வாடாமல்லி முதற் பதிப்பு - 1960 இந்நூல் 2004இல் வசந்தா பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. புதுமலர் 1. தாயுள்ளம் 1749 மார்ச் மாதம் இளவேனிற் காலத்தின் மாலை இளந்தென்றல் மாரிக்காலக் குளிருடன் கலந்து அறைக்குள்ளும் வந்து சுழன்றடித்துக் கொண்டிருந்தது. மாது ழீன் பெரோன் தன் இரண்டாவது பெண் மகவு லாரைனைப் பெற்றெடுத்த பின் சோர்ந்து கிடந்தாள். அரையுணர்வுடன் தனியே கிடந்த அம்மாது அடிக்கடி நோவு பொறுக்காமல் புரண்டு துடித்துக் கொண்டிருந் தாள். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் அவளுடைய முதல் பெண்மகவு பிறந்தது. அதுவும் ஓர் அழகு மணியாய்த்தான் இருந்தது. அதன் பெயர் லீமா. ஆனால், அதன் நினைவே தாயின் நெஞ்சைப் பிளக்கத் தக்கதாயிருந்தது. ஏனெனில், அது மூளை வளர்ச்சி தடைப்பட்டு அறிவு மந்தமுடைய பிள்ளையாயிருந்தது. இப்போது இவ்விரண்டாவது குழந்தையோ முதலதை விட எத்தனையோ மடங்கு அழகுடையதாய்த்தான் திகழ்ந்தது. அதன் உடல் மாவால் பிசைந்து குழைத்து, வெளியே தந்தத் தகடு போர்த்து, அதன் மீது பொன் முலாம் பூசியதுபோலப் பொலிந்தது. அதன் கண்கள் வானின் நீல நிறத்தையும் கடலின் நீலத்தையும் தோற்கடிப்பவையாயிருந்தன. தாயின் கவலை கலந்த அன்பு அந் நீலநிற விழிகளைக் கூர்ந்து நோக்கி, அதில் முந்திய குழந்தையின் அறிவு மந்தந்தான் உள்ளே நின்று ஏய்க்கிறதா, அல்லது அறிவொளியின் ஊற்றுப் படர்கிறதா என்று பார்த்து முடியுமுன், பணிப்பெண்டிர் வந்து குழந்தையை எடுத்து அதற்காக அமர்த்தப் பெற்ற பாலூட்டும் செவிலியிடம் ஒப்படைத்து விட்டனர். தனிமை, தன்னந்தனிமை! பெற்ற குழந்தையின் துணை கூட இல்லாமல் தாய் தனியே கிடந்தாள். வெளியறையிலிருந்தபடியே அவள் கணவன் சார்லஸ் பெரோன், “என்ன! இதுவும் பெண்தானா? சீச்சீ, என்ன வாழ்வு இது?” என்ற கூறிவிட்டு அவள் செவிகளில்கூடப் படும்படியாகக் கால் தூசியைத் தட்டித் துடைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டதை அவள் மறந்துவிடவில்லை. குழந்தையைப் பார்க்க, தாயின் நிலைபற்றிக் கேட்டறியக்கூட அவன் உட்புறம் எட்டிப்பார்க்கவில்லை. அந்தோ! என்ன அன்பற்ற வாழ்வு! என்ன துணையற்ற நிலை! “என் தனிமை கொடிது. என் குழந்தையை இன்னும் இங்கே சிறிது நேரம் இருக்கவிட்டிருக்கக் கூடாதா? இதைப் பார்க்கக்கூட என்னால் எழுந்து அமர முடியாதுதான். அதன் உடல் என்மீது படுவதையாவது எண்ணி ஆறுதல் பெற்றிருப்பேன். என் கணவர் அதனைப் பார்த்து ஏதாவது பேசியிருந்தால்கூட எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். யாருக்கும் என்னைப் பற்றிக் கவலை கிடையாது. என் கணவனுக்குக் கொ... ...!” அவள் உள்ளம் இத்தகைய ஏக்கங்களிடையே உள்ளூர உடைவுற்றது. வெளியே புயலும் காற்றும் வீசியடித்தது. வேனிற் காலத்தின் வரவு கண்டு அஞ்சியோடும் பனிப்புயலின் கடைசி மூச்சு மடக்குக் கதவுகளையும் பலகணிகளையும் ஆங்காரத்துடன் தடதட வென்று தட்டித் தகர்த்துக் கொண்டு சுழன்றடித்தது. இயற்கையின் இவ்வரவம் தவிர எங்கும் எவ்வகை ஓசையும் இல்லை. மஞ்சத்தின் மெத்தைகளும் திண்டுகளும் வில்வெட்டுப் பட்டினால் தைத்தவை; அன்னத்தின் மெல்லிய தூவிகளும் இலவம் பஞ்சும் அவற்றினுள் மெல்ல அடைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உறைகளின்மீது அழகிய பூவேலை ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன. மேற்கட்டிகள் வானின் நீல நிறத்துடன் போட்டி யிட்டன. திரைகளோ செங்கழுநீர் மலரின் வண்ணமாயிருந்தன. மஞ்சத்தின் கால்களும் தூண்களும் வெண் பித்தளைகளாலமைந்து, வெள்ளி பொன் இழைப்பு வேலைகளுடன் தகதகவென்று மின்னின. தலைப்பின் அருகிலும் நான்கு மூலைகளிலும் அரேபியப் பாலைவனத்திலிருந்து கொண்டுவரப் பெற்ற தீப்பறவைகளின் நீண்ட இறகுகள் செப்பமுறச் சூட்டப் பட்டிருந்தன. காற்றில் அவையாவும் அசைந்து மாது ழீனின் துயருக்காகப் படபடப்பவைபோல் துடிதுடித்தன. ஆம்! மாது பெரோன் செல்வ உயர்குடியிற் பிறந்து, உயர்குடி யில் வாழ்க்கை புகுந்த நங்கைதான். அவள் ஆடையணிமணிகளும் அதற்கேற்ற பொற்பும் பொலிவும் உடையவையாகவே இருந்தன. ஆனால்,புறத்தே உள்ள இந்தப் பொற்பையும் பொலிவையும் அப்பேதை அனுபவித்தறிந்ததே கிடையாது. அவள் வாழ்க்கை அவ்வளவு துன்பமயாய் இருந்தது. ஃபிரான்சு நாட்டின் முதலதரச செல்வக்குடியில்கூட, மாமியார் நாத்தனார் கொடுமைகள் ஒரு கொடுமைகள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எந்த அளவுக்கு நரகமாக்க முடியும் என்பதை மாது ழீன் பெரோனின் வாழ்க்கை எடுத்துக் காட்டிற்று. தன் தாய், தங்கை, தமக்கையருக்காகவே அவளை மணந்து கொண்டவன்போல் அவள் கணவன் அவளிடம் நடந்து கொண்டான். அவன் மற்றவர்களுடன் வாய்விட்டுப் பேசுவதை யும், உளம்விட்டுச் சிரிப்பதையும்தான் அவள் செவியாரக் கேட்டிருந்தாள். அவளிடம் அவன் சீற்றமும் எரிச்சலும் கடுகடுப்பான் முகமும் தான் எப்போதும் காட்சியளித்திருந்தன. அவளுக்கு இருட்டில் மட்டும்தான் அவன் கணவனாயிருந்தான். பகலொளியிலெல்லாம் மாமியார், நாத்தனார் கொடுமையே அவள் வாழ்வின் கணவனாய் நின்று கூத்தாடியது. அவள் குழந்தைகளைப் பெற்றெடுத்திருந்தது ஒன்றுதான் குடும்ப வாழ்வில் அவள் ஈடுபட்டவள் என்பதற்குரிய சின்னமாயிருந்தது. மனைவியின் உரிமைதான் அவளுக்கு இல்லை என்றால் தாயின் உரிமையாவது உண்டா? அதுவும் அவளுக்கு மறுக்கப் பட்டது. முதற் குழந்தை லீமாவின் பிள்ளைப் பேற்றில் நோவுக் கிடையில் அவள் அயர்ந்து கண்மூடிக் கிடந்தாள். பிள்ளை பிறந்ததும் அவருக்குத் தெரியாது. அதன் அழுகையையும் அவள் கேட்கவில்லை. கண்விழித்துப் பார்த்தபோது வயிற்றில் பாரம் குறைந்திருந்தது. ஆனால், பிள்ளையைத் தேடியதாயின் கண்களில் ஏமாற்றமே காணப்பட்டது. செவிலியர் அதனை அப்புறப்படுத்தி யிருந்தனர். பிள்ளை பிறந்து உயிருடனிருக்கிறது என்பதையும், அது பெண் என்பதையும், அது அழகுடையது என்பதையும் யார் யாரோ, யார் யாரிடமோ பேசிக் கொண்டிருந்ததை உற்றுக் கேட்டுத்தான் அவள் ஊகித்துணர வேண்டியிருந்தது. உள்ளத்தோடு உள்ளந் தடவி மகிழ, உரையாட, அக் குடும்பத்தில் அவளுக்கு யாருமில்லை. அத்துடன் தாயன்பு படாத காரணத்தினாலோ, தாயின் துன்பம் கருவிலேயே பிள்ளையின் மூளைமீது சென்று அழுத்தியதனாலோ, அதன் மூளை வளர்ச்சி தடைப்பட்டுப் போயிற்று. உடல் வனப்பு வளர்ந்தது. ஆனால், அறிவின் செவ்வொளி படராமல், அது நிறம் விளறி வாடி வதங்கிய மென்மலர் போன்றிருந்தது. பகலொளியிற்பட்டு மங்கிய வெண்மதிபோல் அதன் அழகு தேய்வுற்றது. அறிவு மந்தமுற்றுத் தெம்மாடிக் குழந்தையென அது தூற்றப்பட்டது. தாயுள்ளம் இதனைக் கண்டும் கேட்டும் உள்ளூரத் துடியாய்த் துடித்தது. ஆனால், அவள் பிள்ளை அந்நிலையிலும் அவள் அரவணைப் பின்றி, அவள் ஆறுதலின்றி, அயலாரின் புறக்கணிப்புக் களிடையிலும், இடிப்புரைகளிடையிலும் கேலி நகையாடல்களி னிடையிலும் தரங்கெட்டு உரங்கெட்டு, அருமையற்று வளர்ந்தது. இப்போது இரண்டாவது பிள்ளைப்பேற்றின் துன்பம் அவள் அரை யுயிரையும் குறையுயிராக்கி விட்டது. இனி, அவள் வாழ்வு நாட்கணக்கிலிராது; மணிக்கணக்கிலேயே இருக்க முடியும் என்பதை அவள் அறிந்தாள். இந்த நிலையிலும் அவளுக்கு யாரும் துணையில்லை. தன் குழந்தையைக்கூட இறுதியாக அவள் பார்க்க முடியவில்லை. “இந்தத் தடவை குழந்தை எப்படியிருக்குமோ-இதுவும் அறிவு மந்தமுடையதாய் அமையுமோ, என்னவோ” என்ற நினைவு தாயின் அரையுணர்வு நிலையிலும் அவள் உள்ளத்தை அரித்தது. வாழ்வு அவளுக்கு வேம்பாய்க் கசந்துவிட்டது. சாவை அவள் மனமார வரவேற்க என்றைக்கும் தயங்கியதில்லை. ஆனால், இப்போது அவள் இறக்க விரும்பவில்லை; இறந்து விடுவோமோ என்று கலங்கினாள். ஏன் இந்த மாறுதல்? “ஆ, கடவுளே! நான் இறக்க விரும்பியவள்தான். ஆனால், இப்போது நான் இறக்கக் கூடாது. நான் இறந்தால் என் குழந்தையை - என் குழந்தைகளை - யார் பார்ப்பார்கள், யார் நேசிப்பார்கள்? யார் எண்ணி எண்ணி ஏங்கவாவது செய்வார்கள்?” என்று அவள் விம்மி வெதும்பினாள். புயலின் தொலையாரவாரமும் அவள் உள்ளக் குமுறலின் எதிரொலிகள் போலவே “யார் பார்ப்பார்கள், யார் நேசிப்பார்கள்? யார் நேசிப்பார்கள், யார் பார்ப்பார்கள்?” என்று கூடக்கூட ஆர்ப்பரித்தது. அவள் வாழ்க்கையிலும் அவளுக்கு எவ்வகை ஆறுதலும் இல்லை. அவள் சாவிலும் அவளுக்கு எவ்வகை ஆறுதலும் கிட்டவில்லை. அவள் இறுதி வேண்டுதலைப் புயலும் காற்றும் கேளாதது போலவே இறைவனும் கேட்கவில்லை. ஏங்கிய தாயுள்ளம் இயற்கையன்னையுடன் ஒன்றுபட்டு விட்டது. 2. துன்பத்தொட்டில் பாரிஸ் நகரின் அகன்ற தெருக்களுள் ஒன்றில் காலைக் கதிரவனின் இளங்கதிர்கள் பனிக் காலத்தின் கவடுகளை நீக்கிக் கொண்டிருந்தன. தெருவின் நடுப்பகுதி வண்டிகளின் போக்கு வரவால் சேறடைந்து கிடந்தது. அதிலிருந்து சற்று ஒதுங்கி அங்கு மிங்குமாக இருபுறத்திலும் ஆட்கள் செல்லத் தொடங்கி யிருந்தனர். சற்று மேடான உலர்ந்த இடத்தில் வாதுமைக் கொட்டைகளை வறுத்துச் சுடச்சுட விற்கும் நன்மாது ஒருத்தி தன் இழுப்பு வண்டியுடனும் சூட்டடுப்புடனும் நின்றிருந்தாள். அவள் கனிந்த உள்ளமுடையவள். ஏழைப் பிள்ளைகளுக்கு அவள் அவ்வப்போது காசில்லாமல் ஒன்றிரண்டு கொட்டைகள் எடுத்துக் கொடுப்பாள். ஆனால், காசு கொடுத்து வாங்குபவர் வாங்கும் போதுதானே இந்தக் கருணைப் பணி நடத்த முடியும்? வெறுங்கையுடன் ஏங்கி நின்ற ஏழைப் பிள்ளைகளைத் தாண்டிக் காசு வைத்திருந்த உயர் வகுப்புப் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து மொய்க்கத் தொடங்கியிருந்தனர். தெருவின் மற்றொரு பகுதியில் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களை வைத்துக் கொண்டு அதைக் காட்டித் தக்க பாட்டுக்களைப் பாடிப் பிழைக்கும் தெருப்பாடகன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். குழந்தை ஏசுவின் படத்தையும் அதன் பின்னால் அன்னை மேரி படத்தையும் வைத்துக் கொண்டு அவன், அன்னையிவள் பாரீர்! அனைத்துலகுக்கும், அன்னையிவள் பாரீர்! தன்னருங் குழந்தைகளைத் தாய் மறப்பாளோ? என்று பாடிக்கொண்டு சென்றான். அப்பாட்டை ஏழைப் பிள்ளைகள் கூட அவ்வளவு ஆர்வமாய்க் கவனிக்கவில்லை; ஒரு பெரிய மாடி வீட்டின் மேல்தளப் பலகணி திறந்து அதில் முடங்கியிருந்த இரு சின்னஞ்சிறு குழந்தைகள் அப்படங்களைக் கூர்ந்து கவனித்து அப்பாட்டை ஆர்வத்துடன் கேட்டன. குழந்தை ஏசுவின் படத்திலிருந்து அக்குழந்தைகளின் கண்கள் வாதுமைக் கொட்டைகளை நோக்கி ஆர்வத்துடன் திரும்பின. அவர்களுக்கு ஒரு தாய் இருந்தால் இத் தின்பண்டங்களை அவர்கள் இவ்வளவு ஆர்வத்துடன் கண்டு ஏங்க வேண்டியிராது. மாடி வீட்டிலிருந்தாலும் அவர்கள் துணையற்ற மதலைகளாகவே இருந்தனர்! வாதுமைக் கொட்டை விற்பவள் அப்பக்கம் வரும்போதெல்லாம், அவர்களுக்கு இரங்கிச் சில கொட்டைகளை எடுத்துக் கொடுப்பாள். பிள்ளைகள் இந்த ‘அன்னைப் பாசத்தை’ எண்ணியே நாள்தோறும் அவளை எதிர்பார்த்துப் பலகணியில் வந்து காத்திருந்தன. அவ்விரு குழந்தைகளும்தான் மாது ழீன் பெரோன் பெற்றுவிட்டுப் போன அருஞ் செல்வங்கள். மூத்தவள் லீமாவுக்கு இப்போது ஏழாண்டுகளும் இளையவள் லாரைனுக்கு ஐந்தாண்டு களும் ஆயின. இரு குழந்தைகளும் பொற்பதுமைகள் போன் றிருந்தன. பொன்னிறத் தலைமுடிகள் காற்றில் அலைந்தாடி அவர்கள் முகத்தை மறைத்தன. மூத்த பெண் முகம் வெளுத்து அவள் மேனியும் சிறிது விளறிய தோற்றம் உடையதாயிருந்தது. அவள் மிகமிக மெலிவுற்றுக் காண்பவர்க்கு இரக்கம் உண்டு பண்ணும் தோற்றம் உடையவளாயிருந்தாள். இளைய பெண் லாரைன் அழகு இன்னும் பொலிவுடையதாயிருந்தது. அவள் நீலநிறக் கண்களில் குழந்தைகளின் மருண்ட பார்வை மட்டுமன்றி, தாயன்பின் கனிவும் நிறைந்திருந்தது. வயதில் இளையவளானாலும் அறிவில் முதிர்ந்த அவள் துணையற்றுத் தவித்த தன் தமக்கையைக் கைகளால் அணைத்துக் கொண்டு, வாதுமை விற்ற மாதை நோக்கி சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தாள். மாது ழீன் பெரோன் இறந்தபின் அவள் கணவன் சார்லஸ் பெரோன் மீண்டும் மணம் செய்து கொண்டான். புதிய மாது சூசேனி ழீனைப் போல எவருக்கும் பணிந்து கொடுக்கும் குண முடையவளாயில்லை. அவள் பேரவாவுடையவள். பெரோன் குடியில் கால் வைத்த நாள் முதல் அவள் அதன் அரசியாய் விட்டாள். மாமியாரையும் நாத்தனாரையும் அவள் விருந்தினர் போல நடத்தினாள். ஆனால், பணியாட்களைத் தானே ஏவி அடக்குமுறை செய்தாள். அவளை மற்றவர்களும் கண்டு அஞ்சத் தொடங்கினர். கணவனும் அவளுடன் மல்லாடுவதை நிறுத்திப் படிப்படியாக அவள் கையிலேயே குடும்ப ஆட்சியை ஒப்படைத்து விட்டான். பெரோன் குழந்தைகளிடம் மிகுதி பாசமுடையவனா யில்லை. ஆயினும் அவன் தாயற்ற தன் குழந்தைகளிடம் அவ்வப் போது இரக்கங் காட்டுவது உண்டு. சிறப்பாக இளைய குழந்தையின் நீலவிழிகளும் அதன் சொல் திறமும் இமைந்த நடையும் அவனைக் கவர்ந்திருந்தன. ஆனால், அவன் குழந்தை களிடம் அவனை மாது சூசேன் பெரோன் மிகுதியாக விட்டு வைக்க விரும்பவில்லை. கணவனை அவள் எதுவும் சொல்வதில்லை யாயினும் பணியட்களிடம் சீறி விழுந்து “பிள்ளைகளை ஏன் கவனிக்கவில்லை? தந்தை செல்லங் கொடுத்தால் அவர்கள் கெட்டுவிடுவார்கள். அவர்கள் அறைக்கே தூக்கிக்கொண்டு போங்கள்” என்பாள். நாளடைவில் பிள்ளைகள் கீழே கொண்டு விடப்பட்டன. செவிலி அவர்களைக் கீழே வரப்படாதென்று கண்டிப்புச் செய்து விட்டாள். பிள்ளைகளுக்கு உணவு அவர்கள் அறைக்கே அனுப்பப் படும். உடைகளுக்கான செலவுப் பணமும் செவிலியரிடமே ஒப்படைக்கப்படும். ஆனால், பணம் மிகுதி கொடுக்காமல் மாது சூசேன் பெரோன் பார்த்துக் கொண்டாள். கொடுத்த பணம் உடைகளில் செலவழியாமலும், உடைகளும் பெரும்பாலும் தன் வீட்டுக்கே செல்லும்படியும் செவிலி அகதா பார்த்துக் கொண்டாள். உணவுகூடக் குழந்தைகளுக்கு ஒழுங்காய்த் தரப்படுவதில்லை. பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருள் எதுவுமே கிடையாது. மூத்தவள் லீமா பசி தாங்காமல் அழுவாள். லாரைன் தன் பசியடக்கி, அவளுக்கு ஆறுதல் கூறி அழுகை அமர்த்தவும், அவ்வப்போது பிறருக்குத் தெரியாமல் உணவு தேடி ஒளித்து வைத்திருந்து கொடுக்கவும் பழகி விட்டாள். லீமா கீழே ஓட நினைத்த போதெல்லாம், தங்கை அவளைத் தடுத்து நிறுத்தி அணைத்து, அவள் மனத்தை வேறு திசையில் திருப்புவாள். அறிவு நிரம்பாத அந்த ஏழைச் சிறுமியை யாராவது கீழே கண்டால் கண்டபடி அடித்து வதைப்பார்கள் என்பது அறிவு மிக்க லாரைனுக்கு நன்றாகத் தெரியும். “வேண்டாம் லீமா. சமயம் பார்த்து நான் அவ்வப்போது போய் எடுத்துத்தரவில்லையா? நீ போனால் அவர்கள் யாரிட மாவது அகப்பட்டுக் கொள்வாய். அவர்கள் இரக்கமில்லாதவர்கள். உன்னை அடித்து நொறுக்கி விடுவார்கள். அப்போது நான் என்ன செய்வேன்! வேண்டாம் லீமா; இதோ தெருவில் கூட்டம் பெருகி விட்டது. வாதுமைக்காரி வரும் நேரமாயிற்று” என்று லாரைன் தமக்கையை அமைதிப் படுத்திக் கொண்டிருந்தாள். வாதுமைக் காரியைக் கண்டதும் லீமா “அதோ, வாதுமைக் கொட்டைகள் பார். நேற்று நமக்கு இரண்டு கொட்டைகள் எடுத்தெறிந்தாளே, அதே மாதுதான். இப்போதும் நீ போய் ஏதாவது வாங்கிவா” என்றாள். லாரைன்: “இறங்கிப் போகப்படாது இப்போது அகதா வரும் நேரம். அவள் கண்டு விட்டால் உள்ளதும் கெட்டுப் போகும். நான் இங்கிருந்தே வாங்குகிறேன்., பார்.” கந்தல்களைக் கயிறாகக் கட்டி அதில் ஓர் அழுக்குக் கூடையை இணைத்துத்தெருவில் இறக்கினாள் லாரைன். வாதுமைக்காரி புன் முறுவலுடன் குழந்தையின் அறிவைக் கண்டு வியந்தாள். கூடையினுள் லாரைன் தன் கைக்குட்டைகளில் ஒன்றைப் போட்டிருந்தாள். வாதுமைகள் வாங்கக் காசில்லாத தால், காசுக்குப் பகரம் அதனை அவள் போட்டு வைத்திருந்தாள். அதைப் பார்க்க, வாதுமை விற்பவளுக்குக் கூடக் கண்களில் நீர் ததும்பிற்று. அவள் அக்கைக்குட்டையை எடுத்து முத்தமிட்டு, இரண்டு மூன்று கொட்டைகளைக் கூடையிலிட்டாள். பின் அவள் கைக்குட்டையையும் கூடையிலேயே போட்டு. அதை மேலே அனுப்பினாள். இது கண்ட லாரைன் அவளைக் கனிவுடன் பார்த்து, தன் கனிந்த நோக்கினால் நன்றி தெரிவித்தாள். மாடியில் தனியேயிருந்து துணையற்றுத் தவித்த அக் குழந்தைகளைப் பற்றிய பேச்சே அந்நகரெங்கும் ஏழை மக்கள் குடிகளில் கதையாயிருந்தது. போவார் வருவார் எவரும் இரக்கத்துடன் பலகணிகளில் எட்டிப் பார்க்காமல் செல்வ தில்லை. ஆனால், ஏழைகள் இரங்கி என்னபயன்? ஏழைகளும் இறைவனும் இவ்வுலகில் என்ன செய்ய முடியும்? 3. மனைமாற்றம் ஒரு நாள் பிள்ளைகள் வழக்கம்போலப் பலகணியில் இருந்துகொண்டு தெருவில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தெருவில் ஒரு புறமிருந்து ஆரஞ்சுப் பழங்கள் விற்பவன் வந்து கொண்டிருந்தான். குழந்தைகள் அவனையே நோக்கிக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் எதிர்ப் புறத்திலிருந்தது இரு குதிரைகள் பூட்டிய பெரிய வண்டியொன்று ஒய்யாரமாக வந்தது. அது மாடியருகில் நின்றுவிடவே, லாரைன் பழக்காரனைக் கூட மறந்து அதில் கவனம் செலுத்தினாள். அதிலிருந்து பகட்டான ஆடையணிமணி உடுத்திய ஒரு வயது சென்ற மாது இறங்கினாள். அவளைப் பார்த்ததே லாரைனின் உயிர் குற்றுயிராயிற்று. அவள் லீமாவைப் பிடித்த கைப்பிடியை இறுக்கிக்கொண்டு, “ஐயோ, லீமா அதோ பாட்டி வந்திருக்கிறாள். உள்ளே வா. அறை எப்படியோ கிடக்கிறதே!” என்றாள். பிள்ளைகள் விரைவாக உள்ளே போக முயன்றனர். ஆனால், லீமாவின் கண்கள் பழக்காரனையே உறுத்துப் பார்த்தன. பழக்காரன் இதற்குள் மிக நெருங்கி வந்து விட்டான். அவனும் லீமாவையே பார்த்துக்கொண்டு வந்ததால், வண்டியையும் அதிலுள்ள பெருமாட்டியையும் அவன் கவனிக்கவில்லை. லீமாவை லாரைன் உள்ளே இழுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவன் ஒரு பழத்தை எடுத்துப் பலகணி வழியாக உள்ளே எறிந்தான். ஆனால், அந்தோ, அது குறி தவறிச் சுவரில் மோதி, வண்டியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த பெரு மாட்டியின் தலையணியின் மேலே ‘தொப்’பென்ற வந்து விழுந்தது. பெருமாட்டி பாம்புபோல் சீறியெழுந்தாள். செல்வர் சீற்றத்தின் விலையறிந்த பழக்காரன் பழத்தை எடுக்கக் கூட முயலாமல், கூடையுடன் விரைந்தோடி விட்டான். அச்சமயம் அப்பக்கம் வந்த அகதாகூடப் பெருமாட்டியை அங்கே கண்டு மலைப்படைந்து நின்றாள். இப்பெருமாட்டியே இறந்துபோன ழீனின் தாயாகிய மாது பிளான்ஸி. தன் வழியிலும் பெரோன் வழியிலும் ழீன் பெருஞ் செல்வ உரிமையைக் குழந்தைகளுக்கு விட்டுச் சென்றிருந்தான். குழந்தைகளை வளர்ப்பவர்களுக்கு அச்செல்வத்தின் வருவாய் உரியது. ஆகவே, பெருமாட்டி குழந்தைகளைத் தானே கொண்டு சென்று வளர்க்க விரும்பினாள். ஆனால், புதிய மாது சூசேன் பெரோன் அவர்களைத் தன் கைப்பிடியிலிருந்து அனுப்ப விரும்பவில்லை. “உன் பேர்த்திகளை வேண்டுமானால் வந்து பார்த்துப் போகலாம். அவர்களை அனுப்ப முடியாது” என்று அவள் கண்டிப்பாகக் கூறிவிட்டாள். பெருமாட்டி மாது பிளான்ஸி பிள்ளை வளர்ப்புப் பற்றி மிகக் கண்டிப்பான கருத்துடையவள். அக்கண்டிப்பின் பயனாகவே ழீன் வாழ்விழந்து போனாள் என்பதுகூட அவள் முதுமை அனுபவத்திற்கு எட்டவில்லை. மாற்றாந்தாய் வீட்டில் போதிய கண்டிப்பு இராது என்பதுதான் அவள் ஓயாத குற்றச்சாட்டு. இன்று அதற்குச் சரியான தெளிவு கிடைத்து விட்டது. தன் குடி மதிப்பெங்கே, தெருவிலுள்ள பழ விற்பனையாளன் பழம் எறியும் நிலை எங்கே? “அவன் பழங்களைப் பிச்சைக்காரப் பிள்ளை களிடம் எறிவதுபோல் எறியத் துணிந்து விட்டானே! அவ் வளவுக்குச் சென்று விட்டது பிள்ளைகளை நடத்தியமுறை!” என்று அவள் ஆரவாரம் செய்து கொண்டு தடதடவென்று வீட்டினுள் நுழைந்தாள். அகதா எவ்வளவோ முயன்று அவளுக்கு முன்வந்து குழந்தைகள் அறையை ஒழுங்குபடுத்த விரைந்தோடினாள். ஆனால், இது ஒன்றும் பயனில்லாது போயிற்று. அவள் கண்முன் எல்லாம் தாறு மாறாகக் கிடந்தன. அவள் கூரிய கழுகுக் கண்கள் அங்குள்ள கந்தல் கூளங்கள் ஒவ்வொன்றையும் தும்பு தூசுகளையும் தனித்தனியே கவனித்துக் கொண்டன. ஒவ்வொரு செய்தியையும் கவனித்து அவள் பாரிய தலையணி ஒரு தடவை ஆடிற்று. அகதா நடுக்கத்துடன், ஆனால் வலிந்து ஒரு புன்முறுவலை வருவித்துக் கொண்டு, “பெருமாட்டி, நான் சிறிது வெளியே போயிருந்தேன். அதற்குள்... ...” பெருமாட்டி: உன்னை ஒன்றும் கேட்கவில்லை. நீ வாயை மூடிக்கொண்டிருக்கலாம். (அகதா உடனே பின்வாங்கி அடங்கி ஒடுங்கி நின்றாள்.) “குழந்தைகளே! நான் கேட்பதற்கு மறுமொழி சொல்லுங்கள்.” லீமா உறுத்து விழித்துத் தலையணியைக் கவனித் தாள்; லாரைன், பாட்டி என்ன கேட்பாளோ என்று அஞ்சினாள். உங்களுக்கு இப்படியே ஒவ்வொரு நாளும் பழம், அப்பம் கிடைக்கிறதல்லவா? லாரைன் உடனே விடை தரவில்லை; அவள் தயங்கினாள் ஆனால், அஞ்சுதலறியாத லீமா, “ஆம். பலகணி வழியாக வகை வகையாக நல்ல மனிதர்கள் எனக்கு உணவு தருகிறார்கள். வெளியே எல்லாருக்கும் எங்கள் மீது அன்பு உண்டு” என்றாள். பெருமாட்டி: (அகதாவை நோக்கி) அம்மணி, நிலைமையைப் பார்க்க, இங்கே பிள்ளைகள் பட்டினியாகத்தான் இருக்கிறது போலத் தோற்றுகிறது. இப்போது லாரைன் துணிந்து, “ஆம், பாட்டி. இரண்டு நாளாய் வெளியே இருந்து கிடைத்த ரெண்டு வாதுமைக் கொட்டையையும் ஓர் அப்பத் துண்டையும் தவிர நாங்கள் எதுவும் உட்கொண்டதில்லை” என்றாள். லீமா சிறுபிள்ளைத்தனமாக, “அவற்றைக் கூட நான்தான் பெரும்பாலும் தின்று தீர்த்துவிட்டேன். பாவம், லாரைனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. லாரைன் பாவம், பாவம்” என்று கைகொட்டிச் சிரிக்கத் தொடங்கினாள். மாது பிளான்ஸியின் பழிவாங்கும் எண்ணத்துக்கு இவ்வளவு போதாதா? அவள் அகதா பக்கம் திரும்பி அவள் கன்னத்தில் இரண்டடி பளீர், பளீர் என்று அடித்தாள். மரத்துப் போயிருந்த அவள் கைகளின் தடங்கள் அங்கே பதிந்தன. “உன்னைக் காவலரிடம் ஒப்புவித்துப் பாடம் படிப்பிக்கிறேனா இல்லையா பார். பிள்ளைகள் சிறு அணிமணிகளைக் கொண்டு நீ விற்பதாகக் கூடக் கேள்விப்பட்டேன். இனி என் கையில் அகப்பட்டாயா, உன்னைத் தொலைத்து விடுவேன்” என்று அவள் மீண்டும் கறுவினாள். அகதா பிளான்ஸியின் வீட்டு வேலைக்காரனுடன் நட்பாயிருந்தவள். ஆனால், அவள் சிலகாலம் அவனை விட்டு வேறு வழியில் திரும்பியிருந்தாள். வேலைக் காரன் அவள் மீதுள்ள பொறாமையால் தன் வீட்டுத் தலைவி யிடம் அவள் செய்த காரியங்களை வெளியிட்டுச் சினமூட்டி யிருந்தாள். பெருமாட்டி தன்னைக் கையும் மெய்யுமாகப் பிடித்து விட்டதுடன், கூடுதல் துப்புகளும் வைத்திருக்கிறாள் என்று தெரிந்த அகதா எண்சாணும் ஒரு சாணாகக் குன்றினாள். பெருமாட்டி இக்குழப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டாள். அவள் வேலைக்காரருக்கான மணியைத் தடதடவென அடித்தாள். வேலையாட்கள் எல்லாரும் வந்தனர். வீட்டுக்காரர் எங்கே என்று அவள் சீற்றத்துடன் கேட்டாள். இச்சமயம் திரு. சார்லஸ் பெரோன், மாது பெரோன் ஆகிய இருவரும் வெளியே சென்றிருந்தனர். இதுதான் சமயம் என்று மாது பிளான்ஸி பிள்ளைகளை அகதாவின் ஆட்சியிலிருந்து மீட்டுத் தன் வண்டியில் வைத்துக்கொண்டு தன் வீடு சென்றாள். பணியாட்கள் தங்கள் பொறுப்பைக் குறைப்பதற்காகத் தலைவர் தலைவியிடம் பிளான்ஸி கண்ட காட்சிகளையும், அவள் சீற்றத்தையும் பெருக்கிக் கூறினார். அவர்களுக்கும் பிளான்ஸியின் கடுநாக்கின் முன் நடுக்கமே. ஆகவே, அவர்கள் பேசாமல் அவளிடமே பிள்ளைகளின் பொறுப்பை விட்டுவிட்டார்கள். குழந்தைகள் சார்பில் அனுப்ப வேண்டிய பணத்தையும் சூசேன் அவளுக்கே அனுப்ப ஒப்புக் கொண்டாள். ழீன் வயிற்றில் பிறந்த ஒரு குற்றத்திற்காகக் குழந்தைப் பருவத்திலேயே தண்டிக்கப்பட்டுப் பல அல்லல்களுக்காளான குழந்தைகள் இக்கொடுஞ் சிறையிலிருந்து, மாது பெரோனின் வஞ்சனை, அகதாவின் கொடுமை ஆகியவற்றிலிருந்தும் ஓர் ஆரஞ்சுப் பழத்தின் உதவியால் விடுதலையடைந்தனர். அவர்கள் வாழ்வின் முதல் கொடும்பகுதி-துன்பத் தொட்டில் - முடிவுற்றது. 4. ரோஸி ஒன்பதாண்டுகள் லீமாவும் லாரைனும் தம் பாட்டியார் இல்லத்திலிருந்து வளர்ந்தனர். இப்போது அவர்களுக்கு உணவுக்குத் தட்டில்லை. உடைக்கும் பஞ்சமில்லை. ஆனால், அவர்கள் சிறை முன்னிலும் கடுமையாகவே இருந்தது. முன்பு உணவுக்கு அலந்து அவர்கள் பலகணியில் வந்து குந்தியிருந்தனர். இங்கும் பலகணி ஒன்றே புற உலகுக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்டிருந்த ஒரே தொடர்பாயிருந்தது. இரு பிள்ளைகளும் இப்போதும் பிளான்ஸி மாளிகையின் பலகணியில் வந்து பதுமைகள் போலிருந்து அகன்ற உலகில் தங்குதடையில்லாமல் திரிந்த மக்களைப் பார்த்துக் கொண்டிருப்பர். லாரைன் அடிக்கடி “லீமா! நாம் குழந்தைகளாயிருக்கும் போது, இதுபோலவே பலகணியில் வந்திருப்போமே அப்பா வீட்டில், அது நினைவிருக்கிறதா? அந்த ஆரஞ்சுப்பழம் வந்து விடுதலை தரா விட்டால், இன்னும் நாம் அங்கேதானே இருந்திருப்போம்?” என்பாள். ஆனால், அப்பா வீடு என்ற சொல்லே லீமாவை எப்போதும் திடுக்கிட வைத்தது. பாட்டி வீட்டின் சிறையை அவள் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. அவள் உணவை யும் உடையையும் தவிர எதுபற்றியும் கவலைப்படவில்லை. ஆனால், லாரைன் தன் போக்காகத்திரிய முடியாத நிலையில் கிட்டத்தட்ட முன்போலவே வருந்தினாள். லாரைனுக்கு இப்போது பதினாலு ஆண்டுப் பருவம். அவள் பொன்னிறக் கூந்தல் இப்போது இவள் முகத்துக்கு மட்டுமின்றி உடலுக்கே ஒரு பின்னணியாகும்படி அடர்ந்து திரண்டு பெருகியிருந்தது. அக்கால முறைப்படி அதனை அவள் மயிர்க்கச்சைகளால் வாரிக் கட்டியிருந்தாலும், அடிக்கடி அது கட்டை அவிழ்த்துக் கொண்டு தோளில் வந்து புரண்டு விழும். அப்போதெல்லாம் பிளான்ஸிப் பெருமாட்டி ஏதோ பெரிய இடையூறு ஏற்பட்டு விட்டதுபோல, “அம்மணி, மற்ற வேலை களையெல்லாம் ஒதுக்கிவை. மேலே போய்த் தலையை வாரிக் கட்டிவிட்டு மறுவேலை பார்” என்று கட்டளையிடுவாள். பொன்முகில் தாங்கிய இளந்திங்கள் அசைந்து செல்வதுபோல, லாரைன் மாடிப்படியேறிச் செல்வாள். இரு பெண்களுக்கும் ஆடல் பாடல் கற்றுக் கொடுக்க ஏற்பாடாகியிருந்தது. இதில் இரண்டுபேருமே மகிழ்ச்சி யடைந்தனர். லாரைன் தன் சின்னஞ்சிறிய காலடிகளை நிலத்தில் பட்டும் பாடாமலும் வைத்து, வகை வகையான ஆடல்கள் பழகி, எல்லாரையும் மகிழ்வித்தாள். லீமா அவ்வளவு விரைவில் ஆடலைக் கற்றுக் கொள்ள முடியவில்லையாயினும், ஆடலில் தன்னை மறந்து களிக்கத் தொடங்கினாள். ஆடலாசிரியரும் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதையே ஓர் இன்பமாகக் கருதினார். அத்துடன் அவர் அரண்மனையில் அரசிளஞ் செல்வியர்க்கும் கற்றுக் கொடுத்தவராதலால், அரண்மனை சார்ந்த பல செய்தி களையும் கதையேபோலக் கூறிப் பெண்களை மகிழ்விப்பார். அவர்களும் ஓய்ந்த பொழுதெல்லாம் அரசவை பற்றிய இனிய நிகழ்ச்சிகளைக் கூறும்படி கேட்பார்கள். இளவரசி லூயியின் பண்புச் சிறப்புகளைப்பற்றி கேட்பதில் அவர்களுக்குச் சலிப்பே தட்டுவதில்லை. முதல் முதல் புதிய ஆட்டமாகிய ‘செவ்வாடல்’ கற்பித்த கதைபற்றி அவர் கூறுவார். “சிவப்பு நிறத்தைவிடப் பச்சை நிறத்திலேயே இளவரசிக்கு விருப்பம் மிகுதி. அத்துடன் சிறு பருவத்திலேயே அவள் அடமும், பிடிமுரண்டும் மிக்கவள். ஆகவே, செவ்வாடல் திறம் கூறிப் பாடம் தொடங்கிய பின்னும் அவள் ஆடல் தொடங்காமல் நிலையாக நின்றாள். அத்துடன் என்ன கூறியும் அவள் அடியெடுத்து வைக்க மறுத்தாள். செவ்வாடல் என்ற பெயர் அவளுக்குப் பிடிக்கவில்லை. செவ்வாடல் என்பதைப் பச்சை ஆடல் என்று கூறினாலல்லாமல் ஆட முடியாது என்றாள். ஆடலறிந்த அனைவரையும் வருவித்துக் கேட்டுப் பார்த்தோம். யாவரும் பச்சை ஆடலே அதற்குப் பொருந்திய பெயர் என்றனர்! பச்சை யாடல் என்று நான் கூறிய பின்னே இளவரசி ஆடினாள்.” என்று ஆடலாசிரியர் வம்பளந்தார். அதன் முடிவில் அவர், “அரசவை பற்றி இப்படியெல்லாம் நாம் பேசுவது தவறு. சரி, சின்ன அரசி லாரைன்! இப்போது தலைநிமிர்ந்து உன் பாடம் தொடங்கு. ஆம். பார்வை நேராக இருக்க வேண்டும். எங்கே-ஒன்று, இரண்டு, மூன்று! சரி, அதுதான் சரி! இன்னும் சற்று இடதுபுறம் நோக்கிச் சரியாக. போதும்! உடல் நெளிந்து, கால்களைப் பதமாக எடுத்து வைத்து நடமிடுங்கள். இனி கால் அசைவது தெரியக் கூடாது. மிதந்து செல்வது போன்றிருக்க வேண்டும். நன்று! மிக நன்று!” என்று பாடத்தை நடத்திச் செல்வார். லாரைன் இப்போது குழந்தையாயில்லை. அவள் நடுத்தர உயரமுடையவளாகியிருந்தாலும் அந்த சந்தமாக வளர்ந்திருந்தாள். அக்காலத்தில் மணமாகாப் பருவத்திலேயே பெண்கள் வளர்ந்த மாதர்போல உடையுடுத்துவது வழக்கம். லாரைனின் அமைந்த, ஆனால் எழுச்சிமிக்க நடைக்கு அந்த உடைகூடப் பொருத்த மாகவே அமைந்தது. மார்க்கச்சின் அருகுகள் உள்ளே மீன் எலும்பு வைத்து அந்நாளில் விறைப்பாகத் தைக்கப்பட்டு வந்தன. இவை லாரைன் உடலுடன் ஒட்டி அதன் செவ்விய விளைவுகளையும் நேரொழுங்கையும் எடுத்துக் காட்டின. அவள் இடையும் நடையும் அக்காலச் செயற்கை முறையான ஆடைகளில் கட்டுப் பட்டிருந்தாலும், அவ்வாடைகள் தேவையில்லாத அளவுக்கு அவள் உடற்கூறுகள் தம் இயற்கைக் குழைவு நெளிவை வெளிப்படுத்தின. உண்மையில் சிறு பருவத்திலேயே தொடங்கப் பட்ட ஆடல் பாடல் பருவ மீறி முன்கூட்டியே அவள் உடலுக்குக் கட்டிளமையையும் கவர்ச்சியையும் தந்திருந்தன. விளையாட்டுப் பருவத்தில் அவர்கள் விளையாட விடப் பாடாததனால், ஆண்டின் அளவு கடந்து லாரைன் உடலும் அறிவும் வளர்ச்சியடைந்திருந்தன. அவள் துன்ப வாழ்வு அவள் பெண்மையைத் தட்டி எழுப்பிற்று. மூத்தோர்களின் நடையுடை தோற்றத்திலும் பண்புகளிலும் அவள் கருத்தைச் செலுத்தித் தன் உலகியலறிவை வளர்த்திருந்தாள். அவள் வாழ்வின் பெருங்குறை தாய்ப்பாசம் இல்லாதது தான். அதற்கு அவள் ஏங்காமலில்லை. தந்தையுடன் பழகியாவது தன் உள்ளார்ந்த குழந்தையார்வத்திற்கு நிறைவளிக்க அவள் விரும்பினாள்; ஆனால், இதிலும் அவளுக்கு முட்டுக் கட்டைகள் ஏற்பட்டன. தன்னை விட்டு லாரைன் தந்தையிடம் பாசங் கொண்டால், அவள் மீண்டும் தந்தை வீடு சென்றுவிடக் கூடும் என்று மாது பிளான்ஸி எண்ணினாள். ஆகவே, வாரம் ஒரு முறைக்குமேல் குழந்தைகள் தந்தையைப் பார்க்கச் செல்லும்படி அவள் இணங்கவில்லை. அங்கே சென்றபோதும் தந்தையுடன் குழந்தைகள் தங்குதடையின்றிப் பழக முடியவில்லை. மாது பெரோன் பிள்ளைகளுடன் தந்தை பாசங்கொள்வதை வெறுத்தாள். சார்லஸ் பெரோன் தன் வருவாயிலிருந்தே அவர்களுக்குப் பங்கு தந்துவிடக் கூடும் என்று அவள் அஞ்சினள். இவ்வெண்ணத்துடன் அவள் லாரைனைப் பற்றியும் லீமாவைப் பற்றியும் கணவனுக்குப் பலவகையில் தப்பெண்ணங்கள் ஏற்படும்படி எல்லாச் செய்திகளையும் திரித்துக் கூறி வந்தாள். தந்தை செல்வத்தைக் கறப்பதற்காகவே லாரைன் பாசங் காட்டிச் சூழ்ச்சி செய்கிறாள் என்றும், மாது பிளான்ஸி தந்தையிடம் உட்பகைமை கொள்ளும்படி அவளைத் தூண்டி வருகிறா ளென்றும் கணவனுக்கு அவள் ஓதிவந்தாள். இந்நிலையில் பெரோன் லாரைனிடம் ஏதிலாரைப்போல நடந்து கொண்டதில் வியப்பில்லை. பாவம், லாரைனுக்குத் தாய்ப்பாசம் இல்லாமல் போனது மட்டுமின்றி, தந்தையின் பாசத்துக்கும் இடமில்லாது போயிற்று. குழந்தைகளைத் தாய் தந்தையர் வளர்க்கும்போது கூடக் குழந்தைகள் ஆர்வங்களைத் தாய் தந்தையர் அறிந்து ஆதரவு செய்ய முடிவதில்லை. அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயுள்ள வயது வேறுபாட்டால் குழந்தைப்பருவ அவா ஆர்வங்களை அவர்கள் அறியாது போவதுண்டு. ஆனால், லாரைனை வளர்த்தவளோ, தாயல்ல, பாட்டி. அத்துடன் அவள் கடுமை முறையிலே பழகியவள். லாரைனின் இளமைக் கவர்ச்சியுள் அவள் நடையுடையின் எளிமையழகும் அவளுக்குப் பிடிக்கவில்லை. லாரைன் எல்லாரிடமும் அன்பாயிருந்ததனால், பணிப்பெண்கள் வேலையாட்கள் வரை யாவரும் அவளிடம் இரட்டிப்பு அன்பாதரவு காட்டினர். இதுவும் கிழவியின் சீற்றத்தைப் பெருக்கியது. அவள் லாரைனின் உடையில் குற்றங் கண்டாள்; அவள் சிரித்தால் தவறு; விழித்துப் பார்த்தால் தவறு. சிறை வாழ்வில் குற்றவாளிகள் காணாத கொடுமைகளை, கூண்டில் பறவைகள் அடையாத துன்பங்களை அந்நற்குண நங்கை இளமையிலேயே அனுபவித்தாள். தந்தை வீட்டுக்குப் போய் வந்ததும். “அவர் என்ன பேசினார். நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்றெல்லாம் பாட்டி குறுக்குக் கேள்வி கேட்பாள், லாரைன் அவ்வப்போது ஏதேனும் மறைத்தாலும், சொல்லாது விட்டாலும் லீமா உளறிக் கொட்டிவிடுவாள். பாட்டி சில சமயம் சினங்கொள்வாள், சிலசமயம் எச்சரிப்பாள். ‘தந்தை வீட்டில் எதுவும் பேசக்கூடாது. அங்கே எல்லாம் நஞ்சிடப்பட்டே இருக்கக் கூடும். அங்கே எதுவும் உட்கொள்ளக் கூடாது.’ இவ் எச்சரிக்கைகள் தாயில்லாப் பிள்ளைகள் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தின என்று கூறத் தேவையில்லை. தந்தைக்கு எப்படியாவது தன் அன்பைக் காட்ட லாரைன் அரும்பாடு பட்டாள். அவள் தன் குழந்தைக் கலையார்வ முழுவதும் ஈடுபடுத்தி ஒரு படம் வரைந்தாள். அதை அவர் பிறந்த நாளில் அவருக்குப் பரிசாகக் கொடுக்க எண்ணினாள். ஆனால், பாட்டி அதனைக் கண்டு செய்தியுணர்ந்ததும் அதனைக் கிழித்தெறிந்து விட்டாள். லாரைனின் கனவுக் கோட்டையும் ஆர்வமும் அதனுடன் தகர்ந்தன. அவர்களிடம் உள்ளார்ந்த பற்றுக் காட்டிய உறவினர் ஒரே ஒருவர் தாம் - அது மாது பிளான்ஸியின் மகனும் அவர்கள் மாமனும் ஆகிய திரு. மான்கண்டர் மட்டுமே. அவர் தாய்க்கு அடங்கியவர்; தாயின் சீற்றத்துக்கு அஞ்சியவர். ஆகவே, தாயறியாமலேதான் அவர் பிள்ளைகளிடம் தம் அன்பைக் காட்டி வந்தார். ஒரு நாள் காலை அவர்கள் படுக்கையறைக் கதவில் ஏதோ பிறாண்டும் அரவம் கேட்டது. கதவைத் திறந்த போது மான் கண்டர் அவர் கண்முன் நின்றார். தம் தாயில்லாதபோது அவர் குழந்தைகள், நாய்கள், பூக்கள் எல்லாவற்றிலும் மிகுதி ஈடுபட்டு மகிழ்வார். லாரைனிடம் அவருக்கு உள்ளூரப் பற்று மிகுதி. இன்று அவர்தம் சட்டைப் பையிலிருந்து ஒரு பெட்டி போன்ற கூண்டு கொண்டு வந்திருந்தார். அதை அவர் லாரைனிடம் எடுத்துக் கொடுத்தார். ஆர்வத்துடன் லாரைன் அதை வாங்கிப் பார்த்தாள். அதனுள்ளிருந்து இரு சின்னஞ்சிறு கண்கள் அவளை உற்று நோக்கின. அது ஓர் அழகிய சிறு குச்சுநாய். அதை எடுத்து முத்தமிட்டு உச்சி தடவிக்கொண்டு, “இது ஏது மாமா? எனக்கா?” என்று அவள் கேட்டாள். திரு. மான்கண்டர் “ஆம். ஆனால் நான் உங்களுக்கு ஒரு செய்தி கூறவந்தேன். இந்த நாயின் பெயர் ரோஸி. இது இனி எப்போதும் உன்னுடன் இருக்கும். வேறு யார் உன்னைக் கடிந்து கொண்டாலும். ரோஸி உனக்கு ஆறுதல் தரும். நீ பள்ளிக்கூடம் செல்ல இருக்கிறாய். இது உன் படிப்புக்குத் துணையாயிருக்கும்” என்றார். ரூஸென்ட் ஒணோரே என்னும் தெருவிலுள்ள கன்னித் துறவியர் கலைமாடத்திற்கு லாரைனும் லீமாவும் அனுப்பப் பட்டனர். இச்செய்தியையே குழந்தைகள் மனம் புண்படா வகையில் மான்கண்டர் அவர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். கடுமையான இப்பயிற்சியிலிருந்து மூன்றாண்டுக்காலம் அதனினும் கடுமையான கன்னிமாடப் பயிற்சிக்கு மாற்றப் பெற்றனர். லாரைன் வாழ்வின் மூன்றாம்படி தொடங்கிற்று. 5. கன்னிமாடம் ரூஸென்ட் ஒணோரேயிலுள்ள ‘தாய்மைக் கன்னி மாடம்’ எல்லாவகையிலும் பெருமாட்டி பிளான்ஸியின் மனத்துக்கேற்ற தாயிருந்தது. கண்டிப்பு முறைபற்றிய அவள் குறிக்கோளுக்கு அது நிறைவளிப்பதாக அமைந்தது. பதினெட்டாம் நூற்றாண்டிலுள்ள கன்னி மாடங்கள் பெரும் பாலும் பயிற்சிக்காக வரும் பிள்ளை களை நாகரிக மக்கட்குழுவுக்கேற்ற புதுமையிற் பழக்குபவையாக இருந்தன. ஆனால், இக்கன்னிமாடம் பயிற்சிப் பிள்ளைகளையும் கன்னித் துறவிகளைப்போலவே கட்டுப்பாட்டுடன் பயிற்று வித்தது. பிள்ளைகளின் நாள்முறை வாழ்வில் ஒழுங்கு முறைகள் - சமய ஆசாரங்கள் - ஒழுக்க அமைதிகள் - தண்டனைகள் - அடக்கு முறைகள். இவைகளில்லாத வேளை கிடையாது; இக்கசப்ப வியலுக்கான கசப்புத் தாளிதமாயிருந்தது அவர்கள் கல்வி. மடத்தின் அன்னை லாரைனிடம் மிகவும் அன்புடைய வளாகவே இருந்தாள். ஆனால், பயிற்சித் துறைப் பொறுப்புத் தாங்கிய தமக்கை இம்பீரியா, அவளிடம் அழுக்காறு கொண்டு கொடுமைகள் செய்து வந்தாள். இம்பீரியாவுக்கு முப்பது ஆண்டு இருக்கும். பதினான்காவது ஆண்டில் அவளுக்கு அம்மை நோய் கண்டு முகமெல்லாம் தழும்புபட்டது. அவள் மணவாழ்வு இதனால் தடைப்பட்டுப் போயிற்று. அது முதல் அவள் கன்னி மாடப் பணியில் தன் கவர்ச்சியற்ற வாழ்வைக் கழிக்கத் துணிந்தாள். ஆனால், இன்ப ஆர்வத்தில் அவளுக்கேற்பட்ட ஏமாற்றம் அவளைக் கொடியவளாகவும் கல்நெஞ்சுடைய வளாகவும் மாற்றிற்று. குறிப்பாக லாரைன் போன்ற அழகு நங்கைகளைக் கண்டால் அவளுக்குப் பிடிப்பதில்லை. இயற்கை யிலேயே எப்போதும் கடுகடுப்பாயிருந்த அவள் முகம் லாரைனையோ அவளுடன் சிரித்து விளையாடும் பிள்ளை களையோ கண்டால் கடுஞ் சீற்றங்கொண்டது. லாரைனின் அழகிலும் குணத்திலும் ஈடுபட்டு அவளிடம் பற்றுடைய வராகவோ மதிப்புடையவராகவோ காணப்பட்ட எல்லார் மீதும் அவள் எரிந்து விழுந்தாள். கன்னிமாடங்களில் விருப்பு வெறுப்பைக் காட்டவும் கொடுமை செய்யவும் ஆட்சிப் பொறுப்பேற்றவர்களுக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருந்தன. லாரைன் மீதே கண் வைத்திருந்தத இம்பீரியா அவள் ஒவ்வொரு செயலிலும் குற்றங்கண்டாள். அவள் வாளா இருந்தால் படிக்கவில்லை. என்ற குற்றச்சாட்டு. சிரித்தால் ஒழுக்க முறைபற்றிய சொற்பொழிவு. விளையாட்டு நேரத்தில் வேலைகள் கொடுக்கப்படும். வெளியே போயிருந்தால் எங்கே, எதற்கு, யாருடன் என்ற குறுக்குக் கேள்விகள். இவற்றினிடையில் லாரைன் வாழ்வு அலைக்கழி வுற்றது. லாரைன் அறிவு மந்தமுற்ற தமக்கையை எப்போதும் நிழல் போலத் தொடர்ந்து குறும்புப் பிள்ளைகளின் தொல்லைகளி லிருந்து பாதுகாத்து வந்தாள். அவளை யாராவது துன்புறுத் தினால், தங்கையைக் காக்கும் உடன்பிறந்த ஆண்மகன் போல அவள் போராடி அவளைக் காப்பாள். லீமா மீது லாரைன் இப்படி உயிராயிருப்பது கண்ட இம்பீரியா அவளைப் புண் படுத்தும் எண்ணத்துடனே லீமாவை வைத்து கொடுமைப் படுத்தினாள். லீமாவைப் பாதுகாக்க விடாமல், அவளை வேறு இடத்தில் ஏதாவது சாக்குப் போக்குடன் அனுப்பிக் கொண்டே யிருப்பாள். லாரைன்மீது இம்பீரியாவின் கொடுமைகளைக் கவனித்து அன்னை அவளிடம் தனிக் கனிவு காட்டி அவளுக்காகப் பரிந்து பேச முனைவாள். இதனால் இம்பீரியாவின் பகைமையும் பொறாமையும் இன்னும் மிகுதியாயிற்று. லாரைனிடம் எல்லாரும் பரிவுகொள்வதற்கு அவள் அழகு மட்டுமின்றி, குணமும் காரணம் என்பதை அறிந்து இம்பீரியா அவளைப் பற்றிய நல்லெண்ணத்தைக் கெடுக்கவும் வழி தேடினாள். சிறப்பாக அன்னைக்கு அவள் பேரில் கெட்ட எண்ணம் உண்டாக்க அவள் சூழ்ச்சி செய்தாள். அன்னை அருமையாக வளர்த்த ஒரு பூனையிடம் மடத்தின் சிறுவர் சிறுமியர் அனைவருமே வெறுப்புக் கொண்டிருந்தனர். ஒருநாள் இம்பீரியா, லாரைனின் பெயர் பொறித்த அவளது கோப்பையை அதன் வாயில் கட்டி விட்டாள். பூனை செல்லுமிட மெல்லாம் கோப்பை இழுபட்டு ஓசையுண்டாயிற்று. அது கேட்டுக் கலவரமடைந்த பூனை மேன்மேலும் ஆடியோடி அதை உதறித்தள்ள முயன்றது. சிறுவர் சிறுமியர் கைகொட்டி ஆரவாரம் செய்து அதனுடன் ஓடி அதைத் துன்புறுத்தலாயினர். இம்பீரியா இதனைத் தானே சென்று அன்னையிடம் கூறினாள். இக்குறும்பு செய்தது லாரைன்தான் என்பதைத் தெளிவுபடுத்தக் கோப்பையையும் எடுத்துக்காட்டினாள். இதனால் அன்னைக்கு லாரைன் மீது கடுஞ்சினம் ஏற்பட்டது; அத்துடன் இம்பீரியாவே அன்னையிடம் லாரைனுக்கு இன்ன வகையான தண்டனை தரவேண்டும் என்று கூறி அவளிடமிருந்து அதற்கான கட்டளை பிறப்பித்தாள். அத்தண்டனை லாரைனுக்குப் பொறுக்க முடியாத வேதனை தந்தது. ஏனெனில், அத்தண்டனை வேறு எதுவுமன்று; அவள் அருமை நாய்க் குட்டியை அவளிட மிருந்து அப்புறப்படுத்துவதே. இம்பீரியாவுடன் இக் குறும்பில் பல சிறுவர், பல நங்கையர்கள் ஈடுபட்டனர். லாரைன் ரோஸியை எண்ணி எண்ணி இரவு பகல் தூங்க வில்லை; ஒழுங்காக உண்ண உடுக்கவில்லை. குறும்பர்கள் அவள் துன்பங்கண்டு வேடிக்கை பார்த்துக் களித்தனர். இரண்டு, மூன்று நாள் சென்றும் ரோஸியைக் காணாமல் லாரைன் “என் ரோஸி எங்கே? அது எப்படி யிருக்கிறது?” என்று எல்லாரையும் கேட்கத் தொடங்கினாள். இறுதியில் ரோஸியை இம்பீரியா தோட்டக்காரனிடம் ஒப்படைத்திருந்தாள் என்று நையாண்டிகளுக்கிடையே ரோஸியை அனைவரும் சேர்ந்து கறிவைத்துத் தின்றுவிட்டனர் என்ற தெரிவித்தான். தன் பற்றுதல்கள் அத்தனையையும் ஒருங்கே இணைத்து ரோஸியின் மீதே வைத்திருந்தாள் லாரைன். அதற்குச் செய்யப் பட்ட கொடுமையைக் கேட்ட அவள், ‘ஆ!’ என்று கூறி அப்படியே கல்லாய்ச் சமைந்திருந்தாள். அத்துயரமே அவள் களிப்பை யெல்லாம் போக்கி, அவளுக்குக் கடுநோயாயிற்று. நாட்கணக்காக அவள் படுக்கையில் கிடந்து வதங்கினாள். பாரிஸ் மக்கள் நாயிடம் மிகுதி பற்றுடையவர்கள். மிகப் பெரிய குடும்பத்தினர்கூட நாய் வளர்ப்பவர்களைக் காண நெடுந் தொலை சொல்லக் கூச மாட்டார்கள். நாயிடம் பற்றுடையவர் களிடம் எல்லாரும் நேசங்காட்டினர். நாய் வளர்ப்பு அத்தகைய கலையாயிருந்தது. லாரைன் வளர்த்த அந்த அழகிய சிறு நாயைப் பார்ப்பதற்காக அடிக்கடி பெரிய குடும்பத்துப் பெண்களும் ஆண்களும் கன்னிமாடத்துக்கு வருவதுண்டு. ரோஸிக்கு இழைக்கப்பட்ட கொடுமை, ரோஸியிடம் லாரைன் காட்டிய பாசம், அதன் முடிவால் அவளுக்கேற்பட்ட நோய் ஆகிய இச் செய்திகள் நாய் வளர்ப்புக் கலையன்பர் உலகில் ஒரு புதிய எழுச்சியூட்டிற்று. ரோஸியை யிழந்து ஆற்றாது தவிக்கும் இக்கலை நக்கையைக் கண்டு துயர் விசாரிக்கவும், ஆறுதல் தரவும், வேறு தக்க நாயைப் பரிசளிக்கவும் நாள்தோறும் பாரிஸ் நகரின் செல்வர், நங்கையர் வந்த வண்ணமாயிருந்தனர். அவர்களை வரவேற்கும் பொறுப்பை அன்னை இம்பீரியாவிடமே ஒப்படைத்தாள். அது அவள் செய்த செயலுக்கேற்ற நல்ல தண்டனையாயிற்று. ஏனெனில், அவள் ஓயாது வாசலிலிருந்து காத்து வரவேண்டியதாயிற்று. அவள் அருவருப்பான உருவையும் கொடுங் குணத்தையும் எப்போதுமே எல்லாரும் வெறுத்தனர். இப்போது நாய்க்கு அவள் தீமை இழைத்த பின் நாய்க் கலையன்பருக்கு அவள் ஒரு பேய்மகளாகவே காட்சியளித்தாள். அவள் வரவேற்புக்கு எங்கும் கிண்டலும் வசையும் அவமதிப்புமே எதிர் பரிசாகக் கிடைத்தன. இம்பீரியா தன் புதிய அவமதிப்புக்களுக்கேற்ப, லாரைனிடம் புதுப் பகைமை கொண்டு புதுப் பழிகள் நாடினாள்! ஆனால், அன்னை இப்போது அவளிடம் தனிச் சிறப்பான சலுகை காட்டி வந்தாள். அவள் லாரைனிடம் கொண்ட மதிப்பைக் கொடுக்கப் புதுவகை கண்டாலன்றி, அவள் மீது வஞ்சந் தீர்க்க வழி இல்லை. மடத்தின் மாணவ மாணவிகள் வாரத்தில் ஒரு நாள் தாய் தந்தையருக்குக் கடிதம் எழுத இணக்கம் அளிக்கப் பெற்றனர். லாரைனுக்குத் தந்தையிடம் இருந்த பற்று இம்பீரியாவுக்குத் தெரியும். தந்தைக்குக் கடிதம் எழுத முடியாதபடி செய்தால் அவள் மனம் வருந்துவாள் என்றும் அவள் கண்டாள். ஆகவே சிறுபிள்ளைகள் கடிதம் எழுத உதவும்படி அவர்களுக்கு வழக்கப்படி மாதிரிக் கடிதப் படிவங்கள் வழங்கும்போது அவளுக்கு மட்டும் வழங்காது விட்டாள். லாரைன் மீண்டும் மீண்டும் கேட்டும் அவ்வாரம் அவளுக்கு அதன் படிவம் கிட்ட வில்லை. கடிதம் எழுதுவதிலேயே கருத்தாயிருந்த லாரைன் மாதிரிக் கடிதம் எங்காவது கிடைக்காதா என்று மடத்து நூல் நிலையத்தில் சென்று புத்தகங்களைப் புரட்டினாள். மாது தேமாந்திஞி எழுதிய கடிதங்களின் தொகுதி ஒன்று அங்கே இருந்தது. முன்னுரையிலேயே அம்மாது “பேசுவது போல் எழுதுக. கடிதம் எழுதச் சிறந்த வழி இதுவே” என்று அதில் கண்டிருந்தது. மேற்போக்காக ஒன்றிரண்டு கடிதங்களை வாசித்த போது, இவ்வறிவுரைப்படியே அவள் பேச்சுப் போக்கில்தான் எழுதியிருந்தது தெரியவந்தது. தந்தைக்கு எழுதும் ஆர்வத்தால் தூண்டப் பெற்று லாரைன் தன் மனத்திலுள்ள உணர்ச்சிகளை யெல்லாம் எப்படியோ கடிதத்தில் கொட்டி எழுதலானாள். தந்தையின் எதிர்கடிதம் அவளை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. “என் அருமை லாரைன்! உன் கடிதம் காண மகிழ்ச்சி. நீ இவ்வளவு நல்ல கடிதம் எழுதக்கூடும் என்று நான் கனவிலும் கருதவில்லை. மடத்துப் பயிற்சியும் முன்மாதிரியும் உனக்கு எவ்வளவு கைத்திறம் தந்திருக்கிறது என்று காண நான் பெரிதும் உவகையடைகிறேன். இப்படியே நீ முன்னேறினால் உன் எதிர்காலம் என் நம்பிக்கைக்கும் மீறியதாயிருக்கும் என்பது உறுதி. உன் அன்பான நல உசாவுதல்களுக்கு நான் தரும் மறுமொழி இங்கே யாவரும் நலம் என்பதும் உன் நலத்தில் யாவரும் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதுமே” என்று தந்தை எழுதியிருந்தார். துணையின்றித் தானே எழுதிய கடிதநடை மடத்திற்குப் பெருமையும் தந்தைக்கு மனநிறைவும் தந்து விட்டன. லாரைனின் உள்ளத்தில் கருக் கொண்டிருந்த எழுத்தாண்மைத் திறம் இம்முதற் பாராட்டினால் ஊக்கம் பெற்று அரும்பவிழத் தொடங்கிற்று. இம்பீரியா போன்ற கன்னித்துறவியரின் கொடுமை யிடையே ஃபிரான்சு நாட்டின் ஒரு நல்ல கடித எழுத்தாண்மைக் கலைஞர் கலை எழுந்து அலைபாயத் தொடங்கியது. விரைவில் மடத்தின் முன்மாதிரி கடந்து லாரைனின் பெரோனின் கடித முன் மாதிரி மடத்திலும் வெளியிலும் புகழப்பட்டது. இம்பீரியா மீண்டும் ஏமாற்றமும் கசப்பும் அடைந்தாள். தந்தைக்கு எழுதுவதுடன் நில்லாமல் லாரைன் தன் பழைய பள்ளித் தோழியர்களுக்கும் உறவினர்க்கும் எழுதத் தொடங்கினாள். அவள் உள்ளார்ந்த அன்புக் கனிவார்வமும், அவள் குழந்தை யுள்ளத்தின் கனவார்வங்களும் படிப்படியாக இனிய ஃபிரெஞ்சு மொழி உரைநடையாகி சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கின. அவள் தன் நேரத்தின் பெரும் பகுதியையும் கடிதமெழுதிக் கழித்தாள். நாட்டின் புதிய வாசகர் பலர் இப் புத்திலக்கியதைத் தேடிப் படித்து மகிழ்ந்தனர். தமக்கை இம்பீரியா அக்கடிதங்களின் புகழ் வளராது தடுக்கப் பலவகையிலும் முயன்றாள். பல கடிதங்களை அவள் எழுதும் மேடையறையிலிருந்து சேகரித்து, மற்றப் பிள்ளைகள் நையாண்டி செய்யும்படி வாசித்துக் காட்ட முனைந்தாள். வாசிக்கத் தொடங்கு முன் ஓவிய வகுப்பின் மணியடிக்கவே, அவள் அதை லாரைனின் தலையணியினுள் திணித்து அனுப்பினாள். ஓவிய வகுப்பில் தலையணி நழுவி விடக் கடிதங்கள் சிதறின. ஆசிரியர் அவற்றுட் சிலவற்றை எடுத்துப் படித்தார். அது அவள் கடிதம் என்றும் கேட்டு அவர் அவற்றை எல்லாப் பிள்ளைகளின் முன்னும் பாராட்டினார். இம்பீரியா ஏளனம் செய்யத் தொடங்கிய கடிதங்களின் புகழ் அவள் சுவையறிவற்ற தன்மையைச் சுட்டிக் காட்டுவதாயமைந்தது. நகரின் பல செல்வச் சீமாட்டிகளும் நங்கையர்களும் புதிய எழுத்துக் கலைஞரை வந்து பாராட்டினர். லாரைனுடன் கடிதம் எழுதுங் கலையில் ஈடுபட்டு அவள் புகழைப் பங்கிட்ட நங்கை மதாம் மரீலி, திடுமெனக் கன்னி மாடத்திலிருந்து தன் மணவினை குறித்து விலகினாள். அவள் பாரிஸின் முதல் தர உயர் குடியில் மணந்து கோமாட்டி சார்விஸ் லாரி ஆயினாள். அவள் வாழ்க்கைப் படி விரைவில் உச்ச நிலையடைந்தது. அவள் அரசன், அரசியுடன் அடிக்கடி உலாவச் சென்று மன்னவையின் மங்கையர் ஒளி விளக்கங்களுள் ஓர் ஒளி விளக்கமானாள். அவள் தன் பழைய தோழியரனைவரும் தம் பழைய தோழி வெளியுலகில் இவ்வளவு உயர்வடைந்தது கண்டு மகிழ்வும் மலைப்பும் உடையவராய், அவளைச் சூழ்ந்து மொய்த்தனர். ரோஸியை இழந்ததன் பின் லாரைன் அதனிடமாக வேறு எந்த நாயையும் பரிசாக பின் லாரைன் அதனிடமாக வேறு எந்த நாயையும் பரிசாக ஏற்ப மறுத்து, ரோஸியையே நினைத்து மனமாழ்கினாள். ஆயினும் நாளடைவில் அவள் தேறுதலடைந்து பள்ளி நடவடிக்கைகளில் அக்கடை செலுத்தத் தொங்கினாள். மரீலி கோமாட்டி (சார்விஸ் லாரி) லாரைனுடன் அளவளாவிப் பேசிக் கொண்டிருக்கும் போது, பேச்சு ரூஸோ பற்றி எழுந்தது, ரூஸோவின் புதிய கருத்துகளில் அப்போது புத்தார்வம் பரவி வந்தது. பெண்கள் உலகில் அவர் நூல்கள் மிகவும் விருவிருப்பூட்டி வந்தன. ஆயினும் பழம் போக்காளர் களிடையிலும் ரூசென்ட் தேணொரே கன்னிமாடம் போன்ற இடங்களிலும் புதுப்புனைவுகள் பொதுவாகவும், ரூஸோவின் புனைகதைகள் சிறப்பாகவும் கண்டித் தொதுக்கப் பெற்றிருந்தன. மரீலி ரூஸோபற்றி மிகுதி ஆர்வங் காட்டினாள். லாரைனுக்கும் அவள் அவரது ‘எமிலி’யின் ஒரு சுவடி கொடுத்தாள். லாரைன் அதைப் பிறருக்குத் தெரியாமல் தன் உட்பையில் மறைத்து வைத்துக் கொண்டாள். தனிமாடம் சார்ந்து லாரைன் ‘எமிலி’யைத் திறந்து வாசிக்க முனைந்தாள். ஆனால், முதல் வரியிலேயே, “இந்தப் புனை கதையை வாசிக்கத் துணியும் எந்த இளநங்கையும் தன் குடி மதிப்பை இழந்து விடுவாள்” என்ற வாசகம் அவள் கண்ணிற் பட்டது; இதுகண்டு அஞ்சி லாரைன் உடனே புத்தகத்தை மூடிவிட்டாள். தன் குடிமதிப்பு இதற்குள்ளாகப் போயிருக்குமோ என்று அவள் சிறிது அஞ்சினாள்! இங்ஙனம் மூன்று ஆண்டுகள் சென்றன. கன்னிமாடப் பயிற்சி முடிவடைந்தது. அவள் மீண்டும் தமக்கையுடன் பாட்டியின் வீடு வந்து சேர்ந்தாள். 6. திருமணப் பேச்சுகள் இளவேனிற் பருவம் கழிந்து நடுவேனிற் பருவம் வந்தது. மரங்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கின. இப்போது இருப தாண்டு நிறைந்து இளமையின் முழுமலர்ச்சியுடன் எழிலரசியாக லாரைன் விளங்கினாள். அழகு நடமிடும் பாரிஸ் உயர்தர வாழ்விலேகூட அவள் அழகு எல்லார் கருத்தையும் கொள்ளை கொண்டது. குழந்தைப் பருவத்திலேயே அமைதி மிக்க அவள் தோற்றம் இப்போது விழுமிய பெருமித உணர்ச்சியும் தருவதாயி ருந்தது. ஆனால் அவள் உடலிலும் தோற்றத்திலும் இருந்த மலர்ச்சி இன்னும் அவள் வாழ்வில் இடம்பெறவில்லை. அவளது ஒவ்வொரு விருப்பத்தையும் மலரைக் கசக்கி யெறிவது போல எறிவதே தன் கடன் என் அவள் பாட்டி மாது பிளான்ஸி கருதினாள். தந்தையோ அவளை என்றும் ஒரு சிறிதும் அறிய முடியாதபடி மாற்றந்தாய் இடையிலிருந்து தடுத்து வந்தாள். மலர்களிலும் மலர்ச் செண்டுகளிலும் லாரைனுக்குள்ள அவாவை உணர்ந்து திரு. மான்கண்டர் ஒருநாள் அவளுக்கு ‘வாடாத’ செயற்கை மலர்ச் செண்டு கெண்டு வந்து கொடுத்தார். மலர்கள் இயற்கை மலர்களின் நிறமும் மென்மையும் உடையவை யாயிருந்துடன், அவ்வம் மலர்க்குரிய நறுமணம் ஊட்டப் பெற்றிருந்தது. எலினாரின் உள்ளார்ந்த ஆர்வமுழுவதும் இம்மலர்ச் செண்டில் ஈடுபட்டு மகிழ்ந்தது. அவள் அப்போது பாட்டியைக் காணச் சென்று கொண்டிருந்தாளாதலால், அதனைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்வையிடச் சென்றாள். பாட்டியுடன் அவள் வண்டியேறி உலாவச் சென்றபோதும் இது அவள் ஆடையுள் இடம் பெற்றிருந்தது. லாரைனைத் திடீரென்று மாது பிளான்ஸி ஏறெடுத்துப் பார்த்து, “நிமிர்ந்திரு, லாரைன்!” என்றாள். லாரைன் தன் பன்மலர்ச் செண்டைக் கீழே வைத்து விட்டு நிமிர்ந்தாள். கிழவியின் கண்கள் பன்னிறக் கவர்ச்சியுடைய அப் பூங்கொத்துக் கள் மீது பட்டன. அவள் உடனே “உனக்கு எவ்வளவு திண்ணக்கம், என்முன் இம் மலர்களைக் கொண்டு வர! மலர்களின் மணம் வீசினால் எனக்கு மண்டையிடி வந்துவிடும் என்று உனக்குத் தெரியாதா?” என்றாள். “அவைகள் மெய்யான மலர்களல்ல, பாட்டி. இதோ பாருங்கள்! அவை மலர்கள் போலச் செய்யப்பட்ட தாள் வேலையே!” என்றாள். “என்னிடம் வாதம், விளக்கம் எதுவும் வைத்துக் கொள்ளாதே. நாற்றம் பொறுக்க முடியவில்லை. அதை அப்படியே பலகணியின் வழியாக வெளியே எறிந்து விடு!” “எறிவானேன் பாட்டி! வீட்டிற்கு கொண்டுபோய்...” மாது பிளான்ஸி அவள் பேசி முடிவதுவரைப் பொறுக்க வில்லை. பூச்செண்டைக் கையிலிருந்து பறித்துப் பலகணி வழியாக வீசியெறிந்தாள். அவை சேற்றில் விழுந்து கசங்கி நைந்தன. பின்வரும் வண்டி சக்கரம் அவற்றைச் சேற்றுள் அமுக்கிக் கரைத்து விட்டன. லாரைன் உள்ளத்தின் கிளர்ச்சிகளும் அத்துடன் நைந்து போயின. பாட்டி வீட்டின் கசப்பறிந்து தந்தையிடம் தன் குறைகளைக் கூற எண்ணினாள் அவள். “என்னைப் பற்றி அக்கரை கொள்ள என் தந்தையைத் தவிர உலகில் வேறு யார் இருக்கிறார்கள்? அவர் என்னை நேரில் கண்டால் ஏதாவது கட்டாயம் வழி செய்வார்” என்று அவள் தனக்குள் கூறிக் கொண்டாள். ஆனால், தந்தையை அவள் பார்க்கவே முடியவில்லை. அவள் வரும் எண்ணத்தை மாற்றாந்தாய் அவரிடம் திரித்துக் கூறியிருந்தாள். அவளுக்குத் தந்தையிடத்தில் இம்மியளவும் பாசமில்லை யென்றும், தன் செல்வத்தை நயமாக இப்போதே தன் கைக்குக் கொண்வர வேண்டுமென்னும் சூழ்ச்சியுடன் தான் நேரில் பார்க்க விரும்புகிறாள் என்றும் திரு. பெரோன் நம்பும்படி அவள் கூறியிருந்தாள். ஆகவேதான் லாரைன் சென்ற போதெல்லாம் தந்தையில்லை என்ற மாற்றம் பணியாள் மூலம் தெரிவிக்கப் பட்டது. ஒருநாள் உணவு வேளை பார்த்து லாரைன் தந்தை வீடு சென்றாள். வழக்கம்போல, பணியாள் ‘பெரோன் வீட்டிலில்லை’ என்றான். லாரைன்: வீட்டிலில்லையா? நான் வருவதாகத்தான் அவருக்குத் தெரியுமே! முன்கூட்டி எழுதிவிட்டுத்தானே வந்திருக்கிறேன். பணியாள்: அம்மா! நான் உங்களிடம் என்ன சொல்வேன்! தந்தை வெளியே போயிருக்கிறார் என்று தங்களிடம் கூறத்தான் எனக்கு உத்தரவு. நான் வேறு எதுவும் செய்ய வழியில்லை. லாரைன் நிலைமையை உணர்ந்து கொண்டாள், தந்தையைக் காண முடியாவிட்டால், அவருக்கு உண்மையான நண்பர் யாரையாவதுதான் காணவேண்டும். ஆகவே, “சரி, தந்தையின் குடும்ப குருவை நான் பார்க்கலாமா?” என்று கேட்டாள். பணியாள் “அது என்னால் செய்யக்கூடும். அவரை இதோ அனுப்பு கிறேன்” என்று சொல்லி உட்சென்றான். சிறிது நேரத்துக்குள் நல்ல நாகரிக ஆடையுடுத்த ஒரு வெண்தாடிப் பெரியார் அங்கே வந்தார். அவர் லாரைனிடம் அன்பாக “என்ன அம்மணி! நலமாயிருக்கிறாயா? ஏன் கவலைப் படுகிறாய்?” என்றார். லாரைன் அவரை வணங்கித் தன் துயரங்களையெல்லாம் எடுத்துக் கூறினாள். “உலகில் எனக்கிருக்கும் செல்வம், உறவு, அவாக்கள் எல்லாம் என் தந்தை ஒருவர்தாம். அத் தந்தையைக் கூடக் காணமுடியாத பாவியாயிருக்கிறேன். மாண்ட அன்னை என் துயரை ஒரு வேளை அறிந்து உதவினாலும் உதவலாம் போலிருக்கிறது. உயிருடனிருக்கும் தந்தை என்னைக் கண்டு ஆறுதலளிக்கக் கூட முடியாதவராயிருக்கிறார்” என்றாள். அவள் துயரமே உருவெடுத்து வந்தாற் போலத் தோற்ற மளித்தாள். அவளைக் கண்ட எவருக்கும் கனிவு தோன்றாமலிராது. அவள் கண்களில் நீர் பெருகி வழிந்தது. அடர்த்தியான அவள் நீல நிறக் கூந்தல் அவள் தோள்களையும் முதுகையும் மறைத்துப் புரண்டு கிடந்தது. பனித்திரையிலும் முகில் கூட்டத்திலும் மறைந்தொளிலும் வெண்மதிபோல் அவள் முகம் பொலிவிழந்து வாடியிருந்தது. குடும்ப குரு அவள் துயர் கண்டு சிறிது கண்கலங்கினார். ஆனால், அவர் வெறும் சமயகுரு மட்டுமல்ல. உலகியலறிவும் நிரம்பியவர். ஆகவே சிறிது நேரம் அவள் உணர்ச்சிகள் தெளியும் வரை அவர் வாளா இருந்து விட்டுப் பின் அறிவுரை கூறினார்: “அம்மணி! நீ ஆண்டில் இளமையுடையவன். உலக அனுபவம் பெறாதவள்; துணையற்றவள் என்று நீ கருதுவது அதனாலேயே. ஆனால், நீ அறிவுடைய பெண். தம் அறிவுக்கு மிஞ்சிய துணை உலகில்” யாருக்குமே கிடையாது. அதை நீ பயன்படுத்த வேண்டும். நீ இன்று துணையற்றிருப்பதற்குக் காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? நீ பெருஞ்செல்லவத்துக்கு உரியவளாய்ப் பிறந்திருக்கிறாய். மணமாகும் வரை அந்தச் செல்வத்தை நீ கைக்கொள்ள முடியாது. அது உன் தந்தையிடம் தான் இருக்கும். நீ தந்தையைக் கண்டால் விரைவில் நல்ல மனஉறவு ஏற்பட்டு அதன் பயனை நீ அடைந்து விடக்கூடும். இன்று அதைப் பிறர் துய்க்க விரும்புவதால்தான் உன்னை அண்டவிடாமல் செய்கின்றனர். ஆயினும் நீ அவரைப் பார்த்தாலும் மிகுதி பயன் இராது. அவர் தற்சார்புடையவராயில்லை. ஆகவே, நீ வீண் உணர்ச்சிகளில் காலந்தள்ளாமல், நீயாகவே திருமணம் செய்துகொள்ளப் பார்; அதன் பின் உனக்குத் துணை யார் என்று நீ தேட வேண்டியிராது. உன் துணையை யாவரும் நாடுவர். நீ இன்று கண் கலங்குகிறாய். நாளை இந்நிலையை எண்ணி நான் சிரிக்க வேண்டிவரும் என்றார். லாரைனின் கலங்கிய உள்ளத்தில் குருவின் சொற்கள் சிறிது தெளிவு தந்தன. அது வெறும் அறவுரையன்று; தன் எதிர்கால வாழ்க்கைக்கு ஓரளவு வழிகாட்டுவது என்று உணர்ந்தாள். ஆனால், வழி தெரிந்ததேயன்றி, அதற்கான வாயில் எதுவும் காணோம். வழியும் தற்போது எளிதாயில்லை. தனக்கு ஒரு தமக்கை இருக்க, தான் தன் காரியத்தை முதலில் நினைத்தலாகாது என்று அவள் மீண்டும் அமைந்தாள். தன்னறிவற்ற அத்த மக்கையைத் தான் பார்ப்பது போல, கண்ணாகப் பாவித்துப் பேணத்தக்க ஒரு கணவனைக் கண்டுபிடித்து அவளை மணம் செய்விக்க வேண்டுமே என்று அவள் கவலைப்பட்டாள். தமக்கைக்கும் தன்னை ஒத்த செல்வம் இருப்பதால், குரு கூறிய இடையூறுகள் தன்னைவிட அவளுக்கு இன்னும் மிகுதி என்பதையும் அவள் எண்ணிப் பார்த்தாள். தமக்கை மணமானால், அவள் கணவனே அப்பெருஞ் செல்வத்துக்குரியவன். அதனை ஆள்பவன் அவள் கணவனாகவே இருப்பான். இச்செல்வத்தைக் குறியாகக் கொண்டு எவரேனும் அவளை மணந்தால், அவளை ஏமாற்றிச் செல்வத்தைப் பறித்துக்கொண்டு, அவளைப் பின்னும் துணையற்றவளாக்கலாம்; அல்லது அப்பணத்தை வைத்துக் கொண்டே கொடுமைப்படுத்தலாம். ஆகவே, தான் கவலைப்பட வேண்டியது தன்னைப் பற்றியன்று, அவளைப் பற்றியே என்று லாரைன் முடிவு செய்துகொண்டாள். அவன் அஞ்சியது முற்றிலும் சரியாய்ப் போய்விட்டது. மாது சூசேன் பெரோனின் தொலையுறவினனான ஏவ்ரிமாண்டு என்ற ஒரு பகடி திரு. பெரோனின் மனத்தைக் கரைத்து அவர் இணக்கம் பெற்று லீமாவிடம் காதல் பேச்சுப் பேசத் தொடங் கினான். உலகமறியாத லீமா அவனை மனமார நம்பி அடிக் கடி தங்கையின் பாதுகாப்பின்றி அவனுடன் போகவரத் தொடங்கினாள். ஃபிரெஞ்சு நாட்டார் வழக்கப்படி காதலுரிமை பெற்றபின் காதலர் தொடர்பில் யாரும் தலையிட முடியாது. அண்ணன் தங்கைகூட அவர்களைத் தொலைவிலிருந்தே கவனிக்க முடியும். ஆகவே, லாரைன் இன்னது செய்வதென்றறியாமல் மனங் குழம்பினாள். லாரைன் கவலையை விரைவிலேயே காலதேவன் போக்கினான். எப்போதுமே நலிவுற்றிருந்த லீமா தன் புதிய மாறுபட்ட உணர்ச்சி தாங்காமல் மடிவுற்றாள். தமக்கையின் துணையுமற்ற லாரைன் பாகாயுருகினாள். ஆனால், அத் துன்பத்திடையேகூட, தமக்கை அச்சமயம் இறந்ததால் உண்மையில் சாவினும் கொடிய ஒரு பாழ்ங் கசத்திலிருந்து தப்பினாள் என்று நினைக்காமலிருக்க முடியவில்லை. அப்பாழ்ங் கசம் எத்தகையது என்பதையும் அவள் அறிய நெடுநாட் செல்லவில்லை. தமக்கையின் இறுதி வினைகள் ஆற்றி ஒன்றிரண்டு நாட்களே ஆயின. லாரைன் இன்னும் கறுப்பாடையுடனேயே இருந்தாள். அச்சமயம் லீமாவை மணஞ்செய்ய இருந்த நயவஞ்சகன் எவ்ரிமாண்டு அவளைக் காணவந்தான். துயர் வினாவும் சமய மாதலால் அவளும் அவனுடன் உரையாட மறுக்கவில்லை. “அம்மணி! தங்கள் பெருந்துயரில் பங்கு கொண்டு ஆறுதல் தரும் உரிமையுடன் வந்திருக்கிறேன்” என்று அவன் பேச்சுத் தொடங்கினான். “தங்கள் அன்பாதரவுக்கு நன்றி. என் இன்னுயிர்த் தமக்கை யிடம் தாங்கள் காட்டும் பரிவுகண்டு மகிழ்கிறேன்!” என்றாள் லாரைன். தறுவாய்க்கேற்ற முறையில் நயமாகவும் அதே சமயம் புறஉணர்ச்சிப் போர்வையைச் சுட்டியும் அவன் பேசியதைக் கேட்டு அவள் சிறிது நேரம் திகைத்து நின்றாள். ஏனெனில், அவன் உண்மையில் லீமாவின் பிரிவுத்துயர் உசாவ வரவில்லை. அந்தச் சாக்கில் தன் திருமண விலங்கை லீமாவின் தங்கையிடம் மாற்றிப் போகவே திட்டமிட்டு வந்தான். முதற் பேச்சின் அதிர்ச்சி யிலிருந்து தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு அவன் தன் பேச்சுப் பாணியை மாற்றி, நேரடியாகத் தன் கருத்தைப் புலப்படுத்தத் தொடங்கினான். “மாண்டவர்க்காக எவ்வளவு நாம் வருந்தினாலும் அவர்கள் மீண்டும் வருவதில்லை என்பதை நீங்கள் அறியலாம், அம்மணி. தவிர இச்சிறு துயரால் நீங்கள் உங்கள் அழகிய பொன்னுடைலை வருத்திக் கொள்ளவும் கூடாது. உங்கள் அழகு, குணம், இளமை...” லாரைன் அவன் பேச்சுப் போக்கைக் கண்டு திடுக்கிட்டாள். அவள் அவன் பேச்சை வாளா கேட்டுக் கொண்டிருக்காமல் சினங்கொண்டு எழுந்தாள். அக்காலப் பகட்டாரவார வாழ்வில் பொறுப்பற்ற விடலை ஆடவர் தம்முடன் தம் நாயையோ அல்லது வேறு வளர்ப்பு விலங்குகளையோ இட்டுச் செல்வதுண்டு. லீமாவை மணம் புரிய எண்ணிய இவ்விடலை தன்னுடன் ஒரு குரங்கையே உடன் கொண்டு சென்று வருவது வழக்கம். லாரைன் எழுந்த வேகத்தில் குரங்கு சலசலவென்று பற்கடித்துக் கொண்டு அப்பால் ஓடியது. விடலை அதைப் பிடித்திழுத்துத் தடவிக் கொடுத்துக்கொண்டே, “அம்மணி! என் நெஞ்சத்தைத் தங்கள் வசத்தில் ஒப்புவிக்க உங்கள் தந்தையிடமிருந்து உரிமை பெற்றே வந்திருக்கிறேன்” என்றான். அவன் துணிச்சல் லாரைனுக்குச் சினமூட்டியது. அதே சமயம் இத்தகைய ஈனர்களுக்குத் தந்தை ஒரு சிறிதும் மனிதப் பாசமின்றித் தம் பெண்களை ஒப்படைக்க நினைப்பது பற்றி அவள் மனங் கசந்தது. அவள் இப்போது நயமாகவே பேசினாள். ஆனால், தன் முழு வெறுப்பையும் சீற்றத்தையும் அவன் மீது கொட்டினாள். “தாங்கள் தன்னைக் காதலித்தாகத்தான் அப்பாவி லீமா நம்பியிருக்கக்கூடும். ஆனால், லீமாவைத் தாங்கள் காதலித்த வகையை நான் இதோ பார்க்கிறேனே! தங்கள் காதலை லீமா நம்பியிருக்கக் கூடும். நல்லகாலம், அவள் அக்குழியில் விழாமல் உயிர் விட்டாவது தப்பினாள். அவள் செல்வமும் என்னிடமே வர இருப்பதால், நீங்களும் காதலித்த செல்வத்தைப் பின்பற்றி இப்பக்கம் நாடினீர்கள். பாவம்! தாங்களாவது செல்வத்துக்காக காதலிப்பதாக நடிக்க முடிந்தது. நான் எதற்காக நடிப்பது?” என்றாள். அவன் வாயடைத்துப் போயிற்று. பேச்சில் வெல்ல முடியாதென்று அவளை அச்சுறுத்தி அடக்க எண்ணிக் காலை ஓரடி முன் வைத்தான். லாரைன் பெண் புலி போலச் சீறி எழுந்தாள். தன் கைப்புறச் சட்டையை ஒதுக்கி அதிலுள்ள ஒரு படுதழும்பைச் சுட்டிக் காட்டி, “இதோ பார்; நீ ஆள் தெரியாமல் விளையாட வேண்டாம். என் லீமாவை ஒரு பெண் அடிக்க வந்தாள். அவள் மிக முரட்டுப் பெண். அவளை நான் தடுத்த போது அவள் கடித்த தடம் இது. அவள் கடித்த பல்லின் திறத்தைத் தன்னால் ஆனமட்டும் காட்டினாள். நான் தலையைப் பிடித்த பிடிவிடாமல் இழுத்து என் கைத்திறத்தைக் காட்டி வென்றேன். அவள் பல் தழும்பு என் கையில் அழியாது. அதனைப் போலவே என் கைத் தழும்பும் அவள் வழுக்கைத் தலையில் என்றும் தெரியும். இப்போது கண்டு கொண்டாயா நான் எப்படிப்பட்டவள் என்பதை?” என்றாள். அவன் ‘ஆ!’ என்று கூறிப் பின்னடைந்தான். அவன் குரங்குகூட லாரைன் சீற்றங்கொண்டு அஞ்சி அவனை இழுத்துக் கொண்டு ஓடிற்று. அவன் பேரில் விடலை கொண்ட அச்சம் அவனை மீண்டும் லாரைன் பக்கம் வராமல் தடுத்தது. ஆனால், உரிமை பெற்ற காதலனென்ற முறையில், லாரைனுடைய தந்தையிடமிருந்து அவர் செல்வத்தை அவன் கறப்பதை இது தடுக்கவில்லை. லாரைன் துடுக்குத் தனத்தை மாது பெரோனிடம் அவன் ஒன்றிரண்டு ஆகப் பெருக்கி கூறி, அவள் ஒத்துழைப்புடன் முன்னிலும் விரைவாக அவள் செல்வத்தைக் கரைத்து அவள்மீது பழி தீர்ப்பதென்று அவன் கச்சை கட்டினான். நாளாக ஆக, லாரைனின் செல்வம் அத் தீயோன் தீய வாழ்வுக்கு இரையாகலாயிற்று. மாது பிளான்ஸி இப்போது லாரைன் பக்கமிருந்து திருமண வகையில் வற்புறுத்தினாள். “மாது பெரோன் ஒரு புறம், இவ்விடலை ஒரு புறம் உன் செல்வத்தை இரண்டருகிலிருந்தும் தின்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் திருமண வகையில் காலந்தாழ்த்தினால் விரைவில் ஓட்டாண்டியாய் விடுவாய்” என்று அவள் லாரைனை முடுக்கினாள். லாரைனும் யாரையாவது விரைவில் மணஞ்செய்து கொள்வது என்றுதான் துடித்தாள். ஆனால், இது செல்வங் கரையு மென்ற அச்சத்தினால் என்பதற்காகத்தான். ஆனால், அன்புக்கு அலைந்த அவள் வாழ்வில் அவளுக்கு ஓயாக் கவலையே மிகுதியாயிருந்தது. அக்கவலையிலேயே தோய்ந்த அவள் உள்ளத்தில் காதல் என்ற பேரழகு எவரையும் கவர்ந்தது. ஆனால், எவரும் அவளைக் கவரவில்லை. இளமை, நற்குணம் உடையவராய், நட்புக்கு உரியவராக லாரைன்தேர்ந்தெடுத்த எந்த இளைஞரையும் பாட்டியோ மாற்றாந்தாயோ விரும்புவதாகக் காணவில்லை. அவர்கள் உள்ளத்தில் லாரைனது காதலுக்குரியவன் இளைஞனாயிருக்கக் கூடாது என்ற எண்ணம் இருந்தது போல் காணப்பட்டது. நடுத்தர வயதுடையவரைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தாள். இத்தகை யோரைப் பாட்டி ஆதரித்தால், மாற்றாந்தாயும் அவளைப் பின்பற்றித் தந்தையும் தடுத்தனர். மாற்றாந் தாயும் தந்தையும் ஆதரித்தால், பாட்டி உடனே எதிர்த்தாள். லாரைன் திருமணப் பேச்சு இங்ஙனம் அவர்கள் இருவர் போட்டிக்குரிய ஒரு போராட்ட மாயிருந்தது. இவ்வகையில் தனக்குத் திருமணம் என்பது அவர்கள் உயிருடனிருக்கும் வரை முடியாத காரியமேயாகும் என்று அவன் தனக்குள் எண்ணலானாள். 