நீலகேசி முதற் பதிப்பு - 1955 இந்நூல் 1955இல் பாரி நிலையம், சென்னை - 1. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. நீலகேசி ஆராய்ச்சியும் கதைச் சுருக்கமும் மடலம் (1) நூன்முகம் நீலகேசி என்ற இந்நூலின் பெயரைப்பற்றி ஆராய்ச்சி யாளர்களிடையே கொள்கை வேற்றுமைகள் ஏற்பட்டிருக் கின்றன. இந்நூலின் ஒவ்வொரு மடலத்தின் இறுதியிலும் இதன் பெயர் குறிப்பிடப்படும்போது, நீலகேசி என்ற பெயருடன் திரட்டு என்ற சொல்லும் சேர்க்கப்பட்டு நீலகேசித் திரட்டு என்று காணப்படுகிறது. திரட்டு என்ற இச்சொல்லே மேற் குறிப்பிட்ட வேற்றுமைகளுக்கு அடிப்படைக்காரணமாகும். திரட்டு என்பது பொதுவாகத் தொகுப்பு அல்லது சுருக்கம் என்று பொருள்படும். ஆகவே நீலகேசித் திரட்டு என்ற பெயர்,இந்நூல் ஒரு பெருநூலின் தொகுப்பு அல்லது சுருக்கம் என்பதை உணர்த்துவதாகச் சிலர் கொண்டனர். ஆனால் இந்நூலை மேற்போக்காகப் பார்ப்பவர் களுக்குக்கூட, இது ஒரு நூலின் தொகுப்போ சுருக்கமோ அன்று; முழுமுதல் நூலே என்பது நன்குபுலப்படும். ஆகவே இந்நூலின் பெயர் நீலகேசித் திரட்டு என்று கொள்பவர்கள் திரட்டு என்ற சொல்லுக்கு வேறு பொருள் கொள்ளலாயினர். ஒரு சாரார் திரட்டு என்பது உண்மையில் தெருட்டு என்றிருக்கவேண்டும் எனக் கூறினர். ஆனால் நூலின் ஏட்டுப்படியில் ஓரிடம் நீங்கலாக எல்லா இடங்ககளிலும் திரட்டு என்ற சொல்லே தெளிவாக வழங்கப்பெறுகிறது. இது உண்மையில் பாடபேதமாகக் கூடக் கிட்டவில்லையாதலால், இத்திருத்தம் திருத்துவோரின் நுண்ணிய திறத்தை உணர்த்தும் கற்பனையாகவே கொள்ளத் தக்கதாயிருக்கின்றது. ஆயினும் தெருட்டு என்ற திருத்தத்தை ஏற்பதானால் அது இந்நூலைக் குறிக்க மிகச் சிறந்த சொல் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இந்நூல் உண்மையிலேயே சமய அறிவு கொளுத்த எழுந்தது. தெருட்டு என்பது தெளிவு படுத்துவது என்று பொருள்படும். ஆகவே சமயக் கோட்பாடுகளைத் தெளிவு படுத்தும் இந்நூலுக்கு இப்பெயர் பொருந்துவதேயாகும். இன்னும் சிலர் நீலகேசித் திரட்டு என்ற பெயரை நூலின் பெயராகக் கொள்ளாமல், நூலினது உரையின் பெயராகவே கொள்கின்றனர். திரட்டு என்ற சொல்லைத் தெருட்டு என்றே கொண்டால் உரையினைக் குறிக்க இச்சொல் இன்னும் பொருத்தமிக்கதாகும். ஏனெனில் நீலகேசியின் பொருள்களைத் தெளிவுபெற விளக்குவதே இவ்வுரை. மேலும் இவ்வுரை யாசிரியர் பெயருடன் இது தொடர்பு உடையது. அவர் பெயர் சமய திவாகர முனிவர் என்பது. சமண இலக்கியத்தில் அவர் உயர்ந்த மதிப்பு உடையவர். சமய திவாகரர் என்ற அவர் பெயரே அறியாமை இருளகற்றும் சமய ஞாயிறு போன்ற அறிஞர் எழுதிய விளக்கத்துக்குத் தெருட்டு என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கு மானால், அது மிகவும் ஏற்புடையதே என்பதில் ஐயமில்லை. நீலகேசித் திரட்டு அல்லது தெருட்டு இவ்வகையில் நூலின் உரையின் பெயரானால், நூலின் பெயர் நீலகேசி என்றே அமையும். எது எப்படியாயினும், முழுமுதல் நூலாகிய இந் நூலுக்கு நீலகேசி என்ற பெயரே பொருத்தமானது என்ற நோக்கத்துடன், எம் வெளியீட்டிலும் இதனை நீலகேசி என்றே முதலில் குறித்தோம். முதற்பதிப்பு அச்சகம் சென்றபின், எமது இம்முடிவு மற்றும் ஒருவகையில் உறுதியடைந்தது. பவானந்தம் பிள்ளையவர்களால் பதிப்பிக்கப்பெற்ற யாப்பருங்கல விருத்தியுரையில் இந்நூலின் பெயர் குறிப்பிடப் பெறும் இடங்களிலெல்லாம், நீலம் என்றும் நீலகேசி என்றும் மட்டுமே குறிப்பிடப்படுகின்றது. ஓரிடத்தில் தருக்கமாவன,ஏகாந்த வாதமும் அனேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவதரிசனம், காலகேசி முதலிய செய்யுட் களுள்ளும் சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் கண்டு கொள்க” என்றும், இன்னோரிடத்தில் (487. ம் பக்கம்)“சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, அமிருதமதி என்ப வற்றின் முதற்பாட்டு, வண்ணத்தான் வருவன” என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கே நீலகேசித் திரட்டு என்ற பெயரில்லாததுமட்டுமன்று, நீலகேசி என்ற பெயர் கூட அதனுடன் ஒப்புடைய குண்டலகேசி, பிங்கலகேசி, காலகேசி, அஞ்சனகேசி முதலிய நூல்களைப் போலவே, கேசி என முடிவது காணலாம். நூலாசிரியர் இவ்வகை நூல்கள் பெரும்பாலும் கேசி என்று முடிவதை எண்ணியும், இந்நூல் குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்ததாதலால் அதன் முடிவை எண்ணியும் நீலகேசி என இதற்குப் பெயரிட்டனராதல் வேண்டும். நீலகேசி என்ற ஒரு பெயரே நூற் பெயர் என்று கொள்வது சால்புடையதாயினும், திரட்டு என்ற சொல் அதனைக் குறிக்க ஆசிரியராலோ, பின் வந்தவராலோ சேர்க்கப்பட்டிருக் கலாம் என்று எண்ண இடமில்லாமலில்லை. ஏனெனில் திரட்டு என்ற சொல் வடமொழியிலுள்ள ‘சங்கிரகம்’ என்ற சொல்லுடன் இயைபுடையதாகும். இந்நூலை ஒப்ப பல சமயநெறிகளை விளக்கும் பிற நூல்கள் பலவும் வடமொழியில் ‘சங்கிரகம்’ என்ற சொல்லடுத்தே பெரும்பாலும் வருகின்றன. சாயணமாதவரின் சர்வதர்சன சங்கிரகம், ஹரிபத்ர சூரியின் ஷட்தர் சன சமுச்சயம், சங்கராசாரியரின் சர்வசித்தாந்த சங்கிரகம் ஆகிய வற்றின் பெயர்களைக் காண்க. இப் பல்வேறு நூல்களைப் போலவே, நீலகேசியும் பிறர் மதம் விளக்கி மறுத்துத் தன் மதம் நிறுவுவதனால், அவற்றைப் போலவே சங்கிரகம் அல்லது திரட்டு என்று குறிக்கப்பட்டிருக்கக்கூடும். நூற்பெயரின் இவ்வாராய்ச்சி முடிவு எதுவாயினும் ஆகுக. இது ஒரு முழு நூல் என்பதிலும், இதனைக்குறிக்க வழங்கிய பொதுப் பெயர் நீலகேசி என்பதிலும் ஐயமேற்பட இடமில்லை. ஆயினும் நூலைப் பதிப்பிக்கும்போது நூலின் பெயரைத் தலைப்பில் மட்டுமே நீலகேசி என்று குறிப்பிட்டுப் பதிப்பில் எங்கும் ஏட்டுப்படியில் கண்ட தொடர்களை மாற்றாது அப்படியே அச்சிட்டுள்ளோம். 2. நூலாசிரியர் நீலகேசியின் நூலாசிரியரைப்பற்றி நாம் எதுவுமே அறியக்கூடாத நிலையில் இருக்கிறோம். ஆசிரியர் பெயர், இடம், காலம் எதுவும் தெரியவில்லை. அவர் காலத்திலேயே இவை அறியப்படாது போயினபோலும். புறச் சான்றுகள் கிடைக்காத துடனன்றி, அகச் சான்றுகூட மிகக் குறைவே, அதனால் ஆசிரியர் பெயரும் இடமும் அறியக்கூடவில்லையாயினும், ஓரளவு கால வரையறை மட்டும் ஏற்பட முடிகிறது. சமண சமயநெறியை அலசிக் காட்ட முயலும் இவ்வாசிரியர், தமிழில் வேறெந்த சமண நூல்களையும் குறிப்பிடாமல் மூன்று நூல்களைமட்டும் மேற்கோளாகக் கொண்டு குறிக்கிறார். அவை தொல்காப்பியம், நாலடியார், திருக்குறள் ஆகியவை. இவை மூன்றுமே சமணரால் இயற்றப்பட்டவை என்று கொள்ள இடமுண்டு. முதலது இலக்கண நூல்; பிந்திய இரண்டும் ஒழுக்க நூல்கள். இவையன்றி வேறு சமண நூல்களை அவர் குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது. சமய ஆராய்ச்சி செய்யும் இவ்வாசிரியர் இவைபோலப் பிற சமண நூல்களும் இருந்திருப்பின் குறிப்பிடாதிரார் என்பது உறுதி. ஆகவே, அவை மூன்றேயன்றி மற்றச் சமண நூலும் அவர் காலத்தில் இல்லையென்றே கொள்ளலாம். இம்மூன்று நூல்களுள்ளும் தொல்காப்பியத்தின் காலத்தைத் திட்டமாகக் கூறமுடியவில்லையாயினும், மூன்றிலும் அதுவே முந்தியது என்பது ஒரு தலை. இரண்டாவதாகிய நாலடியார் சமண முனிவர்களால் எழுதப்பட்டதென்றும், அவர்கள் வடநாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டதன் காரணமாகப் பத்திரபாகு என்பவர் தலைமையில் தென்னாடுவந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. பத்திரபாகு, சந்திரகுப்த மௌரியன் என்ற போசனை மாண வனாகக் கொண்டவர். அவர் பஞ்சத்தால் தென்னாட்டுக்கு வந்தபோது, சந்திரகுப்தனும் உடன் சென்றான் என்று சமணர் வரலாறு கூறுகிறது. இதனால் சந்திரகுப்தனும் பத்திரபாகுவும் ஒரு காலத்தவர் ஆவர். சந்திரகுப்தன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஆண்டவன். ஆகவே, பத்திரபாகுவின் காலமும், நாலடியார் காலமும் கி. மு. மூன்றாம் நூற்றாண்டு என்று கூறலாகும். மூன்றாவது நூலாகிய திருக்குறளின் ஆசிரியர் சமணர் மரபுரைப்படி ஏலாச்சாரியார் அல்லது குந்தகுந்தாசாரியார் என்பவராவர். இவர் காலம் சமணர் வரலாற்றின்படி கி.மு. முதல் நூற்றாண்டு அல்லது கி. பி. முதல் நூற்றாண்டு ஆகும். சமண மரபுரையை விட்டு வேறு வகையாக ஆராய்ந்தவர்களும், அவர் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு என்றே கூறுகின்றனர். நீலகேசி, மேற்கூறிய மூன்று நூல்களுக்கும் பிந்திய தென்று ஏற்படவே, அதன் முந்திய கால எல்லை திருக்குறளின் காலமாகிய கி.பி. முதல் நூற்றாண்டு என்று கூறலாம். அதாவது அது முதல் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதேயாகவேண்டும். பிந்தியகால எல்லையை வரையறுப்பது இதனினும் சற்றுக் கடிது. இவ்வகையில் நாம் முற்றிலும் நூலின் அகச்சான்று களையே ஆராய்தல் வேண்டும். இந்நூலுடனொத்த சமய விளக்கத்திரட்டுகள் அனைத்தும் தம் காலத்திலுள்ள சமயக் கோட்பாடுகள் எல்லாவற்றையும் கூடியமட்டும் விளக்குபவை யாகும். இம்முறையில் பின்னாட்களில் தழைத்தோங்கிய சங்கரர், இராமானுசர், மாத்துவர் ஆகியவர்களின் வேதாந்தக் கோட் பாடுகளை இவர் குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது. அதுமட்டு மன்று, பிற திரட்டுக் (சர்வ தரிசன சங்கிரகங்)களில் விளக்கப்பட்ட கோட்பாடுகளில் பலவும் கூட இதில் குறிக்கப்படவில்லை. எனவே, இச்சமயங்களுட் பெரும்பாலனவை, ஆசிரியர் காலத்தி லில்லை எனவும், அவர் அவை வழங்கிய காலத்துக்கு முற்பட்டவர் என்றும் கூறலாம். மேலும், நீலகேசியில் விளக்கப்படும் சமயவாதங்களுள் புத்த சமயத்துக்கு அடுத்தபடியாக ஆசீவகவாதம் என்ற கோட்பாடு இடம் பெறுகிறது. இவ் ஆசீவகவாதத்தைப் பற்றித் தேவார திருவாசகங்களில் எத்தகைய குறிப்பும் இல்லை. வேதநெறிக்குப் புறம்பான புத்த சமண சமயங்களைப் பலவிடங்களிலும் பலவாறாகத் தாக்கி எதிர்த்த இச்சமயத் தலைவர்கள், வேதநெறிக்குப் புறம்பாக ஆசீவகவாதம் என்ற ஒரு தனிக் கோட்பாடு இருந்திருந்தால் அதனையும் எதிர்த்திருப்பா ரன்றோ? வடமொழியிலும் சங்கிரகங்கள் என்ற குழுவைச் சார்ந்த மதவாத நூல்கள் எதுவும் ஆசீவகவாதம் பற்றி விளக்கவில்லை, நீலகேசி ஆசிரியர், சமணமதத்தின் முதல் எதிர் நெறியாகிய புத்த சமயத்தோடொப்ப ஆசீவகவாதத்தை எதிர்த்திருப்பதைப் பார்க்க, அச்சமயம் அவர் காலத்தில் நன்கு தழைத்திருக்க வேண்டும் என்றும், தேவார காலத்துக்குள் அது தடந் தெரியாது அழிந்து போயிருக்க வேண்டும் என்றும் புலப்படும். ஆசீவகவாதம் என்ற பெயர் தேவார காலங்களில் அறியப் படாவிட்டாலும், அதற்கு மிகவும் பிந்திய நூலாகிய சிவ ஞான சித்தியாரில் இடம்பெற்றிருக்கிறது. இது நாம் மேலே குறிப்பிட்ட முடிவுக்கு மாறுபட்டதுபோல் தோன்றுவது இயல்பே. ஆனால் நீலகேசியாலும், பிற நூலாராய்ச்சியாலும், ஆசீவக சமயத்தைப் பற்றி நாம் அறிந்த செய்திகளுடன் சிவஞான சித்தியாரில் கண்ட செய்திகளை ஒப்பிட்டு நோக்கினால், சிவஞானசித்தியார் ஆசீவகவாதம் என்ற பெயரைக் குறிக்கின் றாரேயன்றி அதனை நேரடியாக அறிந்து விளக்க வில்லை என்று காணலாம். ஆசீவகர் நெறி, மேற்போக்கான பண்புகளின் சில வற்றில் சமணரிடையே திகம்பரர் நெறியை ஒத்தது. இருசாராருடையேயும் துறவிகள் ஆடையை வெறுத்தனர். இக்காரணத்தால் இருவரையும் ஒன்று சேர சமணர் எனக் குறிப்பதுண்டு. இவ்வெளி ஒற்றுமையையும் கண்டு, சிவ ஞானசித்தியார் அவை இரண்டும் ஒரே நெறியின் இரண்டு உட்கிளைகள் என மயங்கினர். அது மட்டுமோ? இரண்டினையும் பற்றிக் கூறும் செய்திகள் சிறிதும் ஒன்றுக்கொன்று வேறுபடாது ஒரேபொருளின் இருவகை விரிவுரையாகவே அமைந்துள்ளன. இதிலிருந்து சித்தியார் ஆசிரியர், பிறிதொரு நூலி லிருந்து இப்பெயரைக் கேள்வியுற்று மேலீடாக ஒன்று படுத்திக் குழப்பினரே யன்றி, அச்சமயம் பற்றி நேரிடையாக எதுவும் அறிந்தவரல்லர் என்று ஏற்படுகிறது. ஆயினும் தென்னாட்டில், தேவார காலத்துக்கு முன்பே (கி. பி. 7 ம் நூற்றாண்டுக்கு முன்பே) இறந்துபட்ட இவ் ஆசீவகநெறி, வடநாட்டில் பின்னும் சிலகாலம் இருந்ததெனக் கூறலாம். ஆசீவக நெறியைத் தோற்றுவித்த தலைவர் ம°கரி என்பவர், ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாணரின் ஹர்ஷ சரிதத்தில் பிறசமய வகுப்பினருடனே ம°கரி வகுப்பினரைப் பற்றிய செய்தியும் கூறப்படுகிறது. நீலகேசி இங்ஙனம் ஆசீவக மதம் தமிழகத்தில் தழைத்திருந்த காலத்திய நூல் ஆகும். எனவே, அது ஏழாம் நூற்றாண்டுக்கு முந்திய தாதல் வேண்டும். ஆசிரியர் காலத்தை வரையறை செய்ய உதவும் இன்னொரு செய்தி நீலகேசி 5 வது செய்யுளின் குறிப்பு ஆகும். இதில் ஆசிரியர் தாம் தம் சமயக் கோட்பாடுகளைத் ‘தேவரி’ டமிருந்து கற்றதாகவும், அவை தெய்வ வாக்குக் கொத்த மதிப்புடையவை (பிரமாணிகம்) என்றும் குறிப்பிடுகிறார். ஆசிரியர் தம் குரு எனக் குறிக்கும் இத்தேவர் யார்? தமிழ் இலக்கிய மரபில் வேறெவ்வகை அடையும் இல்லாது “தேவர்” திருவள்ளுவரானால் , நீலகேசி ஆசிரியர் திருவள்ளுவரின் நேரடியான மாணவர் ஆக வேண்டும். அவர் சமய உண்மைகளைத் தேவரிடமிருந்தே கற்றனர் என்பதிலிருந்த, அவர் பிற சமய நெறியினின்று சமணநெறி புக்கவர் என்றும், அதற்கு உரிய ஆசிரியர் திருவள்ளுவர் என்றும் கொளல் தகும், 2 வது பாட்டில் இவ்வரலாறு பழமறை நூல் கண்டு எழுதியதன்று என்று அவர் தாமே கூறுவதும் இக்கோட்பாட்டை வலியுறுத்தும். நீலகேசி ஆசிரியர் திருவள்ளுவர் மாணவர் என்று பெறப்படின் அவர் காலமும் கி. பி. முதல் நூற்றாண்டெனவே துணிதல் வேண்டும். நீலகேசி உரையாசிரியர் நீலாசிரியரைப் பற்றி நாம் அறியக்கூடும் செய்திகளை விட உரையாசிரியரைப் பற்றி அறியப்படுபவை எவ்வளவோ மிகுதி. சிறப்புப்பாயிரச் செய்யுளிலேயே சமய திவாகர வாமனமுனி என்ற அவர் பெயர் தரப்படுகிறது. மேருமந்தர புராணத்தின் முன்னுரையில் அதன் ஆசிரியர் நீலகேசி உரை இயற்றிய வாமனாசாரியர் என்று கூறப்படுகிறது. இது தமிழ்ப் புலவர் வேறுபாடின்றி ஏற்கும் செய்தியாதலால், அதனை இத்துடன் விடுத்து அவர் வாழ்க்கைப்பற்றி அறியப்படும் சில செய்திகளை மட்டும் இங்கே குறிப்போம். இவர் வாமனாசாரியர் என்றும் மல்லி சேனாசாரியார் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவர் மாணவர் புஷ்ப சேனாசாரியார் அல்லது புஷ்ப சேனமுனி என்பவர். இவர் விஜயநகரப் பேரரசை நிறுவிய இரட்டையரள் பின்னவராய புக்கராயரிடம் படைத் தலைவராயிருந்த இருகப்பரின் ஆசிரியர் ஆவர். இருகப்பரும் அவர் தந்தை சைசப்பரும் விஜயநகரத்தை நிறுவியவருள் முன்னவரான ஹரிஹர ராயரின் அமைச்சர்களா யிருந்தனர் என்று அறிஞர்(டாக்டர்) ஹல்ட்ஷ் கூறுகிறார். ஹரிஹரி புக்கராயர்கள் காலம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டாதலின், சமயதிவாகர வாமனரின் காலமும் கிட்டத்தட்ட அதுவேயாகும். இவர் அடிக்கடி உபயபாஷா கவிச் சக்கரவர்த்தி என்றழைக்கப்படுகின்றனர். நீலகேசி உரையின் பொருட் செறிவும், செவ்விய சொல்லினிமையும் வாய்ந்த மணிப்பிர வாள நடையையும் நோக்க, இப்பெயர் பொருத்தமான தென்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். நீலகேசி என்ற பெயரும் கதை மரபும் நீலகேசி என்ற பெயர், இக்காவியத்தின் கதைத் தலைவியும் நடுநாயக உறுப்புமாகிய நீலகேசியின் பெயரை ஒட்டி எழுந்தது. அவள் பழையனூர் மயானத்திலிருந்து உயிர்ப்பலி கொள்ளும் காளியாகத் தோற்றமளிக்கிறாள். அவள் புகழ் தமிழ்நாடு மட்டுமன்றி வடநாட்டிலும் பரவியிருந்தது. புலி யுண்ணும் சிறு தெய்வங்களிடையே அவள் தலைமையிடம் தாங்கியவள். வடநாட்டில் பலாலயம் என்ற நகர்ப்புற மயானத் திலுள்ள காளிக்கு உயிர்ப்பலி செய்யப்படுவதை, முனிசந்திரன் என்ற சமண அறிவன் தடுத்து அதனிடமாக உயிர்கள் போன்ற மண்ணுருக்கள் செய்து அளிக்கும்படி மக்களைத் தூண்டினான். பலாலயத்துக் காளி இது கண்டு மனம் நொந்து, தவ ஆற்றல் மிக்க முனிவனை அணுக அஞ்சி, தன்னினும் பேராற்றல் உடைய பழயனூர் நீலகேசியின் உதவி கோரினாள். பாயனூர் நீலி அதன்படி முனியை அடைந்து, பலவகைகளில் அவனை அச்சுறுத்தியும் அவன் அசையாதது கண்டு மாயத்தால் வெல்ல எண்ணி, அழகிய நங்கை உருக்கொண்டு, அவனை மயக்க முயன்றாள். முனியோ, தன் நுண்ணுணர்வால் அவள் மெய்மை கண்ட கூற, அவள் அவர் பெருமையைக் கண்டு அஞ்சிப் பணிந்து, நீர் இத்தனை ஆற்றல் அடைந்த வகை யாது என வினவினாள். முனிவர் சமண அறத்தின் வலியை உணர்ந்த அவள், தன் தீ நெறி விடுத்து முனிவர் மாணவியாய், சமண அறம் பயின்று அறிவு தெளிந்தாள். தான் தெளிந்ததுடன் அமையாது, உலகமுற்றும் தெரட்ட விரைந்து அவள் பல இடங்களிலும் வெற்றிபடத் திரிந்து, புத்தர், ஆசீவகர், சாங்கியர், வேதவாதிகள் ஆகிய பல்சமய அறிஞரையும் அடைந்து வாதில் வென்று, தன் கோட்பாட்டை நிறுவினாள். இக்கதை வாயிலாக ஆசிரியர் பல சமயங்களின் கொள்கைகளையும் விரித்துரைத்து, அவற்றின் குறைகளையும், சமணநெறியின் நிறைவையும் எடுத்து விளக்குகிறார். நீலகேசி காவியத்தில் கூறப்பட்ட நீலகேசி கதை, பல வகையிலும் தேவார ஆசிரியர்களால் குறிக்கப்படும் பழையனூர்க் காளி நீலியை நினைப்பூட்டுகின்றது. இப்பழையனூர் எதன் பழையனூர் என்று கூறப்படுவது. வட ஆர்க்காட்டு வட்டத்தில் தேவார மூவர்களாலும் பாடப்பட்ட திருவாலங்காட்டின் அருகில் உள்ளது. மூவரும் தத்தம் திருவாலங்காட்டுப் பதிகங்களில் பழையனூரைப்பற்றிக் குறிப்பிடுகின்றனர். திருவாலங்காட்டை அடுத்த இப்ழையனூரில் ஒரு காளி கோயில் இருந்தது என்று திருவாலங்காட்டுத் தலபுராணத் தில் கூறப்படுகிறது. .அப்புராணங் கூறுகிறபடி, பழையனூர்க் காளி, தம் உழையர்(பரிவாரங்) களான சிறுதெய்வங்களுடன் மக்களுக்கும் உயிர்களுக்கும் மிகுதியான அச்சம் விளைத்து வந்ததாகத் தெரிகிறது. தேவர்கள் கூட அவள் செயல்கள் கண்டு நடுங்கி வெருவி, தம்மை அவள் கொடுமையினின்று காக்கும்படி திருமாலிடம் சென்று முறையிட்டனர். இக்காளி பார்வதியின் அருள் துணை பெற்றவளாதலால், சிவபிரானிடமே சென்று உதவி நாடுங்கள் எனத் திருமால் தூண்டினர். சிவபிரானும் அவளை நேரடியாக எதிர்த்துப் போராடத் துணியாது சூழ்ச்சியால் வெல்லக் கருதி, அவளைக் கூத்துப்போட்டிக் கழைத்தார். அவள் இணங்கவே, தேவர்கள் நடுவண்மையின்கீழ் போட்டி தொடங்கிற்று. காளி சிவபிரானுக்கு எவ்வகையிலும் கூத்தில் இளைக்காததன்றிச் சில சமயம் அவரை மிஞ்சியவளாகவும் காணப்படவே, நடுவர்கள் சிவபிரான் பக்கம் தீர்ப்புக்கூறமுடியாது தத்தளித்தனர். இறுதியில் சிவபிரான் சண்டக்கூத்தாடத் தொடங்கினார். சண்டக்கூத்தில் கூத்தர் ஒருகாலைத் தலைக்கு நேரே தூக்கிச் சுழன்றாடவேண்டும். காளியாயினும் பெண் தெய்வமாதலால், நீலி இதைச் செய்யக்கூடாமல் தோல்வியை ஒத்துக்கொண்டாள். இவ்வெற்றியின் காரணமாகச் சிவபிரான் கூத்தரசர் (நடராஜர்) ஆயினார். தலபுராணத்தின் ஆசிரியர் பழையனூர்க் காளியை நீலி எனக் குறித்துள்ளார். திருஞான சம்பந்தர் தேவாரத்திலும் பழையனூர் நீலி பற்றிய குறிப்புத் தரப்படுகிறது. சேக்கிழார் தமது (திருத்தொண்டர்) புராணத்தில் தமது பழையனூர் நீலிக் கதை இன்னொருவகைப்பட்டது. பார்ப்பனன் ஒருவன், தன் மனைவியைப் புறக்கணித்து விட்டுப் பொது மகளிருடன் ஊடாடித் தன் பொருள்களை எல்லாம் தொலைத்தான். ஆதரவற்ற அவன் மனைவி தன் பெற்றோருடன் சென்று வாழ்ந்தாள். கணவன் தன் பொருள் முற்றும் அழித்தபின், மனைவியின் அணிகலன்களைச் சூழ்ச்சியால் கொள்ள எண்ணி, அவள்பால் நேசமுடையவன் போல நடித்து, அவளைத்தன் ஊருக்கு அழைத்துக்கொண்டு வந்தான். ஆனால் வழியில் அவள் அணிகலன்களைப் பறித்துக்கொண்டு அவளையும் தன் பிள்ளையையும் பாழ்ங்கிணறொன்றில் தள்ளிவிட்டுச் சென்றான். மறுபிறப்பில் பார்ப்பனன், வணிகர் குடியொன்றில் பிறந்து பெரும் பொருளீட்டினான். அவன் வருங்கால ஊழை நுனித்துணர்ந்த முனிவர் ஒருவர், வடதிசையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழிப் பயணம் செய்யக்கூடாதென்று எச்சரித்திருந்தார். அதோடு எத்தீமையினும் காப்பளிக்கும் வாள் ஒன்றையும் அவனுக்கு அம்முனிவர் அளித்தார். முனிவர் எச்சரித்த இடம் உண்மையில் முற்பிறப்பில் அவன் தன் மனைவியைக் கொன்ற இடமேயாகும். பாழ்ங்கிணற்றில் விழுந்த அப்பெண், அது முதல் அங்கே பேயாய்த்திரிந்து வந்தாள். இப்பேயே நீலி ஆவள். ஊழ்வினைப் பயனாக வணிகன் பொருள் தேடும் பேரவாவால் உந்தப்பட்டு, முனிவர் எச்சரிகையைப் புறக்கணித்து, அவ்விடத்தின் வழியே வந்தான். பேய், மனித உருவில் கைக்குழந்தையுடன் அவனைப் பின் தொடரலாயிற்று. ஆயினும் முனிவர் தந்த வாளின் திறத்தால் அது அவனை முற்றிலும் நெருங்கவில்லை. அது உண்மையில் பெண்ணல்ல; பேயே என்பதை அறிந்து வணிகன் விரைந்து பக்கத்திலுள்ள பழையனூருக்குட் செல்ல, பேய்ப்பெண் கண்ணீரும் கம்பலையுமாக அவ்வூர்ப் பெருமக்களான வேளாளர் எழுபதின்மரிடம் அவனை இட்டுச் சென்று, அவன் மனைவியாகிய தன்னையும் தன் பிள்ளைகளையும பொதுமகளிர் பற்றால் துறந்து செல்கிறான் என்றும், தன்னை ஏற்கும்படி அவனை ஊரார் தூண்டவேண்டுமென்றும் முறையிட்டாள். வணிகன், தனக்கு மணமோ மனைவியோ எதுவும் இல்லையென்றும், அவர்கள் முன் வாதாடுவது, பெண் அல்ல; பெண் உருவெடுத்துள்ள மாயப் பேயே என்றும் எவ்வளவோ எடுத்துரைத்தும், வேளாளர் அவனைச் சற்றும் நம்பாது அவளை ஏற்க வற்புறுத்தியதுடன், அவள் அச்சந்தவிர்க்கும்படி அவனுக்குத் தீங்குவராமல் உயிர் தந்தும் காப்பதாகக் கூறினர். நீலி பிள்ளையுடன் வணிகனோடு தங்கினாள். அப்போதும் அவனுடைய வாள், அவள் பழிக்குத் தடங்கல் செய்தது. அவனிடம் இருக்கும் வாள் கண்டுதான் அஞ்சுவதாக நடித்து, வேளாளர் மூலம் அதையும் அவள் அகற்றினாள். அதன் பின் அவள், இரவில் வணிகனுடைய உடலைப் பிளந்து குருதி உண்டு, பழி தீர்த்துப் பழையபடிபேயாகச் சென்றுவிட்டாள். இச்செய்திகேட்ட வேளாளர், தம் தவற்றை உணர்ந்து வருந்தித் தம் உறுதி மொழி தவறாது தீக்குளித்திறந்தனர். சேக்கிழார் புராணத்திலும், தலபுராணத்திலும், நீலகேசி காவியத்திலுள்ளது போலவே, பழையனூர், நீலிப்பேய் என்ற பெயர் ஒற்றுமைகள் காணப்படினும், சேக்கிழார் புராணத்து நீலி காளியல்லள். மனித ஆவிவடிவான பேயே. எனவே, சேக்கிழார் புராணக் கதையைவிடத் தலபுராணக் கதையே நீலகேசி காவியத்துடன் மிகுதியும் ஒற்றுமை உடையது. சமணர் இல்லற வாழ்க்கை மறைபற்றிக் கூறும் சமந்த பத்திர அடிகளின் (சுவாமி சமந்தபத்திரரின்) இரத்தினக் கண்டகம் என்ற நூலின் உரையில் இவற்றினும் வேறுபட்ட இன்னொரு பழையனூர் நீலிக்கதை தரப்படுகிறது.இந்நூலில் இல்லறத்துக்குரிய கற்பு (பிரமசரிய) நெறிகாத்துப் புகழ் பெற்ற நங்கையர்க்கு எடுத்துக் காட்டாகப் பழையனூர் நீலியின் பெயர் குறிப்பிடப்டுகிறது. உரையாசிரியர் கதையை விரிவாகக் கூறுகிறார். அதன்படி நீலி, வசபால மன்னன் ஆட்சிக்குரிய வடநாட்டின் தலைநகரான பிருகு கச்சத்தில் வாழ்ந்த ஜினதத்தன் என்ற வணிகன் மகள். அவள் ஒப்புயர்வற்ற அழகு வாய்ந்தவள். அதே நகரில் சமுத்திரதத்தன் என்ற வணிகனுக்கும் அவன் மனைவி சகரதத்தைக்கும் பிள்ளையான சாகர தத்தன் என்பவன் அவள்மீது காதல் கொண்டான். அனால் சாகரதத்தன் புத்தர் குடியினனாதலால் நீலியின் பெற்றோர் அவனுக்கு அவளைத்தர மறுத்தனர். சாகரதத்தனோ நீலியையன்றி, வேறொருவரையும் மணப்பதில்லை என்று பிடிவாதம் செய்தான். இந்நிலையில் சாகரதத்தனும் அவன் பெற்றோரும் சமணர்போல நடித்து நீலியைப் பெற்றனர். நீலி, மணவினையின் பின்தான்இச்சதியை உணர்ந்தாள். ஆனால் மணத்தொடர்பை எவ்வாற்றானும் நீக்க இயலா தன்றோ? கணவனுக்குற்ற கடமையில் தவறாத மனைவியாக நடந்துகொண்டே, அவள் கணவனின் சமயத்திற்குப் புறம்பாய் நின்று சமணநெறியில் தோய்ந்திருந்தாள். அவள் வேட்டகத்தார் இதனை விரும்பாது அவளைப் புத்தநெறியுள் சேர வற்புறுத்தி வந்தனர். இவ்விரண்டகநிலை அவள் உறுதிக்குப் பெருஞ் சோதனையாய் அமைந்தது. ஒருநாள் புத்தத்துறவி (பிக்ஷ&) ஒருவருக்கு உணவு சமைக்கும்படி மாமன் கட்டளையிட்டான். புத்தரோ ஊனுண்பவர். அவளோ, ஊனைக் கனவிலும் கருதத்துணியாத சமணநெறியினள். என் செய்வாள் பாவம். இருதலையும் செல்லமுடியாது அவள் ஒருவகை நடுநிலைச் சூழ்ச்சிகண்டாள். அவள், புத்தத்துறவி அணிந்திருந்த தோல் மிதியடியுள் ஒன்றையே எடுத்துத் திறம்படச் சமைத்துக் கறியாக்கி உண்பித்தாள். ஆனால் துறவி, விடைபெற்றுப் போகமுயலும் போது மிதியடி ஒன்று காணாது தேட, நீலி அவன் உண்டது மிதியடியையே என்று கூறினாள். கணவனும், மாமன் சாமியரும் அடக்கொணாச் சினம் கொண்டும் தேள் கொட்டிய திருடன்போல அதை விள்ளவும் மாட்டாமல் கொள்ளவும் மாட்டாமல் திகைத்தனர். பழிக்குப்பழி வாங்கும் முறையில், அவர்கள் நீலியின் கற்பின் மீது பழிசுமத்தி ஒதுக்கலாயினர். நீலி, அது கேட்டுப் பதைபதைத் தாள். ஆனால் தெய்வம் ஒன்று அவள் கற்பின் திறத்தை மெய்ப்பிக்க ஒருவழி கோலிற்று. அதன் செயலால் நகரின் கோட்டைவாயில் அடைப்பட்டு யாராலும் திறக்கமுடியாது போயிற்று. அக்கால மக்கள் கற்பின் திறத்தில் நம்பிக்கை கொண்டார்கள். எனவே, அரசன் ஆணையால் நகரப்பெண்கள் சகலரும் வந்து கதவைத் திறக்க அழைக்கப்பட்டனர். யாராலும் அது அசையவில்லை. ஆனால் நீலி சென்று தொட்ட அளவில் அது திறந்தது. அவள் மீது வேட்டகத்தார் சுமத்திய பழிமொழி அவளுக்கு மேலும் புகழ் தந்ததேயன்றி வேறன்று. இரத்தின கரண்டகத்தின் நூலாசிரியர் சமந்தபத்திர அடிகள் காலம், கி.பி. இரண்டாம் நூற்றாண்டாதலால், நீலி பற்றிய இக்கதை இதனினும் பழமையானதாதல் வேண்டும் அதோட அவர் தமிழ்நாட்டவர் என்பதும், அவர் வாழ்ந்த ஜினகாஞ்சி, கிறி°தவ ஊழித் தொடக்கத்தில் சமணநெறி யின் தலைமையிடமாயிருந்தது என்பதும் கவனிக்கத்தக்க செய்திகள். இங்ஙனம் பல நூல்களிலும் கூறப்படும் இந்நீலிக் கதை மிகப் பழமைவாய்ந்த தொன்றாகும். காலப்போக்கில் அது பலபடியாக மாறுதலுற்று மேற்சொன்ன மூன்று நூல் களிலும் மூன்று வகையாகக் கூறப்படுகிறது. நீலகேசியின் கதை, தலபுராணக் கதையையும் சேக்கிழார் கதையையும் விட இரத்தின கரண்டக அரைக்கதையையே மிகுதியும் ஒத்திருக்கிறது என்னலாம். ஆயினும், நீலகேசி காவியம் கதையை அடிப்படை யாகக் கருத்தாகக் கொண்டதன்று. சமயக்கொள்கைகளை அலசி விளக்கவந்த நூலே. அவ்விளக்கங்களை நோக்க ஒரு நூலாகமட்டுமே கதை உதவுகிறது. ஆகவே கதைப் பகுதியை ஆராயவேண்டிய நிலைமைக்கே இடமில்லை. அது மக்கள் மரபுரைகளில் கண்ட பெயர்களையும் செய்திகளையும், தம் சமய விளக்கத்தின் சட்டமாய் அமையும்படி ஆசிரியர் புனைந்த புனைவேயன்றி வேறன்று. ஆசிரியரே இக்கதை தம் மனத்திரையில் கண்ட புனைவுக் காட்சி என்று கூறுகின்றார். இலக்கியப் பண்பு கதைப் பகுதியைப்போலவே, நூலின் இலக்கியப் பண்பும், நூலின் முதல் நோக்கத்துக்குப் புறம்பானது சமய விளக்கம் கூற வந்த நூல், இலக்கியப் பண்பை முதல் நோக்கமாகக் கொண்டதாக இருக்கமுடியாது. ஆயினும் இவ்வகைப்பட்ட நூல்களில் காணும் கலை நயத்திலும் மேம்பட்ட நயங்கள் இதில் உண்டு என்பதை நூலின் போக்கில் காணலாம். உணர்ச்சிக்கும் விரிவுரைக்கும் இடந்தராத இப்பொருளையும் கூட ஆசிரியர் தக்க கதை ஒன்றில் பூட்டி உரையாடல் வடிவில் கூறி, அதன் இயற்கையான கடு உவர்ப்பைப் பெரிதும் மாற்றியிருக்கிறார். அதற்கேற்பத் தமிழில் துணிக்காப்பியங்கள் ஐந்தனுள் (சிறு பஞ்ச காவியங்கள்) அது ஒன்றாக இடம் பெற்றுள்ளது. கிரேக்க இலக்கியத்தில் பிளேட்டோ என்ற அறிஞர், தம் கோட் பாடுகளை உரையாடல் வடிவில் சுவைபடக்காவிய நடைப் படுத்தியுள்ளார். பொருளால் தத்துவ விளக்க நுலாகிய அந்நூலை (ரிபப்ளிக் அதாவது அரசியல்) நாடகம் போலக் கவர்ச்சியுடன்வாசிக்கலாம். நீலகேசி ஆசிரியரும், இதே போல அறிவுரையாகிய வள்ளற்பாலையையும், தம் உரையாடல் ஆற்றலாலும், விரிவுரை ஆற்றலாலும் தீஞ்சுவைப் படுத்தி யுள்ளார். அறிவியற் பண்பு இலக்கியப் பண்பிலும் பன்மடங்கு வியப்புத்தரும் செய்தி நீலகேசியில் பல இடங்களிலும் பரந்துகாணப்படும் அறிவியற் பண்பே. அவற்றுட் பல, தற்கால அறிவியலாராய்ச்சிக் கொத்தவை. ஆராய்ச்சியாளர்க்குக் கூட வியப்பும் இறும்பூதும் தரத்தக்கவை. நூலில் பரக்கக் காணக்கூடும் இவ்வுண்மையை எண்பிக்க ஒருசில செய்திகளை மட்டும் இங்கே தொகுத்துக் கூறுவோம். செடி கொடிகள் உயிரற்றவை என இக்காலத்தும் பாமரர் எண்ணுவதுண்டு. உயிர் வளர்ச்சி முறையில் (நுஎடிடரவiடிn) அவை விலங்குகளைவிடத் தாழ்ந்தவையாயினும், அவற்றைப்போலவே உயிர் பண்புடையவை என்பதையும், பிற உயிர்களுடன் அடிப்படை ஒற்றுமைகள் உடையவை என்பதையும், தற்கால அறிவியல் ஆராய்ச்சி நன்கு விளக்குகிறது. புத்தர், செடி கொடிகள் உயிருடையவை என்ற சமணக் கொள்கையை மறுத்தபோது, நீலகேசி சமணக் கோட்பாட்டை வலியுறுத்த வழங்கும் ஆதாரங்கள், இன்றைய அறிவியலார் கூறும் ஆதாரங்களை வியக்கத்தகும் முறையில் ஒத்திருக்கின்றன. செடி கொடிகள் உயிரற்றவைபோல் தோன்றுவதன் காரணம், உயர்தர உயிர்கள்போல அவை, ஐயறிவு (ஐம்புல நுகர்வு) உடையவையாயிராமல், ஓரறிவுமட்டும் உடை யவையாயிருப்பதே என்று நீலகேசி விளக்குகிறாள். தொல்காப்பியரும் உயிர் வகைகளில் ஓரறிவுயிர் முதல் ஐயறிவுயிர் ஈறாக, உயிர் வகைகளை வகுத்து, மனிதன் ஆரறிவுயிர் என்று கட்டுரைத்தல் காணலாம். சமண நூல்களில் மட்டுமே இப்பாகுபாடு கூறப்படுவது குறிப்பிடத் தக்கது. மேலும் செடி கொடிகளைப்போல் பாறையும் புற்று வளர்கிறதே என்ற ஐயமகற்றி, நீலகேசி பாறையும் புற்றும் பிறபொருள்மேலடக்கி வளர்வனபோல் தோன்றுகின்றன என்றும், அவற்றின் வளர்ச்சி புற வளர்ச்சி அல்லது போலி வளர்ச்சியே என்றும் காட்டி, செடி கொடிகள் பிற உயிர் களைப்போலவே உள்ளீடான வளர்ச்சி உடையவை என்று விளக்குகிறாள். புற்று வளர்ச்சியில் புற்றின் உருவம் வடிவும் மாறுகின்றன. உயிர் வளர்ச்சியில் அளவுமாறுதலன்றி உருவும் வடிவும் பெரும்பாலும் தொடர்ந்த நிலைபெறுகின்றன. இதுவன்றி மேலும், செடிகொடிகள், விலங்குகள் போல் நோய்க்காளாய், மருந்து வாயிலாக நோய் நீக்கம் பெறத்தக்கவை. சூழ்நிலைக் கேற்ப மாறுபாடும் செயலெதிர்ப்பும் உடையவை. பால் வேறுபாடும் இனத் தொடர்ச்சியும் பெருக்கமும் கொண்டவை. இத்தனை ஒற்றுமைகளுக்கும் மேலாகச் செடிகளின் புலனுணர்வை விளக்க, இன்று அறிவியலார் அரிதில் எடுத்துக்காட்டும் சான்றாகிய ‘தொட்டால் வாடி’யின் இயல்பையே நீலகேசியும் எடுத்துரைப்பது வியக்கத்தக்கதாகும். இந்திய சமயக்கோட்பாடுகள் அனைத்தும், ஒலியை ஒளியினும் நுண்ணியதாகவும், மேம்பட்டதாகவும் கொள் கின்றன. ஒளி நெருப்பின் தன்மையுடையது; ஒலியோ வானி னூடாக இயங்குவது என்று எல்லாத் தத்துவக் கோட்பாடு களும் தெரிவிக்கின்றன. ஆனால் சமணநெறி ஒன்று மட்டும் ஒலி பொருள்களின் அணுக்களினூடாக இயங்கும் அழுத்தத்தால் பரவுகிறது என்று கொண்டது. ஒலியினும் ஒலி பின்னிட்ட விரைவுடையது என்பதை இன்றைய அறிவியலார் கூறும் எடுத்துக் காட்டாலேயே நீலகேசி விளக்குகிறாள். காட்சியும் கேள்வியும் ஒன்றுபடவே நுகரப்படுகின்றன எனச் சாதிக்கும் புத்தரிடம் அவள் (மின்னலும் இடியும் ஒரே நிகழ்ச்சியாயினும், மின்னல் கண்டபின், சற்றுநேரம் தாழ்ந்தே பேரிடி யோசையைக் கேட்கிறோம் என்பதை விளக்குகிறாள். மின்னலும் இடியும் ஒரே நிகழ்ச்சி என்பது அண்மையிலேயே அதாவது 18 ம் நூற்றாண்டிலேயே மேல் நாட்டறிவியலாரால் மெய்ப்பிக்கப் பட்டது). இறுதியாகப் புத்தரது உலகியல் கோட்பாட்டை (அநாத்ம) வாதத்தை எதிர்க்கையில் அறிவுற்ற சடத்தினின்று அறிவப்பொருள் தோற்றுவது இயல்பன்று என்று நீலகேசி கூறுவது, தற்கால உள நூலாராய்ச்சியாளரால் மேற்கொள்ளப் படும் அரிய ஆராய்ச்சிக் கருத்து ஆகும்; இதன் மூலமே அவள் உடல் வேறு; உயிர் (ஆன்மா) வேறு; உடலழியினும் உயிர் அழியாது என்பதை நாட்டுகிறாள். கொல்லாமை நெறியும் இந்திய சமயக் கோட்பாடுகளும் இத்தகைய அறிவியல் உண்மைகள் நூலில் சிறக்கக் காணப்படினும், நூலாசிரியர் தனிப்பட வற்புறுத்தும் சமணச் சிறப்புப் பண்பு கொல்லாமை (அஹிம்சை) என்பதை நாம் மறத்தலாகாது. எச் சமயத்தை ஆராயும்போதும் நீலகேசியால், ‘கொல்லாமையே உயர் நெறி’ (அஹிம்சா பரமமோ தர்மம்) என்ற சமணக் கோட்பாடே உரைகல்லாலகக் கொள்ளப்படுகிறது. புத்த சமயம் சமணர் சமயத்தைப்போலவே, கொல்லாமையை உச்சிமேற் கொள்ளினும், கொல்லாமையின் நேரான செயல் மறைப் பயனாகிய புலால் உண்ணாமையை மேற் கொள்ள வில்லை என்பது, இந்திய சமய ஆராய்ச்சியாளர் அனைவரும் அறிந்ததே. புத்தரை எதிர்க்கும்போதெல்லாம், அவர்கள் கொல்லாமை நெறி மெய்ந்நெறியானால் அதன் முழு நிறைவு, புலால் மறுத்தலேயாகித் தீரவேண்டும் என்பதை, நீலகேசி வலியுறுத்திக் கூறுகிறாள். வேதவாதத்தைக் கண்டிக்கும் போதும் இதை முறை கையாளப்படுகிறது. புத்த சமயமட்டுமன்றி, இந்திய சமயநெறிகள் அனைத்தும் (கோட்பாடுகள்) சமணருடனொப்பக் கொல்லாமையை உயர்வாகக் கொள்கின்றன. வேதங்களை ஏற்கும் கோட்பாடு களாகிய ஆறு சமயக் கிளை (தரிசனங்)களுள்ளும் முத லதாகிய பூர்வ மீமாஞ்சை ஒன்று நீங்கலாக, ஏனையவை கொல்லாமையை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அடிப்படை சமயக் கொள்கையாக ஏற்கின்றன. சமயத்தின் பேரால் வேள்வியில் உயிர்ப்பலி யிடுவதைச் சமணர்கள் எதிர்க்கும் அளவில், சற்றும் பின்னடையாத சாரங்கியரும் எதிர்க்கவே செய்கின்றனர். யோகநெறி சாங்கிய நெறியின் திரிபேயாதலால், அதுவும் சாங்கியத்தின் இந்நிலையை முற்றிலும் மேற்கொண்டது. இன்று இந்திய சமயக் கோட்பாடுகளில் முதலிடம் பெறும் வேதாந்த நெறியும், வேதச் சடங்குகளைக் கண்டிப்பதே. சங்கரர் ஆன்ம அறிவே அறிவுநெறி என்ற தம் கொள்கையை நாட்டியதுடன், வேதநெறி அறிவற்றவர்களுக்கே தகுந்த கீழ்த்தர நெறி என்று அதனை ஒதுக்குகிறார். மேலும் சமயம் (தர்மம்) என்பது கொல்லாமை (அஹிம்சை)யே என்று தெளிவாகவும் அவர் கூறியிருக்கிறார். வேதாந்த நெறியின் இன்னொரு கிளை யினைத் தோற்றுவித்த இராமனுஜரும், அருள்நெறி (பக்தி) யையே உயர்வாகக்கொண்டு வேதநெறி வீடுபேற்றுக்கு உகந்ததன்று என்று விளக்குகிறார். வேதாந்தத்தில் மூன்றாவது கிளையான இருபொருள் நெறி(துவைதம்) கண்ட மாதவரும் உயிர்ப்பலியைக்கண்டித்து, அதனிடமாக மாவாலான உருவங் களையே பலியிடும்படி தூண்டினார். இதுவும் தம் சீடரிடையே பிற்போக்காளர்களுக்கு மனநிறைவு ஏற்படுத்து வதற்காகவே யன்றி வேறன்று. இவ்வெல்லா நெறிகளுக்கும் தாயகமான உபநிடதங்களும், அக அறிவு (ஆத்மவித்யா) மட்டுமே உயர்வுடையதெனப் பாராட்டி உயிர்க் கொலையை மறுக்கின்றன. இந்திய நெறிகளனைத்துமே கொல்லாமையை மேற் கொள்ளுகின்றன. ஆதலின், சமணர் கொல்லாமைக் கோட் பாட்டின் சிறப்பு என்ன என வினவலாம். இதற்கு விடை யளிப்பது எளிதன்று. ஏனெனில், சமண சமயத்துக்கும் பிற இந்திய சமயங்களுக்குமிடையே, இவ்வகையில் காணப்படும் வேற்றுமை, கொள்கை வேற்றுமையன்று. கொள்கையைக் கடைப்பிடிக்கும் உறுதியும், தளரவிடாததூய்மை யுணர்ச்சியு மட்டுமே சமணரைத் தனிப்படுத்துவது. இந்தியப் பண்பாடு களின் பெருந் தொகுதியாகக் கருதப்படுவதும் அதே சமயம் அவற்றின் முரண்பாடுகளுக்கும் கண்ணாடியாக விளங்கு வதும் ஆன, மகாபாரதம் கொலையையும் புலாலுண்ணலை யும் பெரிதும் கண்டித்துரைத்தபின், அதனை யடுத்தாற் போலவே இவ்வொழுங்குக்கு விலக்குகளாக (வழுவமைதி களாக)அவற்றிற்கு மாறுபட்ட பல செயல்களுக்கும் இணக்கம் தருகிறது. சமணர் கொல்லாமை பேசுவதுடன் அமையாது, அதனை வலியுறுத்தியும், அதன் உறுதியினின்று இம்மியும் விலகாதும் நிற்க, வேதநெறியும் அதனைப் பின்பற்றிய பிறநெறிகளும் விலக்குகளால் அதன்பிடிப்பை முற்றிலும் தளர்த்தியதன் பயனாகவே தான், பிற்காலத்தில் பாமர மக்கள் எளிதில் சமணசமயம் நீத்து, அவற்றை ஏற்றனர். சமணரின பிடிவாத உறுதியால் நெருக்குண்டு அடக்கிக்கிடந்த இன்ப விருப்புடைய மக்கள், அப்பிணியைத் தளர்த்தும் நெறியை அவாவுடன் ஏற்றனர். ஆயினும், தேவாரத்தின் ஒவ்வொரு பதிகத்திலும் புத்தருடன் சமணரையும் சேர்த்து வசைபாடும் சம்பந்தர் வசைச்சொற்களை ஊன்றிக் கவனித்தால், அவ்வசையிலும் சமணசமயத்தின் “அடிப்படை உயர்வு விளங்காமலிராது. இரு சமயத்தாரையும், அவர் பண்புகளையும் அவர் தனித்தனி வேறுபடுத்தி விளக்கியிருக்கிறார். “சமணத் துறவி உலக வாழ்வை முற்றிலும் துறந்து, உடையையும் துறந்து நக்கரா (நிர்வாணரா) ய்த்திரிவர்,” புத்தத் துறவி காவி உடை போர்த்தித் திரிவர். சாக்கிய (புத்த) முனிவர், சுரக்குடுக்கை ஏந்தி இல்லறத் தாரிடமிருந்து கஞ்சியும் சோறும் பெற்றுண்பர்; சமணத் துறவியோ ஒன்றுமின்றி, மயிற்பீலிமட்டும் கொண்டேகுவர். புத்தபிக்கு (பிக்ஷ&)தமக்கெனப் பிறர் எழுப்பிய அழகும் ஆடம்பரமும் மிக்க மடங்களில் (விஹாரங்களில்) சொகுசாக வாழ்வர்; திகம்பரர் (சமணத் துறவியர்) இயற்கையின் கொடுமை கள் முற்றும் தாங்கி; வெளியிடத்தே நோன்பு (விரதம்)கிடந்து தவமேற்கொள்வர்” ஓரிடத்தில் சம்பந்தர், புத்தபிக்கு ஊனுணவின் சுவையைப் புகழ்ந்து பாடுவர்; சமணமுனியோ அதனைப் பழிச் செயல் (பாவம்) என ஒதுக்குவர் என்றும், எளிதில் மீன் பெற்றுய்யுமாறு புத்தர் கடற்கரையிடத்தே தங்குவர். சமண முனிவர் தவத்தின்பேரால் மலைப் பாங்குகளில் கடுவெயிலில் கிடந்துழல்வர்’ என்றும் கூறுகிறார். இங்ஙனம் புத்தசமயம், பிற்கால இந்திய நெறியினும் மிகுதியாகப் புத்தநெறியினின்று அடிப்படைக் கொள்கை யில் மாறுபட்டிருந்தும், பிற்காலப் புது வைதீகநெறி நின்ற சம்பந்தர் போன்றவர், வேதநெறியின் எதிரிகள் என்ற முறையில் இரண்டையுமே ஒருங்கே எதிர்த்தனர். இதற்குக் காரணமில்லாம லில்லை. வேத (இந்து)ச் சடங்குகளைப் புத்த சமயத்தினரைவிடச் சமணர் ஒழிக்கத் தக்கவர் என்பதற்கு அவர் கூறும் காரணம் இது ஒன்றே. “சமணர்கள் வேத வேள்வியை என்றும் பழிப்பவர். பார்ப்பனர் பயிலும் வேதங்களையோ, அவற்றின் அங்கங் களையோ அவர்கள் பயில்வதில்லை. வேதநெறியையும் வேதச் சடங்குகளையும் மறுப்பதையே அவர்கள் தொழிலாகக் கொண்டார்கள். ஆகவே அவர்களை அழித்தே தீரவேண்டும்” என்று அவர் அறைகிறார். வணங்கா முடியுடன் கொல்லாமை வழி சமணர்போல் நிற்பது நன்றா, அல்லது தத்தம் நலம்பேணிச் சூழ்நிலைக்கேற்ப அதனைத் தளர்த்துவது நன்றா என்பது ஆராய்ந்து முடிவுபடுத்த வேண்டிய செய்தி, நீலகேசி இவ்வகையில் சமண மரபுப்படி அதனையே உயர் நெறியாகத் தீவிரமாகக் கொண்டு வாதாடுகிறாள். சமணசமயமும் வேள்விகளும் தேவார முதலிய பிறசமய நூல்களில், சமணரைப் பற்றிக் கூறப்படுபவற்றைக்கொண்டு மட்டுமே சமணசமயப் பண்புகளை மக்கள் பெரிதும் மதிப்பிட்டுவிடுகின்றனர். சிறந்த ஆராய்ச்சி யாளர்கூட, இந்தியர்மட்டுமன்றி மேல்நாட்டவருங்கூட, இவ்வகை மதிப்பீட்டின் காரணமாகச் சமண சமயத்தைப் பற்றித் தப்பும் தவறுமான கருத்துக்கள் கொண்டுவிடுகின்றனர். இதனால் பழங்கால இந்திய வரலாற்றின் ஒரு பெரும்பகுதி வழுநிறைந்து காணப்படுகிறது. இத் தப்பெண்ணங்களுள் முதன்மையானது, வேதவேள்விகள் மீது சமணர் கொண்ட தொடர்பே. சமணத் துறவிகள் வேத வேள்விகளை ஒறுத்தனர் என்பதனால் அவர்கள் தம் இல்லறத்துத் தோழர்களை, வேள்வி களையும் சடங்குகளையும் முற்றிலும் ஒதுக்கிவிடும்படி கூறினர் என்று கருதப்படுகிறது. ஆகவே ஏதேனும் ஒரு நூலில் வேள்வி பற்றியோ, சடங்கு பற்றியோ பேசப்பட்டால் உடனே அது சமண நூலன்று என்ற முடிவுக்குச் சில ஆராய்ச்சியாளர் தாவிவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக ஓர் அரசன் முடியேற்கும் போது திருமுழுக்கு விழா (பட்டாபிஷேகம்) நடத்தினான் என்று கூறப்பட்டால், உடனே அரசன் சமணன் அல்லன் என்று கொள்கின்றனர். இது முற்றிலும் தவறு. சமணமுனிவர்கள் ஒறுத்த வேள்வியும் சடங்கும் உயிர்க்கொலையுடனிணைந்த வேள்வியும் சடங்குமேயன்றி எல்லா வேள்விகளும் சடங்குமல்ல. ஏனெனில் இன்றளவுங் கூட சமணரிடையே இல்லறத்தாருக்கு வகுக்கப்பட்ட எல்லா நடைமுறைகளும் பிறந்த நாள் விழா, பூணூல் அணிவித்தல் (உபநயனம்) மணவிழா முதலிய எல்லாச்சடங்குகளும் பிறரிடம் காணப்படும் முறையிலேயே நடத்தப்பெறுகின்றன. வைதிக (இந்து)அறநூல்களில் கூறப்பட்ட பதினாறு நற்செயல்களுமே (சம்°காரங்கள்) சமணர்களாலும் பின்பற்றப்படுகின்றன. இதுமட்டுமன்று, இச் சமயங்களில் அவர்கள் வழங்கும் மந்திரங்கள் கூட வேதமந்திரங்களே. மந்திர வழிபாட்டுக்குரிய தெய்வங்களும் இந்திரன், வருணன், அக்கினி, வாயு, உருத்திரன் முதலிய வேதத் தெய்வங்களே. எனவே, சமணநெறி வேள்விகளுக்கும் சடங்குகளுக்கும் முற்றிலும் எதிரானதல்ல. ஆனால் சமணசமயம், அவை இல்லறத்தாருக்குமட்டுமே உரியவை என்று கொண்டது. அவர்களுக்கும் கொல்லாமையுடன் கூடிய வினைகள் மட்டுமே உரியவை. வேத வேள்வியாளர் செய்யும் உயிர்க்கொலைக்கு மாற்றாக அவர்கள் சோறும் நெய்யும் படைப்பர். சமணர் வாழ்வியல் ஒழுக்கமுறை சமண ஒழுக்கமுறை, இல்லற ஒழுங்கு (சிராவகதர்மம்) துறவற ஒழுங்கு (யதிதர்மம்) என இருபாலாக வழங்குகிறது. இரண்டும் கொல்லாமையையும், வாய்மை, அவாவின்மை, கற்புநெறி, தன்னல மறுப்பு (அஹிம்சை, சத்தியம், ஆ°தேயம், பிரமசரியம், பரிமித பரிக்கிரகம்) ஆகியவற்றையும், அடிப் படையாகக் கொண்டவை. இரண்டினிடையேயும் உள்ள வேற்றுமை அளவையும் கண்டிப்பையும் பொறுத்தவை. துறவிகள் வகையில் அவை மயிரிழையும் பிறழாது மேற்கொள்ளப்பட வேண்டும். அந்நிலையில் அவை பெரு நோன்புகள் (மகாவிரதங்கள்) எனப்படும். இல்லறத்தார் அவற்றைச் சூழ்நிலைக்கு ஏற்ற அளவு படிப்படியாகப் பயில்வர். இந் நிலையில் அதே நோன்புகள் துணை நோன்புகள் (அணு விரதங்கள்) எனப்படும். சமணர் சமயத்தில் துறவறம் இல்லறத்தின் பழுத்த முடிவு. ஆனால் துறவறத்துக்கான இன்றியமையா முதற்படி என்ற முறையில் இல்லறம் அதனுடனொத்த மதிப்புப் பெறுகிறது. இப்பாகுபாடே இன்று வைதிகர் தாம் மேற்கொள்வதாகக் கூறும் வகுப்புத்தரநிலை (வர்ணாசிரம) நெறியாகும். வைதிக நெறியின் வரலாற்றில், தொடக்கத்திலிருந்தே உபநிடதங்களும், சங்கரர், ராமானுசர் முதலிய தலைவர்களும் இவ்வகுப்பு நெறி, பிறப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பதை எதிர்த்துள்ளனர். ஆயின் அவர்கள் எதிர்ப்பனைத்தும் விழலுக்கிறைத்த நீராய்விட்டது. சமண நெறியிலோ வகுப்புத்தரநிலை பிறப்பு வேற்றுமையுடன் குழப்பப்படாமல் தொடக்க முதல் இன்றளவும் தூய்மையாக காக்கப்பட்டு வருகிறது. சமய மாறுபாட்டைச் சமணநெறி தங்கு தடையின்றி வரவேற்றதன் காரணமாக, எல்லா வகுப்பினரும் சமண நெறியில் சேர்ந்தனர். ஆனால் சேர்ந்தபின் அனைவரும் கொல்லாமை மேற்கொண்டு ஒரு நெறிப்பட்டுப் படிப் படியாக வேற்றுமை களைந்தனர். ஆயினும் உயர்வு தாழ்வற்ற நிலையில் வகுப்புகள் தனித் தியங்குவதை சமண நெறி தடுக்கவில்லை. புத்தநெறிபோல் சமணநெறி இந்தியாவில் முற்றும் அழிக்கப்படாமல் நிற்பது இவ்வொரு காரணத் தாலேயே போலும்! சமயத் துறையில் வைதிகநெறியிலும் தீவிரமான சமணம் வைதிக நெறிபோல் இந்தியாவில் பரவா மலும், புத்த நெறிபோல் உலகில் பரவாமலும் இருந்தாலும், வாழ்வியல் (சமூகத்) துறையில் கொண்ட இந் நெகிழ்ச்சி யினால் இந்தியாவில் மட்டும் அழியாது நிலவிற்று. சமண வகுப்பு நெறி, பிறப்புப்பற்றியதன்று என்பதை நீலகேசி நன்கு விளக்குகிறாள். அவள் தாசப் பெண் (சூத்திரப் பெண்) ஆதலால், வேதங்கள் பற்றிப் பேசவும் தகுதியற்றவள் என்று வேதவாதிகூறும்போது, அவள் உணர்ச்சி ததும்ப வைதிக நூல்களில் கவனிக்கப்படாது கிடக்கும் மேற்கோள்களையே காட்டி, அவனைக் கலங்கவைக்கிறாள். மாபாரத முதலிய வைதிகநூல்களில், எக்குலத்தாரும் தகுதி பற்றி முனிவராவதையும், வேத முனிவர்களே பல வகுப்பினரா யிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறாள். உண்மை யில் சமணர்கள் வைதிகர்களுக்கு எதிரிகளேயன்றி, வேதங்களுக்கு எதிரிகளல்லர். வேதங்கள் தேவமொழி என்பதை அவர்கள் ஏற்கவில்லை. ஆனால் பெரியார் வேதங்கள் உண்மையில் கொல்லாமை நெறியையே அடிப்படை யாகக் கொண்டவை என்றும் அவர்கள் கொள்கின்றனர். உபநிடதங்களிலேயே இக் கருத்து வலியுறுத்தும் கதை ஒன்று கூறப்பட்டிருக்கிறது. வேள்வியில் தேவர்களுக்கு அளிக்கப்படவேண்டுவதாகக் கூறப்படும் ‘அஜம்’ என்பது ஆட்டைக் குறிப்பதா? அன்றா? என்று கருத்து வேற்றுமை வைதிகரிடையேயும் அன்றிருந்ததென்பதைக் காட்டுகிறது. அதன் பொருள் ஆடுதான் என்று தன் மனச் சான்றுக்கொவ்வாது கூறிய அரசன் பழி எய்துவதாக உபநிடதங்கள் கூறுகின்றன. சம்பந்தர், சமணர்‘வேத வேள்வியை நிந்தனை செய் துழல்பவர்’ என இழித்துக்கூறினும், முன்பு சமணராயிருந்த வரான அப்பர் அதனை எதிர்த்தனரேயன்றி, அதன் அடிப்படைக் கோட்பாட்டை என்றும் இழித்துரைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. சமணர் கொல்லாமை நெறியை ஆதரித்து அவரும் “தயாமூலத் தர்மத்தை”ப் பாராட்டுகின்றனர். இன்று வைதிக (இந்து) இந்தியாவில் ஏற்பட்டுள்ள விழிப்பும், நறுமலர்ச்சியும் சமணர் நெறிக்கு ஊக்கமளிப்பவை, காந்தியடிகள் கொல்லாமைக்குப் புத்துயிர் அளித்து வரு கின்றனர். வைதிகர் மேற்கொள்ளும் வேத உபநிடதங்களின் அடிப்படைக் கொள்கைகளைப் பல இக்கட்டுக்களிடையேயும் தூய்மைகெடாது காத்துவரும் சமணர் நெறி, இத்தறுவாயில் இந்தியருக்கும் உலக மக்களுக்கும் வழிகாட்டியாயும், ஒற்றுமைப்படுத்தும் உயர் ஆற்றலாயும் விளக்கவல்லது. எல்லாச் சமயங்களுக்கும் தனிப்படக் கூறுவதானால், கிரு°தவ சமயத்துக்கும் அடிப்படைக் கொள்கையாக விளங்குவது அன்புநெறி. அதற்கும் அடிப்படையான கொல்லாமை நெறியை வழுவறக் காத்து நிற்கும் சமணநெறி சமயத்தவர், தொகையில் சிறிதாயினும் தொண்டால் பெரிதாகவல்லது. இவ்வகை உயர்வுக்கு இந்தியப்பரப்பு எழுமாக! சமயபேத விளக்கம் மடலம் (2) ‘நீலகேசி’யில் பல சமய வகைகளின் கோட்பாடுகளும் சமணசமயக் கோட்பாடுகளோடு ஒப்பிட்டு ஆராயப்படு கின்றன. நூற் குறிப்புக்களிலிருந்து அவ்வச் சமயக் கோட் பாடுகளை ஒழுங்கு படுத்தித் தொகுப்பது நூலை உணர்வ தற்கு மட்டுமன்றி, அந்நாளைய சமய வளர்ச்சி நிலையை அறிவதற்கும் பெரிதும் உதவும். எடுத்துக் காட்டாகப் பூத வாதம் அல்லது சாருவாகம் என்ற சமயமும், சாங்கிய சமயம், பிற்கால நூல்கள் குறிப்பிடும் நிலையிலிருந்து மிகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. நூலாசிரியர் காலத்தில் அவை முதிராப் பருவத்திலிருந்தனவாதலாலேயே, இவ்வேறுபாடு காணப்படுகிறது என்பது பின்னர்க் காட்டப்படும். மற்ற எல்லாச் சமயங்களையும் அலசிப் பார்ப்பதற்கும், அவற்றைக் கண்டித்தபின்னர் மெய்ந் நெறியெனத் தோல்வி யுற்றாருக்கு எடுத்துக் காட்டுவதற்கும், நீலகேசிக்குப் பயன் படும் சமயம் சமண சமய மாதலால், அதன் கோட்பாடு களையே முதலில் விளக்குவோம். 1. சமண சமயக் கோட்பாடுகள் உலக வாழ்வு துன்பம் நிறைந்தது. துன்பத்திற்குக் காரணம் தீவினை. அதன் காரணம் அவாக்கள். அதிலிருந்து விடுபட அருமருந்தாவது அருகன் தாள்கள். அதனை அடையும் வகைகள் சிநபகவானால் வகுக்கப்பட்ட அறநெறி. உலகத் தொகுதி (சம்சாரம்) மேல் உலகு, நடு உலகு, கீழ்உலகு என, மூன்று பாகுபாடுகளை உடையது. கீழ் உலகு என்பது ஒன்றின் கீழ் ஒன்றாய் அமைந்த ஏழு நரகங்களை உடையது. தீவினைப் பயன் நுகர்வோர், இதில் சென்றழுந்தித் தீவினைப் பயன் அகன்ற பின், மீண்டும் நடு உலகிற் பிறப்பர். ஏழு நரகங்களுக்கும் கீழாக நிகோதம் என்ற மீளா நரகு ஒன்று உண்டு. உய்தி வழியற்ற தீவினையாளர் சென்று, மீளாத் துயரடைந்தழுந்து மிடம் இது. மேலுலகுதேவரகளிருப்பிடம். நல்வினைப்பயனை, உயிர்கள், தேவர்களாக நின்று நுகரும் இடம்இது. நல்வினைப் பயன் தீர்ந்ததும் தேவர்களும் அதினின்று நீங்கி நடுஉலகு வரவேண்டியது தான். ஆகவே, உண்மையில் இது நடு உலகை விட மதிப்புக் குறைந்ததே. இரு விளைகளுக் கீடானதும், அவற்றினின்று விலகி வீடு பெறும் வாய்ப்பளிப்பதும் நடு உலகேயாம். இதிலும் அவ்விடுதலைக்கான சுற்றுச்சார்புகளுடைய இடம் வினை நிலம் (கர்மபூமி) எனப்படும். இந்தியா அத்தகைய வினை நிலம் ஆகும்) நடு உலகே ஆறறிவுடைய மக்களுக்கும் ஐயறிவுடைய மாக்களுக்கும் இருப்பிடமாவது. ஐயறிவுயிர்களும் ஓரறிவு முதல் ஐயறிவு ஈறாகப் பலபல படிகளாக வகுக்கப் படும். (இப்பாகுபாடே தொல்காப்பியத்திலும் குறிக்கப் படுகிறது) மண், புனல், அனல், காற்று, வெளி ஆகிய ஐம் பூதங்களிலும் கண்ணுக்குத் தெரியாது அணுவுருவில் உள்ள ஓரறிவுயிர்கள் பல உள. (தற்கால அறிவியலார் கூறும் அணுவுயிர்கள் இவை) சிந பகவான் வீடுபேற்றிற்குக் கருவியாகிக் காட்டிய நெறிகள் மும்முணிகள் எனப்படும். அவை நன்ஞானம் நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவை ஆம். இவை அனைத்துக்கும் அடிப்படையானது அருள் அல்லது எல்லா வுயிர்களிடமும் கனிவுடைமை ஆகும். சமண நெறியின் அடிப்படை மெய்ந் நிலை (தத்துவங்க ளாக மொக்கல வாதத்திற் கூறப்படுவன, இயக்கம் (தர்மம்) நிலை (அதர்மம்), காலம், வெளி (ஆகாசம்), உயிர் (ஜீவன்), பருப்பொருள் (புத்தலம்), நல்வினை (புண்ணியம்) தீவினை (பாபம்) கட்டு (பந்தம்) வீடு (மோக்ஷம்) என்னும் பத்துமாம். இவற்றுள் முதல் இரண்டும் ஒன்றுக்கொன்று மாறாயினும், ஒரே உலகின் இருதன்மைகளைக் கூறுபவையாம். இந்நாட்டில் எழுந்த சமயங்களில் (மேல்நாட்டில் எழுந்தவற்றில் கூட) பல உலகை முற்றிலும் இயக்கச் சார்பாகவும், முற்றிலும் நிலைச்சார்பாகவும் கொண்டு அல்லற்படுகின்றன. உலகு முற்றிலும் இயக்கச் சார்பானால், பொருள்களில் மாற்றத் துக்கு மட்டும் வழி உண்டு. தொடர்ச்சிக்கு வழியில்லை. முற்றிலும் நிலைச்சார்பானால் தொடர்ச்சி உண்டு. ஆனால் மாற்றம், வளர்ச்சி, உயிர்வாழ்வு ஆகியவற்றுக்கு இடமிராது. சமண சமய மொன்றே உலகத் தொகுதியின் அடிப்படை மெய்ம்மை, நிலையுடைமையென்றும், அதனுள்ளீடாக உடனாகவே இயக்க முடைமையும் உண்டு என்றும் கொள்கிறது. (தற்கால அறிஞர் ஈன்°டீனின் ‘தொடர்பு இயல்’ கோட்பாட்டுடன் இது மிகவும் ஒப்புடையதாதல் காணலாம்.) இது போலவே சம மெய்ந்நிலை விளக்கம், பொருளும் பண்பும் வேறெனவும் கொள்ளாது, ஒன்றெனவும் கொள்ளாது. பொருண்மையில் ஒன்று, தன்மையில் வேறு என்ற ஒற்றுமை யில் வேற்றுமைக் கொள்கை (பேதாபேதவாதம்) கொள் கிறது. ஆகவே தான் நிலை நிலையாமை, உண்மை, இன்மை, ஒற்றுமை வேற்றுமை முதலிய மாறுபடு தொடர்கள் மெய்ம்மையின் இரு தன்மை விளக்கச் சமண அறிஞரால் வழங்கப்படுகின்றன. காரணமும் காரியமும் ஒன்றெனச் சிலரும் (சத்காரிய வாதம்) வேறு எனச்சிலரும் (அசத்காரிய வாதம்) வாதிப்ப, சமணநெறி ஒன்று எனின் வேறு என்று கொள்கிறது. (சதசத்காரிய வாதம்) பொருள்களின் மெய்ம்மையை உணரும் வகைகளைச் சமணநெறி நான்காக வகுத்துள்ளது. அவை, பெயர் (நாமம்) உரு (°தாபனம்) பொருண்மை (திரவியம்) செயல் (பாவம்) என்பவை. இந்திய சமயங்களெல்லாவற்றுக்குமே கொல்லாமை அடிப்படை யுண்மையாயினும், சமணம் ஒன்றே அதை ஐயம் திரிபன்றி முழுவலிவுடன் மேற்கொள்வது, வேத நெறியாளர் வேள்வியில் கொலை ஏற்றனர். சமணர்கள் கொள்கையின்படி, தொடக்கக் காலத்தில் வேதங்கள் கொல்லா நெறியின்பாற் பட்ட வேள்விகளே செய்தன. அவ்வளவில் சமணரும் வேதங்களை ஏற்கவே செய்தனர். ஆனால் பிற்காலத்தவர் வேள்வியில் ‘அஜம்’ படைக்கப்பட வேண்டும் என்பதற்கு, முளை தவிர்ந்த நெல்மணி எனப்பொருள் கொள்ளாது, ஆடு எனக்கொண்டு, பின்னர் மாடு குதிரை முதலியவற்றையும் வேள்வியின் பேரால் கொல்லத் தொடங்கிய பின், சமணர் அக்கொலை வேள்விகளையும் வேதத்தையும் மறுத்தனர். வேத சமய நீங்கலான பிற பல சமயத்தார்களும், ஒவ்வொரு வகையில் வேதத்தை மறுக்கவே செய்தனராயினும், சமணரளவு கொல்லா நெறியைப் பேணிக் காக்கவில்லை. 2. புத்த சமயம் நீலகேசி, புத்தசமய நூலாகிய குண்டலகேசியை மறுக்கவே எழுந்ததாயிருக்க வேண்டுமாதலால், அதன் கண்டனங்களுள் புத்தசமயக் கண்டனமே முதலிடம் பெற் றிருக்கிறது. குண்டலகேசி வாதம், அர்க்கசந்திர வாதம், மொக்கல வாதம், புத்தவாதம் என்ற நான்கு பிரிவுகளால் இச்சமயக் கருத்துக்கள் விளக்கப்பட்டுக் கண்டிக்கப்படுகின்றன. இவற்றுள் முதல் இரண்டும் நான்காவதுமாகிய மூன்றிலும் பெரும்பாலும் புத்தசமய ஆராய்ச்சியே நிறைந்திருக்கின்றன. மூன்றாவதாகிய மெக்கலவாதத்தில் மொக்கலன் மூலமாகச் சமண சமயத்தைக் கண்டித்துக் குண்டலகேசி நிகழ்த்திய வாதப் பொருளை எதிர்த்து, நீலகேசி விடையளிக்கிறாள். எனவே, இப்பகுதிதான் நேரடியாகக் குண்டலகேசிக்கு மறுப்புக்கூறும் பகுதியாயிருத்தல் வேண்டும். குண்டலகேசி பெரும்பகுதியும் நமக்குக் கிட்டாமற் போகவே, அதன் போக்கை உய்த்தறிவதும் பெரும்பாலும் இப்பிரிவினால் மட்டுமே கூடும். குண்டலகேசி வாதத்தில் குண்டலகேசி புத்த சமயத் தின் அடிப்படைக் கெள்கைகளை நான்காக வகுக்கிறாள். அவை முதல்வர் (ஆப்தர்) வாய்மொழி (ஆகமம்) பொருண்மை (பதார்த்தம்) செயல் (பிரவிருத்தி) ஆகியவை. முதல்வராகிய புத்தர், காலத் தொடக்கமுதல் என்றுமிருப்பவர்; எல்லாம் வல்லவர்; இருவினையகன்றும் உயிர்கள் நலனை எண்ணி உலக வாழ்வில் பேரூழி பேரூழிதோறும் (கற்பகற்பந்தோறும்) ஊடாடுபவர். அறநெறி உரைத்து அதனை ஏற்றொர்க் கெல்லாம் வீடுபேறு அளிப்பவர். புத்தர் பிரானால் அருளிச் செய்யப்பட்ட வாய் மொழி களான பிடகங்கள் மூன்று. அவை சுத்த பிடகம் (சூத்ர பிடகம்) வினய பிடகம், அபிதம்ம பிடகம் (அபிதர்ம பிடகம்) என்பன. புத்த நெறிப்படி, உலகில் மெய்ம்மையான பொருள்கள் அடிப்படைப் பொருள்களான ஐந்து கந்தங்களே. (°கந்தங்கள்) அவையன்றி உயிர் என்றே ஒன்று இல்லை; உலகு நிலையுடையதல்ல; காலம் என்ற ஒன்று கிடையாது. நொடிகள் மட்டுமே உண்டு. எனவே கந்தங்களும் நிலையானவையல்ல. கணந்தோறும் அழிந்து மறுகணத்தில் புதிதாகத் தோன்றுவன. காரண காரியத் தொடர்போ, பொருண்மைத் தொடர்போ அவற்றிடையே இல்லை. அதாவது, பொருள் ஒன்று இருப்ப தாகத் தோற்றுகிறதே யொழிய, உண்மையில் கணம் தோறும் வேறுவேறு பொருள்கள் மாறி, ஒரே பொருள் போல் தோற்று கின்றது என்று புத்தர் கொள்கின்றனர். ஆற்றில் ஒரு கணம் உள்ள நீர் மறுகண மாறினும், ஒரே ஆற்றைப் பார்ப்பதாக நாம் எண்ணுவது போல, உலகத்தோற்றமும் மாறாதிருப்பதாகத் தோற்றமளிப்பது மயக்கமே என்பர். ஐந்து கந்தங்களாவன: உருவகந்தம் (ரூப°கந்தம்) உணர்ச்சிக் கந்தம் (வேதனா°கந்தம்) அறிவுக் கந்தம் (விஜ்ஞான°கந்தம்) பெயர்க் கந்தம் (ஸம்ஜ்ஞா° கந்தம்) செயற்கந்தம் (ஸம்°கார °கந்தம்) என்பவை. உருவக் கந்தத்துள் எட்டினம் (அஷ்டகம்) என்றழைக்கப் படும் எட்டு வகை உலகப் பொருள்கள் அடங்கும். அவை மண், நீர், காற்று, தீ என்னும் மூலப் பொருள்களும், அவற்றிற்கிணை யான நிறம், சுவை, மணம், ஊறு ஆகிய புல உணர்ச்சிகளும் ஆகும். இவை எட்டும் ஒருங்கு கூடியே எட்டினம் அல்லது பொருளாகத் தோன்றும். இவையன்றி மண்ணுக்குத் திட்பமும், நீருக்கு நெகிழ்ச்சியும், தீக்கு வெப்பமும், காற்றுக்குச் சுழற்சியும் தன்மைகளாம். பொருட்பண்புத் தொடர்பைப் புத்தர் ஏற்ப தில்லையாதலால், அவை பண்பாக மாட்டா. உணர்ச்சிக் கந்தம் இன்ப உணர்ச்சி, துன்ப உணர்ச்சி, சமனுணர்ச்சி என மூவகை. அறிவுக் கந்தம்; ஐம்புல அறி வுடன் மன அறிவும் கூடியது. செயற் கந்தம் மனமொழி, மெய்ச் செயல், உள் என மூவகைப்பட்டது. நன்மை தீமை எனவும் இம் மூன்றும் பின்னும் பகுக்கப்படும். தீச்செயல்களுள் கொலை, களவு, காமம், உடல் பற்றியவை; பொய், கோள், கடுஞ்சொல், பயனில் சொல் நாலும் மொழி பற்றியவை; அவா, வெகுளி, மயக்கம், மனம் பற்றியவை. புத்தசமயம் கொல்லாமையை உயர்வுடையதாகக் கொண்டது. ஆனால், ஊனுண்ணல் கொலையின் பாற்படா தெனப் புத்த நூல்கள் வாதித்தன. கொலை தீவினையாக வேண்டு மானால், கொலைக்காளான பொருள் உயிர் உடையதாயிருத்தல் வேண்டும். உயிருடையதெனக், கொல்பவர் உணர்ந்திருத்தல் வேண்டும். கொல்லும் எண்ணம் வேண்டும்; கொலைச் செயல் வேண்டும்; பொருள் உயிரிழத்தல் வேண்டும் என்று ஐந்து கூறுகள் நிறைவேறுதல் வேண்டும். புத்தர்கள் கோட்பாடுகளைச் சுருக்கிக் கூறும் நான்கு பெருவாசகங்கள் உள. அவை யாவும் துன்பம், (சர்வம் துக்கம்) யாவும் தூய்மை யற்றவை, (சர்வம் அசுசி) யாவும் அழிபவை, (சர்வம் அநித்தியம்) யாவும் உயிரல்லாதவை (சர்வம் அனாத்மா) என்பவை. சமணர் பொருண்மையறியும் வழிகளாகக் கொண்ட பெயர், உரு, பொருண்மை, செயல் என்ற நான்கில், புத்தர் செயல் ஒன்றே ஒத்துக்கொண்டனர். (புத்த சமயம் இறைவன், உயிர், பொருள் மூன்றையும் மறுத்து, எல்லாம் மாற்றம், தோற்றம் என வாதித்தது. அது மாயாவாதத்தின்பாற்படும்) 3. ஆசீவக நெறி நீலகேசியில் காணப்படும் ஆசீவகக் கோட்பாடுகளைப் பற்றிக் கூறுமுன், அதன் வரலாறுபற்றிச் சிறிது கூறவேண்டும். இதனைத் தோற்றுவித்த முதல்வராகிய ம°கரி என்பவர் புத்தர், மகாவீரர் (சிநர்) ஆகியவர் காலத்தவரே. புத்த நூல்கள் அவரை முகலி புத்தர் என்றும், புத்தர் காலத்து எட்டுச் சமயத் தலைவர்களுள் ஒருவராகவும் குறிக்கின்றன. அறிஞர் ஹேர்ன்லே, சமய ஒழுக்கத்துறைப் பேரறிவுத் தொகுதியில் (னுச ழடிநசடேந in நுnஉலஉடடியீயநனயை டிக சுநடநபiடிn யனே நுவாiஉள) அவர் மகா வீரரை மீறித் தனிச் சமயம் ஏற்படுத்திய மாணவர் என்று குறிக்கிறார். அவர்கள் ஏகதண்டிகள் என்றும், ம°கரியர்கள் என்றும் ஜாதகங்களில் (புத்தர் பிறப்புக் கதைகளில்) குறிப்பிடப் பட்டனர். ஆஜீவகர் என்ற பெயர், பிழைப்புக்காக வேடமிட்டவர் என்ற பொருளில், மாற்றார் ஏளனமாக வழங்கிய பெயரே யாகும். பிற்காலத்தார் ஆசீவகர் திகம்பர சமணரின் ஒரு பகுதி என வெளித் தோற்றத்தால் மயங்கினர். புத்த நூல்கள் ஆசீவகர் என்ற பெயருடன் அவர்களைக் குறிக்காவிடினும் அவர்களைச் சமணர் என்று கூறவில்லை. புத்தரும் மகாவீரரும் ம°கரியின் ஒழுக்கக் கேட்டை ஒருப் போலவே கண்டித்துள்ளனர். அறிஞர் ஹேர்ன்லே திகம்பர சமணருக்கும், ஆசீவகருக்கு மிடையிலுள்ள கொள்கை வேற்றுமைகளையும் எடுத்துக் கூறுகிறார். கயாவின் பக்கத்தில் பர்பரிக் குன்றுகளின் குகைகளிலுள்ள அசோகர் கல்வெட்டுக்களிலொன்று, அக்குகை பியதாஸியால் (அசோகரால்) ஆசீவகர்களுக்காக விடப்பட்டது என்று குறிக்கிறது. இவ்விடத்தில் பார்ப்பனர், நிகண்டர் (சமண திகம்பரர்) ஆசீவகர் என, ஆசீவகர் தனிப்படவே குறிக்கப்படுகின்றனர். கி. பி. 6 ம் நூற்றாண்டினரான வராகமிசிரர் தம் பிருகத் ஜாதகத்தில் அக்கால ஏழுவகைத் துறவிகளுள் ஒருவகையாக ஆசீவகரைக் குறிக்கின்றனர். அவ்வேழு வகையினர், சாக்கியர், ஆசீவகர், நிகண்டர், தாபதர், பிக்குக்கள், விதூடகர், சரகர் என்பவர். வராகமிஸிரரின் உரைகாரரான படோட்பலர் ஆசீவகர் அல்லது ஏகதண்டிகள் நாராயணனை வணங்கு பவர் என்று தெரிவிக்கிறார். நீலகேசியும் இங்ஙனமே குறிப்பது கவனிக்கத் தக்கது. எனவே, சில வெள்ளணி (சுவேதாம்பர) சமண நூல்களைப் பின்பற்றி ஆசீவகர் திகம்பர சமணவகையினரே என்று அறிஞர் ஹேர்னிலே கூறுவது பொருத்தமற்றது. வெள்ளணியர் (சுவேதாம்பரர்) கூறும் வேறு சில செய்தி களையும் அறிஞர் ஹேர்னிலே ஆராயாது ஏற்கிறார். மகா வீரருக்கு முந்திய தீர்த்தங்கரரான பார்சுவநாதர் கொல்லாமை, மெய்ம்மை கூறல், திருடாமை, உடைமைகொள்ளாமை ஆகிய நான்கு நோன்புகளையே வலியுறுத்தினர். மகாவீரர் நிறை யுடைமை (பிரமசரியம்) என்பதையும் உட்படுத்தினார். இது ஒருவகையில் உண்மையேயாயினும், இது வலியுறுத்து முகத்தினால் அன்றி வேறன்று. முதல் நான்கிலும் இது தொக்கதாகவே முதலில் கொள்ளப்பட்டது. ஆனால் பார்சுவநாதர், துறவியர், ஆடையோ கௌபீனமோ வைத்துக்கொள்ள இணங்கியதாகவும், மகாவீரரே முதன் முதலில் அதனையும் ஒறுத்ததாகவும் வெள்ளணியார் கூறுகின்றனர். மகாவீரரின் மாணவரான கோசல மொகல புத்திரர், இதனை ஏற்காது பிரிந்து நின்றார் என்பதை அறிஞர் ஹெர்ன்லே நம்புகிறார். ஆனால் வெள்ளணியினர், திகம்பரர் வேறுபாடு மகாவீரர் காலத்துக்குச் சிலகாலம் பிந்தியே ஏற்பட்டது என்று, வரலாறு கூறுவதை அவர் கவனிக்க வில்லை. திகம்பரர் சாவகர் (தொடக்கத் துறவி) களுக்கே கௌபீன உடுக்கையை ஏற்றனர். சமணர் அல்லாதார் பலர் குறிப்பிடும் நிகண்டரும், புத்தர் குறிப்பிடும் அசேலகரும் திகம்பரச் சமணரேயன்றி ஆசீவகர் அல்லர். தென் இந்திய சோழர் 13 - ம் நூற்றாண்டு கல்வெட்டுக் களில் குறிக்கப்படும், ஆசுவக் கடமை என்பது, ஆசீவகர் மீது இட்டவரி என்று அறிஞர் ஹேர்னிலே கூறுவதும், இத் தப்பெண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட ஊகத்தா லேயே யாகும். ஆசுவக் கடமை என்ற தொடர் வருமிடங்களி லெல்லாம் முன்னும் பின்னும் வாணிகம், தொழில் ஆகிய வற்றின்மீதுள்ள வரிகள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. ஆசு என்பது தமிழில் வார்ப்பு அச்சு எனப் பொருள்படும். வெங்கலத்தில் வார்ப்பட வேலை செய்யும் கன்னார்மீதுள்ள வரியே இது குறிக்கத்தகும் துறவி வகுப்பினர்மீது வரி விதிப்பது முன்பின் பொருத்தமோ இயற்கையோ அன்று. எனவே, தமிழ் நாட்டிலே பிற்காலத்தில் (நாயன்மார் காலத் திலும் அதன் பின்னும்) ஆசீவகர் அறியப்பட்டனர் என்பதற் கில்லை. வடநாட்டில் மட்டும் 6 - 7ம் நூற்றாண்டுகள் வரை அது அழியாது நிலவிற்று. ஆசீவகர், தம் தலைவரான ம°கரி பகவான் நிறை வறிவுடையவர் என்றும், இருவினையற்றவர் என்றும், ஆயினும் செயலற்று வாய் திறவாது வாளாவிருப்பவர் என்றும் கொண்டனர். எனவே, அவர் நிறைவர் (பூரணர்) என்றழைக்கப் பட்டனர். செயலற்றிருத்தலும், வாய்பேசாததும் நடக்கும்போதும் பேசும்போதும் சிற்றுயிர்களுக்குத் தீங்கு நேரிடும் என்பதற்காகவே என்று அவர்கள் கருதினர். ஆசிவகரின் மறைமொழிகள் ஒன்பது ‘ஒளிக்கதிர்கள்’ எனப் பெயர் பெற்றன. அவை மக்களுக்குப் புகட்டிய மெய்யறிவின் படி உலகப் பொருள்களின் தோற்றமும் மறைவும் காரண மற்றவை (காரணமின்றித் தற்செயலாய் நிகழ்பவை) பருப் பொருள்களை யன்றி மெய்ப்பொருள்கள் இல்லை. அவை உருவம் உடையவை; இடங் கொள்பவை. அவற்றுக்குத் தன்மைகள் உண்டு. ஆனால் பண்புகள் கிடையா. அம்மூல மெய்ப்பொருள்கள் ஐந்து. மண், காற்று, தீ, நீர், உயிர் என்பவை. இவையனைத்தும் அணு உருவுடையவை. நிறம், மணம், ஊறு ஆகிய மூன்றும் மண்ணின் இயல்புகள். நீரின் தன்மை தட்பம், தீயின் தன்மை வெப்பம், காற்றின் தன்மை ஓசை, உயிரின் தன்மை உணர்தல், இவற்றாலாய பொருள்களுக்கு இவற்றின் தன்மையன்றி வேறு பண்பு இல்லை. ஒரு மூலப் பொருளுடன் மற்றப்பொருள் சேர்ந்திருக்குமாயினும், ஒன்றில் ஒன்று கலந்து ஒன்றுபடுவதில்லை. கொடிகள் ஒன்றின் பின் ஒன்று வருவதன்றித் தொடர்ச்சியான காலம் என்று ஒன்றில்லை. ஒழுக்கம் என்பது இன்பத்தை நாடுவதே யன்றி வேறெதுவும் அல்ல. (நரகம், துறக்கம், மறுபிறப்பு, தெய்வம், படைப்பு இல்லை என்பது தெளிவு) காரிய காரணத் தொடர்பு கிடையாது. எல்லாம் மாற்றமற்ற ஒரே நிலை. (அவிசலித நித்யம்) உயிர், உருவமுடைய பருப்பொருள், அதற்கு நீளமும் அகலமும் மட்டுமன்றி 500 யோசனை (5000 மைல்) உயரமும் உண்டு. அது பாலைக் கனிபோன்ற நீலநிறமுடையது. உயிர் கள் எண்ணற்றவை. அனைத்தும் வீடு பெறுதற்குரியவையே. அங்ஙனம் எல்லா வுயிர்களும் வீடடைந்தால் மீண்டும் பிறக்கும். இக்கருத்து ‘மண்டல வீடு’ எனப்படும். (மண்டலமோக்ஷம்) ஐம்பொருள்களுள் தீயும் உயிரும் மேல் நோக்கிச் செல்பவை. காற்று, பக்கநோக்கிச் செல்வது. மண்ணும் நீரும் கீழ்நோக்கிச் செல்பவை. நோன்புகள் ஒழுக்கமுறைகள் ஆசீவகரால் பாராட்டப் பட்டன. 4. சாங்கிய வாதம் நீலகேசி ஆசிரியர் குறிப்பிடும் சாங்கிய நெறிக் கொள்கைகளுக்கும் பிற நூல்களில் குறிக்கப்படும் சாங்கிய நெறிக் கொள்கைகளுக்கு மிடையில், பல வேறுபாடுகள் உள்ளன. நீலகேசியின்படி சாங்கியக் கருத்துக்களை விளக்குமுன், இவ்வேறுபாடுகட்குக் காரணமான வரலாற்றுச் செய்திகளை விளக்குதல் வேண்டும். தற்கால இந்திய மெய்ந்நிலை விளக்குத் துறைகள் (தரிசனங்கள்) ஆறனுள் (சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், பூர்வமீமாம்சை, உத்தரமீமாம்சை) சாங்கியம் மிகத் தொன்மை வாய்ந்தது. இதன் முதல்வர் கபிலர். இவர் மாபெரு முனிவராக (மஹரிஷி) உபநிடதங்களிலும் மாபாரதத்திலும் குறிக்கப்படுகிறார். அவர் நிறுவிய சாங்கியநெறி, இறையிலி சாங்கியம் (நிரீசுவர சாங்கியம்) எனப்படும். கபிலருக்குப் பின்னர் அசூரி, பஞ்சாஸிகர், விந்தியவாசி, ஈசுவர கிருஷ்ணர் முதலிய பெருந்தலைவர்கள் அதற்கு ஆக்கம் தந்து வளர்த்தனர். ஈசுவர கிருஷ்ணர் எழுதிய சாங்கியக் காரிகையே இன்று சாங்கிய நெறியின் மேற்கோள் நூலாயிருக்கிறது. ஆனால் நீலகேசியில் குறிக்கப்படும் சாங்கியநெறியி லிருந்து வேறுபடுகிறது. சாங்கிய ஆசிரியராக இங்கே கூறப் படுபவர் பராசரர். நீலகேசி உரையாசிரியரும் இந்நூலில் குறிக்கப் பெறும் சாங்கியம் என்ற பெயரும், பிற்காலத்தில் பதஞ்சலி முனிவரின் யோகநெறிக்கே வழங்கிற்று. இது உண்மையில் இறையிலி சாங்கியத்துடன் கடவுள் கொள்கையையும் வணக்கத்தையும்கூடச் சேர்த்துக்கொண்ட நெறியேயன்றி வேறல்ல. நீலகேசியில் கூறப்படும் சாங்கியம், கபிலர் சாங்கிய நெறியின் மெய்ந்நிலை விளக்கத்துடன் (தத்துவ இறைகள்) கடவுட் கொள்கையையும் பிற்கால வேதாந்த நெறியின் ஆன்ம ஒருமைக் கொள்கையையும் (கேவல அத்வைதம்) சேர்த்துக் கொள்கிறது. எனவே, இது வேதாந்த நெறியின் முதிரா முன்னிலையையே குறிக்கும். நீலகேசியில் சாங்கிய நெறியின் தலைவர் பெயரும் இடமும் இவ்வகையில் தனிப்பட்ட சிறப்புடையவை. வேதாந்த நெறிக்கு முதனூலாகக் கொள்ளப்படுவது சங்கராசாரியர் பிரமசூத்திர உரையேயாகும். சங்கரர் உரை எழுதுமுன், முதனூல் வியாசரால் எழுதப்பட்டிருந்தது. இவ்வியாசர் பராசரர் மகன். பராசரியர் என்றும் வழங்கப்பெறுவர். அவர் எழுதிய பாரத நூல் அத்தினாபுரியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறுவது. நீலகேசியில் சாங்கிய ஆசிரியர் இருப்பிடம் அத்தினாபுரி என்றும், அவர் பெயர் பராசரர் என்றும் காணப்படுகிறது. பராசரன் என்பது, இங்கே பராசரீயர் என்ற பெயரின் பிழைபட்ட அல்லது மருவிய உருவாயிருத்தல் கூடும். அப்படியாயின், நீலகேசியில் சாங்கியம் என்று வழங்கும் நெறி, வியாசர் பெயரால் வழங்கிய தனி நெறியாயிருத்தல் கூடும். பாரதத்தில் கூறப்படும் சாங்கியக் கொள்கையும், நீலகேசியில் கூறப்படுவதுடன் ஒத்திருப்பதும், சங்கராசாரியரின் சர்வசித்தாந்த சங்கிரகத்தில் இதே தெய்வக் கொள்கையுடையதாக ‘வியாச மதம்’ என்ற தனிநெறி குறிப்பிடப்படுவதும் அதனை வலியுறுத்தும். சங்கரர் வேதாந்த நெறி எழுந்த பின்னும் இவ்வியாசநெறி சிறப்புடனிருந்திருக்க வேண்டும். நீலகேசி காலத்தில் சங்கரர், இராமநுசர், மாத்துவர் முதலியோர் வகுத்த வேதாந்தக் கிளைநெறிகள் எழவில்லை யாயினும், இவ்வியாச நெறி சாங்கிய நெறியின் கிளை என்ற நிலையில் பயின்றிருக்கவேண்டும். ஆனால் கபில மாமுனிவரின் சாங்கியம் (இறையிலி சாங்கியம்) நீலகேசியில் விளக்கப்படாததன் காரணம் யாது? பிற்கால வேதாந்த நெறிகள்போலாது பழமைமிக்க இந்நெறி நீலகேசி காலத்தில் அறியப்படவில்லை என்று கூறுதல் பொருந்தாது. புத்த சமணநெறிகளுடனொப்பத் தென் இந்தியாவிலும் நிலவியே இருத்தல்வேண்டும். சில அடிப் படை பண்புகளில் புத்த சமண சமயங்கள் ஒத்திருந்தன வாயினும், வேறு சில உயிர்நிலைக் கோட்பாடுகளிலும் வழக்கங்களிலும் அவை மாறுபட்டிருந்தன. ஆனால் சாங்கியமும், (இறையிலி சாங்கியம்) சமணமும் கிட்டத் தட்ட எல்லா அடிப்படை மெய்ந்நிலை விளக்கக் கோட்பாடுகளிலும் ஒத்திருந்தனவாதலால், மற்றச் சமயங்களையும் சிறப்பாகக் கொலை வேள்வியை மேற்கொள்ளும் வேத நெறியையும் எதிர்ப்பதில் அவை ஒன்றுபட்டிருந்தன. இரண்டு சமயங்களும் கொல்லாமை, உயிர்ப் பன்மைக் கொள்கை, இறைவன் படைப்பு மறுப்பு ஆகியவற்றில் உறுதியுடையவையாயிருந்தன. ஆகவே சமணநெறிக்கு எதிரான நெறிகளையே மறுக்க எழுந்த நீலகேசி, அதனை ஏற்குமுறையில் தன் கண்டனங்களுள் அதனை உட்படுத்தாது விட்டிருத்தல் வேண்டும். ஈசுவர கிருஷ்ணர் இயற்றிய சாங்கியக் காரிகையின் உரையாசிரியரான மாதரன் கொல்லாமை நெறி நின்று வேள்வி ஒதுக்கினார். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவனை அற வேள்வியினின்று விலக்கியும், கோயில்களில் ‘பூப்பலி’ ஏற்படுத்தியதைப் பாராட்டியும் பேசும் மற்ற மாதரன், இதே மாதரரனாயிராவிடினும், இதேபோல் சாங்கிய நெறி யினனாயிருக்கக் கூடும். மேலும் குணாட்டியர் பிருகத் கதையின் தமிழ்மொழி பெயர்ப்பாகிய பெருங்கதையின் ஆசிரியரும் கதைத் தலைவரும் சமணராயிருந்தும், வாசவதத்தைக்கு ஆறுதலளித்து அறமுரைத்தவள் சாங்கியத் தாய் என்று கூறப்பட்டிருப்பது காண, சமணர் சாங்கியத் துறவியரை மாற்றாராகக் கொள்ளாது, அறத்துறையில் சமணத் துறவி யருடன் ஒப்பாகக் கொண்டவர் என்று கொள்ள இடமுண்டு. கபிலர் சாங்கிய நெறியும் நீலகேசி, எதிர்க்கும் சாங்கிய நெறியும் வேறெனக் காட்டியபின், நீலகேசியிற் காணப்படும் தெய்வக் கொள்கை சாங்கிய நெறியின் தன்மையை விளக்குவோம். (கடவுட்கொள்கைச்) சாங்கிய நெறிப்படி மெய்ந் நிலைகள்(தத்துவங்கள்)25. அவை, உயிர் (ஆன்மா) இயற்கை. (பிரகிருதி) பெருநிலை (மகத்து) செருக்கு (அகங்காரம்) ஐம்புலன்கள் (ஞானேந்திரியங்கள்) ஐம்பொறிகள் (கர்மேந் திரியங்கள்), மனம், தன்மாத்திரைகள் ஐந்து. ஐம்பூதங்கள் ஆகியவை. உயிர் (ஆன்மா) பொதுவாகப் பண்பும் செயலும் அற்றதாயினும், அதன் முந்நிலைகளான பேருயிர் (பரமாத்மா) உள்ளுயிர்(அந்தராத்மா) வினையுயிர் (கர்மாத்மா) ஆகிய வற்றில் முதலதுமட்டுமே செயலற்றது. மற்ற இரண்டும் செயலுடையவை. பேருயிர்(பரமாத்மா) அல்லது கடவுளே உலகைப் படைத்தது. அதன்முன் உலகில்லை. அதன் செயலூக்கமின்றி எச்செயலுமில்லை. பேருயிர் அனைத்தையும் அழிக்கவும் வல்லது. பேருயிரின் பிறிதுநிலையே உயிராதலால், உயிர் ஒன்றே. 5. வைசேடிக வாதம் வைசேடிக நெறியைத் தோற்றுவித்த முதல்வர் கணாதர். நீலகேசியில் வைசேடிக ஆசிரியர் பெயர் லோகஜிதர். வைசேடிக நெறியில் முதனிலை பொருள்கள் (பதார்த் தங்கள்)ஆறு. அவை முறையே பொருண்மைகள் (திரவியங்கள்); பண்பு (குணம்); வினை (கர்மம்); தொகை (சாமானியம்); வகை (விசேஷம்); வாய்ப்பு (சமவாயம்) என்பவை. பொருண்மைகள் என்பது; ஐம்பூதங்கள், திசை, மனம், காலம், உயிர்(ஜீவன்) என்பன. பண்பும் வினையும் பொருண்மையுடன் ஒன்றியவை. தொகை, பெருந்தொகை (மஹா சமவாயம் அல்லது பரசமவாயம்) என்றும், சிறுதொகை (அலாந்தர சமவாயம் அல்லது அபர சமவாயம்) என்றும் இருவகை. பொருள்களில் கண்ட பொதுத் தன்மையே தொகை எனப்படும். எல்லாப் பொருளுக்கும் அடிப்படையான பொதுத்தன்மை (பொரண்மை நிலை)யே பெருந்தொகை. மற்றப் பொதுத் தன்மைகள் சிறு தொகைகள். வகை என்பது பொருள்களிடையே கண்ட வேற்றுமை அல்லது வேறுபாடு. வாய்ப்பு, பொருண்மை யுடன் அவ்வற்றுக்கேற்ற பண்பும் செயலும் கொண்டு கூட்டும் இயல்பு. இவற்றுள் முதல் மூன்று (பொருண்மை, பண்பு, செயல் ஆகிய) தனிப்பொருள் நிலை உடையவை. அவை வாய்ப்பு மூலம் கலத்தலாலே செயலுலகம் உண்டாம். தொகை வகைகள் வாய்ப்புக்கு உதவுவன. 6. வேதவாதம் அல்லது மீமாம்சை வேதவாதியின் அடிப்படைத் தத்துவம் வேதத்தை ஏற்றுக் கொள்வதே. வேதம் காலம் கடந்தது; ஆக்கிய முதல்வனற்றது; அழியாதது. அதனை அடிப்படையாகக் கொண்டு அதனை ஏற்கும் எல்லா வகைப்பட்ட நெறிகளும் சமயமுறைகளும் அதன் கிளைகள். 