகாவிடம் செல்லக் கேசவன் நம்பூதிரி மிகவும் தயங்கினார் அவர் படியேறி ஏறி இறங்குவதுகண்ட இலட்சுமிக்குட்டியம்மா புன்முறுவலுடன் அவரை அணுகினாள். ‘அப்பாவிடமும் என்னிடமும் எவ்வளவு சூரத்தனமாகப் பேசுகிறீர்கள்! உங்கள் குழந்தையிடம் போய்ப்பேச இந்த அச்சம் ஏன்? போங்கள்? நான்போய்த் தெரிவித்து வருகிறேன்’ என்று கூறி அவள் இந்துவிடம் சென்றாள். இந்துவின் மனமும் நோக்கும் அறிந்த அளவில், அவள் வழி அன்று எளிதாயிருந்தது. “சூரிநம்பூதிரிப்பாடு செய்த கோமாளித்தனம் காரணவருக்குக் கூட வெறுப்பை ஊட்டியிருக்கிறது. ஆகவே நம்பூதிரிப் பாட்டின் வரவுபற்றி நீ எதுவும் மாறாக இனி நினைக்க வேண்டியதில்லை. அவரிடம் இன்று சிறிது மதிப்பாக நடந்துகொள்!’ என்று அவள் இந்துலேகாவிடம் கூறினாள். இந்: நான் மதிப்பாக நடக்கத்தடையில்லை. அம்மா? ஆனால் அவர் எவ்வளவு வெட்கம் கெட்டதனமாகப் பேசுகிறாரே! இல.கு: கண்ணே! நீ அறியாதென்ன இருக்கிறது. நம்பூதிரிகள் பொதுவாகவே இப்படி நடப்பதும் அதை மலையாளிகள் பொருட்படுத்தாமல் விட்டுக்கொடுப்பதும் உனக்குத் தெரியாத தல்லவே! இந்த நம்பூதிரிப்பாடோ நம்பூதிரிகளில் குடிப்பெருமை யாலும் பணத்தாலும் உயர்ந்தவர். கொஞ்சம் அளவுக்குமீறிய போக்குடையவர். இருந்தாலும் அவரை, மதிப்பாய் நடத்துவதனால் என்ன கேடு வந்துவிடப் போகிறது? உன்னை அவர் அடையப் போவதில்லை. அப்படியிருக்க ஒரு பிராமணன், அதிலும் உயர்ந்த நம்பூதிரிமரபுகளிலும் உயர் மரபாளர் - அத்தகையவரை நாம் அவமதித்தோம் என்ற வீண் அபவாதம் நமக்கு எதற்கு? நேற்றைய போலிராமல் இன்று அவர் என்ன சொன்னாலும் பொறுத்து, அவர் கேட்டு மகிழ ஏதோ வீணையோ யாழோ வாசிக்கச் சொன்னாலும் வாசி என்று கூறத்தான் வந்தேன். இந்: சரி, அம்மா! என்னால் முடிந்த அளவு முயல்கிறேன். முந்திய நாள் தான் சற்றுத் தேவைக்குமேல் கடுமையாய் நடந்து விட்டதாக இந்துலேகாவே இன்று கருதத் தொடங்கி யிருந்தாள். அவன் பணத்தையன்றி வேறு எதையும் அன்று அவள் அறிந்திருக்கவில்லை. எங்கே அந்தப் பண பலத்தாலும் காரணவர் வற்புறுத்தலாலும் அவன் தன்னை வலிந்து கட்டாயப்படுத்து வானோ என்று அவள் சிறிது அஞ்சியிருந்தாள். இதுவே அன்றைய அவள் எதிர்ப்புக்குக் காரணம். இந்நிலை இன்று மாறியதால், அவளுக்கு அறிவற்றவரிடம் இயல்பாக உண்டாகும் இரக்கம் நம்பூதிரிப்பாட்டின் மீது சிறிது ஏற்பட்டிருந்தது. இந்துலேகாவை நம்பூதிரிப்பாடு மீண்டும் சென்று தொல்லை கொடுக்கப் போகிறான் என்று எண்ணிச் செறுசேரிக்கு அவன்மீது இன்று சிறிது கோபம் இருந்தது. அதனால் அவர் சிறிதுநேரம் பேசாமலேயிருந்தார். ஆனால் அதேசமயம் சூரி மனத்திலும் இன்று வேறு மாதிரி எண்ணங்கள் இருந்தன. முன்னாள் இந்துலேகாவிடம்தான் மிகவும் பணிந்து நடந்ததனாலேயே அவள் அவ்வளவு எளிதாகத் தன்னை அதட்டி நடக்க முடிந்தது என்று அவன் எண்ணினான். ஆகவே கோவிந்தன் அறிவுரையைப் பின்பற்றி இன்று இந்துலேகாவைத் துச்சமாக மதிப்பதுபோல இறுமாந்து நடக்கவேண்டுமென்று அவன் திட்டமிட்டிருந்தான். அகத்திலிருந்த இந்த மாறுதலால் நம்பூதிரிப்பாட்டின் தொடக்கப் போக்கிலேயே வேறுபாடு ஏற்பட்டது. அதுகண்டு செறுசேரி வியப்படைந்தார். இத்தறுவாயைப் பயன்படுத்திப் பெண் உள்ளம் குறிப்பறிதல், ஆண் பெண் ஒத்த காதல், ஒருவன் ஒருத்தி உறவின் உயர்வு ஆகிய உயர்தத்துவங்களை அவனுக்கு அறிவுறுத்த எண்ணினார். இது பயன்படவேயில்லை. இலட்சுமிக்குட்டியம்மா, மூலம் கேசவன்நம்பூதிரி இந்துலேகாவின் இணக்கமறிந்து நம்பூதிரிப்பாட்டிடம் வந்தார். இந்துலேகாவைப் போய்க் காணலாம் என்றார். இத்தடவை செறுசேரி மட்டுமன்றி, கேசவன் நம்பூதிரியைக் கூடக்கீழே இருக்கும்படி கட்டளையிட்டு, அவன் இந்துலேகாவின் மாடி ஏறிச் சென்றான். ஆணவத்துடனும் முறுக்குடனும் நடந்துகொள்ள வேண்டும் என்ற நம்பூதிரிப்பாட்டின் திட்டம் இந்துலேகாவின் முகவொளியைக் கண்டபோது கரையத் தொடங்கிற்று. ஆயினும் அவன் தன்னையடக்கிக் கொண்டு திட்டப்படி நடக்கத் தொடங்கினான். ‘அறிவுடைச் சான்றோருக்கு அணங்கும் புல்லும் சமம்’ என்ற மூதுரையை நீ கேட்டதுண்டா என்று வலிந்து இறுமாப்புத்தொனியை மேற் கொண்டவாறு கேட்டான். கேள்வி, கேள்வியின் தொனி, கேட்டசந்தர்ப்பம், கேள்வியின் நோக்கம், நடிப்பு எல்லாம் சேர்ந்து இந்துலேகாவின் நகைச்சுவையைப் பலமாகக் கிளறின. அவள் தன்னையடக்க முடியாமல் கலகலவென்று சிரித்தாள். அவள் சிரிப்பின் அலையடங்கும்வரை அவன் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். சூ.ந: ஆகா, சிரிப்பின் கலையைக்கூட இங்கிலீஷ் அலையலையாக வந்து அவள் முகம் முழுதும் சிவக்கவைத்தது. அதை மறைக்க அவள் அறைக்குள் சென்றாள். இனி அவள் வரமாட்டாளோ என்ற கவலை நம்பூதிரிப்பாட்டைப் பிடுங்கித் தின்னத்தொடங்கிற்று. ‘போய் விடாதே, இந்துலேகா! நான் இனி ஒன்றும் புண்படப் பேச மாட்டேன்’ என்றான் சூரி. “நான் போகவில்லை, இதோ வந்துவிட்டேன்’ என்று உள்ளிருந்தே குரல்கொடுத்த வண்ணம் முகம்கழுவித் துடைத்துக் கொண்டு இந்துலேகா மீண்டும் வெளியே வந்தாள். நம்பூதிரிப்பாடும் இதன்பின் தன் புதிய ஆணவக் கோமாளித்தனம் விட்டுப் பழைய கோமாளிப்பேச்சை தொடங்கினான். சூ.ந: ‘இந்துலேகாவின் வயதென்ன?’ இந்: ‘பதினெட்டு!’ சூ.ந: எனக்கு எவ்வளவு வயது இருக்கும் என்று தோன்றுகிறது? இந்: பிறர் வயதை ஊகித்துக கணித்து எனக்குப் பழக்கமில்லை. சூ.ந: ஆனாலும் குத்துமதிப்பாக என்ன தோன்றுகிறது? இந்: ஐம்பது இருக்கலாம்! சூ.ந: ஐயையோ, எனக்கு இப்போதுதானே நிறை இளமை, முப்பது வயது ஆகிறது. இந்: பார்த்தீர்களா? நான் முன்பே சொன்னேனே! எனக்கு மற்றவர் வயதுகளை மதிப்பிடத் தெரியாதென்று. சூ.ந: போகட்டும். நீ ‘காதல்’ என்றால் என்ன என்று அறிவாயா? இந்: நான் கேள்விப்பட்டதேயில்லை! சூ.ந: இவ்வளவு வயதாகியுமா காதலைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை? இந்: ஐம்பது வயது எனக்கு என்று நினைத்துக் கொண்டீர்களா? சூ.ந: அடடா! அப்படியெல்லாம் சொல்லுவேனா? சரி. கிடக்கட்டும்! எனக்குத் திருமணம் ஆகவில்லை. சம்பந்தமும் இதுவரை கிடையாது என்பது உனக்குத் தெரியுமா? இந்: இதோ இப்போது கேள்விப்படுகிறேன். சூ.ந: என்மனைக்குக் குபேரச்செல்வம் உண்டு. அத்தனையும் நான் சம்பந்தம் செய்யும் பெண்ணுக்குத்தான்! இந்: நல்லது. சூ.ந: இந்துலேகாவுக்குக் கல்பதித்த தோடு உண்டா! இந்: உண்டு. சூ.ந: நான் இன்னும் உயர்ந்ததாக, பெரிதாக வாங்கித் தருகிறேன், போட்டுக்கோ! இந்துலேகா சற்று நிமிர்ந்தாள். ‘எனக்குத் தேவையில்லை. நீங்கள் வேறுயாருக்கு வேண்டுமானாலும் வாங்கிக் கொடுக்கலாம்’ என்றாள். கோமாளியும் முன்வைத்த காலைச் சிறிது பின் வாங்கினான். ‘உனக்குக் கொடுக்கத்தான் எனக்கு ஆசை. அது கிடக்கட்டும். இதோ இந்தப்பெட்டியில் என்ன இருக்கிறது? இந்: இதுதான் வீணைப்பெட்டி! சூ.ந: சிறிது வீணைவாசித்துக் கேட்கலாமா? இந்: சரி. இந்து வீணையை வெளியே எடுத்தாள். தாயிடம் கூறிய வாக்கை நினைத்துச் சுதிமுறுக்கி மெல்ல மெல்ல நாலைந்து பணகளைப் பாடிக் காட்டினாள். நம்பூதிரிப்பாட்டுக்கு ஏற்பட்ட புத்திமுட்டுகள், அவமதிப்புக்கள் செம்பாழியில் யாருக்குமே தெரியாதவை. ஆனால் பாறுவுக்கு இந்துலேகா தாலி கொடுத்தது. நம்பூதிரிப்பாடு அவள் மாளிகையில் சென்று பேசியிருந்தது, சீனப்பட்டரிடம் நம்பூதிரிப்பாடு பல்லக்குக்கு ஏற்பாடு செய்யச் சொன்னது ஆகிய செய்திகள் மட்டும் எங்கும் காட்டுத்தீபோல பரவியிருந்தன. நம்பூதிரிப் பாட்டின் போக்குவரவுகள் பற்றியும், அவர் சம்பந்தப் பேச்சுக்களின் முடிவு பற்றியும் எல்லாரும் ஆர்வம் காட்டியதுடன், பலர் பூவரங்கின் பக்கமே சுற்றிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நம்பூதிரிப்பாடு வீறாப்புடன் திரும்பவும் மாளிகைசென்று நெடுநேரம் பேசியதையும் இந்துலேகா அவனுடனிருந்து வீணைவாசித்ததையும் கவனித்த மக்கள் நாற்புறமும் வீணைகேட்க வந்து திரண்டனர். பாட்டுக் கேட்பதற்காகச் சிலர் குளக்கரையில் குழுமினர். சிலர் குஞ்சுக் குட்டியம்மா வீட்டு மாடியேறிப் பார்த்தனர். சிலர் பூவரங்கிலேயே வந்து மாடிப்படிகளில் அமர்ந்தனர். ஆனால் குஞ்சுக்குட்டியம்மா யாரும் மாடியேறக் கூடாதென்று கண்டித்தாள், கேசவன் நம்பூதிரி பூவரங்கின் அருகிலேயே எவரும் நிற்காதபடி விரட்டியடித்தார். ‘பாட்டுக்கேட்பதால் என்ன குறைந்துவிடுகிறது. பெரிய இடத்துச் சம்பந்தமானால் இப்படியா ஆதாளி பண்ணவேண்டும் என்று இளைஞர் முணுமுணுத்தனர். சிலர் கேசவன் நம்பூதிரியையும், வேறு சிலர் நம்பூதிரிப் பாட்டையுமே திட்டிக்கொண்டு சென்றனர். ஆனால் இந்தக்குளறுபடி இந்துலேகாவைப்பற்றிய தப்பெண்ணத்தை வளர்க்கவே பயன்பட்டது. ஏனெனில் துரத்தப்பட்டவர்களில் பலர் தங்கள் மனக்கொதிப்பை உரக்க வெளியிட்ட வண்ணம் கோயில் பக்கமாகவே சென்றனர்.கோயில் படிக் கூடத்திலிருந்த சங்கர சாஸ்திரிகள் இவற்றைக்கேட்டு மேன்மேலும் மனம் புழுங்கினார். பாட்டு முடிந்தது. இந்துலேகா வீணையைப் பெட்டியினுள் வைத்துப் பூட்டினாள். இடைநேரத்தில் நம்பூதிரிப்பாடு சிறிது வெளியே எட்டிப் பார்த்திருந்தான். வெளியில் ஏற்பட்ட கோலாகலத்தை அவன் கண்டு கொண்டான். அது அவனுக்குப் புதிய ஊக்கம் தந்தது. இந்துலேகாவிடம் இறுதியாக உண்டா இல்லையா?’ என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கேட்டுவிடவேண்டும். என்ற துணிவை இது உண்டுபண்ணிற்று. அவன் முகத் தோற்றத்தின் மாறுபாடு கண்ட இந்துலேகாவும் எதிர்ப்புக்குத் தன்னை ஆயத்தமாக்கிக் கொண்டாள். ‘நான் இங்குவந்தது இந்துலேகாவைப் பார்ப்பதற்காகத் தான். இது தெரியுமல்லவா? என்று அவன் தொடங்கினான். இந்: சரி. சூ.ந: நானாக வரவில்லை. எழுத்தனுப்பி வரவழைத்த தனால்தான் வர நேர்ந்தது. இந்: அதனாலென்ன? சூ.ந: காரணவர் பஞ்சு சொல்லி, உன் மாற்றாந் தந்தை கேசவன் நம்பூதிரி கடிதம் எழுதியிருந்தார். இந்: சரிதான். வந்தது குற்றமென்று நான் கூறவில்லை. சூ.ந: என் சம்பந்தத்தைத் தாங்கள் விரும்புவதாக அவர்கள் கடிதத்துக்கு மேல் கடிதம் எழுதி வேண்டிக் கொண்டார்கள். இந்: அவர்களைச் சம்பந்தம் செய்து கொள்வது தானே? சூ.ந; விளையாட்டா செய்கிறாய். இந்து? இந்: நண்பரா நீங்கள், விளையாட்டாகப் பேச! வேண்டிக் கொண்டவர்களைச் சம்பந்தம் செய்வது தானே என்று கேட்டேன். அதுவும் அவர்கள் வேண்டிக் கொண்டதை என்னிடம் சொன்னதனால் கேட்டேன். சூரிநம்பூதிரிப் பாட்டுக்கு மூக்கை முட்டிக்கொண்டு கோபம் வந்தது. ஆனால் அவன் அதை வெளிக் காட்ட அஞ்சினான். அவர்கள் உன் அப்பா, பெரியப்பா அல்லவா?’ என்றான். இந்: யார் அல்ல என்றார்கள்? சூ.ந: சரி அப்படியானால் அவர்கள் வேண்டிக் கொண்டது உன் சார்பில் வேண்டிக்கொண்டதுதானே? இந்: நான் அவர்களைக் கேட்கவில்லையே? சூ.ந: கேட்காவிட்டால் என்ன? அவர்கள் விருப்பம் உன் கடமைதானே! இந்: ஒருவர் பசிக்கு அவர் பிள்ளைகள் உணவு சாப்பிட முடியுமா? ஒருதாய் அல்லது தந்தை நோய்க்குப் பிள்ளை மருந்து சாப்பிட்டால் பயன் உண்டா? சூரி நம்பூதிரி பின்னும் திக்குமுக்காடினான். அவன் தன் கடைசிக் கணை தொடுத்தான். ‘சரி, இந்தப் பெட்டியைப் பார். நன்றாயிருக்கிறதா என்று உன் மதிப்பீட்டைக் கூறு! என்று அவன் ஒரு வெள்ளிப் பெட்டியை அவள்முன் வைத்தான். அவள் அதை எடுத்து நோக்கினாள். ‘மிக நேர்த்தியான வெள்ளிப் பெட்டி’ என்றாள். சூ.ந: உள்ளே இருப்பதையும் பார். இந்து அப்படியே திறந்தாள். வைரமாலை, வைரத்தோடு மரகத மூக்குத்தி, நவமணி மாலை முதலிய கண்கவரும் நகைகள் பல இருந்தன. அவற்றை இந்துலேகா ஒவ்வொன்றாகப் பார்த்து மதிப்பிடுவது போலப் பாவனை செய்தாள். ‘பல ஆயிரம் பதினாயிரம் பெறுமானமுள்ள நகைகள் இவை. ஒரு இளவரசிக்குப்போதியவை’ என்றாள். சூரி நம்பூதிரிப்பாட்டின் முகத்தில் சிறிதே புன்முறுவல் பூத்தது. ‘இவ்வளவையும் நீயே எடுத்துக்கொள்’ என்றான். இந்: எனக்கு இவை தேவையில்லை! நான் இளவரசியல்ல தரவாட்டுப் பெண். நீங்களே எடுத்துக்கொண்டு போகலாம். சூ.