தாயகத்தின் அழைப்பு முதற் பதிப்பு - 1952 இந்நூல் 1952இல் பொன்னி லிமிடெட், சென்னை - 21. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. மெல்லியல் மூவர் நவம்பர் மாதத்தில் ஒருநாள். பிற்பகல் நேரம். வானத்தில் வெங்கதிர் மறைந்துவிட்டது. கீழ்வானில் தண்கதிர் எழுந்து விட்டாலும், வானத்தின் வெள்ளொளியில் அதன் ஒளி மழுங்கி யுள்ளது. வானத்தின் பகலொளியைச் சட்டை பண்ணாமல் நிலப்பரப்பில் அரையிருள் ஆட்சி தொடங்கிவிட்டது. கருங்கும்மென்று கரிசல் பரப்பு கடல்போல் பரந்து கிடக்கின்றது. வானத்தின் வெள்ளொளிச் செல்வனும் நிலத்தின் காரிருட் செல்வியும் தம் இருவேறு வண்ணங்களின் கவர்ச்சிகாட்டி வானவிளிம்பில் கைகோத்து மௌனமான மறைகாதலில் அயர்ந்துள்ளனர். புதர்க்காட்டின் பரப்பைக் கிழித்துக்கொண்டு வெள்ளிய நூலிழைபோல் ஒரு பாதை செல்கிறது. அதன் வழியாகச் சற்று வழிதடவிச் செல்கின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் எத்தனையோ புது மாறுதல்களுக்கிடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஜூலியஸ் ஸீஸர் கண்ட அதே பிரிட்டனின் தோற்றத்தையும் அதே வாழ்க்கைப் பண்பையும் பேரளவு மாறாது வைத்து நினைவூட்டும் இப்புதர்க்காட்டின் சின்னமென்று அவ்வுருவைக் கூறலாம். ஏனெனில் அது ஒரு கிழவன் உருவம். ஆயினும் அவன் நடையும் அவன் முணுமுணுத்துப் பாடிய பாட்டும் நெடுநாளைக்குமுன் அவன் வாழ்ந்த வாழ்வின் இளமையையும் முறுக்கையும் உள்ளக் கிளர்ச்சியையும், இன்னும் நினைவூட்டின. கிழவனுக்கு முன்னே சற்றுத் தூரத்தில் கருமணலில் ஊரும் நண்டுபோல ஏதோ ஒன்று தெரிந்தது. கிழவன் அதை அணுகுந்தோறும் அது ஒரு மூடு வண்டியென்றும் அதன் அருகே செவ்வுடையணிந்த ஒரு மனிதன் நடந்து சென்றானென்றும் விளங்கிற்று. அவன் உடையின் செந்நிறம் முகத்திலும் ஆடைக்குப்புறமே தெரிந்த மேனியிலும் தோய்ந்திருந்தது. அவன் ஒரு காவிக்காரன் என்பதை இது தெளிவாகப் புலப்படுத்திற்று. புதர் நிலமக்கள் இன்னும்கூடக் கால்நடைகளுக்குக் குறியிடக் காவி மண்ணைத்தான் பயன்படுத்தி வந்தனர். அத்தொழிலில் பணம் எளிதாகப் புரண்டது. ஆகவே உயர் நடுத்தர வகுப்பினர் கூட அதில் பெரும்பாலும் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் நாடோடி வாழ்வும் கிட்டத்தட்ட நிலவரமாகிவிட்ட அவர்கள் காவிநிற மேனியும் அவர்கள் வாழ்வை மக்கட் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்திருந்தது. குழந்தைகளை அச்சுறுத்தத் தாய்மார்கள் அந்நாளில் நெப்போலியன் பெயரை வழங்குவர்; அல்லது காவிக்காரனையே பூச்சாண்டியாகச் சுட்டிக் காட்டுவர். கிழவன் கண்ட காவிக்காரன் இத்தகைய செந்நிறப் பூச்சாண்டியாகவே தொலைவில் தோற்றினான். ஆனால் அணுகிப் பார்த்தபோது அந்தசந்தமான இளைஞனாகக் காணப்பட்டான். மேனி நிறமும் உடை நிறமும் இதனை முற்றிலும் மறைக்கவில்லை. காவிக்காரன் அடிக்கடி வண்டியின் பின்புறமிருந்து முன்சென்று பக்கப் பலகணி வழியாக உள்ளே எதையோ கூர்ந்து அக்கரையுடன் பார்ப்பதும் மனநிறைவு பெற்றவன்போலத் தலையசைத்துக்கொண்டு மீண்டும் பின்னுக்கு வந்து நடப்பது மாக இருந்தான். அவ்வண்டியில் அப்படிக் காவிக்காரனுக்கு என்ன அருமையாக இருக்கக்கூடும் என்று அறியக் கிழவன் ஆர்வம் கொண்டான். அவனிடம் சிறிது பேச்சுக்கொடுத்து “அப்பா, வண்டியில் என்ன இருக்கிறது அப்படி அடிக்கடி பார்ப்பதற்கு? உள்ளே உன் குழந்தை எதையாவது தூங்க வைத்திருக்கிறாயா?” என்று கேட்டான். “அது குழந்தையல்ல; ஓர் இளமங்கை.” “அது உன் மனைவியோ?” “எனக்கு மணமே ஆகவில்லை.” “காதலியோ?” “என் காதல், நட்பு, பழக்கம் ஆகியவற்றுக்கெல்லாம் எட்ட முடியாத உயர்குடி நங்கை; என் வண்டியில் செல்லத்தக்கவள்கூட அல்ல. ஆனால் அவள் எனக்கு அறிமுகமானவள். உடல் நொந்து உள்ளமும் நொந்த நிலையில் துயரமுற்றிருக்கிறாள். ஆகவேதான் என் வண்டியின் ஆதரவுடன் ஆங்கிள்பரியிலிருந்து ஏற்றி வருகிறேன்” என்று கூறிக்கொண்டே காவிக்காரன் முன்போல மீண்டும் வண்டியினுள் எட்டிப்பார்த்துவிட்டு வந்து, தனக்குள் கூறுபவன் போல ‘பாவம்! அயர்ந்து தூங்குகிறாள். அழுதழுது ஓய்ந்துவிட்டாள், நன்றாக இளைப்பாறட்டும்” என்றான். காவிக்காரன் பேச்சு கிழவன் ஆர்வத்தை இன்னும் கிளறிற்றே தவிரக் குறைக்க முடியவில்லை. “ஆங்கிள்பரியிலிருந்தா? அவள் யார்? எந்த இடத்துக்குச் செல்கிறாள்? என்ன அவள் துயர்?” என்ற பல கேள்விகளை அவன் அடுக்கினான். காவிக்காரனுக்கு இக்கேள்விகளும் ஆர்வமும் கட்டோடு பிடிக்கவில்லை. ‘இதுவரை இவன் பேச்சுக்கு இடங்கொடுத்ததே தவறு. தன்னால் மதிப்பும் ஆதரவும் அளிக்கப்பெற்ற நங்கையின் செய்திகளைத் துளைத்தறிய இவன் யார்?’ என்று அவன் எண்ண மிட்டான். ஆகவே சற்றுக் கண்டிப்பான குரலில் “அதெல்லாம் இப்போது கூறிக்கொண்டிருக்க நேரமில்லை - தேவையுமில்லை. அது என்னைப் பொறுத்த செய்தியுமல்ல. மேலும் நான் குதிரைகளுக்குச் சிறிது ஓய்வு கொடுத்துத்தான் வரவேண்டும். நான் நின்றுதான் வரப்போகிறேன். நீங்கள் சென்று வாருங்கள்” என்றான். கிழவன் சிறிது சுண்டிய முகத்துடன் சப்புக் கொட்டிக் கொண்டு சென்றான். காவிக்காரன் வண்டியை அவிழ்த்து விட்டுக் குதிரைகளுக்கு இரண்டு சிரங்கை உணக்கற்புல் எடுத்துப் போட்டான். கிழவனையே பார்த்த வண்ணம் அவன் ஏதோ சிந்தனையிலாழ்ந்தான். கிழவன் வடிவம் விரைவில் ஒரு புள்ளியளவாகக் குறைந்து இருளில் இருளாய் மறைந்துவிட்டது. ‘காதல்! இன்று அந்தப் பேச்சுக்கு இடமில்லைதான். ஒரு காலத்தில் அந்தக் கனவு இல்லாமலில்லை. பணத்துக்காக ஏற்றுக் கொண்ட இந்தத் தொழில் வறுமையைப் போக்கிற்று, ஆனால் பாவையை எட்டாத் தொலையாக்கி விட்டது’ என்று அவன் எண்ணமிட்டான். ஆனால் அந்தப் பழைய எண்ணத்தைப் பற்றி இப்போது அவனுக்கு அவ்வளவாகக் கவலையில்லை. அவள் துயரம்தான் அவனைக் கலக்கிற்று. அவள் அவன் வண்டியின் உதவியையும் அதன் மூலம் தனக்கு மறைவையும் ஓய்வையும் கோரினாள். அக்காட்சி அவனை உருக்கிற்று. அவன் உள்ளக் கதவும் திறந்தது. நொந்தழுத பிள்ளையை அணைக்கும் தாயின் நெஞ்சு போல வண்டி அவளை ஏற்றது. பிள்ளை அழுவதுபோல அவள் அழுதாள். பிள்ளை அழுதோய்ந்து தாய் மடியில் உறங்குவதுபோல அவளும் உள்ளே உறங்கினாள். அது கண்டு அவன் ஆறுதலுற்றான். ‘பேசாமடந்தை விடுதி!’ ஆம், அங்கேதான் தன்னை இறக்கி விடும்படி அவள் கோரியிருந்தாள். அது எங்கேயிருக்கிறது? அவன் புதர்க்காட்டிற் பிறந்தவன்தான், அதன் வழிகளை நன்கு அறிந்தவன்தான், ஆனாலும் இப்பெயரை அவன் இதற்குமுன் கேட்டதில்லை. யாரிடம் வினவுவது? கிழவனிடம் கேட்டிருக் கலாம். அவன் வேண்டாத வகையில் துன்பத்தில் துவளும் இம்மெல்லியலாள் பற்றித் துளைத்தறிய விரும்பினான். ஆகவே வேறு யாரையாவது கண்டு வினவவேண்டும் என்று காவிக்காரன் சிந்தித்தான். அவன் கண்கள் நாற்புறமும் தேடின. யாரையும் காண்பதா யில்லை. ஆயினும் என்ன? அன்று நவம்பர் ஐந்தாம் நாள் என்பது அவனுக்குத் தெரியும். புதர்க்காடெங்கும் அது சொக்கப்பனை விழா நாள். பிரிட்டானியர் கிறிஸ்தவராவதற்கு முன்னிருந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கிறிஸ்தவ நாகரிகம் கடந்து வெஸ்ஸெக்ஸ் புதர் நில மக்களிடையே அது வழங்கிவந்தது. இன்னும் சிறிது நேரத்தில் நாற்புறமும் பலப்பல அழற்பிழம்புகள் தெரியும். அதுவரை எவரும் வராவிட்டால், அருகிலுள்ள ஏதேனும் ஒரு ஒளி விளக்கத்தினருகில் சென்று வழி வினவலாம் என்று காவிக்காரன் காத்திருந்தான். சிறிது நேரத்தில் ஒவ்வொன்றாக மூலைதோறும் வெள்ளொளிகள், செவ்வொளிகள், மின்னொளிகள், கரும் புகைச் சுருள்கள் தெரிந்தன. புதர்க்காட்டின் மையத்தில் அதன் பிடரிபோலிருந்த நடுமேட்டின் மீது பண்டைக் கல்லறைமாடம் ஒன்று இருந்தது. காவிக்காரன் கண்கள் அதன்மீது சென்றன. அதில் இன்னும் ஒளியில்லை. ஆனால் வானத்தின் பின்னணியில் அதன் புறவடிவம் நன்கு தெரிந்தது. மேட்டின் தலைபோல ஒரு குவடும் அதன் மிது தலையணைபோலக் கல்லறை மாடமும் தோன்றின. கல்லறை மாடத்தின்மீது தலையணிச் சூட்டுப்போல ஒரு நிமிர்கோடு தெரிந்தது. முதலில் அது உயிரற்ற ஏதோ பொருள்போலத் தோற்றினாலும், அது சிறிது சிறிதாக அசைவதும், நகர்வதும் தெரிந்தது. அவ்வசைவு அது ஒரு மனித உரு என்றும், அசைவின் குழைவுநெளிவு அது ஓரிளம்பெண் என்றும் காட்டின. அவ்வடிவம் விரைவில் குவட்டின் கீழ்பால் இறங்கிச் சென்றது. அதேசமயம் வேறு பல நிழலுருக்கள் தலையில் ஏதோ தாங்கிய வண்ணம் குவட்டின் மேற்புறம் சென்றன. பின் ஒன்றன் பின் ஒன்றாக ஏறிச் சென்றன. தலையின் சுமடுகள் புதர்க்கட்டுகள் என்பதை அவனால் ஊகிக்க முடிந்தது. மாடத்தின் உச்சியில் விரைவில் ஒரு சிற்றொளி எழுந்து பேரொளியாகப் படிப்படியாக அழல் வீசத்தொடங்கிற்று. மாடம் அருகேதான் இருந்தது. நங்கை இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். குதிரைகள் இன்னும் உணக்கற் புல்லைக் கறித்துக்கொண்டுதான் இருந்தன. காவிக்காரன் வழிவினவும் எண்ணத்துடன் அவற்றை அப்படியே விட்டுவிட்டு எழுந்து மாடத்தை நோக்கிப் புறப்பட்டான். மாடத்தின் உச்சியெல்லாம் இப்போது செந்தீ வண்ணமாய் தெரிந்தது. சுடர்ப்பொறிகள் தெறித்தெழுந்து வானவெளியைச் சென்று முத்தமிட்டு மாய்ந்தன. கூளிகளும் குறளிகளும் போலத் தெரிந்த ஆண்பெண் குழந்தை நிழல் வடிவங்கள் அழலொளியை மாறிமாறி மறைந்த வண்ணம் சுற்றிக் கூத்தாடின. கூத்துக்குரிய குரவைப் பாட்டும் அதன் சந்தத்துக்குரிய கைகொட்டோசையும் இருளில் மிதந்து காவிக்காரன் செவிகளில் தெளிவாகக் கேட்டன. தன்னதா னா தனனா தன்ன தானா! தன்னானா தன்னதன தான தன்னா! (தன்னதா) “மந்திரிமா ரே வருவீர்” என்றான் மன்னன் வந்தார்கள் ஒன்று, இரண்டு மூன்று - பேர்கள். “தந்திரியா ரே வருவீர் அரசி மாடம் சார்ந்து செய்தி கோருவோம் எழுவீர்” என்றான் (தன்னதா) மண்டியிட்டுத் தந்திரியார் கெஞ்சு கின்றார்: வா மொன்று தரவேண்டும் மன்னர் மன்னா கண்டொத்தமொழியாள் எம் அரசி என்ன சொன்னாலும் கொற்றவனே கோபம் வேண்டாம். (தன்னதா) பாடியவர் வேறு யாருமில்லை; வழியில் முந்திச் சென்று மறைந்த கிழவர்தான். இளைஞர் மங்கையர் சிறுவர் பலர் பாடியும் அவர்கள் குரல் கடந்து அவர் குரலும் முழக் கொட்டும் எக்களிப்பும் கேட்டன. குறுக்கு நெடுக்காக வில்போல் வளைந்து, பாம்புபோல நெளிந்து சென்ற அவர் உடலின்மீது செவ்வொளி படர்ந்தது. அதன் நரம்புகள் வில்நாண்போல் அதிர்வுற்றன. முகத்தின் குறும்புநகை ஒளி விளக்கத்துடன் மல்லாடிற்று. இக்காட்சி கிழவன்மீது காவிக்காரனுக்கிருந்த பழைய கடுகடுப்பைக்கூட மறக்கடித்தது. சிறுவன் ஒருவன் கிழவனை இடித்துக்கொண்டு, முன் வந்து “காண்டில் தாத்தா, இன்று உனக்கென்ன இளமையே வந்து சற்று எட்டிப்பார்க்கிறதோ? ஏன், இன்னொரு தடவை மணம் செய்து கொள்ளேன்” என்றான். “பேசாதிரு, டிமதி” என்று கிழவன் கையமர்த்திய வண்ணம் மற்றொருவனை நோக்கி, “ஃவேர்வே, இதோ பார், நாம் அனைவரும் இப்போது வீடு சென்று வேறு ஆடை எடுத்துக் கொண்டு பேசாமடந்தைக்குச் செல்வோம். அவ்விடுதிக்காரப் புதுப்பணக்காரன் ஊராரை ஏய்த்துத் திருமணம்செய்து வருகிறானாம். போய் அவனுக்குத் திருமணக் கூத்தடித்து அவன் புட்டிகள் ஒன்றிரண்டைக் காலி செய்யலாம் வா” என்றான். “ஆம். அண்ணே, எல்லோரும் போகலாம்” என்றான் டிமதி. அழல் அவிந்து இதற்குள் கரியும் சாம்பலும் பறந்தன. இருள் மட்டும் கவிந்தது. மற்ற ஒளிகளும் பல்வேறுநிலையில் அணைந்து வந்தன. ஒன்றுமட்டும் நீடித்தொளி வீசிற்று. அதுதான் மீகாமன் வை வீட்டில் அதன் பேர்த்தி யூஸ்டேஷியா வளர்க்கும் தீ” என்றான் ஒருவன். “அந்தப் படுபாவி சூனியக்காரி இப்படிப் பேய்ச் சூனியம் பண்ணுவதால்தான் என்பிள்ளை குற்றுயிராய் நலிகிறது. அவள் பந்தம் கொளுத்துகிற நாளெல்லாம் என் பிள்ளை நோயால் துடிக்கிறது” என்றாள் ஒரு கந்தலாடைப் பெண். “நீ கடவுளை மறந்தாலும் மறப்பாய், சூசன்நண்சச்! பேய்ச் சூனியத்தை மறக்கமாட்டாய்” என்றான் ஃவெர்வே. “உன் பிள்ளை வாழ்வை அது பாதித்தால் தெரியும் உனக்கு” என்று அவள் சீறினாள். ஃவெர்வே அவள் பேச்சைவிட்டுக் கிழவனை நோக்கி “தாத்தா, அந்த மணப்பெண் தாம்ஸின் அத்தை திருமதி யோப்ரைட்டை நேற்றுக் கண்டேன். அவள் மகன் கிளிம் வருகிறானாம் இங்கே, கிறிஸ்துமசுக்கு. ஆள் நல்ல படிப்பு, நல்ல முறுக்கு. பாரிஸில் வாழ்ந்து வைரக்கடையில் வேலை பார்ப்பவனுக்குக் கேட்பானேன்! இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நம் ஊருக்கு அவன் வரவேற்பு விழாவாகத்தான் இருக்கும்” என்றான். “பாரிஸாவது, லண்டானாவது! நம் புதர்க்காட்டுக்கு எதுவும் ஈடல்ல” என்றான் கிழவன் காண்டில். அவர்கள் தன்னால் ஆதரிக்கப்பட்ட நங்கையையும் அவள் குடும்பச் செய்திகளையும் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று அறிந்து காவிக்காரன் இதுவரை கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் திருமண நாளில் அவளுக்கு என்ன துயரம் நேர்ந்திருக்கக் கூடும் என்பதை அவனால் அறியக்கூடவில்லை. அவன் கும்பலை அணுகினான். சூசன்நண்சச் “ஐயோ பேய்” என்றலறினான். அவன் உருவங்கண்டு டிமதிகூடச் செங்கொள்ளி வாய்ப்பேய் என்று அஞ்சி ஃவெர்வேயின் பின்சென்று அவன் இடும்பைக் கட்டிக்கொண்டான். அது காவிக்காரன் என்று கிழவன் கூறியவுடன் தான் சிறிது சிறிதாகத் தெளிவு கிட்டியது. காவிக்காரன் இரண்டொரு பேச்சில் பேசாமடந்தைக்கு வழியறிந்து கொண்டான். அவன் திரும்பவும் வண்டி நோக்கிச் சென்றான். சிறிது நேரத்தில் கும்பலின் எதிரே மற்றோர் உருவம் வந்தது. சூசன் “அதோ திருமதி யோப்ரைட்” என்றான். அனைவரும் வரவேற்றனர். மருமகளின் புது வாழ்வு பற்றிப் பலர் பாராட்டத் தொடங்கினர். திருமதி யோப்ரைட் அனைவருக்கும் அவசரக் குறிப்புத் தோன்றச் சுருக்கமான மொழிகளில் வணக்கமும் விடையும் கூறிவிட்டு, “எனக்கு அவசரமாகப் போக வேண்டும். மன்னியுங்கள். விளக்கொளிகள் மங்குகின்றன. பேசாமடந்தைக்குச் செல்லும் வழியைக் கூறுங்கள். பின்னர் உங்களைப் பார்க்கிறேன்” என்றாள். அவர்கள் வழியைச் சுட்டிக்காட்டினர். ஃவெர்வே அத்துடன் “இப்போதுதான் ஒரு காவிக்காரனும் அதே வழி கேட்டான். அவன் வண்டியைக் கண்டால், அதனுடன் போனால் போதும்.” என்றான். திருமதி யோப்ரைட் அவர்கள் காட்டிய வழியே சென்றாள். பேசாமடந்தை என்பது திரு. வில்டீவுக்குரிய மனையிடத்தில் இருந்தது. அவனே அதன் நிலமுதலாளி. அந்த மனை புதர்க் காட்டின் பிற பகுதிகளைப் போலவே தற்காலமனிதன் ஆட்சிக்கு வளைந்து கொடுக்காத பகுதியாகத்தான் இருந்தது. ஆனால் அதை வழிக்குக் கொண்டு வரமுடியும் என்று ஒரு அறிவாளி கண்டான். அவன் தன் வாழ்வை அதில் கொட்டினான். அவன் வியர்வை அதில் ஊறிற்று. வியர்வையைத் தொடர்ந்து குருதி, குருதியைத் தொடர்ந்து தசையும் உடலும் அதில் இடம் பெற்றன. பித்துக்கொள்ளியாகக் காலஞ்சென்ற அவனிடமிருந்து மனை மற்றொரு அரைப்பித்துக்கொள்ளிக்குக் கைமாறிற்று. முந்தியவன் அறிவையும் உழைப்பையும் உறிஞ்சியது போல, நிலம் இரண்டாவது மனிதன் பணத்தையெல்லாம் உரமாக உண்டு ஏப்பமிட்டது. அவன் உடலும் அந்த மண்ணில் மாண்டது. இரண்டு நைந்த வாழ்வின் பயனைக் குனியாமல் நிமிராமல் அறுவடை செய்யும் குருட்டுப்பேறு வில்டீவுக்குக் கிடைத்தது. அவன் ‘அமெரிகோவெஸ்புகி’ போல் வந்தான், வெட்டினான், குவித்தான். பணக்கடவுள் திருவருள் அவன்மீது பால்மழை பொழிந்தது. மனையில் புது விடுதி ஒன்று தோன்றி அவனுக்குப் புதுப்புகழும் செல்வாக்கும் ஆட்சியும் தந்தன. புதர்க்காட்டின் பழைய நிலப்பண்ணைக் குடியின் செல்வியான தாம்ஸின் கையை அவாவும் அளவுக்கும் அவன் உயர்ந்தான். பேசாமடந்தையில் நுழையுமுன் திருமதி யோப்ரைட்டை நோக்கித் தொலைவிலிருந்து ஒரு வண்டி விரைந்து வந்தது. அவள் அது கண்டு தயங்கி நின்றாள். அது காவிக்காரன் வண்டி. கும்பலில் அவளுக்குக் கூறப்பட்ட காவிக்காரன் செய்தி அவள் நினைவுக்கு வந்தது. ஆனால் அவன் அருகே வந்ததும் “நீ யாரப்பா, இந்த இடத்தை விசாரித்து வருகிறாயாமே, ஏன்?” என்றாள். “என்னை உங்களுக்குத் தெரியவில்லையா?” அவள் விளக்கொளியில் கூர்ந்து பார்த்தாள். “ஆ, நீ எங்கள் பழைய பால்காரனல்லவா? நீ எப்போது காவிக்காரனானாய்?” “அது பழங்கதை. தங்கள் மருமகள் தாம்சினை எனக்கு அறிமுகமுண்டு. அவளைப்பற்றி...” “அவள் திருமணம் இன்று. பின்னால் பேசிக் கொள்ளலாம். நான் உள்ளேபோய் அவளைப் பார்க்க வேண்டும். போகிறேன்.” “சற்றுப் பொறுங்கள், அம்மா. அவர்கள் உள்ளே இல்லை.” “உனக்கெப்படித் தெரியும்?” “என் வண்டியில் இருக்கிறார்கள்.” இதன் பின் நடைபெற்றது ஒரு சிறு நாடகம். காவிக்காரன் தனக்கே முற்றிலும் புரியாத நிகழ்ச்சிகளை நடந்தவாறு கூறினான். “நான் வழக்கமாக வண்டியை ஓட்டவிருந்தேன். பேயறைந்த கோலத்தில் ஒரு பெண் அருகே வந்தாள்” நான் அஞ்சினேன். ஆனால் ‘டிக்கரிவென், எனக்கு ஒரு உதவி செய்வாயா? நான் திக்கற்றுத் துடிக்கிறேன்’ என்றது அவ்வுருவம். அதுதான் தாம்சின், தங்கள் மருமகள்.” “அவளுக்கு உன் முழுப்பெயர் எப்படித் தெரியும்?” “என் தங்கை அவள் தோழி.” டிக்கரிவென் மீதிக்காட்சியை வருணிக்குமுன், தன் மருமகள் திருமணத்துக்கு முன்பே ஏதோ இடர் நேர்ந்திருக்க வேண்டுமென்று திருமதி யோப்ரைட் ஊகித்தாள். அவள் தசைகள் அவளை மீறித் துடித்தன. ‘எங்கே அவளை நான் பார்க்கிறேன்’ என்று விரைந்து சென்று வண்டியின் உள் நோக்கினாள். என்றும் படுத்தறியாத படுக்கையில் வைக்கோல் செத்தைகள் மீது தாம்சின், காற்றெடுக்கப்பட்டு விட்ட ரப்பர் பொம்மைபோல் கிடந்தாள். அவள் கண்களில் உலர்ந்த கண்ணீர் தடங்கள் தெரிந்தன. ஆனால் உறக்கத்தை விடச் சோர்வுதான் கண்களை மூடவைத்திருந்தது. நாடி நரம்புகள்கூட உறங்கிற்றோ என்றபடி அவள் கிடந்தாள். பொன் முகில் வண்ணம் போலத் தலைமுடி சிதறிக் கிடந்தது. அதனருகே முழுநிறைகலையுடைய பிள்ளை இளமதியின் நிழலாக அவள் வட்டமுகம் சோர்ந்திருந்தது. முகத்தோற்றத்தின் பின்னணியில் அவளுக்கு இயல்பான களங்க மற்ற நம்பிக்கை, சூதுவாதற்ற களியார்வம், பாசம் யாவும் இன்னும் இடங்கொண்டன. ஆனால் அதன் அமைதியை முற்றிலும் குலைக்கத்தக்க குமுறல், அவநம்பிக்கை, மனக்கசப்பு ஆகியவற்றின் சீர்குலைவுகள் முன்னணியில் முனைப்பாகத் தெரிந்தன. அவள் கொவ்வைக்கனியிதழின் செந்நிறம் சிறிது மங்கிவிட்டது. ஆனால் அதனுடன் தொடர்புகொண்ட கன்னங்கள் முழுதும் வெளிறி விட்டபடியால் இதழின் நிறமாற்றம் தனிப்படத் தெரியவில்லை. இதழ்கள் இன்னும் துடித்தன. உள்ளம் சோர்ந்தும் துன்பத் துடிப்பை அவளால் மறைக்க முடியவில்லை. தான் ஒருகால் காதலித்த பெண் - ஆயினும் குடும்பப் பெண் - அவள் அழகை அந்நேரம் பார்த்தால் தகாதெனக் கருதி டிக்கரி அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். அதற்குள் அவள் எழுந்தாள்; கண்ணைவிழித்து ஒன்றும் தோன்றாமல் சுற்றிப் பார்த்தாள். அத்தை முகங்கண்டு திகைத்து, “நீங்கள்... இங்கே... நான் இப்போது எங்கிருக்கிறேன்?” என்றாள். வில்டீவ் அன்று அவளை மணந்து கொள்ளவில்லை. இருவரும் மணம் செய்யப்போகும்போது, சமயத்தலைவர் மண உரிமைச்சீட்டுச் சரியில்லை என்றார். சீட்டு ‘பட்மத்’திற்குரியது, அதை வைத்துக்கொண்டு ஆங்கிள்பரியில் மணம் செய்ய முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். மணப் பெண் திகில் கொண்டாள். அதற்குப்பின் பட்மத் செல்வதும் முடியாத காரியம். வில்டீவ் தன் தவறை ஒத்துக் கொண்டு, விரைவில் புதுச்சீட்டுப் பெற்று மற்றொருநாள் மணப்பதாகக் கூறினான். ஆனால் அவள் மனம் இடிந்து விட்டது. மணமாகாமல் அவனுடன் வண்டியில் வர அவள் மறுத்துவிட்டாள். மணவினையை எதிர்பார்த்தனால், வேறு ஏற்பாடும் செய்யவில்லை. அதற்குப்பின் எவர் முகத்திலும் விழிக்க மனமின்றி, அவள் அடிபட்ட விலங்குபோல அலறி ஓடினாள். தன் அவமானத்தை மறைக்கவே அவள் துடித்தாள். டிக்கரிவென்னின் வண்டியும் அவன் அன்பாதரவும் அவளுக்குப் பெரிதும் உதவின. அத்தையும் மருமகளும் சென்றதை நினைக்கக்கூட உரமற்றவர்களாய், விரைந்து பேசாமடந்தையினுள் தம் அறைக்குச் சென்றனர். டிக்கரிவென் விடைபெற்றுச் சென்றான். மணப்பெண்ணுக்குக் கோவிலில் தந்த அதே விளக்கத்தைத் தான் வில்டீவ் பேசாமடந்தையிலும் கொடுக்க முடிந்தது. ஆனால் அடுத்தபடி திட்டத்தைப்பற்றி அவர்கள் நினைக்குமுன் மணவாழ்த்துப் பாடிப் பாராட்டவந்த கும்பல் வெளியேவந்து ஆரவாரம் செய்தது. நடந்த செய்தியை அவர்கள் முகம் பார்த்துச் சொல்ல வில்டீவுக்கு மனமில்லை. பெண்டிருக்கும் அது பிடிக்கவில்லை. ஆகவே இருவரையும் உள்ளறையில் வைத்து விட்டு வில்டீவ் வெளியில் வந்தான். மணப்பெண் சோர்வுற்று ஓய்வுகொள்வதாகக்கூறி வேண்டாவெறுப்பாக வில்டீவ் அவர்கள் பாராட்டைப் பெற்று, கொடுத்துத் தொலைக்க வேண்டிய புட்டிகளைக் கொடுத்தான். கிழவன் காண்டில் குடித்ததுடன் விடவில்லை; இரண்டொரு காதல் பாட்டுப் பாடித்தான் அயர்ந்தான். ஒருமட்டில் கும்பலை அனுப்பிவிட்டு வில்டீவ் உள்ளே வந்தான். தாம்சின் எதுவும் வாய் திறக்கவில்லை. திருமதி யோப்ரைட் அழுதாள், திட்டினாள்; கண்டித்தாள், சீறினாள். தாம்சினின் உயிர்த்துடிப்பும் வில்டீவிடம் எத்தகைய மாறுதலையும் செய்யவில்லை. அவள் அத்தையின் சீற்றமும் அவனை ஒன்றும் பாதித்ததாகத் தெரியவில்லை. நடந்த செய்தி இயல்பான ஒரு தவறு மட்டுமே என்றும், மீண்டும் மணச்சீட்டுப் பெறும் தாமதம் தவிர வேறு கவலைப்படுவதற்கொன்றுமில்லை என்றும் அவன் விளக்கம் கூறினான். பெண்டிரும் வேறு செய்வகை எதுவும் காணாமல், கூறியபடி விரைவில் செய்யும்படி மட்டும் வற்புறுத்தி வேண்டிக்கொண்டு சென்றனர். ஆனால் வில்டீவ் அவர்களை இடையே தன்னுடன் தங்கியிருக்கும்படி கூறியதற்கு, அவர்கள் அறவே இடந்தராது மறுத்துவிட்டனர். மணமுறிவுச்செய்தி மறுநாளே ஊரெங்கும் பரவி விட்டது. மணமுடிந்தபின் மணத்துணைவரைப் பாராட்டி விட்டு வந்ததாகக் கருதிய நண்பர்களும் இவ் எதிர்பாராச் செய்திகேட்டு வருந்தினர். தாம்ஸின் அறையுட்கிடந்து அழுந்தினாள், வெளியே தலைகாட்டவில்லை. திருமதி யோப்ரைட்கூட வெளி நடமாட்டத்தை வெறுத்தாள். தாம்ஸினின் துயரோ அவள் அத்தையின் சீற்றமோ வில்டீவின் மனத்தை அசைக்காததற்குக் காரணங்கள் இல்லாம லில்லை. திருமதி யோப்ரைட் தொடக்கத்திலிருந்தே தாம்ஸின் வில்டீவைக் காதலிப்பதை வெறுத்தவள். அதற்காகத் தாம் சினைக் கடிந்த வெறுத்தவள். . அவள் அத்துடன் அமையவில்லை. குடும்பத்தினர் எவரும் வெறுப்பைக் கொண்டுபோகாத அளவுக்கு அவள் கொண்டு சென்றாள். மணமாகுமுன் கோவிலில் மண முன்னறிவிப்புச் செய்யப்படுவது ஆங்கில நாட்டுமுறை. அதுமுதல் வாரந்தோறும் பிறர் இணக்க எதிர்ப்புக்களை அறிய அது மேடையில் எடுத்துரைக்கப்படும். அத்தகைய தறுவாயில் திருமதி யோப்ரைட் எதிர்பாரா வகையில் எழுந்து நின்று மணவினையைத் தான் எதிர்ப்பதாகக் கூறினாள். இதற்குப் பின் தாம்சினின் வற்புறுத்தலாலும் செங்சலாலும் திருமதி யோப்ரைட் மணவினைக்கு வேண்டா வெறுப்பாக இணங்கினாலும் அவள் செயலை வில்டீவ் தனக்குச் செய்த அவமதிப்பாக எண்ண இடமிருந்தது. இப்போது அவள் செல்லாச் சீற்றத்தால் அவளுக்கு ஏற்பட்ட புதிய அனுபவம் அவள் மனத்துக்கு நிறைவளிக்கக் கூடியதாயிருந்தது என்பதில் ஐயமில்லை. ஒரு அத்தைமீதுள்ள சீற்றத்தால் எந்த உண்மையான காதலனும் தன் காதலியைத் தாம்சின் துடித்தது போலத் துடிக்க விடமாட்டான். ஆனால் காதலை ஒரு வேட்டையாகக் கருதுபவன் வில்டீவ். அதில் அன்பு இல்லை; தற்பெருமை இருந்தது; போட்டி உணர்ச்சி இருந்தது. தாம்சின் துயர் அவன் தற்பெருமைக்கு விறகாயிற்று திருமதி யோப்ரைட்டின் சீற்றம் அவன் போட்டி உணர்ச்சியை வளர்த்தது. அவன் மணமுறிவின் பின்னணியில் வேறுபல செய்திகளும் இருந்தன. * காவிக்காரன் டிக்கரிவென், மாடத்தில் இருளில் பார்த்த பெண்ணுருவம் வேறு யாருமல்ல, மீகாமன் வை மகள் பிள்ளையாகிய யூஸ்டேஷியாதான். கிழவன் காண்டிலும் பிறரும் கடைசிவரை விடாது எரிந்துகொண்டே இருந்ததாகப் பார்த்த தீயும் அவள் வளர்த்ததேயாகும். கிழவன் காண்டிலும் பிறரும் வருவது கண்டே அவள் மாடத்திலிருந்தும் இறங்கி அப்பால் நின்றிருந்தாள். அவர்கள் போனபின் அவள் மீண்டும் அங்கே வந்து நின்றாள். மாடத்தில் தீயவிந்து ஒன்றிரண்டு சுவடுகளே மீந்திருந்தன. அவள் நெடுநேரம் அங்கே நின்றிருந்தாள். இரவின் தனிமையில் அவள் உள்ளம் எங்கெங்கோ திரிந்தது. அவள் நெடுமூச்சு வானத்தின் மூச்சுடன் கலந்தது. அதன் வெப்பு அப்புதர்க்காட்டின் வெப்புடன் ஒன்று பட்டது. அவள் கண்கள் நாற்புறமும் துழாவின. தொலைவில் ஒரு சிறு ஒளிவட்டம் தெரிந்தது. அதைக் கண்டதும் அவள் தன் இடுப்பிலிருந்து ஒரு தொலைநோக்குக் கண்ணாடியை எடுத்து அதன் மூலம் அவ்வொளிவட்டத்தில் கருத்துச் செலுத்தினாள். சிறிது நேரம் பார்த்தபின் மீண்டும் வெய்துயிர்த்தாள். அவள் பார்த்த ஒளிவட்டம் வில்டீவின் அறையில் பலகணியில் தெரிந்த ஒளியேயாகும். தொலைநோக்குக் கண்ணாடியில் பார்த்தபோது அவள் பெருமூச்சுவிடக் காரணம், அதன் மூலம் அவள் பலகணிக்கெதிராக வில்டீவ் இருப்பதையே கூர்ந்து கண்டுகொண்டது ஆகும். யூஷ்டேஷியா இம்முன்னிரவில் உண்மையில் வில்டீவுக் காகவே காத்திருந்தாள். அவன் அவளுடைய நீண்ட நாள் காதலன். இதே நாள் இதே நேரம் அவன் வாரந்தவறாமல் இவ்விடம் வந்து அவளுடன் ஊடாடி மகிழ்வது வழக்கம். தாம்சினை அவன் காதலித்த நாள்முதல் அவன் வரவு நின்றது. அக்காதலைப்பற்றி அவள் கேள்விப்பட்டாள். ஆனால் அவன் வராவிட்டாலும் அவள் வரத்தவறியதில்லை. இரவு குறிப்பிட்ட நேரத்தில் அவள் அவனை அழைத்துப் பேச விரும்பினால், தீப்பந்தம் எரியவைப்பாள். இன்று நவம்பர் ஐந்தாம் நாள் மற்ற தீப்பந்தங்களுடன் அவளும் வளர்த்த தீ அத்தகைய தீப்பந்தமே. தாம்சினின் அழகு இளவேனிற் காலத்தின் இளம்பிறை என்றால் யூஸ்டேஷியாவின் அழகு முதுவேனிற் காலத்தின் முழு நிலா என்னலாம். அழகுடன் வண்ணமும் திண்ணமும் அவளிடம் ஒன்றுபட்டன. அவள் சிறிது சதைப்பற்றேறிய உடலுடையவள். கண்கள் கவர்ச்சி மட்டுமன்றி மயக்கமும் பிறரை அடக்கியாளும் ஆற்றலும் துணிவும் உடையவையாயிருந்தன. மைக்கறுப்பு நிறம் வாய்ந்த அவள் கூந்தல் கற்றை கற்றையாய் அடர்த்தியுடன் சுருண்டு நீண்டு புரண்டது. இவ்வுருமைதிக்கேற்ப அவள் பற்றும் பாசமும் உடையவள். ஆனால் அதேசமயம் போட்டியும் பொறாமையும் மிக்கவள். மாடத்தில் நெடுநேரம் காத்திருந்தும் பயனில்லாமையால், யூஸ்டேஷியாவின் உள்ளம் கொல்லன் ஊதுலை என்னக் குமுறிற்று. அவள் விரைந்து வீடு சென்றாள். வீட்டின் அருகே யுள்ள திடலின் இருகரைகள் சந்தித்த மூலையில்தான் அன்று அவள் தீப்பந்தம் எரிந்து கொண்டிருந்தது. அவன் எதிரே ஒரு சிறு வற்றாத நீர்க்குட்டை இருந்தது. தீப்பந்தத்தின் அருகே ஒரு சிறுபையன் இருந்து பந்தத்தில் அடிக்கடி கட்டைத் துண்டுகளை இட்டுக்கொண்டிருந்தான். அவன் வேண்டாவெறுப்புடன்தான் வேலை செய்தான் என்று தெரிந்தது. அவன் முகத்தில் சோர்வு தட்டியது. அவன் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டு சலிப்புடன் இருந்தான். ஆயினும் அவன் பொறுமையுடன் எதையோ கவனித்துக் கொண்டிருந்தான். தவளை நீரில் துள்ளுவது போல ஓசை கேட்டால் உடனே தன்னிடம் வரவேண்டுமென்று யூஸ்டேஷியா அவனுக்குக் கட்டளை யிட்டிருந்தாள். இவ்வேலைக்குப் பரிசாக அவனுக்கு ஒரு தேய்ந்த காசும் தருவதாகச் சொல்லி ஆசைகாட்டியிருந்தாள். பாழாய்ப் போன தவளை விழாதா, காசைப் பெற்றுப் போகமாட்டோமா என்றே அவன் காத்துக் காத்து இருந்தான். இடையிடையே மேடேறிவந்து யூஸ்டேஷியா பையனை ஊக்குவாள். தவளை பாயவில்லை என்று கேட்டு அவளும் மனக்கசப்புடன் மீட்டும் திடலில் சென்று பார்ப்பாள். இப்படி இரவு கழிந்தது. * தாம்சினும் யோப்ரைட்டும் போனபின் வில்டீவ் வெளியே தன் வேலையாக வந்தான். தீப்பந்தம் அவன் கண்ணிற்பட்டது. “ஆ, மாயக்கன்னி, நீ உன் செயலை நிறுத்த மாட்டாயா?” என்று அவன் தனக்குள்ளே, உரத்துக் கூவினான். அன்று மாலையிலேயே மாட உச்சியில் அவள் காத்திருப்பதையும் அவன் கண்டிருந்தான். அவன் அவளைச் சென்று காண நினைக்கவில்லை. ஆனால் கால்கள் சென்றன. எங்கே செல்கிறோம் என்ற நினைவில்லாமலே தீப்பந்தத்தின் பக்கம் சென்றான். அருகில் சென்றதும் வழக்கப்படி ஒரு சிறு கூழாங்கல்லைக் குட்டையில் எறிந்தான். தவளை ஓசைக்குக் காத்திருந்த பையன் மகிழ்ந்தோடினான். அவன் கையில், அவன் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தேய்ந்த காசை அவசர அவசரமாய் கொடுத்துவிட்டு அவள் வந்தாள். நீண்டநாள் சந்திக்காத காதலர் மீண்டும் சந்தித்தனர். மேடேறிவந்த உருவம் கண்டு அவள் “இதோ வந்து விட்டேன்” என்றாள். அவள் நாடி துடித்தது. ஆனால் அவன் அடுத்த பேச்சு அவளை எச்சரித்தது. “எனக்கு நீ ஓய்வே கொடுப்பதில்லை; என்னை ஏன் ஓயாது நச்சரிக்க வேண்டும்? மாலை முதல் நான் உன் தீப்பந்தத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் வில்டீவ். அவள் துடிப்பையும் அடக்கிக்கொண்டாள். கோபத்தையும் அடக்கிக் கொண்டாள். “உன்னை யார் நச்சரிக்கிறார்கள்? நானும் எல்லோரையும்போலத் தீப்பந்தம் கொளுத்தக்கூடாதா?” என்றாள். “அது மற்ற தீப்பந்தங்களுள் ஒன்றல்ல; என்னை அழைப்பதற்கான அடையாளம்.” “உனக்கான அடையாளம் என்று இப்போது நீ கொள்ள வேண்டியதேவை, என்ன வந்துவிட்டது? நீ அவளை நாடினாய். நீயாக உன் வரவை நிறுத்திக்கொண்டாய். அதன் பின் நான் உன்னிடம் பேசமுடியாது. என் அடையாளத்தை அதன்பின் மதிப்பானேன்?” அவன் தலை கவிழ்ந்து சில கணம் நின்றான். “அப்போது இந்த அடையாளம் எனக்காக அல்ல என்றுதான் கொள்ளவேண்டுமா?” என்றான் கம்மிய குரலில். அவள் மனம் இளகிற்று. “ஆம்; வில்டீவ், உனக்கான அடையாளம்தான். நான் கேள்விப்பட்டேன், கோவிலில் நடந்ததை. உன் உள்ளம் ஊசலாடியிருக்கிறது, என்னை விட்டுப் போகவில்லை என்று உணர்ந்தேன். ஆகவே அழைப்பு விடுத்தேன்” என்றாள் அவள். பெண்மான்களை வேட்டையாட விரும்பிய பெண் வேடன் தான் அவன். ஆனால் வேடரை வலைவீசிப்பிடிக்கும் மான் அவள். பெண்களைக் கவர்ந்து ஆட்கொள்ள நினைத்தவன் அவன். அவள் அத்தகைய ஆடவனையே தேடி ஆட்கொள்ளத்தக்கவள். அவள் அவனை மீட்டும் ஈடுபட வைத்தாள். அத்துடன் பணிய வைக்க நாடினாள். “நான் உறுதிபடைத்தவள். நீ உறுதியில்லாமல் போனாலும் உன்னை மீட்டும் இழுக்கும் ஆற்றல் எனக்கு உண்டு.” என்று தொடங்கினாள். அவன் திமிறினான். “இது தற்பெருமை. இது நான் கூறவேண்டியது. நீயாகக் கூறிக்கொள்கிறாய்?” என்றான். “நீயே என் முக அழகை இன்னொரு தடவை கேட்டுப் பார்” என்று கூறி அவள் சட்டெனத் தன் முகத்தைச் சுற்றிப் போர்த்திருந்த போர்வையை அகற்றினாள். முகில் திரை நீங்கிய முழுநிலாவைப் பழித்த அவள் முகத்தை அவன் முன் பலதடவை பார்த்தவன்தான். ஆனால் அவன் திகைப்புடன் அவன் கவர்ச்சியில் மெய்மறந்து நின்றான். “நீ நாடிய வேட்டையில் இதுபோன்ற மானைப் பார்த்ததில்லையல்லவா?” என்று கூறி அவன் முகத்தைத் தன் முகத்துடன் இணைத்துக்கொண்டாள். “உனக்குத் தீங்கு செய்துவிட்டேன்” என்றான் அவன். “இல்லை. நீ எனக்கு உன் அருமையைக் காட்டியிருக்கிறாய்.” “உன் தோள் இனிது.” “தாம்ஸின் தோள் இனிமை அறிந்தபிறகு கூடவா?” யூஸ்டேஷியாவின் தந்தை படைத்துறை இசைமேளக்கார ராயிருந்தார். ஃபிரெஞ்சுக்காரர். பட்மத்தில் அவர் தங்கியிருக்கும் போது யூஷ்டேஷியாவின் தாய் எப்படியோ அவரிடம் ஈடுபட்டுத் தந்தையைப் பகைத்துக்கொண்டு அவரை மணந்தாள். அவள் தாய் அருமை தெரிந்த அவள் தந்தை தாயின் பெயரை ஏற்று இங்கிலாந்திலேயே தங்கிவிட்டதுடன், மாமனார் பணத்துடன் மகளை நன்கு படிக்க வைத்து அவரிடமே அனுப்பி அவர் மன்னிப்பைப் பெற்றார். இம்மாமனே மீகாமன் வை. அவர் போரில் காலெலும்புகள் உள்ளுற நொறுங்கப்பெற்றதால் ஓய்வு பெற்றவர். புதர்க்காட்டில் இடம் மலிவானதால் அங்கு தங்கினார். அவரிடம் இருந்த தொலைநோக்குக் கண்ணாடியில் தொலைவில் தெரிந்த கடற்பகுதியை அவர் பார்ப்பது வழக்கம். அவர் புதுக்கட்டிடம் கட்ட அறுத்த பலகைகளின் மீந்த துண்டுகளையே யூஷ்டேஷியா காதலனுக்காகத் தீப்பந்தத்திற்கு எரித்தாள். யூஸ்டேஷியா பட்மத் வாழ்வை விரும்பினாள். புதர்க் காட்டை வெறுத்தாள். புதர்க்காட்டு மக்களையும் அவள் புறக்கணித்தாள். யாருடனும் பழகுவதில்லை. ஆனால் அவள் பெண் உள்ளம் ஆண் மகன் ஒருவனைத் தேடியபோது, வில்டீவ் பிறரைவிட நாகரிகமாகத் தோன்றினான். அவனிடம் தன் ஆற்றலைக் கையாடிப் பயின்றாள். எப்படியாவது மணம் செய்துகொண்டு பட்மத் அல்லது இன்னும் நாகரிகமான இடம் செல்லவேண்டுமென்பதே அவள் இடையறா ஆர்வமாயிருந்தது. யூஸ்டேஷியாவுக்காகத் தீப்பந்தம் எரித்துக்கொண்டிருந்த பையன் உண்மையில் சூசன்நன்சச்சின் மகனே. செல்வி வை பந்தம் எரித்த அன்றெல்லாம் அவன் இரவில் வானவெளியிலிருந்ததால் தான் நோய்வாய்ப்பட்டான் என்றதாலேயே அவன் அன்னை யூஷ்டேஷியாவைச் சூனியக்காரி என்று கருதி வெறுத்தான். பையன் காசை வாங்கிக்கொண்டு ஓடும் வழியில் டிக்கரிவென்னின் வண்டியருகில் புதர் தடுக்கி விழுந்தான். டிக்கரி அவனுக்கு உதவிசெய்து, பேச்சுக் கொடுத்து யூஸ்டேஷியா வில்டீவ் காதற் சந்திப்புகள் பற்றி அறிந்து கொண்டான். அவன் பழைய காதல் பரிவாலும் நட்புக் கனிவாலும் மாறியதனால், அவன் அவள் மனைவியின் தடங்கலகற்றி அவள் குடும்பத் துயரொழிக்கத் திட்டமிட்டான். யூஷ்டேஷியா வில்டீவுடன் சந்தித்துப் பேசியதும் அவன் கேட்டுவிட்டான். அவன் நல்ல காலத்தில் அவசரம் காட்டி யூஸ்டேஷியாவிடம் நேரில் சென்று பேசினான். முதலில் தாம்ஸின் திருமணம் நிறை வேற வில்டீவிடம் பேசி உதவவே கோரினான். “வில்டீவிடம் கூற நான் யார்?” என்றாள் அவள். டிக்கரி துணிந்து “நீதான் அவள் திருமணத்தைத் தடுக்கிறாய். வில்டீவுடன் நீ காதல்புரிவதை நான் அறிவேன். உன்னைவிட அவன் வாழ்வுக்கு அவள் இன்றியமையாதவள்” என்றான். யூஸ்டேஷியா புதர்க் காட்சிகளை வெறுத்தாள் என்பதறிந்து அவளைப் பட்மத்தில் ஒரு வீட்டுக்கு உயர்பணியாளாய் அனுப்புவதாகவும் ஆவலூட்டினான். ஆனால் யூஸ்டேஷியா மனம் முற்றிலும் அவன் மொழியில் அமையவில்லை. டிக்கரி யூஸ்டேஷியாவிடம் பேசியது கடமைக்காக. ஆனால் காதல் அவனுக்கு மற்றொரு திட்டத்தையும் துணிச்சலுடன் கூறியது ‘வில்டீவ் முற்றிலும் மறுத்தால், தன் காதலியின் முறிந்த வாழ்வைத் தானே ஏற்று ஏன் செப்பம் செய்யக்கூடாது?’ என்று அவன் எண்ணமிட்டான். இதில் ஆர்வம் அவனை உந்த அவன் திருமதி யோபிரைட்டிடம் இதை நயமாகக் கூறினான். அவள் இதுவே நல்ல திட்டம் என்று கருத முடியாவிட்டாலும் வில்டீவை நெருக்க இது நல்ல பின்னணிக் கையிருப்பு என்று கொண்டாள். தவிரத் தான் வெறுத்தலில் ஃவிரடை விட இவன் கேடில்லை என்று அமைந்தாள். வில்டீவிடம் அவள் பேச்சின் முறுக்கு இதனால் மாறிற்று. இதுவரை வில்டீவ் மணஞ்செய்து கொள்வதாகக் கூறினானே யன்றி அதில் உள்ள குடும்ப அவமதிப்பை எண்ணி விரைவும் அக்கரையும் காட்டவில்லை. ஆயினும் அவன் தற்பெருமையை விட்டுக் கெஞ்சவேண்டியதிருந்தது. ஆனால் இப்போது அவள் ‘தாம்சினை மணம் செய்துகொள்க’ என்று வேண்டவில்லை. “மணம் செய்து கொள்கிறாயா இல்லையா? இரண்டிலொன்று கூறுக” என்றாள். “மணம் செய்துகொள்ளாவிட்டால்...” “அவளை மணக்க விரும்புவர் வேறு ஒருவர் இருக்கிறார்.” “அது யார்?” “முன் அவளைக் காதலித்த ஒருவர்” “அப்படி அவள் எதுவும் என்னிடம் கூறவில்லையே.” “பெண்கள் இதையெல்லாமாக் கூறுவார்கள்?” “சரி. அவரையே மணம் செய்விப்பதுதானே. என்னை ஏன் கேட்கவேண்டும்?” “அவர்தான் அவளை விரும்புகிறார்; அவளல்ல” “அப்படி யானால் அவர் பெயரால் என்னை அச்சுறுத்துவானேன்?” “நீங்கள் மறுத்தால், அவரை அவள் விரும்பும்படி நேரலாம். முன் மறுத்தவள் இப்போது மறுக்கமாட்டாள்.” வில்டீவின் போட்டி வேட்டையும் வீம்பும் தணிந்தன. அடுத்தநாளே விடை தருவதாகக் கூறினான். அன்றே அவன் யூஸ்டேஷியாவிடம் போய் பேசினான். அவள் அன்று அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் படபடப்பும் ஆர்வமுனைப்பும் அவனைக் காட்டிக் கொடுத்தன. வேடன் ஒரு வேட்டையில் தோற்று மற்றொருபுறம் வருகிறான் என்பதை அவள் ஊகித்தாள். அவள் நயமான குறுக்குக் கேள்விகளால் அவன் வாயில் இருந்தே நிலையை முற்றிலும் வருவித்துவிட்டாள். இப்போது துருப்பு தன் கையில் என்று அவள் துணிவு காட்டினாள். அவள் மண உறுதி கேட்டாள். அவன் விளையாடினான். ஆர அமர ஒருவாரத் தவணை கோரினான். அவன் அவள் கரம்பற்றினான். அவள் விடுவித்துக் கொண்டு, “போய் வேறு வேலையில்லாவிட்டால் நாளை வந்து காத்திரு. நான் முன்பு காத்திருந்தேனல்லவா? அதுபோல் காத்திருந்து என் உள்ளங் கனிவித்தால்தான் இனி இந்தக் கனி கிடைக்கும்” என்றாள். அவன் மனக் கசப்புடன் சென்றான். தாம்சினை எப்படியும் மணப்பது; அதன்மூலம் அவள் காதலுள்ளத்தைத் தண்டிப்பது’ என்ற முடிவுடன் அவன் சென்றான். 2. தாயகத்தின் மைந்தன் ஹெக்டன் புதர்க்காட்டுப் பகுதிகளில் தற்கால நாகரிகமும் நிலப் பண்பாடும் மிகுதியாகப் பரவாததுபோல தற்காலக் கல்விமுறையும் பரவவில்லை. ஆயினும் திருமதி யோப்ரைட் தன்புதல்வன் கிளிம்முக்குச் சிறு பருவத்திலேயே தாயகத்தின் முழுக் கல்வியும் கடந்து தொலைநகரங்களின் பண்பையும் வளர்த்தாள். இளமையிலேயே இக்கல்வி அவன் வெளித் தோற்றத்தையும் அவன் கருத்துக்களின் புறவடிவையும் மாற்றி யிருந்தன. ஆயினும் அகத்தே புதர்க்காட்டின் ஒப்பனையற்ற இயல்பான கவர்ச்சி அவன்மீது தன் சுவட்டைப் பதிப்பித் திருந்தது. ஆனால் விசித்திரம் என்னவென்றால் இது அவனைப் புதர்க்காட்டுக்கு இழுத்ததே தவிரப் புதர்க்காட்டு மக்களை அவன்பால் இழுக்க உதவவில்லை. அவன் புதர்க்காட்டு மக்களை மதித்தான். அவர்கள் பண்புகளைப் போற்றினான். போற்றி வளர்க்கவும் எண்ணினான். இது அவன் கலைப்பண்பு. தோற்றத்துக்காக அல்ல; அகப் பண்புக்காக. அவர்களும் அவனை மதித்தனர். ஆனால் இம்மதிப்பு அவன் அகப்பண்புக்காக அன்று, அவன் தாயகப்பற்றுக்காக அன்று, அவன் புறப்பண்புக்காக, அவன் வெளியிடப் பயிற்சித் திறத்திற்காக, நாட்டுப்புறம், நாட்டுப்புறத்தை இயல்பாகக் கருதிற்று. ஆனால் நகர்த்திறத்தை உயர்வுடையதாகக் கருதி அவாவிற்று. ஆனால் நகரத்தின் கல்வி, நாகரிகம், பண்பு, செல்வம் யாவும் கைவந்த இவ்விளைஞன் புதர்க்காட்டை முன்னேற்றும் உயர்கலையார்வத்திற்காக எல்லாவற்றையும் துறக்க ஒருங்கியிருந்தான். சிறு பருவத்திலேயே, புத்தகங்களில் காட்டும் ஆர்வத்தை விட இயற்கையின்-புதர்ப்பரப்பின் அழகில் அவன் மிகுதி ஆர்வம்காட்டி ஈடுபட்டிருந்தான். அவன் தாயகத்துத் தோழர், புதர்க்காட்டில் அவன் காண அப்படி என்ன இருக்க முடியும் என்று விழித்தனர். பணமும் பகட்டும் கலைநயமும் உடைய அவனைக் கண்டு அவர்கள் அன்பும் புத்தார்வமும் கொண்ட போது, அவன் அவற்றில் பெருமைகொள்ளாமல் அவர்களிடம் கருத்துச் செலுத்தினான். இதையும் அவர்கள் உணரக்கூட வில்லை. அவன் கிறிஸ்துமசுக்கு வர இருப்பது கேட்ட அனைவரும் மகிழ்ந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது அவன் பாரிஸ் வாழ்விடையே ஒருவார இடைக்கால அவசர ஓய்வைமட்டுமே. அது கண்ணுக்கும் வெளியுலக வாழ்வைச் சிறிது உற்றுப்பார்க்க உதவும் மாயப் பலகணியாக அமையலாமென்று எண்ணினர். ஆனால் அவன் வந்தது உண்மையில் ஓய்வுக்கல்ல, நிலையான வாழ்வுக்கு. பாரிஸில் அவன் ஒரு பெரிய வைரக் கழக வாணிபத்தில் பணிசெய்தான். அதை விட்டுவிட்டுத் தாயக மக்களிடையே கல்வியைப் பரப்பும் உயர்நோக்கத்துடன் அவன் வந்தான். கிளிம் வரவின் முழுநோக்கமும் புதர்நில மக்களுக்குத் தெரியாது. ஆனால் அவன் விசித்திரக் கருத்துக்களும் விசித்திரப் பண்புகளும் உடையவன் என்பது எல்லாருக்கும் தெரியும். இது வெளியூர் கல்வியால் வந்த கேடு என்று சிலர் கருதாமலுமில்லை. ஆனால் நாகரிக மொழியாகிய பிரஞ்சு மொழியை அவன் பேசுபவன். உலக நாரிகத்தின் நடுவிடமாகிய பாரிஸில் உயர்குடி மக்களிடையே பழகியவன், உயர்ந்த நாகரிகப் பழக்க வழக்க முடையவன், பெரும் பணம் புரளும் நிலையங்களைச் சார்ந்தவன் என்ற புகழ் எல்லோரையும் அவனை அண்ணாந்து பார்க்க வைத்தது. அவன் வரவைப்பற்றியே சந்து பொந்துகள்தோறும் பேச்சாயிருந்தது. இப்பேச்சுப் பல வகையிலும் யூஸ்டேஷியாவுக்கும் எட்டிற்று. அவளைச் சூழக் காற்றில் பறந்து அப்பேச்சின் அலைகள் மோதின. கீழே புல்லறுவடைக்களத்தில் தொழி லாளரும் ஊர் மக்களும் இது பற்றியே பேசுவதும் அவர் களிடையே அவள் பாட்டன் வை கலந்துகொள்வதையும் கவனித்து அவள் உற்றுக் கேட்டாள். மீகாமன் வை புதுமையும் புதுக்கல்வியும் வெறுத்தவர். அவர் கிளிம்மின் புதுக்கல்வி, புதுமைக்கருத்துக்களை வெறுத்தே பேசினார். “அந்தச் சிறுவன் இவ்விடம் விட்டுப் போனதே தவறு. தந்தை தொழிலே மகனுக்கு எல்லா வகையிலும் ஒத்திருக்கும். புது வழி செல்வது எனக்கு என்னவோ பிடிக்கவில்லை. என் தந்தை, மூதாதையர் எல்லாரும் கடலுக்குத்தான் சென்றனர். நானும் அதிலேயே வாழ்ந்தேன். எனக்கு மட்டும் மகனிருந்தால், நான் அவனை அதில்தான் கழிக்கவிடுவேன்” என்று கூறினார். “அத்துடன் அவர் பாரிஸ் நகரத்திலேயே வாழ்கிறாராமே. அந்தப் பொல்லாத நகரத்தில்தான் சில ஆண்டுகளுக்குமுன் மக்கள் மன்னன் தலையை வெட்டித் தள்ளினார்களாம். என் தாய் சிறு பிள்ளையாயிருக்கும்போது இது நடந்ததாகக் கூறுவாள். அது கேட்டு நாங்கள் இனி அந்த உலகில் என்ன என்ன நேருமோ கடவுளுக்கே தெரிய வரும் என்போம்” என்றது ஒரு குரல். “என் போன்ற பலருக்குத் தெரியும், என்ன வருமென்று. அது காரணமாக நாங்கள் ஏழாண்டுகள் கப்பலொன்றில் கடற்கரையின் கீழே பதுங்கிக் கிடக்கவேண்டி வந்தது. அது தவிரக் கால்போனவர், கை போனவர் எத்தனையோ பேர் நாள்தோறும் கப்பலில் வந்து மருத்துவம் பெற வந்தனர்... ஆனால் இடம் பாரிஸானாலும் வேலை வைர வேலை. அதில் மேலாளர் நிலையிலிருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.” பேச்சு எங்கெங்கோ சென்று திரும்பி கிளிம்முக்கு வந்தது. ஒரு குரல் அவன் விசித்திரக் கருத்துக்களையும் ஆழ்ந்த சிந்தனைகளையும் பற்றிக் கூறிற்று. “ஆழ்ந்த கருத்துக்களா?” என்று தொடங்கினார் மீகாமன் வை. “அதெல்லாம் இந்தப் பிள்ளைகளை இக்காலப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதால் வந்த வினை. அதனால் தீமையைத் தவிர நன்மையில்லை வாசற்படிதோறும் சுவர்தோறும் இந்தப் போக்கிரிப்பயல்கள் கரியோ சுண்ணாம்போ கொண்டு எழுதுவதைக் கண்டாலே இவர்கள் படிப்பின் தகுதி தெரியுமே. பெண்கள் வேறுபடித்திருந் தால் அந்தப் பக்கமே போக நீதியிராது. படித்திராவிட்டால் இவர்கள் இந்தக் கெட்டபுத்தியை வளர்த்திருக்கவும் முடியாது; பரப்பியிருக்கவும் முடியாது. இவர்கள் தந்தையர் காலத்தில் இந்தப் படிப்பும் இல்லை. இந்தச் சிறுமதியும் இல்லை.” கல்வியையே அவர் கண்டித்தது ஓர் இளைஞனுக்குப் பிடிக்கவில்லை. “கல்வியே தவறு என்று கூறமுடியுமா? நூல்கள் படிப்பதில் செல்வி யூஷ்டேஷியா எவருக்கும் இளைக்க வில்லையே. அவளுக்கு என்ன குறை?” என்றான் அவன். “படித்தமட்டில் குறை இல்லாமலில்லை. படித்ததனால் தான் இத்தனை மாயக்கற்பனை முட்டாள்தனங்களைத் தலையில் சுமந்து திரிகிறாள். படித்திராவிட்டால் அவள் விரும்பிய வாழ்வுக்கு நன்றாயிருக்கும்” என்ற பேச்சுடன் வை வீட்டிற்கு வந்துவிட்டார். மற்றும் இரண்டு குரல்கள் தம்மில் பேசிக்கொண்டது அவள் கருத்தைக் கவர்ந்தது. அதில் கிளிமின் பெயருடன் அவள் பெயர் இணைக்கப்பட்டது. நம் யூஷ்டேஷியாவும் நல்ல இணைதுணைகள் என்றுதான் தோன்றுகிறது. இருவரும் நூல் படித்தவர்கள். இருவரும் நுணுகிய நய நாகரிகம் உடையவர்கள். இருவருக்கும் உயர்ந்த கொள்கை. குடும்பத்திலும் கிளிம், யூஸ்டேஷியாவுக்கு இணையென்றுதான் சொல்ல வேண்டும். அவள் தந்தை ஒரு பெருநிலக்காரன் மட்டுமேயானாலும், தாய்நகர்ப் பண்புடையவள். இவ்விருவரும் மணவினையில் பிணைக்கப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்? ஏற்கனவே பாரிஸிலிருந்து வருகிறவன் என்ற சொல் கிளிம்மீது யூஸ்டேஷியாவின் கவனத்தை இழுத்திருந்தது. இப்போது அவன் பணமும் குடியும் யாவும் பிறரால் தன்னுடன் ஒப்பிடப்படுவது கேட்க, அவள் முழுவேகத்துடன் அவன் கற்பனை உருவுடன் ஆர்வம் கொண்டாள். தன் குடும்பம் தனித்தே வாழ்ந்ததனாலும், புளும்ஸ்எண்டிலுள்ள யோப்ரைட்களுடன் பழகாததனாலும் அவன் வரவேற்பில் அவனுடன் கலந்து கொள்ளவோ அவனைக் காணவோ தன்னால் முடியாமற் போய்விடுமோ என்று அவள் கவலைகொண்டாள். அவள் பகல் சிந்தனை முழுதும் இரவுக்கனவு முழுவதும் இப்போது கிளிம்பற்றியதாகவே இருந்தது. மாலை உலாவச் செல்லும் போதெல்லாம் அவள் கால்கள் பெரிதும் புளும்ஸ் எண்ட் பக்கமே சென்றன. யூஸ்டேஷியாவின் உள்ளத்தில் முன்பெல்லாம் வில்டீவைப் பற்றிய எண்ணங்களும் கனவுகளுமே வேர்க் கொண்டிருந்தன. இப்போது கண்காணாக் கிளிம்மின் புத்தவா ஆர்வம் வளர வளர, பழைய வடிவம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அத்துடன் மற்றொரு சமயம் அவள் உற்றுக்கேட்ட உரையாட லொன்று அவள் உள்ளப் போக்கை இன்னும் கிளிமின் பக்கம் தள்ளியது. வில்டீவையும் தாம்சினையும் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். தாம்சின் பெருந்துயரைப்பற்றி வருணித்த ஒருவன் இறுதியில் “ஆனால் இத்தனை துயரும் இனி விரைவில் மாறிவிடலாம். உண்மையில் வில்டீவ் இப்போது அவளை மணக்கும்படி கோரினால்கூட அவள் ஏற்றுக் கொள்வாள் என்று கூறமுடியாது. ஏனெனில் காற்றுத் திசைமாறிவிட்டது” என்றான். இப்பேச்சு யூஸ்டேஷியா உள்ளத்தில் வில்டீவ் மதிப்பைப் பல படி இறக்கி, கிளிம்மைப் பலப்படி ஏற்றிற்று. அத்துடன் புதிதாக வரும் இவ்வொளிமணியைத் தான் பெறாமல் தாம்சின் தட்டிக்கொண்டு போய்விடப் போகிறாளோ என்ற பொறாமையும் ஏற்பட்டது. உண்மையில் அவனைச் சந்திக்கக் கூட முடியாத தன்னைவிட, அவனுடன் ஒரு வீட்டிலேயே ஓயாது இருக்கும் தாம்ஸினின் வாய்ப்பு மிகுதி என்றும் அவள் புழுங்கினாள். மறுநாள் யூஸ்டேஷியா வழக்கம்போல மாலை உலாவும் போது புளும்ஸ்எண்ட்பக்கம் சென்றாள். திருமதி யோப்ரைட் இல்லத்தைச் சுற்றிச் சிறிது நேரம் ஊடாடியபின் கருக்கிருட்டில் அவள் தன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள் திருமதி யோப்ரைட்டின் இல்லத்திலிருந்த முழு அமைதியிலிருந்து கிளிம் வந்து விடவில்லை என்றும், ஆனால் வரவிருக்கும் சமயத்தையே அவ்வமைதி குறிக்கக்கூடும் என்றும் அவள் ஊகித்தாள். ஆனால் அந்த வேளைதான் அவன் வந்துகொண்டிருந்தான் என்பதையோ, அவள் திரும்பிச்செல்லும் வழியில்தான் அவன் வரக்கூடும் என்பதையோ அவள் எண்ணவேயில்லை. ஆகவே, பலர் கூடிப் பேசிக்கொண்டுவரும் அரவமும் பல தலைகளும் தெரியத் தொடங்கவே அவள் பாதையிலிருந்து விலகிப் புதர்ப்பரப்பின் இருளில் மறைந்துகொள்ள முயன்றாள். இதில் அவள் முழுதும் வெற்றியடைய முடியவில்லை. ஆகவே, அவள் எதிர்பாராத ஒரு வெற்றி கிட்டியது. போகின்றவர்களிடையே தனியாக, முதன்மையாக இருபெண்டிரும் ஒரு ஆடவரும் சென்றனர். தற்செயலாக அவர்கள் யூஸ்டேஷியா இருந்த பக்கம் பார்த்துக் கொண்டு வந்தனர். ஆகவே, இருளிலும் அவளை அவர்கள் பார்த்திருக்க முடியும். மற்றவர்கள் பார்த்தார்களோ, அடையாளம் கண்டார்களோ என்னவோ ஆடவன் அவளைக் கண்டதுமட்டும் உறுதியாயிற்று. ஏனெனில் அவன் ‘நல்லிரவு’ என்ற சொற்களைத் தெளிவாகக் கூறி அவளுக்கு வணக்கம் தெரிவித்தான். அவளும் ‘நல்லிரவு’ என்று முணுமுணுத்துக்கொள்ளமட்டுமே முடிந்தது. அவள் நடந்தது இன்னது என்று தெளியுமுன் அவ்வடிவங்கள் சென்றுவிட்டன. தற்செயல் நிகழ்ச்சிகள் சிலசமயம் நனவார்வங்களைத் தாண்டிக் கனவார்வங்களை எதிர்கொண்டழைப்பதுண்டு. யூஸ்டேஷியாவகையில் இது உண்மையாயிற்று. எந்த உருவத்தைக் கனவிலன்றி நனவில் எளிதில் காணும் நம்பிக்கை அற்றிருந் தாளோ, அதை வரும் பொழுதே காணும் பேறும், கண்ட முதற்பொழுதிலேயே எதிர்பாராத வகையில் அதன் அறிமுகம் பெறும்பேறும் அவளுக்குக் கிடைத்தன. இந்நிகழ்ச்சி, அதன் காட்சிகள், அதில் அவள் தொடக்கத் திலிருந்து கடைசிவரை கேட்ட பலர் வாயுரைச் சொற்கள் எல்லாம் கேட்டபொழுதைவிட பின்னிட்டு அவள் உள்ளத்தில் பதிந்து, நினைவாகிய தூண்டுதல் ஏற்பட்டபோதெல்லாம் மணி ஒலி செய்து ஒலித்தன. அவற்றிடையே ஒருமுகம் - முன் கண்காணாப் பாரிஸின் கண்காண கற்பனைச் சின்னமாயிருந்து இப்போது அதன் கண்கண்ட சின்னமாய்விட்ட கிளிம்மின் முகம் - அவன் சொற்கள் வீறுடன் அவள் கட்புலன் மீது மிதந்தும் செவிப்புலன்வழி முழங்கியும் அவள் உள்ளத்தைக் கலைத்தன. தற்செயல் நற்பேறுகள் தனித்து வருவதில்லை என்று கூறப்படுவதுண்டு. யூஸ்டேஷியாவுக்கு இன்னும் ஒரு எதிர்பாராத வாய்ப்பு ஏற்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைதோறும் ஊர்ப்புற மக்கள் முகமூடியாட்டம் ஆடுவதுண்டு. இத்தடவை ஊர்ச் சிறுவர் அதன் பயிற்சிக்காக வழக்கம் போல மீசாமன் வையின் விறகுத் தொட்டியைக் கேட்டனர். கிறிஸ்துமஸன்று இவ்வாட்டம் கிளிம் வரவு காரணமாக அவன் இல்லத்தில் அவன் முன்னிலை யிலேயே ஆடப்படவிருக்கிறது என்று கேட்டாள். பொதுவான காலங்களில் அவள் இத்தகைய ஊர்ப்புற ஆட்டங்களை மதித்ததில்லை. ஆனால் தன் உள்ளத்தின் ஆர்வங்களைக் காணும் வாய்ப்புக்காக அவள் துணிந்து சூழ்ச்சிக்கோட்டைகள் கட்டினாள். கூத்தில் சார்லி என்ற இளைஞன் துருக்கி அரசன் பகுதியை நடித்தான். சார்லி உள்ளுற யூஸ்டேஷியாவை அழகுத் தெய்வமாகத் தொலைவில் நின்று பூசித்தவன். ஆகவே அவள் எளிதில் அவனை அணுகிப் பேச்சுக் கொடுத்தாள். கிறிஸ்மஸ் அன்று அவன் பகுதியை அவனிடமிருந்து தான் நடிக்கும்படி அவள் அவனைத் தூண்டினாள். அரைமணிநேரம் தன் அழகுத் தெய்வத்தின் கையைப் பற்றிக்கொண்டிருக்கும் விசித்திரக்கூலி பெற்று அவன் இணங்கினான். யூஷ்டேஷியா அவன் பகுதியை அவனிடம் கேட்டு நடிக்கப் பயின்று வைத்துக்கொண்டாள். கிறிஸ்துமஸுக்கு முன்னாள் அவனிடமிருந்து ஆடை பெற்றுச் சென்று நடித்தும் விட்டாள். சார்லியின் பகுதிக்குச் சார்லி உடல்நல மில்லாமையால் புதியவன் ஒருவன் நடித்தான் என்று கூறப்பட்டது. அது யார் என்று அறிய அவாக் கொண்டனர் சிலர். அச்சிலருள் அது செல்வி வை என்று அறிந்தவர் ஒருவர் இருவர்தான். ஆனால் அவள் நடிக்கும்போதும் பாடும்போதும் கிளிம்பை அவள் பார்க்க முடியவில்லை. அவன் தன்னைப் பார்த்தானா, என்ன நினைத்தான் என்று அறிய முடியவில்லை. தான் ஆணுடையில் வந்ததால், தன்னை அறிந்து பேசவோ, பிற பெண்களுடன் பழகி ஆடலிற் கலப்பதுபோல் தன்னுடன் கலக்கவோ முடியாமற் போனதுபற்றி அவள் வருந்தினாள். ஆயினும் போகுமுன் கிளிம்மை அவள் பார்க்கமுடிந்தது. அவன் தன்னை ஆணல்லாத பெண்தான் என்று ஊகித்துக் கொண்டதாக அவள் அறிந்தாள். ஆனால் அவன் தன்னை அறிந்தானோ இல்லையோ, என்று அவள் உறுதிகூற முடியாமலிருந்தது. ஆனால் அவனுடன் அருகேயிருந்து பேசிவிட்ட மகிழ்ச்சி அவள் நாடி நரம்புகள் தோறும் கூத்தாடிற்று. முன்பு வில்டீவ் நேசத்தை விட்டுவிடும்படி டிக்கரி வென் யூஸ்டேஷியாவிடம் கூறவந்தபோது அவள் அதற்கு முற்றிலும் இணங்காமல் அனுப்பியிருந்தாள். ஆனால் இப்போது அவள் உள்ளத்தின் மாறுதல் நிலைமையையும் மாற்றிவிட்டது. அவள் இப்போது வில்டீவிடமிருந்து தாம்ஸினை விலக்க விரும்ப வில்லை. தன் ஆர்வலனிடமிருந்து தாம்ஸினை விலக்கும்படியும் அவளை வில்டீவுடன் சேர்த்து வைக்கவுமே விரும்பினான். ஆகவே, அவள் இப்போது தானாக டிக்கரிவென்னை நாடிச் சென்றாள். தானாக உளம் திறந்து அவனிடம் பேசத் துணிந்தாள். அவன் அவளை வணங்கினான். அவளும் வணக்கம் தெரிவித்தாள். “இக்குளிர்காலத்தில் நீ இன்னும் இங்கே இருப்பாய் என்று நினைக்கவில்லை” என்றாள் அவள். “இங்கே சிறிது வேலை உண்டு. ஆகவே தங்கியிருக்கிறேன்.” “வேலைகாமிண் சார்ந்ததல்ல வென்று நினைக்கிறேன். செல்வி யோப்ரைட்...” “ஆம்” “அவளை நீ மணந்துகொள்ளப் போகிறாயா?” டிக்கரிவென் முகம் சிவந்தது, கோபத்தாலல்ல, நாணத்தால். ஆனால் அவன் சொற்கள் அதற்கு வேறுவிளக்கம் தந்தன. “என்னை ஏளனம் செய்ய வேண்டாம், அம்மணி நான் அதற்குத்தகுதியுடையனவல்ல. அவள் நலம் விரும்புகிறேன். வில்டீவை மணக்க அவளுக்கு ஏற்பட்ட தடையில் அவள் அவமதிப்பு அடைந்து குன்றிப்போயிருக்கிறாள். அவள் வாழ உதவுவதன்றி வேறு எண்ணம் எனக்கில்லை.” முன்பு வில்டீவ் வந்தபோது அவன் குறித்த செய்தி முழுவதும் சரியல்ல என்பதை யூஸ்டேஷியா இப்போது உணர்ந்துகொண்டாள். பெண்ணின் நோக்கமும் தன் நோக்கமும் இப்போது ஒன்றே என்று கண்டதும் அவள் வந்த காரியத்தில் அவள் திட்டம் எளிதில் உருவாயிற்று. இச்சமயம் தொலைவிலிருந்து வில்டீவ் அவ்வழி வருவதை அவள் கவனித்தாள். “நான் உன் வண்டியினுள் சிறிது நேரம் ஓய்வுகொள்ளலாமா?” என்று கேட்டாள். அவன் வியப்புற்றான். ஆனால் “சரி” என்றான். அவள் உள்ளே சென்று மறைந்துகொண்டாள். வில்டீவ் அவளைப் பார்க்கவில்லை. டிக்கரியிடம் வணக்கம் கூறிவிட்டு அப்பால் சென்றான். அவன் போனதும் அவள் இறங்கிவந்தாள். “போனது வில்டீவ்” என்றான் அவன். அவன் வேறு யாரோ என்று ஒளிந்து கொண்டாள் என்பது அவன் எண்ணம். “அது எனக்குத் தெரியும். அதனாலென்ன?” “நீங்கள் அப்படிக் கேட்பதுகண்டு மகிழ்கிறேன். என் நேற்றைய அனுபவத்துடன் இது