25 மெய்ந்நிலைகளை (தத்துவங்களை) ஏற்கும் சாங்கியம், 6 முதல் நிலைப் பொருள்களை (பதார்த்தங்களை) ஏற்கும் வை சேடிகம், படைப்புக் கொள்கையை ஏற்கும் படைப்பு வாதம் (சிருஷ்டிவாதம்) கடவுட் கொள்கை உடைய கடவுள் நெறி (பிரம்மவாதம்) ஆகிய கொள்கைகளும், வைணவம், மாகேசுரம், பாசுபதம், பாஞ்சராத்திரம், பாரிவிராஜிகம் ஆகிய சமயமுறைகள் யாவும் வேதவாதிக்கு அவன் தலைமை ஏற்கும் கிளைச் சமயங்களாகும். கொலை வேள்வி முறை வேதவினைகளின் அடிப்படை (உபரி சர வசுவின் கதை, இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு எதிர்ப்பை விளக்குகிறது) வகுப்பு வேற்றுமை (ஜாதி வித்தியாசம்) அவன் உலகியல் ஒழுக்க முறையின் அடிப்படைச் சட்டமாகும். நீலகேசி வேதவாதத்தை இறைமறுப்பு நெறி (நா°திகம்) என்கிறான். 7. பூதவாதம் பூதவாதம் சார்வாகம் என்றும், வோகாயதம் என்றும் வழங்கும். நீலகேசியில் பூதவாதம் விளக்கும் ஆசிரியர் பிசாசகர். பொருள்களை யன்றிப் பண்புகளைத் தனிப்பட்டவை யாகப் பூதவாதி ஏற்பதில்லை. அவன் ஏற்கும் மெய்ப் பொருள்கள் ஐம் பூதங்கள் மட்டுமே. அவை தீ, மண், நீர், காற்று, வெளி என்பவை. தீயின் ஆற்றல் கண்ணிலும், செயல் நிறத்திலும் தோற்றும். மண்ணின் ஆற்றல் மூக்கிலும், செயல் மணத்திலும் காணப்படும். இங்ஙனமே நீருக்கு நாவும் சுவையும்; காற்றுக்கு உடலும் ஊறும்; வெளிக்குச் செவியும் ஓசையும் ஆற்றல், சான்ற உறுப்புக்களாகவும் செயல்களாகவும் அமையும். பொருண்மை விளக்க வகையில் பூதவாதி ஒண் கூடு (பிரத்தியக்ஷம்) ஒன்றையே விளக்க (பிரமாண) மாகக் கொள்வான். ஐம்பூதங்களும் என்று முள்ள மெய்ப்பொருள்கள். அவற்றின் கலப்பே உலகம். அதற்குப்படைப்பு, அழிவு கிடையாது. மா, வெல்லம் முதலிய ஐம் பொருளும் சேர்ந்து மது சாரம் உண்டாவது போல், ஐம்பூதத்தினின்று உண்டாகும் தன்மையே உயிரின் செயல் போலத் தோன்றியது. உண்மை யில் உடலன்றி உயிருமில்லை. முற்பிறப்பு, மறுபிறப்பு என்பதும், மேலுலகு, கீழுலகு, துறக்கம், நரகம், நல்வினை, தீவினை, தவம், ஒழுக்கம் யாவும், பொதுமக்களை மயக்கச் சூழ்ச்சியாளர் ஏற்படுத்திய பொய்மூட்டைகள். குறிப்பு: நீலகேசியில் கண்ட பூதவாதத்துக்கும், மாத வாசாரியரின் சர்வ தரிசன சங்கிரகம், சங்கராசாரியரின் சர்வ சித்தாந்த சங்கிரகம் ஆகியவற்றில் கண்ட பூதவாதத்துக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் உண்டு. நீலகேசிப் பூதவாதம் ஐம பூதங்களை ஐந்தெனக் கொள்கிறது. ஆனால் பின்னாளில் பூதவாதிகள் நான்கே ஏற்றனர். கண்கூட்டு விளக்கமே ஏற்ற அந்நெறியினர், கண்கூடாக விளங்காத வெளியை நீக்கினர். நீலகேசி காலத்தால் முந்தியதென இச் செய்தியும் காட்டும். மகா பாரதத்திலும் பூதவாதத்தின் முதல்வரான பிரக°பதி ஐம்பூதங்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. பூதவாதிகளும், சமணர்களைப் போலக் கொலை வேள்விகளை எதிர்த்துக் கொல்லாமையை மேற்கொண்டன ரெனினும், பிற்காலத்தில் இன்பமே அறம் எனக் கொண்டு வேறுபாடுற்றனர். (பிருக°பதிக்குப் பின் இந் நெறியைச் சார்வாகன் புதுக்கி வேறுபடுத்தி யிருக்கலாம்) மடலம் (3) நூற் சுருக்கம் பிரிவு (1) தர்ம உரை பாஞ்சாலம் என்ற நாடு நீர் நிலவளங்கள் நிறைந்தது. அழகிய காட்சிகளை உடையது. அதன் மன்னனாகிய சமுத்திரசாரன், அந்நாட்டின் தலைநகராகிய புண்டர வர்த்தனத்தில் இருந்து செங்கோல் செலுத்தி வந்தான். நகர்புறத்தில் பலாலயம் என்றொரு மயானத்தில் ஒரு காளி கோயிலிருந்தது. அதனருகில் முனிசந்திரர் என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அந்நகர மக்கள் காளி கோயிலில் பலியிடும் படி எண்ணற்ற ஆடு மாடுகளை ஓட்டி வந்தனர். முனிவர் கொல்லா நோன்பியாராதலால், அத்தனை உயிர்கள் கொலை செய்யப்பட வருவது கண்டு மனங் கலங்கினார். எனவே, அவர் அம் மக்களைப் பரிவுடன் நோக்கி, “இத்தகை உயிர்களைக் கொல்ல நீங்கள் எதற்காக முனையவேண்டும்? இதனால் நீவிர் அடையும் பயன் என்ன?” என்று வினவினார். மக்கள் அவரைக் கைகூப்பி வணங்கி, “பெரியீர்! எம் அரசன், நெடுநாள் மகவில்லா திருந்து ஒரு மகனைப் பெற்றான். இறைவி அளித்த இப்பெரும் பரிசிற்காக இவ்வுயிர் களைப் பலியாகத் தந்து எம் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து வழிபாடாற்ற வருகிறோம்” என்றார்கள். முனிசந்திரர் “அன்புடையீர், பிறப்பும் இறப்பும் அவரவர் வினைப்பயனே யன்றி, இறை செயலாகமாட்டா. அப்படியே இறைவன் தலையிட்டு இந் நன்னிகழ்ச்சி ஏற் பட்டதென்று கொண்டாலும் கூட, அதற்காக இவ்வுயிர்களைக் கொல்வது என்ன பயன்தரும். உயிர்க் கொலையால் தெய்வம் சினமடையுமேயன்றி மகிழுமா? உம் நன்றியை எப்படியும் வழக்கம் பின்பற்றித் தெரிவித்தல் வேண்டுமானால், உயிர்களைக் கொல்லாமலே அவற்றைப்போன்ற களிமண் வடிவம் சமைத்துப் பலியிட்டுக் கொள்ளலாமே. அவ்வாறு செய்வதனால் உம் வழிபாடும் குறைவு படாது; இறையும் மகிழும். உங்களுக்கு இத்தனை உயிர்களைக்கொல்லும் பழியும் நேராது. கொல்லாமை சார்ந்த வழிபாடே உண்மை வழிபாடாம்” என நயம்பட உரைத்தார். முனிசந்திரர் அறவுரையின் மேம்பாடும், நலமும் உணர்ந்து, மக்கள் அவர் கருத்துக்கிணங்கி உயிர்களைக் கட்டவிழித்து விட்டனர். பின் அவர்கள் களிமண் வடிவங்களா லேயே பலியிட்டுவிட்டு, மகிழ்ச்சியும் நிறைவும் உடையவ ராய் மீண்டனர். ஆனால் காளிதேவி, தன் மக்கள் வழக்க மாகத் தரும் குருதியுணவு பெறாது துயரடைந்தாள். தன் அடியவர்களைத் தன்னிடமிருந்து நயமொழியால் விலக்கிய இம்முனிவனை ஒறுத்துப் பழிக்குப்பழி வாங்கவேண்டுமென்று அவள் உள்ளம் துடித்தது. ஆயினும், யோகத்தில் வல்ல னிவரிடம் தன் மாயம் செல்லாது என் உணர்ந்து செயலற்றிருந்தாள். காளிகளிடையே முடிசூடா அரசியாய் விளங்கியவள் மாகாளி நீலி அல்லது நீலகேசி. அவள் தமிழ்நாட்டில் பழையனூரில் புகழுடன் வாழ்ந்து வந்தாள். மனிதரைத் தெய்வங்கள் அடக்கி ஆள்வதுபோல், அவள் தெய்வங்களை அடக்கி ஆண்டு வந்தாள். பலாலயத்துக் காளி, தனக்கு நேர்ந்த இன்னலை நீலகேசிக்குச் சொல்லியனுப்பி, அவள் உதவி கோரினாள். நீலகேசியும் தன்னிடம் தோழமை கொண்ட காளியின் துயர் தீர்க்க எண்ணி அப்பணிக்கு ஒருப்பட்டாள். பலாலயத்தின் மயானத்தை அடைந்து நீலகேசி, தன் கூளிகளையும், பூதங்களையும், மாய உருக்களையும் ஏவி, முனிவனைச் சூழச் செய்து அச்சுறுத்தினாள். ஆனால் யோக உறக்கம் உறங்கியிருந்த முனிவரை, அவை எதுவும் அசைக்க முடியவில்லை. தன் ஆற்றலால் அடைய முடியாத வெற்றியைச் சூழ்ச்சியால் பெற எண்ணி, அவள் அந்நாட்டரசன் மகளாகிய காமலேகை யுருவில் அழகிய தோற்றம் தாங்கி அவனிடம் சென்றாள். அரசநிலைக்குரிய ஆடையணிகளுடன் அவள் அவனிடம் காதல் நாடகம் நடிக்கத் தொடங்கினாள். முனிவன் முக்கால உணர்வுடையவனாதலால், அவள் முருக் கண்டு நகைத்து “நீ பெண் அல்ல; பழையனூர்க் காளி நீலி என்றறிவேன். நீ விரும்புவது காதலன்று; என் அழிவே. ஆனால் நோன்பு வலிமையுடைய என்னிடம் உன் செயல்கள் எதுவும் ஈடேறாது” என்றான். அவர் யோக வலிவு கண்டு நீலகேசி வியப்படைந்து, அவர் காலில் விழுந்து, தன் தீயெண்ண முழுதும் ஒப்புக்கொண் டாள். மேலும் அவள் தன் மாய ஆற்றலினும் பன்மடங்கு ஆற்றலுடைய அவர் தன்மையைப் பாராட்டித் தன் தீ வழி யினின்றும் தன்னைக் கரையேற்றி நல்வழிப்படுத்துமாறு அவரை வேண்டினள். முனிவர் அவள் பக்குவ நிலையை யறிந்து, சமணநெறியை அறிவித்து அவளுக்கு அறிவு கொளுத்தினார். தன் கோர உருவாலும் செயலாலும் மக்களை அச் சுறுத்திய கொடுங்காளியாகிய நீலகேசி, முனிவர் அருள் திறத்தால் தன் இயல்புமுற்றும் மாறினாள். உலக வாழ்வின் தன்மை (சம்சாரம்) இது என்பதையும், இன்ப துன்பங்களின் மூலம், இது என்பதையும், விடுதலை வகையாது என்பதையும், விரிவாகவும், விளக்கமாகவும் முனிவர் அறவுரையால் அவள் அறிந்து, விளக்கமெய்தினாள். “உலகத் தொகுதி (பிரபஞ்சம்) மூன்று பகுதிகளை உடையது. அவை மேல், கீழ், நடு பகுதிகள். கீழ்ப் பகுதி ஒன்றின் கீழ் ஒன்றாக ஏழு உலகங்களை உடையது. இவையே ஏழு நரகங்கள். இவற்றின் கீழே மீளா நரகமாகிய நிகோதம் அமைந்துள்ளது. நிகோதத்தில் சேர்பவர்கள் மீள்வதில்லை. அனால் மற்ற ஏழு நரகங்களிலும் சென்று சேர்பவர்கள் தம் பாவந்தீவினைப் பயன்களை முற்றும் துய்த்தவுடன் மீண்டும் நடு உலகில் வந்து பிறப்பர். இவ்வுலகிலேயே மக்களும் மாக்களும் உண்டு. தொல்காப்பியத்தில் கூறப்பட்ட படி மக்களும் மாக்களும் ஆகிய உயிரினங்கள், ஓரறிவு உயிர்கள் முதலாக ஆறறிவுயி ருறாகப் பல வகைப்படும். நடு வுலகத்திற்கு மேலுள்ள உலகங்கள், தேவருலகத்தின் பாற்படும். இம்முப்பகுதிகளும் சேர்ந்ததே உலகத் தொகுதி (பிரபஞ்சம்)” என்று முனிசந்திரர் விளக்கினார். உலகத் தொகுதியில் வாழும் உயிர்கள் பிறந்திறந்து உழல்பவை. அச்சுழற்சியிலிருந்து விடுதலை பெறும் வகை நடு உலக வாழ்வில் மட்டுமே உண்டு. நடுப் பகுதியிலும் சில இடங்களில் மட்டுமே விடுதலைக்கு வேண்டும் நோன்பு, தவம் முதலியவை இயற்றுவதற்கான சூழ்நிலைகள் காணப் படும். இத்தகைய இடங்களையே நன்னிலங்கள் (கர்ம பூமிகள்) என்று கூறுகிறோம். நீலகேசி போன்ற தெய்வங்கள் மேலுலகங்களில் வாழ்பவர்கள். எனவே, அவர்கள் நடு நிலத்து அறவோரை விடத் தாழ்ந்த நிலையையே உடையவர்கள். ஏனெனில், அவர்களைக் கண்டு அஞ்சுபவர்கள் தீயவர்கள் மட்டுமே. எப்பகுதியிலும் நல்லவர்கள், அவர்களைப் பழித்து இழிக்கவே செய்வர். அவர்கள் தம் அடியவர்களை விடுவிப்பதற்கு மாறாக மென்மேலும் அடிமைக் கட்டில் இறுக்கவே உதவுவர். விடுதலை பெற வேண்டின், மூன்றே வழிகள் உள அவை அமுதம் போல் அழியா வாழ்வு தரத்தக்கவை. அவை நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகியவை. உலகமுய்யும் படி சஞ்சீவிகளான இந்நெறிகள் அறிவு மயமான வரும் அன்பு மயமானவருமான ஜினபகவானால் அருளப்பட்டவை. இவற்றை மேற்கொண்டவர் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடையவராய், உள மொழி மெய்கள் மூன்றினாலும், எவ்வுயிர்களுக்கும் துன்பம் உண்டுபண்ணா முறையில் வாழ்பவர். முனிசந்திரர் கூறிய அருள் நெறியைக் கேட்ட பின் நீலகேசியின் அறிவுக் கண் திறந்து, அதை மூடியிருந்த அறியாமை இருள் அகன்றது. அவள் அருளுருவினனும் அறிவுருவினும் ஆகிய ஜினனையும் அறத்தையும் (ஜினதர்மத் தையும்) பாடிப் பரவினாள். தன் பழைய குருதி வாழ்வை வேம்பென வெறுத்தாள். அதினின்றும் தன்னைக் கரையேற்றி அறிவொளி தந்த குருவினிடமும், தலைவனாகிய ஜினனிடமும், தன் கடமையையும் நன்றியையும் தெரிவிக்கு முறையில், அவள் பல நாடுகளிலும் சமண அறவொளியைப் பரப்புவதென்று உறுதி கொண்டாள். பிரிவு (2) குண்டலகேசி வாதம் ஜின பகவன் கோயிலை வலம் வந்து வணங்கிய பின், நீலகேசி தான் அடைந்த புதிய அற நெறியாகிய சமண சமய நெறியை எங்கும் பரப்பும் எண்ணங் கொண்டவளாய், முதலில் புத்தரிடம் வாதிடுவதென்று தீர்மானித்தாள். இம் முடிவுக்குக் காரணம் புத்த நெறியினர் அக்காலத்தில் ஊனுண்பதை ஆதரித்து ஊக்கியும், உயிர் ஆத்மா இல்லை என்று மறுத்தும், சமயக்கோட்பாடுகளைப் புறக்கணித்தும் வந்ததேயாம். முனிவரிடமிருந்து அவள் பெற்ற அருள் திறத்தால் புத்த நெறி பரப்பி வந்தவர்களுள் சிறந்தவள் குண்டலகேசி என்றறிந்து, அவளிடம் வாதிடச் சென்றாள். அச்சமயம் குண்டலகேசி தென் பாஞ்சால நாட்டின தலைமையிடமான காம்பிலி நகரில் வாழ்ந்து வந்தாள். அங்கே சமயப் போருக்கு அனைவரையும் அழைக்கும் அறிகுறியாக ஓர் மரத்தடியில் தருக்குடன் வீற்றிருந்தாள். அவளிடம் வாதிடும் துணிவும் இன்றிப்பணியும் விருப்பும் இன்றி அரசனும் மக்களும் அவள் முன் வாராது ஒதுங்கியிருந்தனர். அவளிடம் கொண்ட அச்சத்தால் நகர் ஒளியிருந்திருந்தது. நீலகேசி வாயில் காப்போன் மூலம் அரசனிடம் குண்டலகேசியின் அழைப்பைத் தான் ஏற்பதாக அறிவித்ததும், அவன் அகமகிழ்ந்து மக்களனை வரையும் திரட்டிக்கொண்டு வந்தான். அரசன் நடுவனாயிருந்து சொற்போர் தொடங்குவித்தான். குண்டலகேசியின் விருப்பத்திற்கிணங்க வெற்றி தோல்வி களுக்கான பரிசும், ஒறுப்பும் முடிவு செய்யப்பட்டன. குண்டலகேசியே அவள் தன் சமய உண்மைகளை வரையறுத்துக் கூறும்படி நீலகேசி கேட்க, அவள் கூறத் தொடங்கினாள். குண்டலகேசி: எங்கள் சமயத்தின் அடிப்படை உண்மைகள் மரபுரை (ஆப்தம்) தெய்வமொழி (ஆகமம்) பொருள் விளக்கம் (பதார்த்தம்) செயல் (பிரவிருத்தி) ஆகியவை. எங்கள் சமயத்தின் தலைவர் புத்த பகவான். அவர் பரம் பொருள். உலகின் தொடக்க கால முதலிலிருந்து என்று முள்ளவர். ஊழி பேரூழியாக (கற்ப கற்ப காலமாக) உலக வாழ்வில் புகுந்து வாழ்ந்து தம் நலம் என்ற எண்ணம் சிறிது மின்றி உலகுயிர்களுக்குப் புத்தநெறியை ஊட்டியவர் அவர். அவர் அருளிச் செய்த மூன்று பிடகங்களே (மறைகளே) எங்கள் முதல் நூல்கள். நீலகேசி: புத்த பகவான் தொடக்க முதலே முழுநிறை வுடைய பரம் பொருளானால், நூறாயிரம் பேரூழிகளாக அவர் உலகவாழ்வில் ஈடுபட்டுத் திரிவானேன்? தொடக்க முதலே அவர் நிறைவுடையவரானால், அவ்வீடு பாட்டின் பயன்யாது? வாழ்க்கையீடுபாடு, முன்வினையின் பயன் ஆகும்: அவர் ஈடுபாடு எவ்வினையின் பயன்? அது முன்வினையின் பயனானால், அவர் தொடக்கத்திலேயே நிறைவுடையராதல் எவ்வாறு? அவர் தம் நலம்பற்றிய கருத்தேயின்றி, உலக நலத்துக்காகவே இங்ஙனம் ஈடுபட்டார் என்றால், அதை ஏன் தொடராது நிறுத்தினார்? கோடிக் கணக்கான உயிர்களை உலவிட்டுத் தான் மட்டும் வீடு (நிர்வாணம்) பெறுவானேன். உயிர்கள் எல்லாவற்றின் நலத்துக்காகவே மூன்று பிடகங்களையும் புத்த பகவான்அருளினார் என்றாய். அப்படி யானால், அவர் ஊனுண்ணலை ஒறுக்காததேன்? மறுக்காத துடன் மட்டுமல்ல, அதற்கு அவர் தூண்டுதலும் ஆதரவும் கூடச் செய்திருக்கிறாரே. ஒழுக்கநெறியின் அடிப்படையாகிய உயிரையே மறுக்கும் நீங்கள், ஒழுக்க உயர்வுப் பற்றிப் பேசுவதில் என்ன பயன்? தலைவரைப் பற்றிய நிலை இது. உலகைப் பற்றிய உங்கள் கருத்து யாதோ? குண்டலகேசி: பேருலகு (அண்டம்) ஐங்கந்தங்கள் (°கந்தங்கள்) ஆகிய மூலப் பொருள்களாலானது. இம் மூலப் பொருள்கள் கணத்திற் றோன்றி மறைவன; உலகும் அதனைப் போன்றே கணத் தோற்றமாகி பொய்ம்மை நிலை (உறுதியற்றுக் கணந்தோறும் மாறும் நிலை) உடையது. நீலகேசி: ஆம். இதுவே உங்கள் கண கழிவுவாதம் (க்ஷணபங்கவாதம்) இதன்படி மூலப்பொருள்களுள் ஒவ் வொன்றும் மறு பொருள் தோன்றுவதன் முன் இறந்து படுகின்றது என்று கொள்கிறீர்கள். ஒரு நிகழ்ச்சி அதன் முன்னைய நிகழ்ச்சிகளுடன் எத்தகைய தொடர்பு மற்ற தாகிறது. இதனை நீங்கள் நிகழ்ச்சிப் பொய்ம்மை வாதம் (அசத் காரியவாதம்) என்று கூறுகிறீர்கள். எனவே, நிகழ்ச்சிகளிடையே காரண காரியத் தொடர்புக்கு வழியில்லை. அப்படியானால், வான் மலர் (ஆகாசபுஷ்பம்) போன்ற இன்மை நிகழ்ச்சி ஏற்பட தடையில்லையல்லவா? காரண காரியத் தொடர்புக்கு இணைப் பாகப் பற்றுத் தொடர்பு (வாசனை) என்ற தத்துவம் கொள்ளப் படின், நிகழ்ச்சிகளிடையே ஒருவகை தொடர்பு ஒப்புக் கொள்ளப் பட்டுவிடும். கண கழிவு வாதமும், இன்மை வாதமும் இதனுடன் பொருந்தாது. தத்துவ விளக்கம் கிடக்கட்டும். புத்தர் அருங்குணங் களை விளக்கும் போதிசத்துவர் (புத்த பாம் பிறவிகள்) கதைகளில் அவர் தம்மிடம் வந்து கேட்பவர்க்குத் தம் தலையும் கண்ணும் ஊனும் குருதியும் மக்களும் முதற்கொண்டு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பொருளைக் கொடுப்பவர் கொடையின் உயர்வு பெறுபவர்க்கு அவை பயன்படும் அளவே யாகும். தலை வேண்டியவர் தலையில்லாது முண்டமாகச் சென்றனரா? இது பொருளற்ற பொருந்தாக் கூற்றாயிற்றே! இக்கொடைச் செயல்கள், இந்திரனால் போதிசத்துவர் சோதனைக்குட்பட்ட காலை எழுந்தன என்கிறீர்களா? நிறைவுடைய போதிசத்துவருக்குச் சோதனை ஏன்? தேவ னாகிய இந்திரனுக்கு அவர் நிறைவை அறிய முடியாதா? இவை எதற்கும் விடை பகர முடியாது குண்டல கேசி விழிக்கவே, அவள் அரசனால் அவமதிப்புடன் அனுப்பப் பட்டாள். நீலகேசி அனைவராலும் புகழப்பெற்றாள். பின், குண்டலகேசியின் ஆசிரியரான அர்த்த சந்திரனைத் தேடிச் சென்றாள். பிரிவு(3) அர்க்கசந்திர வாதம் அர்த்த சந்திரன் உச்சயினி நகரில் வாழ்ந்தான். அவன் சொற் போரில் புலி எனக் கருதப்பட்டான். நீலகேசி அவனை அடைந்து வாது தொடங்கினாள். வாதப்பொருள் புத்தர் வினயபிடகத்திற் கண்ட ஒழுக்க முறை பற்றியதாயிருந்தது. புத்த சமயக் கொள்கைகளுக்கும், புத்த சமயத்தைப் பின்பற்றியவர்கள் மேற்கொள்ளும் நடைமுறைக்கும், இடையிலுள்ள பெருத்த வேற்றுமையை நீலகேசி எடுத்துக் காட்டினாள். கொள்கைகளுள் சில நடைமுறைக்குக் கொண்டுவரத் தக்கவையாகக் கூட இல்லை. புத்தர் பிறப்புக் கதைகள் (ஜாதகக் கதைகள்) பலவற்றில் போதிசத்துவர் தம் மனைவியையும் மக்களையும் கூட இரவலருக்குக் கொடுத்திருக்கிறார். இதிலிருந்து இரவலர் கேட்டதை யெல்லாம் கொடுப்பதே உயர் நெறி என்று கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. ஆயினும் தெளிந்த அறிவுடைய எந்தப் புத்தரும், இன்று இக்கொள்கையைப் பின் பற்றித் தம் மனைவியை ஆண்டி ஒருவன் கேட்டால், கொடுப்பான் என்று எதிர்பார்க்க முடியாது. அடுத்த படியாகப் புத்த சங்கத்தில் புகுந்துள்ள பல புதிய பாக்கங்களை நீலகேசி எடுத்துக் காட்டினாள். சங்க தத்த °தவிரன் என்ற புத்த மடத்துறவி புத்த கோட்டத்தில் ஒரு பெண் துறவியைக் கண்டு அவளைத் தன்னுடன் கூடியிருக்குமாறு அழைத்ததாகக் கூறப்படுகிறது. பெண் துறவி, கோட்டம் தூய இடமாயிற்றே; இச் செயலுக்கு இவ்விடம் ஏற்றதல்ல என்றாளாம். சங்கதத்தன்; துறவியர்க்குக் கோட்டமும் வீடும் ஒரே நிலையை யுடையவைதான் என்று ஒழுங்கு கூறி யமைந்தானாம். இன்னொரு துறவி, ஒரு பெண்ணின் இறந்த பிணத்தைத் தழுவினான். இது கண்டு கடிந்த ஒருவரிடம், அவன் பிணத்துக்கும் உயிருள்ளவர்க்கும் இடையே அறிஞர் காணும் வேறுபாடு யாது? ஒன்று பிணமாய் விட்ட உடல்; மற்றொன்று பிணமாக இருக்கும் உடல். வேற்றுமை அவ்வளவு தானே என்றானாம். (இன்னோரிடத்தில் துறவி யொருவன், பெண் துறவி ஒருத்தியை இணக்குவிக்கையில் சிற்றின்பம் சமயத்துக்கு எதிரான தீமையன்று; மக்கள் வாழ்க்கைக் குழுவின் (சமூகத்தின்) கருத்துக்கு மாறானது மட்டுமே மக்களுக்குத் தெரிந்து அவர்கள் புண்படாத வகையில் நடந்தால் துறவியர்க்கு இழுக்கொன்று மில்லை என்று பேசினான். இங்ஙனம் புத்த சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளும் மனித ஒழுக்கத்தின் அடிப்படை ஒழுங்குகளும் பல வகையில் சமய நூல்கள் மூலமே புறக்கணிக்கத் தூண்டுதல் தரப்பட்டிருக்கின்றன. ஒழுங்குகளைத் தளர்த்தி ஒழுங்கின்மையைத் தூண்டும் இத்தகைய தெளிவான விலக்குகள் பதினெட்டை நீலகேசி எடுத்துக் காட்டினாள். மேலும் துறவினை மேற்கொள்வதாகக் கூறிக் கொள்ளும் புத்த துறவிக்கு, எத்தனையோ ஆடையணிவகைகள் உரிமை யாக்கப்படுவது பொருத்தமற்ற செயல். புத்தசமயம், எல்லா உயிர்களுக்கும் அருளும் அன்பும் காட்டவேண்டும் என்று கூறுகிறதாயினும், ஊனுண்ணலுக்குப் பக்க மேளம் கொட்டு கிறது. வீடு பேற்றுக்கு வழி, ஒழுக்கமே என ஒரு பால் பறை சாற்றுகிறது; மறுபால் பாழ்க்கோட்பாடு (சூனியவாதம்) பேசி ஒழுக்கத்தின் அடிப்படையான உயிர் (ஆத்மா) இப்பொருள் என்று கூறுகிறது. எல்லாப் பொருள்களும் மலமுடையவை என்று கூறினும். புத்தர் சிலைக்கு மலரும் பூசையும் தரப்படுகின்றன. எல்லாப் பொருள்களும் கணந்தோன்றி மறையும் நிலையாமை உடையவை என்று கூறிக்கொண்டே பாரிய கோயில்களும் மடங்களும் எழும்புகிறது. உயிர்த் தொடர்பும் மறுபிறப்பும் மறுக்கப்படுகின்றன. புத்தர் பிறப்புக்களில் மேற்கொண்ட விலங்கு, பறவையுருக்கள் வணங்கப்படுகின்றன. இங்ஙனம் வழிபடப்படும் இத் தெய்வ உயிர்களும், பசிக்கு உணவாகப் பயன்படுவதில் குறையில்லை. இக் குளறுபடிகளைக் கேட்டு அர்க்க சந்திரன் மனங் குழம்பிப் புத்தசமயத் திட்டங்களின் தவறுகளை ஒத்துக் கொண்டான். புத்தர் பேசும் கொல்லாமையும் ஒழுக்கநெறியும் வாய்ப் பசப்பே என்பதை உணர்ந்து நீலகேசியால் அரு ளுரைக்கப் பட்ட சமண அறத்தை மேற்கொண்டு அவனும் சமண அறத்தின் மும்மணிகளை வழி காட்டியாகக் கொண்டு உய்ந்தான். பிரிவு (4) மொக்கல வாதம் அடுத்தபடியாக நீலகேசி பதுமபுரம் சென்று புத்தரின் நேர் மாணவரான மொக்கலன், சாரிபுத்திரன் ஆகிய இரு வருள் ஒருவனான மொக்கலனை அடைந்து புத்தமதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப்பற்றி வாதிட்டாள். இவ்வாதத்தில் பெரும் பகுதி சமணக்கோட்பாடுகள் பற்றிய புத்தர் கண்டனங்களுக்கு விடைதரும் முறையில் அமைந்துள்ளது. (பெரும்பாலும் இவ்வாதப் பகுதி புத்த தமிழ்க் காவியமாகிய குண்டலகேசியின் இறந்துபட்ட பகுதிகளுக்கு மறுப்புரை களாயிருக்கவேண்டும்) நீலகேசி புத்தத் துறவிக்குக் சமணத் துறவிக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குகிறாள். வெளித் தோற்றத்திலேயே சமணத்துறவியர் ஆடையைத் துறந்து எளிய வாழ்வு உடை யவர். புத்தத் துறவியரோ பலவகைத் தையல்கள் வாய்ந்த பல பேருடைகளை அணிந்தனர். இவ்வுடை வண்மை துறவுக்கு அறிகுறியாகாது. தொடக்க காலத்தில புத்தரும் கந்தை களைப் பொறுக்கித் தைத்த உடைகளையே அணிந்தனர். பழைய எளிமை கைவிடப்பட்ட பின் குருட்டுத்தனமாகப் பொருளற்ற மறையில் பகட்டான துணிகளும் அதேபோன்று தைக்கப்பட்டன. அதோடு கந்தை நிறத்தை உண்டுபண்ணவே தொடக்கத்தில் காவி நிறச் சாயமேற்றப் பட்டது. ஆடை, தையல், சாயம் முதலியவற்றுக்கான தோல்களால் துறவியரிடையேயும் உலக வாழ்வு பெருகியதை விளக்கி நீலகேசி நகையாடினாள். மொக்கலன் இது கண்டு சினங்கொண்டு, “நான் வாதத் தில் இரணியனை வென்றவன். அவளேபோல் நீயும் இழிவு பட்டே போவாய் என்பது உறுதி” என்றான். நீலகேசி ஒருவரை வென்றாயானால், நான் இருவரை வென்றிருக்கிறேன். குண்டலகேசியும், அர்க்கசந்திரனும் என்னிடம் தோற்றுப் பணிந்தனர்” என்றாள். மொக்கலன் அது கேட்டு வியப்படைந்தான். மொக்கலன் சமணநெறியின் கொள்கைகளாகிய இயக்கதத்துவம்(தர்மம்) நிலைத்தத்துவம்(அதர்மம்), காலம் வான் (இடைவெளி) உயிர் (ஜீவன்) பொருள் (புற்கலம்), நல்வினை, தீவினை, கட்டு (பந்தம்), வீடு (மோஷம்) ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இவற்றைப் பற்றிச் சமண ஆசிரியரான நாதகுப்தர் வாதிட்டுக் குண்டலகேசியிடம் தோற்றார் என்றான். குண்டலகேசியின் வாதங்களையே மொக்கலன் கூற, நீலகேசி அவற்றிற்கு விடையிறுத்தாள். இயற்கையிலடங்கிய ஆக்கப் பொருள்களாகிய ஐந்து மூலப்பொருள்களுள் (அ°திகாயங்களுள்) இயக்கம்(தர்மம்) நிலை (அதர்மம்) ஆகிய இரண்டு அடிப்படைத் தத்துவங் களைப் பற்றிப் பலர் தப்பெண்ணங் கொள்கின்றனர். இயக்கம் பொருள்களியங்க இடந்தருவது, இயக்குவிப்பதன்று. கடலில் நீரின் தன்மை இருப்பதால், கப்பல் ஓடமுடிகிறது. ஆனால் ஓட்டுவது காற்று முதலியவற்றின் ஆற்றல். இயக்க தத்துவம் நீரின் தன்மைபோன்றது; காற்றின் ஆற்றல் போன்றதன்று. அது போலவே, நிலை (அதர்மம்) இயக்கத்தைத் தடுக்க இடம் தருவது. தடுக்கும் ஆற்றல்கள் வேறு. ஒன்றுக்கொன்று மாறான இத்தன்மைகள் எங்ஙனம் பொருந்தும் என்ற மயக்கத்திற்கு நீலகேசி விடையிறுத்தாள். இயக்கமில்லாமல் உலக வாழ்வு இல்லை. மாற்றம் இல்லை. ஆனால் நிலை இல்லாமல் மாறுபாடிடையே தொடர்ச்சி இராது. எனவே, இரண்டும் ஒத்தியல்வதே உலகு’ என்று அவள் தெளிவு படுத்தினாள். நீலகேசி: புத்தராகிய நீங்கள் உலகின் ஆக்கப்பொருள் ஐந்து கந்தங்கள் என்று கூறுகின்றீர்கள். அப்படியானால் உலகின் எல்லைக்கப்பாலுள்ள தெய்வ உலகு, நரகு எப்படிப் பட்டவை? காலம் என்ற ஒன்றில்லை என்கிறீர்கள். ஆயினும் நொடிகளைக் பற்றியும் பெரூழி (கற்பங்) களைப் பற்றியும் பேசுகிறீர்கள். வானகோளங்கள் பொய் என்கிறீர்கள். ஆனால் வானநூலின்படி எதிர்காலப் பலன் கூறுகிறீர்கள். உயிரின் உண்மையை மறுக்கிறீர்கள். மறை (ஆகமங்) களாலன்றிக் கண்கூடு (பிரத்தியக்ஷம்) உய்ந்தறிவு (அனு மானம்) ஆகிய அளவையால் அதனை நிலை நாட்டக் கூடுமா என்கிறீர்கள். உங்கள் ஐந்து கந்தங்களுள் அறிவுக்கந்தமும் இதுபோன்றதுதானே. உள்ளுணர்வால் அறியக் கூடுவதாயின், உயிரும் அப்படியே? மறைமொழியால் காணப்படுவதெனின், அது உங்களுக்கு உடன்பாடன்று ஆயிற்றே? தேவர்கள் பற்றிய கதைகளைக் கூறுகிறீர்கள். அவர்கள் கண்கூடாகவோ, உய்த்தறிவாலோ அறியக்கூடாதவராயிற்றே? மறையுறையால் மட்டும்தானே அறியப்படக்கூடும்? அம்மறைகளே (புத்தசாதகங்கள்) மறுபிறப்புக்களை ஏற்பதால் உயிரையும் ஏற்பவை ஆகின்றனவே? உயிர் உடலின் உருவுடையது என்ற சமணரின் கொள்கையை மொக்கலன் எதிர்த்தான். நீலகேசி: உயிர் உடலுடன் சேர்ந்தியங்குவது என்பதே இதன்பொருள். உயிர் ஓர் அணு என்ற கருத்தை எதிர்க்கவே இங்ஙனம் கூறப்பட்டது. உயிர் அணுப்பொருளாயின், அது உடலின் ஓரிடத்திலேயே இருக்கும். உடலில் பகுதியாய்விடும். ஆனால் உயிர், உடல்போன்ற பரப்பொருளன்று. உடல் முழுவதும் இயங்கும் ஆற்றல். ஆகவே, வடிவற்ற அதன் தன்மை உடல்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. இது பொருத்தமற்ற கூற்று என்ற கூறிவிடமுடியாது. ஏனெனில் புத்தர் கொள்கைப்படி அறிவுக்கந்தத்தின் செயலாலேயே ஊறு உணர்ச்சி ஏற்படுகிறது. ஊறு உணர்ச்சி உடல் முழுமையும் பரந்து இருப்பது. எனவே, அறிவுக்கந்தமும் உடல் முழுவதும் பரந்து நிற்பதாகிறது. அறிவுக் கந்தம் உடல் முழுமையும் பரந்திருப்பது கூடுவதானால், உயிரின் ஆற்றலும், உடல் முழுவதும் பரந்திருப்பது கூடுவதேயாகும். மொக்கலன்: உயிர் அறிபொருள் (சேதனம்); உடல் அறிவில் பொருள் (அசேதனம்). இங்ஙனம் மாறுபட்ட தன்மை உடையவற்றுக்கிடையே தொடர்பு இருத்தல் எவ்வாறு? இது காளை காலிடறிக் கழுதை நொண்டியாயிற்று என்பது போன்றதல்லவா? நீலகேசி: உயிர், உடல் முழுவதும் பரந்து நேரிடை யாகவே உணர்கிறது என்பது சமணக் கோட்பாடு. அதற்கு இடையீடு எதுவும் வேண்டுவதில்லை. (உடல் அறிகருவி மட்டுமே) நீங்கள் கூறும் மறுப்பு உங்கள் நிலையை மறுப்பதேயன்றிச் சமணர் நிலையை யல்ல. உயிர்வேறு; அறிவு வேறு உயிரில் பொருள் ஆகிய உலகு (பிரகிருதி) வேறு, என்ற உங்கள் கோட்பாடும், வேறுவேறு கந்தங்கள் கோட்பாடும் இம்மறுப்புக்குப் பெரிதும் இடம் தருபவை. ஏனெனில், தொடர்பற்ற இவை ஒன்றுக்கொன்று காரணகாரிய மாதல் எங்ஙனம்! மொக்கலன்: சமணர் காரண காரிய ஒழுங்குப்படி காரியம் நிகழும்போது, காரணமும் உடனிகழவேண்டுமென்று கூறப் படுகிறதே. அப்படியானால், நல்வினைப்பயன் நாடிக்கோயில் கட்டுபவன் உடனடியாகவே அதன் பயனை அடையவேண்டு மன்றோ? பயன் பிற்பட்டுக் காணப்படுமென்றால், அதன் முன் காரணம் அழிந்துபடுமே. நீலகேசி: புத்தர் நெறிப்படி காரணம் அழிந்தபின் காரியம் நிகழும். இது இல்காரியக் கோட்பாடு (அசத்காரியவாதம்) எனப்படும். நீங்கள் இதனை மனத்துட் கொண்டே பேசுகின்றீர்கள். சமணர் கோட்பாடு உள்காரியக் கோட்பாடு (சத்காரியவாதம்) எனப்படும். ஆனால் உங்கள் மறுப்பு, சாங்கியர் உள்காரியக் கோட்பாட்டைக் கருதிய மறுப்பேயாகும். சாங்கியர், காரணமும் காரியமும் ஒன்றே என்பர். சமணர் உள்காரியக் கோட்பாடு இவ்விரண்டு நிலைகளினின்றும் வேறுபட்டது. காரியம், காரணத்தின் வளர்ச்சி ஆதலின், அதன் தொடர்ச்சி என்றும் ஆயின், அது காரணமன்று என்றும் ஒப்புமையில் வேற்றுமை கற்பிப்பது. உலகியலில் சமணர் கொண்ட கொள்கைக்கு இது ஒத்ததேயாகும். புத்தர்போல் உலகு தொடர்ச்சியற்ற மாற்றங்கள் என்றும் கொள்ளாது, வேறு சிலர் போல் மாறுபாடற்ற ஒரே நிலைப்பொருள் என்றாவது கொள்ளவில்லை. மொக்கலன்: சமணர் துன்பத்தை மேற்கொள்வதே நோன்பு (தவம்) என்கின்றனர். அதனால் நல்வினை வரும் என்று கருதப் படுகிறது. ஆனால் துன்பம் தீவினைப் பயனாயிற்றே. ஆகவே, தவம் செய்பவன் முன்னைய தீவினையை நுகர்கிறான் என்றாகிறது. இதனால் நல்வினைப் பயன் வருமென்பது எவ்வாறு? நீலகேசி: சமணத்துறவி மேற்கொள்ளும் துன்பம் தீவினைப்பயன் அன்று. ஏனெனில், அது தானே அவனை வந்தடைவதன்று. அவனாக விரும்பி மேற்கொள்வது. அது தவறு உட்கொள்ளும் கசப்பு மருந்து போன்றது. பயன் நாடுபவன் அதனைத் துயராகக் கொள்வதுமில்லை. கொண்டாலும் அது பயனோக்கிய கருவியேயன்றி வேறன்று. மேலும் புத்தர் கட்கு அமைந்த துதாங்க ஒழுங்குகள் இவ்வகைப்பட்டவைதானே! புத்தரே தன் கண்ணும் தலையும் பிறருக்கு விரும்பி ஈந்ததை என்னென்பது? மெக்கலன்: சமணர் மேற்கொள்ளும் இறப்புவரை உண்ணாத நோன்பு (சல்லேகனம்) கொல்லாமை நெறி யினருக்கு ஒவ்வாத தற்கொலை முறையன்றோ? நீலகேசி: சாவது விலக்கமுடியா நிலையில் மட்டுமே அது மேற்கொள்ளப்படும். எனவே, அது தற்கொலையன்று. கொலையை ஒறுப்பதுபோலவே, கொல்லாநோன்பினர் களான சமணர் தற்கொலையையும் வெறுக்கவே செய் கின்றனர். இந்நோன்பு உயிர் நீப்பதற்கன்று, உயிர் நீங்குவதன் முன், உயிர் நிலையின் மேம்பாட்டுக்காவன செய்வதேயாகும். மொக்கலன்: சொல்லுதல் தீவினை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், சமணர் ஊனுண்ணலைத் தீவினை என்பதேன்? தான் கொல்லாதபோது தின்ப வனுக்குத் தீவினை ஏது? நீலகேசி: தீமையை நேரடியாகச் செய்வது மட்டுமன்று, தீமையைச் செய்யத் தூண்டுவதும் தீவினையே. நல்வினை வகையில் நீங்களே இதை ஒத்துக்கொள்கிறீர்கள். போதி மரத்தைச் சுற்றுவது நேரடியான நல்வினையன்றாயினும், புத்தம் நல்வினையை நினைவூட்டுவதாதலால் மறைமுறை நல்வினை எனக் கொள்கிறீர்கள். ஊனுண்ணலும் அது போன்ற மறைமுறைத் தீவினையின் பாற்படும். மொக்கலன்: சமணத் துறவியர் மயிற்பீலியைப் பயன் படுத்துவது, மயிலைக் கொல்விக்கத் தூண்டுவது தானே? அதுவும் மறைமுறைத் தீவினையன்றோ? நீலகேசி: மயிற்பீலிக்காக மயிலைக் கொல்வதில்லை. கொல்லத்தூண்டுவதுமில்லை. பீலியைக் கொல்லாமைக்குக் கருவியாகவே பயன்படுத்துகின்றனர். தமக்காக மயிலைக் கொல்வது கேட்டால், துறவியர் அதனை ஏற்கார் என்பதும் உறுதி.... மொக்கலன்: தீவினை தீய செயலால் மட்டுமே வரும். ஊனுண்ணல் நுகர்தலால் செயலன்று. நீலகேசி: நுகர்தல் செயலன்று என்று கொள்வதானால், கற்பழித்தல் முதலியவையும் நுகர்ச்சியேயாதலால் தீமை யன்றாய்விடும். பிற பல தீமைகளும் அவ்வாறே. ஊனுண்ணல் மறைமுகக் கொலையன்று என்று நாட்ட மொக்கலன் கூறும் பல்வகை எதிர் உரைகளையும் நீலகேசி எளிதில் மறுத்தாள். மொக்கலன்: துன்பத்தை வரவேற்கும் தவத்தை மேற் கொள்ளும் நீங்கள், உயிருடன் உடலை எரித்தல் போன்ற வற்றையும் தவத்திற்கொப்பான செயலாகக் கொள்ளலாம் அன்றோ? நீலகேசி: பிற உயிர்கட்கு ஊறுசெய்வது மட்டுமன்றித் தனக்கு ஊறு செய்வதும் கொல்லாமைக்கு மாறானதே. சமணர் தவம், பிற உயிர்களுக்கு ஊறு செய்யாத தவம். தனக்கும் ஊறுசெய்வது சமணர் நோக்கமன்று. உடலாற்றலறிந்து படிப்படியாகவே அவர்கள் துன்பத்தை ஏற்பர். மேலும் இம்மறுப்பு புத்தர் வாழ்க்கை வரலாற்றுக்கு மாறானது. புத்தர்பிரான் மேற்கொண்ட நிறைபாடுகள் (பாரமிதைகள்) முற்றிலும் தன்னொறுப்பேயாகும். விசாகையிடம் உணவு ஏற்குமுன், அவரே பல நாள் உண்ணா நோன்பு நோற்றார். இவையனைத்தையும் மறந்து, சமணர் நோன்பை எள்ளுதல் பொருந்தாது. மொக்கலன்: மரவகைகள், உயிர் இனங்களுட்பட்ட வையே என நீங்கள் கொள்கிறீர்கள். மரங்கள் வளர்வதால் உயிரினமானால், வளர்கின்ற காரணத்தால் புற்றும் உயிருடைய தாக வேண்டும். உணர்ச்சியற்ற மயிரும் நகமும் போல்வன கூட வளர்கின்றனவே? நீலகேசி: புற்று வளர்ச்சியும் உயிர் வளர்ச்சியும் சொல் லளவில் வளர்ச்சிகளாயினும், வேறுவேறு வகை வளர்ச்சி கள். புற்றின் வளர்ச்சி, பொருள் புறத்திருந்து அடுக்கடுக்காய் மேல் சேர்ந்து வளரும் வளர்ச்சி. உயிர் வளர்ச்சி, உள் ளீடாய்ப் பொருள் முழுதும் உருப்பெருக்க மடைந்து வளரும் உள் வளர்ச்சி. மயிர் வளர்ச்சியும் நக வளர்ச்சியும் கூடப் புற்றுவளர்ச்சி போன்றவையே. செம்பஞ்சி ஏற்றிய நகம் வளர்ந்தபோது, புத வளர்ச்சியைத் தனிப்படக் காணலாம். மேலும் மரவகைகள் பிற உயிரினங்களைப் போலவே அவ்வப்போது இலைகளை மடக்கி உறங்குகின்றன. புளி முதலியவற்றில் இது எளிதிற் காணப்படும். மொக்கலன்: ஒருசில மரங்களே இலைகளை மடக்கு கின்றன. இது உறக்கம் என்று கொள்வதற்கில்லை. நீலகேசி: உயிரினங்கள் எல்லாம் உறங்கும்போது கண் மூடுவதில்லை. மரவகைகளும் அப்படியே. மேலும் மரவகைகள் உயிரினங்களைப் போலவே விருப்பு, வெறுப்பு, செயலெதிர்செயல் உடையன. மொக்கலன்: அனலருகில் பட்டவுடன் மெழுகு உருகுவதில்லையா? அது உயிர் எனக் கொள்வதில்லையே. செயல், எதிர்செயல், உயிரின் குறியாவது எங்ஙனம்? நீலகேசி: மெழுகின் மாறுதல் அனலின் சூடுபோன்ற புறநிலையைமட்டும் பொறுத்தது. மரவகை, உயிரினம், ஆகியவை தம் விருப்பு, வேண்டுதல் ஆகியவற்றுக்கேற்பச் செயலாற்றும். மரவகைகளும் உயிர்களும் வளர்வதற்கும் வாழ்வதற்கும் எல்லைஉண்டு. வளர்ந்தபின் அவை நலிந்து அழிவு எய்தும். உயிரில் பொருள்களுக்குத் திட்டமான வரையறையும் எல்லையும் இல்லை. விறகுள்ளவரையும் எவ்வளவு நாள் வேண்டுமாயினும் தீ எரியும். வெட்டினால் அழிவது, நோயினால் நலிவது, குணப் படுவது ஆகிய பண்புகள் வாளிலும் தோலிலும் காணப்படும் மாறுதல் போன்றவை. காந்தத்தால் வளைந்த வாள் நிமிர்வது போல்தான், மருந்தால் நோய் நீங்குவதும் என்று பலவாறு மொக்கலன் வாதிட்டான். நீலகேசி அவற்றின் பொருந்தாமை விளக்கி, தம் வடிவும் பண்பும் மாறா இனப்பெருக்கம் உயிர்வகைகளின் சிறப்புப் பண்பு என்பதையும் விளக்கி னாள். மொக்கலன்: நில உயிர், நீர் உயிர், அனலுயிர், காற்றுயிர், வானுயிர் என்று மூலப் பொருள்களிலும் உயிர்களிருப்ப தாகக் கூறுகிறீர்களே. இது உயிரில் பொருள்களிலும் உயிர் இருப்பதாக மயங்குவதல்லவா? நீலகேசி: மூலப் பொருள்கள் (பூதங்கள்) உயிர் உடை யவை என்று சமணர் கொள்வதாகக் கொள்ளுகிறீர்கள். இது தவறு. கண்காணா நுண் உயிர்களாகிய ஓர் உணர்வு உயிர் இனங்கள் எண்ணற்றவை உண்டு. அவை நில நீர் முதலிய வற்றிலிருப்பதையே இப் பாகுபாடு குறிக்கும். மொக்கலன்: நிலயுடைமை (நித்தியம்) நிலையாமை (அநித்தியம்) ஆகியவை மூலப்பண்புகளா? தற்செயல் நிகழ்ச்சிகளான துணைப்பண்புகளா? உலகு நிலையுடை மையை மூலப்பண்பாகக் கொண்டதானால், உயிரினங்கள் மீது அதன் தாக்கு எவ்வாறு ஏற்படும்? நிலையாமை மூலப் பண்பானால், உயிரினங்கள் ஒரே தொடர்ச்சியான உலக நுகர்ச்சி பெறுதல் எங்ஙனம்? நீலகேசி: சமணர் முடிந்த பொருளொருமைக் கோட் பாட்டினர் (ஏகாந்தவாதிகள்) என்ற தப்பெண்ணத்தால் இவ்வினா எழுந்தது. சாத்தன் என்ற ஒரே ஆள் வேலனுக்குத் தம்பியாகவும், மூலனுக்கு அண்ணனாகவும் இருத்தல் கூடு மன்றோ? இருதன்மையும் ஒரே பொருளின் இரு வேறு தொடர்புகளே. அதுபோல, நிலையுடைமையும், நிலை யாமையும் உலகின் இருவேறுபட்ட தொடர்புகள். முழுமை யாகப் பார்க்க அது நிலையுடையது. பகுதிகளாகப் பார்க்க அது நிலையாமையுடையது. இன்னொருவகையாகக் கூறினால், மூலப்பண்பை (அனுவிருத்த சுவபாவம்) நோக்கப் பொருள் நிலையுடையது. துணைப்பண்பை (வியாவிருத்த சுவாவம்) நோக்க நிலையாமை உடையது. மொக்கலன்: பொருள்களின் அடிப்படை இயல்பு நிலையானது என்றும், தற்காலிக இயல்பு நிலையாத தென்றும் கூறுகின்றீர்கள். அப்படியானால் பண்புகளில் லாமல் அவற்றுக் கப்பாற்பட்ட பண்பி, அல்லது பொருள் இல்லையென்று கொள்ளலாகு மல்லவா? நீலகேசி : பண்புகளிலிருந்து பொருளைப் பிரிக்கமுடி யாது என்பது நீங்கள் கூறுவதன் பொருளாயின், அது சரியே. ஆனால், பண்புகளின் கூட்டே பொருள் என்று கொள்வ தானால் அது தப்பாகும். கடல் நிலையானது; அலைகள் நிலையாமையுடையவை. பொன் நிலையானது; அணிவகை கள் நிலையாதவை. ஆயினும், அலைகள் கடலிலெழுவனவே யன்றிக் கடலல்ல. அணிவகைகள் பொன்னாலானவையே யன்றிப் பொன்னல்ல. மொக்கலன்: பொருளும் பண்பும் இருபொருள்களா? ஒரே பொருளா? இருபொருள்கள் என்றும் ஒரு பொருள் என்றும் நீங்கள் மயங்கவைக்கிறீர்கள். நீலகேசி: மெய்ம்மை ஆராய்ந்து பார்ப்பவருக்கு இதில் மயக்கமில்லை. புத்தசமய நூலிலேயே ஐங்கந்தங்கள் சேர்ந்தே ஆன்மா செயலாற்றுக்கின்ற தாயினும், கந்தங்களே ஆன்மாவல்ல. ஒரே சித்தம் முன்னைய சித்தத்தின் பயனாகவும், வருகிற சித்தத்தின் காரணமாகவும் கொள்ளப்படுகிறது. ஒரே பொருளுக்கு இவ்விடங்களில் இரு நிலைகள் கூறப்படுகின்றன. இவைபோலவே, பண்பும் பொருளும் ஒன்றுபட்ட ஒரு மெய்ம்மையின் இரு வேறு நிலைகளாம். மொக்கலன்: மெய்ம்மை உரைகடந்த தென்கிறீர்கள். உரைகடந்ததென்றதே அதுபற்றிய உரைதானே. உரை கடந்த ஒன்றுபற்றி வாளா இருத்தலன்றோ வேண்டும். அதுபற்றி வாதிட இடமேது? நீலகேசி: உரைகடந்தது (அவ்க்தவ்யம்) என்றால், உரைக் கிடமில்லாததென்று பொருள் அன்று. அது ஒரு தரப்பில் அழியாததென்றும், ஒரு தரப்பில் அழிவதென்றும், ஒரு தரப்பில் ஒன்று என்றும், ஒருதரப்பில் வேறுபாடுடையதென்றும் கூறப்படலாம். உரைகடந்தது என்பதன்பொருள், முற்ற விளக்க உரைபெற முடியாதது என்று மட்டுமே பொருள்படும். மொக்கலன்: பொருள்கள் மாறுகையில் அடிப்படை ஒருமைப்பாடு இருக்கவேண்டும் என்கிறீர்கள். பால் தயி ராகும்போது, பாலே தயிருருவில் உள்ளது என்றால், தயிர் பால்தான் என்று ஆகும். அப்போது மாறுபாடு என்ன? நீலகேசி: பொருளின மாறுபாட்டை உள்பயன் கோட் பாடு (சத்காரியவாதம்) எனச் சமணரும், இல்பயன்கோட் பாடு (அசத்காரியவாதம்) எனப் புத்தரும் கூறுவர். இல்பயன் கோட்பாட்டின்படி பால் முற்றிலும் ஒழிந்து தயிர் புதிதாகத் தோன்றுகிறது என்று கொள்ளப்படுகிறது என்று கொள்ளப் படுகிறது. இது உண்மையானால், பால் ஏன் தயிராக மட்டும் மாறவேண்டும்? எண்ணெயாகவும் தேனாகவும் மாறலாமே. பால், தன் அடிப்படைத் தன்மை மாறாமல் உருவில்மட்டும் தயிராக மாறுகிறது. அதாவது பாலின் அணுக்கள் உருவிலும் ஒழுங்கிலும் மட்டும் மாறி, தயிர் அணுக்களாகின்றன. காரணகாரியத் தொடர்பில்லாவிட்டால், புத்தர் வீடுபேறு (நிர்வாணம்) மதிப்பற்றது. யாரும் வீடு பெறலாம் பெற்றவர் பழைய நிலைக்கு மீளலாம் என்றாய்விடும். மொக்கலன் : உண்மை அன்மைபற்றிய உங்கள் கொள்கைப்போக்கு புதுமையானது. தன்னிலையில் உண்மை வாய்ந்த ஒரு பொருளே பிறிதொரு தன்மை, இடம், காலம், முறைமை ஆகியவைகளில் அன்மையாகவும் கூறப்படும் என்பது எவ்வாறு? ஓரிடம் இருப்பது மற்ற இடமில்லை என்று கூறுவது ஒரு பெரிய கோட்பாடா? நீலகேசி: முக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வகையிலும் உள்ள உண்மை, இல்லாத இன்மை ஆகியவற்றிலிருந்து தன்மை, இடம், காலம் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபாடும், உண்மை இன்மைகளைப் பிரித்தறிவதற்கே இப்பிரிவினை ஏற்பட்டது. யானை ஒரு பெரிய விலங்கு என்பது என்றுமுள்ள உண்மை. யானை தறியிற் கட்டுண்டு நிற்கிறது என்பது தற்காலிக உண்மை. ஏனெனில், அது ஒரு குறிப்பிட்ட காலத்தையும் இடத்தையும் மட்டுமே குறிப்பிடுவதாகும். என்றுமுள்ள தன்மை, உண்மை. முயற்கொம்பு போல் என்றுமில்லாத தன்மை, இன்மை. தற்காலிகமாக இல்லாத தன்மை அன்மை. ஒரு பொருள் இங்கு அன்று, இவ்வாறு அன்று என்றால் வேறிடம் உண்டு, வேறு பண்பு உண்டு என்று தெரியவரும். மொக்கலன்: பெயரில்லாத பொருளும் நுகரப்படாத பொருளும் பொருளல்ல என்று கூறப்படுகிறது. ஒருவனால் நுகரப்படாத பொருளும், ஒருவன் பெயர்த் தொகுதியில் அடங்காத பொருளும் இல்லை என்றல் கூடுமா? நீலகேசி: நீங்கள் குறிப்பிடுவது சமணர் கொள்கை யன்று. நாங்கள் கூறுவதெல்லாம் நம்மால் பெயரிடப்பட்டு நுகரப்படும் பொருள்.உண்மையற்றதாயிருக்க முடியாது என்பதே. மொக்கலன்: ஒரு பொருளின் தன்மை அதற்கே சிறப்பு என்றால், இரும்பு பழுப்படைவதையும், தண்ணீர் வெந்நீரா வதையும் என்னென்பது. அவற்றின் தன்மையாகிய கருமையும் தண்மையும் மாறுபடுகின்றனவே. நீலகேசி: இருபொருளின் தன்மை ஒரு பொருளில் காணப்படுவதால், பொருள் மாறுவதுபோல் தோன்றும். அடிப்படைத்தன்மை மாறுவதில்லை. சேர்க்கை நீங்கிய பின், தனித்தன்மை மீண்டும் காணப்படும். இரும்பு சிவப்பதும், தண்ணீர் வெப்பமடைவதும் தீயின் பண்பு அதில் ஏறுவத னாலேயே. தீயின் செயல் நீங்கியபின், அவை பழைய தன்மை யுடனேயே விளங்கும். பூவிருந்த தட்டில் சிலகாலம் மணம் இருப்பதும் இவ்வாறே. மொக்கலன்: துறக்கம் (வானுலகு) ஓர் இடமானால், அதுவும் மாட்டுத் தொழுபோன்ற ஓர் இடமாதலால் அதன் சிறப்பு, உயர்வு யாது? நீலகேசி: புத்தர் அறிவுபெற்ற இடமாகிய போதியடி, பிற இடங்களிலிருந்து எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறே என்க. மொக்கலன்: பிறப்புடைய உயிர், துறக்க மெய்திய பின் மீள்வதில்லை. இச்சிறப்புத் தரத் துறக்கத்தில் என்ன இருக்கிறது? நீலகேசி: இது இடத்தின் சிறப்பல்ல. அங்கே செல்லு முன், உயிர் இருவினை வேரறுத்துவிடுவதால் வரும் பயன். மொக்கலன்: வீடுபெற்ற உயிருக்கும் அறிவு இருப்பதால், செயலும் வினையும் உளதாகவேண்டுமே. நீலகேசி: உலகின் உயிர்கள், அறிவு பொறியறிவாத லால் வினையெய்தும், வீடெய்திய உயிரின் அறிவு, வினை யறுத்த அறிவு. அது வினைப்பயன் சாராது. மொக்கலன் ஐயங்களெல்லாம் நீங்கப்பெற்றுச் சமண அறிவுபெற்றான். அதோடு நீலகேசியைத் தன் தலைவரான புத்தரிடமும் செல்லும்படி தூண்டுகிறான். பிரிவு. 5. புத்த வாதம் புத்த சமயத்தைத் தோற்றுவித்த முதல்வரான புத்த பிரான் கடற்கரை யோரமுள்ள கபிலபுரத்தில் வாழ்ந்து வந்தார். உணவுக்கு மீன் எளிதில் கிடைப்பதற்காகப் புத்தர்கள் கடற்கரையோரமே மடங்கள் அமைப்பர் என்று இங்கு ஏளனமாகக் குறிப்பிடப்படுகிறது. ஊன் விலைஞரும் உயிர்க் கொலைஞரும் அடுத்துத் தொழிலிடங் கொண்டிருந்தனர் என்பதும் குறிக்கப்படுகிறது) அவர் அரசர் மரபினராயிருந்த தற்கேற்ப, அவர் தங்கிய மடம் அரண்மனைக் கொப்பான தாகவேயிருந்தது. அவர் ஓர் உயர்ந்த தவிசின் மீதமர்ந்து, தம்மைப் புடைசூழ்ந்திருந்த தம் திருச்சபை மாணவருக்குப் புத்தநெறியை விளக்கிக் கொண்டிருந்த சமயம், நீலகேசி அவரைச் சென்று கண்டாள். நீலகேசி விருப்பத்திற் கிணங்கப் புத்தபிரான் தம் நெறி யின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கினார். புத்தர்புரான்: மெய்ம்மையின் அடிப்படைத் தத்துவங் கள் ஐந்து கந்தங்களாக வகுக்கப்படும். அவை உருவகந்தம் (ரூபம்) உணர்ச்சிக்கந்தம் (வேதனை) அறிவுக்கந்தம் (விஞ்ஞானம்) பெயர்க்கந்தம் (சம்ஜ்ஞா) செயற்கந்தம் (சம°காரம்) என்பவை. உலகின் பொருள்கள் அனைத்தும் உருவகந்தத்தைச் சார்ந்தவை. அப்பொருள்கள் எட்டினங்களாக (அஷ்டகம்) அறியப்படும். அவையாவன:மண், நீர், காற்று, அனல் ஆகிய மூலப்பொருள் (பூதங்) களும் அவற்றுக்குச் சரியான பொறி யுணச்சிகளாகிய நிறம், சுவை, மணம், ஊறு ஆகியவைகளும் ஆம். இவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாத ஒரே தொகுதியாக எட்டினம் எனப்படும். மூலப்பொருள்களின் பண்புகள் முறையே திட்பம், நெகிழ்ச்சி, வெப்பம், சுழற்சி ஆகியவை. அவற்றின் செயலும் நால்வகைப்படும். உணர்ச்சிக்கந்தம் இன்ப உணர்ச்சி, துன்ப உணர்ச்சி, சமனுணர்ச்சி என மூவகைப்படும். அறிவுக்கந்தம், பொறி அறிவு ஐந்து, மன அறிவு ஒன்று, ஆக ஆறு அறிவுகளையும் பகுதி களாகவுடையது. பெயர்க்கந்தமும் இதேபோல ஆறு வகை. செயற்கந்தம் மன மொழி மெய் என மூவகை. இக்கந்தங்கள் கணந்தோறும் தோன்றி மறைவன. (பல தனிப்படங்கள் விரைவாக ஓடித் திரைக் காட்சியில் தொடர்ச்சி காட்டுவதுபோல) அவை தொடர்ச்சியுடையவைபோலத் தோற்றுதல் மயக்கமே. உண்மையில் எல்லாப் பொருள்களும் நிலையற்றனவே. ஐந்து கந்தங்களின் சேர்க்கையையே ஆன்மா என்ப தன்றி, ஆன்மா அல்லது உயிர் என்ற ஒன்றில்லை. கண வாழ்வும் அழிவுத் தன்மையுமுடைய இக்கந்தங்கள் நிலை யாமை, துன்பம், தூய்மையின்மை, உயிர்ப்பின்மை (அனாத்மா) ஆகிய இயல்புகளை உடையன. இவற்றின் இயல்பை உணர்ந் தவன் உலகத்தோற்ற (சம்சார)த்தின் தன்மை உணர்ந்து துறக்கம் அல்லது வீடு (நிர்வாணம் அல்லது மோக்ஷம்) அடைகிறான். நீலகேசி: ஐந்து விரல்கள் சேர்ந்த கைபோலும், செங்கல் முதலிய பொருள்கள் சேர்ந்தமைந்த வீடுபோலும் கந்தங்கள் சேர்ந்ததே மெய்ம்மை (உலகு) என்கிறீர்கள். ஆனால் கந்தங்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க ஒண்ணாதவை; ஒருங்கே கணந்தோறும் தோன்றிக் கணந்தோறும் அழிபவை என்று கூறுகிறீர்கள். விரல்கள், வீட்டுக்கான பொருள்கள், இவ்வகையில் பொருத்தமான உவமைகள் அல்ல. ஏனெனில் அவை தனித்தனி இயங்கவோ தோன்றவோ அழியவோ கூடும். கந்தங்கள் கூட்டாகவோ இயங்குவதற்கும் அழிவதற்கும் அவற்றைப் பிணைக்கும் அடிப்படை இணைப்பு இன்றியமையாதது. இதனை ஏற்றால் ஆன்மாவை ஏற்றதாகும். இக்கந்தங்கள் அத்தகைய ஆன்மாவின் பண்புகளேயாகும். நாலு முதற்பொருளைக் கூறுகையில் அவற்றின் பண்பும் செயலும் குறித்தீர்கள். பொருளினின்று வேறாகப் பண்பும் செயலும் பொருளாவது எங்ஙனம்? பிற கந்தங்களையும் பிரித்தறிய அறிவுவேண்டும். பொறியுணர்விற்கு அடிப்படையான மண்ணை ஏற்கும்போது, உணர்ச்சி முதலிய கந்தங்களுக்கு அடிப்படையான உயிரை (ஆன்மாவை) ஏற்காததேன்? புத்தர் : நாங்கள் ஏற்பதெல்லாம் பண்புகள்தான்; பொருள்கள் அல்ல. நீலகேசி: அப்படியானால் பண்புகளே பொருள்களாயின. அவற்றின் செயல்கள் பண்புகளாகும். பொருள் பண்பு உறவு ஏற்பட்டுவிடுகிறது. நீங்களோ அத்தகைய உறவை ஏற்ப தில்லை. புத்தர்: பண்புகளல்லாது பண்பி (பொருள்) ஒன்றிருப்ப தாகக் கொள்வதேன். அதனை அறியமுடியுமா? நீலகேசி: பிரிந்தியங்களோ பிரித்துணரப்படவோ முடியாத காரணத்தால் பொருளில்லை என்றாகமுடியாது. உணர்ச்சி முதலிய கந்தங்களின் அடிப்படையாக உயிர்நிலை அல்லது அறிவுநிலை (போதம்) இருக்கவேண்டுவது விலக்க முடியாத உண்மை. மேலும் கந்தங்கள் பிரிந்தியங்காதென்றால், ஒன்றுக் கொன்று மாறான தீ, நீர், ஆகியவை ஒருங்கே இயங்கும் என்ற முரண்பாடு ஏற்படுகிறது. ஒவ்வொரு மூலப்பொருளிலும் மற்ற மூன்றும் கலந் துள்ளன என்கிறீர்கள். அப்படியானால் அக்கலவை மூலப் பொருளிலும் அத்தகைய கலப்பு இருக்கவேண்டும். அக்கலப்பிற் கலந்துள்ள கலப்பிலும் அதனுட் கலப்பிலும் அவ்வாறாகி எல்லையற்ற குழப்பநிலை ஏற்படுகிறது. மூலப்பொருள் என்பதற்குப் பொருளே இல்லாமலாகிறது. புத்தர்: அப்படி அன்று. ஒவ்வொரு மூலப்பொருளிலும் தன் பண்புமிகுந்து, பிற பண்புகள் குறைந்து இயல்கின்றன. நீலகேசி: மிகுதிப்பண்புக்கு முன் குறைந்த பண்பு அழியும். அப்படியும் அவை ஒத்தியங்குதல் அரிது. மேலும் பொறியா லுணரப்படும் எட்டினப் பொருள்கள் அங்ஙனம் உணரப்படாத வற்றுடன் இயங்குவதெவ்வாறு? தவளையின் காற்சுவடு காற்றில் இருப்பது போலன்றோ இந்நிலை? அறிவு செயலுக்கும், செயல் இன்ப துன்பங்களுக்கு இடமாகும் என்கிறீர்கள். அறிபவன், செய்பவன், நுகர்பவன் ஆகிய ஆன்மா இல்லை என்கிறீர்கள். அப்படியானால் இம் மூன்றும் தொடர்பற்றவையாக வன்றோ இருக்கவேண்டும். ஒன்று மற்றதற் கிடமாவது எவ்வாறு? அறிவுக் கந்தம் ஆறனுள் ஒரே நேரத்தில் ஒன்று தானே உணர்விலிருத்தல் கூடும்? மற்றவை மறைவிலுள்ளன என்னின், மறைவில் வைத்துள்ள உள்ளம் அல்லது ஆன்மா ஒன்று இருத்தல் வேண்டுமன்றோ? அறிவுக்குக் காரணம் விருப்பம் (இச்சை) என்கிறீர்கள். விருப்பம் அறிவுக்கு முந்தியதாகவே அது எங்கிருந்து எழு கிறது என்ற வினா ஏற்படுகிறது. உடலிலிருந்து என்றால் அறியாப் பொருளி (அசேதனத்தி) லிருந்து வந்ததென்றாகிறது. அது அறிவினின்று எழுந்ததாயின் காரியமே காரணமாகின்றது. இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக உள்ளுறை அறிவு என்ற ஒன்றைக் கொள்கிறீர்கள். ஆனால் அது ஆன்மாவிற்கு ஒரு மறுபெயரேயன்றி வேறன்று. புத்தக் கோட்பாட்டின்படி பொறியுணர்ச்சிகளுள் மணம், சுவை, ஊறு ஆகிய மூன்றும் பொறிகள் மீது பொருளுலகு தாக்குவதால் ஏற்படுகின்றன என்பது ஒத்துக்கொள்ளப்படுகிறது. நீலகேசி ஓசையும் அத்தகைய தாக்குதலாலேயே ஏற்படுகிறது என்று விளக்கினாள். (இது தற்கால அறிவியல் கொள்கையை வியத்தகு முறையில் நினைப்பூட்டுவதாகும்) ஓசை காற்றணுக் களினியக்கத்தால் உண்டாவதென்றும் அது ஒளியினும் வேகம் குறைந்ததென்றும் கூறி, அதனை எடுத்துக்காட்டினால் விளக்கு கிறாள். வண்ணான் துணி தப்பும்போது அவன் செயலைக் கண்கொண்டு பார்ப்பவருக்கு அச்செயலைப் பார்த்தபின் சில நொடிகள் கழித்தே அதனுடன் ஏற்படும் ஓசை செவியிற்படும். மேலும் கட்புலனுதவி யின்றியே ஓசையின் அண்மை தொலைவுகளையும் வரும் திசையையும் உய்த்துணரலாகும். நொடிக் கோட்பாட்டின் முரண்பாட்டையும் நீலகேசி நன்கு விளக்கினாள். நொடிதோறும் பொருள்கள் அழிந்து மாறுவதானால் புத்தர் என்ற பெயரைச்சொல்வதற்குள் பல நொடிகள் ஆகி, ஒரு நொடியில் கேட்ட உணர்வு அழிந்து, பின் மறுநொடி உணர்வு ஏற்படும். தொடர்ச்சியுமிராது, தொகையாகக் கேட்ட கேள்வியுணர்வு மிருக்க முடியாது என்ற அவள் காட்டினாள். நீலகேசி: ஓசை என்பது பொருளன்று; போலித் தோற்றம் என்கிறீர்கள். ஓசைகளால் ஏற்பட்ட உங்கள் பிடக முதலிய நூல்களும், ஓசை வாயிலாகச் செய்யப்படும் உங்கள் அறிவுரைகளும் என்னாவது! அறிவுக் கந்தமும் பெயர்க்கந்தமும் ஒரேவகைப் பொருள் குறிக்கின்றன. இரண்டுக்கும் புலனாவது ஒரு பொருளாயின், அவை இருபொருள்கள் ஆகா. ஒரு பொருளாயின் அறிவுக் கந்தம் பொருளற்றதாகிறது. செயற் கந்தத்தில் அவா, வெகுளி, மயக்கம் ஆகிய மனத்தின் செயல்களும், பொய், குறளை, இன்னாச்சொல், பயனில் சொல் ஆகிய மொழியின் செயல்களும், கொலை, களவு, காமம் ஆகிய உடற் செயல்களும் கூறப்படுகின்றன. இப் பத்துத் தீமைகளுள் குடியும் பேரவாவும் இடம் பெறாதது ஏன்? மேலும் அவா தீமையாகுமானால், புத்த துறவியர் குடை, மிதியடி, குண்டிகை ஆகியவை வைத்துக் கொள்ளல் தகாதன்றோ? மெய்யறிவுடன் நோக்கினால் அவாவனைத்துமே தீமை என்று கூறுவதற்கில்லை. அது நன்மையாவதும் தீமையாவதும் அவாவிய பொருளின் தன்மையைமட்டுமே பொறுத்தது. வெகுளியோடு எவ்வகை யிலும் ஒப்பாகும் செருக்கு, மயக்கம் (மாயை), சிறுமை (லோபம்) ஆகியவற்றையும் தீமைகளாக எண்ணத் தவறிவிட்டீர்கள். உம் வாழ்க்கை வரலாற்றிலேயே இத் தீமைகளை அகற்றப் பாடுபட்டிருந்தும், உங்கள் சமயக்கோட்பாட்டில் இவற்றைக் கவனிக்காது விட்டுவிட்டீர்கள். மொழிச் செயல்களிலும் தீமை பயக்கும் மெய்ம்மை, புறங்கூறாது நேரிடையில் இழித்துரைத்தல், ஆகியவற்றை நீங்கள் ஒதுக்கத் தவறிவிட்டீர்கள். மேலும் தீமைகளை மனமொழி மெய் என முற்றிலும் பிரித்ததும் வழுவாகும். எல்லாத் தீமைகளிலும் மனத்தின் செயல் உண்டு என்பது தெளிவாக்கப்படவில்லை. கொலைக் குற்றத்திற்கு ஐந்து கூறுகள் தெளிவுபட வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள், செயலுக்காளானது உயிருடைய பொருளாயிருக்க வேண்டும். உயிருடையதெனச் செய்பவர் அறிந்திருக்க வேண்டும். கொல்லும் எண்ணம், கொலைச்செயல், ஆளான உயிர் இறத்தல் இத்தனையும் இருத்தல் வேண்டும். இவ்வைந்தில் எக்கூறு குறைபாட்டிலும் கொலைக்குற்றம் இல்லை என்கிறீர்கள். எனவே, நடைமுறை யில் வெற்றிபெறாத கொலைமுயற்சிகூடக் கொலையாகாது என்றாகிறது. ஆனால் உங்கள் நூலில் காந்திபாலன் (க்ஷhந்திபாலன்) என்ற துறவியைக் கொல்ல முயன்ற மன்னன் கலாகன் (கலாஹன்) நரகு சென்றதாகக் கூறப்படவானேன்? உங்கள் பேரறவுரை (மகாவாக்கியம்) நான்கனுள், எல்லாமே துன்பம் (சர்வம் துக்கம்); எல்லாமே தூய்மை யற்றவை (சர்வம் அசுசி); எல்லாம் நிலையாதவை (சர்வம் அநித்யம்); எல்லாம் உயிரல்லாதவை (சர்வம் அனாத்மா) என்ற நான்கு உண்மைகள் கூறப்படுகின்றன. முதல் உரையின்படி நீங்கள் வற்புறுத்தும் நல்லறமும் நற்பயன் அற்றதாகும். இரண்டாவதன் படி உங்கள் மறை, போதி மரத்தடி முதலியவையும் தூய்மையற்றவையாகவேண்டும். மூன்றாவது வாழ்க்கைக் கொவ்வாதது. நொடிதோறும் எல்லாம் அழிவது உண்மை யானால், அரசன் உடைமைகளைப் பறிமுதல் செய்யும்போதோ, வெள்ளம் முதலியவற்றால் அழியும்போதோ, வருந்துபவர் நொடிதோறும் வருந்தாததேன்? மேலும் சமயத் தலைவராகிய நீங்கள் மறையும் நிலைப்ப தெவ்வாறு? கடைசி உரைக்கு மாறாக நீங்களே உயிர், மறுபிறப்புப்பற்றிப் பேசுகிறீர்கள்.அது வெறும் உலகியல் வழக்கு (வியவகாரப் பிரயோகம்) ஆனால் கூட உங்கள் பழைய நினைவுத் தொடர்ச்சி (பிரத்திய பிஜ்ஞை)க் கொள்கை யுடன் அது ஒத்துவராது. மெய்ப்பொருள்களை, நாம் அவற்றின் பெயர் (நாமம்) உருவம் (°தாபனம்) பொருண்மை (திரவியம்) செயல்வகை (பாவம்) ஆகிய நாலுவகைகளால் அறியலாம். நீங்கள் கடைசிவகை ஒன்றுமட்டுமே ஒப்புக்கொள்கிறீர்கள். முதல் மூன்றுவகைகளாலும் மட்டுமே ஆன்மா தெளியப்படும். வான்மலர் போன்ற தொடர்கள் இல்பொருள் குறிக்கின் றனவே எனின், வான். மலர் என்ற இரண்டும் உள்பொருள் களே என்றும், இல்பொருள் குறிக்கின்றனவே எனின், வான், மலர் என்ற இரண்டும் உள் பொருள்களே என்றும், இல் பொருள் என்பது தொடரின் முரண்பாடு மட்டுமே என்றும் காட்டலாம். பொருள் குறித்தே பெயர் எழுமாதலால், பெயர் பொருளின் அறிகுறியேயாகும். வினைப்பயன், வினையுலகு (சம்சாரம்) வீடுபேறு ஆகியவற்றை ஏற்கும் புத்தநெறியாளர் இவற்றுக்கு அடிப் படையான உயிர்நிலை (ஆன்மா) உண்டென்பதை மறுப்பது பொருத்தமற்றது என நீலகேசி கூற, அதை மறுக்கப் புத்தர் பிரான் கூறிய உவமைகள் பலவற்றுள் பொருத்தமின்மையை அவள் விளக்கிக் காட்டினாள். மேலும் வீடுபேறு என்பது வினை உலகுத்தொடர்பு அறுவதேயாயின், நொடிதோறும் அழிந்து புதிதாகும் உலகில், வீடுபேறுதான் நொடிதோறும் நிகழும் செய்தியாயிற்றே என்று நீலகேசி ஏளனம் செய்தாள். நொடி மாற்றுக்கொள்கையும், மாறுதலில் கொள்கையும் தவறு என்றும், உள்ளார்ந்த நிலைமையுமாகிய தொடர்ச்சியினிடையே மாற்றமாகிய நடுநிலைக் கொள்கையே நேர்மையுடைய தென்றும் அவள் விளக்கினாள். நீலகேசி அறிவின் திறத்தைக் கண்டு வியந்து, புத்த ருடைய குறைபாட்டை ஒப்புக்கொண்டு, இனி அவள் கூறிய உண்மைகளை ஏற்பதாகக் கூறினார். பிரிவு 6. ஆசீவக வாதம் புத்தர் வாழ்ந்த கபிலபுரத்தினின்று அகன்று, நீலகேசி வான்வழியாக வென்றியஞ்செல்வனை (ஜினபகவானை)ப் பாடிப் பரவிக்கொண்டு சென்று, கோழியூரை (குட்குடநகரை) அடைந்தாள். அங்கே ஆசீர்வகர் என்ற சமயப்பிரிவினர். அவர்களையும் வெல்ல எண்ணி நீலகேசி, அவர்களுடைய ஆசிரியராகிய பூரணரிடம் சென்று, “உங்கள் சமயம் எத் தகையது” என வினவினான். நீலகேசி: உங்கள் சமயம் கண்ட தலைவர் யார்? உங்கள் மறை எது? உங்கள் சமயக் கோட்பாட்டின்படி அடிப்படை உண்மை, அல்லது உண்மைகள் எவை? பூரணர்: எங்கள் சமயத் தலைவர் ம°கர் ஆவர். எங்கள் மறை நூல்கள் ‘ஒன்பது ஒளிக்கதிர்கள்’ எனப்படுபவை. எங்கள் கோட்பாட்டின்படி அடிப்படைப்பொருள்கள் ஐந்து. அவை ஐந்தும், ஐந்து வேறு, வேறுவகை அணுக்களாலானவை. அவை மண், புனல், அனல், காற்று, உயிர் என்பன. உள்ளது அழியாது; அல்லத பிறவாத. ஆயின் உள்ளவை நீரில் மிதப்பவைபோன்று மேற்படத் தோன்றும்; அமிழ்ந்து கிடப்பவை போல மறைந்திருக்கும். எம் தலைவர்பெருமான் நிறையறிவுடையவர்; இரு வினைத் தொடர்பற்றவர். எனவே, அவரிடம் பேச்சும் செயலும் இரா. பேசினால்கூட வெளியிடமெங்கும் நிறைந்த அணுவுயிர்களுக்கு ஊறுவிளையும் என்பதனாலேயே அவர் பேசுவதில்லை. மூப்பும் இறப்பும் தவிர்த்தவர் அவர். வானவில்லின் தோற்றம் மறைவு ஆகியவைபோல, அவர் தோற்றமும் மறைவும், அறியவும் விளக்கவும் ஒண்ணாதவை. எனவே, அவரை யாம் நிறைவர் (பூரணர்) என்கிறோம். அவர் அருளிய மறைகளாகிய ‘ஒன்பது கதிர்கள்’ ஐவகை மெய்ப்பொருள்களாகிய உருப்படிகளை (மூர்த்தங்களை)ப் பற்றியும் தோற்ற மறைவுகளின் அறியொணாத் தன்மையையும் காரணமின்மையையும் விளக்கும். ஐவகை உருப்படிகள் வேறுவேறு இயல்புடையன ஆயின் பண்பற்றவை. மெய்ம்மைக்கு ஊறு, சுவை, நிறம், மணம் ஆகியவைமட்டுமே அவற்றுக்கு உண்டு. ஒசை என்பது கிடையாது. ஆனால் நீருக்குத் தண்மையும், தீக்கு வெம்மையும், காற்றுக்கு ஓசையும், உயிருக்கு உணர்வும் (போதமும்) உண்டு. இவையும் மூலப்பொருள்களின் அணுக்களின் குணங்களேயன்றி, அவற்றின் சேர்க்கையாலான பொருள்களின் பண்புகள் அல்ல. கணங்கள் உண்டெனினும் தொடர்ச்சியான காலம் என்ற ஒன்றை நாங்கள் ஏற்பதில்லை. எங்கள் ஒழுக்கமுறை, இன்பத்தையே நோக்கமாகக் கொண்ட உலகியல் ஒழுக்கமுறையே. பிறர் இதுகண்டு நகையாடலாமாயினும், அதுவே உண்மையில் பகுத்தறிவுக் கொத்தமுறை என்பதை எண்பிக்கக்கூடும். நீலகேசி: உங்கள் கோட்பாட்டின் நான்கு கூறுகள் தலைவன், மறைமொழி, மெய்ம்மை இயல்பு, செயல்வகை (ஆப்தம், ஆகமம், பதார்த்தம், பிரவிருத்தி) என்பவை. நான்குமே கண்கூடு, உய்த்தறிவு ஆகிய இருவகை அளவைகளின் ஆதாரமற்றவை. தலைவர் வாளாமை (மௌனம்) பொருளற்றது; அறிவுமுறைக்கு முரணானது. அவர் வாய்திறவாத போது, உங்கள் “ஒன்பது கதிர்க” ளாகிய மறைமொழி தோன்றிய வகை யாது? பூரணர்: அவை ஒக்கலி, ஓகாலி என்ற இரு தேவர் களால் அருளிச் செய்யப்பட்டவை. நீலகேசி: அத் தேவர்கள் மறைமொழி அருளின், அவர்கள் நிறை அறிவுடையவர்களா? நிறை அறிவுடைய தலைவர்போல் அவர்களும் வாய்திறவாதிராததேன்? நிறை அறிவற்றவர் களானால், மறைமொழிகளின் வாய்மை குறைபடுகிறதே. குறையறிவுடைய நம்போலியரே அன்பு காரணமாகப் பிறருக்கு உதவ முன்வருகிறோம். நிறையறிவுடைய தலைவர் ம°கரி வாளா இருந்ததேன்? தோற்றம் மறைவு ஆகியவை காரணமின்றி இயல்பாக நிகழ்பவை என்கிறீர்கள். ஆனால் தலைவர் தோற்றம் காரணமற்றதென்று விளக்க முன்வருகிறீர்கள். அதற்குக் கூறும் உவமையாகிய வானவில் விளக்கமே காரணகாரியத் தொடர்பு வகையில், உங்கள் அறியாமைக்குச் சான்றாகிறது. முகில்கள் மீது ஞாயிற்றின் கதிர்கள் விழுவதனாலேயே அது தோற்றுகிறது என்பதை நீங்கள் அறியவில்லை! வாளாமை நிறை அறிவுக்கு அறிகுறியாகுமானால் பேச அறியாக் குழந்தைகள், செவிட்டூமை கள், மரங்கள், குன்றுகள், நிறை அறிவுடையவையா? அவர் உறுப்பசைவுகூட அற்றவரானால் அவர் உயிரற்றவரா? பாசாங்குக்காரரா? பேசாத அவர், ஐந்து மெய்ப்பொருள் களியல்பு. இருவினையியல்பு ஆகியவற்றுக்கு விளக்கம் தருவாரா? செயலற்ற அவர் வாழ்வில் சிற்றின்ப வேட்கை புகுந்ததெவ்வாறு? மூலப் பொருள்களில் மண்ணுக்கு மட்டுமே நிறம், சுவை, மணம், ஊறு உண்டென்கிறீர்கள். அடுத்த மூன்றுக்கும் அவை இருப்பதால் அவை மண்ணின் பாற்படுமா? அப்படியானால் மூலப் பொருள்கள் இரண்டாகவல்லவோ வேண்டும்? மேலும் இவ்வுணர்ச்சிகளை உணரும் பொறிகளும் மண்தானா? புலன் அறிவுக்கு உட்பட்டவற்றில் இருளும் ஒன்றா யிருக்க, அதை ஏன் பொருளாகச் சேர்க்கவில்லை? மூலப் பொருள்களுக்கு இயல்பு உண்டு என்று கூறிய பின், பொருள்களுக்குப் பண்பு இல்லை என்றல் எவ்வாறு? இயல்பு பொருளிலிருந்து பிரிக்க முடியாதென்றாலும், அதை ஏற்பவர் பண்புகளும், பிரிக்க முடியாத நிலையில் ஏற்கப்படலா மன்றோ? மெய்ம்மையின் மாறாத்தன்மை (அவிசலித நித்தியம்) பற்றிக் கூறுகிறீர்கள். மரம் படகாதலும், பொன் அணிகலனாவதும், வெண்கலமும் கிண்ணமும் மாறுதலல்லவா? வெண்கலத் திலேயே வெளிப்படையான தட்டை உருவும், மறைநிலையான கிண்ண உருவும் உள்ளன என்றாலும், இரண்டும் வேறுவேறு பொருள்களாகி மாற்றம் ஏற்படுகின்றன என்று ஆகிறதே! இலக்கணத்தில் சொற்கள் கூட வேற்றுமையிலும் தொகை களிலும் மாறுகின்றன. வளர்ச்சிமுறை வகையில் நீங்கள் நான்கு கூறுகளை ஒப்புக்கொள்கிறீர்கள். அவை வளர்ச்சியின் கட்டாயத்தன்மை, வளர்ச்சியின் படிமுறை, வளர்ச்சியின் உச்ச எல்லைநிலை, வளர்ச்சியின் கால அளவு ஆகியவை. அதாவது பெண்குழந்தை மாது ஆகமட்டுமே வளரமுடியும். சிறுமி, நங்கை, மங்கை, பேரிளம் பெண் ஆகிய படிகள் கடந்தே வளரமுடியும். கிழவிப் பருவத்துக்கப்பால் வளரமுடியாது. வளர ஐம்பது அல்லது நூறு ஆண்டுகள் வரை செல்லும். மாற்றம் இல்லை என்று கூறும் நீங்கள், மேற்கூறிய இவ்வளவு மாற்றங்களையும் வகைப்படுத்திக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? மாற்றம் இல்லை என்று கூறும் நீங்கள், மேற்கூறிய இவ்வளவு மாற்றங்களையும் வகைப்படுத்திக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? குழந்தையின் வளர்ச்சியில் உருப்பெருக்கம் மாற்ற மல்லவா? ஒன்றரை அடிக் குழந்தை உருவிலேயே ஆறடி முழுவளர்ச்சியும் இருப்பதென்பது பொருந்துமா? மீசை தாடி முதலிய ஆண் உடற்கூறுகளும், கருப்பை முதலிய தாய்மை உறுப்புக்களுமாவது புது வளர்ச்சியாகிய மாறுபாடுகள் என்பதை மறுக்க முடியாதன்றோ? உயிர்கள் (பாலைக்கனியின் நிறமாகிய) நீலநிற மென்றும், போதிய நீள அகலமும் நானூறுயோசனை உயரமும் உடையவை என்றும் கூறுகிறீர்கள். இவ்வளவு பெரிய அளவுடைய உயிர்கள், சிற்றளவுனவாகிய உடலில் அமைந்தி ருத்தல் எவ்வாறு? உயிர்கள் பல கோடியாதலால் அத்தனைக்கும் உலகில் இடம் ஏது? உயிர், பூசணிக்காய் போன்று நீளம் அகலம் உயரம் அடையபருப்பொருளானால், அக் காயைப்போலவே துண்டு படக்கூடியதாயிருக்கவேண்டும். உயிர்கள் எல்லாம் வீடுபெற்றால், உலகியல் வாழ்வில்லையே என்ற கடாவுக்கு மறுமொழியாக, வீடுபெற்ற பின்னும் உயிர்கள் மீண்டும் உலகியலில் தொடக்கநிலை யெய்தும் என்ற மண்டல வீடு பேற்று (மண்டல மோக்ஷ)க் கொள்கையை மேற்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இது உயிர்கள் எண்ணற்றவை என்பதன் முழு இயல்பை அறியாமல் நீங்கள் தரும் விடையாகும். எண்ணற்றவையாகவே இருக்கும் என்ற கணக்கியல் மெய்ம்மையை நீங்கள் உணர வில்லை. மூலப்பொருள்களுள் மண்ணும் நீரும் கீழ்நோக்கிச் செல்பவை என்றும், தீயும் உயிரும் மேல்நோக்கிச் செல்பவை என்றும், கூறுகிறீர்கள். மேல் நோக்குவதாகக் கொள்ளும் தீ, எரி நிலையிலுள்ள கீழ்நோக்கிச் செல்லும் பொருளே என்பதை நீங்கள் கவனிக்கவில்லை. உயிர்கள் தொடர்ந்து மேல் நோக்கு பவையானால், அவை திங்கள் மண்டிலம், விண்மீன் மண்டிலம் ஆகியவற்றை எளிதில் அடைய வேண்டுமன்றோ? பக்கநோக்கிச் செல்வதாக நீங்கள் கூறும் காற்று, உடலில் மேலும் கீழும் செல்வதை நீங்கள் கவனிக்கவில்லை. காலமில்லை என்று கூறும் நீங்கள், வளர்ச்சியின் கூறுகளுள் காலப்போக்கை ஒன்றாகக் கூறுகிறீர்கள். காரண காரியத் தொடர்பை மறுக்கும் நீங்கள், நோன்பும் தவமும் நாடுவதேன்? நீலகேசியின் வாதத்தால் பொய்ம்மை தவிர்ந்த ஆசீவக ஆசிரியர் பூரணர், தன் குழப்பநிலையிலிருந்து விடுதலை தருமாறு வேண்ட, நீலகேசி தன் மறுப்புக்களுக்குத் தானே விளக்கம் கூறி, அவரைச் சமணநெறி மூலம் தேற்றினாள். பிரிவு 7. சாங்கிய வாதம் பூரணரை நல்வழிப்படுத்தியதன் பின், நீலகேசி பூரணரது வேண்டுகோளுக்கிணங்க, பேர்போன சாங்கிய ஆசிரியர் பராசரர் வாழ்ந்துவந்த அத்தினாபுரத்துக்குப் புறப்பட்டாள். சாங்கிய சமயக் கோட்பாடுகளை விளக்கும்படி நீலகேசி கேட்க, பராசரர் அதற்கிணங்கினார். பராசரர்: எங்கள் கோட்பாட்டின்படி மெய்ந்நிலைகள் (தத்துவங்கள்) 25 ஆகும். அவை உயிர்நிலை(ஆன்மா) இயற்கை (பிரகிருதி), பெருநிலை (மகத்), செருக்கு (அகங்காரம்) புலன் (ஞானேந்திரியம்) ஐந்து, பொறி (கர்மேந்திரியம், ஜந்து, மனம், தன்மாத்திரைகள் ஐந்து, மூலப் பொருள்கள் (பூதங்கள்) ஐந்து ஆகியவை. அலகின் இறைவனாகிய தலைவன் (ஆப்தம்) செயலற்றவன். குணமற்றவன் என்றும் துய்ப்பவனேயன்றித் துய்க்கப்படான். மாறுதலற்றவன், வினைத்தொடக்கற்றவன், என்றுமுள்ளவன், எங்கும் நிறைந்தவன், எல்லாம் உணர்பவன், யாவற்றையும் துய்ப்பவன். தலைவனைப்போலவே இயற்கையும் எங்கும் நிறைந்த உருவற்ற (அமூர்த்த) மாறுதலற்ற மெய்ம்மை: செயலற்றது, புலன்களால் அறியொணாதது, ஒருமையுடையது, மறைநிலையுடையது. இயற்கையிலிருந்து பெருநிலையது, மறைநிலையுடையது. இயற்கையிலிருந்து பெருநிலையும் அதனிடத்திருந்து செருக்கும், அதனிடமாக மனமும் தன் மாத்திரைகள் ஐந்தினின்றும் ஐம்பூதங்கள் தோற்றுகின்றன. இவ்விருபத்தைந்து மெய்ந்நிலைகளை அல்லால் வேறு மெய்ம்மை இல்லை. நீலகேசி: ஆன்மா செயலற்றதென்று கூறுவது எவ்வாறு பொருந்தும்! காட்சியும் அறிவும் செயலும் ஒருங்கேயுடையதாய், ஓய்வு ஒழிவு இன்றி உணர்வு (போத) மயமாயிருக்கும் ஆன்மாக்கள் செயலற்றவையாகும் என்கிறீர்கள். பிறருக்கு அறிவு விளக்கம் செய்யப்புகும் நீங்கள் ஆன்மா அன்றோ? பிற உயிர்கள் ஆன்மாக்கள் அல்லவானால், உங்கள் அறிவுரை கேட்டு, அவை தம்மைத் திருத்தும் என்று எங்ஙனம் எதிர்பார்த்தல் கூடும்? பராசரர்: ஆன்மா மூவகைப்படும். அவை பேரான்மா, உள்ளுரை ஆன்மா, வினையான்மா என்பவை. இவற்றுள் பேரான்மா ஒன்றுக்கே செயலில்லை. மற்ற இரண்டுக்கும் செயல் உண்டு. நீலகேசி: இதுவும் பொருந்தாது. பொதுவில் ஆன்மா செயலற்றதென்கிறீர்கள். பின் ஒருவகை செயலற்றது, இருவகை செயலுடையது என்கிறீர்கள். இது முன்னுக்குப் பின் முரணல் லவா? இருவேறு இயல்புடைய இரண்டு, ஒரே பொருளின் இருவகைகளாதல் எவ்வாறு? மேலும் செயலுடையவையாய் உயிர்களின் செயலுக்குக் காரணமாய் இரண்டு ஆன்மாக்கள் இருக்கையில், செயலற்ற சோம்பேறி ஆன்மா ஒன்றுக்கு என்ன வேண்டுதல் ஏற்படக்கூடும்? செயலற்ற பேரான்மா, உடல்களிலும் உலகிலும் நின்று துய்ப்பதெவ்வாறு? எல்லாமறிந்த அப்பேருயிர் என்ன தீவினைப்பயனால் உலக வாழ்வில் சிக்குகிறது? பராசரர்: ஆன்மாவின் செயலென்று நாம் கொள்வ தெல்லாம் ஆன்மாவின் செயலுமல்ல, பேரான்மாவின் செயலுமல்ல; இயற்கை ஆற்றலின் செயலேயாகும். தன்னிறமற்ற பளிங்கின் பின்னாலுள்ள பூவின் நிறம் பளிங்கில் தெரிவது போலவே, இயற்கையின் பண்பும் செயலும் ஆன்மாவில் பட்டொளிர்கின்றன. தன்னுணர்வுடன் கூடி ‘நான்’ ‘எனது’ என்ற முறையில் ஏற்படும் துய்ப்பெல்லாம் உண்மையில் செருக்கின் செயல்; அச்செருக்கு பெருநிலையினின்றும் பெருநிலை இயற்கையினின்றும் தோன்றியவை. நீலகேசி: இயற்கை அறிவுணர்வற்ற பொருள். அத னின்று தோன்றிய பெருநிலை, செருக்கு முதலியவையும் அறிவுணர்வற்றவையாகத்தானே இருக்கமுடியும்? அறிவற்ற பொருளினின்று அறிவுப்பொருள் தோற்றுவதெங்கனம்? இயற்கை உருவற்றது (பருப்பொருண்மையற்றது) காரியகாரணத் தொடர்பற்றது எனக் கொள்கிறீர்கள். அதினின்று தோன்றிய பெருநிலையோ உருவுடையது. காரியகாரணத் தொடர்புடையது. இங்ஙனம் உருவற்ற நிலையிலிருந்து உருவைப் பெறுவதைவிட, வெறுவெளியி னின்று பொருள்களைப்பெறலாகுமன்றோ? புலன்கள், பொறிகள், மனம் முதலியவை தனித்தனி மெய்ந்நிலைகளாகக் கூடுமானால் கை, கால், மலங்கழிக்கும் உறுப்புக்கள், பிறப்பு உறுப்புக்கள் ஆகியவையும் தனிமெய்ந் நிலைகளாகாததேனோ? தாமாக ஒன்றையும் உணரமாட்டாத இவற்றைப்பொறிபுலனென்பானேன்? பொறிகள் செயல் உறுப்புக்களானால், அவற்றினும் தெளிவுபடச் செயலாற்றவல்ல உதடு, இடுப்பு, நாக்கு, பல் முதலியவற்றைப் பொறிகள் என்று கூறாததென்ன? ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ஆகிய தன் மாத்திரைகள் உலகியற்பொருள்களுடன் தொடர்புடையவை யாயிருக்க, அவற்றைச் செருக்கிலிருந்து தருவிப்பானேள்? செருக்கு தன்னுணர்வின் பயனால், அதிலிருந்து உலகியல் பொருள்களின் தொடர்புடைய இத்தன்மாத்திரைகள் எப்படித் தோன்றும்? ஓசை வானவெளியின் இயல்பென்கிறீர்கள். உருவற்ற தாய், உணர்வற்றதாய், எங்கும் நிறைந்த வானவெளியிலிருந்து உலகியற் பொருள்களின் உராய்வால் தோன்றும் ஓசை உண்டாகிறது என்றல் பொருந்தாது. உயிர் உடல் தொடர்பை விளக்க நொண்டிமீது ஊரும் குருடனை உவமை கூறுகிறீர்கள். உங்கள் முதனிலை விளக்கப்படி இது பொருந்தாது; ஏனெனில் இயற்கை, உயிர்நிலை ஆகிய இரண்டுமே செயலற்றவை என நீங்கள் கொள்கிறீர்கள். இது இரண்டு அலிகள் மணவாழ்வால் குழந்தை உண்டாவதாகக் கூறுவது போன்றது. உயிர்கள் பல அல்ல, ஒன்றென்றும்; உயிரும் இயற்கையும் எங்கும் நிறைந்தவை என்றும் கூறுகிறீர்கள். ஆகவே, இரண்டும் என்றும் இணைந்திருக்கவேண்டும். ஆனால், அவை என்றோ இணைந்து உலகு தோற்றுவதாக நீங்கள் கூறுவது தவறு. உங்களில் பல ஆன்மவாதிகள் கூறுவதைவிட, நீங்கள் பிறருக்கு அறவுரை பகர்கிறீர்கள். ஆன்மா ஒன்றேயானால் அறவுரை தரும் ஆசிரியர், பெறும் மாணவருக்கு இடம் எது? பலியாட்டில் (யாகத்தில்) உயிர்க்கொலை செய்தல் தற்கொலையன்றி வேறென்ன ஆகக்கூடும்? படைப்பின் முன் பொருளில்லாது, படைத்தபின் புத்தம் புதிதாகத் தோன்றிற்று என்றால், படைக்கும் இறைவன் மட்டும் அங்ஙனம் தோற்றாதது ஏன்? இறைவன் செயலன்றி வேறு செயலில்லை என்றால், கொலையும் பழியுங் கூட அவன் செயலேயாதல் வேண்டும். ஓருயிர் வாதம் உண்மை யானால், கொல்வானும் கொல்லப்படுவானும், அறிவுடை ஆசானும், அறிவுக் குறையுடைய மாணவனும், மருத்துவனும் நோயாளியும், ஒன்றுபட்டு அறிவுக்குழப்பம் விளைகின்றது. மாறா நிலையுடைமை (அவிசலித நித்தியம்) பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் வளர்ச்சிபற்றிப் பலபடக் கூறு கிறீர்கள். மாறுதலற்ற நிலையுடைய உலகில் வாழ்வு தாழ்வு இருக்கமுடியாது. பராசரர் இவ்வளவும் கேட்ட, அல்லலற்றழுங்கி, மெய்ம்மை விளக்கம் கோரினார். நீலகேசி, உண்மை இன்மை இணைந்த இணைப்பே (அ°தி நா°தி தத்துவமே) உலகின் அடிப்படை என்றும், பேரான்மா என்பது சமணர் சித்த பரமேஷ்டிக்குச் சரியான தாயினும், அறிவு முதலிய பண்பு களை உணர்வற்ற இயற்கையிடம் சுமத்தாது, உயிர்களின் இயல்புகள் என்று கூறுதல் நலம் என்றும் விளக்கினாள். இறுதியில் மும்மணி (இரத்தினத் திரயம்) விளக்கத்தால் பராசரர் விளக்கமுற்றார். பிரிவு. 