ந: இந்துலேகாவையல்லாமல் எந்தப் பெண்ணையும் நான் விரும்ப வில்லை. வேறு யாருக்கும் இதைக்கொடுக்க மனம் வரவில்லை. இந்: மெத்த சரி. இதையே தன்னை ஏற்றதற்கறிகுறியென்றெண்ணி நம்பூதிரிப்பாடு கூத்தாடத் தொடங்கினான். இந்துலேகா முகத்தில் அனல் பறந்தது! “இதா, நம்பூதிரிப்பாடு! நீ ஆள் சோதாவானாலும் பிராமணன் என்பதற்காகவும் அப்பா பெரியப்பாவின் பெயருக் காகவும் இவ்வளவும் பொறுத்தேன். இந்த ஆட்டங்களெல்லாம் இங்கே வைத்துக்கொள்ள வேண்டாம். உன் சம்பந்தம் இங்கே யாருக்கும் தேவையில்லை. நீ போகலாம்!” என்று கடுஞ்சினத் துடன் கூறிவிட்டு உள்ளேசென்று கதவடைத்தாள். வேறு பாஷை எதுவும் புரியாத கோமாளி நம்பூதிரிப் பாட்டுக்குக்கூட இந்தப் பாஷை நன்றாகப் புரிந்தது; போதிய அளவில் உறைத்தது. அடுத்த கணமே அவன் கல்யாணிக் குட்டியை நினைத்தபடி மனத்தைத்தேற்றிக் கொண்டு கீழே இறங்கினான். கோவிந்தன் அவனை எதிர்பார்த்துக் கீழே நின்றான். “கோவிந்தா, எல்லாம் முடிந்தது. இனி நம் ஏற்பாடுதான். போய்விரைவில் எல்லாம் திட்டம் செய்!” என்றான். குறிப்பறியும் குணம் உள்ள கோவிந்தனுக்கு அவன் சொற்களே தேவைப்படவில்லை. அவன் முகமே செய்தி முழுவதையும் தெரிவித்தது. ஆனால் கேட்டு நின்றவர்களுக்குச் சொல்லும் சரி, நம்பூதிரிப்பாட்டின் புதிய கிளர்ச்சியும் படபடப்பும் சரி வேறுவகையான முடிவையே தந்தன. இந்துலேகா மிக எளிதில் ஒப்புக்கொண்டுவிட்டதால், இரவே பயண ஏற்பாட்டுக்கு நம்பூதிரிப்பாடு படபடக்கிறார் என்று நினைத்தார்கள். “பார்! இரவு இங்கே தங்கமாட்டேன். நம் மனைக்கே போவோம்’ என்று கூறியிருக்கிறாள் இந்துலேகா. இருந்தாலும் இருந்தாள், பெருமீன் காத்த கொக்குப்போல. பெருமீன் கிடைத்தவுடன் பாயும் பாய்ச்சலையும், ஆசையின் ஆத்திரத்தையும் பார்!” என்று இளமைத் துடுக்குள்ள இயல்பினர்கள் பேசத் தொடங்கினர். அவள் பாட்டைக்கூடத் தாங்கள் கேட்கக்கூடாதென்றபோது வந்த கோபத்தின் விளைவு இது. கோவிந்தன் காதில் இப்பேச்சு விழுந்தது. காற்று வீசும் திசையறிந்து அவன் காரியமாற்ற எண்ணி நம்பூதிரிப்பாட்டுடன் விரைந்தான். தனியிடம் சென்றதும் நம்பூதிரிப்பாடு வீறாப்பை விட்டுச் சோர்ந்து சாய்ந்தான். “இனி என்ன, கோவிந்தா! இந்துலேகா கிடைக்க மாட்டாள். அது உறுதியாகிவிட்டது. இனி உன் ஏற்பாடுதான்; உன் திட்டம் என்ன ஆயிற்று, என்று கேட்டான். கோவி: திட்டத்துக்குத்தடை ஏதுமில்லை. ஆண்டே! ஆனால் இது யாருக்கும் தெரியாமல் நடக்கவேண்டும். இதுவரை நான் யாரிடமும் சொல்ல வில்லை. ஆனால் அதைச் செய்ய வேண்டியவர் ஒருவர்தான். அவரிடத்தில் சொல்லிவிட்டால் காரியம் நடந்துவிட்டது மாதிரிதான். அந்த முதல் கட்டத்தை நீங்கள்தான் செய்ய வேண்டும். சூ.ந: சொல்! யார்? என்ன செய்யவேண்டும்? கோவி: வேறு யார் இடையீடுமில்லாமல் பஞ்சுமேன வனிடத்தில் நீங்கள் நேரடியாகக் கேட்டுவிடவேண்டும். சூ.ந: சரி, நீயே போய்ப் பஞ்சுவைக் கூட்டிக் கொண்டுவா! நான் இங்கேயே இருக்கிறேன். பஞ்சுமேனவன் உறங்கிக்கொண்டிருந்தார். கோவிந்தன் குஞ்சுக் குட்டி யம்மாவிடம் சென்று ‘பஞ்சுவை நம்பூதிரிப்பாடு கூப்பிடுகிறார்’ என்றான். இந்துலேகாவுக்கு நம்பூதிரிப்பாட்டின் சம்பந்தம் எப்போது உறுதிப் படும், எப்போது உறுதிப்படும் என்று காத்துக் கிடந்தவள் குஞ்சுக் குட்டியம்மா. அவள் கணவனை உடனே தட்டி எழுப்பினாள். ‘அட போ! ஏன் என் தூக்கத்தைக் கெடுக்கிறாய் போ!?’ என்றார் பஞ்சு, தூக்கத்திலேயே! கு.கு: நம்பூதிரிப்பாடு அங்கே கூப்பிடுகிறாராம் இந்த நேரத்தில் என்ன தூக்கம்? பஞ்: நம்பூதிரிப்பாட்டைப் போகச் சொல்லு; விண்டிப்பயல். அவனுக்கு வேறே வேலையில்லை. கணவன் பேச்சு மனைவிக்குக் கிலி உண்டுபண்ணிற்று. ஏதோ பணத் தகராறு கிளப்பிப் பொன்னால் சம்பந்தத்தை அவர் கெடுத்துவிடப் படாதே என்று அவள் பதறினாள். “இந்து அங்கே நம்பூதிரிப்பாட்டுடன் பாட்டும் சிரிப்புமாக இருக்கிறாள். இன்றிரவே கண்ணழிமனைக்கு அவருடன் கூடப் போக வேண்டுமென்று துடிக்கிறாள். இங்கே நம்பூதிரியுடன் நீங்கள் இடக்குப் பண்ணி காரியம் கெடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். போங்க பெண்ணைச் சம்பந்தம் பண்ணி இன்று அனுப்பி வைக்கப் பாருங்கள். வேண்டுமானால் பேர்த்தியை இனி சம்பந்தக்காரருடன் வரவழைத்துப் பார்த்துக் கொள்ளப் படாதா?’ என்றாள் குஞ்சுக்குட்டியம்மா! பஞ்சுவின் தூக்கம் பறந்தே போயிற்று, ‘ஆ, கேசவன் நம்பூதிரி சொன்னது சரியாய்ப் போயிற்று. இந்துலேகாவே ஒத்துக் கொண்டு விட்டாளா? மெத்த மகிழ்ச்சி, இதோ போகிறேன்’ என்று அவர் துள்ளிக் குதித்தார். அவர் முதுமையும் தளர்ச்சியும் அவருக்கு அந்தக் கிளர்ச்சியில் ஒரு சில கணநேரம் அவரிடமிருந்து விடைகொண்டு விட்டன என்றே தோன்றிற்று. 14. நம்பூதிரிப்பாட்டின் திருமணம் ‘பஞ்சு, இந்துலேகாவுக்கு என்னை ஒரு சிறிதும் பிடிக்கவில்லை. அவள் என்னை மறுத்துவிட்டாள். நான் வலியவந்து இந்த அவமானத்தில் சிக்கிக் கொண்டேன். என் மனம் இடிந்து போகிறது. “பஞ்சு, நீ என்னை இப்படி அவமானப்படுத்தக் கூடாது. அவமானப்படப் பார்க்கக் கூடாது. நீதான் வழி செய்ய வேண்டும். பிராமணன், நம்பூதிரிப்பாடு, குபேரச் செல்வன் தான்... ஆனால் இப்போது உன்னை வணங்கி வேண்டுகிறேன். எனக்கு ஒரு வழி செய்து காப்பாற்ற வேண்டும்” நம்பூதிரிப்பாடு பஞ்சுவின் காலடியில் விழாத குறையாகக் கரைந்தழுதாள். பஞ்சு முதலில் திடுக்கிட்டார். அடுத்தகணம் அவர் இயல்பான பிராமண பக்தியும் இரக்க மனமும் அவரை ஆட்டிப் படைத்தன. “நம்பூதிரிப்பாடு, இந்த நிலைக்கு நான் வருந்துகிறேன். இதை நானும் எதிர்பார்க்கவில்லை. இப்போது என்னால் என்ன செய்ய முடியும்? இயன்ற எந்தக் காரியமும் நான் செய்யத் தடையில்லை. இந்துவை வற்புறுத்த மட்டும் தான் என்னாலாகாது” என்றார். சூ.ந: இந்துவின் திசைக்கே நான் இனிப் போக மாட்டேன், எனக்கு அவள் வேண்டாம். எனக்கு உங்கள் கல்யாணிக்குட்டி தான் வேண்டும். அவளை இன்றிரவே எனக்குச் சம்பந்தம் செய்து கொடுத்து, நாளை காலையிலேயே அவளை என்னுடன் கூட்டி அனுப்புங்கள். இதைச் செய்தால் போதும். இதைச் செய்து மானம் காக்கவேணும். ஒரு பிராமணனுக்குச் செய்யும் பரம உபகாரம் இது. இது கேட்டுப் பஞ்சுமேனன் வியப்பாலும் திகைப்பாலும் ஒரு கணநேரம் தம்பித்து நின்றார். பின் அவர் நிலையை எண்ணிச் சிரித்தார். “இவ்வகையில் என்னாலானது செய்யத் தடையில்லை. ஆனால் இவ்வளவு விரைவில் எப்படி எல்லாம் முடியும்? பேசி ஏற்பாடு செய்கிறேன்!” என்றார். சூ.ந: அப்படிச் சொன்னால் போதாது. எனக்குக் காலையில் விடியு முன்பே போய்த்தீர வேண்டும். பஞ்சு சற்றுச் சிந்தித்தார். அவர் மனம் நம்பூதிரியின் நிலைகண்டு இரங்கிற்று. அத்துடன் இந்துவுக்காக வந்து இப்படி அவர் அவதியுறா விட்டால், கலியாணிக் குட்டிக்கோ, பூவள்ளித் தரவாட்டுக்கோ இந்தக் கண்ணழி மூர்க்கில்லத்துச் சம்பந்தம் எளிதில் கிடைப்பதுமல்ல. ஆகவே நம்பூதிரிப் பாட்டுக்கு இணங்கி விடுவதென்று முடிவு செய்தார். பஞ்: சரி அப்படியே, இப்போதே போய் நான் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இங்கேயே இருங்கள். சூ.ந: பஞ்சு, இன்னும் ஒரு வேண்டுகோள். இந்தக் காரியம் வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். நான் போன பிற்பாடு தெரிந்தால் போதும். ‘சரி’ என்று கூறிப் பஞ்சுமேனோன் அகன்றார். பஞ்சுமேனோன் சங்கரமேனோனைத் தேடிக்கொண்டு போனார். வழியில் குஞ்சுக்குட்டியம்மை வந்தாள். ‘என்ன சம்பந்தத்துக்கு ஏற்பாடாயிற்று?” என்று கேட்டாள். செய்தி இரகசியமாக இருக்கவேண்டுமென்ற நம்பூதிரிப்பாட்டை நினைத்துப் பஞ்சு மனைவியிடம் கூட எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆகவே அவள் நம்பிக்கையைக் கெடுக்காமல் பதில் சொன்னார். ‘ஆம், இரவிலேயே சம்பந்தம் முடிக்க வேண்டும். காலையில் விடியு முன்பே நம்பூதிரிப்பாடு போகிறார். அதனால்தான் அவசரமாகச் சங்கர மேனோனைத் தேடுகிறேன்’ என்றார். குஞ்சுக்குட்டியம்மாவின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. தன் திருமணத்தின் சமயத்திலோ, மகள் திருமணத்தின் சமயத்திலோ கூடக் கிழவி இவ்வளவு மகிழ்ச்சி கொண்டதில்லை. அவள் செல்லும் வழியில் சங்கர சாஸ்திரிகளைக் கண்டாள். சங்கர சாஸ்திரியும் அதே மயக்கத்திலிருந்தாலும், அவர் மகிழ்ச்சிக்குப் பதிலாக முற்றிலும் மனச்சோர்வுற்றிருந்தார். ஊர்விட்டே இரவு ஊர்தியிலேயே போய் விடத் துடித்தார். ஆனால் பூவள்ளியில் அவர் அடிக்கடி இராமாயண பாரதம் வாசிக்கும் திருப்பணியில் இருந்தார். தான் திரும்பி வரும்வரை அந்தப் பணியை அண்ணாதுரை ஐயர் என்ற தமிழ்ப் பிராமண னிடம் விட்டுவிட்டுச் செல்ல எண்ணினார். பஞ்சுமேனவனைக் கண்டு விடை கொள்ளவே அவர் வந்திருந்தார். இந்துவின் திருமணம் கழிந்து போகலாமே என்று குஞ்சுக்குட்டியம்மா வற்புறுத்தியும் அவர் கேட்கவில்லை. பஞ்சுவிடம் செய்தி கூறும்படி குஞ்சுக் குட்டியம்மாவிடம் கேட்டுக் கொண்டு அவர் ஊர்தி நிலையம் செல்லப் புறப்பட்டார். சங்கரமேனோன் பஞ்சுவிடமிருந்து புதுமுடிவுகேட்டு வியப்படைந்தார். ஆனால் பஞ்சுவின் முடிவை அவர் மனப்பூர்வ மாக ஏற்று அதை இரகசியமாகவே நடத்தவும் முனைந்தார். கோவிந்தனை அனுப்பி நம்பூதிரிப்பாட்டுக்கு வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்யும்படி கூறிவிட்டு, கும்மிணியம்மா விடமும் மாதவன் தாய் பார்வதியிடமும் மட்டும் நடக்கவிருக்கும் செய்தி தெரிவித்தார். கும்மிணியம்மைக்கும் அவள் மகள் கலியாணிக்குட்டிக்கும் வந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அம்மகிழ்ச்சியில் பங்குக் கொள்ளச் சீனுப்பட்டர் இல்லையே என்று மட்டும் அவர்கள் ஆற்றாமை கொண்டனர். சீனுப்பட்டர் பஞ்சுமேனவன் கோபத்துக்கு அஞ்சி இன்னும் பூவள்ளிக்கு வெளியிலேயே தலைமறைவாய்த் திரிந்து வந்தார். பார்வதியம்மா இந்துலேகாவைக் கண்டு இந்தக் கோலாகல முடிவைத் தெரிவித்தபோது, செறுசேரியும் உடனிருந்தார். நம்பூதிரிப்பாட்டின் முடிவு கண்டு இருவரும் வயிறுகுலுங்கச் சிரித்தனர். ஆனால் கலியாணிக்குட்டியை நினைத்தபோது இந்துலேகாவுக்கு மகிழ்ச்சியே வந்தது. ஏனெனில் இதைவிட உயர்ந்த சம்பந்தத்தைக் கலியாணிக்குட்டி கனவுகண்டிருக்க முடியாது என்பதை அவள் அறிந்திருந்தாள். கோவிந்தனுடன் நம்பூதிரிப்பாடு குளப்புரை சென்று குளித்துவிட்டு, இருநூறு பிராமணர்களை ஊட்டுப்புரையிலிருந்து வரவழைத்து, தன் திருமணத்துத் தானம் என்று கூறி அவர்களுக்கு ஆளுக்கு ஒரு வெள்ளி தட்சிணை கொடுத்தார். கோவிந்தன் தந்திரமாகப் பெண் இந்துலேகாதான் என்ற நம்பிக்கையை இச்சமயத்தில் வலியுறுத்தினான். திருமணத்துக்கான சடங்குகளைப் பார்த்து மனம் புழுங்கிக் கொண்டே சங்கர சாஸ்திரிகள் ஊர் திரும்பிச் சென்றார். அதே ஏற்பாடுகளை அப்பக்கம் நின்றிருந்த கேசவன் நம்பூதிரியும் பார்த்தார். இந்துலேகாவின் மனநிலை அவருக்குத் தெரிந்திருந்ததனால், இந்த ஏற்பாடுகளின் பொருள் விளங்காமல் அவர் குழப்பமடைந்தார். செறுசேரியைக் கண்டு அதுபற்றி விசாரித்தார். சூரிநம்பூதிரியை வரவழைத்துப் பல தொல்லைகளைத் தன் அறியாமையால் வரவழைத்ததற்காகக் கேசவன் நம்பூதிரியை இன்னும் நன்றாகத் தண்டிக்க விரும்பினார் செறுசேரி. ஆகவே சம்பந்தம் நடப்பது இரவிலேயே என்றும், காலையிலேயே நம்பூதிரி புறப்பாடென்றும் மட்டும் முதலில் குறிப்பிட்டார். பின் பெண் இந்துலேகா அல்ல என்ற மட்டும் கூறினார். நம்பூதிரிப்பாடு தன் மனைவியிடம் கருத்துச் செலுத்தியது கண்டிருந்த கேசவன் நம்பூதிரி அவர் செல்வாக்கால் தம் குடும்ப வாழ்வு சீரழிந்து விடுமோ என்று பயந்தவராகையால், பெண் இந்துலேகா அல்ல என்றவுடன் பெரிதும் குழம்பி மனம் மாழ்கினார். பெண் கலியாணிக்குட்டி என்று இறுதியில் கேட்டபோதுதான் அவருக்கு உயிர் வந்தது. செறுசேரி, கேசவன்நம்பூதிரி, வேலைக்காரர்கள் இவர்கள் மட்டுமே இரவில் நடைபெற்ற அந்தச் சம்பந்தத்தில் உடனிருந்தனர். மலையாள நாட்டு மரபுப்படி நம்பூதிரிப்பாடு கால் அலம்பிக்கொண்டு தாலாட்டு இல்லத்தில் மேற்கறையில் நுழைந்து பட்டு மெத்தையில் பள்ளிகொண்டார். பெண்கள் அறையின் மற்றொரு கதவு வழியாகக் கலியாணிக்குட்டியை ஒப்பனைசெய்து அறைக்குள் அனுப்பினார்கள். பெண்ணின் அருமை கண்ட நம்பூதிரிப்பாடும் எதிர்பாராச் செல்வம் கைவரப் பெற்ற கலியாணிக்குட்டியும் ஒரு கணத்தில் உடனுறை வாழ்க்கை தொடங்கினார்கள். காலையில் கோவிந்தன் விடியுமுன்பே நம்பூதிரியைக் கூவி எழுப்பினான். கலியாணிக்குட்டி ஒரு மூடுபல்லக்கிலும் வந்தபடியே செறு சேரியுடன் நம்பூதிரிப்பாடு ஒரு பல்லக்கிலும் அமர்ந்தனர். வரும்போது இருந்த ஊர்வலத்தைவிட ஆட்கள் குறைந்தாலும், முழக்கம் குறையவில்லை. கோவிந்தன் அந்தப் பகட்டாரவாரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். வழியில் கேட்டவரிடமெல்லாம் நம்பூதிரிப்பாடு இந்துலேகாவையே சம்பந்தம் செய்து கொண்டு போகிறார் என்று சொல்லும்படியும் கோவிந்தன் தன் ஆட்களுக்குச் சட்டம் செய்திருந்தான். 15. ஏமாற்றமும் குழப்பமும் நம்பூதிரிப்பாட்டின் ஊர்வலம் ஊர்தி நிலையத்தருகிலுள்ள ஊட்டுப் புரை நடந்தே சென்றது. ஆனால் கோவிந்தன் திட்டப்படி, ஊர்வலம் எங்கும் தங்காமல் நேரே விரைந்தது. முழக்கம் கேட்டு சங்கர சாஸ்திரிகளும் வேறு பலரும் ஊட்டுப்புரையிலிருந்து வெளி வருவதற்குள் ஊர்வலம் கண்ணுக் கெட்டிய தொலை வரை சென்றுவிட்டது. ஆனால் கோவிந்தன் மட்டும் பிந்திவிட்டவன் போல ஊட்டுப்புரையருகில் நடந்தான்; சங்கர சாஸ்திரிகள் அவனை அடுத்துக் கேள்விகள் கேட்டார். “நம்பூதிரிப்பாட்டின் ஊர்வலம் தானேஇது, கோவிந்தா?” கோவி: ஆம். வேறு யாருடையதாயிருக்க முடியும். ச.சா: பஞ்சுமேனவனின் ஊட்டுப்புரை தானே இது? இங்கே கூடத் தங்காமல் போக அப்படி என்ன அவசரம்? கோவி: பஞ்சுமேனவனும் கேசவன் நம்பூதிரியும் இங்கே தங்கி உணவருந்திச் செல்லும்படிதான் வலியுறுத்தினார்கள். நம்பூதிரிப் பாட்டுக்கும் செறுசேரிக்கும் கூட இது விருப்பந்தான். ஆனால் இப்போதுதான் புது ஆட்சி வந்துவிட்டதே? நேரே கண்ணழி மூர்க்கில்லம் சென்றுதான் உணவு என்ற கட்டளையாகிவிட்டது? ச.