7. சிராம்மோன் திரு. பெரோன் திடீரென்று பக்கவாதத்தால் தாக்குண்டு பாயும் படுக்கையுமானார். சில நாளில் நோயின் கடுமை நீங்கிற்று. ஆயினும் உடல் தேறும் தறுவாயில் சில நாள் மருந்தூற்றுக் களினருகில் சென்று தங்குதல் நலம் என்று மருத்துவர் கருதினர். அதன்படியே ‘பூர்பன் லார்ஷம் போல்ட்’ என்ற மருந்தூற்றுப் பதிக்குச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. லாரைன் இத்தறுவாயில் தந்தையுடன் சென்று அவருக்குத் துணையுதவி செய்ய விரும்பினாள். தந்தை தம் வீட்டின் கட்டுப்பாட்டுக் கோட்டை யிலிருந்து விலகியிருக்கும் சமயம் இதுவேயாதலால் அதனை விட்டுவிட அவள் விரும்பவில்லை. மாது பிளான்ஸி வழக்கம்போல் அவளைத் தடுத்து, எச்சரித்து, உறுக்கிப் பார்த்தாள். ஆனால், லாரைன் தன் வாழ்வில் முதல் தடவையாகத் தான் செய்த முடிவில் உறுதியாய் நின்றாள். பிளான்ஸி: உன்னை நான் போகவிடப் போவதில்லை. நீ போனால் திரும்ப இவ்வீட்டு வாயில் உனக்கு அடைக்கப் பட்டுவிடும். லாரைனை இவ்வச்சுறுத்தல்கள் அசைக்காததைக் கண்டு அவள் தொனியைச் சிறிது மாற்றி எழுந்து அவளருகில் வந்து பேசினாள். “நான் கதவடைத்துவிட்டால் நீ என்ன செய்ய முடியும் என்று அமைந்தாராய்ந்து பார். உன் தந்தை வீட்டில் தந்தைக்குப் பின்னாலிருந்து கொண்டு மாது பெரோனும் விடலையும் உன் செல்வத்தை உன்னை யறியாமல் கரைத்துக் குடிப்பர். உன் பக்கம் போராட ஆளிராது” என்றாள். லாரைன்: என் பக்கம் கடவுள் இருப்பார். கடவுள் என்ற சொல், மாது பிளான்ஸியைத் தூக்கிவாரிப் போட்டது. கடவுள் போன்ற எட்டாப் பொருள் பற்றிச் சின்னஞ்சிறு பிள்ளைகள் பெரியவர்கள் முன்னிலையில் பேசத் துணியும் காலம் இது என்று அவள் நினைத்து உறுமிக் கொண்டாள். ஆனால், அவள் வாயாடவில்லை. அவள் வேறு பக்கமாகத் தன் வற்புறுத்தலைத் திருப்பினாள். “மருந்தூற்றுப் பதியில் வைத்து உன் தந்தை உயிர் நீத்து விட்டால் நீ என்ன செய்யக்கூடும்?” லாரைன்: நான் ஒரு கன்னித் துறவியாய்விடுவேன்! லாரைனின் துணிச்சல் பயன் தந்தது. மாது பிளான்ஸிதன் அச்சுறுத்தல்கள் இனிச் செல்லாது என்று கண்டாள். லாரைன் சிறு பிள்ளையல்ல; தன் நிலைமையறிந்து கொண்ட நிறையிள மாது ஆகி விட்டாள். மருந்தூற்றுப் பதியிலும் யாவரும் அவள் அழகு, அவள் அறிவுத் திறம், நாகரிகப் பண்பு ஆகியவற்றை வியந்து பாராட்டினர். தந்தையின் உள்ளத்தில் கூட அவளைப் பற்றிய மதிப்பு உயர்ந்தது. லாரைன் திரும்பி வந்தபோது, மாது பிளான்ஸிகூடப் பேசாது அவளை வரவேற்றாள். லாரைனின் வாழ்க்கையனுபவங்களால் அவள் அறிவு அவள் வயதுக்கு மீறியதாயிருந்தது. இவ்வறிவு அவள் உணர்ச்சியின் வளர்ச்சியைத் தடைப்படுத்திற்று. அவள் தன் பருவத்திலுள்ள மங்கையர்களைப் போல எதிர்காலம்பற்றி மனக்கோட்டைகள் கட்டவில்லை. அவள் மனம் இன்னும் தன் பழைய வாழ்வின் தொல்லைகளைப் பற்றியும் தன் நிகழ்காலச் சூழல்களைப் பற்றியுமே சிந்தித்து வந்தது. தவிர, கனவுக் கோட்டைகள் கட்டிவந்த பல பெண்களை அவள் அறிந்திருந்தாள். பலர் கனவுக் கோட்டைகள் போன போக்கை அவளால் மறக்க முடியவில்லை. பலர் காதற் கனவுகள் மணவிழாவின் எல்லையை எட்டாமலே காதற் கனவுகளாயிருந்தன. சிலர் கனவுகள் மணவினையின் எல்லையிலோ, மணவிழாவின் பின்வந்த தேனிலவுக் காலப் புத்தின்ப எல்லையிலோ நின்றுவிட்டன. இவற்றால் குடும்ப வாழ்வு வெறும் காதல் விளையாட்டாயிருக்க முடியாது என்பதை அவள் அறிந்தாள். சிறப்பாகப் பெண்களுக்குக் காதல், மணமாகும் வரைதான் மதிப்புத் தருகிறது - அல்லது அதனை ஒருவரிடம் நம்பி ஒப்படைப்பதுவரைதான் மதிப்பு உண்டு என்று அவள் கண்டாள். ஆகவே, அவள் கனவுக் கோட்டைகளிலீடுபடாமல், ஆய்ந்தமைந்து தன் எதிர்கால வாழ்க்கை பற்றித் திட்டமிடுவதில் கருத்துச் செலுத்தினாள். இத்தனைக்குமிடையில் அவளிடம் அவளறியாமலே ஒரு குறைபாடு இருந்து வந்தது - அவள் உள்ளம் காதலை அறியவில்லை - காதலை அவாவவும் இல்லை. அவள் அலந்தது காதலுக்கல்ல; அன்புக்கு, நட்புக்கு! உள்ளந்திறந்து அன்பு செலுத்த, அன்பு கோர ஒரு தாய்; அன்போ அறிவுரையோ அளிக்க ஒரு தந்தை; துன்பம் பகிர்ந்து, இன்பம் பெருக்கி ஊடாட ஓர் உயிர் நண்பன்; இவர்களே அல்லது இவர்களின் ஒரு வட்டுக் கலவையே இப்போதைய அவள் தேவை. அவள் தன் விருப்பங்களை ஆராய்ந்தாள்; தன் சூழல்களை ஆராய்ந்தாள். ஆம்; தன் எதிர்கால வாழ்வின் தேவை ஒரு கணவன் - அவன் வெறுங்காதலனாய் இருந்து பயனில்லை; தந்தையற்ற அவளுக்கு ஒரு தந்தையாய், தாய் அற்ற அவளுக்கு ஒரு தாயாக இல்லாவிடினும், அவன் அவள் தாய்மையன்புக்குரியவனாய், அவள் மதிப்பார்வத்துக்கும் அவா ஆர்வத்துக்கும் உரிய பண்பாளனாய் இருக்க வேண்டும். இப்பண்புக் கூட்டுக்குமுன் இளமை, அழகு, பகட்டான காதல் பசப்பு ஆகிய எவையும் புறக்கணிக்கத்தக்கவை என்று அவள் உள்ளம் கூறியது. அவள் மனத்திரை முன் இப்பண்புகள் அவளுக்குப் பழக்கமான ஒரு முது நண்பர் உருவில் காட்சியளித்தன. அந்நண்பரே அவள் தந்தையின் இல்லத்திற்கு அடிக்கடி விருந்தினராக வந்து கொண்டிருந்த கோமான் எல்ஃஜீயர் ஜோஸப் சிட்னி சிராம்மோன் என்ற பகட்டான பெயர் தாங்கியவர். அவர் உண்மையில் எழுபது வயதுடையவர்; ஆனால், அவர் வீர வாழ்வு வாழ்ந்தவராதலால், உடற்பட் டுடையவராய் ஐம்பதென மதிக்கத் தகுந்த தோற்றமுடைய வராயிருந்தார். அவர் இளைஞரினும் விரைந்த சுறுசுறுப்பான நடையுடையவர்; அத்துடன் நெட்டையாகவும் பார்ப்பதற்குப் பெருமிதத் தோற்றமுடையவராகவும் இருந்தார். அறிவமைதியும், அதனிடையே பண்பான்மையின் சின்னமாக கனிவும் புன்முறுவலும் அவர் முகத்தில் எப்பொழுதும் ஒளி வீசின. கடற் படையிலே வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்து, மன்னர், இளங்கோக்களால் மதிப்புப் பெற்ற அவர் தம் வாழ்க்கையின் மாலைப் போதை இன்பமாகக் கழிக்கவே பாரிஸ் வந்திருந்தார். அவர் குடும்பம் ஐரோப்பாவின் மன்னர் குடிகளுடன் பழந்தொடர்பு கொண்டது - ஃபிரஞ்சு அரசரும் ஆஸ்திரிய அரசரும் தாங்கள் சிட்னி கால்வழியில் வந்தவர்கள் என்று பெருமையுடன் கூறிக் கொண்டனர். லாரைனின் கனவுருவம் இந்நனவுருவத்தைச் சுற்றியே வட்டமிட்டது. சிட்னி சிராம்மோன் வீரர் மட்டுமன்று; நல்ல பண்பு முடையவர். லாரைனுடன் அவர் தந்தைபோல் பழகினார்; தந்தை போலவே நடந்து கொண்டார். ஆயினும் அவள், அவர் உரையாடுமிடத்தில் வந்ததும், அவர் பேச்சிலும் உள்ளக் கிளர்ச்சியிலும் மாறுதல்கள் ஏற்படவில்லை. அவர் நண்பராகிய லாரைனின் மாமன் திரு மான் காண்டர் இது பற்றி அவருடன் குறும்புக் கேலி செய்வதுண்டு. அவர் வயது இதனை ஓர் இன்ப வேடிக்கையாக்கப் போதியதாயிருந்தது. லாரைனின் அமைந்த ஆராய்ச்சித் திட்டம் இவ்வேடிக்கையை வினையாக்க முனைந்தது. “ஆம் அவருக்கு என் அன்பு தேவை; எனக்கும் அவர் அன்பு தேவை. நான் அவரை மதிக்கிறேன். அவர் மிகவும் நல்லவர், நற்பண்புடையவர். அவர் தீங்கெண்ணமாட்டார். நல்லெண்ண முடையவர். நம்பிக்கைகேடு செய்யும் கூட்டத்தவரல்லர் அவர். ஆம்! நான் துணிந்துவிட்டேன். இது என் முடிவு. என் மாமாவிடம் இது பற்றிக் கலந்தாராய்வேன்” என்று அவள் தனக்குள் கூறிக்கொண்டாள். தூய அல்லிமலர் போன்ற அவள் உள்ளத்தில் மெல்லிய செந்நிற ஒளி படர்ந்து பரவி ஓடிற்று. கலையை உடையாகக் கொண்ட அவ்வெழுத்தாளர் நங்கை புதிய கருத்தார்வத்துடன் உடையில் கலையார்வம் கொண்டாள். பகட்டான அக்கால உடைகளை அவள் மேற்கொள்ளவில்லை-ஆனால், அவள் கலை தேர்ந்த எளிமை பகட்டை விடப் பகட்டுவதாயிருந்தது. நீலக் கோடிட்ட தூய வெள்ளாடை அதன்மேல் சிவந்த கச்சை, இவை அவள் இயற்கை யழகைப் பல மடங்கு பெருக்கிக் காட்டின. புது நயம் மிகுந்த இந்தப் போர்க் கோலத்துடன் அவளிடம் புது நங்கையாகி, தன் மாமனிடம் சென்று பேசினாள். அவளிடம் அவர் கண்ட மாறுதல் அவர் முகத்தில் புன்முறுவல் தோற்றுவித்தது. ஆனால், அந்த மாறுதலின் போக்கு வழக்கமாக எவரும் எதிர்பாராததாயிருந்தது! அவர் லாரைன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டார். அவரை அறியாமல் அவர் உள்ளம் அவள் கருத்துகளை எண்ணி நகை பூத்தது. லாரைனிடம் அவர் கேட்டார் - “குழந்தாய்! நீ கூறுவதெல்லாம் சரிதான். ஆனால், அவர் வயதென்ன? உன்னைவிட அவர் ஒரு தலைமுறைக்கு முந்தியவ ராயிற்றே இதை நீ எண்ணிப் பார்க்கவேண்டாமா?” லாரைன்: அதனால் என்ன கேடு மாமா? அவர் என்னை நேசிக்க முடியும், நேசிக்கிறார். என்னை அவர் பேண முடியும். எனக்கு அவர் மீது மதிப்பு உண்டு. வேறு என்ன வேண்டும்? திரு காண்டர் இப்புதுக் கருத்தில் ஆர்வங்காட்ட முடிய வில்லையாயினும், படிப்படியாக அதனை ஏற்கத் தொடங்கினார். தாய் தந்தையர் உணர்ச்சியற்ற போக்கால் எத்தனை பேர் காதலில்லா மணத்திற் சிக்கி அலைக்கழிகின்றனர். அவற்றைப் பார்க்க, இது மோசமென்று கூறுவதற்கில்லை. இதில் ஏமாற்றம் இல்லை, ஏமாற்றுதலும் இல்லை; சூழ்நிலையை நோக்க, புறத்தேயுள்ள பொருந்தாமை அத்தனை பெரிதன்று என்று அவரும் அமைந்தார். “சரி, நான் அவரிடம் மெல்ல இதுபற்றித் தெரிவிக்கிறேன்” என்று அவர் ஏற்றுக்கொண்டார். சிட்னி சிரோம்மோன் அக்கருத்தை விளையாட்டாகக் கருதுவாரென்று திரு. காண்டர் எதிர்பார்த்தார். ஆனால், அவர் அவ்வாறு கருதவில்லை. அதுபற்றி ஆராய முனையவும் இல்லை. தம் தொலைக் கனவுகளையும் மீறிய இவ்வெதிர்பாராச் செய்தி அவரைத் துள்ளிக் குதிக்க வைத்தது. அது அவர் உள்ளத்தை முற்றிலும் மகிழ்ச்சியுளாழ்த்திற்று. அவர் தோற்றம் இதனால் பல ஆண்டு இளமை பெற்றது. அவரது வழக்கமான அமைதி பறந்தது - அவர் உள்ளக் கிளர்ச்சியால் துள்ளிக் குதித்தாடினார். ஆயினும் அவர் முற்றிலும் அறிவமைதியை இழந்து விடவில்லை. “என் அருமை காண்டர்! நீங்கள் விளையாட்டுக்குத் தான் கூறுகிறீர்கள் போலிருக்கிறது. தங்கள் மருகியாவது, என்னை இங்ஙனம் கருதுவதாவது! அவள் அழகென்ன, இளமையென்ன? அவள் நாகரிகத்துக்கும் குணத்துக்கும் அவளைத் தலைமேற் கொள்ள எத்தனை இளைஞர்களும் இளங்கோக்களும் காத்துக் கிடக்கின்றனர். அவள் என்னைப் புகழ்ந்து பாராட்டுவதற்காக இதைக் கூறியிருக்கக் கூடும். அதற்கு நான் தகுதியுடைய வனல்லவே.” அவர் சொற்கள் அவர் உள்ளார்ந்த உணர்ச்சியை மறைக்க வில்லை. காண்டருக்கு வேறு சொற்கள் தேவைப்படவுமில்லை. அவர் அமைதியாக, “விளையாட்டல்ல, கோமான்! தாங்கள் இதனை ஏற்றுக் கொண்டதாக லாரைனிடம் கூறப் போகிறேன்” என்றார். லாரைனின் மகிழ்ச்சிக்கும் எல்லையில்லை. அத்துடன் அவள் வகையில் இதுவரை ஒத்துவராத இரு கட்சிகளும் இதில் விளக்கத்தக்க அளவு ஒற்றுமை காட்டினர். சிட்னி சிரோம்மோன் இளைஞராகவோ நடுத்தர வயதினராகவோ கூட இல்லாமல், முதியவராகவும் மிக உயர்குடி மதிப்புடையவராகவும் இருந்ததால், மாது பிளான்ஸி ஒரு புறமும், மாது பெரோனும் திரு. பெரோனும் மறுபுறமும் இத் திட்டத்தை, அட்டியின்றி ஏற்றார்கள். மணநாள் குறிக்கப்பட்டது. மணவிழாவுக்காக யார் யாருக்கு அழைப்பிதழ் அனுப்புவது என்பதற்கான விருந்தழைப்புப் பட்டியல் வகுக்கப்பட்டது. “திரு. திருமதி................ அவர்களுக்கு, திருநிறை செல்வக் கோமான் எல்ஃஜீயர் ஜோஸப் சிட்னி சிரோம்மோனுக்கும் திருநிறைச் செல்வி லாரைன் தேழீன் பெரோனுக்கும், நிகழும் 1769 ஏப்ரல் மாதம் 12ஆம் நாளன்று காலை 11- 11 மணிக்குப் பாரிஸ் நகரக் கோயிலில் வைத்து நடைபெறும் திருமண நிறைவு விழாவுக்குத் தாங்கள் தங்கள் அன்பரும் சுற்றமும் சூழ அன்பு வருகை தந்து எங்களைச் சிறப்பிக்கும்படி கோருகிறோம். இங்ஙனம் தங்களன்புள்ள, திரு. பெரோன் மாது பிளான்ஸி பெண் ஓர் அழகரசி. மாப்பிள்ளை ஒரு புகழரசர், துணையிணைப்பு எதிர்பாராதது. எனவே, எங்கும் பரபரப்பும் வியப்பார்வமும் பரந்தன. மண அழைப்பிதழ்கள் எங்கும் நடமாடின. மணமகள் உடையில் அவள் கலைச்சுவையுடன் அவள் செல்வ மரபு போட்டியிட்டது. இரண்டும் சரிசமமாகவே இணைந்தன. அவள் விரும்பிய வெண்மை நிறம் வென்றது - ஆனால் வெண்மை வெள்ளிச் சரிகைகளாகவும் வெண்பட்டுகளாகவும் மிளிர்ந்தது. பொன்னணி மணிகளின் ஒளிகளைக் கவிந்து வைரங்களின் வெள்ளொளி சுடர் விட்டது. இளஞ் சிவப்புநிற அருகுகளும் வானீலக் கச்சைகளும் இவ்வெண்மைகளை எடுத்துக் காட்டின. முகத்திலும் உடலிலும் படர்ந்த நறுமண வெண்தூளிடையே மங்கிய சிவப்பொளி கலந்துறவாடி இளநகை பூத்தன. முதுமையின் அமைதி, இளமையின் எக்களிப்பு மணமகனிடம்; இளமையின் எழில் அறிவின் அமைதி மணமகளிடம்; மனம் நிறைந்த இன்பக் களிப்பு அனைவரிடமும்-இத்தகைய நிறை அமைதி பெற்று விளங்கியது மணவிழா. லாரைன் கோமான் சிராம்மோனின் மனைத் தலைமையை உரிமையுடன் ஏற்று கோமாட்டி சிராம்மோன் ஆனாள். மணப்பெண் மணவாழ்வின் உறுதி வாசகத்தை முறைப்படி கூறுகையில், அவள் உள்ளம் அமைதி பெற்றிருந்தது. அவள் குழந்தைக் கால வாழ்வின் இருண்ட நினைவுகள், கன்னிமைக் காலப் புயல்கள் யாவும் ஓய்வு பெற்றேகின. 8. மன்னவை யேற்றம் பாரிஸ் நகரில் வேர்சேப்பாக்கத்தில் ஒரு பெரிய மாளிகை. அது வழக்கமாகத் திறக்கப்படாமலே இருந்து வந்தது. இன்று அது திறக்கப்பட்டு அங்கே உயர்குடி மக்கள் அணியணியாகச் சென்று குழுமிக் கொண்டிருந்தனர். இறையிட்டுத் தூசி படிந்து கிடந்த சாய்விருக்கை, மேடைப் பலகைகள் யாவும் நெய்யிட்டுத் துடைத்துப் பளபள வென்று மின்னின. வில் வைத்தமைத்து அவற்றின் மீது மென் பட்டு மெத்தைகளிடப்பட்ட அவ்விருக்கைகளில் ஒய்யாரமாக அமர்ந்து மாதரும் இளமங்கையரும் அழகிய சிறு விசிறிகளால் அடிக்கடி சிறு வீச்சு வீசிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் இளைஞரும் நல்லாடவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆடையேந்தியும் மேலங்கியின் நீண்ட பின்தானைத் தொங்கலை ஏந்தியும் பணியாட்களும் பணிப்பைதல்களும் தத்தம் பணியில் கருத்துச் செலுத்தி நின்றனர். இவர்களனைவரும் அம்மாளிகை முழுதும் பரந்து மலரை மொய்த்த பூவண்டு, பொறி வண்டுகள் போல் மொய்த்திருந்தனர். தெருக்களில் அடர்த்தியாக நின்றும் நடந்தும் திரிந்த மக்கள் திரள்களை மேலிருந்து பார்ப்பவருக்கு, அவர்கள் தலையணியும் அதிலுள்ள தீப்பறவை இறகுகளும் தவிர வேறு எதுவும் தெரியமாட்டாது. ஆளேயில்லாமல் நீரில் மிதந்து இறகுக் கடைகள் சென்றன என்று கூறத்தக்கதாயிருந்தது அக்காட்சி. இவ்விறகுக் கடலிடையே மீன் பிடிக்கும் படகுகள் போலக் குதிரைகளும் குதிரை ஊர்திகளும் அங்காங்கு மெல்லென மெல்லென அசைந்து சென்றன. இம்மாளிகையே மன்னர் சிறப்பிருக்கைக்குரிய “காலரி தேகிளாஸே” என்ற அரண்மனை. உயர்குடி மக்கள் மணி விழாவின் பின் மணமக்கள் இம்மாளிகையிலே அரசனரசியின் திரு முன்னிலையில் அரசவையோருக்கும் மக்களுக்கும் அறிமுகப் படுத்தப்படுவது பிரஞ்சு நாட்டு மரபு. அம்முறையில் கோமான் சிட்னி சிரோம்மோனையும் கோமாட்டி சிரோம்மோனையும் அறிமுகப்படுத்தும் விழாவுக்காகவே இச்சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தகைய கூட்டங்களுக்கு மட்டுமே வெளியேயெடுத்து வழங்கப்படும் பல உயர் சிறப்புப் பொருள்கள் இவ்வரண் மனையின் பக்க அறைகளில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றுள் ஆரஞ்சுப்பழம் போன்ற நிறமும் வடிவும் உடைய விளக்குகள் தனிப்படக் குறிக்கத்தக்கன. வெள்ளித் தொட்டிகளில் வெள்ளி பொன் வேலைப்பாட்டுடன் ஆரஞ்சு மரம் போலத் தோற்றும் படி செய்யப்பட்ட செயற்கை மரங்களில் ஆரஞ்சுப் பழங்கள் போலவே இவை தொங்கின. இத்தொட்டிகளனைத்தும் இன்று மாளிகை எங்கும் வரிசை வரிசையாகப் பரப்பி வைக்கப் பட்டிருந்தன. மண்டபத்தின் பலவகைச் சிங்காரப் பொருள்கள் மீதும் மாதர் ஆடவர் அணி மணி ஒப்பனை வண்ணங்களின் மீதும் அவை தம் அடங்கிய செவ்வொளியை வீசிக் கொண்டிருந்தன. ஃபிரான்சு நாட்டில் பழைய ஐரோப்பாவின் நாகரிகம் உச்சநிலை அடைந்திருந்த காலம் இது. பதினான்காம் லூயியின் பேரரசு வெற்றிகளும் பெருஞ் செல்வமும் கலைவண்மையும் ஃபிராhன்சையே ஐரோப்பாவின் தலை நிலமாகவும், பாரிஸை அதன் நடுமேடையாகவும் வேர் சேப்பாக்கத்தையும் அதன் அரண் மனையையும் அவற்றின் மேடை மையமாகவும் ஆக்கியிருந்தது. இந்நாகரிகம் மேலும் வளர்ச்சி எய்தவில்லை; ஆனால், அதன் பொலிவு குன்றவுமில்லை. செயற்கைப் பண்பையும் உயர்குடிப் பெருமையையும் மேற்பூச்சாகக் கொண்ட இச்செயற்கைப் பொழிவின் மாயப் பசப்பை ‘அகற்றவிருந்த ஃபிரஞ்சுப் புரட்சி இன்னும் இருபது ஆண்டுத் தொலைவிலேயேயிருந்தது. ஆயினும், அதன் முன்னறி குறிகள் இப்போதும் மறைவில் மினுங்கின. ரூசோ ஒருபுறமும் வால்த்தேர் ஒருபுறமும் கலைஞரிடையேயும் அறிஞரிடையேயும் உலவத் தொடங்கி இருந்தனர். தென்றலிடையே தோன்றிய இச்சிறு புயல் முகில்கள் வருங் காலத்தில் பெரும் புயலை எழுப்ப ஃபிரான்சை அல்லோலகல்லோலப் படுத்துவ துடன் அமையாது தன் வாடைக் குளிரால் உலகையே நடுங்கி ஆடச் செய்யும் என்று இச்சமயம் எவரும் எண்ணியிருக்க முடியாது. வழக்கம்போல, வழக்கத்தினும் மிகுதியாக, அரசிபற்றியும் அவள் தோழர் தோழியைப் பற்றியும் இன்று வம்புரையாடிக் கொண்டடிருந்த பாரிஸ் இளமாதர், இளைஞர்கள் கட்டாயம் அதனைப் பற்றிக் கனவு கண்டிருக்க மாட்டார்கள். அவர்களிடையே தலை நிமிர்ந்து சென்று தவிசேறி இறுமாந்து வீற்றிருந்த அரசனும் அரசியும், தம் தலைகளைத் தூக்கு மேடைக்கு அனுப்பவேண்டி வருமென்றோ, தாமும் தன் பெருமக்கள் கோமக்களும் தம்மால் இன்று புறக்கணிக்கப்படும் கீழ் மக்கள் முன் நின்று உயிருக்குக் கெஞ்ச வேண்டி வரும் என்றோ சிறிதும் நினைத்திருக்க மாட்டார்கள். எதிர்கால நுனித்தறியும் நோக்கு மனிதருக்கு இருந்திருந்தால், அன்றைய விழவுக் கொண்டாட்டம், விழவுக் கொண்டாட்டமாகவே இருந்திருக்க முடியாது.’ வேடிக்கைப் பாட்டுகள், வசைப் பாட்டுகளை மாதர் ஒருவரிடமிருந்து ஒருவர் திரும்பத் திரும்பக் கேட்டு மனப்பாடம் பண்ணிப் பரப்பிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவர் ஆடையணி, நடையுடை, ஆடல் பாடல் வண்ணங்களில் கருத்தைச் செலுத்தி அதனுடன் போட்டியிட்டு மேம்படுவது ஒன்றிலேயே குறியாயிருந்தனர். போக ஒளிவு மறைவான காதல், அதன் விளைவான மறை பிறவினைபற்றிய உரையாடல் உதட்டுக்குதடு நடமாடின. கிரேக்க புராண மரபுப்படி மறை காதலும் அதன் விளைவுகளும் கடலகச் செல்வன் திருவிளையாடல்கள். புதிதாக உயர்குடி நங்கையரிடையே புகழ்பெற்றுவந்த விகட வசைக்கவிஞன் டிபஃவ்வர்ஸ் அத்தகைய திருவிளையாடல்களில் பிறந்தவன் - அத்திருவிளையாடல்கள் பற்றி நகையினிமைத் திறமும் வசைத்திறமும் தோன்றப் பாடி யிருந்தான். அப்பாடல்கள் இத்தகைய கூட்டங்களில் ஊடாடின. லிஸெட் என்ற அரசவை இளவரசி ஒத்தி பற்றிய பாடல் இவற்றுள் ஒன்று. அப்பாடல்: “மயல்விழியார் லிஸெட்! உன்றன் மாயவலையில் மன்னவையின் மைந்தர் பலர் வதைப்படுகிறார்! கயல்விழியார் கோமகளிர் கண்ணுறுத்தலாம், காரழகி இளவரசி கடுகிச் சீறலாம்! புயலிடையும் கடற்செல்வன் பொலிந்து பெற்றவன் பொருவில்மண மாதைஎனக் கலைபுகலுதே.” இப்பாட்டைக் கோமகள் ஒருத்தியே பாடிக் குறும்புச் சிரிப்புச் சிரித்தாள். ‘ஆகா, ஆகா, என்ன அழகிய பாடல் என்ன சொல் நயம்! திரும்பி ஒரு தடவைபாடு’ என்று காதல் கோயிலின் மறையின்பமறியாப் புத்திள மங்கையர் பலர் அவளைச் சூழ்ந்து மொய்த்தனர். இளவரசருள் ஒருவர் மன்னர் நாகரிக நடையுடையையும் அரசியின் இயற்கை வனப்பையும் புகழ்ந்தார். அவள் பொன்னிற் மயிர் வனப்பில் அவர் ஈடுபட்டார். அது பொறுக்கவில்லை ஓர் இளமங்கைக்கு. “அது இயற்கைப் பொன்னிறமல்ல. புதிதாக வந்த பொன்னிறப் பூச்சு மையின் திறமே அது” என்றாள் அவள். “அது உனக்கு எப்படித் தெரியும், அம்மணி?” “நானும் அதைத்தான் பயன்படுத்தியிருக்கிறேன்” என்று சொல்ல மங்கையின் நா எழவில்லை. “அத்தகையதொரு பொடியை இப்போது பலர் வழங்குவது எனக்குத் தெரியும். மேலும் அரசி முடி வேறு நிறமாயிருந்ததை நான் அறிவேன்” என்றாள். “எல்லார் முடியும் வேறுநிறமாகும் காலம் உண்டு” என்றார் முதுமையை எதிர்த்துப் போராடிய பெருமானார் ஒருவர். கோமான் சிராம்மோன் வழக்கத்துக்கு மேற்பட நற்பண்பு தேர்ந்த ஆடையணியுடன் வந்து தவிசினருகில் உள்ள தம் இருக்கையில் அமர்ந்திருந்தார். கோமாட்டி சிராம்மோன் இருக்கை இன்னும் வெறுமையாகவே இருந்தது. அவள் ஒப்பனை தீர்ந்து இன்னும் வரவில்லை. அனைவரும் அவளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏன் அவள் இன்னும் வரவில்லை என்று வினவினர் சிலர். சிலர், “குறித்த நேரத்தில் அவள் வந்து சேராமலிருக்க வேண்டும் என்றுதானே சிலர் விரும்பிக் கொண்டிருப்பர்” என்றனர். இங்கே சிலர் என்றது மாது பெரோனையும் மாது பிளான்ஸியையும் தான் என்று கூறத் தேவையில்லை. கிழவனை மணப்பதால் அவள் இறுமாப்படங்கித் தம் மனம்போல நடப்பாள் என்று இருவரில் எவர் நினைத்திருந்தாலும், இதற்குள் அவர்கள் ஏமாந்தே போயிருப்பார்கள். லாரைன்பால் அமைந்திருந்த அமைதி, மனநிறைவு, பெருமிதம் ஆகியவை இவ்வெண்ணங்களைச் சிதறடித்துவிட்டன. ஆகவே, அரசர் முன்னிலையில் அவள் பெருமை பெறுவது இரு திறத்தாருக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் நண்பர், தோழியர் பலர் இக்குறிப்பறிந்து நடக்கவும் தயங்கவில்லை. மணவிழாவில் மாது சிரோம்மோனின் மண ஆடை ஒப்பனையில் கருத்துச் செலுத்தியதைவிட இப்போது அவள் தோழியராக வந்து குழுமிய உறவினர் மிகுதி கவனம் செலுத்தினர். எவரிடமும் தன்மயமாக நடந்து கொள்ளும் இயல்புகொண்ட லாரைன் முதலில் அவர்கள் முயற்சிகளை வாய் பேசாமல் பொறுத்துக் கொண்டிருந்தாள். ஆனால், அதனிடையே எழுந்த போட்டியைப் பார்க்க, அவர்கள் ஒப்பனை என்றுமே முடியாத ஒப்பனையாய் விடுமோ என்று அவள் அஞ்ச வேண்டிய தாயிருந்தது. மயிரை வாடி முடிப்பாள் ஒருத்தி; தொங்கவிடுவாள் மற்றொருத்தி. வெள்ளாடை சார்த்துவாள் ஒருத்தி; அதனை அகற்றி நீல ஆடையுடுத்த வேண்டுமென்பாள் மற்றொரு மங்கை. இவையன்றி இருந்திருந்து அவள் கால்களும் அலுத்தன. காற்றோட்டம் வராமல் சூழ யாவரும் வந்து மொய்த்ததால், அவள் வியர்த்து விருவிருத்தாள். கடைசியில் அவளால் பொறுக்க முடியவில்லை. அவள் அருகிலிருந்தோர் கைகளைத் தட்டிவிட்டு எழுந்து நிமிர்ந்து நின்றாள் சிறிது கோபக் குறிப்புடன். அவள் விசிறி படபடத்தது! அவள் திடீர் மாறுதல் தோழியாக நடத்த அவள் எதிரிகளைத் திகைக்க வைத்தது. அத்திகைப்புக் கலையுமுன் அவள் கூட்டத்தை ஊடுருவிச் சரேலென வெளியேறினாள். அவள் குறிப்பறிந்த தோழியும் உடன் சென்றாள். மீட்டும் தோழியர் சிறையுட்பட்டால், குறித்த நேரம் தவறித்தான் அரசவை சேர முடியும் என்பதை மாது சிராம்மோன் நன்றாக உணர்ந்துகொண்டாள். அக்காலத்தில் பெண்டிர் எப்போதும் தலைவலி மருந்து முதலியவற்றை ஒப்பனைப் பொருள்களுடன் வைத்துக் கொண்டிருந்தனர். தோழியர் குழுவின் நெருக்கடியால் ஏற்பட்ட சோர்வை அவள் அம் மருந்தால் தீர்த்துக் கொண்டு தன் இயற்கை ஆடையணிகளைத் தன் கலைத்திறம் முழுதும் காட்டித் திருத்திக் கொண்டாள். பின் அவள் தன் தோழியிடம் “திரும்ப ஒப்பனையறை செல்லாமலே மண்டபம் செல்ல வழியுண்டா பார். எப்படியாவது நாம் உடனே அங்கே சென்றுவிட வேண்டும்” என்றாள். தோழி நல்லகாலமாக இம்மாளிகையில் பலதடவை பணியாளாக வந்து பழகியவள். புறமேடை ஒன்றில் எப்படி யாவது நுழைந்து விட்டால், அதிலிருந்து அங்குள்ள மறைவழி களுள் ஒன்றின் மூலம் கீழே செல்ல முடியும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், கோமாட்டியாகிய தன் தலைவியைப் பலகணியேறித் தாவச் சொல்ல முடியாதே என்று அவள் தயங்கினாள். மாது சிராம்மோன் அவள் குறிப்புணர்ந்து “பெண்ணே! நீ ஒன்றும் தயங்க வேண்டாம். இந்தப் பொல்லாத பிடாரிகளிடமிருந்து தப்ப, கூற்றுவன் உலகுக்குத் தாவவும் நான் தயங்கமாட்டேன” என்றாள். இருவரும் பலகணி ஒன்றில் ஏறித்தாவிப் புறமேடை, பெரும்பாலும் முடியிருக்கும் இருட்டறைகள், மறைபாதைகள், இடைவழிகள் ஆகியவற்றினூடாகச் சுற்றிச் சுற்றிச் சென்று மண்டபமடைந்தனர். அவர்களைக் கண்ட பின்னரே சிராம்மோன் மூச்சு வாங்கினார். எங்கே பிளான்ஸி - பெரோன்மாயப் பசப்புத் தன் புது மணத் துணைவியைப் பட்டுச் சிறைவைத்து விழாவைக் கொடுத்துவிடுகிறதோ என்று அவர் அஞ்சினார். மாது சிராம்மோன் ஏதோ காற்றுவாங்கப் போயிருக்கிறாள் என்று பேசாதமைந்திருந்த ‘பிடாரிகள்’ சிறிது நேரம் சென்று அவளைத் தேடிக் காணாமல் வியப்புற்றனர். ‘எங்கே போயிருப்பாள்! தன் ஆத்திரம் பொறுக்காமல் பலகணியிலிருந்து குதித்திருப்பாளோ? அப்படி குதித்திருந்தால் எவ்வளவோ நல்லதுதான். ஆனால், அத்தகைய முடிவு ஏற்பட்டதாக நம்ப முடிய வில்லையே. எல்லாம் அமைதியாயிருக்கிறதே’ என்று எண்ண மிடலாயினர். அதனிடையே மணமகள் மண்டப மடைந்தாள் என்ற கசப்பான செய்தியைக் கேட்டு அவர்கள் விம்மிப் பொறுமினர். ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொண்டனர். எதிரிகள் தவிர மற்றவர்கள் புதிய மாது சிராம்மோனின் அமைந்த நிறை அழகையும் அவள் ஆடையணி நயத்தையும் நடையையும் போற்றிப் புகழ்ந்தாரவாரித்தனர். “நாட்டில் பிறந்த நல்ல மல்லிகை மலர் இவள். மலையிடையே பிறந்த மாசிலா மாணிக்கம்” என்றனர் பலர். ‘நாட்டு மல்லிகை’ என்ற அடை மொழி அவளைப் பற்றிப் பேசுபவர் நாவிலெல்லாம் ஊடாடி அவள் சிறப்புப் பெயராய் நாளடைவில் அமைந்துவிட்டது. இந்நாட்டு மல்லிகையின் முன் தோட்டத்து மல்லிகை எதுவும் மணம் பெறவில்லை. மன்னர் பதினைந்தாம் லூயி பெண்களினும் நாணம் மிக்கவர். ஆனால், அவரைச் சூழ்ந்து மொய்த்த சூழ்ச்சிக் கும்பல் அவர் இறுமாப்புச் சிறுமையை வளர்த்து வந்தது. உலகம் ஃபிரான்சின் பேரரசைச் சார்ந்தும், ஃபிரான்சு தன் பேராற்றலைச் சார்ந்துமே இயங்குகிறதென்று அவர் நம்பி வந்தார். தம் நா அசைவது சட்டம்; தம் விரலசைவது ஆட்சி என்பது அவர் எண்ணம். ஆயினும் அவள் உள்ளத்திலும் நம் நாட்டில் ஒரு மாறுதல் ஏற்பட்டு வருகிறது என்ற எண்ணம் இருந்திருக்கக் கூடும். ஏனெனில் தம் தற்பெருமை தோன்ற அவர், “எனக்குப்பின் ஊழிக்கால அழிவுதான்” என்று கூறுவதுண்டாம்! அவர் உள்ளத்தைக் கவர்ந்து தவிசேற அரும்பாடுபட்ட காதற் கலையணங்காகிய அவர் துணைவியோ, அத்தவிசேறிய பின் தன் கலையைத் தனக்காகவே முழுதும் பயன்படுத்தினாள். அவள் ‘தனக்குப்பின் பேரூழி’ என்றுகூட எண்ணியதில்லை. அவள் முடிவும் அதற்கேற்ப, கள்ளமிலா மன்னன் முடிவுபோலத் திடுமென நிகழவில்லை. தன்னைச் சூழ்ந்த பட்டுப்பூச்சிகள் ஆலகாலவிடத்தையே கக்க முடியும் என்பதை அவள் நன்கு கண்டனுபவித்த பின்னரே மாண்டாள். இன்று இம்மன்னனும் அரசியும் தம் கடைசிக் கொலு விருக்கையில் அமர்ந்திருந்தனர். கோமான், கோமாட்டி சிராம்மோன் இருவரும் அதன் பாராட்டுக்கு முழுதும் உரியவராயினர். மணவிழாவுடன் மன்னனேற்ற விழாவும் இனிது நிறைவேறிற்று. பழைய ஃபிரான்சின் தங்குதடையற்ற இன்ப வாழ்நாளின் மாலைக் காலத்தில் மாலையிளங் கதிரவன் போல மாது சிராம்மோனின் வடிவழகும் பண்பழகும் துலங்கின. அவள் நடந்ததே நடைக்கு இலக்கியமாயிற்று. அவள் ஆடையே ஆடையணியில் பழமைக்கும் புதுமைக்கும் நடுநிலைவாய்மை நாடியவர் முன் மாதிரியாயிருந்தது. அவள் பேச்சுகளோ மன்னவைக்குரிய இன்ப நயமும் மற்றையோரும் விரும்பி மேற்கொள்ளும் அறிவு நயமும் பொருந்தியதாயிருந்தது. அவளும் சிராம்மோனும் முதுமைக்கும் இளமைக்கும் இடையே, நகருக்கும் நாட்டுக்கும் இடையே ஒரு பாலமாகத் தோன்றினர். பழைய ஃபிரான்சு அவர்கள் மூலம் புதிய ஃபிரான்சு நோக்கிப் புன்முறுவல் பூத்தது. மாது சிராம்மோனாகிவிட்ட லாரைனின் கடிதங்கள் இதற்குள் ஃபிரான்சின் நற்கடித இலக்கியத்தில் இடம் பெற்றுவிட்டன. அவள் கடிதத்தை அவள் உரையாடல் திறமும் நயமும் தோற்கடித்தன. இவை யாவற்றையும் அவள் அன்பு கலந்த இனிய அருட்பண்பும், நடுநிலை கோடாத நேர்மையும், நயங்கெடாத எளிமையும் வென்றன. ஃபிரான்சு நாட்டின் எல்லா வகுப்பினரிடையேயும் அவள் கிட்டத்தட்ட வேறுபடாத வகையில் நல்லருளொளி பாவித்தாள். அவள் சென்றவிட மெல்லாம், அவளைச் சூழ அமைதியும் இனிய தென்றலும் வீசின; கண்காணா ஒளியொன்று அவளைப் போர்த்து நின்று அவள் வனப்பையும் இனிமையையும் பெருக்கின என்று தோற்றிற்று. மாது சிராம்மோன் முழு வளர்ச்சியடைந்துவிட்ட இப்போதும் நடுத்தர உயரமும் நடுத்தரத்தில் சற்றே குறைந்த வடிவும் வண்ணமும் உடையவளாயிருந்தாள். அவளைப் பார்த்த எவரும் அவள் சிற்றுருவுடைய சிங்காரி என்று எண்ணும் படியாகவே அவள் தோற்றம் இருந்தது. அக்கால ஃபிரெஞ்சுப் பெண்கள் விரும்பிய வகையில் அவள் கால்கள் வனப்புடையதாக மட்டுமன்றி, சற்று வளர்ந்த சிறு குழந்தைகளின் கால்களோ என்னும்படி அளவாயிருந்தன. இதனால் அவள் விரைந்த நடைகூட அன்ன மென்னடைபோல இருந்தது. மலரைத் தாங்கிய மென்காம்பு பட்டில் நடந்தாற்போல அவள் நடைபழகினாள். அவள் இல்லற வாழ்க்கை கொந்தளிப்பற்றதாயிருந்தது. அதில் ஆட்டபாட்டம் எதுவுமில்லை. ஆனால், கோடைக்கால வான்போல அது அமைதியுடையதாகவும், இன்பமுடையதாகவுமே இருந்தது. அதற்கு நிறைவு தரும் முறையில் அவளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. முதற் குழந்தை பெண். அது லாரனை உரித்து வைத்தது போலவே இருந்தது. அதனுடன் அதன் சாயல் மாது சிராம்மோன் அறையில் தொங்கவிடப் பட்டிருந்த அவள் அன்னை மாது ழீன் பெரோனின் சாயல் படிந்தும் இருந்தது. லாரைன், தன் தாயை நினைவூட்டிய அம்மகவைத் தன் உயிர்போலப் போற்றி வளர்த்தாள். அதற்கு அவளிட்ட பெயர் அடிலி என்பது. அடுத்த குழந்தை ஆண். அது பெரிதும் தந்தை சிரோம்மோனை நினைவூட்டுவதாயிருந்தது. அது தந்தை பெயரைச் சார்ந்து எல்ஃஜீயர் அகஸ்டி என்றே அழைக்கப் பட்டது. அன்பற்ற சிறைக் கூண்டில் வளர்ந்த லாரைன், மணவாழ்வு கழிந்து இக்குழந்தைகளின் அன்பில் மீண்டும் சிறைப்பட்டாள். ஆனால், இத்தடவை அவள் சிறை அவள் விரும்பி மேற்கொண்ட பொன் சிறையாயிருந்தது. தன் இரு கண்மணிகளையும் லாரைன் இமைபோல் காத்தாள். சிராம்மோனும் அவள் மணவாழ்வின் முன் திட்டமிட்ட திட்டத்திற்கு ஒரு சிறிதுகூட ஊறுவராத வகையில் அவளை அன்பாதரவுடனும் மதிப்புடனும் நேசித்து வந்தார். இதில் வியப்பில்லை. ஏனெனில், வயது கடந்தும், உள்ளத்தில் முதுமை யேறாத அச்சீரிய வீரர் அவளை உளமாறக் காதலித்தேயிருந்தார். மாது லாரைனோ காதலறியா விட்டாலும் அன்பின் அருமை அறிந்தவள். அவள் தன் உள்ளார்ந்த அன்பு முழுவதையும் அவர்மீது கொட்டி அவர் இல்லற வாழ்வினை நிறைந்த நல்லற வாழ்வு ஆக்கினாள். இல்லறத்துணைவர் நேசத்துக்கு அவர்கள் வாழ்வு ஒரு முன்மாதிரியாயிருந்தது. 9. கைம்பெண் மன்னன் பதினைந்தாம் லூயி தன் நாணத்தையும் தன் இறுமாப்பையும் உடன்கொண்டு இயற்கை வாழ்வெய்தினான். மன்னன் பதினாறாம் லூயி ரேயிம்ஸ் தலைக் கோயிலில் பேரார வாரத்துடன் முடி சூட்டப்பெற்றான் இதுவே ஃபிரான்சின் கடைசி மன்னரின் முடிசூட்டு விழா என்பதை உணர்ந்தவர்கள் போல, ஃபிரஞ்சுப் பெருமக்கள் இதில் தங்கு தடையற்று தம் இன்பக் கேளிக்கைகளில் மிதந்தனர். இப்போது அவர்களுக்கு வாய்ந்த அரசி மேரி அந்தாய்னெட் இக்கேளிக்கை ஊழிக்கு எல்லா வகையிலும் ஏற்ற தலைவியாயமைந்தாள். அவள் அழகு ஃபிரஞ்சு அரசிகளுக்குள் கூட முன் என்றும் கண்டு கேட்டிராத ஒன்றாயிருந்தது. அவள் ஃபிரான்சின் அரசியாக மட்டுமில்லை; அழகுக்கும் காதலுக்கும் அரசி போலவே காணப்பட்டாள். உண்மையில் அரசி என்ற பெயருக்கு ஒரு சிறிது இழுக்கும் தரும் அளவுக்கு அவள் இன்ப வாழ்வு சென்று அவ்வெல்லையில் நின்று கலையரசி, காதலரசி என்ற பட்டங்களுக்கும் நாட்டரசி என்ற பட்டத்துக்கும் இடையே ஊசலாடுவதாயிருந்தது. மற்ற எந்த அரசியும் செலவு செய்யாத பெரும் பொருள் அவள் அரண்மனைக் கேளிக்கையின்ப வாழ்வில் செலவாயிற்று. பெருமக்கள் அதில் பங்கு கொண்டனர் - பொதுமக்கள் தெரிந்தும் தெரியாமலும் இவ்வெல்லாச் செலவுகளுக்கும் இறையிறுத்தனர். மன்னவையின் இன்ப வாழ்வில் பொது மக்கள் கருத்துச் செல்லவில்லை. ஆனால், பெருமக்களுக்கோ அதில் பங்கு கிடைத்ததுடன், அதுபற்றிக் கவலையின்றிப் பேசி வம்பளக்கவும், அரசி கட்சி, அரசி எதிர்க்கட்சி எனப் பிரிந்து உள்ளூறப் பூசலிடவும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த இன்ப வாழ்விலும் பூசலிலும் ஃபிரெஞ்சுப் பெருமக்கள் நேர்மை, வாய்மை, அமைதி ஆகியயாவும் கெட்டு வந்தன. பொதுமக்கள் பார்வையில் அவர்கள் தம்மையுமறியாமல் தம்மை இழிவுபடுத்திக் கொண்டு வந்தனர். இவ்வாய்மை வாழ்வுச் கிடையில் அதன் கலைப் பண்புடன் முற்றிலும் முரண்பட்டுவிடாமல், ஆனால் அதிலிருந்து எண்ணெயினிடையேயுள்ள தண்ணீர்த்துளிகள் போலத் தனிப் பட்டுப் பிரிந்து வாழ்ந்தனர். சிராம்மோன் துணைவர். பெரு மக்களிடையே பெருமக்களாக அவர்கள் நடமாடினர்; ஆனால், அவர்கள் வாழ்வு எளிமையும் நற்பண்பும் கெடாதிருந்தது. சிறப்பாக மாது சிராம்மோன் வகையில், அவள் உடையும் பெருமிதத் தோற்றமும்தான் அவள் உயர்குடியைக் காட்டினவே தவிர, அவள் அறிவு, ஒழுக்கம், பணிவு, கடமையுணர்ச்சி, அன்பு ஆகியயாவும் அக்குழுவினுக்கு அப்பாற் பட்டவையாயிருந்தன. பூசல், உட்பூசல், பொய்மை, உட்பகைமை ஆகியவை நிறைந்த மன்னவைக் குழாத்திடையே அரசியின் கண்கள் அடிக்கடி அன்பாதரவுக்கும் அமைந்த அறிவுரைக்கும் சுவைமிக்க உரையாடலுக்கும் மாது சிரோம்மோனையே நாடின. இன்ப வாழ்வில் தோய்ந்திருந்தும் அவள் உள்ளம் முற்றிலும் நச்சி படாது இருந்தது. சூழல்கள் அவளை ஈர்த்திராவிட்டால், அவளும் மாது சிரோம்மோனின் முன்மாதிரியைப் பின்பற்றி யிருக்கக் கூடும். ஆனால், மாது சிரோம்மோனை அவள் அடிக்கடி காணக்கூட முடிவதில்லை. அவள் அவ்வப்போது அரசியைப் பார்ப்பதுண்டானாலும் அவள் நேரம் பெரும் பாலும் தன் குழந்தைகளைப் பேணுவதிலும், தன் கணவனின் பெருஞ் செல்வத்தை மேற்பார்வையிடுவதிலும் சென்றது. இத்துடன் மணமாகி ஆறாண்டுக்கு மேலாகி விட்டதால், சிராம்மோனின் உடல் முதுமைக்கும் நோய்க்கும் படிப்படியாக இரையாகி வந்தது. முடிசூட்டி விழாவில் அவர் கலந்துகொள்ள முடியவில்லை. மாது சிராம்மோன்கூட அவரை விட்டுச் செல்ல மனமில்லாமல், மன்னவை செல்வதும் தன்மனை வருவதுமாக இருந்தாள். ஆனால், முடிசூட்டு நாளில் அவள் பெரும் பகுதியையும் மன்னனவையிலேயே கழிக்கும்படி நேர்ந்தது. அவளுக்கு அவ்வளவு பொறுப்பு அவ்விழாவில் ஏற்பட்டது. அவள் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகி விட்ட பின்னும் இன்னும் அவள் பாரிஸின் அழகரசிகளுள் முதல் வரிசையிலேயே இருந்தாள். அவள் அறிவும் அன்பும் அவளை அவ் அழகரசிகள் என்றும் நாட முடியாத உயர் மதிப்புப் பெறச் செய்திருந்தன. ஆகவே, இன்பக் கோட்டையிலே அவள் ஓர் அறிவுக் கொடியாக உலவினாள்; வஞ்சனைப் புயலிடையே நேர்மைத் தென்றலாக அவள் விளங்கினாள். ஆயினும், அவள் வகையில் தெய்வம் தன் கொடுமைகளை இன்னும் நிறுத்திவிட்டதாகத் தோன்றவில்லை. ஏனெனில், அவள் முடிசூட்டு விழாவிலிருந்த போதே அவள் கணவன் உயிர் உடலுடன் போராடத் தொடங்கிற்று. பணியாட்கள் விரைந்து அவளை நாடி அனுப்பப் பெற்றனர். விழாவின் நடுவேளையிலேயே அவள் மூடு வண்டியில் கூட்டங்களை ஊடுருவி விரைந்து வந்தாள். ஆனால், விழாவை விட்டு வந்ததுதான் மிச்சம். இங்கே கணவன் உயிர் அகன்றது; அங்கே அவளில்லாமல் விழா நிறைவேறிற்று. உலகம் அவளைக் கண்டு பொறாமைப்பட்டது. அவள் உலகை எண்ணிப் பொறாமைப்பட்டாள். பணம் படைத்த கணவனை, முதுமையுடைய கணவனை மணக்கும் அழகிய மங்கையர் கணவன் நீண்ட நாள் வாழ்வை எதிர்பார்த்தும் மணப்பதில்லை; அவன் மாள்வு அவர்களுக்கு அதிர்ச்சியையூட்டுவதும் கிடையாது. உண்மையில் பலர் கைம் பெண்ணாகும். நாளையே எதிர் பார்த்திருப்பார்கள். அழகிய செவ்வல்லி மலரை விரும்புபவர்கள் அதனுடன் முள்ளையும் சேர்த்துப் பெற வேண்டியிருப்பது போலவே. அவர்கள் தாம் விரும்பும் பணத்துடன் இணைத்துத் தரப் பணம் படைத்த கிழக் கணவனை இழந்து கைம்பெண்ணாவது இத்தகையவர். பெரும்பாலாருக்கும் முள்ளில்லாத செவ்வல்லிப் பூக் கிடைத்தது போன்றது. ஆனால், மாது சிராம்மோன் இத்தரத்து மாதல்ல; அவள் நிலை வேறாகவே இருந்தது. அவள் சிராம் மோனுக்காக உண்மையிலேயே ஏங்கினாள். ஒரு தந்தைக்காக மகன் அடையும் துயர், ஓர் உடன்பிறந்தானுக்காக உடன் பிறந்தான் உடையும் துயர், ஒரு தோழனுக்காக மறுதோழன் அடையும் துயர் இதனினும் மிகுதியாக இருக்க முடியாது; குறைந்தே இருக்கும். தந்தை, தாய், உடன் பிறந்தார், நண்பர் என்ற எல்லா வகை அன்பையும் கணவனிடம் வைத்திருந்த மாதுசிராம்மோன் அவ்வெல்லா வகைத் துன்பங்களையும் ஒரு சேர இப்போது அனுபவித்தாள் என்னலாம். அவள் தன் துயரின் எல்லையைக் கண்டு விட்டதாகவே இப்போது எண்ணினாள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், கணவனுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்த வாழ்விலேயே அவள் இதுவரை தனக்கு ஏற்பட்ட வாழ்வின் உச்சநிலை இன்பத்தை அடைந்திருந்தாள். அவ் இன்ப வாழ்வின் கொடு முடியாயிருந்த கணவன் இப்போது இல்லை; அதன் அடிவாரமாகிய குழந்தைகள் பாசம் இன்னும் மீந்திருந்தது. அவள் உள்ளார்ந்த பாசம் முழுவதும் மடைதிறந்த வெள்ளம் போல அவர்கள் வாழ்வில் பாயத் தொடங்கிற்று. பெண்மையின் இளமை - பின் தாய்மை - இறுதியில் கைம்மை! பிஞ்சாயிருந்த இளமையின் பொலிவு தாய்மையில் போதாகி, கைம்மையின் துயரிடையே மலர்ச்சியடைந்தோ என்னும்படி யிருந்தது லாரைனுடைய இப்போதைய தோற்றம். உடலழகு மலர்ச்சி பெற்று அக அழகு மணம் வீசிற்று. கணவன் படத்தை வைத்து அவனை எண்ணி ஏங்கும்போது அவள் முகத்தில் படியும் துயர வரைகள்; குழந்தைகளுடன் குழந்தை போல அவள் அவர்களைப் பின்பற்றி ஓடியாடி மகிழும்போது அதே முகத்தில் காணப்படும் மகிழ்ச்சி வரைகள் ஆகிய இரண்டும் அவள் நூல் நடையின் கலையழகினும் கவர்ச்சியுடையவையாய் இருந்தன. கன்னியர் அழகு காதல் கோயில் புகாதவர்களையே கவரும் தன்மையுடையது. அவள் அழகு காதற் பண்பில்லாமலே மனிதர் உள்ளத்தை மேம்படுத்துவதாயிருந்தது. அவள் அழகு ஒரு பண்பாய், அப்பண்பு ஒரு நெறியாய் மக்களை ஈர்த்து ஆட்கொள்வதாயமைந்தது. இளமையின் ஆர்வமும் முதுமையின் அறிவமைதியும், உலகியலாரின் திறமையும் சமயவாணரின் தூய்மையும், நகர வாழ்வின் இன்னயமும் அறிவுத் திறமும் நாட்டுப்புற வாழ்வின் எளிமையும் நேர்மையும் அவள் வாழ்வில் இரண்டறக் கலந்து ஒன்றுபட்டன; நகரத்தின் உயர்வாழ்வில் அவள் நல்லிடம் பெற்றுப் பொலிய முடியும். ஆனால், அவள் மனம் திறந்தவெளி, தங்குதடையற்ற காற்று, பகலவனொளி, நாட்டுப்புறக் காட்சி ஆகியவற்றையும் நாடிற்று. கணவனிறந்தபின் அவள் நகரத்து வாழ்வை விட்டு நாட்டுப்புறஞ் சென்று வாழவேண்டுமென்றே திட்டமிட்டாள். இவ்வெண்ணத்துடன் அவள் கணவனின் நகர்ப்புறப் பண்ணை மனைக்குச் சென்றாள். அங்கே அவள் கணவனின் இளவலான திரு. ஜோஸப் சிராம்மோன் தங்கி யிருந்தார். திரு. ஜோஸப் மணமாகாதவர். 35 ஆண்டுப் பருவத்தினர். லயானின் கோவிலக வட்டத் தலைவராக அவர் பணியாற்றி வந்தாராயினும் ஃபிரஞ்சு நாட்டுக் கோயிலகத்தாரைப் போலவே அவர் உலகியல் பண்பாடு மிக்கவர்; அறிவாராய்ச்சிகளில் ஈடுபட்டவர். புத்தியக்கங்களையும் கலைகளையும் அவர் அறிந்திருந்தார். ஆனால், எதிலும் முனைந்து ஈடுபடுவதில்லை. தொல்லையற்று இன்பவாழ்வு நாடும் குணம் அவரிடம் உறைந்திருந்தது. மாது சிரோம்மோனிடம் அவர் அன்புடனும் ஆதரவுடனும் பழகினார். அவள் நாட்டுப்புற வாழ்வு பற்றிய கருத்துகளைக் கேட்டு அவர் உள்ளூரப் புன்முறுவல் கொண்டார். அவள் பருவம், அழகு, கலைச்சுவை, உயர் பண்பு ஆகியவற்றுக்கு நாட்டுப்புற விரைவில் சலிப்புத் தரும்; அவளுக்கு ஏற்றது நகர வாழ்வு. அதிலும் சிறப்பாகப் பாரிஸ் வாழ்வே என்பது அவர் எண்ணம். அவள் பண்புக்கேற்ற சூழ்நிலை நகரத்தில் மட்டுமே உண்டு என்பதை அவர் அடிக்கடி சுட்டிக் காட்டினார். அவர் கூறியதிலும் உண்மையில்லாமலில்லை. ஆனால், மாது சிரோம்மோனின் நாட்டுப்புற ஆர்வம் நாட்டுப்புறப் பண்பு காரணமாகவே ஏற்பட்டதன்று; புதிய கலைப்பண்பு காரண மாகவே ரூசோவின் ‘எமிலி’யை அவள் பயிற்சிக் காலத்தில் கற்க மறுத்து விட்டாலும், ரூசோவின் நூல்களைக் கற்காமலேயே அதே வகை இயற்கைக் காட்சி ஆர்வமும் எளிமையார்வமும் அவளிடம் ஏற்பட்டிருந்தது. திரு. ஜோஸப் சிராம்மோனின் மனையும் உணவுமுறையும் வாழ்வும் கலைஞர் கலைத் திறத்துக்குக் கூட நிறைவளிப்பதாகவே இருந்தது. அவர் தோட்டத்திலும் பயனுடைய காய்கறி பழங்கள் கீரைகளுடன் நல்ல மலர்களும் நிலவரப் பச்சைச் செடி கொடிகளும் பலவண்ணமும் வடிவமைப்பும் தோன்றச் சிங்காரித்து வைக்கப்பட்டிருந்தன. மாது சிராம்மோன் அதில் அடிக்கடி உலவுவாள். சிலசமயம் திரு. ஜோஸப்பின் மட்டக் குதிரையேறி நாட்டுப்புறக் காட்சிகளைச் சுற்றிப் பார்வையிடுவாள். ஆனால், இப்புத்தனுபவங்களாலும் அவள் முகத்திலுள்ள சலிப்பு மாறவில்லை. அவள் வாழ்வில் ஏதோ குறையிருப்பது போலத் தோன்றியது. அது என்ன என்று அவளுக்கே தெரியவில்லை யாயினும், அவள் மனம் எதிலும் பற்றாமல் ஊசலாடியது. குழந்தைகளுடன் விளையாடும் நேரந்தவிர மற்றச் சமயங்களில் அவள் உள்ளம் எதிலும் அக்கறைகொள்ள முடியாமல் வெறுமை யடைந்திருந்தது. இதுபற்றித் திரு. ஜோஸப் கவலைப்பட்டு அடிக்கடி உசாவி வந்தார். “அம்மணி, இன்று நேரத்தை எவ்வாறு கழித்தீர்கள்” என்று அவள் உலவி வந்தமர்ந்திருக்கும்போது திரு. ஜோஸப் கேட்டு, பேச்சுத் தொடங்கினார். “ஐயா, தங்கள் அக்கறைக்கு நன்றி. நன்கு அமைதியாகவே கழித்தேன். அடிலிக்கு எழுத்துக் கற்று கொடுத்தேன். அவள் விரைவில் கற்றுக் கொள்கிறாள். ஆனால், இத்தனை சின்னஞ்சிறு பருவத்தில் அவள் மூளைக்கு மிகுதி வேலை கொடுக்கக் கூடாதென்று நினைத்து விவிலிய நூலின் படங்களைக் காட்டிக் கதைகள் கூறிப் பொழுதுபோக்கிக் காட்டினேன். அகஸ்டி மட்டும் புத்தகங்களில் அக்கறை கொள்ளாமல் குறும்புகள் செய்கிறாள். மரங்களிலெல்லாம் ஏறி இறங்குகிறான்... ... இரு குழந்தைகளையும் விளையாடவிட்டு அவர்களை என் ஓவியச் சட்டத்தில் தீட்ட முயன்றேன். ஆனால், அவர்கள் ஒரு நிலையாக நில்லாததால் படம் ஓடவில்லை.” “இப்போது நீங்கள் புத்தகங்களில் மிகுதி கவனம் செலுத்து வதில்லை போலிருக்கிறது!” “புத்தகங்களை விட இயற்கை இங்கே கவர்ச்சியூட்டுகிறது. இன்றுகூடக் குதிரையேறி நாட்டுப்புறங்களைச் சுற்றிப் பார்வை யிட்டேன். நம் நாடு இவ்வளவு அழகிய காட்சிகளுடையது என்பதை நான் இதற்கு முன் எண்ணியதே இல்லை.” அவள் ஆர்வத்தைக் கண்டு ஜோஸப் வியப்புற்றார். “நீங்கள் விரும்பும்போதெல்லாம் தாங்கள் குதிரையை எடுத்துச் சென்று உலவுங்கள். சில நாளைக்காவது இந்நாட்டுப் புறக் காட்சி உங்களுக்குப் புதுமையுணர்ச்சி தரலாம்.” “தங்கள் நல்லெண்ணத்துக்கு நன்றி. ஆனால், நாட்டுப்புறக் காட்சியின் புதுமையுணர்ச்சி எனக்குச் சில நாளைக்குத்தான் இருக்கும் என்று எனக்குத் தோற்றவில்லை. இது எனக்கு என்றும் புத்தம்புது விருந்தாய் இருக்கும் என்பது உறுதி.” திரு. ஜோஸப்புக்கு இன்னும் வியப்பு மிகுதியாயிற்று. பாரிஸின் உயர்குடியிலும் உயர்மதிப்புப் பெற்ற நங்கை ஏனிப்படிக் கூறுகிறாள் என்று அவர் அறியமுடியவில்லை. இயற்கை விருப்பு ஒரு கலையாக, ஒரு சமயமாக ரூசோவால் மாற்றப்பட்டு வந்ததாயினும், அதன் புத்தார்வத்தில் இன்னும் ஈடுபடவில்லை. மாது சிராம்மோனோ, பள்ளிப் பருவத்தில் ரூசோவின் எமிலியை வாசிக்காது எறிந்து விட்டவளாயினம், ரூசோவைப் போலவே இயல்பாக அவ்வுணர்ச்சியுடைய வளாயிருந்தாள். இதனை அறியாத திரு. ஜோஸப் “தங்கள் நாட்டுப்புற ஆர்வம் தற்போதைக்கு உங்கள் புதுமையுணர்ச்சிக்கு விருந்தாயிருக்கக் கூடும். தங்கள் பண்புக்கு நிலையான விருந்தளிக்க நாட்டுப் புறத்தாலோ அதன் பண்பிலா முரட்டு மக்களாலோ முடியாது. அத்தகைய கன்னிப்புதுமை நகரங்களில், அதுவும் பாரிஸ் நகரம் ஒன்றில்தான் உண்டு” என்றார். மாது சிராம்மோன் “தாங்கள் கூறுவதில் உண்மையில்லை என்று நான் கூறவில்லை. ஆனால், எனக்குப் பாரிஸ் சலித்து விட்டது. நாட்டுப்புறக் காட்சியை நான் புது விருந்தாக மட்டும் விரும்பவில்லை. நிலையாக இங்கேயே தங்க விரும்புகிறேன். இங்கிருப்பதுடன் அன்று. இன்னும் நகரிலிருந்து தொலைவில் ஒதுங்கிச் சிறு குடிசை கட்டி இருந்து, நாட்டுப்புறத்தாள் போலவே வாழ விரும்புகிறேன்.” மாது சிராம்மோனின் மனப்போக்கை அவள் மைத்துனர் அறிந்து கொள்ள முடியவில்லை. இதில் வியப்புக்கு இடம் கிடையாது. ஏனெனில், அவளே அதை இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை. அவள் நெடுநேரம் இயற்கையின் காட்சியைக் காண்பவள் போல மொட்டை மாடியில் சென்றிருப்பாள். ஆனால், அவள் கண்கள் எந்தக் காட்சியிலும் ஈடுபட்டு மகிழாமல் வெறித்திருக்கும். அவள் இயற்கையை நுகர்ந்து மகிழ்வதாக எண்ணினாலும், உண்மையில் அவள் எதிலும் மகிழவில்லை. அவள் உடல் நிழலில் உணங்கும் பழங்கள்போல உள்ளூர வாடிற்று. அவளுக்கு அவ்வாட்டமோ அதன் காரணமோ தெரியாது. திரு ஜோஸப் அதனைக் கவனித்தார். ஆனால், பாரிஸ் இன்பத்தைப் பெறாததனாலேயே அவள் உள்ளம் வாட்டமுறுகிறது என்றும், நாட்டுப்புறக் காற்று அவளுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றும் மட்டுமே எண்ணினார். “புறவெளியில் உள்ள காற்று உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று கருதுகிறேன் அம்மணி. அதிலும் இவ்விளவேனில் காலத் தென்றல் புறத்தே இனிது. அகத்தே மெல்லுடல்களை வருத்தும் நச்சுத் தன்மையுடையது” என்றார். அச்சொற்கள் அவளை ஏனோ திடுக்கிடச் செய்தன. ஆனால், அவள் உள்ளத்தின் போக்கையும் உடலின் நிலையையும் அவளே அறியவில்லை. திரு. ஜோஸப் கவலையுடன் அவள்மீது தம் சால்வைகளைக் கொண்டுவந்து போர்த்துவார். அடிக்கடி அவளைத் திறந்த மாடியிலிருந்து உள்ளே இட்டுச்சென்று படுக்க வைப்பார். அவள் அவர் அக்கறைக்கு நன்றி காட்டும் முறையில் அவரைக் கனிவுடன் பார்த்து “எனக்கு ஒன்றும் கேடு வராது. நீங்கள் கவலை யற்றிருங்கள். நான் நாட்டுபுறத்தில் ஒரு குடிசை கட்டி வாழ்ந்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடும்” என்றாள். அவள் போக்குப்படி விட்டு, பின்னரே அவளுக்கு அவள் உண்மைத் தேவையை விளக்கவேண்டும் என்று திரு. ஜோஸப் எண்ணி அவள் வேண்டுகோளுக்கு இணங்கினார். அவர் ஒத்துழைப்புடன் தொலைவில் அவள் சென்று தனக்கென ஒரு குடிசை கட்டினாள். அவ்வேலை அவள் உள்ளத்துக்கும் உடலுக்கும் சிறிது ஓய்வு கொடுத்தது. வீட்டில் நூல்கள், தோட்டச் செடிகள் அழகாக அமைக்கப்பட்டன. அவள் பிள்ளை களுடன் சிறிது நேரம் நேரம் போக்குவாள். தோட்ட வேலை செய்வாள். அடிக்கடி ஊர்ப்புறம் சுற்றி ஏழை எளியர் வாழ்விற் கலந்து ஊடாடுவாள். பல குடும்பங்களில் வறுமைப் புயலிலிருந்தும் துன்பத்திலிருந்தும் அவள் மூலம் பலருக்கு உதவியும் விடுதலையும் கிட்டியது. அவள் ஊர்த் தெய்வமாக வாழ்ந்தாள். வீடு, சுற்றுப்புறம், மக்கள் யாவும் அவள் விருப்பத்துக்கு இணக்கமாகவே இருந்தன. ஆனால், மகிழ்ச்சி அவள் முகத்தில் இல்லை. திரு. ஜோஸாப்புக்குத் தம் எண்ணத்தில் பெரிதும் உறுதி ஏற்பட்டது. அவள் அறிவும் அவளும் இத்தகைய தொண்டை நாடியது இயல்பே. இது அவளது பெருந்தன்மைக் குணம். கணவனில்லாத காரணத்ததால் அவள் பாரிஸை வெறுப்பதும் இயல்பே. ஆனால், பாரிஸ் அவள் உயிர். அங்கே தான் அவள் வாழ முடியும் என்று அவர் கருதினார். மன்னனவை, பாரிஸ் நகர வாழ்வு, அவற்றின் செய்திகள் ஆகியவற்றில் அவர் அவள் கவனத்தைத் திருப்பினார். பாரிஸில் அமையாது நாட்டுப்புறம் நாடிய அவள் உள்ளம் இப்போது தன்னையுமறியாமல் பாரிஸ் நகருக்கு ஏங்கத் தொடங்கிற்று. அவள் பாரிஸ் நண்பர்கள் நான் தவறாமல் அவளுக்குக் கடிதம் எழுதி வந்தனர். அவள் கடித எழுத்தாண்மைக்கு ஓய்வின்றி அவளும் கடிதங்கள் வரைந்து அனுப்பி வந்தாள். ஒருநாள் வழக்கத்திற்கு மேற்பட்ட அளவுடையதாய், மிகச் சீரிய கலை நயமுடைய தாளில் மலர் மணமும் தூள் மணமும் போட்டியிடும் படி மணமூட்டப்பட்ட ஒரு முடங்கல் வந்தது. திரு. ஜோஸப் அதனை ஆவலுடன் அவள் முன் பிரித்துக் காட்டி வாசித்தார். அது இளவரசர் டி. கான்டியின் மாளிகை விருந்துக்கான அழைப்பு. “இதனை ஏற்று ஒன்றிரண்டு நாள் பாரிஸில் கழித்து விட்டு வந்தாலென்ன?” என்று ஜோஸப் நயமாகக் கேட்டார். மாது சிராம்மோனிடம் இப்போது எத்தகைய ஆர்வத்துக்கும் இடமில்லாது போயிற்று. உணர்ச்சியற்ற, ஆனால் வெறுப்பற்ற குரலில் “சரி, பழைய நண்பர்களை மீண்டும் பார்க்க எனக்கும் எண்ணமுண்டு” என்றாள். பாரிஸ் இருகைநீட்டி மாது சிராம்மோனை மீண்டும் வரவேற்றது. அவள் இடைக்கால வாழ்வை அவள் நினைத்திருந் தாலும் பாரிஸ் நினைக்கவில்லை. எம்மாறுதலும் இடையே நிகழாதது போலவே பாரிஸின் இன்பக் கவலை அவளை ஒரு படகுபோல் ஈர்த்துக் கொண்டது. அவளும் நாட்டுப்புறத்தில் நாட்டுப்புற ஆர்வத்துடன் ஆனால், உள்ளுணர்வற்று மிதந்தது போலவே அவ்வின்பக் கேளிக்கைகளுள் கலந்தாள். இன்னும் பாரிஸ் உயர்குடி அவள் தலைமையை முணுமுணுப்பின்றி ஏற்றது. அவள் பாரிஸ் அழகில் தன்னை இழக்க முடியவில்லை. ஆனால், பாரிஸ் அவள் அழகில் தன்னை இழக்கத் தயங்கவில்லை. அவள் எவருடனும் ஆர்வத்துடன் ஊடாடவில்லை. ஆனால், எல்லாரும் போட்டியிட்டுப் பண்பிற் சிறந்த இத்தலை நங்கையின் நட்பில் ஊடாடினர். அவள் உரையாடலில் புத்தார்வ நங்கையரும் புதுமையிளைஞரும் மகிழ்ந்தனர். அவ்வாழ்க்கைப் போக்கை மாற்றிய புதுஅனுபவம் இவ்விருந்து மாளிகையிலேயே தொடங்கிற்று. உயர்குடியாளரிடையே உயர்குடியாளராயினும், அவர்களைத் தன் புதுமைப் பாடல்மூலம் தாக்கியும் அதே சமயம் கவர்ச்சி செய்தும் அவர்கள் வாழ்வில் இடம்பெற்ற கலைஞன் ஆக்டேவ் மூரட் அவ்விருந்தினரில் ஒரு விருந்தினனாக வந்திருந்தான். எழுத்தாண்மைக் கலைநங்கையும் பாடற்கலையன்பனும் இங்கே மோதிக் கொண்டனர். 2. அவன் 10. வழியிற் பிறந்த மகவு பதினைந்தாம் லூயி காலத்திய ஃபிரஞ்சு நாட்டரசி போலந்து நாட்டினள். அவள் தந்தை போலந்து மன்னன் ஸ்டானிஸ் லாஸ் லெக்ஸின்ஸ்கி. ஃபிரஞ்சு நாட்டரசன் உறவு மூலம் அவன் மதிப்பு மற்ற அரசர்களிடையே உயர்வடைந்தது. அவன் வாழ்வின் பிற்பகுதி இதனால் வளமுற்றது. இயற்கை யிலேயே இன்ப வாழ்வில் விருப்புடையவன் அவன். இப்போது அவனுடைய அரண்மனை பல நாட்டுச் சிறந்த கலைஞர்களுக்கும் இன்ப வாழ்வையே நோக்கமாகக் கொண்ட பல உயர்குடி ஆடவர் பெண்டிருக்கும் நல்விருந்துக் கூடமாயிற்று. ஆயினும் அரசவையின் மதிப்பு இதனால் குன்றவில்லை. போலந்து அரசவைக்குப் பொலிவூட்டிய அவைத் தலைவி கோமாட்டி டி பஃவ்வர்ஸ் என்ற அழகி. அவர் காதலை ஒரு கலையாகவும், கலையை ஒரு காதல் விளையாட்டாகவும் ஆக்கியவள். கலையிலும் இன்பத்திலும் மூழ்கி, அத்துடன் அரசியல் சூழ்ச்சி நயங்களிலும் வல்லவனாயிருந்த ஸ்டானிஸ் லாஸுக்கு அவள் எல்லாவகையிலும் உற்ற துணைவியாகவும் கைக் கருவியாகவும் அமைந்தாள். அவள் அரசியல் வாழ்வின் நண்பர்கள் அனைவரும் அவளுக்கும் நண்பர்கள். அரசன் ஆடிய நாடகங்களில் அரசியல் காட்சி அங்கத்தில் அவளிருந்து நடிப்பாள்; அடுத்த அரசியல் காட்சி தொடங்கு முன் கோமாட்டி டி பஃவ்வர்ஸ் இடைக் காட்சி அங்கம் நடத்தி அரசன் நாடகத்தைத் திறம்பட இயக்குவாள். அரசனிடம் அவளுக்குள்ள செல்வாக்கை மன்னவையிலுள்ள அனைவரும் அறிந்து, அவளையே அரசன் விருப்பங்களை இயக்கும் திறவு கோலாகப் பயன்படுத்தினர். அவள் கண்ணசைந்தால் அரசன் கோல் அசையும்; அரசிகூட அவள் ஆற்றலை அடிக்கடி பயன்படுத்திக்கொள்ளத் தயங்கவில்லை. இதனால் அவள் அரசனுக்கும் அரசிக்கும் மேற்பட்ட ஆற்றலுடையவளாகவும், அவர்களைவிட எல்லார்க்கும் இனியவளாகவும் அமைந்தாள். அரசன் ஸ்டானிஸ் லாஸ் மிகப் பருத்த உடலுடையவன். வாழ்வின் பிற்பகுதியில் அவன் இன்ப வாழ்வும் சோம்பலும் பெருகின. உடல் பின்னும் அளவில் பெருத்தது. அவன் பெரும்பாலும் அரண்மனையை விட்டு வெளியே செல்வதை நிறுத்திக் கொண்டிருந்தான். இன்றியமையாது செல்ல வேண்டியிருந்தாலும் ஏவலர் அவனை நாற்காலியுடன் தூக்கிக் கொண்டு போய்த்தான் வண்டியிலேற்றுவர். படுக்கவும் இருக்கவும் அவனுக்கு நாற்காலி வேறு, படுக்கை வேறு என்ற வேற்றுமை கிடையாது. படுக்கையே, விரித்தால் கட்டில், மடக்கினால் நாற்காலி என்ற முறையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலும் அவனிடம் மாறாதிருந்த பழம்பண்பு அவன் போச்சுத் திறமும் நயமும், அவன் மூளைத் திறமும் மட்டுமே இவற்றின் பயனாக ஃபிரஞ்சுப் பேரரசனுக்கு அடுத்தபடியான மதிப்பு அவனுக்கும் அவன் அரசவைக்கும் ஐரோப்பாவெங்கும் இருந்து வந்தது. கலையழகியாகவும் காதற்கலை மகளாகவும் இருந்த கோமாட்டி டி பஃவ்வர்ஸின் உடல், உளம் இரண்டுமே ஆண்டின் போக்கால் மாறுபடாமல் இருந்தன. அவள் என்றும் கன்னிக் கலையழகியாகவே இருந்தாள். இளைஞரும் கலைஞரும் எப்போதும் அவளைச் சுற்றி வட்டமிட்ட வண்ணமாகவே இருந்தார்கள். அவள் அழகு மட்டுமின்றி அவள் பேச்சும் எல்லாரையும் கவர்ந்தது. நீண்ட நாள் அவளுடன் பழகியவர் களுக்குத்தான் அவள் வயது ஓரளவுக்காவது தெரியவரும். ஆனால், அத்தகையவர்கூடத் தாம் பருவமாறினும் அவள் பருவ மாறாதிருந்தது கண்டு வியப்படைந்தனர். சிறப்பாக இந்நிலை அரசன் ஸ்டானிஸ் லாஸுக்குத்தான் ஏற்பட்டிருந்தது. அவன் முன்போலவே அவளை நடத்தி வந்தான். முன்போலவே அரண்மனையாட்சி முழுவதும் அவள் கையிலே விடப்பட்டிருந்தது. ஆனால், முன்போல் அவன் அவளுடன் ஓடியாட, இன்ப விளையாட்டுகளில் கலக்க முடியவில்லை. அவளுக்கு உள்ளூர அவனிடம் முன் உள்ள கவர்ச்சி கிடையாது. அவள் கலைக்கும் வாழ்வுக்கும் அவன் இப்போது அவ்வளவு பொருத்தமாயில்லை. ஆயினும், அவன் அரசன்; அவள் அரசவைக் கலையரசி. அத்துடன் அவனிடம் அவள் உள்ளூரக் கொண்டிருந்த நம்புணர்ச்சியும் மதிப்பும் சிறிதும் மாறாதிருந்தன. ஆகவே, அவள் தன் வெறுப்பை முற்றிலும் அடக்கிக் கொண்டு, தன் வாழ்க்கை நாடகத்திடையே அவனிடம் மற்றொரு நாடகம் நடித்து வந்தாள். அரசனுடைய அரசியல் நாடகங்களுக்குப் புறம்பாகத் தான் நடத்திய கலை நாடகங்களை அவள் கண்ணில் படாமல் மாறாட்டம் செய்து வந்தாள். அவள் நாடகத்தின் மிகமிகப் புதுமைவாய்ந்த கட்டம் 1738-ஆம் ஆண்டுக்கு உரியது. வழக்கம்போலவே அவள் ஆடினாள், பாடினாள், உரையாடினாள். அவள் காதலர்கள் எப்போதும் போலவே அவளைச் சுற்றி வட்டமிட்டு வந்தனர். ஆனால், அவ்வளவு பேருக்கும் தெரியாது. அவள் அடிவயிற்றின் நிலை. அவள் ஓட்ட சாட்டமும் சுறுசுறுப்பும் இன்பக் கேளிக்கையும் அவர்கள் கண்களை அவ்வளவு திறமையாக மறைத்தன! போலந்து நாட்டின் தலைசிறந்த வழக்குமன்றத் தலைவர் ஒருவரே கோமாட்டி பஃவ்வர்ஸின் மிகப் புத்தம் புதிய காதலர். அவர் வழக்கறிவின்திறமெல்லாம் அவள் கையில் பம்பர மாயாடிற்று. அவளது ஒரு புன்முறுவலுக்காக அவர் ஏங்கிக் கிடந்தார். அவள் பல இளைஞருடன் களித்து வாய்விட்டுச் சிரித்துப் பேசுவாள். ஆனால், அவள் அவரை மதிப்புடன் நடத்தினாள். அத்துடன் அவள் அவரை ஒருகணம் தன்னை விட்டு அப்பாற் செல்ல விடுவதில்லை. அவர் அறிவுரைகளைக் கேட்பாள்; அவருடன் வாதாடுவாள். அவர் நட்பைப்பற்றிப் பிறரிடம் பெரிதாகப்பேசி, அவரைத் தன்னிடம் ஈடுபடுத்துவாள். அவள் கலைச்சுவைத் திறத்தைப் புகழ்ந்து, அவரை அடிக்கடி இன்பக் கனவுலகுக்கு ஏற்றி இறக்குவாள். ஒருநாள் வழக்கு மன்றத் தலைவரிடம் அவள் திடுமெனத் தன் முறைகளை மாற்றினாள். அண்மையிலுள்ள நகரத்துக்குச் சென்று சில துணிமணிகள் வாங்க வேண்டுமென்றும், அச்சமயத்தில் தான் அவர் தோழமையை விட விரும்பாததால், தன்னுடன் அழைத்துச் செல்ல எண்ணுவதாகவும் அவரிடம் அவள் கூறினாள். அவர் இப்புது வாய்ப்பை ஆர்வத்துடன் வரவேற்றார். இருவரும் ஒரே வண்டியிலேறி நகர் சென்றனர். நகரில் பொருள்கள் வாங்கியபின் அவள் வண்டியோட்டியை வேறு வேலை கொடுத்தனுப்பி விட்டாள். அவன் வருவதற்காகக் காத்திருப்பவள் போல் அவள் பிற்பகல் வரை நகரில் தங்கினாள். அதன்பின் மன்றத்தலைவரை நோக்கி, “இந்த வண்டியோட்டி களை நம்பி இங்கே வந்தது தவறு. அவனை ஒரு வேலையாக அரண்மனைக்கு அனுப்பினேன். அவன் இன்று திரும்ப மாட்டான் போலிருக்கிறது. நாம் இன்று இந்நகரில் தங்கி அவதிப்படத்தான் வேண்டுமென்று அஞ்சுகிறேன்” என்றாள். மன்-தலை: தாங்கள் அதற்காகக் கவலைப்பட வேண்டாம் நான்தான் உங்களுடனிருக்கிறேனே, வண்டிக்காரன் வராவிட்டால் போகிறது. நானே- கோ-டி: வேண்டாம் வேண்டாம். தாங்கள் என் விருந்தினர். அத்துடன் ஒரு வழக்கு மன்றத் தலைவர்! மன்-தலை: நான் தங்கள் உயிர் நண்பன். என்னிடம் தாங்கள் எவ்வகை வேறுபாடும் காட்ட வேண்டியதில்லை. “அது தெரியாதா எனக்கு?” என்று அவள் ஆர்வத்துடன் அவர் கையைப் பற்றினாள். அவர் இப்பெரும் பேற்றை நழுவவிடாமல் கையை இறுகப் பற்றினார். அவள் அக் கையைத் தான் பற்றாவிடினும் அவர் பற்றியபின் எடுக்க முடியவில்லை. அவள் சோர்வுற்றவள்போல் தன் கையை அதன் முழுப் பளுவுடன் அவர் கைமீது கிடக்கவிட்டாள். வழியில் வண்டி விரைவாகச் செல்லும்போது அவள் “இப்போது என்ன இவ்வளவு அவசரம்? வழியில் காட்சிகள் கவர்ச்சிகரமாயிருக்கின்றன. மெள்ள இயற்கைக் காட்சியைக் கண்டின்புற்றுச் செல்வோம்” என்றாள். காதலன் நெஞ்சு களிவுற்று நெகிழ்ந்தது. அவர் குதிரை மீது கடிவாளத்தையிட்டு அதனை ஒரு தூக்க நடைபோட விட்டார். அவள் ஒன்றும் பேசாதது கண்டு மெல்லத் திரும்பிப் பார்த்தார். அவள் கண்கள் அரைத்துயில் கொள்வது போன்றிருந்தன. உடல் மெல்லத் துவண்டு அவர் மீது சாய்ந்தது. அத்தறுவாயில் அவரிடம் காதல் தெய்வமே இறங்கி வந்து வரந் தருவது போலிருந்தது. அவர் அவளை அணைத்து தன்மீது சாத்தினார். அவள் சற்றுக் கண் திறந்தாள். “இப்போது எதுவரை வந்திருக்கிறோம்?” என்று கேட்டாள். தாம் மிக மெள்ளச் செல்வதற் காக அவள் எங்கே கண்டிக்கப் போகிறாளோ என்று அஞ்சியவராய் அவர் “விரைவில் வந்துவிடுவோம். சிற்றோடையருகிலுள்ள மரத்திட்டுக்கு வந்துவிட்டோம்” என்றார். “சிறிது இங்கே தங்கிவிட்டுப் போகலாமல்லவா? குதிரை களும் இளைப்பாறித் தண்ணீர் குடிக்குமே” என்றாள் அவள். அமுதம் அருகில் இருந்தும். அதை எடுக்கத் துணி வில்லாதவர் போலத்தான் இருந்தார். அவர் வலிய வந்த அழைப்புப் போன்ற இவ்வுரை அவரை ஊக்கியது. அவர் அச்சம் எல்லாம் தீர்ந்தது. தன்னைப்போல அடங்காக் காதலுடையவள் அழைப்பாகவே இச்செயலை அவர் கருதினார். அவர் உடலில் மின்சாரம்போல ஆர்வம் வந்து பாய்ந்தது. அவர் அவளைச் சருகுபோலத் தாங்கிச் சென்று மரத்தடியில் கிடத்தினார். அவள் சிறிது நீர் வேண்டும் என்றாள். மன்றத்தலைவர் விரைந்து ஓடைப் பக்கம் சென்று தம் கை கொண்டமட்டும் தண்ணீர் கொண்டு வந்தார். வந்தபோது அவர் கண்ட காட்சி அவரைத் தூக்கி வாரிப் போட்டது. அவள் அருகே ஒரு பச்சைப் பசுங்குழவி கிடந்தது. அவர் அதுபற்றித் தம் வியப்பை வெளியிடத் தொடங்குமுன், அது தன் கதையைத் தொடங்கி ‘வீல் வீல்’ என்ற கத்திற்று. கோமாட்டி முகத்தில் ஒரு மெல்லிய குறும்புநகையின் சாயல் தென்பட்டது. அவள் மன்றத்தலைவரை அருகில் அழைத்து அவர் கையை உரிமையுடன் பற்றி முத்தமிட்டுத் “தாங்கள் உண்மையான நண்பர் என்று எனக்குத் தெரியும். இனி என் நட்புரிமையில் முதல் இடம் உங்களுக்குத்தான். ஆனால், தாங்கள் இன்னும் ஒரே ஒரு உதவி செய்ய வேண்டும்” என்றாள். தம்முதல் ஏமாற்றத்தை அடக்கிக் கொண்டு, வழக்கமான நட்புணர்ச்சி விடாமல் அவர் “என்ன உதவியாயினும் கூறுக” என்றார். ‘ஏதோ பெரிய உதவியாய்த் தானிருக்க வேண்டும்’ என்று அவர் எதிர்பார்த்தார். “அரண்மனை சென்றவுடன் தாங்கள்தான் இந்நற் செய்தியை அரசருக்குப் பக்குவமாய்க் கூறவேண்டும். இது நானும் எதிர்பாராத செய்தி என்பதைத் தாங்கள் அறிவிக்க வேண்டும்.” மன்றத் தலைவர் அவள் முன்கருதலைக் கண்டு வியந்தார். ஸ்டானிஸ் லாஸ் ஒரு பிள்ளையின் தந்தையாகக் கூடிய பருவங் கடந்து வந்தாராதலால் அவர் தவறாக ஐயங்கொள்ளக்கூட இடமிருக்கக் கூடாது என்பது அவள் எண்ணமாயிருக்க வேண்டும் என்று அவர் அறிந்து கொண்டார். ஆனால், பிள்ளை ஸ்டானில் லாஸ் அரசரின் பிள்ளை தான் என்பதை அதன் குறும்புநகை அப்போதே காட்டிற்று. அது கொழுகொழுவென்று இருந்தது. முன்னமே கோமாட்டி கொண்டுவந்திருந்த மெல்லாடையில் பொதியப்பெற்று அது தாளில் பொதிந்த பேரீச்சம் பழச்சுளைகள் போல் கண்ணைக் கவர்ந்தது. நகர் சென்ற கோமாட்டி பற்றி யாவரும் கவலையுறத் தொடங்கியிருந்தனர். வண்டி வந்து நின்றதுமே அவர்கள் வந்து பார்த்தனர். கோமாட்டி எங்கே என்ற அவர்கள் கேள்விக்கு மன்றத் தலைவர் “உள்ளே பாருங்கள்” என்று கூறி விரைந்தகன்றார். விரைவில் மன்னர் ஸ்டானிஸ் லாஸ் நாற்காலியிலிருந்து தாமே எழுந்து வந்து குழந்தையை எடுத்தணைத்தார். அது ‘நீதான் என் தந்தை, நீதான் என் தந்தை’ என்று கூறுவதுபோல அவரைச் சுட்டிச் சிரித்தது. அவர் உள்ளம் மிகமிகக் குளிர்ந்தது. உள்ளத்தில் பொறாமை கொண்டது அரசிமட்டுமே. ஆனால், குழந்தையிடம் யார் பற்றுதல் கொண்டாலும் தாய் அதனை மீண்டும் ஏறெடுத்துப் பார்க்காதது கண்டு அவள்கூடக் குழந்தையிடம் சிறிது இரக்கம் கொண்டாள். குழந்தையை எடுத்துக் கொஞ்சுபவருடன் குலவிவிட்டுக் கோமாட்டி தன் இன்ப வாழ்வில் மீண்டும் மிதந்தாள். தந்தையும் தாயும் இருக்கையிலேயே குழந்தை தந்தையும் தாயும் அற்ற குழந்தையாக, ஆனால் பலராலும் பாராட்டப்பெற்று வளர்ந்தது. கோமாட்டியின் புதுமை வாய்ந்த வாழ்க்கை, குழந்தையின் புதுமை வாய்ந்த பிறப்பு வளர்ப்பு ஆகியவை பற்றிய பேச்சே போலந்தின் தலைநகரத்து மக்கள் பொழுதுபோக்குப் பேச்சா யிருந்தது. அந்நாளைய மக்கள் பலரும் தத்தம் வாழ்க்கையின் இறுதிக் கல்லறை வாசகத்தைத் தாமே எழுதி, கல்லறை செல்லு முன்பே பரப்பிவிடுவது வழக்கம். கோமாட்டி தனக்குத் தேர்ந்து கொண்ட வாசகம் இது: இன்பம் விழைந்தாள் இன்பத்தில் தான்மிதந்தாள் இன்ப அமைதியீண் டெய்தினாள்-இன்ப உலகுக்குக் காத்திருக்கத் தாளாம லிம்மை உலகிலே பெற்றாள் உவந்து. கோமாட்டி பெற்ற மகவு தாயின் கலைத் திறத்துடன் தந்தையின் நகைத் திறமும் தன் சார்பில் வசைத் திறமும் கூட்டிப் பாடக் கற்றுக் கொண்டான். அவன் கவிதைகள் வால்தேரின் வசைத்திறமும், ரூஸோவின் கலைத்திறமும், பழைய ஃபிரஞ்சுக் கவிதையின் இனிமையும் நயமும் ஒருங்கே உடையதாயிருந்தன. தன் புதுமைப் பிறப்பையும் புதுமை வாழ்வையும் உட்பொதிந்து அவன் தன் கல்லறை வாசகமாக எழுதிய பாடல் இது. ஈதோ ஒரு கவி வீரன் பெரு வாழ்க்கை ஈதோ குதிபெருங் கானாறு-ஈதோ வழிநெறியே வாழ்வென்னும் நல்லுரை நாட்ட வழியிடைத் தோன்றினான் வந்து. இளைய ஸ்டானிஸ் லாஸ் சில நாட்களிலேயே அரண்மனையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அருகிலிருந்த ஒரு சிற்றூரில் ஒரு குடியானவனிடம் வளர்க்கப்படும்படி விடப்பட்டான். குடியானவனுக்கு நாய்கள் மீதும் கால்நடைகள் மீதும் மிகவும் விருப்பம். ஸ்டானிஸ் லாஸையும் நாய்களைப்போலவே அன்பாக நாய்க் கொட்டிலிலிட்டு வளர்த்தான். ஸ்டானிஸ் லாஸ் என்ற அவன் பெயரும் விரைவில் மறக்கப்பட்டது. தாய் தன் குழந்தை என்று கவலைகொள்ளாதபோது, தந்தை எப்படிக் கவலை கொள்ள முடியும்? அவன் முதற்பெயர் வழக்காறற்று, தாயின் பட்டப் பெயருக்கும் அவன் உரியவனாகாமல், ஆக்டேஸ் மூரட் என்ற அவன் குடிப்பெயர் ஒன்றினால் மட்டுமே அவன் குறிக்கப் பெற்றான். தாய் தந்தையரின் உரிமையாக அவனுக்குப் பட்டம், செல்வம், அறிவு ஆகிய எதுவுமில்லை. தந்தையின் திறமும் கவலையற்ற தன்மையும்; தாயின் மூலம் ஃபிரான்சுக் குரிய கலை நயமும் மட்டும் அவனுடைய மரபுச் செல்வங்களாக விளங்கின. 11. விகடக் கவிஞனும் விகடக் குள்ளனும் ஒருநாள் மன்னர் ஸ்டானிஸ் லாஸ் கோமாட்டி டி-பஃவ் வர்ஸுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். “என் பெயருடைய நம் சிறிய ஸ்டானிஸ் லாஸ் இன்று வருகிறானாம்” என்று அவர் பேச்சைத் தொடங்கினார். ஸ்டானிஸ் லாஸ் டி-பஃவ்வர்ஸுக்கு இப்போது ஒன்பது ஆண்டுப் பருவமாயிற்று. “அவன் அறிவு நிலைபற்றி என்னென்னவோ கேள்விப்படு கிறேன். அவன் அறிவு மந்தமுடையவனாயிருந்தால், அவன் அறிவைத் தீட்ட இங்கே சில விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யலாம் என்று எண்ணுகிறேன்” என்றாள் கோமாட்டி. “அவனுடன் நான் விளையாடமாட்டேன்” என்றாள் சிறுமி காதரீன்! அவள் ஆறு வயதுடையவள். டி-பஃவ்வர்ஸ் பிறந்ததன் பின் அரசிபெற்ற பெண் அவள். அவள் அண்ணன் சார்லஸும் “நானும் விளையாடப் போவதில்லை” என்று சுளித்தான். இருபிள்ளைகளும் டி-பஃவ்வர்ஸை வெறுக்கும்படி அவர்கள் அன்னையால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர். சிறுவன் ஸ்டானிஸ் லாஸ் எதிர்பார்த்த வேளைக்கு முன்பே வந்து விட்டான். அரசனும் கோமாட்டியும் அப்போது வெளியே போயிருந்தனர். அரண்மனையில் வேலையாட்கள் மட்டுமே இருந்தனர். இவர்களுள் எவரும் டி-பஃவ்வர்ஸை வளர்ந்தபின் பார்த்தவர்களல்லர். சிறுவனுக்கும் யாரையும் தெரியாது. தான் இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவும் சிறுவனாகிய அவன் அறியவில்லை. அப்பருவத்திலுள்ள சிறுவர்களைப் போலவே அவன் தான் என்றும் காணாத, ஆனால் அடிக்கடி கேள்விப்பட்ட தன் அன்னையைக் காண ஆவலுடையவனா யிருந்தான். ஆனால், அச்சிறுவன் கேள்விக்கு ‘அவள் அரண்மனையில் இல்லை’ என்ற