8. வைசேடிக வாதம் சாங்கிய ஆசாரியனை விடுத்து நீலகேசி, வைசேடிக சமயத்தலைவராகிய லோகஜிதர் குடிலை (ஆசிரமத்தை) அடைந்தாள். அவர் வைசேடிக முதல்வரான கணாத முனிவருடனேயே ஒப்பானவர் என்று சொல்லத்தக்க அளவு, அறிவாராய்ச்சியும் புகழும் உடையவர். அவர் தம் நெறியின் அடிப்படைக் கொள்கைகளை விரித்துக் கூறலானார். எங்கள் சமயக் கோட்பாட்டின்படி பொருண்மைகள் ஆறு. பருப்பொருள் (திரவியம்), பண்பு (குணம்). செயல் (கர்மம்), தொகை (சாமான்யம்), வகை (விசேஷம்), கோப்பு (சமவாயம்) என்பன. அவற்றுள் பருப்பொருள்களாவன; மூலப்பொருள்கள் ஐந்து, திசை, மனம், காலம், உயிர் ஆகிய ஒன்பதும் ஆகும். பண்பும் செயலும் பருப்பொருள்களைச் சார்ந்து நிற்பவை, தொகை பெருந்தொகை, உள்ளுறைதொகை என இருவகை. முன்னது பொருளின் உண்மை அல்லது இருப்பை உணர்த்தும், பின்னது பொருள்களில் உள்ளீடாக உள்ள பொதுப் பண்புகளைக் குறிக்கும். இத்தொகை என்றும் நிலையாய், பொருள்களின் ஒருமைப்பாட்டுக்கு உதவுவதாகும். வகை வேற்றுமைகளுக்கு அடிப்படைக் காரணமாயிருப்பது கோப்புப் பொருள்களுடன் அவற்றுக்குரிய பண்புகளையும் செயலையும் இணைப்பது. முதல் மூன்று பொருண்மைகளும் மட்டும் தனி இருப்பு உடையவை. மற்றவை சார்பு நிலையின. நீலகேசி: பருப்பொருள்கள் ஒன்பது என்று வகுத் திருக்கிறீர்கள் . அவற்றுள் மண், நீர் அனல், காற்று ஆகிய முதல் நான்கும் ஒருவகையே. உலகியல் மரபுப்படி நான்காம் எனில், மண்வகைகளும் பிரிக்கப்படவேண்டும். ஒரு வானியல்பாகக் கூறப்படுகிறது. ஆனால் அது பருப்பொருணணுக்களின் உராய்வால் ஏற்படுகிறது. வானில் இயல்பு என்பதைவிட, வெளியின் இயல்பு என்பது கூடச் சால்புடையது. எடைப் பருப்பொருள் தொடர்புடையது அன்று எனின், மணியை அடிப்பதனால் ஓசை உண்டாவதை என்னென்பது? வானம் பருப்பொருணன்று; அழியாதது; எங்கும் நிறைந்தது. ஆனால் ஓசையோ வரையறைப்பட்ட பரப்பும் கால எல்லையும் உடைய, பருப்பொருள் தன்மை உடையது. திசை பருப்பொருளுடனோப்பத் தனிப்பொருளாகக் கூறப்பட்டது. ஞாயிறு முதலிய பொருள்களின் நிலைகளுடன் தொடர்புப் படுத்தினாலன்றி அது அறியொணாதது. அது இடவெளியின் ஒரு முறையேயன்றித் தனிப் பொருளன்று. தெற்கு மேற்கு என்ற திசையும், வலம் இடம் என்பதும், உறவு என்ற முறையிலும் தனி நிலையுடையவையல்ல. ஒன்றின் நிலை ஒன்றுக்குக் கிழக்கு என்றால், மற்றொன்றுக்கு மேற்கு ஆகும். ஒன்றுக்கு இடமுள்ள பொருள் மற்றொன்றை நோக்க, வலம் ஆகும். இவை பொருள்களின் பலவகைச் சார்பு விளக்கங்களோ (ஞசநனநையடள) அன்றி வேறல்ல. மனம் என்பதும் ஆன்மாவின் இயக்கமேயன்றித் தனிப் பொருள் அன்று. மனம் தனி வகையில், அதனால் அறியப் படும் புல உணர்வுகளும், தனி நிலைகளாய்ப் பருப் பொருள்கள் என்பது ஆகாது, பதினான்கு ஆகும். காலம் என்பதும் இதுபோலப்பொருள்களின் இயக்கத்தினால் ஏற்படும் தொடர்புகளுள் ஒன்றே. குணம், செயல் ஆகியவை பொருளுடன் ஒன்றுபட்டே உயிருக்கு உணர்வளிக்கிறது. இவ்வுணர்வுக்கான கருவியே கோப்பு. இவற்றைத் தனிவகைகளாகக் கொள்ளின் உயிரும் பொருளும் இயக்கமற்ற பொருள்களாகின்றன. அறிவும் செயலும் உயிரின் இணையறாப் பண்பேயன்றி, கோப்பினால் ஏற்படும் தன்மைகளல்ல. லோகஜிதர்: பண்பும் பண்பியும் ஒன்றானால், ஒன்று அழியும் போது மற்றதும் அழியவேண்டும். பச்சோந்தியின் நிறங்களுள் ஒன்றழியும்போது பச்சோந்தி அழிவதில்லையே. ஆகவே, இரண்டும் வேறு என்று ஏற்படுகிறது. மனிதனிடமிருந்து இளமை போயினும் மனிதன் அழிவதில்லை. முதுமைதாங்கி நிலைபெறுகிறான். சுருண்டிருந்த பாம்பு ஊரத்தொடங்கினால், சுருளுரு நீங்கும்; பாம்பு நீங்குவதில்லையன்றோ? நீலகேசி: பண்பில்லாத பொருளில்லை. அது அறியப் படவும் முடியாது. அதோடு தனிப் பொருளாயின் பருப் பொருளிலிருந்து பிரித்துத் தனிவகையாகத்தான் கருதப்படு வானேன். பருப்பொருளிலேயே அடக்கப்படலாமே! உண்மையென்னவெனில், பொருள் தொடர்பும் நிலையும் உடையது. பண்புகள் அதனுடனும் தொடர்புடையவையாய் மாறும் இயல்புடைய தன்மைகள். இரண்டும் பொருள் வகையில் ஒன்று; தன்மை, தோற்றவகையில் வேறுபாடுடையவை. பண்பும் செயலும் கோப்பினால் பொருளுடன் இணைவு உடையவை என்கிறீர்கள். இணைவு ஏற்படுமுன் அவற்றிற்கு நிலை ஏது? உள் பொருளாயின், பொருள் தொடர்பு இல்லாதபோது நிலைபெறுவது எவ்வாறு? இல்பொருளாயின், கோப்புக்கு உரியதாகாதே! தொகை என்பது அறிவால் அறியப்படும் பண்புகளின் பொதுத்தன்மையன்றித் தனியாய் இருப்பதன்று. எல்லாப் பொருள்களிலுமே வேறுவேறு பொதுப்பண்புகள் இருக் கின்றனவாதலால், எல்லாம் தொகைகளாதல் வேண்டும். தொகை வகைகள் ஓர் உறவேயன்றி வேறன்று. ஒரு முறையில் தொகையாவது இன்னொருமுறையில் வகையாகும். லோகஜிதன்: பண்புகளில் கூடுதல் முறைகள் உண்டு. தித்திப்புப் பொருள்களில் மிகுதித் தித்திப்பும், குறைந்த தித்திப்பும் அறியப்படுகின்றன. தொகை அவ்வாறு அறியப்படாது. நீலகேசி: பொதுப் பண்புகளினால் ஏற்படும் தொகுதியே தொகையாதலால், அதிலும் கூடுதல் குறைகள் உண்டு. எடுத்துக்காட்டாகக் குதிரை என்ற தொகையில் பொதுப் பண்புகளின் உயர்வு தாழ்வுகளால் உயர்வகைக் குதிரை, தாழ்ந்தவகைக் குதிரை என்ற படிப்படியான வேறுபாடு காணலாம். தொகை, வகை ஆகியவை பண்புகளின் பொதுமை, வேறுபாடுகளேயன்றி வேறல்ல. தனிப்பொருள்களாயின், எல்லாப் பொருள்களும் எல்லாப் பண்புகளுடனும் சேர இடந்தரவேண்டும். வெண்கொக்குப்போல் கருங்கொக்கும், பறக்கும் பறவைபோல் பறக்கும் விலங்கும் இருத்தல் கூடியதாக வேண்டும். கோப்பு நிலையுடைய (சத்) அன்று என்று நீங்களே ஒப்புக்கொள்வதால், அதுவும் தனிப்பொருளன்று. லோகஜிதன்: பொருள் ஒருமை உடையது, நிலை யாயானது. பண்புகள் பன்மை வாய்ந்தவை. நிலையற்றவை. இரண்டும் ஒன்றாதல் பொருந்தாது. பொருள் பண்பாயின் பண்புகள் ஒன்றாகும். பண்புபோல் பொருளும் அழியும். நீலகேசி: பண்பு பொருள் என்று நான் கூறவில்லை. பொருள் சார்ந்தது. பல பண்புகள் ஒரு பொருள் சார்ந்து ஒரே நேரத்திலும் அறியப்படலாம். பாற்கட்டி என்ற ஒரே பொருள், வெண்மையாகவும் பெரிதாகவும் தித்திப்பாகவும் இருக்கலாம். ஒவ்வொரு நேரம் ஒரு பண்பு பிரித்தறியப்படும். ஆகவே, பன்மைவாய்ந்த பண்புகளும், நிலையற்ற பண்புகளும், ஒரு நிலையான பொருளைச் சார்ந்து அறியப்படுதல் பொருந்துவதே யாகும். ஒரே பொருளே தொகையாகக் கருதப்படும்போதும் சில பண்புகள் கருத்தில் முந்தும், வகைகளாகக் கருதப் படும்போது, அவை மறைந்து வேறு கருத்துக்கள் முன்வரும். தென்னையை மரம் என்று கூறும்போது மரப்பொதுப் பண்பும், தென்னைவகை என்று கருதும்போது கிளியற்றது, இறகு வடிவ ஓலை முதலிய சிறப்புப் பண்புகளும் கருத்தில் இடம்பெறும். நீலகேசி கூறிய உண்மைகளின் திட்டத்தை உணர்ந்து, லோகஜிதன் மனமாறி அவளுக்குத் தலைவணங்கிச் சமண நெறியே பெற்றான். பிரிவு 9. வேதவாதம் அத்தினாபுரியிலிருந்து புறப்பட்டு, நீலகேசி பல கல்தொலைவு நடந்து, காகந்தி நகரை அடைந்தாள். அங்கே வேத நெறியாளர் கலைக்கூடம் ஒன்றிருந்தது. அதில் பூதிகன் என்ற வேத ஆசிரியன் பல மாணவர்கட்கு வேதநெறி புகட்டிக் கொண்டிருந்தான். .நீலகேசி வேதநெறி பற்றி வாதிட வந்திருப்பதாகச் சொல்லவே. அவன் மாணவர் புடைசூழ முன்வந்து அவளிடம் வாதாடினான். பூதிகன்: எங்கள் முதனூல் வேதம் ஆகும். அது காலம் கடந்தது. தானே இயங்குவது. வேதத்தை மூலமாகக் கொண்டு பல மெய்ந்நிலை விளக்க மறைகள் ஏற்பட்டள்ளன. 25 மெய்ந்நிலை களைக் கொண்ட சாங்கியம், 6 பருப்பொருள்களை விரித்துரைக்கும் வைசேடிகம், படைப்பு முறை கூறும் படைப்பு வாதம் (சிருஷ்டி வாதம்), கடவுள் இயல்புரைக்கும் கடவுள்வாதம் (பிரமவாதம்), பல தெய்வங்கள் பெயரையும் கொள்கைகளின் பெயரையும் ஒட்டி ஏற்பட்ட வைணவம், மாகேசுரம், பாசுபதம், பாங்சராத்திரம், பரிவிராஜிகம் முதலிய முறைகள் ஏற்பட்டிருக் கின்றன. இவற்றிலும் உட்கிளைகள் பல. இவை எல்லாமே வேதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளவை. நீலகேசி: உங்கள் வேத நெறி அல்லது மீமாம்சகவாதம், கடவுள் மறுப்பு (நாத்திகச்) சார்பானது; எல்லா மறிந்த தலைவரை ஏற்பதன்று. ஆயினும் கடவுளையும் சிறு தெய்வங் களையும் வழிபடும் பல நெறிகளுக்கு அதனைத் தாயக மெனக் கொள்கிறாய். பிந்தியவை சிறந்ததென உங்களுக்குத் தோன்றினால், உங்கள் கடவுள் மறுப்புக்கொள்கை வாய்ந்த வேத நெறியை விட்டுவிடுவதுதானே? பூதிகன்: (கடுஞ்சினத்துடன்) யாரைக் கடவுள் மறுப் பாளர் என்றாய்! எங்கள் வேதம் யாவராலும் உரைக்கப் பட்டது அன்று (அபௌருஷேயம்) என்ற நிலையை உன்னால் அறியப்படமுடியாது. அதனைக்கற்கும் தகுதி சூத்திரச்சியாகிய உனக்கு இல்லை. அறியாத, அறியமுடியாத ஒன்றை ஆராய்ந்துரைக்க உனக்கு உரிமை ஏது? நீலகேசி: நன்று சொன்னாய். நால்வகுப்புக்குப் புறம் பான சண்டாளர்கள்(பஞ்சமர்) கூட உங்கள் வேதமொழிகளை உரைத்திருக்கும்போது, அதனை அறிய ஒருவருக்குத் தகுதி இல்லை என்றுகூற வெட்கமில்லையா? வேதங்களை வகுத்தும் மந்திரந் தந்தும், முனிவர்கள் என்று உங்களால் கொள்ளப்பட்ட வசிட்டர், அகத்தியர், சக்தி, பராசரர், வியாசர், சுகர் ஆகியவர்கள் பிறப்பையும் மரபையும் ஓர்ந்து பார்க்க வேண்டும். வசிட்டரும் அகத்தியரும் நான்முகனுக்குத் தேவருலக நடனமாதான திலோத்தமையிடம் பிறந்தவர்கள். சக்தி வசிட்டருக்குச் சண்டாளமாதொருத்தியிடம் பிறந்தவர். பராசரர் சக்தி மகன். வியாசர் பராசரருக்கும் வலைச்சிக்கும் பிறந்தவர். வியாசர் தம் மூதாட்டியான திலோத்தமையிடம் பெற்ற பிள்ளை சுகர். இத்தகைய உயர் பிறப்பாளர் மொழிகளுக்குத் தெய்வத் தன்மை கற்பித்த நீங்கள், என் நல்குடிப் பிறப்பை இழித்துரைப்பது நகைக்குரியது. பிறப்பால் உயர்வு இழிவு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இவர்கள் பெயர்களையே எடுத்துக்கூறி, அவர்களை மேம்பாடடையச்செய்தது தவமே என்று உங்கள் நூற்களே கூறுவதை நீங்கள் உணரவில்லை. பூதகர்: சரி போகட்டும். நீ வேதங்களிலிருந்து மேற் கோள் காட்டுகிறாய். தெய்வீகமென நாங்கள் கொள்ளும் அவ் வாய்மொழிகளுள் நீ யாதெனும் குறை காட்ட முடியுமா? நீலகேசி: ஏராளமாகக் காட்டமுடியும். அவை மனிதர் வாய்மொழி என்பதற்கு அவையே சான்று பகர்கின்றன. அவற்றுட் பல நடைமுறைக்கு ஒத்துவாராதவை. பொய்யுரை கள் மலிந்தவை. அது பிற்காலத்தது என்பதற்கான தெளிவுக ளுண்டு. கீழ்வகை உலக ஆவல்களையே அவை வற்புறுத்து கின்றன. தீநெறிக்கு ஊக்குகின்றன. கொடுமை, கீழ்மை ஆகியவற்றுக்குத் துணை தருகின்றன. பூதிகர்: இவ்வுரைகள் எவ்வாறு பொருந்தும்? நீலகேசி: மனிதர் வழங்கும் மொழியில் பிற நூல்களிற் காணப்டும் அதேவகை பிறப்பு, நடை, சொல், எழுத்து ஆகியவற்றால் அமைந்து, தெய்வநூல் என்பதற்கான சிறப்புப் பண்பு எதுவும், இல்லாதிருப்பதனால் அத மனிதர் ஆக்கிய நூலே. தெய்வமே மாந்தர் நாவில் நின்று கூறியது எனக் கொண்டால், வேதமட்டுமென்ன, எல்லா நூல்களும் தெய்வத் தன்மை மிக்க ஆன்றோர் நாவில் தோற்றியதேயாகும். மேலும் வேதங்களைப் பற்றிக் கூறுகையில், பிருகதாரணிய உபநிடதம் பெரியோர்களால் கூறப்பட்டது (மஹதோ பூத°ய நி°வாஸிதம்) என்றே குறிப்பிடுதல் காணலாம். வேதங்களில் ஒன்று தித்திரியால் கூறப்பட்டதாதலால், தைத்திரி எனப்பட்டது. இதுவும் ஓர் ஆசிரியன் அருளியது எனக் கூறுகிறது. தித்திரி என்ற மனிதர்கூட அதே நூலில் குறிப்பிடவும் பெறுகிறார். பூதிகர்: வேதங்கள் யாரால் எப்போது அருளப்பட்டன என்று கூறப்படவில்லையே. பிற நூல்கள் அவ்வாறு குறிக்கப் பட்டன. ஆதலால், வேதங்கள் தொடக்க மற்றவை, தெய்வீகச் சார்புடையவை என்பது பெறப்படுகின்றது. நீலகேசி: தொடக்கமறியப்படாததால் ஒரு பொருள் தொடக்க மற்றது ஆகாது. பொதுமக்களிடையே வழங்கும் எத்தனையோ பழமொழிகள் யார் இயற்றியவை? எப்போது இயற்றப்பட்டவை என்று அறியப்பட முடியாதவை. ஆயினும், அவை மனிதர் ஆக்கியவையன்றித் தெய்வீகமல்ல என்பது தெளிவு. மேலும் மனிதர் புற்றிலிருந்தும், கலத்திலிருந்தும் நிலத்திலிருந்தும், விலங்கிலிருந்தும் பிறந்ததாக வேதம் கூறுவது, நடைமுறை யறிவுக்குப் பொருந்தாதவை. இந்திரனும் சூரியனும் முறையே ஆண்பாலாகிய அருணனை மருவி, வாலி சுக்ரீவரைப் பெறுதல், இந்திரன் தன்குறியிழந்து ஆட்டுக்கடாவின் குறியை ஒட்டப்பெறுதல், ஆகிய அறிவுக்குப் பொருந்தாக் கதைகள், அவற்றில் இடம்பெறுகின்றன. என்றும் நிலைபேறுடையதும் எங்கும் நிறைந்ததுமான ஆன்மா, இடம் விட்டிடம் பெயர்வதாகக் கூறப்பட்டுள்ளது. கர்ணன் கன்னியாகிய குந்தியின் காது வழி யாகப் பிறந்த கதை, வாழ்க்கைக்கு எவ்வளவு முரண்பட்டது? குருடன் விழுந்த மணி பொறுக்குதல், விரலற்ற முடவன் இவற்றை மாலையாகக் கோத்தல், கழுத்தற்ற மனிதன் அதை அணிதல் ஆகிய முழுப் பொய்யுரைகள் வேதங்களில் மலிந்துள்ளன. இவை நடவாச் செயல்மட்டுமல்ல, நடக்க முடியாத செயல்கள். அறிவுப்பகுதியில் (ஞானகாண்டத்தில்) எல்லாம் கடவுள் (பிரமம்) என்றும் பன்மைத் தோற்றமும் வேற்றுமையும் மயக்கத் தோற்றம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், வினைப்பகுதியில் (கர்மகாண்டத்தில்)வேள்வி, உலக அவாக்கள் புகழப்பெறுகின்றன. இவை ஒன்றுக்கொன்று முரணான கூற்றுக்கள். குருக்கள் ஆடு, மாடு, யானை பரிசு பெறுவது சமயத் தலைவர்களே உலக அவாவிலழுந்தியவர் என்று காட்டுகிறது. யாக்ஞவல்கியர் சனகரிடம் தாம் வேள்வியில் முனைவது உண்மையறிவும் அவாவாலன்று, காணிக்கை பெறும் நோக்கத்துடன் மட்டுமே என்று ஒத்துக்கொள்கிறார். குருக்கள் இங்ஙனம் உலகப்பற்றில் மூழ்குவதால், அவர்கள் மனம் படிப்படியாக உலகியலாளரினும் கீழ்நிலையடைகிறது. வேளாண் செல்வன் ஒருவன் தன் புதல்வருள் ஒருவனிறந்தபின் அவன் ஆன்மா நன்னிலையடையும்படி அவன் பங்காகிய பாதி செல்வத்தைக் குருக்களுக்கு நன்கொடையாக அளித்தான். ஒரு மகன் இறந்தால் பாதி செல்வத்துக்காளாய்ச் செல்வனான குருக்கள் , மற்ற மகனும் இறந்தால் முழுச்செல்வமும் கிடைக்குமே என ஏங்கினதாக உங்கள் சமயநூல்களே கூறுகின்றன. உங்கள் மறைநூல்கள் குடிவகை, ஊனுண்ணல், சிற்றின்பம் ஆகியவற்றை ஆதரிக்கின்றன. சௌத்ரமணி வேள்வியில் குருக்கள்மார் குடித்து ஆடுவதே தலைமையான நிகழ்ச்சி. வேள்வியில் உயிர்கள் கொல்லப்படுவது மட்டுமன்றி அவற்றின் ஊனும் உண்ணப்படுதல் கட்டாயமாகும். பிள்ளையின்றேல் வீடில்லை என்ற எச்சரிக்கையினால் பௌண்டரம் முதலிய வேள்விகள் செய்யப்படுகின்றன. இதில், கற்பிழத்தல் ஒரு நற்செயலாக்கப்படுவதனால் சிற்றின்பமும் ஒழுக்கக் கேடும் சமய ஆதரவு பெறுகின்றன. மற்றும் வேதங்கள் பல தெய்வங்களை வணங்கு வதுடன் நில்லாது, பல இடங்களில் பல தெய்வங்களைத் தனித்தனி முழுமுதற் கடவுள்கள் எனக்கூறிப் படிப்பவர் மனத்தில் மயக்கத்தையும் குழப்பத்தையம் உண்டுபண்ணுகின்றன. பல அடிப்படைக் கருத்துக்கள் பல பொருள்படக் கூறப்பட்டுள்ளன. பல்வேறு திறத்தாரால் பல்வேறு பொருள்கொள்ள இடம்தந்து, அவை மயங்கவைத்தல் என்ற குற்றத்தின்பாற் படுகின்றன. எடுத்துக்காட்டாக ‘அஜேநயஷ்டவ்யம்’ என்ற தொடரில் அஜம் என்பதனை ஆடு என்று ஒருசாராரும், முளைத்தல் வலிவுஅற்ற வறுத்த நெல்மணி என்று மற்றொருசாராரும் பொருள் கொள்ளும்படியாயிருக்கிறது. இம் மயக்கம் உபரிசரவசுவின் கதையில் தெளிவாக விளங்குகிறது. மகாபாரதம் சாந்தி பருவத்தில் உபரிசரவசு கதை கூறப்படுகிறது. வியாழபெருமான் (பிரக°பதி) தலைமையில் இந்திரனால் நடத்தப்பெற்ற வேள்வியில் குருவான வியாழன் வேள்விக்காக ‘மாவிலங்கு’செய்யும் படி கூறுவதுகேட்டு, ஊனுண்ணும் விருப்புடன் வேள்விக்கு வந்த ‘தேவர்கள்’ வெகுள, முனிவர்கள் வியாழனையே ஆதரிக்க, இருவரிடையேயும் நடுவராக அமர்ந்த அரசன் வசு, அகச் சான்று மீறித் தேவர்புறம் தீர்ப்பளிக்க நரகடைந்தான். இக்கதை சமணர் கோட்பாட்டை நினைவூட்டுகிறது. வேத வேள்விகள் ‘மா அரிசி’ முதலிய படைப்புகளாலேயே முனிவர் களால் தொடக்கத்தில் செய்யப்பட்டன என்றும், ஊனுணவு பிற்காலத்தில் ஏற்பட்டு வேள்வி தூய்மை கெட்டதென்றும் சமணர் கொள்கின்றனர். மகாபாரதக் கதை சமணர் கோட்பாட்டை வலியுறுத்துகிறது என்பதில் ஐயமில்லை. மேலும் வேதங்களிலேயே சனகர், யாக்ஞவல்கியர் உரைத்தார் என்று வருவதாயிருப்பனவும், நூலின் பாக்கள் இவ்வளவு என்பது வரையறையற்றது (அநந்தம்) என்பது பொருந்தாது. பொருந்தின், இவ்வேதம் எல்லையற்ற வேதத் தின் ஒரு பகுதி என்றே கொள்ளவேண்டும். எல்லையற்ற வேதம் அறிவானால் எல்லாச் சமயங்களுக்கும் மூலம் அது என்னல் வேண்டும். வேதத்தை வைத்துக் கூச்சலிடும் நீங்கள், ஒப்புக் கொள்ளாத இந்நிலையை நாங்கள் ஏற்கிறோம். பூதிகர்: நீங்கள் உங்கள் சமயத்துக்கு வேதத்தில் ஆதாரங் காட்டுவதானால் உங்கள் இறைவனாகிய அருகன் அதில் குறிப்பிடப்படவேண்டும். நீலகேசி: ஆம், இருக்கு வேதத்திலேயே, “Arhan bibarshi Sayakani Danvan Arhatu Viswaroopam Arhat Brahmi Arha Eva Itham Sarvam Eth Bootham Yach Abavyam Ya Yevam Veda”முதலிய வாசகங்கள் உள்ளன. இதேபோன்று வாய் மொழி(ஆகமங்கள்) அருளிய இறைவன் நிறையறிவினன் என்று சமணர் கொள்வது போலவே வேதங்களும், ““Savetti Viswam Na Hi Thasya Vetta Thamahu ragriyam Purusham Mahantam and Hiranyagarbasarvagnaha”என்று கூறுகின்றன. எல்லா மக்களும் நான்முகனிடமே பிறந்ததாகக் கூறும் நீங்கள், உயர்வு தாழ்வு கற்பிப்பதேன்! தலையில் பிறத்தல் உயர்வும் காலில் பிறத்தல் இழிவும் ஆம் எனின், கடவுளாகிய நான்முகன் உடலிலேயே உயர்வு தாழ்வு ஏற்படுமா? மேலும் உங்கள் நூல்களிலேயே திருமால் தலையில் பிறந்த வியர்வை தீயதாகவும் காலில் பிறந்த கங்கை தூயதாகவும், உந்தியிற் பிறந்த நான்முகன் தெய்வமாகவும், காதுகளில் பிறந்த மத கைடபர் தீயோராகவும் கூறப்பட்டிருக்கிறதே. வேதங்களை வரையறையின்றிப் புகழும் நீங்கள், உங்கள் கொலைவேள்விக்கே இடம் தேடுகின்றீர்கள். வேதங்களை முன்னோர்கள் நூலாகமட்டும் கொள்ளும் நாங்கள், அதனைப் பழிக்காமல் அதன் பெயரால் நடைபெறும் தீமைகளையே பழிக்கிறோம். நீலகேசியின் சொற்கள் பூதிகன் உள்ளத்திலும், அவன் மாணவர் உள்ளத்திலும் பதிந்து அவர்களைத் திருத்தின. அவர்கள் கொல்லாநெறி மேற்கொண்டு அப்பழ அறநெறி யில் நிற்கத் தொடங்கினர். பிரிவு 10. பூதவாதம் வேதவாதியை வென்று நீலகேசி வெற்றிகரமாகத் திரும்பிவரும் வழியில், உலோகாயத (அனாத்மநா°திக) நெறியாகிய பூதவாதத்தின் பேர்போன தலைவனான பிசாசகனைச் சந்தித்தாள். அவன் மதனஜி தனென்ற அரசன் ஆதரவுபெற்று அவன் அரண்மனையிலிருந்தான். எனவே, அவ் அரசன் அவையிலேயே வாதம் தொடங்கிற்று. (இந் நெறியின் முதல்வன் சார்வாகனாதலால் இது சார்வாகம் எனவும் பெயர்பெறும்.) பூதவாதத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவை என்று நீலகேசி வினவ, பிசாசகன் அதை விளக்கிக் கூறலானான். பிசாசகன்: பொருள்வேறு, பண்பு வேறு என்ற மயி ரிழைப் பாகுபாடுகளை நாங்கள் ஏற்பதில்லை. எங்களுக்கு அடிப்படை உண்மைகளாவன ஐந்து பூதங்களே. உலக நடை முறைகள் எல்லாம் அவற்றினிடமிருந்தே தோன்றி இயங்குபவை. அனல், மண், நீர், காற்று, வெளி என்ற இவ்வைந்து பூதங்களும் நிலையாயன; மெய்ம்மைகள், இவற்றிலிருந்து முறையே கண்கள், மூக்கு, நாக்கு, உடல், காதுகள் ஆகிய பொறிகள் தோற்றுகின்றன. அவற்றினிடமிருந்து நிறம், மணம், சுவை, ஊறு, ஓசை ஆகிய புல ணுணர்வுகள் எழுகின்றன. மா, வெல்லம் முதலாய ஐம் பொருட்களின் சேர்க்கையால் வெறிதரும் சாராயம் உண் டாவதுபோலவே, இவ் ஐந்தின் சேர்க்கையால் அறிவு தோற்ற மெய்துகின்றது. அதனிடமாக இன்ப துன்பமுண்டாய், ஐம்பூதங்களின் செறிவுக்கியைய வளர்ச்சியுற்று வேறுபட்டுப் பிரிந்தொழிதலால் இவையனைத்தும் அழிவுறுகின்றன. உயிர் என்ற ஒன்று இல்லை. சூழ்ச்சிமிக்கவர் கற்பனை யில் தோன்றிய இப்பொய்ம்மையை அறிவற்ற ஆயிர மாயிரமக்கள் நம்பி ஏமாறுகின்றனர். முக்காலத்தும் உயிர் என்ற பொருள் இல்லை; இருப்பவை, இருந்தவை, இருக்கப் போகின்றவை எல்லாம் ஐம்பூதங்களே. நீலகேசி: உங்கள் முடிந்த உண்மையை நீங்கள் கண்டறிந்த வகை யாது? புலனுணர்வாலறிந்தீர்களா? உய்த்தணர்வாலா? அல்லது நிறையறிவுடைய உங்கள் தலைவர் அறிவாலா? உங்கள் சமயத்தைத் தோற்றுவித்த முதல்வர்யாருமில்லாததால், அதற்கு வாய்மொழியும் இருக்க முடியாது. நிறையறிவுடைய முதல்வர் மட்டுமே வாய்மொழி போன்ற நிறை அறிவுரை தரமுடியும். வினைசார் பற்ற அத்தகைய முதல்வரக்கு உங்கள் கோட்பாட்டிலும் இடமிருக்க முடியாது. நீங்கள் ஏற்கும் அளவை கண்கூடு (புலனறிவு) ஒன்றே. அதன் வாயிலாய் புலனறிவுக்கு மூலமான உடல், அதற்கு மூலமான முடிந்த உண்மைகள் ஆகியவற்றை அறிவதெவ்வாறு? பூதங்கள் ஒன்று சேர்வதால் புதிதான உயிர்த் தன்மையுடைய அறிவு தோன்றுவதெவ்வாறு? பூதங்கள் முதற்காரணமா, (மூலப் பொருளா), நிமித்தகாரணமா (செய்வோனா)? முதல் காரண மானால், புலனன்றி அறிவும் உணர்வும் தோன்றுமா? பிசாசகன்: விறகிலிருந்து தீ தோன்றுவது போலவே தான் புலன்களிலிருந்து உணர்வும். நீலகேசி: விறகில் தோன்றும் தீ, விறகைப்போலவே உணர்வற்றது. விறகுடன் எரிந்து அதனுடன் ஒழிவதேயன்றித் தன்செயலாக எதுவும் உடையதன்று. பூதங்கள் சேர்க்கையில் உயிர் தோன்றுவது அவ்வாறன்று. பூதங்கள் அறிவும் உணர்வும் அற்றவையாயினும் உயிர் அவற்றை உடையது. அப்படியிருக்க, பூதங்களிலிருந்து உயிர் எவ்வாறு தோன்றும்? மேலும் விறகு மிகுதிப்பட்டால் தீ வளரும், ஆனால் உடல் வளர்ச்சியுடன் உணர்ச்சி வளர்ச்சியடைவதில்லையே. பூதச் சேர்க்கையாலுண்டாகும் புலனறிவு, பூதச் சார்பான பொருள் களை உணர்ந்தும் உயிர், உணர்வு, அறிவு ஆகியவற்றை உணர்வதில்லை. நலவினை உணர்வு, தீவினையச்சம், அகச்சான்று ஆகியவைகள் புலனுடன் தொடர்பற்றவை. ஐம்பூதங்கள் சேர்க்கையால் அறிவு உண்டாகும் என்கி றீர்கள். அனால் புலன்கள் அவ்வப்பொறிகள் வாயிலாக மட்டும் அறியப்படுவானேன்? மைபொறிகளுள் சிலபொறிகளே உடைய கீழுயிர்கள் ஐம்பூதங்களில் சில பூதங்கள் குறைய உண்டானவையா? சில பூதங்கள் குறைந்தும் ஒரு பூதமே தனித்தும் புலனறிவுண்டாமெனில், ஐம்பூதமும் ஐம்பொறியும் சேர்ந்தே அறிவுண்டாமெனும் கோட்பாடு வீழ்ச்சியுறுகின்றது. இவற்றுக்கும் மேலாகப் பொருளுண்டெனின், ஆன்மாவை ஒப்புக்கொண்டாகவேண்டும். பூதங்கள், புலனுணர்வு இல்லாதபோது முன்நினைவு ஏற்படுகிறதே. மனம் என்ற ஒன்றின்றி அது எவ்வாறு ஏற்படும்? பசி, சினம், அவா, சிற்றின்பம் ஆகியவை புலனுணர்வி லடங்குபவை அல்லவே? சிறு குழந்தை அழுவது, பால் குடிக்க முனைவது எவ்வறிவின்பாற்படும்? இவை இயற்கையானால், அவை வளர்ச்சிப் பருவந்தோறும் மாறுபடுவானேன்? உயிர்வகை தோறும் வேறுபடுவானேன்? உயிர்கள் உணர்விழந்த நிலையில் புலனுணர்வில்லா மலும் உயிர் நிலவுகிறதே. புலனுணர்வு கடந்த உயிர் இருக்க வேண்டுமன்றோ? உடலில் பூதச் சேர்க்கை அழியாமலே உயிர் போவதெவ்வாறு? பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உயிர் இல்லை. அவ்வுணர்வு இல்லாததனால் என்கிறீர்கள். பிறப்புக்கு முன்னும் இறப்புக்கு பின்னும் பூத உணர்வில்லாததால் பூதங்களுமில்லை என்று கொள்ளலாமா? ஒரேவகை உடலுடைய உயிர்கள் பலபடி அறிவு, பல்வகை அறிவு நிலை, இன்பதுன்ப நுகர்வு உடையவையாயிருப்பானேன்? பொருள் சேமித்துப் புதைத்துவைத்து இறந்தவன் பிள்ளைக்கு இடமறிவிக்கும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கு ஏற்படுகின்றனவே? இறப்புக்குப்பின் உயிர் இல்லை என்றால், இது எவ்வாறு கூடும்? பிசாசகன்: (விலாப்புடைக்க நகைத்து) புலனாலறியப் படாதவை பொய்யாகும். பொய்யைப்பற்றி ஏன் இவ்வளவு மயிரிழை ஆராய்ச்சி! நீலகேசி: ஆவியை நம்பாத உனக்கு நேரிடையாக ஆவியைக் காட்டுகிறேன் என்று கூறித் தன்தெய்வ ஆற்றலால் பிசாசகன் முன் ஒரு பேய் வடிவுடன் தோன்றினாள். பிசாசகன் அஞ்சி உணர்வற்று நின்றான். நீலகேசி அவனைத் தேற்றி, அஞ்சவேண்டாம். இது உன் தாயுருவம்; வேறன்று. நீ பிசாசகன் என்று பெயர்பெற்றதே அதனால்தான்! என்றான். பிசாசகன் நீலகேசியின் அறநெறி ஏறினான். நீலகேசி யும் தன் அறப்பணியால் மனநிறைவடைந்து தன் அறிவு நிலையில் நின்று வீடுபேறுற்றாள். முற்றும் வாழ்வாங்கு வாழ்தல் முதற் பதிப்பு – 1956 இந்நூல் 1960இல் நெய்தல் பதிப்பகம், சென்னை - 5. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. எண்ணெயும் தண்ணீரும் டெவன்ஷயர் என்பது இங்கிலாந்தின் தென் மேல் பகுதியிலுள்ள ஒரு கோட்டம்! அதில் சிற்றூர்கள் மிகுதி. சிறு குடியானவர்களும் சிறு திறத்தொழிலாளர்களுமே இவற்றில் பெரும்பாலராக வாழ்ந்து வந்தனர். அவர்கள் வீடுகள் பெரிதும் கூரைவேய்ந்த குச்சுவீடுகளே. பேரூர்களில் ஊரிலிருந்து சற்று விலகித் தனியாகச் சிறு செல்வர், உயர் குடியினர் ஓட்டுவீடுகள் சில இருந்தன. இவை இரண்டு மூன்றடுக்குகள் உடையவை. பேரூர் ஒன்றில் குச்சு வீடுகளினின்றும் சிறு செல்வரின் ஊரிலிருந்து சற்று விலகித் தனியாகச் சிறு செல்வர், உயர் குடியினர் ஓட்டுவீடுகள் சில இருந்தன. இவை இரண்டு மூன்றடுக்குகள் உடையவை. பேரூர் ஒன்றில் குச்சு வீடுகளினின்றும் சிறு செல்வரின் ஓட்டுவீடுகளினின்றும் பிரிந்து தனியாக இடமகன்ற பெரிய மாளிகை ஒன்று இருந்தது. முயற்கூண்டுகளிடையேயும் ஆட்டுக் கிடைகளிடையேயும் அமைந்த ஒரு பேரவுனைக் கூடமாக அது காட்சியளித்தது. இதுவே திரு. மெர்ட்டனின் மாளிகை இல்லம். மெர்ட்டன் குடியினர் ஊரிலில்லாதபோது இம்மாளிகை யண்டை மிகுதி நடமாட்டம் கிடையாது. ஆனால் இப்போது சில நாட்களாக அவர்கள் இங்கிலாந்திலேயே இருந்து வந்தனர். எனவே அங்கே இப்போது மக்கள் நடமாட்டமும் பரபரப்பும் இருந்தன. அக்குடியினரின் உற்றார் உறவினரோ செல்வ உயர்குடி நண்பரோ வரும் நேரங்களில் இங்கே பரபரப்பு இன்னும் மிகுதியாயிருக்கும். மாளிகையினுள்ளே விருந்துகள், இசை அரங்குகள், ஆடல் அரங்குகள் நடைபெறும் போது, மாளிகை ஒரு சிறு கோயிலாகவும் சுற்றுப்புறம் ஒரு விழாக் கூடமாகவும் தோற்றமளிக்கும். இத்தகைய சிறப்புக் காட்சிகள் எதுவுமில்லாமலே ஒரு நாள் மாளிகையின் பெட்டிவண்டி ஒன்று மாளிகை முன் வந்து நின்றது. ஒன்றிரண்டு பணியாட்கள் மட்டும் ஆரவாரமின்றிச் சென்று வரவேற்றனர். வண்டியிலிருந்து முதலில் மாளிகைத் தலைவர் திரு மெர்ட்டனும், எளிய ஆடையுடுத்த ஒரு சிறுவனும் இறங்கினர். அவர்களுக்குப் பின்னே மற்றொரு சிறுவன் இறங்கினான். முதற் சிறுவன் உடையும் தோற்றமும் மட்டுமின்றி அவன் நடையும் அவன் பணிமக்கள் அல்லது குடியானவன் வகுப்பைச் சேர்ந்தவன் என்று காட்டின. திரு மெர்ட்டன் அவனைக் கையிற் பற்றி இட்டுச் சென்றாலும் அவன் இயற்கைப் பணிவுடன் பின்னிடைந்தே சென்றான். அவர்கள் பின் வந்த சிறுவனோ தலை கவிழ்ந்து புறங்கைக் கட்டிக் கொண்டு சற்றுப் பின் தங்கி வந்தான். ஆயினும் அவன் குடியானவச் சிறுவனல்ல என்பதை அவன் உடை காட்டிற்று. உண்மையில் அவன் திரு மெர்ட்டனின் ஒரே பிள்ளையான டாமி என்ற தாம° மெர்ட்டனேயாவன். வீட்டினுள்ளிருந்து முப்பத்தெட்டு, நாற்பது ஆண்டு மதிக்கத்தக்க ஒரு செல்வமாது அவர்களை வரவேற்றாள். இதுவே திருவாட்டி மெர்ட்டன். அவள் முதலில் பின்னிடைந்து வந்த டாமியை எடுத்தணைத்துக் கொண்டாள். பின் மெர்ட்டனுடன் வந்த சிறுவனை நோக்கி “வா குழந்தை, உன்னைக் காண நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,’’ என்று பரிவுடன் வரவேற்றாள். குடியானவச் சிறுவனை எல்லாரும் களிப்புடனும் ஆதரவுடனும் நடத்தினர். மாளிகையின் எல்லாப் பகுதிகளுக்கும் அவனை அவர்கள் இட்டுச் சென்று காட்டினர். குடும்ப உணவு மேடையில் அவனுக்கும் குடும்பத்தினருடன் குடும்பத்தினன் போல நாற்காலியிட்டு வெள்ளி தங்கத் தட்டங்களில் உணவு வட்டித்தனர். ஆனால் சிறுவன் முகத்திலோ பணிவையும் நன்றியையும் தவிர வேறு உணர்ச்சியில்லை. கட்டுண்ட விலங்குபோல அவன் அச்சூழ்நிலைகளிடையே உணர்ச்சி யில்லாமல் கடமையாற்றினான். மாளிகையின் ஆடம்பரமும் பிறர் பரிந்துரையும் கூட அவனுக்கு இயற்கைச் செயலார்வத்தை உண்டு பண்ணவில்லை. சுவர்களிலும் நிலை மாடங்களிலும் பதிக்கப்பட்டிருந்த நிலைக் கண்ணாடிகள் அவன் கந்தலுடையையும் பிறர் கட்டுடை களையும் வேறு பிரித்துக் காட்டின. மைபூசிய வண்ணத் தூண்களும் வெண்பித்தளைப் பிடிகளுடன் பூ வேலைப்பாடுகள் அமைந்த நிலைக் கதவுகளும் வெள்ளி, பொன் கலங்களும் அவன் ஏழ்மையை எள்ளி நகையாடின. வான்முகடென உயர்ந்த மேற்கட்டுக்களும் வளைவுகளும் அவனை அண்ணாந்து பார்க்க வைத்தன. சிறுவன் தம் வீட்டையும் வீட்டுப் பொருள்களையும் கவனித்துப் பார்த்து வருவது கண்டு திரு மெர்ட்டனும் திருவாட்டி மெர்ட்டனும் மகிழ்ச்சியுடன் அவனையே நோக்கி யிருந்தனர். ஆனால் அவர்கள் அவன் முகத்தில் எதிர்பார்த்த மகிழ்ச்சியார்வத்தையோ வியப்பையோ அதில் காணவில்லை. அவற்றைப் பாராட்டியோ வியந்தோ அவன் வாய்திறந்து எதுவும் கூறவும் இல்லை; கேட்கவும் இல்லை. எதிர்பாரா இக்காட்சிகளால் அவன் உணர்ச்சிகள் அனைத்தும் அதிர்ச்சியுற்றுப் போயிருக்க வேண்டும் என்று அவர்கள் மதித்தனர். ஆனால் உணவு மேடையில் அவன் வெளியிட்ட கருத்துக்கள் இவ்வெண்ணத்தை அகற்றின. அவன் எண் ணெயிடையே தண்ணீர்த் துளிபோல் பற்றற்றவனாய் நடந்துகொண்டது புறச்சூழ்நிலையின் புதுமை காரணமாக மட்டுமன்றி. அவன் உள்ளக் கருத்துக்களும் மற்ற மக்கள் கருத்துக்களிடையே எண்ணெயுள் தண்ணீர் போலத் தனிப் பட்டதாகவே இருந்தன என்பதைக் கண்டனர். உண்ணுமுன் ஒரு வெள்ளிக்கிண்ணியின் வேலைப் பாட்டில் சிறுவன் சிறிது ஈடுபட்டுக் கவனித்ததாகத் திருவாட்டி மெர்ட்டனுக்குத் தோன்றிற்று. உடனே அவள் சிறுவனை நோக்கி “தம்பி, இது நல்ல வேலைப்பாடமைந்த சிறு கிண்ணிதான். இது எங்கள் டாமியினுடைய கிண்ணி. அவன் வேறுயாரையும் இதைத் தொடவிடமாட்டான். ஆனால் இது உனக்குப் பிடித்தமாக இருந்தால் அவன் இதை மகிழ்ச்சியுடன் உனக்குப் பரிசாகக் கொடுப்பான் என்று நான் அறிவேன். ஏன் டாமி! நீ என்ன சொல்லுகிறாய்” என்று கூறி டாமியை நோக்கினாள். டாமியும் “ஆம் அம்மா, நான் ஹாரிக்கு எதையும் மகிழ்ச்சியுடன் கொடுப்பேன். எனக்கு வேறு தங்கக் கிண்ணிகள் இருக்கின்றன. இதனினும் பெரிய வெள்ளிக் கிண்ணிகளும் இருக்கின்றன. நான் இதை ஹாரிக்குப் பரிசாக கொடுக்கிறேன். உனக்கு இது விருப்பம் தானே, ஹாரி” என்று கேட்டான். சிறுவன் விடை அவர்கள் யாரும் எதிர்பாராததாயிருந்தது. “உன் அன்பிற்கு மிகவும் நன்றி, டாமி; அம்மையார் அவர்கள் ஆதரவும் எனக்குப் பெருமை தருகிறது. இருவர் அன்புக்கும் நான் கடமைப்பட்டவன். ஆனால் இத்தகைய பொருள்கள் எதுவும் உண்மையில் எனக்குத் தேவையில்லை. என்னை இவ்வகையில் மன்னிக்கக்கோருகிறேன்” என்றான் அவன். திரு மெர்ட்டன் அவன் தோள்கள் மீது கையிட்டுக் கொண்டு “ஏன் தம்பி, அப்படி சொல்லுகிறாய்; இது நல்ல வெள்ளிக் கிண்ணியாயிற்றே. இதை ஏன் வேண்டாம் என்கிறாய்?” என்று கேட்டார். “எனக்குத் தேவைப்படும் கலங்கள் யாவும் என் வீட்டி லிருக்கின்றன. அவை கூட என் தேவைக்கு மேற்பட்டவை. அவற்றுட் சிலவற்றை நான் என் அயல் வீட்டுத் தோழர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். தேவைக்கு மேற்பட்ட பொருள்களைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருக்கக் கூடாதென்பது என் கருத்து. மேலும் கலங்கள் வெள்ளியினால் செய்யப்படுவது நல்லது என்று எனக்குத் தோன்றவில்லை. சற்று முன் வெள்ளித் தட்டமொன்றை இங்குள்ள ஒரு ஆள் கீழே போட இருந்தபோது, அம்மா அவரைக் கடிந்து எச்சரிக்க நேர்ந்தது. வெள்ளிப் பொருள்களைக் கொண்டுபோகும் போதும் கொண்டுவரும் போதும் அவை வெள்ளியாயிருப்பதனாலேயே எப்போதும் எச்சரிக்கையும், கவலையும், கண்காணிப்பும் தேவைப்படுகின்றன. அவை அலம்புவதற்கும் எளிதல்ல, உறுதியுடையவையும் அல்ல. எங்கள் வீட்டுக் கலங்களோ எப்படிப் போட்டாலும் எங்கே வைத்தாலும் கவலையில்லை. உறுதியும் உடையவை” என்று அவன் விடை பகர்ந்தான். திருவாட்டி மெர்ட்டன் “சிறுவன் முழுக்க முழுக்கப் பட்டிக் காட்டானாகவே இருக்கிறான்,” என்று முணுமுணுத்துக் கொண்டாள். ஆனால் திரு. மெர்ட்டனோ அவனை வியப்புடனும் பாராட்டுடனும் நோக்கி “தம்பி, நீ இச்சிற்றூருக்கும் இச் சிறு வயதுக்கும் மேற்பட்ட அறிவாளியாயிருக்கிறாய். என் டாமிக்கு நீ தோழனாயமைந்தது எங்கள் நற்பேறு. நீயே அவன் பள்ளித் தோழனாகவும் அமைந்தால் இன்னும் நன்றாயிருக்குமென்று கருதுகிறேன். உனக்குக் கற்பிக்கும் ஆசிரியர் யார்? உன் பள்ளி எது?” என்றார். சிறுவன் “இவ்வூரில் பள்ளி எதுவுங்கிடையாது. நான் இவ்வூர் ஓதுவாராகிய திரு. பார்லோவிடம் கற்றுக் கொள்கிறேன். உங்கள் பாராட்டை நான் பெறுவது உங்கள் அன்பு காரணமாகவும் ஓரளவு அவர் சீரிய படிப்பினைகள் காரணமாகவுமே; டாமியும் அவரிடம் படித்து என் படிப்புத் தோழனாகக் கூடுமானால் நான் உண்மையிலேயே மகிழ்ச்சி யடைவேன்” என்றான். குடியானவருக்குக் கற்றுக்கொடுக்கும் ஒரு ஆசிரியரிடம் பிள்ளையை விடுவதில் திருவாட்டி மெர்ட்டனுக்கு முதலில் மனமில்லாதிருந்தது. ஆனால் குடியானவச் சிறுவனையே தங்கள் வீட்டில் வந்து பெருமையடையச் செய்த ஆசிரியர் தன் பிள்ளைக்கு இன்னும் உயர்வு கொடுக்கக் கூடும் என்ற எண்ணம் அவளுக்கு மெல்ல எழுந்தது. ஆகவே அவளும் திரு. மெர்ட்டன் விருப்பத்துக்கு இசைந்தாள். குடியானவச் சிறுவனுக்கு இவ் எதிர்பாரா உயர்குடித் தொடர்பை உண்டு பண்ணக் காரணமாயிருந்தது இச்சந்திப்புக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்ச்சியும் அதில் அச்சிறுவன் காட்டிய தீரமுமேயாகும். அந்நிகழ்ச்சியை அடுத்த பிரிவில் கூறுவோம். அடிக்குறிப்பு 1. ஜில்லா போன்ற ஒரு பிரிவு. 2. பெருமையும் சிறுமையும் தாம்தர வருமே பொருள் வகையில் திரு மெர்ட்டன் குடிக்கும், குடியானவச் சிறுவனாகிய ஹாரியின் குடிக்கும் இடையே உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றது. திரு மெர்ட்டனை டெவன்ஷயர் மக்கள் ஜமெய்க்காச் செல்வர் என்று கூறி வந்தனர். ஜமெய்க்கா என்ற தொலை தூர மேலைத் தீவில் அவருக்கு ஏராளமான கரும்புத் தோட்டங்களும் கனிவயல்களும் இருந்தன. அவற்றில் உழைக்கப் பதினாயிரக் கணக்கான நீகிரோ அடிமைகளும்1 அவர்களை மேற்பார்க்க ஆயிரக்கணக்கான குடிபடைகளும் வேலையாட்களும் இருந்தனர். அடிமைகளுக்கு அவர்கள் பூவுலகத் தேவர்களாகவும், மற்ற மக்களுக்குத் தொழில் மன்னர்களாகவும், பிற செல்வர்களுக்குச் செல்வர் சமூகத்தின் முதல்வர்களாகவும் விளங்கினர். பயணம் செய்யும்போது அவர்களை நீகிரோவர் பல்லக்கில் வைத்துச் சுமந்து சென்றனர். மற்றும் டாமிகூட, ஒரு நீகிரோ குடைபிடிக்க, மற்றொருவன் மூட்டை சுமக்க, மூன்றாவது ஒருவன் தன்னை வேண்டும்போது தூக்கிச்செல்ல, இளவரசன் போலவே தெருக்களில் கொண்டு செல்லப்பட்டான். வீட்டிலும் அவன் செல்வத்துக்குரிய ஒரே செல்லப்பிள்ளையாக வளர்ந்தான். அவன் கேட்ட உணவு உடனே தருவிக்கப்பட்டது. அவன் இம்மெனுமுன் பணி செய்ய எத்தனையோ பணியாளர்கள் இருந்தனர். அவன் சீற்றத்துக்கு யாவரும் அஞ்சி யொடுங்கி, நடுங்குவர். திரு மெர்ட்டன் அவன் படிப்புக்காகவே இங்கிலாந்துக்கு வந்திருந்தார். ஹாரியின் தந்தை ஸான்ட்போர்டு இதற்கு நேர்மாறாக முற்றிலும் ஏழைக் குடியானவர். அவர் வயலில் உழைத்துக் காடுகளில் விறகு வெட்டியும், ஏளமாட்டா வறுமையுடன் காலந்தள்ளி வந்தார். சிறு பருவத்திலிருந்தே ஹாரி தாய்க்கு வீட்டில் வேண்டிய உதவி செய்வதுடன் தந்தையுடன் சென்று அவருக்கு உதவி செய்யவும் பழகியிருந்தான். எதையும் தூய்மையுடனும் ஒழுங்குடனும் பேணும் பழக்கத்தை அவன் தாய் அவனுக்கு ஊட்டியிருந்தாள். வயலில் தந்தையுடன் ஒத்துழைத்து அவன் நல்ல உடற்கட்டும் உழைப்பாற்றலும் உடையவனா யிருந்தான். அடிக்கடி தந்தையையும் மாமனையும் பார்க்கக் காட்டு வழிகளில் அவன் செல்ல வேண்டி வந்தது. தந்தையுடனும் தனியாகவும் இடர்களைச் சமாளித்துக் காடுகளில் சென்று வந்ததால், அவனிடம் வீரமும் குடி கொண்டிருந்தது. ஆனால் அவனுக்குப் படிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்காமலிருந்தது. ஹாரியின் இயற்கை அறிவையும் அதன் வளர்ச்சி யையும் ஊன்றிக் கவனித்த அவ்வூர் ஓதுவார் திரு பார்லோ ஒருநாள் திரு ஸாண்ட்போர்டிடம் பேசுகையில் “ஐயா, எந்தப் பிள்ளைகளையும் கல்வி யில்லாமல் வளர்க்கக்கூடாது. அதிலும் ஹாரிபோல இயற்கையறிவும் ஆற்றலும் உள்ள பையனைப் படிப்பிக்காமலிருப்பது சரியல்ல” என்று கூறினார். ஸாண்ட்போர்டு “ஏழைகளாகிய எங்களுக்கு அதற் கான வாய்ப்பு ஏது? இப்பக்கத்திலோ பள்ளிகள் இல்லை. தொலைக்கு, அனுப்ப எங்களால் முடியாது. தவிர வாழ்க்கைக்கே வழியில்லாமல் வறுமைக் குழியில் புரளும் நாங்கள் பிள்ளைகளை எங்ஙனம் படிக்க வைக்க முடியும்? சிறுபிள்ளைகளாயிருக் கிறார்களே என்று கூடக் கருத இடமின்றி நாங்கள் அவர்களை உழைக்கவிட வேண்டியிருக்கிறதே” என்றார். இது கேட்டுத் திரு பார்லோ சிறிது பெருமூச்சு விட்டு “ஐயா, ஹாரியின் கல்வியைப் பற்றியவரை தங்கட்குக் கவலை வேண்டாம். அவனுக்கு வேண்டிய எல்லாக் கல்விப் பயிற்சியையும் அதனுடன் வேண்டிய தேவைகள் யாவற்றையும் நானே பார்த்துக் கொள்கிறேன். அவனுக்கு வீட்டில் வேலையுள்ள நேரம் தவிர மற்றச் சமயங்களில் என் வீட்டிலேயே இருக்கட்டும்” என்றார். திரு ஸாண்ட்போர்டு இதனை மனமுவந்து ஏற்று அவருக்கு எல்லையிலா நன்றியும் கடப்பாடும் தெரிவித்தார். அன்று முதல் ஹாரி ஸாண்ட்போர்டு தன் வீட்டில் தேவைப்பட்ட வேலை களைச் செய்தும் ஓய்ந்த நேரங்களில் ஆசிரியர் வீட்டிலிருந்து பயின்றும் வந்தான். ஹாரி திரு மெர்ட்டன் மாளிகைக்குச் சென்றதற்கு முந்திய நாள் காலை நேரங்களில் டாமி ஒரு பணிப் பெண்ணுடன் ஊர்ப்புறத்தே உலாவச் சென்றிருந்தான். அவர்கள் ஒரு செடி யண்டை மலர் பறித்துக் கொண்டிருக்கையில், புதரிடையிலிருந்து ஒரு பாம்பு வந்து அவன் காலைச் சுற்றிக் கொண்டது. அதையறிந்த டாமி அச்சமும் திகிலும் கொண்டு விழித்தான். அவன் திகில் கண்டு என்ன செய்தி என்று பணிப்பெண் வினவினாள். அவன் அதற்குக் காலைநோக்கிக் குறிப்புக்காட்ட மட்டுமே முடிந்தது. அவளும் காலில் பாம்பைக் கண்டு கலவர மடைந்து இன்னது செய்வதென்றறியாது திகைத்தான். பின் அவள் வேலையாட்களைக் கூட்டிவர வீட்டுக்கே ஓடினாள். பாவம், டாமி ஓடவும் முடியாமல், நிற்கவும் மனமின்றித் துடியாய்த் துடித்தான். இச்சமயம் அப்பக்கமாக வந்த ஹாரி ஒரு நொடியில் நிலையை உய்த்துணர்ந்தான். அவன் உடனே குனிந்து, சட்டெனப் பாம்பின் கழுத்தைப் பிடித்து, அதை வெளியே இழுத்து வீசியெறிந்தான். டாமிக்கு இப்போது தான் உயிர் வந்தது. அவன் ஹாரியைக் கழுத்தோடு அணைத்துக் கொண்டு அழத் தொடங்கினான். இதற்குள் பணிப்பெண்ணின் அலறல் கேட்டு வேலையாட்களும் திருவாட்டி மெர்ட்டனும் ஓடி வந்தனர். டாமியிடமிருந்து இடர்நீங்கிய வகையறிந்ததும் அனைவரும் ஹாரியைப் பாராட்டினர். திருவாட்டி மெர்ட்டன் ‘அப்பா, இன்று முதல் நீ என் குழந்தை. நீ கட்டாயம் என் வீட்டுக்கு வந்து தங்கிப் போக வேண்டும். எங்கள் பிள்ளையாகவே நீ இருந்தால் கூட எங்களுக்கு மகிழ்ச்சியே’ என்றாள். ஹாரி “அம்மா, நான் உங்களுக்கென எதுவும் செய்து விடவில்லை. இடுக்கண் வந்தால் யாரும் யாருக்கும் உதவ வேண்டுவது தானே. நீங்கள் அன்புடையவர்களாதலால் இதைப் பெரிதுபடுத்துகிறீர்கள். நான் இனி வீட்டுக்குப் போகவேண்டும் என் தாய் தந்தையரிடம் இணக்கம் பெற்று மற்றொருநாள் உங்கள் வீட்டுக்கு வருகிறேன்” என்றான். திரு. மெர்ட்டன் இந்நிகழ்ச்சியின் பின் ஹாரியின் தாய் தந்தையரை உசாவியறிந்து அவர்கள் இணக்கம் பெற்று ஹாரியைத் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்றான். அடிக்குறிப்புகள் 1. நீகிரோக்கள் முழுக்கறுப்பு நிறமுடைய மக்களினத்தவர். திராவிட இனத்தவராகிய இந்தியர் செங்கறுப்பு அல்லது தவிட்டு பிற இனத்தவர். ஆரியராகிய ஐரோப்பியர் வெள்ளை நிற இனத்தவர். அமெரிக்க இந்தியர் சிவப்பு நிற இனத்தவர். சீனர் முதலிய கீழ் ஆசிரியாவின் மங்கோலிய மக்கள் மஞ்சள் நிற இனத்தவர். பண்டையுலகிலும் அண்மைகால அமெரிக்காவிலும் நீகிரோவர் அடிமைகளாக்கப்பட்டுக் கொடுமைக்காளாக்கப்பட்டனர். 19-ம் நூற்றாண்டிலேயே இவ்வடிமை வழக்கம் சட்டத்தில் ஒழிக்கப்பட்டது. ஆனால் நீகிரோவர் இன்னும் முற்றிலும் உயர் நிலை எய்திடவில்லை. 2. இந்தியாவிலும் தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்பட்ட மக்களும் இதுபோல் அடிமைப்பட்டு, பின் கொடுமைக்காளாக்கப்பட்ட மக்களே. சட்டத்தில்கூட அவர்கள் பற்றிய தனிக் கட்டுப்பாடுகளும் வேறுபாடுகளும் இன்னும் அகலவில்லை. 3. டாமியின் பயிற்சித் தொடக்கம் ஓதுவார் திரு. பார்லோ இயற்கையிலேயே நல்லொழுக் கமும் நாட்டுப்பற்றும் மக்கட்பற்றும் உடையவர். இம் மூன்றும் சேர்ந்த சமூகத் தொண்டே தெய்வபக்தி என்பதை அவர் உணர்ந்தவர். ஹாரி இயற்கையிலேயே நல்ல உழைப்பாளி. ஆனால் திரு பார்லோவின் அறிவுரை மூலமும் அவர் வழி நின்றதன் மூலமும் அவன் உழைப்பாற்றல் உழைப்பார்வத்தால் பன்மடங்கு வளம் பெற்றது. அத்துடன் அவர் அவனுக்கு எழுத்துவாசிப்பு, கணக்கு முதலிய பள்ளிப்படிப்பறிவையும்; வாழ்க்கைக்குத் தேவைப்படும் மற்றெல்லா வகைப் பயிற்சி களையும் ஒருங்கே ஊட்டி வந்தார், இங்ஙனம் அவன் கல்விப் பயிற்சி வெறும் பள்ளிப் பயிற்சியாயிராமல் ஒரு நல்ல குடும்பப் பயிற்சி, ஒரு நல்ல பள்ளிப்பயிற்சி, ஒரு நல்ல வாழ்க்கைப்பயிற்சி ஆகிய மூன்று பகுதிகளும் நிறைந்த முழுநிறை சமூகக் கல்விப் பயிற்சியாய் அமைந்தது. திரு. பார்லோவின் வாழ்க்கைப் பயிற்சி முறையில் ஒரு முழுமையான வாழ்க்கைத் தத்துவமே அடங்கியிருந்தது. அன்பு, தற்சார்பு, தன்மதிப்பு ஆகிய மூன்று பண்புகளும் அதன் அடிப்படைக் கூறுகளாயிருந்தன. மக்கள் யாரிடமும் வகுப்பு, குடி, குல வேற்றுமை பாராட்டக் கூடாது என்பதும்; விலங்குகள், பறவைகள் முதலிய உயிரினங்களைக் கூடக் கூடியமட்டும் கொல்லவோ துன்புறுத்தவோ கூடாதென்பதும்; ஒருவருக்கு இடுக்கண் நேர்ந்தால், எவரும் அவருக்கு உதவாதிருத்தல் கூடாதென்பதும்; தன்னுழைப்பாலேயே தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதும்; உழைப்பவர்களை இழிவாகக் கருதக் கூடாது என்பதும்; எவரையும் அவமதிக்கவோ எவர்க்கும் அஞ்சி நடக்கவோ கூடாது என்பதும்; தன் மதிப்பையும் தன் நேர்மையையும் உயிரினும் மேலாகக் கருதவேண்டும் என்பதும்; தன்னைவிட மூத்தோர், பெரியோர் அல்லது வலிமையுடையோர் தீங்கு செய்தால் கூடியமட்டும் பொறுமையுடன் அத்தீங்குகளைப் பொறுத்து ஏற்று அவர்கள் தாமே திருத்திக் கொள்ளும்படி விட்டுவிடுதல் நலம் என்பதும்; நலிவுற்றோர், பெண்டிர், சிறுவர், ஏழைகள் ஆகியவர்களை எவரும் துன்புறுத்துவதை எதிர்க் காதிருக்கலாகாது என்பதும்; தீமையை எதிர்ப்பதில் மிகச் சிறந்த உயர்நெறி தீமைக்கு மாறாக நன்மை செய்வதே என்பதும் திரு பார்லோவின் உறுதிக் கோட்பாடுகள். இவையே நாளடைவில் ஹாரியின் கோட்பாடுகளாய் அவன் இயற்கைக் குணமாய் ஊறிவிட்டன. ஆகவே அவன் உலகில் மதிப்படைந்ததில் வியப்பில்லை. ஹாரியுடன் இப்போது உடன்மாணவனாக வந்த டாமி பலவகையில் ஹாரிக்கு நேர்மாறான இயற்கையும் பண்பாடும் உடையவன். அவனைச் சுற்றிலும் இருந்த உயர்குடி மக்களின் போலி வாழ்க்கைப் பண்பு பிஞ்சிலேயே அவன் உள்ளத்தில் தோய்ந்து உறைந்து போயிருந்தது. நீகிரோ அடிமைகளை விலங்குகளிலும் கீழாக மதித்து வதைக்கும் பண்பை அவன் மேலைத் தீவிலேயே இயல்பெனக் கொண்டிருந்தான். இங்கிலாந்திலும் ஏழைக் குடியானவர்களும் தொழிலாளர்களும் அவன் சமூகச் சூழலுக்கு அரைகுறை அடிமைகளாகவே தோற்ற மளித்தனர். கொடுத்ததை உண்டு அடிபடுவது அடிமைகளின் உரிமையானால், உணவுக் கூலிக்காகக் காலாலிட்ட வேலையைத் தலையால் செய்தல் தாழ்குடியினர் கடமை என்றும்; இவ்விரு சாராரும் உயர்குடியினருக்கு உழைப்பதே அவர்கள் நீங்காக் கடனென்றும்; உயர் வகுப்பினரானோர் தாம் உழையாது பிறரை உழைக்க வைத்து அதட்டியும் ஆணை பிறப்பித்தும், உயர் வாழ்வும் இன்பமும் நுகர்தற்குரியவர் என்றும் அவனைச் சார்ந்தோர் கூறும் உரைகளை அவன் உறுதியுரைகளாகக் கொண்டிருந்தான். இவற்றுடன் குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக இருந்ததனால் அவனுக்குத் தற்சார்பு, தன் பொறுப்பு என எதுவும் இல்லாதிருந்தது. எதற்கும் அவன் அடிமைகளையும் வேலையாட் களையுமே நம்பியிருந்தான். அவர்களை அதட்டியும் அடித்தும் வேலை வாங்குவதனால் கடுஞ்சொல்லும் கொடுஞ் செயலும் அவனிடம் இரண்டாந்தர இயற்கைப் பண்புகளாய்ப் போய்விட்டன. தாய் தந்தையரும் பிறரும் அவன் கேட்டதை யெல்லாம் தந்தனராதலால், பிடிவாதமும் அடம்பிடித்தலும் அவனிடம் பெருகின. எனவே தற்பெருமை, வீம்பு, குடும்பப் பெருமை, வகுப்பிறுமாப்பு, சோம்பல், இரக்கமின்மை, அன்பின்மை, கோழைத்தனம் ஆகிய பல தீயகுணங்களும் பழக்கங்களும் அவன் உள்ளத்தை மூடி மாசடைய வைத்திருந்தன. சுருங்கச் சொன்னால், கொடுமையே அவன் அறநெறியாகவும், சோம்பலே அவன் பொருள் நெறியாகவும் தன்னலமே அவன் இன்ப நெறியாகவும் அமைந்திருந்தன. திரு பார்லோ உலக அறிவு மட்டுமன்றி மக்கள் உளப் பாங்கும் அறிந்தவர். ஆகவே திரு மெர்ட்டன் மாளிகையில் சென்று டாமியைக் கண்டதுமே அவர் அவன் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் படிமானங்களையும் உய்த்துணர்ந்து கொண்டார். இவற்றை மாற்றியமைப்பது அருமை என்பது அவருக்குத் தெரியும். ஆனால் மாற்றியமைக்க முடியும் என்றும் அவர் உறுதியாக நம்பினார். எனினும் திரு மெர்ட்டன் உண்மை யிலேயே அவற்றை மாற்றியமைக்க எண்ணுகிறாரா என்றறிய அவர் ஆவல் கொண்டார். ஆகவே அவர் திரு மெர்ட்டனிடம் “தங்கள் சிறுவன் செல்வத்துட் பிறந்து செல்வ வாழ்வு வாழப் பழகியவன். எங்கள் வீட்டிலிருந்து கடுமை வாய்ந்த எங்கள் எளிய வாழ்க்கையை அவன் எப்படித் தாங்குவான்?” என்று கேட்டார். திரு மெர்ட்டன், “தாங்கள் கூறுவது உண்மையே. ஆனால் வேண்டுமென்றேதான் நான் அவன் சூழ்நிலையை மாற்ற எண்ணுகிறேன். வெள்ளை முதலாளிகளும் கறுப்பு அடிமை களுமே நிறைந்த ஜமெய்க்காவில் நான் விரும்பும் சூழ்நிலையிருக்க முடியாது.” ஆகவேதான் நான் அவனைக் கல்விக்காக இங்கிலாந்துக்குக் கொண்டு வந்திருக்கிறேன். அவனை இங்கும் பொதுப் பள்ளிக்கு அனுப்புவதனால் நான் விரும்பும் பயன் முற்றிலும் ஏற்படாது. குடும்ப வாழ்வின் சூழலிலேயே இந் நாட்டிலும் வகுப்பு வேறுபாட்டுப் பண்பாடும் வகுப்பு வேறுபாட்டுணர்ச்சியும் வேரூன்றி விடுகின்றன. பொதுப் பள்ளிகள் இவற்றை அகற்றத்தக்க ஆற்றலுடையவையாயில்லை. தங்கள் வசமிருந்து கல்வி பெற்ற ஹாரியிடம் நீங்கள் அவன் வகுப்பிற்கு உரிய அடிமை யுணர்ச்சியை முற்றிலும் அகற்றி, அவனுக்கு உயரிய வாழ்க்கைப் பண்பை ஊட்டியுள்ளீர்கள். எனவே என் சிறுவனுக்கும் அவன் வகுப்பிற்குரிய அடக்குமுறை உணர்ச்சியையும் ஆதிக்க மனப்பான்மையையும் அகற்றி, அதே உயர் பண்பை வளர்த்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. ஆகவே எவ்வகையான தட்டுதடங்கலும் மயக்க தயக்கமுமின்றி அவனைத் தங்கள் பொறுப்பில் விட்டுவிட ஒருப்பட்டுள்ளேன். நாங்கள் தங்கள் விருப்பப்படி எத்தகைய முறைகளையேனும் கையாண்டு அவனை வழிக்குக் கொண்டு வரக் கோருகிறேன்” என்றார். திரு மெர்ட்டனின் மனப்போக்கறிந்தபின் திருபார்லோ டாமியின் கல்விப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மறுநாளே டாமி ஹாரியுடன் திருபார்லோவின் இல்லம் வந்து சேர்ந்தான். அவன் பயிற்சி முறையும் மறுநாளே தொடங்கிற்று. 4. உழைப்பார்வம் முதல் நாளன்று காலை உணவு முடிந்ததும் திருபார்லோ சிறுவர் இருவரையும் தன் தோட்டத்துக்கு இட்டுச் சென்றார். அவரது முதற்பாடம் உழைப்பைப் பற்றியதாகவே இருந்தது. “மனிதருள் உணவு உண்ணாதவர் இல்லை. விலங்கு களிடையேயும் அப்படியே. உயிரினங்களுள் உணவுண்ணா தவை எதுவும் கிடையாது. பிற உயிரினங்கள் யாவும் தம் உணவைத் தாமே தேடிக் கொள்ளப் பழகியுள்ளன. ஆனால் மனிதரிடையே பலர் இப் பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர். எனினும் மனிதரிடையேயும் உழைப்பவர் உழைப்பது எல்லாம் பெரிதும் உணவுக்காகவே என்பதை மறக்கக் கூடாது.” பிற உயிரினங்களுக்கு உணவு ஒன்றே வாழ்க்கையின் பெருந்தேவை. மனிதனுக்கும் உணவே அடிப்படைத் தேவையாயிருக்கிறது. ஆனால் உணவல்லாத பல புதிய தேவைகள் மனிதனுக்கு உண்டு. உடை, உணவு சமைத்தல், வீடுகட்டல், அறிவு வளர்த்தல் முதலிய பலவும் இத்தகையவை. இத்தேவைகளுக்கும் அவன் உழைக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் மனிதரிடையே பலவகை உழைப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வுழைப்புக்களை மனிதர் ஒருவர்க்கொருவர் பரிமாறிக் கொள்வதால்தான் பலவகை உழைப்பாளிகள் ஏற்பட்டுள்ளனர். இருந்த போதிலும் மனிதன் அடிப்படைத் தேவையும் அடிப்படை உழைப்பும் இன்னும் உணவாகவும் உணவுக்கான உழைப்பாகிய உழவாகவுமே இயங்குகின்றது. அடிப்படைத் தேவையாகிய உணவு ஒன்றுதான் யாவருக்கும் இன்றியமையாத பொதுத் தேவை. அது போல அடிப்படை உழைப்பாகிய உழவும் எல்லா மனிதருக்கும் இன்றியமையாத உழைப்பு. உணவில்லாமல் உடல் வளர்ச்சி யடைய முடியாது. அதுபோலவே, இவ்அடிப்படை உழைப்பு இல்லாமல் உடல் நலம் ஏற்படாது. உடலின் உறுப்புக்கள் எல்லாவற்றின் ஒத்த வளர்ச்சிக்கும் உழவு அல்லது தோட்டத் தொழிலைப் போல் சிறந்த உழைப்பு வேறு எதுவும் இல்லை. வயல்களில் பயிர் வகைகளை உண்டுபண்ணும் உழவரா யிராதவருக்காகவே காய்கறிகனிகள், மலர்கள் ஆகியவற்றை உண்டுபண்ணும் தொழில் தோட்ட வாய்ப்பை இயற்கை அளித்துள்ளது எனலாம். எனவே தத்தம் உணவுக்காக உழைக்கும் திறமையை எல்லாரும் பெற்றிருக்க வேண்டும். அது அவர்கள் வாழ்க்கைப் பயிற்சி அல்லது கல்வியின் ஒரு பகுதி.” உழைப்பையும் உழவையும் பற்றிய இவ் அறிவுரை களுக்குப் பின் ஆசிரியர் டாமியைநோக்கி “நானும் என் மாணவன் ஹாரியும் எங்கள் சிறுபங்குக்கு நாள்தோறும் காலையில் நிலம் பண்படுத்த உழைக்கிறோம். அதற்காக இத்தோட்டத்தில் எனக்கெனத் தனி நிலப்பகுதி வகுக்கப்பட்டிருக்கிறது. ஹாரிக்கும் அப்படியே, உனக்கும் இன்று ஒரு பகுதி வகுத்துத் தருகிறேன். நாங்கள் உழைக்கும் நேரத்தை நீயும் வீணாக்காமல், நீயும் அதில் உழைக்கப் பழகிக்கொள்ளலாம். இதன் மூலம் எங்களைப்போல் நீயும் தனக்கும் பிறருக்கும் பயன்படும் உழைப்புடையவனாகலாம் அல்லவா?” என்றார். டாமி பயன்படும் உழைப்பு எதனையும் நான் செய்ய வேண்டியதுமில்லை, செய்யப் போவதுமில்லை. நான் உயர் குடியாளன். எனக்கு நிறை செல்வமுண்டு. நான் ஏன் குடியான வனைப்போல ஏரும் கலப்பையும் பிடிக்கவேண்டும்? ஆகவே எனக்கு நீங்கள் நிலப்பகுதி வகுக்க வேண்டாம். திரு பார்லோ அது உன் விருப்பம். நாங்கள் வேலை செய்யும் நேரத்தை நீ வேறு எவ்வழியிலாவது போக்கிக் கொள்ளலாம். திரு பார்லோவும் ஹாரியும் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் தம் பாத்தியை வெட்டிச் செப்பனிட்டுப் பயிர் செய்தனர். டாமி கம்புங் குச்சும் ஒடித்தும் முட்டைக் கட்டிக் கொண்டிருந்தும் அந்நேரத்தை வீண் போக்கினான். வேலை முடிந்ததும் திரு பார்லோ ஹாரியைமட்டும் இட்டுக்கொண்டு தோட்டத்தின் ஒரு கோடியிலிருந்த வேனில் அருந்தகத்திற்குச் சென்றார். தன்னை அவர் அழைக்காவிடினும் டாமி அவர்களைப் பின் தொடர்ந்தான். திரு பார்லோவின் துணையாள் அருந்தகத்தில் மேடையிட்டு இரு நாற்காலிகள் போட்டிருந்தார். இரு தட்டங்களில் இனிய பழவகைகள் வைத்திருந்தன. இரு குவளைகளில் நறுந் தேம்பாலும் மற்றும் இருகுவளைகளில் நறும்புனலும் இருந்தன. டாமியைக் கவனிக்காமலே ஆசிரியர் தாம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஹாரியை மற்றதில் அமரும்படி கூறினார். இருவரும் பேசிக் கொண்டே பழங்களை அருந்தித் தேம்பால் பருகினர். டாமிக்கு நாற்காலியும் இட்டிருக்கவில்லை. அவன் நின்று கொண்டிருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி அவனுக்குப் பழங்களும் வைக்கப்பட வில்லை. அவனிடம் யாரும் பேசவோ, உண்ணும்படி அழைக்கவோ செய்யவில்லை. டாமியின் வாழ்க்கையில் அவனை வேறு ஒருவர் புறக்கணித்து நடத்தியது இது தான் முதல்தடவை. அவன் கடுஞ் சினங்கொண்டு உறுத்துப் பார்த்தான். பற்களை நெறநெறவென்று கடித்துக் கொண்டான். கைகால்களை நிலத்தில் ஓங்கியறைந்து பார்த்தான். ஆசிரியர் கவனம் அவன் பக்கம் செல்லவேயில்லை. அதன்பின் அவன் வெப்பமும் புழுக்கமும் தாங்காமல் விம்மிவிம்மி அழுதான். ஆசிரியர் ‘என்னசெய்தி, டாமி! ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார். டாமி யாதொரு விடையும் சொல்லாமல் மேலும் அழுதான். ஆசிரியர் ‘உனக்கு விடைதர மனமில்லாவிட்டால் ஒன்றும் பேச வேண்டாம். இங்கே பேசித் தீரவேண்டும் என்று யாரும் கட்டாயப் படுத்துவாரில்லை’ என்று கூறி எழுந்து சென்றார். ஹாரி சற்றுப் பின்தங்கி டாமியை இரக்கத்துடன் பார்த்து விட்டுத் தானும் போய்விட்டான். முற்பகல் முழுவதும் ஆசிரியரும் ஹாரியும் நூலகம் சென்று பல சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருந்தனர். டாமியும் உடன் சென்றிருந்தான். அவ்வாசிரியரைவிட்டு வீட்டுக்கே சென்று விடலாமா என்று கூட எண்ணினான். ஆனால் என்றும் தன்னிடம் கடுமையாகப் பேசாத தன் தந்தை வரும்போது “நீ ஆசிரியரிடம் நல்ல பெயர்வாங்கி வந்தால்தான் உன்னை ஐமெய்க்காவிற்கு இட்டுச் செல்ல முடியும். அல்லது உன்னை விட்டுவிட்டு நானும் உன் தாயாரும் மட்டும் சென்றுவிடுவோம்” என்று எச்சரித்தது அவன் நினைவுக்கு வந்தது. ஆகவே உச்சி வேளைவரை எப்படியும் கழித்துவிடுவது என்று பொறுத்திருந்தான். உச்சி வேளையிலும் தனக்கு உணவில்லாமல் மற்ற இருவருமே உண்பது காண அவன் சீற்றம் எல்லை மீறியது “எனக்கு மட்டும் ஏன் உண்ணவில்லை” என்று கேட்டான். ‘நீ செல்வப் பிள்ளை. உயர்குடிப்பிள்ளை. நீ வேலை செய்ய முடியாது. நாங்கள் ஏழைகள். உழைத்து உண்கிறோம். சோம்பேறிகளுக்குக் கொடுக்க எங்களிடம் உணவு ஏது?’ என்று ஆசிரியர் அமைதியாக விடையளித்தார். டாமிக்கு இப்போது உண்மையிலேயே நிரம்பப் பசி. கோபமும் தாபமும் வேறு அவன் உள்ளத்தைக் கொதிக்க வைத்தது. அவன் கண்கள் அழுதழுது சிவந்திருந்தன. ஹாரிக்கு அவன் துன்பத்தைத் தாங்க முடியவில்லை. ஆசிரியரின் கடுமுறையையும் அவன் முழுதும் உணர்ந்து கொள்ளவில்லை. ஆகவே இரக்கத்துடன் ஆசிரியரை நோக்கி ‘ஐய, என் பங்கு உணவை நான் என் மனம் போல் யாருக்கும் கொடுக்கலாம் அல்லவா?” என்று கேட்டான். “ஆம், உன் பங்கு உணவு உன்னுடையதே. நீ அதை எதுவும் செய்யலாம்’ என்றார் அவர். ‘சரி, இன்று நான் என்பங்கு முழுவதையும் பட்டினி கிடக்கும் என் தோழன் டாமிக்குக் கொடுக்கிறேன்’ என்றான். பசியார்வத்துடனும் ஆவலுடனும் டாமி அதைப் பெற்றுக் கொள்ள இருந்தான். அதற்குள் ஆசிரியர் “அப்பனே, உழைப்ப தனாலேயே உயர் குடிமக்களுக்கு இழிவு வந்துவிடும் என்று கூறினாயே உழைப்பவரிடம் உணவை இரந்து உண்பது அதனிலும் இழிவல்லவா?” என்றார். டாமி உணவைத் தொடவில்லை. முன்னிலும் மிகுதியாக அழுதான். ‘நான் கொடுத்த உணவை நான் மீண்டும் உண்ண விரும்பவில்லை’ என்று ஹாரி எழுந்து விட்டான். ‘என் மாணவன் உண்ணாமல் நானும் உண்ண விரும்ப வில்லை’ என்று ஆசிரியர் எழுந்து விட்டார். ஆசிரியரும் ஹாரியும் தன்னிடம் கொடுமையுடையவர் அல்லர் என்பதை டாமி ஒரு நொடியில் உணர்ந்து கொண் டான். தனக்காக அவ்விருவரும் உணவு மறுத்துவிட்டனர் என்பதையும் உணர்ந்தான். ஆசிரியர் வீட்டில் ஒரு ஒழுங்கு முறை உண்டென்றும் அதன்படி தான் குற்றம் செய்ததற்காக அனைவரும் பட்டினி கிடக்கின்றனர் என்றும் அவனுக்குத் தெளிவாயிற்று. அவன் ஆசிரியரிடம் பணிந்து “இன்றைய குற்றம் முழுவதும் என்னுடையது என்னை மன்னித்து இருவரும் உண்ணும்படி கோருகிறேன். நாளை முதல் என் பங்கு வேலையை நான் கட்டாயம் செய்கிறேன்” என்றான். ஆசிரியர் மனமுவந்து “அப்படியானால் ஹாரியும் நானும் எங்கள் உணவில் ஒவ்வொரு பங்கு உனக்குத் தருகிறோம். உண்மையில் உன்னைப் பட்டினியிட்டு உண்பதைவிட உன்னுடன் பகிர்ந்துண்பதே எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார். மூவரும் உண்டு மகிழ்ந்தனர். பின் அனைவரும் நூலகம் சென்றனர். 5. கதை வாசிப்பு- செல்வனும் கூடை முடைபவனும் நூலகத்தில் சென்றவுடன் ஆசிரியர் மாணவரிருவரையும் வீற்றிருக்கச் செய்தபின் தன்னிடமிருந்த ஒரு கதைச் சுவடியை டாமியினிடம் கொடுத்து “இதிலிருந்து ஒரு கதை வாசி. இருவரும் கேட்டு இன்புறுகிறோம்” என்றார். டாமி “எனக்கு எழுத வாசிக்க வராது” என்றான். ஆசிரியர் “அப்படியானால், நீ வாங்கி வாசி, ஹாரி” என்றார். ஹாரி சுவடியை வாங்கி வாசித்தான். இருவரும் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் படித்த கதை ‘செல்வனும் கூடை முடைபவனும்’ என்பது அது வருமாறு: ஒரு ஊரில் ஒரு பெருஞ் செல்வன் இருந்தான். அவனுக்குப் பெரிய மாடமாளிகையும் அளவற்ற நிலபுலச் செல்வமும் உண்டு. அவன் இன்ப வாழ்விலும் குடியிலும் மயங்கிக் கிடந்தான். குடியானவர்களைக் கொடுமைப்படுத்திப் பொருள் பறித்தும் வந்தான். அவன் சோம்பல் வாழ்வாலும் மட்டற்ற இன்பத்தாலும் அவன் எப்போதும் நோய்வாய்ப்பட்ட வனாயிருந்தான். அத்துடன் அவன் கொடுமைக்குட்பட்ட மக்கள் வெறுப்பாலும் கிளர்ச்சிகளாலும் அவன் ஓயாது தொல்லைப்பட்டுச் சுடு மூஞ்சித்தன முடையவனாகவும் இருந்தான். அவன் மாளிகையை யடுத்த வெளியிடத்தில் சூரல் புதரருகில் சிறு மூங்கிற் குடிசையில் ஓர் ஏழை முதுமகன் வாழ்ந்து வந்தான். அவன் குடும்பமேயில்லாமல் தனியாய் வாழ்ந்த போதிலும், சூரல் வார்ந்து கூடை முடைந்து வரும் வருவாயில் தானும் உண்டு. தன்னையொத்தவர்க்கும் உதவி செய்து கவலை யற்று வாழ்ந்துவந்தான். அவன் இனிய பாடல்கள் பாடிக் கொண்டு இன்பமாய்த் தொழில் செய்வது வழக்கம். அவனைச் சிறுவர் முதல் பெரியவர் வரை ஊர்மக்கள் யாவருமே நேசித்தனர். செல்வன் ஒருநாள் தன் சிவிகையில் ஏறிச் செல்லு கையில் கூடை முடைபவன் குடிலருகாகச் சென்றான். கூடை முடைபவன் தன் வாயிலில் பாடிக் கொண்டே கவலை யற்றிருப்பது கண்டான். பஞ்சணை மெத்தையிலும் சிவிகை யிலும் அமர்ந்தும் உறக்கம்வராது கவலைப்படும் தன் வாழ்வை அவன் எண்ணிப் பார்த்தான். தன்னிடமில்லாத அமைதி இவ் வேழையிடமிருப்பது காண அவனுக்குப் பொறுக்கவில்லை. தன் மாளிகையைச் சார்ந்த புறவெளியில் விதையாமல் பயிரிடாமல் காடாய் வளரும் சூரல்களே அவன் கவலையற்ற வாழ்வுக்குக் காரணம் என்பதை அவன் எண்ணியபோது அவன் சீற்றம் இன்னும் வளர்ந்தது. அன்றிரவே அவன் தன் பணியாட்களை ஏவி அச்சூரல் காட்டில் தீயிடும்படி கூறினான். நெருங்கி வளர்ந்திருந்த சூரல்கள் ஒன்றையொன்று பற்றி எரியவே, தீ எங்கும் பரவிக் கூடை முடைபவனுக்கு வேண்டும் சூரல் காட்டை மட்டு மின்றி அதனை அடுத்த அவன் குடிலையும் எரித்துச் சாம்பராக்கிற்று. அவன் பிழைத்து வெளியேறுவதே அரும்பாடாயிற்று. பிழைத்துவந்தும் கூடை முடைவோனுக்கு ஏன் பிழைத்து வந்தோம் என்றாயிற்று. ஏனென்றால் அவன் பிழைப்புக்கு மூலப்பொருளான சூரல் காடு முழுவதும் சாம்பராய்ப் போயிற்று. வாழ்க்கைக்கு வகையற்ற நிலையில் அவன் அவ்வூர் ஆட்சித் தலைவனிடம் சென்று முறையிட்டான். ஆட்சித் தலைவன் செல்வனை வருவித்து உசாவினான். அவனுக்கும் செல்வன் செயல் மன்னிக்க முடியாத பெருங் குற்றமாகவே பட்டது. அவனைத் தண்டிக்குமுன் அவன் குற்றத்தை அவன் மனதறிய விளக்கி அவனுக்கு ஒரு படிப்பினை கற்பிக்க வேண்டுமென்று எண்ணினான். இந்நோக்கத்துடன் ஆட்சித் தலைவன் இருவரையும் ஒரு மரக்கலத்திலிட்டனுப்புவித்துத் தொலை தூரத் தீவொன்றில் விட்டுவரும்படி கட்டளையிட்டான். அத்தீவில் நாகரிகமற்ற முரட்டு வகுப்பினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் செல்வனையும் கூடை முடைவோனையும் அணுகிச் சூழ்ந்தனர். அவர்கள் முரட்டுத் தோற்றத்தையும் ஆரவாரத்தையும் கண்டு அவர்கள் என்ன செய்வரோ என்று செல்வன் அஞ்சினான். தீவின் மக்களில் சிலர் நெருங்கி வந்து அவர்களை ஏற இறங்கப் பார்த்தனர். ஆனால் அவர்கள் பேசியதைப் புது வரவாளர் இருவரும் உணர முடியவில்லை. அவர்கள் பேசின மொழி விளங்காப் புதுமொழியாயிருந்தது. புதுவரவாளர் பலபல பேசியும் அவர்களும் உணர முடியவில்லை. இதற்கிடையில் அவர்கள் செல்வன் ஆடையணிமணிகளை அவனிடமிருந்து பறித்து அவன்மீது தம் முரட்டு இயல்பைக் காட்டலாயினர். கூடைமுடைவோன் தன் கைச் சைகைகளாலும் அடையாளங்களாலும் தாங்கள் அவர்கட்கு வேலை செய்வ தாகவும், தங்கட்கு உணவு வேண்டுமென்றும் தெரிவித்தான். அதுகண்ட அவர்கள் கரடுமுரடான உணவுப் பொருள்களைக் கொடுத்தனர். கூடைமுடைவோன் எல்லா உணவுகளும் பழகி யிருந்ததனால் அவற்றை உண்டு பசியாறினான். செல்வன் பசியினால் வேண்டா வெறுப்புடன் ஒரு சிறிது அயின்றான். அதன்பின் அவர்கள் அவ்விருவரையும் காட்டுப்புறத்திற்கு இட்டுச் சென்று அங்கே குவிந்துகிடக்கும் கட்டைகளை ஊருக்குக் கொண்டுவரும்படி கட்டளையிட்டனர். கூடை முடைவோன் திண்ணிய உடலுடையவனாகையால் அவர்கள் கொடுத்த தொழிலை அவர்களும் வியக்குமாறு விரைந்து செய்தான். செல்வனோ ஒரு கட்டையைக் கூடத் தூக்க முடியாது வேலைசெய்வதாகப் பாசாங்கு செய்தான். எனவே அம்முரட்டு மக்கள் மிகுதியான நல்லுணவைக் கூடை முடைவோனுக்கும், சிறிதளவேயுள்ள முரட்டுணவைச் செல்வனுக்கும் கொடுத்தனர். ஆனால் கூடை முடைவோன் தன்னுணவில் செல்வனுக்குப் பங்கு கொடுத்து ஆதரித்தான். ஒரு நாள் கீழேகிடந்த செல்வனின் பழந் தொப்பி யொன்றை அத்தீவின் இளைஞன் ஒருவன் கண்டெடுத்துப் பெருமையுடன் தலையில் வைத்துச் செல்வதைக் கூடை முடைவோன் கண்டான். உடனே அவனுக்கு ஒரு புதிய எண்ணம் உண்டாயிற்று. அருகிலிருந்த சூரல்களையும் புல்களையும் பார்த்து ஈர்ந்து அவன் ஓர் அழகிய குல்லாய்முடைந்தான். மறுதடவை இளைஞன் அப்பக்கம் வந்தபோது அவன் அவனை அருகிலழைத்து அவன் தலையில் அதை மாட்டி வைத்தான். இளைஞன், அதனால் அடைந்த மகிழ்ச்சி எல்லையில்லாதது. ஊரில் அனைவரிடமும் சென்று அவன் அதைக் காட்டி மகிழ்ந்தான். அது முதல் இளைஞரும் பெண்களும், இளையோரும் முதியோரும் ஒவ்வொருவராக வந்து குல்லாய் கேட்டனர். கூடை முடைவோனுக்கு அதுவே தொழிலாகப் போய்விட்டது. அவனும் வகைவகையான தலையணிகள், அரைக்கச்சைகள், காலணிகள் செய்து கொடுத்து வந்தான். இவற்றால் மகிழ்ந்த தீவின் மக்கள் செல்வனுக்கு மட்டும் கட்டை சுமக்கும் வேலை தந்து; அவனைக் கூடைத் தொழிலிலேயே விட்டு ஆதரித்தனர். அவனுக்கு உணவு மட்டுமன்றி அவ்வூரில் கிடைக்கும் எல்லாப் பொருள்களையும் தந்தனர். சில நாட்களில் ஆட்சித் தலைவன் கப்பலையனுப்பி அவர்களை மீட்டுக் கொணர்வித்தான். செல்வன் இப்போது தன் ஏலாச் சிறுமையையும் கூடை முடைவோன் திறமை சான்ற நற்பணிப் பண்பினையும் உணர்ந்து ஆட்சித் தலைவனிடம் மன்னிப்புக் கோரினான். ஆனால் தலைவன் அவனிடம் கடுமையாக, “நீ நல்லறிவு கொண்டதற்கு மகிழ்ச்சியே. ஆனால் உன் செல்வ இறுமாப்புக்கு நீ இன்னும் தண்டனை பெற்றாக வேண்டும். உன் செல்வ முழுவதையும் இந் நல்லானுக்கும் அரசியலுக்கும் எடுத்துக் கொள்வதே சிறந்த தண்டனையாகும். ஆயினும் நீ உன் செல்வத்திற் பாதியை இவனுக்குக் கொடுத்து மறுபாதியை நல்லுணர்வுடன் பேணிக் கொள்ளும்படி பணிக்கிறேன்” என்றான். கூடைமுடைபவனோ ‘ஐயன்மீர்! செல்வன் அறியாமற் செய்த பிழைக்கு அவன் தீவில் அடைந்த தண்டனையே போது மானது. அத்துடன் எனக்கு அவன் என்சூரல் காட்டுக்கு இணையாகச் சூரல் வளரும் வேறு பகுதி கொடுத்தால் போதுமானது. அவன் செல்வத்தை அவனே என் பேரால் துய்த்து நுகரட்டும்’ என்றான். செல்வன் அவன் பெருந்தன்மையைக் கண்டு முற்றிலும் மனமாறித் ‘தலைவன் தண்டனையாக உனக்கு மாற்றிய பாதிச் செல்வம் மட்டுமல்ல, முழுச் செல்வத்தையுமே என்னுடனிருந்து ஆண்டு நடத்த நான் என் தோழனாகிய இம் முதியோனை அழைக்கிறேன். என் செல்வம் அப்போது ஏழைகள் யாவருக்கும் நற்பயன் தந்து எனக்கும் புகழ்தரும்’ என்றான். முதியவன் உதவியால் செல்வன் பண்பு மாறி ஏழை கட்குப் பல உதவிகள் செய்து வாழ்ந்தான். கதை வாசித்து முடிந்தது. கதையை டாமி இமை கொட்டாது ஆர்வத்துடன் கேட்டிருந்தான். முடிவில் அவன் ஆசிரியரை நோக்கி “ஏடுகளில் இவ்வளவு இன்பகரமான கதைகள் இருக்குமென்று இதுவரை எனக்குத் தெரியாது. இக் கதையும் இதில்வரும் கூடைமுடைவோன் குணமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் செல்வன் கீழிருந்து முழுச் செல்வத்தையும் மேற்பார்ப்பதை விட, தனக்கென அவன் செல்வத்திற் பாதியைப் பெற்றிருந்தால் அது அறிவுடைய செயலாயிருக்கும்” என்றான். டாமி புறத்தே வகுப்பு இறுமாப்புக்களால் கெட்டாலும் அகத்தே ஆராய்ச்சிப் பண்புடையவனாகவே இருக்கிறான் என்றும்; அவன் வாழ்க்கை யார்வம் அற்றவனல்லன் என்றும் கண்டு ஆசிரியர் உள்ளூர மகிழ்ச்சியடைந்தார். பின் அவர் “கதை பற்றிய உன் கருத்துக்கள் பொதுவாக ஏற்கத்தக்கவையே. ஆனால் இறுதியில் நீ கூறியது முற்றிலும் சரியல்ல. கூடைமுடை வோன் விரும்பியது செல்வத்தை யல்ல; பிறருக்குச் செல்வத்தைப் பயன்படுத்துவதையே. ஆகவே தனக்கெனப் பெறும் செல்வத்துக்கும் தன் வழியில் விட்ட செல்வத்துக்கும் அவனைப் போன்றவர்க்கு வேற்றுமை இராது. எடுத்துக்காட்டாக உனக்கென உனக்குச் செல்வம் இருப்பதற்கும் உன் தந்தையின் செல்வத்தை நீ நுகர்வதற்கும் என்ன வேற்றுமை இருக்க முடியும்?” என்றார். 6. டாமியின் வாசிப்பார்வம் ஆசிரியரும் மாணவரிருவரும் நாள்தோறும் தோட்டத் தில் வேலை செய்து களைப்படைந்தபின் நூலகம் வருவது வழக்கம். இங்கே வந்தபின் ஆசிரியர் உத்தரவுப்படி ஹாரி ஒவ்வொரு நாளும் ஒரு கதை வாசிப்பான். டாமி வருமுன்பே அவன் நன்கு எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்தான். அத்துடன் அவன் நாள்தோறும் அதில் முன்னேற்றங் காட்டியும் வந்தான். எழுத்துக்களை அவன் திருத்தமாக ஒலித்து வந்ததுடன், சொற்களைச் சேர்க்க வேண்டிய இடங்களில் சேர்த்தும், பிரித்து வாசிக்க வேண்டிய இடங்களில் பிரித்தும் வாசிக்கப் பழகியிருந்தான். இத்துடன் நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்தியும், பொருளுணர்ந்து கதையிலீடுபட்டு, வேண்டிய இடங்களில் தொனியை உயர்த்தியும் தாழ்த்தியும், உணர்ச்சிக்கனிவுடன் படித்தான். இதனால் கேட்போருக்கு ஓசையின்பமும் கதையின்பமும் ஒருங்கே ஏற்பட்டன. டாமி தொடக்கத்திலிருந்தே கதை கேட்பதில் விருப்பம் காட்டினான். ஹாரியின் வாசிப்பு முறை இவ்விருப்பத்தைப் பெருக்கி அவனைப் பதுமை போலிருந்து கதையிலீடுபடச் செய்தது. நாள்தோறும் கதை வாசிக்கும் நேரம் எப்போது வரும், எப்போது வரும் என்று அவனை அதே ஆர்வத்துடன் எதிர் பார்த்திருக்கத் தொடங்கினான். ஆசிரியர் அவனது இவ் வார்வத்தைக் கண்டும் காணாதது போலிருந்து வந்தார். ஹாரி தன் வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சில நாளைக் கொருதரம் ஓய்வு பெற்றுக் கொண்டு தன் வீடு சென்று சில நாள் இருந்துவருவது வழக்கம். டாமி வந்தபின் சில நாட்களில் இங்ஙனம் அவன் ஓய்வுபெற்று வீடு சென்றான். ஆசிரியருடன் டாமி மட்டுமே இருந்தான். மறுநாள் வழக்கம்போல் தோட்டவேலை முடிந்து இருவரும் நூலகம் வந்து சேர்ந்தனர். டாமி தன் கதை கேட்கும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. கொஞ்ச நேரம் வாளா இருந்தபின் அவன் ஆசிரியரிடம், “இன்று கதை வாசிக்க ஹாரி இல்லை. எனக்குக் கதை வாசிக்கத் தெரியாது. நீங்களே ஒரு கதை வாசித்துக் காட்டுவீர்களா?” என்றான். ஆனால் ஆசிரியரோ “தானாக வாசிக்க முயலாதவர்களுக்கு நான் வாசிப்பதில்லை. மேலும் எனக்கு வேறு வேலையிருக்கிறது” என்று கூறிவிட்டார். ஹாரிக்கு நூலகத்தில் நேரமும் போகவில்லை. என்றும் விதிர்விதிர்ப்புடன் எதிர்பார்த்திருக்கும் அந்நன்னேரத்தை அவன் கழிப்பதே அருமையாய்விட்டது. ‘நாம் கதை கேட்பதில் மட்டும் ஈடுபட்டிருந்து அதை வாசிக்கப் பழகாமலிருந்தது தவறு. பழகியிருந்தால் இப்போது யாரையும் எதிர்பாராமல் விரும்பிய கதையை வாசிக்கலாமே’ என்று அவன் எண்ணினான். ஹாரியின் ஓய்வு நாட்கள் ஐந்தும் கழிந்து அவன் வந்தபின் மீண்டும் கதை வாசிப்புத் தொடங்கிற்று. டாமி இப்போதும் முன்போலவே ஆர்வத்துடன் கதை கேட்டு மகிழ்ந்தான். ஆனால் இப்போது அவன் அத்துடன் நிற்கவில்லை. தன் விளையாட்டு நேரத்தில் அவன் ஹாரியிடம் நயமாக “ஹாரி, எனக்கு உன்னைப் போல் கதை வாசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறது. ஆகவே நீ அதை எப்படிக் கற்றாய் என்று அறிய விரும்புகிறேன்” என்றான். ஹாரி இது என்ன பெருத்த கேள்வி! நான் இங்கே வருவதே படிப்பதற்குத் தானே. ஆசிரியரிடமும் முதலிலிருந்தே எழுத்தும் வாசிப்பும் கற்றுக் கொண்டேன். டாமி ஆம், இப்போது எனக்கு நினைவு வருகிறது. நான் வந்தவுடன் ஆசிரியர் நீ எழுத வாசிக்கப் படிக்க வேண்டாமா?’ என்று கேட்டார். ஆனால் தொழிலாளர் வகுப்பினர்தான் வேலை பழக வேண்டியது என்று நான் எண்ணியது போலவே, கணக்கர் வகுப்புத்தான் வாசிக்கவும் எழுதவும் பழகிக் கொள்ள வேண்டும் என்று கருதி அங்ஙனம் கூறிவிட்டேன். நான் செய்தது எவ்வளவு தவறு என்பதை இப்போது கண்டு கொண்டேன். உண்மையில் பல வகையிலும் ஆசிரியர் நன் மதிப்பையும் விருப்பத்தையும் பெற நான் தவறிவிட்டேன். இப்போது அவரிடம் எழுத்துக் கற்றுக் கொடுக்கும்படி கேட்க எனக்கு வெட்கமாயிருக்கிறது. அவர் என்மீது மதிப்புக்கொண்டு விருப்பம் காட்டும்படி ஏதாவது ஒரு செயல் செய்து அவரை மகிழ்விக்க எண்ணுகிறேன். நம் ஓய்வு நேரங்களில் நீ சிறிது கற்றுக் கொடுத்தால், நான் விரைவில் கற்றுக்கொள்வேன். நற்குணமுடைய ஹாரி இதற்கு முற்றிலும் இணங்கி னான். அவன் பொறுமையாகச் சிறுகச் சிறுகக் கற்றுக் கொடுத்தான். கற்றுக் கொடுப்பதிலும் ஹாரிக்கு இயற்கை யான ஆர்வம் இருந்தது. டாமியும் ஆவலுடன் கற்று விரைந்து முன்னேறினான். சில நாட்களுக்குள் அவன் தானாகவே ஒரு புத்தகத்தின் ஒரு பக்கத்தை வாசித்துப் பார்த்துக் கொண்டான். அதன் பின் முன் கூட்டி ஹாரியிடம் தான் அன்று வாசிக்க விரும்புவதாகக் கூறிவிட்டு, ஆசிரியர் ஹாரியை வாசிக்கச் சொல்லுமுன் அவரை வணங்கி “ஐயா, வாசிப்பில் வெறுப்புக் காட்டியதற்குச் சில நாளாக வருந்துகிறேன். அத்துடன் ஹாரியின் உதவியால் நானே வருந்திக் கற்று வாசிக்கப் பழகிக் கொண்டேன். இன்று நானே முயன்று கதை வாசிக்கலாமா?” என்று கேட்டான். ஆசிரியர் முக மலர்ச்சியுடன் “ஓ, வாசிக்கலாம்” என்றார். எடுத்த எடுப்பிலேயே டாமி தட்டுத் தடங்கலில்லாமல் வாசிப்பது கண்டு ஆசிரியரே வியப்படைந்தார். அவன் வாசித்த கதை ‘இரு நாய்களின் வரலாறு’ என்பது. 7. இருநாய்கள் கதை ஓர் ஏழைக் குடியானவனிடம் ஒரு நாய் இருந்தது. அதன் குட்டிகள் இரண்டில் ஒன்றை அவன் தானே வைத்துக் கொண்டான். மற்றதை அவன் நகரத்தில் வாழ்ந்த தன் பண்ணைத் தலைவருக்குப் பரிசளித்தான். குடியானவனிடத்திலிருந்த நாய் ‘கீப்பர்’ என்றும், செல்வனிடமிருந்த நாய் ‘ஜௌலர்’ என்றும் பெயரிடப்பட்டன. இடவாய்ப்புக்குத் தக்கபடி ஜௌலர் குறைவறத் தின்று கொழுத்து அழகு வாய்ந்ததாயிருந்தது. எல்லாரையும் தன் நடிப்புக்களாலும் கரண வேடிக்கைகளாலும் அது மகிழ்ச்சியூட்டியது. கீப்பரோ ஏழையாக வளர்ந்து குச்சுப் போன்ற உடலும் ஒட்டிய வயிறும் முரட்டுக் குணமும் உடையதாயிருந்தது. ஜௌலர் நகரிலிருந்ததனாலும், இன்ப வாழ்வே வாழ்ந்ததனாலும், பெரும்பாலும் கோழையாயிருந்தது. கீப்பரோ ஓநாய்களிடையேயிருந்து ஆடுமாடுகளைப் பாதுகாத்தும் அவற்றுடன் போரிட்டும் தலைவனையும் கால்நடைகளையும் காத்தும் ஒப்பற்ற வீரமுடையதாயிருந்தது. பண்ணைத் தலைவன் தன் நாட்டுப்புறப் பண்ணை களைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தபோது ஜௌலரும் உடன் வந்தது. ஜௌலரின் உடன் பிறந்த நாயாயிருந்தும் கீப்பர் அதைப்போல அழகாயும் கவர்ச்சியுடையதாயும் இல்லை என்று செல்வன் ஏளனம் பேசிக் கொண்டிருந்தான். ஜௌலரும் கீப்பரை ஏளனமாகக் கருதித் தொலைவில் நின்றிருந்தது. ஆனால் ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி செல்வன் கருத்தை முற்றிலும் மாற்றியது. காட்டுப் பாதையில் இரு நாய்களுடனும் செல்வன் போய்க் கொண்டிருந்தான். திடுமென ஒரு புதரினின்றும் ஒரு ஓநாய் வெளி வந்து அவன் மீது பாய்ந்தது. அதன் செங்கண்களையும் மயிரடர்ந்த உடலையும் கண்டதுமே செல்வனுக்கு உயிர் உடலில் இல்லை. அவன் அரவம் கேட்டதே முன் சென்ற ஜௌலர் பின்னோடியது கண்டு அவனுக்கு மேலும் திகில் ஏற்பட்டது. ஆனால் ஓநாய் அவன் மேல் விழுமுன் பின்னால் தொலைவில் வந்து கொண்டிருந்த கீப்பர் பாய்ந்தோடிவந்து ஓநாயின்மீது தாக்கிற்று. நாய் இனத்து நாட்டு விலங்கும் காட்டு விலங்கும் நெடுநேரம் மூர்க்கமாகப் போராடின. ஓநாயின் முரட்டுத் தாக்குதலைக் கீப்பர் நெடுநேரம் திறமையாகத் தட்டிக் கழித்துக் கொண்டு அதனை நாற்புறமும் திக்கு முக்காடச் செய்தது. இறுதியில் அது சளைத்தது கவனித்து அதன் தொண்டையைக் கடித்துக் கொன்று வீழ்த்தியது. ஓநாயினால் ஏற்பட்ட காயங்களுடன், ஓநாயின் குருதி யுடன் தன் குருதியும் தோய்ந்து அம் முரட்டு நாய் இறுமாப் புடன் ஓநாய் உடல்மீது கால்வைத்து நின்று செல்வனை நோக்கி வால் குழைத்தது. அதன் நயநாகரிக மற்ற தோற்றத்தை இப்போது செல்வன் வெறுக்கவில்லை. அதுவே தன் உயிரைக் காத்தளித்த தோழன் என்பதை அவன் உணர்ந்தான். அதுமுதல் அவன் அதனை வளர்த்த குடியானவனுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் தரும் நிலபுலன் கொடுத்து அந்நாயையும் நன்கு வளர்க்கும்படி ஊக்குவித்தான். 