சா: யார் கட்டளை அது, இந்துலேகாவினுடையதா? கோவி: ஆம். இனி நாங்கள் எல்லாரும், நம்பூதிரிப்பாடு உட்பட, இந்துலேகாவின் தாசர்கள்தானே? என்ன செய்வது? எனக்கும் நேரமாகிறது, நான் போகிறேன். சாஸ்திரிகளுக்கு எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போலாயிற்று. மாதவன் மீது அவர் உள்ளம் பாகாய் உருகிற்று. “அந்தோ! அழகும் கல்வியும் இந்த இந்துலேகாவுக்கு இருந்து என்ன பயன்? அவள் அறிவு இப்படியா போக வேண்டும்? தன்னை நம்பிய மாதவனை இப்படியா நெஞ்சில் ஈட்டி வைத்துக் குத்துவது? மாதவன் எங்கே? பணத்துக்காகப் பல்லிளித்த இந்தப் பிணம் எங்கே? குதிரையை விட்டுக் கழுதையைத் தேடிப்பிடித்த இவள் அறிவு இருந்தவாறு என்னே?” என்று அவர் ஏங்கி ஏங்கி மறுகினார். சென்னையில் மாதவன் ஒரு வார ஓய்வு எடுத்துக் கொண்டு, கோவிந்தப் பணிக்கருக்கும் இந்துலேகாவுக்கும் கடிதம் எழுதியபடியே, தாயகம் புறப்பட்டான்; தன் வேலையாட்கள் இருவரில் ஒருவனைச் சின்னனுடன் சென்னையிலே தங்கவிட்டு, மற்றொரு வேலையாளுடன் புறப்பட்டான். வேலையாள் அவனை ஊர்தி ஏற்றிவிட, அவன் நேரே செம்பாழியிடத்துக் கருகிலுள்ள ஊர்தி நிலையம் வந்து சேர்ந்தான். அவன் வந்து சேர்ந்த அன்று காலைதான் நம்பூதிரிப்பாட்டின் ஊர்வலம் அவன் மனை நோக்கிச் சென்றிருந்தது. பயண அலுப்பினால் அன்று இரவு தரவாட்டு ஊட்டுப் புரையில் தங்கி, மறுநாள் வீடுவர, அவன் திட்டமிட்டிருந்தான். ஆனால் ஊர்தியின் பக்க மேடையில் நிற்கும் சமயம் அங்கே கூடியிருந்த கூட்டத்தில் ஒருவர் மற்றொருவருடன் பேசும் பேச்சில் ‘இந்துலேகா’ என்ற பெயர் கேட்டு அவன் திடுமென நின்றான். அக்கூட்டத்தினர் உண்மையில் முந்தின நாள் நம்பூதிரிப் பாட்டின் திருமணப் பரிசு பெற்றவர்கள் கூட்டமே, அன்று ஊர்தி கிட்டாததனால் அவர்கள் மறுஊர்திக்காகக் காத்து இருந்தார்கள். இந்துலேகாவின் பெயரும் அவளைப் பற்றிய பேச்சும் அவர்களிடையே அடிக்கடி நடைபெற்றது. ‘இந்துலேகாவுக்கு வந்த யோகம்தான் யோகம்’ என்றான் ஒருவன். ‘பெண்களுக்கு அழகும் படிப்பும் எல்லாம் வேறு எதற்கு? பெரிய மீனாகப் பார்த்துப் பிடிப்பதற்குரிய தூண்டில்களல்லாமல் வேறென்ன?’ என்றான் மற்றொருவன். ‘ஏது இந்துலேகாவைப்பற்றிப் பேசுகிறீர்கள்?’ என்று மாதவன் ஒருவனைப்பார்த்து ஆவலுடன் கேட்டான். முதல்வன்: ஏது இந்துலேகாவா? செம்பாழியிடத்துப் பூவள்ளித் தரவாட்டு இந்துலேகாதான்? நீ ஏன் கேட்கிறாய்? உனக்கு அவளைத் தெரியுமா? மா: அவள் யோகம் என்ன என்று அறியத்தான் கேட்டேன். முதல்வன்: வேறு என்ன திருமணயோகம்தான். சம்பந்தக் காரன் கண்ணழி மூர்க்கில்லத்து நம்பூதிரிப்பாடாம்! பெருங் குபேரச்செல்வனாம்! மாதவன் தலை சுழன்றது. கண்கள் இருண்டன. மின்னேறுண்ட மரம்போல் அவன் உடல் சாய்ந்தது. நின்ற இடத்திலேயே இருந்துவிட்டான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் திடுமென ஏதோ எண்ணிச் சட்டைப்பையில் கைவிட்டு ஒரு கடிதத்தை எடுத்தான். நம்பூதிரிப்பாட்டின் வரவுகாரணமாக இந்துலேகா கடிதம் எழுதுவது தடைப்பட்டிருந்தது. அவன் இரண்டாம்நாள் கழித்து முடிந்தபின்பே அவள் அதை முடித்தனுப்பியிருந்தாள். மாதவன் அன்றே புறப்பட்டு விட்டதனால் அது அவனுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் முதல்நாள் அஞ்சலிலேயே அவன் தந்தை கோவிந்தப்பணிக்கர் அவனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். புறப்படும் அவசரத்தில் மாதவன் அதை அரைகுறையாக வாசித்துவிட்டுச் சட்டைப் பையிலிட்டிருந்தான். அவன் இப்போது எடுத்து வாசித்துப் பார்த்தது அதுவே. “காரணவன் பஞ்சுவும் கேசவன் நம்பூதிரியும் இந்துலேகாவுக்குக் கண்ணழி மூர்க்கில்லத்து மனை சூரிநம்பூதிரிப்பாடு என்ற, குபேரச் செல்வனுக்குச் சம்பந்தம் செய்துவிடப் பகீரத முயற்சி செய்கிறார்கள். இது நடக்கப் போவதில்லை. ஆயினும் நடக்கும் செய்திக்குத்தான் விவரம் எழுதுகிறேன். அதுபற்றி உனக்கு ஒரு சிறிதும் கவலை வேண்டியதில்லை.” ‘ஆகா! அப்பா எனக்குத் தேறுதல் எழுதியிருக்கிறார். அவரை மீறிக் காரியம் நடந்திருக்கிறது. குபேரச் செல்வத்தில் இந்து மயங்கிப் போய்த் தன்னிலை மறந்திருக்க வேண்டும். அல்லது காரணவரும் கேசவன் நம்பூதிரியும் கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும். எப்படியானாலும் என் வாழ்வு முடிந்தது; என் கனவுக்கோட்டைகள் தகர்ந்தன’ என்று தனக்குள்ளே பலவாறாகக் குழம்பினான் மாதவன். இந்துலேகாவை நினைக்குந்தோறும் கண்டதையும் கேட்டதையும் அவனால் நம்ப முடியவில்லை. ஆனால் கண்டதும் கேட்டதும் எண்ணுந் தோறும் மீண்டும் மனம் இடிவுற்றது. அவன் மனம் சிந்திக்க மறுத்தது. செய்வது இன்னது, போவது எங்கே என்ற திட்டமில்லாமல் அவன் ஊர்தி நிலையத்தை அடுத்த அரசமரத்தடியில் சென்று அங்குமிங்கும் நடந்தான். அவனைக்கடந்து மற்றொரு கூட்டம் சென்றது. நம்பூதிரிப்பாட்டின் ஊர்வலத்தின்போது ஊட்டுப்புரையிலிருந் தவர்களே அவர்கள், ஊர்வலக் காட்சியை அவர்கள் வர்ணித்துக் கொண்டு சென்றனர். இந்துலேகாவின் பெயர் இங்கும் அடிபட்டது. “மூடுபல்லக்கில் இந்துலேகா. மற்றொரு பல்லக்கில் நம்பூதிரிப்பாடும் செறுசேரியும். ஆளும் தடியும் தாளமும் மேளமும்! என்ன முழக்கம், என்ன வேகம்? ஆனையும் பின்னிட ஓடுகின்றனர். மணமுடித்து வீடு செல்பவருக்கு ஏனோ இந்த அவசரம்?” என்று அவர்கள் அக்காட்சியை உயிர்த் துடிப்புடன் தீட்டிக் காட்டினார்கள். நெடுநேரம் சிந்தித்தும் தான் காண்பதும் கேட்பதும் கனவா நனவா என்று மாதவனால் உறுதிப்படுத்த முடியவில்லை. அவன் அறிவு புரண்டது. உணர்வு குலைந்தது. மரத்தடியில் சாய்ந்தபடியே நெடுநேரம் கிடந்தான். அருகே யாரும் இல்லை. ஆனால் சற்றுத் தொலைவில் இருந்த விடுதிக்கார மாது அவன் விழுந்து கிடப்பதைக் கவனித்து அருகேவந்து ‘என்ன வேண்டும் சிறிது மோர் கொண்டு வரட்டுமா?’ என்றாள். அவன் காது கேட்டது. நா அசையவில்லை. ஆயினும் அவள் சிறிது மோர் கொண்டு வந்து வாயில் ஊற்றினாள். அவன் சிறிது எழுந்து உட்கார்ந்தான். ஆனால் கொஞ்ச நேரத்தில் அவன் வயிறு ஏற்றதையும் மேலே தள்ளிற்று. அவன் மீண்டும் சோர்வுற்று விழுந்து கிடந்தான். எவ்வளவு நேரம் அவன் கிடந்தான் என்று கூற முடியாது. நிழல் இருந்த இடத்தில் வெயில் கடந்ததனால், உடம்பு சுள்ளென்றது. அவன் மீண்டும் எழுந்து சிறிது தள்ளாடி ஊர்திப் பக்கம் சென்றான். ஊர்தியருகே செல்லும் கூட்டத்திடையே ஒருவர் பழக்கப்பட்டவர் போலத் தெரிந்தது. ஆம்! அது சங்கர சாஸ்திரிகள்தான் என்று தோன்றிற்று. சாஸ்திரிகளே, சாஸ்திரிகளே என்று கூவினான். அவர் திரும்பிப் பார்த்தார். மாதவனைக்கண்டு திடுக்கிட்டார். அவன் கண்ணில் விழிக்க அவருக்கும் கஷ்டமாகவே இருந்தது. ஆயினும் அவனை விட்டுச் செல்ல அவர் துணியவில்லை. அவனருகே வந்தார். தெரிந்த ஒருவர்மூலமும்தான் கண்டதும் கேட்டதும் மெய்தானா என்று கேடக அவன் துடித்துக் கொண்டிருந்தான். ‘மாதவிபற்றி ஏதேதோ கேட்கிறேனே! அவை உண்மைதானா சாஸ்திரிகளே!’ என்று ஈனக்குரலில் கேட்டான். “ஆம்!” என்று ஒரு சொல் அவரைமீறி வெளிவந்தது. அது கேட்டதே மாதவனுக்குக் கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையும் போயிற்று. ஆனால் அச்சமயம் மாதவனைக் குற்றுயிராக்கியிருந்த அந்தச் செய்தி சங்கர சாஸ்திரிகளின் நல்ல உள்ளத்தைப் புயலாக்கியிருந்தது. அவர் நான்கு நாட்கள் ஓயாதுபட்ட கவலை யெல்லாம் தன்னுள் அடக்கிக்கொண்டிருந்தார். மாதவனைக் கண்டதே அவர் அடக்கிவைத்திருந்த மெய்முழுவதும் பீறிக் கொண்டுவந்து அவர் சின்னஞ் சிறுபிள்ளைபோல மாதவனைக் கட்டிக் கொண்டு கதறியழுதார். மாதவனும் உடனழுதான். இறுதியில் மாதவனே சங்கர சாஸ்திரிகளுக்கு ஆறுதல் கூற வேண்டியதாயிற்று. நண்பர் இருவரும் சென்ற இரண்டு நாட்களில் தரம் கண்டதும் கேட்டதும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டார். இதனால் மாதவன் இதயப்பண்புகள் முன்னிலும் பலமாகவே கிளறப்பட்டன. ஏனென்றால், இந்துலேகாவுக் கெதிராகக் காரணவர், கேசவன்நம்பூதிரியின் கட்டாயத்தால் செய்தி நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற ஒரு ஆறுதல் மாதவனுக்கு இருந்தது. சாஸ்திரிகள் கூறியதால் அது முற்றிலும் தகர்ந்தது. மாதவன் கடிதம் கண்ட மகிழ்ச்சியில் பாறுவுக்குத் தாலி பரிசளித்த செய்தி நம்பூதிரி வந்ததனால் உண்டான மகிழ்ச்சி என்று சாஸ்திரிகள் நம்பியபடி மாதவனுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இரவே புக்ககம்போக வேண்டுமென்ற பிடிவாதமும் இடையே தங்கக்கூடாதென்ற ஆத்திரமும் நம்பூதிரிப் பாட்டினுடையவை யல்ல. இந்துலேகாவுடையதே என்று கேட்டு மாதவன் ஏங்கினான். அவன் பிடித்துத் தொங்கிய மயிரிழை ஆதாரமும் அகன்றது. மாதவனுக்கு உணவுகொள்ள மனமில்லை. சங்கர சாஸ்திரிகள் தாம் சென்று ஊட்டுப்புரையில் உண்டு சிறிது உணவு எடுத்துக்கொண்டு வந்ததைக்கூட உண்ண முடியவில்லை. செம்பாழியிடத்துக்கு இதன்பின் செல்லவோ, பழக்கப்பட்ட இடங்களைப் பார்க்கவோ கூட அவன் விரும்ப வில்லை. உயிர்வாழவும் ஒரு சிறிதும் விரும்பவில்லை. ஆயினும் தற்கொலைப் பழியை எண்ண அவன் உடம்பு இடங்கொடுக்க வில்லை. உடனே திரும்பச் சென்னைக்கே போய்ப் பின் செய்வதுபற்றி சிந்திக்க எண்ணினான். சாஸ்திரியும் அவன் கூடச் செல்ல விரும்பினார். ஆனால் தந்தையிடம் செய்தி கூறி ஆறுதலளித்துப் பின்னால் வரும்படி அவரை வேண்டினான். அடுத்த ஊர்தியிலேயே சென்னை புறப்பட்டான். வண்டியில் அவன் உடல்தான் கிடந்து கொண்டது. அவன் உயிர் கவலைகளாகிய புயல்களில் தத்தளித்தது. அடிக்கடி உணர்விழந்து துடி துடித்தது. ஊர்தியிலிருந்திறங்கியதே அவன் நேரே பணி மனைக்குச் சென்றான். அவனுக்குப் பணிமனையில் இடம் வாங்கித் தந்தவர் கில்ஹாம் என்ற வெள்ளையர். மாதவனிடம் அவருக்குப் பற்றும் பாசமும் மிகுதி. அவன் அறிவுத் திறத்திலும் சுறுசுறுப்பிலும் பண்பிலும் அவர் மிகவும் பெருமை கொண்டவர். மேலாள் கீழாள் என்ற வேற்றுமையில்லாமல் அவனுடன் பழகி வந்தவர். மாதவன் தன் திருமணத்துக்கென ஒருவார ஓய்வு பெற்றுச் சென்றிருந்தான். அப்படியிருக்க, திருமண மறுநாளே திரும்பிவருவது கண்டு திடுக்கிட்டார். அவன் முகத்தோற்றம் அவருக்கு மேலும் கிலியூட்டிற்று. “என்ன மாதவா? என்ன நடந்தது? ஏன் உடனே திரும்பி விட்டாய்? என் இப்படி ஒளியிழந்திருக்கிறாய்?” என்று கேட்டார். மா: யாருக்கும் எதுவும் நேரவில்லை. ஐய! ஆனால் எனக்கு வாழ்விலுள்ள பற்றுதல் முற்றிலும் நீங்கிவிட்டது. வெள்ளை நண்பருக்கு நிலைமையை எளிதில் ஊகிக்க முடிந்தது. காதல் முறிவன்றி வேறெதுவும் இவ்வளவு மனக்கசப்பை உண்டுபண்ண வழியில்லை என்று அவர் அறிந்தார். அதற்காக அவர் தனக்கே அவ்வகைத் துயர் சேர்ந்தது போல வருந்தினார். தக்க அனுபவ அறிவுரை தர முனைந்தார். “என்ன நடந்திருக்கக்கூடும் என்று என்னால் ஊகிக்க முடிகிறது, மாதவா? ஆனால் இந்த நேரத்தில் உள்ள கசப்பில் எதுவும் விளங்காது. தெய்வம் கட்டாயம் வழி விடும். நானும் எந்த வழியில் உனக்கு உதவ வாய்ப்பு ஏற்பட்டாலும் மகிழ்வுடன் செய்வேன்! என்றார். மா: தங்கள் நல்ல உள்ளத்தை நான் அறிவேன், ஆண்டே! ஆனால் எனக்கு வந்த பேரிடியினின்று நான் மீள வேண்டுமானால், நான் இங்கே இருக்கக்கூடாது. தொலை அயல் நாடுகளில் சென்று உலகு சுற்றிச் சில நாள் கழிக்க விரும்புகிறேன். ஆகவே தயவுகூர்ந்து எனக்கு ஒரு ஆண்டு ஓய்வு தரும்படி கோருகிறேன். அயல்நாடுகள் செல்வது இத்தகைய மனநிலைக்கு உகந்ததென்று ஒத்துக்கொண்டார். ஆனால் அது குளிர்காலமாதலால் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லுவது வாய்ப்பாகாது என்றும், இந்தியாவின் வட பகுதியிலும் பர்மாவிலுமே சுற்றும்படியும் கில்ஹாம் அறிவுரை கூறினார். அத்துடன் ஒரு ஆண்டு ஓய்வு எடுக்க வேண்டாமென்றும், நாலுமாதம் இப்போது எடுத்தால் பின் வேண்டும் போது அதைத் தொடர்ந்து மிகுதி எடுக்கலாமென்றும் கூறினார். மாதவன் அவர் அறிவுரை என்று நாலுமாதம் ஓய்வுக்கு மனுவிட்டான். அதை ஏற்று இணக்கமளித்தார். மாதவனை வாழ்த்தினார். இப்போது உன் உடல் மிகவும் தளர்ந்துள்ளது. ஓய்வு எடுத்துச் சிற்றுண்டியும் அருந்திச் செல்லும்படி வற்புறுத்தினார். அவர் வற்புறுத்தலினால் அவர் வரவழைத்த சிற்றுண்டி யருந்திவிட்டு மாதவன் தன் அறைக்கு மீண்டான். சின்னனையும் வேலையாட்களையும் அவன் வண்டியேற்றி ஊருக்கு அனுப்பினான். சின்னனிடம் அவன் வேறு எதுவும் கூறவில்லை. சில நாள் வெளியூர் செல்ல வேண்டியிருக்கிறது. ‘நீ ஊர் சென்றிரு. விவரங்கள் அப்பாவுக்கும் கடிதத்தில் எழுதியிருக்கிறேன்’ என்றுகூறி அனுப்பினான். அச்சமயம் கோவிந்தப் பணிக்கர் கோவிந்தன்குட்டி ‘மேனவனுடன் உரையாடிக் கொண்டிருந்தார். வேலையாள் வந்ததும், ‘ஆ மாதவன் வந்துவிட்டானா? என்றெழுந்தார். சின்னன்மேனவன் வந்திருக்கிறார். மாதவன் மேனன் வரவில்லை. ஆனால் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்’ என்றான். கோவிந்தப் பணிக்கர் நாடி அப்போதே தளர்ந்தது, உடம்புக்கு ஒன்றுமில்லையே என்று கேட்டவண்ணம் கடிதத்தை உடனே உடைத்து வாசித்தார். வேலையாள் ‘இல்லை’ என்றான். கடிதம் கண்ட உடனே அவர் கோவெனக் கதறினார். ‘ஐயோ மகனே! நீ என்னைப் பார்க்காமலா போய்விட்டாய்?’ என்றழுது புலம்பலானார். கோவிந்தன்குட்டி மேனவன் திடுக்கிட்டார். என்ன செய்தி என்றறியக் கீழே கிடந்த கடிதத்தை வாசித்தார். தந்தை அலறலால் ஏற்பட்ட முதல் அச்சம் தீர்ந்தது. ஆயினும் அவர் மனமும் குழப்பநிலை யடைந்தது. கடிதத்தில் கீழ்வருமாறு எழுதப்பட்டிருந்தது. “சங்கர சாஸ்திரிகள் மூலம் நடந்தவைகளனைத்தும் உணர்ந்தேன். என்னைப் போலவே நீங்களும் இந்துலேகாவிடம் உறுதியாயிருந்தீர்கள். ஆகவே நான்தான் ஏமாந்து போனேன் என்று சொல்வதற்கில்லை. பணத்தின் ஆற்றலை வேறு சிலர் அறிந்துள்ள அளவில் நீங்களோ நானோ அறியவில்லை. எனக்கு மனஅமைதி சிறிதும் இல்லாததனால் நாடு சூழ்வரச் செல்கிறேன். மன அமைதி ஏற்பட்ட பின்னரே நான் தங்களையும் அம்மாவையும் வந்து காண எண்ணுகிறேன். ஆனால் தற்கொலை முதலான பொறுப்பற்ற செயல்களில் இறங்குவேனென்று நீங்கள் சிறிதும் கவலை கொள்ள வேண்டாம். யார் உரிமை கொள்ள மறந்தாலும் இந்த மாதவன் மீது உங்கள் உரிமை என்றும் உள்ளது. மாறாதது; அதைப்பேணித் திருப்ப உங்களிடம் வருவேன், என்று எத்தனை நாளைக்குள் என்று என் குழம்பிய மனநிலையில் இப்போது எனக்கே தெரியவில்லை. என் அம்மா என்னைக் காணாமல், நினையாமல் ஒருகணம் இருப்பது எவ்வளவு கடுமை என்பதை நான் அறிவேன். உங்கள் துன்பமும் பெரிதாயிருப்பது உறுதி. ஆனால் அம்மாவுக்காகத் தங்கள் துன்பம் அடக்கி அம்மாவுக்கு ஆறுதல் தரவேண்டும். இன்றே சென்னைவிட்டு நான் புறப்பட்டுவிட்டேன். “மாதவன்” மாதவனக்கு ஏதோ தீங்கு நேர்ந்துவிட்டதோ என்ற முதல் அச்சம் கோவிந்தன் குட்டிமேனவனுக்கு அகன்றது. மாதவன் அறிவிலும், துன்பக் கடல் நீந்தி அவன் கரையேறி விடுவான் என்ற நம்பிக்கையிலும் அவருக்கு உறுதி இருந்தது. தப்பெண்ணம் எப்படியும் விரைவில் நீங்கிவிடுமென்றும் அவர் நம்பினார். ஆயினும் மாதவன் குடும்பத்திலும் பூவள்ளித் தரவாட்டிலும் மாதவன் தப்பெண்ணத்தினால் ஏற்படக்கூடும் பெரும் கொந்தளிப்பை எண்ணி அவர் கவலைகொண்டார். அதற்கான முயற்சியை அவர் தெளிந்த உள்ளம் திட்டமிட்டு வந்தது. அவர் முதலில் கோவிந்தப்பணிக்கரைத் தேற்றி எழுப்பினார். அவர் துயரம் ஆற்ற அரும்பாடுபட்டார். “அந்தோ, அண்ணா! நீங்களே இப்படி நெருக்கடி நேரங்களில் உணர்வைத் தளரவிட்டால், மற்றவர்களை யார் தேற்றுவது. இப்போது என்ன அப்படி நீக்க முடியாத துன்பம் நேர்ந்துவிட்டது! மாதவனுக்குப் பெருந்தீங்கு ஒன்றும் இல்லை. மாதவன் கவலைக்குக் காரணமான செய்திகூட ஒரு தப்பெண்ணம் தான். அவன்தான் சிறுவன், ஆய்ந்தோய்ந்து காரியமாற்றாமல், தானும் தொல்லைப்பட்டுப் பிறருக்கும் தொல்லை உண்டு பண்ணுகிறான், நீங்களாவது இப்போது நிலைமையை எப்படிச் சமாளிப்பது, பார்வதியும் இந்துலேகாவையும் எப்படித் தேற்றுவது என்று சிந்திக்காமல், மேல்செய்வதைத் திட்டமிடாமல், இப்படிச் சோர்வுக்கு ஆளாகலாமா!” என்று வாதாடினார். கோவிந்தகுட்டிமேனவன் சொற்கள் கோவிந்தப்பணிக்கருக்கு ஒருவித ஆறுதலும் தந்தன. அவர் அறிவுக்கும் பொருத்தமாகத் தோற்றிற்று. ஆயினும் அவர் உணர்சசி அவரை இப்போதும் வேறொரு வழியில் இழுத்தது. ‘ஆம், தம்பி! நீ சொல்வதுதான் சரி. இனி மாதவனைச் சென்று தேடவேண்டும். அவனைத் தேடிக்கண்டு பிடித்த பின்னல்லாமல் நான் சாப்பிடப் போவதில்லை’ என்றார். இதற்குள் சென்னையிலிருந்து மாதவன் வரவில்லை. கடிதம்தான் வந்துள்ளது என்ற செய்தி பரவிற்று. பார்வதியம்மாள் ஓடிவந்து ‘என் பிள்ளைக்கு என்ன நடந்தது?’ என்று அலறினாள். அவள் பின்னே இந்துலேகா, குஞ்சுக்குட்டியம்மா அம்மூ முதலிய பலரும் வந்து கூடினர். ‘சென்னைச் செய்தி என்ன? என்னிடம் கூறப்படாதா மாமா?’ என்று இந்துலேகா கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டாள். “துளிப்பட ஒன்றுமில்லை. இந்து, நீ முதலில் உள்ளறைக்குப் போ. நான் பார்வதிக்கு முதலில் ஆறுதல் சொல்லட்டும்” என்றார் கோவிந்தப் பணிக்கர். இது கேட்பதற்குள் பார்வதியம்மா கூக்குரலிட்டு உருண்டு புரண்டாள். “ஐயோ மகனே, இனி உன்னை எங்கே காணப்போகிறேன். என்னிடம் சொல்லாமல் எங்கே போனாய்? உன்னைச் சென்னைக்கனுப்பி விட்டு உயிரோடிருந்தேனே! இனி எப்படி இருப்பேன்? என்று கதறினாள். அவளை யாரும் தேற்றுவதற்குள் அவள் உணர்விழந்தாள். இந்துலேகாவுக்கும் மனத்தில் ஆயிரம் ஐயங்கள் எழுந்து தேள்கள் போல கொட்டத் தொடங்கின. சட்டென்று மேசையில் கிடந்த எழுத்து எடுத்து வாசித்தாள். அடுத்த கணம் அவள் அறைசென்று நெஞ்சிலடித்தும் முட்டியும் அழத் தொடங்கினாள். அறிவிற் சிறந்த இந்துலேகாவுக்கு இச்சமயம் அறிவு சிறிதும் பயன்படவில்லை. அவள் குழந்தைபோலக் குழைந்து இழைந்து துடித்தாள். இச்சமயம் சங்கரமேனவன் வந்தார். நிலைமைகளை அவர் ஒரு நொடியில் ஊகித்துணர்ந்தார், பார்வதியம்மாவிடம் பக்குவமாய்ப் பேசினார். “பார்வதி! மாதவன் விரைவில் வரப் போகிறான், வந்தால் உன்னைப் பற்றித்தான் முதலில் கேட்பான். நீ அது வரையில் உடம்பைப் பார்த்துக் கொள்ளப் போகிறாயா? இல்லையா?” என்றார். பார்வதி: மாதவன் வரப்போகிறானா? எப்போ? எப்படி? சொல்லு, சொல்லு! ச.மே: அவன் தப்பெண்ணத்தால் நாடு சுற்றத்தானே போயிருக்கிறான். நீங்கள் அழுது உங்களுக்கு ஆறுதல் சொல்லும் நேரத்தில் நாங்கள் பம்பாய் போனால் கண்டு கொள்ளலாம். ஒருவேளை சென்னையிலேயே கண்டு பிடித்து விடலாம். நீயும் இந்துலேகாவும் அழுதால் எல்லாம் கெட்டுவிடும். அவனைக் கண்டுபிடிக்கத் தாமதமாய்விடும். பார்வதி: இதோ, நானாக அழுகையை நிறுத்தினேன். உடனே போய், என் மாதவனைப் போய் என்னிடம் கூட்டிவாருங்கள். கோவிந்தப்பணிக்கர் இப்போது தலையிட்டார். “அவனைக் காண நானும் கோவிந்தக்குட்டி மேனனுமே போகிறோம். ஆனால் அதற்குள் நீ இன்னொரு உதவி செய்ய வேண்டும். அதோ அங்கே இந்துலேகாவின் நிலையைப் பார்! அவளுக்கு உன்னைத் தவிர வேறு யாரும் ஆறுதல் சொல்ல முடியாது. அவளைத் தேற்று. அதன் பின் நாங்கள் புறப்படுகிறோம்” என்றார். இந்துலேகாவின் துன்பத்தை ஆற்றப் பார்வதியம்மாவும் கோவிந்தக்குட்டி மேனவனும் தம் திறமை முழுவதும் பயன்படுத்த வேண்டியதாயிற்று. “ஐயோ! அவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றது கூட என்னைக் கொல்லவில்லை. நான் இவ்வளவு மோசமானவள் என்று...” அவளைக் கோவிந்தப் பணிக்கர் முழுதும் பேசவிடவில்லை. “அதற்கு அவனைச் சரியானபடி தண்டிக்கத்தான் வேண்டும். நீதான் தண்டிக்கப் போகிறாய். ஆனால் ஆளைப் பிடித்துக் கொண்டு வந்த பின்னல்லவா அதுபற்றி யோசிக்க வேண்டும்” என்றார். உடனே எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். இந்துலேகாவை இது உடனே அமைதிப்படுத்திற்று. அத்துடன் சங்கர சாஸ்திரிகள் சூழ்நிலைகளால் இவ்வளவு தப்பெண்ணம் கொண்டிரா விட்டால் மாதவன் எதையும் எளிதில் நம்புபவன் அல்ல என்றும் அவர் எடுத்துக்காட்டி இந்துலேகாவின் உள்ளத்திலிருந்த கொதிப்பையும் கசப்பையும் மாற்றினார். எல்லாரும் மாதவனைத் தேடும் முயற்சியில் தத்தம் பங்கைத் கவனிக்கலானார்கள். நான்கு வேலைக்காரர்களுடனும் வேண்டிய பொருளுடனும் கோவிந்தப் பணிக்கரும் கோவிந்தன் குட்டி மேனவனும் சென்னைக்குப் புறப்பட்டார்கள். 16. மாதவன் சுற்றுப்பயண அனுபவங்கள் தன் உள்ளத்தில் கொந்தளித்து வீசிய புயலிலிருந்து தப்பிப் புற உலகிலே தென்றலின் குளிர்ச்சியை நாடினான் மாதவன். ஆனால் புற உலகிலும் எல்லாம் தென்றலாய் இல்லை. அவன் மனப்புயலின் புறநிழல்கள் போலப் பிற உலகிலும் புயலின் அலைகள் அவன்மீது வீசத்தொடங்கின. சென்னையிலிருந்து அவன் நேரே பம்பாய் சென்றான். அங்கே அவன் முதல் செயலே அவன் மன அமைதியின்மையின் விளைவை அவனுக்கு நன்கு எடுத்துக் காட்டிற்று. தன் பயணச் செலவை எண்ணி அவன் தன் தந்தை பரிசாக அளித்த கடுக்கன்களை விற்க முயன்றான். அதை அவன் பரிசாகப் பெற்றதாதலால் அதன் விலைமதிப்பு அவனுக்குத் தெரியாது. அவன் அனுபவக்கேட்டைக் கண்டு ஒரு தரகன் அதற்கு நூற்றறுபது வெள்ளி வாங்கித்தந்து அவனை ஏமாற்றினான். விற்றபின்தான் அதை விற்கும் தேவையே இல்லை என்பது அவன் நினைவுக்கு வந்தது. அவன் காசாகவும் தாள் பணமாகவும் இன்னும் முந்நூறு வெள்ளிக்குமேல் இருந்தது. மனஅமைதி நாடி மாலைநேரம் அவன் பம்பாயின் அழகிய துறை முகத்தையும் கடற்கரையையும் காணச் சென்றான். பம்பாய்த் துறைமுகம் இந்தியாவின் தலைவாசல் என்று புகழப்படுவதுண்டு. அதற்கேற்பப்பல மேனாட்டுக் கீழ்நாட்டுக் கப்பல்கள் ஒன்றுட னொன்று போட்டியிடுபவை போல் அங்கு அணியணியாய் நிற்பதை அவன் கண்டான். அவற்றின் இளங்குட்டிகள் போல நீராவிப்படகுகள் ‘குப் குப்’ என்று புகை தள்ளிக் கொண்டு அவற்றினிடையே சுற்றிச் சுற்றிச் சென்ற வண்ணம் இருந்தன. வெளிநாடு செல்லும் இளைஞர் நங்கையரை அனுப்பவந்த நண்பர் ஒருபுறம், வெளிநாட்டிலிருந்து வரும் புதல்வனை அல்லது புதல்வியை வரவேற்க வரும் பெற்றோர் ஒருபுறம், காதலனை விட்டுப் பிரியும் காதலியும் நெடுநாள் காதலியைவிட்டுப் பிரிந்து பின்கூடும் காதலனும் ஒருபுறம் எனத் துறைமுகக் காட்சி பலதிறப்பட்ட கவர்ச்சியுடையதாயிருந்தது. வெளிநாடு செல்லப்புறப்படும் கப்பல்களைக் கண்ட மாதவனுக்குத் தானும் பரந்த கடலில் பயணம் செய்தால் கவலை நீங்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. மேல் நாடுகள் செல்ல அவன் அப்போது எண்ணாததால், இந்தியாவுக்குள்ளேயே பயணம் செய்யும் கப்பலுண்டா என்று விசாரித்தான். கல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் செல்லும் ஒரு கப்பல் உண்டென்றும் அது புறப்படும் நேரம் அடுத்து விட்டதென்றும் கேள்விப்பட்டான். சற்றுப் பரபரப்புடன் அதில் கல்கத்தாவுக்கே ஒரு சீட்டு வாங்கிக் கொண்டு ஏறினான். மாதவன் அமைதியின்மையால் ஏற்பட்ட பெருந்தவறு களுள் இது மற்றொன்று என்பது விரைவில் விளங்கிற்று. கப்பல் எங்கே செல்கிறது என்றுதான் மாதவன் விசாரித்துக் கொண்டானே தவிர இது எப்போது சேருவது என்பதை அறிந்து கொள்ள வில்லை. கரையோரமுள்ள ஒவ்வொரு சிறு துறைமுகத்திலும் அது தங்கித் தங்கி ஆளும் சரக்கும் ஏற்றி இறங்கிச் செல்லுவதாதலால், அதில் யாரும் நீண்ட பயணம் செய்வதில்லை. கடலில் இரண்டொருநாள் கழித்தபின், மாதவனுக்குக் கடற்பயணத்தின் புதுமையெல்லாம் தீர்ந்தது. எங்கே கரையைக் காண்போம். எப்போது போய்ச் சேருவோம் என்றாய் விட்டது. ஆனால் ஆறு நாள் பயணம் செய்தபின், கப்பல் இப்போது எவ்வளவு தொலைவு வந்திருக்கிறது என்று கேட்டபோது, அது மலையாளக்கரைக்கு வந்திருக்கிறது என்று கேட்டு வியப்பும் திகைப்பும் அடைந்தான். மலையாளக்கரைத் துறைமுகங்கள் ஒவ்வொன்றிலும் அது ஒன்றிரண்டு நாட்கள் நின்றன. முதலில் கரையில் இறங்கிப் போய்ப் பார்க்கலாமா என்று எண்ணினான். தன் தாய் நிலப்பாசம் அவனைப் பலமாக முன்னே இழுத்தது. ஆனால் இந்துலேகாவின் எண்ணம் அவனை மீண்டும் பின்னே தள்ளிற்று. இந்துலேகாவின் எண்ணம் தாய் தந்தையைப் பற்றியும் நினைவூட்டவே, அவன் பின்னும் கலங்கினான். தன்னைக் காணாமல் அவர்கள் எவ்வளவு வருந்துவார்கள் என்று நினைத்த போது, அவன் தன் பயணம் எவ்வளவு நெஞ்சழுத்தமான செயல் என்று தன்னையே கடிந்து கொண்டான். கடலில் சிலநாள் கழிவதற்குள் அவனுக்கு உடல் நலிவுற்றது. அவனால் தன் அறையிலிருந்து வெளியே போக இயலவில்லை. சிலநாள் அவன் படுக்கையிலேயே கிடக்க வேண்டி வந்தது. கப்பல் சென்னைத் துறை முகம் வந்தபின்பே அவனுக்குக் கல்கத்தா போய்ச் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. உடலும் ஓரளவு குணமடைந்தது. அப்படியும் கல்கத்தாவில் கால் வைத்தபின்தான் கடலில் அவன் பட்ட அவதிகளுக் கெல்லாம் ஒரு முடிவு ஏற்பட்டது போல் இருந்தது. பம்பாயிலிருந்து அங்கே போய்ச் சேரக் கப்பலில் மொத்தம் இருபத்து மூன்று நாட்கள் ஆயின. இரண்டுநாள் மாதவன் கல்கத்தா நகரத்தின் நீண்ட தெரு வீதிகளையும் கடைகளையும் தொழிற்சாலைகளையும் சுற்றிப் பார்த்தான். மூன்றாம் நாள் அவன் அங்கிருந்த விலங்குக் காட்சிச் சாலையில் பலவகை விலங்கு பறவைகளை வேடிக்கையாய் பார்த்துக்கொண்டே சென்றான். சிறுத்தைப்புலி ஒன்றுக்கு இரைபோடும் காட்சியை அவன் சற்று நின்று கவனித்தான். அச்சமயம் அவனெதிரே மேனாட்டுப் பாணியில் உடையணிந்த மூன்று நாலு செல்வர் வந்தனர். அதே காட்சியைக் காண அவர்களும் அவ்விடத்தே நின்றனர். விலங்குகளை ஒவ்வொன்றையும் தனித்தனி கூண்டுகளில் அடைத்திருந்தது. அத்துடன் வெளியே பொதுவாக ஒரு அழிவேலியும் இருந்தது. புலிக்கு இரைபோடச் சென்றவன் வெளிக்கதவை முதலில் திறந்து உட்சென்றான். அதைவழக்கப்படி உள்ளிருந்தே தாழிட்டுக் கொண்டு போக அவன் மறந்து விட்டான். ஆகவே உட்கதவு திறந்ததே புலி உறுமிக்கொண்டு இரண்டு கதவுகளையும் கடந்து பாய்ந்தது. அதைக் கண்டதே அச்செல்வர்களும் தொலைவில் நின்றிருந்த பிறகும் ஒருவர்மீது ஒருவர் மோதி விழுந்தடித்து ஓடத் தொடங்கினர். தத்தம் உயிரைக்காக்கும் துடிப்பில் எவரும் பக்கத்திலுள்ளவர்கூடத் தள்ளிக் கொண்டு