ஒத்துவருகிறது” என்று புதிர்போட்டான் அவன். அவள் போக அவசரப்பட்டாள். ஆனால் இப்புதிய புதிரையும் அறிய அவாக்கொண்டாள். “நேற்றைய அனுபவம் என்னவென்று கூறத் தடையுண்டா?” என்று கேட்டாள். “தடையில்லை. நேற்று ஒரு நங்கைக்காக வில்டீவ் கல்லறைமாடத்தில் காத்திருந்தான் வீணாக.” “நீயும் காத்திருந்துதானே பார்த்தாய்?” “எப்போதும் பார்ப்பதனால்தானே இவற்றை அறிகிறேன்.” அவளுக்குப் பழைய செய்திகள் பலவற்றின்மீது ஒளி விளக்கம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அவள் அதற்காக வருந்தவில்லை. கோபப்படவுமில்லை. “சரி, நாளையும் நீ போவாயல்லவா?” என்று கேட்டான். “ஆம், நீங்கள்?” “நான் வரவில்லை. அவனைப் பார்க்க விரும்பவில்லை. அதேசமயம் நேரில் பார்க்காமலே செய்தி அறிவிக்க விரும்புகிறேன்.” அவன் புரிந்துகொண்டான். அவன் விரும்பியதும் அதுவே. “நீங்கள் செய்தி கூறினால் கூறச் சித்தமாயிருக்கிறேன். அல்லது கடிதம் தந்தால் கொடுக்கிறேன்” என்றான். அவள் கடிதம் கொடுத்தாள். அவன் வாங்கிக்கொண்டான். “இறுதியாக உங்கள் மனமாற்றங் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் இதன் காரணத்தையும் கூற முடியுமானால்...” “அது வேண்டாம்” என்று அவள் எழுந்தாள். அன்று கல்லறை மாடத்தில் டிக்கரி முன்பே வழக்கம் போல ஒளிந்து காத்திருந்தான். வில்டீவ் வந்து அதன்பின் சிறிதுநேரம் இருந்தான். அதன்பின் கணக்காய் எட்டு மணிக்கு டிக்கரி வெளிப்பட்டு “இன்று சரியான நேரத்தில் சந்தித்துவிட்டீர்கள்!” என்றான். வில்டீவ் விழித்தான். “யாரை?” என்று கேட்டான். “வழக்கமாக ஒருவரை; இப்போது இருவரை” “ஒருவரைத்தானே காண்கிறேன்” “ஆம்; இதோ மற்றவர்” என்று கூறி அத்தகைய கொடுத்தான். தன் எதிரியிடமிருந்து அவன் அத்தகைய எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் இது ஏதோ இவன் ஏமாற்றுக்களில் ஒன்று என்று கருதி அதைப் படித்தான். அவன் முகம் விளறிற்று. கடிதம் வருமாறு: “திரு. வில்டீவ் அறியவும். ஆர அமரச் சிந்தித்தபின், இனி நாம் எத்தகைய சந்திப்புத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாமென்று முடிவு செய்துவிட்டேன். சிந்திக்கும்தோறும் இம்முடிவே வலியுறுகிறது. என் உள்ளம் உங்களுக்குத் திறந்திருந்ததுவரை, நீங்கள் வேறொருவரை நாடிய போதும் பொறுத்திருந்தேன் என்பதை அறிய அங்குள்ள உணர்ச்சிநிலையை நான் பின்பற்றி அதன் முடிவைத் தெரிவிக்கும் உரிமை எனக்கு உண்டு என்பதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள். முன் என்னிடம் உங்கள்பால் இருந்த உணர்ச்சி இப்போது எனக்கு இல்லை. அது என்னிடம் ஒரு குற்றமாயிருக்கலாம். ஆனால் அது நீங்கள் குறை காணத்தக்க ஒரு குற்றமாகாது என்பதை அறிவீர். முன் தொடர்பால் உங்களிடம் பெற்றுக் கொண்ட சிறுபொருள்கள் இத்துடன் அனுப்பப்படு கின்றன. முன்பு நீர் வேறிடம் நாடியபோதே, நான் முறைப்படி, அதை அனுப்பியிருக்க வேண்டும். கடிதம் கொண்டு வருவாரிடமே அவற்றை ஒப்படைத்தனுப்பியுள்ளேன். யூஸ்டேஷியா.” மறுபேச்சுப் பேசாமல் வில்டீவ் வீடு திரும்பினான். நான் முதல்தர முட்டாளாய் விட்டேன். இரண்டு மான்கள் என் வலையில் சிக்கியிருந்தன. இரண்டையும் இழந்துவிட்டேன். இப்புதிர்களின் காரணமென்ன, இம்மாறுதலுக்குக் காரணமான புதுமனிதன் யார் என்று அறியாமல் அவன் துடித்தான். ஏமாற்றுபவர் தாமும் ஏமாற்றப்படும் நிலை வருவது அரிதல்ல என்று கண்டான். முழுத்தோல்வி, அவமானத்திலிருந்து மீள இப்போது ஒரே ஒரு வழிதான். ‘உடனே போய்த் தாம்ஸினையாவது மணம்செய்துகொள்ள வேண்டும்’. இத்தடவை கடத்துவது அவனுக்கு ஆதாயமன்று. அவன் நாளை என்று இருக்காமல், உடனே சென்றான். கிளிம் வரும்வரை உணர்ச்சியற்றிருந்த தாம்ஸின் அவன் வருகைக்கு முன்னாள்தான் மைத்துனனை வரவேற்க எழுந்து வேலையில் முனைந்தாள். அத்தையும் அப்போது தான் முதலில் வில்டீவை எதிர்த்ததற்கான காரணத்தை வாய்விட்டுக் கூறினாள். பாவம்! அவள் கிளிம்முடனேயே அவளை இணைத்துவிட விரும்பியிருந்தாள். தாம்ஸின் அத்தையிடம் சிறிது கண்டிப்பாக “இப்போது இதைச் சொல்லி என்ன பயன்? இனி நான் அவன் பெயரைக் கெடுக்காமலிருந்தால் போதாதா? என் மண முறிவுச் செய்தியை அவன் அறிந்தால் அது அவனுக்குத் தலையிறக்கமாய் விடும். அவனிடம் அதைக் கூறாமல் இருந்து, பிறர் கூறுமுன் மணவினையை முடித்தாகவேண்டும். அவன் மனம் திகைப்படை யாமல் இருக்க வேறு வழியில்லை” என்றாள். அத்தையும் அதுவே தக்க யோசனை என்று இணங்கினாள். இதன் பயனாக ஊரெல்லாம் அறிந்த செய்தி கிளிம்மினிட மிருந்து மறைக்கப்பட்டது. மறுநாள் கிளிம் தன் நண்பனைப் பார்க்க வெளியூருக்குப் போக இருந்தான். அங்கே செய்தி அவனுக்கு எப்படியும் எட்டிவிடும். ஆகவே அவன் வருமுன் வில்டீவை எப்படியாவது சரிப்படுத்தி மறைவாக மணமுடித்துவிட வேண்டுமென்று அத்தையும் மருமகளும் முடிவுசெய்தனர். அனால், அவர்கள் திட்டத்தில் அவர்கள் முயற்சி இல்லாமலே வில்டீவ் வந்து நழுவினான். அவன் இரவே வந்து திருமதி யோப்ரைட்டைக் கண்டு “நாளையே தனிப்பட்ட முறையில் மணத்தை முடித்துவிடப் போகிறேன்” என்றான். அவன் ஆத்திரம் திருமதி யோப்ரைட்டுக்கு விளங்கவில்லை. தாம்ஸினுக்கும் அப்படியே. ஆனால் தாம்ஸின் இப்போது காதலாராய்ச்சியில் இறங்க வில்லை. திருமதி யோப்ரைட்டும் காரணகாரிய நுட்பங்களில் கருத்துச் செலுத்தவில்லை. “சரி” என்று தம் முடிவை அவர்கள் தெரிவித்தனர். மொத்தத்தில் வில்டீவ் மகிழ்ச்சியடைந்தான். முழுத் தோல்வியிலிருந்து தப்பியது இதற்கான ஒரு காரணம். மற்றொரு காரணமுமிருந்தது. யூஸ்டேஷியாவின் மனமாறுதலை அறியாத அவன் இம்மணச் செய்தி அவளுக்கு ஒரு தண்டனையாகு மென்றும், இதை வைத்து அவள் காதலை மீண்டும் புதுப்பித்து வளர்க்கலாமென்றும் மனப்பால் குடித்தான், இம்மகிழ்ச்சியால் வழியில் அவன் டிக்கரியைக் கண்டதும் “திருமணம் முடிவாகி விட்டது?” என்றான். அவன் முழு மகிழ்வுடன் பாராட்டினான். தாம்ஸினின் முடிவுக்குக் காரணமான ஒரு கடிதம் மேசையில் கிடந்தது. அது கிளிம் அயலிடத்திலிருந்து எழுதியது. “என் காதில் விழும் இந்த அருவருப்பான செய்தி உண்மையா? பொய்யானால் துணிந்து இப்பொய் எப்படி ஏற்பட்டது? உங்கள் விளக்கம் காணும்வரை முள்மேல் நிற்கிறேன். இவ்விளக்கமின்றி நான் வெளியே தலைகாட்டவும் விரும்பவில்லை. தாம்ஸின் என்ன நிலையில் தான் இருக்கிறாள்?...... பின் குறிப்பு:- நான் நாளைக்காலை வருகிறேன். தங்கள் மகன் கிளிம்” கடிதத்தை அத்தைக்குக் காட்டாமலே தாம்ஸின் வாசித்து விட்டுச் செய்த முடிவு தான், வில்டீவுக்கு மேற்குறிப்பிட்டபடி போலி இன்பமளித்தது. வில்டீவ் போனபின் தாம்ஸின் அத்தையிடம் கடிதத்தைக் காட்டினாள். அவள் முதல் தடவையாக மருமகள் முன்னறிவை மெச்சி அவளை அணைத்துக்கொண்டாள். ஆனால் “நாளைக் காலை கிளிம் வருவதாக எழுதியிருக்கிறானே, என்ன செய்வது?” என்றாள். “வருமுன் மணமுடித்துவிட வேண்டும்.” “கிளிம் இல்லாமலா?” “ஆம்; முடிந்த காரியத்தை அவனிடம் சொல்லி விளக்கிவிடலாம். அதை முடிக்காமல் அவன் கண்களில் எப்படி விழிப்பது?” “சரி, அப்படியானால் மணவினைக்கு யார் வருவது? நான் மட்டும் போதுமா?” “நீங்களும் வரவேண்டாம். இது குடும்பத்துக்கு மதிப்புத் தரும் திருமணமன்று. அவமதிப்பை மூடிவைக்கும் திருமணம்தான். இதில் என்னைத் தவிர இந்தக் குடும்பத்தில் யாரும் கலக்கவேண்டாம்.” டிக்கரிவென் காலையில் கதவைத் தட்டினான். திருமதி யோப்ரைட் தாமஸினை நோக்கி “இப்போது இன்னொரு காதலன் வருகிறானே” என்றாள். “காதலன் அல்ல. மணமகனு மல்ல. மணமகன் தோழன்” என்றாள். அதைக் கேட்டுக்கொண்டு வந்த டிக்கரி “மணமகள் தோழி யார் தெரியுமா?” என்றாள். “யார்?” அத்தையும் மருமகளும் ஒரு குரலில் கேட்டனர். “யூஸ்டேஷியா!” இருவரும் விழித்தனர். ஆனால் விளக்கம் கேட்க நேரமில்லை. தாம்சின் அத்தை யிடம் விடைபெற்றுத் தான் மட்டும் டிக்கரிவென்னுடன் கோயில் சென்றாள். மணவினை எளிதில் முடிந்தது. வில்டீவ் கோயிலில் யூஸ்டேஷியாவைக் கண்டு அவள் முன்னிலையில் மணமகனாகப் போகிறோம் என்பதுபற்றி மகிழ்ந்தான். ஆனால் அவளே மணமகள் தோழியாயிருந்தது கண்டு அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான். காதலித்த காதல்கன்னியைக் காதலொழித்துக் கடிமணம் புரிந்தான் காதல் வேடனாகிய வில்டீவ். தாம்சின் கோயிலுக்குப் புறப்பட்ட சிறிது நேரத்திலெல்லாம் கிளிம் வீட்டிற்கு வந்தான். வழக்கம்போல அவனை வரவேற்றுக் காலை உணவு வட்டிக்கப்பட்டது. அதுவரை அவனும் எதுவும் கேட்கவில்லை. யாரும் எதுவும் சொல்லவுமில்லை. தாம்சின் இன்னும் எழுந்து கீழே வரவில்லை என்று அவன் எண்ணி, “தாம்சின் இன்னும் ஏன் கீழே வரவில்லை?” என்றான். திருமதி யோப்ரைட் “இதோவந்துவிடுவாள்” என்றாள். அவளைப் பற்றி அவன் மேலும் பேச்செடுத்தான். அன்னை “இன்னும் அரைமணி நேரம் பொறுத்திரு. அவள் வந்ததும் எல்லாம் கூறுகிறேன்” என்றாள். அவனுக்குப் புதிர்மேல் புதிராயிற்று. ஆயினும், தன்னை அடக்கிக்கொண்டு வெறுப்பாய் ஏதோ அருந்தினான். திருமதி யோப்ரைட்டுக்கு இப்போதுதான் தாம்சின் மணம்செய்கிறாள் என்று கூறக்கூட மனமில்லை. முன் ஏமாற்றியவன் இப்போதும் ஏமாற்றாமல் காரியத்தை நடத்தினான் என்று தெரியும்வரை அவள் உள்ளம் உறுதிப்படவில்லை. டிக்கரி முதலிலும் பின் மணமக்களும் வந்தபின்தான் அவளுக்கு உயிர் வந்தது. 3. இருதலைக் கவர்ச்சி கிளிம்யோப்ரைட்டின் வருகை ஹெக்டனில் எல்லோராலும் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டது. அதன் மூலம் ஹெக்டனுக்கே ஒரு புதுவாழ்வு ஏற்படும் என்றும் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதன் பரபரப்பு விரைவில் குறைந்துவிட்டது. யோப்ரைட் குடியின்மீது உலவிய முகில் இதற்கு ஒரு காரணமானாலும் வேறும் ஒரு காரணமும் இருந்தது. கிளிம் எதிர்பார்த்தது போலப் புதர்க்காட்டை வெறுத்துப் பாரிஸின் பகட்டைக் கொண்டுவரவில்லை. அவன் பாரிஸ் ஆர்வத்தையே குறைத்துப் புதர்க்காட்டின் புகழே பாடினான். பாரிஸில் அவன் வாழ்ந்து வளர்ந்தாலும் அவன் உள்ளம் புதர்க்காட்டையே நாடிற்று. இதனைத் தெரிந்து கொள்ளாதவர் அல்லது தெரிந்து கொள்ளவிடாதவர் ஒருவர்தான் - அதுவே அவன் மீது தன் புத்தார்வத்தைச் சொரிந்து தொலைவில் நின்று பூசித்த யூஸ்டேஷியா. வருகையை எதிர்பார்த்த மக்கள் இப்போது விரைவில் அவன் போய்விடுவான் என்கிற இயல்பாய் எண்ணியிருந்தனர். கிறிஸ்துமஸ் கழிந்துவிட்டது. வாரம் ஒன்றாயிற்று, இரண்டாயிற்று. புறப்படுவதுபற்றிய சந்தடி காணோம். இதுபற்றி ஊரில் பேச்செடுத்துப் பலர் நேரிலேயே கிளிம்மிடம் கேட்டனர். அவன் நாட்டுப்புறக் கல்விக்கான தன் திட்டங்களையும் குறிக்கோளையும் பற்றிப் பேசத் தொடங்கினான். மக்கள் எதிர்பார்த்தபடி அவன் விடுமுறைக்கோ ஓய்வுபெறவோ வரவில்லை. பணங்கொடுத்த வைர வாணிபப் பணிக்கு - கிட்டாத நிலையில் பலர் ஆவலாகப் பெருமையுடன் பேசிய பணிக்கு - அவன் ஒரு முழுக்குப் போட்டு விட்டுவந்துவிட்டான் என்பது அப்போதுதான் தெரிந்தது. அவன் கல்வித் திட்டமும் எவர் ஆர்வத்தையும் எழுப்பவில்லை. பாரிஸ் பணியால் அவன் தன்னையும் உயர்த்தி ஊருக்கு மகிழ்ச்சியும் தந்து பெருமைப்படுத்தி இருக்கலாம். அத்தகையவன்தானா வெறும் பள்ளியாசிரியராவது என்று அவர்கள் சப்புக்கொட்டினர். கல்வித்துறையாளரைக் கிளிம் கலந்திருந்தால்கூட அவர்கள் அவன் திட்டத்தில் ஆர்வங் கொண்டிருக்கமாட்டார்கள். அதற்கான சூழ்நிலை புதர்நிலத்தி லில்லை என்று அவர்கள் கூறியிருப்பார்கள். அங்குள்ள வாழ்வுநிலையில் கல்வி தேவைப்படாது; பயன்தராது. ஏனென்றால் கல்விகற்றவர் அதனைப் பயன்படுத்தும் புதுத் துறைகள் அங்கு ஏற்படவில்லை. அதுமட்டுமன்று. கற்றவர்கள் பழய துறைகளுக்குத் தகாதவராகவும் ஆய்விடுவர். கிளிம் இதுபற்றிச் சிந்திக்கவேயில்லை. அவன் வாழ்வில் பொருளியல் சிக்கலில்லை. கல்வி அவனுக்கு முன்னேற்றத்துக்கோ, தனிமனிதன் வாழ்க்கை நிலை உயர்வுக்கோ உரிய ஒரு செய்தியில்லை. அது அவன் கண்ட உயர்வாழ்விலிருந்து அவனுக்குக் கிட்டிய ஒரு சொகுசுக் குறிக்கோள் மட்டுமே. திருமதி யோப்ரைட்டிடம் ஒருநாள் கிளிம் தன் திட்டத்தைக் கூறினான். அவள் அதை விரும்பவில்லை. “இவ்வளவு பாடுபட்டு உனக்குக் கிடைத்த வாழ்க்கைப் படியை நீ உதறிவிடுவது நல்லதல்ல. உன் கருத்துக்கள் உன் நல்லெண்ணத்தைக் காட்டு கின்றன என்பதில் ஐயமில்லை. நல்லெண்ணங்கள்மட்டும் காரியத்துக்குப் பயன்படமாட்டா. இது உன் துறையல்ல. இதில் இறங்கினால் நீ கேடடைவது உறுதி” என்றாள். தாயின் முடிவு மகனை உறுத்திற்று. ஆனால் அவன் தன் முடிவில் உறுதியாக நின்றான். தாயும் அவள் முடிவில் உறுதி யாகவே இருந்ததை அவள் தோற்றம் காட்டிற்று. அன்பிணைப் புடைய இருவரும் இது முதல் கருத்து வேறுபட்டால் தொடர்பு அற்றவர் போலாயினர். தாய் மகன் உறவு தவிர மற்றவை அற்றன. தாய்மகன் உறவைக்கூடப் பாதிக்கும் மற்றொரு தொடர்பு கிளிம் வாழ்வில் விரைவில் உருவாயிற்று. அது அவன் உயர்கருத்துகளுடன் மோதி அவற்றையும் தகர்க்கப் போதியதாயிருந்தது. அவ்வாரம் ஞாயிற்றுக்கிழமை புதர்க்காட்டு மக்களின் மூடபக்தியைக் காட்டும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. சூசன் நன்சச் யூஸ்டேஷியாமீது கொண்ட தப்பெண்ணம் வளர்ந்து கொண்டே இருந்தது. வரவர அவள் நோயில் நலிந்தாள்! யூஸ்டேஷியாவின் சூன்யத்தால் வந்தவிளைவே அது என்று நினைத்த அவள் அதை ஒழிக்க ஒருவழி கண்டாள். சூனியக்காரிகளை ஊசிகொண்டு குத்தினால், சூனியத்தின் ஆற்றல் கெட்டுவிடும் என்ற நம்பிக்கை நாட்டுப்புறத்தில் உண்டு. அதை அவள் நடைமுறையில் துணிந்து செய்து விட்டாள். கோவிலுக்கு அன்று யூஸ்டேஷியா வந்திருந்தாள். சூசன் அவள் அருகிலேயே உட்கார்ந்திருந்து வழிபாட்டில் அவள் ஆழ்ந்திருந்த சமயம்பார்த்துக் கூரிய தன்னூசியை அவள் கையில் ஆழக் குத்திவிட்டாள். யூஸ்டேஷியா உடனே மூர்ச்சிக்கவே, அவள் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். ஊரில் இந்நிகழ்ச்சி பரபரப்பை ஊட்டியது. இயல்பாகவே யூஸ்டேஷியாவை ஊர் மக்களில் பலருக்கும் பிடிக்கவில்லை. அவள் சூனியக்காரி என்ற பழி அவள் மீதுள்ள வெறுப்புக்கும், வெறுப்பு அவள் சூனியக்காரி என்று பழிப்பதற்கும் சாக்காயின. ஆகவே பெரும்பாலோர் சூசனையே ஆதரித்தனர். கிளிம்மட்டும் அவள்மீது செய்த செயல் கொடிதென்றும், புதர்க்காட்டின் இம்மூட நம்பிக்கை கல்வி ஒன்றால் மட்டுமே அழியுமென்றும் வாதாடினான். ஏற்கனவே கிளிம்மை ஆர்வத்துடன் பூசித்து வந்தவள் யூஸ்டேஷியா. அவ்விருவரையும் மேலும் பிணைக்கும் மற்றொரு நிகழ்ச்சியும் இரண்டொருநாளில் ஏற்பட்டது. வழக்கம்போல யோப்ரைட்டின் இல்லத்தில் பலர் யூஸ்டேஷியாவைப் பற்றிப் பேசினர். அவள் தனிவாழ்வு, இரவு பகல் புதர்க்காட்டில் திரிதல், தீப்பந்தம், முணுமுணுப்பு ஆகிய யாவும் கண்டிக்கப்பட்டன. சூனியக்காரி என்ற பழியும் இறுதி முத்தாய்ப்பாகக் கூறப்பட்டது. கிளிம் எல்லாக் கூறுகளிலும் அவள் பண்புகளை ஆதரித்து விளக்கிவந்தான். இச்சமயம் யூஸ்டேஷியா வீட்டில் நீரிறைக்கும் வாளி கிணற்றில் விழுந்துவிட்டதை எடுக்க நீள வடக்கயிறுகள் தேவை என்று ஒரு சிறுவன் வந்தான். திருமதி யோப்ரைட் கையிலகப்பட்ட கயிறெல்லாம் எடுத்துத் தந்தாள். கயிறுகொண்டு செல்பவனுடன் சென்று உதவுவதாகக் கூறி கிளிம்மும் உடன்சென்றான். அவன் சென்றது திருமதி யோப்ரைட்டுக்குப் பிடிக்க வில்லை. கயிறு கேட்கவந்த சிறுவனைத் தனக்குள் தூற்றினாள். வாளியை எடுக்க ஒரு தடவை கயிறு கிணற்றில் ஆழிக் கரண்டியுடன் தாழ்த்தப்பட்டது. வாளி கரண்டியுடன் வந்தது. ஆனால் நீர் மட்டத்துக்கு மேலேறியதும் கயிறு இற்று அது மீண்டும் விழுந்துவிட்டது. இதற்குள் இழுப்பவர், கயிற்றைத் தாங்குபவர் சோர்ந்துவிட்டனர். இரண்டாவது தடவை கிளிம் தானும் உதவுவதாக முன்வந்தான். கயிறு அவன் வயிற்றைச் சுற்றிக் கொண்டு செல்வதுகண்ட ஒரு பெண் குரல் மாடியிலிருந்து “அவரைச் சுற்றிக் கயிறு - அது ஆபத்து” என்று கூவிற்று. எல்லோரும் அப்பக்கம் திரும்பிப் பார்த்தனர். கிளிமும் பார்த்தான். அது யூஸ்டேஷியாவே. அவன் மீதுள்ள பற்றாலும் கவலையாலும் அவள் தன்னை மறந்திருந்தாள். கயிறு வயிற்றிலிருந்து இடுப்புக்கு இறக்கிச் சுற்றப்பட்டது. அத்தடவை வாளி வரவில்லை. மறுதடவை இன்னொருவர் உதவியுடன் வாளி எடுக்கப்பட்டது. வாளி எடுக்கப்பட்டாலும் அது அன்று பயன்படாதென்று கண்ட கிளிம் புளும்ஸ்எண்டிலிருந்து இரவு காலத்துக்குத் தண்ணீர் கொண்டு கொடுக்கும்படி ஆளனுப்பினான். அச்சமயம் யூஸ்டேஷியா அவனைக் கனிவுடன் நோக்கினாள். அவன் ஒருகணம் நோக்கினான். புதர்நிலச் சமூகத்தின் மூடநம்பிக்கைக்கு ஆளான அணங்கு என்ற எண்ணத்துடன் அவள் அழகும் அன்றுதான் கண்ட அன்புக்குணமும் அவனை ஈர்த்தன. அவள் மீது தப்பெண்ணமில்லாத எவர் கண்ணுக்கும் அவள் அன்று என்றையும்விட ஒப்பற்ற தேவியாகவே தோற்றியிருப்பாள். கிளிமுக்கோ அவள் அன்று தன் உயர்கல்விக் குறிக்கோளுடன் சரிசமமாக அவன் உள்ளத்தில் குடிகொள்ளத்தக்க குறிக்கோள் பெண்மையாகத் தோற்றினாள். எல்லோரும் போய்விட்டனர். கிளிம் வாளிபற்றிய பேச்சிலிருந்து தொடங்கிப் பலவும் பேசிக்கொண்டே நின்றான். பின் தன் வீட்டிலிருந்து தண்ணீர் வரும்வரை உதவத் தானே நீர் இறைப்பதாகச் சொல்லிக் கிணற்றண்டை போனான். கயிற்றின் நுனியை அவன் கட்டிவிடுமுன் யூஸ்டேஷியா வாளியை எடுத்துக் கிணற்றுள் கயிற்றினுடன் தாழ்த்தினாள். “கயிற்றைத் தொடாதே” என்று அவன் எச்சரித்தான். ஆனால் கயிறு தாழத்தாழக் கனம் மிகுதியாகவே, அவள் “என்னால் பிடிக்க முடியவில்லை” என்றாள். அவன் உடனே கயிற்றை இழுத்துக் கட்டினான். அந்த நேரத்தில் அவன் கையைக் கயிறு அறுத்து இரண்டாம் முறையும் காயம் உண்டு பண்ணிற்று. அவள் அதைக் கைக்குட்டை கொண்டு கட்டிக்கொண்டே “ஏன் கயிற்றை விட்டுவிடுவது தானே?” என்றாள். “கயிற்றை விட்டுவிடாதே என்று நீங்கள் தானே சொன்னீர்கள்” என்றான் அவன். அவன் சொல் அதற்குள் அவளுக்கு மறைமொழியாயிற்று. அவர்கள் உள்ளப் பிணைப்பை இது வலுப்படுத்திற்று. கிளிம் தன் மனத்திலுள்ளதையெல்லாம் அவளிடம் கொட்டலானான். அவள் கருத்தில் சிலவற்றைத் தான் ஏற்க முடியவில்லை என்பதை அவன் ஆர்ந்தமைந்த அறிவு காணமுடிந்தது. ஆனால் காதலார்வம் அவன் அறிவையும் இனிய அன்புத்திரையில் மூடிற்று. அவள் புதர்க்காட்டின் இயற்கையழகில் ஈடுபட்டாள். அவள் அதில் திரிந்ததுண்டு. ஆனால் அதை வெறுத்தாள். அவன் புதர்க்காட்டு மக்கள் நிலையை உயர்த்தப் பாடுபட விரும்பினான். அவர்கள்மீது தன் மனித இனப்பற்றைச் சொரிந்தான். அவள் அம்மக்களை மனமார வெறுத்தாள். அவன் பாரிஸையும் பகட்டையும் வெறுத்துப் புதர்க் காட்டிலேயே நிலையாக வாழ்ந்து அதன் பணிக்காகத் துன்பங் களையும் எளிய வாழ்க்கைமுறைகளையும் ஏற்றுக்கொள்ள விரும்பினான். அவள் புதர்க்காட்டு வாழ்வை நரகமெனக் கொண்டு கூடிய விரைவில் பட்மத்திலோ முடியுமானால் பாரிஸ் போன்ற நரகங்களிலோ சென்று நாகரிகப் பகட்டுவாழ்வை நுகரக் கனவுகண்டாள். ஆயினும் அவன் தன் குறிக்கோளை அவள்மூலம் நிறைவேற்றத் திட்டமிட்டான். அஃதறிந்தும், அவன் மனத்தை மாற்றி, பாரிஸறிந்த அவனுடன் பாரிஸுக்கோ, பாரிஸ் வாழ்வுக்கோ அவனை இட்டுச்செல்ல அவள் திட்டமிட்டாள். காதலுக்குக் கண்ணில்லை என்ற முதுசொல் அவர்கள் இருவர் காதல் போக்கை விரைவுபடுத்திற்று. கிளிம் தன் குறிக்கோளின் திட்டத்தில் கருத்தூன்றி அதற்குத் தன்னைத் தகுதியாக்கி இரவுபகல் படித்தான். ஓய்ந்த நேரம் உலாவச் சென்றான். உலாவல் அவனை இயல்பாகவே யூஷ்டேஷியா இல்லத்தின் பக்கம் இழுத்துச் சென்றது. அவளுடன் நீண்டநேரம் போக்கி அவன் வருவான். அன்னை அவனிடம் வெளியே போனால் “இவ்வளவு நேரம் ஏன்?” என்று கேட்கும்போதெல்லாம் அவன் உலாவச் சென்றதும் யூஷ்டேஷி யாவைக் கண்டு பேசியதும் கூறுவான். பாவம், தாய்மனம் அவன் மனப்போக்கையும் நிலையையும் அறிந்தது. ஆனால் தாம்சின் அவளை மீறியது போல, அவனும் மீறுவது கண்டாள். அவள் அன்பு அவனை நாடிற்று. அவள் அறிவு அவனைக் கண்டித்தது. அவனிடமிருந்து இப்போக்கு அவளைப் பிரித்து வைத்தது. தாய்க்கும் மகனுக்குமிடையே கல்வித்திட்ட வகையில் நிகழ்ந்த அதே போராட்டம் காதல்வகையிலும் நடந்தது. முடிவும் அதே முடிவுதான் ஏற்பட்டது. அவன் கல்வித் திட்டத்தைக்கூட அவள் ஓரளவு ஏற்க முடிந்தது. அவன் காதல் திட்டத்தை அவள் முழுமூச்சுடன் எதிர்த்தாள். அவன் அவளுடன் மிகுதி பேசுவதையே நிறுத்தினான். அவளும் அப்படியே தனித்து ஒதுங்கிவிட்டாள். ஏதிலார்போல நடந்து பிறர் முன்னிலையில் ஒப்புக்குத் தாய்பிள்ளையாக அவர்கள் உணர்ச்சியின்றிச் சிறிதளவு சொல்லாடினர். காதலர் இருவரும் அடிக்கடி சந்தித்து மகிழ்ந்தனர். கிளிம் முகத்திலுள்ள அம்மகிழ்ச்சி திருமதி யோப்ரைட்டின் கண்ணுக்குத் தப்பவில்லை. தன் காதலைப்பற்றி அவன் பேச உறுதிகொண்ட அன்று, முன்பே அதை அறிந்துகொண்டவள் போல அவள் முறைப்பாயிருந்தாள். அன்று அவர்கள் மாறுபாடு உச்சநிலை அடைந்தது. அவள் யூஸ்டேஷியாவைத் தான் ஏற்க முடியாது என்று கூறிவிட்டாள். “சரி, அப்படியானால் நான் வேறு வழி பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கூறி அகன்றான் அவன். தற்சமயம் ஒரு தனிக்குடில் கட்டிக்கொண்டு மணம் செய்து கொண்டு அதில் சிறிது காலம் இருந்து, பின் உழைத்துப் பணம் சேர்த்து நல்ல வீடு செல்லலாம் என்பது அவன் திட்டம். இதை அவன் யூஸ்டேஷியாவுக்கு எடுத்துக் கூறி, மணஉறுதி கோரினான். அவள் விரும்பியது பாரிஸ்நகரவாழ்வின் பகட்டு. அவற்றைப்பற்றி அவன் பேசுவதைக் கேட்க விரும்பினாள். அவற்றில் பழகிய அவன் மூலம் அந்த வாழ்வைத் தானும் பெற அவள் விரும்பினான். ஆனால் அவன் விரும்பியது புதர்க்காட்டு எளிய வாழ்வு, அந்நில மக்கள் பணி, அதற்கான இடந்தரும் வாழ்க்கை. அவனைத் தன்னால் மாற்ற முடியவில்லையென்றும் அவள் கண்டாள். ஆயினும் நாளடைவில் அவனை ஏமாற்றித் தன் விருப்பங்களை நிறைவேற்ற அவள் எண்ணினாள். ஆகவே தன் விருப்பங்களை மட்டும் வற்புறுத்திக் கூறிக்கொண்டு அவள் இணங்கினாள். தன் குறிக்கோளை மட்டும் வற்புறுத்திக் கூறிவிட்டு அவனும் அவ்விணக்கத்தை ஏற்றான். தனிப்பட்ட சிறு குடிசை ஒன்றை அமர்த்திக் கொண்ட கிளிம் தன் பொருள்களை மூட்டைகட்டிக் கொண்டு புறப்பட்டான். “வேறு வீடு செல்கிறேன், அம்மா” என்று அவன் கூறியபோது அவளும் “மூட்டை கட்டுவதிலிருந்தே அறிந்துகொண்டேன், போகிறாயென்று” என்றாள். ஆனால் அவன் போனபின் அவள் நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. புதுக் குடிசை கிளிமுக்கும் மிகவும் தனிமையாகத் தானிருந்தது. மணமாகும்வரை அதில் ஒரு அறையை ஒழுங்குசெய்து அதில் இருந்தான். விரைவில் அவர்கள் திருமணம் நடந்தேறியது. யாரும் திருமணத்துக்குச் செல்லவில்லை. திருமதி யோப்ரைட் வீட்டிலேயே இருந்தாள். ‘யூஸ்டேஷியாவின் திருமணம் நடைபெற்றது; அதுவும் கிளிம் யோப்ரைட்டுடன்’ என்ற செய்தி வில்டீவின் காதுகளுக்குப் பேரிடியாகச் சென்றெட்டிற்று. அவர்கள் காதலைப்பற்றி இதுவரை அவன் எதுவுங் கேள்விப்படவில்லை. தர்மசினை மணந்தபின்னும் அது காரணமாக யூஸ்டேஷியாவின் பொறாமை தன்மீது அவள் காதலை வளர்க்கும் என்ற கயமைத்தனமான அவன் எண்ணம் பஞ்சாய்ப் பறந்தது. அத்துடன் தாம்சினை மணக்கத் தனக்கு யூஸ்டேஷியா ஊக்கமளித்ததன் காரணமும் சட்டென அவனுக்கு விளங்கிற்று. இரு பெண்கள்மீதும் கிளிம்மீதும் அவன் உள்ளம் தணலாகச் சீறி எழுந்தது. திருமதி யோப்ரைட்டின் தனிமையிடையே ஒருநாள் தாம்சின் அவளைப் பார்வையிடச் சென்றாள். அவள் உடல் மெலிந்து காற்றிலாடும் சருகுபோல ஆடிற்று. மணவாழ்வு நலம்பற்றி வினவிய திருமதி யோப்ரைட்டுக்கு அவள் மழுப்பலாகவே விடை கூறினாலும் அவள் தோற்றம் அவள் மணவாழ்வின் போலித்தனத்தை எடுத்துக்காட்டிற்று. அதுமட்டுமன்று. அத்தையிடம் பணம் கோருமளவு அவள் வறுமையுள் தள்ளப்பட்டிருந்தாள். தனக்குக் கணவர் பணம் தரவில்லையென்றும், கேட்கத் தனக்குப் பரிதாபமாக இருப்பதாகவும் அவள் கூறினாள். திருமதி யோப்ரைட் “நான் பணம்தரத் தடையில்லை. ஆனால் கணவனிடம் பணம் கேட்காமல் இருக்கக்கூடாது. கேட்டுப் பார்த்தபின் நாளை வா, தருகிறேன்” என்றாள். உண்மையில் தாம்ஸினிடம் மட்டுமன்றிக் கிளிமிடமும் திருமதி யோப்ரைட்டுக்குக் கனிவு பிறந்திருந்தது. அவளிடம் அவள் குடும்பச் சேமப் பணமாக நூறு பொற்காசுகள் இருந்தன. அதைத் தர்மஸினிடம் கொடுத்து இருவரும் பங்கிட்டுக் கொள்ளும்படி கூற எண்ணியிருந்தாள். ஆனால் அவள், பணத்தை அவளிடம் கொடுக்குமுன், பணவகையில் கணவனை நம்பக்கூடாதென்பதை அவள் தெரிந்து எச்சரிக்கையாயிருக் கட்டும் என்பதற்காகவே, கணவனிடம் கேட்கும்படி தாம்சினைக் கோரியிருந்தாள். மறுநாள் திருமதி யோப்ரைட் எதிர்பார்த்தபடி தாம்ஸின் வரவில்லை. ஆனால் வில்டீவ் வந்தான். அவனுக்குப் பணத்துக்கு மிகவும் முடையாகவே இருந்தது. தாம்ஸினை அன்று வரவிடாமல் தடுத்தவன் அவனே. அவள் அத்தை வீட்டுக்கு முந்தினநாள்தான் வந்திருந்தாள். இன்று அடுத்த நாளே போக அவள் முனைந்ததும், அத்தை மருமகளுக்கு ஏதோ குடும்பப் பரிசு தர இருக்கிறாள் என்று ஊகித்தாள். அவளைத் தடுத்தபின் தான் போய் அவள் சார்பில் பெற்று விற்றுச்செலவு செய்துவிடலாம் என்று அவன் எண்ணினான். ஆனால் அவன் எவ்வளவு குறிப்பாகக் கேட்டும் காரியம் சாயவில்லை. அவன் கேட்காமலே நம்பாதிருந்த திருமதி யோப்ரைட், கேட்டபின் பின்னும் ஐயுற்றாள். தாம்ஸினின் காரியங்களைத் தாம்ஸினுடமே வைத்துக் கொள்வதாகக் கூறி அவள் அவனை மனக்கசப்புடன் அனுப்பினாள். வில்டீவ் போனபின் காண்டில்பாட்டன் பிள்ளையான கிறிஸ்டியன் வந்தான். திருமதி யோப்ரைட் கூடியவிரைவில் பணத்தை உரியவரிடம் சேர்க்க எண்ணியதால் அவனிடமே கொடுத்து, கிளிம்மிடம் ஐம்பது கொடுத்து, தாம்சின் ஐம்பது எடுத்துக்கொள்ளும்படி தாம்சினிடம் அனுப்பினாள். கிறிஸ்டியன் புதர்க்காட்டு வழியில் செல்லும்போது ஆட்கள் வரவே, திருடர் என்று அஞ்சிப் பணத்தை இரு காலணிகளிலும் கொட்டிக் கொண்டான். வந்தவர்கள் அவன் ஊர் நண்பர்கள். அவர்கள் வற்புறுத்தலுக்கிணங்கி அவர்களுடன் பந்தய ஆட்டம் காணச்சென்றான். அது முடிந்தபின் அவன் அவசர வேலையாகத் தாம்சினைக் காணச்செல்வதால் தன்னுடன் யாராவது வரும்படிக் கோரினான். வேறு யாரும் வரவில்லை. வில்டீவ் உடனே வர ஒத்துக்கொண்டான். வெள்ளையுள்ளத்தானான கிறிஸ்டியன் வில்டீவிடமே தன்னிடம் அவன் மனைவிக்குரிய பொருள் இருப்பதைக் கூறினான். தன் மனைவியின் பணத்தைத் தர அவன் அத்தை தன்னை நம்பாமல், இந்த அயலானை நம்பியது கண்டு அவன் உள்ளுற வெம்பினான். அதை எப்படி யாவது தட்டிப்பறித்து அவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க எண்ணி அவன் வழியில் கிறிஸ்டியனிடம் ‘தனிப்பந்தய ஆட்டம் ஆடிவிட்டுச் செல்வோமே’ என்றான். பந்தய ஆட்டத்தில் வரும் குருட்டு யோகம் பற்றிக் கதைகள் அளந்து அவனை இணங்கவும் வைத்தான். ஆனால் ஆட்டத்தில் அவன் கிறிஸ்டியனிடமிருந்த சிறுதொகையை வைத்துத் தோற்க வைத்ததுடன், ஆட்டவேகத்தில் தன் மனைவிக்குரிய பொற்காசையும் அதற்குமேல் கிளிமுக்குரிய காசையும் வைத்து இழக்கச்செய்தான். கிறிஸ்டியனுக்கு அதற்கு மேல்தான் தன் பிழை தெரிந்தது. ஆயினும் வேறு வகையின்றித் திட்டிக்கொண்டு போனான். வஞ்சனையால் பெற்ற பணத்தை எடுத்துக்கொண்டு அவன் போகுமுன், தாம்சின் பெயர்கேட்டு ஒளிந்துவந்து எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த டிக்கரிவென் அவனை மீண்டும் பந்தயமாடவைத்தான். வில்டீவ் அத்தனை பணமும் தோற்ற பின் அவன் பணத்துடன் தாம்சினைத் தேடினான். பணத்தில் பாதி கிளிமினுடையது என்று அவனுக்குத் தெரியாது. ஆகவே கிளிமும் யூஸ்டேஷியாவும் மணவிழா விருந்து முடிந்துவருவது கண்டும் அதைக் கொடுக்கவில்லை. சிறிதுநேரம் சென்று தாம்சின் சார்லி ஓட்டிய வண்டியில் வருவது கண்டு அவளிடம் முழுத்தொகையையும் கொடுத்தான். தாம்சினுக்குக் கிளிமின் பங்குத்தொகை பற்றி எதுவும் தெரியாது. 4. குடும்பத் தொல்லைகள் கிறிஸ்டியன் தான் செய்த மடத்தனத்தின் பிறகு எங்கும் தலைகாட்டவில்லை. பணம் உண்மையில் மீண்டும் உரிய இடத்தில் போய்ச்சேர்ந்தது அவனுக்குத் தெரியாது. தாம்சின் அவ்வளவு பெருந்தொகை கண்டு வியந்தும் கிளிம்மின் பங்கறி யாமல் அது தன் அத்தை மாமா ஆகியவர்களின் ஒன்றுபட்ட பரிசு என்று எண்ணி மனமார நன்றி தெரிவித்தாள். இதில் தற்செயலாகத் தொகை குறிப்பிடவில்லை. கிளிம்மிடமிருந்தும் இதுபோல நன்றிதெரிவிப்பு வரும் வரும் என்று அவள் ஆவலுடன் காத்திருந்தாள். இப்பணம்மூலம் கிளிம் தன் பெருந்தன்மையறிந்து மீட்டும் தன்னிடம் வருவான் என்றும் ஏழைத்தாய் கைப்பாசை கொண்டாள். மகனிடத்திலிருந்து செய்தி வராதது கண்டு திருமதி யோப்ரைட் வியந்தாள். மகனை அவன் வீட்டில் பார்க்க விரும்ப வில்லை. யூஸ்டேஷியா ஒருநாள் பாட்டன் வீடு வந்திருப்பதாகக் கேட்டு அவனை அங்கே கண்டு கேட்பதென்று புறப்பட்டாள். இருவருக்கும் தெரியாமல் இடையில் நிகழ்ந்த நிகழ்ச்சியால் ஒருவரை ஒருவர் அறியாமல், பழய பகைமையால் மாமியும் மருமகளும் புதுப்போராடினர். ஒருவரைப்பற்றி ஒருவர் கொண்ட ஐயங்கள், தப்பெண்ணங்கள் புதுப்பிக்கப் பட்டுப் பெருக்கி விடப்பட்டன. வில்டீவ் மனைவி, கிளிம்முக்குத் தரவேண்டிய பணத்தைத் தான் வாங்கித்தர, பழய காதலிக்குத் தானே கொடுத் திருக்க வேண்டும் என்றும் கிளிம் இதை அறிந்திராததால்தான் நன்றி தெரிவிக்கவில்லை என்றும், திருமதி யோப்ரைட் கருதியிருந்தாள். பேச்சில் அது தொனிக்கவே யூஸ்டேஷியாவின் சினம் அளவு கடந்தது. நடந்த செய்தி எதனையும் கருதாது கிளிம் அன்று காலையில் அன்னையை மனைவியுடன் சென்று பார்த்து மன்னிப்புக் கோருவதாக இருந்தான். அதற்கிடையில் நடந்த பூசல்கேட்டு அவன் அது மனைவியின் குற்றமாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான். அத்துடன் அச்சமயம் பார்த்து யூஸ்டேஷியா பாரிஸுக்கு எப்படியாவது என்றாவது போகவேண்டுமென்று வற்புறுத்தினாள். மணத்துக்கு முன்னைய தன் உறுதியை அவள் மீட்டும் சுட்டவே. அவன் மனைவிக்குரிய காதல் உரிமையை எண்ணிப் புழுங்கினான். அடுத்தநாள் தாம்சினுக்குப் பொன்னைப்பற்றிய முழு விபரமும் தெரிந்தது. அவள் உடனே கிளிம்மிடம் சென்று மன்னிப்புத் தெரிவித்து, அவன் பங்கைக் கொடுத்துவிட்டாள். ஆனால் அதற்குள் இச்சிறு தடுமாற்றம் இதனைப் போலப் பல மடங்கு பொன்னாலும் பெறமுடியாத குடும்ப அமைதியைக் குலைத்து விட்டது. நிலைமை வேறு இருவகைகளிலும் மோசமாகி வந்தது. கிளிம்மின் பணம் யூஸ்டேஷியாவின் பகட்டிலும் அவர்கள் இன்பவாழ்விலும் கரைந்தது. வறுமை அவர்களை வாட்டிற்று. அதற்கிடையில் கல்விக் குறிக்கோளில் கருத்தூன்றிய கிளிம் இரவுபகல் படித்ததில் கண்பார்வைக்கு இடையூறு நேரத் தொடங்கிற்று. மருத்துவர் படிக்கக் கூடாதென்றார். சிலநாள் யூஸ்டேஷியா அவனுக்காகப் படித்தாள். சிறிதுநாள் கழிந்தபிறகு கூட மருத்துவர் நிலையாகவே படிப்புவேலை கூடாது என்று தெரிவித்து விட்டார். கல்விக் குறிக்கோளும் கெட்டது. அதுவகை அறிந்து தொழில்மூலம் பணம் நாடுவதும் கெட்டது. இருவரும் தத்தம் தாய், பாட்டனிடமிருந்து பணம் கோருவதையும் விரும்பவில்லை. யூஸ்டேஷியா பாட்டனிடம் செல்வதைத் தடுக்க உடலுழைப்பை மேற்கொள்ள விரும்பினான். இதனால் கண்ணுக்குக் கேடில்லை; பணமும் சிறிது சிறிதாகச் சேர்க்கலாம் என்று எண்ணினான். அவன் புல்வெட்டும் தொழிலிலீடுபட்ட ஃவெர்வேயை யடுத்து அத்தொழிலைப் பழகினான். அதைப் பகல் முழுதும் செய்திவ ந்ததில் அவனுக்குச் சிற்றூதியம் கிடைத்தது. இதனால் உடலமைதியும் மன அமைதியும் கிடைத்தன. பாரிஸில் பயின்ற தன் கணவன் இழிமக்கள் வேலைசெய்து தன் மதிப்பையும் அவன் மதிப்பையும் கெடுப்பதுகண்டு யூஸ்டேஷிh புழுங்கினாள் அவன் காதல் வாழ்வு அவளுக்கு முற்றிலும் கசப்பாயிற்று. அவள் தான் முன்வெறுத்த புதர்நில மக்களுடன்கூடத் தொடர்புகொண்டு தெருக்கூத்து, ஆடல் ஆகியவற்றில் பங்குகொள்ளத் துணிந்தாள். இதில் முதல் இடத்திலேயே மற்றவர்கள் அவளை அறியா விட்டாலும் வில்டீவ் அறிந்து உடன் ஆடினான். அவனுடன் தொடர்பு புதுப்பித்து அவனுடன் மீண்டாள். டிக்கரிவென் இதைப் பார்த்துவிட்டான். மணவினையில் ஈடுபட்ட பின்பும் இருவரும் தகாக்காதல் கொள்வதாக எண்ணினான். தன் உள்ளத்தின் தெய்வமான தாம்ஸினின் குடும்ப வாழ்வை யூஸ்டேஷியா கெடுப்பதாக எண்ணி, மேலும் தாம்ஸினுக்கு உதவியாக ஒற்றுக் கேட்டல், மறைந்து செயலாற்றுதல் தொடங்கினான். தாம்ஸினிடம் சென்று தான் கண்ட காட்சியைக் கூறினான். அவள் பேச்சால் அவள் மண வாழ்வு மணவாழ்வாயில்லை என்பதையும் அறிந்து கொண்டான். தான் யூஸ்டேஷியாவைச் சந்திப்பது தன் மனைவிக்கு எப்படியோ தெரிந்துவிட்டதென அவள் பேச்சுக் குறிப்புக் களாலும் நடையாலும் வில்டீவ் கண்டுகொண்டான். அத்துடன் யூஸ்டேஷியா வீட்டுவழி இரவில் போகும்போதெல்லாம் வழியில் புதர்முடிச்சுக்கள் தன்னைத் தடுக்கி விழவைப்பதைக் கவனித்தான். தாம்ஸினின் பழயகாதல் நண்பன் டிக்கரி செயல் இதுவென அவனும் உணர்ந்து கொண்டான். இத்தடங்கல் யூஸ்டேஷியாவுடன் அவன் தொடர்புகொள்வதை நிறுத்து வதற்கு மாறாக ஊக்கிற்று. அவன் பகலிலேயே அவளைக் காணவிரும்பினான். கிளிம் இருந்தபோதும் நட்பையும் தன் உறவுத் தொடர்பையும் பயன்படுத்தி அவர்கள் குடும்ப நண்பனாகத் தொடர்பு கொள்ள எண்ணினான். குடும்பத்தில் பிளவும் தப்பெண்ணமும் ஏற்பட்டால் குடும்ப உறுப்பினர் மதிகள் யாவும் திரிந்து அவர்கள் தலைவிதிகள் ஆகப் பின்னப்பட்டு விடுகின்றன. புதிர்முடிச்சுக்கள் இரவில் நடப்பவன் கால் விதியாவது போல், வாழ்வில் அன்பின் பாதையில் இத்தலைமதியின் முடிச்சு தலைவிதியாகிறது. கிளிம் நாள்தோறும் தன் தாய் வருவாள் என்று காத்திருந்தான். அவள் வராதது கண்டு, இனி தன்மனைவியுடன் தாய் வீடு சென்று மன்னிப்புப்பெற எண்ணினான். அதற்குள் அவனுக்காகக் காத்திருந்த திருமதி யோப்ரைட்டிடம் டிக்கிரி சென்று கிளிம்மை அவளே சென்று பார்ப்பது நலம் என்று கூறினான். தாய் உள்ளமும் இதனை உவந்து ஏற்றது. அவள் புறப்பட்டாள். என்றும் நடந்தறியாதவள். தள்ளாத வயது. புதர்க்காட்டு வழி நீளமும் அறியாமல், வெய்யில் தாங்காமல் அவள் நொந்தாள். வழியில் புல்வெட்டுபவன் ஒருவனைத் தொலைவில் கண்டாள். அவனிடம் கேட்கத் தொடர்ந்தாள். புல்வெட்டு பவனிடம் கேட்க, “முன் செல்பவன் கிளிம் வீடுதான் செல்கிறான், பின் பற்றிப்போ” என்றான் பாவம், அவன் தான் கிளிம்! இது அவளுக்குத் தெரியாது. அவனைப் பின்பற்றி வீட்டில் அவன் நுழைந்தபோது தான் அது கிளிம் என்று அறிந்தாள். அவளால் நடக்க முடியவில்லை. வீடு எதிரே தான் தெரிந்தது. வழியில் சூசன்பிள்ளை இருந்தது. அதன் உதவிகோரித் தட்டுத்தடுமாறி வீட்டுவாயிற்படி அடைந்தாள். அதற்குள் அது சாத்தப் பட்டிருந்தது. அவள் தட்டினாள். தன் வலுவற்ற கையினால் மீட்டும் தட்டினாள். ‘கிளிம், கிளிம்’ என்று கூப்பிட்டாள். ஓசை காணவில்லை. உள்ளே சென்ற கிளிம் வேலையயர்வால் உடைமாற்றாமல் வெளிக்கூடத்திலேயே சாய்ந்து அயர்ந்து தூங்கினான். அவனை அந்நிலையில் யாரும் காணாதிருக்க வேண்டி யூஸ்டேஷியா கதவைச் சார்த்தியிருந்தாள். ஆனால் திருமதி யோப்ரைட் வந்து சேருவதற்குச் சற்று முன்பே வில்டீவ் கதவைத் தட்டி உள்ளே நுழைந்திருந்தான். முன்னைய காரணத்திற்காக அவள் மீட்டும் கதவைச்சார்த்தியிருந்தாள். கிளிம் படுத்திருந்த கோரமும் யூஸ்டேஷியா நிலையும் கண்டு, இது தக்க சமயம் என்று வில்டீவ் பேச்சுக் கொடுத்து அவள் வாழ்வின் வெறுப்பைத் தன்மீது பாடமாகத் திருப்பிக்கொண்டிருந்தான். இந்தச் சமயம் திருமதி யோப்ரைட் கதவு தட்டவே யூஸ்டேஷியா நடுங்கி யார் என்று பலகணி திறந்து பார்த்தாள். தன் மாமியென்று அறிந்ததும் மீண்டும் நடுங்கினாள். வில்டீவுடன் தன்னை அவள் காணாதிருக்கவேண்டும் என்று எண்ணி ‘கிளிம்மே வந்து திறக்கட்டும்’ என்ற எண்ணத்துடன் வில்டீவுடன் பின்கட்டுக்குச் சென்றாள். வில்டீவுடன் சிறிது பேசியிருந்து அனுப்பிவிட்டு, மாமியை உள்ளே கணவன் அழைத்துப் பேசிக்கொண்டிருப்பார் என்ற கருத்துடன் முன்கட்டுக்கு வந்தாள். ஆனால் அந்தோ கிளிம் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறான்! கதவு இன்னும் சார்த்தப்பட்டே இருக்கிறது. அவள் திறந்துபார்த்தாள் யாரையும் காணோம். அண்டை அயலில் பார்த்தாள், யாருமில்லை. அவள் கலவரமடைந்தாள். ஆனால் செய்வதின்ன தென்றறி யாமல் சும்மாயிருந்தாள். கணவன் எழுந்தபோது கூட அவனிடம் சொல்லத்துணியவில்லை. பொய்மைப்பேய் அவளைப் பிடித்தது. ஆனால் ஏற்கனவே மாலையில் தாம்ஸினைக் காணச் செல்ல எண்ணிய கிளிம், இப்போது இருவரும் போகலாம் என்று அழைத்தான். அவள் நாளை போகலாம் என்று கடத்தினாள். அவன் தானே செல்வதாக வற்புறுத்திச் சென்றான். குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்புடன் அவள் வீட்டிலிருந்து குமுறினாள். திருமதி யோப்ரைட் அலுப்பாலும் தன்னைக்கண்டும் மருமகள் கதவு திறவாதிருந்தது கண்ட வெறுப்பாலும் குற்றுயிராய் நடந்தாள். அச்சமயமும் சூசன் குழந்தை ஒன்றுதான் அவளுக்குத் துணை. கடவுள்கூட அத்திக்கற்ற தாய்க்கு உதவ முன்வரவில்லை. அவள் நகர்ந்து நகர்ந்து வந்த வழிமீண்டாள். தட்டித்தடுமாறி விழுந்தாள். சூசன் குழந்தை குழந்தையாதலால் ஏதேதோ கேட்டது. அவள் மூளை குழம்பிற்று. காலில் ஏதோ குத்திற்று. அவள் சாய்ந்தாள். “என்மகன் எனக்கு உதவவில்லை. நான் சாகிறேன்” என்ற சொல் குழந்தை உள்ளத்தையும் உருக்கிற்று. “நான் என்ன செய்யவேண்டும் பாட்டி?” என்று கேட்டது. “அருகே உள்ள குட்டையில் நீர் நனைத்துவா” என்று கைக்குட்டையைக் கொடுத்தாள். குழந்தை வருவதற்குள் உயிர் நீங்கிற்று. குழந்தை அச்சத்துடன் ஓடிற்று. குழந்தையின் விளங்கா மழலைமொழி அருகில் பலரை இட்டுக்கொண்டு வந்தது. அதற்குள் கிளிம் அவ்வழி வந்தான். யாரோ கிழவி இறந்துவிட்டது கண்டு அருகில் சென்றான். தன் தாய் என்று அறிந்து கதறினான், அழுதான், புலம்பினான். கும்பல் கூடிற்று. அனைவரும் அவளை அருகிலிருந்த குடிசைக்கு எடுத்துச் சென்றனர். காலில் இருந்த காயம் புதர்க்காட்டின் நச்சு அட்டையால் நேர்ந்ததெனக் கொண்டனர். மருந்திடப்பட்டது. மருத்துவர் வந்தனர். கிழவி உயிர் இப்பால் இல்லை என்று கண்டு அனைவரும் ஓய்ந்தனர். யூஸ்டேஷியா நெடுநேரம் காத்திருந்தாள். மீட்டும் வந்த வில்டீவுடன் கணவனைத் தொடர்ந்தாள். நிலைமையறிந்து மீட்டும் மௌனம் சாதித்தாள். இச்சமயம் யூஸ்டேஷியாவிடம் அவள் பாட்டன், வில்டீவைப்பற்றிய ஒரு புதுமைச் செய்தியை வெளியிட்டான். அமெரிக்காவிலுள்ள வில்டீவ் உறவினர் இறந்துவிட்டதால் திடீரென்று எதிர்பாராத வகையில் அவனுக்கு நூறாரம்பொன் மதிப்புள்ள திரண்ட செல்வம் கிட்டியுள்ளது என்பதே அச்செய்தி. கிழவன் தன் பேர்த்தி இந்த வில்டீவை மறுக்காமல் மணந்திருந்தால் எவ்வளவு சம்பத்துடையவளாயிருந்திருப்பாள் என்று மனக் கசப்புடன் குறிக்காதிருக்க முடியவில்லை. ஆயினும் இதைத் தன்னிடம் கூறாமலே தன்னிடம் நாடிய வில்டீவின் பக்கம் யூஸ்டேஷியா மிகவும் பரிவும் பற்றும் கொண்டாள். தாயின் இறுதிச் சொற்கள் குழந்தைமூலம் கிளிம் செவிக்கெட்டின. உண்மையில் தாயிடம் உயிரையே வைத்திருந்த தனயன் அதை எண்ணிஎண்ணி நோய்வாய்ப்பட்டான். அது தேறியும் அடிக்கடி மனம் தடுமாறினான். அப்போதும் பொய்மை, வெட்கம், காதல் தடுமாற்றம் ஆகிய கூளிப் பேய்களால் அலைக்கப்பட்ட அவன் மனைவி அவனிடம் உண்மை கூறவில்லை. தாயின் இறுதியான நிலையை விவரமாய் அறிய அவன் டிக்கரி நாடினான். அவள் அன்புள்ளத்துடனேதான் வந்தாள் என்று கேட்டு அவன் மனைவி மீது ஐயங்கொண்டான். குழந்தையை விசாரித்தறிந்து சூசன் வீட்டில் சென்று அதை வினவினான். குழந்தை யூஸ்டேஷியா வீட்டினுள் வில்டீவ் சென்றதும், திருமதி யோப்ரைட் தட்டியதும், யூஸ்டேஷியா எட்டிப் பார்த்துப்பின் சென்றதும் யாவும் கூறிற்று. எப்போதும் யூஸ்டேஷியாவைப் பழித்த சூசனும் “சூனியக்காரியை அழகுக்காக மணந்த நீங்கள் வேறு எந்நிலைதான் அடைய முடியும்?” என்றாள். கோபவெறியுடன் வந்தான் கிளிம். அவளிடம் உண்மையைக் கூறி “ஏன் என்னிடம் இத்தனை பொய்மை?” என்றான். அவள் உள்ளம் இதற்குள் பாரிஸ், வில்டீவ், நூறாயிரம் பொன் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தது. கணவனை அவள் எதிர்க்க விரும்பவில்லை. ஆனால் வெறுப்பு அவள் பாதையைத் தடுத்தது. அவள் தன் பிழையை ஒத்துக் கொண்டாள். பணியவில்லை. அவன் கோபம் அவளை வெளியேற்றியது. கிளிம், நோய் வாய்ப்பட்ட கிளிம், தாயிழந்து தவித்த கிளிம், மனைவியையும் வெளியேற்றித் தன்னந்தனியனாய் வீட்டிலமர்ந்தான். யூஸ்டேஷியா பாட்டன் வீடு சென்றாள். அது பூட்டிக் கிடந்தது. ஆனால் முன் அவளைப் பூசித்து வந்த சார்லி புறக்கடை யேறிச் சென்று கதவு திறந்தான். பாட்டன் துப்பாக்கிகளைக் கொண்டு அவள் தன்னை மாய்த்துக்கொள்ள எண்ணினாள். அவன் அவற்றை அப்புறப்படுத்தி அவள் உயிரைக் காத்தான். பாட்டன் வந்தபோது அவள் நிலை கண்டு இரங்கினான். ஆனால் தன் முழு நிலையையும் அவள் அவனுக்குக் கூறவில்லை. வில்டீவ் மட்டும் அடிக்கடி வராவிட்டால் அவள் உள்ளம் வெடித்திருக்கும். தான் வெளி நாடு சென்றுவிட உதவும்படி மட்டும் அவள் அவனிடம் கேட்டிருந்தாள். அவன் தாம்ஸினை விட்டு அவளுடன் வரவிரும்பினான். அவள் இணங்கவில்லை. ஆகவே பட்மத் வரை வந்து வழியனுப்ப அவன் ஒத்துக்கொண்டான். ஆனால் உள்ளுற, பட்மத் வந்தபின் அவளை இணங்க வைத்து, உடன் செல்லவே அவன் எண்ணினான். அவர்கள் செல்லவிருந்த அன்று கிளிம் யூஸ்டேஷியா வுக்குக் கடிதம் எழுதியிருந்தான். அவள் வருவாள் என்று காத்திருந்து அலுத்தான். தாய் வகையில் பிடிவாதத்தாலும் காலங்கடத்துதலாலும் நேர்ந்த இடரெண்ணி அவன் தானே பணிந்து அவளை மீண்டும் வருமாறு கடிதத்தில் வேண்டி யிருந்தான். கடிதம் வரும்போது இரவு நெடுநேரம் ஆனதால் மீகாமன் வை அதை அவள் அறையிலிருந்த மேசையில் வைத்தான். அவள் இரவு முழுதும் மூட்டை கட்டிப் புறப்பட ஏற்பாடு செய்வதும் அவனுக்குத் தெரியாது. அன்று கடுமழை, புயல், மின்னல், அதையும் பாராமல் யூஸ்டேஷியா மூட்டையுடன் தான் குறிப்பிட்டபடி கல்லறை மாடத்தில் இரவு பதினொரு மணிக்கு முன்பே சென்று காத்திருந்தாள். உள்ளத்தில் புயல், சோர்வு. வெளியில் ஆடையெல்லாம் மழையில் நனைந்து புயலில் குலைந்தன. ஆனால் வில்டீவைக் காணோம். அவள் சீறினாள்; அழுதாள்; அரற்றினாள். நெடுநேரம் சென்றதும் இறங்கிப் புதர்வழி அவன் வீடு செல்லப் புறப்பட்டாள். இருட்டில் வழி தெரியவில்லை. மழை வெள்ளம் வழிகளை ஆறாக்கிப் புதர்க்காட்டைக் குளமாக்கியிருந்தது. தொலைவில் கானாற்றின் மதகு கல்லென் றிரைந்தது. அவள் மதிமயங்கினாள். எங்கே செல்கிறோம், என்ன என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அலைந்தாள். வில்டீவ் அன்று பகலே அவசர அவசரமாகத் தனக்குப் புதிதாகக் கிடைத்த செல்வத்தையெல்லாம் பொருளாகப் பத்திரமாக மாற்றுவதில் ஈடுபட்டிருந்தான். முன்னிரவிலேயே வண்டியையும் குதிரையையும் சட்டம் செய்து நிறுத்தியிருந்தான். எல்லாரும் உறங்கியபின் மூட்டை கட்டவேண்டியிருந்ததால் நேரமாயிற்று. மழை, புயலிடையே யூஸ்டேஷியா குறித்த நேரத்துக்கு முன்பே போய்க் காத்திருப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. கணக்காகப் பதினொரு மணிக்குப் புறப்பட்டுச் சென்றான். தாம்ஸின் தன் மணவாழ்வைத் தன் மணவாழ்வல்ல வென்றும், கணவன் கணவனல்லவென்றும் எப்போதுமே நன்கு அறிந்தவள். டிக்கரி கூறிய விவரங்களாலும் கணவன் யூஸ்டேஷியா ஆகியவர்கள் போக்கினாலும் அன்று நடக்கும் செய்திகளைக் கிட்டத்தட்ட உள்ளபடி உணர்ந்துகொண்டாள். அவளிடம் அப்போது கைக்குழந்தை இருந்தது. அதனை முரட்டுத் துணிகளில் சுருட்டிக்கொண்டு கிளிம் வீட்டுக்குவந்து தன் நிலையையும் ஐயங்களையும் கூறி அவனை யூஸ்டேஷியாவையும் வில்டீவையும் பின்பற்றும்படி அனுப்பினாள். அதன்பின்னும் அவளால் கைகட்டிக் கொண்டு இருக்கமுடியவில்லை. மதலையை மீண்டும் பொதிந்தெடுத்துக்கொண்டு தன் வீட்டண்டை வந்தாள். வழியில் டிக்கரியின் வண்டியைக்கண்டு அவனையும் அழைத்துக் கொண்டு ஓடிவந்தாள். வில்டீவ் வண்டியில் செல்வதுகண்டு கிளிம் அதைப் பின்பற்றினான். வில்டீவைக் கண்டதும் அவன்மீது தன் வசைமாரியைத் துவக்கினான். வில்டீவுக்கு அவனுடன் பேசிக்கொண்டிருக்க நேரமோ மனமோ இடந்தரவில்லை. விரைந்து சென்றான். ஆற்றுவெள்ளம் கரை புரண்டோடிற்று. இதனிடையே ஏதோ ஒன்று ஆற்றில் தொப்பென்று விழுவதாகத் தெரிந்தது. வில்டீவ், கிளிம் இருவர் உள்ளத்திலும் யூஸ்டேஷியா வின் எண்ணம் எழுந்தது. இருவரும் பாலத்திலும் கரையிலுமாகச் சென்றனர். தலைமயிர்போல ஏதோ ஒன்று வெள்ளத்தில் அலைவது தெரிந்தது. வில்டீவ் குதித்தான். அவனையும் வெள்ளம் சுழித்திழுத்தது. கிளிம் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவனும் குதித்தான். வெள்ளம் அவனையும் விழுங்கி ஏப்பமிட்டு எக்காளமடித்தது. இதற்குள் கும்பல் கூடிற்று. தாம்ஸினும் டிக்கரியும் பரபரப்புடன் ஓடி அழுதரற்றினர். படகுகொணர்ந்து சிலர் வெள்ளம் ஒதுக்குமிடத்துத் துழாவினர். ஒவ்வொன்றாக மூன்று உடல்கள் எடுக்கப்பட்டன. அவை யூஸ்டேஷியா வில்டீவ் கிளிம் ஆகியவர்களுடையவை என்று கூறத் தேவையில்லை. கிளிம் உடல் ஒன்றில்தான் உயிர் இருந்தது. வில்டீவ் அவன் கரங்களைக் கட்டிக்கொண்டிருந்தும் உயிர் போய்விட்டது. யூஸ்டேஷியா உடல் வெள்ளத்தில் தோய்ந்தும் உருத்திரிந்தும் போயிருந்தது. 5. முடிவு கிளிம் சில நாட்களில் பிழைத்தான். ஆனால் அவனுக்கு வாழ்க்கைமுழுதும் கசந்துவிட்டது. என்றும் அகத்துறவியான அவன் வாழ்வின்பம் முற்றும் துறந்து தன் பழய உயர் குறிக்கோள் ஒன்றையே உயிர்த் துடிப்பற்ற குறிக்கோளாக்கி வாழ்ந்தான். வில்டீவ் உடுப்பில் கொண்டுசென்ற பொருளகப் பத்திரங்கள் தண்ணீரில் நன்றாக ஊறிப்போயின. ஆயினும் அவை ஒவ்வொன்றாக மெதுவாகத் தணலின்மீதும் நிழல் சூட்டின் மீதும்பரப்பப்பட்டு உலர்த்தப்பட்டன. நீரிலிருந்து மீண்ட அப்பணம் போலவே இப்போது அதற்குரிமையாளரான தாம்ஸினின் வாழ்வும் மெல்லத் துயர்க்கடலிலிருந்து மீண்டது. டிக்கரிவென்இப்புயலிடையே மாறாவடமீனாய் தாம்ஸினின் உண்மை நண்பனாயிருந்து வந்தான். அவன் இப்போது தன் காவித்தொழிலையும் சிவப்புடையையும் மாற்றிவிட்டான். சில நாட்களுக்குள் அவன் மேனியின் சிவப்புச் சாயமும் மாறிற்று. அவன் படிப்படியாகத் தாம்ஸினுடன் நட்பு புதுப்பித்துக் காதலுரிமை கோரினான். கிளிம்மிடம் தாம்ஸின் இதுபற்றிக் கருத்துரை கோரினாள். மாண்டுபோன அத்தையின் விருப்பத்தை அவனிடம் முதலில் கூறி, தன்னை அடையும் எண்ணமிருந்தால், அத்தை விருப்பத்தை மதித்தே தான் நடக்க இருப்பதாகக் கூறினாள். ஆனால் கிளிம் தான் உடல் பிழைத்திருப்பதன்றி, உள்ளம் பிழைத்திருக்கவில்லை என்று கூறி மறுத்தான். டிக்கரியின் உறுதியைப் பாராட்டி அவன் காதலை ஆதரித்தான். தாம்ஸினின் சிறு குழந்தை யூஸ்டேஷியா, பழைய யூஸ்டேஷியாவின் நினைவுக்குறியாகக்கிளிம்மினால் வளர்க்கப் பெற்றாள். அவன் குறிக்கோளில் ஒத்துழைக்க வேண்டிய யூஸ்டேஷியாவினிடமாக அச்சிறுகுழந்தை அவள் சின்னமா யிருந்து அவனை ஊக்கிற்று. டிக்கரி வாழ்க்கையின் கோடையில் முதிர்ந்து அதன் வேனிலில் மாறாது பொலிவுடன் தாம்ஸினுடன் வாழ்ந்தான். யூஸ்டேஷியாவிடம் மாறா அன்புடன் நடந்த சார்லிக்கு அவன் தலைமுடி ஒன்றைக் கிளிம் நினைவுக்குறியாய் தந்து மகிழ்வித்ததுடன் வாழ்க்கையில் அவனுக்குப் பல உதவிகள் செய்து ஊக்கினான். புதர்நிலமக்கள், பல மாறுதல்களைக் கண்ட புதர்நிலம் போலவே, இப்புயல் கடந்து வாழ்ந்துவந்தனர். ஆயினும் அதன் சிறுசுவடு ஒன்று அவர்கள் வாழ்விலும் பதிந்தது. கிளிம் வாழ்வுப்புயல் அவன் மதிப்பை மெல்ல உயர்த்திற்று. அவன் ஆர்வத்துடன் நாடியபோது கிட்டாத ஆதரவு ஆர்வமிழந்த நிலையில் இன்று கிடைத்தது. வாழ்விழந்த அவனைப் புதர்நிலச் செல்வி ஆதரித்துப் புதுவாழ்வளித்தாள். வளர்ந்தும் பிள்ளை மனமுடைய அவனைச் சமூகம் பிள்ளையாக வளர்த்தது. புதர் நிலத்தின் ஒப்பற்ற மதலையாகிய அவனும் தன் வாழ்வுகடந்து புதர்நிலத்தின் வருங்கால வாழ்வென்னும் சிறுவீறு கட்டுவதில் முனைந்து பணியாற்றினான். ஆசிரியர் 19-ஆம் நூற்றாண்டின் எல்லைக்கடந்து இருபதாம் நூற்றாண்டிலும் பெருவாழ்வு வாழ்ந்த முந்திய நூற்றாண்டின் இலக்கியப் பெருமக்களுள் ஒருவர் தாமஸ் ஹார்டி. அவர் மறைந்தபோது பத்தொன்பதாம் நூற்றாண்டு அப்போது தான் மறைந்ததென்று மக்கள் கருதினர். 1840-இல் பிறந்த அவர் 1928-இல் உயிர் நீத்தார். புனைகதைத் துறையில் அவர் ஒப்புயர்வற்றவர். டிக்கன்ஸ், தாக்கரே என்ற நடு நூற்றாண்டுப் பெரியவர் போலவே, பின் நூற்றாண்டுப் பிற்பகுதியிலும் மெரிடித், ஹார்டி என இருவரும் இணைதுணையாய் விளங்கினர். வால்ட்டர் ஸ்காட் ஸ்காட் லந்தையும் இங்கிலாந்தின் எல்லைப்புறத்தையும் சித்தரித்து அதன் பெருங்காப்பியங்களாகத் தம் புனைகதைகளைத் தீட்டியதுபோல், ஹார்டி தம் கதைகளனைத்தையும் வெஸ்ஸெக்ஸ் நாட்டுப்புற வாழ்வின் பெருங்காவியமாக்கினார். சிற்றூர் வாழ்வு, சிறப்பாகப் பெண்கள் உள்ளத்தின் சஞ்சலங்கள், அதனால் ஏற்படும் குளறுபடிகள் ஆகியவற்றைச் சித்தரிப்பதில் அவர் வல்லவர். தாயகத்தின் அழைப்பு, (சுநவரசn டிக கூhந சூயவiஎந) மதிகறக்கும் மக்கள் திரளுக்கு அப்பால், (குயச குசடிஅ ஆயனடல ஊசடிறன) டெஸ்டர்பர் வில், பசுமரக் காவினடியில் (ருனேநச கூhந ழுசநநறேடிடின கூசநந) என்பன அவர் தலைசிறந்த புனைகதைகள். வாழ்க்கையின் ஒரு பகுதியை, ஒரு நாட்டின் தனிப் பின்னணி யுடன், ஒரு தனிப்பண்பைக் குறுகிநுணுகி ஆய்ந்து தீட்டி, ஒரு தனித்துறையின் முடிசூடா மன்னனாய் விளங்கியவர் ஹார்டி. டிக்கன்ஸ் விட்ட பகுதியைத் தாக்கரே, ஷெல்லி விட்ட பகுதியைக் கீட்ஸ், டெனிஸன் விட்ட பகுதியை ப்ரௌனிங் ஆகியவர்கள் தீட்டி நிறைவுறுத்தியது போல ஹார்டி விட்ட பகுதியை நிறைத்து, மெரீடித் அவருடன் இணைதுணையாக விளங்கினார். ஆனால் மெரிடித் கதைகள் ஒரு சிறுகுழுவின் தனிக் கருவூலம். ஹார்டி பொதுமக்கள் திரளின் பொதுச்செல்வ மாகியுள்ளார். எஎஎ காதல் மயக்கம் முதற் பதிப்பு – 1949 இந்நூல் 1952இல் பொன்னி லிமிடெட், சென்னை - 21. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. காதல் மயக்கம் சதாசிவனுக்கு இரண்டு ஆண்மக்களும் ஒரு பெண்ணுமாக மூன்று பிள்ளைகள் உண்டு. அவன் மணமான நாளிலிருந்து குடும்பப் பொறுப்பை மகிழ்ச்சியுடனேற்று மனைவி மக்களிடம் பற்றுதலுடையவனாகவேயிருந்தான். ஆனால் நாற்பதாவது வயதில் அவன் மனப்போக்கில் ஒருவகை மாறுதல் ஏற்பட்டது. அவன் யசோதையை மணம் செய்யும்போது அவனுக்கு வயது பதினெட்டு. அவளுக்குப் பதினொன்று. அவர்கள் திருமணம் உறுதியாகும் வகையில் அவர்களிருவருக்குமே எதுவும் தெரியாது. அவர்களைக் கலக்காமலே தாய்தந்தையர் அவர்களை வாழ்க்கைத் துணைவராக்கி விட்டனர். அவர்களும் வைத்த இடத்தில் வைத்தபடி இருந்து, தாய்தந்தையர் எதிர் பார்த்தபடி நடந்து ஒருவருடனொருவர் நேசமாக உறவாடினர். இளமைமணம் பொருத்தமற்றதென்ற எண்ணம் அவர் களில் எவருக்கும் கனவில்கூட எழவில்லை. ‘அத்திருமணம் தன் விருப்பத்தால் ஏற்பட்டதன்று; பிறர் விருப்பத்துக்கு நாம் பலி யிடப்பட்டோம்’ என்பதும் அவர்களுக்குப் புதுமையானதாகத் தோன்றவில்லை. அது போலவே மணமானவர் காதலி லீடுபடும் வகையில் எந்த நூலையும் வாசிக்காமலும் எதையும் பிறர் போதிக்காமலும் எப்படியோ வாழ்க்கைத் தேரை அவர்கள் நடத்திக்கொண்டுதான் சென்றனர். அவர்களிருவரும் இயற்கையாகவே தம் பெரியோரைப் பின்பற்றிச் சமயப்பற்றுடையவராய் இருந்தனர். அச் சமயம் பற்றிய ஆராய்ச்சியும் அவர்களிடம் எழவில்லை. ‘சமயம் என்பது அறிவை மயக்கும் அபினி’ என்ற குற்றச்சாட்டையோ அவர்கள் கேள்விப்பட்டதில்லை. அவர்கள் ஊரின் பெயர் ராதாபுரி. அது மிகவும் ஒதுக்க மான ஊர். ஆகவே மேற்கூறிய புதிய எண்ணங்களும் நாகரிக அலைகளுமில்லாமல் அவர்கள் நெடுங்காலம் அமைதியாகக் கழித்துவிட்டனர். ஆயினும் காலப்போக்கில் நாகரிகத்தின் பலகணி ஒன்று அவ்வூரின் மீது திறந்துவைக்கப்பட்டது. அவ் வூருக்குள்ளும் சில பத்திரிகைகள் நடமாடத் தொடங்கின. சதாசிவனும் அவ்வப்போது அவற்றைப் பொழுது போக்காகத் தருவித்துப் படிப்பான். பத்திரிகைகளில் உள்ள பல செய்திகளில் அவன் நாட்டுப் புற மனப்பான்மைக்கு மிகவும் கவர்ச்சி தந்த பகுதி குடும்ப வாழ்க்கை இரகசியங்கள், காதல் மர்மங்கள் ஆகியவை பற்றிய துண்டு வெளியீடுகளின் விளம்பரங்களே. இவற்றுட் பல இலவச மாக, அஞ்சல் செலவுகூட இல்லாமல் அனுப்பப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தது. கைம்மாறு கருதாமல், வலிய விளம்பரம் செய்து, தம்செலவில் பிறருக்கு வாழ்க்கையின் அடிப்படைச் செய்திகளிலேயே உதவ இம்மகாத்மாக்கள் முன்வருவது கண்டு அவன் வியப்படைந்தான். நாளடைவில் அவ்வார்த்தை அடக்க முடியாமல் அவற்றில் கண்ட விலாசங்களுக்கு எழுதினான். பல வெளியீடுகள் வந்து குவிந்தன. இவற்றில் பல மருந்துகளுக்கான விளம்பரங்களாயிருந்தன. ஆயினும் அவற்றுடன் கூடவே வாழ்க்கையின் மர்மங்களும் விளக்கப்பட்டிருந்தன. அவற்றை அவன் ஆவலுடன் வாசித்தான். சிலவற்றில் குறிப்பிட்டிருக்கும் மலிவான காதல் பற்றிய நூல்கள், கதைகள், மருந்துகள் ஆகியவற்றைக்கூட வருவிக்கத் தொடங்கி னான். இவை அவன் வாழ்க்கை பற்றி அவன் நினைக்காத எண்ணங்களையும் புதிதாக நினைக்கத் தூண்டின. வேறு எவ்வகை அபினியையும் காணாத அவனுக்கு இவை அபினியாய் உதவின. முதலில் இந்நூல்கள், வெளியீடுகள் தரும் செய்திகளை அவன் அவ்வளவாக நம்பவில்லை. “அவை பொய்யும் புனை கதையுமே; ஆனால் வாசிக்க மிகவும் கவர்ச்சிகரமானவை” என்று மட்டும் அவன் நினைத்தான். ஆயினும் யாவரும் மதிக்கத் தக்க பேர்போன பெரிய மனிதர், உயர் பதவியினர், மேனாட்டறிஞர்கள் நற்சாட்சிப் பத்திரங்களையும், அவற்றால் பயனடைந்த எண்ணற்றவர்கள் நன்றியுரைகளையும் பார்த்து அவனுக்கு உள்ளூர நம்பிக்கை பிறந்தது. “மணவாழ்வில் முதலில் காதல் இருக்கும். வரவர அவ் வுணர்ச்சி மரத்துப்போகும். பழகப்பழகப் பாலும் புளிக்கும் .