8. குடிப்பெருமையின் குலைவு டாமி மெர்ட்டன் பார்லோவின் இல்லத்தின் புதிய சூழ்நிலையில் மிக விரைவாக முன்னேறி வந்தான். அவன் இயற்கையிலேயே கெட்ட பையனல்லன். உண்மையில் எவரும் இயற்கையில் கெட்டவராய் இருப்பதுமில்லை. பிள்ளைகள் நல்லவராவதும் கெட்டவராவதும் வீட்டுச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டையடுத்த அயல் சூழல் நிலைகளின் காரணமாகவுமே. டாமிக்கு அவன் செல்வக் குடியும் அவன் உயர் வகுப்பும் பல செயற்கைச் சூழ்நிலைகளை உண்டு பண்ணிக் கெட்ட கருத்துக்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை உண்டு பண்ணியிருந்தது. ‘பழக்கமென்பது பின்பிறந்த இயற்கை’1 என்ற பழமொழிக்கிணங்க, அவன் பழக்கவழக்கங்கள் அவன் இயற்கையியல்பை மறைத்துப் புறத்தோடுபோல் அதனை மூடியிருந்தது. பார்லோவின் கல்வி முறையின் பெரும்பகுதி இச்செயற்கைத் தோட்டை உடைத்தெறிந்து அவன் உள்ளார்ந்த இயற்கை இயல்பு தடையின்றி வளர விடுவதாகவே இருந்தது. தானே உழைத்தல், உழைத்தபின் பசித்துண்டல், வாசித்தல் ஆகியவற்றை அவன் மேற்கொண்ட பின்னும் அவனது குடிப்பெருமையும் இறுமாப்பும் அவனைவிட்டு அகலவில்லை. பிற வகுப்பினரும் அடிமைகளும் இழிவானவர்கள் என்றும் அவர்கள் தமக்கு ஊழியம் செய்யவே பிறந்தவர்கள் என்றும் அவன் கருதினான். எனவே எந்த வேலையையும் தான் செய்யாமல் அவர்களையே அதட்டி வேலை வாங்கும் பண்பு அவனை விட்டு நீங்க நெடுநாளாயிற்று. ஹாரி வெளியே போயிருந்த நாட்களில் ஒரு நாள் அவனுக்கு நேர்ந்த நிகழ்ச்சி இப்பெருமைக்குப் பேரூறு விளைத்து அவன் திருந்துவதற்கு வழிகாட்டுவதாயிருந்தது. டாமி அன்று பந்துமட்டையெடுத்துப் பந்தாடிக் கொண்டிருந்தான். பந்து துள்ளியோடி வேலிக்கு அப்பால் சென்றுவிட்டது. அவனுடைய இயற்கைச் சோம்பல் அவனை அதைப்போய் எடுப்பதற்குத் தயங்கச் செய்தது. அவன் அவ்வழியே பார்த்துக் கொண்டிருக்கையில் கிழிந்த அரைகுறைக் கந்தலாடையுடுத்த ஒரு ஏழைச் சிறுவன் அவ்வழி வந்து கொண் டிருந்தான். டாமி அவனை நோக்கி அப்பந்தை எடுத்துப்போடு என்று கூறினான். அவன் கவனியாது செல்வதுகண்டு பின்னும் உரத்தகுரலில் அதட்டிக் கூறினான். அப்போதும் அவன் அசட்டையாய்ச் செல்லவே, டாமி கடுஞ் சினங்கொண்டு “அடே மடையா, உனக்குக் காதென்ன செவிடா? பந்தை எடுத்துப் போடு என்று கத்துகிறேன். பேசாமல் ஏன் போகிறாய்?” என்று கூவினான். சிறுவன் அவனைச் சற்றே ஏறெடுத்துப் பார்த்து “எனக்குக் காது கேட்காமலில்லை. நான் செவிடனுமல்ல. ஆனால் நீ கழுதை போற் கத்துவதை நான் கவனித்து என்ன ஆக வேண்டும்? என்னால் எடுத்துத்தர முடியாது. நீ வேண்டுமானால் போய் எடுத்துக்கொள். உன்கால் என்ன நொண்டியா?” என்றான். ஏழைப்பையன், கந்தலாடை யுடுத்தவன் தன்னை மீறுவதுடன் தன்னை அசட்டை செய்து அவமதிப்பாகவும் பேசினது காண, டாமியின் உடலின் குருதி கொதித்தது. அவன் ஒவ்வொரு தசையும் துடித்தது. அவன் அச்சிறுவனைச் சென்று நன்றாய் அடித்து நொறுக்க வேண்டுமென்று ஆத்திரம் கொண்டு வேலியேறிக் குதித்தான். ஆனால் வேலியின் மறுபுறம் என்ன இருக்கிறது என்று பாராமல் வேகமாகத் தாவியதால் அங்குள்ள ஒரு பன்றிக் குட்டையில் போய் விழுந்தான். அக்குட்டையில் நீர் கால்பங்கும் சேறு முக்காற் பங்கும் இருந்தது. விழும் வேகத்திலேயே அவன் காற் புதையல்கள் நழுவியோடின. காற் சட்டையும் உடுப்புமாக மார்பளவுக்கு அவன் சேற்றில் தோய்ந்தான். எவ்வளவு முயன்றும் வெளியேற முடியாமல் அவன் அதில் மேன்மேலும் அழுந்தி வந்தான். அவன் இரங்கத் தக்க நிலையைக் கண்டு சிறுவன் தன்னை அவன் அவமதித்ததையும் மறந்து அவனைத் தூக்கி விட்டான். அவமதிப் பாலும் வெட்கத்தாலும் அவன் அச்சிறுவனை முகம்பார்க்கக் கூடத் துணியாமல் சரேலென்று தோட்டத்துக்குள் திரும்பி வந்து விட்டான். டாமியின் உள்ளத்துக்கு இந்நிகழ்ச்சி பேரதிர்ச்சியும் குழப்பமும் தந்தது. அவன் குடிப் பெருமையுணர்ச்சிக்கு மட்டுமன்றி அவன் தன்மதிப்புக்கே இது சீர் குலைவாய் அமைந்து அவனைக் குழப்பியது. இந்நிலையில் பார்லோ அவனைக் கண்டு அவனிருந்த அலங்கோலத்தைப் பார்த்து “இது என்ன? உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார். டாமி நடந்தது யாவற்றையும் ஒன்று விடாமல் கூறினான். ஆசிரியர் தொடக்கத்தில் அவன்மீது சினங் கொண் டார். பின் கவலை காட்டினார். இறுதியில் புன்முறுவலுடன் “நடந்த மட்டும் எல்லாம் நலமே. இந்நிகழ்ச்சியின் பாடங்களை நீ நன்குணர்ந்தால் இதனாலுள்ள சிறு கெடுதியினும் பன்மடங்கு நல மேற்படும். இப்போது சென்று உடல் கழுவி ஆடைமாற்றிக்கொள்” என்றார். அடிக்குறிப்பு 1. ழயbவை ளை ளுநஉடினே சூயவரசந. 9. ஹாரி டாமி உரையாடல் ஹாரி வந்த பின் டாமி அவனிடமும் எல்லா விவரமும் கூறிவிட்டுப்பின் “இதன் படிப்பினையை நீ உணர்ந்தால் எவ்வளவோ நலம் ஏற்படும் என்று ஆசிரியர் கூறினாரே, அப் படிப்பினைகள் என்னவாயிருக்கக்கூடும்? ஒரே ஒரு பாடம் எனக்குப் புலப்படுகிறது. நான் ஆய்ந்தோய்ந்து பாராமல் வேலியேறிக் குதித்தது தவறு. இது தவிர நான் வேறு என்ன தவறு செய்தேன்?” என்றான். ஹாரி இதைக் கேட்டு நகைக்காமலிருக்க முடியவில்லை. “உனக்குத் தெரியவரும் குற்றம் இவ்வளவு தானா? என்னைக் கேட்டால் ஆய்ந்தோய்ந்து பாராதது ஒரு பெருங்குற்ற மாயினும், அது பொதுவாக எவரும் செய்யக் கூடும் குற்றமே. கோபத்தில் ஆய்ந்தோய்ந்து பார்ப்பது யாருக்கும் எளிதன்று. ஆனால் உனக்கு அவமதிப்பு நேர்ந்தது அதனாலல்லவே. நான் இப்படி விழுந்திருந்தால், நீ இரக்கமடைந்து உதவுவது உறுதி. நீ உதவியதற்கு நான் வெட்கப்படுவேனா? தவறிக் குட்டையில் விழுந்ததற்குச் சிறிது எச்சரிக்கை வேண்டும் என்று தானே யாரும் சொல்வார்கள். நீ அடையும் மனக்குழப்பம் அதனாலல்லவே!” என்றான். டாமி, நீ கூறுவது சரியே. ஆனால் என் தவறு என்ன? நான் என்ன செய்திருக்கக் கூடும்?” என்று கேட்டான். ஹாரி அவனுக்கு நயமாக அவன் தவறுகளை விளக்கினான். “ஏழை என்ற காரணத்துக்காக நீ சிறுவனை வேலை ஏவியதும் அதட்டிப் பேசியதும் பிறர் தன் மதிப்பைப் புண்படுத்தும் செயல். தன் மதிப்புடைய எவனும் எவ்வளவு ஏழையானாலும் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்யமாட்டான். ஆனால் அதே சிறுவன் நீ துன்பத்துட் சிக்கியபோது நீ உத்தரவிடாமலும் நீ கேட்காமலும் உனக்கு உதவினானன்றோ? தொடக்கத்தில் அவன் தன் மதிப்பைப் புண்படுத்தாமல் ‘அன்பு கூர்ந்து பந்தை எடுத்துப் போடுவாயா, தம்பி,’ என்று கேட்டிருந்தால் அவன் கட்டாயம் எடுத்துப் போட்டிருப்பான். நீ இன்னும் பெருந்தன்மை யுடையவனாயிருந்தால் அவனை ஏவாமல் நீயே சென்று எடுத்திருக்கலாம். ‘நீ என்ன கால் நொண்டியா’ என்று அவன் கேட்டதன் பொருள் அது தான்” என்றான். டாமி நீ கூறுவது ஓரளவு சரிதான். ஆனால் இந்த நியாயம் ஒரு தரத்திலுள்ளவர்களிடையில் மட்டும் தானே பொருந்தும்? பிறப்பிலேயே நன் மக்கள் வகுப்பில் பிறந்த எனக்கும் தொழில் செய்யப் பிறந்த அச்சிறுவனுக்கும் இதே ஒழுங்கு பொருந்துமா? தொழில் செய்யும் வகுப்பினர் எங்கள் வீடுகளில் வேலை செய்யவில்லையா? யாரும் அதைக் குறையாகக் கருதவில்லையே! ஹாரி பிறப்பிலேயே நன்மக்கள் என்றால் என்ன? தொழில் செய்யப் பிறந்தவர்கள் என்றால் என்ன? டாமி நல்ல வீடு, தோட்டம் துறவுகள், பணவாய்ப்பு, ஆட்கள் எடுபிடி உடையவர்கள் நன்மக்கள். இவை குறைந்தும் இல்லாமலும் பிறர்க்கு ஊழியம் செய்து பிழைப்பவர்கள் தாழ்குடியினர். அவர்களே வேலைக்காரர்களாகிறார்கள். ஹாரி உங்களிடம் பணம் இருக்கிறது. நீங்கள் அதைத் துய்க்கிறீர்கள். அவர்களிடம் பணம் இல்லை. ஆகவே நீங்கள் அவர்கள் விரும்பும் பணத்தை ஊதியமாகக் கொடுத்து உழைப்பு வாங்குகிறீர்கள். அப்போதும் நீங்கள் கொடுக்க விரும்பினால் மட்டும் போதாது. அவர்களும் வாங்க விரும்பி அதற்கீடாக உழைக்க ஒப்புக் கொண்டால் தானே அவர்கள் ஊழியர்களாக முடியும்? ஒன்றும் வாங்காமலே அவர்கள் உழைக்கப் பிறந்தவர்கள் என்றோ, நீங்கள் உத்தரவிட்டதற்காகவே உழைக்க வேண்டியவர்கள் என்றோ எப்படி கூறமுடியும்? அவர்கட்குப் பிடிக்காவிட்டால் அவர்கள் வேலையை விட்டு நீங்கலாம் அல்லவா? இதுமட்டுமன்று. வீடு குடி தோட்டம் துறவு இருப்பத னாலேயே நீங்கள் ஏவப்பிறந்தவர்களானால் இவையெல்லாம் இல்லாதபோது உன்னை ஒருவர் அதட்ட நீ பொறுப்பாயா? டாமி நான் கூறியது தவறு என்று பெரிதும் விளங்கிவிட்டது. ஆனால் பணம் வாங்காமலே ஜமெய்க்காவிலும் இங்கும் எங்கள் வீட்டில் அடிமைக் கறுப்பர்களான நீகிரோக்கள் வேலை செய்கிறார்களே! அவர்களை அடிப்பதும் அடியாமலிருப்பதும், உணவு கொடுப்பதும் கொடுக்காமலிருப்பதும், அவர்கள் வாழ்வும் தாழ்வும் முற்றிலும் எங்கள் வசத்திலேயே இருக்கிறதே! ஹாரி ஆம், ஆடுமாடுகளையும் குதிரைகளையும் அவற்றின் விருப்பு வெறுப்பைப் பாராமல் மனிதர் பிடித்தடக்கிப் பயன் படுத்துவது போலப் பலர் இக் கறுப்பரையும் அடிமைகளாக்கி இருக்கிறார்கள். இது ஒரு கொடிய பழக்கம். அறிவுடையோர் இதனைக் கண்டித்து வருகின்றனர். அவ்வகுப்பினரிடையே கல்வியும் செல்வமும் பெருக்க முற்று அவ்வகுப்பறிஞர் அவர்கள் கொடுமைகளை நீக்கப்பாடுபடும் நம்மவரிடையே கூட நல்லறிஞர்கள் அவற்றைக் கண்டித்து ஒழிக்க முன் வருகின்றனர். டாமி நீ கூறிய உவமைப்படியே இவர்கள் ஆடு மாடுகள், குதிரைகள் நிலையில் இருந்தால் நாம் அவர்களை அடிமைப் படுத்துவதில் தவறென்ன? விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதுபோலத் தானே அவர்களுக்கும் நமக்கும் இடையில் இருக்கின்றன? ஹாரி விலங்குகளை மனிதர் பயன்படுத்துவது கூட உண்மையில் நேர்மை என்று கூற முடியாது. ஆனால் விலங்குகளுக்கும் மனிதருக்கும் உள்ள வேற்றுமை அடிப்படை இயற்கையைச் சார்ந்தது. இரண்டு தரப்பும் இருவேறுபட்ட இனம்; பிறப்பிலேயே வேறுபட்டவை. கருப்பரும் வெள்ளையரும் அப்படியல்ல. இருவரும் மனிதர்களே. இன்றும் அவர்கள் நம்மைவிடப் பிற்பட்டவர்களல்ல. நம்மிடை தாழ்ந்த வகுப்பினர் என்பவர்கள் சில வாய்ப்புக்களில்லாமல் சீர்கெடுவது போலவே தான் அவர்கள் சீர்கெட்டுள்ளனர். ஆனால் நம்மிடையே தாழ்ந்தவர்கள் உழைப்பாலும் அறிஞர் அறிவாலுமே பணவசதி ஒன்றுமட்டுமுடைய உயர் வகுப்பினர் சோம்பேறி வாழ்க்கை வாழ்கிறோம். இது போலவே நம்மினத்தவரைவிடப் பலவகையில் மேம்பட்ட இவர்கள் சில நாகரிக வாய்ப்புக்கள் பெற முடியாதிருப்பதனாலேயே நமக்கு அடிமைப்படுகிறார்கள். நாகரிக மற்றவர்கள் என்று கூறப்படும் பல மக்களும் உண்மையில் தத்தம் சூழ்நிலைக்கேற்ற ஒவ்வொரு துறையில் வெள்ளை யரினும் திறமையுடையவர்களாயிருக்கிறார்கள். டாமி சிறு வேறுபாடுகள், தனிச் சிறப்புகள் யாவருக்கும் இருந்தாலும் வெள்ளையரே எல்லாருக்கும் முந்தி நாகரிக மடைந்தனர் என்பது மறுக்கக்கூடாததன்றோ? ஹாரி இன்று முந்திக் கொண்டார்கள் என்று வேண்டுமானால் கூறலாம். இது கூடச் சில வாய்ப்புக்களின் பயனாகவே. ஆனால் காலத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் வெள்ளையர் முந்திக் கொண்டார்கள் என்று கூறுவது முற்றும் பிசகு. ஏனெனில் வெள்ளையர் நாகரிகமடைந்ததெல்லாம் நேற்று முந்தாநேற்றுத் தான். அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே இன்று நாம் கறுப்பர் என்று புறக்கணிக்கும் எகிப்தியர், பாபிலோனியர், இந்தியப்பழங்குடியினர் ஆகியவர்கள் உயர் நாகரிகமடைந்திருந்தனர். ஐரோப்பியர் இவர்களிடமிருந்தே நாகரிகத்தைக் கற்றுக் கொண்டனர் என்னலாம். டாமி நாகரிகமற்ற நீகிரோவர்களிடையிலிருந்தும் பிறரிட மிருந்தும்தான் வெள்ளையர் நாகரிகம் பெற்றனர் என்ற உன் கூற்று எனக்கு வியப்பைத் தருகிறது. ஹாரி ஆம், நாம் அதைப் பெரும்பாலும் எண்ணிப் பார்ப்ப தில்லை. ஆசிரியர் உலக நாகரிகம் பற்றிப் போதித்திருப்ப தனால் எனக்கு ஓரளவு இது தெரியவந்தது. இவைபற்றி அவர் இன்னும் விரிவாகக் கூறக்கூடும். கறுப்பராகிய நீகிரோவர் மட்டுமல்ல, சிகப்பராகிய அமெரிக்க இந்தியரும், மஞ்சள் நிறத்தவராகிய சீனரும், கருந் தவிட்டு நிறத்தவராகிய இந்தியரும் வெள்ளையருக்கு மிக முற்பட்ட, மேம்பட்ட நாகரிகமுடையவர்கள். டாமி என் தற்பெருமையை அடிப்படையிலிருந்தே கல்லி எறியப் போதிய செய்திகளை இன்று உன்னால் அறிந்தேன். தற்பெருமை, குடிப்பெருமை, வகுப்புப் பெருமை, இனப்பெருமை ஆகிய யாவும் ஒழுக்கமுறையில் தீயவைமட்டுமன்று, வரலாற்றறிவுக்கும் மாறானவை என்று கண்டு கொண்டேன். இனி எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் குடி, எல்லாரும் ஒரே இறைவன் மக்கள் என்ற அன்பு நெறிப்படியே நடப்பேன். டாமியின் மனமாற்றம் நன்கு தொடங்கியது கண்டு ஹாரி மகிழ்ந்தான். ஹாரி மூலம் இதைக் கேள்விப்பட்ட ஆசிரியரும் பூரிப்படைந்தார். 10. அடிமையும் அரிமாவும் ஹாரியுடன் பேசியதனால் டாமிக்குத் தன் குற்றங்கள் தெரிந்தன. ஆனால் அதைத் தெரிந்து நடப்பதில் அவனுக்கு இன்னும் பயிற்சி ஏற்படவில்லை. மேலும் ஹாரி சுருக்கமாகக் கூறிய பல செய்திகளை அவன் எண்ணிப் பார்க்கப் பார்க்க, புதிய ஐயங்கள் தோன்றின. வாய்ப்புக்கள் இல்லாததனால் பலர் அடுத்தவர்கட்கு உழைக்க நேருகிறதென்றால், அவர்கள் ஏன் அவ்வாய்ப்பைப் பெற முடியவில்லை என்று அவன் தனக்குத் தானே கேட்டுக் கொள்ளலானான். அதுபோல அடிமையா யிருக்கும் கறுப்பர்கள் அதை ஏன் தாமாக விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவனுக்குப் புரியவில்லை. இந்நிலையில் ஆசிரியர் ஹாரியிடம் மறுநாள் படிக்கும் படி கூறிய கதை இக்கருத்தை விளக்க ஏதுவாயமைந்தது. ஹாரி வாசித்த கதை அடிமையும் அரிமாவும் என்பதே. (கதை) உரோம நாட்டினர் அயல் நாட்டு மக்களை அடிமை களாக வைத்து வேலை வாங்குவது வழக்கம். உரோமநாட்டுப் பெருமகன் ஒருவனிடம் அண்ட்ராக்ளிஸ் என்ற ஒரு அடிமை இருந்தான். பெருமகன் அவனை ஈவிரக்கமின்றிக் கொடுமையாக வேலை வாங்கினான். இப்படி வேலை செய்வதைவிட உயிரை விட்டாலும் நலம் என்று அவனுக்கு எண்ணமுண்டாயிற்று. தப்பியோடி அகப்படும் அடிமைகளை அந்நாட்டு அரசியலார் கொலைத் தண்டனைக் காளாக்குவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ‘அகப்பட்டால் என் தலை போகிறது, அன்றேல் விடுதலை பெறுவேன்’ என்று எண்ணியவனாய் அவன் ஓரிரவு ஓடினான். ஆனால் அவன் தப்பிப்பிழைக்கு முன் தலைவன் அவனைப் பிடித்துவிட்டான். அரசியலின் பெருமக்கள் மன்றத்தார் அவனுயிர் போக்குவதிலேயே ஒரு புதிய முறையைக் கையாண்டனர். அவனை விலங்குக் காட்சியிலுள்ள சிங்கத்துக்கு இரையாக்கி யாவரும் காண அவன் கொலையை ஒரு காட்சியாக்க எண்ணினர். விலங்குக் கொட்டகையில் பெருந்திரள் மக்களிடையே சிங்கக் கூண்டு நடுவரங்கில் கொண்டுவரப்பட்டது. அண்ட்ராக்கிளிஸை நடுவரங்கில் தள்ளி வெளிவரமுடியாத படி கதவை அடைத்தார்கள். அதன்பின் சிங்கத்தின் கூண்டு திறக்கப்பட்டது. அச்சிங்கம் காட்டிலிருந்து அண்மையிலேயே பிடிபட்டுக் கொண்டுவரப்பட்ட அடங்கா விலங்காயிருந்தது. அதனை அடக்கும் எண்ணத்துடன் அதை ஒன்றிரண்டு நாளாகப் பட்டினியாகவும் போட்டு வைத்திருந்தனர். ஆகவே அது கூண்டு திறந்தவுடன் அனைவரும் எதிர்பார்த்தபடியே உங்காரத்துடனும் பசி வெறியுடனும் கொட்டகை முகடதிர முழங்கிக் கொண்டு அண்ட்ராக்ளிஸை நோக்கிப் பாய்ந்தது. காட்சியாளர்கூட அம்முழக்கம் கேட்டு நடுநடுங்கினர். அண்ட்ராக்ளிஸும் தன் முடிவு வந்ததறிந்து சாக ஒருங்கி நடுங்கி நின்றான். ஆனால் யாவரும் வியக்கும் வண்ணம் சிங்கம் சிறிது தூரத்தில் வந்ததும் தலைநிமிர்ந்து அண்ட்ராக்ளிஸைப் பார்த்து நின்றுவிட்டது. பின் அவனை நாற்புறமும் மோந்து பார்த்தபின் முற்றிலும் அமைதியடைந்து நாட்டுநாய்போல் வால் குழைத்து அவன் காலடியில் படுத்து மகிழ்ச்சி தெரிவித்தது. காட்சியாளர்கள் அடைந்த வியப்பில், அவர்கள் தாங்கள் காணவந்த காட்சியைக் காணாத ஏமாற்றத்தைக் கூட மறந்தனர். ஏனெனில் எதிர்பாராத இக்காட்சி அவர்களுக்கு எல்லையிலாப் புதுவிருந்தாயமைந்தது. யாவரும் நெருக்கித் தள்ளி அக்காட்சியைக் காணலாயினர். அரசியல் தலைவனும் பெருமகனும் அண்ட்ராக்ளிஸை அழைத்துச் “சிங்கம் எப்படி உன்னிடம் அடங்கிற்று. நீ என்ன மாயம் செய்தாய்?” என்று கேட்டனர். அண்ட்ராக்ளிஸ் “ஐயன்மீர், நானும் உங்களைப் போலவே முதலில் வியப்படைந்தேன். சாவை மட்டும்தான் எதிர்பார்த்துச் சென்றேன். சிங்கம் நாய்போல் அடங்கியது கண்டபின் எனக்கு உண்மை விளங்கிற்று. இந்தச் சிங்கம் காட்டு விலங்கேயாயினும் நெடுநாளைக்கு முன் ஒருநாள் அதற்கு நான் செய்த நன்மையால் பழகிற்று. இவ்வளவு நாள் கழித்து மனிதர் மறந்தாலும் அது மறவாதிருப்பது காண நானும் வியப்பே அடைகிறேன்” என்றான். யாவரும் அந்நிகழ்ச்சியை விளக்கிக் கூறும்படி கோரினர். “நான் அடிமையாவதற்கு முன் எங்கள் நாட்டின் காட்டில் ஒரு நாள் வேட்டையாடிக் கொண்டிருந்தேன். முள்ளடர்ந்த வழியில் நடந்த அலுப்பால் ஓரிடம் ஓய்வாயிருந்தேன். அச்சமயம் எதிர்பாரா வகையில் என் அருகே உறுமல் போன்ற அரவம் கேட்டுத் திரும்பினேன். ஒரு பெரிய சிங்கம் என் அருகில் நின்றிருந்தது. தப்பியோட முடியாத அளவு அது அருகிலிருப்பது கண்டு நான் வெல வெலத்துப்போய் இன்றுபோலவே சாவை எதிர்நோக்கி நின்றேன். ஆனால் சிங்கம் என்னைக் கொல்ல முயலாமலிருந்ததுடன் என்னை இரக்கமாகப் பார்த்துத் தன் காலில் ஒன்றை என்னிடம் தூக்கிக் காட்டிற்று. அது சற்று நொண்டிவந்ததையும் நான் அப்போதுதான் எண்ணிப் பார்த்தேன். சாவுக்குமேல் வேறு என்ன வர முடியும் என்ற துணிவுடன் நான் அது நீட்டிய முன் காலை மெல்லப்பிடித்தேன். அது வலி தாங்காது அலறிற்று. அதன்மேல் நான் ஊன்றிக் கவனித்தபோது அதன் அடியில் ஒரு முள் குத்திக் கொண் டிருப்பது கண்டேன். என் முழுத்திறத்தையும் காட்டி ஆதர வாக அம்முள்ளை எடுத்து அதனைப் படுக்க வைத்தேன். அதுவும் பூனைபோல் வலிதீரும் வரை படுத்திருந்தது. வலிதீர்ந்தால் எப்படியும் அது நம்மைக் கொன்றுவிடவே செய்யும் என்று எண்ணி அது தூங்கியவுடன் போக எண்ணினேன். ஆனால் அது தன் உணவில் எனக்குப் பங்கு கொடுத்து என்னை ஆதரித்ததுடன் உறக்கத்திடையிலும் நான் போவதுகண்டு விழித்து என்னைக் கனிவுடன் பார்த்தது. ஆகவே அது நோய் நீங்கி வெளியேறும்வரை காத்திருந்தேன். போகும்போதும் அது என்னிடம் பரிவுகாட்டியே சென்றது. “இவ்வளவு காலத்துக்குப்பின்னும் இச்சிங்கம் என் செயலையும் நினைத்து என்னையும் அடையாளம் அறிந்து கொண்டு நட்பாய் இருக்கிறது” என்றான். அன்ட்ராக்ளிஸ் கதை கேட்டு அனைவரும் வியப் படைந்தனர். அவனுக்கு அவர்கள் விடுதலை அளித்து அச்சிங்கத்தையும் பரிசளித்தனர். சிங்கமும் அவனிடம் உடன் பிறந்தான்போல் நடந்து கொண்டது. அன்ட்ராக்ளிஸ், சிங்கம் ஆகிய இருவரிடை உள்ள நட்புப் பற்றிய இக்கதை டாமிக்கு மிகவும் வியப்பை உண்டாக்கிய துடன் உயிர்களிடத்து உள்ளார்ந்த பாசம், அடிமைகளிடத்துப் பரிவு ஆகிய குணங்களை உண்டு பண்ண உதவிற்று. இக்கதை முடிந்தவுடன் அவன் ஆசிரியரிடம் “இது இனிய கதையேயாயினும் பொருத்தமற்ற கதையென்றே நினைக்கிறேன். சிங்கம், புலி இயற்கையிலேயே கொடியவையல்லவா? அவை எப்படி நன்றிக்குக் கட்டுப்பட்டு மனிதனிடம் அன்பு கொள்ளக் கூடும்?” என்று கேட்டான். “சிங்கம், புலி முதலியவைகள் உயிரினங்களைக் கொன்று அவற்றின் ஊனையே தின்பவை. அவை உயிர்களைக் கொல்வது கொடுமையாலன்று; பசியாற்றிக் கொள்வதற்காகவே. பசி யில்லாத போது இவை இரை தேடுவதுமில்லை. கொல்வது மில்லை. பாம்பு முதலிய வேறு உயிர்கள் அச்சத்தால் கொல்லுகின்றனவேயொழியத் தின்பதற்காகக்கூட அல்ல. உண்மையில் ஊனுண்ணாதவையாயிருந்தும் கொன்றழிக்கும் காட்டானையைவிட இவை கொடியவையல்ல. உணவுக்காகக் கூட இல்லாமல், யானையைப் போலக் கொலை, துன்பம் பற்றிய எண்ணமில்லா அறியாமைகூட இல்லாமல், மனிதன் கொலை, வஞ்சகம், அடக்குமுறை ஆகியவற்றைச் செய்து வாழ்கிறான். அறிவுடன் கூடிய இம்மனிதனிடம் மட்டும் தான் தன் இனத்தவரையே அடிமையாக நடத்தும் பழக்கம் உண்டு. மனிதர் மீதேறி மனிதர் செல்வதுபோல், மனிதர் உழைப்பால் மனிதர் வாழ்வதுபோல் எந்த விலங்கும் எங்காவது வாழ்வதுண்டா?” என்று ஆசிரியர் கேட்டார். அடிமைத்தனத்தை ஆதரித்தல், வேலையாட்களை அடக்கியாளுதல் ஆகியவை பற்றிய டாமியின் பல ஐயங்கள் இப்போது அகன்று வந்தன. 11. டாமி உதவும் குறிப்பறிந்து உதவப் பழகுதல் டாமி குட்டையில் விழுந்தபோது அவனைத் தூக்கி விட்ட பையனை அவன் என்றும் மறக்கவில்லை. ஹாரியுடன் பேசியதன் பயனாக, தான் அவனுக்கு நன்றிகூடக் கூறாமல் நழுவி வந்தது பெருந்தவறு எனக் கண்டான். அத்துடன் அன்பும் உதவியும் நன்றியும் கீழ் உயிரினங்களிடத்தில் கூட அடிக்கடி காணப்படுகின்றன என்பதும் அவனுக்கு விளங்கிற்று. ஆகவே எப்படியாவது அச்சிறுவனைக் கண்டு அவனிடம் மன்னிப்புக் கேட்டுத் தன் நன்றியறிதலையும் அவனுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று அவன் விரும்பினான். அத்துடன் ஏழைகள் பிற்படுவதற்கு உணவு உடை முதலிய வகைகளில் அவர்கட்கு வாய்ப்புப் போதாமையே காரணம் என்பதையும் ஆசிரியர் அவனிடம் வற்புறுத்தியிருந்ததனால் அச்சிறுவனுக்குத் தான் நன்றியுரை மட்டும் கூறி நிறுத்திவிடாமல், தன்னாலான உதவிகளும் செய்ய அவன் உறுதி கொண்டான். அவன் விரும்பியபடியே அவன் சிறுவனை அன்று மாலை தோட்டத்தின் பின்புறமுள்ள வெளியில் கண்டான். அவன் அப்போது வேலியில் படர்ந்திருந்த கொடித் தக்காளிப் பழங்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தான். டாமி அவனிடம் சென்று “தம்பி, அன்று நீ என்னைக் குட்டையிலிருந்து தூக்கி விட்டபின் உனக்கு நன்றிகூடத் தெரிவிக்காமற் போனதுபற்றி நான் வருத்தமடைந்தேன். அத்துடன் நான் உன்னை அவ்வளவு கொடுமைப்படுத்தியபின் நீ நன்மை செய்து விட்டதனால் உன்னைப் பார்க்கவும் எனக்கு வெட்கமாய்ப் போய்விட்டது. இரண்டு வகையிலும் நான் உன்னிடம் மன்னிப்புக் கோர வேண்டும்” என்றான். சிறுவன் “நான் அவ்வளவு சிறப்பாக எதுவும் உனக்குச் செய்துவிடவில்லை. இடையூறு நேர்ந்தபோது பகைவருக்குக் கூட உதவாதிருக்க முடியாதே! அதுபோல நீயும் உன் நிலையிலுள்ள சிறுவர் என் நிலையிலுள்ள சிறுவரிடம் செய்யாத எதனையும் செய்துவிடவில்லை. ஆயினும் நீ என்னைப் பொருட்படுத்தி என்னிடம் வந்து அன்பாகப் பேசியது கண்டு நான் மகிழ்ச்சி யடைகிறேன்” என்றான். சிறுவன் நட்புணர்ச்சியும் கனிந்த சொல்லும் டாமிக்கு அவன்மீது பின்னும் கனிவூட்டின. அவன் “உன்னிடம் நான் இன்னும் நன்கு பழகிக்கொள்ளவே விரும்புகிறேன். என்னை இனி உன் நண்பனாகவும் தோழனாகவும் கருதிக்கொள்” என்றான். சிறுவன் உன் சொற்கள் எனக்கு மிகவும் பெருமை தருகின்றன. என் வயதையொத்த உன் போன்ற சிறுவருடன் நட்புக் கொள்வதில் எனக்குப் பேரவா உண்டு. ஆனால் அதற்கான நேரமும் வாய்ப்பும் எனக்கேது? டாமி இது கேட்டு மனம் வருந்தினான். ஏழைகள் வாய்ப் பின்மை, அவர்கள் அவதிகள் ஆகியவைப்பற்றி அவன் கேள்விப் பட்டாலும், அவற்றை அவன் தெளிவாக இன்னும் அறிந்து கொள்ளவில்லை. நினைத்தபடி ஆடை, அணி மணி, சிற்றுண்டி கிடையாததே வறுமை என்பது மட்டும் தான் அவனுக்குத் தெரியும். சிறுவன் நிலையறிந்து உதவும் எண்ணத்துடன் அவனைப் புண்படுத்தாமலே அவனுடன் அதனைப்பற்றி உசாவினான். ‘இந்த வயதில் நேரமில்லாமல் போக உனக்கு அப்படி என்ன வேலை?’ என்று கேட்டான். இக்கேள்வியே அவன் முகத்தின் களையை விரட்டிக் கண் கனிய வைத்தது. ஆயினும் அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டு “என் கந்தலாடையே ஓரளவு இதற்கு விடை தரும். இதுபோன்ற கந்தலாடை கூட மிகுதியில்லாமல் என்னுடன் சேர்ந்து ஏழு ஆண்களும் இரண்டு பெண்களும் உடன் பிறந்தவர் களாய் உள்ளனர். இத்தனை பேருக்கும் தாய் தந்தையருக்கும் மூத்த பிள்ளையாகிய நான் தான் வேண்டிய உணவுப் பொருள் கொடுக்க வேண்டும்” என்றான். இதைக் கேட்ட டாமிக்கும் கண் கனிந்தது. “உன் தந்தை இவற்றைக் கவனிக்கமாட்டாரா?” என்று பின்னும் கேட்டான். சிறுவன்: தந்தை உழைத்தால் கூட எங்களுக்குப் போதிய உணவு கிடைப்பதில்லை. இப்போதோ தந்தைக்கு உடலுக்குக் குண மில்லை. அம்மாவுக்கு அவர்களைக் கவனிப்பதிலேயே முழு நேரமும் போய்விடுகிறது. ஆகவே நான் விறகு பொறுக்கல், காட்டுக் காய்கனி கிழங்கு சேர்த்தல் ஆகியவற்றில் என் ஓய்வு நேரத்தையெல்லாம் ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது. தந்தை உடல் நலப்பட்டு உழவு வேலைக்குப் போகும் வரை எங்களுக்குத் துன்பம் தான். சிறுவன் சொற்கள் டாமியின் உள்ளத்தை உருக்கின. பாவம்! சிறுவன் குடும்பக் கவலையுடையவனாய்ப் போதிய உணவு கூட இல்லாதிருக்க வேண்டும் என்பதைக் கவனித்தான். அவன் உடனே சரேலென்று ஆசிரியர் வீட்டினுட் சென்று ஒரு பெரிய அப்பத் துண்டையும் தன் ஆடைகளில் ஒரு முழுத் தொகுதியையும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். “தம்பி, நீ எனக்கு இன்னல் நேர்ந்தபோது உதவினாய். நீ துன்பமடைவதைக் கண்டு நான் வாளா இருக்க முடியாது. எனக்குத் தேவைக்குமேல் யாவும் இருக்கின்றன. இவற்றை நீ எடுத்துக்கொள்” என்றான். சிறுவன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவன் டாமியிடம் மனமார நன்றி பாராட்டினான். அவன் மகிழ்ச்சிகண்ட டாமி தன் பொருள்களைத் தான் துய்ப்பதில் என்றும் கண்டிரா இன்பங் கண்டான். ஆசிரியரிடம் டாமி இவற்றைக் கூறியபோது அவர் உள்ளூர மகிழ்ச்சியடைந்தார். ஆயினும் அவர் அவனுக்கு இன்னும் சில நற்பழக்கங்களை உண்டு பண்ணும் எண்ணத்துடன் அவன் செயலைப் பாதி பாராட்டி அதில் சில குறைகளையும் விளக்கலானார். “நீ சிறுவனிடம் நன்றி தெரிவித்ததும் மன்னிப்புக் கோரியதும் போற்றத்தக்க நற்செயல்கள். அவனுக்கு உதவிசெய்ய எண்ணியது இன்னும் பாராட்டத்தக்கதே. ஆனால் அவ்வுதவி செய்யும் பண்பில் சில குறைகள் விட்டு வைத்திருக் கிறாய். உன் ஆடைகளைக் கொடுக்க உனக்கு உரிமையுண்டு. அவை உன்னவை. ஆனால் என்னுடைமையான அப்பத்தை நீ என்னைக் கோராமல் கொடுத்திருக்கக் கூடாது. அத்துடன் உன் ஆடைகளை அவனுக்குக் கொடுப்பது பொருத்தமானதா என்பதை நீ எண்ணியிருக்க வேண்டும். அவனுக்கேற்ற ஆடைகள் வாங்கிக் கொடுத்திருந்தால், உன் ஆட்களை விட அது அவனுக்கு நலம் செய்திருக்கும். அவை மதிப்புக் குறைவாயினும் அவன் வாழ்க்கைக்குப் பொருத்தமாயிருக்கும்” என்றார். டாமி ஆசிரியர் உடைமையை எடுத்துக் கொடுத்த தற்காக ஆசிரியரிடம் உடனே மன்னிப்புக் கோரினான். ஆனால் தன் ஆடையைக் கொடுப்பதில் என்ன பொருத்தக் குறைவு என்று கேட்டான். ஆசிரியர் மறுமொழி கூறாமலே நகைத்தார். அவர் மறுமொழி கூறவேண்டிய தேவை ஏற்படாமலே டாமிக்கு அது விளங்கத்தக்க ஒரு காட்சியை அவன் அப்போது கண்டான். அவர்கள் பேச்சுக்கிடையே சிறுவன் கலவரத்துடன் ஓடிவந்து டாமியின் ஆடைகளை ஒரு மூட்டையாகச் சுருட்டி அவனிடமே கொடுத்து, “எனக்கு இவ்வாடைகள் வேண்டாம். அதை அன்பு கூர்ந்து திரும்பப் பெற்றுக்கொள்” என்றான். சிறுவன் முகம் சீறியிருந்தது. கண்கள் கன்னிக் கலக்க முற்றிருந்தன. கன்னங்களில் யாரோ கைத்தடம் தெரியும்படி அடித்து வீங்கியிருந்தது. டாமி அவனை நோக்கி, “தம்பி, ஏன் ஆடைகளை வேண்டாம் என்று மறுக்கிறாய்? ஏன் உன்முகம் இப்படியிருக்கிறது?” என்று கேட்டான். “உன் ஆடைகளால் தான் நான் தொல்லைக்காளாய் இவ்வடிகளும் பட்டேன். இவற்றை உடுத்து நான் வெளியே போனதும் அவை பட்டாடையானதால் பலரும் இதை நீ எங்கே திருடினாய் என்று கேட்டு என்னை அவமானப்படுத்துகிறார்கள். மேலும் போகிற இடங்களிலெல்லாம் என் நண்பர்களும் பிற சிறுவர் சிறுமியரும் என்னை எள்ளி நகையாடுகிறார்கள். சிலரை நான் மறுத்துரைத்து அதனால் ஏற்பட்ட கைகலப்பில் நான் ஒன்றிரண்டு பேரை அடித்தேன். அவர்கள் அனைவரும் சேர்ந்து திருட்டுப் பயலே என்று வைது அடித்துத் துவைத்து விட்டனர். அதன்பின் தான் நான் ‘இவ்வாடையும் வேண்டாம், இத்தொல்லை களும் வேண்டாம்’ என்று உன்னிடம் ஓடோடி வந்தேன்,” என்றான். ஆசிரியர் இவற்றைக்கேட்டு டாமியை நோக்கி “உன் உதவியின் பொருத்தமற்ற தன்மை இப்போது விளங்கிற் றல்லவா?” என்றார். டாமி தலை கவிழ்த்துக் கொண்டான். பின் சிறுவனிடம் தான் நல்லெண்ணத்துடன் செய்தாலும் ஆராயாது செய்ததை மன்னிக்கும்படி கோரினான். திரு பார்லோ அதன்பின் ஹாரியையும் டாமியையும் ஏவிச் சிறுவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் ஒரு நாளைக்குப் போதிய உணவு வகைகளை அனுப்பி வைத்தார். சிறுவனும் டாமியிடம் ‘எனக்கு நேர்ந்த தீமை என் நிலைமையினால், உன்னாலன்று. நீ வருத்தப் படவேண்டாம். நான் உன் நல்லெண்ணத்தை என்றும் மறவேன்’ என்றான். டாமியும் இனி சிறுவன் குடிநிலைக்கேற்ற ஆடைகள் வாங்கி அவனுக்கும் அவன் உடன் பிறந்தார்களுக்கும் கொடுப்பதென்று மனத்தில் உறுதி செய்துகொண்டான். 12. ஹாரியும் சேஸ் பெருமகனும் சிறுவனுக்கு ஆடைகள் வாங்கும் நோக்கத்துடன் ஹாரியும் டாமியும் மறுநாள் புறப்பட்டுச் சென்றனர். போகும் வழியில் அவர்கள் இரங்கத்தக்க ஒரு காட்சி கண்டனர். நன்கு கொழுத்த கொடிய வேட்டை நாய்கள் சில சேர்ந்து ஒரு சிறுமுயலைத் துரத்தித் துரத்தியடித்துக் கொண்டிருந்தன. களைத்துப் பலவகையில் காயமுற்று நலிந்தும் முயல் அவற்றுக்குப் பிடிகொடாமல் தப்பியோடிற்று. ஆயினும் நாய்கள் அதனை மோப்பம் பிடித்துத் தொடர்ந்தன. ஹாரி நின்ற இடத்துக்குப் பக்கத்திலுள்ள சாலைகளில் ஒன்றன் வழியாக அது ஓடி மறைந்தது. டாமி இக்காட்சியைக் கண்டு “இச்சிறு முயலை இத்தனை கொழுத்த வேட்டை நாய்கள் சேர்ந்து வேட்டையாடுவானேன்?” என்ற கேட்டான். ஹாரி இந்நாய்களின் வரலாறு அறிந்தவர்களுக்கு இது வழக்கமான செயல். இந்நாய்கள் சேஸ் பெருமகனுக்கு உரியவை. அவன் விலங்குகளையும் மனிதர்களையும் கொடுமைப்படுத்து வதையே பொழுதுபோக்காகக் கொண்டவன். ஏழைகள் அவன் பெயரைக்கேட்டால் நடுங்குவர். அவனைக் கண்டால் கரடி புலியைக் கண்டது போல் வெருவியோடுவர். காணாதபொழுது அவனை வெறுப்பர். அக்கொடியவன் விலங்குகள் மீது மட்டுமன்றி மனிதர் மீது கூட இவ்வேட்டை நாய்களை ஏவுவான். டாமி பெருமக்களில் இவ்வளவு கொடியவர்கள் இருக்கி றார்கள் என்பது எனக்குத் தெரியாது. இப்போது நாம் என்ன செய்யக்கூடும்? ஹாரி சில சமயங்களில் சில தீமைகள் நம்மால் விலக்க முடியாதவை ஆகின்றன. விலக்க முடிந்தால் நாம் விலக்கிக் கடமையாற்றுகிறோம். விலக்க முடியாவிட்டால் விலக்க முயலலாம். அதுவும் பயன் பெறாதவிடத்தில் விலக்கும் வாய்ப்புக்குக் காத்திருந்து அதனை மனவாக்குக் காயங் களால் எதிர்க்கும் முயற்சியில் முனையலாம். ஆனால் எச்சமயத்திலும் அதற்கு எவ்வகை ஆதரவும் கொடுக்கக் கூடாது. அதில் என்ன வந்தாலும் பட்டுக்கொள்வதே சிறந்தது. அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே நாய்கள் அவர்கள் இருக்குமிடம் வந்துவிட்டன. ஆனால் எக்காரணத் தாலோ அவற்றின் மோப்பம் தடைபட்டுவிட்டது. அவற்றின் பின்னால் குதிரை மீது வந்த சேஸ் பெருமகனுக்கு நாய்களை எப்பக்கமாய்த் திருப்புவது என்று தெரியவில்லை. ஆகவே ஹாரியை நோக்கி “சிறுவனே, இப்போது ஓடி வந்த முயலை நீ பார்த்திருக்கலாமே! அது எப்பக்கம் போயிற்று தெரியுமா?” என்று கேட்டான். ஹாரி மறுமொழி கூறவில்லை. திரும்பவும் பெருமகன் கேட்க, ஹாரி ‘எனக்குத் தெரியாது, ஐயா’ என்று கூறினான். சே. பெருமகன் நீ முயல் வந்ததையே காணவில்லையா? ஹாரி வந்ததைக் கண்டேன். அது போனதைக் கவனிக்க வில்லை. சே.பெ நீ பொய் சொல்லுகிறாய். அதை நீ ஏன் மறைக்க வேண்டும். நான் கேட்கிறேன். அது எங்கே போயிற்று என்று சொல். ஹாரி நான் பொய் கூறவேண்டிய தேவையுமில்லை. மெய் கூற வேண்டிய தேவையுமில்லை. என்னால் ஒன்றும் கூறமுடியாது. ‘கூற முடியாதா? நான் கூறச் செய்கிறேன்’ என்று கூறி அவன் தன் குதிரைச் சவுக்கினால் ஹாரியை அடித்தான். ஹாரி உடலில் சவுக்குப்பட்ட இடம் தழும்பேறிவிட்டது. அவன் உடல் துடித்தது. ஆனால் அவன் அசையவில்லை. பெருமகன் மீண்டும் மீண்டும் அவனை கை வலிக்கும் வரை அடித்தும் பயனில்லாது போயிற்று. அச்சமயம் அப்பக்கம் வந்த மற்றொரு நன்மகன் சிறுவனை இரக்கத்துடன் பார்த்து, ‘தம்பி நீ வீணில் அடிபடுவானேன். முயல்போன வழியைக் கூறி விடுவது தானே!’ என்றான். ஹாரி ஐயா, நாம் அடிபடுவதை விலக்குவதற்காகத் துன்பப் படும் ஒரு உயிரைக் காட்டிக் கொடுப்பது கோழைத்தனம். என்னை இந்தப் பெரிய மனிதர் வேண்டுமானால் கொல்ல லாம். அவரைக் கண்டிக்க அவருக்கு மேற்பட்டவர்கள் இல்லை. ஆனால் நான் அவர் கொடுமைகளுக்கு உடந்தையா யிருக்கமாட்டேன். நன் மகன் பெருமகனை நோக்கி “ஐயா, இச்சிறுவன் வயதில் சிறியவன். அறிவில் எவ்வளவோ பெரியவன். இவனை நீங்கள் வீணில் அடிப்பதனால் உங்களுக்கு என்ன பயன்? நீங்களாக முயலைத் தேடிக் கொள்ளுங்கள்” என்றார். சேஸ் பெருமகன் அதையும் கேளாமல் “இவன் சொல்லாவிட்டால் இவனுடன் நிற்கும் மற்றவன் சொல்லட்டும்” என்று உறுமினான். டாமி எங்கே தன்னையும் அவன் அடிப்பானோ என்று அஞ்சினான். ஆனால் அதற்குள் நன்மகன் பெருமகனை நோக்கி “ஐய, ஏழைகளை நீங்கள் துணிவுடன் எப்படி வேண்டுமானாலும் நடத்திக்கொள்ள முடியும். ஹாரியுடன் நிற்கும் டாமியிடம் அது செல்லாது. அவன் உம்மைக்காட்டிலும் பெருஞ் செல்வர் வீட்டுப்பிள்ளை. அவன் பக்கம் கை நீட்டுமுன் நன்றாக ஆய்ந்தோய்ந்து நீட்ட வேண்டும்” என்றான். நேர்மைக்குச் சிறிதும் விட்டுக் கொடுக்காத அக் கொடியவன் இவ்வெச்சரிக்கையை உடனே ஏற்று இரு வரையும் விட்டுச் சென்றான். நன்மகனும் ஹாரியைப் பாராட்டி “உனக்குச் செய்த தீமைக்கு இவன் நாளடைவில் துன்பம் அடைவது உறுதி. ‘வல்லானுக்கு வல்லான் வையத்தி லுண்டு’ என்பதை இவன் கவனிக்கவில்லை. வருங்காலத்தில் இது போன்றவரைக் கண்டிக்கும் ஆற்றல் உன் போன்ற அறிவாளி களுக்குக் கட்டாயம் வரும்” என்று ஆறுதலளித்துச் சென்றான். டாமி இவ்வளவு நிகழ்ச்சிகளிடையேயும் திகைத்து நின்றிருந்தான். அவன் இப்போது ஹாரியை நோக்கி “நீ கூறியபடியே அப்பெருமகன் நடந்து கொண்டான். நீ அவன் கையில் பட்டுத்துடிப்பதைக் காண எனக்குப் பொறுக்க வில்லை. ஆனால் எனக்கும் இன்னது செய்வதென்று தெரியவில்லை. நேர்மைக்கு அஞ்சுவதைவிட இக்கொடுஞ் செயலாளர் செல்வத்துக்கு அஞ்சுகிறார்கள் என்பதை மட்டும் காண்கிறேன். இத்தகையோரிடம் நீ இவ்வளவு உண்மை கூறி எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டாம் அல்லவா? ‘முயலை நான் காணவேயில்லை’ என்று கூறித் தப்பியிருக்கலாமே” என்றான். ஹாரி அது ஓரளவு சரியே; இத்தகையோரிடம் பொய் கூறுவது கூடத் தவறல்ல என்பதையும் நான் அறிவேன். ஆனால் துன்பத்துக்கஞ்சிப் பொய் கூறுவது கோழைத்தனம். அது தீமையை மென்மேலும் வளர்க்கும். இப்போது மெய் கூறி நான் துன்பமடைந்தாலும் அத்துன்பம் வீண்போகாது. ஏழை துன்பத்துக்கஞ்சி அடிமைப்படமாட்டான் என்ற நிலையை அது வளர்க்கும். டாமி உன்னைப் போன்ற எத்தனைபேர் துன்பப்பட்டு இத்தொல்லை நீங்க வேண்டுமோ! என்னைக் கேட்டால் இத்தீமைகளைக் கூடும்போது வன்மையாகக் கண்டித்து ஒழிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். என் கையில் இன்று துப்பாக்கியிருந்திருந்தால் இப்பெருமகனைச் சுட்டொழித் திருப்பேன். ஹாரி ஆம். நானும் முன்னாலெல்லாம் அப்படி எண்ணிய துண்டு. அப்போதெல்லாம் ஏலமாட்டாத இடத்தில் பொறுமை என்ற முறையையே கொண்டிருந்தேன். இப் போதும் உண்மையில் ஏலமாட்டாத நிலையிலேயே பொறுத்துக் கொண்டிருந்தேனாயினும், அந்நிலையில் நான் பொய் கூறத் தயங்கியிருக்க மாட்டேன். முயல் போகாத வழியில் போனதாகக் கூறினால் தீமை செய்யாமலே தப்பிக் கொள்ளலாம். இப்போது நான் காட்டும் பொறுமை எதிர்ப்பின் நோக்கமே வேறு. உன்கையில் துப்பாக்கியும் ஆற்றலும் இருந்து நீ சுட்டுக் கொன்றிருந்தால், இந்தப் பெருமகன் கொடுமை மட்டும் தானே ஒழியும் - அதுவும் ஒரு உயிரை ஒழித்து! அதனால் கொடியார் கொடுமை முழுவதுமோ, பெருமக்கள் கொடுமை முழுவதுமோ ஒழியுமா? மேலும் இவன் கொலை இவனும் நாளடைவில் திருந்த வகையில்லாமல் செய்து விடுமல்லவா? ஆனால் என் எதிர்ப்புப் போன்ற எதிர்ப்பு ஏழைகளுக்கும் வழிகாட்டும். செல்வரையும் நாளடைவில் திருத்தும். ஹாரியிடமிருந்து டாமி பொறுமை எதிர்ப்பு என்ற புதியதோர் தத்துவத்தை உணர்ந்தான். அதன் வெற்றியையும் அவன் விரைவிலேயே காண முடிந்தது. கடைக்குச் சென்று அவர்கள் திரும்பி வரும்போது அவர்கள் ஊர் வெளியிடத்தில் ஒரு புறம் மக்கள் ஆரவாரம் கேட்டனர். அப்பக்கமாகத் திரும்பிப் பார்த்தபோது ஒரு குதிரை தலைதெறிக்க ஓடுவதையும் அதன் சேணத்திற் சிக்கிய காலுடன் ஒரு மனிதன் பின்னால் இழுத்துச் செல்லப்படுவதையும் கண்டனர். பலர் இக்காட்சியைக் கண்டு கலவரப்பட்டுக் கூவினாலும், எவரும் எதுவும் செய்யத் தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றனர். குதிரை செல்லும் வழி சற்று வளைவாயிருந்தது. சிறிது தொலைவில் குதிரை வேகத்தை இயற்கையாகத் தடுக்கக் கூடும் படிக்கட்டு ஒன்று இருந்தது. ஹாரி குறுக்காக ஓடிக் குதிரை அப்பக்கம் வருமுன் அதில் நின்று கொண்டான். படிக்கட்டைக் கடப்பதற்கு அதனைக் குதிரை தாண்டியாக வேண்டும். வேகத்தைத் தடுத்து நின்று தாண்டத் தொடங்கு முன் ஹாரி தாவிச் சென்று அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டான். குதிரையின் ஓட்டமும் தடைபட்டது. பலர் உதவிக்கு வந்து குதிரையால் இழுத்துச் செல்லப்பட்டவனை விடுவித்தனர். குதிரைமீது சென்றவன் வேறுயாருமல்ல, சேஸ் பெரு மகனே. குதிரை எதையோ கண்டு கலைந்து மருண்டதினால் அவன் தவறி விழ இருந்தான். ஆனால் அவன் காலின் தார்முள் சேணத்தில் சிக்கிக் கொண்டது. பாதை கடுநிலமாயிருந்திருந்தால் அவன் அவ்விழுப்பில் மாண்டே போயிருக்க வேண்டும். நிலம் சேறும் சக்தியுமாயிருந்ததனால் அவன் ஆடைகள் கெட்டுச் சிறிது காயமடைந்ததுடன் நின்றது. அவன் அடைந்த கிலியும் அவமதிப்பும் அவனை வாட்டின. ஆனால் தன்னைக் காத்தவன் காலையில் தன் கொடுமைக்கு ஆளான சிறுவனேயென்று கண்டதும் அவன் பின்னும் வெட்கமுற்றான். ஆயினும் அதை வெளிக்குக் காட்டாமல் அவன் தான் செய்தவற்றை மன்னிக்கும் படி கூறிக்கொண்டு தன் சட்டைப் பையிலிருந்து ஒரு பொன்னை ஹாரியிடம் கொடுத்தான். ஹாரி அதனை அசட்டையுடன் மறுத்து, “நான் பிறருக்கு உதவுவது அவர்கள் பணத்தை எதிர்பார்த்தல்ல. அவர்கள் மனிதர்கள்; மனிதர் துன்பங் கண்டால் உதவுவது மனிதர் கடமை என்பதற்காகவே” என்றான். செல்வன் இம் மறுமொழியை எதிர்பார்க்கவில்லை. ஆயினும் அவனுக்குக் கிடைத்த அவமதிப்பால் அவன் வேறு எதுவும் கூறமுடியாமல் தன் குதிரையேறிச் சென்றான். ஹாரியும் டாமியும் சிறுவன் வீடு சென்ற போது சிறுவன் அவர்களை வரவேற்றான். திருபார்லோ ஓதுவாராகவும் ஆசிரியராகவும் இருந்ததுடன் குடும்ப மருத்துவ உதவிக்கு வேண்டிய பயிற்சியும் உடையவராயிருந்தார். அவர் சிறுவன் தந்தைக்கு மருந்தும் அவர்கள் குடும்பத்துக்கு வேண்டிய உணவு வசதியும் இதற்குள் அனுப்பியிருந்ததனால் அவர்கள் ஏற்கெனவே மகிழ்ச்சியுடனிருந்தனர். டாமி சிறுவனுக்கும் அவன் உடன் பிறந்தார்களுக்கும் எடுத்துச் சென்றிருந்த ஆடைகளை வழங்கிய போது அனைவரும் டாமியைப் பாராட்டினர். தம் குடும்ப நலன்களுக்கு அவனே பெரிதும் காரணம் எனக் கொண்டாடினர். டாமி ஹாரியிடம் ‘என் பணம் இது காறும் இவ்வளவு நல்ல பயனை என்றும் தந்ததில்லை’ என்று மகிழ்ச்சியுடன் கூறினான். 13. மண்ணுயிர் பேணல் திரு பார்லோவின் வாழ்க்கைப் பயிற்சிக் கல்வி ஹாரியை எப்படித் திருத்திற்றோ, அதே வகையில் டாமியையும் மிக விரைவாகவே திருத்திற்று. இருவருடைய வேறுபட்ட குடும்பச் சூழ்நிலைகள் இப்பயிற்சி முறையின் வெற்றியில் மிகுதி வேறுபடவில்லையாயினும், ஹாரியின் குடும்பச் சூழ்நிலை அவனுக்கு உலக அனுபவத்தையும் திறத்தையும் தந்திருந்தது. டாமியிடம் இப்பயிற்சி அதனைப் புதிதாகத் திடீரென்று உண்டுபண்ண முடியவில்லை. திரு பார்லோவின் பயிற்சிப் பண்புகளுள் ஒரு பண்புவகையில் அவன் செய்த தவறுகளும் கோமாளிக் கூத்துக்களும் இதனை வலியுறுத்தின. ஹாரி ஒரு நாள் ஒரு பருந்தின் பிடியுட்பட்ட கோழிக் குஞ்சை ஆசிரியரிணக்கம் பெற்றுப் பருந்தைத் துரத்திவிட்டு எடுத்து வளர்த்துவந்தான். தோட்டத்திலுள்ள பறவைகளிடம் அவன் அன்பாக நடந்து அவற்றின் நண்பனாகவும் விளங்கினான். ஆசிரியர் இச்செயல்களைப் போற்றி ஆதரித்ததுடன் உயிர் களிடத்து அன்புகாட்டுவதன் அவசியம் பற்றியும் அடிக்கடி பேசினார். முரட்டு இயல்புடைய விலங்குகள்கூட அன்பாக நடத்தப்பட்டால் பண்பு மாறி நட்புக் கொள்ளுவ துண்டு என்றும் பல கதைகள் வாயிலாக விளக்கினார். அத்துடன் மனிதன் மிகப் பழங்காலத்தில் இங்ஙனம் அன்பு பூண்டு பழக்கிய விலங்குகளே நாயும் பூனையும் கீரியும் என்பதையும், இவற்றின் இனங்களாகிய ஓநாய், காட்டுப்பூனை முதலிய விலங்குகள் இன்னும் கொடுவிலங்குகளாகவே உள்ளன என்பதையும் அவர் விளக்கினார். இவற்றைக்கேட்ட டாமிக்குத் தானும் அவ்வழியில் நின்று விலங்குகளைப் பழக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. டாமியின் நல்லெண்ணமும் நல்லார்வமும் அவனை உடனே செயலிலிறங்கத் தூண்டிற்று. அவன் உடன்தானே ஓர் அப்பத்துண்டைக் கையிலெடுத்துக் கொண்டு இதனை ஏதாவது ஒரு முரட்டு விலங்குக்குக் கொடுத்து அதன் குணத்தை மாற்றி அன்பு செலுத்துவேன் என்று புறப்பட்டான். எந்த விலங்குக்குக் கொடுக்க வேண்டும் என்றும் அவன் உறுதி செய்து கொள்ள வில்லை. முதன் முதல் கண்ணில் தென்படும் விலங்கினிடமே தன் செயலார்வத்தைக் காட்டுவது என்று எண்ணிக் கொண்டான். அவன் கண்ணில் முதல் முதல் தென்பட்டது ஒரு சிறு பன்றிக்குட்டி தான். அது பால்குடிப் பருவத்துக்குட்டி. அது தாயை விட்டுச் சிறிது தொலைவில் வெயில் காய்ந்து கொண் டிருந்தது. டாமி அதனை அன்புகனிய அழைத்து அப்பத் துண்டைக் கொடுக்கப் போனான். ஆனால் அத்தகைய செயல் எதையும் அறியப் பழகாத அச்சிறு விலங்கு பிடிபடாமல் உறுமிக்கொண்டே ஓடத் தலைப்பட்டது. டாமி “அட அறிவு கெட்ட, நன்றி கெட்ட பன்றிக்குட்டி, உனக்கு உணவுதரத் தானே வருகிறேன். ஏன் ஓடுகிறாய்? உனக்கு அன்புப் பாடம் கற்றுக் கொடுக்கிறேன் பார்!” என்று கூறிக் கொண்டு அதன் பின்னங்கால்களைப் பிடித்து இழுத்தான். இப் புதுப் பயிற்சி பிடிக்காது மருண்ட பன்றிக்குட்டி வீல், வீல் என்று கத்திக் கொண்டு உதறித் துடித்தது. ஓசை கேட்கும் தொலைவுக் குள்ளேயே இருந்த தாய்ப்பன்றி தன் குட்டியின் கதறல் கேட்டுப் பாய்ந்து வந்தது. அதன் மீந்த குட்டிகளும் கலகலத்துக் கூவிக்கொண்டு தாயுடன் ஓடிவந்தன. இப்படையெடுப்பைக் கண்டு சற்றுக் கலவரமடைந்த டாமி பன்றிக்குட்டியை நழுவ விட்டான். அது முழு வலிமையுடன் தாயிடம் பாய்ந் தோடுகையில் அவன் காலடிகளிடையில் புகுந்து அவனைத் தூக்கிப் போட்டது. அவ்விடம் சேறாயிருந்ததால் டாமியும் தன் நிலையிழந்து கால் வழுக்கி விழுந்தான். கால் முதல் தலைவரை சேற்றில் புரண்டது. அதன்பின் அவன் எழுந்திருக்கு முன் குட்டியை நோக்கி ஓடிவந்த தாய்ப்பன்றியும் பிறகுட்டிகளும் அவன் மீது மோதி அவனை மீண்டும் உருட்டித்தள்ளி மிதித்துச் சென்றன. இதற்குள் டாமியின் நல்லார்வமும் அதனையடுத்து ஏற்பட்ட பொறுமையும் முற்றிலும் மறைந்தது. அவன் கடுஞ்சினங்கொண்டு தாய்ப்பன்றியையும் பின்னங்காலால் பிடித்து உதைக்கத் தொடங்கினான். உதைபட்டு வெருட்சி யடைந்த அது அவனைப் பல முழதூரம் இழுத்துச் சென்று சேற்றில் தள்ளிவிட்டது. இத்தடவை அவன் விழுந்தெழுமுன் அப்பக்கமாக வந்த வாத்துப் படை பன்றிகளுக் கஞ்சி அவன்மீது புரண்டுருண்டோடிற்று. இவையெவற்றாலும் அவனுக்கு மிகுதி காயங்கள் ஏற்பட இடமில்லாமல் போனாலும் அவனுடைகள் அழுக்கடைந்து சிதைந்தன. அவனுக்கு அவமதிப்பும் ஆத்திரமும் ஏற்பட்டது. இந்நிலையில் அவனைக்கண்ட ஆசிரியருக்கு ஒரு புறமும் சிரிப்பும் ஒருபுறம் பரிவும் ஏற்பட்டது. இதெல்லாம் என்ன என்று அவர் கேட்டபோது அவன் “இம்முரட்டு விலங்குக்கு அன்புப் பயிற்சி தர முயன்றேன். இதெல்லாம் உங்கள் பாடத்தைச் செய்கையிற் காட்ட முனைந்ததன் விளைவுதான்” என்றான். ஆசிரியர் ‘நீ கற்றதும் நன்று. கற்றதைச் செயலில் காட்ட முனைந்ததும் நன்று. முனைந்த வகையில் தான் கோளாறு. எந்தப் புதிய கருத்தையும் முற்றிலும் பயன்படுத்த உலகப் பொது அறிவு அல்லது அனுபவ அறிவு வேண்டும். இத்தவறுகளால்தான் நீ உன் குறைபாடுகளைக் காண முடியும். தண்ணீரில் தத்தளிக்காமல் ஒருவர் நீந்தப் படிப்பதில்லை. கீழே விழாமல் மிதி வண்டியிற் பழகுவதில்லை. ஆகவே தேறுதல் அடைந்து போய் ஆடை மாற்றி உடலலம்பிக் கொள்’ என்றார். அவன் உடலலம்பி ஓய்வுற்றபின் ஆசிரியர் மெல்ல அவனுக்கு அவன் தவற்றை விளக்கினார். “மனிதரைப் போல் விலங்குகளுக்கும் இயற்கை இயல்பும் பழக்க இயல்புகளும் உண்டு. இவற்றின் பயனாக நம் உட்கோள்களை அவை உடனடியாக அறிந்து கொள்வதில்லை. நாம் செய்வதன் நோக்கத்தை அவை படிப்படியாக உணர்ந்து கொண்டதாக அவற்றின் செயல் மூலம் அறிந்தே அவை இயல்பு மாறுகின்றன என்று அறிய வேண்டும். அதுவரை பொறுமை காட்ட வேண்டும். பன்றிக் குட்டியை நீ அழைத்தபோது அது வரவில்லை. அதுதானாக வரும் வரை நீ காத்திருக்க வேண்டும். ஏனெனில் அதன் இயற்கையியல்பு கட்டுப்பாட்டுக்குள் அமைவதல்ல. சற்று உயர்ந்த பண்புள்ள பறவைகள் முதலிய உயிர்கள்தான் கட்டுப்பாட்டுக்குள் பழகமுடியும். உயிர்கள் உயருந்தோறும் இணக்கமும் அறிவும் இயல்பாக இருக்கும். படியில் தாழுந்தோறும் எதிர்ப்பு உணர்ச்சியும் அச்சமுமே மிகுதியாக இருக்கும்” என்றார். 14. யானையும் தையற் காரனும் மறுநாள் விலங்குகளின் இயல்புகளை உணர்த்தவல்ல கதைகளில் ஒன்றை ஆசிரியர் சிறுவர்க்குக் கூறினார். அதுவே ‘யானையும் தையற்காரனும்’ என்ற கதை. (கதை) இந்தியாவின் மேற்கரையில் சூரத் என்று ஒரு நகர் உண்டு. அதில் பட்டும் சரிகையுமே தைத்து வரும் உயர்கலைத் தையற்காரன் ஒருவன் இருந்தான். அங்காடித் தெருவின் ஒரு திருப்பத்தில் அமைந்திருந்த அவன் தையற்கடை வழியாக ஒரு யானைப்பாகன் நாள்தோறும் தன் யானையைக் குளிப் பாட்டக் கொண்டு செல்வான். சில சமயம் பாகன் அருந்தகம் செல்கையில் அக் கடைப்புறத்திலேயே அதைக் கட்டி விட்டுச் செல்வான். ஒருநாள் யானை, வாயிற் கம்பிகளின் வழியாகத் தும்பிக்கையை உள்ளே நுழைத்துத் துழவுவதைக் கவனித்த தையற்காரன், அதற்கு ஒரு எச்சரிக்கையாகத்தன் ஊசியால் துதிக்கையில் குத்தினான். யானையின் துதிக்கை மிக மென்மை வாய்ந்தது. சிற்றூசியால் குத்தவே யானைக்குக் கடுப்பு மிகுதியாக இருந்தது. அதனால் அது தையற்காரன் மீது சீற்றங்கொண்டு அவனிடத்தே பகை கொண்டது. மற்றொரு நாள் பாகன் குளிப்பாட்டும் போது யானை, அவன் அறியாதபடி துதிக்கை நிறையச் சேறும் நீரும் நிரப்பி அடக்கிக் கொண்டது. யானையின் துதிக்கை இரு குடங்க ளுக்கு மேல் பிடிக்கவல்லது. திரும்பிவரும்போது அது, சமயம் பார்த்து, உள்ளே பட்டுத் துணிகளைப் பரப்பித் தைத்துக் கொண்டிருந்த தையற்காரன் மீது அச்சேற்று நீரை இறைத்து வஞ்சம் தீர்த்துக் கொண்டது. அதனால், யானை சிறு தீமைகட்கும் நெடுநாள் கறுவம் வைத்துக் கொண்டிருந்து பழிவாங்கும் இயல்புடையது என்பதனைத் தையற்காரன் உணர்ந்தான். “யானை பழிவாங்குமியல்புடையது மட்டுமல்ல; ஓரளவு பொறுமையும் உடையதென்றே கூற வேண்டும். ஏனெனில் எவ்வளவோ பாரிய வல்லமையுடைய அவ்விலங்கு தீமை செய்யாதவிடத்தில் அடங்கியும், தீமை அளவிலேயே தீமை செய்தும் தன் மட்டு மீறாமலிருக்கிறது என்று கூறலாம். அது பட்டாடைகளை நனைத்ததேயன்றி வேறு ஊறு செய்யக் கருதவில்லை. மேலும் பாகன் தண்டனைகளுக்கும் அது பொதுவாகக் கறுவம் வைப்பதில்லை. கறுவம் கொள்ளும்போது கடம்பிடிக்கும் போதும் அது, அவன் ஆற்றலுக்கு மேற்பட்ட தன் ஆற்றலைக் காட்டுகிறது” என்றான் ஹாரி. ஆசிரியர் “உன் உய்த்துணர்வு சரியானதே. அவ்விலங்கு உருவில் மட்டுமல்ல பெரிது, சில வகையில் தன்மையிலும் அப்படியே” என்றார். 15. டாமியின் செயற் பண்பாடு ஒரு நாள் காலையில் ஹாரியும் டாமியும் உலவச் சென்றவர்கள், வழக்க மீறி நெடுந்தொலை சென்று விட்டனர். ஆகவே, களைப்பார ஒரு மரத்தடியில் உட்கார்ந் திருந்தனர். திருந்திய நல்லாடை உடுத்த ஓர் ஏழைப் பெண்மணி அவர்களிருப்பதைக் கண்டு அவர்களை அணுகி, “குழந்தைகளே, உங்களைப் பார்த்தால் நடந்து வழிதவறி அலைந்தவர்கள்போல் இருக்கிறதே” என்றாள். ஹாரி “நாங்கள் வழி தவறவில்லை. சிறிது தொலைவு நடந்து விட்டதால் ஓய்வு கொள்ளவே உட்கார்ந்திருக்கிறோம்” என்றான். “சரி, அப்படியானால், என் வீட்டுவரை வந்து சிற்றுண்டியருந்திச் செல்லலாம் வாருங்கள்” என்று அவள் அழைத்தாள். டாமிக்குக் களைப்பு மட்டுமன்றிப் பசியும் மிகுதியாக இருந்தது. ஆகவே ‘இவ்வம்மையாரின் அழைப்பை ஏற்றுப் போவோமே’ என்று ஹாரியைக் கேட்டான். ஹாரி ஒத்துக் கொள்ளவே, இருவரும் அம்மாதின் வீட்டுக்குச் சென்றனர். வீடும் சமையற்கட்டும் மாதின் ஆடையைப் போலவே திருத்தமும் தூய்மையும் உடையவாக இருந்தன. மாதின் இளஞ்சிறுமி அவர்கட்கு நறும்பாலும் அப்பத்துண்டுகளும் கொணர்ந்து கொடுத்தாள், இருவரும் அவற்றை உண்டு மகிழ்ந்து இன்னுரை யாடிக் கொண்டிருந்தனர். பிறகு அவர்களிடம் நன்றி தெரிவித்துக் கொண்டு புறப்பட விரும்பினர். அச்சமயம் சுடு மூஞ்சியுடன் ஒருவன் தடதடவென்று வீட்டுக்குள் நுழைந்து அம்மாதினிடம் “உங்கள் பெயர் தானா டாஸ்ஸெட்?” என்று கேட்டான். அம்மாது “ஆம். அதுவே எங்கள் குடிப் பெயர். நீங்கள் எதற்காகக் கேட்கிறீர்கள்?” என்றாள். அவ்வயலான் தன் சட்டைப்பையிலிருந்து ஒரு தாளுறை எடுத்து, இது ஒரு மன்ற நடவடிக்கைப் பத்திரம். உங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகத் திரு ரிச்சர்டு கிரஃப் பெற்ற உத்தரவுப் பத்திரம் இது. வட்டியுடனும் செலவு தொகையுடனும் உங்கள் கணவன் இதை உடனடியாகக் கொடுக்காவிட்டால், உங்கள் உடைமைகள் யாவற்றையும் கைப்பற்றி அவற்றை ஏலத்திலிட வேண்டி வரும்” என்றான். மாது எங்களுக்குக் கடன் எதுவும் கிடையாது. இதில் ஏதோ தவறு இருக்க வேண்டும். மேலும் திரு ரிச்சர்டு கிரஃப் என்ற பெயரையே நாங்கள் இதுவரை கேட்டது கிடையாது. என் கணவர் ஒரு செப்புக் காசுகூடக் கடன் வாங்கக் கூடியவரும் அல்லர். எங்கள் நில முதலாளிக்கு மட்டுமே. நாங்கள் பணம் கொடுக்க வேண்டும். அயலான் தவறு எதுவுமில்லை, அம்மணி, எங்கள் தொழிலை நாங்கள் நன்கு அறிந்தே வந்திருக்கிறோம். உங்கள் கணவன் திரு கிரஃப்பிற்கு 391 பொன் 10 வெள்ளி கொடுக்க வேண்டும். உங்கள் கணவர் வரட்டும். அவரிடம் எல்லாம் பேசிக் கொள்கிறோம். அதற்கிடையில் நாங்கள் வந்த காரியத்தைப் பார்க்கிறோம். அயலானுடன் மற்றொருவனும் வந்து வெளியில் நின்றிருந்தான். அவன் அவனையும் அழைத்துக்கொண்டு புறக்கூடத்தில் சென்றிருந்தான். சிறிது நேரத்தில் தள தளப்பான உடலுடைய ஒரு நடுவயதுடைய ஆடவர் வந்தார். அவரே அவ்வீட்டுத் தலைவர். அவர் வந்தவுடன் சிறுவரை வரவேற்றுப் பின் தனக்குப் பசியாக இருப்பதால் உணவு வட்டிக்கக் கூறினார். உண்ணுமுன் மாது “உங்கள் உணவு வேளையிலும் என்னால் ஒரு கலவரமான செய்தியைக் கூறாமலிருக்க முடியவில்லை” என்று கூறி, அயலார் வந்ததையும் அவர் கூறிய செய்திகளையும் தெரிவித்தாள். அவன் முகம் உடனே களங்க முற்றதாயினும் அவன் தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “அந்தோ, அதன் தொகை எவ்வளவு இருக்குமோ எனக்குத் தெரியாது. அது வேறுயார் கடனுமல்ல. உன் அண்ணன் கடை முறிவுற்றபோது அவன் கடனாளியாகிய இந்த ரிச்சர்டு கிரஃப் அவனைக் காவலில் வைக்கப் போனான். நான் அவனுக்குப் பிணையமாக இருந்து அவனைக் காத்தேன். அவனும் தடையின்றி மேல் புலம் சென்று தொழிலில் ஈடுபட முடிந்தது. அங்கே போன சில நாட்களில் பணம் அனுப்பி விடுவதாக அவன் வாக்களித்துத்தான் சென்றான். ஆயினும் சென்ற மூன்று ஆண்டுகளாக அவன் இருக்கும் திக்கோ அவனைப் பற்றிய விவரமோ தெரியவில்லை” என்றார். மாது இப்போது, முன்னிலும் பன்மடங்கு மனங்கலங்கி னாள். “ஐயோ, என் நன்றி கெட்ட அண்ணனாலும் என்னாலு மல்லவா கடனில்லாத நீங்களும் உங்கள் பிள்ளைகளும் இன்று திண்டாட வேண்டியிருக்கிறது. அதனாலல்லவா குடிப்பெருமையில் கருத்துடனிருந்த நம் வீட்டிலேயே இந்த ஏவலர் வந்து புக முடிந்தது” என அரற்றினாள். மனைவியின் துயர் கண்டபின் திரு டாஸ்ஸெட்டுக்குத் தன் இல்லத்தில் துணிந்தேறிய ஏவலராகிய அயலவர்மீது சினம் பொங்கிற்று. “நம் பெருமை கெடுமுன் நான் உயிர் கொடுத்துக் காக்கிறேன்” என்று அவன் வாளை உருவிக் கொண்டெழுந் தான். மனைவி உடனே அழுகுரலுடன் சென்று அவனைத் தடுத்து “என்ன செய்கிறீர்களென்று எதையும் ஆய்ந்தோயாது செய்துவிடாதீர்கள். உள்ள பெருமையாவது இருக்கட்டும். நீங்கள் செய்ய விரையும் செயல் என்னையும் குழந்தைகளையும் என்றென்றைக்கும் மீளாத்துயரில் ஆழ்த்தும்” என்றாள். திரு டாஸ்ஸெட்டும் அவள் கூற்றின் உண்மையறிந்து அமைந்தான். இதற்குள் தாய் தந்தையர் துயரை உணர்ந்து பிள்ளைகள் கண்கலங்கி அழத் தொடங்கினர். தந்தை, இனித் தெய்வமே கதி எனத் தலையிறங்கிச் சாய்ந்தான். டாமி, இக்குடும்பக் கலக்கம் முற்றும் நாடகக் காட்சி பார்ப்பதுபோல் பார்த்திருந்தான். ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை. அவன் சிறுமியிடம் “அம்மாவிடம் வேறு சமயம் வருகிறேன் என்று சொல்லு. நாங்கள் போய் வரு கிறோம்” என்று கூறிவிட்டு ஹாரியை அழைத்துக் கொண்டு புறப்பட்டான். திரு பார்லோவின் இல்லம் வந்ததும் அவன் பார்லோவிடம் சென்று, தனக்குத் தன் வீடு செல்லச் சிறிது ஓய்வு தர வேண்டினான். அவன் ஏதோ குறிப்புடன் கோரிக்கை செய்வதை உய்த்துணர்ந்த ஆசிரியர், அதற்கு இணங்கினார். அவர் தம் குதிரை வண்டியை வரவழைத்து அதில் அவனை அனுப்பி வைத்தார். மகனின் எதிர்பாரா வருகைகண்டு தாய் தந்தையர் வியப்புற்றனராயினும் வியப்பினும் மிக மகிழ்ச்சி உற்றனர். முதல்முதல் நலஉசாவு வினாக்கள் முடிவுற்றதும் அவன் அவர்களிடம் தனக்கு நாற்பது பொன்கள் வேண்டுமென்று கோரினான். தாய்தந்தையர் இக்கோரிக்கை கேட்டுக் காரணமறியாமல் மலைப்புற்றனர். ‘உனக்கு ஏன் அத் தொகை’ என்று அவர்கள் கேட்டதற்கு அவன், “சிறிது நாள் பொறுங்கள். உங்களுக்குத் தெரியவரும். நான் அதனை எந்தத் தீயவழியிலும் செலவு செய்யமாட்டேன் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்” என்றான். டாமியின் ஆர்வ முனைப்புக் கண்டு திரு மெர்ட்ட உள்ளூர மகிழ்ந்தார். இது டாமியிடம் இதுவரை காணப்படாத புதிய பண்பு என்பதை அவர் நுனித்துணர்ந்தார். ஆகவே அவனிடம் முழு நம்பிக்கையுடன் அத்தொகை தந்தார். ஆயினும் அது தீயவழியில் செலவு செய்யப்பட்டதாகக் கண்டால் பின் இதுபோல் கொடுக்க முடியாமற் போகலாம் என்று மட்டும் எச்சரித்தார். பின்பு டாமி ஹாரியை இட்டுக்கொண்டு டாஸ்ஸெட் குடியினரின் இல்லம் சென்றான். திருமதி டாஸ்ஸெட் அப் போதும் கவலையுடன் கண் கசிந்து கொண்டு தானிருந்தாள். சிறுவரை அவள் அன்புடன் வரவேற்றாள். டாமி அவளிடம் “அம்மா, நீங்கள் எங்களிடம் எவ்வளவோ பரிவு காட்டி னீர்கள். இப்போது உங்களுக்கு இன்னல் நேர்ந்திருப்ப தறிந்து நாங்களும் பரிந்து உதவ ஒருங்கியிருக்கிறோம்” என்றான். “குழந்தைகளே, எங்களிடமிருப்பதை உங்களைப் போலுள்ள குழந்தைகள் எப்போதும் துய்க்கலாம். எங்களுக்கு அவ்வழி யிலேயே நீங்கள் மகிழ்ச்சி ஊட்ட முடியும். ஆனால் எங்களுடைய இப்போதைய இன்னல் மிகப்பெரிது. நீங்கள் ஆறுதல் தர முடியும். ஆனால் உதவ முடியாது. எங்களாலும் ஒன்றும் செய்வதற்கில்லை. கடனில்லாமல் உழைத்து நாங்கள் நல் வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்கள்தான். எங்களாலியன்றவளவு பிறருக்கும் உதவுபவர்கள்தான். ஆனால் நாற்பது பொன் என்பது எங்கள் முயற்சிக்கு எட்டாதது. இதற்குத் தெய்வம் தான் வழிவிட வேண்டும். நம்மாலாவது யாதொன்றும் இப்போது இல்லை” என்று ஏக்குற்றாள். ‘எங்களால் உதவ முடியாதென்று உங்களுக்கு உறுதி யாகத் தெரியுமா?’ என்று கேட்டுப் பிறகு டாமிதான் கொண்டு வந்த பையை அவள் மடிமீது கவிழ்த்தான். அதிலிருந்து பொற்காசுகளாகவே நாற்பது பொன்கள் பொலபொலவென விழுந்தன. “இவற்றை எடுத்து உங்கள் கடனை அடைத்துவிடுங்கள். உங்களையும் உங்கள் தங்கக் கட்டிகளையும் தெய்வம் காப்பாற்றட்டும்” என்றான் டாமி. நம்பிக்கையின்மை, துன்பம் என்னும் தடங்காணா இருகடல்களின் எல்லையில் நின்றிருந்த அவ்அம்மையார் ஒரேயடியாக இன்பம், நன்றி என்னும் தடங்காணா மற்றிரு கடல்களின் எல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். துன்பத்தினிடையே திடுமென வந்த இவ்வின்பந் தாங்க மாட்டாமல் அவள் சாய் இருக்கையிற் சாய்ந்தாள். அவள் உணர்ச்சி வேகத்தால் நரம்புகள் முறுக்குற்று வலித்துக் கொண்டன. இப்புது நிகழ்ச்சி கண்டு யாவரும் அதிர்ச்சி யுற்றனர். திரு டாஸ்ஸெட் உடனே ஓடிவந்து ஆவன செய்தான், உசாவிச் செய்தியறிந்து அவனும் மனமகிழ்ச்சியுற்று டாமியை ஆரத் தழுவிக் கொண்டான். இனி நிலைமைகள் சரிப்பட்டு விடுமென உணர்ந்து டாமியும் ஹாரியும் விடைபெற்று விரைவில் ஆசிரியரகம் சேர்ந்தனர். வேனிற்காலம் ஓய்ந்து சாரற்காலம் தொடங்கிற்று. டாமியிடம் கண்ட இனிய மாறுதல்களை ஆசிரியரைப் போலவே டாமியின் தாய் தந்தையரும் பிறரும் வரவேற்றனர். சாரற் பருவம் நீங்கிப் பனிப்பருவம் வந்துற்றதும் பறவைகள் பாடலோய்ந்து அலைந்தாடலோய்ந்து தத்தம் கூடுகளிலடங்கின. சிறுவரும் தம் சுற்றுப்புற உலாக்கள் நீங்கி ஆசிரியரகத்திலும், தோட்டப் பயிற்சி நீக்கி நூலகப் பயிற்சியிலும் இறங்கினர். அடிக்குறிப்பு 1. ஸ்ரீ 39-10ள 16. அன்பும் அருளும்: தெம்பும் தெருளும் ஒரு நாள் செந்நிறக் கழுத்துடைய ஓர் அழகிய பறவை திரு பார்லோவின் இல்லத்தைச் சுற்றி வட்டமிட்டுக் கொண் டிருந்தது. ஹாரி ஆசிரியரை அழைத்து வந்து அதனைக் காட்டி “இது என்ன பறவை, எதற்காக இது வீட்டைச் சுற்றி வருகிறது?” என்று கேட்டான். ஆசிரியர் அதைப்பற்றி விளக்கினார். “இதனைச் 1செஞ்சிட்டு என்பார்கள். இது பெரிதும் அச்சமும் கூச்சமும் உடைய பறவை. ஆயினும் பறவைகளுள் இது எளிதில் மனிதருடன் பழகுவது. இது பசியோடிருப்பத னாலேயே இப்போது வீட்டைச் சுற்றிப் பறக்கிறது. பசியினால் தான் இது துணிவுடன் தானாக நம்மை நாடி வருகிறது. இப்போது நீங்கள் ஏதாவது தீனியிட்டால் வந்து தின்னும். ஆனால் இது தின்னுமுன்பே வெளியே ஓடிப்போக வழி பார்த்துக் கொண்டு தான் வரத்துணியும் ஆகவே முதலில் இந்தப் பலகணிகளையெல்லாம் திறந்து வைத்துவிட்டுத் தீனி போட்டு விலகி இருந்து பாருங்கள்” என்றார். டாமி அங்ஙனமே செய்தான். அது அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே தொத்தித் தொத்தி வந்து அப்பொறுக்கு களை எடுத்தெடுத்துத் தின்றது. அதன்பின் அது, பலகணி வழியாக வேகமாகப் பறந்து சென்று, அருகாமையிலுள்ள மரக்கிளையிலேயே நாள் முழுதும் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தது. உணவு கொடுத்த விருந்தினரை நன்றியுடன் பாராட்டி இசைவிருந்தளிப்பது போலிருந்தது அவ்வினிய பாடல். டாமியும், ஹாரியும் மாறிமாறி நாள்தோறும் அதற்கு உணவிட்டு வந்தனர். அது நாளடைவில் அவர்கள் கையில் வந்திருந்தே தின்றுவிட்டுப் போகவும் சில சமயம் அறைக் குள்ளேயே அவர்களை ஓட்டங் காட்டிப் பின் சென்று பாடவும் தொடங்கிற்று. ஆனால் ஒரு நாள் ஹாரி அதற்கு உணவு கொடுக்கப் போகும்போது அதைக் காணவில்லை. அது இருந்த மரத்தடியில் அதன் சிறகுகள் சின்ன பின்னமாகச் சிதறிக் கிடந்தன. சிறிது தொலைவிலிருந்து ஒரு பெரிய பூனை பறவையின் கால்களை மட்டும் நகங்களால் பற்றிக் கோதிக் கொண்டிருந்தது. தங்கள் செல்வச் சிறு பறவை கிழிக்கப்பட்டது கண்ட அச்சிறுவருக்கு முதலில் கண்கள் கலங்கின. பின் பூனைமீது சினங்கொண்டு அதைத் தாக்க முனைந்தனர். ஆனால் அது தன்னை அவர்கள் அணுகுமுன் ஓடி மறைந்தது. டாமி அழுதுகொண்டே ஆசிரியரிடம் வந்து பூனை யினும் கொடிய உயிரினம் இருக்க முடியாது. யாருக்கும் எத்தீங்கும் செய்யாத அப்பொன்னிளம் பறவையைக் கொல்ல யாருக்குத்தான் மனம் வரும்! அதனைக் கிழித்தழிக்கும் உயிரினத்தை உலகில் வைத்திருத்தல் படாது?” என்றான். ஆசிரியர் புன்முறுவலுடன் ஹாரியின் பக்கமாகப் பார்த்தார். ஹாரியும் “ஆம், ஐயா; டாமி கூறியது சரி. எனக்கும் அப்படியே தோற்றுகிறது. பார்வைக்கு முனிவர் போலும் அறியாச் சிறு குழந்தை போலும் இருக்கும் இந்த ‘நாட்டுப் புலி’ கொடுமையின் திருவுருவாகவே அமைந்திருக்கிறது” என்றான். ஆசிரியர் இந்தப் பறவை எவ்வுயிருக்கும் கெடுதல் செய்யாதது என்று நீங்கள் கூறுகிறீர்கள். நான் அப்படி நினைக்கவில்லை. ஆனாலும் இந்தப் பூனைக்கு அது எதுவும் தீங்கு செய்ததில்லை, செய்யப் போவதுமில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். அப்படி யானால் பூனைக்கு அதன் பேரில் வேறு என்ன பகைமையிருக்கக் கூடும்? ஹாரி அதற்குப் பகைமையிருக்க வழியில்லை. அது அதைத் தின்னும் பொருட்டே கொன்றிருக்க வேண்டும். ஆசிரியர் சரி, மனிதர் அதைத் தின்பதில்லையா? டாமி தின்பதுண்டு. நாம் கூடப் பறவைகளையும் பிற உயிர் களையும் சமைத்து உண்கிறோம். ஆசிரியர் கொல்லாமலா உண்கிறீர்கள்? டாமியும் ஹாரியும் கேள்வியின் போக்கு, பூனையை விட்டு விட்டுத் தம் மீது திரும்புவது கண்டு ஒன்றும் மறு மொழி கூற முனையாமல் விழித்தனர். ஆசிரியர் உங்கள் வாய் பேசாமையே இப்போது உங்களுக்கு ஒரு நல்ல மறுமொழியாயிற்றல்லவா? பூனை அப்பறவையைக் கொன்றது பகைமையாலல்ல. பசியினால் தான். பசியாத போதும் வேறு உணவு இருக்கும்போதும் நீங்கள் பறவை களைக் கொல்லாததுபோலவே பூனையும் அவற்றைக் கண்டாலும் ஓடி வேட்டையாடாது. ஆனால் இவ்வகையில் பசியால் கொடுமை செய்வது பூனையும் மனிதரும் மட்டு மல்ல; எல்லா உயிர்களும்தான். கிட்டத்தட்ட பூனை அறியாச் சிறு பிள்ளைபோலிருந்து பசியினால் நாட்டுப்புலியாக மாறியது என்று கூறினீர்களல்லவா? இப்போது அதோ பாருங்கள் உங்கள் செல்வப் பறவையினத்தைச் சேர்ந்த மற்றொரு செஞ்சிட்டு! அந்த மரக்கிளையில் உட்கார்ந்துகொண்டு அது என்ன செய்கிறது, பார்த்து வாருங்கள். சிறுவரிருவரும் ஒருபுறம் ஒதுங்கி நின்று அதனைக் கவனித்துவிட்டுத் திரும்பினார்கள். ஹாரி ஐயா, நீங்கள் கூறுவது சரியே. இச்செல்வச் சிறுபறவை யும் ஒரு கொழுத்த மரப்புழுவை மரப்பொந்திலிருந்து குத்தி எடுத்து, மரக்கிளையில் வைத்துச் சிறிது சிறிதாகச் சிதைத்துத் தின்கிறது. பூனையைச் சாது என்று நினைத்தது போலவே இதனையும் சாது என்று முற்றிலும் நினைத்திருந்தோம். இப்போது இன்னும் சிறிய உயிரினங்களுக்கு இதுவும் ஒரு குட்டி எமன் என்று கண்டோம். ஆசிரியர் ஆம், இது உலக இயல்பு. பூனைகள் எலிகளைக் கொன்று நாள்தோறும தின்கின்றன. நாம் அதைத் தடுக்க எண்ணுவதில்லை. ஏனென்றால் எலிகள் பண்ணும் தொல்லையை ஒழிக்கவே நாம் பூனையைச் செல்வமாக வளர்க்கத் தொடங்கினோம். பூனையில்லா விட்டாலும் பொறியைவைத்துப் பிடித்துக் கொல்லவே செய்வோம். ஆனால் நாம் எலியைக் கொல்வது தின்பதற்காக அல்ல. பின் எதற்காக? டாமி அது நம் உணவுப் பொருள்களை அழிக்கிறது. ஆசிரியர் நன்று; அப்படியானால் ஒரு உயிர் இன்னொருயிரைக் கொல்வதற்குப் பசிமட்டுமல்ல, தன்னலமும் ஒரு காரணம். மனிதர் உணவு இது என்று தெரிந்து மனிதர்மீது பகைமையால் எலி நம் உணவை அழிப்பதில்லை. ஆயினும் அதன் செயல் நமக்குத் தொல்லை விளைப்பதால் அதனைக் கொன்று ஒழிக்க விரும்புகிறோம். மனித நாகரிகம் தொடங்கிய நாள்தொட்டு மனித இனம் எலிகளினத்தின் மீது ஓநாய் போர்தொடுத்துப் பூனையினத்தின் உதவியுடன் கொன்றொழித்துக் கொண்டுதான் வருகிறது. பதினாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடக்கும் இப்போராட்டம் இன்னும் ஓய்ந்து விடவில்லை. ஏனெனில் இன்னும் உலகில் எலிகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. மனிதர் கொன்றொழிக்கும் வேகத்தை விட அது பெற்றுப் பெருகும் வேகம் மிகுதி. அது பெருகும் வேகத்தைவிட அதனை வேகமாகக் கொன்றொழித்து இப்பெரிய ‘இனப் போராட் டத்தை’ முடிக்க மனிதனறிவும் விஞ்ஞானமும் இன்னும் வகைதேடிக் கண்டுபிடிக்கவில்லை. ஹாரி எலி இனமா மனித இனத்தின் எதிரி? நீங்கள் கூறுவது புதிர்போடுவது போலிருக்கிறதே! ஆசிரியர் ஆம் எலி இனம் மட்டுமல்ல. அதனிலும் எவ்வளவோ சிறிய உயிர்கள் கூட மனித வல்லமைக்கு மேற்பட்ட ஆற்ற லுடையவையாக இருக்கின்றன. மாந்தர் தலையையே வாழும் உலகமாகக் கொண்ட பேன், அவர்களின் அழுக்காடை, தட்டு முட்டுப் பொருள்களில் கீறல் குழிவுகள் ஆகியவற்றி லேயே தங்கள் பேரரசாட்சி செலுத்தும் மூட்டைப் பூச்சிகள், சதுப்பு நிலத்தில் பிறந்து சாக்கடையிலும் மனிதர் அழுக்குப் பழக்கவழக்கங்களிலும் புதுக் குடியேற்ற நிலங் கண்டு வாழும் கொசுக்கள் முதலியன மனிதனால் இன்னும் அழிக்கப்பட முடியாத அளவுக்குப் பெருகும் ஆற்றலில் வல்ல பேரினங்கள் ஆகும். கரடி புலி சிங்கத்தை எறி படை, எய்படை, சுடுபடைகளால் வென்ற மனிதன் இவற்றின் பெருகும் ஆற்றல் முன்னும் சிற்றுருவின் முன்னும் செயலற்றவனாகவே இருக்கிறான். இவற்றிலும் நுண்ணியவையான, மனிதன் கண்ணுக்குப் புலப்படாத நோய் அணுவுயிர்கள் பல, இவ்வகைகளில் இன்னும் பெருக்கமும், பிழைத்துத் தப்பும் ஆற்றலும் வாய்ந்தவை. மருத்துவ அறிஞர் இவற்றுடன் போராடவே புதுப்புதுக் கருவிகளைக் கண்டுபிடிக்கப் பாடுபட்டு வருகின்றனர். டாமி எங்கோ தொடங்கி மனித நாகரிகம் பற்றிய பல அரிய செய்திகளை விளக்கியுள்ளீர்கள். பசியும் தன் நலமும் நாகரீகத்துக்கே அடிப்படை என்று கண்டோம். பகைமை விடுவிக்கும் பண்புகள் இவை மட்டுமா? ஆசிரியர் இல்லை. இவை அடிப்படைப் பண்புகள் மட்டுமே. துணைப் பண்புகளும் உண்டு. கொன்று பழகிய உயிர், ஓய்வு நேரங்களில் விளையாட்டாகவும் கொல்லும். இதில் வீர விளையாட்டும் உண்டு. பொழுதுபோக்கு விளையாட்டும் உண்டு. பூனை பசியில்லாத போதும் எலியைப் பிடித்துத் தப்ப விட்டு விளையாடுவதுமுண்டு. சிறு பசிவேளையில் பிடித்து வைத்துக் கொண்டு சித்திரவதை செய்வதுமுண்டு. சிறு பிள்ளைகளும் பூச்சிகளைப் பிடித்து விளையாடுவது இவ்வகையினதே. கொல்லும் பூச்சிகளை நாம் தின்பதில்லையாயினும் பிற உயிர்களைக் கொல்ல இருக்கும் மனித இனம் முன் கூட்டி இக் கொலைத் தொழிலை விளையாட்டாகப் பழகிக் கொள்கிறது. சிறுபிள்ளைகள் வீடுவைத்து, பள்ளி வைத்து, போர் வீரர் வைத்து விளையாடுவது பிற்கால வாழ்க்கையின் முன் ஒத்திகையல்லவா? அது போல் பெரிய உயிரினங்களைப் பிற்காலத்தில் வேட்டை யாடிக் கொல்லுவதற்கு முன்னொத்திகையாகவே பிள்ளைகள் சிற்றுயிர்களைக் கொல்வதில் விதிர்விதிர்ப்புக் காட்டுகிறார்கள். டாமி அப்படியானால் உயிர்களைப் பிள்ளைகள் கொல்வது சரி என்று கூறலாம் அல்லவா? ஆசிரியர் இயற்கையென்று கூறலாம். ஆனால் சரி ஆகாது. விலங்குகளும் அறிவற்றவர்களும் அங்ஙனம் செய்வது இயல்பு. மனிதன் அறிவுடையவன். அவன் கொலையைக் கூடியமட்டும் குறைத்துக்கொள்ள வேண்டும். சிறு பருவத்திலேயே பயிற்சி யிடையே பயிற்சியாக இதனையும் அவன் பழகிக் கொள்ளுதல் வேண்டும். விலங்குகளில், மனிதனின் பகை விலங்குகள் இருப்பது போல நட்பு விலங்குகளும் உண்டு. உண்மையில் பல விலங்குகள் பகையாகவும் நட்பாகவும் செயலாற்றலாம். பறவைகள் பயிர்களையும் அழிக்கும். பயிர்களை அழிக்கும் புழுக்களையும் அழிக்கும். குருவிகள் பயிர் மணிகளைத் தின்னும். ஆனால் அதைப் பெருக்குவதும் ஒரு நாட்டிலுள்ள பயிர் மணிகளை உலகமெங்கும் பரப்புவதும் அதுவே. மனிதன் தனக்குள் மட்டுமின்றி விலங்குகளுடனும் நட்பு உணர்ச்சி பழகினால் பகை விலங்குகளை நட்பு விலங்குகளாக்கலாம். அப்படி ஆக்கின விலங்குகளே குதிரை, ஆடு, மாடு, நாய், பூனை, கீரி முதலியன. நாயும் பூனையும் இயற்கையில் பகை உயிர்களானாலும், மனிதன் இரண்டையும் பழக்கி ஒரே வீட்டில் வளர்க்கிறான் அல்லவா? ஹாரி நாயும் பூனையும் எப்படி இயற்கைப் பகை? நாய் பூனையைத் தின்பதில்லையே! ஆசிரியர் இன்று பொதுவாகத் தின்பதில்லை. ஏனென்றால் இரண்டும் மனிதனைச் சார்ந்து பொது உணவு கொள்ளப் பழகிவிட்டன. மேலும் ஒன்றையொன்று தப்பிப் பிழைக்க வேறுவழிகள் ஏற்பட்டன. நாய் வலிவுடையது. ஆனால் பூனை மரம் ஏறும்; வளைந்து நெளிந்தும் ஓசையில்லாமல் மறைந்தும் ஓடவல்லது. இவற்றால் கொலைப் பழக்கம் குறைந்தாலும், ஒருபுறம் அச்சமும் மறுபுறம் வீரமும் மிகுந்துள்ளன. பூனை அச்சத்தால் வெருள்கிறது. சில சமயம் தன் குட்டிகளைக் காப்பாற்றப் போராட்டம் செய்யும். மேலும் பூனைக் குட்டிகளை நாயும், நாய்க்குட்டிகளைப் பூனையும் தின்று விடுவதுண்டு. பூனையே தன் குட்டிகளைத் தின்பதும் நாயே தன் குட்டியைத் தின்பதும் இன்னும் பல உயிரினங்களில் பெண் ஆணைத் தின்பதும், ஆண் பெண்ணைத் தின்பதும் உண்டு என்பதை நீங்கள் கவனிக்கலாம். ஹாரி ஆகவே அச்சமும் பகைமையின் ஒரு காரணம்; வீரமும் மற்றொரு காரணம் என்று அறிகிறோம். ஆசிரியர் ஆம், நாம் இப்போது வேட்டையாடுவது உணவுக் காகவும் பொழுது போக்குக்காகவும் மட்டுமே. மனிதன் முதலில் அச்சம் காரணமாகவே கொடு விலங்குகளுடன் போராடினான். போராட்ட வெறியால் அது வீரவிளையாட்டாயிற்று. எவ்விலங் கினத்தையும் தின்னாத யானை, முதலில் அச்சங்காரணமாகப் புலிகளுடன் போராடப் பழகிற்று. பின் அவ்வீர உணர்ச்சியை விளையாட்டாகப் பழகித் தன்னுடன் வாழும் பிற உயிரினங் களைக் காலால் மிதித்தழிக்கத் தொடங்கிற்று. பயிர்களையும் இதே உணர்ச்சியால் தின்றும் தின்னாமலும் அழிக்கும். காட்டில் மிதித்தழித்தே அது போக வழி காண வேண்டும். அவ்வழக்கத்தின் பழக்கம் தான் இது. டாமி விலங்குகள் குணம் மாறுமா? ஆசிரியர் மாறும். ஏனெனில் ஒவ்வொன்றுக்கும் மனிதனளவு அறிவு இல்லாவிட்டாலும் சற்றுக் குறையச் சிறிதளவாவது அறிவு உண்டு. சிவந்த பழங்களைத் தின்னும் கிளிக்கு மிளகாய்ப் பழம் கொடுத்துப் பாருங்கள். முதல் நாள் தின்று எரிவால் அவதியுறும்; மறுநாள் அந்நிறப்பழங்களைக் கண்டாலே வெறுக்கும். குரங்குக்குப் பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டைக் கொடுங்கள். முதல் நாள் பிடித்துக் கை கொள்ள வைத்துக் கொள்ளும். அது தீ என்று அதற்குத் தெரியாது. அடுத்ததடவை சூடு கண்ட பிள்ளைகள்போல அதுவும் அத்தோற்றமுள்ள பொருள்களைக் கண்டாலே விலகி ஓடும். ஹாரி மனிதன் அறிவு எவ்வகையில் இவற்றினும் சிறந்தது? அளவில் மட்டுந்தானா? ஆசிரியர் அளவிலும் சிறந்தது. தன்மையிலும் சிறந்தது. விலங்கு களைப்போல மனிதன் அனுபவத்தால் அறிகிறான். அறிந்த அனுபவ அறிவைத் திரட்டி மரபாக்கி நாகரிகமாக்குகிறான். அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றை ஊகிக்கிறான். இது அளவில் மிகுந்த அறிவாகிறது. ஆனால் தன்மையிலும் மனிதனுக்கு வேறுபாடு உண்டு. அவன் புதிய அனுபவங் களை உண்டு பண்ணுகிறான். கருவிகள் உண்டுபண்ணுவது, பொறி அமைப்பது, பிற விலங்குகளின் பண்புகளை மாற்றுவது, சமைத்தல், பயிரிடுதல், தெரிந்த அறிவைத் தன்னினத்தவர்க்கு அறிவிக்க மொழியும் அதற்கு வரிவடிவம் ஆக்குவது, படம், உருவம் அமைத்தல், கலங்கள் ஊர்திகள் அமைப்பு, காரண காரிய ஆராய்ச்சியால் வருங்காலமறிந்து திட்டமிடுவது ஆகிய இவை மனித அறிவின் தன்மையையே மாற்றி அமைத்துள்ளன. டாமி இவ்வளவும் மனிதனின் உயர்ந்த திறத்தைக் காட்டு வனவே. அப்படிப்பட்ட மனிதன் விலங்குகளிடத்தில் ஏன் அன்பு செலுத்த வேண்டும்? ஆசிரியர் விலங்குகளும் தன் குஞ்சு குட்டி, தன் இனத்தில் அன்பு செலுத்துகின்றன. ஆனால், பகைவரையும் அன்பால் பிணைத்து நட்பாக்கும் அன்பு மனிதனின் சிறப்பியல்பு ஆகும். காரணமில்லாமல் பகைகொள்வதை விலங்குகள் வளர்க்கின்றன. காரணமில்லாமலே அன்பு காட்டுவதை மனிதன் வளர்க்கிறான். இதற்குத்தான் அருள் என்று பெயர். இதுவே மனிதன் கண்ட கடவுட் பண்பு. விலங்குகளுக்குக் கடவுளைப் பற்றிய கருத்தும் கிடையாது. இக்கடவுட் பண்பும் கிடையாது. இப்பண்புடை யாரை, இதில் வழி காட்டியவரையே மனிதன் அருளாளர்1 எனப் போற்றுகிறான். இயேசு, ஸென்ட் பால், ஸென்ட் ஃபிரான்ஸிஸ் அஸ்ஸிஸி, மார்ட்டின் லூதர் ஆகியோர் இத்தகைய அருளாளர். ஆசிரியரும் மாணவரும் இங்ஙனம் பேசிக் கொண் டிருக்கையில் பனிமூடிய வானிடையே மேல் பால் விழும் ஞாயிற்றொளியின் செங்கதிர்கள் மங்கிய கழுநீர்ப்பூ வண்ணத்துடன் விளங்குவது கண்டனர். சிறிது நேரம் அக்காட்சியிலீடுபட்டிருந்து பின் தம்தம் இல்லத்துக்கு மீண்டனர். அடிக்குறிப்புகள் 1. சுயbin சுநனசெநயளவ. 2. இந்தியாவில் புத்தர், அசோகர், திருவள்ளுவர், சிபிச் சோழன், வள்ளலார் இத்தகைய அருளாளர். 