விடை தவிர எவரும் வேறு எதுவும் சொல்லவில்லை. அறியாத இடத்தில் எங்கே போவது, யாரைக் கேட்பது என்று விளங்காமல் அவன் விழித்தான். உண்மையில் அவனுக்கென்று அறை ஒழித்து விடப்பட்டிருந்தது. ஆனால், அவனை எவரும் இனமறியாததால், எவரும் அவனை அங்கே இட்டுச் செல்லவில்லை. தாயைச் சிறிது மறந்து தன்னுடன் விளையாடும் நாய்களை நினைத்துக் கொண்டவனாய்ச் சிறுவன் தோட்டத்தின் பக்கம் சென்று பாதைகளிடையே உலாவினான். சிறுவன் மந்த அறிவுடையவன் என்றே கோமாட்டி டி-பஃவ்வர்ஸ் கேள்விப்பட்டிருந்தாள். பார்வைக்கு அவன் மந்த அறிவுடையவனாகத்தான் காணப்பட்டான். ஆனால், உண்மையில் அவன் அறிவு மந்தமுடையவனல்ல. அவன் பிறந்த நாளிலிருந்து தாய் என்ற பெயரைத் தவிரத் தாயன்பு இன்னதென்று அனுபவித்தறியாதவன். பிற சிறுவர்களைத் தாய் அன்புடன் அணைப்பது போல, தானும் தாயிடம் சென்றால் அணைத்துக் கொள்வாள், ஆதரிப்பாள் என்று மட்டும் அவன் எண்ணினான். அவன் அறிவுணர்ந்த நாள்முதல் அவனை எல்லாரும் துன்புறுத்தி அலைக்கழித்தே வந்தனர். அவர்களிடமிருந்து தப்புவதற்கு அவன் பிள்ளையுள்ளம் கண்ட ஒரே வழி ஒன்றும் தெரியாதவன் போல விழித்திருந்து நழுவி விடுவதுதான். அவன் வாய்விட்டுப் பேசுவதும் மனம் திறந்து விளையாடுவதும் நாயுடனும் வண்டு தேனீக்களுடனும் அவனறிவு இயற்கையாக வாயாடாமல் வளர்ந்து வந்தது. அவன் பேசுவது குறைவு. பேச எண்ணுவது மிகுதி. அப்பேச்சுகள் அவன் உள்ளத்தினுள்ளேயே அக உரையாடல்களாக இருந்தன. அவன் ஓர் அரைகுறைப் பித்துக் கொள்ளி என்ற எண்ணத்தை இது உறுதிப்படுத்திற்று. சிறுவன் தோற்றமும் அவனைப் பற்றிய எண்ணத்தை உயர்த்த வில்லை. அவன் தலைமயிரை யாரும் வாரி முடிப்ப தில்லை. அது என்றும் எண்ணெயறியாமலே இருந்தது. மழைத் துளியும் பனித்துளியும் அதை வளர்த்தன. காற்றும் பனியும் படிவித்தபடி யெல்லாம் அது படிந்தது. அவன் ஆடை கந்தல் களாயிருந்தது. அதை அவன் மனம் போன போக்கிலெல்லாம் உடுத்திருந்தான். அவன் முகம் தூசி படர்ந்தும் ஒழுங்காகக் கழுவப் பெறாமலும் பஞ்சடைந்திருந்தது. அவன் சில சமயம் பரக்கப் பரக்க விழிப்பான். அப்போது தான் அவன் புதிய சூழ்நிலைகளை ஆராய்கிறான் என்பதை எவரும் அறிவதில்லை. சிலசமயம் அவன் கருவிழிகள் இமையுட் சென்று மறையும். கண் வெள்ளொளி படர்ந்திருக்கும். அப்போது அவனிடம் மடமைப் பித்தும் உச்ச நிலையடைந்திருக்கிறது என்று பலரும் எண்ணிக் கொள்வார்கள். அப்போதுதான் அவன் உள்ளம் மிக வேகமாகச் சிந்திக்கிறது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். தாயினைப் பற்றிய ஏக்கத்திலிருந்து நாயின் நினைவுக்கும் நாயின் நினைவிலிருந்து காட்டு மலர்களின் நினைவுக்கும் அவன் உள்ளம் தாவிக் கொண்டிருந்தது. அவன் மிக ஆழ்ந்த அறிவுத் தூக்கத்திலிருந்தான். ஆனால், நேரமாக ஆகப் பசி அவன் வயிற்றை அலைத்தது. மேலே விழித்தகண் விழித்தபடி நடந்து கொண்டிருந் தான். பாதை வழியே கால் சென்றாலும் எங்கே செல்கிறோம் என்று அவன் அறியவில்லை. அப்போது “டே, யாரடா அது? தடிபோலப் பாதை நடுவிலே வருகிறே. ஒத்திப் போடா” என்று ஒரு குரல் கேட்டது. குரல் பெரிதாயிருந்தது. ஆளையே காண முடியவில்லை. ஓசை நிலத்திலிருந்து வருவது போலிருந்தது. அவன் மேலும் நடந்தான். ஓசை நிலத்திலிருந்து வருகிறது என்ற அவன் ஐயம் மேலும் வலுப்பெறுவது போலிருந்தது. ஏனென்றால், அக்குரல் “என் மேலே மிதிச்சுடாதெடா, படவா? உனக்குக் கண் தெரியலே” என்று கதறிற்று. கூர்ந்து கவனித்தபோதுதான் அக்குரல் கோழியின் செஞ்சூட்டுப் போலத் தெரிந்த ஒரு தொப்பி அணிந்த பொம்மை உருவத்திலிருந்து வந்தது என்று தெரிந்தது. பொம்மை தலை உயர்த்தியபோது அது உயிருள்ள உருவம் என்று தெரிந்தது. சிறுவன் குறளிகுள்ளர் பற்றிக் கேட்டிருந்தான். எங்கே பட்டப் பகலில் ஒரு குறளியிடம் வந்து சிக்கிவிட்டோமே என்று அவன் அஞ்சினான். சாவிக் கொத்தின் ஒலி கேட்டால் குறளிகள் அஞ்சி ஓடும் என்று அவன் கேட்டிருந்தான். ஆகவே, அவன் சட்டைப் பையிலிருந்த சாவியை எடுத்து ஓசைபடக் குலுக்கினான்! அவன் கருத்தை அவ்வுருவம் ஊகித்துக் கொண்டது. ஆகவே கடுங்கோபத்துடன், “நான் குறளியல்லடா, பித்துக்குள்ளி; மனிதன்தான். ஆனால், உன்னைப்போல மந்த புத்தியில்லெ; நல்ல புத்திக்காரன்” என்றான். சிறுவன் அச்சந் தெளிந்து விட்டது. ஆனால், இப்போது உருவத்தின் கோபம் சிறுவனுக்கு வந்தது. அவன் உள்ளபடியே அவ்வுருவத்தைக் காலால் மிதித்துத் துவட்டலாமா? என்று எண்ணினான். அது செய்யாமல் விலகிப் போனான். குள்ள உருவம் கை கொட்டிச் சிரித்து, “ஏண்டா, மானங் கொட்டவனே! உனக்கு இங்கே என்ன வேலை? நாய்க் கொட்டில்லே கிடந்த பயல் அங்கேயே கிடக்கிறதுதானே!” என்றான். இத்தடவை சிறுவன் குனிந்து குள்ளனைப் பிடித்துக் குலுக்கிச் சுற்றினான். சிறுவனாயினும் உறுதியும் வலுவும் வாய்ந் ஆக்டேவ் மூரட்டின் பிடியில் அவன் மூச்சுத் திணறி ‘வீல் வீல்’ என்று கதறினான். அச்சமயம் ஆக்டேவ் மூரட்டை அறிந்த அரண் மனைத் தலைமைத் தவசுக்காரன் அங்கே வந்தான். அவன் “ஸ்டானிஸ், ஸ்டானிஸ் அவனை விட்டுவிடு, அவன் அரண்மனைச் செல்வக் கோமாளி. அவனை விட்டு விடு” என்று கூறினான். ஸ்டானிஸ் லாஸ் (ஆக்டேவ் மூரட்) விடுவதாயில்லை. கோமாளியும் கதறலுக்கிடையில் மேலும் மேலும் வசவுகளை வாரிக் கொட்டினான். கடைசியில் தவசுக்காரன் தன் சட்டையிலிருந்து ஆரஞ்சுப் பழமொன்றை எடுத்துச் சிறுவன் முன் நீட்டினான். பசியின் கொடுமையைக்கூட மறந்து சண்டையிலீடுபட்டிருந்த சிறுவன் உடனே கோமாளியைக் கைவிட்டுப் பழத்தில் நாட்டம் செலுத்தினான். ஆனால், இங்கே கோமாளி அவனை முறியடித்து விட்டான். அவன் இம்மெனுமுன் பாய்ந்து பழத்தைத் தட்டிக் கொண்டு, மின்னலெனப் பறந்தான். சமையற்காரன் “சரி ஒழிந்தது. இனி நீ வந்த செய்தி சொல்லலாம். இவனுடன் ஏன் நீ தொல்லையில் மாட்டிக் கொண்டாய்?” என்றான். சிறுவன் ஆக்டேவ், “நான் மாட்டிக் கொள்ளவில்லை. அவனாக வந்து வல்லடி வழக்குத் தொடுக்கிறான். இவன் யார்? இங்கே இவனுக்கு என்ன இவ்வளவு சலுகை?” என்றான். சமையற்காரன்: “இவன் யாரென்பது யாருக்கும் தெரியாது. தன் குள்ளத் தன்மையால் முதலில் எல்லார் இரக்கத்தையும் மன்னர் விருப்பத்தையும் கவர்ந்தான். மன்னர் சலுகைகள் பெறுந்தோறும் அவன் அகமும் பிடிவாதமும் குறும்புகளும் உச்ச நிலைக்கு ஏறிவிட்டன. இப்போது அவனைக் கண்டால் எவருக்கும் அச்சம். மன்னன் அவனிடம் வைத்த நம்பிக்கையால் பலரை அவன் மன்னனுக்காகாதவர்கள் ஆக்கி விட்டான். இப்போது அவன் பிடிவாதம் அரசனையும் மிஞ்சித் தான் போகிறது. ஆனால், எவர் போக்குக்கும் விட்டுக்கொடுக்காத அரசன் அவனுக்கு விட்டுக் கொடுத்து வருகிறான். சரி இது கிடக்கட்டும். அவன் திசைக்கு நீ போக வேண்டாம். இப்போது நீ பசியாயிருக்கிறாய், இதோ இவற்றைச் சாப்பிடு” என்று தன் சட்டைப்பைகளில் கொண்டு வந்த தின்பண்டப் பெட்டியைத் திறந்து வைத்தான். சிறுவன் வேறொன்றும் பேசாமல் பசியார்வத்துடன் சிற்றுண்டிகளை எடுத்தருந்தினான். அப்போது அடிசிற் களத்தின் மேற்பார்வையாளன் அங்கே வந்தான். சமையற்காரன் அவனைச் சிறுவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். “ஸ்டானிஸ் லாஸ், இவன் ஒரு கலைஞன். ஆனால் மற்றக் கலைகளுடன் சமையல், சிற்றுண்டிக் கலைகளையும் கலந்து நம் போலந்து அரண்மனைச் சமையலுக்கே ஒரு புதுமை அளித்திருக்கிறான்.” சிறுவன்: சமையற் கலையில் மற்றக் கலைகளுக்கு இடமேது? இருந்தாலும் அத்திறத்தின் பயன் என்ன? மேற்பார்வையாளர் சிரித்துக்கொண்டு “நேரே பார்க்கும் வரை எல்லாரும் அப்படித்தான் கூறுவார்கள். என் கலையின் தன்மைகளில் சிறவற்றை இதோ பார்” என்று ஒரு புத்தகத்தை நீட்டினான். புத்தகத்தில் நிறையப் படங்கள் இருந்தன. சில சிற்றுண்டி களைப் பலவகையில் அடுக்கி வைக்கும் முறைகள், சில சிற்றுண்டி கள் செய்யுமுறை பற்றிய விளக்கங்கள். சிறுவன் கவனம் படங்களில் தான் பெரிதும் ஈடுபட்டது. “இதெல்லாம் சரி, அரண்மனையில் இது எவ்வகையில் பயன்படும்?” என்று கேட்டான். மேற்பார்வையாளன்: தின்பண்டங்களை அரசன் விரும்பும் பொருள்கள் வடிவில் செய்து உண்பதற்கு முன்பே அவரை உணவின் வடிவில் நான் மகிழ வைக்கிறேன். எடுத்துக்காட்டாக இன்று அரசன் விரும்பி வேட்டையாடும் கலைமான் திரியும் அடர்ந்த காட்டைச் சித்திரித்துக் காட்ட எண்ணியிருந்தேன். ஆனால், அரசன் செயற்கை ஊற்றுகளில் மிகுதி ஈடுபட்டிருப்பது கேட்டு இப்போது திட்டத்தை மாற்றிக் கொண்டுவிட்டேன். இன்று நீயும் என் மாலைக் கலைப் படைப்பைக் கண்ணாரக் காணலாம். மன்னனும் கோமாட்டியும் வந்த பின் யாவரும் உணவு மேடையைச் சுற்றிக் கூடினர். மேடையை மறைத்து மூடியிருந்த திரை விலக்கப்பட்டதும் அனைவருந் திகைத்தே போயினர். அளவிற் சிறிதாய்-ஆனால் உருவில் முற்றிலும் ஒரு சிறிய அரண்மனை முற்றத்தை ஒத்திருந்தது. உணவு மேடைக் காட்சி. தேனும் பாலும் பழச்சாறும் தனித்தனி நடுமையத்திருந்த ஓர் அணங்குருவத்தின் கைகளிலிருந்த சிறு குடங்களிலிருந்தும் அன்னங்களின் அலகுகளிலிருந்தும் வழிந்தோடின. கீழ் விழுந்த சாறுகள் அழகாக ஓடைகள் போல வளைந்து சென்று ஆங்காங்கே குளங்கள் போலும் ஏரிகள் போலும் அமைக்கப்பட்டிருந்த குடைவுகளைச் சென்று நிரப்பின. ஓடையின் திருப்பங்களிலும் ஆங்காங்கே உள்ள மேடுகளிலும் அழகிய கற்கண்டுச் சிலையுருவங் களும் பூந்தோட்டங்களும் வைக்கப் பட்டிருந்தன. மன்னனும் மற்றனைவரும் இக்கலைக் காட்சியைக் கண்டு வியந்தனர். ஒரு நாளைக்குள் உணவாக வயிற்றில் அடைபடும் பொருளிலா இத்தகைய கலைப் பண்பைச் செலவு செய்ய வேண்டும் என்று சிறுவன் எண்ணிக் கொண்டான். ஆனால், அவன் இதனை வெளியிட்டுச் சொல்லவில்லை. “உன் திறமைக்கு நீ வெர்செல்ஸ் அரண்மனையில் இருக்க வேண்டும்” என்றான். மேற்பார்வையாளன்: “உனக்கு இப்போது என்ன தெரியும் வெர்செல்ஸ் அரண்மனையின் கதைகள். அங்கேயாவது என் கலைப் படைப்பு அன்றன்றாட உணவில் அழிந்து விடுகிறது. அங்கே உணவுப் பொருள் விருந்தினர் உணவாகக்கூட ஆவதில்லை. உணவாக்காமல் பதுக்கி வைத்த உணவுப்பொருள், உண்பாருக்கு வழங்காமல் ஒதுக்கிவைத்த தின்பண்டங்கள், உணவு வாங்காமல் திருட்டுக் கணக்கில் மீத்துவைத்த பணம் எல்லாம் பணியாட்கள் கைப்பொருளாகின்றன. அங்கே என் கலைக்கு இடமில்லை. பொய்மை, வஞ்சகம் ஆகியவற்றுக்கே முதலிடம் அதைக் காண இங்குள்ள கவலையற்ற சோம்பல் வாழ்வுகூடக் கேடில்லை.” தான் உள்ளத்தில் எண்ணியதைக் கலைஞனும் எண்ணியது கண்டு சிறுவன் வியப்படைந்தான். ஆனால், அவன் அறியாத செய்திகளும் உலகில் பல நிகழ்கின்றன என்று உணரலானான். சமையல் துறையில் ஏற்பட்ட இவ்விரு நண்பர்களுமே போலந்து அரண்மனையில் ஆக்டேவ் மூரட்டுக்குக் கிட்டிய இரண்டு நண்பர்கள். வேறு யாவரும் அவனைக் கவனிக்கவில்லை. கோமாட்டியிடம் தொடக்க முதலே சிறுவன் மிகுதி ஈடுபாடு காட்டினான். ஆனால், அவள் அவனை விரும்பவோ, வெறுக்கவோ செய்யவில்லை. அவனைத் தன் மகனாக நடத்துவதை விட அயலானாக நடத்துவதிலேயே அவள் நாட்டங் கொண்டாள். இது அவனுக்கும் ஓரளவு பிடித்தமாகவே இருந்தது. கண்ட கண்டவரிடமெல்லாம் தொல்லையையே அனுபவித்து வந்த சிறுவனுக்குத் தொல்லை தராத தாய்கூட இனிய பண்புடைய தாயாகவே தோற்றினாள். இத்துடன் தாயின் கலைப் பண்பும் திறமையும் நயமிக்க வசைப் பேச்சுகளும் அவன் கலையார் வத்தைத் தூண்டி யெழுப்பின. மக்கள் உளப் பாங்கறிந்து அவள் உரையாடுவதையும், சூழலுக்கேற்ற வகையில் பிறரை நையாண்டி செய்து சிறுபாக்கள் இயற்றிச் சார்த்துக்கவி பாடுவதையும் அவன் உடனிருந்து கண்டும் கேட்டும் மகிழ்ந்தான். அவ்வப்போது அவன் உள்ளத்திலும் அதே போன்ற உரையாடல்களும் பாடல்களும் நிழலாடத் தொடங்கின. அவன் வாய் திறவாமலே உள்ளந் திறந்து இவற்றில் ஊடாடினான். இத்தகைய கனவார்வங்களைத் தூண்டிய அத்தாயின் வாழ்க்கையில் பிறர் காணக்கூடும் கோணல் மாணல்களும் குறைகளும் அவன் கண்ணில் படாததில் வியப்பில்லை. அவன் பெண்மை பற்றிய எந்த ஒழுக்க மரபைக் கொண்டும் தாயை அளவிட முனையவில்லை. உண்மையில் அவள் வாழ்க்கை மரபைக் கொண்டே அவள் பெண்மையை அளவிட்டான். அவ்வளவு முறையால் அவன் கண்டதெல்லாம் அவள் திறமையும் நயமும் மற்ற எப்பெண்டிரிடமும் காண முடியாத அருஞ் சிறப்புகள் என்பதே. தாயை அவன் உள்ளம் பாராட்டியது போலவே மன்னனையும் அவன் அமைதியான, தீம்பற்ற குறும்பு கலந்த அவன் இன்ப வாழ்வையும் பாராட்டிற்று. அவன் விருப்பு வெறுப்புகள் தாயைக் கவரவில்லை; ஆனால், அவன் உள்ளத்தின் பாராட்டு மன்னன் உள்ளத்திலும் நேசத்தை வளர்த்தது. மன்னனுக்கு இயற்கை வெளியின் காட்சிகளிலும் தோட்டம் துறவுகளிலும் ஈடுபாடு மிகுதி. ஆக்டேவ் மூரட் அவனிடம் அடிக்கடி சென்று அவ்வின்பத்தில் பங்கு கொண்டான். அத்துடன் மன்னனுக்கு விருப்பமான வேட்டை நாய்கள், செயற்கை நீரூற்றுகள் ஆகியவற்றில் சிறுவனுக்கும் விருப்பம் மிகுதி, மன்னன் தன் நீரூற்றைப் பிறர்கண்டு மகிழ்ந்து பாராட்டுவதில் சொக்குபவன். எனவே (ஆக்டேவ் மூரட்) அவன் அன்பிற்குப் பெரிதும் ஆளானான். வயது ஏறஏற, ஆக்டேவின் புறவாழ்வில் எத்தகைய மாறுதலும் ஏற்படாமல், அகவாழ்வு மட்டும் கலைப் பண்பு மிகுதியாகி வளர்ந்து வந்தது. இது அவன் பித்துக் கொள்ளித் தோற்றத்தை வளர்த்தது. அவன் மன்னவையில் எல்லாருடனும் நெருங்கிப் பழகாமல், சமையல்காரர் பணியாட்களுடனேயே பழகி வந்தான். அதேசமயம் அவன் மற்ற பணியாட்களைப் போல முற்றிலும் ஒதுங்கிவிடவும் இல்லை. உரையாடல் நெருக்கடி களினிடையில், உரையாடல் போக்கு மிகமிக மந்தமாயிருக்கும் சயமத்தில் அவன் சொல்லம்பு ஒன்று வந்து விழுந்து உயிர்ப்பும் கலகலப்பும் ஊட்டும்; அல்லது அவன் வசைப்பாட்டு ஒன்று குண்டு சிதறியது போல் சிதறி எல்லாரையும் அதிரவைக்கும். பொதுப்படப் பித்துக்கொள்ளி என்று கருதப்பட்ட அவன் இங்ஙனம் கலை, உரையாடல்களில் கலந்து தன்னைச் சூழத் தன் கலையார்வத்தில் அவாக் கொண்ட ஒரு சிறு சூழலையும் உண்டுபண்ணி வந்தான். அவன் இருதிற மயக்கமுடைய போக்குக் கண்டு கோமாட்டிக்கும் அரசனுக்கும் கவலை பிறந்தது. நன்மை எது, தீமை எது என்றறியாத போலந்து அரண்மனைச் சூழலிடையே கூட அவன் தீ நெறிப்பட்டு விடுவானோ என்ற பீதி ஏற்பட்டது. ஆயினும் கோயிலகத் துறவி ஒருவர் பேச்சில் அவன் அடிக்கடி ஈடுபடுவதை மன்னன் கவனித்தான். கோயிலகத் துறையில் அவன் உள் ஆர்வம் உடையவனாயிருக்கிறான் என்ற தப்பெண்ணம் காரணமாக, கோயிலகத் துறைக்கே அவனைப் பயிற்றுவித்து, அவனைக் கடைத்தேற்றுவிக்க அவர்கள் திருவுளங் கொண்டனர். 12. பாரிஸ் நோக்கி ஆக்டேவ் மூரட்டுக்குச் சமயத்துறைப் பயிற்சி அளிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மடத்துறவி அப்பே பார்க்கெட் என்பவர். அவர் பெயரளவில் தான் துறவியே தவிர, உண்மையில் மன்னனையும் மன்னவையையும் மகிழ்வித்துத் தம்மிடம் ஈடுபடுத்தப் போதிய கலைத் திறமும் உரையாடல் திறமும் உடையவர். கோமாட்டியைப் போலவே அவரும் இம்மெனுமுன் பாட்டுகள் கட்டிப் பிறரை மகிழ்விப்பார். ஆனால், அவர் பாடல்களில் வசைத் திறம் மிகுதி. அவ்வசை யெதிர்ப்புக்கு ஆளானது சமயமும் சமய நம்பிக்கைகளுமே. மன்னன் இவ்வசைத் திறத்தில் ஈடுபட்டு அவரைப் பாராட் டினான். அது ஒரு கலைப் போக்கு மட்டுமே என்றுதான் அரசன் நினைத்தான். அதுவே அவர் சமயம் பற்றிய கருத்து என அவன் எண்ணவில்லை. எண்ணியிருந்தான் அவரைச் சயமத்துறைக்காகப் பயிற்றுவிக்கப்பட வேண்டிய சிறுவனுக்கு ஆசிரியராக்கி யிருக்கமாட்டான். சமயம், வாழ்க்கை, இளமை ஆகியவை பற்றிய அப்பே பார்க்கெட்டின் கருத்துகளை அவரது கீழ்வரும் பாடல் எடுத்துக் காட்டுகிறது. எப்படியும் இன்பம், எப்படியும் களியாட்டம் இவையேஎன் வாழ்வின் எழிலார்ந்த தத்துவங்கள்! செப்பிடுமிவ் இன்பம் தெவிட்டுகின்ற அப்பொழுதே அப்பெரு வாழ்வில் வீண்பொழுதென் றறைந்திடுவேன்! இன்று கழிவதுபோல் என்றும் கழியுமென்றால் நன்றே இளமை கழிந்த தெனநான் மகிழ்வேன்; தப்பும் தவறும் எண்ணிக் கழிவிரக்கம் நான்கொள்ளேன்! சமயத்தைப் புறவேடமாகக் கொண்ட அரண்மனையின் இன்ப வாழ்வினர் அவர் சமயத்தைத் தாக்கி வசைபாடுவது கேட்டு மகிழ்ந்தனர். அதுவும் கலைமரபு சார்ந்த வேடமென்றே கொண்டனர். முதல் நாளிலேயே உணவு மேடையில் அவர் கடவுள் வணக்கம் செலுத்தும் பொறுப்புத் தரப்பட்டது. ஆனால், அவரோ “கடவுள் தரும் உணவை உண்பதைவிட உயர் வணக்கம் எதுவும் நான் அறியேன்” என்றார். இன்ப வாழ்வுப் போக்குக்கு அவர் தந்த புது விளக்கம் எல்லாருக்கும் பிடித்தமாகவே இருந்தது. அடிக்கடி “பைபிளையும் வழிபாட்டு ஏடுகளையும்விட எனக்கு வால்ட்டேரிடமே மிகுதி விருப்பம்” என்பார். இது அவர் காலத்துக்கேற்ற அறிவுத்திறம் என யாவரும் போற்றினர். நாள் முழுதும் இன்ப வாழ்வில் கழித்துவந்த அரசன் நாளிறுதியில் உறங்குமுன் விவிலிய நூலுரை கேட்டுத் தன் உள்ளார்ந்த சிறு பழி பாவங்களைக் கழுவிக்கொண்டு விடுவதுண்டு. அப்பே பார்க்கெட் ஒரு நாள் இங்ஙனம் விவிலிய நூல் வாசிக்கும் பணி தரப்பட்டார். அன்று துறவியும் தம் சமயக் கட்டுப்பாடுகளெல்லாம் துறந்து நன்கு உண்டு குடித்துக் குடிமயக்கத்தில் பாதியும் சோர்வு காரணமான உறக்க மயக்கத்திலும் ஆழ்ந்திருந்தார். அவர் கண்முன் விவிலிய நூலின் எழுத்துகள் கூளிகளாகவும் குறளிகளாகவும் துள்ளிக் குதித்தாடின. ஆகவே, “கடவுள் கனவில் பிறங்கும் ஒளி உருவுடன் யாக்கோபின் முன் தோன்றினார்” என்று வாசிக்குமிடத்தில் ‘கடவுள் கவின் மிக்க குரங்குருவுடன் யாக்கோபின் முன்வந்து தோன்றினார்’ என்று படித்தார். அரைக் குடிமயக்கத்தில்கூட அரசனுக்கு இது பொருத்தமற்ற வாசகம் என் தோன்றிற்று. “என்ன அடிகளே, கடவுள் குரங்காகவோ தோன்றினார்?” என்று கேட்டான். “ஆம் அரசே, கடவுள் எல்லா வடிவிலும் தோன்றுவார். விரும்புவார் விரும்பும் வடிவிலெல்லாம் விளங்குவான் எம் மெய் இறைவன்” என்று துறவி விளக்கம் தந்தார்! கோமாட்டியிடம் அப்பே பார்க்கெட் எப்போதும் காதல் துறை சார்ந்த உவமைகளிலும் நயநுட்பங்களிலுமே ஊடாடினார். அவள் அவர் துறவி என்பதைக் கூட மறந்து அவருடன் காதல் விளையாடல்கள் விளையாடினாள்! யார் யார் எத்தகையவர் என்றறிந்து அவ்வவர்க்கேற்ற உருவும் பண்பும் உடையவராய், ஒரு புதுமைக் கண்ணனாய்ப் பார்க்கெட் அரண்மனை வாழ்வில் உலவினார். ஆக்டேவ் மூரட் தாயிடமிருந்தும் மன்னரிட மிருந்தும் பெற்ற வாழ்க்கைத் தத்துவம் இத்துறவிக் கோலம் பூண்ட கலைப் பேரரசன் ஒண் கலையால் உறுதிப்பட்டது. இன்ப வாழ்வு முற்றிலும் தெவிட்டாமலிருக்க இடையிடையே வழங்க வேண்டிய காரம்தான் சமயம் என்ற எண்ணமே அவனுக்கு ஏற்பட்டதில் வியப்பில்லை. அரண்மனை வாழ்வு, அன்னை, மன்னன், அப்பே பார்க்கெட் ஆகிய இத்தனை சூழல்களிலிருந்தும் ஆக்டேவ் மூரட் பல பாடங்களும் பல திறங்களும் பெற்றான். ஆனால், அவன் உள்ளார்ந்த இளமைத் துடிப்பு எதனாலும் பண்படவில்லை. அத்துடன் பார்க்கெட்டிடமிருந்து அவன் சமய எதிர்ப்பை மட்டுமே கற்றான். அவர் சமயப்புற வேடத்தை அவன் கற்றுக் கொள்ள வில்லை. அரண்மனை வாழ்விலிருந்து அவன் காதல் பசப்பைக் கற்றுக் கொண்டான். ஆனால், அவன் உள்ளம் அது இன்னதென்றறியாமல், அதனை ஒரு விளையாட்டுப் பொழுது போக்காக மட்டுமே கொண்டது. இசை, நாடகம், கூத்துகள் ஆகியவற்றுடன் அதுவும் ஒரு பொழுதுபோக்கு என்றே அவன் எண்ணினான். இத்தனையையும் கடந்து அவன் சூழலில் எவரிடமும் இல்லாத ஒரு சமயப் பண்பு மட்டும் அவனிடம் குடிகொண்டிருந்தது. அவன் உள்ளம் அன்பின் கவர்ச்சி நாடிற்று. மக்கள் யாவரும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் அவனிடம் ஊறித் ததும்பிற்று. அன்னையின் பாடல்களிலும் துறவியின் வசைப்பாக்களிலும் காணமுடியாத ஓர் உயர் ஒளிக் கவர்ச்சியை இது அவன் உரையாடல்களுக்கும் பாடல்களுக்கும் தந்து பொதுமக்களை அவனிடம் பெரிதும் ஈடுபடுத்தின. அவனும் பெரு மக்களிடையே ஒரு கோமாளியாகவும் பொது மக்களிடயே ஒரு சிறு தெய்வமாகவும் ஊடாடினான். கேலி, களியாட்டங் களிடையே அவன் உணவற்றோருக்கு உணவு தேடியளித்தான். இன்னற் பட்டோருக்கு ஆறுதலுரை யளித்துத் தேற்றுவித்தான். ஆக்டேவ் மூரட்டுக்கு 18 ஆண்டானபோது மன்னன் ஸ்டானிஸ் லாஸ் தன் பெயர் கொண்ட இச்சிறுவனுக்கு இரண்டு சிறு பண்ணைகளை அளித்தான். மன்னனை ஆட்டி வைத்த கோமாட்டி, என்றும் மன்னனிடம் தனக்கென எதுவும் குறையிருந்ததில்லை. மன்னனுடைமைகளையே அவள் தன்னுடமைகளாக உரிமையுடன் ஆண்டு வந்ததால் அவளுக்குத் தனிப்பட எதுவும் கொடுக்க அவனுக்கு வாய்ப்பு ஏற்படவுமில்லை. எனவேதான் அவளுரிமை எண்ணி அவள் சிறுவனுக்கு அரசன் இவற்றை அளித்தான். இவ்வுடைமைகள் மூரட்டின் உள்ளார்ந்த செல்வப் பற்றின்மை, அருட்பணி இயல்புகள் ஆகியவற்றை வெளிக்கொணர உதவின. அவன் தன் செல்வத்தைத் தன் பணியாட்கள் நலனுக்கென ஒதுக்கி, தன் நாடோடி வாழ்வுக்கும் தன் திருத்தொண்டுகளுக்கும் வேண்டிய சிறு தொகையே எடுத்துக் கொண்டான். அவன் ஏழ்மைத் தோற்றம் சிறிதும் அகலவில்லை; அவன் ஏழ்மை மனப்பான்மை தான் அகன்றது. அவன் கலை வளர்ந்தது; அவன் வள்ளன்மை பெருகிற்று. உயர் வகுப்பாரிடை யேயும் விகடகவி என்ற அவன் நிலை சிறிது உறுதிப்பட்டது. அவன் பாக்கள் உயர்குடி மக்களிடையே வாயுரையாக எங்கும் பரந்தன. பாரிஸ் அரண்மனையில்கூட அவை பாடிப் பரவப்பட்டன. விவிலிய நூற்கதைகள், கருத்துகள், சமயப் பாடல்கள் அவன் கைபட்டுத் திரிந்து உருமாறித் தவித்தன. எல்லாம் காதல், பெண்டிர் பகட்டாரவாரம், விடுதலை, களியாட்டம், கூத்து மயமாக மிளிர்ந்தன, துறவிகள், சமயத் துறையினர் பலரிடையே கூட இவை உள்ளூரப் பாராட்டும் ஆதரவும் பெற்றன! நான்ஸி யிலுள்ள ஒரு கலைக்கழகம் அவனை வெளிப் படையாகப் பாராட்டித் தம் கழக உறுப்பினர் உரிமை தந்து பெருமைப் படுத்திற்று. வசை தேர்ந்த அவன் கலைப் புகழ் உலகில் பரந்தது. அதே சமயம் அவன் சமயப் பயிற்சியும் நிறைவுற்றதாக அப்பே பார்க்கெட் அறிவித்தார். கோமாட்டி அவனைப் பாரிஸுக்கு அனுப்பி அங்குள்ள மடங்கள் ஒன்றில் மேற்பயிற்சி பெற்று உறுப்பினராக்க எண்ணங் கொண்டாள். இதில் அவன் படித்தரத்தை உயர்த்தவே அவனுக்குப் பண்ணை நிலங்களும் தரப்பட்டன. ஆனால், ஆக்டேவ் மூரட்டுக்குப் போலந்தில் இன்ப வாழ்வை விட்டுப் பாரிஸுக்குப் போக விரும்பவில்லை. அவன் முதல் தடவையாகத் தன் தாயிடம் மன்றாடினான். “அம்மா! எனக்குச் சமயத்துறையே பிடிக்கவில்லை. அதைத் தான் உங்களுக்காக ஏற்க வேண்டுமானால், போலந்திலேயே ஒரு பணியில் அமர்த்தலாமே. நீங்கள் உங்கள் வாழ்நாளெல்லாம் மனநிறைவுடன் இங்கேயே கழித்திருக்கிறீர்கள். எனக்கும் இது போதும், பாரிஸ் எதற்கு? ” என்று அவன் வாதாடினான். கோமாட்டிக்குக் கூட இப்பொழுது அவன்மீது சிறிது கனிவு தோன்றிற்று. ஆனால், அவள் உறுதி மாறவில்லை. “தம்பி, சமயத் துறையை நாங்கள் உனக்கு ஒரு பிழைப்பாகக் கருதவில்லை. உன் அறிவு சுடர்விட்டு ஒளிர அது நல்ல இடம். பாரிஸ்தான் அதற்கு ஏற்ற இடம். பாரிஸ்தான் உலகின் உச்சி; உண்மையான உலகம். உன் பாட்டி, முப்பாட்டி, என் சிற்றன்னை, அத்தை யாவரும் அங்கேதான் புகழ்பட வாழ்ந்துள்ளார்கள். நான் போலந்தில் வாழ்ந்தேனென்றால். அது நம் மரபில் ஒரு கறை மட்டுமே. பாரிஸில் என் ஆட்சிக்குப் போட்டியுண்டு. இங்கே போட்டியற்ற ஆட்சி கிடைத்தது-தங்கினேன். ஆனால், நீ இளைஞன்; உன் எதிர்காலம் பாரிஸில்தான் இருக்கமுடியும். வாழ்வின் ஓய்வுக் காலத்தில் வேண்டு மானால் நீ இங்கே வரலாம். அதற்காகவே உனக்குப் பண்ணைகள் அளிக்கும்படி அரசனைத் தூண்டினேன்” என்றாள் அவள். தாயிடம் அவனுக்கு எப்போதுமே நேசமும் பெருமையும் உண்டு. ஆனால், தாய் தன்னிடம் நேசம் காட்டியதை அவன் அன்றுதான் கண்டான். “எனக்குப் பெருவாழ்வு வேண்டாம். இங்குள்ள இன்ப வாழ்வே போதும” என்றான் ஆக்டேவ் மூரட் கண்ணீருடன். “தாய் தந்தையர் அங்ஙனம் விரும்ப முடியாது ஸ்தானி! மேலும் பாரிஸ் என்றால் இன்பம். நீ பாரிஸின் இன்பக் கதிரொளியைக் கண்டால், இங்குள்ள இன்பங்கள் யாவும் நிலவொளியாகவும் மின்னொளியாகவும் மங்கி மறையும். போ, என் சொல்லைத் தட்டாதே” என்று பெருமிதத்துடன் ஆணை யிட்டாள் அன்னை. வேறு போக்கில்லாமல், கால் முன்னிழுக்க, உள்ளம் பின்னிழுக்க, பாரிஸ் நோக்கிப் பயணப்பட்டான் இளைஞன். 13. துறவியர் மடம் ஆக்டேவ் மூரட் ஸென்ட் ஸல்பிஸ் துறவியர் மடத்தில் ஓர் உறுப்பினராய்ச் சேர்க்கப்பட்டபோது அவனுக்கு 24 ஆண்டுப் பருவம். லாரைன் இன்னும் சிராம்மோன் ஆகாமல் 13 வயதுக் கன்னிப் பெண்ணாய்த் தாய்மைக் கன்னிமாடத்தில் பயின்று வந்தாள். இரண்டு சமய நிலையங்களும் அருகேதாமிருந்தன. துறவியர் மடத்தில் ஆக்டேவ் மூரட் இரண்டாண்டுகள் கழித்தான். “சீறும் பகைமைகள், இருள் நிறைந்த பொறாமை உள்ளங்கள், வஞ்சகச் சூழ்ச்சி வலைகள் இவை மற்றப் பொது மக்களிடையே காணப் பெறுவதை விட சமயத்துறைவரிடமும் எவ்வளவோ மிகுதியாக விளங்குகின்றன” என்ற ஆக்டேவின் முடிவு ஸென்ட் ஸல்பிஸ் துறவிமாடத்திலுள்ள அவர் அனுபங் களைக் குறித்துக் காட்டுகின்றன. துறவிகளிடையேயுள்ள முக்கிய கட்சி வேறுபாடு முதியோர், இளைஞர் என்பதே. இரு சாராரிடையிலுள்ள உள்ளார்ந்த சமயப் பற்றோ நல்லுள்ளமோ சிறிதும் கிடையாது. இளைஞர் போக்கில் ஐயம், ஆவர்கள் களியாட்டங்களில் கண்டனம், அவர்கள் இன்ப ஆர்வம் கண்டு புழுக்கம், அவர்கள் நற்பெயர், செல்வாக்குப் பெறாமல் தடுக்கும் உறுதி ஆகிய இவையே முதியோரின் ஓய்வு ஒழிவற்ற வாழ்க்கைப் பண்புகளாக யிருந்தன. சிறு குறும்புகள், பேரச்சம், இவற்றுள் கரந்து பேரவா ஆகியவை இளைஞர் பண்புகளாயிருந்தன. இவ்விரு சாராரையும் சாராமல் இருந்தவன் திருத்தந்தை டூர்னிக்கெட். அவன் நடுத்தர வயதுடைய வனாயினும் இளைஞரிடம் பொறாமை கொள்ளவில்லை. அதே சமயம் இளைஞரிடம் உள்ள பேரவாவும் குறும்புகளும் அவனைத் தீண்டவில்லை. துறவு வாழ்வு மேற்கொண்டவரிடையே விவிலிய நூலை ஆர்வத்துடன் கற்று அதன் உரைகளை உணர்ச்சியுடன் உருப்பண்ணிக் குடித்தவன் அவன் ஒருவனே ஆக்டேவ் மூரட்டிடம் பரிவும் நேசமும் காட்டியவனும் அவன் ஒருவனாகவே அமைந்தான். அவன் சமயப்பற்று, அவன் நகைச்சுவை, அவன் கலையார்வம் ஆகியவற்றைத் தடுக்கவில்லை. மடத்தலைவன் திரு. குத்தூரியர் ஒருநாள் தன் துறவியர் குழாத்தினரனைவரையும் ஒரு திருக்கூட்டமாகக் கூட்டும்படி பணியிட்டிருந்தான். மடத்தைச் சார்ந்த ஏதோ முக்கிய செய்தி அலசியாராயப்படவிருந்த தென்பது அத்துறவியரின் பர பரப்பிலும் முணுமுணுப்புகளிலும் தெளிவாக விளங்கின. அவர்கள் கண்கள் அடிக்கடி ஆக்டேவ் மூரட்டைக் குறி பார்த்தன. மூரட் அருகிலேயே இடித்துக் கொண்டுவந்த முது துறவி ஒருவர் “அப்பனே! உன் முகமெல்லாம் கரி; உன் கைவிரல் களிலெல்லாம் இப்படி மையாயிருக்கிறதே?” என்று கடுப்புடன் கேட்டார். மை எழுத்தாண்மையின் அறிகுறி. துறவிகளுக்கு ஐயத்தையும் கசப்பையும் வளர்க்க எழுத்தாண்மையைவிட வேறு எதுவும் வேண்டாம். மூரட் மீது அவர் தோழர்கள் பெருமுயற்சி யுடன் உருவாக்கிவந்த குற்றச்சாட்டு அவர் எழுத்தாண்மை சார்ந்ததாகவே இருந்தது. எல்லாரும் வந்து கூடியாய்விட்டது. தலைமையிருக்கையில் மடத் தலைவர் அமர்ந்திருந்தார். முணுமுணுப்பெல்லாம் அடங்கி எல்லாரும் சந்தடியின்றி அவரையே நோக்கினர். அமைதிக்கு முற்றுப்புள்ளியிட்டு அவர் எழுந்து பேசலானார். “தோழர்களே! நம் அன்பர் அப்பே ஆக்டேவ் மூரட் நம் எச்சரிக்கைகளை மீறித் தூய தாளில் மீண்டும் அழுக்கு மை கொட்டி வருகிறதாக அறிகிறோம்” என்று அவர் தொடங் கினார். மூரட் அவரை நிமிர்ந்து நோக்கினான். அவரோ “தாங்கள் இப்போது பேச வேண்டாம். சிறிது பொறுத்திருங்கள்” என்று அமைத்துவிட்டு மீண்டும் “இச் செய்தி பற்றி இன்று இக்கூட்டத் தில் முடிவு செய்த பின், நாம் அனைவரும் கை கால்களைத் தேய்ப்புத் தாளும் கல்லுமிட்டுக் கழுவித் தூயநிலையிலேயே நம் பணியில் மீண்டும் ஈடுபடுவோமாக” என்றார். குற்றச்சாட்டில் ஆக்டேவ் மூரட் எழுத்தாண்மைத் திறம், அவர் நகைத்திறக் குறும்புகள், நடிப்புத்திறம், தோற்ற நடை யுடையாவும் வகுத்தாராயப்பட்டன. “விலங்கு, பறவைகள் குரலோசைகளைக் கூடச் செய்து காட்டுவதில் நம் மூரட் திறமையுடைவர். ‘கோழி இரு தடவை கூவுமுன் நீ மூன்று தடவை என்னை மறுத்துக் கூறுவாய்’ என்று தூய திரு. பீட்டரிடம் இயேசு கூறினாரல்லவா? அந்நிகழ்ச்சியை நான் விரித்துரைக்கும் போது, அதற்குச் செவிப்புலச் சான்று விளக்கமாக மூரட் கோழியாகக் கூவி என் பேச்சுக்கு நாடகப் பண்பு ஊட்டினார்” என்றார் ஒருவர். தூர்னிக்கட்டால் இது கேட்டு விலாப்புடைக்க நகைக்காம லிருக்க முடியவில்லை. தலைவர் எச்சரிக்கைகூடச் சிரிப்பை அடக்க உதவவில்லை. அவர் அமைந்தாலும் அவர் முகமும் உடலும் அமைய மறுத்துக் கலகலத்து நகைப்பில் குலுங்கின. தலைவர் சீற்றம் இதனால் மிகுந்தது. அப்படியும் பக்கத்திலிருந்த தோழர் ஒருவர் தந்த மூக்குத்துளை நிரம்ப இழுத்து மூளைக்கு வேறு திசையில் கவனமூட்டிய பின்பே அவர் சிரிப்பு அடங்கிற்று. தலைவர் யாவரையும் கையுயர்த்தி எச்சரித்து விட்டு குற்றப் பத்திரிகை வாசித்தார். “திரு அப்பே ஆக்டேவ் மூரட் இன்ப நாட்டமுடையவ ராயிருக்கிறார். அவர் பேச்சும் எழுத்தும் பிறருக்கு இன்பமூட்டும் தன்மையுடையவையாகவே இருக்கின்றன. இவை ஒரு மடத்துக்கு உகந்தவையா? ஒரு துறவிக்குப் பெருமை தருபவையா? நம் மடத்துக் கட்டுப்பாடுகள் அவர் ஆர்வங்களை அடக்க முடிய வில்லை. அவை அதை இன்னும் தீட்டிப் பளபளப்பாக்குகின்றன. அவர் துறவியர் பணிக்கு ஏற்றவரல்லவர் என்றே நான் எண்ணுகிறேன்.” “இது அவரே அறிந்து ஒத்துக்கொள்ளும் செய்தியாயிற்றே! ஆயிரம் தடவை அவர் கூறியிருக்கிறார் இதை. மேலும் மனத்திலுள்ளதை வெளியிடும் வாய்மையை ஒழித்துப் பொய்மை நடிப்பதிலும் மாள்வதே மேலானது என்னும் அவர்தம் கொள்கையை வலியுறுத்தியுள்ளார். ஆகவே, இது அவர் குற்றமோ. அவர்மீது குற்றச்சாட்டோ ஆகாது. அவரை ஏற்றுக் கொண்ட நம் குற்றமும் நம்மீதுள்ள குற்றச்சாட்டுமே ஆகும்” என்றார் தூர்னிக்கட். தலைவர் குத்தூரியர் அவரை மீண்டும தடுத்துத் தொடர்ந்து பேசினார். “ஆம்! அவரே ஒத்துக் கொள்கிறார். இது குற்றச்சாட்டை உறுதிப் படுத்துகிறது. நம் குற்றச்சாட்டைப் பற்றி அவரே தம் ஆசிரியர் அப்பே பார்க்கட்டுக்கு எழுதுகிறார்; நான் அனைவராலும் குற்றம் சாட்டப்படுகிறேன் - குற்றச்சாட்டும் நேர்மையற்றதன்று என்று, தாய்க்கு எழுதும் கடிதத்திலோ ‘இங்கே அழகுடைய பொருள்களுக்குக் குறைவில்லை - அழகுடைய சிறுமிகள் பலர். எதைப்பற்றியும் நான் கவிதை எழுதத் தவறுவதில்லை - எல்லாரையும் காதலிக்கிறேன் யாரைக் காதலிப்பது, யாரைக் காதலிக்காமலிருப்பது என்று வேற்றுமைப் படுத்த முடியாததனால்!’ என்று எழுதுகிறார். அன்னையிடம் கூட இவர் வேறு செய்திகள் எழுதமுடியவில்லை” என்றார் தலைவர். குற்றச்சாட்டு யாவராலும் ஆதரிக்கப்பட்டது. ஆனால், அவர் போலந்து அரண்மனைச் சிறுவராதலால், அவரைத் தாமாக நீக்கி, அரசர் பகைமையை வாங்கிக் கொள்ள மடத்துத் துறவிகள் துணியவில்லை. அவரைக் கொண்டே அதைவிட்டுச் செல்ல இணக்கம் பெறுவிப்பதென்று அவர் முடிவு செய்தனர். இம் முடிவைத் தெரிவிக்கும்படி ஆக்டேவ் மூரட் அழைத்துவரப் பணிக்கப் பெற்றார். மூரட் அச்சமயம் ஃபிரஞ்சு நாடு மன்னவையிலுள்ள தம் அத்தைக்குக் கடிதம் வரைந்து கொண்டிருந்தார். அழைப்புக் கொண்டு வந்தவனிடம் “இதோ வருகிறேன் என்று சொல்” என்று கூறியவராய் மீண்டும் கடிதத்தில் ஆழ்ந்துவிட்டார். காத்திருந்த துறவியர் கூட்டம் கலைந்தது. பின் வழிபாட்டு நேரம் வந்தது. அதற்கான மணி அடித்தது. யாவரும் தொழுகை மேடை சுற்றிக் கூடினர். மூரட் கடிதம் அப்போது முடிவுபெறவில்லை. தொழுகையின் அவரச மணிகூட அக்கடிதத்தின் ஒரு நகையாடற் குறிப்பாயிற்று. “இக்கடிதத்தை இன்னும் நீட்டிக்க முடியவில்லை. அதோ கடவுள் தொழுகை மணியடித்து அழைக்கிறார். இங்கே ஓயாது தொழுகை மீது தொழுகையாய், தொழுகையே தொழிலாய் இருக்கிறது. கடவுள் ஒரு கலைஞராயிருந்தால்., அவர்கூடச் சலிப்புத் தட்டாமல் எப்படி ஓயாது ஏன் ஏன் என்று அடியார் வழிபாட்டுக்கே மறுமொழி கொடுத்துக் கொண்டிருக்க முடியுமோ தெரியவில்லை... இன்று தங்களால் - தங்களுக்குக் கடிதம் எழுதுவதால் கடவுள் அழைப்பை இரண்டு தடவை புறக்கணிக்க வேண்டியதாயிற்று. வானுலகில் கடவுள் என்மீது குற்றம் சாட்டினால், நான் பொறுப்பை உங்கள் மீது தான் போடவேண்டி வரும்.” துறவியர் கூட்டத்தின் முடிவு மாலையில் ஆக்டேவ் மூரட் காதுக் கெட்டியது. துறவிகளுக்கோ, தாய் தந்தையார்களுக்கோ எத்தகைய பொறுப்புமில்லாமல், தானே துறவி மடத்தின் கட்டுப்பாடுகளை ஒரேயடியாக மீறுவதென்று அவன் துணிந்தான். பார்க்கெட்டுக்கு அவன் தன் உறுதியைத் தெரிவித்து ஒரு நீண்ட கடிதம் எழுதினான். தன் நண்பர் டுர்னிகெட்டுக்கு அன்பு கனிந்த ஒரு குறிப்பை எழுதி வைத்தான். பின் தன் இன்றியமையாப் பொருள்களைக் கட்டி யெடுத்துக் கொண்டு, துறவியுடை நீத்துப் பொதுவுடையில் உலவச் செல்பவன்போலப் புலர் காலையில் எழுந்து சென்றான். வழக்கமாக அவன் இவ்வாறு சென்று ஏழையருடன் ஊடாடுவதும், நாட்டுப்புற நங்கையருடன் களியாடுவதும் வழக்கம். ஆகவே, யாரும் அவனை அச்சமயம் கண்டிருந்தாலும் அவன் புதிய முடிவை உணர்ந்திருக்க முடியாது. பாலும் பதநீரும் விற்கும் சிறுமி ஒருத்திமீது அவன் வெளிச் செல்லும் வேகத்தில் மோதிக் கொண்டான். “பால் சிந்திவிட்டதா? அது பற்றிக் கவலைப் படாதே. சிந்தியதற்கு மேல் பணம் தந்து விடுகிறேன்!” என்றான் மூரட். மூரட்டின் நற்பணிகளையும் நற்பண்பையும் அங்கே அறியாதவர் கிடையாது. அவள் புன்முறுவலுடன், “தங்கள் பணம் தங்களிடம் இருந்தால், என்னிடமிருப்பது போலத்தான். என் பெயர் கூறிச் செலவு செய்யுங்கள்” என்று கூறியகன்றாள். அவள் அவன் மறு மொழிக்குக் கூடக் காத்திராமல் பாடிக் கொண்டே சென்றாள். “பாவம். நல்ல ஆள்தான். சிறிது பைத்தியம்” என்று சிறுமி முனகிக் கொண்டு போனாள். அன்று மூரட்டுக்கும் கவிதைப் பைத்தியம் உச்ச நிலைக்குச் சென்றது. உறவும் பொறுப்பும் புறக்கணித்தே உதவா பொய்மூட்டைகள் வீசிஎறிந்தேன்; இறைவா! பொய்மை மரபின்றேல் நரக கதியெனில், அது ஏற்பேன்! வாழ்வின் இன்பம் நான் துய்ப்பேன் அது பழியாம் எனின், அது பழியாகுக, துறவோர் மரபு தொலைத்திட்டேன் துளங்கும் அதன்புகழ் பிறர்க்காகுக, துறவின் துறவே எனக்காகுக. என்று அவன் பாடிக் கொண்டு சென்றான். அவன் போனது பற்றி மடத்துறவியர் கழிவிரக்கம் கொள்ள வேயில்லை. அவன் மடத்திலிருக்கையில் புனைபெயருடன் எழுதிய “கோலகொண்டா அரசி, அலைன்” வால்ட்டேரால் கூடப் புகழப்பெற்றது. அதன் ஆசிரியர் மூரட்தான் என்று அரண்மனை யெங்கும் தெரிந்துவிட்டது. உலகம் புனைகதை எழுதிய துறவியைப் புகழ்ந்தது. ஆனால், துறவி மடம் இப்பாராட்டைக் கண்டனமாகக் கருதியது. தம் மடத்தின் பெயருடன் அவன் தொடர்பறுந்ததே நல்லது என்று கருதி அவர்கள் நீண்ட பெருமூச்சு விட்டனர். 14. லக்ஸம்பர்க் கோமகன் அப்பே ஆக்டேவ் மூரட் இப்போது அப்பே (துறவித் தந்தை) ஆகவில்லை. அவன் உடலில் பழைய தட்டுத் தடங்கலற்ற துடிப்பும் இயற்கை ஊக்கமும் பரந்தன. அவன் நடை உடை தோற்றம் எப்போதும் போலவே அசட்டைத் தன்மை வாய்ந் தாயினும், மடத்தின் கட்டுப்பாடும் பருவத்தின் இயல்பும் தம் வேலையை ஓரளவு செய்திருந்தன. அவன் தோற்றத்தில் இப்போது அசட்டைத்தனம் இருந்தது - ஆனால், அது அருவருப்பும் ஊட்டத் தக்கதாகவே இருந்தது. உயர்குடி மக்களிடையேயுள்ள மரபுகளில் சில அவன் இயற்கை யோடியற்கையாகப் படிந்துவிட்டன. அவ்வப்போது உரையாடல் மேடையில் அவன் திடுமெனப் பேச்சை நிறுத்தித் தூங்கி விடுவான். அவனிடமிருந்து நீக்க முடியாத பழைய கெட்ட பழக்கம் இதுவொன்றே. ஆனால், இதுகூட எவர் வெறுப்பையும் தூண்டவில்லை. ஏனெனில், அத்தூக்கத்திலிருந்து அவன் எதிர்பாராது எழுந்ததும், தூக்கத்துக்கும் சேர்த்து வட்டியுடன் ஏதாவது நகைத் திறமுடைய துணுக்கு, குறும்புமிக்க வசை அல்லது இயற்கை வாய்மையுடைய கவிதை ஆகியவற்றை வாரிக் கொட்டுவான். அவன் வழக்கம் போலப் பொதுமக்களிடையே எதிர்பாரா நண்பனாகவும் இன்னருட் குறும்புத் தெய்வமாகவும் உலவினான். ஆனால், அதே சமயம் உயர்குடியினரிடையிலும் அவன் ஒரு நல்ல பொழுது போக்குக் கவிஞனாய், விகடகவியாய் விளங்கினான். அவன் பல இடங்களிலும் சுற்றித்திரிந்து இப்போது பாரிஸ் வந்து தன் அத்தை லக்ஸம்பர்க் கோமகளில்லத்தில் தங்கினான். லக்ஸம்பர்க் கோமகள் பாரிஸின் காதலரசியாக இருந்த காலம் ஒன்று உண்டு. அப்போது அவள் உயர்குடியினரால் மதிப்பும் பெற்றதில்லை. உயர்குடி இளைஞரை மட்டுமே அவள் கவர முடிந்தது. அவள் பகட்டு வாழ்வு இளமையின் எல்லை தாண்டவில்லை. ஆனால், இப்போது இளமையின் இயற்கை யெல்லையை அணுகுந்தோறும், அவள் காதலரசியாக மட்டுமிராமல், கலையரசியாகவும், பண்பரசியாகவும் உருமாறி வந்தாள். அவள் இன்னும் பேரழகுயுடையவளாகவே இருந்தாள். அவள் செல்வமும் அனுபவமும் உயர்குடியினர் மதிப்பை விலைபெற்றன. பொது மக்களையும் அவள் வாழ்க்கை மாறுதல் வயப்படுத்திற்று. அவள் ஞாயிறு தவறாமல் திருக்கோயில் சென்று மண்டியிட்டு வழிபாடாற்றத் தொடங்கினாள். வழியில் ஏழையரிடம் பரிவு காட்டிப் பெரும்பண்பின் மதிப்புப் பெற்றாள். அவள் இல்லத்தில் நாள்தோறும் வந்து குழுமும் இரவலர்களுக்கு அவள் தன் நீண்ட பிரம்பின் நுனியால் வெள்ளி பொன் நாணயங்கள் வழங்கி வள்ளன்மை உரிமை கோரினாள். இப்புது முறைகளுக்கேற்ப அவள் தோழமையும் இளங் காதலருக்குக் கட்டுப்பட்டிராமல், சீமான்கள், சீமாட்டிகள், கலைஞர், கற்றோர் ஆகியவரை உட்படுத்திற்று. கோமகள் மாறிய வாழ்வுக்குக் கவிதையஞ் செல்வன் ஆக்டேவ் மூரட்டின் வருகை எல்லா வகையிலும் பொருத்த மாயிருந்தது. காதல், கவிதை, பெருமிதம், வசை, ஓசைத்திறம் ஆகியவற்றின் ஒரு கூட்டாக விளங்கிய அவள் வாழ்வு அதே பண்புகளை யவாவிய கோமான் வாழ்விற் பதித்த ஒரு முத்தாயிற்று. அவ்வாழ்வின் பல்வண்ண மணி ஒளிகளிடையே அதன் தூய வெண்ணகை முறுவலித்து முகிழ்ந்தது. இயற்கையின் அழகிடையே பலவண்ணப் புதுமைகள் திரைநீக்கி இடையிடையே தலைகாட்டுவதுண்டு. வாழ்க்கையின் செயற்கை வனப்பினிடையே இத்தகைய புது வண்ணங்கள் மறைந்து நின்று நகையாடும். மூரட்டின் அரைத் துயில் கனவுகள் இவற்றைத் தம் அகக் கண்ணால் கண்டு தம் மின்னற்கலை யுரைகளால் தீட்டிக் காட்டும். மயிலென நடந்து திரியும் மாதர் இடுப்பகலத்தை மிகைபடுத்திக் காட்டும் உட்கட்டு வைத்த கச்சைகளின் ஊசலாட்டமும், ஆடலிடையே வெளிப்பட்டு மின்னும் செம்பஞ்சுக் குழம்பூட்டிய அவர்களது செஞ்செவேலன்ன சிவந்த உள்ளங் கால்களும், எல்லாரிடமும் ஒப்புரவுடன் ஊடாடுவது போலப் பாவித்து உண்மையில் தம் காதலியர் திசையிலேயே அடிக்கடி நடமாடும் ஆடவர் கண்ணோக்கையும், மறைப்பது போலப் பாவித்து யாவருக்கும் தம் ஐவிரல்களிலும் நிறைந்த மோதிர வரிசையைக் காட்டும் செல்வர் திறமை நயமும் யாவும் மூரட்டின் கவிதையுள்ளத்தில் படம்பிடித்து அவ்வப் போது அவன் பாடல்களில் காட்டப்பட்டன. பாரிஸின் காதல், வீரம், கலை ஆகியவற்றின் முக்கூட்டமாக அவன் விளங்கினான். கோமகள் இல்லத்தின் விருந்தினரைப் போலல்லாமல், எப்போதும் அவளுடனே இருந்து அவன் இல்லத்தை ஆட்கொண்ட ஓர் உயிர் உண்டு. அதுவும் ஒரு பெருமாட்டி போலவே நடத்தப் பட்டது. பெருமாட்டி பிரில்லன்ட் என்றே அது அழைக்கப் பட்டது. ஆனால், உண்மையில் அது பெருமாட்டியல்ல, ஒரு பூனை மட்டுமே. கோமகளின் கலைவாழ்வுக்குப் பெருமாட்டி பிரில்லன்ட் ஒரு முத்தாய்ப்பு. கோமகள் விருந்தினரைச் சென்று வரவேற்பாள். அவர்களுடன் ஊடாடுவாள். பெருமாட்டி பிரில்லன்ட் இருந்த இடத்திலிருந்துதான் எல்லாரையும் வரவேற்பது. அவள் பேச்செல்லாம் சிறிது தலையசைவு, கண்ணைப் பாதி திறத்தல், அவ்வப்போது அமைந்த ஆனால், பல பொருள் பொதிந்த பார்வைகள் ஆகியவற்றினுள்ளே அடங்கி யிருந்தது. விருந்தினர் சார்பான வேலைகள் ஓய்ந்தபோது கோமகள் பெருமாட்டி பிரில்லன்டின் தனித்தொண்டிலேயே ஈடுபடுவாள். கோமகள் தன் மனையையும் தன் மனையின் பணியாட்களையும் ஆண்டாள். பெருமாட்டி பிரில்லன்ட் அவள் மீது ஆட்சி செலுத்திற்று. பெருமாட்டி பிரில்லன்ட் கோமகளைவிட ஆக்டேவ் மூரட்டிடம் மிகுதி உரிமை கொண்டாடிற்று. மூரம் வாழ்வில் இப்போது கவலையும் பொறுப்பும் மிகுந்தன. பாரிஸ் வாழ்வு செலவைப் பெருக்கிற்று. ஏழை மக்களுக்கு அவன் செய்த திருத் தொண்டும் இச்செலவும் அவன் போலந்துப் பண்ணையிலிருந்து வரும் அரைகுறை வருமானத்தை விட எவ்வளவோ பெருக்க மடைந்தது. அவன் கடன் பட்டான். கடன்காரர்களுக்குத் தவணை சொல்லிச் சொல்லி அலுத்தான். பகலில் அவர்களைக் காண்பதற்கஞ்சி இரவிலே வெளியே சென்றுவரத் தொடங்கினான். பெருமாட்டி பிரில்லன்டினிடம் மூரட் தன் துயரக் கதைகளை எல்லாம் கூறுவான். அதன் கனிந்த பார்வையும் வால் குழைப்பும் அவனுக்கு அடிக்கடி ஆறுதலளிக்கும். மூரட்டும் நன்றியறிதலுடன் தன் உணவில் ஒரு பங்கு அதற்கீந்து அதன் நட்பைப் பேணினான். வெளியே சென்றால் அதற்குத் தின்பண்டம் வாங்காமல் அவன் வருவதில்லை. அவன் வரவறிந்து அதுவும் கண் திறக்கத் தவறியதில்லை. தின்பண்டம் பிடித்தமாயிருந்தால் அது வால் குழைக்கும். இல்லாவிட்டால் வாயிலிட்டதை உடனே விழுங்கி விட்டுக் கண்ணை மீட்டும் மூடிக்கொள்ளும். அவ்வப் போது மூரட் வேட்டையாடப் போவான். வேட்டையாடும் உடையிட்டவுடனே பெருமாட்டி பிரில்லன்ட் வழக்கமீறிய சுறுசுறுப்புக் காட்டிச் சற்று எழுந்து நின்று நெளித்துக் கொள்ளும். வேட்டையாடி இரண்டொரு வெள்ளெலித் தலைகள் அல்லது வெண்முயல் தலைகள் கொண்டு வந்து கொடுத்தபின்தான் அது அமைதியுடன் எப்போதும் போலத் துயில் கொள்ளும். ஒரு நாள் வழக்கம் போலப் பூனையுடன் பேசிக் கொண்டே யிருந்து மூரட் திடீரென்று தூங்கி விட்டான். பெருமாட்டி பிரில்லன்ட் அவனைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து அதன்பின் அவன் மடியில் சாய்ந்து புரண்டது. பின் அவனைப் போலவே அதுவும் வழக்கப்படி தூக்கத்துள் ஆழ்ந்தது. மூரட் விழித்தெழுந்த போது அது துயிலிலாழ்ந்திருந்தது. பலவகையிலும் தன்னை யொத்த அத்தோழனிடம் அவன் அன்பும் பாசமும் வழிந்தோடிற்று. அவன் அதன் மீது தன் கவிதையார்வத்தைப் பரவவிட்டான்: 1. உலகம் எங்கணும் தேடினும் உன்னைப்போல் இலகு வாணகை மேனியாள் கண்டிலேன் அலகில் பூனை இனத்துள் அரிவையர் கலக மிட்டுனை நத்தினர் மெச்சினார். 2. நத்தி என்பயன் நானில மங்கைமார் நித்தங் காதல் அலைந்தனர் நாடியே; ஒத்து யாவரும் நின்னிசை பாடநீ மொத்தக் காத லரசியே ஆயினாய்! 3. தாங்கு காதல் அரசிநீ யாகிய பாங்கு யாதெனுனக் காக்குவென் அல்லனோ? ஈங்கு பாமகள் ஆகிய கோமகள் ஓங்கு காத லுரிமையினா லன்றோ? 4. காதல் பாடிமெய் காதல் பெறாதவிந் நோதல் சான்றபொய் வாழ்விது வாழுவேன், தீதி லாதுனைப் போலொரு பூனையாய் காதல் தெய்வதங் கைவந்தி லேன் அந்தோ! ஆக்டேவ் மூரட் வாழ்வில் உண்மையில் காதல் இடம் பெறாமலில்லை. ஆனால், அவன் காதல் இன்னும் கலைக் காதலாகவே இருந்தது. அது விளையாட்டுக் காதலளவுக்கு மேல் என்றும் செல்வதில்லை . கோமகளின் பணி நாடிச் செல்ல வேண்டியிருந்தது. அத்திருவாட்டி அவன் பாடலிலும் உரையாட லிலும் மிகுதி ஈடுபட்டு அவனுடன் மாலைநேர முற்றும் அளவளாவி யிருந்தாள். இரவுணவையும் அங்கேயே உண்டு இரவு முழுதும் தன்னுடனே தங்கியிருந்து விடும்படி திருவாட்டி காதலழைப்புத் தந்தாள். உணவு முடிந்து சிறுகுடியுடனும் சிற்றுண்டியுடனும் சிற்றுரையாட அமர்ந்திருக்கும் சமயம் அவள் பழங்காதல் பழக்கமுடைய உரிமைக் காதலன் ஒருவன் வந்து இடை மறித்தான். பாரிஸ் வாழ்வில் காதற்போட்டி கைகலப்புப் போட்டியாய், சாதல் விளையாட்டாக மாறுவதுண்டு. காதல் வீரனாயினும் வீரக் காதல் நாடாத மூரட் மற்றவகையான போட்டிகளை விரும்பாமல் சீட்டாட்டப் போட்டியையே தேர்ந்தெடுத்தான். “காதலுக்காகக் கழுத்தறுத்துக் கொள்வானேன்? வெற்றி தோல்வி காதலில் முடிவதுதானே? இருவரும் சீட்டாடி வென்றவன் திருவாட்டியின் காதலை உரிமையால் பெறுவது தானே!” என்றான் அவன். எதிரியும் ஏற்றான். காதலில் எதிரி வென்றான். மூரட் மனமுறிவுற்றுக் கோமகளில்லமே வந்தான். ஆனால், அன்று கோமகள், டி-லீஞ் இளவரசன் ஒரு நடிகை வீட்டில் அளித்த விருந்தாட்டிற்குச் சென்றிருந்தாள். உறவினரின் உரிமை பாராட்டி, அவன் அங்கே சென்றான். காதலால் நைந்த கவிஞர் உள்ளத்துக்கு நடிகையர் ஆடல் பாடல் நல்ல மருந்தாய் உதவிற்று. 15. காதலர் சந்திப்பு பழைய காதலரசி புதிய உயர்குடி நாகரிகத் தலைவி - கோமகள் லக்ஸம்பர்க்கின் வருகை நடிகை நங்கையர் கலா ஆர்வங்களைப் பெருக்கிற்று. இளவரசன் டி-லீஞ் அவர்கள் ஆடல்பாடல்களிலீடுபட்டு வழக்கமீறி மிகுதி குடித்து அயர்ந்து சாய்ந்து விட்டான். அத்துடன் பெண்குலம் தன் பெருமை பேணித் தம் தனிக்கூடம் சென்று திரையிட்டது. பெண்டிர் கலையுலகம் கண் மறைந்து செல்ல, ஆடவர் கண்துயில் கொள்ள, ஆக்டேவ் மீண்டும் தனியே விடப்பட்டான். ஆனால், பூனை உலகப் பெருமாட்டி பிரில்லன்ட் மட்டும் தன் அரைத்துயில் கண்களால் அவனை இன்னும் கடைக்கணித்துக் கொண்டிருந்தாள். ஆக்டேவும் அன்று சிறிது மிகுதியாகவே தேறல் பருகி யிருந்தான். அவன் கண் முன் அவன் பழங்காலப் போலந்துக் காட்சிகள் வட்டமிட்டன. போலந்து அவனுக்கு வாழ்க்கையின் துறக்க வாயிலாகத்தான் இன்னும் காட்சியளித்தது. ஆனால் அழகுத் தெய்வமாகவே நடித்த தாய் அதைவிட்டு அவனைத் துரத்தினாள். எங்கும் ஏழை மக்கள் குடில்கள் அவனுக்குத் திறந்தே இருந்தன. அவற்றில் அவன் ஆறுதலும் தேறுதலும் பெற்றான். ஆனால், அவை அவன் அவாக்களை நிறைவேற்றவில்லை. வாழ்க்கையில் ஏதோ ஒரு குறை இருந்ததாக மட்டும் அவனுக்குத் தோன்றிற்று. அது இன்னதென அவனாலும் எண்ணிப்பார்க்க முடியவில்லை. உயர்குடி விருந்து மேடைகளில் அவன் தத்தித் தத்திப் பறக்கும் இராவிட்டில்கள் போல எட்டாது உறவாடினான். அவன் உள்ளம் அவற்றின் இன்பங்களில் பற்றவில்லை. ஒரு வேளை பாரிஸ் அரண்மனை வாழ்விடையே ஊடாடும் வாய்ப்புப் பெற்றால்! தாய் மரபினர் பலர் ஆடியயர்ந்த இடம் அது. ஆனால், உயர் குடியில் அவனுக்கு ‘வாயில்’ வகுத்த அவன் கவிதை அரண்மனையில் அவனுக்கு ‘வாயில்’ அடைத்தது. அவன் வசை தேர்ந்த நாவுக்கு அரசி அஞ்சினாள். பொறாமையும் புழுக்கமும் நிறைந்த மன்னர் அவையில் அவன் வசை பொறாமை கள் அகற்றும் நன்மருந்து என்பதை அவள் அறியவில்லை. நன்மை தீமைப் பகுத்தறிவும் இல்லாது போயது எவ்வளவு வருந்தத் தக்கது! இவ்வெண்ணங்களிடையே ஆக்டேவ் மூரட் தன்னை மறந்தான். அவன் கண் மூடிற்று. அவன் கவிதையங் கனவுகளில் ஆழ்ந்தான். அவன் எத்தகைய கனவுக் காட்சிகளில் திளைத்தான் என்பது அவனுக்கே தெரியாது. ஆனால், ஏதோ ஒரு சலசலப்பு, ஒரு மூச்சு - அதனிடையே அவன் அரையுணர்வு திரும்பிற்று கண்ணைத் திறக்காமலே அவன் தன் சூழ்நிலையில் கருத்துச் செலுத்தினான். அவன் கண் விழித்தபோது அவன் கண்ட காட்சி அவன் வாழ்நாள் முழுவதும் அவனை விட்டகலாதிருந்தது. பாரிஸின் கலை, அரண்மனையின் கலைப் பகட்டு - இயற்கையின் எழிலும் இனிமையும் எளிமையும் - தெய்வங்களின் முகங்களில் காணப் படுவதாகக் கூறப்படும் பரந்த அருளிரக்கம் - கண்ணையும் கருத்தையும் பறிக்கும் இன்னதென்று கூறமுடியாத ஒரு கவர்ச்சி - இத்தனையும் ஓர் உருக் கொண்டு அவன் முன்னே நடமிட்டது. அதன் ஆற்றலில் அவன் உடல் உயிர் உள்ளம் மூன்றும் ஈடுபட்டு அவன் மீண்டும் தன்னையிழந்தான். அழகிய பெண்கள் அவனுக்குப் புதிதல்ல. அவளைப் பார்க்கிலும் பகட்டான அழகை - அவள் தோற்றத்திலும் துடிப்புடைய இளமையை - அவள் கவர்ச்சியிலும் முனைப்பான கவர்ச்சியை அவன் கண்டிருந்தான். ஆனால், அக்கூட்டுக் கலவை கவிதையின் கூட்டுக் கலவை போல், உலகியல்பில் கால் வைத்து, கனவுலகில் நிலவுவது போன்றதாயிருந்தது. அவ்வனப்பு கண் கடந்த வனப்பு. அதன் ஒளி காட்சி கடந்து அகக்கண்களில் ஊடாடித் திகழ்வதாயிருந்தது. அவன் கண்ட காட்சி வேறு எதுவும் அன்று. அதே விருந்தில் அன்று வந்த கலந்து கொண்டிருந்த லாரைன் சிராம்மோனையே. மாது சிராம்மோன் இப்போது கைம்பெண். கணவன் இறந்து ஆண்டுகள் மூன்றாகிவிட்டன. ஆனால், அவள் தன் கைம் பெண் கோலத்தை இன்னும் களையவில்லை. துயர் ஆடையாய் மேற்கொண்ட கறுப்பு நிலையாகவே அவள் தூய வெண்பொன் னிறத்தை எடுத்துக் காட்டும் நல்லாடையாக விளங்கிற்று. கைம்மைக் கோலமோ, தாய்மையோ அவள் கன்னியழகில் பெருமாறுதல் உண்டு பண்ணவில்லை - உண்டு பண்ணிய மாறுதலும் அவற்றின் ஒளியைப் பெருக்கி அமைதியால் வனப்பூட்டியதேயன்றி வேறன்று. இயற்கையின் எளிமையில் ஆர்வங்கொண்டும் அதனால் நிறைவடையாத மாது சிராம்மோன் மாளிகை விருந்துகளிலும் கலந்து கொள்ள முடிந்ததே தவிர, முழுவதும் அதனால் நிறைவு பெற முடியவில்லை. அவள் உள்ளத்தின் துன்ப மின்னதென்றும் அவளால் குறிப்பிட்டுணர முடியவில்லை. கணவனிடம் அவள் நேசம் பெரிது. அவன் இறந்ததற்காக அவள் உள்ளூர வருந்தினாள். ஆனால், ஓராண்டுக்குப் பின்னும் அவள் வருத்தம் குறையவில்லை. கணவன் பிரிவால் வந்த வருத்தமாயிருந்தால் தானே நாள் செல்லச் செல்லக் குறையும்? பிள்ளைகளிடம் அவள் தன் உயிரையே இரு கூறிட்டு உரித்து வைத்திருந்தாள். அவர்களைக் காணும்போது அவள் உள்ளம் மகிழ்ச்சியும் ஆறுதலும் பெற்றது. ஆனால், அவ்வுணர்ச்சியின்போது பாசிபடர்ந்த குளத்தில் விழுந்த கல் சிறிது பாசியை விலக்குவது போல, அம் மகிழ்ச்சி அவள் நிலையான துன்பத்தைச் சிறிதே அகற்றிப் பின் மீண்டும் பழைய நிலைமையிலேயே கொண்டுபோய் விட்டது. டீ லீஞ் தந்த அவ்விருந்தில் அவள் உரையாடல்கள் எல்லாராலும் வியந்து பாராட்டப்பட்டன. அடிக்கடி ஆக்டேவின் பாடலும் அவள் காதில் விழுந்தது. அப்பாடல்களை அவள் அடிக்கடி உயர்குடி விற்பன்னரால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்படுவது கண்டும் அவ்வப்போது அவற்றின் நயம் பாராட்டியும் உள்ளாள். இன்று அக்கவிஞனே விருந்தில் கலந்து கொண்டுள்ளான் என்றும் அவள் கேட்டாள். ஆனால், விருந்தின் அமளியில் அவள் அவனைக் காணவில்லை. விருந்தின் குடியாட்டில் அவள் ஒதுங்கியிருந்தாள். குடியாட்டுத் தீவிரமானபோது எல்லாப் பெண்களும் அவளிருந்த பெண்கள் கூடத்திற்கு வந்துவிட்டனர். ஆனால், அவர்களும் ஆடிப்பாடி அலுத்துப் போயிருந்தனர். விடிந்த பின்னரே அவர்கள் தத்தம் மாளிகை சென்று முழு ஓய்வு கொள்ள முடியும். ஆகவே, அவர்கள் சாய்மஞ்சங்களில் ஆங்காங் கமர்ந்து சாய்ந்தனர். கண்கள் ஒவ்வொரு இணையாக இணைந்து மூடின. மாது சிராம்மோனுக்கு மட்டும் உறக்கமும் வரவில்லை. விருந்து மண்டபத்தின் புழுக்கமும் தாங்கவில்லை. விடியற் காலமானால், வெளியே சென்று வரலாம். அதுவரை மாளிகை யினுள்ளேயே சுற்றிப் பார்க்க எண்ணி அவள் வெளிக் கிளம்பினாள். ஆக்டேவ் இருந்த பகுதி கிட்டத்தட்ட வெறுமையாகவே அவளுக்குக் காணப்பட்டது. ஆக்டேவ் மூரட்டின் நலிந்த உடல் அரைச் சுற்றிப் பொதிந்திருந்த கந்தலாடைகளுடன் மஞ்சத்துடன் மஞ்சமாகக் காட்சியளித்தது. தான் தனிமையிலிருப்பதாக எண்ணிய அவள் அங்கிருந்த கண்ணாடி ஒன்றில் தன் நிழலை நோக்கித் தன்னுடையணிகளைச் சரிப்படுத்திக் கொண்டிருந்தாள். அச்சமயம் ஒரு நெடு மூச்சுக் கேட்டு அவள் திரும்பிப் பார்த்தாள். மஞ்சத்தில் சோர்ந்து கிடந்த உருவம் அவள் கண்ணில் பட்டது. அது யாரோ? எவரோ? ஆனால், அம்முகத்தில் ஏதோ ஒன்று அவள் ஆர்வம், இரக்கம், அன்பு ஆகிய பல்வகை உணர்ச்சி களையும் ஒருங்கே இயக்கிற்று பிள்ளையிடம் தாய் கொள்ளும் கவலை, உடன் பிறந்தாரிடம் உடன்பிறந்தாள் கொள்ளும் பாசம், கணவனிடம் மனைவி கொள்ளும் உரிமை, நட்பு, நண்பரிடம் கொள்ளும் பரிவு யாவும் அவள் உள்ளத்தில் ஒருங்கே எழுந்தன. அவன் சோர்வு நோய் காரணமாகவா, வெறி மயக்கத்தாலா அல்லது வெறும் தூக்கத்தினால்தானா என்றறிய அவள் நெஞ்சம் ஆவல் கொண்டு துடித்தது. தனிமை உள்ளார்ந்த மனித உணர்ச்சி களுக்கு வலுத்தர, அவள் அவனண்டை வந்து குனிந்து அவன் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள். அவன் தலை காயவில்லை. பின் நெஞ்சையும் கையையும் தொட்டுப் பார்த்தாள். நாடிகள் சரியாகவே ஓடின. அவள் கவலை தீர்ந்தது. ஆக்டேவ் காலடி ஓசையும் ஆடைச் சலசலப்பும் கேட்டு அரை விழிப்புக் கொண்டது இப்போதுதான். ஆக்டேவ் கையிலிருந்து இச்சமயம் ஒரு புத்தகம் பாதி நழுவிக் கொண்டிருந்தது. அது என்ன புத்தகம் என்று அவள் காண அவாவினாள். துணிந்து அதை அவன் கையினின்று எடுத்துப் பார்த்தாள். அதன் பெயர் அவளுக்கு வியப்பதிர்ச்சி தந்தது. அது அவள் எப்போதும் விரும்பி வாசித்த - அவள் மொழி பெயர்த்துவந்த ஹோரோஸின் ஆடற்பாக்கள். அதை அவள் எடுத்துத் தற்போக்காகத் திறந்தாள். அதுமுன் அடிக்கடி திருப்பிய ஒரு பக்கமாகவே திறந்தது. அப்பக்கத்திலுள்ள ஒரு இலத்தீன் பாடலை அவள் தனக்குள் வாசித்துக் கொண்டாள். “மா‘தேர் சைவாகு’ பிடினும்... ...” காதலுக்குரிய நங்கை ஒரு கணத்தில் கலை நங்கையாக மாறினாள். பாட்டைத் திரும்பத் திரும்ப முனகிக் கொண்டே அதன் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டாள். ‘ஆம். இது சரி, இது போதும் என்று எண்ணுகிறேன்’ என்ற முன்னுரையுடன் தாய்மொழி ஆக்கம் வெளிவந்தது. “என் காதல் வாழ்வு கழிந்த தென்றெண்ணினேன்!- எனில் காதல்வேள்தன் அருங்குதலைச்சிறார் சூழ...” மொழிபெயர்ப்புக் கலையை இடைமறித்துப் புத்தகம் தொப்பென்று கீழே விழுந்தது. அவ்வரவம் கேட்டஞ்சிய பெருமாட்டி பிரில்லன்ட் ஆக்டேவ் மடியினின்று குதித்துப் பாய்ந்தோடிற்று. ஆக்டேவ் மூரட் தன் அரைத்துயில் நாடகம் விடுத்து நனவரங்கத்தில் துணிந்தேற முன்வந்தான். அவள் எழுந்து நின்று அவனுக்கு வணக்கம் செய்து “ஆக்டேவ், தம்மை யொத்த கலைஞன், தம் கலைக்கு வணக்கம் செலுத்துகிறேன்” என்றாள். அவன் துணிந்து அவளையே நோக்கி அவள் கவர்ச்சியைப் பருகினான். அவள் அதிர்ச்சியுற்றுத் தன் வயமிழந்து அப்பார்வையில் வதங்கினாள். அவன் உள்ளம் துடித்தது. அவள் ஆர்வம் முன் தள்ள, அச்சம் பின் தள்ள அகப்போர் ஆடினாள். இருவரும் நெடுநேரம் பேசவில்லை. எல்லையற்ற கால வெளி எல்லையற்ற காலத்துடன் கலந்து கொண்டது. ஓர் ஆடவனும் பெண்ணும் அக்கலப்பிடையே செயலற்று நின்றனர். மனித உலகின் உணர்வு இருவரையும் கால எல்லையினின்று தட்டி எழுப்பிற்று. கால எல்லை வருங்காலத்தின் தொலை விளிம்பிலும் இருக்கலாம். கனவுலகின் மாயத்திரையின் பின்னும் இருக்கலாம். நிகழ் காலமும் நனவும் அவற்றை எப்படி வேறு பிரித்தறிய முடியும்? மனித சமூகத்தில் உறுப்பினரான மனிதர் சமூக உறுப்பினராக மட்டும்தான் பரிமாறிக் கொள்ள முடியும்? கனவுலகின் மோனவரம்பை அவள் சிறுகத் தட்டியுடைத் தாள். வழக்கமான மனித உலகின் வெற்றுரைகளைக் கொண்டு, “தங்களை இனிய தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டேன் என்று அஞ்சுகிறேன்” என்றாள். “தூக்கம் இனிதோ இல்லையோ; விழிப்பு இனிதென்று காண்கிறேன்” என்றான் அவன். அவள்: நான் ஓர் எழுத்தாளர். அத்துடன் இலத்தீனக் கவிதையில் ஈடுபட்டவள். இலத்தீனக் கவிதையில் ஈடுபட்ட மற்றொரு உள்ளத்துடன் பழகும் வாய்ப்புக் கிட்டியதில் மகிழ்ச்சி யடைகிறேன். அவன்: அப்படியானால் தாங்கள் என் நண்பர். என் ஆசிரியர் அப்பேத லீலை அறிவீர்களா? அவள்: ஆ, அவர் தங்களுக்கு நண்பரா? நானும் அவர் மாணவியே. இன்று காலையில் கூட அவரிடம்தான் பாடங் கேட்டேன். என்ன அரிய புலமை நயம், அவரிடத்தில்! அவன்: ஹோரோஸ், விர்ஜில் ஆகிய மலைகளில் ஏற முடியாதபோது நான் எப்போதும் அவர் துணையைத்தான் நாடுவது. படைவீடுகளில் நான் காலம் கழிக்கும்போது என் அவப் பொழுதை நற்பொழுதாக்க நான் இதனைப் பயன்படுத்துகிறேன். ஆனால், தாங்கள் - தங்கள் இயற்கை வனப்பைக் காணத் தாங்கள் உயர் குடிப் பசப்பருள் ஒருவர் என்று எண்ண முடியவில்லை. அதே சமயம் உங்கள் மெல் விரல்கள் மை படத் தக்கவையாகவும் தோற்றவில்லை. அவள்: மைமட்டுமென்ன, அடிக்கடி சாயமும் தோய்ந் திருப்பதுண்டு. தாங்கள் அப்போது பார்த்தால் என்ன சொல் வீர்களோ? அவன்: ஆகா; கவிதை நங்கை மட்டுமன்றி ஓவிய நங்கையும் உங்களிடம் வீற்றிருக்கின்றனரோ?... சரி, சரி, இத்தனை கலைப்பண்பு இந்த நாடோடிக் கவிஞனுடன் தன் முழுப் பொழுதைப் போக்கிவிடக் கூடாது. இசையாடல் அரங்கம் தங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும். தாங்கள் அதை விட்டு... அவள்: தரக்கேடில்லை. நான் அதில் சலிப்படைந்த பின் தான் வந்தேன். அவன்: அதற்காக வருந்துகிறேன். ஏனெனில், தங்களுடன் ஓர் ஆடல் ஆடி மகிழ எண்ணியிருந்தேன். அவள்: அதற்காக வருந்த வேண்டியதில்லை, ஐயனே. நான் ஆடலிற் கலப்பதில்லை. நான் இன்னும் இழவுத் துயராற்றிக் கொண்டுதான் இருக்கிறேன் என்பதை என் கறுப்பங்கியிலிருந்து தாங்கள் கண்டு கொண்டிருக்கலாம். ஆயினும், மாடியிருக்கையில் சென்றமர்ந்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். அது ஆடுவதினும் இனிது. மனித உலகைக் கண்ணுறும் வானவர் போல ஈடுபடாமலே ஈடுபடலாம். வருகிறீர்களா? அவன்: (இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்) நான் ஆடலில் அவ்வளவு தேர்ந்தவனல்ல. அதைப் பார்வையிடுவதில் தங்களுடன் அதனினும் எளிதாகப் போட்டியிட முடியும். ஆக்டேவ் தன் கட்டிளைமையிலும் அந்த சந்தமுடைய வனல்ல. ஆனால், அவன் நெட்டையான உறுதி வாய்ந்த உடலுடையவனாயிருந்தான். லாரைன் பார்வைக்கு அந்த சந்தமுடையவளாயினும் அவனைப் பார்க்க மிக நடுத்தர உயரமுடையவளாகவே காணப்பட்டாள். அவன் தோள்களில் சார்ந்து அவள் அரங்க மேடை சென்ற காட்சி கழுகினைப் பற்றி வாழை வளர்வது போன்றிருந்தது. ஆடல் பாடல் மேளங்கள் அரங்கில் ஒரு சிறிது நேரமே ஓய்ந்திருந்தன. பெண்டிர் ஓய்வகத்திலிருந்து ஒவ்வொருவராகத் திரும்பி அரங்கேறினர். வெளிமயக்கம் நீங்கிய ஆடவரும் ஒவ் வொருவராக எழுந்து வந்து கலந்தனர். முழவங்கள் முழங்கின. சூழல்கள் இயம்பின. பன்னிற வண்ணங்கள் பறந்து சுழன்றன. பல்லிய இசைகள் அவற்றுடன் ஒத்துக் கூத்தாடின. அவர்கள் ஆடல் அரங்கின் மாறுபாடுகளைப் பற்றிப் பேசினர். 18ஆம் நூற்றாண்டிறுதியில் ஆடலரங்கைப் பற்றிய சிற்றின்பக் களியாட்டங்களை ஆக்டேவ் வெறுத்தான். பழைய கலை இலக்கணம் வழுவாத செந்திற ஆடலை அவன் புகழ்ந்தான். அவன் பழமைப் பற்றில் அவள் ஈடுபட்டாள். ஆனால், புதுமையை அவள் உடனிருந்து பழிக்க முடியவில்லை. புதுமை ஆடலின் தோற்றுதல் தலைவியான அரசியிடம் அவள் பற்றுக் கொண்டவள். ஆக்டேவ் புதிய அரண்மனை வாழ்வைக் கண்டித்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆக்டேவின் திறந்த உள்ளம், கட்டற்ற போக்கு ஆகியவை அவளுக்குப் பிடித்திருந்தன. ஆனால், காதல், பெண்டிர் ஆகிய வகைகளில் அவன் கொண்டிருந்த கருத்தும் அவன் வாழ்க்கைப் போக்கைப் பற்றி அவள் கேட்டிருந்த செய்திகளும் அவளுக்கு எச்சரிக்கையூட்டின. பெண்டிரைப் பற்றியும் காதலைப் பற்றியும் அவன் பேசியபோது அவள் அதில் ஈடுபடவில்லை. அவன் காதல் பற்றிய தன் பாடலொன்றைப் பாடினான்: மெல்லிய காதல் துடிப்பு மேன்மேல் வளர்ந்திடில் வெடிப்பு நாளாக ஆகத் துவர்ப்பே இன்பம் பழகிடில் புளிப்பே *** எத்தனை மெல்லிய தாகிய பொன்மலர்ச் சங்கிலி யாயினும் அழுத்த மிகுந்திடின் உறுத்தும் தத்துறு காலையின் ஆர்வம் தளர்தரு மாலையில் சோர்வே அதன்மே லெதுவும் வருத்தும் *** எங்கும் சுற்றித் திரியாமல் இடையிடை வெட்டிப் பிரியாமல் தங்கும் காதல் உவர்ப்பாகும். *** தன் பாட்டையோ பேச்சையோ லாரைன் கவனிக்கா திருப்பது கண்டு ஆக்டேவுக்குச் சுருக்கென்றது. ஒரு பெண்ணின் புறக்கணிப்பு கண்டு அவன் இதுவரை உளைவுற்றதில்லை. அவன் ஏதாவது சாக்குப் போக்குக் கூறி எழுந்துபோக எண்ணினான். இளவரசன் டி லீஞ் அப்பக்கம் வந்து அவனைப் பழைய நட்புரிமையுடன் அழைக்கவே அவன் லாரைனிடம் விடை பெற்றுப் பிரிந்தான். அவன் தன் அருகேயிருந்து எழுந்தபோதுதான் லாரைனுக்குத் தன் உள்ளம் அவன் போன திசையே போக விரும்புவது தெரிந்தது. 3. காதல் வேட்டை 16. விருந்துக்குப் பின் ஆக்டேவ் மூரட் காதலுணர்ச்சிக்கு என்றும் அடிமையா யிருந்ததில்லை. காதலை ஒரு விளையாட்டு வேட்டையாகவும், பெண்டிருலகத்தை ஒரு வேட்டைக் காடாகவுமே அவன் நினைத்து வந்திருந்தான். அவன் தீங்கற்று அமைந்த நற்குணம், பிறர்க்குதவும் பண்பு, சொல் திறம் ஆகியவை அவனுக்கு மக்கட் குழுவினிடமே பொதுவாகவும் பெண்டிரிடம் சிறப்பாகவும் மிகுதி செல்வாக்கு அளித்தது. ஆகவே, அவன் காதல் வேட்டையை எல்லாரும் கேலி செய்தனரேயன்றி எவரும் கண்டித்ததில்லை. அவன் நாடிய எந்தப் பெண்மணியும் அவனை அசட்டையாக உதறித் தள்ளிவிடவும் இல்லை. அவன் காதலை ஒரு சூதற்ற விளையாட்டாகக் கருதினான் என்றால், அவன் நாடிய பெண்டிர் அதைத் தங்கள் அழகுக்கும் பண்புக்கும் உரிய ஒரு சான்று என்றே கொண்டு பெருமையுற்றனர். அவன் காதல் வேடிக்கைக் காதலாயிருந்ததனால், அதற்கு இரையாகி எந்தப் பெண்ணும் வாழ்விழக்கவோ வருந்தவோ நேர்ந்துவிட வில்லை. ஆனால், இன்று வேடன் ஒரு புதுமாதிரி விலங்கின்மேல் காதல் வலையிட வேண்டி வந்தது. விலங்கு அவன் வலையையே மதிக்கவில்லை. அவன் காதலைத் தனக்குரிய பெருமையாக ஏற்கவில்லை. அக்காதல் தத்துவத்தைக்கூட முகத்துக் நேரே மறுத்து, அவனை அவமதித்து விட்டது. மாது சிராம்மோனைப் புறக்கணித்து விட்டு அவன் இளவரசன் டி லீஞ்சிடம் சென்ற போது, அவன் உள்ளம்தான் உளைந்தது. அவள் அமைதியைச் சிறிதும் இழந்ததாகத் தோற்றவில்லை. விருந்தில் மீண்டும் அனைவரும் கூடியிருந்த போதும் அவள் அவனை நாடாமலே இருந்தாள். ஆனால், அவன் கண்கள் அவளை விட்டகல முடியவில்லை. அவளையே அவன் பார்த்துக் கொண்டிருப்பதை ஒன்றிரண்டு தோழர் கவனித்துப் புன்னகை செய்து கொண்டனர். ஆனால் அவன் வேறு எதையுமே கவனிக்க முடியாதவனாகவே இருந்தான். விருந்தினரிடையே பேச்சு பழைய ஃபிரஞ்சு நாட்டுப் பண்பாடு, அதன் நகர நாகரிகப் போக்கு, இவற்றுக்கெதிராக ரூசோ ஒருபுறமும் அரசி மறுபுறமும் வழக்கில் கொண்டு வந்த நாட்டுப்புற இயற்கை வாழ்வார்வம் ஆகியவற்றின் உயர்வு தாழ்வுகளைப் பற்றி ஊசலாடிற்று. பண்பரசியும் பேச்சுக் கலையில் வல்லவளுமான மாது சிராம்மோன் பேச்சை வேறு பக்கம் திருப்பி மீண்டும் நல்லிணக்க உணர்ச்சியை உண்டுபண்ணினாள். ஆக்டேவ் மூரட் இதனைக் கவனியாமலில்லை. அவள் அழகு, பண்பு ஆகியவற்றின் உயர்வைக் கண்டு, அவள் செல்வநிலையையும் உயர்குடி மதிப்பையும் எண்ணுந்தோறும் அவன் உள்ளம் உள்ளூர உடைவுற்றது. ஏனெனில், அவன் அவளை எவ்வாற்றானும் பெறமுடியாத நிலையை அவை வற்புறுத்தின. அவள் பாரிஸ் அழகரசி. செல்வத்தில் புரள்பவள். அவன் நாடோடி. அவன் வருவாய் மிகச் சிறிது. செலவு பெரிது. அவ்வருவாயும் சமய வாழ்வை யெண்ணி அவனுக்குத் தரப்பட்ட செல்வ வருவாயாத லால், மணமாகாத நிலையில் மட்டுமே அவனுக்கு உரியது. லாரைனை மணப்பதென்றால் அவன் முற்றிலும் ஓட்டாண்டி யாகத்தான் மணக்க வேண்டிவரும். மணமில்லாக் காதல், மறை தொடர்வு மட்டும் தான் இந்நிலையில் எண்ணக் கூடியது. ஆனால், மண உறவிலேயே இத்தனை உயர்வு தாழ்வு கடக்க வேண்டி யிருக்கிறது. மற்ற உறவு எண்ணுவதற்கும் இடமற்றது. அவன் இப்போது தன் காதல் தத்துவத்தையே மதிக்கவில்லை. என் செய்வது? என் செய்வேன் என்று இடையறா ஏக்கத்திலாழ்ந்தது அவன் உள்ளம். காதலை அவன் பழித்த காலமெல்லாம், நகையாடிய காலமெல்லாம், அது அவனை எள்ளி நகையாடும் காலம் வரும் என்று அவன் எண்ணவே இல்லை. காதல் என்பது மலருக்கு மலர் தாவுவது என்றுதான் அவன் எண்ணியிருந்தான். காதல் என்பது மலருடன் ஒன்றுபட்டு அதன் வாழ்வில் வாழ்ந்து அதன் மாள்வில் மாள்வது போன்றது என்பதை அவன் இப்போது தான் கண்டான். ஆனால், இவ் எண்ணம் முன்பு வந்திருக்கக் கூடாதா? இளமையின் முற்பகல் கழிந்து - நிலையான காதலற்றவன் என்ற பெயர் படியப்பெற்று - இல்லறம் நாடிப் பொருள் மீத்து வையாது வாடாவாரியாய்ச் செலவு செய்து கடன்பட்டு - இறுதியில் காதல் வாழ்வையே கனவு காணமுடியாத நிலையை எய்திவிட்டான் அவன். காதலிற் சறுக்கியதும் தன்னையொத்த தன்னிலும் எளிய இடங்களை விட்டு அரண்மனை வாழ்விலும் கலை வாழ்விலும் உள்ளோர்க்கும் எளிதில் கருதமுடியா உயர் கொம்புக் கனியிலா கண் படிய வேண்டும்? இவற்றையெல்லாம் எண்ணிக் கொண்டே விருந்து மாளிகையில் சுழன்று கொண்டிருந்தது மூரட்டின் உள்ளம். அவன் கலையில் கண்ட கனவுக் காதல்கூட இத்தகைய உயரிடம் நாடவில்லை. அவன் மடத் துறவியாயிருக்கும்போது புனை பெயரில் எழுதிய புனைகதை அலைனில். பேரரசன் முல்லை நிலத்து அயர் நங்கையாகிய அலைனை விரும்பிப்பெற்று மண்ணுலகில் வானுலக இன்பந்துய்க்கிறான். ஆ! லாரைன் மட்டும் ஓர் அலைனா யிருந்தால்! அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போலந்துக்கோ, அல்லது நாகரிக மக்கட்குழுவினுக் கெட்டாத ஸைபிரியாப் பாலைவனத்துக்கோ கொண்டுசென்று, தனியான காதல் உலகொன்றைப் படைத்து வாழ்ந்திருக்கலாமே! ஆனால், நனவு கனவிலிருந்து எத்தனை தொலை? இளவரசர் அணுகத் தயங்கும் அவள் அழகும் பீடு நடையும் இறுமாந்த அமைதியும் எங்கே? பேதைமைக் கனவுக் கோட்டைகளெங்கே? அவள் நடமாடும் உலகில் தான் நடமாடுவதே தன் தாயின் உயிர்குடிப் பழக்கம், தன் கலை ஆகியவற்றின் பயன்களாயிற்றே! நல்லெண்ணத்தாலும் பெருந்ததன்மையாலும் காணப்பெற்ற இடத்தை உரிமையாகப் பெற எண்ண முடியுமா? விருந்து மாளிகையிலிருந்து அவன் உடல் எப்படியோ தள்ளாடித் தள்ளாடிக் கோமகள் மாளிகையிலுள்ள தன் அறை அடைந்தது. அவன் உள்ளம் விருந்து மாளிகையைச் சுற்றியும் லாரைனின் கறுப்பங்கியைச் சுற்றியுமே வட்டமிட்டது. நெடுநேரம் துயில்கொள்ளாதிருந்து அவன் கண்கள் உறுத்தத் தொடங்கின. அப்போதுதான் அவன் கருத்துத் தான் இருக்குமிடத்தையும் சூழ்நிலையையும் கவனித்தன. அறைக் கதவு தாழிடப்படாமலிருந்தது. அதைச் சென்று தாளிட்டான். பலகணி வழியாக் குளிர்வாடை வீசிற்று. அவ்வாடை மீண்டும் உள்ளத்தைச் சுழலவிட்டது. அவன் மடத்தைவிட்டு வந்தபின் திரிந்த நாடுகள், கண்ட காட்சிகள், செய்த போர்கள், அதில் அவன் பெற்ற விருதுகள் அவன் உள்ளத்தைத் துளைத்தன. இவை எல்லாம் செய்தும் யாது பயன்? யார் மதித்தென்ன? மதியாது போயென்ன? தன்வாழ்வில் இனிக் குறிக்கோளற்றவன். நோக்கமற்றவன் ஆனோமே என்று எண்ணி ஏங்கினான். ‘மீண்டும் வாரைனைக் காண - அவள் நட்பைப் பெறமுயற்சி செய்யலாமா?’ என்று அடிக்கடி கேட்டது அவன் உள்ளத்தினுள் ஒளிந்திருந்த ஆவல். அறிவு விடை தந்தது; ‘அதனாற் பயனென்ன, பேதை மூரட்! உனக்கு நாக்குக் கடுநாக்கு. உயர்குடியினரிடம் பேச - உயர்குடி நங்கையரை வசப்படுத்த-அந்நங்கையரசியைக் கனிவிக்கப் போதிய இனிய நயம் உனக்கு ஏது? உன் தோற்றம்! கோமாளிகளில்கூட நீ நல்ல கோமாளியல்லவே! உன் உயர்குடி வாழ்வு - உன் கலை இவை அணுகப் போதும் - வெறுப்பைச் சிறிது மாற்றப் போதும். அதற்குமேல் அவாக் கொள்ளாதே!’ அவா பின்னும் கூறிற்று: ‘கிடைப்பதில்லை என்று தெரிந்து விட்டால், பின் முயற்சி செய்து பார்ப்பதில் தவறென்ன? வந்தால் வராது வேறு வருகிறது. வராவிட்டால் அதனால் வரும் புதிய கேடு ஒன்றுமில்லையே. ஆகவே போய்ப் பார்.’ இவ்வூசலாட்டங்களுக்கிடையே அவன் கண்ணடைத்தது. அவன் எப்போது கண்ணயர்ந்தான் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால், பலகணி வாயில் வழி கதிரவனொளி அவன் படுக்கைமீது பரவும்வரை அவன் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். 17. கனல் பற்றுகிறது ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ மின்னாததெல்லாம் மண்ணல்ல!’ லாரைனின் அழகு, செல்வம் பண்பு ஆகியவற்றை மூரட் எவ்வளவு உயர்வாக மதித்தாலும் தவறில்லை. உண்மையில் அவை அவன் அவளை அறிய அறிய அவன் பிடிக்கும் மேலும் மேலும் எட்டாதவையாகவே இருந்தன. ஆனால், அவன் தன்னைப் பற்றி எண்ணிய எண்ணங்களும் தன் காதலின் பொருத்தமின்மை பற்றிக் கொண்ட கவலைகளும் உண்மையில் அவ்வளவு மோசமாக இல்லை. அவன் கடன்பட்டிருந்தது உண்மை. அவன் பணப்பற்றும் திறமையுமுள்ளவனல்ல; அவன் போலந்துப் பண்ணையை, அவன் ஆட்கள் மனம்போலவே மேல்பார்க்க விட்டு விட்டிருந்தான். இப்போது அவன் பாரிஸ் வாழ்வு அவற்றின் வருமானத்தை அடகு வைத்து அடகு வைத்து அவற்றின் செல்வாக்கை முற்றிலும் கெடுத்துவிட்டன. ஆனால் அவன் திறமையுடன் அப்பண்ணையை ஆண்டிருந்தால்கூட அவள் செல்வம் லாரைன் மதிப்புக்குப் பல கல் பின் இடைந்தே இருந்திருக்கமுடியும். அவன் மதிப்புப் பெறுவதானால், பொருள் காரணமாக என்றுமே பெற்றிருக்க முடியாது. அவன் தோற்றமும் அப்படியே. ஆனால், லாரைன் இவற்றைவிடக் கலையில் குணத்தில், அன்புள்ளத்தில்தான் ஈடுபடுபவள் என்பதை அவன் இன்னும் அறியமாட்டான். அவன் புலமை, கவிதை நயம். அவள் கலையுள்ளத்தில் ஏற்கனவே வடு உண்டுபண்ணியுள்ளது என்பதை அவன் கவனிக்கவும் இல்லை. தவிர, அவளை அறியும் தோறும் அவள் உயர்வடைவது போலவே, அவனை அறியும் தோறும் அவனும் பிறரால் உயர்வடையத்தக்க பெருமைகள் உடையவனே. அவன் நாடோடி வாழ்வு முழுவதும் இன்ப வாழ்வாகக் கழிந்த வாழ்வு அன்று. எத்தனையோ ஏழைக் குடியானவர்கள் குடும்பங்கள் அவன் பெயரைத் தெய்வத்தின் பெயருக்கு அடுத்தபடியில் வைத்துப் பேணியதுண்டு. அவன் காதல் வேட்டைகளும் உண்மையில் உயிர் பலிகொள்ளும் விலங்கு வேட்டைகளல்ல. பிற நாட்டரசரை வென்று அவர் நாடுகளையோ செல்வங்களையோ கொள்ள எண்ணாமல், புகழ் அறுவடை மட்டும் நாடிய பண்டை அரசர் போல, அவன் தன் இன்பப் பொழுது போக்கு மட்டும் நாடி, வண்டுகள் போல் மலருக்கு மலர் தாவினான். மலர்கள் அதனால் கேடுறவில்லை - பயன்பெற்றன என்பதை வண்டு கவனிக்காவிடினும், அது வண்டின் பண்பை உயர்த்துவதாகவே இருந்தது. அவன் செய்த போர்களும் பிழைப்பு - செல்வம் - ஆட்சி உரிமை நாடிய போர்களல்ல. காதல் விளையாட்டைப்போல் அதுவும் அவனுக்கு ஒரு வீர விளை யாட்டாகத் தானிருந்தது. ஆனால், காதல் விளையாட்டில் உள்ளூர இருந்த உள்ளக் கனிவு போலவே இங்கும் அவனிடம் இயற்கையான ஓர் உள்ளார்வம் இருந்து செயலாற்றிற்று. எந்தப் போரிலும் அவன் ஆதிக்கக்காரர் பக்கம் நின்று போரிடவில்லை. கவிஞன் பைரனைப் போல, அடிமைப்பட்ட மக்களுக்காகவே அவன் போராடினான். ஆகவே, அவன் போர் வீரம் காரணமாகப் பெற்ற பதக்கங்கள், அவன் போர் வீரத்துக்கு மட்டும் சின்னங் களாயமையவில்லை. அவன் விடுதலை யார்வத்துக்கும் சின்னங்களாயமைந்தன. மேலும் அவன் போர்ச் செயல்கள் குருதி கொப்புளிக்கும் செயல்களோ கொடுமை நிறைந்த செயல்களோ ஆக அமையவில்லை. தன் நேச நாட்டினராயினும் சரி, எதிரி நாட்டினராயினும்சரி, போர் வீரர் அல்லாத இடத்தில் அவன் தாக்கியதில்லை. போர் செய்யாத போதும் தாக்கியதில்லை. அடைக்கலம் புகுந்தவரை அவன் கைவிட்டது கிடையாது. பெண்டிர், குழந்தைகள் ஒரு தமையனிடம் ஒரு மாமனிடம் அகப்பட்டால் எப்படி நடத்தப் பெறுவரோ அப்படித்தான் நடத்தப்பட்டனர். போரின் குழப்பத்தைப் பயன்படுத்தி மாதரை அவன் துன்புறுத்தியதோ உள்ளங் கலங்கச் செய்ததோ அரிது. இத்தனையும் லாரைனுக்கு அவனைக் காணும் சமயத்தில் தெரியாது. ஆனால், அவனைக் கண்டது முதல் அவள் தப்பெண்ணங்கள் குறையாமலிருக்க முடியாது. காதலுக்கென, அன்புக்கென, நட்புக்கென பண்பட்டிருந்த அவள் கலையுள்ளம் முன் ஒரு கணவனிடம் மட்டுமே நட்புப் பெற்றது. குழந்தைகளிடம் மட்டுமே அன்புக்கு ஒரு புகலிடம் கண்டது. ஆனால், காதலுக்குரிய அவள் உள்ளத்தின் ஏழைமை நிரம்புகளும் அதற்குரியார் கை விரல் படக் காத்துக் கொண்டு தானிருந்தன. அவள் இளமை அகன்று விடவில்லை. ஆனால். அத்தகைய விரல்கள் வரா விட்டால். அவை அவளையும் அறியாமல், என்றும் காத்துக் கொண்டு தான் இருந்திருக்கும். காலையில் மூரட் எழுந்ததும், பகலொளி அவன் தயக்கங்களை மட்டுமன்றி அதன் நம்பிக்கையையே சிதறடித்து விட்டது போன்றிருந்தது. அவன் அறையின் அலங்கோலம் அவன் உள்ளத்தைத் தைத்தது. “ஒருவேளை எப்படியோ அவள் இசைந் தால்கூட, நம்மை அறிந்த நண்பர்களெல்லாம் நாளை தலையசைத்துக் கிண்டால் செய்வார்களே ‘கடனைத் துர்க்க நல்ல வழி கண்டுபிடித்தானப்பா’ என்று. அதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியுமா? காதலினும் மானம் பெரிது. இவ்வுணர்ச்சியைப் பிஞ்சிலேயே கொய்தெறிய வேண்டுமென்று அவன் உறுதி செய்துகொண்டிருந்தான்.” அச்சமயம் இரவில் விருந்திடையே அவனைச் சந்தித்த இளவரசன் டி லீஞ் அவ்விடம் வந்தார். கவிஞன் கலை நங்கையிடம் ஈடுபட்டதை அவன் விருந்திலேயே கண்டு கேலி செய்தவர். ஆகவே, “லாரைனைக் காணவே புறப்பட்டேன். அவளிடம் பேசும்போது உங்கள் பக்கத்துணையும் இருந்தால் நலம் என்று எண்ணி அழைத்துப் போகவே வந்தேன்” என்று அவர் கூறியதும் மூரட் அவர் கேலி செய்வதாகவே எண்ணினான். “நான் அப்பக்கம் திரும்புவதில்லை என்று முடிவு செய்து விட்டேன்” என்று மனச்சலிப்புடன் கூறினான். டி லீஞ், “நண்பரே! உம் மனநிலையை நான் நன்கறிவேன். ஆனால், நீர் அதுபற்றி இத்தனை கவலை கொள்ள வேண்டிய தில்லை. எட்டாக் கனி மீதுள்ள ஆவல் என்றும் நிறைவேறாத ஆவலாகவே இருப்பதில் கேடில்லையல்லவா? அதை அடக்கப் பார்ப்பதனால் அது வளரும். கண்டு மகிழும் நிலையில் அதனை அமைத்து வைப்பதே சரியான வழி. காதற் கலைஞராகிய உங்களுக்கு நான் இதற்குமேல் சொல்ல வேண்டியதில்லை. வாருங்கள் போகலாம்” என்று அழைத்துச் சென்றார். மாது சிராம்மோனின் மாளிகை, அரண்மனைக்கும் நாட்டுப் புறக் குடிலுக்கும் இடைப்பட்ட நிலையில் பண்பும் எளிமையும் கலந்த ஒரு விருந்தாயிருந்தது. காலத்துக்கொத்த புதிய மாதிரி கட்டட அமைப்பு, பொருள்கள், படிவங்களுடன், பழமையின் அமைதியும் அதில் குடி கொண்டிருந்தது. இயற்கையின்பத்தி லீடுபட்ட அவள் கலைச் சுவை ஒவ்வொரு சிங்காரப் பொருளிலும் நிலைக் கண்ணாடி, படங்கள், மணப் பொருள்கள், சாயப் பொருள்கள் யாவற்றிலும காணப்பட்டன. ஆனால், உடலழகையும் சிறுமைப்பட்ட இன்பத்திலும் முழுதும் ஈடுபட்டவர்களின் போலிப் பகட்டு அதில் இடம் பெறவில்லை. அதன் அழகு முற்றிலும் தாய்மையின் அழகை நினைவூட்டும் தன்மையுடையதாயிருந்தது. பணியாள் சார்லட் அவர்களை வரவேற்றான். தலைவி குளித்துக்கொண்டிருப்பதாகவும், விரைவில் வந்துவிடுவாள் என்றும் கூறி அவன் அவர்களை முன்கட்டில் அமரும்படி கூறினான். இருவரும் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். டி லீஞ் மாளிகையைச் சென்று சுற்றிப் பார்வையிடலாமே என்றழைத் தார். மூரட் “நான் இன்னொரு தடவை பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சென்று பார்த்து வாருங்கள்” என்று சொல்லிவிட்டு அங்கேயே அமர்ந்திருந்தான். தலைவியே அதனை வந்து காட்டும்போது பார்த்துவிடும் வாய்ப்பு இருக்கட்டும் என்று அவன் உள்ளம் உள்ளூரக் கூறியிருக்க வேண்டும். அத்துடன் பணியாட்களுக்குரிய பண்புடன் சார்லட் தன் தலைவியின் குணச் சிறப்புகள் பற்றி அளக்கத் தொடங்கினான். தன் உள்ளத்தை ஆட்கொண்ட மாதினைப் பற்றிய இவ்வெதிர்பாராப் புகழ்க் காவியத்தில் அவன் தங்குதடையின்றி ஈடுபட்டான். தன் காவிய வர்ணனைக்கு இத்தனை மதிப்பு கொடுத்த விருந்தினன்மீது பணியாளுக்கும் தன்னையறியாத பாசம் ஏற்பட்டது. லாரைன் உடல் இப்போது முன்னைய நாள் இரவினும் மிகுதி வாட்டமுற்றிருந்தது. இது விருந்தின் களைப்பு மேலீட்டினால் ஏற்பட்டிருக்கக் கூடும் என, மூரட் தனக்குள் விளக்கங்கூறிக் கொண்டான். அவள் வரும்போதே அவள் குச்சுநாய்கள் அவளை எதிர்கொண்டழைத்தன. கூண்டிலிருந்த பூவைகள் ‘வருக’ ‘வருக’ என்று கலவின. அவள் மூரட்டை வரவேற்ற வண்ணம் நாய்களைக் கையிலெடுத்துக் கொண்டு பூவைகளை நோக்கிப் புன்முறுவல் செய்தாள். “வாருங்கள், கவிதையஞ் செல்வரே! விருந்து கழிந்தபின் நண்பருடன் உரையாடாமலிருக்க முடிவதில்லை. நீங்கள் வந்தது நல்லதாய்ப் போயிற்று. இல்லையானால் நான்தான் உங்களைப் போன்ற நண்பர்களைத் தேடிப் புறப்பட வேண்டும்” என்றான் அவள். “எத்தனை இயற்கையான வரவேற்பு?” என்று அவனால் எண்ணாமலிருக்க முடியவில்லை. இதற்குள் டி லீஞ் அவர்களும் வந்துவிட்டார். சிறிது அவர்கள் பேசிக்கொண்டிருந்த பின் லாரைன், “இங்கிருப்பதை விட என் கலைக் கூடத்தில் வந்திருந்தால், இன்னும் அமைதியாக உரையாடலாம். அத்துடன் என் புத்தம் புதிய படைப்புகளை நானும் உங்களுக்குக் காட்ட வேண்டாமா?” என்றாள். லாரைனின் புதிய படைப்பு அவள் பிள்ளைகள் இரு வரையும் தீட்டி அவள் வரைந்த கொண்டிருந்த படமே. அவள் அருமைக் குச்சு நாய் அருகில் வால்குழைத்து நின்றது. படத்தின் கடைசித் திட்டம் முடியும் தறுவாயில்தான் இருந்தது. அவள் புதிய படைப்பு என்று கூறியபோது மூரட் அவள் மொழி பெயர்ப்பைத்தான் எண்ணியிருந்தான். ஓவியக் கலைஞனை பொறாமை சிறிது அவன் உள்ளத்தில் தலைகாட்டி மறைந்தது. “அம்மணி, தாங்கள் வெறும் கலைஞராகப் பிறக்காதது நன்றாயிற்று. எழுத்துக் கலை அரசு, ஓவியக் கலையரசு ஆகிய இரண்டரசுகளையும் பிடித்துக் கொண்டு தாங்கள் கலைத் தொழிலாளருக்குத் தலையிடி உண்டாக்கிவிடுவீர்கள்” என்றான். தற்புகழ்ச்சியை எளிதில் விரும்பாத லாரைன்கூட புன் முறுவல் பூத்தாள். தன் மகிழ்ச்சியை ஓரளவு மறைத்துக் கொண்டு, “கவிஞனாயிருந்து கொண்டு போர் வீரர்களுக்குரிய பதக்கங்களையும் பெறும் தங்களைவிட நான் அவ்வளவு பெருங்குற்றவாளி ஆக மாட்டேன்” என்றாள். டி லீஞ் ஓவியத்தில் அக்கறையுடையவர். அவர் படங்களைப் பாராட்டியதுடன், “நீங்கள் எதையும் தொடங்குவதும் அப்படியே விட்டுவிட்டுப் புதுமுயற்சியில் ஈடுபடுவதும் வழக்கமாயிற்றே. இதையும் அப்படி விட்டுவிடாதீர்கள்” என்றார். லாரைன், “இதோ உங்கள் முன்னிலையில் இப்போதே முடித்து விடுகிறேன். உங்களைப் போல் ஊக்குபவர் இல்லாத தனால்தான் நான் பாதியில் விட்டு வைத்துவிடுகிறேன்” என்று கூறி, வண்ணப் பெட்டியும் தூரிகையும் எடுத்து வேலை தொடங்கினாள். டி லீஞ் அதனையே உற்று நோக்கியிருந்தார். மூரட் இச்சமயத்தை அவள் நூல் அடுக்குகளைப் பார்ப்பதில் செலவிட்டான். அவற்றுட் பெரும்பகுதி அவள் வாசிக்கும் ஃபிரஞ்சு, ஆங்கில, இலத்தீனக் கவிதைகள். ஒரு சில அவள் மொழி பெயர்ப்புக் கையெழுத்துக் கட்டுகள், புது நூல்கள் ஒரு சிலவே இருந்தன. ஆனால், அதில் தனது புனைகதை ‘கோல கொண்டா அரசி அலைனும்’ இருக்கக் கண்டான். ஆசிரியனின் உடைமையார்வத்துடன் அவன் அதை எடுத்து நோக்கினான். அதன் முதற்பக்கத்திலேயே “என் மனத்துக்குப் பிடித்த புனைகதை - லாரைன்” என்று எழுதப்பட்டிருந்தது. தன்னைப் பற்றி அவன் கொண்ட அவநம்பிக்கையின் ஒரு கூறு அவனை விட்டகன்றது. இதற்குள் படம் முடிவடைந்துவிட்டது. அதனை அருகி லுள்ள நிலை மேடையில் வைத்துவிட்டுத் திரும்பிய லாரைன் அவன் கையிலுள்ள புத்தகத்தை நோக்கி “என் உள்ளத்தின் மறைதிற வொன்றை என்னைக் கேளாமல் எடுத்துத் திறந்து விட்டீர்களே” என்றாள். மூரட் இதுகேட்டு முதலில் திடுக்கிட்டு விட்டான். ஆனால், அவள் முகப்பார்வையிலிருந்து தான் கொண்ட பொருளில் அவர் பேசியிருக்க முடியாது என்று உணர்ந்து கொண்டான். அவள் குறிப்பறிய எண்ணி, “தங்கள் மறைதிறவு என்ன, அதை நான் அறியலாமா?” என்றான். லாரைன், “அதுதான் உங்கள் கண்முன் இருக்கிறதே. ‘என் மனத்துக்குப் பிடித்த புனைகதை’ என்று அதில் எழுதியிருக் கிறேன். அவ்வாசிரியர் இயற்கையின் வாழ்வில் முற்றிலும் ஒன்றுபட்டுள்ளார். நானும் அதுபோலவே ஈடுபட்டுள்ளேன். இந்நூலாசிரியர் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது போல வேறு எவரும் கொண்டது கிடையாது; கொள்ளப் போவதுமில்லை.” மூரட் கலையுள்ளமும் அதனை விஞ்சிக் காதலுள்ளமும் இன்ப உணர்ச்சியினால் துடிப்புற்றது. “அம்மணி அதை எழுதியது யார் என்பதைத் தாங்கள் அறிந்து கூறுகிறீர்கள் என்றே நினைக்கிறேன்” என்றான். லாரைன், “அவர் உள்ளத்தை அறிகிறேன். ஆனால், அவர் யார், பெயரென்ன என்பதை அறியேன். அறிந்தால் கட்டாயமாக அவர் நட்பை நான் விரும்புவேன். நீங்கள் அறிவீர்களா?” மூரட்டினால் சிரிக்காமலிருக்க முடியவில்லை. அவளுக்கு உண்மையினைப் பற்றிய ஐயம் சிறிதே நிழலாடிற்று. “அதை எழுதியது ஒருவேளை நீங்களாயிருக்குமோ?” “தங்கள் உள்ளத்தின் ஏற்பை உணர்ந்தபின் ‘நானே தான்’ என்று மகிழ்ச்சியுடனும் சற்றுப் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன். நான் மடத்தின் துறவியாகப் பயிற்சி பெறும் நிலையில் எழுதியதால் புனை பெயருடன் வெளியிட்டேன். ஆனால், அப்படியும் அது நான் என்பது பலருக்கும் தெரிந்து விட்டது. வால்த்தேர்கூட அந்நூலைப் பாராட்டினாராம். ஆனால், இப்பாராட்டுகளின் விளைவு விசித்திரமானது. பாரிஸ் அரண்மனை வாயில் எனக்கு அடைக்கப்பட்டது அதனாலே தான்.” லாரைன் கையிலிருந்த தூரிகை சட்டென கீழே விழுந்தது. அவள் எதிர்பாராத தின்பண்டம் பெற்ற குழந்தைபோலக் கைகளைக் கொட்டி “ஆ, அலைனின் ஆசிரியர் நட்பை நான் ஏற்கெனவே பெற்றுவிட்டதற்காக மகிழ்ச்சி. ஆயினும் முதலில் மூரட்டாகவே தங்களை வரவேற்கிறேன். அலைனின் ஆசிரியராக மீண்டும் ஒருமுறை உங்களை மனமார வரவேற்கிறேன். தங்கள் கலை ஒளி அடிக்கடி என் சிறு குடிலில் வந்து ஒளியூட்ட வேண்டும் என்பது என் மனமார்ந்த விருப்பம். இங்கே நீங்கள் விருந்தினராக வருவதாக எண்ண வேண்டாம்! இதை இனி தங்கள் இல்லமாகப் பாவிக்க” என்றாள். காணும் மகிழ்ச்சி மட்டுமேயேற்று அத்துடன் ஆர்வத்தை அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற டி லீஞ்ஞின் பரிந்துரை ஏற்று வந்த மூரட் காணும் மகிழ்ச்சி கடந்து நெருங்கிய நட்புரிமையே பெற்றுவிட்டது பற்றி அகமகிழ்வு கொண்டான். ‘நன்கு தொடங்கியது நன்கு முடிவுற இனி வழியுண்டு’ என்ற நம்பிக்கை பிறந்தது. அவன் உள்ளத்தின் சோர்வு அகன்றது. அதே சமயம் லாரைன் உள்ளத்தில் அவளறியாது மறைந்துலாவிய உருவிலாக் காதல் நட்புருவில் கருக்கொளத் தொடங்கிற்று. அவள் இன்னும் உளமார்ந்த நட்பிலீடுபடுவதாகவே எண்ணினாலும், ஒரு நாளிலேயே நட்பெல்லையைத் தாண்டி அவ்வுணர்ச்சி தன் இயல்பைச் செயற்படுத்திக் காட்டிற்று. டி லீஞ் மாளிகையை விட்டகலும்போது வழியில் மூரட்டின் முதல் வெற்றி பற்றிப் பாராட்டுச் செலுத்தினார். 18. உள்ளங்களின் இணைப்பு அரண்மனை யரசரும் மாளிகை மன்னரும் குடிசை யிளவரசிகளை நாடி மணம் பெற்றதாகத்தான் கலைஞரும் கவிஞரும் கனவு காண்பது வழக்கம். மூரட்டே அலைனில் அத்தகைய காதற் கனவைத்தான் தீட்டியிருந்தான். ஆனால், அலைன் ஆசிரியர் வாழ்வில் புகுந்த காதல் இதற்கு நேர்மாறா யிருந்தது. இங்கே குடிசையரசன், நாடோடி மாளிகை மங்கையை நாடினான். இப்புதிய காதலின் இன்பமும் புதிதாகவே இருந்தது. அலைனை எழுதியபோது மூரட் மடத் துறவியாகப் பயிற்சிபெற்று வந்தான் என்ற குறிப்பு லாரைனுக்கு அவன் வாழ்க்கைப் புதிர்களில் ஆர்வம் தூண்டிற்று. அவன் மடத்துறவு வாழ்க்கை, அதில் அவன் ஈடுபடுவதற்கான காரணம், துறவிகள் பற்றிய அவன் கருத்துகள் ஆகியவற்றிலிந்து தொடங்கி அவன் தாய், அவள் காதற் கலைவாழ்வு, மன்னன் ஸ்டானிஸ் லாஸுடன் அவள் நட்பு, வழியிடை அவள் தன்னைப் பெற்றெடுத்த புதுமை வரலாறு ஆகிய யாவற்றையும் லாரைன் அவளிடமிருந்து சிறுகச் சிறுகக் கேட்டு அவன் வாழ்வில் எல்லையற்ற ஆர்வங் கொண்டாள். குடிசைகளில் அவன் திரிந்து அங்கே அடைந்த இனிய அனுபவங்கள், பிற்பட்ட நாடுகளில் அவன் திரிந்து மக்களுக்கு ஊட்டிவந்த விடுதலை ஆர்வம், அவ்விடுதலைப் போர்களில் அவன் ஈடுபட்டு ஆற்றிய செயல்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை அவளுக்குத் தன் வாழ்க்கையின் நிறைவேறாக் கனவுப் பகுதிகள்போல் இன்பமும் பெருமையும் தந்தன. அவள் மூரட்டின் புறத்தோற்றத்தை மறந்தாள். அவன் எளிமையை மறந்தாள். அவனிடம் அவள் கொண்ட மதிப்பு நட்பினைத் தாண்டிற்று. அவள் பற்றும் பாசமும் மற்ற எல்லா உறவுகளையும் தாண்டிற்று. குடும்பத் தலைவரின் மனப்போக்கை முதன்முதல் குறிப்பாய் அறிபவர்கள் பணியாட்களே. சார்லட்டுக்குத் தலைவியிடம் பற்றும் அச்சமும் உண்டு. அதேசமயம் எவருடனும் அவள் நெருங்கிப் பழக அவள் இடம் கொடுப்பதில்லை. எவருடனும் அவள் உரையாடும்போதும் அவள் சமயமறிந்து இடைமறிப்பது வழக்கம். ஆனால், தலைவி மூரட்டுடன் உரையாடும்போது அவள் அடிக்கடி அப்பாற் சென்று அவர்களைத் தனியே உரையாடலில் தம்மை மறக்கும்படி விட்டு விடுவாள். காதலென்னும் இன்பப் படுகரில் படிப்படியாகச் சறுக்கி அமிழ்ந்துவந்த காதலரும் இதனை இயல்பென ஏற்றமைந்தனர். குழந்தைகள் அடிலியும் அகஸ்டியும் முதன்முதல் மூரட்டைக் கண்டு விலகி நின்றன. முதன் முதலில் அவனிடம் அச்சம்விட்டுத் தாவியது அடிலியே. ஆக்டேவ் மூரட் அவளை ஒன்றும் விழுங்கிவிடாதது கண்டு அகஸ்டியும் பக்கத்தில் வந்து விளையாடத் தொடங்கினான். குறும்புமிக்க இரு சிறுவரும் தாயிடம் பற்றுதலைவிட அச்சமே மிகுதி உடையவராயிருந்தனர். அத்துடன் அடிக்கடி அவள் வாசிப்பு, கலை, கவிதையினால் அவர்களுடன் அவள் முழு நேரம் கழிக்கவோ, அவர்களைக் கவனிக்கவோ முடியவில்லை. பணியாட்களே அவர்களை மிகுதி கவனிக்க வேண்டியதாயிருந்தது. மூரட் அவர்களுக்கே தன் முதலிடம் தந்து அவர்கள் வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் போதே தன் வேலைகளில் கவனம் செலுத்தினான். அத்துடன் பிள்ளைகளைப் புதுவிளை யாடல்களில் ஈடுபடுத்தவும், அவர்களைத் தோட்ட வேலை, பயனுடை விளையாட்டுத் தொண்டுகள், பணியாட்களுக்கு உதவி செய்தல் ஆகியவற்றில் அவன் சிறிது சிறிதாகப் பயிற்றினான். அதனால் அவர்கள் பயிற்சியில் அவன் தாய்க்கு ஏந்தலாகவும் தாயினும் திறமையுடையவனாகவும் இருந்தான். தன் வாழ்வில் கவலை யற்றிருந்த அவன் தன்னினும் தன் பண்ணை வாழ்வில் லாரைன் அசட்டையா யிருந்ததைக் கவனித்து மெல்ல மெல்ல அவள் கவனிக்காத துறைகளில் கவனம் செலுத்தினான். அவள் வீட்டாட்சி, குடும்ப ஆட்சி, பண்ணையாட்சி ஆகிய யாவும் ஒரு சில நாட்களில் புதுவாழ்வாக மாறின. யாரையும் அதட்டாமலே தன்வயப்படுத்தி ஆட்கொள்ளும் அவன் இயல்பு லாரைனின் புறக்கணிப்பாட்சியைத் திறமை வாய்ந்த அன்பாட்சியாக மாற்றிற்று. பிள்ளைகள் லாரைனை நேரடியாகத் தொந்தரவு செய்யாதவாறு தான் அவ்விருவரையும் வைத்து விளையாட்டுக் காட்டிக்கொண்டே லாரைனுடன் உரையாடி அவளை மகிழ்விக்கும் கலையில் மூரட் தேர்ச்சி காட்டினான். பணி யாட்கள்கூட இதனால் அவனை ஒரு நொடி காணா விட்டால், அவனையே நாடுபவராயினர். லாரைனிடம் அவன் தன் காதலைத் தெரிவிக்கவேயில்லை. அவள் தன் காதலில் ஈடுபடுவதை அவன் விரைவு படுத்தவுமில்லை. ஆனால், அதற்குள் அம்மாளிகை முழுவதையுமே அவன் தன் காதற் கோயிலாக மாற்றிவிட்டான். அம்மாளிகையின் ஒவ்வொரு பகுதியும் காட்சியும் லாரைன் உள்ளத்தை மூரட் உள்ளத்துடன் ஒன்றுபடுத்த உதவின. ஒவ்வொரு மலரின் மணத்தையும் அவர்கள் இருவரும் ஒருங்கே நுகர்ந்தனர். ஒவ்வொரு மாலை வானழகிலும் அவர்கள் இருவரும் ஒருங்கே ஈடுபட்டுத் தம்மைக் கடந்து ஒரே இன்பவாரியில் திளைத்தனர். இருவரும் சேர்ந்து கட்டிய மனக்கோட்டைகள் எத்தனையோ? சில சமயம் அடிலியும் சில சமயம் அகஸ்டியும் அம்மனக் கோட்டைகள் புறச் சின்னங்கள் போல அவர்கள் இருவர் கைகளையும்பற்றி இடையே உலவுவர், அல்லது ஒருவர் மடியிலிருந்து ஒருவர் மடிக்குத்தாவுவர். இத்தனைக் கிடையிலும் அவர்களிடையே காதல் என்ற சொல் ஒலிக்கப்படவேயில்லை; நட்பின் எல்லை கடந்து ஒரு சொல், ஒரு குறிப்புக்கூட நிகழவேயில்லை. லாரைன் இன்னும் கைமைச் சின்னமாக கறுப்புடையிலேயே இருந்தாள். ஆனால் உடை கறுப்பு உடையாயிருந்தாலும் அதிலும் தோற்ற நடை உடையணிகளிலும் அவள் முன்னிலும் இப்போது மிகுதி கருத்துச் செலுத்தியிருந்தாள். அவள் காதல் ஏற்படுத்திய மாறுபாடு இது மட்டுமே. நட்பின் முயற்சியான அவர்கள் காதலில் ஒளிப்பில்லை - நாணமில்லை - உலகத்தைப்பற்றிய சிந்தனையில்லை. அதே சமயம் உடல் சார்ந்தெழும் சிறுமைக் காதலின் தன்னலம், பரபரப்பு, சிறு பொறாமைப் பொச்சரிப்புகள் ஆகிய எவையும் அதன் அமைந்த போக்கில் இடையீடாகவில்லை. தத்தம் குழந்தைப் பருவம், குடும்பச் சூழல்கள், உறவினர், நண்பர் பற்றிய செய்திகள் எதுவும் அவர்கள் பேச்சுகளிடையே தங்கு தடங்கலின்றிப் பேசிக் கொள்ளப்பட்டன. இறந்த காலத்தில் உலவி, நிகழ்காலம் அளாவி, எதிர்காலத்தைப் பற்றிய எண்ணமற்ற தாயிருந்தது அவர்கள் ஊடாட்டம். லாரைன் அலைனின் ஒவ்வொரு வரியையும் ஒரு நூறு தடவை படித்திருந்தாள். எல்லாரிடமும் அவள் அதனை மேற்கோள் காட்டுவது வழக்கம். அலைகள் ஆசிரியரிடம் அதனை மேற்கோள் காட்டுவதில் அவளுக்குச் சிறிது நாணம் இருந்தது. ஆகவே, அவள் “அலைனின் ஆசிரியரைக் காண முடியுமா? கண்டால் எவ்வளவு நற்பேறு என்றுதான் நான் முன்பெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தேன். கண்ட பிற்பாடு கூட முதலில் இது ஓர் அரிய வாய்ப்பாயிற்று என்றுதான் எண்ணினேன். ஆனால், இப்போது எண்ணுகிறேன் - அலைன் ஆசிரியர் நீங்கள் என்று தெரிந்திருந்தால் நான் தங்கள் நட்பை விரும்பியிருக்க மாட்டேன்” என்றாள். மூரட்: ஏன் அப்படி? லாரைன்: நான் என் அலைனிலிருந்து மேற்கோள் காட்ட முடியாதல்லவா? மூரட்: ஏன் காட்ட முடியாது? தன் நூலிலிருந்து மேற்கோள் காட்டப்பெறும் வரை விரும்பாத கலைஞன் இருப்பானா? லாரைன்: கலைஞன் விரும்பலாம். ஆனால், மேற்கோள் காட்டுபவர்களுக்கு அதில் என்ன மனநிறைவு கிடைக்கும்? எதிரிக்குத் தெரியாத ஒன்றை - புதிதான ஒன்றைப் பேசுவதிலல்லவா அவை இருக்கக்கூடும். மூரட்: தாங்கள் பேசுவது எதுவானாலும் எனக்குப் புதிதாகவே இருக்கும். லாரைன் முகம் இவ்வாசகத்தினால் நாணமிகுந்து சிவந்தது. அவள் முகத்தைச் சிறிது திருப்பிக் கொண்டாள். அவன் அதை மாற்ற மேலும் “தங்கள் உரையாடற்கலை கலைக்கும் கலைப்பண் பூட்டும்” என்றான். காதல் அம்புகளிலிருந்துகூடத் தன்னைக் காத்த அந்நட்பு அவளை மிகவும் வயப்படுத்திற்று. “இவ்வளவு இனிய கற்பனைகளை, இவ்வளவு நயமிக்க அறிவுப் பண்பை நீங்கள் எவருக்கும் தெரியாமல் இதுவரை எங்கே மறைத்து வைத்துக் கொண்டிருந்தீர்கள்? தங்களை நான் முன்பே கண்டு பழகியிருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும்” என்றாள். தன் பேச்சின் போக்கு தன் உள்ளத்தைத் திறந்து காட்டுவதுடன் நிற்கவில்லை - தன் உள்ளத் திரைக்குப் பின் அறைகுறையாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரே ஒரு மறை செய்தியையும் வெளிப்படுத்திவிடத் தக்கதாகும் என்று அவள் கண்டாள். கண்டு பேச்சை உடனே மாற்றினாள். “தாங்கள் நண்பர்களைப் பற்றியெல்லாம் மிகவும் பேசுகிறீர்கள். பகைவர்களாக எவரையும் குறிப்பிடவில்லை. தங்களுக்குப் பகைவர்களே கிடையாதென்று நினைக்கிறேன்.” மூரட்: ஏன் கிடையாது? மடத்துத் துறவியரில் பெரும் பாலார் என்னை வெறுப்பவர்கள்தாம். தங்களைப் போன்ற அரண்மனை வாணர்களில் தாங்கள் நீங்கலாக எவரும் என் கூட்டுறவுக்கு இடந்தர மாட்டார்கள். லாரைன்: துறவியர் ஏன் தங்களைப் பகைக்க வேண்டும்? மூரட்: நான் துறவியாகப் பயிற்சி பெறவிருந்தவன் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களே! லாரைன் உண்மையில் அவர் மடத்தில் கல்விப் பயிற்சி பெற்றர் என்றே நினைத்திருந்தாள். காதல் வேடராகிய மூரட் ஒரு துறவியாக விருந்தார் என்ற எண்ணம் அவளைக் குலுங்கக் குலுங்க நகைக்க வைத்தது. அதுபற்றிய விவரங்களையெல்லாம் அவள் முழுதும் கேட்டாள். பின் அரண்மனை வாணர் தங்களைப் பகைப்பானேன் என்று பின்னும் புதுத் தூண்டுதல் தந்தாள். ஆக்டேவ் மூரட், தான் பாதையிற் பிறந்த பாலன் என்பதையும், தாயின் தங்கு தடையற்ற போக்கிலேயே தான் வாழ்ந்த வகையையும் கூறினான். லாரைன் அவன் கைகளைத் தன் கைகளால் பற்றிக் கனிவுடன் “அன்பரே, நம் இருவர் நேசமும் இப்போது முழு நிறைவுடையதாகிறது. நான் வெளிப் பார்வைக்கு வேறு வகைப் பட்ட. சூழ்நிலையில் பிறந்தாலும் பிறப்பு முதல் இன்றுவரை தங்களைப் போல அன்புக்கும் அறிவாதரவுக்கும் அலைந்தவளே!” என்று கூறித் தன் குழந்தை காலத் துன்பங்கள், அப்பாவிச் சிறுமியான தன் தமக்கையின் துன்பமிக்க வாழ்வு, முடிவு, ஒரு சிறு குச்சு நாய் தவிரத் தான் ஆதரவற்றுத் தவித்தது, இறுதியில் நல்லமைதியையும் விடுதலையையும் நாடியே நற்குணமிக்க முதியோனாகிய கோமான் சிராம்மோனை மணந்தது ஆகிய எல்லாச் செய்திகளையும் விரித்துரைத்தாள். இருவர் வரலாறுகளும் இருபெருங் காவேரிகளாக வந்து ஒன்றிவிட்டன. ஆக்டேவ் மூரட் இவ்வாழ்வுடன் தன் வாழ்க்கையிலுள்ள ஒப்புமைகளை எடுத்துக் காட்டினான். தானும் ஒரு நாயுடன் நாயாக ஒரே கொட்டிலில் வளர்க்கப்பட்டதையும், தன் பிள்ளைமைக் காலத் துயரங்களை உடன்பிறப்புப் போன்றிருந்த அந்த நாயிடம் கூறி ஆறுதல் பெற்றதையும் அவன் விரித்துரைத் தான். அத்துடன் லாரைனைப் போலவே தானும் முன் ஓவியம் வரைவதில் சிறிது விருப்பங் கொண்டிருந்ததாகவும், தன் பெரிய தாய் ஒருத்தியின் படத்தை உள்ளபடியே சுருக்கு, திரைகளுடன் வரைந்து விட்டதாகவும் அதனாலே அச்செல்வ ஆதரவை இழந்ததாகவும் எடுத்துரைத்தான். லாரைன் மீண்டும் சிரித்தாள். “நீங்கள் எல்லாவற்றையும் உள்ளதை உள்ளபடியே சித்திரிப்பவரானால், உங்களைக் கண்டு நானும்கூடத்தான் அஞ்ச வேண்டும். எங்கே பெண்களாகிய எங்கள் சிறுமைகளையெல்லாம்...” மூரட் அவளைப் பேச விடவில்லை. “பெண்ணின் பெருமைகளைப் பாடும் திறம் ஆண்களுக்கு இன்னும் இல்லை - அதன் பின்னல்லவா சிறுமைபற்றிப் பேசவேண்டும்” என்றான். அவள் மீண்டும் பேச்சை மாற்றினாள். அதே சமயம் நட்பு என்னும் புறப்போர்வையுட் பொதிந்து அவள் ஒரு காதல் கோரிக்கை விடுத்தாள். “அன்பரீர், கலைத் துறையில் தாங்கள் எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும் என்று விரும்புகிறேன்.” அவள் கோரிக்கை என்னவாயிருக்குமோ என்று அவன் வியப்படைந்தான். “தங்களுக்காக என்ன உதவியாயினும் செய்யத் தயங்கமாட்டேன்” என்றான். லாரைன்: இன்னதென்று தெரியாமலே இவ்வளவு எளிதாக வாக்குறுதி கொடுத்துவிட்டீர்களே! அந்தமட்டில் எனக்கு நல்லதுதான். நான் கை பழக குழந்தைகளையும் நாயையும் பூவையும் பார்த்துப் பார்த்துத்தான் வரைகிறேன். அவர்களோ அவையோ ஒரு நிலையில் படத்துக்கு அமைந்திருக்க முடிவதில்லை. கலையருமையை அவர்கள் அறியமாட்டார்கள். நீங்கள் என்முன் இருந்து படித்துக் கொண்டிருப்பதானால், தங்களைப் பார்த்துப் படம் வரையலாம் என்றிருக்கிறேன். மூரட்: சிலை போலிருக்கச் சொல்கிறீர்கள். அது தானே நீங்கள் விரும்பும் கலைப்பண்பு! நல்லது. எவ்வளவு நேரம் இருக்க வேண்டும். லாரைன்: அதற்குள் நேரக் கணக்கிடுகிறீர்களே! ஒரு நாளைக்கு அரை மணி நேரம் இருந்தால் போதும். மூரட்: ஒரு நாளைக்கு அரை மணியா? அப்படியானால் நாள் கணக்கில் திட்டமிடுகிறீர்கள் போலிருக்கிறதே! லாரைன்: ஆம்... சில பல நாட்களாகும். ஒரேயடியாக இருப்பது உங்களுக்கும் சிரமம். எனக்கும் மற்ற வேலைகளைப் பார்க்க வேண்டுமல்லவா? அத்துடன்... மூரட்: அத்துடன் என்ன? சும்மா சொல்லுங்கள். லாரைன்: இதைச் சாக்கிட்டுத் தங்களைத் தொடர்ச்சியாக இங்கே அழைக்கலாம் அல்லவா? இத்தகைய பட்டுக் கயிற்றினால் தானே நாடோடிப் பறவையாகிய உங்களைக் கட்டி வைக்க முடியும்? பட்டுப் பொதியினுள் பொதிந்த அவள் காதல் அழைப்பு அவன் உள்ளத்தைக் குளிரச் செய்தது. துணிவற்ற தன் விருப்பத்தை அவள் மதித்தாள் என்பதை அவள் ஆர்வ இணக்கம் அவனுக்கு அறிவித்தது. உரையாடல் கலப்பு உள்ளக் கலப்பாயிற்று. 19. பாதையில் கண்ட காதற் கனிவு பாதையிற் பிறந்த பாலகன் கதை மாளிகையிற் பிறந்த மாதுக்குக் களிப்பூட்டிற்றேயன்றி, மாளிகையிற் பிறந்தோர்க்கு வழக்கமான அருவருப் பூட்டவில்லை. மூரட்டினுடைய காதல் தத்துவத்தை அறிந்தும் அவள் அவனையோ, கட்டற்ற காதல் வாழ்வு வாழ்ந்த அவள் தாயையோ பழிக்கவில்லை. அவள் உள்ளம் மலையின் சாரலில் மெல்லச் சரியும் பனிப் பாறைபோல், அவனை நோக்கிச் சரிந்து கொண்டுதானிருந்தது. ஆனால், அச்சரிவின் வேகத்தை நெடுநாள் தடுத்து நிறுத்திய குத்துப் பாறாங்கல் ஒன்று இருந்தது. அதுவே காதல் பற்றிய அவள் உயர் கருத்து. உலகில் பலருக்கு - சிறப்பாக அந்நூற்றாண்டின் மேலை ஐரோப்பாவுக்கு - காதல் ஓர் உடல் சார்ந்த இன்பம். அது ஆணுக்கு இன்ப வேட்டை; பெண்ணுக்கு இன்பத் தூண்டில். வேடனது வேட்டை வெற்றியில் முடியும். அதற்கிரையான பெண்ணின் இன்பம் தூண்டிலிரையை நாடிய மீனின் இன்பம் போலச் சிற்றின்பமாய், பின் துன்பத்தையும் மீளா உளத் துயரத்தையும் இடிவையும் நல்கும். ஆணின் வெற்றி மேலும் பல வெற்றிகளுக்கு முதற்படியாய் அமையும். அவன் காதல் துறையில் எத்தகைய மாபழிகளைச் செய்தாலும் அவனுக்கு இயற்கை தண்டனை தருவதில்லை. அவன் மனச்சான்றும் மக்கள் மனச்சான்றும் அவனைக் குறை கூறுவதில்லை. பெண்ணின் தோல்வியோ மேலும் தோல்விகளுக்கு வழி காட்டுமேயன்றி மீட்புக்கு வழி காட்டாது. இயற்கையும் இரக்கமின்றி அவளைத் தண்டிக்கும். இயற்கை தன் தண்டனைகளைச் சிறிது தளர்த்தினால், மக்கள் கண்டிப்பர். மக்கள் சிறிது கனிவு காட்டினால், அவள் மனச்சான்றே அவளைத் தயங்காது உள்ளிருந்து ஓயாது உறுத்தும். இயற்கையறிந்த லாரைன் இத்தகு காதலைவிட நட்பை உயர்வாக எண்ணினாள். காதல் நட்பினும் உயர்வுடையது என்பது அவளுக்கு இதுவரை தெரியாது. கணவன் காதல் அவளுக்கு நட்பாக மட்டுமே இருந்தது. ஆயினும், அவள் அந்நட்பையே காதல் எனக் கொண்டிருந்தாள். இப்போதோ அவள் உள்ளம் இதனைக் கடந்து காதலை நாடி வந்தது. ஆனால், மூரட்டின் நாடோடிக் காதலையறிந்து அவன் காதல் தத்துவத்தை அவன் பாடல்களால் உணர்ந்த அவள் அத்தனைய காதலில் சறுக்கி விழக்கூடாதெனத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். அதேசமம் மற்றப் பெண்களைப் போல அவள் தன் மனவுறுதியில் ஐயங்கொள்ள வில்லை. எனவேதான் காதலுக்கஞ்சி நட்பை உதறித்தள்ளாது. நட்பளவில் நின்று அதனை நுகர்ந்தாள். லாரைன் தன் ஓவியத்தைச் சாக்கிட்டு நாள்தோறும் மூரட்டைத் தன் மாளிகையில் சந்தித்தாள். ஆனால், உண்மையில் அரை மணி நேரம்கூட அவள் தொடுத்துத் தூரிகையில் வேலை செய்தில்லை. அந்த அரைமணி நேரமும் காலை மாலை என்ற தட்டுப்பாடற்றதாய் விட்டதனால், அவன் பெரும்பொழுதையும் அவள் மாளிகையிலேயே கழித்தான். இரண்டு உள்ளங்கள் ஒன்றன் கவர்ச்சியில் ஒன்று ஈடுபட்டிருக்கும்போது, பிரிவுக்குத் தான் தூண்டுதல் வேண்டுமேயன்றிக் கூடுவதற்குத் தூண்டுதல் தேவையில்லை யன்றோ? நாளடைவில் மூரட் பெயரளவில் விருந்தாளியா யிருந்தானேயன்றி, உண்மையில் லாரைன் குடும்பத்தில் ஒரு குடும்ப உறுப்பினன் போலாய் விட்டான்! அவன் வரவைப் பணியாட்கள் முதல் நாள்முறை நிகழ்ச்சிகளில் ஒன்றாக எதிர்பார்க்கலானார்கள். குழந்தைகள் அவனைச் சிறிது நேரம் காணாவிட்டால், தாயைக் காணாத சேய்கள்போல் மயங்கினர். லாரைன் அவன் வரவிலேயே எப்போதும் கருத்துச் செலுத்தியிருந்ததனால், அவன் வாயிலில் நுழைவது முதல் தன் அறை வருமளவும் அவன் செயல்முறைகள் எல்லாவற்றையும் அவற்றவற்றுக்குரிய தனி ஓசைகளாலேயே அறியத் தொடங்கினாள். அத்துடன் முன் அனுபவங்கள் இருவருக்கும் வேறு வேறாயிருந்தாலும், அடிப்படையில் இருவர் கருத்துகளும் போக்குகளும் பெரிதும் ஒத்திருந்தன. ஆகவே, புறநிகழ்ச்சிகளில்கூட அவர்களுக்கு எத்தகைய சிறு கருத்து வேறுபாடுகளும் இல்லாதிருந்தது. பணியாட்கள், பிள்ளைகள், அயலார்க்கு இருவரில் ஒருவர் கருத்தே அடுத்தவர் கருத்தாக அமைந்தது. ஓவிய அறையில் அவள் அவன்முன்னே இருக்கும் போதெல்லாம், அவளையறியாமல் அவள் உள்ளம் அவனைப் படம் பிடித்துக் கொண்டது. அவள் கூர்விழிகள் அவன் அங்க அமைப்பின் ஒவ்வொரு கூறினையும் வாங்கி உள்ளத்துக்கு அனுப்பிவைத்து, என்றுமழியா வகையில் பொறிப்பித்தன. ஜூலை மாதத்தில் ஒரு நாளிரவு பெரும் பகுதியும் அவர்களிருவரும் அயலகத்திலுள்ள ஒரு விருந்தில் கழித்தனர். இத்தகைய தறுவாய்களில் லாரைக் தன் ஊர்தியில் தன் மாளிகைக்குத் திரும்புவது வழக்கம். மூரட்டும் தனியே குதிரையேறி மீளவிரும்புவதாகக் கூறிக்கொண்டு தன் அத்தை வீடு செல்வான். ஆனால், இன்று வழக்கத்துக்கு மாறாக அவள் அவனைத் தன்னுடன் ஊர்தியில் வரும்படி கூறினாள். அவன் எப்போதும் போலச் சாக்குப்போக்குச் சொல்ல வாயெடுத்த போது அவள் அவனைக் குறும்பு நகையுடன் நோக்கி “இன்று சாக்குப்போக்குக்கு வழியில்லை. வண்டியோட்ட வேறு ஆளில்லை. உங்கள் நட்பை இன்று செயலில் காட்ட வேண்டும்.” என்றாள். தன் தாய் போலந்து நாட்டு நடுவரை அழைத்த அழைப்புப் பற்றிய கேள்வி நினைவு அவன் உள்ளங் கடந்து விரைந்து பாய்ந்தது. அன்றைய அனுபவம் முழுவதும் அதே நாள் கதையை அவனுக்கு நினைவூட்டு வனவாயிருந்தன. வழியில் அவன் தன் சந்திப்புக்குரிய வேறு ஒன்றை எடுத்துரைத்தாள். தன் புதுக் குதிரையை இன்று வண்டியில் பூட்டியிருப்பதாகவும் அதற்குரிய விலை கொடுப்பதற்குள், அதற்குரிய மதிப்பை உள்ளவாறறிந்து கூறவே அவனை அழைத்திருப்பதாகவும் அவள் கூறினாள். ஆனால், குதிரையின் இயல்பு பற்றி அவள் மீண்டும் பேச்செடுத்ததாக அவனுக்கு நினைவு எதுவும் இல்லை. அவனும் அக் குதிரையின் இயல்பு பற்றி பிற்காலத்தில் ஒரே ஒரு குறைதான் கூறினான். அவ்வமுத வேளையின் அருமை அறியாமல் அது விரைந்து நடந்ததே அதன் ஒரு குறையாக அவன் கருதினான். அன்று மூரட் பழங்கால மன்னவ வீரர்போல எடுப்பான உடையணிந்திருந்தான். அதன் நீலநிறம் லாரைனின் நீலவிழிகளில் நிழலாடியது. அவளோ வானவில்லின் பன்னிறங்களையும் ஒளிக் கதிர்களின் முன் பகட்டும் சூரியபட அங்கியணிந்து வில்வெட்டுப் பட்டினாலமைந்த காலணிகளும் அணிந்திருந்தாள். அவள் வழக்கமாக அணிந்த கறுப்பு நிறத்தை ஆடையருகுகளின் நிறம் மட்டுமே நினைவூட்டியது. ஆனால், இக்கறுப்பும் அவள் மெல்லிய உள்ளாடை கடந்து மின்னிய மேனியின் தூய வெண்மையை எடுத்துக் காட்டவே உதவிற்று. அவள் அன்று பகைவனை எதிர் கொள்ளப் புறப்பட்ட இராநங்கையென மூரட்டுக்குக் காட்சி யளித்தாள். “குதிரையைச் சற்று மெல்லவே தட்டிவிடுங்கள். என் தலை சுற்றுகிறது. என் உடலெல்லாம் ஒரே தளர்ச்சியாயிருக்கிறது” என்றாள் அவள். ஆடல் பாடல்களில் கலந்து அவள் மேனி உண்மையிலேயே துவண்டிருந்தது. ஆடையணி மணிகளின் எடை வேறு அதனை அழுத்தியது. “தங்கள் இறக்கைகளைக் கழற்றி வையுங்களேன்” என்றான் அவன். அவள் அதற்குக் கூட வலுவற்றவள் போல ஏங்கிப் பெரு மூச்சு விட்டாள். அவன் அவள் தலையைத் தாங்கி அவள் அணி மணிகளையும் திண்ணிய மேலங்கியையும் ஒவ்வொன்றாகப் பூட்டவிழ்த்து வண்டியில் களைந் தெறிந்தான். அது சிறுகச் சிறுக வளரும் மலைபோல அவள் முன்னிலையில் எழுந்து வளர்ந்தது, அவள் அதனை உணராதவள்போல் அரைக்கண் துயில் கொண்டாள். அவன் தலை அவள் தோள்மீது படிந்தது. அவள் உடல் தலையறுந்த கொடிபோல அவன்மீது துவண்டு படிப்படியாகச் சரிந்து அவன்மீது கிடந்தது. காலை வேளையில் குளிர்ந்த நல்வாடைக் காற்று அவள் பொன்னிளங் கூந்தலையும் மெல்லிய உள்ளாடைகளையும் நீவித் திரைத்து விளையாடிற்று. சிறிது நேரம் அவள் தளர்ச்சியுற்று அரைத் துயிலில் ஆழ்ந்து கிடந்தாள். பின் அவள் கண்கள் சிறிது சிறிதாகத் திறந்தன. ஆனால், அவள் அவன் மடியிலிருந்து எழவோ, தன் நிலையை மாற்றிக் கொள்ளவோ விழையவில்லை. அவனை நோக்கிக் கனிந்த உள்ளத்துடன் “தாங்கள் உண்மையான நண்பர்” என்றாள். போலந்து நடுவரிடம் அன்னை கூறிய சொற்கள் அவன் நினைவுக்கு வந்தன. அவன் நினைவை அவளும் அறிந்து கொண்டாள் என்னலாம். ஏனெனில், அவள் அடுத்த சொற்கள் அந்நிகழ்ச்சியை மீட்டும் நினைவுபடுத்தின. “தாங்கள் பாதையில் பிறந்ததாகச் சொன்னீர்கள். தங்கள் பிறப்பு வரலாறு என் உள்ளத்தைத் தொளைத்தது. ஏனெனில், நான் மாளிகையிலேயே பிறந்தாலும், வாழ்க்கையில் பாதையிலேயே விடப்பட்டேன். கூடத் துணை வந்த தமக்கை பாதையிலேயே என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டாள். எனக்குத் துணையாயிருந்த என் கணவர் நடுவழியில் கண்டு நடுவழியிலேயே விட்டுவிட்டார். என் துயர்களுக்குப் பேராறுதல் தந்து சிறு நாய்ச் செல்வன் ரோஸிகூட எனக்கு நிலைக்கவில்லை. தங்கள் வாழ்க்கை வரலாறு அந்த ரோஸியையும் எனக்கு நினைவுட்டுகிறது. தங்களுக்கும் ஒரு நாய் உற்றதுணையாய் உதவியுள்ளது. நம் இருவரும் இரு வேறு வாழ்க்கையில் நட்பின் நிறைவைத் தங்களிடமே பெற்றேன். இது என்றும் குறைவுபடக் கூடாது. மாறவும் கூடாது என்பதே என் விருப்பம்” என்றாள் அவள். அவள் மீண்டும் கண்மூடினாள். காதலமுதம் அவன் முன் கட்டவிழ்ந்து கிடந்தது. அயலானுடன் இருக்கும் நங்கைபோல அவள் நடந்து கொள்ளவில்லை. அது அவனுக்கு மகிழ்ச்சி யூட்டிற்று. ஆனால், காதலி போலவும் அவள் ஆர்வத்துடன் அவனை ஏற்கவில்லை. அவன் காதல் கோயிலினுள் அவனை வரவேற்றாள். ஆனால், நட்புத் திரை அவள் காதலுக்குக் கைவிலங் கிட்டு நிறுத்திற்று. “இது என்றும் குறைபடக் கூடாது; மாறவும் கூடாது என்பதே என் விருப்பம்.” - அவள் விருப்பம் அவனுக்கு ஆணையாகவே அமையும் என்பதை அவள் எப்படியோ அறிந்து, அச்சமின்றி அவன் வசம் உடலை நம்பி ஒப்படைத்தாள். உள்ளம் அவனுடையது என்பதை அவள் அறிவாள். உடல் அவன் அடைக்கலமாயிற்று. ஆனால், காதல் எடுக்கக்கூடிய பொருளன்று; கொடுக்கத்தக்க பொருள். அமுதம் கைக்கொண்டும் உண்ண மாட்டாத வயிற்று வலிக்காரன் போல் அவன் கட்டுண்டிருந்தான். மாளிகை யணுகும்வரை அவள் அசைவற்று, அமைதியுடன், கவலையோ நாணமோ எதுவும் இல்லாமல் கிடந்தாள். அவனும் அகப் புயல்களினால் நாலாபுறமும் மேல்கீழும் மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டும் புறத்தே அசைவற்று அமைதியுற்று அமர்ந்திருந்தான். தேன் குடத்தில் வீழ்ந்து தத்தளிக்கும் தேனீப்போல அவன் தத்தளித்தான். அவனைப் பார்த்துப் படம் வரையும்போது புறத்தே தோன்றிய அவன் அக அழகைச் சிறுகச் சிறுக அவள் பருகியிருந்தாள். ஆனால், இது அவனுக்குத் தெரியாது. சிறுகச் சிறுக அளவறிந்து பருகியதனால் அது அவளுக்குத் தெவிட்டா அமுதமாயிருந்தது. அத்துடன் அமுதம் அவள் அவா ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. வேண்டும்போது அவள் அதனை நுகரலாம். வேண்டிய அளவில் நுகரலாம். வேண்டாத போது அதனை ஒதுக்கி வைத்துக்கொள்ளலாம். ஆனால், மூரட்டின் காதல் வாழ்வு காதலடிமை வாழ்வாகவே இருந்தது. அவன் அவா ஆட்சியுள் அது அடங்கவில்லை. அமுதத்தை அவன் நுகர முடிவது அவன் விருப்பப்படியோ அவன் விரும்பிய அளவிலோ அல்ல. நுகரும்போது அவன் சிறுகச் சிறுகப் பருகவோ, அளவறிந்து பருகவோ எண்ணியதில்லை - அவள் அழகை அவன் கண் கொண்ட மட்டும் பருகினான். அது உளங்கொள்ளாது தெவிட்டிற்று. அவன்மீது இடப்பட்ட நட்புத்தளை அவன் உள்ளத்தின் பாய்ச்சலைத் தடுத்திழுத்தது. தளை அவனுள்ளத்தை ஈர்த்த இடமெல்லாம் கன்னிப் புண்பட்டது. காதலாட்சி அவள் கையிலிருந்தது. அவன் அதில் மலர் போல் கசக்கப்பட்டான். மெல்லியல் மாதர்களையே கவிஞர் மலரென்று வருணிப்பார்கள். இங்கே அவன் மலரானான். அவள் அதனைக் கசக்கி நுகரும் காரிகையானாள். இந்நிலை கண்டு அவள் புழுங்கினாள். மாளிகை வட்டாரம் அணுகிதும் அவன் மெல்ல எழுந்தான். அவன்மீது சாய்ந்திருப்பதில் அப்போதும் அவள் நாணம் காட்டவில்லை. தன் ஆடைகளைப் பூட்டிவிடும்படி அவள் அவனுக்கு நட்பாணையிட்டாள். உணர்ச்சி எதுவுமின்றி இயந்திரம்போல அவன் செயலாற்றினாள். மாளிகை வந்ததும் அவள் தானும் கீழே இறங்கிப் பல்வகை எண்ண அலைகளில் மூழ்கியிருந்த அவனையும் கீழே இறக்கினாள். தன் பணியாட்களை விளித்து, குதிரை பூட்டவிழ்க்கும்படி கூறிவிட்டு அவள் அவனிடம் இரக்கமின்றி விடைபெறலானாள். “தாங்கள் செய்த உதவிக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டவள். தங்கள் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்றுடன் அது முற்றுப்பெற்றுவிடும். ஆகவே, இன்று வரத் தவறாதீர்கள். நான் தங்களுக்காகக் காத்திருப்பேன்” என்றாள். காதல் என்னும் வெந்நீரில் அவளை அவள் காதல் தெய்வம் அன்று குளிப்பாட்டிற்று. ஆனால், குளித்து முடியுமுன் அவளை நட்பென்னும் குளிர் நீர்த் தடத்தில் தள்ளிவிட்டுச் சென்றது! அவளை அவன் வெறுக்கவும் முடியவில்லை; விரும்பி விடவும் முடியவில்லை. அவளை விட்டகல அவனால் முடிய வில்லை; ஆனால், விட்டகல அவன் தன்முனைப்பு அவனைத் தட்டி ஊக்கிற்று. இரு குதிரைளால் இரு திசை கட்டியிழுக்கப் படுபவன் போல அவன் உளைவுற்றான். எண்ணெய்ப் பசையறியாத அவன் தலைமுடியில் அன்று பூசப்பட்டிருந்த எண்ணெய்ப் பசையைப் போக்கிக் காலை வெளியில் வாடைக் காற்று அவனை எள்ளி நகையாடிற்று. அவன் தேர்ந்தெடுத்து, விருந்தகத்துக்கென அணிந்த ஆடை நெகிழ்ந்து பழைய அலங்கோல ஆடையை நினைவுட்டும் முறையில் ஊசலாடிற்று. காதலின் கசப்பு - நட்பில் வெறுப்பு - வாழ்க்கையில் உவர்ப்பு ஆகிய மூன்று உணர்ச்சிகளாலும் உந்தப்பெற்று அவன் தன்னறை சென்று படுக்கையிற் புரண்டு சோர்வுற்றான். தன்னை அலைக்கழிக்கும் அக்காதல் தெய்வத்தின் மீது அவன் உள்ளூரச் சீற்றம் கொண்டான். தான் படும் பாட்டை அவள் படச் செய்யவேண்டும் - அவள் வாழ்க்கையில் பலவகையில் மொத்துண்டவள்தான்; ஆயினும் தன்னருமையை முற்றிலும் அவள் அறியச் செய்ய அவள் இன்னும் சிறிது பட வேண்டியதுதான் என்று அவன் எண்ணிக்கொண்டான். எண்ணம் ஆவியுருவில் விரிந்தகன்று முகில் கோட்டையாக உருவெடுத்தது. தன் நிலை, தன் கடன்கள், மணம் செய்ய முடியாது தடங்கல் செய்யும் தன் சமயப் பயிற்சி ஆகியவை எல்லாம் அவ்வுருவுக்குத் திட்ப வடிவம் தந்தன. ‘ஆம், மணமில்லா உறவிலேயே அவளைப் பிணைத்தல் வேண்டும். பிறர் காதல் புள்ளிமான்களை வதைத்து அழிவு செய்கின்றனர். நானும் என் புள்ளிமானை வாட்டி வதைப்பேன். ஆனால், இறுதியில் அதனை நான் புறக்கணிக்கப் போவதில்லை. அதனை மடக்கி எனதாக்கி ஆட்கொள்வேன்’ என்று அவன் உறுதி பூண்டான். 20. போராட்டம் மூரட்டின் சீற்றத்திடையே அவனுக்கு முன்பு தோன்றாத பல சிறு நிகழ்ச்சிகள் விளங்கத் தோன்றின. ஆடவர் பெண்டிருடன் காதல் விளையாட்டு விளையாடிக்கொண்டே அதில் சரிசமப் பொறுப்புக் கொள்ளாது விலகியிருப்பது ஆண் மரபு! இன்று அவ்வாண் மரபையே அவள் பின்பற்றி வருகிறாள் என்று அவன் கண்டான். முன்பு ஒரு நாள் அவன் பொழுது போக்காக அவள்மீது ஒரு பாட்டுக் கட்டி அவளை யாழ் வாசிக்கும்படி தூண்டி அதன் பண்ணில் அவளை ஈடுபடுத்தியிருந்தான். அதைத் தன் காதலுக்கு ஒரு வெற்றியாக்கவே அவன் நினைத்தான். அவளும் அதனைக் கூசாது பாடினாள். ஆனால், அவன் எதிர்பார்த்த செயல் வெற்றிதான் கிடைத்தது. அது உணர்ச்சி வெற்றியா யமையவில்லை என்பதை அவன் இப்போது உணர்ந்தான். மென்மை, வனப்பு மேதினி எங்குமே மேவினும் என்ன பயன்? மெல்லியலாள் இவள் மேனி வனப்பதில் மேவி மிளிராமே! மேனி வனப்பது மேவி மிளிராமே!! வெள்ளாம்பல், சேதாம்பல் விரிதரு மலர்களெல்லாம் விரிந்தலர்ந் தென்னபயன்? விரிதரு பொன்னவிர் மேனியாள் மென்சாயல் மேவி மிளிராமே! மேனியாள் மென்சாயல் மேவி மிளிராமே! நீடிய புகழ் ஒளி நிகரறு பெருந்திரு நேரினும் என்ன பயன்? நிறைவினுக் குயிர்தரும் நீள்திரு நங்கைதன் நினைவதிற் சாராமே! நீள்திரு நங்கைதன் நினைவதிற் சாராமே!! ஆண்மையும் வீரமும் ஆள்வுறு சூழ்ச்சியும் ஆளினும் என்ன பயன்? ஆரணங்கோர் ஆண்மை அவாவுறும் ஆரணங்கு ஆட்கொண் டருளாமே!! அவன் பாடினான். அவள் யாழ் நரம்புகள் பாடின. அவள் உடலின் நரம்புகளும் உடன்பாடின. ஆனால், அப்பாட்டில் அவனைப் பற்றிய உணர்ச்சிகள் எதுவும் அவனுக்குக் காணப் படவில்லை. பாடலில் அவன் எழுப்பிய வினாக்களுக்கு அவள் தந்த விடை அவ்வினாக்களின் எதிரொலிகளே என அவனுக்குத் தோற்றிற்று. அந்நிகழ்ச்சியின் பொருள் இன்று அவனுக்கு விளங்கிற்று. அவன் இதை நினைந்து இன்றும் ஒரு பாடல் எழுதினான். இது காதல் பற்றிய பாடலே, ஆனால், இன்றைய காதல் துறை வேறு. அது காதல், ஊடல் எல்லை கடந்து அவன் உள்ளக் குமுறலைச் சித்திரித்தது. அது அவள்மீது குற்றச் சாட்டுத் தெரிவித்தது. பாவியல் காதலி ஓவியந் தீட்ட உவந்து முனைந்தனளே! ஓவிய மாதிரி உயிர்கொண் டியங்கிற்று! ஆனால், ஓவியக் காதலில் உயிரது தானில்லை! பாவியல் காதலி பல்வண்ணந் தீட்டிப் பலபட மயங்கினளே! ஆவியின் மெய்வண்ணம் எவ்வண்ணம் அறிகிலாள்! ஆனால், பல்வண்ணத்தே அங்கே மெய்வண்ணம் தானில்லை! பாவியல் காதலி காதல் வரைந்தனள் நட்பெனும் சட்டத்திலே! நட்பு நகைத்தது காதல் பதைத்தது ஆனால், நல்ல அச்சட்டத்தில் நற்படம் தானில்லை! பாட்டு அவனுக்குக் களிப்பூட்டியது, குற்றச்சாட்டு அவனுக்கு ஆறுதலளித்தது. அதைக் கண்டு அவள் அடையும் உளப்பாடு, மெய்ப்பாடுகளை எண்ணிப் பார்க்க அவனுக்குச் சிறிது ஊக்கம் பிறந்தது. பாட்டைத் திருத்தமாக ஒரு தாள் நறுக்கில் எழுதிச் சட்டைப் பையினுள் வைத்துக் கொண்டான். கடைசி இருப்பு மிக எளிதில் முடிவுற்றது. அன்று மூரட் எதுவும் வாயாடவில்லை. அவளும் முழுதும் படத்திலேயே கருத்துச் செலுத்தினாள். ஒருமுகப்பட்டு நெடுநேரம் உழைத்த தனால் அவள் சோர்வுற்றிருந்தாள். ஆகவே, தோட்டத்தில் சென்று உலவி வருகிறேன் என்று வெளியே சென்றாள். சிறிது நேரம் கழித்து அவள் மீண்டும் வந்தபோது மூரட் அங்கே இல்லை. தன்னிடம் கூறாமல் அவன் என்றும் வீட்டை விட்டுப் போனதில்லை. ஆகவே, மாளிகையில் எங்காவது இருப்பான் என்று நினைத்து ஆள்விட்டு அழைத்தாள். அவனை எங்கும் காணவில்லை என்று பணியாட்கள் கூறவே வியப்பு அடைந்தாள். அச்சமயம் தன் ஓவியச் சட்டத்தில் சொருகியிருந்த தாள் நறுக்கு அவள் கண்ணில் பட்டது. அதை எடுத்து அப்பாடலை வாசித்தாள். அவள் உள்ளத்தை அப்பாடல் ஒருபுறம் உருக்கிற்று. மறுபுறம் அது அவள் தற்பெருமையை முற்றிலும் குத்திக்காட்டிற்று. அவன் உள்ளூரப் படும்பாட்டை அவள் அறியாமலில்லை. அது அவள் தற்பெருமைக்கு ஊக்கமே அளித்தது. ஆனால், அவன் குற்றச்சாட்டை அவளால் ஏற்கமுடியவில்லை. அவனுடன் விளையாட்டு, காதல் விளையாடுபவர்களுக்கே ஏற்றது. அதனைத் தான் குறை கூறவில்லை. அதனை ஒரு விளையாட்டுக்காக மட்டுமே தானும் கொள்ளமுடியும். காதல் வேடனாகிய அவனுக்கு அவ் வேட்டைக்குப் பலியாகக்கூட மடநங்கையர் எத்தனையோ பேர் மாநிலத்தில் கிடைக்கக்கூடும். தன்னை அதில் சிக்க வைக்க அவனுக்கு என்ன உரிமை? தான் அதில் சிக்காதது கண்டு கோபங் கொள்வது, குற்றச்சாட்டு விடுப்பது எத்தனை திமிர்கொண்ட செய்கை? இதற்கு அவனுக்குச் சரியான இடிப்புரை நல்க வேண்டும் என்று அவள் தனக்குள் உறுதிசெய்து கொண்டாள். உறுதி அவளுக்கு ஊக்கம் தந்தது. அதை மீட்டும் மீட்டும் வலியுறுத்தி அதன் வெற்றியில் ஊடாடுவது இனிப்பாகத்தான் இருந்தது. ஆனால், அந்தோ! அவள் அறியாத மாறுதல் அவளிடம் உள்ளூர ஏற்பட்டு வந்தது. அவ்வுறுதி நிறைவேற்றி விடும் ஆர்வத்தில் அவள் தனக்கு வழக்கமான அமைதியை இழந்தாள். மூரட் எப்போது வருவான், அவன் காதலை நையாண்டி செய்து கடிந்து அவனைப் பணிய வைப்பது எப்போது என்று அவள் படபடக்கலானாள். வேறு எதிலும் அவளால் சிறிதும் கருத்துச் செலுத்த முடியாது போயிற்று. குழந்தைகளிடம்கூட அவளால் அன்று அமைதியுடன் நேரம் போக்க முடியவில்லை. ஒரு பக்கம் அவனைக் காணவேண்டும் என்ற படபடப்பு, மற்றொரு புறம் அவனை வன்மையாகக் கண்டித்துப் பணிய வைப்பதற்கான திட்டம்; இவ்விரண்டிற்கு மிடையே அவள் ஒவ்வொரு நொடியும் கழிந்தது. அவள் மீண்டும் மீண்டும் அப்பாடலை வாசித்தாள். பாடலின் செறிவும் செப்பமும் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. ஆனால், அதன் கருத்து அவளைத் துளைத்தரித்தது. அவன் காதல் கவிதைக்கு உகந்ததாயிருக்கலாம். கவிதை, கலை என்ற முறையில் எல்லாரையும் போலத் தானும் அதில் ஈடுபட முடியும். ஆனால், அவன் காதலுடன் என் பெயரை அவன் ஏன் சேர்த்திணைக்க வேண்டும். நான் அத்தகைய காதலுக்கு இரையாக்கப்படக் கூடியவள் என்று நினைக்கிறானோ? எவ்வளவு திண்ணக்கம் இருக்க வேண்டும் அவனுக்கு? ‘மீட்டும் அச்சொல்லை என் வகையில் பயன்படுத்தாதிருந்தால் மட்டுமே என் நட்பு உனக்கு உரியதாகும். அன்றேல் என் நட்புக்கும் நீ அப்பால் சென்று விடுவாய்’ என்று திட்டவட்டமாகக் கூறி விடுகிறேன் என்று அவள் தனக்குள் உறுதி வகுத்தாள். மறுநாள் மாலை பெட்டி வண்டியில் ஒரு நாடகக் காட்சிக்குச் செல்ல அவள் எண்ணியிருந்தாள். அதன் முடிவில் மூரட்டிடம் பேசவேண்டும் என்றும், அவன் பாடலை வினயமாக எடுத்துக்கொண்டதாகக் காட்டிக் கொள்ளாமல், மேளாப்பாகவும் நையாண்டியாகவும் பேசி அவன் காதல் பசப்பில் அவனே வெட்கமுறும்படி செய்யவேண்டுமென்று அவள் இப்போது மனக் கோட்டை கட்டினாள். ஆனால், அவள் மனக்கோட்டைகள் முற்றுப்பெறவில்லை. அவள் சற்றும் எதிர்பார்ப்பதற்கு முன்பே அவன் அக்கோட்டை களைக் கிழித்துக் கொண்டு வந்து விட்டான். தன் திட்டங்கள் குலைந்துவிடும் என்பதை அவன் முகத்தைக் கண்டதுமே அவள் உணர்ந்து கொண்டாள். அவன் முகம் கன்னி வீங்கிப் போயிருந்தது. அவனுக்கு அது குறும்பாகவோ, விளையாட் டாகவோ இருந்ததெனக் கூற முடியவில்லை. இத்தனையும் அவன் நடிப்பு என்றால், அவன் நடிகர் எவரையும் விட நடிப்புத் திறமிக்கவன் என்றே கூற வேண்டியிருக்கும். நாடகத்திற்கு முந்தியோ நாடகக் கொட்டகையிலோ அவனிடம் பேச அவள் விரும்பவில்லை. நட்புக்கும் பெருந் தன்மையான விட்டுக் கொடுப்புக்கும் மேற்பட, அவனுடன் அவள் சரிசமமாகவோ, நெருங்கிய பழக்க முடையவளாகவோ காட்டிக் கொள்ள விரும்பவில்லை. நாடகத்துக்குப் போகும் வழியில் மூரட் பேச்சு எதையும் தொடங்கவில்லை. அவன் சீற்றம் நட்பு முறையில் பொதுப் பேச்சு பேச இடந்தரவில்லை. நாடக மேடையில் அவர்கள் இருக்கைகள் குடும்ப இருக்கைகளாகவே அமைந்தன. வெளியார் எவரும் தெளிவாகக் காண முடியாதபடி அவை திரையிடப்பட்டிருந்தன. இருவர் இருப்பது தெரியுமேயன்றி அவர்கள் தோற்றமோ பேச்சோ வெளியாருக்குத் தெரியவராது. எனவே, அவ்விடம் தனிப்படப் பேசுவதற்கேற்ற வாய்ப்புடையதாயிருந்தது. லாரைன் இதை அறிந்து தானாக எதுவும் பேச இடம் கொடாமல் வாளா இருந்தாள். மூரட் தானாகவே பேச்சைத் தொடங்கினான். “ஓவியம் முன்மாதிரியாக இனி தாங்கள் என்னை அழைக்கப் போவதில்லை என்று எண்ணுகிறேன்” என்றான் அவன். லாரைன் : தற்காலிகமாகவன்றி நிலையாகவே நான் அழைக்காமலிருக்க நேரிடும், என் ஓவியச் சட்டங்கள் மீது அன்று எழுதிவைத்தது போன்ற போலிக் காதற் பாக்களை ஒட்டி வைப்பதாயிருந்தால்! மூரட் : போலிப் பசப்பு. எது போலி, எது பசப்பு! அதில் எழுதியிருந்த ஒவ்வொரு சொல்லும் என் வாழ்வையும் உயிரையும் பிழிந்தெடுத்த துளிகள்! லாரைன் : உங்கள் வாழ்க்கையே இத்தகைய கவிதைகளால் ஆனவை. வேறு வாழ்வை நீங்கள் அறியமாட்டீர்கள். எனக்கு அத்தகைய வாழ்க்கைச் செய்திகள் பழக்கப்படவில்லை. என் நட்பு உங்களுக்கு வேண்டுமானால், நீங்கள் என்முன் காதல் என்ற சொல்லையே வழங்கப்படாது. அச் சொல்லுக்கு நீங்கள் கொள்ளும் பொருள் வேறு, நான் கொள்ளும் பொருள் வேறு. மூரட் : நீங்கள் கொள்ளும் கருத்தென்ன? அவள் திடுக்கிட்டாள். பேச்சின் போக்கு தனக்கு எதிராகத் திரும்பிவிட்டது என்பதையும், தன் சொல்லாலேயே தான் அதற்கு இடங்கொடுத்து விட்டதையும் அவள் கண்டு கொண்டாள். சிறிது தயங்கி நின்று, பின் “உங்களுக்குக் காதல், வாழ்க்கை நிகழ்ச்சிகளாகிய சங்கிலித் தொடரில் ஒரு கண்ணி; வாழ்க்கைப் புகழாரத்தில் ஒரு புகழ் மலர்; ஒரு தற்காலிகச் செய்தி. எனக்கு அது ஒரு மனிதர் வாழ்வில் ஒரே தடவை நிகழக்கூடிய புயல்.” மூரட் : ஆம், அதை நான் இப்போதுதான் உணர்கிறேன். மூரட்டின் குரல் அவன் உள்ளார்ந்த போராட்டத்தின் விளைவால் தழுதழுத்து விம்மிற்று. அவளுடைய உள அமைதி கலைவுற்றது. ஆயினும், அவள் வெளிக்கு அதைக் காட்டிக் கொள்ளாமல், “தங்கள் சொற்களில் எனக்கு நம்பிக்கையில்லை” என்றாள். மூரட் : எதனால்? லாரைன் : காதலைப்பற்றிய தங்கள் எண்ணத்தை எல்லாரும் அறிவார்கள். உங்கள் காதற் பாடல்களில் பலவற்றை நானும் அறிவேன். எடுத்துக்காட்டாக, துடியிடை சூழ்கரம் அணைக்கவே, வெடிபட வெம்மொழி தடுக்கவே, வெடுக்கென எடாக்கனி எடுத்தல்போல் இனிப்பதிவ் வுலகினில் யாதரோ? இப்பாட்டு உங்கள் உள்ளத்திலிருந்து எழுந்ததுதானே! நீங்கள் இப்போது கூறியது ஓருணர்ச்சியில், ஒரு நேரத்தில். அது வேறோர் உணர்ச்சியில் வேறொரு நேரத்தில், அவ்வளவுதானே! மூரட்டின் முகம் சுண்டிற்று. அவன் சிறிது நேரம் பேச முடியாது கல்லாய்ச் சமைந்தான். ஆனால், அவன் கடுந்துயரை அந்த மௌனம் தெளிவாக எடுத்துக் காட்டிற்று. எங்கே அவன் பேச்சு மட்டுமன்றி மூச்சும் அற்றுவிட்டதோ என அவள் அஞ்சினாள். அவள் உறுதி கலையவில்லை. ஆனால், உள்ளங்கனிவுற்றது. அவனுக்கு இச்சமயம் விட்டுக்கொடுத்தாக வேண்டும் என்று அவள் துணிந்தாள். அவள் குரலில் முன்னைப் பாசத்தில் பாதி இடம்பெற்றது. என்றுமில்லாத புதிய கனிவும் அதில் தோய்வுற்றிருந்தது. “இதோ பார், ஸ்டானீ! எனக்கு உன்னிடம் எத்தகைய சீற்றமும் கிடையாது. நீ என்றுமே என் நண்பர்களுள் ஒருவனாக இடம் பெற்றுவிட்டாய். மற்ற எந்த நண்பரும் உன்னளவு என் உள்ளத்தின் ஆழ்தடத்தை எட்டியதில்லை. நீ ஏன் பொறாமைப் பட வேண்டும்?” “எனக்கு யார்மீதும் பொறாமை ஏற்பட்டதில்லை. என் உணர்ச்சிக்கு நட்புப் போதாது.” “அப்படியா? மிக நன்று. நாம் உடன்பிறப்புரிமை உடையவர்கள். நீயும் நானும் அண்ணன் தங்கையாகவே நேசித்து வாழ்வோம். நட்பைவிட இது உங்கள் உணர்ச்சிக்கு மிகவும் ஆறுதல் தருமல்லவா?” “நான் வேண்டுவது நேசமுமல்ல; உணர்ச்சியுமல்ல. இவற்றைக் கடந்து செல்ல விரும்புகிறேன்.” அவன் தொனி மீண்டும் சற்றுக் கடுமையாயிற்று. “மன்னிக்க வேண்டும். தங்கள் உணர்ச்சிக்கேற்ற இடம் தாங்கள் வேறு பார்க்க வேண்டியதுதான். என் ஆற்றலுக்குட் பட்ட எல்லாம் தங்களுக்குத் தந்தேன். நம்பிக்கை, பற்றுறுதி, கள்ளமற்ற, உள்ளந்திறந்த வாய்மை, என் மாளிகை, என் கூட்டுறவு, என் குழந்தைகள் தோழமை, இவை யாவும் உங்களுக்குரியவை யாயுள்ளன. இன்னும் என்ன வேண்டும்?” அவள் மனநிலையை அவன் ஓரளவு உய்த்தறிந்தான். இப்போது முறித்துக் கொண்டுவிடுவதால் எப்பயனுமிராதென அவன் எண்ணினான். அவனிட்ட திட்டம் நிறைவேற வேண்டுமே. ஆகவே அவன், “நான் உங்களை எப்போதுமே தனியாகக் காணமுடிவதில்லை. நட்புக் கடந்த பிறப்புரிமை இதுவா?” என்றான். அவள் உள்ளத்தின் மீது உள்ளூர அழுத்தி வந்த ஒரு பளு நீங்கிற்று. “இது ஓர் அகற்றமுடியாத குறையன்று. எனக்கு அடிக்கடி தங்களுடன் தனியேயிருந்து உரையாடவேண்டும் என்ற அவா உண்டு. அத்தகைய தறுவாய்களை இனி நானே உண்டு பண்ணிக் கொள்கிறேன். இனி என்றும்போல் என் உடன்பிறப்பாளனாக என்னுடன் வந்து கலந்து கொள்ளலா மல்லவா?” அவள் கேள்வி அவள் உள்ளார்ந்த கவலையையும் ஆர்வத்தையும் காட்டிற்று. அவன் தனக்குள் புன்முறுவல் செய்து கொண்டான். ‘பெண்கள் இயல்பு மிகப் புதுமை வாய்ந்தது. இது எள்ளுக் கொடி தரமாட்டேன், கொள்ளுக்கொடி தருவேன் என்னும்’ என்று அவன் உள்ளம் கூறிற்று. நாடத்தின் ஒரு பாதி இதற்குள் கழிந்துவிட்டது. ஆனால், முன்கதைத் தொடர்பின் கவலையின்றி, என்றும் போல அவர்கள் நாடகத்தை ஒருங்கு கூடியிருந்து கண்டு மகிழ்ந்தனர். ஆனால், நாடகம் முடிவதற்குக் காத்திராமல், ஒன்பது மணிக்கே வெளிவந்து ஒரு விருந்து மாளிகைக்குச் செல்ல வேண்டும் என்று லாரைன் திட்டமிட்டிருந்தாள். மூரட்டுடன் கடுமையாகப் பேசவும், தன் உள்ளத்தின் ஆழ்ந்த கருத்துகளை ஒளித்து விளையாட்டுப் போக்கில் பேசவும் நினைத்த அவள், முதலில் அவனுடன் ஊடலில் ஆழ்ந்தும் பின் கூடலில் மகிழ்ந்தும் நேரம், சூழ்நிலை யாவற்றையும் மறந்தாள். நாடகத்தின் காட்சிகளிடையே தற்செயலாகக் கடிகாரத்தைப் பார்த்தபோது மணி 9-20 ஆய்விட்டது. அவள் உடனே அங்கிருந்த ஏவலர் மணிப்பொறியை இயக்கினாள். ஏவலன் வந்ததும் உடனே வண்டி கொணரும்படி ஆணையிட்டாள். மற்றோராளை அனுப்பித் தான் சிறிது தாமதித்தாலும், வருவது உறுதி என்று விருந்தினருக்கு அறிவிக்கச் செய்தாள். அருகிலிருந்த ஓய்வறைக்குச் சென்று அவள் விரைந்து விரைந்து தன் கலைந்த முடியைத் திருத்திக் கொண்டாள். மூரட்டும் விரைவு காட்டி அவள் மேலாடையை எடுத்து அவள் மீதிட்டு அதன் பூட்டுகளை அவன் மாட்டினான். தானே அவளைக் கைகொண்டு தாங்கி, விரைந்து வண்டியிலேற்றிப் பின் தானும் ஏறி உட்கார்ந்தான். அவள் இப்போது காதல் விளையாட்டில் ஈடுபடவில்லை. ஆனால், அவள் உள்ளம் அவளையும் மீறி முன்னால் வண்டிப் பயணத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டது. அவனுடைய வாதங் களைவிடத் தன் உள்ளுணர்ச்சியின் அவாக்களே அவன் காதலுக்குத் தூண்டிலிட்டு வந்தன என்பதை அவள் உணர்ந்தாள். “முன் நட்பாட்சி என்னிடம் இருந்தது. காதலாட்சியும் என் வசமிருந்தது. இப்போது நட்பாட்சியை அவனிடம் உரிமையாகக் கொடுத்துவிட்டேன். காதலாட்சியிலோ என் உறுதி என்னைக் கட்டுப்படுத்துகிறது. அவனை எதுவும் கட்டுப்படுத்தவில்லை” என்று முணுமுணுத்தது அவளுள்ளத்தினுள் ஒரு குரல். 