அவ்வப்போது புத்துணர்ச்சி, புது அனுபவங்கள் வேண்டும். குறிப்பறிதல், காதலை வெளிப்படக்காட்டுதல், காதலுக்குப் பதில்காதல் இருக்க வேண்டிய அவசியம், கள்ளக்காதல், மண வாழ்வின் கசப்பினால் நெறிபிறழ்ந்த காதல் ஆகிய எண்ணற்ற செய்திகள் அவனுக்கு மலைப்பையும் அதேசமயம் மேலும் அறியும் ஆவலையும் தூண்டின. யசோதை அவன் வாசிப்பதைப் பொருட்படுத்தவில்லை. அது எது பற்றியது என்றும் அவள் கவனிப்பதில்லை. ஒவ்வொரு சமயம் கவனித்தால்கூட அவள் அலட்சியமாக முகத்தைச் சுளித்துக்கொண்டு போய்விடுவாள். அவன் அவற்றை வாசிப்பதை விரும்பியதாகவும் அவள் காட்டிக் கொள்ளவில்லை; அவன் வாசிப்பதை எதிர்ப்பதாகவும் காணவில்லை. ‘நல்லவர்கள் பெரியவர்கள் இதைப்போய் வாசிப்பார்களா?’ என்ற ஏளனக் குறிப்பு அவள் முகத்தில் தொனிக்கும். சதாசிவனுக்குத் தான் வருந்தி வரவழைத்த இவ்வெளி யீடுகளை ஒன்றுமறியாத யசோதை அலட்சியமாகக் கருதுவது பிடிக்கவில்லை. அவற்றை வாசிப்பது கேவலம் என்று கூறினால் கூட அவனுக்குப் பொறுத்துக் கொள்ளமுடியும். ‘அது அவனுக்குப் பொருத்தமானது, அவளுக்குப் பொருத்தமற்றது’ என்ற பேதபாவம் அவனுக்குக் குத்துதலாக இருந்தது. தன் புதிய நூல்களில் கண்டபடி இது மணவாழ்வின் கசப்பு என்றும், காதலில்லாத இடத்து ஏற்படும் புறக்கணிப்பு என்றும் அவன் முடிவு கட்டினான். அவன் மன வேறுபாட்டை அறியாத யசோதை எப் போதும் போலவே நடந்து கொண்டாலும், அவன் புதிய பார்வைக்கு அவள் வரவர அவனிடம் மிக அசட்டையாக நடந்து வருவதாகத் தோன்றிற்று. தன்னைக் காதலிப்பவர் காதலைப் பற்றிக் கவலை கொள்வதும், பொறாமை கொள்வதும், புதிய காதல் முயற்சியால் காதலனைத் தன்வசப்படுத்தப் பார்ப்பதுமே ஒருவர் காதலின் அறிகுறிகள் என்றுபடித்த அவனுக்குத் தன் குடும்ப வாழ்வில் காதலில்லை என்றும் தோன்றிற்று. காலத்தில் காதல் வாழ்வு நாடாதவர் வயது சென்றபின் வருத்தப்படுவர் என்ற காதல் அறிவுரை அவன் கருத்திற் கவலையேற்றிச் சிந்தனையைக் கூராக்கியது. கீழ்த்தரமான இவ்வெளியீடுகளில் அவன் ஈடுபடுவது கண்டு, அவனைக் கீழ்மக்கள் பலர் துணிந்து அணுகினர். அப்பு என்பவன் அத்தகையோருள் ஒருவன். அவனிடம் சதாசிவன் மெள்ளச் சென்று தன் ஐயத்தைக் குறிப்பாகத் தெரிவிக்க முயன்றான். சதாசிவன் உயர்நிலையுடையவன்; வயதானவன்; இந்நிலையிலும் அவன் அத்தகைய எண்ணங்களைக் கொண் டிருந்தானென்று காண அப்பு வியப்படைந்தான். சதாசிவன் செல்வனாதலால், அவன் போகிற போக்கில் விட்டுப் பணம் கறக்கலாம் என்று கண்டு அப்பு அவனுக்கு இதமாகப் பேசினான். ‘குடும்பப் பெண்கள் காதலின்ப மறியாக் கயவர்களைத்தான் ஏமாற்றிப் பிழைக்கமுடியும். ஒருவேளை அவர்கள் காதலிக்க முன் வருவதுகூட, கணவன் காதல் அருமை அறிந்து வேறிடம் செல்கிறான் என்று தெரிந்தபின்தான்’ என்று அவன் கூறினான். மேலும் அவன் தனக்குத் தெரிந்த பொதுப் பெண்களின் கவர்ச்சி, காதல் திறம் ஆகியவற்றை விரித்துரைத்தான். அதோடு காதலிலீடுபடுவதனால் மட்டுமேதான் பொதுமகளிர் குடும்பப் பெண்களால் வெறுக்கப்படுகிறார்கள் என்று அவன் சொல்லி வைத்தான். சதாசிவன் பண்பட்ட மனத்தில் இங்ஙனமாக விதை விதைத்து நீரும் உரமுமிட்டபின் அறுவடைக்கான வேலைகள் ஒழுங்காக நடைபெறலாயின. ஒருநாள் காதலைப்பற்றிய எண்ணங்களால் அவன் கருத்தழிந்து காதல் வெளியீடுகளைக் கூடப் படிக்க மனமில்லாமல்வெளியே உலாவச் சென்றான். ஊருக்கு அப்புறத்திலுள்ள பரந்தவெளியில் தனியே ஆழ்ந்த சிந்தனைகளுடன் அவன் சென்றுகொண்டிருக்கையில் பதி னெட்டு அல்லது இருபது வயது மதிக்கத்தக்க மங்கை ஒருத்தி அவன் எதிர்ப்பட்டாள். வழக்கத்திற்கு மேற்பட்ட அழகு அதை எடுத்துக்காட்டும் ஆடையணியுமுடைய அவளுடைய தோற்றத்தில் ஈடுபட்டு அவன் அவளைக் கூர்ந்துபார்க்க முயலு முன் அவளே நாணமின்றி அவனிடம் வந்து, “ஐயா! தாங்கள் மிகவும் நல்லவர்களாகக் காணப்படுகிறீர்கள்; எங்கள் வீட்டுப்பசு தாம்பைறுத்துக் கொண்டு இப்பக்கமாக ஓடிற்று. என்னொருத்தி யால் அதைத் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. சற்று எனக்கு ஒத்தாசை செய்வீர்களா?” என்றாள். அவள் வேண்டுகோளைச் சதாசிவனால் மறுக்க முடிய வில்லை. அவளுடனும் அவளை விட்டகன்று வேறிடத்திலும் சுற்றி யலைந்து பசுவைப் பிடிப்பதற்கு இரண்டு மூன்று நாழிகை யாகிவிட்டது. அதற்குள் பொழுது சாய்ந்து கருக்கிருட்டாயிற்று. அப்பெண்ணணங்கு பசுவின் அறுந்த தாம்பைப்பற்றிக் கொண்டு வரும் அவனை நகை முகத்துடன் வரவேற்று நன்றி கூறினாள். “என்னை யார் என்று கூட உங்களுக்குத் தெரியாது. அப்படி யிருந்தும் பெருந்தன்மையுடன் செய்த உதவி நான் மறக்கக் கூடியதல்ல. நீங்கள் யாரோ? உங்கள் நலங்கள் அறிய விரும்பு கிறேன்” என்றாள். சதாசிவனுக்கும் இதற்குள் அவனுக்கு இயற்கையான கூச்சமுழுதும் அகன்றுவிட்டது. அவன் அவளைப் பற்றி உசாவி அறிந்தது போலவே அவனும் அவளைப் பற்றி உசாவினான். அவள் தன் பெயர் ஆனந்தி என்று கூறவே அவனுக்கு உடனே அப்பு கூறிய பெண் இவளே என நினைவுக்கு வந்தது; பொது மகளிர் காதலை அறிய நினைத்த தன் நினைப்பின்படி ஒப்பற்ற அழகியான இந் நங்கையை நேரிலறிய வாய்ப்பு ஏற்பட்டதென்று அவன் மகிழ்ச்சி யுற்றான். அவர்களிருவரும் பழக்கமானவர்கள் போலப்பேசிக்கொண்டே ஊரை நோக்கி வந்தனர். அப் பேச்சிடையே அவள் கவர்ச்சியும் எளிமையும் அவன் அடிக்கடி அவளைக்கூர்ந்து கவனிக்கும்படி செய்தன. அச்சமயங்களில் அவள் சற்று முகத்தைத் திருப்பிச் சாய்ந்த பார்வையுடன் புன்னகை செய்தாள். தன் அக உணர்ச்சியை அளவையாகக் கொண்டு அவளும் தன்னைக் காதலிக்கிறாள் போலும் என்று அவன் கருதினான். உண்மையான காதலின் தன்மை, அதன் அறிகுறிகள் ஆகியவற்றைப்பற்றி நூல்களில் படித்த அவனுக்குக் கண் கண்ட காரிகையான அவள் மூலமே அதனை ஆராய்ந்தறிய வேண்டு மென்ற அவா ஏற்பட்டது. ஆகவே, அவன் “நீ என்னை மிகப் பெரிதாக நினைத்துவிட்டாய். எனக்கு உண்மையில் பணமோ அல்லது வேறுவகை உயர் நிலையோ எதுவும் கிடையாது” என்று கூறி அவள் காதலைச் சோதிக்கத் தொடங்கினான். அப்புவினால் முழுவிவரமும் அறிந்த அப்பெண் “அப்படி யானால் நான் அச்சமின்றி என் காதலை வெளியிடலாம். அது வளர்வதற்கு இனித் தடையில்லை” என்றாள். சோதனையின் பயனாக வந்த எதிர்பாராத அவ் இனிய மறுமொழி அவனைச் சொக்கவைத்தது. ஆயினும் அவன் காதல் ஆராய்ச்சியை நிறுத்தவில்லை. “மணவாழ்வில் ஈடுபடாத உங்கள் வகுப்பினருக்குக் காதல் என்பது பற்றி என்ன தெரியும்?” என்று அவன் வினாவினான். ஆனந்தி : மணவாழ்க்கையின் காதலெல்லாம் வெறும் கட்டுக் கோப்புத்தானே. உள்ளமும் உள்ளமும் ஒட்டும் காதலை வளர்ப்பது நாங்கள்தான்; பிறர் தங்கள் உள்ளங்கள் காதலுக் கடிமையாகாமல் ஊரார் விருப்பத்துக்கு அடிமையாகும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால் நாங்களோ ஒளி பட்டதும் படாததும்படம்பிடித்துவிடும் நிழற் படத்தகடுகள்போல் காதல் என்றதுமே கனிந்துருகும் இளகிய உள்ளத்தினராய்ப் பண்பாடடைகின்றோம். சதாசிவன் உள்ளூர ‘இத்தகைய நற்குடியின் காதல் கிடைக்கப் பெற்றதே’என மகிழ்ந்தான். அவன் பின்னும் ‘காதலுடையவர் தம் மனத்திலுள்ள காதலைப் பற்றி வெளிப் படையாகப் பேசுவார்களா? பேசுவது தகுதியா?’ என்று கேட்டான். ஆனந்தி: ஏனில்லை! காதலுணர்ச்சியினால் பறவைகள் பாடவில்லையா? அவற்றுக்குக் கட்டுப்பாடேது? காதலர் கவனிக்கவேண்டுவ தெல்லாம் காதலைப் பெறுபவர் அதற்குத் தகுதியானவர் தாமா என்பது மட்டுமே. இறுதிவாசகம் அவள் நாவிலிருந்து வெளிவருகையில் அவள் கண்ணில் ஓர் ஒளியும் இதழில் ஒரு புன்னகையும் தவழ்ந்தன. அத்தகுதி தன்னிட மிருப்பதாக அவள் எண்ணுவது கண்டு அவன் இன்பத்தின் உச்சியேறியவன் போல் மயக்க மெய்தினான். அதில் கலந்துள்ள குறும்புக் குறிப்பு அவன் அறிவுக்கு எட்டவில்லை. ஊருக்குள் வந்ததும் சதாசிவன் மெல்ல விலக எண்ணு பவன் போல் பாசாங்கு செய்தான். அவள் அது கண்டு இவ்வளவு தூரம் வந்தவர்கள் ‘என் வீடுவரை என்னைக் கொண்டுவிட்டுச் செல்லப்படாதா?’என்றாள். அவள் வீட்டை யறிந்துகொள்ளும் எண்ணத்துடன் அவன் இணங்கினான். ஆனால் வீடுவந்ததும் அவள் சற்று உள்ளே வந்து இளைப்பாறிப்போக வற்புறுத்தி னாள். அவனால் அதைமீறக் கூடாமல் உட்சென்றான். அவ்வீட்டில் வேறு ஆள் நடமாட்டமேயில்லை. கிழவி யாகிய ஆனந்தியின் தாய் அவனை விருந்தினர்களை வர வேற்பதுபோல் இன்மொழிகளுடன் வரவேற்று முகமன் கூறினாள். அவனை அமரவைத்து அவனைப்பற்றிய விவர முழுதும் விடாது கூறும்படி பலவகை ஆதரவான கேள்விகள் கேட்டாள். ஆனந்தியின் காதலை விட்டாலும் அவள் உபசாரத்தை விட முடியாதது போல் அவனுக்குத் தோன்றியது. அவர்கள் பேசிக்கொண்டிருப்பதற் கிடையில் ஆனந்தி பால், பழம், சிற்றுண்டி ஆகியவற்றை எங்கிருந்தோ கொண்டு வந்தாள். சதாசிவன் ‘ஏனித்தனை உபசாரம். எனக்கு இதொன்றும் வேண்டாம். வீடுசெல்ல நேரமாயிற்று’ - என்றான். கிழவி “எங்கள் வீடெல்லாம் வீடாகாதா? நாங்கள் ஏழைக ளென்றா நீங்கள் எங்கள் உபசாரத்தை ஏற்கத் தயங்குகிறீர்கள்!” என்றாள். சதாசிவன் “அப்படியொன்றுமில்லை. உங்கள் அன்பே பெரிது” என்று கூறி ஆனந்தி கொண்டுவந்தவற்றில் சிறிது உட்கொண்டான். ஆனால் அதன் பின்னும் அவனை அவர்கள் எளிதாக வெளியேற விடவில்லை. அவன் விடைபெற்றுப் போகையில், ஆனந்தி “போகிறதுதான் போகிறீர்கள்; இன்னும் ஒரு சிறிய உதவி செய்துவிட்டுப் போங்கள். பக்கத்து அறையை என்னால் திறவுகோல் கொண்டு திறக்க முடியவில்லை சற்று திறந்து தருகிறீர்களா?” என்று கேட்டாள். சதாசிவன் சரி என்று சென்று திறந்தான். அதைத் திறப்பதில் ஒன்றும் தொந்தரவு இருந்ததாகக் காணவில்லை. படபடப்புடன் அவன் நேரே தன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் போகும்போது ஆனந்தி வாயிற் படியில் நின்று, “இனி உங்களை எப்போது காண்பது?” என்றாள். அவன் சற்றே திரும்பிப்பார்த்து “வாய்ப்பு நேரும்போது வருகிறேன்” என்று சொல்லிச் சென்றான். அவள் நகைத்துக்கொண்டாள். அவள் தாய் அவளைப்பார்த்து “இவன் நல்லகுடும்பத் தவன் போலிருக்கிறது. பெண்களிடம் பேச அஞ்சுகிறான்; இவனை எங்கிருந்து பிடித்தாய்?” என்றாள். ஆனந்தி: எல்லாம் அப்புவின் வேலை. இந்த ஏழையின் பேரழகினில் பக்குவப் படுத்திவிட்டிருந்தான். தற்செயலாக இவனைக்கண்டு மாட்டை மேயவிட்டு, அந்தச்சாக்கில் அதைப் பிடித்துவரச் சொல்லி அழைத்துவந்தேன். தாய்: இவ்வளவு தொந்தரவு எடுத்துக்கொண்டும் அவன் நழுவிவிட்டான். அவன் உன் அழகில் ஈடுபட்டது உறுதிதான். ஆனால் எப்போது மீண்டும் வருவானோ? ஆனந்தி: எப்போதா? நாளை விடிந்தவுடன் தான் வரப் போகிறான்! தாய்: அது உனக்கு எப்படித் தெரியும்? ஆனந்தி: எல்லாம் என் திட்டப்படிதான். அறையைத் திறக்க உதவினான் அல்லவா? அதன்பின் திறவுகோலை என்னிடம் தரும்போது பேச்சுக்கொடுத்துக்கொண்டே வாங்கி அவன் சட்டைப் பையில் போட்டு வைத்திருக்கிறேன். அதைத்தர மறந்துவிட்டதாக எண்ணி வீட்டுக்குப் போனபின் அதைப் பார்த்துவிட்டுக் காலையில் அதைத்தர வருவான். தாய்: சரியான முன் யோசனை! சதாசிவன் வீடுபோய்ச் சேரும்போது வழக்கத்திற்கு மாறாக நேரம் சென்றுவிட்டது. அதற்குள் அவன் மனைவி அவனைத் தேடிக்கொண்டு கவலையுடனிருந்தாள். வந்ததும் ‘இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தீர்கள்’ என்று கேட்டாள். சதாசிவனுக்கு நேரடியாக உண்மையைச் சொல்ல முடிய வில்லை. “ஒரு நண்பனிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டேன். நேரம் சென்றதே தெரியவில்லை” என்றான். ஆனால் பெண்களா அம்மட்டில் விடுகிறவர்கள். “அப்படி யார் நண்பர் வந்துவிட்டார்கள் பேச, எனக்குத் தெரியாத நண்பரா?” என்று கேட்டாள் யசோதா. சதாசிவன் இவள் இக்கேள்வி கேட்பாள் என்று முன் கூட்டி எண்ணியிருக்கவில்லை. ஆகவே மேலீடாக நினைவுக்கு வந்தபெயரைச் சொல்ல எண்ணி “நம் இராமலிங்கத்துடன் தான் பேசிக் கொண்டிருந்தேன்” என்றான். யசோதைத் தன் மூத்தபையனைப் பார்த்து, “இராம லிங்கத்திடம் போய், அப்பா அங்கே இன்று வந்திருந்தாரா என்று கேட்டுவா” என்றாள். அவள் தன் சொல்லை நம்பவில்லை என்று கண்டு, அவளாகக் கண்டுபிடிக்குமுன் நாமாக உண்மையைச் சொல்லிவிடுவோம். என்றெண்ணி அவன் “இந்தச் சிறிய செய்திக்கு இப்படி வழக்கு விசாரணை செய்வாய் என்று நான் எண்ணவில்லை. நான் இராமலிங்கத்திடம் ஒன்றும் பேசிக் கொண்டிருக்கவில்லை. உன்னிடம் பொய்தான் சொன்னேன்” என்று கூறினான். யசோதா: நீங்கள் கூறுவது பொய்யென்று எனக்குத்தான் முன்னமே தெரியுமே? சரி, அப்புறம் வேறு யாருடன்தான் பேசிக்கொண்டிருந்தீர்கள்? சதாசிவன்: அதையெல்லாம் நீ ஏன் கேட்க வேண்டும்? என் மனம் போல் நான் யாருடனாவது பேசக்கூடப் படாதா? “பேசக்கூடாதென்று யாரும் சொல்லவில்லை. அதற்கு இவ்வளவு மறைப்பு எதற்கு என்றுதான் புரியவில்லை. எனக்கு என்னவோ ஒன்றும் பிடித்துக் காணவில்லை? போகட்டும்” என்று கூறிக்கொண்டே யசோதை அவன் உடுப்பைக் கழற்றி ஆணியில் மாட்டினாள். அச்சமயம் அதில் சத்தம் கேட்கவே, அவள் பையில் கைவிட்டு அதிலிருந்த திறவுகோலை எடுத்து “இது ஏது திறவுகோல்? இதில் இருக்கிறதே கதை” என்றாள். திறவுகோலைக் கண்டதுமே சதாசிவன் “ஐயையோ, இதை மறந்துபோய்க் கொண்டு வந்துவிட்டேனே; திறவு கோல் காணாமல் எங்கே தேடுகிறார்களோ தெரியவில்லை. இங்கும் இனி உண்மையைக் கூறாமல் வழியில்லை” என்று நடந்ததை யெல்லாம் கூறினான். யசோதை: யார் அத்தகைய பெண்? இதுவும் கட்டுக் கதையா? அந்தப் பெண் பெயர் என்ன? சதாசிவன் ‘ஆனந்தி’ என்றதுமே அவள் “என்ன? ஆனந்தியா! சரி, சரி! நல்ல இடமாகத்தான் பார்த்து விட்டீர்கள். எத்தனை நாள் இந்தக் கபட நாடகமோ? ஐயோ! நான் இனி என்ன செய்வேன்?” என்று அழத் தொடங்கினாள். சதாசிவன் எவ்வளவு ஆறுதல் கூறியும் அவள் கேட்கவில்லை. “நீங்கள் நாடிய இடத்திற்கே நீங்கள் சென்று வாழுங்கள்... இனி நான் உங்கள் பக்கம் நாடுவதில்லை” என்று சீற்றத்துடன் கூறினாள். வெளியில் காதல் நாடிய அவனுக்கு வீட்டிலிருக்கும் காதலுக்கு மோசம் வந்தது. ‘அப்பு போன்ற நாடோடிகளுக்கு இத்தகைய இரண்டகமான நிலையில்லை. ஆணும் பெண்ணு மாகத் தாராளமாய்க் கலந்து கொள்ளும் உயர் குடிமக்களுக்கும் இத்தகைய இக்கட்டு வருவதற்கில்லை. நம்போன்று, தானுண்டு, தன் காரிய முண்டு என்றிருப்பவர்கள் இதிலெல்லாம் மாட்டிக்கொண் டிருக்கப்படாதுதான்’ என்று அவன் நல்லறிவு கூறியது. ஆனாலும் மாட்டிக்கொண்ட பின் நயமாகத்தான் பின்வாங்கவேண்டும். நாளைத் திறவுகோலைக் கொடுத்துவிட்டு இனி எங்குமே போகவேண்டாம். ஆனால் இவ்வுறுதி வெற்றி பெற வேண்டுமே? யசோதையிடம் ஒளித்து நடந்ததால் இவ்வளவு தொல்லை வந்துவிட்டது. இனி அவள் என்ன நினைத்தாலும் சரி, அவளிடம் மனந் திறந்து செய்யப்போவதைச் சொல்லித் துணிந்து செய்வது என்று முடிவு கட்டினான். அதன்படி மறுநாள் காலையில் சதாசிவன் யசோதையிடம் “நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள். இதோ இந்த ஒரு தடவை திறவுகோலைக் கொண்டு கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன். இனி அப்பக்கம் நாடப்போவதில்லை” என்றான். அவள் முகத்தில் முழுநம்பிக்கை தோன்றவில்லை. ஆனால் கலவரமுமில்லை. “உங்கள் விருப்பம்” என்றாள். ஆனந்தி வீட்டில் திறவுகோலைத் தேடிக்கொண்டிருப்ப தாகப் பாசாங்கு செய்தாள். சதாசிவன் அவளிடம் போய் “என்ன தேடுகிறாய்?” என்றான். ஆனந்தி: எங்கள் அரங்குத் திறவுகோலை. சதா: அது இதோ இருக்கிறது. ஆனந்தி எதிர்பாராத வகையில் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தாவி, “என் உள்ளத்தைத் திருடியது மட்டுமின்றித் திறவுகோலையுமா திருடினீர்கள்? திறவுகோலைத் தந்தது போதாது. உள்ளத்தையும் திருப்பித் தந்தாலன்றி விடேன்” என்றாள். அவள் இக்காட்சிக்குத் தன்னை முன் கூட்டிச் சித்தப் படுத்தியிருந்தாள் என்பது அவள் அணிமணி, பட்டாடை, நறுமணம் முதலியவற்றால் விளங்கின. சதாசிவன் அவள் பிடியில் ஐந்து நொடிகள்தான் தன்னை மறந்திருந்தான். அதற்குள் யசோதையின் சீறிய தோற்றம் அவன் மனக்கண்முன் தோன்றியது. சதா: ஆனந்தி, இது என்ன விளையாட்டு! நான் மண மானவன். மூன்று பிள்ளைகளுக்குத் தந்தை என்பதை மறந்து விடாதே. ஆனந்தி: நான் ஒன்றும் மறக்கவில்லை. வீட்டு வாழ்வின் கவலையைக் கொஞ்ச நேரம் மறந்திருங்கள். களவாடிய உள்ளத்தைத் திரும்பித் தந்தாலன்றி விடமாட்டேன். சதாசிவன் திமிற முயன்றும் அவள் கெட்டியாக அவனைப் பிடித்துக்கொண்டாள். தன் தவறான நிலைமையறிந்தும் அவன் அவள் மயக்கத்தில் சிறிது ஓய்ந்திருந்தான். அந் நிலையில் ஆனந்தியின் தாய் திடுமென உள்ளே வந்து அக்காட்சியை எதிர்பாராத குடும்ப மாது போல நடித்து “அட காதகா, நம்பிய மங்கையைப் பெண்டாளுவதா? இதோ உன்னை ஊர் சிரிக்க வைக்கிறேன். ஊருக்குப் பெரிய மனிதன். ஏழைப் பெண்களுக்கு எமனாவதா? செய்த காரியத்துக்குச் சரியான பரிகாரஞ் செய்தால் போயிற்று. இல்லாவிடில் பார்த்துக் கொள்வோம்” என்றாள். ஆனந்தி காதலுக்காகப் பரிவது போல் பாசாங்கு செய்து, “அவர் பேரில் குற்றமில்லையம்மா! என்னைப் போலவே அவரும் காதலுக்கு அடிமையாகிவிட்டார்” என்று கூறித் தாயை அனுப்பிவிட்டு, “அம்மா முன்கோபி, நீங்கள் வருந்த வேண்டாம். திறவு கோலை என்னிடம் தந்து விட்டுப் போங்கள்” என்றாள். ஆனால், சதாசிவன் திறவு கோலைக் கொடுக்கும் போது அவள் அவன் கையிலிருந்த வைர மோதிரத்தை மெள்ளக் கழற்றி எடுத்துக் கொண்டு “உங்கள் நினைவாக இதை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்றாள். அவன் வியப்படைந்து மறுமொழிகூற வாயெடுக்குமுன் தாய் வந்து ஆனந்தியை அழைத்துச் சென்றாள். சதாசிவன் “என் மோதிரத்தைக் கொடுத்துவிட்டுப் போ” என்றான். ஆனந்தி: நான் இழந்த கற்பிற்கு இது விலை. சதா: உனக்கு ஏது கற்பு இருந்தது இதுவரை? ஆனந்தி: உங்களுக்கு எவ்வளவு நிறை இருந்ததோ அவ்வளவு கற்பு எனக்கும் இருந்தது. சதா: அதற்குச் சரியான விலையை நான் தந்து விடுகிறேன். மோதிரத்தைக் கொடு. அது என் மனைவியின் நினைவுக்குறி. ஆனந்தி: மனைவியின் நினைவு என் நினைவைவிட உங்களுக்குப் பெரிதாய்விட்டதோ? சதா: கேடு கெட்ட மனைவிகூட மதிப்பில் பெரிய பொது மகளிரை விட உயர்வானவள் என்பதை அறிந்து கொண்டேன். சதாசிவன் ஐந்து பத்து ரூபாய்த்தாளைத் தர எண்ணி இருந்தான். ஆனால் அவர்கள் பிடிவாதத்தாலும், பயமுறுத்த லாலும், நூறு ரூபாய்களை எறிந்து விட்டு மோதிரத்துடன் வீடு வந்து சேர்ந்தான். மறுநாள் காதல் பற்றிய கட்டுரைகள், வெளியீடுகள் ஆகியவை சதாசிவன் அறையில் கொளுத்தப்பட்டுக் கிடந்தது கண்டு யசோதை அவன் மனமாற்றத்தை யறிந்தாள். அவளாக அவனையண்டி நடந்த யாவையும் கேட்டு மனமாற அவனைப் பாராட்டினாள். காதலைப்பற்றி அவன் ஒரு நாள் அவளிடம் பேசுகையில், அவள் அவன் மனத்தில் காதல் வெளியீடுகளால் ஏற்பட்டிருந்த ஓர் ஐயத்தை அவள் தீர்த்தாள். “மணமாகும் வரை காதலர் காதல் அவர்களிடையே தவழும். மணமானபின் கணவன் மனைவி ஆகிய இருவர் காதலும் வாழ்க்கை நோக்கி வளரும். பிள்ளை களைப் பெற்றபின் அது பிள்ளைகள் வாழ்க்கையை நோக்கி வளரும். முதுமை எய்தியபின் அது உலகையளாவிப் பரவும்” என்றாள். காதலின் உண்மைப் பேராசிரியர் யார்? பெண்மை தானே! 2. பிள்ளைத் திருட்டு “எனக்கு இது பிடிக்கவில்லை, கங்கு! இந்தக் கடைசிக் கட்டத்திலாவது இம்முயற்சியை ஒழித்துக் கட்டிவிட்டுக் கவலையில்லாமலிருக்கலாமே” என்று இராமகிருஷ்ணன் தன் மனைவி கங்கையம்மாளைப் பார்த்துப் பரிவுடன் கேட்டான். இராமகிருஷ்ணன் இச்சமயம் தெருவாயிற் படியில் நின்று கொண்டிருந்தான். அவன் நல்ல உடற்கட்டுடையவன்; வயது ஏறத்தாழ முப்பத்தைந்து இருக்கும். அவன் மனைவி கங்குவுக்கும் வயது முப்பதேதானிருக்குமானாலும் அவள் சற்றுப் பருத்த உடலுடையவளாயிருந்தாள். அதிலும் இப்போது அவள் கருப்ப முற்றவளோ என்னும்படியான தோற்றம் உடையவளா யிருந்தாள். இராமுவின் அமைதியான கேள்விக்குக் கங்கு வெடுக் கென்று விடை கூறினாள். “இவ்வளவுதானா உங்கள் வீரதீரம்! காதுவரை மீசையை முறுக்கி விட்டுக்கொண்டிருப்பது இதற்குத்தானா? குழந்தையாவலோ என்னைப்போல் உங்க ளுக்கும் இருக்கிறது. எனக்கு இனிப்பேறு இருக்காதென்றும் உங்களுக்குத் தெரியும். அப்படியிருந்தும் ஏன் இவ்வளவு தயக்கம்?” இராமு: ‘என்ன அப்படி வந்துவிட்டது இப்போது? இனி உனக்குக் குழந்தை பிறக்கப் படாதா என்ன?’ கங்கு : “அதெல்லாம் ஒரு நாளுமில்லை. என்னைப் போலப்பருத்த உடலுடையவர்களுக்கு இந்த வயதுக்கு மேல் பிள்ளைபிறப்பது அரிது, நான் ஒரு மலடியாய் இருக்க வேண்டுமென்று இராவிட்டால், மணமாகி இந்தப் பதினைந்து ஆண்டுகளாக எப்போதாவது கருத்தங்கியிராதா? ஏனிவ்வளவு! நாம் போட்டிருக்கும் திட்டத்தைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.” இராமு: “ஏனில்லை? இவ்வளவு தொல்லை எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் ஏதாவது ஒரு பிள்ளையை எடுத்து வளர்த்துக் கொள்ளலாம். நூற்றுக்கணக்கான பிள்ளைகள் அவ்வகையில் கிடைக்கும்.” கங்கு: “ஆம், ஆனால் எந்தப்பிள்ளையையும் ஐந்து வயதாகுமுன் எடுத்து வளர்க்க முடியாது. அந்த வயதுக்குப் பின் அது உண்மையில் நம் குழந்தையாகப் போவதில்லை. இதையெல்லாம் எத்தனையோ தடவை பேசிப்பேசிப் பார்த்தாயிற்று. இந்தத் திட்டத்தில் என் பங்கு வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன். உங்கள் பங்கு வேலையைச் செய்ய நீங்கள் பின்வாங்காதேயுங்கள்.” இராமு: “நான் சொல்வதைக் கேள். ஏற்கெனவே கருப்ப மடைந்திருப்பதாகப் பாசாங்குசெய்து வயிற்றில் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு நீ படாதபாடுபட்டிருக்கிறாய். மலடி என்ற பெயரை மாற்றுவதற்காகப் பைத்தியக்காரி போல நடந்துவருகிறாய். பிள்ளை பிறந்து இறந்தது, வயிற்றில் இறந்தது, உனது நோயால் இறந்தது என்று நடித்து வருகிறாய். இவ்வகையில் உன் மனத்துன்பம் எனக்குத் தெரியும். ஆயினும் -” கங்கு: “ஆயினும் போயினும் ஒன்றும் இங்கே வேண்டாம். எனக்கு எப்படியும் இப்போது பிள்ளை கொண்டுவந்தாக வேண்டும்.” கங்கு உண்மையில் படபடப்பும் ஆத்திரமும் உடையவள். ஆனால் இப்போது அவள் யாரும் இரங்கத்தக்க நிலையில் கண் கலங்கி நின்று கணவனிடம் மன்றாடினாள். இராமு: “தாய்மை என்பது இன்னது என்பதை அறியும் நாம் ஒரு தாயிடமிருந்து அவள் குழந்தையைப் பிரிப்பது பழி யல்லவா?” கங்கு: “இருக்கிற இரண்டு பிள்ளைகள் கஞ்சியில்லாமல் கதறுகிறபோது மூன்றாவது குழந்தையை எடுத்து வளர்ப்பது தவறா? இவ்வொரு குழந்தையாவது வறுமையில் வாடாமல் பார்ப்பது புண்ணியமாயிற்றே! இதனால் மற்றப்பிள்ளை களுடைய நிலைமை கூடச் சற்று மேம்படும். தாய்தந்தையருக்கும் தொல்லை குறைவு. இதனால் பழிபாவம் வந்து விடு மென்றுதயங்கவேண்டாம். போய் விரைவாகக் காரியத்தை முடியுங்கள்” எப்படியும் திருட்டுத் திருட்டுத்தானே என்று எண்ணிய இராமகிருஷ்ணனுக்கு உள்ளூர இக்காரியத்தில் மனம் செல்லவில்லை. ஆனால் மனைவியின் உருக்கமான பேச்சும் அவள் உணர்ச்சியும் அவன் ஒழுக்கக் கோட்பாட்டைத் தகர்த்துத் தள்ளின. அவன் வேண்டாவெறுப்பாய் இக்காரியத் துக்கு ஒத்துக்கொண்டான். “சரி, அப்படியே ஆகட்டும். ஆனால் இதில் ஒரு சிறிது பிழை ஏற்பட்டாலும் நாம் ஒரு பெரும் புயலை எதிர்க்கவேண்டி நேரிடும்” என்று கூறியவனாய், அவன் பயணத்துக்கு ஆயத்தமானான். கங்கு தன்காரியம் கைகூடவேண்டுமே என்ற கவலையில் இரவு முழுவதும் ஊணுறக்க மில்லாமல் தெய்வத்திற்கு வேண்டு கோள் செய்து நேரம் போக்கிக்கொண்டிருந்தாள். *** இராமு, கங்கு ஆகிய இருவர்களின் ஆழ்ந்த சூழ்ச்சித் திட்டத்துக்கு ஆளான குடும்பம் சீதை என்பவளின் குடும்பமே. சீதை அடுத்த ஊராகிய திருக்கோவூர்க் கோயில் குருக்கள் சேஷுவின் மனைவி. அவர்கள் வறுமைக் கடலில் உழல்பவர்கள்; அந்நிலையில் மணமானது முதல் ஆண்டுதோறும் சீதை ஒரு குழந்தையைப் பெறத் தவறுவதில்லை. இப்போது இரண்டு குழந்தைகளுக்குப்பின் மூன்றாவது குழந்தையை ஈன்றிருந்தாள். அதுவும் எல்லாம் ஆண் குழந்தைகள். (அவர்கள் வகுப்பில் பெண்களுக்குப் பரிசம் கொடுத்து வாங்குவது வழக்கம். ஆதலால் பெண்கள் பிறப்பதே செல்வம்; ஆண்கள் பிறப்பது வறுமை) ஏழை, பணக்காரர் பார்த்துப் பிள்ளைகளை நேர்மை யாகப் பங்கிட்டுத் தராத தெய்வத்தின் பிழையைச் சரிப் படுத்தத் திருக்கோவூரில் கண்கண்ட தெய்வமாக ‘நங்கி’ என்ற மருத்துவச்சி ஒருத்தி இருந்தாள். பிள்ளை வேண்டாம் என்றிருப்பவர்கள் இத்தெய்வத்திற்கு மட்டும் காணிக்கை செலுத்திவிட்டால், வேண்டாத பிள்ளைக்குத் தடையுத்தரவு போடப்பட்டுவிடும். வேண்டாதபிள்ளை தடையுத்தரவை மீறித்துணிந்து உலகுக்குள் வந்துவிட்டால், அதை வந்த உலகுக்கு மீண்டும் அனுப்பிவிடவும் அவள் தயங்கமாட்டாள். சீதை பிள்ளை வேண்டுமென்று தவங்கிடக்கவில்லை; ஆயினும் வந்தபின் வேண்டாமென்றும் கூறவில்லை. என்றாலும் பேறுகாலச் செலவுகளுக்குத் திண்டாடும் அவளிடமிருந்து நங்கி காணிக்கை எதனையும் எதிர்பார்ப்பதற்கில்லை. இந்நிலையில் ஏதோ அறிமுகமில்லாத ஒருவன் கையில் முன்பணமும் வைத்து, கூடுதல் பணம் தரும் உறுதியும் கூறி, ஒரு பிள்ளை வேண்டும் என்ற கூறியபோது அவள் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டாள். அறிமுகமில்லாத பக்தன் வேறுயாருமில்லை, இராமுதான். வெளிப்படையாக நங்கி போன்ற கீழ் மக்களுடன் உறவு வைத்துக்கொள்ள அஞ்சி அவன் அவளுடன் மாற்றுருவில் பேரம் செய்திருந்தான். சீதையின் வீட்டுக்குப் பின்பக்கமிருந்த ஊர்ப்புறக் காட்டில் இரவு முழுதும் பனியில் காத்திருந்து இராமு இயற்றிய தவம் விடியற்காலை வேளையில் பயன் தந்தது. பொற்பதுமைபோன்ற குழந்தை ஒன்றும் நன்றாக உறங்கும் நிலையில் அவன் கையில் வந்து சேர்ந்தது. இதுவரையில் தனக்குக் காணிக்கை தரும் பக்தன் யார், அவன் நிலைமை என்ன என்று அறிய ‘நங்கித்’ தெய்வம் கவலைப்படவில்லை. ஆனால் பெறக்கூடும் காணிக்கை முற்றும் பெற்றபின் இவ்வாராய்ச்சியைச் சற்றுத் தொடங்கினாள். “நீங்கள் யார், குழந்தையை எதற்காக, எங்கே கொண்டு போகிறீர்கள்?” என்று அவள் உசாவினாள். இராமுவுக்கு இதற்கு விடை கூறுவது சற்றுத் தொல்லையாகவே இருந்தது. ஆயினும் காரியம் இவ்வளவு கைகூடியபின் இனித் தயக்கம் கூடாதென்று எண்ணி துணிந்து பொய் கட்டினான். “நான் ஒரு ஆண்டி, கோயில் திருப்பணிகளிலும் சமயப் பணிகளிலும் ஈடுபட்டவன். இப்பணியைத் தொடர்ந்து செய்யப் பழிபாவமறியாத பருவத்திலிருந்தே ஓர் உயிரை எடுத்து வளர்த்துப் பழக்கிவிட்டுப் போகலாம் என்று எண்ணுகிறேன்,” என்றான். தீயவளானாலும் கூரிய அறிவுடைய நங்கி இப்பொய் யுரையை ஏற்கமுடியவில்லை. ‘நீங்கள் ஆண்டியானால் உங்களுக்கு இவ்வளவு பணம் ஏது?’ என்று அவள் கேட்டாள். ‘கோயிற்பணி என்று சொல்பவர்களுக்கு இந்நாட்டில் செல்வத்துக்கு என்ன குறைவு’ என்று அவன் அவள் வாயை அடைத்துவிட்டுக் குழந்தையுடன் விரைவில் மறைந்தான். தீமையில் மரத்துப்போன நங்கியின் மனச்சான்றுக்கு இராமு கூறிய பொய்யுரை இன்னும் தீமைக்கு வலிவு தருவதா யிருந்தது. ‘துறவிகளே இத்தகைய செயல்களுக்குத்துணிந்தால் என்போன்றவர் பிழைப்பை நாடி எதுதான் செய்யலாகாது?” என்று அவள் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். குழந்தைக்கோ, இவ்வுலகிலேயே, ஆனால் தன் உணர் வில்லாமல் புதுவாழ்வு கிடைத்தது. *** நங்கி குழந்தையைத் திருடும்போது வீட்டில் தாயும் பிள்ளையும் தவிர யாருமில்லை. பக்கத்து ஊர் விழாவிற்காக சேஷு முந்தின மாலையே ஊரைவிட்டுப் போய்விட்டான். விடியற்காலையிலேயே அணையாடைத் துணிகளை எடுத்துக் கொண்டு அவன் தாய் ஆற்றங்கரை சென்றிருந்தாள். முன் னெச்சரிக்கையுடன் நங்கி தாய்க்கும் சேய்க்கும் கொடுத்திருந்த மயக்க மருந்தால் இருவரும் நன்றாக உறங்கினர். குழந்தை போனதறியாமல் நெடுநேரம் உறங்கிய சீதை எழுந்ததும் கண்ணைக் கசக்கிக் கொண்டு குழந்தை இருந்த இடத்தை நோக்கினாள். குழந்தையைக் காணோம். நாற்புறமும் சுற்றிப் பார்த்தபின் வாய்விட்டு “ஐயோ என் குழந்தை எங்கே? என் குழந்தை எங்கே?” என்று அலறிக்கொண்டு வீட்டைச் சுற்றிலும் ஓடியோடித் தேடினாள். எங்கும் காணாது போகவே அவள் வாயிலும் வயிற்றிலும் அடித்தழுதாள். துணைக்கோ, ஆறுதலுக்கோ ஆளில்லாமல் அழுதழுது நினைவிழந்து சாய்ந்தாள். காலை பத்துமணிநேரத்துக்கு மாமியார் வந்து அவளை அதட்டி எழுப்பி ‘எங்கேயடி குழந்தை?’ என்றாள். அவள் “ஐயோ! யாரோ திருடிக்கொண்டு போய்விட்டார்களே. நான் என்ன செய்வேன்?”என்று மீண்டும் கதறி யழலானாள். மாமியார் கேட்கும் கேள்விகளுக்கு அவள் விடை சொல்லவும் முடியவில்லை. “வீட்டின் எல்லாப்பொருள்களும் வைத்தது வைத்தபடி இருக்கிறதே. அவற்றை யெல்லாம் விட்டுப் பிள்ளைக்கு மட்டுமா திருடன் வருவான். நான் விடியற்காலம் போகும்போது உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையை அதற்குள் எங்கே போக்கடித்தாய்?”என்று அவள் பலவாறு கடிந்து கொண்டாள். பிள்ளை காணாமற்போன துன்பம் ஒருபுறம். மாமியார் தொல்லை ஒருபுறம் சீதைக்குப் பெரு வதையாயிருந்தது. அச் சமயத்தில் அவளுக்கு ஒரே ஓர் எண்ணம் தான் தோன்றிற்று. நங்கி மருந்துகொடுத்தபின் தான் என்றுமில்லாத நெடுந்தூக்கம் தூங்கியதை அவள் எண்ணினாள். ‘நங்கிதான் எடுத்திருக்க வேண்டும்’ என்று அவள் போக்குரை கூறினாள். ஆனால் நங்கியிடம் கேட்டபோது அவள் சீறிவிழுந்து ‘மருந்துக்கில்லாத குடும்பத்திற்கு நடந்து வந்து பண்டுவம் பார்த்தேனல்லவா?அதற்கு இந்தப் பரிசு வேண்டியதுதான். வலிய வந்து திருட்டுப் பட்டம் வாங்கவோ உனக்கு இரவு பகலாய் உழைத்தேன்?”என்று தாவினாள். மாமி அவளிடம் ஆதரவாய்ப் பேசி ‘அம்மா, பிள்ளை யிழந்த துயரத்தால் ஏதோ கூறினாள். வருந்தாதே’ என்று சொல்லித் தன்னிடமிருந்த ஒன்றிரண்டு காசுகளைக் கொட்டிக் கொடுத்து அவளைத் தேற்றி அனுப்பி னாள். ஆனால் நங்கி அத்துடன் அமையாமல் ஊர்ப்புறத்துள்ள பேய்களைப் பற்றிக் கதையளந்து போனாள். “மனிதர் யார் குழந்தையைப் பார்த்துத் திருடுவார். இதெல்லாம் அந்தப் பேய் மரத்தடி வீராயியின் விளையாட்டுத்தான் என்பதில் ஐய மில்லை” என்பாள். ஆனால், சீதை மட்டும் பேயை நம்பவு மில்லை, நம்பவிரும்பவுமில்லை. ‘அது எந்த மனிதரிடமாவது இருந்து வாழட்டும், கடவுளே’ என்று எண்ணியிருப்பாள். நலிந்தோர்க்கு நாள் செய்யும் துணையன்றித் துணை யில்லையென்பதற்கிணங்க, சீதையின் ஆற்றொணாத்துயரம் நாட்செல்லச் செல்லச் சிறிது சிறிதாகக் குறைந்தது. அவள் அடிக்கடி ‘குழந்தை காணாமற் போனதைக்கூட நான் பொருட்படுத்தவில்லை. அது உயிருடன் எங்காவது வளர்ந்தால் போதும்’ என்பாள். அவளுடன் இருந்த பெண்களும் “உயிருடன் கட்டாயம் இருக்கும் அம்மா! யாராவது கொண்டு போகிற வர்கள் வளர்க்கத்தானே கொண்டுபோயிருப்பார்கள். குழந்தை யிடம் நகை முதலிய எதையாவது எண்ணிக் கொண்டுபோகவோ வழிகிடையாது. ஆகையால், நமக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவ்வளவுதான். அதற்குக் கட்டாயம் நன்மை தான் கொடுத்து வைத்திருக்கும்” என்பார்கள். *** சீதையிடம் பெண்கள் கூறிய தேறுதலுரைகள் பொய் யாகப் போகவில்லை. வறுமையிடையே பிறந்த குழந்தை, செல்வத்திடையே கண் விழித்தது. பல தடவை ‘சூலி’ யெனப் பொய் நடிப்பு நடித்த கங்குவோ, பத்து மாதக் கர்ப்பம், பேறு காலத்துன்பம் ஆகிய எதுவுமின்றி, ஒரு பத்துநாழிகைக் கவலை மட்டிலும்பட்டு ஒரு பிள்ளைக்குத் தாயானாள். பிள்ளைக்கு அலைந்த அவள் உள்ளத்தில் தாயின் இயற்கையன்பு இருந்தது. தாய் மாறியதை அறியாத குழந்தைக்கு அவள் ‘பெற்றதாய்’ போலவே ஆய்விட்டாள். தாயின் அரவணைப்பில் மகிழ்வது போலவே அது அவள் அரவணைப்பிலும் மகிழ்ந்தது. தாயின் மகிழ்ச்சி கண்ட அவளுக்கும் சில சமயம் கணவன் மனத்தில் தோன்றிய பழிபாவஅச்சம் தோன்றும். ஆனால் குழந்தையின் ஒரு முத்தம், அதன் அயர்ந்துறங்கும் முகத்திற் காணப்படும் ஒரு ‘நரிவிரட்டு’ அதனைப்பறக்கடித்துவிடும். அச்சமயங்களில் அவள் “பழியாம், பாவமாம்! இவ்வின்பத்துக்கு முன் அவை எம்மட்டு? இதற்காக அரசாங்கமே என்னைச் சிறையிட்டாலும், தூக்கிலிட்டாலும் கூட, நான் கழிவிரக்க மடையமாட்டேன். அத்தனை துன்பத்துக்கும் இத்தங்கக் கனியின் ஒரு முத்தம் போதிய விலை ஆகும்!” என்று குழந்தையை உச்சி மோந்து மகிழ்வாள். ஊராருக்குக் கங்கு பிள்ளைப் பெற்றதில், அதுவும் நோய் நொடியற்று, நல்ல பிள்ளையாகப் பெற்றெடுத்ததில் சற்று வியப்புத்தான். ஆனால் அது முற்றிலும் பொய் என்று எவரும் கனவிலும் நினைக்கத் துணிந்திருக்க மாட்டார்கள். கங்குவை ஒரு பொருட்டாக எண்ணாதிருந்த பெண் களுக்கு ஒரு சிறிது பொறாமை அல்லது மனத்தாங்கல் தோன்றி யிருக்கலாம். ஆனால் அதை மற்றச் செய்திகள் விரைவில் மறக்கடித்தன. எல்லாருடனும் அவர்களும் வெற்றிலைபாக்கு, கற்கண்டு ஆகியவற்றில் பங்குகொண்டு விட்டார்கள். பிராமணர் களுக்குத் தானமும் காணிக்கையும் முறைப்படி கொடுக்கப் பட்டன. எல்லாரும் அளக்கிற கதையை அளந்துவிட்டுப் போகிறபோக்கில் மனநிறைவுடனேயே போயினர். கங்குவின் மாமியார் வந்து குழந்தையைப் பார்த்து மகிழ்ந்தாள். பெயரீட்டு விழாவின் போது குழந்தைக்குப் பாலகிருஷ்ணன் என அருமையாகப் பெயரிடப்பட்டது. தாயும் தந்தையும் பாட்டியும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு அவனை வளர்த்தனர். பத்தாமா தத்திற்குள் அக்குழந்தை அம்மூவரை மட்டும் தனிப்பட மா, பா, தா என்று ஓரெழுத்திட்டு அழைக்கக் கற்றுக்கொண்டது. *** ஓர் ஆண்டு இங்ஙனம் யாதொரு நிகழ்ச்சியுமில்லாமல் கழிந்தது. சீதை அவ்வப்போது காணாமற்போன குழந்தையை நினைத்தாலும், வர, வர, அவள் அதை மறந்து தன் வாழ்விலீடு படத் தொடங்கினாள். பாலகிருஷ்ணன் செல்வர் வீட்டில் பிறந்த குழந்தை போலவே வளர்ந்து வந்தான். கங்குவும் இராமுவும் கூட அதைத் திருடிப்பெற்றோம் என்பதைத் தாங்களே கிட்டத்தட்ட மறந்து தங்கள் பிள்ளையாகவே எண்ணிவிட்டனர் இந்த நிலையில் இயற்கை தன் பிழையைத் திருத்தமுனைந்தது. பிள்ளையே இனிப்பெறமாட்டோம் என்றிருந்த கங்கு வுக்குத் தாயின்பந் துய்த்த காரணத்தாலோ, உடல் தேறியத னாலோ எக்காரணத்தாலோ உண்மையிலேயே கருப்பம் உண்டாய்விட்டது. அவள் பத்துமாதத்தில் அரும்பாடுபட்டு ஓர் ஆண் குழந்தையை ஈன்றாள். இப்பேறு கடும் பேறாகத் தோன்றியதால், தேர்ந்த பெண்மருத்துவ நிபுணர் ஒருவரை அழைத்திருந்தனர். அவள் பேறு காலத்தின்போதே அது முதற்பேறு என்பதை எளிதில் கண்டுகொண்டாள். ஆகவே பாலகிருஷ்ணனை அவள் இதற்கு முன் பெற்றவள் என்ற கதை பொய்யா யிருக்கவேண்டும் என்று அவள் அறிந்தாள். அவள் கங்குவை நோக்கி ‘அம்மா, என்னிடம் உண்மையைக் கூறிவிடு. பாலகிருஷ்ணன் நீ பெற்ற குழந்தை யல்ல என்று நான் அறிவேன். அதுயார் குழந்தை?’ என்று கேட்டாள். இனி உண்மையை மறைக்க முடியாது என்று கங்கு உணர்ந்து கொண்டாள். இன்னொருத்தியாயிருந்தால் தனக் கென ஒரு குழந்தை பிறந்துவிட்டதே இனி எடுப்புப் பிள்ளை யேன் என்று நினைத்திருப்பாள். ஆனால் பாலகிருஷ்ணன் அவள் தசையில் பிறவாவிடினும் இப்போது அதனுடன் அன்பில் கலந்துவிட்டான். எங்கே உண்மையை வெளியிட்டால் அவனை இழந்துவிட வேண்டிவருமோ என்று அவள் தயக்கமடைந்தாள். ஆனால் மருத்துவ நிபுணர் சற்று நயங்காட்டித் தானொன்றும் தீங்கு செய்வதில்லை என்று கூறியபின் அவள் மெல்ல யாவும் ஒத்துக்கொண்டாள். மருத்துவமாது உண்மையிலேயே மிகவும் கனிந்த உள்ள முடையவள். பிள்ளைப்பாசமன்றிக் கங்குவின் செயலில் தீய எண்ணம் எதுவுமில்லை என்பது அவளுக்கு வெள்ளிடை மலையாக விளங்கியது. அதேசமயம் பிள்ளையை உரியவரிடம் சேர்க்கவேண்டும் என்றும் அவள் நேர்மையுள்ளம் விரும்பிற்று. கங்குவின் நல்ல பெயருக்கு ஊறு ஏற்படாமலே இரண்டு காரியத்தையும் செய்ய அவள் மூளை திட்டமிட்டது. அதன்படி ஒரு சில நாட்களுக்குள் மீண்டும் ஒரு பொய் நாடகம் நடிக்கப் பட்டது. பாலகிருஷ்ணனுக்கு நோய் என்று அவள் அடிக்கடி பொய் மருந்து கொடுத்துவந்தாள். ஒருநாள் திடீரென்று அவன் இறந்தான் என்று செய்தி பரப்பப்பட்டது. பிள்ளை என நம்பும்படி தலையணை ஒன்று கட்டி இடுகாட்டிற் அனுப்பப் பட்டது. ஆனால் உண்மையான பாலகிருஷ்ணன் மறைவாக மருத்துவமாதின் ஆள் ஒருவர் மூலம் தொலைவிடத்துக்கு அனுப்பப்பட்டான். இராமுவும் கங்குவும் மிகுந்த மனவருத்தத்துடனேயே இவ் ஏற்பாட்டுக்கு இணங்கினர். பின்னர் மூன்றாண்டுகள் பிள்ளை தொலைவிடத்தில் இராமுவின் செலவில் வளர்ந்து வந்தது. அதன்பின் மருத்துவ மாது தற்செயலாகப் போவதுபோல் சீதையைக் காணச்சென்றாள். பேச்சினிடையே பேச்சாக அவள் சீதையின் பழங்கதை முற்றிலும் வருவித்தாள். சீதை தன் குழந்தை பேயிடம் சென்றுவிட்டதென்ற கதையை நம்பவில்லை என்றும் அது எங்கோ வளர்ந்து வருவது உறுதி என்றும் கூறினாள். மருத்துவமாது உடனே பக்குவமாக ‘நீ சொல்வதில் உண்மை நிறைய இருக்கிறது அம்மா. எனக்குத் தொலைவிடத்தில் ஓர் உறவினர் இருக்கிறார். அங்கே நாலைந்து வயதுடைய பிள்ளை ஒன்று இருந்தது. அது யாராலோ அவ்விடத்தில் தனியாக விடப்பட்டதாம். உன்பிள்ளையும் அதுபோல எங்காவது வளர்ந்து வரக்கூடும்’ என்றாள். அதன்பின் அவள் ஏதோ நினைத்தவள் போல “அம்மா, நான் ஒன்று கேட்கிறேன், உன் பிள்ளையை இத்தனை ஆண்டு கள் கழித்து எங்காவது பார்த்தால் உனக்கு அடையாளம் தெரியுமா?” என்று கேட்டாள். சீதை உடனே முகமலர்ச்சியுடன் ‘அந்த நல்ல காலம் வருமானால் ஏன் எனக்குத் தெரியாது? தாய் அறியாத சூலா? என் பிள்ளைக்கு வலது காதின் கீழ் மறுவுண்டு. வலதுகையின் கீழும் இன்னொரு மறுவுண்டு’ என்றாள் அவள். மாமி இவ் வடையாளங்கள் தனக்கும் தெரியும் என்றாள். மருத்துவமாது ‘அப்படியானால் நான் என் உறவினர் வீட்டுப்பிள்ளையையும் அம்மாதிரி வேறெங்கேனும் எடுப்புப் பிள்ளைகள் இருந்தால் அவற்றையும் இவ்வடையாளங்களால் சோதித்தறிவேன். உங்களிடம் தவறாக நம்பிக்கை உண்டுபண்ண நான் விரும்பவில்லை. ஆனால் ஏதோ ஒன்று என் மனத்திற்குள் கூறுகிறது, நான் உங்கள் பிள்ளையைக் கண்டுபிடிப்பேன் என்று’ என்றாள். பழைய வருத்தமும் கவலையும் மாறி மறதியிலாழ்ந்திருந்த சீதையின் தாயுள்ளம் நம்பிக்கை என்னும் நிலவொளி கண்டு மீண்டும் ஊசலாடிற்று. ஒரு சில நாட்களில் அம்மாது மீண்டும் பிள்ளையுடன் வந்தாள். தாயும் பாட்டியும் உடனே அதனைத் தம் பிள்ளை யெனக் கண்டு இன்பக் கண்ணீரால் அவனை ஆட்டினர். பிள்ளையும் இரண்டாம் தடவை தன் பெற்றோரை மறந்து, அவர்களிட்ட பாலகிருஷ்ணன் என்ற பெயரையும் மறந்து விட்டான். தயானந்தன் என்ற புதுப்பெயருடன் பெற்ற தாயின் அணைப்பில் மீண்டும் புது வாழ்வு புகுந்தான். போன பிள்ளை மீண்ட கதை சீதை குடும்பத்தின் பெயரை எங்கும் பரப்பிற்று. பலர் மீண்டுவந்த குழந்தையைக் கையுறை யுடன் காணவந்தனர். அவர்களிடையே ஆளுடன் ஆளாக இராமுவும் கங்குவும் தம் புதுக் குழந்தையுடன் சென்று தம் குழந்தையினும் பன்மடங்கு கண்ணாக வளர்த்த தம் பால கிருஷ்ணனைக் கண்டனர். சீதை யன்புடன் போட்டியிட்டுச் சிறுவனை அவள் மடிமீது வைத்து அணைத்துக்கொண்டாள். தன் மனக்குழப்பத்தை மறைக்கச் சீதையிடம் ‘அம்மா, உன் மூன்றாவது குழந்தை மறைந்து மீண்டது. என் முதற் குழந்தை மறைந்தேவிட்டது. உன்மகிழ்ச்சியால் என்துயரை மறைக்க எண்ணுகிறேன்’ என்று கூறிக் கொண்டு பிள்ளை கையில் ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தாள். அவள் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகிற்று. குழந்தை அருமையுணர்ந்த சீதை அவள் தாயுணர்ச்சியை அறியாதறிந்து அவளுடன் அனுதாபம் கொண்டாள். அவள் குழந்தை யன்பையும் அவள் தாராள நன்கொடையையும் அவள் வாயாரப் போற்றினாள். ‘நம்’ திருட்டின் முழுப்பயனான இன்பத்தையும் பெற்று விட்டோம். அதற்கான நியாயமான தண்டனையையும் பெற்றுவிட்டோம். ஆயினும் இத்தனை துன்பம் கொடுத்தும் பெறுதற்கெட்டா இன்பம் இரட்டிப்பாகவே நமக்குக் கிடைத்தது. நம் திருட்டைக் கடவுள் மன்னித்து விட்டார். என்பது உறுதி’ என்று கங்கு கணவனிடம் கூறினாள். 3. அன்பின் வெற்றி கோமான் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு மிகுந்த நன்மதிப்புடன் வாழ்ந்துவந்தவன். அதோடு அவனுக்கு ஐயாயிர ரூபாய் மதிப்புடைய நிலங்கள் உண்டு. அவன் நல்ல உலகிய லறிவும் சுமுகமான நடையுமுடையவன். ஆயினும் சிற்சில வகைகளில் அவன் கண்டிப்பான கொள்கைகளைக் கடைப் பிடித்து வந்தது பலருக்குப் பிடிக்கவில்லை. அவற்றுள் ஒன்று சண்டை சச்சரவுகள், வழக்குகள் ஆகியவற்றை அவன் மனமார வெறுத்ததுஆகும். இரண்டு கட்சிகளுள்ள இடங்களிலெல்லாம் பெரும் பாலோர் ஏதாவது ஒரு கட்சியோடு சேர்ந்து பேசுவார்கள், அல்லது விலகி நிற்பார்கள். கோமானோ விருப்பு வெறுப் பில்லாமல் துணிந்து பொதுநெறி கூறுவான். அதனை இரு புறமும் ஏற்கும்படி இரு கட்சியையும் எதிர்த்துங்கூடப் போராடுவான். இதன் பயனாக இரு கட்சிகளும் ஒன்றுபோல அவனை வெறுப்பதுண்டு. யாராவது வழக்கு மன்றத்திற்குப் போகவிருந்தால் முழு மூச்சுடன் எதிர்த்து நிற்பான். வழக்கு மன்றங்கள் செல்வதால் நீதி கிடையாது, அநீதியே கிடைக்கும் என்பது அவன் விடாப்பிடியான கொள்கை. இங்ஙனம் பலர் வாய் வேதாந்தமாகக் கூறுவதுண்டு. ஆனால் கோமான் அதன் வழியில் நிற்பான். வாதியாகவோ, எதிர்வாதியாகவோ, சான்றாளராக வோகூட அவன் வழக்கு மன்றம் ஏறமாட்டான். வழக்கறிஞர் களாகவும், சான்றாளராகவுமிருந்தே பிழைப்பவர்கள், வழக்காளிகள் ஆகிய யாவரும் இதற்காக அவனை உள்ளூர வெறுத்தனர். கோமான் மனமறிய வஞ்சகமாக எதுவும் செய்யாதவன். பொய் கூறுவதும் அவன் இயல்பன்று ஆனால் வஞ்சகர் வலையில் விழாமலிருக்கப் பொய்யை நல்ல கருவியாக அவன் பயன்படுத்தினான். வஞ்சகர்கள் ஏதாவது செய்தி பற்றி உளவறிய வந்தால், முழுப் பொய்கூறி அவர்களை ஏமாற்றுவதில் அவனுக்கு மிகவும் விருப்பம். கோள், பிறர் செயலில் தலையீடு ஆகியவற்றில் ஈடுபட்ட பல ஊர்ப்புறஞ் சுற்றிகள் அவன் செல்லு மிடமறிய விரும்புவர். அவன் செல்லாத இடமே சொல்லி அவர்களை அலையவைப்பான். நாளடைவில் நம்பமுடியாத சொல்லுக்குக் ‘கோமான் வாய் உரை’ என்ற பெயர் அவ்வூரில் ஏற்பட்டது. கோமான் கோட்பாடுகள் ஊரில் ஒருவகையான வெறுப்பைப் பல இடங்களில் உண்டு பண்ணினாலும், அது அவன் வாழ்க்கையையும் தாக்கவில்லை. அவன் மதிப்பையும் சற்றும் குறைக்கவில்லை. ஏனெனில் அவனது உலகியல் திறம், கண்டிப்பு, உழைப்பு, சிக்கனம் ஆகியவற்றின் பயனாக அவன் செல்வமும் ஆற்றலும் வளர்ந்துகொண்டுதான் வந்தன. ஆனால் இக்கோட்பாட்டை அவன் தன் குடும்ப வாழ்வில் காட்டியதும் அதனால் எதிர்பாராத சோதனைகள் ஏற்பட்டன. கோமான் மனைவி இளமையிலேயே இறந்துவிட்டாள். இக்குறுகிய மண வாழ்க்கை அனுபவத்திற்குள் அவ்வாழ்வு வெறுத்துப் போய்விட்டதால் அவன் பின் மணம் செய்து கொள்ளவில்லை. எனவே இயற்கையாக அவன் குடும்பத் தொல்லை யற்றவனாகவே இருந்தான். ஆயினும் அவனுக்கு நீலா என்ற கைம்பெண்ணான ஒரு உடன் பிறந்தாளும், கோகிலா என்ற மருமகளும் இருந்தனர். ஆதரவற்று, ஏழ்மை நிலையிலிருந்த அவர்களைச் செல்வ நிலையில் இருந்த அவன் தன்னுடன் வைத்து ஆதரித்தான். கோமான் உள்ளூர அன்புகனிந்த உள்ளமுடையவனா யினும், குடும்ப வாழ்விலும் தன் கண்டிப்பான கொள்கையைக் கையாள வேண்டுமென்னும் உறுதியுடையவனாயிருந்ததனால் மேல் போக்காகப் பார்ப்பவர்களுக்கு அவன் கல்நெஞ்சனாகக் காணப்பட்டான். அவன் தங்கையும் தங்கை மகளும் எல்லா ரையும்போல் பகட்டான வாழ்வு, வெளிப்படையான இன்ப நுகர்ச்சி ஆகியவற்றில் பற்றுடையவர்களா யிருந்தனர். ஆனால் அவனோ எளிய வாழ்க்கை, சிக்கனம், பழமைப்பற்று ஆகிய வற்றை உறுதியான வாழ்க்கை விதியாகக் கொண்டிருந்தான். தற்காலப் புது நாகரிகப் போக்குகள் அவனுக்குப் பிடிப்பதில்லை. அவற்றால் இறுதியில் அழிவு நேரிடும் என்பதே அவன் நம்பிக்கை. இக்கோட்பாட்டின் பயனாகக் கோமான் காப்பி, தேயிலை, பலகாரங்கள் ஆகியவற்றை அனுமதிப்பதில்லை. பழையது, கஞ்சி முதலியவையே காலை உணவாக்கப்பட்டன. துணிகளிலும் கையால் நூற்கப்பட்டுக் கைத்தறியால் நெய்யப்பட்ட ‘கதிர்’ ஆடையையும் தானும் உடுத்து வீட்டுப் பெண்களும் உடுக்கச் செய்வான். இக்கட்டுப்பாடுகள் கைம்பெண்ணான நீலாவுக்கே கடுமையாயிருந்தன. இள மங்கையாகிய கோகிலாவுக்குக் கேட்க வேண்டியதில்லை. அவள் மெல்லிய தாவணிகளையும் பளபளப் பான துணிமணிகளையும் விரும்பினாள்; எழுச்சி தரும் காப்பியிலும் சிற்றுண்டி வகையிலும் இரவு பகலாக அவ ளுக்குத் தேட்டமாயிருந்தது. அவள் இயற்கையில் நல்ல வனப்பு உடையவள். ஆனால் கோமானின் போக்குக் காரணமாக, அவளைவிட எவ்வளவோ குறைந்த அழகுடைய பெண்கள் பகட்டான உடையுடுத்து அவளை வெட்கப்படும்படி செய்தும், அவமதித்தும் வந்தனர். இளைஞர்களுக்கும் உடைவழி, அழகுணர்ச்சி சென்று, பகட்டான தோற்றத்திற்கு முதல் மதிப்புக் கொடுப்பது கண்டு கோகிலா மனம் புழுங்கினாள். நீலா, கோகிலா ஆகியவர்களின், நிறைவேற்றப்படா ஆவல்கள் அவர்கள் உள்ளங்களில் ஆழப்பதிந்து ஏமாற்ற மாகவும், ஏமாற்றம் வெறுப்பாகவும், வெறுப்புப் பகையாகவும் மாறின. வறுமையில் கிடந்த தங்களை அவன் வலிய அழைத்து ஆதரவு தந்தான் என்பதை அவர்கள் மறந்தனர். அவன் தம்மிடம் பற்றுடையவன் போல் நடந்து கொண்டாலும், தம் நல்வாழ்க்கை யில் பொறாமை கொண்டு அதை அழிக்கவே அவன் சூழ்ச்சி செய்கிறான் என்றும், தான் வாழாததால் பிறரும் வாழப் படாதென்று அழி நினைவுடையவன் என்றும் அவர்கள் எண்ணினர். “இந்தப் பண ஆசை பிடித்த பேய் தன் வாழ்நாள் உள்ள மட்டும் நமக்கு உண்மையில் செல்லாக் காசும் தரப்போவதில்லை. நம்மைவைத்து ஆதரிப்பதாகக் கூறுவதெல்லாம், பணங்காசு செலவில்லாமல் நம்மிடம் புழுக்கை வேலை வாங்கிக் கொள்வ தற்குத்தான். அவன் சாகும்வரை நாம் பொறுத்திருப்போம் என்பதற்குமில்லை. அவன் இப்படியே நம்மைப் பிழிந்து நம்மைச் சாகடித்தபின் தான் சாவான் போலிருக்கிறது. தெய்வச் செயலாக அவனைக் காலன் நமக்குமுன்பே கொண்டுபோய் விட்டாலும் கூட, நம் வாழ்நாளின் நற்பகுதி போனபின்புதான் அது நேரிடும். நமக்கு அவன் காசு பயன்படாது” என்பாள் நீலா. கோகிலா அதை முற்றிலும் ஆமோதிப்பவள். உண்மையில் தாயைவிட அவளுக்கே கோமானின் கட்டுப்பாட்டில் பேரளவு சீற்றம் ஏற்பட்டிருந்தது. “நம் நல்ல நாட்களை எல்லாம் பாழாக்க இந்தக் கிழம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. என் இளமையும் அழகும் பயன்படாமல் அவரது வாழ்க்கைபோல நம் வாழ்வும் உப்புச்சப்பற்றுப் போக வேண்டுமென்றுதான் இவ்வளவு வேதாந்தம் படிக்கிறார். கிழவரான அவர் தமக்கேற்ற ஆடையைத் தம் விருப்பப்படி அணிந்து கொள்ளட்டும். அது போல் நமக்கேற்ற ஆடையை நம் விருப்பப்படி நாம் அணிய விடுவது தானே. அவருக்குப் பழையதும் கஞ்சியுந் தான் விருப்பமாயிருக்கலாம். அதற்காக நமக்கும் அதுவா? அவர்போல நமக்கும் விருப்பங்கள் இராதா?” இது அவள் ஓயாத முனக்கம். நீலா: அதையெல்லாம் சொல்லுவானேன்! அவர் விருப்பப் படி செய்ய அவரிடம் பணம் இருக்கிறது. நம்மிடம்தான் நமக் கெனப் பணமில்லையே. கோகிலா: நம்மிடம் பணமில்லாவிட்டால் என்ன? எங்கும் பெண்களா சம்பாதிக்கிறார்கள். இவர் கொடுக்காவிட்டால் வேறு மனிதத்தன்மை உடைய யாராவது கொடுத்துவிட்டுப் போகிறார்கள். அதற்கு மனமில்லாமல் நம்மிடம் பாசமிருப்பது போல் பாசாங்கு காட்டி நம்மைப் புழுக்கைகளாக்கு வானேன்? நீலா: இதையெல்லாம் யாரிடம் போய்ச் சொல்வது. அவர் இருக்குமட்டும் இப்படி வாழத்தான் வேண்டும். நமக்குப் போக்கேது? கோகிலா: இந்தச் சனிக்குக் கூடிய விரைவில் ஒரு போக்காடு வராதா? நீலா: போக்காடும் சாக்காடும் விரும்பி விட்டால் மட்டும் வருமா? வேண்டுமானால் காரியத்தில்...... இப்படிப் பேச்சு நீண்டு கொண்டு போயிற்று. மனம் சென்றவழி மதி செல்லவே அவனை நஞ்சிட்டுக் கொன்றால் என்ன என்ற துணிவு ஏற்பட்டது. ஒருநாள் நீண்ட ஆராய்ச்சி களின் பின் அவ்வகையான பொருள் ஒன்று தேடிப் பாலில் கலந்து கொடுத்தனர். அவர்கள் முகத்தோற்றத்தில் அவர் களையும் அறியாமல் ஏற்பட்ட மாறுதல்களைக் கவனித்தும் வழக்கம்போல் கோமான் பாலைக் குடித்தான். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த விளைவு காலை வரையும் காணாது அவர்கள் ஏமாந்தனர். உண்மை என்னவென்றால் அவர்கள் யாரோ தற்செயலாக நஞ்சென்று கூறிய பச்சோந்தி எச்சிலைத்தான் கலந்திருந்தனர். கோகிலாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திலும் கோபத்திலும் தோட்டத்தில் தேடிப்பிடித்து ஒன்றிரண்டு பச்சோந்திகளைக் கல்லாலடித்துக் கொன்றாள். “கொல்லமுடியாத நஞ்சை ஏன் கொண்டு திரிகிறீர்கள்? நீங்களாவது சாவுங்கள்” என்று பதைத்துக் கொண்டிருக்கும் பச்சோந்திகளிடம் கூறித் தன் கோபத்தை மாய்த்துக் கொள்ள முனைந்தாள். தன் முயற்சி பலிக்காதது கண்டு நீலாவுக்குத் தன் தலை விதியில் நம்பிக்கை அதிகரித்தது. ‘நம் விதியை நாம் அனுப விப்பதைவிட்டு அதை விட்டோட ஒப்புமா? அழுது தொலைப் பதை நன்றாய் அழுது தொலைக்காவிட்டால் கிழம் நோய்ப்பட்டு இன்றைய அரைப்பட்டினிக்கும் வகையில்லாமல் செய்து விட்டால் என்ன செய்கிறது? நாளைமுதல் இனி இன்னும் அதிகமாகத் துணிமணி, தின்பண்டம் வாங்காதே. அது கிழத்துக்குத் தெரிந்தால் மோசம்” என்றாள் அவள். கோகிலாவுக்கு இந்தப் புதிய அறிவுரை பிடிக்கவில்லை. அவள் தானாக இன்னும் விசாரித்து அரளிக் கிழங்கைத் தேடிப் பிடித்து அதை உணவில் கலந்து வைத்தாள். ஆனால் அன்றிரவு யாரோ அவசர வேலையாகக் கோமானை அவன் உண்ணுமுன் அழைத்துக் கொண்டு போய் விடவே அச்சூழ்ச்சியும் தோல்வி யுற்றது. போக்குமுட்டித் திக்குமுக்காடிய கோகிலாவின் மனக் கசப்புக்கு இப்போது ஒரு புத்தம்புதுவழி தென்பட்டது. ‘இந்தக் கிழம் நமக்கு வேண்டியதைத் தராவிட்டால் என்ன? தருப வர்களிடம் மறைவாகப்பெற்றுக் கொள்வோம்’என்று அவள் எண்ணினாள். அதன் பயனாக அன்று முதல் அவள் தன் அழகிலீடுபட்டவர்களிடம் குறிப்பாகத் தன் விருப்பங்களைத் தெரிவித்தாள். நண்பர்களிடமிருந்தும் இளைஞர்களிட மிருந்தும் பல பகட்டான பொருள்கள் வந்து அவள் பெட் டிக்குள் ஒளிந்தன. முதலில் தாய் இதைக் கண்டித்தும், பிறகு தானும் உள்ளூர அதில் மகிழலானாள். கோமான் கண்களில் இவை படத்தொடங்கியதும் அவன் கண்டிக்க முற்பட்டான். இப் பொருள்களில் பலவும் மாதவன் என்ற ஒரு வீணனிட மிருந்து வந்ததென்று கோமான் அறிந்தான். அவன் இயல்பு களைக் கூறிக் கோகிலாவுக்கு அறிவுரைகள் கூறினான். ஆனால் கோகிலா “மாமா, நீங்கள் தானாக எதுவும் வாங்கிக்கொடுப்ப தில்லை. கொடுப்பவர்களையும் தடுக்க வேறு வேண்டுமா?” என்றாள். ‘இதெல்லாம் பெற வேண்டாம் கோகு. இனி இவற்றைக் கண்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும்’ என்று கோமான் கோபத்துடன் கூறினான். கோகிலா அவனை நிமிர்ந்து பார்த்து ‘உன் கோபத்திற்கு இங்கே நாங்கள் அஞ்சும் நிலையில் இல்லை. கொடாக் கண்ட னாகிய உன்னிடம் கஞ்சிக்கு அலைக்கழிவதைவிட, விருப்பத் துடன் தருபவர்களிடம் பெறுவது ஒரு மானக்கேடல்ல, உண்மை யில் உன்னைப்பார்க்க, மாதவன் எவ்வளவோ மேம்பட்டவன்’ என்றாள். கோமான் இப்போது அவர்கள் மனவெறுப்பை உணர்ந்து கொண்டான். ஆனால் அவன் கோபம் பறந்துபோயிற்று. ‘இனி அவர்களை நம்பி மனம் போல் போக விடுவது கூடாது. நானே விழிப்பாக இருக்கவேண்டும்’ என்று அவன் உறுதி கொண்டான். இவன் கவனிப்பும் மேற்பார்வையும் கண்டிப்பும் இன்னும் மிகுதியாயின. அவன் நடைகண்டு சீறியவர்களில் இப்போது மூன்றாவது ஒருவனும் சேர்ந்து விட்டான். ஆகவே, மாதவன் வீணனாகிய அவன் தன்காரியம் முடிக்க வகை தேடிக்கொண்டு கோமான் மீது அவர்கள் வெறுப்பை இன்னும் கிளறிவிட வகை தேடினான். கோமான் எப்போதும் திறந்த வெளித்திண்ணையிலேயே படுத்து உறங்குவது வழக்கம். அச்சமயம் மாதவன் அவன் கழுத்தை அரிந்து புதைத்து விடுவதென்றும் அதன்பின் கோகிலாவை அவன் மணந்து கொள்ளுவதென்றும் மூவரும் கூடிப் பேசினர். மாதவனை ஓரிரவு ஏவிவிட்டு உள்ளே மற்ற இருவரும் தாம் விரும்பிய ‘நற்செய்தி’யை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ‘ஐயோ, கொலை, கொலை’ என்ற குரல் கேட்டது. இனிச் செத்து விடுவான் என்று அவர்கள் விளக்கெடுத்துக் கொண்டு வெளியில் வந்தனர். ஆனால் இருட்டில் மாதவன் குறிதவறி வெட்டியதால் கழுத்தில் ஆழ்ந்த காயம் ஏற்பட்டதேயன்றி உயிர்போகும் நிலையில்லை என்று கண்டனர். கொலையாளியைத் தேடும் சாக்குடன் வெளியே ஒளிந்துநின்ற மாதவனை அவர்கள் தேடிக் கண்டு ‘அடப் பைத்தியமே, இன்னும் அது சாகவில்லை; போய்க் குறை வேலையைத் துணிகரமாக முடி’என்று அனுப்பினர். இத்தடவை வெட்டு இன்னும் ஆழமாய்ப் பாய்ந்தது. கோமான் இப்போதும் ‘அடபாவிகளா, பொறுமையாகக் கொலை செய்யப் பார்த்துக் கொண்டா இருக்கிறீர்கள்’ என்று கதறி னான். ஆயினும் கொஞ்ச நேரத்தில் குரல் மங்கி ஓய்ந்துவிட்டது. ‘ஆ, ஒருவகையில் ஒழிந்தது’என்றனர் இருவரும். ஆனால் ‘கொலை’ என்ற எண்ணம் இனித்தஅளவு கோகிலாவுக்கு அச்செயல் இனிக்கவில்லை. மாதவன் பரிசுகளுக்காகவே அவனிடம் பாசங்கொண்ட அவளுக்கு அவன் பரிசு இனி வேண்டியதில்லை என்ற எண்ணம் விடுதலை யளிக்கவே, அவனிடம் அவளுக்கு வெறுப்பு ஏற்பட்டது. ‘நமக்காக மாமனைக் கொன்றவன் இனி வேறு யாருக்காவது நம்மையும் கொல்லத்தானே செய்வான்’ என்றது அவள் உள்ளம். எனினும் கோமான் இப்போதும் செத்துவிடவில்லை. அவர்கள் வந்தபோது அவன் இரத்த வெள்ளத்திடையே தலையைப் பிடித்துக்கொண்டு சாய்ந்து கிடந்தான். தயங்கிய குரலில் ‘ஆ, என்னைக் கொல்ல உதவுமளவுக்கு நான் உங்களுக்கு என்ன செய்தேன்’ என்று அவன் உருக்கமாகக் கூறி அழுதான். தோல்வி, வெட்கம், பச்சாத்தாபம் ஆகிய எல்லாம் சேர்ந்து இருவரையும் செயலற்றவர்களாக்கி விட்டன. அவர்களும் இரவைப் பேசாதிருந்து அழுது போக்கினர். மறுநாள் கோமான் கொலை முயற்சிச் செய்தி காட்டுத் தீபோல் பரவியது. அவன் மருத்துவ நிலையத்திற்குக் கொண்டு போகப்பட்டான். ஊர்காவலர் துப்பு விசாரித்து மாதவனையும் இருபெண்களையும் காவலிலிட்டனர். குற்றவழக்குத் தலைவர் மருத்துவ விடுதியிலேயே கோமானின் வாய் மொழிச்சான்றுபெற முயன்றார். கோமான் மனத்தில் இப்போது ஒரு புதிய போராட்டம் தொடங்கிற்று. நன்றிகெட்ட தன் தங்கைக்கும், மருமகளுக்கும் படிப்பினை தருவதா? அப்படியானால் அவர்கள் குற்றத்தை உள்ளபடி கூறவேண்டும். ஆனால் அதனால் யாருக்கென்ன நன்மை. அறிவற்ற அவர்கள் செயலைத் தானும் செய்வதா? அவர்கள் மதியாத உறவைத் தானும் மதியாதிருப்பதா? என்று அவன் மனம் ஊசலாடிற்று. ஒரு முடிவுக்கும் வராத நிலையில் உணர்வு சோர்வதாக நடித்துத் தேர்விலிருந்து சற்றுத்தப்பி அமைதியுடன் மனதில் ஆராய்ச்சி செய்தான். இறுதியில் ஆத்திரம் குறைந்தது. அன்பு வெற்றி பெற்றது. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’ என்ற வள்ளுவர் வாய்மொழிகளும் இயேசு பெருமான் அறிவுரையும் அவன் மனத்தில் ஒளிவீசின. அதன் பயனாகத் தன் உறவினரை மட்டுமன்றி மாதவனையும் மன்னித்துவிட முடிவு செய்தான். ஒருமணி நேரம் சென்றபின் குற்றத்தலைவருடன் காவலதி காரி ஒருவர் வந்து கேள்விகள் கேட்டார். கா. அ: இக் கொலையை யார் செய்தது? கோமான்: யார் செய்ததென்று தெரியவில்லை. இருட்டில் ஆளைப்பார்க்க முடியவில்லை. கா. அ: யார் என்று குறிப்பாகத் தெரிந்ததா? யார் மீதாவது ஐயமில்லையா? கோமான்: எதிர்பாராத செயலானதால் மூளை குழப்ப மடைந்து விட்டது; எதுவும் தெரியவில்லை எனக்கு யாரும் பகைவர் கிடையாது. ஆகவே யார்மீதிலும் ஐயமில்லை. காவலதிகாரி திகைத்தார். ஆயினும் இரு பெண்கள் நிலையைப்பற்றிக் கேட்டும் அவர்கள் முகக் குறிகள் மூலமே உண்மை கண்டு மிருந்தார். ஆகவே அவர் “உங்கள் தங்கை, மருமகள் ஆகியபேர் மீதும் இதுவரையில் உடந்தையாயிருந்த ஐயம் உமக்கு இதற்கு ஏதேனும் உண்டா? கோமான்: “எனக்கு யார் மீதும் கிடையாது” காவலதிகாரி தன் செவிகளையே நம்பமுடியவில்லை, “என்ன அவர்களைக்கூட ஐயுறவில்லையா?”என்று கேட்டார். “இத்தகைய செயலை உங்கள் தங்கையோ மருமகளோ செய்வார்கள் என்று நீங்கள் ஐயுறுவீர்களா?” என்றான் அவன். கா. அ: ‘மாதவனும் அவ்விரு பெண்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்கள். நீங்கள் அதற்கு என்ன கூறுகிறீர்கள்’ கோமான்: கொலைக்குற்றத்தை ஒருவர் மீது சுமத்தினால் அச்சமும் கிலியும் எது வேண்டுமானாலும் சொல்லச் செய்யும். குற்றத்தை ஒப்புக்கொண்டால் தான் தண்டனை குறைந்து மன்னிப்புக்கிடைக்கும் என்று நீங்கள் ஆசை காட்டியிருக்கலாம். ஆகவே பொய்யாகவாவது ஒப்புக்கொண்டிருப்பார்கள். காவலதிகாரிகள் இயல்புகளை அறிந்து இப்படித் திண்ணக்கமாகப் பேசும் இவனை வைத்துக்கொண்டு வழக்கு மன்றத்தில் நுழைவதெப்படி என்று விழித்தார் காவலதிகாரி. கொலைக்குற்றம், கொலைக்கு உடந்தையாயிருந்த குற்றம் ஆகியவை நன்கு தெளிவாக்கப்பட்டுத் தண்டனை பெறுவது உறுதி என்று காவலறையில் கிடந்த மூவர் முன்னும் காவலதிகாரி சென்று ‘இனி நீங்கள் போகலாம். யாரை நீங்கள் கொலை செய்ய சூழ்ச்சிசெய்து கொல்ல முயன்று பார்த்து விட்டீர்களோ அவனே உங்கள் பக்கமாய் விட்டான். இனி, நீங்கள் போகலாம்” என்றார். கோமான் காயம் ஆற மாதக்கணக்கானது. ஆனால் நீலாவும் கோகிலாவும் அவன் காலடியில் கிடந்து கண்ணீரால் அவனைக் குளிப்பாட்டினர். அவர்கள் திருந்தப்பெற்ற உள் ளன்புடன் கூடிய பணியால் அவன் குணமடைந்தான். அவர்கள் மனம் திரும்பியது கண்டு அவனும் எல்லையிலா மகிழ்ச்சி யடைந்தான். அவனும் தன் கண்மூடித் தனமான கட்டுப்பாட்டை அன்பு முறையுடன் தளர்த்தினான். காப்பியும் சிற்றுண்டியும் தாவணி களும் மட்டாக நடமாடத் தொடங்கின. பச்சோந்தி எச்சில் கதை, அரளிக்கிழங்குக் கதை ஆகியவை வெளிப்படையாகக் கூறப்பட்டு மன்னிக்கப்பட்டன. அவர்கள் அன்புப்படிப்பினை முற்றுப்பெறும்படி கோமான் மாதவனையும் வரவழைத்துத் தன் தங்கையும் மருமகளும் திருந்துவதற்கு அவனே காரணம் என்றுகூறி அவனுக்கு விருந்தளித்துப் பரிசும் வழங்கினான். அவனும் மனமாரத் திருத்தமுற்றான். கோகிலாவுக்குக் கோமான் அவன் விருப்பத்துக்கொத்த கணவனைத் தேடி மண முடித்தான். மாதவன் தன் தகா எண்ணங்களை முற்றிலும் கைவிட்டு அவளைத் தங்கையாக மதித்து மணவினையில் தக்க துணையாயிருந்தான். கோமான் தன் மருமகள் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு ‘இது வள்ளுவர் பெருமான் தந்த அமுதம். “மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்” என்று அவரே கூறுவதற்குரியவர்’ என்பான். 4. உத்தியோக வேட்டை வாழ்க்கை என்பதே ஒரு வேட்டை. அவ்வேட்டையில் பலனின்றி அலுத்துப் போகிறவர்கள் பலர்; அலையாமல் உலையாமல் வெற்றி காண்பவரும் பலர். ஆனால் இந்தப் பெரிய வேட்டைக்குள் பல சிறு வேட்டைகள் உண்டு; கல்விவேட்டை. மணவேட்டை, பணவேட்டை, உத்தியோக வேட்டை என்று. ஹரிஹரன் வாழ்க்கையில் முதல் வேட்டை எளிதாக முடிந்தது. மற்ற வேட்டைகள் தொடங்கின. ஹரிஹரன் தாயார் சாரதாம்பாள் தன் கணவன் சஞ்சீவ னிடம் வந்து. “இப்போதுதான் கடவுள் கடைக்கண் பார்த்தார் போலிருக்கிறது. பையன் ஒரு மட்டில் பி. ஏ. படிப்பாகிய கடலைக் கடந்து விட்டான். இனி அவன் திருமணத்தையும் முடித்து விடவேண்டும்” என்று வாழ்க்கையின் இரண்டாம் காண்டத்தை நினைவூட்டினாள். சஞ்சீவன்: பையன் இந்த மட்டில் தேறியது நல்லதுதான் .இன்னும் கொஞ்சம் பொறுத்தால் அவன் படிப்புக்கு வழி யிராது. ஏனென்றால் கைப்பணமும் கடன் பணமும் எல்லா வற்றையும் கரைத்து இனிக்கரைக்க வகையில்லாத போதுதான் அவன் தேறினான். சாரதா: ஏதோ தேறியமட்டும் நல்லதல்லவா? கடனோடு கடனாக வாங்கிக் கோவிலுக்கு அர்ச்சனை பண்ணி அமர்க்களம் பண்ணி விடுவோம். அப்போதுதான் பெண் வீட்டார்கள் நீ முந்தி, நான் முந்தி என்று வருவார்கள். சஞ்சீவன்: மணத்துக்கு என்ன அவசரம், நல்ல இடமாக வரும் வரை காத்திருந்தால் போகிறது. சாரதா: அதெல்லாம் காத்திருந்து ஏமாறுபவள் நானல்ல, சூட்டோடு சூடாகக் காரியத்தை முடிக்கவேண்டும். 2500 ரூபாய் தரச்சித்தமாயிருந்த பத்மாவீட்டார் இப்போது வந்து அதைத்தர இணங்கினால் பேசாமல் முடித்துவிட வேண்டியதுதான். படிப்பு வேட்டை தேறினால் பதவி வேட்டை தேறிற்று என்றா பொருள்? ஒரு வெற்றியின்போது மறுவெற்றியை எதிர்பார்ப்பது உலக இயல்பு. அந்த இயல்பை நாம் பயன்படுத்திக்கொள்வோம். அதில் நாமே விழுந்து விட வேண்டாம். பி. ஏ. முதல் வகுப்பில் முதன்மையா யிருந்தவர்கள் வேலையில்லாமல் திண்டாடுவதை நாம் பார்க்க வில்லையா? ஆகவே நயமாகப் பத்மாவையே முடித்து விடுவோம். சாரதா எண்ணியபடி யாவும் எளிதில் முடிந்தது. பையன் தேர்வைப்பற்றி மகிழ்ச்சி தெரிவிப்பது என்ற முறையில் பத்மாவை யிட்டுக்கொண்டுவந்த அவள் பெற்றோர்களிடம் பக்குவமாகப் பேசி இரண்டாயிரத்தைந்நூறு ரூபாய் மணப் பரிசிலுடன் மண வினைப்பேச்சு நடந்தேறிவிட்டது. நல்ல செல்வமிக்க குடும்பத்தில் மணந்து கொண்டோம் என்ற மனநிறைவு ஹரிஹரனுக்கு இருந்தது. நல்ல கணவனைப் படைத்தோம் என்ற நினைவு பத்மாவுக்கும் இருந்தது. ஆனால் அவர்கள் குலத்தில் மணவினை மணவாழ்க்கை யின் தொடக்கமன்று. அது குலத்தின் வாழ்க்கையில் ஒரு முடிச்சு. அவர்கள் வாழ்க்கை தொடங்குமுன் இன்னொரு வினைமுறை - பூப்பு நிறைவு (ருது - சாந்தி) விழா நடைபெற வேண்டும். மணவிழாவின் போது பத்மா பருவமடையாத சிறு பெண் ணாகவே இருந்தாள். மணவேட்டை முடிந்ததும் ஹரிஹரன் வாழ்க்கையின் வேலைதேடல் வேட்டை தொடங்கிற்று. அவன் பத்திரிகைகள் வாங்கி வாங்கிக் குவித்தான். விளம்பரத்துண்டுகள், நற்சான்று களின் படிகள், மனுக்கள், சிபாரிசுக் கடிதங்கள் ஆகியவற்றின் கூளங்களை அஞ்சல்காரன்போல் பையில் அடைத்துக்கொண்டு அவன் அலுவலகத்துக்கு அலுவலகம், ஊருக்கு ஊர் அலைந்து திரிந்தான். அஞ்சல் தலைகளை நிறைய வாங்கி வைத்துக்கொண்டு ஹரிஹரன் பல அரசியல் நிலையங்களுக்கும் மனுக்கள் அனுப்பி வைத்தான். அஞ்சல் பதிவுச்சீட்டுக்கள், கைப்பற்றுச் சீட்டுக்கள் வந்தவண்னமாயிருந்தன. ஒரு சிலவற்றிற்கு மறுமொழிகளும் வந்தன. ஆனால் எல்லா மறுமொழிகளிலும் முகவரியும் கையொப்பமும் மட்டுந்தான் புதியது. கடிதம் ஒரே அச்சடித்த கடிதம் தான்; ‘வேலை காலி இல்லை’ என்ற ஒரே பல்லவிதான் எல்லாவற்றிலும்! ‘அரசியல் நிலையங்களுக்கு ஆள் செல்வாக்கும் பிற செல்வாக்கும்தான் வேண்டும்; தனிப்பட்ட நிலையங்களைப் பார்ப்போம்’ என்று ஹரிஹரன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு மீண்டும் புது முயற்சியி லிறங்கினான். ஆனால் இங்கே தோல்விமட்டுமன்றி அவமதிப்பும் கிடைத்தது. “உங்கள் பட்டம், படிப்பு வெடிப்புக்களெல்லாம் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் படித்தவர்களை எடுப்பதில்லை. திறமையுள்ளவர்களையே யெடுப்போம். உங்கள் திறமைக்கு என்ன சான்று” என்று கேட்டனர் அவர்கள். “வேலை கொடுத்தால் தானே திறமையைக்காட்ட முடியும்?” “எங்களுக்கு அப்படிப் பரிசோதனைகள் செய்து கொண் டிருக்க நேரமில்லை. வேலையிலிருந்து அனுபவமும் திறமைச் சான்றும் உடையவர்களையே எடுப்போம்.” வேலை அனுபவமும் திறமைச்சான்றும் பெறச்சம்பள மில்லாமல் உழைப்பதாகக் கூறிப் பார்த்தான். அதற்கும் “படியாதவர்கள் எத்தனைபேரோ இருக்கிறார்கள். படித்த வர்களை எடுப்பதால் தங்கள் உரிமை கெடுகிறது என அவர்கள் முணுமுணுப்பார்கள்”என்கிறார்கள் படிப்பில்லாமலே முன்னிலைக்கு வந்த நிலைய முதல்வர்கள். ‘அரசியல் நிலையங்களும் தனி நிலையங்களும் மதியாத படிப்பைத் தந்து தொலைத்தார்களே, கல்வித்துறையாளர்கள், அவர்களாவது அதை மதிக்கவேண்டு’ மென்று மூன்றாம் படலத்திலிறங்கினான் ஹரிஹரன். பல பள்ளி முதல்வர்கள் “பயிற்சியில்லாதவன் எங்களுக்கு வேண்டாம். மேலாட்கள் அத்தகையவர்களை எடுத்தால் சீற்றம் அடைவர்” என்றனர். “பயிற்சிக்கு இரண்டாண்டு அனுபவம் வேண்டும் என் கிறார்களே. அப்படியிருக்கப் பயிற்சி யில்லாமல் எடுக்க மாட்டேன் என்று கூறலாமா?” “அதற்கு நாங்கள் என்ன செய்வது. பயிற்சியுள்ளவர்கள் நிறைய இருக்கும் பள்ளிகளைப் பார்த்துச் செல்லுங்கள்” பயிற்சியில்லாதவர்களை மிகுதியாக அம்முதல்வர் வேலைக்கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்து ஹரிஹரன் தன் விதியை நொந்தான். அவன் இதன்பின் மிகப்பணிவோடு பலர் பள்ளிகளில் மன்றாடினான். அப்பணிவு கண்டு ஒரு முதல்வர் அவனிடம் இரக்கம் காட்டினார். “எங்கள் பள்ளியில் பயிற்சியில்லாத ஆசிரியர் இடம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதற்குச் சரியான வாக்குறுதி தரும் ஆட்கள் கிடைக்கவில்லை. நீங்கள் பாவம் நல்ல ஆளாகத்தோன்றுகிறது; இந்த வாக்குறுதியை நீங்கள் அளிப்பதாயிருந்தால், உங்களுக்குப் பதவி தருகிறேன்” என்றார். அவர் ‘முதல் முதலாக வெற்றியஞ் செல்வி கடைக் கணித்தாள்’ என்ற மகிழ்ச்சியுடன் ஹரிஹரன் “என்ன வாக்குறுதி வேண்டுமானாலும் தருகிறேன். அருள் கூறுங்கள்” என்றான். முதல்வர்: எங்கள் பள்ளிக்கு உரிய ஊதியம் 40 ரூபாய்; ஆனால் நாங்கள் 25 ரூபாய்தான் கொடுக்கமுடியும், அதைப் பெற்று 40 ரூபாய் பெற்றதாகக் கையெழுத்திட முடியுமானால், வேலைபார்க்கலாம். வேறுவழியின்றி ஹரிஹரன் இதனை ஏற்றான். ஆனால் மறுமாதமே 20 ரூபாய் வாங்கிக்கொண்டு 40 ரூபாய்க்குக் கையெழுத்திட ஒரு ஆள் முன்வந்தான். இதுபற்றி அவன் முனங்கியபோது முதல்வர் 30 ரூபாய் பெற்றுக் கைழுத் திட்டவனை அனுப்பிவிட்டுதான் உன்னைப்போட்டோம்’ என்றார். அவர்முன் தன்பணிவு கண்டு இரங்கியதாகத் தான் எண்ணியது தவறு என்று அவனுக்கு இப்போது தெரியவந்தது. தோல்வி வெற்றிக்கு ஒருபடி; முயற்சி திருவினைஆக்கும் ; ஆறுதடவை தோற்றும் ஏழாம் தடவை ராபர்ட் புரூ°போல வெற்றி பெறலாம் என்ற பள்ளிப்பாடச் செய்திகளையும் நீதி களையும் எண்ணி அவன் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான். வேலையற்றவர்கட்கு வேலை கொடுப்பதற்காகவே ஒருவர் பள்ளி நடத்துவதாக அவன் கேள்விப்பட்டான். ‘துன்பப் படுபவர்கட்கே தெரியும் துன்பத்தின் அருமை’ என்று நினைத்து அவன் அங்கே சென்றான். அவனது துணையற்ற நிலைமையைக் கண்ட பள்ளி முதல்வர் தன் மூக்குக் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டே அவனை ஆதரவுடன் ஏற்றுக்கொண்டார். ஹரஹரனும் தன் முழுத்திறமையையும் காட்டிக் கல்விப்பணி யிலீடுபட்டான். ஊதியம் ஓர் இருபது ரூபாய்தான் என்பதைக் கூட அவன் பாராட்டவில்லை. ஆனால் அப்பள்ளியில் மாதந்தோறும் சம்பளம் கொடுக்கும் வழக்கமில்லை என்றும் பத்துப் பன்னிரண்டு மாதங்கள் வரை பாக்கி உண்டென்றும், பாக்கி கொடுக்கப் படுமுன் ஆள் மாறுமென்றும் அவன் அறியப் பத்துப் பன்னி ரண்டுமாதமாயிற்று. முதல்வரிடமிருந்தும் ஆசிரியரிடமிருந்தும் மிக வருந்திப்பெற்ற ஓர் அறுபது ரூபாய் கடனைக் கொடுக் காமலும் வேறு ஊதியம் பெறாமலும் ஓர் ஆண்டு முடிந்ததும் அவன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டான். கொடுத்த கடனையும் அத்துடன் யாரும் கேட்கவில்லை. வந்தமட்டுக்கு ஆதாயம் என்று ஹரிஹரன் கல்வி நிலையங்களுக்கு ஒரு கும்பிடுபோட்டுவிட்டான். வருவாயற்ற வழக்கறிஞரான ஒரு நண்பர் சட்டம் படிக்கும்படி அறிவுரை கூறினார். வேறுவகையின்றி அவ்வழியே அவன் சிந்தனை சென்றது. ஆனால் அதற்குப் பணம் வேண்டுமே! தாய் தந்தையர் “தம் நிலத்தை விற்றாவது படிப்பிக்க எண்ணினர். ஆனால் வாழ்க்கையில் அவன் படித்த படிப்பினையால் அவன் அதற்குத் துணிய மறுத்து விட்டான். “நான் படித்த படிப்புப் போதும். உங்களிடம் கடைசிகாலம் கஞ்சிகுடிக்க இருப்பதையும் கெடுக்க மாட்டேன். நானாகப் பிழைக்கமுடிந்தால் பிழைப்பேன் அல்லது உங்களைக் கெடுக்காமலாவது இருப்பேன்” என்றான். பத்மா இதற்குள் பருவமெய்திவிடவே, பூப்பு நிறைவு விழா நடத்தவேண்டுமென்று ஹரிஹரன் தாய் சாரதா வற்புறுத்தி னாள். வருவாயில்லாமல் ஒரு மனைவியின் பொறுப்பை ஏற்க அவன் விரும்பவில்iல். அதே சமயம் தன் தோல்விகளின் மனக் கசப்பிடையே தன் கவலைகளைப் பகிர்ந்துகொள்ள உதவும் ஒரு காதல் துணைவியிருப்பதையும் அவன் நொந்த உள்ளம் அவாவிற்று. அவன் தயக்கத்தைக் குறிப்பாக உணர்ந்த சாரதா அவ்விழாவுக்கான ஏற்பாடுகளில் முனைந்து அதை முடித்து வைத்தாள். மணப்பெண் பத்மா தன் சிறுவயதின் விளையாட்டுக் காதலனைத் தன் மனத்தகத்தே வைத்து கனவாகவளர்த்து இப்போது நனவுலகிலேயே தன்னருகில் வந்தணையப் பெற்றுப் பெருமகிழ்ச்சியடைந்தாள். ஆனால் அவள் மகிழ்ச்சிக்கேற்ற மகிழ்ச்சி காட்டாமல் ஹரிஹரன் வாட்டமுற்றான். காதல் கனிந்த உள்ளத்துடன் பத்மா “அன்பரே, ஏன் மனவாட்டம்? வேறு, யாரிடத்தில் சொல்ல முடியாவிட்டாலும், என்னிடத்தில் சொல்லுங்கள். ஒருவர் சிந்தனைக்கு இருவர் சிந்தனை மேலல்லவா?” என்றாள். “இத்தகைய காதலுக்கு ஏற்ற கைம்மாறு” வாய்மை ஒன்றே என்று எண்ணினான் ஹரிஹரன். அவன் தன் தோல்விகள், அவற்றினிடையே மனைவியின் பொறுப்பைத்தான் ஏற்க விரும்பாதது, இவற்றுக்கிடையே மனைவியின் துணையை நாடி அதற்கிணங்கியது ஆகியவற்றை விரித்துரைத்து “உனக்கு நான் கணவனாகத் தகுதியுடையவன் அல்லன். உன் மணவாழ்வின் தொடக்கத்தில் உன்னை மகிழ்விக்க முடியாமல், மணநிறைவான வுடனே பழையபடி தொழில் தேடும் வீண்முயற்சியிலீடுபட வேண்டியவனாயிருக்கிறேன்” என்றான். பத்மா கணவனை அணைத்துக்கொண்டு “இன்று என்னுடன் இருக்கிறீர்கள். இந்தக் கவலைகளை எல்லாம் ஒரு நாளைக்கு மறந்து இன்பமாயிருப்போம். அதன் பின் எது வந்தாலும் இருவரும் ஒன்றுபட்டு வாழ்க்கைப் போரை நடத்துவோம்” என்றாள். மனித உணர்ச்சி, தெளிந்த அறிவு ஆகியவற்றில் தோய்ந்த அக்கருத்தை ஏற்று அவன் அன்று பத்மாவையே உலகாகவும் தன்னையே மனிதசமூகமாகவும் கொண்டு இன்பமாகக் கழித்தான். பத்மா அடுத்த நாள் ஹரிஹரனுக்கு வழிச்செலவு தந்து “வெற்றியுடன் மீள்க. ஆனால் வெற்றியிலும் தோல்வியிலும் உங்கள் கடமையும் இங்கே, உரிமையும் இங்கே. எந்த இன்பம் வரினும் நான்வந்து பங்குகொள்வேன். எந்தத் துன்பமாயினும் வந்து பங்கு தருக” என்றனுப்பினாள். “வெற்றிக்காயினும் சரி, தோல்விக்காயினும் சரி, இனி ஆயிரம் யானை வலிவுடன் போராடுவேன்” என்று புறப் பட்டான் ஹரிஹரன். ஆனால் தோல்விகளும் ஆயிரம் யானை வலிவுடன் அவனைப்பார்த்துக் கொக்கரித்தன. ‘ஆராம் கடை’ப் பூட்டு விற்பனைக் குழாத்தின் பேராள் ஒருவரிடம் துணைப்பேராள் (சப். ஏஜெண்டு) வேலை ஒன்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. மாதம் 50 ரூபாய் சம்பளமும் ஏராளமான கழிவூதியமும் தருவதாக உறுதி கூறப்பட்டிருந்தது. இருநூறு ரூபாய் உறுதிப்பணக்கோரிக்கை ஒன்று தவிர அதில் கவர்ச்சிக்கு ஒன்றும் குறைவில்லை. அதுகண்டு ஹரிஹரன் மாமனார் அத்தொகையையும் தரமுன்வந்தார். பருத்தி புடவை யாய்க் காய்த்த தென்ற எண்ணத்துடன் அவன் வேலையிலீடு பட்டான். கழிவூதிய மட்டுமே மாதம் நூறு ரூபாய்க்குக் குறையாமல் கிடைக்கும் என்று பேராள் கூறிய ஊக்கமொழி கேட்டு அவன் பின்னும் உவகை கொண்டான். பேர்போன ஆராம்கடைப்பூட்டுக்களின் மூட்டை ஒன்றைப் பேராள் அவனிடம் தந்து மிகவும் பெருமிதத்தோற்றத் துடன் அதனைக் கையாளும் முறைகளைக் கற்பித்தான். “இதை எனக்குக் கற்பது கடினமாயிருக்கிறதே. ஏழைமக்கள் இதனைக் கற்றுப் பயன்படுத்துவது எவ்வாறோ”என்று ஹரிஹரன் கேட்டான். பேராள் சீற்றமும் வியப்பும் கொண்டு “பேர்போன வாணிகத்துறை வல்லுனர்கள் பார்க்கப் பெருமைப்படும் ஆராம்கடைப் பூட்டின் அருமையை நீ என்ன கண்டாய்! இதை வெளியில் சொன்னால் எவன் உனக்குத்துணைப் பேராண்மை தந்தான் என்று அலைக்கழிப்பார்கள்” என்றான். “கோபப்படாதேயுங்கள், ஐயா! நான் கேட்டுத் தானே தெரிந்துகொள்ளவேண்டும்” என்று பணிவுடன் பேசினான் ஹரிஹரன். மேலும் “பூட்டுக்களைச் சுமந்து செல்லச் சுமையாள் வைக்கக் குழாத்தினர் உதவுவரா” என்று ஹரிஹரன் கேட்டான். பெருமைதங்கிய ஆராம் கடைப்பூட்டுப் பேராள் அவனை ஏற இறங்கப்பார்த்து “உனக்கு நூற்றுக்கு 25 விழுக்காடு தரு கிறோமே எதற்காக? விற்பனை தெரிந்தவனானால் இதெல்லாம் நீ கேட்பாயா?” என்றான். இதுவரைப் படியாத பணிவுப்பாடத்தை இவ்வர்த்தகத் துறையில் ஹரிஹரன் முதன் முதலாகக் கற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. கூலிக்கு ஒரு சுமையாளை மதிப்பாக அமர்த்திக் கொண்டு ஹரிஹரன் ஊர் ஊராய்ச் சுற்றினான். ஆராம் கடைப்பூட்டுக் களின் புகழைப் பேராளும் வெட்கப்படும் படி பாடினான். அதனைத்திறக்கும் பொறிகளையும் பூட்டும் பொறிகளையும் இயக்கிக்காட்டினான். அவன் மன மகிழும்படி ஊர்மக்கள் பேரானந்தத்துடன் வெண்கலக் கடையில் பெண்கள் கூடுவது போல் கூடி வேடிக்கை பார்த்து வியந்தனர். பலர் பல கேள்விகளையும் ஐயங்களையும் கேட்டனர். பேராளைப் போலின்றி அவன் பொறுமையுடன் விடையளித்தான். இதனால் அவனுக்கு எளிதில் பொழுது போயிற்றேயன்றி ஒரு காசும் வரவில்லை. ஏனெனில் பேர்போன ஆராம்கடைப்பூட்டைப் பார்க்க மக்கள் விரும்பினரேயன்றி வாங்கத் துணியவில்லை. இங்ஙனம் ஒரு மாதம் சென்றது. எதுவும் விற்றால் தானே கழிவூதியம் கிடைக்கும். ஆனால் சம்பளமாவது கிடைக்கு மென்று அவன் போராளைத் தேடினான். போராளிருந்த இடத்தில் “அவன் போய்க்கிட்டத்தட்ட ஒரு மாதமாயிற்” றென்றனர். அவனைத்தேடிப் பலவர்த்தகர்களைக் கேட்டுப் பார்த்தான். அவர்களில் ஒருவன் பேராளைப் பற்றி எல்லாச் செய்திகளையும் விடாது விசாரித்தபின் “குழாத்தின் பூட்டுக்கள் உன்னிடம் இருக்கின்றனவா” என்று கேட்டான். ஹரிஹரன் “ஆம்” என்று கூறவே வர்த்தகன் “நான் அவனைப்பார்க்கட்டும்” என்றவாறு அவற்றை வாங்குவதற்கு மாறாக அவற்றைத்தானே கைப்பற்றிக் கொண்டு “எனக்குக் குழாத்தினர் தரவேண்டும் கடனுக்கு ஈடாயிற்று, போ” என்றான். சூழ்ந்துநின்ற ஹரிஹரன் கோபம்கொண்டு வழக்கறிஞர் ஒருவரையடுத்து அவர் கேட்ட பணம் தந்து வழக்குத் தொடுத்தான். வழக்கு அவனுக்கு எதிராக முடிந்தது. எதிரிக்கு ஆன 25 ரூபாய் செலவும் அவன்பேரில் சுமந்தது. துணைப்பேராள் என்பதற்காகத் தான் 200 ரூபாய் கட்டிய பத்திரத்தைக் காட்டினான். அதில் வரித்தலை இல்லாததிற்காகப் பின்னும் ஒரு ரூபாய் கொடுக்கவேண்டியதாயிற்று. இதனைக்கொடுக்க முடியாதென்றும் மன்றம் நீதியற்றதென்றும் கூறியதற்காக மன்றத்தார் புது வழக்குத் தொடுத்து மன்றத்தை அவமதித்த தற்காக 10 ரூ தண்டம் விதித்தனர். மேலும் எதிர்த்தால் சிறைத் தண்டனை வருமென்று அவன் அதனைக் கட்டித் தீர்த்தான். இரண்டொருநாளில் ஹரிஹரன் பேராளை நேரில் ஓரிடத்தில் சந்தித்தான். தன் கோபத்தையும், ஆத்திரத்தையும் அடக்கமுடியாமல் அவனைத் தாவித்தாவி அடித்தான். இதனால் அவன்மீது புது வழக்குத் தொடரப்பட்டது. அவன் அடிப்பதற்குக் கூறிய காரணம் அவன் குற்றத்தை உறுதிப்படுத்த மட்டுமே உதவிற்று. அவனுக்கு 50 ரூபாய் தண்டம் அல்லது ஒரு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. காவல் பிடிக் காது ஹரிஹரன் தண்டம் கட்டினான். அதில் பாதி போராளுக்குத் தரப்பட்டது. தற்கால அரசியல் முறையில் காவல் துறையும் வழக்கு மன்றமும் செல்வர். அநீதர் ஆகியவர் சார்புடைய தாகவே இருப்பதை யறிந்து, ‘இதை அறிய இதுவரைச் செலவு செய்த பணம் ஒரு நல்ல விலைதான்’ என்று எண்ணினான். எல்லாத் துறைகளிலும் ஊழல்களே நிறைந்திருப்பதுகண்ட ஹரிஹரனுக்கு இவற்றை அகற்றப் பாடுபடுவதாகக் கூறப்படும் பத்திரிகைத்துறை நினைவுக்கு வந்தது. உடனே முதன்மையான தேசீயப் பத்திரிகை ஒன்றினை அடுத்துப் பத்திரிகாசிரியரைக் கண்டான். அவர் பத்திரிகைத் தொழிலின் கரை காணாப் பரப்பையும் நுட்பதிட்பங்களையும் எடுத்துரைத்து, நன்றாக உழைப்பதாயின் உழைப்புக்கேற்ற கூலிதருவதாக வாக்களித்தார். எவரும் இதுவரை உழையாத உழைப்பு உழைத்து, எவரையும் விட உயர் ஊதியம் பெற எண்ணி ஹரிஹரன் இரவு பகலாய் அறுபது நாழிகையும் எல்லாத் துறைவகைகளிலும் புகுந்து யாரும் விருப்புறும்படி உழைத்தான். ஆசிரியர் காட்டிய மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் அளவேயில்லை. அடிக்கடி தலையங்கம் எழுதும் வேலைகூட அவனுக்குக் கொடுக்கப்படவே அவன் வியப்பும் இறும்பூதும் அடைந்தான். மாத இறுதியில் 15 ரூபாய்க்கு ஓர் அடைவுச் சீட்டும் (செக்) நன்றியறிதலுடன் கூடிய விடுதலைச் சீட்டும் அவனுக்கு அனுப்பப்பட்டது. ‘இது என்ன முறை ஐயா’ என்று அவன் சென்று கேட்க, ‘உன் உழைப்புக்கேற்ற ஊதியமிது. மூளையில்லா உழைப்புக்கு இவ்வளவுதான் யார் கொட்டித் தருவார்கள்!’ என்றார் ஆசிரியர். ஹரிஹரன் இவ்வவமதிப்பைப் பொறுக்கமாட்டாமல் “வேலைவாங்கிப் பயன்படுத்திக்கொண்ட பிறகு நன்றி யில்லாமல் மூளையில்லை யென்று கூறுவது அடுக்குமா” என்று கேட்டான். ஆசிரியர்: ஊதியம் கொடுக்குமிடத்தில் நன்றி எதற்கு? அப்படியும் உம் விடுதலைத்தாளில் நன்றி தெரிவித்தேயிருக் கிறோம். நீர் வழக்காடியதனால் தான் உம்மைப்பற்றிக் கூற நேர்ந்தது. நீரே சொல்லும், மூளையுள்ளவன் எவனாவது ஊதியம் பேசாமல் உழைக்க வருவானா என்று? ‘தொழிலுக்கு இணை எதுவுமில்லை; இப்படிச் சேவகம் செய்வானேன்’ என்ற எண்ணம் ஹரிஹரன் மனத்தில் அரும் பிற்று. ஆனால் ‘படிப்பையும் பயன்படுத்தி நுணுக்கத் துறைகளில் ஈடுபடுவோம்’ என்று எண்ணி அதுவகையில் நாட்டம் செலுத்தினான். பல்தொழில் நுட்பக் கழகம் (ஞடிடல - கூநஉhniஉயட ஐளேவவைரவந) ஒன்றில் சென்று தொழில் நுட்பப்பட்டியலைக் கவனித்தான். இரட்டை மாட்டு வண்டியோட்டல், பனைமர மேறுதல், கால்நடைப் பண்ணை, பால்பண்ணை, கையச்சு முதலிய தொழில்களிருந்தன. பயிற்சிக் காலத்திலேயே 30 ரூபாய் ஊதியம் தரப்படுவதை எண்ணிச் சிரித்தான். ஆனால் இத்தொழில்களைத் தொழிலாளிகளிட மிருந்தே இன்னும் சிறப்பாகப் பழக முடியும் என்று கண்டு மூன்று நாளைக்குள் அதனையும் விட்டான். முழு நிறை தோல்வியுடன் இங்ஙனமாகத் தன்னுடைய உத்தியோக வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவன் வீடு நாடிவந்து தன் காதல் துணைவி பத்மாவுடன் இத்தனை கதையும் கூறினான். அவள் இவற்றைக் கேட்டுச் சிரித்த சிரிப்பு உண்மையில் அவனுக்கு ஆறுதலாயிருந்தது. ஏனெனில், இவ் வோரிடத்திலாவது அவமதிப்பும் வஞ்சகமுமில்லை. ‘இத்தனை தோல்விகளுக்கிடையில் இளமையிலேயே மணம் செய்து ஒரு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன். என் செய்வது? என்று அவன் கவலையுடன் கூறினான். ‘இத்தனையிடையிலும் உங்கள் மனச்சான்று குறைகூற வேண்டாத செயல் இது ஒன்று உண்டு என்று காட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையது. இன்னும் ஒருநாள் இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் மறந்திருப்போம். அதன்பின் வழி ஏற்படும்’ என்றாள் பத்மா. ஹரிஹரனுக்குப் பத்மாவின் உறுதி ஒரு பலம் தந்தது. அவள் அன்பணைப்பு மீட்டும் உலகை மறந்து புத்திளமை தந்தது. ஒருவனாயிருந்து பட்ட தோல்வியிடையே இனி இருவரா யிருப்பது ஒரு ஆறுதல்தான் என்று ஹரிஹரன் பத்மாவை நோக்கிக் கூறினான். அவள் கோணிய பார்வையுடன், “இருவ ரல்ல, மூவர் இருக்கிறோம்’ என்றாள். அவள் கருவுற்றிருந்தாள் என்பது அவனுக்கு அப்போதுதான் விளங்கிற்று. தன் பொறுப்பு இன்னும் பெரிதாவதையே அது குறித்தாலும் அவனால் மகிழாமல் இருக்க முடியவில்லை. பத்மா குறிப்பிட்ட ஒரு நாள் கழிந்தது. ஹரிஹரன் “நான் மீண்டும் வேலை தேடச் செல்ல வேண்டாமா?” என்று கேட்டான். பத்மா: நீங்கள் வேலை தேடப் போகிறீர்களா? தோல்வி தேடப் போகிறீர்களா? ஹரி: வேலைதேடத்தான் போகிறேன். தோல்வி வெற்றிக்குப் படி என்பதை நீ கேட்டதில்லையா? பத்மா: கேட்டதுண்டு. ஆனால் நீங்கள் அப்படிப் பினையை அறிந்ததாகக் காணவில்லையே? ஹரி: ஏன்? பத்மா: தோல்வி படிப்பினையாவது என்றால், தோல்வி தரும் இடத்தை விலக்கிப் புதுவது நாடவேண்டும் என்று பொருள். மேலும் அரசியல் நிலையம், தனிநிலையம், வாணிகம், தொழில் என்று நீங்கள் நாடிய போக்கே காட்டவில்லையா, வெற்றி எத்திசையில் இருக்கிறது என்பதை! ஹரி: எனக்கு நீ கூறுவது புரியவில்லையே. விளங்கச் சொல். பத்மா: பெரிய இடத்திலிருந்து தொடங்கிச் சிறிய இடம் நாடினீர்கள். அரசியலின் பொறுப்பிலிருந்து தனி மனிதர் பொறுப்பை நாடினீர்கள். பிறரைச்சார்ந்து நிலை வாழ்வதி லிருந்து படிப்படியாகத் தன்னைச் சார்ந்து வாழும் நிலைக்கு வந்துள்ளீர்கள். இனி நீங்கள் முயலவேண்டிய இடம் ஒன்றே. நம் குடும்பத் தொழிலுக்கு நாம் ஒரு ஆளைத் தேட வேண்டும் . அன்னியர் அதில் உண்மையாய் உழைக்க மாட்டார்கள். அன்னியரிடம் நாம் உழைக்க விரும்புகிறோம். எவ்வளவு உண்மையாக உழைத்தாலும் அவர்கள் சொட்டுக் கூறுவார்கள். இந்நிலையில் என்ன செய்வது என்று விளங்கவில்லையா? ஹரிஹரன்: ஆம், நம் தொழிலையே நாம் செய்வது நல்லது. நம்மிடம் என்ன தொழிலிருக்கிறது. குடும்பம் நடத்தும் தொழிலுக்கு நீ சம்பளம் தரப்போகிறாயா? பத்மா: ஆம் தரப்போகிறேன். என் தந்தையின் குடும்ப நிலங்கள் சீரழிகின்றன. தாங்களே அதனை மேற்பார்த்து நடத்துங்கள். நான் கூடவந்து உழைக்கிறேன். பிள்ளை வளரும் வளர்ச்சியுடன் செல்வமும் வளரும். ஹரிஹரன் சொல்லொணா மகிழ்ச்சி யடைந்தான். உண்மையில் அவன் பிள்ளை வளரும் வேகத்தை விட அவர்கள் செல்வம் வளரலாயிற்று. ஏனெனில் தங்கள் தலைவர் வீட்டுப் பெண்ணும் மருமகனுமாக வந்து உழைப்பது கண்ட வேலை யாட்கள் அன்பும் ஊக்கமும் மிகுந்து ஒத்துழைத்தனர். பத்மாவின் தந்தை தன் நிலங்களில் பாதியை அவர்களுக்கே தந்து மறு பாதியையும் மேற்பார்க்கும்படி கூறினார். 5. முன்னோர் பழி விசயரங்கன் தென்இந்தியாவின் செல்வ வளமிக்க ஒரு சிறு நாட்டின் அரசன். அவன் குடிகளை நடுநிலை நேர்மையுடன் ஆண்டுவந்தான். அவன் கருவூலங்கள் பொன்னால் நிறைந் திருந்தன; களஞ்சியங்கள் நெல் முதலிய பலவகைக் கூளங் களாலும் நிறைந்தன. குடிமக்களும் பசியும் பிணியும் இன்றி இன்பவாழ்வு வாழ்ந்து வந்தனர். அழகிற் சிறந்த ஆரணங்கு திருமலாம்பாள் மன்னன் வாழ்க்கைத் துணையாக வாய்த்திருந்தாள். அவளுக்கு இரண்டு ஆண் மக்களும் ஒரு பெண் மகவும் இருந்தனர். மன்னனது முப்பதாவது ஆண்டு விழா பல்லியங்கள் இயம்ப, பல்லணிகள் மிளிர, மக்கள் ஆடல்பாடல்களுடன் நடந்தேறிற்று. நட்பரசர்களும் அவர்கள் தூதர்களும் தத்தம் நன்கொடைப் பரிசில்களுடன் நகரெங்கும் நிறைந்து ஆர வாரித்தனர். மன்னன் வழக்கப்படி விழாக்கண்டு மகிழ்ச்சிப் பெருக் குடன் தன் தாயாகிய கலையரசியின் திருவடியில் விழுந்து வணங்கி வாழ்த்துப் பெற்றான். அதன் பின் அவன் தன் மகிழ்ச்சி தாங்காமல் அவளிடம் “அம்மா, உன் புண்ணியத்தால் நமக்கு எல்லாவகைச் செல்வமும் நிறைந்துள்ளது. என்போல் நற் பேறுடையவர்கள் வையகத்தில் வேறுயார் இருப்பார்கள்!” என்றான். எதிர்பாராத வகையாக இதைக் கேட்டதும் அரசி முகம் களிப்படைவதற்கு மாறாகக் கறைபடர்ந்து ஒளி குன்றிப் போயிற்று. விசயரங்கன் அதுகண்டு ஏமாற்றமடைந்து ‘என்னம்மா இவ்வளவு நன்மைகளுக்கிடையிலும் மனங்க சக்கும்படி உனக்கு என்ன குறையேற்பட்டது?’ என்று கேட்டான். கலையரசி: குறை எனக்கல்ல, எல்லோருக்குமேதான். உனக்கு இத்தனை நாளும் அது தெரியவேண்டாமென்று நினைத்து மறைத்து வைத்திருந்தேன். இனித் தெரியாமலிருக்க வழியில்லை. நம் குடும்பத்தின் மீது நிலையாக ஒரு பெரும் பழி தொங்கிக்கொண்டிருக்கிறது. நமது மரபில் தோன்றிய அரசர் எவரும் நேர்மையற்ற முறையிலேயே கொல்லப்பட்டு வந் துள்ளனர்; வருவர்; அதுவும் 18 வயதுக்குள்ளாக. அது மட்டு மன்று. இம்மரபில் பிறக்கும் எந்தப் பெண்ணும் மணமான ஓராண்டிற்குள் கைம்பெண்ணாகிவிடுவர். இவ்வளவு கோரமான பழியின் கீழ் இருக்கும் நீ வெளித்தோற்றத்தால் மகிழ்ச்சி யடைவது கண்டு என் முகம் வாடிற்று. இன்ப அலை மோதிய மன்னன் உள்ளம் இவ் எதிர்பாராச் செய்தி கேட்டு இடிந்தது போலாயிற்று. சிறிது நேரம் அவன் செயலற்று நின்று, பின் தேறி ‘அம்மா, நீ கூறும் செய்தி எவ்வளவு மகிழ்ச்சியையும் குலைக்கப் போதியதாகவே இருக்கிறது. ஆனால் அது முற்றிலும் பொருத்தமானதாகத் தோன்ற வில்லையே. நம்மரபில் எந்த அரசனும் 18 வயதுக்குள் அநீதமா இறப்பான் என்றீர்கள். இதோ நான் 30 ம் ஆண்டு நிறைவு விழா ஆற்றியிருக்கிறேனே. இம் மரபில் வந்த பெண்கள் மணமான முதலாண்டில் கைமை அடைவார் என்றீர்கள். இதோ என் மனைவி 3 பிள்ளைக்குத் தாயாயிருக்கிறாள். மூத்த புதல்வனுக்கே 12 வயதாகிவிட்டதென்று உனக்குத் தெரியுமே. அப்படியிருக்க நடைமுறையில் பலிக்காத இந்தப் பழியை நம்பி நீ இவ்வளவு கலவர மடைவானேன்? கலையரசி: இப்பழியிலிருந்து நீ தப்பினால் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் அது நிறைவேறாதிருக்கிறது என்று நினைப்பது தவறு. பழியின் பொருளை நீ ஆழ்ந்து கவனிக்க வில்லை. உன் மனைவி இந் நாட்டின் இளவரசிதான். ஆனால் அவள் நம் மரபில் பிறந்தவளல்ல. நீயும் இம்மரபில் ஆண் வரிசையில் பிறக்கவில்லை. ஆதலால்தான் உங்கள் இருவரையும் அஃது இதுவரை சாரவில்லை. ஆனால் உன் பிள்ளைகள் நிலை அதுவல்ல. நான் அஞ்சுவது இம்மரபுக்காக. நேர்மரபில் பிறக்காதவர்கள் அரசரான பின் அம்மரபில் சேர்ந்து விடு கின்றனர். விசய: அப்படியானால் இப்பழி இதுவரை தவறாது நடந்து வருகிறதா? அதைப் பற்றி நான் கேள்விப்படவில்லையே. கலையரசி: ஆம். நாலைந்து தலை முறையாக நடந்தே வருகிறது. இதை வெளியில் யாரிடமும் சொல்லாமல் வைத் திருக்கிறோம். நான் இம் மரபில் வாழ்க்கைப்பட்டவளல்ல. இதில் பிறந்தவள். என்னை மணந்து அரசரான உன் தந்தை ஓர் ஆண்டே அரசராயிருந்தார். நீ வயிற்றிலிருக்கும் போதே இறந்து விட்டார். அவருக்கு முன் என் அண்ணன்மார் பலரும் 18 வயதில் இறந்தவர்களே. ஆண்கள் எவரும் 18 வயதுக்கு மேலிருப்ப தில்லையாதலாற்றான் சில தலை முறைகளாய்ப் பெண் வழியில் ஆட்சிவருகிறது. ஆனால் எப்படியும் ஆணல்லவோ ஆள வேண்டும். ஒரு தலைமுறை கழிந்தால் மீண்டும் ஆண் சந்ததி அழிந்து விடுகிறதே. இதை எண்ணிப் புலம்பும் விதி என் போன்ற இம்மரபுப் பெண்கள் தலையில் விடிந்திருக்கிறது. விசய: இப்பழி இக்குடும்பத்தில் எப்படி வந்ததம்மா? கலையரசி: அது ஒரு நீண்டகதை. இந்த ‘இரங்க’ மரபில் முதலரசராயிருந்த ஆதிரங்கர் ஒரு கோயிலை அழித்து அதன் பொருளைக் கைக்கொண்டாராம். அந்தக் கோயில் குருக்க ளிட்ட பழி பல தலைமறைகளாக நடந்து வருகிறது. விசய: ஆதிரங்கர் செய்த பழியைப் பின் வந்த நம் முன்னோர்கள் தீர்த்திருக்கலாமே. கலையரசி: அதெல்லாம் எல்லாரும் பார்த்தாய் விட்டது. பழியின் தீம்பு நம்மரபைத் தலைமுறை தலைமுறையாய்த் தொடர்வது போல அதன் வயிரம் அக்குருக்கள் மரபில் தலைமுறை தலைமுறையாய்ப் பேணப்படுகிறது. அக்கோயிலைத் திரும்பக் கட்டி அதன் பொருளை ஒன்றுக்குப் பத்தாகக் கொடுக் கிறோம் என்று சொன்னாலும் அம்மரபினர் கேட்கமாட்டேன் என்று பாழுங் கோயிலைக் கட்டிப் பழியாளுகிறார்கள். விசயரங்கன் “அம்மா, இத்தகைய கொடும் பழி நம் அறியாச் சிறுபிள்ளைகளைத் தாக்கும்படி விட்டுக் கொண் டிருக்கக்கூடாது. ஏதோ நல்லவேளை நான் சில காலம் இப் பழிக்கு ஆளாகாதிருப்பதினால் அதற்குள் எப்பாடு பட்டாயினும் அதை மாற்ற வகை தேடுவேன். அதுவரை என் பிள்ளை சத்தியரங்கனை வைத்துக்கொண்டு நீயும் அமைச்சரும் நாட்டைக் கவனித்து வாருங்கள். இதை அகற்றியன்றி நான் திரும்ப வரப்போவதில்லை” என்றான். மகன் உறுதி கேட்டுக் கலையரசி நடுநடுங்கினாள். அவனால் இம் மாற்றமுடியாப் பழியை அசைக்க முடியுமென்று அவள் நம்பவில்லை. வீணே இதைச் சொல்லி அதற்குத் தப்பி யிருந்த அவன் ஒருவன் வாழ்வையும் கெடுத்துக் கொண்டோமே என்று வருந்தினாள். தாய் தடுப்பதையும் மனைவி மக்கள் தடுப்பதையும் பொருட்படுத்தாமல் ஒரே வீறாப்புடன் விசயரங்கன் சத்திய ரங்கனிடம் ஆட்சியுரிமையை விட்டு விட்டுத் தம் மரபினர் சூறையாட்டுக் கிரையான கோயிலிருந்த இடம் உசாவி அத்திசை சென்றான். அக்கோவில் நகரினின்று நெடுந் தொலைவில் மக்கள் வாடையே படாத ஒரு பாழுங் காட்டின் நடுவிலிருந்தது. யாரும் நெடுங்காலம் போகாத வழியாயிருந்தபடியால் அது முள்ளும் புதரும் அடர்ந்து தீயவிலங்குகள், நச்சுப் பாம்புகள் முதலியவை நிறைந்ததாயிருந்தது. மரங்களையும் புதர்களையும் வெட்டி வழி செய்தும் விலங்குகளுடன் போராடிக் கொன்றும் உண்ண உணவின்றியும், பருக நீரின்றியும், பல துயருழந்தும் நெடுநாட் சென்ற பின்னரே அவன் அக்காட்டைக் கடந்தான். கோயிலைச் சூழ்ந்த கோட்டை மதில்களில் வாயில்கள் எதுவுமே காணப் படாமல் மூடப்பட்டிருந்ததால் அதில் ஏறிக் குதித்து உட் செல்ல வேண்டியதாயிற்று. நகரினின்று புறப்பட்டுப் பல நாளாய் அவனுக்கு ஒழுங் கான உணவில்லை. அத்துடன் எங்கும் குளிக்கவோ உடைகள் அலக்கவோமுடியாதுபோனதால் புழுதியடைந்த தோற்ற மடையவனாயிருந்தான். விலங்குகளுடன் போராடியதாலும் முட்கள் பீறியதாலும் உடைகள் தாறுமாறாய்க் கிழிந்தும் உடல் காயம்பட்டுக் குருதி தோய்ந்தும் இருந்தன. ஆகவே கோயிலுக்குள் செல்லுமுன் குளிக்க எண்ணி எங்குத் தேடியும் குளமோ கேணியோ வேறு நீர் நிலையோ காணவில்லை. கோயிலை யடுத்து ஒரே ஒரு குளம் இருந்தது. ஆனால் அது பூசைக்கான குளமாதலால் அதன் தூய்மையைக்கெடுக்க அவன் விரும்பவில்லை. கோயிலை அவன் நாற்புறமும் சுற்றிப் பார்த்தான். எங்கும் கால்வைக்க முடியாதபடி இடிந்து பொடிந்த கல்லும் மண்ணும், பரந்து வளர்ந்த கொடியும், முள்ளும் நச்சுயிர்களுமாகவே இருந்தன. உள்ளே செல்லத்தக்க வாயில்களும் வேறு எதுவும் இல்லை. ஒரே முள்வாயில்தான். அதுவோ ஈர்க்கு நுழையாதபடி சார்த்தி உள்ளிருந்து தாளிடப்பட்டிருந்தது. அது யாரும் போகாதிருக்கும் வழிபோலவே இருந்தாலும் உள்ளிருந்து தாளிடப்பட்டிருப்பதால் உள்ளே ஆளிருக்கவேண்டும் என்று நினைத்து அதனைத் தட்டினான். யாதொரு அரவமும் கேட்க வில்லை. தன்வலிவு கொண்டமட்டும் தட்டியும் பலனில்லாமல் சோர்ந்துவிட்டான். உள்ளேயிருந்து எப்படியும் ஆள் செல்லும் போது பார்த்துக் கொள்வோம் என்று அங்கேயே ஊணுறக்க மின்றிக் கிடந்தான். அக்கோயிலின் பாழ் நிலையைக்கண்ட விசயரங்கன் தனக்குள் ‘ஐயோ, என் முன்னோரல்லவா இந்தப் பாழ் நிலைக்குக் காரணம். கோயில் செல்வத்தைக் கொள்ளையிட்டு ஈட்டிய பொருளைக் கொண்டல்லவா நான் இது வரை வாழ்ந்து வருகிறேன். என்ன வெட்கக் கேடு. இதை நான் திருத்தி அமைத்து என் குடிப்பழியைத் தீர்ப்பேன்!’ என்று எண்ணிக் கொண் டிருந்தான். நெடுநேரம் சென்று கதவு திறக்கப்பட்டது. ஒரு பழுத்த கிழவன் வெளியே வந்தான். அவனே அக்கோயிலில் அப்போது வழிபாடாற்றி வந்த குருக்கள். அவன் விசயரங்கனைப் பார்த் ததுமே முகத்தைச் சுளித்துக்கொண்டு “யார்? இங்கே ஏன் வந்தாய்? எப்படி வந்தாய்? சாத்திரங்களுக்கு மாறாக, தூய்மை யற்ற உடலுடன் இதற்குள்வர உனக்கு என்ன துணிச்சல்!” என்றான். விசயரங்கன்: “ஐயா, கோயில் குளம் புண்ணிய தீர்த்த மாதலால் அதில் இறங்கித் தூய்மைக்கேடு செய்ய விரும்ப வில்லை. வேறு குளமோ, நீர் நிலையோ கேணியோகூட இல்லா ததால் இந்நிலையில் வந்திருக்கிறேன். குருக்கள்: ஆம், அக்குளத்தில் யாரும் குளிக்கப் படாது என்பது உண்மையே. அது பூசைக்குரியது. குருக்கள் குளிக்கும் குளம் ஒன்று உண்டு. அதுவும் நீ குளிப்பதற் குரியதன்று. ஆனால் இதோ இந்தச் சுரங்க வழியில் சென்றால், அங்கே ஒரு குளம் இருக்கிறது. அதில் முதலை, பாம்புகள், அட்டைகள் நிறைந் திருக்கும். உனக்குத் துணிவு இருந்தால் அதில் சென்று குளிக்க லாம். விசய: விசயரங்கனுக்கு எதிலும் துணிவு வராதிருந்தது கிடையாது. குருக்கள்: ஆ, விசயரங்கனா நீ, அந்த அதமச்சண்டாளன் ஆதிரங்கன் கொள்ளுப்பேரனா? சரி, சரி. உன்னைத் தூய்மைப் படுத்தத்தக்க தீர்த்தமொன்று வேறே இருக்கிறதா? உன் குருதி யன்றி வேறெதுவும் உன்னைத் தூய்மைப்படுத்தாது. விசய: அப்படியானால் நான் இப்போதே தூய்மை யுடையவன் தான். காட்டுவிலங்குகளுடன் வழியில் போராடி என் உடலெல்லாம் குருதி தோய்ந்துதானிருக்கிறது. குருக்கள்: அதை நான் மறந்துவிட்டேன். இந்தக் காட்டைக் கடந்து யாரும் உயிருடன் வரமுடியாது. நீ ஒரு வீரன்தான். ஆனால் நீ எதற்காக இவ்வளவு வருந்தி இங்கே வந்தாய்? இன்னும் ஏதாவது கோயிலில் இருந்தால் திருடவோ கொள்ளை யிடவோ செய்யலாமென்றா? விசய: சிவசிவ! ஒருநாளுமில்லை. முன்னோர் பழிகளுக் கான கழுவாய் தேடி நோன்பு செய்து தங்கள் பழியை அகற்றும் படி தங்களைக் கோருவதற்காகவே வந்தேன். குருக்கள் முகம் சீற்றத்தால் முதலில் சிவந்து பின் கடுகடுத்துக் கறுத்தது. அவன் விசயரங்கனைப் பார்க்காது முகத்தைத் திருப்பிக்கொண்டு “நீ வந்த காரியம் வீண்; உடனே ஓடிப்போ” என்று கூறி விட்டுக் கோயிலுள் சென்று கதவைத் தடாலென மூடிக்கொண்டான். விசயரங்கன் மனந்தளராமல் தான் வந்த காரியத்தை எப்படியும் முடிக்கும் உறுதியுடன் குருக்கள் காட்டிய முதலைக் குளத்துக்குச் சென்றான். முதலைகள் பிடியில் அகப்படாமல் ஓடியும் போராடியும் பின்னும் உடம்பில் பல காயங்களுடன் அவன் குளித்தெழுந்தான். அட்டைகள் அவன் உடலின் குருதியை உறிஞ்சின. சோர்ந்த உடலுடனும் ஒரு காரியம் முடித்துவிட்டோம் என்னும் நிறைவுடைய மனத்துடனும் அவன் மீண்டும் கோயில் வாயிலண்டை வந்தான். விசயரங்கனை மனமாரப் பகைத்து முதலைக்குளத்தில் அவன் கட்டாயம் உயிர் இழந்து போவான் என்று மகிழ்ந்திருந்த குருக்கள் அவன் உயிருடன் மீண்டுவருவது கண்டு வியப்பும் ஏமாற்றமும் அடைந்தான். ‘ஓகோ, நீ அதில் குளித்து மீண்டு விட்டாயா? அங்கேயே நீ இறந்திருந்தால் இப்போது உன் முயற்சி என்ன ஆகும்?’ என்றான் அவன். விசய: என் பழிகளெல்லாம் உடலுடன் கழுவப் பட்டிருக்கும். புண்ணிய தீர்த்தத்திலிருந்து புகழ் பெற்றிருக்கும். குருக்களின் மீளாப் பகைமை யிடையிலும் கூடச் சாவையும் மதியாத அரசன் வீரத்தையும் பொறுமையையும் பெருந்தன்மையையும் எண்ணிப்பாராம லிருக்க முடியவில்லை. ஆனால் குருக்களின் உள்ளார்ந்த பகைமை உணர்ச்சி இதனை நொடிப்பொழுதில் முன்னையிலும் கொழுந்துவிட்டெரியும் வெஞ்சினமாக மாற்றியது. அடே குடிகேடா, சாவுகூட உன்னை அச்சுறுத்தவில்லையா?’ என்றான் அவன். விசய: உங்கள் பழியின் பயனாக எங்களுக்கு வாழ்வு சாவைவிடக் கசப்பாய்ப் போய்விட்டது. குருக்கள்: உங்கள் முன்னோர்கள் செய்த பழிச் செயலை நீ எவ்வாறு தீர்க்கமுடியும்? விசய: எப்படி நீங்கள் தீர்க்கச் சொன்னாலும் தீர்க்கச் சித்தமே. தாங்கள் விரும்பினால் சூறையாடப்பட்ட செல்வத்தை வட்டியுடன் திருப்பித் தருகிறேன். குருக்கள்: உங்கள் வட்டியும் சூறையாடப்பட்ட முதலி லிருந்து ஈட்டிய வருவாய்தானே? கூரியவாளின் வெட்டினும் கொடுமையான இச்சொற்கள் கேட்டு மன்னன் தலைகுனிந்தான். விசய: எல்லாச் செல்வத்தையும் தந்துவிட்டு இக் கோயிலில் தங்கி உழைத்துக் கடனடைக்கிறேன். குருக்கள்: இங்கே நீ என்ன உழைத்தாலும் உன் சாப் பாட்டுக்குக் காணாதே. ஒரு கோயிலில் பணியாளன் இரவும் பகலும் உழைத்தாலும் ஆண்டுக்கு நூறு ரூபாய்க்குமேல் ஈட்ட முடியாது இன்னும் ஒரு இருபது ஆண்டு நீ வாழ்வதாக வைத்துக் கொள்வோம். ஆதிரங்கன் திருடிய நூறாயிரத்தில் முதலின் ஒரு சிறு பகுதி கூட அதனால் அடைபடாதே. அதற்குமேல் அதன் வட்டி வேறாகிறது. விசய: என் வாழ்நாளும் செல்வமும் எல்லாம் கொடுத்து என் உள்ளத்தையும் இறைவனடியில் செலுத்துவேன். என் கடனடைபடாமலே அவர் என்னை ஆட்கொள்வார். குருக்கள்: “ஆகா... குருக்களை விட்டுவிட்டுக் கடவுளிடம் நேரடியாகப் பேரமா? ஆகட்டும். அக்கடவுள் செய்வதைப் பார்க்கிறேன்” என்று கேலியும் கோபமும் கலந்த தொனியில் கூறினார். விசய: கடவுளின் எல்லையற்ற கருணையொன்றையே நான் நம்பியிருக்கிறேன். அவர் ஒருவரே என் அடைக்கலமும் பாதுகாப்பும். அவர் என்னைக் கட்டாயம் மன்னித்தருளுவார். குருக்கள்: நான் குருக்களாயிருக்கிறவரை கடவுள் மன்னிக்கமாட்டார். இது நினைவிருக்கட்டும். விசய: கடவுளுக்கு அடுத்தபடி பெரியவராகிய நீங்கள் அப்படிச் சொல்லலாமா? உங்களுக்கு நான் அவ்வளவு பகை மைக்கு என்ன செய்தேன், அல்லது யாருக்கு என்ன செய்தேன்? குருக்கள்: நீ நேர்மையான அரசன் என்றே கேள்விப் பட்டிருக்கிறேன். எனக்கும் நீ எவ்வகைக் கெடுதலும் செய்ய வில்லை. ஆனால் உன் முன்னோர் பழிக்காக நீயும் உன் பின்னோர்களும் அழியவேண்டும். இது என் விருப்பம். விசய: எனக்கு முன்னாலிருந்த இரண்டு அரசர்களும் அவர்கள் பிள்ளைகளும் நானும் அழிந்தால்போதாதா? முன்னோர் பழிக்காக ஒன்றுமறியாப் பின்னோர் பழி ஏற்க வேண்டுமா? குருக்கள்: வேண்டும், முன்னோர் பழியால் வந்த செல் வத்தை நுகரக்கூடுமானால், பழியின் பயனை ஏன் நுகரக் கூடாது. விசய: ஆனால் நான் அப்பயனை முழுவதையும் கொடுத்து நாட்டையும் செல்வத்தையும் நல்லவாழ்வையும் கொடுக்கச் சித்தமாயிருக்கிறேனே. என் பழியை ஏன் இன்னும் பின் வாங்கக் கூடாது? குருக்கள்: நீங்கள் என்றென்றைக்கும் அழிவுற்று உலகுக்கு ஒரு படிப்பினையா யிருக்க வேண்டும். நீ நல்லவனாகவும் நேர்மையுடையவனாகவும் இருந்தால், உன் அழிவு இன்னும் பயன்தரும். எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் முன்னோர் பழிவிடாதென்பதை அவர்கள் அறிவர். விசய: உலகுக்கு நீங்கள் உங்களுக்கு வேண்டிய படிப் பினைத்தர நானும் என் சூதறியாக் குழந்தைகளுமா பலியிடப் படவேண்டும். குருக்கள்: ஆம், ஒரு மனிதன் பலியிடப்படுவது பெரிதல்ல. அதனால் ஏற்படும் உலக நன்மை பெரிது. அரசனாகிய உனக்கு இது தெரிந்திருக்கவேண்டும். விசய: அதுசரியே. ஆனால் உங்கள் படிப்பினையோடு இன்னொரு படிப்பினையும் உலகுக்கு ஏற்பட்டுவிடுமே. முன்னோர் பழி செய்தபின் எவ்வளவு நல்லவனாயிருந்தும் பயனில்லை. பழிசெய்தாலும் ஒன்றுதான், நன்மை செய்தாலும் ஒன்றுதான். கடவுள் கண்களில் கழிவிரக்கமும் நற்குணமும் பயன்படா என்ற பாடமும் உலகில் பதிவது கெடுதலல்லவா? பழி செய்தவனுக்குப் பிறந்தவனுக்கும், அவன் குடியிலுள்ளவர் களுக்கும் பழி செய்வதன்றி வேறுவகையில்லை என்று ஆய்விடாதா? குருக்கள்: கடவுள் நம்பிக்கையுடையவன் இதையெல்லாம் ஆராயமாட்டான். அவன் கடவுளை நம்பியிருப்பான். நீ வேண்டு மானால் இப்படி ஆராய்ந்து இன்னும் பழிசெய். பழிசெய்வதும் நன்மை செய்வதும் பழிவிருப்பத்தாலும் நன்மை விருப்பத் தாலுமே. பலனை எதிர்பார்த்துச் செய்யும் நன்மை நன்மை யாகாது. பழியால் உலகுக்குப் படிப்பினை வரவேண்டும் என்று முன்னே கூறிய குருக்கள் உரைக்கு இது முரண்பட்டதென்பதை மன்னன் கவனிக்கவில்லை. ‘அப்படியானால் எனக்கு வேறுபுகலிடம் இல்லையா?’ என்று குருக்கள்காலில் விழுந்து அவன் கேட்டான். ஈவிரக்கத்தின் நிழல் கூட இல்லாமல் குருக்கள் நிலத்தின் மீது காலாலுதைத்து, ‘ஏன் என்னிடம் இன்னும் வாதாடுகிறாய்? நான் உனக்குக் கூறும் புகலிடம் ஒன்றுதான் என் பழிச்சொல்படி நீ நேர்மையற்ற முறையில் கொலை செய்யப்படவேண்டும். உன் பிள்ளையும் பிள்ளையின் பிள்ளையும் அதேபோல் அழிய வேண்டும். இதவே உன் “கர்மநெறி” இதை யாராலும் மாற்ற முடியாது’ என்றான். விசய: ‘கர்மத்திற்கும் இறைவ’னான கடவுள் மனம் வைத்தால் மாற்றுவார். குருக்கள்: கடவுளும் செய்யமாட்டார், குருக்களும் செய்ய மாட்டார், போ. விசய: நான் போகமாட்டேன். இங்கேயே பட்டினிகிடந்து சாவேன். குருக்கள்: நீ என் பழிச்சொல்படி படுகொலைக்குத் தானாளாவாய். பட்டினிகிடந்து இயற்கைச்சாவு சாவது உனக்குக் கிட்டாது. விசய: அப்படியானால் இப்பழிச்சொல்லின் மரபிற்குரிய நீங்களே சொல்லுங்களேன். குருக்கள்: ‘உனக்காக நான் பழி ஏற்க முடியாது. உன் பழி உனக்கே’ என்று கூறி அகன்றார். விசயரங்கன் கோயிலிலேயே வாயிலில் காத்திருந்தான். நாள்தோறும் முதலைக்குளத்தில் குளிப்பான். மற்றநேர மெல்லாம் உணவுநீர், கொள்ளாமல், கடவுளையே எண்ணி வாயிலில் தவங்கிடப்பான். நாள்தோறும் குருக்கள் போகும்போது தன்கொடும் பார்வையை அவன் மீது உறுத்திச் செல்வார். மூன்றாம் நாள் மன்னனுக்கு அசையவும் வலிக்கவில்லை. அச்சமயத்திலும் குருக்கள் ‘மன்னனாய்ப் பிறந்த உனக்குப்பட்டினி கிடந்து சாவதென்பது எளிதன்று, அதிலும் கொள்ளையடித்த செல்வத்தின் கொழுப்பு எளிதில் அகலாது. ஆகவே உன்பழியை மாற்றிவிடும் வீண் முயற்சியைவிட்டு விட்டு இங்கிருந்து போ’ என்றார். ‘உடலோடு உணர்வு இருக்கும்வரை இவ்விடம் விட்டுப் பழிநீங்காமல் போகமாட்டேன்’ என்றான் அரசன், உறுதி குலையாமல். நான்காம் நாள் மாலை அரசன் உணர்விழந்து தடா லென்று கல்தரைமீது விழுந்து காயமடைந்து குருதி ஒழுகக் கிடந்தான். குருக்கள் அப்போதும் உணர்ச்சியற்றவராய் அவனை விட்டுவிட்டுக் கோயிலினுள் உறங்கச் சென்றார். அச்சமயம் அரண்மனையில் திருமலாம்பாள் வலது கண் துடித்தது. அவள் தன் மாமியையும் மக்களையும் அமைச்சர் களையும் அழைத்து ‘என் கணவனுக்கு ஏதோ பெரிய ஆபத்து என்று என் மனம் கூறுகிறது. ஆனால் என்னாலோ வேறு யாராலோ இப்போது ஒன்றும் செய்யமுடியாது. எல்லாரும் கைகூப்பிக் கடவுளிடம் வேண்டிக்கொள்வோம். அவர் அரசன் உயிர் காத்தருள்க’ என்று சொன்னாள். அனைவரும் ஒருங்கே நின்று இறைவனை மனமார உள்ளன்புடன் உருகிக்துதித்தனர். அன்றிரவு முழுவதும் ஆணும் பெண்ணும் குழந்தையும் வேறு செயலின்றி வணக்கத்திலேயே ஈடுபட்டுக் கண்ணீரும் கம்பலையுமாயிருந்தனர். குருக்கள் கண்மூடி ஐந்துநொடிப் பொழுதுகூட இராது. கடவுள் ஒரு குழந்தையுருவில் அவன் கனவில் தோன்றி, “கடவுள் நம் கைக்குள்ளிருக்கிறார் என்ற கர்வத்தினால் கல்நெஞ்சு கொண்ட கஞ்சனே! எனக்களிக்க விருக்கும் படையல்சோறும் நீரும் அவனுக்குக் கொடுத்து உணர்வு வருத்துக. அவன் பழியை நானே அகற்றிவிட்டேன்’ என்றார். குருக்கள்: என் பழி என்னாவது? கடவுள்: என்பழியல்லாமல் உனக்குவேறு ஏது பழி? அதுவும் இத்தனை தலைமுறையாக எத்தனையோ மடங்கு தீர்ந்துவிட்டது. ஆகவே நான் கூறியபடிசெய், அல்லது இந்த வேலையை விட்டுப்போ. குருக்கள் கோயில் தளத்தின்மீது புரண்டார். ‘ஆ, என் தெய்வமே என்னைக் காட்டிக்கொடுத்துவிட்டது. இனி எனக்கு வாழ்வு போயிற்று. பக்தனுமாயிற்று, கடவுளுமாயிற்று! இவ் வுலகத்தில் அவர்களே எல்லாம் நடத்தட்டும். நான் போகிறேன்’ என்று அவன் தனக்குள் கூறிக்கொண்டான். கடவுள் கட்டளைப்படி விசயரங்கனுக்கு உணர்வு வரு விக்கட்டதும், அவன் ‘ஆ உணவு தந்து என் தவத்தைக் கெடுப் பானேன். உங்களால் நீக்கமுடியாத பழியைக் கடவுளிடம் கேட்டு நான் நீக்கிக்கொள்வதையும் ஏன் தடுக்கவேண்டும்? இது நேர்மையா?’ என்றான். குருக்கள் முகத்தில் அசடுவழிய மனக்கசப்புடன், “உன் கடவுள் உன் பழியை நீக்கிவிட்டார். அவர் கட்டளைப்படிதான் உனக்கு இந்தக்கடைசிப் பணியை வேண்டாவெறுப்பாகச் செய்தேன். இனி நீபோய் இவ்வுலகில் வாழலாம். எனக்குத்தான் கடவுளில்லை. நான் போகிறேன்’ என்றார். விசயரங்கன் மனமகிழ்ச்சியால் அவர் காலில் விழப் போனான். குருக்கள் அவனை உதறித்தள்ளி, ‘என் காலில் நீ விழவேண்டுவதில்லை. கடவுளிடமே போய்க் காலில் விழலாம். இனி என் காலந்தான் போயிற்று. நான் போகிறேன்’ என்று சுரங்கத்தில் நுழைந்தான். விசயரங்கன் அவரைப் பின்பற்றிச்சென்று “ஐயா, எங்கே போகிறீர்கள். என் தீமைகளைக்காண எண்ணிய நீங்கள் நன்மை களையும் கண்டுகளிக்க வேண்டாமா?” என்று கூறினான். குருக்கள் “அதைக் கண்டுகொண்டு என்னால் வாழ முடியாது. இந்தக் கோயிலுக்கும் இனிநான் பூசைசெய்ய முடியாது. வேறு ஆள்பார்த்துக்கொள். என்னைவிடு” என்று திமிறிக்கொண்டு போய் முதலைக்குளத்தில் குதித்தார். இரண்டு முதலைகள் அவர் உடலைப் பங்கிட்டுத் தின்று விட்டன. மனவருத்தத்துடன் விசயரங்கன் அங்கேயே நின்றான். பின் கோயிலைச்சுற்றி ஒரு தடவை பார்த்துவிட்டு நாட்டுக்கு வந்தான். கண்ணையிழந்து பெற்றவர்கள்போல் திருமலாம்பாள், மன்னன் தாய், குழந்தைகள் குடிகள் யாவரும் மகிழ்ந்தனர். அரசன் அக்கோயிலை மீண்டும் கட்டிமுடிக்க அமைச்ச ருக்கு உத்தரவிட்டான். ஆனால் அவர்கள் செல்லுமுன் கோவி லெங்கும் தவிடுபொடியாய்க் கிடந்தன. அதனைச் சுற்றியுள்ள காடுகளும் தீப்பிடித்தெரிந்துகொண்டிருந்தன. தன் முடிவுடன் அக்கோயிலும் முடிவிடட்டும் என்று குருக்கள் வெடிமருந்தால் அதனைத் தவிடுபொடியாக்கும் ஏற்பாடுகளை செய்துவைத்தே இறந்தார். பசுஞ்சாணியில் புதைந்திருந்த தீப்பாசாணத்தின் ஆற்றலால் குருக்கள் இறந்து சில மணி நேரத்துப்பின் அது பற்றி வெடித்தது. கடவுளின் பேராற்றலிலிருந்து கடவுளின் கருணையை அகற்றினால் ஏற்படும் வடிவமே இக்குருக்களின் வடிவம் என்று மன்னன் தன் அமைச்சர்களிடம்கூறி அவருக்கு அக்கோயில் முதலைக்குளத்தினருகிலேயே ஈமக்கடன்களாற்றக் கட்டளை யிட்டான். 6. இன்பமும் துன்பமும் பெண்கள் உலகில் அக்குவின் பெயர் எல்லாவகை இன்பங்களும் நிறைந்த வாழ்க்கைக்கு மறுபெயராய் விளங்கிற்று. அவள் அழகு வாய்ந்தவள். அவள் கணவன் சாத்தன் அவளிடம் அன்பும் ஆதரவும் உடையவனாயிருந்தான். அவர்களுக்கு நிறைந்த செல்வமும் இருந்தது. அவர்கள் நாகரிகமும் நற்குணமும் உடையவர்களாயிருந்தபடியால், அவர்களுக்குப் பெரும்பாலும் பகைவரே கிடையாதென்னலாம். அக்குவின் வாழ்க்கையில் ஒரே ஒரு குறை இருந்தது. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து சிலநாளில் இறந்துபோயிற்று. அதன்பின் குழந்தையில்லாதிருந்தது. இறந்த குழந்தையின் நினைவு சிலநாள் அவள் இன்ப வாழ்வைக் கறைபடுத்தினாலும் நாளாக ஆக அவள் அதை மறக்கலானாள். ஆனால் அந் நிகழ்ச்சியை மறந்தபின்னும் அதன் ஒரு விளைவு அவள் அறியாமலே அவள் வாழ்வில் எதிர்பாராத இடையூறுகளைக் கொண்டு வந்தது. அவள் குழந்தை இறப்பதற்குக் காரணமான செய்தி அது பிறந்த ஐந்தாம் நாள் அதன் தோள்பட்டையில் ஒரு சிவப்புப் புள்ளி தோன்றியதேயாகும். பேறு காலத்தில் அவளைக்கவனித்த மருத்துவச்சி சச்சி அதைக்கண்டதும் ‘அம்மா இது பொல்லாத அறிகுறி. இக்குழந்தை இதனால் சில நாளில் இறந்துவிடும்’ என்றாள். அவளது இவ்வுரை கேட்டுத்தாய் மிக வருந்தினாள். அதை ஒரு முன்னறிவிப்பு என்று கொள்ளாமல் அதனை ஒரு அவச்சொல் என்று அவள் எண்ணினாள். சிலநாளில் குழந்தை இறந்துவிடவே அவள் கரிநாக்குத்தான் பலித்துவிட்டது என்று எண்ணிய அக்கு அதனைப் பலரிடம் கூறிவந்தாள். சச்சியின் தொழில்முறையில் இது பெருங்குந்தகங்கள் விளைவித்தது. சில நாட்களில் அக்குவும் மற்ற மக்களும் இதனை மறந்தனர். ஆனால் சச்சி இதனை ஒரு பகைச்செயல் என்று கொண்டு பழிவாங்கும் எண்ணமுடையவளாயிருந்து வந்தாள். அக்குவின் கணவன் சாத்தனுக்கு நிறைந்த செல்வமிருந்த தனால் அவன் தன் நேரத்தைப் பெரிதும் கவறாடுவதிலும் உரையாடுவதிலுமே போக்கிவந்தான். அக்குவும் அவனுடனும் அவன் நண்பருடனும் சிலசமயம் விளையாடியும் உரையாடியும் இருப்பாள். அவர்களுடன் அளவளாவிப் பழகிய உற்ற நண்பன் நீலகண்டன் என்பவன். அவனும் சாத்தனைப்போலவே நல்ல செல்வ நிலையிலுள்ளவன். ஆகவே அவன் தன் நேரத்தின் பெரும் பகுதியைச் சாத்தன் வீட்டில் விளையாடியே போக்கி வந்தான். விளையாடாத நேரங்களில் அவன் உலாவுவான் அல்லது உடற்பயிற்சி செய்வான். அவன் நல்ல உடற் கட்டுடையவன். அவ்வூர் மருத்துவர் நல்ல உடற்பயிற்சி பெற்ற உடலுக்கு அவனையே இலக்காகக் கூறுவார். அவன் மண மாகாதவனாயினும் சமயப்பற்று மிகுந்தவனாயும் ஒழுக்க முடைய வனாயுமிருந்ததனால், சாத்தன் வீட்டில் சாத்தனிருந் தாலும் இல்லாவிட்டாலும் அக்குவுடன் தங்குதடையில்லாமல் அண்ணன் தங்கை போல் பழகிவந்தான். அக்குவிடம் வர்மம் கொண்டு அவள் மீது பழி வாங்கக் காத்துக்கொண்டிருந்த மருத்துவச்சி சச்சிக்கு எதிர்பாராத வகையில் ஒரு துணைக்கருவி கிடைத்தது. இயற்கையில் மண வாழ்க்கையில் விருப்பமோ பெண்களிடம் பற்றுதலோ இல்லாதிருந்த நீலகண்டனுக்கு அக்குவுடன் நெருங்கிப் பழகத் தொடங்கியபின் அவள்மீது கெட்ட எண்ணம் தோன்றியது. அக்குவும் அவள் கணவனும் சூதுவாதற்றவர்களாக இருந்ததும், அவர்களும் ஊராரும் அவன் நல்லொழுக்கத்தில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்ததும் அவனுக்குத் துணிவை ஊட்டின. ஒரு நாள் சாத்தன் தனக்குவர வேண்டிய வாடகைப் பணங்களைப் பிரிக்கச் சென்றிருந்தான். வழக்கம் போல் நீலகண்டன் அங்குவந்து அக்குவுடன் கவறாடிக் கொண் டிருந்தான். அவன் அன்று வழக்கத்திற்கும் மிகுதியாக அவ ளுடன் சிரித்துரையாடியும் மறைபொருள்படப் பேசியும், அவள் ‘ஏதோ அன்று அவனுக்கு மன எழுச்சியுண்டாயிருந்தது’ என்று நினைத்தாளே யொழிய வேறு எக் குறிப்பையும் உணரவில்லை. ஆகவே இன்னும் சற்றுத் தெளிவாகத் தன் கரத்தைத் தெரிவிக்க எண்ணிச் சட்டென அவள் கையை எடுத்துத் தன் கையினால் அழுத்தினான். வழக்க மற்ற அந் நடத்தையால் அக்கு திடுக் கிட்டாள். அவள் முகம் கறுத்தது. வெடுக்கென அவள் தன் கையை இழுத்துக் கொண்டாள். நீலகண்டன் அவள் கோபம் கண்டு அச்மடைந்து விட்டான். ஆயினும் அதனைக் காட்டிக்கொள்ளாமல், தன் பிழையை அப்படியே மழுப்பிவிட எண்ணி “ஐயோ பாவம்? ஒரு ஆட்டத்திலேயே இவ்வளவு களைத்துவிட்டீர்களே. உங்கள் நாடி அதற்குள் துடிதுடிக்கத் தொடங்கிவிட்டதே’ என்றான். அவனது தீடீர் மாறுபாடுகள் அவளைக் குழப்பின. ‘தான் நினைத்தது போல் அவன் தப்பெண்ணம்தான் கொண்டிருக்கி றானா? அல்லது உண்மையிலேயே தன் நாடியைப் பார்க்கத்தான் முயன்றானா?’ அவளால் ஒன்றும் உறுதியாக முடிவு செய்ய முடியவில்லையானாலும் அச்சமும் விழிப்பும் ஏற்படுத்தி விட்டன. ஆயினும் ‘நாமாக எதுவும் காட்டிக் கொள்ளாதிருந்து பார்ப்போம்’ என்று அவள் எண்ணினாள். “உங்கள் கணவன் இன்னும் வருவதாகக் காணோம். நீங்கள் முற்றிலும் களைப்படைந்திராவிட்டால் இன்னொரு ஆட்டம் ஆடலாம்!” என்றான் நீலகண்டன். அக்கு ‘எனக்கு மிகவும் களைப்பாகவே இருக்கிறது. மேலும் எனக்கு உறக்கச் சடைவு வேறு’ என்றாள். நீலகண்டன், அப்படியானால் நீங்கள் சற்றுப் படுத் துறங்குங்கள். நான் வெளியே புறத்திண்ணையில் இருக்கிறேன்’ என்றான். அக்குவுக்கு உண்மையில் உறக்கம் வரவுமில்லை. அவள் உறங்கவுமில்லை. அறைக்கதவைச் சார்த்திக்கொண்டு மனதில் பலவும் எண்ணி எண்ணி நேரம் போக்கினாள். ஒரு மணி நேரத்துக்குள் சாத்தன் அங்கே வந்தவன் நீலகண்டன் வெளியே தனியே இருப்பது கண்டு ‘ஏன் வெளியே இருக்கிறாய்?’ என்று கேட்டான். நீல: அக்குவுக்கு உடம்புக்குச் சற்று குணமில்லை. ஆகவே அவளைத் தூங்கவிட்டு நான் இங்கே இருக்கிறேன். சாத்: அவள் தூங்கினாலென்ன? நீ உள்ளே இருப்பது தானே! நீ அயலான் அல்லவே இதற்குள் அக்கு கதவைத்திறந்து கொண்டு, வெளியே வந்தாள். நீலகண்டன் அவள் பக்கம் திரும்பி ‘இப்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?’ என்றான். ‘ஆம், இப்போது மிகவும் நலம்தான்’ என்று அவள் வழக்கமான முறையிலேயே கூறினாள். அக்கு பரிமாற, சாத்தனும் நீலகண்டனும் எப்போதும் போல் உண்டு வழக்கப்படி ஆடிப்பாடி யிருந்தனர். சிறிது நேரம் விளையாடிய நீலகண்டன மாலையுலாவிற்காக வெளியே சென்றான். அக்கு தன் கணவன் தனிமையாயிருந்த சமயம் நீலகண்டனைப் பற்றிப் பொதுவான சில கேள்விகள் கேட்டாள். அவன் என்றும் போல் அவனைப் பெருமைப் படுத்தி ‘அவன் சிறந்த ஒழுக்க முடையவன்’ என்று பேசினான். அக்கு அன்று நடந்த சிறு நிகழ்ச்சியையும் அதன் பின் ஒன்றும் நடவாததுபோல் அவன் நடித்ததையும் கூறினாள். சாத்தன் தன் மனைவி தான் வேண்டாத ஐயங்களை மனதிற்கொண்டு அவன் நட்புரிமையைத் தவறாகக் கொண்டாள் என்று எண்ணி அவளைக் கடிந்து கொண்டான். அவளும் தான் செய்தது பிழைதான் என்று ஒத்துக் கொண்டு அதன்மேல் முன்போல் நடப்பதாக உறுதியளித்தாள். ஆனால் அமைதியான நீர் நிலையில் சிறு கல்விழுந்தாலும் பின் முற்றிலும் பழைய அமைதி ஏற்படாதல்லவா? அதுபோல் கணவன் இருக்கும் போது நீலகண்டனுடன் தாராளமாகப் பழகினாலும், தனியே விடப்பட்டபோது அவள் கூடிய மட்டும் விழிப்பாகவும் கண்காணாத் திரை ஒன்றை இடையிலிட்டுமே நடமாடி வந்தாள். பெண்களிடமே இது வரை மனத்தை நாடவிடாமல் நம்பிக்கையுடனும் வெற்றியுறுதியுடனும் அக்குவை ஆழம் பார்க்க எண்ணி அவளிடம் உரிமையெடுத்துக் கொண்ட நீலகண்டனுக்கு முதல் படியிலேயே அவள் கொண்ட கடுஞ் சினத்தோற்றமும் அவமதிப்பும் பொறுக்க முடியாதவையா யிருந்தன. அவனது வருத்தத்திற்கு அவன் தோல்வி மட்டுமன்றி அவனது தன் மதிப்பிழப்பும் காரணமாயிற்று. உள்ளூர அவனுக்கு அவள் மீது பொறாமை, பகைமை, வஞ்சம் ஆகிய எல்லா உணர்ச்சிகளும் ஏற்பட்டன. அவன் மேற் பூச்சான நற்குணத் தோற்றம் அவற்றை மறைத்து வளரச் செய்தனவே யன்றி அவனைத் திருத்தவில்லை. உண்மையில் அவனை விடக் குறைந்த ஒழுக்க நடிப்பு உடைய எவனும் நாம் தானே தவறு செய்தோம் என்று எண்ணித் தன்னையே கடிந்திருப்பான். அதோடு சாத்தன் களங்கமற்ற நட்புரிமையை எண்ணியிருப்பான். ஆனால் நீலகண்டன் தற்பெருமையும் கோபமும் இந்நன்றிகளை எண்ணவிடாது அவன் அறிவை மறைத்தன. அவன் எப்படி யாவது தன்னை அவமதித்த அக்குவின் செருக்கை அடக்கி அவள் மீது பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று ஆழ்ந்த சூழ்ச்சி செய்யலானான். ஆனால் அக்குமீது குறைகூறுவது எளிதன்று என்பது அவனுக்குத் தெரியும். களங்கமற்ற தாராள நட்புத் தன்மையிடையே இச்சிறு செயலின் தன்மையை உடனே கண்டு சட்டெனத் தன் செயலை வளரவொட்டாமலும் மீண்டும் நிகழவொட்டாமலும் தடுத்தவள் அவள். பிறரிடம் இயற்கை யாகவே நடந்தும் தனக்குமட்டும் எவருமறியாத கண்காணாத் திரையிட்டவள் அவள். அதுமட்டுமா? கணவன் வரும்வரை உறங்குவதாகச் சாக்குச் சொல்லி மெல்லத்தன்னை வெளியே அனுப்பும் சூழ்ச்சி நயம் உடையவள் அவள். எனவே அவள் சூழ்ச்சிகள் என்று அவன் எண்ணிய இவற்றினும் ஆழ்ந்த சூழ்ச்சி யால் அவளை வெல்ல அவன் எண்ணினான். பாம்பின்கால் பாம்பறியும் என்றபடி வஞ்சகர்களுக்கு வஞ்சகர்களை அறியும் ஆற்றலுண்டு. அக்குவுக்குக் கேடு செய்வதென்றால், அதற்கு உடந்தையாயிருக்கக்கூடிய உயிர் அந்த ஊரில் சச்சி ஒருத்திதான் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆகவே அவள் வீடு சென்று தனிமையில் அவளைக்கண்டு ‘எனக்கு உன்னால் ஒரு உதவிஆகவேண்டும். அக்குவின் வீட்டில் பேறுகாலத்திற்கு நீ சென்றிருக்கிறாய். அவள் உனக்குச் செய்த தீமையையும் அதன் காரணமாக நீ உள்ளூர அவள் மீது கொண்டுள்ள பகைமையையும் வேறுயார் அறியாவிட்டாலும் நான் அறிவேன். ஆகவே அவள் வகையில் நான் அறிய வேண்டிய விவரங்களை நீ கூறுவாய் என்று நம்பிவந்திருக்கிறேன். அவள் அங்க அடையாளங்களைப் பிறர் அறிந்துள்ள அளவினும் சற்றுக் கூடுதலாக அறிய விரும்புகிறேன்’என்றான். அவன் என்ன திட்டமிட்டு இவற்றைக் கேட்கிறான் என்று சச்சியால் அறியக்கூடவில்லையாயினும், அக்குவுக்கு ஏதோ கேடு சூழ்கிறது என்பதை மட்டிலும் அவள் குறிப்பாக அறிந்தாள். அவளுக்கு வேண்டியதும் அவ்வளவுதானே! ஆகவே அவன் கேட்டவிவரங்களை அவள் கூறினாள். நீலகண்டன் ஆழ்ந்த சூழ்ச்சித்திட்டம் பெரும்பாலும் அவன் நினைத்தபடியே நடந்தது. சாத்தன் இருக்கும்போதே நீலகண்டன் அவ்வப்போது அக்குவுடன் உரையாடாமலும் நெருங்காமலும் இருந்துவந்தான். சாத்தன் ஏன் இருவரும் ஒரு மாதிரியிருக்கிறீர்கள் என்பான். நீலகண்டன் ‘அக்குவுக்குச் சற்று உடம்புக்குக் குணமில்லை போலிருக்கிறது, என்பான். அவளும் வேறு கூறுவதற்கில்லாமல் ‘ஆம்’ என்று ஒத்துக்கொள்வாள். ஆனால் சாத்தனுடன் மட்டும் முன்னைவிட ஒட்டிக்கிரட்டியாய் அவன் விளையாடியும் பேசியு மிருப்பான். ஒருநாள் திடீரென்று நீலகண்டன் சாத்தன் வீட்டுக்குப் போவதை நிறுத்தித் தன் வீட்டிலேயே தங்கினான். இதற்குமுன் அவன் வீட்டிலேயே தங்கினான். இதற்குமுன் அவன் வீட்டில் வேறு எதற்கும் தங்குவது கிடையாது. கடவுள் வழிபாட்டில் சிறிது நேரம் கழிப்பதற்கு மட்டுமே வீட்டில் அவன் தங்குவான். இன்று அவன் வீட்டிலேயே தங்கினானாயினும் வேறு எதுவும் செய்யாமல் ஒரே நீண்ட வழிபாட்டில் இருந்துவந்தான். வழிபாட்டை இதுவரை அவன் வெற்றிகரமான வாழ்க்கைக் குரிய ஒரு இன்றியமையாக் கடமை என்று மட்டும் எண்ணி வந்தான். ஆனால் இன்றோ அவன் கொடிய அழிவுத்திட்டத் தில் அது ஒரு பகுதியாயிற்று. அவன் எதிர்ப்பார்த்தபடி அவனுக்காக நெடு நேரம் காத்திருந்தும் வராததால், தான் உண்ணாமல் அவனையிட்டு வந்து உண்ணுகிறேன் என்று வீட்டில் கூறிவிட்டு அவனை நாடி வந்தான். வழிபாடு முடியட்டும் என்று சற்று இருந்து பார்த்தான். அன்றைய வழிபாடு முற்றுப்பெறும் வழிபாடாகக் காணவில்லை. ஆகவே முனிவன் போலக் கைகூப்பி உட்கார்ந்திருந்த அவனைப் பிடித்து அசைத்து ‘என்னப்பா நீலு, என்ன இத்தனை ஆழ்ந்த வழிபாடு. ஏன் இன்று வீட்டுக்கு வராமலே இங்கே இருக்கிறாய்’ என்றான். நீலகண்டன் திட்டமிட்ட நாடகத்திற்குத் தொடக்க மணியாய் இது அமைந்தது. அவன் சாத்தன் கை தன்மீது பட்டதுமே உரக்க, ‘கடவுளே, என்னைச் சூழ்ந்துள்ள மாய வலையிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக. நண்பன் வீடென்று நம்பி நான் வீழ்ச்சியடையாமல் காப்பாயாக’ என்று கதறினான். சாத்தனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “என்னடா நீலு? என்ன, மாயவலை என்கிறாய். பழி என்கிறாய். ஒன்றும் விளங்க வில்லையே. பேசாமல் வழிபாட்டை முடித்துக்கொண்டு என் வீட்டுக்கு வருவது தானே! நீலகண்டன்: போதும். உன் வீட்டுக்கு வந்ததும் போதும். என் மனச்சான்றுக்கு மாறாகப் பழியேற்க வேண்டி வந்ததும் போதும். சாத்தன்: ஏன், உன் மனச்சான்றுக்கு மாறாக உன்னை நடக்க யார் வற்யுறுத்துகிறார்கள்? நீலகண்டன்: யார்? நீயும் உன் மனைவியும் தான். நீ குறிப்பறியாத முட்டாளாய் என்னை அவள் வலையில் சிக்க வைக்கிறாய். அவள் ஒன்றுக்கு மஞ்சாப் பேயாய் வந்து வாய்த்தாள். சாத்தன்: என்ன நீலு, நீயா இப்படிப் பேசுகிறாய், அதுவும் அக்குவைக் குறித்து? அவள் என்ன செய்தாள்? நீலகண்டன்: என்ன செய்தாளா, என் வாழ்வை, நல்ல பெயரைக் குலைக்கிறாள். உன் நட்பையும் நல்லெண்ணத்தையும் எடுத்துக் காட்டினாலும் கேட்கமாட்டேன் என்கிறாள். அவளுக்கு நீ பிள்ளையில்லாக் குறையை வைத்திருக்கிறாயாம்! உன் குறிப்பறிந்தே அவள் என்னைப் பழிக்கு இழுக்கிறாளாம்! சாத்தன்: என்ன! என்ன! வாலும் தலையும் இல்லாமல் கூறுகிறாய். விவரமாய்க் கூறு. நீலகண்டன்: பிள்ளையில்லாததால் அவள் என் மீது தவறாக எண்ணம் கொண்டு நடந்ததை நான் கண்டித்தேன். அதை உன்னிடம் அரை குறையாகச் சொல்லியும் அதை நீ அசட்டை செய்ததால் உன் தடங்கல் கிடையாது என்று சொல்லி என்னைத் தன் மாயவலையில் சிக்க வைத்துவிட்டாள். நானும் ஏமாந்து உன் நட்புக்குக் கேடு செய்து வருகிறேன். இனி இப்பொல்லாங்கி லிருந்து விலகியே தீரவேண்டும். ஆகவே என்னை உன் வீட்டுக்கு வர வற்புறுத்தாதே. சாத்தன் இச்செய்தி கேட்டு முதலில் அவநம்பிக்கையும் பின் குழப்பமும் சினமும் கொண்டான். ‘உன் மனம் போல் கண்டபடி அளக்காதே. இதை நான் நம்பவில்லை. நீ ஏதோ மனத்தில் வைத்துக் கொண்டு கயிறு திரிக்கிறாய்’ என்றான். “அப்படியானால் இதோ என் தெளிவுகள்! இனியாவது உண்மையறிந்து என் வழிக்கு வராதே. நான் அவளை இழுத்தேன் என்று அவள் உன்னிடம் கூறிப்பார்த்தாள். நீ அதைப் பொருட் படுத்தவில்லை! இது பொய்யா? என்னுடன் அவள் நீ இல்லாத சமயம் நெருங்கி உறவாடி, திடீரென்று நீ வந்துவிட்ட போதெல்லாம் பேசாமலிருப்பது கண்டு நீ ஏன் என்று கேட்ட போது, நான் ‘அவளுக்குக் குணமில்லை’ என்றேன். அவளும் ‘ஆம்’ என்றாள்! இது பொய்யா! அதுதான் போகட்டும், அவளுடன் நான் பழகிய பழக்கத்துக்கு மறுக்கமுடியாத சான்று தருகிறேன். அவள் இடது இடுப்பில் ஒரு நீலமறு. வலது காலில் ஒரு மறு. இவற்றை நான் அறிந்திருக்கிறேன். என் பழிக்குச் சான்றுகள் இவை போதாதா?” என்று கோப நடிப்பு நடித்தான் நீலகண்டன். சந்தர்ப்ப பொருத்தமான இச்செய்திகள் கேட்டுச் சாத்தன் தன்னிலையிழந்து கடுஞ்சினங்கொண்டு கொதித்தான். முதலில் அவன் சினம் நீலகண்டன் மேலேயே எழுந்தது. பின் தன்னையடக்கிக் கொண்டு இவ்வளவுக்கும் காரணமான தன் மனைவியை வெளியேற்றி விடுவதென்று உறுதி கொண்டு வீட்டை நோக்கிப் பாய்ந்து சென்றான். அக்கு அவன் சீற்றத்தைச் சற்றும் உணரக்கூடவில்லை. அவனும் அவளுக்கு எதையும் விளக்கிக் கூறும் நிலையில் இல்லை. “குடியைக் கெடுக்கவந்த நீலி! உன் வேசங்கள் போதும். இவ்வீட்டில் இனி ஒரு நொடியும் நீ இருக்கக் கூடாது. வெளியே போ” என்றான் அவன். “ஏன், நான் என்ன செய்து விட்டேன். ஏனிவ்வளவு கோபம்” “வேண்டாம். உன் நடிப்பை நிறுத்து. உன்னுடன் கூடிக் கெடுத்தவனே பழிகளை ஒத்துக்கொண்டான்” “என்ன, என்ன, என் பழியா? கெடுத்தவனா?” “முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க வேண்டாம். நீ நீலகண்டனை வற்புறுத்தி என் வாழ்வைக் குலைத்ததை முழுவதும் அவன் ஒப்புக்கொண்டாய்விட்டது. இனி பேச்சுக்கிடமில்லை. இறங்கு வெளியில். ” “அட கடவுளே! இப்படியும் பழி கூறுவார் உண்டா? அவர் சொன்னால் முன்பின் ஆராயாமல்” ‘எனக்கு ஆராயவும் வேண்டாம் சீராயவும் வேண்டாம். இந்நொடியே இவ்வீடு விட்டுப்போ, குடிகேடி’ என்று அவன் அவளைப் பிடித்துத்தள்ள எழுந்தான். குடிகேடி, சண்டாளி என்று அவன் இரைவதை எல்லாம் இது வரை கேட்டுக்கொண்டிருந்தவள், தான் கற்பிழந்தவள் என்று கணவனே நம்பிவிட்டான் என்று கண்டதுமே அடக்க முடியாத ஆத்திரம் கொண்டாள். இதுவரை அடங்கிக்கிடந்த அவள் பெண்மையின் ஆற்றல் முழுதும் வீறுடன் எழுந்துநின்றது. அவள் அவனை நோக்கி “என் மீதா இப்பழி? என்மீதா இத்தூற்றுதல்? இது யாருடைய தூண்டுதலானாலும் சரி. அவர்கள் கோளூரை ஒரு நாள் விளங்கும். நீங்கள் ஒரு நாள் வருந்த வேண்டிவருவது உறுதி” என்றுகூறி அவன் போ என்று மறுமுறை கூறுமுன் சரேலென வெளியேறினாள். அவள் தன் உறவினர், நண்பர், உற்றார் ஆகிய பலரிடமும் சென்று தன் கணவன் பழிச்சாட்டைக் கூறித் தனக்கு வேலையும் கூலியும் நாடினாள். ஆனால் ‘கணவன் பழித்தான்’ என்ற தீச்சொல் காட்டுத் தீப்போல் பரவி அவளுக்கு எல்லா வழிகளையும் அடைத்தன. மாலைவரை பல இடமும் சுற்றி மாலையில் ஆற்றை நோக்கி நடந்தாள். ஊர்ப்புறத்தே செல்லு கையில் நீலகண்டன் எதிர்பட்டு அவளைத் தடுத்து நிறுத்தி “கணவன் பழிசுமத்தி விட்டபின் உனக்குப் போக்கிடமில்லை. ஆகவே என்னுடன் வந்து விடு. உனக்கு நல்ல தொலைவிடத்தில் வீடு தருகிறேன். அவனை எதிர்பாராது யாருமறியாமலிருந்து வாழலாம்’ என்றான். ஊருக்குக் கடவுளடியாராய்க் காட்சிதரும் அக்கெடு கேடனையும் அவன் வஞ்சகப் பேச்சையும் கேட்க மனமில்லாது அவள் காதைப் பொத்திக்கொண்டாள். ஆனால் அவன் அண்டிப் பேச்சுக்கொடுக்க வரவே, அவள் சீறி ‘நாயே, எட்டி நட. உன் வரிசையை யாரிடம் காட்டுகிறாய்’ என்று சினந்து கூறினாள். அப்போதும் அவன் அவளைவிடாது தொடர்ந்து ‘உன் செருக்கு இனி செல்லாது. உனக்கு இப்போது யாரும் துணையில்லை. நான் எதுசெய்தாலும் கேட்பவர் கிடையாது. ஆகவே அருமைகெடாமல் என் சொற்படிநட’ என்று கூறிக் கொண்டு அவள் கையைப் பிடிக்க எட்டினான். அவள் திமிறிக்கொண்டு ஓடலானாள். அவன் அவளைத் துரத்திக்கொண்டுபோய்ப் பிடிக்க முயன்றான். தனியிடத்தில் புலியிடம் அகப்பட்ட மான்போன்ற அவள் செய்வதறியாது திகைத்தாள். ஆயினும் எப்படியாவது தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி அங்கே கிடந்த கல்ஒன்றை எடுத்து அவன்மீது முழுவலிமையுடன் எறிந்தாள். அது அவன் இடக் கண்ணில் பட்டு அதைக்கெடுத்துவிட்டது. அதிலிருந்து வழியும் இரத்தத்தைக் கையால் அழுத்திக்கொண்டு அவன் உட்கார்ந்து விட்டான். ஒரு பெண்ணுக்கு ஆசைப்பட்டு ஒரு கண்ணை இழந் தேனே என்று அவன் புலம்பினான். கொஞ்சநேரத்திற்குள் அவன் வஞ்சப் பழிக்குணம் மீண்டும் தலையெடுத்தது. பழயபடி அக்குவைத் தொடர்ந்து என்னைவிட்டு இனியும் நீ தப்பியோடப் பார்க்கவேண்டாம். இரு; உன் கணவன் உன்னை என் சொல்லால் வெளியேற்றினான் என்ற கோபத்தால் நீ என் மீது கல்லெறிந்ததாக உன்மீது வழக்குத் தொடுக்கிறேன் பார். இப்போதே இங்கே நடந்ததற்குச்சாட்சி யாரும் இல்லை. நான் சொல்வதையே யாரும் நம்பு வார்கள்.’என்றான். அவள் ‘கடவுளே எனக்குச் சாட்சி’ என்றாள். நீலகண்டன், “கடவுள் வழக்கு மன்றத்திற்கும் வரமாட்டார். அவர் ஆளாக எவரும் இங்கே கிடையாது. ஆகவே என் வாய் மொழிக்கு எதிர்மொழி செல்லாது.” “ஆள் ஏன் இல்லை. இதோ” என்று ஒருகுரல் பின்னா லிருந்து கேட்டது. நீலகண்டன் திரும்பிப் பார்த்தான். அது அவ்வூர் மருத்துவர் என்று கண்டான். அவர் ‘அடவஞ்சகா, உன் காலைமாலை வழிபாடுகளும் ஒழுக்கப் பூச்சும் எல்லாம் இதற்குத் தானே. கொலைபாதகர்களுக்கும் இல்லாத துணிவுதானே அதன்பயன்’ என்றார். நீலகண்டன் வெட்கித் தலைகுனிந்தான். மருத்துவர் மேலும் ‘ஒரு சூதறியாத நற்குல மங்கையைப் பாழ்படுத்தத் துணிந்தாய்! ஓர் ஒப்பற்ற நண்பன் குடும்பமென்றும் எண்ணாத நன்றி கெட்ட பதரானாய்! ஆளற்ற, திக்கற்ற இடத்தில் தான் ஒழுக்கத்திற்கும் கடவுட் பற்றுக்கும் சோதனை என்பதை மறந்தாய்! உன் போன்றவர்கள் கடவுளின் பெயரையே பழிக்கு இழுத்து விடுகிறார்கள்’ என்று இடித்துரைத்தார். அவர் எங்கே தன் கோபத்தில் ஊரெல்லாம் தன் பெயரைத் தூற்றுவரோ என்று அவன் உடலம் நடுங்கிற்று. அவன் அவர் காலடியில் வீழ்ந்து தன்னை மன்னிக்கும்படியும் தன் நொந் தழிந்த கண்ணை மேலும் தீங்குதராமல் கட்டியுதவும் படியும் வேண்டினான். மருத்துவர் ‘உன் கண்ஒன்று கெட்டது போதாது; இரண்டும் கெடவேண்டும். உன்னிடம் எனக்கு இரக்கம் கூடக் கிடையாது. ஆயினும் சாத்தனிடம் நீ உன் குற்ற முழுவதும் ஒத்துக்கொண்டால் கட்ட இணங்குகிறேன்’ என்றார். வேறு வழியின்றி நீலகண்டன் அதற்கிணங்குவதாக ஒத்துக் கொண்டு அவருடன் சென்றான். மருத்துவர் அக்குவுக்கு ஆறுதல் கூறி ‘நீ எங்கேயம்மா போய்க்கொண்டிருந்தாய்’ என்று கேட்டார். அக்கு ‘நான் என்ன செய்வேன். எவரும் இடந்தராமல் திக்கற்றவ ளாக்கிவிட்டனர். இயற்கை யன்னையிடம் சரண்புக எண்ணித்தான் ஆற்றை நாடினேன்’ என்றான். மருத்துவர் மனம்வெதும்பி ‘ஐயோ நல்லநேரத்தில் நான் வராவிட்டால் என்ன நேர்ந்திருக்குமோ. சரி. போனது போகட்டும். இனி எந்நாளிலும் இப்படி நம்பிக்கை சோர விடாதே’ என்று கூறிச் சாத்தனிடம் இட்டுச்சென்றார். நீலகண்டனும் மருத்துவரும் அக்குவை இட்டுவருவதைக் கண்டு சாத்தன் ஒன்றும் புரியாமல் இவளை ஏன் இங்கே இட்டுக்கொண்டு வருகிறீர்கள். அவள் கண்ணில் நான் விழிக்க மாட்டேன்’ என்றான். மருத்துவர் பக்குவமாக நடந்ததெல்லாம் கூறினார். நீலகண்டன் ‘தலைகுனிந்து அவையெல்லாம் உண்மையே’ என்றான். சாத்தனுக்கு அப்போதும் முழுநம்பிக்கை ஏற்படவில்லை. ‘அவள் அங்க அடையாளங்கள் உனக்கு எப்படித் தெரிந்தது?’ என்று கேட்டான். ‘சச்சி கூறினாள்’ என்று நீலகண்டன் கூறியதுமே சாத்தனும் அக்குவும் ஒரேகுரலில் ‘ஆ! சண்டாளி’ என்றனர். சாத்தன் இவ்வுண்மை கேட்கச் சகிக்காமல் வெறி கொண்டு நீலகண்டன் மீது பாய்ந்து அவன் நொந்த கண் மீது மீண்டும் ஓங்கிக் குத்தினான். மருத்துவர் சென்று தடுத்தும் தடுக்கமுடியவில்லை. அக்கு, சாத்தன் முன் வீழ்ந்து பணிந்து ‘எப்படியும் எல்லாத் தீங்கும் ஓய்ந்து விட்டது. இந்நன்னாளில் வேறு தீம்பு விளைத்து அதைக் கறைப்படுத்துவானேன்’ என்றாள். நீலகண்டன் தன் கண்ணொன்று குருடானது தனக்குப் போதிய படிப்பினை என்று அவ்வூருந் திசையும் விட்டுச் சென் றான். சச்சியோ இனி என்ன நேரிடுமோ என்றஞ்சித் தற்கொலை செய்துகொண்டாள். அக்குவின் அடுத்த குழந்தை அனைவரையும் இன்பத் திலாழ்த்தி இத்தீய பழிகளை மறைக்க வைத்தது. 7. வெற்றிக்கு மார்க்கம் யாது? ‘உலகில் அடிக்கடி திறமை மிக்கவன் தோல்வியடை கிறான். ஒன்றுக்குமுதவாத சோம்பன் வெற்றியைக் கைப்பற்றி விடுகிறான். இதிலெல்லாம் திறமையின் பலன் ஒன்றுமில்லை. எல்லாம் யோகம், குருட்டு யோகம், அவ்வளவுதான் என்றார் ஒரு பெரியார். விருந்துண்டு, வெற்றிலை பாக்கு மென்றுகொண்டு விருந்து மண்டபத்தில் வந்திருந்த விருந்தாளிகளிடையே எப்படியோ இதுபற்றிப் பேச்சு எழுந்தது. உடனே நடுத்தர வயதுடைய ஒருவர் சற்று நிமிர்ந்து “அதெல்லாம் இல்லை. திறமையும் சூழ்நிலையும் சேர்ந்து தான் வெற்றியை நிர்ணயிக்கமுடியும். குருட்டு யோகமே கிடையாது. திறமையோ வென்றால், அதுமட்டும் போதாது. வேண்டுமென்றால் சிறு காரியங்களில் திறமையால் மட்டும் வெற்றி காணலாம். ஒரு ரூபாய் சம்பாதிக்கவேண்டும் என்றோ ஒரு எறும்பைக்கொல்ல வேண்டுமென்றோ ஒரு பொய்யைக் கூறிச் சாதித்துவிடவேண்டுமென்றோ அற்ப ஆசையுடையவன் எளிதாக இவற்றைச் சாதித்துவிடலாம் ஆனால் சந்திரனை எட்டிப்பிடிப்பது, தன்னைத் தானடக்கிவிடுவது, ஒருபோதும் பொய் பேசாதிருப்பது ஆகியவை போன்ற பெருங்காரியங்களில் திறமை எவ்வளவு இருந்தாலும் வெற்றி கிடையாது” என்றார். இன்னொருவர். “பார்க்கப்போனால் வெற்றி என்பது பெரிதளவுக்குப் பிறப்பிலேயே ஏற்படும் ஒருவகைத் திறமையைப் பொறுத்தது. விளக்கமாகச் சொல்வதானால் பிறவியிலேயே ஏற்படும் பரம்பரைப் பண்பு இருக்கிறதே, அதுதான் வெற்றிக்குப் பெரும்பாலும் வழி செய்வதாகும்” என்றார். வாழ்க்கையி லடிப்பட்டவர் போலத் தோன்றிய கிழவர் ஒருவர் இடைமறித்தார். “வெற்றி மார்க்கம் என்பது ஒரு தனிக் கலை ஐயா, தனிக்கலை! வெற்றி என்பது திறமையாலும் அல்ல, பிறப்பாலும் அல்ல. அது தோல்விகளிலிருந்து படிப்படியாக ஏற்பட்ட படிப்பினைகள் காரணமாக வருவது. ஒவ்வொரு தோல்வியிலும் ஒரு படிப்பினை உண்டு. அதைக்கண்டு மேல் முயற்சி செய்பவர்களுக்கே வெற்றி வரும். ‘மாலை’ யின் வாழ்க்கை வரலாற்றைக் கவனித்தவர்களுக்கு இச்செய்தி விளங்கும்” என்றார் அவர். பொழுது போக்காகப் பேசிக்கொண்டிருந்த அனைவ ரிடையேயும் எதிர்பாரா ஓர் உணர்ச்சி தென்பட்டது. பலர் ஒரு முகமாக அவரைப் பார்த்து அது என்ன கதை ஐயா, சொல்லுங்கள் கேட்போம்’ என்றார்கள். கிழவர் கனைத்துக்கொண்டு கதை தொடங்கி விட்டார். மாலை என்பவன் பதினெட்டு வயதுவரை ஒன்றுக்கு முதவாத பேர்வழி. அவனிடம் சல்லிக்காசுகூடக் கிடையாது. அவனுக்கு எந்தத் தொழிலும் தெரியாது. ஏமாற்ற, திருடக் கூடத் தெரியாது. அவனுக்கு உதவிசெய்யத் தாய் தந்தையரோ அண்ணன் தம்பி உறவினர் முதலிய எவருமோ கிடையாது. இத்தனைக் கிடையில் அவன் பெருத்த சோம்பேறி கூட. உழைத்து வேலை செய்வ தென்பதை அவன் கனவிலும் எண்ணாதவன். (இதுவரையிலும் கவனியாதவர் கூட இப்போது கவனிக்கத் தொடங்கினர்) திருடுவதா, கொள்ளையடிப்பதா? இந்த இரண்டு வழிகள் தான் அவனுக்குத் தென்பட்டன. ‘திருடத்திறமை வேண்டும். கொள்ளை யடிக்கப் பலம்வேண்டும்; ஆனால் சிறு வழிப்பறிக்கு இரண்டும் வேண்டாம்’ என்ற எண்ணினான். அவன் முதல் முதல் திருட்டைக் கேட்டால் எவரும் சிரிப்பார்கள். ஆனால் அவன் அனுபவமற்ற மூளையின் முதல் முயற்சி அது. அவன் எங்கும் செல்லாமல் தன் வீட்டுத்திண்ணையி லேயே உட்கார்ந்து கொண்டான். போகிறவர்கள் வருகிறவர் களைக் கவனித்துக்கொண்டிருந்தான். ஒருவர் கனமான ஒரு தோல்பெட்டியுடன் அசைந்தாடி அவ்வழிவந்தார். அவர் வந்தசமயம் ஆள் சந்தடிகூட நிற்கவில்லை. பலர் அங்குமிங்கும் போய்க் கொண்டுதானிருந்தார்கள். ஆயினும் மாலை எதையும் கவனிக்காமல் அவர்மேல் பாய்ந்து அப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். அதன்பின் என்ன நடந்ததென்று கூறத்தேவையில்லை. தெருவில் பலர்கூடி வீட்டினுள் நுழைந்து பெட்டியை உடைய வரிடம் ஒப்படைத்ததுடன் எல்லாரும் சேர்ந்து அவனை நைய அடித்தனர். அவன் வீடு திருடன் வீடு என்று பெயரடைந்தது. மாலையின் இம்முதல் வீரச்செயல் பார்வைக்குப் பித்துக் கொள்ளித்தனமானதா யிருந்தாலும் அவன் மட்டில் அது வீண்போகவில்லை. அதனின்றும் அவன் தன் வாழ்க்கை யின் முதல் படிப்பினையை அடைந்தான். “கொள்ளையிடுவ தானால், உன் வீட்டின் பக்கமே கொள்ளையிடாதே” என்றும்; மேலும் “கொள்ளை கொடுப்பவன் தனியே யிருக்கும் சமயம் கொள்ளையடிப்பது நல்லது” என்றும் உணர்ந்தான். அடுத்த தடவை மாலை தன் வீட்டிலிருந்து ஐந்து கல் தொலைவு நடந்துசென்று தனியே செல்லும் ஒருவனிடமிருந்து அவன் கொண்டு சென்ற பொருள்களைப் பறிக்க முயன்றான். அவன் ஆள் வாட்டசாட்டமாயிருந்ததனால் நெடுநேரம் போராடினான். இறுதியில் மாலை வெற்றிகரமாகப் பொருளைப் பறித்தான். ஆனாலும் பறிகொடுத்தவன் அடுத்த காவல்காரர் நிலையத்தில் அவனைப்பற்றிய முழுவிவரமறிவித்ததால் அவன் எளிதில் பிடிப்பட்டுத் தண்டனை யடைந்தான். வழிப்பறியைவிட ஒளிந்து திருடுவது நல்லது என்ற பாடம் அவனுக்குக் கிடைத்தது. காவலிலிருந்து விடுதலையானபின் குளத்தில் கைகால் அலம்பச் சென்ற ஒருவன் கரையில் வைத்த மூட்டையை மாலை தூக்கிக் கொண்டோடினான். ஆனால் மூட்டைக்காரன் அதைக் கண்டு துரத்தியோடிப் பிடித்துக்கொண்டான். திருடியபின் தப்பித்துக்கொள்ள நேரம் இருக்க வேண்டும் என்பது அவனுக்குப் புலப்பட்டது. சில நாட்கழித்து மாலை கட்டவிழ்த்துத் திரிந்த ஒரு பசுவைக்கொண்டு சென்று கொன்று தசையைத் தின்றுவிட்டுத் தோலைக் காயப்போட்டுவைத்தான். பசுவின் சொந்தக்காரன் காவலருக்குத் தெரிவிக்க,. அவர்கள் தோலை அடையாளங் கண்டு துப்பறிந்து அவனைத் தண்டித்தனர். திருடிய பொருளின் தடம் இருக்கக் கூடாது என்பதை அவன் உணர்ந்தான். ஒருநாள் கன்னக்கோலிட்டுக் கதவுத்தாழை நீக்கித் திருட எண்ணினான். வீட்டில் உள்ள கிழவி எழுந்து வந்தாள். கிழவி தானே என்று கையை உள்ளே விட்டான். அவள் அரிவாளால் வெட்டவே அவன் கை வெட்டுப்பட்டு இரத்தம் பெருக்கிக் கொண்டு வந்தான். திருட்டில் எதிரி பலவீனன் என்று துணிச்சலடையாதே என்பது இத்தடவை அவனுக்குக் கிடைத்த பாடம். அதோடு கையைக்குணப்படுத்த மருத்துவ நிலையம் சென்றதால் இத்திருட்டுக் கண்டுபிடிக்கப்பட்டது. இனித் திருடிக் காயமுற்றால் மருத்துவநிலையம் செல்லக்கூடாது என்று தெரிந்துகொண்டான். கோவிலில் யாருமிருக்க மாட்டார்கள். கல்சிலைதானே இருக்கும் என்று கோயிலில் புகுந்து திருடினான். கற்சிலைப் பக்கத்தில் பதுங்கியிருந்த குருக்கள் பிடித்துக் கொண்டார். கற்சிலைக்குச் சக்தியில்லாவிட்டாலும் அதனருகிலுள்ள குருக்களுக்குச் சக்தி உண்டு என்பது தெரியவந்தது. திருட்டும் கொள்ளையும் அவ்வளவு சிறந்த தொழிலல்ல, வஞ்சகமும் சூதும் அதைவிட நல்ல தொழில்கள் என்று எண்ணி னான் மாலை. சாமியார் உருவத்துடன் ஒரு பாமர வேளாள னிடம் சென்று நான் சில பூசை முறைகள் செய்யமுடியுமானால் மண்ணாங்கட்டியைப் பொன் கட்டியாக்குவேன் என்று கூறினான். பூசைசெய்ய இரண்டு வாசலுள்ள ஒரு குகையைத் தேர்ந்துகொண்டு முன்பணமாக நூறுரூபாய் வாங்கிக் கொண்டான். குறிப்பிட்ட நாள்வரை வேளாளன் ஒரு வாயிலில் காத்திருந்தான். மாலை மறுவாயிலின் வழியாக ஓட எண்ணி யிருந்தான். ஆனால் வேளாளன் தன் ஆவலையடக்க முடியாமல் ஒரு சிலரிடம் இச்செய்தியைக் கூறவே, அது காவலருக்குத் தெரிந்து அவர்கள் குகைக்கு இருபுறமும் காவல் வைத்து விட்டனர். மாலை கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டான். தீயவன் தீமையைவிட அறிவிலியின் அறியாமை மிகுதி தீங்கு தரக்கூடும் என்பது இதனால் கிடைத்த புதுப் படிப்பினை. மாலை இதன்பின் தொலைதூரத்தில் சென்று ஒரு வைர வியாபாரியை யடுத்து அவனுக்கு இச்சகமாய் நடந்து அவனது நம்பிக்கைக்குரிய பணியாளாய் நாளடைவில் அவன் கணக்கா ளானான். ஒருநாள் நிரம்பப் பணத்துடனும் இரத்தினமணி களுடனும் பயணம் செய்கையில் ஓர் ஆற்றைக் கடக்கவேண்டி வந்தது. ஆற்றின் பக்கமாகப் படகுகிடந்தும் ஓட்ட ஆளில்லை. தங்க இடமில்லாததால் ஆறுகடந்தும் தீரவேண்டும். வியா பாரிக்கோ நீந்தவும் தெரியாது. படகோட்டவும் தெரியாது. மாலை தானே ஓட்டுவதாகக்கூறி வியாபாரியுடன் படகிலேறி நட்டாற்றில் தற்செயலாகக் கவிழ்ந்தமாதிரி காட்டிப் படகைக் கவிழ்த்துவிட்டுப் பணப்பைகளுடன் கரைக்கு நீந்திவந்தான். பல திருட்டுக்களில் ஏமாற்றமடைந்த மாலை இத்துடன் விட்டு விடாமல் வியாபாரியிடம் காட்டிய நடிப்பைத் தொடர்ந்து நடித்தான். கரையில் நின்று பதறிப்பதறி ‘எசமானே, இதோ இருக்கிறேன். இப்பக்கமாக வாருங்கள், இதோ வாருங்கள்’ என்று கத்தினான். அப்படியும் அவர் வராததனால் எசமானிறந்ததற்குத் துடிப்பவன் போல் மணலில் புரண்டு அழுதான். அண்டையில் கூடியவர்களிடம் ‘என் எசமான் இறந்தார். அவர் பொருள்களை என்சின்ன எசமானிடம் ஒப்படைக்க வேண்டும், யாராவது ஆளனுப்புவீர்களா?’ என்றான். ஆயிரத்துக்கொருவன் இவன், மிக நம்பிக்கை நாணய முள்ளவன் என்று எண்ணிய மக்கள் அப்படியே அனுப்பி வியாபாரி மகனை வருவித்தனர். அதன்பின் வியாபாரி உடல் கண்டெடுத்து அடக்கம் செய்யப்பட்டது. எசமானபக்தி, நாணயம் ஆகிய நல்லபெயர்களைச் சம்பாதித்த மாலைக்குப் புதிய எசமான் பங்கும் பரிசும் வேறு கொடுத்தான். அதோடு, நீந்துவதை யாவரும் அறிந்திருக்க வேண்டும் என்றும், ஆற் றோரப் படகுகளில் படகோட்டி கட்டாயம் இருக்கச் செய்யவேண்டுமென்றும் எடுத்துரைத்துப் பெரிய அறிவாளி, சமூகசேவகன், மகாத்மா என்ற புகழ் உரைகளும் சம்பாதித்தான். இப்புகழுடன், அவன் சீரும் செல்வமும் வளர்ந்தன. ஆனால் இவ்வளவுக்கிடையில் வியாபாரியின் பையை மாலை ஓரிடம் புதைத்து வைத்திருந்தான். அவன் புதிய புகழ் அதை ஐயத்துக்கிடமின்றி நன்கு மறைத்ததுடன், அவன் உண்மைக்குப் பரிசாகப் புதிய எசமானனிடமிருந்து சிறிதளவு நிலமும் பொருளும் வந்தது. தான் சேமித்துவைத்த பொருள் என்ற சாக்குடன் வியாபாரி பொருளில் சிறிதெடுத்துப் புதிய எசமானனுடன் கூட்டாக வர்த்தகம் செய்தான். குத்தகை, ஈடு, தரகு முதலியவற்றில் வேறு ஈடுபட்டான். இவற்றில் கிடைத்த தென்ற சாக்கில் மீதிப்பொருளையும் வெளிக்கொணர்ந்து செல்வந்தனானான். தூரதேசங்களுக்குச் சென்று வைரங்களை விற்றும் வாங்கியும் வைர வியாபாரியாகவே அவன் ஆய்விட்டான். இப்போது அவன் திருட்டு மனிதர் எவர் கருத்திற்கும் தெரியாமல் மறைந்துவிட்டன. அவன் மனசாட்சி மட்டும்தான் அதற்குச் சான்று. ஆனால் இதனையும் மறக்கடிக்க அவன் வகைதேடினான். தன் வருவாயைப் பெருக்கிக்காட்டி அரசிய லுக்கு வருமானவரியை மிகுதியாகக் கொடுத்தான். வருமானவரி தானாகவருவதை அவர்கள் கணக்கிடவிரும்பவில்லை. பொது வேலை செய்து உழைப்பாளி என்று பேர்வாங்கினான். உழையாமல் சம்பாதிப்பது திருடுவதைவிட மோசம் என்று வேதாந்தம் பேசினான். இவையெல்லாம் வெற்றியடைந்தபின், அவன் தன் இறுதிப்பாடத்தைக் கற்றுக்கொண்டான். ‘தீய வழியால் சம்பாதித்தபின் தீயவழியை ஒழித்துவிடு. பின் நல்லவழியில் முன்னைய வாழ்க்கையை மறைக்கலாம்’ என்பதே அப்பாடம். ‘மாலை இன்று பெருஞ்சொல்வன் மட்டுமல்ல; பெரிய பரோபகாரி, தேசசேவகன்; அவனை மகாஞானி, கர்மயோகி, தெய்வஅருள் பெற்றவன் என்றுகூடப் புகழ்பவர் உண்டு’ என்று கிழவர் கூறிமுடித்தார். ‘கேட்டது கதையா, நாடகமா, வாழ்க்கையா’ என்று எல்லாரும் சுற்றிச்சுற்றிப் பார்த்தனர். ஒருசிலர் ‘யாரப்பா அந்த மாலை? அவன் ஊர் எது, பேர் எது?’என்று ஆவலாய்க் கேட்டனர். கிழவர் ‘மாலை என்பது அவன் பெயருமில்லை, அவன் ஊர் பேர் கூறமுடியாது. ஆனால் எத்தனையோ ‘மாலை’ கள் சமூகத்தில் உண்டு. முழுமையாக நீங்களும் நானும் எவரும் மாலையாய் ஒருவேளை இல்லாமல் போனாலும் மாலையின் அம்சம் நம் எல்லாரிடமும் உண்டு’ என்றார். ‘கிழவர் அவரைச் சுட்டிப்பேசினார், இவரைச் சாட்டிப் பேசினார்’ என்று சிலர் முணுமுணுத்துக் கொண்டனர். ‘அவர் மனக்கசப்படைந்து உலகத்தையே பழித்துக் கொண்டார்’ என்றனர் ஓரிரவர். வெற்றியின் மார்க்கம் பற்றி ஆராய்ந்தவர் மட்டும் “கதையை வளர்த்துப் பயனைமறைத்துவிட்டார். கதையைக் கவனித்தால் நான் சொன்னதுதான் சரி” என்று அவரவர் கொள்கைக்கேற்றபடி அதற்கு விளக்கம் கூறிக்கொண்டு போனார்கள். 8. இன்பவாழ்க்கையின் உரிமை ‘அடகடவுளே, நம் அம்முவின் கணவனல்லவா இறந்து விட்டான்’ என்ற கூறித் தான் படித்துக்கொண்டிருந்த தந்தித் தாளைக் கீழே வீசினார் சம்பு. அதைக்கேட்டுக் கொண்டிருந்த அவர் மனைவி சாலு ‘என்ன, என்ன அம்முவின் கணவனா இறந்துவிட்டான். ஐயையோ, இனி என்ன செய்வோம். அவள் மணவினைக்குப்பின் மன்றல் நிறைவு விழாக்கூட நடை பெறவில்லையே. என்ன கொடுமை!’ என்ற அழுது அங்கலாய்க்க லானாள். என்ன அரவம் என்று பார்க்கவந்த அம்முவிடம் சாலு ஒன்றும் சொல்லமாட்டாமல் ‘கண்ணே உன்விதி இப்படியா அமையவேண்டும். என் பாவம் உன் வாழ்வையும் கெடுக்க வேண்டுமா?’ என்று அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள். சம்புலிங்க ஐயரும் விசாலட்சியம்மையும் (சாலு) தம் மட்டான வரும்படியில் காலந்தள்ளி வந்தனர். மகள் நல்வாழ்வை எண்ணி உள்ள பொருளை எல்லாம் திரட்டி, உயர் கல்விக்காகப் பயின்றுவந்த சீனுவுக்கு அவளை மணமுடித்து வைத்தனர். அவள் பருவமடைந்த பின்னும் சீனுவின் தாயான தைலம் பெருந்தொகை தந்தாலல்லாமல் மன்றல் நிறைவு விழா நடத்த முடியாது என்று சொன்னதனால் அவள் அதை எதிர்பார்த்துத் தாய் வீட்டிலிருந்தாள். இந்நிலையில் தாய்தந்தையரும் அதனை விட அம்முவும் அடைந்த மனத்துயரை வாசகர்களே ஊகித்துக் கொள்ளலாம். மணவிழாவின் போது பொம்மை வைத்து விளையாடும் சிறுமியாயிருந்தவள் அம்மு. மணவினை என்றால் என்ன என்பதை அவள் இப்போதுதான் அறியத் தொடங்கிய பருவம். அதற்குள் பேரிடிபோன்ற இச்செய்திகேட்டு அவள் எண்சாணும் ஒரசாணாகக் குன்றினாள். அவள் முகம் குருதிக்களை நீங்கி விளறிற்று. சாலு அவளைக்கட்டிக்கொண்டு ‘என் ஒளியிழந்த மாணிக்கமே! உன் பவிசும் அதுபோன போக்கும் அறியக்கூடிய வயதுகூட உனக்கு இன்னும் வரவில்லையே. எல்லாரும் நீ கண்ணும் கைந்தலையுமாய் இருந்து கழுத்து நாண் கலையாது நல்வாழ்வு பெறுவாய் என்று கூறுக்கேட்டு மகிழ்ந்திருந்தேனே. என் மகிழ்ச்சி என்னாயிற்று!’ என்று புலம்பினாள். அம்முவின் கணவனுக்கு எந்தவிதமான சொத்தும் கிடையாது. அம்முவின் தாய்வீட்டில் இருந்த பொருள் எல்லாம் பெரும்பாலும் அவள் மணவிழாவிலும் அவன் அணிகலன் களிலும் செலவாய்விட்டன. ஆகவே, சீனுவின் அழவுவினை களுக்கு அம்முவின் அணிகலன்களை விற்றே செலவு செய்ய வேண்டியதாயிற்று. அவள் மணவினையின் போது தாயகத்தி லிருந்து அவளுக்கு அளிக்கப்பட்ட கலங்களும் தட்டுமுட்டுப் பொருள்களும் விற்றுச் செலவு செய்யப்பட்டுவிட்டன. அம்மு கணவனை இழந்ததுடன் வாழ்க்கைக்கான வகையுமற்றவ ளானாள். சீனுவுக்கு அவன் வீட்டில் தாய் தைலம் ஒருத்தி மட்டுமே யிருந்தாள். அவள் பொரள் மீது பேராவல் கொண்டவள். அக்காரணத்தாலேயே அம்மு வீட்டாரை அவள் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தாள். இப்போது மைந்தனிறந்த துயரத்துடன் அவன் பெயரால் அவளுக்கு அம்மு வீட்டாரிடமிருந்து பணம் பறிக்க வகையில்லையே என்ற துயரமும் சேர்ந்தது. அவள் துயரம் இப்போது கோபமாக உருவெடுத்து அம்முவின் மீது பாய்ந்தது. அவள் வந்தவர்களிடமெல்லாம் அம்முவின் பொல்லாத கிரகம் தன் வாழ்க்கையின் கொழுகொம்பாயிருந்த தன் மைந்த னுயிரைக் குடித்துவிட்டதென்று ஒப்பாரிவைத்தாள். அத னிடையே அம்முவின் பெற்றோருக்கும் போதிய வகைமாரிகள் கிடைத்தன. அம்மு சிறுபிள்ளையாயினும் மிகுந்த உலக அறிவுடை யவள். கணவனை அதிகம் கண்டறிந்தவளல்லளானாலும் அவனிடம் ஆழந்த நேசம் வைத்திருந்தாள். தைலம் தன்னையும் தன் பெற்றோரையும் எவ்வளவோ வைதாலும் தன்னை அவமதித்தாலும், தன் கணவன் இறந்ததுபற்றி அவள் கொண்ட துயரம் அம்முவை உருக்கிற்று. தனக்கும் அவளுக்கும் மட்டுமே பொதுவான இத்துயரத்தால் அவள் தைலத்தின் மிது பாசங் கொண்டாள். மேலும் உண்மையில் கைம்பெண்ணுக்குத் தாயகத்திலும் இடமில்லை, வேட்டகத்திலும் இடமில்லை என்பதை அவள் அறிந்தாளானாலும், கைம்பெண்ணுக்குரிய வசவு கேட்பதானால் தாயகத்தாரிடமிருந்து அதைக் கேட்பதைவிட வேட்டகத்தாரிடம் கேட்பது நன்று என அவள் எண்ணினாள். ஆகவே தைலத்துடனேயே வாழ எண்ணிக் கணவனிறந்த சில நாட்களுக்குப்பின் அவளைக் காணச் சென்றாள். தைலம் அவளை முகங்கொடுத்துக்கூடப் பாராமல் வாளா இருந்தாள். அம்மு முறைப்படி அவள் காலடியில் விழுந்து வணங்கி அவளைத் தாவிக்கட்டிக்கொண்டு “மாமி, என்னிடம் ஏன் பாராமுகமாயிருக்கிறீர்கள். தாங்கள் மைந்தனை இழந்து துயரமடைகிறீர்கள். நான் கணவனை இழந்து துயருறுகிறேன். துயரத்தால் ஒன்றுபட்ட நம் வாழ்வை ஒன்றாகவே கழிக்க வந்திருக்கிறேன். என்னை நீங்கள் வெறுத்துத் தள்ளக்கூடாது” என்றாள். தைலம் அவள் பிடியை உதறிக்கொண்டு “உனக்கு இங்கே உணவுகொடுப்பது யார்?” என்றாள். அம்மு: “மாமி, நான் தங்களுடனிருந்து உழைக்கிறேன். நான் நம் உழைப்பின் பயனை உண்போம். யார் நமக்குக் கொடுக்கவேண்டும்? ஏதோ உழைத்துழைத்துச் செத்தாலும் நம் அன்புக்குரியவருடன் விரைவில் போய்ச் சேரலாமல்லவா?” கிழவி கோபங் கொண்டு “நீ வேண்டுமானால் சாகலாம் நான் சாக விருப்பங்கொள்ளவில்லை. உன்னோடிருப்பதும் எனக்கு மகிழ்ச்சியில்லை. உன்னைக் காணும் போதெல்லாம் இறந்த என்மகனை நான் எண்ண வேண்டிவரும். ஆயினும் உண்மையிலேயே உனக்கு என்னிடம் பாசம் இருந்தால் உன் தாய் தந்தையரிடமிருந்து எனக்குப் பொருள் தேடிக்கொண்டு வரலாம்” என்றாள். அம்மு: அவர்கள் செல்வர்களல்லவே. செல்வமிருந்தால் கூடப் பிறருக்கு யார் நாள்தோறும் கொடுப்பார்கள். எனக்கு நீங்கள் கணவனைப் பெற்றதாய். நான் தான் தங்களுக்குக் கடைமைப்பட்டவள். தைலம்: போதும் பசப்புக்காரி, எனக்கு உணவு கூடத் தராதவர்களுக்குப் பரிந்து அங்கே உண்ணும் உணவை இங்கே உண்ணலாம் என்று வந்தாயோ? அம்மு: அப்படியொன்றுமில்லை மாமி. எங்கும் நான் உழைத்து உண்ண வேண்டியவள்தான். இங்கு உழைப்பது உரிமை என்றுமட்டுமே நினைத்தேன். தைலம்: இங்கே உனக்கென்ன உரிமை? பாசம் எல்லாம் அங்கே, பரிவெல்லாம் இங்கே. போதும் உன் உரிமை. என் மைந்தனைக் கொன்றுதின்றாயே. அந்த உரிமை போதாதா? அம்மு: அம்மா, அவர் இறக்கும் போதுநான் இங்கேகூட இல்லையே. மேலும் அவருக்காக நீங்கள் வருந்துமளவு நானும் வருந்துகிறவளாயிற்றே. நான் கொன்றேன் என்று அடாப்பழி கூறலாமா? தைலம்: நீ கொல்லாவிட்hல் உன் சாதகபலன் கொன்றது. எல்லாம் ஒன்றுதானே. அம்மு: நீங்கள் சாதகம் பார்ததுத்தானே யம்மா மணம் செய்வித்தீர்கள். தைலம்: அதெல்லாம் இப்போது ஏன் அளக்கிறாய்? என்னிடம் இனி என்ன வழக்கு? அதிலும் உன்னைப்போல் கணவனிறந்த பின்பும் துரோகம் செய்கிறவள் கண்ணில் கூட விழிக்கக்கூடாது. அம்மு: நான் ஒரு துரோகமும் என் கணவருக்குச் செய்ய வில்லையே! தைலம்: எனக்கென்ன கண்ணில்லையா? கணவன் இறந்து இவ்வளவு நாளாயிற்று. இன்னம் கூந்தலை விரித்துக்கொண்டு ஒய்யாரச் சேலையுடன் என்முன் வந்து பேச உனக்கு எவ்வளவு திண்ணக்கம்? அம்மு: மாமி, இளவிதவைகள் மொட்டையடிப்பது மில்லை, வெள்ளை கட்டுவதுமில்லை. இது உங்களுக்குத் தெரியாததல்லவே. ஏனிப்படி வீண் பழி கூறுகிறீர்கள்? தைலம்: நான் ஏன் உன்னிடம் எதவும் கூறவேண்டும். நீ வந்து என் மகனிடம் மிகவும் பற்றுதலுள்ளவள் போல் நடித்த னால் கூறுகிறேன். கணவனிடம் அன்புடையவர்கள் கணவ னிறந்தபின் இவ்வழக்குகளை எண்ணமாட்டார்கள். நானெல் லாம் கணவனிறந்த அன்றே மொட்டையடித்துக் கொண்டேன். அம்மு: நீங்கள் அப்போது 40 வயதாயிருந்தீர்கள். 1 வயதாயில்லையே! தைலம்: நாங்கள் 15 வயதில் கணவனைக் கொல்லும் பழிகாரிகளாயிருந்தால்தானே. நான் சொல்லுகிறேன். என்னை நீ கேட்காவிட்டாலும் சொல்லுகிறேன். என்ன வயதானாலும் அழகு செய்வது இளைஞர்களிடையே உல்லாசமா யிருப்ப தற்குத்தானே? இப்பேர்ப்பட்டவர்கள் இரண்டாம் மணங்கூடச் செய்வார்கள். என்னைப் பொறுத்தமட்டில் தலை மொட்டை யடிக்காது இவ்வீட்டில் நீ காலடி எடுத்து வைக்கவேண்டாம்! அம்மு, “என்னால் மொட்டையடித்துக் கொள்ளவும் முடியாது. நான் உங்கள் வீட்டுக்கு வரவுமில்லை” என்று கூறி விட்டுத் திரும்பினாள். அம்மு வீட்டில் தைலத்தைப்போன்ற எண்ணங் கொண்டார் இல்லாமலில்லை. தாய்தந்தையர் அம்மு சிறு பிள்ளையாதலால் மொட்டையடிக்க வேண்டுவதில்லை என்றே சொன்னார்கள். ஆனால் அம்முவின் அண்ணன் மாதேவன் மொட்டையடிக்காவிட்டால் குடும்பத்திற்குக் கெட்டபெயர் என்று வாதிட்டான். அறுத்துக்கட்டிக் கொள்ளும் (விதவை மணம் செய்யும்) வகுப்பனிர்தான் மொட்டையடிக்காமலிருப்பர் என்றும் அவர்களைப் பார்த்து மற்றவர்களும் கெடுகிறார்கள் என்றும் அவன் விளக்கப் புகுந்தான். மாதேவன் வாதத்தால் வேறு எந்தப் பலனும் ஏற்பட வில்லையானாலும் அவன் கூறிய விளக்கம் அம்மு மனத்தில் புதிய எண்ண அலைகளை உண்டுபண்ணின. இந்நாட்டிலேயே அறுத்துக்கட்டும் வகுப்புக்கள் இருக்கின்றன என்று அவள் கேட்டது அதுதான் முதல் தடவை. அதனுடன் பல சீர் திருத்தவாதிகளும் சமயத் துறையறிஞர்களும் பண்டைக் காலத்தில் தமிழர்களிடையிலும் பிறநாடுகளிலும் இவ்வழக்கம் இருந்ததென்று கூறியதை அவள் படித்திருந்தாள். சாத்திரமறிந்த சில பண்டிதர்கள் வேண்டாவெறுப்பாக அதை ஒத்துக் கொள்வதையும் அவள் கவனித்திருந்தாள். இளவிதவைகள், அதிலும் மணவாழ்வின் தொடர்பேயில்லாத அவள் போன்ற கன்னி விதவைகளாவது மணந்துகொள்ள நேர்மையான சமூகம் வழி வகுப்பதில் தவறில்லை என்றும் அவள் எண்ணியதுண்டு. இப்போது தன் வாழ்க்கையிலேயே இந்தக் கேள்வி எழுந்து விட்டது என்பதை அவள் எண்ணிப் பாராதிருக்க முடியவில்லை. இயற்கையில் காதல் வாழ்க்கை இன்னதென்று அறியாத அவள் உள்ளத்தில் இவ்வெண்ணங்கள் முழுவதும் ஆராய்ச்சி யாக மட்டுமேயிருந்தன. தாய், தந்தை அண்ணன் ஆகியவர்கள் நாளாசரித்தொடர்பில் இதையெல்லாம் அவள் மறந்தாள். அவ்வப்போது அண்டை அயலார் கண் அவள்மீது படும். அவள் ஓடி ஒளிந்து கொள்வாள். அவர்கள் இளைஞர்களானால் அவள் சற்றுக் கோபமடையக் கூடச் செய்வாள். விதவைகளிடம் இந்தச் சமூகம் ஐயப்படுகின்றது: அவர்களைக் கட்டிக் காக்கிறது. ஆனாலும் அடுத்தவீட்டு விதவைகளை ஊடுருவிப்பார்ப்பதை இந்தச் சமூகத்து மக்கள் மானக்கேடென்றும் எண்ணுவதில்லை. என்ன வஞ்சகச் சமூகம்!’ என்றெண்ணுவாள். சிலசமயம் “ஆண்கள் வெட்கமில்லாமல் மூன்றாவது நாலாவது மனைவி கட்டிக் கொள்கிறார்கள். சிலசமயம் ‘ஒருவர் இருக்கும் போதே பலரைக் கட்டிக் கொள்கிறார்கள். பெண்களுக்கு அம்மாதிரி செய்யும் உரிமையைத் தடுத்ததுடனில்லாமல் அவர்களைப் பழிக்கிழுத்துவிட்டு அழித்து, தாங்கள் குற்றமற்றவர்கள் போல் தப்பிவிடவும் பார்க்கிறார்கள். ஒரு பாலுக்கு ஒரு நீதி என்ற இவ்வாண்கள் சட்டம் எவ்வளவு கொடுமையானது!’ என் றெண்ணுவாள். அவர்கள் குடும்ப மருத்துவரான முதியவர் ஒருவர் இருந் தார். அவருடன் அவர் புதல்வன் எக்ஞகாராயணனும் வருவான். தந்தை எல்லார் நலங்களும் விசாரித்துப் போவதுண்டு. மணமாகாத இவ்விளைஞன் அம்முவை அண்டாது விலகி நடந்தாலும் அவள் பற்றி மிகவும் பரிந்து பேசுவான். குறிப்பாக அவளைக் கவனித்தும் வந்தான். அம்முவை யறியாமல் அவள் கவனம் அவன் மீது சென்றாலும் அவள் அது தனக்துத்தகாத நெறியெனத் தன்னையடக்கிக்கொள்வாள். ஒருநாள் யாருமில்லாத சமயம் எக்ஞன் அம்முவின் எதிர்வந்து ‘அம்மு, உன்னிடம் ஒரே ஒரு செய்தி கூறவேண்டும். கோபிக்காமல் கேள். நான் மற்றவர்களைப் போல் உன்னிடம் கெட்ட எண்ணத்துடன் நடக்கமாட்டேன். உன் மனநிலை யையும் ஒழுக்கத்தையும் நான் அறிவேன். உன்னை மணஞ்செய்து கொள்ள நான் சித்தமாயிருக்கிறேன். அவ்வுரிமையுடன்தான் உன்னிடம் பேச விரும்புகிறேன்’ என்றான். அவனது மனத்தின் பாசம், அவன் நடை, தோற்றம் ஆகியவற்றில் விளங்கிற்று. அவன் நேர்மை அவன் பேச்சில் தெளிவாகத் தோன்றிற்று. அவன் தன்னிடம் பிற இளைஞர் போல் வசமுற்றும் தன் ஐம்புலனுமடக்கிக் கொண்டு நடந்ததை அவள் அறிவாள். அந்நிலையில் அவனிடம் உண்மை உரைக்க எண்ணினாள். ‘அன்பரே, என் மனத்தை நான் இன்னும் அறிய வில்லை. சமூகத்திற்கு நான் அஞ்சுகிறேன். இரண்டாம் மணம் செய்யவும் துணியவில்லை. எவர் விருப்பத்திலும் ஏமாந்து விழுந்து தவிக்கவும் விரும்பவில்லை’ என்றாள். எக்ஞன் அன்று மனமுடைந்து சென்றான். ஆனால் இதன் பின் அவன் துணிந்து தனிமையில் அவளுடன் பேசலானான். ‘இரண்டாம் மணம் செய்து கொள்பவர் பலர் பெருகி வருகின்றனர். இரண்டாம் மணம் செய்யாதவர்கள் எல்லாரும் முற்றிலும் தம்மைக் கட்டிக் கொண்டு தூய வாழ்வு வாழ் கிறார்கள் என்பதற்கில்லை. மறுமணமின்றி மனங்சிதைவதிலும் தவறுவதிலும் மறுமணம் செய்தல் மேலானது. அம்மு போன்ற பெண்கள் காதலறியாமல் கடமைமட்டுமறிந்த மனைவியர். அவர்கள் மறுமணம் உண்மையில் மறுமணமேயன்று; முதன் மணமேயாகும்’ என்பன போன்ற பல உண்மைகளை எக்ஞன் அவளிடம் பன்னிப்பன்னிக் கூறினான். அம்மு மட்டும் இணங்கினால் போதும், பிறரை நாளடைவில் இணங்கவைக்கும் திறம் தனக்கு உண்டு என்றும் அவன் உறுதி கூறினான். ஆனால் அம்முவின் மனம் இருதலைக் கொள்ளியாக இன்னும் ஊசலாடவே செய்தது. “என் தாய்தந்தையர் வெறுக்கும் செய்தியை நான் செய்ய ஒப்பமாட்டேன்” என்பாள் அவள். எக்ஞன் நீ பிறந்ததுகூட உன் தாய்தந்தையர் விரும்பியன்று. பிறந்தபின் அவர்கள் விரும்பினர்; அவ்வளவுதான்; அதுபோல் அவர்கள் விரும்பி நீ காதல் கொள்ளமுடியாது. நீ காதலிப்ப வரை அவர்கள் விரும்பி ஏற்பர், அவ்வளவுதான். அம்மு: ‘காதல் மனத்தைப் பொறுத்தது. ஆனால் அதைப் பிறரறியச் செய்வதுதான் செயலாகும். நான் என் காதலை உங்களிடம் காட்டியது கூடத்தவறு. ஆகவே என் தாய் தந்தையரை மீறி நான் உங்களை மணந்து கொள்ளத் துணியவில்லை’ எக்ஞன்: ‘நீ துணியவேண்டாம். நான் துணிகிறேன்’ என்று அவளை இழுத்துத் தழுவிக்கொண்டான். அவள் உள்ளூர மகிழ்ச்சி கொண்டும் அச்சத்தால் உடல் நடுங்கினாள். எக்ஞன் அவள் அச்சந்தீர ‘நீ எதற்கும் அஞ்சவேண்டாம். இப் போதே நீ என் மனைவி என்று நினைத்துக்கெள். யார் பிரித் தாலும் பிரியாதபடி உன்னைச் சிலநாளில் மணந்து கொள் கிறேன். கூடுமானால் இருவர் பெற்றோரும் இணங்கக் கூடா விட்டால் அவர்களை மீறி மணந்து கொள்வோம். ஆனால் பெற்றோர்களை மீறியதாக எண்ணவேண்டாம். மீறிய குற்றத்தையும் மீறவைத்த குற்றத்தையும் என் மீது போடு’ என்றான். அவன் வீரமும் பெருந்தன்மையும் கண்டு அவள் பூரித்தாள். ஆயினும் ‘தாய்தந்தையரை எக்காரணம் கொண்டு மீறினாலும் தவறுதானே’ என்றாள். ‘உன் நியாயப்படியே உன்னிடம் பேசுகிறேன். மணமான பின்னும் அப்படியா?’ ‘இல்லை’ ‘சரி நான் கணவனாய் விட்டேன். உன்னையும் மீறி! இனி நீ என்னைத்தான் மீறக்கூடாது. சரிதானே’ அவள் தலை குனிந்தாள். அவள் வாழ்வின் மாறுதலை அவள் கூறித் தாய் தந்தையர், அண்ணன் அறியவேண்டி வரவில்லை. என்றுமில்லா அவளது முகமலர்ச்சியே அவர்களுக்கு வியப்பை ஊட்டின. அவள் அவளுடைய மணவிழாவின் ஒப்பனையின் போது கூடப் பொன் வேய்ந்த பூ மொட்டையாய்த்தானிருந்தாள். ‘இன்றோ அன் றலர்ந்த பொன் மயமான செந்தாமரை மலராய்க் காட்சி யளித்தாள். திருமகளின் உயிரோவியம் போல நின்ற அவளைத் தாய் கட்டிக் கொண்டு ‘என்ன மாறுதலம்மா இது. காலத்தில் மலராத இம்மலர்ச்சி கண்டு நான் களிப்பதா, கண் கலங்குவதா அம்மா’ என்றாள். அம்மு சற்றுநேரம் வாளாநின்றாள். பின் ஒருவாறு தெளிந்து ‘நான் மனமறிந்து என்ன தவறும் செய்யமாட்டேன் என்று உங்களுக்குத் தெரியுமே, அம்மா. ஆனால் என் செயலுக் கிடமின்றி எக்ஞர் என்னை மறுமணம் செய்து கொள்ள உறுதி கூறிவிட்டார். அவர் கணவனுரிமையை ஏற்றுக் கொண்டார். நீங்கள் வாழ்த்தினால் நான் மனைவி உரிமை பெறுவவேன்’ என்றாள். சாலுவால் ஒன்றும் பேசமுடியவில்லை. சம்புவுக்கோ குரல் கம்மிற்று. இருமுறை கனைத்துக்கொண்டு விக்கிவிக்கி ‘என்னால் உன்னைக் குறைகூற முடியவில்லை அம்மா? உன் நிலையிலுள்ள பெண்கள் உள்ளத்துயரை யாராலும் ஆற்றமுடியாது. அவர்கள் வாழ்வைத்தான் அடக்குவார்கள். அல்லது அழிப்பார்கள். நீயோ உன்னைக் கூடுமான மட்டும் அடக்கிக் கொண்டு வந்திருக்கிறாய். உன் பொறுப்பை ஏற்றவரும் தகுதியுடன்தான் நடந்திருக்கிறார். பெற்றவன் என்ற முறையில் ஊருக்கு நான் அடிமை. ஆனால் அறிவும் மனிதத்தன்மையும் உடையவன் என்ற முறையில் நான் உன்னை வாழ்த்துகிறேன். இதுதான் உன் முதல் காதல் அனுபவம். உன் காதல் மணம் நன் மணமாகுக’ என்றார். சாலுவுக்கு அவரவ்வளவு அறிவின் துணிவு வரவில்லை. ஆனால் அவர் மனக்குளிர்ச்சி அவளையும் ஆட்கொண்டது. அவள் மீண்டும் அம்முவைத் தழுவி உச்சிமோந்து “எங்களைப் பழி சூழ்ந்தாலும் சூழட்டும், அம்மா. நீ மகிழ்ச்சியா யிருந்தால் போதும். அறிவுமிக்க உன் அப்பாவே துணிந்து உன்னை வாழ்த்திவிட்டார். பெற்ற வயிறு உன்னை வாழ்த்தக் கேட்கவா வேண்டும்!” என்றாள். இருவர் மனப் போராட்டத்திடையேயும் அவர்கள் அன்பின் மடிவைக் கண்டு அம்மு கனிவுடன் இருவர் காலடி யிலும் விழுந்து வணங்கினாள். அச்சமயம் மாதேவன் அங்குவந்து ‘இது’ என்ன நாடகம்’ என்றான். சாலு அவனைத் தனியே ஒரு மூலைக்குக்கொண்டு சென்று அவனிடம் ஒன்றிரண்டு மொழிகளில் செய்தியைக் கூறினாள். அவன் நாணறுந்த வில்போல் நிமிர்ந்து நின்று ‘பேயே உனக்கு மணவாழ்க்கை வேறா’ என்றான். தாய்தந்தைய ரிருவரும்கூட அவன் சினம் கண்டு நடுங்கினர். அம்மு கண்ணீரும் கம்பலையுமாய் அவன் காலில் விழுந்து ‘என் பிழையைப் பொறுத்து என்னை வாழ்த்த வேண்டும் அண்ணா’ என்றாள். அவன் அவள் தலையை எட்டி உதைத்து ‘நீ பாழாய்ப் போக, உன்னை மயக்கிய அந்தப் பாதகனும் குட்டிச்சுவராய்ப் போக’ என்று எரிந்து விழுந்தான். இதுவரை ஒதுங்கிநின்ற சம்பு அவனைச் சரேலென்று அவள் பக்கமிருந்து தள்ளி ‘மனிதத்தன்மை அற்ற பதரே, அவளைக்குற்றம் சொல்ல உனக்கு என்னடா தகுதி. ஏதோ அவள் பெண்ணாய்ப் பிறந்ததனால் இவ்வளவு துன்பத்துக் காளானாள். அவளைப் போன்ற நிலை உனக்கு வந்தால் நீ எத்தனை தடவை மணம்செய்து கொள்ளமாட்டாய்? மணம் செய்யாமலே தவறு செய்தால்கூட உன்னை யார் குறை கூறு வார்கள்?’ என்றார். சமயப்பற்று மிக்க தந்தையிடமிருந்து இந்த நியாயத்தை எதிர்பாராத மாதேவன் கல்லாய்ச் சமைந்து நின்றான். பின் ஒருவாறு தேறி “அப்பா என் கோபத்துக்கு மன்னிக்க வேண்டும். ஆனால் நம் நிலைமையை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் பிராமணர். உங்கள் காலத்தில் நீங்கள் புரோகிதம் செய் தீர்கள். இப்போது நான் புரோகிதம் செய்து பிழைக்கிறேன். கோயிலில் பூசைசெய்தும் பிழைக்கிறேன். என் தங்கை மறுமணம் செய்தால் என் வாழ்க்கை என்னாவது?’ சம்பு: வேறு நல்ல நாணய முடைய பிழைப்பு உனக்குச் செய்யத் தெரியாதானால் அதற்காக உன் தங்கை வாழ்விழக்க வேண்டுமோ? அதற்காக உன் தங்கையென்று பாராமல் உதைக் கிறாய். பழி பேசுகிறாய்; நீயும், உன் புரோகிதமும்!’ என்று காய்ந்தார். மாதேவனுக்குத் தந்தையும் தாயும் தங்கை பக்கமாயிருந்து தன்னை யவமதித்தது போலத் தோற்றிற்று. ‘நீங்கள் எக் கேடேனுங் கெடுங்கள். நான் போகிறேன் என்றான். சம்பு: ‘மாதேவா. நீ அவ்வளவு எளிதாகப் போய் விடலாம் என்று எண்ணாதே. உனக்குத் தங்கையின் மணம் பிடிக்கா விட்டால் கண்டித்திருக்கலாம், வாதாடலாம். அவளை விட்டு நாம் எப்படி விலக முடியும். அவளை நீ பழித்தது தவறு. அதனைப்பின் வாங்கிக் கொண்டு அவளுக்கு நல் வாழ்த்துக் கூறு. இல்லாவிட்டால் நான் உன்னைப் பழிக்க நேரிடும். அதோடு இவ்வீட்டில் நீ காலடியும் எடுத்து வைக்கக் கூடாது’ என்றார். மாதேவன் ஊர்க்கோபத்தைவிட இப்புதிய புரட்சிகரமான வீட்டுக் கோபத்துக் கஞ்சினான். தங்கையை நோக்கி. ‘எங்கே வாழ்ந்தாலும் நீ வாழ்வாயாக’ என்று கூறி விட்டுச் சென்றான். அம்முவிடமிருந்து இச்செய்திகளை அறிந்த எக்ஞன் எதிர்பாராத இவ்வளவு விரைவில் அம்மு வெற்றி யடைந்தது கண்டு ‘பார்த்தாயா, என் வேலை தொடங்கு முன் உண்மைக் காதல் எவ்வளவு காரியம் சாதித்தது பார். இனி என் காதல் வரிசையையும் பொருத்துக் காணப்போகிறாய்’ என்று கூறி விட்டுச் சென்றான். எக்ஞன் தாய் தந்தையரிடம் எல்லையில்லாப் பற்று உடையவன். தன் உழைப்பாலும் அறிவுத்திறத்தாலும் ஆதர வாலும் அவர்கள் மனம் கோணாமல் நடந்து வந்தான். ஊரிலும் அவனுக்கு நல்ல வருவாயும் மதிப்பும் இருந்தது. எக்ஞன் சென்ற விடம் வம்பு வழக்கு எதுவுமிராது என்ற நல்ல பெயர் அவனுக்கிருந்தது. எக்ஞன் அன்று வழக்கத்திற்கும் அதிகமாக மகிழ்ச்சியுடன் நடமாடினான். அத்துடன் தாய் தந்தையரிடமும் என்றும் விட மிகுதியான ஆதரவுடன் நடந்தான். அது கண்டு அவன் தாய் மதுரம் ‘ஏதடா இன்று என்றையும்விட மகிழ்ச்சியாயிருக்கிறாய். ஏதாவது புதையலெடுத்திருக்கிறாயா?’ எக்ஞன்: ஆம், அம்மா புதையல் என்றே சொல்ல வேண்டும். நான் ஒரு பெண்ணைக் கண்டு பிடித்து மணம் செய்யும் உறுதி கொண்டிருக்கிறேன். மதுரம்: இதற்குள்ளாகவா? கண்டவுடனேயா இதை யெல்லாம் முடிவு செய்கிறது. எக்ஞன்: கண்டவுடன் அல்ல அம்மா, கண்டு பேசி முடிவு செய்த பின் தான் உங்களிடமும் அப்பாவிடமும் சொல்லும் துணிவு வந்தது. தந்தை: எங்களிடம் ஏன் அவ்வளவு அச்சம். எக்ஞன்: வேறொன்றுமில்லை. அந்தப் பெண் ஒரு... ஒரு விதவை. மதுரம்: விதவையா? ஏன் இருந்து இருந்து இரு விதவை யையா பார்க்கவேண்டும். எக்ஞன்: பெயரளவில் தான் விதவை. அவள் மணமான பின் குடும்பமாக வாழவேயில்லை. ஆனால் ஒரு பெண் மனத் திற்குப் பிடிப்பதற்கு அவள் விதவை, அல்ல என்று பார்த்து முடியுமா? தந்தை: நீ பணம் சம்பாதிக்கத் தொடங்கி விட்டாய். நன்மை தீமை தெரியும் வயதாய் விட்டது. எப்படியோ போ. பெண்யார்? எக்ஞன் ‘இவ்வூர்’ என்று கூறியதும் தாய் ‘விதவையைத் தான் கட்டுகிறாய். செல்வத்துடனாவது கட்டப்படாதா’ என்றாள். எக்ஞன்: நாம் ஏழையாயிருந்தால் இப்படிப் பிறர் சொல்வது நமக்கு எப்படியிருக்கும் அம்மா? மேலும் மணம் செய்யச் செல்வம் ஒன்றுமட்டுமா பார்ப்பது. மதுரம்: ஏதோ விதவையானாலும் பெண் அழகுதான். ஆனால் ஊரார் வசவு செய்வார்களே. ஏன் இந்தத் தொல்லை யில் மாட்டிக்கொள்கிறாய்? முன்பின் ஆலோசித்தப்பார். எக்ஞன்: அம்மா நான் ஊராருக்காக வாழவில்லை! மேலும் ஊரில் தடங்கல் செய்தால் காசி சென்று மணப்பதாக உறுதி செய்துவிட்டேன். தந்தை: அவ்வளவு எதற்கு எக்ஞா! இந்த அவசர புத்தியைவிட்டு விட்டு வேறு இடமாகப் பார்த்துச் செய். எனக்கு இது பிடித்தமில்லை. எக்ஞன்: அப்பா, தங்களுக்குப்பிடித்தமில்லை யானால் கூட வேறு வழியில்லை. நான் எங்கே சென்றாவது அவளை மணக்க உறுதி கொண்டுவிட்டேன். மகன் நன்மையில் நாட்டமடைய அத்தாய்தந்தையர்அவன் விருப்பத்திற்கு இணங்குவது வழக்கமாய்ப் போய்விட்டது. தம்மால் தீர்க்க முடியாத கடன் சிக்கல்களை அவன் வளர்ந்து குடும்பத் தொழிலை மேற்கொண்டபின் தீர்த்து வைத்தது அவர்கட்குத் தெரியும். ஊரே எதிர்த்தாலும் அவன் வெற்றி பெறும் ஆற்றலுடையவன் என்றறிந்த அவர்கள் அவனுக்கு வாழ்த்துக் கூறினர். இருபுறமும் தாய் தந்தையர் இணக்கம் பெற்றபின் அம்முவை எக்ஞன் தன் தாய் தந்தையரிடம் இட்டுச் சென்றான். இதுவரை அவளைப்பற்றிக் கேள்விமூலம் அறிந்த அவர்கள் அவள் அழகு, குணம் ஆகியவற்றை அறிந்து பழகப்பழக மகன் வற்புறுத்தலுக்கிணங்கிய இணக்கம் மனமார்ந்த இணக்க மாயிற்று. அவர்கள் அம்முவை மன மகிழ்வுடன் வாழ்த்தினர். கன்னி நறுமணம் போலவே, பூவுடனும் பொலிவுடனும் இன்னிசை யரங்குகளுடனும் அம்முவும் எக்ஞனும் மண முடித்துக்கொண்டனர். மணத்துக்கு ஆதரவாக ஒரு கட்சியும் எதிர்ப்பாக ஒரு கட்சியும் ஊரிலிருந்ததாயினும் ஒவ்வொருவராக எக்ஞனின் அன்பிலீடுபட்டு எதிர் கட்சியினரும் வந்து விட்டனர். அம்முவை வாழ்த்தும் முதியவர்களுள் தைலமே முன் னிலையில் நின்றாள். இதுகண்ட ஊரார் ஒவ்வொருவரும் வியப்பால் மூக்கில் கைவைத்தனர். அம்முவைக் காதலிக்குமுன்பே தைலத்துக்கும் அவன் இறந்த புதல்வனுக்கும் எக்ஞர் பல அரிய உதவிகள் செய்ததுண்டு. அவளைக் காதலிக்கத் தொடங்கிய பின் அவன் வாரந்தவறாது தைலத்தைக்கண்டு அவள் குறைகளை விசாரிப்பான். பணக் குறையே பெருங்குறையாகக் கூறிய அவளிடம் அவன் ‘நான் விரும்பும் பெண்ணை எனக்குக்கிடைக்கும்படி நீ உதவினால் உனக்கு விரும்பியதெல்லாம் தருவேன்’ என்றான். பெண் யார் என்று கேட்காமலே அவள் ஒத்துக் கொண்டாள். தெரிந்தபின் பணஆர்வம் அவ்வழி நிறுத்தியது. இதுவே அவள் நடைமாற்றத்தின இரகசியம். ஆனால் பிள்ளைக்குப் பிள்ளையாய் எக்ஞனும் தன் பழைய மருமகளும் நடப்பதுகண்டு அவள் உள்ளபடியே மன மாற்றமடைந்து அவர்களுடனேயே குடிவந்துவிட்டாள். மணநாள் கழிந்து மணமக்கள் அளவளாவியிருக்கும் போது அம்மு ஒருநாள் கணவனை நோக்கி ‘இவ்வளவு புரட்சிகரமான வெற்றி எப்படி நமக்குக் கிடைத்தது என்று எனக்கே புரியவில்லை’ என்றாள். ‘இன்பம் ஒவ்வொருவரும் பெறவேண்டும் உரிமை. அது பெறப் போராடச் சித்தமாயிருக்கவேண்டும் . அரை குறையாக அதனை நாடினால் கிட்டாது’ என்றான். ‘பெண்கள் தம் இன்பவாழ்வு தம் உரிமை எனக்கருதிப் போராடாததுதான் அவர்கள் குற்றம்’ என்று அம்மு அறிந்தாள். 9. நம்விதி நம் கையிலே துரைசாமி என்பவன் இராமாபுரத்தில் ஒரு செல்வன். அவனுக்குப் பல காணி நிலங்கள் இருந்தன. தன் மனைவி இறந்தபின் அவன் தன் இருபுதல்வியர்களை வளர்த்து அவர்க ளிருவருக்குமே தன் உடைமைகளை எல்லாம் பகிர்ந்து வைத் தான். மூத்த புதல்வியாகிய உருக்குமணி அறியாச் சிறுபருவ மாகிய பதினொன்றாம் வயதிலேயே விசுவநாதன் என்பவனுக்கு மணமுடிக்கப் பெற்றாள். இளையவளான இலட்சுமி சிறு குழந்தையாயிருந்தாள். தந்தையிறந்தபின் இருபுதல்வியர்கள் செல்வத்தையும் மேற்பார்க்கும் பொறுப்பு விசுவநாதனுக்கே ஏற்பட்டது. உருக்கு விசுவநாதனை மணக்கும்போது கணவன் என்றால் என்ன என்பதையே அறியாதவளாயிருந்தபடியால் விசுவநாதனை அவள் தன் தாய் தந்தையர் விருப்பப்படியே மணக்க நேர்ந்தது. ஆனால் தாய்தந்தையர் போயும் போயும் அவனைத் தேர்ந் தெடுத்ததற்குக்கூட காரணம் காண்பது அரிது. அவனிடம் பெண்கள் விரும்பும் அழகும் குணமும் நாகரிகமும் அறிவும் எள்ளத்தனை கூட இல்லை. ஆண்கள் விரும்பும் செல்வமும் இல்லை. அவனுக்குத்தகுதி உண்டானால் அது இரண்டே இரண்டுதான். ஒன்று அவன் தன் குடும்பச் செல்வ முழுவதையும் வழக்காடி இழந்தவன். ‘ஆயிரம்’ பேரைக் கொன்றவன் அரைமருத்துவன் என்ற நியாயப்படி இத் தோல்விகளாலேயே அவன் வழக்கு மன்றப் பழக்கமும் திறமையும் மிகுதியுடையவன் என்று உருக்குவின் தந்தை எண்ணியிருக்கக்கூடும். மேலும் ஆண்மகவில்லாத உருக்குவின் குடும்பத்திற்கு அவன் ஆண்மகவாய் வந்திருக்கத் தகுந்தவன். தனக்கென வீடும் செல்வமும் இல்லாததால் அவன் மாமன் இருக்கும்போதே மாமனார் வீட்டுப் பிள்ளையாய் இருந்து வந்தான். உண்மையில் விசுவநாதன் வழக்கு மன்றதைப்பற்றி அறிந்த தெல்லாம் வழக்கில் பணத்தை இறைப்பதெப்படி, செல்வத்தைச் சீரழித்து வழக்கிலும்தோற்பதெப்படி, ஒரு வழக்கை ஒன்பது வழக்காய்ப் பெருக்கி மன்றாடி வக்கீல்களைக் கொழுக்கவைப்ப தெப்படி என்பதுதான். துரைசாமி இறக்குமுன் தனக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தால் அதை அவர் பிள்ளைகூட்டிக் கொள்ளும்படி செய்து அவர் செல்வமுழுவதையும் நேரடியாகக் கைக்கொள்ள எண்ணியிருந்தான். ஆனால் அவனுடைய இவ் விருப்பம் கைகூடவில்லை. அவர் இருக்கும் காலத்திலெல்லாம் பிறக்காமல், இறந்தபின்னரே அவனுக்குப் புதல்வன் பிறந்தான். இக்காரணத்தால் அவன் தன் மாமனார் செல்வத்தில் தன் மனைவியின் செல்வத்தைமட்டுமே தனதெனக் கூறிக்கொள்ள முடிந்தது. அதுவும் மனைவி கையெழுத்திட்டால்தான். தன் கொழுந்தியாகிய இலட்சுமி சிறுமி யாதலால் அவள் பங்கை அவன் பயன் படுத்தமுடியாமல் அதன் வருவாயை மட்டுமே கள்ளக் கணக்கு மூலம் வீணாக்க முடிந்தது. விசுவநாதனுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது ‘பிச்சைக் காரப்பயல்- சற்று முந்திப் பிறந்திருக்கக் கூடாதா? இப்பஞ்சை பிறக்கும் நேரம் தெரியாமல் பிறந்து தன்னையும் பஞ்சையாக்கி என்னையும் பஞ்சையாக்கிவிட்டான்’ என்றான். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அவனுக்கு இன்னும் மூன்று பெண்கள் பிறந்தன. ‘முதலில் பஞ்சத்தால் வாடினேன். இப்போது பெரு வெள்ளங்களால் இன்னலுறுகிறேன். இரண்டுவகையிலும் எனக்குக் கேடுதான்’ என்பான் அவன். உருக்குவும் இலட்சுமியும் குழந்தைகளிடம் உயிராயிருந்தனர். தானாடாவிடினும் தசை யாடும் என்ற முறையில் அவனும் அவ்வப்போது குழந்தைக ளன்பில் ஈடுபடுவான். ஆண்டுகள் செல்லச் செல்ல இலட்சுமி வளர்ந்து மணப் பருவத்தை அணுகிவந்தாள். அவள் மணமானதும் அவள் பங்குச் செல்வம் விசுவநாதனை விட்டு விலகிவிடும் என்பதை அறிந்த அவன் கடன்காரர்கள் அவனைக் கடனுக்காக நெருங்கி முற்றுகையிட விரைந்தனர். பலர் வழக்கு மன்றில் அவனுக் கெதிராகத் தீர்ப்பு வாங்கினர். அவனுக்குத் தன் பெயரில் செல்வம் கிடையாது. மனைவிகொழுந்தி பேரில் மட்டுமே எதுவும் உண்டு. ஆகவே அவர்கள் அவனைக் காவலிட முயன்றனர். இந்நெருக்கடியில் கடன்காரர்கள் எதிர்பார்த்தபடியே கணவன் துயர்கண்ட உருக்குமணி தன் நிலங்களை விற்றுக் கடனடைத்து அவனை மீட்டாள். அதன்பயனாக இப்போது உருக்குமணி, குழந்தைகள் ஆகியவர்களை வைத்துக் காக்க விசுவநாதனிடம் இலட்சுமியின் செல்வம் மட்டுமே மீந்திருந்தது. அவளை மணம் செய்து கொடுத்தால் தான் ஓடெடுக்கவே வேண்டும் என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே அவ மணவினையைக் கூடியமட்டும் ஒத்திப்போடுவது என்பதே அவனது திட்டமாயிருந்தது. ஆனால் என்றேனும் ஒருநாள் இலட்சுமிக்கு மணமுடித்தே யாகவேண்டும். அவளை என்றுமே மணமில்லாமல் வைத்திருக்க முடியாது. எனவே அவள் செல்வமும் அதன் வருமானமும் தன் கையிலிருக்கும்போதே வேறு வருவாய்க்கு வழிதேட அவன் எண்ணினான். வழக்கிலும் சட்ட நுணுக்கங்களிலும் காலங் கழித்த அவனுக்கு ஒரு புது வழக்கு மூலம் வருவாய் தேடலாம் என்று தோன்றிற்று. தம்மீது காவற்சீட்டு (றுயசசயவே)ப் பெற்றுக் காவலிட முனைந்த கடன்காரர்கள் தன் மதிப்பைக் குறைத்தும் தனக்கும் குடும்பத்திற்கும் தொல்லை யுண்டுபண்ணியும் தொல்லை தந்ததற்கு அவர்களிடம் நட்டஈடு கோரி வழக்குத் தொடுத்தால் சட்டப்படி தன் நிலைக்கேற்றபடி ஐயாயிரம் அல்லது பதினாயிரம் பெறலாகும் என்றுஅவன் எண்ணினான். உருக்குமணி தன் மணவினையின் போது ஒன்றுமறியாச் சிறு பிள்ளையாயிருந்தாள். உலகமறிந்த தந்தை தனக்கேற்ற கணவனையே தேர்ந்தெடுப்பர் என்று தான்அவள் நம்பி யிருந்தாள். ஆனால் இப்போது அவர் தேர்ந்தெடுத்த கணவன் தன்னைநம்பி வாழ்பவர்கட்குத் தொல்லை உண்டு பண்ணுவதிலன்றி வேறெதிலும் தரமற்றவன் என்பதைத் தெளிவாக அவள் கண்டுகொண்டாள். தன் கணவன் என்ப தற்காக அவள் தன் செல்வம், தன் வாழ்க்கை ஆகிய எல்லா வற்றையும் கைவிடத் துணிந்தும், அத் தன்மறுப்புக்குக்கூட அவன் தகுதியற்றவன் என்று கண்டாள். தோல்விகளால்கூட அவன் தன் தவறுகளை அறிந்து திருந்துபவன் அல்லன் என்பது அவள் கண்ட உண்மை. விசுவநாதன் தன் புதிய திட்டத்தை அவளிடம் வெளி யிட்டான். ‘ஆங்கிலச் சட்டம் இருக்கிறதே, அதன் அழகே தனி தான்! மனக்கவலைக்குக்கூட ஒரு விலை வைத்து அது மதிப்பிட்டுத் தருகிறதே, அது நமக்கு எவ்வளவு நன்மையா யிருக்கிறது!’ உருக்கு: ‘ஆம். இப்போது உங்களுக்கு அது நன்மையாகத் தோன்றுவது உண்மைதான். ஆனால் அதனால் நமக்குத் தீமை யும் வராமலில்லை. ‘குன்றிராமன்’ வழக்கில் நாம் அவனுக்கு நட்டஈடு கொடுக்கவேண்டிவந்ததே! விசு: சட்டம் எப்போதும் நேர்மையாய் அமைவதில்லை. அமையாததும் ஒருவகையில் நல்லதுதான். ஆனால் எதிர் கட்சியார் அடிக்கடி மன்றத் தலைவர்களுக்குக் கைக்கூலி கொடுத்து வழக்கைக் கெடுத்து விடுகிறார்கள். உருக்கு: உங்கள் வழக்குகள் ஒன்றிலாவது நீங்கள் தோல்வி யடையாமலில்லை, தோல்விகள் அத்தனையும் எதிர்கட்சியின் கைக்கூலியினால்தானே! விசு: கைக்கூலி இல்லையானால் அவ்வளவு வழக்கிலும் எனக்குத்தானா தோல்வி வரவேண்டும்? ஆனால் இதை யெல்லாம் உன்னிடம் சொல்லி என்ன பயன்? நீ எப்போதும் என் எதிரிகள் பக்கம்தானே பேசுவாய்? உருக்கு: அப்படியானால் நானும் கைக்கூலி வாங்கியிருப் பேன் என்று சொல்லுங்களேன். விசு: அப்படிக்கூட நான் எண்ணக்கூடும். உருக்கு சற்றுநேரம் பேசாமலிருந்தாள். பின் “நான் சொல்வதைச் சொல்லி விடுகிறேன். நமக்கும் வழக்குக்கும் ஏழாம் பொருத்தம் . அதில் இப்போது வழக்குத் தொடுக்கவோ பணம் இல்லை. ஆகவே வழக்கு மன்றத் திசையை நாடாதிருந்தால் இன்றைய நிலையிலாவது காலந்தள்ள முடியும்” என்றாள். விசுவநாதன் இதற்கொன்றும் மாற்றம் தரவில்லை. மறுநாள் மாலை அவன் முகமலர்ச்சியுடன் மீண்டும் அவளிடம் வந்து ‘எனக்கு இப்போது ஒரு புதுவழி தோற்றுகிறது. அதன்படி நடந்தால் நம் தொல்லையெல்லாம் தீரும்’ என்றான். கணவன் அறிவுத்திறத்திலும் செயலாற்றலிலும் நம்பிக்கை யிழந்துவிட்ட உருக்குவுக்குக்கூட அவன் முக மலர்ச்சி ஒர் எழுச்சியை ஊட்டிற்று. மனக் கிளர்ச்சியுடன் ‘என்ன? உங்கள் பழைய வழிகளை விட்டுப் போகும்படி புதிதாக வேலை ஏதேனும் வந்துவிட்டதா? இந்தச் சோம்பல் பிழைப்பைவிட்டு வேலையில் ஈடுபட்டால் நல்வாழ்க்கைக்கு ஒரு விடிவு ஏற்படும்’ என்றாள். விசு: வேலையும் பிழைப்பையும் இந்தப் பிறப்பில் என்னால் ஆகாதவை. நடைமுறையில் செய்யக்கூடிய வழி ஒன்றையே கூறுகிறேன். உருக்குவுக்கு வந்த நம்பிக்கையும் கிளர்ச்சியும் வந்த வழியே மீண்டன. மீண்டும் வழக்கமான உணர்ச்சியற்ற குரலில் ‘சரி. உங்கள் திட்டத்தையே பார்ப்போம்,’ என்றாள். விசு: ஏன் இலட்சுமியை நானே மணந்து கொண்டால் அவள் செல்வத்தை வைத்துக்கொண்டு நாம் எல்லாரும் கவலையின்றி வாழலாமல்லவா? உருக்கு: இந்தப் பேடித்தனமான வழிதானா உங்களுக்கு அகப்பட்டது? இது என்ன பைத்தியக்காரத்தனமான எண்ணம்? ஒரு மனைவியை வைத்துக்கொண்டே வாழ வகையில்லாதவ னுக்கு இரண்டு இருந்து என்ன செய்ய? அதிலும் அவள் வாழ வேண்டிய சிறு குழந்தை உதவாக்கரைக் கிழவனைக் கட்டிவைத்து அவள் வாழ்க்கையை அழிக்க நான் ஒப்பமுடியாது. விசு: சரி, அப்படியானால் நீயும் உன் பிள்ளைகளும் பட்டினி கிடக்கச் சித்தமாயிருந்து கொள்ளுங்கள். இலட்சுமி வேறுயாரை மணந்து கொண்டாலும் அவள் செல்வம் அவ ளுடன் போய் விடும். உருக்கு: ஏன், நீங்கள் உங்கள் குடும்பத்தைக் காக்க ஏதாவது வேலை செய்வது தானே. நானும் ஏதாவது ஊழிய வேலைகள் செய்தும் பால், மோர் திண்பண்டங்கள் விற்றும் என்னா லானதைச் செய்கிறேன். விசு: நீ வேண்டுமானால் உழைக்கலாம். எனக்கு உழைத்துப் பணம் தேடிப் பழக்கமில்லை. நான் அவ்வழியில் கருத்தைச் செலுத்தவும் முடியாது. உருக்கு: நீங்களும் ஒரு ஆண் பிள்ளை என்று வெட்க மில்லாமல் கூறிக் கொள்கிறீர்கள். விசு: நான் யாரிடமும் அப்படி பெருமையடிப்பது கிடை யாது. என் இயற்கைப்படி நான் நடக்கிறேன். என் வழி உனக்குப்பிடித்தமானால் சொல்லு. அல்லது உன்பாடு. உருக்கு: நீங்கள் ஆண்பிள்ளை யல்லவானால் உங்களைக் கட்டிக் கொண்ட பழியை நான் சுமக்கிறேன். விசு: சரி. அப்படியே ஆகட்டும். ஆனால் இன்னொரு தடவை கூறுகிறேன். இலட்சுமி மணத்தினால் நமக்குப் பணம் இல்லாது போவதை மட்டும்தான் குறிப்பிட்டேன். தீமை அத்துடன் நிற்காது. நீ என்னையும் இழந்துதா னாகவேண்டும். நான் காவலிடப்படுவது உறுதி. உருக்கு: ஏனப்படி? விசு: இலட்சுமி கணவன் அவள் செல்வத்தின் வருவாய் பற்றிய வரவு செலவுக் கணக்குக் கேட்பது உறுதி. நம் வகையில் அவள் வருமானத்திலிருந்து நான் எடுத்துச் செலவிட்ட ஆயிரத்தைந்நூறு ருபாய்களையும் நாம் நம்பிக்கைமோசடி செய்ததாக நான் குற்றஞ் சாட்டப்படுவேன். உருக்கு: நம் இலட்சுமி அவ்வளவு தூரம் செல்ல இணங்க மாட்டாள். விசு: கட்டாயம் செய்வாள். மணமான பின் கணவன் செயலுடன் அவள் செயல் ஒன்றுபட்டுவிடும். அவள் தொடக் கத்தில் சிறிது தயங்கினால்கூட நயத்தாலோ பயத்தாலோ கணவன் வழிக்கு அவள் வந்து விடுவாள். உருக்கு: அதைநான் இது வரை எண்ணிப்பார்க்க வில்லை தான். ஆனால் மணமாகுமுன்பே இலட்சுமியிடமிருந்து எல்லாக் கணக்கையும் அவள் பார்த்துத் திருப்தி பட்டுக்கொண்டதாக எழுதிவாங்கிக் கொள்வோம். விசு: நீ வழக்கு நடவடிக்கை தெரியாது பேசுகிறாய், வயது வராதவளும் மணமாகாதவளும் ஆன ஒருத்தியின் கையொப்பம் செல்லுபடியாகாது. இலட்சுமியை நான் மணந்து கொள்வதைத் தவிர உண்மையில் வேறு நமக்கு வழியில்லை. அதற்கு ஏன் தடங்கல் கூற வேண்டுமென்பதை நான் உணரக் கூடவில்லை. பலதார மணங்களை நீ வெறுக்கிறாய் என்று கூற முடியாது. அத்தகைய பல மணங்களுக்கு என்னையும் இழுத்து கொண்டு போயிருக்கிறாய். மேலும் இன்னாரென்றும் இப்படிப் பட்டவன் என்றுந் தெரியாத ஒருவனுடன் மணம் செய்துகொண்டு உன்னையும் விட்டுச் செல்ல வேண்டுவதை விட இங்கே உன் னுடன் இருப்பது மேலல்லவா? தங்கையை விட்டுப் பிரியமனமில்லா உடன் பிறப்புப் பாசம் மற்றெல்லா நியாயங்களையும் விட உருக்குமணியின் மன உறுதியை இளக்கிற்று. அவள் மனமாற்ற மறிந்த விசுவநாதன் மேலும் ‘நான் என் நன்மையை மட்டும் எண்ணிக் கூறவில்லை. எல்லார் நன்மையையும் கருதித் தான் கூறுகிறேன்!’ என்றாள். கடைசியில் உருக்குமணி ‘சரி இலட்சுமி இதனை ஏற்றால், என்னால் தடங்கலிராது’ என்றாள். விசு: நன்றாகச் சொன்னாய். இலட்சுமிக்கு இவை பற்றி என்ன தெரியும்? அவள் சிறுபிள்ளை. நீ என்னை மணந்து கொண்டபோது உன்னைக் கேட்டுக் கொண்டா செய்தார்கள். அப்படி யிருந்தும் நாம் இன்பமாக வாழவில்லையா? உருக்கு அடைந்த இன்பம் அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் பேசிப்பேசி அசந்து போனாள். நாலு புறமும் ஓடித் திக்குமுக்காடிய முயல் இனிச்சாகவாவது செய்வோம் என்று சோர்ந்து விழுவது மாதிரி அவர் வழி நிற்க முடிவு செய்தாள். ஆனால் அவள் உணர்ச்சியின்மை ஒரு கொட்டாவியாய் வெளி வந்தது. ‘சரி, எல்லாம் உங்கள் மனம் போல் நடக்கட்டும். ஆனால் எனக்கு ஒரே ஒரு உறுதி வேண்டும். இனிமேலாவது வழக்கு மன்றத்துக்குப் போகக் கூடாது’என்று கேட்டாள் உருக்கு. இதனைப் பலபட எதிர்த்தும் வழியின்றி விசுவநாதன் வேண்டா வெறுப்பாய் ஏற்றுக் கொண்டான். விசுவநாதன் முடிவு பற்றிக் கேள்விப்பட்ட இலட்சுமியின் சிற்றப்பனார் இதனை எதிர்த்து ஊர் முழுதும் பறையடித்தார். அதன் பயனாக உள்ளூரில் இலட்சுமியை விசுவநாதன் மணந்து கொள்ள முடியாதென்ற நிலை ஏற்பட்டது. ஆகவே விசுவநாதன் ஊராரை ஏமாற்றி வெளியூரில் சென்று மறைவாகக் காரியம் முடிக்க எண்ணினான். இராமேசுரத்திற்குப் புண்ணிய யாத்திரை செல்வதாகச் சாக்குக் கூறிக்கொண்டு அங்கே சென்றான். அத்திருப்பதியில் உள்ள பல்லாயிரம் குருக்களில் ஏழையாக ஒருவரைக் கண்டு பிடித்து இத் திருமணத்தை முடித்துத் தரும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. பொய்யர்கள் பலரிடம் பழகிப் பொய்மைகளைக் கரைத்துக் குடித்த அக்குருக்கள் மறைவாகத் திருமணம் செய்வதில் சூதிருக்கவேண்டும் என்று ஊகித்து அதனைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணிப் பெருந்தொகை கேட்டார். விசுவநாதன் அது நேர்மையற்ற தொகை என்று வாதிட்டும் அவர் ‘மணமும் நேர்மையற்றது தானே. பெண் கொடுக்கும் உறவினர் இல்லாதது எனக்குத் தெரியாததா? நீர் வேண்டுமானால் வேறு குருக்கள் பார்த்துக் கொள்ளும்’என்று உலுக்கவே வேறுபுகலின்றிக் குருக்கள் கேட்டுக் கொண்ட தொகை கொடுக்கப்பட்டது. இவ்வளவும் இலட்சுமியறியாமலே நடந்துவிட்டது. மணத்துக்கு மூன்றுமணி நேரமிருக்கும்போது உருக்கு தங்கையைச் சரிப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள். இச் செய்தியைக் கேட்டதும் சிறு குழந்தையாகிய இலட்சுமி கூட அக்காளிடம் சினங்கொண்டு சீறினாள். ‘என்ன அக்கா, அத்தானையா நான் மணம் செய்வது. உனக்குப் பைத்தியமா என்ன’ என்றாள் அவள். உருக்கு: என்னம்மா இதற்கு இவ்வளவு கோபிக்கிறாய்? காவேரி தன் தமக்கை கணவனை மணம் செய்து கொள்ள வில்லையா? நெறி தவறிய மூத்தோர் பசப்புச் சொற்களைக் குழந்தையின் கூரிய அறிவு சிதறியடித்தது. இலட்சுமி ‘காவேரி தமக்கை கணவனை மணந்தது தமக்கை யிறந்த பின். இருக்கும் போதல்ல!’ என்றாள். உருக்கு ‘நானும் இறந்திருந்தால் எவ்வளவோ நன்றா யிருக்கும்!’ என்று கண்ணீர் வடித்தாள். இலட்சுமி அவளைக் கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்களைத் துடைத்து ‘உன்னைப் புண்படுத்த நான் விரும்பவில்லை, அக்கா. என்னை ஏன் அத்தானை மணந்து கொள்ளச் சொல்கிறாய்!’ என்றாள். வறுமைத் துயரம், தங்கையன்பு ஆகியவற்றிடையே உருக்குவின் உள்ளம் ஊசலாடத் தொடங்கிற்று. அவள் ‘இலட்சுமி, உன்னிடம் நான் என்ன சொல்லட்டும்! எங்களிடம் பணம் இல்லை. நாங்களும் குழந்தையும் பட்டினியில்லாமல் வாழ உன் செல்வம் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் அதற்காகவும் உன் வாழ்க்கையைப் பாழாக்க நான் வற்புறுத்தவில்லை. நீ உன் நன்மையைக் கவனித்துக் கொள்’ என்றாள். இலட்: ‘அக்கா’ உங்களுக்கு உதவி செய்ய நான் எதுவும் செய்வேன். அத்தானை மணந்து கொள்வது ஒன்று தவிர வேறு எது வேண்டுமானாலும் சொல். உருக்கு தங்கையை மார்போடணைத்துக்கொண்டு கண் கலங்கினாள். அவளால் ஒன்றும் ‘பேசமுடியவில்லை. இலட்சுமி மீண்டும் ‘அக்கா உன் சொல்லை நான் தட்டுகிறேன் என் றெண்ணாதே. அத்தானுக்கு மனைவியிருக்கிறாள். நாலுபிள்ளை இருக்கிறது. அத்துடன் வயதுமாயிற்று. அவரை மணந்துதான் இந்தச் செல்வத்தை உங்களுக்குத் தரவேண்டுமா என்ன? நான் மணம் செய்யாமல் கன்னியாகவே இருந்துவிடுகிறேன். செல்வத்தை எல்லாரும் நன்றாகச் செலவு செய்யலாமே’ என்றாள். உருக்குவின் கன்னங்கள் வழியாகக் கண்ணீர் பெருகிற்று. அவள் இலட்சுமியை இன்னும் இறுகத் தழுவிக்கொண்டு ‘கண்ணே, நீ ஓர் ஒப்பற்ற மாணிக்கம். ஆனால் நான் படுபாவி, மனித உணர்ச்சிகூட இல்லாமல் இந்தக் காரியத்திற்கு உன்னிடம் பேச வந்தேன். நீ எனக்காக எந்தத் தியாகமும் செய்வாய். ஆனால் நான் அதை ஏற்கமாட்டேன். மணவினை முடிக்காமலே நாம் திரும்புவோம். வேறுபயனில்லாவிட்டாலும் அந்தப் பணம் பிடுங்கிக் குருக்களுக்கு மேலும் பணம் பிடுங்கும் ஆசையிலாவது ஏமாற்றம் வரட்டும். நாளடைவில் உனக்குப் பிடித்தமாக வேறு திருமணம் செய்துகொள்ளலாம்’ என்றாள். இலட்: ‘ஏன் அக்கா, நான் திருமணம் இல்லாமலே இருக்கிறேனே’ உருக்கு: ‘ஆம், நீயிருந்தாலும் நம்பாழும் சமயமும் சாதியும் அப்படியிருக்க வொட்டாதம்மா! கிழவனையோ பிணத்தையோ கட்டினாலும் அது கட்ட ஒட்டும். மணமில்லா திருக்க வாட்டாது. அதுமட்டுமா? இதோ பார்! உலக ஆசாரத்தின் கூத்தை! மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் உணவு உடைதர ஒரு கணவன் தான் சம்பாதிக்காததுடன் நிற்காமல் மனைவி, கொழுந்தி ஆகியவர்கள் செல்வத்தையும் பாழாக்கி, அவர்கள் உழைப்பையும் பாழாக்கும் எமனாயிருக்கிறானே. அத்தகைய எமனைக் கட்டினாலும் கட்டித்தான் ஆகவேண்டும். பழிதீர்ந்து விடும். நாமாக உழைத்துச் சாப்பிட்டால் சாதி சமூகம் பழிக்குமே. ஆண்கள் எவ்வளவு மூடமாய்ப் பிறந்தாலும் அவர்களுக்கு இருக்கும் உரிமை, எவ்வளவு அறிவுடையவர்களாயிருந்தாலும் பெண்களுக்குக் கிடையாது. இச்சமயம் விசுவநாதன் வந்தான். உருக்கு அவனை நோக்கி “திருமண ஏற்பாடுகள் எல்லாவற்றையும் நிறுத்திவிடுங்கள். இலட்சுமிக்கு மனதில்லை. அவள் எண்ணுவது சரி என்றே தோன்றுகிறது” என்று துணிந்து கூறினாள். விசு: ‘சீ, சுத்தப் பைத்தியமே. இனி எதுவும் நிறுத்த முடியாது. அந்த எமகிங்கரக் குருக்களுக்கு ரூபாய் 25 ம் அழுது தொலைத்தாய்விட்டது. மண ஏற்பாடுகளுக்குகாக இன்னும் ரூபாய் 25 செலவாக்கியாய்விட்டது. இவ்வளவும் கைப்பண மல்ல; கடன் வாங்கிய பணம். இந்த மணம் முடியாவிட்டால் அவள் செல்வமட்டுமல்ல, நம் மானமும் போய்விடும். உருக்குவுக்கு ஒரே மனக்குழப்பமாயிற்று. “இவ்வளவும் என் பிழையால் வந்தது. உங்கள் பைத்தியக்காரத் திட்டத்தை அன்றே நான் எதிர்க்காது விட்டது தவறு” என்றாள் அவள். ‘செய்வது செய்வோம், பொறுப்பு யார் தலையிலாவது விழட்டும்’ என்ற நினைத்த அந்தக் கோழை ‘ஆம். அவ்வளவும் உன்னால் வந்த தவறுதான்’ என்று கூறி உடலை நெட்டிவிட்டுக் கொண்டான். உருக்குவின் தலை சுழன்றது. உள்ளமும் உடலும் அலுத்து அவள் படுக்கையில் சோர்ந்து கிடந்தாள். ஆக்கவேலை எதிலும் உணர்ச்சியும் ஊக்கமுமற்ற விசுவநாதன் இவ்வழிவு வேலையில் வழக்கத்துக்கு மாறான ஊக்கமும், சுறுசுறுப்பும் காட்டினான். அவன் உருக்குவைத் தனியே தன்னறைக்கு இட்டுச்சென்று மேலும் தன் சூழ்ச்சிப் பயிருக்கு நீர் விட்டான். “நீ நான் சொன்னதைவிட்டு எதை எதையோ பேசிக் காரியத்தைக் கெடுத்துவிட்டாய். ஆனால் போனது போகட்டும். குருக்களை ஏமாற்றினால் அவன் தண்டோரா அடிப்பான். ஆகவே அவன் வாயை மூடவாவது வேடிக்கை மணம் செய்துவிட வேண்டும். ஆகவே உன் தங்கையைக் கூப்பிடு. உருக்கு: “அது முற்றிலும் வேடிக்கை மணம்தானா?” விசு: “ஆம், வேறென்ன மனைவியும் மக்களும் உடைய இக் கிழவனுக்கு உண்மையில் மணம் எதற்கு? குருக்களுக்காக இந் நாடகத்தை முடித்து விட்டுப் போவோம். உருக்கு: அப்படியானால் அவள் மறுபடியும் உண்மையில் மணம் செய்து கொள்ளக் கூடுமா? விசு: ஓகோ நன்றாகச் செய்யலாம். அறிவுடைய உருக்குவே சிறுபிள்ளைகள்போல் இதனை நம்பி ஏற்றுக்கொண்டாள். இலட்சுமி அவள் உறுதியான நம்பிக்கைகண்டு தானும் இந்நாடகத்துக்கு உடன்பட்டாள். அவ்விருவரும் கூறியபடி குருக்களிடம் அது வேடிக்கை மணம் என்பதை வெளியிடாதிருக்கவும் இணங்கினாள். ஆனால் மணமுடிந்து இலட்சுமியைப் படுக்க அனுப்பிய பின் விசுவநாதன் பெருமூச்சு விட்டு ‘அப்பாடா, ஒருவகையில் காரியத்தை முடித்துவிட்டேன். இனி இலட்சுமியின் செல்வம் நமக்குத்தான்’ என்றான். உருக்கு: அட சண்டாளா! வேடிக்கை மணம் என்றுதானே சொன்னாய். இத்தனை வஞ்சகமா? விசுவநாதன் முகத்தைத் திருப்பிக்கொண்டு வெளியே சென்றுவிட்டான். இலட்சுமி அவளைக் கண்டதும் ‘என்ன அக்கா, அது வேடிக்கை மணம் என்று முதலிலேயே சொல்லியிருக்கப் படாதா? நான் உன்னை இவ்வளவு மனம் புண்படுத்தி யிருக்க மாட்டேனே’ என்றாள். அடிக்கடி உருக்கு தன் கணவனிடம் ‘உங்களைப் போல் உலுத்தரை இந்த உலகில் காண முடியாது. என்னைத்தான் எமாற்றி ஏமாற்றிப் பிழைக்கிறீர்கள். அந்தக் கருத்தறியாக் கைந்தலையையும் ஏமாற்றலாமா? என்பாள். அடிக்கடி சிரித்துக்கொண்டு ‘நான் என்ன செய்வது. விதி என்னை ஏமாற்றவில்லையா? அதே விதி உங்களையும் இழுக் கிறது. மேலும், ஆபத்துக்கு ஏது பாவம்’ என்றான். அவன் சொற்களைவிட அவன் சிரிப்பு அவளுக்கு நல்ல படிப்பினையா யிருந்தது. தன்மதியே அவளுக்கு விதியாய் உதவிற்று என்று உணர்ந்தாள். ஆயினும் அவள் குழம்பிய மனத்தில், அதைவிட்டுத் தப்பும் வழி தோன்றாது திகைத்தாள். இருவரும் வஞ்சிக்கப்பட்டோமே என்ற துன்பம் அவளை வருத்தி வாட்டியது. ஆனால் அத்துன்பத்தைக் கூடிய மட்டும் இலட்சுமிக்கு அறிவிக்காதிருந்து வந்தாள். ஆயினும் அவள் பருவமடைந்தபின் அவளால் அதை மறைத்து வைக்கக்கூட வில்லை. மெள்ள நடந்தவை யாவற்றையும் விடாது எடுத்துக்கூறி ‘என் அறியாமையால் நானே உன் வாழ்க்கையைப் பாழாக்கி னேன் என்று’ கூறினாள். ஒன்று மறியாத பாவை இலட்சுமி அவளுக்குக் கூறிய மறுமொழி அவள் அறிவுக் கண்களுக்கு முதலில் வியப்பையும் பின் புதுப்பாதையையும் காட்டுபவையாயிருந்தன. “அறியாமல் செய்த பிழையை இப்போது அறிவுடன் திருத்திக்கொள்வதுதானே” என்றாள் இலட்சுமி. உருக்கு: அது எப்படி முடியும்? வேடிக்கைமணம் என்றுகூறி மணம் நடத்தி விட்டார்களே. இலட்சுமி: வேடிக்கை மணம் அல்லவென்றால் வஞ்சக மணம் என்றாகிறது. வேடிக்கை மணத்துக்குள்ள மதிப்புக்கூட வஞ்சக மணத்துக்குக் கிடையாது. அதை நான் மதிக்கப் போவதில்லை. உருக்கு: நீ மதிக்காவிட்டாலும் சட்டம் மதிக்கிறதே. நான் என்ன செய்வது? இலட்சுமி: நான் என்ன செய்வதா? சட்டம் மதித்தால் என்ன? நாம் சட்டத்தை மதித்தால்தானே. ஒன்றுமறியா இளம்பிள்ளையிடமிருந்து இத்தனை புரட்சிகரமான சொல் வருவது கண்டு உருக்கு வியப்படைந்தாள். உருக்கு: உன் புரட்சிகரமான போக்குக்கண்டு நான் திகைப் படைகின்றேன், இலட்சு. இலட்சு: வஞ்சகம், கொடுமை, அநீதி ஆகியவற்றுக்குக் கண்ணை மூடிக்கொண்டு நீ தலைவணங்குவது கண்டு நான் திகைப்படைகிறேன், அக்கா! உருக்கு: ஆத்திரப்பட்டுப் பேசாதே இலட்சு. விதியின் கையில் நாம் வெறும் பாவைதானே. அதை வெல்ல யாரால் முடியும்? இலட்சு: யாராவது வெல்ல முயற்சித்ததுண்டா? உருக்கு: விதியை வெல்ல நினைப்பது முட்டாள் தனம் அம்மா? இலட்சு: அப்படியானால் என்னை ஒரு முட்டாள் என்று வைத்துக்கொள். நாளை நீயே பார்ப்பாய், என் விதி யார் கையிலென்று. உருக்குவுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அச் சிறுபிள்ளை யறிவு தன் அறிவுக்குக் குறைந்ததல்லவென்று கண்டாள். தன் அறிவு தனக்கு இதுவரை உதவவில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். ஆகவே, அவள் மதியீனத்தைத் தன் மதியீனத்தால் திருத்துவதை விட அவள் புதுப்போக்கில் சென்று தான் புது அனுபவம் பெறட்டுமே என்றிருந்து விட்டாள். மறுநாள் இலட்சுமியின் வாக்கின் பொருள் தெரிந்தது. அவளை வீட்டில் எங்குமே காணவில்லை. விசுவநாதன் எங்கும் அவளைத் தேடி ஆள் விட்டும் பயனில்லை. உருக்கு கவலையற்றிருப்பது கண்டு விசுவநாதன் அவளிடம் சென்று இவ்வளவும் உன் தூண்டுதல்தான். நீ அவளுக்கு உடந்தையா யிருப்பதைவிட அவள் உங்களை விட்டுத் தப்ப உடந்தையா யிருந்தது ஒரு தவறல்லவே’ என்றாள். விசுவநாதன் தலையிலடித்துக்கொண்டு ‘இப்படி யெல்லாம் பெண்கள் தலைதெறித்துப் போவதால்தான் நம் தர்மம் கெட்டுப் போகிறது’ என்றான். அவள் சிரித்தாள். “உங்களைப் போன்ற வஞ்சகர்கள் வஞ்சனைகளால் கெடாது பிழைத்திருந்தாலல்லவா அது எங்களால் கெடுக்கப்பட முடியும்” என்றாள் அவள். விசு: “என்னை எதிர்த்துப் பேசத் துணிந்துவிட்டாயா? இந்துப் பெண்களுக்குக் கணவன் தெய்வம் என்பதை மறந்து விட்டாயா?” உருக்கு: “ஆம். ஆனால் நீங்கள் என் தெய்வமன்று, பேய். என் தீராப்பழியின் மனித உருவம். உங்களைக் கடவுளாக மதித்துத்தான் நான் இக்கதிக் காளானேன். விசு: நீ ஏனோ இப்படிப் பேசுகிறாய். இனி நாம் அழிந்து போகத்தானே வேண்டும் என்பதை நீ உணர்ந்தாயா? உருக்கு: வளரும் பெண்ணொருத்தியின் வாழ்வைக் கெடுப்பதைவிட நாம் அழிந்தாலென்னவாம்! விசு: சரி. இனி என்னை எப்படியும் காவலில் போட்டுவிடு வார்களே! உருக்கு: போனால் நல்லதுதான். அது உங்களுக்கு நல்ல படிப்பினை. விசுவநாதன் ஆலகால விடம்போல் சினந்தெழுந்து அவளை வைது அடிக்கத் தொடங்கினான். அவள் அமைதியுடன் அடிகளை வாங்கிக்கொண்டு ‘உங்களுடன் வாழ்வதை விடச் சாவது நல்லது என்றுதான் இருக்கிறேன். அதற்கு வழி தெரியாமல் திகைக்கிறேன். அடித்து நீங்களே கொன்று விட்டால் நல்லதாயிற்று’ என்றாள். ஆனால் அவள் கோபக்குரல் கேட்டு அக்கம் பக்கத் தார்கள் வந்து உருக்குவைக் காத்தனர். இலட்சுமியிடமிருந்து புதுப் படிப்பினைகள் கற்றுக் கொண்ட உருக்குவுக்கு இப்போது ஒரு புது எண்ணம் தோற் றிற்று. அவள் தன் கணவனுக்குப் பைத்தியம் என்றும், இலட்சுமியைத் தான் மணஞ்செய்தும் மனைவியாக்கிக் கொண்டும் விட்டதாகப் பிதற்றியதால் அவளை வெளியே அனுப்பிவிட்டதாகவும் அதனால் பைத்தியவெறி மிகுதியாகித் தன்னைக் கொல்ல வருகிறான் என்றும் கூறிப் புலம்பினாள். விசுவநாதன் தனக்குப் பைத்தியமில்லை யென்றும் மணம் நடந்தது உண்மைதான் என்றும் கூறிப் பார்த்தான். மணம் செய்த குருக்கள் பெயர் கூறிப் பார்த்தான். எவரும் கவனிக்க வில்லை. அவனே கடிதம் எழுதுவித்துப் பார்க்க, அவர் இறந்து விட்டதாக அறிந்தான். அவரைச் சேர்ந்தவர்கள் கூடப் பணம் கொடுத்தால்தானே ஏதாவது சொல்லுவார்கள்! அவன் மனைவிமீது வெஞ்சினம் கூறினான், திட்டினான். அதனால் அவன் பைத்தியக்காரன் என்பதுதான் உறுதிப் பட்டது. இதற்கிடையில் இலட்சுமி ஓடியது கேட்டுப் பழய கடன்காரர்களும் இராமேசுரம் போகக் கடன் கொடுத்த புதுக் கடன்காரர்களும், வந்து சூழ்ந்து கொண்டனர். பலர் முன்பே நடவடிக்கை ஏற்பாடு செய்திருந்ததால் அவன் காவலிலிடப் பட்டான். உருக்குவுக்கு இப்போது வேறு செல்வமில்லை என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் அவள் தன் நகைகளை விற்று அவனைத் தப்புவிக்க முயலக்கூடும் என்று அவன் எண்ணினான். எனினும் இத்தடவை அவள் விரலசைக்கவில்லை. ‘வேறு எதுவும் இவரைத் திருத்தாது. இனிச் சிறை வாழ் வாவது திருத்துமா என்று பார்க்கிறேன்’ என்றிருந்துவிட்டாள் உருக்கு. அவனை மீட்க முயலாது, தன் நகைகளில் சிலவற்றை விற்று ஒரு பசுவும் சில தளவாடங்களும் வாங்கிப் பால் விற்றல், தின்பண்டம் விற்றல் ஆகிய செயல்களில் அப்பணத்தை ஈடுபடுத்தி அவ்வுழைப்பால் வயிறு வளர்க்கலானாள். இலட்சுமியும் அவள் நிலையறிந்து அவளுடன் வந்திருந்து உதவினாள். விசுவநாதன் சிறையில் அரைகுறையான, மோசமான உணவும், கடுமையான உழைப்பும் தரப்பெற்று, ஆறுமாதம் கழித்தான். உருக்கு ஏதேனும் விற்றுக் கொடுத்துத் தன்னை விடுவிப்பாள் என்று நம்பி அவனுக்குச்சிறைப் படி கொடுத்து வந்த கடன்காரர் ஏமாந்து அதனை நிறுத்தி விட்டனர். அவனும் விடுதலைபெற்றுத் தன் முழு வஞ்சகத்தையும் மனைவி மீது தீர்ப்பதென்று முடிவு செய்து வீட்டுக்கு ஓடிவந்தான். ஆனால் அவன் வீட்டில் வருமுன் கதவு தாழிடப்பட்டது. ஆங்காரத்துடன் காலால் கதவை உதைத்து, ‘கணவனைச் சிறையில் அடைத்துவிட்டு இப்போது கதவை அடைக்கிறாயா?’ என்று கூறினான். உருக்கு: இங்கே யார் கணவனும் சிறைக்குப் போகத் தக்கவர்கள் இல்லை என்றாள். ஊர்க்காவலன் ஒருவன் இரைச்சல் கேட்டுவந்து இங்கே ஏன் அமளி பண்ணுகிறாய்?’ என்றான். விசு: என் வீட்டில் வந்து நான் கதவைத் தட்டுகிறேன். உனக்கென்ன? ஊராரிடமிருந்தும் உருக்குவிடமிருந்தும் அவன் கதை முற்றும் கேட்டிருந்த காவலன் ‘யார் கூறியது இது உன் வீடு என்று. இது உருக்கமணி, இலட்சுமி ஆகிய இருவருடைய வீடு. நாதியற்றுச் சிறையிலும் வாழ்வற்று வரும் உனக்கு வீடு ஏது? போ, எங்காவது போய்ப் பிழை. குடும்ப வாழ்க்கை நடத்து பவர்களிடம் சென்று தொந்தரவு கொடுக்காதே’ என்று அதட்டினான். விசுவநாதன் உண்மையிலேயே பித்துப் பிடித்தவன் போல் தெரு வெங்கும் அலைந்து பலராலும் இழிக்கப்பட்டான். வேலை கேட்டால் கூட அவனுக்கு வேலை தருவாரில்லை. கடைசியில் திரும்ப ஒரு நாள் விடியற்காலையில் தன் வீட்டருகிலேயே வந்தான். இத்தடவை அவன் ஆங்காரம் செலுத்தவில்லை. கதவைத் தட்டக்கூடவில்லை. பொறுமை யுடன் வெளியே காத்திருந்தான். வீட்டு வேலைக்காரி சாணி தெளிக்கக் கதவைத் திறந்தாள். அவளிடம் அவன் பணிவாகக் கெஞ்சி ‘அம்மா, நான் வழக்காட வில்லை. பசியால் வாடுகிறேன். எந்த வேலையும் செய்யத் தயங்கவில்லை. யாரும் வேலைகூடத் தரமாட்டேன் என் கிறார்கள். வீட்டம்மாவிடம் சொல்லி என்னை மன்னிக்கும்படி நல்மொழி கூறி என்னை இட்டுச்செல்’ என்றான். அவன் பிடிவாதம் மாறுவதற்கே காத்திருந்த உருக்கு வெளிவந்து அவனை அழைத்துச் சென்று உணவு தந்து ஆதரவு செய்தாள். ஆயினும் அப்போதும் அவள் அவனிடம் மனம் விட்டுப் பேசவில்லை. ‘நான் வேலை செய்ய ஒப்புக் கொண் டேனே. ஏன் இன்னும் கோபம் தீரவில்லை’ என்று அவன் கேட்டான். ‘என் காரியத்துக்கு அது போதும். இலட்சுமி பேரில் சுமத்திய பழி என்னாவது. அவளை நீங்கள் மணக்கவேயில்லை என்று ஊரறியக் கூறினாலன்றி இவ்வீட்டில் நீங்கள் வாழ முடியாது’ என்று திடமாக அவள் கூறினாள். ‘அப்படியே நான் ஊரறிய யாவரிடமும் கூறுவதுடன் விரைவில் நானே அவளுக்கு வரன் தேடி மணமுடிப்பேன்’ என்றான். அவர்கள் உழைப்பின் பயனாகக் குடும்பம் மீண்டும் செழித்தது. இலட்சுமியும் நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட்டாள். உருக்கு இலட்சுமியைக் கண்ட போதெல்லாம் ‘கண்ணே, நீ பெயருக்கு மட்டும் இலட்சுமி அல்ல. வறுமையையே தரும் விதியை வெல்ல வழி கண்ட இலட்சுமி நீதான்’ என்று பாராட்டுவாள். ‘நான் ஏதோ வழி காட்டியிருக்கலாம். வழி கண்டது நீ தான் அக்கா’ என்பாள் இலட்சுமி. 10. மூடப்பழக்கங்களின் மீளா அடிமை ‘இந்த ஆண்டுடன் நம் தருமத்திற்கு வயது பதின் மூன்றாகிறது. வெளியில் பதினெரு வயதுதான் என்று சொல்லிவருகிறேன். பதினாறு, பதினைந்து என்று நினைத்தேன் என்று செவிட்டில் அடித்தது போல் சொல்லிவிடுகிறார்கள். என்ன செய்வது? இரண்டு வருஷத்துக்கு முந்தியே திருமணமா யிருக்க வேண்டிய குழந்தை!’என்று காமாட்சி தன் கணவன் இராமசுப்பனிடம் பேச்சோடு பேச்சாகக் கூறினாள். இராமசுப்பன் ஒரு கிட்டங்கியில் கணக்கனாக வேலைபார்த்து வந்தான். இராமசுப்பன்: என்னை என்ன செய்யச் செல்கிறாய்? தந்தையிடமிருந்து எனக்குக் கிடைத்த சொத்து ஒரு 75 ரூபாய்ச் சில்லறை. நீ கொண்டு வந்தது தாலிக்கேற்ற வெறுங் கழுத்து. நமது மாதவருமானம்பன்னிரண்டு ரூபாய். இந்த நிலையில் முதல் மகளைக் கூடிய மட்டும் நல்ல இடமாகப் பார்த்துக் கொடுக்கப் போய்க் கையிருப்பிலிருந்த 200 ரூபாயும் போக 300 ரூபாய் கடனாகவும் வாங்கிக் தொலைத்தோம். கடனாளிகளுக்கு இன்னும் ஈடு சொல்லி முடியவில்லை. சாவது வரை ஈடு செய்யப் போவதுமில்லை. தருமாம்பாள் மணத்தை எப்படி நடத்துவது என்று விழிக்கிறேன். காமா: எப்படியாவது நடத்தித்தானாக வேண்டும். கடன் வாங்கியோ திருடியோ கொள்ளையடித்தோ எப்படியாவது நடத்தியே ஆக வேண்டும். இ. சு: கடன் கால்காசு தருபவர் யாரும் கிடையாது, இந்தச் சமூகத்தில், திருடுவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் திறமையும் துணிவும் வேண்டும். அது இல்லை. அவளை மண முடிக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என்பதை ஒத்துக் கெள்ளத் தான் வேண்டும். காமா: நன்றாய்ச் சொன்னீர்கள். திருடுபவர்களுக்கும் கொள்ளையிடுபவர்களுக்கும் சட்டம்தான் தண்டனை கொடுக்கும். சமூகத்தில் இடமுண்டு. பெண்ணை மணம் செய்யாது வைத்திருப்பவர்களைச் சமூகம் வாழவொட்டுமா? பழக்க வழக்கக் கட்டுப்பாட்டை மீற முடியாதே. இ.சு: அதே பழக்க வழக்கம் தானே காசில்லாதவன் அந்த நரகவாழ்வு கூட மேல்தான். ஆனால் கூடிய மட்டும் நல்ல, அதாவது தீமை குறைந்த இடமாகப் பாருங்களேன். இராமசுப்பன், காமாட்சி கூறிய படியே செய்யும் உறுதி யுடன் ஒரு மாத ஓய்வு பெற்றுச் சோதிடர், திருமணத்தரகர் ஆகியவர் உதவியுடன் அலைந்தான். தரகர் கெட்ட இடம் பார்த்துத் தேடித்தந்தனர். தரகும் கேட்டனர் .சோதிடர் அக்கெட்ட இடத்திற்கும் தனித்தரகு கோரினர். சமூகக் கட்டு என்பது ஏழைகள் வாழ்வை மட்டும் கட்டி, தரகர், சோதிடர் சமூகப் பகைவரான காலிகள் ஆகியவர்களுக்கு மட்டுமே முழுச்சுதந்தரம் அளிப்பதாகும் என்று கண்டு இராமசுப்பன் மனம் நொந்தான். இறுதியில் இருளிடையே ஒருமாய ஒளி காணலாயிற்று. சங்கரநாராயணன் என்ற அரசியல் பணியாளன் தானாக வலியவந்து பெண் கோரினான். அவன் ரூ. 200 மாதச் சம்பளம் வாங்குபவனாதலால் பல பெண்கள் வீட்டார் வந்து போட்டி யிட்டும் அவன் தர்மாம்பாளையே வேண்டி நின்றான். ஓரளவு மன ஆறுதலுடன் இராமசுப்பன் தன் வீடு வந்து மனிவியுடன் கலந்து பேசினான். காமா: நல்ல இடமா? என்ன அப்படி எதிர்பாராத வரவு? மாப்பிள்ளைக்கு என்ன வயதிருக்கும்! இ.சு: நம் நிலையில் வயதைப் பார்த்தால் நல்ல இடமாக எப்படிக் கிடைக்கும்? நிதானமான வயதுதான்.ஆனால் அரசியல் அலுவல். 200 ரூபாய் சம்பளம். வரதக்ஷிணையே இல்லாமல் சுருக்கமான செலவில்’ நடத்த ஒப்புக் கொள்கிறார்கள். ஏன், நகை கூட அவர்களே போட்டுக் கொள்வார்களாம். காமா: அதெல்லாம் நல்லதுதான். குணமும் வயதும் ஓரளவாவது ஒத்திருக்க வேண்டுமே. ஆள் யார் என்று தான் கூறுங்களேன். ஆள் இன்னார் என்றறிந்ததும் காமாட்சி சீறி விழுந்தாள். ‘இதுதானா நல்ல இடமென்றீர்கள். பேர் வழிக்கு54 வயதாயிற்று. பல் ஒன்று கூடக் கிடையாது. தடிபோல வளர்ந்த நான்கு பிள்ளைகள் மூத்த மனைவிக்கும், ஆறு பிள்ளைகள் இரண் டாவது மனைவிக்கும் இருக்கிறார்கள். அதில் கடைசிப் பிள்ளை கூட நம் மகளுக்குக் கணவனாயிருக்கத் தகுந்த வயதுடையவன். போய்ப் போய் இதைப்பார்த்துவிட்டுத்தானா எக்களிப்புடன் வந்து கனைக்கிறீர்கள்!’ என்றாள் அவள். இ.சு: பெண்களுக்கு இப்படிப் பேசத்தான் தெரியும். மணமில்லாமல் பெண்களிருக்கச் சமூகக் கட்டுவிடாது. செலவில்லாமலோ வரதக்ஷிணையில்லாமலோ மணம் செய்யவும் சமூகக்கட்டு வழிவிடாது. இந்நிலையில் நடை பிணங் களுக்குக்கட்டித் தலைமுழுக்குவது ஒன்று தான் சமூகம் ஏழைகளுக்கு விட்ட வழி. வேறு என்ன செய்யச் சொல்கிறாய்! ஏதோ வருகிற சனிகளில் நல்ல சனியாய் வந்திருக்கிறது. வேண்டு மானால் செய், வேண்டாமானால் விட்டுவிடு. இனி என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம். அவர் எரிந்து விழுந்ததனால் காமாட்சிக்குக் கோபம் எதுவும் இல்லை. அவர் கூறியவை அனைத்தையும் அவளும் அறிவாள். மனச்சான்று, சாதிக்கட்டு, பழக்க வழக்கங்களால் செயலற்றாலும் அழிந்துவிட மறுக்கும் மனச்சான்று ஒன்றுதான் பொது நீதியைப் பேசவாவது தூண்டிற்று. கூரிய அறிவுடைய பெண்மை உள்ளம் தன் ஏல மாட்டாத் தன்மையிலும் மற்றொரு கேள்விகேட்டு வைத்தது. “மாப்பிள்ளைக்கு வயதாகி யிருப்பதால், வேறொன்றும் கேட்காவிட்டாலும் அவர் புது மனைவிக்கு ஏதாவது வழி செய்வாரா? அவர் தம் வாழ்க்கைக்குக் காப்புக் கட்டவாவது (iளேரசயnஉந) செய்திருக்கிறாரா?” என்று அவள் கேட்டாள். இ.சு: தானம் வாங்கும் மாட்டிற்குப் பல்லைப் பார்த்து வாங்க முடியுமா? வரதட்சிணை, நகை ஒன்றும் பேசா திருக்கையில் ஏதேனும் கேட்டு வினையை விலைக்கு வாங்கு வானேன். மாதச் சம்பளக்காரர் என்று பலர் பெண் கொடுக்கக் காத்திருக்கக் கூடும். யாராவது தட்டிக்கொண்டு போனால் என்ன செய்கிறது? காமா: அதுசரி. நான் ஒன்றும் கண்டிப்பாகக் கேட்கச் சொல்லவில்லை. ஏதோ வாழ்க்கைக் காப்புச் செய்திருப்ப துண்டா என அறிவதுதானே? இ.சு.: நான் அறிந்தவரை செய்திருக்க முடியாது. இது வரை செய்யாதிருந்தால் இனிச் செய்வதும் முடியாது. 54 வயதில் எந்தக் காப்புக் கழகம் வாழ்க்கைக் காப்பளிக்க முன் வரும்? எந்தக் கழகமும் நம்பிப் பணமுடக்காத இடத்தில் தன் கண்மணியைத் தான் கொண்டு தள்ள நேருகிறதே என்று அவள் மனம் நொந்தாள். ‘சரி, இனிப் பேசிப் பயனில்லை. தருமாம்பாள் தலையெழுத்து அவ்வளவுதான். வேறு வழியில்லாவிட்டால் அதையே செய்யுங்கள்’என்று அவள் கூறிவிட்டுக் கடவுளை நொந்து கொண்டு ‘தர்மம்! உன்னை இப்படிக் கொண்டுதள்ள வேண்டியிருக்கிறதே’ என்றழுதாள். இ.சு: நீ அழுவதைப் பார்த்தால் செல்வமுள்ள கிழவனை விட ஆண்டியான இளைஞனை நீ விரும்புவாய் போலிருக்கிறது. உன் விருப்பம் அதுவானால் ஏதாவது நம்மினும் ஏழையைப் பார்த்துக் கொடுத்து விடலாம். என்னைப் பற்றியவரையில் அதுவே மேன்மையானது என்று எண்ணுகிவேன். காமா: வேண்டாம். அதைச் சமூகம் ஒப்பாது. நம் பழக்க வழக்கங்களைத் துணிந்து எப்படி விடமுடியும்? கிழவனை மணப்பதில் எவ்வகை நன்மையுமில்லா விட்டாலும் உலகம் அதை ஒரு பொருட்டாக எண்ணாது. ஏழ்மையை அது ஒருபோதும் மன்னிக்காது’ என்றாள். இ.சு: சரி, அப்படியானால் உன் முடிவுப்படியே செய் கிறேன். அதை நேரடியாகச் சொல்லி விடுவது தானே! காமா: ஏதோ பெற்ற மனமும் இயற்கை உணர்ச்சியும் கேட்கவில்லை. ஆனால் அதற்காகப் பழக்கத்தை மீறத் துணிவும் வரவில்லை. பழக்கம் மதயானையைவிட வலிமையுடையது. கணவனிடம் இவ்வகை முடிவு தெரிவித்து அனுப்பி விட்டபின் காமாட்சி, “ஐயோ தருமா, உன்நிலை இப்படியா ஆயிற்று” என்று கரைந்து கரைந்து உருகலானாள். தர்மா அவளிடம் வந்து ‘நீங்கள் ஏன் அழவேண்டும், அம்மா? உங்கள் முதற் பிள்ளையை நாலுவயதில் மண்ணுக்கு இரையாக்கி விட்டு வாழவில்லையா? என்னை 18 ல் வாழ்க்கைக்கத்தானே இரை யாக்குகிறீர்கள். இரண்டிலும் உங்கள் குற்றம் ஒன்றுமில்லையே. ஒன்றில் இயற்கையின் வலிமை செயலாற்றுகிறது. மற்றொன்றில் பழக்க வழக்கமாகிய செயற்கை வலிமை செயலாற்றுகிறது’ என்று தேறுதல் கூறினாள். அவள் எல்லாம் உற்றுக் கேட்டறிந்தாள் என்று கண்ட காமாட்சி அவளைக் கட்டிக் கொண்டு, “எல்லாம் அறிந்த உனக்கு நான் என்ன கூறுவது? அறிவைக் கொடுத்த கடவுள் ஆக்கத்தைக் கொடுக்கவில்லையே” என்றாள். தர்மாம்பாள் ஒன்றும் சொல்லத் துணியவில்லை. ஆனால் மனதிற்குள் “குருட்டுப் பழக்கத்தின் அடிமையாகவே இரு என்றும் கடவுளா சொன்னார்?” என்று கேட்டுக் கொண்டாள். மணவினையின் போது தருமா மகிழ்ச்சியுடையவளாகவே காட்சியளித்தாள். சமூகம்கூட அதுகண்டு வியப்படைந்தது. காமாட்சிக்கு அது எவ்வாறு என்று புரியவில்லை. மணவினை முடிந்தபின், “எப்படியம்மா நீ மகிழ்ச்சியுடனிருந்தாய்?” என்று கேட்டாள். அரை நொடியில் தர்மாம்பாளின் முகக்களை மாறிற்று. “அம்மா, சமூகத்தின் கட்டளையினால் செய்யும் காரியத்தைப் பற்றிச் சமூகத்துக்கு வருத்தமில்லாதபோது நாம் சமூகத்தின் முன் வருத்தப்படுவதாகக் காட்டுவதும் தவறுதானே. நாம் வருந்துவது கண்டு திருந்துகிற சமூகமா அது” என்றாள் அவள். பழுக்கக் காய்ச்சிய இரும்பு பாய்ந்த பசுமரம் போல் அவள் நெஞ்சு உள்ளூரக் கருகுவதையும் ஆயினும் வெளித் தோற்றத்தில் பச்சிலைகளுடன் விளங்குவதையும் கண்டாள் காமாட்சி. கண்டு, ‘இச்சிறுவயதில் அவ்வளவு அடக்கமும் நடிப்பும் உனக்கு எங்கிருந்துதான் வந்ததோ’ என்றாள். தர்மா: சமூகத்தின் அடிமைகளாக உள்ள தாய் தந்தைய ராகிய உங்களிடமிருந்துதான். தாய் ஒன்றும் பேசமுடியாமல் மகளைக் கட்டிக் கொண்டு “நாம் ஏன் பெண்ணாகப் பிறந்தோம். அதுவும் இந்தச் சமூகத் தில்’ என்று அழுதாள். தர்மாவின் மகிழ்ச்சியால் எல்லோரும் ஏமாந்தது போலவே இராமசுப்பனும் ஏமாந்தான். ஆனால் காமாட்சியைப் போல நேரடியாய்ப் பேசி அவன் அதன் உண்மையறிந்து கொள்ள முடியவில்லை. “நான் நினைத்தது சரி. இது மிக வெற்றிகரமான நல்ல மணமாக முடியும் என்று நான் அப்போதே நினைத்தேன்” என்று அவள் தற்பெருமை அவனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டது. தர்மாம்பாள் தன் மணவாழ்வில் இன்பத்தை எதிர்பார்த்து ஏமாறவில்லை. ஆனால் அவள் எதிர் பார்த்ததை விட மிகுதி யான மனக்கசப்பு அவளுக்கு ஒவ்வொரு கணமும் ஏற்பட்டு வந்தது. கிழவனென்று தெரிந்தும் பணத்துக்காகவே அவள் பலியிடப்பட்டாள். ஆனால் சங்கரநாராயணன் தன் கிழத் தனத்தை மறைக்க எண்ணி வெற்றியடையாது போனாலும் சமூகத்தின் முன் தன் பொருள் நிலையை நன்கு மறைத்துக் காட்டுவதில் அவன் வெற்றிபெற்றான். மாதவருவாய் அன்றி வேறு அவனுக்குச் செல்வமில்லை. பொருட்செலவு எதுவு மில்லாமல் செய்வதானால் மணம் செய்து வாழ்ந்து கொள்ள லாம் என்றே அவன் பிள்ளைகள் அவனுக்கு உரிமை அளித் திருந்தனர். இந்நிலையில் தன் செல்வநிலையை உயர்த்திக்காட்ட மணவிழாவை மட்டுமே அவனால் பகட்டாக நடத்த முடிந்தது. அதுவும் கடன் வாங்கி. அணிமணிகள் உறவினரிடமிருந்து இரவலாக வாங்கப்பட்டு விழாவின் பின் திருப்பிக் கொடுக்கப் பட்டன. மணவிழாவுக்கான கடனை மீட்கும்வரை தர்மாவின் வீட்டுச் செலவில் பணம் பிடித்துக்கொள்ளப்பட்டது. அக்கடன் தீர்ந்த பின்பும் அப்பெயரால் தொடங்கப்பட்ட சின்னம் பிள்ளைகள் உறவினர் நலன்களுக்காக நீடிக்கப்பட்டது. தர்மாவுக்கு இந்நிலையில் சங்கரநாராயணன் தன்னை ஏன் மணந்து கொண்டான் என்று முதலில் புரியவில்லை. அவர் கிழவர் மட்டுமல்ல, உள்ளூர நோயால் அரிக்கப்பட்ட உட லுடையவர். அவர் மணவாழ்வில் கொண்ட விருப்பம் அவளுக்கு அருவருப்பையும், இரக்கத்தையும், நகைப்பையும் தந்தது. ஆனால் அவள் நகைக்கும் நிலையில் இல்லை. பகல் முழுதும் நாயாய் உழைத்து, இன்பம் எள்ளத்தனையுமின்றி, தன் குறை கேட்பா ரில்லாத நிலையில் அவள் சிரிப்பதெப்படி? ஆனால் அவள் சிந்தித்தாள். அந்த ஒரு உரிமை இருந்தது அவளுக்கு. ஆனால் அதனைக் கூடப் பிறர் பயன்படுத்துவதில்லை என்று அவள் கண்டாள். சிந்திக்க அவளுக்குப் பல செய்திகள் விளங்கின. தன்னை மணக்காவிட்டால் வீட்டில் சம்பளமின்றிக் கட்டுப் பட்டு வேலை செய்ய வேறு வேலையாள் கிடைக்கமாட்டாது என்பதனால்தான் கிழவன் மணவினைக்கு உறவினர் இசைந்தனர் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். பெண்ணினமும், ஆணினமும் சேர்ந்தே சமூகம் எனப் படுகிறதாயினும், அந்தச் சமுகத்திற்குப் பெண்களைப் பலி கொடுக்கப் பெண்கள் தயங்குவதில்லை என்று கண்டாள் தர்மா. ஒருநாள் தர்மா தன் கணவனிடம் தனக்கு ஏதாவது நகைநட்டுச் செய்து போடும்படி கேட்டாள். வேறெதிலும் புதுமைக் கருத்தை நாடாத கிழவருக்கு அப்போது புத்தறிவு தோன்றிற்று. “அழகு என்பது இயற்கையானது. செயற்கையாக அணிமணி போடுவதெல்லாம் வீண்” என்றார் அவர். தர்மா: அப்படியானால் மண விழாவிற்கு நகைகளை இரவலாக வருந்தி வாங்கி ஏன் போட்டீர்கள்? சங்-நா: பொதுமக்களையும் சமூகத்தையும் திருப்திப் படுத்தத்தான். தர்மா: அந்தத் திருப்தி இப்போது வேண்டாமா? சங்-நா: இதென்ன பைத்தியக்காரி மாதிரி பேசுகிறாய். மணவிழா நடப்பது பொதுமக்களுக்காக; வாழ்வதும் தாழ்வதும் நம் பாடு. தர்மாம்பாள் பகுத்தறிவுக்கு அவள் கேள்விகளாலும் அனுபவங்களாலும் பிறருக்கு ஏற்படாத தெளிந்த அறிவு ஏற் பட்டு வந்தது. ஒருநாள் இன்றியமையாத அவளைக் கூட்டிக் கொண்டு சங்கரநாராயணன் வெளியூர் போய் வரவேண்டி யிருந்தது. புகைவண்டி நிலையத்தில் வண்டிக்காகக் காத்து நின்றபோது நிலையத் தலைவர் அவரை நட்புரிமையுடன் நலம் விசாரித்தபின் தர்மாவைக்கண்டு “இதுதான் உங்கள் பேத்தியோ” என்றார். இவ் மதிப்பைப் பெறாமல் சங்கர நாராயணன் அவளை இழுத்துக்கொண்டு வண்டியேறி விட்டார். அதுமுதல் அவர் அவளுடன் பயணம் செய்வது மில்லை; வெளிச் செல்வதுமில்லை. சமூகத்தின் கட்டுப்பாட்டைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த அறிவு கூர்மையுள்ள தர்மா பின்வாங்கவில்லை. வேலை வாங்குவதும் பணப்யைச் சுருக்கிக்கொள்வதும் தவிர வேறு கணவன் கடமைகளை எதுவும் அறியாத சங்கர நாராயணன் அவளைத் தனிமையில் அணுக முயன்ற போது விலாங்கு போல் நழுவியும் முயல்போல் குதித்தோடியும் மேஜை, நாற்காலிகளை இடையே யிட்டுத் தட்டு மறித்தும் தன் பெண் ணுரிமையைக் காக்க அவள் முற்பட்டாள். தான் கூண்டுக்குள் அகப்பட்ட கிளியைத் தாவிப்பிடிக்க வலியற்ற கிழவன் என்று தன் பிள்ளைகளிடம் கூடக் கூற முடியாமல் தத்தளித்தான் சங்கரநாராயணன். ஐம்பத்தைந்தாவது வயதில் சங்கரநாராயணனுக்கு வேலையினின்று ஓய்வு தரப்பட்டது. நான் இன்னும் வேலை யாற்றும் ஆற்றலுடையவனேயாதலால் வேலை நீட்டிப்பு வேண்டும் என்று அவன் எவ்வளவு வாதிட்டும் அரசியலார் இதனை ஏற்கவில்லை. அரசியலார் தீர்ப்பை அடுத்துச் சில ஆண்டுகளுக்குள் காலன் தீர்ப்பும் வந்தது. தர்மா அனாதை களாலயத்திலிருந்தும் துறக்கப்பட்ட அனாதை ஆனாள். பெண்களியக்கத் தலைவி ஒருத்தி தர்மாவிடம் வந்து ‘நீ ஏனம்மா இத்தகைய ஒரு நடைபிணத்தை மணக்க இணங்கி னாய்?’ என்று கேட்டாள். தர்மா: அம்மா, இந்துவாய்ப் பிறந்தபின் ஆணே மணத் துக்கு இணங்க வேண்டுமென்பதில்லை. அடிமை இந்துவின் அடிமையாகிய பெண்ணின் இணக்கத்தை யார் கேட்கிறார்கள். பெ. இ.த: இணங்க மறுத்தால் என்ன? தர்மா: அடிமைச் சமூகத்தில் அடிமைக்குப் பிறந்து அடிமைக்கு வாழ்க்கைப்படவிருக்கும் அடிமை மறுப்பதெப்படி? பெ. இ.த: அப்படியானால் மணமே வேண்டாம் என்று கூறலாம் அல்லவா? ஒருவரும் எதிர்க்காவிட்டால் அடிமை நீடிக்கத்தானே செய்யும். தர்மா: ஆம். ஆனால் உலகைத்திருத்தும்படி தன்னை அழிக்க யார் விரும்புவார்கள். தானே அழிந்தால் புகழ் வரும் அல்லது இகழாவது இராது. உலகத்துக்காகத் தம்மை அழிப்ப வர்களுக்கு அடிமைச் சமூகம் இருக்கும் வரை இகழ்தானே கிடைக்கும். பெ. இ. த: வாழ்க்கையையே துறக்க வேண்டிய போது இந்த இகழ் அச்சத்தை ஏன் துறக்கக் கூடாது? போகட்டும். போனதெல்லாம் போகட்டும். விதவைகளில்லங்கள் எத் தனையோ இருக்கின்றனவே. சமூகத்தை ஒழித்துவிட்டு இனி யாவது வெளிவந்து அவற்றில் சேர்ந்து தொண்டாற்றலாமே! தர்மா: அதுவும் என்னால் முடியாது! பெ. இ.த: ஏன்? எத்தனையோ பெண்கள்அவ்வாறு செய்துள்ளார்களே! தர்மா: என் ஊரிலோ, என் குடும்பத்திலோ யாரும் அப்படிச் செய்யவில்லை. அதில் முதல் ஆளாயிருக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் விதவையென்ற காரணத்துக்காக இவ்வழகிய கேசத்தை ஒழிக்கவும் விருப்பமில்லை. பெ. இ.த: பின் என்னதான் செய்யப்பொகிறாய்? தர்மா: இதுவரை பலியாயிருந்தது போலவே இறுதிவரை இச்சமூகத்துக்கு நான் பலியாகப் போகிறேன். வேண்டா வெறுப் புடன் கேசத்தை ஒழித்து, சமூகத்தின் மூதேவியாய் மொட்டை யடித்து வெள்ளாடை உடுக்கப் போகிறேன். இதைத் துறக்கும் விருப்பமிருந்தாலும் துணிவில்லை. துணிவு என்றுவரும், யாருக்குவரும் என்றுகேட்க எண்ணி னாள். பெண்கள் இயக்கத் தலைவி, ஆனால் கேட்கவில்லை. இந்தச் சமூகத்தால் இகழப்பட்டாலும், அச்சமூகத்தை இகழும் துணிவு வரும்வரை எல்லாரும் சமூகத்தின் அடிமைகளாகவும், சமூகம் தன் மூடத்தனத்தின அடிமையாகவுமே இருக்க வேண்டும் என்று அவள் கூறிக் கொண்டாள். 