17. ஏழைச் சிறுவன் நன்றியுணர்வு பனிக்காலத்தின் நடுவில் ஒருநாள் வழக்கத்துக்கு மாறாக வானம் வெளிவிட்டிருந்தது. ஆகவே சிறுவரிருவரும் வெளியில் சென்று உலவினர். நெடுந்தொலை சென்றபின் திடுமெனப் பனி பொழியத் தொடங்கிற்று. பனி மூடிய பாதைகளில் அவர்கள் வழி தப்பிச் சென்று விட்டனர். பனியின் கடுமையும் மிகுதியாகியதால் இருவரும் ஒரு பெருமரத்தின் பொந்தினை அடைந்து அதில் தங்கினர். பசி தாங்கிப் பழகாத டாமி இப்போது பசியாலும் குளிராலும் நடுங்கி அவதியுற்றான். ஹாரி “இப்போது வழியுந் தவறிவிட்டது. பனியாலும் வெளிச்செல்ல முடியவில்லை. பனி ஓயுமட்டும் நாம் இங்கேதானிருக்க வேண்டும்” என்றான். டாமி “ஐயோ, எவ்வளவு நேரம் இருக்க வேண்டுமோ? எனக்குப் பசிகாதை அடைக்கிறது. ஆனால் பசியைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம் போலிருக்கிறது. குளிர் தாங்கமாட்டாமல் உடல் மறுத்துப் போகிறதே!” என்றான். ஹாரி சிரித்துக் கொண்டு, “இவற்றிடையே தான் நாம் மனித மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும். இம்மரம் நமக்கு ஓரளவு பாதுகாப்புத் தருகிறது. இதனைச் சூழ்ந்துள்ள சுள்ளிகளைப் பொறுக்கி அனலுண்டாக்குவோம். அதில் குளிர் காய்ந்தபின் வேண்டுவதைச் சிந்திக்கலாம்” என்றான். அதன்படியே இருவரும் சுள்ளியும், உலர்ந்து பனியில் நனையாத சருகுகளும் தேடிவந்து குவித்து மூட்டமிட்டனர். அடியில் சருகும் காய்ந்த சுள்ளியும் மேலே சற்று ஈரமான வற்றையும் இட்டு மூட்டத்தை நீடிக்க வைத்தனர். செங் கொழுந்து விட்டு புகைமூடி எரியும் அனலில் இருவரும் கை கால்களை வாட்டிக் குளிர் தணித்துக் கொண்டனர். டாமி “ஒன்றுக்கும் உதவாத சுள்ளிகளிலல்லவா இந்நேரம் நம் உயிர்ச்சக்தி தங்கியிருக்கிறது. நான் இதனை இவ்வளவு சக்தியுடையதென்று இதுகாறும் எண்ணவில்லை” என்று கூறினான். “ஆம். இயற்கையைக் கையாளும் முயற்சியைக் கை விட்டுச் செல்வர், மனிதர் உழைப்பைக் கையாள்கின்றனர். இதனால் அவர்கள் உடல்வலுவும் இழந்து உடல் நலமும் மூளையாற்றலும் இழக்கின்றனர். ஏழைகளில்லாவிட்டால், அல்லது ஏழைகள் ஒற்றுமையுடன் ஒத்துழையாமைப் போராட்டம் தொடங் கினால், செல்வர் வாழ வகை தெரியாமல் திண்டாடுவர். இன்று ஏழைகளைத் தாழ்ந்த வகுப்பினர் என்று கருதுகிற அவர்களே ஏழைகள் தயவு நாடி அவர்களுக்கு அடிமைப்பட வேண்டி வரும்” என்றான். டாமி இங்ஙனம் சொல்லளவில் தான் சொல்லிக் கொள் கிறோம். ஏழைகள் எங்கும் அப்படிச் செய்வதாகக் காண வில்லையே. ஹாரி வேலை நிறுத்தத்துக்கு வேறு என்ன பொருள்? டாமி அது சம்பளம் உயர்த்திக்கொள்ள மட்டும் தானே உதவுகிறது. அதிலும் செல்வருடைய கை மேலோங்கித் தானே இருக்கிறது. ஹாரி வேலை நிறுத்தம் முழு வேலை நிறுத்தமாக இல்லாத தாலும் திட்டமிட்ட வேலை நிறுத்தமாக இல்லாததாலுமே இந்நிலை ஓரளவு இருக்கிறது. மற்றும் ஏழைகள் தங்கள் வலுவையறிந்து பெருக்கிக் கொள்ளவில்லை. பெருக்கிக் கொண்டு எதிர்ப்பதாலேயே புரட்சிகள் எழுகின்றன. ஆனால் புரட்சியிலும் கொடிய ஏழைகளின் ஆற்றல் ஒன்றை வரலாற்றில் காண்கிறோம். நாகரிகத்தில் முன்னேறிச் செல்வவாழ்வு வாழ்ந்த கிரேக்கரையும் உரோமரையும் நாகரிகமே இன்னது என்று அறியாத காத்தியர், விஸி காத்தியர், ஊணர்கள் படையெடுத்து அழிக்க முடியவில்லையா? இன்ப வாழ்வே நாகரிகம் என்று நினைப்பவர்கள் எளிய முரட்டு வாழ்வு வாழும் காட்டு மனிதர்களுக்கு இரையாகிறார்கள். ஏழை நாகரிக முறைகளைக் கையாளும் வரைதான் அவனுக்கு அடிமைத்தனம். அவன் காட்டு மிராண்டியானால் நாகரிகமே அவன் கைப்பட்டு அழியும். டாமி அப்படியானால் நாகரிகம் வாழ செல்வரும் உழைத்து உழைப்பாளி ஆகவேண்டும். ஏழைகளையும் தங்கள் இன்ப வாழ்வு வாழப் பழக்க வேண்டும். ஹாரி ஆம்; அதுவே உயர் நாகரிகம்; நிலையான, உண்மை யான நாகரிகம். டாமி நான் இனி செல்வர்களைத் திருத்தவும் ஏழைகளை உயர்த்தவும் பாடுபடுவேன். இரண்டிலும் நீ ஒப்பற்ற துணைவனாக இருப்பாய். ஆசிரியர் ஒப்பற்ற வழி காட்டி யாக இருப்பார். சரி, இப்போது குளிர் காய்ந்து கொண் டோம். உணவுக்கு வகை தேடவேண்டும். இச்சமயம் அவ்வழி ஒரு சிறு பையன் பனிப் புயலிடையே கூட ஒரு கட்டு விறகைச் சுமந்து கொண்டு பாடி ஆடிக் கொண்டு வந்தான். அவன் வேறு யாருமல்லன். டாமியின் உதவி பெற்ற சிறுவன் ஜாக்கி ஸ்மிதர்ஸே. அவன் அவ்விருவரும் அனல் காயப்படும் பாட்டைக் கண்டு, “அண்ணன்மீர், என் வீடு அருகிலேயே இருக்கிறது. இந்த மரப் பொந்தைவிட அங்கே வாய்ப்பாகத் தங்கி இளைப்பாறலாம் வாருங்கள்” என்று அழைத்துச் சென்றான். சிறுவன் தாய் தந்தையரும் தம்பி தங்கையரும் டாமி யையும் ஹாரியையும் அன்புடன் வரவேற்று, உலர் ஆடையும் கணப்புதவியும் அளித்தனர். சிறுவன் “ஐயா உங்களுக்குத் தரத்தக்க நல்ல உண்டியில்லையே என்று வருந்துகிறேன். எங்கள் வீட்டுத் தவிட்டப்பத்தை நீங்கள் உண்ண முடியாதே!” என்று வருந்தினான். டாமி “யார் சொன்னது தின்னமுடியாதென்று. நீங்கள் அதுவேனும் கொடாவிட்டால் நாங்கள் பட்டினி தானே கிடந்து மடிய வேண்டும். உங்களுக்கு வைத்துக் கொண்டு எங்களுக்கும் அதில் சிறிது கொடுத்தால் தின்று பசியாறுகிறோம்” என்றான். ஜாக்கியும், அவன் உடன் பிறந்தாரும் இரு மாணவருக் கும் தவிட்டப்பம் தந்து, தாமும் உண்டனர். இதற்குள் டாமியையும் ஹாரியையும் காணாமல் திரு பார்லோ கவலைப்படுவாரோ என்றெண்ணிய வீட்டுத் தலைவர் திரு ஸ்மிதர்ஸ் சிறுவரை அங்கேயே இருக்கக் கூறிவிட்டுத் திரு பார்லோ இல்லம் சென்றார். பார்லோ எங்கும் ஆள் விட்டுத் தானும் தேடும் முயற்சியிலேயே ஈடுபட்டுக் கவலையுட னிருந்தார். திரு ஸ்மிதர்ஸைக் கண்டு அவர்களைப் பற்றிக் கேட்டதுமே அவர் முகமலர்ச்சியடைந்து, “தங்கள் வரவு நல்வரவு. தாங்கள் கொணர்ந்த செய்தி இன்னும் மகிழ்ச்சிக் குரியது. என் சிறுவர்க்கு உதவியும் செய்து அவர்களைப் பற்றிய செய்தி கொண்டு வந்து கவலை மாற்றிய தங்களுக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டுள்ளேன்” என்று அளவளாவினார். சில நேரத்திற்குள் பார்லோ திரு. ஸ்மிதர்ஸுடன் அவர் இல்லம் சென்று சிறுவரை அழைத்து வந்தார். இனிமேல் வீட்டைவிட்டு நெடுந்தொலை செல்லாது எச்சரிக்கையாக இருக்கும்படி அவர்களுக்கு அறிவுரை கூறினார். 18. அறிவின் ஆற்றல் ஆசிரியர் பார்லோ சமயத்துறை ஓதுவாரானாலும் சமயத்துடன் அன்பையும் அறிவையும் ஒன்றுபடுத்திச் சிறுவரை மக்கட்பணியில் ஈடுபடுத்தினார். ‘மக்கட் பணி யிலீடுபடாத சமயம் போலிச் சமயம்; அது சமய எதிர்ப்பை விடப் பன்மடங்கு தீயது என்ற அறிவுரையை அவர் மாணவ ருக்குப் புகட்டினார். அதுபோலவே கல்வியும் அறிவும் ஆற்றலும் மக்களிடையே படித்தவரை உயர்த்தி, மக்களிடையே உள்ள உயர்வு தாழ்வுகளை மிகுதிப்படுத்துவதற்கல்ல; அவற்றைக் குறைத்து மனித சமூக முழுவதற்கும் பணி செய்வதற்கே என்று அறிவுறுத்தினார். இத்துடன் அறிவு வேறு, விளையாட்டு வேறு, வாழ்க்கை வேறு என்ற எண்ணத்தைப் போக்கி மூன்றும் மனிதன் வளர்ச்சியின் மூன்று இணைபிரியாப் படிகளே என்று காட்டினார். சிறுமைப் பருவம் விளையாட்டுப் பருவம். அவ்விளையாட்டு விளையாட்டுக் கல்வியாய், பின் கல்வி விளையாட்டாய், இறுதியில் வாழ்க்கைப் பயனாய்க் கனிவுறுகிறது. மூன்று பண்புகளும் ஒவ்வொரு படியிலும் மிகுதியாக வளர்ச்சியுற்றாலும் உண்மையில் எல்லாப் படிகளிலும் மூன்றும் கலந்து இணைந்தே நிற்கின்றன. பிள்ளை விளையாடும் பொருள்களைப் பிடித்தும் உடைத்தும் சுவைத்தும் விளையாட் டுடன் அறிவும் பெறுகிறது. அவற்றுள் தின்ன முடிபவற்றைத் தின்று பயனும் பெறுகிறது. கல்வியிலும் எழுத்தறிவு பயனை நோக்கியது. பாட்டும் நாடகமும் கலையும் அதன் விளையாட்டுப் பகுதிகள். அறிவு நூல் அறிவு பெருக்குவது. வாழ்க்கையிலும் தொழில், பயன் கருதியது. விருப்பத் தொழில், கேளிக்கைகள், கலைத் தொழில்கள், வேட்டை முதலியன விளையாட்டின் முதிர் நிலைகளே. வாழ்க்கையின் வெற்றி தோல்விகளும், குடும்ப சமூகப் பணிகளும், அரசியல் தொண்டும் அறிவு பயன் இரண்டும் கருதின. விளையாட்டிடையேயும், உலாவினிடையேயும், வினையாட லிடையேயும் திருபார்லோ மாணவர்கட்கு விலங்கியல்புகள், செடிகொடியின் இயல்புகள், மருந்து வகைகள், கனிப் பொருட் செல்வம் ஆகியவற்றைப் பற்றியும்; குடும்பம், வகுப்பு, ஊர், நாடு, உலகம் ஆகியவற்றின் ஆட்சி வகைகள், நாகரிக நிலை ஆகியவற்றைப் பற்றியும், பல நாட்டு மக்கள் பழக்க வழக்கங்கள் பற்றியும், நிலவகை, நிலச் செல்வம், கடற்பரப்பு, கடற்செல்வம் ஆகியவற்றை பற்றியும், மண்ணுலகின் உட்கூறுகள், புறக்கூறுகள், அவற்றின் அமைப்பு, தன்மை, அவை தோன்றிய காரண காரிய விளக்கம், மண்ணுலகை யொத்த பிற கோளுலகங்கள், ஞாயிறு, விண்மீனுலகங்கள் ஆகியவற்றைப் பற்றியும் ஆர்வமூட்டும் கேள்விகளை எழுப்பி, விளக்கங் காணும்படி செய்வித்தார். உடலாற்றலால் தொழி லாற்றிச் செல்வமாக்குவதினும், மிகுதியாக அறிவாற்றலால் தொழிலாற்றிச் செல்வம் பெருக்கும் வகைகளை அவர்கட்கு அறிவுறுத்த எண்ணி, அவர்களை அவர் பொழுதுபோக்காகத் தோட்டத்திற்குப் பனிக்கால இறுதிநாட்களில் ஒரு நாள் அழைத்துச் சென்றார். அப்போது பனிவீழ்வது சிறிது ஓய்வுற்றிருந்தது. ஆனால் பனி உருகுமளவுக்கு வெப்பம் ஏறவில்லை. அதுவே பிள்ளைகள் பனி உருளைகள் செய்து விளையாடும் பருவம். திரு பார்லோ களியாய் இறுகிய பனிச் சேற்றில் சிறிதெடுத்து உருட்டி ஹாரி கையில் கொடுத்தார். இயற்கை உணர்ச்சியால் தூண்டப்பட்ட அவன் அதனை மேலும் பனியுடன் சேர்த்து உருட்டிப் பெரிய பந்தாக்கினான். பனியுடன் பனி சேர்ந்து இறுகிக் கொண்டது. இவ்வேடிக்கையைப் பார்த்து எழுச்சி பெற்ற டாமி உருளையைத் தன் கையில் வாங்கிக் கொண்டான். ஹாரி மேலும் மேலும் பனியைச் சேர்த்துத் திரட்டவே பந்து பாரிய உருவடைந்தது. அதன் பளு மிகுதியாகி விட்டதால் டாமியால் அதனைக் கையில் வைத்துக் கொள்ள முடிய வில்லை. அவன் அதை மெல்லப் பனிமூடிய நிலத்தின் மீதே வைத்தான். பிறகு ஹாரியும் டாமியும் அதைப் பனி நிலத்தின் மீதே உருட்டினர். நிலத்திலுள்ள பனி அதனுடன் சேர்ந்து சேர்ந்து அது பெரிதாகிக் கொண்டே வந்தது. அது முழந்தாளுயரத் துக்கு மேல் பெரிதானபோது ஒருவரால் தள்ள முடியாத தாயிற்று. இருவரும் ஒரே சமயத்தில் சேர்ந்து தள்ள வேண்டி வந்தது. அரையளவு உயரமான பின் இருவர் சேர்ந்தாலும் அது அசையவில்லை. இனி உருட்டித் தள்ள முடியாதென்று அவர்கள் முயற்சியைக் கைவிடும் தறுவாயில் ஆசிரியர் ஒரு கோலை டாமியின் கையில் கொடுத்து ‘இதை உருளையடியில் நிலத்திலூன்றித் தள்ளு’ என்றார். அவன் தள்ளியபோது வியத்தகு முறையில் இருவராலும் தள்ள முடியாத அவ்வுருளையை அவனொருவனே தள்ள முடிந்தது. உருளை பின்னும் உருண்டு பெரிதானபின் இருவரும் அக்கோலூன்றித் தள்ளினர். அதன்பின் ஆசிரியர், உருளையின் பின்னால் ஒரு அடைகல் வைத்து அதன்மீது கோலை அடைகொடுத்து அதை மேல்நோக்கித் தள்ளக் கூறினார். உருளை மீண்டும் நகரத் தொடங்கியது. ‘ஒரு கோலால் இது எப்படி முடிந்தது?’ என்று இருவரும் ஆசிரியரிடம் கேட்டனர். அதற்கு ஆசிரியர் பொருள்களின் இயல்புகளைக் கூறும் இயல்நூல் துறை களில் அதன் இயக்கம் பற்றிய இயக்க நூல் ஒன்று உண் டென்றும், இங்ஙனம் பொருள்களை இயக்கும் முறைகள் பல உண்டென்றும் கோலால் தென்னும் இம்முறைக்குத் தென்னுகோல் (டுநஎநச) முறை என்று பெயரென்றும் கூறி அதன் தன்மைகளை விளக்கினார். மற்றும் ஒரு தோல் பட்டையை உருளையின் பின் கொடுத்து இருபுறமும் கயிறுமாட்டி உருளையை இழுத்துப் பார்க்கக் கூறினார். அப்போதும் அது எளிதாக இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். ஒரு பொருளைத் தூக்குவதைவிடத் தள்ளுவது எளிது என்று தள்ளுவதைவிட இழுப்பது எளிது என்றும் காட்டிவிட்டு இவ்வேறுபாட்டுக்கான காரணத்தையும் அவர் விளக்கினார். மண்ணுலகின் நடுநோக்கி எல்லாப் பொருள்களும் ஒரு ஈர்ப்புச் சக்தியால் இழுக்கப் படுகின்றன என்றும் இதனால் ஏற்படும் பளு நம் உடலையும் தாக்குகிறதென்றும் ஒரு பொருளைத் தூக்கும்போது வெறும் கை முயற்சி மட்டும் வேலை செய்கிறதென்றும் தள்ளும்போது உடலின் கனம் மட்டும் செயலாற்றுகிறது என்றும், இழுக்கும் போது உடலின் கனத்துடன் சேர்ந்து உடலே ஒரு தென்னு கோலாகப் பயன்படுகிறது என்றும் அவர் எடுத்துரைத்தார். 19. செல்வமும் அறிவும் ஒரு நாள் திரு பார்லோ மாணவர் இருவரையும் நோக்கி, “செல்வன், வேலைக்காரன், கணக்கப்பிள்ளை இம் மூவருள் தலை சிறந்தவன் யார்?” என்று கேட்டார். “இருவரையும் வைத்து வேலை வாங்கும் செல்வனே சிறந்தவன்” என்றான் டாமி. “இருவர் வேலையையும் தானே செய்யும் வேலைக் காரன் தான் சிறந்தவன்” என்றான் ஹாரி. “இருவர் விடையிலும் சிறிது சிறிது உண்மை உண்டு. செல்வத்தை வைத்திருப்பவன் செல்வன். அதனை ஆக்கு பவன் வேலைக்காரன். ஆனால் கணக்கப்பிள்ளையே சிறந்தவன் என்று நான் கருதுகிறேன்” என்றார் ஆசிரியர். இவ்விடை டாமிக்கு மட்டுமன்று, ஹாரிக்கும் வியப் பூட்டியது. இருவரும் ஒரு முடிவாக “அது எப்படி?” என்று கேட்டனர். ஆசிரியர் “வேலைக்காரனில்லாமல் செல்வன் வாழ முடியாது. அவனே வேலை செய்யும் திறமுடைய வேலைக் காரனாக இருந்தால்தான் வாழ முடியும். ஆகவே செல்வனை விட வேலைக்காரன் சிறந்தவன் என்பதில் பொருளுண்டு. ஆனால் வேலைக்காரன் உடலுழைப்பை மட்டும் நம்பியிருக்கிறான். அதனை வளர்க்கும் அறிவைப் பெறுவதில்லை; அவ் வேலையைச் செல்வனிடம் விட்டு விடுகிறான். செல்வனோ வேலைக்கு வேலையாளையும், அறிவுக்குக் கணக்கப் பிள்ளையையும் அமர்த்திக் கொள்கிறான். எனவே கணக்கப் பிள்ளை வேலைக்காரர் சார்பில் ஒரு வேலைக்காரனாகவும், செல்வன் சார்பில் அதனை வகுத்துத் தொகுத்து வளர்ப்பவ னாகவும் இருக்கிறான். அவன் அறிவு நாடிய வேலைக்காரனே. முதலாளியும் தொழிலாளியும் இல்லாத இடத்தில் அவன் தானே முதலாளியாகவும் தொழிலாளியாகவும் இயங்க முடியும். ஆதலால் அவனே மூவரினும் சிறந்தவன்” என்றார். வெளிப்பார்வைக்குச் செல்வமுமில்லாமல் உழைப்பு மில்லாமலிருக்கும் இத்தரகன் உண்மையில் இருவர் தன்மையுமுடையவன் என்று கண்டு மாணவர் மலைப் பெய்தினர். ஆசிரியர் இதனை விளக்கும் முறையில் குதிரைக் காரனும் கணக்கப் பிள்ளையும் என்ற கதையை வாசிக்குமாறு டாமிக்குப் பணித்தார். அவன் அதை வாசித்தான். குதிரைக்காரனும் கணக்கப்பிள்ளையும் குதிரைக்காரன் ஒருவன் தலைசிறந்த நற்பண்புகளை யுடைய ஒரு குதிரையை விற்கக் கொண்டு வந்தான். அதனைக் கண்டு வாங்க விரும்பிய ஒரு செல்வன் அதன் விலையை வினவினான். குதிரைக்காரன் முந்நூறு பொன் என்றான். செல்வன் “குதிரை மிக நல்ல குதிரைதான். ஆனால் ஒரு குதிரைக்கு யார் இவ்வளவு பெருந்தொகை கொடுப்பார்கள்?” என்று கேட்டான். செல்வன் எத்தனை கசடியும் குதிரைக் காரன் விலை குறைக்க மறுத்தான். செல்வனோ அதில் மூன்றிலொரு பங்கு கூடக் கொடுக்க மனமில்லாததனால் விலையிறக்கிக் கேட்காமல் மீண்டும் மீண்டும்” இது நேர்மை யற்ற விலை; நீ கனவு காண்கிறாய்; இது எண்ணிப் பார்க்க முடியாத விலை” என்று பசப்பினான். அதே சமயம் குதிரையைவிடவும் அவன் மனமில்லாதிருப்பதைக் கண்ட குதிரைக்காரன் அச்செல்வனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க எண்ணினான். “ஐயா, நீங்கள் குதிரையின் விலை நேர்மையற்றது என்று எண்ணுகிறீர்கள். சரி, நீங்கள் குதிரைக்கு விலையே கொடுக்க வேண்டாம். குதிரையின் காலிலிடும் இலாடங்கள் நான்கில் ஒவ்வொன்றிற்கும் ஆறு ஆணிகளாக இருபத்து நான்கு வெள்ளி ஆணிகள் பதித்திருக்கின்றன. இவற்றில் முதல் ஆணிக்கு ஒரு செப்புச் சல்லியும் அடுத்த ஒவ்வொன்றுக்கும் முன்னாணியின் இரட்டி மதிப்புமாகப் போட்டுக் கூட்டிய சல்லிகளின் தொகையினைக் கொடுக்கிறீர்களா?” என்று கேட்டான். “பொன் கணக்காகக் கேட்ட இவன் செப்புத் துட்டுக்கும் சிறிதான சல்லிக்கணக்கில் கேட்கிறான். விளையாட்டுக்காகக் கேட்கிறானோ, வெற்றிக்காகத்தான் கேட்கிறானோ! வெற்றியானால் இவன் பைத்தியக்காரன் தான்! இவனை மடக்கிவிடலாம்” என்று எண்ணியவனாய்ச் செல்வன், “தாராளமாக ஆணிகளின் மொத்த மதிப்பை நீ கூறிய கணக்குப்படி கூட்டிக் கொடுக்கிறேன். குதிரையைத் தர இணக்கம்தானா?” என்று கேட்டான். குதிரைக்காரன் ‘ஐயா, கணக்குப் போட்ட பின் சாக்கு போக்குக் கூறக்கூடாது. இப்போதே எச்சரித்துக் கொள் கிறேன்’ என்றான். இச்சமயம் இவை யாவற்றையும் கேட்டுக் கொண்டு ஒரு பக்கமிருந்த கணக்கப்பிள்ளை செல்வனை நோக்கி “ஐயா, கணக்குப் பார்க்காமல் இதனை ஒத்துக் கொள்ள வேண் டாம்” என்றான். செல்வன் கணக்கப் பிள்ளையை, நோக்கிக் கடுமையாக “எனக்கு மலிவாகக் கிடைப்பதை அருந்தலாக்கிக் குதிரைக் காரனிடம் கைப்பணம் வாங்க எண்ணமா உனக்கு?” என்றான். தன் மீது தன் தலைவன் அவதூறு கூறியதைக் கேட்ட கணக்கப்பிள்ளை, நமக்கேன் இத்தொல்லை என்று தலை கவிழ்ந்து இருந்தான். ஆனால் குதிரைக்காரன் அக்கணக்கப் பிள்ளை அறிவுடையவன், அத்துடன் நல்லவன் என்று எண்ணி, அவனை அவமதித்த செல்வனுக்கு ஒரு பாடமும், கணக்குப் பிள்ளைக்கு ஒரு நல்லூதியமும், அதேசமயம் தனக்குப் போதிய ஆதாயமும் வரும் வகையில் பேச்சைத் திருப்பினான். அவன் செல்வனைப் பார்த்து “ஐயா, என் கணக்குப்படி தர நீங்கள் ஏற்றாய் விட்டது. கணக்கப் பிள்ளை வேறு வகையாகக் கருதுகிறார் போலத் தோற்றுகிறது. ஆனால் நீங்களே கணக்கப்பிள்ளையைக் கடிந்து கொண்ட போது என் நாணயத்தையும் சற்று இழுக்குப்படுத்திக் கூறினீர்கள். ஆகவே அவரவர் தவறுதலுக்கு அவரவர் தண்டனை பெறும் வகையில் நான் ஒரு திட்டம் கூறுகிறேன். நீங்கள் கூறியபடியே ஆணிகளின் தொகை மதிப்பீட்டுக் கூட்டி நீங்கள் எனக்குக் கொடுங்கள். அது எனக்குப் போதும். அது நான் முதலில் கூறிய குதிரையின் விலையாகிய 300 பொன்னுக்குக் குறைவாக இருந்தால் உங்கள் விலையை ஏற்ற முயன்ற குற்றத்துக்காகக் கணக்கப்பிள்ளை அந்தக் குறையைப் போட்டு எனக்குத் தரட்டும். அது அந்த 300 பொன்னுக்குக் கூடுதலாக இருந்தால் அவன் உங்களுக்கு ஆதாயமே தேடினவன் ஆகிறானாதலால் அந்த 300 பொன்னை மட்டும் நான் எடுத்துக் கொண்டு மிஞ்சிய தொகையை நான் அவனுக்குக் கொடுத்து விடுகிறேன்” என்றான். செல்வன் இதனை ஆர்வத்துடன் ஏற்றான். ஏனெனில், தொகை 300 பொன்னில் குறைந்திருந்தால் அதன் விலையை மிகுதியாக மதிப்பிட்ட குற்றத்திற்காகக் கணக்கப்பிள்ளை தன்னிடம் செலுத்துவான் என்று மகிழ்ந்தான். தான் குறை வாக மதிப்பிட்டிருக்கக் கூடும் என அவனுக்குச் சிறிது கூட ஐயமில்லை. சல்லி மதிப்பை அவன் சல்லியாகவே மதித்தான்.* கணக்குப் பார்த்தபோது சல்லிக்கணக்கில் பதினேழா யிரத்து நானூற்று அறுபத்தைந்து பொன்னும் சில்லறையும் கொடுக்க வேண்டி வந்தது. குதிரைக்காரன் குதிரைக்குத் தான் கூறிய விலையாகிய 300 பொன்னையே எடுத்துக் கொண்டு இந்தப் பதினேழாயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து பொன்னையும் சில்லறையையும் கணக்கப்பிள்ளைக்குக் கொடுத்தான். இவ்வளவு பெருந்தொகையைக் கொடுத்தபின் செல்வன் செல்வத்தின் மிகப் பெரும் பகுதி குறைந்து விட்டதனால் கணக்கப் பிள்ளையே பெருஞ் செல்வனானான். கணக்கு வருமாறு சல்லிகள் ஆணி 1-வது: ... ... ... ... ... 1 ,, 2 ,, ... ... ... ... ... 2 ,, 3 ,, ... ... ... ... ... 4 ,, 4 ,, ... ... ... ... ... 8 ,, 5 ,, ... ... ... ... ... 16 ,, 6 ,, ... ... ... ... ... 32 ,, 7 ,, ... ... ... ... ... 64 ,, 8 ,, ... ... ... ... ... 128 ,, 9 ,, ... ... ... ... ... 256 ,, 10 ,, ... ... ... ... ... 512 ,, 11 ,, ... ... ... ... ... 1,024 ,, 12 ,, ... ... ... ... ... 2,048 ,, 13 ,, ... ... ... ... ... 4,096 ,, 14 ,, ... ... ... ... ... 8,192 ,, 15 ,, ... ... ... ... ... 16,384 ,, 16 ,, ... ... ... ... ... 32,768 ,, 17 ,, ... ... ... ... ... 65,536 ,, 18 ,, ... ... ... ... ... 1,31,072 ,, 19 ,, ... ... ... ... ... 2,62,144 ,, 20 ,, ... ... ... ... ... 5,24,288 ,, 21 ,, ... ... ... ... ... 10,48,576 ,, 22 ,, ... ... ... ... ... 20,97,152 ,, 23 ,, ... ... ... ... ... 41,94,304 ,, 24 ,, ... ... ... ... ... 83,88,608 மொத்தம் = 1,64,77,215 சல்லிகள், அதாவது = 17, 163 பொன், 15 வெள்ளி, 3 துட்டு. இந்தக் கதையைப் படித்த டாமிக்கும் ஹாரிக்கும் அது வியப்பாகவும் விளங்காப் புத்தியாகவும் இருந்தது. சல்லி எத்தனை பெருகினால் இவ்வளவு பெருந்தொகை வரமுடியும் என்று அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஆசிரியரே கரும்பலகையில் சுண்ணக்காம்பெடுத்துக் கணக்குப் போட்டுக் காட்டியபின்னரே அவர்கள் அதனைச் சரி என ஏற்றனர். கணக்கின் பயனைச் சிறுவனுக்கு மனத்திலூன்றச் செய்ய இக்கதை பெரிதும் பயன்பட்டது. அடிக்குறிப்பு 1. ஆங்கில நாணய மதிப்பில் 4 சல்லி (கயசவாiபே) ஒரு துட்டு, 12 துட்டு அல்லது பென்னி (யீநnலே), ஒரு வெள்ளி (ளாடைடiபே). 20 வெள்ளி ஒரு பொன் (யீடிரனே). 20. நாட்டுப் பற்றும் நாகரிகமும் ஹாரி, டாமி ஆகிய இருவருமே திரு பார்லோவின் பயிற்சி முறையில் மிக முன்னேறி வந்தனர்; இருவருமே சூழவும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பப் பெற்றனர். ஆயினும், ஹாரியே எப்போதும் தன்னிலும் மூத்த மாணவனாகவும் யாவராலும் முதன்மையாகப் போற்றப்படுபவனாகவும் இருப்பது கண்ட டாமிக்கு அவ்வப்போது சிறிது அழுக்காறு ஏற்பட்டிருந்தது. மேலும், முன்னே தான் இழிவாகக் கருதிய வகுப்பினருடனேயே தான் இப்போது பழகுவதனாலேயே தனக்கு மதிப்புக் குறைகிறது என்றும் ஆசிரியரும் ஹாரியும் அதே வகுப்பினர் ஆதலால் தான் தங்கள் வகுப்பை உயர்த்துகின்றனரென்றும் உள்ளூர எண்ணம் ஏற்பட்டது. இதனைப் புண்படாதபடி ஆசிரியரிடம் கேட்டு அவர் விளக்கமறிய அவன் எண்ணங் கொண்டான். டாமியும் ஹாரியும் ஒருங்கே முன்னேறி, ஒருங்கே யாவராலும் மதிக்கப்பட்டாலும் ஹாரியே எங்கும் முதல் மதிப்புப் பெற்றான். டாமிக்கு ஹாரியினிடம் பற்றும் மதிப்பும் இருந்ததாயினும் அவ்வப்போது சிறிது பொறாமை ஏற்படாம லில்லை. மேலும் தன் புதிய சூழ்நிலையில் யாவரும் ஒரே வகுப்பினராதலால் தன்னைவிட ஹாரியை மதிப்பது வகுப்புப் பற்றுக்காரணமாக இராதா, என்ற ஒரு ஐயமும் அவனுக்கு இருந்தது. இதனைக் குறிப்பாகக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளவும் அவனுக்கு ஒரு தறுவாய் கிட்டிற்று. ஆசிரியர் பலநாடுகள், பலநாட்டு மக்களின் பண்பு களை அவர்கட்குச் சித்தரித்துக் கொண்டு வந்தார். ஒரு நாள் அவர் கிரீன்லாந்து பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அது இங்கிலாந்தைவிட எத்தனையோ மடங்கு பெரிய நிலப்பரப்பு. ஆனால் அங்கே உயிர் வாழ்க்கை மிக மிகக் கடுமையானது. திமிங்கிலமும் நீர்க்குதிரையும் (ளுநயட) அதனைச் சூழ்ந்த கடலிலும் நிலத்திலும் மிகுதி. மக்கள் அதில் மிகக் குறைவு; அதுவும் தென்பகுதிகளிலேயே வாழ்கின்றனர். அவர்கள் உண்ண அங்கே எத்தகைய பயிர்களோ விலங்கினமோ கிடையாது. பேரிடையூறு களுக்கிடையே உயிரைவெறுத்துத் திமிங்கிலத்தையும் நீர்க் குதிரையையும் வேட்டையாடியே அவர்கள் வாழ்கின்றார்கள். அவற்றின் இறைச்சியே அவர்கட்கு உணவாகவும் தோலே ஆடையாகவும் எலும்புகளே கருவிகளாகவும் பயன்படுகின்றன. அவற்றிடையே வாழும் இம்மக்களைப் போன்ற நாகரிகமற்ற மக்கள் உலகில் எங்கும் கிடையாது என்று கூறலாம். ஆசிரியரது இவ்விளக்கத்தைக் கேட்ட டாமி “இவ்வளவு மோசமான நாட்டிலேயே இவர்கள் அடைபட்டுக் கிடப் பானேன். நல்ல நாடுகளுக்குச் சென்றாலென்ன? அவர்கட்கு வழி தெரியாதா?” என்று கேட்டான். ஆசிரியர் பழங்கால நிலையில் அவர்களுக்கு வழி தெரியாம லிருக்கலாம். ஆயினும் பழங்காலத்திலும் மக்கள் இடம் விட்டு இடம் போய்க் கொண்டுதானிருந்தார்கள். ஆனால் மனித இயல்பு பிழைக்கவே முடியாதநிலை ஏற்பட்டாலோ அல்லது, மற்றோரினத்தினரால் வாழ எவ்வழியும் இல்லாமல் துரத்தப் பட்டாலோ அன்றி எவரும் தங்கிய இடத்திலிருந்து புலம் பெயர்வதில்லை; தங்கள் வாழ்க்கை எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அதற்குத் தக்கபடி அவர்கள் வாழப்பழகிக் கொள்கிறார்கள். டாமி பிற உலக மக்களின் நாகரிகத்தைப் பார்த்து நாகரிகப் பட வேண்டும் என்ற எண்ணம் வராதா? ஆசிரியர் வெள்ளையரால் அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தப் பட்ட பிறகே மற்ற மக்கள் வெள்ளையர் நாகரிகத்தைப் பார்த்துப் பழகி, அதனை உயர்வுடையதென்று எண்ணத் தொடங்கு கிறார்கள். ஆனால் இது, உண்மையில் அவர்கள் அடிமை மனப்பான்மையே என்று கூறலாம். ஏனெனில் வெள்ளையர் கைக்கு அடங்காமல் இருக்கும் நீகிரோக்கள், சீனர், லாப்லந்து வாசிகள் ஆகியோர் எவரும் தத்தம் நாட்டையும் தத்தம் நாகரிகத்தையுமே உயர்வென்று கருதுகிறார்களே அன்றி ஐரோப்பிய நாகரிகத்தை உயர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. கிரீஸ்லந்து மக்களும் அது போன்றே வெள்ளையரைத் தம்மினும் கீழான நாகரிகம் உடையவராகவே கருதுகிறார்கள். டாமி அது எப்படிப் பொருந்தும்? ஆடை உடுத்தாததும் பச்சை இறைச்சியைத் தின்பதும் நாகரிகம் என்று கருத முடியுமா? ஆசிரியர் ஏன் முடியாது? ஆடை உடுத்த நாம், உடுத்துவது நாகரிக உயர்வு என்று கொள்கிறோம். உடுத்தாத அவர்கள் அதையே நாகரிக உயர்வு என்று கருதுவதும் அதுபோன்ற இயற்கை உணர்ச்சிதானே. எடுத்துக்காட்டாக அணிமணிகள் மிகச் சூடிக்கொள்ளாத நாம் அதையே நாகரிகம் எனக் கருதிக் கொள்கிறோம். காதும், மூக்கும் எங்கும் தொளையிட்டு நொறுநொறுவென்று அணிமணி வகையும் பாசியும் பவளமிடும் மக்களை நாம், நாகரிகம் அற்றவர் என்று தானே கொள்கிறோம். நாம் முகத்தில் பெண் தூலும் உடலில் பச்சையும் குத்திக் கொள்வது நாகரிகமற்ற செயல் என்று முற்காலத்திலெண்ணி, பிறகு கீழ் நாட்டவரைப் பார்த்து மேற்கொண்டு இப்போது அது நாகரிகம் என்று எண்ண வில்லையா? புகை குடிப்பது முதலிய பழக்கங்களையும் நாகரிகமற்றவை என்று கருதி நாம் கீழ்நாடுகளிலிருந்து பழகி இப்போது நாகரிகம் என்று கொள்கிறோம். ஆனால் இன்னும் முகமும் உடலும் நாம் சாயமடிக்கப் பழகாததனாலேயே அங்ஙனம் சாயமடித்துக் கொள்ளும் செவ்விந்தியரை நாகரிக மற்றவரெனக் கருதுகிறோம். டாமி இது சொல்லுக்குச் சொல் மாறாட்டமாக இருக்கிறதே அன்றி முற்றிலும் சரியாக முடியாது. வாழ்க்கை வசதிகளே இல்லாத தங்கள் நாட்டைக் கிரீஸ்லாந்து மக்கள் எப்படி மற்ற நாடுகளைவிடச் சிறந்ததாக எண்ண முடியும்? ஆசிரியர் செழிப்பு மிக்க எகிப்து, இந்தியா, சீனா முதலிய நாடு களைவிட இங்கிலாந்து நலநாடு என்று நாம் எண்ண வில்லையா? நம்மிடத்திலிருப்பது உண்மையில் மதிப்புடைய செல்வம் என்று தானே கூறுகிறோம்? அது இல்லாவிட்டால் வேறு இருப்பதையேதான் பெருமையாக எடுத்துக் கூறு வோம். நாட்டுப்பற்று முற்றிலும் அறிவு சார்ந்ததல்ல. நம் நாட்டுப்பற்றும் அப்படித்தான். எல்லார் நாட்டுப்பற்றும் அப்படித்தான். ஆனால் அது இயல்பானது. அதுவே தன் மதிப்புக்கும் உரியது. ஏனெனில் மற்றவர் செல்வம், நாடு, வாய்ப்பு, பண்பு ஆகியவற்றை நாடுவதினும் தம்முடையவற்றைப் பேணி முடியுமட்டும் வளர்ப்பதே சிறப்பல்லவா? பெரும்பாலும் இவ்வகையில் அவர்கள் தனிச் சிறப்புப் பெறவும் வழி உண்டு என்று கூறலாம். டாமி இவ்வகையில் கிரீஸ்லந்து மக்கள் செல்வமில்லாததே செல்வம் என்று கூறுவார்களா? ஆசிரியர் ஆம், கடுமையான சூழ்நிலைகளில் தாங்கள் அடைந்த திறமையையும் அரும்பண்புகளையும் அவர் காட்டுவர். அது உண்மையுமாகும். இயற்கை வளம் கெழுமிய இடத்தில் மனிதர் வளம் குறைவது இயற்கை தானே. கீரீஸ்லந்து லாப்லந்து மக்கள் உடலுறுதியும் உடல் நலமும் வாய்ந்தவர்கள். தொலைவிலிருந்து குறிதவறாது எய்வதில் ஒப்புயர்வற்றவர்கள். அவர்கள் சின்னஞ் சிறு படகில் பனிப்புயல்களிடையும் கற்களினிடையும் அஞ்சாது திரியும் திறமுடையவர்கள். இது போலவே அந்நாகரிகர்களென நாம் கருதும் பல மக்களிடமும், அவர்கள் சிறப்பாகக் கருதும் பல பண்புகள் உண்டு. அவரவர் நாடு அவரவர்க்குப் பொன்நாடு ஆவதுபோல அவரவர் பண்பு அவரவருக்குப் பொன்னான பண்பு. மதத்திலும் இது போல எல்லா மதத்தினரும் தத்தம் மதமே உயர்வு என்பர். இன்று மறுப்பியல் கிறித்தவர் (ஞசடிவநளவயவே ஊhசளைவயைn) கத்தோலிக்கரையும் கிறித்தவரல்லாத பிற மதத்தினரையும் நாம் நம்மினும் சிறப்புக்குன்றிய மதத்தைப் பின்பற்றியவராகக் கருதுகிறோம். ஆனால் சில நூற்றாண்டுகளுக்குமுன் எடனையும் தாரையும் வணங்கிய இயற்கை வழிபாட்டினராக இருந்தபோதும் அவ்வம் மத முறைகளையே பெருமையுடையதெனக் கொண்டிருப்போம். நாம் இன்று இஸ்லாமியராய் விடக் கூடுமானால் கிறிஸ்தவ மதத்தைக் குறைவுடையதெனக் கருதி, இஸ்லாம் மதத்தையே ஒப்புயர்வற்றதெனக் கருதியிருப்போம் என்பதில் தடையிராது. டாமி இப்போது, வகுப்புப் பற்றிய தன் கருத்தை இத்துடன் இணைத்தான். “நாகரிகம், நாடு, மதம் ஆகியவற்றைப் போலத்தானே வகுப்பும். ஏழையர் ஏழ்மையை உயர்வாகவும் செல்வர் செல்வத்தை உயர்வாகவும் கொள்வது இதுபோன்ற குழு உணர்ச்சியே ஆகும் அல்லவா?” என்று கேட்டான். ஆசிரியர் நகைத்து “உன் வகுப்புக்கும் நீ நன்றாகப் போராடுகிறாய். அது நன்று. ஆனால் செல்வர்கள் அனை வரும் அதற்குப் போராடவே இல்லை. கிரீன்லாந்து லாப்லந்து மக்கள், வெள்ளையர் தம்மைப் பெருமையுடையவர்களாக எவ்வளவு உறுதியுடன் நம்புகிறார்களோ அவ்வளவு உறுதியுடன் நம்பியே வாழ்கின்றனர். ஆகவே போராட வேண்டிய நிலை அவர்கட்கு இல்லை. ஏழைகளே போராட வேண்டிய நிலையிலுள்ளனர். பெரும்பாலான ஏழையருக்கு அத் தன்மதிப்பு உணர்ச்சி இல்லை என்பதை நீயே ஒத்துக் கொள்வாய்” என்றார். டாமி ஆம், ஹாரியைக் காணு முன்னும் தங்கள் விளக்கங் களைக் கேட்கு முன்னும் அத்தகைய உணர்ச்சி உடைய வர்கள் இருப்பார்கள் என்று நான் எண்ணியதே இல்லை. ஆசிரியர் ஆகவே ஏழை, செல்வ வகுப்புகளிருவருக்குமே தத்தம் வகுப்புணர்ச்சி இருக்கிறது என்று கூறமுடியாது. அப்படி இருந்திருந்தால் அது இயற்கையாக இருக்கும். இப்போது இருப்பதெல்லாம் ஏழைகட்கு உள்ளூர மனக் கசப்பும், வெளிப்பட அடிமை உணர்ச்சியும்; செல்வர்கட்கு உள்ளூரக் கொடுந் தன்மையும், வெளிப்பட அடக்குமுறையும் இறு மாப்புமே. இது இரு வகுப்புக்கும் பெருந்தன்மை அன்று. தன்மதிப்பும் அன்று. டாமி அப்படியானால் குற்றம் யாருடையது? ஆசிரியர் குற்றம் இருவர் மீதுமே. ஏழைகள் தன் முயற்சியும் தற்காப்புமின்றி அடிமை உணர்ச்சி கொள்ளுதல் தவறு. அதுபோல் செல்வர் தன் முயற்சியின்றிச் சோம்பேறியாக வாழ்வதும், இறுமாப்புடன் பிறரை அடக்கி ஒடுக்குவதும் தவறு. இப்போது ஏழைகளின் தன் மதிப்புணர்ச்சி வகுப்புணர்ச்சி அல்ல, இருவகுப்பையும் திருத்தும் நல்லுணர்ச்சியே என்பது விளங்கு கிறதன்றோ! டாமி முற்றிலும் விளக்கம் பெற்றேன். இதைத் தெளிவாகக் கேட்டதற்கு மன்னிக்கக் கோருகிறேன். ஆசிரியர் நீ தெளிவாகக் கேட்டதே சிறப்பு. ஹாரி நம் இவ்வுரை யாடலில் கலக்காமலே இருப்பது எதனால் தெரியுமா? அவன் இரு வகுப்பில் எதையும் சார்ந்தவனாகத் தன்னைக் கருதவில்லை. ஒரே மனித வகுப்பைச் சார்ந்தவனாகக் கருதுகிறான். உனக்கு நான் தரவிரும்பும் பயிற்சியும் அதுவே. ஹாரி ஏழை வகுப்பினனாகவும் இருக்கப்படாது. நீ செல்வ வகுப்பினனாகவும் இருக்கப்படாது. இருவரும் வகுப்பு வேறுபாடற்ற அதை ஒழிக்கும் ஒரே மனித இனத்தினராக இருத்தல் வேண்டும். டாமி ஆம்; நானும் அதையே விரும்பி ஏற்கிறேன். ஆசிரியர் அங்ஙனம் ஏற்பது இருவருக்குமே எளிதன்று. ஹாரி அவ்வழியில் போராடியே வருகிறான். நீயும் போராட வேண்டி வரக்கூடும். இருவரும் வெற்றி பெறுக. டாமியின் உள்ளார்ந்த அறிவுக் குழப்பமும் அழுக்காறும் அப்போது தெளிவு பெற்றது. 21. தொலை நோக்காடி திரு பார்லோவின் தோட்டத்தின் ஒரு மூலையில் ஒரு சிறிய இரண்டடுக்கு மாடி இருந்தது. அங்கே ஆசிரியர், பிள்ளைகளை என்றும் கூட்டிக் கொண்டு போனதில்லை. அது அத்தோட்டத் துடன் சேர்ந்தது என்பதே அவர்களுக்குத் தெரியாது. ஒரு நாள் அதிலிருந்து ஆசிரியர் வெளிவருவது கண்ட ஹாரி, ‘அக்கட்டடம் யாருடையது? என்ன கட்டடம்’ என்று கேட்டான். திருபார்லோ, “அது நம் கட்டடமே நம் தோட்டத்தைச் சேர்ந்ததே. வான நூல், உயிர் நூல், இயல் நூல் ஆகியவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளை நான் இங்கே என் அறிவு விளக்கத்துக்காக மேற்கொள்வது வழக்கம்” என்றார். ஆசிரியர் இல்லத்தின் ஒரு பகுதியில் ஆசிரியர் செய்வது, ஹாரிக்குக்கூடத் தெரியாமலிருக்கிறதே என்று டாமி மனத்துக்குள் கூறிக் கொண்டான். ஆசிரியர் அதைக் குறிப்பாக அறிந்து “இச்செய்திகளை நான், வேண்டும் போதன்றி யாருக்கும் தெரியப்படுத்துவதில்லை. என் வேலை சமயப்பாசுரம்பாடுவது. அதற்கு நாட்டுப்பற்றோ மக்கட் பற்றோ மிகுதி அறிவோ வேண்டுவதில்லை என்று கருதப்படுவதை நான் அறிவேன். இவை சமயப் பணிக்கு ஒவ்வாதவை, மாறானவை என்று கூட எண்ணுபவர்கள் இன்னும் இந்நாட்டிலும் பிறநாட்டிலும் இல்லாமலில்லை. அறிவியல் மிகவும் முன்னேற்றமடைந்து அதன் வாணிகப் பயறு எல்லாம் நுகர்ந்தாலும் அதன் பண்பும் பெருமையும் இன்னும் உலக மக்களில் எல்லா வகுப்பினரிடையும் சிறிதும் பரவி விடவில்லை. ஆகவே இவற்றை என் சமயப் பணிக்குக் குந்தகமில்லாதபடி மறைவாகவே நடத்தி வருகிறேன். இப்போது ஹாரியும் நீயும் பல செய்திகளை அறிந்து கொண்டிருப்பதால் உங்களுக்கு இவ்விடத்தைக் காட்டுகிறேன்” என்று அழைத்துச் சென்றார். அக்கட்டடத்தில் பல அறிவியற் கருவிகள் இருந்தன. அவற்றுள் முக்கியமானவை ஒரு நுண்ணோக்காடியும் ஒரு தொலை நோக்காடியுமே. முதலதின் மூலம் ஒரு சிறுதுளி தண்ணீரிலுள்ள கட்புலனாகாச் சிறு தூசுகளும் சிறு நுண் ணுயிர்களும் பன்னூறாகப் பெருக்கமுற்றுத் தோற்றின. மெல்லிய துணியை அதன் மூலமாகப் பார்த்தால் குறுக்கும் நெடுக்குமான நூல்கள் வண்ண இரும்புப் பாளங்களாகவும் இடையிலுள்ள சிறு தொலைகள் பலகணிக் கம்பியிடையிலுள்ள இடமளவு அகலமாகவும் காணப்பட்டன. இதற்கு நேர்மாறாகத் தொலை நோக்காடியில் தொலைதூர மலைகள், அருகிருந்து காண்பதுபோல் முழு விளக்கம் பெற்றன. வானத்திலுள்ள விண்மீன்கள் பலவற்றை அது விளக்கமாகக் காட்டியதுடன் திங்களைக் கிட்டத்தட்ட ஒரு நிலப் பரப்பாகக் காட்டப் போதியதாக இருந்தது. சிறுவர் இவற்றைக் கண்டு வியந்தனர். ஆசிரியர் அவற்றின் பயன்களையும் விளக்கினார். தொலை நோக்காடியையோ அதுபோன்ற புதுக் கருவிகளையோ அறியாத மக்களிடையே முதல் முதல் அது விளைவித்த மயக்கங்களைப் பற்றிய ஒரு கதையை இச்சமயம் ஆசிரியர் சிறுவர்கட்கு எடுத்துரைத்தார். தொலைநோக்காடி பற்றிய கதை ஆப்பிரிக்காவின் உள்நாட்டுப் பகுதியிலுள்ள ஒரு நாட்டின் தலைவனுக்கும் அவன் குடியின் உறவினனான மற்றொரு தலைவனுக்கும் மாறாப் போராட்டம் நடந்து வந்தது. அதில் உறவினன், பழந் தலைவனை அருகிலுள்ள மலையகத்துக்கு ஓட்டி விட்டு, நாட்டாட்சியைக் கைப்பற்றினான். பழைய தலைவன் தன் உழையர் குழுவினுடன் மலையில் மிகக் கவலையோடு காலம் கழித்தான். அங்கும், புதிய தலைவன் எந்த நேரம் படையெடுத்து வந்து தன்னை அழிப்பானோ என்று அவன் ஓயாது அஞ்சிக் கொண்டே இருந்தான். இப்போது, அவனுடன் முன்னே பழகி நண்பனாக இருந்த ஒரு வெள்ளையன் அங்கே வந்தான். எதிர்பாராது காட்டிடையே கண்ட தன் தோழனுடன் அவன் அளவளாவி நலமுசாவினான். தலைவன், தன் அவல நிலையிலும் அவனை ஆதரவுடன் வரவேற்றுத் தன் இன்னல்களையும் எடுத்துரைத்தான். வெள்ளை நண்பனுக்கு அப்போது ஓர் எண்ணம் உண்டாயிற்று. ஐரோப்பாவில் அப்போதுதான் தொலைநோக்காடி புதிதாக வழங்கத் தொடங்கியிருந்தது. ஆப்பிரிக்கக் காடுகளில் தொலைவிலுள்ள பகை விலங்குகளையும் செய்திகளையும் அறிய உதவும்படி அவன் அதனைத் தன் பயணப் பையிலிட்டுக் கொணர்ந்திருந்தான். அதனை எடுத்து அவன், தலைவன் நகரை நோக்கிப் பார்த்தான். புதிய தலைவன், பழைய தலைவனைப் பற்றிக் கவலையில்லாமல் தன் பெரு மக்களுடன் விருந்தாடிக் கொண்டிருந்ததைக் கண்டு “நண்பரே, தமக்குக் கொஞ்சமும் கவலை வேண்டாம். புதிய தலைவன் உம்மைப்பற்றிய எண்ணமே இல்லாமல் விருந்தாடிக் கொண்டுதானிருக்கிறான்” என்றான். பழைய தலைவன் ‘அது உங்களுக்கு எப்படித் தெரியும்?’ எனவே, ‘இதோ பாருங்கள்’ என்று வெள்ளை நண்பன் அவனைத் தொலை நோக்காடியில் பார்க்கக் கூறினான். தலைவன் அதனைப் பார்த்ததுமே தன் தோழர்களைக் கூவிப் “படை திரட்டுங்கள், பகைவன் வந்துவிட்டான்” என்று ஆரவார மிடத் தொடங்கினான். தான் கண்ட காட்சி அண்மையில் நிகழ்வதாகத் தலைவன் எண்ணியதால், புதிய தலைவன் அண்மையில் வந்து பாளையமடித்துள்ளான் என்று அவன் கருதினான். இத்தவறான எண்ணத்தை நீக்கி மெய்மையை விளக்க வெள்ளை நண்பனுக்கு நெடுநேரமாயிற்று. விளக்கியபின் அந்நண்பனுக்கு இதே தொலை நோக்காடியின் மூலம் இன்னொரு உதவி செய்யும் எண்ணமும் அவனுக்கு உண்டாயிற்று. அவன் தன் நண்பனிடம் “நான் சற்று நாட்டுப்பக்கம் போய் வருகிறேன். நான் கூறியபடி கேட்டால், உனக்கு உன் நாடு கைக்குக் கிட்டும்” என்றான். தலைவன், ‘சரி கூறுக’ என்றான். “உன் படைகளை அணிவகுத்து இங்கேயே நிறுத்திப் படைக்கலங்களைப் போருக்குச் செல்வதுபோல் ஆரவாரமாக வீசிக் கொண்டிருக்கச் செய். நான் வரும்வரை இது நடக்கட்டும்” என்று வெள்ளை நண்பன் கோரினான். இதன்பின் அவ்வெள்ளையன் புதிய தலைவனிடம் வந்து, வேறு பல செய்திகள் பேசி விட்டு அவன் பழைய தலைவன் பேச்செடுத்தபோது ‘இதோ அவன் என்ன செய்கிறானென்று இதன் மூலம், பார்’ என்றான். புதிய தலைவன் பார்த்ததும் தன்னருகிலேயே பழைய தலைவன் அணிவகுத்துப்போருக்கு வந்துவிட்டதாகத் தோன்றிற்று. அவன் உடனே படைகளை அழைத்துப் ‘பகைவர் கிட்ட வந்துவிட்டனர். போருக்கெழ நேரம் இல்லை. எல்லாரும் ஓடுங்கள்’ என்று கூறித் தானும் ஓடி விட்டான். வெள்ளை நண்பன் மலையிலுள்ள தலைவனிடம் சென்று விளங்கக் கூறி, அவனை நாட்டுக்கு அழைத்து வந்தான். அவன் தன் உறவினன், அவன் புது ஆற்றல் பெற்றானென்றெண்ணி, அதன் பின் அவன் மீது போரே தொடராமல் நட்போடு இருந்தான். “தொலை நோக்காடி ஆப்பிரிக்கரிடையே இவ்வளவு மலைப்பை உண்டு பண்ணியதில் வியப்பில்லை. எங்களுக்கே அது வியப்பாகத்தானிருக்கிறது” என்றான் ஹாரி. 22. டாமியின் குணமாற்றமும் ஹாரியின் ஏமாற்றமும் டாமி இப்போது பல மாதங்கள் தொடர்ந்து ஆசிரியரின் இல்லத்தில் பயின்று வந்ததால் சில நாள் வீடுவந்து செல்லுமாறு அழைப்பு வந்தது. இவ்வளவு நாள் பயிற்சியிடையே ஏற்பட்ட நற்பண்பு நன்கு தோயுமுன்னே பழைய சூழ்நிலையால் அது கெட்டுவிடப்படாதே என்று ஆசிரியருக்குச் சிறிது கவலையாக இருந்தது. ஆகவே அவர் ஹாரியையும் உடன் அனுப்ப விரும்பினார். ஹாரியிடம் இதைக் கூறியபோது அவனும் அதனை மனமுவந்து ஏற்றுக் கொண்டான். டாமியின் வருகை, மெர்ட்டன் இல்லத்தில் யாவராலும் ஓர் இளவரசன் வருகை போலக் கொண்டாடப் பட்டது. ஆசிரியரில்லத்தில் அவன் தானாகச் சிந்திக்கவும் தானாகத் தன் உணவை உண்ணவும் உடுக்கவும் உழைக்கவும் பயிற்றுவிக்கப் பட்டிருந்தான். ஆனால் மெர்ட்டன் குடியிருப்புக்கருகே வந்தது முதல் அவனுக்குத் தனியாகச் சிந்திக்கவும் நேரமில்லை; அவன் உண்பதும் உடுப்பதும் நடப்பதும் யாவும் பல வேலையாட்களின் ஓர் ஆரவாரச் செயலாகிவிட்டது. பிறர் எழுப்பியே அவன் எழுந்து, பிறர் வண்டியில் இழுத்துச் சென்றே அவன் வெளிச்சென்று, பலர் வணங்கி வழிகாட்டியே அவன் எச்செயலும் செய்ய வேண்டியதாயிற்று. இந்நிலையில் இடைக்காலப் பயிற்சியின் தடம் படிப்படியாக மறைய வேண்டி வந்தது. ஹாரியின் தோழமை ஒன்று மட்டுமே மிகுந்திருந்தது. ஆனால் ஹாரியை அவ்வில்லத்தில் திரு மெர்ட்டனைத் தவிர யாரும் கவனிக்கவேயில்லை. தொடக்கத்தில் டாமி அவனைப் பிறர் அழையாவிட்டாலும் தான் அழைத்தே எச்செயலும் செய்துவர முயன்றான். ஆனால் பிறர் பிடிவாத மான புறக்கணிப்பிடையே அவனும் அப்பழக்கத்தை நழுவ விட்டான். ஹாரி அவனை அணுகாமலும், அதே சமயம் ஆசிரியர் தன்னிடம் கூறிய கடமையின் பொறுப்பறிந்து, முற்றிலும் அகலாமலும், தொலைவிலேயே நின்று பின்பற்றி வந்தான். திருமதி மெர்ட்டன் கூட டாமியை மட்டுமே கவனித்து, ஹாரியை முற்றிலும் புறக்கணித்து வந்தாள். அவர்கள் வீட்டுக்கு வந்திருந்த சீமாட்டி ஒருத்தி ஹாரியின் தோற்றத்தையே காணப் பிடிக்காமல் அவனைப் பற்றி ஏதாவது பிறரிடம் நையாண்டி செய்து குத்திப்பேசிக் கொண்டிருந்தாள். அவள் அவனைக் குடியானவன் பையன் என்றும், ஆசிரியர் பார்லோவால் உயர்குடி மகன் போல நடத்தப்பட்ட கோமாளிக் கீழ்மகன் என்றும் குறிப்பிட்டு அவமதித்தாள். டாமி எது பேசினாலும் எல்லாரும் அதில் நகைச் சுவையோ பிற உயர்பண்போ கண்டவர்கள் போல் கல கலத்து ஆரவாரித்துப் பாராட்டினர். அவனும் இதுவரை ஆசிரியரகத்தில் கீழ்த்தர மக்களால் உணரப்படாமல் தன் திறமைகள் இங்கே உணரப்பட்டுப் போற்றப்படுவதாக எண்ணலானான். இங்ஙனம் எண்ண எண்ண, ஹாரியிடம் அவனுக்கிருந்த பற்றும் மதிப்பும் படிப்படியாகக் குறைந்தன. அவன் ஹாரி காணத் தன் பேச்சுத் திறத்தை விளம்பரப் படுத்துபவன்போல் ஓயாது கடகடவென்று பேசி ஆர்ப் பரிக்கத் தொடங்கினான். இம்மாறுதல்கள் திருமெர்ட்ட னுக்குப் பிடிக்கவில்லை. ஹாரியும் இதுகண்டு கவலையுற்றான். இச்சமயம் அண்டையிலுள்ள நகரமொன்றில் ஒரு நாடகக் குழு நாடகமாடிக் கொண்டிருந்தது. டாமியும் நண்பரும் சற்றுப் பொழுதுபோக்கட்டும் என்று திரு மெர்ட்டன் அவர்களனை வரையும் நாடகம் பார்க்க அனுப்பினார். நாடகம் பார்க்க வந்த மக்கள் பெரும்பாலோரும் குடியானவர்களும் வணிகருமே ஆவர். டாமியின் நண்பர் தாம் அவர்களைப் போன்றவர்களல்லர் என்றும் உயர்குடியினர் என்றும் பிறருக்குக் காட்டுவதற்காக எல்லா மக்களையும் அவமதித்தும் வைதும் கலவரம் செய்தும் வந்தனர். நடிகர்களையும் நாடகக்காரர் களையும் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. கல்லும் கட்டியும் தாளும் அரங்கினுள் எறிந்தும் கை கொட்டியும் நாடகம் பார்ப்பவரைப் பார்க்கவிடாமல் செய்வதே தம் பெருமையைக் காட்டவழி என்று அவர்கள் எண்ணினார்கள். ஒருபுறம் ஒதுக்கப்பட்ட ஹாரி இடைமறிக்க முயன்ற போது அவர்கள் ‘அடே! உன் வகுப்புக்கு நீ என்று பேச வந்துவிட்டாயா? ஆனால் எங்களிடம் உன் தரமறிந்து பேசு’ என்றனர். டாமியின் நண்பரில் சிலர் அவனைப் பழித் துரைத்ததுடன் அடிக்கடி குத்தியும் இடித்தும் விளையாடினர். ஹாரி, டாமி வகையில் தன் பொறுப்பை எண்ணி யாவற்றையும் பொறுத்துக் கொண்டான். அவர்கள் டாமியின் விருந்தினர் ஆதலால் அவர்களை எதிர்ப்பது டாமியின் பெயரைக் கெடுப்ப தாகும் என்று எண்ணினான். ஆனால் இக்காரணத்துக்காகவும் அவனை யாவரும் கோழை என்றனர். நண்பர்களில் செல்வன் நாஷ் என்ற ஒருவன், யாவரிலும் மிகுதியாகக் கூட்டத்திற்குத் தொல்லை தந்தான். நகரப் பழக்கமுடைய ஒரு குடியானவன் அவனை நயமாக அடிக்கடி வேண்டிக் கொண்டும் அவன் கேளாமல் தன்னிடம் நயந்து பேசிய அவனையே கயவன் என்று கூறி முகத்தில் குத்தினான். இதனால் பொறுமை இழந்த அவன், செல்வன் நாஷை அவன் தோழர் காணப்பிடித்துக் குலுக்கிக் கீழே நிலத்தில் தள்ளி, அவன் நெஞ்சில் காலை ஊன்றிக் கொண்டு உட்கார்ந்தான். “அமரிக்கையாக இருக்கத் தெரியாததனால் இப்போது அமரிக்கையாய்க் கிடக்கப் படித்துக்கொள்” என்றான். தன் வீம்பனைத்தும் விட்டு அவன் பெட்டிப் பாம்பாய் அடங்கி யிருந்தான். டாமியும் நண்பரும் அதுகண்டு வாலாட்டாமல் வாளா இருந்தனர். அதன்பின் மற்றக் குடியான நண்பர் இடையீட்டின் பேரில் அவன் “இவர்கள் உயர்குடியினருமல்லர். பொதுக்குடியினரும் அல்லர். தம் தகுதி தெரியாக் கயவர்கள். ஆயினும் இவர்களுக்கு இன்று இவ்வளவு பாடம் போதும். மேலும் இவர்களுடன் இருக்கும் பையன் மிக நல்லவனாகத் தோற்றுவதால் அவனுக்காகவே இத்தெறுதலையை இத்துடன் விடுகிறேன்” என்றுகூறிச் செல்வன் நாஷ் மீதுள்ள காலை எடுத்து அவனைப் போகவிட்டான். 23. அவமதித்தவர்க்கு அவமதிப்பு மறுநாள் காலையில் சிறுவர் அனைவரும் உலவச் சென்றிருந்தனர். அச்சமயம் மக்கள் பெருந் திரளாக ஒரே திசையில் செல்வதைக் கண்டனர். செய்தி யாது என வினவிய போது அயலிடத்தில் ஒரு மஞ்சு விரட்டு விழா என்று கேள்விப்பட்டனர். டாமியின் நண்பர் சென்று அதைக்காண விரும்பினர். வீட்டில் சென்று கேட்டால் அவர்களுக்கு இணக்கம் கிடை யாது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஏனெனில் திருமதி மெர்ட்டன், தன் ஒரே செல்லப் பிள்ளைகளாகிய டாமியை எந்த இடையூறுகளிலும் சிக்கவிடாமல் எச்சரிக்கையாக இருக்குமாறு நண்பர்களுக்குக் கூறியிருந்தாள். நண்பரில் ஒருவன் “நாம் பேசாது போய் வருவோம். நாம் போனோம் என்று யாரிடமும் கூற வேண்டாம்” என்றான். “நாங்கள் ஒருவரும் சொல்ல மாட்டோம்” என்று யாவரும் கூறினர். ஹாரி மட்டும் ஒன்றும் பேசவில்லை. ஒருவன் அவனைச் சுட்டிக்காட்டி “அவன் சொல்லிவிடுவான் போலிருக்கிறது. அவன் குடியானவன்தானே! அவன் துரோகம் செய்யத் தயங்க மாட்டான்” என்றான். ஹாரியின் முகம் சிவந்தது. “துரோகம் செய்யும் வழக்கம் குடியானவனுக்குக் கிடையாது. நானும் இதுவரை எவர்க்கும் துரோகம் செய்தது இல்லை. ஆயினும் அதற்காக நான் பொய் சொல்லப் போவது இல்லை. மேலும் மஞ்சுவிரட்டு என்பது இடையூறு மிக உடைய விளையாட்டு. டாமியை அதில் தலையிடும்படி நான் ஒப்பமாட்டேன்” என்றான். தோழரில் ஒருவன் “இவன் முழுவதும் கோழை. இவனை யார் வரச் சொல்லுகிறார்கள். நாம் போவோம். இந்தப் பிச்சைக்காரன் இங்கேயே பிச்சையெடுத்துத் திரியட்டும்” என்றான். ஹாரி “நான் கோழை அல்ல. நீங்கள் போவதானால் நானும் வரத்தான் போகிறேன். நான் பிச்சைக்காரனுமல்ல. பிச்சைக்காரனானால்கூட உங்களிடம் வந்து பிச்சை எடுக்கத்தக்க பிச்சைக்காரன் யார் இருக்கக் கூடும்?” என்றான். அவன் பேசிய பேச்சை, தம்மையும் டாமியையும் அவமதிப்பதாகக் கொண்டு தோழர்கள் பலவாறாக எதிர்த் தனர். டாமியும் தன்னை மறந்து, தன் தோழர்முன் ஹாரி தன்னை அவமதித்ததாக எண்ணிக் கையை மடக்கி அவன்மீது பலமுறை குத்தினான். நட்பை ஒருபுறமும் தன் பொறுப்பை ஒருபுறமும் எண்ணி ஹாரி ஒன்றும் பேசாமல் குத்துக்களைப் பொறுத்து வாங்கிக்கொண்டு “நீ உன் தோழன்மீது இப்படி தவறு பண்ணுவாய் என்று நான் கனவிலும் எண்ணவில்லை, டாமி” என்றான். தோழர்கள் இப்போது, அவன் கோழை என்பதை உறுதிபண்ணி, அடிவாங்கியும் பணிந்து பசப்புகிறான் என்றனர். அத்துடன் இத்தகைய கோழை டாமியைத் தோழன் என்று கூறுவது மற்றும் அவமதிப்பதாகும் என்றனர். ஹாரி இதற்கு மேல் ஒன்றும் பேசாமல் கண் கலக்கத்துடன் அவர்களைத் தொடர்ந்தான். அவன் பொறுமையையும் அழுகையையும் கண்டு அவனை முற்றிலும் கோழை, என்றே நினைத்து அனைவரும் மீண்டும் துணிந்து அவமதித்தனர். அப்போது ஹாரி “என் நெடுநாள் தோழன் என்பதற்காகத்தான் டாமியின் அடிகளை நான் பொறுத்துக் கொண்டேன். நீங்கள் யாரேனும் என்னை அவமதித்தால் நான் பொறுக்கப் போவதில்லை” என்றான். இது கேட்ட செல்வன் நாஷ் அவனது சென்னியில் ஓங்கி அடித்தான். நாஷ் சற்றுப் பெரியவனாயினும் ஹாரி அவனைத் திருப்பி அடித்தான். இது முதல் இருவரும் மாறி மாறிக் குத்தியும் அடித்தும் சண்டையிட்டனர். ஹாரியை நாஷ் பலமுறை வீழ்த்தியும், ஹாரி மீண்டும் மீண்டும் எழுந்து அவனை நாலா பக்கமும் நின்று தாக்கி நன்கு முறியடித்துக் காட்டினான். அவனை இதுவரை அவமதித்தவரும் இப்போது வேண்டாவெறுப்பாக அவனைப் பாராட்ட நேர்ந்தது. அவர்கள் தம்மை மன்னித்து நாஷை விட்டுவிடும்படி கோரினர். ஹாரி இப்போது நாஷைத் தூக்கி எடுத்துவிட்டு “நீ எனக்கு ஒரு எதிரி அல்ல. உன்னைத் தாக்க நேர்ந்ததற்கு நான் மிக வருந்துகிறேன்” என்றான். இச்சமயத்தில் ஏழையினும் ஏழையான ஒரு நீகிரோச் சிறுவன் பிச்சை கேட்டுக் கொண்டு அங்கே வந்தான். அவன் தான் ஆங்கிலக் கடற்படையில் வேலை பார்த்தவனென்றும் வறுமையில் வாடுவதாகவும் கூறி இரந்தான். பலரும் அவனைக் கண்டு எள்ளி நகையாடினரே அன்றி எதுவும் செய்யவில்லை. ஹாரி அவனுக்கு ஏதேனும் கொடுக்க எண்ணிப் பையில் கையிட்டான். பையனும் ஆவலுடன் ஹாரியிடம் வந்து தன் குல்லாயைக் கவிழ்த்து நீட்டினான். பையில் அரைத் துட்டு மட்டுமே இருந்தது கண்ட ஹாரி உணர்ச்சி குன்றியவனாய், அதை எடுத்துக் குல்லாயில் வைத்தான். சிறுவனோ அவன் குறிப்பு முற்றும் அறிந்து பலமுறை தலை தாழ்த்தி வணக்கம் செய்து சென்றான். மஞ்சு விரட்டுக்கான ஏற்பாடுகள் இதற்குள் பெரும் பாலும் முடிந்துவிட்டன. காளைகள் ஓடும் நடு இடத்தைச் சுற்றியிருந்த கம்பிவேலிகள் மட்டும் இன்னும் பூட்டப் படவில்லை. அதற்குள் ஒரு முரட்டுக் காளை கட்டறுத்துக் கொண்டு கூட்டத்தை நோக்கி ஓடி வந்தது. எதிர்பாராது நேர்ந்த இவ்விடையூற்றால் கூட்டம் கலகலத்தது. காளையைத் தடுத்து நிறுத்த அனுப்பப்பெற்ற நாய்களைக் கூட அது குத்திச் சரித்துக் கூட்டத்தினரிடையே புகுந்து அமளி செய்தது. பலர் அதன் காலடியில் பட்டுத் துவைந்து உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர். செல்வன் மெர்ட்டனும் தோழரும், அது தங்கள் பக்கம் திரும்புவது கண்டு ஓடினர். ஆனால் டாமி ஓடுமுன் அது அவனையே குறியாகப் பார்த்து அவன் மீது பாய்ந்தது. டாமி அதுகண்டு அஞ்சிக் கலக்கமுற்றுக் கால் இடறி விழுந்தான். காளையின் காலடியில் அவன் துவைபட ஒரு கணப்போதே இருந்தது. அதற்குள் ஓடியவர் கீழே விட்டுச் சென்ற தார்க்கோல் ஒன்றை எடுத்துக்கொண்டு ஹாரி, காளையருகில் ஓடி அதைக் குத்தினான். காளை டாமியை விட்டுவிட்டு ஹாரியை நோக்கிக் கொம்புகளைத் தாழ்த்திக் கொண்டு விரைந்தது. இப்போது ஹாரியின் உயிருக்கு இடையூறு என்று நிலைமாறிற்று. இதற்குள் ஹாரியிடம் துட்டு வாங்கிய நீகிரோச் சிறுவன் காளையின் வாலைப்பிடித்து இழுத்துப் பின்னே நின்று அதனை நைய அடித்தான். அதே சமயம் அவன் பின்னங்கால் இடறலுக்கும் திறமையாகத் தப்பிக் கொண்டதால், காளை மீண்டும் மீண்டும் படும் அடி தாங்காமல் உங்காரமிட்டு வளைய வளையத் திரும்பிச் சிறுவனின் பிடியிலிருந்து தப்ப முயன்றது. அவனோ தானும் திரும்பித் திரும்பி அதற்குப் பிடி கொடுக்காமல் மீண்டும் மீண்டும் அடித்தான். இப்படிச் சிறிது நேரம் காளைக்கு நீகிரோச் சிறுவன் தாக்குக் கொடுத்ததன் பயனாக, காளைகளை அடக்கும் வீரர் பலர் கயிறும் சாட்டையும் கைக் கொண்டு திரண்டு வந்து மாட்டின் குளம்புகளிலும் கொம்புகளிலும் கயிறுகளை மாட்டி வரிந்து இழுத்து அதனைப் பிணித்தனர். டாமியின் உயிரும் ஹாரியின் உயிரும் நீகிரோச் சிறுவன் திறமையால் காப்பாற்றப் பெற்றன. ஹாரி மெர்ட்டனுடன் வந்த வேலைக்காரர்கள் அவனுக்கு இடையூறு வர இருந்த நேரத்தில் உயிர் கலங்கினர். மஞ்சு விரட்டுக்குப் போக வேண்டாம் என்று அவர்கள் தடுத்தும் அவர்களை மீறியே தோழர் வந்தனர் என்றாலும் அதனால் வரும் தவற்றுக்குத் தாமே தண்டனை பெற வேண்டிவரும் என்பதை அனைவரும் அறிவர். ஆயினும் ஹாரியின் வீரச் செயலால் அவன் இடையூற்றிலிருந்து தப்பியதே அவர்களுக்கு உயிர் வந்தது. அடுத்தபடி ஹாரிக்கு இடையூறு என்று அவர்கள் அஞ்சினாலும் நீகிரோவால் அது தவிர்க்கப்பட்டது கண்டனர். இன்னும் இருந்து நீகிரோப் பையன் கதியைப் பார்க்க அவர்கள் விரும்பி னாலும் அவர்கள் பொறுப்பு இடந்தரவில்லை. மேலும் டாமிக்கு உடலிடை ஊறு எதுவுமில்லாமலிருந்தாலும் அச்சத்தால் அவன் கை கால்கள் ஓய்ந்து விழுந்து கிடந்தான். ஆகவே அவர்கள் அவனைத் தூக்கிக் கொண்டு இல்லம் வந்தனர். ஹாரி, அவனுக்கு இனி இடர் இல்லை என்று கண்டதனாலும் நீகிரோவின் பாதுகாப்பில் இப்போது அவன் கருத்துச் சென்றதனாலும் அவன் உடன்செல்லாது பின் தங்கினான். காளை அடக்கப்பட்டு நீகிரோச் சிறுவனும் காக்கப் பட்ட பிறகே ஹாரிக்கு முழு உயிர் வந்தது. அவன் சென்று அச்சிறுவனை ஆரத் தழுவிக் கொண்டு பலவகையிலும் நன்றி பாராட்டித் தன்னுடன் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தான். தான் எத்தனை உதவி யாருக்குச் செய்தாலும் பிச்சைக்கார நீகிரோவாகிய யாவரும் தன்னைத் தீண்டி வீட்டுக்கே விருந்தாக அழைப்பார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆகவே அவன் அன்பு அழைப்பைத் தட்டாமல் ஹாரியுடன் அவன் வீட்டுக்குச் சென்றான். ஹாரியின் தந்தையாகிய திரு சான்ட்போர்டு நடந்ததை எல்லாம் கேட்டு ஹாரியையும் நீகிரோவையும் பாராட்டியதுடன் நீகிரோச் சிறுவனிடம் மிக நன்றி பாராட்டி உணவும் உடையும் தந்து தன் பிள்ளைபோல் சீராட்டினார். அத்துடன் தன் வீட்டை அவன் வீடாகப் பாவித்து அங்கேயே தங்கியிருக்கவும் அவர் அவனை வேண்டினார். சிறுவனும் சமூக வேலிவரம்புகள் அறுத்து எழுந்த இவ்வன்பு ஆர்வத்தினால் மகிழ்ச்சியும் நன்றியும் உடையவனாக அவர்களுடன் அளவளாவி இருந்தான். 24. மெர்ட்டன் குடியின் மனமாற்றம் ஹாரியின் வீரத்தைக் கண்டு மனமாற்றமடைந்தது போல் டாமியின் தோழர்கள் பாசாங்கு செய்தனராயினும் உள்ளூர அவன்மீது அவர்களுக்கு இருந்த கசப்பு குறையவில்லை. அவன் வீரத்தால் அவர்களுக்கு அச்சமே மிகுந்தது. டாமியை அவனே காப்பாற்றியது கண்டும் அவர்கள் மனம் மாறவில்லை. அவன் எச்சரிக்கையை மீறி டாமியை இட்டுச் சென்ற தங்கள் தவற்றை மறைக்க அதை அவன் மீதே சுமத்திவிட அவர் துணிந்தனர். டாமியின் வீட்டிலிருந்த பல உயர்குடிப் பெண்டிர் ஹாரியை வெறுத்தனராதலால் அவர்களும் அவர்கள் குற்றச்சாட்டுக்குப் பக்கமேளம் அடிக்கச் சித்தமாக இருந்தனர். பெண்களுடன் இருந்து பேசிக் கொண்டிருந்த திருமதி மெர்ட்டன் நெடுநேரமாகியும் டாமியும் தோழரும் வராதது குறித்துக் கவலைப்பட்டு வேலைக்காரரை உசாவினாள். அச்சமயம் ஒரு வேலையாள் ஓடிவந்து “அம்மா, பெரிய இடர் தொடர்ந்து விட்டதம்மா! நம் டாமிக்கு, செல்வன் டாமிக்கு’ கூவினான். ‘ஐயோ என் பிள்ளைக்கு இடரா! ஐயோ டாமி என்ன ஆனான்?’ என்று தாயுள்ளம் அலறித் துடித்தது. உணர்ச்சி மிகுதியால் அவள் உடல் சோர்ந்து விழுந்தனள். பெண்டிர் அவளுக்குத் தேறுதல் உதவிகள் செய்தனர். திரு. மெர்ட்டன் உடனே என்ன செய்தி என்று அறிய விரைந்து ஓடினார். அவர் சிறிது தொலை செல்வதற்குள் டாமியை ஏந்திக் கொண்டே வேலை ஆட்களும் சிறுவரும் எதிர் வந்தனர். டாமிக்கு உண்மையில் எவ்வகையான இன்னலும் இல்லை என்றறிந்து மனமமைந்தபின் நடந்தது என்ன என்று உசாவினார். உண்மையை ஓரளவு உய்த்தறிந்தபின் அவர் மற்றவருடன் வீட்டுக்குத் திரும்பினார். டாமியை வீட்டிற்குள் கொண்டு வருவதற்குள் திருமதி மெர்ட்டன் மீட்டும் உணர்வு பெற்று எழுந்தாள். மகன் இன்னலின்றி முன்னே கொண்டு வரப்பட்டதும், மீட்டும் மகிழ்ச்சி மீதூரப் பெற்று “ஆ என் குழந்தை; உயிருடன் வந்து சேர்ந்தாயா!” என்று எடுத்து அணைத்துக் கொண்டாள். சற்று ஆறுதலடைந்தபின் அவள் சுற்று முற்றும் தோழர்களைப் பார்த்து அவர்களிடையே ஹாரி இல்லாததைக் கவனித்தாள். உடனே அவள், அவனே இதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, அவன் மீது தன் அடங்கியிருந்த உணர்ச்சி முழுவதையும் போக்கி “ஆ, அந்தச் சிறு எமகாலன் உன்னுடன் திரும்பி வரவில்லையா? காளைக்கே அவன் இரையாகி இருந்தால் என் வயிற்றில் பால் வார்த்தது போல் இருக்கும்” என்றாள். டாமியின் தோழர் கூறியதையும் பெண்டிர் திருமதி மெர்ட்டினறிய உரத்துப் பேசிக் கொண்டிருந்ததையும் அவள் கவனித்தாலேயே அவள் எளிதில் இம்முடிவுக்கு வந்தாள். சிறுவன் டாமி “அம்மா, நீ சிறு எமகாலன் என்று யாரை இவ்வளவு கோபத்துடன் வைகிறாய்?” என்று கேட்டான். வேறு யார் இதனைக் கேட்டாலும் அவள் அவர்கள் மீது சீறியிருப்பாள். தன் மகனே கேட்டதில் வியப்புற்று “வேறுயாரை அப்பா நான் வைவேன். உன்னை இந்த இடையூற்றில் தள்ளி விட்டுத் தப்பி இருக்கிறானே, உன் தந்தையின் செல்வப்பிள்ளை, அந்த ஹாரி பயலைத்தான்!” என்று கடுகடுப்புடன் சொன்னாள். “யாரம்மா சொன்னது ஹாரி என்னை இடையூற்றில் கொண்டு தள்ளினான் என்று. என்னைப் போகக் கூடாது என்று அவன் எவ்வளவோ தடுத்துப் பேசினான். நான் அவன் அறிவுரையைக் கேட்டிருந்தால் இத்தனை இடையூறு நேர்ந்திராதே” என்று டாமி தாயிடம் கூறினான். திருமதி மெர்ட்டன் ஒன்றும் தோன்றாமல் விழித்தாள். “பின் உன்னை அங்கே போகத் தூண்டிய குற்றம் வேறு யாருடையது?” என்று மெர்ட்டன் கேட்டார். டாமி: ஹாரி ஒருவன் தவிர, வேறு எல்லாருமே இக் குற்றத்திற்குப் பொறுப்பாளிகள் தான், நான் உள்பட. திருமதி மெர்ட்டன் தன் தவறு உணர்ந்து குழப்ப முற்றாள். ஹாரி மீதுள்ள குற்றம் தவிர்ப்பது கண்ட உயர்குடிப் பெண்களில் ஒருத்தி “ஹாரி இத்தகைய வீர விளையாட்டுக் களில் செல்லமாட்டான். அவன் கோழை ஆயிற்றே. இடையூறு என்றால் தான் ஓடிவிடுவானே” என்று குற்றத்தை மாற்றிக் கூறினாள். ஆனால் டாமி, “அம்மா ஹாரி குற்றவாளியும் அல்ல கோழையுமல்ல. அவன் வீரன். என்னை அவன் தான் காப் பாற்றித் தானே அவ்விடருக்குள் குதித்தான். அவனுக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. உங்கள் தலைவர் சொல்லையும் கேட்டு நானும் அவனைப் புறக்கணித்ததுடன் பலவகையில் அவமதித்தும் விட்டேன்” என்றான். இதற்குள் முடிவுவரை இருந்து பார்த்து வந்த வேலையாட்களில் ஒருவன் “நம் செல்வன் டாமி கூறுவது உண்மையே. டாமிக்கு வந்த இடையூற்றை ஹாரி தன்மீது ஏற்றுக் காளைக்குப் பலியாகத்தான் இருந்தான். ஆனால் ஹாரியைப் போலவே வீரனான ஒரு நீகிரோச் சிறுவன் வந்து ஹாரியையும் காத்ததுடன் காளையுடன் நெடுநேரம் மல்லாடி மற்றவர் அதனை அடக்க உதவினான். நல்ல காலமாக ஹாரி தலையிட்ட பின் யாருக்கும் தீங்கு இல்லை. டாமிக்கு முன்னே காளையின் கலசலால் மட்டும் சிலர் காயமுற்றும் ஒருவர் இருவர் இறந்தும் போயினர்” என்றான். ஹாரி மீது அவதூறு கூறி முன் வந்த பெண்கள், இப் போது ஹாரியைப் புகழலாயினர். பரவச திருமதி மெர்ட்டன் மட்டும் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் வெட்கித் தலை குனிந்தாள். திரு. மெர்ட்டன் வேலையாளை நோக்கி “எல்லாம் சரி, ஹாரி எங்கே? அவன் ஏன் இன்னும் வரவில்லை” என்று கேட்டார். வேலையாட்களுள் ஒருவன் “ஐயா, டாமியுடன் எல்லோரும் வந்துவிட்டனர். ஹாரி நீகிரோச் சிறுவனைக் கவனித்துக் கொண்டு பின் தங்கியிருந்தான். ஆனால், நான் திரும்பி வரும்போது ஹாரியும் நீகிரோச் சிறுவனை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்குச் செல்வதைப் பார்த்தேன்” என்றான். திரு. மெர்ட்டன் “ஹாரி, யாரிடமும் முறித்துக் கொள் பவன் அல்ல. இவர்கள் அவனை மிகமிகத் தகாதமுறையில் நடத்தியிருக்க வேண்டும். இல்லை என்றால் அவன் இங்கே வராமல் போயிருக்கமாட்டான்” என்றார். பின் அவர் டாமியை நோக்கி “ஆம் எனக்கு இப்போது நினைவு வருகிறது. நீயே அவனைத் தகாத முறையில் நடத்தியதாகக் கூறினாய் அல்லவா? உன் வீட்டு விருந்தினனாக, உன் தோழனாக வந்தவனை நீயே அவமதித்து அடித்துத் துரத்தியிருக்கிறாய். நீ ஒரு உயர்குடி மகன்தான்! நன்றிகெட்ட தெறுதலை” என்று சினந்து சீறினார். டாமி உண்மையிலேயே அவர் கூறிய செயலைச் செய்தவனானதால் உடல் படபடக்கத் துடித்தான். தந்தை அவன் மீது இதற்கு முன் கோபம் கொண்டு பேசியதே கிடையாது. தந்தையின் கடுங்கோபத்தையும் பிள்ளையின் பதட்டத் தையும் கண்ட தாய் பிள்ளையை எடுத்து ஆதரிக்கப் போனாள். திரு மெர்ட்டன் அவள் பக்கம் திரும்பி “உன் பிள்ளையை எடுத்து அணைத்துக் கொள்ள இதல்ல சமயம். தாய் தந்தையருக்கு மீளாத அவப்பெயர் கொடுத்த பிள்ளை அதற்குத் தகுதி உடையவனும் அல்ல” என்றார். பிள்ளையையும் வேலையாட்களையும் கூட என்றும் கடிந்துகொள்ளாத, தன் சொல்லுக்கு எதிர்சொல் கூறாத தன் கணவர் இன்று ஏன் இவ்வளவு கண்டிப்பும் கடுங்கோபமும் கொண்டார் என்று அறியாமல் திருமதி மெர்ட்டன் கல்லாகச் சமைந்து போனாள். திரு மெர்ட்டன் கோபம் மாறாமலேயே அனைவரை யும் துச்சமாகப் பார்த்துவிட்டு வெளியே போனார். டாமி கோ எனக் கதறி அழுதான். வேலையாட்கள், நெருக்கடி அறிந்து தாயையும் பிள்ளையையும் தேறுதல் கூறி அழைத்துச் சென்றனர். திரு மெர்ட்டன் சீற்றத்துடனேயே தன் அறைக்குப் போகும் வழியில் ஓதுவார் பார்லோ, அவரை எதிர்பாரா முறையில் வந்து கண்டார். திருமெர்ட்டன் அம் மகிழ்ச்சியில் தன் கோபத்தைச் சிறிது மறந்து அவரை அன்புடன் வரவேற்றார். ஆனால் இந்நல்லார் முன்னிலையில் தன் மகன் செய்த குற்ற முழுவதற்கும் தானே பொறுப்பாளி என்பது அவர் நினைவுக்கு வந்தது. உடனே அவர் நடந்த அனைத்தையும் சுருக்கமாகக் கூறி, ஹாரி வகையில் தன் குடியினர் நடந்து கொண்ட தகுதி தவறிய முறைக்கு மன்னிக்கவும் அதுவரையில் ஹாரியின் மன்னிப்பையும் கோரும்படியும் வேண்டினார். ஆசிரியர் “ஏதோ இயற்கைத் தவறுடன் தான் நேர்ந்திருக்கக்கூடும். ஒன்றும் மீட்க முடியாக்குறை நேர்ந்துவிடவில்லை. ஹாரி எதுபற்றியும் குறைபடுபவனும் அல்ல” என்றார். திருமெர்ட்டன்: அதனால்தான் நான் இன்னும் வருத்தம் அடைகிறேன். அத்தகையவனையும்கூடத் தகாத முறையில் நடத்தி அவமதித்தவன் என்பிள்ளை என்று நினைக்க முடியவில்லை. அப்பெருந் தன்மையும் நற்குணமும் நன்றியறி தலும் அவனிடம் ஒரு சிறிதுகூட இல்லை என்பதுதான் எனக்கு மீளா அவமானமாக இருக்கிறது. திரு. பார்லோ: டாமியிடமும் அப்பண்புகள் இல்லாம லில்லை. ஹாரியிடம் அப்பண்புகள் இருப்பதைப் போலவே டாமியிடமும் இயற்கையாகவே இருக்கின்றன. அக்கம் பக்கப்பழக்கமும் சூழ்நிலையும் அவற்றை மாற்றி அமைக் கின்றன. பிறர் சொல்லைவிடப் பிறர் செயல் ஒருவன் நடையை மாற்றி அமைக்கவல்லது. திரு. மெர்ட்டன், திரு பார்லோவை வீட்டிலுள்ள மற்றையோருக்கு அறிமுகம் செய்து வைத்தார். டாமி அவரை நன்கு வரவேற்றான். ஆனால் அவன் முகத்தில் கிளர்ச்சி இல்லை. அவன் கழிவிரக்கத்தை ஆசிரியர் கவனித்து மனநிறைவடைந்தார். அவன் திருந்த முடியாத அளவு மாறவில்லை என்று கண்டார். 25. நீர்கழிய எய்தவடு டாமியின் ஈவு இரக்கமே அவன் தோழர்களை அவனை விட்டு நீங்கச் செய்தது. ஆசிரியர் அவனை மெல்லத்தட்டிக் கொடுத்து ‘இங்கு நடந்தது என்ன? ஏன் நீ கிளர்ச்சி அற்று இருக்கிறாய்?’ என்று கேட்டார். டாமி தலையைத் தொங்க விட்டுக் கொண்டு, “நான் யாரிடமும் பேசும் தகுதியைக்கூட இழந்து விட்டேன். இங்கே வந்தபின் என்னுள் எத்தகைய பேய் புகுந்து ஆடியது என்று தெரியவில்லை. சில நாட்களாக எனக்கு நன்மை எல்லாம் தீமை என்றும் தீமை எல்லாம் நன்மை என்றும் தோன்றின. நான் தங்கள் இல்லத்தில் வருந்திக்கற்ற பாட மெல்லாம் என்மீது பூசப்பெற்ற சாயம்போல் இங்கே வந்ததும் கரைந்து போயிற்று. இப்போதுள்ள என் அறிவுகூட நிலைத் திருக்குமோ மாறுமோ தெரியவில்லை” என்றான். அவன் கலக்கம், உள்ளபடியே அவன் மாற்றத்தைச் சித்தரித்தது என ஆசிரியர் கண்டார். தன்னை வருத்திக்கும் தகுதி தன்னைத் திருத்தப் போதியது என்றும் எண்ணிக் கொண்டார். டாமியின் தவறுகளை ஒவ்வொன்றாக அவனிடமிருந்தே வருவித்தும் இறுதியில் அவன் ஹாரியின் மன்னிப்பைத் தனக்காகக் கோரும்படி ஆசிரியரிடம் கேட்டான். ஆசிரியர் “நீ ஹாரிக்குச் செய்ததற்கு நீயே சென்றுதான் ஹாரியைக் கேட்க வேண்டும். நீ அவனை அவமதித்தபின் அவன் எப்படி உன்னை நாடிவருவான்” என்றார். அவன் அப்படியே செய்வதாக ஒத்துக் கொண்டான். ஆசிரியர் அதன்பின் ஹாரி வீட்டுக்குச் சென்று நீகிரோச் சிறுவனைப் பாராட்டி ‘நீ உன் நாட்டார்க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு’ என்று போற்றினார். ஹாரி நடந்த செய்திகளைத் தற்பெருமையின்றி நயம்பட எடுத்துக் கூறினான். ஆசிரியர் அவற்றை மகிழ்ச்சியுடன் கேட்டாராயினும் அதைக் காட்டிக் கொள்ளாமல் “நீ ஏன் திரு. மெர்ட்டன் வீட்டுக்குப் போகாமல் நேரே இங்கே வந்துவிட்டாய்? அதனால் மெர்ட்டன் மிக வருந்துவார் என்பதை நினைக்கவேண்டாமா?” என்று கேட்டார். ஹாரி அவர் வருந்துவார் என்று எனக்குத் தெரியும். ஆயினும் பலவழியிலும் எனக்கு அங்கே போகத் துணிவு வரவில்லை. நான் நீகிரோச் சிறுவனைக் கவனிக்க வேண்டியிருந்ததால் டாமியுடன் செல்ல முடியவில்லை. அதன்பின்னும் நான் போவதாக இருந்தால் டாமிக்கும் டாமியின் தோழர்களுக்கும் பலவகையில் இடைஞ்சலாக இருந்திருக்கும். நடந்த செய்திகளை அவர் கேட்டால் நான் அப்படியே சொல்ல வேண்டிவரும். மேலும், நீகிரோச் சிறுவனுக்கு நான் கடமைப்பட்டுவிட்டேன். அவனை மெர்ட்டன் குடிக்கு இட்டுச் செல்வது கூடியதா கூடாததா என்று எனக்குத் துணிய முடியவில்லை. எப்படியும் அவனிடம் உள்ள கடப்பாடு எனது ஆதலால் அவனை என் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வருவதே அவ்வகையில் சிறந்தது என்று நினைத் தேன். ஆயினும் திரு மெர்ட்டனைக் காணாதது தவறுதான்; இப்போதே சென்று மன்னிப்புக் கோருகிறேன். ஆசிரியர், அவன் சரியான காரணம் கூறுவது கண்டு மகிழ்ந்து! ‘சரி, இப்போது போக வேண்டாம் டாமி, உன் வகையில் செய்த தவற்றினால்தான் இத்தனை சிக்கலும். அவனே உன்னிடம் மன்னிப்பு கேட்க வருவான். முன் கூட்டி உனக்கு அதைத் தெரிவித்து அவனை மன்னிக்க முடியுமா என்று அறிய அவன் என்னை வேண்டினான் என்றார். ஹாரி “டாமி வேண்டும் என்று எதுவும் செய்யவில்லை. அவன் தோழர்கள் அவன் மனத்தைக் கரைத்து மாற்றினர் என்பது எனக்குத் தெரியும். அவன் மாறியது எனக்கு வருத்தம் தந்தாலும் அவனை நான் மன்னிக்கத் தடை ஏதும் இல்லை” என்றான். ஆசிரியர் “இப்போதே மன்னித்துவிட வேண்டாம். அவனே கழிவிரக்கம் கொண்டாலன்றி உன் மன்னிப்பால் அவன் மனமாற்றம் நிலையாகிவிடாது. அவன் அதைக் கோரட்டும்” என்றார். மறுநாள் டாமி வந்து மன்னிப்புக்கோரி, ஹாரியின் நட்பை மீண்டும் பெற்றான். திரு மெர்ட்டனும் திருமதி மெர்ட்டனும் வந்து ஆசிரியரையும் ஹாரியையும் நீகிரோச் சிறுவனையும் ஹாரியின் தாய் தந்தையர்களையும் அழைத்துச் சென்று விருந்து செய்வித்ததுடன் ஸாண்ட் போர்டு குடியினருக்கு நிலையான வருவாய்தரும் பணியைத் தந்தார். ஆசிரியருக்கும் அவர் நற்பணியைத் தம் சிறுவனுக்கே மட்டுமன்றி ஊர்மக்கள் சுற்றூர் மக்கள் அனைவருக்குமே ஆற்றத்தக்க முறையில் பெரிய பள்ளி ஒன்று அமைக்கப் போதிய பொருள் அளித்தார். நீகிரோச் சிறுவனுக்கும் பள்ளியில் பயிற்சியும் வாழ்க்கை வாய்ப்பும் ஏற்பாடு செய்தார். பொருட் செல்வத்தில் சிறந்த மெர்ட்டன் குடிமக்களின் அன்புச் செல்வமும் மிகுந்து தழைத்தது. மெர்ட்டன் குடியே அவ்வூராய் விரிவுற்றது. நீகிரோச் சிறுவன் ஆசிரியர் பார்லோவின் நற்பயிற்சி யால் மேற்பாடுற்றபின் திரு மெர்ட்டன் அவனைத் தன் ஜமெய்க்கா உடைமைகளை மேற்பார்க்கும் பணியில் ஈடு படுத்தியதுடன் நீகிரோ மக்கள் அடிமை ஒழிந்து அவர்களை மேம்படுத்தும் பணியிலும் அவனை ஊக்கினார். ஹாரி, டாமி, நீகிரோச் சிறுவன் மூவரும் இனவேற்றுமை, வகுப்பு வேற்றுமை அற்ற நிலையில் மூன்று உடன் பிறந்தார்கள் போலிருந்து தத்தம் துறைகளில் மக்கள் பணியாற்றினர். ஆசிரியர் ஓதுவார் பார்லோ அவர்கள் அருள் தந்தையாகவும் ஆங்கில நாட்டின் ஒரு பகுதியில் ஒரு சிறு வானுலகு படைத்த வானுலகச் சிற்பியாகவும் விளங்கினார். (முற்றும்) கன்னியின் சோதனை இந்நூல் 2002இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. முதற் பதிப்பு - 1957 1. கன்னியின் சோதனை (1167 முதல் 1175 வரை நடைபெற்ற பாண்டிய உள்நாட்டுப் பெரும் போரைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட தழுவல் சிறுகதை) வணங்காமுடிப் பாண்டியரின் வழிவந்தவள் அவள். அவர்கள் குருதி அவள் நாடி நரம்புகளில் ஓடிற்று. அவள் எடுப்பும் துடிப்பும் இதைப் பறைசாற்றின. ஆனால் அவனும் இளைத்தவனல்ல. இணங்காத வரை இணங்கவைக்கும் இரும்புறுதி படைத்த சேரக் குடிச்செம்மல் அவன். அவளை அவன் விடாது பின் தொடர்ந்தான். இடமும் சூழலும் அவனுக்கு உதவின. நங்கை சென்ற பாதை தருவை நீர்ப்பரப்பில் போய்த் திடீரென்று முடிவுற்றது. அவள் அங்குள்ள ஒரு குத்துக் கல்லின்மீது அமர்ந்தாள். காளையும் அவளை அணுகினான். அருகிலேயே அமர்ந்தான். ‘வேணி! எவ்வளவு நேரம் உன்னை விடாது தொடர் கிறேன்? ஏன் இப்படி காடு மேடாக ஓடுகிறாள்? இதோ பார். உனக்கென்று பிட்டும் அப்பமும் பதநீரும் கொண்டு வந்தி ருக்கிறேன். உணவு நீரில்லாமல் எவ்வளவு நேரம் இப்படிச் சுற்ற முடியும்? வா, சிறிது உணவருந்தி விட்டுப் போகலாம்” என்றான் அவன். அப்போதுதான் அவனை முதன் முதலாகக் கவனிப்பது போல அணங்கு அவன் முகம் நோக்கினாள். “வேண்டாம் வானி! அது உனக்கு உரிய உணவு. மக்களெல்லாம் உணவும் நீரும் இல்லாமல் துடிக்கும் காலம் இது. இந்நிலையில் உன் உணவுக்கு நான் எமனாகிவிட விரும்பவில்லை. நீயே தின்று பசியாறு. நான் ஏற்கனவே சருகும் நீரும் உட்கொண்டு விட்டேன்” என்றாள் அவள். அவன் பெயர் வானியல்ல. வானவனேந்தல். நண்பர்கள் தான் சுருக்கமாக அவனை வானி என்று அழைத்தார்கள். அது போலவே அவள் பெயரும் வேணியல்ல. வேண்மாள் என்ற அழகிய பெயரையே அவள் தோழியர் அப்படிக் குறுக்கி இருந்தார்கள். இருவருமே ஒருவரை ஒருவர் அழைக்க வழங்கிய பெயர்ச் சுருக்கமே அவர்கள் பழக்கத்தைச் சுட்டிக் காட்டிற்று. பாண்டிநாடு அன்று போர்ப் புயலில் சிக்கிச் சீரழிந்து கிடந்தது. முரட்டுச் சிங்கள வீரனின் அட்டூழியங்கள் ஒருபுறமும் பஞ்சமும் நோயும் வறுமையும் மற்றொரு புறமும் நாட்டு வாழ்வைக் காட்டு வாழ்விலும் கொடியதாக்கியிருந்தன. இந்நிலையில் பாண்டி நாட்டுச் செல்வியாகிய வேண்மாள் வீடு குடி இழந்து, துணையிழந்து, ஊர் ஊராய்ந்துத் திரிந்தாள். நிழல் போல வான வனேந்தல் அவளைத் தொடர்ந்து பகை வீரர்களிடமிருந்து அவளைக் காத்திராவிட்டால், அவள் அவ்வளவு எளிதாகத் தருவைக்கரை வந்து சேர்த்திருக்க மாட்டாள். ஆனால் இயல்பாகத் துணிச்சல் மிக்க அந்த அணங்கு அதை முற்றிலும் உணர்ந்தவளல்ல. அது ‘தெய்வத்தின் செயல்’ என்று மட்டுமே அவள் உணர்ந்தாள். ஒரு காதல் தெய்வத்தின் செயல் அது என்பதை அவள் எண்ணிப் பார்க்கவில்லை! சிங்களப் படைத்தலைவன் இலங்காபுரனை எதிர்த்துப் பாண்டியனுக்கு உதவ வந்த சேரர் படையிலே வானவனேந்தல் ஒரு வீரன். சேரர் படைகள் பல களங்களில் சிதறி ஓடத் தொடங்கிய பின்னும், அவன் தன் நாட்டுச் சேவையிலேயே நாட்டமாயிருந்து வந்தான். ஆனால் வேண்மாளின் வேல் விழி அவனை நாட்டுச் சேவையிலிருந்து மெல்ல மெல்லப் பெண்மையின் சேவைக்கே இழுத்து வந்தது. எதிரிகளின் மாயவலைகளிடையே கண்ணும் கருத்துமாய் அவளுக்குக் காவலாக இருந்து வந்தவன் அவன். ஆனால் அப்பெண்மையின் மாயவலையில் சிக்கினான். இதில் அவன் பெற்ற வெற்றியும் மிக மிகச் சிறிது. அவள் அவன் உதவியை விரும்பி நாடியதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. அதைவெறுத்ததாகவும் வெளிப்படை யாகக் கூறவில்லை. மொத்ததில் அவள் அவன் காதலுக்குப் பிடி கொடாமல் அவனை இழுத்தடித்து அலைக்கழித்து வந்தாள். இந்நிலையில் அவனால் அவளை விட்டு அகலவும் முடியவில்லை. அதே சமயம் அவளை உரிமையுடன் அணுகவும் வழி காணாமல் தத்தளித்தான். தன் உணவு மூட்டையை அவன் அவள் முன்னே அவிழ்த்துப் பரப்பி வைத்தான். “இதோ பார், வேணி! என்னிடமிருப்பது நான்கு பேருக்கு நான்கு நாளைக்குப் போதியது. அப்படி இருக்க என்னுடன் இதைப் பகிர்ந்து உண்பதால் நீ இதற்கு எப்படி எமனாகிவிட முடியும்? நேர்மாறாக, இதை உனக்குத் தராமல் உன்னை நான் போக விட்டால், நான்தான் உனக்கு எமனாகிவிட நேரும். ஆகவே வீண் வாதத்தை விட்டு, இதில் சிறிது பங்கு கொள்!” அவன் அவளை வறுபுறுத்தி உண்பித்தான். அரைகுறை விருப்புடன் அவள் ஒரு கை உண்டாள். ஒரு மடக்குப் பதநீர் அருந்தினாள். அதற்குள் ஏதோ எண்ணியவள் போலத் திடீரென்று எழுந்தாள். அடுத்த கணம் என்ன நடந்ததென்றே அவனுக்குத் தெரியாது. கல கல வென்ற ஒரு சிரிப்பொலி அவன் காதைத் துளைத்தது. அவன் நிமிர்ந்து பார்க்குமுன் அவள் வேறொரு திசையில் எட்டி நடந்தாள். பிட்டும் அப்பமும் பதநீரும் அப்படியே கிடந்தன. அவற்றை அப்படியே போட்டு விட்டு உண்ட கையை உதறிய வண்ணம் அவனும் எழுந்து அவளைப் பின்பற்றினான். குளிக்கும் துறை நோக்கி அவள் விரைந்தாள். அவனும் அதே திசையில் விரைந்தான். அன்று முழு நிலா நாள், வட்ட வடிவமான வெள்ளித் தட்டுபோல வெண்ணிலா தருவைப் பரப்பில் எழுந்து. அதன் அலைகளை எல்லாம் வெள்ளித் தகடுகள் போல் மின்னி மினுங்கச் செய்திருந்தது. வேறு எந்தச் சமயத்திலும் வேண் மாளும் சரி; வானவனேந்தலும் சரி; அந்த அழகில் கட்டாயம் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் இப்போது நேரமில்லை. அத்துடன் குளிப்புத் துறையில் முழு நிலா நாளில் இரவில் வழக்கமாகக் காணப்படும் மக்களின் பெருந்திரள் அன்று இல்லை. போர்களின் கிலி காரணமாக அங்கொருவர் இங்கொருவராக மட்டும் சில பல ஆடவர். பெண்டிர் குறிப்பாக புத்திளங் காளையர். கன்னியர்-அங்கே நிலவில் புனல் விளையாட்டை நாடி வந்திருந்தனர். வேண்மாள் அச்சிறு கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பெண் உருக்களிடையே பெண் உருவாகப் பதுங்கிப் பதுங்கி ஓடி, வானவனேந்தலைக் ‘கண்ணாமூச்சு’ ஆட வைத்தாள். எது வேண்மாள், எது வேறு பெண் வடிவம் என்று அறியாமல் வானவனேந்தல் ஒவ்வொரு பெண்ணாக அருகில் சென்று உற்றுநோக்கி அலைந்து கொண்டிருந்தான். அவனது அச்செயல் கண்டு இளம் பெண்கள் பலர் கலவரமடைந்தார்கள். இளங்காளையர் பலர் சீறினர். இவற்றை உற்றுக் கவனித் தவாறு ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மூலையிலிருந்த ஒரு பெண் குரல் கேலிச்சிரிப்புச் சிரித்தது. ஆனால் அச்சிரிப்போ வானவனேந்தலை மேன்மேலும் வேண்மானிருந்த திசை யறிந்து செல்லும்படி தூண்டிற்று. அவன் அச்சிரிப்பின் திசையில் பாய்ந்து சென்று அவ்விலாங்குமீனைப் பிடிக்க ஓடியாடினான். இறுதியாக அவள் கிட்டத்தட்ட அவன் கையில் சிக்கி இருந்தாள். அதற்குள் அவன் கைப்பிடியிலிருந்து நழுவி அவள் துறையருகே மணல்மீது உட்கார்ந்துவிட்டாள். அவனும் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க அருகே அமர்ந்தான். “ஏன் இப்படி என்னை ஏய்க்கிறாய். வேணி? என்னிடம் உனக்கு அச்சமா? வெறுப்பா? நான் உன்னை என்ன செய்துவிடப் போகிறேன் என்று எண்ணுகிறாய்? அல்லது நீ வெறுக்கும்படி என்ன செய்துவிட்டேன்?” என்று மிகவும் நொந்த குரலில் கேட்டான். அவன். அவள் மலர்ந்த முகம் உடனடியாகச் சுண்டிற்று. அது சிந்தனையில் ஆழ்ந்தது. வானவனேந்தல் அவள்மீது கொண்ட பாசத்தின் தன்மையை அவள் அறியாதவளல்ல. ஆனால் அவள் உள்ளம் அன்று பாசத்தையோ தேசத்தையோ நாடித் துடிக்கவில்லை. பாண்டி நாட்டு வாழ்வு அன்று உரிமையற்ற வாழ்வு. அதில் அமைதியில்லை; வாழ்வின் ஆர்வமில்லை. எப்படியாவது அந்தச் சூழலை விட்டு மனித வாழ்வுக்குரிய இடத்துக்குப் பறந்து செல்லவே அவள் துடித்தாள். அவள் இதயத்தின் ஆழத்தில் இது கடந்து வேறு ஒரு நாட்டமும் இருந்தது. தான் இந்தக் கொடிய நிலத்திலிருந்து தப்பினால் போதாது. தன் நாட்டுக்கு மறுபடியும் விடுதலை, புதுவாழ்வு, உரிமை கிட்ட வேண்டும். அவள் தனி ஒரு உயிர்தான். துணையற்ற பெண்தான். ஆனால் ஏதோ ஒன்று இதற்காக வாழும்படி. இதற்காக வாழ முடியாவிட்டாலும் குறைந்த அளவு இதற்காக மாறும்படி யேனும் அவளை உள்ளூரத் தூண்டிற்று. அவள் சிந்தனையை-அவள் உள்ளப் போக்கை அறிய முடியாமல் வானவனேந்தல் அவளையே நோக்கியவண்ணம் இருந்தான். அவள் கண்கள் நேரடியாக அவன் கண்களைச் சந்திக்கவில்லை. துறையின் பக்கமாக அவள் பார்வை அங்குமிங்கும் மருண்டு மருண்டு நோக்கிற்று. அவள் நோக்கின் குறிப்பறிய விரும்புபவன்போல அவனும் அத்திசையில் நோக்கினான். தன் கேள்விகளுக்கு மறுமொழியாக, அந்தக் காட்சியிலே ஏதோ இருக்க வேண்டுமென்று அவன் எண்ணினான். அவன் எண்ணியது வீண் போகவில்லை. “போரின் கோரப்பிடியிலிருப்பவர்கள் என்று இந்த இளங்காளையர். கன்னியரைப் பார்த்தால் தோன்றாது-பருவத்துடிப்பு அவர்களை இச்சமயத்தில் இவ்வேளையிலும் இங்கே கொண்டு வந்திருக்கிறது. அதுபோலத்தானே நானும்....” ....