போயினர். விலங்குகளின் காவலர்கள்கூட மலைப்பால் செயலிழந்து நின்றுவிட்டனர். மாதவன் ஒருவனே அந்தக் கும்பலில் தன்னுணர்வு கெடாமல், தன் சட்டைப் பையிலிருந்த அறுகால் வேட்டுச்சுழல் துப்பாக்கியை எடுத்துக் குறிபார்த்துச் சுடத் தொடங்கினான். செல்வர்கள் ஓடிமுடியாதவர்கள், அங்குமிங்கும் சுற்றினார்கள். புலி எளிதில் அவர்களில் இளைஞன் ஒருவன்மீது ஆத்திரத்துடன் பாயத் தொடங்கிற்று. இளைஞன் கிலிகொண்டு கிட்டதட்ட உயிரற்றவனாய் விழுந்தான். அது கண்டு மற்றச் செல்வர்கள் அலறினர். ஆனால் இதற்குள் மாதவனின் துப்பாக்கியிலிருந்து முதல் குண்டு புலியின் தோளில் பாய்ந்தது. அது சிறு காயமேயாதலால் புலி வெருண்டு கீழே விழுந்து கிடக்கும் இளைஞனை விட்டு விட்டு, மாதவனையே நோக்கிப் பாய்ந்து வந்தது. மாதவன் துப்பாக்கியிலிருந்து அடுத்தடுத்துக் குண்டுகள் பாய்ந்தவண்ணம் இருந்தன. இரண்டாவது குண்டில் புலி கீழே விழுந்தது. மூன்றாவது குண்டு அதன் உடலிலிருந்து உயிரைப் போக்கிற்று. அது பாய எழுந்த நிலையிலேயே பின்னோக்கிச் சாய்ந்து புரண்டது. திடீர் அதிர்ச்சியால் செயலற்றுக் கிடந்த காவலர்கள் இதற்குள் திறந்த கதவை அடைத்து மற்ற விலங்குகள் வெளிவராமல் தடுத்தார்கள். காட்சி சாலை மேலாள் செய்தியறிந்து வந்து மாதவனருகில் வந்து கைகொடுத்து அவன் திறத்தை மனமாரப்பாராட்டினர். இதற்குள் அலறிய பூமான்களும் விபத்துக்காளான இளைஞனும் மாதவனை ஆர்வத்துடன் அணுகினர். பூமான் ஆங்கிலத்திலேயே பேசினார். “அன்பரே! தங்கள் வீரமே வீரம்! இடரில் கலங்காத தங்கள் தன்னறிவே தன்னறிவு! தாங்கள் செய்த உதவிக்கு நாங்கள் என்ன கைமாறு செய்யப்போகிறோம்! என் அருமை மகனின் உயிர் இன்று தங்கள் கையிலேயே புத்துயிர் பெற்றது!” என்று அவர் அன்புடன் நன்றி பாராட்டினார். மாதவனுடன் அவர்கள் நெருங்கிப்பேசி அவனைப்பற்றிய செய்தியாவும் அறிந்து கொண்டனர். தம்மைப் பற்றிய செய்திகள் யாவும் அவனுக்கு அறிவித்தனர். கல்கத்தாவிலிருக்கும் வரை தம் விருந்தினராய் இருக்கும்படி அவர்கள் அவனை வற்புறுத்தி அழைத்தனர். “என் பெயர் பாபுகோவிந்தசேன். என்னுடன் இருப்பவர் கோபிநாத் பானர்ஜி என்ற என்னுடைய பங்காளி நண்பரும் சித்ரபிராசத்சேன் என்ற என் தம்பியும் ஆவர். இந்த இளைஞன் என் மகன் பாபுகேசவ சந்திரசேன் ஆவான். கல்கத்தாவில் இருக்கும் நாளளவும் எங்கள் விருந்தினராய் இருப்பதில் தங்களுக்கு மிகுதி இடைஞ்சலாவதும் இல்லையானால். அவ்வாறே இருக்கும்படி உங்களை மனமார அழைக்கிறோம்” என்றார் அவர். முன்பின் தெரியாத இடத்தில் கிடைத்த இந்தத் துணைவர்களின் ஆதரவை மாதவன் மகிழ்வுடன் ஏற்றான். அனைவரும் காட்சிமனையின் வாயிலுக்கு அருகே சென்றனர். அங்கே நான்கு முதல் தரமான குதிரைகள் பூட்டிய சிங்காரவண்டி ஒன்று நின்றது. அதிலேறி ஐவரும் கல்கத்தா நெடுஞ் சாலைவழி விரைந்தனர். ஒன்றிரண்டு கல் தொலை சென்றபின் நாற்புறமும் மதில்சூழ்ந்து ஒரு பெரிய பூங்காவின் நடுவே அமைக்கப்பட்டது போன்றிருந்த ஒரு விசாலமான மாட கூட மாளிகை நோக்கி வண்டி ஓடிற்று. அதுவே பாபு கோவிந்தசேன் வாழ்வக மாளிகை என்று மாதவன் அறிந்தான். அதன் பெயர் அமராவதி என்பது. அதன் பெயருக்கேற்ப அது ஒரு பொன்னுலக நகரம் போலவே வனப்பு மிக்கதாயிருந்தது. மாளிகை சூழ்ந்த மனைவெளி பலவகை நிழல்தரும் சாலைகள், பூஞ்செடி கொடிப் பண்ணைகள், வளைந்து வளைந்து பூம்படுக்கைகளிடையே செல்லும் தோட்டப் பாதைகள் ஆகியவை நிறைந்ததாய் இருந்தது. மாளிகையோ பல வண்ணங்களில் இழைத்துப் பளிங்கு போலப் பளபளப்பாக்கப்பட்ட சலவைக் கற்களால் சுட்டப்பட்டு, பல அடுக்கு மாடிகளை உடையதாய் வானளாவிய உயரமுடையதாய் இருந்தது. அதன் உள்ளே சென்று பார்த்தபோது, அது அகன்ற பெரிய கூடங்கள், அறை உள்ளறை பக்க அறைகள் ஆகியவை நிறைந்து ஒரு சிறிய நகரம் போலப் பலவகைக் காட்சிகளும் பரப்பும் உடையதாயிருந்தது. மேல் தளத்தின் பூவண்ணவேலைகளையும், பல வண்ணச் சர விளக்குகளையும் நாற்புறச் சுவர்களிலும் பதித்திருந்த நிலைக்கண்ணாடிகள் பெருக்கிக்காட்டின. தெய்வங்கள், தேசத் தலைவர்கள் படங்களும் இயற்கைக் காட்சி தீட்டிய ஓவியங்களும் வண்ணக் கலைக் காட்சிகளும் சுவர்கள் எங்கும் நிரம்பியிருந்தன. நிலத்தளத்தில் அடுக்கடுக்காக விரிக்கப்பட்டிருந்த மணிக் கம்பளங்கள், பட்டுக்கள் ஆகியவை நடப்பவர்கள் எல்லாரது நடையையும் அன்னமென்னடையாக்கி யிருந்தன. பலகணிகள், வாயில்கள் எல்லாவற்றிலும் பலநிறக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு, பலநிறப் பூ வேலைப்பாடுகள் செய்த பட்டுத் திரைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. நாற்காலிகள், சாய்விருக்கைகள், வில்வைத்த கட்டில்களில் பட்டு வேய்ந்த இலவம் பஞ்சு மெத்தைகள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றின் மீதும் மேசைகள் மீதும் மெல்லிய வலைப்பின்னல்களுடன் கூடிய துணிகள் அழகுபட விரிக்கப் பட்டிருந்தன. நாற்புறமிருந்தும் மலர்க்கொடிகளின் தென்றல் உள்ளே உலாவிற்று. அது போதாதென்று மேல் தளங்கிலும், மேசைகள் மீதும், பல இடங்களில் சுவர்களின் உள்ளேயும் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுக் கிட்டத்தட்ட எல்லா வேளைகளிலும் சில்லென்ற இரைச்சலுடன் காற்றை உமிழ்ந்து கொண்டிருந்தன. இரா நேரங்களில் சரவிளக்குகளல்லாமல் சுவரில் புதைந்தும் மின்னொளி விளக்குகள் இருட்டை அகற்றி ஒளி பரப்பின. மாளிகையின் பகட்டாரவாரமும், வாழ்வின் பெருமிதச் செலவுகளும் பாபு கோவிந்தசேன் கோடி குவித்த பெருஞ்செல்வர் என்பதை எடுத்துக் காட்டின. ஆனால் மாதவனிடம் அவர்கள் அச்செல்வச் செருக்கை ஒரு சிறிதும் காட்டவில்லை. நெருங்கிப் பழகிய உறவினர் போல எளிமையுடனும் அன்புப் பாசத்துடனும் பழகினர். தற்கால நவநாகரிகத்திலும் விஞ்ஞான வாய்ப்பு வசதிகளிலும் கோவிந்தன்குட்டி மேனவனுக்கு அளவற்ற பெருமையும் நம்பிக்கையும் இருந்தன. ஆகவே மாதவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் வகையில் ஒருவிதக் கஷ்டமும் இருக்க மாட்டாது என்று அவர் எளிதாக எண்ணியிருந்தார். ஆனால் அந்த வேலையாகப் புறப்பட்டதே, தான் எண்ணிய அளவு யாவும் எளிதல்ல என்று கண்டார். தந்தித் தபால், புகைவண்டி, விசை வண்டி ஆகியவற்றின் உதவியால்கூட ஒரு தனி மனிதனை அகல் உலகில் தேடுவது கடலில் துரும்பைத் தேடுவது போன்றதே என்பது அவருக்கு விளங்கிற்று. காவல் நிலையங்கள் இவ்வகையில் உதவக் கூடுமானாலும், பெருஞ்செலவும், நீடித்த காலமும் இத் தேட்டத்தில் செல்வது இன்றியமையாதது என்பதும் அவருக்குப் புலப்பட்டது. நண்பர் இருவரும் சென்னை வந்து சேர்ந்தவுடனே மாதவன் நண்பரும் மேற்பணியாளருமான கில்ஹாம் துரையை அணுகினார்கள். அவர் மூலம் மாதவன் நான்கு மாத ஓய்வே எடுத்திருந்தானென்றும், மனம் மிக வெதும்பியிருந்ததாலும் சுற்றுப் பயணத்தால் உளம் தேறவே சென்றிருக்கிறானென்றும் அறிந்து ஓரளவு ஆறுதல் அடைந்தார்கள். அதன்பின் அவர்கள் பம்பாய்க்கே முதலில் சென்றார்கள். பம்பாய் ஊரில் எங்கும் தேடியபின் அவர்கள் காசிக்குச் சென்றார்கள். காசியில் கோவிந்தப் பணிக்கர் திடீரென்று நோய்வாய்ப்பட்டதால், அங்கே பத்து நாள் தங்க வேண்டியதாயிற்று. கோவிந்தன் குட்டிமேனவனுக்கு இச்சமயம் எக்காரணத் தாலோ ஒரு புதிய சந்தேகம் ஏற்பட்டது. மாதவன் ஒருவேளை மேனாடுகளுக்குப் பயணம் சென்றிருக்கக்கூடும் என்று அவர் எண்ணினார். இதனால் அவர்கள் பைத்தியக்காரணைப் போலத் திரும்பவும் பம்பாய்க்கே சென்றார்கள். அங்கிருந்து வெளி நாடுகளுக்குக் கப்பலேறியவர்கள் பெயர்ப்பட்டியல்களை அவர் பெரு முயற்சியின் மீது பெற்று முழுவதும் ஆராய்ந்தார். மாதவன் பெயரை எந்தப் பட்டியலிலும் காணவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் தேடிய ஏட்டிலேயே மாதவன் பெயர் இடம்பெற்ற பட்டியல் இருந்தது. மாதவன் மேனாடுகளுக்குத் தான் போயிருப்பான் என்ற எண்ணத்தினால், அவர் கல்கத்தா செல்லும் கப்பலைக் கவனிக்கவில்லை. அதில்தான் மாதவன் சென்றிருப்பான் என்பது எவராலும் ஊகிக்க முடியாத செய்தியாக இருந்தது. பம்பாயிலும் கோவிந்தப் பணிக்கர் நோய்ப்பட்டு மூன்று நான்கு நாட்கள் தங்க வேண்டியதாயிற்று. பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்தினால் நல்லது என்றும் கோவிந்தன் குட்டிமேனன் எண்ணியிருந்தார். இந்துலேகாவைப் பற்றி மாதவன் கேட்ட செய்திகள் தவறானவை என்றும், அது பற்றி அவன்கொண்ட மயக்கம் அகற்றி உடனே தாய் தந்தையரையும் இந்துலேகாவையும் கண்டு அவர்கள் ஆறாத் துயரகற்ற வேண்டுமென்றும் பல பத்திரிக்கைகளில் அவர் விளம்பரப் படுத்தினார். மாதவன் பத்திரிக்கை வாசிக்கும் வழக்கமுடைய வனாதலால் இந்த விளம்பரங்கள் விரைவில் பயன்தரும் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால் இங்கும் துரதிர்ஷ்டம் குறுக்கிட்டது. அவர் விளம்பரப்படுத்திய சமயமே மாதவன் கல்கத்தாக் கப்பலில் சென்ற சமயமாய் இருந்தது. பத்திரிக்கைகள் அச்சமயம் அவனுக்குக் கிட்டவில்லை. கிட்டிய பத்திரிக்கைகளை வாசிக்கும் நிலையிலும் அவன் இல்லை. அவன் படுக்கையில் கிடந்து புரண்டு கொண்டிருந்த காலம் அது. 17. சந்திப்பு மாதவனும் அவன் புதிய நண்பர்களும் கல்கத்தாவில் பாபு கோவிந்தசேனின் மாளிகையில் சில நாட்கள் ஒருங்கே இருந்தனர். அதன் பின் கோவிந்தசேனின் புதல்வர் கேசவசந்திரசேனின் ஓய்வுநாள் முடிந்து விட்டதால், அவர் தன் வேலை ஏற்கும்படி பம்பாய் புறப்பட்டார். கோவிந்த சேனின் பங்காளியான கோபிநாத் பானர்ஜி அலகாபாத்திலுள்ள தன் கிளை நிலையத்துக்குப் பயணமானார். மாதவன் சிலநாட்கள் பர்மா, காசி, அலகாபாத், ஆக்ரா, டில்லி, லாகூர் ஆகிய இடங்களைப் பார்த்துவிட்டுப் பின்பே தாயகம் திரும்புவதாக அவர்களிடம் கூறியிருந்தான். அப்படித் திரும்பும் சமயம் அலகாபாத்தில் இரண்டு நாளும், பம்பாயில் இரண்டும் நாளும் கட்டாயம் வந்து தங்கள் விருந்தினராய் இருந்து போக வேண்டும் என்று அவ்விருவரும் மாதவனிடம் வற்புறுத்தி வாக்குறுதி பெற்றிருந்தனர். அவர்கள் போய் நான்கு நாட்களுக்குப் பின் மாதவன் பாபு கோவிந்த சேனிடம் அலகாபாத்துக்குப் புறப்படுவதாக விடை கோரினான். கோவிந்தசேன் கன்றைப் பிரியும் தாய்ப் பசு போலக் கலங்கினார். மாதவனும் அவர் அன்பில் முற்றிலும் ஈடுபட்டு அவர் ஆதரவுக்கு நன்றியும் பண்புகளுக்குப் பாராட்டும் தெரிவித்தான். தம் நினைவாக கோவிந்தசேன் மாதவனுக்குத் தங்கச் சங்கிலியுடன் கூடிய ஒரு தங்கக் கைக்கடிகாரமும், ஒரு பொன்சரிகை நிரம்பிய பட்டு அங்கி உடையும், வெள்ளி பதித்த தந்தப் பெட்டியும் பரிசாக அளிததார். தம் வண்டியிலேயே அவனை உடன்கொண்டு சென்று ஊர்தியில் ஏற்றினார். வண்டி புறப்பட்டது. மாதவன் பலகணி வழியாக இருபுறமும் ஆறுகள், பாலங்கள், காடுகள், ஊர்கள் ஆகியவற்றைப் பார்த்தவண்ணம் பயணம் செய்தான். அடிக்கடி அவன் உள்ளம் ஊர்தியையும் பயணத்தையும் மறந்து எங்கெங்கெல்லாமோ பறந்து தவழும். பசித்த வேளைகளில் மட்டும் அவன் மானசிகப் பயணத்தை நிறுத்தி, ஊர்தி நிலையங்களில் இறங்கிச் சிற்றுண்டிச் சாலையில் உணவருந்திவிட்டுத் திரும்பினான். ஒரு பெரிய ஊர்தி நிலையத்திலிருந்து வண்டி புறப்படுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன், ஓர் இளைஞன் வண்டி திறந்து மாதவனருகே வந்தமர்ந்தான். ‘நான் இங்கே சிறிது நேரம் இருப்பது பற்றித் தடை ஏதேனும் உண்டா?’ என்று அவன் வண்டியிலிருந்தவர்களைப் பார்த்துப் பொதுவாகக் கேட்பது போல் ஆங்கிலத்தில் கேட்டான். பொதுவாகக் கேட்டாலும் அவன் குறிப்பாக மாதவனையே நோக்கினான். வண்டியில் வேறு எவரும் ஆங்கிலம் தெரிந்தவராக இல்லாத நிலையில் மாதவனே பதிலளித்தான். ‘தடையேதும் கிடையாது, அன்பரே!’ என்றான் அவன். கொஞ்சநேரத்தில் இருவரும் எளிதில் நண்பர்கள் போலப் பேசிப் பழகி விட்டார்கள். மாதவன் தன் ஊர், பெயர், பயண நோக்கம் ஆகிய விவரங்க ளெல்லாவற்றையும் அவனிடம் கூறினான் அவனும் தன்னைப்பற்றிய பல விவரங்கள் தெரிவித்தான். “என் பெயர் ஷியர் அலி. நான் அலகாபாத்தில் உதவி நீதிபதியாய் இருக்கிறேன். என் தகப்பனார் ஒரு பெரிய வணிகச் செல்வர். நானும் வாணிகம் செய்ய வேண்டுமென்றே அவர் விரும்பினார். ஆனால் என் விருப்பம் பணித்துறையாதலால் இப்பணி ஏற்றேன். உங்களைப் பார்த்தவுடன் நீங்கள் ஒரு பி.ஏ., மட்டுமல்ல, ஒரு பி.