21. ஊடலும் கூடலும் காதலர் இப்போது காதலராக நடிக்கவில்லை. அவர்கள் ஒப்பந்தப்படி அவர்கள் உள்ள உணர்ச்சிக்கு இப்போது “உடன் பிறப்பின் உரிமை நேசம்” என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. இப்போர்வையினுள் இருந்துகொண்டே காலின் உணர்ச்சி அவர்களை இயக்கிற்று. லாரைன் உண்மையிலேயே காதலின் தன்மையை அறியாதவள். தன் உள்ளத்தை உள்ளிருந்து இயக்கும் உணர்ச்சி காதலாகவே இருக்கவேண்டும் என்று அவள் ஓரளவு உணர்ந்து கொண்டிருந் தாளாயினும், அதனை வேறு எவரும் அறியாதபடி மறைத்து, நட்பின் திரையில் அதனை வரிந்துகட்டி அவ்வெல்லையினுள் அதனை அமிழ்த்திவைக்க எண்ணினாள். ஆனால், உண்மையில் இவ்வெண்ணம்கூடக் காதலின் ஆற்றலுக்கு ஒரு சான்று என்பதை அவள் உணரவில்லை. காதலில்லாவிட்டால் நட்பின் திரையை அவள் நாடியிருக்க வேண்டியதில்லை. அதன் மறைவில் தன் உணர்ச்சிக்குரியவனைக் கட்டுப்படுத்தி அவனைக் காணும் வாய்ப்பை உண்டுபண்ணிக் கொள்ள இத்தனை தற்புரளிகளை வகுக்கவும் வேண்டியதில்லை. மூரட்டைப் பற்றியமட்டில், ‘நட்புத் திரை’ உண்மையில் ஒரு திரையாகக் காணப்படவில்லை. அது அவளுக்காக மேற் கொள்ளப்பட்ட நடிப்பே, அதன் மறைவிலிருந்து காதல் பொறியைத் தான் தன் மனம்போல முன்னிலும் திறம்பட இயக்க முடியும் என்பதனையும், நேரிடையான காதலால் சாதித்துக் கொள்ள முடியாத காரியங்களைக்கூட இத்திரையால் சாதித்துக் கொள்ளலாம் என்றும் அவன் கண்டான். அவள் உள்ளார்ந்த இரண்டகமும் தன் வஞ்சனையும் அவன் நேரிய ஒருமுகப்பட்ட முயற்சிக்கு உதவின. அவர்கள் சென்றிருந்த விருந்துக் கூடத்தில் லாரைனும் மூரட்டும் பல நண்பர்களிடையே நண்பர்களாக அமர்ந்தனர். ஆனால், அவன் லாரைனுக்கு நேரெதிராக, ஆனால் சற்றுச் சாய்முகமான இடத்தில் சென்றமர்ந்து கொண்டான். இதனால் மற்ற எவரும் கவனியாதபடியே அவன் அவளைக் காணவும் அவள் அழகைக் கண்டு பருகவும் முடிந்தது. லாரைன் அவன் சூழ்ச்சித் திறம் கண்டு பொருமினாள். ஆனால், அவளால் நேரிடையாக அவனைக் கண்டிக்க முடியவில்லை, அவனைக் காதலனாகத் தான் நடத்த முடியாதாதலால், அவன் மீது கோபப்படவும் வழியில்லை. தன் நட்புறுதி அவனுக்குப் போதிய கட்டுப்பாடு தராமல், தன்னையே கட்டுப்படுத்துகிறது என்பதை உணர்ந்த அவள் உள்ளூரத் தன்னையே கடிந்துகொண்டாள். அதே சமயம் அவன் பார்வையில் தன் உள்ளம் உண்மையில் ஈடுபட்டு மகிழ்வதை அவன் முகத்தில் நிறமாறுதல் எடுத்துக்காட்டு வதையும் அவள் உணர்ந்தாள். அவனுக்கு மட்டுமன்றிப் பிறர்க்கும் இதனால் தன் உள்ளுணர்ச்சி துலங்கிவிடப்படாதே என்று அவள் அஞ்சி அஞ்சி நடுங்கினாள். உயர்குடியினர் விருந்துக் கூடங்களில் பேச்சுக்களில் பெரும் பகுதி காதல் பற்றியதா யிருப்பது இயல்பு. இதுவும் லாரைனுக்கு இப்போது தலையிடியாயிருந்தது. அவள் உள்ளம் அதில் ஈடுபடாமலிருக்க முடியவில்லை - அவள் காதலின் மறைப்பும் புதுமையும் இம்முறை தாக்குதலுக்குத் தப்ப முடியவில்லை. அவள் கணவரின் நண்பருள் ஒருவரும் அவளால் உயர்வாக மதிக்கப்பட்டவரும் ஆன கோமான் தேசேகரே இத்தடவை அப்பேச்செடுக்கக் காரணமாயிருந்தார். அவர் வந்ததும் அவளுக்கு வழக்கமான முறையில் முன்பே கூறாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றார். மற்ற நண்பர்களிடம் கூட அவர் நேராகப் பேசவில்லை. லாரைன் சென்று அவரிடம் “உடம்புக் கென்ன? ஏன் பேசாதிருக்கிறீர்கள்?” என்றாள். அவர் அவள் முகத்துக்கெதிரே ஒருதாள் நறுக்கை எறிந்து, “இதோ பாருங்கள், நீங்கள் உங்கள் புதிய கவிதை நண்பர் மூரட்டுடன் சேர்ந்து கொண்டு எனக்குத் தந்துள்ள கூட்டுப் பரிசை!” என்றார். லாரைன், அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தாள். ஆம். மூரட்டின் கவிதைக் குறும்பில் அவளும் ஈடுபட்டு, தேசேகருக்கு மிகப் பொருத்தமான ஓர் இலத்தீன் கவிதையை அவள் தன் இனிய ஃபிரஞ்சு நடையில் மொழிபெயர்த்திருந்தாள். மூரட் அதில் தான் ஓர் அடியைச் சேர்த்து, தன் பெயரையும் லாரைன் பெயரையும் அவ்வடியிற் பொறித்துத் திருவிளையாடல் நிகழ்த்தியிருந்தான். தேசேகர் இதனால் அடைந்த மனத் தாங்கலை மாற்ற அவள் அரும்பாடு படவேண்டியதாயிற்று. இறுதியில் ஒருவாறு அமைந்த பின் தான் இவ்வளவு எளிதாக அதில் மனத்தாங்கல் அடைபவரல்லரென்றும், இது தவிர வேறு சில நிகழ்ச்சிகளும் தம் மனத்திற்குத் தொல்லை தந்திருந்தன வென்றும் கூறினார். எல்லாரும் அந்நிகழ்ச்சிகள் யாவை என்றனர். அவர் மற்றொரு அனுபத்தை விவரித்துரைத்தார். தேசேகர் படைத்துறையில் அலுவல் பார்த்தவர். அவர் மேலாளாக சாட்டர்ன் பணியாற்றினார். தேசேகரின்கீழ் பணியாற்றிய ஒருவன் அடிக்கடி பணியிலிருந்து ஓய்வு கோரி வந்தான். அவர் ஒரு தடவை விடாப்பிடியாக மறுத்துவிட்டார். அவன் நேரடியாக சாட்டர்னுக்கே மனுவிட்டு ஓய்வு கோரத் துணிந்தான். அவனுக்கு ஓய்வும் கிடைத்துவிட்டது. தேசேகர் தன்கீழ்ப் பணியாற்றிய ஒருவனுக்குத் தன்னைப் பொருட் படுத்தாமல் ஓய்வு கொடுத்ததுபற்றி சாட்டர்னிடம் குறை பட்டார். சாட்டர்ன் சிரித்துக்கொண்டே அவரிடம் விளக்கம் கூறினார். “நான் உங்களை அவமதிப்பதற்காக அப்படிச் செய்ய வில்லை. அவன் எதற்காகக் கேட்டான் என்ற மறை செய்தியை நான் அறிவேன். இத்தகைய மனிதக் குறைபாடுகளை நீங்கள் அறிவதுமில்லை, மதிப்பதுமில்லை. அத்துடன் இந்நிகழ்ச்சியில் தனிப்பட்ட சுவை வேறு உண்டு. அவன் எனக்குக் கடிதம் எழுதி ஓய்வு பெற்றது தன் காதற்கிழத்தியைச் சென்று காண்பதற்காகவே. எனக்குக் கடிதம் எழுதிய அதே நாளில் அவளுக்கும் கடிதம் எழுதியிருந்தான். ஆனால், மறதியாக அவன் இரண்டு கடிதங் களையும் தலைமாறி உறைகளில் போட்டு அனுப்பி விட்டான். என் கடிதம் காதலிக்குச் சென்றிருக்க வேண்டும். காதலிக்கு எழுதிய கடிதமே எனக்கு வந்தது. அதைப் பார்த்ததும் மறு பேச்சின்றி ஓய்வு கொடுத்துவிட்டேன். நீங்களும் அதை வாசித்துப் பார்க்கலாம் - மனிதர் குறைபாடுகளை அறிந்து, அதனால் நீங்கள் கோபங்கொள்ளாமல் மட்டும் இருக்க வேண்டும் என்று கோருகிறேன். ஏனென்றால், அதில் உம்மைப் பற்றிய அவன் உள்ளார்ந்த கருத்தைத் தன் காதலிக்குத் தெரிவித்திருக்கிறான்” என்று கூறி சாட்டர்ன் அக்கடிதத்தை தேசேகரிடம் காட்டினார். அக்கடிதம் வருமாறு : “என் உயிர்க் காதலியே, உன் இனிய தோள்களை நான் வந்து அணையவிடாமல், அந்தக் கொடியோன் தேசேகர் பிடிவாதமாக எனக்கு ஓய்வு மறுத்து வருகிறான். ஆனால், என் உயிர்த் தோழியை நான் வந்து காண்பது அவரால் தடைபடாமல் இருக்க நான் கடவுள் வரைக்கும் சென்று முறையிடத் தவறமாட்டேன். சாட்டர்ன் வேறு எது அறிவித் தாலும் அறியாவிட்டாலும் காதலுள்ளங்களை அறிந்தவர். அவர் கட்டாயம் எனக்கு ஓய்வளிப்பார் என்றே எதிர்பார்க்கிறேன். நான் படைத்துறையில் சென்றிருப்பதே உனக்காகத்தான் என்பதை தேசேகர் போன்ற அறிவிலிகள் எப்படி அறிவார்கள்? போர் எதிரிகளுடன் தான் போராட வேண்டும். இங்கேயோ கேடுகெட்ட அமைதிகாலப் போராட்டமே நடைபெற வேண்டியிருக்கிறது. அமைதிகாலப் போர் என்பது கேட்டு நீ மயங்கலாம். ஆம்; எனக்காக இடாத போரெல்லாம் எனக்கு அமைதிகாலப் போர், எனக்காகப் போரிடுவதென்றால் அது உனக்காகப் போரிடுவது தான். இங்குள்ள மூடர்கள் உனக்காகவோ தங்கள் காதலியர் களுக்காகவோ போரிடுகிறார்கள். எப்படியும் எதிர்பார்க்குமுன் வந்துவிடுவேன். அதற்கு அச்சாரமாக இதோ...” இக் கடிதத்தைக் கேட்டு தேசேகர் எதிர்பார்த்தபடி யாரும் சினம் கொள்ளவில்லை. சாட்டர்னைப் போலவே எல்லாரும் காதலனிடம் அனுதாபம் காட்டினர். தேசேகர் மனித வாழ்க்கையை உணராத மந்த மதியினரே என எல்லாரும் ஒரே மனதாக முடிவு செய்தனர். அவர் இது கேட்டு மீண்டும் முகஞ் சுளித்தார். அப்போது மூரட் “கதைச் சுவைக்காகத்தான் எல்லாரும் இங்கே வீரன் காதலில் ஈடுபாடு காட்டுகின்றனர். உண்மையில் வீரன் செய்ததும் தவறு. சாட்டர்ன் செய்ததும் தவறு. நீங்கள் யாவரும் பொறுப்பில்லாமல் கதை கேட்பதும் தவறு. நான் கூறுவதே சரி என்பதில் உங்களுக்கு ஐயமிருந்தால், காதல் கலை ஆகியவற்றின் மேம்பாடறிந்த லாரைனைக் கேளுங்கள்” என்றான். தன் பெயரை இதில் இழுத்தது லாரைனுக்குப் பிடித்த மில்லை. ஆனால், தேசேகர் ஆவலுடன் அவளை எதிர்நோக்கி அவள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்த்ததனால், அவளுக்குத் தலையிடாமல் வேறு வழியில்லை. அவளும் தேசேகர் விரும்பியபடி, மூரட்டின் குறும்புள்ளம் திட்டமிட்டபடியே, தேசேகர் பக்கமாகத் தீர்ப்பளிக்க வேண்டி வந்தது. அனைவரும் அதை வேண்டா வெறுப்பாக ஏற்றமைந்தனர். அன்றைய பேச்சில் அரசியலைப் பற்றிய இருவேறு கருத்துகள் கட்சியார்வத்துடன் பரிமாறப்பட்டன. லாரைனுக்கு அரசியிடம் அளவற்ற பற்றும் நேசமும் இருந்தது. அத்துடன் பேச்சார்வம் ஆர்வ எல்லை கடந்து ஆரவார எல்லையையும் பூசல் எல்லையையும் அணுகி வந்தது. அவள் பேச்சை மாற்றி அரசியால் புதிதாகப் புனைந்தியற்றப்படும் கறிவகைகளில் பிறர் கருத்தைத் தாண்டி அதனையடுத்து அவற்றுள் ஒன்றை அவர்களிடையே தருவித்தாள். விருந்தின் உணவுத் திட்டத்தை அவளே வகுத்திருந்ததால், அவள் அக்கறிவகைகளைத் தன் கை வகுப்பாகவே ஏற்பாடு செய்திருந்தாள். அதன் சுவையில் அனைவரும் ஈடுபட்டுப் புகழ்ந்தனர். அத்துடன் இன்தேறல் அவர்கள் நாவின் பூட்டவிழ்த்து விட்டிருந்தது. அவர்களில் பலர் மூரட்டை நோக்கி “இன்று லாரைன் நமக்கு செவிக்கு இனிய உணவு தந்து நாவுக்கும் இனிய சுவை தந்துள்ளாள். அவளுக்கு நாம் செய்யும் கைம்மாறு வேறு எதுவுமில்லை. எங்கள் விருந்துக் கவிஞனாகிய நீங்கள் அவள்மீது ஒரு பாட்டுப் பாடுக” என்றனர். தான் மூரட்டின் பாட்டைக் கேட்க வேண்டிவரும் என்று லாரைன் எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு அத்தகைய வாய்ப்பைக் கொடுக்கவும் அவள் விரும்பவில்லை. ஆகவே, அவள் “மூரட் பாடும் பாட்டு எனக்குப் பிடிக்காது. அவர் கடவுளைப் பழித்துப் பாடுபவர். அத்துடன் பெண்களைப்பற்றிக் கீழ்த்தரமான முறையில் பழிக்காமல் அவர் பாடவே முடியாது” என்றாள். “மூரட்! இது உனக்கு ஓர் அறைகூவல்! உனக்கு ஓர் அறைகூவல்! எங்கே லாரைன் கருத்தை முறியடித்து ஒரு பாட்டுப் பாடு பார்க்கலாம்! கடவுளைப் பழிக்கப்படாது!” என்று பலரும் ஆரவாரித்தனர். மூரட் சிறிது நேரம் வாயடைத்திருந்தான். அனைவரும் அவன் கவிதையை எதிர்நோக்கிச் சந்தடியற்றமைந்திருந்தனர். லாரைன் சிடுசிடுத்துக்கொண்டாள். அவள் முடியின் கீற்றொன்று அவள் முகத்தில் விழுந்தது. அதை அவள் எடுத்துக் கோதி விட்டாள். அச் சமயம் மூரட் அவளை நோக்கி ஒரு குறும்புநகை நகைத்தான். ஒரு கணப்போதில் அவன் பாட்டு எல்லார் செவிகளிலும் மணிபோல் ஒலித்தது. கோதிநீவிய கோதையர் கோதிலாப் போதுலாவு முகிற்குழல் போதிலேன் மாதர் நீலவிழியுடன் வாதிடும் ஓதி நீல ஒளிநகை போதுவேன். நிலை யுலாவிய நீள்சுருள் முடி உலைவ தன்றிவே றுலைவிலாதவள் குலைவிலா நிறை கோதைய ரின்றெனும் கலைஞருங் குறை காணகி லாதவள். வாட்ட நீங்கிய வாளொளிப் பாளத்தே கோட்டம் கண்டிடும் கோவிளங் காமவேள் நாட்டு கோட்டம் வேறெங்கும் காணாமையால் கோட்ட மார்முடி கோடுறச் சாடினான். “நன்று, நன்று; கவிஞர் மூரட்! இன்று உம் கவிதை உம்மையும் கடந்துவிட்டது!” என்று யாவரும் போற்றினர். லாரைனின் சிடுசிடுப்பகன்றது. அவள் உள்ளத்தின் ஆழ்தடத்திலிருந்து தோன்றிய ஒரு புன்னகை அவள் முகத்தில் உலாவிக் கண்களில் ஒளி வீசி இதழில் பூத்தது. அறிவுப் போட்டியில் இவ்வாடவனை வெல்ல பெண்டிருலகில் கூட எவராலும் முடியாது என்று அவள் எண்ணிக்கொண்டாள். சிறிது நேரத்தில் விருந்தினர் மீண்டும் தம் நல்லின்ப அமைதியிலிருந்து வழுவிப் பழமை- புதுமைப் போராட்டத்தில் இறங்கலாயினர். செந்நெறியமைதி நாடிய சேயிழையாளான லாரைன், உடனே தன் உரையாடற் கலைத்திறத்தைப் பயன்படுத்தி அவர்களிடையே அமைதி பிறப்பிக்க முயன்றாள். ஆனால், இப்போது தேறலஞ் செல்வன் அவர்கள் நாக்கைத் தீட்டிக் கொண்டிருந்ததனால், அவள் முயற்சிகள் பலிக்கவில்லை. ஆகவே, அவள் சீட்டாட்டத்தில் அவர்கள் சிந்தனையைச் செலுத்த எண்ணி அண்டையிலிருந்த பச்சைப் பளிங்கறையில் சீட்டுக் கட்டெடுத் திட்டு அவர்களை அங்கே வரவழைத்தாள். அனைவரும் ஆட அமர்ந்தனர். இதே சமயம் அங்கே பாரியதோர் கிளிக் கூண்டில் உலவிக் கொண்டிருந்த கிளியருகில் உட்கார்ந்து கொண்டு, மூரட் அதற்குத் தன் கருத்துக்களை வெளியிட்டுக் கூறப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தான். அவனை அவ்வீடு பாட்டிலிருந்து மாற்ற எண்ணிச் “சீட்டாடுபவரைச் சென்று கவனித்துக் கொண்டிருங்கள்” என்று பணித்தாள். அவனும் இணங்கினான். மூரட்டின் பல குறைபாடுகளில் அடங்காத சூதாட்ட ஆர்வமும் ஒன்று. சீட்டாட்டத்தை அவன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கையில் அவன் கண்களில் சூதாட்ட வெறி நின்று கூத்தாடிற்று. இயல்பிலேயே கனிந்த உள்ளமும் நற்சிந்தைகளும் உடைய லாரைன் தான் செய்த செயலின் கோளாறு கண்டு மீண்டும் மனங்கலங்கினாள். அவனை அணுகி அவன் தோளை அணைத்துக்கொண்டே “மூரட்! இது என்ன மன நிலை? இதிலிருந்து அகலமாட்டாயா?” என்று குறையிரந்தாள். அவள் தொனி அவன் வெறி மயக்கத்தை ஒரு நொடியில் நீக்கிற்று. அவன் அவளை மட்டுப்பாவினுக்கு இட்டுச் சென்று அவளிடம் “இனிச் சீட்டையே தொடமாட்டேன் என்று தங்களுக்கு வேண்டுமானால் நான் உறுதி தரமுடியும்” என்றான். அவள் காதல் மறுப்பு வீரம் தள்ளாடிற்று. “இவ்வுறுதி பெறுவதன்மூலம் அவன் உள்ளத்தில் தன் ஆற்றல் பெருகும் - இருவர் உணர்ச்சியிணைப்பும் வலியுறும். ஆனால், ஒரு நல்ல செயலை - ஓர் ஆணுயிர் காக்க இருக்கும் நல்வாய்ப்பைத் தான் அது செய்யாவிட்டால் வாளா இருக்கவேண்டிவரும். எவ்வளவு தன் நா மறுத்தாலும், அவன் தன் காதலைப் பெற்றவன் என்பதை உள்ளம் அறியும். அவன் கெடவிடுவதா? ஒருபோதுமில்லை! என்ன வரினும் வருக. அவ்வுறுதி பெற்றே தீருவேன்” என்று துணிந்தாள். “சரி நீங்கள் உறுதி தந்தால் பின் என்றும் மாறமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். என்னிடம் வீணில் உறுதி கொடுத்து விட்டதாகவும் நீங்கள் என்றும் எண்ண வேண்டி வராது. இப்போது இருவருமே விருந்தினரைச் சென்று வெளியிலிருந்த கவனிப்போம்” என்றாள். உள்ளே பகலொளி போல் வெளிச்சம். அதில் விருந்தினர் குடித்தும் சிற்றுண்டியார்ந்தும் சீட்டாடியும் ஆடுவோரைச் சூழ்ந்துதவியும் இருந்தனர். வெளியே பச்சைத் திரையிட்ட பலகணிகளுக்கிப்பால், பச்சை அரையிருளில் லாரைனும் மூரட்டும் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். இப்போது நீலக் கூந்தற் பின்னல்கள் அவன் தோள்களில் வந்து புரண்டன. ஒருவர் மூச்சு வெப்பம் மற்றவர் கன்னத்தை வெதுவெதுப்பாக்கின. பின்புறத் திலுள்ள தோட்டத்திலிருந்து வேனிற் பருவ விடியற்கால நேரத்தின் நறுமணம் மூக்குகளைத் துளைத்தன. லாரைனின் உடலும் உள்ளமும் களைப்புற்றும் முழு அமைதியுடன் விளங்கிற்று. எங்கும் செறிந்த இன்ப அமைதி அவள் உள்தசையைச் சென்ற அவளைக் குழைவுறுத்திற்று. அவள் இன்பச் சோர்வினால் மூரட்டின் தோள்களைத் தன் கைகளால் பிணைத்து நின்ற இப்போது உள்ளே நுழைந்து ஆடவருடன் ஊடாடிய நங்கையரைக் கண்டு களித்தாள். அவரவர் சின்னஞ்சிறு கைத்திறங்கள், சிறு குறும்பு நகைகள், குறுகுறுத்த பார்வைகள், காதற் போராட்டங்கள், ஊடல்கள் யாவும் அவர்கள் ஒன்றிய காட்சித் திரையில் நாடகங்கள் போல மிளிர்ந்தன. 22. கவிஞனின் வெற்றி பருவம், வேளை, சூழல் ஆகியவற்றின் தாக்குதல்களில் ஈடுபட்டு லாரைன் தன் உள்ளத்தை தற்காலிகமாகப் பறி கொடுத்திருந்தாள். ஆகவே, அவள் மனம் மூரட்டிடம் தான் வலியுறுத்திய உறுதியில் சற்றுத் தளர்வு கொண்டு அதனை மறந்திருந்தது. ஆனால், அவன் ஒரே நோக்கமுடையவனா யிருந்ததனால், இத்தகைய தளர்வு எதற்கும் ஆளாகவில்லை. தற்காலிகமான அவள் தளர்ச்சியை அவன் நன்கு பயன்படுத்த விரும்பினாலும், அதன் தற்காலிகப் பலனில் அவள் மனம் நாடவில்லை. அவள் தன் தவறுணர்ந்து தன் இயல்பு மறவாது நடக்கும்படி செய்யவே அவள் எண்ணினாள். ஆகவே, தன் தறுவாய்க்குக் காத்திருந்து அவன் போக்குடன் ஒத்துறவாடினாள். “நகரின் ஆடல் பாடல்கள் மனத்திற்குச் சிறிதுநேரம் மகிழ்ச்சி யூட்டக்கூடும். ஆனால், பூந்தோட்டங்களின் எழில், மலர்களின் வனப்பு, தென்றல் காற்றின் இனிமை, பொன்னிள வெயிலின் பூம்பொலிவு ஆகியவையே நிலையான இன்பந் தருகின்றன. இதனாலேயே ஏன் மீண்டும் நாட்டுப்புறத்தில் என் கொழுநர் பண்ணைக்கே செல்ல விரும்புகிறேன். அவ்விடத்தில் எல்லா இன்ப நிறைவும் உண்டு - நீங்களும் அங்கே உடன் இருந்தால் நிறைவு மணம் பெறும். நீங்கள் வந்து என் இலத்தீன் மொழி பெயர்ப்பில் உதவுவீர்களல்லவா?” மூரட் புன்முறுவலுடன் “அது மட்டுமா? தங்களுடன் இருப்பதால் குடி, சூது முதலிய கீழ்த்தர இன்பங்களை விட்டு விலகி நல் ஒழுக்க வாழ்வு பெறலாம் அல்லவா?” என்றான். தன் மன உறுதியையே அவன் கேலிசெய்வது கண்ட லாரைனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “உன் நாத்துடுக்குத்தனத்தைக் கேட்டுக் கேட்டு என்னால் பொறுக்க முடியவில்லை” என்றாள். அப்போதும் அவன் நையாண்டித்தனத்தை விடவில்லை. “உடன் பிறந்தானிடம் உடன் பிறந்தாள் பேசும் அன்பு முறையா இது? உடன் பிறப்புரிமை உறுதி கூறிவிட்டு வேறு ஏதோ உரிமை கொண்டாடுபவள் போல் ஊடற் பசப்புப் பசப்புகிறீர்களே?” என்றான். தன் உணர்ச்சிகளைக் குத்திக் காட்டிய இவ்வவமதிப்பு அவள் உள்ளத்தின் எரிவில் எண்ணெய் ஊற்றிற்று. அவள் உண்மையிலேயே கடுஞ்சீற்றம் கொண்டாள். “ஊடல்! பசப்பு! இத்தகைய பேச்சுகளை நான் என் காதுகளால் கேட்கப் போவதில்லை. சரி, இதற்குச் சரியான வழி செய்கிறேன். என் நாட்டுப்புறத் தங்கலுக்கு உங்களை அழைத்திருந்த அழைப்பை நான் பின் வாங்கிக் கொள்கிறேன். தங்கள் தோழமை எனக்குத் தேவையில்லை. என்பிள்ளைகள் இதனால் சிறிது நேரப் போக்கிழந்தாலும் கேடில்லை. நீங்கள் அங்கே வரவேண்டாம்” என்று கூறி அவனருகிலிருந்து அவள் சரேலென்று விலகிச் சென்றாள். அவள் போகும்போதும் மூரட் கடகடவென்று சிரிக்கும் ஒலியே அவள் காதுகளைத் துளைத்தன. இத்தடவை அவள் கோபம் அதன் சூழ்நிலைகளுடன் நிற்கவில்லை. மூரட்டைக் காணாதவிடத்திலும் அவன் உருவமும் அவன் நகைப்பும் முன்வந்து தோன்றி அதனைக் கிளறி விட்டுக் கொண்டே இருந்தன. அவள் வீடு வந்தபோது குழந்தைகள் ஓடி வந்து “மூரட் எங்கே, குட்டியப்பா எங்கே” என்று கேட்டபோது அவள் சீற்றம் அவர்கள் மீதுகூட அலைபாய்ந்து சிதறிற்று. உள்ளூர அவள் சினத்துக்கு அவளே ஆளாக வேண்டியிருந்தது. ஆனால், தன்னைத்தான் எந்தக் குற்றத்திற்காக குறைகூறிக் கொள்வதென்றும் அவளுக்குத் தெரியவில்லை. மூரட்டைச் சந்திக்க முடியாமல் போனது தனக்கு உள்ளூர வருத்தம் என்பதை அவள் ஒப்புக் கொள்ளும் நிலையிலில்லை. அவனைத் தான் தண்டித்தது தவறென்றும் எண்ணமுடியவில்லை. ஆனால், தண்டனை அவனைப் பாதிக்கவில்லை; தன்னைத்தான் பாதித்தது. இதனால் அவள் மனப் புகைச்சல் அவன் மீது இன்னும் மிகுதியாயிற்று. மூரட்டுடன் நன்கு பழகியிருந்த ஒருவனே அவளிடம் வண்டியோட்டியா யமர்ந்திருந்தான். அவன் இத்தறுவாயில் அவளிடம் எதுவும் கேட்காமலே குறிப்பறிந்து எல்லா ஏற்பாடுகளும் செய்து வந்தான். அவளுக்கு வேண்டிய ஆடை யணிமணி வகைகளைப் பற்றிக்கூட அவன் அவளிடம் கேட்கவில்லை. தானாக எடுத்து வைத்து அவள் முன் இருந்து கட்டினான். குழந்தைகளுக்கான துணிமணி, விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள் முதலிய யாவும் ஒழுங்குபடச் சேகரமாயின். லாரைன் தூய வெள்ளாடையே அணிந்து புறப்பட்டாள். உலாவியிருக்கும்போது படிக்க அவள் ரூசோவின் ஹிலாயிஸ் ஏட்டையும் எடுத்து வைத்திருந்தாள். சிறுமி அடிலிக்கு இப்போது ஆறு வயது. அவள் நாய்க்கு மூரட் ‘பாள் ஆளி’ என்று பெயர் வைத்திருந்தான். அடிலி அந்நாயை அங்குமிங்கும் பின் தொடர்ந்து துரத்தி விளையாடியவாறே சென்றாள். வண்டியோட்டி மூட்டைகளை எடுத்துக்கொள்ள, மற்றொரு பணியாள் மூன்று வயதுடைய அகஸ்டியைத் தூக்கிக் கொண்டான். அன்று அவர்கள் ஓர் ஏரியில் படகிற் சென்று அதன் நடுவிலுள்ள தீவில் உலாச் சோறு உண்ண எண்ணியிருந்தனர். வண்டி யோட்டியே படகுக்கும் ஏற்பாடு செய்து படகோட்டவும் முன் வந்தான். படகு கரையிலிருந்து உதைக்கப்பட்டது. துடுப்புகள் தெளிந்த பளிங்குபோன்ற நீரை இருபுறமும் துளைந்து படகை முன் செலுத்தின. துடுப்புகளிலிருந்து கண்ணாடிப் பாளங்கள் போல வெளியோடும் நீர்க் குமிழிகளைப் பார்த்தும், நீர்ப் பூச்சிகளைத் தின்னப் பறந்து வரும் விட்டில்களை வேட்டை யாடியும் அடிலி சுற்றித்திரிந்தாள். சிறுவன் அகஸ்டியோ தாயை அகலாது படகின் இப்புறமும் அப்புறமும் சுற்றித் திரிந்தான். அவள் மனம் அமைதியுடனிருந்தது. நீர்க் காற்று பகலின் வெப்பிடையே நல்லின்பம் தந்தது. அக்காட்சிகளிடையே ரூசோவின் ஹிலாய்ஸைத் திறந்து அவள் அதில் ஈடுபடலானாள். ஆனால், இவ்வாசிப்புக்கு இது சமயமல்ல என்பதை அவள் விரைவில் உணரவேண்டிய தாயிற்று. ஏனெனில், விட்டி லொன்றை வேட்டையாடும் போது படகின் விளிம்பு கடந்து சென்று அடிலி நீரில் விழுந்து விட்டாள். லாரைன் கூறுமுன் படகோட்டி படகை நிறுத்திக் குதித்துஅவனைப் படகேற்றினாள். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு லாரைன் அவளைத் தேற்ற வேண்டிய தாயிற்று. மூரட் இருந்தாலன்றி, குழந்தைகள் பற்றிய கவலை யில்லாமல் வாசிப்பது என்பது முடியாது என்ற எண்ணம் அவள் மனத்திரையில் வந்து தலை நீட்டிற்று. ஆனால், அவள் அவ்வெண்ணத்தை துரத்தியோட்டினாள். ஒரு கண் பிள்ளைகளிடத்திலும். ஒரு கண் புத்தகத்திலுமாக வைத்துக் கொண்டு படிப்பதாகப் பாசாங்கு செய்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருந்தாள். ஆனால், கண்தான் இந்த ஏமாற்றில் ஈடுபட்டதே தவிர, மனம் நெடுநேரம் வேறு எதிலுமே தங்காமல், அவளையும் மீறி ஆக்டேவ் மூரட்டைச் சுற்றிவட்டமிட்டது. ஏரியின் நீர்ப்பரப்பு பச்சை வண்ணத் தகடுபோல் பளபளப்பாக மின்னிற்று. அதனிடையே உள்ளூரப் பரப்படியிலிருந்து சிறிது சிறிதாக மேலெழுந்து கரையருகே வெண்ணுரையுடன் சென்று கலகலத்துக் கை கொட்டியார்க்கும் சிற்றலைகள் வெண்கோலமிட்டு அழித்த வண்ணமிருந்தன. கரையருகில் வளர்ந்து நீர்த்திரைகளை நுகரத் தலைகளை வளைத்து நிற்கும் மரங்களும் கரையருகில் சதுப்பு நீரில் படர்ந்த அல்லிக் கொடிகளும் கண்ணுக்கு நாற்புறமும் விருந்தளித்தன. தொலைவில் காணப்பட்ட அவ்வல்லி மலரின் வனப்புடன் போட்டியிட்டு அகஸ்டியின் குருதிச் சிவப்பங்கியும் அடிலியின் வெள்ளிய அங்கியும் காண்பவர் உள்ளங்களைக் களிப்பித்தன. பாரிஸின் செயற்கையழகியல் ஈடுபட்டு மகிழ்ந்த கண்கள் இவ்வியற்கை யழகில் தம்மை முற்றிலும் பறிகொடுத்தன. ஆனால் இவ்வழகுகளுக்கு அழகு தரக்கூடும் ஏதோ ஒன்று குறைபட்டதாக அவள் உள்ளம் உணர்ந்தது. அவள் சிந்தனைகளிடையே முத்துப்போன்ற ஒரு கனத்த மழைத்துளி அவள் மூக்கு நுனியில் பட்டுத் தெறித்தது. அவள் சிறிது அதிர்ச்சியுற்றுச் சுற்றுமுற்றும் நோக்கினாள். கதிரவன் மேல்பால் விழும் நேரமாகவில்லை யாயினும், கதிரொளி மறைந்து மங்கிவிட்டது. வெண்முகிற் குலங்கள் படிப்படியாக நிறுங்கறுத்துப் புகைப்படலங்களாகி வந்தன. முதல் துளியை அடுத்து விரைவில் துளிகள் விழலாயின. திடுமென்று படபடவென்ற இரைச்சலுடன் பெருமழையே கொட்டத் தொடங்கிற்று. இவ்வளவு மாறுதலும் சில நொடிகளுக்குள் விரைந்து நடைபெற்றதனால் அவளால் இன்னது செய்வதென எண்ணக்கூடவில்லை. இருப்பது கரையிலிருந்து தொலைவில் தன் கண்ணின் கருமணிகள் வேறு தன்னுடனிருந்து இப்புயலில் சிக்கிக் கொண்டன. கையில் குடையுமில்லை - ஒதுங்கி நிற்க வகையுமில்லை. முன் கருதலின்றி இப்படி வந்துவிட்டோமே என்று அவள் தன்னைத்தானே கடிந்து கொண்டாள். அகஸ்டியும் அப்போது வாத்துகள் மீது கவனம் செலுத்தியிருந்தான். அவை யாவும் கரையை நோக்கி அம்புகள் போல் பாய்ந்துகொண்டிருந்தன. “அம்மா, அதோ வாத்துகள் விரைந்தோடுகின்றன. மழை வலுக்கும் என்பதற்கு இது அடையாளம் என்று மூரட் மாமா கூறுவாரல்லவா? நாம் இப்போது தம்பியை வைத்துக்கொண்டு என்ன செய்வோம்?” என்றாள் அடிலி. அவள் கேள்வி தன்னை இடித்துக் காட்டுவது போலிருந்தது லாரைனுக்கு. அவள் திகைத்தாள். தன் இருகுழந்தைகளையும் இரு விலாப்புறத்திலும் இழுத்தமைத்துத் தன் அங்கியால் அவர்களைப் பொதிந்து கலையைக் கவலையுடன் நோக்கிய வண்ணம் படகு செலுத்துபவனை விரைந்து செலுத்தும்படி ஊக்கினாள். இச்சமயம் ஒரு புதரடர்நத தீவருகிலிருந்து ஒரு படகு அவர்களை நோக்கி விரைந்து வந்தது. அதில் யாரோ குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு வந்தது தெரிந்தது. ஆளணுகியதும் குடையினடியிலிருந்து மூரட்டின் சிறு முகம் அவளை நோக்கிக் குறுநகை நகைத்தது. காலமறிந்து உதவ முன் வந்த இவ்வரவு அவள் முகத்திலும் கவலைக்குறியகற்றி நன்றியின் புன்னகை வருவித்தது. அடங்கிய அச்சமுழுதும் ஆர்வ வரவேற்பாக மாறிற்று. குழந்தைகளோ தாயைக்கூட மறந்து அவனை நோக்கித் தாவின. அவர்களின் ஆரவாரம் புயலை மறக்கடித்தது. மூரட் குடையாதரவு மட்டும் கொண்டுவரவில்லை. அடிலி, அகஸ்டி ஆகியவர்களுக்கான தின்பண்டங்கள், உணவுப் பொருள்கள், குழந்தைகளுக்கும் லாரைனுக்கும் வேண்டிய புயலங்கிகள், சேற்றில் நடக்க உதவும் புறக் காற் புதையல்கள் ஆகிய யாவும் அவன் படகிலே கொண்டுவரப்பட்டிருந்தன. ஆகவே, அவர்கள் புயலைச் சட்டைபண்ணாமல் அவரவர் சட்டையணிந்து குடையின் பாதுகாப்பில் வீட்டில் அமர்வது போல் அமர்ந்து புயலை ஒரு கண்காட்சியாகக் காண முடிந்தது. படகோட்டிக்கு வேண்டிய முரட்டுப் பையும் அவன்முன் கருதலுடன் எடுத்து வந்திருந்ததால், படகு புயலிலும் இன்ப உலாப்போல உலா வர முடிந்தது. லாரைன் உள்ளத்தின் சீற்றம் அகன்றதுடன், தன் புறத்தோடகற்றி இயற்கைக் கனிவுடன் அகமகிழ்வுற்றது. அதனறிகுறியாக அவள் தானே வலிந்து முன்னைய இயற்கை மரபுநின்று மூரட்டுடன் பேசத் தொடங்கினாள். “இப்போது நம் படகு ஒரு பறவைக் கூண்டாய் விட்டது. நாம் எல்லாரும் அதில் உள்ள பறவைகளாய் விட்டோம்” என்றாள். “இதோ நம் பறவைக் குஞ்சுகள்” என்று மூரட் அடிலியையும் அகஸ்டியையும் எடுத்து மடியில் வைத்தணைத்துக் கொண்டான். தன் பிள்ளைகள் கூடத் தன்னை விட்டு விட்டு அவனிடம் சென்றிருந்து அகமகிழ்வு காட்டியது லாரைனுக்குச் சிறிது பொறாமையை உண்டுபண்ணிற்று. அவள் சிறிது நேரம் பேசாமலிருந்தாள். குடையின் விளிம்பிலிருந்து நீர் தாரை தாரையாய் ஒழுகிற்று. பிள்ளைகள் அதில் கையிட்டு நீரை ஏந்தின. மூரட்டும் கூட நீரை ஏந்திக்கொண்டு “மழை நீர் புயல் நீராயில்லை. அது நல்ல வெதுவெதுப்பாகவே இருக்கிறது?” என்றான். “உங்களுக்கு எல்லாம் வெதுவெதுப்பாகவே வந்தமைந்து விடுகின்றன” என்று தன் உள்ளார்ந்த புழுக்கம் தோன்ற நறுக் கொன்று கூறினாள் லாரைன். அவன் நகைத்தான். “இதுவா தங்கள் நன்றி. தாங்கள் கூறுவதைப் பார்க்க, இந்தப் புயலுக்குக்கூட இயற்கை காரணமல்ல, நான்தான் காரணம் என்று நினைக்கிறீர்கள் போலத் தோற்றுகிறதே” என்றான். லாரைன் மனம் மீண்டும் மாறிற்று. “நான் அப்படி எண்ண வில்லை; ஆனால், அதனை நீங்கள் எதிர்நோக்கியிருக்க வேண்டும்.” மூரட்: ஆம். லாரைன்: எப்படி உங்களுக்கு மட்டும் அது முன்கூட்டித் தொரிந்தது? மூரட்: காற்று வடக்கிருந்து அடித்ததைக் கவனித்தேன். வடக்குக் கறுத்து வந்தது. தங்கள் பயணம் பற்றிக் கவலைப்பட்டு நான் பாரிஸ் செல்வதை நிறுத்திக்கொண்டு தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு தீவில் வந்து காத்திருந்தேன். தன்னைப்பற்றிய அவன் உள்ளார்ந்த கவலை அவள் உள்ளத்தை உருக்கிற்று. தன் குழந்தைகளிடம் தன் உயிரையே வைத்திருந்ததாக அவள் நினைத்திருந்தாள். ஆனால், குழந்தை களை இத்தகைய முன் எச்சரிக்கை யில்லாமல் அவள் கூட்டி வந்திருந்தாள். மூரட் காதலை ஒரு விளையாட்டாகக் கருதியிருந்தது உண்மையாயிருக்கலாம். இன்று அது அவனுக்கு விளையாட்டாக இருக்க முடியாது என்பதை அவள் கண்டாள். ஆனால், இன்னும் அவள் தன் உள்ளார்ந்த மாறுதலை அவனிடம் காட்டத் துணியவில்லை. நேர்மாறாக அவள் மீண்டும் தன் கையிலுள்ள ரூசோவின் புனைகதையிடையே கவனம் செலுத்தத் தொடங்கினாள். இப்போது பொறாமையின் ஒரு புயல் வீச்சு அவனுடைய உள்ளத்தையும் தைத்தது. “அது என்ன புத்தகம்?” என்று கேட்டுக் கொண்டே அவன் அதை வாங்கினான். வாங்கி அதை வெடுக்கென்று ஏரியில் எறிந்தாள். அவன் சீற்றம், உணர்ச்சி கண்டு அவள் திகைத்தாள். ஆனால், அவ்வுணர்ச்சியை எதிர்ப்பது உணர்ச்சிப் போராட்டத்தை வளர்ப்பதாகும் என்றெண்ணிப் பல்லைக் கடித்துக் கொண்டு வாளா இருந்தாள். “ரூசோ பெருங்குடி மக்களை எதிர்ப்பவன். தாமும் பெருங்குடி மக்களிடையே இடம்பெறவேண்டும் என்று துடிக்கும் போலிகளாகிய நடுத்தரக் குடிச் செல்வர்தாம் அவன் நூல்களை வாசிக்கின்றனர். குடும்பக் கடமைகளை மறந்த சோம்பேறிப் பெண்டுகள்தாம் அதை வாசிப்பதாகப் பாசாங்கு செய்வார்கள்.” முழுதும் பொய்யும் புனைசுருட்டுமான இத்தாக்குதல் சூழலுக்குப் பொருத்தமாயிருந்ததனால் அவள் தன்னை மறந்து கலகலவென்று சிரித்தாள். பிள்ளைகள் காரண மறியா விட்டாலும் கூட இருந்து விழுந்து விழுந்து சிரித்தன. “இவர்களெல்லாம் ஏன் சிரிக்கிறார்கள்?” என்று மூரட் படகோட்டியைப் பார்த்துக் கேட்டான். அவனும் சிரிக்கத் தொடங்கினான். அதன்பின் மூரட் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்கள் சிரிப்பு மனப்புயலை எட்டிற்று வானமும் சிரிக்கத் தொடங்கிற்று. அதனால் புறப்புயலும் விடை கொண்டேகிற்று. அதன் தடங்களைச் சிந்திய மலரிதழ்களும் தழைகளும் குளிர் காற்றும் மட்டும் காட்டின. புயலின் முன் அமைதி எச்சரிக்கை அமைதி. புயலின் பின் அமைதியோ ஆறுதலும் இன்பமும் தரும் அமைதி. பறவைகள் அப்போது தாவிப் பறந்தன. குஞ்சுகள் கலகலத்தன. அகஸ்டி படகில் ஒதுங்கிய நத்தைச் சிப்பிகளைப் பொறுக்கத் தொடங்கினான். அடிலி லாரைனுக்கும் மூரட்டுக்கும் இடையே வந்து உட்கார்ந்து இருவர் கைகளையும் எடுத்துத் தன் தோள்கள் மேலிட்டுக்கொண்டு இளவரசிபோல் வீற்றிருந்தாள். அகஸ்டி, அவள் பின்வந்து சாய்ந்து இருவர் தோள்களையும் இருகைகளால் பற்றினான். லாரைனின் கைகள் மூரட்டின் கைமீது பட்டன. அவன் அதை மெல்லப் பற்றினான். அவள் அவனைத் தடுக்கவில்லை. கைகள் தழுவிக் கொண்டன. அவள் புன்னகை அவன் மனத்துள் அலையோடிப் பாய்ந்து இன்ப உணர்ச்சிகளைத் தூண்டி எழுப்பின. இருவர் உள்ளங்களும் கூத்தாடின. ஒருவர் நாடித் துடிப்பு அதனை மற்றவர்க்கு அறிவித்து வந்தது. அடிலியை அவன் மடிமீது எடுத்து வைத்துக் கொண்டான். அகஸ்டியை அவள் மடிமீது எடுத்து வைத்துக் கொண்டாள். அடிலியை அணைத்த அவன் கைகள் அவள் தோள்களில் வந்து தழுவின. அகஸ்டியின் கன்னங்களைக் கிள்ளிய அவள் விரல்கள் அவன் கன்னங்களை மறைத்துப் படிந்த மயிர்களை நீவி அவற்றைத் தடவின. அவர்கள் உள்ளங்கள், இடையே கரையில் வந்து மோதும் இரண்டு இன்பக் கடல்களாயின. 23. பிரிவு படகு கரையில் வந்திறங்கிற்று. மூரட் முன்பே அமர்த்தி வைத்திருந்த பெட்டிவண்டி சிறிது தொலைவில் கப்பியிட்ட பாதையின் கோடியிலேயே நின்றிருந்தது. படகுத்துறை சதுப்பு நிலத்திலிருந்ததால், வண்டி அதுவரை வரமுடியவில்லை. மூரட் முதலில் மூட்டைகளைக் கட்டிப் படகோட்டியிடம் கொடுத்து வண்டிக்கு அனுப்பினான். பின் அடிலியை ஒரு தோளிலும் அகஸ்டியை மறு தோளிலும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். லாரைன் தானும் உடன் செல்ல எண்ணித் தன் அங்கியைத் திரைக்கத் தொடங்கினாள். மூரட் திரும்பிப் பார்த்து நீங்கள் நடந்துவரத் துணிவதானால், கடைசிவரை நடந்துதான் வரவேண்டும். வண்டியில் வரவேண்டுமானால் நான் திரும்பி வரும்வரை இங்கேயே இருங்கள்” என்றான். அவளுக்குத் தெரியும், சேற்றில் தன் காலுறைகள் சிக்கினால், உடைகளும் கெட்டுவிடும்; வண்டியில் தான் ஏறமுடியாது என்பது. ஆயினும், மெய்ப்புக்காகவே அவள் நடக்க முனைய வேண்டியிருந்தது. இந்நிலையில் சிறு குழந்தை போலவே அவள் காத்திருக்க வேண்டியதாயிற்று. மூரட் பிள்ளைகளை விட்டு விட்டு மீண்டும் வந்ததும் அவளிடம் எதுவும் கூறாமல் அவளைத் தூக்கினான். “மூரட்! என் பளுவை உங்களால் தாங்க முடியுமா?” என்றாள் அவள். மூரட்: அது தெரிந்தால் நீங்கள் பேசாமல் என் கழுத்தைக் கட்டிக்கொள்வீர்கள். அது எனக்கு ஏந்தலாயிருக்கும். அவன் சொன்னபடியே கழுத்தைக் கட்டிக்கொண்டாள். அவன் உயர்ந்த தோள்கள் அவள் கைக்கு எட்டவில்லை. குனிந்து கையை ஏற்றபோது அவள் அவன் கன்னங்களுக்கு ஒரு முத்தம் தந்தாள். அவள் புன்னகை செய்தாள். அவளை அவன் ஆர அமர மெள்ளவே தூக்கிச் சென்றான். அவள் மேலங்கி அவன் திண்ணிய உடலில் நெருக்குண்டு கசங்கிற்று. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவள் அவன் கண்ணோக்கிலிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், அதன் மீது படர்ந்த சிவப்பு அவள் அகமகிழ்வை அவனுக்குக் காட்டிற்று. மூரட் காதலுள்ளத்தினைக் கைப்பற்றுவதில் வெற்றி கண்டான். வெற்றி எவ்வளவு என்பது அவனுக்கு இன்னும் தெரியாது. ஆனால், தெரிந்த அளவே அவள் வாழ்வில் புத்தொளி தூண்டப் போதியதாயிருந்தது. ஆனால், இவ்வெற்றியின் மகிழ்வை வரவிருந்த பிரிவு வந்து கலைத்தது. அவன் பாரிஸ் வருமுன் ஈடுபட்டிருந்த போர்த் துறையிலிருந்து அவனுக்கு விரைவான அழைப்பு வந்திருந்தது. லாரைனின் பயணத்துக்காக அவன் தன் பயணத்தைச் சிறிது தாழ்த்திக் கொண்டிருந்தாலும், அவன் படுக்கை தட்டுமுட்டுகள் எல்லாம் முன்பே அனுப்பப்பட்டிருந்தன. இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவனும் புறப்பட்டுச் செல்லவேண்டும். அரும்பிய காதல், அதனை அப்படியே தொலைவில் வளரவிட்டு அவன் நாடோடி வாழ்வை மீட்டும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எத்தனை மாதத்தில், எத்தனையாண்டில் மீண்டும் ஃபிரான்சு நாடு வந்து காதலியைக் காண்பானோ, அவனுக்கே தெரியாது. போகுமுன் தன் நினைவுக் குறியாகத் தன் காதலிக்கு ஏதேனும் கொடுக்க நினைத்தான் அவன். இப்போது அவர்கள் சமூக உயர்வு தாழ்வு மீட்டும் குறுக்கிட்டது. அரண்மனை வாழ்க்கைப் பரிசுகளை அரும் பொருளாகக் கொள்ளமுடியாத உயர் செல்வப் பெண்டு அவள். அரண்மனை நுழைவே தன் உடைமதிப்புக்கு அப்பாற்பட்டவன் அவன். அவளுக்கு எத்தகைய பொருளைத் தருவது? இராப்பகல் இதுவே அவன் ஓயாச் சிந்தனையாகிவிட்டது. அரும்பொருட் கடைகள், பட்டாடையணி அங்காடிகள், பொன்னணிமணி வீதிகள் ஆகியவற்றிலெல்லாம் அவன் அலைந்தான். பல பொருள்கள் அவனுக்குப் பிடிக்கவில்லை. பிடித்த பொருள்களின் விலையோ அவன் பணப்பையின் அளவுக்கு மீறியிருந்தது. அந்தோ காதல் ஒருபுறம் முன்னிழுக்க, வறுமை அவனை வாட்டிப் பின்னிழுத்து வதைக்க, அவன் அல்லற்பட்டு நொந்தான். அவன் பொது வாழ்வே இப்போது லாரைன் கூட்டுறவால் செலவேறியதாய்விட்டது. ‘பணம், பணம்’ என்றே பண்ணை மேலாளுக்கு எழுதிவந்தான். பணக் கவலையற்ற தலைவனுக்கு இப்போது ஏன் இவ்வளவு தேவைகள் என்பதறியாது மேலாள் திகைத்தான். அவன் அனுப்பும் பணம் எல்லாம் தேவையை என்றுமே நிறைவேற்றவில்லை என்று தோற்றிற்று. பண்ணை நிலங்கள் பலவற்றை அடகு வைத்தாய்விட்டது அடகு வைத்த பின் பல விற்கவும்பட்டன. இப்போது மூரட்டின் இறுதிக் கோரிக்கைக்கு மறுமொழியாக மேலாள் “இனி அடகு வைக்கவும் இடமில்லை; விற்றால் வாங்கவும் ஆளில்லை. முழுவதும் விற்றுவிட்டால்கூட வாங்க ஆள் கிடைப்பது அருமை” என்று எழுதிவிட்டான். நண்பர்களிடமெல்லாம் கடனுதவிக்கு எழுதிப் பார்த்தாய் விட்டது. நண்பர்களின் மதிப்பிழந்ததுதான் பலன். இறுதியாக மூரட்டுக்கு ஒரே ஒரு புது எண்ணம் தோன்றிற்று. அவன் தன் குதிரைகளையும் தன் பாலாடுகளையும் என்றும் விற்க எண்ணியதில்லை. அவை அவன் நண்பர்கள் போல வளர்ந்துவந்தன. இப்போது அவற்றை விற்பதற்கு மாறாக, அவற்றுள் சிலவற்றையே நினைவுப் பரிசாக அனுப்பினால் என்ன என்று எண்ணினான். அங்ஙனமே மேலாளுக்குக் கடிதம் வரைந்தான். அவன் சிறந்த குதிரைகளையும் ஆடுகளில் இரண்டு நல்ல ஆடுகளையும் தன் பேரால் கோமாட்டி சிராம்மோனுக்கு அனுப்பும்படி அவன் கட்டளையிட்டான். பரிசுக்கான நன்றியைக் கூட அவன் நேரிடையே பெறக் காத்திருக்கவில்லை. இச்சமயம் மூரட் ஈடுபட்ட போர், பிரஞ்சு நாட்டுக்கான போர் முயற்சியே. இங்கிலாந்தின்மீது படையெடுப்பதென்று ஃபிரஞ்சு அரசியல் இப்போது திட்டமிட்டிருந்தது. அதற்காக விரிவான முறையில் ஆளெடுக்கப்பட்டனர். லாரைனை மணந்துகொள்ள வேண்டுமானால், நற்பணியும் வருவாயும் வேண்டுமென்ற எண்ணங்கொண்ட ஆக்டேவ் மூரட் தன் நண்பர்கள், அரசியல் தோழர்கள் யாவரிடமும் தனக்கு நல்ல பணி ஒன்று பார்த்துத் தரும்படி கூறியும் எழுதியும் வந்திருந்தான். அவன் பாடல்களில் கருத்துப் போக்கு அரசியல் துறைகளில் அவனுக்குப் பெருத்த எதிர்ப்பை உண்டுபண்ணி யிருந்ததனால், எங்கும் பணியுதவி கிட்டவில்லை. போர்த் துறையில் மட்டுமே இடம் கிடைத்தது. இங்கிலாந்துப் படையெடுப்பு அணியில் அவன் ஓர் உயர்தர பதவியிலமர்த்தப் பட்டான். இங்கிலாந்துப் படையெடுப்பு உண்மையில் நடைபெறவே யில்லை. ஃபிரஞ்சுப் புரட்சி அவ்வெண்ணம் மீண்டும் பல ஆண்டு எழாமல் தடுத்துவிட்டது. நெடுநாட் சென்று நெப்போலியன் மீண்டும் அதே முயற்சியில் ஈடுபட்டான். ஆனால், அவனாலும் அது நிறைவேறவில்லை. ஆகவே, மூரட்டின் தொண்டும் படைத்தளங்களில் சில ஆண்டுக் காலம் மாறிமாறிச் சென்றிருந்ததுடன் நின்றது. இவ்வாண்டுகளில்போர் இல்லை - போர்ப் பேச்சே இருந்தது. மூரட்டுக்கு மனநிலையை உயர்த்துவதற்குக் கூடப் பயன் படவில்லை. ஏனென்றால் அவன் கனிந்த உள்ளமும் பெரும் போக்குகளும் அவன் வருவாயை இங்கும் கரைத்தன. படைவீட்டு வாழ்வு அவன் வாழ்வின் பல நெருப்புத் தேர்வுகளிடையே ஒரு நீண்ட நெருப்புத் தேர்வாக மட்டும் உதவிற்று. அந் நெருப்புத் தேர்தல்களிடையே லாரைனின் கடிதங்களும் அவள் நினைவுகளும் மட்டுமே அவனுக்கு உயிர்ப்பூட்டும் தென்றல் காற்றுக்களாயுதவின. அவன் முதற் கடிதம் அவன் காதலின் தன்மையையும் உள்ளத்தின் பிரிவுத் துன்பத்தையும் நன்கு எடுத்துக் காட்டிற்று. அவர்களிடையே உள்ள மரபுப் படி ‘காதல், காதலி’ என்ற சொற்களை அவன் வழங்கவில்லை. நட்பு, உடன்புறப்பு என்ற சொற்களே அவற்றில் இடம்கொண்டன. ஆனால், ஆர்வமும் துடிப்பும் நட்பு, உடன் பிறப்பு ஆகியவற்றின் உணர்ச்சியிலிருந்து அவன் உணர்ச்சியையே வேறு பிரித்துக் காட்டின. அவன் முதற் கடிதம் வருமாறு: பிரெஸ்ட் பிப்-21, 1777 என் அருமை நங்கையீர்! உம்மை நான் மீட்டும் என்ற காண்பேன்? பொற்குவையையிழந்த உலோபிபோல் நான் வருந்துகிறேன் - பொற்குவையை நான் முன்பும் ஆட்கொண்ட தில்லை யாயினும் கண்டேனும் களிப்பில் மூழ்கியிருந்தேன். இப்போது எனக்கு முன்னிருந்த வேறு பொழுது போக்கும் வழியில்லை. என் வாசிப்பார்வம், கலையார்வம் எல்லாவற்றையும் இப்போது நீங்கள் கொள்ளைகொண்டு விட்டீர்கள் நீங்கள் இல்லாமல் இப்போது அவற்றில் ஆர்வம் செல்லவில்லை. தங்கள் ஓவியக் கலையை - தங்களிடம் கண்டு நான் பொறாமைப்படும் கைத்திறத்தை - நானும் பெற்றிருந்தால் இங்கே நான் கையெழுத்தினிடமாக, என் நிலைமையை என் உருவுடனேயே இதன் கீழே தங்கள் காலடிச் சுவட்டுடன் தீட்டியிருப்பேன். ஆனால், அத்திறமில்லாமல் பெயரை மட்டும் பொறிக்கிறேன். தங்களை மறக்க விரும்பியும் மறக்க முடியாத, ஆக்டேவ் மூரட் படைவீடுகள் அடிக்கடி மாற்றப்படும். அப்போது அவள் கடிதங்கள் பிந்தியும், பல சேர்ந்தும் வரும். சில சமயம் அவன் கடிதங்களும் ஒழுங்காய்ச் சேராமல் போகும். அவள் தன்னை மறந்தாளோ, அவள் பெருவாழ்வில் தன் சிறு நினைவில் தடம் அகன்றதோ என அவன் ஏங்கி ஏங்கி நெஞ்சம் புண்ணாவான். அவள் சில சமயம் தன் நெஞ்சுநோய் தன்னை வாட்டுவதாக வரைந்திருப்பாள். அப்போது அவன் நெஞ்சம் துடிக்கும். சின்னஞ்சிறு கருமணிகளின் சிறுசிறு நோய் நொடிகளைப்பற்றி அவள் குறித்திருப்பாள். அப்போது அவன் கடிதமூலம் அக் குழந்தைகள்மீது தன் பாசத்தைப் பாகாய் உருக்கி அனுப்புவான். சில சமயங்களில் அவள் கடிதங்களில் அன்பும் கனிவும் கலந்திருக்கும். அவன் வாழ்வுப் பாலைவனத்தில் அது இசை நீருற்றாய் அவனைச் சில நாள் மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்த்தும். அவளும் உண்மையில் அவனில்லாதபோது தன் வாழ்வின் வெறுமையை உணர்ந்தாள். அவன் வீட்டாட்சித்திறமை அவள் திறமையின்மையை மூடி வைத்திருந்தது. பணியாட்களை அவன் திறத்துடனும் அதே சமயம் அன்புக் கனிவுடனும் ஆட்சி செய்திருந்தான். ஆட்சிப் பொறுப்பு அற்ற செல்வ இளவரசியாக அவள் நாட்கழித்திருந்தாள். இப்போது அவளே நேரில் ஒவ்வொரு சிறு காரியத்தையும் கவனிக்க வேண்டிவந்தது கவனித்தும் முன்போல் எல்லாம் சரிவர நடைபெறவில்லை. பல பணியாட்கள் அவளை ஏமாற்றினர். பலர் அவளிடம் கடுஞ்சொல் கூறினர். பலர் அவள் சீற்றத்துக்காளானார்கள். அவன் வருமுன் அவள் எல்லாரையும் தன் மனம்போல் விட்டிருந்தபடிகூட இப்போது அவளால் முடியவில்லை. உள்ளத்தில் எழுந்து அவளை உள்ளூர ஆட்கொண்டு வதைத்து வந்த உணர்ச்சிகளைத் தனக்கும் தெரியாமல் அடக்க அவள் செய்த முயற்சி அவள் உள அமைதியையும் இன்ப அமைதியையும் குலைத்து, கடுஞ்சொல், கடுகடுப்பு ஊட்டியிருந்தன. அவள் உடல் நிலையையும் அவள் சூழ்நிலையையும் இது கெடுத்து அவள் வாழ்வில் கசப்பூட்டியது. லாரைன் கத்தோலிக்க சமயத்தில் பற்றுடையவளாகவே முழுதும் கழித்தவள். அவள் உள்ளார்ந்த கலை வாழ்வு அவள் புறவாழ்வைச் சிறிதும் மாற்றி விடவில்லை. ஞாயிறு தோறும் அவள் கோயிலுக்குப்போக முடிவதில்லையாயினும் கூடுமான மட்டும் போவாள். அவன் உடனிருந்தபோது காதல் வாழ்வு கோயிலைப் பெரிதும் மறக்கடிக்க வைத்திருந்தது. பிரிவும் தன் காதல் உணர்ச்சியை அடக்கும் எண்ணமும் இப்போது சமய உணர்ச்சிக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டின. அவள் இப்போது வழக்கமாகக் கோயில் செல்லத் தொடங்கி யிருந்தாள். அத்துடன் அவள் தன் இரண்டக வாழ்வைத் தானே கண்டிக்கத் தொடங்கினாள். இக்கசப்பினால் அவள் பழைய நெஞ்சு நோய் மீண்டும் தலைகாட்டிற்று. கசப்பு நோயூட்டினதுடன், நோய் கசப்பைப் பெருக்கிற்று. தன் இரண்டக வாழ்வுதான் கடவுள் சீற்றத்துக்கு வழிவகுத்து நோய் வருவித்ததென்று அப்பேதைப் பெண் எண்ணினாள். ஆகவே அவள் வழக்கமாகக் கத்தோலிக்கர் மதகுருவிடம் பாவ மன்னிப்புக் கேட்பது மாதிரி கேட்டாள். காதலனிடம் என்றும் மனம் விட்டுக் கூறாத அவள் உள்ளத்தில் காதல் போராட்டக் கதையை அவள் மதகுருவிடம் கூறினாள். மூரட்டுக்கு வரைந்த கடிதத்தில் இதை அவள் ஒரு சிறிதுதான் கட்டியிருந்தாள். “உங்களிடம் கூட நான் கூறியிராத கூறமுடியாத என் உள்ளார்ந்த பல மனவேதனைகளை மதகுருவிடம் கூறி என் மனப்பாரத்தை ஓரளவு குறைத்துக்கொண்டேன். ஆனால், இன்னும் என்வேதனை குறைந்தபாடில்லை” என்று அவள் எழுதியிருந்தாள். காதலின் கண்கள் எப்போதும் காதலர் வகையில் பொறுப்பற்ற தன்மை உடையவை. அதிலும் பிரிவினிடையே இப்பொறுப்பற்ற தனம் பல வகையில் புகையும், தன் லாரைன் தன்னிடம்கூடக் கூறமுடியாத வேதனையைக் கேவலம் ஒரு மதகுருவிடம் கூறினாள் என்ற எண்ணம் மூரட்டின் மனத்தை வாட்டியது. அந்தோ? அவள் மறைத்த மறை செய்தி வேறு எதுவுமன்று - அவன் எந்தக் காதலுக்காக ஏங்கிக் காத்திருந்தானோ அதே காதலுணர்ச்சிதான் என்பதை மட்டும் அவள் அறிந்திருந்தால், அவள் எவ்வளவு துள்ளிக் குதித்திருப்பாள். ஆனால், காதல் வழிபடும் பக்தை இங்கே காதல் தெய்வத்தை நம்பாமல் வேறு தெய்வத்திடம் நம்பிக்கை வைத்து அவதியுற்றாள்! இவ்வாண்டும் லாரைன் ஓர் இலத்தீன் நூலை - ஸெனெக் காவின் ஒரு காவியத்தை - மொழி பெயர்த்திருந்தாள். ஸெனக் காவின் ஃபிரஞ்சு உருவத்தில் மூரட் தன் காதலியின் கைத்திறங் கண்டு மகிழ்ந்தாள். “மொழிபெயர்ப்பாசிரியர் தன் முதலாசிரியர் கருத்துகளினூடே தன் முகத்தைக் காட்டக்கூடாது. உங்கள் முகத்தையோ உங்கள் மொழி பெயர்ப்பு ஒரு சிறிதுதான் தடுக்கிறது. நாம் மொழி பெயர்க்கிறோம் என்ற எண்ணம் உங்களுக்கு அவ்வப்போது இல்லாமலிருந்தால், நீங்கள் இலத்தீன் ஸெனக்காவின் ஃபிரஞ்சு மொழி பெயர்ப்பாளரா யிருக்க மாட்டீர்கள். மற்றொரு ஃபிரஞ்சு ஸெனக்காவாய் விட்டிருப்பீர்கள். அப்போது ஸெனக்கா அன்பர்கள் உங்கள் நூலை வாசிக்கமாட்டார்கள். ஃபிரஞ்சு மக்களும் நானும் மட்டுமே வாசித்து மகிழ்வோம்” என்று அவன் பாராட்டி யிருந்தான். அவன் பாராட்டு அவள் எதிர்பார்த்ததினும் அவள் உள்ளங் குளிர்வித்தது. அவள் நோய் சிறிது நாள் அவளை விட்டகன்றது. அவ்வப்போது அவள் தன் உள்ளத்தில் படிந்த சூழ்நிலைச் சாயலை அகற்ற எண்ணி பாரிஸ் செல்வாள். சில சமயம் அரண்மனை சென்று அரசியின் அவையில் தன் பழைய நண்பர்களுடன் கூடி ஊடாடுவாள். இங்கே எப்போதும் போல எல்லாரும் அவளை வரவேற்று அவள் கூட்டுறவில் மகிழ்வார்கள். அவள் உரையாடல் திறமும் எப்போதையும் விடச் சிரிப்பதாகவும் உயர்வுடையதாகவுமே இருந்தது. ஆனால், ஏதோ ஒரு பளு - ஒரு நிழல் அவள் வாழ்வின் மீது படிந்திருந்தது என்பதை எவரும் கவனியாதிருக்க முடியவில்லை. அவள் எப்போதுமே இன்ப வாழ்விடையிலும் தன் மதிப்பும் பெருமித நடையும் உரையவளாயிருந்ததனால், யாரும் அது பற்றி அவளிடம் உரையாடத் துணியவில்லை. அண்டிக் கேட்பவருக்கோ அவள் ‘தனி வாழ்வை’ யோ, தன் குழந்தைகளின் உடல் நிலையையோ சுட்டிக் காட்டுவாள். பாரிஸ் அவ்விளக்கம் கேட்டு உள்நடுக்கமுற்றது. அரண்மனை இன்பவாழ்வில் இடம் பெற்ற ஒரு நங்கை கணவன் இறப்புப்பற்றி இழவு மரபுப்படி பேசலாம் - சில நாளைக்கு! குழந்தை நோய் பற்றிக் கவலைப்படுவ தாகக் கூறலாம் - பிற நிகழ்ச்சி ஈடுபாடுகளுக்கிடையில்! கணவனுக்காகப் பல ஆண்டு கடுந்தவம் - குழந்தைகள் நோய்க்காகக் குறைபட்டழியும் உள்ளம்! அவள் உயர் பண்பு கண்டு இன்ப வேட்டைக்காடாகிய பாரிஸ் நடுங்கியதில் வியப்பில்லை. இவள் உண்மை மனநிலையும் மனப் பண்பும் அறிந்தால் அவர்கள் திகில் இன்னும் மிகுதியாகும் என்பது உறுதி. ஆனால், அவள் நிலைமையை முற்றிலும் உணர்ந்து கொள்ள முடியாத மூரட் அவள் பாரிஸ் வாழ்வு. அரண்மனை நடமாட்டம் பற்றிப் பொறாமையும் கவலையும் கொண்டான். எத்தனை உயரிய இன்ப ஆடல் பாடல்கள்! எத்தனை வகை வகை நண்பர்! அவற்றிடையே போலந்து நாடோடியை அவள் மறந்துவிடக் கூடும் என்று அவன் அஞ்சினான். “நான் மீண்டும் பாரிஸ் பெருமன்றம், பாரிஸ் என்ற சொல்லைக் கேட்கவே வெறுக்கிறேன். என்னை என் லாரைனிடமிருந்து அனுப்பியது பாரிஸே! அங்கே உன் உள்ளங் கொள்ளை கொள்ள எத்தனை பொருள்கள், நிகழ்ச்சிகள், ஆட்கள்! அவற்றின் நினைவுகள் மேன்மேல் வந்து படிந்து என் நினைவைப் புதைத்துவிடுமே! நான் திரும்பிவரும்போது தங்களுக்கு நான் ஓர் அயலானாய் விடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று எழுதியிருந்தான். இந்தக் கடிதத்தில் அவன் முதன் முதலாக அவளை என் நங்கையீர் என்று விளிக்காமல் ‘என் அருமை லாரைன்’ என்று விளித்திருந்தான். அவள் அதனைப் பொருட்படுத்தும் நிலையிலில்லை - அவனிடம் தெரிவிக்காமலே அவள் அவன் காதலுக்குத் துடியாய்த் துடித்தாள். அவனிடம் அவள் அதனைத் தெரிவிக் காது தடுத்தது வெறுப்பன்று, நாணமுமன்று - அவன் காதலை அவள் நம்பாதது கூட என்று - அவனைத் தான் மணந்து கொள்ள முடியாது என்ற எண்ணமே. அவள் நோய் இப்போது அவளை மீறிப் பெருகிற்று. அவள் பாயும் படுக்கையுமானாள். இதனை அவள் கடிதங்கள் முற்றிலும் மறைக்க முடியவில்லை. அவள் உட்கொள்ளும் வகை வகையான மருந்துகள் பற்றியும் எழுதியிருந்தாள். அவள் உண்மை நிலையைப் படிப்படியாக அவன் ஐயுறத் தொடங்கினான். அவள் கடிதங்களே படிப்படியாக அவற்றை மறைமுகமாக விளக்கின. அத்துடன் அவன் தன் உணர்ச்சியார்வத்தால் அவளைக் காதலி போல் கருதி எழுதிய போதெல்லாம், அவள் அவற்றைக் கடியவுமில்லை. அவைபற்றிக் குறிப்பிடவுமில்லை. ஆகவே, அவள் நோய் பற்றித் துணிந்து தன் கருத்தைத் தெரிவித்தான். “தங்கள் உடல் நலம், தங்கள் மகிழ்ச்சி, தங்கள் இன்ப வாழ்வு இவை சின்னஞ்சிறு புட்டிகளில் அடைக்கப்பட்டு மருத்துவர் களால் தரப்படக் கூடும் என்று நீங்கள் எத்தனை நாள் நம்பி ஏமாறப் போகிறீர்கள்! ஆனால், எத்தனை தடவை ஏமாந்தாலும், நீங்கள் அவற்றைத்தான் நம்புகிறீர்கள். உங்கள் மருந்து நான்தான்; என் உயிர் நீங்கள் தாம். இதோ இதை எழுதும் போதும் என் மனக்கண் முன் நான் உங்களை ஆரத் தழுவிக் கொள்வதாக எனக்குத் தோன்றுகிறது. அந்நாள் எந் நாள்” என்று அவன் எழுதினான். “உயர்கலை, உயர் பண்புகள், உள்ளத் தூய்மை இவற்றை நான் உளமாரக் காதலிக்கிறேன் - பண்பு வடிவிலல்ல; மனித வடிவில், தங்கள் உருவில்.” “கற்பனையில் நான் தங்களுக்கு முத்தங்கள் பொழி கின்றேன். கற்பனை முத்தங்கள் ஏமாற்றந் தரலாம். ஆனால், உண்மை முத்தமில்லாத விடத்தில் பல ஏமாற்றங்கள் ஓர் உண்மை நுகர்வாகாதா? தவிர உண்மை முத்தங்கள் கூட எனக்கு அருமைதானே!” “என் கடிதங்கள் காதற் கடிதங்கள் போன்றிருக்கின்றன. ஆம், என் காதலை நான் தங்கள் உள்ளத்தினிடமிருந்து மறைக்க வேண்டியதில்லை. செவிகேட்கச் சொல்லக் கூடாதென்பது தங்கள் ஆணை. கடிதத்தில் கூட எழுதப்படாதுதான். ஆனால், கட்டனையிட்ட தாங்கள் சீறாதிருக்கும்போது, கட்டளையின் பிடி தளருமல்லவா? மேலும் நான் எத்தகைய காதலன்? இது வரை எனக்காக நீங்கள் செலவு செய்திருக்கும் பணத்தை நான் கணக்குப் பார்த்தேன். (நட்பில் கணக்குப் பார்ப்பதை மன்னிக்க வேண்டும். கணக்குத் தானே அதை நட்பெல்லை கடவாமல் தடுக்கிறது!) எனக்கான செலவில் நூறில் ஒரு பங்கில் காதலர் எத்தனை பேர் அகப்படமாட்டார்கள் - காதலரும் அகப்படுவார்கள் - கலைப்பண்பமைந்த” நல்ல குதிரைகளும் அகப்படும். ஆகவே, நான் உடன்பிறப்பாளனாய் இருந்து குளிர்காய வேண்டியதுதான். அவள் உள்ளத்துயரை அவன் அறியவில்லை. அவன் துயரை அவளும் எண்ணிப் பார்க்கவில்லை. அவன் தன் துயரில் வர வர அவர்கள் கட்டுப்பாட்டை மீறித் துணிந்து காதற் கடிதங்களும் கண்டனக் கடிதங்களும் எழுதலானான். அவற்றில் பல அவள் உள்ளார்ந்த காதல் தீயைக் கிளறின. பல அவளை உயிருடன் வாட்டி வதைத்தன. அவள் வதைப்படும் ஊமை உயிரினம்போலத் துடியாய்த் துடித்தாள். ஆனாலும் அவள் வாய்விட்டுக் கடிதத்தில் ஒரு வரியும் இதுபற்றி எழுதத் துணிவில்லை. காதலிக்கிறேன் என்றால், எங்கே காதலுரிமையில் மணஞ்செய்து கொள்ள வற்புறுத்துவானோ என்று அவள் அஞ்சினாள். நாடோடிக் காதலனை மணக்கும் துணிவு இன்னும் அவளுக்கு வரவில்லை. இங்ஙனம் மற்றும் ஓர் ஆண்டு கழிந்தது. போர் முயற்சி இப்போது கைவிடப்பட்டது. மூரட்டுக்குப் பணியிடம் இப்போது அகன்றுவிட்டது. மூன்று ஆண்டு அவன் தன் உயிர் நிலையான லாரைனை விட்டுப் பிரிந்திருந்தும். அதனால் அடைந்த பயன் பிரிவுத் துன்பமன்றி வேறு எதுவுமில்லை. அவன் வருவாயில் மிகுதியாக எதுவும் மிஞ்சவில்லை. அவன் முன்னினும் வறுமைப்பட்டவனாகவே இருந்தான். விடுதலை கிடைத்ததும் அவன் பாரிஸுக்கு மீண்டு வந்தான். அவள் பாரிஸில் இருப்பதாகவே அவன் கேள்விப் பட்டிருந்தான். ஆனால், அவனுக்கு எதுவும் எழுதாமல், அவள் பாரிஸ் விட்டு நாட்டுப்புறத்துக்குச் சென்றிருந்தாள். அவன் தன்னைக் கண்டதும் தன் உள்ள நிலைமையை முழுதும் உணர்ந்து கொள்வான் என்று அவள் அஞ்சினாள். அவன் கடைசிக் கடிதம் இதனை அவளுக்கு நன்கு விளக்கிற்று. “உன் நோய், உன் மனவேதனைகள், மத குருவிடம் தெரிவித்த உன் உள்ளத்தின் உள் மறைவுகள் எல்லாவற்றையும் நீ வெளியிட்டுக் கூறவேண்டியது என்னிடமே - வேறு எங்கே? உனக்கு ஆறுதல் தரவேண்டியவன் நான் - வேறு யார்?” ஆனால், நேர்மை வழியையும் அறிவு வழியையும் பின்பற்ற நீங்கள் தயங்கினால், நான் அவ்வழியை உங்களுக்குத் திறந்துவிட முடியும் - என் வாழ்வில் அவை பயன்பட்டிராவிட்டாலும் உங்கள் வாழ்விற்குப் பயன்படலாம். நான் உண்மையில் பூனையினும் வலி குறைந்தவன். ஆனால், உங்களைக் காக்க வேண்டி வந்தால், உங்கள் உள்ள மறைவை நான் உணரக் கூடுமானால், நான் ஒரு புலியின் வலிமை உடையவனாவேன். அதே சமயம் தங்கள் உள்ளங் கனிவிக்க ஒரு மென்மை வேண்டுமானால், மற்ற எவ்வகையில் நான் புலி போன்றவானாலும், உங்கள் வகையில் நான் உங்கள் மென்கரங்களுக்கியைந்த பூனையாவேன். என்னை நம்பும்படி கோருகிறேன். தங்கள் நண்பர்கள், உறவினர்கள், தங்கள் சிறு குழந்தைகளை விட நான் தங்களை நேசிக்கிறேன்” என்று அவன் கடைசி கடிதத்தில் குறித்திருந்தான். மேலும் அதே கடிதத்தில் மற்றொரு தேதியிட்டு அவன் இன்னும் தெளிவாகத் தன் உள்ளக் கருத்தை வெளியிட்டிருந் தான். “இங்கே ஒரு நண்பர்மூலம் உங்கள் அவசர முடிவு பற்றியும் பாரிஸிலிருந்து என் வரவு கேட்ட பின் விரைந்து சென்றது பற்றியும் கேள்விப்பட்டேன். உங்கள் புரியாப் புதிர்ச் செயல்களுக்கு - உங்கள் உள்ளத்தின் கடுந் துயர்களுக்கு - நோய்களுக்குத்தான் காரணம் என்ன? மூன்றாண்டு பிரிவின் பின் அவாவுடன் தங்களைப் பார்க்கவந்த என்னைக் கண்டு அஞ்சியோடுவானேன்? ஓடித்தான் என்ன பயன்? தங்கள் கட்டளை ஒன்றையன்றி இதுவரை தங்களிடமி ருந்து என்னைத் தடுத்துவைக்கும் சக்தி வேறு எது இருந்து வந்துள்ளது? தாங்கள் ஓடினால் நான் தொடர மாட்டேனா? ஒரு வேளை - என் தற்பெருமை அடிக்கடி என்னிடம் தெரிவித்துப் பார்ப்பதுபோல - தங்கள் நோய் என் பிரிவினால் நேர்ந்ததோ என்றுகூட என்னால் நினைக்காமலிருக்க முடியவில்லை. உங்கள் நோய் - உங்கள் உள்ளத்தின் மறை செய்தி யாவும் என் உள்ளத்தின் அதே நெருப்புத்தானோ என்று என்னால் ஆவலுடன் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. என் ஆவல் சரியாயிருக்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை மட்டும் - நான் வேறெதற்கும் வணங்காத இறைவனிடம் வணங்கி வேண்டிக் கொள்ளத் துணிகிறேன். எனது லாரைனுக்குரிய, ஆக்டேவ் 24. சந்திப்பு என்னை விட்டு ஏன் ஓடவேண்டும்? ஏன்? ஏன்? ஏன். லாரைன் இக்கேள்விகளுக்கு என்ன விடை கூறுமுடியும்? கோமாட்டி சிராம்மோன் என்ற நிலையில் அவள் அவன் நாடோடிக் காதலை அடக்கப் பார்த்தாள். அவனிடம் தன் காதலையும் மறைக்கப் பார்த்தாள். ஆனால், அவள் உள்ளம் கோமாட்டி சிராம்மோன் உள்ளமன்று; லாரைனின் உள்ளம், பெண்மையின் உள்ளம். அது அவள் கட்டு மீறி மூரட்டிடம் ஓடியது. அவனுக்காகவே வாதாடியது. கோமாட்டி சிரோம்மோனின் மதிப்பைக் குலைத்து. அமைதியைக் குலைத்து அது மூரட்டிடம் ஓடத் துடித்தது. கோமாட்டி சிரோம்மோன் மதகுருவின் துணை நாடினாள். அது அவள் துயரத்தையும் மதிப்பையும் பெருகிற்று. அவள் ஆருயிர்க் குழந்தை களிடமிருந்துகூட அவள் உள்ளத்தில் எழும் காதல் அவள் கருத்தைப் பிரித்தது. இந்நிலையில் அவள் மூரட்டின் உண்மையையும் உறுதியையும் அவன் கடிதங்களில் கண்டாள். அவன் காதலின் ஆழத்தையும் கண்டாள். தான் மறைத்த உண்மையை அவனாக அறிந்து கொண்டதையும் உணர்ந்து கொண்டாள். அவன் அறிந்து கேட்பதை ‘ஆம்’ என்று ஒத்துக்கொள்ள அவளால் முடியவில்லை. காதல் எல்லாவற்றையும் மீறிவிட்டது. இன்னும் ‘தான்’ என்ற தன் மதிப்பு நிலையை அது எளிதில் கரைத்து விட முடியவில்லை. அவனாக அதை அறியட்டும் என்றுதான் அவள் காத்துக் காத்து - துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தாள். தன்னை அவன் கண்டால் போதும், தன் உண்மை நிலையை அவன் ஒரு நொடியில் அறிந்து கொள்ள முடியும் என்பதில் அவளுக்கு இப்போது ஐயமில்லை. அந்தச் சந்திப்பில் அவள் இதுவரை அரும்பாடுபட்டு நடித்து வந்த நடிப்பு, மறைத்து வந்த மறைப்பு, தன் பெருமிதப் பகட்டு யாவும் தகர்ந்துவிடும் என்பதும் அவளுக்குத் தெரியும். அத்தகைய தறுவாய்க்கு அவள் காதலுள்ளம் காத்திருந்தது. ஆனால், அவள் உயர்குடிப் பெருமை மரபு அதன் நேரடித் தாக்குதலை மிகைப்படுத்திற்று. அவன் பார்வையில் மெய்ம்மை யெதிரில் தன் பொய்ம்மையை எப்படி வெளிப்படுத்துவதென்று அஞ்சியே அவள் அச்சந்திப்பைக் கடத்திப்போட்டு அதில் நின்று அஞ்சியோடினாள். அவள் உடல் ஓடிற்று. அவள் உள்ளம் அவன் தன்னை எட்டிப் பிடிப்பதை எதிர்பார்த்துத் துடிதுடித்தது. ‘நோய், நொடி, மனத்துயர் என்றெல்லாம் அளந்தேனே! காதல் என்ற சொல்கூட நம்மிடையே கூடாது என்று கட்டளை யிட்டேனே! இவை அத்தனையும் பொய் என்று என் முகம் காட்டிவிடுமே! அப்போது அவர் என்ன சொல்வார்! என்ன நினைப்பார்! நான் ஒரு நடிகை, ஒரு உணர்ச்சிப் பசப்புக்காரி என்று எண்ணி விடமாட்டாரா?’ இவைகள் அவள் உள்ளத் திரைகளில் மோதிய எண்ண அலைகள். மூரட் பாரிஸ் நண்பன் மூலம் அறிந்த செய்திகள் அவன் ஐயங்களை மேலும் உறுதிப்படுத்தின. அவள் ஓட்டத்தின் உண்மையான காரணமும் அவனுக்கு விளங்காமலில்லை. ஆகவே அவன் அவளைச் சந்திக்கப் பின்னும் விரைந்து துடித்தான். பாரிஸில் அவன் தங்கவில்லை. இளைப்பாறவோ, விடாய் தீர்த்துக் கொள்ளவோ சிறிது காலந் தாழ்த்தவுமில்லை. வண்டி கிடைத்தால் அவன் ஏறினான். கிடைக்காவிட்டால் காலைக் கடுக நடக்க விட்டான். அவனிருந்த ‘ஆள்ஸி’ என்ற சிற்றூர்ப் புறத்தை அடுத்த குன்றின் மீதேறி அவ்வூரைக் கண்டதுமே அவன் கண்கள் அதனைத் துருவத் தொடங்கின. ஆனால், அங்கே சென்றடைய இன்னும் பலமணி நேரப் பயணம் செல்ல வேண்டும். இப்போதோ கதிரவன் மேல் வானில் மறைந்து கொண்டிருந்தான். மாலைச் செவ்வொளி விரைந்து மங்கி வந்தது. இன்னும் இருட்டிலேயே ஒரு புதர்க்காடு கடந்தாக வேண்டும். எனினும், அவன் தயங்க வில்லை. மீண்டும் நடை போட்டான். காற்றுக் குளிர்ந்தது. இரவின் இருள் மேலும் இருண்டது. மின்னி மின்னித் தெரிந்த ஒன்றிரண்டு விண் மீன்கள் விரைவில் எங்கோ சென்றொளிந்தன. பனித்துளிகள் போல வெப்ப மிக்க சில துளிகள் வீழ்ந்தன. இவை பனியல்ல, மழைத்துளிகள் என்று அவன் அறிந்தான். விரைவில் மழை தாரை தாரையாகப் பொழிந்தது. புதர்க்காட்டில் வழியும் நன்கு தெரியவில்லை. ஒதுங்குமிடமும் இல்லை. ஒதுங்க இடமிருந்தாலும் அன்று அவன் ஒதுங்கியிருக்க மாட்டான். அவன் நீண்ட கால்கள் தம் முழு நீளத்தையும் காட்டி நிலத்தை அளந்து தாவின. அவன் உடைகள் தொப்பென்று நனைந்தன. உடைகடந்து உடலில் நீர் ஆறாய் ஒழுகிற்று. அவன் விரைவும் விடா முயற்சியும் வீண்போகவில்லை. அந்தப் புயலிலும் அவன் வருவான் என்ற உறுதியுடன் அவள் காத்திருந்தாள். உள்ளம் சந்திக்கத் துடித்தது. உடல் சந்திக்க அஞ்சிற்று. அவள் மாடி அறையில் வைத்திருந்த விளக்கு அணைக்கப்படவில்லை. அதன் ஒளியை அவன் நெடுந் தொலைவிலேயே கண்டான். அது அவன் ஊக்கத்தைப் பன் மடங்காக்கிற்று. அன்றும் என்றும் போலவே அவள் அவன் கடிதங்களை மீண்டும் மீண்டும் படித்தாள். அவள் கட்டளையை மீறி அவன் காதல் துணிந்து எழுதிய தொடர்கள் “என் அருமை லாரைன்” “என் உள்ளங் கொள்ளை கொண்ட நங்கை” - “என் வாசிப்புத் திறம், கலைத்திறம் யாவும் நீயில்லாத போது உன்னிடமே வந்து விடுகின்றன” - “கற்பனை முத்தங்கள்” இவை ஒவ்வொன்றும் அவள் சீற்றத்தைக் கிளப்பவில்லை. அவள் காதல் தீயை எண்ணெய் வார்த்து வளர்த்திருந்தன. அவள் நரம்பெல்லாம் துடித்தது. “அவன் மழையில் நனைந்து வருகிறான். நான் காதல் தீயில் வெதும்பிக் காத்திருக்கிறேன்.” என்று கூறிக் கொண்டது அவள் கலைத்திறம் உள்ளம். ஆயிற்று, முற்றத்தில் அவன் காலடி ஓசை கேட்டது. அவள் அப்பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. திரும்பினால் இடையே யுள்ள சுவர்களைத் துளைத்து அவள் முகத்தை அவன் பார்த்து விடக் கூடும் என்று அவள் அஞ்சினாள் போலும்! அவனை அவள் வரவேற்கவில்லை. பணியாள் வரவேற்றாள். அவன் ஆடையணிகளைக் கழற்ற அவள் உதவவில்லை. பணிப்பெண் உதவினாள். அவன் என்ன நினைப்பான்? அவள் கொழுநன் தலைமகன் திரு. தேசப்பவாஸ், அவள் பிள்ளைகள் ஆகியவர்களுடன் அவன் உரத்த குரலில் பேசினான். அவளுக்குத் தெரியும். யாருக்காக அவன் உரத்துப் பேசினான் என்று. ஆனால், அவள் கீழே இறங்கத் துணியவில்லை. அவனும் விரையவில்லை! அவளைக் காண அமைதியே நல்ல முன்னேற் பாடு என்று எண்ணியவன் போலச் சிரித்து உரையாடினான். பணியாட்கள் அவன் பெருந்தன்மை கண்டு வியந்தனர். அவனுக்குள்ள நட்புரிமையை யாரும் மறந்து விடவில்லை. அதன் அளவையும் அவர்கள் அறிவர். தலைமைப் பணியாள் அவனிடம் வந்து “ஆடையகற்றி குளிர் காய்ந்தவுடன் தாங்கள் உண்ணலாம். தங்களுக்கு உணவு லாரைனின் அறையிலேயே வட்டித்திருக் கிறோம்!” என்றனன். அப்பாடா! தன் பொறுமைக்குரிய பரிசு கிடைத்துவிட்டது. அவன் விரைவில் மாடியறை சென்றான். நட்பருமை உணர்ந்த அவனை உள்ளே அனுப்பி மெல்லக் கதவைச் சாத்தினான். நெடுநாட் பிரிவுக்குப் பின் ஏற்பட்ட அவ்வமைந்த சந்திப்பு அவர்கள் உள்ளத்தைக் கனிவித்தது. ஆனால், அவர்களுக்கும் அந்நட்பு நட்பெல்லை கடந்தது என்பது தெரியாமலே இருந்தது. லாரைனின் உள்ளம் எப்பாடு பட்டாலும், அவள் புற நடிப்பின் திறமும் அவள் பெருமித நகையும் அத்தகையவை. அவள் மாடிப்படியில் சிறிதிறங்கி அவனை வரவேற்றாள், முகத்தைச் சிறிது திருப்பிக் கொண்டே. அவள் ஆடை வெளுத்திருந்தது - அவள் மேனியும் விளறியிருந்தது. அவள் முகத்தைப் பார்க்காமலே அவள் உடல் நிலை அவனுக்கு விளங்கிவிட்டது. அவள் பேசவில்லை. ‘வாருங்கள்’ என்ற சொல் அவள் வாய்க்குள் தான் முனகிற்று. அவன் உள்ளத்தின் காதல் செவிதான் அதைக் கேட்டிருக்கக் கூடும். அவள் அவனுக்கு முன்னால், முதுகைக் காட்டிக் கொண்டே உணவு மேடையருகில் வந்து சற்றப் பின்புறமாகச் சாய்ந்து அமர்ந்தாள், அவன் பசிதீர உண்டான். பணியாள் வந்து மேடை துடைத்தான். அருகிலிருந்த கணப்படுப்பில் மேலும் சில கட்டைகள் இட்டுக் கிளறி விட்டு மீண்டும் கதவைச் சாத்தி விட்டுச் சென்றான். “ஐயாவின் அறையிலும் எல்லாம் சரியாகப் போட்டு வைத்து விட்டேன்” என்று அவன் அம்மாவிடம் கூறிச் சென்றான். ஆம். வந்துவிட்டது சந்திப்பு நேரம். தூக்கு மேடையில் கண்ணியவிழ்த்து விடும்போது அதைக் காணப் பொறாமல் கண் மூடிக் கொண்டு அக்காட்சியை அகக் கண்ணால் பார்க்கும் குற்றவாளிபோல, அவள் கண்ணை மூடிக் கொண்டிருந்தாள். ஆனால், தூக்குக் கண்ணி விழுந்ததாகத் தெரியவில்லை - அவன் பேசவே காணோம். என்ன செய்தி என்று கண்ணைச் சற்றே திருந்து பார்த்தாள். அவன் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறான். அவன் தோற்றம் அவன் விம்மி விம்மிக் கரைவதை எடுத்துக் காட்டிற்று. “ஸ்தானீ!” அவன் உடல் நடுங்கிற்று. கை அசையவில்லை. “என் கண்ணே! என் அருகில் வா.” அவள் அவன் அருகில் வந்து மண்டியிட்டாள். முகத்தைப் புதைத்த கைகள் விலகின. ஆனால், முகம் மீண்டும் அவள் மடியில் புதையுண்டது. “என் லாரைன். நானே உன் வேலையை எளிதாக்கி விடுகிறேன். நீ எதுவும் விடை கூற வேண்டியதில்லை. நானே உன் உள்ளத்தில் உள்ளதை எல்லாவற்றையும் கூறி விடுகிறேன். என்னிடம் எப்படி வாய் திறப்பதென்று, எப்படி முகம் கொடுத்துப் பேசுவதென்று மலைக்க வேண்டாம். நான் கேட்ட கேள்விகளுக்கு விடை எனக்கே தெரியும். உன் வாயால் வேறு எதுவும் கேட்கவேண்டியதில்லை. ஒரே ஒரு சொல் தெரிந்தால் போதும். நீ என்னைக் காதலிக்கிறாயல்லவா?” அவள் முழுமனத்துடன் அமைதியாக ‘ஆம்’ என்றாள். “ஆம்! அது போதும், மீந்த எல்லாம் நான் அறிவேன். நாம் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். உலகில் எந்த ஆடவன் எந்தப் பெண்ணையும் காதலிப்பதை விட நான் உன்னை மிகுதியாகக் காதலிக்கிறேன். எந்தப் பெண்ணும் எந்த ஆடவனைக் காதலிப்பதைவிட நீயும் என்னைக் காதலிக்கிறாய் என்று நான் இப்போது தெள்ளத் தெளியக் காண்கிறேன்.” “ஆம். அவ்வண்ணமே நான் என்றும் காதலிப்பேன்.” “நானும் அப்படியே.” இரண்டு உள்ளங்களும் இவ்வாறு ஒன்றுபட்டு ஒழுகின. லாரைன் தன் காதலனைத் துணிவுடன் ஏறிட்டுப் பார்க்க முயன்றாள். அதற்குள் மூரட், “கண்ணே லாரைன், என்னை இன்னும் சற்று நேரம் பார்க்க வேண்டாம். என் துயரக் கண்ணீர் ஓய்ந்துவிட்டது. ஆனால், இன்னும் இன்பக் கண்ணீர்த் துளிகள் விழக்கூடும். இந்த மழை நேரத்தில் அது உன் ஆடைகளை ஈரமாக்கி விடும்.” அவள் வெட்டெனச் சிரித்தாள். சிரிப்பில் அவர்கள் முதற்காட்சியின் துயரச் சூழல் அகன்றது. “ஆ! நீ சிரித்து விட்டாய். இனி நாம் அச்சமின்றி ஒருவரை ஒருவர் பார்க்கலாம், பேசலாம். துயரத்தின் பெருமித உருவில் நான் உன்னை அணுக முடியாது. சிரிப்பு வாயில் திறந்துவிட்டது இதோ!” - அவன் எழுந்து அவளை வாரி யெடுத்து ஆரத் தழுவினான். அவள் அவன் தோள் மீது துவண்டாள். அவன் முத்தங்கள் தெம்பற்ற அவள் உடலில் பொழிந்தது தெம்பூட்டின. அவள் அவன் திரண்ட தோள்களைக் கிள்ளி “உங்களுக்கு இப்போது எத்தனை துணிச்சல்!” என்றாள். பாற்குடமும் தேன் குடமும் மோதி உடைந்தன. பாலும் தேனும் கலந்து பாய்ந்தன. இரண்டு உள்ளங்களில் தனித் தனியே சிறைபட்டுக் கிடந்த நேர் மின்சாரமும் நிரை மின்சாரமும் இடைமறிப்புத் தகர்த்து ஒன்றுடனொன்று கலந்து பாய்ந்து ஒன்றுபட்டன. 25. அவள் இணங்கினாள் அவன் பிணங்கினான் கோமாட்டி சிராம்மோன் அப்போது கோமாட்டி சிராம்மோனாக இல்லை. லாரைனாகவே ஆய்விட்டாள். அரண்மனை வட்டாரங்களிலும் உயர்குடி வட்டாரங்களிலும் ஆடவர் காதற் பசப்பை அடக்கிப் பெண்டிரின் பொறாமை களுக்கும் அப்பாற்பட்ட அம்மாதரசி இன்று ஒரு காதல் கலைஞனின் மாய வலைவீச்சில் முழுதும் சிக்கினாள். அவன் அவளை இப்போது தேட வேண்டியதில்லை - அவள் தேடினாள், காதல் பற்றிய அவள் உயர் எண்ணங்கள், பெண்மையின் உயர் மதிப்பு, தன் உறுதியில் தனக்கிருந்த நம்பிக்கையாவும் காதற் சூறாவளியில் பஞ்சாய்ப் பறந்தன. காதல் அவளை அவள் சமுகச் சூழலிலிருந்து தனியே பிரித்தது. புறத்தே அவள் தன் சமூகத்தில் உறுப்பு வகித்தாள். ஆனால், அகவாழ்வு அவ் வகுப்புக் கடந்து பரந்த மனித சமுகத்தின் அடிப்படை உணர்ச்சி ஒழுக்கினுள் விரைந் தோடிற்று. வெளியே புயலும் சூறாவளியும் சுழன்றடித்தது. ஆனால், வண்ணக் கண்ணாடிகளமைத்த பலகணிகள் அவற்றை அவர்கள் அறையில் ஊடாடாமல் தடுத்தன. அவர்களைச் சுற்றி அமைதி நிலவிற்று. அது முன்போல உடன் பிறப்புப்பாசத்தின் அமைதியன்று; புதிதாகக் கட்டறுத்து விடப்பட்ட காதற் பறவைகளின் அமைதி. மூரட் முகத்தில் இப்போது வெற்றியின் வீறும் ஆண்மையின் இறுமாப்பும் கலந்தொளிர்ந்தன. லாரைனின் முகத்திலோ ஆழ்கடலமைதியும் மலை முகட்டின் மாலை ஒளியும் நிலவின. மூரட் : நாம் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டற்ற காதல் வெறி கொண்டுவிட்டோம். நம் இணைப்பைத் தடுப்பவர் யாரும் இல்லை. ஆயினும்,..., ஆயினும்... லாரைன்: ஆயினும், என்ன, ஏன் தயக்கம்? மூரட்: வேறொன்றுமில்லை. நான் காதல் பரிசாக என் காதலிக்கு எதுவும் உடன் கொண்டுவர முடியாது, என்னைத் தான் அளிக்க முடியும். லாரைன்: காதலிக்கு வேறென்ன வேண்டும். எனக்கு நீ, உனக்கு நான்! வேறு எதனையும் நான் கோரவில்லையே! மூரட்: அதை நான் அறிவேன், ஆயினும் என் நிலைமையில் என்னை மணக்கும்படி நான் உன்னைக் கோர முடியாது. அது உன்னை அவமதிப்பதாகும். நீ அதை ஏற்றுக் கொள்ளலாம். உன் நண்பர், உன் தோழியர் உன்னைக் குறைவாகப் பேசி ஏளனம் செய்வார்கள். நான் உன்னைக் காதலிக்கத் தொடங்கிய போது நான் பெத்தப் பெரிய கனவுகளெல்லாம் கண்டு கொண்டிருந்தேன். போரில் அருஞ் செயல்கள், புகழ், அரசியல் வெற்றிகள் ஆகியவற்றை ஈட்டி அவற்றை உன் காலடியில் கொண்டு வந்திட்டு அவற்றை என் காதல் படைப்பாக ஒப்படைக்க எண்ணியிருந்தேன். ஆனால், அக்கனவுகள் இப்போது தவிடு பொடியாய் விட்டன. என் வாழ்க்கைத் தோல்வியை இப்போது எல்லாரும் அறிவர். நான் பெருங் கடனாளியாய் விட்டேன். இப்போது உன்னை மணப்பதன் மூலம் என் தோல்விகளை வெற்றியாக்க நாடிய கயவனாகத் தான் நான் உலகுக்குக் காட்சியளிப்பேன். அத்தோற்றம் தவறென்று என்னால் எண்பிக்க முடியாமல் போய்விடும். லாரைன் இத்தடைகளை முன்னெல்லாம் அப்படியே ஏற்றிருப்பாள். இப்போது அவள் புதிய லாரைனாக இருந்தாள். அவள் தன் மதிப்பு, மதிப்பு உலகத்தார் ஒப்புரவு, சமூக வரம்புகள் ஆகிய எல்லாக் கோட்டைகளையும் தாண்டிக் காதலனுடன் தீயில் குதிக்கச் சித்தமாயிருந்தாள். “ஊரார் என்ன சொன்னாலும் சொல்லட்டும், நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. வயது முதிர்ந்த சிராம்மோனை நான் மணக்க முற்பட்ட போது கூட எனென்னவோதான் முதலில் கூறிக் கொண்டார்கள். இன்றும் அது போலவே தான், சொல்வதெல்லாம் சில நாள் சொல்லவார்கள். நம் துணிவின் முன் அவை படிப்படியாய் அடங்கிவிடும். நாம் சில நாள் பிறரது கூட்டு வாழ்வில் கலக்காமல் தனிமாளிகையில் வசிக்கலாம். நாட்டுப் புறத்தில் நாள் கழிக்கலாம். என் நாட்டுப்புறப் பண்ணைகளை நாமே மேற் பார்வையிட்டு ஒதுங்கியிருக்கலாம். மேலும்...” மூரட்: “நான் சமூகத்தைப் பற்றி மட்டுமல்ல எண்ணுவது. அவர்கள் மறக்கக்கூடும். என்னால் மறக்க முடியாது. “இரவலனாக உன்னிடம் வந்தேன். உன் பொருளின் மீது உயிர் வாழ்கிறேன்” என்று நான் எண்ணப் பொறுக்க முடியாது. மேலும் உனக்கும் உன் செல்வத்துக்கும் உரிய குழந்தைகள் வேறு இருக்கிறார்களே. அவர்கள் உரிமையிடையே நான் எப்படித் திருட்டுத்தனமாக நுழைந்து மன நிறைவுடன் வாழ முடியும்? நீ ஒரு பெருஞ் செல்வச்சீமாட்டியாக இராமல் ஒரு நாட்டுப்புற இடைச் சேரிப் பெண்ணாயிருந்திருந்தால், நம் நிலை இப்படி இருக்காது.” இப்போது அவள் இணங்கினாள்; அவன் பிணங்குகிறான். அவன் கெஞ்சி, அவள் கட்டளையிட்ட காலம் மாறிவிட்டது. அவள் கெஞ்சி, அவன் மறுக்கும் காலம் இது. அவன் நாடோடிக் காதலை அவள் பழித்து உயர்நெறிக் கோடிட்டு அவள் நின்ற காலம் போயிற்று. இப்போது அவள் கட்டற்ற காதலில் திளைக்கத் துணிந்திருந்தாள். ஆனால், அவன் உயர்நெறிக் கோடிட்டான். ‘ஆ! என் செல்வத்தைக்கூட என் பகையாக்கி விட்டாய். அது மட்டுமா? அச்செல்வத்தை ‘சீன்’ ஆற்றில் எறிந்துகூட நான் உன்னைப் பின்பற்றி உன் வறுமையில் பங்கு கொள்வேனே! இந்தக் குழந்தைகளை எண்ணி அதுவும் செய்ய முடியாத வளானேன்!’ அவன் மனம் சிறிது இளகிற்று. ஆனால், தான் நெடு நாளைக்க முன் செய்துகொண்ட திட்டம் அவன் நினைவுக்கு வந்தது. அவன் முன் இட்ட சமூகக் கோட்டினை இப்போது கடக்கச் சித்தமாய் விட்டான். ஆனால், அக்கோடு அழிய வேண்டும். அது மீண்டும் தன் தன்மதிப்பைக் கெடுக்கக் கூடாது என்று அவன் கருதினான். ஆகவே அவன் “ஆம். உன் செல்வத்தை நீ துறந்துவிடு. குழந்தைகள் அவற்றைப் பின்னால் பெற்றுக்கொள்ளட்டும். நாம் அதைத் தொடாமல் என் நாட்டில் என் பண்ணையில் சென்று வாழலாம். அங்கும் நாம் பட்டினி கிடக்கப் போவதில்லை. நாட்டுச் சோளமும் காட்டுப் பழங்களும் தின்று நாம் பறவைகள் போல் வாழலாம்” என்றான். அவள் பெண்மை வலுவிழந்திருந்தது. ஆனால், அது மீட்டும் சிறிது தலைகாட்டிச் சீறியெழுந்தது. “பிறர் உன்னைப் பார்த்தோ, பாராமல் மறைவாகவோ கேலி செய்வதைக் கூட உனக்குப் பொறுக்க மனமில்லை; உன் விடுதலையைவிட உனக்கு மனமில்லை. ஆயினும் என் விடுதலையையும் என் பெருமையையும் மட்டும் உன் பெருமைக்கு நான் பலியிட வேண்டும் என்கிறாயே!” அவன் உள்ளத்தில் இக்குற்றச்சாட்டுத் தைத்தது. தன் முகத்தை அவள் தோளில் புதைத்துக் கொண்டு, “என்னை மன்னித்து விடு. என் உள்ளத்திலுள்ளதைப் பேச்சில் சரியாகக் கூற முடியவில்லை. உன்னுடன் நான் போட்டியிட எண்ணுவனோ? செல்வர் பெருமையிழந்து வாழ முடியும், ஏழை பெருமை யிழந்தால் வாழ்வு எது? எனக்காக நீ செல்வர் குடிப் பெருமையை, மனித உள்ளத்தின் தன்மதிப்பைக்கூட வல்லவா இழக்க வேண்டும்? உன் காதலன் மனத்துயர் இனி உன் மனத்துயர் தானே! இதை எண்ணிப்பார்” என்று பலவாறு வாதிட்டான். அவள் உள்ளத்தின் காதல் அவன் பக்கமாகவே நின்று வாதாடியது. அவள் தன் உள்ளத்தின் உறுதியிழந்தாள். அவள் உள்ளம் அவன் உள்ளத்தின் ஒரு கூறாயிற்று. அவன் தன் வெற்றி தொடர்ந்து மீண்டும் பேசினான்: “நீயில்லாமல் நான் வாழ்ந்து பார்த்தாய்விட்டது. நானில்லாமல் நீ வாழ்ந்து பார்த்தாய்விட்டது. எதிர் காலத்தைப் பற்றித் திட்டமிட்டு வீண் கோட்டைகள் கட்டிப்பார்ப்பானேன்? எனக்கு நீ, உனக்கு நான். உலகை மறந்து, உலகைக் கடந்து நான் உன்னைத் தொடர முடியும். உலகு கடந்து நீ என்னை அடைய முடியும். உன் பெயரை நான் காக்க முடியும். என் தவறை நீ மறைக்க முடியும். இது போதாதா? நீ உடலாய் முன்போலிரு. நான் உன் உயிராய் உலவி ஊடாடி வருகிறேன்.” அவன் சொல் அவள் செவியில் முழுதும் புகவில்லை. அவள் உணர்வு சுழன்று. ‘பெயரிழக்க ஒருப்பட்டேன். செல்வமிழக்க ஒருப்பட்டேன். குழந்தைகள் வாழ்வையும் பாதி மறக்கத் தலைப் பட்டேன். இன்னும் தியாகம் கோருகிறான். இவன் துணிச்சலுக்கு ஓரளவில்லை. இனி நான் என் செய்வேன்’ என்ற எண்ணம் அவள் அரையுணர்வு நிலையிலும் அவளை வாட்டியது. அவளைச் சுற்றி உலகமே, உலகின் படைப்பு முழுவதுமே விரிந்து சுழல்வதாக அவளுக்குத் தோன்றிற்று. “நான் உன்னிடம் தாயின் பாசம். தந்தையின் அன்பு, கணவனின் காதல், குழந்தையின் பரிவு ஆகிய எல்லா வகை அன்பையும் ஒருங்கே கொண்டுள்ளேன் உனக்கு நான் எல்லாமாக இருக்க முடியும். உலகுக்கு நாம் நண்பராக மட்டும் தோற்றுவோம். நம் தடைக்கல்கள் ஒரு நாள் நீங்குவது உறுதி. அன்று மணந்து கொள்வோம்! அதுவரை கட்டற்ற, கருத்தொரு மித்த காதலராய் இருக்கத் தடையென்ன? இதில் என் உயிர், நம் உயிர் தொங்குகிறது. இது இன்றேல் உன் வாழ்வு கசப்பாகும்; எனக்கு வாழ்வே இராது. உன் தனித்தன்மையை விட்டு இதை ஏற்றுக் காதலராயிருப்போம் என்ற ஒரு சொல் கூறுக” என்று அவன் மீண்டும் வற்புறுத்தினான். அவள் கனிவுடன் அவன் கையைத் தன் கையில் எடுத்து அணைத்துக் கொண்டு, “குழந்தைகள் செல்வ உரிமையைப் பறிக்கக் கூடாதென்றீர்கள். அவர்கள் தாய் உரிமையைப் பறிக்கலாமா? என மன்றாடினாள். அவன் எதற்கும் துணிந்து புதுப்புது வகை விடுவிப்பு அளித்தான்.” “நாம் மணம் செய்துகொள்ளும் வரை அவர்கள் அறிய வேண்டுவதில்லை. அவர்கள் உறங்கிய பின் மாற்றுடை அணிந்து ஒருவரை ஒருவர் சந்திப்போம். என் வீட்டிற்கே நீ நடந்துவந்து சென்றால், யாரும் தவறாக எண்ணமாட்டார்கள். வண்டியில் வந்தால் தானே முறைப்படி வருவதாக உணரப்படும்.” “பிள்ளைகள் நேரடியாக எதுவும் அறியாமலிருக்கலாம். ஆனால், என் ஆர்வம் அவர்களிடம் குறைவதை அவர்கள் அறிந்து கொள்ளக்கூடுமே. தவிர, நான் மறைவெளிப்புடன் நடந்தால், என்ன துணிவுடன் நான் அவர்களுக்கு நேர்வழி கற்பிக்க முடியும்?” “இதெல்லாம் உன் துன்பம், உன் கவலை மட்டுமல்லவே. எனக்கும் அதே கவலை உண்டல்லவா? அவர்கள் உன் பிள்ளைகள் மட்டுமல்லர். என் பிள்ளைகளும்தான். இந்நிலையே விரும்பத்தக்க நிலை என்று நான் கருதவில்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் நமக்கு வேறு வழியில்லை. இது என் விருப்பமன்று. இயற்கையின் விருப்பம்.” அவள் வாதிட்டு வழிகாண முடியவில்லை. வாதிட்டு வழிகாணும் திறமும் அவளிடம் இல்லை. அவள் உடலின் உயிர் அவன் உடலில் புகுந்துகொண்டதாகவே அவளுக்குத் தோற்றிற்று. அவன் நல்லவனா கெட்டவனா; அவன் கூறுவது சரியா, தப்பா என்று ஆராயும் ஆற்றலைக்கூட அவள் அறிவு இழந்தது. அவன் தோள்கள், அவன் நிமிர்ந்த நோக்கு ஆகிய இவையே அவள் உடலையும் உயிரையும் ஈர்த்தன. அவள் அவன் கழுத்தைக் கைகளால் பிணைத்துக் கொண்டு அழுதாள். அவன் அவள் வெதும்பிய மேனி துடைத்து நீவி மயிர் கோதினான். அவள் முகத்தைத் தன்னை நோக்கி உயர்த்தி ‘நானிருக்க உனக்கு ஏன் கவலை? என்னிடம் உன்னை ஒப்படைத்துவிடு. உன் துன்பம் எனக்கு. என் இன்பம் உனக்கு’ என்றான். அவன் அணைப்பு அவளை இறுக்கிற்று. அவள் உயிர்ப்பு அவனை இனிய நறுமணமுள்ள நெய்யி லிட்டு வாட்டிப் பொரிப்பது போலிருந்தது. அவன் முத்தங்கள் அவள் உயிரை வாங்கின. அவள் இன்பத்தில் துன்பமும், துன்பத்தில் இன்பமும் பெற்றாள். நன்மை தீமை, உயர்வு தாழ்வு, தக்கது தகாதது ஆகிய பேதாபேதங்கள் யாவும் அவளை விட்டகன்றன. அவள் இரண்டற்ற காதலுணர்ச்சி அலைகளில் மோதி அலைக் கழிக்கப்பட்டு உலகை ஒரு கனவென மறந்து வாழலானாள். அக் கனவிடையே - நீண்ட ஆழ்ந்த கனவிடையே அவள் குழந்தைகளின் விளையாட்டாரவாரமொன்றே முன்னைய வாழ்வை ஓரளவு நினைவூட்டுவதாயிருந்தது. அவள் காதற் கடலில் மூழ்கி அதன் அடித்தலத்தில் சோர்ந்து கிடந்தாள். 4. பறவை சிக்கிற்று 26. பிரிவுக்கு முன் லாரைனும் மூரட்டும் பகல்முழுதும் அடிலி, அகஸ்டி ஆகியவர்களை உடன்கொண்டு அவர்களுடன் விளையாடியும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தும், அவர்கள் மூலமே ஒருவர் உள்ளத்தை மற்றவருடன் பரிமாறிக் கொள்வர். இரவில் அவர்கள் பேச்சிடையே குழந்தைகள் உறங்கும். பேச்சிடையே தான் விழிக்கும். ஆனால், இவ்விரண்டு எல்லைகளுக்கிடையில் பிள்ளைகள் தாம் நேரம் செல்வதறியாது ஒருகணம் கழிந்ததென உறங்கி எழுந்தனர். காதலின் முதிர் பறவைகளோ அதற்குள் தம் உலகைப் பல தடவை வட்டமிட்டுலாவிப் பல சிற்றூழிகள் கழித்துவிடும். கணப்படுப்பருகில் எதிரெதிர் இருந்து, ஒருவர் கால்கள் மற்றவர் கால்களுடன் ஊடாட அவர்கள் பேசியிருப்பர். ஒருவரிடுப்பில் ஒருவர் கை கோத்து இரவின் நிலாக் காட்சியில் வெளியே தோட்டத்தில் உலவித் திளைப்பர். பலகணியருகே இருவரும் நின்று காதற் கூண்டிலுள்ள இரு பறவைகள் உலகை எட்டிப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு வாயாடாமலே உளமூடாடுவர். இங்ஙனமாகச் சில நாட்கள் கழிந்தன. எதிரெதிர் மின்னாற்றலால் இயக்கப்பட்ட இரு இரும்புத் துண்டங்கள் போல அவர்கள் ஒன்றுபட்டு உறவாடினர். ஆனால், அவர்கள் உள்ளங்கள் அடிக்கடி பூசலிட்டன. ஞாயிற்றின் சுழல் விசையினால் எறியப் பட்டும் அப்பால் செல்ல முடியாமல், அதன் ஈர்ப்பாற்றலில் சிக்கி அஞ்ஞாயிற்றையே சுற்றிச் சுற்றியோடும் கோளினங்கள் போல, அவர்கள் உள்ளங்கள் தத்தம் தன் முனைப்பு முற்றும் அழியாத நிலையில் விலக முயன்றும் விலக முடியாமல் ஒன்றை ஒன்று பின்னி வட்டமிட்டுச் சுழன்றன. அச்சுழற்சியில் மூரட் ஞாயிறாயிருந்தான், லாரைனோ கோளினங்களாயிருந்தாள். அவள் தன் முனைப்பும் பெண்மையும் பெரிதும் வலுவிழந்தாலும் தாய்மை உணர்ச்சி இடையிடையே வந்து தூண்டச் சிறிது சிறிது வலுப்பெற்று எதிர்த்து நின்று தயக்கமுற்றது. தன் உள்ளத்தின் இப்போராட்டக் காலத்தின் ஒவ்வொரு வினாடியும் லாரைன் நினைவில் சுட்ட தழும்பு போல் பதிந்திருந்தன. தன்முனைப் பழிவுபற்றிப் பின்னாளில் அவள் என்றுமே கழிவிரக்கம் கொண்டதில்லை. அது முற்றிலும் அழியாமல் தலைதூக்கி நின்றதற்காகவே அவள் நெடுநாள் தன்னைப் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் அத்தறுவாய்களிலும் மூரட்டின் ஆண்மை மிக்க உருவம், அவளை எண்ணி எண்ணியே வட்டமிட்ட அவன் உரையாடல் வெள்ளம், அவள் மனத்தை மாற்ற அவன் வாதிட்ட வாதங்கள், முறையிட்ட காதல் முறையீடுகள், அவன் உள்ளத்தில் ஈர்க்கிடையின்றி நிறைந்து நிலவிப் பொங்கி வழிந்த அவன் காதல் கனிவு ஆகியவை அவளுக்குப் பேராதரவும் பேரின்பமும் அளித்தன. ஆனால், பெண்மை தளர்ந்தும் முறியவில்லை. கொடி கொழு கொம்பையே தழுவியாடியும் அதனைப் பற்றிச் சுருள மறுத்தது. அவள் தன் கோடு மீறத் துணிந்தாள். ஆனால், கோட்டினை அழிக்க ஒருப்படவில்லை. மூரட்டின் ஆழந்தேரும் ஆழ்கயக் கரண்டி அவள் காதலுள்ளத்தின், ஆழங்கடந்து எங்கும் அடித்தடம் காண முடியவில்லை. ஆனால், இவ்வோரிடத்தில் அது பாறைமீது மெல்லனக் கண் கண் என்று மோதிற்று. அவள் உடலை அவனிடம் ஒப்படைத்தாள். உள்ளத்தை ஒப்படைத்தாள். தன் மானத்தை ஒப்படைத்தாள். தாய்மையைக் கூட ஒதுக்கிவைக்க ஒருப்பட்டாள். ஆனால், தாய்மையை ஒப்படைக்கத் தயங்கினாள். தயக்கம் நீடித்தது. அவள் எதிர்த்தே நின்றாள். அவள் திட்டம் மாற்றினாள். ஆண்மை பணிய மறுத்தது. சற்றுத் தன்னை உரப்படுத்திக்கொண்டு அவன் ஒரு நாள் மாலை கூறினான்: “இன்னும் ஒரு முறை நான் பழைய வெள்ளத்தில் குதித்துப் பார்த்து விடுகிறேன். ஏதாவது உயர் பணியை எப்படியாவது பெற்றுவரப் போகிறேன். என்றும் அது வராமற் போகாது. நம் இடக்கு நிலை நீங்க அது ஒன்றுதான் தற்போதைய வழி. உன்னை உணர்ச்சிச் சூதாட்டத்தில் ஏமாற்றிக்கொண்டு நான் இன்னும் நெடுநாள் இருக்கக்கூடாது. எனக்கு எத்தனையோ செல்வாக்குள்ள நண்பர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஒருவர் விடாமல் புரட்டிப் புரட்டி முயலுவேன். நான் ஒரு நற்பணி யடைந்தால் என் லாரைன் என் மனைவியாகத் தடை ஏதுமில்லையோ! ” அவள் விடை கூறவில்லை. அவன் மீது சாய்ந்து அவனை இறுக அணைத்துக் கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டாள். அவன் வீரம் அவன் காதலுள்ளத்தைக் கஞ்சித்தாள் போல் படபடத்துத் துடிக்கச் செய்தது. அவள் பெண்மை தோற்கவில்லை. அவன் ஆண்மையும் வென்றது. ஆனால், இடையே காதல் - இன்பம் - கனவு! அவர் போராட்டத்திடையே காதல் தான் நெளிந்து புரண்டது! “நான் உயர்பணி பெற்றுவந்தால் என்னை நீ மணந்து கொள்வாயா?” என்று ஓர் ஆண் குரல் கேட்டது மீண்டும் தொலைவிலிருந்து எழுந்தது போல. அவள் தன்னை மறந்து உரக்கக் கூவினாள். “ஆம். ஆம். ஆம் கட்டாயம் மணந்து கொள்வேன்.” “அதற்காக எவ்வளவு நாள், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நீ காத்திருப்பாயல்லவா?” “ஆ! கடவுளே! எவ்வளவு நாளா? எவ்வளவு காலமா?” மீண்டும், “ஆம். ஆம். எவ்வளவு காலமாயினும் காத்தே இருப்பேன். உடல் காத்திருக்கும். உயிர் உடலில் இருக்கும் வரை உயிரும் காத்திருக்கும்.” அவன் பெருமூச்சு விட்டான். “ஆம். என் லாரைனின் உறுதி எனக்கும் உறுதி தரும். நான் இனி எதையும் தாங்குவேன். எனக்கு இனி ஆறுதல் தர, ஊக்கம் தர, உறுதிதரப் புறத்தேயுள்ள வேறு எந்தத் தெய்வ வணக்கமும் தேவையில்லை. என் உள்ளக் கோயிலிலேயே காதல் பலி பீடத்தின் பின் நின்று நஞ்சு குழைத்த அமுத நோக்கு நோக்கும் என் காதல் தெய்வத்தினை அகக் கண்ணால் ஒரு தடவை கண்டால் போதும். நான் புது மனிதனாக உழைப்பேன்... உன்னை விட்டுச் செல்வது ஒன்றுதான் இப்போது எனக்குக் கடத்தற்கரிய ஒரு கடமை. ஆயினும் அவ்வப்போது பாரிஸில் சந்திப்பேன். அங்கே நீ என்னைக் காணவரும்போது வேறு எத்தனை பேர் வந்து இடைமறிப்பர். ஈட்டி என்று தெரியாமல் எத்தனை பேர் ஈட்டிகள் கொண்டு குத்துவர்.” “நீ என்னை அந்த அளவு காதலிக்க முடிகிறதா?” “ஏன் இந்தக் தயக்கம்? நீ இருக்கும்போது நான் உயிர் வாழ்கிறேன். நீ இல்லாதபோது உயிர் வாழ்வதாகக் கூறமுடியாது. ஆயினும் மீண்டும் உன்னைக் கண்டு உயிர் வாழும் வாழ்வைக் கனவுகண்டு கொண்டு அரையுயிர் வாழ்வேன்.” அவள் தலை சுழன்றது. அவள் புனைகதைச் சுவடி மீது அவள் தலை சாய்ந்தது. அவள் துயிலில் வீழ்ந்தாள். தாய்மையின் சாயல் - ஆனால், இளமையின் துடிப்பு அனுபவத்தின் வரித் தடங்கள் - ஆனால், குழந்தையின் தூய்மை. இத்தகைய அழகுக் காவியத்தை அவன் என்றும் கனவிலும் எண்ணியதில்லை. இதனைவிட்டுச் செல்ல வேண்டுமே! ஆம்! விட்டு சென்றுதான் ஆகவேண்டும். காற்று சிறிது அலறிற்று. அவள் எழுந்தாள். தூங்கும் குழந்தையைக் காக்கும் தாய்போல் அவன் இருப்பது கண்டாள். “புயலில் நம் காதல் நம்மைக் கூட்டிற்று. இன்று மீண்டும் புயல். இதனை உன்னுடன் கைகோத்து நின்றே காண விரும்புகிறேன்” என்றாள். அவன் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு அவள் பலகணிப் பக்கம் சென்று கதவைத் திறந்தாள். ஒரே காற்று. எல்லா விளக்குகளும் ஒரே மூச்சில் அணைந்தன. அவள் செய்வதறியாது அவனை நோக்கினாள். இருளில் அவன் அவளை அருகே இழுத்து - ‘வா போவோம், புயலிடையே!’ என்றான். அவன் சொற்கள் வெறியூட்டின. இருவரும் மட்டுப்பாவில் சென்று புயலிடையே இரு பாறைகளாக நின்றனர். புயல் அவள் நீலக் கூந்தலை இருவர் கழுத்தையும் சுற்றியடித்தது. அவன் ஆடையை அவள் மீதும் அவள் ஆடையை அவன் மீதும் மாற்றி வீசிற்று. இருவரும் ஒருங்கே கொல்லென்று சிரித்தனர். நள்ளிரவு மணி பன்னிரண்டு அடித்தது. மூரட் லாரைனை உள்ளே அழைத்து வந்து சாம்பல் பூத்திருந்த தணப்பு சட்டியில் இன்னும் சில சட்டைகளையிட்டுக் கிளறினான். இருவரும் அடுப்பின் தணலில் சார்ந்து இன்னும் சில நேரம் உறங்குவதற்குக் கூடப் பிரிந்துசெல்ல முடியாத நிலையிலிருந்தனர். அவள் கண்கள் அவன் நீண்ட தோள்களை அளந்தன. அவன் கண்கள் அவள் கண்களில் நீளொளியில் மூழ்கின. சிறிது நேரத்தில் அவள் பார்வை அவன் பார்வையுடன் சந்தித்தது. “உன்னைக் காதலிப்பது நானல்ல. என் உள்ளுறை உயிர்” என்றது அவள் இதழ்கள். “ஆ, தேனினும் இனிய என் காதற் கனி! உன்னை நான் ஏன் முன்பே, வாழ்வின் தடம் கரடுமுரடாகு முன்பே, காதலுரிமை மீது திரை விழுமுன்பே சந்தித்திருக்கப்படாது” என அவன் அங்கலாய்த்தான். விடியற்கால வெண்மை புயல் மேகத்திடையேயும் மங்கலாய் ஒளி வீசிற்று. காலை மணம் பரவிற்று. துயிலைக் கிழித்த காதலுக்கு நீள் விடை கொடுத்து அவர்கள் பிரிய முனைந்தனர். அவர்கள் கைகள் பிரிய விடாது ஒருவரையொருவர் தழுவிப் பிணைத்தன. பிரியா விடைச் சின்னங்களாக முத்தங்கள் பொழிந்தன. இரவு முற்றிலும் அணைத்த அணைப்பு பொய்யாயிற்று - புத்தார்வத்துடன் அவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு, ஒருவர் உடலை மற்றவர் உடலினின்று கிழித்தெடுத்தனர். அவர்கள் உடல்விட்டு உடல் பிரிந்தது. சில மணி நேரத்தில் அவர்கள் இடம் விட்டு இடமும் பிரியவேண்டும் என்பதை நினைத்து ஏங்கினர்! ஆனால் இந்நிலையிலும் இருவர் உறுதியும் மாறவில்லை. அவள் குழந்தைகளுடன் அவனை எண்ணியெண்ணிப் பொழுதுபோக்கி, அவன் வருங்கால வரவை எதிர் நோக்கியிருக்க - வரையறைப்படாத அந்நாளை வரையறைப்படுத்தி எண்ணி எண்ணிக் கழிக்க அவள் ஒருப்பட்டாள். அவ்வருங்காலத்தை விரைவுபடுத்த - அதற்காக அகலுலகில் அலைந்து திரிந்து, அருந்திருவும் பணிவெற்றியும் நாட அவன் முனைந்தான். பகலின் ஒளி அவர்களைப் பிரித்தது; அவள் வாயிற் படியில் நின்றாள். அவன் கண்கள் அவளைத் திரும்பத் திரும்ப நோக்கிக் கொண்டே, அவன் கால்கள் மாளிகையை விட்டேகின. அவர்கள் குழந்தைகள் செய்தி எதனையும் உணரவில்லை - இன்றும் அவன் அவர்களுக்குச் சிற்றப்பனாகவே இருந்தான் - சிற்றப்பன் தன் படைத் துறைப் பணியேற்கச் சென்றான் என்று விடிந்தபின் அவர்கட்குக் கூறப்பட்டது. லாரைன் துயரை அவர்கள் அறியமாட்டார்கள். ஆனால், வேறு வேறு வகையில் மூரட் இல்லாக் குறையைப் பிள்ளைகளும் அடிக்கடி எண்ணினர்; பணியாட்களும் அடிக்கடி எண்ணினர். அவன் எல்லார் நட்பையும் அந்த அளவு சார்ந்திருந்தாள். 27. பிரிவு ஆண்டுகள் இரண்டு சென்றன. அதன் ஒவ்வொரு நாளும் அவனுக்கு ஓராண்டாகக் கழிந்தது. அவளுக்கோ ஒவ்வொரு நாளும் இரண்டு ஆண்டுகளாகக் கழிந்தன. இவளை நேரிடையாக வந்தடைய உதவத்தக்க, தன் மதிப்புரிமையுடன் அவளை உரிமை மனைவியாக்கிக் கொள்ள உதவத்தக்க ஒரு பணிபெறும் முயற்சியவாவில் அவன் உள்ளம் ஈடுபட்டு நாட் கழித்தது. அத்தகைய குறி எதுவுமின்றி, தன் வசத்திலில்லாத, தன் விருப்பத்துக்குக் கட்டுப்படாத ஒரு எதிர்கால நற்பேற்றை எண்ணி, காதலுள்ளத்தின் நம்பிக்கையன்றி வேறு நம்பிக்கையின்றி, அவள் உள்ளம் ஏங்கிக் கிடந்தது. அவள் உயிர் அவள் உடலில் இல்லை என்பதை அம்மாளிகையிலுள்ள பணியாட்களும் உணராதிருக்க முடியவில்லை - குழந்தைகள்கூட அவள் மாறுதல் கண்டு ஒன்றும் புரியாமல் மறுகின. பாரிஸ் உயர்குடி மக்களோ, அவள் ஒழுக்க உயர்வினால்கூட அவள் கூட்டுற வின்பத்தை வெறுக்க முடியாதிருந்தவர்களாதலால் திடுமென அவள் வரவு நின்றதுகண்டு மலைவுற்றனர். பலர் வந்து வந்து அவளை அழைத்தனர் - மன்றாடினர். அவள் உள்ளம் தனக்குள் எதையோ சுற்றிச் சுற்றி வந்ததேயன்றிப் புறத்தே எதையும் நாடவில்லை. அவள் சொற்களும் வளைய வளைய ஏதோ கூறினதன்றி எதற்கும் சரியான விடை பகரவில்லை. அவள் மாளிகை அவளுக்கு ஒரு துறவுக் கூடமாயிற்று. பாரிஸ் அவளைப் படிப்படியாக மறந்தது. பிரிவிடையேயும் அவர்கள் சிறு பிணக்குகள் நின்று விட வில்லை. அவர்கள் கடிதங்கள் பலவற்றை இப்பிணக்குகள் நிறைத்தன. “நீ நான் என்று உன்னை அழைக்காமல் நான் வேறு எப்படி அழைக்க முடியும்? நேரிடையே கூடப் பிறர் இருக்கும் போது நான் நீங்கள், நாங்கள் என்று சுட்ட முடிகிறதேயன்றி, தனியே இருக்கும் போது அவ்வாறு பேசமுடிவதில்லையே. கடிதங்களில் எத்தனையோ செய்திகள் எழுதுகிறோம். எதுவும் பிறர் பார்க்கத் தக்கதல்லவே. அப்படியிருக்கப் பலர் காண எழுதுவதுபோல் எப்படி எழுதமுடியும்? அதனால் நான்தான் என்ன ஆறுதல் பெறமுடியும்? நீதான் என்ன ஆறுதல் பெற முடியும்? என் கையை, என் முகத்தை, என் உள்ளத்தை நான் ‘நீங்கள், நாங்கள்’ என்று பேசமுடியுமா? நீ அவற்றினும் எனக்கு நெருங்கிய உரிமையுடைய வளாயிற்றே! நீ என்ன கூறினாலும் நான் நீ, என் கண்மயி போன்ற காதலுரிமையை இழக்க முடியாது. இங்கே எனக்கிருக்கும் ஒரே ஆறுதல் அதுதான் - அவை சொற்கள் அல்ல - என் ஓயாத சிந்தனைகளின் பிழிவுகள். கடிதத்தில் மற்றச் சொற்களை யெல்லாம் விட்டுவிட முடியும். கடிதம் முழுவதுமே நீ, நீ, கண்மணி, கண்மணி என்று எழுதினால் கூட எனக்குப் போதும். அச்சொற்களிலேயே என் உயிர் அடங்கியிருக்கிறது. அவற்றைப் பற்றி எழுதுவதைவிட என்னால் எழுதாமலிருந்து விடக் கூட முடியும்!” அது அவன் கடிதங்களில் ஒன்று. அவள் மறுத்துரைத்தாள். வாதாடினாள். ஆனால், அவளுக்கு அவள் உள்ளத்தின் அவாவைத் தெரிவித்தது அவள் கடிதங்களல்ல, அவன் கடிதங்களே. யார் கையோ தன் கையைப் பிடித்து எழுதுவதாகவும், யார் உள்ளமோ தன் உள்ளத்தினருகி லிருந்து எழுதச் சொல்வதாகவும், அதற்கு மறுமொழி அவனிடம் சென்று தங்கிய தன் உள்ளத்திலிருந்து, அவன் கையை இயக்கிய தன் அரை ஆர்வத்தினாலேயே எழுதப்பெற்று வருவதாகவும் அவளுக்குத் தோன்றிற்று. பெண்களுக்குக் காதற் போராட்டம் ஒரு போராட்டம் அன்று, ஒரு நாடகம் மட்டுமே என்பதை அவள் உணர்ந்தாள். அவள் திட்டுதல், அவள் கண்டனம், அவன் வெறுப்பு ஆகியவை தாம் அவன் உள்ளத்துக்குத் தெவிட்டாத அமுதமா யிருந்தன. அவன் தனிமை. அவன் மறைபட்ட வாழ்வு, அவன் துயர் ஆகியற்றைத் தாங்க அவனுக்கு வலிவு தந்தவை அவைகளே. அவள் கடிதங்களை அவன் தவிர வேறு யாரும் பார்ப்ப தில்லை என்பதை அவன் எழுதியபின்தான் அவள் உணர முடிந்தது. தன் உள்ளத்தையே அவள் மற்றொருவர் உள்ளமாகக் கருதி அதனிடமிருந்தே தன் காதலை மறைக்க எண்ணியிருந்திருக்க வேண்டும். தங்கள் மறை காதல் நடிப்பை விட்டுப் படிப்படியாக அவன் கடிதங்களில் தன் உள்ளம் திறந்து காதலிக்கத் தொடங்கினான் என்று அவள் சினங்கொண்டு ஒருநாள் இரவு உட்கார்ந்து “இனி இப்படி வெளிப்படையாகக் கண்ணே, நீ, நான் என்று எழுதக்கூடாது. நம் உள்ளத் திரை மறைவிலுள்ள காதல் திரை மறைவாகவே இருக்கட்டும். கடிதத்தில் நட்புரிமை தோன்ற நீங்கள், நாங்கள் என்றே எழுதுங்கள்” என்று அவள் எழுதியிருந்தாள். அவன் அப்படியே எழுதியிருந்தால் அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை அவள் அறியவில்லை! இரண்டாண்டுகளிலும் மூரட் எதிர்பார்த்ததுபோல, அவனுக்குப் பணி உயர்வு எதுவும் கிட்டவில்லை. அவன் பாடல்கள், அவன் வணங்காமுடி மரபு, அவன் கொடு நாக்கு அவனை என்றும் சிறு படைத்துறைவனாகவே வைத்திருந்தன. அவன் கனிந்த உள்ளத்தைக் காதல் கூடத் தடுத்தாள முடியவில்லை. ஏழைச் சிறுவர், சிறுமியர், வறுமைக்குழியில் உழலும் எத்தனையோ கன்னியர் அவன் சிறு வருவாயில் பொத்தல்கள் செய்தனர். அவன் இடதுகை கொடுத்துக் கொண்டேயிருந்தது. வலது கை கடன் வாங்கிக் கொண்டே யிருந்தது. அம்பலத்தில் சென்றாடியும் அரங்கன் அரங்கனாகவே அவன் மீள வேண்டிய நிலையிலிருந்தான். இரண்டாண்டு வாழ்வில் அவனுக்குக் கிடைத்த செல்வ மெல்லாம் இரண்டு நாள் ஓய்வில் ஊர் சென்று மீளும் உரிமைதான்! 28. காதல் மணம் லாரைன் தன் நாட்டுப்புற மாளிகையில் அவ்வூர்ச் சமயத் தலைமகனார் அழைப்பை ஏற்று வந்திருந்தாள். அவள் குழந்தைகளும் தாதியும் அவளுடன் பெட்டி வண்டியிலமர்ந்து வந்திருந்தனர். முன்கூட்டி ஏற்பாடு செய்திருந்தபடி ஸ்டானிஸ் லாஸும் (மூரட்) அங்கே வந்து அவர்களைக் கண்டு மகிழ்ந்துற வாடினான். முதற் பிரிவின்போது லாரைன் உள்ளத்தில் காதல் முளை விட்டுத் தளிர்த்திருந்தது. இந்த இரண்டாண்டுப் பிரிவுக்குள் அது அரும்பு விட்டுப் போதாகி மலரும் பருவமடைந்திருந்தது. அவள் காதலனை அடைய மறைந்து வரும் காதலியாய் இப்போது வரவில்லை. மணமகனை வரவேற்க வரும் மணமகளாகவே வந்தாள். அவள் கைமைக் கோலம் மறக்கப்பட்டு நெடுநாளாயிற்று. ஆனால், இப்போது கன்னிக் கோலமும் மறைந்தது. அனற்கொழுந்தெனும்படி செக்கச் செவந்த கச்சு இப்போது அவள் மார்பகத்தை எடுத்துக்காட்டிற்று. அதன் கழுத்துப் பட்டை மூன்றடுக்கான நீல அலைகளால் அதற்கு வேலிகளமைத்தது. வெண் பூக்கள் தவழ்ந்து புரளும் மங்கிய பச்சை அங்கி கச்சின் நிறத்தையும் உடலின் வெண்மையையும் எடுத்துக் காட்டின. கழுநீர் மலரின் நிறங்கொண்ட பட்டுக் காலுறைகளும் காலணிகளும் அங்கிகளினடியில் நின்று அடிக்கடி எட்டிப் பார்த்தன. அவள் முகத்திலும் காதலனைக் காண வருகிறோம் என்ற மகிழ்ச்சி தாண்டவமாடிற்று. சந்தித்த மறுநாளோ மாலையில் அருகேயுள்ள பழங் கோட்டையைப் பார்க்கச் செல்வதாக இருவரும் ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். வர நேரமாகக் கூடுமாதலால், அருந்தகத்தில் உண்டு தத்தம் அறைகளுக்கு நேரே வந்துவிடுவதாக அவர்கள் கூறியிருந்தனர். எனவே, யாரும் அவர்களுக்காகக் காத்திருக்கத் தேவையில்லாதிருந்தது. புறத்தடைகளை இங்ஙனம் நீக்கிய பின் இருவரும் தமக்கு முன்னிரவுக்குப் போதிய உணவுப் பொருள்களுடன் புறப்பட்டனர். தலைமகனார் மாளிகையுடன் சுற்றுப்புறங்களும் மறைவதற்குள் அவர்கள் அவற்றை முற்றும் மறந்து விட்டனர். ஊர்ப்புறவெளி கடந்து மரங்கள் கடந்து வந்தபின் அவர்களைச் சுற்றிலும் புதர்க் காடுகளே காணப்பட்டன. கடல் போலப் பரந்து கிடந்த அவற்றின் கிளைகளும் தழைகளும் அசைவது அலைகள் எழுந்தெழுந்தடங்குவது போல் இருந்தது. அவ்வலைகளின் பரப்பில் வெண் மலர்களும் பொன் மலர்களும் அணியணியாக நின்று மூழ்கி எழுந்தன. ஆங்காங்கு உற்ற புதர்களுக்கிடையில் உயர மிக்கதாகத் தோன்றிய சிறு காமரங்கள் தனித்தும் இணை இணையாகவும் சில சமயம் குடும்பம் குடும்பமாகவும் நின்றன. தென்றல் தழைகள் மீது உராசி மலர்களைக் கொய்து குறும்பு நகை நகைத்துச் சென்றது. இளமுகில்கள் மலைமுகடுகள் மீது தவழ்ந்து விளையாடின. நீரோடைகள் மறைந்து ஓடிச் சலசலத்து இறைந்தன. வானவெளியில் ஓடிச் செல்லும் செக்கர்வானின் பின்தானையை இழுத்துப் பிடித்தணைக்க விரைவதுபோல் இருளின் முரட்டுக்கரங்கள் தாவின. இளவேனில் பருவத்தின் தொடக்கமாதலால், குளிர்முற்றிலும் விலகவில்லை. ஆதலால், இளவெயில் மறைந்ததுமே உடல் சற்றே பனிக்கத் தொடங்கிற்று. லாரைன் நடை சிறிது தளர்ந்தது. அவள் மூரட்டின் கையை இறுகப் பற்றி அவன் தோள்கள் மீது சார்ந்து அவன் தாவுநடையுடன் ஒத்து நடந்தாள். அவள் அன்று உலகை மறந்தாள். தன் செல்வக் குழந்தை களைக்கூட மறந்தாள்; தன்னையே அவள் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவள் உள்ளத்தில் மூரட்டின் வடிவமொன்றே இடம் பெற்றது. தென்றல் அவன் அங்கியை அவள்மீது கொண்டு வந்து போர்த்திற்று. அதன் குளிர் கலந்த வெதுவெதுப்பு அவள் மேல் ஆடைகளைத் துளைத்து உடலை வாட்டிற்று. அதன் வாட்டத்திலிருந்து தப்ப அவள் அதன் விலாவைச் சுற்றித் தன் தளிர்க்கைகளை வளைத்தணைத்துக் கொண்டாள். அவனும் அவள் தோள்கள்மீது தன் கைகளைச் சேர்த்து அவளைப் பற்றி இழுத்துச் சென்றான். மலர்களிடையே வண்டுகள் இரைந்தன. அவனுக்கு அது தன் உள்ளத்தின் இரைச்சல் போலத் தோற்றிற்று. முயல்கள் புதர்களிடையே வெருவிப் பாய்ந்து அவர்கள் கால்களிடையே உராய்ந்து சென்றன. மிளாக்களும் மான்களும் தொலைவில் நின்று அவர்களைக் கனிவுடன் பார்த்து மிரள மிரள விழித்தன. மூரட்டுக்கு அவை லாரைனின் உள்ளத்தின் ஓட்டத்தையும் அவள் காதல் மருட்சியையும் நினைவூட்டின. இயற்கை ஐம்புலன்களின் மீதும் தன் தாக்குதல் தொடங்கிற்று; மங்கிய இருளில், பனிக்காற்றில், சலசலக்கும் அருவிகளிடையே, முன்னிரா நங்கையின் மென்மணம் மலர்களின் மணத்துடன் கலந்து எங்கும் பரவிற்று. இரவின் அணைப்பில் கிடந்தது நீள் நிலம். காதலின் அணைப்பில் கிடந்தது உள்ளம். உடல் துவண்டது. இருவர் கரங்களும் சோர்ந்து மெல்ல ஊர்ந்தன. புதர்க்காட்டின் எல்லையை அணுகியதும் அங்கே ஒரு மணல் வெளியும் அதன் அருகே ஒரு சிறு குன்றும் இருந்தன. அவன் அவளை அவ்வெளியில் சென்று சற்று இளைப்பாறச் செய்தான். கையிலிருந்த மூட்டையைக் குன்றோரம் உள்ள பாறைமீது வைத்துவிட்டு அவள் அருகே அமர்ந்து தன் கைக்குட்டையால் அவள் களையார வீசினான். அவள் முகம் குளிரில் வாடிய மலர்போல் துவண்டு இருந்தது. நீலமலர்கள் போன்ற கண்கள் இரவின் நிழலால் இன்னும் ஆழ்ந்த நீல நிறம் பெற்று மருட்சியூட்டின. அவன் அவற்றின் கவர்ச்சியில் குளிர்காய்ந்தான். பறவைகள் மரத்தில் சலசலத்தன. அவன் பறவைச் சேவலைச் சுட்டிக்காட்டி “அதோ தன் படை நோக்கி விரையும் சேவலைப்பார்” என்றான். அவள் குறிப்பறிந்து அவன் தோளில் தன் தலைசாய்த்தாள். கானங் கோழிகள் ஒன்றை ஒன்று துரத்திச் சென்றன. புதர்கள் கலைந்தன. அவற்றிடையே ஒரு குகை குன்றின் அடிவாரத்தில் தென்பட்டது. அதன் வெளிப்புறம் அரையிருளில் மறைந்திருந்தாலும் உள்ளே வானத்தின் ஒளிநிலவியதை மூரட் கண்டான். “தங்க அதோ நல்ல இடம். இங்கே செல்வோமா?” என்று மூரட் மெல்ல லாரைனின் செவியில் முனகினான். அவள் விடை எதுவும் கூறவில்லை. ஆனால், அவளையுமறியாது அவள் தலையசைந்தது. அவன் அவளைக் குழந்தையைத் தூக்குவது போலத் தூக்கிச் சென்றான். குகை அவர்களுக்கு அன்று ஒரு தனி மனையாய், மணவறையாய், மஞ்சமாய் உதவிற்று. லாரைன் உடல் குகையில் கிடந்தது. அவள் உள்ளமெனுங் குகையில் மூரட் கிடந்து புண்டான். இதுவரை அவன் காதற்கடலில் கரைகாணாது அவன் அலமந்திருந்ததுண்டு. இன்று அவள் காதலில் அவன் மூழ்கிக் கரைகாணாமல் தத்தளித்தான். இதுவரை அவன் அவள் காதலுக்குரியவனாயிருந்தான். இப்போது அவள் அவன் காதலில் கரைந்து அவன் காதலன்றி வேறு தனி வாழ்வற்றவளானாள். ஐயங்கள் உருகின. அருளிரக்கம் அகன்றது. அன்பு பறந்தது. தன் மதிப்பு, தன் முனைப்பு எல்லாம் அவளை விட்டோடின. இன்பம், இன்பம், இன்பமொன்றே எங்கும் நிறைந்திருந்தது. குகையினின்று வெளிவரும்போது நள்ளிருள் அணுகி விட்டது. தனியே அவனைக் காணக் கூசிய நங்கை காட்டின் இருளினிடையே அவன் தோளன்றிச் சிந்தனையற்று அவளைத் தொடர்ந்து வந்து அவன் குறிப்பில் நின்றாள். அவன் குளிர் படாமல் அவளைத் தன் மடிமீது வைத்துத் தன் மேலங்கியால் போர்த்துக்கொண்டு, மூட்டையிலிருந்த சிற்றுண்டிகளை எடுத்து அவளுக்கு ஊட்டினான். சிறிது நேரம் குழந்தைபோல அவள் களைதீர உண்டாள். பின் அவன் முக நோக்கிப் புன்முறுவலுடன். “நான் உண்டால் போதுமா? இதோ, இந்த வாயும் சிறிது உண்ணட்டும்” என்று அவனை உண்பித்தாள். குழந்தை மனம் ஒரு கணத்தில் தாய் மனமாயிற்று. “அன்பே, நேரமாயிற்று. நாம் இனி வீடு விரைவோம்” என்றாள். அவளை அவன் அவள் அறைவரை இட்டுச்சென்று அவளைப் படுக்கையில் இட்டுப் போர்வையால் போர்த்த பின் நீண்ட முத்தங்களை விலை தந்து விடைபெற்றுத் தன் அறை சென்று உடலை நீட்டிப் படுத்தான். காலைக் கதிரொளி அவன் உடல்மீது தன் ஒளிக்கரம் நீட்டிப் பகல் நேரம் அறிவித்தது. அவன் நேரமும் உணராமல் உறங்கிக் கிடந்தான். ஆனால், அவள் அவன் முன் வந்து நகைத்து நின்றாள். பகலவன் ஒளியாலோ, அந்நகையொலியாலோ அவன் விழித்துக் கண்களைத் துடைத்துக் கொண்டு நோக்கினான். ஆ ‘நீயா’ என்றான். அவள் சிரித்தாள். நாம் இருப்பது “தலைமகனார் மாளிகை!” என்றாள். அந்த ஒரு வாசகம் அவர்கள் தற்போதைய நிலையையும் அவள் புதுத்தொடர்பையும் அவனுக்கு ஒருங்கே நினைவூட்டின. ஆழ்ந்த சிந்தனை அவன் முகத்தில் நிழலாடிற்று. ஆனால், அவள் முகத்தின் அமைதியும் அதில் நடனமிட்ட களிப்பும் அவனை மீண்டும் ஊக்கிற்று. லாரைன் தன் நாட்குறிப்பில் இந்நாள் தனிப்படக் குறிக்கப்பட்டது. அவன் நாட்குறிப்பிலும் அப்படியே அது அவர்கள் காதல் மணநாள். அவர் வாழ்நாளில் ஆண்டுதோறும் இந்நாளை இருவரும் கூடியிருந்த போது அடிக்கடி அவர்கள் அவ்விடத்தைக் காண விழைவதுண்டு. காண முடியா விட்டாலும் அதனையும் அதனிடமாகத் தாம் நுகர்ந்த இன்ப நினைவு களையும் அவர்கள் ஒருவர்க்கொருவர் கூறி மகிழ்வர். இருவரும் வேறு வேறிடத்தில் அந்நாளில் இருக்க நேர்ந்தால், இருவர் கடிதமும் அந்நாளில் மற்றவர் கையில் இருக்கும். அந்நாளைய ஒருவர் நினைவு மற்றவர் முன் வந்து உலவும். காதலன் பல ஆண்டு காத்து, காதற் பலவாண்டு காத்து, காதலின் மறுக்கவொண்ணாக் கவர்ச்சியிலீடுபட்டு இருவரும் காதல் மணங் கண்டனர். ஆனால், அவர்கள் புறவாழ்வு இன்னும் முன் போலவே நிகழ்ந்தது. முன்போல அயலாரிடையே காதலியையும் அவள் செல்வரையும் கண்டு பசப்புரை பேசி, பின் ஒருவரிடம் ஒருவர் விடைகொண்டு பிரியலாயினர். 29. தப்பெண்ணம் கூடலில் பிரிவு போன்ற துன்பம் வேறில்லை. பிரிவிடையே கூடுவது போன்ற இன்பமும் பிறிதில்லை. அடுத்த இரண்டாண்டு களிலும் மூரட்டும் லாரைனும் இவ் இன்ப துன்பமிரண்டனையும் மாறி மாறித் துய்த்தனர். காரம், காரத்துக்குப் பின்னர் தித்திப்பு; தித்திப்புக்குப் பின் காரம் என்ற உணவு முறையில் தித்திப்பின் சுவையைக் காரம் பெருக்குகிறது. காரம் இடையே வந்து தித்திப்பை மட்டுப்படுத்தினாலும், அது மீண்டும் தித்திப்பின் சுவைத்திறத்தைப் பெருக்கவே உதவுகிறது. இது போலவே துன்பத்திடையே இன்பத்தை எதிர்பார்க்கும் இன்பம், அதைத் தொடர்ந்த இன்பம், அவ்வின்பத்தின் பின், பின்நோக்கி அதனை நினைக்கும் இன்பம் என அவர்கள் வாழ்க்கை நெளிந்து நெளிந்து ஓடிற்று. மூரட் அடிக்கடி நாட்டுப்புறம் வந்து தன் வீட்டில் தங்கியிருப்பான். அவ்வேளைகளில் முன்னிரவில் ஒரு உருவம் போர்வை ஒன்றைப் போர்த்துக் கொண்டு கிளைவழிகளில் நடந்துவரும். மூரட் அவ்வுருவின் வரவை எதிர் நோக்கி நின்று, அதை உள்ளே வரவேற்றபின் கதவை உள்ளிருந்து தாழிடுவான். இவ்வுருவம் வேறுயாருமன்று லாரைன்தான்! வண்டியில் வராமல் நடந்து வருவதனாலும், முகமூடி இராவேளையில் வருவதனாலும் அது இன்னாரென்று யாரும் ஐயுறவே இடமில்லாதிருந்தது. விடியற் காலையில் அவள் அவனிடமிருந்து பிரியா விடை பெற்று எவரும் எழுமுன் உட்சென்று தன் அறையில் சிறிது கண்ணயர்வாள். நேரே சந்திக்க முடியாத சமயம் அவள் கடிதங்கள் அவனை நாடிவரும். அவன் கடிதங்கள் அவளை நாடிச் செல்லும். அவள் கடிதங்கள் அவன் உயிராயிருந்தன. அவன் கடிதங்கள் அவளுக்கு மனப்பாடமாய் அவள் உள்ளத்தில் என்றும் நீங்காதிருந்தன. அவற்றின் உணர்ச்சி வேகம் அவளை அவன் காதலியாக விசை வண்டியில் ஈர்த்துச் செல்வது போன்றிருந்தன. “உன்னை நினைக்கும் போது என் உள்ளத்தில் பல்வகை உணர்ச்சிகள் ஒரே காலத்தில் வந்து மோதுகின்றன. உனக்குரிய ஒரு உடன் பிறந்தான், ஒரு உடன் பிறந்தாள், ஒரு மகன், ஒரு நண்பன், ஒரு மனைவி இன்னும் நன்றாகச் சொன்னால் ஒரு காதற்கிழத்தி ஆகிய இத்தனை பேரின் கனவுகளும் என் உள்ளத்தில் எழுகின்றன.” “நம் உயிர்கள் ஒன்றாய்விட்டன. நாம் இனி எப்படி தனித்தனி வாழ முடியும்... நான் உயிர்க்கும் மூச்சைவிட நீ எனக்கு இன்றியமையாதவளாய் விட்டாய்.” “என் நண்ப, உன்னிடம் விடைபெற்றுக் கொள்கிறேன். என் காதலி, உன்னிடம் இத்துடன் விடைபெற்றுக்கொள்கிறேன். நான் பதினைந்தாண்டு பருவமாயிருந்து, நம் காலம் பொன்னார்ந்த பழங் காலமாயிருந்தால் எப்படி இன்பக் காதல் உணர்ச்சியில் களிப்பேனோ, அப்படி உன் காதலில் களிக்கிறேன்.” “ஒருவருக்கொருவர் முற்றிலும் உளம் பொருந்தி, ஒருவருக் கெனவே ஒருவர் படைக்கப்பட்டவராய், காதலென்னுங் கடுந்தீயில் தூய்மையுற்று ஒரே குளம்பில் உருகி ஒன்றுபட்ட இரு உயிர்களின் கூட்டுறவுக்கு முன் இந்த உலகத்தின் திரண்ட செல்வங்கள் கூட எம்மட்டு?” “உயிர் என்றும் முதுமையடைவதில்லை. என் உயிரோ தன்னகத்துக் கால எல்லைவரை கூட அணைய முடியாத காதல் கொழுந் தீ சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது.” மூரட் உள்ளத்தைப் பீறிட்டு அவன் மைக்கோலின் வழி உருகியோடிய காதல் நெருப்புப் பிழம்புகள் இவை! அவை இன்ப நெருப்பாய் லாரைன் உள்ளத்தை வதக்கிப் பிழிந்தன. அவன் கடிதங்கள் அவளுக்கு அவன் காதல் வாய்மையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தின. “நான் இத்துடன் விடை கொள்கிறேன், என் அருமை, என் அருமைத் துணைவரே! என் ஆழ்ந்த இடையறாக் காதலில் சலித்துவிடாதேயுங்கள். அது எவரும் அறிய முடியா அருமை யுடையது. அது எனக்கு இனிமையின் ஓயாத ஊற்று. என் கவலைகள் அனைத்தினிடையேயும், என் சுமைகளைத் தாங்க எனக்கு உதவும் ஓர் உறுதி வாய்ந்த நண்பனாய் அது இயங்குகிறது.” “இத்துடன் முடிக்கிறேன். என் வாழ்வின் இன்பமே! துன்பமே! இன்பதுன்பமே!” அவள் இதற்கு முன் எவரையும் காதலித்தேயறியாதவள். பருவத்தின் முதற்றொடக்க நிலை கடந்த இவ்வுணர்ச்சி அவளை இளந் தளிர்போல் அதிரவைத்தது - ஆனால், அதே சமயம் அது அவள் குருதிகளினூடே மின்னாற்றல்போல் விருவிருப்பூட்டி அவளுக்கும் புத்திளமை தந்தன. மறுபுறம் அவனோ என்றும் இது போல் காதலித்ததில்லை. பருவங் கடந்த அவன் காதல் அவன் ஆண்மையைத் தளர்த்தவில்லை - ஆனால் பெண்மையைப் பற்றி ஏளனமாகக் கருதி அதே சமயம் அவர்களைத் தன் காதல் விளையாட்டால் அடிமைப்படுத்திய அவன் உள்ளம் இன்று ஒரு பெண்ணின் காதலுக்குத் துடிதுடித்து நின்றது. உள்ளங்கள் இணைந்த பின்னும் அவன் ஆணவம், அடக்குமுறை, கோபதாபங்கள் அகலவில்லை. அவன் அவளுடன் அடிக்கடி ஆரவாரம் செய்து பூசலிட்டான். அவளும் அடிக்கடி பிடிவாதமுள்ளவளாகவே இருந்ததனால் பூசல் சில சமயம் புயலாக எழும். அவர்கள் மறைகாதலின் மறைப்புக்குக்கூட சில சமயம் இப்பூசல்கள் பங்கமாய்விடுமோ என்ற நிலை அடைவதுண்டு. ஆனால், உள்ளத்தின் வேறுபாட்டை நீக்கும் இணைக்கும் அவர்கள் உடல் இணைப்பு அமைந்தது. கோபத்திடையே வேட்கை மிகுந்தது. அணைப்பிடையே வெறுப்பு மறைந்தது. அவள் குற்றங்கள் அவனுக்குத் தெரியாமலில்லை. அவன் பெண்ணுக்கு அடிமையல்ல. அவள் காதலின் வலிமைதான் அவனை ஓரளவு தன்னுடன் பிணித்து வைத்தது என்று அவள் அறிந்தாள். உலகெலாம் சுற்றிய மரபில் வந்தவன் அவன். பெண்டிர் வேட்டையாடியவன். அவன் பழக்கவழக்கங்களை அவள் காதல்கூட மாற்ற முடியவில்லை. காதலுக்குக் கூட அவன் அடங்கி நடக்கவில்லை. அடிக்கடி ஆடு மாடுகளை நடத்தும் கோனான் குரலும் நடையும் அவன் காதலில் இருந்தன. ஆனால் காதலில் அவள் பட்டபாடு! அவளுக்காக அவன் துடித்த துடிப்பு! காதல் ஆர்வம்! இவை அவன் உள்ளத்தைத் தன் வேகத்தில் அடித்துக்கொண்டு சென்றன. அவள் குழந்தை போன்ற பண்பு, ஒருமை நினைவுகள் அவனைக் கவர்ந்தன. சண்டையின் பின் ஆறுதலில்கூட அவளிடம் தணிவுக்கும் பணிவுக்கும் இடமில்லை. ஒரு பூசற்புயலின் பின் இணக்கம் ஏற்பட்டதும் மறு கடிதத்தில் “குற்றங்கள் அனைத்தும் உன்புறமே என்பதை இப்போதாவது அறிந்தது பற்றி மகிழ்ச்சி. ஆனால், குற்றங்கள் எத்தனை உன்னிடமிருந்தாலும் அத்தனையும் மன்னிக்கும் பரந்த நெஞ்சம் எனது என்பதனால் நீ கவலை யற்றிருக்கலாம். எக்காரணங் கொண்டும் உன்னை நான் விட்டோடிவிட முடியாது” என்று அவன் அன்புக் கடிதம் வரைந்தான். ஒருநாள் வழிநடை விடுதி ஒன்றில் முன்னிரவில் சந்திப்பதென அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வழக்கம் போல லாரைன் எளியஉடையில் இன்னாரெனத் தெரியாமலே வருவதாக இருந்ததால் மூரட் தன் பெயராலேயே ஓர் அறைக்கு ஏற்பாடு செய்திருந்தான். ஆனால், லாரைனுக்குப் பகல் நேரமே அன்று போகாததால் நண்பகலுக்கு முன்பே அவ்விடுதிக்கு வந்துவிட்டாள். இந்தத் தொலையிடத்தில் எளிய உடயில் தன்னை யாரும் அறியமாட்டார்கள் என்று அவள் நினைத்திருந்தாள். ஆனால், அவள் யார் என்று அறியாவிட்டாலும், அவள் நடையுடை தோற்றம் பேச்சுகள் அவள் குடியுயர்வை மறைக்க முடியவில்லை. உயர்குடி நங்கை இவ்வாறு உருமாறி வருவதன் குறிப்பை ஒருவாறு மக்கள் உணர்ந்திருந்தனர். விடுதித் தலைவன் இதனால் அவளைத் தானே வந்து வரவேற்று வணங்கினான். இது அவளுக்கு வெட்கமாயிற்று. ஏவலரும் காவலரும் அவளைக் கண்ணடித்து உறுத்து நோக்கலாயினர். அவள் கடுநோக்கில் அவர்கள் அஞ்சி ஒடுங்கினாலும் நோக்குத் திரும்பியதே முன்னிலும் கலகலவென்று சிற்றாரவாரம் செய்தனர். பிறர் கண்களுக்குத் தப்பும்படி அவள் காய்கறித் தோட்டத்தில் சென்று நண்பகல்வரை உலாவலானாள். மூரட் எப்போது வருவான். நான் காத்திருப்பதைக் கண்டு அவன் எவ்வளவு வியப்பும் மகிழ்வும் கொள்வான் என்ற சிந்தனையிலேயே அவள் ஆழ்ந்திருந்தாள். அத்துடன் அவனுக்கு விருப்பமான நாட்டுப்புற உணவுகளை எண்ணி அவள் தனக்குள் சிரிக்காமலிருக்க முடியவில்லை. அச்சிரிப்பு மறையவும் ஒரு பெண் குரல் அவளைத் திடுக்கிடச் செய்தது. அதே உணவுகளின் பெயர்களைக் கூறி அவற்றை முன்கூட்டி வட்டித்து வையுங்கள். மூரட்டுக்கு அவைதாம் பிடிக்கும். ஆனால், எனக்கு வேறு உணவு வட்டித்து வையுங்கள்” என்று அப்பெண்குரல் ஏவலரிடம் உரத்துக் கூறிற்று. அத்துடன் அக்குரல் தன்னருகே வருவதாகத் தோற்றவே அவள் திரும்பிப் பார்த்தாள். போலிப் பகட்டுடை யுடுத்திப் பசப்பில் ஒரு நாணங்கெட்ட மாது அவளை நோக்கி நடந்தாள். அவள் கீழ்மைக் குணம் அவள் நடையுடையினும் தெள்ளத் தெளிய விளங்கிற்று. மூரட் இன்னுமா காதல் விளை யாட்டுகள் விளையாடுகிறான். அதுவும் இத்தகைய மாதுடன் என்று அவள் எண்ணியபோது சினம் ஒருபுறம் புழுக்கம் ஒருபுறம் அவளைத் தின்னத் தொடங்கிற்று. இதற்கிடையே அம்மாது லாரைனை உற்ற நோக்கி அவளை இடித்துக்கொண்டு போனதன்றி, அவள் கேட்க “ஓகோ, இதுவேறேயா?” என்றபோது அவள் அங்கம் பதைபதைத்தது. ஒரு கீழ் மகளுடன் கீழ் மகளாக நடத்தி ஒரேஇடத்தில் இருவரை வரைவழைத்திருக்கிறான் என்றெண்ணம் அவளைப் பொசுக்கிற்று. அவள் சீற்றத்துடன் மூரட் அறைக்கு வந்து விடுதிப் பணியாளை அழைத்து “என் வண்டியைக் கட்டு, நான் போகவேண்டும்” என்றாள். அம்மாது “தொலையுதா சனி” என்று அடுத்த அறையில் வாய் விட்டுக் கூறியது அவள் காதில் எரிகொள்ளியாய்ப் பாய்ந்தது. அவள் சீற்றம் முன்னிலும் பதின்படங்காயிற்று. தன் காதலால், தன் குடிமதிப்பு, தாய்ப்பாசம் எல்லாவற்றையும் விடச்செய்து, இந்த நடுத்தரக் குடியாளன் காமக் கிழத்தியாகத் தான் இழித்து நடத்தப்பட நேர்ந்ததே என்று அவள் தன் ஏழை நெஞ்சையே இடித்துரைத்தாள். இந்நிலையில், மூட்டை முடிச்சுகளுடன் அவள் வெளி யேறும்போது மூரட் அங்கே வந்தான். லாரைனைக் கண்டு அவன் அதிர்ச்சியுற்றான். அவன் மற்ற மாதை எதிர்பார்த்து, அவள் திட்டப்படி தான் நண்பகலில் வந்திருக்கிறான் என்று நினைத்து அவள் கோபம் அவளையும் மீறியது. அவன் ஏதேதோ பேச எழுந்ததும், அவள் சினம் செந்தீயாக மாறி “உன்னை நான் கண்டு பேசியது போதும். இனி என் கண்முன் என்றும் வரவேண்டிய தில்லை” என்று கூறி வண்டியேறிச் சென்று விட்டாள். மூரட் கல்லாய்ச் சமைந்து நின்றான்! அவன் கடுஞ் சினத்தின் முன் அவன் ஆண்மை முற்றிலும் பறந்தது. அதன் காரணத்தை அவன் முற்றிலும் அறியவும் முடியவில்லை. அவள் எப்படி நண்பகலிலேயே வந்தாள். வந்தபின் என்ன நடந்தது என்பதை அவன் அறிய முடியவில்லை. அடுத்த அறையிலுள்ள இழிதரமாது அவனிடம் வந்து பேச முன்வந்தபோதுதான் அவனுக்குச் செய்தி ஒருவாறு விளங்கிற்று. அவள் அவன் பழங் காதலியருள் ஒருத்தி. அவள் கேட்டபோதெல்லாம் அவன் ஏதாவது காசு பணம் கொடுக்காம லிருப்பதில்லை. அவள் அவனிடம் நாய்க்குட்டியின் பாசத் துடனும் பண்புடனும் நடந்தும் வந்திந்தாள். அன்று அவன் அவ்விடம் வருவதைத் தன் நண்பனான விடுதியாளனால் தெரிந்தே அவள் அவனை முன்கூட்டிச் சந்திக்க எண்ணினாள். நண்பகல் அவன் வருவதை அவள் அறிந்த வகை இதுவே. மூரட் இத்திருவுருவத்தை இன்று ஏறெடுத்தும் பார்க்க வில்லை. “சனியனே! என் முகத்தில் இனி விழிக்காதே. போய்த் தொலை” என்று லாரைன் தன்னிடம் பேசிய பேச்சினும் கடும் பேச்சுக்கூறி எரிந்து விழுந்தான். என்றும் அவன் சீற்றங் கண்டறியாத பகட்டுடை யணிந்த அவ் ஏழைப் பெண் நடுங்கி ஒதுங்கிச் சென்றாள். சீற்றம், புழுக்கம், தற்பழிப்பு ஆகிய நரகவெந்தீக்களிடையே லாரைன் பதைபதைத்து வெந்து கொண்டிருந்தாள். இருளில் திடுமென மின்னல் ஏற்பட்டு இடியேறுண்டவன் போல மூரட் உணர்விழந்து செயலற்றுத் திரிந்தான். 30. புயலின்பின் அமைதி “சாவின் தடத்தை என் உள்ளத்தில் பதித்துச் சென்று விட்டாய் இன்பத்தின் தொலை அளவுக்குக் கூட என் மனத்தில் இடமில்லாது போயிற்று. கூதிர்ப்பருவத்தில் இலைகள் உதிர்வது போல என் ஆர்வக் கனவுகள் எல்லாம் உலர்ந்து உதிர்ந்து விட்டன. நாள் செல்லச் செல்ல, மணி செல்லச் செல்ல, என் மன இருள் செறிகிறது. என் ஆண்மை அகன்றது. நான் வலிவிழந்தேன். பதினைந்தில் எழவேண்டிய காதல் நாற்பத்தைந்தில் எழுந்தது. எப்படியோ பொறுத்தேன், அப்பருவத்திலும் நேர்ந்த துன்பம் இன்று நேர்ந்தால் என்ன செய்வேன். தாயே குழந்தையைத் தள்ளி உதறினால், குழந்தை என்ன செய்யும்! அக்குழந்தையினும் திகற்றவனானேன்!” நம் காதல் நம் பருவத்தில், நம் நீண்ட நாள் அனுபவங்களின் பின் நட்பின் அமைதி பெற்றிருக்க வேண்டும். இன்று நீ அமைதி யளித்துவிட்டாய் - அது நட்பின் அமைதிதானா? நீயே எண்ணிப்பார்! என் நெஞ்சம் இடிந்துவிட்டது. உன்மீது என்னால் குறை கூறவும் இயலாத நிலையில் இருக்கிறேன். இத்துன்பம் என் ஆற்றலை மீறிவிட்டது. பதினைந்து வயதுக் குழந்தைபோல என்னை நடத்தி விட்டாய். நிலைமையை நீயாக ஆர அமரப் பார்க்கவுமில்லை. என் விளக்க விடைகளைச் செவி கொடுத்துக் கேட்கவும் இடம் வைக்கவில்லை. குற்றத்துக்குத் தண்டனை பெற்றால், குற்றம் தீரலாம். காரணத்துடன் காரியம் நிகழ்ந்தால். காரணம் விலக்கிக் காரியம் தடுக்கலாம். குற்றமறியாத் தண்டனை, காரணமறியாக் காரியம் நடக்கும் வாழ்வில் எதையறிந்து எதைச் செய்வது? எப்போதும் எதிர்பாரத் தீமைக்கு அஞ்சி, எதையும் எதிர்பார்த்து, குருட்டு விதியின் பிடியில் வாழ்வதெப்படி? என்னால் என் சார்பில் ஒன்று மட்டுமே கூறமுடியும். என் மன அமைதி. என் இன்பத்தை நீ துரத்திவிட்டாய். ஆனால், அந்த அமைதியையும் இன்பத்தையும்விட நீ எனக்கு இன்றியமை யாதவளாக இன்னும் இருக்கிறாய். என் உயிரும் என் மூச்சும் மட்டுமல்ல, என் அறிவும் என் உணர்வும் உன் கை நொடிப்பில் இருக்கிறது. நீ என்ன செய்வாயோ, செய்ய மாட்டாயோ? நான் யார் அதைக் கூற. கசக்கி எறியப்பட்டவன். அவன் குற்றத்திற்கு விளக்கம் இக் கடிதத்திலில்லை. விளக்கம் கூறத் தான் இடந்தரவில்லை என்ற குற்றச்சாட்டின் முன் இது ஒரு குற்றமல்லதான். ஆயினும், இக்கடிதம் எழுதியவன் ஆயிரம் கொலை செய்திருப்பினும். அவள் மன்னித்திருப்பாள். காதலன் விளக்கத்தில் காதலைவிட வேறு என்ன வேண்டும்? அவன் காதற்புயல் சூறைக் காற்றாயடிப்பது கண்டாள். அவன் இன்னும் காதல் விளையாட்டு விளையாடத்தான் செய்கிறான் என்று வைத்து கொள்ளலாம். அப்போதும் என்ன? அது அவன் முன் வாழ்வின் நிழல். தன் ஒளிபடாத இடத்தில் அதைக் கறைப்படுத்தட்டும். அதுவும் தன் நிலைமையின் குற்றம், தங்கள் சூழ்நிலையின் குறைமட்டுமே. அவன் உள்ளத்தில் அவள் நிறைந்திருக்கிறாள் - ஆம். இனி குறைகாணும் படலம் அகன்று விட்டது. விளக்கங் கூற வேண்டுந் தேவை இனி இருக்க வேண்டிய தில்லை. இனி அவன் குறைகள் தன் குறைகள். அவன் திருந்தும் பொறுப்பு அவனதல்ல. தனது இந்நினைவுகளால் காதலென்னும் குன்றின் கொடுமுடியேறினாள் லாரைன். கொடு முடியிலிருந்து கடலிற் குதிக்கவோ, அல்லது அப்படியே வானிற் பறக்கவோ அவள் சித்தமானாள். அவன் கடிதம் புயலின் பின் அமைதியாய், கார்கால முகிலின் பின் வான வில்லாய்க் கனிவுற்றது. “என்னை வெறுத்துவிடாதே. என் குழந்தாய்! என் சீற்றத்தின் உயரம் என் அளவிடமுடியாத அன்பின் ஆழம் மட்டுமே. ஆனால், நீ என் காதற் குழந்தை. உன்னை நான் குழந்தையாகத் தான் நடத்த வேண்டும். சீற்றத்தின் உயரம், காதலின் ஆழம் இரண்டும்பற்றி இனி உன்னைக் கவலைப்பட விடமாட்டேன். உன் காதல் கிளி இனி நீ எது செய்யினும் உன்னைக் கொத்தாது. நீ இன்னுணவு தரினும் கசப்புணவு தரினும், அது இனிமையாகவே பேசும்.” “என் வானில் திரியும் பறவையே! இனி நீ எங்கே வேண்டுமானாலும் போ. ஆனால், என்னை மறவாமல் எப்போதும் திரும்பி வா. என் கை இரையுடன் எப்போதும் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கும். “உன் காதலைப்பற்றிக்கூட இனிநான் கவலைப்படமாட்டேன். என் காதலைப்பற்றிய கவலையே எனக்குப் பெரிதாகிவிட்டது. நீ யாரைக் காதலிக்கிறாய் என்பது பற்றிக் கூட எனக்குக் கவலை யில்லை. உலகில் எவரையும்விட நான் உன்னைக் காதலிக்கிறேன். என்பதை மட்டும் நீ மறக்காதிருந்தால் போதும். உன்னுடன் வாழக் கிடைப்பதுவரை, அல்லது அந்நம்பிக்கை உள்ளவரை என் வாழ்வு எனது. இனிக் கசக்கி எறியாத கை. அவள் தன்னையும் கடந்து விட்டாள். தன் காதலையும் கடந்து விட்டாள் என்பதை அவன் கண்டான். ஆனால், அவள் கடிதம் இப்போதும் குறையே கண்டது. “குறைகள்யாவும் உன்னுடையனவே. ஆனால், தண்டனை யடைந்தவன் நான்” என்று பல்லவியுடன் தொடங்கி “சென்ற காலப் பிழைகள், இப்போதைய பிழைகள், வருங்காலப் பிழைகள் யாவும் நான் மறக்கிறேன் ஆனால், ஒரு குறை இன்னும் உறுத்துகிறது. சினமாறிய கடிதத்தில்கூட உன் அன்பு முத்தம் அனுப்பவில்லை!” என்று எழுதியிருந்தான். அவன் சிறுபிள்ளைத்தனமான ஆர்வம் அவள் பெண்மை யைக் கலகலக்க வைத்தது. அவன் கண் பார்வை மங்கத் தொடங்கியுள்ளதென அவள் கடித மூலம் கேட்டு அவள் அவனுக்கு எழுதிய கடிதம் இது. “உங்கள் நிலை கேட்டுக் கலங்குகிறேன். ஆனால், அதனைச் சரிப்படுத்த வழியுண்டு. கண்ணுக்குக் கட்டுக் கட்டிவைத்துப் புகுங்கள். வெளியே பகலிலல்ல, வீட்டினுள் இருக்கும் போதும், இரவிலும், ஆம்! இருட்டில்கூட என் குறைகளைத் தங்கள் கண்கள் சிறிதுகாலம் துளைத்துப் பார்க்காமலிருக்கட்டும். என்னை அறிய உங்களுக்குக் கண்ணால் காணவும் காதால் கேட்கவும் கூட இனித் தேவைப்படாதென்று எண்ணுகிறேன். தங்கள் நெஞ்சு என் நெஞ்சையறியும், தங்கள் உடல் என் உடலை அறியும்!” தங்கள் புற உயிர் 31. மீட்டும் பிரிவு ஸ்பா என்னும் மருந்து நீரூற்று நகரில் லாரைன் சென்று சில நாள் கழித்தாள். மூரட்டும் அடிக்கடி அங்கே சென்று அவளைக் கண்டு வந்தான். ஆனால், அங்கே நீடித்திருந்ததன் காரணமாக லாரைனுக்குப் பல புதிய நண்பர்கள் ஏற்பட்டனர். அவர்களுள் புல்லர் என்ற ஆங்கிலக் குடும்பத்துடன் அவள் நன்கு பழகிக் கிட்டத்தட்டக் குடும்பத்தில் ஒருத்தியாகக் காட்சியளித்தாள். அவள் அவ்வளவு எளிதாக அயலாருடன் பழகி விட்டது கண்டு மூரட் உள்ளூறப் பொறாமை கொண்டான். தன் பைங்கிளி பிறர் கையில் சென்று அமர்வது கூட அவனுக்குப் பிடிக்கவில்லை. தான் தன் கிளியை மணந்தபின்தான் தன் கிளியாகப் பாராட்ட முடியும் என்பதை அவன் மறந்தான். இளவரசன் டிலீஞின் மாளிகைக்கு மீண்டும் ஒரு முறை லாரைன் விருந்தினளாய்ச் சென்றாள். பின் அரண்மனையிலேயே அவள் ஒரு நாடகத்தில் பங்கு கொண்டாள். இப்போது இளமைப் பருவமடைந்து வந்த அகஸ்டி அரமகனாகவும் நடித்தனர். மூரட் மீது இருந்த அரண்மனைத் தடைகூட அகன்றது. அவன் மக்கள் கிளர்ச்சியின் தலைவன். ஃவிகாரோவாக நடித்தான். நாடகம் சிறப்புறப் பாராட்டப்பட்டது. குறிப்பாக மூரட்டின் வீர உரையும் நடிப்பும் பலராலும் மெச்சிப் புகழப்பட்டன. ஆனால் அந்தோ, அவன் நடிப்பு வரவிருக்கும் பிரஞ்சுப் புரட்சியெனும் சூறாவளிக்கு ஒரு முன்னறிவிப்பு ஆயிற்று. ரூசோ, வால்ட்டேர் ஆகிய எழுத்தாளர் எழுத்தில் கரு முளைத்து, அரசியல் சூழ்ச்சியாளர் பூசல்களால் கருமுதிர்ந்து, மக்கள் வறுமை, வெனிஸ் முப்போரின் இன்னல்கள், அரண்மனை பெருமக்கள் ஆரவாரச் செலவுகளால் ஏற்பட்ட வரிச்சுமை ஆகியவற்றால் மக்கள் பெருங்கடல் கொந்தளித்தெழுந்தது. மன்னர் பதினாறாம் லூயி பதினான்காம் லூயியின் ஆணவப் பெருந்தகைமைப் பண்புக்கு நேரெதிர் பண்புடையவன். அவன் புயல் வருமுன்பே இளந்தளிர்போல் நடுங்கினான். ஆக்டேவுடன் மீண்டும் நாடகம் நடிக்கப்படுவதை அவன் தடை செய்தான். நேரிடையாக ஆக்டேவிடம் அவன் “நீ பெருங்குடியிற் பிறந்தவன் என்பதனால், ஏதோ அறிவின் சிகரத்தை எட்டிவிட்டதாக நினைக்கிறாய். உனக்குத் தரப்பட்ட சலுகை பெரிது. அதற்கு நீ செய்யும் கைம்மாறு என்ன?” என்று இடித்துரைத்தான். அது ஆக்டேவ் மூரட்டின் உள்ளத்தை மட்டும் தைக்க வில்லை. இதுவரை மன்னர் பெருங்குடியாளரை நேரடியாக இப்படிக் கடிந்தது கிடையாது. மக்களை நடுங்கி ஒடுங்க வைத்த பதினான்காம் லூயிகூட எந்தப் பெருமகனையும் இவ்வாறு கூறத் துணிந்தது கிடையாது. பெருமக்கள் யாவரும் முணுமுணுத்தனர். ஆனால், இதுவும் வரப்போகும் புயலின் ஒரு முன்னறிவிப்பாகவே அமைந்தது. அப்புயலில் அரசன் உயிருக்கு இடையூறு விளைந்தது. பெருமக்கள் பெயரும் உருவும் மறைந்து ஓடி ஒளிக்க வேண்டியதாயிற்று. மன்னர் நட்பின் அறிகுறி; பெருமக்கள் மரபுக்குரிய நடை உடை தோற்றத்தின் சிறு நிழல், அத்தகைய ஐயம்கூட இப்போது பாரிஸ் வட்டாரத்தில் மக்கள் கடுஞ் சீற்றத்துக்கு இரையாயிற்று. ஆனால், புயல் புற எல்லையில் அடிக்கத் தொடங்கிய பின்பும் பூங்காவில் பொன் மலர்கள் பொலிவுடனேயே நின்றன. நறுமணம் புயல் வாடையை மறக்க வைத்துக் கொண்டிருந்தது. 1784ஆம் ஆண்டு பிறந்தது. புத்தாண்டு விழாவில் அரசிளஞ் சிறுவர்க்கு விளையாட்டுப் பொம்மைகள்கூட வாங்கவில்லை. அரசி தன் அரண்மனை ஆரவாரச் செலவுகளைக் குறைக்க இட்டிருந்த திட்டத்துக்கு இது ஒரு முன்முகம். இதே ஆண்டுத் தொடக்கத்திலேயே மூரட் லாரைன் மூலம் அரசியால் கொலுவிருக்கை தரப்பட்டு மதிக்கப்பெற்றான். அச்சமயம் அவன் அவள் மீது பாடிய சாத்துக்கவி அரண்மனை வாணர்களுக்குக் களிப் பூட்டியது. அதில் உள்ளூர அரசிக்கு அளிக்கப்பட்டிருந்த அறிவுரை எச்சரிக்கையை யாரும் கவனிக்கவில்லை. அரசியிடம் நேசங்கொண்டிருந்த லாரைன் கூட அதனைப் பிற்காலத்திலேயே காண முடிந்தது. அவளும் பேச்சு நயம் எழுத்து நயம் உடையவளாயினும், இத்தகைய புதை பொருள் அவள் இலக்கிய நடைக்கு அப்பாற்பட்டிருந்தது. தன் தாயிடமிருந்து மூரட் பெற்றிருந்த தனி மரபுடைமை அது. அடுத்த ஆண்டு அரசியின் வாழ்வில் காலமெனும் நச்சரவம் புகுந்த ஆண்டு. அவள் ஊதாரிச் செலவினங்களில் ஒன்று பற்றிய கதை வெளியாயிற்று. அவள் நாட்டுப் புறத்தில் ஒரு பண்ணையில் சென்று மக்கள் மனக் கண்ணுக்கு மறைந்து வாழத் தொடங் கினாள். அதே ஆண்டு மூரட்டின் ஊதாரி வாழ்விலும் பெருந்தடை ஏற்பட்டது. அவன் கடன்காரர் அவனைச் சூழ்ந்து அவன் மதிப்புக் கோட்டையைத் தகர்க்க முற்பட்டனர். அவனுக்குப் புதிதாகக் கிடைத்த சில அரசியல் நண்பர்கள் அறிவுரையால் அவன் இக் கடன் தொல்லையிலிருந்து மீளவும் முடியுமானால் பெருந்திரள் பொருள் திரட்டவும் புதிய கனாத்திட்டமிட்டான். அதன்படி அவன் ஸெனகல் என்ற வெளிநாட்டுத் துறைமுகத்தின் ஃபிரெஞ்சு ஆட்சித் தலைவனாகச் சென்றான். ஸெனகல் செல்லுமுன் அவனை விடைகொடுத்தனுப்பச் சென்ற லாரைன் அவன் பிரிவுத் துயரை அடக்க முடியாமல் துடித்தாள். ஆனால், தன் துடிப்பை அவனிடம் காட்ட விரும்பாது அவள் தன்னை அடக்கிக் கொண்டாள். அவள் நிலையிலிருந்து அவன் தேற்றினாள். அவன் தலைமயிர்களிடயே பல நரை காணத்தொடங்கி யிருந்தன, அவள் கைகள் அவற்றிடையே விளையாடின. “அன்பே, நீ வருமுன் இம் முடி முழுதும் பொன் முடியாகி விடக்கூடும்” என்றாள். அவன் தன் இன்னல்களிடையேகூட நகைத்துக் கொண்டு, “உன் பொன்முடிகளுக்கேற்ற வெள்ளி முடியாவது எனக்கு அப்போது கிடைக்குமே” என்றான், அவள் அவன் தோள்மீது புரண்ட தன் முடிகளின் ஒரு குழலை எடுத்துக்காட்டி “இது நீலமாயிற்றே, நீலமுடி பொன்முடியாகாதா?” என்றான். சற்றுப்பின் விளையாட்டுப் பேச்சை நிறுத்தி “என் அன்பே, உன் வயது என் காதலில் ஒரு மாறுபாடும் செய்யாது. உன் வயது, உடல், உடலழகு எல்லாம் நான் கடந்து விட்டேன். ஆயினும் உன் கவலை கழிவிரக்கங்கூட அற்ற என் கல் மனத்தின் கொடுமையை நினைவூட்டுகிறது. நான் உன்னை வாழ்க்கை முழுதும் வதைத்து விட்டேன். இன்னும் எத்தனை நாள் நீ வதைபட வேண்டுமோ என்ற எண்ணம் என் கல் மனத்தின் உறுதியையும் கலைக்கப் பார்க்கிறது” என்றான். “நீங்கள் வதைப்பது உண்மைதான். ஆனால், அவ் வதைப்பே எனக்கு இன்பமாகவும் தோற்றுகிறது. இவ்வதைப்புக்கு மாறாக யாரேனும் இன்பங்களைக் கொட்டினாலும் நான் விரும்பமாட்டேன். அத்துடன் உங்கள் கல் மனம்தான் என் உயர்குடி வரம்புகளின் இருப்புக் கோட்டைகளைத் தகர்த்து, நம் இருவர் கைக்கும் அடங்காத இவ்விளமையை ஓரளவு இருவரும் துய்க்கச் செய்தது. நான் அதுபற்றிக் குறைபட்டதுண்டு. கழிவிரக்கங் கொள்ள வேண்டியதில்லை. நான் என் மனப்படி நடந்திருந்தால் இன்று நான் கழிவிரங்கியே இருக்க வேண்டும்; உங்கள் குறைகளும் குணங்களாக எனக்கு இப்போது காணப்படுவதால் நான் தங்கள் குறைகளைக்கூட விரும்பத் தொடங்கியுள்ளேன்” என்றாள் அவள். அவன் உடனே “அது போலத்தான் இன்று துயராகத் தோற்றுபவையும் நாளை இன்பமாகத் தோற்றுவது உறுதி. ஆகவே, மனநிறைவுடன் எனக்கு விடைதருக” என்று தன் ஆறுதலுரைக்கு முத்தாய்ப்பு வைத்தான். அவர்கள் சந்தித்தது ஆக்டேவ் மூரட் வீட்டில். காலை ஒளி கிட்டிற்று. அவள் இன்னும் அசைவதாகக் காணோம். இத்தடவை அவளை அவன் கைப்பிடித்து வாயிலண்டை கொண்டுவந்து தழுதழுத்த ஆனால் உறுதியான குரலில், “பொழுதாகி விட்டது. இனி நீ தங்கக் கூடாது. அத்துடன் நானும் பயணமாக வேண்டும். என் கடிதங்கள் என் மனத்தைப் படம் பிடித்தனுப்பும். உன் கடிதங்கள் என் இலக்கியமாயிருக்கும். இதோ நான் உள்ளே போய்விடப் போகிறேன். விடைதந்து விடைபெற்றுக் கொள்க” என்றான். அவள் தன் களையிழந்த முகத்தை மறைத்துக் கொண்டு விடைபெற்றுச் சென்றாள். 32. ஆபிரிக்கா “இங்கே எனக்கு மன உரம் மிகவும் தேவையாகவே இருக்கிறது - அதிலும் நாம் கழித்த கடைசி சிலமணி நேரத்தை எண்ணிப் பார்க்கும்போது! பிரியும்போது நாம் அடைந்த, ஆனால், காட்டிக் கொள்ளாதடக்கிய அதே துன்பத்தை - அதைவிட ஓயாது உள்ளத்தை அறுக்கும் துன்பத்தை - தொலைவில் இருந்து அனுபவித்து வருகிறேன். ஆனால், இழந்த, இழக்கும் இன்பப் போதுகளை நான் எப்படியும் விரைவில் மீட்டும் பெறுவேன் என்ற நினைப்பு ஆறுதல் அளிக்கிறது.” மேலையாபிரிக்காவில் ஸெனகாலின் ஆட்சித் தலைவ ராய்ச் சென்ற மூரட் லாரைனுக்கு எழுதிய முதற் கடிதத்தின் பகுதி இது. ஸெனகாலில் ஃபிரஞ்சுக் கொடி வானளாவப் பறந்தது, ஃபிரஞ்சு ஆட்சியின் சின்னமாக. அவ்வாட்சியின் தனிப் பேராளாகவே மூரட் அங்கே சென்றிருந்தான். ஆனால், ஸெனகாலின் ஃபிரஞ்சுக் கொடியின் மரபு அவனால் சிறிதும் உணரமுடியாத மரபாயிருந்தது. ஆபிரிக்காவின் நாட்டுக் குடிகள் கறுப்பர். அவர்கள் வெள்ளையராகிய ஃபிரஞ்சு மக்களை உள்ளூர வெறுத்தனர். அதே சமயம் அவர்கள், அவர்கள் கொடிய வாளுக்கும் துப்பாக்கி குண்டுகளுக்கும் கொடுமைகளுக்கும் அஞ்சினர். ஆட்சியாளர் போக்குப் படி நடப்பவர்களுக்குச் சிலசமயம் தன் நாட்டுத் தோழரை அழித்தவாறு உயர்பதவி, கொள்ளை ஆதாயத்தில் பங்கு ஆகியவை கிடைக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். ஆகவே வெறுப்பு, அச்சம், அடிமைத்தனம், பேராவல் ஆகியவற்றின் சின்னமாகவே ஃபிரஞ்சுக் கொடி அவர்கள் கண்முன் ஒளிர்ந்தது. ஆட்சிப் பொறுப்பில் பங்குகொண்ட பணியாளர்களாகிய வெள்ளை யரோ வென்றால், ஆட்சியையும் பணித் துiறையையும் உழைப்புக்கும் பொறுப்புக்கும் உரியவையாகக் கருதவில்லை கொள்ளையடிக்கும் உரிமைக்கும் சூழ்ச்சித் திறமைக்கும் உரியவையாகவே நினைத்தனர். அவர்கள் நாட்டுமக்களை நாட்டு மக்களாகவே கருதவில்லை. தாம் விரும்பும் பொருளும் பிற சாதனங்களும் நிறைந்த ஒரு வேட்டைக் காடாகவே அவர்கள் கருதினர். ஆக்டேவ் மூரட் ஸெனகாலில் நேர்மையாக ஆட்சியும் நடத்தி ஒழுங்கான முறையில் பொருளும் ஈட்டிப் புகழுடனும் செல்வத்துடனும் பாரிஸுக்கு மீண்டும் சென்று லாரைனைப் பெறவே விரும்பினேன். நல்லாட்சி மக்கள் நல்வாழ்வுக்கு மட்டுமின்றித் தன் நல்வாழ்வுக்கும் உதவும் என்று அவன் எண்ணினான். இவ்வகையில் ஸெனகல் அவனுக்கு ஒரு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. வெள்ளையர் கொள்ளையடிப்பதையும் கைக்கூலி முதலியன பெறுவதையும் அவன் கண்டித்தடக்க முயன்றதினால், அவர்கள் வெறுப்பையும் கசப்பையுமே பரிசாகப் பெற்றான். அதே சமயம் அவன் திறமை கண்டு அவர்கள் அஞ்சவும் செய்தனர். அவனிடம் அவர்கள் குறை கூறுவதற்கும் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. பிறரை வேலை ஏவியதை விட அவன்தானே பன்மடங்கு கடுமையான உழைப்பு உழைத்தான். ஆனாலும் இந் நல்லாட்சியாலும் உழைப்பாலும் எவரது நன்றிக்கும் அவன் உரியவனாகவும் இல்லை. ஏமாறாத இடத்தில் ஏமாற்றுவது, அஞ்சாத இடத்தில் அச்சுறுத்துவது என்ற முறையிலேயே ஆபிரிக்கக் கறுப்பர் பழகி ஊறிப் போயிருந்தனர். ஆகவே, வெள்ளையர் அஞ்சி உள்ளத்தில் பொய்மையுடன் நடந்து கொண்டது போலவே அவர்களும் நன்றியற்றவராய், வேண்டா வெறுப்புடன் உழைத்தனர். நாட்டின் பழைய அரசர் மரபினரும் கோமக்களும் மூரட்டின் நற்பண்பைப் புகழ்ந்தனர். முன் எல்லாரும் துன்புறுத்திப் பரிசு வாங்கியது போல் வாங்காமல், நல்ல விலையுயர்ந்த பரிசுகளை அவன் அவர்களுக்கு வழங்கினான். அவர்கள் அதைப் பெற்றுப் புகழ்ந்தனர். ஆனால், அவர்களும் ஏமாறிய இடத்தில் ஏமாற்றியதாகக் கருதினரேயன்றி இம்மியும் மனமாறுதல் அடையவில்லை. பொறாமையுடன் பணியாட்களினால் ஸெனகலடைந்த சில நாட்களில் மூரட்டின் படை வீடு எரியூட்டப்பட்டது. தீயணைப்பில் எவரும் முந்தி மூரட்டே நேரில் சென்று உழைத்தான். அதனால் கால்கள் நெருப்புக் காயங்களால் கொப்புளித்தன. ஆட்சியாளருக்கு உரிய அறைகள் கூட சிறைக்கூடங்களைவிட மோசமாயிருந்தன. அவற்றைக் கட்டும் போதே பணியாட்கள் எல்லாப் பொருள்களையும் தமக்கெனக் கொண்டு செத்தைகளை வைத்துக் கடனைக் கழித்தனர். பெருக்கித் தீட்டும் வேலையிலீடுபட்ட கறுப்பர்கள் அரைகுறையாக வேலை செய்ததால் எங்கும் அழுக்கும் முடை நாற்றமும் மிகுந்திருந்தன. இச்சூழல்கள் மூரட்டுக்கு ஒத்துப் போகாததால் அவனுக்குத் தலையிடியும் காய்ச்சலும் மாறாத தோழர்களாயின. இத்தனை இன்னல்களிடையிலும் எப்படியாவது சீரமைப்பை ஏற்படுத்தி வெற்றி பெறலாம் என்று அதன்பின் தன் தனி வாழ்வையும் உயர்த்தி விடலாம் என்று ஆக்டேவ் மூரட் மனப்பால் குடித்து வந்தான். லாரைனுக்கும், லாரைனுடன் தற்போது நெருங்கிப் பழகிய அரசிக்கும் பிற நண்பர்களுக்கும் அவன் ஆபிரிக்காவின் அரும் பொருள்களைச் சேகரித்து அனுப்பினான். லாரைனின் பரிசு ஆபிரிக்காவின் தலைசிறந்த கிளியினவகையாகிய பொன்னிறக்கிளி ஒன்று. அகஸ்டிக்குச் செவந்த தலையுடைய ஒரு பச்சைக்கிளி. அரசிக்கு ஒரு பாடும் பூவை. அது ஸெனகல் மொழியிலும் ஃபிரஞ்சு மொழியிலும் அரசின் புகழ் பாடும்படி பழக்கப்பட்டிருந்தது. இப்பரிசுகள் நண்பர்களை மகிழ்வித்தன. ஆனால், ஃபிரான்சின் தட்பவெப்பச் சூழலில் அவை விரைவில் இறந்துபட்டன. லாரைன் நீங்கலாக மற்றவர்கள் அப்பரிசுகளை மறந்தே விட்டனர். மூரட்டின் பிரிவுத் துன்பத்தில் ஒருசில மாதங்களே அவன் கனவுகள் ஆறுதலளித்தன. தன் கனவுகள் ஆபிரிக்க மண்ணில் என்றும் நிறைவேறப்போவதில்லை என்பதை அவன் சில நாட்களில் உணர்ந்து கொண்டான். அவன் கடிதங்கள் இதனை ஓரளவு குறிப்பிட்டனவாயினும் வெளிப்படையாக அவன் இம்முடிவைக் குறிக்கவில்லை. புகுந்தது புகுந்தாய் விட்டது. எப்படியும் கடமைகளை முழுவதும் முற்றுவித்து மீள்வதென்ற உறுதியுடனேயே அவன் இராப்பகல் ஓயாது உழைத்தான். பிரிவு இருவருக்கும் தாங்கொணாத் துயராகவே இருந்தது. ஆனால், லாரைன் மட்டும்தான் அதன் தாக்குதலில் முற்றிலும் தன் செயலிழந்து மறுகினாள். உழைப்பிலும் கடிதங்கள் எழுதுவதிலும் ஆக்டேவ் தன் நேரத்தைப் போக்கினான். அவன் உள்ளார்ந்த ஆண்மையும் எக்களிப்பும் துன்பத்திடையேயும் அவன் உள்ளத்துக்கு ஊக்கம் தந்தன. அவன் மனமுறிவுறவில்லை. ஆனால், லாரைனோ ஒரே துன்பப் பாலைவனத்தில் துவண்டாள். காதல் வாழ்வு இத்தகைய பாலை வாழ்வாயிருந்த தென்றால், மற்ற குடும்பவாழ்வோ அப்பாலைவனத்தில் எழும் புயல்களாகவே இருந்தன. மூரட்டின் இன்றியமையாமையைக் காதலுள்ளம் எவ்வளவு உணர்ந்ததோ அவ்வளவு அவள் குடும்ப வாழ்வும் பட்டுணர்ந்தது. ஆனால், அவன் தன் உள்ள உணர்ச்சிகளையும் முற்றிலும் அவளுக்கு எழுதவில்லை. தன் துன்பங்களையும் அவள் மீது சுமத்த அவன் விரும்பவில்லை. ஆபிரிக்காவிலிருந்து மீண்டபோது மூரட் வெறுங் கையனாகத்தான் மீண்டான். வரும்போது கப்பல் உடைந்ததால், உடுத்த உடை தவிர எல்லாம் இழந்தான். ஆபிரிக்காவை வேண்டியவர்களுக்குத் தரும் பரிசாகவே நினைத்த அரசாங்கமும் வேறாளனுப்புவதைத் தவிர எதிலும் அக்கறை காட்டவில்லை. பாரிஸிலுள்ள ஒரு உறவினருக்கெழுதியே மூரட் லாரைனை வந்து காண போதிய உடையணி வாய்ப்பைப் பெற முடிந்தது. இந்நீண்ட காலப் பிரிவு இருவர் வாழ்விலும் பல ஆண்டுகளைக் கொண்டது. இளமையைவிட்டு இருவரும் இன்னும் நீண்ட தொலை சென்று விட்டனர். லாரைனுக்கு இம்மாறுதலை அவள் பிள்ளைகளின் வளர்ச்சி நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டின. ஆனால், மூரட்டிடம் அதன் தாக்குதல் வயது ஒன்று தவிர வேறு எவ்வகையிலும் இல்லை. அவன் காதற் கடிதங்கள் அவன் காதல் வாழ்வின் துடிப்பையும் ஆர்வத்தையுமே காட்டின. 33. லாரைனின் குடும்பத் துயர்கள் பிரிவால் தடைபட்டு லாரைனின் காதல் மாறாமல் அப்படியே நின்றது. ஆனால், அவர்கள் பிள்ளைகள் வாழ்வு மாறாத அக்காதலரின் முன் மிக விரைந்து மாறி வந்தன. மூரட் அடிலிக்கும் அகஸ்டிக்கும் ஓர் ஒப்பற்ற தந்தையாகவும், விளையாட்டுத் தோழனாகவும் ஆசிரியனாகவும் இருந்திருந்தான். அவன் உதவியின்றி அவர்களைக் கவனிக்கும் வேலை லாரைனுக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. ஆயினும், அவர்கள் முற்போக்கில் அவள் கவனம் செலுத்தியும் அவர்கள் வளர்ச்சியில் இன்புற்றுமே வந்தாள். அடிலி, தாயை உரித்து வைத்தாற் போன்ற அழகுடன் விளங்கினாள். அதே சமயம் அவள் துடிதுடிப்பும் குறுகுறுப்பும் எல்லாரையும் கவர்ந்தன. ஆனால், அவளை அடக்கியாள்வது லாரைனுக்கு அரும் பாடாகவே இருந்தது. அகஸ்டியோ அவளைவிட அடக்கமும் அமைதியும் உடையவனாக இருந்தான். ஆனால், அவன் அறிவு விரைந்து வளர்ச்சியுற்றது. அரண்மனையில் இருவரும் நடித்ததிலிருந்து அவர்களுக்கு நடிப்பில் இயற்கை ஆர்வமும் திறமும் இருக்கிறது என்று கண்டு கொண்ட லாரைன் அவற்றை ஒரு நடிகையின் உதவியால் மேம்படுத்தினாள். இருவரும் பள்ளிப்பருவம் கடந்தபின் உயர்தரக் கல்விச் சாலைக்குச் செல்லாமலே கற்கும்படி திருத்தந்தை பெர்னார்டு என்பவரை அவர்களின் வீட்டாசிரியராக அமர்த்தினார். மூரட் ஆபிரிக்காவிலிருந்த காலத்தின் பெரும் பகுதியிலும் அவரே வளரும் பிள்ளைகளாகிய அவர்கள் கல்வியின் முழுப் பொறுப்பையும் ஏற்றிருந்தார். எட்டாண்டுகளாக நீடித்து இப்பணி செய்த பின் அவர் கிட்டதட்ட அவர்கள் குடும்பத்துடன் குடும்பத்தின் ஒருவராகக் கருதப்பட்டு வந்தார். ஆனால், இந்நிலை நீடிக்கவில்லை. அவர் லாரைனின் தாய்மை வாழ்வில் ஒருபெரும் புயலை உண்டுபண்ணி அகன்றார். மூரட் போன்ற ஒரு தோழமையில்லாக் குறையை அது அவளுக்கு எடுத்துக் காட்டியது. ஆசிரியர் பெர்னார்ட் வந்தது முதல் பிள்ளைகளை அவர் பெரும்பாலும் அவர் பொறுப்பிலும் பணிப்பெண் டார்னாட் பொறுப்பிலும் விட்டுவிட்டதால், அவர்களிடையே ஏற்பட்டு வரும் மாறுதலை அவள் கவனிக்க முடியவில்லை; அவளை உள்ளூர வாட்டிவந்த காதல் பிரிவுத் துன்பமும் இங்ஙனம் கவனிக்கும் சூழ்நிலையை உண்டுபண்ணவில்லை. பிள்ளைகளுக்கும் தனக்கும் இடையே சிறிது சிறிதாக ஒரு திரையிடப்பட்டு அவர்கள் பிரிக்கப் படுவதையும் அவள் காணவில்லை. எனினும் நாளடைவில் சில சிறு செய்திகள் அவள் உள்ள அமைதியைக் குலைக்கத் தொடங்கின. ஒருநாள் லாரைன் தன் பெட்டி வண்டியில் ஏறி வெளியே போய்க் கொண்டிருந்தாள். வழியில் ஒரு தோட்டத்தினருகே ஒரு குத்துக்கல்மீது அகஸ்டி உட்கார்ந்து கொண்டிருப்பது கண்டு அவள் திடுக்கிட்டாள். அணுகிக் கேட்டபோது அவள் ஆசிரியர் தன்னை அங்கே இருக்கச் சொல்லிப் போயிருப்பதாகவும் விரைவில் வந்து விடுவார் என்றும் கூறினான். “அப்படியானால் நானும் அவர் வரும்வரை இருந்து போகிறேன்.” என்று தாய் கூறியதும் சிறுவன் அடைந்த கலவரத்தை அவள் கவனித்தாள். ஆசிரியர் வந்ததும் “இப்படிச் சிறு பிள்ளைகளைத் தனியே விட்டுப் போகும் வழக்கத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டாள். அவர் முனகிக் கொண்டு “உடம்புக்கு நலமில்லை” என்பது போன்ற நொண்டிச் சாக்குகள் கூறினார். ஒருநாள் விடியற்காலையில் லாரைன் படுக்கையிலிருந்து எழாமல் விழித்துக் கொண்டே கிடந்தாள். பிள்ளைகள் இரண்டும் வந்து நின்றிருந்தன. அவர்களைக் கண்டதும் ஆவலுடன் கைகளை விரித்து அவள் அழைத்தாள். ஆனால், அவர்கள் வர அஞ்சியவர்கள் போல நின்றார்கள். ‘ஏன் வராமலிருக்கிறீர்கள், அம்மாவிடம் வர என்ன அச்சம்?’ என்று கேட்டபோது அவர்கள் அழுதனர். இயற்கைக்கு மாறான இந்நிகழ்ச்சி லாரைனின் தாயுள்ளத்தை உறுத்தியது. குழந்தைகளைத் தான் நெடுநாளாக நேரிடையாகக் கவனிப்பதில்லை என்பதும், மூரட்டைப் போலத் தன்னினும் இனிய ஒருவர் அவர்களுக்கு இல்லை என்பதும் அப்போதுதான் அவளுக்குப் பளிச்சென்று புலப்பட்டது. அவர்கள் உடல் பொதுவாக அழுக்கடைந்திருப்பதும். அவர்கள் உடைகள் பழையனவாய்க் கந்தலடைந்திருப்பதையும் கூட அவள் கண்கள் அப்போதுதான் கண்டன. அவள் உடனே மணியை அடித்து டார்னாடை அழைத்தாள். பணியாட்களுக்கு ஆணைகளிட்டும் நெடு நாளாகியிருந்தது. இப் புதிய மரபை டார்னார்டு மதிக்கவோ விரும்பவோ இல்லை என்பதை அவள் வருவதில் காட்டிய தாமதமும் வரும்போது முணுமுணுத்ததும் எரிந்து விழுந்ததும் நன்கு காட்டின. அத்துடன் லாரைனின் முதல் கேள்வியே அவள் குடும்ப நிலையை முழுவதும் அம்பலப்படுத்தத் தக்க தாயிருந்தது. அன்று காலைதான் லாரைன் அடிலிக்காக ஒரு உடைதுன்னிக் கொடுத்திருந்தாள். அவன் பழைய உடையை மாற்றி அதைத் தானே உடுத்த எண்ணி அதைக் கொண்டு வரும்படி லாரைன் பணித்தாள். அது வண்ணானிடம் போயிருக்கிறது என்று கூறி டார்னார்டு தற்காலிகமாகத் தப்பித்துக் கொண்டாள். ஆனால், உண்மையில் அந்த உடையையும், பிள்ளைகளுக்காக லாரைன் கொடுத்த உடைகள், உணவுகள், சிற்றுண்டிகள், பணம் யாவுமே டார்னார்டின் பிள்ளைகளுக்கும் ஆசிரியருக்கும் தான் பயன்பட்டன. பிள்ளைகளை இருவரும் அடக்கி ஒடுக்கி அச்சுறுத்தி வைத்து லாரைனின் குடும்பப் பணத்தைக் கூட்டாகக் கொள்ளையடித்து வந்தனர். “அம்மாவிடம் எந்தச் செய்தியைக் கூறினாலும் உதை” என்று இருவரும் பிள்ளைகளை உறுக்கி வைத்திருந்தனர். இந்த அட்டூழிய ஆட்சிக்கு எட்டு ஆண்டுகளாகப் பிள்ளைகள் வாய் திறவாமல் ஆட்பட்டிருந்தனர். அவள் மனத்தில் படிப்படியாகப் பல ஐயங்கள் ஏற்பட்டன. ஆனால், அவள் ஐயங்களை யெல்லாம் கூளிகுறளிகளாக்கும்படி உண்மை கோரமான பெரும்பேயுருவில் ஒரு நாள் வெளிப்பட்டது. அவள் எதிர்பாராது வீட்டுக்குத் திரும்பி வந்தபோதெல்லாம் ஆசிரியர் பிள்ளைகளின் பயிற்சியில் ஈடுபடாததைக் கண்டாள். டார்னார்டும் தன் கடமைகள் எதுவும் செய்யாது எங்கோ சுற்றுவதும் தெரிந்தது. ஒரு நாள் எதிர்பாராத விதமாக அகஸ்டி ஒரு கடிதத்தைக் கையில் கொண்டு செல்வதை அவள் கண்டு விட்டாள். அவளைக் கண்டதும் சிறுவன் கடிதத்தை ஒளித்து வைப்பது அவள் ஐயத்தை இன்னும் பெருக்கியது. “கடிதம் யாருக்கு?” என்று கேட்டாள் அவள். சிறுவன் நடுங்கினான். ஒதுங்கி ஓடத் தலைப்பட்டான். நிலைமை பின்னும் பெருத்த கிலியூட்டிற்று. அவள் சிறுவனை எட்டிப் பிடித்துத் தன் அறைக்குள் கொண்டு சென்று அறைக் கதவை உள்ளிழுத்துப் பூட்டிவிட்டுக் “கடிதம் யார் கொடுத்தது?” என்று கேட்டாள். அவன் நடுங்கிக்கொண்டே ஆசிரியர் டார்னார்டுக்குக் கொடுக்கச் சொன்னதென்றும், அதை வேறு எவரிடமும் கொடுத்தால் தனக்குத் தண்டனை கிடைக்குமென்றும் கூறினான். கடிதம் துறவியாகிய ஆசிரியரால் தன் காதற் கிழத்தியாகிய டார்னார்டுக்கு எழுதப்பட்டிருந்தது. “அகஸ்டியையும் டார்னார்டின் கணவனையும் நஞ்சிட்டு விரைவில் கொன்று விடும்படி கூறி அதற்கான திட்டத்தை ஆசிரியர் அதில் விரித்திருந்தார். அதை வாசித்ததும் லாரைன், இடியுண்டவள் போலத் திடுக்கிட்டாள். அவள் மூளை கனவேகமாகச் சுழன்றது. அகஸ்டியை ஏன் கொல்ல வேண்டும்? ஆம்; இப்போது அவளுக்கு விளங்கிற்று. அது அவள் மடத்தனத்தின் பயம்தான் அகஸ்டியின் கல்வியை விரைவில் முற்றுவிப்பதற்காக அவள் ஒரு பெருந்தொகையை அவன் கல்விக்கென்று எழுதி வைத்து, கல்விப் பயிற்சிக்காலம் முடிவுற்றதும் அதை ஆசிரியர் பெற்றுக் கொள்ளலாம் என்று வரைந்திருந்தாள். அகஸ்டி கல்விப் பயிற்சிக் காலம் அவன் சாவினால் எளிதில் முடிந்துவிடும் என்று துறவியின் பேய் உள்ளம் திட்ட மிட்டிருக்க வேண்டும். ‘சட்டத்தின் பிடி எழுத்தின் வாசகத்தையே பற்றி நிற்கும்’ என்ற கோர உண்மையை அவள் கண்டாள்.” டார்னார்டின் கணவனைக் கொல்வதற்கான காரணத்தைத் தேடிப்பார்க்க வேண்டியதில்லை. கணவனைக் கொன்றாலே சட்டப்படி அவளை மணக்க முடியும். துறவி என்ற நிலையைப் பெயர் மாற்றத்தால் தகர்க்க திட்டமிட்டிருக்கலாம். தன்னைச் சூழ இருந்த இடம் அவளுக்கு விழிப்பும் எச்சரிக்கையும் ஊட்டிற்று. நிலைமை முற்றிவிட்டது. தலைக்கு மிஞ்சுமுன் விரைந்து செயலாற்ற அவள் விரைந்தாள். நம்பகமான வேலையாள் மூலம் காவல் நிலையத்துக்குக் குறிப்பு வரைந்தாள். காவல் துறையினர் வருவதற்குள் இருவரையும் தன்னறை வரும்படி ஆளனுப்பினாள். இருவரும் எச்சரிப்பின்றித் தனித்தனியாக வந்தனர். உள்ளே வந்தபின் இருபுறமும் காவலர் வந்து சேர்வது கண்டனர். காவலரிடம் கடிதம் ஒப்படைக்கப்பட்டது. காவலர் இட்டுச் செல்லும் போது ஆசிரியர் கண்களில் தீப்பொறி பறக்க லாரைனை உறுத்து நோக்கிச் சென்றார். ‘இனி இவள் நம் வாழ்நாள் எதிரி’ என்பதை அந்நோக்கு அவளுக்கு அச்சுறுத்திக் காட்டிற்று. நல்ல காலமாகச் சட்டத்தின் பிடி அவர்களை ஆறுமாதம் கடுங்காவலிலிட்டது. ஆறு மாதம் கழிந்தது. அவர்கள் வெளி வந்ததும் அவளுக்கெதிரான ஆழ்சதிகளில் ஈடுபட்டன. ஆனால், அவர்கள் சதி நெருப்புப் பற்றுமுன் மாபெருந்தீயாகிய ஃபிரெஞ்சுப் புரட்சி எழுந்தது. அதன் ஈர்ப்பிலும் சுழலிலும் துறவி பெர்னார்டின் பழிகளுக்கு வேறு வழிகள் ஏற்பட்டன. லாரைன், பிள்ளைகளிடமிருந்து படிப்படியாகக் கழிந்த எட்டாண்டுச் செய்திகளனைத்தும் கேட்டறிந்து பின்னும் திகில் கொண்டாள். பிள்ளைகளுக்காகத் தான் கொடுப்பதாக நினைத்த பண மட்டுமன்றி உணவும் உடையும் அவர்களுக்குப் போய்ச் சேராதது, தாயுடன் அன்புப் பாராட்டப்படாது, பேசப்படாது என்பதற்காக அவர்கள் அடித்தடக்கப்பட்டது; ஒருவர் மீது ஒருவர் ஒற்று வேலைக்கு ஏவப்பட்டது ஆகிய யாவும் வெளி வந்தன. எத்தகைய பெருங்கசத்தருகில் சென்று கொண்டி ருந்தோம் என்ற அதிர்ச்சி அவளைச் சில நாள் படுக்கையில் தள்ளியது. உடல் தேறுவதற்காக அவள் சிலநாள் வெளியே செல்ல எண்ணினாள். அப்போது அரசியல் சூழ்ச்சிகளின் காரணமாக மிகவும் அல்லற்பட்டு நாட்டுப்புறத்தில் ஒரு தனி இடத்தில் ஒதுங்கியிருந்த அரசி தன் கலைப்பண்ணைக்கு வரும்படி அழைத்தாள். அங்கே அவர்கள் இருக்கும்போதுதான் மூரட்டினிடமிருந்து கிளிகள் பரிசாக அனுப்பப்பட்டிருந்தன. அரசி மூரட் பற்றியும் மற்றச் செய்திகளையும் நலங்களைப் பற்றியும் கனிவுடன் உசாவி உரையாடினாள். ஆனால், அரசி இப்போது லாரைனின் நிலையைவிட மிகவும் உயர்நிலையிலில்லை. அரசவைச் செலவு மீதும் அவள் மீதும் ஏற்பட்ட தூற்றரை புரட்சிக்காற்றின் ஆற்றலால் புகைந்து அனன்று அழலாயெழத் தொடங்கியிருந்தது. அதன் முன்னறிகுறியாக அவள் முகத்தில் துயர்க் குறிகள் படர்ந்து நிழலாடின. 34. அடிலியின் திருமணம் ஸெனகலிலிருக்கும்போது மூரட் லாரைனைப் பற்றிய தன் எண்ணங்களையெல்லாம் கடிதங்கள் கொட்டி அதை, அவள் பார்வைக்கே அனுப்பி வந்திருந்தான். ஆனால் லாரைன் அவனுக்கு எழுதிய கடிதங்களில் தன் துயரம், தன் எண்ணங்களை முழுதும் கொட்டவில்லை. அதே சமயம் எழுத்தாளராகிய அவளால் எங்கேனும் அவற்றைக் கொட்டிப் பதிவு செய்யாமலும் இருக்க முடியவில்லை. பிரிவுகால நெருக்கடி தீர்ந்தபின் இருவரும் மீண்டும் பார்க்கும்படியான வடிவில் அவள் தன் நாட் குறிப்பில் அவற்றை நிழற்படம் பிடித்து வைத்தாள். அது ஒரு சோகக் காவியமாயினும் அதே சமயம் பெண்மையின் பொறுமை வீர காவியமாகவும் விளங்கிற்று. அதில் அவள் துயர்கள், அவற்றை அவ்வப்போது ஆற்றிய தன் ஆறுதல் எண்ணங்கள் ஆகியவை இடம் பெற்றன. ஸெனகலுக்கு மூரட் புறப்பட்ட காலமுதலுள்ள அவள் வாழ்வையும் எண்ணங்களையும் அவள் காதல் ஒழுக்கின் போக்குகளையும் அவை நிழற்படுத்தின. 1786 ஜூன் 16 : உங்களைக் குறித்தே, என் அருமைக் கணவனே, நான் நேற்று கனவு கண்டேன். நனவில் உங்களிடம் நான் பெரிதும் காணாத அமைதியைக் கனவில் உங்களிடம் இருக்கக் கண்டேன். ஆனால், நம் காதலுக்குக் குந்தகமாயிருந்த பேயுருவ மனிதர்கள் புற்றீசல்கள்போல வாயில்கள் வழியே உள் நுழைந்தனர். நீங்கள் மறைந்துவிட்டீர்கள். இன்று கோமகன் டார்ட்டாய் வீட்டு விருந்துக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள வாண வேடிக்கையில் ஆழ்ந்தேன். ஒளியண்டங்களை உள்ளடக்கிய ஒளி அண்டங்களுள் நானும் என் சிறு உலகும் அடங்கிக் கிடந்ததாக எனக்குத் தோன்றியது. இவ்வளவு பெரிய அகிலாண்டத்துள் ஒரு சிறிது உலகில் வாழும் சிறியவளாகிய நான் விரும்பியபடி எதுவும் ஏன் நடிக்கவில்லை என்பதை இப்போது அறிந்து அமைதியுற்றேன். ஜூன் 19: நான் இப்போது தனியே இருக்கிறேன் தனியே இருக்கிறேன் என்று கூறுவதைவிட என் நண்பருடனும் அவர் நினைவுகளுடனும் ஊடாடுகிறேன் என்று கூறலாம். நினைவுகளில் சில துயர் நினைவுகள் கறுப்புடையில் தோன்றின. ஆனால், சில இன்ப நினைவுகள். அவை நீலம், சிகப்பு, வெள்ளை முதலிய பன்னிறங்களில் ஊடாடின. உங்களைக் காதலிக்கும்போது அக்காதலின் தன்மையை அறியாது காதலித்துவிட்டேன். அது இவ்வளவு இடர் நிறைந்ததென்று தெரிந்திருந்தால், அதை உள்ளத்தின் வாயில் கடவாமல் தடுத்திருப்பேன். ஜூன் 23: தோட்டத்தில் உலவும் ஆவிபோலப் பகலின் ஒரு பகுதியை நிழல்களுடன் நிழலாகக் கழிக்கிறேன் - அந்நிலையிலும் என்னினும் உருவற்ற நிழல் ஒன்று என்னைத் தொடர்வதாகத் தெரிகிறது. ஏனெனில், அடிக்கடி யாரோ காலூன்றிப் பின்னாடிவரும் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறேன். எட்டு மாதங்களுக்கு முன் காதுகளில் தோய்ந்துவிட்ட உணர்ச்சி இன்னும் விட்டபாடில்லை. ஜூன் 28: முதல்நாள் உங்களைக் கண்டபோது கொண்ட உணர்ச்சியையே இன்றுகூடக் கொள்கிறேன். என்றும் இந்நிலைதான் என்றே எண்ணுகிறேன். ஏனெனில், நீங்கள் என் உயிர். உயிரில்லாது உடலிருக்க முடியாததுபோல் உங்களை நினைக்காமல் நான் இருக்க முடிவதில்லை. உயிர் விட்டுப்போக விரையும்போதும் உடல்தானே துடிக்கிறது! ஆகஸ்டு 17: நீங்கள் சிறிது ஓய்வுபெறத் திரும்பி வருவதுகேட்டு உவகை கொள்கிறேன். என் கருத்துகளெல்லாம் இந்தப் புது மகிழ்ச்சியில் குலைகின்றன. என் அங்கமெலாம் நடுங்குகின்றது - உன் வரவு ஒன்று தவிர எதுவும் பார்க்காது கண் குருடாய், அது தவிர ஒன்றும் கேட்காது காது செவிடாய் இயங்குகின்றன. இச்சிறு சந்திப்பு உறங்கும் துயரைத் தட்டி எழுப்பியதன்றி வேறல்ல. அடுத்த நாட்குறிப்புப் பகுதி இதைக் காட்டுகிறது. 1787 ஜனவரி 22: என் நெஞ்சில் காதலின் இடத்தில் காலன் வந்திருப்பது போல இருக்கிறது. பகலெல்லாம் வேதனை, இரவெல்லாம் துயரம். பிரிவின் போது பட்ட துயரம் தேவலை; இந்த நீடித்தமைந்த துயர் தாங்க முடியவில்லை. இவ்வுயிரைப் போக்கிவிட முடியுமானால் ஆறுதலாகத் தான் இருக்கும்! மே 7: ஏனிஸியை விட்டுச் செல்கிறேன் - சிறிதும் வருத்த மின்றி. அங்கே உங்களைப் பற்றிய எண்ணம் என் பிரிவுத் துன்பத்தை எண்ணெயிட்டு வளர்க்கிறது. மாவட்டத் தலை மகனிடம் என் மற்றப் பொருள்களை எல்லாம் ஒப்படைத்து விட்டேன். அவரிடமிருந்து புது மாற்றுப் பொருள்களும் பெற்றுக் கொண்டேன். இதுவும் உங்கள் பற்றிய நினைவுறுத்துகளை விலக்குவதற்காக முதலில் நீங்கள் இருந்த அறைக்கு அடுத்த அறை எனக்குக் கொடுக்கப்பட்டது. இதுவும் தொல்லையாகத்தான் இருந்தது. நயமாகப் பேசி தலைமகனையே அந்த அறைக்கு வருவித்து நான் அவன் அறைக்குச் சென்றுவிட்டேன். இப்போது எனக்குச் சிறிது அமைதி ஏற்படக்கூடும். காலம் என்னை மாற்றிவருகிறது. என் குணம்கூட மாறி வருகிறது. எவரிடமும் வெறுப்பும் கசப்பும் மிகுந்து வருகின்றன. என்னை நானே அறிய முடியவில்லை. நீங்கள் திரும்பி வரும் போது நான் எப்படியிருப்பேனோ, உங்களால் அறியக்கூடுமோ என்னவோ? மே 15: பகலெல்லாம் நான் பிள்ளைகளுடன் உலவுகிறேன். அடிலி வளர்ந்துவிட்டாள். நான் நள்ளிரவிலேயே குளிக்கிறேன். குளித்தபின்தான் இந்நாட் குறிப்பை எழுதுகிறேன். பகல் நேரத்தில் பிள்ளைகளிடமிருந்து பிரியாதிருக்கவும் இரவுப் பொழுதை எளிதில் போக்கவும் இது உதவுகிறது. மே 19: பழைய நாள் திரும்பி வரும் என்ற நம்பிக்கை எனக்குக் குறைந்து வருகிறது. ஆனால், இது என் குற்றமன்று, உங்கள் குற்றம். இதுவே என் ஆறுதல். பழைய நாளை நீங்கள் பறிக்கலாம் - அந்த எண்ணங்கள் மட்டும் எப்படியும் எனதுதான். மே 29: நீங்கள் அனுப்பிய பரிசுகள் பெற்றேன். தங்களைப் பற்றியே நண்பர் பேசினர். இன்றும் அவ்வின்பத்தை நீடிக்க எண்ணி அவரை இங்கேயே தங்கி விருந்தினராயிருக்க அழைத்தேன். உங்கள் உடல் நிலையை அவர் அறிவித்து எனக்குச் சிறிது வருத்தமும் தந்தார். ஜூலை 5: கொச்சின் சீனாவிலிருந்து வந்த அரசிளங்கோ பெருங்குறும்பர். உங்கள் பரிசுக் கிளிகளைக் கூண்டிலிருந்து திறந்து விட்டுவிட்டார். ஆயினும் புதிய பரிசுகள்தாம் உங்களைப் போல ஓடின. என் பழைய கிளிகள் கூண்டு திறந்ததும் உள்ளேயே இருந்துவிட்டன. அவை பெண்களினத்துக்குரியவை போலும்! இம்மாதத்தில் அடிலிக்கும் அர்மாண்ட் டிகஸ்டின் என்ற இளைஞருக்கும் மண ஒப்பந்தம் ஏற்பட்டது. காதலர் இன்பப் பொழுது போக்கை நாடி லாரைன் தன் குழந்தைகளுடன் அருகாமையிலுள்ள ‘மென்டன்’ என்ற இடத்துக்குச் சென்றனர். பின் மீட்டும் ஏனிஸி வந்தபின் மணவாழ்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. மணவிழாவைப்பற்றி லாரைன் மணநாளாகிய ஜூலை 31- நாட் குறிப்பில் தன் எண்ணங்களைத் தீட்டிக் காட்டினாள். தன் குடும்ப நிகழ்ச்சியைக் கூடக் கலைத் திறம்பட எழுதும் லாரைனின் எழுத்தாளர் திறமை இக்குறிப்பில் விளங்குகிறது. ஜூலை 31: மணமகன் பாரிஸிலிருந்து புறப்படும் போதே அவருக்கு ஒரு பல்லில் நோவு தொடங்கிற்று. சொத்தையான பல்லைப் பிடுங்காமல் மண விழாவுக்குப் புறப்படமாட்டேன் என்று அவர் பிடிவாதம் செய்தார். மணவிழா மகிழ்ச்சியும் காதலும்கூட நோவைத் தடை செய்ய முடியாதென்றும், மண விழாவின்போது நோவு இருந்தால் மணவிழாவை நினைக்கும் போதெல்லாம் நோவும் அவ்வெண்ணத்துடன் கலந்து திரும்பும் என்றும் அவர் அழகாக வாதாடினார். ஆனால், பல் மருத்துவர் அவர் பல்லைப் பிடுங்கும்போது பல்லை மட்டுமின்றி அவர் உள்தாடையின் ஒரு சிறு கூறினையும் சேர்த்துப் பிய்த்தெடுத்து விட்டார்... நான் அவர்களுக்குக் காலையுண்டி அளித்தேன். ஆனால், உண்டியைவிட அவர்களுக்கு ஓய்வே மிகவும் தேவையாயிருந்தது. அனைவரும் படுக்கைக்குச் சென்றபின், நான் எனக்கு இந்நிகழ்ச்சியால் ஏற்பட்ட திடீரதிர்ச்சியினின்று சமநிலையமைதி பெறுவதற்காக நான் என் அறைக்குச் சென்றேன். ஏழை அடிலி என் நிலையினும் மோசமாகவே இருந்தாள். அச்சம் அவள் உள்ளத்தை மட்டுமின்றி உடலையும் வாட்டியது. இரவெல்லாம் அவளை நான் என் படுக்கையிலிட்டுப் போர்த்திக் குளிர் வராமல் பாதுகாத்தேன். அவளும் ஒரு சிறிதுகூடக் கண்ணயரவில்லை; நானும் அப்படியே. அவளுடைய புதிய மாறுதல் நிலைபற்றி நான் அவளுக்கு எதுவும் அறிவிக்காமலிருந்து விட்டேன். ஆயினும் அதனால் அதிர்ச்சி ஏற்படாத வகையில் எல்லாம் ஒழுங்கமைக்கவே எண்ணியிருந்தேன். ஆனால், தன்னையறியாமல் வரும் இப்புது நிலைப் பற்றி அவள் இது காரணமாகவே இரட்டிப்புத் திகில் கொள்ளும்படியாயிற்று. புதுவரவு நான் எதிர்பாரா வகையில் அவள் அமைதி முற்றிலும் குலைத்தது. மூன்றுமணி நேரம் இருவரும் இந்நிலையில் படுக்கை யிலிருந்தோம். இருவரும் எழுந்திருக்க வேண்டும் என்ற சிந்தையே யில்லாமல்தான் இருந்தோம். ஆனால், இறுதியில் கடிகாரத்தின் பக்கம் என்கண் திரும்பிற்று. ஒரு மணிக்குத் திருமணம். இப்போது இதற்குள்ளாகவே மணி பதினொன்றாயிற்று. இரண்டு மணி நேரத்துக்குள் அவள் உடுத்தி அழகு ஒப்பனை செய்தாக வேண்டும். அவள் வருங்காலக் கணவனின் முதல்நாள் காட்சியின் முழுப் பயனை அப்போதுதான் அவள் அடைய முடியும். ஒரு மணிக்கு எல்லாம் சட்டமாயிற்று. மிகுந்தபெருமிதத் துடனும் ஆழ்ந்த அமைதியுடனும் முறைப்படி மண உலாவுக்குப் புறப்பட்டோம். அடிலியை கைப்பிடித்து நான் முன்னும், மணமகனைக் கைப்பற்றிக் கொண்டு அவர் தந்தை பின்னும் சென்றோம். மணமேடையின் முன் என் மகளை விட்டுப் பின்னடைந்தபோது என் நெஞ்சு துடியாய் துடித்தது. ‘ஆம்’ என்ற அந்த நிறை முதன்மையுடைய சிறிய சொல்லை, ஒரு தடவை வாய்விட்டுரைத்த பின் மீட்கமுடியாத அப்பெருந்திறச் சொல்லை, எவ்வளவு கழிவிரக்கம் கொண்டாலும் பயன் ஏற்றுத் தீரவேண்டிய அவ்வலிவு சான்ற சொல்லை அவள் வாய் ஒலித்த போது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சியைவிட உண்மையில் நான் அதே சொல்லைச் சொல்லிய போதுள்ள உணர்ச்சி மிகமிகக் குறைவே. ஆயினும் என்னதினும் இச்சொல் இங்கு எவ்வளவு மேம்பட்டது! நான் முதுமை வாய்ந்த, ஒரு நோய்ப்பட்ட மணமகனைக் கட்டிக் கொண்டு, அவருக்குப் பெரும்பாலும் மனைவியாயிருப் பதினும் நோய் மருத்துவர் ஆகவே இருந்து வந்தேன். அவளோ அழகும் குணமும் வாய்ந்த நல்லிளைஞனை மணக்கிறாள். அன்று நான் அம்மணவிழாவின் விளைவுகள் குறித்துச் சிந்திக்கவே யில்லை; என் கண்களுக்கு, எல்லாவற்றையும் எல்லாரையும் ஒருங்கே நேசித்த என் கண்களுக்கு அன்று எல்லாமே ஒரே தன்மையாக நல்லனவாகத் தான் தென்பட்டன. அன்று காதல் என்பது இன்னது என்பதை மட்டுமே நான் அறியாதவளாயிருந்த தினால் நான் என் வயது சென்ற கணவனை என் தந்தையையும் பாட்டனையும் நேசித்த அதே முறையிலேயே நேசித்தேன். காதலினும் மெல்லிய இப்பிஞ்சு உணர்ச்சி அன்று என் உள்ளத்துக்கு நிறைவளித்தது. ஆனால், காலம் என்னை வஞ்சித்து விட்டது. அதுமட்டுமின்று, இன்பத்தின் மீதுள்ள நம்பிக்கையையும் அது அழித்து விட்டது. ஆகவேதான் மகளின் மணவினையின் போதெல்லாம் என் கண் ஆறாத நீர் ஒழுக்கிற்று. அச்சமயம் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என் உணர்ச்சிகள் என்னை மீறின. நான் வசமிழந்தேன். என் அடிலியின் கண் கலங்கவில்லை. ஆனால், அவள் முகம் மெலிவால் நீண்டு காணப்பட்டது. அவள் கணவன் தோற்றமும் இன்பத்தில் உறுதியுற்றதாகக் காணப்படவில்லை. தலைமகனார் அறிவும் உணர்ச்சியும் வாய்ந்த நல்லுரை யாற்றினார். அனைவர் உள்ளங்களும் கனிவுற்றன. மணமக்கள் மேற் கவிகையை அகஸ்டியே தாங்கினான். ஆனால், அவன் உயரம் பற்றாததால், அவன் ஒரு உயரிய நாற்காலிமீது நிறுத்தப் பட்டிருந்தான்! அதன்மீது அவன் நின்ற தோற்றம் இயேசு பிறப்புப் பற்றி அறிவிப்பதாகப் படங்களில் காணப்படும் அறமைந்தருள் ஒருவன் தோற்றத்தை நினைவூட்டுவதாக இருந்தது. விழா வினை முடிந்ததும் முன்போலவே ஊர்க்கோலமாக மீண்டோம் - ஆனால், இப்போது என் புதல்வியை மணமகன் தந்தையாகிய டிகண்டினும், மணமகனை நானும் பற்றிக் கொண்டு சென்றோம். முன்னிருந்த அதே அமைதி நிலவியிருந்தது. மாளிகைக் கூடத்தில் எங்களுக்காகச் சிற்றுண்டி காத்துக் கொண்டிருந்தது. சிற்றுண்டிக்குப்பின் நாங்கள் தோட்டத்தில் உலாவச் சென்றோம். ஆங்கே ஊர்த்தலைவன் ஆயர் ஆய்ச்சியர் படைசூழ மணமக்களைப் பாராட்ட வந்தனர். ஆயர் ஆய்ச்சியராக நடித்த ஒவ்வொருவரும் ஒரு காதற் பாடலின் இரண்டிரண்டடி ஒவ்வொருவராகப் பாடினர். பின் நாட்டுப்புற இசைக் கருவிகளுடன் களங்கமற்ற நாட்டு ஆடல்களில் நாங்கள் கலந்து கொண்டோம். ஆடலில் டிகண்டினுடன் நான் ஆட்டத்தைத் தொடங்கி வைத்தேன். என் குழந்தைகளுடன் நான் அன்று ஆடிய ஆட்டத்தினும் மகிழ்ச்சியுடன் நான் என்றும் ஆடியதில்லை என்று உறுதியாகக் கூறலாம். ஆடல் பாடல்கள் நாள்முழுதும் நடைபெற்றன. நாங்கள் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாயிற்று. பாட்டுகள் நாட்டுப்புறக் கவிஞரால் கட்டப்பட்டவை. அவற்றுள் குறிப்பிடத் தகுந்த ஒன்று, தச்சனால் இயற்றப்பட்டிருந்தது. அத்தச்சன் ஆதாமின் நேர்மரபில் வந்தவன் என்று கூறத் தடையில்லை! பாட்டின் வகைக்கு அவன் ஏதோ ஒரு பெயர் குறித்திருந்தான். ஆனால், அவன் அதை எழுதிய தாள் இருபது புத்தகத்தாளை அடக்குவது. அதில் அவன் நாலு பக்கங்கள் தான் எழுதியிருந்தான்! அடேயப்பா! அந்தப் பாடலுக்கு முடிவு என்று ஒன்று இருக்குமா என்று நாங்கள் நீண்ட நேரம் ஐயுறவு கொண்டோம். இந்த நிலையில் நாங்கள் நன்கு கேட்கும்படி அவன் ஒரு நாற்காலியின் மேல் நின்று கொண்டு கால் புள்ளி முற்றுப்புள்ளி விடாமல் நிறுத்தி வாசித்தான். ஆடி ஓய்ந்த பின் சிறிது நாட்டுப்புற விளையாட்டு விளையாடினோம். அதன் பின் தலைமகனார் எட்டுமணிக்கு விருந்தளித்தார். தலைமகனார் விருந்து வழக்கம் போலவே முழு நிறைவுடையதாயிருந்தது. விருந்து நெடுநேரம் நடந்தது. அதன் பின்னும் விளையாட்டு அதன் பின் எங்கள் இரவு - மணமக்கள் புது விடியல் போது, மணமகளை மன்றற் படுக்கைக்கு அழைத்துச் செல்லும் போது மணமகளுக்கிருந்த நடுக்கமும் மலைப்பும் கிட்டத்தட்ட எனக்கும் இருந்தது. வயது மிகுதியாயினும் கூட இன்றைய நிகழ்ச்சிகள் இன்னும் மிகப்பல - அவற்றைத் தெரிவிக்கும் இடம் இதுவன்று - என் மூரட்டுடன் தனி வண்டையிருந்து அவனைச் சிரிக்க வைத்து மணிக் கணக்கில் வருணிக்க வேண்டிய சிறுகாட்சிகள் உண்டு. ஆனால் அவற்றுள் ஒன்று மணமகளுக்கு ஒரு சிறு தூண்டுதல் செய்யும்படி மணமகன் தந்தையை நான் தூண்ட நேர்ந்தது. அச்சமயம் எனக்கிருந்த அறைப்பு - என் வாழ்நாளில் அது போல் என்றும் இருந்ததில்லை - அதனால் சிவப்பேறிய முகம் இன்னும் சிவப்பு மாறவில்லை, இந்நிலையை என் மூரட் காண வேண்டும்! அடிலி திருமணத்துக்குப் பின்னும் இரண்டாண்டுகள் லாரைன் தன் வழக்கமான தனி வாழ்வு வாழ வேண்டியிருந்தது. அவளுக்கு இப்போதிருந்த ஒரே இன்பம் இளங் காதலருடனும் புதல்வனுடனும் விருந்து, உலா அயர்தம் மலை, ஆறு முதலிய இயற்கைக் காட்சிகளை அவர்களுடன் அனுபவிப்பது மேயாகும். அடிக்கடி அவள் நாட்டுப்புறக் குடும்பங்களைச் சென்று பார்வையிட்டு அவர்களுடன் தங்குவாள். நாட்டுப் புறக் குடும்பங்களின் அமைதி அவள் உள்ளத்துக்குத் தற்காலிகமாக வாவது முழு நிறைவளித்தது. இவற்றைப் பற்றி யெல்லாம் கடிதங்களிலும் நாட்குறிப்புகளிலும் எழுதும்போது, அவள் தன்னை இரு சொற்களால் குறிக்கத் தொடங்கினாள். இவற்றுள் ஒருசொல் சிறு வகைச்சொல் ஆயினும், கேலியுடனும் அகமகிழ்வுடனுமே எழுதப்பட்டது. இதுவே லாரைன் தன்னைக் குறிக்குமிடத்து ஆக்டேவ் மூரட்டின் காமக்கிழத்தி என்று குறிக்கும் இடங்கள் ஆகும். காமக்கிழத்தியரால் உலைவு பெறாத நிறை இன்பம் என நாட்டுப்புறக் குடும்ப வாழ்வு ஒன்றை அவள் குறிப்பிட்டாள். தன்னைக் குறிக்க அவள் வழங்கிய இன்னொரு சொல் ஒரு குற்றச் சாட்டாகவும் - அதே சமயம் அவள் பிரிவுத் துயரத்தை நன்கு சித்தரிப்பதாகவும் உள்ளது. அவள் பல கடிதங்களின் இறுதியிலும் போக்கிலும் தன்னை “உன் விதவை லாரைன்” என்று குறிக்கிறாள். உயிருடனிருந்தும் உடனிராத அவன் வன்கண்மையை இது நயத்துடன் எடுத்துக் காட்டுகிறது. அவள் துயரம், அவள் காதலார்வம், உள்ளத்தூய்மை, கற்பு உரம் ஆகிய யாவற்றையும் ஒரு கடிதம் படம் பிடித்துக் காட்டுகிறது. “உலகில் யாவும் நிலையற்றது - உங்களையும் உங்கள் காதலையும் தவிர ...கடவுளைத் தவிர என்றார் சாலமன். ஆனால் என் கடவுள் நீங்கள் ஒருவரே; வேறு எந்தக் கடவுளையும் நான் அறிந்து கொள்ளவில்லை. உங்களுக்காக நான் படும் துன்பத்தில் ஓராயிரம் பங்கு நான் எந்தக் கடவுளுக்குப் பட்டிருந்தாலும் அந்தக் கடவுளின் துறக்கமும் அந்தக் கடவுள் நெறியின் திருநிலைத் தகுதியும் எனக்கு முழுவதும் கிடைத்திருக்கும்... எனவே, நான் மிகவும் மோசமான கடவுளைத்தான் தேர்ந்தெடுத் திருக்கிறேன் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், என் கடவுள்தான் காரியவாதி, தான் தோன்றித் தனமுடையவர்; அன்பராகிய என் உள்ளத் தடத்தின் ஆழ்ந்த அன்புக் கனிவை உணராதவர். என் துயரை என் அன்பை அளக்கத் தக்க அளவுகோலாக அவர் துயரும் அன்பும் இல்லை. இத்தகைய அன்புக்கு எனக்குக் கிடைக்கும் கைம்மாறோ, ஆதரவும் ஆறுதலும் எப்போதும் மிக மிகத் தேவையோ அந்த நேரத்தில் கைவிடப்பட்டு, துறக்கப்பட்டு இருப்பதுதான்... ஆயினும் இவ்வளவறிந்தும் ஏதோ ஒரு ஆழ்ந்த இயற்கையான மடமைச் சக்தி என்னை ஆட்டிக் கொண்டி ருக்கிறது. வேறு எந்த நல்ல கடவுள் வேறு எந்த உலகும் பதவியும் இன்பமும் தருவதானால் கூட அவற்றை மறுத்து இக்கடவுள் தரும் துன்பங்களையே விருப்புடன் ஏற்பவளாயிருக்கிறேன்!” ஆக்டேவ் மூரட்டின் நீண்ட ஆபிரிக்க வாழ்வு 1788 இறுதியில் முடிவுற்றது. ‘போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே’ என்பது போல அவன் முன்னைய வறுமையை இன்னும் பெருக்கிக் கொண்டு முன்னிலும் வெறுங்கையனாய், கசப்புடையவனாய், ஆனால், முன்னிலும் ஆர்வமிக்கவனாய் வந்து சேர்ந்தான். ஆபிரிக்காவுக்குச் செல்லாமலிருந்திருந்தால், இந்த நீண்டகாலப் பிரிவும் அதன் துன்பங்களும் மிச்சமாயிருக்கும். அவன் அவா, ஆர்வம், ஆணவம், அவன் காதற் பணிவுக்குத் தண்டனை தந்து, அவன் காதல் வாழ்வையும் தடுத்து அவனையும் துன்பத்துக்காளாக்கியிருந்தது. 35. ஃபிரஞ்சுப் புரட்சி உலகில் புரட்சிகள் பல நிகழ்ந்துள்ளன. ஆனால் ஃபிரஞ்சுப் புரட்சி தனக்கு முன்னுள்ள எந்த நிகழ்ச்சிகளிலிருந்தும் தனக்குப் பின்னுள்ள எந்தப் புரட்சியிலிருந்தும் தனிப்பட்டே நிற்கிறது. ஏனெனில், அதுவே முதல் புரட்சி; ஆனால் புரட்சிகளின் தாய். அதற்கு முன்னைய நிகழ்ச்சிகள் எல்லாம் நாட்டுக்கு நாடு, கட்சிக்குக் கட்சி ஏற்பட்ட புரட்சிகள். ஃபிரஞ்சுப் புரட்சி எந்த நாட்டுக்கும் எந்தக் கட்சிக்கும் எவருக்கும் எதிராக நடைபெற வில்லை. அது ஃபிரஞ்சில் நடைபெற்றாலும், ஃபிரஞ்சுப் புரட்சி என்று நிகழ்ச்சியிடம் பற்றிப் பெயர் பெற்றாலும், உண்மையில் அது ஒரு உலகப் புரட்சியின் முதல் அலையே. தொடக்கத்தில் ஒரு கிளர்ச்சி போலத் தோன்றியிருக்கக் கூடும். ஆனால், அது கிளர்ச்சியன்று. ஏனெனில் கிளர்ச்சி செய்தவர் கிளர்ச்சிக்கு ஆட்பட்டு, பின் அவரும் அதே படியாக மறுகிளர்ச்சிக்கு ஆட்பட்டனர். புரட்சிக்காரர் யார், அவர்கள் எதிர்ப்புக்கு ஆளானவர் யார் என்பதை நிலவரமாக யாரும் அறிய முடிய வில்லை. ஒரு நாளைய புரட்சிக் காரர்கள் மறுநாள் எதிர்ப்புக்காளாயினர் ஆயினும் புரட்சியின் போக்கில் ஒன்றை மட்டும் தெளிவாகக் காணலாம். புரட்சிக்காரர் எதிர்ப்புக்காளாக முடிந்ததே யன்றி, எதிர்ப்புக்காளானவர் புரட்சிக்காரராக என்றும் ஆனதில்லை. புரட்சித்தீ கீழிருந்து தாக்கியது. அது கீழ் நோக்கவில்லை. ஏனெனில் புரட்சியின் போராட்டம் மனிதருக்கும் மனிதருக்கும் உள்ள போரோட்டமோ, அல்லது நன்மை தீமைகள் ஆகியவற்றிடையே அல்லது கருத்துக்களிடையே உள்ள போராட்டமோ கூட அல்ல. அது உண்மையில் வாழ்க்கை வளமுடையவர் நனவுலகிற்கும் வளமற்றோர் கனவுலகிற்கும் இடையே நடந்த போராட்டம். அதில் உயிரிழந்தவர் அழிந்தவர் மனிதர் மட்டுமல்லர்; நிலையங்கள், கருத்துகள், கலைப் பண்புகள், ஒழுக்க முறைகள் யாவுமே அதில் பட்டுக் கருகி உருமாறிக் கலையுற்றன. ஏனெனில், இவையாவும் நனவுலகின் சரக்குகள். அவை கனவுலகத்தீயில் அழிய முடியும். ஆனால், புதிதாக அத்தீயில் முளைத்து வளர முடியாது. ஃபிரெஞ்சுப் புரட்சி கோரமிக்கக் காட்சிகளையுடையது மட்டுமன்று. மற்றப் புரட்சிகளிலுள்ள காட்சிகளைப்போல் அவை மனித சக்திக்கு, மனித அழிவுக்குக் கட்டுப்பட்டவையல்ல, மனிதர் செயலுமல்ல. மற்றப் புரட்சிகளில் புரட்சியின் உருவம் உலகுக்கு விளங்கிற்று. ஆதரிப்பவர், ஆதரியாதவர் என்ற பிரிவினர் உருவாக முடிந்தது. ஃபிரெஞ்சுப் புரட்சி முதல் புரட்சியாதலால் அத்தகைய கட்டுப்பாடான நிலையான பிரிவு இல்லை. எதிர்ப்பவர் ஆதரிப்பவர் ஆய்க் கொண்டு வந்தனர். முதலில் ஆதரிப்பவர் எதிர்ப்புகளாய் வந்தனர். பின்னால், குறிக்கோள்கள், கூச்சல்கள் வரவர மாறின. சில சமயம் அவை தெளிந்து உருவிழந்து உருக்குலைந்தன. ஆனால், ஒரு அடிப்படை - வளமற்றோர் கனவு நனவுலகில் பேயுருவம் தாங்கி ஒழுக்கம், திட்டம், மனித உணர்ச்சி ஆகிய எவற்றின் கட்டுக்கும் உட்படாமல் கோர தாண்டவமாடியது. காதலின் பிடி - மனித நல்லுணர்ச்சியின் பிடி ஆகிய இரண்டினாலும் மட்டுமே லாரைன் தன் இனத்தவரிடையே தனிப்பட்டு விளங்கினாள். செல்வச் செருக்கு, இன்ப வேட்டை, சமூக ஆணவம், அடக்குமுறை ஆகிய உயர் குடியினர் மாசுகள் இதனால் அவளைத் தீண்டவில்லை. புரட்சி வராதிருந்தால், அவள் உயர் குடியினளாய், அதே சமயம் மக்கள் சார்பில் நிற்கும் உணர்ச்சியுடையவளாய் இருந்திருக்கலாம். உயர்குடி வாய்ப்பை வைத்துக்கொண்டே, அதன் நற்பயனாம் கலைச்சுவையையும் அறிவுத் திறத்தையும், மனித உணர்ச்சியின் வசமாக்கி அவள் பொது மக்களிடம் அனுதாபம் காட்டி இருதிறத்தும் அன்புத் தெய்வமாக இயங்கியிருக்க முடியும். ஆனால், அவள் உள்ளார்ந்த இடம் உயர் குடியினர் நனவுலகம். அவள் நனவில் கனவின் கவின் நிலாக் காணமுடியும். கனவைக் கோர நனவுருவாகக் காணமுடியாது. புரட்சிப் புயலின் தொடக்க அதிர்ச்சி இதனை வெளிக் கொணர்ந்தது. அவள் மக்களை மதித்தாள், அவர்களிடம் அன்பு கொண்டாள். அதில் தான் மாறுவதன்றி வேறு மாற்றம் விரும்பவில்லை. ஃபிரெஞ்சு அரசவைக் கோலத்தை அவள் மனித உணர்ச்சியுடன் கலக்க விரும்பியதுண்டு. ஆனால், அக்கோலத்தை அறுக்க முடியவில்லை. ஆகவே, தான் மக்கள் வெறுப்பலையிலும் போட்டி உயர்குடியினர் பொறாமையலையிலும் அவள் சிக்கவில்லை. ஃபிரஞ்சுப் புரட்சிக் கருத்துகளைக் கனவுருவில் ஓரளவு சுவைத்த அவள் அது நனவுருவெடுக்கத் தொடங்கியதே அதனைத் தெளிவாக வெறுத்து ஒதுங்கத் தொடங்கினாள். ஆனால், ஆக்டேவ் மூரட் நிலை இது அன்று. அவனும் உயர் குடியிற் பிறந்தவன்தான். ஆனால், அதன் இன்பக் கோலத்தை ஒழிக்க அவன் ஒருப்பட்டேயிருந்தான். அவன் மனிதனாக, தங்குதடையில்லாமல் வாழ விரும்பினான். உயர் குடியாட்சியை, மக்கள் துயரிடையே உயர்குடியினர் நடத்தும் இன்ப ஆட்சியை வீண் ஆரவாரச் செலவுகளை அவன் வெறுத்தான். ஆகவேதான் புரட்சியில் ஈடுபட்ட அறிஞர், கலைஞர்கள் உணர்ச்சிகள் அவனையும் இயக்கின. அவன் புரட்சித் தெய்வத்தின் புகழ் பாடினான். அவன் போக்கை லாரைன் வெறுக்கவில்லை, எதிர்க்கவில்லை. ஆனால், அவள் தன்னாலி யன்ற மட்டும் எச்சரித்தாள். ஆக்டேவ் மூரட்டின் தொடக்க ஆர்வத்தை அது சிறிதும் தடைப்படுத்தவில்லை. ஆனால், அவனும் நீடித்துப் புரட்சிப் போக்குடன் ஒத்துப்போக முடியவில்லை. சமூகக் கருத்துகளையும் சமூக அமைப்பையும் எதிர்த்த அப்புரட்சி, சமூக அமைப்புடன் இணைந்த மனித உணர்ச்சிகளையும் நடைமுறை ஒழுக்கத்தையும் கூடத் தொடக்க வெறியில் மதியாது அழித்தது. இது மூரட்டைப் பெரிதும் புண்படுத்தியதனால் அவன் அதன் அழிவுச் சுழலில் இருந்து விலகவேண்டி வந்தது. அவனுக்கு இப்போது வயது ஐம்பத்தொன்று. சமயப் பயிற்சி மாணவன், புனைகதையாசிரியன், வசைத்திறக் கவிஞன், இலத்தீனப் புலவன், நடிகன், விடுதலைப் படைவீரன், மனித யுணர்ச்சியுடனாண்ட ஆட்சியாளன் என்ற பல துறைகளில் அவன் மனித உலகுக்குப் பொதுவாகவும், புத்தார்வக் காதல் வேடனாகப் பெரும்பாலான பெண்மை உலகுக்கும், ஏழைபங்காளனாகப் பொது மக்களுக்கும் நன்கு தெரிந்தவனாயிருந்தான். ஒரே ஒரு பெண்ணுக்கும் கடவுளுக்கும் மட்டுமே அவன் முழுநிறை காதல் தெரியவரும். ஆனால், இத்தனை அனுபங்களுக்குப் பின்னும் அவன் இயற்கையான இளமைத் துடிப்புச் சிறிதும் கெடவில்லை. உள்ளக் கிளர்ச்சியும் தளரவில்லை. அவன் இப்போது தன் பிறப்பிடமாகிய லோரேன் பகுதியிலுள்ள பெருமக்களின் பேராளாய் ஃபிரஞ்சு அரசியல் மன்றில் இடம்பெறவிரும்பித் தேர்தலுக்கு நின்றான். இதில் அவன் வெற்றி பெறவே மன்ற உறுப்பினனாய்த் தன் புத்தார்வங்களைக் கொட்டினான். இச்சமயத்தில் லாரைன் அவனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் “வெர்ஸேல்ஸும் பாரிஸும் மிகமிக விழிப்பாயிருக்க வேண்டும். சென்ற சில நாட்களில் எழுந்துவரும் அரவம் பெரும் புயல் நிகழ்ச்சிகளுக்கான முன்னறிகுறிகளாகத் தோற்றுகின்றன” என்று எழுதியிருந்தாள். ஆனால், மூரட்டின் உள்ளத்தில் நாட்டுப் பற்றார்வமும் மனிதப் பற்றார்வமும் புரட்சிக் கனவார்வமாகக் கொழுந்து விட்டெரிந்தது. 1789-இல் நடைபெற்ற அரசியல் மன்றக் கூட்டத்திற்கு அரசனும் அரசியும் மன்ற உறுப்பினர்களும் ஊர்வலமாகச் சென்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினன் என்ற முறையில் மூரட்டும் இடம்பெற்றிருந்தான். மன்னர் ஆடைதான் பொன்னாடையா யிருந்ததே தவிர அவர் நடையிலும் தோற்றத்திலும் ஃபிரெஞ்சு அரசின் பெருமிதம் இல்லை. அவர் வெள்ளை யுள்ளமும் கனவும் உடையவர். ஆனால் அவருடைய கூச்சம் அவர் நயநாகரிக மற்ற தோற்றத்தை இன்னும் வற்புறுத்திக் காட்டியது. அரசி எப்போதும் பகட்டும் தளுக்கும் உடைய வளேயாயினும் இப்போது அவள் முகத் தோற்றம் முற்றிலும் பொலிவிழந்த தாகவே இருந்தது. அவள் மூத்த மகள் நோய்வாய்க் கிடந்தாள். சாவு அவளுடன் கொஞ்சிக்கொண்டிருந்தது. ஆனால், அவள் பொலிவின்மை இதனால் மட்டுமல்ல. அவள் முகத்தில் வருத்தம் மட்டுமன்றிக் கலக்கமும் அச்சமும் குடிகொண்டிருந்தன. அவள் மீது பெருமக்கள் கொண்ட பொறாமையும் அதன் பயனாக அவள் பொதுமக்கள் உள்ளத்தில் இழந்துவந்த மதிப்பையும் அவள் அறிந்து கொண்டு தானிருந்தாள். அத்துடன் அரசர் போகும் போது மக்கள் காட்டிய சிறு சலசலப்பு அவள் கடந்த போது சட்டென நின்றுவிட்டது. பிணங்காணும் மக்கள்போல அவள் செல்லும் வழியில் அவர்கள் முழுதும் சிலையாக நின்றிருந்தனர். ஓரிடத்தில் புதுமைக் கிளர்ச்சியிலீடுபட்ட பெண்கள் கூட்டம் “வாழ்க ஆர்லியன்ஸ் கோமான்” என்று கத்திற்று. அது அவளுடைய பழங் காதலனின் பெயராதலால், அது அவள் நெஞ்சை ஊடுருவி அறுத்தது. மக்களின் ஆரவாரத் தினிடையே பாரிஸ் புகுந்த அந்நங்கைக்கு இவ்வரவேற்பு அவள் வருங்கால இன்னல்களை முன்னறிவிப்பவையாக தோன்றின. மன்றத்தில் மன்னருக்கு எதிர்ப்பு தொடக்கத்திலிருந்தே மிகுதியாயிருந்தது. மன்னர் பெருமக்கள் உதவியை நாடினார். இது நிலைமையை இன்னும் மோசமாக்கிற்று. பொதுமக்கள் பெருமக்கள் எதிர்த்து ஆரவாரம் செய்தனர் சற்றுப் பொறுமை இழந்த மன்னர் மன்றத்தை இனி கூட்டாமலே ஆளப்போவதாக உறுக்கினார். இது உண்மையில் எதிர்ப்பு வேகத்தைப் பெருக்குவ தாக முடிந்தது. அரசியலமைப்பையே மாற்றிச் சட்டமமைத் தன்றிக் கூட்டங் கலைய விடுவதில்லை என்று மன்ற உறுப்பினர் முடிவு செய்தனர். மன்னர் மீது சீற்றம் பொங்கி ஆரவாரித்தது. இச்சமயம் லாரைனுக்கும் ஆக்டேவ் மூரட்டுக்கும் பெருத்த வாக்கு வாதம் ஏற்பட்டது. இத்தடவை வாக்கு வாதம் வழக்கம் போலக் காதல் பற்றியதாயில்லை. அரசியல் தொடர்பு பற்றியதாக இருந்தது. மன்னனரையே எதிர்க்கத் துணிந்த மன்றத்தில் மூரட் இன்னும் ஏன் இருக்க வேண்டும் என்று அவள் வாதாடினாள். ஆனால், மன்றத்திலிருந்து விலகுவதால், மன்னர் நிலையில் மாறுதல் ஏற்படாது என்ற காரணம் காட்டி அவன் அங்கேயே இருந்தான். உள்ளே இருந்த கொந்தளிப்பு வெளியே மக்கள் கடலிடையே இன்னும் பெருத்த கிளர்ச்சியைத் தூண்டிற்று. அதன் முழக்கம் நகரினின்று தொலைவிலுள்ள லாரைன் மாளிகைவரை எட்டியது. கடைத்தெருவில் கடைகள் கொள்ளை யிடப்பட்டன. பணக்காரர் மாளிகைகளும் உயர்குடியினர் அரண்மனைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. கட்டுமீறிய கிளர்ச்சிக்காரர் அரசன் ஆட்கள், பெருமக்கள் என்று ஐயுறவு கொண்டவர்களையெல்லாம் வெட்டியும் மிதித்தும் அடித்தும் வீழ்த்திச் சென்றனர். பெண்கள் கூக்குரல் ஒருபுறம் சிறுவர் சிறுமியர் அழுகுரல் ஒருபுறம் கிளர்ச்சிக்காரர் ஆரவாரத்தையும் மீறிக் கிலியூட்டியது. மூரட் வெர்ஸேல்ஸில் கூடிய மன்றத்தில் ஆர்வத்துடன் வாதஞ்செய்து கொண்டிருந்தான். அதே சமயத்தில் வெளியே சென்றிருந்த அகஸ்டி என்ன நேருமோ என்ற கவலையுடன் லாரைன் மாளிகையினுள் துடிதுடித்துக் கொண்டிருந்தாள். ஆனால், நெடுநேரம் அகஸ்டியைப் பற்றிக் கவலை கொள்வதற் கின்றி, சந்தடி அவள் இல்லத்தினை அணுகுவது கேட்டாள். அச்சத்தால் அவள் வாயில்களையும் பலகணிகளையும் அடைத்து உள்ளே அஞ்சி ஒடுங்கிக் கிடந்தாள். கிளர்ச்சிக் காரர்கள் பந்தமேந்தித் தெருவில் ஆர்ப்பரித்துச் சூழ்வரை ஒளியாலும் கம்பலையாலும் அவள் அறிந்து நடுங்கினாள். அவள் தோட்டங்களில் மக்கள் வெள்ளம் புகுந்து அழிவு செய்தது. பலர் வாயில்களையும் பலகணிகளையும் கல்லால் தாக்கினர். பலகணி விளிம்பு வழியாக நோக்கிய போது அவள் கண்களை அவளால் நம்பமுடியவில்லை. பிச்சைக்காரர் நிலையிலுள்ள நடுத்தரக் குடும்பப் பெண்டிர் கையில் சுத்தியும் தடியும் கல்லும் ஏந்தித் தலைவிரி கோலமாகப் பேய்கள் போல் அலறிக்கொண்டு பாய்ந்தனர். அவளால் இத்தோற்றத்தைத் தாங்கமுடியவில்லை. கண்ணை உள்ளே இழுத்துக் கொண்டாள். ஆனால், விழிப்பு நிலையிலும் அக்கோரக் காட்சி அவள் மனத்தை விட்டு அகலாது பீதியுறுத்தியது. இரவுமுழுதும் அவள் உறக்கம் இத்தகைய காட்சிகளும் காட்டு விலங்குகளும் நிறைந்த ஒரு கனவுக் கோவையாயிருந்தது. மறுநாள் காலையில் அவள் தன் அணிகளில் முக்கியமான வற்றை மட்டும் தன்னுடலிலேயே மறைத்துக் கொண்டு வீட்டைத் தன் தலைமை வேலையாளின் பொறுப்பில் விட்டுவிட்டு நகரைவிட்டு வெளியேறினாள். சிலநாள் நாட்டுப் புறத்தில் தங்கிப் பின் ஸ்விட்ஸர்லாந்தில் சென்று தங்கினாள். ஆக்டேவ் மூரட்டை உடனழைத்துச் செல்வது வீண் என்பது அவளுக்குத்தெரியும். அதற்கு நேரமுமில்லை - அவனுக்குக் கடிதம் எழுதக் கூட அவளுக்குப் போதிய அமைதியில்லை. விரைந்த விளங்காத கையெழுத்துடன் அவள் சிறு துண்டு எழுதி அவனுக்குக் கொடுக்கும்படி வைத்துச் சென்றாள். “ஜூலை, 13. திங்கள் 11 மணி : புயல் பொங்கி வருகிறது. இனிக் காலதாமதம் செய்வது பேரிடர் தரக்கூடும். இப்போதே நிலைமை முற்றிவிட்டி ருக்கக்கூடும். ஆனால், உங்களைப் பற்றி எதுவும் அறியாமல் போவதா? அதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஆயினும், அகஸ்டியை நினைத்து நான் ஓட வேண்டியவளாகிறேன். கொலையும் கொள்ளையும், வஞ்சனையும் கொடுமைகளும் நிறைந்த இச்சூழ்நிலையில் தீங்குகள் வராமல் எச்சரிக்கையாய் இருங்கள். தங்களுக்காக ஆயிரமடங்கு கவலைப்படும் இந்தத் தங்கள் மனையாட்டியைக் குறித்து - சிந்தியுங்கள். இதோ நான் தங்கள் எண்ணத்தை நெஞ்சிலிருந்து எடுத்தெறிந்து செல்ல வேண்டியிருக்கிறது.” பாஸ்டில் சிறை வீழ்ந்தது - மன்னர் இதைக்கேட்டதும். “ஆ, இது என்ன, அரசியலுக்கு எதிரான கிளர்ச்சியா?” என்றனராம். அந்த அளவு சூழ்நிலையை அவர் உணராதவராயிருந்தார். அருகிலிருந்த ஒருவர் “கிளர்ச்சியல்ல அரசே, புரட்சி” என்றனர். அந்தச் சொல் - அதுவரை உலக மக்களுக்கு வெறும் சொல்லா யிருந்தது; இப்போது அவர் நேரடி அனுபத்தால் புதுப்பொருள் விளக்க இருந்தது. அவர்கள் பொன்னுலகு அழிவுற்றது. மக்களிடம் அதனிடமாக வாக்களிக்கப்பட்ட பொன்னுலகை எங்கும் காண வில்லை. இடையே நகைத்தீ புகைக்கும் குழம்பாறாக ஓடிற்று. மூன்று நாட்கள் கழித்து நிலைமை ஆக்டேவ் மூரட்டின் நம்பிக்கைகளையும் குலைத்தது. இருவரும் ஒரு ஒதுக்குப்புறத்தில் குடிசை கட்டி வாழ்ந்தால் என்ன என்ற திட்டம் இப்போதும் அவன் மனக்கண்முன் நிழலாடியது. பாரிசை மறப்போம் இதன் இன்ப வாழ்வைத் துறப்போம், கலை பெரிதே ஆனால் இயற்கை அதனிடம் அரிதே காதலும் நீயும் கவினுற உலவும் காட்சியே எனது கருத்திடை நிலவும் இன்பம், பிறவெலாம் துன்பம்! என்று பாட்டிசைத்தனுப்பினான். புறப் புயலிடையேயிருந்து அவன் அகப் புயலிடையே வந்து விழுந்த நறுமலராயிருந்தது அது அவளுக்கு! “என்ன எதிர்பாராப் புரட்சி! கண் தொடர்ந்து கண்டும் மனம் நம்ப முடியவில்லை. இது ஒரு பயங்கரக் கனவோ என்ற ஐயம் அகலமுடியவில்லை. இதுகளைத் துடைத்துத் துடைத்துப் பார்க்கிறேன். ஆனால், கைகள் நடுங்குகின்றன. வருக, வருக என் இன்ப உயிரே. தாம் கூறியபடியே தனிக்குடில் வாழ்வு வாழலாம். பாரிஸ் நரகை விட்டு வருக” என்று அவள் அவசர அவசரமாக எழுதினாள். லாரைன் அவா நிறைவேறவில்லை. புரட்சி மீதுள்ள மூரட் மனக்கசப்பு நீடிக்கவில்லை. மயானக் கசப்பு மயானத்துடன் மடிவதுபோல, முதற் காட்சியின் வெறுப்பு பழக்கத்தால் மழுங்கிற்று. மன்றச் சார்பிலேயே கலைக்கழகமொன்றில் அவன் மறுபடி கருத்தியல் விளக்கங்களில் இறங்கினான். “கிரேக்கர்கள் அறிந்த ஓர் உண்மையை நாமும் அறிந்து கொண்டோம். தனிமனிதன் தன்னாண்மையின்றி மனித வாழ்வில்லை. தனித் தன்னாண்மையில்லாத சட்ட ஆட்சி விடுதலை ஆட்சி ஆக” என்று அவன் முழங்கினான். ஆனால், அக்டோபரில் மன்னரும் அரசியுமே குற்றவாளிகளைப் போல் கொண்டுவரப்பட்ட போது, அவன் விடுதலைக் கோட்டின் எல்லை கடந்து விட்டது. அரசியின் குற்றச் சாட்டையும் தண்டனையையும் லாரைன், ஃவிட்சர்லாந்திலிருந்தே கேள்விப்பட்டாள். மூரட் அருகிலிருந்தே கண்டான். ஆயினும் அவள் துயரங்களை முற்றிலும் அவன் அப்போது அறிய முடியவில்லை. அரசியாய்ப் பொதுமக்கள் உள்ளங்களிலும் அழகரசியாகக் கலையுலகினர் உள்ளங்களிலும் ஆண்ட அவ்வுயர் குடியின் உயர் பெண்மணி மக்கள் கடுஞ் சீற்றத்தின் முன் புலிகளிடையே அகப்பட்ட மான்போல் மருள மருள விழித்தாள் - மறுகினாள் - புலம்பித் துடித்தாள். ஆனால், புலிகளிடையே மானுக்குக் கிடைக்கும் கருணைகூட அம்மனிதப் புலித்திறள்களிடையே அவளுக்குக் கிட்டவில்லை! புலிகள் மானைத் தின்னும்; அதன் துயரை ஒரு விளையாட்டாக, ஒரு பழிக்குப்பழியாக, தம் வாழ்வின் நீண்ட நாளைய குறைபாட்டை நினைவு படுத்தும் விழா நிகழ்ச்சியாகக் கருதியதில்லை. அக்டோபர் 31-ஆம் நாள் இரவின் கடைசி நள்ளிரவு மணி உறங்காது விழித்திருந்த மக்கள் உள்ளத்தில் ஓர் இறுதி எச்சரிக்கை மணியாக அலறிற்று. அம்மணியோ பிற மணிகளோ அதன் பின் நெடுங்காலம் அடிக்கவில்லை. சாவி கொடுப்பவன் கூடத் தங்கமுடியாமல், உயிருக்கு விலை தந்தவர்களெல்லாம் நகரைவிட்டு ஓடலாயினர். மூரட் புரட்சியைக் கண்டு அஞ்சும் கூட்டத்திலும் இல்லை. புரட்சியில் முற்றிலும் கலந்து கொள்ளவுமில்லை. அவன் புரட்சியார்வப் பேச்சுகள் அவன் முகத்தில் நடமாடி அவனைக் காத்திருக்க வேண்டும். புரட்சிப் பெரும்புயல் சுழன்றடிக்கும் இடங்களில் அவன் அச்சுழலின் சுழலாமையமாய் உழன்றான். அவன் கண்முன் புதுமைக் கோலத்தின் பெயரால் தங்கள் கந்தைகளின்மீது உயர்குடி நங்கையர் பூவாடையை அரைகுறையாகப் போர்த்த விடுதிப் பெண்கள், தொழிலாளப் பெண்கள் ஆகியவர்கள் மன்றப் பேரவையில் அமளி செய்து மன்ற மேடையில் நடனமிடும் காட்சிகள், புரட்சிக் களிப்புடன் போட்டியிட்டு உயர் விடுதிகளில் புகுந்தடித்து உண்ட உயர்குடி வெறியுடன் புரட்சிப் பாடலை அரைகுறையாகக் கம்மிய குரலில் பாடும் இளைஞர் காட்சி ஆகியவை கூத்தாடின. புரட்சிகரமான பாட்டுகள் பாடிய குற்றத்திற்காகச் சமயத் துறையிலிருந்து துரத்தப்பட்டவன், அப்பாடல்களுக்காகவே அரசவையினின்று விலக்கி வைக்கப்பட்டவன், இப்போது புரட்சி ஃபிரான்சில் அந்த நாட்களை எண்ணி வருந்துவதா மகிழ்வதா என்றறியாமல் மயங்கினான். துன்பத்திடைத் தளராத அவன் உள்ளம், அன்று உள்ளூரப் புன்முறுவல் பூத்தது. ‘அந்தோ ஆட்சிக் குழுவே! அந்தோ சமயத் தலைமையே! உன் அறிவு இருந்தவாறு - நண்பர் யார், பகைவர் யார் என்பதைக் கூட உன்னால் உய்த்தறிய முடியாமற்போயிற்று. நீ இந் நிலைக்கு வருவதில் என்ன வியப்பு!’ என்று அவன் மனம் எண்ணிற்று. அதே சமயம் கட்டவிழ்ந்த மக்கள் பாய்ச்சல் எந்த எல்லைக்குச் செல்லும் என்றும் அவனால் அறிய முடியவில்லை. இவ்வழிவுப் புயலிடையேயும் அவர்கள் காதல் வாடா மலராகவே இருந்தது - புயல் அதன் அழகைப் பெருக்கவே உதவிற்று. “என் குழந்தையே! என் காதல் சிறு தெய்வமே! நம் பணியாள் வண்டியோட்ட அடிலியும் அகஸ்டியும் நம்மிடையே புகுந்து நெளிய, பாரிஸிலும் பெர்லினிலும் வண்டியில் பயணம் செய்தோம் ஓர் ஊழியில். அந்த ஊழி, அந்த நாள் இனி என்று வரும்” என்று அவன் அங்கலாய்த்தான். “உன் ஆவல் சிறு பிள்ளைத்தனமானது. என் ஆழ்ந்த இன்ப துன்ப உணர்ச்சிக் குப்பையினருகே அது இரக்கப்படத்தக்கது. ஆயினும், இவ் வுணர்ச்சியைத் தூண்டும் அரிய ஆற்றல் அந்தச் சிறுபிள்ளைக்கு இருக்க வேண்டும்” என்ற அவள் மறுமொழி தெரிவித்தாள். இப்போதுகூட அவர்களிடையே பிணக்கும் ஊடலும் துளியும் இடம் பெறாமலில்லை. அவள் கடிதங்கள் சிறிது தாமதித்தால் அவன் “இதுவே என் கடைசிக் கடிதம். இனி என்றென்றைக்குமாக உன்னிடம் விடை பெற்றுக்கொள்கிறேன். இனி அடுத்த உலகில் சந்திப்போம்” என்று எழுதிவிடுவான். ஆனால், அடுத்த உலகம் அடுத்த அறையாகவும் அடுத்த ஊழி மறு நாளாகவுமே அமையும்! “உங்கள் மீது எனக்கு வரும் கோபம் பெரிது. உங்களை ஒரு தடவை கொன்றால்கூடப் போதாது. அதனால்தான் கொல்லத் துணியாது. மீண்டும் கடிதம் எழுதிக் கோபத்தைத் தெரிவிக்கிறேன். ஆனால், காதலிப்பவர் கோபத்தைச் சரிசமக் காதலுணர்ச்சியறியாதவர் எப்படி மதிக்க முடியும்?” என்று அவள் பிதற்றுவாள். “நல்ல காற்று உங்கள் நெஞ்சில் வீசும் நேரம், சற்றும் தயங்காது என்னிடம் வருக. என்றையும்விட இன்று உம் பிழைகளைப் பொறுத்து உங்களை ஏற்க விதிர்விதிர்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று அவள் அடிக்கடி அவனை அழைப்பாள். அடிலி திருமண வாழ்வின் முதல் ஆண் மகவு ஐந்தாவது ஆண்டில் அம்மை கண்டு இறந்தது. ஸ்விட்ஸர்லாந்தில் வைத்து இரண்டாவது சிறுவன் பிறந்திருந்தான். அதன் பெயரீட்டு விழாவில் கலந்து கொண்ட ஸ்விட்ஸர்லாந்துக் குடியானவர் களுடன் நட்பாடி லாரைன் தன் வாழ்வின் நெடுநீண்ட இன்பத் துயரத்திலிருந்து சிறிது விடுதலை பெற்றாள். “ஏழை மக்கள் தம் வறுமைக்குக் காரணமானவர்கள் என்று செல்வர் இல்லங்களையும் மாளிகைகளையும் தீக்கிரையாக்கி, அவர்கள் குருதி வெள்ளத்தில் குளித்து மகிழும் இந்த நாளிலும், உலகில் இங்கே மனநிறைவும் இயற்கை யமைதியுமுடைய ஏழைக் குடியானவர்களைக் காண வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன். என் கடைசிக் கையிருப்பான வெள்ளியை அவர்கள் பிள்ளைகளுக்குத் தின்பண்டம் வாங்கிச் செலவு செய்தேன். ஆ! அறச் செயல் நம் உள்ளத்தை எவ்வளவு தூய்மைப்படுத்துகிறது - இறைவன் ஒளியுடன் அது எத்தனை நெருக்க முடையது. கொடுப்பவனையும் உயர்த்திப் பெறுபவனை யும் உயர்த்தும் இந்நற்செயல் தழைக்கவாவது உலகில் ஏழையும் செல்வரும் இருப்பது நல்லதென்றே எண்ணுகிறேன்” என்று லாரைன் தன் உள்ளார்ந்த புரட்சி எதிர்ப்புக்கு விளக்கம் தருகிறாள். அந்தோ! செல்வர் விருப்பம் இது. ஏழைகள் இதே விருப்பம் உடையவராயிருந்தால், தாம் செல்வராகவும் பிறர் ஏழையாகவும் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவர் என்பதை லாரைன் நினைத்துப் பார்க்கவில்லை! அடுத்த ஆண்டு புரட்சி வேகத்தில் சிறிது ஓய்வு காணப் பட்டது. துடிப்பும் படபடப்பும் ஆர்வமாக நிலவிற்று. மன்றம் எல்லாம் பட்டம் பதவிகளையும் நீக்கும் தீர்மானம் நிறைவேறிற்று. லாரைன் “இனி நான் கோமாட்டி சிராம்மோனல்ல; நீங்களும் இப்போது வெறும் திருவாளர் மூரட் தான். ஆகவே, நம் சமத்துவத்தைப் புரட்சி மன்றம் ஏற்படுத்திவிட்டது” என்று பாதி கேலி கலந்த களிப்புடன் கூறினாள். நிலைமை சரிப்பட்டு விட்டது என்ற எண்ணத்தில் லாரைன் இப்போது பாரிஸுக்கே மீண்டு வந்தாள். ஆனால், அடுத்த ஆண்டு தொடங்கியும் பழைய படி புதிய கார்முகில்கள் தோன்றின. லாரைனுக்குத் தனிப்பட்ட அச்சுறுத்து வேறு ஏற்பட்டது. ஏனெனில், சிறை உடைத்தபோது வெளிப்பட்ட ஆசிரியர் பெர்னார்டு இப்போது புரட்சித் திரைக்குள் புகுந்து அதன் சீற்றத்தைக் கிளறி அவனைத் தன் காரியங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தார். புரட்சியியக்கம் போய்க் கொண்டிருந்த போக்கில் யார் வேண்டுமானாலும் எவரை வேண்டுமானாலும் தாக்கி அழிக்க மக்கள் சீற்றத்தைப் பயன்படுத்தலாம். லாரைன் மீண்டும் வெளிநாடு செல்ல எண்ணமிட்டாள். ஆஸ்டிரியா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளிலுமிருந்து நண்பர்கள் “எங்கள் மனை உங்களது. இங்கு வந்து எம்மைப் பெருமைப்படுத்துக” என்று அழைப்பு விடுத்தனர். அவள் சிறிது தயக்கத்தின்பின் பெர்லினில் வாழ்ந்த இளவரசர் ஹென்றியின் அழைப்பை ஏற்றனள். மன்னர், அரசி உறவினர் பல பெருமக்கள் ஏற்கனவே வெளிநாடுகளை நோக்கிப் புறப்பட்டனர். விரைவில் பாரிஸிலிருந்து வெளிநாடு செல்லும் மக்கள் அணி ஒரே சங்கலித் தொடராய்ச் சென்று கொண்டேயிருந்தது. 1891 மே 14-இல் லாரைன் தன் காதலன் மூரட்டினிடமும் மகளிடமும் மருமகன் அர்மந்திடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு பெர்லின் புறப்பட்டாள். அத்தடவை அவள் பிரிவை ஒவ்வொரு சிறு பொருளும் தடைப்படுத்துவதாக அவளுக்குத் தோற்றிற்று. ஒவ்வொருவரிடமிருந்து பிரியும்போதும் அவள் மனம் தனித்தனி கவலையுற்றது. இதற்குக் காரணம் என்னவென அவள் மதித்துணர முடியவில்லை. ஆனால், இப்பிரிவு உண்மையில் பலவகையில் பலரிடமிருந்தும் பல பொருள் களிடமிருந்தும் நிலையான பிரிவாகவே முடிந்தது என்பதை அவள் பின்னர் தன் அறிய முடிந்தது. புரட்சித் தீ அவள் சுற்றுச்சார்பு முழுவதையும் மாற்றிற்று. மருமகனை அவள் கண்டது அதுவே கடைசி. அவள் திரும்பி வரும்போது அருந்த உலகம், காட்சி, ஆட்கள் ஆகிய யாவற்றிலும் பெருமாறுதல் ஏற்பட்டன. ஆகவே, சாவை விட்டுச் செல்லும் உயிர்போல அவள் பிரிவுற்றது பின்னாட்களின் நிலைநோக்கப் பொருத்தமேயாகும். அவள் பெரிய பயண வண்டியில் வருவாள். பெருந்திரள் பணியாட்கள், துணையாட்கள் புடைசூழ வருவாள் என்று இளவரசன் ஹென்றி எதிர் பார்த்திருந்தான். ஆகவே, தன் வண்டியுடன் மிகையாக ஏழு குதிரைகள் இட்டு வந்திருந்தான். லாரைன் பளுவற்ற சிறு வண்டியில் ஏழு குதிரைகள் பூட்டியதும் அது காற்றாய்ப் பறந்தது. இவ்வாண்டு ஜூனில் மன்னனும் அரசியும் குற்றவாளிகள் போல் அடைபட்டிருந்த இடத்திலிருந்து தப்பியோட முயன்று நேரிடையாகவே பெருங் குற்றவாளிகளாகப் பிடிபட்டனர். மூரட்டுக்குப் புரட்சி மீதிருந்த ஆர்வமெல்லாம் இதற்குள் ஆவியாய்ப் பறந்து போயிற்று. லாரைன் தந்த எச்சரிப்பும் அறிவுரையும் இப்போது அவனுக்கு முற்றிலும் சரி எனப்பட்டது. ஆகவே “என் வாழ்க்கை முற்றிலும் ஒரே தோல்வி மயமாய்ப் போய்விட்டது - உன் காதலொன்றைத் தவிர... அதையே நாடி வருந்துகிறேன்” என்று எழுதினான். காதலர் இருவரும் இப்போது பெர்லினில் தங்கினர். புயலிலிருந்து தப்பி ஒதுங்கி ஒரு பாறையிடுக்கில் தங்கும் பறவைகள் போலப் புரட்சி அரசாங்கம் தம் பிடியிலிருந்து விலகிய அவர்களை ஆசிரியர் பெர்னார்டின் தூண்டுதலால் நாடு கடத்தியது. அதன் தொடர் வேகத்தை - அதன் முதற் பீடிகையையே அவர்கள் நேரிடையாகக் கண்டனர். 1793க்கும் 1795-க்கும் இடையே மன்னர், அரசி, அவர்கள் உறவினர் போக பாரிஸில் மட்டும் இரண்டாயிரத்து முன்னூறு பேர் கொலைப் பொறிக்கு இரையாயினர். கருத்துப் புரட்சியாக இது தொடங்கி அரசியல் புரட்சியாக மாறி இறுதியில் தனி மனிதர் பொறாமை பகைமைப் புரட்சிகளாக உருவெடுத்ததனால், பெரு மக்களும் தலைமக்களும் மட்டுமேயன்றிப் பொதுமக்களும், அரசியல் வாதிகள் மட்டுமன்றித் தனிப்பட்டவர்களும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் அதில் சிக்குண்டு மாண்டு மடிந்தனர் அல்லது அவதியுற்றனர். 36. ஐம்பதும் அறுபதும் முதலில் லாரைனை வருக, வருக என்றழைத்த ஹென்றி இளவரசன் அதே ஆர்வத்துடன் 1791இல் மூரட்டையும் வர வழைத்தான். நீண்டநாள் இயற்கைச் சூழ்நிலையினாலும் தத்தம் மனப்போக்குகளாலும் பிரிந்திருந்த காதலர் இருவரும் வாழ்க்கையின் மாலைப் போதில் ஒருங்குகூடி வாழ்ந்தனர் ஆனால், அவர்கள் கூடிய நேரம் அவர்கள் தாய்நாட்டின் வாழ்விலிருந்து அவர்கள் பிரிவுற்ற நேரமாயிருந்தது. அவர்கள் ஒருங்கே பங்குகொண்டது காதல் பிரிவுத் துயரைத்தான். ஆனால், அவர்கள் தாய்நாட்டுத் தோழர் பலரின் துயர்களைப் பார்க்க அவர்கள் துயர் குறைவே. காதலர்களைப் பிரித்த புரட்சி அவர்களை இணைத்தது. பகட்டாரவார வாழ்வை ஒழித்த புரட்சி அவர்கள் பகட்டார வாரமற்ற வாழ்க்கையைத் தீண்டவே இல்லை. உண்மையில் பட்டம் பதவிகள் நெப்போலியனால் ஒழிக்கப்பட்டபோது இருவரிடையேயும் சமூக அடிப்படையில் இருந்த ஒரு பிரிவுத் தட்டி அகற்றப்பட்டதாகவே அவர்கள் எண்ணினர். அவர்கள் பொருளியல் வாழ்வு தகர்ந்தது; காதல் வாழ்வு மலர்ந்தது. இளைஞர் காதலைக் கலைத்த புரட்சி இங்ஙனம் அவர்களுக்கு முதுமையில் காதலின் இன்கனிவளம் நல்கிற்று. மூரட்டுக்கு இப்போது 59 ஆண்டுகள் நிறைவுற்றன. லாரைனுக்கு நாற்பத்தெட்டாண்டுகள் கழிந்தன. சுற்றத்தார், நண்பர், தோழர் பலர் அவர்கள் அருகிலிருந்து மறைந்தனர், அல்லது தொலை சென்று பிரிந்தனர். அவர்கள்மீது இதன் தடமும் காலத்தின் தடமும் பொறிக்கப்பெற்றே இருந்தன. ஆனால், இருவர் உள்ளத்தின்மீதும் இளமையின் சாயல் மறையவில்லை - அது மேன்மேலும் பொலிவுற்றது. சிறப்பாக மூரட் பேச்சும் நடையும் முகத் தோற்றமும் இளமையைக் கழித்துவிட்ட ஒருவனைவிட இளமையை அணுகும் ஒருவனையே நினைவூட்டு வனவாயிருந்தன. அவன் உரையாடல் எப்போதும் போலவே பொதுநலங் கனிந்தவையாகவும் இருந்தன. அவன் ஒரே துன்பம் தாயகம் விட்டுப் பிரிந்திருப்பதே தனித்திருக்கும் வேளைகளி லெல்லாம் இப்பிரிவுத்துன்பம் அவனை முற்றிலும் ஆட் கொண்டது. “பாரிஸிலே பிறந்து வளர்ந்த நானே பிரிந்து வாழும்போது போலந்தில் அதுவும் பாதையிற் பிறந்த அகதிக்கு ஏன் பாரிஸைப் பற்றி இத்தனை பரிவு ” என்று லாரைன் அடிக்கடி கிண்டல் செய்வாள். அந்தக் கிண்டல்கூட அவன் முகத்தில் வழக்கமான புன்சிரிப்பைக் கொண்டுவருவது அருமையாயிருந்தது. பாரிஸ் எல்லையையும் ஃபிரான்சு எல்லையையும் தாண்டி உலகெலாம் பரந்த இயற்கை எழில், ஏழைக் குடியானவர் வாழ்வின் இன்னலம் ஆகியவற்றில் ஈடுபட்ட லாரைனை இப்பிரிவு அத்தனை பாதிக்கவில்லை. அவன் மனப்பாங்கும் போக்கும் அறிந்து அவனைத் தேற்ற அவள் தன் முழு ஆற்றலையும் நேரத்தையும் வழங்கினாள். அவர்களுக்கென ஹென்ரி இளவரசர் மெரிக்காட்ஸ் என்ற நாட்டுப் புறப் பண்ணை ஒன்றைப் பரிசாக அளித்திருந்தார். அதனைப் பண்படுத்திப் பயிரிடும் வேலையில் இருவரும் பங்கு கொண்டனர். லாரைன் எவ்வளவு வற்புறுத்தியும் மூரட் மண்வெட்டுதல், களைகட்டல் முதலிய கடுவேலைகளை வேலைக்காரர்களுக்கே விட்டு விட ஒருப்படாமல் தானும் பேரளவு பங்கு கொண்டான். அவனைப்பற்றிய செய்திகளில் லாரைன் விருப்பமே அவன் விருப்பமாயிருந்தது. ஆனால், அவளைப் பற்றிய செய்திகள் எதிலும் அவன் விருப்பத்துக்கு அவள் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாயிருந்தாள். காதல் ஒன்று தவிர அவளை அடக்கும் வகை துறை எதுவும் அவனுக்கு இல்லை. அவன் இதற்காக அவளிடம் மல்லுக்கு நிற்பான். ஆனால், தனித்து இருக்கும் வேளைகளிலெல்லாம் பிடிவாதங்களே அவள் உள்ளத்தில் அவனைப்பற்றிய இன்ப நினைவுகளை வளர்த்தன. பெண்ணுள்ளம் அடிமைப்படுத்த விரும்பும். ஆனால், அடிமையை விரும்புவதில்லை. வேறெதற்கும் பணியாத ஆண்மையைக் காதலொன்றில் பணிய வைக்கும் வெற்றியையே பெண்மை நாடுகின்றது. மூரட்டும் அவள் காதல் ஒன்றன் முன்பே முற்றிலும் தன் ஆண்மை இழந்தவனாகத் தன்னை மறந்து ஓய்வு பெற்றான். சில சமயம் அவளுடைய வழக்கமான கடுமை லாரைனின் நீண்ட நாள் காதல் தன் மறுப்பில் எண்ணத்தில் ஈடுபட்டுச் சிறிது தளர்வுறும். அப்போது லாரைன் கை கொட்டிச் சிரிப்பாள். சிறு வெற்றிகள்கூட அவளுக்கு அவள் காதலின் விலையை எடுத்துக்காட்டிற்று. அவள் அதை விற்க விரும்பவில்லை. அதன் மதிப்பை அறிந்து சேமித்து வைக்கவே விரும்பினாள். அவர்கள் இரண்டாண்டுகள் மெரிக்காட்ஸில் வாழ்ந்தனர். இதற்குள் பொறாமை என்னும் குறளி இளவரசனுக்கும் மூரட்டுக்கு மிடையே சிறிது மன உவர்ப்பைத் தூண்டிவிட்டான். இச்சமயம், பிரஷ்யா அரசன் வின்ஸ்லங் என்ற இடத்தில் மூரட்டுக்கு ஒரு நிலப் பண்ணை அளித்து வரவழைத்தான். மெரிக்காட்ஸில் இருக்கும்போது ஒரு நாள் மூரட் லாரைனைத் தேடிச் சென்று அவளைத் தோட்டத்தின் கோடியில் கண்டு பிடித்தான். அவள் கையில் உறைகிழிந்த ஒரு கடிதம் இருந்தது. அவள் முகம் எல்லையற்ற களிப்பில் மூழ்கியிருந்தது. “என்ன கடிதம், என்ன மகிழ்ச்சியான செய்தி?” என்று கேட்டுக் கொண்டு அவன் அவளை அணுகினான். அவள் முகம் சிவந்தது. கைகள் கடிதத்தை மறைத்தன. அவள் பின் வாங்கினாள். “அது இப்போது உங்களுக்குத் தெரிய வேண்டாம். நாளடைவில் தானே தெரியும்.” என்ற அவள் கத்தினாள். அவன் ஆவல் பெருகப் பெருக, அவள் மறுப்பு வலுத்தது. இறுதியில் அதனை எட்டிப் பறிக்க அவன் முயன்றான். அவள் தோட்டப் பண்ணைகளைச் சுற்றிச் சுற்றி ஓடினாள். அவள் மெல்லுடல் அவள் ஓட்டத்தை முயலோட்ட மாக்கிற்று. ஆக்டேவ் மூரட்டின் வாட்ட சாட்டமான கால்கள் அந்த அளவு வளைந்து சுற்றி ஓடமுடியாமல் குறுக்கே சென்று பிடிக்க முயன்றன. அவளை அவனால் பிடிக்கவே முடியவில்லை. ஆனால், இறுதியில் முற்றிலும் சோர்வுற்றபின் அவள் கடிதத்தைக் கீழே எறிந்து அவனைச் சுற்றி சுற்றி ஓடினாள். அவன் அத்துடன் அவளைத் தொடர்வதை விட்டுக் கடிதத்தை எடுத்து வாசித்தான். அவள் “ஆகா, என்ன மகிழ்ச்சிகரமான செய்தி! இதைக் கேட்க என்ன ஆர்வம்” என்று தாளமிட்டாள். நாடு கடத்தப்பட்டவர் செல்வம், பட்டம் யாவும் புரட்சி அரசியலாரால் பறிமுதல் செய்யப்பட்டன என்ற செய்திதான் அக்கடிதத்தில் காணப்பட்டது. இதில் என்ன மகிழ்ச்சி என்று அறியாமல் அவன் விழித்தான். “உங்களுக்கும் எனக்கும் இடையே இருந்த தடை விலகிற்று. நம் மணத்திற்கு இனி என் செல்வமோ என் பிள்ளைகளோ முட்டுக் கட்டைகளல்ல” என்று அவள் கூறிய போதுதான் அவனுக்கு அவள் மகிழ்ச்சியின் குறிப்புப் புலப்பட்டது. காதலுக்கெனவே வாழ்ந்த அப்பெண் தெய்வத்தை அவனால் அதன்பின் எச் சமயத்திலும் கடிந்து சொல்ல மனம் வந்ததில்லை. அவன் அவளைக் குழந்தை போல் வாரிச் சுருட்டி மடிமீது வைத்து ஆங்காங்கு வெள்ளிக் கம்பிகள் தளிர்த்த, ஆனால், இன்னும் நீலநிறம் முற்றிலும் கெடாத அவள் தலை முடியை நீவி தன் நீண்ட நாள் கொடுமையை நினைந்து வெப்பேறிய கண்ணீரால் அவற்றை நனைத்தான். அவன் எண்ணங்களை ஊடுருவி உணர்ந்தவள் போல அவள் வழக்கமாகத் தன் வெற்றிகளிடையே கூறும் சொற்களால் அவனைக் கிண்டல் செய்தாள். “குற்றங்கள் யாவும் உன் னுடையவைதான். இதை நீ அறிந்து கொண்டால் நான் உன்னை மன்னித்துவிடத் தடையில்லை. என் உள்ளம் அத்தனை பெரிது.” தன்னைவிட அவளுக்கு இச்சொற்கள் முற்றிலும் பொருத்த மானவை என்பதை இன்று அவன் கண்டான். அவன் அவள் மெல்லிய கைகளால் தன் முகத்தை மறைத்து அவள் தோளில் சார்ந்து “நீ குற்றமற்றவள். நான் உனக்குச் செய்த கொடுமைகள் மன்னிக்க முடியாதவை” என்றான். “எனக்கு மன்னிக்கத் தெரியாது. மறக்கத் தெரியும்” என்றாள் அவள். “நீ என்னை மணந்து என் மனைவியாக இருப்பாயா? என்னுடன் உன் வாழ்க்கையை ஒன்றுபடுத்தினால் என் வாழ்வு நிறைவடையும். இல்லாவிட்டால் என் வாழ்வு வற்றற் பாலையாகவே இருக்கும். என் காதலை ஏற்றேன் என்று ஒரு சொல் கூறி என்னை இன்ப உலகுக்கு இட்டுச்செல்வாயா? வாய் திறந்து ஒரு சொல் கூறு. ஆம் என்று கூறு. என் கவலை தோய்ந்த உள்ளத்திற்கு ஓர் ஆறுதல் அளி.” “ஆம், நான் உங்களைக் காதலிக்கிறேன்.” எல்லாக் காதல் கதைகளுக்கும் ஏற்படும் இயல்பான முடிவு இது. இந்த “ஆம்” என்ற சொல்லின் மறுபடிவமே மண வினையில் மணப்பெண் இதழிலிருந்து மீண்டும் “ஆம்” என்ற உருவம் பெறுகிறது. அடிலியின் திருமணத்தின்போது லாரைன் இச் சொல்லைப் பற்றி முதல் முதலாகச் சிந்தித்திருந்தாள். தானும் ஒருமுறை இதனை முன்பு கூறியிருந்தாலும், அது காதலறியாக் குழந்தைப் பருவத்துக் கதையாக அவளுக்குத் தோற்றிற்று. இப்போது பிள்ளையும் பேரனும் வந்ததன்பின் அவள் வாழ்வில் இதே காதல் வளையம் மீண்டும் சூழ்ந்தது. அவள் மூரட் இப்படி மீண்டும் தன் காதல் வாழ்வை தொடங்க வேண்டுமென்று விரும்பினாள். விருப்பம் கனவாயிற்று. கனவு கற்பனையாக உருவெடுத்தது. இறுதியில் அது சிறிது சிறிதாக அவள் உள்ளுலகில் செயல் திட்டமாக வளர்ந்தது. அதன் நிறை வேற்ற அவள் நாளும் ஓரையும் வரையறுத்து விட்டாள். இடம் நிகழ்ச்சி வரிசையாவும் ஒழுங்குபடுத்தப் பெற்றன. ஆனால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இருவரில் ஒருவர் - முக்கியமான செயல் செய்யப்பட வேண்டியவர் ஒருவருடன் கலக்காமலே திட்டமும் நிறைவேறிச் செயலும் தொடங்கிற்று. அந்த ஒருவர் ஆக்டேவ் மூரட் தான் என்று கூறத் தேவையில்லை. அன்று அவள் தன்னை மணப்பெண்ணென உடுத்தி அணிமணி ஒப்பனை செய்து கொண்டாள். அதைக் கண்டு மூரட் ஏன் இந்த ஒப்பனை யென்றான். அவள் “இன்று நம் காதல் மணம் நிறைவேறிய நாள். இன்று காதலராக உடுத்துக் கொண்டு தோட்டத்தில் உலவி வருவோம்” என்றாள். அவனும் “சரி” என்று உடையுடுத்தி வந்தான். ஆனால், அவள் முகத்திலுள்ள களிப்பும் குறும்புநகையும் கண்டவுடன் அவன் “என்ன, புதிய செய்தி ஏதேனும் உண்டா?” என்றான். “எனக்கென்ன தெரியும்? என்னை நீங்கள் தோட்டத்திற்கு இட்டுச் செல்கிறீர்கள். அழைத்துச் செல்கிறீர்கள். என்ன உட்கருத்து வைத்திருப்பீர்களோ, யார் கண்டார்” என்றாள். அவள் ஏதோ திட்டமிட்டிருக்கிறாள் என்பதை அவன் உய்த்துணர முடிந்தது. அது என்ன என்று அப்போதும் அவனுக்குப் புரியவில்லை. அன்று அவள் காதலனாக நடித்தாள். அவனைக் காதலியாக்கினாள். மாலை மதியையும் வானத்தின் சிவப்பு வண்ணத்தையும், பறவைகளின் கலகல ஒலிப்பையும், மலர்களின் மணத்தையும் அவள் அவனுக்கு இட்டுச் சென்று காட்டி நினைவூட்டினாள். அவன் உள்ளத்தில் புதுக்காதல் மலர் வித்தாள். அவள் கைகள் அடிக்கடி அவன் கன்னத்தை வருடின. அவள் கண்கள் அவன் கண்களை ஊடுருவிப் பனித்தன. அவள் நாடகத்தின் உட்பொருளறியாமல் அவன் விழித்தான். “செயலற்ற காதலன்பரே! எல்லாம் என்னால் திட்டமிட்டுச் செய்யப்படும். ஒன்றே ஒன்று மட்டும் என் பாயிலிருந்து வரமுடியாது. வரப்படாது. அதை மட்டும் நிறைவேற்றி விடுங்கள்” என்று அவள் கூறிய போதும் அவனுக்குத் தன் கடமை, தன் உரிமை புலப்படவில்லை. “ஊம்...