அவள் பேசி முடிக்கவில்லை. அவள் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள். பின் துறையின் ஒரு திசையில் அப்பார்வை உருக்கத்துடன் திரும்பிற்று. அவனும் அப்பக்கமாக ஆர்வத்துடன் கழுத்தைத் திருப்பினான். அவன் கண்ட காட்சி அவன் சிந்தனை அலைகளை உள்ளத்திலும் மெல்ல எழுப்பின. ஆடவர், பெண்டிர் அனைவருமே வெறும் புனல் விளையாட்டை விரும்பி வந்தவர்களல்ல. இதை வானவனேந்தல் அறிய நெடுநேரம் பிடிக்கவில்லை. ஆடவருடன் ஆடவராகச் சிலர் ஊடாடித் திரிந்து வந்தனர். அவர்கள் விளையாடவில்லை; விளையாடுபவர்களைக் காண்காணிப்பவர்கள் போலவே உலவினர். அவர்கள் பார்வை பிறரை-விளையாடுபவரை-அச்சுறுத்துபவையாக, எச்சரிப்பவையாக இருந்தன. துறையின் இருபுறமும் இவர்களைப் போலச் சிலர் தனித்தனியாகவும் கும்பல் கும்பலாகவும் நின்றிருந்தனர். கூர்ந்து கவனித்தால் அவர்களில் சிலர் வில்லும் வேலும், வாளும் ஈட்டியும் ஏந்தியிருந்தனர் என்பது தெரியவந்தது. புனல் விளையாட்டுப் பழக்கத்திலே அவர்கள் ஒரு போர்க்களத்தையே எதிர்பார்த்து வந்தவர்கள் போலக் காணப்பட்டனர். இவற்றைக் கண்ட வானவனேந்தல் கண்கள் ஆழ்ந்த கலக்கத்தால் விரிவுற்றன. அவன் கண்ணோட்டம் அலைகள் மீது தவழ்ந்தது. தருவை ஒரு பெரிய ஏரி-ஆனால் எல்லா ஏரியிலும் பெரியது. கடலுடன் எட்டிய ஒரு சிறு கடல். கடலுடன் அது கலக்குமிடத்தில் அலைகளின் வரிசை நுரை நுரையாக ஒரு வெண்கோடுபோல் தெரிந்தது. அந்தக் கோடுகளைப் பிளந்து ஆங்காங்கே பெரிய, சிறிய கலங்கள் ஒன்றிரண்டு பலர் கண்களுக்குப் புலனாயின-வானவனேந்தல் அப்போது நிலை மையை உய்த்துணர்ந்தான்! ஆம், அவை சோழக்கடற்படை வரிசைகள். பாண்டி நாட்டுப் போரில் குதிப்பதற்கு முன் அவை பாண்டி நாட்டில் அட்டூழிய ஆட்சி செய்த சிங்களவர்களை அவர்கள் தாயகத்திலிருந்து துண்டித்து அவர்களை முற்றுகை யிட முனைந்திருந்தது. இலங்கையிலிருந்து படையுதவியும் சிங்களப் படைகளின் பிடி தளர்ந்துவிடுவது உறுதி என்று சோழநாட்டு அமைச்சர்கள் எண்ணியிருந்தனர். இதற்குமேல் நேரடி உதவி செய்ய அவர்கள் அன்று உடனடித் தயாராயில்லை. தொலைவில் கலங்களிலே பதித்திருந்த வானவனேந்தலின் கருத்து எதிர்பாராது அருகே திரும்ப நேர்ந்தது. துறையில் விளையாட்டுகள் அழிந்து கொலைக்கள அமளியாக மாறிற்று. புனல் விளையாட்டில் ஈடுபட்டவர்களிலும் மிகப் பலர் உண்மையில் விளையாட அங்கு வரவில்லை. ஆடவரில் பலரும் பெண்டிரில் சிலரும் அதைச் சாக்காகக் கொண்டு, மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் தாண்டி ஏரியில் நீந்திச் சென்றனர். தற்செயலாக அவர்கள் சென்ற திசை கடல் ஏரியுடன் கலக்கும் திசையாக அமைந்தது. அத்திசையில் அவர்கள் குறிப்பிட்ட ஒரு எல்லை அணுகியதும், கரையிலுள்ள அசையா உருவங்கள் திரும்ப உயிர்பெற்றன. வேல்கள் பாய்ந்தன. அம்புகள் நீரைக் கிழித்துச் சென்றன. உருவிய வாளுடன் பலர் ஏரியையே பிளந்துவிடுவது போலப் பாய்ந்து சென்றனர். அடுத்த கணம் முன்னேறியவர்களுள் ஒருவன் ‘ஆ, ஐயோ!’ என்று கூவினான். ‘கொல்லு! வெட்டு!’ என்ற கூக்குரல் ஒன்றும், செத்தோம்! பிழைத்தோம்! கொலைபாதகர்கள்! கொடிய வேட்டை நாய்கள்!’ என்ற கதறல் மற்றொரு புறமாக ஏரிப் புறத்தில் கேட்டது. கருங்குருதி சோர ஒன்றிரண்டு புனல் விளையாட்டாளர்களின் உடல்கள் குற்றுயிருடன் கரைக்கு இழுத்து வரப்பட்டன. கன்னியின் கண் வழியே வழி செலுத்தி, இக்காட்சிகள் மூலமே அவள் உள்ளத்தில் அலைபாய்ந்த எண்ணப் புயல்களைப் பேரளவு ஊகித்துணர்ந்தான் வானவனேந்தல். அவனுக்கு அக்காட்சியில் புரியாதது ஒன்றே ஒன்றுதான்- புனல் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் எதற்காகத் திடீரெனக் கடலின் பக்கம் திரும்பினர்? காவல் காத்த சிங்கள ஒற்றர் படைகள் அவர்களை ஏன் தாக்கின? இவற்றைப் பற்றி மட்டும் அவன் மெல்லப் பேச்செடுக்க எண்ணினான். அவன் கருத்தை அவள் குறிப்பால் அறிந்து கொண்டாள். ஆனால் அப்போதும் வாய்பேசத் துணியவில்லை. பின் ஒரு சில சொற்களில் அவள் நிலைமையை விளக்கினாள். ‘இந்த நாட்டில் இப்போது வாழ்வு இல்லை. வேறு நாடு சென்றால் வாழலாம். அதோ அந்தக் கப்பல்களில் சென்று இடம் பெற்றுவிட்டாலும் நம்பிக்கை உண்டு. இதைத்தான் இன்று பாண்டி நாட்டு மக்கள் எண்ணுகின்றனர். பாடத்துக்கோ, நேரத்துக்கோ, விளையாட்டுக்கோ அவர்களுக்கு நேரமில்லை!” என்று அவள் சுருக்கமாகக் கூறினாள். அவன் அவளைப் பின்னும் தொடர்ந்து சுற்றினான். அவன் நிலை பின்னும் மாறவில்லை. ஆனால் அவன் உள்ளம் இப்போது அவள் உள்ளமறியாமல் தடுமாறவில்லை. ஆயினும் இப்போதும் அவன் உள்ளத்தில் ஒரே கவலை-போரோ அமைதியோ-வாழ்வோ, தாழ்வோ-அவளின்றி அவனுக்கு வாழ்வில்லை. அவள் காதலில்லாமல் அவனுக்கு வாழ்வில் குறிக்கோளில்லை. செயல் நோக்கமில்லை. அவள் நோக்கத்தைத் தன்வழி திருப்ப வகை தெரியாமல் அவன் திண்டாடினான். அவன் விரும்பியது காதல்-அவள் விரும்பியது விடுதலை! அவன் காதல் பேச்சை எடுக்கவே அவள் இடம் தரவில்லை. விடுதலை நோக்கி அவன் உள்ளத்தைத் திருப்ப முயன்றாள் அவள். ஆனால் அவனோ விடுதலையைப் பற்றி எண்ணவே நடுங்கினான். ஏனென்றால் அன்று விடுதலை என்பது காதலின் இடுகாடு மட்டுமல்ல; உயிரின் சாக்காடு என்பதை அவன் உணர்ந்திருந்தான். புனல் விளையாட்டாளர்கள் குருதி சிந்திய பிணங்களையே விடுதலை என்ற சொல் அவன் கண்முன் கொண்டு வந்தது. அவன் சாவைக் கண்டு அஞ்சவில்லை. சாவை வெறுக்கவில்லை. ஆனால் அவன் ஆருயிர்க் காதலியின் உயிர்-அதைப் பலி கொடுக்கத்தான் அவன் தயங்கினான். உயிர் கொடுத்துக் காதலைப் பெற அவன் தயங்கவில்லை. ஆனால் காதலியின் உயிரை இடருக்குள்ளாக்கி-சாதல் கொடுத்து உயிர் பெறும் நிலையை எண்ணியே அவன் அஞ்சினான். அவனது ‘காதல்-விடுதலை போராட்டங்கள் கிட்டத்தட்ட தருவைக்கரைப் போராட்டத்தின் எதிரொலிகளாகவே அமைந்தன. அவனை அச்சந்தரும் தேர் உச்சிக்கு அவள் இட்டுச் செல்வாள். அடுத்த கணம் சாவின் குகை போன்ற பள்ளத்தில் அவள் குதிப்பாள். அவளுக்காக அவனும் சாவுடன் போராடத் தயங்கவில்லை. சில சமயம் அவள் அவனை எங்கும் சுற்றியடித்துக் கணத்தில் மறைந்து விடுவாள். அவளைத் திரும்பவும் தேடிப் பிடிக்கும் வரை அவனுக்கு உடலில் உயிர் அமையாது. அம்முயற்சியை மறைந்து நின்று அவள் பொறுமையுடன் பார்த்துக் கொண்டேயிருந்து விடுவாள். அவன் ஓயாது அவளைத் தன் பாசவலையில் தள்ள அரும்பாடுபட்டான். அவள் ஓயாது அவளை எங்கும் அலைக்கழித்துத் திணற வைத்தாள். இறுதியில் ஒரு நாள் அவள் அவனிடம் புது மாதிரியாக நடந்து கொண்டாள். “நான் செல்லும் திசைவேறு; நீ செல்லும் திசை வேறு வானி! நான் பெண்தான். ஆனால் இந்நாட்டை விட்டு எப்படியும் தப்பிச் செல்ல நான் துணிந்து விட்டேன். நீ என்னுடன் வருவதானால் வரலாம். ஆனால் வர அஞ்சினால் வரவேண்டாம். கோழைகளுடன் இங்கிருந்து செத்த வாழ்வு வாழ்வதை விடக் கடலலைகளிடையே குருதி சிந்தி வீரமாக மாள்வது மேலானது என்று கருதுகிறேன்,” என்றாள் அவள். “நான் கோழை என்று நினைக்கிறாயா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான் அவன். “அவ்வாறு யார் சொன்னது? உன் வீரம் விடுதலையை நோக்கினால், நாம் ஒரு வழிசெல்லலாம். இல்லையானால் இன்றே இப்போதே, இங்கேயே பிரியலாம்!” என்றாள் அவள். கூறிய சொல்லுக்கு எதிர்சொல் கூற அவனுக்கு வாய்ப்பில்லை. அவள் அருகே நின்ற படைவீரர் வரிசையை எப்படியோ துளைத்துக் கொண்டு மறுபுறம் மறைந்தாள். வானவனேந்தலால் படைவீரர் வரிசையை அதே வகையில் திடுமெனத் துளைத்துச் செல்ல முடியவில்லை. படை வீரர் அவனைத் தடுத்து நிறுத்தினர். படைத்தலைவர் பலருடன் கைகலந்து சிங்களப் படை நாயகன் இலங்காபுரன் முன்னேயே சென்று அவன் தன் நிலையை விளக்கி வாதாட வேண்டி வந்தது. அவர்கள் கேள்வி. எதிர்க் கேள்விகளுக்குத் தகுந்த விளக்கம் கூறித் தப்புவதற்கு நாட்கள் சில பல சென்றன. அதன் பின் வேண்மாளைத் தேடிப் பிடிப்பது இன்னும் அரும் பெருங்காரியமாய் அமைந்தது. அவன் பித்தன் போல அலைந்தான். ஒரு கணம் அவள் மீதும் அவன் கோபத்தால்-சீறினான். மறுகணம் அவள் பாச அலைகளில் மிதந்து தத்தளித்தான். அவளை வெறுத்துத் தள்ளி விட்டு வாழ்வதாகக்கூடத் தனக்குள் உறுதி கூறிக் கொண்டான். அவளைத் தேடுவதில்லை என்று அடிக்கடி சூளுரைத்துக் கொண்டான். ஆனால் அதே சமயம் அவன் கால்கள் அவனையறியாமலே அவளைத் தேடிக் கொண்டு சென்றன. இறுதியாக ஒ ரு நாள், முன்னிரவு நேரம்! அன்று முழு நிலா இல்லை. மூன்றாம் பிறை அப்போதுதான் ஏரி மீது தோன்றியிருந்தது. அந்த அரை இருட்டுடன் அரை இருட்டாக, ஒரு குத்துக் கல்லுடன் குத்துக்கல்லாக அவள் உருவம் அமர்ந்திருந்தது. அருகே சென்ற பின்தான் வானவனேந்தல் அவள் பக்கம் நோக்கினான். அவனை அறியாமல் அவன் உடலில் ஒரு மின் அலை பாய்ந்தது. அதே சமயம் அவள் தற்செயலாக அங்கே வந்து நிற்கவில்லை; அவனை ஆவலுடன் எதிர்பார்த்தே வந்திருக்க வேண்டும் என்று ஏதோ ஒன்று அவன் அகச் செவிகளில் வந்து கூறிற்று. அவள் முகம் முற்றிலும் வாடியே இருந்தது. ஆனால் அவனைக் கண்டவுடனே அதில் ஒரு மின் ஒளி தோன்றி மறைவது போல் இருந்தது. ‘உன்னிடம் விடை கொள்ளாமல் போக மனமில்லை, வானி! அதற்காகத்தான் காத்தலைந்தேன், நாட்கணக்காக, இன்று கூடக் காத்திருந்தேன். மணிக்கணக்காக, இப்போது கண்டுவிட்டேன். இனி விடை பெற்றுக் கொள்கிறேன். போய் வருகிறேன்.” என்றாள் அவள். சொல்லின் பொருள் அவனுக்குப் புலப்படுமுன் மங்கை சரேலென்று ஏரியில் குதித்தாள். அவள் உடல் நீருடன் நீராக மறைந்தது. மல்லாந்து மிதந்தும், கைகால்களை வீசியும் அம்பு வேகத்தில் அவள் நீந்திச் சென்றான். அவள் செல்லும் திசையை நீரில் கலங்கிய ஒளி நிழல் வண்ணமும், நீர் குமிழியிடும் அரவமும் தான் காட்டின. அவன் ஒரு சில கணங்களே திகைத்து நின்றான். அடுத்த சில கணங்களில் அவனும் அவள் சென்ற திசையிலே நீரில் குதித்து விரைந்தான். இரவின் அமைதியில் நீரில் இருவரும் கிட்டத்தட்ட அருகருகே சற்று முன்பின் மிதந்து முழுமூச்சுடன் நீந்தினர் ஆனால் அவர்கள் போக்கு அப்படியே தடையற்ற போக்காக இருந்துவிடவில்லை. முன்னாள் குளிக்கும், துறையில் அவர்கள் கண்ட காட்சிக்கு அவர்கள் விரைந்து ஆட்பட நேர்ந்தது. எங்கிருந்தோ தருவைக் கரை எங்கும் திடீரென்று உயிர் பெற்றது. அம்புகள் சரமாரியாய்ப் பொழிந்தன. வேல்கள் சீறிப் பாய்ந்தன. ஒன்றிரண்டு முரடர் வாளுருவிய வண்ணம் நீரில் நீந்தி அவர் களைப் பின் தொடர்ந்தனர். நல்ல காலம், அவர்களை யாரும் பின் தொடர்ந்து கைப் பற்ற முடியவில்லை. ஏனெனில் காவலர் விழிப்படையுமுன் அவர்கள் கடல் அலை வாயை நோக்கி நெடுந்தொலைவு சென்றிருந்தனர். ஆனால் அம்புகளுக்கும் வேல்களுக்கும் அவர்கள் அவ்வளவு எளிதாகத் தப்ப முடியவில்லை. வானவனேந்தல் சென்ற பக்கமே அம்புகள் பேரளவில் பாய்ந்தன. அவன் வலது கன்னங்கள், வலது துடை, வலது விலாப்புற முழுவதும் சல்லடை சல்லடையாகத் துளைக்கப்பட்டன. அவற்றின் குருதியால் ஏரி நீரில் கருநிழல் படரத்தொடங்கிற்று. இதை அவன் கவனிக்கவில்லை. அவள் கவனித்தாள். “வானி, வானி! நான்தான் பெரும் பிழை செய்துவிட்டேன். விடுதலையை விடக் குறைந்ததன்று உன் உளம்; உன் காதல்! போவோம்; பின் சென்று விடுவோம்,” என்று அவள் கதறினாள். அவள் அவனுக்குச் சற்றுப் பின்னாகவே நீந்தி வந்து கொண்டிருந்தாள். காதலியின் உள்ளத்திலிருந்து இப்போது பீறிட்டு வந்த காதலுரைகள் அவனை ஊக்கின. அவன் வலிமையை நூறு மடங்காக்கின. அவன் தானும் பின்னடைய வில்லை; அவளையும் பின்னடைய விடவில்லை. அவள் விரைந்து அவனருகிலேயே நீந்தி வந்தாள். அவன் கைகளில் ஒன்று-அம்புகள் பாயாத கை-அவள் முதுகை ஏந்தித் தாங்கிற்று. தாங்கி அவளையும் முன்னோக்கி இழுத்தபடியே முன்னிலும் வேகமாக அலைகளைப் புடைத்துக் கொண்டு முன்னேறினான். அவர்களைத் தொடர்ந்து பின்பற்றி வந்த சிங்களக் காவலர் கூக்குரல்கள் ஏரியிலே பின்னடைந்தன-அவர்கள் கூட அவர்களை வந்து எட்ட முடியவில்லை. ஒன்றிரண்டு அம்புகள் வானவனேந் தலின் கால்களில் ஊசிகளாக வந்து குத்தின. ஆனால் அதே சமயம் எங்கிருந்தோ ஒரு படகு அவர்களைநோக்கிப் பின்னிருந்து பாய்ந்து வந்தது. படகு அருகே வர வர, அதிலிருந்த அம்புகளும் வேல்களும் அவர்களுக்கு இப்போது புதிய எமன்கள் ஆயின. மல்லாந்து நீந்திய மங்கையின் கண்களுக்கு அருகாகவே ஒன்றிரண்டு அம்புகள் துளைத்தன-அவற்றின் வேதனையால் அவள் கூவிய கூக்குரல் கடல் அலைகளின இரைச்சலையும் தாண்டி நீரில் பரவிற்று. அடுத்த கணம் அவள் நிலை தடுமாறிய வண்ணம் மிதந்தாள். அவள் உடலுடன் தன் உடலையும் பிணைத்து வானவனேந்தல் நீந்த வேண்டியதாயிற்று. ஆனால் காதலின் புது நம்பிக்கை தந்த புதுவீரம் அவனை ஆயிரம் வீரரின் வீரத்துடன் ஊக்கிற்று. ஆயிரம் யானைகளின் துதிக்கை களுக்குரிய வலு அவன் ஒரு கையில் வந்து செயலாற்றிற்று. படகிலிருந்து காலனின் சீற்றம் போல் சீறி வந்தது ஒரு வேல், வேலின் ஒரு நுனி வானவனேந்தல் துடையைக் குறிபார்த்துப் பாய்ந்தது. ஆனால் மறு நுனியிலோ காலனின் பாசக்கயிறு போல் நீண்ட கம்பி நூல் இணைக்கப்பட்டிருந்தது. வேல் எதிரியைச் சாய்க்காவிட்டால் கூடக் குற்றுயிருடன் அவனை ஈர்த்துவரும்படி படகிலுள்ளோர் திட்டமிட்டிருந்தனர் என்பதை அது காட்டிற்று! அரையுணர்வுடன் மிதந்திருந்த வேண்மாள் கூட அத்தோற்றம் கண்டு துடிதுடித்தலறிவிட்டாள். ஏனெனில்வேல் அவளஞ்சியபடி வானவேந்தல் துடையில் பாய்ந்தது. பின் துடையைத் துளைத்து மறுபுரம் பாதி உருவி அப்படியே நின்றது. வேல் குறியில் சென்று பொருந்தியது கண்டதும் படகிலுள்ளோர் கூவி நூலை இழுக்கத் தொடங்கினர். பாவம்; காதலிக்காக உயிரைப் பணயம் வைத்து அவளையும் ஏந்திக்கடல் நோக்கிச் சென்ற காளையின் உடல் குற்றுயிருடன் காலன் பிடியில் சிக்கிப் பின்னேறத் தலைப்பட்டது. காதலியின் உடலும் இப்போது அப்பிடியின் இழுப்புக்களாயிற்றுவே! வேண்மாளும் குற்றுயிராகவே மிதக்கிறாள் என்பதை வானவனேந்தல் அறிவான். ஆனாலும் மரணப்பிடிக்கு இலக்காவதைவிட அவளாவது கடலின் பிடியில் துணிந்து முன்னேற வழியிருக்கட்டும் என்று அவன் அந்த அவல நிலையிலும் எண்ணினான். எனவே அவளை ஏந்திய கையை அவன் நழுவ விட்டான். “வேணி! உன் காதலுறுதி பெற்ற பின் எனக்கு வாழ்வும் தாழ்வும் ஒன்றுதான். சாவு எனக்கு இப்போது இனிக்கும் நறுந்தேன். நான் களிப்புடன் செல்கிறேன். நீ எப்படியும் கடலில் தப்பிச் செல். பிழைத்திருந்தால் என்னை மறவாதே!” என்றான். அவன் உள்ளம் அவளைச் சுட்டது அவன் விடுத்த கையை அவள் எட்டிப் பிடித்துக் கொண்டாள். “நீ செல்லும் திசையில்தான் எனக்கு இனி வாழ்வும் சாவும்-நான் இனி விரும்பும் விடுதலை அது ஒன்று-வாழ்ந்தால் உன் காதலுக்காக வாழ்வேன்-மாண்டால் அதற்காக மாள எனக்கும் தெரியும்,” என்றாள் அவள். அவனை ஈர்த்திழுத்துச் சென்ற வேலைக் கூட அவள் எட்டிப் பிடித்து அதற்கு முத்தமிட முயன்றாள். இன்னும் ஒன்றிரண்டு கணம். சிங்கள வீரர் பழிக்கு அக்காதல் துணைவர் உடலும் உயிரும் இரையாக இருந்தன. ஆனால் அவர்கள் அஞ்சிய அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. கடலலைமீது அலை வாயில் திரிந்த சோழர்களது படைவீரர்கள் நாள்தோறும் இமை கொட்டாது தருவை ஏரிப்பக்கம் கண்ணோட்டம் செலுத்தியிருந்தன. சேணாட்டுக் கன்னியரைக் கைப்பிடித்த செல்வர் பலர்-சோழர்க்குச் சொந்தமான தமிழ்க் குருதியைத் தம் நரம்பிலும் ஓட விட்ட பாண்டிய நாட்டு, சேரநாட்டுத், தமிழர்-கொடுங்கோல் நிலமான தாயகம் விடுத்து அண்மைத் தாயகம் வந்து சேரத் துடித்த துடிப்பும், அதற்காகச் சாவுடன் அவர்கள் மேற்கொண்ட கோரப் போராட்டமும் சோழ வீரர் அறியாததல்ல. அத்தகையோர் கடலலைகளுடன் போராட்டம் நடத்திய நேரத்திலெல்லாம், சோழ வீரர்கள் நீரிலே பாய்ந்து அவர்களைக் காப்பாற்றியே வந்தனர். அத்தகைய ஒரு படகு, படகிலிருந்து குதித்து நீந்திய ஒரு வீரனுடன் சிங்களப்படகை நோக்கி விரைந்து கொண்டிருந்த உடல்களைக் கைப்பற்றப் போராட்டம் நடத்தியது. நீந்திச் சென்ற வீரனின் கைவாள் வேலின் பாசமாகிய கம்பு நூலை முதலில் அறுத்தது. படகிலுள்ளோர் அதன்பின் எளிதாக வானவனே ந்தலையும் அவன் உடலில் பாய்ந்த வேலைப்பற்றி இருந்த வேண்மாளையும் அருமுயற்சியுடன் படகிலேற்றினர். இருவரும் படகுடன் சோழர் கடற்படைத் தலைவன் அண்ணல் பல்லவராயன் முன் கொண்டு வரப் பட்டபோது, சோழ வீரர் அனைவரும் கடலலையுடன் போட்டியிட்டு ஆரவாரமிட்டு மகிழ்ச்சிக் கூத்தாடினர். ஒரு வீரன்தான்; ஒரு வீராங்கனைதான் - ஆனால் பாண்டி நாட்டின் தன்மானத்தையே, சேர நாட்டின் வீரத்தையே அந்த இருவர் உடலை மீட்டதன் மூலம் புதுப்பித்துவிட்டதாகச் சோழ மக்கள் இறும்பூதெய்தினர். நீந்திச் சென்று கம்பி நூலறுத்த வீரன் வேறு யாருமல்ல; அண்ணல் பல்லவராயனின் இளங்காளை பெருமாவளவனே! அவனுடன் படையைச் சாக்களத்திற் கோட்டி அவனது பெரும் புகழில் பங்கு பெற்றவன் அவன் மாமனும் அண்ணல் பல்லவராயனின் மைத்துனனுமான கோவகிளங்கோமான் ஆவான்; இருவருக்கும் அச்சமயத்திலேயே ‘வளவனேறு’ ‘சென்னிப்புலியேறு’ என்ற பட்டங்கள் அண்ணல் பல்லவ ராயனால் கடலலை மீதே-நிலவொளியிலேயே வழங்கப்பட்டது. வேண்மாள் தன்னுணர்வு பெற நாழிகை அல்ல; நாட்கள் ஆயின. வானவனேந்தல் சாவுக்கும் உயிருக்கு மிடையே ஊசலாடிக் கொண்டிருந்தான். ஆயினும் வேண்மாளின் கண்களிலிருந்து பெருகிய காதல் வெந்நீர் அவன் கோரப் புண்களை மெல்ல மெல்ல ஆற்றின. எதிரிகளின் வேல் சென்று துளைத்த அவன் துடையின் வழி அவன் காதல் உயிர் அடிக்கடி சென்று மீண்டது. மேலும் சோழ கடற்படை மருத்துவர் அனைவரும் ‘போகும் உயிர் இனி மீளாது’ என்று கைவிட்ட பின்னும் நாட்கணக்காக, வாரக் கணக்காக வானவனேந்தல் உயிர் உடலை விட்டோடாமல் ஊசலாடிற்று. கொல்லும் வேலினும்-நஞ்சினம் கொடிது தமிழ் மாதர் காதல் விழிகள் என்பர் கவிஞர். ஆனால் அதே கவிஞர் அதற்கு மாற்றாக அதே காதல் விழிகளைப் பாடியுள்ளனர். அவ்விழிகளே அமுதமாய் இறக்கும் உயிர்களுக்கு இறவா இன்பமும் அளிக்கவல்லன என்று சுட்டிக்காட்டியுள்ளனர். வானவனேந்தல் உயிர் வேண்மாளின் இக்காதல் வரலாற்றுக்குத் தக்க சான்றாய் இலங்கிற்று. அவன் சாவை நோக்கிச் சென்று அவ்விழிகளின் கண்ணீரின் ஆற்றலால் மெல்ல மீட்சி யடைந்தான் பல மாதங்கள் சென்றபின், கடற்படை மூல தளத்தருகே சோணாட்டில் ஒரு மருத்துவமனையில் வேண்மாளருகே கிடந்த அவன் உடல் படிப்படியாகத் தேறுதலுற்றது. எழுந்து உட்காரலானான். பின்னும் சில மாதங்களில் புத்தார்வத்துடனும் புதுத் துடிப்புடனும் புதிதாகத் திரட்டப்பட்ட சோழர் பெரும்படையில் அங்கம் வகித்தான். ஆண்டுகள் பல கழிந்தன. சோழ நாட்டுத் தரைப் படைகளாலும் கடற்படைகளாலும், புதிதாக ‘வாள் படை’யாக திரட்டப்பட்ட சேரர் விற்படை, வேறுபடை, கவணெறி கடற்படைகள் ஆகியவற்றின் கூட்டுச் செயலாலும், பாண்டியப் படைவீரர் மட்டுமன்றி, ஆடவர் பெண்டிராகிய பொது மக்கள் காட்டிய ஒப்பற்ற வீர தீரச் செயல்களாலும் பாண்டி நாட்டிலிருந்து கடைசிச் சிங்கள வீரர்வரை அப்புறப் படுத்தப்பட்டனர். அவன் பாண்டி நாட்டுப் போர்களில் பழக்கப்பட்டவன், தருவக்கரை போராட்டம் புத்தார்வத்தையும் புது வலிவையும் புதுப் பயிற்சியையும் தந்திருந்தன. அவன் பாண்டிநாட்டு நிலப்போர்களிலும் கடற்போர்களிலும் நில நீர்ப் போர்களிலும் மாறிமாறி ஈடுபட்டுப் பெரும் புகழ் நிறுவினான். இறுதியில் அவனே சோழப்படை நாயகத்தின் தனிப் போராகப் பாண்டி நாட்டுப் படை நாயகமாகவும் பாண்டிய சோழப்படைகளின் இணையற்ற தனிப் பேராளாகவும் பொறுப்பேற்றான். அவன் தலைமையில் பாண்டி நாடு மீண்டும் பண்புற்றது. சேர நாடு மீண்டும் சீரமைந்தது. காதற் கன்னியர் கடைக்கண் ஆற்றல் எந்த அளவு சாதிப்பதற்கரியனவற்றையும் சாதிக்க முடியும் என்பதைத் தன் கடுஞ்சோதனை மூலம் வேண்மாள் காட்டிவிட்டாள். அவர்கள் முதல் மகவு இருவர் உள்ளத்திலும் மற்றெல்லா எண்ணங் களையும் மறக்கடித்து ‘தருவைக் கரசு’ என்ற பெரும் பெயரையே ஒரு புதிய பட்டமாக்கி, அக்குழந்தைக்குச் சோழப் பெரும்படை நாயகனான அண்ணல் பல்லவராயனே பெயரிட்டு விழா நடத்திய போதும், சோழப் பெரும் பேரரசன் அச்செல்வன் எழுத்தறிவிப்பு விழாவிலே மீண்டும் அவனுக்கு ‘மும்முடிப் பாண்டியன்’ என்ற விருந்தளித்த போதும், வீரக்காதலராக வாழ்வு தொடங்கிய அவன் தாய் தந்தையர் விடுதலைப் புகழ் தந்த தம் காதலைக்கூட மறந்து மகிழ்ச்சியிலே திளைக்க வேண்டியவராயினர்! 2. ஈழ நாட்டு நங்கை இடைக்காலப் பாண்டியப் பேரரசும் இலங்கைப் பேரரசும் தத்தம் பெருவாழ்வின் உச்சநிலை அடைந்திருந்த காலம். இரு அரசுகளுமே வல்லமை வாய்ந்த கடற்படைகளுடன் கடலரசுகளாக விளங்கின. பாண்டியன் சீர்மாறன் சிவல்லபன் பரசக்கர கோலாகலன் (கி.பி.830-862) இலங்கை மீது படையெடுத்துப் பயங்கரப் போராட்டங்கள் நிகழ்த்தினான். இச்சூழல்களைப் பின்னணியாகக் கொண்ட கற்பனைக் கதை இது. தெம்பாங்கு! பெயரின் இனிமையைப் பழித்தது அவள் அழகு. அவ்வழகின் வெறிக்கு வெறியூட்டிற்று அவள் ஆடல். மதுவின் போதையைத் துளைத்துக் கொண்டு இப்புதிய வெறி புத்தளக் கோட்டையின் காவலன் பூமன் பொலந்தரரின் மூளையைக் குழப்பிற்று. அவன் பொறுப்புப் பெரிது. பாண்டியர் புத்தளத்தில் படையிறக்கு இலங்கையில் கால் வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியவன் அவன்-இதை அவன் ஒரு கணம் மறந்தான். கொடிபோலத் துவண்டு அசைந்தாடிற்று அவள் உடல். அவள் இளமையின் ஒய்யாரத் தளதளப்பு அவன் உறுப்புக்கள் தோறும். நாடி நரம்புகள் தோறும், அடக்க முடியாத ஆவலைத் தூண்டின. எழுந்தெழுந்தடங்கி அலைபாயும் அவள் மார்பகங்கள் அவனை ஒருகணம் இன்ப வெள்ளத்தில் மிதக்க வைத்து. அடுத்த கணமே துன்பவெந்தீயிலிட்டு வாட்டின. பாம்பைப் பழிக்கும் முறையில் வளைந்து நெளிந்த அவள் உறுப்புகள் அவனைச் சுற்றி சுற்றி பாசவலை வீசுவது போலிருந்தன. நிலத்தில் பரவாமலே அதன் மீது சுழன்று சுழன்று வட்டமிட்ட அவள் மென்மலரடிகள் அவனைத் தன்னிலையழிய வைத்தன. அவளைக் கண்ணால் பருகுவது போதாதென்று கையால் பற்ற அவன் எழுந்தான். பிடி நழுவ நழுவ, தள்ளாடிய உடலுடனே அவனைச் சுற்றித் தானும் நெளிந்தாடினாள். “ஆகாகா! அஃகாக!” “மாயாவி என்று பேர் படைத்த, கடற்படைத் தலைவன் அதிகன் அஞ்சியே என்கையில் விரைவில் சிக்க இருக்கிறான். நீ என் கைக்குத் தப்பலாம் என்று நினைக்கிறாயா? வா, என் கற்கண்டே! சிங்களச் சிங்காரச் செல்வமே! என் வெண்ணெய் உடலில் குளித்து என் உள்ளம் கொதிப்பாறட்டும்! உன் தேன் முகத்தால் என் பசியின் துடிப்பகற்றுவாய்!’ என்றான். அவனிடம் பிடிகொடாமல் நழுவிக்கொண்டே அவனை மேலும் பேச்சில் இழுக்க முயன்றாள் அவள். “என்ன, அதிகன் அஞ்சியா? போதையில் எதுவும் பேசுவது எளிது. பிடித்த பின்னல்லவா இப்படி சிரிக்க வேண்டும்!” என்றாள் அவள். பொலந்தரர் மீண்டும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். “சிக்கியது போலத்தான். நம் கடற்படைத் தலைவர் அரிமானேந்தல் காங்கேயன் துறையின் காவலுக்குச் சென்றிருப்பதாக அவனுக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆகவே அவன் நம் கோட்டையைக் கைப்பற்றும் எண்ணத்துடன் இங்கே வரப் போகிறான். வந்து சிக்கப் போகிறான்; பொறியில்! அஃகா!” “தலைவர் அரிமான் போனதுதான் எல்லாருக்கும் தெரியுமே! அப்படியிருக்க அவன் சிக்கப் போவது என்பது உங்கள் அவசரக் கணக்கே தவிர வேறு என்ன? வீண் சம்பம் அடிக்காதேயுங்கள்!” பொலந்தரர் கனைத்த கனைப்பு மாளிகையின் மோட்டை அதிர வைத்தது. “ஆகா, பார்த்தாயா? உனக்கு அழகு இருக்கிறது. அறிவு இல்லை. அரிமான் போகவில்லை. போனதாக நான்தான் பொய் செய்தி பரப்பினேன். அதை நம்பி அவன் புத்தளத்தைத் தாக்க இருக்கிறான். பாதிப்படைகள் இறங்கியதும், அரிமான் கடற்பக்கமிருந்து பின்னணியில் தாக்கப் போகிறார். நிலத்தில் இறங்கவும் முடியாமல் கடலில் தப்பவும் முடியாமல், தென்னிலங்கையில் தன் முடிவை எளிதாகக் காணப் போகிறான்!” நங்கை தெம்பாங்கின் செந்தாமரை முகத்தில் ஏளனக் குறிதொனித்தது. “உங்கள் பேச்சு எதற்குச் செல்லும்? அரிமான் போகவில்லை என்றீர்கள். இப்போது கடலிலிருந்து வருவார் போகவில்லை என்கிறீர்கள்! இங்கே துணையற்ற பெண்களிடம் பேசி ஏய்க்கலாம். தென்னகத் தமிழரிடம் இதெல்லாம் செல்லுமா?” என்றாள். அவள் முகம் சிறிது சுளித்தது. ‘பெண்களுக்கும் அரசியலுக்கும் தொலைதூரம்! அரிமான் காங்கேயன் துறைக்குச் செல்வதாகத்தான் பாவித்துப் புறப்பட்டான். ஆனால் அருகிலுள்ள புத்தத் துறையில் பதுங்கியிருக்கிறான். தெரிந்து கொள், இப்போது பிகுச் செய்யாதே! அதிகனை வெல்லுகிற ஆணழகனிடம் உன் அழகை ஒப்படைக்க மறுக்காதே!” என்றான். பேச்சில் சிக்கித் தெம்பாங்கு அவன் கைப்பட்டு விட்டாள். அவன் அவள் மெல்லுடலைத் தன் உடலுடன் அணைத்து ஆவலுடன் அழுத்தத் தொடங்கினன். இணங்குவது போலப் பாவித்து அவள் சட்டென்று மீண்டும் நழுவியோடினாள். “அதிகன் வீரம் உங்களிடம் சிக்கும் போது, என் அழகு எங்கே போய்விடப் போகிறது! அதன் பின் நானாக வருகிறேன். ஆனால், நினைவில் இருக்கட்டும். பழைய இலங்கையரசன் ஒருவன் மகுடத்திலிருந்து எடுத்த மணி ஒன்றை அதிகன் முடியில் அணிந்திருக்கிறான்! பாண்டியன் அவனுக்கு அளித்த பரிசாம் அது! அதிகனைப் பிடிப்பது உண்மையானால். அந்த மணியைக் கைப்பற்றி எனக்குக் கொடுங்கள். அதன் பின் நான் உங்கள் விஷயத்துக்குத் தடை கூறப் போவதில்லை” என்று கூறிவிட்டு வெளியேறினாள் தெம்பாங்கு! அவள் ஒரு சிங்கள உயர்குடி நங்கை. இளமையிலேயே அவள் தாயை இழந்தவள். தாய்போல அவளைப் பேணிய தந்தையும் பிற உறவினரும் பாண்டியர் கடற்படைப் போர்களிலேயே வீரமரணமடைந்தனர். இதனால் அவள் துணையற்றவளானாள். துணையற்றவர்களுக்குரிய உதவி நாடியே அவள் பொலந்தரரிடம் வந்திருந்தாள். ஆனால் அவள் அழகும் ஆடல் பாடல் நயங்களும் கண்ட கோட்டைக் காவலன் அவள் நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான். உதவி புரிவதாக வாக்களித்து நாள் கடத்திக் கொண்டே, அவளைத் தன் வலையில் சிக்கவைக்க எண்ணினான். இதையறிந்ததும் வேறு வழியில்லாமல் தெம்பாங்கு வேண்டா வெறுப்புடன் அவன் ஆதரவிலேயே நாள் கழித்து வந்தாள். துணையற்ற அந்நிலையிலே காதல் அவள் வாழ்வில் புகுந்தது. அது அவளை அரசியல் சூழ்ச்சிகளின் மாயச் சுழல்களில் மெல்ல மெல்லச் சிக்கவைத்தது. ஏனெனில் அவள் காதலைப் பெற்று அதில் இழைந்த இளைஞன் இலங்கை வாணன் அல்ல; பாண்டிநாட்டவன். அவன் பாண்டியர் படைத்தலைவன் இளமாறன். பாண்டி நாட்டு ஒற்றர்கள் இச்சமயம் இலங்கையில் ஈசல்கள் போல் எங்கும் பறந்தனர்-எறும்புகள் போல எங்கும் புகுந்து திரிந்தனர். அவர்களுடன் கலந்து படைத்தலைவன் அதிகனுக்கு வேண்டிய உளவறிந்து செல்லவே இளமாறன் புத்தளத்துக்கு வந்திருந்தான். தெம்பாங்கு அவனைக் காதலித்தது போலவே அவனும் அவளை உயிர்ப் பாசத்துடன் காதலித்தான். அவளுடன் பேசி மகிழ, மறைவில் முத்தங்கள் பரிமாற கிடைத்த தறுவாய்களில் தனியிடம் கண்டு தம்மை மறந்து கலந்தின்புறு வதற்காகவே அவன் தன் கடமைகளை வேண்டுமளவு தளர்த்தி நாட்கடத்தி வந்தான். அவளும் அவன் பகை நாட்டன் என்பது தெரிந்தும், அரசியல் நேர்மைக்கும் காதல் பாசத்திற்கும் இடையே வாள்முனை மீது நடந்து திரிந்தாள். “போர் எப்படி முடியுமோ சொல்ல முடியாது. ஆனால் அது முடிந்தபின் இங்கே, பாண்டி நாட்டிலோ இருவரும் ஒன்றுபட்டு வாழ்வோம். அதுவரை இந்த ஒளிவுமறைவுக் காதலல்லாமல் நமக்கு வேறு வழியில்லை-உன்னைப் போல நானும் இந்த இரண்டக நிலையில்தான் காரியமாற்ற வேண்டும்?” என்று அவன் தன் காதலியிடம் கூறியிருந்தான். தெம்பாங்கு மீது ஒரு கண்வைத்துச் சமயம் பார்த்திருந்த இன்னொரு ஆடவன் உண்டு. அவன் இலங்கைவாணனல்ல; பாண்டிய நாட்டானும் அல்ல. பாண்டியர் ஒற்றர் படையுடனே வந்த ஒரு சேர நாட்டுக் கடலோடி. அவன் பெயர் மணிக் குட்டுவன் அவன் கட்டிளைஞன்அல்ல; நடுவயதினன். ஆனால் கடல் வாழ்வில் அவன் குடும்பமற்றவனாக, காதலுக்கு அலைந்தவனாகவே திரிந்தவன். பொலந்தரரிடம் அவள் சிக்கியிருப்பதும், அவனை மனமார வெறுப்பதும் அவனுக்குத் தெரியும். ஆகவே எப்படியாவது அவளைத் தான் கைப்பற்றித் தன் நாட்டுக்கு இட்டுச் சென்றுவிடலாம் என்ற நப்பாசை அவனை அலைக்கழித்தது. அவன் அவளையே அடிக்கடி கண்ணோட்ட மிட்டு வட்டமிட்டு வந்தான். பொலந்தரரிடமிருந்து வெளியேறிய நங்கை இளமாற னுக்காகக் கோட்டை மதிற்புறத்திலுள்ள ஓர் அருந்தகத்தில் சென்று காத்திருந்தாள். காத்திருப்பதற்குரிய சாக்குப் போக்கு நாடி, அவள் அருந்தகத்துப் பணியாளிடம் ஒன்றிரண்டு அப்பமும் தேம்பாகும் கொணரப் பணித்திருந்தாள். ஆனால் அச்சமயம் அவள் எதிர்பாராத வகையில், மணிக்குட்டுவன் அவள் தோள்மீது கைவைத்தான். தன்னிடம் தகா உரிமையுடன் நடந்துகொண்டே அவனைக் கண்டு சீறினாள், ஆனால் அவள் துணையற்ற நிலையறிந்த அவன், தன் கையை எடுப்பதற்கு மாறாக, அதை மேலும் அழுத்தி அவள் தோளைப் பிடித்துக் குலுக்கினான். “கோட்டைக் காவலாளியைப் போல உன்னைக் குரங்குகைப் பூமாலையாகக் கசக்கி எறிபவனல்ல நான். என் கழுத்தில் மணி யாரமாக...!” அவன் பேசி முடிப்பதற்குள் தெம்மாங்கின் தோள் மீதிருந்த கையை வன்மையாக வேறொரு கை பின்னின்று பிடித்திழுத்தது. மணிக்குட்டுவன் திடுக்கிட்டுத் திரும்பினான். வந்தவன் இளமா றனே! அவன் படைத் தலைவனென்றறிந் திருந்ததனால், சட்டென இரண்டடி பின்வைத்து வணக்கம் தெரிவித்தான், மணிக் குட்டுவன். “அந்தப் பெண்ணை ஏன் தொட்டாய்?” என்று உறுமினான் இளமாறன். “நான் எந்த அடாச் செயலும் எண்ணவில்லை...” “சரி, போ! இனி இத்திசை நாடாதே, பத்திரம்!” மணிக்குட்டுவன் மறுசொல் சொல்லாமல் வணங்கி வெளியேறினான். அருந்தகத்தின் பின்புறத்தில் இருந்த ஒரு மாந்தோப்பே காதலர்கள் அடிக்கடி சந்திக்குமிடமாயிருந்தது. மணிக் குட்டுவனை அனுப்பிய பின் இளமாறன் தெம்பாங்கை ஒரு வழியாக அப்பக்கம் அனுப்பிவிட்டு, தான் மற்றொருபுறமாக அங்கே சென்றான். இரவின் இருட்டையும் குளிரையும் அவ்விருவரும் அன்று ஒரு சிறிதும் பொருட்படுத்தவில்லை- ஆர்வ அணைப்பில் பிற உலகை மறந்தனர். பஞ்சணைகளில் மன்னர் இனிய நேரங்களில்கூட காணாத நிறை பேரின்பத்தில் ஆழ்ந்தனர். அச்சமயம் அவர்கள் தாம் இரு வேறு நாடுகள், இரு வேறு மொழிகளுக்குரியவர். இரு பகை அரசுகளுக்குரியவர்கள் என்பதை முற்றிலும் மறந்தனர். தம் தனித்தனி வாழ்வை மறந்தனர். அதனிடையே தெம்பாங்கு காதுடன் காதாக, உள்ளத்துடன் உள்ளமாக அன்றைய நிகழ்ச்சிகள் முழு வதும் ஒரு தூசு விடாமல் இளமாறனிடம் தெரிவித்தாள். அதிகன் அஞ்சியைப் பொறியில் சிக்க வைப்பதற்காகப் பரப்பப்பட்ட பொய்யையும் அவனிடம் கூறினாள். காதலின் ஆர்வ உரைகளே தூங்கிக் கிடந்த இளமாறனின் கடமை உணர்ச்சியைத் தட்டி எழுப்பிற்று. தன் உயிர் காக்க அவன் விடியுமுன்பே விரைய முற்பட்டான். தான் கூறிய மாற்றமே தன் காதலன் தங்கிவிட்டுப் பிரியக் காரணமாயிற்று என்று தெம்பாங்கு அச்சமயம் எண்ணாதிருக்க முடியவில்லை. ஆனால் அவன் அக்குறிப்பறிந்தான். “கண்மணி, இந்த அவசர நேரத்தில்கூட நான் உன்னை விட்டு நெடுந்தொலை பிரிய வில்லை. செய்தியை இங்கிருந்தே தக்க ஆள்வழிக் கூறி அனுப்பி விட்டு எப்படியும் இதே இடத்தில் நாளை சந்திப்போம்” என்றான். அவர்கள் பிரியா விடையிடையே- ஒரு பிரிவை ஆயிரம் பிரிவாக்கி மீண்டும் மீண்டும் பேசிய ஆர்வ உரைகளிடையே கிழக்கு வெளுத்துவிட்டது. நங்கையை உட்கோட்டைக்கு அனுப்பிவிட்டு இளமாறன் காற்றாகப் பறந்தான். பாண்டியர் ஒற்றர் படைத் தலைவன் கடம்பன் இளமாறனின் நண்பன். அவன் அச்சமயம் புத்தளத்திலேயே மறைந்து உலவினான். அவனை இளமாறன் தேடிக் கண்டுபிடிக்க எண்ணிக் கோட்டை வீதிப் பக்கம் சென்றான். ஆனால் எதிர்பாராத வகையில் அவனே எதிர்ப்பட்டான். இளமாறனை அவன் மாறன் என்றே அழைப்பது வழக்கம். “மாறா! நீ என்ன ஒரேடியாக மாரன் விளையாட்டி லேயே இறங்கி விட்டாயா? ஒற்றர்படை அலுவலத்துக்கு உன் செய்தி எதுவுமே எட்டவில்லையே!” என்றான். வேடிக்கையாக அவன் கேட்ட கேள்வி இளமாறன் உள்ளத் தில் தைத்தது. தன் காதல் கதையைத் தெரிந்துதான் அவன் பேசு கிறானோ என்று ஒரு கணம் எண்ணினான். ஆனால் அடுத்த கணம் அவன் தன் காதற் கதை முழுவதையுமே தானாக நண்பனுக்கு எடுத்துரைத்தான். அதுகேட்டு கடம்பன் காரி ஏளனப் புன்முறுவல் பூத்தபோது, அக்காதலி மூலமே தனக்குக் கிடைத்த அரிய இரகசியத்தை அவனிடம் சொன்னான். “அன்பனே! இச்செய்தி முக்கியமானது; அவசரமானது. காதலில் இழைந்து தன் வயமற்ற என்னைவிட, இதை உடனடியாகத் தலைவரிடம் கொண்டு செல்லத் தக்கவன் நீயே! இப்போதே விரைவாயாக!” என்றான் இளமாறன். “நீ ?” “நான் இன்று வரவில்லை. இன்னும் சில வேலைகள் இருக்கின்றன.” என்ன வேலை என்று கடம்பன் காரி கேட்கவில்லை. நண்பன் நிலையை அவன் குறிப்பால் அறிந்தான். ஆயினும் அவனால் ஒரே ஒரு எச்சரிக்கை தராமலிருக்க முடியவில்லை. “காதல் இனிதுதான். ஆனால் அதற்கு ஒரு நேரம் உண்டு. இடம் உண்டு. வரம்பும் உண்டு. இந்த மூன்றும் கெட்ட நேரம் இது. உன் காதலி நம் பகைவர் பாசறைக்குரியவள்- தமிழ் நங்கை கூட அல்ல; சிங்கள நங்கை. அவள் காதல் ஒரு வேளை பகைவர் வீசும் வலையாய் இருந்துவிடக் கூடாது; விழிப்பாயிரு” என்றான். “தெம்பாங்கை உனக்குத் தெரியாது; தெரிந்தால் உன் அச்சத்துக்கு இடமேயிராது. அவள் சிங்கள நங்கையாய் இருக்கலாம். ஆனால் அவள் உள்ளம் அப்பழுக்கற்ற காதலில் திளைக்கும் பெண்மை உள்ளம். அக அழகு மொழி கடந்தது. இனம் கடந்தது...” “சரி, சரி, நான் இதோ, புறப்பட்டு விட்டேன். பேசிக் கழிக்க இப்போது நேரமில்லை!” கடம்பன்காரி பேசிக்கொண்டே கோட்டையின் கடற் புறமதில் மீது பரபரவென்று ஏறினான். அவ்விடத்தில் காவல் மிகுதியில்லை. ஏனெனில் அப்பக்கம் செங்குத்தான மதில் நேராகக் கொந்தளிக்கும் ஆழ்கடலின் மீது உயர எழுந்து நிமிர்ந்து நின்றது. சாவுக்கஞ்சாத வீரரும் அவ்விடத்தை அணுக அஞ்சுவர். ஆனால் சாவுடனே விளையாடிப் பழகிய மரபுக்குரியவன் கடம்பன்காரி. அவன்கண்ணை மூடிக்கொண்டு பாறை வழி சறுக்கினான். அலையுடன் அலையாகக் கொந்தளிக்கும் கடலில் மிகுந்த ஒரு மிதப்புக்கட்டை அவனை அலையில் விழாமல் தடுத்தாண்டது. அம்மிதப்புக் கட்டை உண்மையில் புறத்தே கட்டைபோல் தோன்றும்படி குடைவாக செய்த ஒரு மாயப் படகே. அது கடம்பன் காரி நுழைந்தும் அலைக் கிழித்துத் திறந்த கடலில் பாய்ந்தது. இளமாறன் சிறிது நேரம் படகை நோக்கிய வண்ணமே மதில் மீது நின்றான். பின் கோட்டை மதிலிலிருந்து இறங்கி நகரினுள்ளே திரிந்தான். இரவில் தெம்பாங்கை முன் இரவு சந்தித்த தோப்பை அவன் அணுகினான். தெம்பாங்கு அவனுக்கு முன்னே அங்கே வந்து காத்திருந்தாள். நள்ளிரவுப் போதில் காதலரிருவரும் ஒருவரை ஒருவர் பின்னிக் கொண்டு சருகுப் படுக்கையில் கிடந்தனர். உடைகள் பெரும்பகுதியும் நெகிழ்ந்து கிடந்ததைக் கூட உணராமல் அவர்கள் அயர்ந்து இன்பத்துயிலில் ஆழ்ந்திருந்தனர். அச்சமயம் இரண்டு பந்தங்களின் ஒளி அவர்கள் முகத்தில் பாய்ந்தது. அவற்றின் வெப்பம் கன்னங்களில் உறைத்தது. காதலர் கலவரத் துடன் திடுக்கிட்டெழுந்து, அரைத் துயிலில் கலங்கிய கண் களுடன் சுற்று முற்றும் பார்த்தனர். முரட்டுச் சிங்கள வீரர் அவர்களைச் சுற்றிலும் திரண்டு நின்றனர். அவர்கள் பின்னணியில் துடிதுடிக்கும் மீசையுடன் பொலந்தாரே வந்து சீறி நின்றான். தன் காதல் வாழ்வும் மறைவிடமும் எப்படி இவர்களுக்குத் தெரிந்தது? அது தெரிந்தாலும் இப்படி நள்ளிரவில் வந்து தாக்கும் படியாக தான் செய்த குற்றம் என்ன? இக் கேள்விகளுக்கு விடை காணாமல் இளமாறன் உள்ளம் தத்தளித்தது. ஆனால் வீரரின் பேச்சுக்களும் நடைமுறைகளும் விரைவில் யாவற்றையும் விளக்கின. பொலந்தரர் பேசினான். உணர்ச்சி வேகத்தால் அவன் உடல் துடித்தாடிற்று. “அடே, பாண்டி நாட்டுப் பதரே! என்ன துணிச்சலடா உனக்கு! இலங்கை நாட்டுக் கோட்டைக்குள் நுழைந்து வாழ் வதும் போதாமல், கோட்டைக் காவலன் பாதுகாப்பிலிருக்கும் சிங்கள நங்கையின் இதயத்தையும் களவாடப் புறப்பட்டு விட்டாய்! பார். உனக்கும் உன்னிடம் பசப்பிய அந்தச் சிறுக்கிக்கும் என்ன தண் டனை அளிக்கிறேனென்று?” என்று அவன் இளமாறனை நோக்கிக் கூறினான். பின் மற்ற வீரரை நோக்கிக் கட்டளையிட்டான். “போங்கள், இவனைக் கட்டிக் கொண்டுபோய் பாதாள அறையில் அடையுங்கள். அவன் கொட்டம் அடங்கத் தண்டனை தருவோம். ஆம், அந்த மாயக் கள்ளியையும் வேறொரு திசையில் அடைப்பீர்” எனறான். தெம்பாங்கு இச்சமயம் வீரருள் ஒருவனைக் கேள்விக் குறியுடன் நோக்கினாள். அவன் அவளுக்கு வணக்கம் செய்து விட்டு, பொலந்தரரை நோக்கிப் பணிவுடன் கூறினான். “ஆண்டே, தங்களுக்கு இவள் பெருங்குற்றம் இழைத்திருக் கலாம். ஆனால் நாட்டுக்கு அவள் செய்த நலம் சிறிதன்று. அதிகன் அஞ்சி பிடிபட இருக்கிறான். அவனுக்கு முன்னால் அவனுக்கடுத்த படியான படைத் தலைவனையே அவள் கைப்பற்ற உதவி யிருக்கிறாள். ஆகவே அவளை மன்னிக்கக் கோருகிறேன்,” என்றான். இளமாறனுக்குத் தான் பிடிப்பட்டதைவிட இம்மாற்றம் பேரிடியாயிற்று. “ஆ! என் தெம்பாங்கா என்னைக் காட்டிக் கொடுத்தது?” என்று பற்களைக் கடித்தான். அவன் ஏமாற்றத்தைத் தெம்பாங்கு உணர்ந்தாள். “அன்பரே, அவர் கூறியது முற்றிலும் உண்மையல்ல. அதை அப்படியே நம்பி விடாதேயுங்கள்” எனறு கூறி அவன் தோள்களைப் பற்ற முயன்றாள். ஆனால் இளமாறன் வெறுப்புடன் அவளைக் கையால் உதறித் தள்ளினான். ஒரு கணத்துக்கு முன் அவளை ஆவலுடன் அணைத்து மகிழ்ந்து அதே கரம் இப்போது இரும்புக் கரமாய் அவள் உடம்பில் தழும்பேற்றிற்று. வீரர் அவளை ஒன்றும் செய்யாது விட்டனர். ஆனால் இளமாறன் கைகளைப் பின்புறமாகக் கட்டி இழுத்துக் கொண்டு சென்றனர். நடுப்பகலில் கூட இருட்டாகவே இருக்கும் பாதாள அறையில் ஒரு தூணுடன் சேர்த்துச் சங்கிலியால் பிணைத்தனர். பாண்டியர் வீரம் காதற் கட்டில் மயங்கிக் கண்ணிழந்து இங்ஙனம் எதிரியின் பாசறையில் கட்டுண்டு கிடக்க நேரிட்ட தென்று இளமாறன் இரவெல்லாம் வருந்தினான். ஆயினும் தன் தலைவனுக்கு எதிரியின் மறைசெய்தி அறிந்து கூறிக் கடமை செய்து விட்டோம் என்ற மன நிறைவு அவனுக்கு ஓரளவு ஆறுதல் தந்தது. மறுநாள் காலை பாதாள அறையின் கதவு திறக்கப்பட்டது. உள்ளே இன்னொருவன் கட்டுடன் தள்ளப்பட்டதை அவன் உணர்ந்தான். முதலில் அது யார் என்று அவன் கவனிக்கவில்லை. விளக்குடன் கட்டுண்டவன் பின்னால் இரு காவலர் வந்தனர். அவர்களுடன் தெம்பாங்கும் வந்தது காண, அவனுக்கு அவள் மீதிருந்த கோபம் இன்னும் பெரிதாயிற்று. அவளைக் கொன்று விடப் போகிறவன் போலப் பார்த்தான். அவள் மீது பாய்ந்து அவளைக் கட்டுண்ட நிலையில் உடலுக்குத் தான் வலி ஏற்பட்டது. தெம்பாங்கு அவன் நிலை கண்டு இரங்கியது போலத் தோன்றிற்று. ஆனால் அவள் உள்ளத்தின் ஆழத்தையோ போக்கையோ அவனால் உணர முடியவில்லை. கட்டுண்டவன் மீது விளக்கொளி பட்டதும், இளமாறன் ‘ஆ’ என்று அலறினான். “ஆ, கடம்பன்காரி! நீ எங்கே இப்படி என்னைத் தொடர்ந்து வந்தாய்?” என்றான். “ஆம் கடம்பன்காரிதான். நீ பிடிபட்டது கேட்டுத்தான் நான் திரும்பி ஓடிவந்தேன். எப்படியோ நானும் எளிதில் பிடிபட்டு விட்டேன். ஆனால் நீ அவளிடம் இன்னும் உயிரையே வைத்திருப் பாய் என்று நினைக்கிறேன்” என்றான். “இந்த அழகிய நச்சுப் பாம்பைத்தானே குறிக்கிறாய்!” என்று இளமாறன் தெம்பாங்கைச் சுட்டிப் பேசினான். “அவளை நீ இப்போது எவ்வளவு திட்டினாலும் எனக்கு மனம் ஆறாது. அவள் என்னைக் காட்டிக் கொடுத்தாள். உன்னையும்...!” அவன் பேசி முடியுமுன் தெம்பாங்கு குண்டுபட்ட பெண் புலிபோலச் சீறி அவன் மீது பாய்ந்தாள். தன் முழு ஆற்றலுடனும் சங்கிலியில் பிணைக்கப்பட்ட தன் கையாலேயே அவன் அவளை ஆவேசத்துடன் நெக்கி அப்பால் தள்ளினான். அவள் பாதாள அறையின் வாயில் பக்கமே சென்று விழுந்தாள். ‘அட தமிழா உனக்கு அறிவுதான் மழுங்கிவிட்டது. கண்ணுமா தெரிய வில்லை?’ என்று ஏதேதோ கூறிப் புலம்பியவாறு அவள் வெளியேறினாள். காவலரும் கதவை அடைத்துப் பூட்டிவிட்டு அகன்றனர். இளமாறன் முதலில் தெம்பாங்கின் புலம்பலைக் கவனிக்க வில்லை. ஆனால் இருட்டில் ஏதோ அருகில் மின்னுவதைக் கண்டான். காலை எட்டி அதைத் தன் பக்கமாக இழுத்துப் பார்த்தான். அது ஒரு திண்ணிய உடைவாள்! அவனுக்கு ஒன்றும் புரியவில்லை- தன்னைக் காட்டிக் கொடுத்த நங்கை இப்போது மீண்டும் நடிப்பு நடித்து இதைக் கொண்டு தந்து விட்டுப் போவா னேன்? ஏனென்று அவனுக்குத் தெரியவில்லை. முயற்சியுடன் அதைக் ‘காலாலும் கையாலும் பற்றி எடுத்து இடையில் சொருகி மறைத்துக் கொண்டான். இப்புதிய கண்டுபிடிப்பை அவன் கடம்பன்காரியிடம் கூறவில்லை. ஆனால் அவன் மூளை விரைவாக வேலை செய்தது. அவன் அவ்வுடைவாளைப் பயன்படுத்தி வெளியேறத் திட்ட மிட்டான். மீண்டும் இரவாயிற்று. வாயில் காவலன் ஒருவன் தவிர மற்ற காவல் வீரர் அனை வரும் பாதாள அறையின் வாயிலிருந்து அப்பால் சென்றனர். அவர்கள் விடை பெற்றுக் கொண்டிருந்ததை அவன் கூரிய செவிகள் அவனுக்கு உணர்த்தின. முன்னிரவு கழிந்தது. வாயில் காவலன் உறக்கத்தைப் போக்கும் எண்ணத்துடன் வாயிலின் குறுக்கே அங்குமிங்கும் நடந்தான். இடையிடையே அடங்கிய குரலில் எதோ சிங்களப் பாட்டைப் பாடினான். அவன் கண்களையும் நாடி நரம்பு களையும் தாக்கிய உறக்கத்தை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. இளமாறன் மெல்லக் கடம்பன்காரியைக் காலால் தடவி எழுப்பினான். “காரி! நீ உறங்குகிறாய்; நான் விழித்துக் கவலையுடன் திட்டமிட்டு வருகிறேன். இப்பொழுது செயல் செய்யும் நேரம். எழுந்திரு!” என்றான். “நள்ளிரவு, விலங்கு, பாதாள அறை இவற்றிடையே என்ன இருக்கிறது, செயல் செய்ய?” என்றான் காரி. “அது பற்றி உனக்குக் கவலை வேண்டாம், தெரிகிறதா!” கடம்பன்காரிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் சொல்கிற படி செய்வதாக வாக்களித்தான். “வாயில் காவலர்களை இச்சமயம் எப்படியாவது உள்ளே வரச் செய்ய வேண்டும். அதற்கு நான் ஒரு வழி செய்கிறேன். இன்னும் கால் நாழிகை நேரத்துக்குள் நான் மெல்ல ஒன்று, இரண்டு, மூன்று என்பேன். மூன்று என்றவுடன் நீ திடுமென வலி கண்டவன் போலச் சங்கிலியுடன் போராடிக் கொண்டு தரையில் உழல வேண்டும். வாயில் காவலன் அது கேட்டு உள்ளே வரும்வரை நீ இதை இடைவிடாது நடிக்க வேண்டும்” என்றான். கடம்பன்காரி அந்தக் கால்நாழிகை நேரமும் மலைப்புடன் ஆனால் ஆவலுடன் காத்திருந்தான். இளமாறன் தன் கிழிந்த சட்டையை மேலும் கிழித்தான். கிழந்த தும்புகளைப் பல்லில் கடித்து முறுக்கினான். உடை வாளை வலது காலடியில் வைத்து அத்தும்புகளால் இறுக்கிக் கொண்டி ருந்தது. கால் நாழிகையானதும் அவன் மெல்ல ‘ஒன்று- இரண்டு- மூன்று’ என்றான். கடம்பன்காரி அவன் நடிப்பைத் தொடங்கினான். சங்கிலி கலகலத்தது. காரியின் கதறல் வாயில் காவலனுக்குக் கேட்டும் அளவில் எழுந்தது. சங்கிலியுடன் கைகால்கள் நிலத்தில் உராயும் அரவம் பாதாள அறை எங்குமே எதிரொலித்தது. இளமாறனும் இதற்கிடையே “ஐயோ இது என்ன காரி! காக்காய் வலியோ குதிரைவலியோ என்னவோ? இனி என்ன செய்வேன்?” என்று கத்தினான். தண்டனைக்குரிய குற்றவாளி வலியால் இறந்து விடக் கூடாதே என்று கருதி, வாயில்காவலன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அவனிடம் விளக்கு இல்லை. ஆகவே விழுந்து புரள்பவனைத் தடவி எடுத்து நிறுத்துவதற்காக அவன் கீழே குனிந்தான். செவிகளைக் கூராக்கிக் கொண்டு இளமாறன் இத்தனை யையும் உன்னிப்பாகக் கவனித்தான். அவன் கீழே குனிந்திருந்த தன் காலை எட்டி நீட்டித் தன் முழுவலுவுடன் அவன் அடிவயிற்றில் உதைத்தான். காலில் கட்டியிருந்த உடைவாள் அவ்வடி வயிற்றைத் துளைத்தது. உடனே குடல் பீறிட்டு வெளிவந்தது. வாயில் காவலன் பிணமானான். முன் உடைவாளைத் தன் பக்கம் இழுத்தது போலவே இளமாறன் இப்போது வாயில்காவலன் பிணத்தைத் தன் பக்கமாக இழுத்தான். அவன் இடையில் தொங்கிய சாவிக் கொத்தையும் அவன் வாளையும் எடுத்துக் கொண்டான். சாவிகளால் தன் விலங்கையும் கடம்பன் காரியின் விலங்கையும் அகற்றிய பின், உடைவாளைத் தானும் வாளைக் கடம்பன்காரியும் தாங்கிய வண்ணம் இருவரும் பாதாள அறையை விட்டு வெளியேறினர். வெளிவாயில் காவலரையும் இருவரும் சேர்த்து தாக்கி வீழ்த்தினர். அதன்பின் இருவரும் வேகமாக வெளிக் கோட்டை மதிலை நோக்கி நடந்தனர். ஆனால் இவ்வளவு பெரு முயற்சி யுடன் பெற்ற அவர்கள் விடுதலை நீடிக்கவில்லை. பாதாள அறையில் நடந்த போரின் அரவமோ, புறவாயில் காவலர் இட்ட கூக்குரலோ எதிர்த்தரப்பாரில் பலரை அதற்குள் திரட்டிவிட்டது. புறக்கோட்டை மதிலருகிலேயே அவர்கள் நாற்புறமும் சூழப்பட்டனர். இத்தடவை அவர்கள் மீது எதிரிகள் தம் முழு ஆத்திரமும் காட்டி வஞ்சம் தீர்த்துக் கொண்டனர். இருவரையும் நையப் புடைத்தபின் முன்னிலும் பயங்கரமான ஓர் இருட்டறையில் கல் தூண்களில் முன்னிலும் திண்மை வாய்ந்த இரும்புச் சங்கிலி களால் மாட்டினர். ஆனால் இத்தடவை அடைபட்டது அவர்கள் இருவர் மட்டுமல்ல. தெம்பாங்கு மூன்றாவது தூணில் கட்டப்பட்டாள். “தமிழ்த் துரோகிகளே! விடியட்டும்! உங்களுக்கு உடந்தையாயிருந்த இந்த அழகிய நட்டுவாக்கலி உங்கள் கண்முன் நசுக்கப் படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். அதன் பின் நீங்களும் அதே வழியில் செல்லலாம்” என்று கூறிவிட்டுக் காவலர் அகன்றனர். வாயில் கதவு பூட்டப்பட்டது. முதல் அதிர்ச்சி தீர்ந்தபின், இளமாறன் தெம்பாங்கை நோக்கினான். அவள் முகம் கவிழ்ந்திருந்தது. “என்னை ஏன் பார்க்க மறுக்கிறாய். தெம்பாங்கு? முதலில் நீ எங்களைக் காட்டிக் கொடுத்தாய். நாங்கள் சீறி வைதோம். அவர்கள் பாராட்டினார்கள். பின் நாங்கள் தப்பியோட உதவி செய்தாய். இப்போது உன் நாட்டவராலேயே கட்டுண்டு கிடக் கிறாய்! இது என்ன மாயம்; என்ன நாடகம்? இக் கூத்து முடிந்து விட்டதா; இன்னும் உண்டா?” என்று கேட்டான். அவள் இளமாறனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகம் அழுதழுது வீங்கியிருந்தது. அவள் கண்கள் சிவந்திருந்தன. கண்ணீர் வடியவில்லை. ஆனால் கண்ணீரின் ஊற்றே வற்றிவிட்டது போன்ற தோற்றம் அதில் இருந்தது. “வேறு மாயமும் நாடகமும் இல்லை அன்பரே” எல்லாம் காதல் மாயமும் காதல் நாடகமும்தான். உங்களை இடையறாது என்னுடன் தங்கி வாழும்படி செய்யும் ஆர்வம்தான் என் முதல் துரோகத்திற்கு முன்னறிவற்ற மூடச் செயலுக்கு காரணமா யிற்று. உங்களைச் சிக்க வைத்துவிட்டால்,உங்களையும் மன்னித்து, எனக்கும் உங்களையே காதல் மணம் செய்து தந்துவிடுவதாகப் பசப்பினார்கள். அதை நம்பினேன். ஆனால் கிடைத்தது எனக்கு விடுதலை மட்டும்தான். நான் ஏமாந்தேன். இரண்டாவது தடவை நான் உதவியதன் காரணம் அதுவே. அது வெற்றிபெறவில்லை. உங்களுக்காக நான் வருந்துகிறேன் எனக்காக அல்ல. நான் பெறும் தண்டனைக்கு நான் வருந்தவில்லை; மகிழ்கிறேன். என் மடமைக்கு நான் தண்டனை யனுபவிக்கிறேன். அத்துடன் இவ்வுலகின் ஏமாற்றங் களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் நிலையாக விடுபடுகிறேன். ஆனால் என் காரணமாக என் மடமை காரணமாக நீங்களும் உங்கள் நண்பரும் அடையவிருக்கும் முடிவை எண்ணித் தான் இப்போது நான் தாங்கொணாத் துன்பமும் அனுபவிக்கிறேன்” என்றாள். இளமாறன் தான் அவளை முன் தாறுமாறாகப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தான். “வீரராகிய நாங்கள் இருவரும் மாள்வதில் தவறில்லை. உங்களை இதில் மாட்டி விட்டதற்காகவே வருந்து கிறோம்” என்று கூறி அவளைத் தன்னால் இயன்ற மட்டும் ஆற்ற எண்ணினான். ஆனால் அவள் ஆறுதல் எதுவும் விரும்பவில்லை. “என் பிழையை மன்னித்து என்னை இன்னும் முடிவுரை காதலிப் பதாகக் கூறுங்கள். என் துன்பத்தை இன்பமாக்கும் செய்தி அது ஒன்றுதான்” என்றாள். இளமாறன் மட்டுமல்ல; கடம்பன்காரியும் அவள் காதல் உறுதியைப் பாராட்டி அவள் முடிவுக்காகப் புலம்பினர். ----- பொழுது விடிந்தது. அவர்கள் அடைபட்டிருந்த அறை சிறைக்கூடமல்ல. வதைக்கூடம் என்பதை அவர்கள் இப்போது தெளிவாகக் கண்டனர். மனிதரைச் சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்யும் எண்ணற்ற கருவிகள். பொறிகள், இயந்திரப் பகுதிகள் எங்கும் சிதறிக் கிடந்தன. அவற்றின் சாட்சியே அவர்களுக்கு ஒரு மிகப் பெருந் தண்டனையாயிற்று. மாலையில் கதவு திறக்கப்பட்டது. சாவின் தூதுவரை ஒத்த முரடர்கள் மூவர் உட்புகுந்தனர். “அழகிய நச்சுப்பாம்பே! உன் காதலன் கண் காண, அவன் நண்பன் முன்னிலையிலேயே, நீ முதல் பலியாகப் போகிறாய். அவர்கள் முதலில் இதைப் பார்க்கட்டும்” என்றான். அவள் கண்கள் இமையாடவில்லை. உடல் அசையவில்லை. சாவை வரவேற்கும் வீர வனிதையாகவே அவள் நின்றாள். ஆனால் அவர்கள் முதல் செயலே அவள் எதிர்பாராத பிணித்திருந்த சங்கிலியை அவிழ்த்து அவள் கைகள் இரண்டை யும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அவள் கால்களை அவன் இரும்புக் கரங்கள் மிதித்து அழுத்திக் கொண்டன. அந்நிலையில் மற்ற இருவரும் அவள் ஆடை, உள்ளாடைகளைக் கிழித்தெடுத்துத் தீயிலிட்டனர். அந்த அழகுப் பிழம்பின் ஒவ்வொரு அணுவும் தாங்க முடியாத அவமானத்தாலும் வெட்கத்தாலும் செத்து மடிந்தது. அவர்கள் முன் வதைப்புக் கருவிகளிடையே ஒரு விசித்திர அழகுப் பொருளாக ஒரு இரும்புப் பாவை வடிவம் இருந்தது. தெம்பாங்கின் அழகுடன் கூடப் போட்டியிடத் தக்க வாய்ப்பு டையதாக இருந்தது. முரடர் அதனருகிலுள்ள ஒரு குமிழை அழுத்தியதும், அது இருபாதியாக மெல்ல விலகிற்று. இரு பாதிகளின் உட்புறமும் ஒரு மனிதனை மூடி வைக்கத்தக்க அளவில் உட் குடைவாயிருந்தது. உட்பகுதி முதலில் இந்த அளவே கோரக் காட்சி அளித்தது. ஆனால் அதன் முழுக் கொடூரமும் குற்றவாளிகளுக்குத் தெரியும்படி முரடர் காட்டினர். ஒரு குமிழை அழுத்தியதும் உட்பகுதி முழுவதிலும் குண்டூசிகள் போன்ற கூரிய ஊசிகள் நிரம்பின. மற்றொரு குமிழை அழுத்தியதும் இன்னும் கூரிய நீண்ட ஊசிகளும், மூன்றாவது குமிழ் அழுத்தப்பட்டபின் சுழலும் திருகாணிகளும் வெளிவந்தன. இவற்றைக் கண்டு சிறைப்பட்டவர் மூவரும் துணுக்குற்றனர். ஆனால் தெம்பாங்கு எதுவும் பேசவில்லை. நாணமும் அடக்கமும் கூட அவளை விட்டகன்றது போலத் தோன்றிற்று. தெம்பாங்கின் கோரத் தண்டனையின் முதல் பகுதி தொடங்கிற்று. இரும்புப் பாவையின் விலகிய இரு பிளவுகளுக்கிடையே அவர்கள் அவளைக் கொண்டு திணித்தனர். அடுத்த கணமே அவள் அசைய முடியாதபடி ஊசிகள் நாற்புறமிருந்தும் அவள் அழகிய உடலைச் சென்று தடவி நின்றன. அவள் மயிர்க் கூச்செறிந்தாள். கண்களை மூடிக் கொண்டாள். பின் பாவையின் இரு பகுதிகளும் மெல்ல சென்று படலாயின. ஊசிகள் நங்கையின் மேனி முழுதும் நாற்புறமும் தைத்துத் துளைத்தன. வேதனை தாங்க மாட்டாமல் அவள் கதறித் துடித்தாள். ஆனால் முரடர்களின் தலைவன் குமிழைத் தளர்த்தும்படி உத்தரவிட்டான். பிளவுகள் மீண்டும் விலகின! அந்த எழிலுருவம் இதற்குள் உணர்ச்சியிழந்து சோர்ந்து துவண்டது. தலைமுதல் அடிவரை உடலெங்கும் ஊசி குத்தியதால் முத்து முத்தாகக் குருதித் துளிகள் நிரம்பின. இளமாறன் இது காண முடியாமல் கண்களை மூடிக் கொண்டான். ஆனால் கடம்பன்காரி இதுகண்டு புலிபோலச் சீறினான். அவனைக் கட்டியிருந்த சங்கிலிகள் யானைகளைக் கூடத் தடுத்து நிறுத்தப் போதியவை. ஆனால் அவன் இப்போது மத யானையானான்- வெறி கொண்ட மதயானையானான். அந்தச் சங்கிலிகளை ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல் அவற்றுடனே பாய்ந்து முன்னேற முனைந்தான். அவன் மூர்க்க ஆவேசத்தின் முன் சங்கிலிகள் உடைந்தன. அறுந்த சங்கிலியுடனே அவன் முதல் முரடன் மீது தாவி அவனை நிலத்துடன் நிலமாக அழுத்தினான். அவன் திண்ணிய உடல் குருதிக் குழம்பில் குழைந்த ஒரு பிண்டமாகத் துவண்டது! மற்ற இருவரில் ஒருவன் இது கண்டதும் ஓட முயன்று தடுக்கி விழுந்தான். கடம்பன்காரி அவனையும் மிதித்துத் துவைத்த வண்ணம் மற்றவனையும் வெட்டி வீழ்த்தினான். வெறி தணியு முன் விழுந்தவர் வாளை எடுத்து அவன் இளமாறனை விடுவித்தான். இளமாறன் குருதி துவண்ட அந்த ஆடையற்ற உடலை மெல்ல எடுத்து ஒரு பலகையில் கிடத்தினான். தன் மேலாடையை எடுத்து அதன் புண்பட்ட மெல்லுடலைப் போர்த்தினான். அவள் முழுதும் உணர்வு பெறவில்லை. ஆனால் கிட்டத்தட்ட, முற்றிலும் அடங்கியிருந்த மூச்சு மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கிற்று. அவ்வப்போது அரையுணர்வில் அவள் வேதனையால் முனகத் தொடங்கினாள். கடம்பன்காரி இப்போது மீண்டும் இளமாறனைச் செயல் துறையில் ஊக்கினான். “மாறா! இனி இங்கு தங்கியிருப்பது ஆபத்து! உன் விலை மதிப்பற்ற இந்த இனிய சுமையை அப்படியே தாங்கிக் கொள், நாம் கடற்கரைக்கே இக்கணமே ஓடிவிட வேண்டும். நட விரைவில்!” என்றான். தூக்கும்போது தெம்பாங்கு வேதனையால் மெல்ல முனகினாள். ஆனால் அதைக் கவனிக்க அச்சமயம் இடமில்லை. நண்பன் பின்வர, தெம்பாங்கின் சுமையுடன் அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விரைந்தனர். கோட்டைப்புற மதில் அருகே சென்றபின் அவர்கள் சிறிது தயங்கினர். ஒரு நங்கையைச் சுமந்து கொண்டு நிலத்தில் செல்ல முடியும். அவளுடனே கடலில் குதித்து நீந்துவது எப்படி? அதுவும் செங்குத்தான மதிலில் அச்சுமையுடன் சறுக்கி அதனடியிலுள்ள கொந்தளிக்கும் அலைகளையும், சுழல்களையும் கடப்பது எவ்வாறு? இரு நண்பர்களும் இது பற்றிக் குசுகுசுவென்று பேசினர். அவர்கள் பேச்சு அரையுணர்வில் இருந்த தெம்பாங்கை முழு உணர்வுக்குக் கொண்டுவந்தது. அவன் மெல்ல போர்வையை விலக்கிக் கொண்டு பேசினாள்; “இன்னும் நீடித்துத் தயங்க வேண்டாம். நீங்கள் சறுக்குமிடம் சறுக்கி, நீந்துமிடமும் நானே நீந்திடுவேன்; ஆகட்டும்!” என்றாள். “அப்படியானால் நீயே முதலில் இறங்கு மாறா! தெம்பாங்கை இறக்கி விட்டுவிட்டு நான் பின்னால் பாது காப்பாக வருகிறேன்!” என்றான் கடம்பன்காரி. அவன் வியப்படையும்படியாக, தெம்பாங்கு முகத்தைத் திருப்பிக் கொண்டு ‘ஊகூம்’ என்று தலையாட்டி மறுத்தாள். இளமாறன் மெல்லச் சிரித்தான். “நண்பனே! உனக்கு வீரம் புதிதல்ல; பெண்கள் செய்திபுதிது தானே! உன் முன்னே தெம்பாங்கு ஆடை யெறிந்துவிட்டு நீரில் இறங்க முடியுமா?” என்றான். கடம்பன்காரி வெட்கமடைந்தான். ஆனால் உள்ளூரச் சிரித்துக் கொண்டான். இரும்புப் பாவையின் கோரக் காட்சி அவன் கண்முன் நின்றது. ஆனால் அவன் ஒன்றும் பேசவில்லை. “நீ திரும்பிக் கொள், தெம்பாங்கு”என்று கூறினான். அவள் திரும்பியதும் அவன் கொஞ்சமும் பயமேது மின்றி சரேலென்று மதிலிலிருந்து சறுக்கினான். அடுத்த கணம் அலை களினூடே அவன் தலை எழுந்தெழுந்து முன்னேறியது. இளமாறன் மெல்லத் தெம்பாங்கின் போர்வையை அகற் றினான். மெல்லிய மேலாடையை மட்டும் மார்பையும் உடலையும் சுற்றி அவள் வரிந்து கட்டிக் கொண்டாள். “இருவரும் ஒன்றாகச் சறுக்குவோமா?” என்றான். “வேண்டாம். நீங்கள் பின்னால் வாருங்கள்!” என்று கூறி அவள் அம்புபோல் பாய்ந்தாள். அவளையடுத்து இளமாறன் பாய்ந்தான். காதலின் உள்ளார்ந்த ஆற்றலால் அவர்கள் ஒத்து நீந்தினர். பாண்டியர் படகுகள் அடிக்கடி அப்பக்கம் அலைந்து கொண்டுதான் இருந்தன. அவற்றுள் ஒன்றைக் கண்டதும் கடம்பன் காரி அதைப் பற்றி ஏறினான். படகிலிருந்த ஒருவரின் மேலா டையை எடுத்துப் பின்வரும் காதலரிடம் வீசினான். நீரிலேயே அந்த ஆடையை வரிந்து கட்டிக் கொண்டு தெம்பாங்கு படகில் ஏறினான். இளமாறனும் அவள் ஏற உதவி செய்து தானும் ஏறினான். படகோட்டிகள் தம் பொறுப்பறிந்து காற்று வேகத்தில் படகோட்டினர். பாண்டியர் கப்பற்படையின் வேவு கலம் ஒன்று அவர்களை பாண்டியர் கடற்படைத் தளத்துக்கே இட்டுச் சென்றது. சிங்கள நங்கையின் வீரக் கதை பாண்டிய நாட்டவர் உள்ளங்களில் ஒரு புதிய தமிழ் வீரக் கதையாக உலவிற்று. 3. மூன்று காதலர்கள் ‘புருவம் கறுப்பொழியப் பிள்ளை கறுப்பில்லை; விழிகள் கறுப் பொழியவேறெதும் கறுப்பில்லை’ என்றுதான் பெண்களின் மலர் மேனியைக் கவிஞர்கள் வருணிப்பார்கள். ஆனால் காயாம்பூ இதற்கு விலக்கான ஒரு காரிகையாய் இருந்தாள். புருவத்துக்குரிய கருமையழகு மட்டுமின்றி, வில் போன்ற வளைவு நயமும் அவள் மேனியெங்கும் படர்ந்து, அவளுக்குக் கண் கொள்ளாக் கவர்ச்சி அளித்திருந்தது. கருவிழியின் கருமை ஒளியும் உயிர்த் துடிப்பும் அவள் அங்கங்கள் ஒவ்வொன்றிலும் நிலவிக் காண்பவர் அமைதிக்குப் பங்கம் விளைவித்து வந்தது. அவள் சொற்களில் புருவத்தின் வளைவு நயமும், விழிகளின் கூர்மையும் துடிப்பும் ஒருங்கே செயலாற்றின, விழிகளில் தெறித்த குறும்பு அவள் சொற்களிலும் நெறித்தாடிற்று. விளையாட்டுப் பருவத்திலே அவள் எப்போதும் ஒரு சிறு பெண் படைக்குத் தலைவியாக விளங்கினாள். அதே சமயம் மற்ற சிறுவரை அவள் சும்மா விடுவதில்லை. அவள் என்னைக் கிள்ளி விட்டாள். இவள் என்னை அடித்துவிட்டாள், என்று அவள் ஒரு போதும் யாரைப் பற்றியும் பெரியவர் களிடம் குறைகொண்டு சென்றதில்லை. ஆனால் ‘காயாம்பூ என்னைக் கிள்ளி விட்டாள் குளத்தில் தள்ளி’ என்று சில பலர் அவளைப்பற்றி ஓயாது குறை கூறுவதுண்டு. அதே சமயம் அவள் தன் நடை உடை கவர்ச்சி யாலும், கலகலப்பான பேச்சாலும் பெரியவர்கள் கோபத்தைக் கூட எளிதில் மாற்றி, வாலி கண்டபுரத்து மக்களிடையே ஒரு சிறிய இளவரசி அல்லியாகத் திகழ்ந்தாள். பள்ளி கடந்து, கல்லூரி சென்ற போதும் காயாம்பூவின் குறும்பு வளர்ந்ததே அன்றி, குறையவில்லை. திருமணமாகாத ஆசிரியருக்கு அவள் திருமணக் கடிதமும் மணவாழ்த்துப் பாடல் களும் எழுதி மாணவ மாணவியரிடையே பரப்பி விடுவதுண்டு. காதல் நாடகத்தில் ஈடுபட்ட பெண்டிர்முன் ஆண் வேடத்தில் தோன்றியும், அத்தகைய ஆடவர்களைப் போலக் கடிதங்கள் அனுப்பி அந்தப் பெண்களைக் கிண்டல் செய்வாள். ஆனால் அதன் பயனாகவே கல்லூரித் தலைவர் கோபத்துக்கும் ஆளாகி, அவள் தேர்வுக்கு முன்னே வீட்டுக்குத் திரும்ப நேர்ந்தது. அவள் அழகின் கவர்ச்சியில் ஈடுபட்டு, அவள் திரும்பிய திசையிலெல்லாம் ஓடாத இளைஞர் இல்லை. ஆனால் எவரும் அவளைத் தம் வசப்படுத்த முடியாமல் திண்டாடினர். ஆயினும் அவள் கல்லூரியை விட்டு விலக நேர்ந்தபோது, அவளுக்காகவே கல்வியைத் துச்சமென்று உதறித் தள்ளிவிட்டு, வாலிகண்டபுரமே தாம் கண்ட இன்ப உலகமென்று கருதித் திரிந்த இளைஞர் மூவர் இருந்தனர். அவர்களில் ஒருவன் அவளைப் போலவே வாயாடி. அவன் பெயர் மருது. மற்றொருவன் மதுரை- அவன் வாய் பேசாமலே அவள் குறிப்பறிந்து நடந்து வந்தான். மூன்றாவது இளைஞன் செங்கோடன் என்பவன்- அவன் பெருஞ் செல் வத்துக்கு உரியவன். அவனுடன் உறவுகொள்ளப் பெண்களைப் பெற்ற செல்வத் தாய்தந்தையர் மிகப் பலர் காத்துக் கிடந்தனர். ஆனால் காயாம்பூவின் நிழலாக அவன் அவளை விட்டகலா மலும், அவளை முற்றிலும் அணுகாமலும், அவளைச் சுற்றி வட்ட மிட்டான். கல்லூரியிலும் சரி, வாலிகண்டபுரத்திலும் சரி, காயாம் பூவுக்குப் பெண்களிடம் போட்டி இருந்ததில்லை. ஆடவர்களை அவள் சிறிதும் சட்டை செய்ததில்லை. ஆனால் கல்லூரியை விட்டு வாலி கண்டபுரம் வந்தபின் அவள் நிலையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அவள் சென்றவிடமெல்லாம் அவளுக் குரிய மூவகை நிழல்களானமருது, மதுரை, செங்கோடன் ஆகிய மூவரும் சென்றனர். மருதுவின் வாய்த்துடுக்கும் கலகலப்பும் மதுரையின் இன்னமைதியும், செங்கோடனின் பணமும் அவளைச் சுற்றி ஒரு நடக்கும் கோட்டையாக அமைந்தன. அவள் விரும்பினாலும் வெறுத்தாலும் சிரித்தாலும் சினந்தாலும் இந்தக் கோட்டை அவனை விட்டு விலக மறத்தது. “என்னைச் சுற்றி இப்படி ஏன் ஓயாமல் வட்டமிடு கிறீர்கள்?” என்று காயாம்பூ அடிக்கடி அலுத்துக் கொள் வதுண்டு. அச்சமயங்களில் செங்கோடன் முகத்தைப் பார்க்க அவளுக்கு இரக்கமாக இருக்கும். ‘நான் வட்டமிடவில்லை. நேரே உன்னை யடையப் போகிறேன்’ என்று கூறுவது போலிருந்தது அவன் குறும்புப் பார்வை. ஆனால் மருது பேச்சுக்கு எதிர்ப்பேச்சு கொடுத்து வாதமிடுவான். “நீ சாட்டையாக இருந்து சுழற்றிவிட்டால் பம்பரம் ஏன் சுழலாது; வட்டமிடாது; நீ பேசாமல் என்னைத் திருமணம் செய்துகொள். அதுதான் மற்ற இருவரிடமிருந்து தப்ப வழி!” என்பான். மதுரையும், செங்கோடனும் காயம்பூவிடத்தில் தான் வாய் பேசவில்லையே தவிர, தமக்குள்ளும் மருதுவுடனும் ஓயாது பூசலிடத் தயங்கவில்லை. “காம்பூ ஒரு வாயாடியை ஏற்கப் போவதில்லை. உன்னுடன் ஓயாது வாயாட அவளால் முடியாது. அவள் என்னிடம்தான் உண்மையில் காதல் கொண்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே நீங்கள் இருவரும் அவளை என்னிடமே விட்டுவிட்டுத் திருமண வாழ்த்துக்குத் தயாராயிருங்கள்” என்று மதுரை பேசினான்; செங்கோடன் இதை மறுத்துரைத்தான். “வாய்ப் பேச்சும் சோறு போடாது. காதலும் வயிறு நிரப்பாது. காயாம்பூவுக்கேற்ற இன்ப மாளிகையும், மற்றவைகளையும் நான்தான் அளிக்க முடியும். ஆகவே அவள் என்னைத் தான் மணக்கப் போகிறாள். நீங்கள் வயிறு நிரம்ப மணவிழாவில் உண்டு, வாய் நிறைய வாழ்த்தி விட்டுப் போகலாம். வேறு மனக்கோட்டை கட்டாதேயுங்கள்” என்பான். மூன்று காதலரிடம் போட்டிப் பூசல்கள், வாத எதிர்வாதங்கள், மூன்று வகையான காதல் பூசனைகள்- சில சமயம் காயாம்பூவுக்கு நேரப் போக்காக அமையும். ஆனால் அவையே பல தடவை அவளுக்குத் தீராத் தொல்லையாகவும் இருந்தன. அவள் கைக் குட்டை கீழேவிழுந்து விட்டால், அது மண்ணில் மிதிபட்டு இருப்பதையும் பாராமல் சண்டையிட்டுக் கொள்வர். இறுதியில் மூவரில் ஒருவர் கையிலிருந்து அழுக் கடைந்து, தும்பு தும்பாகக் கிழிந்த உருவிலேயே கைக்குட்டை அவள் கைக்கு வந்து சேர நேரும். அவளுக்கு நீர் வேட்கை ஏற்படும்போது, மூவரும் சென்றுதான் கொண்டுவர வேண்டுமாம்! நான் தான் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்று ஒரே கிண்ணத்தைக் கைப்பற்ற மூவரும் போட்டியிடுவர். இறுதியில் அவள் கையில் வெறும் கிண்ணந்தான் வந்து சேரும். அதில் இருந்த நீர் முழுவதும் போட்டிப் பூசலுக் கிடையில் நிலத்திலும் மூவர் உடைகளிலும் சிந்திப் போய் விடும். காயாம்பூ மூன்று காதலர்களில் எவரிடமும் தனிப் பாசம் காட்டவில்லை, எவரையும் தனிப்படப் பகைக்கவும் இல்லை, இதனால் மூவர் போட்டிகளும் எந்நாளும் போட்டிகளாகவே இருந்தன. அவள் தோழியர்களுக்கு இந்நிலை என்றும் காசில்லாப் படக்காட்சி- நாடகக் காட்சியாய் அமைந்தது. எல்லோரையும் நையாண்டி செய்த அவளைத் தோழியர் நையாண்டி செய்யத் தொடங்கினர். “காயாம்பூ திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை, மூன்று காதலர்களுடன் என்றும் கன்னியாகவேதான் கழிக்கப் போகிறாள்,” என்று அவர்கள் எங்கும் புறங்கூறத் தொடங்கினார்கள். மூவரில் ஒருவரும் அவளை விட்டுவேறு பெண்ணை நாடவில்லை யாதலினால் அந்தப் பேச்சையெல்லாம் நம்பினார்கள். ‘மூன்று காதலர்களைக் கொண்ட வாடாத கன்னி மலர்’ என்ற தொடர் காயாம்பூவின் வாழ்வை எட்டிக் கொண்டது. அவள் எவ்வளவு உதறித்தள்ள முயன்றாலும், அது அவளை விட்டு விலக மறுத்தது. “உங்கள் மூவரில் எவரையும் நான் மணம் செய்து கொள்ளப் போவதில்லை. நீங்கள் இப்படி என்னைச் சுற்றி அலைய வேண் டாம்!” என்று அவள் ஒருநாள் மூவரையும் பார்த்துச் சீறினாள். “அப்படியானால் நீ யாரை மணம் செய்யப் போகிறாய்?” என்று கேட்டான் மருது. “அது என் பிரியம் உனக்கு அதுபற்றி என்ன கவலை?” என்று சாடினாள் காயாம்பூ. “என்னைத் தவிர வேறு யாருக்கு அதுபற்றிய கவலைக்கு உரிமை உண்டு. வேறு எவன் உன்னை அணுகினாலும், மூவரும் பொங்கி, போட்டியை நிறுத்திக் கொண்டு அவனைக் கொன் றொழித்து விடுவோம்” என்றான் மருது. அவர்கள் போட்டி வாழ்வில் முதல் தடவையாக மதுரை இதை ஆமோதித்தான். செங்கோடன் கூட அதற்கு ஆதரவும் தெரிவித்தான். மூவரின் ஒற்றுமையைக் கண்டு காயாம்பூ நகைத்தாள். “சரி, அப்படியானால் நான் ஒருவரையும் மணம் செய்யப் போவ தில்லை!” என்றாள். ஆனால் அவள் தன் தவறை அடுத்த கணமே உணர்ந்தாள். ‘மூன்று காதலர்களைக் கொண்ட வாடா மலர்க் கன்னி’ என்ற அவள் பெயருக்குப் புத்துயிர் ஏற்பட்டு விட்டது. “வாடா மலர்க் கன்னிக்குரிய மாறாத இளம் காதலர்களாகவே நாம் ஓயாது சுற்றுவோம்” என்று மூவரும் ஒருங்குக் குரல் எழுப்பினர். ஊராரும் காதலரும் முற்றிலும் ஒற்றுமையாய்த் தனக்கு இப்படிப் பெயர் சூட்டிவிட்டது கண்ட காயாம்பூவின் உள்ளம் அனைவர் மீதும் பொங்கிக் குமுறி எழுந்தது. ‘மூவரும் யாரையும் மணம் புரிந்து கொள்ள ‘மாட்டேன்’ என்ற பல்லவியை அவள் மாற்ற எண்ணினாள். திடீரென ஒருநாள் இது ஒரே விசித்திரமாக அவள் வாயிலிருந்து தெறித்தது. “மூவரும் ஒன்றாக ஏன் போட்டியிடுகிறீர்கள்? மூவரையும் ஒருங்கே எப்படி நான் மணந்துகொள்ள முடியும்? முறையாக வாருங்கள். ஒருவர் பின் ஒருவராக மணந்து கொள்கிறேன். ஆனால் ஒருவர் வாழ்நாளில் மற்றொருவரை மணந்து கொள்ள முடியாது” என்றாள். இப்போதும், கூறிய மறுகணமே அவள் நாவைக் கடித்துக் கொண்டாள். ‘ஐயோ! இவ்வளவு லேசாகச் சொல்லி விட்டேனே! என்று’ அவள் அங்கலாய்த்தாள். அவள் வாசகங்களுக்கு மிக மோசமாக வசை வாசகங் களுக்குக் கூட- இப்போதும் இரண்டு எதிர்பாராத பயன்கள் இருந்தன. ஊரார் களித்தின்புறம் புதுமைச் சுவை- அவளையே நையாண்டி செய்து இன்புறும் நகைச்சுவை- அதில் இருந்தது. அத்துடன் அந்த வசைக்கு இலக்கான காதலர்கள் மூவரும் மற்றவர்களைவிட மிகுதியாக அதில் ஈடுபட்டு மகிழ்ந்தனர். ஆனால்- அது, இதைக் கூறியவள் உள்ளத்தைச் சுட்டது. காதலர் மூவரும் அந்த வாசகத்தை அவள் முன்னும், தம்மிடையேயும் அதைத் திரும்பத் திரும்பக் கூறி மகிழத் தயங்க வில்லை. ஊரார் அனைவரும் அதைக் கொண்டு அவளையும் நம்மையும் நையாண்டி செய்தபோது கூட அவர்கள் ஒரு சிறிதும் அதில் மகிழ்ச்சி ஒரு நுட்பம் அவர்களுக்கு நகைச்சுவையையும் இன்பத்தையும் தராதிருக்க முடியவில்லை. அவர்கள் மூவருள் ஒவ்வொருவரையும் அவள் வெறுக் காது ஏற்கச் சித்தமாயிருந்தாள்- எல்லோரும் இதை எண்ணி எண்ணியே வாசகத்தின் கோர முடிவை மறந்திருந்தனர். மூவரையும் அவள் ஓரளவு விரும்ப முடிந்தது- இதுதான் அவர்கள் பெற்ற நகைச்சுவையின் மர்மம். அவர்கள் நகைச்சுவை அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்க வில்லை. அதே சமயம் அவர்கள் மகிழ்ச்சி கொடுக்கவில்லை. அதே சமயம் அவர்கள் மகிழ்ச்சியையும் அந்த நகைச்சுவை கெடுக்கவில்லை. “மூவரில் யார் முதல் காதலராயிருப்பது?” -மூவர் உள்ளங்களும் இக்கேள்வியிலும் அதற்கு விடை காண்பதிலும் முனைந்தன. “மூவரில் யார் முந்திக் கொள்ளக் கூடும்?” -அவள் உள்ளமும் முதல் தடவையாக, சிறிது கவலை யுடன், இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டது. ஏனெனில் மூவரில் யார் வேண்டாம் என்று துணிவதுதான் அவளுக்குச் சிரமாயிருந்ததே தவிர, யார் வேண்டும் என்று துணிவது அவ்வளவு சிரமமாய் இல்லை. அவள் மதுரையிடம் உண்மைக் காதலைக் கண்டாள். அவள் அறிந்தோ, அறியாமலோ அவள் உள்ளம் அவனைத்தான் நாடிற்று. ஆனால் உண்மைக் காதலன் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருக்க முடியும்- எவ்வளவு காத்திருந் தாலும் காதல் களிப்பு ஊறுகாய் சுவைபோல, மிகுதியாகத்தான் இருக்கும். ஆனாலும் அவன் முந்திக்கொள்ள மாட்டானா என்றும் விரும்பாமல் இருக்க முடியவில்லை. காதலுக்கு மதுரை, தோழமைக்கு மருது என்று கருதி யிருந்தது அவள் உள்ளம். மதுரை முந்திக் கொள்ளத் தவறினால் மருது முந்தலாம்; இந்த எண்ணத்திலும் அவளுக்கு சிறிது மகிழ்ச்சி இருந்தது. செங்கோடனை அவள் வெறுக்கவில்லை. ஏனென்றால் மற்ற இருவரிடமும் இல்லாத பணம் அவனிடத்தில் இருந்தது. ஆனாலும் மற்ற இருவரிடமும் இருந்த ஈடுபாடு அவளுக்கு அவனிடம் இல்லை. காதலைப் பெற்று அலுத்தபின் தோழமையையும் பெற வேண்டும். இரண்டும் இல்லையெனத் தீர்ந்து விட்டால் பணத்தை வைத்துக் கொண்டு வாழ்வில் ஓய்வு தேடலாம் என்றும் அவள் உள்ளம் திட்டமிட்டது. ஆனால் நடந்தது அவள் எதிர்பார்த்த வகையிலல்ல; முறை கீழாக அமைந்தது! மதுரை தயங்கினான்; மருது முந்திக் கொண்டாலும் வாதாடத் தொடங்கியிருந்தான். அதற்குள் செங்கோடன் கைவரிசையைக் காட்டினான். “மருது, என்னை முந்தவிடு. இதோ காத்திருக்கிறது உனக்கு ஓர் ஆயிரம்,” என்றவுடன் வாதாடிய மருது ஆயிரம் வாங்கிக் கொண்டு சற்றுத் தயங்கிப் பின்னடைந்தான். “காயாம்பூ, எப்போ தும் உன்மேல் ஒரு கண் வைத்துக் கொண்டு பொறுத்திருப்பேன் என்னைமறந்து விடாதே!” என்று கண்ணைச் சிமிட்டிக் கூறிக் கொண்டு அவன் சிறிது தொலைவு விலகி சென்றான். “மதுரை, என்னை முந்தவிடுவாய் என்று எண்ணுகிறேன். காத்திருக்க உனக்கு மூவாயிரம்!” என்றான் செங்கோடன். மதுரை முதலில் சீறினான். பின் பணத்தை ஒரு புறமும் மங்கையை ஒரு புறமும் மாறி மாறிப் பார்த்தான். மங்கை முகத்தின் அமைதி கண்டு வேண்டா வெறுப்புடன் பணத்தை வாங்கினான். “இந்தப் பணம் கரையும் வேகத்தில் உன் வாழ்வும்...” - அவன் முடிக்கு முன் செங்கோடன் அவனை நெக்கித் தள்ளிவிட்டு காயாம்பூவைக் கைப்பற்ற முன்னேறினான். குறும்பாட்டத்தில் முந்திக் கொண்டிருந்த காயாம்பூ காதல் போராட்டத்தில் தோற்றாள். பணம் தவிர எதுவுமற்ற செங்கோடனை அவள் வேண்டா வெறுப்புடன் மணந்து கொண்டாள். வாலிகண்டபுரத்தார் கேலிகளுக்குத் தற்காலிக மாக ஒரு ஓய்வு ஏற்பட்டது- போட்டிக் காதலரிருவருள் மருது ஆயிரம் பணத்தையும் எண்ணிக்கொண்டே கேலி பேசத் தொடங்கியிருந்தான். “ஆயிரம் நாள் பிரிவு இருக்காது என்று எண்ணுகிறேன். அதற்கு ஆயிரம் வெள்ளி போதாது?” என்று சிறிது எக்களிப்புடனேயே பேசினான். அதே சமயம் மதுரை பெருமூச்சுடனும் ஏக்கத்துடனும் மூவாயிரம் வெள்ளியையும் அவற்றை மறதியில் மூழ்கடிக்கக் கூடிய குடியிலேயே செலவிட்டான். செங்கோடனை அவள் காதல் நெஞ்சுடன் சந்திக்க வில்லை. கடமைக்கு மட்டுமே உரியவனாக வரவிடுத்தாள். மணநாள் இரவே அவன் பணம் அவளுக்கு உரியதாயிற்று. அதுமுதலே அப்பணத்திற்குரியவன் மீது அவளது விருப்பு வெறுப்பாகி- கசப்பாக வளரலாயிற்று. அவள் வாழ்வின் ஒவ்வொரு பகலும் ஓர் ஊழி- ஒவ்வோர் இரவும் ஒரு பேரூழி ஆயிற்று. ‘இன்று கழிந்தது. இனி நாளையும் கழிய கேண்டுமா?’