எல். என்பது எனக்குப் புரிந்துவிட்டது. உங்களிடம் பேசுவதற்காகவே நான் இந்த வண்டியில் ஏறினேன். என் சீட்டு முதல் வகுப்புக்குரியது. முதல் வகுப்பு வண்டியில் என் மனைவி, புதல்வன் முதலியவர் இருக்கிறார்கள்” என்று விளக்கினான் நண்பன். அவன் கூறியதற்கேற்ற தோற்றமும் அவனுக்கு இருந்தது. அந்த ஆள் பொன்னிறமாகவும் நெட்டையாகவும் இருந்தான். தலையைக் கவிந்த பொன் தொப்பியும் நீண்ட பொற்சரிகை அங்கியும் பட்டுக்காற் சட்டையும் அவன் பெருஞ் செல்வ நிலையை எடுத்துரைப்பவை போலிருந்தன. அடுத்த பெரிய நிலையத்துக்கு வந்த சமயம் ஷியர் அலிகான் மாதவனுடன் பேசிக்கொண்டே அவனைக் கையால் பற்றிக்கொண்டு நடை மேடையில் இறங்கினான். அங்கு நின்று அவன் தன் ஏவலனைக் கூப்பிட்டான். தாடியுடைய மற்றொரு குள்ளமான பட்டாணி வந்தான். ஷியர் அலி மாதவன் மூட்டை முடிச்சுக்களை அவனுக்குக் காட்டினான். நாங்கள் சிற்றுண்டி யருந்தி வரும்வரை இந்தக் கனவானுக்குரிய அந்தப் பொருள்களைப் பார்த்துக் கொண்டிரு என்றான். ஏவலன் அப்படியே மாதவன் மூட்டைகளினருகில் அமர்ந்தான். ஷியர் அலி மாதவனைச் சிற்றுண்டி மனைக்கு அழைத்துச் சென்றான். பலவகை உணவு குடிகளுக்கு உத்தர விட்டான். பின் அவன் திடுமென ஏதோ நினைத்துக் கொண்டவன் போல மாதவனை நோக்கினான். “ஆ! மறந்து விட்டேன். என் மகன் முதல் வகுப்பில் என் மனைவியுடன் இருக்கிறான். நான் இல்லாமல் அவன் சாப்பிட மாட்டான். நான் அவனையும் அழைத்து வருகிறேன். இன்னும் 14 கணங்கள் இருக்கின்றன. இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடிச் சென்றான். சிற்றுண்டி மனை ஏவலாள் கேட்ட உண்டி குடிவகைகள் கொண்டு வந்தான். ஆனால் நண்பன் ஷியர் அலி வரட்டும் என்று மாதவன் காத்திருந்தான். கணங்கள் ஐந்து, பத்து, பதின்மூன்று ஓடின. நண்பனைக் காணாதது கண்டு வியந்து, மாதவன் முதல் வகுப்புக்கு ஓடிச்சென்று, ‘ஷியர் அலிகான், உதவி நீதிபதி ஷியர் அலிகான்!” என்று கூவினான். யாரும் பதில் கூறவில்லை. தான் இருந்த வண்டியண்டை சென்றான். அங்கே தன் மூட்டை முடிச்சுக்களையும் காணவில்லை. அவற்றுக்குக் காவலாயிருந்த ஏவலாளனையும் காணவில்லை. மாதவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வண்டி புறப்பட்டுவிட்டது. செய்வது இன்னதென்றியாமல் மாதவன் அங்கும் இங்கும் ஓடினான். வண்டி ஊர்தி நிலையம் கடந்தபின் அவன் நிலையத் தலைவரிடம் முறையிட்டுப் பார்த்தான். அவன் மூட்டையில் அவன் பணம் கிட்டத்தட்ட அத்தனையும், கோவிந்தசேன் தந்த பரிசுகளும் இருந்தன. அவை போய்விட்ட பின் அவனிடம் ஒன்றிரண்டு வெள்ளியும் பயணச்சீட்டும் மட்டுமே இருந்தன. நிலையத் தலைவன் அவன் முறையீட்டில் அக்கரை காட்டவேயில்லை. காவல் துறையினரிடம் கூறும்படி ஏவினான். காவல் நிலையம் சென்றபோது, அது மூடப் பெற்றிருந்தது. திரும்பவும் நிலைய முதலிவரிடம் வந்தான். அவர் ‘என்னால் என்ன செய்ய முடியும்?’ என்று கையை விரித்தார். அதேசமயம் இதுவரை அவனைத் தொடர்ந்து வந்த சிற்றுண்டி மனை ஏவலாள் சிற்றுண்டிக்கான விலை கோரினான். “நான் சிற்றுண்டி கோரவில்லை. திருடன்தான் கோரினான் நான் எப்படிக் கொடுக்க முடியும்” என்றான் மாதவன். ‘இருவரில் கைவசம் இருப்பவர்தான் இருவர் சார்பிலும் கொடுக்க வேண்டியவர்’ என்றான் ஏவலன். நிலைய முதல்வரிடம் அவன் இதுபற்றி முறையிட்டான். நிலைய முதல்வர் மாதவனே கொடுக்கும்படி பணித்தார். ‘என் கையில் உள்ள பணத்தை நான் கொடுத்து விடத் தடையில்லை. ஆனால் என் பணமும் பொருளும் திருட்டும் போன நிலையில் நான் என் நண்பர் ஒருவருக்குத் தந்தியடிக்க வேண்டும். அதை மட்டும் எனக்கு நீங்களே செய்து தர வேண்டும்’ என்று மாதவன் கேட்டான். நிலைய முதல்வர் இதற்கும் அசையவில்லை. ஆனால் தற்செயலாக ‘உன் நண்பன் யார்?’ என்று கேட்டார். ‘பாபு கோபிநாத் பானர்ஜி, அலகாபாத்’ என்றான் மாதவன். பானர்ஜியின் பெயர் கேட்டதே நிலைய முதல்வர் போக்கிலே குறிப்பிடத்தக்க மாறுதல் ஏற்பட்டது. அவர் அவனுக்கு இருக்கையளித்தார். ‘நீங்கள் பானர்ஜியின் நண்பரா? மன்னிக்க வேண்டும்!’ என்றார் சிற்றுண்டி மனை ஏவலனிடமும் இச்செய்தி குறிப்பிடத்தக்க மாறுதல் செய்தது. எனெனில் அவன்தன் பணத்தைப்பற்றிய கவலையேயில்லாமல் நழுவிச் சென்று விட்டான். நிலைய முதல்வர் மாதவனிடமிருந்து தந்திச் செய்தி எழுதி வாங்கினார். தந்தியடித்தார். அரைமணி நேரத்துக்குள்ளேயே பதில் தந்தி வந்துவிட்டது. தந்தி நிலைய முதல்வர் பெயருக்கே வந்தது. “மலபாரில் இருந்து வந்துள்ள மாதவனின் தந்தி கிடைத்தது. அவர் என் உயிருக்குயிரான நண்பர் அவரை என்னை நடத்துவது போலவே நடத்தி எல்லா வசதிகளும் செய்து கொடுக்கக் கோருகிறேன். தந்தி கிடைக்கும் போது இங்கிருந்து வரும் கடைசி வண்டி போய்விட்டது. இல்லாவிட்டால் நான் உடனே அங்கே வந்திருப்பேன். நாளை காலை முதல் வண்டியிலேயே வருகிறேன். திருட்டுப்பற்றி மாதவனுக்கு எந்தக் கவலையும் வேண்டாம். காவல் துறையில் நீங்களே அறிவித்து வேண்டிய நடவடிக்கை எடுக்கவும். “பாபு கோபிநாத் பானர்ஜி” நிலைய முதல்வர் பானர்ஜியிடம் பலவகையில் கடமைப்பட்டார். பல உதவிகள் பெற்றவர். மாதவனிடம் அவர் கொண்டுள்ள மதிப்பறிந்ததே, அவர் மாதவனுக்கு அரச உபசாரங்கள் செய்தார். அத்துடன் அவர் ஒரு மலையாளத்துச் சிற்றரசர் என்றும், ஒரு இலட்சம் வெள்ளிவரை திருட்டுப் போயிற்றென்றும் காவல் துறையினரை அழைத்து ஆர்ப்பாட்டம் செய்தார். மாதவன் காதல் துறையினரிடம் தன்னைப்பற்றியும் திருட்டைப் பற்றியும் கூடியமட்டும் விவரமாக உண்மையையே எடுத்துக் கூறினான். மூட்டையில் கல்கத்தா நண்பரான பாபு கோவிந்தசேன் பரிசுகள் இருந்தன வென்றும், அவற்றின் விலை மதிப்புத் தனக்குத் தெரியாதென்றும் மட்டும் கூறினான். இது கண்டு நிலைய முதல்வர் சிறிது ஏமாற்றமும் வியப்பும் அடைந்தார். ஆனால் பானர்ஜி மட்டுமன்றி சேனும் அவர் நண்பர் என்பது கேட்டு நிலைய முதல்வரும் காவல் துறையினரும் அவனை முன்னிலும் மதித்தனர். காவல் துறையினர் சிற்றுண்டி மனை ஏவலனையும் பிற ஏழைப்பணி யாளரையும் துன்புறுத்தியதன்றித் திருட்டு வகையில் வேறு எவ்வகைத் துப்பும் காண இயலவில்லை. கோபிநாத் பானர்ஜி இரவே கல்கத்தாவில் கோவிந்த சேனுக்குத் தந்தியடித்து மாதவன் செய்திபற்றிக் கூறினார். கோவிந்தசேன் இரவே தந்திமூலம் பதில் தெரிவித்தார். “மாதவனுக்கு நேர்ந்த இடர்பற்றி வருந்துகிறேன். ஆனால் அதுபற்றி மாதவனுக்குக் கவலை எதுவும் வேண்டியதில்லை. அவர் கணக்காக இரண்டாயிரம் வெள்ளிவரை பொருளகங் களிலிட்டுப் பயணகாலத்தில் வேண்டுமிடங்களிலெல்லாம் எடுத்துக் கொள்ளும்படி கூறுங்கள். அத்துடன் அனுபவமுள்ள நம் ஏவலர் ஒருவரையும் அவருடனே அனுப்பி, சுற்றுப்பயணம் முடிந்து மலபார் செல்லும்வரை உடனிருந்து உதவும்படி செய்யுங்கள். போன பொருள்கள் அகப்பட்டாலும் அகப்படா விட்டாலும் , அதன் பொறுப்பு என்னுடையது என்று மாதவனிடம் தெரிவியுங்கள்” என்பது அப்பெருந்தகையின் பதிலாயிருந்தது. கோபிநாத் பானர்ஜி வந்து கல்கத்தா தந்தியைக் காட்டிய போது மாதவன் தழுதழுத்த குரலில் கோவிந்த சேனையும் பானர்ஜியையும் வாயார வாழ்த்தினான். ஆனால் தன் சுற்றுப்பயணத்தை மேலும் தொடராமல் சென்னைக்கே சென்றுவிட்டுத் திரும்பிவர விரும்புவதாகத் தெரிவித்தான். பானர்ஜி இதை ஒத்துக் கொண்டாலும் நாலைந்து நாட்களாவது தம்முடன் இருக்க வேண்டுமென்றும், அதன்பின் பம்பாய், சென்று அங்கிருந்தே சென்னை செல்ல வேண்டுமென்றும் வற்புறுத்தினார். மாதவன் இவ்வன்பு வற்புறுத்தலை மறுக்கமாட்டாமல் அவ்வாறே தங்கிச் செல்ல இணங்கினான். பம்பாயில் கோவிந்தப்பணிக்கர் உடல்நோய் ஒருநாள் இரண்டுநாள் என்று நீடித்துக் கொண்டே போயிற்று. இதனால் மாதவனைத் தேடும் பயணமும் தடைப்பட்டே நின்றது. ஒவ்வொருநாளும் பர்மாவுக்கு மறுநாள் புறப்பட வேண்டும். அடுத்த நாள் புறப்படவேண்டும் என்று கழித்துக் கொண்டே அவர்கள் பம்பாயில் தங்கியிருக்க வேண்டியதாயிற்று. ஒருநாள் கோவிந்தகுட்டிமேனவன் கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்தார். அவ்வழி தற்செயலாக வந்த கேசவசந்திரசேன் அவரைக் கடந்து சிறிது தொலை சென்றபின், திடுமென ஏதோ நினைத்தவராய் அவரை நோக்கி வந்தார். மாதவனை ஒத்த தோற்றம் அவரிடம் இருப்பதாக அவருக்குத் தென்பட்டது. “அன்பரே நீர் எந்த நாட்டவர் என்று நான் அறியலாமா?” என்று ஆங்கிலத்தில் வினவினார். “மலபார்!” என்று கோவிந்தக்குட்டி சொன்னதே அவர் முகத்தில் புத்தொளி வீசிற்று. “நான் நினைத்தேன். சரி, அப்படியானால் மலபாரிலிருந்து மாதவன் என்ற ஓர் இளைஞனை அறிவீர்களா?” என்று கேட்டார். ‘மாதவன்’ என்ற பதத்தை எதிர்பாராமல் கேட்டதே கோவிந்தன் குட்டிமேனவன் துள்ளிக் குதித்தார். “ஆகா! மாதவனை உங்களுக்குத் தெரியுமா? அவன் எங்கே? என்ன நிலையில் இருக்கிறான்? அவனைக் காணாமல் தானே மாதக்கணக்காக நாங்கள் தேசதேசமெல்லாம் அலைந்து திரிகிறோம்!” என்று படபடப்புடன் கேட்டார் கோவிந்தன் குட்டி. கேசவசந்திரசேன் மாதவனைப் பற்றித்தாம் அறிந்த தனைத்தையும் கூறினார். இதுகேட்டுக் களிப்படைந்த கோவிந்தன் குட்டி மேனோன் சுருக்கமாக மாதவன் ஒரு தப்பெண்ணத்தால் வெளியேறியதையும், அவன் தந்தையும் தானுமாய் அவனைத் தேடுவதையும், தந்தை உடல் நலமில்லா நிலையையும் எடுத்துரைத்தார். பின் ‘மாதவன் இப்போது எங்கிருக்கிறான்?’ என்று கேட்டார். கேசவசந்திரசேன் உடனே கல்கத்தாவுக்குத் தந்தியடித்து, மாதவனைப் பற்றி விசாரித்தார். கோபிநாத் பானர்ஜியுடன் அலகாபாத்தில் இருக்கக் கூடும் என்று தெரிந்ததும், பானர்ஜிக்குத் தந்தி கொடுத்தார். மாதவன் அலகாபாத்தி லிருந்து புறப்பட்டு விட்டதாகவும், பம்பாய்க்கே வந்து கொண்டிருப்ப தாகவும் பானர்ஜி மறுமொழி அனுப்பினார். நண்பர்கள் அனைவருக்கும் இப்போது மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் கேசவசந்திரசேன் தன் இளவயதுக்கேற்றபடி மாதவனுக்கு ஓர் இனிய குழப்பம் உண்டு பண்ணத் திட்ட மிட்டார். மாதவன் தந்தையையும் கோவிந்தன்குட்டி மேவனையும் தன் மாளிகையிலேயே வைத்துவிட்டு, மாதவனைத் தான்மட்டுமே ஊர்தி நிலையம் சென்று அழைத்து வந்தார். உணவு வேளையானதும் சில நண்பர்களை அறிமுகப் படுத்துவதாகக் கூறி மாதவனைத் தந்தையும் அம்மாமனும் இருக்கும் அறைக்குக் கொண்டு வந்தார். பிரிந்து துயரத்திலாழ்ந்திருந்த தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் ஆர்வத்துடன் தழுவிக்கொண்டார். “ஐயோ மகனே, நீ இப்படி என்னை மீளாத் துயரத்தில் ஆழ்த்தலாமா? நான்தான் போகட்டும்! உன் அம்மா படும்பாட்டை நீ அறிவாயா? திரும்பவும் கண்டு நீ நலமாயிருக்கிறாய் என்று உணரும்வரை அந்த உயிர் உடலி லிருக்குமோ போய் விடுமோ என்று கூட எனக்குக் கவலையாயிருக்கிறது. ஆனால் பெற்ற பிள்ளையாகிய உனக்கு அந்தக் கவலையெல்லாம் ஏது?” என்று கோவிந்தப் பணிக்கர் புலம்பினார். மாதவனும் கண்ணீர் விட்டான். கோவிந்தன்குட்டி மேனவனை நோக்கி, ‘சிற்றப்பா! என்னைக் கண்டு கொண்டதாகவும், உடனே புறப்பட்டு வருவதாகவும் அம்மாவுக்கு ஒரு தந்தி கொடுங்கள்’ என்றான். கோ.ப: ஆம். தம்பி, உடனே தந்தியடி, இல்லையென்றால் பார்வதியும் அந்தப் பெண்ணும் உயிர் பிழைத்திருப்பது அருமை. அந்தப் பெண் என்று யாரைக் கூறுகிறார் தந்தை என்று மாதவனுக்கு விளங்கவில்லை. ‘எந்தப் பெண் அப்பா? அப்படி யார் அங்கே இருக்கிறார்கள்?’ என்று கேட்டான். கோ.ப: அடே அசடு! வேறு எந்தப் பெண் உனக்காக உயிர்விடப் போகிறாள். என் மருமகள் இந்துலேகாதான். மாதவன் மிரள மிரள விழித்தான். பணிக்கர் பின்னும் பேசினார். “ஊரில் யாரோ எதுவோ சொன்னது பெரிதாய்ப் போய் விட்டது. அதை நம்பி அந்தப் பெண்ணைத் தவிக்க விட்டாய். அதுதான் போகட்டும். பெற்றதாய் தந்தை இருக்கிறார்களே! அவர்களை வந்து கேட்போம் என்ற உணர்வாவது இருந்ததா? இப்படி எங்கள் எல்லோருக்கும் இவ்வளவு துன்பம் உண்டு பண்ணுவதற்காகவா நாங்கள் இரவும் பகலும் கண் விழித்திருந்து பண்ணுவதற்காகவா நாங்கள் இரவும் பகலும் கண் விழித்திருந்து உன்னை வளர்த்தோம்?” என்று அவர் மீண்டும் புலம்பினார். மாதவன் அக்கடுமொழிகளில் அடங்கியிருந்த கனிவு கண்டு அவரை ஆற்றினான். ஆனால் இந்துலேகாவுக்குத் தான் தந்த அதிர்ச்சியை எண்ணியபோது அவன் உள்ளமும் உடைவுற்றது. அவன் நெடுநேரம் மரம்போல உணர்ச்சியற்று இருந்தான். இச்சமயம் கேசவசந்திரசேன் வந்து எல்லாரையும் உண்ணும்படி அழைத்தார். உண்மையிலேயே உணவுமேடையில் மாதவன் உண்ணாமலே துயரத்திலாழ்ந்திருப்பதைக் கேசவசந்திரர் கவனித்தார். அவர் மாதவனைக் கேலி செய்து அவன் துயர் போக்க முயன்றார். “அண்ணா! ‘மாதவ பாரதம்’ இப்போது எந்தக் கட்டம் வரை வந்திருக்கிறது? அருச்சுனன் தீர்த்த யாத்திரை கழிந்து விட்டதா?” என்றார். கோவிந்தன்குட்டிமேனவன் அவர் கூறுவதைத் திருத்திக் கூற முயன்றார். “இது மாதவபாரதம் அல்ல மாதவ ராமாயணம் தான். ஆனால் அந்த இரமாயணத்தில் இராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டாவது போனான். மாதவராமாயணத்திலோ இரவாணன் மாய சீதையைத்தான் தூக்கிக் கொண்டு போனான்!” என்றார். கோவிந்தப்பணிக்கர் கேள்வியை ஆராய்ச்சிக்கே திருப்பினார். “இராமாயணத்திலும் உண்மைச்சீதையை இராவணன் தூக்கிக்கொண்டு போகவில்லையாம். மாயா சீதையைத்தான் தூக்கிக்கொண்டு போனதாக ஆனந்த ராமாயணம் கூறுவதாக நினைவு” என்றார். “ஆராய்ச்சிக்குரிய மேடை இதுவல்ல, நேரமும் இதுவல்ல. உணவான பின் எல்லாரும் மேலே நிலாமுற்ற மேடைக்குச் செல்வோம். இன்று முழு நிலா. கற்பனைக்கும் ஆராய்ச்சிக்கும் ஏற்ற இடமும் நேரமும் அதுதான். இரவு முழுதும் வேண்டுமானாலும் விழித்திருந்து ஆராய்ச்சிநடத்தி, பின் இராட்சசர்கள் போலப் பகலில் கிடந்து உறங்கலாம்” என்றார். எல்லாரும் உணவு முடித்து நிலா முற்றமேடை சென்றார்கள். 