11. தெய்வச் செயல் i பார்வதி ஒரு நல்ல குடும்பப்பெண்அவள் சிறு பிள்ளையா யிருக்கும்போதே வறுமையின் அனற்காற்று அவள் குடும் பத்தின்மீது வீசலாயிற்று. ஆயினும் அவள் தாய்தந்தையர் தம் ஒரே மகளான அவளைக் கூடியமட்டும் செல்லமாக வளர்த்து வந்தார்கள். அவள் நல்ல அறிவும் அறிவுக்கேற்ற அழகும் உடையவள். குடும்பம் வறுமைப்பட்ட போதும் துன்பம் எப்படி யிருக்கும், நோய் எப்படியிருக்கும் என்பவற்றை அறியாவண்ணம் பெற்றோர் ஆதரவில் அவள் வளர்ந்து வந்தாள். பார்வதியின் பெற்றோர் அவளை அம்பி என்ற இளைஞ னுக்கு மணமுடித்து வைத்தனர். அம்பி தாய்தந்தையரை இழந்தவனானாலும் சுறுசுறுப்பும் முயற்சியும் உடையவன். எளிய முயற்சியுடன் பொருள் தேடத்தக்க பல சிறு தொழில் களில் அவன் பூசை செய்து காணிக்கைகள் பெறுவான். மண விழா, இழவுவினை ஆகியவை நடைபெறுமிடங்களில் குருக்களாயிருந்து ஊதியம் பெறுவான். அவன் வகுப்பினர் ஈடுபடாத இத்தொழில்களில் அவன் முதன்முதலாக ஈடு பட்டதனால் அருமையும் நல்லூதியமும் கிடைத்தன. இவை தவிர விறகுக் குத்தகை எடுத்து சில்லறைக் கடைக்காரர்களுக்கு அனுப்பி வைத்துத் தரகு பெறுவான். ஊர் வழக்குகளில் நடுவரா யிருந்து தீர்ப்பளித்து இருபுறத்தவர் நன்கொடைகளும் உரிமை யாகக் கொள்வான். மணவாழ்க்கையின் தொடக்கத்தில் பார்வதி முன்போல் குறைவற்ற நிலையிலேயே வாழ்ந்தாள். அவள் அழகும் சிக்கன வாழ்வும் அவளை வீட்டுக்கு நல்லரசியாக்கிற்று. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மனங்கோணாமல் இல் வாழ்க்கை நடத்தி வந்தனர். பார்வதிக்கு வயது பதினேழாவதற்குள் அவள் ஒரு குழந்தைக்குத் தாயானாள் அவளையொத்த பெண்களிடையே இது அவள் மதிப்பை உயர்த்திற்று. அவள் குழந்தை யின்பத்தில் திளைத்தாள். இக்குழந்தையை அடுத்தடுத்து அவள் பல பிள்ளைகளைப் பெற்றாள். நாற்பதாவது வயதில் அவள் பதினான்கு பிள்ளைகளைப் பெற்றிருந்தாள். இவற்றுள் இறந்துபோன ஆறு குழந்தைகள் போக, அவளுக்கு மூன்று ஆண்களும் ஐந்து பெண்களும் இருந்தனர். முதல் நான்கு பிள்ளைகள் பிறக்கும்வரை பார்வதிக்குக் குழந்தை பெறுவதில் பெருமையும், குழந்தைகள் வளர்ப்பதில் இன்பமும் குறையாதிருந்தது. ஆனால் குழந்தைகள் அதிகமாக ஆக வறுமை அதிகரித்தது. வறுமை அதிகமாக ஆகக் குழந்தை களும் அதிகரித்தன. குழந்தைகளுக்கு உணவில்லாததுடன் தாய்க்கும் உணவில்லாத காரணத்தால் கைக்குழந்தைகள் கூடத் தாய்ப்பால்இன்றித் தவித்தன. வறுமையாலும் தாயின் உடல் நோயுற்றதாலும் பிள்ளைகளும் நோய்க்காளாயின. இறந்தவை போக இருப்பவையும் சாகமாட்டாச் சாவாகவே வாழ்ந்தன. இந்நிலையில் பார்வதி ஒவ்வொரு குழந்தைப் பேற்றையும் ஒரு புதுநரகவாழ்வாக எண்ணிப் பதைத்ததில் வியப்பில்லை. குழந்தைகள் தொல்லைகள் பொறுக்கமாட்டாமல் அவள் தாயன்புகூட வற்றிவிட்டது. சில சமயம் அவள் தன் மனமார அவற்றை வைது அடித்து ஒறுக்கவும் தொடங்கினாள். இத்தனை இன்னல்களுக்கடையில் தன் நாற்பதாவது வயதில் பதினைந்தாவதாக ஒரு பிள்ளை வரப்போவது கண்டு அவள் நெஞ்சம் கலங்கினாள். ஆனால் அம்பி அவளுக்கு ஆறுதல் கூறினான். “நாம் என்ன செய்யலாம் பாரு.எல்லாம் தெய்வச் செயல். நம்மாலாவது யாதொன்றும் இல்லை” என்று அவனும் உடனிருந்து புலம்புவான். பாருவும் வேறுவகை தெரியாது தெய்வத்தை நோக்கி, “ஆண்டவனே, எனக்கு இருக்கும் பிள்ளைகளும் அவற்றின் தொல்லைகளும் போதாதா? எங்கள் வறுமைக்குழிக்கு இன்னும் ஒரு பிள்ளை தருவானேன். இனியாவது எனக்குப் பிள்ளையில்லா வரன் தந்தருளக் கூடாதா?” என்று வேண்டிக் கொள்வாள். பிள்ளைவரம் கேட்பதற்கு மாறாகப் பிள்ளையில்லாவரம் கேட்கும் பார்வதியின் செயல் அம்பிக்குப் பிடிக்கவில்லை. “பிள்ளை வேண்டும் என்று தெய்வத்திடம் கேட்பது கூட தவறு. தரவேண்டாம் என்று கேட்பது பின்னும் கேலிக்கூத்து. உண்மை யில் கடவுள் நம் விருப்பத்துக்காக எதுவும் தருவதில்லை. நம் விருப்பத்துக்காக எதுவும் நிறுத்தவும் மாட்டார். அவர் தமக்கு நன்மை என்று தோன்றுவதைச் செய்கிறார்’ என்று அவன் அவளைக் கடிந்து அறிவுரை கூறுவான். பாரு: செல்வமிகுதியுடைய பலர் விரும்பி விரும்பித் தவங்கிடந்தும் பிள்ளைகள் தராமல் வறுமையில் வாடுப வர்களுக்கு வேண்டாத பிள்ளைகளை வழங்குவது எப்படி நன்மை? அம்பி: கடவுள் தருவது அவரவர் தகுதிப்படியே. ஒவ் வொருவர் நன்மையும் திமையும் அவரவர் முன்வினைப் பயனுக்குத் தக்கபடி அமைகிறது. அப்பயனைத் தான் தெய்வம் கொடுக்கிறது. பாரு: அப்படியானால் தெய்வச் செயல் என்று கூறுவா னேன். வினைப்பயன் என்பதுதானே. பிள்ளை வேண்டியவர் களுக்கு இல்லாது போவதும், வேண்டாதவர்களுக்கு வலிய வருவதும் இரண்டும் ஒரே தீவினையின் பயன்தானோ? அம்பி: தனிமனிதன் தன் வினைப்பயனை அடைகிறான். ஆனால் உலக நன்மையை எண்ணிக் கடவுள் செயலாற்றுகிறார். அவ்வகையில் வினைப்பயன்களைத் தகுதியறிந்து மாற்றுகிறார். அவர் செய்வ தெல்லாம் உலக நன்மைக்கே. பாரு: பிள்ளைகளை அதிகமாகக் கொடுத்து அவர்களைப் பட்டினி போடவைப்பதும் உலக நன்மைக்காகத் தானா? அம்பி: ஆம் அப்படித்தானிருக்க வேண்டும். பாரு: இது விசித்திரமான புதிராயிருக்கிறதே. அம்பி: தெய்வச் செயலின் போக்கே விசித்திரமானது தான். பார்வதிக்கு இவ்வேதாந்தங்களால் சிறிதும் மனஅமைதி ஏற்படவில்லை. “எது எப்படியானாலும் என்னால் இனித் தாங்க முடியாது. ஒன்று கடவுள் இனிமேல் எனக்குக் குழந்தையில்லாது செய்யவேண்டும். அல்லது இந்தப் பேறோடு என் உயிரை வாங்கிக் கொள்ளவேண்டும்” என்றாள். அம்பி: குழந்தையும் சரி, உயிரும் சரி, தெய்வம் தரும் நன்கொடைகள். அவற்றை வேண்டாம் என்று கூறுவதும் எண்ணுவதும் கூடத் தெய்வ நிந்தனையாகும். அவற்றால் எவ்வளவு துன்பம் வந்தாலும் பொறுத்துக்கொண்டே யாக வேண்டும். மரம் வைத்தவனுக்கல்லவா தண்ணீர் விடும்கவலை. அவன் மரத்தை வளர்த்தாலும் சரி, வாட வைத்தாலும் சரி, நமக்கென்ன? பார்வதிக்கு ஒன்றும தோன்றவில்லை. “நம் வருவாயாவது சற்று அதிகப்படக் கூடாதா? பிள்ளைகளுக்குக் கஞ்சிக்காகவது வகை செய்ய வேண்டாமா?” என்று அவள் கண்கசிந்தாள். அம்பி: நான் என்ன செய்யட்டும். எளிதாக வந்து கொண் டிருந்த வருவாயில் போட்டிவந்து குடிகெடுக்கிறது. கொடுப்பவர் குறைத்தே கொடுக்கின்றனர். கேட்டால் வேண்டாம். போ என்கிறார்கள். உனக்குத் தான் தெரியுமே. விறகு வண்டிக்காரர் களை எல்லாரும் மோர்குடிக்கக் கொடுத்து வசப்படுத்துவது பார்த்து நாமும் மோர் வாங்கி வைத்தோமே! நம் குசேல பரம்பரை அவற்றை வைத்துப்பார்க்காமல் விட்டனவே! செல்வர்களுக்குச் செல்வத்தோடு செல்வம் வட்டி சேர்வது போல், நமது வறுமையின் மூலம் வறுமையோடு வறுமை வட்டி சேர்கிறது. கணவனுடன் பேசி இனிப் பயனில்லை என்று பார்வதி வாளா இருந்தாள். ஐஐ கணவனின் சமய வேதாந்தம் பார்வதிக்குப் பிடிக்க வில்லை யென்றால் அவன் அரசியல் வேதாந்தம் அதனிலும் கசப்பாகவே இருந்தது. ‘பிள்ளையோ பிள்ளை’ என்ற அவள் வாழ்க்கை யிடையே ஒரு சமயம் அவள் “இந்த வறுமைப் பேய்கள் பிறந்து பிறந்துதான் நம் நாடு குட்டிச்சுவராய்ப் போகிறது” என்று வாய்விட்டுக் கூறி விட்டாள். அரசியல் மேடைகளைச் சுற்றி நின்று நாட்டு நிலைகளைப்பற்றி அறிந்த அம்பி அவள் ‘அறியாமை’ கண்டு இரங்கினான். “அட பைத்தியமே, இந்த வறுமைப் பேய்கள் பெருகியிருப்பதனால்தான் நம் நாட்டுக்கு இன்னும் இவ்வளவாவது வாழ்விருக்கிறது. இவர்களால் இந்நாட்டில் வறுமை ஒருபுறமும், மக்கள் நெருக்கம் ஒருபுறமும் மிகுந்திராவிட்டால், இதற்குள் வெள்ளையர் இங்கே குடியேறி நம் தர்மத்தை அழித்திருப்பார்கள். அது மட்டுமா? பிள்ளை பெறுவதைத் தடுக்கவேண்டும் என்று அவர்கள் நம்மை ஏய்ப்பதற்காகவே கூறுகிறார்கள். கர்பத்தடைப் பாசாங்குகள் ஒருபுறமிருக்கும்போதே முன்பு உலகில் கால்பங்கு மக்கள் தொகையினராயிருந்த அவர்கள் இப்போது பாதித்தொகையின ராய் விட்டனர் உலகின் முக்கால் பங்குப் பகுதியிலும் குடியேறி அந்நாட்டு வாழ்வுகளை அழித்தும் விட்டனர். கடவுள் வறுமையையும் மக்கட் பெருக்கத்தையும் நம் நாட்டு நன்மைக்கே தந்திருக்கிறார்” பார்வதி: நம்மைப் பட்டினி கிடக்கச் செய்யும் நாட்டைப் பற்றி நமக்கென்ன கவலை வேண்டியிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. வறுமையில் கிடந்து உழன்று நம் தர்மம் வாழ் வதைவிட, நாம் நல்வாழ்வுடன் ஒரு சிலராய் வாழ்ந்து வெளி நாட்டாருக்கு இடம் கொடுத்தால்தான் என்ன கெட்டு விட்டது? நம் தர்மத்தை வைத்துக்கொண்டு நாம் இப்படி வாழ்வதைவிட, வேறு எந்தத் தர்மமாவது வந்து வாழ்ந்து விட்டால்தான் என்ன? அம்பி: அதெல்லாம் எப்படியாவது போகட்டும். நம்மா லியன்ற அளவு நம் நாட்டுக்கு நாம் நன்மை செய்வோம். மீதி, தெய்வச் செயல். பாரு: நம் சேவையும் யாரும் பாராட்டத்தக்க தென்று எனக்குப் படவில்லை. அப்படிப் பார்த்தாலும் பதினான்கு பிள்ளையைப் பெற்று ஆறைப் புதைத்து வருவதைவிட, எட்டுப் பிள்ளைகளை மட்டுமே பெற்று வாழவைத்தால் நல்லதாயிற்றே. அந்த ஆறு பிறக்காதிருந்தால் மற்ற எட்டுக்கும் சற்றுக் கூடுதல் உணவாவது கிடைக்குமே. அம்பி: அந்த ஆறு பிள்ளைகளும் வறுமையினால் தானே இறந்தன. அவ்வறுமையைப் போக்கவேண்டுவது அவசியந் தான் என்பதை ஒத்துக் கொள்கிறேன். பிள்ளைப் பேற்றைக் குறை கூறுவதைவிட வறுமையைக் குறைகூறு. நம் அரசியல் தலைவர்கள் வறுமையைக் குறைக்க வழிசெய்து கொண்டுதா னிருக்கிறார்கள். ஏழைப் பிள்ளைகளின் தாய்மார்களுக்கு வேண்டும் உதவி செய்வதாகத் திருமதி சர்வோபகாரி யம்மையார் விளம்பரங்கூடச் செய்திருக்கிறாள். பார்வதி: மெய்யாகவா? இவ்வளவு தெய்வச் செயலைப் பற்றிக் கூறியவர்கள் இதைச் சொல்லப்படாதா? ஏதோ ‘இரத்தல் இழிவானாலும்’ பிள்ளைகளைப் பட்டினி போடு வதைவிட இரந்தாவது பார்க்கிறேனே. அம்பி அதற்கு ஒத்துக்கொண்டான். ஐஐஐ பார்வதி திருமதி சர்வோபகாரியைப் பார்க்கச் சென்ற நேரம் நல்ல நேரமாகத்தான் இருக்கவேண்டும். அவள் பல செல்வ அன்பர்களுடன் அளவளாவிப் பேசிக் கொண்டிருந்தாள். எல்லாரையும் போல் அவளும் பட்டும் ஜரிகையும் பகட்டான நகைநட்டுமாயிருந்தாள். ஆனால் பார்வதியைக் கண்டதுமே அவள் பாகாயுருகித் தேனாய்ப் பேசினாள். ‘ஏனம்மா, நீ ஏழைத் தாயா? எட்டுக் குழந்தையா? நல்லது, இதோ நாற்காலியில் உட்கார். பட்டினியும் பசியுமா? அம்மாடி, பாவம். எல்லாம் இனிச் சரியாகக் கவனிக்கிறேன். இதோ, இந்தச் சிற்றுண்டியும் தேயிலை யும் அருந்தி இளைப்பாற்றிக் கொள்’ என்றாள். கணவன் வேதாந்தத்தைக்கூட நம்பத் தொடங்கினாள் பாரு. உண்மையிலேயே பசியோடிருந்த அவள் மணமானபின் என்றுமறியாச் சிற்றுண்டியை அன்று உட்கொண்டாள். அதன் பின் திருமதி சர்வோபகாரி யம்மையார் அவளை அன்பாக அழைத்து “அம்மா, உன் தங்கமணிகளை அழைத்துக்கொண்டு என் வீட்டில் வந்து என்னைப் பார். இப்போது வேலையிருக் கிறது. போய்வருகிறேன்’ என்றாள். தான் நடப்பது நிலத்திலா, வானிலா என்றறியாது நடந் தாள் பார்வதி. கணவன் கூறிய ‘நம்தர்மம்’ இதுதான் போலும் என்று அவள் எண்ணிக் கொண்டாள். மறுநாள் பார்வதி தன் எட்டுப் பிள்ளைகளுடனும் திருமதி சர்வோபகாரி யம்மையார் வீட்டுக்குச்சென்றாள். முன் அவளைக் காணச்சென்ற பொதுவிடத்தைவிட அவளுடைய வீடு பரந்தகன்று ஆடம்பரமிக்க தாகவே இருந்தது. வரவேற்பும் முந்திய தடவைபோல் எளிதாயில்லை. ஏழைகளுக்கே உழைப்ப வர்கள் எப்படி இவ்வளவு ஆடம்பரமாயிருக்கக்கூடும் என்று பாரு ஒருகணம் நினைத்தாள். அடுத்கணம் அது நன்றிகெட்ட எண்ணமென்று அகற்றிவிட்டுப் பணிவுடன் அவள் அம்மையாரை அணுகினாள். அவளைச் சூழ்ந்து அரிசி குறுணை நொய்கள் போல் நின்றிருந்த பிள்ளைகளை திருமதி சர்வோபகாரி அம்மையார் ஒவ்வொன்றாகப் பார்த்து விட்டு “இதெல்லாம் உண்மையிலேயே நீ பெற்ற பிள்ளைகள் தானா, அல்லது இங்கே காட்டுவதற்காகச் சேர்த்துக்கொண்டு வரப்பட்டவர்களா?” என்று கேட்டாள். தன்னைப் பிச்சைக்காரியென்று மட்டுமின்றித் திருடி யாகவும் மதித்துக்கேட்கப்பட்ட இக்கேள்வியைச் செவி யேற்றதும், பார்வதி சினங்கொண்டு, “உங்கள் பிச்சையும் வேண்டாம், இந்தத் திருட்டுப் பட்டமும் வேண்டாம்” என்று சரேலென வெளியேறினாள். அதுகண்டு திகைத்த பரோப காரியம்மையார் நயமான குரலில் “கோபப்படாதே யம்மா, எத்தனையோபேர் ஏமாற்றியதனால் உன்னையும் இனமறி யாமல் சொல்லிவிட்டேன். இதோ உன் பிள்ளைகளுக்கு உதவி வாங்கிப் போ” என்றாள். பார்வதி ஒருகால் வெளியிலும் ஒருகால் உள்ளுமாக நின்றாள். பரோபகாரி அம்மாள் உரத்த உத்தரவிட, அதன்படி பணியாள் ஒருவன் ஒரு பையைக்கொண்டு வந்தான். அதிலிருந்து அவள் (பிள்ளைக்கு ஒரு ரூபாய் என்று கணக்கிட்டு) பதினைந்து ரூபாயை எடுத்து அவளிடம் உரக்க ஒன்று, இரண்டு எனப் பதினைந்துவரை எண்ணிக் கையில் போட்டுவிட்டு, இதோ இந்தப்பதினைந்து ரூபாயையும் இப்போதைக்கு உன் பிள்ளைகள் செலவுக்காக வைத்துக்கொள். மிகவும் முடைப்பட்டால் என்னிடம் தாராளமாக வந்து உதவிகேள். தயங்காதே” என்று சொல்லியனுப்பினாள். உலகிற்குச் சிறுதொகையானாலும் பார்வதியின் வறுமை யில் அது பெருந்தொகையாகவே பயன்பட்டது. சில நாட் களுக்குள் அது செலவாயிற்று. ஆனால் அதற்குள் அவளுக்கப் பத்தாமாதமாயிற்று. பிள்ளைபிறந்து பத்து நாள் சென்றபின் வறுமை மீண்டும் தலைதூக்கிற்று. அவளுக்கு வேலைசெய்ய முடியாத நிலையில் பிள்ளைகள் பட்டினியால் வாடின. ஆகவே மீண்டும் சர்வோபகாரியின் உபகாரம் நாடிச் சென்றாள். ஆனால் இத்தடவை அவள் முழு ஏமாற்றம் அடைந்தாள். பலநாள் பல மணிநேரம் காத்து இறுதியில் கண்டபோதும் அம்மையார் எதுவும் கொடாததுடன் வாயார வைது அனுப்பினாள். அண்டையிலுள்ள அன்பர்கள் அம்மையார் எவருக்கும் ஒரு தடவைக்குமேல் கொடுப்பதில்லை என்றும், அதுவும் சமய சந்தர்ப்பம் பார்த்துச் சிலருக்குத்தான் என்றும் உளவு கூறினர். அச் சிலருள் தான் ஒருத்தி என்ற ஆறுதலுடன் ஏமாற்ற மிக்கவளாய்ப் பாரு மீண்டும் வீடுவந்து பழய படி வறுமைக்கு உறவானாள். பாருவின் மூத்த பையன் சிலநாள் சளிக்காய்ச்சலில் வதைபட்டு உயிர் துறந்தான். அவனுக்கு மருந்து வாங்கவோ, கஞ்சி வார்க்கவோ பணமில்லாமல் கண்ணீருடன் அவனை அவன் பெற்றோர் எமனிடம் அனுப்பிவைத்தனர். ஆனால் அவனை அடக்கம் செய்யவும் அவர்களிடம் பணமில்லை. அம்பி யாரிடமோ இருபது ரூபாய் கடன் வாங்கி வந்து காரிய முடித்தான். பாரு: ‘இந்த இருபது ரூபாயில் பாதி இரண்டு மூன்று நாளைக்கு முன் வாங்கிவந்திருந்தால் பிள்ளை பிழைத்திருப் பானே. இறப்பதற்கு வாங்கிய கடன் வாழ்விக்க வாங்கப்படாதா’ என்று வயிறெரிந்து கேட்டாள். அம்பி ‘நீ உலகமறியாமல் பேசுகிறாய். கெட்ட செலவிற்கு யாரும் கொடுப்பார்கள். நல்லதற்குக் கொடுப்பார்களா?’ என்றான். பார்வதி மனங்கசந்து ‘உங்கள் தெய்வச் செயல்தான் ஒரு புதிர் என்பதற்கில்லை. உங்கள் தர்மமும் ஒரு புதிராய்த் தானிருக்கிறது’ என்றாள். அம்பி: ஏதோ தெய்வச் செயலை என் செயல் போலவும், நாட்டுத் தர்மத்தை என் தர்மம் போலவு மல்லவா எண்ணிக் கோபித்துக் கொள்கிறாய். நான் என்ன செய்வேன். பாரு: “நான் அப்படிச் சொல்லத்தான் முடியவில்லை. அப்படி எண்ணினால் தவறில்லை. தன் கடமைகளை மழுப்பு பவர்கள் ‘தெய்வச்செயல்’ என்று கூறித் தாங்கள் முயற்சி செய்யாததற்கு நல்ல சாக்குச் சொல்லிவிடுகிறார்கள். தங்களுக்கு விருப்பமில்லாச் சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டைபோட நாட்டுத் தர்மம் என்கிறார்கள். இழவுக்குமட்டும் கடன் கொடுக்கும் தோழர்களும், பரோபகாரி யம்மையார் போன்ற வர்கள் வாழும் நாடும் அவர்கள் சமயமும தானே உங்கள் நாடும் சமயமும்?” என்றாள். அவள் எதிர்ப்பு வேதாந்தத்தை அவன் முற்றிலும் உணரக் கூட வில்லையாயினும் அவள் வசையின் குத்து எத்தகையது என்பதை அவன் அறியாதிருக்க முடியவில்லை. பாருவுக்கு உலகசோதனை இன்னும் முடியவில்லை. “தனிமனிதர் தன்மையைப் பார்த்துவிட்டோம். ஆனால் நாலு பேர் இருக்கும்போது சர்வோபகாரியம்மைபோன்றவர்கள் கூட நன்மை செய்ய நாடுகிறார்களே. ஆகவே நாலு மனிதர் நடத்தும் கழகங்களையே நேரில் அண்டிப் பிழைப்புக்கோ, வேலைக்கோ வழி கேட்போம். பிச்சையும் எடுக்கவேண்டாம்’ என்று பார்வதி எண்ணினாள். அதன்படி அவள் எங்கும் அத்தகைய கழகத்தை நாடித் தேடலானாள். பல இடங்களில் தேடியபின் நீண்ட விளம்பரப்பலகை தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தைக் கண்டாள். அதில் ‘விடுதலை பெற்ற கைதிகள் உதவிக்கழகம்’ என்று எழுதப் பட்டிருந்தது. ‘குற்றத்தண்டனை பெற்றவர்களுக்கே உதவி செய்யும் கருணை வள்ளல்கள் நமக்கு உதவிசெய்யவா மாட் டார்கள்’ என்று எண்ணி அங்கே நுழைந்தாள். அவள் கட்டிடவாயிலை அணுகுமுன் ஒரு பணியாள் அவளை உள்ளே ஒரு கூடத்தில் அமரச் சொன்னாள். தனக்கு நல் வரவேற்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவள் ஒவ்வொரு நொடியும் கழகத்தலைவர் வருகைக்காகக் காத்திருந்தாள். அரைமணி நேரத்துக்குள் நீண்ட அங்கியும் பாரிய தலைப்பாகையும் அணிந்த ஒருவர் வந்து ‘அம்மா நீயார், உனக்கு என்ன வேண்டும்?’ என்றார். அவள் பணிவாக, ‘என் கணவனுக்கு ஏதாவது வேலை வேண்டும். வறுமையால் வருந்துகிறோம்? வேலை கிடைத்தால் நான் கூட உழைப்பேன்’ என்றாள். தலைவர்: சரி. உன் கணவன் எப்போது சிறையிலிருந்து வந்தான். என்ன குற்றத்துக்காகத் தண்டனை பெற்றான். பாரு: ‘என் கணவன் குற்றம் எதுவும் செய்யவில்லை. வறுமைக்கொடுமையால் இனிக் குற்றம் செய்தாலுண்டு’ தலைவர்: அப்படியானால் நீ இங்கே ஏன் வந்தாய்? உன் கணவன் குற்றத்தண்டனைபெற்றுச் சிறைப்பட்டு, அதற்குப்பின் வேண்டுமானால் வரலாம். இப்போது இங்கே உதவி கிடையாது, போ’ என்று அதட்டித் துரத்தினார். ‘தெய்வச் செயலின் புதிரைத் தோற்கடிக்க வைக்கிறது இவ்வுலகச் செயலின் புதிர். இவ்வுலகமே அத்தெய்வத்தையும் படைத்திருக்கவேண்டும்’ என்று எண்ணினாள் பாரு. கழகத் தலைவர் இப்பெண்ணாராய்ச்சியாளர் கூறுவது புரியமாட் டாமல் திகைத்தார். பின் ‘ஏதோ பைத்தியம் போலும்’ என்று ஆறுதலடைந்து கொண்டார். ஒரு சில நாள் கழித்துப் பாருவின் ஊரில் அந்த வட்டத்தின் ‘குழந்தைகள் உடல்நல வாரம்’நடைபெற்றது. ‘சாக்காட்டுக்கும் பட்டினிக்கும் இரையாகிவரும் குழந்தைகளை வைத்துக் கொண் டிருக்கிறோமே. குழந்தைகளின் உடல் நலத்துக்காகக் கூடும் விழாவுக்கு அழைத்துச் செல்வோம். ஏதாவது உதவி அல்லது அறிவுரையாவது கிடைக்கும்’ என்று எண்ணினாள். அவளுக்கோ அவள் குழந்தைகளுக்கோ உள்ளே நுழை யவே இடம் கிடைக்கவில்லை. கூட்டத்தில் புகுந்து முன் சென்று நின்ற போதும் அங்கே விதவித ஆடை உடுத்த செல்வச் சீமாட்டி கள் குழந்தைகளுக்கே பரிசுகள் வழங்கப்பட்டது கண்டாள். அவள் குழந்தைகளை ஏறெடுத்துப் பார்ப்பார் இல்லை. அவ் விழாவிற்கு வந்த பள்ளியாசிரியர் ஒருவரைக் கண்டு அவள், “உடல் நலம் குறைவற்ற, அதிலும் அதற்கு வேண்டும் செல்வம் நிறைந்த சீமான்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பரிசு கொடுப்பதால் நாட்டின் உடல் நலம் எப்படி வளரும். அதற்கு வகையற்றவர்களுக்கல்லவா உதவவேண்டும்” என்ற கேட்டாள். ஆசிரியர் நகைத்து ‘அம்மா, நீ உலக மறியாமல் சொற்களைக் கண்டு ஏமாறுகிறாய். இதெல்லாம் செல்வர் பொழுது போக்கு விழா. ஏழைகளுக்கு உதவி யென்பதெல்லாம் ஏழைகளை நயத் தாலும் பயத்தாலும் அடக்க ஒடுக்கமாக வைத்துக் கொள்ளச் செல்வர்களுக்கு உதவி செய்வதற்கும், அத்துடன் அவர்களுக்குப் பொழுது போக்குவதற் காகவும்தான். ஏழைகளுக்கு விழிப்பு ஏற்படும் வரை அரசியல் ஏழைகளைப் பற்றி அஞ்சவும் செய்யாது. அவர்களைப் பொருட்படுத்தவும் செய்யாது. செல் வர்களுக் கஞ்சி அவர்களைத் திருப்திப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கும். அதனை ஏழைகள் கண்டு கொள்ளாதிருக்கத் தான்’ ஏழைகளுக்குப் பரிவதாக வாய்ப்பறை யடிப்பது” என்றார். அவர் உலகமறிந்த ஆசிரியர் - ஆனால் அவருக்கும் அது ஒரு சிரிப்புக்கான செய்திதான். உடல்நல விழாவில் நடுவர் ஆயிருந்த சீமானையே தேடிக்கூடப் பார்வதி தன் கேள்விகளைக் கேட்டாள். ‘பஞ்சை ஏழையாகிய ஒர பெண் இப்படியெல்லாம் பேச எங்கே கற்றுக் கொண்டாள்’ என்று அவர் வியப்படைந்தார். “இவற்றை யெல்லாம் பற்றி நன் சிந்தித்துப் பார்த்ததே யில்லையம்மா? சிந்தித்தாலும் இதையார் கேட்பார்கள்? நீங்கள் சொன்னால் கோபப்படுவார்கள் அல்லது அவமதிப்பார்கள். நான் சொன்னால் சிரித்துக் கொண்டு போய்விடுவார்கள். அவ்வளவு தான். வேறுபலனிராது’என்றார். சமயம், அரசியல், அறம் ஆகிய மூன்று துறைகளையும் ஆராய்ந்து பார்த்து விட்ட பாருவுக்கு உண்மையில் நல்ல மூளைத் தெளிவு ஏற்பட்டுவிட்டது. இனி வெளியாரை அடுத்துப் பயனில்லை. தன் குடும்பத்தைத்தானே சீர் திருத்த முடிந்தால் தான்பயன் உண்டு என்ற கண்டாள். ஆகவே இதுவரை கணவனிடம் பேசியதை விடச்சற்று வெளிப்படையாகத் தன் குறையைக் கூறுவதென்று தீர்மானம் செய்துகொண்டாள். பாரு: தெய்வச் செயல், தர்மம், அரசியலார் சீர்திருத்தம், அறநிலையங்கள் ஆகியவை ஒன்றும் ஏழைக்குடும்பங்களுக்கு உண்மையில் ஒர துரும்பும் உதவாதென்று கண்டுகொண்டேன். இனி நம் கையே நமக்கு உதவி என்று நாம் நடக்கவேண்டும். அம்பி: நம் கையே நமக்கு உதவ முடிந்திருந்தால், நாம் ஏன் ஊர்தேடிச் சென்றிருக்கவேண்டும்? நம்மாலேயே நம்மைச் சரிப்படுத்த முடிந்திருந்தால், பிள்ளைகள் பட்டினிகிடந்து சாவதை நாம் ஏன் பொறுத்திருக்க வேண்டும்? எனக்கு நீ சொல்வது விளங்க வில்லையே! பாரு: உங்களுக்கு ஏன் விளங்கப்போகிறது? அவரவர் படுகிறபாடு அவரவர்களுக்குத் தானே தெரியும்! உலகில் உள்ள சோம்பல் வேதாந்தத்தை நாம் திருத்த முடியாது. நம் வீட்டி லுள்ள வேதாந்தத்தை நாம்தான் மாற்றியமைக்க வேண்டும். அம்பி: என்ன வேதாந்தம் நம் வீட்டிலிருக்கிறது. நீ என்ன தான் சொல்கிறாய்? பாரு: நம் வறுமையைப் போக்கும் வழிகளில் ஒன்று நீங்கள் செய்யக்கூடியது. உழைத்துப் பணம் தேடுவது. அது முடியும் வரையில் நான் செய்யக் கூடியது ஒன்று உண்டு. அதை நான் தான் உறுதியாகச் செய்ய வேண்டும். நம் வறுமை நீங்கும் வரையில் நான் பிள்ளைபெறக்கூடாது. அம்பி: அது எப்படி முடியும்? பாரு: மனிதச் செயலைத் தெய்வச்செயல் என்று கூறி நம்மையே ஏய்த்துக் கொள்ளாதிருந்தால் முடியும். நீங்கள் தெய்வச் செயலை நம்பலாம். பேறுகாலந் துன்பமுதல் எல்லா வற்றையும் நேரடியாகப்படும் எனக்கு அப்படிச் சொல்லிவிட்டுப் பேசாமலிருக்க முடியாது. மேலும் கெட்டகாரியங்களுக் கெல்லாம் உலகில் எத்தனை நடிப்பு இருக்கிறது. அவற்றைத் தர்மம், அறம் என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். உங்கள் மனைவி பிள்ளைகளுக்கு உதவும்படி கொஞ்சநாள் நடிப்புக்குக் கணவனாயிருந்து, பிள்ளை பெருக்கும் நாட்டுத் தொண்டை விட்டு, வறுமை நீக்கும் மனிதத் தொண்டில் இறங்குங்கள். அம்பி: அத்தகைய புரட்சிக் கருத்துக்களை உன்மனதில் யார் புகுத்தினார்கள்? பாரு: ஏன் இதுவும் உங்கள் தெய்வச் செயல்தான். நான் கண்ட தெய்வச்செயல் இதுதான். இனி நான் இருக்கிற பிள்ளையைப் பேணுவது தவிர வேறு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியாது, வறுமை நம் திசையிலிருக்கும் வரை. அம்பியின் தெய்வச் செயல் வேதாந்தம் பறந்தோடி விட்டது. அவன் பல எளிய தொழில்களை நாடி ஏங்குவதை விட்டு ஓரிடத்தில் கீழாளாயிருந்து மேலாட்களின் நம்பிக்கை பெற்றுப், படிப்படியாக உயர் ஊதியம் பெற்றான். பாருவும் பதினைந்தாவது பிள்ளையுடன் பிள்ளைப் பேற்றுக்கு ஒரு நீண்ட ஓய்வு கொடுத்தாள். அவர்கள் பிள்ளைகளில் ஆறு நிலைத்தன. முன்போல் குசேலபரம்பரையாயிராமல் ஊக்கமுடைய பிள்ளைகளா யிருந்தன. அவற்றுட் சில கல்வி கற்று ஊதியம் பெற்றன. சில உழைத்து ஊதியம் பெற்றன. நல்லுடல் பெற்ற பாரு தன் முதுமையின் எல்லையில் வந்தபின் கூடத் தன் பதினாறாவது கடைசிப்பிள்ளையைப் பெற்றாள். ஆனால் அது கட்டிளமையில் பிறந்த பிள்ளை போலவே உடல் நலமுடையதாய், அறிவுடையதாய் இருந்தது. இளமை வாழ்வைக் கூடப் பொய்யாக்கும்படி அவர்கள் பிள்ளையும் பிள்ளையின் பிள்ளையுமாய் நல்வாழ்வு நடத்தினர். அம்பி வர வரப்பாருவிடம் அன்பும் மதிப்பும் அதிக முடைவ னானான். ‘தெய்வம், தர்மம், நாடு, அறம், கடமை, உரிமை ஆகியவற்றால் எங்கும் பெறாத அறிவை உன் துணிந்த அறிவுத்திறத்தால் பெற்றேன். இது நீ தந்த செல்வம்’ என்று அவன் அவளைப் பாராட்டுவான். 12. உமா சுந்தரி அல்லது பெண்மையின் உள்ளம் உமாசுந்தரி பார்த்தசாரதியின் இளைய புதல்வி. அவள் பிறக்கும் போதே தாயைக் கொன்று பிறந்தவள் என்ற பெயருக் காளானவள். அவளையும் அவளைவிட ஒன்றிரண்டு ஆண்டு மூத்த பெண்ணான நித்தியகல்யாணியையும் அவள் தந்தையே வளர்த்து வந்தார். பார்த்தசாரதி சென்னையில் தரகு வர்த்தகம் நடத்தி வந்தவன். தற்கால வர்த்தகத் தரகர் இயல்புப்படியே அவன் ஆயிரம் நூறாயிரமாகப் பணம் திரட்டிக் குவித்தான். அதிலும் போர்க்காலத்தில் எல்லாப் பொருள்களும் அருந்தலாயிருந்த போது சிமிட்டி முதல் மண்ணெண்ணெய், சர்க்கரை வரை எல்லாப் பொருள்களையும் மறைவாகச் சேமித்து வைத்துக் கருஞ் சந்தையில் கொள்ளையாதாயத்துக்கு விற்றான். ‘தண்ணீர் முடையான காலத்தில் தண்ணீரையும் விற்கலாம்’, ‘எவர் துன்பத்தால் பணம் வந்தாலும் பணத்தால் நமக்கு வருவது இன்பந்தான்’ என்பவை அவன் அடிப்படைக் குறிக்கோள்களா யிருந்தன. சமூகத்துறையில் இத்தகைய கோட்பாட்டால் பொருள் தேடுபவர், குடும்பத்துறையில் வேறு எவ்வகையில் இன்பந்தேடுவார்? மனைவியைத் தெரிந்தெடுக்கும் வகையில் பொம்மையோல அழகும் பொம்மைபோலவே தனக்கெனச் செயலுமற்ற அப்பாவிப் பெண்ணைத் தேர்ந்தெடுத்தான். ‘அறிவுடைய பெண் அகங்காரம் கொள்ளும்; செல்வர் வீட்டுப் பெண் தன்னைமதித்து நடக்கும்; பணமுடையவர் தம் செல்வாக்கைக்காட்ட வேண்டுமானால், புற அழகு ஒன்றை மட்டும் கருதியே பெண்தேடவேண்டும்’ என்பான் அவன். இக்கருத்துக்கேற்றவளாய் அமைந்த அவன் மனைவியும் அவன் விருப்பப்படி அவனையே பேணி வாழ்ந்து இரண்டாவது பிள்ளை பிறந்ததும் இனி உலகில் கடமை எதுவுமில்லை என்ற அவனை விட்டகன்றாள். அவனும் பணம்தேடும் முயற்சிக்கு வேறு குந்தகம் நாடாமல் அப்பணியிலேயே முனைந்தான். கல்யாணி, உமா ஆகிய இருபுதல்வியர்களிடையே, கல்யாணி தாயின் அறிவும் தந்தையின் ஆணவமும் நிறைந்தவளா யிருந்தாள். செல்வ இறுமாப்பில் நின்ற அவளுள்ளம் கல்வியை ஒரு பொருட்டாய் எண்ணி ஏற்கவில்லை. ஆனால் உமாவிடம் தாயின் அழகு நிலைத்ததேயன்றி அவள் அறிவுநிலை ஏற்பட வில்லை. அவள் அழகுக்கு ஏற்ற கல்வியும் சுறுசுறுப்பும் உடையவளானாள். இதன் பயனாக இளமையிலிருந்தே கல்யாணிக்கு அவள் மீது பொறாமை ஏற்பட்டு வந்தது. பார்த்தசாரதி தன் கொள்கைப்படி இரு புதல்வியரையும் செல்வர்களைத் தேடியே மணம் செய்து வைத்தான். கல்யாணி, இராமசாமி என்ற வழக்கறிஞர் மனைவியானாள். உமா, சுந்தரம் என்ற புலமையும் அறிவும் மிக்க கல்லூரிப் புலவரின் மனைவி யானாள். மணமான சில ஆண்டுகளுக்கு இருவர் வாழ்கைத் தரங்களும் கிட்டத் தட்ட ஒன்று போலவே இருந்தன. ஆனால் விரைவில் வாழ்க்கையின் விசித்திரமான சோதனைமுறை அவர்களைப் பிரித்தது. கல்யாணி தன் கணவன் செல்வத்தில் மயங்கி எல்லாச் செல்வப் பெண்களையும் போலவே உணர்ச்சியற்ற வாழ்க்கையி லேயே நிறைவு பெற்றாள். ஆனால் உமா தன் கணவன் அறிவுத் திறம், அழகு, குணம் ஆகிய அனைத்திலும் ஈடுபட்டு அவரது காதல் வாழ்வினை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தாள். கணவனும் அவள் குறிப்பறிபவன் போலவே நடந்து கொண்டான். இருவரும் அடிக்கடி இசையரங்குகள், ஆடல் மேடைகள், படக்காட்சிகள் ஆகியவற்றுக்குச் சென்று களித்து வந்தனர். ஒரு முறை உமாவுக்குப் பம்பாய் நகர்க்காட்சிகளைக் காட்டும் எண்ணத்துடன் சுந்தர் அவளைப் புகைவண்டியில் இட்டுச்சென்றான். வண்டியின் இடவசதிக் குறைவால் பெண் களுக்கென ஒதுக்கப்பட்ட முதல் வகுப்புக் கூடத்தில் அவளை விட்டு, அவன் தனியிடத்தில் அமர்ந்து சென்றான். உமா ஏறிய வண்டியில் அவளுடன் முகமூடியணிந்த உயர்குடி நங்கை ஒருத்தி இருந்தாள். வண்டி புறப்பட்டபின்பே அவள் தன் முகத்திரையைச் சற்று விலக்கினாள். விலையுயர்ந்த ஆடையணிகளை யுடையவ ளாயும் பேரழகியாயும் அவள் காணப்பட்டாலும், அவள் முகம் எவர் மனத்தையும் வருத்தத்தக்க துயரத் தோற்றமுடையதா யிருந்தது. இயற்கையாகவே கனிந்த உள்ளமுடைய உமா அவளை அணுகி ‘அக்கா! நீ இவ்வளவு துயரமுடையவளாகக் காணப்படகிறாயே. உனக்கு என்ன இன்னல் நேர்ந்ததோ?’ என்றாள். முகமூடிமாது: பெண்களுக்கு வேறு என்ன இன்னல் வேண்டும்? எல்லாம் மணவினையால் ஏற்பட்ட இன்னல்தான். உமா: மணவினை துன்பம் இப்போதுதான் கேட்கிறேன். அம்மா! மணவினை பொதுவாக இன்பமல்லவா தரும்? மு. மா: ‘இன்பம்போல் தோற்றக்கூடும், அம்மா. உண்மை யில் ஓர் ஆணை நம்பி கைப்பிடித்ததன்பின், பெண்களுக்குத் துன்பத்தைத்தவிர இன்பம் கிடையாது. மணம் என்பது ஒரு சூதாட்டம். அதில் இழப்பது எப்போதும் பெண்கள்தான். விதி கணவன் கையில் ஒரு பொம்மையாக நம்மை ஒப்படைத்து வருகிறது. கணவனை நாம் நம்பினால் கேட்டைவது உறுதி. அவர்கள் காதல் நொடிக்கு நொடி மாறுவது. அவர்கள் இழைக்கும் தீமைகளோ எல்லையற்றவை. இவற்றிலிருந்தெல்லாம் பெண்ணாய்ப் பிறந்தவர்களுக்கே ஒரே ஒரு விடுதலைதான் - அதுதான் சாவு’ வெளிப்பார்வைக்குச் செல்வமும் சிறப்பும் நிறைந்த அம்மாதின் முகத் தோற்றத்திலும் பேச்சிலும் உள்ள மனக்கசப்பு, மன உடைவு ஆகியவை எவர் உள்ளக்கிளர்ச்சியையும் அழிப்பவை யாகவே இருந்தன. ஆயினும் உமா தன்னைச் சமாளித்துக் கொண்டு பேசலானாள். உமா: நான் மணமானவள். ஒரு குறையுமின்றி இன்ப மாகவே இருக்கிறேன். மு. மா: ஆம், தற்போது, எல்லாம் பொறுத்துப்பார். பின்னால் தெரியும். துன்பமுடிவு பற்றிய அவள் உறுதி துன்பக்கேணியில் கால்வையாத உமாவை நடுங்க வைத்தது. அவள் ‘நீ யாரம்மா’ என்ற கேட்டாள். மு. மா: நான் அமராவதி நாட்டின் அரசி. உமா: ஓர் அரசியின் மணவாழ்வுகூடவா இவ்வளவு துயரமாயிற்று. அரசி: ஆ, இன்பமாகிய மயக்கமருந்து உட்கொண்ட எத்தனையோ பெண்களில் நீயும் ஒருத்திபோலும்! அழகும் பகட்டும் அணிமணியும் ஆடையும் புறத்தே- நம் ஆழ்ந்த அழிவை மறைக்க, பிறர் நம்பாதிருக்கச்செய்யவே அத்தனையும்! சொல்லப்போனால் இந்தியாவின் அரசிகள் துயரத்தைப் பார்க்க, ஏழைப் பெண்கள் துயரம் ஒரு துயரம் அல்ல என்னலாம். அரசன் மனங் கவர்ந்த ஆடலணங்கைவிட அரசி இழிவாகவே நடத்தப்படுகிறாள். என் புதல்வி ஓர் அரசனை மணப்பதைவிட ஓர் ஆண்டியை மணந்தால் எவ்வளவோ நலம். ஆனால் யாரை மணந்தாலும் பெண்ணின் வாழ்வு பிழைப்பட்ட வாழ்வே. அழிவு சற்று முன்பின். அல்லது சற்று மாறுபட்ட வகைகளில்; அவ்வளவுதான். உமா: நீ கூறுவது அவ்வளவும் அப்படியே உண்மையாய் இருக்க முடியுமா, அம்மா! அரசி: நான் கூறுவது பொய்யாயிருந்தால் நல்லது என்றுதான் நானும் எண்ணுவேன். ஆனால் என்னால் அப்படி எண்ணக்கூடவில்லை. இதோ நீ இப்போது அன்றலர்ந்த செந்தாமரைபோல்தான் இருக்கிறாய். உன் ஆடையணிகளுக்கே நீ அழகு கொடுக்கக் கூடியவள்தான். ஆனால் ஆடை அணிமணி நிலைக்கலாம்; உன் இன்பம்...........” வாழ்க்கையின் கசப்பையெல்லாம் பிழிந்தெடுத்த அவள் உரைகளை முற்றிலும் கேட்க உமாவுக்குப் பிடிக்க வில்லை. வண்டியும் அப்போதே நின்றதால் அதைச் சாக்கிட்டு அவள் முகம் பாராமலே இறங்கிவிட்டாள். ஆனால் அரசியின் உருவம் புறக் கண்ணை விட்டகன்றதே யொழிய, சோகமே உருவெடுத்த அவள் தோற்றம் மனக்கண் முன்னிருந்து அகலவேயில்லை. “மணம் என்பது ஒரு சூதாட்டம். அதில் இழப்பது எப்போதும் பெண்கள்தான்...... பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு ஒரே ஒரு விடுதலை. அதுதான் சாவு” துன்பக்கேணியின் ஆழத்திலிருந்து வந்த இச்சொற்கள் அவள் அகக் காதில் என்றும் ஒலித்துக் கொண்டேயிருந்தன. சுந்தர் இக்கதையைக் கேட்டுச் சிரித்தான். இரண்டுமாதம் கழித்துச் சுந்தருக்குக் கல்கத்தாவில் ஓர் உயர் பதவி கிடைத்தது. அதை ஏற்க அவன் கல்கத்தா சென்றான். கல்கத்தாவில் வீட்டு வசதி செய்யும்வரை உமாவை இட்டுச் செல்ல முடியாதாதலால் அவன் உமாவை அவள் தமக்கை கல்யாணி வீட்டில் விட்டு, தான் மட்டும் சென்றான். உமா அவனுக்கு அடிக்கடி தன்மனத்திலுள்ள பிரிவுத்துயரத்தை முற்றிலும் விளக்கிக் காதற்கடிதங்கள் எழுதுவாள். அவளும் வழக்கம்போல் கனிவான மொழிகளால் அவளைத் தேற்றி எழுதுவான். பட்டகாலிலேபடும் என்பதற்கிணங்கப் பிரிவுத் துன்பத்தை யடுத்து உமாவுக்குப் பல துன்பங்கள் தோன்றின. சுந்தர் அவ ளுக்கு வீடுதேடி அழைத்துக் கொள்ளுவதில் ஆத்திரம் கொண்டவனாகவே காணவில்லை. அவள் வீடு தேடும் வகையில் வற்புறுத்த வற்புறுத்த, அவன் மறு மொழியில் உணர்ச்சியற்ற அசட்டை மனப்பான்மையே வளர்ந்து வந்தது. இதற்கிடையில் திடீரென உமாவின் தந்தை பார்த்தசாரதி காலமானான். இறுதிக்காலத்தில் அவன் வர்த்தகத்தில் பெரு நட்டம் ஏற்பட்டது. கருஞ்சந்தைக்கு வழியில்லாமலும், அவ்வப்போது கண்டு பிடிக்கப்பட்டுத் தண்டனை யடைந்தும், அவன் தீய வழியில் ஈட்டிய பொருள் முற்றிலும் கரைந்தது. ஆகவே அவன் மருமக்கள் எதிர்ப்பார்த்தபடி அவன் பெருஞ் செல்வம் அவர்கட்கு வரவில்லை. செல்வத்திற்காகவே மணந்த செல்வ மருமக்களிருவரும் தம் மனைவியர் நிலைகண்டு ஏமாந்தனர். ஆயினும் கல்யாணி கணவனைப்போலவே பணப்பித்துடையவளானதால் அவள் கணவன்அவள் தந்தையை வெறுத்த வெறுப்பு அவளைத் தாக்கவில்லை. ஆனால் சுந்தர் இதுவரை உமாவிடம் காட்டிவந்த காதல் பசப்பு முற்றிலும் மாறிற்று. அவன் அவளுக்குக் கடிதம் எழுதுவதையே நிறுத்திவிட்டான். அவன் கிரு°தவ மாதாகிய லூஸி ஸில்வர்டேல் என்பவளைக் காதலித்ததாக ஊரில் அலர் தூற்றப்பட்டது. உமாவுக்குக் கணவன் புறக்கணிப்பு மிகவும் வருத்தத்தைத் தந்ததாயினும், கணவனிடம் இருந்த மதிப்பு ஒரு சிறிதும் மாற வில்லை. ஆகவே அவள் அலர் தூற்றலை ஒரு சிறிதும் நம்பாமலே இருந்தாள். ஆனால் உண்மை எத்தனைநாள் மறைந்திருக்க முடியும். ஒரு நாள் அவள் பெயருக்கு அவனிட மிருந்து பதிவுசெய்யப்பட்ட கடிதம் ஒன்று வந்தது. தன் கணவன் தனக்குப்பதிவுசெய்த கடிதம் அனுப்புவானேன் என்று அவளுக்குப் புரியவில்லை. கடிதத்தை உடைத்துப்பார்த்ததும் அவள் தலைசுழன்றது. சுந்தர் அதில் தான் கிரி°தவசமயம் தழுவிவிட்டதாகவும், அவளும் கிரி°தவளாக இணங்காவிடில் அவளை மணமறுப்புச்செய்து வேறு கிரி°தவமாதை மணந்து கொள்ளப் போவதாகவும் எழுதியிருந்தது. அவள் காதல் சமயத்தையும் எதனையும் அவனுக்காகத் துறக்கத் தயங்கவில்லை. ஆனால் அவன் சட்டத்தின் காரணமாகவே இதனை எழுதினான் என்பதையும், அவளை விட்டொழிவதற்கே ஆர்வமுடையவனா யிருந்தான் என்பதையும் அவள் கண்டாள். ஆகவே அவள் தன் தமக்கை, உறவினர் ஆகியவர்கள் அறிவுரைக்கிணங்கிச் சமய மாறமறுத்து எழுதிவிட்டாள். ஒரு சிலநாட்களில் கணவனுடன் லூஸி செய்துகொண்ட மணவிவரம் வெளியிடப்பட்டது. உமாவுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இவ்வழைப்பு அவர்கள் மணவினைக்குச் சட்டப்பாதுகாப்பு அளிப்பதற்கு மட்டுமே என்பதை அவள் பின்னால் உணர்ந்தாள். உமாவைச் சமயமாறவேண்டாம் என்று அறிவுறுத்திய அதே தமக்கையும் உறவினரும் அவள் நிலைமை அவள் தலை விதியால் நேர்ந்தது என்றும் நாக்கில் நரம்பில்லாமல் இழித்துப் பேசி ஒதுக்கலாயினர். அன்பற்ற கணவன் சமயத்தைச்சாக்கிட்டுத் தன்னை வெறுத்துத் தள்ளினது ஒருபுறம்; அதேபோலச் சமயத்தின் பேரால் உறவினர் கணவனாதரவற்ற அவளைத் தாமும் விலக்கியது இன்னொரு புறமுமாக அவளை வாட்டி வதைத்தன. கணவன் இறவாவிடினும், அவள் அவனைத் துறந்ததனால் கைம்பெண்போன்றவளேயானாள். ஆகவே அவள் முடி களைந்து, வெண்புடவை அணிந்து கைம்பெண் கோலம் கொள்ளவேண்டும் என்று கல்யாணியும் அவள் கணவனும் வற்புறுத்தினர். உமா இதை மறுத்து விட்டாள். இரண்டாண்டுகள்கூட மணவாழ்வின்பத்தை முட்டில் லாமல் துய்க்காத உமாவின் மனம் கைம்பெண் வாழ்வை முற்றிலும் ஏற்கவில்லை. அதேசமயம் அவள் தன் மதிப்பு அவளை நன்னெறியினின்றும் விலகவும் விடவில்லை. இந்து சமயம் தன்னைக் கைம்பெண்ணாக்க உதவியதுடன், மறு மணத்தைத் தடுத்துக் கைம்பெண்ணாகவே வைத்திருக்கிறது என்பதை அவள் எண்ணி உள்ளமழிவாள். ஆனால் அதே இந்து சமயத்தைச் சார்ந்த இளைஞர்கள் அவள் நிலையறிந்தும், அவள் கடமை யுணர்ந்தும், அவள் பக்கம் நாடி மொய்ப்பதையும் அவள் கண்டாள். தன் நேரிய இன்பவாழ்வைக் கெடுக்கும் இதே சமயம் அவர்கள் நேர்மையற்ற இன்பவேட்கையைமட்டும் தடுக்காத தேனோ என்று அவள்சிந்திப்பாள். ‘பெண்களின் ஒழுக்கம் பற்றி இவ்வளவு பேசும் சமூகத்தில் - நேரான வழிவிட்டு என்னைக் கெடுக்க இளைஞர்களுக்கு இடம் கொடுக்கும் சமூகத்தில், என்னை மணந்துகொள்ளும் துணிவும் நேர்மையும் உடைய இளைஞன் மட்டும் ஏன் இருக்கக் கூடாது” என்று ஏங்குவாள். ‘இந்நாட்டில் காமம் மலையளவு; காதல் கடுகளவேனும் கிடை யாது. காமத்துக்குச் சமூகம் இடம் வகுக்கிறது; காதலுக்குத் தடை போடுகிறது’ என்று நொந்துகொள்வாள். அவள் எண்ணங்களுக்குச் சான்றுப் பாத்திரங்கள் போல் கையொப்பமிட்டும் இடாமலும் எண்ணற்ற காதல் கடிதங்களும் அவளுக்கு வந்தன. சிலர் துணிந்து கடிதம் வந்ததா என்று கேட்கவும், சிலர் குறிப்பாகப் பார்க்கவும் பேசவும் சுற்றிச்சுற்றி வரவும் செய்தனர். இத்னையையும் தூண்டி விடும் சமூகம் குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவு செய்யவும் தன்னையே பழிக்கவும் காத்திருந்ததை அவள் கண்டு புழுங்கினாள். கல்யாணியும் சில சமயம் அவள் கணவனும் அவளுடன் பிறர் பரிமாறுவதுண்டு அவளைக் கடிந்துகொள்வார்கள். அவளோ ‘பிறர் மனமறிந்து செய்யும் பழிக்கு நான் என்ன செய்வேன்’ என்பாள். அவர்களோ ‘நீ என்ன செய்வாயோ? இப்படி புதுப்பெண்போல் சிங்காரித்துக் கொண்டிருந்தால் அது அவர்களை அழைப்பதுபோலத்தானே. அதற்குத்தான் தலையை மொட்டையடித்து வெள்ளாடையணிவது’ என்பர். ‘மொட்டையடிப்பவர்கள் தீய வழியில் செல்வதில்லையா? ஒருவர் வயதையும் பருவத்தையும் மொட்டையும் வெள்ளை யாடையும் தடுத்துவிடுமா’ என்று அவள் கேட்பாள். அப்போது அவர்களுக்குக் கோபம் மூக்கைமுட்டிவிடும் ‘இப்படி நாத்திகம் பேசுபவர்கள் ஒழுக்கக் கேடு அடைவதில் என்ன வியப்பு?’ என்று முன்னிலும் வன்மையாக அவளை அவமதித்து நடத்தினர். நொந்த அவள் மனத்தின் போக்குக்கண்டு இன்சொல்லும் ஆறுதலுரையும் கூறிக்கொண்டே சூதுவாதற்ற அவள் உள்ளத்தில் கல்யாணியின் மோட்டாரோட்டி ‘ஜேக்கப்’ இடம் பெற்றான். அவன் மற்றவர்களைப்போலத் தன் உணர்ச்சியை வெளிக்காட்டாமல் நயவஞ்சகத்துடன் நண்பன்போலவே நடந்ததால் அவளையுமறியாமலே அவள் உள்ளம் அவன்பால் ஈடுபட்டது. அவள் மனதையறிந்து அவன் பக்குவமாக அவளைத் தன் வயப்படுத்தினான். அவனுரைப்படி அவள் அவனை மணந்து கொள்ள இணங்கி அவனுடன் வெளியேறிவிட்டாள். ஆனால் அவன் கையில் அவள் சிக்கியபின் அவள் கிரி°தவ சமயம் சாராமல் கிரி°தவனான தன்னை மணக்க முடியாது என்று அவன் கூறினான். எல்லாச் சமயமும் ஒன்றே என்று தன்னைத் தேற்றிக்கொண்டு உமா அவனைப்போலக் கத்தோலிக்க கிரித்தவ சமயம் தழுவி அவனை மணந்து கொண்டாள். எச்சமயமும் ஒன்றே என்பதை அவற்றைப் பின்பற்றும் மக்கள் அவற்றைத் தீமைக்குப் பயன்படுத்தும் பண்பிலும் உமா கண்டாள். இந்துவாயிருந்த ஒருத்தியை மணக்கத் தடைசெய்த அதே கிரித்தவக் குருக்கள் கிரி°தவனாகிய அவன் மணந்தபின் குடிப்பதையோ முன் போலக் கூத்தியார், காதலிகளுடன் ஊடாடுவதையோ தடைசெய்யமுடியவில்லை. கணவனுக்கு அவள் அழகு சிலநாளில் கைத்துப்போய்விட்டது. ஆனால் அவன் வாழ்க்கையைத் திருத்தமுடியாத குருக்கள் அவள் பழகிய இந்து சமயப் பாடல்களைக் கண்டித்து, தன் கிரித்தவர் குடியிருப்பிலிருப்பவர்கள் அப்பாட்டுக்களைப் பாடினால் துரத்திவிடவேண்டிவரும் என்றுமட்டும் அச்சுறுத்தினார். புகைவண்டியில் தான் கண்ட அரசி கூறிய சோகமொழி கள் இப்போது அவள் காதில் புதுப்பொருளுடன் ஒலித்தன. “மணம் என்பது ஒரு சூதாட்டம். அதில் இழப்பது எப்போதும் பெண்கள்தான்” ஆம். எப்போதும், எல்லா வாழ்க்கைப்படி களிலும், எல்லாச் சமயங்களிலும் அப்படித்தான் என்பதை இப்போது அவள் கண்டாள். இனி அவள் காணவேண்டும் உண்மை ஒன்றே ஒன்றுதான். பெண்ணாய்ப் பிறந்தவர்களுக்கு ஒரே ஒரு விடுதலை - அது தான் சாவு. அவ்விறுதி விடுதலையை நாடுமுன் தமக்கையைக் காண்போம் என்று அவள் எண்ணி னாள். உடன் பிறந்த பாசம் எந்நிலையிலும் பாதுகாப்பளிக்கும் என்று நம்பினாள். ஆனால் உமாவைவிடக் கல்யாணிக்குப் பொறாமையும் இறுமாப்பும், தன்னலமும் நெருங்கிய உடன்பிறப்புக்கள். அவள் தன் தங்கையைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் மறுத்தாள். ‘சமயமும் ஒழுக்கமும் கெட்ட துரோகி, என் கண்ணில் விழியாமல் போய்த் தொலை’ என்றாள் அவள். “நான் வேண்டுமென்று கெடவில்லையே. சூழ்நிலைகள் என்னைக் கெடுத்தன. என்னைச் சமயம் மன்னிக்காவிடினும் உடன்பிறந்த நீ மன்னிக்கக்கூடாதா? என்போலப் பெண்ணாய்ப் பிறந்த நீ மன்னிக்கக்கூடாதா?” ‘உன்னை மன்னிப்பவர்தாமும் நரகம் அடைவார்கள். பாவிக்கு யாரும் இரங்கமாட்டார்கள்’ என்றாள் கல்யாணி. ‘பாவிக்காகவே நான் பிறந்தேன்’ என்ற ஏசுபிரான் வாக்கு அவள் நினைவுக்கு வந்தது. ஆனால் மறுகணமே அப்பெரியார் பெயர் கூறும் சமயமும் தன்னைப்புறக்கணித்துவிட்டதை உணர்ந்து அவள் மனம் நைந்தாள். ‘தாசிக்கு இடம் கொடுக்கிறதே நம் சமயம். எனக்கு மட்டும் இடம் கிடையாதா’ என்று அவள் வாதாடினாள். ‘உலகறியக் கெடுபவள் தாசி. நீ ஏமாற்றிக்கேடு சூழ்ந்தாய். நீ இறந்தொழிதலே நலம், போ’ என்றாள் கல்யாணி. அரசி கூறிய இறுதி விடுதலைக்குத் தமக்கையே வழி காட்டினாள். அவள் கங்கையின் ஆழ்ந்த இதயத்துள் அமைதி நாடினாள்., அவள் உடல் நீங்கியபின்னும் உயிர் உலவியிருக்கக் கூடு மாயின் அவளைக் கொல்ல உதவிய, தூண்டிய, வற்புறுத்திய அதே சமயமே அவள் செத்ததற்காகவும் அவள்மீது பழி கூறுவதை அவள் கேட்டிருப்பாள். ‘பழிகாரி! செய்த பழிகள் அத்தனையும் போதாதென்று இறுதியில் மாபாதகமாகிய தற்கொலையிலும் இறங்கினாள்’ என்று மக்கள் அவளைத் தூற்றினர். இறக்கமுனையும் தறுவாயில் உமா வாய்விட்டுக் கூறிய மொழிகள் இவை: ‘இறைவனே, நீ கொடுத்த அறிவைக் கொண்டு நீ உண்டா, இல்லையா என்றுகூட அறியும் ஆற்றல் எனக்கில்லை. உன்னை அறிய முதலில் உதவிய ஒரு சமயம் என்னை நல்வழியில் போகவிடாமல் தீயவழியில் தள்ளிப் பின் தூற்றி வெளியேற்றியது. உன்னை அறிவிக்க முனைந்த இன் னொரு போட்டிச் சமயமோ, என் பழைய சமயத்தை எதிர்ப் பதிலும் ஒழிப்பதிலும் காட்டிய ஆர்வத்தில் எட்டிலொரு பங்கு என் நலத்தில் காட்டவில்லை. அதுவும் என்னை அகதியாக விட்டுவிட்டது. அகதிக்கு நீயே துணை என்று சமய நூலோர் கூறுவார்கள். உன் பெயரால் நடைபெறும் சமயங்களாலும் காக்கமுடியாத அகதியை நீ காப்பாற்றுவாயா? காப்பாற்றினும் சரி, காப்பாற்றாவிடினும் சரி. இதோ என் கடமை, என் பாவபுண்ணியம் எல்லாவற்றுக்கும் இதோ என் முற்றுப் புள்ளி. என் அரசி கூறிய விடுதலை ஒன்றுதான் விடுதலை” வாழ்விலும் சமயத்திலும் கிடைக்காத விடுதலை சாவில் அவளுக்குக் கிடைத்தது. எஎஎ பேரறிஞர் அண்ணா மணிவிழா வாழ்த்துரை பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களின் மணி விழாவிலே கலந்து கொள்வதில் நான் மிகுந்த உற்சாகம் அடைவதற்கும், இதனை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுவதற்கும் காரணம் - பல ஆண்டுகளாக அப்பாத்துரையார் அவர்களுடன் நெருங்கிப் பழகி அவரை அறிந்தவன்; அவருடைய தமிழ்த் தொண்டால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நற்பயனை உணர்ந்தவன்; அவர்கள் குடும்பத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்பதுதான். ஒருவரை நாம் மதிக்கிற நேரத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் மதிக்கிறார்கள் என்பதை அறியும்போது ஏற்படுகிற இனிமையை விட வேறு ஓர் இனிமை இருக்க முடியாது. அப்பாத்துரையாரை நாம் எந்தக் கோணத்திலிருந்து பாராட்டுக்கிறோமோ அதையல்லாமல், அவருடைய தனித் திறமையை அறிந்த மற்றவர்கள் அவருடைய தொண்டின் மேன்மையை உணர்ந்து. பல்வேறு கோணங்களில் பாராட்டிப் பேசுவதைக் கேட்கும்போது, நாம் மேலும் மகிழ்ச்சி அடைகிறோம். நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள் ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கிய காலத்திலிருந்து, அறப் போராட்டங் களில் ஈடுபட்ட கட்டம் வரை அவரது தனித் திறமையை நாம் நன்கு அறிவோம். தமிழின் மூலத்தை ஆய்ந்தவர் அவர், தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர்; தமிழ் இனத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்கும் இடையே பகைமூட்ட அல்ல - தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார். அவர் அறிந்த அனைத்தையும் எழுதி ஏடாக்கினால், அவை இந்த மண்டபமே நிறையும் அளவுக்கு இருக்கும். நம் அப்பாத்துரையார் அவர்கள், எந்த நேரத்தில் பார்த்தாலும், சிந்தனை - படிப்பு - எழுத்து என்று சிறப்பாகக் கழித்திருக்கிறார். மற்ற நாடுகளில் அறிவாளர்கள் ஒன்று சொன்னால், அதை ஏற்றுக் கொள்வதற்கு அங்கே ஒருவரோடு ஒருவர்போட்டி போட்டுக் கொள்வார்கள். ஆனால் இந்த நாட்டில் ஒருவரை ‘அறிவாளி’ என்று சொன்னாலே ஆபத்து; “அவன் என்ன பெரிய அறிவாளியா? என்ன அறிவு?”.... பெரிய அறிவு!” என்று கேட்பதன் மூலம் தங்களிடம் அறிவு இருக்கிறது எனக்காட்டிக் கொள்ளச் சிலர் முனைவார்கள்! இத்தகைய அறிவுப் பணி புரிவதே பெரிய சிக்கல்தான்; ஆனால் சிக்கலிலேதான் சுவையும் இருக்கும். மேனாடுகளில் எந்த அளவு இப்பணியில் ஈடுபடுகிறார்களோ அந்த அளவுக்கு எழுத்துத்துறையானாலும், பேச்சுத் துறையானாலும், வேறு எந்தத் துறையானாலும் இங்கே உற்சாகமாக ஈடுபடுவது என்பது மிகமிகக் கடினம். இப்படிப்பட்ட கடினமான தொண்டை முப்பது - முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கி, பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் நிறைவேற்றி வருகிறார். அவர், தம் வாழ்க்கையைக் கரடு முரடான பாதையில் நடத்தி, அதே வேளையில் மிகத் தெளிவான தமிழறிவைத் தமிழகம் ஏற்கும் அளவுக்குப் பணி புரிந்திருக்கிறார். சுதிக்குள் பாடும் இசைவாணர் அப்பாத்துரையாரது வாழ்க்கை, ஒரு பூந்தோட்டமா? இல்லை! வறுமைச் சூழலிலே தம் குடும்பச் சூழலை அமைத்துக் கொண்டு இருப்பவர் அவர். எனினும் பண்பட்ட உள்ளத்தோடு மாற்றாரின் இழிமொழிகளையும் ஏசல்களையும் தாங்கிக் கொண்டு - தம் பணிகளைச் செய்திருக்கிறார். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் சொன்னது போல், அவர் விரும்பியிருந்தால் ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ஆகியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்து கொள்ளவில்லை. எந்தெந்த வகையில் எல்லாம் தமிழுக்குத் தொண்டாற்றலாம் - எந்தெந்த வழிகளில் எல்லாம் தமிழ் நாட்டுக்குப் பணியாற்றலாம் என்று எண்ணி எண்ணி, அந்ததந்த நேரங்களில் அருந்தொண்டு ஆற்றியவர் அப்பாத்துரை யார். ஒவ்வொன்றையும் பற்றி ‘இப்படிச் செய்வது சரியா?’ என்ற கேள்வி அவருடைய எண்ணத்தில் ஊடுருவி நிற்கும். ஆகவே, சிறிது காலம் பள்ளி ஆசிரியராக இருப்பார்; பிறகு அது பிடிக்காமல் பத்திரிகை ஆசிரியர் ஆவார்; அதன் பிறகு, தமிழ்ப் பாதுகாப்புப் பணியில் குதிப்பார். பின்னர், போராட்டத்தினால் பயனில்லை என்று கருதி, ஏடுகளை எழுதி அளிக்கஎண்ணுவார். இவ்வாறு அந்தந்த நேரத்தில் தோன்றுவதில் ஈடுபடுவார். இசை நிகழ்ச்சியில் பாடுபவர் - பல வகையான பண்களை ஏற்ற இறக்கத்தோடு பாடினாலும் - பல்வேறு இசை நுணுக்கங் களைக் கையாண்டாலும் - ஒரு சுதிக்குள்ளே நின்றுதான் பாடுவார். அதுபோலவே, அப்பாத்துரையாரும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும் ஒரு சுதிக்குள்ளாகவே - ‘தமிழ் வாழ வேண்டும் தமிழ் வளர வேண்டும்’ என்ற ஒரு குறிப்பிட்ட கொள்கை வட்டத்தில் நின்று தொண்டாற்றியவர். மாறுபட்ட கருத்துடையவர்களும் தமிழ் மொழியின் பாதுகாப்பைப் பொறுத்து இன்று ஒன்றுபடுகிறார்கள். நானும் குன்றக்குடி அடிகளாரும் தோற்றம் - போக - நடவடிக்கைகள் - இருக்கும் இடம் - ஆகியவற்றில் மாறுபட்ட வர்கள்; என்றாலும், எங்கள் இருவரையும் தமிழ் ஒன்றுபடுத்தி இருக்கிறது. இதுதான் நாம் கையாள வேண்டிய சுதி! இதற்குள் நாம் எல்லா வற்றையும் காட்டலாம்; இந்த நிலை ஏற்பட, தமிழ் நாட்டில் முப்பது ஆண்டுகளுக்குமேல் பாடுபட வேண்டியிருந்தது! இந்தச் சுதியை நமக்கு அமைத்துக் தந்தவர்களில் அப்பத் துரையாரும் ஒருவர், அப்படிப்பட்ட முறையில் அமைவதுதான் அடிப்படையான தொண்டு. கடன்பட்டுக் குடிமாறும் புத்தக ஆசிரியர்கள் மேலை நாடுகளில் ஒரே ஒரு புத்தகம் எழுதினாலே, ஒருவர் தம் வாழ்நாளை வசதியாகக் கழித்துவிட முடியும் - அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு! அப்படிதான் ஓர் எழுத்தாளர் தாம் எழுதிய புத்தகத்தின் வருவாயைச் செலவழிப்பதற்காக - ஓராண்டுக் காலம் ஓய்வில் இருந்தே செலவழிப்பதற்காக - தென்அமெரிக்காவுக்குச் சென்று அங்கே வாழ்ந்தாராம்! இங்கோ... ... ஓர் ஆசிரியர், ஒரு புத்தகத்தை எழுதி வெளி யிட்டார் என்றாலே, குடியிருந்த வீட்டை மாற்றுவதைப் பார்க்கிறோம். அந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்குத் தாம் பட்ட கடனை அடைக்க முடியாமல், கடன்காரர்களுக்கு அஞ்சி, தென் சென்னையில் வீடு இருந்தால் வட சென்னைக்கும், வடசென்னை யில் வீடு இருந்தால் தென் சென்னைக்கும் அவர் குடிபோவார்! அப்படிப்பட்ட நிலையே இங்கு இருக்கிறது! இங்குப் புத்தகம் எழுதுவதும் அதன் மூலம் வருவாய் தேடுவதும் அவ்வளவு கடினம்! புத்தகம் வாங்கும் பழக்கம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும். அப்பாத்துரையின் நூல்களை - ஏடுகளை - வீடுதோறும் வாங்கி வைக்க வேண்டும். அப்பாத்துரையார் எழுதிய நூல்களில் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்னும் நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும் - எத்தனை ஆயிரம் கவிதைகளை, இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் - என்பதை எண்ணி எண்ணி வியந்தேன். புத்தகம் எழுதுவோரை மற்ற நாடுகளில் எல்லாம் வித்தகர் களாகப் போற்றுகிறார்கள். இந்த நாட்டிலோ, ‘புத்தகம் எழுதி இருந்த பணத்தைப் பாழாக்கிக் கொண்டவர்கள்’ என்கிற பழிச் சொல்தான் கிடைக்கும் எழுத்தாளர்களுக்கு! இந்த நிலையிலும் நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள், தமிழ்மொழிக்கு ஏற்றம் தரும் பல அரிய நூல்களை எழுதி யிருக்கிறார். மறதி ஆகும் மரபு நம்மால் மதிக்கத் தக்கவர்களின் வாழ்க்கை வரலாறு முழு அளவுக்குத் தமிழகத்தில் இல்லை. ‘தனித்தமிழ் இயக்கம்’ கண்ட மறைமலையடிகள், ‘தமிழ்த் தென்றல்’-திரு.வி.க. நீதிக்கட்சித் தலைவர் சர்.பி.