- இப்படி நாட்கள் கழிந்தன. எப்படியோ கடமையுணர்ச்சியும் மழுங்கிற்று. அவன் இன்பத்தை அவள் கருதவில்லை- அவன் கட்டளைகளைக் கூட மீறத் துணிந்தாள். வாழ்க்கை அவளுக்கு மட்டுமல்ல; அவனுக்கும் கசப்பா யிற்று. மங்கையைவிட மது அவனுக்கு மிகுந்த கவர்ச்சி தரத் தொடங்கிற்று. அவன் குடித்தான்; மேலும் மேலும் குடித்தான். அவள் அவன் செயலைத் தடுக்கவில்லை. அவன் குடித்து அழிவது நலம் என்று கருதி அதில் அவனை ஊக்கினாள். அவளை ஊர் தூற்றத் தொடங்கிற்று. அவள் பயப்பட வில்லை. கணவன் செங்கோடன் இறந்தான்- அவள் தன் அறி யாத்தனத்தால் ஏற்ற விலங்கு தளர்ந்ததென மகிழ்ந்தாள். மாதக் கணக்காகத் தனக்குக் கிடைத்த தண்டனைக்கீடாக, மதுரை தன் கைமை நிலைபற்றிக் கேட்டு, தன்னை வந்து காண்பானா என்றும் அவள் கவலை கொண்டாள். ஆனால் அடுத்து வந்தவன் மதுரை அல்ல; மருது! கனி கிடைக்கவில்லை; காய்தான் கிடைத்திருக்கிறது அவள் கனிக்காக சிறிது காத்திருக்க, சாக்குப் போக்குக் கூற எண்ணினாள். ஆனால் மருது என்ன நினைப்பானோ என அஞ்சி, கனி கைவராத நிலையில் அவள் அவனை ஏற்றாள். அவள் தனக்குத்தானே ஓர் ஆறுதல் கூறிக் கொண்டாள். முதற் கணவன் இறந்த ஒரு மாதத்திலா மறுமணம்? இந்தப் பெண்ணுக்கு இதயமில்லையா- என்று கேட்டனர் மக்கள். இது பற்றி மருது கவலைப்படவில்லை. ஆனால் காயாம்பூ உள்ளத்தை இது உறுத்தியது. அவளுக்கு இதயம் இருந்தது. இதை அவள் இப்போதுதான் நன்கு உணர்ந்து கொண்டிருந்தாள். ஆனால் அந்த இதயம் மாண்ட கணவனையோ தற்போதைய கணவனையோ நாடவில்லை. கண்காணாத மதுரையைப் பற்றியே அந்த இதயம் ஓயாது சிந்தித்துச் சிந்தித்து சீரழிந்தது. வாயாடி மருது மணமானபின் வாயாடவில்லை. காதல் போட்டியில் சலிக்காத அவன் மணமான பின்தான் மங்கையின் உள்ளம் தன் திசையில் இல்லை என்பதை உணர்ந்தான். அவன் தன்னாலியன்ற மட்டும் அவளுக்கு ஆர்வம் ஊட்ட முனைந்தான். தன் பேச்சுத் திறனால் மட்டுமின்றி தன் அன்பு, தியாகம், காதல் திறன்- ஆகியவற்றையும் அப்பெண்ணரசியின் காலடியில் படைக்க முற்பட்டான். ஆனால் திரும்பிய பெண்ணுள்ளத்தின் கொட்டத்தை அடக்க யாரால் முடியும்! அவன் அன்பு அத்தனையும் அவள் அழுகையைப் பெருக்கிற்றே யன்றி அடக்கவில்லை. “நீ ஏன் முந்தி வந்தாய்? மதுரையை யல்லவா எதிர்பார்த்தேன்,” என்று அவள் கூறத் தயங்கவில்லை. கன்னியாயிருந்த காயாம்பூ மருதுவைக் கண்டிருந்தாள். ஆனால் காதல் மணம், அவன் உள்ளத்தை முழுக்க முழுக்க ஒரு காதலன் உள்ளமாக, காதற் கணவன் உள்ளமாக மாற்றியிருந்தது. அந்த அளவுக்குக் காயாம்பூவின் போக்கு அவன் உள்ளத்தில் கொதிப்பையல்ல- கசப்பை ஊட்டிற்று. “உன் மதுரை வரட்டும். நீ கூறியபடி செங்கோடன் முறை கழிந்தது. என் முறை கழிகிறது. அவன் வருகைக்குக் காத்திரு! நான் போகிறேன்,” என்று அவன் நள்ளிரவில் எழுந்து சென்றான். அவள் அதனைத் தடுக்கவில்லை; வாதாடவில்லை; மதுரையைப் பற்றிய எண்ணம் அவள் உள்ளத்தைக் கலக்கி யிருந்தது. அவனைப் போகவிட்டு அவள் மறு திசையில் முகம் திரும்பிப் படுத்துக் கொண்டாள். மறுநாள் ஊரெல்லாம் அல்லோக கல்லோலப்பட்டது. மருது ஒரு மரத்தடியில் தூக்கிட்டு மாண்டிருந்தான். ஊரார் அவனுக்காக அழுதனர்- அழுவதற்கு ஒரு தனிக் காரணமும் இருந்தது. அவன் மடியிலிருந்த முடங்கலின்படி தன்னிட மிருந்த ஆயிரம் வெள்ளியை காயாம்பூவுக்கே அளித்துச் சென்றிருந்தான். தன் மனைவியின் நற்குணத்தைக்கூட அதில் புகழ்ந்திருந்தான். செங்கோடன் கொடுத்த பணம்- அதை அவன் செலவு செய்யவில்லை. அவளுக்கே எழுதி வைத்திருந்தான். தன் சாவுக்கு அவள் காரணமென்பதை அவன் முற்றிலும் மறைக்க முற்பட்டிருந்தான். அவன் அவள்மீது சாகும்போதும் கொண்டிருந்த காதல் பழைய வாயாடி மருதுவின் காதல் அல்ல; இதை மீண்டும் கைம்பெண்ணான காயாம்பூ அறிந்தாள். அவள் உள்ளம் என்றுமில்லா ஆர்வத்தில் பழைய கன்னி காயாம்பூ அறியாத துடிதுடிப்புடன் மதுரைக்காக ஏங்கிற்று. அவன் வருவான், வருவான் என்று காத்திருந்தாள். மதுரையின் காதல் மற்ற காதலர்களின் உணர்ச்சிகள் போன்ற தன்று. அது தொடக்கத்திலிருந்தே ஆழமானது. ஆனால் அவன் அதை வெளியிட்டுக் கூறவோ, அதைச் செயற் படுத்தவோ சக்தியற்றவனாயிருந்தான். காயாம்பூ தவிர, வேறு பெண்ணிடம் பழகாததனால் காதற் பெண்டிரின் இயல்பும் முற்றிலும் அவர் களிடம் தான் கொள்ள வேண்டும் முறையையும் அறியா திருந்தான். இக்காரணங்களாலேயே அவன் காயாம் பூவைப் பெறுவதில் முந்திக் கொள்ளாமல் தயங்க நேர்ந்தது. ஆனால் செங்கோடன் முந்திக் கொண்டபோது அவன் உடனே மனமுடைந்தான். அவனுக்கிருந்த கொஞ்சநஞ்ச தன்னம் பிக்கையும் தகர்ந்தது. செங்கோடன் கொடுத்த மூவாயிரத்தையும் கூட அவன் வேறு எதற்கும் பயன் படுத்தவில்லை. இந்த மனக் கசப்பையும் மன முறிவையும் ஆழ்ந்த மறதிப் போதையில் மூழ்கடிக்கும் குடிகளிலேயே துணிந்து செலவு செய்தான். அப்படியும் காயாம்பூவை மறந்து வாழ முடியாது தன்னால்- என்று உணர்ந்து- தவித்து- தடுமாறி- அயல்நாடு ஓடினான். கூலியாய் வாழ்ந்து நலிகிறான். செங்கோடன் இறந்ததோ, அதன்பின் மருது இறக்க நேர்ந்ததோ அவனுக்குச் சிறிதும் எட்டவில்லை. ஆனால், மனத்துயராலும் கூலி வேலையாலும் வறுமையாலும் நோயாலும் அரிக்கப்பட்டு, குற்றுயிராகச் சாவின் கோர வாயிலை அணுகும் சமயம். அவனுக்கு இறுதியாக அவளை ஒருமுறை பார்த்துவிட்டுச் சாக வேண்டும் என்ற ஒரே ஏக்கம் ஏற்பட்டது. புறப்பட்டான். வரும்போது செய்த பயணத்தைவிட இது அவனுக்கு நீண்டதாக, இடர் நிறைந்ததாக இருந்தது. காயாம்பூ இருந்த இடத்தை அவன் அணுகிய போதும், எவர் கண்ணிலும் படாமல் காயாம்பூவைச் சென்று சந்திக்க விரும்பினான். ஏனெனில் காயாம்பூவை அவன் இன்னும் மற்றொ ருவன் மனைவியாகவே மனக் கண்களால் கண்டான். மதுரை வருவான், வருவான் என்று காயாம்பூ நாட்கள், வாரங்கள், மாதங்கள்- காத்திருந்தாள். ஆனால், முடிவில் அவளும் நம்பிக்கை இழந்தாள். செங்கோ டனின் செல்வத்தில் பாதியளவு இன்னும் அவளிடமே இருந்தாலும், அவள் உடைந்த உள்ளம் மதுரை இல்லாமல் இதை அனுபவிக்க இடம் தரவில்லை. அதை அவள் மன வெறுப்புடன், அருகிலே இடிந்து தளர்ந்து கிடந்த ஓர் அம்மன் கோயிலைச் செப்பனிடுவதற்காக கொடுத்துவிட்டு, மருது தூக்கிட்டுக் கொண்டு மாண்ட மருத மரத்திலேயே தானும் உயிர் விடுவ தென்று புறப்பட்டாள். நேரம் நள்ளிரவு. அவள் கொல்லைக் கதவைத் திறந்தபோது ஏதோ சடாரென்று உட்பக்கமாகச் சாய்ந்தது. அவள் முதலில் என்னவோ என்று அஞ்சினான். பின் சாகத்துணிந்த தனக்கு வந்த அச்சத்தை எண்ணிப் பேய்ச் சிரிப்புச் சிரித்தவளாய், சாய்ந்ததைக் கவனித்தாள். அது ஒரு மனித உருவம் என்று கண்டாள். சாகத் துணிந்தவளுக்கு வரும் இயல்பான உணர்ச்சிக் கனிவு அவனை ஆட்கொண்டது. அவள் அவனை நீர் தெளித்து உணர்வுறுத் தினாள். “நீ யார்? ஏன் இப்படி வந்து சாய்ந்திருக்கிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது?” என்றாள். அவன், அவள் எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்த மதுரை என்பது அப்போது தெரியாது. அதனால் அவள் காலடி தழுவி, “காயம்பூ! என்னை மன்னித்து விடு. நீ இன்னொருவன் மனைவி என்பது தெரிந்தும், இதற்கும் சமயம் உன் காலடியில் கிடந்தாவது இறக்க எண்ணி வந்திருக்கிறேன். இந்தச் சமயம் செங்கோடனுக்குக் கூட என் மீது இரக்கமில்லாமல் போகாது” என்றான் மதுரை. அவள் திடுக்கிட்டாள். அவனை வாரி அணைத்தெடுத்து தன் கட்டிலில் கொண்டு கிடத்தினாள். மெல்லத் தன் உள்ளத்தில் சேர்த்து வைத்திருந்த உண்மைகளையும் பட்டபாட்டினையும் எடுத்து உரைத்தாள். அவன் வருவான் என்ற நம்பிக்கை இழந்து, அன்றே தன் பணம் முழுவதையும் கோவிலுக்குக் கொடுத்த செயலை ஆற்றாமையுடன் கூறி அழுதாள். இன்னும் ஒரு மணி நேரம் சென்றிருந்தால் மருதுக்கு தான் செய்த சதியால் அவன் தூக்கிட்டுக் கொண்ட மரத்திலேயே தானும் தொங்கியிருக்க நேரிடும் என்று கூறிக் கதறினாள். செங்கோடன் இறத்ததும், அதன்பின் மருது அவள் காதல் பெறாது மாண்டதும், தனக்காகவே தையல் காத் திருந்ததும் கேட்ட, மதுரை ஒருபுறம் தன் மடமைக்கு வருந்தினான். மறுபுறம் தன் இறுதி இன்பத்தை எண்ணியாவும் மறந்தான். ஆயினும் கடைசியில் தன்னையே உயிராகக் காதலித்த பிரியையிடம் வாலிபனாக வராது குற்றுயிராய் வந்த நிலையினை எண்ணி வருந்தினான். இன்பம் இனிது; துன்பங்களின் இறுதியில் இன்பம் இன்னும் இனிது; ஆனால் சூழ்நிலையால் அவன் அதை அனுபவிக்க முடியவில்லை. நீண்டகால நோயாலும் நலி வாலும் ஒரு சில நாட்களில் அவள் காலடியிலே கிடந்து இனிய கனவுகளுக்கிடையே உயிர் தந்தான். கன்னியரை அடக்கியாண்டு காளையர் உள்ளங்களை ஆட்டிப் படைத்த காயாம்பூ, தன் காதலுள்ளமறிந்த காதலனை ஆட்கொள்ள முடியாமல், மீண்டும் கன்னி யாகவே வாழ்வினைக் கழிக்க நேர்ந்தது. மூன்று மண வாழ்வு கழிந்ததும் அவள் உளம் தளர்ந்ததேயன்றி, வயது இருபதுக்கு மேல் ஏறவில்லை. திரும்பவும் இன்ப வாழ்வு வாழும் எண்ணம் அவளுக்கு இல்லை. அதே சமயம் தன் பிழைகளுக்கான ஒரே பரிகாரம் சமூக சேவையே என்பதை அவள் உணர்ந்தாள். வாலிகண்டபுரம் மக்களிடையே அது முதல் அவள் ஒரு தெய்வமானாள். அவளைக் கேலி செய்தோர் தொகை வரவரக் குறைந்தது. ஏனெனில் அவள் இளைஞர்க்கும் நங்கையர்க்கும் ஒரு தமக்கையாயிருந்து தன்னாலியன்ற தொண்டு செய்தாள். பெரி யோர் முதலோரைப் பேணினாள். சிறுவர் சிறுமியருக்குத் தாயைப் போல் ஆதாரமாய், அவர்கள் உடல் நலத்திலும் அக்கறை செலுத்தினாள். நாற்பது ஆண்டுகள் சென்றபின் காயாம்பூ இயற்கை அடைந் தாள். அவள் விருப்பப்படி மக்கள் மதுரையை அடக்கம் செய்த இடத்திலேயே அவளையும் அடக்கம் செய்தனர். மண்ணுலகில் இளமையின் அறியாமைக்கும் அனுபவ மின்மைக்கும் ஆளான இரு உள்ளங்கள் மீண்டும் மண்ணிலே- இணையற்ற இயற்கையின் மடியில் ஒருங்கு புதையுண்டன. 4. தொண்டுள்ளம் சின்னஞ்சிறு கிரேக்க நாட்டில் ஒரு மூலையில் நாகரிகத்தில் பின்தங்கிய மாசிடோனில் பிறந்தான் சிக்கந்தர் (அலெக் சாண்டர்) அவன் சிந்து ஆறுவரை மன்னர் மகுடங் களின் மீது நடந்து உலகளந்தான்! அராபிய வீரர் பலர் இஸ்லாத்தின் ஒளியையும் வீர மரபையும் மேல்திசையில் இஸ்பானிய (ஸ்பெயின்) வரைக்கும் கீழ்திசையில் கங்கை வரைக்கும் சீனக்கடல் வரைக்கும் கொண்டு சென்று பரப்பி யுள்ளனர். அராபியக் கலைஞர் மக்கமும் மதீனமும் பாக்தாதும், பாஸ்ராவும், கூர்ச்சரமும் எங்கும் மாடமாளிகைகளால் நிரப்பியுள்ளனர். அராபிய பாரசிகக் கவிஞர், கலைஞர் தம் கவிதைகளாலும் ஓவியங்களாலும் உலகைப் புத்துலகாக்கி யுள்ளனர். ஆற்றலும் அறிவும் அழகும் படைத்த வீர இளைஞரும் நங்கையரும் உலகில் எத்தனை எத்தனையோ வகைகளில் பயன்பட்டுப் பெருமையும் புகழும் நிலை நாட்டியுள்ளனர்! ஆனால் நான்- நான் ஹசன் கண்ணீர் வடித்தான், கண்ணீர் வடித்த அந்த முகத்தைப் பாலை நிலத்தின் தெண்ணீர் நிழற்படுத்திக் காட்டிற்று. ‘அந்தக் கண்ணீரில், அந்த முகத்தில் அழகுகூட இல்லையே, இயற்கையான தோற்றம் கூட இல்லையே! நோயின் கன்னங்கள், குழிவிழுந்த கண்கள்- உலகுக்கு வேறு வகையில் பயன்படாவிட்டாலும், கண்டவரைக் கவர்ந்து மகிழ்வூட்டும் கட்டழகு இல்லா விட் டாலும், பார்ப்பவருக்கு வெறுப்புத்தரும் அருவருப்பான தோற்றமாவது இல்லாமல் இருக்கக் கூடாதா?’ என்று அவன் ஏங்கினான். அவன் கூனிக் குறுகிய உடல் உடையவன். கால்கள் இளம் பிள்ளை வாதத்தால் வற்றி வதங்கிச் செயலாற்றிருந்தன. கைகள் நடுக்கு வாதத்தால் ஓயாது ஆட்டங் கண்டன. பாலையில் பிறந்து, பாலையில் வளர்ந்து, பாசியும் சருகும் கிழங்கும் உண்டவன் அவன். அவனுக்குக் கல்வியும் கிடையாது, நா நயமும் கிடையாது. உடல் வலுவும் இல்லை. எப்படியோ பிரயாணிகள் போக்குவரவுப் பாதையிலுள்ள நறுநீர்ச் சுனையருகே ஒரு புதர் வீட்டில் பதுங்கி வாழ்ந்தான் அவன்! ஆண்டிகளிலும் கேடுகெட்ட ஆண்டியாக, அகதிகளிலும் கேட்பாரற்ற அகதியாக, நோயாளிகளிலும் கடைப்பட்ட ஏல மாட்டா நோயாளியாக அவன் நாட்கழித்தான்! தன் தோற்றத்தையும் பிறர் தோற்றத்தையும் ஒப்பிட்டுக் காண மட்டும் அவனுக்குக் கூரிய கண்கள் இருந்தன. முன்னதை அவனுக்கு ஒளிக்காது காட்டக் கண்ணாடி போன்ற சுனை நீர்ப் பரப்பும் அருகே இருந்தது. புகழ் அவன் உள்ளத்தில் ஒளிந்து கிடந்தது- அதில் பின்னிக் கொண்டு மக்கட்பாசம், உயிர்ப்பாசம் படர்ந்து தழைத்திருந்தது. அன்புக்குப் பாத்திரமாக அவன் வாழ்வு அமையாவிட்டாலும், அன்பு சுரக்கும் தாய்மை உள்ளம் அவனுக்கு இருந்தது. ஆனால் அதன் அருமையை அவன் அறிய வில்லை. அவனுக்கு இருந்த ஒரே உணர்வு, ‘நாம் பயனற்ற பிறவியாய் விட்டோமே!’ என்ற ஏக்கம் தான்- ‘நான் ஏன் பிறந்தேன், எதற்கிருக்கிறேன்?’ என்ற சிந்தனையே அவனை ஓயாது அரித்துத் தின்றது! ஆனால் செயலார்வம் வேறு. செயலாற்றல் வேறு! அவன் வாழ்வில் செயலாற்றல் இல்லை. செயலார்வம் இருந்தது. அது உள்ளூரக் கனிவுற்று வளர்ந்து சிறு கண்ணீர்த்துளிகள் பெருக்கின. அக்கண்ணீர் துளிகள் பெரு வெள்ளங்கள் ஆற்றாத செயல்கள் ஆற்றின- பலபலர் புண்ணீர்த்துளிகள் ஆற்றி ஆறுதல் அளித்தன. ஆற்றலுடையவர் செய்ய முடிந்த, ஆனால் செய்யாத, செய்ய முனையாத சிறு செயல்கள் எத்தனையோ ஹசன் அன்புள்ளத்தின் ஆர்வ வடிவில் பொங்கி வழிந்து செயற்களம் புகுந்தன. ஆட்டி றைச்சியும் மாட்டிறைச்சியும் குழந்தைகளுக்குத் தரமாட்டாத ஊட்டத்தைத் தாய் அன்பில் ஊறிக் கசியும் இளம்பால் அளிக்கு மன்றோ? அது போல் சின்னஞ் சிறு உயிர்களுக்கு, ஏழை எளிய மக்களுக்குப் பெருஞ் செல்வரும் பிறரும் செய்ய முடியாத உதவிகளையெல்லாம் அந்த ஏலமாட்டா அகதியாகிய ஹசன் செய்தான். அவனுக்குப் புகழார்வம் இருந்தது. ஆனால் இச் செயல்களை அவன் புகழுக்காகச் செய்யவில்லை. அவை புகழுக்குரிய செயல்கள் என்றே அவன் கருதவில்லை. அவன் அன்புள்ளம் இவற்றைச் செய்தது- தன் வாழ்வின் ஏக்கத்திடையே கண்ணீர்த் துளிகள் வழிந்தோடும் கரடுமுரடான உள்ளங் களுடனேயே அவன் இவற்றைச் செய்துகொண்டு, சருகாக வாடி வதங்கிய மகிழம் பூப்போல எங்கும் மணம் பரப்பினான். அவன் புதர்வீடு புதர்வீடாகத்தான் இருந்தது. அதை அவன் புல்வீடாகக்கூட ஆக்கவில்லை. ஆக்க முயலவில்லை. ஆனால் நறுஞ்சுனை சூழ அவன் எங்கும் நிழல்தரும் மரஞ்செடி கொடிகளும் மலர்ப் பண்ணைகளும் வைத்துப் பயிரிட்டான். அவன் ஆற்றல் சிறிதாயினும் அயர்ச்சியில்லாத அவன் முயற்சி பெரிதாய் இருந்தது. பகலின் வெப்பத்திலும் இரவின் குளிரிலும், பசியிலும் கடுந்துன்பத்தையோ விடாயின் வெந்துயரத்தையோ பாராமல் அவன் விடாமுயற்சியுடன் நறுஞ்சுனையைச் சுற்றியுள்ள பாலைவனப் பகுதியை ஒரு சோலைவனமாக்கினான். மக்கள் அக்காட்சியிலும் அதன் தண்ணொளியிலும் மகிழ்வுற்றனர். அதைத் தெய்வச் செயலால் அமைந்த பாலைத் தண்டலை என்றனர்! ஏனெனில் சோலைவனத்தை ஆக்கிய அத்தெய்வ உள்ளம் எவர் கண்முன்னும் எளிதில் காட்சியளிக்க வில்லை- காட்சியளித்தாலும் அதன் அருவருப்பான ஏலா உருவினனிடையே ஒரு தெய்வ உள்ளத்தின் எழிலை எவர் கண்டுணர முடியும்? அவன் புதர்வீடு புதர் வீடாகத்தான் இருந்தது. ஆனால் அவன் நறுஞ்சுனையைச் சூழ ஒரு படிகக் கற்பந்தலும் பைந்தளிர்க் காவணமும் அமைந்தான். பாலைவனக் கோடி வரை பலநாள் நகர்ந்து நகர்ந்து சென்று அவன் களிமண் கொணர்ந்து சுட்டுச் சிறு சிறு செங்கல்கள் ஆக்கினான். இடிந்துவிழுந்த மாடங்களை எங்கெங்கெல்லாமோ தேடி எப்படி எப்படியோ அக்கற்களை இழைத்து இழைத்து அழகப்படிமங்களாக்கின. அழகு என்பது அன்புருவே யன்றோ? எப்படி எப்படியோ அவன் கலைஞர் எவரும் செய்தற்கரிய கலையார்ந்த ஓர் இன்பத் தண்ணீர்ப் பந்தலை அந் நறுநீர்ச் சுனையருகே எழுப்பினான். மக்கள் நறுநிழற் சோலையில் தங்கி அந்நறுநீர்ச் சுனையின் அழகில் ஈடுபட்டு நீரருந்தினர். கனிமரக்காவின் இனிய பழம் அருந்தினர். நறுமணமலர்கள் கொய்து சூடி மகிழ்ந்தனர். இவற்றைப் பாலை வெப்பிடையே ஆக்கிப் படைத்த தெய்வத்தை அவர்கள் வாயார வாழ்த்தினர். ஆனால் இப்போது, அவர்கள் கண்காணாத் தெய்வத்தை மட்டும் வாழ்த்தவில்லை. தண்ணீர்ப் பந்தலைக் கண்காணாத் தெய்வம் ஆக்கியிருக்க முடியாது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்- ஒரு கண் கண்ட தெய்வ உள்ளம்- மனிதத் தெய்வம்தான் அதை ஆக்கியிருக்க முடியும் என்று கண்டனர்- அம்மனிதத் தெய்வத்தையே வாழ்த்தினர்! ஆனால் அந்த மனிதத் தெய்வம் அருவருப்பான ஏலமாட்டாக் கூனல் நோயாளி வடிவம் தாங்கி இருக்கும் என்பதை அவர்கள் எப்படி உணர முடியும்? ஆகவே அக் கண்கண்ட தெய்வம் கூட அவர்களுக்குக் கண்காணாத் தெய்வத்தின் ஒரு பண்புடனே, தோன்றா உருவாக, அவ் அருவருப்புருவில் உட்சுரந்து ஒளித்து நின்றது! நன்மை அழகு கடந்து, அறிவு கடந்து, அன்புருவான நன்மை- எத்தனை நாள் மக்கள் உள்ளத்திலிருந்து மறைந்திருக்க முடியும்? இருளில் ஒளிகாணும் கதிர்போல், இரும்பைக் கவரும் காந்தம் போல அது மக்கள் உள்ளத்தில் தெய்வங்கடந்து தெய்வ உள்ளத்தை, தெய்வ உள்ளங்கடந்து தெய்வ வடிவைக் காணும் ஆர்வம் தூண்டி வந்தது. “பைம்பொழில் அமைந்தது யாராலே? படிக நன்மாடம் எடுத்தவர் ஆர்? இவற்றை யெல்லாம் ஒருவர் - எமைப் போல மனித உருவுடையார்- எங் கேனும் இருந்திடல் வேண்டுமன்றோ?” இந்த எண்ண அலைகள் பிரயாணிகளின் உள்ளங்களில்- செல்வர், ஏழை எளியவர் உங்ளங்களிலும்- குடிசைவாணர், அரண்மனை, மாடமாளிகைக் கோமான்கள் என்ற வேறுபாடின்றி எல்லார் உள்ளங்களிலும்- ஒருங்கே எழுந்தன. தத்தம் உள்ளுணர் வால் தூண்டப்பட்டு, அன்புகலந்த அறிவுக் கண்களுடன் எல்லாரும் எங்கும் தேடலாயினர். அவன் புதர்வீட்டின் சிதைந்த பகுதிகளைச் செப்பம் செய்ய வேறு ஆளில்லை. அதில் கருத்துச் செலுத்த அவனுக்கும் நேரம் இல்லை. அவன் வீட்டருகே, நாற்புறமும், பரல் கற்கள், முட்கள் நிரம்பியிருந்தன. அவை அவன் நொந்த கால் களுக்கும் உடலுக்கும் நோவளித்தன. அவன் அவற்றில் இடர்ப்பட்டு இடர்ப்பட்டு வாழ்ந்தான். அவன் அறிவு இப்பக்கம் செயலாற்ற வில்லை. அவனால் அவற்றை மாற்ற இயலவில்லை. ஆனால் அதே சமயம் அவன் பாலைவன உலகின் வாழ்வையே மாற்றப் பாடுபட்டான். திட்டமின்றி, நோக்கமின்றி பெருஞ்செயல் அது என்ற எண்ணம் கூட இன்றி அவன் அதில் ஈடுபட்டான்! பாலையிலே நறுஞ்சுனைகள் இன்பந் தருபவை. அவற்றுக்கு ஈடாக எந்த இன்பத்தையும் கூற முடியாது. ஆனால் அவை தூர தொலைவில், பல நாள் பயணங்களுக்கு ஒரு முறையாகவே, அமைவன. அத்துடன் அவை தங்கி வாழ உதவும் நிலைவர இன்பம் தருபவையல்ல. நீடித்த இன்பம் தருபவையுமல்ல. எல்லையற்ற நீடித்த துன்பத்திடையே மின்னல் போல இடையே வந்து மறையும் கண இன்பங்களாகவே அவை அமைய முடியும். நீண்ட நரகப் பரப்புக் கடந்தே இத்தகைய தனிச் சொர்க்கத்திலிருந்து அடுத்த தனிச் சொர்க்கத்துக்குச் செல்ல முடியும். சென்ற பின்னும் சிலநாள் சில சில பொழுதே தங்கலாம்- விரைந்து அதை விடுத்து எல்லையிலா நகரப்பரப்பில் புகுந்தாக வேண்டும். பாலை நில மக்களுக்கு இதுவே தெய்வ நியதியாய் இருந்தது. ஆனால் புதர்வீட்டு நியதியை மாற்ற முடியாத ஹசன்- இதை மாற்றியமைக்க முற்பட்டான். மாற்றியமைத்தான்! புதர் வீட்டைச் செப்பம் செய்யும் ஆற்றலோ, அறிவோ, நேரமோ, கருத்தோ இல்லாத அவனுக்குப் பாலைவன உலகையே மாற்றியமைக்க ஆற்றல் இருந்தது. அறிவு இருந்தது. நேரமும் கருத்தும் இருந்தன! ஒருநாள் மணல் மலை, மறுநாள் ஆழ்கசம்; ஒரு பொழுது மேடு பள்ளங்கள், பாதைகள், மறுபொழுது உருவிலாப் பரப்பு என்ற ஓயாத மாறுபாட்டு நிலையுடையது பாலைப் பரப்பு. அது எல்லையற்ற கடல் போன்றது மட்டுமன்று; திக்குத் திசையற்ற வானவெளி போன்றது. மனிதன் ஆற்றலைக் கண்டு பேய்ச் சிரிப்புச் சிரிக்கும் இயற்கையின் அழிவாற்றல் இதுவே! அதில் பாதை செப்பனிடுவதென்பது காலமும் தொலையும் வென்று வரும் இந் நாளைய மேலையுலகுக் கூட எண்ணுதற்கெளிய செயலன்று. அது மனிதரால் நினைக்க முடியாத, ஆற்றலுடைய வரால் செய்ய முடியாத, அறிஞரால் திட்டமிட முடியாத கலைஞர்களால் கற்பனையிற் காண முடியாத செயல் ஆகும். ஆயினும் அன்பு இத்தனையிலும் வலிமை மிக்கது. ஹசன் தெய்வ உள்ளத்தினின்று அது எப்படியோ கற்பனை செய்தது. திட்டமிட்டது, வழிகண்டது, செய்து முடித்தது. பிரயாணிகள் எறிந்து சென்ற நைந்து கிழிந்த சாக்குகளை, பைகளை, துணிகளை ஹசன் ஒவ்வொன்றாகப் பொறுக்கித் திரட்டினான். தன் உணவுக்காக உடைக்காக எவரிடமும் இரந்த றியாத அவன் இப்போது தொலை நகரங்களுக்குச் சென்று வீடு வீடாக, தெருத்தெருவாக இரந்தான். ஆனால் அவன் காசு கோரவில்லை. உணவு கோரவில்லை. உடை கோரவில்லை சாக்குகள், பைகள், நைந்து கிழிந்த கந்தல்கள் மட்டும் வேண்டு மென்று இரந்தான். பைத்தியத்தில் ஒரு இரவல் பைத்தியம், இரவலரிடையே ஒரு பைத்திய இரவலன் என்றெண்ணிக் கொண்டே செல்வரும் ஏழை எளியவரும் தமக்கு எவருக்கும் வேண்டாத பயனற்ற பீத்தல் சாக்குகளை, பைகளை, அழுக் கேறிய கந்தல் கூளங்களை அவன்மீது வீசி எறிந்தனர்- அருவறுப்பான அவன் தோற்றத்தை மறைக்கவும் அவை உதவி- அவன் தோற்றத்திலிருந்து விரைந்து விடுபடவும் அவை அவர்களுக்கு உதவின! சாக்குகள், பைகள் கந்தல் கூளங்களை அவன் மூட்டை மூட்டையாகச் சுமந்து கொண்டு, சில சமயம் மலை மலையாக உருட்டிக் கொண்டு, வேறு சில சமயம் அவற்றுடன் புரண்ட வண்ணம் அவன் திரிந்தான். அவன் புதர் வீட்டைச் சுற்றிலும் அவை மதில்மேடுகளாக மலைகளாகக் குவிந்தன. மலைகளில் புதர் வீடும் மறைந்தது, அவனும் புதையுண்டான். அவன் ஏலா நோயாளி, தீராசகதி, அருவறுப்பான தசைப் பிண்டம் மட்டுமல்ல. அவன் ஒரு பைத்தியம்- கந்தல் கூளப் பைத்தியம் என்று அவன் திசையில் கண் பார்வை செல்லவிடாமலே நழுவினர் பலர். ஆனால் கந்தல் கூளங்களை அவன் நெடு நாளைக்கு மலையாக நிற்கவிடவில்லை. அவை விரைவில் கரைந்தன. அவனுக்கு அவை சாக்குகளல்ல, பைகளல்ல, கந்தல் கூளங்களல்ல. ஊழை ஊழை ஊழையே துணைக் கருவியாகக் கொண்டு வெல்ல முற்படுபவன்போல, மணற் புயலை மணலாலேயே தடுக்க எண்ணி, அதற்காக அவன் அமைந்தன, சாக்குகளிலும் பைகளிலும் கந்தல் கூளங்களிலும் கட்டப்பட்ட மணலே அவனுக்கு மணற்புயலின் அழிவு தடுக்க உதவும் மணற் கோட்டைக்குரிய செங்கல்கள் ஆயின. சிறுகச்சிறுக அவன் பாலைவனப் பாதைகளை ஒவ்வொரு பகுதியாகத் தேர்ந்து, அவற்றைத் தற்காலிகமாகச் சமதளப் படுத்தினான். புயல் அவற்றை அழிக்குமுன் அவன் விரைந்து அவற்றின் மீது தளர்வாக மணல் பெய்யப்பட்ட சாக்குகளைப் பரப்பினான். பின் அத்தற்காலிகப் பாதையின் இருபுறமும் மணற் சாக்குகள், பைகள், மூட்டைகளை அடுக்கி மணற் கோட்டைகள் அமைத்தான். பீத்தல் சாக்குகள், நைந்து கிழிந்த பைகள், சிலசமயம் மணற் குவியல்களை நடுநடுவே வைத்து அவன் சிக்கனமும் பேணிக் கோட்டையையும் உலைக் கோட்டை ஆக்கினான். மணற் புயல் இருபுறமும் குவித்த மணலே இதனை உலவாக் கோட்டை ஆக்கிற்று. அம்மதில்களின் பாதுகாப்பிலே அவற்றின் ஊடாக, அவன் சுட்ட களிமண் குழாய்களை அடுக்கிப் பச்சைக் களி மண்ணில் பொதிந்து இணைத்து, அக்குழாய்களின் மூலமாகவே நறுஞ்சுனையிலிருந்து ஒழுகும் கழிவு நீரைக் கசியவிட்டால், இக் கசிவின் ஈரம் இருபுறமும் சோலை வனச்சாலை வளர்த்தது, சாலையின் மரஞ்செடிகொடிகள் பாதையில் நடப்பவருக்கு நிழலும் நிலத்துக்குக் குளிர்ச்சியும் அளித்தன. அத்துடன் அவற்றின் வேர்கள் விரைவில் மணற் சாக்குகள் நீடித்த வலுவை நிலையான உயிர்வலு ஆக்கின. முன்பு பாலைவனம் எங்கும் ஆங்காங்கே மட்டுமே துளி துளிச் சோலை வனங்கள் இருந்தன. இப்போது சோலை வனத்துக்குச் சோலைவனம் சோலைவனச் சாலைகள் அமைந்தன. பாலைவனக் கப்பல்கள் என்று அழைக்கப்படும் ஒட்டகைகள் செல்வருக்கு மட்டுமே உதவின. அவர்களுக்கும் முயற்சி குறைந்ததேயன்றி அயற்சி நீங்கவில்லை. வெப்பிலிருந்து மிகுதி பாதுகாப்பும் கிடைக்கவில்லை. இப்போதோ ஹசன் முயற்சியால் செல்வர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒருங்கே நிழலும் குளிர்ச்சியும் நீரும் உணவும் நெடுகக் கிடைக்கலாயின. பாதை நெடுக ஹசன் மரங்களிலே சுற்றிப் புல் உரண்பாவினான். ஹசன் உழைப்பின் பயனையே இதுவரை கண்டு வியந்த மக்கள் அதே உழைப்பையே நேரில் கண்டு இன்னும் வியப்பும் ஆர்வமும் கொண்டனர். இப்போது அவன் கண்காணாத் தெய்வமாக, தோன்றாத் தெய்வ உள்ளமாக இல்லை. அவன் கண்கண்ட தெய்வ உருவாகப் பேணிப் பூஜிக்கப்பட்டான். வணங்கப்பட்டான். அவன் உருவம் அவன் தெய்வீக அன்புள்ளத்தைப் பெருக்கிக் காட்டவே உதவிற்று. அவன் ஏலாமை அவன் தெய்வீக ஆற்றலுக்குச் சான்றளித்தன. அவன் அன்பின் அளவு மக்கள் கடவுளைப் பற்றிக் கொண்டிருந்த வரண்ட எண்ணங்களுக்கு களிப்பூட்டிற்று. அவன் புகழ் எங்கும் பரவிற்று- குடிசைகளில் தவழ்ந்தது, கூடகோபுரங்களில் உலவிற்று. நாள்தோறும் மன்னர் இளங்கோக்கள் நூற்றுக் கணக்கில் அறிஞர் கலைஞர் ஆயிரக்கணக்கில், மக்கள், ஏழை, எளியர் பதினாயிர நூறாயிரக் கணக்கில் அவன் தெய்வ உருக்காண வந்து வந்து குழுமினர்- ஒருவரை ஒருவர் முந்தி நெருக்கினர். புகழுக்கு ஆர்வமதியுருவான புகழ்த் தென்றலுக்கு- அன்புருவான புகழ் இசைக்கு கலந்தவன் தான் அவன். மன்னர், வீரர், அறிஞர், கலைஞர் ஆற்றல் எண்ணிப் புழுங்கியவன்தான் அவன். ஆனால் இப்போது புகழ் அவனைச் சுற்றிப் புயலால் அடித்தது எக்காளமாய் முழங்கிற்று. மன்னர், வீரர், அறிஞர், கலைஞர் ஆகிய எல்லார் புகழும் தாண்டி, தெய்வத்துடனேயே போட்டியிடும் அரும்புகழ் ஆயிற்று. ஏனெனில் அம்மன்னர், வீரர், அறிஞர், கலைஞரே வியத்தகு தெய்வத்தைக்காண வருவது போல அவனைக் காண வந்தனர். ஏழையர் குடிசையை இன்ப வாழ்வாக்கப்பாடுபட்ட அவனுக்கு, பாலைவனத்தையே செல்வர் மாளிகை சூழ்ந்த உரிய புதர்வீட்டைப் பொன் மாளிகையாக்க இப்போது செல்வர் விரைந்தனர். ஏழைகள் தொண்டனாகிய அவன் சூழலை அரண்மனைச் சூழலாக்க மன்னர்கள் போட்டியிட்டு முந்தினர். அருவறுப்புக்குரிய அவன் கூனிய ஏலாநோயுடல் அரைகுறையாக மூடிய கந்தலகற்றிப் பொன் அணிமணி பட்டாடை, பஞ்சணை மலரணை அனைக்க ஏழை யரும் செல்வர்களும் வீரமைந்தர்களும் அழகிளம் பூவையரும் அரும்பாடுபட்டனர். இவற்றை அவன்ஏற்கவில்லை, மறுக்க வில்லை. ஆனால் புகழுக்கேங்கிய அவனது நைந்த அன்புள்ளம் ஒருபுறம் ஆறுதல் பெற்றது- ஒருபுறம் சிரித்தது! ஆனால் இவ்விரண்டு வகை உணர்ச்சிகளிடையே புதிய ஒரு வேதனையும் எழுந்தது. ஏழை எளியார் தொண்டை எல்லாரும் மதித்தனர்- ஏழையும் செல்வரும் மதித்தனர்- தெய்வப்பண்பாகப் போற்றிப் பூசிக்க நெருங்கினர்- அதற்காக உலகின் உழைப்பும்- செல்வமும் குவிக்க முற்பட்டனர்! ஆனால் அவ் ஏழையின் ஒரு சிறு கூறினை ஏழைகளோ, அச்செல்வத்தின் ஒரு திவலையைச் செல்வர்களோ அவ் ஏழை பணியில் ஈடுபடுத்த முனைவதில்லை அவர்கள் அன்புத் தெய்வத்தைப் பூசித்தனர்- வழிபடவில்லை. அன்பே அறம் என்று கண்ணாரக் காண்கின்றனர்- ஆனால் பின்பற்றும் அறம் அதுவன்று! ஆரவாரப் புகழ்ப் பூசனைகளை விரும்பாமல், அதே சமயம் அவற்றை வெறுப்பதாகக்கூடக் காட்டிக்கொள்ளாமல், தொண்டின் கடுமையையும் புகழின் வெறுமையையும், அன்பின் அரும்பெறல் நிலையையும் அஃது இல்லா அறத்தின் மலிவையும் எண்ணி ஹசன் புதிய புன்முறுவலுடனும் புதிய ஏக்கத்துடனும் இயற்கையின் அமைதியில் அறிந்தான். அவன் கண்கண்ட மனித உண்மை உலகம் மீட்டும் மெள்ள மெள்ள மறந்தது- அவனைக் கண்காணாத் தெய்வத்தின் கண்காணா வடிவாக்கி அம் முறையிலே பூசனையும் நடத்திற்று. யாழ் நாங்கை முதற் பதிப்பு – 1963 இந்நூல் 1963இல் சேகர் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. யாழ் நங்கை இளவேனில் உலகெங்கும் ஆட்சி பரப்பத் தொடங்கியிருந்த காலம். ஆனால், இளவேனிலும் தென்றலும், தென் தமிழும் அகிலும் பிறந்த இடமென்று கருதப்படும் தண் பொதிகையின் சாரலிலே அது கொலுவீற்றிருந்தது என்று கூறவேண்டும். இந்தக் கொலு மண்டபத்தினடுவே ஒரு கொலுவரங்க மேடையாகவே ஆரியர்ப்பண்ணை வெளி காட்சியளித்தது. ஏனெனில் ஆரியூரின் இளம் பண்ணை முதல்வரான ஆராவமுத நாயகரின் கைவண்ணம் காட்டு வளத்தைச் சோலைவளமாகவும், சோலை வளத்தைக் கனிமரக் காவளம், பூந்தோட்ட வளமாக்கியிருந்தது. அதனிடையே சிற்றாற்றின் நீரோட்டத்திடையே குற்றாலத்துடன் போட்டியிடும் இன் அருவிகள், இயற்கையோடைகளைக் கண்டு நகைக்கும்படி பன்னிற ஒளி யூடுருவப் பாய்ந்து ஏழிசை நாதங்களுடன் சலசலத்தோடும் ஓசைகள், வடிவழகும் பூவழகும் வாய்ந்த சித்திரப் பொய்கைகள் இன்பநடம் பயின்றன. பொதிகையின் அகிற்கட்டையும் சந்தனக் கட்டையும் வாரியடித்துக் கொண்டு வந்த சிற்றாற்றுடன் போட்டியிட்டுத் தென்றல் அவற்றின் குணத்தையும் தமிழ் மணத்தையும் எங்கும் அள்ளி வீசிக்கொண்டிருந்தது. இந்த அழகு மணக் காட்சிகளில்கூடக் கருத்தைச் செலுத்த நேரமில்லாமல் இளநம்பியும் இளநங்கையும் ஒருவர் மையலில் ஒருவர் ஈடுபட்டு ஒரு பொய்கைக் கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நம்பி முகத்தைக் காணாதவள் போல் கண்டு களித்தவளாக நங்கை நாணத்துடன் அவன் சொற்களை ஆர்வத்துடன் பருகி ஒன்றிரண்டு சொற்களிலேயே தன் நிறைகருத்துத் தெரிவித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் அருகே ஓர் இளையானை தன் துதிக்கையில் இருவர் உடலையும் துளாவி விளையாடியதைக்கூட அவ்விருவரும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு கொடியின்மீது சாய்ந்துகொண்டு பேசிய பாணியிலேயே நங்கை அதன் துதிக்கையில் சாய்ந்துகொண்டு பேசிய வண்ணம் நம்பியிடம் கருத்துச் செலுத்தியிருந்தாள். நம்பி வேறு யாருமல்ல - அவ்வியற்கைச் சூழலின் செல்வமனைத்திற்கும் உரியவனான பண்ணை முதல்வர் ஆராவமுதனே. அவனிடம் ஊடாடியிருந்த நங்கை அவன் காதலியல்ல. அவன் காதலித்து மணந்த புதுமணப் பெண் அருண்மொழித்தேவி. அவர்கள் மன்றல் மேடையேறி மாதங் கள் ஆண்டாய் வளர்ந்துவிட்டன. ஆயினும் நங்கையின் நாணமும் நம்பியின் ஆர்வமும் பழகிய காதலாக மாறாமலே இருந்தன. தமிழின் என்றும் மாறாத கன்னிமை எழில் அவர்கள் காதல் மீது படர்ந்திருந்தது. அக் கன்னியிளங் காதல் பண்ணை நாச்சியாராய்விட்ட அருண் மொழியை இப்போது ஒரு கன்னித் தாயாகவே ஆக்கியிருந்தது. அவர்களருகே காதற் சிறுவன்போல் விளையாடிய யானைக்கன்று அவர்கள் திருமணத்தின்போது விசயநகரப் பேரரசன் கிருட்டிணதேவராயன் அனுப்பிய பரிசேயாகும். தாயாகுமுன்பே அருண்மொழி அதன் மீது தாய்ப்பாசம் காட்டியிருந்தாள். அந்த உரிமையை அது ஆராவமுதனிடமும் காட்டத் தயங்கவில்லை. காதல் நங்கையிடம் ஆராவமுதன் அவ்வாண்டு நடைபெற விருந்த இந்திரவிழா பற்றியே பேசினார். ஆயினும் அப்பேச்சு அருண்மொழிக்கு ஒருபுறம் மகிழ்ச்சியையும் மற்றொருபுறம் வெட்கத்தையும் நாணத்தையும் பெருக்கின. “அருள், இந்திர விழாவை ஆண்டுதோறும் நடத்தும் பொறுப்பு ஆரியூர் மரபைச் சார்ந்தது. அந்த மரபில் பிறந்த காரணத்தால் இதுவரை நான் அதை நடத்தி வந்தேன். ஆனால்... ஆரியூர் மரபு இப்போது... உன்னிடம் வந்துவிட்டது... நீதான்...” அவன் பேசி முடிக்கவில்லை. அவளும் மறுமொழி கூறவில்லை. ஆனால் அவள் ஆர்வக் குறும்பு நகை முழுதும் பேசிற்று. நாணிக் கோணிய அவள் உடலும் செந்தாமரை யென மலர்ந்த ஒளி முகமும் பேசாத மறுமொழி பேசிற்று. இறுதியில் “பெண் எப்படி இதை எல்லாம் செய்வதாம்?” என்றாள் அவள். “நீ பெண்தான். ஆனால்...” அவன் மேலும் என்ன கூறப் போகிறான் என்பதுகூட அவள் அறியாததன்று. அவள் தந்தை தஞ்சையாண்ட செல்வப்ப நாயகரின் முது பேரமைச்சரான முத்தப்ப வாண்டையார் தாயற்ற குழந்தையாகிய அவளுக்கு அவர் ஒரு தாயாகவும் விளங்கியிருந்தார். மணமானபோது தன் காதலுடன் புது வாழ்வகம் செல்லும் சமயம்கூட அவர் மடியிலிருந்து இறங்கிச் செல்வது அவளுக்குக் கலக்கம் தரத்தவறவில்லை. ஆனால் அவளுடன் இணைபிரியா விளையாட்டுத் தோழனாயிருந்த அண்ணன் மெய்யப்பனை விட்டுப் பிரிவது அதனிலும் கடுந்தேர்வாயிற்று. அவள் தன்னிடம் பத்துத்தடவை வந்து, பத்துத்தடவை அவனிடம் திரும்பித் திரும்பிச் சென்று விடை பெறுவதையும், முத்தப்பருங்கூடக் கண் கலங்குவதையும் கண்ட ஆராவமுதர்க்கு அவளை இன்னும் சில நாள் அண்ணனுடனேயே இருக்கவிட்டுப் போகலாமா என்றுகூடத் தோன்றிற்று. “ஏன் மாமா, மெய்யனையே உங்கள் மகளுக்குச் சீதன மாக அனுப்பிவிடுவதுதானே!” என்று கூட அவன் குறும் பாக முத்தப்ப நாயகரை நோக்கிக் கூறினான். “மெய்யப்பன் என்ன பொம்மையா, நகைப் பெட்டியா சீதனமாக அனுப்ப! நாளை அவன் இன்னொருத்திக்குச் சொத்தாக வேண்டியவன் தானே!” என்றார் முத்தையர். அருள் மொழியிடம் மெய்ப்பனைப் பற்றியும் அவனை விட்டு அவள் பிரிய முடியாமல் தவித்த திருமணக் காலக் காட்சியைப் பற்றியும் ஆராவமுதர் பேசாத நாளே கிடையாது. “நீ பெண்தான். ஆனால்...” என்று ஆராவமுதன் தொடங்கிய போது கணவன் குறும்பு தன்னிடமிருந்து அண்ணன் பக்கந்தான் திரும்புகிறது என்று அவள் உணர்ந்து கொண்டாள். ஆயினும் உணராதது போல அவள் மீண்டும் கோணினாள். “நீ பெண்தான். ஆனால் இதைச் செய்யும் தகுதியுடைய ஒருவரை நான் தேர்ந்தெடுத்துவிட்டேன். அவர் என் கட்டளைகளை மதியாதவர் - உன் விருப்பம் அவருக்குக் கட்டளைகளைவிட வலிமையுள்ளது. அதனால்தான் பொறுப்பை இப்போதே உன்னிடமுள்ள புதிய மரபுக்கு விட்டுவிட எண்ணினேன்” என்றான் ஆராவமுதன். முன்னிலும் பன்மடங்கு வெட்கத்துடன், அதே சமயம் தன் அண்ணனிடம் கணவன் காட்டிய பாசம், அவனைக் காணும் ஆர்வம் ஆகியவற்றால் உள்ளூர உவகை பொங்கும் நிலையில் அவள் வாய் முத்துதிர்த்தாள். “என் விருப்பம் என்ன, எனக்குத் தாங்களிட்ட கட்டளை என்று கூறியனுப்புகிறேன்” என்றாள். ஆரியூர்ப் பண்ணை மாளிகையின் உள்ளரங்க நங்கை யாகிய செம்மாமலர், பண்ணை நாச்சியார் அருண்மொழித் தேவியாரின் முடங்கலுடன் தஞ்சை சென்றபோது, மெய்யப்ப வாண்டையார் வரவேற்றுத் தங்கை விருப்பப் படியும் மைத்துனர் குறிப்புப்படியும் ஆரியூர் வந்து விழாவுக்கான பொறுப்பு முழுவதும் ஏற்பதாகக் கூறினான். தங்கையாயினும் பண்ணையரசியான அருண்மொழித் தேவியாருக்கு அவன் தன் சூழ்துணைப்பாங்கன் மாக்கோதை நம்பியையே தூதாக அனுப்பினான். தங்கை விருப்பத்திற்கும் மைத்துனர் குறிப்புக்கும் தான் அளிக்கும் மதிப்பைக் காட்டும்படி அவள் தன் தாய் செல்வமாக வளர்த்து வந்த பறவைகளில் ஒரு பஞ்சவண்ணக் கிளியைத் தேர்ந்தெடுத்து அதை அவர்கட்குப் பரிசாக அனுப்பினாள். இந்திர விழாவன்று இதற்குச் சோடியான பறவையையும் பிற பொருள்களையும் கொண்டு வருவதாக உறுதி கூறியனுப்பினாள். தஞ்சையிலிருந்து விழாவின்போது யார் யார் வருவார்கள் என்பதே ஆரியூர்ப் பண்ணையின் உள்ளரங்கப் பணிப் பெண்களிடையே தீராப் பேச்சாயிருந்தது. இந்த நங்கைக்கு அந்த நம்பி, அந்த நம்பிக்கு இந்த நங்கை என்றுகூட அவர்கள் சோடியிணைத்துக் குறும்பாட்டமாடினர். தஞ்சை நம்பியிருள் மிகுதியாக அடிபட்ட பெயர் மாக்கோதை பற்றியதே. ‘அரண்மனையரங்க யாழ் நங்கை தன் உள்ளத்தை எவரும் அறியாமல் மூடி வைத்தாலும் அவள் உள்ளார மாக்கோதை யிடமே ஈடுபட்டதை தோழியர் அறிந்து அவளைக் கேலி செய்யச் சூழ்ந்தனர். அவள் தனக்கு எவரிடமும் பாசம் கிடையாது என்று மறுக்க மறுக்க, அவர்கள் மேலும் மேலும் நம்பியுடன் நங்கைக்கு மேலும் மேலும் முடிச்சுப் போட்டுப் பகர்வதிலேயே குறியாயினர். ஆனால் தஞ்சை சென்ற செம்மாமலர் மீண்டு வந்தபோது பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அன்று மாளிகையின் விருந்துக்கூடப் பொறுப்புத் தற்செயலாக யாழ்நங்கையின் பொறுப்பாயிருந்தது. மெய்யப்பனிடமிருந்து தூது கொண்டு வந்த மாக்கோதையை அவளே வரவேற்றாள். இருவரும் ஒருவரை ஒருவர் உள்ளூரக் காதலித்தவர்களேயானாலும், ஒருவர் உள்ளத்தை ஒருவர் அறிந்தது கிடையாது. இந்நிலையை அவர்களது அன்றைய நேருக்குநேர் சந்திப்பு ஒரு நொடியில் கலைத்தது. ஏனெனில் இருவருமே தொடக்கத்தில் தத்தம் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு கடமையாற்ற முனைந்து அதில் தோல்வியுற்றனர். இறுதியில் தம் உள்ள உணர்ச்சிகளையெல்லாம் இருவரும் ஒருவருக்கொருவர் கொட்டிக்கொள்ள நேர்ந்தது. அதுமட்டு மன்று. பேச்சினிடையே மாக்கோதை யாழ் நங்கைக்குத் தான் கொண்டுவந்த அரும்பொருளான பஞ்சவண்ணக் கிளியைக் காட்ட அதன் கூட்டைத் திறந்தான். யாழ் நங்கை கிளியுடன் விளையாடிக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தாள். இருவரும் பேச்சில் மட்டும் ஈடுபட்டுக் கிளியை மறந்துவிடவே அது மெல்ல நழுவிப் பறந்தோடிப் போயிற்று. யாழ்நங்கையின் ஆருயிர்த் தோழியான வாணுதல் வந்து கூட்டின் வெறுமை பற்றி நினைவூட்டிய பின்தான் காதலர் தம் பெரும்பிழை கண்டு கலங்கினர். யாழ் நங்கையைப் போலவே வாணுதலும் மாக்கோதை நம்பி என்ற இளைஞனிடம் உளம் பறிகொடுத்திருந்தாள். ஆனால் பண்ணையின் உள்ளரங்கக் காவல் முதல்வனான ஒய்யார நம்பி அவளைத் தனக்கே உரிமையாக்க எண்ணியிருந்ததால் அவளைத் தன் வயப்படுத்த அல்லது தொல்லை கொடுத்துத் திருப்ப எண்ணியிருந்தான். யாழ் நங்கை அவள் தோழியென்பதை எண்ணி அவளைத் துன்புறுத்தும் இந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. அவளை அவன் பழி தீர்த்ததுடன் விடாமல், கடமை தவற்றுக்காக அவளைக் காவலில் வைத்து ஒறுக்கவும் முற்பட்டான். அவன் எதிர்பார்த்தது போலே மாக்கோதை மட்டுமன்றி வாணுதலும் அவளுக்காக மன்றாடினர். அவன் பிடிவிடாமல் அவளை ஒறுப்பதிலேயே முனைந்து நின்றான். ஆரியூர் நாச்சியார் அருண்மொழித்தேவியார் இச் சமயம் அந்த இடத்துக்கு வரவே, இருதரப்பாரும் வாய்மூடி நின்றனர். ஆனால் காதலர்தாம் முற்றிலும் நடுங்கிக் கொண் டிருந்தனர். அருண்மொழித்தேவியின் சொற்கள் தொடக்கத்திலேயே அவர்கள் கட்டம் நீக்கின. “யாழ்நங்கை, பஞ்சவண்ணக்கிளி பறந்துபோய் விட்டதே என்று இருவருமே கவலைப்படத் தேவையில்லை. அது என் அறைக்கே வந்து என் கூட்டில் இடம் பெற்று விட்டது. என் அண்ணனார் தூதனாகவரும் மாக்கோதை நம்பிக்கு நம் விருந்தினர் மாளிகையில் வரவேற்புக்கு ஏற்பாடு செய் - அத்துடன் அண்ணனாருக்கு, உடனே அனுப்பிய கிளிக்கும் தூதர் மூலம் அனுப்பிய செய்திக்கும் நான் நன்றி தெரிவித்தனுப்பி விடுகிறேன். மாக்கோதை தஞ்சை விருந்தினரில் முதல் விருந்தாளியாக இங்கேயே இருக்கட்டும் - அது செய்தியையும் அண்ணனாருக்கு நான் தெரிவித்து விடுகிறேன். தன் ஆர்வத் திட்டம் பண்ணை நாச்சியார் வரவால் கெட்டு விட்டது என்று கண்ட ஒய்யார நம்பி பெட்டிக்குள் சீறி ஓடும் பாம்பாக தற்காலிகமாக அடங்கினான். ஆனால் இந்திர விழா நாளன்று அவன் வட்டியும் முதலுமாக காதற்சோடிப் புறாக்களை அச்சுறுத்தி வாணுதலை வசப்படுத்துவதென்று வழி பார்த்திருந்தான். ஆரியூரில் இதற்கு முன் நடைபெற்ற இந்திர விழாக் களையெல்லாம் வெல்லும் வகையில் அந்த ஆண்டைய விழா ஆரவாரத்துடன் நிறைவேறிற்று. மெய்யப்ப வாண்டை யாரும் அவர் புடைசூழ் குழுவினரும் அதில் காட்டிய அக்கறையே அதற்கு முக்கிய காரணமாயிருந்தது. ஆயினும் பேரரசர் கிருட்டிண தேவராயர் தன் பேரவையின் புதுப் புகழ் ஒளியாளரான அரியநாயகரையே தன் விழா வாழ்த்தேந்திய தூதராக அனுப்பியது அதற்குக் கிட்டத்தட்ட ஒரு பேரரசு மதிப்பே தந்திருந்தது. அன்றைய இரவு நிலவில் தனித்துச் சந்தித்து உரையாடுவதெனத் திட்டமிட்டு யாழ் நங்கையும் மாக்கோதையும் சிற்றாற்றின் ஒரு மணல் திட்டை நிலவுக் குறியாக்கியிருந்தனர். பாதுகாப்புக்காக யாழ் நங்கை. நிலவே போன்ற வண்ணமுடைய வெண்பட்டு முக்காடிட்டு வருவதென்றும் முடிவு செய்யப்ப ட்டிருந்தது. இயல்பாக அதே இரவு நிலவில் அதே இடத்தை அதே முறையில் நிலவுக் குறியாக்கிச் சந்திப்பது என்று வாணுதல், மாக்கோதை ஆகிய சோடிக் காதலர் திட்டமிட் டிருந்தனர். முதலில் அவ்விடம் வந்த மாக்கோதை அங்கே காத்திருந்த வாணுதலையே தன் காதலி என்று கருதி அவளை அருகிலுள்ள புன்னைப் பொதும்பருக்கு ஆர்வத்துடன் இட்டுச் சென்றான். கிட்டத்தட்ட அதே முறையில் சற்றுப் பின் வந்த வில்லாளன் அச்சமயம் அவ்விடம் வந்த யாழ் நங்கையையே தன் காதலி என்று கருதி அதே பொதும்பருக்குள் இட்டுச் சென்றான். ஆனால் சோடியுடன் சோடி சந்திக்கும்போது ஒவ்வொருவரும் தத்தம் காதலியருடன் பேச நேர்ந்தது. தங்கள் தவற்றை இதனால் இரு காதலரும் உணர்ந்து கொண்டனர். ஆனால் காதலியர் இருவரும் இதற்குள் ஒருவரை ஒருவர் அடையாளமறிந்து கொண்டு, தம் பிழை அவ்வளவு பெரும்பிழையாய் விடவில்லை என்று கண்டு சிரித்தனர். இரு சோடிகளும் தவறு திருந்தி ஒருங்கே பேசத் தொடங்கினர். தொலைவிலிருந்தே வில்லாளனைப் பின் தொடர்ந்த காவல் முதல்வன் ஒய்யார நம்பி, அவனுடன் இணைந்து சென்ற உருவம் கண்டதே வாள் நுதலின் குற்றங் கண்டு அவளைக் கைப்பற்ற அத்தறுவாயைப் பயன்படுத்த விரைந்தான். தொலைவில் அவன் சாயல் கண்டதே வில்லாளன் மலைப் புற்றான். ஆனால் மாக்கோதை பெண்டிர் இருவரையுமே பொதும்பரில் மறைத்துவிட்டு, வாணுதல் முடக்கைத் தான் போர்த்துக் கொண்டு வில்லாளனுடன் வெளியேறி வந்தான். மாக்கோதையையே வாணுதலென்று கருதி ஒய்யார நம்பி அவனை இழுத்துச் சென்றான். அத்துடன், “சான்றுடன் தோழி கடமை தவறியும் தப்பினாள். இன்று நீ அகப்பட்டுக் கொண்டாய். நீ என்னுடன் இணைந்து கொள்கிறாயா அல்லது உன் தவற்றை மாளிகை முழுதும் அறியச் செய்து தண்டிக்கவா?” என்று பேசினான். இச்சமயம் பார்த்து மாக்கோதை முடக்கெறிந்து அவன் கன்னத்திலறைந்தான். “கடமை தவறியது இப்போது யார், தெரிகிறதா?” என்று கூறி அவனை அவமதிப்புடன் அவ் விடம் விட்டுத் துரத்தினான். தன் ஆவலும் நிறைவேறாமல், அவமதிப்பும் நேர்ந்தது கண்ட காவல் முதல்வன் ஒய்யாரன் இப்போது எப்படியாவது பழிவாங்கும் உறுதியுடன் மறை சூழ்ச்சிகளில் முனைந்தான். சூழ் நிகழ்ச்சிகள் அவனுக்கு இவ்வகையில் வாய்ப்புக்கள் அளித்தன. வாணுதலின் காதல் விளையாட்டு யாழ்நங்கையின் ஆர்வப் பேச்சுக் கடந்து வினையாயிற்று. அவள் வயிற்றில் அதன் விளம்பரச் சின்னமாகக் கரு வளர்ந்து வந்தது. இதை அருள்மொழித்தேவி குறிப்பாலறிந்தும் சினங் கொள்வதற்கு மாறாக இரக்கமுற்று, மாளிகையும் காத்து அவளுக்கு எவ்வாறு உதவுவது என்று கவலை கொண்டாள். ஆனால் அவள் இதை அறியவில்லை என்று நினைத்து அறியுமுன்னே ஒய்யாரன் விரைந்து திட்டம் வகுத்தான். முதலில் அவன் வில்லாளனின் தமையனான மும்முடி நம்பியினிடமும் மாக்கோதையின் தந்தையான வையாபுரி வாணரிடமும் அவ்விருவரின் பிழைகளைப் பெருக்கி இரு குடும்பங்களிலும் பிணக்கு உண்டு பண்ணினான். மற்றொரு புறம் அவன் அருள்மொழித்தேவியை தண்டனையளித்ததாகப் பாவித்துக் காதல் துணைவர்களைத் தன் பிடியிலிறுக்கிவிட முனைந்தான். மும்முடி கன்னியரையும் காதலையும் வெறுத்தவன். தன் இளவலையும் பெண்டிர் தீண்டாப் பெட்டகமாக வளர்ப் பதில் முனைந்தவன். தன்னை மறைத்துத் தன் ஆணையை மீறிய வில்லாளனை அவன் கண்டவாறு பேசியதுடன் நில்லாமல், வீட்டினுள்ளேயே பூட்டிச் சிறை வைத்துவிட்டு அவன் உடல் நலம் கெட்டுவிட்டதென்ற சாக்குக் கூறி அவன் பதவியைப் பார்த்து வந்தான். வையாபுரி வாணனும் இதுபோலவே தன் மைந்தன் மீது கடுஞ் சீற்றங்கொண்டு அவனைக் கடிந்து கொண்டான். தன் பதவியை இதற்குமுன் அவன் மைந்தனுக்கு விட்டுக் கொடுத்துத்தான் பசுமலையில் பண்பார்ந்த தமிழ்ப் பணியிலும் நல்ல திருப்பணியிலும் ஈடுபட்டிருந்தான். இப்போது அவனும் தனயனைப் பதவியிலிருந்து அப்புறப்படுத்தித் தன் பழம் பணிமேற்கொண்டான். ஆனால் தன்னிலும் மூப்பும் அனுபவமும் மிக்க வையாபுரி வாணர் வருகை மும்முடிக்குப் பிடிக்கவில்லை. இருவரும் அடிக்கடி மாளிகைக் காவற் பணியில் ஒருங்கு ஈடுபட நேர்ந்ததனால் அவர்கள் அடிக்கடி வாய்ச்சண்டையிட்டு வந்தனர். தன் தம்பியைக் கெடுத்தவன் மாக்கோதை என்று மும்முடியும், தன் தனயனைக் கெடுத்தது வில்லாளனே யென்றும் அவர்கள் வாதாடி வந்தனர். மாக்கோதை தன் தந்தையின் மனம் புண்பட நடந்த தற்காக வருந்தி அவர் திருப்பணியைத்தான் மேற்கொண்டு திருநீறும், தவமணி மாலையும் காவியுடையும் பூண்டு பசுமலையருகே தங்கினான். இரவெலாம் அவன் உள்ளம் அவனையும் மீறி யாழ் நங்கையை எண்ணி மிகவே, அதனைச் சிதறடிக்கும் நோக்கத்துடன் அவன் புறங்காட்டில் எலும்பு களிடையே திரிந்து உள்ளத்துக்கு வைராக்கியம் உண்டு பண்ண முயன்று கொண்டிருந்தான். இச்சமயம் அழகிய பூம்பல்லக்கில் ஒரு பிணம் புதைக்கப்பட வந்தது கண்டு சற்றே விலகினான். ஆனால் பிணத்தைக் கையும் வாயும் கட்டிக் கொணர்ந்தவர்களே பிணத்துடன் கோபாவேசத்துடன் பேசுவதையும் பிணம் பெருமூச்சு விட்டு எதிர்த்துரையாடுவதையும் கண்டு அவன் கிலியடைந்தான். உண்மையில் பிணமாகக் கட்டப்பட்டுக் கொண்டு வரப்பட்டவள் வாணுதலே. பண்ணை நாச்சியார் கொலைத்தீர்ப்பை நிறைவேற்றுவதாக வாக்களித்து அவள் அவளைக் கட்டிக் கங்கன், திம்மன் என்ற தன் கூலிக் கொலைகாரர் வசம் ஒப்படைத்திருந்தாள். கடைசி நேரத்தில் காதலனைத் துறந்து ஒய்யாரனை மணக்க இசைந்தால், காதலனையே கொன் றொழித்து அவள் பிள்ளையுடன் அவளை ஏற்பதாகக் கூறும்படி கொலைகாரருக்கு ஆணையிடப்பட்டிருந்தது. பிணக் கோலத்தில் அவர்கள் பேச நேர்ந்த வகை இதுவே. “தேவி, என் காதலுக்காக என்னைக் கொல்லும்படி தீர்ப்பளித்ததாக வல்லவா உங்கள் தலைவன் பசப்பினான். இப்போது அதைவிடப் பெருங் குற்றத்தை - பெரும் பழியைத் தான் செய்வதுடன் என்னையும் அதற்குத் தூண்டுகிறான். தேவியார் ஆணைபற்றிய அவன் கூற்றுப் பாசாங்கு என்பது இதனால் தெரிகிறது. ஆகவே அவன் பழியை நிறைவேற்றுங்கள். கடவுள் கோபம், தேவியார் சீற்றம் ஆகியவற்றுடன் என் சாபமும் உங்களைச் சூழட்டும். உங்களைப் போன்ற கயவர்களை ஆட்டுவிக்கும் அந்தப் பழிகேடன் இருக்கும் உலகில் வாழ்வதை விட மண்ணுடன் மண்ணாவதே எனக்கும் என் வயிற்றுக் குழந்தைக்கும் நல்லது” என்று வாணுதல் சீறினாள். நடந்தது யாவற்றையும் மாக்கோதை ஊகித்துக் கொண்டான். வாணுதல் மேல் கொலைஞர் கை நீட்டுமுன் அவன் புகுந்து அவர்கள் கை வாளைப் பறித்து அதைச் சுழற்றித் தாக்கினான். அவன் துறவி வேடத்தையும் அதற்கொவ்வா வீரத்தையும் கண்டு அவர்கள் கிலி கொண்டோடினர். ஓடும்போது வாணுதலுக்கென்று அவர்கள் தோண்டிய குழியில் கங்கன் விழுந்தான். திம்மன் ஓட்டத்தில் குவித்திருந்த மண்ணைச் சரியச் செய்ததால் அவன் அதிலிருந்து மீளாது புதையுண்டான். அந்நிலையில் வேறு எதையும் கவனியாமல் இனி இது தமக்கேற்ற இடமன்று என்று கண்டு மாக்கோதை வாணுதலை இட்டுக் கொண்டு மாறுவேடத்துடன் தஞ்சைக்கு மறைந்தோடினான். கொலைகாரர்களில் பிழைத்தவன் மூலம் செய்தி யறிந்து ஒய்யாரன் மாக்கோதையைத் தேடிக் காண முயன்றும் பயன்படவில்லை. அவன் நேரே மெய்யப்பனிடம் சென்று, தேவி அனுப்பிய தூதனாக நடந்தான். “தன் உள்ளரங்க மாது ஒருத்தி யுடன் காதல் விளையாட்டில் ஈடுபட்ட குற்றம் போதாதென்று உங்கள் சூழ் துணையரங்கனான மாக்கோதை மற்றொரு வாலிபனான வில்லாளனால் பழிப் பேச்சுக்காளான வாணுதல் தண்டனையைத் தடுத்துக் கடமையில் ஏவலன் ஒருவனைக் கொன்று வாணுதலுடன் தப்பியிருக்கிறான் அவன். பழிக்காகத் தேவி தன்னிடம் மீந்துள்ள ஒரே குற்றவாளியான யாழ் நங்கை தலையை வாங்க உத்தரவிட்டிருக்கிறாள். நீங்களும் குற்றவாளி களில் உங்களிடம் மீந்துள்ள வில்லாளன் தலை வாங்கி உள்ளரங்க மதிப்பையும் தங்கள் மதிப்பையும் காக்க வேண்டு மென்பது தேவியாரின் விருப்பம். இதை அறிவிக்கவே வந்தேன்” என்றான். தன் தங்கையின் உள்ளப் பாங்குகளை முற்றிலும் அறிந்தவன் மெய்யப்பன். அவள் ஆணை கேட்டு அவன் திடுக்கிட்டான். சிறிது நேரம் அவன் உள்ளம் அதை நம்ப மறுத்தது. ஆயினும் தங்கையாக மட்டுமன்றி, ஒரு மாளிகை நாச்சியாராகவும் இருந்த அம்மாதரசியின் விருப்பென்று முறைப்படி தெரிவிக்கப்பட்ட செய்தியை அசட்டை செய்ய அவன் விரும்பவில்லை. அவனும் சீறி விழுபவன் போலப் பாவித்து வில்லாளனை வரவழைத்து அவனைக் குற்றஞ் சாட்டினான். “என் துணைவனான உனக்கு நான் தரும் சலுகை ஒன்றுதான். அண்ணனிடம் விடை பெறவும் இறுதி வழிபாடு செய்யவும் இடம் தருகிறேன். அதன்பின் என் கையாலேயே உன் தலை வாங்குவேன்” என்றான். தன் பிழைக்குத் தண்டனையுடன் இந்த மதிப்பும் பெறுவதில் பெருமைகொண்ட வீரன் வில்லாளன் அவ்வாறே செய்தான். கடுநஞ்சுடைய மும்முடிகூடக் கண் கலக்கத்துடன் மெய்யப்பன் கருணை நீதி கண்டு பெருமித முற்றான். வில்லாளனுடன் உட்சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் மெய்யப்பன் கலங்கிய கண்களுடன் ஒரு அட்டைப் பெட்டி ஏந்தி வெளி வந்தான். “அன்பரே! என் தங்கை விருப்பப்படி என் துணைவன் தலை வாங்கிவிட்டேன். அதன் சின்னமாகத் தலையை இப்பெட்டியி லிட்டு முத்திரை வைக்கப்பட்டுள்ளது. இதை என் தங்கையிடம் தந்து இத்தலை கண்ட பின், யாழ்நங்கை தலையையும் இதுபோலத் துணித்துக் கொள்க! தலைக்குப் பதில் தலையை என்னிடம் கொணரும் பொறுப்பை வையாபுரி வாணரும், உடனிருந்து தலைகள் இரண்டும் கண்டு உறுதி கூறும் சான்றாளராக மும்முடியும் அனுப்பப் பெறுக!” என்றான் மெய்யப்ப வாண்டையார். தன் திட்டம் இறுதியில் எளிதாக நிறைவேறுவது கண்டு வீறுடன் ஒய்யாரன் உள்ளரங்கமேறினான். அச்சமயம் தேவி தன் தோழியருடன் வள்ளுவரம்மானையும் சிலம்பக் கந்தக வரியும் ஆடிக்கொண்டிருந்தாள். ஒற்றர் மூலம் நடப்பனவற்றை ஓரளவு அறிந்திருந்தாலும், அறியாதவள்போலப் பார்த்து, யாழ் நங்கையின் துயராற்ற அவ்விளையாட்டிடையே அவள் அரும்பாடுபட்டு வந்தாள். வழக்கப்படி முன்னறிவிப்புச் செய்யாமல் ஒய்யாரன் நேரே உள் வருவதறிந்து அவள் திடுக்கிட்டாள். அவன் தூது அவளைப் பின்னும் கலங்கச் செய்தது. அன்பும் பெருந்தன்மையுள்ளமும் படைத்த தன் தமையன் ஆணைகளை அவளாலும் நம்ப முடியவில்லை. ஆயினும் முறைப்படி அனுப்பப்பட்ட தமையனின் விருப்பத்தை மதிக்காமலிருக்கவும் அவள் துணியவில்லை. தமையன் திட்டப்படியே தன் தோழி யாழ் நங்கையைத் தானே தலைவாங்குவதாக அவளும் கூறி வில்லாளனின் தலையை உடன் வந்தவரிடமிருந்து பெற்றுக்கொண்டு அவள் யாழ் நங்கையுடன் உள்ளறை சென்றாள். சிறிது நேரத்தில் அவள் பெட்டியுடன் மற்றொரு பெட்டியைக் கொணர்ந்தாள். இரண்டையும் என் உள்ளரங்கத் தலைவியுடனிருந்து நீங்கள் திறந்து பார்த்த பின் மீண்டும் முத்திரையிட்டு என் அண்ணாரிடம் ஒப்புவிக்க என்று கூறி அவள் உட்சென்றாள். உள்ளரங்கத் தலைவி செம்மாமலர் உண்மையில் ஒய்யாரன் தமக்கையே. அவன் கபடங்களை அவள் அறியாதவள். இரண்டு இன உயிர்கள் மாய்க்கப்பட்டுத் துடிக்கும் நிலை காண நேர்ந்ததே என்று அவளும் அவ்வுயிரினிடம் உரியவர்களாயமைந்த வையாபுரி வாணரும் மும்முடியும் ஏங்கி நின்றனர். ஆனால், கட்டிடம் திறக்கப்பட்டபோது கண்ட காட்சி அவர்களுக்கு இனிய அதிர்ச்சியையும் வியப்பார்வத்தையும் விழுமிய வீறமைதியையும் உண்டுபண்ணின. யாழ்நங்கையின் தலை இருக்க வேண்டிய பெட்டியில் அதற்குப் பதிலாக அருள்மொழி நாச்சியாரின் யாழே முறியடிக்கப்பட்டுக் கிடந்தது. மாக்கோதை யின் தலை எதிர்பார்க்கப்பட்ட பெட்டியில் மெய்யப்ப வாண்டையாரின் வில்லே முறிபட்டுக் கிடந்தது. தஞ்சை முத்திமை நாயகமாம் தம் தலைவர், மாளிகை நாச்சியாராகிய தம் தலைவி ஆகிய இரு பெருந்தகை உள்ளங்களின் குடி மரபுக்கேற்ற அறிவு, பண்பு, அருள் ஆகியவற்றை இரு பெட்டிகளும் நங்கையர்க்கும் நம்பியர்க்கும் தெள்ளத் தெளிய விளக்கின. “தன் துணைவி யாழ் நங்கை தனக்கு யாழ் போன்ற இனிமையுடையவள். அந்த யாழ் முறிவே தன் துணை யாழ்நங்கை முறிவுக்கு ஒப்பு” என்பதைத் தேவி செயல் சுட்டிற்று. “தன் துணைவன் மாக்கோதை தனக்குக் கைவில் போன்றவன். வில்முறிவே மாக்கோதை முறிவுக்கு ஒப்பு” என்று மெய்யப்ப வாண்டையார் செயல் சுட்டிற்று. மாண்டவராகக் கருதப்பட்ட இருவரும் தேவியின் அருளால் உயிர் பெற்று, மாற்று உரைத்ததும் துணை தேடி அலைந்தனர். ஒய்யார நம்பியின் குற்றங்கள் விரைவில் வெளியான பின், அவர்களைத் தேடிக்கொணர்ந்து இணைவிக்கும் பொறுப்பை அவள் அவனிடமே ஒப்படைத்தாள். தம்பி பிழைக்குக் கழுவாயாகச் செம்மாமலரும் உடன் சென்று இரு காதற்சோடிகளையும் தேடிக் கொணர்ந்தாள். தன் காதல் தெய்வமாகிய அருள் மொழியும் அவள் உயிர்த்தமையனும் செய்த செயல்கள் கேட்டு மகிழ்ந்த ஆரியூர்ப் பண்ணையார் தஞ்சை நாயகமும் அவர்கட்கு மணம் செய்வித்து இரு ஆட்சி நாயகங்களிலும் பதவியும் பரிசும் அளித்து மகிழ்ந்தனர். 2. கணவன் உலக முழுதாளத் தெரிந்தவர்களுக்குக்கூடச் சில சமயம் தம்மை ஆள, தம் மனையை ஆளத் தெரிவதில்லை. மையூர் கிழான் வாழ்க்கைப் போக்கு இதற்கு ஒரு சான்றாய் அமைந்தது. மாய மந்திரங்களுக்குப் பேர் போனது மலைநாடு. ஆனால் மலைநாட்டில் மட்டுமல்ல; தென்னாடு முழுவதிலுமே மையூர் கிழானின் பெயர் மாய மந்திரங்களைக் காட்டிலும் ஆற்றலுடைய தாய் இருந்தது. சேரப் பேரரசின் நிலப்படை, கடற்படை, மலைப்படை ஆகிய முப்பெரும் படைகளின் வரலாற்றிலும் அவன் செயல்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருந்தன. இறுதியில் அம் முப்பெரும் படைகளுக்கும் அவனே முதல்வனானான். அதுமட்டுமின்றி, அதனையடுத்து, அவனே பேரரசன் இளஞ்சேரல் இரும்பொறையன் அமைச்சனாகவும், அவன் சமய குருவுக்கு மேம்பட்ட கலையிலறிவும் சமய ஞானமும் படைத்த ஞானசிரியனாகவும் விளங்கினான். வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அவன் ஆற்றலும் புகழும் பெருகின. பேரரசின் உள்ளும் புறமும், பேரரசன் வாழ்விலும் உள்ளத்திலும் அவன் எதிர் வாக்கற்ற செல்வாக்குப் பெற்றிருந்தான். இங்ஙனம் குறைவற்ற நிறைவுடையதாகத் தோன்றிய மையூர் கிழானின் வாழ்வில் எவரும் எதிர்பாராத வகையில் உள்ளூர ஒரு பொத்தல் இருந்தது; அதை அவனுக்கும் உலகுக்கும் நாளடைவில் எடுத்துக்காட்ட உதவினாள் ஒரு நங்கை - அவன் முதுமைக் காதலுக்கு இலக்கான நீலமணி என்ற அழகாரணங்கே அவள்! பேரரசின் ஆணையும் ஆற்றலும் முற்றிலும் சென்றெட்டாத அகமலை நாட்டில், வணங்காமுடி மன்னராக வாழ்ந்த மலையரை யரின் குடியில் பிறந்த நங்கை அவள். இளமையிலேயே அவள் தந்தையை இழந்தாள். தந்தையற்ற அவளுக்கு வானமே தந்தையாயிற்று. தாயும் அவளை நெடுநாள் இருந்து பேணவில்லை. அவளுக்கு மலையே தாயாய் இருந்தது. அத்துடன் இயல்பாக உறவினரின் பாசத்துக்கோ, கட்டுக்கோ அவள் ஆட்படவில்லை. மலையில் திரிந்த மான்களும், மயில்களும், குயில்களுமே அவளுக்கு உறவுகளாயிருந்தன. மான்களிடையே ஒரு தோகை மயிலாக, குயில்களிடையே ஒரு இசைக் குயிலாக அவள் ஓடியாடிப் பாடித் திரிந்தாள். மேகம்போல் அலையாடிய அவள் மென் கூந்தலில் வானத்தின் நீல நிறம் படிந்திருந்தது. அதே நீல நிறம் அவள் நீண்டகன்ற கருவிழிகளில் செறிவுற்றும், அவள் நாடி நரம்புகளில் நெகிழ்வுற்றும் பரந்தோடிற்று. மலைப் பிளவுகளில் நிலவை உண்டு வளர்ந்த சந்தனமரக் கட்டைகளின் சாயல் அவள் உடல் சாயலாயமைந்தது. மெல்லிய வெள்ளி பொன் தகடுகளினூடாக ஒளி வீசும் முத்துப் பவளச் சிலை போல் அவள் காட்சி யளித்தாள். முயலின் செங்குருதியைக் குடித்து அதில் அவள் அளைந்ததின் அடையாளமோ என்று கருதும்படி செவ்வரக்கு நிறம் அவள் வாயிதழ்களிலும், உள்ளங்கை, உள்ளங் கால்களிலும், நகங்களிலும் தோய்ந்து, நாடி நரம்புகளில் பின்னிப் படர்ந் திருந்தது. வான ஒளியும் மலை நிழலும் சேர்ந்து சேலமலைப் பக்கங்கள் உருவாக்கிக் காட்டும் கொல்லிமலைப் பாவையோ என்னும்படி அவள் எழிலரசியாய்க் காட்சியளித்தாள். அவள் ஓடியாடிய மலைகளும் காடுகளும் திடீரென ஒருநாள் மையூர்கிழான் மலைப்படைகளின் வேட்டைக் களங்களாயமைந்தன. அதன் பயனாக மலையரையர் செல்வங்கள் யாவும் சேரப் பேரரசன் திறைப் பொருள்கள் ஆயின. திறைப் பொருளுடன் திறைப் பொருளாக நீலமணியும் பேரரசன் அவைக்குக் கொண்டு வரப்பட்டாள். அத்திறைப் பொருள்களி லிருந்து மையூர்கிழானுக்கு அள்ளி வழங்கப்பெற்ற பரிசுப் பொருள்களிடையிலும் அவள் ஒரு பரிசுப் பொருளானாள். அச்சமயம் அவளுக்கு வயது பன்னிரண்டு. பருவ மெய்தாத விளையாட்டுச் சிறுமியாகவே அவள் காட்சியளித்தாள். ஆனால் மையூர்கிழானோ ஏற்கெனவே நாற்பதும் ஐந்தும் சென்று, இளமைப் பருவமும் நடு வயதும் கடந்து, முதுமையின் வாயிற்படியை எட்டிப் பிடித்திருந்தான். அவன் வீரம் மறைந்து விடவில்லையாயினும், அது காதலாக மலராமலே அறிவின்பால் முதிர்ந்து, சமய ஞானமாகக் கனிவுற்றிருந்தது. அவன் பேரவாக்கள் இப்போது போர்க்கள வெற்றிகளும் ஆட்சிப் புகழும் கடந்து ஐந்தடக்க வெற்றியிலும் பிரமச்சரியத்திலுமே பதிந்திருந்தன. அவற்றுக்கான ஆராய்ச்சிகளிலும் பயிற்சிகளிலுமே அவன் ஆர்வமுடன் ஈடுபட்டிருந்தான். ஆனால் இந்நிலையிலும் எப்படியோ சிறுமி நீலமணியின் வடிவழகும் குறும்பு நடையும் கலகலப்பும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. பறந்து திரியும் பறவைகளுடன் தாமும் பறந்து திரிந்து மகிழ முடியாத மாந்தர், அவற்றைக் கூண்டில் அடைத்து வைத்து மகிழ்கின்றார்களன்றோ? அதுபோல இளமையுணர்ச்சியிலும் இன்பத்திலும் மிதக்க முடியாத - மிதக்க எண்ணாத அவன், அவற்றில் மிதக்க இருந்த அந்த முதிரா இளமையைத் தனதாக்கிக் கூண்டிலடைத்து வைத்து மகிழ எண்ணினான். அவன் குறிப்பறிந்த பேரரசன், அவளை அவனுக்கே மண உறுதி செய்து வைத்தான். சிறு வீடு கட்டி வாழும் வாழ்க்கையன்றி வேறு வீட்டு வாழ்க்கை யறியாத அந்நங்கை ஒரு மாளிகைச் செல்வனின் மனையாட்டி ஆயினாள். காதலைத் துறந்து தவ வாழ்வு மேற்கொண்ட துறவிகள் உண்டு. தவ வாழ்வு மேற்கொண்டு காதலில் சறுக்கி விழுந்து, விசுவாமித்திரர் போல அவதியுற்ற வீரத் துறவிகள் கூட உண்டு. ஆனால் மையூர்கிழான் இவ்விருவகைகளிலும் சேர்ந்தவனல்ல. அவன் காதலில் சறுக்கவில்லை; காதலில் மிதக்க விரும்பவு மில்லை. தவ வாழ்விலேயே கடு நீச்சல் நீந்திச் செல்ல விரும்பினான். அந் நீச்சலிடையே ஆங்காங்கே காலூன்றிக் கொள்ளும் இடமாகவே, காதலைக் கருதினான். அதற்காக ஓர் இள நங்கையின் அழகையும் இளமையையும் பாழாக்குகிறோமே என்ற எண்ணம் தன்னலம் மறவாத அந்தத் துறவிக்கு ஏற்பட வில்லை. தனக்கு வேண்டாத ஒன்றைப் பிறருக்கு இல்லாத தாக்குவதே தனதாக ஆக்குவதென்று அவன் கருதினான். நீலமணி வளர வளர, அவள் அழகு கண்கொள்ளா எழிலொளியாக வளர்ச்சியுற்றது. தனக்கெனக் கட்டிக் காக்கும் அந்த அழகை வேறு எவரும் காண மையூர் கிழான் பொறுப்ப தில்லை. எவரும், பெண்கள்கூட அவளுடன் தொடர்பு கொள்வதை அவன் விரும்பவில்லை. அதற்காகவே மலையரையர் குடியிலிருந்து கொடுமணவல்லி என்ற மாதைத் தேர்ந்தெடுத் திருந்தான். அவள் நீலமணிக்குக் காவலாகவும் துணையாகவும் மட்டும் அமர்த்தப்படவில்லை. மற்றோர் அரிய கடமையும் அவளுக்குத் தரப்பட்டிருந்தது. அவளும் கடமையுணர்ச்சியுடன் அதை நிறைவேற்றினாள். “மையூர்கிழான் தேடக் கிடைக்காத பேரரசின் பெருஞ்செல்வம். ஆனால் அவனே உன் கணவன். உன் அன்புக்காக அவன் ஏங்கிக் கிடக்கிறான். நாடு அவன் கையில்; ஆனால் நீயே அவன் அன்புக்குரிய உயிர்க்கூடு. உலகம் அவன் காலடியில்; ஆனால் நீயே அவன் நெற்றியின் நறுமணத் திலகம். உனக்காக அவன் செய்யாத தியாகம் இல்லை; படாத பாடில்லை. அவனை ஆர்வமாகக் காதலிப்பது உன் கடமை. அவனுக்கென்றே வாழ்வது, அவனுக்குரிய நன்மனைவியாய் அவன் மனம் கோணாமல் நடப்பது உனக்குப் பெருமை தரும்” - இவை நீலமணியின் காதில் அவள் ஓயாது ஓதிவந்த போதனையாய் அமைந்தது. பாவம்! காடும் மலையும் அலைந்து திரிந்த பறவை அவள். அவளுக்கு நாடே ஒரு சிறையாகத்தான் தோன்றிற்று. அரண்மனையோ சொல்ல வேண்டியதில்லை. அது அவளுக்குச் சிறைக் கோட்டத்துக்குள்ளும் ஒரு சிறைக் கோட்டமாக அமைந்தது. அவள் கடமை உணர்ச்சியில் தவறவில்லை. ஆனால், அவள் பழைய கலகலப்பு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அவள் சூது வாதற்ற உள்ளம் உடையவள். அன்பு கனிந்த இதயம் கொண்டவள். தன் ஒரே கூட்டாளியாக அமைந்த கொடுமணவல்லியிடம் இயல்பாக மிகுந்த பாசமும் நேசமும் காட்டினாள். அவள் கூறியபடி மையூர்கிழானிடம் மதிப்பும் பாசமும் கொள்ள அவனைக் காதலித்து அவனை மகிழ்விக்க அவள் மனமார முயற்சி செய்தாள். ஆனால் காதல் என்பது இன்னது என்று அறியாத நிலையில் அவனிடம் அவள் அச்சமும் திகிலுமே கொள்ள முடிந்தது! அதனால் அவள் காதல் முயற்சிகள் காண்பவர்க்கு நகைப்பிற்குரியவையாகவும் இரக்கத்துக்குரியவையாகவும் அமைந்தன. அவனும் அவள் அழகைப் பருகினானேயன்றி, காதலை வேறெந்த வகையிலும் எதிர்பார்க்கவில்லை. இளமையிலேயே காதலையறியாத அவன் முதுமையில் காதலிக்கும் ஆற்றலையே இழந்திருந்தான். குற்றேவலையே அவன் காதலாகக் கருதியிருந்தான். கூண்டுக்கிளி கூண்டுப் பழத்தையே கொம்புப் பழமாகக் கொத்தி வாழ்ந்தது! கூண்டையே வானமாகக் கொண்டு அதற்குள் தத்தித் தவழ்ந்தது! நீலமணியின் வாழ்வு இவ்வாறே சென்றிருந்தால், அவள் என்றும் காதல் புகாக் கோட்டைக்குள்ளே காதலறியாக் காரிகையாகவே காலம் கழித்திருத்தல் கூடும். ஆனால் அத்தகைய போலிக் குடும்ப வாழ்விலிருந்து அவள் அழகே அவளைக் காத்தது. அது அவள் வருங்கால வாழ்வின் விதையை யாரும் எதிர்பாராத முறையில் புனைமாண் குடுமி என்ற ஓர் இளைஞன் உள்ளத்தில் விதைத்துவிட்டது. அந்த விதை விரைவில் பெரிய மரமாக வளர்ந்து கோட்டை மதில் தாவிக் கிளை பரப்பிற்று. வெளியுலகிலிருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்பட்டிருந்த அவள் காதலுக்குத் தாவ அந்தக் கிளை பயன்பட்டது. அவன் ஆணழகன், பூவிரியும் காவிரி நாட்டுச் செம்மல். அவன் தந்தை சேரர் தலைநகராகிய வஞ்சியிலேயே சோழர் தனி மாளிகையின் தலைவராயிருந்தவர். தந்தை இறந்த பின்னும் அந்நகரிலேயே வாழ்ந்த முதியவளான தன் அத்தை வீட்டில் அவன் தங்கியிருந்தான். தந்தையின் பதவியுரிமையால் அவன் அவ்வப்போது மையூர்கிழான் மாளிகைக்குச் செல்வதுண்டு. நீலமணிக்கு அம்மாளிகையில் இருந்த கட்டுப்பாட்டின் அளவே அவளைப் பற்றிய ஆர்வத்தை முதலில் அவன் உள்ளத்தில் தூண்டிற்று. அவள் இள வயதையும், சூது வாதற்ற வெள்ளை யுள்ளத்தையும் பற்றிக் கேள்விப்பட்டபோது, அவனுக்கு அவளைக் காணும் ஆர்வமும் எழுந்தது. அவளைக் காண்பதென்பது புனைமாண்குடுமிக்கு எளிதாயில்லை. ஏனெனில் நீலமணி பருவ இளமையை அணுகுந் தோறும், அவள் சிறைக் கோட்டத்தில் கட்டுப்பாடுகளும் பெருகின. அவளை யாராவது தற்செயலாகக் காண நேர்ந்தாலும் திட்டமிட்டுக் காண முயன்றதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். அவளுடன் தொலையுறவுடையவர்களாய எவருமே வஞ்சிமாநகர் எல்லையை அணுகாதபடி தொலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். ஆனால் அவளைக் காண முடியாத ஏமாற்ற நிலை புனைமாண்குடுமியின் வகையில் காணும் ஆர்வத்தைப் பன்மடங்கு வளர்த்ததே தவிர, சிறிதும் தளர்த்திவிடவில்லை. அவள் போக்கு வரவுகள் பற்றியும், சூழல்கள் பற்றியும் உளவறிந்து, அம்மாளிகையையே நிழல் போலச் சுற்றிக் கொண்டிருந்தான் அவன். ஆண்டுகள் ஒன்றிரண்டு சென்றன. நீலமணி, கொடு மணவல்லியையும் ஒரு சில பாங்கியரையும் தவிர, வேறு வெளியார் எவரையும் பார்க்கவில்லை. பார்க்க முனையவு மில்லை. யாரும் தன்னைக் காண விரும்புவதாகவோ கண்ட தாகவோ கூட அவளுக்குத் தெரியாது. ஆயினும் விடா முயற்சியின் பயனாகப் புனைமாண்குடுமி தொலைவிலிருந்தும், ஓரளவு அருகில் ஒதுங்கி நின்றும், பல இடங்களில் பதுங்கிப் பல கோணங்களிலிருந்தும் அவள் அழகை அடிக்கடி அள்ளி அள்ளிப் பருகியிருந்தான். நல்ல காலமாக ஒரு தடவைகூட அவனை அச்செயலில் எவரும் காணவில்லை. கண்டிருந்தால் அவனது ஒரு திசைக் காதல் அந்த ஒரு திசையில்கூட இல்லாமல் அழிக்கப்பட்டே விட்டிருக்கும். நீலமணியைக் காணப் புனைமாண்குடுமி எடுத்துக் கொண்ட அருமுயற்சிகள் ஒன்றல்ல; பல; ஒரு வகையிலல்ல; பல வகையில். அவன் இயல்பான கட்டமைந்த உடல் உடையவன். அதைப் பயன்படுத்தி அடிக்கடி பெண் வேடத்தில் உலவினான். பூ தேவையாக இருந்த காலத்தில் பூ வாணிச்சியாகவும், வெற்றிலைப் பழங்கள் தேவையான காலத்தில் அத்தகைய பொருள் விற்கும் பெண்டிராகவும் உருக்கொண்டு சென்றான். நீலமணியின் பேரழகைக் காணும் தோறும் பரிவு அடக்க முடியாக் காதலாயிற்று. சூது வாதறியா அந்தப் பெண்ணை ஒரு கொடுங்கோலன் சிறைப்படுத்தி ஆட்கொள்வதா என்ற கடுஞ் சினம் அவனுக்கு ஏற்பட்டது. எப்படியாவது அவளைச் சிறைக் கடத்தி, மையூர்கிழானின் தொடர்பறுத்து, அவளைத் தானே பெறுவதென்று அவன் திட்டமிட்டான். அவனிடம் உயிரே வைத்திருந்த அத்தையான காதம்பரியிடமும் அவன் பக்குவமாக யாவும் கூறி அவள் ஒத்துழைப்பையும் ஒருவாறு பெற்றான். ஆனால் இருவர் ஒன்றுபட்ட முயற்சியால்கூட, அவளைக் காணவும் போக்கு வரவுகள் அறியவும் முடிந்ததேயன்றி, அவளுடன் பேசவோ, அவள் உள்ளம் அறியவோ முடியவில்லை. ஒருநாள் ஆடலணங்குகள் மையூர்கிழான் மாளிகையின் கொலு மண்டபத்தில் ஆடிய சமயம், அவன் அவளை வாய்ப்பாக அருகிலிருந்து காண நேர்ந்தது. அவள் மையூர் கிழானிடம் கொண்ட பற்று முற்றிலும் அச்சமும் திகிலுமேயன்றி வேறல்ல என்பதை அந்தக் காட்சி காட்டிற்று. ஏனென்றால், இயல்பாக ஆடலணங்குகளின் கலையில் ஈடுபட்டு ஆடவேண்டிய அவள் கண்கள், அவர்கள் முகத்திற்கும் மையூர்கிழான் காலடிக்கும் இடையே ஊசலாடி, புலியருகே இருந்த புள்ளிமான்போல் மருண்டு மருண்டு கலவரமடைந்ததை அவன் கண்டு கொண்டான். அதே நாள் அவன் ஆணுருவிலேயே ஏவலரில் ஒருவன் போல உள்ளறைகளை அடுத்த கூடத்தில் உலவிக் கொண்டிருந்தான். கூடத்திலிருந்து பார்த்தால் தெரியும்படி ஒரு நிலைக் கண்ணாடி சுவரில் பதிக்கப்பட்டிருந்தது. அதன் முன் நின்று, தன்னைச் சீர்திருத்திக் கொண்டிருந்த நீலமணி, தற்செயலாக புனைமாண்குடுமியின் அழகு வடிவைக் கண்ணாடியில் கண்டாள். அவள் எழிலுருவை அதே சமயம் அவனும் கண்டான். காவலும் கட்டும் இல்லாத அந்தச் சூழலில், நிழலுருவின் மூலம் இருவரும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணமே நின்றார்கள். ஓர் இளைஞன் கட்டமைந்த வடிவழகை அவள் உற்று நோக்கியது அதுதான் முதல் தடவை. அவளால் கண்களைக் கண்ணாடியின் திசையிலிருந்து அகற்ற முடிய வில்லை. அவள் உள்ளம் போக எழுந்தது. ஆனால் உடல் எழ மறுத்தது. நாணம் அவளைக் கொன்றது. கண்ணாடி முன்னும் அவள் முகம் சிவந்தது. அவள் நாடி நரம்புகளில் இன்னதென்றறிய முடியாத ஒரு புத்துணர்ச்சி பெருக்கெடுத்தோடிற்று. அவள் கைகள் அவளையும் மீறி அந்நிழலுருவைப் பற்ற முனைந்தன. அவன் யார் என்றறியாமலே, அவன் மூலம் இளமையின் துடிப்பைத் தன்னுள் உணர்ந்தாள் நீலமணி. அவனும் இந்நிகழ்ச்சி யால் அவள் உள்ளுயிரின் இயல்பை - அவள் மேற்கொண்ட வெற்று வாழ்வின் கொடுமையை நன்கு உணர்ந்தான். அவளை அடைய அவன் முன்னிலும் கடுந்துணிவு