18. நண்பர் உரையாடல் கேசவசந்திரசேன் பொன்பளிங்கு மாடியில் பால் நிலவு வீசிய சமயம் அது பம்பாய் நகரத்தின் ஒரு செல்வ மனை என்று எவருக்கும் தோற்றவில்லை. புராண இதிகாசங்கள் வருணித்துக் காட்டும் கயிலை மலையிலேயே அவர்கள் கனவில் சென்று தங்கியதாகத் தோற்றிற்று. ஆனாலும் பேசத் தொடங்கிய பின் அவர்கள் அக்கனவுக் காட்சியைக்கூட மறந்தார்கள். இங்கிலீஷ் படிப்பினால் வருங்கேடு, மேலைநாட்டு நவநாகரிகத்தின் அழிமதிகள் ஆகியவைபற்றிக் கோவிந்தப் பணிக்கர் பேச்சுத் தொடங்கினார். ஆனால் கடவுள், பழைய ஆசாரப் பழக்கவழக்கங்கள், புதிதாகக் கிளர்ந்தெழுந்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் ஆகியவைபற்றி எல்லாம் ‘பேச்சு நீண்டு வளர்ந்தது. பழமையின் பிடியிலிருந்து மிகுதி அசையாத கோவிந்தப் பணிக்கர் ஒருபுறம், மேனாட்டு நாத்திக உலோகாயதப் பகுத்தறி வியக்கங்களில் முளைத்துநின்ற கோவிந்தன் குட்டிமேனவன் ஒருபுறம், இவர்களிடையே நடுநிலைத் தேசிய நெறி காத்த மாதவன் ஆகிய மூவரும் மலையாளத்திலேயே பேசினாலும், இடையிடையே கோவிந்தன் குட்டிமேனவன் கேசவசந்திரசேனிடம் ஆங்கிலத்திலும் பேச்சுப்போக்கைச் சுட்டிக் காட்டியதனால், அவருக்கும் இப்பேச்சு ஒரு விருந்தாகவே விளங்கிற்று. அவர்கள் பேசி முடியும் சமயம் முழுநிலா மேலை வானிடையே சென்று தாழலாயிற்று. அவர்கள் தம்மையறியாது துயிலில் ஆழ்ந்து, காலை வெயில் சுள்ளென்று தடித்தபின்பே எழுந்து காலைக்கடனைக் கவனிக்கச் சென்றனர். 19. காரணவர் உள்ளம் மாதவனைப்பற்றி இந்துலேகாவுக்கு இரு பெருங்கவலைகள் இருந்து வந்தன. ஒன்று மனக்கசப்பால் அவன் உடல் நலத்துக்கோ உயிருக்கோ ஏதேனும் கேடு வந்து விடக்கூடாதே என்ற அச்சம்; மற்றது ஊரார் வாயுரை கேட்டு அவன் தன்னைப் பற்றி அவ்வளவு எளிதாகத் தப்பெண்ணம் கொண்டுவிட்டானே என்பது பற்றிய வருத்தம். மாதவன் தன் மனத்தின் பளு குறைக்கவே நாடுசுற்றி வரச் சென்றான் என்று கேட்டபோதும், அவனைத் தேடக் கோவிந்தப்பணிக்கரும் கோவிந்தன்குட்டிமேனோனும் புறப்பட்டு விட்டதறிந்த போதும் முதல் கவலை பெரிதும் குறைந்தது. படிப்பு முடித்துவிட்ட நிலைகளில் மாதவன் நாடு சுற்றுவது அவன் அறிவு வளர்ச்சிக்கும் அனுபவத்துக்கும் ஏற்றதேயாதலால் அதுபற்றி அவள் சிறிதும் வருந்தவில்லை. ஆனால் இரண்டாவது கவலையும் அவன் பிரிவும் அவளை ஓயாது வாட்டி வதைத்தன. மாதவன் அன்னையைத் தவிக்கவிட்டுச் சென்றது முதல் பார்வதியம்மாளிடம் இந்துலேகா தனக்கு ஒரு புதுப்பொறுப்பு ஏற்பட்டு விட்டதாக நினைத்தாள். மகனைப்பிரிந்து வாடும் அம்மாதர் பெருந்தகைக்கு ஒரு மகள்போல இருந்து அவள் அத்தாயின் துன்பம் ஆற்ற அரும்பாடுபட்டாள். அதுவே மாதவன் பிரிவு வகையில் அவளுக்கும் ஓர் ஆறுதலாயிருந்தது. இந்துலேகாவின் ஊண், உடை, குளி, உறக்கம் யாவும் பார்வதியம்மாவுடன் கழிந்தது. அவள் பார்வதியம்மாவை ஒரு கணநேரம் கூட விட்டுப் பிரியவில்லை. இந்துலேகாவின் சேவையும் பாசமும் பார்வதியம்மாவுக்கு மிகவும் ஆறுதலாயிருந்தன. மாதவனிடம் இந்துலேகாவுக்கிருந்த பற்றும் அவள் அறியாததல்ல; ஆனால் அந்தப் பற்று நட்பளவில் இருந்ததாகவே அவள் எண்ணினாள். மாதவன் இந்துலேகாவை மனைவியாகப் பெற விரும்புவது போல, இந்துலேகா அவனைத் துணைவனாக ஏற்க விருப்பமுடையவளா யிருப்பாளானால், மாதவன் இப்படி அவதிப்பட நேர்ந்திருக்காது என்று அவள் எண்ணினாள். தன் துயரத்திடையே ஒருநாள் அவள் இந்துலேகாவிடம் இதுபற்றி மெல்லத் தன் உள்ளம் திறந்தாள். மாதவனையே தான் தன் கணவனாகத்தான் தேர்ந்தெடுத் திருப்பதாக இந்துலேகா கூறியதே பார்வதியம்மா எல்லையற்ற மகிழ்ச்சியடைந்து, புதிதாக அவளை மருமகளாகப் பெற்றதுபோல அணைத்துக் கொண்டாள். ‘இந்த மகிழ்ச்சியான செய்தியை நீயே மாதவனுக்கு எழுதியனுப்பினால், அவன் எங்கிருந்தாலும் வந்து விடுவான்’ என்று அவள் ஆர்வமாகக் கூறினாள். தன்னை மீறிய ஒரு சிறு புன்முறுவலுடன் இந்துலேகா விடையளித்தாள். ‘அவர் இருக்குமிடம் தெரிந்தால் தானே யம்மா எழுத முடியும்? மேலும், இது அவருக்குத் தெரியாத இரகசியமல்ல, அம்மா! அதை அவர் நீண்ட நாளாக நன்கு அறிவார்.’ இது கேட்டது முதல் பார்வதி துயரம் மிகமிகக் குறைவுற்றது. மாதவன் தன்னைப்பற்றிய புரளியை இவ்வளவு எளிதாக நம்பி விட்டானே என்ற வருத்தம் இந்துலேகாவுக்கு அவ்வளவு எளிதில் தீரவில்லை. உண்மையில் அவள் மாதவன் போனநாள் முதல் தானாக ஊர்தி நிலையத்தில் ஓர் ஆளமர்த்தி அவனைப் பற்றிய செய்தி எது தெரிந்தாலும் உடனேவந்து சொல்லும்படி திட்டம் செய்திருந்தாள். அத்துடன் மாதவன் போகுமுன் நடந்த செய்திகளையும் தக்க ஆட்களைவிட்டு விசாரித்துக் கிட்டத்தட்ட எல்லா விவரமும் அறிந்திருந்தாள். ஆயினும் அவனைக் கடைசியாகக் கண்டு பேசியவர் சங்கரசாஸ்திரிகளேயாதலால், அவரைக் கண்டு, போகும் சமயம் மாதவன் என்ன பேசினான், என்ன எண்ணினான் என்று அறிய ஆவலுள்ளவளாய் இருந்தாள். கண்ணழி மூர்க்கில்லத்தில் புறப்பாடுநடந்த அன்று ஊர்முழுவதுமே இந்துலேகா பற்றிப் புரளி இருந்ததென்பதை இப்போது அவள் அறிந்து கொண்டிருந்தாள். ஆனால் மாதவன் அந்தப் புரளியை நம்புவதற்கு முக்கியக் காரணமாய் இருந்தவர் சங்கரசாஸ்திரிகளே என்ற செய்தி செம்பாழி எங்கும் பரந்து விட்டது. இதனால் சங்கரசாஸ்திரிகள் எங்குமே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டது. மாதவன், இந்துலேகா இருவருக்குமே தாம் மிக நெருங்கிய நண்பராயிருந்தும், தாமே மாதவன் பிரிவுக்குக் காரணமாயிருந்தது பற்றி அவர் மிகவும் வருந்தினர். அதிலும் தம்மாலேயே இது நேர்ந்தது என்று இந்துலேகா கருதியிருப்பாளே என்று அவர் மிகுதியும் கலக்கமடைந்தார். ஆயினும் இந்து லேகாவின் துயரத்திடையே அவளை வந்து காணாதிருக்க அவரால் முடியவில்லை. இந்நிலையில் அவர் இந்துலேகாவைக் காணும்படி செம்பாழி வந்தார். ஆனால் அவள் முன்வரத் துணியாமல் ஊர்தி நிலையத்தருகிலேயே உலாவினார். சங்கரசாஸ்திரிகள் செம்பாழிக்கு வந்துள்ளார் என்று கேட்டதே இந்துலேகா அவரை ஆளனுப்பி வரவழைத்தாள். அவர் வந்ததும் தாம் செய்த பிழைக்கு வருந்தி மன்னிப்புக் கோரலானார். அத்துடன் இந்துலேகாவின் நிலைகண்டு மீண்டும் அழலானார். இந்துலேகாவே அவரை ஆற்ற வேண்டியதாயிற்று. “அன்பரே! தாங்கள் என்னிடமும் மாதவனிடமும் ஒருங்கே பாச முடையவர்கள் என்பதை நான் அறிவேன். மாதவன் பிரிவுக்குத் தாங்கள் மனமாரக் காரணமாயிருந்தீர்கள் என்று யாரும் கூறவில்லை. நானும் கருதவில்லை. அது வாழ்வின் பல தற்செயல் பிழைகளில் ஒன்று மட்டுமே. ஆகவே தாங்கள் இதற்காக வருந்தக்கூடாது. நான் தங்களை அழைத்தது எனக்குத் தாங்கள் ஆறுதலளிப்பதற்காகவே, இப்போது நான் தங்களுக்கு ஆறுதல் தரவேண்டியிருக்கிறது!” என்றாள். சங்கரசாஸ்திரிகள் தம் துயரத்திடையிலும் இது கேட்டுச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இந்துலேகா மேலும் தொடர்ந்தாள். “எனக்கு ஒரேஒரு செய்திபற்றி மட்டுந்தான். இன்னும் ஆற்றாமையாய் இருக்கிறது. என்னை இவ்வளவுகாலம் அறிந்து பழகியவர் இந்தப் புரளிகளை இவ்வளவு எளிதாக நம்பி விட்டாரே என்பதுதான் அது? இதுபற்றித் தங்களைக் கேட்டு மெய்யுணரவே தங்களை அழைத்தேன்” என்றாள். “அம்மணி, தங்களைப்பற்றிய புரளிகளைக் கேட்டு முற்றிலும் நம்பியவன் நான், மாதவனல்ல. பலர் கூறியது கேட்டு நம்பாமல் அவன் என்னைக் கேட்கும் வரை இருதலைக் கொள்ளி எறும்பாகவே மனக்குழப்ப மடைந்திருந்தான். அவற்றைப் பற்றி என்னிடம் கேட்டு, நான் ‘ஆம்’ என்று கூறிய பின்பே அவன் வெறிபிடித்தவன் போலானான். “நான் கேட்டதும் கண்டதும் என்னையே பைத்தியம் பிடிக்க வைத்திருந்தது. அச்சமயம் மாதவன் என்னை நம்பியது வியப்பல்ல. நீங்களே கண்டால்கூட நம்பியிருப்பீர்கள். நான் நண்பன் என்று தெரிந்ததனால்தான் என் உறுதி மாதவனை முற்றிலும் மனமுடையச் செய்தது. அத்துடன் நான் காணுமுன்பும் கண்டபின்பும் அவனைச் சந்தித்தவரெல்லாம் ஒரே குரலில் பேசினார்கள். இந்நிலையில் எவரும் கேட்பதை நம்பியே தீர வேண்டியதாயிருந்தது” என்றார். இந்துலேகாவின் மனம் சாஸ்திரிகள் விளக்கத்தால் முழுதும் ஆறுதல் அடைந்தது. பலநாள் ஊர்தி நிலையத்திலிருந்து ஏதேனும் செய்தி வருமா, வருமா என்று இந்துலேகா காத்துக் கொண்டிருந்தாள். அவள் எப்போது குளித்தாள், எப்போது உண்டாள் என்று எவருக்கும் தெரியாது. இரவு அவள் உறங்குவதே யில்லை; மாதவனைப் பற்றிப் பலவும் எண்ணி அவள் இராப்போதுகள் கழிந்தன. அவளை மீறி மாலையிலேயே அவள் சிலசமயம் கண்ணயர்ந்து கிடப்பது வழக்கம். ஒருநாள் மாலை அரையுறக்கத்திலிருந்து இந்துலேகா பெருங் கூக்குரலுடன் எழுந்தாள். “ஐயோ! ஐயோ! இந்த முசல்மான் படுபாவி என் கணவனைத் தாக்குகிறானே! அதோ குத்துகிறானே! குத்திக் கொன்று விட்டானே? நான் இனி என்ன செய்வேன்? எப்படிப் பிழைப்பேன்!” என்று அவள் ஆர்ப்பரித்துக் கொண்டு அல்லோலகல்லோலப் பட்டாள். மாளிகையின் மாடியிலிருந்து எழுந்தகுரல் பூவள்ளி எங்கும் கேட்டது. பஞ்சமேனவன், இலட்சுமிக்குட்டியம்மை ஆகியவரும் வேறு பலரும் அலறியடித்துக் கொண்டு இந்துலேகாவின் மாடிக்கு ஓடிவந்தனர். இலட்சுமிக்குட்டி இந்துலேகா கையைப்பற்றினாள். அது கனல் கக்கும் கொள்ளிமீது கையைவைப்பது போல் கொதித்தது. ‘ஐயோ, உடல் இப்படித் தீயாய்க் காய்கிறதே! உடம்புக்கு என்ன?” என்று அலறினாள். பஞ்சுமேனவனும் பதறினார். ‘குழந்தை, ஏன் இப்படி அலறினாய்? உடம்புக்கு என்ன?’ என்றார். இந்துலேகா முகம் விளறியிருந்தது. கைகால்கள் நடுக்குற்றன. அவள் தன் தாயை அருகழைத்தாள். ‘தனியே சொல்ல விரும்புகிறேனம்மா!” என்றாள். பஞ்சுமேனவனும் மற்றவர்களும் கீழே போய்க் காத்திருந்தார்கள். இலட்சுமிக்குட்டி இந்துலேகாவுக்கு ஆதரவாக அங்கிருந்து ‘என்னம்மா உனக்கு!” என்று கேட்டாள். “நான் ஒரு பொல்லாத கனவு கண்டேனம்மா! மாதவனை ஒரு முசல்மான் குத்திக் கொன்றதாகவே கண்டேன் அம்மா! அதுமுதல் என் உள்ளம் வேகின்றது, அது கனவுதானே என்று எண்ண முடியவில்லை. ஒரு வேளை அது உண்மையாயிருந்து விடுமோ என்று இப்போதும் அஞ்சுகிறேன். இதை நான் நேரே பெரியம்மாமனிடம் சொல்ல முடியவில்லை. நீ சொல்லிவிடு” என்றாள். இந்துலேகா கூக்குரலிடும்போது ‘என் கணவன்’ என்றே மாதவனைக் குறிப்பிட்டிருந்தாள். இந்துலேகாவுக்கும் மாதவனுக்கும் இருந்த நேசம் பலர் அறிந்ததானாலும், அவள் உள்ளம் அவனையே கணவனாய் ஏற்றுவிட்டது என்பதை இப்போது எல்லாரும் உணர்ந்து கொண்டனர். பஞ்சுமேனவனுக்கும் இது விளங்கி யிருந்தது. இலட்சுமிக்குட்டி கூறிய செய்தியால்! மாதவன் தவிர வேறு எவரையும் அவள் கணவனாக ஏற்கக் கூடிய நிலையிலோ, அவன் இல்லாமல் வாழக் கூடிய நிலையிலோ இல்லை என்று அவருக்கு நன்கு விளங்கிற்று. அவர் மனம் இந்துலேகாவின் உயர்ந்த பண்பிலும் பாச உள்ளத்திலும் இழைந்தது. “இலட்சுமி! மாதவனிடம் இந்துவுக்கு இவ்வளவு உயிர்ப் பாசம் இருக்கும் என்பதை நான் அறியாமல் போய்விட்டேன். இந்துலேகா இல்லாமல் அவன் வாழ மாட்டான் என்பதையும் இப்போது அறிந்து கொண்டேன். “மாதவன் பிரிவை எண்ணியெண்ணியே குழந்தை இப்படி உடல் நலிகிறது. அத்துடன் என் சூளுரையையும் அவள் நினைத்து நினைத்து வெம்பியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படித்தானே இலட்சுமி?” என்று அவர் கேட்டார். “ஆம். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!” என்றாள் இலட்சுமி. “அப்படியானால், சூளுரையால் வந்த துன்பத்தையாவது நான் நீக்க முயல வேண்டும். என் குழந்தை உடல் உருகி உருகிச் சாகும்போது, நான் என் சூளுரையை நினைத்துக் கொண்டு எப்படிச் சும்மா இருப்பது? போ. போய் கேசவன்நம்பூதிரியை வரச் சொல்லு! நான் ஏதாவது வழி பார்க்க வேண்டும்!” என்றார் அவர். ‘இலட்சுமிக்குட்டி அப்படியே சென்று கேசவன் நம்பூதிரியை வர வழைத்தாள். “நம்பூதிரி! நான் ஏதோ தெரியாத்தனமாய் சூளுரை எடுத்து விட்டேன். நம் பகவதி பேரிலேயே எடுத்து விட்டேன். அதனால் நம் குழந்தை வெம்பி வெம்பி உருகுகிறது என்று அறிகிறேன். இந்தச் சூளுரைக்குத் தக்க பரிகாரம் இல்லாமலா போகும்! பரிகாரம் செய்தால் குழந்தை நலப்பட்டு விடலாம் அல்லவா?” என்றார். இத்தடவை கேசவன் நம்பூதிரியின் வேலை எளிதாயிருந்தது. “சூளுரைக்குப் பரிகாரம் இல்லாமலா போகும்? கட்டாயம் இருக்கும்? நான் கேட்டு வந்து சொல்லுகிறேன் பரிகாரம் செய்தால் குழந்தை நலப்படுவது உறுதி. இதில் சந்தேகம் கிடையாது!” என்றார். இம்மாதிரி காரியங்களில் அண்ணாத்துரை ஐயர் கூறியதே செம்பாழியில் எல்லாருக்கும் சட்டமாயிருந்தது. அவரைக் கேசவன்நம்பூதிரி அணுகிக் கேட்டார். அவர் கூறிய பதிலைப் பஞ்சுமேனவனிடம் வந்து கூறினார். “சூளுரையின் எழுத்து ஒவ்வொன்றுக்கும் இரண்டு வெள்ளி எடையாக வெள்ளியாலோ தங்கத்தாலோ உருக்கள் செய்து பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டு, ஸ்ரீபோர்க்கலி பகவதிக்கு இலட்சார்ச்சனையும் செய்தால் போதுமாம். சூளுரைக்குத் தக்க பரிகாரம் ஆய்விடுமாம். எழுத்து வெள்ளியால் இருப்பதைவிடத் தங்கமாய் இருந்தால், குழந்தை உடன் தானே நலமாய் விடுமாம்!” என்றார். பஞ்சுமேனவனின் பிஞ்சு உள்ளம் இது கேட்டதே மகிழ்ச்சிக் கூத்தாடிற்று. “தங்கமாகவே இருக்கட்டும், நம்பூதிரி! இப்போதே கொடுக்கிறேன். விரைவில் ஏற்பாடுகள் நடக்கட்டும்!” என்றார். “ஸ்ரீபோர்க்கலி பகவதியம்மன் மீதாணை, என் இந்துலேகாவை இந்தச் சண்டாளப் பயல் மாதவனுக்குக் கொடுக்க மாட்டேன். இது சத்தியம்” என்ற சூளுரையின் 59 எழுத்துக் களுக்கும் எழுத்து ஒன்றுக்கு இரண்டு வெள்ளி எடையாக 118 வெள்ளி எடை தங்கத்தில் எழுத்துக்கள் உருவாயின. எழுத்துக்களுடன் பஞ்சுமேனவன் இந்துலேகாவிடம் சென்றார். எழுத்துக்களைக் காட்டினார். “பார், அம்மா! நான் உன் மனமறியாமல் முன் கோபத்தில் செய்துவிட்ட சூளுரைக்கு என்ன செலானாலும் தக்க பரிகாரம் எடுக்கப் போகிறேன். உன் நோய் இனி குணமாகிவிடும் என்று பிராமணர்கள் என்னிடம் உறுதி கூறி விட்டார்கள்” என்றார். இந்து சிரித்தாள். ஆனால் அவள் முகத்தில் கண்ட பொலிவு அவள் மகிழ்ச்சியையும் தெரிவித்தது. “இலட்சுமிக்குட்டியம்மா கைப்பிடித்துப் பார்த்துக் காய்ச்சல் இப்போதே நீங்கிவிட்டது” என்றாள். தன் பரிகார முயற்சியாலேயே குழந்தை நலம் பெற்றதென்ற அகமகிழ்வில், பஞ்சுவும் எல்லாரிடமும் கிளர்ச்சியுடன் பேசினார். சூளுரைப் பரிகாரச் செய்தியை இலட்சுமிக்குட்டி முன்பே இந்துவிடம் கூறியிருந்தாள். அவள் நோய் குணமானது அதன் மகிழ்ச்சியாலேயே. ஆனால் இந்துவையும் அவள் தாயையும் தவிர, செம்பாழியில் எல்லாரும் அது பரிகார ஏற்பாட்டின் பயனே என்று உறுதியாக நம்பினார்கள். ‘எழுத்துக்கள் பிராமணருக்குத் தானம் கொடுக்கப்பட்டன. ஆனால் 59 எழுத்துக்களில் 20 எழுத்துக்கள் அண்ணாத்துரை ஐயருக்கும் 19 சங்கர சாஸ்திரிகளுக்குமே கிடைத்தன. மற்ற பிராமணர்கள் இருபது பேருக்கு ஆளுக்கு ஒரு எழுத்துக் கிட்டிற்று. தானமும் இலட்ச அர்ச்சனையும் முடிந்த அன்றே மாதவனைக் கண்டுபிடித்து விட்டதாகவும், அடுத்த நாளே செம்பாழிக்கு வருவதாகவும் கோவிந்தன்குட்டிமேனோனிட மிருந்து தந்திச் செய்தி கிடைத்தது. பஞ்சுமேனவன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. போர்க்கலி பகவதியம்மனிடம் பஞ்சுமேனவனுக்கும் பூவள்ளி மக்களுக்கும் உள்ள பக்தியும் இந்த ஒருநாள் மகிழ்ச்சியுடன் பன்மடங்காகப் பெருக்கமுற்று வளர்ந்தது. “பார், நம்பூதிரி! நான் சத்தியம் செய்தது முதல் தரவாட்டில் அதனால் தொடுத்துப் புயலே வீசிற்று. அதற்கான பரிகாரம் செய்ததே புயல்கள் காற்றாகப் பறந்தன. தரவாட்டில் தென்றல் உலவத் தொடங்கிற்று!” என்று கேசவன் நம்பூதிரியிடம் பஞ்சுமேனவன் பெருமை பேசினார். 20 மங்களம் வந்தவுடன் மாதவன் கோவிந்தன்குட்டி மேனவனைப் பூவள்ளிக்கனுப்பிச் செய்தியறிவிக்கச் சொன்னபின், தந்தையுடன் சென்று தன் தாயைக் கண்டான். பார்வதியம்மா ஏற்கெனவே செய்தி அறிந்து சிறிது தெம்புடன் இருந்தாள். கணவனுடன் மகனையும் கண்டதும் அவள் நோயும் நலிவும் இருந்த இடம் தெரியாது பறந்து போயின, அவர்கள் பயண அலுப்புத் தீரவும் பசியாறவும் வேண்டிய ஏற்பாடுகளில் முனைந்தாள். “கோவிந்தப் பணிக்கரை நோக்கி அவள் புன்முறுவல் பூத்தாள். ஏன் மாதவனை இனி இங்கேயே தங்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பாவம், இந்துலேகா எதிர்பார்த்துத் துடிதுடித்துக் கொண்டிருப்பாள், போகட்டும்” என்றாள். மாதவன் இந்துலேகாவின் மாடி ஏறச்செல்லும் சமயம் இலட்சுமிக்குட்டி இந்துலேகாவிடம் அவள் வரவு கூறிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள். மாதவன் வந்துவிட்டான் என்று மீண்டும் சென்று கூறிவிட்டுக் களிப்புடன் மீட்டும் இறங்கிச் சென்றாள். இந்து தன்னை எதிர்கொள்ள வராதது கண்டு வியப்புடன் மாதவன் உள்ளே மெல்ல அடி எடுத்து வைத்துச் சென்றான். உள்ளிருந்து குரல் கேட்டது. “நான் வெளியே வரமுடியாதவளாயிருக்கிறேன். இங்கே வாருங்கள்” என்றாள். ‘இன்னும் படுக்கையில்தான் இருக்கிறாளோ’ என்ற பதைபதைப்புடன் மாதவன் உள்ளே சென்றான். அவள் நல்ல உடல் நலத்துடன்தான் இருந்தாள். மகிழ்ச்சியே உருவாக நின்றிருந்தாள். ஆனால் அவள் எவ்வளவு துடைத்தும் கண்களிலிருந்து ஒழுகிய கண்ணீரை நிறுத்த முடியவில்லை. “உங்களைப் பார்ககவே விடமாட்டேனென்கிறது, இந்தக் கண்ணீர்” என்றாள். அவன் தன் மேலாடையால் அந்தக் கண்ணீரைத் துடைத்தகற்றி அவளை அணைத்துக் கொண்டான். ஐந்துகணம் மௌனமான விழிகளின் பேச்சு - பின் முறுவல் எதிர் முறுவல் - கேலி எதிர்கேலி ஆகியவை அவர்கள் நீண்டகாலப் பிரிவுக்கு ஒரு முத்தாய்ப்பு வைத்து, முடிவில் அவர்கள் உளங்கிளறி இருவரையும் பேச வைத்தன. ஆனால் பேசத் தொடங்கியபின் ஒரு நாளும் ஒரு பகலும் கூட அந்த பிரிவின் விளக்கத்துக்குப் போதவில்லை. மாதவனை முசல்மான் கொன்றதாக இந்து கனவு கண்ட நாளும் மணியும், அகமதாபாது செல்லும் வழியில் அவன் திருட்டுக்கு ஆளாகித் தத்தளித்த நாளும் மணியும் ஒத்திருந்தன என்பதை இருவரும் கணக்கிட்டுப் பார்த்து வியப்படைந்தனர். மாதவன் மலபாருக்கு நேர் எதிராகக் கப்பலிலிருந்து மலபாரை நோக்கிய சமயமே, இந்து சங்கர சாஸ்திரிகளை அழைத்து அவன் பிரிவின் விவரம் கேட்ட வேளை என்றும் அவர்கள் கணிப்புக் காட்டின. மாதவன் தன் மகிழ்ச்சியில் கூட இந்திய நண்பரை எண்ண நேரமில்லை. கில்ஹாம் துரையை எண்ண ஓய்வில்லை. ஆனால் அவன் பொறுப்புக்கள் அத்தனையையும் இப்போது கோவிந்தப் பணிக்கரும் கோவிந்தன் குட்டிமேனோனும் எடுத்துக்கொண்டு, அவன் மறதிக்கு நண்பர்களிடம் மன்னிப்பும் கோரித் தந்திருந்தனர். திருட்டுப்போன பொருள்கள் மீட்கப்பட்டுவிட்டன என்ற செய்தியை அவர்களிடம் பானர்ஜி அறிவித்திருந்தார். கேசவசந்திரசேனுக்கு இந்தியன் சிவில் சர்வீஸில் அமர்வாணை கிடைத்ததெனக் கல்கத்தாவிலிருந்து கோவிந்தசேன் தெரிவித்திருந்தார். கேசவசந்திரசேன் கில்ஹாம் துரைக்கு எழுதி மாதவனையும் அந்த சர்வீஸுக்குப் பரிந்துரைக்கும்படி வேண்டியிருந்தார். அவ்வாறே செய்துவிட்டதாக அவர் கோவிந்தன்குட்டி மேனுக்கு எழுதினார். இவ்வளவும் மாதவன் அறியவில்லை. ஒரு வாரத்துக்குள் மாதவனுக்கும் இந்துலேகாவுக்கும் மங்களமாக மன்றல் மிகப் புத்தம் புதிய பாணியிலே நடந்தேறிற்று. பஞ்சுமேனவன் பழமைப் பற்றாளரானாலும் இந்துலேகாவையும் மாதவனையும் மகிழ்விக்கும் முறையில் எல்லாம் அவர்கள் மனம்போல விட்டிருந்தார். இதற்கு அவர் ஒன்றும் வருந்தவும் நேரவில்லை. ஏனெனில் மணவிழாவிலேயே கில்ஹாம் துறை, பாபு கோவிந்தபிரசாத் சேன் முதலிய நண்பர்கள் பகட்டாரவாரமான பாராட்டுக்களும், செம்பாழியிடம் என்றும் கண்டிராத கண்ணைக் கவரத்தக்க பரிசுகளும் வந்தெய்தின. கில்ஹாம் தம் பரிசான வெள்ளி வாளுடன் சிவில் சர்வீஸ் ஆணைப் பத்திரமும் அனுப்பியிருந்தார். கோவிந்தபிரசாத்சேன் களவுபோன பழைய பரிசுகளுடன் அவற்றினும் பன்மடங்கு விலையேறிய தங்க வெள்ளிப் பொருள்கள் பலவற்றைத் தம் சார்பிலும் பிற நண்பர்கள் சார்பிலும் பரிசாக அனுப்பியிருந்தார். கண்ணழிமூர்க்கில்லத்து மனையையே குபேர செல்வமென மதித்திருந்த செம்பாழியிடத்தவர்கள் கண்முன் அம்மனையின் செல்வ முழுவதையும் தன்னுடள் அடக்கத்தக்க கோவிந்தசேனின் பரிசுகளைக் ண்டு வியப்பார்வமும் மகிழ்ச்சியும் கொண்டார்கள். மணவிழாவில் மூன்றுநாள் இராப்பகல் அளிக்கப்பட்ட பிராமண விருந்தும் தானமும் தரவாட்டின் பழமைப் பற்றுக்கும் முழுநிறைவளித்தன. தொகுக்கப்பட்ட கா. அப்பாதுரையார் நூல்கள் கால வரிசையில் 1. குமரிக் கண்டம் 1940-43 2. நாத்திகர் யார்? ஆத்திகம் எது? 1943 3. இராவணன் வித்தியாதரனா? 1943 4. கால்டுவெல் ஒப்பிலக்கணம் 1944 5. கெஞ்சி 1944 6. தளவாய் அரியநாத முதலியார் 1944 7. சிறுகதை விருந்து 1945 8. மேனாட்டு கதைக் கொத்து 1945 9. சேக்சுபியர் கதைகள் 1945, 1950, 1954 10. கிருட்டிண தேவராயர் 1946 11. வருங்காலத் தமிழகம் 1946 12. சங்க காலப் புலவர்கள் 1946 13. டேவிட் லிவிங்ஸ்டன் 1946 14 போதும் முதலாளித்துவம் 1946-47 15. குடியாட்சி 1947 16. ஆங்கிலப் புலவர் வரலாறு 1947 17. சமதரும விளக்கம் 1947 18. இரவிவர்மா 1949 19. சுபாசு சந்திரபோசு 1949 20. சங்க இலக்கிய மாண்பு 1949 21. காதல் மயக்கம் 1949 22. பெர்னாட்சா 1950 23. தாயகத்தின் அழைப்பு 1951 24. ஐக்கிய நாடுகளின் அமைப்பு 1952 25. பொது உடைமை 1952 26. சமூக ஒப்பந்தம் 1952 27. ஆங்கில தமிழ் அகராதி 1952 28. வருங்காலத் தலைவர்கட்கு 1952 29. சமூக ஒப்பந்தம் 1952 30. பொது உடைமை 1952 31. ஐன்ஸ்டீன் 1953 32. எண்ணிய வண்ணமே 1953 33. ஜேன் அயர் 1954 34. நிழலும் ஒளியும் 1954 35. தென்னாடு 1954 36. *தென்னாட்டுப் போர்க்களங்கள் 1954 37. ஐனேயை’ள டுயபேரயபந யீசடிடெநஅ 1954 38. டாம் பிரெணின் பள்ளி வாழ்க்கை 1955 39. தென்மொழி 1955 40. திராவிடப் பண்பு 1955 41. நீலகேசி 1955 42. கட்டுரை முத்தாரம் 1956 43. வாழ்வாங்கு வாழ்தல் 1956 44. இதுதான் திராவிட நாடு 1956 45. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழகம் 1956 46. ஹோரேஸ் வால்போல் கடிதங்கள் 1956 47. கதை இன்பம் 1956 48. அறிவுச் சுடர் 1956 49. பொன்னின் தேட்டம் 1957 50. பெஞ்சமின் பிராங்ளின் 1957 51. வாழ்க 1957 52. உலகம் சுற்றுகிறது 1957 53. பேரின்பச் சோலை 1957 54. கன்னியின் சோதனை 1957 55. நல்வாழ்வுக் கட்டுரைகள் 1957 56. திருநிறை ஆற்றல் 1957 57. செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள் 1957 58. வியப்பூட்டும் சிறுகதைகள் 1957 59. மன்பதைக் கதைகள் 1957 60. மக்களும் அமைப்புகளும் 1957-58 61. மருதூர் மாணிக்கம் 1958 62. சிலம்பு வழங்கும் செல்வம் 1958 63. மணிமேகலை 1958 64. சரித்திரம் பேசுகிறது 1959 65. வள்ளுவர் நிழல் 1959 66. காரல் மார்க்சு 1960 67. தமிழன் உரிமை 1960 68. மேனாட்டு இலக்கியக் கதை 1960 69. இரு கடற்கால்கள் 1960 70 வாடாமல்லி 1960 71. இருதுளிக் கண்ணீர் 1960 72. காரல் மார்க்ஸ் 1960 73. மலைநாட்டு மங்கை 1961-62 74. புதியதோர் உலகம் செய்வோம் 1962 75. யாழ் நங்கை 1963 76 வளரும் தமிழ் 1964 77. கன்னடநாட்டின் போர்வாள் ஐதரலி 1964 78. வெற்றித் திருநகர் 1964 79. மொழிவளம் 1965 80 குழந்தை உலகம் 1967 81. செந்தமிழ்ச் செல்வம் 1968 82. கொங்குத் தமிழக வரலாறு 1983 83. இந்துலேகா 1988 முதற் பதிப்பிற்கான ஆண்டு இல்லாத நூல்கள் மறுப்பதிப்பு செய்த ஆண்டு விவரம்: 1. தமிழ் முழக்கம் 2001 2. இன்பத்துள் இன்பம் 2001 3. இந்திய மக்கள் விடுதலை வரலாறு 2002 4. வாழும் வகை 2002 5. உலக இலக்கியங்கள் 2002 6. ஈலியாவின் கட்டுரைகள் 2002 7. பிறமொழி இலக்கிய விருந்து -1 2003 8. பிறமொழி இலக்கிய விருந்து 2 2006 9. சிறுவர் கதைக் களஞ்சியம் 1 2002 10. சிறுவர் கதைக் களஞ்சியம் 2 2002 11. சிறுவர் கதைக் களஞ்சியம் 3 2002 12. சிறுவர் கதைக் களஞ்சியம் 4 2002 13. சிறுவர் கதைக் களஞ்சியம் 5 2002 * தென்னாட்டுப் போர்க்களங்கள் எனும் நூல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அப்பாத்துரையம் - 31 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) மொழிபெயர்ப்பு  மலைநாட்டு மங்கை  இந்து லேகா ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 31 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+312 = 328 விலை : 410/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 328  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் மலைநாட்டு மங்கை முன்னுரை ... 3 1. ஆற்றங்கரையிலே ... 8 2. இலட்சுமிபுர நகரத்திலே ... 14 3. மீரீ கிராமத்திலே...! ... 22 4. பானேயியின் வீட்டிலே! ... 35 5. சோவன் ஷிரீ நதியின் நீர்ப்பரப்பிலே! ... 42 6. வயல் வெளியிலும் மனையிலும் ... 51 7. இரண்டு மீரீ கிராமங்களிலே ... 56 8. இரவில் நள்ளிருள் ... 65 9. நடுக் காட்டிலே! ... 70 10. இலட்சுமிபுர நகரத்திலே! ... 74 11. மீண்டும் சோவன் ஷிரீ கிராமத்தில்! ... 80 12. கூணாசூந்திக் கிராமத்திலே! ... 86 13. பானேயி ... 91 14. ஜங்கி ... 96 15. கண நேரச் சூறாவளி ... 101 16. பன்னிரு கிராமத்தார் பஞ்சாயத்து ... 105 17. மீண்டும் சோவன்ஷிரீ அன்னையின் மார்பிலே!! ... 112 அடிக்குறிப்புகள் ... 116 இந்துலேகா 1. சின்னன் படிப்பு ... 127 2. பெண் உள்ளம் ... 132 3. கோபப் புயல் ... 155 4. காதலர் பிரிவு ... 165 5. மீண்டும் புயல் ... 173 6. புதிய திட்டம் ... 177 7. கண்ணழி மூர்க்கில்லத்துச்சூரிநம்பூதிரிப்பாடு ... 186 8. சென்னைச் செய்தி ... 197 9. அமளிகுமளி ... 199 10. காதற் கடிதம் ... 211 11. ஊரார் வாயுரைகள் ... 215 12. கோமாளியின் முதல்நாள் கூத்து ... 221 13. மறுநாள் கூத்து ... 239 14. நம்பூதிரிப்பாட்டின் திருமணம் ... 255 15. ஏமாற்றமும் குழப்பமும் ... 260 16. மாதவன் சுற்றுப்பயண அனுபவங்கள் ... 271 17. சந்திப்பு ... 279 18. நண்பர் உரையாடல் ... 288 19. காரணவர் உள்ளம் ... 289 20 மங்களம் ... 297