சொல்லுங்கள். எல்லாம் சரியாக நடந்து விட்டன. அந்த ஒரு கேள்விதான் பாக்கி” என்றாள். “எந்தக் கேள்வி?” “இவ்வளவு தெரியாதா? காதலில் எவைகள் கேட்கக் கூடாதோ அந்தக் கேள்வி; என்றாள் அவள்.” அவன் மூளையில் மின்னொளி பாய்ந்தது. “நான் உன்னைக் காதலிக்கிறேன். மனமாரக் காதலிக்கிறேன். நீயில்லாமல் நான் வாழ முடியாது நீ என் காதலை ஏற்று என் மனைவியாகி என்னை இன்பத்திலாழ்த்துவாயா?” என்றாள் அவள். “ஆம்” என்றான் அவன். நாடகம் முடிவடைந்தது. “ஆ. ஒப்பற்ற நடிகை நீ” என்று அவன் அவள் காதைத் திருகிக் கொண்டு கூறினான். “நான் ஒப்பற்ற நடிகையல்ல. நீங்கள்தாம் ஒப்பற்ற நடிகர். நான் இயற்றிய நாடகத்தைப் படித்துப் பார்க்காமலே உங்கள் பகுதியை நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்” என்றாள். அவள். “கடவுள் இப்படித்தான் நாடகமியற்றி அதன் குறிப்பறியாத நம்மை நடிக்க வைக்கிறார்” என்றான் அவன். “கடவுளாவது, கத்தரிக்காயாவது. கடவுள் என்று ஒருவர் இல்லை. காதல் என்ற ஒன்றுதான் உண்டு” மன்னவைக்கும் மத குருவுக்கும் மாறுபாடு எண்ணாத மங்கையின் காதல்கூற்று இது. “அன்பே! இத்தகைய வாசகம் மூரட் போன்ற மத எதிரிகளின் வாயில் வரலாம். உன்னைப்போல மதவாதிகளும் தலைவணங்கும் நல்லெழுத்தாளர் வாயில் வரலாமா?” “இது இப்போது என் வாய்மொழியல்ல. என் நாடகத்தில் அந்த ஒரு கேள்வி நீங்கலாக நான்தானே நீங்களாக நடித்தேன். இதுவும் அதன் ஒரு பகுதிதான்” என்று அவள் கூறிக் குறுநகை புரிந்தாள். “இதன் பொருள்? என்றான் அவன்.” “இந்த ஆண்டுகளுக்கே எதை உணரவும் ஒரு புரோகிதத்தின் விளக்கம் தேவை. பெண்களைப்போல தெய்வத்தையும் உட் பொருள்களையும் அவர்கள் நேரிடையாக அறிய முடிவதில்லை. சரி விளக்கி விடுகிறேன். ஆனால், விளக்கியபின் முன் விளங்காத தற்காக அதன்படி நடக்க வேண்டிய பொறுப்பு உங்களது” என்றாள் பீடிகையிட்டு. “நான் கத்தோலிக்கராகவே இருக்கிறேன். சீர்திருத்தத்தையும் புரட்சிகளையும் நான் வெறுக்கவில்லை. எதிர்க்கவில்லை. கத்தோலிக்கராகவே நான் மணந்து கொள்ளவேண்டும். உங்கள் பகுத்தறிவுப் புரட்சிக் கொள்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனக்காக என் கத்தோலிக்க நெறியை ஒரு நாள் தாங்கிக் கத்தோலிக்கக் கோயிலில் வந்து என்னை மணந்து கொள்ளுங்கள்” என்றாள். பெண்கள் திட்டம் கடவுள் திட்டத்தைப் போலவே கற்பனை கடந்ததென அவன் அறிந்தான். மணமகன் திருக்கோயிலுக்கே என்றும் சென்றதில்லை. மணமகளும் புரட்சியினால் துரத்தப்பட்டது முதல் சென்ற தில்லை. ஆனால், கத்தோலிக்க மதகுருக்கள் இப்போது புரட்சிப் புயலால் சிதறடிக்கப்பட்ட நிலையில் இருந்தனர். லாரைன் போதிய கழுவாயும் தண்டங்களையும் தர முன்வந்த போது அவற்றை ஆர்வத்துடன் ஏற்றனர். மன்னரும் மதமும் ஆட்சி செய்தபோது இரு துறைகளிலுமிருந்து துரத்தப்பட்ட கவிஞன் இரு துறைகளிலும் ஊடாடிய கலை நங்கையுடன் அவ்விரு துறைகளின் பெயர்களுக்கும் ஒரு சிறிது உயிர் கொடுத்துப் பாழடைந்த கோயிலில் எளிய இனிய திருமணம் செய்து கொண்டான். திருமண விருந்தினரை வரவேற்பதில் அகஸ்டி இப்போது பெரும் பங்கு எடுத்துக் கொண்டான். அவனுக்கு இப்போது வயது 27 ஆயிருந்தது. காதலர் தங்கள் பிள்ளைகளுடன் பிரஷ்ய அரசன் அளித் வின்ஸ்லோப் பண்ணையில் சென்று புதுமண வாழ்வு வாழ்ந்தனர். 37. வின்ஸ்லோப் பண்ணை பெர்லினில் பெரும்பாலும் மெர்க்காட்ஸில் மூரட்டுக்கு உடலுழைப்பற்ற சோம்பல் வாழ்வே வாழ வேண்டியதாயிருந்தது. நாடோடியாக வளர்ந்த அவனுக்கு அதன் கட்டுப்பாடு மிகவும் தொல்லையாக இருந்தது. இப்போது வின்ஸ்லோவில் அவனுக்கு வாய்ப்புக் கிடைத்ததுமே அவன் உழைப்பாளிகளுடன் உழைப் பாளியாய் இருந்து உழைத்தான். அவன் பண்பறிந்து லாரைன் இதில் அவனை ஊக்கத் தவறவில்லை. வின்ஸ்லோப் பண்ணையில் அவர்கள் நாடு பெயர்ந்த ஃபிரெஞ்சுப் பெருங்குடி மக்களைக் கொண்டு வந்து பிரஷ்ய அரசன் இணக்கம் பெற்றக் குடியேற்றினர். உயர் குடியிலிருந்து வீழ்ச்சியுற்றும் இன்ப வாழ்க்கை யே நாடிய அந்த ஃபிரெஞ்சுக் குடியேற்றம் நீண்டநாள் வெற்றிகரமாக நடக்கமுடியவில்லை. ஆனாலும் எல்லார் உழைப்பையும் தான் நின்று பொது மக்களைத் தூண்டி மூரட் சிலகாலம் அதனை வளமுடையதாக வைத்துப் பேணினாள். பொது மக்கள் அவனையும் அவனைப் போலவே அரும்பண்பு படைத்த அவன் துணைவி லாரைனையும் போற்றிப் புகழ்ந்தனர். தகுதி பற்றி எழுந்த இப்புகழ் மீதுகூட உயர்குடி மக்களுக்குப் புழுக்கமும் பொறாமையும் ஏற்பட்டது. ஒவ்வொருவராகக் குடியேறிவர் விலகலாயினர். பண்ணை முன் போல் குடியானவர் உரிமைக்குள்ளேயே நின்றது. “நம் காதல் வாழ்வில் காணாத ஒரே ஒரு இன்பத்தை இன்று மணவாழ்வு நமக்குத் தங்குதடையின்றித் தந்துள்ளது. முன்பெல்லாம் எப்பொழுது விடிந்துவிடுமோ என்று அஞ்சியஞ்சிச் சாவோம். ஏனெனில், விடியற்காலம் நமக்கு பிரிவுச் சின்னமாயிருந்தது. இப்போது அந்த அச்சமில்லை. இது மண வாழ்வின் மகத்துவம்” என்று ஒரு நாள் லாரைன் தன் தற்போதைய வாழ்வின் நலம் பாராட்டினாள். அச்சிறு பிரிவினால் அவள் உள்ளத்தில் ஏற்பட்ட வடு அவள் அவாவின் ஆழத்தை அவனுக்கு எடுத்துக் காட்டிற்று. “நீ இல்லா விட்டால் நான் வானுலகின் நிறை இன்பம் என்ற ஒன்று உண்டு என்பதை நம்பியே இருக்கமாட்டேன். அதனை நீதான் எனக்குக் காட்டி வருகிறாய். ஆயினும், அதனை நான் என்றும் முற்றிலும் கைப்பற்றவிட முடிவதில்லை. பார்த்துப் பார்த்து ஏங்குகிறேன். அல்லது சிறிது பற்றி விட்டுவிடுகிறேன்” என்றான் அவன். “இருக்கலாம். ஆனால், நீ இல்லாவிட்டால் ஒருவேளை நான் அந்த இன்பத்தை நோக்கிப் பறந்து சென்றுவிடக் கூடும். நீதான் என்னை நிலத்தில் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக் கிறாய். நான் இன்ப உலகுக்கு உன்னால்தான் பறந்து போகாமல் இருக்கிறேன். நீ அங்கே வராவிட்டால் எனக்கு அங்கே இன்பம் ஏது?” என்று அவள் கட்டுரைத்தாள். மூரட்டின் நெட்டை உடல் இப்போது சிறிது கூனத் தொடங்கிற்று. அவன் கவிழ்ந்த நடை நடக்கலானான். அவன் தலை மயிர் முற்றிலும் வெண்ணிறமாய், வெண்பஞ்சு போர்த்தது போல் இருந்தது. ஆனால், அவள் தலை இன்னும் பாதிக்குமேல் மங்கிய நீல நிறமாகவே இருந்தது. அவள் தூய வெண்ணிறமோ முதுமையிலும் மாசற்றே இருந்தது. முதுமையின் சின்னம் சிறிது நரையாலன்றி வேறு எவ்வகையிலும் அனைத்திலும் - அவள் நடையில் கூடப் பழய நயம் இன்னும் தொக்கி நின்றது. ஆகவே, அவன் படிப்படியாக வலுவிழந்து அவள் வலுவைச் சார்ந்து வாழ வேண்டியவனானான். அவன் இதற்காக அருந்தினான். ஆனால், அவள் இப் பொறுப்பை விரும்பி ஏற்றாள். “ஆண்கள் ஆணவம் இளமையில்தான். முதுமையில் பெண்ணின் தாய்மை அவளுக்கு ஆணைப் பாதுகாக்கும் உரிமை தருகிறது” என்று அவள் தன்னிலையை விளக்கினாள். அவன் எதுவும் கூறவில்லை. ஆயினும் உள்ளூர “நம் ஆட்சி தற்பெருமையில் மகிழ்ந்திருந்தது. அதில் அவா உண்டு அன்பில்லை, ஆட்கொள்ளும் இன்பமுண்டு ஆனால், இன்பம் இல்லை. பெண்மையின் ஆட்சி அன்பாட்சி, அருளாட்சி. அது கடவுள் தன்மையுடையது” என்று அவன் எண்ணாமலிருக்க முடியவில்லை. அவர்கள் பேச்சு அடிக்கடி நெப்போலியன் வந்த போதுதான் அவர்கள் இருவரிடையே வேறுபாடு விளைவித்த உயர்குடிப் பட்டம், செல்வம் ஆகியவை தகர்ந்து, அவர்கள் மணவினைக்கு வழிவகை ஏற்பட்டது. இது அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட நன்மை. இது போக மூரட், லாரைன் ஆகியவர்களின் அனுபவம் ஆராய்ச்சியால் வேறு பல நன்மைகள் புலப்பட்டன. உயர்குடியினருக்குப் பெருஞ் செல்வம் முன்பு பல வகையில் ஒரு பெருஞ் சுமையாகவே இருந்தது. மூத்தவனைச் செல்வம் சாரும். அவன் அதைத் தனியே வைத்துக்கொண்டு கொடுங்கோலாட்சி செய்ய வேண்டும். மற்ற இளவல்களோ செல்வமில்லாமலே அச்செல்வ மதிப்பைக் காக்க வழி காணவேண்டும். அதாவது போர் முதலிய துறைகளில் பயிலப்பெற்று, பிற கொடுங் கோலாட்சிகளுக்கு வலுத்தந்து வாழ வேண்டும். பெண்களோ வெனில் போதிய செல்வர் கைக்குக் காத்திருக்க வேண்டும். அழகின்மை, பொருளின்மை காரணமாக அது கிடைக்கா விட்டால் அவர்கள் தம் நிலைவிட்டு இறங்கி மணம் செய்யவோ, அல்லது தொழிலிலீடுபடவோ முடியாது. ஒன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அல்லது மதிப்போடு உயிருடன் தற்கொலை செய்து கொள்வது போலக் கன்னி மடங்களில் கன்னித்துறவியாகச் செல்ல வேண்டும். நெப்போ லியன் புதிய ஆட்சி உயர் குடியினருக்குப் பொதுமக்கள் வாழ்வின் உரிமைகள் வழங்கிற்று. மூரட்டின் இவ்விளக்கம் லாரைனுக்குக் கூடப் பிடித்த மாயிருந்தது. புரட்சியை வெறுத்த அவள் இப்புரட்சிக் கருத்தை வெறுக்க முடியவில்லை. காதல் அக்கருத்தை அவளிடம் இயல்பாகவே புகுத்தியிருந்தது. புரட்சித் தீக்கு இரையாகி வாடி வதங்கி யழிந்த மலராகிய அரசியிடம் லாரைன் இன்றும் பற்றுடையவளாய் இன்றும் அவள் இனிய பண்புகளை நினைந்து வருந்தாமலில்லை. ஆனால், மூரட் அவளை இதற்காகக் கடிந்துகொண்டான். அவள் குற்றம் இன்ப நாட்டம் மட்டுமல்ல. மட்டற்ற இன்ப நாட்டமும், பொது வாழ்வு, அரண்மனை வாழ்வு ஆகியவற்றின் தகுதியை அவமதித்ததும் அவளிடம் மன்னிக்க முடியாத குற்றங்களென அவன் எடுத்துக் காட்டினான். “மன்னர் முன்னிலையிலேயே அவள் ஒருநாள் தன் இளங்காதல் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாள். அவன்மீது உண்மையாகவே தனக்கு உள்ள உள்ளத் துடிப்பை அவள் எடுத்துரைத்து, “இதோ, நீ கைவைத்துபபார்” என்று அவனை வற்புறுத்தினாள். மன்னர் அதற்குமேல் வாளா இருக்க முடியவில்லை. “அம்மணி, நீங்கள் சொல்லும் சொல்லில் அவர் நம்பிக்கை கொள்வார். உன் உள்ளத் துடிப்பை அறியாதவர் யார்?” என்று கூறவேண்டி வந்தது. மூரட் எடுத்துக்காட்டிய இக்காட்சி அரசியிடம் உள்ள பற்றின் குறைபாட்டை நன்றாகச் சுட்டிக்காட்டிற்று. “ஆம். புரட்சி வரம்புமீறி மிகைபட்டிருக்கலாம். ஆனால், பழைய வாழ்வு சென்ற திசை தவறான திசைதான்” என்று அவள் ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.” 38. நெப்போலியன் அன்பழைப்பு அடிலியின் காதல் வாழ்வு விரைவில் வாட்ட முற்றது. ஒன்றிரண்டு பிள்ளைகளைப் பெற்றபின் அவள் உடல் நலிவுற்றது. அத்துடன் அவள் கணவனும் மட்டற்ற குடியிலாழ்ந்து. அகாலமாக உயிர் துறந்தான். கைம்பெண்ணான அடிலி எப்படியோ புரட்சியின் புயல் கடந்து வாழ்ந்தும், வாழ்வில் தனிமைப்பட்டு வருந்தினாள். தன் தாய் தன்னுடனிருந்தாலாவது ஆறுதலாயிருக்கும் என்று அவள் எண்ணினாள். லாரைனும் அவளிடம் மிகவும் பாசங்காட்டி அவளை மகிழ்விக்கும் கடிதங்கள் எழுதினாள். அவளைப் பற்றிய ஒரு கடிதத்தில், வாழ்வில் என் வான்புகழ்நீ, மங்காத இன்பம்நீ! தாழ்வின்றி என் மனத்தே என்றும்நீ தங்கியுள்ளாய்! வீழ்தூன்றி என் உயிரில் நீ நிலைத்து வளர்கின்றாய்! வண்ணமலர் தந்து மகிழ்வு ஊட்டும் வனமல்லிகை நீ! என்னபுயல் வீசிடினும் இலைதழைகள் உதிர்த்திடினும் மன்னி உரம் பெற்றுநின்று மலர் தந்து மகிழ் பூப்பாய்! என்ற ஒரு அன்புப் பாடல் எழுதியனுப்பினாள். நெப்போலியனின் முதல் மனைவி ஜோஸஃவைன் நட்பு அடிலிக்குக் கிடைத்தது. அதன் மூலம் அவள் தன் தாய்மீதும் மூரட் மீதும் இருந்த நாடுகடத்துச் சட்டத்தை அகற்றுவித்தாள். 1799-இல் அடிலி அன்பழைப்புக் கிணங்க இருவரும் பாரிஸ் வந்தனர். மூரட்டுக்குப் புதிய பட்டம் வழங்கப்பட்டது. அவன் மூரட் கோமான் ஆனான். லாரைன் மீண்டும் புது உரிமையால் கோமாட்டியாயினாள். முன் அவர்களை அவள் பட்டம் பிரித்து நின்றது. இன்று அவர்கள் சேர்க்கைக்குப் புதுச் சின்னமும் புதுப் புகழும் பொலிவும் அளித்தது. அடிலியும் நெப்போலியன் மனைவி ஜோஸஃவினும் புரட்சித் தொடக்கத்தில் ஒன்றாகவே சிறைப்பட்டுச் சிறையிலே தோழமை பெற்றவர்கள். இப்போது ஜோஸஃவின் கட்டிளமைப் பருவம் கடந்தவளானாலும் அது தோற்றாமல் தன் இயற்கையழகைப் பலவகையிலும் பெருக்கி, நெப்போலியன் குறிப்பறிந்து அவனை மகிழ்விப்பதில் ஈடுபட்டிருந்தாள். நெப்போலியனிடம் அவளுக்குப் பேரளவு செல்வாக்கும் இருந்தது. தன் இளமைத் தோழிக்காக அவள் இச்செல்வாக்கைப் பயன்படுத்தத் தயங்கவில்லை. அடிலி ஜோஸஃவினைக் காணச் சென்றபொழுது நெப்போலியன் துயிலில் ஆழ்ந்திருந்தான். ஜோஸஃவினே அவளை வரவேற்றான். வெளிக்கூடத்திலிருந்த ஜோஸஃவினின் நாய் ஃவார்ச்சூன் பார்க்கப் பயங்கரமானது. ஆனால், அவள் அதனிடம் மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவள் மண விழாவில்கூட அதை அவள் விட்டுப் பிரியவில்லை. அதுவும் மணமகனாகிய நெப்போலி யனையே கடித்துத் தன் சலுகையின் அளவைக் காட்டிற்று. இப்போதும் அது உறுமிக் கொண்டு அடிலிமீது பாய முயன்றது. ஜோஸஃவின் அதனை விலக்கி விட்டுத் தோழியுடனிருந்து பேசிய போதும் அது விடாமல் அடிக்கடி வந்து தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது. “ஆ, மாது தே அஸ்டின் என்னை வந்து காண விரும்பியது கண்டு மிக மகிழ்ச்சியடைகிறேன். (நாயை நோக்கி) பேசாதிரு சிறிது நேரம், ஃவார்ச்சூன். இது என் பழைய தோழி அடிலி. (மீண்டும் அடிலியை நோக்கி) உங்கள் தாய் மாது சிராம்மோன் எப்படி இருக்கிறாள்? வா, வந்து என்னுடன் அமர்ந்து எல்லாம் தெரிவி. நாம் தேநீர் அருந்திக்கொண்டே பேசலாம். நான் தேநீர் கொண்டுவரச் சொல்லுகிறேன்” என்று அன்பாதரவுடன் கூறி அவள் வேலையாட்களைத் தேநீர் கொண்டுவரும்படி பணித்தாள். அடிலி தன் வாழ்வின் தனிமை, தன் தாயின் துணை யில்லாமல் தான் படும் துன்பம் ஆகியவற்றைக் விளக்கிக் கூறினாள். மாது ஜோஸஃவின் இயல்பிலேயே நட்புணர்ச்சியுடையவள். அரசியல் உயர்வு இதனைப் பெரிதும் வளர்த்திருந்தது. மாது ஆக்டேவ் மூரம் பெயர் உயர்குடியின் புகழுக்குரியது என்பதை அவள் அறிவாள். குடிப்பிறப்பு வேற்றுமைகளைச் சட்டத்தால் களைந்தாலும் அவர்கள் பண்பையும் ஆதரவையும் பெறுவதில் நெப்போலியன் முனைந்திருந்தவன். உயர்குடித் தொடர்பால் ஜோஸஃவினும் தன் மதிப்பை நிலைநாட்ட நினைத்தாள். ஆகவே, அடிலிக்கு உதவுவதில் சிறிதும் காலம் தாழ்த்தவில்லை. உறங்கிக்கொண்டிருந்த நெப்போலியனை அவள் தட்டி எழுப்பினாள். அப்பெருவீரனை அவள் மனைவியின் உரிமைப் படி செல்லப் பெயர்களால் அழைப்பது வழக்கம் அடிலியின் முன்னிலையிலேயே அவள் அப்பெயர்களால் அவனை “நானா, நானா! பெரப்போ, பெரப்போ, எழுந்திருங்கள். பிறகு தூங்கலாம்” என்று முடுக்கினாள். “என்ன அப்படி அவசரமான செய்தி? ஏதாவது துணிக் கடைக்காரன், தையல் கடைக்காரன் வந்திருக்கிறானா?” என்று நெப்போலியன் புரண்டுகொண்டே கூறினான். “இல்லை. உங்களுக்கு ஒரு புலவரைச் சேர்த்து வைக்க விரும்புகிறேன். உங்கள் அவையை அவர் அழகுபடுத்துவார்” என்றாள் அவள். புலவர் என்ற சொல் அடிலியின் அன்பழைப்பை விட விரைவில் அவர் உறக்கத்தை அகற்றியது. “புலவரா, ஆ” என்று அவன் எழுந்து விரைவில் ஆடை மாற்றிக் கொண்டு வந்தமர்ந்தான். “பழைய அரசியின் அவைக்களத்தில் பெரும்புகழ் பெற்றிருந்த பெண்மணி கோமாட்டி சிராம்மோனைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேனல்லவா?” நெப்போலியன் கண்களில் மகிழ்ச்சி ஒளி வீசிற்று. புலவர், உயர்குடி அவைகளையும் கனியச் செய்யும் பெண்பாற் புலவர் ஆகிய சிராம்மோனின் பெயர் அவன் அவா ஆர்வங்களுக் கேற்றதாயிருந்தது. பண்டைய அரசரினும் கலை, நாகரிகம் வளர்ப்பதில் தான் பிற்பட்டு விடவில்லை என்பதைக் காட்ட இது ஓர் அரிய வாய்ப்பு என அவன் எண்ணினாள். மூரட் பெயரும், மாது சிராம்மோன் இப்போது அவன் மனைவியாய் மாது மூரட் ஆன செய்தியும் இதன் பின்னரே கூறப்பட்டது. மூரட்டின் பெயரும் நாடுகடத்தப்பட்டோர் பட்டியிலிருந்து அடிபடாமல் மாது மூரட் திரும்பி வந்து வாழ முடியாது என்பதை ஜோஸஃவின் பக்குவமாக எடுத்துரைத்தாள். அத்துடன் மூரட்டும் கவிஞன் என்பதும். விகட வசைக் கவிஞன் என்றும் கூறப்பட்டபோது நெப்போலியன் மனம் தெளிவு பெற்றது. முன் அரசவையில் அவன் இடம் பெறாதது அவன் குடிப்பிறந்தும் அதனை எதிர்க்கும் புரட்சியாளருடன் ஓரளவு ஆதரவு காட்டினான் என்பதை அறிந்த போது நெப்போலி யனுக்கு எல்லா வகையிலும் மனநிறைவு ஏற்பட்டது. உயர்குடியாள் பண்புடன் பொது மக்கள்பால் ஒத்துணர்வும் உடைய அவன் தொடர்வு நெப்போலியனின் நடுநிலை நாகரிக ஆட்சிக்கு உறுதுணையாயிருக்கும் என்பதை அவன் கண்டான். மூரட் லாரைன் வருமுன்பே பாரிஸ் வந்து அவள் வரவுக்கான ஏற்பாடுகளைச் செய்தான். சீரழிந்து கெட்டிருந்த அவள் பழைய மாளிகையும் தோட்டமும் திருத்திச் செப்பம் செய்யப்பட்டன. ஆனால், மாளிகையைத்தான் திருத்த முடிந்ததே தவிரச் சுற்றுச் சார்புகளைத் திருத்த முடியவில்லை. பெருமக்கள் வாழ்ந்த பகுதியிலிருந்த அவ்வீடு தன்னந் தனியாயிருந்தது அருகிலிருந்த மாளிகைகளெல்லாம் பாழடைந்து கிடந்தன. பலவற்றில் அவற்றின் வேலைக்காரர்களும் சிலவற்றில் புதிய ஆட்சியின் படைவீரரும் தலைவர்களும் இருந்தனர். ஆனால், முன்னைய வீட்டுத் தலைவர்களைப் போல் அவர்கள் வீட்டைச் செம்மைப்பட வைத்துக் கொள்வதில் அக்கறைசெலுத்தவில்லை. எந்த நேரத்திலும் அது அடுத்தவர் கைக்குப் போய் விடலாம் என்று அவர்கள் நினைத்ததே இதற்குக் காரணம். மனித வாழ்வு இங்கே அழிந்து கிடந்தது. மனிதர் வகுத்தமைத்த தோட்டங்கள் சீர்கெட்டிருந்தன. ஆனால், மனிதர் வகுக்காது வரைந்திருந்த மரங்கள் முன்னிலும் பெருத்துக் காணப்பட்டன. புரட்சி மனித வாழ்வை மாற்றியமைத்தது - இயற்கையைப் பாதிக்கவில்லை என்பதை இது வற்புறுத்திக் காட்டிற்று. அடிலி நாடு கடத்தப் பெறவில்லை. ஆகவே, அவள் வீடும் குடியும் செல்வநிலையும் பாதிக்கப் பெறவில்லை. அவள் தன் தாய்க்கெனத் தனி வீடு வாங்கியிருந்தாள். நெப்போலியன் ஆட்சி அவள் செல்வநிலையை இன்னும் உயர்த்தியிருந்தது. அடிலியைக் கண்டபின் மூரட் நெப்போலியனையும் ஜோஸஃவினையும் சென்று கண்டான். அவனை அவர்கள் நன்கு வரவேற்றதுடன் அவனுக்கு அவைக்களத்திலிருந்தே வாழ்க்கைக்குப் போதிய ஒரு சிறு உதவிச் சம்பளமும் தர உறுதி கூறினர். இன் பின்னரே மூரட் தன் புது மனைவியையும் அகஸ்டியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டான். பல தோல்விகளிடையேயும் ஏமாற்றங்களிடையேயும் மூரட் தளராது அவாவி எதிர்பார்த்திருந்த தன்னாண்மையும் மட்டான செல்வ நிலையும் இப்போது அவனுக்குக் கிடைத்தன. அத்துடன் லாரைனின் செல்வநிழலில் தங்க மறுத்த அவனுக்கு அவள் தங்க நிழலளிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவன் மனம் நிறைவடைந்தது. என்றுமே இளமனம் படைத்த அவன் மகிழ்ச்சி இப்போது உடலுக்கும் புத்திளமை தந்தது. அவன் தலையின் வெண்மை ஒன்று தவிர அவன் முதுமையைக் காட்டும் சின்னம் எதுவுமில்லை. அவன் இப்போது தன் நிலத்தில் உழைத்தும் தன் தோழர்களான ஏழை எளியவர்க்கு உதவியும் வாழ்ந்தான். இவ்வாழ்வு அவன் உடற்பண்புக்கு ஒத்ததாயிருந்தது. மூரட்டை விட லாரைன் பல ஆண்டு இளையவள். ஆகவே, அவள் முதுமையில் அவனைக் காக்கும் இனிய பொறுப்பு தனக்கு ஏற்பாள் என அவன் கனவு கண்டு வந்திருந்தான். ஆனால் நிலைமை இப்போது அதற்கு நேர் மாறாயிருந்தது. பாரிஸுக்கு வந்தபின் அவள் பக்கவாதத்துக்கு இரையானாள். அவள் கால்கள் வலுவிழந்தன. அத்துடன் அவை சூம்பிச் சுருக்கமுற்றன. இளமையில் பல்வலி, வயிற்றுவலி, வாதம் ஆகியவற்றுக்கு ஈடுகொடுத்த மூரட் இப்போது உரம் கெடாது இருந்தது அவளுக்கு இப்போது ஒரு நல்ல பாதுகாப்பாயிற்று. அவன் சிறிதும் அயராது அவள் நலம் பேணி அவள் தன் குறை உணராதவாறு பாதுகாத்தான். மருந்தூற்று களுக்கு அவளை இட்டுச் சென்றான். அவளுடன் இன்னுரையாடி அவள் மனநிலை கெடாவாறு பேணினாள். இவ்வாறாக நெப்போலியன் அழைப்பு அவர்களை வாழ்வின் இறுதிக் கூற்றில் ஒன்றுபடுத்திற்று. 39. நந்தா விளக்கு ‘இளமை அழகை விலைப்படுத்தும்; முதுமை அதனை நுகரும் என்ற உண்மைக்கு மூரட் லாரைனின் வாழ்க்கை முறையும் அவர்கள் இல்லமும் இப்போது இலக்காயிருந்தன. வீட்டின் பலகணிகள் பூந்தோட்டத்தை எட்டிப் பார்க்கும்படி அமைந்திருந்தன. அத்தோட்டத்தின் மலர்கள் ஒரு கவிஞனின் கவிதைக் கனவையும், அக்கவிஞன் கனவுகண்ட நங்கையின் கலைக் கனவையும் ஒருங்கே நினைவூட்டுவனவாய் இருந்தன. வெள்ளைச் சிரிப்பு சிரிக்கும் முல்லைப் பந்தருடன் போட்டியிட்டு வெள்ளை, சிவப்பு, நீல நிறங்களைக் கலந்து காட்டிய அந்திமந்தாரங்கள், சிவந்த செம்பருந்திகள், அம்பருத்திகள், நந்தியாவட்டைகள் ஆகியவை கூட்டு நடனமாடின. பன்னிறங்கள் மூரட்டின் நிலையற்ற துடிப்பைக் காட்டின. ஆனால், அதனிடையே அவன் தன் காதல் மனைவி லாரைனுக்குப் பிடித்தமான தூய முல்லைக்கு நடுவிடந்தர மறந்து விடவில்லை. நடமாடமுடியாத அவள் உடனிருந்து பேணினாற் போல அவன் கை அவளுக்கு விருப்பமான மலரையும் வளர்த்தது.’ லாரைன் எப்போதுமே நல்ல வீட்டமைப்பை விரும்பியவள். அதனை மதித்துணரும் பண்பும் உடையவள். ஆனால், அதனை ஒருங்கமைக்கும் பயிற்சி அவளிடம் முன்பே இல்லாதிருந்தது. உடல் சோர்வுற்ற இப்போது அதன் பொறுப்பும் மூரட்டிடமே இருந்தது. அவ்வப்போது அடிலி இப்போது அவளுக்கு இதில் உதவியாயிருந்தாள். இவ்விருவர் முயற்சியால் லாரைனுக்கு வீட்டின் அமைதிகாக்க ஒரு தலைவியின் மேற்பார்வையில்லாக் குறை தோற்றாமலே இருந்தது. தன்னுடன் தன் இரு குழந்தை களையும் தீட்டியிருந்த லாரைனின் ஓவியம் வீட்டு முன் கூட முகப்பை அழகு செய்தது. தோட்ட மலர்களில் பொறுக்கி எடுத்த சில கொத்துகள் பலகணியடுத்த சுவரொட்டிப் பலகையில் அழகுற வைக்கப்ட்டிருந்தன. எதிரே இருந்த கண்ணாடிகள் அப்பூந்தட்டுகளையும் தோட்டத்தின் மலர்களையும் அருகருகாக நிழற்படுத்திக் காட்டின. மற்றொரு புறத்துச் சுவரின் மங்குப் பிடி மீதமைந்த இரண்டு மெழுகுவத்தி விளக்குகள் இருந்தன. அவற்றின் நடுவே வேள்மதனின் அழகிய சிற்றுருவம் நகைத்து நின்றது. அரசவையினின்று, புதிய பட்டம் பதவிகளின் சின்னங்கள் பெருமையுடன் அங்கிமீது காட்சியளிக்க மூரட் இல்லத்தில் நுழைவான். ஆடைமாற்றி அவன் சிற்றுண்டியுடனும் பருகு நீருடனும் பகலெல்லாம் படுக்கையிலிந்து தன்னைப் பற்றியே கனவு கொண்டிருக்கும் தன் காதல் மனைவியண்டை யமர்ந்து இன்னுரையாடி ஊட்டி உண்பான். அவள் தன் கனவுகளை இன்றும் இனிய கட்டுரையாக, வருணனையாக, ஒவியங்களாகத் தீட்டுவதுண்டு. மூரட்டும் அவளும் அவற்றை மீண்டும் மீண்டும் வாசித்துப் பாராட்டியும் குற்றம் சாட்டியும் மகிழ்வர். விடுமுறை நாட்களில் இருவரும் இலத்தீன் காவியம் படிப்பர். அல்லது அதன் மொழி பெயர்ப்பில் பங்கு கொள்வர். அடிக்கடி ஒரு சொல்லுக்கு இருவரும் மல்லாடுவர். சொற்போரில் இன்னும் எவரும் உண்மை வெற்றியடைவதில்லை. யாராவது ஒருவரின் முதல் முத்தம் சொற்போருக்கு ஒரு முடிவு கட்டும். முதுமை இக்காதல் நாடகத்தை சிறிதும் குறைத்துவிடவேயில்லை. இளமையின் பலவகைத் தடைகளை நோக்க, முதுமையே அக்காதலர்களின் உண்மை நண்பன் எனத் தோற்றிற்று. 1804இல் நெப்போலியன் பேரரசனாக முடிசூட்டினான். மூரட் செல்வத்தில் செல்வர் நிலையில் இல்லாத போதிலும் அதில் பங்கு கொள்ளும் கலைமதிப்புடையவனாயிருந்தான். இருவரும் அடிக்கடி நெப்போலியன் நாட்டுப்புறப் பண்ணை செல்லும்போது உடன் சென்று விருந்தினராயிருந்தனர். லாரைன் இப்போதும் பேச்சினால் குடிசையையும் அரண்மனை யாக்கும் திறமுடையவளாகவே இருந்தாள். பழைய அரசி பற்றியும், நாகரிக நடையுடை மாறுபாடுகள் பற்றியும் அவள் பேசிக் கேட்பதில் எவருக்கும் சோர்வு ஏற்பட்டதில்லை. பேரரசன் நெப்போலியனுக்கு அதுவே பெரு விருந்தாயிருந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பே நாடு கடத்தப் பட்டோர் அனைவரும் திருப்பி அழைக்கப்பட்டிருந்தனர். லாரைன், மூரட் ஆகியவர்களின் பழைய நண்பர்கள் பலர் இப்போது வந்து அவர்களுடன் அடிக்கடி கலந்து கொண்டனர். ஆனால், பழைய நண்பர்கள் எவருமே லாரைனையும் மூரட்டையும் கண்டு பொறாமைப்படாமலிருக்க முடியவில்லை. அவர்கள் வாழ்வும் செல்வமும் ஒருங்கே இழந்திருந்தனர். லாரைனும், மூரட்டும் வாழ்வுடன் செல்வமும் இவ்விரண்டுக்கும் மேம்பட்ட இன்ப நிறைவும் பெற்றிருந்தனர். புயலில் அணையாத தீ இப்போது அமைதியில் நந்தா விளக்கா யிருந்தது. சூறாவளியில் வளைந்து நெளிந்த நீண்ட மலர்க் காம்பு இப்போது தலைநிமிர்ந்து நின்று தன் மலரை உயர்த்திக் காட்டி, தான் வாடாமலர், ‘வாடாமல்லி’ என்பதை விளம்பரப்படுத்திற்று. லாரைன் அடிக்கடி தன் இறந்து போன பழைய நண்பர்களையும் அவர்கள் அடைந்த இன்னல்களையும் நினைத்து வருந்துவாள். பாரிஸின் பல காட்சிகள் இவற்றை நினைவூட்டி அவள் மனப்புண்களைக் கிளறின. மூரட் அவள் கவனத்தைத் தன் காதலுலகு மீது திருப்புவான். “புரட்சியை எண்ணி வருந்துவது தவறு லாரைன், உண்மையில் அது ஏழை மக்கள் வாழ்வைப் பாதிக்கவே யில்லை. நம் காதல் வாழ்வில் அது செய்ததெல்லாம் முன்னைய வாழ்வில் இருந்த ஓயாத் தடைகளை அகற்றியதே. அது அழித்தது பெரும்பாலும் பகட்டு வாழ்வையும் நம் காதலுக்குத் தடையாயிருந்த நம் தற் பெருமைகளையும் மட்டுந்தான்” என்று அவன் விளக்குவான். அது முற்றிலும் உண்மையன்றாயினும் பெரும் பகுதி உண்மை என்பதை அவள் கண்டாள். தன் தாயின் இறுதிப் படுக்கை பற்றிய அவள் தொலை நினைவுகள் வந்து, அப்புரட்சிக்கு ஆசி கூறுபவை போலத் தோன்றின. அவள் காதல் வாழ்வில் எத்தனை கடுமைகள் இருந்தாலும் அந்தத் தாயின் சோகவாழ்வை நோக்க அது அவளுக்கு வானுலகமாகத் தென்பட்டது. ஆக்டேவ் மூரட்டுக்கு இப்போது தன் வாழ்வில் ஒரே குறை மட்டும்தான் இருப்பதாகப் புலப்பட்டது. லாரைனின் வாழ்வு தன் இன்பக் கனவுகளுக்கு முழுதும் இலக்கானதாயிருந்ததுடன் தன் எதிரிகளாலும் நண்பர்களாலும் எவாரலும் குறைகூற முடியாதபடி அப்பழுக்கற்றதாயிருந்தது. அந்நிறை பண்பை வாழ்விறுதியிலாவது முயன்று பெற வேண்டும் என்று அவன் சில சமயம் விரும்பினான்; ஆனால், அதைக் கேட்ட லாரைன் நோயையும் மறந்து விலாப் புடைக்கச் சிரித்தாள். “புரட்சிக் காரருக்கு இயைய நடக்க முயன்று பார்த்தீர்கள். உங்கள் குறிக்கோளும் அவர்கள் குறிக்கோளும் ஒன்றாகத் தோற்றிற்று. ஆயினும், அவர்கள் உங்கள் பண்பில் நிற்கவில்லை. அப்படி யிருக்க நாங்கள் பார்த்துக் கேலி செய்து கவிதையில் தாக்கி வந்த சமயத் துறைவரையும் உயர்குடிப் பசப்பரையும் எப்படி மன நிறைவு படுத்த முடியும்?” என்று அவள் கேட்டாள். அவள் கூறிய விடை அவனைப் பின்னும் சிரிக்க வைத்தது. “நீ இவ்வளவு பேரையும் என்னையும் மனநிறைவுபடுத்த வில்லையா? மேலும் பெண்களைப் பற்றியும் காதலைப் பற்றியும் நான் கொண்டிருந்த ஏளனக் கருத்துகளைக் காதல் கண்ட பின் நான் தடமின்றி விட்டுவிட வில்லையா?” என்று கேட்டான். “அன்பரே, என் காதலை நீங்கள் உறுதியாகப் பற்றி நின்றதும் பெண்களைப் பற்றியும் காதலைப்பற்றியும் உள்ள தங்கள் கருத்தை என் வகையில் காட்டாததும் உண்மையே. ஆனால், பெண்மையையும் காதலையும் பற்றிய தங்கள் பண்பு மாறிவிட்டதாக எண்ண வேண்டாம். வழிவிடுதியில் நான் கண்ட பெண்...” அவள் பேசமுடியாதபடி அவன் கை அவள் இதழைப் பொத்திற்று. அவன் முகத்தில் நாணத்தின் நிழலாடியதை அவள் கண்டாள். “அன்பே, உங்களைக் குறைகூற இதைச் சொல்லவில்லை. உண்மையில் இந்தக் குறையே என்னை உங்களிடம் அடிமைப் படுத்தியுள்ளது. நான் எல்லாவகையிலும் உங்களுடன் சரிக்குச் சரி என்று போராடவில்லை என்பதை நீங்கள் பெண்மையைத் தாய்மையைத் தற்கொலைப் படுத்திக் கொண்டேன். ஆனால், அதற்காக நான் வருந்தவில்லை, தங்களைத் திருத்தவும் எண்ணவில்லை. ஏனெனில், தங்களிடம் உள்ள இக்குறையே தங்கள் மதிப்பை உயர்த்துகிறது. காதலுக்கு நீங்கள் கட்டுப்பட்டீர்கள்; பெண்மைக்குக் கட்டுப்படவில்லை. பெண்மைக்கு நீங்கள் கட்டுப்பட்டிருந்தால், உங்கள் மனம் தளர்ந்து இன்று என்னைப் பாதுகாக்கும் நிலையைத் தராதிருக்கும்” என்றாள். அவள் பெருந்தன்மை, மனிதவாழ்க்கை பற்றிய அவள் ஆழ்ந்த அறிவு அவனைத் திகைக்க வைத்தன. அவள் மீண்டும் தொடர்ந்து பேசினாள்: “அன்பே, உயர்வகுப்பின் பசப்பு உங்களிடம் என்றும் நாடப்போவதில்லை என்பதை நான் அறிவேன் சமயத் துறையிலோ புறக்கட்டுப்பாடுகளையே இன்றைய உலகம் கவனிக்கிறது. தாங்கள் கட்டுப்பாடற்றவர். நான் உலகக் கட்டுகளை மீறத் துணியவுமில்லை, விரும்பவுமில்லை. ஆனால் கட்டுப்பாட்டை மீறிய உங்களை நான் போற்றத் துணியாதவள் அல்லள். கட்டுப்பாடுகளை ஆக்கியது புரோகிதம்; தன்னாண் மையைப் படைத்தது கடவுள்; கடவுள் முன்னிலையில் சமயக் கட்டுப்பாட்டை மதித்து நடந்தவர் நிறை பண்புகளைவிட உங்கள் பிழைகளும் குறைபாடுகளும் இறைவனுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணும் என்பதில் ஐயமில்லை. எனக்குக் கடவுள் இடது கை தந்தால் கட்டற்ற தறுதலையாகிய தங்களுக்கு வலது கை தருவது உறுதி.” அவன் வாழ்க்கை கடந்த அவளது வாழ்க்கைத் தத்துவம், அவள் பெண்மை கடந்த மனித இன அறிவு கண்டு அவன் வியப்பும் இறும்பூதும் எய்தினான். “கண்மணி, நீ நாகரிக முடையவள்தான்; கலை நங்கைதான்; அறிவுக் களஞ்சியம்தான். ஆனால், சமயங்கடந்த இச் சமயத்தை கற்றாய்?” என்றான். “சமயப் பகைவனாகிய இந்தக் காதலனிடமிருந்துதான்” என்று அவள் அவனைத் தன் அருகே இழுத்து வைத்து உச்சி நீவினாள். லாரைனின் நோய் இப்போது அவளுக்கு முழு ஓய்வு கொடுத்தது. அவள் உள்ளம் மூரட்டின் நிறை காதலைப் பருகி வளர்ச்சி பெற்றது. அவள் அறிவு மீண்டும் இளமை நலம் நோக்கிக் கனிவுற்றது. ஆனால், அவர்கள் இருவர் வாழ்வின் உழைப்பும் கவலையும் மூரட் மீது அழுத்தின. அவன் விரைந்து தளர்வுற்றான். லாரைனுக்கும் மூரட்டுக்கும் இப்போது ஒரு புதுக் கவலை ஏற்பட்டது. அடிலி தான் கைம்பெண் என்பதை மறந்து நெடு நாளாயிற்று. புரட்சிப் பகைவர் ஒருவரிடம் அவள் தன் மனத்தைப் பறிகொடுத்திருந்தாள். அவர் சிறையிலிருந்ததால் அவள் வாடி வதங்கினாள். காதலை அவள் எவரிடமும் சொல்லவில்லை. தாயும் அவளிடம் விவரம் கேளாமலே நிலைமையை உய்த்தறிந்து வருந்தினாள். அவள் இளமையில் தனக்கு ஏற்பட்ட காதல் ஏக்கமே அவளையும் பீடித்ததென எண்ணி அவள் தன்னையே கடிந்து கொண்டாள். ஒரு நாள் அடிலியின் நிலை அம்பலத்துக்கு வந்தது. அவள் சிறையில் காதலனுக்கு அனுப்பிய கடிதம் ஒன்று காவலர் கைப்பட்டது. அவளும் சிறைப்பட்டாள். லாரைன் உள்ளமும் தசையும் துடிதுடித்தன. அவள் தன் நீர்ததும்பும் கண்களால் மூரட்டை நோக்கினாள். மூரட் அவள் வாய்திறக்கக் காத்திருக்கவில்லை. தன் அரசியல் நண்பகளனைவரையும் இதுவகையில் உதவும்படி கோரி நடையாய் நடந்தான். இறுதியில் நெப்போலியனையே நேரில் கண்டு, காதல் பற்றியும் கலை பற்றியும் பேசி அக்கலைவள்ளலின் உள்ளம் கனிவித்து, இறுதியில் அரசியல் கட்சி கடந்து காதலித்த தன் புதல்வியை மன்னிக்குமாறு பேரரசன் காலடி வீழ்ந்து மன்றாடினான். கலைஞர் என்றால் கண்ணையும் ஈயும் பண்புடைய அவ்வீரன் உடனே விடுதலை உத்தரவு பிறப்பித்தான். வெற்றி மகிழ்வுடன் மூரட் மீண்டான். லாரைன் தன் நோய் மறந்து எழுந்து அவனைத் தன் மடிமீது சார்த்தி இன்பக் கண்ணீர் சொரிந்தாள். தாயின் கண்ணீருடன் மகளின் கண்ணீரும் அவனை ஆட்டின. ஆனால், இவ்வலைச்சல் மூரட்டின் இறுதி ஊக்கத்தை அழித்தது. அவன் வாழ்விலேயே முதல் தடவையாக அவன் தலையிடி என்று சாய்ந்தான். தலையிடி காய்ச்சலாயிற்று. கைகால் குளிர்ந்தது. நாடி தளர்ந்தது. தன் முடிவு வந்ததென அவன் உணர்ந்தான். லாரைனை நோக்கி அவன் கண் கலங்கினான். காதல் குறிப்புணர்ந்த அம்மாது “அன்பே தன் மார்பில் நான் இறக்கத்தான் விரும்பினேன். ஆனால், தெய்வ சித்தம் இருந்தபடி இருக்கட்டும். எனக்காகத் தாங்கள் கவலைப் படக்கூடாது. சாவுகூட நம் காதலில் எந்த மாறுதலும் செய்யாது. உங்கள் மனைவி வாழ்வில் உங்களுக்காகக் காத்திருந்தது போலவே, சாவு வரும் வரையும் காத்திருப்பாள். நீங்கள் மணநாளில் போல இன்றும் மன மகிழ்ச்சியுடன் இருக்கலாம்” என்றாள். தான் மண அணி அணிந்து, மண அணி அவனுக்கும் அணிவித்து, லாரைன் தன் மடிமீதே அவனைக் கிடத்தினாள். அந்நிலையிலேயே அவன் உயிர் புன்முறுவலுடன் பிரிந்தது. அகஸ்டியும் புரட்சிக்கெதிரான குற்றவாளி ஒருத்தியின் காதலில் ஈடுபட்டிருந்தான். ஆனால், தந்தையின் தீரம் அவனுக்கு ஒரு வழிகாட்டியாயிருந்தது. அவன் தந்தையிடத்தில் இருந்து, தாய்க்கு ஆதரவானான். மூட்டின் உள்ள வளம் லாரைனுக்கு இப்போது அவள் மரபுரிமைபோல வந்தமைந்தது. அவள் அறிவு முற்றிலும் தெளிவடைந்தது. அவனிருந்தபோது அவனிடம் பேசும் இன்பத்தினும், இப்போது அவன் பேச்சை, அவன் முகத்தை நினைக்கும் இன்பம் சிறிதாயில்லை. அவன் காதற் கடிதங்களோ அவள் உள்ளத்தில் பாராமல் படிந்திருந்தன. விவிலிய நூலைத் தவறாமல் படித்துவந்த அவள் அவற்றுக்கு ஒப்பாக அவற்றை உள்ளத்தில் வைத்துப் பேணினாள். கடவுட் பற்றினும் காதல் குறைந்ததன்று என்பதை அவன் துன்ப வாழ்வின் இன்ப நிறைவு பட்டாங்கமாகக் காட்டிற்று. அவள் கடவுட் பற்றையும் மனித இனப்பற்றையும் மூரட் காதலும் அவள் மாறா இளமை உள்ளமும் தூய்மைப்படுத்தி உயர்வு தருபவையாயிருந்தன. மூரட் இறந்தது 1815இல் அவனுக்காக அவள் வரைந்த கல்லறை வாசகம். “என் நண்பரே, நான் இப்போது உறங்குகிறேன்” என்பது தான். இறந்த அவன் நினைவு உண்மையில் அவளுக்குத் தூங்கும் காதலனைக் காணும் நிலையாகவே இருந்தது. அவள் காதில் உடல் கடந்த, புலனுணர்ச்சி கடந்த நிலையை எய்திவிட்டது. இளமை வாழ்விலே யாரினும் தூய உள்ளமும் எவரினும் உயர்ந்த நாகரிக நயமும் படைத்த அக்கலை நங்கையின் அறிவும் முதுமையில் முதிர்ந்த நெல்லிக்கனி போல் பளிங்குத் தன்மை பெற்று ஒளி வீசிற்று. அவள் மூரட்டின் துணையில்லாமல் வாழ்ந்த பன்னிரண்டாண்டுகளும் மூரட் ஏழை மக்களிடையே ஆற்றிய நற்றொண்டினை ஏழை, செல்வர், பொதுமக்கள், உயர்ந்தோர் யாவரிடையும் அவள் ஆற்றினாள். அவள் கண் அறுவை செய்து இருட்டறையில் இருந்தபோது அவளை ஒரு கணம் பார்த்துச் செல்லவந்த அமைச்சர் ஒருவர் மூன்று மணி நேரம் இருந்து அவள் மடமடவென்று பேசிய வருணனைக் காட்சிகளில் மயங்கினார். ஆயிரம் கண்கொண்டு உலகை நோக்கிய மனிதனினும் சிறந்த ஒரு உயிரினத்தின் அனுபவ பாடம்போல அவள் உரை நிறைவும் தெளிவும் உடையதா யிருந்தது. 1815இல் வாட்டர்லூப் போராட்டத்தில் முனைந்து நெப்போலியன் ஆட்சியிழந்தான். பதினொரு ஆண்டு கழித்து உள்ளூர அரித்த காதல் நோய்க்கு இரையாகி அடிலி ஸ்விட்ஸர் லாந்தில் உயிர் நீத்தாள். வாழ்வின் எக்கடமையிலும் தவறாது நிறையின்பம் கண்ட லாரைன் தன் இன்பச் செல்வியின் வாடிய வாழ்க்கைக்குப் பேரளவில் தானே காரணம் என்று உணர்ந்து புண்பட்ட உள்ளத்துடன் துடித்தாள். அடுத்த ஆண்டில் அவளும் விரைவில் உடல்நலமிழந்து மூரட்டின் நினைவு ஒன்றே ஆறுதலாக அமைந்து உயிர்நீத்தாள். அவள் கல்லறை வாசத்தை அவளே முன்கூட்டி எழுதித் தந்திருந்தாள்; வாழ்வில் முழுதும் காண அவாவிய மாண்புடை இறுதித்துறை சென்றமைந்தென் வாழ்வின் அலுப்பெலாம் தீர மறைவெனும் ஓய்வு பெறுவேன். ஸெனகலிலிருந்து அவள் எழுதிய கடிதம் ஒன்று அவள் இறுதி நினைவுகளைத் தூண்டியது. “இப்போது நள்ளிரவு. நான் படுக்கைக்குச் செல்கிறேன், தூங்கவும் முயல்வேன். ஏனெனில், தூக்கத்தின் அமைதியிடையே என் கருத்துகள் நனவுலகின் தொலைகடந்து உன் தலையண்டை யுலவக்கூடுமல்லவா?” ஸெனகலிலிருந்து உறக்கத்தில் பாரிஸ்வரும் உள்ளம் எந்த உலகத்திலிருந்தாலும் இப்போது என் தலையண்டை சுற்றாமலா இருக்கும் என்று நினைத்து அவள் சாவின் துன்பத்திடையேயும் கலகலவென நகைத்தாள். அவள் மேலும் எழுதியிருந்தாள்: “இறந்தபின் உயிர் எந்நிலை பெறுமோ நான் அறியேன். ஆனால், என் விருப்பம் இது. நான் ஒரு செடியாய் இருக்கவேண்டும். நீ என்னில் மலரும் மலராக வேண்டும். நான் என் மலரைப் பாதுகாக்க உன்னைச் சூழ முட்களை வளர்த்து வைத்துக் கொண்டிருப்பேன்.” “ஆகா, இப்போது தெரிகிறது, ஏன் எனக்குப் பன்னிரண்டு ஆண்டுகட்குள் நீ போனாய் என்று. இப்போது செடியும் வளர்ந்திருக்கும். முட்படுக்கையும் சித்தமாயிருக்கும். நான் இதோ வருகிறேன்” என்று அவள் தன் இறுதி மூச்சுடன் கூறினாள். வாடிய அவள் முகத்தின் முறுவல் வாடாமலராகிய வாடாமல்லி!யென அவள் காதலைக் குறித்துக் காட்டுவதுபோல இருந்தது. அப்பாத்துரையார் அறிவைப் பேணாத அரசு! அறிவு பல துறையினது; எனவே அறிஞர்களும் பல துறையினர் ஆவர். தமிழ் எனும் மொழித்துறையும் அதன் புலமைத் துறையும் பற்பல. தமிழில் கலைகளும், பண்பியல்களும், புறத்துறையைச் சார்ந்த அறிவு நிலைகள். தமிழின் மொழியியலும், சொல்லியலும் ஒலியியலும் அதன் அகத்துறையைச் சார்ந்த அறிவு நிலைகள். இசை, இயல், நாடகம் என்பன கலைத்துறை அறிவு நிலைகள். அவற்றுள் இலக்கியமும் இலக்கணமும் இயல்துறையைச் சார்ந்தவை. அறநூல்களும் வாழ்வியல் நூல்களும் பண்பியலைச் சார்ந்தவை. மொழியியலும் அது சார்ந்த இனவியலும் வரலாற்றைச் சார்ந்தவை. இன்னோரன்ன பலதுறைத் தமிழ் அறிவியலில் தனித்தனித் துறையறிவும், பல்துறை அறிவும் சான்ற பேரறிஞர்கள் பலர் அன்றுந் தேன்றினர்; இன்றுந் தோன்றி இருந்து சிறந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே படித்தாய் வளர்ந்தவருமிலர்; வாழ்ந்தவரும் இலர். அவர்களை அடையாளங் கண்டு கொண்டவரும் கொள்பவரும் மிகச் சிலரே! வாழ்க்கை என்பது வெறும் உயிர் வாழ்தல், பொருளியல் துய்ப்புகளில் மேம்படுதல் என்பன மட்டுமே பொருள் பெறுமாயின், அறிவு வாழ்க்கையே பொருளற்றதாகப் போய்விடும். அறிஞர்களோ பிறவியிலேயே உயர் உணர்வு பெற்றவர்களாக, வாழ்வியலில் அக்கறை கொள்ளாமல், அறிவுத் துறைகளிலேயே தம்மை மூழ்கடித்துக் கொண்ட முழு மாந்தர்களாக வாழ்ந்து சிறப்பவர்களாவர். எனவே அன்றும் இன்றும் என்றும், வறுமை அவர்களுக்கு உயிருடைமையாகவே உள்ளது. அவ்வறிஞர்கள் வரிசையில் நம் தமிழறிஞர்கள் தொன்று தொட்டு வறுமையிலேயே செம்மையைக் கண்டவர்களாக இருந்து வருவதை வரலாறு உறுதி கூறும். அறிவு முனைப்பால் முழுமை பெற்றவர்களாதலின், அவர்கள் தம் ஊனுடம்பு ஓம்பும் வெற்று வாழ்ககைக்காக, எதற்காகவும் எவரிடத்தும் எப்பொழுதும் கூனல் எய்தாக் கொள்கையாளர்களாக இருந்து, தாம் பேசும் தண்டமிழ்க்கும் தாம் வாழும் இனத்துக்கும், தாம் பிறந்த நிலத்துக்கும் அரிய பல தொண்டுகளாற்றி, இறுதி வரை, வாழ்வியலுக்கு உறுதி பயப்பதாம் பொருள் நிலையில் ஓர் இம்மியும் உயராது, வறுமையிலேயே வாழ்ந்து வெறுமையிலேயே மறைவோராக இருக்கின்றனர். அவ்வருந்தமிழ்ச் சான்றோர்களுள், அண்மைக் காலத்தே நம்மிடையே தோன்றியிருந்து அரிய பல அறிவுத் தொண்டாற்றி, இறுதியில் கலங்கிய நெஞ்சொடும், கண்ணீர் விழியொடும், காலச் சுழலில் மாய்ந்து போனவர்களான இரு பெரும் புலவர்கள் என்றென்றும் இவ்வினமும் நிலமும் நினைக்கத் தக்க சான்றோர்கள் ஆவர். அவர்கள் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரும் ஆவார்கள். இவருள் பாவாணரை என் வாழ்வில் நாற்பத்தைந்தாண்டுக் காலம் அருகிருந்து பார்த்தேன்; பன்மொழிப் புலவரை கடந்த முப்பதாண்டுகளாக என் அகத்திருந்து பார்த்தேன். இவர்கள் இருவரும் இவ்விருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேரு மலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும், குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெரு மக்கள்! மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்களை விண்மீன்கள் என்றால், இவர்கள் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணாளர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டுத் தவம் இயற்றிய தீந்தமிழ்த்துறவோர்கள். பாவாணர்க்கும் பன்மொழிப் புலவர்க்கும் நெருங்கிய உளத்தொடர்பும், கொள்கைத் தொடர்பும், அறிவுத் தொடர்பும் உண்டு. உழைப்பில் இருவரும் ஊக்கம் இழக்காத ஓர் ஏர் உழவர்கள், யாருக்கும் அஞ்சாத வல்லரிமாக்கள்! தண்டமிழ்த் தாயின் தவப்பெரும் புதல்வர்கள்; வறுமையில் செம்மை காத்த பெருமையாளர்கள்! மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப் பற்றும் கொண்ட நல் உரவோர்கள்! தமிழகத்தில் பொதுவான அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள் பற்பலர் அவ்வப்போது தோன்றுகின்றனர்; பல அருஞ்செயல்களைக் கூடச் செய்கின்றனர்; செய்தும் வருகின்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் ஒரே தரத்தினர், அறிவுத் திறத்தினர் அல்லர். அவரவர்களுக்கு அவரவர்களுடைய வாழ்க்கைக்குத் தமிழ் ஒரு பிழைப்புக் கருவி. அவர்கள் தமிழைப் படித்தனர்; அல்லது கற்றனர்; அதில் புலமை பெற்றனர்; அல்லது ஆசிரியத் தன்மை பெற்றனர்; வாழ்வுற்றனர். ஆனால், பாவாணரைப் போலும், அப்பாத்துரையார் போலும் தமிழ் அறிஞர்களும் பெரும் கொள்கைப் புலவர்களும் எப்பொழுதோ ஒருமுறை, ஓரிரு கால கட்டத்திற்குள்தாம் பிறந்து தம்மால் தமிழையும் தமிழால் தம்மையும் மேம்படுத்தும் அரும்பெறல் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தமிழுக்கு ஆற்றிய அல்லது ஆற்றி வரும் தொண்டுக்குப் புலவர்கள் பிறர் அத்தனையரும் இணைந்து ஆற்றிய அல்லது ஆற்றிவரும் தொண்டும் ஈடாகாது என்று உறுதியாய் மெய்ப்பித்துக் காட்ட முடியும். அத்தகைய கொள்கைப் புலவோர்கள் தமிழுக்கு ஆற்றியது தான் - ஆற்றி வருவதுதான் தொண்டு-என்னும் பெருமை பெறக் கூடியது. புறநிலையில் அவர்போல் வைத்து எண்ணக் கூடிய புலவர்கள் பிறர் செய்வது பணி; தமிழ்ப் பணி! அல்லது ஆசிரியப் பணி; பேராசிரியப் பணி! எனவே தமிழும், தமிழினமும் தமிழ்நாடும பாவாணர், அப்பாத்துரையார் போலும் தனிமுதல் பேராசிரியர்களால் - அவர்கள் வாழ்க்கையையே ஈடு வைத்து ஆற்றிய தொண்டால் - பெருமை யுற்றன; நிலைமை பெற்றன; சிறப்புப் பெற்று வருகின்றன. இவர்களுள் பாவாணர் தமிழ்மொழி ஆய்வில் தனிக்குன்றம் எனச் சிறந்து விளங்கினார். பன்மொழிப் புலவர் திராவிட மொழி ஆய்விலும் வரலாற்றிலும் தமிழையும் தமிழரையும் தமிழ்நாட்டையும் மேம்பாடு உறச் செய்தார். ஆனால் நம் நெடு வரலாற்று மூடக்கடைப்பிடியால் இருவரும் குன்றின் மேலிட்ட விளக்காக வாழாமல், குடத்துள் சுடர்ந்த விளக்குப் போல் நலங்குன்றி, வளங்குன்றி வறுமையிலேயே பெருமூச்செறிந்து உயிர் தவிர்க்கலாயினர். இது கழிபெரும் இரங்கல்! நாம் கழித்துக் கட்ட வேண்டிய புலமைப் புறக்கணிப்பு! இப்பிழைப்புக்கு நாமும் நம்மையாளும் அரசும் பெருந்தண்டனை ஏற்கத் தக்கவர்கள்! நாணித் தலைகுனிய வேண்டியவர்கள்! பாவாணர் மறைந்த பொழுது அவர் செய்ய வேண்டிய பணி, முற்றுப் பெறாமல் பரந்துபட்டு நின்றது. அவர் ஏறத்தாழ இருபத்தைந்து நூல்கள் எழுதி இத்தமிழுலகு பயன்பெறத் தந்து சென்றார். ஆனால் பன்மொழிப் புலவரோ ஏறத்தாழ நூற்று எண்பது நூல்களுக்குப் பேராசிரியராக விருந்து அறிவாளுமை செய்து மறைந்தார். இருவரும் இன்னும் எழுதி முடிக்க வேண்டிய அறிவு நூல்கள் பல உள. அம் முடிக்கப்பெறா நூல்கள் இவ்விருவர் பாங்கிலிருந்தும் நமக்குக் கிடைக்கப் பெறாமற் போனது நம் போகூழே! நாமேதாம் அவர்கள் தம் பணியில் முற்றுப் பெறாமற் சென்றதற்கு முழுக் காரணர்களாகப் பொறுப்பேற்றுக் கொள்ளுதல் வேண்டும். இது நமக்கு மட்டுமன்று. நம் மொழிக்கு இனத்திற்கும் நாட்டிற்கும் நாமே ஏற்படுத்திக் கொண்ட பெரும் பேரிழப்பாகும்! எதிர்காலம் நம்மைப் பொறுத்துக் கொள்ளாது. நம் பெருமைக்குரிய பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்கள் பாவாணர் மறைந்த எட்டாண்டுகள் கழித்து மறைந்துள்ளார். பாவாணர் மறைந்த பின்னை நாமும் நம் அரசும் விழித்துக் கொண்டிருந்தாலும் நம் பன்மொழிப் புலவரை இன்னும் சில காலத்திற்குப் புரந்து பேணி அவர் எச்ச அறிவாட்சியை நீட்டித்திருக்க வழி செய்திருக்கலாம். அதன் வழி அவர் அறிவால் இம்மொழிக்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் கிடைத்திருக்க வேண்டிய அறிவுக் கருவூலங்களைக் கிடைக்கச் செய்திருக்கலாம். ஆனால், நாம் தாம் போற்றிக் கொள்ள வேண்டிய பெரும் புலமையை மண்ணில் போட்டுப் புதைத்து விட்டு, அப் புதை மேடையில் நின்று மறைந்து போன புலவர்க்குப் போற்றுதலுரையும், விழா வேடிக்கையும் செய்து நிறைவுறுவோர்கள் ஆயிற்றே! என் செய்வது? இனி, பன்மொழிப் புலவர் தம் வாழ்வியல் நிலைகளை நன்றியுடன் நினைந்து வியந்து போற்றுதல் செய்வோம். புலவரவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல் வாய்மொழி எனும் சிற்றூரில் 24.6.1907 ஆம் ஆண்டுப் பிறந்தார் பெற்றோர் முத்தம்மாளும் காசிநாதரும் ஆவர். சிறு அகவைப் பொழுதிருந்தே தமிழுணர்வும் தமிழின உணர்வும் அவருள் காழ் கொண்டிருந்தன. எதையும் விரைந்து கற்கும் ஆர்வமும், கற்றவற்றை நினைவில் இருத்திக் கொள்ளும் திறமும் இயற்கையாகவே வாய்க்கப் பெற்றவராகையால், அவர் தமிழுடன் ஆங்கிலம், சமசுக்கிருதம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளையும் பள்ளிப் பருவத்திலேயே எளிதாகக் கற்றுத் தேர்ந்தார். தொடக்கத்தில் ஆங்கிலத்திலேயே மதிதகு இளங்கலை ஆங்கிலப்பட்டம் க்ஷ.ஹ.(ழடிn’ள) பெற்றார். பின்னர் தமிழில் முதுகலை (ஆ.ஹ.) தேர்வுற்றார். தமிழில் முதுகலை பட்டம் பெறுவதற்கு முன்னரேயே இந்தியில் விசாரத் (க்ஷ.ஹ.வுக்குச் சமமானது) பட்டம் பெற்றது பெருவியப்பே! பின்னர், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குசராத்தி போலும் திராவிட மொழிகளையும், அரபு, சப்பான் ஈபுறு, மலாய் ஆகிய ஆசிய மொழிகளையும், பிரெஞ்சு, செர்மன், உருசிய, இத்தாலி முதலிய ஐரோப்பிய மொழிகளையும் ஆர்வத்தால் தொடர்ந்து கற்றுப் பன்மொழிப் புலவர் என்ற தனிச் சிறப்புப் பெற்றார். தமிழகத்தில் பன்மொழிப் புலவர் என்று அழைக்கும் தகுதி பெற்றவர் நம் பெருமதிப்பிற்குரிய கா. அப்பாத்துரையார் ஒருவரே. இனி வருங்காலத்தில்கூட இப்பன்மொழிப் புலமைத் தகுதிபெறம் ஒருவர் தோன்றுவார் என்பதற் குறுதியில்லை. ஒரு மொழிப் புலமை எய்துவதற்கே ஒருவர் வாழ்நாள் முழுமையும் செலவிட்டாலும் போதாது என்னும் நிலை இயல்பானதாயிருக்க, பன்மொழிப் புலமை பெறுவதென்பது செய்தற்கரிய செயலே அன்றோ? நம் பேரறிஞர் அவர்கள் தொடக்கத்தில் அரசுப் பணியாளர், ஆசிரியர், இதழாசிரியர் எனப் பல்வேறு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். நூலாசிரியர் என்னும் நிலையில் இவர் தமிழகத்தின் தனிநிலைப் பேராசிரியராக விளங்குவது பெருமைப் படத்தக்கது. இதுவரை வெளிவந்த அவருடைய நூற்களே ஏறத்தாழ 180 அளவில் இருக்கும். (சரியான கணக்கு எடுக்கப் பெற்று வருகிறது.) இலக்கியம், வரலாறு, மொழியாய்வு, மக்கள் வரலாறு, திருக்குறள், சமயம், மெய்ப் பொருளியல், ஆராய்ச்சி முதலிய பல்வேறு துறைகளில் பல அரிய நூல்களை இத் தமிழ் மொழிக்கும், இம்மக்களுக்கும் ஆக்கி வழங்கிய பெரும் பேராசிரியர், அவர். அவர் எழுதிய நூல்களுள் மிக முகாமையானவை; மொழியியலில், தென்மொழி, வளரும் தமிழ், மொழிவளம், ஐனேயை’ள டுயபேரயபந ஞசடிடெநஅ (மறைமலையடிகளாரின் அரிய முன்னுரையைக் கொண்ட ஆங்கில நூல்), கால்டுவெல் ஒப்பிலக்கணம் முதலியன; வரலாற்றியலில், தமிழக வரலாறு, இந்திய நாகரிகத்தின் திராவிடப் பண்பு, வருங்காலத் தமிழகம், குமரிக்கண்டம், தென்னாடு, தமிழ் முழக்கம், தமிழன் உரிமை, இதுதான் திராவிடநாடு, தாயகத்தின் அமைப்பு, ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், இருகடற்கால்கள், இந்திய மக்கள் விடுதலை வரலாறு, சரித்திரம் பேசுகிறது. கொங்குத் தமிழக வரலாறு (மூன்று பகுதிகள்), கெஞ்சிக்கதை முதலியன; மாந்தவியலில், நல்வாழ்வுக் கட்டுரைகள், வாழும் வகை, சங்க காலப் புலவர், சமதர்ம விளக்கம், இல்லறமாண்பு, சங்க இலக்கிய மாண்பு, மக்களும் அமைப்புகளும், தென்னகப் பண்பு, முதலியன; இலக்கிய வியலில், சங்க இலக்கிய மாண்பு, செந்தமிழ்ச் செல்வம், சிலம்பு வழங்கும் செல்வம், உலக இலக்கியங்கள். மேனாட்டு இலக்கியக் கதைகள் (இரண்டு பகுதிகள்), அன்னை அருங்குறள் முதலியன. திருக்குறள் தொடர்பாக - வள்ளுவர் நிழல், திருக்குறள் மணி விளக்க உரை (6 பாகங்கள்) திருக்குறள் தெளிவுரை, திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு, (ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் (ஆiனே யனே கூhடிரபாவ டிக கூhசைரஎயடடரஎயச) முதலியன; அறிஞர்கள் வரலாற்று வரிசையில், ஆங்கிலப் புலவர் வரலாறு. அறிவுலக மேதை பெர்னார்டுசா, ஓவியக் கலைஞர் இரவி வர்மா, சேன்அயர், பெஞ்சமின் பிராங்ளின், அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன், தளவாய் அரியநாதர், கிருட்டிண தேவராயர், சுபாசு சந்திரபோசு, வில்லியம் கூப்பரின் கடிதம், டேவிட் லிவிங்சுடன், ஐதர் அலி முதலியன; பொதுமை நூல்கள்-குடியரசு, பொது வுடைமை, சமூக ஒப்பந்தம், முதலீடு (ஊயயீவையட), போதும் முதலாளித்துவம், மே விழா முழக்கம், உலகம் சுற்றுகிறது, உயிரின் இயல்பு, அறிவுக்கடல், இன்பத்துள் இன்பம் முதலியன; கதை நூல்கள் - இரு நகரக் கதை, சேக்சுபியர் கதைக் கொத்து (நான்கு பாகங்கள்), விருந்து வரிசை, மாமனார் வீடு, முத்துமாலை, கடல் மறவர், கல்மனிதன், துன்பக்கேணி, நூர்சகான், மன்பதைக் கதைகள் (6 பாகங்கள்), விந்தைக் கதைகள் (4 பாகங்கள்), யாழ் நங்கை, மலைநாட்டுமங்கை, யுத்தக் கதைகள் முதலியன. இனி, எழுத்தாக்கக் கொடுமுடியாகத் திகழும் நூல்கள், இவருடைய திருக்குறள் மணிவிளக்க உரை-6 பகுதிகளும், திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பும் (ஏறத்தாழ 1000 பக்கங்கள்), ஆகும். இனி, அவர் துணையாசிரியராக இருந்து தொகுத்தது சென்னைப் பல்கலைக் கழக வெளியீடான `ஆங்கிலத் தமிழ் அகராதி’ ஒரு செயற்கரிய செயலாகும். இதன் தலைமைத் தொகுப்பாசிரியராகத் திகழ்ந்தவர் மறைந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் பா. அ. சிதம்பரநாதனார் என்றாலும், அதன் முழுப் பணியும் நம் பன்மொழிப் புலவர் அவர்களையே சாரும் என்பதை அறிந்தார் அறிவர். இனி, இதன் அடிப்படையில், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக வந்த `ஆங்கிலத் தமிழ்க் கையகராதி’ என்னும் ஏறத்தாழ 700 பக்கச் சில வெளியீடு மிகு பயனுடைய அரிய அறிவு நூலாகும். இத்தனை நூல்களை இவர் எழுதி வெளியிட்டிருந் தாலும், இவற்றாலெல்லாம் இவர்க்குக் கிடைத்த அறிவுக் கூலியோ மிக மிக எளிய சிறு சிறு தொகைகளே! இவர் நூல்களை வெளியிட்டுக் கொடுத்த பதிப்பகங்களால் இவர் பெரிதும் ஏமாற்றப்பட்டிருக்கிறார். இவர் நூல்களை வெளியீடு செய்து கொள்ளையடித்த சில பதிப்பகங்கள் இவர்க்கு அறிவுக் கூலியாகக் கொடுத்தவை 100, 200 உருபாக்களும், மிகச் சில வெளியீட்டு நூல்களுமே! இவரின் கழக, ஆங்கிலத் தமிழ்க் கையரகராதிக்கு, அப்பதிப்பகத்தார் இவருக்குக் கொடுத்த தொகை வெறும் 300 உருபாவே என்றால், நம் நாட்டு வணிக நூல் வெளியீட்டகங்கள் புலவர்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு புலமையை விலை பேசும் நிலையினை என்னவென்று சொல்வது? இங்கு எப்படி அறிவு வளரும்? அறிஞர்கள் எப்படி வாழமுடியும்? கொள்ளையில் தலையாய கொள்ளை அறிவுக்கொள்ளையே! நம் பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களின் தனிநிலை வாழ்க்கை மிக மிக இரங்கத்தக்கது என்பதைத் தெரிவிக்க மிகமிக வருத்தப் படுகிறோம். இவரின் மூளையை உறிஞ்சிக் கொழுத்த வெளியீட்டாளர்கள் இன்றைக்குப் பெருஞ்செல்வம் படைத்த பெரும் முதலாளிகளாய் உள்ள நிலையில், இவர் மறைந்த காலை வீட்டாருக்கு இவர் வைத்துச் சென்றது ஏறத்தாழ ஐந்து இலக்க உருபா கடன் சுமையே என்றால் இவரின் அவல வாழ்க்கையை எண்ணி எவ்வாறு கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியும்? இவர் உயிரோடிருக்கும் பொழுது இவருக்குக் கிடைத்த பெருமைகள் பல. ஆனால் அவை வெறும் பெருமைகளும் பட்டங்களும் பாராட்டுகளுமே! 1961இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். தமிழகப் புலவர் குழு உறுப்பினராக இறுதி வரை இருந்துள்ளார். 1970இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்புறுப்பினராகக் கலந்து கொண்டார். பின் மதுரையில் நடந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில், தமிழக முதல்வர் முன்னிலையில் இந்தியத் தலைமையமைச்சரால் பொற்கிழியும் கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றார். 1973இல் செந்தமிழ்ச் செல்வர் பட்டமும், சேலம் தமிழகப் புலவர் குழுக் கூட்டத்தில் சான்றோர் பட்டமும், தமிழன்பர் பட்டமும் பெற்றார். 1981 சனவரி 26இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி பட்டமும் நம் பன்மொழிப் புலவர்க்கு அளிக்கப்பெற்றது. 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவர்க்கு திரு.வி.க. விருதையும் தங்கப் பதக்கத்தையும் கொடுத்துப் பெருமைப்படுத்தியது. அதே ஆண்டு மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் இவருக்குப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தையும் அளித்தது. ஆனால், இவை எல்லாவற்றினும் பெருமைப் படக் கூடிய செய்தி இங்கிலாந்து ஆக்சுபோர்டு பல்கலைக் கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்னும் நூலை, அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைத்துள்ளதே! இத்தனைப் பட்டங்களும் பெருமைகளையும் பெற்றுக் கொண்ட ஒரு பெரும் புலவர் அவற்றை வைத்துத் தமிழ் வணிகம் செய்யத் தெரியாத காரணத்தால், வாழ்வின் இறுதிக் கட்டம் வரை வறுமையிலேயே உழன்றார் என்பதும், இவர் மறைந்த பின் இவரின் விலைமதிப்பற்ற அறிவுடம்பும், எளிய ஓர் ஏழை மகனுக்கு வாய்க்கும் பூமலர்ப் பாடையில் கூட இன்றிப் புனைவு செய்யப் பெறாத ஒரு வெற்றுத் தென்னங்கிற்றுப் படுக்கையிலேயே கிடத்தி வைக்கப் பெற்றுத் தூக்கிச் சென்று சாவண்டியிலேற்றப் பெற்றதென்பதும் எத்துணைக் கொடுமை யான செய்திகள் என்பதை எண்ணிப் பார்க்கக் கேட்டுக் கொள்கிறேன். இனி, இதனினும் கொடுமை இவர் பொதுச் சுடுகாட்டில் எல்லா ஏழை எளியவர்களைப் போலவே வெறும் எருவாட்டியால் வைத்துத் தீ மூட்டப்பெற்றது. ஐயகோ! இன்றிருந்து நாளை ஒன்றுமில்லாமற் போகும் அரசியல் தலைவர்களுக்குக்கூட கடற்கரை போலும் சிறப்பிடங்களில் புதைக்கப்பெறும் வாய்ப்பும், ஆரவாரப் புதை மேடைகளும் மணிமண்டபங்களும் கிடைப்பது இயல்பாய் இருக்க, அப்பாத்துரையார், பாவாணர் போலும் பேரறிவுப் பெருமக்கள் பொது இடுகாடுகளிலும் சுடுகாடுகளிலும் புதைக்கப் பெறுவதும், சுடப் பெறுவதும் எத்துணை கொடுமையானவை! இங்கிலாந்தில் அறிஞர்கள், புலவர்கள், பாவலர்களுக்கு றுநளவ ஆinளைவநச ஹbநெல என்னும் பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய அடக்கவிடம் இருப்பது இங்கு சிந்திக்கற் பாலது! அறிஞர்கள் மறைந்த பிறகு அவர்களை வெகுவாகப் போற்றிப் பேசுவதும், பாராட்டி வானளாவப் புகழ்வதும் நம் தந்நலத்தையும் மன இறுக்கத்தையுமே காட்டும். அறிஞர்கள் தனியாக வாழ்ந்து வளர்ந்து விடுவதில்லை. அனைவரும் குடும்பம் என்ற வயலிலேயே வளர்கின்ற பயிர்களாகவே இருப்பர். எவ்வளவுக்கெவ்வளவு அறிஞர்கள் தம் தனிநலத்தை மறந்து, பொது நலனுக்காக - மக்களுக்காக - தாம் பிறந்த மொழிக்காக - இனத்துக்காக - நாட்டுக்காகத் தங்களைப் பலியிட்டுக் கொள்கிறார்களோ - ஈகப்படுத்திக் கொள்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் குடும்பங்கள் நசிந்துப் போகின்றன என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்! இந்த உண்மை நம் பன்மொழிப் புலவர் வாழ்வில் நூற்றுக்கு நூறு மெய்யாகி நிற்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்திற்கு ஏராளமான கடன் சுமைகள். அவர்களின் தோள்களை அழுத்திக் கொண்டிருக்கும் சுமைகளை அரசும் மக்களும் தாங்கிக் கொள்ளுதல் வேண்டும். அத்துடன் அவருடைய நூல்களை மறுபதிப்புச் செய்தும் அச்சாகாத நூல்களை வெளிப்படுத்தியும், அவற்றை அரசுடைமையாக்கியும் அவருடைய அளப்பரிய அறிவுக்கு அரண் செய்தல் தமிழரசின் கடமையாகும்! அதன் வழி, தன்னை உண்மையாகத் தமிழ் நலமும் தமிழர் நலமும் கருதும் அரசாக மெய்ப்பித்துக் காட்டுதல் வேண்டும். அல்லாக்கால் எதிர்காலம் இன்றைய அரசையும் மக்களையும் குறைகாணவும் குற்றங்கூறவுமே செய்யும் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்! வாழ்க பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரின் அரும் புகழ்! பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். (528) - தென்மொழி தொகுக்கப்பட்ட கா. அப்பாதுரையார் நூல்கள் கால வரிசையில் 1. குமரிக் கண்டம் 1940-43 2. நாத்திகர் யார்? ஆத்திகம் எது? 1943 3. இராவணன் வித்தியாதரனா? 1943 4. கால்டுவெல் ஒப்பிலக்கணம் 1944 5. கெஞ்சி 1944 6. தளவாய் அரியநாத முதலியார் 1944 7. சிறுகதை விருந்து 1945 8. மேனாட்டு கதைக் கொத்து 1945 9. சேக்சுபியர் கதைகள் 1945, 1950, 1954 10. கிருட்டிண தேவராயர் 1946 11. வருங்காலத் தமிழகம் 1946 12. சங்க காலப் புலவர்கள் 1946 13. டேவிட் லிவிங்ஸ்டன் 1946 14 போதும் முதலாளித்துவம் 1946-47 15. குடியாட்சி 1947 16. ஆங்கிலப் புலவர் வரலாறு 1947 17. சமதரும விளக்கம் 1947 18. இரவிவர்மா 1949 19. சுபாசு சந்திரபோசு 1949 20. சங்க இலக்கிய மாண்பு 1949 21. காதல் மயக்கம் 1949 22. பெர்னாட்சா 1950 23. தாயகத்தின் அழைப்பு 1951 24. ஐக்கிய நாடுகளின் அமைப்பு 1952 25. பொது உடைமை 1952 26. சமூக ஒப்பந்தம் 1952 27. ஆங்கில தமிழ் அகராதி 1952 28. வருங்காலத் தலைவர்கட்கு 1952 29. சமூக ஒப்பந்தம் 1952 30. பொது உடைமை 1952 31. ஐன்ஸ்டீன் 1953 32. எண்ணிய வண்ணமே 1953 33. ஜேன் அயர் 1954 34. நிழலும் ஒளியும் 1954 35. தென்னாடு 1954 36. *தென்னாட்டுப் போர்க்களங்கள் 1954 37. ஐனேயை’ள டுயபேரயபந யீசடிடெநஅ 1954 38. டாம் பிரெணின் பள்ளி வாழ்க்கை 1955 39. தென்மொழி 1955 40. திராவிடப் பண்பு 1955 41. நீலகேசி 1955 42. கட்டுரை முத்தாரம் 1956 43. வாழ்வாங்கு வாழ்தல் 1956 44. இதுதான் திராவிட நாடு 1956 45. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழகம் 1956 46. ஹோரேஸ் வால்போல் கடிதங்கள் 1956 47. கதை இன்பம் 1956 48. அறிவுச் சுடர் 1956 49. பொன்னின் தேட்டம் 1957 50. பெஞ்சமின் பிராங்ளின் 1957 51. வாழ்க 1957 52. உலகம் சுற்றுகிறது 1957 53. பேரின்பச் சோலை 1957 54. கன்னியின் சோதனை 1957 55. நல்வாழ்வுக் கட்டுரைகள் 1957 56. திருநிறை ஆற்றல் 1957 57. செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள் 1957 58. வியப்பூட்டும் சிறுகதைகள் 1957 59. மன்பதைக் கதைகள் 1957 60. மக்களும் அமைப்புகளும் 1957-58 61. மருதூர் மாணிக்கம் 1958 62. சிலம்பு வழங்கும் செல்வம் 1958 63. மணிமேகலை 1958 64. சரித்திரம் பேசுகிறது 1959 65. வள்ளுவர் நிழல் 1959 66. காரல் மார்க்சு 1960 67. தமிழன் உரிமை 1960 68. மேனாட்டு இலக்கியக் கதை 1960 69. இரு கடற்கால்கள் 1960 70 வாடாமல்லி 1960 71. இருதுளிக் கண்ணீர் 1960 72. காரல் மார்க்ஸ் 1960 73. மலைநாட்டு மங்கை 1961-62 74. புதியதோர் உலகம் செய்வோம் 1962 75. யாழ் நங்கை 1963 76 வளரும் தமிழ் 1964 77. கன்னடநாட்டின் போர்வாள் ஐதரலி 1964 78. வெற்றித் திருநகர் 1964 79. மொழிவளம் 1965 80 குழந்தை உலகம் 1967 81. செந்தமிழ்ச் செல்வம் 1968 82. கொங்குத் தமிழக வரலாறு 1983 83. இந்துலேகா 1988 முதற் பதிப்பிற்கான ஆண்டு இல்லாத நூல்கள் மறுப்பதிப்பு செய்த ஆண்டு விவரம்: 1. தமிழ் முழக்கம் 2001 2. இன்பத்துள் இன்பம் 2001 3. இந்திய மக்கள் விடுதலை வரலாறு 2002 4. வாழும் வகை 2002 5. உலக இலக்கியங்கள் 2002 6. ஈலியாவின் கட்டுரைகள் 2002 7. பிறமொழி இலக்கிய விருந்து -1 2003 8. பிறமொழி இலக்கிய விருந்து 2 2006 9. சிறுவர் கதைக் களஞ்சியம் 1 2002 10. சிறுவர் கதைக் களஞ்சியம் 2 2002 11. சிறுவர் கதைக் களஞ்சியம் 3 2002 12. சிறுவர் கதைக் களஞ்சியம் 4 2002 13. சிறுவர் கதைக் களஞ்சியம் 5 2002 * தென்னாட்டுப் போர்க்களங்கள் எனும் நூல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொருள் அடிப்படையில் தொகுக்கப்பட்ட அப்பாத்துரையம் தமிழ் - தமிழர் -- தமிழ்நாடு முதல் பதிப்பு மறுபதிப்பு 1. வருங்காலத் தமிழகம் 1946 2002 வளரும் தமிழ் 1964 2006 தமிழ் முழக்கம் --- 2001 2 தென்மொழி 1955 2001 தமிழன் உரிமை 1960 2001 3. சரித்திரம் பேசுகிறது 1959 2002 மொழிவளம் 1965 2001 4. புதியதோர் உலகம் செய்வோம் 1962 2001 (அறப்போர் பொங்கல் மலர்) வரலாறு 5. சங்க காலப் புலவர்கள் 1945 2003 தளவாய் அரியநாத முதலியார் 1944 2003 கிருட்டிண தேவராயர் 1946 2003 இரவிவர்மா 1949 2003 6. சுபாசு சந்திரபோசு 1949 2003 கன்னடநாட்டின் போர்வாள் ஐதரலி 1964 2003 7. டேவிட் லிவிங்ஸ்டன் 1946 2003 ஐன்ஸ்டீன் 1953 2003 ஜேன் அயர் 1954 2003 8. பெர்னாட்சா 1950 2003 டாம் ப்ரெணின் பள்ளி வாழ்க்கை 1955 2002 9. பெஞ்சமின் பிராங்ளின் 1957 2008 10. குடியாட்சி 1947 2006 ஐக்கிய நாடுகளின் அமைப்பு 1952 --- இரு கடற்கால்கள் 1960 2002 11. தென்னாடு 1954 2006 இதுதான் திராவிட நாடு 1956 --- 12. இந்திய மக்கள் விடுதலை வரலாறு --- 2002 13. வெற்றித் திருநகர் 1964 2003 14. கொங்குத் தமிழக வரலாறு 1983 2002 ஆய்வுகள் 15. சங்க இலக்கிய மாண்பு 1949 2002 சிலம்பு வழங்கும் செல்வம் 1958 2001 இன்பத்துள் இன்பம் --- 2001 16. தென்னாட்டுப் போர்க்களங்கள் -1 1954 2003 17. தென்னாட்டுப் போர்க்களங்கள் -2 1954 2003 18. வாழ்க 1957 2001 உலகம் சுற்றுகிறது 1957 2007 19. மணிமேகலை 1958 2002 செந்தமிழ்ச் செல்வம் 1968 2001 வள்ளுவர் நிழல் 1959 2001 மொழி பெயர்ப்பு 20. குமரிக் கண்டம் 1940-43 2002 21. கால்டுவெல் ஒப்பிலக்கணம் 1944 --- திராவிடப் பண்பு 1955 2014 22. கெஞ்சி 1944 -- 23. பிறமொழி இலக்கிய விருந்து -1 --- 2006 எண்ணிய வண்ணமே 1953 --- 24. பிறமொழி இலக்கிய விருந்து 2 --- 2003 25. தாயகத்தின் அழைப்பு 1952 --- காதல் மயக்கம் 1949 --- 26 . 1800ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் 1956 2001 27. ஹோரேஸ் வால்போல் கடிதங்கள் 1956 2002 செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள் 1957 2002 ஈலியாவின் கட்டுரைகள் --- 2002 28. நீலகேசி 1955 2003 வாழ்வாங்கு வாழ்தல் 1956 கன்னியின் சோதனை 1957 2002 யாழ் நங்கை 1963 --- 29. பேரின்பச் சோலை 1957 2003 30. வாடாமல்லி 1960 2004 31. மலைநாட்டு மங்கை 1961-62 2007 இந்துலேகா 1988 2003 இளையோர் வரிசை 32. சிறுவர் கதைக் களஞ்சியம் -1 --- 2002 குழந்தை உலகம் 1967 1982 33. சிறுவர் கதைக் களஞ்சியம் - 2 --- 2002 34. சிறுவர் கதைக் களஞ்சியம் - 3 --- 2002 35. சிறுவர் கதைக் களஞ்சியம் - 4, --- 2002 கதை இன்பம் 1956 --- 36. சிறுவர் கதைக் களஞ்சியம் -5 --- 2002 37. சேக்சுபியர் கதைகள் - 1 --- 2002 சேக்சுபியர் கதைகள் - 2 --- 2002 38. சேக்சுபியர் கதைகள் - 3 --- 2002 சேக்சுபியர் கதைகள் - 4 --- 2002 39. பொன்னின் தேட்டம், 1957 2002 மன்பதைக் கதைகள், 1957 2002 மருதூர் மாணிக்கம் 1958 2004 40. மேனாட்டு இலக்கியக் கதைகள் 1960 2002 மேனாட்டுக் கதைக் கொத்து, 1945 2002 சிறுகதை விருந்து, 1945 --- வியப்பூட்டும் சிறுகதைகள் 1965 --- பொது 41. அறிவுச் சுடர் 1951 2004 மக்களும் அமைப்புகளும் 1957-58 --- நிழலும் ஒளியும் 1949 --- நாத்திகர் யார்? 1943 --- இராவணன் வித்தியாதரனா? 1943 --- 42. கட்டுரை முத்தாரம் 1956 வாழும் வகை --- 2002 43. நல்வாழ்வுக் கட்டுரைகள் 1957 2002 திருநிறை ஆற்றல் 1957 2004 44. போதும் முதலாளித்துவம் 1946-47 இருதுளிக் கண்ணீர், 1960 உலக இலக்கியங்கள் --- 2002 45. காரல் மார்க்சு 1960 சமூக ஒப்பந்தம் 1952 பொது உடைமை 1952 ஆங்கிலப் புலவர் வரலாறு 1947 46. சமதரும விளக்கம் 1947 2002 வருங்காலத் தலைவர்கட்கு 1952 2002 47. ஆங்கிலம் தமிழ் அகராதி 1952 --- 48. ஐனேயை’ள டுயபேரயபந யீசடிடெநஅ 1954 --- அப்பாத்துரையம் - 30 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) மொழிபெயர்ப்பு  வாடாமல்லி ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 30 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+288 = 304 விலை : 380/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 304  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் ஏடு-1: புதுமலர் 1. தாயுள்ளம் ... 3 2. துன்பத் தொட்டில் ... 8 3. மனைமாற்றம் ... 12 4. ரோஸி ... 16 5. கன்னிமாடம் ... 22 6. திருமணப் பேச்சுக்கள் ... 29 7. சிராம்மோன் ... 37 8. மன்னவை யேற்றம் ... 44 9. கைம்பெண் ... 53 ஏடு-2: அவன் 10. வழியிற் பிறந்த மகவு ... 64 11. விகடக் கவிஞனும் விகடக்குள்ளனும் ... 71 12. பாரிஸ் நோக்கி ... 80 13. துறவியர் மடம் ... 85 14. லக்ஸம்பர்க் கோமகன் ... 91 15. காதலர் சந்திப்பு ... 96 ஏடு-3: காதல் வேட்டை 16. விருந்துக்குப்பின் ... 106 17. கனல் பற்றுகிறது ... 110 18. உள்ளங்களின் இணைப்பு ... 118 19. பாதையில் கண்ட காதற் கனிவு ... 125 20. போராட்டம் ... 132 21. ஊடலும் கூடலும் ... 142 22. கவிஞனின் வெற்றி ... 150 23. பிரிவு ... 159 24. சந்திப்பு ... 171 25. அவள் இணங்கினாள் அவன் பிணங்கினான் ... 177 ஏடு-4: பறவை சிக்கிற்று 26. பிரிவுக்குமுன் ... 184 27. பிரிவு ... 190 28. காதல் மணம் ... 193 29. தப்பெண்ணம் ... 198 30. புயலின்பின் அமைதி ... 204 31. மீட்டும் பிரிவு ... 207 32. ஆபிரிக்கா ... 211 33. லாரைனின் குடும்பத் துயர்கள் ... 215 34. அடிலியின் திருமணம் ... 221 35. ஃபிரஞ்சுப் புரட்சி ... 230 36. ஐம்பதும் அறுபதும் ... 243 37. வின்ஸ்லோப் பண்ணை ... 251 38. நெப்போலியன் அன்பழைப்பு ... 255 39. நந்தா விளக்கு ... 261