தியாகராயர் போன்றவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துத் தொகுத்து, நூல்கள் ஆக்கித் தருவதில் இன்றைய புலவர் பெருமக்கள் ஈடுபட வேண்டும். தமிழ் பெரும்புலவர்களின் - வாழ்க்கை வரலாறுகள் நம் மிடத்திலே இல்லை. அப்படிப்பட்ட பெரியார்களின் வரலாற்றை மறந்துவிட்டால், நம்முடைய ‘மரபு’ பிறகு நமக்குக் கிடைக்காது. ‘மரபு’ என்பதே இப்போது ‘மறதி’ என்று ஆகிவிட்டது. பண்டைத் தமிழ் மன்னர்களைப் பற்றிச் சரியாக எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. நம்முடைய பள்ளிச் சிறுவர்களின் பாடநூலைப் பார்த்தால் - இராசராச சோழனுக்கு இராசேந்திர சோழன் மகன் என்று சொல்வாரும் உண்டு; தம்பி என்பாரும் உண்டு’ என்று இருக்கும்! ஒரு புத்தகத்தில் கரிகாலனைப் பற்றியத் செய்தி வருகிற இடத்தில் ஒரு நட்சத்திரக் குறி இட்டிருப்பார்கள். அதற்கு விளக்கம் கடைசிப் பக்கத்தில் இருக்கும். ‘கரிகால் வளவன் உரையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டான் என்பது உண்மை என்பாரும் உண்டு; இல்லை என்பாரும் உண்டு’ என்று இப்படித்தான் அந்த விளக்கம் எழுதப்பட்டிருக்கும்! உண்மை வரலாறு உருவாகட்டும் இப்படி ஐயப்பாடுகளுக்கு இடம் கொடுக்கும் போக்கினை நீக்கி, உண்மையான தமிழக வரலாற்றை உருவாக்கும் பணியினை வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். கல்வெட்டுகளில் காணப்படுவதையும், இலக்கிய ஏடுகளில் உள்ளவற்றையும், இன்ன பிற சான்றுகளையும் திரட்டி, தமிழக வரலாற்றைத் தொகுத்துக் கொடுக்கும் பணியைத் தமிழ் மக்கள் - தமிழ்ச் சான்றோர்கள் - ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் சில திங்கள்களில் (1968- சனவரித் திங்கள் முதல் வாரத்தில்) இரண்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாடு சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்குள் இந்தப் பணியைச் செய்து முடித்தால், வெளிநாடுகளிலிருந்து வருபவர் கட்கு, “இது தான் எங்கள் நாட்டு வரலாறு” என்ற எடுத்துக் காட்டமுடியும். இத்தகைய பணியை செய்து முடிக்கக்கூடிய குழு ஒன்று அமைக்கப்பட்டால், அதற்குத் தலைமை - ஏற்றுப் பணியாற்று வதற்கு முழுத் திறமை பெற்றவர் - பன்மொழிப் புலவர் அப்பாத் துரையாரே ஆவார் என்பதை இங்கு நான் தெரிவித்துக் கொள் கிறேன். (சென்னையில் 20-9-1967 அன்று நடைபெற்ற பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் அவர்களின் மணி விழாவுக்குத் தலைமை தாங்கி அன்றைய முதல்வர் - பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய பாராட்டுரை. நன்றி - ‘நம் நாடு’ நாளிதழ் - : 22-9-1967.) அப்பாத்துரையார் அறிவைப் பேணாத அரசு! அறிவு பல துறையினது; எனவே அறிஞர்களும் பல துறையினர் ஆவர். தமிழ் எனும் மொழித்துறையும் அதன் புலமைத் துறையும் பற்பல. தமிழில் கலைகளும், பண்பியல்களும், புறத்துறையைச் சார்ந்த அறிவு நிலைகள். தமிழின் மொழியியலும், சொல்லியலும் ஒலியியலும் அதன் அகத்துறையைச் சார்ந்த அறிவு நிலைகள். இசை, இயல், நாடகம் என்பன கலைத்துறை அறிவு நிலைகள். அவற்றுள் இலக்கியமும் இலக்கணமும் இயல்துறையைச் சார்ந்தவை. அறநூல்களும் வாழ்வியல் நூல்களும் பண்பியலைச் சார்ந்தவை. மொழியியலும் அது சார்ந்த இனவியலும் வரலாற்றைச் சார்ந்தவை. இன்னோரன்ன பலதுறைத் தமிழ் அறிவியலில் தனித்தனித் துறையறிவும், பல்துறை அறிவும் சான்ற பேரறிஞர்கள் பலர் அன்றுந் தேன்றினர்; இன்றுந் தோன்றி இருந்து சிறந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே படித்தாய் வளர்ந்தவருமிலர்; வாழ்ந்தவரும் இலர். அவர்களை அடையாளங் கண்டு கொண்டவரும் கொள்பவரும் மிகச் சிலரே! வாழ்க்கை என்பது வெறும் உயிர் வாழ்தல், பொருளியல் துய்ப்புகளில் மேம்படுதல் என்பன மட்டுமே பொருள் பெறுமாயின், அறிவு வாழ்க்கையே பொருளற்றதாகப் போய்விடும். அறிஞர்களோ பிறவியிலேயே உயர் உணர்வு பெற்றவர்களாக, வாழ்வியலில் அக்கறை கொள்ளாமல், அறிவுத் துறைகளிலேயே தம்மை மூழ்கடித்துக் கொண்ட முழு மாந்தர்களாக வாழ்ந்து சிறப்பவர்களாவர். எனவே அன்றும் இன்றும் என்றும், வறுமை அவர்களுக்கு உயிருடைமையாகவே உள்ளது. அவ்வறிஞர்கள் வரிசையில் நம் தமிழறிஞர்கள் தொன்று தொட்டு வறுமையிலேயே செம்மையைக் கண்டவர்களாக இருந்து வருவதை வரலாறு உறுதி கூறும். அறிவு முனைப்பால் முழுமை பெற்றவர்களாதலின், அவர்கள் தம் ஊனுடம்பு ஓம்பும் வெற்று வாழ்ககைக்காக, எதற்காகவும் எவரிடத்தும் எப்பொழுதும் கூனல் எய்தாக் கொள்கையாளர்களாக இருந்து, தாம் பேசும் தண்டமிழ்க்கும் தாம் வாழும் இனத்துக்கும், தாம் பிறந்த நிலத்துக்கும் அரிய பல தொண்டுகளாற்றி, இறுதி வரை, வாழ்வியலுக்கு உறுதி பயப்பதாம் பொருள் நிலையில் ஓர் இம்மியும் உயராது, வறுமையிலேயே வாழ்ந்து வெறுமையிலேயே மறைவோராக இருக்கின்றனர். அவ்வருந்தமிழ்ச் சான்றோர்களுள், அண்மைக் காலத்தே நம்மிடையே தோன்றியிருந்து அரிய பல அறிவுத் தொண்டாற்றி, இறுதியில் கலங்கிய நெஞ்சொடும், கண்ணீர் விழியொடும், காலச் சுழலில் மாய்ந்து போனவர்களான இரு பெரும் புலவர்கள் என்றென்றும் இவ்வினமும் நிலமும் நினைக்கத் தக்க சான்றோர்கள் ஆவர். அவர்கள் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரும் ஆவார்கள். இவருள் பாவாணரை என் வாழ்வில் நாற்பத்தைந்தாண்டுக் காலம் அருகிருந்து பார்த்தேன்; பன்மொழிப் புலவரை கடந்த முப்பதாண்டுகளாக என் அகத்திருந்து பார்த்தேன். இவர்கள் இருவரும் இவ்விருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேரு மலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த ப/றுளியாறும், குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெரு மக்கள்! மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்களை விண்மீன்கள் என்றால், இவர்கள் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணாளர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டுத் தவம் இயற்றிய தீந்தமிழ்த்துறவோர்கள். பாவாணர்க்கும் பன்மொழிப் புலவர்க்கும் நெருங்கிய உளத்தொடர்பும், கொள்கைத் தொடர்பும், அறிவுத் தொடர்பும் உண்டு. உழைப்பில் இருவரும் ஊக்கம் இழக்காத ஓர் ஏர் உழவர்கள், யாருக்கும் அஞ்சாத வல்லரிமாக்கள்! தண்டமிழ்த் தாயின் தவப்பெரும் புதல்வர்கள்; வறுமையில் செம்மை காத்த பெருமையாளர்கள்! மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப் பற்றும் கொண்ட நல் உரவோர்கள்! தமிழகத்தில் பொதுவான அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள் பற்பலர் அவ்வப்போது தோன்றுகின்றனர்; பல அருஞ்செயல்களைக் கூடச் செய்கின்றனர்; செய்தும் வருகின்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் ஒரே தரத்தினர், அறிவுத் திறத்தினர் அல்லர். அவரவர்களுக்கு அவரவர்களுடைய வாழ்க்கைக்குத் தமிழ் ஒரு பிழைப்புக் கருவி. அவர்கள் தமிழைப் படித்தனர்; அல்லது கற்றனர்; அதில் புலமை பெற்றனர்; அல்லது ஆசிரியத் தன்மை பெற்றனர்; வாழ்வுற்றனர். ஆனால், பாவாணரைப் போலும், அப்பாத்துரையார் போலும் தமிழ் அறிஞர்களும் பெரும் கொள்கைப் புலவர்களும் எப்பொழுதோ ஒருமுறை, ஓரிரு கால கட்டத்திற்குள்தாம் பிறந்து தம்மால் தமிழையும் தமிழால் தம்மையும் மேம்படுத்தும் அரும்பெறல் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தமிழுக்கு ஆற்றிய அல்லது ஆற்றி வரும் தொண்டுக்குப் புலவர்கள் பிறர் அத்தனையரும் இணைந்து ஆற்றிய அல்லது ஆற்றிவரும் தொண்டும் ஈடாகாது என்று உறுதியாய் மெய்ப்பித்துக் காட்ட முடியும். அத்தகைய கொள்கைப் புலவோர்கள் தமிழுக்கு ஆற்றியது தான் - ஆற்றி வருவதுதான் தொண்டு-என்னும் பெருமை பெறக் கூடியது. புறநிலையில் அவர்போல் வைத்து எண்ணக் கூடிய புலவர்கள் பிறர் செய்வது பணி; தமிழ்ப் பணி! அல்லது ஆசிரியப் பணி; பேராசிரியப் பணி! எனவே தமிழும், தமிழினமும் தமிழ்நாடும பாவாணர், அப்பாத்துரையார் போலும் தனிமுதல் பேராசிரியர்களால் - அவர்கள் வாழ்க்கையையே ஈடு வைத்து ஆற்றிய தொண்டால் - பெருமை யுற்றன; நிலைமை பெற்றன; சிறப்புப் பெற்று வருகின்றன. இவர்களுள் பாவாணர் தமிழ்மொழி ஆய்வில் தனிக்குன்றம் எனச் சிறந்து விளங்கினார். பன்மொழிப் புலவர் திராவிட மொழி ஆய்விலும் வரலாற்றிலும் தமிழையும் தமிழரையும் தமிழ்நாட்டையும் மேம்பாடு உறச் செய்தார். ஆனால் நம் நெடு வரலாற்று மூடக்கடைப்பிடியால் இருவரும் குன்றின் மேலிட்ட விளக்காக வாழாமல், குடத்துள் சுடர்ந்த விளக்குப் போல் நலங்குன்றி, வளங்குன்றி வறுமையிலேயே பெருமூச்செறிந்து உயிர் தவிர்க்கலாயினர். இது கழிபெரும் இரங்கல்! நாம் கழித்துக் கட்ட வேண்டிய புலமைப் புறக்கணிப்பு! இப்பிழைப்புக்கு நாமும் நம்மையாளும் அரசும் பெருந்தண்டனை ஏற்கத் தக்கவர்கள்! நாணித் தலைகுனிய வேண்டியவர்கள்! பாவாணர் மறைந்த பொழுது அவர் செய்ய வேண்டிய பணி, முற்றுப் பெறாமல் பரந்துபட்டு நின்றது. அவர் ஏறத்தாழ இருபத்தைந்து நூல்கள் எழுதி இத்தமிழுலகு பயன்பெறத் தந்து சென்றார். ஆனால் பன்மொழிப் புலவரோ ஏறத்தாழ நூற்று எண்பது நூல்களுக்குப் பேராசிரியராக விருந்து அறிவாளுமை செய்து மறைந்தார். இருவரும் இன்னும் எழுதி முடிக்க வேண்டிய அறிவு நூல்கள் பல உள. அம் முடிக்கப்பெறா நூல்கள் இவ்விருவர் பாங்கிலிருந்தும் நமக்குக் கிடைக்கப் பெறாமற் போனது நம் போகூழே! நாமேதாம் அவர்கள் தம் பணியில் முற்றுப் பெறாமற் சென்றதற்கு முழுக் காரணர்களாகப் பொறுப்பேற்றுக் கொள்ளுதல் வேண்டும். இது நமக்கு மட்டுமன்று. நம் மொழிக்கு இனத்திற்கும் நாட்டிற்கும் நாமே ஏற்படுத்திக் கொண்ட பெரும் பேரிழப்பாகும்! எதிர்காலம் நம்மைப் பொறுத்துக் கொள்ளாது. நம் பெருமைக்குரிய பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்கள் பாவாணர் மறைந்த எட்டாண்டுகள் கழித்து மறைந்துள்ளார். பாவாணர் மறைந்த பின்னை நாமும் நம் அரசும் விழித்துக் கொண்டிருந்தாலும் நம் பன்மொழிப் புலவரை இன்னும் சில காலத்திற்குப் புரந்து பேணி அவர் எச்ச அறிவாட்சியை நீட்டித்திருக்க வழி செய்திருக்கலாம். அதன் வழி அவர் அறிவால் இம்மொழிக்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் கிடைத்திருக்க வேண்டிய அறிவுக் கருவூலங்களைக் கிடைக்கச் செய்திருக்கலாம். ஆனால், நாம் தாம் போற்றிக் கொள்ள வேண்டிய பெரும் புலமையை மண்ணில் போட்டுப் புதைத்து விட்டு, அப் புதை மேடையில் நின்று மறைந்து போன புலவர்க்குப் போற்றுதலுரையும், விழா வேடிக்கையும் செய்து நிறைவுறுவோர்கள் ஆயிற்றே! என் செய்வது? இனி, பன்மொழிப் புலவர் தம் வாழ்வியல் நிலைகளை நன்றியுடன் நினைந்து வியந்து போற்றுதல் செய்வோம். புலவரவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல் வாய்மொழி எனும் சிற்றூரில் 24.6.1907 ஆம் ஆண்டுப் பிறந்தார் பெற்றோர் முத்தம்மாளும் காசிநாதரும் ஆவர். சிறு அகவைப் பொழுதிருந்தே தமிழுணர்வும் தமிழின உணர்வும் அவருள் காழ் கொண்டிருந்தன. எதையும் விரைந்து கற்கும் ஆர்வமும், கற்றவற்றை நினைவில் இருத்திக் கொள்ளும் திறமும் இயற்கையாகவே வாய்க்கப் பெற்றவராகையால், அவர் தமிழுடன் ஆங்கிலம், சமசுக்கிருதம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளையும் பள்ளிப் பருவத்திலேயே எளிதாகக் கற்றுத் தேர்ந்தார். தொடக்கத்தில் ஆங்கிலத்திலேயே மதிதகு இளங்கலை ஆங்கிலப்பட்டம் க்ஷ.ஹ.(ழடிn’ள) பெற்றார். பின்னர் தமிழில் முதுகலை (ஆ.ஹ.) தேர்வுற்றார். தமிழில் முதுகலை பட்டம் பெறுவதற்கு முன்னரேயே இந்தியில் விசாரத் (க்ஷ.ஹ.வுக்குச் சமமானது) பட்டம் பெற்றது பெருவியப்பே! பின்னர், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குசராத்தி போலும் திராவிட மொழிகளையும், அரபு, சப்பான் ஈபுறு, மலாய் ஆகிய ஆசிய மொழிகளையும், பிரெஞ்சு, செர்மன், உருசிய, இத்தாலி முதலிய ஐரோப்பிய மொழிகளையும் ஆர்வத்தால் தொடர்ந்து கற்றுப் பன்மொழிப் புலவர் என்ற தனிச் சிறப்புப் பெற்றார். தமிழகத்தில் பன்மொழிப் புலவர் என்று அழைக்கும் தகுதி பெற்றவர் நம் பெருமதிப்பிற்குரிய கா. அப்பாத்துரையார் ஒருவரே. இனி வருங்காலத்தில்கூட இப்பன்மொழிப் புலமைத் தகுதிபெறம் ஒருவர் தோன்றுவார் என்பதற் குறுதியில்லை. ஒரு மொழிப் புலமை எய்துவதற்கே ஒருவர் வாழ்நாள் முழுமையும் செலவிட்டாலும் போதாது என்னும் நிலை இயல்பானதாயிருக்க, பன்மொழிப் புலமை பெறுவதென்பது செய்தற்கரிய செயலே அன்றோ? நம் பேரறிஞர் அவர்கள் தொடக்கத்தில் அரசுப் பணியாளர், ஆசிரியர், இதழாசிரியர் எனப் பல்வேறு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். நூலாசிரியர் என்னும் நிலையில் இவர் தமிழகத்தின் தனிநிலைப் பேராசிரியராக விளங்குவது பெருமைப் படத்தக்கது. இதுவரை வெளிவந்த அவருடைய நூற்களே ஏறத்தாழ 180 அளவில் இருக்கும். (சரியான கணக்கு எடுக்கப் பெற்று வருகிறது.) இலக்கியம், வரலாறு, மொழியாய்வு, மக்கள் வரலாறு, திருக்குறள், சமயம், மெய்ப் பொருளியல், ஆராய்ச்சி முதலிய பல்வேறு துறைகளில் பல அரிய நூல்களை இத் தமிழ் மொழிக்கும், இம்மக்களுக்கும் ஆக்கி வழங்கிய பெரும் பேராசிரியர், அவர். அவர் எழுதிய நூல்களுள் மிக முகாமையானவை; மொழியியலில், தென்மொழி, வளரும் தமிழ், மொழிவளம், ஐனேயை’ள டுயபேரயபந ஞசடிடெநஅ (மறைமலையடிகளாரின் அரிய முன்னுரையைக் கொண்ட ஆங்கில நூல்), கால்டுவெல் ஒப்பிலக்கணம் முதலியன; வரலாற்றியலில், தமிழக வரலாறு, இந்திய நாகரிகத்தின் திராவிடப் பண்பு, வருங்காலத் தமிழகம், குமரிக்கண்டம், தென்னாடு, தமிழ் முழக்கம், தமிழன் உரிமை, இதுதான் திராவிடநாடு, தாயகத்தின் அமைப்பு, ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், இருகடற்கால்கள், இந்திய மக்கள் விடுதலை வரலாறு, சரித்திரம் பேசுகிறது. கொங்குத் தமிழக வரலாறு (மூன்று பகுதிகள்), கெஞ்சிக்கதை முதலியன; மாந்தவியலில், நல்வாழ்வுக் கட்டுரைகள், வாழும் வகை, சங்க காலப் புலவர், சமதர்ம விளக்கம், இல்லறமாண்பு, சங்க இலக்கிய மாண்பு, மக்களும் அமைப்புகளும், தென்னகப் பண்பு, முதலியன; இலக்கிய வியலில், சங்க இலக்கிய மாண்பு, செந்தமிழ்ச் செல்வம், சிலம்பு வழங்கும் செல்வம், உலக இலக்கியங்கள். மேனாட்டு இலக்கியக் கதைகள் (இரண்டு பகுதிகள்), அன்னை அருங்குறள் முதலியன. திருக்குறள் தொடர்பாக - வள்ளுவர் நிழல், திருக்குறள் மணி விளக்க உரை (6 பாகங்கள்) திருக்குறள் தெளிவுரை, திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு, (ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் (ஆiனே யனே கூhடிரபாவ டிக கூhசைரஎயடடரஎயச) முதலியன; அறிஞர்கள் வரலாற்று வரிசையில், ஆங்கிலப் புலவர் வரலாறு. அறிவுலக மேதை பெர்னார்டுசா, ஓவியக் கலைஞர் இரவி வர்மா, சேன்அயர், பெஞ்சமின் பிராங்ளின், அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன், தளவாய் அரியநாதர், கிருட்டிண தேவராயர், சுபாசு சந்திரபோசு, வில்லியம் கூப்பரின் கடிதம், டேவிட் லிவிங்சுடன், ஐதர் அலி முதலியன; பொதுமை நூல்கள்-குடியரசு, பொது வுடைமை, சமூக ஒப்பந்தம், முதலீடு (ஊயயீவையட), போதும் முதலாளித்துவம், மே விழா முழக்கம், உலகம் சுற்றுகிறது, உயிரின் இயல்பு, அறிவுக்கடல், இன்பத்துள் இன்பம் முதலியன; கதை நூல்கள் - இரு நகரக் கதை, சேக்சுபியர் கதைக் கொத்து (நான்கு பாகங்கள்), விருந்து வரிசை, மாமனார் வீடு, முத்துமாலை, கடல் மறவர், கல்மனிதன், துன்பக்கேணி, நூர்சகான், மன்பதைக் கதைகள் (6 பாகங்கள்), விந்தைக் கதைகள் (4 பாகங்கள்), யாழ் நங்கை, மலைநாட்டுமங்கை, யுத்தக் கதைகள் முதலியன. இனி, எழுத்தாக்கக் கொடுமுடியாகத் திகழும் நூல்கள், இவருடைய திருக்குறள் மணிவிளக்க உரை-6 பகுதிகளும், திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பும் (ஏறத்தாழ 1000 பக்கங்கள்), ஆகும். இனி, அவர் துணையாசிரியராக இருந்து தொகுத்தது சென்னைப் பல்கலைக் கழக வெளியீடான `ஆங்கிலத் தமிழ் அகராதி’ ஒரு செயற்கரிய செயலாகும். இதன் தலைமைத் தொகுப்பாசிரியராகத் திகழ்ந்தவர் மறைந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் பா. அ. சிதம்பரநாதனார் என்றாலும், அதன் முழுப் பணியும் நம் பன்மொழிப் புலவர் அவர்களையே சாரும் என்பதை அறிந்தார் அறிவர். இனி, இதன் அடிப்படையில், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக வந்த `ஆங்கிலத் தமிழ்க் கையகராதி’ என்னும் ஏறத்தாழ 700 பக்கச் சில வெளியீடு மிகு பயனுடைய அரிய அறிவு நூலாகும். இத்தனை நூல்களை இவர் எழுதி வெளியிட்டிருந் தாலும், இவற்றாலெல்லாம் இவர்க்குக் கிடைத்த அறிவுக் கூலியோ மிக மிக எளிய சிறு சிறு தொகைகளே! இவர் நூல்களை வெளியிட்டுக் கொடுத்த பதிப்பகங்களால் இவர் பெரிதும் ஏமாற்றப்பட்டிருக்கிறார். இவர் நூல்களை வெளியீடு செய்து கொள்ளையடித்த சில பதிப்பகங்கள் இவர்க்கு அறிவுக் கூலியாகக் கொடுத்தவை 100, 200 உருபாக்களும், மிகச் சில வெளியீட்டு நூல்களுமே! இவரின் கழக, ஆங்கிலத் தமிழ்க் கையரகராதிக்கு, அப்பதிப்பகத்தார் இவருக்குக் கொடுத்த தொகை வெறும் 300 உருபாவே என்றால், நம் நாட்டு வணிக நூல் வெளியீட்டகங்கள் புலவர்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு புலமையை விலை பேசும் நிலையினை என்னவென்று சொல்வது? இங்கு எப்படி அறிவு வளரும்? அறிஞர்கள் எப்படி வாழமுடியும்? கொள்ளையில் தலையாய கொள்ளை அறிவுக்கொள்ளையே! நம் பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களின் தனிநிலை வாழ்க்கை மிக மிக இரங்கத்தக்கது என்பதைத் தெரிவிக்க மிகமிக வருத்தப் படுகிறோம். இவரின் மூளையை உறிஞ்சிக் கொழுத்த வெளியீட்டாளர்கள் இன்றைக்குப் பெருஞ்செல்வம் படைத்த பெரும் முதலாளிகளாய் உள்ள நிலையில், இவர் மறைந்த காலை வீட்டாருக்கு இவர் வைத்துச் சென்றது ஏறத்தாழ ஐந்து இலக்க உருபா கடன் சுமையே என்றால் இவரின் அவல வாழ்க்கையை எண்ணி எவ்வாறு கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியும்? இவர் உயிரோடிருக்கும் பொழுது இவருக்குக் கிடைத்த பெருமைகள் பல. ஆனால் அவை வெறும் பெருமைகளும் பட்டங்களும் பாராட்டுகளுமே! 1961இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். தமிழகப் புலவர் குழு உறுப்பினராக இறுதி வரை இருந்துள்ளார். 1970இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்புறுப்பினராகக் கலந்து கொண்டார். பின் மதுரையில் நடந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில், தமிழக முதல்வர் முன்னிலையில் இந்தியத் தலைமையமைச்சரால் பொற்கிழியும் கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றார். 1973இல் செந்தமிழ்ச் செல்வர் பட்டமும், சேலம் தமிழகப் புலவர் குழுக் கூட்டத்தில் சான்றோர் பட்டமும், தமிழன்பர் பட்டமும் பெற்றார். 1981 சனவரி 26இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி பட்டமும் நம் பன்மொழிப் புலவர்க்கு அளிக்கப்பெற்றது. 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவர்க்கு திரு.வி.க. விருதையும் தங்கப் பதக்கத்தையும் கொடுத்துப் பெருமைப்படுத்தியது. அதே ஆண்டு மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் இவருக்குப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தையும் அளித்தது. ஆனால், இவை எல்லாவற்றினும் பெருமைப் படக் கூடிய செய்தி இங்கிலாந்து ஆக்சுபோர்டு பல்கலைக் கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்னும் நூலை, அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைத்துள்ளதே! இத்தனைப் பட்டங்களும் பெருமைகளையும் பெற்றுக் கொண்ட ஒரு பெரும் புலவர் அவற்றை வைத்துத் தமிழ் வணிகம் செய்யத் தெரியாத காரணத்தால், வாழ்வின் இறுதிக் கட்டம் வரை வறுமையிலேயே உழன்றார் என்பதும், இவர் மறைந்த பின் இவரின் விலைமதிப்பற்ற அறிவுடம்பும், எளிய ஓர் ஏழை மகனுக்கு வாய்க்கும் பூமலர்ப் பாடையில் கூட இன்றிப் புனைவு செய்யப் பெறாத ஒரு வெற்றுத் தென்னங்கிற்றுப் படுக்கையிலேயே கிடத்தி வைக்கப் பெற்றுத் தூக்கிச் சென்று சாவண்டியிலேற்றப் பெற்றதென்பதும் எத்துணைக் கொடுமை யான செய்திகள் என்பதை எண்ணிப் பார்க்கக் கேட்டுக் கொள்கிறேன். இனி, இதனினும் கொடுமை இவர் பொதுச் சுடுகாட்டில் எல்லா ஏழை எளியவர்களைப் போலவே வெறும் எருவாட்டியால் வைத்துத் தீ மூட்டப்பெற்றது. ஐயகோ! இன்றிருந்து நாளை ஒன்றுமில்லாமற் போகும் அரசியல் தலைவர்களுக்குக்கூட கடற்கரை போலும் சிறப்பிடங்களில் புதைக்கப்பெறும் வாய்ப்பும், ஆரவாரப் புதை மேடைகளும் மணிமண்டபங்களும் கிடைப்பது இயல்பாய் இருக்க, அப்பாத்துரையார், பாவாணர் போலும் பேரறிவுப் பெருமக்கள் பொது இடுகாடுகளிலும் சுடுகாடுகளிலும் புதைக்கப் பெறுவதும், சுடப் பெறுவதும் எத்துணை கொடுமையானவை! இங்கிலாந்தில் அறிஞர்கள், புலவர்கள், பாவலர்களுக்கு றுநளவ ஆinளைவநச ஹbநெல என்னும் பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய அடக்கவிடம் இருப்பது இங்கு சிந்திக்கற் பாலது! அறிஞர்கள் மறைந்த பிறகு அவர்களை வெகுவாகப் போற்றிப் பேசுவதும், பாராட்டி வானளாவப் புகழ்வதும் நம் தந்நலத்தையும் மன இறுக்கத்தையுமே காட்டும். அறிஞர்கள் தனியாக வாழ்ந்து வளர்ந்து விடுவதில்லை. அனைவரும் குடும்பம் என்ற வயலிலேயே வளர்கின்ற பயிர்களாகவே இருப்பர். எவ்வளவுக்கெவ்வளவு அறிஞர்கள் தம் தனிநலத்தை மறந்து, பொது நலனுக்காக - மக்களுக்காக - தாம் பிறந்த மொழிக்காக - இனத்துக்காக - நாட்டுக்காகத் தங்களைப் பலியிட்டுக் கொள்கிறார்களோ - ஈகப்படுத்திக் கொள்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் குடும்பங்கள் நசிந்துப் போகின்றன என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்! இந்த உண்மை நம் பன்மொழிப் புலவர் வாழ்வில் நூற்றுக்கு நூறு மெய்யாகி நிற்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்திற்கு ஏராளமான கடன் சுமைகள். அவர்களின் தோள்களை அழுத்திக் கொண்டிருக்கும் சுமைகளை அரசும் மக்களும் தாங்கிக் கொள்ளுதல் வேண்டும். அத்துடன் அவருடைய நூல்களை மறுபதிப்புச் செய்தும் அச்சாகாத நூல்களை வெளிப்படுத்தியும், அவற்றை அரசுடைமையாக்கியும் அவருடைய அளப்பரிய அறிவுக்கு அரண் செய்தல் தமிழரசின் கடமையாகும்! அதன் வழி, தன்னை உண்மையாகத் தமிழ் நலமும் தமிழர் நலமும் கருதும் அரசாக மெய்ப்பித்துக் காட்டுதல் வேண்டும். அல்லாக்கால் எதிர்காலம் இன்றைய அரசையும் மக்களையும் குறைகாணவும் குற்றங்கூறவுமே செய்யும் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்! வாழ்க பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரின் அரும் புகழ்! பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். (528) - தென்மொழி பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் (24.7.1907-26-5-1989) `அறிவுச் சுரங்கம் அப்பாத்துரையார்’ என்று பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரை `முகம் மாமணி குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது என்பது அவருடன் பழகியவர் களுக்கு, அவருடைய பேச்சுக்களைக் கேட்டவர்களுக்கு, அவருடைய புத்தகங்களைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெறியும். அப்பாத்துரையார் பேசும்பொழுது, உலக வரலாறுகள் அணிவகுத்து நடைபோடும் அரிய செய்திகள், ஆய்வுச் சிந்தனைகள், ஒப்பீடுகள் நிரம்பிய அவருடைய பேச்சைக் கேட்டவர்கள் மூளை கனத்துவிடும். ஒரு சிறு மூளைக்குள் இவ்வளவு செய்திகளை எப்படி அடைத்து வைத்திருக்கிறார் என்று வியக்க வைக்கும். அவரைத் தமிழகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்னும் ஏக்கம் அறிஞர் களிடையே இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில் திருவாளர் காசிநாதப்பிள்ளை - திருவாட்டி முத்து இலக்குமி அம்மையாருக்கு மூத்த மகனாக 1907 ஆம் ஆண்டு, ஆனி மாதம் ஏழாம் நாள் (சூன் 24) பிறந்தவர் அப்பாத்துரையார். குடும்ப மரபையொட்டிப் பாட்டனார் பெயரான நல்லசிவன் என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. ஆயினும் பெரியோர்களால் செல்லப் பெயராக அழைக்கப்பட்ட `அப்பாத்துரை’ என்னும் பெயரே இவருக்கு இயற்பெயர் போல் அமைந்துவிட்டது. இவருடன் பிறந்த இளையவர்கள் செல்லம்மாள், சுப்பிரமணி, குட்டியம்மாள், கணபதி ஆகியோர். இரு தம்பிகள். இரு தங்கைகள், நல்லசிவன், காசிநாதன் என மாறி மாறி வரும் குடும்ப மரபில் அப்பாத்துரையாரின் பாட்டனாரின் பாட்டனார், அவர் பாட்டனாரின் பாட்டனார் ஆகிய ஏழாம் தலைமுறையினரான நல்லசிவன் என்பவர், கல்வி கற்ற, வேலையற்ற இளைஞராய்ச் சாத்தான்குளம் என்னும் ஊரிலிருந்து ஆரல்வாய்மொழி என்னும் ஊருக்கு வந்து, அக்கால (மதுரை நாயக்கர் காலத்தில்) அரசியல் பெரும் பணியில் இருந்த ஊரின் பெருஞ்செல்வரான தம்பிரான் தோழப்பிள்ளையிடம் கணக்காயராக அமர்ந்தார். ஆண் மரபு இல்லாத தம்பிரானுக்கு நல்லசிவன் மருமகன் ஆனார். சதுப்பு நிலமாயிருந்த புறம்போக்குப் பகுதி ஒன்றைத் திருத்திப் புதிய உழவு முறையில் பெருஞ்செல்வம் ஈட்டிய அவரே அப்பாத்துரையார் குடும்ப மரபின் முதல்வர். அவருக்கு நாற்பது மொழிகள் தெரியுமாம். குடும்ப மரபினர் வழியில் தன் பிள்ளையும் எல்லா மொழிகளும் பயில வேண்டும் என்னும் வேட்கையில் காசிநாதப்பிள்ளை அப்பாத்துரையாரிடம், `குறைந்தது ஏழு மொழிகளில் நீ எம்.ஏ. பட்டம் பெற வேண்டும். ஆங்கிலம் முதலில் தொடங்கி, பதினைந்தாம் வயதில் எம்.ஏ., முற்றுப் பெற வேண்டும். இருபத்து மூன்று வயதிற்குள் இயலும் மட்டும் மற்றவை படிக்க வேண்டும்’ என்று கூறினார். அவருடைய எண்ணத்தைத் தம் வாழ்நாளில் நிறைவேற்றி முடித்தவர் அப்பாத்துரையார். பழைய - புதிய மொழிகள் என ஆப்பிரிக்க மொழிகள் உட்பட நாற்பது மொழிகள் (ஏழாம் தலைமுறை பாட்டனார் போல்) அப்பாத்துரையாருக்குத் தெரியும். எழுத, பேச, படிக்க என அய்ந்து மொழிகள் தெரியும். அவை: தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், மலையாளம் ஆகியன. இனி அப்பாத்துரை யாரின் வாய்மொழி யாகவே அவரது வரலாற்றுச் சுருக்கத்தைக் கேட்போம். `ஆரல்வாய்மொழி ஊரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தபோது, புதிதாக அரசினர் பள்ளி தொடங்கப் பட்டது. அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் திருவாங்கூர் தனி அரசில் சேர்ந்திருந்த நிலையில் அப்புதிய பள்ளியில் தமிழுக்கு இடம் இல்லாதிருந்தது. தமிழ்க்கல்வி நாடி, குலசேகரப்பட்டினத்திலிருந்த என் பெரியன்னை வீட்டில் தங்கிப் படித்தேன். பின், குடும்பத்தினர் அனைவரும் எனக்காக நாகர்கோவிலில் குடியேறி, வாடகை வீட்டில் இருந்து வந்தனர். இந்நிலையில் என் பெற்றோர் என்னை நான்காம் வகுப்பிலிருந்து கல்லூரி முதலிரண்டு ஆண்டு படிப்பு வரை பயிற்றுவித்தனர். 1927இல் எனது பி.ஏ., ஆனர்ஸ் (ஆங்கில இலக்கியம்) படிப்புக்காகத் திருவனந்தபுரம் சென்றேன். நண்பர்கள் வீடுகளில் தங்கி, 1930இல் அத்தேர்வு முடித்து பணி நாடி சென்னைக்கு வந்தேன். சென்னையில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தேன். கூட்டுறவுத் துறையில் ஆறு மாதங்களும், `திராவிடன்’, ஜஸ்டிஸ்’ பத்திரிகைகளில் ஒவ்வொன்றிலும் ஆறு மாதங்களும், பச்சையப்பன் கல்லூரியில் இரண்டு மாதங்களும் பணியாற்றினேன். அதன்பின், `பாரத தேவி’, `சினிமா உலகம்’, `லோகோபகாரி’, `தாருல் இஸ்லாம்’ ஆகிய பத்திரிகைகளின் விற்பனைக்களம் அமைத்ததோடு, அவற்றில் பாடல், கட்டுரைகள் எழுதி வந்தேன். இச்சமயம், புகழ்வாய்ந்த சேரன்மாதேவி `காந்தி ஆசிரமம்’ என்ற குருகுலம் அரசியல் புயல்களால் அலைப்புற்று, கடைசியில் காரைக்குடி முத்துப் பட்டிணத்தில் சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலம் என்ற பெயரால் நடைபெற்று வந்தது. இதில் நான் தோழர் ஜீவானந்தத்திற்கு அடுத்த தலைமை ஆசிரியராக ஓராண்டும், `குமரன்’ பத்திரிகைகளில் சில மாதங்களும் பணியாற்றினேன். நாகர்கோவில் திரும்பி மீண்டும் சில மாதங்கள் கழித்த பின், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாசரேத், சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் காந்தியடிகளின் ஆக்கத் திட்டங்களில் ஒன்றாகிய இந்தி மொழி பரப்புதலை நன்கு நடத்தி வந்தேன். அதன் முத்தாய்ப்பாக ராஜாஜி முதல் அமைச்சரவையின் ஆட்சியின் போது, திருநெல்வேலி, எம்.டி.டி. இந்துக் கல்லூரி பள்ளியில் 1937 முதல் 1939 வரை இந்தி ஆசிரியராகப் பணியாற்றினேன். இங்கிருக்கும்போதுதான் இந்தி விசாரத் தேர்வையும் முடித்துக் கொண்டேன். நாச்சியாரை நான் திருமணம் செய்து, இரண்டாண்டு வாழ்க்கைக்குப் பின் அவளையும், என் தந்தையும் ஒருங்கே இழந்தேன். அரசியல் சூழல்களால் இந்தி கட்டாயக் கல்வி நிறுத்தப்பட்டதனாலும், என் சொந்த வாழ்க்கையில் நேரில் துயரங்களாலும் நான் திருநெல்வேலியை விட்டு வெளியேறினேன். இதே ஆண்டில் ஆங்கில எம்.ஏ. பட்டம் பெற்றதுடன், தமிழ் எம்.ஏ.வையும் தனிமுறையில் திருவனந்தபுரத்தில் எழுதித் தேறினேன். அத்துடன் ஆசிரியப் பயிற்சிக்காக ஓராண்டு சென்னை சைதாப்பேட்டை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் படித்தேன். இதே ஆண்டில்தான் காந்தியடிகளை, இந்திப் பிரச்சார சபையில் கண்டு பழகவும், மறைமலையடிகளுடன் தொடர்பு கொள்ளவும், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தில் என் தமிழ் நூலாசிரியப் பணி தொடங்கவும் வழி ஏற்பட்டது. 1941இல் பழைய காந்தி ஆசிரமத்தின் புது விரிவாக செட்டிநாடு அமராவதிப் புதூரில் அமைக்கப்பட்டிருந்த சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலப் பள்ளியில் ஆறு மாதங்களுக்கு மேல் தலைமை யாசிரியராகப் பணியாற்றினேன். கவிஞர் கண்ணதாசன் இப்பள்ளியில் என் மாணவராய்ப் பயிலும்போது தான் தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கினேன். அப்பாத்துரையாரின் முதல் மனைவி நாச்சியார் அம்மையார் மறைவுக்குப் பின், செட்டிநாடு அமராவதிப்புதூரில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது அலர்மேலு அம்மையாரின் தொடர்பு கிடைத்தது. காதலாக மாறியது. திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் தலைமையில், திருக்குறளார் வீ. முனுசாமி முன்னிலையில் அப்பாத்துரையாரின் திருமணம் திருச்சியில் நடைபெற்றது. இதனையடுத்து, செட்டிநாடு கோனாப்பட்டில் சரசுவதி உயர்நிலைப் பள்ளியில் இரண்டாண்டுக்காலம் பணியாற்றினார். இந்த ஊருக்கு அறிஞர் அண்ணாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் வந்திருந்தபோது அவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர், பாவேந்தர் உதவியோடு 1943 இல் துணைவியார் அலர்மேலுவுடன் சென்னைக்குக் குடிவந்தார். பாவேந்தரின் உதவியால் ஆங்கில நாளேடான `லிபரேட்டரில்’ உதவியாசிரியராகப் பத்து மாதங்கள் பணியாற்றினார். பின்னர், `விடுதலை’ நாளேட்டில் ஆறு மாதங்களும், முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியல் இரண்டு ஆண்டுகளும் பணியாற்றினார். இக்காலங்களில் தான் பெரியாரின் தொடர்பும், திராவிடர் கழகக் தொடர்பும் இவருக்கும் அலர்மேலு அம்மையாருக்கும் ஏற்பட்டது. பின்னர், 1947 முதல் 1949 முடிய நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றினார். இச்சமயம் சைதாப்பேட்டையில் ஓராண்டுக்காலம் தங்கியிருந்த போது, `இந்தியாவில் மொழிச் சிக்கல்’ என்னும் ஆங்கில நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலை அடிகள் நாற்பது பக்கத்தில் முன்னுரை வழங்கி யுள்ளார் என்பது தனிச்சிறப்பு. இந்த நூலே, அப்பாத்துரையாரின் அரசுப் பணிக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. 1949 முதல் 1959 வரை பதினோரு ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தார். ஆயினும், இந்த ஓய்வே நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுத வாய்ப்பாக இருந்தது. வருவாய்க்கும் உதவியது. ஆங்கில மொழிக்கு ஜான்சன் தந்த ஆங்கில அகராதியைப் போல் தமிழுக்கு ஒரு அகராதி எழுத வேண்டும் என்ற விரைவு அப்பாத்துரையாரின் நெஞ்சில் ஊடாடியதால், முதலில் ஒரு சிறு அகராதியைத் தொகுத்தார். பிறகு அது விரிவு செய்யப்பட்டது. தற்கால வளர்ச்சிக்கேற்ப பெரியதொரு அகராதியைத் தொகுக்க வேண்டுமென்று எண்ணிச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகக் காவலர் சுப்பையாபிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையும், பண உதவியையும் நாடியபோது, பல்கலைக்கழகமே அம்முயற்சியில் ஈடுபடப் போவதாகக் கூறியது. அப்பணிக்கு அப்பாத்துரையாரை சென்னைப் பல்கலைக் கழகம் பயன்படுத்திக் கொண்டது. 1959லிருந்து 1965 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் தமிழ் அகராதித் துறையில் டாக்டர் அ. சிதம்பரம் செட்டியாருடன் இணையாசிரியராகப் பணியாற்றி `ஆங்கிலத் தமிழ் அகராதியை’ உருவாக்கினார். 1971 ஆம் ஆண்டு, தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபட்டு அதன் தலைவராகவும் தொண்டாற்றி யுள்ளார். இயக்கத் தொடர்பு அப்பாத்துரையாரின் முன்னோர் `பிரம்மஞான சபை’ என்னும் தேசிய விடுதலை இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். அப்பாத்துரையாருக்கும் அவ்வியக்கத்தில் ஈடுபாடு இருந்தது. டாக்டர் அன்னிபெசன்ட், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. லாலா லஜபதிராய், லோகமானிய பாலகங்காதர திலகர் ஆகியோரின் தேசிய இயக்கத்தின் தீவிர செயல்பாடுகளில் பற்று வைத்தார். அக்காலம் காந்தியார் இந்தியாவிற்கு வராத காலம். தேசிய விடுதலை இயக்கத்தைப் பரப்பும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர் அப்பாத்துரையார். தெருவில் தேசிய பஜனைக் குழுக்களுடன் பாடிச் சென்று இயக்கம் வளர்த்தவர். தன் சேமிப்புப் பணத்தில் மூடி போட்ட காலணா புட்டிகளை நிறைய வாங்கி, அதற்குள் துண்டுக் காகிதங்களில் தேசிய முழக்கங்களை எழுதிப் போட்டு, அப்புட்டிகளை குளம், அருவிகள், கடற்கரைகள் எங்கும் மிதக்கவிட்டவர். அதன் மூலம் தேசியச் சிந்தனைகள் பரப்பியவர். ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் வெளியான சிப்பாய்க் கலகம் பற்றிய ஆங்கிலப் பாடலை ஆங்கிலத்திலும், தமிழிலுமாக நிறைய படிகள் எழுதி, ஆசிரியர் சட்டைப் பைகளிலும் மாணவ நண்பர்களின் புத்தகங்களிலும் வைத்து நாட்டு விடுதலை எழுச்சியைப் பரப்பியவர். இத்தகைய தேசியவாதி, திராவிட இயக்கவாதியாக மாறியதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, திருவனந்தபுரம் பிரம்மஞான சபையின் சமபந்தி போஜனம். ஆதி திராவிடர் பரிமாற, பார்ப்பனரும் வேளாளரும் உட்பட அனைத்து வகுப்பினரும் கலந்து உண்ண வேண்டுமென்று வேளாளராகிய பி.டி.சுப்பிரமணியப் பிள்ளையும், கல்யாணராம ஐயரும் ஏற்பாடு செய்திருந்தனர். பந்தி வேளையில் எல்லாப் பார்ப்பனரும், வேளாளரும் எழுந்து சென்றுவிட்டனர். அதனால் இவ்விருவருக்கும் பெருத்த அவமானமாயிற்று. அதுமட்டுமன்றி, இவ்விருவரையும் தத்தம் அமைப்புகள் மூலம் சாதி நீக்கம் செய்துவிட்டனர். இந்நிகழ்ச்சி அப்பாத்துரையாரை மிகவும் பாதித்தது. தேசிய இயக்கத்தில் அப்பாத்துரையார் இருந்தபோதும் இளம் வயதிலேயே முற்போக்குச் சிந்தனையாளராக இருந்தவர். தேசியத் தலைவர்களான காந்தியடிகள், திலகர், லாலா லஜபதிராய் போன்றோரின் படங்களை வைத்து பூசை செய்வது அப்பாத்துரையாரின் வழக்கம். இச்செயலை தந்தையாரைத் தவிர மற்ற அனைவரும் கண்டித்தனர். அதற்கு அவர், `பெண்கள் சேலையை ஒளித்து வைத்த காமுகன், யானையை ஏவிப் பெண்ணை ஏமாற்றி வசப்படுத்திய காம வேடன் ஆகியோரை நீங்கள் கடவுளாக வணங்குகிறீர்கள். அவர்களைவிட இந்தத் தலைவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்’ என்று எதிர்மொழி தொடுத்துள்ளார். மேலும், எட்டாம் வகுப்பில் சேரும்பொழுது, பார்ப்பனத் தலைமையாசிரியர் நடந்து கொண்ட முறை ஆகியவை இவருடைய உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது. இவையெல்லாம் இவரை திராவிட இயக்கத்தின் பால் பற்றுகொள்ள வைத்துள்ளது. பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகும்படி, சென்னைக்குப் பாவேந்தரால் அழைத்து வரப்பட்ட அப்பாத்துரையார், `விடுதலை’ இதழில் குத்தூசி குருசாமி அவர்களுடன் துணையாசிரியராகப் பணியாற்றினார். தென் சென்னையில் திராவிட இயக்கத்தை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கிளைக் கழகங்கள் அமைப்பதிலும், துணை மன்றங்கள் அமைப்பதிலும் முழு மூச்சாக ஈடுபட்டு திராவிட இயக்கத்தை வளர்த்தார். சென்னையில் பெரியார் வீடு வாங்கத் தயங்கியபோது, பெரியாரின் தயக்கத்தைப் போக்கி மீர்சாகிப் பேட்டையில் வீடு வாங்கத் துணை நின்றவர் அப்பாத்துரையார். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்போது முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர். இந்தி ஆசிரியராக இருந்த இவரை இந்தி எதிர்ப்புக் களத்தில் முன் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். அவரைக் கொண்டே இந்தியின் தன்மையைச் சொல்ல வைப்பதற்கே. பெரியார் நடத்திய முதல் திருக்குறள் மாநாட்டில் இவருடைய பங்களிப்பும் உண்டு. தம் பேச்சாலும், எழுத்தாலும் திராவிட இயக்கத்திற்குத் தொண்டாற்றிய அப்பாத்துரையாரை இயக்க மேடைகள் நிறைவாகப் பயன்படுத்திக் கொண்டன. இலக்கிய மேடைகளும் அலங்கரித்துக் கொண்டன. தமிழ்மொழி, தமிழ் இன முன்னேற்றத்தின் போராளியாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தம் இறுதிக் காலங்களில் `தலைநகர்த் தமிழ்ச் சங்கம்’ நடத்திய மொழிப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். அப்பாத்துரையார் கவிதை எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். 1935க்கு முன் அவருடைய படைப்புகள் அனைத்தும் கவிதைகளாகவே இருந்தன. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக் காலங்களிலும் இவருடைய கவிதைகள் `திராவிட நாடு’ இதழில் வெளியாயின. இவருடைய பெயரில் வந்த முதல் புத்தகம், சிறை சீர்திருத்தம் செய்த திருமதி ஃபிரை ஆகியோரின் வரலாறுகளைத் தமிழாக்கம் செய்ததுதான். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக சுமார் 170க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் `தென்னாட்டுப் போர்க்களங்கள்’, `கொங்குத் தமிழக வரலாறு’, `ஆங்கிலத் தமிழ்முத்து அகராததி’, `திருக்குறள் மணிவிளக்கஉரை’ `காரல் மார்க்சின் தாஸ் காபிடல் (மூலதனம்)’ மொழிப் பெயர்ப்பு ஆகியவை அறிஞர்கள் மனத்தைவிட்டு அகலா நூல்கள். திருக்குறள் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கு 2132 பக்கங்களில் உரை எழுதியுள்ளார். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்தவர். அப்பாத்துரையார் 82 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிஞர்களோடு பழகி கணக்கற்ற அறிவுச் செல்வங்களை வழங்கி, 26.9.89 இல் புகழுடம்பு எய்தினார். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, எழுத்துத் துறையில் கவிஞராக ஆய்வறிஞராக, எழுத்தாளராக, மொழி பெயர்ப்பாளராக ஒப்பிலக்கியவாதியாக பத்திரிகையாளராக விழுதுகள் பரப்பி ஆலமரமாகத் திகழ்கிறார். இந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்து விளையாடியவர்களெல்லாம் பெரிய மனிதர்களாக உயர்ந்துள்ளார்கள். ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தமிழர்கள் நெஞ்சில் என்றும் நிலைப்பார். -முனைவர் இளமாறன் யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 18-22 ஊசியின் காதுக்குள் தாம்புக் கயிறு...? வினா: இக்கால படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை? விடை: நிறைய படிக்க வேண்டும். `இலக்கியம்’ என்றால் என்ன? ஓர் இலக்கை உடையது. என்ன இலக்கு? மனிதனுக்குப் பொழுது போக ஏதாவது படிக்க வேண்டும். அதற்காக ஏற்பட்டதுதான் இலக்கியம். பிறகு தான் `இலக்கியம்’ வெறும் பொழுதுபோக்காக இருக்கக் கூடாது என்று ஆயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான் உலகமெங்கும் இலக்கிய உணர்வு ஏற்பட்டு, இலக்கியங்கள் தோன்றின. இலக்கியத்திற்கு முன்பே சயின்ஸ் - அறிவியல் தோன்றியது. அறிவியல்தான் மனிதனைப் படிப்படியாக உயர்த்தியது. பிறகுதான் இலக்கியம் தோன்றியது. இந்த இலக்கியங்கள் தோன்றிய பிறகுதான் அறிவியல் துறை குன்றிவிட்டது. இலக்கியத்தைவிட அறிவியல்தான் மனிதனுக்கு வேண்டும். `நீதி நூல்கள்’ இலக்கியங்கள் அல்ல என்று சொல்கிறார்கள். நான் சொல்வேன், திருக்குறள் ஓர் ஒப்பற்ற இலக்கியம்; அருமையான நீதி நூல்; இணையற்ற, தத்துவ நூல்! அதற்கு ஈடான நூல் உலகத்தில் கிடையாது! திருக்குறளுக்கு அடுத்து; திருக்குர்ரானைக் கூறலாம். அது ஒரு நீதி நூல்! அதில் கற்பனை குறைவு. முகம்மது நபியின் நேரடி அனுபவங்களே - உண்மைகளே, இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட நீதி நூல்! பைபிளை அப்படிச் சொல்ல முடியாது. அதை யேசுநாதர் மட்டும் எழுதவில்லை! பலர் எழுதியிருக் கிறார்கள். பல கற்பனைகள் உள்ளன. ஆனால், யேசுவின் வாசகங்கள் உயர்ந்த நீதிகள்! `ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைய முடியாது!’ என்று ஒரு பொன்மொழி இருப்பது தவறு! யேசு அப்படிச் சொல்லியிருக்க முடியாது! அவர் பேசிய மொழியில் `ஒட்டகம்’ என்பதையும், `தாம்புக்கயிறு’ என்பதையும் குறிக்க ஒரே சொல் தான் உண்டு. ஆகவே, `ஊசியின் காதுக்குள் தாம்புக்கயிறு நுழைந்தாலும் நுழையலாம்; பரலோக ராஜ்யத்திற்குள் பணக்காரன் நுழைய முடியாது!’ என்றுதான் அவர் சொல்லி இருக்கவேண்டும்! காதல் திருமணம் செட்டி நாடு அமராவதிப் புதூரில் அப்பாத்துரையார் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதுதான் அலமேலுவைச் சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருச்சிராப்பள்ளிக்குச் சென்றார்கள். திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் அவர்கள் தலைமையில் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் கலப்புத் திருமணம் மட்டுமன்று, இருவருக்குமே மறுமணமுமாகும்! தமிழுக்காக மயக்கம் ஆங்கிலத் தமிழ் அகராதியைத் தொகுக்கும் பணியில் அப்பாத்துரையார் முழு ஈடுபாட்டோடு பகல் நேரம் மட்டுமல்லாமல் பின்னிரவு வரை உழைத்து மயங்கி விழுந்த நாள்கள் பலவாம். அப்படி மயங்கி விழுந்த போது, மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டு, தலையின் முன் பகுதியில் ஒரு கறுப்பு வடு ஏற்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு பத்தாம் வகுப்பில் படிக்கும்போது பிரமு அத்தையாருக்கு என்னை மருமகனாகக்கிக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. தந்தை விருப்பமின்மையால், இது தடைபட்டது. இச்சமயம் சைவ சித்தாந்தத்தில் வல்லுனரான ஒரு முதலியார் அவர்கள் குடும்பத்திலும் ஊரிலும் கோயிலிலும் சைவ போதகராக இருந்தார். அவரிடம் அத்தையார் என் ஆங்கிலக் கல்வி, தமிழ்க் கல்வி பற்றிப் புகழ்ந்துரைத்தார். முதலியார், “ஒரு தமிழ்ப் பாட்டுப் பாடு” என்றார். நான் அன்று படித்த தமிழ் புத்தகங்களில் மிகப் பெரும்பாலும் வேதாந்தப் புத்தகங்களே. `ஞான வாசிட்டம்’, `கைவல்ய நவநீதம்’, `நிட்டானுபூதி’ முதலிய புத்தகங்களின் பாடல்களை ஒப்புவித்தேன்; விளக்கமும் கூறினேன். முதலியாருக்கு என் தமிழ் அறிவில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், வேதாந்த அறிவில் கசப்பு ஏற்பட்டது. ஆயினும் அவர் உடல்நலமில்லாதபோது, அவருக்குப் பதிலாகக் கோவிலில் சொற்பொழிவாற்றும் வேலையை எனக்கு அளித்தார். அச்சிட்ட அவர் சொற்பொழிவுகளையே படித்து நான் பேசினேன். பிற்காலத்தில் சைவ சித்தாந்தத்தில் பேரளவில் ஈடுபட இது எனக்கு உதவிற்று. இந்தி ஆசிரியராக இந்தி எதிர்ப்பு `முகம்’ மாமணி: நீங்கள் இந்தி ஆசிரியராக இருந்து கொண்டே இந்தியை எதிர்த்திருக்கிறீர்களே, உங்கள் செயல் மக்களைக் குழப்பியிருக்குமே! விடை: `சிலருக்குக் குழப்பமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தி எதிர்ப்பின் முன்னோடிகளான பெரியாரும் - அண்ணாவும் என் செயலைப் புரிந்து கொண்டு, இந்தி எதிர்ப்பு மாநாடுகளில், கூட்டங்களில் எனக்கு முதன்மை கொடுத்தனர். `இந்தி மொழியே தெரியாதவர்கள், இந்தியை எதிர்ப்பதை விட இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பன்மொழிகளில் புலமை பெற்ற அப்பாத்துஐரயார் எதிர்ப்பது தான் சரி. ஏனென்றால் அவருக்குத் தான் தெரியும். இந்தியில் ஒன்றும் இல்லை; அரசியல் ஆதிக்கத்துக்காக அதைப் புகுத்துகிறார்கள் - என்று நம்மைவிட அப்பாத்துரையார் சென்னால்தான் மக்களுக்கு உண்மை புரியும்” என்னும் பொருள்பட பெரியாரும் அண்ணாவும் எனக்கு ஆதரவு கொடுத்தனர். (குறிப்பு: அப்பாத்துரையார் 250 பக்கங்களில் ஐனேயை’ள டுயபேரயபந ஞசடிடெநஅ எனும் நூலை மறைமலையடிகளாரின் 40 பக்கங்கள் கொண்ட முன்னுரையோடு 1948இல் வெளியிட்டார். இந் நூல் வெளியிட்டதால் தமிழக அரசின் மொழி பெயர்ப்புத் துறையில் பணியாற்றி வந்த அப்பாத்துரையார் வேலை பறிக்கப்பட்டது. அண்ணா முதல் அமைச்சரானதும் முறையிடப்பட்டது. ஆனால், அப்பாத்துரையாரின் பத்தாண்டுகாலப் பணிக்குச் சேர வேண்டிய பணம் கொடுக்கப்படவில்லை.) - நேர்க்காணல் `முகம்’ மாமணி யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 30-31 கா. அப்பாத்துரையார் தமிழ்ப்பணி பன்மொழிப் புலமை தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் முதுகலைப் புலமைப் பெற்றவர். தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளிலும் அரபு, சப்பான், ஹீப்ரு மற்றும் மலேயா முதலிய ஆசிய மொழிகளிலும் பிரஞ்சு, செர்மன், ரஷ்யா, இத்தாலி போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் சுவாசிலி என்ற ஆப்பிரிக்க மொழியிலும் மூல அறிவு பெற்றவர். இம்மொழிப் புலமை பல்வேறு மொழிகளில் நூல்களை எழுதவும், மொழி பெயர்ப்பு செய்யவும் பெரிதும் துணை செய்தது. திருக்குறள் உரை அப்பாத்துரையார் பெரிதும் மதித்த தலைவர்களுள் ஒருவரான பெரியார், சமய சார்பற்ற முறையில் ஓர் உரையினைத் திருக்குறளுக்கு எழுதுமாறு அவரைக் கேட்டுக் கொண்டார். அவர் தன் மாணவராகிய கவிஞர் கண்ணதாசன் நடத்திய `தென்றல்’ என்னும் இலக்கிய வார ஏட்டில் இருநூறு குறட்பாக்களுக்கு உரை எழுதினார். 1965ஆம் ஆண்டு `முப்பால் ஒளி’ என்னும் பெயரில் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கி அவ்விதழில் திருக்குறளுக்குத் தொடர்ந்து உரை எழுதலானார். 1965 முதல் 1971 வரை `முப்பால் ஒளி’ இதழில் வெளிவந்த திருக்குறள் உரையினை விரிவுபடுத்தி ஒவ்வொன்றும் ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆறு தொகுதிகளாகத் திருக்குறள் மணி விளக்கவுரையென்னும் பெயரிட்டு வெளியிட்டார். இந்த ஆறு தொகுதிகளிலும் இருபது அதிகாரங்களிலுள்ள இருநூறு திருக்குறட்பாக்களுக்கு விரிவான விளக்கவுரைஅமைந்துள்ளது. எஞ்சிய 1130 குறட்பாக்களுக்கு அவர் எழுதிய உரை இன்னும் அச்சேறாமல் உள்ளது. ஆங்கிலத்திலும் திருக்குறளுக்கு மணி விளக்கவுரை 1980இல் திருக்குறள் அறத்துப்பாலின் முதல் 19 அதிகாரங்கள் வரை ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கு அவரது ஆதரவுடன் தட்டச்சு வடிவம் தந்தார். அறத்துப் பாலின் எஞ்சிய 19 அதிகாரங்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கும் தட்டச்சு வடிவம் தந்துள்ளார். இவ்வாறு அறத்துப்பால் முழுமைக்கும் தட்டச்சில் 2132 பக்கங்கள் அளவிற்கு அவரது ஆங்கில உரை எழுதப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆங்கில உரையும் இன்னும் அச்சேறாமல் உள்ளது. தென்னாடு முழுவதும் ஒரே மொழி, தமிழ்! திராவிட மொழிகள் பற்பலவாயினும் அவற்றுள் பண்பட்டவை ஐந்து. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் துளு. இவ்வைந்தனுள் இலக்கியம் கண்ட மொழிகள் நான்கு. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம். பண்பட்ட ஐந்து மொழிகளும் ஒரே இலக்கியம் உடையதாய் ஒரே எழுத்து வடிவம் உடையதாயிருந்த காலம் உண்டு. ஆனால், இலக்கியம் ஒன்றானதால் ஐந்து மொழிகளும் ஒரே பெயருடன் `தமிழ்’ என்றே அழைக்கப்பட்டது. சங்க இலக்கியங்கள், தேவாரத் திருவாசகங்கள் ஆழ்வார்களின் நாலாயிரப் பிரபந்தங்கள் எழுதப்பட்ட காலத்தில் தொன்னாடு முழுவதும் ஒரு மொழிதான் இருந்தது. வள்ளுவர் “தமிழ் மொழியையே மொழியாகக் கண்டார். தமிழ் நாட்டையே உலகமாகக் கண்டார். தமிழ்ப் பண்பையே மனிதப் பண்பாகத் தீட்டினார். அவர் தனிச் சிறப்புக்குக் காரணம் இந்தப் பொதுமைதான்” என்றும் வள்ளுவர் நாளில் தமிழ்ப் பண்புடன் போட்டியிடும் பண்பு இல்லை. அதுவே உச்சநிலையில் இருந்தது என்றும் கூறுகிறார். அப்பாத்துரையார். “தமிழ்ப் பண்பு நிறைந்த பகுதியையே அக்காலத்தவர்கள் தமிழகம் அல்லது செந்தமிழ்நாடு என்றார்கள். `தமிழ் கூறும் நல் உலகு’ எனத் தொல்காப்பியம் கூறுவது இதையே” எனவும் சமற்கிருதம் அன்று பிறக்கவில்லை. ஆரிய மொழியில் எழுத்தில்லை. இலக்கணமில்லை. இலக்கியம் என்ற கருத்தின் நிழல்கூட அன்று கிடையாது. சமற்கிருதம் இலக்கிய மொழி ஆன காலம் திருவள்ளுவருக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் சங்க இலக்கியத்துக்குப் பின்னரே” என்பதும் அப்பாத்துஐரயாரின் கருத்தாகும். தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில் தீண்டாதோருக்காக ஆலயங்கள் திறந்த போது தன் மகிழ்வை வெளிக்காட்டி அச்செயலைப் பாராட்டிக் கூறும்போது- பிறையெனத் தேய்ந்து நின்ற ........ ............ ........... பயிரது காக்கும் வேலி படர்ந்ததை அழித்ததே போல் செயிருறு சமய வாழ்வு சீருற அமைந்த பேதம் அயர்வுறு மனித வாழ்வை அழித்த தீங்கிதனை நீக்கி உயிருறச் செய்த கீர்த்தி ஓங்கு சித்திரைக் கோ மாற்கே! என்று கூறுகிறார். வேலியே பயிரை மேய்ந்தது போல், சீர்படுத்த வந்த சமயம் தீண்டாமை எனும் பேதத்தை ஏற்படுத்தியது. இத் தீங்கை நீக்கிக் கீர்த்தி பெறச் செய்த செயலைப் பாராட்டுகிறார். `தமிழ்ப் பண்பு’ என்னும் நாடகத்தில் தமிழர் விழா பற்றி இருவர் விவாதம் மூலம் விவரித்துள்ளார். கிறிஸ்துமஸ், ஈதுப் பண்டிகைகளைச் சிறப்பாக் கிருத்துவரும், முசுலீம்களும் கொண்டாடினாலும் அது தமிழர்களை எவ்வகையிலும் அவமதிக்கவோ, புண்படுத்தவோ செய்வதில்லை. தமிழ் விழாக்களுடன் தமிழ் விழாக்களாக அவற்றை ஏற்ற கிருத்தவ, இஸ்லாமிய நண்பர்களுடன் அவற்றை நாம் கொண்டாடுவதன் காரணம் எல்லாத் தமிழரும் சேர்ந்து முழு நிறை தமிழ்த் தேசியம் பேண அது உதவுகிறது. ஆனால், தீபாவளி போன்ற வடவர் பண்டிகைகள் தமிழரை அவமதிக்கும் புராணக் கதைகளைக் கொண்டாடுபவை. தமிழரைப் புண்படுத்துபவை. அத்துடன் அவை தமிழ்ப பண்புக்கு மாறுபட்டவை என்ற கருத்தை விதைப்பதோடு `மலையாளிகள் கொண்டாடும் ஓணம் விழா தமிழ்ப் பண்புடைய விழா மட்டுமல்ல, தமிழின விழா. மலையாளிகளும் இனத்தால் தமிழ்க் குழுவான திராவிடம் சார்ந்தவர்களே. பண்பில் அது பொங்கலைவிட குறைந்த விழாவல்ல. மேலும் பண்டு தமிழகத்திலும் அவ்விழா எங்கும் கொண்டாடப்பட்டதாகப் பத்துப்பட்டுப் பறைசாற்றுகிறது எனத் தமிழ்ப் பண்புடைய தமிழர் விழாக்கள் பற்றி இந்நாடகத்தின் மூலம் ஒரு சிறு ஆய்வே செய்துள்ளார், அப்பாத்துரையார். வங்க தேசத்திற்கு இணையான சிறப்புடையது தமிழகத் தேசியம். இச் சிறப்பிற்குக் காரணமாக விளங்கிய தலைவர் வ.உ.சி. அவர்களின் சிறப்பை எடுத்து உணர்த்துகிறார். “கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் தமிழகத்தின் முடிசூடா மன்னராகவும், தொழிலாளரியக்கத்தின் முதல் அனைத்திந்தியத் தலைவராயும் விளங்கினார். அத்துடன் இந்தியத் தலைவர்களிடையே காலங்கடந்த தொலை நோக்குடைய தலைவராகவும் விளங்குகிறார். அவருக்குப் பின் வந்த தீவிரவாதத் தலைவர்களுள் செயல்பாட்டில் அவருக்கு ஒப்பான செயற்கரியன செய்த பெரியாராகப் போஸ் நீங்கலாக எவரையும் கூற முடியாது. இவ்விருவருக்குமிடையே காந்தியடிகள் தலைமை இவர்களைத் தாண்டி ஒளி வீசிற்றாயினும், அது நாடு கடந்த உலக எல்லையும், அரசியல் கடந்த ஆன்மிக எல்லையையும் என்று கூற முடியாது”. 1906 ஆம் ஆண்டு சூரத்தில் கூடிய பேரவையில் தீவிரவாதியான திலகரை மிதவாதிகள் தாக்குதலிலிருந்து வ.உ.சி. தலைமையில் தமிழகத்திலிருந்து சென்றவர்கள் காத்தார்கள் என்ற சூழலை அப்பாத்துரையார் விரிவாக விளக்குகிறார். வான்புகழ் மணிமேகலை மணிமேகலையும் சிலப்பதிகாரமுமே பழமைமிக்க சிறப்பு வாய்ந்த காவியங்களாகத் திகழ்கின்றன. இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம் இயற்றப்படு முன்பே மதுரைக் கூலவாணிகரால் இயற்றப்பப்டட மணிமேகலையே புத்த உலகில் தலைசிறந்த காப்பியமாகக் காணப்படுகிறது. இலக்கியப் பண்பில் உயர்ந்த இம் மணிமேகலை பற்றி `மணிமேகலை’, `வான்புகழ் மேகலை’ என்ற கட்டுரையில் ஆய்ந்துள்ளார், அப்பாத்துரையார். இலக்கியத்தில் காப்பியங்களை இயற்கைக் காப்பியங்கள், செயற்கைக் காப்பியங்கள் என இரண்டாகப் பிரித்து இயற்கைக் காப்பியமாவது மக்களிடையே வழங்கி மக்கட் பாடங்களைக் காப்பிய உணர்வுடைய ஒரு கலைஞன் தொகுப்பால் ஏற்படுவது. செயற்கைக் காப்பியமாவது ஒரு கலைஞனையே கட்டமைக்கப்படுவது என விளக்கும் அப்பாத்துரையார் ஹோமரின் `இலியட்’ இயற்கைக் காப்பியம் என்றும் மில்டனின் `துறக்க நீக்கம்’ செயற்கைக் காப்பியம் என்றும் கூறி மணிமேகலையை இரண்டுக்கும் இடைப்பட்டதாகக் கூறியுள்ளார். உயர்காப்பியப் பண்புகள் முற்றிலும் அமைந்த மணிமேகலை புத்த சமய இலக்கியமாகக் காணப்படுவது பற்றி `புத்த சமயம் சார்ந்த ஏடுகள் உலகில் பல மொழிகளில் இருக்கின்றன. ஆனால், புத்த சமயச் சார்பான இத்தகைய நல் இலக்கியம் சமற்கிருதத்திலோ பாலியிலோ வேறு எந்த உலக மொழிகளிலோ கிட்டத்தட்ட 50 கோடி புத்த சமயத்தினர் பேசும் சீன மொழியிலோ 8 கோடி புத்த சமயத்தினர் பேசும் சப்பான் மொழியிலோ கூடக் கிடையாது” என இலக்கியப் பண்பாலும் காலத்தாலும்கூட புத்த சமய உலகில் மணிமேகலைக்கு ஈடு வேறு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 40-42 அப்பாத்துரையம் - 25 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) மொழிபெயர்ப்பு  தாயகத்தின் அழைப்பு  காதல் மயக்கம் ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 25 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 20+252 = 272 விலை : 340/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 272  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் தாயகத்தின் அழைப்பு 1. மெல்லியல் மூவர் ... 3 2. தாயகத்தின் மைந்தன் ... 23 3. இருதலைக் கவர்ச்சி ... 37 4. குடும்பத் தொல்லைகள் ... 47 5. முடிவு ... 56 ஆசிரியர் ... 58 காதல் மயக்கம் 1. காதல் மயக்கம் ... 63 2. பிள்ளைத் திருட்டு ... 76 3. அன்பின் வெற்றி ... 87 4. உத்தியோக வேட்டை ... 97 5. முன்னோர் பழி ... 109 6. இன்பமும் துன்பமும் ... 122 7. வெற்றிக்கு மார்க்கம் யாது? ... 134 8. இன்பவாழ்க்கையின் உரிமை ... 141 9. நம்விதி நம் கையிலே ... 155 10. மூடப்பழக்கங்களின் மீளா அடிமை ... 172 11. தெய்வச் செயல் ... 182 12. உமா சுந்தரி அல்லது பெண்மையின் உள்ளம் ... 195