கொண்டான். அவன் காதலுக்கு அன்றுமுதல் இறகு முளைத்தது. ஆனால் சிறைக் கோட்டை இதற்கு மேல் எத்தகைய வாய்ப்பும் அளிக்கவில்லை. ஏவலர், பணிப் பெண்கள் பலரின் துணையை அவன் நாடினான். அவர்களில் பலர் நீலமணியின் நிலைக்கு இரங்கியவர்களே. பலர் புனைமாண்குடுமியின் நிலை கண்டு துடித்தார்கள். ஆனால், எவரும் ஆபத்து நிறைந்த அப்பணியில் ஈடுபட அஞ்சினார்கள். நீலமணியை அணுகவே யாருக்கும் துணிவு பிறக்கவில்லை. புனைமாண் குடுமி நேரே கொடுமண வல்லியைக் காண முயன்றான். ஆனால் கடமை, அச்சம் ஆகிய இரு சிறைகளுக்குள் அவள் பூட்டப்பட்டிருந்தாள். முதலில் அவன் மீது சீறி விழுந்தாள். பின் அச்சுறுத்தினாள். எச்சரித்துப் பேசினாள். இறுதியில் தானே அச்செய்திக்குச் செவி சாய்க்க அஞ்சுவதாகக் கூறிவிட்டுத் திரும்பிப் பாராது ஓடினாள். அவன் இப்போது நம்பிக்கை இழந்தான். நீலமணியைக் காணக்கூட வெளியேறாது படுக்கையில் சென்று விழுந்தான். அவன் உடலெல்லாம் கொதிப்பேறிற்று. நாள் கணக்காக - வாரக் கணக்காக அவன் நோய்வாய்ப்பட்டுப் புரண்டு துடித்தான். அவனுடைய அத்தை காதம்பரி அவன் நிலையுணர்ந்து தன்னாலியன்ற மட்டும் தேற்றினாள். எப்படியும் நீலமணியை மீட்டுத் தருவதாக அவனிடம் வாக்களித்து அவனுக்கு அரை உயிர் வரும்படிச் செய்தாள். அவள் கூறியபடி செய்வதாகத் தெரிவித்து அவனும் தன்னைத் தானே ஆற்றியிருந்தான். ஒரு நாள் காடை கவுதாரி விற்கும் குறப்பெண் ஒருத்தி காதம்பரியிடம் வந்தாள். காதம்பரி நல்ல விலை கொடுத்துப் பறவைகள் பல வாங்கினாள். நாள்தோறும் வரும்படி அழைப்பு விடுத்து அவளுடன் நெருக்கமான பழக்கம் ஏற்படுத்திக் கொண்டாள். பின் மருமகனைக் கொண்டு நீலமணிக்கு ஒரு கடிதம் எழுதுவித்து அதை அவள் மூலமே நீலமணிக்கு அனுப்பத் துணிந்தாள். ஆனால் கடிதம் யார் எழுதியது என்று மட்டும் அவன் தெளிவாகக் குறிக்கவில்லை. “கண்ணாடியில் நீ கண்ட நிழலுரு” என்று மட்டும் கையொப்பமிட்டிருந்தான். ஆடவர் எவரும் இல்லாமல் அவள் தனியாய் இருக்கும் சமயம் பார்த்துத் தரும்படி குறப் பெண்ணுக்கு எச்சரிக்கை தந்தாள் காதம்பரி. நீலமணி நிலைக் கண்ணாடியின் முன்னரே கவலையுடன் நிற்பதைக் குறப்பெண் கண்டாள். அவள் கண்களில் நீலமணி தனியாய் இருப்பதாகவே தோன்றிற்று. அவள் மெல்ல உள்ளே சென்று நீலமணியைப் புகழ்ந்து பேசினாள். பேச்சினிடையே, “கண்ணாடியில் நிழலுருவாக நீ கண்ட இளைஞன் கொடுத்த கடிதம் இது” என்று கூறி முடங்கலை நீட்டினாள். மற்ற எந்தச் சமயத்திலும் நீலமணி இத்தகைய எதையும் கை நீட்டி வாங்கியிருக்க மாட்டாள். ஆனால் அன்று ஏற்கனவே கண்ணாடியின் நிழலுரு அவள் உள்ளத்தில் தோன்றி அவளைக் குழப்பம் அடையச் செய்திருந்தது. அவள் இன்னது செய்கிறோம் என்று அறியாமல் முடங்கலைக் கையில் வாங்கி, அதனுடன் விளையாடிக் கொண்டிருந்து விட்டாள். அருகேயிருந்த மற்றொரு நிலைக் கண்ணாடியின் முன் தான் மையூர்கிழான் ஆடை திருத்திக் கொண்டிருந்தான். குறப்பெண் கூறிய சொற்கள் கூரிய ஈட்டி போல அவன் செவிகளில் பாய்ந்தன. நீலமணி முடங்கலைக் கைப்பற்றி துணிவுடன் அதை வைத்து விளையாடுவது கண்டதும் அவன் சீற்றம் பெரிதாயிற்று. உடல் தளர்வுற்ற பின் முதல் தடவையாக அவன் பழைய வீரத் துடிப்பு அவனை உள் நின்று தூண்டிற்று. அவன் சரேலென வந்து நீலமணியை எட்டி உதைத்தான். செய்தி இன்னதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த குறப்பெண்ணைப் பிடித்தாட்டிக் கழுத்தை நெரித்தான். அவள் வீறிட்டுக் கதறக்கூட நேரமில்லாமல் அப் பிடியில் குற்றுயிராய் உணர்விழந்தாள். அவள் உயிரிழந்துவிட்டாள் என்ற எண்ணத்துடன் மையூர்கிழான் ஒரு சிறிது கோபம் மாறி, நீலமணியிடமிருந்து பறித்த முடங்கலுடன் தன்னறை சென்றான். முடங்கலை வாசித்ததும் மையூர்கிழானிடம் பாதி ஆறியிருந்த கோபம் மறுபடியும் பன்மடங்காகச் சீறி எழுந்தது. “மலையிடையே பிறந்த அழகு மாணிக்கமே! ஆண்டுக் கணக்காக உன் பொன்னெழில் என்னை வாட்டுகிறது. கண்ணாடியில் உன் புற அழகை மட்டுமன்றி அகத் துயரும் நன்கு அறிந்தேன். அதுநாள் முதல் உன்னைச் சிறைப்படுத்தி வைத்துள்ள “பூதத்”திடமிருந்து உன்னை விடுவிக்க அரும்பாடு பட்டு வருகிறேன். அந்நாள் விரைவில் வரும். அதுவரை ஆற்றியிரு. என்றும் உன்....... கண்ணாடியில் கண்ட நிழலுரு” என்று புனை மாண்குடுமி அதில் எழுதியிருந்தான். அறிவாராய்ச்சி, ஐந்தடக்கப் பயிற்சி, பிரமச்சரிய நோன்புகள் ஆகிய எல்லாம் மையூர்கிழானின் கடுஞ் சீற்றத்துடன் சீற்றமாய் எழுந்தன. அவன் முடங்கலை வாசிக்கு முன் குறப்பெண் எழுந்தோடியிருநதாள். அவன் ஏவலர் காவலர்களை ஆரவாரமாகக் கூவியழைத்து, அவள் எங்கிருந்தாலும் துருவித் தேடிப் பிடிக்கும்படி கட்டளையிட்டான். நீலமணியையும் கொடுமணவல்லியையும் மாளிகையின் கொலு மண்டபத்துக்கே இட்டுச் சென்று, குற்றவாளிக் கூண்டிலேற்றி, விசாரணை தொடங்கினான். முடங்கலை யாவரும் அறிய வாசித்துக் காட்டி, அதை அனுப்பியவன் யார் என்று கேட்டுக் கேட்டு, இருவரையும் பலவகைத் தண்டனைக்கு ஆளாக்கினான். குறப் பெண் பிடிபட்டாள். சிறையில் அவள் நகக் கண்களில் ஊசி ஏற்றப்பட்டது. முடங்கலைக் கொடுத்தவன் யார் என்று கூறும்படிச் செய்யக் காவலர் தம் வித்தைகள் யாவும் காட்டினர். ஆனால் குறப் பெண் இதற்குள் நிலைமையை முற்றிலும் புரிந்துகொண்டு விட்டாள். உயிர் கொடுத்தும் மலை நங்கையின் மானத்தையும் தன்னை நம்பிய குடும்பத்தின் மதிப்பையும் காப்பதென்று அவள் துணிவு கொண்டாள். அவள் இரகசியம் அவளுடனேயே ஆவியாக அவள் உடலைவிட்டு வெளியேறிற்று. மையூர்கிழானின் அடக்கு முறைகளுக்கு ஒரே ஒரு பலன்தான் ஏற்பட்டது. கடமைக் கோட்டைக்குள் இருந்த கொடுமணவல்லியின் நெஞ்சத்தை அது சுட்டது. காவலரிடம் அவள் நீலமணியின் வாழ்க்கைக் கடுமையை முற்றிலும் எடுத்துரைத்து, யாரோ எழுதிய முடங்கலுக்காக தீங்கறியாத அவளைத் துன்புறுத்துவது தகாதென வாதாடினாள். ஆனால் இந்த நற் செயலுக்கு அவள் அடைந்த பலன் நாக்குத் துண்டிக்கப்படுவதாகவே முடிந்தது. மையூர்கிழானின் உள்ளம் இப்போது ஒரு புயலாயிற்று. ஐயப் பேய் இப்போது அவன் உள்ளத்தின் கற்பனையைத் தூண்டிவிட்டது. நீலமணியின் தவறை அது பலபடியாகப் பெருக்கிக் காட்டிற்று. இன்னும் சூதுவாது தெரியாதவளாகவே இருந்த நீலமணி நடந்தவை யாவற்றையும் தனக்குத் தெரிந்த அளவு முழுதும் எடுத்துரைத்தாள். ஆனால் மையூர்கிழான் அவற்றை ஒரு சிறிதும் நம்பவில்லை. சூதுவாதற்றவளாக நடித்துத் தன்னை நெடுநாள் ஏய்த்து வந்த கள்ளி என்று அவளை அவன் கருதினான். தாய் தந்தையற்றவள், உற்றார் உறவினர் அற்றவள் என்ற இரக்கம் ஒரு சிறிதுகூட அவனுக்கு ஏற்படவில்லை. அவளைத் தன் மலைக்கோட்டைக்கே இட்டுச் சென்று தூக்கிலிட்டு, அவளுடலைப் புலிகளுக்கு இரையாக்கி விடும்படிக் காவலர்க்குக் கட்டளையிட்டான். நீலமணியின் அலறல்கள் கேட்டு மலை இரங்கிற்று. மரங்கள் இரங்கின. தூக்கிடக் காத்து நின்ற காவலர்கள் கூட மனங் கலங்கினர். ஆனாலும் கடைசி நேர உத்தரவுக்காகவே அனைவரும் காத்து நின்றனர். முகமூடியிட்ட ஓர் உருவம் அவ்வுத்தரவைக் கொண்டு வந்தது. “இது கொண்டுவரும் ஆள் பலரறிய அச்சண்டாளியைத் தூக்கிலிடட்டும்! அவள் உடலையும் இவனிடமே ஒப்படைத்து, நள்ளிரவில் புலிவாழ்காட்டுக்கு அனுப்புக!” என்ற உத்தரவில் எழுதியிருந்தது. காவலர் அவனை உள்ளே விட்டனர். அவன் அவளைத் தூக்குமேடை ஏற்றினான். அன்றிரவே அவள் உடலுடன் அவன் வெளியேறினான். தன் வாழ்வு அன்றுடன் முடிந்துவிட்டதாகவே நீலமணி எண்ணியிருந்தாள். ஆனால் அது அவ்வாறு முடியவில்லை. முகமூடியிட்டு அவளைத் தூக்கிட வந்தவன் உண்மையில் புனைமாண்குடுமியே! அவன் முகமூடியுடன் புறப்பட்டு மையூர்கிழான் அனுப்பிய தூதனை வழியிலே மடக்கித் துரத்திவிட்டு, தானே தூதனாக வந்தான். தூக்குக் கயிற்றுக்கு அவன் சுருக்குப் போடவில்லை, கடு முடிச்சிட்டு, கயிற்றில் பஞ்சுப் பொதிகள் சுற்றியிருந்தான். நீலமணியைத் தூக்கேற்றுமுன் அவள் கழுத்திலும் திண்ணியதோர் பட்டையிட்டு, அவளை மயக்க மருந்திட்டு உணர்விழக்கச் செய்திருந்தான். இவ்வகை முறைகளால், உயிர் போன உடலென்று உயிருடனேயே அவளை அவன் நள்ளிரவில் வெளியேற்றிச் சென்றான். தப்பியோடிய தூதனால் மையூர்கிழானுக்குத் தன் தண்டனை பற்றிய ஐயம் மறுநாளே ஏற்பட்டது. அவன் அத்தூதனைத் தூக்கிலிட்டான். காவலர் ஏவலர்களையெல்லாம் வாயில் வந்தபடி திட்டி, கைக்கு வந்தபடி தானே சென்று புடைத்தான். தன் ஆடையணிகளைத் தானே கிழித்துக் கொண்டு தன் மதிப்பையும் மானத்தையும் மறந்து தெருத் தெருவாகச் சுற்றினான். பேரரசன் முதல் பேரரசப் பணியாளர் அனைவரும் கண்டு கலங்கும் வகையில் வீரனாக, அமைச்சனாக விளங்கிய அப்பெருமகன் பித்தனானான். மாளிகை பாழடைந்தது. அவன் உறவினர் தம் நிலையிழந்து தவித்தனர். வஞ்சிமாநகரே ஒளியிழந்தது. அவன் அதன் தெருக்களிலும் சுற்றுப்புறங்களிலும் ‘பேய்’ போலச் சுற்றினான். நகரடுத்த ஒரு சிற்றூரில் ஒரு நாள் நீலமணியை - அல்லது நீலமணி போன்ற ஒரு வடிவழகியை அவன் கண்டான். அவளருகே ஒரு வாலிபன் அவளுடன் கொஞ்சிக் குலவிய வண்ணம் பாசத்துடன் பழகினான். அவள் வயிறு பெருத்திருந்தது. இருவரைச் சுற்றிலும் அன்பும் ஆதரவும் கனிவுற்றிருந்தன. ஆனால் கோர வறுமையின் பிடியிலேயே இருவரும் இருந்தனர். “நீலமணி! நீயா? என்னை விட்டுவிட்டா சென்றாய்? ஏன் இந்த வறுமை? வா, உன் கணவன் நான்தானே, வா! மீண்டும் பட்டாடை, பகட்டான துணிமணி தருகிறேன், வா! நீ சாகாதிருந்ததற்கு மகிழ்கிறேன். அவனையும் மன்னிக்கிறேன், வா!” என்று பித்தன் பிதற்றினான். நீலமணி நடுநடுங்கினாள். ஆனால் அருகில் நின்ற புனைமாண்குடுமி அவளை அருகிழுத்து அணைத்துக் கொண்டான். “அஞ்சாதே, நீலமணி! உன் கணவன் நான் இருக்கிறேன். என் வறுமையின் சின்னம் உன் வயிற்றில் இருக்கிறது. இப்போது இவனுக்கு அஞ்சவேண்டாம். இரக்கப்படு. இவன் முன்னாள் கணவன்; கொடுங்கோலன்; இந்நாள் தந்தை; இரங்கத்தக்க பைத்தியம்! இவனையும் நம் வறுமையில் பங்கு கொள்ள வைத்து ஆதரிப்போம்!” என்றான். மையூர்கிழானை அதன் பின் வஞ்சிமாநகர் அறிந்ததில்லை. ஆனால் ஒரு வஞ்சிக் கொடியின் பின்னால், “தாத்தா, தாத்தா!” என்று தாடியைப் பிடித்திழுக்கும் ஒரு சிறுவனை ஏந்திக்கொண்டு, கண்ணீரால் அச்சிறுவன் முகத்தை நனைத்தவாறே பித்தம் தெளிந்த ஒரு முதியவன் வஞ்சிமாநகரை அடுத்த சிற்றூரில் உலவினான். அவன்தான் மையூர்கிழான் - அவன் பெயரே நீலமணியும் புனைமாண்குடுமியும் பெற்றெடுத்த செல்வத்துக்கும் இடப்பட்டது. பழைய மையூர்கிழானின் புகழின் ஒரு சிறு பதிப்பாக - ஆனால் அப்புகழில் மறைந்திருந்த உள்ளார்ந்த பொத்தல் இல்லாமல் அச்சிறுவன் வளர்ந்து வந்தான். 3. செங்காந்தள் கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் காஞ்சி முதல் கள்ளிக்கோட்டை வரையுள்ள தெற்குக் கடற்கரை முழுவதும் போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தில் இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக மன்னர், அவர்கள் ஆதிக்கத்தை ஒழித்தனர். அந்தக் காலத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை இது. திருவனந்தபுரத்திலிருந்து குமரி முனை செல்லும் நெடும்பாட்டையின் அருகே, குமரக் கோட்டம் என்னும் ஒரு மலை உண்டு. பாட்டையில் செல்லும் எவரையும், அதன் இயற்கை அழகமைதி கவராமலிராது. மலையடிவாரத்தைச் சூழ்ந்து, பாட்டையின் இரு மருங்கும் பரந்துள்ள பசுங்கழனிகள், மலைநங்கை உடுத்தாடும் பச்சைப் பட்டுப் பாவாடைபோல் அலையாடி நிற்கும். மலையின் சரிவில் கீழிருந்து பார்ப்பவருக்கு, மலைநங்கை மடி விரித்ததுபோல் தோன்றும் ஒரு ஏரி உண்டு. ஏரியின் கரையில் அமைந்துள்ள கோயில், மலைநங்கை மடியேந்திய குழந்தை போலக் காட்சியளிக்கும். ஏரிக்கரையிலே புலர்காலையிலே வந்து குளிக்கும் சேரநாட்டு நங்கையரும், நம்பியரும் கொடி போல் உலரவிட்டிருக்கும் அவர்களது கலப்பற்ற தூய வெள்ளாடைகளும் இக்காட்சியின் அழகுக்கு அழகு செய்து நிற்கும். பாட்டையில் நடந்தவாறே இந்தக் கண் கொள்ளா எழிலைப் பருகிக்கொண்டு வந்தான் மருதவாணன். ‘ஆ! இதுவா செபசித்தியோன் பிறப்பிடம், எவ்வளவு கவர்ச்சிகரமான சூழலில் பிறந்திருக்கிறான் அவன்?’ என்று அவன் தனக்குள் முனகிக் கொண்டான். மருதவாணனும் செபசித்தியோனும் ஒருங்கே கோட்டாற்றுக் கலைக் கல்லூரியில் படித்தவர்கள். செப சித்தியோன் பிறப்பால் தமிழனே. ஆயினும், போர்ச்சுகீசியர் ஆதிக்கம் பெரிதாயிருந்த காலத்தில், அவன் முன்னோர்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். இதனால் அவன் பெயரும் போர்ச்சுகீசியப் பெயராய் அமைந்திருந்தது. கல்லூரி திறக்கும் சமயம், தன் பிறப்பிடமாகிய கரமனையிலிருந்து புறப்பட்ட மருதவாணன், தன் நண்பன் அழைப்பை ஏற்று, அங்கே ஒன்றிரண்டு நாள் தங்க ஒத்துக்கொண்டிருந்தான். ஒத்துக் கொள்ளும்போது நண்பனை மட்டுமே எண்ணியிருந்தான். அவன் ஊரின் அழகு பற்றி எண்ணவில்லை. ஆகவே இப்போது ஒத்துக்கொண்டது பற்றிப் பெருமகிழ்ச்சியடைந்தான். காண்பதற்கு மலைமேலுள்ள ஊர் களிப்பைத் தந்தாலும், அவ்வளவு உயரம் வளைந்து வளைந்து செல்லும் ஒடுங்கிய பாதையைக் கண்டபோது அவன் இதில் எப்படி ஏறிச் செல்வது என்று மலைப்பே அடைந்தான். ஆனால் அதை எதிர்பார்த்தவன் போலச் செபசித்தியோன் அடிவாரத்தருகில் ஒருசிறு கட்டை வண்டியுடன் காத்திருந்தான். மருதவாணனை மட்டுமின்றி, அவன் பழக்கவழக்கங்கள், விருப்பு வெறுப்புகளைக்கூட செபசித்தியோன் பெற்றோர் அறிந்திருந்தனர். அவனுக்குப் பிடித்தமான பொருள்கள் தேர்ந்தெடுத்துச் சித்தம் செய்யப்பட்டிருந்தன. அவன் தன் வீட்டில் தங்குவது போலவே, இயல்பாக அங்கே பழகித் தங்கினான். கீழிருந்து பார்க்கும்போது மலை ஒரே மலையாகத் தோன்றினாலும், மேலே செல்லச் செல்ல, சிறிதும் பெரிதுமாக முன்பின்னாகப் பல முகடுகளும், அகன்ற பள்ளத்தாக்குகளும், மேடு பள்ளங்களும் இருந்தன. எல்லா இடங்களையும் நன்கு கண்டு பழகிய செபசித்தியோன், அவனை அதன் தொலை யிடங்கள், உள்ளிடங்களுக்கெல்லாம் இட்டுச் சென்று காட்டினான். பாழடைந்த பண்டைக்காலப் புத்த, சமணப் பள்ளிகளின் தடங்கள் ஆங்காங்கே தெரிந்தன. ஆனால் போர்ச்சுகீசியர் காலத்துக் கோயில்களும், மடங்களும், கட்டிடங்களும், ஆதிக்கமிழந்த போர்ச்சுகீசிய வெள்ளையர் வாழ்ந்த குடியிருப்புகளும் கிட்டத்தட்ட நல்ல நிலையிலேயே இருந்தன. தம் ஆட்சி ஆதிக்கம் குறைந்த பின்னும் தம் உயர்வு மனப்பான்மையையும், அதற்குரிய மெருகு மினுக்குகளையும் விடாத அவ்வெள்ளையரை - சிறப்பாக வெள்ளை நங்கையரைக் காண அவனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. மடத்தின் தலைவர் வெள்ளையரானாலும் செபசித்தி யோனை நன்கறிந்தவர். அவர், இருவருக்கும் தட்டப்பம், மலைக் கனிகள், தேன், தினைமா முதலியன அளித்து அன்பாதரவு காட்டினார். அது மிகப் பெரிய மடமாக இருந்ததென்பதற்கு அதன் பெரிய கட்டிடங்கள் சான்றளித்தன. ஆனால் அதன் ஒரு சிறு பகுதி மட்டுமே மடத் தலைவரின் கீழ்ச் செயல்பட்டது. ஒரு சில கூடங்களும், அறைகளும் பாழடையாமல் மடத் தலைவரால் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டோ, கவனிக்கப்பட்டோ வந்ததாகத் தெரிந்தன. மீந்த பகுதிகள் பாழடைந்தவை அல்லது பாழடையும் நிலைக்குச் சென்று கொண்டிருந்தவை என்று தோன்றின. மடத் தலைவர் மேற்பார்வையிலிருந்த ஒரு பெரும்பகுதி, மாளிகை போலச் சிங்காரிக்கப்பட்டிருந்தது. அதன் வாயில்களின் முன்னுள்ள தட்டிகளும், கதவு பலகணிகளுக்கு இட்டிருந்த வண்ணப் பூத்திரைகளும் அதில் வாழ்ந்தவரின் இனம், பண்பு, தரம் ஆகியவற்றை உரக்கக் கூறி நின்றன. சமயச் சார்பற்று ஒதுங்கி இன்ப வாழ்வே வாழ்ந்த ஒரு வெள்ளையர் குடும்பத்துக்குரிய இடமாய் அது இருந்தது. நண்பர் அவ்விடத்தின் உயர்வைக் கவனித்தது கண்டு, தலைவர் ஆர்வத்துடன் விளக்கம் தந்தார். “இந்த மடத்துக்குப் பெருஞ்செல்வம் அளித்த ஒரு உயர்குடி வெள்ளையரின் வீடு இது. அவர் நாஞ்சில் படைத் துறையில் உயர் பணியில் இருந்தவர். அக்குடும்பத்தை இங்கே நாங்களெல்லாம் செஞ்ஞாயிற்றுக்குடி என்று கூறுவது வழக்கம். உண்மையில் ‘செஞ்ஞாயிற்று’ என்பது உயர்குடி நங்கை என்ற பொருளுடைய ‘செஞாரிட்டா’ என்ற போர்ச்சுக்கீசியச் சொல்லின் தமிழாக்கமே. இப்போது குடும்பத்தின் பொருள் நிலை ஒரு சிறிது குறைந்தாலும், மடத்தின் ஆட்சியாளர் அவர்களைத் தனிப்பட மதித்து நடக்கும்படி எனக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். அவர்களுடன் பழகிய பின் நானும் அவர்களை மிக உயர்வாக மதிக்கிறேன்” என்றார் அவர். “இங்கே ஒரு நாள் தங்கி, என் பழம் பாடங்களை முடிக்கிறேனே!” என்றான் மருதவாணன். நண்பனின் திடீர் முடிவு, செபசித்தியோனுக்கு வியப்பளித்தது. “என்ன இந்த இடத்தில் இப்படித் திடீர்க் காதல்?” என்றான். மருதவாணன் உண்மையில் ஒரு புத்தகப் புழுவாய்க் காலம் கழித்தவன். மாணவரிடையேகூடக் கலகலப்பாகப் பழகுபவன் அல்ல. ஆனால் செபசித்தியோனோ கோட்டாற்றுக் கடை வீதியாகிய கம்பள முதல் கால்வாய்க் கரைவரை எல்லா இடத்திலும், எல்லா வகையினருடனும் ஆரவாரமாகப் பழகி ஆர்ப்பரிப்பவன். மருதவாணனின் புத்தார்வம் செபசித்தி யோனுக்கு வியப்பளித்ததற்கு இதுவே காரணம். ஆனால் தற்காலிகமாக மருதவாணன் அதற்கு ஒரு விளக்கம் தந்தான். “அதோ பார், செபாசு! அந்த மலை முக்கு யானையின் துதிக்கை போல எவ்வளவு சொகுசாக வளைந்திருக்கிறது! அதன் மீது இந்த நண்பகலில் பறவைகள் பறப்பது எவ்வளவோ ஒய்யாரமாய் இருக்கிறது! காலையில், மாலையில் அல்லது நிலவில் பார்த்தால் என்ன அலங்காரக் காட்சியாய் இராது!” என்றான் அவன். “சரி சரி, நண்பகல் காட்சி போதாது. காலை, மாலை, நிலவுக் காட்சியெல்லாம் வேண்டுமா? ஏது, இங்கே வாரக் கணக்கில் தாவளமடிக்க எண்ணம்போலிருக்கிறதே!” என்றான். மடத் தலைவர் இங்கே தலையிட்டார். மருதவாணன் திடீர் மாற்றத்தில், பிரம பிதாவின் செயலை ஒருவேளை அவர் கண்டாரோ என்னவோ - அவர் அவன் ஆர்வத்தை உள்ளார் வத்துடன் ஆதரித்தார். “தம்பி கூறுவது சரிதான். வேளைக்கொரு அழகை அக்குவட்டில் நானே பார்த்திருக்கிறேன். ஏன், இருவரும் ஒரு வாரம்தான் தங்கிப் போவதுதானே! அடைத்துக் கிடக்கும் நல்ல அறைகளில் ஒன்றின் திறவுகோலைத் தருகிறேன். அறை, விருந்தினர் அறைதான். எல்லா வாய்ப்புகளும் உண்டு. விருந்தாளிகளுக்குத்தான் இங்கே பஞ்சம்! இருவரும் தாராளமாக இங்கே தங்கிப் படித்துப் பொழுது போக்கலாம்!” என்றார். செபசித்தியோன் மருதவாணன் முகம் நோக்கினான். மறுகணம் இணங்கினான். “பேருக்குத்தான் இப்போது கல்லூரி திறக்கிறார்கள். அடுத்து விரைந்து ஓணஓய்வு மீண்டும் வருகிறது; அதன் பின்னால் போனால் போகிறது. அம்மா அப்பாவிற்கு என்னை விரைவில் அனுப்ப மனம் வந்தாலும் வரும். உன்னை அவ்வளவு விரைவில் அனுப்ப மனமில்லை. ஒரு வாரமல்ல, ஒரு மாதம் இருந்து போவோம் கோட்டாற்றுக்கு” என்றான் அவனும். செபசித்தியோன் தங்க எண்ணியது தன் வீட்டில்தான். ஒருநாள் இரண்டு நாட்களுக்குள் தன் வீடு செல்ல அவன் எண்ணினான். ஆனால் மருதவாணன் இடையிடையே செபசித்தியோனின் வீட்டுக்கு வந்து, வாரக் கணக்கில் மடத்தலைவர் தந்த அறையிலேயே தங்க விரும்பினான். செபசித்தியோன் இதற்கு இணங்கினான். “நண்பன் வாழ்வில் ஏதோ மாறுதல் வந்திருக்கிறது. இன்னதென்று அறிய முடியவில்லையே!” என்று செபசித்தியோன் சில சமயம் நினைப்பான். ஆனால் அவன் தாய் அவன் கவலை கண்டு புன்முறுவல் பூத்தாள். “நீ அவனை மலைக்கு அழைத்து வந்தாய். ‘பரம பிதா’...” என்று தொடங்கினாள். அவன் இடைமறித்து, “போதும்; அம்மா போதும்! மடத் தலைவருக்கு நீ தங்கையாகப் பிறந்திருக்க வேண்டும்” என்றான். “உன்னைப்போல எல்லாச் சிறுவரும் சந்தைக் கடையைக் கிளறிக் கொண்டிருக்க மாட்டார்கள். தெய்வ பக்தியுள்ள இளைஞர் இல்லாமல் போகவில்லை. மருதனைப் பார்த்தாலே தெரிகிறதே!” என்று தந்தை வேறு திருவிளக்கம் தந்தார். மருதவாணன் உள்ளத்தில் ஏற்பட்ட மாறுதல் என்ன வென்பது அவனுக்குத் தெரியாது. அவன் படிப்பில் என்றுமில்லா அக்கறை காட்டிப் பழம் பாடங்களை ஒன்று விடாமல் திருப்பித் திருப்பிப் பக்கம் பக்கமாகப் புரட்டினான். இதற்கிடையே மடத் தலைவர் அன்றாடம் ‘கன்னி மரியா’, ‘திருநிறை தாய்’, ‘குழந்தை இயேசு’, ‘இயேசுவும் ஆட்டுக்குட்டியும்’ என்ற தலைப்புக் களுடைய அழகிய வண்ணப் படங்கள், சிற்றேடுகள் கொண்டு வந்து அறையை நிரப்பியிருந்தார். ஆனால் மருதவாணன் கண்கள், இவற்றிலெல்லாம் சுற்றிப் பார்த்து அலுப்புற்ற பின் மலை முகட்டைப் பார்க்கும். மலை முகட்டிலிருந்து கண்கள் அந்த வெள்ளையர் மாளிகையில் இறங்கும். அதன் திசைகளில் பதியும் மலை முகட்டில் நாளொரு வண்ணமும் பொழுதொரு வடிவமும் மாறிற்றோ, என்னவோ - அந்தத் திரையில் நாளுக்கொரு பூவேலைச் சித்திரம் மாறுவது தவறுவதில்லை. அது தொழிலாளர் பூவேலையல்ல. வீட்டில் யாரோ கலையுணர்ச்சியும், பயிற்சியும் உடையவர் - பெரும்பாலும் ஒரு இள நங்கையின் - பூ வேலையே என்பதை இது காட்டிற்று. புறக்கண்கள் அப் பூவேலையில் படிந்த அதே நேரத்தில் அக்கண்கள் அதைப் புனைந்த இள நங்கையின் கற்பனை உருவைச் சுற்றி நிழலாடின. இரவில் பல தடவை, சில சமயம் எவரும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவில், அவன் இனிய யாழின் இசையை - மனமுருக்கும் சோகமுடைய காதல் கீதத்தைக் கேட்பான். பகலில் அவன் கண்ட திரையின் பின்னிருந்தே, அந்த இசையும் வருவதாக அவனுக்குத் தோன்றிற்று. பூவேலையில் ஈடுபட்ட அதே கைகள், யாழையும் மீட்டியிருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். கண்வழி ஓவியக் கலையில் இன்பமும், செவிவழி இசைக் கலையில் இனிமையும் ஒருங்கே அளிக்கவல்ல அம் மெல்விரல்கள், காதல் இசை மீட்டினால் எப்படி இருக்குமோ?... இப்படி அவனால் எண்ணாமலிருக்க முடியவில்லை! அந்த மாளிகையின் புறஅமைப்பு முழுவதும், பகலும், இரவும் பல கோணங்களிலிருந்து பார்த்துப் பார்த்து மருதவாணனுக்கு மனப்பாடமாகி விட்டது. அதன் உள் அமைப்பு எப்படி இருக்குமோ, அதன் உள்ளே யார் யார் இருப்பார்களோ... இதுமட்டுமே அவனுக்குத் தெரியாது. எந்த நேரத்திலும், எவரும் உள்ளே போகவோ வெளியே வரவோ இல்லை என்பதை மட்டும் அவன் உன்னிப்பாகக் கண்டறிந்து கொண்டான். இதனால் மாளிகையில் ஆடவர் இல்லை என்றும், மாளிகைவாசிகள் வாழ்க்கைப் படியில் நல்ல செல்வாக்கான நிலையிலே உள்ளவர்களே என்றும் அவனால் ஊகிக்க முடிந்தது. அவன் ஊக்கம் சரி என்பதைப் பின் வந்த நிகழ்ச்சிகள் விரைவில் காட்டின. கல்லூரி வாழ்விலோ, நேரிடையிலோ குடும்பம், சமுதாயம், பெண்டிர் முதலிய பேச்சுக்களில் என்றும் கலக்காதவன் மருதவாணன். அந்த ஒரு குடும்பத்தில் மட்டும் தனக்கு இவ்வாறு தன்னையும் அறியாமல், இவ்வளவு ஈடுபாடு ஏன் என்பது, அவனுக்கு விளங்கவில்லை. ஒப்புக்குத்தான் நண்பன் செப சித்தியோன் வீட்டுக்கு அவன் போய் வந்தானேயன்றி, அவன் கால்கள் அங்கே பாவவில்லை. மடத்தின் திசையில் உயிரை வைத்துவிட்டுச் சென்றவன் போல விரைந்து வந்து, வழக்கமான பலகணிப் பக்கம், புத்தகமும் கையுமாகக் காத்திருக்கத் தொடங்கினான். இரவு நேரங்களில் அப்பலகணியினருகிலேயே சாய்ந்து கிடந்து கனவுக் காட்சிகளில் இழைந்தான். திரையின் பூவேலைக்கும், நள்ளிரவின் இசைக்கும் உரிய நங்கையைக் காணும் வேணவா அவனுக்குப் பெரிதாயிற்று. அதை நிறைவேற்றிக்கொள்ளும் வகையறியாது அவன் திகைத்தான். ஆனால் புற நிகழ்ச்சிகள் அவன் எதிர்பாராத வகையில் அவனுக்கு அந்த வாய்ப்பை அளித்தன. மதுரை நாயகர் படை வீரர்கள் நாடெங்கும் அச்சமயம் பரவியிருந்தார்கள். ஆனால் திடுமெனத் திருவாங்கூர் அரசர்க் கும், மதுரை அரசி மங்கம்மாவுக்கும் ஏற்பட்ட பூசலால், படைப் போக்கு வரவு மிகுதியாயிற்று. மதுரைப் படைகள் வெற்றி யடைந்ததால், படை வீரர்கள் தங்கு தடையின்றி எங்கும் திரியத் தொடங்கினர். மக்கள் சிறப்பாகச் செல்வரும், பெருமக்களும் கலகலத்து அஞ்சினர். முன்னைய ஆட்சிகளின் செல்வந்தர்களான போர்ச்சுகீசியரைப் பற்றியோ கேட்க வேண்டியதில்லை. அவர்கள் எங்கும் தக்க துணையும், ஆதரவும் தேடினர். மடத்துக்கருகிலுள்ள மாளிகை வாசிகளையும் இந்த அச்சம் பீடித்தது. அவர்கள் மாளிகைக்கு அருகிலேயே ஓரிரு படைப் பிரிவுகள் தாவளமிட்டபோது, அவர்கள் கிலி அவர்கள் குடும்ப அமைதியையே கலக்கிற்று. அதுவரை அவர்கள் பாதுகாப்புடனும், தன் மதிப்புடனும் வாழ்ந்த மாளிகை மதிலின் எல்லை கடந்து, அவர்கள் இரவோடிரவாக மடத் தலைவரிடம் ஓடினர். அவர் உதவியைக் கோரி மன்றாடினர். மடத் தலைவர் அவர்களுக்கு வேண்டிய ஆறுதல்களைக் கூற முயன்றார். ஆனால் அவரையே அச்சம் பிடித்தாட்டிற்று என்பதை அவர் தொனி காட்டிற்று. இந்நிலையில் தங்கள் மதிப்பையும், பெருமையையும் மறந்து பெண்டிர் கை பிசைந்து கண் கலங்கலாயினர். மருதவாணன் தற்செயலாக மடத்துக்கு வந்தபோது இந்தக் காட்சியைக் கண்டான். ஒரு விநாடியில் அவன் உள்ளம் உருகிற்று. ஆனால், அதே சமயம் அவன் தோற்றம் காப்புறுதியளிக்கும் வீர காவலனின் வீறும், அமைதியும் உடையதாயிற்று. “நீங்கள் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. எத்தனைபேர் வந்தாலும் நான் உயிர் கொடுத்து உங்களைக் காக்கிறேன்” என்று கூறினான். மாளிகை வாசிகள் மூன்று பெண்டிர். சற்று முதுமை எல்லையடைந்த நிலையில் ஒருத்தி, ஓர் அழகு இள நங்கை, மூன்றாவது ஓர் இளம் பெண் ஆகியோர். மூன்றாவது பெண் நின்ற நிலையிலிருந்தே, அவள் ஒரு பணிப் பெண் என்று தெரிந்தது. அழகு கொழிக்கும் இளம் பருவ நங்கையே இசைக்கும் பூவேலைக்கும் உரியவளாய் இருக்க வேண்டுமென்று மருதவாணன் மதித்தான். அவனது நம்பிக்கையூட்டும் அந்த ஆதரவு கேட்டு அவர்கள் முகங்கள் மலர்ந்தன. தாய் அவனுக்கு வாயார நன்றி தெரிவித்தாள். ஆனால் முகபாவத்தில் மூவருமே தனித்தனியாக நன்றி கூறுவது போலிருந்தது. இள நங்கை ஆர்வமும், துடிப்பும் மிக்கவளாகவே இருந்தாள். அவள் கண்கள் மீண்டும் நன்றியறிவிப்பை நகை ஒளியாகத் தெரிவித்த வண்ணம் இருந்தன. வாயிதழ்கள் அதை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டன. அச்சத்தாலும், கிலியாலும் இள நங்கையின் அழகு, அவர்கள் முன்னே பன்மடங்கு முனைப்பாகக் காட்சியளித்தது. அவள் வெள்ளையர்களிடையே கூடக் காணுவதற்கரிய செம்பொன் வண்ணமுடையவளாய் இருந்தாள். சுண்டினால் குருதி கொட்டிவிடுமோ என்னும்படி செங்கழுநீர்ச் சிவப்பேறிய அவ்வுடலழகை, அவள் மெல்லிய பொன்னிற அங்கி பெரிதும் எடுத்துக் காட்டிற்று. இளமையின் தளதளப்பு மட்டுமின்றித் துடிப்பும் உறுப்பு உறுப்பாகத் தெரிந்த வண்ணம் இருந்தன. கண்கள் இயல்பாகவே நீண்டகன்றவை - விழியுடன் கருநீலமாக மின்னின. அவை இமைக்கும் தோறும் மருதவாணன் உள்ளத்தைச் சென்று வெட்டுபவை போலிருந்தன. அவள் அழகு காண்பார்க்கு இன்பத்தைவிடத் துன்பத்தையே மிகவும் தூண்டிற்று. மருதவாணன் போல பெண்டிரிடம் மிகுதி ஈடுபடாதவர்களைச் சுட்டெரிக்கும் ஆற்றல் அவ்வழகிக்கு இருந்தது. அவள் மறைந்த கணம் முதல் அவனுக்கு வேறெதிலும் மனம் செல்லாமல் தத்தளித்தான். பூ வேலையும், இசையும் இது முதல் அவனுக்கு இன்பமூட்டவில்லை. அவை அவன் உள அமைதியையே சிதைக்கத் தொடங்கின. குடும்பத்தின் கிலியைப் பயன்படுத்தி, மருதவாணன் மேலும் அவர்களுடன் பழக மற்றொரு வாய்ப்பைத் தேடிக் கொண்டான். அவன் உறவினர் ஒருவர் மதுரைப் படைத் தலைவரான தளவாய் ராசப்பையனுடன் பழகி நட்பாடி வந்தார். அவர் மூலம், படைத் தலைவரிடமிருந்தே மடத்துக்கும், அப்பெண்டிருக்கும் பாதுகாப்புத் தேடித்தர அவன் எண்ணினான். இதை மடத் தலைவரிடமே கூறினான். ஆனால் தாயும், சேயும், பணிப்பெண்ணும் கூடவே இருந்ததனால் அவர்கள் யாவரின் ஆர்வ நன்றிகளையும், ஆர்வ நட்பையும் மீண்டும் அவனால் பெருக்கிக் கொள்ள முடிந்தது. அவன் வாக்குறுதி தந்ததுடன் நிற்காது, உடனே உறவினருக்கு முடங்கலும் போக்கினான். ஓரிரு நாட்களுக்குள் அவர்களுக்குப் பாதுகாப்பாகப் படைத் தலைவரின் கட்டளைப் படிகளுடன் இரு காவலரும் அனுப்பப்பட்டார்கள். அக்கட்டளையை மாளிகை வாயிலும், மடத்திலும் வெளியே ஒட்டச் செய்து, காவலரையும் வெளியே நிறுத்தினான். இப்பொழுது மடத் தலைவரும், பெண்டிரும் முற்றிலும் அமைதியுற்றனர். ஒரு வாரத்துக்குள் மதுரைப் படை வீரர், பரிசுப் பொருள்களுடன் மதுரை நோக்கி மீண்டனர். அனைவரும் பெருமூச்சு விட்டனர். இந்நிகழ்ச்சியின் பின் மருதவாணன் சூழல் பழைய நிலைமைக்கே மீண்டது. ஏனெனில் மாளிகை வாசிகள் மறுபடியும் மாளிகைக்குள்ளே அடைபட்டு விட்டனர். இவ்வளவு உதவி செய்த பின், அவன் தானாக உள்ளே செல்லத் தயங்கினான். அது அவர்கள் நன்றியைப் பயன்படுத்திக் கொள்ளும் பண்பற்ற செயலாகத் தோன்றக்கூடும் என்று அவன் எண்ணினான். ஆயினும் ஒருநாள் பொறுத்துப் பார்த்தபின் நலம் விசாரிப்பவன் போல அவன் மெல்ல மாளிகை முன் கூடத்தில் நுழைந்தான். முதியமாது அவனை ஆரவாரத்துடன் வரவேற்றாள். பணிப்பெண் கூட வெளியே வந்து மீண்டும் மீண்டும் அவனை மனமார வாழ்த்தினாள். ஆனால் ஆவலாகக் காண எண்ணிய உருவம் - செம்மாதுளை போன்ற கன்னிய உடலுடைய அவ்விள நங்கை - வெளியே வரவில்லை. அடுத்த அறையில்தான் இருந்தாள் என்பதை, அவன் குறிப்பாய் அறிந்தான். அவள் மூச்சுவிடும் அரவம்கூட அவனுக்குக் கேட்டது. ஆனால் அவள் வெளியே தலைகாட்டவில்லை; காலடி எடுத்து வைக்கவுமில்லை. அவன் போக எழுந்தான். ஆனால் கண்கள் அவனையும் மீறி அறையைத் துளாவின. தாய் அதைக் கவனிப்பதறிந்த அவன், துணிந்து அவளிடம் புதல்வியின் நலம் பற்றியே விசாரித்தான். தாய்க்கு இப்போது அவள் நினைவு வந்தது. உடனே அவனைச் செல்லவிடாமல் தடுத்து, அவள் மீண்டும் புதல்வி சார்பில் அவனுக்கு நன்றி கூறினாள். “தாங்கள் அளித்த பாதுகாப்பு எங்களுக்குப் பெரிதல்ல. அவளுக்குத் தான் அதன் அருமை பெரிது. அப்படியிருக்க அவள் இப்படி நன்றியற்றவளாக நடந்ததற்கு நான் வெட்கப்படுகிறேன் - மன்னிப்புக் கேட்கிறேன்” என்று கூறிவிட்டுப் புதல்வி இருந்த அறையின் பக்கம் திரும்பி நோக்கிக் கண்டிப்புடன் பேசினாள். “செங்காந்தள்! இங்கே வா! ஏன் புலியைக் கண்டது மாதிரி பதுங்கியிருக்கிறாய்! அன்று உன் நிலையை நினைத்துப் பார்! வா, வந்து அவருக்கு உன் நன்றியும் வணக்கமும் கூறிக்கொள்” என்றாள். தாய் கட்டளையை மட்டும் சரிவரச் செய்பவள் போல அவள் வந்து, ‘வணக்கம், நன்றி’ என்ற இரண்டு சொற்களைக் கூறிவிட்டுச் சென்றுவிட்டாள். ‘இளமை துடிதுடிக்க நின்று, அன்று கடைக்கண்ணால் என் இதயம் கவர்ந்து அமைதியைக் குலைத்த அந்தப் பெண்ணா இவள்?’ என்று மருதவாணன் வியந்தான். அன்று பெண்மையின் முளைத்த உருவாகத் தோன்றியவள், இன்று இப்படிக் கட்டுப்பாட்டின் இயந்திர உருவாகத் தோற்றுவானேன் என்று, தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான். ஒரு நாளைக்குப் பல தடவை அந்த மாளிகையின் பக்கம் போக அவன் கால்கள் விருவிருத்தன. ஆனால், அவன் இரண்டு நாளைக்கு மூன்று நாளைக்கு ஒரு தடவையே போகத் துணிந்தான். முதிய மாதும் பணிப் பெண்ணும் அவனுக்கு எந்தத் தயக்கத்துக்கும் வழியில்லாதபடி, வீட்டுப் பிள்ளையாகவே நடத்தினர். அடிக்கடி வந்து போகுமாறு கூறினர். ஆனால் முதலில் ஆவலின் உருவாகவும், பின் கட்டுப்பாட்டின் உருவாகவும் கண்ட அந்த அழகுருவை அவன் அதன்பின் என்றும் வெளியே காண முடியவில்லை. இரவு நேரங்களில் முன் வழக்கமாகக் கேட்ட யாழிசையைக்கூட அவன் இப்போது கேட்கவில்லை. பூ வேலைகளில் இப்போது மாறுதல் எதுவும் காட்சி தர மறுத்தது. நங்கை வாழ்வில் அப்படி என்ன மாறுதல் வந்துவிட்டது என்று அவன் மீண்டும் கவலையுற்றான். அவளைக் காண வழி என்ன என்று தெரியாமல் கலக்கமுற்றான். இரண்டு மூன்று நாட்களாக அவன் மாளிகைக்குச் செல்லவில்லை. உள்ளே அவளைக் காண வழியில்லை என்ற காரணத்தால் அவன் வெளியே நாற்புறமும் சுற்றிச்சுற்றிச் சென்று, எங்கேனும் பலகணிகள் வாயில்களில் அவளைப்பற்றி ஏதேனும் அரிய வழி உண்டா என்று தேடினான். சிலசமயம் பலகணிகளை அவன் கடந்து செல்லும் சமயமே கதவு திறந்த ஓசை காதில் படும். அவன் ஆவலுடன் திரும்பிப் பார்த்தால், கதவு திறந்துதான் இருக்கும் - ஒரு முகம் வெட்டி மறைவது போலத் தோன்றும். தான் காணாமல் மறைத்துத் தன்னைக் காண்பதில் என்ன மருமம் என்று அவன் உணர முடியவில்லை. அவனால் இந்தக் கண்ணாமூச்சு விளையாட்டைப் பொறுக்க முடியவில்லை. மாளிகைக்குள்ளிருந்து பணிப்பெண் வெளியே போகும் சமயம் பார்த்து, அவன் அவளைத் தடுத்து நிறுத்தினான். அவளது இளந் தலைவியைக் காணத் தனக்குள்ள அடக்கமுடியாத ஆர்வத்தை அவளிடம் தெரிவித்தான். அவள் அதைப் பொறுமையுடன் கேட்டாள். ஆனால் அமைதியாக மறுப்பளிக்கத் தவறவில்லை. “அன்று ஆபத்தில் என்னவோ அவள் துணிச்சலுடன் வெளிவந்து பேசியிருக்கலாம். பொதுவாக அவள் எவருடனும் எதுவும் பேசவோ, எவரையும் காணவோ செய்வதில்லை. தனக்குள் தானே அடங்கிக் கிடப்பாள். அவ்வளவு கூச்சமுடையவள். நீங்கள் அவளைக் காண்பதென்பதோ, கண்டு பேசுவதென்பதோ முயற்கொம்புதான்” என்றாள். மருதவாணன் முகம் சுண்டிற்று. அவன் அகங் குன்றிக் குருகிற்று. இது கண்டு செம்பவளம் பெரிதும் இரக்கமுற்றவள் போலத் தோன்றிற்று. அவள் சற்று ஆழ்ந்து சிந்தித்து மீண்டும் வாய் திறந்தாள். “வேண்டுமானால் நீங்கள் ஒரு புது வழியில் அவளுடன் தொடர்பு கொள்ளலாம். ஆனால் அது வெற்றி பெற்றாலும் பெறலாம். பெறாமல் போனாலும் போகலாம். மேலும் அது நான் சொன்னதாக இருக்கவும் கூடாது. அவளுக்குப் புத்தகம், பாட்டு என்றால் உயிர். அதில் அவளுக்கு ஒரு வெறி என்று கூடக் கூறவேண்டும். அவள் எழுதும் பாட்டுக்கள் பெரும்பாலும் தமிழ்ப் பாட்டுக்களேயாதலால், இதை நான் நன்கு அறிவேன். நீங்கள் அடிக்கடி புத்தகமும் கையுமாக இருப்பதனால், உங்களுக்கு அதே பயிற்சி இருக்கக் கூடுமென்று எண்ணுகிறேன். உங்களிடம் ஆர்வமும் மிகுதியாயிருக்கிறது. அந்த ஆர்வத்தைக் கவிதையாக்கி, உங்கள் கருத்துக்களை அவ்வழி நீங்கள் தெரிவித்தால், பாட்டின் ஆர்வத்தில் அதை அவள் படித்து மகிழக்கூடும். ஒருவேளை உங்களுக்கு நல்வாய்ப்பிருந்தால் பதில் எழுதக்கூட நேரலாம்” என்றாள். மாணவனாக வந்த மருதவாணன் மலை மடத்தில் காதலனாகியபோது கவிஞனாகவும் மாறத் தொடங்கினான். அவன் தன் உள்ளத்திலுள்ள ஆவலையெல்லாம் பிழிந்து, தனக்குத் தெரிந்த கவிதை மொழியிலேயே வடிகட்டி, அருமுயற்சியுடன் ஒரு பாடல் எழுதினான். அக்கவிதையிலேயே அவன் தன் ஏக்கந் தெரிவித்து வேண்டுகோளும் விடுத்தான். ஆடிவரும் வண்டினுக்கு மலர்கள் இதழ் திறக்கும்; பாடிவரும் பாணனுக்குப் பாண்டியன் கை திறக்கும்; வாடிவரும் பயிர்களுக்கு வான்முகிற் பை திறக்கும்; நாடிவரும் காதலுக்குன் நெஞ்சு திறவாயே! இப்பாடலைச் செங்காந்தனிடம் கொடுக்கும்படி அவன் செம்பவளத்திடம் ஒப்படைத்தான். அதன் பதில் வருவதற்காக, அவன் ஒரு பகல் முழுவதும் துடிதுடிப்புடன் காத்துக் கொண்டிருந்தான். பதில் வருமா? வராதா? - இது அவன் ஏக்கம், வெறும் பாட்டுக்குப் பாட்டுத்தான் வருமா, அதில் காதல் வேண்டுகோளுக்கு இசைவுக்குறிப்பும் ஒரு சிறிதாவது இருக்குமா? இது அவன் மயக்கம், பாட்டாய் ஏன் எழுதினோம், பாட்டாய்ப் பதிலும் எழுதுவதற்குத்தான் இவ்வளவு நேரம் பிடிக்கிறதோ - இவ்வாறு அவன் கழிவிரக்கம் கொண்டான். அவளுக்குப் பாட்டு எழுத வருமோ - இது அவன் ஐயப்பாடு, செம்பவளம் பேசியதை மறந்த மறதி. பதில் இறுதியில் வந்தது. மாலை இருளிலேயே அவன் கையில் ஒப்படைக்கப்பட்டது. அது அவனுக்கு மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் ஒருங்கே தந்தது. அது பாட்டில் எழுதப்பட்ட பதில். அவன் அஞ்சிய அச்சத்துக்கு இடமில்லாமல் காதல் வேண்டுகோளுக்கு பதில் மட்டுமல்ல, இசைவு, வெளிப்படையான ஆர்வம் இசைவு அழைப்பே அதில் இருந்தது. ஒரு பெண்ணின் அழைப்பு, காதலழைப்பு - பருத்தி புடவையாகக் காய்த்தது காணும் மகிழ்ச்சியுடன் அவன் அதை மீண்டும் மீண்டும் வாசித்தான். வண்டு வருக, கதவு திறந்திருக்கும் கண்டு வருக, வடக்குத் திசை அறைக்கே! உண்டு, வருகை முழு நிலவு நாள் அன்று! கொண்டு நிழலும் மயங்குமென் காதலே! “ஆகா! என்ன பாட்டு, பாட்டில் என்ன அழைப்பு! முழு நிலவு நாளில் வருக! அது இன்றே! வடக்குத் திசை அறைக்கு வருக! ஆம், அது வீட்டின் பின்புற அறை; மடத்திலிருந்து எளிதாகத் தாவிச் சென்று எட்டும் அறை! கதவு தட்ட வேண்டியதில்லை; அது திறந்தேயிருக்குமாம்! காதலியிடமிருந்து முதல் நாளிலேயே இத்தகைய அன்பின் ஆர்வ அழைப்பு துணிச்சலான ஆர்வ அழைப்பு எந்தக் காதலனுக்கும் வந்திராது. நான் தனிப் பெருமையுடையவன்” என்று அவன் உள்ளம் குதித்தாடிற்று. மகிழ்ச்சியால் அவன் தலை சுற்றிற்று. ஆனால் குதித்தாட, தலை சுற்ற அது நேரமன்று. அன்றே, அன்றிரவே முதல் காதல் சந்திப்புக்குச் செல்ல வேண்டும். அதற்கான தயாரிப்புகளில் அவன் முனைந்தான். உடுத்த ஆடை களைந்து களைந்து திருத்தி உடுத்தல் - தலைவகுத்த வகுப்பு மாற்றி வகுப்பு வாருதல், முகம் துடைத்துத் துடைத்துப் பார்த்தல் முதலியன தொடங்கினான். எல்லாரும் துயிலில் அடங்கும் நேரம் இரவு பத்து நாழிகை, அதற்கே அவன் காத்திருந்தான். பின் ஒரே எட்டில் மாளிகையின் பின்புறம் அடைந்தான். கதவு மூடித்தான் இருந்தது. ஆனால் கை வைத்ததும் திறந்து கொண்டது. அங்கே சிறிது நேரம்தான் இருந்தான். செம்பவளம் மெல்ல அங்கே வந்தாள். செங்காந்தள் இன்னும் சிறிது நேரத்தில் வர இருக்கிறாள் என்று கூறிச் சென்றாள். அவன் நாடி நரம்புகள் முழு முறுக்கேறித் துடித்தாடின. ஆர்வமும், ஆவலும் உச்சநிலையடைந்தன. நள்ளிரவு. பட்டிசை சலசலத்தது. சதங்கைகள் ஒலித்தன. மெல்லச் செங்காந்தள் அவன் முன் வந்து நின்றாள். ஆனால் அவள் முகம் சீறி இருந்தது. அவள் பின்னால் செம்பவளம் வந்து நிழல்போல நின்றாள். அவன் புன்னகை தவமும் முகத்துடன் அவளை நோக்கினான். “அன்பரே! என்னை மன்னிக்க வேண்டும். பாட்டுக்குப் பாட்டாய், எதை எதையோ எழுதிவிட்டேன். அதற்கு வருந்துகிறேன். ஆனாலும் குறித்தபடி வந்து, உங்களுக்கு என் கடமையை நிறைவேற்றிவிடவே முனைந்தேன்” என்றாள். மருதவாணன் சற்றுத் திடுக்கிட்டான். இது மீண்டும் கட்டுப்பாட்டு இயந்திரத்தின் சந்திப்புத்தான், முதலில் கண்ட இளமை துடிக்கும் பெண் அல்ல என்று கருதினான். சற்று நேரம் மௌனம் நிலவிற்று. பின் அவள் வாய் திறந்தாள். “நான் விடை பெற்றுக் கொள்ளட்டுமா? இப்படித் தனிப்பட, இரா நேரத்தில்...” என்று தொடங்கினாள் அவள். “தனியே சந்திக்கத்தானே கோரினேன். அழைப்புக் கூட விடுத்தீர்கள்?” “ஆம், தவறு என்னுடையதுதான். நான்தான் கூறிவிட்டேனே! பாட்டுக்குப் பாட்டாய் எதுகை மோனையிட்டு என்னவோ எழுதிவிட்டேன், மன்னியுங்கள். இப்போது உங்களை முழுதும் ஏமாற்றி விடவில்லை. நானே நேரில் வந்து விளக்கம் சொல்லிவிட்டேன். இனி நான் இங்கே நிற்கக்கூடாது...” என்று கூறி மறுசொல் எதற்கும் வழி வைக்காமல் சரேலென்று போய்விட்டாள். ‘என்ன இது?’ என்று கேட்பதற்குள் செம்பவளமும் போய்விட்டாள். ‘கண்ணிலான் பெற்றிழந்தான்’ என்ற நிலையாயிற்று மருதவாணனுக்கு. இன்ப ஆர்வத்தின் உச்சியிலிருந்து அவநம்பிக்கையின் அடியாழத்தில் சென்று அவள் விழுந்தாள். காதல் கனவெல்லாம் ஒரே அவலச் சோகமாயிற்று. இரண்டு மூன்று நாட்கள், அவன் தன் அறையிலேயே அடைந்து கிடந்தான். எதையும், எவரையும் பார்க்கவே எண்ணவில்லை. நல்ல காலமாக, செபசித்தியோன் அந்நாட்களில் வந்து காணவில்லை. கண்டிருந்தால் இடைக்காலக் காதல் ஈடுபாடு அம்பலமாகி யிருக்கும். அவநம்பிக்கையின் ஆழத்திலும் ஒரு வேளை செங்காந்தளிடமிருந்து செம்பவளமோ, யாரோ ஏதாவது செய்தி தெரிவித்து விளக்கமாவது தரமாட்டார்களா என்ற ஒரு ஆறுதலொளி மின்னிற்று. ஆனால், இரண்டாம் நாள் இரவுக்குள் அவன் உள்ளம் ஒரே அந்தகார இருளாயிற்று. அந்த இருளில் மின்னலாகச் செம்பவளம் திடீர் வருகை தந்தாள். அவன் பேசவில்லை. அவனைப் பிடித்தாட்டினாள். “வருகிறாள் தலைவி, உடன் தயாராகு! நேரமில்லை; அதோ வந்து விட்டாள்” என்று கூறிவிட்டு ஓடினாள். நறுமணம் விரைந்து வந்தது. சலசலவென்ற பட்டிசைப்பு. முன்பு கட்டுப்பாட்டு இயந்திரமாகக் காட்சியளித்த ஆயிழை - நாணமும், வெட்கமும் மட்டுமல்ல, உணர்ச்சி பெற்ற ஆண்மை யுருவான அணங்கு, கட்டறுத்து விழும் பறவை போல அவனருகே அவன் படுக்கையில் வந்து விழுந்தாள். அன்று அவன் தலை கோதவில்லை; வாரி வகுப்பெடுக்கவில்லை. ஆடை திருத்தவில்லை. அன்றைய தயாரிப்பு வேலை ஒன்றே ஒன்றுதான். அவன் அறைக் கதவை மறவாது சாத்தினான். சமுதாயக் கட்டு வீழ்ந்தது. குடும்ப நாணம் குலைந்தது. உடலுடன் உடல், உயிருடன் உயிர், மூச்சுடன் மூச்சாயின, இரு வேறு உள்ளங்கள். பேச்சில்லை, மூச்சில்லை. ஒரே ஆர்வ அணைப்பு. கேள்விகள் எதற்கும் ஒரே பதில் - முத்தங்கள். “மன்னியுங்கள். நான் அவளல்ல. ஆசையை அடக்க முடியவில்லை” - இவை யன்றித் தன் புதிர் நடவடிக்கைகட்கு அவள் வாய்மொழியால் எதுவும் விளக்கம் தரவில்லை, தர முடியவில்லை. அவனுக்கும் எதுவும் அச்சமயம் தேவைப்படவில்லை. இரவெல்லாம் இன்பம் - பகலெல்லாம் அது பற்றிய உணர்வற்ற நினைவு. இப்படி இரண்டு நாட்கள் சென்றன. மறுபடியும் இரண்டு நாட்கள் ஏமாற்றம். பின் மீண்டும் திடீர் அழைப்பு. இத்தடவை இடமாற்றமும், ஒரு புதிய ஏற்பாடும் தொடங்கிற்று. மாளிகையிலேயே அவள் படுக்கை யறைக்கு ஒரு வெளிக்கதவு இருந்தது. இதற்குச் செம்பவளத்தின் மூலம் செங்காந்தள் உள்ளும் புறமும் பூட்ட வல்ல பூட்டும், மூன்று திறவு கோல்களும் சித்தம் செய்தாள். இந்த ஏற்பாட்டை அவர்கள் மருதவாணனுக்குத் தெரிவிக்கவில்லை. ஆனால் இரண்டு நாள் இடையே அவர்களடைந்த ஏமாற்றத்துக்கு அதுவே விளக்கமாகச் செம்பவளம் இதனை அவனிடம் கூறினாள். மருதவாணன் - செங்காந்தள் தொடர்பு வெளியுலகுக்கு இன்னும் மறை தொடர்பு - களவியல் தொடர்பாகத்தான் இருந்தது. ஆனால் காதலர்க்கு அது முற்றிலும் இயல்பான குடும்பத் தொடர்பாய் விட்டது. மருதவாணன் பகலில் தன் அறையிலும், இரவு செங்காந்தள் அறையிலும் மணமான ஒருவனைப் போலவே கழித்தான். ஆனால் செங்காந்தள் இன்னும் இரு பெண்களாகத்தான் இருந்தாள். பின்வழி இரவில் வந்த போது, ஆர்வத் துடிப்புடைய காதல் மனைவியாகவே நடந்து கொண்டாள். மாளிகையில் எல்லாரும் அறியவரும் சமயம், மருதவாணன் முன் போலக் குடும்ப நண்பன் - செங்காந்தள் குடும்பக் கட்டுப்பாடு என்னும் கோட்டை வாசல் கடவாத இயந்திரப் பதுமை! செங்காந்தளின் புதிர் இன்னும் மருதவாணனுக்குப் புதிராகவே இருந்தது. தாயிடம் மருதவாணன் நேரில் எதுவும் வெளியிட அவள் இணங்கவில்லை. தானும் தாயிடம் எதுவும் கூற மறுத்தாள்! “போர்ச்சுகீசிய வெள்ளைப் பெண்ணாயிற்றே! தமிழ் நாட்டானை மணந்துகொள்ளத் தாய் தடை செய்வாளென்று அவள் நினைக்கிறாளா?” இனி நண்பன் செபசித்தியோனுக்கு உண்மை நிலை கூறாதிருப்பது தவறு என்று எண்ணினான். அவனிடம் யாவும் கூறி, செங்காந்தள் புதிருக்கு விளக்கம் யாது என்று கேட்டான். அவனுக்கும் தெளிவாய் ஒன்றும் புரியவில்லை. ஒரு வேளை அது வெள்ளையர், நாட்டவர் இன வேறுபாடாய் இருக்கலாம். ஆனால் இன்னொரு ஐயத்துக்கும் இடமுண்டு என்று அவன் கருதினான். அது அவன் தாய் தந்தையரும் மடத்தலைவரும் காட்டிய மனப்பான்மையே. மருதவாணன் கிறித்தவ சமயம் ஏற்க வேண்டும் என்று தாய் தந்தையர் விரும்பலாமோ! செங்காந்தள் காதலன் தன்மதிப்பு இந்தச் செயலைத் தகாது என்று ஒருவேளை எண்ணச் செய்திருக்கலாம் என்று அவன் கருதினான். செபசித்தியோன் உலகறிந்தவன். நடை நயமும், சொல் நயமும், பண்பும் உடையவன். செய்திகள் எதுவும் தெரிவிக் காமலே, செங்காந்தளின் தாயிடம் மெல்லச் செங்காந்தள் - மருதவாணன் - திருமணம் என்ற சொற்களை இழையோட விட்டான். அதிலிருந்து அவள் உள்ளப் பாங்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. அவள் வெள்ளையர், நாட்டவர் வேற்றுமை சிறிதும் கருதவில்லை. சமய வேறுபாடு கூட அவளுக்கு ஒரு சிறிதும் கிடையாது. மருதவாணனைப் பற்றிய அவள் மதிப்பும், பாசமும்கூடப் பெரிதாகவே இருந்தன. அப்படியானால் செங்காந்தள் தாய்க்குச் செய்தி யறிவிக்கத் தடை கூறுவதின் புதிர் யாது? நண்பர் இருவரும் இதுபற்றிப் பலப்பலவும் சிந்தித்தனர். திடீரென்று செபசித்தியோன் மருதவாணன் துடையில் ஓங்கியடித்தான். அவன் ‘ஐயோ’ எனுமுன், மீண்டும் அடித்த வாறே, “புதிர்வேறு என்னடா? நீ அவளைத் தண்டித்து விட்டாய்!” என்றான். மருதவாணனுக்குப் பின்னும் புரியவில்லை. செபசித்தி யோனும் புரியவைக்க முயலவில்லை. அவன் தானே துணிந்து தாயிடம் நாநயத்துடன் பேசி யாவும் முடித்தான். செங்காந்தள் தாய்மை யுற்றிருந்தாள். காதலனிடம் முதலில் காட்டிய அதே இயந்திரக் கட்டுப்பாடு, இப்போது தாயிடம் அதைக் கூற முடியாமல் தடுத்தது. ஆனால் செபசித்தியோன், செம்பவளத்திடம், அது தாய்க்குத் தெரியாமலே திருமணத்துக்குத் தாயின் இணக்கம் பெற்றுவிட்டதாகக் கூறினான். அதே சமயம் தாயிடம் மகள் மனநிலையின் இக்கட்டை எடுத்து விளக்கி, அதைத் தெரியாத முறையிலேயே நடந்துகொள்ளும்படி தூண்டியிருந்தான். திருமணம் நடைபெற்றது. செங்காந்தளுக்கும் மருத வாணனுக்கும் - அதோடு செபசித்தியோனுக்கும் செம்பவளத் துக்கும். ஆமாம்; அவர்களது காதலும், மணமும் சிறப்புறக் காரணமாக இருந்த குற்றம் அவர்களுடையதல்லவா? 4. தமிழ்ப் பண்பு புறக் காட்சி - 1 காலம்: காலை இடம்: வேலூர், மாணவி அஞ்சில்அஞ்சி இல்லக்கூடம். ஆட்கள்: மாணவி அஞ்சில்அஞ்சி. (புலவர் நன்னாகையார் வருகை.) அஞ்சில்அஞ்சி:- வாருங்கள் இரண்டு நாட்களாய், உங்களை வீடு தேடி வந்தும் காண முடியவில்லையே. புலவர் நன்னாகை:- ஆம், அம்மா! பொங்கல் வந்து விட்டதல்லவா? அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறேன். இவ்வாண்டில் புது முறையில் பொங்கல் வாழ்த்துக்கள் உருவாக்கியிருக்கிறேன். அவற்றை அச்சகத்தில் கொடுத்து, பிழை திருத்தி வாங்குவதற்குள் போதும் போதும் என்றாய்விட்டது. அச்சகங்கள் எல்லாவற்றிலும் இதே நெருக்கடி. ஆள் கண்ணில் எண்ணை விட்டுக் கொண்டு பார்க்காதிருந்தால் வாழ்த்துக் களைப் பொங்கலுக்குள் வாங்க முடியாது. அஞ்:- அப்படியா, மன்னிக்க வேண்டும். இதுபற்றி நான் உங்களை ஒன்று கேட்க வேண்டுமென்றிருக்கிறேன். நன்:- என்ன கேட்கவேண்டும் அஞ்சி, தாராளமாய்க் கேள். உனக்கு விளக்கம் தராமல் வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறேன். அஞ்:- வேறொன்றுமில்லை அம்மணி. நீங்கள் தீபாவளி பிள்ளையார் சதுர்த்தி முதலிய விழாக்கள் கொண்டாடுவது தவறு என்று ஓயாது கண்டிக்கிறீர்களே, இந்தப் பொங்கலும் விழாத்தானே! இதை நீங்கள் முன் நின்று நடத்துகிறீர்களே, இதற்கு என்ன காரணம்? நன்:- இது என்ன கேள்வி, அஞ்சி! பொங்கல் தமிழர் விழா, மற்றவை தமிழர்க்குரியதன்று. அஞ்:- சரி, கிருஸ்துமஸ், ஈதுப் பெருநாள் ஆகியவை கூடப் பழந்தமிழர் விழாவல்லவே? தமிழர் கிறிஸ்தவ சமயம், இஸ்லாம் சமயம் சார்ந்து அதைக் கொண்டாடுகிறார்களே, கொண்டாடலாமா? நன்:- அவர்கள் சார்ந்துள்ள சமய விழாக்களை அவர்கள் கொண்டாடுகிறார்கள். அதில் தவறில்லை. மேலும் அவை குற்றமற்ற விழாக்கள்; நல்ல விழாக்கள். அஞ்:- அப்படியானால் தீபாவளி முதலியவை கெட்ட விழாக்களாவது எப்படி? கிறிஸ்தவ, இஸ்லாம் நெறிதழுவிய தமிழர் கிருஸ்துமஸ், ஈதுப் பண்டிகைகள் கொண்டாடுவது போலத்தானே இந்து சமயம் தழுவியர்கள் அப் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். அதில் தவறென்ன? நன்:- கிருஸ்துமஸ், ஈதுப் பண்டிகைகளைச் சிறப்பாகக் கிறிஸ்தவரும் முஸ்லிம்களும் கொண்டாடினாலும், நானும் அதில் அந்நண்பர்களுடன் கலந்து கொள்வது உனக்குத் தெரியும். காரணம் அவை மாமலையிலிருந்து வந்த மருந்து போல, தொலை நாடுகளிலிருந்து வந்தாலும், தமிழ்ப் பண்புக்கு மாறுபட்டவை யல்ல. தமிழர்களை எவ்வகையிலும் அவமதிக்கவோ, புண்படுத்தவோ செய்வதில்லை. தமிழ் விழாக்களுடன் தமிழ் விழாக்களாக அவற்றை ஏற்று, கிறிஸ்தவ இஸ்லாமிய நண்பர் களுடன் அவற்றை நாம் கொண்டாடுவதன் காரணம் அதுவே. எல்லாத் தமிழரும் சேர்ந்து முழுநிறை தமிழ்த் தேசியம் பேண அது உதவுகிறது. ஆனால் தீபாவளி முதலிய வடவர் பண்டிகை கள் தமிழரை அவமதிக்கும் புராணக் கதைகளைக் கொண்டாடு பவை. தமிழரைப் புண்படுத்துபவை. அத்துடன் அவை தமிழ்ப் பண்புக்கு மாறுபட்டவை. அஞ்:- மலையாளிகள் கொண்டாடும் ஓண விழாக்கூடத் தமிழ்ப் பண்புடையதுதானா? நன்:- ஆம், தடையில்லாமல். அது தமிழ்ப் பண்புடைய விழா மட்டுமல்ல, தமிழின விழா. மலையாளிகளும் இனத்தால் தமிழ்க் குழுவான திராவிடம் சார்ந்தவர்களே. பண்பில் அது பொங்கலை விடக் குறைந்த விழாவல்ல. மேலும் பண்டு தமிழகத்திலும் அவ்விழா எங்கும் கொண்டாடப்பட்டதாகப் பத்துப் பாட்டுப் பறை சாற்றுகிறது. அஞ்:- இவையெல்லாம் எனக்குப் புதுமையும் வியப்பும் தரும் செய்திகளாயிருக்கின்றன. தமிழ் கடந்து தென்னகமெங்கும் பரவியும் மேல் நாடுகள் வரை சென்று உலகளாவிப் பரந்தும், வடவரிடம் மட்டும் புகாத இந்தத் தமிழ்ப் பண்பு எத்தகையது? அது வடவர் மீது வெறுப்புப் பரப்புவது மட்டும்தான் என்று சிலர் கருதுவதுபோலத் தோன்றுகிறதே. நன்:- தீமையை அகற்றுவதற்கு முதலில் அத்தீமை வரும் புறவடிவைச் சிறிது காலம் வெறுக்க நேரலாம். அது இயல்பே. ஆனால் உண்மையில் தமிழ்ப் பண்பு எந்த இனத்தையும், எந்த உயிரையும் கூட வெறுப்பதல்ல. “அனைத்து உயிர் ஒன்றென்று” எண்ணுவது. அது வடவரையல்ல, வடவர் பெயரால் புகுத்தப் படும் தீய பண்புகளையே வெறுக்கிறது. வடவர் பெயரால் என்ன, கடவுள் பெயரால் புகுத்தப்பட்டாலும் வெறுத்து ஒதுக்க வேண்டியதுதானே! இதை வடவர் மீது வெறுப்பு என்று கூறுவது பெரிதும் தவறு. ஏனெனில் வடவரிலும் காந்தியடிகள் போன்ற பண்பாளர் உண்டு. சமஸ்கிருதத்தில்கூட எல்லாம் தீய பண்பு களல்ல. ஆனால், துரதிருஷ்ட வசமாக பண்பற்றவர்கள் சமஸ்கிருதத்தின் பெயர் கூறி, நெடுங்காலம் தமிழ்ப் பண்புக்கு மாறான, தமிழினத்துக்கு எதிரான கூறுகளையே பரப்பி வைத்துள்ளனர். அஞ்:- அப்படியானால் தமிழ்ப் பண்பு என்பது என்ன, விளக்குவீர்களா? நன்:- சங்க இலக்கியக் காட்சிகள் மூலமே விளக்குகிறேன். தமிழ்ப் பண்பு என்பது உலகின் நல்ல பண்புகளின் உச்ச நிலையான கலை வார்ப்படம். தமிழ்ப் பண்புக்கு மாறாகாத நல்ல பண்புகள் உலகெங்கும் உண்டு. ஆனால் தமிழர்கள் தீமை விலக்கி நன்மை வகுத்ததுடன் நிற்கவில்லை. நன்மையிலும் வடிகட்டிய உயர் நலம் வகுத்தார்கள். அதுவே தமிழ்ப் பண்பு. அதைத் தமிழர் காதல் வாழ்வு, குடும்பம், சமுதாய வாழ்வு, பொருளியல், ஆட்சி, சமயம் ஆகிய எல்லாத் துறைகளிலுமே காணலாம். திருக்குறள் இவற்றுக்குக் கலங்கரை விளக்கங்களான இலக்கண வரம்புகள் வகுத்துள்ளது. சங்க இலக்கியமும் சிலம்பு மேகலைகளும் இவற்றுக்குக் கண்கூடான காட்சி விளக்கங்கள் அளிக்கின்றவை. அவற்றுள் ஒன்று “ஒரேர் உழவர்” என்ற புலவர் பாடியது. அஞ்:- என்ன பெயர் அது? விசித்திரமாக இருக்கிறதே! நன்:- ஆம்! “ஒரேர் உழவர்” அந்தப் புலவருக்கு இயற்பெயர் இன்னதென்றே தெரியவில்லை. ஆனால் “ஒரேர் உழவர்” என்ற ஒரு பொருள் பொதிந்த அழகிய தொடரை அவர் படைத்து, அதன்மூலம் ஓர் ஒப்பற்ற சித்திரம் காட்டி அதைத் தன் குடும்ப வாழ்க்கைக்கு உவமையும் ஆக்கினார். மற்றப் புலவர்களும் மக்களும் அத்தொடரையே அவருக்குச் சிறப்புப் பெயராக்கி விட்டார்கள். அவர் இயற்பெயர் நமக்கு வந்து எட்டாமல் இதுவே செய்துவிட்டது. அஞ்:- ஆ, அப்படியா? என்ன அழகுப் பெயர்! 2 அகக் காட்சி - 1 காலம்: மார்கழி மாதம், பிற்பகல் வேளை. இடம்: ஊர்ப்புற வயற்காடு; மழைத் தூறலால் பசபசத்துள்ள செவ்வல் நிலத்தினூடாக விரையும் தேர். ஆட்கள்: தேரில் புலவர், பாகன். பாகன்:- பயணத்துக்கு ஏற்ற மாதமும் அல்ல, காலமும் அல்ல இது. பாருங்கள், செம்மண்ணில் மேலீடாகப் பெய்த தூறல் மேல் பகுதியைச் சருக்கலாக்கியிருக்கிறது. தேரின் சக்கரங்கள் அடிக்கடி வழுகிச் செல்கின்றன. குதிரையின் காலடிகளில் இலாடத்துடன் இலாடமாகப் புழுதியும் சேரும் எட்டிப் புடைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு பொருந்தாத காலத்தில் ஏன் புறப்பட வேண்டும்; சற்று முன்கூட்டிப் புறப்பட்டிருக்கலாமே! புலவர்:- இருக்கலாம். ஆனால் தகடூர் மன்னன் அஞ்சியின் அன்புக்கு அஞ்சி நீடிக்க வேண்டியதாயிற்று! பாகன்:- வீரத்துக்குத்தான் அஞ்சுவார்கள். நீங்கள் அன்புக்கு அஞ்சுவானேன்? இது விசித்திரமாய் இருக்கிறதே! புலவர்:- ஆம்; அஞ்சியின் வீரத்துக்கு அஞ்சாதவர் இல்லை. சேர சோழ பாண்டியர் அவன் பகைமைக்கு அஞ்சு கின்றனர். குறுகிய மன்னரோ அவன் நட்புக்கே அஞ்சுகின்றனர். ஏனெனில், அந்நட்பு மூவரசர் பகையை உண்டு பண்ணக் கூடுமென்று அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் என் போன்ற புலவர்களோ அவன் அன்புக்கே அஞ்சுகின்றனர். அவனுடன் இருக்குமளவும் அவன் உரிமை விருந்தினராக, சுற்றத்தாரையும் கடந்த பங்காளிகளாக உண்டுடுத்து அவன் அரண்மனையிலே உறங்கலாம். அவன் பூங்காவனங்களில் உலவலாம். ஆனால் தன் காதலியைப் பிரிய இணங்கினாலும் அவன் இணங்குவான், புலவரைப் பிரிய எளிதில் இணங்கான். பிரியும் நாள், அணுகிற்று என்று எண்ணினாலே அவன் முகம் கறுக்கும். அது காண உள்ளம் பொறுக்காமலே, பல தடவை பிரிவை ஒத்திப் போட வேண்டி வந்தது. அவன் காதலியை எண்ணிச் செல்லும் நேரம் பார்த்து, நானும் சிறிது விலக இணக்கம் கோரித்தான் புறப்பட்டேன். பாகன்:- அப்படியா? நான் அவனைப்பற்றிக் கேள்விப் பட்டது சரியாய்ப் போயிற்று! புலவர்:- என்ன, என்ன கேள்விப்பட்டீர்கள்? பாகன்:- ஆம்; தங்களைப் போன்ற ஒரு புலவர்தான் அதைப் பாடினதாகக் கேள்வி. அவர் வேறு யாருமல்ல. செந்நாப் புலவர் அருந்தமிழ் நங்கை ஒளவையார்தான். அவர் புலவராக மட்டுமல்ல, பாகராகக்கூட இருந்தாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில் அதியமான் அஞ்சியை அவர் ஒரு தேர்க் காலுக்கே உவமை கூறினார். புலவர்:- தேர்க்காலுக்கா? அதியன் அஞ்சிக்கு தேர்க்கால் உவமையா? பாகன்:- ஆம்; எப்படிப்பட்ட தேர்க்கால் தெரியுமா? அதைச் செய்த தச்சன், ஒரு நாளைக்கு எட்டுத் தேர்களைச் செய்து பூட்டி ஓடவிட்டு விடுவானாம். அத்தகைய தச்சன் ஒரு மாதமாகப் பெருமுயற்சி செய்து, ஓர் ஒப்பற்ற தேரின் கால் ஒன்றைச் செய்து முடித்தானாம்! அந்தத் தேர்க்காலின் உறுதக்குத்தான் அஞ்சியை அவர் உவமை கூறினார். புலவர்:- ஆகா, ஆகா! என்ன அழகு? செந்நாப்புலவர் என்பது ஒளவையாருக்கே தகும். அவர் பாகராக மட்டுமென்ன, தச்சராகவும், ஆட்சியாளராகவும்கூட இருந்திருக்க வேண்டும். இரண்டு தொழில்களின் அருமையையல்லவா பாட்டில் உவமான உவமேயமாகப் புகுத்திக் காட்டியிருக்கிறார். ‘களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து எம்முளும் உளன் ஒரு பொருநன், வைகல் எண்தேர் செய்யும் தச்சன், திங்கள் வலித்த காலன் னோனே!’ - (புறம் 87) பாகன்:- பாம்பின் கால் பாம்பு தானேயறியும். புலவர் நயங்களை மட்டும் புலவரிடமிருந்து தானே முழுவதும் உணர வேண்டும்; தேர், தச்சுத் தொழில் நயம் எனக்குப் புரிகிறது. அஞ்சியின் அருமையும் புரிகிறது. ஆனால் இதில் ஆட்சி பற்றி என்ன இருக்கிறது? புலவர்:- (சிரித்தவாறு) அதில்தானே நயம் இருக்கிறது. அஞ்சி பெரு வீரன். பேரரசன். ஆனால் அவன் நாடு சிறிது, சிறிதிலும் சிறிது. ஒரு நாளில் ஏழு பெருநாடு வெல்லும் வீரன் அவன். ஆனால் அவன் எந்த நாட்டையும் வெல்வதில் அதைப் பாதுகாப்பதிலே செலவிடுகிறான். எழுகடல் கடந்த ஏழிசை மன்னர் மரபில் வந்தவன் அவன். அந்த ஆட்சித் திறனை எல்லாம் தகடூரளவில் ஒடுக்கி, அதனைச் செயம் செய்வதில் அவன் செலவிடுகிறான். ஆலரச மரங்களின் வளர்ச்சியை அவன் ஓர் அரைக்கீரைப் பாத்திக்கு அளிக்கிறான். ஆனை அம்பாரிகளின் செல்வத்தை அவன் ஆடு மாடுகளின் மூலமே உண்டு பண்ணுகிறான். பெரிய அணைக்கட்டுகளால் தேக்க வேண்டிய வளத்தை, அவன் சிறு வரப்புகள் மூலமே உண்டுபண்ணுகிறான். பாகன்:- ஆ, தங்கள் விளக்கத்தை ஒளவையார் கேட்டால்கூட வியப்படைவார்! ஒளவையார் ஓர் உவமையைத் தேடிப் பிடித்ததே அருமை. நீங்களோ... புலவர்:- (புன்முறுவலுடன்) எல்லாம் பிறந்த நாட்டின் பெருமை. அதன் பண்பு பாகரிடம் இருக்கிறது; தச்சரிடம் இருக்கிறது. அரசனிடம் அதைக் காண்கிறோம். உழவரிடம், வீரரிடம், உம்மிடம், என்னிடமெல்லாம் உண்டு. பாகன்:- உம்மிடமும் என்னிடமுமா? உழவரிடமுமா? புலவர்:- ஆம். அதோ! (கலப்பை எருதுகளுடன் உழவன் ஒருவன், வேக வேகமாக விரைகிறான்.) அகக் காட்சி - 2 காலம்: பிற்பகல். இடம்: ஊர்ப்புறம். ஆட்கள்: புலவர், பாகன் (தேரருகில்), உழவன். உழவன்:- (எருதுகளைத் தடவிக் கொடுத்துக்கொண்டே அவற்றை நோக்கி) விரைந்து செல்லுங்கள். என் செல்வங்களே! வானின் செவ்வியும் நிலத்தின் பதமும் ஒத்து, உழவுக்கு ஏற்ற பருவம் வந்திருக்கிறது. இப்போது ஒரு கணம் கூடக் காலம் தாழ்த்தாதேயுங்கள். பாகன்:- யாருடன் போகிறாய் அண்ணே! கூட ஒருவரையும் காணோமே! உழவன்:- ஏன். இதோ செல்கின்றனவே, என் செல்வங்கள்! இந்த எருதுகள் நன்றாய் இருக்கும் வரை எனக்கு என்ன குறை? ஆனால் இன்று நின்று பேச நேரம் இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்துக்குள் உழுதாகவேண்டும். புலவர்:- என்ன இவ்வளவு அவசரம், அன்பரே! மழை இப்போதுதானே பெய்திருக்கிறது. உம்மிடம் நாங்கள் சில செய்திகள் கேட்க வேண்டும். சிறிது தங்கிப் போகலாமே! உழவன்:- ஏதோ, நீங்கள் மிக நல்லவர்கள், அயலூர், கேட்பதைக் கேளுங்கள். நான் விரைந்து போகவேண்டியிருக்கிறது. எனக்கு ஒரே ஒரு காணி நிலம் இருக்கிறது. எனக்கும் என் ஒரு இல்லத் தலைவிக்கும் வீட்டிலுள்ள இருகண்மணிகளுக்குக்கும் அது போதும். ஆனால் அதை உழுவதற்குக் கருவியாக ஒரே ஒரு ஏரும், துணைகளாக இந்த ஒரே சோடி எருதுகளும்தான் உண்டு. இன்று பொழுதுக்குள் உழுது முடித்தால்தான் பதம் போகுமுன் வேலை முடியும். அதனால்தான் உங்களிடம்கூட மிகுதி நின்று பேச முடியவில்லை. புலவர்:- அப்படியா, மிக நன்று. ஆனால் நீ நல்ல உழைப்பாளியாக இருக்கிறாயே! சிறிது பணம் சேர்த்து இன்னும் ஒரு ஏர், கூட ஒரு சோடி எருது வாங்கிக் கொண்டால் என்ன? இப்படி பரபரப்பில்லாமல், ஆர அமர வேலை செய்யலாமல்லவா? உழவன்:- என்னைவிட எவ்வளவோ அறிவும் அனுபவமும் உங்களுக்கு உண்டு, அண்ணா! உங்களுக்கு நான் என்ன சொல்வது! ஒருவன் எவ்வளவு பெரியவனானாலும் ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பதுதானே இன்ப முறை? இந்த வீட்டுக் குடும்ப வாழ்வு போலத்தான் வெளிக் குடும்ப வாழ்வும்! ஒரு வீட்டில் ஒரு இல்லக் கிழத்தி, ஒரு இல்லக் கிழவன்! அவர்கள் வாழ்வின் பொலிவுக்கு ஓரிரு கண்மணிகள்! அதுபோல, புற வாழ்விலும் எனக்கு ஒரு காணி நிலம், ஒரு ஏர்! இந்த ஒரு சோடி கண்மணிகள்! இவ்வளவு போதும். இவற்றைத்தான் நாம் கண்போலப் பேண முடியும். எவ்வளவு பணம் திரட்டினாலும், அது இந்தச் சிறு வட்டத்துக்குள்ளே சுழன்றால்தான் முழு இன்பம் காண முடியும். பாகன்:- ஆகா, உன் அனுபவ அறிவே அறிவு. உழவன்:- ஆம். ஏதோ என் சிறு வாழ்வின் அனுபவத்தைச் சொன்னேன். நான் இப்போது போகட்டுமா? புலவர்:- போய் வா! நாங்களும் போய் வருகிறோம்; வணக்கம். உழவன்:- வணக்கம்; போய் வருகிறோம்! (எருதுகளுடன் செல்கிறான்.) புலவர்:- பார்த்தீரா அன்பரே! அஞ்சியின் அரும்பண்புக்கு இந்த உழவனிடம் இரண்டு உவமைகள் மிளிர்கின்றன. ஒரு கால் செய்த பெருந் தச்சன், ஒரு சிறு நாடாளும் பெரு மன்னன், ஒரு மனைக்கு உண்மையான உயர் கணவன், ‘ஓர் ஏர் உழவன்’ பாகன்:- ஆயிர ஒளவையை விஞ்சிய செவ்வையான உவமைகள். ‘ஓர் ஏர் உழவன்’ - தமிழ்ப் பண்பின் தகை நிறை சால்பை விளக்கும் எத்தகைய இனிய பொருள் செறிந்த தொடர். உம்மை இனி இந்தப் பெயராலேயே நான் அழைக்கப் போகிறேன். புலவர்:- ஓர் ஏர் உழவன் ஆளும் நாட்டினர் நாம் நாம் எல்லாரும் ஓர் ஏர் உழவர்தான். அந்தப் பெயரில் நான் பெருமையடைகிறேன். 5. குறிஞ்சிக்கலி தரும் ஒரு நாடகக் காட்சி அகக் காட்சி - 1 (பீடிகை) காலம்: மார்கழி மாதம் - முன்னிரவு நேரம் இடம்: சிறுகுடியூரில் காடு வெட்டியின் குடிசைப் புறக் கொடிப்பந்தர்; சிறு தொலைவில் வெளிப் புறத்தே வேங்கை மரம். ஆட்கள்: தலைவி பொன்னி, தோழி மருக்கொழுந்து, (கொடிப் பந்தரருகே பொன்னி மயங்கித் தங்குவதை மருக்கொழுந்து காண்கிறாள்...) மருக்கொழுந்து:- ஏனம்மா, என்ன இந்நேரம் இங்கே வந்து நிற்கிறீர்கள்? உங்களுக்கு இன்னும் உறக்கம் வரவில்லையா? பொன்னி:- ஏண்டி, மரு! நீயே உறங்காதபோது, எனக்கெப்படியடி உறக்கம் வரும்? அதிருக்கட்டும்; இப்போது நான் உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். மரு:- ஏம்மா பொய் சொல்றீங்க! அப்படி என்னைத் தேட வேண்டிய நேரமல்லவே இது! பொன்:- போடி, இதெல்லாம் பேசாதே! எனக்கு இன்றைக்கு மனதுக்கு என்னவாபோல இருக்கிறது. சமயத்துக்கு ஏற்றதாக நீதான் ஏதாவது பொழுதுபோக்கு சொல்லேன்! மரு:- அப்படியே! சரி, வாங்கம்மா! நாம் இரண்டு பேரும் இப்படிக் கைகோர்த்துக் கொண்டு பாடுவோம். பொன்:- எனக்கோ எதிலும் மனம் பற்றவில்லை. இப்போது என்ன பாட்டுப் பாடமுடியும்? மரு:- வள்ளைப் பாட்டு. பொன்:- இப்போது எப்படி அதைப் பாடுவது? மரு:- ஏன்? மூங்கிலரிசி இருக்கிறது; அதைக் குற்றிக் கொண்டு பாடுவோமே! இதோ இங்கிருக்கிற பாறையையே உரலாக்கி, யானைக்கொம்பை உலக்கையாகக் கொண்டு இந்த அரிசியைப் பாடிக்கொண்டே குற்றுவோம். பின் சேம்பின் இலை இருக்கிறது. அதைச் சுளகாக வைத்துப் புடைத்துக் கொண்டு பாட்டை முடிப்போம். பொன்:- சரி; எதைப் பற்றியடி பாடுவது? மரு:- வேறு எதைப்பற்றி? நீங்கள் உள்ளத்தில் வைத்து மறைத்தாலும், உங்கள் முகத்தில் வந்து நிழலாடுகிறாரே, அவரைப் பற்றித்தான்! பொன்:- ஆ! மரு:- ஆம், அம்மா! எனக்குத் தெரியாதா? சொல்கிறேன்; அன்றொரு நாள் நள்ளிரவில், கருமுகில் திரண்டு மின்னி இடித்து மழை பொழிந்த சமயம், திடீரென நீங்கள் முன்னே எழுந்து சென்று விரைய, நான் உங்கள் பின்னால், உங்களுடனேயே தொடர்ந்து வந்து கண்ட காட்சி நினைவிருக்கிறதா? நம் தினைப்புனத்தில் வந்து பரண் மீதிருந்து காவல் செய்தாரே அவர் - ஆம், அந்தக் காளை - கானவன்... ஆம், அவரேதான்... அவரேதான்!... சி...ல...ம்...ப...ன்... பொன்:- போடி நீ, குறும்பு பேசுகிறாய்! மரு:- சரியம்மா, நான் சொல்லவில்லை. பொன்:- பார்த்தாயாடி, அதற்குள் கோபம் வந்து விட்டது. நான் இனி ஒன்றும் பேசவில்லை. சொல்ல வந்ததைச் சொல்லு. மரு:- அப்படி வாங்க வழிக்கு. ஏதோ ஒரு ஓசை கேட்டு அவர் திரும்பி நிமிர, நாம் அஞ்சி ஒளிய எண்ண, கண்மூடி விழிக்குமுன் மின்னல்போல நாம் கண்ட காட்சி ஆகா, என்ன காட்சி அது! பொன்:- சொல்லுடி, சொல்லு! நீ கவிஞர் போல அதை அன்று வருணித்தாயே! இன்னும் ஒரு முறை அதைச் சொல்லடி கேட்போம்! மரு:- வந்தது யானை என்று காலடியோசையால் அறிந்து, அவர் பரண் உச்சி ஏறி, கவணெடுத்து விசையுடன் எறிந்தாரே, அந்தக் கல்... பொன்:- மாமரம் ஏழும் துளைத்ததோ? மரு:- சீ, அது பழம் புளுகுக் கதை. இது நான் கண்ணாற் கண்டது! கேளுங்களேன்; அந்தக் கல் அருகிலிருந்த வேங்கை மரத்திலுள்ள பூக்களையெல்லாம் பொன்னை வாரி இறைத்தது போல் சிதறிவிட்டு, அத்துடன் நில்லாமல் ஆசினி மரத்திலுள்ள கனிந்த பழங்களை உதிர்த்துக் கொண்டு, அருகே தேன்கள் கட்டியிருந்த கூட்டில் துளை செய்து தேனையெல்லாம் வீணாக்கி ஓட விட்டது! பொன்:- இவ்வளவுதானா? மரு:- ஒருநாளும் இல்லை. அதுவே பின் மாமரத்திலுள்ள வடுக்களையெல்லாம் உதிரச் செய்து, வாழையின் மடலை அழித்து...... பொன்:- அப்புறம் என்ன ஆயிற்று? ஏன் தயங்குகிறாய்? மரு:- ஒன்றுமில்லை. உள்ளே கல்லிருக்கும் பலாப் பழத்திற்குள் புகுந்து கல்லோடு கல்லாய்த் தங்கிவிட்டது... தங்கி விட்டது... தங்கிவிட்டது! பொன்:- பலாப்பழத்திற்குள் தங்கிவிட்டதா? யானை என்ன ஆயிற்று? மரு:- (மருள மருள விழித்து) யானையா?... ஏது யானை? பொன்:- என்னடி கதையா சொல்லுகிறாய், கதை! பாடப் போகிறோம் என்றாய்; இடையே கதையில் வந்து தூங்குகிறாய்! மரு:- ஆம், அம்மா! மறந்துவிட்டேன். பலாச் சுளைக்குள் என் மனமும் பறிபோய்விட்டது. இப்போது அந்தச் சிறிய மலையை எறிந்தவனுடைய பெரிய மலையைப் பற்றிப் பாடுவோமா? பொன்:- உன் மனசு. அகக் காட்சி - 2 (நடுக் காட்சி - பாடுகிறார்கள்) பொன்:- மலைவாணர் பொய்த்தால் மலைபொய்க்கும்; வான்பொய்க்கும்; மலையருவி தானும் பொய்க்கும் என்பார் களேடி! இப்போது மலையருவி பொழிகின்றதேடி, மலையருவி பொழிகின்றதே! மரு:- மலைவாணர் பொய்யர் ஆவாரோ அம்மா! மலைவாணர் பொய்யர் ஆவாரோ? அஞ்சாதே; பெண்ணே, இனி நீ என் பொறுப்பு என்று கூறிய மலைவாணர் பொய்யர் ஆவாரோ அம்மா! வெண்ணிலாவில் வெப்பந் தோன்றினாலும் தோன்றலாம் மலைவாணர் பொய்க்க மாட்டாரே யம்மா! பொன்:- அடி, என் முன் கை வளைகள் எல்லாம் கழன்று கழன்று விழுகின்றனவே! இக்கொடுமை செய்தவர்தானேடி அவர்? மலைவாணர் கொடுமை செய்தால் மழை பொய்யாது என்பார்களே! இப்போது மழை பெய்கிறதேடி, மழை பெய்கிறதே! வளைநெகிழச் செய்த அக்கொடியார்க்குரிய மலையிலே மழை பெய்கிறதேடி! மரு:- அப்படியானால் வராதிருக்க மாட்டாரம்மா, வராதிருக்க மாட்டார்! நம்மிடம் அன்பாதரவு காட்டிய அருளுடைய மலைநாடன் வராதிருக்கமாட்டார் அம்மா! தண்ணீரில் மிதக்கும் குவளை வெப்பத்தால் வெந்தாலும் வேகலாம்; அவர் வராது உங்களைக் கொடுமைக் குள்ளாக்குவார் என்று என்னால் நம்ப முடியாது, அம்மா! பொன்:- ஏடி, நீ என்ன சொன்னாலும் எனக்கு ஆறவில்லையடி! அவர் வந்து என்னை அணைக்காததனால், என் மேனியெல்லாம் பசலையுற்று விட்டதடி! ஆனால் அவர் மலைமட்டும் நீலமணி போலப் பளபளக் கிறதடி! என் மேனியெல்லாம் பசலையுறச் செய்தவரது மலையாயி ருந்தும் அது பட்டையிடாத நீலமணிபோலப் பளபளக்கிறதேடி! மரு:- அவர் வரத்தான் கொஞ்சம் தாமதமாகிறது. ஆயினும் அவர் நம்மைக் கைவிடுபவரல்லர் அம்மா, கைவிடுபவர் அல்லர்! மலையோடு இணைந்த மலைக்குரிய அந்த மலைவாணர் நம்மைக் கைவிடுபவர் அல்லர் அம்மா! வானில் கதிரவன்மீது இருள் தோன்றினாலும் தோன்றலாம் அவர் நம்மைக் கைவிடுபவர் அல்லர் அம்மா! அகக் காட்சி-3 (இடைக் காட்சி) பொன்:- என்னடி, பாட்டு முழுவதும்தான் பாடிவிட்டாய்; இன்னும் அவர் வந்த பாடில்லையே! மரு:- (சிரிக்கிறாள்) நாம்தான் பாட்டிடையே அவரை மறந்து விட்டோம் அம்மா! அவர் வந்துவிட்டுப் போய் இருக்கிறார் அம்மா! பொன்:- வந்து விட்டாரா? வந்து விட்டுப் போயிருக் கிறாரா? என்னடி ஏமாற்றுகிறாய்? உளறுகிறாய்? வந்துவிட்டுப் போயிருக்கிறாரென்று எப்படித் தெரியும்? மரு:- எப்படித் தெரியுமாம்மா? அவர் கேட்கட்டும் என்று தானே இந்த வள்ளைப் பாட்டைப் பாடி வைத்தேன். அவர் இடையே வந்தார். பாட்டைக் கேட்டார். பெருமூச்சு விட்டுக் கொண்டு போனார். பொன்:- எங்கேடி போனார்? என்னிடம் ஏன் சொல்ல வில்லை? ஐயோ, அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ? அவரைக் காணாமல் நான் என்ன செய்வேன்? மரு:- இந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாமம்மா! இனி அவர் இப்படி வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கமாட்டார். நான் கவலைப்பட வேண்டியது இல்லை. நீங்கள் பெருமூச்சு விட வேண்டியதில்லை. கவலையுற வேண்டாம்; இதோ பாருங்கள் வேங்கை மரத்தடியில்! உங்கள் தந்தையுடன் அவர்........... புறக் காட்சி (மங்களக் காட்சி) இடம்: வேங்கை மரத்தடி ஆட்கள்: தலைவன் சிலம்பன், சிறுகுடிவாணன், காடு வெட்டி. சிலம்பன்:- தினைப்புனம் காக்கத்தான் இச்சிறு குடிக்கு வந்தேன். ஆனால் இங்கிருந்து போகும்போது என் உயிரைச் சிறுகுடியில் வைத்து விட்டுத்தான் போகிறேன். காடுவெட்டி:- ஆ, அப்படியா?....... அதுதான் நம் சிறுகுடி நாட்டார் நான் போகும்போதே அப்படி முணுமுணுக்கிறார்கள். இப்போதல்லவா செய்தி விளங்குகிறது. இதை உங்கள் தாய் தந்தையர் உறவினர் அறிவார்களா? சிலம்:- ஆம்; அறிவார்கள்! காடு:- நான் இப்போது ஒன்றும் முடிவு சொல்வதற்கில்லை. என் துணைவி செஞ்சாந்தும் பொன்னியின் நற்றாயும் ஏதோ குறிப்பாகத்தான் சொன்னார்கள்; அவர்களிடம் கலந்து பின் பேசுகிறேன். சிலம்:- அவர்கள் என்னை அறிவார்கள். பொன்னியின் வாழ்விலும் அக்கரை கொண்டவர்களே. அவர்கள் ஆதரவையே தருவார்கள் என்று எதிர் பார்க்கிறேன். தங்கள் உள்ளம்...... காடு:- தந்தையின் உள்ளம் வேறு எப்படி இருக்கும்? பொன்னி விரும்பினால்...! அகக் காட்சி-4 (இறுதிக் காட்சி) இடம்: கொடிப்பந்தர். ஆட்கள்: பொன்னி, மருக்கொழுந்து. மரு:- இனி என்னம்மா, உங்கள் மனம்போலத்தான் வாழ்வு. பொன்:- ஏன், உன் மனம்போலல்லவாடி! மரு:- அவர் மனதுபோலவும் தானம்மா! பொன்:- போடி, கேலியா செய்கிறாய்? மரு:- இனி வரவேண்டியது அவர். நான் போக வேண்டியதுதானேயம்மா?... இனித்தான் இருக்கிறது வேலை! போகலாம், வாருங்கள். (குனிந்த தலையுடன் பொன்னி செல்ல - மருக்கொழுந்தும் உடன் செல்கிறாள்.) அடிக்குறிப்பு 1. கலித்தொகை 41-ம் பாட்டு. அப்பாத்துரையம் - 28 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) மொழிபெயர்ப்பு  நீலகேசி  வாழ்வாங்கு வாழ்தல்  கன்னியின் சோதனை  யாழ் நங்கைஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 28 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+320 = 336 விலை : 420/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 336  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் நீலகேசி 1. ஆராய்ச்சியும் கதைச் சுருக்கமும் ... 3 2. சமயபேத விளக்கம் ... 25 வாழ்வாங்கு வாழ்தல் 1. எண்ணெயும் தண்ணீரும் ... 89 2. பெருமையும் சிறுமையும் தாம்தர வருமே ... 94 3. டாமியின் பயிற்சித் தொடக்கம் ... 98 4. உழைப்பார்வம் ... 102 5. கதைவாசிப்பு - செல்வனும் கூடை முடைபவனும் ... 107 6. டாமியின் வாசிப்பார்வம் ... 112 7. இருநாய்கள் கதை ... 115 8. குடிப் பெருமையின் குலைவு ... 117 9. ஹாரி டாமி உரையாடல் ... 120 10. அடிமையும் அரிமாவும் ... 125 11. டாமி உதவும் குறிப்பறிந்து உதவப் பழகுதல் ... 129 12. ஹாரியும் சே° பெருமகனும் ... 134 13. மண்ணுயிர் பேணல் ... 140 14. யானையும் தையற்காரனும் ... 144 15. டாமியின் செயற் பண்பாடு ... 146 16. அன்பும் அருளும் தெம்பும் தெருளும் ... 151 17. ஏழைச் சிறுவன் நன்றியுணர்வு ... 160 18. அறிவின் ஆற்றல் ... 164 19. செல்வமும் அறிவும் ... 167 20. நாட்டுப் பற்றும் நாகரிகமும் ... 172 21. தொலை நோக்காடி ... 179 22. டாமியின் குணமாற்றமும் ஹாரியின் ஏமாற்றமும் ... 183 23. அவமதித்தவர்க்கு அவமதிப்பு ... 186 24. மெர்ட்டன் குடியின் மனமாற்றம் ... 191 25. நீர்கழியஎய்தவடு ... 196 கன்னியின் சோதனை 1. கன்னியின் சோதனை ... 201 2. ஈழ நாட்டு நங்கை ... 216 3. மூன்று காதலர்கள் ... 235 4. தொண்டுள்ளம்1. கன்னியின் சோதனை ... 248 யாழ் நங்கை 1. யாழ் நங்கை ... 259 2. கணவன் ... 272 3. செங்காந்தள் ... 285 4. தமிழ்ப் பண்பு ... 303 5. குறிஞ்சிக்கலி தரும் ஒரு நாடகக் காட்சி ... 312