கெஞ்சிக் கதை (ஜப்பானிய நாவல்) முதற் பதிப்பு - 1965 இந்நூல் 2002இல் சாகித்திய அக்காதெமி, சென்னை - 113. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது முகப்பு உரை செய்ஜி ரோ -யோஜி சாவா ‘ கெஞ்சி கதைகள்” —ஹீயான் ஆட்சி மரபுக்குரிய தலைசிறந்த எழுத்தாளாரான முரசாக்கி சீமாட்டியாரால் (கி.பி.975-1031) இயற்றப்பட்ட நெடு நீளமானதொரு வண்ணக் கதை (நாவல் )ஆகும். ஆண் பெண் இரு பாலரிடையேயும் எண்ணற்ற ஈடும் எடுப்புமில்லாத கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் ஜப்பான் படைத்து உருவாக்கிய காலம் அதுவே. தவிர அந்நாட்கள்வரை எழுதப்படவேண்டிய எதற்கும் ஒரு சொல்லைக் குறிக்க ஒரு தனிக் கருத்துக் குறியீடாக அமைவுற்ற பாரிய சீன எழுத்து முறையையே பின்பற்ற வேண்டியதாயிருந்தது. இதற்குப் பதிலாகக் கடுஞ் சிக்கல் வாய்ந்த இம் முறையிலிருந்தே உருவான எளிய ஒலிக் குறியீட்டு வாய்ப்புடன் புதிய ‘கனா’ எழுத்துமுறை அக்காலத்திலேயே வழக்கில் புகுந்தது. கருத்துகளை வரி வடிவில் பதிவு செய்யும் வேலையை இது எளிதாக்கி இலக்கியப் படைப்புக்கு ஓர் உயிர்த் தூண்டுதல் அளித்தது. மேலும் சீன நாகரிகத்துடன் தொடர்பு ஏற்பட்ட நாள்முதல் சில காலமாக ஜப்பான் அப்பெருநாட்டின் மேம்பட்ட செல்வாக்கு வெள்ளத்துள் மூழ்கிக் கிடந்தது. இந்நிலையிலிருந்து மீண்டு ஜப்பான் தன் மரபுரிமையை வலியுறுத்தத் தொடங்கியதும் ஜப்பானியக் கலை நாகரிக வரலாற்றின் பொன்னூழி என்று கருதப்படும் இந்த —ஹீயான் மரபின் ஆட்சிக் காலத்திலேயே ஆகும். இப் புத்தெழுச்சியில் ஜப்பானுக்குப் புதிய ஊட்டமும் உரமும் தந்து நிறை வளித்த நாகரிகம் ஒன்று உண்டு. ஆசியத் தலைநிலத்திலிருந்து கடலால் பிரிக்கப்பட்ட நாடான ஜப்பானுக்கு அதுவரை அயல் நிலமாக நிலவியிருந்த அந்த நாகரிகம் புத்த நெறியையே தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள சீரிய நாகரிகமே ஆகும். முக்காலத்துக்கும் உரிய உலகப் பேரிலக்கியத் தலை யேடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இப்பொன்னேட்டுக்குப் பின்னணியா யமைந்த காலத்தின் தன்மை இது. ஹீயான் மரபுக்காலப்பேரரசின் பேரவையில் பண் போங்கிய உயர் குடிக் கொழுந்துகளான அறிவான்ற ஆடவர், பெண்டிர்க்குக் குறைவு இருந்ததில்லை. கவிதையும் கலையும் அங்கே பேராதரவு பெற்றுப் பேணி வளர்க்கப்பட்டன. அப்பேரவைப் பெருமாட்டிகளிடையே சீமாட்டி முரசாக்கி ஒருவர். மிக்க இளவயதிலேயே அவர் கவிதையிலும் உரை நடையிலும் சிறந்து விளங்கினார். அரண்மனை வாழ்வில் நடைபெற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் - அதன் பெருமக் களிடையே பிறங்கி பிணக்கு சூழ்ச்சி உட்சூழ்ச்சிகள் ஆகிய அனைத்தையும்- அவர் இடைவிடாது கூர்ந்து கவனித்து வந்தார். இக்காட்சி யறிவையும் அதன் உள்ளப் பதிவுகளையும் அடிப்படையாகக் கொண்டுதான் ஒப்புயர்வற்ற நடை நய வனப்புடன் கூடிய இந்தப் பெருந்தகை வண்ணக் கதை எழுந்துள்ளது. சீமாட்டி முரசாக்கி ஜப்பானிய பேரரசியான ஜோதோமோனின் என்பவரிடம் பாங்கியராய் இருந்தவர். இப் பொன்னேட்டை எழுதும்படி அவருக்குக் கட்டளையிட்டவர் - அந் நாளைய பேரரச தலைநகரான ‘கியோட்டோ’ வுக் கருகாமையில், ‘இஷியாமா’த் துறவு மடத்தின் ஆழ்ந்த அமைதியினிடையே சென்று தங்கி இப் பெருங் கலையேட்டை உருவாக்கும்படி இசைவளித்து ஊக்கியவர் அவரே என்று கூறப்படுகிறது. கதையின் சுவடுகள் முழுவதும் முடிவுற்ற ஆண்டு கி.பி. 1021 என்று கருதப்படுகிறது. ஆனால், முதற் பகுதியை அவர் கி.பி. 1008 முதலே எழுதத் தொடங்கியிருந்தார். உயர் அறிவுத் திறமும் பண்பாட்டுச் செல்வமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற ஒரு கலையணங்கின் பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட பேருழைப்பின் இன்கனியாகப் பிறந்த கலை ஏடு இது. ‘கெஞ்சி கதைகள்’ மொத்தத்தில் 54 சுவடிகள் அடங்கியது. அவற்றுள் ஐம்பத்தொரு சுவடிகள் கதை முதல்வனாகிய கெஞ்சி ஹிக்காரு பெருமகன் வாழ்க்கை பற்றியது ஹீயான் பேரரச மாமன்மறத்தின் கலைத் திருவார்ந்த பண்போங்கிய ஒரு பெருமகன் வாழ்விடையே நிகழ்ந்த காதற் சுவையார்ந்த வனப்புமிக்க வீரக் கேளிக்கைகளைத் தீட்டிக் காட்டும் பகுதிகள் இவை. கடைசி மூன்று சுவடிகளும் அப் பெருமகன் மறைவின்பின் அவர் புதல்வன் ஹிக்காரு பெருமகன் வாழ்க்கைக்குரிய ஓவியம். தற்போதைய தமிழாக்கம் வண்ணக் கதை முழுவதையும் உள்ளடக்கியதன்று, அதன் ஒரு பகுதியையே உட்கொண்ட தென்று அறிகிறேன். ஆனால், இந்நிலையில்கூட ஓராயிர ஆண்டுகட்குமுன் இயற்றப்பட்ட இந்த ஜப்பானிய கலைப் படைப்பின் சீர்த்திமிக்க நேர்த்தியை வாசகர் எளிதில் காண முடியுமென்றே நம்புகிறேன். இவ்வண்ணக் கதையில் மக்கள் உளங் கவர்ந்த ஓர் இளம் பெருமகனின் காதல் தேட்டங்களிடையேயும் அதன் மாயப் புயல்களில் சிக்கி மாழ்குறும் வனிதையரின் துயரிடையேயும் ஆசிரியர் வாசகர்களின் கருத்தோட விடுகிறார். அவ்விடங்களில் மனித இன நலங்களிலும், ஆடவர் பெண்டிர்க்குரிய மென் தொடர்புகளினால் உருவாகும் நுண்ணயமிக்க உளப்பாட்டுப் பாங்குடைய நல்ல கட்டங்களிலும் ஆசிரியர் கொண்ட உள் நோக்கும் ஒத்துணர்வும் எவ்வளவு சீரியன என்பதைக் கண்டு வாசகர்கள் வியப்பார்வமுறாமலிருக்க முடியாது. அது மட்டுமன்று. அந் நாளைய பழக்க வழக்கங்கள்; சமுதாய மரபுகள் மீது தம் கூரொளி விளக்கம் காட்டி வழுவற மதிப்பிடும் ஆசிரியர் திறம்; அறிவார்ந்த அம் முடிவுரைகளை இலக்கியத் துறைக்குரிய நுண்ணிய நேர்மை தவறாமல் வகுத் துணர்த்தும் அவரது ஆற்றல் ஆகியவை எவரது உள்ளத்தையும் தன் வயப்படுத்தாமலிருக்கமுடியாது. கதைப் போக்கிலும் மனித வாழ்வின் செயலார்ந்த நிகழ்ச்சிகளின் கூறுபாட்டிலும் அவ்வவற்றை அவ்வவற்றுக்குரிய இசைவார்ந்த இயற்கைப் பின்னணிகளுடன் இணைக்க ஆசிரியர் எங்கும் தவறியதில்லை. வண்ணக் கதை நாடகத்தில் வந்துலவும் பண்புறுப்பினர்கள் நானூற்றுக்குக் குறையாதவர்கள். தென்றல் அலை தவழும் வண்ண மலர்கள், வேனிலின் கூதிர் காலத்தின் செந்தழல் வண்ணப் பொலிவு, கடுங்குளிர் காலத்துக்குரிய பனி படர்ந்த மலைச் சாரல்கள், பள்ளத் தாக்குகளின் வெள்ளொளி வண்ணம் ஆகிய இயற்கையின் பருவக் காட்சி ஓவியங்களே தரப்படுகின்றன. இந்த அணி நயத்தை ஜப்பானியர் இயற்கையின் பரிவிரக்கம் (‘மோனோ -நோ -ஆவாரே’) என்பர். புத்தர்பெரு நெறியால் பண்புருவாக்கப் பெற்று ஜப்பானியர் அந்நாளில் ஏற்றமைந்த மெய்ம்மைக் கோட்பாட்டின்படி ‘ மனித வாழ்வின் சிறுமை கண்டு இயற்கை கனிவுற்றிரங்கும் காட்சி’ என்று இந்த ஜப்பானிச் சொற்றொடரை நாம் தமிழாக்கம் செய்யலாம். ஹீயான் மரபாட்சி யூழியிலும் சரி, அதன் பின்வந்த காலங்களிலும் சரி, ஜப்பானிய இலக்கியப் படைப்புகளின் அடிப்படை பின்னணியாய் அமைந்த கோட்பாடு இதுவேயாகும். ஜப்பானிய இலக்கியத்தின் பொன்னேடுகளுள் ஒன்றாகக் ‘கெஞ்சி கதைகளை’ முதன்மை வாய்ந்த இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் மொழி பெயர்க்கும்படி சாகித்ய அக்காதெமி, தேர்வு செய்துள்ளது கண்டு மகிழ்ச்சி யடைகிறேன். அதற்கு முகப்பு உரை வழங்குமாறு என்னை அழைத்திருப்பது எனக்குப் பெருமை தருவது என்றும் கருதுகிறேன் இரு நாடுகளிடையே ஒத்துணர்வும் நேச உறவும் வளர்ப்பதற்கு ஒவ்வொரு நாட்டினரின் இலக்கியச் செல்வங்களையும் மற்ற நாட்டினர் கண்டுணருமாறு செய்வதைவிடச் சிறந்த வழி வேறு கிடையாது. இது உறுதி. இவ்வகையில் ஜப்பானிய மொழியில் இந்திய இலக்கியங்களின் தலை சிறந்த படைப்புகளில் சிலபல மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. ஜப்பானிய மக்களுக்கு அவற்றைப் படித்து நலங் கண்டு மகிழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதே முறையில் இந்திய மக்கள் ஜப்பானின் சிறந்த கலைப் படைப்புகளைத் தங்கள் தங்கள் தாய் மொழியாக்கங்களின் மூலமே பெற்று அவற்றின் நலங் கண்டு மகிழும் வாய்ப்பு இதுவரை இல்லாதிருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜப்பானிய இலக்கிய வரலாற்றிலே முனைத்த முக்கியத்துவம் உடைய இந்த இலக்கியப் படைப்பை இந்தியாவின் கலை முகச் சமுதாயத்தின் முன் கொணரும் அக்காதெமியின் நன் முயற்சியை நான் மனமார வரவேற்கிறேன். 1. கிரித்சுபோ முன்னொரு காலத்தில் ஒரு சக்கரவர்த்தி இருந்தார். யார் அந்தச் சக்கரவர்த்தி எந்தக் காலத்தவர் என்று இப்போது அறியத் தேவையில்லை. அந்தச் சக்கரவர்த்தியின் ஆஸ்தானப் பேரவையிலே ஆடையணியரங்கக் கூடத்தில் இடம் பெற்ற சீமாட்டிகளிலே ஒருத்திதான் இங்கே நம் கதைத் தொடக்கத்துக்கு உரியவள். மற்றச் சீமாட்டிகளைப்பார்க்க. அவள் அவ்வளவு உயர்குடிப்பெருமை உடையவளல்ல. ஆனாலும் மற்ற எந்தச் சீமாட்டிகளுக்கும் கிட்டாத உயர் பதவியை அடையும் பாக்கியம் அவளுக்கு ஏற்பட்டது. தமக்கே அந்தப் பதவி கிடைக்கக் கூடுமென்று முதல் வரிசைச் சீமாட்டிகளெல்லாரும் உள்ளூர மனப்பால் குடித்து வந்தனர். இந்த ஆசைக்கனவுகளைத் தகர்த்துவிட்ட அப் புதுப் பெருமைக் காரியிடம் அவர்கள் மிகவும் வெறுப்பும் அருவருப்பும் கொண்டனர் ஆடையணி அரங்கத்தின் இரண்டாந்தரச் சீமாட்டிகளோ இதுவரை அவளுடனே சரிசமமாகத் தோழமை கொண்டிருந்தவர்கள் இப்போது தம் தலைக்குமேல் அவ்வளவு உயரத்தில் அவள் பறக்கத் தொடங்கியது கண்டு, அவர்களும் அவள் மீது பொருமினார்கள். இக்காரணங்களால், பேரவையில் அவள் பதவி உச்ச உயர்வுடையதாகவே யிருந்தாலும், அவளைச் சுற்றியடித்த பொறாமை, சூழ்ச்சிப் புயல்களும் அதே அளவு வன்கண்மை உடையவையாய் இருந்தன. அவற்றின் ஓய்வொழிவற்ற நச்சரிப்புகளால், அவள் உடல் தளர்ந்தது, உளம் சோர்ந்தது. அவளது வழக்கமான முகமலர்ச்சி அவளிடமிருந்து நிலையாகவே விடைபெற்றுக் கொண்டது. அவள் அரண்மனையில் அதிகமாகத் தங்காமல் அடிக்கடி தன் மனைக்கே சென்று ஒதுங்கி வாழத் தலைப்பட்டாள். யார் அவள் மீது சோர்வுற்றாலும், அவளே சோர்ந்து தளர்வுற்றாலும், சக்கரவர்த்திக்கு மட்டும் அவள் மீது ஏற்பட்ட கவர்ச்சி ஒரு சிறிதும் குறையவில்லை. உண்மையில் கவர்ச்சி அனுதாபமாகவும், அனுதாபம் பாசமாகவுமே நாளுக்கு நாள் வளர்ந்தது. அவள் மீது அவர் கொண்ட கனிவு பெருகிற்று. இது வகையில் அவரை மெல்லக் கடிந்து கொண்டவர் பலர். ஆனால், இதை யெல்லாம் அவர் ஒருசிறிதும் செவியில் வாங்கிக் கொள்ளவில்லை. பேரரசு எங்கும் அவர் போக்குப்பற்றிய பேச்சே பேச்சாயிற்று. அவரருகே செல்லும் உரிமைபெற்ற பேரரசுக் கோமான்களும், பேரவைப் பெருஞ் செல்வர்களும் மரபுக் கொவ்வாத அவர் தொடர்பைச் சுட்டிக்காட்டும் முறையில் ஒருவரை ஒருவர் ஓரக் கண்ணால் பார்த்துச் சாடையாக நையாண்டி செய்தார்கள். காதுக்குக் காதாகப் பரவிய இச்செய்தி பேரரசின் எல்லைமுழுதும் தாவி, கடல் கடந்த நாட்டிலும் உலவத் தொடங்கிற்று முன்னாட்களில் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிதான் பேரரசையே நெடுங்காலம் கலவரங்களிலும் குழப்பங்களிலும் ஆழ்த்திற்று என்று கூடக் குத்தலாகப் பேசினர் பலர். பேரரசின் தூராதொலைவிலுள்ள பகுதிகளிலே நாட்டுப்புற மக்களிடையே துயரங்களுக்கும் மனக் குறைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை இப்போது சீமாட்டியின் செய் தி அவற்றின் அடங்கிய கனலை விசிறி அழல் எழுப்பிற்று. ‘பேரரசன் மிங்ஹுவாங் காலத்தில் அவன் ஆசைநாயகி குவீபீ எழுப்பினாளே புயல், அதே புயலல்லவா இப்போது மீண்டும் புகுந்திருக்கிறது’ என்று புயல்களுக் கிடையிலும் புதிய சீமாட்டியின் வாழ்வை எவரும் நேரடியாகத் தாக்கத் துணியவில்லை. அவள் உள்ளத்தை ஆட்கொண்டவர் ஒரு சக்கரவர்த்தி - அவர் ஆற்றலின் நிழல் இந்த அளவுக்கேனும் அவளைக் காத்தது. அவள் தந்தை ஒரு மேலவை உறுப்பினராய் இருந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் குடும்பத்துக்கு இருந்த மதிப்பை அவர் மனைவி ஒரு சிறிதும் மறக்கவில்லை. அவர் இறந்தபின் வருவாய் குன்றிவிட்டது; இக்கட்டுகள் பல ஏற்பட்டன ஆனாலும் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அரும்பாடுபட்டு அம்மாதரசி தந்தையற்ற தன் புதல்வியைப் பேணி வளர்த்தாள். இவ்வளர்ப்பில் அவள் கண்ட வெற்றி சிறிதன்று. ஏனெனில், பெற்றோர் இருவரும் உயிருடனிருந்து, வருவாயின் வளம் ஒரு சிறிதும் குறைவுபடாத எத்தனையோ குடும்பங்களின் இளம்பெண்களுக்குக்கூட மாதரசி தன் புதல்விக்களித்த பயிற்சியில் ஒருபாதி கிட்டியதில்லை. ஆயினும், செல்வியின் வாழ்வு முழு வளம் காண்பதற்குத் தடையாக அவளுக்கு ஒரு பெருங்குறை இருந்தது.அவள்வாழ்விலும் வளர்ச்சியிலும் அக்கறை காட்டி, தன் செல்வாக்கினால் அவற்றை ஊக்கத்தக்க உறவினர் எவரும் நங்கைக்கு அமையவில்லை .இதனால் வாழ்வின் மிக நெருக்கடியான நேரங்களிலெல்லாம், ஆறுதலுக்கோ அறிவுரைக்கோ கூட எவரும் இல்லாத நிலையில் நங்கையின் தாய் மாழ்கி மறுகநேர்ந்தது. செல்வி புதுச் சீமாட்டியானபின், அவள் உரிய காலத்தில் ஓர் இளவரசனுக்குத் தாய் ஆனாள். முன் ஒருவாழ்விலே பேரரசர் குடும்பத்துடன் அவளுக்குத் தனிப்பட்ட ஏதாவது தொடர்பு இருந்திருக்குமோ, என்னவோ அவள் பெற்றெடுத்த இளவரசன் சிறந்த அழகிளஞ் செம்மலாக விளங்கினான். பேறுகாலத் தீட்டுநாட்கள் கழியும் வரை தந்தையாகிய சக்கரவர்த்திக்கு அவனைக் காணாதிருக்கப் பொறுக்கவில்லை. அந்நாட்களின் ஒவ்வொரு நாழிகையையும் அவர் ஓர் ஊழியாகக் கருதித் துடி துடித்தார், அந்நாட்கள் கழிந்தவுடன் இளவரசனைப் பேரவைக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால், அவனுக்கு முன்பே அவன் பேரழகு பற்றிய பெரும்புகழ் சக்கரவர்த்தியின் செவிகளில் சென்று எட்டியிருந்தது. எனினும், குழந்தை இளவரசனை நேரில் கண்டதே அப்புகழுரைகள் அவன் அழகுப் பேரொளியை ஒருசிறிதும் பெருக்கிக் கூறிவிடவில்லை என்பதை அவர் உணர்ந்து மகிழ்ந்தார். அவர் உள்ளம் உவகை பூத்து ஒளி வீசிற்று. சக்கரவர்த்திக்கு ஏற்கனவே மூத்த இளவரசன் ஒருவன் இருந்தான். அவன் தாய் வலங்கை அமைச்சரின் புதல்வியான கோக்கிடன் சீமாட்டி. அம்முறையில் பேரரசுக்குரிய பட்டத்து இளவரசனாக எல்லாராலும் அவன் நன்மதிப்புடன் பாராட்டப்பட்டிருந்தான். ஆயினும் புதிய இளவரசனின் அந் சந்தமான உடல் வனப்பும் முகவொளியும் அவனிடம் இல்லை. அதுபோலவே சக்கரவர்த்தி புதிய சீமாட்டியிடம் கொண்ட ஆர்வப்பாசமும் கோக்கிடன் சீமாட்டி அறியாத ஒன்று. இந்நிலையில் சக்கரவர்த்தி எவ்வகையிலாவது சீமாட்டியையே தம் உரிமைத் துணைவியாகவும் , புதிய இளவரசனையே தம் உரிமைப் புதல்வனாகவும் நடத்த மனமார விரும்பினார்; ஓரளவு அவ்வாறு நடத்தவும் முயன்றார்..ஆனால் இவ்வகையில் சூழல்கள் அவர்களுக்கு நேர்மாறாய் அமைந்திருந்தன. பொழுதுபோக்குக் கேளிக்கை நேரங்களில் மட்டுமன்றி, உயர்ந்த அரசியல் அலுவல் நேரங்களில்கூடச் சக்கரவர்த்தி சீமாட்டியைத் தம் அருகில் அமர்த்திக் கொள்ளத் தலைப் பட்டார். சீமாட்டியினுடைய நடையுடை தோற்றங்களும் அச்சமயங்களில் அவ்வுயர்பதவிக்கு ஒரு சிறிதும் குறைவுபடா வகையிலேயே அமைந்திருந்தன. ஆயினும் அவள் நய நாகரிக நடைகூட ஒரு முரண்பாட்டைப் பிறர் கண்களிலிருந்து மறைக்கப் போதியதாய் இல்லை. அரசியல் அலுவல்களுக்குரிய அரண்மனை உயர்மாடங்களில் பொறுக்கி எடுத்த ஒருசில பேரரசுப் பெருமக்களே சக்கரவர்த்தியைத் தொடர்ந்து உள்ளே செல்லும் உரிமை பெற்றிருந்தார்கள். அத்தகையவருள் ஒருவருக்கு ஒப்பான குறைந்த குடியுரிமைத்தகுதிகூடச் சீமாட்டிக்கு இல்லை. சக்கரவர்த்தியின் பாசஉள்ளம் இதை மறுக்கவோ, மறக்கவோ முடியவில்லை. சிலசமயம் சக்கரவர்த்தி இரவெல்லாம் சீமாட்டியின் தோழமையில் போக்கியும் மனநிறைவடைவதில்லை. பகல் நேரத்திலும் அவளையே உரிமைத் துணைவியாக உடன்கொள்ள முனைந்தார். பலதடவை பகல் இரவு, வார மாத வேறுபாடின்றி கிட்டத்தட்ட மெய் காவற் பெண்டிரைப் போல அவள் இடையீடில்லாமல் நிலையாகச் சக்கரவர்த்தியின் திருமுன்னிலையில் அமர்ந்திருக்க நேர்ந்தது. இவற்றையெல்லாம் கோக்கிடன் சீமாட்டிகண்டாள். அவள் உள்ளத்தில் புதிதாக ஓர் அச்சம் எழத்தொடங்கிற்று. தான் போதிய அளவு முன்னெச்சரிக்கையாயிருந்து தடுக்காமல் போனால், புதிய இளவரசனிடம் சக்கரவர்த்தி காட்டிய ஆர்வம் எல்லை மீறிவிடலாம் என்று அவள் எண்ணினாள். அவனையே சக்கரவர்த்தி தம் அரண்மனைக் கீழ்மாடத்தில் தவிசேற்றிப் பட்டத்து இளவரசியாக்கிவிடக்கூடும் என்றும் கருதினாள் ஆனால், உண்மை நிலை அவள் கருதியதற்கு நேர்மாறாகவே இருந்தது, குடி மதிப்பில் மட்டுமின்றி வரிசை முறையிலும் கோக்கிடன் சீமாட்டியே புதிய சீமாட்டிக்கு முற்பட்டவள். அவளிடமும் சக்கரவர்த்தி மனமார ஈடுபட்டிருந்தார். அத்தொடர்பின் சின்னங்களாக அவள் பெற்றிருந்த குழந்தைகளும் பல இந்நிலையில் சக்கரவர்த்தியின் புத்துறவால் அவள் நிலை அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை. சக்கரவர்த்தி தான் அவள் விருப்பு வெறுப்புகள் கண்டு அப்புத்துறவின் வருங்கால நலம் பற்றி அஞ்ச வேண்டியவராயிருந்தார். தம்மளவில் புதிய சீமாட்டிக்கு அவர் எவ்வளவு உறுதியான ஆதரவு அளித்தாலும், அவளைத் தாழ்த்திப் பழிவாங்கக் காத்திருந்தவர் பலர் என்பதை அவர் உணராதவரல்ல. அத்துடன் அவளுக்கு அவர் அளித்த நன்மதிப்புகள் ஒன்றினாலும் அவள் மகிழ்ச்சியடையவில்லை. நேர்மாறாக அவை ஒவ்வொன்றும் அவளை மேன்மேலும் கடுந்துயர்களுக்கே ஆளாக்கிற்று. அவளது அவலச் சூழ்நிலையில் அந்த நன்மதிப்புகளே அவளை அச்சுறுத்தி வந்த கோரப்பகைகளையும் பெருக்கின. மதிப்பும் இன்பமும் வேண்டாம் வாழ்வின் சிக்கல்களி லிருந்து விடுபட்டால் போதும் என்றாகி விட்டது சீமாட்டியின் நிலை! சீமாட்டிக்குத் தங்குமிடமாக அளிக்கப்பட்டிருந்தது அரண்மனையின் பக்கமாளிகைகளில் ஒன்றாகிய கிரித்சுபோ. அங்கிருந்து சக்கரவர்த்தியின் தனிமாடத்துக்கும் சக்கரவர்த்தியின் தனிமாடத்திலிருந்து அங்கும் அவள் இரவு பகல் ஓய்வொழிவில்லாமல் போய்வர வேண்டிவந்தது. இது அவள் பகைவர்களைப் பெருக்கி அவர்கள்உள்ளங்களில் வன்மத்தை மேன்மேலும் தூண்டி வளர்க்கவும் இன்னல்களையும் இடர்களையும் பெருக்கவுமே உதவின. ஏனெனில் அவ்வழி அரண்மனையைச்சுற்றி வளைந்து வளைந்து சென்றது. பல அரண்மனைச் சீமாட்டிகளின் வாயில் கடந்தும் பலர் நிலா முற்ற மாடங்களின் முன்னாகவும்அவள் செல்ல வேண்டியவளானாள். அந்நிலையில் அவளைப் பார்த்த கண்கள் அவள் மீது பொறாமை கொண்டு நெருப்பைக் கக்கிச் சீறாமலிருக்கமுடியவில்லை. பாதை அடிக்கடி நெருக்கிய இடைவழிகள், சுரங்கவழிகள் படிவளைவுகள் புழைக்கடை வாயில்களினூடாகச் சென்றது இங்கே பகைவர், ஏவலாட்கள் ஆகியோரின் குறும்புச் செயல்களுக்கு ஆளாகி, அவள் பரிவாரப் பெண்டிர் சிவிகைக்காரர் ஆகியோர் பல வகைப்பட்ட தீங்குகளுக்கு உட்பட்டனர். இது அவள் மதிப்பைப் பெரிதும் ஊறுபடுத்திய தோடல்லாமல் சிற்சில சமயம் அவளுக்கே ஆபத்தாகவும் அமைந்தது. ஒரு சமயம் யாரோ புழைக்கடை வாயிலொன்றைப் பூட்டி விட்டனர். பாவம் சிவிகை செல்லா இடங்களைக் கடக்க எண்ணி அவள் வேலையாட்களுடன் வேலையாளாகக் கால்நடையாய் நெடுந்தூரம் அலைந்து திரிய நேரிட்டது. இவற்றையெல்லாம் கேள்வியுற்றுச் சக்கரவர்த்தியின் உள்ளம் உருகிற்று. அவள் துயரை காணப் பொறாமல் அவர் அவள் தங்குமிடத்தை உடனடியாகக் கோரோடன் மாளிகைக்கு மாற்றும்படி உத்தரவிட்டார். இது துயர வெந்தீயை ஆற்றுவதாக அமையவில்லை; அதில் எண்ணெய் ஊற்றுவதாகவே முடிந்தது. ஏனெனில், கோரோடன் மாளிகை ஆடையணி அரங்கத்தின் தலைமைச் சீமாட்டிக்கு உரியது. சீமாட்டிக்கு வழி செய்வதற்காக அவள் அதை ஒழித்து விட்டுச் செல்ல வேண்டி வந்தது . சீமாட்டிக்கு ஏற்கெனவே இருந்த மற்றப் பகைவர் போதாதென்று இப்போது புதியதொரு பொல்லாப் பகையும் எழுந்தது. புதிய இளவரசனுக்கு இப்போது வயது மூன்றாயிற்று. .அவன் காலுறைபூட்டு விழா பட்டத்து இளவரசன் விழாக் களுக்கு ஒரு சிறிதும் குறையாத ஆடையணி அலங்கார ஆடம் பரங்களுடன் நடைபெற்றது. பேரரசின் கருவூலத்திருந்தும், திறை மாளிகையிலிருந்தும் விழாவுக்கான பரிசில்கள் மேன் மேலும் வந்து குவிந்த வண்ணமாயிருந்தன. இதுவகையிலும் பல திசைகளிலிருந்தும் கண்டனங்கள் எழாமலில்லை. ஆயினும் குழந்தை இளவரசனைப் பொறுத்தவரை இவற்றால் எத்தகைய தொல்லையும் ஏற்படவில்லை. ஏனெனில் அவன் அழகு நாளொரு மேனியாக வளர்ந்த வண்ணமிருந்தது. நடையுடை பண்பு நயங்களும் கண்டவர்களையெல்லாம் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்துபவையாகவே அமைந்தன. ‘பண்பழிவுகளே பெருகி வரும் அணிமைக் காலங்களில் கூட இவ்வளவு சீரிய நற்பிறப்புக்கு எப்படி .இடமேற்பட்டதோ’ என்று மனந்திறந்து தம்வியப்பை ஒளிக்காது வெளியிட்டவர்கள் கூட உண்டு. அவ்வாண்டு வேனிற் பருவத்துக்குள்ளாகச் சீமாட்டியின் வாழ்வில் துயர மேகங்கள் படர்ந்தன. அடிக்கடி அவள் தன் வீடு செல்ல இசைவு கோரினாள். ஆனால், இசைவு கிடைக்கவில்லை. ஓர் ஆண்டாக நிலைமை இவ்வாறே நீடித்தது. அவள்வேண்டு கோள்களுக் கெல்லாம் அவளுக்குச் சக்கரவர்த்தியிடமிருந்து கிடைத்த மறுமொழி ஒன்றுதான். ‘இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துக்கொள்’ என்று மட்டுமே அவர் கேட்டுக் கொண்டார். ஆயினும் அவள் நிலை நாளுக்கு நாள் மோச மாயிற்று. ஐந்தாறு நாட்கள் அவள் உடல் தொடர்ந்து தளர்ச்சியடைந்து நிலைமை முற்றியபின் சீமாட்டியின் தாய் தன் மகளுக்கு விடுதலை அளிக்கும் படி கண்ணீருடன் மன்றாடினாள். எங்கே தன் எதிரிகள் எதிர்பாராத வகையில் ஏதேனும் கேடு செய்து விடுவார்களோ என்று சீமாட்டி இப்போது கூட அஞ்சினாள். ஆகவே நோயுற்ற நிலையிலும் அவள் தன் மைந்தனை அரண்மனையிலேயே விட்டு விட்டு இரகசியமாக வெளியேறி விட ஏற்பாடுகள் தொடங்கினாள். தாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமாட்டியை அனுப்பிவிட வேண்டிய காலம் வந்து விட்டதென்று சக்கர வர்த்தியும் இப்போது கண்டார். அதே சமயம் ‘போய்வருகிறேன்’ என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் அவள் நழுவிச் செல்வதை அவரால் மனமாரப் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. எனவே, அவர் விரைந்து சென்றார். இப்போதும் அவள் உடல் மெலிந்து முகம் விளறியிருந்ததே தவிர, அவள் அழகோ கவர்ச்சியோ ஒரு சிறிதும் குறையவில்லை. அவள் அவரைக் கனிவுடன் நோக்கினாள். ஆனாலும் ஒன்றும் பேசவில்லை. அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்று கூட அவருக்கு ஐயம் உண்டாயிற்று. அவள் உருவில் ஒளியிழந்த உயிர்ப்பதுமை ஒன்றுதான் கிடந்ததோ என்னும்படி அவள் தோற்றம் முற்றிலும் மங்கிப்போயிருந்தது; அதில் மகிழ்ச்சியின் தடத்தையே காணமுடியவில்லை. நடந்தவை எல்லாவற்றையும் ஒரு நொடியில் மறந்து நடக்க இருப்பவற்றைப் பற்றியும் சிந்தியாமல் சக்கரவர்த்தி அழகு மொழிகளை ஒரு நூறாக அடுக்கினார். அருமை முத்தங்களை ஓராயிரமாகப் பொழிந்தார். ஆனால், அவள் பக்கமிருந்து ஒரு மூச்சுக்கூடப் பதிலாக எழவில்லை. ஏனெனில், இச்சமய மெல்லாம் எதையும் அவள் தெளிவாகக் காணும் நிலையிலோ கேட்கும் நிலையிலோ இல்லை. அவள் பார்வை மருண்டது. அறிவு மயங்கிற்று. படுக்கையில்தான் கிடக்கிறோமா, எங்கே கிடக்கிறோம் என்பதுகூட அவளுக்குத் தெரியாது. அவளை இந்நிலையில் கண்ட சக்கரவர்த்தி செய்வது இன்னதென்றறியாமல் திகைத்தார். கலங்கிய நெஞ்சுடனும் குழம்பிய உள்ளத்துடனும் ஓர் இழுப்புச் சிவிகை கொண்டு வரும்படி அவர் கட்டளையிட்டார். ஆனால், அவளை அவர்கள் அதில் கிடத்தப் போகும் சமயம் தாம்செய்வது இன்னது என்று அறியாமலே அவர் இடையிட்டுத் தடுத்தார் ‘எங்கள் இருவரில் எவரும் தனியாக இறுதிப் பயணம் புறப்பட்டு விடக்கூடாது என்று எங்களிடையே ஓர் ஒப்பந்தம் உண்டு. ஆகவே, இப்போது என்னை விட்டு அவள் போகும்படி விடமாட்டேன்’ என்று அவர் புலம்பினார். இவ் வார்த்தைகளை மட்டும் சீமாட்டியின் செவிகள் கேட்டன என்று தோற்றிற்று. ஏனெனில் அவள் இப்போது அவற்றுக்கு மறுமொழி கூறினாள். ‘இறுதிப் பயணமா!....... ஆம் நான் ஆவலுடன் விரும்பும் அதனைத் தனியே மேற்கொள்ள முடியுமானால் அதுவரை மகிழ்வுடன் வாழ்வேனே!’என்றாள். தளர்ந்து வரும் மூச்சுடன் மிகத் தணிவான குரலில் அவள் பேசினாள். ஆனால், அவள் எப்படியோ குரலெழுப்பினாளே தவிர, அதற்கான சக்தியற்றவளாய் முழு உயிரும் கொடுத்தே ஒவ்வொரு சொல்லையும் உருவாக்கினாள். எப்பாடு பட்டும் அவளை இறுதிவரை தம்முடனேயே வைத்துக்கொள்ளச் சக்கரவர்த்தி எண்ணினாலும் அது முடியவில்லை. அவளுக்கு இறுதிக்காலப் பாசுரம் பாடுவதற்காகக் குருமார் ஏற்கெனவே அவள் இல்லத்துக்கு அனுப்பப்பட்டிருந்தனர். எப்படியும் விளக்கேற்றும் நேரத்துக்குள் அவளை வீட்டுக்கு அனுப்பியாக வேண்டும். ஆகவே, இறுதியில் ஒரு வழியாகச் சக்கரவர்த்தி அவளைச் சிவிகைக்காரர் வசம் ஒப்படைத்தார். அவர் தன்னாலியன்ற மட்டும் கண்ணயர முயன்றார். ஆனால், ஏதோ ஒன்று தொண்டையைப்பிடித்துக் கொண்டிருப் பது போலத் தோற்றிற்று கண்கள் மூட மறுத்தன. சீமாட்டியின் மாளிகைக்கும் அரண்மனைக்குமிடையே இரவு முழுவதும் தூதர்கள் போய் வந்த வண்ணமே இருந்தனர். ஆனால், தொடக்கத்திலிருந்தே தூதர்கள் எவராலும் நல்ல செய்தி கொண்டு வரமுடியவில்லை. நள்ளிரவு சென்ற சிறிது நேரத்துக்கொல்லாம் மாளிகையில் அழுகையும் கூக்குரலும். எழுந்ததாகக் தெரிவிக்கப்பட்டது மாளிகையினுள்ளிருந்து தோழிப்பெண்கள் முறைப்படி செய்தி தெரிவித்து விட்டனர் சீமாட்டியின் இறுதி மூச்சு காற்றுடன் கலந்துவிட்டதென்று கேட்டதே சக்கரவர்த்தி உணர்விழந்து விட்டார். செய்தியை அவர் உள்ளம் வாங்கிக்கொண்டதோ இல்லையோ என்று கூடத் தெரிய முடியாதிருந்தது. குழந்தை இளவரசனிடம் சக்கரவர்த்திக்குப் பாசம் பெரிதாயிருந்தது. ஆயினும் இச்சமயம் அவனை அரண்மனையில் வைத்துக்கொள்ளக் கூடாதென்று முடிவு செய்யப்பட்டது. என்ன நிகழ்ந்தது என்பதை அக்குழந்தையால் உணரமுடியவில்லை. பணியாட்கள் கையைப் பிசைந்துகொண்டு கலங்குவதையும் சக்கரவர்த்தி ஓயாது கண்ணீர் வடிப்பதையும் கண்டு ஏதோ கடுந்துயருக்குரிய செய்தி நடைபெற்றிருக்க வேண்டுமென்று அவன் எண்ணினான். சாதாரணப் பிரிவுகளில் ஒவ்வொருவர் முகத்தில் துன்பத்தின் நிழல் படர்வதை அவன் கவனித்திருந்தான். இப்போது காண்பது அதுவல்ல, இது கொந்தளிக்கும் பெருங்குமுறல் என்று கண்டு, இப்பிரிவு வழக்கத்துக்கு மேற்பட்ட பெரும் பிரிவாயிருக்க வேண்டு மென்று அவன் பிள்ளைமனமும் முடிவுசெய்து கொண்டது. இறுதிவினைகள் தொடங்கிய சமயம் சீமாட்டியின் தாய் கதறி அழுதாள். தன்புதல்வியின் சடலத்திலிருந்து எழுந்த புகையிலே தன்சடலத்தின் புகையையே கண்டதாக அவள் துடித்தாள். அரண்மனை மாதர் ஏறிவந்த அதே வண்டியில்தான் அவளும் வந்திருந்தாள். வினை முறைகளும் நிறைந்த ஆரவாரத்துடன் அதாகோ என்ற இடத்தில் நடைபெற்றன. புதல்வியின் உடல் தன்முன் இருந்தவரை உடலில் உயிர் இல்லை என்பதையே தாயின் பாசம் மறக்கச் செய்திருந்தது. ஆனால், பாடையில் தீ மூண்டதே, உடலின் நிலையை அப்போதுதான் கண்டதுபோல உள்ளம் துடித்தது. அதுமுதல் எவ்வளவு முயன்றும் அவளால் இயல்பான தன்னறிவுடன் பேசமுடிய வில்லை. அவள் தலை சுற்றிற்று. வண்டியிலிருந்து அவள் கீழே விழுந்து புரண்டாள். முழுத்துயரையும் அவள் இப்போதுதான் உணர்ந்தாள் என்று அருகிலிருந்தோர் கூறிக்கொண்டனர். அரண்மனை வள்ளுவன் வந்து ஒரு திருமுறை விளம்பரத்தை வாசித்தான். அதன்படி மாண்ட சீமாட்டியின் அன்னை மூன்றாவது படித்தரச் சீமாட்டியாக உயர்த்தப் பட்டிருந்தாள். பாடையருகிலே அந்த நீண்ட விளம்பரத்தின் வாசகம் வாசிக்கப்பட்டபோது, அதுவும் ஒரு துயரார்ந்த நிகழ்ச்சிபோலவே அமைந்திருந்தது. நெடுநாள் முன்னதாகவே அவளை ஒரு பாங்கியாக உயர்த்தினோமில்லையே என்று சக்கரவர்த்தி பெரிதும் வருந்தினார். ஒருபடியேனும் இப்போது அவளை உயர்த்தியதற்கு இதுவே காரணம். ஆனால், இந்தச் சிறிதளவு மதிப்புக்குக்கூட அவள்மீது பெறாமை கொண்டவர் பலர். வேறு சிலர் சற்றுத் தாராள மனப்பான்மை யுடையவரா யிருந்தனர்.அவள் உண்மையிலேயே பேரழகு வாய்ந்தவள் என்பதை அவர்கள் எண்ணிப்பார்க்கத் தயங்கவில்லை. மற்றுஞ்சிலர் அவள் இனிய அமைந்த குணநலங்களைக் கண்டு பாராட்டினர் ‘இவ்வளவு இனிய குணம் வாய்ந்த மாதரசியைக்கூட யாரேனும் வெறுக்கக் கூடுமா, இது என்ன வெட்கக்கேடு என்றும் சிலர் துணிந்து பேசினர்’. நேர்மையற்ற முறையில் அவள் இவ்வாறு தனிப்படுத்தப்பட்டு விடவில்லை யானால் அவளைப்பற்றி எதுவும் எவராலும் பேச வாய்ப்பே ஏற்பட்டிராதென்றும் அவர்கள் கருதினார்கள். சக்கரவர்த்தியின் கட்டளைப்படி, ஏழுவார காலம் இழவு வினைமுறைகள் விரிவாகக் கொண்டாடப்பட்டன. நாட்கள் பல கடந்தும் சக்கரவர்த்தி அரண்மனை மாதர் பகுதியைவிட்டு வெளிவரவேயில்லை. அவரிடம் அணுக்க வேலை செய்து வந்தவர்களின் வாழ்வில் ஒளியில்லாது போயிற்று. ஏனெனில் அவர் ஓயாது இராப்பகல் கண்ணீர் வடித்தபடியே கழித்தார். கோக்கிடன் சீமாட்டிக்கோ மற்ற உயர்படி அணங் குகளுக்கோகூட ஒரு சிறிதும் உளக்கனிவு ஏற்படவில்லை. ‘மாண்ட சீமாட்டி இருந்தபோதும் சக்கரவர்த்தி அறிவிழந்தவரா யிருந்தார். இப்போதும் அவர் நிலையில் வேறுபாடு கிடையாது; அதைவிட அறிவிழந்தவராகவே திரிகிறார்’ என்று அவர்கள் பேசிவந்தனர். சிலசமயம் சக்கரவர்த்தி தன் முதல் புதல்வனான கோக்கிடன் சீமாட்டியின் பிள்ளையைச் சென்று பார்ப்பதுண்டு. ஆனால், அப்போதுகூட மாண்ட சீமாட்டியின் புதல்வன் எண்ணம் வந்து அவரை அலைக்கழித்தது. மிக நம்பகமான வேலையாட்களையோ, சிலசமயம் தன் செவிலியையோ அனுப்பிச் சிறுவன் நிலைபற்றி அவர் தகவலறிந்துவந்தார். இலையுதிர் காலத்தின் நடுநாள் நெருங்கி வந்து கொண்டிருந்தது. மாலைக் காற்றுத் தன் தண் குளிர்க்கரங்களால் மனிதர் உடல்களில் சுறீர் சுறீர் என்று கிள்ளிற்று. சக்கர வர்த்தியின் உள்ளத்தடத்தில் பழைய நினைவுகள் எத்தனையோ வந்து வந்து மொய்த்தன. அவர் ஒரு கடிதத்துடன் தம் அம்பறாத் தூணிச் செல்வரின் சிறுபெண்ணை மாண்ட சீமாட்டியின் மாளிகைக்கு அனுப்பினார். அதன்பின் அவள் வரவை எதிர்நோக்கிக் கொண்டு இரவில் காத்திருந்தார். அன்று அழகிய நிலா எறித்துக் கொண்டிருந்தது. ஆனால் இசையுடன் இசையாகக் கலந்து உலவிய ஒரு தளர்ந்த மென்குரலையும், அதற்குரிய இளநிலா முகத்தையும், ஒயிலுடன் ஒசிந்து நெளியும் நடையையும் சேர்த்தே அவர் எதனையும் காணமுடிந்தது. ‘இருளின் சூழலில் நனவுலகப் பொருள்களே கனவு ருக்களைவிட மாயமாகத் தோற்றவல்லன’ என்று கருத்துரைக்கும் பாடல் இப்போது அவர் நினைவுக்கு வந்தது. பழைய இராக்கால நினைவுகள் அவ்வாறு கனவுருவாக வேனும் தோற்றாதா என்று சக்கரவர்த்தி ஏங்கினார். தூதுசென்ற. சிறுமி மாளிகை வாயிலை அணுகினாள். அங்கே அவள் கண்ட காட்சி எதிர்பாராததாய் இருந்தது. மாளிகையின் சுற்றுப்புறமெங்கும் ஒரே புதர்க் காடாய்ப் பாழ்பட்டுக் கிடந்தது. ஏனெனில் இதற்குமுன்பெல்லாம் கைம்பெண்ணாயிருந்த பெரிய மாதரசி தன் புதல்வியாகிய சீமாட்டியிடமே மாளிகை மேற்பார்வை முழுவதையும் ஒப்படைத்திருந்தாள். இப்போது முதுமை ஒருபுறமும், புதல்வி இறந்ததாலேற்பட்ட கவலை ஒருபுறமும் அவளைச் செயலற்றவளாக்கியிருந்தது. தோட்டத்தில் அவள் புறக் கணிப்பின் சின்னங்களை அவ்விலையுதிர் காலத்தின் ஊதைக் காற்றும் மிகைபடுத்திற்று. நிலவொளி அதிகமாக ஊடுருவ விடாமல் வாதுமை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இவற்றைக் கவனித்தவாறே சிறுமி மாளிகை வாயிலை அடைந்தாள். அவளைக் கண்ட மாதரசி அவளுக்கு வரவேற்புமொழி எதுவும் கூற இயலாதநிலையில் சிறிதுநேரம் வாளா இருந்தாள். பின் அவள் வாய்திறந்தாள். ‘அந்தோ! நான் இந்த உலகில் எல்லைகடந்த காலம் நீடித்து வாழ்ந்துவிட்டேனே!’ இந்த மாளிகைக்கு வரும் வழியை அடைத்துக் கிடக்கும் புதர்க் கூளங்களின் மீது பனியில் நனைந்து கொண்டு உங்களை ஒத்த உயர்பண்புடைய ஒரு தூதர் நடந்துவரும்படி யாயிற்றே!’ என்று கூறிஅவள் அழுதாள். ஆனால், அம்பறாத்தூணிச் செல்வரின் சிறுமி சாதுரியமாகப் பேசினாள். ‘அம்மணி, இங்கேவந்த அரண்மனை மாது ஒருத்தி இங்கே கண்ட காட்சிகளால் மனநைவுற்று உருகியதாகச் சக்கரவர்த்தியிடம் சென்று கூறினாராம்! இப்போது என் மனநிலையும் இதுவே!’ என்றாள். சிறிதுநேரம் சென்றபின் சிறுமி சக்கரவர்த்தி கூறியனுப்பிய செய்தியை ஒப்பித்தாள், “என்மனம் இருள் சூழ்ந்து கிடக்கிறது, அதன் பயங்கரக் கனவுகளை விட்டு வெளியேற வழிகாணும்படி நான் தட்டித்தடவிப் பார்த்தேன். எவ்வளவோ ஆழ்ந்து ஆலோசனைசெய்து பார்த்தும் அத்துயிலொழிக்க வகை காணவில்லை. எனக்கு இங்கே அறிவுரையோ ஆறுதலோ கூறுபவர் யாரும் கிடையாது. தாங்களாவது இரகசியமாக இங்கே வரமாட்டீர்களா? இளவரசன் அவ்வளவு பாழ்பட்ட துயரடைந்த இடத்தில் நாட்கழிப்பதும் நல்லதல்ல, அவனும் உடன்வருக!” சக்கரவர்த்தி இத்துடன் இன்னும் என்னென்னவோ கூறினார். ஆனால் பல பெருமூச்சுகளுடன் அவர்பேசிய அச்சொற்க ளெல்லாம் ஒரே குழப்பமாயிருந்தன. அத்துடன் அவர் தம் துயரை என்னிடமிருந்து மறைக்க எடுத்துக்கொண்ட பெருமுயற்சிகளைக் கண்டதும், முழுதும் கேட்காமலே நான் புறப்பட்டு வந்து விட்டேன். அவர் வரைந்தனுப்பிய கடிதம் இதோ இருக்கிறது’ என்று சிறுமி கூறிக் கடிதத்தை நீட்டினாள். ‘என்பார்வை மங்கலாயிருக்கிறது, கடிதத்தை ஒளி படும்படியாக நான் வைத்துப் பார்க்கிறேன்’ என்று கூறி, அவள் கடிதத்தைத் துருவி நோக்கினான். கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. ‘காலஞ் செல்லச் செல்ல எண்ணங்கள் மங்கி மழுங்கிவிடும் என்றுதான் நான் எண்ணியிருந்தேன். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. நாட்கள், மாதங்கள் செல்லுந்தோறும், என்வாழ்க்கை மேன்மேலும் பொருளறற்றதாக, பொறுக்க முடியாத பாரமுடையதாக ஆகிவருகிறது. ஓயாது நான் குழந்தையைப் பற்றியே எண்ணிவருகிறேன். அவன் எவ்வாறு இருக்கிறானோ என்று கவலைப்பட்டும் வருகிறேன். நானும் அவன் தாயுமே இணைந்து அவன்வளர்ப்பைக் கவனித்து வருவோம் என்றுதான் பாவி நான் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தேன். அவ்வகையில் அன்னையின் இடத்தைத் தாங்களே மேற்கொண்டு, சென்றகாலத்துக்குரிய ஒரு சின்னமாக அவனை இட்டுக்கொண்டு வரமாட்டீர்களா?’ கடிதத்தின் வாசகங்கள் இவையே. இவற்றுடன் பலசெய்திகளும் ஒருபாடலும் இணைக்கப்பட்டிருந்தன. ‘தகாசிப் படுகரில் தண்குளிர்ப் பனித்துளி உகுதர ஊதை வீசிடும் பொழுதிலே நகுதரும் அல்லி மென்முளை தனை நோக்கி நெகுதரும் என் வன்நெஞ்சம் நேய முடனே! உருவகப்படுத்தி அவர் இளவரசனைப் பற்றியே எழுதியிருந்தார். ஆனால், கடிதத்தை அவள் இறுதிவரை வாசிக்க முடியவில்லை. கடைசியில் அவள் தாயுள்ளம் பேசிற்று. ‘நீண்டவாழ்வினால் மனக்கசப்பே மிகுதியாகும் என்பது எனக்குத் தெரிந்திருந்தும், நான் நெடுநாள் இந்த உலகத்தில் தங்கியிருந்துவிட்டேன்’. அதன் பயனாகத் ‘தகாசகோ’வின் செந்தூரமரநிழலைச் சென்றடைந்தாலும் தலைகுனியவே நேரும்படி அவ்வளவு பெரிய வெட்கக்கேட்டுக்கு ஆளாய் விட்டேன். அப்படியிருக்க, கூடகோபுரங்கள் நூறுகொண்ட அரண்மனையின் அகலிடமெங்கும் நான் எவ்வாறு உலாவத் துணிவு கொள்ளமுடியும்? மாண்பு மிக்க அரச ஆணை என்னை மீண்டும் மீண்டும் அழைத்தாலும், அவ் ஆணைக்கு என்னால் கீழ்ப்படியமுடியுமென்று எனக்குத் தோற்றவில்லை. ஆனால், அரண்மனை ஆணை இளவரசனுக்குத் தெரிய வருமோ, வராதோ - அவன் அங்கே வரத் துடிக்கிறானென்பது மட்டும் உறுதி. உண்மையில் இந்த இடத்தில் இருப்பதில் அவனுக்கு ஒருசிறிதும் கிளர்ச்சியேயில்லை. சக்கரவர்த்தியிடம் இதனைக் கூறுங்கள். இங்கே பேசப்பட்ட மற்ற விவரங்களையும் தெரிவியுங்கள். எப்படியும் இந்த மாளிகை சிறுகுழந்தையின் வாழ்வுக்கு உகந்ததல்ல.’ அம்பறாத்தூணிச் செல்வரின் சிறுமி இப்போது பேசினாள். ‘குழந்தை உறங்கிவிட்டதென்று கேள்விப்படுகிறேன். அது எப்படி இருக்கிறது என்று நேரிலே பார்த்துச் சக்கரவர்த்திக்கு அதுபற்றித் தெரிவிக்கும் விருப்பம் உடையேன். ஆயினும் அரண்மனையில் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். நேரம் மிகுதியாய்விட்டது’ என்றாள் அவள். அவள்போக விரைந்தாள். ஆனால் தாயுள்ளம் விடவில்லை. அதுமேலும் தொடர்ந்தது. ‘தம் உள்ளத்தின் துயரார்ந்த எண்ணங்களின் இருளிடையே உழல்பவர் கூட நண்பர் உரையாடல் மூலம் சிறிது ஒளிபெற்று வழிகாண முடியும். ஆகவே, உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது நீங்களாகவே தனி முறையில் இங்கு வருகைதரும்படி கோருகிறேன். சென்ற காலங்களிலெல்லாம் மகிழ்விடையே வெற்றிப் பெருமிதத்துடன் நீங்கள் இங்கே வந்து சென்றிருக்கிறீர்கள். ஆனால் இப்போதோ நீங்கள் இத்தகு செய்தியுடன் வர வேண்டியதாகியுள்ளது. ஊழ்வாய்ப்பை நம்பி வாழ்வது எவ்வளவு அறியாமை! ‘என்புதல்வி பிறந்தநாள்முதல் தம்வாழ்வின் இறுதிவரை என் நெஞ்சறிந்த தலைவராகிய அவள் தந்தை அவளை அரசவைக்கே அனுப்பவேண்டுமென்று துடித்துக் கொண்டி ருந்தார். தாம் உயிர்விடநேர்ந்தால் இந்த அவாவைத் தளர விட்டுவிடக்கூடாதென்றுகூட அவர் என்னிடம் உறுதி கோரினார். இதனால்தான் தக்க பாதுகாவலரில்லாமல் அவளுக்குப் பல இக்கட்டுகள் நேரக் கூடுமென்பது எனக்குத் தெரிந்தபோதிலும்கூட, அவர் அவாவை நிறைவேற்ற நான் அரும்பாடுபட்டேன். ‘அரச அவையிலே சீமாட்டிக்கு ஆதரவுக்கு ஒரு குறைவுமில்லையானாலும், அவள் மனிதத்தன்மையற்ற தனிப் பகைமைகளின் தழும்புகளை எவ்வளவோ பொறுமையுடன் தாங்கி வதைபடவேண்டியதாயிற்று. அவள் தன்மீது சுமத்தப்பட்ட வெறுப்பின் பாரம் பொறுக்கமாட்டாமல் கொலையுண்டாளோ என்னும்படியாக வீணாக மாளநேர்ந்தது உண்மையில் அறிவார்ந்த மாண்புமிக்க சக்கரவர்த்தி அவளைப் புறக்கணித்தால்கூட நன்றாயிருந்திருக்கும். என் இதயத்தின் அறிவற்ற இருள் நிலையில் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது! அவர் அன்பு எத்தகைய புறக்கணிப்பையும் விடக் கொடுமை வாய்ந்ததாகவே முடிந்தது.’ கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீர் அவளை மேலும் பேச முடியாமல் தடுத்தது. இப்போது நேரம் இரவாயிற்று. சிறுமி மறுபடியும் பேசினாள். ‘இவை யாவும் அவரே கூறினார். அது மட்டுமோ? அவர் இன்னும் எவ்வளவோ புலம்பினார். “என் விருப்பாற்றல், அறிவமைதி எல்லாவற்றையும் கொள்ளை கொண்டுவிட்ட இந்தப் பாசப்புயல் என் கண்களைமூடி என்னை இழுத்துச் சென்று பலருக்குக் கண்ணுறுத்தலும் தந்துவிட்டது. இந்தப் பாசத்தின், அளவைப் பெரிதாக்கிய அதே ஊழ்தான் அதற்குரிய எங்கள் இன்ப வாழ்வையும் இவ்வாறு குறுக்கியிருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். உடனடி பிரிவுக்கென்றே படைக்கப்பட்டவர்களின் வெறியார்ந்த குறுகிய காலப்புயலாக அது முடிந்தது. என் காதலுணர்ச்சி காரணமாக எவருக்கும் துன்பம் நேர்ந்துவிடக் கூடாது என்று நான் எவ்வளவோ முன்கருதலாயிருந்தபோதிலும், அவள் வகையில் எதுவும் பயனில்லாது போய்விட்டது. தாம் அவள் காரணமாகத் தீங்குக்கு ஆளாய்விட்டதாக நினைத்த பலபேரின் வெறுப்பும் அவள்மீது சுமந்து அவளை அழிவில் ஆழ்த்திவிட்டது?” “இவ்வகையாகச் சக்கரவர்த்தி மீண்டும் மீண்டும் கண்ணீரும் கம்பலையுமாக வாய்விட்டலறுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது இரவு நெடுநேரமாய் விட்டது. விடியுமுன் நான் இச்செய்தியை அரண்மனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஆகவே போய் வருகிறேன்” தானும் அழுகையிடையே இவ்வாறு பேசியவண்ணம் அவள் விடைபெற்றுச் சென்றாள். மேகங்களற்ற வானவெளியில் தெண்ணிலா மெல்லச் சாய்ந்து விழுந்து கொண்டிருந்தது. குளிர்காற்றில் புல்திரள்கள் நடுங்கின. சுவர்க்கோழிகள் விடாது கத்தின. அவ்விடம் விட்டு விரைய மனமில்லாதவளாக அம்பறாத் தூணிச் செல்வரின் புதல்வி தனக்குள்ளாக ஒரு பாடலைப் பாடினாள். ‘சுவர்க்கோழிக் குரலென்ன இடைவிடாமல் சுவறாமல் இரவெல்லாம் வடியும் கண்ணீர் மாதரசி மறுமொழியாக எதிர்பாடல் பாடினாள். பல்கோடிப் பூச்சியினம் குரல் எடுக்கும் பசிய புல்கோடி மீது பொழியும் முகில் நாயகர்தம் செல்கெழுகண் ணீர்த்துளிகள் பனித்துளி களாக! அரசவைப் பெருமக்கள் ‘முகில்நாயகர்கள்’ என்று அழைக் கப்படுவதுண்டு என்பதை அவள் இங்கே நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள். மாண்ட சீமாட்டி விட்டுச்சென்ற அரைக் கச்சை, சீப்பு முதலிய சிறு பொருள்கள் சிலவற்றை அவள் தூதணங்கின் கையில் ஒப்படைத்தாள். சக்கரவர்த்தியால் மாண்ட சீமாட்டிக்குப் பரிசுகளாக வழங்கப்பட்டவை சில. இப்போது மாண்ட சீமாட்டியின் நினைவூட்டுகளாக அவையே பயன்பட்டன. சிறுவனான இளவரசனுடயே தாதியராக வந்த நங்கையர் முகங்களும் தேம்பியே இருந்தன. அவை தம் தலைவியின் மறைவுக்காக வருத்தமடைந்ததாகத் தெரியவில்லை - அரண் மனைக்கு அடிக்கடி சென்று ஊடாடும் வாய்ப்பை இழந்து விட்டோமே என்றுதான் அவர்கள் வாட்டமுற்றனர். எப்படியும் தம்மை அரண்மனைக்கே அனுப்பி விடும்படியும் அவர்கள் சீமாட்டியின் அன்னையிடம் வருந்தி வேண்டிக் கொண்டார்கள். ஆனால் அம்மூதாட்டி தன் வாழ்வின் ஒளியிழந்த மாலைப் போதை அரண்மனையில் சென்று கழிக்க எண்ணவில்லை. அதே சமயம் இளவரசனை அங்கே அனுப்பிவிட்டு, நாள்தோறும் அவனைப்பற்றி ஏங்கி ஏங்கித் தவிக்கவும் அவள் விரும்பவில்லை. தூது தாங்கிச்சென்ற அணங்கு சக்கரவர்த்தியைச் சென்று கண்டபோது, அவர் முற்றிலும் விழித்துக் கொண்டேதான் இருந்தார். தூங்கி விடவில்லை. அரண்மனை முன்கூடத்திலுள்ள மலர்த்தொட்டிகள் அப்போதுதான் முழு மலர்ச்சியுற்றுப் பூத்துக்குலுங்கின. அவற்றைப் பார்வையிடும் சாக்குடன் அவர் முற்ற வெளியிலேயே உலவிக்கொண்டிருந்தார். அவருக்கு உள்ளந்தரங்கமான நாலைந்து நம்பகமான அரண்மனைப் பெண்டிருடனே இதற்காகவே அவர் மேலீடாகப் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இச்சமயங்களில் (குவீபீச் சீமாட்டியின் சோகக்கதை பற்றித்) ‘தெய்ஜிநோஇன்’ இயற்றிய பாடலுக்கு நேரான ‘மாளாப்பழி’ என்ற பட்டத்தையோ, ‘யாமதோ’ திணை மொழியில் தீட்டப்பட்ட கவிதையஞ்செல்வி ‘ஈசே’, கவிஞர் ‘ட்ஸுயாயுகி’ ஆகியோர் பாடல்களையோ சக்கரவர்த்தி பார்வையிட்டவண்ணம் உலாவுவார். அத்துடன் முதலில் குறிப்பிடப்பட்ட பாடலின் சோகக்கதை பற்றியே அவர் காலையும் மாலையும் உரையாடிக் கொண்டிருப்பது வழக்கம் என்று அறிகிறோம். தூதாக வந்த அணங்கின் பக்கம் சக்கரவர்த்தி வியப்புடன் திரும்பினார். ஆர்வத் துடிப்புடன், ‘செய்தி என்ன?’ என்று கேட்டார். தூதணங்கு தான் கொண்டு வந்த துயரார்ந்த செய்தியைக் காதோடு காதாக உள்ளவாறு எடுத்துரைத்தாள். பின் சீமாட்டியின் அன்னை கொடுத்தனுப்பிய கடிதத்தை அவரிடம் கொடுத்தாள். அக்கடிதம் வருமாறு: ‘மாட்சிமை தங்கிய பேரரசர் பிரானின் அன்புக் கட்டளைகளைச் சொற்களால் வருணிக்க முடியாத தூய உயர் மதிப்புடன் வாசித்தேன். ஆனால், அவற்றிலடங்கிய செய்தி என் உள்ளத்தில் காரிருளையும் கலக்கத்தையுமே பரப்பியுள்ளது. கடிதத்துடன் ஒருபாடல் இணைக்கப்பட்டிருந்தது. அதில் மாதரசி தன் பெயரனான இளவரசனை ஒரு மலராக வருணித்திருந்தாள். அம் மலர் தன்னைப் பெரும் புயல்களிருந்து காப்பாற்றிய மரத்தின் அரவணைப்பை இழந்து தவிப்பதாக அவள் புனைந்துரை மூலம் தன் கருத்தறிவித்திருந்தாள். பாடல் பிழை மலிந்ததாகவே இருந்தது. ஆனால் ஆறாத் துயரத்தின் பசும்புண்ணுடன் நடுங்கிய ஒரு கையே அதை எழுதிற்று என்பதை அவர் அறிந்திருந்தார். பிழைகள் அந்நோயின் சின்னங்கள் என்று அவர் கருதியிராவிட்டால், அவ்வளவு பிழைகளை அவர் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்! தூதணங்கின் முன்னிலையில் தம் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் அடக்கிக்கொள்ளச் சக்கரவர்த்தி தம்மா லானமட்டும் முயன்றார். ஆனால், மாண்ட சீமாட்டி முதன்முதல் அவரைச் சந்தித்த காட்சி அவர் மனக் கண்முன் ஓயாது நிழலாடிற்று. அச்சித்திரத்தை அடுத்து ஆயிரமாயிரம் நினைவுகள் அவர் உள்ளத்தில் வந்து நெருங்கி மொய்த்தன. ஒரு நினைவை யடுத்து அடுத்த நினைவு, அதனையடுத்து வேறொன்று என இடையறாது ஓடி,அவை அவரைத் தன்னிலை இழக்கச் செய்தன. ‘அந்தோ! இன்பத்தில் இழைந்த அந்த நாழிகைகள், யாமங்கள் - நாட்கள், மாதங்கள் - காலக் கணிப்பையும் மாந்தர் கருத்துகளையும் பீறிட்டுக்கொண்டு யாவும் ஓடி விட்டனவே!’ என்று புலம்பி அவர் சிந்தை நைந்தவராய் அழுங்கினார். இறுதியில் அவர் வாய்விட்டுக் கூறியது இவ்வளவே! ‘ஆ, மேல் மன்ற உறுப்பினரான அவர் தந்தை தெரிவித்துச் சென்ற விருப்பம் எவ்வளவு நிறைவளத்துடன் நிறைவேறி யிருக்கக் கூடும்! அது நிறைவேறும் என்று பொங்கும் மகிழ்வுடன் நினைந்து நினைந்து நான் நாட்போக்கினேனே! இப்போது இவை கூறி என்செய்வது? ஆயினும் ஒருவேளை... ஒரு வேளை.... இளவரசன் வருங்கால வாழ்வில்..... அவன் வாழ்வு நிறை வாழ்வாக நீடுக என்று மட்டுமே நான் இனி இறைவனை இறைஞ்ச முடியும்!’ தூதணங்கு கொண்டுவந்த பரிசுகளை அவர் நோக்கினார். ஆ, மீன்கொத்தி வடிவான கொண்டை ஊசி! அந்தோ, அவள் சென்றிருக்கும் வானக ஓடையின் நினைவாகக் கொண்டு வந்தனையோ, இதை?’ என்றார். பின்னும் அவர் ஒரு பழம் பாடலை மேற்கோளாக எடுத்தாண்டார். வான் சென்று அவளை நாடும் ஒரு மாயாவி கண்டேனிலையே! வான் சென்று ஆவியுருவில் அவளுக்கென துயரை உரைக்கும் ஒரு மாயாவி கண்டேனிலையே! என்று அவர் உருக்கமாகப் பாடினார். குவீபீயின் சித்திரம் வரைந்த ஓவியன் மாயத்திறம் படைத்தவன் தான். ஆனால், அச்சித்திரம் ஒரு தூரிகையின் வேலை மட்டுமே - உயிர்த்துடிப்பு அதில் இருந்திருக்க முடியாது. அவள் பொன்மேனியின் நுண்ணிய வனப்பு மன்னர் மன்னன் வே - யாங் பொய்கையில் நிழலாடும் வண்ணமலர் போன்றது; அதன் சாயல் அவன் பூங்காவில் ஒசிந்தாடும் வன்னிமரத்தின் பசுங் கொம்பு போன்றது’ என்றெல்லா மல்லவா, கவிஞர் பாடினார்! படத்தில் காணும் மாதரசியின் உருவில் நாம் இவற்றைக் காண முடியாது - முற்றிலும் முகச்சாயமும் நறுந்துகளும் நிரம்பிய ஒரு சாதாரணச் சப்பானிய உயர்குடி நங்கையாக மட்டுமே அது காட்சியளிக்கிறது!’ படத்தைப் பார்த்து இவ்வாறு எண்ணினார் சக்கரவர்த்தி. மாண்ட சீமாட்டியின் குரலை, வடிவத்தை அவர் எண்ணுந்தோறும் பறவைகளின் இனிய கானத்திலோ, மலர்களின் மாய வனப்பிலோ அவர் எத்தகைய ஒப்புமை களையும் காணமுடியவில்லை. அந்தோ, காலை மாலை, எத்தனை நாள், எத்தனை தடவை அவர்கள் தம்முள் இரண்டறக் கலந்த உணர்வுடன் ஒரே இணைகுரலில் தெய்வத்திடம் பணிந்து வேண்டியிருந்தனர்: ‘ஒரே ஒரு சிறகைத் தமக்குள் பகிர்ந்து கொள்ளும் இயல்புடைய இரட்டைப் பறவைகளை ஒத்து, ஒரே கிளையைத் தமக்குள் பொதுவாகக் கொண்ட இரட்டை மரங்களை ஒத்து இருவர் இணை உயிர்களும் இரண்டற்ற நிலையில் இணைந்தியங்கும்படி தெய்வம் அருளுமாக’ என்ற இவ்வேண்டுகோளை, அந்தோ, தெய்வம் நிறைவேற்றியிருக் கப்படாதா? சக்கரவர்த்தியின் உள்ளத்தை மீளா நெடுந்துயரில் கொண்டு சாய்க்கக் காற்றின் ஒரு சிறு சலசலப்பு, பாச்சைகளின் ஒரு சிறு கொக்கரிப்புப் போதுமாயிருந்தது, இப்போது! ஆனால் கோக்கிடன் சீமாட்டி அவருக்குத் தன் அன்பழைப்பை அவசரக் கட்டளையாக்கி வானவெளி யூடாக அனுப்ப இச்சமயம் பார்த்துத் தானா துணிய வேண்டும்? இதுவரை அவர் மாடத்தின் பக்கமே நாடாத அவள் இப்போது இரவு முழுதும் துயிலொழித்து நிலாமுற்ற மாடத்திலிருந்து அவருக்காகப் பாடிக் கொண்டிருந்தாள். இது அவர் உள்ளத்தை ஆழ்ந்து கிண்டிக் கிளறிற்று - அவருடனிருந்த ஆயத்தாரும் பணிநங்கை யரும் அவர் நிலையை எண்ணிப் பெரிதும் துணுக்குற்றனர். ஆனால், காலமறியாது கணை எய்யத் தொடங்கிய அச்சீமாட்டி தன் தனி இறுமாப்பை ஒரு சிறிதும் விட்டுவிடவில்லை - அவள் அவரை நாடிவர மனங்கொள்ள வில்லையாயினும் அவளை நாடி அவர் வருவதற்கே காத்துக் கிடந்தாள் - அரண்மனையில் குறிப்பிடத்தக்க வேறு எந்த நிகழ்ச்சியும் நடந்திராதது போல நடக்கத் துணிந்து விட்டாள், அவள்! இப்போது நிலா மேல்வானில் சென்று விழுந்தது. அந்த இருளில் ‘புதர்களுக்கிடையே அமைத்த அந்த மனையில், தன் காதலியின் தாய் இருக்கும் நிலையைச் சக்கரவர்த்தி எண்ணிப்பார்த்தார். அவள் உள்ளம் படும்பாட்டை உருவகம் செய்து ஒரு பாடலாகப் பாடினார். கூதிர் காலத்துக் குளிர் மதியம் வான விளிம்பில் ஆழ்ந்து மறைவது கண்டு அத் தாய் உள்ளம் எவ்வாறு பொறுக்குமோ? முகில் மண்டலத்தின்மீது உலவுவதாகக் கூறப்படும் வானவர் (சக்கரவர்த்தி) ஆகிய என்போன்றார் கூட அதைக் கண்டு கலங்குகின்றோமே!’ என்று அவர் மனமாழ்கினார்! எரியும் பந்தத்தை உச்ச அளவுக்குத் தூண்டி விட்டபடி அவர் பின்னும் அங்கேயே நீடித்து இருந்தார். ஆனால், இறுதியில் வலங்கைக் காவற்கூடத்திலிருந்து மேடஓரை (நள்ளிரவு ஒருமணி) அடித்த ஓசை அவர் செவிப்பட்டது. அதன் மேலும் தன்னை அந்நிலையில் யாரும் பார்த்துவிடக் கூடாதே என்ற எண்ணத்துடன் அவர் மெல்லத் தன் அறைக்கே நடந்தார். ஆனால், அவர் கண்கள் நெடுநேரம் துயில்கொள்ள முடியவில்லை. கண்கள் மூடியபின்னும் விடிய நெடுநேரத்துக்கு முன்னே துயில் அவரை விட்டோடிற்று. காலைக் கதிரவன் வந்து பலகணி மேலெழுந்த போதும் கண்டிலன் போதம்! என்ற கவிதையஞ் செல்வி ஈசேயின் அடிகளுக்கிசைய, காலைத் திருவெழுச்சியின் வண்ணக் கூறுகளில் கூட அவர் கருத்து செல்லவில்லை. பேரரச மேடை மீது காத்திருந்த வற்றல் தனி உணவைக்கூட அவர் கைகள் தொடமறுத்தன. உணவு வகைகள் என்னென்ன என்பதையே ஏறிட்டு நோக்காதவராய் அவர் கவலையில் ஆழ்ந்தார். உணவு வட்டிப்போர், வகைப்படுத்து வோர் தம் தலைவர் நிலைகண்டு ஏக்கமுற்றனர். பணி நங்கையரும், பணி மைந்தரும் அவர் ஏதோ விசித்திர நோன்பு மேற் கொண்டிருப்பதாக எண்ணினர். ‘கொண்டு வந்த உணவைக் கொண்டு போகிறோமே, என்ன பொருளற்ற வேலையாய் விட்டது நம்பணி!’ என்று அவர்கள் ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக் கொண்டனர். தம் குடிமக்களின் முணுமுணுப்பில் அவர் கருத்துச் செல்லவில்லை. அவர்களைப் பற்றிய கவலைகளிலிருந்து நழுவி, அவர் மென்மேலும் தம்மைப் பற்றிய கவலையிலேயே கருத்தழிந்து வந்தார். இன்ப வாழ்வுக் காலத்திலேயே அரசியலைப் புறக்கணித்து வந்தார் என்ற அவச்சொல்லுக்கு அவர் ஆளாகியிருந்தார். அதே கறை இப்போது முன்னிலும் பெரிதாகத் தொடங்கிற்று. வேறொரு தேசத்துச் சக்கரவர்த் தியைப் பற்றிப் பேசுவது போல மக்கள் அவரைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். நாட்கள், மாதங்கள் இவ்வாறு கழிந்தன. அவற்றின் முடிவில் இளவரசன் பேரவைக்குக் கொண்டு வரப்பட்டான். இதற்குள் அவன் ஈடும் எடுப்புமற்ற எழிலிளஞ் செல்வனாக வளர்ந்திருந்தான், அவனைக் காணச் சக்கரவர்த்தி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அது இளவேனில் பருவம்; பேரரசுக்குரிய பட்டத்து இளவரசனைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கும் காலம் அணுகி வந்தது. ஆனால், சக்கரவர்த்திக்கு இச்சமயம் உள்ளூர ஒரு நைப்பாசை எழுந்தது. ‘மூத்த புதல்வன் உரிமையைப் புறக்கணித்து விட்டு, இந்த அழகிளஞ் செல்வனையே பட்டத்து இளவரசனாக அறிவித்து விட்டாலென்ன’ என்று அவர் அடிக்கடி எண்ணமிட்டார். அடக்க முடியாத இந்த ஆர்வத்தூண்டுதலுக்கு அவர் ஓயாது இரையானார். ஆயினும் இது செய்ய அவர் முற்றிலும் துணியக்கூடவில்லை. அத்தகைய தேர்தலை ஆதரிக்கப் பேரவையில் யாரும் முன்வர மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். அத்துடன் தேர்ந்தெடுத்து விட்டாலும், தேர்வின் பின்னும் மக்கள் அதைப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள் என்று அவருக்குத் தோற்றவில்லை. இப்படிப்பட்ட செயலால் குழந்தை இளவரசனுக்குப் புகழைவிட ஆறாத் துயரே மிச்சமாகும் என்பதைச் சக்கரவர்த்தி மதித்துணர்ந்தார். எனவே, உள்ளத்தின் உள்ளாழத்திலிருந்து எழுந்த அந்த ஆர்வத் திட்டத்தை அவர் அந்த உள்ளத்திற்குள்ளேயே அடக்கி யமைந்தார். உலகினிடமிருந்து அவர் உள்ளாசை முற்றிலும் மறைக்கப் பட்டுவிட்டது. ஆனால், இந்த மறைப்பின் மூலமே அவருக்கு ஒரு நற்பெயர் கிடைத்தது. அவர் விரும்பியதையே எதிர்பார்த்த மக்கள், எதிர்பார்த்தபடி நடவாதது கண்டு வியப்புற்றனர், அவரைப் பாராட்ட முந்தினர். ‘பார், சிறுவன் மீது தம் உயிரையே தான் கொட்டி வைத்திருக்கின்றார், நம் சக்கரவர்த்தி! ஆயினும் என்ன? தம் ஆர்வப் பைத்தியத்தைக் கூட அவர் ஓர் அளவில் நிறுத்தி வைத்துவிட்டாரே!’ என்று அவர்கள் கலகலப்புடன் கூறினர். அரண்மனைச் சீமாட்டிகள் உள்ளங்களில்கூட இதுவரை இவ்வகையில் நிலவிய அச்சம் பெரிதளவு குறைந்தது. அவர்களும் அமைதியுற்றனர். இளவரசனின்பாட்டி - சீமாட்டியின் தாய் அடைந்த துயரம் என்றும் ஆற முடியாத் துயரமாகவே அமைந்தது. மாண்ட புதல்வியின் ஆவியைத் தேடிச் செல்லும் ஆர்வம் அவளிடம் வளர்ந்து கொண்டே இருந்தது. அதன் படியே விரைவில் அவள் உயிர் உடற்கூட்டை விட்டு அகன்றது. சக்கரவர்த்தியை மீண்டும் துயர மேகங்கள் சூழ்ந்தன. ஆனால் இப்போது இளவரசனுக்கு வயது ஆறாயிற்று. நிகழ்ச்சிகளை ஓரளவு உற்றறியும் பருவம் எய்தி விட்டதனால் அவன் தன் வாழ்வில் முதல் தடவையாக ஆறாத்துயரால் விம்மி விம்மி அழுதான். பல ஆண்டுகளாகத் தன்னிடம் அன்பு காட்டிய அப்பெருமாட்டியின் உயிரற்ற சடலத்தைக் கண்முன் கண்ட காட்சி - இதை அவன் நெடுநாள் மறக்கவில்லை. பின்னாட்களில்கூட அவன் அதை நினைத்தவுடன் துக்கத்துள் தோய்ந்து புலம்புவதுண்டு. இந்நாள்முதல் இளவரசன் அரண்மனையிலே தங்கி வாழ்ந்தான். வயது ஏழானதும் அவன் கல்வி பயிலத் தொடங்கினான். படிப்பில் அவனது விரைந்த முன்னேற்றங்கண்டு தந்தை வியப்பில் ஆழ்ந்தார். இனி இந்தத் துணையற்ற சிறுவனிடம் யாரும் கடுமை காட்டமாட்டார்கள் என்பதையும் அவர் உணர்ந்தார். ஆகவே கோக்கிடன் சீமாட்டியின் அறைக்கும் மற்ற அரண்மனைப் பகுதிகளுக்கும் அவனைத் தாராளமாக இட்டுச்செல்லத் தொடங்கினார். இப்போது அவன் தாய் இவ்வுலகில் இல்லை. ‘தாயற்ற இப்பிள்ளையிடம் அன்பு காட்டத் தவற மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்’ என்று அவர் பேரரசின் மன்னுரிமைச் சீமாட்டியரிடம் அவனைப் பற்றிப் பரிந்துரைப்பார். இவ்வாறு அரண்மனையின் பலவகை மறைதிரைகளையும் விலக்கி இளவரசன் எங்கெங்கும் திரிந்து பழகினான். கரடு முரடான வாழ்க்கைப் பாதையில் பழகிய போர்வீரர், வெறுப்பிலேயே வளர்ந்த வன்கணாளர்கூட, பால் வடியும் அச்சிறுவனின் மதிமுகத்தைக் கண்டதும் தம்மை யறியாமலேயே அதில் ஈடுபட்டு நகைமுகம் காட்டினர். கோக்கிடன் சீமாட்டிகூட அவனை வரவேற்காமல் ஒதுக்கிட முடியவில்லை. அவளுக்கு இரண்டு புதல்வியர்கள் இருந்தார்கள். இளவரசன் அழகுக் கவர்ச்சியில் ஒரு சிறு பகுதியைக்கூட அவர்களிடம் காண இயலவில்லை. அவன் நடை, நயம் ,பெண்டிரிடம் அவன் காட்டிய அறியாப் பருவத்தின் கூச்சம் ஆகியவற்றின் கவர்ச்சியில் ஈடுபட்ட மாதரசியர், இளம் பெண்டிர் அவனுடன் மனம் விட்டு விளையாடினர். அவனுடன் பழகுவதில் ஆடவரும் பெண்டிரும் எல்லையற்ற இன்பம் கண்டனர். அவன் கலைத்திற நுட்பநயங்கள், நடை நயங்களின் பட்டியலை நாம் இங்கே முழுநிறைவாக எடுத்துக் கூறுவதானால், அவை வாசகர்களுக்குச் சலிப்பூட்டி விடும் என அஞ்சுகிறோம். வாழ்விலும் இந்நயங்கள் மற்றவர்களுக்குச் சலிப்பையே அளித்திருக்குமோ என்று கூட அந்தப் பட்டியல் எவரையும் எண்ணச் செய்துவிடும்! அவன் கவர்ச்சிகள் அவ்வளவு அதிகம் - அவை பட்டியலில் அமையாதவை, பட்டியல் கடந்த உயிர்ப் பண்புடையவை. இச்சமயம் கொரியா நாட்டவர் சிலர் தலைநகருக்கு வந்தனர். அவர்களிடையே சோதிடன் ஒருவனிருந்தான். ஏற்கெனவே பேரரசர் ‘உடா’ காலத்தில் அயல்நாட்டவர் அரண்மனை வருவதைத் தடைப்படுத்தும் ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆகவே, சக்கரவர்த்தி அவர்களை அரண்மனைக்கு வரவழைக்கத் துணியவில்லை. ஆயினும் முழுதும் இரகசிய இரசியமாக, அவன் தங்கியிருந்த இடத்துக்கு அவர் இளவரசனை அனுப்பினார். வலங்கைத் துறைச் செயலாளர் வசம் அவனை ஒப்படைத்து, தம் மகனென்றே அவனை அறிமுகப்படுத்தும்படி சக்கரவர்த்தி ஏற்பாடு செய்திருந்தார். அவன் வருங்கால வாழ்க்கை பற்றி அறியும் ஆர்வம் அவருக்கு அவ்வளவு பெரிதாயிருந்தது! சிறுவன் முகத்தின் ஒளிக்கோடுகள் கண்டு சோதிடன் பெருவியப்படைந்தான். அதே சமயம் அவன் அடிக்கடி தன் தலையை ஆட்டி முகத்தைச் சுளித்துக் கொண்டான். ‘ஒரு நாட்டாட்சியின் தலைமைக்கே உரிய குறிகள் இவ்விடம் உள்ளன. ஆனாலும் அதுவே அவன் வாழ்க்கைப் பாதையாய் அமைந்தால் கூட, ஒரு பெரிய வல்லரசனாய், உலகாளும் சக்கரவர்த்தியே யாகும் வரை அவன் எதிலும் அமைந்து நிற்கமாட்டான் என்று தெரிகிறது. அதே சமயம், ஊன்றிக் கவனித்தால் - அவன் ஆட்சியில் குழப்பமும் துயரும் உடன்தொடரும் என்று காண்கிறேன். இது மட்டுமன்று, இவ்வழி விடுத்து அரசியற் பெரும் பணி முதல்வனாக, பேரவைப் புகழ் சான்ற உறுப்பினனாக அவன் உயர்வு பெற்றால்கூட, ஒரு சுமுகமான முடிவை இவன் வகையில் என்னால் காணமுடியவில்லை. ஏனென்றால், அப்போதும் நான் முன்னால் குறிப்பிட்ட அரசுரிமைக் கூறுகளை அவன் மீறியாகவேண்டும்’ என்று சோதிடன் கூறிமுடித்தான். வலங்கைத் துறை செயலாளர் சூழ்ச்சிநய மிக்கவர். கல்வியிலும் அனுபவத்திலும் ஆழ்ந்தவர். சோதிடனுடன் நயமாகப் பேசி அவன் பேச்சை அவர் வேறு திசையில் மாற்றினார். அவன் அறிவின் ஆழந்தேர்ந்து தன் அறிவின் ஆழங்காட்டி அவனை மாறா நண்பனாக்கினார். இறுதியில் இருவரும் தம்மிடையே கவிதைகள், கட்டுரைகள் பரிமாறிக் கொண்டனர். சோதிடன் உள்ளம் இப்போது இன்பத்தின் குளிர் தென்றலில் குளித்தாடிற்று. ‘இப்பேரரச எல்லையை விட்டகலும் தறுவாயில் இவ்வளவு அகன்ற அறிவாற்றல் படைத்த ஒருவருடன் கலந்து உரையாடும் மகிழ்ச்சி எனக்குக் கிட்டியுள்ளது. இப்போது விடைகொள்ள நான் வருந்தினாலும், இவ்விடத்திலிருந்து மிக இனிய உணர்ச்சிகளுடனேயே நான் சொல்கிறேன்’ என்று அவன் மனம் விட்டுப் பேசினான். சிறுவனாகிய இளவரசனும் இச்சமயம் ஓர் இனிய சிறுகவிதை இயற்றி அதைச் சோதிடனுக்குப் பரிசாய் அளித் தான். சோதிடன் அதை அளவிறந்த ஆர்வத்துடன் பாராட்டி அவனுக்குத் தானும் பல நேர்த்தியான பரிசுகள் வழங்கினான். இவற்றைக் கேள்வியுற்ற சக்கரவர்த்தி மீண்டும் கருவூலத்திலிருந்தே சோதிடனுக்குப் பேரரச மதிப்புக்குரிய பரிசுகள் பலவற்றை அனுப்பிப் பெருமைப்படுத்தினார். இவையனைத்தும் மிகமிக இரகசியமாகவே நடைபெற்றன. ஆயினும் பட்டத்து இளவரசன் பாட்டனாரான வலங்கை அமைச்சரும் அவர் சார்பினரும் எப்படியோ இவற்றைப் பற்றிக் கேள்வியுற்றுச் சந்தேகமும் சஞ்சலமும் கொண்டனர். ஆனால், சக்கரவர்த்தி அவர்கள் சந்தேகத்தையும் சஞ்சலத்தையும் எளிதில் திறம்பட அகற்றினார். அவர் இப்போது சீன நாட்டுச் சோதிடர்களையே வரவழைத்தார். தாமே கண்ட சில குறிகளால் தம் சிறுவனை உரிமை இளவரசனாக ஏற்பதற்கே இது வரை தாம் தயங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதைக் கேட்டவுடன் எல்லோரும் ஒரு மனதாகச் சக்கரவர்த்தியின் கூரறிவையும் முன்னெச்சரிக்கையையும் பாராட்டினார்கள். அவரும் அரசுரிமை மதிப்போ, தாய்வழி செல்வாக்கோ இல்லாமல் சிறுவனை உரிமை இளவரசனாக்கி அரண்மனையில் ஆதரவில்லாமல் தவிக்க விடுவதில்லை யென்று முடிவு செய்தார். ‘என் ஆற்றலே பெரிதன்று. ஆகவே அரசியல் பெரும் பணி முதல்வர் மீது என் சார்பில் கண்காணிப்புச் செலுத்தும் பொறுப்பை அவனுக்கு அளிப்பேன்’ என்று அவர் எண்ணினார். இதுவே சிறுவன் வருங்கால வளர்ச்சிக்குகந்த நல்ல திட்டமாகும் என்று கருதி அவர் சிறுவன் கல்வியிலேயே முழுக் கவனம் செலுத்த முனைந்தார். கலை இயல் துறைகள் ஒவ்வொன்றிலும் இளவரசன் முழுநிறை பயிற்சி பெறும்படி அவர் திட்டமிட்டார். இவ் வெல்லாத் துறைகளிலும் அவன் காட்டிய ஆர்வத்தையும் தகுதியையும் கண்டபோது, இத்தகைய சிறுவன் குடிச்சிறப்பு எதுவுமற்ற ஒரு பொது மனிதனாக நேர்ந்ததே என்று அவர் உள்ளம் வருந்திற்று. எனவே, பிறைக் கணிப்பிலும் கோளினங் களின் போக்கிலும் வல்ல பல அறிஞர்களை அவர் மேலும் அழைத்துத் தக்க ஆலோசனைகள் நடத்தினார். அவர்கள் அனைவரும் ஒருமனதாக ஒரே அறிவுரை கூறினார்கள். பெருமக்களுடனே போட்டியிடுமளவுக்குப் பொது மக் களிடையே செல்வாக்குப் படைத்த ‘மினமோட்டோ’ என்ற ஜென் குழுவினருள் அவனை ஒருவனாக்கும்படி அவர்கள் சக்கரவர்த்தியை வேண்டினர். இது மிக எளிதில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆண்டுகள் எத்தனை சென்றும் சக்கரவர்த்தி மாண்ட சீமாட்டியை ஒரு சிறிதும் மறக்க முடியவில்லை. அம்மறதியையும் அவர் இன்ப ஈடுபாட்டையும் கருதி அரண்மனை ஆட்சியாளர் எத்தனையோ மாதரசியரை அரண்மனைக்குக் கொண்டுவரத் தவறவில்லை. ஆனால், மாண்ட சீமாட்டிக்கு ஈடுசோடு எவரும் இல்லை என்ற உறுதியுடன் சக்கரவர்த்தி அவர்கள் எவரையும் கண்ணெடுத்துப் பாராமலே திருப்பி அனுப்பி வைத்தார். ஆயினும் ஒரு மாதரசியின் புகழ் எங்கும் அலையோடிப் பரவியிருந்தது. அவள் முந்திய ஒரு சக்கரவர்த்தியின் புதல்வி. அவள் அன்னை கைம் பெண்ணாக ஒதுங்கி வாழ்ந்த ஒரு பேரரசியே. அவள் அப்புதல்வியைக் கண்ணாக, கண்ணின் இமை போல் காத்து வளர்த்து வந்தாள். முந்திய சக்கரவர்த்தியிடமே பணி செய்த அரண்மனை மாதரசி ஒருத்தி அவ் இளவரசியுடன் நெருங்கிப் பழகி வந்தாள். சிறு குழந்தை முதலே இளவரசியை நன்கு அறிந்தவளாதலால், இளவரசி பருவமடைந்த பின்னும் அவளைச் சென்று காணும் வாய்ப்பு அம்மாதரசிக்கு இருந்தது. அவள் சக்கரவர்த்தியிடம் அடிக்கடி அவ்விளவரசியைப் பற்றிப் பேசுவதுண்டு. ‘பேரரசே!’ மூன்று சக்கரவர்த்திகளின் பேரவைகளின் நான் பங்கு கொண்டு பணியாற்றி வந்திருக்கிறேன். அவ்வளவு நாட்களிலும் மாண்ட சீமாட்டியின் அரிய பேரழகுக்கு ஈடாகக் கருதக்கூடிய வேறு எந்நங்கையையும் நான் கண்ட தேயில்லை. ஆனால், இந்த இளவரசி மாண்ட சீமாட்டியின் ஓர் அச்சுப் பிழம்பாகவே திகழ்கிறாள். அத்தகைய முழு நிறை பெண்மையின் எழிலுருவம் அவள்!’ என்று அவள் அடிக்கடி கூறுவாள். அவள் பேச்சில் எந்த அளவு உண்மை இருக்கக்கூடுமோ என்று வியந்தவராய், அரைகுறை நம்பிக்கையுடனேயே சக்கரவர்த்தி இப்பேச்சுகளுக்குச் செவி கொடுத்து வந்தார், ஆயினும் ‘மாண்ட சீமாட்டியின் சாயல்’ என்ற ஒரே செய்தி அவர் உள்ளத்தின் ஆழ் தடத்தில் அவ்வப்போது இன்னதென்றறியாத விதிர் விதிர்ப்பை உண்டு பண்ணி வந்தது. இவற்றையெல்லாம் கேட்ட பேரரசியாகிய அன்னை மிகவும் கலவரம் அடைந்தாள். ஏனென்றால், முன்னைய சீமாட்டியைக் கோக்கிடன் சீமாட்டி எவ்வளவு வன் கண்மையுடனும் கொடுமையுடனும் நடத்தி யிருந்தாளென்பதை அவள் கேள்வியுற்றிருந்தாள். இந்த அச்சத்தை வெளிக் காட்டாமலே, அது காரணமாக அவள் இளவரசி பருவ மடைந்த பின்னும் அவளைப் பேரவையில் திரு முன்னிலைப் படுத்தத் தயங்கிக் காலம் கடத்திக் கொண்டு வந்தாள். ஆனால் இந்நிலையிலேயே அவள் திடுமென உலகு நீத்தாள். தாயிழந்து தன்னந் தனியளாகத் தவித்த இளவரசியின் இரங்கத்தக்க நிலைபற்றிக் கேள்விப்பட்டார், சக்கரவர்த்தி! மாண்ட பேரரசிக்கிருந்த கவலை இளவரசியின் பணியாளர் களுக்கும் பாதுகாவலருக்கும் ஏற்படாத வகையில் அவர் மென்னயத்துடன் அவர்களுக்குத் தன் கருத்தறிவித்தார். தம் புதல்வியரான இளவரசியருள் ஒருத்தியாகவே பாவித்துத் துயரார்ந்த அவ் அழகிளஞ்செல்வியை ஆட்கொள்வதாக அவர் சொல்லியனுப்பினார். அவள் இல்லத்தின் தனிமைத் துன்பம் தவிர்த்து அவளை இன்பத்தில் ஈடுபடுத்த அரண்மனை வாழ்வே மிகவும் உகந்தது என்று அவள் பாதுகாவலரும், அவள் உடன் பிறந்தானாகிய இளவரசன் –ஹியோ புகியோவும் எண்ணினர். ஆகவே அவள் பேரவைக்கு இட்டுக் கொண்டு வரப்பட்டாள். அவளுக்கு புஜித்சுபோ மாளிகையின் அறைகள் ஒளித்து விடப்பட்டன. அம் மாளிகையின் பெயராலேயே இதுமுதல் அவள் புஜித்சுபோ இளவரசி என்று அழைக்கப்பட்டாள். தன் காதல் சீமாட்டியின் தோற்றத்துடன் அவள் தோற்றம் எவ்வளவு நெருங்கிய ஒப்புமை உடையதாய் இருந்தது என்பது கண்டு சக்கரவர்த்தி மலைப்படைந்தார். ஆயினும் மாண்ட சீமாட்டிக்கு இல்லாத குடிச்சிறப்பு இவ் இளவரசிக்கு அவளைவிட எத்தனையோ மடங்கு உயர்வுடையதாக அமைந்திருந்தது. இது கோக்கிடன் சீமாட்டியிடமிருந்தோ, பிறரிடமிருந்தோ ஏற்படக் கூடுமென்ற அவமதிப்பு அச்சத்தின் நிழலுக்கே இடமில்லாமல் செய்தது. அதுவே அவளிடம் எல்லாருக்கும் பெருமதிப்பை உண்டுபண்ணிற்று. அவளை மகிழ்விக்க, அவளுக்கு ஏற்றபடி நடக்க ஒவ்வொருவரும் போட்டியிட்டு முந்திக் கொள்ள முனைந்தனர். அவள் சிறுசிறு விருப்பங்களையும் நிறைவேற்ற, அவளுக்கு எத்தகைய சலுகையையும் தங்கு தடையின்றி அளிக்க எவரும் தயங்கவில்லை. சக்கரவர்த்தியின் பாசத்தினால் மாண்ட சீமாட்டிக்கு ஏற்பட்ட இடர்கள் அதே பாசத்தை மேற்கொண்ட இளவரசிக்கு நேரவில்லை - அவள் உயர் குடிப்பிறப்பு அந்தப் பாசத்துக்கு எல்லார் ஒத்துழைப்பையுமே எளிதில் பெற்றுத் தருவதாயிருந்தது. சக்கரவர்த்தியின் உள்ளத்தில் பழைய காதலின் பிடி காலத்தின் போக்கால் ஒரு சிறிது கூடத் தளரவில்லை. ஆயினும் அவ்வப்போது மாண்ட சீமாட்டியிடம் சென்ற தம் நொந்த உள்ளத்தை அவர் அதே சீமாட்டியின் உயிர்ச் சாயலாய் அமைந்த இளவரசி மீது செல்லவிட்டு, சிறிது சிறிதாக ஆறுதலும் தேறுதலும் கண்டார். இடையிடையே நிகழ்ந்த இந்த ஒரு சிறு மாறுபாடன்றி, மொத்தத்தில் துயர் ஆழ்ந்த அவர் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த வேறு மாறுபாடு எதுவும் இல்லாமலே கழிந்தது. மினமோட்டோ குழாத்தினரில் உறுப்பினனாகச் சேர்க் கப்பட்டபின் இளவரசன் கெஞ்சி என்ற பெயரால் அழைக்கப் பட்டான். ஆயினும் கிட்டத்தட்ட எப்போதுமே அவன் சக்கரவர்த்தியுடனே அரண்மனையிலேயே தங்கி வாழ்ந்தான். பொதுவாக அரண்மனைப் பணி மாதருடனும் ஆடையணியரங்க மாதரசியருடனும் அவன் மிக எளிதாகப் பாச நேசத்துடனேயே பழகி வந்தான். இச்சமயம் புஜித்சுபோ இளவரசி அடிக்கடி சக்கரவர்த்தியின் தனியறைக்கு அழைக்கப்பட்டு, அவருடன் ஊடாடி வந்தாள். இவளிடமும் இளவரசன் எத்தகைய கூச்சமும் தடையும் இல்லாமலே பழகி வந்தான். இளவரசன் கெஞ்சியின் நன்மதிப்பையும் நேசத்தையும் பெறும் வகையில் அரண்மனை மாதர் எல்லாருமே தங்கு தடையற்ற இனிய போட்டியில் ஈடுபட்டிருந்தனர். அவனும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு நற்பண்பு கண்டு பாராட்டி, அப்போட்டிகளிடையே ஒரு சிறிதும் மனக் கசப்புக்கு இடமில்லாமல் எல்லாருடைய நேசத்தையும் பொது உரிமையாகப் பெற்றிருந்தான். ஆயினும் அவர்கள் அனைவரும் குழந்தையிடம் பழகும் பெரியவர்களாகவே அவனிடம் நடந்து கொண்டனர். அவன் பாசம் இதற்கேற்ற தொலைவான பாசமாகவே இருந்தது. ஆனால், புஜித்சுபோ இளவரசி வகையில் அவன் தொடர்பு புதுவகையாய் அமைந்தது. அவள் இளமையும் அழகு நலமும் அவன் உள்ளத்தைத் துளைத்தன. தொடக்கத்தில் அவள் அவன் உணர்ச்சியில் பங்கு கொள்ளாமல் அவனிட மிருந்து ஒதுங்கி ஒளித்து நடமாட முயன்றதுண்டு. ஆனால், அவர்கள் அடிக்கடி நேருக்கு நேர் சந்திக்காமல் இருக்க முடியவில்லை. அவன் கவர்ச்சியில் ஈடுபடவும் அவள் சூழல்களே பெரிதும் உதவின. இளவரசனுக்குத் தன் அன்னை பற்றிய நினைவு ஒரு சிறிதும் கிடையாது. ஆனால், அரண்மனை மாதரசி அவ் அன்னைக்கும் இளவரசிக்கும் தோற்றத்தில் எவ்வளவு ஒற்றுமை இருந்தது என்று வியந்துரைப்பதை அவன் கேட்டிருந்தான். அவன் இள உள்ளத்தின் கற்பனையில் அவள் மீது அவனுக்கு ஒரு புதிய அக்கறையை இது உண்டு பண்ணிற்று. தாய்மைப் பாசமும் இளமை உணர்ச்சிகளும் அவன் உள்ளத்தில் தடுமாறின. அவள் நட்பைப் பெற்று அவளுடனே வாழ்நாள் முழுதும் கழிப்பதை விடப் பெரும் பேறு, பெரிய இன்பம் வேறு இல்லை என்று ஏதோ ஒன்று அவன் அகச் செவிகளில் ஓதி வந்தது. சக்கரவர்த்தியே ஒரு சமயம் அவன் உள்ளப் போக்கை இளவரசிக்கு எடுத்து விளக்கி, ஏற்கெனவே அவனிடம் ஈடுபட்ட அவள் இதயத்தின் சாய்வை நிலையாக அத்திசைப்படுத்த நேர்ந்தது. ‘இளவரசியே! இந்த இள உள்ளத்தை அறியாமல் எக்காலத்திலும் அதைக் கடுமையுடன் புறக்கணித்து ஒதுக்கி விடாதே! தன் தாயின் சாயல் உன்னிடம் எவ்வளவு பொருந் தியுள்ளது என்பதை அவன் பல தடவை கேள்வியுற்றிருக்கிறான். உன்னிடம் அவன் காட்டும் பாசத்தை இதுவே பன்மடங்கு பெருக்குகிறது என்பதை நான் அறிவேன். இந்நிலையில், தகாத முறையில் அவன் உன்னைத் தொந்தரவு செய்வதாக என்றும் எண்ணாதே, உனக்குரிய முழு நயநாகரிகத்துடன் அவனுடன் பழகுவாய் என்று நம்புகிறேன்’ என்று அவர் அடிக்கடி கூறுவார். அத்துடன் ‘உன் தோற்றத்துக்கும் அவன் தாய் தோற்றத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் காண, நீ மட்டும் இவ்வளவு இளமையுடையவளாய் இல்லாமலிருந்தால், நீயேதான் அவன் தாயோ என்று கூட எவரும் எண்ணுதல் இயல்பு’ என்று சக்கரவர்த்தி நயம்பட அவளிடம் பேசி யிருந்தார். இவ்வாறு, மிக இளம் பருவத்திலேயே, இளமையின் மாயச் சூழ்நிலையிலேயே இளவரசியின் மாய அழகு அவன் பசுமை யுள்ளத்தில் பதிந்தது. புஜித்சுபோ இளவரசியின் உருவமே அதன்மீது உருவான முதல் தடமாகவும், இறுதிவரை அழியாத உயிர்த்தடமாகவும் விளங்கிற்று. கோக்கிடன் சீமாட்டி இளவரசியை என்றும் மனம் விட்டு நேசித்ததில்லை. இப்போது அவளுடன் பழகிய கெஞ்சி இளவரசன் மீது அவளுக்கு முன்பு இருந்த பகைமை மீட்டும் புத்துருவெடுத்தது. அச்சீமாட்டியின் பிள்ளைகள் வடிவழகிகளென்றே பொதுவாகப் பாராட்டப் பெற்றிருந்தனர். ஆயினும் இவ்வகையில் அவர்கள் கெஞ்சி இளவரசனுக்கு ஈடானவர்களல்லர். அவன் தோற்றத்திலும் நய நாகரிக நடையழகிலும் ஈடுபட்டுப் பொது மக்கள் யாவருமே அவனை ‘ஹிகரு கெஞ்சி’ அதாவது ‘ஒளிதிகழ் கெஞ்சி’ என்று புனைந்துரைத்தனர். கெஞ்சியைப் போலவே புஜித்சுபோ இளவரசியையும் யாவரும் உச்சிமேற்கொண்டு பாராட்டி மகிழ்ந்தனர். அவளை அவர்கள் ‘மின்னும் கதிரொளி இளவரசி’ என்று விதந்துரைத்தார்கள். இளமையின் வாயிற் படியிலும் கெஞ்சியின் வடிவமைதி பெரிதும் குழந்தை நலமிக்கதாகவே இருந்தது. அவசரப்பட்டு ஆடவர் உடைபோர்த்து அக்குழந்தைப் பருவநலனைக் கெடுப்பது வெட்கக்கேடானதென்றே எவரும் கருதினர். ஆயினும் முறைப்படி அவன் பன்னிரண்டு வயதை எட்டிவிட்டதனால், நிறை ஆடவரின் உடை அணியும் விழாவுக்குரிய பருவம் வந்துவிட்டதென்பதை எவரும் ஒத்துக் கொண்டனர். எனவே, சக்கரவர்த்தி அதற்கான ஏற்பாடுகளில் முனைந்தபோது எவரும் வியப்படையவில்லை. ஆனால், சக்கரவர்த்தி எவரும் எதிர்பார்த்திராத அளவில் தளராமுயற்சியுடனும் ஆர்வத் துடனும் அவற்றில் ஈடுபட்டார். பொதுவாக அதற்கு மதிப்பிடப்பட்டிருந்த எல்லைமீறி அதில் பகட்டாரவாரத்தைக் காண அவர் துடித்தார். சென்ற ஆண்டிலேயே பட்டத்து இளவரசனின் உடையணிவிழா தென்மாளிகையில் நடைபெற்றிருந்தது. அதில் ஒரு சிறிதும் குறைபடாத அரும்பெருஞ் சிறப்புகளுடன் இவ்விழாவும் நடந்தேறிற்று. அதற்காகப் பல்வேறு அரங்கங்களில் நடைபெற்ற விருந்துகளையும் கருவூல, கூல அரங்க ஏற்பாடுகளையும் சக்கரவர்த்தி தாமே தம் நேர் மேற்பார்வையில் வைத்து நடத்தலானார். பணியாளர் எங்கே நன்றாகக் கவனிக்காமல் விட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் அவர் எவரையும் அப்பொறுப்பில் விட்டுவிட்டு ஒதுங்கியிருக்கத் துணியவில்லை. இதனால் விழா அப்பழுக்கில்லாமல் முழுநிறை நேர்த்தியுடன் நிறைவேறிற்று. விழாவின் வினைமுறைகள் சக்கரவர்த்திக்கே உரிய தனி மாளிகையின் கீழ்பாரிசத்தில் ஒழுங்குசெய்யப்பட்டன. சக்கரவர்த்தியின் பொன் அரியாசனம் கீழ் திசைநோக்கி அமைக்கப்பட்டது. விழாத் தந்தையாகப் பொறுப்பேற்ற இடங்கை அமைச்சரின் இருக்கை அதன் முன்னாலேயே நிறுவப்பட்டது. குரங்கின் ஓரையில், அதாவது பிற்பகல் மூன்று மணிக்குக் கெஞ்சி இளவரசன் விழாவரங்கத்துக்கு வந்து சேர்ந்தான். இளநலம்வாய்ந்த அவன் நெடுநீளமான தலைமுடி அவன் அழகுக்கு அழகு செய்வதாயிருந்தது. அதை வார்ந்தெடுத்து ஊதா நாடாவால் கட்டுவது விழாத் தந்தையின் வினைமுறைக் கடமைகளில் ஒன்றாய் இருந்தது. ஆனால், அதைக் கட்டும்போதே ‘இந்த அழகுக் காட்சிக்கு இன்று ஒருமுடிவு ஏற்பட்டுவிடுமே’ என்று அவரால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. அதைக் கத்திரியால் கத்திரிக்கும் பொறுப்புடைய கருவூல எழுத்தாயர் கூடத் தம் இன்றியமையாக் கடமை பற்றி மனங்கவன்றார். ‘இவ் வினிய விழாவை இளவரசன் தாய் உயிருடனிருந்து பார்த்தால் எவ்வளவு பெருமைப்படுவாள். அவள் இருந்து காணக் கொடுத்து வைக்கவில்லையே’ என்று சக்கரவர்த்தி ஒருகணம் பொருமினார். ஆனால், நல்லோரையில் அத்தகைய துயர எண்ணங்கள் புகுவது தகாது என்று எண்ணி அந்த எண்ண அலையை அவர் விரைவில் மாற்ற முனைந்தார். முறைப்படி முடிகவித்துக் கெஞ்சி தன் அறைக்குச் சென்றான். அங்கிருந்து தன் உடையைமாற்றி முழுநிறை ஆடவருடையுடன் மீண்டும் விழாமேடைக்கு வந்து, சக்கரவர்த் திக்குத் தன் வணக்கவழிபாடு தெரிவிக்கும் பூசனை நடன மாடினான். அவ்வாடலின் நளின ஒய்யாரம் கண்ட எல்லார் கண்களிலும் நீர்துளிர்த்தது. தம் பழந்துயரங்களைச் சிலகாலமாக மறந்திருந்த சக்கரவர்த்தி இக்காட்சியால் மீண்டும் பழமையின் இருளார்ந்த எண்ணங்களில் ஆழ்ந்தார். குழந்தை ஆடை களைந்தபின் கெஞ்சி இளவரசன் தோற்றம் முன்போல அவ்வளவு பொலிவுடையதாய் இருக்க முடியாது என்றே பலரும் எண்ணிருந்தார்கள். ஆனால், அவர்கள் இனிய வியப்பில் மூழ்கினர். ஏனெனில் முழு ஆடவருடையில் அவன் எழில்வண்ணம் முன்னிலும் பன்மடங்காக ஒளி வீசிற்று. விழாத் தந்தையாகிய இடங்கை அமைச்சருக்கு ஒரு புதல்வி இருந்தாள். பட்டத்து இளவரசன் உள்ளத்தை அவள் அழகு கவர்ந்திருந்தது. ஆனால், அமைச்சர் பட்டத்து இளவரசன் உறவைப் பெரிதாக மதிக்கவோ, ஆதரவு தரவோ முன்வரவில்லை. அவர் தம் புதல்வியைக் கெஞ்சி இளவரசனுக்கே தர அவாக் கொண்டார். சக்கரவர்த்தியிடம் இச்செய்தி மெல்லத் தெரிவிக்கப் பட்டது, அதை அவர் ஆர்வத்துடன் வரவேற்றார். ஆற்றல்மிக்க இத்தொடர்பு தம் புதல்வனுக்கு மிகவும் நலம் தருவது என்று அவர் கருதினார். அரண்மனைவாணர் அனைவரும் திருமண நறுங்களத்தில் பங்கு கொண்டு பருக அமர்ந்தனர். அச்சமயம் இளவரசன் கெஞ்சி மற்ற இளவரசர்களுடன் தனது இடத்தில் வந்து அமர்ந்தான். இடங்கை அமைச்சர் அச்சமயம் அவனருகே வந்து காதில் ஏதோ இனிய இரகசிய மொழிகள் புகன்றார். அவன் முகம் நாணத்தால் சிவந்து கன்னங்கள் இனிய சுழிகள் பூத்தன. ஆனால், அவன் இவை தவிர வாய் திறந்து எத்தகைய மறுமொழியும் கூறவில்லை. அரண்மனை ‘அகபட்டிச்’ செயலாளர் ஒருவர் இச்சமயம் அமைச்சரை அணுகினார். சக்கரவர்த்தியை உடனடியாக வந்து காணும்படி செய்தி அறிவித்தார். சக்கரவர்த்தியின் தவிசை அவர் அணுகியதே, அணியரங்கச் சீமாட்டி ஒருத்தி அவரிடம் ஒரு வெண்ணிற உள்ளாடையையும் கன்னிமைக்குரிய கச்சு ஒன்றையும் வழங்கினாள். இளவரசனின் நிறைநாள் விழாத் தந்தை என்ற முறையில், அவரிடம் அளிக்கப்படவேண்டிய இளம்பருவச் சின்னங்களே இவை. சக்கரவர்த்தி இதன் பின் தம் பேரரசுரிமைக் கலத்திலிருந்து அவருக்குத் தேம்பாகு ஊற்றிப் பருகுவித்தார். ‘இன்று கட்டப்படும் ஊதா நிற நாடா நம் இருகுடிகளின் தளரா இணைப்பின் சின்னமாகுக!’ என்ற கருத்துடைய இனிய கவிதையைச் சக்கரவர்த்தி அமைச்சரிடம் வெளியிட்டார். ‘ஊதா நாடா ஒளி மழுங்கினாலன்றி இரு குடும்பங்களின் இணைவு என்றும் தளர்வுறாதென்று உறுதி கூறுகிறேன்’ என்று அமைச்சர் பதிலளித்தார். அதன்பின் அவர் பேரரசர் அரியாசனத்தின் படிக்கட்டுகள் வழியாக முற்றத்தில் இறங்கி, அங்கிருந்து பேரரசருக்குச் செலுத்த வேண்டிய ‘பெரும் பெயர் வணக்கம்’ ஆற்றினார். இவ்விழாவிலேயே பேரரசின் இலாயத்திலுள்ள குதிரைப் பந்திகளும், பேரரசின் ஆடற்பருந்து மனையிலுள்ள ஆடற் பருந்து வரிசைகளும் கண்காட்சிகளாக அணியணியாகக் காட்டப் பட்டன. அவையனைத்தும் கெஞ்சி இளவரசனுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளென்று பேரரச ஆணை பிறப்பிக்கப் பட்டது. பேரரசன் தவிசின் அடிப்புறத்திலே இளவரசர்களும் பேரவைப் பெருங்கோ மக்களும் தத்தமக்குரிய பரிசுகளைப் பெற வரிசை வரிசையாகக் காத்து நின்றார்கள். அத்துடன் அன்று முழுவதும் சக்ரவர்த்தியின் கட்டளைப்படி வலங்கைச் செயலாளர் பழக்கூடைகளையும் குடிகலங்களையும் எல்லாருக்கும் இலவசமாக வழங்கிக் கொண்டே இருந்தார். தவிர, முற்றங்களில் எவரும் எளிதில் நடந்து செல்ல முடியாதபடி தின்பண்டப் பெட்டிகளும் பரிசுப் பொட்டலங்களும் எங்கும் சிதறிக் கிடந்தன. பட்டத்து இளவரசன் அறிமுகவிழாவில்கூட இவ்வளவு தாராளமான பொங்கல் பெருவளம் காணப்பட்டதில்லை என்று பலரும் கூறிக் கொண்டனர். அன்றிரவு இளவரசன் கெஞ்சி தன் மாமனாரான அமைச்சரின் இல்லம் சென்றான். அங்கே அவன் மன்றல் நிறைவு விழா ஆடம்பரத்துடன் நிறைவேற்றப்பட்டது. அவ்வேளையில் இளவரசன் இன்னும் சிறு குழந்தைபோலவும், சிறிது உணர்ச்சிக் கோழையாகவும் நடந்து கொண்டானென்று கூறப்படுகிறது. ஆனால் அவன் கவினார்ந்த தோற்றம் வழக்கப்படி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திற்று. புது மணப்பெண் ஒருத்தி மட்டுமே அவ்வியப்பிலும் கவர்ச்சியிலும் மிகுதியாக ஈடுபடவில்லை என்று தோன்றிற்று. அவள் இளவரசனைவிட நான்குவயது மூத்தவள். அவனைச் சிறுபிள்ளையாகவே கருதியிருக்கக் கூடும். ஆகவேதான் அவனைக் கணவனாகக் கொள்ள வெட்கப் படுபவள்போல் அவள் காணப்பட்டிருக்க வேண்டும். இளவரசன் கெஞ்சி இன்னும் அரண்மனையிலேயே தங்கி வாழ வேண்டுமென்பது சக்கரவர்த்தியின் விருப்பமாயிருந்தது. இது காரணமாகவே அவன் தனக்கென்று ஒரு மாளிகை அமர்த்திக் கொள்ளவில்லை. தவிர, அவன் உள்ளத்தின் ஆழ்ந்த அடித்தளத்தில் அவன் இன்னும் புஜித்சுபோ இளவரசியைத் தவிர வேறு எந்தப் பெண்ணுருவையும் வைத்துப் பூசிக்க எண்ணவில்லை. வேறு யாரையும்விட அவளே எவ்வளவோ உயர்பண்புடைவள் என்றுதான் அவன் இன்னும் எண்ணினான். அது மட்டுமன்று, புஜித்சுபோ இளவரசியைப் போன்ற வருடனேயே அவன் பழக விரும்பினான் - அதே சமயம் எவரையும் அவளுக்கு ஒருசிறிதும் ஒப்பாகவும் அவன் கருதவில்லை. அவளே அவன் உலகில் பண்புக்குக் கட்டளைக்கல் ஆனாள். மண உறுதி மூலம் அவனுடன் இணைக்கப்பட்ட நங்கையின் பெயர் ஆய் என்பது. அவளைப் பற்றி எல்லாரும் என்னென்னவோ புகழ் மாலைகளை அடுக்கி வந்தார்கள். ஆயினும் எக்காரணத்தாலோ இளவரசன் மட்டும் அவளிடம் எத்தகைய நற்பண்புகளையும் காண முடியவில்லை. நேர்மாறாக, அரண்மனையிலுள்ள நங்கை புஜித்சு போவே அவன் சிந்தையில் ஓயாது உலவினாள். ஆனால் புஜித்சுபோ பற்றிய சிந்தனை அவனுக்கு அமைதியை அளிக்கவில்லை. கடுந்துயரையே உண்டு பண்ணிற்று. இப்போது இளவரசன் ஒரு முழுநிறை ஆடவனாய் விட்டபடியால், முதிராச் சிறுவன் என்ற முறையில் இதுவரை பெண்கள் பகுதிகளில் தங்கு தடையின்றித் திரிந்ததுபோல இப்போது திரிய முடியவில்லை. இப்பொழுது அவன் கால்கள் மனம்சென்ற திசையில் செல்லும் உரிமையை இழந்துவிட்டன. அரண்மனைக் கேளிக்கை வேளைகளில் மட்டும் பலருடைய யாழ்குழல் இசை ஓசைகளுடன் கலந்து தன் உள்ளங்க கொள்ளைகொண்ட அணங்கின் இனிய குரலையும் கேட்பதால் அவன் ஓரளவு ஆறுதல் கொண்டான். எனினும் மொத்தத்தில் முழுநிறை ஆடவனானபின் அவன் வாழ்க்கை அவனுக்கு ஒரு தாங்க முடியாச் சுமை ஆயிற்று. வழக்கமாக அவன் ஐந்தாறு நாட்கள் அரண்மனையில் கழித்தபின்னரே, ஒன்றிரண்டு நாட்களைத் தன் மாமனார் இல்லத்தில் இளவரசி ஆயுடன் கழிக்க முற்பட்டான். மனை வாழ்க்கையில் அவன் காட்டிய இந்தப் பராமுகத்தை அவன் புத்திளமையின் சிறுதவறு என்று மட்டும் கொண்டு, அவன் மாமனார் மனங்கோணாது அவனை எப்பொழுதும் இன்மு கத்துடன் வரவேற்றார். அது மட்டுமன்று, மாமனார் வீட்டில் யாவருமே - பணியாட்கள், ஏவலர் முதற்கொண்டு - அவன் வரவில் ஆர்வம் காட்டினர். அவன் வந்த வந்த சமயங் களிலெல்லாம் அவனுடன் பொழுது போக்கி அவனை மகிழ் வூட்டும் வகையில் பண்பார்ந்த குடிகளின் இளைஞர் பலர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவனுக்காகவே அவன் மாமனார் வீட்டார் பெருஞ் செலவில் பலவகைக் கேளிக்கைகளையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். முன்பு இளவரசன் கெஞ்சியின் அன்னைக்கு உரியன வாயிருந்த அறைகளில் ஒன்று ‘ஷிகைசர்’ என்பது. இப்போது அதுவே அரண்மனையில் இளவரசனுக்குரிய பணிமனை யிடமாக ஒதுக்கப்பட்டிருந்தது. அவன் அன்னையிடம் முன்பு வேலைபார்த்த பணியாட்களையே இப்போது சக்கரவர்த்தி தேடித்திரட்டி அவன் பரிவாரமாக்கினார். அத்துடன் அவன் பாட்டியின் மாளிகை அழிவுக்கு ஆளாகிக் கொண்டிருந்தது கண்டு சக்கரவர்த்தி பேரரசின் பொதுப்பணி அரங்கத்தின் வாயிலாக அதைச் செப்பம் செய்து சீரமைத்தார். அம் மாளிகையைச் சுற்றி அமைந்திருந்த மர வரிசைகளும் குன்றுகளும் அவ்விடத்துக்கு எப்போதுமே இன்பகரமான தோற்றம் அளித்திருந்தன. இப்போது மாளிகையை அடுத்த ஏரியின் கரைகள் சீர் செய்யப்பட்டு அத்தோற்றம் இன்றும் அழகுபடுத்தப்பட்டது. இவற்றையெல்லாம் கண்டும் கெஞ்சி ஒரு சிறிதும் மகிழ்வெய்தவில்லை. நேர்மாறாகத் துயரார்ந்த தொனியில் அவன் தனக்குள்ளே புலம்பினான். ‘நான் விரும்பிய ஒருவருடன் மட்டும் இங்கே வாழக்கூடுமானால்...’ அவன் விருப்பம் என்றும் நிறைவேறா விருப்பமாகவே நீண்டது. கெஞ்சி இளவரசனுக்கு அளிக்கப்பட்ட ‘ஹிகரு’ அல்லது ‘ஒளிமிக்கவன்’ என்ற புனைபெயர் பற்றிச் சிலர் வேறு வகையான ஒரு விளக்கம் தருகின்றனர். கொரியாவிலிருந்து வந்த சோதிடனாலேயே அது அவனுக்கு வழங்கப்பட்டது என்று அவர்கள் குறித்துள்ளனர். 2. முள் மரம் ஒளி திகழ் கெஞ்சி....! இத்தகு புகழ் பெயர் தாங்கிய எவரும் மக்கள் கண் ணொளிக்கோ, குறை காண்பவரின் ஓயாத் துளைப்புக்கோ எளிதில் தப்பி வாழ முடியாது. வரலாறு எங்கேனும் ஒரு சிறிது சறுக்கியதாகத் தோன்றினாலும்கூட, அதை ஒன்றுக்குப் பத்தாக்கிப் பின் சந்ததிகளுக்கெல்லாம் தெரியும்படி அவை பட்டவர்த்தனமாகப் பறைசாற்றிவிடும். மிக இரகசியமான செய்திகள் கூட வாயாடிகளின் வம்பளப்புக்கு இலக்காகி, அவனை ஊதாரி என்றோ உதவாக்கரை என்றோ வருங்காலங்கள் முடிவு செய்துவிட வழிசெய்யும், இவற்றைக் கெஞ்சி இளவரசன் நன்கறிந்தவன். ஆதலால் அவன் தன் செயல்கள் ஒவ்வொன்றிலும் மிகவும் விழிப்புடன் இருந்தான். இளமை விளையாட்டுகளில் கூட அவன் தனக்குரிய தன்மதிப்பையும் வெளித் தோற்றத்தையும் ஒரு சிறிதும் அப்பழுக்குப் படாமல் காத்து வந்தான். இக்காரணங்களால் நாம் அவன் புறவாழ்க்கையில் மிகுதி கொந்தளிப்பூட்டும் உணர்ச்சிக் குளறுபடிகள் காண்பதற்கில்லை. ‘கதனோ நோ ஷோஷோ’ போன்ற புத்தார்வ லீலா வினோதக் கதை ஆசிரியர்கள் அவன் வரலாற்றை உப்புச் சப்பற்ற வறட்டுக் கதை என்று கூறுவது இதனாலேயே... இளவரசன் சில காலம் காவற் படைத் தலைவருள் ஒருவனாகப் பணி ஏற்றான். இச் சமயங்களில் தன் நேரத்தைப் பெரும்பாலும் அரண்மனையிலேயே கழித்து வந்தான். இதுகாரணமாக அவன் தன் மாமனார் வீடாகிய ‘நெடுமாடத்’ துக்குப் போவது மிக அரிதாகவே இருந்தது. இதைக் கூட ஒளிவு மறைவான இரகசியக் காதல் உணர்ச்சியின் விளைவென்றே பலர் எண்ணினர். ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது. மற்றத் தோழர்களைப்போல அவன் காதல் விளையாட்டில் தலைகுப் புறக் குதிக்க விரும்பவில்லை. அற்பக் கேளிக்கைகளிலோ, வெளிப்படையான சாதாரண செய்திகளிலோ அவன் மனம் செல்லவும் இல்லை. அவன் இயல்பு இவ்வகையில் விசித்திரமா யிருந்தது. அவ்வப்போது அருமையாகச் சில வேளைகளில்தான் காதல் அவனை ஆட்டிப்படைத்தது. ஆனால், அது அவன் உள்ளத்தை ஆட்கொண்ட அச்சில வேளைகளில் எவரும் எதிர்பாராத விசித்திர இடங்களில்தான் அது சென்றது. தடைகளை எல்லாம் மீறி அது அவனை முன்னோக்கி உந்தித் தள்ளிற்று. எதிர்பாராத மிக மோசமான சிக்கல்களிலும் குளறுபடிகளிலும் அது அவனைக் கொண்டு மாட்டி விட்டது. காலம் அடைமழைக் குரியதாய் இருந்தது. பலநாட்களாக மூடிய வானம் ஒரு சிறிதுகூட இடைவெளியிட்டு ஒளி காட்டியதில்லை. அரசவையோர் இது காரணமாக மிகக் கடுமையான நோன்புகளில் ஈடுபட்டிருந்தனர். இளவரசன் கெஞ்சி ஏற்கெனவே நெடுநாட்களாக அரண்மனையில் அடைபட்டுக் கிடந்துவிட்டான். நெடுமாடத்திலுள்ளோர் அனைவரும் அவன் வருகையை எதிர்பார்த்து எதிர்பார்த்துப் பொறுமையிழந்து தவித்தனர். ஆனால், அரண்மனையிலுள்ள பணி மைந்தர்கள் வேறு யாரிடம் சேவை செய்வதையும் விடக் கெஞ்சி இளவரசனிடம் சேவைச் செய்வதிலேயே மிகவும் ஆர்வம் காட்டினர். ஒவ்வொரு கணத்திலும் அவன் ஆடையணி அலங்காரங்களை ஒவ்வொரு புதியஉருவில் ஒப்பனை செய்வ திலேயே அவர்கள் விறுவிறுப்புடன் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய அரசவைத் தோழர்களிலே கெஞ்சிக்கு உகந்த சிறந்த நண்பன் அரண்மனை இலாயக் காவலின் பொறுப்பேற்று இருந்த இளைஞன் தோ நோ சூஜோவே. அவனுடன் பேசுவதிலும் விளையாடுவதிலும் கெஞ்சிக்குப் பொழுது போவதே தெரிவதில்லை. தோ நோ சூஜோவுக்காக அவன் மாமனார் வலங்கை யமைச்சர் அரு முயற்சியுடன் ஒரு மாளிகை கட்டியிருந்தார். ஆனால், அவனுக்கு அந்த மாளிகையில் தங்குவதில் ஒரு சிறிதும் விருப்பமில்லை. கெஞ்சியைப் போலவே அவனும் மாமனார் மாளிகையின் ஒய்யாரமான தனி வசதிகளைவிட அரண் மனையின் தங்குதடையற்ற படாடோப வாழ்வையே பெரிதாகக் கொண்டான். இருவர் நட்பையும் இது வளர்த்து, அரண் மனையிலேயே இருவரையும் இடையறாத் தோழமை கொள்ளச் செய்தது. இருவரும் அங்கேயே ஒன்றாகப் படித்தும் விளையாடியும் பொழுது போக்கினர். தமக்குரிய எல்லா வேலைகளையும் இருவரும் ஒன்றாகவே இருந்து செய்தனர். இதனால் சாதாரண நண்பர்களிடையே உள்ள ஆசார உபசாரங்கள்கூட அவர்களுக்கு இல்லா தொழிந்தது. ஒருவர் உள்ளத்தின் எந்த இரகசியமும் அடுத்தவர் உள்ளத்தில் தங்குதடையின்றிச் சென்று உலவிற்று. ஒரு நாள் இரவு மழை விடாது ஊற்றிய வண்ணமாக இருந்தது. அரண்மனையில் அச்சமயம் ஆள் நடமாட்டம் மிகுதி இல்லை. இளவரசன் கெஞ்சியின் அறையிலோ வழக்க மீறிய அமைதி குடி கொண்டிருந்தது. இளவரசன் விளக்கருகே அமர்ந்து ஏடுகளையும் தாள்களையும் கிளறிப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று அவன் தன் மேஜையின் உள்ளறையிலிருந்து சில கடிதங்களைக் கையில் எடுத்தான். இது அருகே அமர்ந்திருந்த தோ நோ சூஜோவின் ஆர்வ அவாவைக் கிளப்பிற்று. அவற்றின் பக்கம் அவன் நாட்டம் திரும்பிற்று. கெஞ்சி அவன் குறிப்பை உணர்ந்து முன்கூட்டி அவனைத் தட்டிக் கழிக்க முயன்றான். ‘இவற்றுள் சிலவற்றை நீ பார்க்கலாம். சூஜோ! ஆனால் வேறு சிலவற்றை.....!’ அவன் பேசி முடியுமுன் விலக்கிக் காட்டிய அச்சிலவற்றையே சூஜோ பாய்ந்து கைப்பற்றினான். ‘சாதாரணக் கடிதங்களை நான் பார்ப்பதால் என்ன பலன்? அவை என் கடிதங்களையும் எல்லார் கடிதங்களையும் போலத்தான் இருக்கும். தனிப்பட்ட ஆர்வ உணர்ச்சித் துடிப்பு, கோபதாபம், இரகசியச் சந்திப்புத் திட்டம், மாலையிருளின் மறைவிடக் கை கலப்புகள் - இவை குறித்த உன் இரகசியக் கடிதங்களைத்’ தான் நான் பார்க்க விரும்புகிறேன்’ என்றான் அவன். சூஜோவின் வற்புறுத்தலைவிட அவன் ஆர்வ வேண்டு கோள் கெஞ்சியை இணங்க வைத்தது. ஆகவே உள்ளறையிலுள்ள கடிதங்கள் அவ்வளவையுமே அவன் புரட்டிப் பார்வையிட விட்டுக் கையைக் கட்டிக் கொண்டிருந்தான். உண்மையில் இந்த விட்டுக்கொடுப்பால் எந்தக் காரியமும் முழுகிப் போய் விடவில்லை என்பது அவனுக்குத் தெரியும். ஏனெனில், பொதுவாக அவ்வளவு வெளிப்படையாக அவன் தன்னுடைய மிக அந்தரங்கமான கடிதங்களை விட்டுவைப்பதில்லை. அவை இன்னும் மறைவான தனி உள்ளறைகளிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அகப்பட்ட கடிதங்களே மிகப்பல, பலவகைப்பட்டவை, இதனால் சூஜோ அகமகிழ்வுற்றான். ஒன்றிரண்டை முழுக்க முழுக்க வாசித்துப் பார்த்தான். அவற்றில் குறிப்பாகத் தெரிவிக்கப்பட்டிருந்த பெயர்களை யெல்லாம் துருவி நோக்கி ஆள் யார் யார் என்பதை ஊகிக்க முனைந்தான். ஒன்றிரண்டு ஊகங்கள் ஆபத்தான அளவில் மெய்ம்மையை அணுகின. ஆனால், கெஞ்சி ஒத்துக் கொள்ளாத வரையில், எல்லா ஊகங்களும் அவனுக்கு ஒரே நிலையில்தான் இருந்தன. பல ஊகங்களைத் தவறான திசையில் செலுத்திக் கெஞ்சி அவன் குழப்பத்தைப் பெருக்கி மகிழ்ந்தான். இறுதியில் கெஞ்சி கடிதங்களனைத்தையும் எடுத்தடுக்கி மீட்டும் உள்ளறையில் வைத்தான். ஆனால், அவன் அத்துடன் விடவில்லை. ‘என் கடிதங்களையெல்லாம் நீ பார்த்துவிட்டாய். என் இரகசியக் கடிதங்களின் தொகுதியைவிட உனது தொகுதி கட்டாயம் பெரிதாய் இருக்க வேண்டும்!’ சுவைமிக்கதாயும் இருக்க வேண்டும்! எங்கே, உன் கடிதங்களையும் நான் பார்க்கட்டும், அப்போதுதான் என் உள்ளறை உனக்கு இது போல எப்போதும் மனமாரத் திறக்கும்’ என்றான். ‘நீ பார்க்க விரும்பத் தக்கதாக என்னிடம் எதுவும் இருக்காது’ என்று கூறிவிட்டு, கவனத்தை மாற்றுவதற்காகச் சூஜோ பெண்ணினம் பற்றிய தன் வரட்டு வேதாந்தங்களை விரித்து விளக்கத் தொடங்கினான். ‘இவள் நிறைவுடையவள்; நம் உள்ளம் நாடியது இவளையே’ என்று கூறத்தக்க அளவில் எந்தப் பெண்ணும் இந்த உலகில் இருக்க முடியாது. நான் வாழ்க்கையில் கண்ட மொத்த அனுபவத்தின் முடிவு இது. மேலீடான கவர்ச்சியும் கலையார்வமும் மிக்க பெண்டிரிடையே நம் விசைக் கையெழுத்தை நயம்பட அழகோவியமாக எழுதத் தக்கவர்கள் இருக்கலாம். இக் கவர்ச்சியுடன் பேச்சு எதிர் பேச்சுகளிலும் உரை பாடலிலும் சிறந்த நாநயமும் திறமும் கொண்டவர்கள் இருக்கக்கூடும். ஆயினும் இதற்கு மேல் ஆழ்ந்து சோதனை செய்தால், அதில் தேறுபவர்கள் இருக்கமாட்டார்கள். ‘மேலும் பொதுவாகத் தங்கள் அழகு, தங்கள் திறங்களைத் தாங்களே மெச்சிக் கொள்வதில்தான் பெரும்பாலான பெண்டிர் ஈடுபட்டுவிடுகிறார்கள். சிலர் தம்முடன் போட்டியிடும் மற்றப் பெண்டிரை யெல்லாம் தூற்றும் பழக்க மிகுந்தவர்களாய், தம்மைச் சூழ அருவருப்பைப் பரப்புபவர்களாகவே உள்ளனர். ‘இன்னும் சிலர் இருக்கிறார்கள். அன்பு காரணமாக அவர்கள் தாய் தந்தையர்கள் அவர்களை அளவு கடந்து புகழ்ந்து சீராட்டிப் பாராட்டி விடுகின்றனர். குழந்தைப் பருவ முதல் அவர்கள் திரையிட்ட பலகணிக்குப் பின்னேயே அடைபட்டுக் கிடக்க நேர்வதனால், அவர்களைப் பற்றிய உண்மையான தகவல் எவருக்கும் இல்லாது போகிறது. ஏதோ ஒன்றிரண்டு கலைகளில் அவர்களுக்குள்ள தனிச் சிறப்பு மட்டுமே வெளியே தெரியவருகிறது. இந்த ஒன்றிரண்டின் மூலமே வெளியார் அவர்களிடம் அக்கறை கொள்ளத் தொடங்குகின்றனர். அழகுநடை சொல் நயம் அவர்களிடம் இருக்கிறது. உலகில் பழகாததனால் ஏற்படும் புதுமைக் கவர்ச்சியும் முனைப்பாயிருக்கிறது. தவிர, ஒன்றிரண்டு கலைகளிலேயே சிறந்த முன்மாதிரிகளை வாழ்நாளின் பெரும்பகுதியும் அவர்கள் பின்பற்றுவதனால், அந்த ஒன்றிரண்டு துறைகளில் மட்டும் தேர்ச்சியின் உச்ச உயர் எல்லையை அவர்களிடம் காண முடிகிறது. இவையே அவர்கள் குணநலங்களை மிகைப்படுத்திக் காட்டவும், குறைபாடுகளை முற்றிலும் மறைக்கவும் பயன்பட்டு விடுகின்றன. அவர்கள் பொறுக்கியெடுத்த அகஉரிமை நண்பர்கள் இதில் அவர்களுக்கு மிகவும் உடந்தையாய் விடுகின்றனர். ‘இவர்களைப் பற்றிய புகழ்ச்சியுரை பல தடவை நம்ப முடியாத எல்லைக்குச் சென்று விடுகிறது. மதிப்புரை இன்னும் பேரளவு தவறி விடுகிறது என்று கூறத் தேவையில்லை. எனவே இவர்கள் வகையில் கு™ங்குறை இரண்டையும் கணித்து மதிப்பிட முயற்சி செய்கிறவர்கள் எப்போதுமே பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாகிவிட நேர்கிறது.’ தன் பேச்சு ஒரே கசப்பு வேதாந்தமாகச் செல்வதைத் தானே உணர்ந்து வெட்கமடைந்தவன் போல அவன் பேச்சிடையே சிறிது தயங்கினான். ‘என் அனுபவம் போதாததாய் இருக்கலாம். ஆனால் நான் கண்ட அளவில், என் முடிவு இதுவே’ என்று கூறி அவன் ஓய்ந்தான். கெஞ்சியின் முகம் மெல்லப் புன்முறுவல் பூத்தது. ‘அப்படியானால், அந்த ஓரிரு அருந்திறமைகூட இல்லாத வர்களும் இருக்கக் கூடுமல்லவா?’ என்று கேட்டான். சூஜோ மறுமொழியாக மேலும் பேசத் தொடங்கினான். கட்டாயமாக இருக்கக் கூடும். ஆனால், எவரையும் இத்தகையவர்கள் அவ்வளவு திறமையாக ஏய்த்துவிட மாட்டார்கள். மேலும் எந்த நல்ல திறங்களும் இல்லாத இத்தகையவர்களின் தொகையும், நல்ல திறங்களே முழுதும் நிரம்பியிருக்கக் கூடியவர்களின் தொகையும் கிட்டத்தட்டச் சரிசமமாகவே இருக்குமென்று எண்ணுகிறேன். ‘மொத்தத்தில் பெண்களை நான் மூன்று வகையினராகப் பாகுபாடு செய்ய விரும்புகிறேன். முதலாவது வகுப்பினர் உயர்ந்த மதிப்பும் குடிப்பெருமையும் உடையவர்கள். அவர்கள் எங்கும் உச்ச அளவில் ஆரவாரமாகப் புகழப்படுகிறார்கள். இதனால் அவர்கள் குறைகள் எவையும் ஒரு சிறிதும் தெரியாமல் அவற்றின் மீது மூடுதிரை இடப்பட்டு விடுகின்றது. உண்மை நிலைக்குப் பெரிதும் மாறாக, அவர்கள் நம் கண்முன் அப்பழுக்கற்ற முன்மாதிரிகளாகக் காட்டப்படுகிறார்கள். அடுத்தபடியாக நடுத்தர வகுப்பினரிடையே எவரைப் பற்றியும் எவரும் தம் கருத்தைத் தாராளமாக எடுத்துரைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இக்காரணத்தால் இங்கே ஒன்றுக் கொன்று முரண்பட்ட மதிப்புரைகளே மிகுதி. காண்பவற்றையும் கேட்பவற்றையும் ஒப்பிட்டு அரித்துப் பார்த்தாலன்றி, இங்கே எந்த முடிவும் சொல்ல இயலாது. நன்மையும், தீமையும் விரவிய வகுப்பு இதுவே. மூன்றாவது வகுப்பு கீழ் வகுப்பே. அதைப் பற்றி நாம் இங்கே பேச வேண்டியதில்லை.’ தோ நோ சூஜோ முற்ற முடிந்த உருவில் எல்லாவற்றையும் தீர்த்துக்கட்டிக் கூறிய வகை கண்டு கெஞ்சிக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. ‘உன்னுடைய இந்த மூன்று வகுப்புகளில் எந்தப் பெண் எந்த வகுப்பில் சேர்க்கப்பட வேண்டியவள் என்று தீர்மானிப்பதே முதலில் எளிதான காரியமன்று. ஏனெனில், உயர் மதிப்புடை யவர்கள் சில சமயம் மிகக் கீழ் நிலைக்குத் தாழ்த்தப்பட்டு விடுவதுண்டு. நேர் மாறாக, மிகச் சாதாரணமான குடியில் பிறந்தவர்கள் பெரிய பணி முதல்வர்களாக உயர்வு பெற்று விடுவதைக் காண்கிறோம். அவர்கள் இறுமாந்து உயர் வகுப்பினராகச் சொக்கித் திரிவர். தம் பழைய இல்லங்களையும் முற்றிலும் புதுப்பித்து இவர்கள் உயர்ந்தவர்களிடமிருந்து தம்மை வேறு பிரித்தறிய முடியாதபடி செய்து விடுவார்கள். இத்தகைய நிலைகளில் உன் ஆராய்ச்சி முறை எப்படிச் செயலாற்றுமோ?’ என்று அவன் கிண்டலாகக் கேட்டான். இச் சமயம் ஹிதரி நோ உமா நோ கமியும், தோஷிகிபு நோ ஜோவும் வந்து நண்பர்களுடன் கலந்து கொண்டனர். தாமும் நோன்பு மேற்கொள்வதற்காகவே அரண்மனைக்கு வந்ததாக அவர்கள் கூறினார்கள். அவர்கள் இருவருமே காதல் கேளிக்கைகளில் மிகவும் நாட்டம் உடையவர்கள், நல்ல இன்ப உரையாடலில் ஆர்வம் உடையவர்கள். ஆகவே தோ நோ சூஜோ கெஞ்சி கேட்ட கேள்விகளை அப்படியே அவர்கள் வசம் கூறி, அவற்றுக்கு அவர்களிடமே விளக்கம் நாடினான். அவர்கள் மறுமொழி இச்செய்திகளை ஒளிவு மறைவு இன்றி அலசி ஆராய்வதாகவே அமைந்தது. முதல் முதல் உமா நோ கமி பேசினான். ‘ஒரு பெண்மணி எவ்வளவு பெரும் பதவிக்கு உயர்வுற்றாலும், அவன் பிறந்த குடியே உயர்ந்ததல்லவானால் உலகம் அவளை மதியாது. உயர் பிறப்புடையவர்களாய் இருக்கும் உயர் தகுதியுடைய பெண்களையே உலகம் மதிக்கும். அதே சமயம் காலக் கேட்டால் உச்ச மதிப்புடைய உயர்குடி நங்கை துணையற்ற நிலையில் இன்னா இடர்களுக்கு ஆளானால், அவள் உள்ளத்தின் உயரிய பயிர்ப்பும் தகுதியும் விரைவில் மறக்கப்பட்டு விடும். உலகில்அவள் ஏளனத்துக்கு உரியவள் ஆகிவிடுதல் உறுதி. ஆகவே எல்லா வழிவகைகளையும் ஆராய்ந்து பார்த்தால், இவ்விருவகை அணங்குகளையுமே நாம் நடுத்தர வகுப்பில் தான் சேர்க்க வேண்டும். அத்துடன் “சூர்யோக்கள்” , அதாவது தொலை மாகாணங்களில் சென்று உழைக்கும்படி அனுப்பப் படும் பணிமுதல்வர்களின் பெண்களும் இதுபோல நடுத்தர வகுப்பிலேயே சேர்க்கப்படவேண்டுமென்று எண்ணுகிறேன். ஏனெனில், அவர்கள் வாழ்வு ஓயாது உயர்வு தாழ்வுகளுக்கு ஆளாகின்றது. ‘இன்னும் இவர்களன்றி, அமைச்சரவை மதிப்பற்ற மூன்றாம்படி நான்காம்படி அமைச்சர்கள் இருக்கின்றார்கள். பொதுவாக நாள்முறை வேலைகளில் உழலும் பொதுநிலைப் பணியாளர்களுக்குத் தரப்படும் மதிப்பைவிட, இவர்களுக்குக் கிடைக்கும் மதிப்புக் குறைவேயாகும். அவர்கள் நல்ல குடியில் பிறந்தவர்களே. அத்துடன் அரசியல் அமைச்சர்களைவிட அவர்கள் பொறுப்புக் குறைவு. அவர்கள் மன அமைதி இதனால் பெரிதாகிறது. இத்தகைய குடும்பங்களில் பிறந்த பெண்மணிகளுக்கு வறுமையின் துன்பம் சிறிதும் கிடையாது. அடிக்கடி இன்ப வாழ்க்கைச் சூழல்களுக்கிடையிலும் ஆடம்பரங்களுக் கிடையிலும் அவர்கள் வாழ்கிறார்கள். எனவே இவர்களில் பலர் ஒரு சிறிதும் குறை கூறமுடியாத மாதரசியரா கின்றனர். பல சமயம் இவர்கள் மன்னர் பேரவையில் கூட இடம் பெற்று வாழ்வில் எதிர்பாரா வெற்றி காண்கிறார்கள். இது வகையில் நான் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் தரமுடியும்.’ கெஞ்சி இளவரசன் இப்போதும் சிரித்தான். ‘இத்தகையவர்கள் வெற்றிக்கு அவர்கள் பொருள்தானே காரணம்?’ என்று நையாண்டியாகக் கேட்டான்! ‘இது தெரியாமல் பெரிதாக அளந்து விட்டாயே!’ என்று தோ நோ சூஜோவும் இளவரசனை எதிரொலித்து ஏளனமாகக் கேட்டான். ஆனால், உமா நோ கமி இருவர் இடையீட்டையும் ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல் மேலும் தொடர்ந்தான். ‘சிலரது குடிப் பெருமையையும் புகழையும் கண்டு பலர் ஏமாந்து விடுகின்றனர். அவர்கள் கல்விப் பயிற்சியிலேயே குறை இருக்க முடியு மென்றும் எண்ணிப் பார்க்காது போய் விடுகின்றனர். ஆயினும் அத்தகையவர்களை நம்பி அவர்களிடம் சிக்கி அல்லலுறுபவர்கள் அனுபவம் வேறு.’ “இவ்வளவு கல்லா விலங்குகளாகவே இவர்கள் எப்படித்தான் உயரிய சூழலிலே இருந்து வளர்ந்து விட்டார்களோ?” என்று அத்தகையோர் பலர் மீளும் வழி காணாது கதறுவதைக் கண்டிருக்கிறோம். ‘பெண்மைக்குரிய எல்லா உயிர்ப் பண்புகளும் நிரம்பப் பெற்ற பெண்மணி’ எங்கோ ஓரிடத்தில் இருக்கத்தான் வேண்டுமென்று நான் மனமார நம்புகிறேன். என்றேனும் ஒரு நாள் எதிர்பாராமல் அத்தகைய அணங்கைக் கண்டு நான் வியப்படைய நேரும் என்றும் எண்ணுகிறேன். ஆனாலும் என்போன்ற ஓர் ஏழைக்கு அவள் கட்டாயம் எட்டாத் தொலைவில் தான் இருப்பாள். அத்தகைய நிறை நங்கையை நான் தனிப்பட ஒதுக்கி என் வகுப்பு முறையில் அவளைச் சேர்க்காமல் விட்டதன் காரணம் இதுவே. ‘அத்தகைய நிறை அணங்கைக் கற்பனை செய்து பாராமல் என்னால் இருக்க முடியவில்லை. ‘பாதி இடிந்து பொடிந்து தகர்ந்தும், பாதி செடி கொடிகள் படர்ந்து மூடப்பெற்றும் உள்ள ஓர் அகன்ற வாயில்!’ அதனின்று தொலை தூரத்தில், அதற்குரிய மாளிகை என்று எவரும் கனவில் கூடக் கருத முடியாத உருவில் பாழ்பட்டுக் கிடக்கும் இடிபாடுகள்! அவற்றிடையே ஓர் உள்ளறையிலே எவரும் காண முடியாத ஓர் அழகாரணங்கு அடைபட்டுக் கிடப்பதாக வைத்து கொள்வோம்! எவ்வளவு வியப்பார்வத் துடன் அக்காட்சியைப் பாராட்டுவோம் - எவ்வளவு குதூகலத்துடன் அந்த அழகுக் கருவூலத்தைக் கண்டு பிடித்து விட்டது பற்றிக் கூத்தாடுவோம்! அக்காட்சியின் மலைப்பிலும் திகைப்பிலும் நம் கோட்பாடுகளையும் வகுப்பு தொகுப்புப் பாகுபாடுகளையும் எப்படி நாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, அதன் எதிர்பாராத, புதுமை வாய்ந்த மாயக் கவர்ச்சியில் இழைந்து செயலற்றவர்களாக நிற்போம்! ‘அவள் சூழல்களை எல்லாம் என் கற்பனை யுள்ளம் படைத்துருவாக்கிக் காண விரும்புகிறது.’ ‘அவள் தந்தை ஒரு முரடன். கரடு முரடான தோற்றம் உடையவன். அவள் தமயன் பார்வைக்கே அருவருப்பானவன். முற்றிலும் சுடு மூஞ்சி. அவர்களிடையிலே, மிகச் சாதாரணமான படுக்கை யறையிலே அடைபட்டுக் கிடக்கிறாள், அம்மாய அணங்கு. இச்சூழ் நிலைகளில், உலகத்தினின்று துண்டுபட்டுப் பூட்டி வைக்கப்பட்ட நிலையில், அவள் உணர்ச்சிகளும் விசித்திரமாகவே இருப்பது உறுதி. மற்றப் பெண்களுக்கு மிக அற்பமாகத் தோற்றும் சிறு செய்திகள், கலை நுட்பங்கள் அவளிடம் எதிர்பாராத, இயற்கை மீறிய உயிர்த் துடிப்புடைய முழு மெய்ம்மைகளாக விளங்கும். ஒரோவொரு கலைத் துறையில் உலகிலேயே எவரும் எங்கும் காணாத முழுநிறை ஆற்றலுடன் அவள் நம் உள்ளம் புளகாங்கித மடைய, உடல் புல்லரிக்கச் செய்து விடுவாள். ‘வடுவிலாக் குடிமரபில் வந்த உங்களைப் போன்றவர்கள் இத்தகைய காட்டு மலர்களை உங்கள் கவனத்துக்குக் கீழ்ப்பட்டவை என்று ஒதுக்கிவிடக் கூடும். ஆனால், என்னளவில் என் உள்ளத்திலிருந்து இவ் உருவத்தைத் துரத்திவிட முடியாது’ - இவ்வாறு கூறுகையில் உமா நோ கமி தன் அருகிலிருந்த ஷிகிபு நோ ஜோவை ஒருக்கணித்து நோக்கியது போலிருந்தது. ஷிகிபுவும் ஒரு கணநேரம் தன் தங்கையருள் ஒருத்தியைத்தான் இவ் வருணனைகள் குறித்தனவோ என்று எண்ணினான். ஆனால் அவனும் இதுபற்றி வாய் திறந்து பேசவில்லை.’ கெஞ்சியின் விழிகளைச் சுற்றித் துயிலின் தெய்வம் மெல்ல நிழலாடி வந்தது. ஆனால், அரைத் துயிலிலும் அவன் ஏதோ பேசத் தொடங்கினான். ‘உச்ச உயர் வகுப்பிலேயே ஒருவரைத் தேர்ந்தெடுப்பது இவ்வளவு சிரமமானால்,..... இவ்வளவு.... சிரமமானால்’ வாசகத்தின் பிற்பகுதி அவன் வாய்க்குள்ளாகவே ஏதோ உருவிலா ஓசையாக வெளிவந்தது. அவன் அத்துடன் கொட்டாவிவிட்டான், மெல்லக் குறட்டை விட்டு உறங் கலானான். கெஞ்சி இச் சமயம் மெல்லிய வெண்பட்டினாலான அங்கி அணிந்திருந்தான். தோள் மீது மயிர்க் கற்றைகளாலான ஒரு முரட்டு மேலாடை மெல்ல நழுவிக் கிடந்தது. அரையில் ஆடையை இறுக்க உதவிய அரைக் கச்சையும் கட்டு நெகிழ்ந்து சோர்ந்து கிடந்தது. விளக்கின் பக்கமாகச் சாய்ந்து படுத்த நிலையில் அவன் வடிவழகை நோக்க, அவன் ஒரு பெண்ணாய்ப் பிறந்திருந்தானில்லையே என்று எவரும் எண்ணத்தோற்றும். பெண்ணினத்தை வகைப்படுத்தி, அதில் தனி ஒரு வகுப்பின் தனி மாதிரியாக உமா நோ கமி முழுநிறை அழகாரணங்கு ஒருத்தியைக் கற்பனை செய்திருந்ததாகக் கண்டோம். அந்தக் கற்பனை அழகாரணங்குகூடக் கெஞ்சி போன்ற ஓர் இளவரசனுக்குப் போதிய தகுதி உடையவளாக மாட்டாள். இவ்வாறு அவனை அருகே இருந்து கண்ணுற்ற அவ்விருவரும் எண்ணினர். இளவரசன் துயிலால் உரையாடல் நெடிது தடை படாமல் மேலும் தொடர்ந்தது. பல ஆட்கள், செய்திகள் பற்றிய வாதம் எழுந்தது. முழுநிறைவு என்பது எந்தத் துறையிலும் காணுதற்குரிய ஒரு பண்பு என்று உமா நோ கமி வலியுறுத்திப் பேசினான். பெண்கள் வகையில் அது இன்னும் அரிது என்று வாதித்தான். ‘தன் அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதில் அரசனுக்கு ஏற்படும் இக்கட்டு சிறிதன்று. ஆனால், தன் வாழ்க்கைத் துணைவியைத் தேர்ந்தெடுக்கும் கணவனின் பொறுப்பு அவ்வரசன் பொறுப்பை ஒரு தூசாக்கி விடுகிறது. ஏனெனில் அரசன் தன் வேலைகள் அத்தனையையும் ஒருவனிடமே ஒப்படைக்கத் தேவையில்லை - ஒருவர், இருவர், ஒருசிலரிடம் கூட ஒப்படைக்கவேண்டியதில்லை - உச்ச உயர் படியிலிருந்து கடைசிக் கீழ்ப்படி வரை எத்தனையோ படிகளில் எத்தனையோ வகைப் பணியாட்களின் மொத்தப் பெருந்தொகுதியிடமே அவற்றை ஒப்படைக்கிறான். ஆனால், கணவன் தன் குடும்பத்தில் அத்தனை வேலைகளுக்கும் பொறுப்பாக ஒரே ஒரு ஆளை - ஒரு வாழ்க்கைத் துணைவியை - தேர்ந்தெடுக்க வேண்டியவன் ஆகிறான். ‘வீட்டுத் தலைவி வெவ்வேறுபட்ட பல்வகைப் பண்புகளையும் ஒருங்கே தன்னிடம் கொண்டவளாயிருத்தல் வேண்டும். அதே சமயம் இத்தேர்வு மிகக் கண்டிப்பாய் இருப்பதற்கும் வழியில்லை. எடுத்துக்காட்டாக, நாம் தேர்ந்தெடுக்கும் அணங்கினிடம் நாம் ஆர்வமாக நாடும் சில அனுபவபூர்வமான பண்புகள் இருப்பதாக வைத்துக் கொள் வோம். தேர்வுக்குப் பின் இவற்றுக்கு புறம்பே நம் முழுநிறை குறிக்கோளை நோக்க அவள் குறைபடுவதாகக் காணப்பட்டால், நாம் பொறுதி இழந்துவிடக் கூடாது. காதல் கூடும் வேளையில் நாம் அவளைத் தேர்ந்தெடுக்க உதவிய அந்த முதற் பண்புகளை நாம் மறந்துவிடாமல் மனத்தில் கொள்ள வேண்டும். அவற்றையே முதன்மையாகக் கொண்டு அவற்றில் மன நிறைவடையவேண்டும். ‘ஆனால் இங்கேகூட நாம் எச்சரிக்கையாய் இருத்தல் இன்றியமையாதது. இளமை முறுக்குக்கும் மாசு மருவற்ற வடிவழகுக்கும் எப்போதும் குறுகிய எல்லையுடைய தற்பற்று உண்டு. ஒரு தூசிகூடத் தன்மேல் படப் பொறுக்காத ஒய்யார மென்னயத்துக்கும் அது வழி வகுப்பது உறுதி. இவற்றை உடையவர்களின் கடிதங்களில் ஆழ்திறமற்ற சிறு பொதுச் சொற்களன்றி வேறு எவையும் இடம் பெறமாட்டா. ஆனால் அந்தச் சிறு சொற்களின் வரி வடிவங்களுக்கும் அவர்கள் வண்ண மெருகிட்டுத் தீட்டி நம் உள்ளத்தில் இன்னதென்றறிய முடியாத துடிப்பை உண்டு பண்ணுவர். அதே சமயம் இதே பெண்களை அருமுயற்சியுடன் நாம் தனித்துச் சந்திக்கும் பேறு பெற்றபின் அவர்கள் நம் காதுகளுக்கே தெளிவாகக் கேட்காதபடி அவ்வளவு தாழ்ந்த மென்குரலில் பேசுவார்கள். இது அவர்களை நம்மிடமிருந்து இன்னும் அருந்தொலைவாக்கி அவர்களது மாயக் கவர்ச்சியை மிகுதிப்படுத்தவே உதவும். ‘இவை யனைத்தும் மேலீடாகப் பெண்மையின் இளமை நலத்துக்குரிய நாணத்தின் மயக்க தயக்கமாகவே தோன்றுவது இயல்பு. ஆனால், அது நேர்மாறாக உள்ளடங்கிய உணர்ச்சி வேகத்தின் புறத் தோற்றமாகவும் பின்னாடித் தெரியவர இடமுண்டு. ‘இன்னும் சில இடங்களில் நாம் தேர்ந்தெடுத்த முழுநிறை அணங்கின் வாழ்வு தங்கு தடையற்ற இன்பத்துடன் மிதந்துசெல்வதாகத் தோற்றும். ஆனால், அதற்குள்ளாக, நாம் எதிர்பார்ப்பதற்கு நேர்மாறான திசையில் அது சரிவது காண்போம். அவள் உணர்ச்சியற்றவளா யில்லை யாயினும், அதற்கு நேர்மாறாக மட்டுமீறிய உணர்ச்சிக்கூறு உடையவளாய் அமையக்கூடும். மிகத் தகாத வேளைகளில், மிகத் தகாத முறைகளிலே அவள் தன் உணர்ச்சி ஆர்வங்களைக் கொட்டக் கூடும். அதுமுதல் “இவளிடமிருந்து நாம் எப்படித் தப்புவோம்” என்ற கவலை நம்மைப் பிடித்து ஆட்டத் தொடங்கிவிடும்.’ ‘பாச ஆர்வமிக்க இன்னொரு வகை வாழ்க்கைத் துணை உண்டு. அவள் நம் குடும்ப நலனில் கொண்ட அக்கறை காரணமாக அதன் ஒவ்வொரு சிறு கூறுகளிலும் முழுமனதுடன் ஈடுபடுவாள். ஆனால், இது காரணமாகவே அவள் தன் வெளித் தோற்றத்தில் ஒருசிறிதும் அக்கறை காட்டாமல், வீட்டு வேலைகளில் முழுக்க ஈடுபட்டு உழைக்கும் சமயம், அவிழ்ந்து சோர்ந்த கூந்தலைத் தாறுமாறாக எடுத்துச் செருகிக் கொண்டு அருவருப்பான தோற்றமளிப்பாள். ‘மேலும் வெளியுலகில் சுற்றித் திரியும் கணவன் அங்கங்கே பல செய்திகளைக் காணவும் கேட்கவும் வழியுண்டு. அவற்றை அவன் அயலாருடன் பேசி வாதிக்க முடியாது. இந்நிலையில் வீட்டுக்கு வந்தவுடன் தன் மறுபாதியாகப் பழகிவிட்ட ஒரு துணைவியுடன் அவை பற்றி உரையாட விரும்பாமல் இருக்க மாட்டான். ஒத்துணர்வுடனும் ஒத்த அறிவுடனும் அதை ஆர்வத்துடன் செவியேற்று அதில் அவன் ஈடுபட்டு மகிழும்போது உடனிருந்து மகிழ்ந்தும், வருந்தும் போது உடனிருந்து வருந்தியும் ஒரு துணைவி அளிக்கும் துணைமை பெரிது. மற்றும் சில சமயம் ஏதேனும் அரசியல் நிகழ்ச்சிகள் கணவன் உள்ளத்தின் அமைதியைக் குலைக்கவோ அல்லது அவன் உவகை உணர்வைத் தூண்டவோ செய்யலாம்: அதைத் தனியிடத்திலிருந்து கொண்டே நம்பகமான ஒரு துணை உள்ளத்தினிடம் வெளியிடும் ஆர்வம் அவனுக்கு இருப்பது இயல்பு. சிற்சில சமயம் அவன் உள்ளூர இவற்றுள் எதையேனும் கருத்துட் கொண்டு தனக்குள்ளாக நகையாடவோ அல்லது பெருமூச்சு விடவோ இடமேற்படும். இத்தகையவற்றை வெளியிட்டுக் கூறி அமைதியும், அதே சமயம் வெளியுலகுக்குச் செல்லவிடா தடக்கிப் பாதுகாப்புறுதியும் தரத்தக்கவள் துணைவியே. ஆனால் குடும்ப நலஆர்வ மட்டுமே மிகுதியுடைய மேற்குறிப்பிட்ட வாழ்க்கைத் துணைவி அச்சமயம் இவற்றில் அக்கறை கொள்ள மாட்டாள். உணர்ச்சியற்ற தொனியுடன் “என்ன செய்தி அப்படி!” என்று அசட்டையாகக் கேட்டு, அவள் அவன் ஆர்வத்தின் மீது தண்ணீரைக் கொட்டி விடுவாள்! ‘இது மிகவும் மன வருத்தத்துக்குரிய செய்தி ஆகும்.’ உமா நோ கமி இதுபோன்ற இன்னும் பலவகை மாதிரிகளை எடுத்து எடுத்து ஆய்வாராய்வுகளில் ஈடுபட்டான். ஆனால், அத்தனைக்குப் பின்னும் அவனால் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. நீண்ட பெருமூச்சுடன் அவன் மேலும் தொடர்ந்தான். ‘மொத்தத்தில் நான் மேலே காட்டியபடி குடிப்பிறப்பு, அழகு ஆகிய இரண்டு பண்புகளையுமே நாம் போதாதவை என்று தூக்கி எறிந்து விடலாம். நாம் விரும்பி மேற்கொள்ளும் பெண்மணி எளியவளாய் இருக்கட்டும். சூதுவாதற்றவளாகவும் இருக்கட்டும். ஆனால், அவள் நேர்மையுடையவளாகவும் அமைதியான குணம் உடையவளாகவும் இருத்தலே சால்பு. அப்போதுதான் மொத்தத்தில் அவள் மீது நாம் சுமத்தும் பொறுப்பை அவள் மீறாதவளாய் இருப்பாள். இவையன்றிக் கூடுதலாக வேறு நற்பண்புகளும் அவளிடம் இருக்குமேயானால் தெய்வச் செயலாகக் கிடைத்த பொன் மலரின் மணம் போல, அவற்றை நாம் அருமையாகக் கொண்டாட வேண்டியதே. அதே சமயம் இவற்றோடு சிறு குறைகள், பிழைபாடுகள் இருக்க நேர்ந்தால் கூட அவற்றை நாம் மிக நுணுகி ஆராய்ந்து கணித்தல் கூடாது. ‘அத்துடன், பொறுப்புத் தன்மையும் பாசமும் இருக்கும் இடத்தில் வெளித் தோற்றம் கூட மிக மோசமானதாய் இருக்க முடியாது என்று நாம் உறுதியாக நம்பலாம்.’ ‘பொறுக்கும் பண்பிலேயே எல்லை மீறிச் செல்பவர்களும் உண்டு. தமக்குத் தீங்குகள் இழைக்கப்படும்போது, கண்டிப்புடன் எதிர்த்தே பெண்டிர் அவற்றைத் திருத்தித் தம்மைத் தற்காத்துக் கொள்ளமுடியும். ஆனால், மேலே குறிப்பிட்டவர்களில் பலர் அத்தீங்குகளைக் கண்டும் காணாதது போல் பொறுமையின் திருவுருவமாக இருந்து விடுவார்கள். பலசமயம் அவர்கள் பொறுமையின் ஒளிகுன்றா உயர் விளக்குகளாகக் கூட திகழ் வார்கள். ஆயினும், திடீரென ஒருநாள் எதிர்பாராத வேளையில் அவர்கள் தம் பொறுமையின் எல்லைக் கோட்டை அடைந்து விடுவதுண்டு. அப்போது அவர்கள் வாய் திறவாமல் ஓர் அழகிய பாடலை எழுதி வைத்துவிட்டு எங்கோ மறைந்து விடுவார்கள். அவர்கள் பாடல் வாசிப்பவர் உள்ளத்தில் இரக்கம் உண்டு பண்ணத்தக்க மொழியில் அமைந்திருக்கும். அவர்கள் அன்புக்குரியர் உள்ளத்திலோ அது கடுந்துயரையும் கழி விரக்கத்தையும் எழுப்பிக் கொந்தளிப்பு ஊட்டும். இவ் வுணர்ச்சிகளைத் தம் பழைய வாழ்வின் சூழலில் பரப்பிவிட்டு, அவர்கள் மலைகள் பல கடந்த ஒரு சிற்றூரிலோ, கடற் கரையோரத்தில் உள்ள ஒரு சிறு குடியிலோ சென்று தம் வாழ்நாளைப் பாழ்நாளாகக் கழிப்பார்கள். அதே சமயம் அவள் காதல் துணைவனும் அவளை எங்கெங்கும் தேடித் தடங் காணாமல் இன்னொரு திசையில் மனமாழ்குவான். ‘நான் சிறுவனாயிருந்த சமயம் அரண்மனைப் பெண்டிர் இதுபோன்ற துயரார்ந்த கதைகள் பல கூறுவது வழக்கம். அவற்றில் ததும்பிய உணர்ச்சிகள் மெய்யானவையே என்பதை நான் ஒருபோதும் ஐயுற்றதில்லை. அவ்வுணர்ச்சிகளில் தோய்ந்து நான் கண்ணீரை ஆறாகப் பெருக்கியுமிருக்கிறேன். ஆயினும் அக்கதைகளிடையே காணப்பட்ட துயர உணர்ச்சிகள் பெரிதும் நடிப்புணர்ச்சிகளே என்று நான் இப்போது சந்தேகப்படத் தொடங்கியிருக்கிறேன்.’ ‘எடுத்துக்காட்டாக, நம் கற்பனைக்குரிய நங்கை மேற்கூறியபடி தன் கணவனைக் கைவிட்டுச் சென்றிருந்தாள் என்று வைத்துக் கொள்வோம். கணவனும் அவளிடம் மாறாப்பாசமுடையவனாகவே துடிக்கிறான். ஆனால், அவனை இத்தனை துன்பங்களுக்கும் ஆளாக்கிவிட்டு அவள் தானும் தாங்கமுடியாது துயரத்தில் ஆழ்கிறாள்! அவன் பாசத்தைக் கடுஞ் சோதனைக்குள்ளாக்க எண்ணி, அதன் பயனாக அவள் விளைவித்த விசித்திர நிலையே இது எனலாம். ‘அவள் போக்கை ஆர்வமாகப் பாராட்டும் ஒரு தோழமை அணங்கு அவளைக் காண வருகிறாள். “ஆ, என்ன ஒப்பற்ற இதயம்! எத்தகைய ஆழ்ந்த உணர்ச்சி!’’ என்று அவள் நிலையைப் புகழ்ந்து வருணிக்கிறாள். ‘அணங்கின் நடிப்பை இது இன்னும் ஒருபடி ஏற்றி உச்சநிலைக்கு உயர்த்தி விடுகிறது. கணவனிடமிருந்து பின்னும் எட்டாத் தொலை வரை செல்லும் எண்ணத்துடன் அவள் இறுதியில் துறவியர் கன்னி மாடம் புக முனைகிறாள்.’ ‘இம்முடிவுக்கு அவள் வந்த சமயம், அவள் மனப்பூர்வ மாகவே அப்புது வாழ்வில் நுழையத் துணிந் திருக்கக்கூடும், அதிலிருந்து திரும்ப வெளிவர வேண்டுமென்ற அவாவின் நிழல்கூட இருந்திருக்க மாட்டாது. ஆனால், இப்போது மற்றோர் ஆர்வ அணங்கு அவள் புதுப்போக்குப் பற்றிக் கேள்விப் படுகிறாள். “அந்தோ, பாவம்! இந்த அளவுக்கு அவள் செல்ல நேர்ந்ததென்றால், அதற்கு முன் அவள் என்ன பாடுபட்டிருக்க வேண்டும்? எத்தனை வேதனைகளைத் தாங் கியிருக்க வேண்டும்?’’ என்று இரங்குகிறாள். அவள் உணர்ச் சிகளுக்குப் புது விளக்கம் தருகிறாள். கன்னி மாடத்துக்குள்ளேயே சென்று இவற்றை அவள் வெளியிடுகிறாள். ‘அவளுக்காக ஏற்கெனவே மனம் வெம்பி வெதும்பிக் கொண்டிருந்தவன், அவள் கணவன். அவள் துறவு நங்கையர் மாடம் புகுந்தது கேட்டு அவன் கண்ணீர் விட்டுக் கதறி அழுகிறான். அது கண்டு அவன் பணியாளோ, செவிலியோ, வேறு ஆர்வ நண்பரோ கன்னி மாடத்துக்கு ஓடோடிச் சென்று கணவன் கையிழந்த நிலை பற்றி அலறி அடித்துக் கொண்டு புலம்புவர். “என்ன காரியம் செய்துவிட்டாய், அம்மணி! என்ன காரியம் செய்துவிட்டாய்!” என்று அவளைக் குத்திப் பேசுவர். இப்போது அவளும் மனம்முற்றிலும் நைந்து, தான் தற்போது இருக்குமிடமும் நிலையும் மறந்து அழத் தொடங்குகிறாள். அது மட்டுமோ! பெண்டிரின் வழக்கப்படி மன வேதனையிடையே தன் தலைமயிரைப் பிய்த்துக் கொள்ள எண்ணிக் கைகளைத் தலைக்குக் கொண்டு செல்கிறாள் - அந்தோ! துறவியான சமயம் மொட்டையடித்துத் தலையை மழுக்கலாக்கியது அப்போதே அவளுக்கு நினைவுக்கு வருகிறது! ‘இப்போது அவள் கண்கள் தங்கு தடையின்றி நீர் பெருக்குகின்றன. முன்னிலும் இரங்கத்தக்க நிலையில் ஆறு தலின்றி அவள் மண்ணில் விழுந்து புரள்கிறாள். ‘அணங்கின் வாழ்வு இப்போது எல்லா வகையிலும் சீர்கெட்டழிந்து விடுகின்றது. துறவிலேயே நாட்டம் செலுத்தி மனத்தில் உறுதி வேண்டி அவள் ஓயாது வணக்க வழிபாடாற் றலாம். ஆனால், ஒவ்வொரு கணமும் இதே நிலையில் அவள் போக்க முடியாது உள்ளத்தில் தளர்ச்சி ஏற்பட்ட சமயம், தான் துறவியானதற்காக அவள் வருந்தாமலிருக்க முடிவதில்லை’ இந்தப் பாவ எண்ணம் தோன்றுந்தோறும், துறவியானதற்கு முன்னிருந்த அவள் நிலையைவிட அவளைப் பெரும் பாவியாகவே புத்த பகவான்கூட எண்ண முடியும், எண்ணி வெறுக்கவும் நேரும். இன்பம் கைவராமல், இன்பந்துய்க்கும் பாவிகளைவிட மோசமான பாவியாய் இரு உலக வாழ்விலும் கெட்டலைந்த அவளை அவள் எண்ணங்களே ஒரு நரகிலிருந்து மறுநரகுக்கு இட்டுச் செல்லும். ‘அணங்கு, அவள் கணவன் ஆகிய இருவரின் முற் பிறப்புக் குரிய நல்வினைகள் தலையிட்டால், துறவுக்கு உரிய முடிவான உறுதியை அணங்கு மேற்கொள்ளும் முன்பே அவளை அவள் கணவன் கண்டு மீட்க வழி ஏற்படலாம். ஆனால், அப்படிப்பட்ட நிலையிலும், அதன் பின்னாவது முன்னைய உணர்ச்சிக் கேடுகளுக்கு அவள் மேலும் வழிவிடாதிருந்தால்தான், அவர்களுக்கு வாழ்வு உண்டு. கணவனிடம் தவறு கண்டாலும், கண்ணை மூடிக்கொண்டு பொறுதியுடன் அவனோடு வாழ்வதென அவள் உறுதி கொண்டாலல்லாமல் இது கூடிவராது. ‘இன்னும் வேறு ஒருவகைப் பெண்டிர் இருக்கிறார்கள் - அவர்கள் தம் அன்புக்கும் தம் கணவர் பாசத்துக்கும் தாமே கண் விழித்துக் காவல் காக்கும் திருப்பணியை மேற்கொண்டு விடுகிறார்கள். இத்தகைய அணங்கு கணவனிடம் நேரிடையாக ஒரு குற்றத்தைக் காண வேண்டுமென்பதுகூடக் கிடையாது. குற்றத்தின் நிழல் இருக்கும் பக்கம் அவன் திரும்பியதாக அவள் எண்ணினால் போதும் - உடனே அவள் முதல்தர நாடகக் காட்சிக்குத் தன்னைக் கச்சை கட்டிக் கொண்டு விடுவாள். இத்தகைய கணவனுடன் இனி ஒரு கணமும் வாழ முடியாது என்று கடுஞ் சீற்றத்துடன் கூறிக் கிளர்ந்ததெழுந்து விடுவாள். ‘மனிதன் அரைகுறை நைப்பாசைகள்அவ்வப்போது அவனைத் தவறான வழியில் செலுத்தினாலும், பெரும்பாலும் அவன் முதல் பாசமே அடிப்படை வலுவுடையதாய், இறுதியில் அவனைத் தன் பழைய சூழல்களுக்கே இழுக்கும் தன்மை யுடையதாகும் என்னலாம். ஆனால், மேற்கூறிய நங்கை தன் தகிடுதத்தங்களால் அந்தப் பாசத்தில் பிளவு ஏற்படுத்தி, அது திரும்பப் பொருந்த முடியாதபடி செய்தவளாகிறாள். நேர்மாறாக, சிலர் சிறு கண்டனத்துக்குரிய சிறு பிழை நேரும்போது அதை, தான் காணாமலில்லை என்ற குறிப்புடன் ஒரு கண்ணோட்டத்தால் மட்டும் காட்டி யமைகின்றனர். தனிக் கண்டனத்துக்குரிய பெரும் பிழை கண்டவிடத்திலும் அவள் கடுமை காட்டாமலே அதை மெல்லக் கடிந்து ஒழித்து ஒடுக்கும் நயநாகரிகமுடையவளாகிறாள், இத்தகையவள் தொடக்கத்தில் தன் துணைவன் உள்ளத்தில் பெற்ற இடத்தைவிடப் பன்மடங்கு உறுதியான இடத்தை இறுதியில் பெற்று விடுகிறாள். ஏனெனில், பொறுப்பவர் பொறுதியின் ஆற்றல்போல அடங்கா உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் தீங்கு இழைப்பவர்களிடம் அவ்வுணர்ச்சிகளை அடக்கும் திறம் வேறில்லை என்பது உறுதி. ‘அவள் பொறுதியும் பெரும்போக்கும் இவ்வாறு அவள் பாசத்திலிருந்தும் பண்பிலிருந்துமே எழுவதாகத் தெரிந்தாலும், அவற்றின் மூலமே அவள் உணர்ச்சிகள் போதிய ஆழமற்றவை என்பதும் தெளிவாகி விடுகின்றது. கரையோரமாகச் செல்லாப் படகு நீரோட்டத்தில் மிதந்து செல்லவே நேரிடும் என்பது பழமொழியன்றோ! இதில் உங்கள் கருத்தென்ன?’ என்று அவன் கேட்டான், தோ நோ சூஜோ ஆமென்று குறிப்பது போலத் தலை யசைத்தான். அவன் பேசினான், ‘ஆதாரமில்லாமலே அன்புக்குரியவன் உள்ளத்தில் சந்தேக மெழுப்பிவிட்டவனுக்கு அதன் மூலமாகவே தளர்வுற்று வரும் காதலைப் புத்தெழுச்சியுடன் புதுப்பிக்க வகை ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்த அக்கினிப் பரிட்சை மிக ஆபத்தானது, இத்தகைய சந்தர்ப்பங்களில் எழும் சீற்றம் ஆதார மற்றதாதலினாலே மௌனமாகப் பொறுத்திருந்து விட்டால் அது எளிதில் மாறிவிடும் என்றும் சிலர் பரிந்துரைக்கிறார்கள், ஆனால், எப்போதுமே நிலைமை இப்படி இராது என்பதை அனுபவமாக நான் கண்டுள்ளேன். ‘மொத்தத்தில் பெண்டிரிடத்தில் எதிர்பார்க்கத்தக்க மிகச் சிறந்த பண்பு ஒன்றுதான், தன் பங்காக ஊழ்வழி வந்து சேர்வது எதுவானாலும், அதை அவன் பொறுமையுடனும் மென்னயத்துடனும் தாங்கிக் கொள்ளுவதே சிறந்தது. இவ்வாறு கூறும்போது அவன் தன் தங்கை இளவரசி ஆயை நினைத்துக் கொண்டிருந்தான். அத்துடன் அவன் இது பற்றிய கெஞ்சியின் கருத்தையே ஆவலுடன் எதிர்பார்த் திருந்தான். ஆனால், இச் சமயம் கெஞ்சி முற்றிலும் துயிலில் ஆழ்ந்திருந்ததனால் இதில் அவனுக்கு ஏமாற்றமும் மனச்சலிப்புமே ஏற்பட்டன. இவ்வகை வாத எதிர் வாதங்களில் உமா நோ கமி திறமையுடையவனல்லன். தன் இறக்கைகளைக் குத்திக் குடையும். பறவை போல, அவன் தன்னைத் தானே குடைந்து கொண்டு நின்றான். ஆனால் ,அவன் இன்னும் என்ன சொல்லப் போகிறான் என்று கேட்கவே தோநோ சூஜோ விரும்பினான். அவ்வகையில் அவனைத் தூண்டி ஊக்கவும் முற்பட்டான். உமா நோ கமி தொடர்ந்தான், ‘பெண்கள் செய்திகளெல்லாம் கலைத் தொழிலாளர் கைவினைப் பொருள்கள் போன்றவையே. தான் விரும்பும் எதையும் மரச் சிற்பி செய்துவிடக்கூடும், ஆயினும் அவன் கைவினைப் பொருள்கள் தற்காலிக விளையாட்டுப் பொருள்கள் மட்டுமே. அவை வேடிக்கைக்காகச் சிறிது நேரம் பார்க்கத் தக்கவையே யல்லாது நிலையான கலையமைதி அல்லது மெய்விதியடிப்படையாக அமைபவை அல்ல. காலப் போக்குக் கிசைய, செதுக்கும் கலைஞனும் தன் கைப் படிவத்தை, அன்றன்று உலவி மறையும் விருப்பு வெறுப்புப் பாங்குகளுக்கேற்பப் புதுப்புது வகையில் உருவாக்குகிறான். ஆனால், இதனின் வேறாக இன்னொருவகைக் கலைஞனும் உண்டு. அவன் தன் பணியில் இன்னும் ஆழ்ந்து செல்கிறான். மனிதர் வாழ்க்கையிலே பயன்படுத்தும் பொருள்களை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு அவன் மெய்யான அழகு வழங்குகிறான். கலை மரபு அவற்றுக்கு வகுத்துள்ள நிலையான உருவை அவற்றுக்கு அளிக்கிறான். வேலையற்ற நேரத்திற்குரிய களியாட்டப் பொருள்களிலிருந்து அழகு மெய்ப் பொருள்கள் செய்யும் இக்கலைஞன் முற்றிலும் வேறுபடுத்தி உணரத்தகுந்தவன் ஆவான். ‘வண்ண ஓவியர் கலைக்கூடத்தில் கை வண்ணத்திறம் கருவித் தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்த்தி மிக்க கலைஞர் பலர் இருத்தல் கூடும். அவர்களில் எவர் மிக்கவர், எவர் குறைந்தவர் என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு அவர்கள் அனைவருமே ஒத்த திறமையுடையவராகவும் இருத்தல் கூடாததன்று. ஆனால், அவர்கள் ஒவ்வொருவருமே ஆர்வப் பாராட்டும் கவர்ச்சியும் நோக்கமாகக் குறிக்கொண்டவர்களே. ஒருவன் ஹோராய் மலைகளைத் தீட்டிக் காட்டுகிறான். மற்றொருவன் புயல் மீது மிதக்கும் புயலுருவாக ஒரு ‘கடல் மா’ உருவாக்குகிறான். மூன்றாவது ஒருவன் கடல் கடந்த மாநிலத்துக்கு உரிய கொடு விலங்கொன்றைச் சித்திரிக்கிறான். அல்லது கற்பனாகாரமான பூத வேதாளங்களைப் புனைந்துருவாக்குகிறான். கற்பனைத் திறனைத் தங்கு தடையின்றி ஓடவிடும் இக்கலைஞர்கள் குறிக்கோள் வெறும் அழகன்று. காண்பவர் கண்பார்வையைப் பிணித்து அவர்கள் உள்ளத்தை ஈர்த்து வைக்கும் உணர்ச்சிப் பிழம்புகளையே அவர்கள் நாடுகின்றனர். ‘அவர்கள் படங்களில் எவையும் மெய்யுருக்களல்ல. ஆனால், எல்லாமே மெய் வாய்மையுடையவையே. இயல்பாகக் காட்சி தரும் குன்றங்கள், ஆறுகள் அப்படியே காணப்படு கின்றன - எங்கும் காணத்தக்க முறையில், இயல்பான வடிவமைதியுடைய மனைகள் தம் அழகு காட்டிப் பகட்டுகின்றன. இத்தகைய அமைந்த காட்சிகளைத் தீட்டுவதிலும்; சில சமயம் நன்கு பழக்கப்பட்ட வேலிகளின் மறுபுறம் உலக மக்கள் கண்களிலிருந்து மடக்கப்பட்டுக் கிடக்கும் காட்சிகளைத் திறந்து காட்டுவதிலும்; ஆரவார வாழ்விலிருந்து ஒதுங்கிய மேட்டு நிலத்தில் திண்ணிய மரப் பொதும்பர்களை உருவாக்கிப் புனைவதிலும்; இவையனைத் திலும் கோடுகள், கீற்றுகள், உருவமைதி, அளவமைதி ஆகிய வற்றில் தக்கபடி கவனம் செலுத்துவதிலும் கலை முதல்வர்களின் தேர்ந்த கைத்திறம் மிகுதி தேவைப்படுவது உறுதி - தேர்ச்சி பெறாதவர்கள் அவற்றில் ஆயிரம் வழுக்களுக்கு உள்ளாக நேரும்.’ ‘கையெழுத்துக் கலையிலும் இதுபோலச் சிலர் தம் விரை வெழுத்தின் கோடுகளை இப்படியும் அப்படியுமாகக் கிறுக்கி, இவை கைத்திறத்தின் போக்குகள் என்று பிறர் நினைப்பார்கள் என்று எண்ணி மனப்பால் குடிப்பர். ஆனால் உண்மையான கையெழுத்தாண்மையின் கலைச் செப்பம் ஒவ்வொரு எழுத்திலுமே தன் செவ்வியையும் அமைதியையும் பொறித் துவிடும் தன்மையுடையது. முதற் பார்வையில் சில எழுத்துகள் அரை குறைகள் போலத் தோற்றக் கூடுமானாலும் படியேட்டுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அவையே குறையற்றவை என்பது தெரிய வந்துவிடும்.’ ‘சின்னஞ்சிறு செய்திகளின் நிலையே இது. இவற்றுக்கு மேற் சென்று மனித இதயத்தையே மதிப்பிடத் தொடங்கினால். சமுதாயப் பாங்குகளுக்குரிய தோற்ற நடிப்புத் திறங்கள் வகையில் நாம் ஏமாற்றமடையாமல் இருக்க எவ்வளவு விழிப்பாயிருக்க வேண்டுமென்று கூறத் தேவையில்லை. பல செயற்கைத் திறங்கள், நடிப்புத் திறங்கள் புறவிழியை மட்டுமே கவரத்தக்கவை. ‘சில நாட்களுக்கு முன்தான் இவற்றை நான் உணர நேர்ந்தது. நீங்கள் பொறுமையாகக் கேட்பதானால், நான் இவ் வரலாற்றை எடுத்துரைக்க முடியும்.’ இது கூறிக்கொண்டே அவன் சற்று அவர்கள் பக்கமாக நகர்ந்து உட்கார்ந்தான். இதே சமயம் கெஞ்சியும் விழித்துக் கொண்டான். தோ நோ சூஜோ கைமீது கன்னம் வைத்தவனாய் முழுதும் ஈடுபட்ட கவனத்துடன் அமர்ந்திருந்தான். உண்மையில் அன்றிரவு உமா நோகமி பேசியது முழுவதும் பொருத்த மற்றதாகவும், உலக வாழ்வு பற்றி ஒரு குரு மடத்துறவி உரைத்த சமய உரைபோலவும்தான் இருந்தது. ஆயினும் சிற்சில சமயங்களில் இத்தகு தறுவாய்கள் அவரவருக்குரிய சொந்தக் கருத்துகள் பற்றி வாதிக்கவும், உள்ளந் திறந்து ஒவ்வொருவர் தனிஇரகசியங்கள் எடுத்துரைக்கவும் எளிதாக உதவின. உமா நோ கமி தொடர்ந்து பேசினான், ‘அது என் இளமைக் கால நிகழ்ச்சி. என் நிலையும் இன்றைவிட அன்று தாழ்ந்தது. நான் ஒரு பெண்ணிடம் காதல் கொண்டிருந்தேன்- அவளும் நான் மேலே கூறிய மெய்யான பாசமுடைய அணங்கு போன்றவளே. அவள் முழு நிறைவான கவர்ச்சி பொங்கி வழியும் ஒரு பேரழகியல்லள். ஆனால் என் இள உள்ளத்தின் தற்செருக்கு என்னையொத்த சிறந்த இளைஞனின் நிலையான மனைவியாகத் தக்க அத்தகைய அழகியாக அவளை ஏற்காவிட்டாலும், அந்நாளில் போதிய தற்காலிக நிறைவுடைய தாக அவளிடம் உள்ளம் ஈடுபடச் செய்தது. எனக்கு நேரம் போகாது தேங்கிய தறுவாய்களில் அவளைவிடச் சிறந்த தோழமை வேறு கண்டிருக்க முடியாது. ஆனால், அவள் எல்லையற்ற பொறுப்பற்ற தனம் உடையவளாகவே இருந்தாள். இந்தக் கொடுங் கண்டிப்பும் ஆர்வத் துடிதுடிப்பும் கொஞ்சம் குறைவாயிருக்குமானால், அதற்காக அவள் பாசத்தில் இன்னும் சிறிது குறைபாட்டைக்கூட நான் விரும்பி வரவேற்றிருக்கக்கூடும்.’ ‘ அவள் சந்தேகங்கள் ஒருசிறிதும் தளராமல் பெருகிக் கொண்டே வந்தன. அதுபற்றி என் சிந்தனையும் பெரிய தாயிருந்தது. ஆயினும் எதற்கும் பற்றாப் பேர்வழியாகிய என்மீது அவளது இடைவிடாத பாச ஆர்வத்தை என்னால் எண்ணிப் பார்க்காமலிருக்க முடியவில்லை. அதனால் நான் அவள் மீது பரிவுகொண்டேன்.நான் மட்டும் சற்றுப் பொறுமை காட்டி வந்தால் எப்படியும் சில நாட்களுக்குள் அவள் தன் ஓயாச் சந்தேக மனப்பான்மையைக் கட்டுப்படுத்தத் தொடங்கி விடுவாள் என்று கருதிக் கொண்டேன். ‘எனது மிகச் சிறுசிறு தேவைகளைக்கூட நான் எண்ணிப் பார்க்கத் தொடங்கு முன்பே முன்னறிவுடன் கண்டு நிறை வேற்றுவது அவள் வழக்கம். தன்னிடம் ஏதேனும் சின்னஞ்சிறு குறைபாடு இருப்பதாகத் தோன்றினாலும், அதை நீக்கவே அவள் அருமுயற்சி செய்து; வந்தாள். அப்படியும் ஏதேனும் ஒரு சிறு பண்பில் அவள் என் விருப்பங்களுக்குப் பின்னடைய நேர்ந்தால், அதை நான் கண்டு மனக் குறைப்படாமலிருக்கும்படி தடுத்து மறைத்துக் கொள்ளவும் அவள் இடையறா முயற்சி எடுத்துக் கொண்டாள். இவ்வாறு பல்வேறுவகைகளிலும் அவள் என் நலன்களைப் பெருக்கவே பாடுபட்டு வந்தாள். ‘என் விருப்பப்படி ஒவ்வொரு சிறு பனித்துளியளவு செய்திவரை சரிவர நடத்தப்பட்டால், அவற்றால் என் உள்ளத்தில் ஏற்படும் நிறைவே அவள் தனிப்பட்ட குறைகளுக்கு ஈடு செலுத்திச் சரி செய்து, அக்குறைகள் என் உள்ளத்தை உறுத்தாமலிருக்கக் கூடும் என்று அவள் அன்பார்வத்துடன் நம்பியிருந்தாள்: உண்மையில் அவளைப் பிறர் கண்டுவிட்டால் அவளைப் பற்றி அவர்கள் கொள்ளும் மதிப்புக் குறைவுகள் எனக்கு மனவருத்தந் தரப்படாதே என்பதற்காக அவள் வெளியே தலைகாட்டுவது கூட இல்லை. ‘பொதுநிலை மட்டான அவள் தோற்றம் எனக்குப் பழகிப் போய்விட்டது. இந்நிலையில் இந்த ஒரு பொறுப்பற்றதனம் மட்டும் இல்லாமலிருந்தால் அவள் நற்பண்புகள் காரணமாக மொத்தத்தில் எனக்கு அவள் மீது முழுமன நிறைவே ஏற்பட்டிருக்கும். ஆனால், இந்த ஒன்றில் அவள் ஒரு சிறு முன்னேற்றமும் காட்டவேயில்லை. இறுதியில் எனக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. “ஆம். என்னை மகிழ்விக்கவே அவள் இவ்வளவு பாடுபடுகிறாள். இவ்வளவு வணக்க இணக்கமாகவும் இருக்கிறாள். இந்நிலையில் இவளுக்கு ஒரு படிப்பினை தந்து திருத்தும்படி, திடீரதிர்ச்சி தரும் ஏதேனும் செய்தாலென்ன? அதனால் தீராத இந்த நோய்க்கு ஒரு தீர்வு, அல்லது ஓர் ஓய்வு ஏற்படக்கூடும்” என்று எண்ணினேன். ‘என்னிடம் அவள் பாசம் வரம்பு கடந்ததாய் இருப்பதனால், அவளுக்கு இவ்வாறு பாடங்கற்பிக்க எண்ணும் போது, அதனால் எனக்குப் பெரு வருத்தம் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும்; ஆனால், அதை அவளுக்காகப் பொறுத்துக் கொண்டு, உண்மையிலேயே அவளைத் துறந்து விடுவதாக நடிப்பதென்று தீர்மானித்தேன். இவ்வுட்கருத்துடன் முதலில் நான் உணர்ச்சியற்றவனாக நடித்துக் கடுமையாக நடந்து கொண்டேன். அதுபோது அவள் முற்றிலும் அமைதியிழந்து கடுஞ் சினங் கொண்டு எங்களைக் கண்டு சந்தி சிரிக்கும்படி ஆட்ட பாட்டங்கள் நடத்தினாள். இது கண்டு நான் அவளிடம் இறுதியாகக் கண்டிப்புடன் பேசினேன்.’ “உன்னிடம் எவ்வளவோ பாசம் வைத்திருக்கும் ஒருவனை உதறித் தள்ளிவிட எண்ணினால், இதுபோலக் காரியமல்லாத சிறு காரியங்களுக்கெல்லாம் பெருங் கூக்குரலிடு. இதுவே அதைச் சாதித்துக் கொள்வதற்குரிய நல்லவழி. நேர்மாறாக நீ என்னுடன் நீடித்து வாழவிரும்பினால், இப்படி நான் சிறிது பாசக் குறைவாயிருப்பதாக நீ எண்ணும்போதெல்லாம், உனக்கெதிராக நான் பெருஞ் சதி செய்கிறேன் என்று எண்ணிவிடக் கூடாது. இந்த ஒரு செய்தியை நன்றாகக் கருத்தில் பதிய வைத்துக் கொண்டால், என் அன்பு உன்னிடம் கட்டாயம் தொடர்ந்து நீடிக்கும். ஒரு வேளை உலகில் இன்னும் உயர்நிலைக்கு நான் மேம்பாடடையக் கூடும். அப்போது!” ‘உணர்ச்சி வேகத்தில் நான் சிறிது முரட்டுத்தனமாகப் பேச நேர்ந்தாலும், மொத்தத்தில் திறமையுடனேயே காரிய மாற்றிய தாக எண்ணிக் கொண்டேன், அதற்கேற்ப அவள் முகத்தில் ஒரு சிறு புன்முறுவல் தோன்றிற்று. “குறைபாடுகளையும் தோல்விகளையும் மட்டும் ஒரு சிறிது பொறுத்துக் கொள் வதானால், அதுபற்றி நான் கவலைப்படமாட்டேன். உலகில் உயர்படிக்கு நீங்கள் வரும்வரை அந்நிலையில் என்னால் காத்திருக்கமுடியும்” என்று அவள் விளக்கம் உரைத்தாள். ஆனால், அவள் அடுத்த வாசகத்தின் தொனி மாறுபட்ட உணர்ச்சி காட்டிற்று. அது அவள் முடிவையும் வேறுபடுத்திற்று. “இருந்தாலும் நீங்கள் மதிப்பாக நடப்பதற்கு என்றேனும் ஒருநாள்தான் கற்றுக் கொள்வதானால், அதுவரை உங்கள் கடுஞ் சொற்களை ஒவ்வொரு நாளும் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, நாம் இருவரும் இருவேறு பாதையாகப் பிரிந்து செல்லும் காலம் வந்துவிட்டது என்பதை நீங்கள் கூறுவது போல நானும் ஏற்றுக் கொள்ளுகிறேன்” என்றாள் அவள், ‘இதனையடுத்து அவளது பழைய பொறுப்பற்ற கோபா வேசம் திடுமென எழுந்தது. அவள் என் மீது மிகக் கடுமையான வசைமாரிகளை வீசினாள். பெண்களுக்கு இயல்பான காட்டுமிராண்டித் தனத்துடன் அவள் எதிர்பாராமல் என் சுண்டு விரலைப் பற்றி இழுத்து நெறுநெறு வென்று கடித்தாள், அவள் பற்கள் ஆழமாகப் பதிந்து காயம்பட்டது. வேதனை மிகப் பெரிதாய் இருந்தாலும் நான் அதை அடக்கிக் கொண்டு துயரார்ந்த குரலில் என் முடிவை எடுத்துரைத்தேன். ‘நாகரிக சமுதாயத்தில் என் மதிப்பு இனி உயர முடியாதபடி நீயே தடை செய்துவிட்டாய். என் மீது நீ இப்போது இட்ட தழும்புகளால் நான் இனி மிகத் தாழ்ந்த பணிகளுக்குக் கூடத் தகுதியற்றவனாய் விட்டேன். உயர்ந்தோர் குழாத்தில் நான் இனி தலை காட்டவும் முடியாது. உலக வாழ்விலிருந்தே ஒருங்கித் தான் காலங்கழிக்க வேண்டும். இது எப்படியானாலும், உனக்கும் எனக்கும் உள்ள உறவு இனி நீடிக்கப் போவதில்லை. இனி நாம் ஒருவரை ஒருவர் பார்க்கப் போவதில்லை” என்று கூறி வெளியேறினேன். ‘வெளியேறும் சமயம் நான் என் ஊறுபட்ட விரலைத் கையில் பற்றிப் பிடித்தபடியே கீழ்வரும் பாடலைப் பாடினேன்.’ ‘கண்ணுற்ற காலையெலாம் கையின் விரல்வளைத்து எண்ணுறுங்கால் யான் அடைந்த துன்பங்கள் சான்றாகப் புண்ணுற் றழுங்கும் இந்த ஒற்றைவிரல் போதாது!’ இதுகேட்ட அவள் கண்ணீரை ஆறாகப் பெருக்கினாள். “இன்னும் உங்கள் இதயம் தன் துயரை மட்டுமே விரல் விட்டு எண்ணியமைவதானால், நம் கைகளின் மிக நல்ல பலன் நம் பிரிவிலேயே இருத்தல் உறுதி” என்று நைந்த இழையை முற்றிலும் ஒட்டறுத்தாள். ‘மேலும் சில சொற்களை வீசி எறிந்த பின் நான் அவளை இறுதியாக விட்டகன்றேன். ஆனால், அத்தருணம் கூட எங்கள் தொடர்பு முற்றிலும் ஒழிந்ததென்று நான் மனமார எண்ணவில்லை. ‘நாட்கள் பல சென்றன. அவளைப் பற்றிய செய்திகள் எதுவும் என்னை வந்து எட்டவில்லை. இறுதியில் நான்அமைதி யிழந்தேன். ஒரு நாள் இரவு விழா நாளுக்குரிய இசைப் பயிற்சிகள் முடிவுற்றன, நான் அரண்மனையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். கடும் பனிமழை பெய்து கொண்டிருந்தது, அரண்மனையிலிருந்து என்னுடன் புறப்பட்டவர்களெல்லாம் தத்தம் வழிகளைப் பின்பற்றி என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்கள். ஆனால், எனக்குத் திட்ட வட்டமான வழி கிடையாது - எங்கே போவதென்று கருத்தே இல்லாமல், நான் நின்ற இடத்திலேயே நின்று தயங்கினேன். ஏனெனில் எனது என்று கூறத் தக்க இடம் எதுவும் எனக்கு எந்தத் திசையிலும் இல்லை. அரண்மனை வளாகத்திலேயே நான் ஓர் அறையை எடுத்து அதில் தங்கியிருந்திருக்கக்கூடும். ஆனால் குடும்ப ஆறுதலற்ற அத்தகைய தனியிடத்தின் மோன அமைதிகளை இச்சமயம் நான் எண்ணிப் பார்க்கவே நடுங்கினேன். இந் நிலையிலே திடுமென அவளைப் பற்றிய எண்ணம் என்னுள் எழுந்தது. ‘அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாளோ? இச்சமயம் அவள் தோற்றம் எப்படி இருக்குமோ? என்று நான் துடிதுடிப்புடன் என்னுள் கூறிக்கொண்டேன். அவளை உடனே சென்று காணும் ஆர்வத்துடன் தோள்களில் படிந்த பனித் துளிகளைத் துடைத்து நீக்கிக் கொண்டு நான் அவள் வீட்டை நோக்கி நடந்தேன். என்நெஞ்சு என்னுள் அடித்துக் கொண்டது. ஆயினும் இவ்வளவு நாள் சென்ற பின் அவள் கோபம் கட்டாயம் ஆறியிருக்க வேண்டும் என்றே நான் நினைத்தேன். ‘அறையினுள்ளே விளக்கு மங்கலாக எரிந்து கொண்டி ருந்தது. ஆனால் அது சுவரை நோக்கியே திருப்பி வைக்கப் பட்டிருந்தது. திண்டு மெத்தைகளிட்டு ஒப்பனை செய்த ஒரு படுக்கையைச் சுற்றித் திரைகள் தொங்க விடப்பட்டிருந்தன. அதன் அருகே பெண்டிர் உள்ளாடைகள் காயப் போடப் பட்டிருந்தன. மொத்தத்தில் எக் காரணம் பற்றியோ, அவள் என்னை எதிர்பார்த்தே யிருந்ததாக எனக்கு அச்சமயம் தோற்றிற்று. அவ்வளவு நல்ல சூழ்நிலைகளுக்கிடையே அவளைக் காணவந்தது பற்றி நான் உள்ளூர மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டேன். ஆயினும் இதற்கெதிராக எதிர்பாரா வகையில், அவள் வீட்டில் இல்லை என்ற பதிலே எனக்குத் தரப்பட்டது.’ ‘நான் பணிப் பெண்களிடம் விசாரித்தேன். அன்றிரவு தான் அவள் தன் பெற்றோர் வீடு சென்றாளென்றும் ஒரு சில பணிப் பெண்கள், வேலையாட்களை மட்டும் நான் வீட்டில் விட்டுச் சென்றாளென்றும் நான் அறிந்தேன், இப்போதுதான் என் அமைதியை ஏற்கெனவே குலைத்திருந்த ஒரு செய்தியில் என் கருத்துச் சென்றது. இது வரை அவள் எனக்கு ஒரு பாடலோ, கடிதமோ எழுதியனுப்பி என்னுடன் சமரசம் செய்து கொள்ள முயன்றதில்லை, என் மீது பொறுதியிழந்து, ஐயுறவு கொண்ட தாக அவள் நடித்ததெல்லாம் என்னை விட்டுச் செல்வதற்கான சூழ்ச்சிகள் தானோ? - இத் திடீர் எண்ணம் இப்போது என்னைச் சுட்டது. இந்த ஊகத்தை வலியுறுத்த வேறு சான்றுகள் எவையும் எனக்குத் தென்படா விட்டாலும், இந்த எண்ணமே எனக்குப் பெருத்த மனக்கசப்பை உண்டு பண்ணிற்று. நான் அவளிடம் என்உளம் திறந்து காட்ட எண்ணினேன். ‘அவளை நான் நெடு நாள் சந்திக்காவிட்டாலும், அவளை நான் மறந்ததில்லை. என் வாழ்வை அவள் வாழ்வாகவே கருதி நான்அதற்கான திட்டமிட்டிருந்தேன். இதை நான் அவளுக்கு மெய்ப்பித்துக் காட்ட முனைந்தேன். அவள் ஆடைக்காக நான் மிக இனிய வண்ணச்சாயலுடைய ஒரு துணிவகையைத் தேர்ந்தெடுத்திருந்தேன். அதன் நிறமும் உயர்வும் அவள் கண் களைக் கவர்வனவாய் அமைந்திருந்தன. இதை இப்போது அவள்பால் அனுப்பினேன். எப்படியும் அவள் என்னை முற்றிலும் தன் நினைவிலிருந்து அகற்றியிருக்க முடியாது’ என்று நான் எனக்கே தேறுதல் கூறிக் கொண்டேன். ‘துணிவகையை அவள் கண்ட பின் அவள் எனக்கு எத்தகைய தடையும் கூறவில்லை. என்னிடமிருந்து ஒளிந்து கொள்ள முயலவும் இல்லை. என் கேள்விகளுக்கெல்லாம் அவள் அமைதியாகவும் இன் முகத்துடனும் மறுமொழி கூறினாள். தன் நிலைபற்றி அவள் எத்தகைய வெட்கமோ மனத் தயக்கமோ கொள்ளவில்லை.’ ‘இறுதியில் எப்படியும் அவள் பேச்சில் பழய தொனியின் ஒரு சிறு சாயல் தென்பட்டது. “முன்போல நீங்கள் நடந்து கொண்டால், என்னால் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமுடியாது. இனி அமைதியாக வாழ்வதாக வாக்களித்தால், உங்களை மறுபடியும் ஏற்றுக் கொள்ளத் தடையில்லை” என்றாள். அவள் எண்ணம் இன்னும் உள்ளூர என்னை நாடிற்று என்று கண்டதால், அவளைப் பின்னும் சிறிது பயிற்றுவித்து ஆட்கொள்ளலாம் என்று நான் எண்ணினேன். என் பேச்சு இதற்கு ஏற்றதாக அமைந்தது. “இன்னும் அப்படி ஒன்றும் உறுதியாகக் கூற முடியாது. நான் விரும்புவது போலத்தான் வாழமுடியும். அச்சுதந்திரம் மட்டும் இன்னும் என்னிடமே இருக்கும்” என்று சொன்னேன். ‘எங்கள் வாத எதிர்வாதங்கள் மீண்டும் முன்போலவே தொடர்ந்தன. ஆயினும் அன்று எனக்கு வெளிப்படத் தெரிந்ததைவிட அவள் உள்ளம் இதனால் உள்ளூரப் புண்பட்டு நைவுற்று வந்ததென்று இப்போது எண்ணுகின்றேன். ஏனெனில் ஒரு சில நாட்களுக்குள் அவள் உடல் நிலை படிப்படியாகத் தளர்வுற்றது. அவள் அதே கவலையாக உயிர் நீத்தாள். என் உ™ர்ச்சியற்ற நடத்தையை எண்ணி நான் மன நைந்து என்னையே பழிக்கும்படி செய்துவிட்டு, அவள் என்னை விட்டு நிலையாகப் பிரிந்து சென்றுவிட்டாள்.’ ‘அவளிடம் என்னென்ன குற்றங்களிருந்தாலும், அவள் என்னிடம் கொண்ட மாறாப் பற்று ஒன்றே அவளை எனக்கு ஓர் ஒப்பற்ற மனைவியாக்கி இருக்குமென்று இப்போது நான் உணர்ந்தேன். சிறு பேச்சுகளிலும் சரி, மிக முக்கியமான செய்திகள் பற்றிய உயர் உரையாடலிலும் சரி - ஒரு தடவைகூட, ஒரு கணம் கூட அவள் பேச்சுத் திறமை தளர்வுற்றதில்லை என்பதை நான் இப்போது எண்ணிப் பார்த்தேன். வண்ணப் பூ வேலைகளிலே அவள் முன்பனித் தெய்வதம் (தச்சுதாதேவி) தான்; இலையுதிர் காலத் தழைகுழைகள் மீது அத் தெய்வதம்கூட அவளைவிடத் திறம்படத் தன் மென்கரங்களால் சாயம் தோய்வித்திருக்க முடியாது! துன்னல் வேலையிலோ அவள் வானவர் நெசவாரணங்கான தனபதா தேவிதான்! இவற்றை நான் நினைந்து நினைந்து வருந்தினேன்.’ அவன் மேலே பேச முடியாமல் தயங்கினான். அவ் அணங்கின் பண்புகளையும் திறங்களையும் எண்ணி எண்ணி மேலே செல்ல மாட்டாதவன் போல உழன்றான். தோ நோ சூஜோ இப்போது தலையிட்டான். ‘தெய்வ மாக்கதைக்குரிய வானவர் நெசவாரணங்கும் ஆயரிளைஞனும் நுகர்ந்த காதலின்பம் என்றென்றும் நிலை யானது. அணங்கின் காதலும் அவ்வானவ நெசவாரணங்கின் காதலை ஒத்ததாய் இருந்திருக்கக்கூடுமானால், அவள் துன்னல் திறமை சற்றுக் குறைத்திருந்தால் கூட நீங்கள் பொருட் படுத்தியிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆயினும் இத்தகைய ஆரணங்குப் பெண்மணியை நீங்கள் அறிந்திருந்தும் கூட உலகத்தில் பெண்ணினம் விரும்பத்தகாத ஒரு வற்றற் பாலைப் பரப்பு என்று நீங்கள் நினைக்கிறீர்களே, அது பற்றி நான் வியப்படைகிறேன்’ என்றான். உமா நோ கமி மீண்டும் தொடர்ந்தான். ‘இன்னும் கேளுங்கள்’ ‘இதே சமயத்தில் நான் இன்னொரு மாதரசியையும் கண்டு பழகி வந்தேன். அவள் முதலணங்கைவிட எவ்வளவோ உயர் குடிப் பிறந்தவள். கவிதை, விரைவுக் கையெழுத்து, வீணை வாசிப்பு ஆகியவற்றில் அவள் வல்லவள். அவள் ஒரு சாதாரணமான பெண்மணியல்லள் என்பதை அவள் நாநயமும் கைநயமும் ஒருங்கே காட்டின. அவளை அறிந்த எவரும் இதை மறுக்க முடியவில்லை. இவற்றுடன் தோற்றத்திலும் அவள் குறைந்தவளாயில்லை. மட்டான அழகுடையவளே. மேற் குறிப்பிட்ட அணங்கு காரணமாக நான் துன்புற்ற சமயங்களி லெல்லாம். இடையிடையே மன அமைதி நாடி நான் இப்புதிய மாதை இரகசியமாகச் சென்று காண்பதுண்டு, ஆனால் நாளடைவில் அவள் மீதே நான் முற்றிலும் காதல் கொண்டு விட்டதை உணர்ந்தேன்.’ ‘முதல் அணங்கு மாள்வுற்ற சமயம் நான் கடுந்துயரில் ஆழ்ந்திருந்தேன். ஆயினும் சென்றதை எண்ணி எண்ணி வருந்துவதில் பயனில்லை யாதலால், நான் புதிய மாதரசியை முன்னிலும் அடிக்கடி சென்று காணலானேன். விரைவிலேயே அவள் உள்ளம் நிலையற்றது, சபல முடையது என்று கண்டேன். நான் இல்லாத சமயம் தான் விரும்பாத முறையில் அவள் நடந்து வந்தாள் என்பதை நான் நேரிடையாகக் காணாவிட்டாலும் உய்த்துணர்ந்து கொண்டேன், இது முதல் நான் அவளை நீண்ட நாள் இடையிட்டே சென்று காணத் தொடங்கினேன். கடைசியிலேயே அவளுக்கு இன்னொரு காதலன் இருந்தான் என்பது உறுதியாயிற்று. ‘அது மாசி மாதம் (இறையிலாமாதம்). முழு நிலா இரவில் எங்கும் வண்ண ஒளி வீசிற்று. அரண்மனையிலிருந்து நான் புறப்பட்ட போது, நான் அரண்மனை இளைஞருள் ஒருவனைச் சந்தித்தேன். அன்றைய இராப்பொழுதை நான் ‘தைனாக’ னிலேயே கழிக்கப் போவதாக அவன் கேட்டதும், தானும் அதே திசையில் வருவதாகக் கூறிக் கொண்டு என்னுடன் வந்தான். நாங்கள் சென்ற பாதை மாதரசியின் மாளிகை வழியாகச் சென்றது. அவன் அங்கேயே இறங்கினான். மிக அவசியமாகக் கவனிக்க வேண்டிய அலுவல் தனக்கு அப்பக்கம் இருந்ததாகவும் கூறினான். ‘மதிற்புறம் பாதிக்கு மேல் பாழடைந்து கிடந்தது. அதன் பிளவுகளினூடாக நிழலடர்ந்த ஓர் ஏரியின் நீர்ப்பரப்பு காட்சியளித்தது. நிலவொளிகூட அந்த இடத்தைக் கடந்து விரைந்து செல்ல விரும்பாமல் அங்கேயே தயங்கித் தயங்கி நின்று அதன் அழகைக் கண்டு மயங்குவது போலிருந்தது. அத்தகைய இடத்தைக் கடந்து நானும் செல்ல விரும்பவில்லை. ஆகவே இளைஞன் வண்டியை விட்டு இறங்கியபோது நானும் அங்கேயே இறங்கினேன். மாதரசிக்கு மற்றொரு காதலன் இருந்தான் என்பதை நான் முன்பே ஊகித்திருந்தேன். அவன் சிறிதும் தயக்கமில்லாமல் நேரே உள்ளே சென்றான். முன் வாசலிலுள்ள மூங்கில் தட்டி மீது ஒய்யாரமாக அமர்ந்த வண்ணம். நிலவையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.’ ‘பொன்னரளிப் பூக்கள் அப்போது தான் முழுதும் மலர்ச்சி யடைந்து கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கின. வாடிவிழுந்து கிடந்த வண்ணச் சருகுகள் காற்றில் அல்லாடிக் கலகலத்தன. அதிசயிக்கத்தக்க அழகிய ஓவியத் திரைக்காட்சி போல யாவும் எங்கள் கண்முன் தோற்றின. ‘திடுமென இளைஞன் தன் ஆடையில் செருகி வைத்திருந்த ஒரு குழலை எடுத்து வாசித்தான். பின் குழலை ஒரு புறம் வைத்துவிட்டு, “இனிய தண்ணார் நிழல்’’ முதலிய பண்ணார்ந்த பழம் பாடல்களைப் பாடினான். விரைவில் வீட்டினுள் நாட்டு யாழ் ஒன்று மீட்டப்பட்டு அப்பாடலுக்கிசைய நயமுடன் யாரோ இனிய இசை யெழுப்பினர். முன்பனிப் பருவத்திற் கேற்றபடி பண்ணின் திறம் அமைந்திருந்தது. அதில் பாடலுக் குரிய அணங்கு தன்வயப்பட்டு உணர்ச்சியுடனும் மென்னயங் களுடனும் ஈடுபட்டிருந்தாள். இதனால் பாடலின் ஓசை பலகணிக் கதவுகளினூடாகவே செவியில் வந்து விழுந்தாலும், அது காலத்துக்குகேற்ற புத்தம் புதிய பாணியிலமைந்து, உள்ளுணர்ச்சிகளை வாய்மையுடன் வெளியிடுவதாயிருந்தது. நிலவின் எழிலார்ந்த இன்னமைதிக்கு அது எல்லாவகையிலும் ஏற்ற தாயமைந்திருந்தது. இளைஞன் உள்ளம் இதனால் கிளர்ச்சியும் எழுச்சியும் கொண்டது. இசையின் ஓசை வெளிவந்த பலகணிக்கு நேராக அவன் இப்போது சென்று நின்றான். செல்லும் சமயம் அவன் தற்பெருமையுடனும் மகிழ்வுடனும் என்னைத் திரும்பி நோக்கினான். “இச்சருகுகளின் மீது என்னைத் தவிர வேறு எவரும் நடந்து சென்றிருக்கமாட்டார்கள். வேறு பலர் காலடியும் இதுவரை அவற்றின் மீது படிந்திருக்க முடியாது” என்றும் அவன் கூறினான். ‘பொன்னரளி மலர் ஒன்றைக் கையில் எடுத்து ஏந்திய வண்ணம், அவன் இதே கருத்தை ஒரு பாடலாகவும் வெளி யிட்டான். “மயங்கு நின் மாய யாழிசை உலவ, மாமலர் வண்ணங்கள் நிலவ, வயங்கிய இரவில் வானிடை மதியம் வளர் ஒளி யோடெங்கும் குலவ, நயங்கிளர் உன்றன் மாமனை வாயில் கடந்திடு நல்லடி பதியத் தயங்கி நின் றிலஈ தென்கொலோ பொழிலின் தள்ளரும் எழிலிடை இழைந்தே!” அவள் இசையைப் புகழ்ந்த இந்தப் பாடலின் குறைபாட்டைப் பொறுத்தருளும் படி அணங்கினை அவன் வேண்டினான். அத்துடன், “உன் இசையினிமையைப் பருகும் ஆர்வத்துடன் நான் அருகே வந்து நிற்கிறேன். மீண்டும் ஒரு முறை அதே இசையைக் கேட்கும்படி அருள்க” என்று அவன் குறையிரந்தான். மேலும் பல புகழ்ச்சியுரைகளைக் காதலன் கூறிய பின், தன் குரலைப் பின்னும் செயற்கையாக்கிக் கொண்டு மாதரசி பாடினாள். “சலசலக்கும் முதுவேனில் தழைகளுடன் இழையக் கலந்திசைக்கும் குழல் தயங்கத் தகுதிபெறும் பாடல் குலவவலேன் அலேன் எனவே குழையும் என்றன் நெஞ்சம்!” மேலும் பல வகைக் காதல் விளையாட்டுகளில் அவர்கள் ஈடுபட்டனர். வேறு ஐயுறவுகள் எதுவுமில்லாத நிலையில், அணங்கு பதின்மூன்று நரம்புகளையுடைய யாழெடுத்துப் ‘பஞ்சிகி’ மெட்டை மீட்டிக் காலத்தின் புதுமைப்பாணியின்படி விரையார்வத்துடன் விரல்களை ஓட்டினாள். அவள் பாடல் மிக நேர்த்தியாய் இருந்ததென்பதில் ஐயமில்லை. ஆனால், என்னால் அதை நன்கு சுவைத்து மகிழ முடிந்ததென்று கூற இயலாது. ‘ஒருவன் ஏதேனும் அரண்மனை அணங்குடன் அவ்வப்போது ஊடாடி உடனிருப்பதானால், அச்சமயம் இயன்ற அளவு வேறு கவலையற்ற தனி இன்பம் நுகரக்கூடும். தான் இல்லாத சமயம் என்ன நடைபெறுகிறது என்பது பற்றி அத்தருணங்களில் இம்மியளவும் சிந்தனையற்று இருக்கவும் முடியும். இந்த மாதரசியையும் நான் அவ்வாறு இடையிடையே தான் சந்தித்து வந்தேன். ஆயினும் சூழல் வயப்பட்டு நான் ஒருவனே அவள் உள்ளத்தில் இடம் பெற்றவன் என்று கருதி அகமகிழத் தொடங்கியிருந்தேன். இந்த ஓரிரவுக் காட்சி அந்த எண்ணத்தின் கடைசித் துகளைக்கூடப் பொசுக்கிவிட்டது. நான் அவளைத் திரும்பவும் ஒரு போதும் சென்று காணவில்லை. ‘அனுபவமற்ற என் புத்திளமையில் நிகழ்ந்த இந்த இரு நிகழ்ச்சிகளும் பெண்ணினத்தில் எனக்கிருந்த நம்பிக்கையைப் போக்கிவிட்டது. அதன் பின்னும் இத்திசையில் என் கருத்து வரவர மோசமாகிக் கொண்டு தான் வந்தது. உங்கள் பருவத்தில் அவற்றின் கவர்ச்சி பெரிதாகவே இருக்குமென்பதில் ஐயமில்லை. ஆனால், தொட்டால் உருக்குலைந்து விடும் புல் நுனி மேலுள்ள பகட்டான மணிக்கற்கள் போன்ற பனித்துளி போன்றவர்களே அவர்கள்! ஆனால், கையில் எடுத்தால் நீராகிவிடும் ஆலங் கட்டிகள்! இன்னும் சிறிது வயது சென்றால் நீங்களும் இவ்வாறே கருதுவீர்கள். தற்போது இந்த அறிவுரையையாவது உள்ளத்தில் கொள்ளுங்கள். ‘மட்டற்ற பாசம் காட்டுபவர்களிடமும், மெல்லிய அன்பு வலை வீசி மையலில் சிக்க வைப்பவர்களிடமும் எச்சரிக்கையாயிருங்கள். நேர் வழி கடைப்பிடித்து அவர்கள் வயப்பட்டால் நீங்கள் உலகில் உங்களுக்குரிய மதிப்பைப் பெரிதும் இழப்பது உறுதி” தோ நோ சூஜோ இதை ஒத்துக் கொண்டதாகத் தன் வழக்கப்படி தலையாட்டினான். உமா நோ கமியின் இந்த அறிவுரைக்கு இணங்கியது போலவே கெஞ்சியும் புன்முறுவல் பூத்தான். ‘உங்கள் இருவரின் கதைகளும் ஒரே மாதிரிச் சோகக் கதைகள் தான்’ என்று நகைத்தவாறே கூறினான். இப்போது தோ நோ சூஜோ மீண்டும் தன் கருத்து அறிவித்தான். ‘இப்போது நானாகவே உங்களுக்கு ஒரு கதை கூறுகிறேன். ‘ஒரு மாதரசியிடம் நான் மிக இரகசியமாகவே நட்பாட வேண்டியவனாய் இருந்தேன். ஆனால் என் கடுமுயற்சி களுக்கெல்லாம் அவள் அழகு போதிய பரிசாயிருந்தது. அவளை நான் என் மனைவியாக்கிக் கொள்ள எண்ணியதில்லை. ஆயினும் அவள் மீது என் பாசம் வளர்ந்து கொண்டே வந்தது. அவளை ஒரு கணம் நினையாமலிருக்க முடியாது என்னும் நிலைக்கு வந்து விட்டேன். அதேசமயம் அவளும் என்னிடம் முழுநிறை நம்பிக்கை வைத்திருந்தாள். அவளுக்கு நியாயமாகக் கோபமூட்டும் வகையில் நான் அடிக்கடி நடந்து கொண்ட போதிலும், எதுவும் தவறாக நடக்காதது போலவே அவள் அமைதியுடனிருந்தாள். அவள் நம்பிக்கை அவ்வளவு ஆழ்ந்ததாயிருந்தது. பல வாரங்கள் தொடர்ச்சியாக வராமலிருந்து ஒருநாள் வந்தால்கூட, நாள் தோறும் வருபவனை வரவேற்பது போல அவள் இன்முகத்துடன் என்னை வரவேற்றாள். எப்போது வந்தாலும் எப்படி வந்தாலும் அட்டியின்றி வரவேற்கும் இந்த அமைதி இறுதியில் எனக்கே மனவருத்தம் ஊட்டுவதாயிருந்தது. இவ்வரிய நம்பிக்கைக்கு இனிமேல் தகுதியுடையவனாயிருக்க வேண்டுமென்று நான் துணிந்தேன். ‘அவள் தாய் தந்தையர் உயிருடனில்லை. நான் அவளை எவ்வளவு கடுமையாக நடத்தினாலும் அவள் அவ்வளவு அமைதியாய் இருந்ததற்குக் காரணம் இதுவே. ஏனெனில் உலகத்தில் அவளுக்கிருந்த ஒரே தொடர்பு நான் தான். ஆயினும் அவள் வகையில் நான் கொண்ட உறுதி நீடிக்கவில்லை. விரைவில் அவளை நான் முன்னிலும் பன்மடங்கு மோசமாகவே நடத்த நேர்ந்தது. இச்சமயம் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி பின்னாட்களிலேயே எனக்குத் தெரிய வந்தது. எங்கள் நட்புறவை அறிந்து கொண்ட யாரோ ஒருவர் புதைவு மறைவாக அவளுக்குக் காதற் கடிதம் எழுதினர். இது அவளுக்கு அச்சமும் வேதனையும் அளித்தது. அவள் துயரத்தை உணராத நிலையில், நான் அவளை அடிக்கடி நினைத்த போதிலும், எப்படியோ நீண்ட காலம் அவளைக் காணாமலும் கடிதங்கள் அனுப்பாமலும் இருந்துவிட்டேன். அவன் மனத் துயரம் உச்ச நிலையடைந்திருந்த சமயத்திலேயே அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. எனவே அவள் “என் இயத்தின் ஏந்தல்” என்ற புனை பெயர் கொண்ட மலர் ஒன்றைக் கொய்து அதை எனக்கு அனுப்பி வைத்தாள்.’ இதைக் கூறும் சமயம் தோ நோ சூஜோவின் கண்கள் நீர் ததும்பிக் கலங்கி நின்றது. ‘சரி, மலருடன் அவள் செய்தி எதுவும் அனுப்ப வில்லையா?’ என்று கெஞ்சி கேட்டான். தோ நோ சூஜோ மறுமொழி கூறினான். ‘அவள் எழுதியது இது. “மலைவாணர் காட்டுவேலி முள்வேலியே யானாலும், அதன் மீது சிறிது கண்ணோட்டம் செய்தருளுக. ஏனெனில் அதனருகே ஏந்தல் மலர் இனிதாக வளர்கின்றது” “இக்கடிதம் கண்டதே நான் விரைந்து அவளிடம் சென்றேன். வழக்கம் போலவே அவள் என்னிடம் எதுவும் கடிந்து கொள்ளவில்லை. அவள் முகத்தில் வாட்டம் மிகுதியா யிருந்தது. அந்த இடத்தின் கவர்ச்சியற்ற தனிமைச் சூழலும் அதில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஏக்கமளிப்பதாகவே இருந்தன. அவற்றினிடையே பழங்கதைகளில் வரும் துயரார்ந்த அரசினர் செல்வியாகவே அவள் காட்சியளித்தாள். இந்நிலையில் நான் அவளை மகிழ்விக்க எண்ணினேன். குழந்தைக்காகவல்ல, அதன் தாய்க்காகவேதான் நான் வந்தது என்ற குறிப்புக் காட்ட முயன்றேன். இதற்காகக் “குழந்தை மலர்” என்று புனை பெயர் கொண்ட அப்பூவை என் பாடலில் “பாயல் மலர்” என்ற மற்றப் புனை பெயரால் குறிப்பிட்டேன். அவளும் அதே பெயராலேயே குழந்தையைச் சுட்டித் தன் மொழிப் பாடலில் அப்பாயல் மலரின் பிறப்பின் போது ஏற்பட்ட கொடும் புயல் பற்றி மெல்லச் சுட்டினான். ‘ஆயினும் அவள் என்னிடம் மென்னயத்துடனேயே பேசினாள். நேரடியாகக் கோபம் கொள்ளவில்லை. அவளை மீறி ஒன்றிரண்டு துளி கண்ணீர் விழுந்தபோது அவற்றைக்கூட என்னிடமிருந்து மறைக்க அரும்பாடுபட்டாள். என் நடத்தையால் அவள் கொண்ட துன்பத்தைவிட, அவள் துன்புறுவதாக நான் கருதுவது பற்றியே அவள் பெரிதும் துயரடைவதாகத் தோற்றிற்று. இதன் பயனாக, அவளை விட்டுச் செல்லும் போது என்மனம் அமைதியாகவே இருந்தது. நான் திரும்பி வரும் காலத்தை இதுவே இயல்பாக நீட்டித்தது. ஆனால், இறுதியில் நான் வந்த சமயம் அவள் மறைந்துவிட்டாள். அவள் உயிருடன் இருக்கின்றாளோ, இல்லையோ; உயிருடன் இருந்தாலும் அவள் மிக மோசமான நாடோடி வாழ்வு தான் நடத்திக் கொண்டிருக்க முடியும். ‘நான் அவளை நேசித்த காலத்திலேயே அவள் என் பிழைகளுக்குரிய தன் கண்டனத்தை ஒரு சிறிது வெளிப்படக் காட்டியிருந்தால், அவள் இப்படி வீடற்று நாடோடியாய்த் திரிந்தலைய வேண்டி வந்திராது. ஏனெனில் அந்நிலையில் நான் அவளை இவ்வளவு நெடுநாள் புறக்கணிக்கத் துணிந்திருக்க மாட்டேன். அத்துடன் இறுதியில் எப்படியும் அவள் பாசத்தை ஏற்று அவளை எனக்கு உரிமையாக்கிக் கொண்டிருப்பேன். அக்குழந்தையும் அழகுமிக்கதாகவே இருந்தது. அவர்களைத் தேடித் தேடி நான் நாட்கள் பல கழித்தும், இதுவரை அதில் வெற்றி எதுவும் காணவில்லை. ‘உமா நோ கமி உங்களிடம் கூறியதை ஒத்த துயரமிக்க கதை தான் இதுவும் என்று எண்ணுகிறேன். அவள் காதலித்தாள். காதலிக்கவும் பெற்றிருந்தாள். ஆயினும் காதலிக்கப் பெறாத காதலி நிலையைவிட அவள் நிலை எவ்வகையிலும் மேம்பட்டதாயில்லை. உண்மையில் நான் அவளை மறக்க முடிகிறது. விரைந்து மறந்து கொண்டு தான் வருகிறேன். ஆனால் அவள் என்னை மறக்க முடியாது என்றே நம்புகிறேன். மறக்க விரும்பும் உணர்ச்சிகள் அவள் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு தான் இருக்கக்கூடும். ஏனெனில் இப்போது அவள் வாழ்க்கை பாதுகாப்பும் அற்றது, மகிழ்ச்சியுமற்றது என்றே என் உள்ளம் கற்பனை செய்து காண்கிறது’ உமா நோ கமி மீண்டும் பேசினான். ‘நண்பரே! மொத்தத்தில் சென்றுவிட்ட அவளுக்காக நான் இப்போது ஏங்கி வாடினாலும், இருக்கும் போது அவள் ஒரு தீராத் தொல்லையாகவே இருந்தாள். இத்தகைய ஒருத்தியை இறுதியில் என்றேனும் ஒரு நாள் விட்டுத் தொலைக்க நான் விரும்பாது இருந்திருக்க முடியாதென்றே நான் மனமார எண்ணுகிறேன். அவளைவிட யாழ்நங்கை அறிவுத்திறம் மிக்கவளே. ஆனால், அவள் மிகுந்த சபல உணர்ச்சி கொண்டவள். இதுபோலவே, தோ நோ சூஜோ, ஓயா ஐயுறவு கொண்ட உங்கள் அணங்கும் மிகவும் ஐயுறவுக்கு இடமானவள் என்றே தோற்றுகிறது. ‘எனவே, அறிவார்ந்த வகையில், நாம் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், முடிவில் நாம் ஏமாற்றமே அடைவோம். உலகப் போக்கு அமையப் பெற்றுள்ள வகையே அது. எவ்வளவு தான் ஒப்பிட்டுப் பார்த்து அரித்துப் பொறுக்கித் தேர்ந்தெடுத்தாலும், எல்லா வகையிலும் எல்லா அளவிலும் போற்றத்தக்க நலமார்ந்த நங்கையை நாம் என்றுமே கண்டு தேர்தல் முடியாததாகும்!’ தோ நோ சூஜோ இப்போது இடைமறித்தான். ‘அழகுத் தெய்வமாகிய வானணங்கு கிச்சிஜோவை அத்தகைய அணங்கின் பண்புக்குச் சான்றாக நான் குறிப்பிட முடியும். ஆயினும் அவ்வளவு உயர்ந்த வீறமைதி வாய்ந்த ஒருவருடன் வாழ்வதென்பது நடைமுறைக்கு ஒவ்வாத தென்றே தோற்றுகிறது’ என்றான். இது கேட்டு எல்லாரும் சிரித்தார்கள். தோ நோ சூஜோ மீண்டும் –ஷிகிபுவின் பக்கம் திரும்பிப் பேசினான். ‘இனி ஷிகிபுவின் முறை. அவள் சுவைமிக்க ஏதேனும் நிகழ்ச்சி ஒன்று கட்டாயம் கூறுவான். வா, ஷிகிபு, பேச்சை நீயும் தொடர்ந்து செல்லவிடு’ என்றான். ‘என் போன்ற எளிய மக்களுக்குக் குறிப்பிடத்தக்க எந்தப் பெரு மகிழ்ச்சியும் நிகழ்வதில்லை’ என்று ஷிகிபு தட்டிக் கழிக்க எண்ணினான். ஆனால் இப்படிப் பேசி மற்றவர்களைக் காக்க வைப்பது தவறு என்று தோ நோ சூஜோ அவனைக் கடிந்து கொண்டான். அவனும் தோழர்களுக்குப் பொருத்தமான நிகழ்ச்சி எது என்று சிறிது ஆழ்ந்து யோசித்த பின் தொடங்கினான். ‘நான் பல்கலைக் கழகத்திலே ஒரு மாணவனாக இருந்த சமயத்திலேயே ஒரு பெண் எனக்குத் தெரியவரலானாள். அவள் அதிசயிக்கத் தக்க ஓர் அறிவுப் பிழம்பு. சிறந்த பெண்களுக்குரிய இலக்கணங்களாக உமா நோ கமி குறிப்பிட்ட பண்புகளில் ஒன்று அவளிடம் இருந்ததென்பதில் ஐயமில்லை. ஏனெனில் பொதுச் செய்திகள் பற்றியும் சரி, தனிப்பட்ட விவகாரங்கள் பற்றியும் சரி - அவளிடம் சரிவரப் பேசி எவரும் நற்பயன் பெற முடியும். ஆனால் இத்தகைய பிரச்சினைகள் அறிந்து கையாளுவதுடன் அவள் திறமை நின்றுவிடவில்லை. கற்றறிந்து தேர்ந்த புலவர்கள் கூட அவளுடன் சரிசம நிலையில் பேச முடியாது. அவர்களைத் தலைகுனிய வைக்கும் அளவு அவள்அறிவு ஆழ அகல முடையதாய் இருந்தது. ‘அவள் தந்தை ஒரு பேராசிரியர். அவரிடம் நான் பாடம் பயின்று கொண்டிருந்தேன். அவருக்குப் பல புதல்வியர் இருந்ததாக நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆயினும் தற் செயலான சூழ்நிலை நிகழ்ச்சிகளால் அவள் ஒருத்தியினிடமே நான் ஒன்றிரண்டு சொற்கள் பரிமாற நேர்ந்தது. அப்பெண்ணே நான் குறிப்பிட்ட அறிவாரணங்கு. நாங்களிருவரும் ஒருங்கே காணப்பட்டது தந்தை செவிக்கு எட்டிற்று. அவர் உடனே கையில் இனிய தேறல் கலத்துடன் என்னை அணுகினார். ‘இரு மனைவியர்’ பற்றிய பாடலையும் சாடையாகச் சுட்டிக் காட்டினார். ‘துரதிருஷ்ட வசமாக, எனக்கு அவ் வணங்கிடம் ஒரு சிறிதும் விருப்பம் ஏற்படவில்லை. ஆயினும் அவளிடம் இணக்க நயத்துடனேயே பழகினேன். அவன் அதன்மீது என்னிடம் மிகுந்த அக்கறை காட்டினான். உலகில் முன்னேறுவதற்கு நான் என்னென்ன செய்ய வேண்டுமென்று எனக்கு அறிவுரைகள் பல எடுத்துரைத்து விரிவான விளக்கங்கள் வழங்கினாள். அவள் எனக்கு அனுப்பிய கடிதங்கள் வியத்தகு முறையில் கடித இலக்கண நடையில் அமைந்திருந்தன. முற்றிலும் சீன எழுத்துகளையே அவள் கையாண்டு தன் புலமை காட்டினாள். இதற்கு ஒரு கைம்மாறாக அவளைச் சென்று காண்பது என் கடமை என்று கருதினேன். அவளையே என் ஆசிரியராக்கிச் சீன மொழியின் கவிதைகள் இயற்றக் கூடப் பழகிக் கொண்டேன். ‘என் கவிதை முயற்சிகள் மோசமானவை, தட்டித் தடவித் தள்ளாடியவை. ஆயினும் அந்த அளவேனும் கற்றதற்கு நான் இன்னும் அவளிடம் நன்றியுடையவ னாயிருக்கிறேன். ஆனால் இந்நிலையிலும் அவள் எவ்வகையிலும் என் மனைவியாகத் தக்கமாதிரி அணங்கல்லள். ஒரு முழு மூடத்தைக் கட்டிக் கொண்டு வாழ்வதில் எவ்வளவோ இடர்கள் இருக்கக் கூடுமானாலும், புலமை சான்ற ஓர் உயர் அறிவார்ந்த நங்கையை மணஞ்செய்வது அதனிலும் பெருந்தொல்லைகள் தருவது ஆகும். கெஞ்சியையும் உங்களையும் போன்ற இளவரசர்கள்கூட இவ்வளவு புலமை மூட்டையையும், அறிவு மூட்டையையும் சுமக்கும்பெண்ணை உங்களுக்கு ஆதரவாகக் கொள்ள மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். ‘பெண்கள் அவ்வப்போது தங்கள் அறியாமையால் தமக்குத் துன்பம் விளைவிப்பவராய் இருந்தாலும் கூடக் கேடில்லை. நம் பழம் பிறவிகளின் வினைப் பயன்கள். நம்மை அவளுடன் இயல்பாக ஒத்த உணர்வில் இணைத்தால் போதுமானது. முற்றிலும் தெளிவாகச் சொல்லப்போனால், ஆடவர்களுக்குக்கூட இவ்வளவு பெருங்கல்வி வாழ்க்கையில் நன்கு முன்னேறுவதற்கு அவசியமன்று என்றுதான் நான் கூறுவேன்.’ இத்துடன் அவன் பேச்சை நிறுத்தினான். ஆனால், கெஞ்சி இளவரசனும் பிறரும் கதை முழுவதையும் இயல்பான முடிவுவரை கேட்க விரும்பினர். ஆகவே அவ்வணங்கு முற்றிலும் போற்றத்தக்க பண்புடையவளே என்று சாதித்து அவளைக் கிளற முயன்றனர். ஆயினும் கதையைத் தான் இன்னும் தொடர முடியாது என்று ஷிகிபு எவ்வளவோ மறுத்தான். பின் எவ்வளவோ முகத்தைக் கோண வைத்துப் பிகுச் செய்தபின், ஒருவாறு தொடர்ந்தான். ‘நான் நீண்ட நாட்களாக அவளைப் பார்க்கவில்லை. இறுதியில் தற்செயலாக அவள் வீட்டுக்குச் செல்ல நேர்ந்த பொழுது, அவள் வழக்கம்போல இயல்பாக என்னை வரவேற்க வரவில்லை. வெறுக்கத்தக்க முறையில் ஒரு திரை மறைவிலிருந்து பேசலானாள். “ஓகோ, இப்போதுதான் இவள் ஊடுகிறாள் போலிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தான் இவளிடமிருந்து முறித்துக் கொள்ள வேண்டும்” என்று நான் என் அறியாத்தனத்தினால் நினைத்துக் கொண்டேன். சிறு செய்தி களுக்காக முகம் கோணும் இயல்புடையவர்களல்லர் அவ்வளவு அறிவு மிக்கவர்கள் என்பதை நான் சிறிது மறந்திருந்தேன். உலகியலை நன்கு அறிந்ததாக அவள் பெருமையடித்துக் கொள்பவள். என் பாசத்தின் குறைபாட்டைப் பற்றி அவள் ஒன்றுமே கவலைப்படுபவளுமல்லள். ‘ஒரு சிறிது கூடத் தயங்காத குரலிலேயே அவள் என்னுடன் பேசினாள். சில வாரங்களாக அவளுக்கு நீர்க் கொண்டிருந்ததாம். அதனால் அவள் காரமான பூண்டுத் தைலம் உட்கொண்டிருந் தாளாம். இது அவள் மூச்சுக்கு அருவருப்பான வாடையை அளித்திருந்ததனாலேயே, அவள் என்னருகே வரத் தயங்கினாளாம். ஆயினும் தனி முக்கியத்துவம் வாய்ந்த செய்தி ஏதேனும் இருந்தால் அது பற்றிக் கவனம் செலுத்தி வாதிக்க அவள் சித்தமாகவே இருந்ததாகக் கூறினாள். இவ்வளவையும் அப்பழுக்கற்ற முழுநிறை இலக்கிய நடையிலே அவள் தெரிவித்தாள். ‘இதற்கு என்ன தகுதியான விடையளிப்பது என்று அறியாமல், நான் “போய் வருகிறேன்” என்று எழுந்தேன். சந்திப்புத் தனக்கு அவ்வளவு சுமுகமான வெற்றி குறிப்ப தாயில்லை என்று கண்டு, அவள் சற்று உயர்த்திய குரலில் பின்னும் பேசினாள். “என் மூச்சுக்கு இவ்வாடை அகன்ற பின், தயை கூர்ந்து திரும்பி வாருங்கள்” என்றாள். ‘இது செவியில் படாதது மாதிரி என்னால் நடித்து விட முடியவில்லை. அதே சமயம் சந்திப்பை நீட்டிக்கவும் எனக்கு விருப்பம் கிடையாது. ஏனெனில் அவ்வாடை இச்சமயம் முற்றிலும் பொறுக்க முடியாததாயிற்று. சிறிது கடுமையாக நான் என் உட்குறிப்பு அமைய ஒரு பழஞ் சிலேடைப் பாடலைக் கூறினேன். ‘மாடத் தலையில் ஆடற் சிலந்தி பீடில் வருகை குறித்த இவ்விரவின் நினைப்பூட்டுத் தைல நாளின் மறுநாள் மனைக்கட் படவிழைந் தனையோ?’ இப்பாடலையடுத்து நான் போகிற போக்கிலேயே முகம் திரும்பியவாறு, “உன் பிழை மறத்தற்குரியதன்று” என்று கூறிக் கொண்டே விரைந்தேன். ஆனால், அவளோ என்னைத் தொடர்ந்தே வந்தாள். “இரவோடிரவாக, ஒவ்வோர் இரவும் நாம் சந்திக்கும் நாட்களில், நினைப்பூட்டு நாளிலும் நான் சந்திக்கத் துணிவேனே” என்று அவள் கூறினாள். நினைப் ‘பூட்டும்’ நாள், நின்னைப் பூண்டு நாள் என்ற என் பாட்டின் சிலேடையை அவளும் திறம்படக் கையாண்ட அருமையை நான் காணா மலில்லை. உன்னை எதிர்பார்த்திருந்தால், பூண்டுத் தைலம் உட்கொண்டிருக்க மாட்டேன். சந்தித்திருப்பேன் என்ற குறிப்பு அதில் தொக்கி நின்றது.’ ‘என்ன பொருந்தாப் புளுகுக் கதை இது?’ என்று இளவரசன் கேட்டான். அனைவரும் இது கேட்டுச் சிரித்தனர். ‘இதை இவன் இட்டுக் கட்டித்தான் கூறியிருக்க வேண்டும்’ என்றும் ஏளனம் செய்தனர். ‘இப்படி ஒரு பெண் இருப்பாள் என்பதே நம்பமுடியாத செய்தி. இருந்தால் அத்தகையவள் ஓர் அரக்கியாகவே கருதப்பட முடியும். இத்தகைய கதை மூலம் எங்களுக்கு அதிர்ச்சியூட்டி விட்டாய் ஷிகிபு!’ என்று எல்லாரும் அவனைக் கடிந்து கொண்டனர். அத்துடன் இதனினும் நல்லதாக நீ கட்டாயம் ஒரு கதை கூறியாக வேண்டும்’ என்றும் வற்புறுத்தினர். ‘இதைவிட நல்லதாக எந்தக் கதை தான் இருக்க முடியும்? என்று கூறியவாறு ஷிகிபு அறையை விட்டே வெளிச்சென்று விட்டான். உமா நோ கமி இப்போது தொடங்கினான். ‘ஆடவரிடமும் சரி, பெண்டிரிடமும் சரி இப்போது ஒரு போக்கு வளர்ந்து வருகிறது. ஏதோ ஒரு சிறிது கற்றுவிட்டால், உடனே தங்கள் அறிவைப் பெரிதாக்கிக் காட்டிவிட வேண்டுமென்று விரும்பிவிடுகிறார்கள். ஆனால் மூன்று வரலாறுகளையும் ஐந்து இலக்கண இலக்கியங்களையும் கற்று விடுவது கூடப் பண்பாட்டுக்கு வழி வகுத்ததாக ஆகிவிட மாட்டாது. அதே சமயம் அவற்றை உணராத ஒரு பெண்பாலர் கூட எல்லாப் பொது அறிவும் தனிமுறை அறிவும் பெறமுடியாதென்று கூறுவதற்கில்லை. இதை அடைய அவள் முறையாகப் படிக்க வேண்டாம். கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டு, இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பொறுக்கித் தேர்ந்தால் போதும். அதன் பின் இயற்கை அறிவைமட்டும் தளரவிட வில்லையானால், அவள்தான் எதிர்பாராத அறிவுநலங்கள் எய்தப் பெறுவது உறுதி. ‘ இத்துடன் அவள் திருப்தி அடையட்டும். பெண்டிர் மொழிநடைக்குச் சிறிதும் ஒவ்வாத முறையில் சீன வடிவங்களுடனேயே எல்லா எழுத்துகளையும் உருப் போட்டுவிட அவள் முனைந்துவிடக்கூடாது ஏனெனில் அத்தகைய கடிதங்களைப்பெறுபவர்.‘ஐயோஇந்த ஆண் மாரித்தனம் சற்றுக் குறைந்து சிறிது பெண்மைக்கு இடமிருந் திருக்கக் கூடாதா? என்றே ஏங்குவர். பேச்சு நடையில் இந்தச் சீனக் குறியீடுகளுக்குரிய ஒலிப்பையே எழுதியவர் குறித் திருக்கலா மானாலும், அவற்றின் சீனக்கலப்பையே கருத்துள் கொண்டு வாசிப்பவர் இன்னும் மிகுதியாகத் திணறக் கூடும். புத்தம் புதிய பாணியை மேற்கொள்ளும் நம் உயர்குடி நங்கையரிடங்கூட இம் மாதிரிப் பெண்கள் உண்டு. அத்துடன் வேறு பலர் செய்யுளமைதியைத் தம் வயப்படுத்திவிட எண்ணி, இறுதியில் தாமே அதன் வயப்பட்டு அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். காரியம் எவ்வளவு அவசரமானதா யிருந்தாலும், நேரம் எவ்வளவு பொருத்தமற்றதானாலும் தம் நினைவில் எழுந்த சில மேற்கோள் உவமையணி நயங்களை விடாது புகுத்தும் எண்ணத்துடன் அவர்கள் தம் எழுத்து மேடையருகே சென்று குந்திக் கொண்டு கவிதையி லாழ்ந்து விடாமல் இருக்க முடிவதில்லை. ‘ விழா நாட்களில் இத்தகைய அணங்கு மிகவும் தொல்லை தருபவள் ஆகிறாள். வானவில் அணங்கின் விழாவிலே எல்லோரும் அவள் அவ்விழாவின் குறியீடான ஒன்பது மலர் இணைந்த வேர் பற்றிய பழங் குறிப்புகளைத் தேடிக் கோத்துக் கொண்டு எல்லோருக்கும் தொந்தரவு உண்டு பண்ணுவாள். ஒன்பதாவது மாதம் ஒன்பதாவது நாளில் மற்றெல்லாரும் தத்தமக்கு அளிக்கப்பட்ட எதுகைச் சட்டத்திற்கேற்ற நொற்களைத் தேடிக் கொண்டிருக்கும் சமயம், அவள் பொன்னரளி மலர் மீது உள்ள பனித்துளியை அதனுள்ளே உவமையாகத் திணிக்க முயன்று, அதற்காகத் கைவசமுள்ள முக்கிய வேலையி லிருந்து எல்லார் கவனத்தையும் நழுவச் செய்வாள். மற்றும் சில சமயம் அவர்கள் இயற்றியவை இயல்பாக இன்பமளிக்கத் தக்கவையாய் அமைந்திருந்தாலும், அவள் வேளை வாய்ப்புகளைக் கவனியாமல் தவறானநேரத்தில் அவற்றைப் பிறர்மீது திணிப்பதால் நச்சரிப்புக் குரியவள் ஆகிவிடு கிறாள் அவற்றை ஆய்ந்தமைந்து துய்க்க முடியாத மக்கள் அச் சமயம் அவ்வணங்கிற்கு இயல்பான தீமையை விட மிகுதியான தீங்கை அவள் மீது சுமத்தி விடுவர். ‘ புத்தக அறிவைவிட மக்கள் முகக் குறிகளை அறியும் அறிவே ஒருவருக்கு மதிப்புத் தருவதாகும். “ எதற்காக?” என்ற சிடு சிடுப்புவரை முகத்தில் தோன்றி எச்சரிக்கும். “சரி அப்படியே!” என்ற இணங்குபவரையோ ஊக்கும். இவற்றையோ நேரச் சுழல் வாய்ப்புகளையோ கவனியாதவர்கள் பிறர் கவனத்துக்கும் ஒத்துணர்வுக்கும் உரியவர்கள் ஆகமுடியாது. ‘ சிற்சில சமங்களில் பெண்கள் தமக்குத் தெரிந்த அளவை விடக் குறைவாகவே அறிவதாக நடித்தல் நலம். அதுபோல அடிக்கடி சொல்ல விரும்புபவற்றில் ஒரு பகுதியையே...’ இவ்வளவு நேரமும் கெஞ்சி உரையாடலில் அவ்வப் போது இடையிடையே கலந்து கொண்ட போதிலும் தன் உள்ளத்தின் உள்ளாக ஒருவரைப் பற்றிய ஒரே சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தான். அந்த ஓர் அணங்கைப் பற்றி அவன் சிந்திக்குந்தோறும், சிந்திக்குந்தோறும் பெண்ணினத்துக்கே யுரியவையாக நண்பர்கள் குறித்த குறைபாடுகள், மிகைபாடுகள் ஆகியவற்றில் எதன் தடத்தையும் அவன் அவளிடம் காண முடியவில்லை. ‘ அவளைப் போல யாரும் இல்லை!’ என்று அவன் நினைத்தான் - அவன் உள்ளம் நிறைவடைந்திருந்தது. நண்பர் உரையாடல் அவர்களை ஒரு தெளிவான முடிவுக்குக் கொண்டு வரவேயில்லை. ஆனால், அது பல புத்தார்வக் கதைத் துணுக்குகளுக்கும் கருத்துகளுக்கும் மட்டும் இடம் தந்தது. இரவை இவ்வாறு. கழித்துவந்தவர்கள் இறுதியில் திடுமென வானிலை மாறி விட்டது கண்டனர். மழை ஓய்ந்து விட்டது. கெஞ்சி இளவரசன் அரண்மனையிலேயே இப்போது நீண்ட காலம் கழித்து விட்டதால், பெரு மாடத்தில் தன்னை யாவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று உணர்ந்தான். அவ்விடத்துக்கே புறப்பட்டான். ஆய் இளவரசியின் தோற்றத்திலும் ஆடையணி யமை தியிலும் ஒரு திட்ப நுட்பம், பெருமித வீறு - சிறிது கடுமை வாய்ந்த வீறமைதியே காணப்பட்டது. முந்திய இரவில் நண்பர்கள் பேச்சில் எந்த மனிதனும் எளிதில் புண்படுத்திவிடத் துணியாத அளவில் ஒரு மனத் திட்பமும் பற்றுறுதியும் வாய்ந்த மனைவி பற்றிய செய்தி அடிபட்டிருந்தது. மற்ற எந்தப் பெண்டிரையும் விட, அந்த வகைக்கு ஒப்பற்ற முன் மாதிரியாகவே இளவரசி விளங்கினாள் என்று கெஞ்சி எண்ணாமலிருக்க முடியவில்லை. ஆனால் அந்த எண்ணமும் சரி, அவளது மாசு மறுவற்ற முழுநிறை அழகும் சரி அவன் உள்ளத்தில் தாங்கொணாப் பளுவுடன் அழுத்தினவேயன்றி வேறல்ல. அவளை அணுகி நட்பாடுவதும் முடியாது என்று நிலையை அவையே உண்டுபண்ணின. இளவரசன் கெஞ்சி இப்போது வேறு பக்கம் தன் கவனம் திருப்பினான். சுனாகன் பெருமாட்டியிடமும் இளவரசியின் மற்றப் பொது நிலைப் பணிப் பெண்டிரிடமும் அவன் கலந்து நகையாடி மகிழ்ந்தான். இப்போது நண்பகல் கடுவெப்பேறி வந்தது. அதனால் சிவந்த இளவரசனுடைய கன்னங்கள் அவனது அழகுக்கு அழகு செய்தன என்றே அப்பெண்டிர் கருதினர். ஆய் இளவரசியின் தந்தை இச்சமயம் வந்து திரைக்கு அப்பால் நின்றுகொண்டே மருமகனுடன் அன்புரையாடினார் வேளையின் வெப்பு எவர் வருகை தருவதற்கும் இசைவற்றது என்று கருதிய இளவரசன் இவ்வுரையாடலை விரும்பாது முகஞ்சுளித்தான். இது கண்டு பாங்கியர் அவனைக் கேலி செய்து அடங்கிய முறையில் நகையாடினர். கெஞ்சி அவர்களை அமைதிப்படுத்தும் முறையில் கடுமையுடன் நோக்கியவாறு பஞ்சணையில் சாய்ந்து விழுந்தான். அவன் நடத்தை இந்த மாடத்தில் ஏனோ நன்கு அமையவில்லை. இச்சமயம் இரவின் நிழல் படரத் தொடங்கிற்று ஆனால், சனி உச்ச நிலையிலிருந்த தென்றும், அதனால் கெஞ்சி இளவரசன் அரண்மனைக்கு இச்சமயம் செல்வது சரியல்ல வென்றும் எவரோ கூறினார்கள். மற்றொருத்தி, ‘ ஆம், நீ கூறுவது முற்றிலும் சரி. அது இப்போது பெருந் தடைதான்’ என்றாள். இதுகேட்டு இளவரசன் பொருமினான். ‘அந்தோ, என்ன பரிதாபம்! என் மாளிகையும் அதே திசையிலல்லவா இருக்கிறது? இப்போது நான் எங்கே போவேன்?’ என்று முணு முணுத்தான். ஆனால் முணு முணுத்தவாறே அவன் சாய்ந்து துயிலில் ஆழ்ந்தான். அவன் கவலை இப்போது பாங்கியரிடையே ஆழ்ந்த சிந்தனைக் குரியதாயிற்று அவர்கள் செய்வகை யாது என்று ஆராயத் தொடங்கினர். ‘ஏன்? கீ நோ கமியின் மனையில்லையா?’ என்றாள் ஒருத்தி. இந்தக் கீ நோகமி கெஞ்சியின் பாங்கருள் ஒருவன். அவன் மனை ஆற்று நடுவே அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் அணிமையில் ஆற்றில் அணைபோட்டு, அதை அவன் மனைப்புறத் தோட்டத்தின் வழியே ஓடும்படி செய்திருந்தார்கள். இதனால் அம் மனையகம் இன்பகரமான நிழலும் குளிர்ச்சியும் உடையதாயிருந்தது. கெஞ்சி இச் சமயம் பார்த்து விழித்துக் கொண்டான். ‘ஆகா, இது மிக நன்று, நன்று. மேலும் நாம் முன் வாசலில் திடுமென நுழைய விரும்பினாலும், அதைப் பொருட் படுத்தாத மக்கள் வாழும் மனை அது’ என்றான். தகாத திசைகள் என்று குறிப்பிடப் பட்டவற்றை நீக்கி மற்றத் திசைகளிலும் கெஞ்சிக்கு எத்தனையோ நண்பர் மனைகள் இருந்தன. ஆயினும் அவற்றில் ஒன்றிலும் அவன் இரவைப் போக்க விரும்பவில்லை.ஏனென்றால் இவ்வளவு நீண்ட காலம் வராதிருந்த பின், இப்போது தன்னைவிட நல்ல பொழுது போக்குத் துணை கருதியே வான கோளங்களின் சாக்கில் அவன் வேறிடம் செல்வதாக இளவரசி ஆய் நினைத்துக் கொள்ளக் கூடும். இதை அவன் விளக்க எண்ணினான். கீ நோ கமியிடம் கெஞ்சி இதைத் தெரிவித்த போது அவன் இதற்கு அட்டியில்லாமல் இணங்கினான். ஆயினும் மற்றத் தோழர்களிடம் அவன் முணு முணுத்தான். அவன் தந்தை இயோ நோ கமி தன் அலுவல் காரணமாக வெளியிடம் சென்றிருந்தான். தன் இள மனைவியைப் பாதுகாத்துக் கொள்ளும்படி அவன் மைந்தனிடம் கூறியிருந்தான். ‘இக் காரணத்தால் நான் விரும்பும் அளவு இளவரசனுக்கு வேண்டிய இடவசதி செய்ய முடியாதே என்று வருந்துகிறேன்’ என்றான் அவன். கெஞ்சி இதனை உற்றுக் கேட்டு, அவன் கவலையை இனிய நகை முகத்துடனே அகற்றினான். ‘நீ கவலை கொள்ள வேண்டாம், கீ நோ கமி! அம் மாதரசியின் அருகிலேயே இருக்க நேர்வது பற்றி நான் மகிழ்கிறேன். மனைபுகும் சமயம் வரவேற்க ஒரு மனைத் தலைவி இருப்பதும் விரும்பத்தக்கது தானே! மேலும் அம் மாதரசியின் திரை மறைவிலேயே எனக்கு ஒரு மூலை கிடைத்தால்-.......’ கீ நோ கமி இந்தக் கேலியைப் பொருட்படுத்தவில்லை. ‘அப்படியும் உங்களுக்கு’ என்று தன் வசதிக் குறையை விளக்கப் புகுத்தான். ஆயினும் அதைக் கூறி முடிக்காமலே ஓர் ஏவலனை அனுப்பி இளவரசனுக்கு மனையின் ஓர் அறையைச் சித்தம் செய்யும்படி சொல்லியனுப்பினான். இவ்வளவு எளிய மனை செல்வதை இயல்பான ஒரு நிகழ்ச்சியாக்கி, கெஞ்சி ஒரு சில நம்பகமான மெய்க்காவலரை மட்டும் உடன் கொண்டு அக்கணமே புறப்பட்டான். இவ்வளவு அவசரம் வேண்டா மென்று கீ நோகமி தடுத்தும் கெஞ்சி அதைப் பொருட் படுத்தவில்லை. கீ நோ கமியின் மனையில் நடுக் கூடத்தின் கீழ்கோடி அறையைத் தூசு துடைத்துத் துப்புரவு செய்து வேலையாட்கள் அதை இளவரசன் தற்காலிகத் தங்கலிடம் ஆக்கினர் அத்துடன் பலகணிகளின் பக்கமிருந்து பார்க்கத் தக்க மனைப்புறப் பகுதிகளின் அழகில் அவர்கள் பெருங் கருத்துச் செலுத் தினார்கள். அதற்காகவே அவர்கள் சில ஓடைகள், கால்வாய்களின் போக்கை மாற்றியமைத்தார்கள். நாட்டுப்புறப் பாணியில் தட்டிவேலிகள் அமைத்து அதனருகே அழகிய செடி கொடிகளை நட்டனர். செடி கொடிகளிடையே குளிர் நறுந்தென்றல் இனிது தவழ்ந்தது. அவற்றின் மீது வண்டினங்களின் இனிய கீதம் மிதந்தது. வானவெளியில் எண்ணற்ற மின் மினிகள் அழகிய இருள் ஒளிக் கோலங்கள் இட்டன. மனை சூழ்ந்த அகழி மீது மனை செல்வதற்குரிய பாலம் அமைந்த இடத்தருகே வந்து இளவரசன் குழாத்தினர் அமர்ந்து குடித் திளைப்பாறினர். அவர்கள் உணவுக்கு ஏதேனும் கொண்டு வருவதாகக் கூறிக் கொண்டு கீ நோ கமி அவசர அவசரமாகச் சென்றான். கெஞ்சி அமைந்த உள்ளத்துடன் சூழலிலுள்ள காட் சியழகைக் கண்டு களித்தான். பெண்ணினம் பற்றிய சென்ற இரவின் உரையாடலிலே, நடுத்தர வகுப்புத்தான் நண்பர் அனைவரின் பேரளவு பாராட்டுக்கும் உரியதாயிருந்தது. தான் இப்போது காண வந்ததும் அத்தகைய ஒரு குடும்பமே என்று கெஞ்சி உணர்ந்தான். வீட்டிலுள்ள மாதரசியை எல்லாரும் புகழ்வது கேட்டு. அவளைக் காண அவன் ஆவலுடையவனாய் இருந்தான். இந்நோக்கத்துடன் நின்ற அவன் செவிகளில் மனையின் மேல் சிறகில் மனித அரவங்கள் கேட்பன போலிருந்தன. அவன் உற்றுக் கவனிக்கலானான். பெண்டிர் மெல்லாடைகளின் சலசலப்பு, காதுகள் விரும்பிக் கேட்கத்தக்க இனிய இளங்குரல்கள் அவ்வப்போது எழுந்தன. அவர்கள் அடங்கிய குரலில் பேசுவது போலவும் நகைப்பது போலவுமே தோற்றினாலும், உண்மையில் எவரும் கேட்காதபடி பேச வேண்டும் என்ற கவலை கொண்டவர் களாகத் தெரியவில்லை. ஏனென்றால் இளங்குரலுக்குரியவர்களுள் ஒருத்தி இளவரசன் தங்கிய திசை நோக்கிய ஒரு பலகணியைத் திறக்கத் தொடங்கினாள். ‘இது என்ன தகாவேலை?’ என்று கண்டித்த வண்ணம் கீ நோ கமி அதை மீண்டும் மூட வேண்டிய தாயிருந்தது. அறையிலிருந்த ஒரு விளக்கின் ஒளி தாளட்டையாலான பலகணியின் ஒரு கீறல் வழியாக வெளியே தெரிந்தது. கெஞ்சி இப்பலகணியின் அருகாக மெல்ல நகர்ந்து அதன் வழியாக உள்ளிருப்பவர்களைக் காண அவாவினான். ஆனால் அவ்வழியே எதுவும் காணமுடியவில்லை. பெண்களனைவரும் அவர்களுக் குரிய நடு அறையிலேயே இருந்தார்களென்றும், அதனையடுத்த வெளியறையிலேயே தன் பார்வை சென்ற தென்றும் ஊகித்தான். அவர்கள் மிகத் தாழ்ந்த குரலில் தான் பேசினார்கள். ஆயினும் ஆங்காங்கே தெளிவாகக் கேட்ட சில சொற்கள் மூலம் அவர்கள் தன்னைப் பற்றித் தான் பேசினார்களென்று கெஞ்சி எளிதாக அறிய முடிந்தது. ‘போடி, என்ன வெட்கக் கேடடி இது? இவ்வளவு அழகான இளவரசனை இவ்வளவு சின்னஞ்சிறு வயதில் அவனாக விரும்பாத ஒரு சீமாட்டிப் பொம்மையுடன் சென்று கட்டி வைத்திருக்கிறார்களே!’ என்றாள் ஒருத்தி. ‘இந்த மணவாழ்க்கை பற்றி இளவரசருந்தான் ஒரு சிறிதும் பொருட்படுத்துவதில்லையாமே, இதற்கென்ன சொல்லுகிறாய்?’ என்று கேட்டாள் மற்றொருத்தி. அவர்கள் இயல்பாகவே பேசினார்கள். எதையும் குறிப்பாக உள்ளத்தில் கொண்டு பேசவில்லை. ஆனால் தன் நெஞ்சில் நிறைந்து ததும்பி வழியும் செய்தியையே அவர்களும் தங்கள் உள்ளத்தில் கொண்டு பேசுவதாகக் கெஞ்சி எண்ணினான். ‘அந்தோ! புஜித் சுபோ சீமாட்டியுடன் உள்ள தன் உறவு இந்த அளவு விவாதிக்கப்படத் தொடங்கி விட்டதா? இதை அவர்கள் எவ்வாறு அறிந்திருக்கக்கூடும்?’ என்று அவன் சிந்தனை யிட்டான். ஆனால், அடுத்து அவர்கள் பேசிய பேச்சின் போக்கு அவன் ஐயத்தைப் போக்கிற்று. அச்செய்தி பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது கண்டு உற்றுக் கேட்பதைச் சற்று நிறுத்தினான். ஆனால், அதற்குள் உரத்த குரலில் மீண்டும் பேச்சு எழுந்தது. இளவரசன் மொமோஸோனோவின் புதல்வி அசகாவ் இளவரசியிடமும் கெஞ்சி இளவரசன் நட்பாடியிருந்தான். முன்னொரு நாள் அவளுக்கு ஒரு காலை மந்தாரைச் செண்டுடன் ஒரு பாடலையும் அனுப்பியிருந்தான். இப்போது மனையகத்தில் கூடிக் குலவிய பெண்களில் ஒருத்தி அந்தப் பாடலையே பாடிக் காட்டுவது கேட்டு அவன் வியப்படைந்தான். பாடலைத் தவறாகவும் தலை கீழாகவுமே அவள் பாடினாள். அவள் மனைத் தலைவியாகவே யிருக்க வேண்டுமென்று ஊகித்து, அவள் அழகும் அவள் யாப்பிலக்கண அறிவைப் போன்றதாகவே இருந்து விடுமோ என்று அஞ்சினான். இச்சமயம் கீ நோ கமி ஒரு விளக்குடன் வந்து அதைச் சுவரில் மாட்டினான். அதை நன்றாகக் கத்திரித்துக் திருத்திய பின் கெஞ்சியிடம் ஒரு பழத் தட்டையளித்தான். ஆனால், கெஞ்சிக்கு இத்தகைய செயல்கள் எதுவும் எழுச்சியூட்டவில்லை. ‘மனைக்குரிய உன் மற்ற உறவினர்களை நான் காண வேண்டாமா? என்று மெல்லக் கேட்டான். ஆனால், நீ நோ கமி அந்தக் குறிப்பை உணர்ந்து கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. அத்துடன் கெஞ்சி செயலற்று மெல்லச் சாய்ந்து கண்ண யரலானான். அவன் ஏவலர்கள் வாயாடாமல் அடங்கி அமர்ந் திருந்தனர். அறையிலிருந்தவர்களிடையே கீ நோ கமியின் மைந்தராகிய சிறுவர் இருந்தனர். அரண்மனைப் பணிப் பையன்களென்ற முறையில் அவர்களில் சிலரைக் கெஞ்சி ஏற்கனவே அறிந்திருந்தான். அவர்களுடன் இயோ நோகமியின் பல புதல்வர்களும் இருந்தார்கள். மற்றும் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயதுடைய ஒரு சிறுவன் தோற்றம் கெஞ்சிக்குக் கவர்ச்சி யூட்டிற்று. அவனைப் பற்றி அறியும் அவாவில் அவன் சிறுவர்களைப் பொதுவாகக் கீ நோ கமிக்குக் காட்டி, ‘இவர்கள் யார் யார் பிள்ளைகள்!’ என்று கேட்டான். ஒவ்வொருவராக விவரம் கூறிக் கொண்டு வந்து, கீ நோ கமி அச் சிறுவனைப் பற்றியும் விளக்கினான். ‘அவன் காலஞ் சென்ற சுனாகனின் கடைசி இளம் புதல்வன். சுனாகன் அவனிடம் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தான், ஆனால் அவன் குழந்தையா யிருக்கும் போதே உயிர் நீத்தான். அவன் தமக்கையே என் தந்தையை மணஞ்செய்து கொண்டவள். அவன் இங்கே வந்து வாழ்வதன் காரணம் இதுவே. படிப்பில் அவன் சூட்டிப்பாகவே இருப்ப தனால், அரண்மனைக்கே அவனை ஒரு நாள் அனுப்பலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆயினும் அதற்குரிய செல்வாக்குக் கிடைக்குமோ என்று மட்டும் ஐயுறுகிறோம்’ என்றான். கெஞ்சி சிறுவன் நிலைக்கு இரங்கினான். ‘பாவம், ஏழைச்சிறுவன்!’ என்று கூறி மெல்லப் பேச்சை நீட்டினான். ‘இப்போது இவன் தமக்கை தான் உன் மாற்றாந்தாய், அல்லவா? ஆயினும் என்ன விசித்திரம், இவ்வளவு இளம் பெண்ணுடன் உனக்கு எத்தகைய உறவு? அத்துடன் - ஆம், இப்போது எனக்கு நினைவு வருகிறது- அவளை அரசவையில் முன்னிலைப் படுத்தும் பேச்சுக்கூட இருந்தது என்று எண்ணுகிறேன். சக்கரவர்த்திகூட அவள் செய்தி என்ன என்று ஒருதடவை விசாரிக்கக் கேட்டிருக்கிறேன். உலகின் போக்கில்தான் எவ்வளவு ஏற்றத் தாழ்வுகள் மாறுதல்கள் ஏற்படுகின்றன, பார்!’ என்று பெரிய வேதாந்தி பேசுவது போலப் பேசினான். கீ நோ கமி பணிவுடன் பதிலளித்தான். ‘ஆம், இளவரசே! அவள் முதலில் எதிர்பார்த்ததை விடப் பின்னால் அவளுக்குக் கிடைத்த மதிப்பு மிகவும் குறைவானதே. ஆனால், நம் மனித வாழ்வின் நிலையே அது தான். ஆம்,ஆம், மனித வாழ்வு என்றும் அப்படித்தானே இருந்து வருகிறது? மேடுகள் பள்ளங்கள் எல்லாருக்கும் உள்ளன - ஆனால் ஆடவரை விடப் பெண்களே அதற்கு மிகுதி ஆளாகின்றார்கள் என்று எண்ணுகிறேன்’ என்றான். கெஞ்சி: உன் தந்தை, அவளை நன்கு போற்றிப் பாராட்டத் தானே செய்கிறார்? கீ நோ கமி: பாராட்டவா? நன்றாகச் சொன்னீர்கள்! இந்த வீட்டின் ஆட்சியே அவள் கையில்தான். அவள் மீது அவர் காட்டும் மோகம் முழு நிறைவானது, மட்டு மீறியது. அதனைத் தாங்க மாட்டாத நாங்களனைவரும் - எல்லாரிலும் மிகுதியாக நான் தான் - அவரை இதற்காக அடிக்கடி எதிர்த்துக் கண்டிக்க வேண்டி வந்துள்ளது. ஆனால், அவர் இவற்றை ஒரு சிறிதும் காது கொடுத்து வாங்குவதே யில்லை. கெஞ்சி: அப்படியானால், புத்தம் புதுப் பாணியில் வாழும் ஓர் அரண்மனைச் செல்வன் மனையில் அவளை அவர் எவ்வாறு விட்டுச் செல்ல முடிந்தது? அவர் பொதுவாக முன்னெச்சரிக்கை யுணர்வும் கூர் மதியும் உடையவராகத் தெரிகிறதே! - இது கிடக்கட்டும் ! இப்போது அவள் எங்கே இருக்கிறாள்? கீ நோ கமி: பொது அறைக்குச் சென்று விடும்படி பெண்டிருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதற்குரிய முன்னேற்பாடுகளை அவர்கள் இன்னும் முடிக்கவில்லை. கெஞ்சியின் குழாத்தினர் அனைவரும் நன்றாகக் குடித்திருந்ததனால் தாழ்வாரங்களிலேயே அயர்ந்து உறங்கி விட்டனர். கெஞ்சி தன் அறையில் தனியனானான். ஆனால் அவனால் உறங்க முடியவில்லை. இறுதியில் உறக்கம் வந்த பின்னும் அவன் ஒரு கணமே கண் மூடினான். அதற்குள் பின் சுவரின் தாள் பலகணியின் பின்னாக யாரோ செல்வதறிந்து விழித்துக் கொண்டான். மனைத் தலைவி மறைவாய் இருக்கும் பகுதி இதுவே என்று அவன் எண்ணினான். உள்ளார்வம் மெல்லத் தூண்டிவிட அவன் அப்பக்கம் நகர்ந்து சென்று உற்றுக் கவனித்தான். ‘நீ எங்கே இருக்கிறாய், எங்கே தான் இருக்கிறாய்?’ என்று கரகரத்த கீச்சுக் குரலில் யாரோ தொண்டைக்குள் கேட்டது போலிருந்தது. மாலையில் தான் கண்ட சிறுவன் குரலே அது என்று கெஞ்சிக்குத் தோற்றிற்று. குரலுக்கு எதிர் குரலும் மெல்லவே எழுந்தது. ‘நான் இங்கே, இப்பக்கம்தான் படுத்திருக்கிறேன். புதிய ஆள் தூங்கி விட்டதா? அவர் அறை அடுத்தாற்போல்தான் இருக்க வேண்டும், ஆனாலும் அவர் எவ்வளவு தொலைவில் இருப்பதாகத் தோற்றுகிறது?’ இக்குரல் சிறுவன் குரலையே மிகவும் ஒத்திருந்தது - அது அவன் தமக்கையாகவே இருக்க வேண்டுமென்று கெஞ்சி முடிவு செய்தான். சிறுவன் குரல் பேசிற்று. ‘அவர் இந்தச் சிறகில் தான் உறங்குகிறார். இன்றிரவு தான் நான் அவரைக் கண்டேன். ‘ஆ, அவரைப் பற்றி நாம் கேள்விப்பட்ட தெல்லாம் முற்றிலும் உண்மைதான். அவர் அழகின் உருவாகவே இருக்கிறார்,’ என்றான் அவன். அரை உறக்கத்தில் அவள் பிதற்றினாள். ‘இந்த இரவு சீக்கிரம் விடியாதா என்று இருக்கிறேன். ஏனெனில் நாளை காலையில் தான் அவரை நன்றாகக் காண எண்ணுகிறேன்’ என்றாள் அவள். அவள் குரல் படுக்கை விரிப்புகளுக் குள்ளிருந்தே வருவது போலிருந்தது. தன்னைப் பற்றி அவள் மேலும் எதுவும் கேள்விகள் கேட்கவில்லையே என்று கெஞ்சி வருந்தினான். ஆனால் விரைவில் மீண்டும் சிறுவன் குரல் கேட்டது. ‘அப்பக்கம் மூலையறையில் சென்று நான் படுக்கப் போகிறேன். இங்கே விளக்கு எவ்வளவு மங்கி மங்கி எரிகிறது?’ என்றான் அவன். குரலுடன் விளக்கைத் தூண்டிவிடும் செயலும் ஒருங்கே நிகழ்வதாகத் தோன்றிற்று. அவன் தமக்கையின் படுக்கை தாள் பலகணியின் எதிரிலுள்ள மூலையிலே இருந்ததாகத் தென்பட்டது. ‘சூஜோ எங்கே? எனக்குப் பயமாய் இருக்கிறது. என்னுடன் யாராவது பக்கத்தில் இருந்தால் நல்லது’ என்று அவள் சிறிது உரத்துக் கூவினாள். பக்கத் தறையில் இருந்து பல குரல்கள் ஒருங்கே பதிலளித்தன. அது பணியாட்களின் அறை. ‘அம்மணி, அவள் கீழ்மனையில் குளிக்கச் சென்றிருக்கிறாள். விரைவில் வந்து விடுவாள்’ என்றன அக் குரல்கள். எல்லாம் அமைதியான பின், கெஞ்சி மெல்லச் சென்று இடைக் கதவின் தாழை இப்பக்கம் மெள்ள விலக்கினான். தாழ் விலகியதே கதவை இழுக்க முயன்றான். கதவு மறுபக்கம் கொண்டியிடப் படவில்லை. அது எளிதில் திறந்து கொண்டது. அவன் நுழைந்தது ஓர் இடைவழி அறையே. அதன் ஒரு கோடியில் ஒரு திரையும் அதன் பின்னால் ஒரு மயங்கி விளக்கும் தெரிந்தன. அதன் அரை இருட்டிலே துணிமணிப் பெட்டிகளும், அணிமணிப் பேழைகளும், ஆடைகளும் அறையெங்கும் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. அவற்றிடையே உன்னிப்பாக நடந்து சென்று கெஞ்சி குரல்கள் கேட்ட பக்கமிருந்த உள்ளறையை அணுகினான். அங்கே ஒரு சின்னஞ்சிறிய உருவம் பதுங்கிக் கிடந்தது. அவன் நுழைந்ததே அவள் தன்னை மூடியிருந்த போர்வையை அகற்றினாள். அதுகண்டு கெஞ்சி மலைப் படைந்தான். தான் வரவழைத்த பணி நங்கையின் வருகையே என்று அவள் கெஞ்சியின் வருகையை ஏற்றமைந்ததுதான் இவ் விசித்திர நிகழ்ச்சிக்குக் காரணம். நிலைமையை ஊகித்துக் கெஞ்சி துணிந்து பேசினான். ‘அம்மணி! நீ சூஜோவை அழைத்தது கேட்டேன். அவளுக்குப் பதிலாக நானே வந்து, நெடுநாள் உன்னிடம் உள்ளந்தரங்கத்தில் கொண்டிருந்த மதிப்பை உன்சேவையி லீடுபடுத்த எண்ணியிருக்கிறேன்’ என்றான். மாதரசிக்கு இப்போதும் எதுவும் புரியவில்லை: அவள் மூளை குழம்பிற்று. அவள் உரத்துக் கூவ எண்ணினாள். ஆனால் தொண்டையில் குரல் எழ மறுத்தது. மேலும் குரல் எழுந்தாலும் வெளியே வராதபடி முகம் விரிப்புகளிடையே புதையுண்டிருந்தது அவளுக்குத் தெரியாது. மென்னயத்துடன் கெஞ்சி அவளிடம் சொல்லாடினான். ‘அம்மணி, நான் சொல்வதைத் தயை செய்து செவி கொடுத்துக் கவனி. இந்தத் திடீர் நுழைவு உனக்குத் தகாத் துணிச்சலாகவே தோற்றக்கூடும். ஆனால் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன், எவ்வளவு பூசிக்கிறேன் என்பதைத் தெரிவிக்க இதுபோன்ற ஒரு தறு வாய்ப்புக்காக நான் எத்தனை ஆண்டுகள் காத்திருந்து வருகிறேன் என்பது உனக்குத் தெரியவராது. இன்றிரவு இந்த இரகசிய வருகையின் அவாவை என்னால் தடுக்கக்கூடவில்லை. என் ஆசையின் அளவை இந்தத் திடீர் நுழைவே உனக்கு மெய்ப்பித்துக் காட்டக் கூடும்’ என்றான். அவன் பணிவிணக்கம், நய நாகரிகம், மெல்லியல்பு ஆகியவை இச் சமயம் பேய்மகளைக் கூட அவன் வசமாக்காமல் இருந்திருக்க முடியாது. ஆயின் அந்நிலையிலும் மணமான ஒரு மாதரசிக்கு இத்தகைய சூழல் ஒரு சிறிதும் தகுதியல்ல என்றறிந்து, அவள் புறமனம் அக மனத்தின் துடிப்புக் கடந்து பேசிற்று. ‘நீங்கள் செய்வது தவறு என்றே எண்ணுகிறேன்’ என்று அவள் தளர்ந்த குரலிலேயே கூறினாள். ஆனால் அவள் மனக்குழப்பம் கூட இச்சமயம் அவள் இனிய கவர்ச்சியைப் பெருக்கிற்றே யன்றி வேறன்று. அவ்வழகின் மாயத்தில் சிக்குண்டு கெஞ்சி விரைந்து மறுமொழி கூறினான், ‘நான் தவறு செய்யவில்லை, அம்மணி! நீண்டகாலப் பாசமும் மதிப்பும் தவிர வேறு வழிகாட்டி யில்லாமலே, நான் மயிரிழையும் பிசகாது உன்னருகே வர முடிந்துள்ளது. ஆனால் என் திடீர் நுழைவே என் நோக்கம் பற்றி நீ தவறாக ஐயம் கொள்ள வைத்திருக்கிறது என்று அறிகிறேன். ஆகவே நான் தெளிவாகக் கூறிவிடுகிறேன். என்னிடம் வேறு எந்தத் தவறான எண்ணமும் கிடையாது. என் மனதில் குழப்ப மூட்டும் ஒரு செய்தி குறித்து யாராவது ஒருவரிடம் மனம் விட்டுப் பேச மட்டுமே விரும்புகிறேன்’ என்றான். இவ்வாறு கூறிக் கொண்டே அவன் குழந்தை போல அவள் சிறிய அழகுடலைக் கைகளில் எடுத்தணைத்தபடி நடந்தான். ஆனால் இடைவழி அறை கடக்குமுன், ஏற்கெனவே மாதரசியால் அழைக்கப் பட்டிருந்த பணிப்பெண் சூஜோ அப்படுக் கையறைக்குள் வந்தாள். அது கண்ட கெஞ்சி திடீர் வியப்பால் கூவி விட்டான். தனது இடத்தில் யார் தான் நுழைந்திருக்கக் கூடுமென்ற மலைப்புடன் அவள் அவனை நோக்கித் தட்டித் தடவி வந்தாள். ஆனால், அடுத்த கணம் கெஞ்சியின் ஆடைகளுக்குரிய நறுமண வளத்தால் அவள் அவன் இளவரசனே என்று கணத்தில் ஊகித்துக் கொண்டாள். அதன் பின்னர் நடப்பது இன்னதென்று அவளுக்குப் புரியவில்லை ஆனாலும் வாய் திறந்து ஒரு சொல் கூற அவளுக்குத் துணிவு ஏற்படாது போயிற்று. அவன் வேறு யாராவது ஒரு சாதாரண மனி தனாயிருந்தால், அவன் செவிகள் இப்போது அவள் கையில் இருந்திருக்கும். ஆனால், இச்சமயம் அதற்கு மாறாக அவள் உள்ளத்தில் இவ்வாறு ‘ நினைவலைகள் வீசின. ‘ அவன் ஓர் இளவரசன் என்பது ஒருபுறமிருக்கட்டும். நான் செய்யும் எத்தகைய கலவரமும் அந்த அளவுக்கு ஊர் வாயைக் கிளறி விடுவதாகவே முடியும் . ஆனால் இந்த அழகிய பெருமகனை, இளவரசனை நான் தொடுவதானால், ...... அவள் படபடப்புடன் , ஆனால் வாய் பேசாமல், கெஞ்சியின் அறைக்கே அவனைப் பின் தொடர்ந் தாள். அறைக்குள் நுழைந்ததுமே கெஞ்சி அவள் கண் முன்னே மெல்லக் கதவை அடைத்தான். அதே சமயம், ‘நீ காலையில் வந்து உன் தலைவியை இட்டுக் கொண்டு போ’ என்று கூறி அவளை அனுப்பினான். அணங்கின் பெயர் உத்சுசேமி. தன் பணிப் பெண் முன்னிலையிலேயேதான் இவ்வளவு எளிதாக முற்றிலும் கைப்பற்றப்பட்டது கண்டு அவள் வெட்கத்தால் உடல் குன்றினாள். ‘ பணிப் பெண்’ தான் கண்டதைக் வைத்துக் கொண்டு தன்னைப் பற்றி இன்று என்ன நினைப்பாள், என்ன தான் நினைக்க மாட்டாள்’ அவள் மனக்குழப்ப மடைந்து கலங்கினாள். ஆனால் கெஞ்சியின் நாத்திறம் எதற்கும் எப்படியும் சரியான நம்பத்தக்க விடை கூறித் தற்காலிகமாக ஐயுறவு, தப்பெண்ணங்களை அகற்ற முற்பட்டது. எனினும் இந்நிறைவு ஒரு கணமே நிலை பெற்றது. அவள் உள்ளம் மீண்டும் மீண்டும் திடீர் திடீரென்று கலவர மடைந்தது. ‘ இதெல்லாம் ஒரு வெறும் கனவா, என்ன ! - நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர், ஓர் இளவரசர் - என் போன்ற ஒரு தாழ்ந்த உயிரினத்துக்காக நீங்கள் இந்த அளவுக்கு உங்களைத் தாழ்த்திக் கொள்ள முடியுமென்று என்னால் நம்ப முடியவில்லை! உங்கள் கருணை என்னை மூழ்கடிக்கிறது. ஆனால், என் நிலை என்ன என்பதை நீங்கள் மறந்தே விட்டீர்களென்று கருதுகிறேன். நான் யார்? ஒரு சூரியோவின் மனைவி, இதை எதுவும் மாற்ற முடியாது. நீங்கள்...’ தன் முரட்டு நடவடிக்கையால் அவளுக்கு எவ்வளவு வேதனையும் குழப்பமும் ஏற்பட்டு விட்டன என்று கெஞ்சி இப்போது காணத்தொடங்கினான். தன் செயலை எண்ணி அவன் தானே வெட்கமுற்றான். ஆயினும் அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டு விளக்க ஆறுதல் கூற முனைந்தான். ‘ சமூகப்படிகள், உயர்வுதாழ்வுக் கணக்குகள் ஆகிய வற்றைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஒரு மண்டைக்குள் இவற்றை யெல்லாம் கொண்டு திரிவதென்பது தலைசுழல்கிற காரியம்! ஆனால் என்னைப் பற்றி நீ என்னென்ன கேள்விப்பட்டிருப்பாயோ? அது எதுவானாலும் நான் உறுதியாகக் கூறுகிறேன். காதல் வேட்டை பற்றி நான் எதுவும் அறியாதவன், அதைப் பயிலாதவன் இன்றைய என் செயலைப் பற்றி உண்மையில் நாளை உன்னைவிட நானே மிகுதி வியப்படைவேன். ஆனால் இச் செயல் கட்டாயம் அந்த வகையைச் சேர்ந்ததன்று.’ இதுபோன்ற பத்திருபதுக் கணக்கான செயல் விளக்கங்களை அவன் பின்னிப் பின்னி இழைத்தான். ஆனால் இத்தனைக் கிடையிலும் அவள் பெண்மை தன் நிலைமையைத் தெளிவாக உளங் கொண்டு விட்டது. கட்டுதிட்ட ஆசாரப் பேச்சுகளிலிருந்து ஒரு சிறிது நழுவி விட்டால், இளவரசன் ஒப்பற்ற அழகுக் கவர்ச்சியின் முன் தான் மசிந்துவிட நேர்வது உறுதி என்று அவள் கருதினாள். ஆகவே தன் நடத்தை எவ்வளவு தலை நிமிர்வாக, எவ்வளவு தரங் கெட்டதாகத் தோன்றினாலும், அவன் விளக்கங்கள் எதனையும் ஏற்கக் கூடாதென்று அவள் துளிந்தாள். தன் குழப்பத்தைத் தெளிவித்துத் தன்னை ஆட்கொள்ளும் முயற்சிகளாகவே அவற்றைக் கருத முனைந்தாள். இது அவள் போக்கை முற்றிலும் நாட்டுப்புற நங்கையின் போக்காகவே ஆக்கிற்று. இயல்பாக அவள் மென்னடையுடையவள். நல்லிணக்க முடையவள். ஆனால், அன்று அந்நிலையில் அவள் தன் உள்ளுணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு சமுகக் கட்டுப் பாட்டை எண்ணித் தன் இதயத்தை எஃகாக்கிக் கொண்டாள். இம்முயற்சி அவளுக்குச் சொல்லொணா வேதனையே தந்தது. வாய் மொழிகளால் கெஞ்சியின் வாதங்களுக்குத் தன்னால் தக்க பதில் கூற முடியா தென்று உணர்ந்து அவள் தன் முனைப்பழிந்து கலங்கிக் கண்ணீர் வடித்தாள். அது கண்டு அவன் கடுந்துயர் அடைந்தான். ஆயினும் அந்நிலையில் கூட அத்தகைய காட்சியை எக்காரணம் கொண்டும் தவிர்க்க அவன் விரும்பவில்லை. அதுவே அவள் கவர்ச்சியைப் பன் மடங்கு பெருக்கி, அவள் அருமையையும் உயர்த்திற்று. ஆயினும் அப்படியும் அவளுக்கு ஆறுதல் கூற அவன் விரைந்தான், எப்படி ஆறுதல் கூறுவது என்று மட்டுந்தான் அவனுக்குத் தெரியவில்லை. இறுதியில் ஆறுதல் முயற்சியையே விடுத்து அவளைக் கடிந்து கொள்ளத் தொடங்கினான் ‘ என்னிடத்தில் ஏன் இப்படிக் கல் நெஞ்சுடன் நடந்து கொள்கிறாய், அன்பே! உன்னை நான் சந்தித்தவகை சிறிது புதுமை வாய்ந்த தென்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆயினும் இச்சந்திப்பு ஊழியின் செயலென்றே எண்ணுகிறேன். அப்படியிருந்தும் உலகத் தொடர்பே அற்றவள் போல் என்னிடமிருந்து இப்படி அஞ்சி அஞ்சி விலகுவது எவ்வளவு கொடுமை?’ என்றான். அவள் அழுது கொண்டே புலம்பினாள். ‘நான் தொல்லைகளுக்கு ஆட்படுமுன் இது நிகழ்ந் திருந்தால், என் தலைவிதியின் சீட்டு என் மீது விழுமுன் நடைபெற்றிருந்தால், உங்கள் நல்லெண்ணம் எவ்வளவு தற்காலிகமானதா யிருந்தாலும், அது நீடிக்கும் வரை அதை மகிழ்வுடன் நுகரத் தயங்கி யிருக்க மாட்டேன். நீங்கள் உங்கள் இடம் பெயர்ந்து இறங்கிவரும் புது வகைக் கருணையை மீண்டும் எண்ணிப் பார்த்து எனக்கு முழு நீதி செய்வீர்களென்றும் மனமார நம்பியிருப்பேன். ஆனால், இப்போது என் போக்கின் திசை நிலைபெற்று உறுதி யடைந்து விட்டது. இத்தகைய சந்திப்புகளால் எனக்கு மீளாத் துயரமும் ஆறாக் கழிவிரக்கமும் தவிர வேறு என்ன விளையக்கூடும்? எப்படியும் ‘ என் உள்ளந் தரங்கத்தை கண்டு கொண்டதாக மட்டும் எவரிடமும் கூறா தேயுங்கள்’ என்று அவள் ஒரு பழம் பாடலின் அடியுடன் முடித்தாள். ‘அவள் துயரம் பெரிதுதான். அது பற்றி நான் வியப்படைய வில்லை’ என்று கெஞ்சி தனக்குள்ளாகக் கூறிக்கொண்டான். பல இனிய மெல்லுரைகளால் அவன் அவள் துயராற்ற அரும்பாடுபட்டான். இப்போது சேவல் கூவிற்று. வெளியே முற்றத்தில் கெஞ்சியின் ஆட்கள் தட்டுத் தடுமாறி எழுந்து நின்றனர். ஆயினும் ஒருவன் உறக்க மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டே, ‘இன்னும் ஒரே ஒரு உறக்கம் உறங்கினால் எவ்வளவு நன்றாயிருக்கும்?’ என்றான். அதே சமயம் மற்றவன் , ‘போ, நேரமாகிறது. இளவரசர் பெருமானின் தேர் கொண்டு வா’ என்றான். ஆனால், இதற்குள் கீ நோ கமி அப்பக்கம் வந்தான். ‘இப்போது ஏன் இந்த அவசரம். எப்போதும் தம்முடன் பெண்களை அழைத்துக் கொண்டு வந்து தங்கினால்தான், இளவரசர் விடியுமுன்பே எழுந்து செல்லுவார். சனிக்கோள் காலநியதி அது. இப்போது இளவரசர் நள்ளிரவிலேயே எழுந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்று ஏவலர்களை மீண்டும் அமைதிப்படுத்தினான். ‘ இந்த இரவின் இனிய வாய்ப்பு இனி என்றேனும் நிகழவாபோகிறது!’ என்ற கவலையுடன் கெஞ்சி ஏங்கிக் கிடந்தான். ‘அவளால் கடிதமாவது எழுத முடியுமா?’ இத்தகைய தடைகளை எல்லாம் எண்ணி எண்ணி அவன் உள்ளம் மெழுகாய் இளகிற்று. சூஜோ தன் தலைவியை இட்டுச் செல்ல வந்தாள். அவளைப் போகவிட மனமில்லாமல் அவன் நெடுநேரம் தாக்காட்டினான். போகவிடத் துணிந்த பின்னும் அவளை மறுபடியும் தன் பக்கமிழுத்தான். பணிப் பெண் சூஜோ கேட்கும்படி குரலை உயர்த்திக் கொண்டு தன் கடைசி ஆர்வத்தைப் பேச்சாகக் கொட்டினான்: ‘உனக்கு நான் எவ்வாறு செய்தி அனுப்புவேன்? அந்தோ, அம்மணி! என் போன்ற ஏங்கும் காதலனையோ, உன்னைப் போல இரக்கமற்ற கல் நெஞ்சக் காதலியையோ உலகம் இதுவரை கண்டிராது’ என்று கூறி முடித்தான். பறவைகள் ஏற்கெனவே வாய் விட்டுப் பாடிக் கொண்டி ருந்தன. தான் கவையற்றவள்; அவரோ இளவரசர் - இதை அவள் ஒரு கணமும் மறக்க முடியவில்லை. ஆகவே தான் மென் மொழிகளால் அவளிடம் அவன் மன்றாடிய போது கூட, அவள் உள்ளம் தன் கணவன் இயோ நோ கமியின் முகத்தைத் தன்னகத்தே உருவகப்படுத்திக் கொண்டது. பொதுவாக அவள் அவனை நினைப்பதேயில்லை. நினைத்தாலும் வெறுப்புடன் தான் நினைப்பதே வழக்கம். ஆனால், இப்போது நினைப்பது இன்றியமையா உயிர்க்கடன் என்று அவள் கருதினாள். கற்பனையில் இவ்வாறு வந்து கண்ட கணவன், கனவிலேனும் தனது இப்போதைய நிலையைக் கண்டு விட்டால் என்ன செய் வது என்று அவள் நடுங்கினாள் - அந்த எண்ணமே அவளை அச்சத்தாலும், வெட்கத்தாலும் துணுக்குறச் செய்தது. பகலொளி பரவி விட்டது. கெஞ்சி அவளுடன் இடைத் தட்டியின் கதவருகே சென்றான். அதன் இப்புறமும் அப்புறமும் காலடிகள் விரைந்தன அவளைக் கதவுக்கப்பால் விடுத்து அதைச் சார்த்தும் சமயம், தன் வாழ்வின் இன்பத்திலிருந்தே தான் அடைபட்டு விட்டதாக அவன் கருதினான். ஆடை திருத்திக் கொண்டு அவன் உப்பரிகை மீது சென்று உலவினான். மேல்சிறகிலிருந்து ஒரு திரை இப்போது அவசரமாக விலக்கப்பட்டது. பல கண்கள் இப்போது ஆர்வத்துடன் இளவரசனையே நோக்கின. தாழ்வாரத்திலுள்ள ஒரு தட்டி அவன் உருவைப் பாதி மறைத்தது. அவனை முற்றிலும் தெளிவாக அவர்களால் காணக்கூடவில்லை. எனினும் காணும் அவா அவர்களை நீடித்து நிற்கத் தூண்டிற்று. அவ்வுருவங்களில் ஒன்று தன் உள்ளத்தைத் துடிக்க வைத்த அணங்காய் இருக்கக் கூடுமோ என்று நினைத்து அவன் பெருமூச்சு விட்டான். நிலா மறையவில்லை. மங்கிய ஒளியுடனே விடியற் கால வானொளியிலும் அது தெளிவாகத் தெரிந்தது. அன்றைய காலைக் காட்சி ஈடெடுப்பற்ற எழிலுடையதாயிருந்தது. ஆயினும் வானத்துக்குத் தனிப்பட்ட தன்னுணர்ச்சி எதுவும் இல்லை. காணும் மனிதர் உணர்ச்சியாகவே அது காட்சியளிக்க முடியும். கெஞ்சி இந்தக்காட்சிக்கு அன்று முற்றிலும் அன்னியனாகவே இருந்தான். ஏனெனில் கண்முன் இருந்த அவ்வழகில் அவன் ஈடுபடாமல், ஆவலுடன் அவன் அடிக்கடி எதிர் திசையில் திரும்பிப் பார்த்தபடியே சென்றான். ‘அவளுக்கு ஏதேனும் செய்தி அறிவிக்க முடியுமா? இல்லை, அது ஒரு போதும் முடியாது’ - இவ்வெண்ணம் அவன் உள்ளத்தில் துயர் நிரப்பிற்று. துயரார்ந்த அவ்வுள்ளத்துடன் அவன் தன் மனைவியின் இல்லம் சென்றான். சிறிது உறங்கி உள்ளத்துக்கு ஓய்வு தரவே அவன் விரும்பினான். ஆனால் அவ்வுள்ளம் மீண்டும் அவளைக் காணும் வழிவகைகளையே ஆராய்ந்து கொண்டிருந்தது. அது வகையில் நம்பிக்கை யிழந்த பின்னும், அவள் இச்சமயம் என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் என்று கற்பனை செய்து பார்ப்பதிலேயே அது ஈடுபட்டது. அவள் பேரழகியல்ல என்றே அவன் கருதினான். ஆனால், அழகற்றவள் என்றும் எவரும் கூறிவிட முடியாது. ‘ஆம்! உமா நோ கமி முழு விரிவாக விளக்கிய நடுத்தர வகுப்புக்கு எல்லாவகையிலும் பொருத்தமான எடுத்துக்காட்டே இவள்’ என்று அவன் எண்ணமிட்டான். நெடு மாடத்திலேயே கெஞ்சி சிறிது நேரம் தங்கினான் ஆனால், எவ்வளவு முயன்றும் அவளை எண்ணாமலிருக்கவோ, அவளை நினைந்து ஏங்காமலிருக்கவோ முடியவில்லை. கடைசியில் மனக்கசப்புற்று வேறு வழியில்லாமல் கீ நோ கமியையே வரவழைத்தான் ‘அந்தச் சிறுவனை- உன் வீட்டில் நான் கண்ட சுனாகன் புதல்வனை - என் சேவையிலேயே ஏன் ஈடுபடுத்தப்படாது? அவன் தோற்றம் எனக்குப் பிடித்திருக்கிறது. அவனை நான் என் மெய்க் காவலனாக வைத்துக் கொள்கிறேன். கூடும்போது சக்கரவர்த்திக்கும் அறிமுகப்படுத்துகிறேன்’ என்று அவனிடம் கூறினான். கீ நோ கமி தலைவணங்கினான். ‘ உங்கள் அன்புக்கு நன்றி. தங்கள் கோரிக்கையைச் சிறுவனின் தமக்கையிடம் நான் தெரிவிக்கிறேன்’ என்றான். இம்மறுமொழி கெஞ்சியின் மனத்தை உறுத்திற்று. ஆயினும் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பேச்சுப் போக்கிலேயே மற்றும் செய்திகள் அறிய விரும்பினான். ‘சரி, இப்புதிய அணங்கு மூலம் உங்களுக்குப் புதிய உடன் பிறப்புகள் ஏதேனும் உண்டா?’ ‘என்று வினவினான். கீ நோ கமி: இல்லை ஐயனே! அவளுக்கு மணமாகி இரண்டாண்டுகள் ஆய்விட்டன. ஆனால் குழந்தைகள் இல்லை. தன் திருமணத்தின் மூலம் அவள் தன் தந்தையின் ஆணையை மீறியதாகத் தெரிகிறது. இது அவளைக் கணவனிடமிருந்தும் விலகியே இருக்கத் தூண்டியதாக அறிகிறேன். கெஞ்சி: அப்படியா? இது வருந்தக் தக்க செய்தியே. அவள் தோற்றம் அப்படி மோசமானதல்ல என்று கேள்வி. அப்படித் தானே! கீ நோ கமி: கணிசமான அளவில் மோசமல்ல என்று தான் கூறப்படுகிறது. ஆனால், எனக்கு அவளுடன் மிகுதி தொடர்பு கிடையாது. மாற்றாந்தாய்மாருக்கும் மாற்றாந்தாய் மக்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு அது பற்றிய பழமொழிக்கிணங்கச் சிக்கல் வாய்ந்ததேயாகும். ஐந்தாறு நாட்களுக்குப் பின் கீ நோ கமி சிறுவனை இட்டுக் கொண்டு வந்தான். அவன் அவ்வளவு பேரழகுடையவன் என்று கூற முடியாது. ஆனாலும் அவனிடம் போதிய கவர்ச்சி இருந்ததாகவே கெஞ்சி கருதினான். தனிச் சிறப்புக்குரிய தோற்றமும் அவனிடம் இருந்தது. இளவரசன் அவனிடம் அன்பாகப் பேசினான். மிக விரைவிலேயே அவனைக் தன் வயமாக்கிக் கொண்டான் தமக்கையைப் பற்றி கெஞ்சி கேட்ட கேள்விகளில் சிலவற்றுக்கு அவன் தன்னாலியன்ற பதில் கூறினான். ஆயினும் மொத்தத்தில் அவற்றால் நாணமும் குழப்பமும் அடைந்து அவன் நாத் தழுதழுத்தான். கெஞ்சி இப்போது நேரடிக் கேள்விகளை விடுத்துச் சுற்று வழியிலேயே வேண்டிய செய்திகளை அறிய முற்பட்டான். இது சிறுவன் உள்ளத்தில் மீண்டும் இன்னமைதி உண்டு பண்ணிற்று. மொத்தத்தில் செய்தி இன்னது என்பதைச் சிறுவன் அறிந்தாலும், அவனால் அதன் வளைவுநெளிவுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவற்றை உணர விருப்பும் ஆர்வமும் அவன் இளவயதுக்கு அப்பாற்பட்ட தாயிருந்தது. ஆகவே தமக்கைக்குக் கெஞ்சி ஒரு கடிதம் கொடுத்தபோது, எத்தகைய கேள்வியும் கேளாமலே அதைக் கொண்டுசென்றான். இக்கடிதம் அவள் உள்ளத்தின் உணர்ச்சிகளைப் புயலாக்கிக் கிளறி விட்டது. அவள் கண்கள் மழையாகப் பொழிந்தன. இதைத் தம்பி காணாதபடி அவள் வாசிக்கும் கடிதத்தைக் கொண்டே தன் முகத்தை மறைத்துக் கொண்டாள். கடிதம் நெடுநீளமாயிருந்தது. பல முறையீடுகளுக் கிடையில் அதில் ஒரு பாடலும் இடம் பெற்றிருந்தது. ‘கண்ட கனவையே கனவாக மீண்டும் காண்பேனோ? இவ்விருப்பம் எழுந்த கண முதலாய் அந்தோ, இமைகள் இருவிழியும் பகைத்தனவே! இவ்வளவு அழகான கையெழுத்தை அவள் இதற்கு முன் என்றும் கண்ட தேயில்லை. அவள் கண்களை ஒரு நீர்ப்படலம் வந்து மூடிற்று. ‘என்னே விதியின் விசித்திரத் திருவிளையாட்டு? அதுவே முதலில் அவளை ஒரு ‘ சூரியோ’ வின் மனைவியாக்கிக் கொக்கரித்தது - இப்போது ஒரு கணம் இந்தப் பொன்னார் முகில்மீது உயர்த்தி வைத்துக் கேலி செய்கிறது! அவள் நெஞ்சம் எதெதையோ நினைத்து ஆழ்ந்து சிந்தித்தது. அவள் தன் அறைக்குள் சென்றாள். மறுநாள் கெஞ்சி சிறுவனைத் தன்னிடம் வரும்படி அழைப்பு விடுத்தான். அவன் இப்போது தமக்கையை அணுகினான். ‘நான் கெஞ்சி இளவரசனிடம் செல்கிறேன். அவர் கடிதத்துக்கு உன் மறு மொழி எங்கே?’ என்று கேட்டான். அவள் கடிதம் எதுவும் தரவில்லை. ‘அங்கே இத்தகைய கடிதங்களை வாசிக்கத் தக்கவர் எவரும் கிடையாதென்று அவரிடம் சொல்லு’ என்றாள். சிறுவன் இது கேட்டுச் சிரித்தான். ‘என்ன மட்டிப் பெண் நீ, இதைப்போய் நான் எப்படி அவரிடம் சொல்ல முடியும்? கட்டாயம் பதில் கடிதம் வாங்கி வரும்படி தான் அவர் என்னிடம் கூறியிருக்கிறார்’ என்றான். கெஞ்சி சிறுவனிடம் இந்த அளவுக்குத் தன் அந்தரங்கம் உரைத்ததை எண்ணி அவள் சீற்ற மடைந்தாள். ‘இந்த வயதில் இம்மாதிரிக் காரியங்களை அவர் உன்னிடம் கூறவே நியாயமில்லை. அங்கே போய் இம்மாதிரிப் பேச்சுகளுக்கு இடம் கொடுப்பதானால், நீ அங்கே போக வேண்டியதில்லை’ என்றாள், ‘அதெப்படி? அவர் தான் என்னை வரச் சொல்லி யிருக்கிறாரே!’ என்று பதிலளித்து அவன் சிட்டாய்ப் பறந்தான். மறுபுறம் கெஞ்சியும் பையனை அவன் காலதாமதத் துக்காகக் கடிந்து கொண்டான். ‘உனக்காக நான் நேற்று முழுவதும் காத்துக் கொண்டிருந்தேனே! பதில் கொண்டு வர மறந்து விட்டாயா? திரும்பி வரவே மறந்திருந்தாயா?’ என்று கேட்டான். சிறுவன் முகம் நாணத்தால் சிவந்தது. அவன் நாவசையவில்லை, ‘ சரி முடிவு என்ன? என்று கெஞ்சி மீண்டும் கேட்டான். ‘அங்கே இத்தகைய கடிதங்களை வாசிப்பவர் எவரும் கிடையாது’ என்று கூறினான். ‘என்ன பித்துக் கொள்ளித்தனம்; இத்தகைய சொற்களால் என்ன பயன்!’ என்று எரிந்து விழுந்த வண்ணம் கெஞ்சி மீண்டும் ஒரு கடிதம் எழுதி அதைப் பையனிடம் கொடுத்தான். உனக்குத் தெரிந்திருக்க வழியில்லை என்று நினைக்கிறேன். உன் தமக்கைக்குத் திருமணமாகுமுன் நான் அவளை அவ்வப்போது சென்று சந்தித்ததுண்டு. ஆனால், நான் கையாலாகாத, ஆளற்ற ஜீவன் என்று நினைத்து இப்போது இவ்வளவு ஏளனமாக நடத்துகிறாள். ஆயினும் நீ இனி என் பிள்ளையாகவே இருப்பாய் என்று நம்புகிறேன். எப்படியும் அங்கே அவர் வயதானவர் உன்னைப் பேணிக் காக்க நெடுநாள் இருக்க மாட்டார்’ என்று அவனிடம் பேசினான். இந்த விளக்கமே சிறுவனுக்குப் போதிய மன நிறைவு அளித்தது. அத்துடன் இதன்மூலமே அவன் உள்ளத்தில் கெஞ்சி பற்றிய மதிப்பு முன்னிலும் பன் மடங்காயிற்று. இளவரசனும் எப்போதும் அவனைத் தன்னை விட்டு விலக விடாமல் உடன்கொண்டு, அரண்மனைக்குப் போகும்போது கூட அவனை இட்டுக் கொண்டே சென்றான். தவிர அரண்மனை அகத்துறை முதல்வனிடம் பரிந்துரைத்து, அவனுக்குத் தக்கதாக ஒரு சிறிய அரண்மனைப் பணியாடையே தைத்தளித்தான் உண்மையில் சிறுவனை அவன் தன் சொந்தப் புதல்வனைப் போலவே அன்பாதரவுடன் நடத்தி வந்தான். கெஞ்சி தொடர்ந்து கடிதங்கள் அனுப்பிக் கொண்டே யிருந்தான். ஆனால், உத்சுசேமி சிறுவன் இளமையை எண்ணி மறுமொழி அனுப்பாமலே வாளா இருந்தாள். அவன் கவனக் குறைவால் கடிதங்கள் தவறான கைகளில் சிக்கிவிடக்கூடும். அப்படிச் சிக்கினால் எவ்விதப் பயனும் பெறாமலே அவளுடைய தூய நற்பெயர் கறைபட்டழிந்துவிடும். மேலும் இத்தொடர்பு அவளுக்கு, உள்ளூர விருப்பத்துக்குரியதாயிருந்தாலும். சமூகப்படியில் ஒருவருக்கொருவர் நெடுந்தொலைவாய்விட்ட இருவருக் கிடைப்பட்டதாதலால், என்றும் நீடித்த நல்லிணைப் புக்கு இடந் தராது. இக்காரணங்களை எண்ணி வெளிப் படையான வெற்றாசார மொழிகளின் வரம்பு கடவாமலே எழுதி வந்தாள். அவர்களிருவரும் ஒருங்கிருந்த நேரம் மிகக் குறுகிய தேயானாலும், அவன் தோற்றம் அவள் உள்ளத்தில் மிகத் தெளிவாகப் பதிந்திருந்தது. அதன் பேரழகை அவள் மனமார ஒத்துக்கொண்டாள். ஆயினும் தன் தோற்றத்தை ஏகதேசமாகக் கூட அவன் அறிந்திருப்பானோ என்று அவள் ஐயுற்றாள். ஆகவே இன்னும் ஒரு தடவை அவன் தன்னைச் சந்தித்தால், தன் தோற்றத்தில் அவன் உவர்ப்புக் கொண்டு விடக்கூடும் மென்றும், எல்லாத் தொடர்புமே ஓய்ந்துவிடக்கூடு மென்றும் அவள் அஞ்சினாள். கெஞ்சி இந்நாளெல்லாம் இடைவிடாது அவளையே நினைத்துக் கொண்டிருந்தான். அந்த ஒரு நாள் சந்திப்பின் ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியையும் விடாது நினைவில் கொண்டுவந்து அக்காட்சிகளிலேயே மிதந்தான். ஒவ்வொரு நினைவும் ஒவ்வொரு காட்சியும் ஒருபுறம் அவன் ஆவலை வளர்த்தது, மறுபுறம் அவன் ஏக்கத்தைப் பெருக்கிற்று. அவனிடம் அவள் தன்னைப் பற்றிப் பேச நேர்ந்த போது அவள் முகத்தில் படர்ந்த துயரத்தை அவன் தன் உளக் கண்முன் கண்டான். அதை எண்ணிய போதே இன்பமயமாக அவன் உள்ளம் துடிதுடித்தது. அவளை இரகசியமாகச் சந்திக்கலாமா என்று எண்ணினான். ஆனால் இது வெளிப்பட்டுவிட்டால் நேரும் இடர் மிக மிகப் பெரிது. அதன் விளைவு தன்னை அழிக்குமாயினும், அவளுக்கே இன்னும் பேராபத்தாக வந்து முடியும் என்று கண்டான். மீண்டும் பல நாட்கள் அவன் தன் அரண்மனையில் கழித்தான். மீண்டும் ஒரு தடவை சனிக்கோளின் நிலை அவனைத் தன் மாளிகைக்கு மீள முடியாமல் தடுத்தது. ஆயினும் போவதாக அவன் புறப்பட்டு, வான்கோள்களின் தடை நிலையை வழி நடுவிலேயே கண்டுகொண்டதாகப் பாவித்தான். இப்போது முன் போல் நடு ஆற்றுமனையில் சென்று தங்கிடம் பெறுவதைத் தவிர வேறு வழியில்லையாயிற்று. கீ நோ கமி இதுகண்டு வியப்புற்றான். ஆனால் இதனால் அவன் மகிழ்ச்சியடையாமலில்லை. ஏனெனில் அவன் மனைப்புறத் தோட்டத்தில் புனைந்தியற்றப்பட்டுள்ள சுனைகள், செய்குளம், கால்வாய்கள் ஆகியவற்றின் அழகில் ஈடுபட்டே கெஞ்சி மீண்டும் வருகை அவாவியதாக அவன் கருதினான். நடு ஆற்றுமனைக்குக் காலையில் செல்ல விரும்புவதாகக் கெஞ்சி சிறுவனிடம் கூறியிருந்தான். அவனே இப்போது இளவரசன் அறையில் துணைவனாயிருக்கும்படி அவன் வரவழைக்கப்பட்டான். இதற்கு முன் சிறுவனின் தமக்கைக்குக் கெஞ்சி அனுப்பிய கடிதத்தில், அவன் தன் திட்டத்தை அவளுக்குத் தெரிவித்தும் இருந்தான். இவ்வளவு அரும் பெருஞ்சூழ்ச்சித் திட்டமும், அதைச் சாக்காகக் கொண்டு கெஞ்சி தன் மனைக்கு வருவதே தனக்காகத்தான் என்ற உணர்வும் உத்சுசேமியின் தற்பெருமையைத் தூண்டி அகமகிழ்வூட்டின. ஆயினும் நாம் மேலே கண்டபடி கனவு போன்ற தன் விரைந்த முதற் சந்திப்பில் தான் இளவரசனை மகிழ்வித்த அளவு ஆர்ந்தமர்ந்த அடுத்த சந்தர்ப்பத்தில் மகிழ்விக்க முடியாது என்று எவ்வாறாகவோ அவள் கருதிக் கொண்டிருந்தாள். ஏற்கெனவே அவள் வாழ்க்கை துயரார்ந்ததாய்விட்டது. இளமையின் அவாக்கள் தகர்வுற்றழிந்துவிட்டன. இச் சுமைகளுடன் மேற்குறிப்பிட்டது போன்ற ஒரு புத்தம் புது ஏமாற்றமும் நேர்ந்துவிடக் கூடாதே என்று அவள் அஞ்சி நடுங்கினாள். அவன் வரும்போதே அவனைக் காணும் நிலையில் அவள் அவனை எதிர்பார்த்தபடியே தன் முன்னறையில் இருந்தாள். ஆனால், பெண்மைக்குரிய அவள் தன்மதிப்பு இவ்வாறு அவன் கருதிவிட இடமளிக்க ஒருப்படவில்லை. எனவே சிறுவன், கெஞ்சி அறையில் இருக்கும் சமயம் பார்த்து, அவள் தன் பணியாட்களிடம் கட்டளையிட்டாள். ‘இது நம் விருந்தாளி இருக்கும் அறைக்குப் பக்கத்தில் உள்ள அறை. இதில் இருப்பது எனக்கு வாய்ப்பாக இல்லை. என் உடம்பு மிகவும் திமிர்த்துக் கொண்டிருக்கிறது. அதைப் பிடித்து விட்டுக் கொள்ள வேண்டும். சூஜோ அறை அகற்கேற்ற வாய்ப்புகள் உடையது. அங்கே என் உடைமைகளை யெல்லாம் கொண்டு செல்லுங்கள்’ என்றாள். இதன் பயனாக அச்சிறையின் எதிர்புறமுள்ள அறைக்கே அவள் படுக்கையும் தட்டு முட்டுப் பொருள்களும் கொண்டு செல்லப்பட்டன. கெஞ்சி முன் கருத்துடனேயே திட்டமிட்டுத் தன் ஏவலாளர்கள் அனைவரையும் விரைவில் தத்தம் படுக்கைக்கு அனுப்பி விட்டான். எல்லாம் அமைதியானவுடன் அவளுக்குக் கடிதம் கொடுத்தனுப்பினான். ஆனால் சிறுவன், அவள் அறையில் அவளைக் காணவில்லை. வீட்டின் மூலைமுடுக்குகள் தோறும் தேடிக் கடைசியில் எதிர் சிறையிலுள்ள சூஜோ அறையிலே அவளைக் கண்டு பிடித்தான். தன்னை இவ்வாறு அலைய வைத்ததற்காகப் பாதி கோபத்துடனும் பாதி அழுகையுடனும் அவன் தன் தமக்கையைக் கடிந்து கொண்டான். ‘நீ ஏன் இப்படிக் கண்ணாமூச்சியாடிச் சாகசம் பண்ணித் திரிகிறாய்? அவர் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்?’ என்றான். அவளுக்கு இப்போது கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ‘என்னை இப்படித் தொடர்ந்து வேட்டையாடிக் கொண்டு வர வேண்டிய அவசியம் உனக்கு என்ன வந்தது? தவிர, இத்தகைய செய்திகளைச் சின்னஞ்சிறு குழந்தையாகிய உன் மூலம் அனுப்புகிறாரே, அது எவ்வளவு தவறு? போ, அவரிடம் போய்ச் சொல்லு, எனக்கு உடம்புக்கு நலமில்லை. என்தோழியர் என்னுடன் இருக்கிறார்கள். நான் அவர்களைக் கொண்டு என் உடல் பிடித்து விட்டுக் கொள்ளப் போகிறேன்’, என்று கூறி அவனை அனுப்பினாள். தான் தன்னுரிமையுடன் வாழ்ந்த காலத்தில், தன் தந்தை உயிருடனிருந்த போது, இத்தகைய அருநிகழ்ச்சி எவ்வளவு மகிழ்ச்சியூட்டி யிருக்கும் என்று இச்சமயத்திலும் அவளால் எண்ணாதிருக்க முடியவில்லை. ஆனால், இப்போதோ தன்னையே தனக்குத் துணையாக விட்டு விட்டுத் தந்தை மறைந்துவிட்டார். இப்போது இளவரசர் தயவைக் கண்டு ஐயுறவும், அச்சமும், எச்சரிக்கையும் கொள்ள வேண்டியதா கியுள்ளது. இது காரணமாக அவர் தான் தன்னை எவ்வளவு பசப்புக்காரி என்று நினைத்துக் கொள்ளமாட்டார்? - இவ்வெண்ணங்களுடன் அவர் காதலை ஏற்கும் சுதந்தரம் தனக்கில்லையே என்று அவள் துடிதுடித்தாள். இது அவன் மீது அவள் பாசத்தை முன்னிலும் பன்மடங்காக வளர்க்கவே உதவிற்று. ஆனால், இச்சமயம் திடுமென அவள் சூழ்நிலை அவள் நெஞ்சில் மின்னல் போல் பாய்ந்து வந்தது. அந்தோ, அவள் வாழ்வின் பகடை என்றென்றைக்குமாக ஒரு நிலையில் தூக்கி எறியப்பட்டு விட்டது. இப்போது அவள் பெண்ணல்ல, மனைவி - ஒருவர் மனைவி! இப்போது இவ்வெண்ணங்களை எண்ணுவதிலேயே பொருளில்லை என்று அவள் கண்டாள். அவற்றை மூளையில் புகவிடுவதேயில்லை என்று மீண்டும் துணிவு கொண்டாள். தன் இளந்தூதன் எப்படித்தான் காரியத்தை வெற்றி கரமாகச் சாதிப்பானோ என்ற கவலையுடன், கெஞ்சி படுக்கையில் கிடந்து புரண்டான். கடைசியில் பதில் வந்தது. அவன் திடுக்கிட்டான். அதன் உணர்ச்சியற்ற கடுமை கண்டு அவன் திகைத்தான். பின் பெருத்த ஏமாற்றத்துடன் வாய் விட்டுக் கதறினான். ‘இது மிக மிக மோசம், மிக மிகக் கொடுமை!’ என்று கூறிப் படுக்கையில் சாய்ந்து விழுந்தான். வேதனையால் அவன் முகம் கோரமாகத் தோற்றிற்று. சிறிது நேரம் பேசாமல் இருந்த பின் பெரு மூச்சுடன் எழுந்தான். தன் உணர்ச்சிகளை ஒரு பாடலாகக் கொட்டினான். ‘சோனோச் சமவெளியில் வளர்கின்ற முள்மரம் மாய மரமென் றறியாது நிழல்தேடிப் பாதை தவறிப் பரிதவிக்கின் றேன், அந்தோ!’ என்று புலம்பினான். உத்சுசேமி இன்னும் உறங்கவில்லை. மேற்குறிப்பிட்ட பாடலையும் செய்தியையும் பெற்று அவள் ஓர் எதிர் பாடல் அனுப்பினாள். ‘புறம்போக் கிடங்களிலே பொல்லா நாடோடியாய் வறண்ட இவ் வாழ்வில் திரிவேன். அம்மாய மரம்போல் அணுகும் வழிப்போக்கர் கண்முன் சுருண்டு மடிந்து சுருங்கும் வளம் எனதே’ சிறுவனுக்கும் உறக்கம் இமைகளை நாடவே இல்லை. அவன் கெஞ்சிக்காக மனமாழ்கி வருந்தினான். ஆயினும் அவனுக்காக மீண்டும் மீண்டும் தமக்கையிடம் சென்று வருவதைப் பலரும் கவனிக்க நேரும் என்று அவன் அஞ்சினான். உண்மையில் இச்சமயம் மனையில் எல்லாருமே ஆழ்ந்த துயிலில் தம்மை மறந்திருந்தனர். கெஞ்சி மட்டுமே இரவின் கருமையினும் திண்ணிய துயரின் கருந்திரையில் தோய்ந்து மனமாழ்கினான். அணங்கின் புரியமுடியாத புதிய முடிவையும் அதன் பயனான அவளது முரட்டுப் பிடிவாதத் தையும் நினைத்து நினைத்து அவன் சீறினான். ஆனாலும், எதனாலும் வெல்ல முடியாத அவள் துணிவாற்றலை இந்நேரத்திலும் அவனால் மதித்துப் பாராட்டாமலிருக்க முடியவில்லை. இறுதியில், விழித்திருந்து விழித்திருந்து அவன் அலுத்தான். இனி செய்யத்தக்கது எதுவுமில்லை என்று உள்ளம் ஓய்ந்தது. ஆனால், ஒரு கணத்தில் அவனிடம் ஒரு புத்தெழுச்சி ஏற்பட்டது. அவன் திடுமெனச் சிறுவன் கையைப் பற்றிக் காதில் ஓதினான். ‘அவள் இருக்குமிடத்திற்கு என்னை இட்டுக் கொண்டு போ. நான் நேராகவே பார்க்கிறேன்’ என்றான். பையன் தலையாட்டினான். ‘இதுமுடியாத காரியம். கதவு உள்ளிருந்து தாழிடப்பட்டிருக்கிறது. அத்துடன் உள்ளேயும் வேறு பலர் இருக்கிறார்கள். உங்களுடன் இந்நிலையில் வர எனக்கு அச்சமாயிருக்கிறது’ என்றான். கெஞ்சியின் மனம் இறுதியாக உள்ளூர இடிவுற்றது. ‘சரி, அப்படியே ஆகட்டும். ஆனால் யார் என்னைக் கை விட்டாலும் நீ மட்டும் என்னை விட்டு விடாதே’ என்றான். பையன் ஆர்வத்துடன் அவன் கையை அணைத்துக் கொண்டான். கெஞ்சி அக்கைகளால் அவனையே தன்னருகில் இழுத்துக் கிடத்தி அணைத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தான். அழகொளியும் புகழொளியும் மிக்க இளவரசனுடன் துயிலும் வாய்ப்பில் மகிழ்ந்து சிறுவன் அகமெங்கும் புல்லரித்தது. நெகிழாத தமக்கையின் இதயத்தைப் பார்க்கிலும் நெகிழ்ந்து குழைந்த அந்தச் சிறுவனின் உடலின் அணைப்பு இளவரசன் அகத்துக்கும் ஆகத்துக்கும் இனிய அமைதியளித்தது. அவன் அந்தத் தமக்கையாகவும், அவள் அவனாகவுமே இருந்திருந்தால்.....! 3. உத்சுசேமி கெஞ்சியின் கண்கள் இப்போதும் உறங்க மறுத்தன. அவன் சிறுவன் செவிகளில் தன் குறைகளை ஓதினான், ‘என்னை இதுவரை எவரும் இப்படி வெறுத்ததில்லை. என்னால் இதைத் தாங்க முடியாது, எனக்கு இப்போது வாழ்வும் வெறுத்து விட்டது, இந்த உலகத்தின் மீதும் வெறுப்பு ஏற்பட்டு விட்டது, இனியும் இப்படியே வாழ்வை நீட்டிக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை’ என்று முணுமுணுத்தான். சோகமிக்க இச்செய்தி கேட்டுச் சிறுவன் மனமுருகி அழத் தொடங்கினான். மென்மை வாய்ந்த அந்தச் சிறிய உருவம் - பசுமையார்ந்த அவன் தலை முடி குறுகத் தறித்துவிடப்பட்ட வகைகூடக் கெஞ்சியின் கண்களுக்கு அவன் தமக்கையின் இனிய தோற்றத் தையே நிழற்படுத்திக் காட்டிற்று, அவன் ஒத்துணர்வு கெஞ்சியின் உள்ளங்கசிய வைத்தது. அவ்வப்போது அவன் எண்ணங்கள் கட்டறுத்தோடின. அடிக்கடி சிறுவனருகிலிருந்து நகர்ந்து வெளியேறிச் சென்று தானாக உத்சுசேமியின் தங்கிடம் தேடிச் செல்லலாமா என்று ஆலோசனை செய்தான். ஆனால், இது உண்மையில் மிகப் பெரும் பொல்லாங்குக்கே இடம் தரும் என்று கண்டு அவன் அக்கருத்தைக் கை விட்டான், இரவு முடியும் வரை இத்தகைய ஊசலாட்டங்களிடையே உழன்றுழன்று இறுதியில் வேண்டா வெறுப்புடன் பொறுமையாக விடியற்காலை ஒளியை எதிர் பார்த்து உருண்டு புரண்டான். அரையிருட்டிலே, முற்றிலும் விடியுமுன்பே அவன் எழுந்தான், எப்போதும் போலச் சிறுவனிடம் கூறிவிட்டுப் போகும் வழக்கத்தைக்கூட அன்று மறந்தான், அவன் நெஞ்சம் அழன்றெழும் எண்ணங்களால் அந்த அளவு நிரம்பி நிலையற்றிருந்தது. இதனால் அந்த இள உள்ளம் புண்பட்டது. பகல் முழுவதும் அவன் தனியே யிருந்து வருந்தினான். கெஞ்சியிடமிருந்து மீண்டும் பதில் வராததனால் அவன் மனமாற்றம் அடைந்து விட்டான் என்று உத்சுசேமி எண்ணினாள். அவன் மீண்டும் வலியுறுத்தியிருந்தால் அவள் சீற்றம் கொண்டே யிருப்பாள், அதே சமயம் அவ்வளவு எளிதாக அவன் தோல்வியை ஏற்றதும் அவளுக்கு அமைதி தரவில்லை, எப்படியும் அவனுக்குகெதிராகத் தன் உள்ளக் கதவை அடைத்துத் தாழிடுவதற்கு இதைவிட நல்ல தருணம் வேறில்லை என்பதை அவள் உணர்ந்தாள். அதை வெற்றிகரமாக ஒப்பேற்றி விட்டதாகவும் எண்ணினாள். ஆனால் இதன் பின்னும் அவள் எண்ண அலைகளில் பெரும்பாலானவற்றிலும் அவன் நிழலன்றி வேறெதுவும் படரவில்லை என்பது கண்டாள். மற்றொருபுறம் வேதனைக்குரிய இந்தக் காரியத்தை முற்றிலும் மறந்துவிடுவதே நலம் என்று கெஞ்சி துணிந்திருந்தான், ஆனால் இது செய்யும் ஆற்றல் அவனிடம் இல்லை. இறுதியில் இந்த ஊசலாட்ட நிலையைப் பொறுக்க மாட்டாமல் மீண்டும் சிறுவனையே அணுகினான், ‘என் துன்பம் பெரிது. வேறு செய்திகளிலேயே கருத்துச் செலுத்த நான் எவ்வளவோ முயல்கிறேன். ஆனால் என் உள்ளம் என் கட்டில் இல்லை. இனி இவ்வேதனையுடன் என்னால் மல்லாட முடியாது. நீ எப்படியாவது தக்க சமயம் பார்த்துக் காத்திருந்து, உன் தமக்கையினிடம் என்னைக் கொண்டு சேர்த்துவிட வேண்டும்’ என்றான். சிறுவனுக்கு இப்போது பெருத்த சஞ்சலமாயிற்று. ஆயினும் கெஞ்சி தன்னிடம் வைத்த ஆழ்ந்த அந்தரங்க நம்பிக்கை கண்டு அவன் உள்ளூரப் பெருமையும் எக்களிப்பும் கொண்டான். அவர்கள் ஆவலுடன் காத்து எதிர்பார்த்திருந்த சந்தர்ப் பமும் விரைவிலேயே அவர்களுக்குக் கிட்டிற்று. கீ நோ கமி புற மாகாணங்களுக்குச் செல்லும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆகவே மனையில் பெண்டிர் மட்டுமே இருந்தனர்; ஒரு நாள் மாலையில் தெருக்களிலெல்லாம் அரையிருளின் அமைதி குடி கொண்டிருந்தது. அப்போது சிறுவன் கெஞ்சியை மனைக்கு இட்டுச் செல்ல ஒரு வண்டி கொண்டு வந்தான். கெஞ்சியும் அன்று முற்றிலும் இளஞ் சிறுவன் பாதுகாப்புக்கே எல்லாவற்றையும் விட்டுவிடவில்லை. மாறு வேடத்தின் மறைவையும் மேற்கொண்டான். ஆயினும் தன் ஆத்திர அவசரத்தில் வண்டி செல்லத் திறந்த தன் மாளிகை வாயிலைச் சார்த்தக் கூட மறந்து வண்டியை அவன் வேகமாக ஓடவிட்டான். மனையின் ஒரு பக்க வாயிலில் சென்றதும் இருவரும் இறங்கினர். இளமை காரணமாகத் தன் போக்குவரவு பற்றிக் காவலரோ தோட்டக்காரரோ எதுவும் கூற மாட்டார்கள் என்பது சிறுவனுக்குத் தெரியும். தன்னளவில் உள்ளே செல்ல அவன் தயங்கவில்லை. ஆகவே இரட்டைக் கதவுகளிட்ட கீழ்அறை வாயில்முகப்பில் கெஞ்சியைப் பதுங்கியிருக்க வைத்துவிட்டு உள்ளே சென்றான். ஒளிந்து மறைந்து செல்ல முயலாமல், மனையின் நடுப் பகுதிக்குச் செல்லும் சறுக்குக் கதவைத் தட்டி முழக்கினான். ‘புழுக்கமிக்க இந்த இரவில் கதவுகளை யெல்லாம் ஏன் சாத்தி வைத்திருக்கிறீர்கள்’ என்று பணிப் பெண்கள் அனைவரும் கேட்கும்படியாக அதிகாரம் செய்தான், ‘மேல் மாடத்து நங்கை காலையிலிருந்து இங்கே இருக்கிறாள். நம் மாதரசியுடன் நாற்கட்ட ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று பணிப் பெண்கள் பதிலளித்தனர். மேல் மாடத்து நங்கை என்றது - கீ நோ கமியின் உடன் பிறந்தாளையே. உத்சுசேமி தனியா யிராமல் வேறொரு தோழியுடன் இருந்தாலும் கெஞ்சிக்கு அவளைக் காணும் ஆர்வம் பெரி தாயிற்று. அவன் மெல்லப் பதுங்கிச் சென்று தட்டி வாசலின் ஒரு சிறு பிளவு வழியே உட்சென்றான், சிறுவன் திறந்து சென்ற வாயில் திறந்தபடியே இருந்தது. அதனூடாக இடைக் கூடமும், அது கடந்து நங்கையர் இருந்த அறையும் தெளிவாகத் தெரிந்தது. அறையின் கதவின் மீதிட்ட திரை பாதி மடிக்கப்பட்டிருந்தது. நுழை தட்டிகளும் புழுக்கங் காரணமாக முற்றிலும் திறந்து வைக்கப்பட்டே யிருந்தன. இக்காரணங் களால் அறையின் உள்ளே யிருந்த காட்சி முழுவதும் கெஞ்சிக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. விளக்கருகே நடுத்தூண் மீது சார்ந்து கொண்டு அமர்ந்திருந்த அணங்கே தன் உளங் கொண்ட மாதரசி என்று அவன் கண்டான். அவளை அவன் கூர்ந்து கவனித்தான். அவள் கோடற்ற கருஞ் சிவப்பாடை அணிந்திருந்தாள். தோளில் ஒருவகைச் சவுக்கம் கிடந்தது. அவள் தலையின் சாய்ந்த நிலை கவர்ச்சிகரமாய் இருந்தது. ஆனால் அவள் உருவம் மிக மிகக் குறுகியதாயிருந்ததனால் அவள் பெண்மையும் மட்டுப்படுவது போலத் தோற்றிற்று. தன் தோழியிடமிருந்து கூட அவள் தன் முகத்தை மறைக்கவே முயன்றதாகக் காணப்பட்டது - அவ்வப்போது ஒரு கணத்துக்குமேல் அவள்கூட அதை முழுமையாகக் கண்டிருக்க முடியாது. கெஞ்சிக்கு நேர் எதிராகவே தோழி இருந்ததால் அவளை அவன் மிகத் தெளிவாகக் காண முடிந்தது. அவள் உள்ளாடை மிக மெல்லிய வலை போன்ற வெண்துணியால் ஆனது, சிவப்பு நீல மலர்களால் பூவேலை புனையப்பட்ட புற ஆடை ஒன்று அதனைப் பாதி பொதிந்தும், பாதி பொதியாமலும் தொட்டுத் தொடாமல் கிடந்தது. முன்னே உடை இணைத்துக் கட்டப்படாமல் திறந்தே கிடந்ததனால், அவள் கழுத்தும் மார்பகங்களும் மறைவின்றி நன்றாகப் புலப்பட்டன. அரைச் சட்டையைத் தோளுடன் இழுத்துக் கட்டிய மெல்லிய சிவப்புக் கச்சை கூட அவற்றிடையே வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. மொத்தத்தில் அத்தோற்றம் தங்கு தடையற்ற அவள் நடையைச் சுட்டிக் காட்டிற்று. அவள் நெட்டையாகவும் கட்டமைப்பு உடையவளாகவும் இருந்தாள். மேனி அப்பழுக்கற்ற வெண்மையும் மென்மையும் உடையதாயிருந்தது. உறுப்புகள் உறுதியான தசைப் பற்றுடையவையாய் உருண்டு திரண்டு காட்சியளித்தன. தலையின் சாய்வும் புருவங்களின் கோணங்களும் குற்றமற்றவை யாயிருந்தன. இதழின் வண்ணமும் கண்களின் பார்வையும் காண்பவர்க்கு இன்பமளித்தன. தலைமுடி அடர்த்தியாகவே இருந்தது. ஆனால் தோள்மட்டத்தில் நேர்த்தியாகக் குறுகக் கத்தரித்துவிடப்பட்டிருந்தது. அதன் இழைகள் பட்டிழைகள் போல மென்மையும், அழுத்தமும். பளபளப்பும் உடையவையாய் இருந்தன. இத்தகைய அழகு பிம்பத்தை மகளாகப் பெற்றிருப்பது இயோ நோ சுகேக்கு எத்தனை பெருமைக்குரிய செய்தி! அவன் இது பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வதில் வியப்பில்லை. அவளிடம் மட்டும் படபடப்புசற்றுக் குறைவாயிருந்தால், அவள் முழு நிறைவுடையவள் என்றே கூறலாம் - இவ்வாறு கெஞ்சி நினைத்தான். ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அவள் வேண்டாத கட்டைகளை எல்லாம் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் மிகவும் உணர்ச்சித் துடிப்புடையவள். இச்சிறு செயலிலும் தேவைக்கு மேற்பட்ட படபடப்பே காட்டினாள். அச்சமயம் அவள் தோழி மெல்லக் குரல் கொடுத்தாள். ‘சற்றுப்பொறு. இப்போது ஓர் எக்கச்சக்கமான கட்டம். என் முயற்சி இப்போது இதோ இந்த ஓர் எதிர் கட்டை தான்’ என்றாள். முதலணங்கு இதற்குள் பொறுமையிழந்தாள். ‘ஆட்டமெல்லாம் முடிந்துவிட்டது. நான் தோற்று விட்டேன் இப்போது காய்களை எண்ணுவோம்’ என்று அவள் எண்ணத் தொடங்கினாள். விரல்கள் பத்து இருபது முப்பது நாற்பது என்று கூட்டின. இயோவின் மனைவியின் சலவை வேலை அரங்கத்தைப் பார்க்க, ‘எட்டுத் தொட்டி இடப்புறம், எதிரே ஒன்பது வலப்புறம்’ என்ற பழம் பாடலின் முலடியை இச்சமயம் கெஞ்சியால் தனக்குள்ளாக எண்ணாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் இயோவின் செல்வி எதையும் முடிக்காமல்விட எண்ணவில்லை. தன் வெற்றிகளைப் போலத் தோல்விகளையும் அவள் எண்ணியே தீர்த்தாள். இது கவர்ச்சியை இன்னும் குறைத்து அவளைப் பொதுநிலைநங்கையின் திசையில் தள்ளுவதாகக் கெஞ்சிக்குத் தோற்றிற்று.’ உத்சுசேமியுடன் அவளை ஒப்பிடுவதில் கெஞ்சி புதுச்சுவை கண்டான். உத்சுசேமி மௌனமாக உட்கார்ந்திருந்தாள். அவள் முகம் பாதி மறைந்திருந்தது. அதன் முழு வடிவமைதியையும் அவன் காண முடியவில்லை. அவளையே நீடித்து நோக்கிய சமயம்கூட, அவன் பார்வை தன் மீது படுகிறது என்பது தெரியாமலே, தெரிந்தவள் போல அவள் தன் இருப்பைச் சிறிது மாற்றினாள். ஆயினும் இது பக்கவாட்டில் அவள் முகவெட்டை நன்கு எடுத்துக்காட்டிற்று. அவள் கண்ணிமைகளை நோக்க. கண் சிறிது வீக்கமுற்றிருந்ததோ என்று கெஞ்சிக்குத் தோற்றிற்று. வடிவமைதியிலும் பல கோணங்களில் மென்னயக் கவர்ச்சி சிறிது குறைபடுவதாகவே காணப்பட்டது. அதே சமயம் மறைபடும் பகுதிகளிலேயே அவளது சிறந்த கவர்ச்சிக் கூறுகள் இருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். அவள்வாய் திறந்த போதோ, காட்சியின் குறைகளனைத்தையும் அதன் மூலமே சரி செய்துவிடும் உறுதி அதில் இருந்தது. தோழியளவு அழகு அவளிடம் இல்லையாயினும், அவளைக் கடந்த அரிய மதி நுட்பம் இருந்ததென்பதில் கெஞ்சிக்கு ஐயமில்லை. உத்சுசேமியின் தோழியோ, தன் மாயக் கவர்ச்சியின் அலைகளை எங்கும் தங்கு தடையில்லாமல் பரவவிடுபவ ளாகவே இருந்தாள். அவள் இடைவிடா நகைப்பும் எக்களிப்பும் காட்சிக்கு இனிமையே தந்தன. ஒருவகையில் அவள் எவரையும் எளிதில் கவர்ந்து மகிழ்வூட்டும் நிறம் உடையவளாகவே அமைந்தாள். அவள் ஒழுக்கக் கட்டுப்பாடு பற்றிக் கெஞ்சி அவ்வளவாக உயர்மதிப்புக் கொண்டதில்லை. ஆனால் இது முற்றிலும் குறை என்றே அவன் இச்சமயம் கருதவில்லை. தனி மனிதர் இயல்பாக ஒருவர் ஒருவருடன் பழகுவதைக் காண்பதில் கெஞ்சி புத்தார்வம் கொண்டவன். அத்துடன் செயற்கையான புற ஆசாரக் கட்டுப்பாடுகளிடையே வளர்ந்தவன் அவன். மக்கள் நாள்முறை வாழ்வுகூட அதில் பழகாத கெஞ்சிக்கு ஒரு புத்தம் புதுக்காட்சியா யிருந்தது. ஆகவே தம் மீது பிறர் கண்பார்வை இருப்பதாகவே அறியாத அவ்விருவரையும் மறைந்துநின்று ஒற்றாடுவது அவனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை யானாலும், அவ்வார்வம் காரணமாக அவன் மேலும் தொடர்ந்து அங்கேயே நின்றிருந்தான். ஆனால் தமக்கையின் அருகிலேயே அமர்ந்திருந்த சிறுவன் இப்போது புறப்பட எழுந்துவிட்டது கண்டு அவனும் முன் தான் மறைந்திருந்த இடத்துக்கே மெல்லத் திரும்பினான். கெஞ்சியை அவ்வளவு நேரம் காக்க வைத்ததற்காகச் சிறுவன் மிகவும் வருத்தம் தெரிவித்தான். அத்துடன் ‘இன்று ஒன்றுமே சாயாது என்றுதான் தோற்றுகிறது. என் செய்வது? அவளுடன் விருந்தாளி ஒருவர் இருக்கிறார்’ என்றான். ‘அப்படியானால் நாம் திரும்ப வேண்டியதுதானா? இதை என்னால் தாங்க முடியாது!’ என்று கெஞ்சி அங்கலாய்த்தான். சிறுவன் தொனி மாற்றினான். ‘போகவேண்டாம், இருந்து பார்ப்போம்!’ என்றான். அவன் ஒரு சிறு குழந்தையேயானாலும், நிலைகளையும் மக்கள் பண்புத் திறங்களையும் கூர்ந்து கவனித்து அவற்றை நன்கு பயன்படுத்துவதைக் கெஞ்சி அனுபவமாய் அறிந்திருந்தான். ஆகவே எப்படியும் தமக்கையை வசப்படுத்தி விடுவானென்று கெஞ்சி உறுதி கொண்டான். நாற்கட்ட ஆட்டம் இப்போது முடிந்திருக்க வேண்டும். மெல்லாடையின் சலசலப்பும் காலடிகளின் அரவமும் எழுந்தன. மனையில் அனைவரும் தத்தம் படுக்கைக்குச் சென்று கொண்டிருந்தனர் என்று இவை காட்டின. ‘நம் இளமனைத் தலைவர் எங்கே? தட்டி வாயிலை நான் அடைக்கப் போகிறேன்’ என்று ஒரு வேலையாளின் குரல் கேட்டது. அதனை யடுத்துக் கதவு தாழிடப்படும் ஓசையும் எழுந்தது. கெஞ்சி இப்போது சிறுவனை நோக்கினான். ‘அவர்கள் எல்லோரும் உறங்கச் சென்று விட்டனர்’. இனித் தான் ஏதேனும் திட்டம் வகுக்க வேண்டும்’ என்றான். தமக்கையுடன் - வாதாடுவதோ அவள் இரும்புப் பிடியை முன் கூட்டித் தளர்த்த முயல்வதோ பயனற்றதென்பது சிறுவனுக்குத் தெரியும். தற்காலச் சூழ்நிலையில் மிகச் சிறந்த திட்டம் - அவள் தனியாய் இருக்கும் சமயம் பார்த்துக் கெஞ்சியை நேரே அவளிடம் இட்டுச் செல்வதுதான். இதே கருத்துடன் கெஞ்சியும் கேள்விகள் கேட்டான், ‘கீ நோ கமியின் தங்கை இன்னும் இங்கே தான் இருக்கிறாளா?’ அவளை நான் ஒரு சிறிது பார்க்க விரும்புகிறேன்’ என்றான் அவன். ‘அது முடியாத காரியம். அவள் இப்போது என் தமக்கை யறையிலேயே இருக்கிறாள்’ என்றான் சிறுவன். ‘அப்படியா?’ என்று வியப்புற்றவன் போல் நடித்தான் கெஞ்சி. ஏனென்றால் கேள்வி கேட்கும் போதே இச்செய்தியை அவன் நேரடியாகக் கண்டு தெரிந்திருந்தாலும், இவ்வாறு ஒற்றாடிக் கண்ட செய்தி சிறுவனுக்குக் கூடத் தெரியவேண்டாம் என்று அவன் எண்ணினான். இறுதியில் இத் தாமதங்களால் பொறுமையிழந்து, இனி வீணாக்க நேரமில்லை என்று சிறுவனை அவன் நெருங்கினான். சிறுவன் ‘சரி’ என்று தலையசைத்தான். பின் பெண்கள் பகுதியின் தலை வாயிலைத் தட்டிக் கொண்டு உள் நுழைந்தான், எல்லாரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். ‘நான் இடையறையிலே உறங்கப் போகிறேன். காற்றுக்காகக் கதவையும் திறந்து தான் வைக்கப் போகிறேன்’ என்று உரக்கக் கூவிக் கொண்டே நிலத்தில் பாயை விரித்துச் சிறிது நேரம் உறங்குவதாகப் பாவித்தான். ஆயினும் மிகச் சீக்கிரத்திலேயே அவன் எழுந்து நேரொளியிலிருந்து கண்களைக் காத்துக் கொள்ள விரும்புபவன் போல ஒரு தட்டியை இடைமறித்து வைத்தான். இந்தத் தட்டியின் நிழலிலேயே கெஞ்சி பதுங்கிப் பதுங்கி உள்ளே நுழைந்துவிட்டான். ஒருபுறம் அடுத்தபடி என்ன நடக்குமோ என்ற அச்சத் துடனும், மறுபுறம் இத்துணிகர முயற்சியினால் எதிர்பார்த்த நலன் கிட்டுமோ, என்ற ஐயமும் கெஞ்சியைப் பிடித்தாட்டின. படபடவென்று அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் அவன் சிறுவனைத் தொடர்ந்து நடுப் படுக்கையறையின் வாயிலிலுள்ள தட்டியை அணுகி அதைச் சற்றே விலக்கிக் கொண்டு பெரு விரலூன்றிப் பதுங்கி நடந்தான். ஆனால் மாறுவேடத்துக்காக அவன் அணிந்திருந்த தளதளப்பான ஆடைகளில்கூட அவன் தனிப்பட எவரும் கவனித்து நோக்கத்தக்க தோற்றமுடைய வனாகவே இருந்தான். நள்ளிரவின் அமைதியிடையே இவ்வாறு அவன் உத்சுசேமியின் படுக்கையை அணுகினான். உத்சுசேமி கெஞ்சியின் வருகையை எதிர்பார்த்து எதிர்பார்த்து அஞ்சியே இருந்தாள். ஆனால் பல நாள் வராது கண்டு அவன் வர மாட்டான் என்று மகிழ்ச்சியடையத் தொடங்கிவிட்டாள். ஆயினும் புதுமை வாய்ந்த கனவு போன்ற அந்த முதற் சந்திப்பின் நினைவு மட்டும் அவள் உள்ளத்தில் ஊடாடிக் கொண்டே இருந்தது. இதனால் அன்றும் அவள் உறங்க முடியவில்லை. கிடந்து புரண்டு உருண்டு கொண்டி ருந்தாள். ஆனால் அவள் அருகே அவளுடன் நாற்கட்டமாடிய நங்கை நன்றாக உறங்கி விட்டாள். மனமார வாய்விட்டு இரகசியங்கள் பலவற்றைப் பேசியதனால், அவள் மனநிறை வுடனும், அமைதியுடனும் கிடந்தாள். கெஞ்சி இளவரசன் தன் உடையை மாற்றிக்கொண்டி ருந்தாலும் அவன் உடைகடந்து உடம்பிலூறிய நறுமணத்தை மாற்றிக்கொள்ள மறந்துவிட்டான். உத்சுசேமிக்கு அது அவன் வரவுபற்றி முன்னெச்சரிக்கை தந்துவிட்டது, அவள் தலை உயர்த்தி நோக்கினாள். ஒற்றைத்துணி யிட்டிருந்த திரைத் தட்டியின் பின்னால் இருளிலே இருள்புடைத்துச் செல்வது போல ஏதோ அசைவது கண்டாள். இந்த இருட்டிலும் அது கெஞ்சி இளவரசன் என்பதை அவள் அறிந்துகொண்டாள். திடீர் அச்சமும் தலைசுற்றும் மனக்குழப்பமும் அவளைப் பீடித்தன. அவள் பொருக்கெனப் படுக்கையிலிருந்து எழுந்தாள். மெல்லிய வலையாடை ஒன்றைப் போர்த்துக் கொண்டு அவ்வறையை விட்டே நழுவிச் சென்றாள். ஒருகணம் கழித்தே கெஞ்சி உட்புகுந்தான். ‘படுக்கை இருவருக்கு விரிக்கப்பட்டிருந்தாலும், உள்ளே ஒருவரே இருந்தது கண்டு மகிழ்ந்தான். மேற்போர்வையை அகற்றிவிட்டு மெல்ல உறங்கும் நங்கையை அணுகினான். அவள் தான் எதிர்பார்த்த உருவினும் வாட்டசாட்டமானவள். ஆனால் இது அவன் போக்கை மாற்றவில்லை. அவள் ஆழ்ந்த உறக்கம் அடுத்தபடி அவன் வியப்பைத் தூண்டிற்று. அடுத்த கணம் அது உத்சுசேமியல்ல என்று கண்டான். ‘என்ன தவறுசெய்து விட்டோம்’ என்ற அச்சம் மேலிட்டது.’ ‘என் செய்வது, வந்து விட்டோம். இனித் தவறான அறைக்கு வந்துவிட்டோம் என்று சொல்லமுடியாது. ஏனெனில் இங்கே எந்த அறையும் தவறானதே. இனி உண்மை அணங்கைச் சென்று தேடுவதும் பலனற்ற செயல். ஏனெனில் உத்சுசேமி தன்னை ஒரு தூசளவாகவேனும் மதித்திருந்தால்கூட இப்படி விட்டுச் சென்றிருக்கமாட்டாள். அத்துடன் ஒருவேளை, அது விளக்கொளியில் தான் உற்றுப் பார்த்த பெண்மணியாகவும் இருக்கலாம். அப்படியானால், மாற்றம் அவ்வளவு மோச மானதும் அல்ல!’ - இவ்வாறு அவன் தனக்குள்ளாகப் பேசினான். ஆனால் இப்பேச்சின் போக்குக் கண்டு அவன் உள்மனம் கடிந்து கொண்டது - ‘ஏன் இத்தனை சபலம் - அதுவும் உனக்கா!’ என்றது. அணங்கு கண்களைத் திறந்தாள். இயல்பாக எதிர் பார்க்கத்தக்க படியே அவள் திடுக்கிட்டாள். ஆனால் இந்த உணர்ச்சி நீடிக்கவில்லை. அவள் அச்சம் எளிதில் அகன்றது. அவள் ஆழ்ந்த சிந்தனையற்றவள். பெண்மையின் அனுபவ மற்றவள். உணர்ச்சிகளில் மிதந்தவள். அவற்றில் உறுதி காணாதவள். எனவே இவ்வளவு திடீர்வருகை கூட அவள் அமைதியை மிகுதி குலைத்து விடவில்லை. தான் அவளைப் பார்க்க வரவில்லை என்று விளக்கம் தரவே கெஞ்சி முதலில் எண்ணினான். ஆனால் அவ்வாறு செய்தால், உத்சுசேமி இவ்வளவு அரும்பாடு பட்டுக் காக்கும் இரகசியம் ஒரு நொடியில் வெளிப்பட்டுவிடும். ஆகவே வேறுவழியில்லை. அவளுக்காகவே வந்ததாக நடிக்க முற்பட்டான். அந்த மனையின் பக்கம் அவன் அடிக்கடி வருவது அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளைச் சந்திக்கவே இவ்வாறு அரும்பாடு பட்டதாக அவள் எண்ணும்படி விட்டுவிட்டான். இத்தகைய கதையைக் கேட்டால் அதில் துளியளவு உண்மையும் இருக்கக்கூடும் என்று எவரும் எண்ணமாட்டார்கள். ஆனால் எவ்வளவு பொருந்தாப் பொய்யானாலும் அவன் அழகிலும் பெருமையிலும் சொக்கிய அவ்வணங்கு அதை அப்படியே நம்பி விழுங்கினான். அவளிடம் அவனுக்கு வெறுப்புக்கிடையாது. ஆனால் அன்று அவன் எண்ணமெல்லாம் மாயமாக மறைந்து விட்ட மற்ற அணங்கு பற்றியதாகவே இருந்தது. அவள் அவனை எக்கச்சக்கமான நிலையில் மாட்டி விட்டு மறைந்துவிட்டாள். அதுபற்றித் தற்போது எங்கோ ஓரிடத்தில் பதுங்கியிருந்து தன்னைப் பாராட்டி மகிழ்ந்து கொண்டிருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. ‘உலகிலேயே அவளை ஒத்த பிடிவாத முடைய பெண் இருக்க முடியாது. அப்படிப்பட்டவளை நாடி பின்தொடர்ந்து செல்வதில் என்ன பயன்?’ என்று அவன் தனக்குள்ளே கூறிக் கொண்டான். ஆயினும்இவ்வளவும் அறிந்த பின்னும் அவன் இதயத்தில் அவள் நினைவே நிரம்பியிருந்தது. அவன் முன்னிருந்த பெண்மணிக்கு இளமை இருந்தது. கவர்ச்சி இருந்தது. களியாட்டத் துடிப்பு இருந்தது. விரைவில் இருவரும் ஒருவருடன் ஒருவர் எளிதில் பழகினர், கூடிக்குலவினர். ‘நன்கு தெரிந்த ஒருவரைச் சந்திப்பதை விட இப்படித் திடுமெனச் சந்தித்துப் பழகுவதில் எவ்வளவு இன்பம் இருக்கிறது?’ என்று கெஞ்சி பேச்சைத் தொடங்கினான். பேச்சிறுதியில் அவன் மேலும் தொடர்ந்தான்: ‘நான் ஒன்று கூற விரும்புகிறேன், தவறாக எடுத்துக் கொள்ளாதே!’ நம் சந்திப்பு இன்னும் சில நாட்களுக்காவது இரகசியமாய் இருக்க வேண்டும். நான் விரும்புகிறபடி எப்போதும் நடப்பதற்கு என் நிலை இடந்தரவில்லை. அத்துடன் உன் உறவினரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டால் நம்மிடையே தலையிட்டுத் தொல்லைகள் விளைவிக்கக் கூடும். ஆகவே பொறுமையுடன் இரு. என்னைமறந்து விடாதே? என்று பேசினான். அவாத்துடிப்பற்ற இந்த அறிவுரைப் பண்பு அவளுக்கு மன நிறைவு அளிக்கவில்லை. அவள் மறு மொழியில் சிறிது ஏமாற்றம் தொனித்தது. ‘ அப்படியானால் நான் உங்களுக்குக் கடிதங்கள் கூட எழுதப்படாதா?’ அதைக்கூட மக்கள் தவறாகக் கருதி விடுவார்களா?’ என்று கேட்டாள். அவன் பதில் அரைகுறைத் தேறுதல் அளிப்பதாய் இருந்தது. ‘அப்படியொன்றுமில்லை’. மறைப்பு என்பது மக்கள் பட்டாங்கமாக அறிந்து விடப்படாது என்பதுதான். அவ்வப்போது என் பணியிலுள்ள சிறுவன் நம்மிடையே கடிதங்கள் கொண்டேகக் கூடாதென்றில்லை. ஆனால் இதற்கிடையில், வெளியார் யாரிடமும் இதுபற்றிச் சொல்லாடி விடாதே’ என்றான் அவன். உத்சுசேமி அறையை விட்டு ஓடிய சமயம் அவள் கைச்சதுக்கம் ஒன்று தோளிலிருந்து நழுவி விழுந்திருந்தது. கெஞ்சி உத்சுசேமியின் தோழியை விட்டுப் பிரியும் சமயம், அது அவன் கண்களில் பட்டது. அதை அவன் ஆவலுடன் எடுத்து வைத்துக் கொண்டான். சிறுவன் அருகாமையிலேயே படுத்திருந்தான். கெஞ்சி அவனை மெல்ல விழிப்பூட்டினான். தன் தலைவர் தன்னை எந்த நேரம் அழைப்பாரோ என்ற எண்ணத்தினால் அவன் அரைத் தூக்கமே தூங்கியிருந்தான், அவர்கள் வெளி வரும் போது ‘யாரது?’ என்று ஒரு குரல் கேட்டது. அது மனையில் வேலை பார்த்த ஒரு கிழவியே. சிறுவனுக்கு ஒரு சிறிது கலக்கம் ஏற்பட்டது. அதைக் காட்டிக் கொள்ளாமல் ‘நான்தான்’ என்று பதிலளித்தான். ‘இந்நேரத்தில் நீ இங்கே எதற்காக இப்படி நடமாடுகிறாய்?’ என்று கடிந்த வண்ணம் அவன் கதவை நோக்கியே முன்னேறினாள். ‘என்ன சனியன் இது!’ என்று சிறுவன் உள்ளுக்குள் முணுமுணுத்தான். ஆனால் விளக்கங் கூற விரைந்தான். ‘அதெல்லாம் ஒன்றுமில்லை.’ ஒரு நொடி சற்று வெளியே போய்வர எண்ணினேன்’ என்றான். இச்சமயம் கெஞ்சி வாசல் கடந்து வந்து கொண்டிருந்தான். அச்சமயம் பார்த்து விடியற் கால மேகங்கள் விலகி நிலவின் ஒளி அவன் மீது விழுந்தது. கதவருகே வயது வந்த ஒரு நெடிய ஆடவனைக் கண்டு அவள் அலறினாள். ‘இது யார் உன்னுடன் இருப்பது?’ இக்கேள்வியால் எதுவும் நேரு முன் நல்ல காலமாக அவள் தானே தன் கேள்விக்குப் பதிலாக ஒரு விளக்கமும் கூறிவிட்டாள். ‘ஓகோ, மிம்புவா அது!’ இப்படிப் பனைமரத்திலே பாதியாய் வளர்ந்து விட்டதுபார்!’ என்றாள். மிம்பு கம்பிபோல் ஒடுங்கி நெட்டையான ஒரு பணிநங்கை. அவ்வளர்ச்சி காரணமாக மனையில் எல்லாராலும் கேலி செய்யப்பட்டு வந்தவள். அவளுடனேயே சிறுவன் வெளியே செல்வதாகக் கிழவி நினைத்ததனால், அவள் கேலி சற்று நீண்டது. ‘தம்பி, நீயும் மோசமில்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் அவள் உயரத்துக்கு உன் உயரம் சரியாய்ப் போய்விடும்’ என்றாள். இந்தப் பேச்சுடன் அவர்கள் வெளிவந்த கதவுவழியே அவள் உள்ளே சென்றாள். கிழவி தன்னை இன்னொருவராகக் கருதிய போதிலும் கெஞ்சியின் இக்கட்டு இத்துடன் தீரவில்லை. இடைவழியின் நிழலிலே கூடிய மட்டும் பதுங்கிப் பதுங்கியே நடந்தான். கிழவி அவனருகே வந்து, ‘கண்ணே, இப்போது உன் காவல் முறைதானே!’ என்றாள். கிழவி நினைத்த மிம்புவாகக் கெஞ்சி பதில் கூற முடியாமல் திண்டாடினான். ஆனால் தானே தனக்கு மறுமொழி கூறிவிடும் கிழவியின் பழக்கம் இப்போதும் அவனைக் காத்தது. ‘நேற்றெல்லாம் நான் பொல்லாத சூலையால் முடங்கிக் கிடந்தேன். ஆனால் வேலைக்கு ஆட்கள் போதவில்லை. முற்றிலும் முடியாமலிருந்தாலும் உளைந்து உழைத்து விட்டேன். இப்போது என் நோவு தாங்க முடியவில்லை. பேசக்கூட முடியவில்லை. இதோ- ஐயோ, ஐயோ - வேதனையாயிருக்கிறது. நான் போகிறேன்’ என்ற அவள் அவர்களைக் கடந்து உருண்டு புரண்டு ஓடினாள். கெஞ்சி இப்போது மயிரிழை அளவிலேயே தப்பினான். ‘இத்தகைய பேரிடர்களை ஏற்றும் பெறத்தக்க அவ்வளவு பெரிய காரியமா உத்சுசேமியின் செய்தி?’ என்று அவன் எண்ணினான். ஆகவே குதிரைகளைச் சிறுவன் கவனத்தில் விட்டுவிட்டு அவன் தன் மாளிகைக்கே வண்டியை ஓட்டினான். மாளிகையில் வந்த பின்னரே சிறுவனிடம் கெஞ்சி முந்திய இரவின் நிகழ்ச்சிகள் முழுவதையும் எடுத்துரைத்தான். ‘உன்னால் நேர்ந்த குளறுபடி மிக மிகப் பெரிது’ என்று அவன் பையனை மனங்கொண்ட மட்டும் கடிந்து கொண்டான். பின் பையன் செய்தியை நிறுத்திவிட்டு அவன் தமக்கையின் மாய்மாலப் பசப்பைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டான். அந்தக் குழந்தை உள்ளம் இவற்றைக் கேட்டு மனநைந்து உருகிற்று - ஆனால் தன் சார்பிலோ, தமக்கையின் சார்பிலோ எத்தகைய விடை விளக்கம் கூறவும் அவன் வகை காணவில்லை. கெஞ்சி தன்னையும் நொந்து கொள்ளத் தவறவில்லை. ‘ என்னைப்போல அவப்பேறுடையவன் வேறு இருக்க முடியாது. அவள் என்னை மனமார வெறுத்தாலல்லாமல். சென்ற இரவு நடத்தியது போல அவள் என்னை ஒரு போதும் நடத்தியிருக்க முடியாது. இதில் ஐயமில்லை. ஆனால் குறைந்த அளவு அவள் என் கடிதங்களுக்கு நயநாகரிமான மறுப்பாவது எழுதியிருக்க முடியாதா! அந்தோ, நான் எவ்வளவு கீழானவன்! என்னை விட இயோ நோ கமி எத்தனையோ உயர்வுடையவன்!... தன்னை அவள் வெறுத்து விட்டாள் என்ற எண்ணத்திலேயே அவன் இவ்வாறெல்லாம் புலம்பினான். ஆனால் அதே சமயம்அவள் கைச்சதுக்கத்தை அவன் தன் உள்ளாடையில் மறைத்து அணிந்து கொண்டுதான் இருந்தான். இன்னும் சிறுவனை அவன் தன் அருகே கிடத்திக் கொண்டு, தன் உணர்ச்சிகளை ஆர்வமாக அவன் செவிகளிலேயே கொட்டினான். ‘உன்னிடம் எனக்கு எவ்வளவோ பாசம் உண்டு என்பது உனக்குத்தெரியும். ஆயினும் இனிமேல் உன்னைக் காணும் போது என் நெஞ்சில் இந்தப் பெருத்த ஏமாற்றம்தான் முன் வந்து தாண்டவமாடும் இதுவே நம் நட்புத் தொடர்பைத் துண்டித்து விடப் போதுமானது’ அவன் சொற்களின் கடுமையும் உறுதியும் கண்டு சிறுவன் தேற்றுவாரற்ற தனிமைத் துயரில் மாழ்கினான். சிறிது நேரம் இருவரும் ஓய்வு கொண்டனர். ஆனால் கெஞ்சி கண்ணுறங்கவில்லை. விடிந்ததும் அவன் அவசர அவசரமாகத் தன் எழுத்துவேலைக் குரிய மைக்கோல் கொண்டு வரும்படி கூறினான். இன்று அவன் முறையான கடிதம் எழுதவில்லை. மடித்த தாள்நறுக் கொன்றில் ஏதோ கிறுக்கினான். அது பள்ளிச் சிறுவர் கைவரிப் பாடம் போல இருந்தது. அதில் அவள் தான் மறைந்தோடும் போது நழுவ விட்ட கைச்சதுக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டான். ‘ ஆற்றருகே மரத்தடியில் பொன்சிறை வண்டு உதிர்த்த மென்சிறகு போன்ற’ தென்று அதை அவன் தன் பாடலில் வருணித்தான். சிறுவன் இக்கடிதத்தை எடுத்துத் தன் ஆடையின் மடிப்பில் செருகிக் கொண்டான். உத்சுசேமியின் தோழி இப்போது என்ன உணர்ச்சிகளுடன் இருப்பாளோ என்று கெஞ்சி ஒரு கணம் கவலைப்பட்டான் . ஆனால் சிறிது சிந்தித்தபின் அவளுக்கு எச்செய்தியும் அனுப்பா திருப்பதே நன்று என்று கருதினான். கைச்சதுக்கத்தில் அதை அணிந்த அணங்கின் மென்மணம் என்றும் நீங்காமலே இருந்தது. அதை இதன் பின்னும் மிகப்பல நாட்கள் கெஞ்சி தன் உள்ளாடைக்குள்ளேயே அணிந்திருந்தான். சிறுவன் மனை சென்ற போது அவன் தமக்கை சிடு சிடுத்த முகத்துடன் அவனை எதிர்பார்த்திருப்பது கண்டான். ‘ நீ எனக்கு வெட்டிவைத்த படுகுழி எத்தகையது என்று தெரியுமா உனக்கு? அதிலிருந்து நான் தப்பியது உன்னாலல்ல - அப்படியும் என் தோழிக்கு நான் என்னதான் விளக்கம் கூறமுடியும்? இள வரசனிடம் தான் உன்மதிப்பு இப்போது என்ன வாயிருக்க முடியும் - எப்பேர்ப்பட்ட குறளிக்கோமாளிக் கூத்தனாக அவர் உன்னைக் கருதியிருப்பார்! நீ பிறந்த பிறப்பில் உனக்கு இப்போதாவது வெட்கம் ஏற்பட்டிருக்குமென்று எணணுகிறேன்’ என்றாள். இரு சார்பிலும் இவ்வளவு தகுதியற்ற கடுமையுடன் நடத்தப்பட்டும் சிறுவன் மனமுடையவில்லை. பாடலுடன் கூடிய கடிதத்தை ஆடைமடிப்பிலிருந்து எடுத்து அவளிடம் தரத் தயங்கவில்லை. அவளும் அதை வாசிக்க மறுக்கவில்லை. ‘நழுவிய கைச்சதுக்கம் என்பது என்ன? அதைப்பற்றி அவர் பேசுவதென்ன?’ இது புரியத்தொடங்கியதும் அவள் மறு மொழி எளிதாயிற்று. “கொண்கன் என்னை அகன்ற கணமுதல் கண்கள் முற்றும் கனிந்து பனித்தன, விண்கொள் ஈசெயோ மேவும் வலைஞர்கள் திண்க ரைத்தலத் திட்ட மெல்லாடைபோல்! என்ற பழம் பாடலை அவள் அடிக்கடி கேட்டிருந்தாள். ஆனால் அதில் முதலடிகள் எப்படியோ அவள் நினைவுக்கு வராமல் நழுவவே, ‘விண்கொள் ஈசெயோ மேவும் வலைஞர்கள் திண்க ரைத்தலத் திட்ட மெல்லாடைபோல்!’ என்ற பின்னிரண்டு அடியை மட்டும் தன்பாடலாக எழுதினாள். உணர்ச்சிக் குழப்பம் போதாமல் இந்த அரைப்பாடல் மறந்த குழப்பமும் அவளை மயக்கத்தில் ஆழ்த்தின. இதேசமயம் மேல் மாட நங்கையும் மிகவும் நைவுற்றாள். தனக்கு நேர்ந்த இனிய நிகழ்ச்சிபற்றி யாரிடமாவது கூற அவள் துடித்தாள். அங்ஙனம் செய்ய முடியாமல் தனிமையில் தன் அடங்கா இயற்கை யார்வத்தைப் பொறுமையுடன் அடக்கிக்கொண்டிருந்தாள். உத்சுசேமியின் தம்பி வந்த போது அவள் உள்ளம் புது நிகழ்ச்சி எதிர்பார்த்து விதிர் விதிர்த்துத் துடித்தது. ஆனால் அவளுக்குக் கடிதம் இல்லை. அவள் எதுவும் அவளது கட்டற்ற இன்ப வாழ்வில் முதல் தடவையாக ஏமாற்றத்தின் சாயல் அவள் புருவங்கள் மீது படர்ந்தது. உத்சுசேமி கெஞ்சியின் காதலுக்கு எதிராகத் தன் உள்ளத்தை எஃகாக்கிக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் கெஞ்சியின் கடிதத்தில் கனிந்து கிடந்த அவன் பாசத்துடிப்பைக் கண்டதும், அவன் காதலை ஏற்கும் சுதந்திரம் தனக்கு இல்லாமற் போயிற்றே என்ற வருத்தத்தில் மீண்டும் ஆழ்ந்தாள். முடித்த முடிச்சை இனி அவிழ்ப்பது முடியாதானாலும், அதன் கடுமை இப்போது அவளை முன்னிலும் மிகுதியாக அறுக்கத் தொடங் கிற்று. மடித்து வைத்த கடிதத்தை அவள் மீண்டும் எடுத்து அதன் ஓரத்திலேயே தன் இதயத்தின் பதிலைப் பதிந்து வைத்தாள். கெஞ்சியின் உவமையையே அவள் தொடர்ந்து வளப் படுத்தினாள். ‘அடிக்கடி கண்ணீரால் நனைந்த என் கைத்துண்டு மரத்தடியில் நழுவிப் பனி நீரில் முற்றிலும் நனைந்த பொன்சிறை வண்டின் சிறகின் தோற்றத்தையே நினைவூட்டிற்று’ என்று அவள் வரைந்தாள். 4. யுகாவ் ஆறாவது வளாகத்தைச் சேர்ந்த மாதரசி ரோக்கு ஜோ சீமாட்டி கெஞ்சியின் இரகசியக் காதல் வாழ்வில் இடம் பெற்றிருந்த காலம் இது. ஒருநாள் அவன் அரண்மனையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் சமயம், வழியில் தன் செவிலித்தாயைக் காணவேண்டுமென்ற விருப்பம் அவனுக்கு ஏற்பட்டது. அவள் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு, உலகவாழ்விலிருந்து ஒதுங்கி ஐந்தாவது வளாகத்திலேயே ஒரு புத்த துறவு நங்கையாய் வாழ்ந்து வந்தாள். பலரிடம் உசாவி வீடறிந்து கொண்ட பின்னும், முன் வாயில் பூட்டப்பட்டிருந்ததால் கெஞ்சி தன் வண்டியை உள்ளே செலுத்த முடியவில்லை. ஆகவே செவிலித்தாயின் புதல்வனான கோரெமிட்சுவைச் சென்று காண ஒரு பணியாளை அனுப்பிவிட்டு அவன் அருகிலே அரை குறைப் பாழ் நிலையிலிருந்த ஒரு சிறு கிளைச்சந்தைப் பார்வையிட எண்ணி இறங்கினான். அடுத்திருந்த முதல் வாயில் கதவுக்குப் புதிய கழிகளால் வேலியிடப்பட்டிருந்தது, அதன் மேல்புறம் ஐந்தாறு தொகுதி களாகக் கொடிகள் படர்வதற்குரிய பின்னல் சட்டங்கள் அமைந்திருந்தன. இவற்றை மறைத்திருந்த வெண்திரையில் ஆங்காங்கே சிறு கீறல் கிழிசல்கள் இருந்தன. அவற்றினூடாகப் பல கண்கள் - பெண்டிர் கண்கள் - கெஞ்சியை ஆவலுடன் கூர்ந்து நோக்கியிருந்தன. தான் செல்லும் சமயம் தற்செயலாகப் பார்க்கும் கண்களே அவை என்று அவன் முதலில் எண்ணினான். ஆனால் நிலத்தளத்துக்கும் அக்கண்களுக்கும் உள்ள தூரத்தை நோக்க, மனித எல்லை கடந்த அரக்கராயிருந்தாலன்றி, அவர்கள் நிலத்தளத்தில் நின்று அவ்வாறு நோக்க முடியாது என்பது தென்பட்டது. படுக்கை, மேசை முதலிய ஏதேனும் ஒன்றைக் கொண்டுவந்து இட்டு, அவற்றின் மீதேறியே அவர்கள் பார்க்க முயன்றிருக்க வேண்டும். இது அவனுக்குப் புதுமையாகத் தோற்றிற்று. முன்பாக ஓடிவரும் அரண்மனை முன்னோடிகள் கூட இல்லாமல், ஒரு சாதாரண வண்டியிலேயே அவன் வந்திருந்தான். இந்நிலையில் அவன் யார் என்று எவரும் ஊகிப்பது முடியாது. அந்தக் கவலையில்லாமல் அவ்வீட்டை நுட்பமாக அமைதி யுடன் கவனித்தான். வாயிலும் பின்னல் சட்டங்களாலேயே ஆக்கப்பட்டிருந்தது. அது திறந்திருந்ததனால் அவன் உட்புறத்தை நன்கு பரிசீலனை செய்ய முடிந்தது. மிகவும் எளிய நிலையில் உள்ள வீடு அது, வாய்ப்பு வசதிகளும் அந்த அளவிலேயே இருந்தன. முதலில் அத்தகைய வீட்டில் இருப்பவர்மீது அவனுக்கு இரக்கம் ஏற்பட்டது. கீழ்வரும் பாடல்கள் அவனுக்கு இச்சமயம் நினைவுக்கு வந்தன. ‘அகல் உலகில் உரிய உறைவிடம் எதுவும் தேடற்க!’ பகல் கழியின் அயலிடம் உன் தங்கிடமாக் கொள்க! மன்னர் மணிபவள மாளிகையில் வாழட்டும், துன்னும் தழைக்குடிலே போதும் இன்பத் துணைவர்க்கே!’ பின்னிய வேலிமீது கொடி ஒன்று படர்ந்து தன் பசுமையான குளிர்ச்சி தங்கிய தழைகளை எங்கும் பரப்பிற்று. அவற்றிடையே தமக்குள் தாமே பேசிக்கொள்பவரின் முத்த இதழ்கள் போலப் பாதி திறந்த இதழ்களையுடைய வெண்மலர்கள் கூடிச் சிரித்தன. அவற்றின் பெயர் ‘யுகாவ்,’ (மாலை முகங்கள்) என்பது. அப்பெயர்களிட்டுப் பணியாள் ஒருவன் அவற்றைக் கெஞ்சிக்கு அறிமுகப்படுத்தினான். அந்தப் பாழ்ங்குடிலில் இவ்வளவு அழகாய்க் கொத்துக்கொத்தாக அம்மலர்கள் பூத்துக் குலுங்க உளங்கொண்டது அவனுக்குப் புதுமையாகவே இருந்தது. இற்று முறிந்த இறைவாரங்களிலும், கை வாரங்களிலும் வாய்த்த வாய்த்த இடங்களிலெல்லாம் சென்று சென்று அக்கொடி தன் வண்ணப் பூவளங்கொழித்தது. கெஞ்சி அம்மலர்களில் சில பறித்து வரும்படி வேலையாள் ஒருவனை அனுப்பினான். அவன் பறித்துக் கொண்டிருந்த சமயம் மஞ்சள் மேலாக்கிட்ட ஒரு சிறுமி சிறிது நாகரிகமாக அமைக்கப்பட்ட சறுக்குத் தட்டிக் கதவு திறந்து கொண்டு கெஞ்சியிடம் வந்தாள். நன்கு நறுமணம் தோய்விக்கப்பட்ட ஒரு வெள்ளை விசிறியை அவனுக்கு அவள் அளித்தாள்: ‘இம்மலர்களை வைக்க உங்களுக்கு ஏதேனும் வேண்டாமா? அதற்கு இது உதவட்டும். நீங்கள் வந்து தேர்ந்தெடுக்கும் இந்நாளில் கொத்துகள் குறைவாய் இருக்கின்றனவே என்று மட்டும் தான் வருந்துகிறேன்’ என்றாள். கெஞ்சி மனையின் வாயில் திறந்து கொண்டு திரும்பி வரும் வழியில் செவிலித்தாயின் புதல்வனான கோரெமிட்சு மற்ற மனையிலிருந்து வெளிவந்தான். கெஞ்சியை இவ்வளவு நேரம் காக்க வைத்ததற்காக அவன் மிகமிக வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். ‘வாயில் கதவின் திறவு கோலை நெடுநேரமாகக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகவேதான் நேரமாயிற்று. ஆனால் நல்ல காலமாக, இந்த எளிய பகுதியிலுள்ள மக்கள் உங்களை அடையாளமறிந்து கொள்ளமாட்டார்கள். ஆயினும் இந்த அந்தசந்தமற்ற இடுக்குத் தெருவில் நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து அலுப்படைய நேர்ந்ததே என்று வருந்துகிறேன்’ என்றான். அவன் கெஞ்சியை மனைக்குள் இட்டுச்சென்றான், கோரெமிட்சுவின் உடன் பிறந்தான் மடத்துத் துணைவனா யிருந்தான். அவனும் அவன் மைத்துனன் மிகாவாநோ கமியும் தங்கையும் மனை முன்கூடத்தில் கூடி இளவரசனை வரவேற்றனர். தம் சிறுமனைக்கு அவ்வளவு உயர்ந்த ஒருவர் என்றேனும் வரக்கூடும் என்று கூட அவர்கள் கருதியதில்லை யாதலால், இவ் வெதிர்பாரா வரவில் அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். துறவு மாதாகிய செவிலித்தாய்கூடத் தன் படுக்கையி லிருந்து எழுந்து அவனை வரவேற்றாள். ‘உலகப்பற்றை முற்றிலும் துறந்து செல்ல வேண்டுமென்று நான் எத்தனையோ நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு ஆவல் அதைத் தடுத்து வந்திருக்கிறது. செவிலித் தாயாகவே நீ என்னை என்றும் அறிந்து வந்திருக்கிறாய். அந்த நிலையிலேயே ஒரு தடவை நீ என்னைப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்பினேன், நீ என்னைக் காண வரவேயில்லை. காத்திருந்து அலுத்த பின்னரே நான் இந்நோன்பை மேற்கொண்டேன். இப்போது என் திருவார்ந்த சங்கம் கட்டளையிட்ட நல்லறங்களைச் செய்ததன் பயனாக, என் இளஞ்சிறுவனே என்னைத் தேடிவரும் பரிசு எனக்குக் கிட்டியுள்ளது. அத்துடன் என் உடல் நலங்கூடச் சிறிது மீண்டிருக்கிறது. உன்னைக் கண்டதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியால் இனி நான் பகவான் அமிதனாகிய புத்தர் பிரான் ஒளிக்கு மனநிம்மதியுடன் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் காத்திருக்க முடியும்’ என்றாள். அவள் முதுமைப்பாசம் ஒரு சில துளிக் கண்ணீராக அவள் கன்னங்களில் படிந்தன. கெஞ்சி பணிவன்புடன் மறுமொழி கூறினான். ‘நீங்கள் பொல்லா நோய்க்கு ஆட்பட்டு நலிவடைந்து இருக்கிறீர்கள் என்று சில நாட்களுக்கு முன் கேள்விப்பட்டேன். அதனால் எனக்கு ஏற்பட்ட கவலை பெரிது. இப்போதுகூட உங்களை இந்த நோன்பாடையில் காண வருத்தமாகவே இருக்கிறது. என் விருப்பம் - நீங்கள் இன்னும் நீண்டநாள் வாழ்ந்து, உலகில் நான் இன்னும் உயர் படிகளுக்கு முன்னேறுவதைக் காண வேண்டும் என்பதே. ஏனென்றால். அப்போதுதான் நீங்கள் திரும்பப் பிறக்கும் சமயம் அமித நாதனின் இன்ப உலகில் ஒன்பதாவது கோளத்தில் சென்று பிறக்க வழி ஏற்படும். நிறைவேறாத விருப்பங்களுடன் மாள்பவர் அந்த அவாக்களின் தீவினைப் பயனால் பளு உடையவர்களாகித் தாழநேர்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்’ என்றான். செவிலித்தாயர் போன்ற முது மக்கள், தங்கள் வளர்ப்புக் குழந்தைகள் கருங்குரங்கு போன்ற தோற்றமுடையவர் களானால் கூட அவர்களை வனப்புமிக்க குணமணிகளாகக் கொள்வது வழக்கம். அப்படியிருக்க, கெஞ்சியின் இளமை வாழ்வில் பேரிடம் வகித்த அம்மாது தன் பணி மிகவும் மகிமை வாய்ந்தது, முக்கியத்துவம் உடையது என்று கருதியதில் வியப்பில்லை. கெஞ்சி பேசிய சமயம் பெருமிதம் நிறைந்த இன்பக் கண்ணீர் அவள் கண்களில் ததும்பிற்று. துறவு வாழ்க்கை மேற்கொண்ட அம்முதிய மாது ஒரு மனிதனின் வாழ்க்கைப் போக்கில் இவ்வளவு உயிர் ஆர்வம் காட்டியது தகாது என்று அவள் மைந்தர்கள் எண்ணினார்கள். கெஞ்சிகூட இதனால் அதிர்ச்சியடையக் கூடுமென்று எண்ணி அவர்கள் ஒருவரை ஒருவர் ஐயுற வச்சத்துடன் நோக்கினர். ஆனால் கெஞ்சி அதன் பாசத்தில் தோய்ந்து மகிழ்வுற்றே நின்றான். அவன் சொற்களும் அதே உணர்ச்சியைத்தான் காட்டின. ‘நான் குழந்தையாய் இருந்தபோதே எனக்கு உரியவர்களும் அரியவர்களும் என்னை விட்டகன்றார்கள். என் வளர்ப்பில் பலர் கருத்துச் செலுத்தினாலும், உற்ற தாயாக எல்லாரிலும் எனக்கு அருமையானவர்கள் நீங்கள்தான். உங்களிடம் தான் நான் முழுத் தாய்ப் பாசமும் கொண்டுள்ளேன். நான் வளர்ந்தபின் முன்போல் அடிக்கடி உங்களுடன் நான் வந்திருக்க முடியவில்லை. இங்கே வந்து நான் விரும்பிய அளவில் அடிக்கடி உங்களுடன் பழகவும் இயலாமல் போயிற்று. ஆயினும் நான் இதற்கு முன் இங்கு வந்து போனது முதல் இது நாள் வரையும் எவ்வளவோ நீண்ட நாட்களானாலும், உங்களைப் பற்றிக் கருதாத நாளில்லை- வாழ்க்கையின் போக்கு இவ்வளவு கடும் பிரிவுகளுக்குக் காரணமாய் விட்டதே என்று வருந்தாத நேரமுமில்லை’ என்றான். அவன் பேச்சிலும் முகத்திலும் கனிவு துலங்கிற்று. தன் கண்ணில் கசிந்த ஈரத்தைத் துடைக்க அவன் கையை உயர்த்தியபோது, அதன் உறைநுனிகளில் செறிந்திருந்த அரசுரிமை சான்ற நறுமணம் அச்சிற்றறை முழுவதும் பரவிற்று. இத்தகைய இளவரசனுக்குச் செவிலித்தாய் என்ற முறையில் முதியவள் கொண்ட தற்பெருமை கண்டு சிறிது அருவருப்புற்ற அவள் மைந்தர்கள் கண்கள் கூட இப்போது கலங்கின. நோயுற்ற மாதின் பெயரால் இடைவிடாப்பூசனைகள் நிகழ ஏற்பாடுகள் செய்தபின், கோரெமிட்சுவின் உதவியால் கெஞ்சி ஒரு விளக்கைத் தருவித்து வண்டியில் ஏற்றி, அவ்விடம் விட்டுப் புறப்பட்டான். வீட்டுக்கு வெளியே வந்ததும் அவன் வெண்மலர்கள் வைக்கப்பெற்றிருந்த விசிறியை நோக்கினான். அதிலே முயற்சியில்லாதது போலத் தோற்றும்படி மிக நேர்த்தியான எழுத்துகளில் ஒரு பாடல் தீட்டப்பட்டிருந்ததை அவன் கவனித்தான். ‘உங்கள் கருத்தைக் கலங்க வைத்த மலர்கள் ஒளிமிக்க பனித்துளியாடையால் புதுமைத் தோற்றம் படைத்த யுகாவ் மலர்களேயாகும்’ என்று குறித்தது அப்பாடல். அதன் முயற்சியில்லா எளிமை, எழுதியவர் அடையாளமும் மதிப்பும் மறைப்பதற்கென்று வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டதாகத் தோற்றிற்று. ஆயினும் அம் மறைப்புக் கடந்து கையெழுத்து அவ்வுயர்வையும உயர் குடியின் பயிர்ப்புச் சிறப்பையும் காட்டிற்று. இவைகண்டு கெஞ்சி ஒருபுறம் வியப்பும் மற்றொரு புறம் அதனூடாக மகிழ்வும் கொண்டான். ‘இடது புறமுள்ள இந்த வீட்டில் யார் வசிக்கிறார்கள்?’ என்று அவன் கோரெமிட்சுவிடம் கேட்டான். இடையீட் டாளனாக இருக்க விரும்பாமல் கோரெமிட்சு கை விரித்தான். ‘என் தாய் இல்லத்தில் நான் ஐந்தாறு நாட்களாகத் தான் தங்கியிருக்கிறேன். அந்த நாட்களிலும் தாயின் நோய் பற்றியே முற்றிலும் சிந்தனை செலுத்தி வர வேண்டிய நிலையில் அயலாரைப் பற்றி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை’ என்றான். கெஞ்சி இப்போது தன் ஆவலுக்கு விளக்கம் கூறினான். ‘பொல்லாங்குக்கு இடமற்ற, ஆனால் முக்கியமான ஒரு செய்தி குறித்தே இதை அறிய விரும்புகிறேன். இந்த விசிறி எத்தனையோ பிரச்சனைகளை எழுப்பியுள்ளது. அவற்றை நான் விடுவித்துணர்வது மிகமிக அவசியம். ஆகவே தயவு செய்து, அருகில் இவ்வட்டாரத்தை நன்கறிந்தவர்களிடம் விசாரித்துத் தெரிவியுங்கள்’ என்றான். கோரெமிட்சு உடனே அடுத்த வீட்டின் வேலையாளை அழைத்துக் கேட்டான். ‘இந்த மனை செயலிழந்து விட்ட ஒரு நிலவாரக் கிழவருடையது. அவர் நாட்டுப்புறம் சென்று வாழ்கிறார், ஆனால் இச்சீமாட்டி இங்கேயே தங்கியுள்ளாள். அவள் இளமை நலமும் சமுதாய வாழ்க்கை யார்வமும் உடையவள். அவள் உடன் பிறந்தார் அரண்மனை இளைஞர் ஆதலால் அடிக்கடி இங்கே வந்து போவதுண்டு. ஒரு வேலையாளுக்குத் தெரிந்த அளவில், இம்மனை பற்றிய செய்திகள் இவையே’ என்றான் அவன். கோரெமிட்சு இவற்றைக் கெஞ்சியிடம் தெரிவித்தான். இங்கே குறிப்பிட்ட அரண்மனை இளைஞருள் ஒருவரே விசிறியிலுள்ள பாடலை எழுதியிருக்க வேண்டும் என்று கெஞ்சி எண்ணினான். அதில் தொனித்த தன்னிறைவமைதியை நோக்க, அதை எழுதியவன் அத்தகைய தற்பெருமைக்குரிய உயர் பதவியாளனாகவே இருக்க வேண்டும். ஆயினும் கெஞ்சி இச்சமயம் காதற் புதுமை யார்வத்தில் மிதந்து கொண்டிருந்தான். ஒருவேளை இப்பாடல் தன்னை அறிந்த ஒருவரால் தன்னை நோக்கியே எழுதப்பட்டிருக்கக் கூடும் என்ற இனிய கற்பனையை விலக்குவது அவனுக்கு அரிதாயிற்று. ஆகவே அவன் தானும் தன் கையெழுத்தை மாற்றிக் கொண்டு ஒரு தாளில் எழுதினான். ‘மாலை அரை அருளில் நான் மங்கலாகக் கண்ட அம்மலர்கள் மேலும் அணுகி நுணுகி நான் நோக்கி யிருந்தேனானால் சிறிதும் கருத்தில் குழப்பம் அளித்திருக்க மாட்டா!’ எழுதிய தாளை மடித்து அதைத் தன் வேலையாளிடம் கொடுத்து அனுப்பி விசிறி தந்தவர்களிடம் கொடுக்கும் படி கூறினான். விசிறியை அனுப்பியவர்கள் கெஞ்சியை முன்பின் பார்த்தறியாதவர்கள் ஆகலாம். ஆனால் அவன் முகத்தோற்றம் நன்கு அறியப்பட்ட ஒன்று. ஆகவே அவர்கள் பலகணி வழியாக அவனைக் கண்டபோதே அவனைச் சரியாக ஊகித் துணர்ந்திருக்கக் கூடும் என்று அவ்வேலையாள் நினைத் திருந்தான். விசிறியை அனுப்பும் சமயம் அவர்களுக்கிருந்த விதிர் விதிர்ப்பார்வத்தையும் அதற்குரிய விடை நெடுநேரம் வராதிருந்தது பற்றி அவர்கள் அடைந்த ஏக்க ஏமாற்றத்தையும் அவனால் கற்பனைப் படுத்திக் காண முடிந்தது. வேண்டுமென்றே நாகரிக நயமுறைகட்கு மாறாகக் காலம் தாழ்த்திய ஒன்றாக இக்கடிதத்தின் தாமதத்தை அவர்கள் கருதிக் கொள்ளக் கூடும். இவ்வாறு நினைத்த வேலையாள் மனையை அணுகவே கூச்சமடைந்தான். இதற்கிடையில், மங்கலான பரந்த ஒளியின் துணை கொண்டு, கெஞ்சி மெள்ளத் தன் செவிலித் தாயின் மனையிலிருந்து புறப்பட்டுச் சென்றான். அடுத்த மனையின் திரைகள் இச்சமயம் இறுக இழுத்துக் கட்டப்பட்டிருந்தன. அவற்றினூடாக மின்மினி போல மினுங்கிய ஒரு விளக்கொளி மட்டும் வெளியே தெரிந்தது. அவன் அன்று குறிக்கொண்டு சென்ற இடம் ரோக்குஜோ சீமாட்டியின் இல்லமே. இங்கே முற்றிலும் வேறுபட்ட காட்சிகள் அவன் கண்களுக்கு விருந்தளித்தன. அழகிய பூங்கா, அதனை அடுத்து நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டம், அகன்ற இன்ப வாய்ப்புள்ள மனையிடம், பகட்டான இந்த ஆரவார அழகுப் பரப்புகளுக்குரிய அழகியின் இன்பத்தோழமை ஆகியவை அவன் உள்ளத்திலிருந்து தழை குழை வேலிகளையும் வெண்மலர்களையும் கொண்ட மனையின் காட்சியை முற்றிலும் அகற்றி விட்டன. வரும்போது எண்ணியதைவிட நீடித்து அவன் இங்கே தங்கிவிட்டான். அங்கிருந்து தன் மாளிகை நோக்கி அவன் திரும்பியபோது, கதிரவன் ஏற்கெனவே உச்சி நோக்கி நெடுந்தொலை சென்றிருந்தான். இப்போது மீண்டும் ஒரு தடவை அவன் தழை குழை வேலிக்குரிய வீட்டின் வழியாகச் சென்றான். அதே பக்கமாக இதற்கு முன் அவன் எண்ணற்ற தடவைகள் சென்றிருக்கிறான். ஒரு தடவையாவது வழியில் எதிலும் கவனம் செலுத்தியதில்லை. ஆனால் விசிறி பற்றிய நிகழ்ச்சி இத்தெருக்களின் வழி செல்லும் பயணங்களுக்கு முன்பு இல்லாத ஒரு புத்துயிர் கொடுத்து விட்டது. அவன் அடிக்கடி தன்னைச் சுற்றிலும் ஆவலுடன் நோக்கினான். அவ்வீடுகளில் வசிப்பவர்கள் பற்றி யெல்லாமே விவரமான செய்திகள் அறிய விரும்பினான். கோரெமிட்சு கெஞ்சியின் மாளிகைப்பக்கம் வரப் பல நாளாயிற்று. வந்த போது இத்தாமதத்துக்கு விளக்கம் கூறினான். ‘என் தாய் வரவர உடல் நலிவுற்று வந்தாள். அவளை விட்டு வருவது அரியதாயிற்று’ என்று கூறினான். பின் கெஞ்சியை இன்னும் நெருங்கி அணுகித் தாழ்ந்த குரலில் மேலும் சில தகவல்கள் தெரிவித்தான். ‘மனை பற்றி நான் மேலும் விசாரணைகள் செய்தேன். ஆனால் மிகுதியாக எதுவும் அறிய முடியவில்லை. சென்ற வைகாசி ஆனியிலிருந்து தான் அங்கே யாரோ வந்து தங்கி வருவதாகத் தெரிகிறது. ஆனால் யாரென்பது அவள் வேலையாட்களுக்கே தெரியவில்லை. வேலியிலுள்ள ஒரு துளை வழியாக நான் ஒன்றிரண்டு தடவை எட்டிப் பார்த்தேன். அங்கே சில இளம் பெண்கள் உலவுவது கண்டேன். ஆனால் அவர்கள் தம் பாவாடை நுனிகளைக் கையில் சுருட்டி எடுத்துக் கொண்டு சென்ற முறையிலிருந்து. அவர்கள் பணிப் பெண்கள் மட்டுமே என்று உணர்ந்தேன். நேற்றுக் கதிரவன் மறைவுக்குச் சிறிது நேரம் கழித்து ஒரு சீமாட்டி கடிதம் எழுதிக் கொண்டிருப்பது கண்டேன். அவள் முகம் அமைதியாயிருந்தது. ஆனால் அது முற்றிலும் துயரம் குடி கொண்டிருப்பதாகத் தோற்றிற்று. அவள் பாங்கியருள் சிலர் மறைவாகக் கண்ணீர் வடித்துக் கொண்டே நின்றனர்’. இவற்றைக் கேட்டபின் கெஞ்சிக்கு மேலும் அறிய வேண்டும் என்று ஆர்வம் எழுந்தது. தன் தலைவரான கெஞ்சி உயர் பதவி உடையவர், பெரும் பொறுப்புகள் உடையவர் என்பதைக் கோரெமிட்சு அறிவான். ஆயினும், அவர் இளமை, மக்கள் அவரிடம் காட்டிய நேசம் ஆகியவற்றுக்கு அவர் வாழ்வில் ஓர் இடம் உண்டு; ஒரு சில இளமை விளையாட்டுகளில் அவர் ஈடுபடவில்லையானால், அவர் கடமைகளில் ஓரளவு தவறியவராகவே கருதப்படுவார் என்று கோரெமிட்சு கருதினான், சாதாரண மக்களிடம் கனவிலும் மன்னிக்க முடியாத செயல்களைச் கெஞ்சியிடம் அவர்கள் இயல்பானவையாகவும், சரியானவையாகவும் கொள்வர் என்பதில் அவனுக்கு ஐயமில்லை. இவ்வெண்ணங்களுடன் அவன் பின்னும் கெஞ்சியை நெருங்கி மெல்லப் பேசினான். ‘மேலும் சில தகவல்கள் அறிய எண்ணி நான் அவளுடன் தொடர்பு கொள்ள ஒரு சாக்குப் போக்குக் கண்டேன். அதன் பின் அதற்கு மறுமொழியாகப் பண்பட்ட கையெழுத்துடன் நாகரிக வாசகங்களடங்கிய ஒரு கடிதம் பெற்றேன். அவள் நல்ல நிலையிலுள்ள அணங்காகவே இருக்க வேண்டும்’ என்றான். ‘நீ இன்னும் விளக்கமான தகவல்கள் அறிய வேண்டும். அவளைப் பற்றி எல்லாச் செய்திகளும் அறியும் வரை நான் மன அமைதி பெற முடியாது’ என்று கெஞ்சி அவனிடம் பேசினான். அன்று மழை நாளிரவில் நண்பர்கள் உளங்கொண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றைப் போன்றதே இது என்று கெஞ்சி கருதினான் - புறச் சூழல்களால் கடை வகுப்புக்குத் தள்ளப்பட்டு விட்ட சீமாட்டிகளுள் இவளும் ஒருத்தி. அத்தகையவர்கள் கடை வகுப்பினரைப் போலவே புறக்கணிக்கத்தக்கவர்கள் என்று நண்பர்கள் கருதி யிருந்தனர். புறக்கணிக்கத் தகாத பண்புகள் அவளிடத்திலிருந்தாலும் அவள் கவனத்துக்குப் புறம்பானவளே என்று அவர்கள் முடிவு செய்திருந்தனர். இது நிற்க. கோரெமிட்சு திரும்பி வரும்வரை கெஞ்சியின் அகவாழ்வில் உத்சுசேமி திரும்பி வரும் வரை கெஞ்சியின் அகவாழ்வில் உத்சுசேமி கொண்ட பாசத் தொடர்பில் கருத்துச் செலுத்துவோம். பெண்டிர் வன்கண்மை மற்ற மக்களைப் பாதிப்பது போல உத்சுசேமியின் வன்கண்மை கெஞ்சியைப் பாதிக்கவில்லை. அவன் விருப்பத்துக்கு அவள் ஆதரவளித்து ஊக்கி யிருந்தால், அவன் அவள் தொடர்பை விரைவில் உணர்ச்சி வசமான தன் பயங்கரச் சறுக்கல்களில் ஒன்றாகக் கருதி எப்பாடுபட்டும் அதை அகற்றவே முற்பட்டிருப்பான். ஆனால் அவள் வகையில் அவன் அடைந்த தோல்வியே, அவள் எண்ணத்தை ஓயாது அவன் உள்ளத்தில் உரமிட்டு வளர்த்தது. அவள் உறுதியைக் குலைக்கப் புதுப்புது திட்டங்களிடும்படி அது அவனை ஓயாது தூண்டிற்று. செவிலித் தாயைக் காணச் செல்லும் நாள் வரை அவன் பொது மக்கள் வகுப்பில் யாரைப் பற்றியும் மிகுதி கருத்துச் செலுத்தியதில்லை. ஆனால் மழை நாள் உரையாடலின் பின்னும், அந்நாள் முதலும் அவன் எல்லா வகுப்பினரிடையிலும் - சிறப்பாக அவனால் நன்கு பழகியறியப்படாதிருந்த எல்லா வகுப்பினரிடையிலும் மறைந்து கிடக்கும் மனிதப் பண்புகளைத் துருவித் தேடினான். எட்டாதவை, கிட்டாதவை, தகாதவை என்று அவன் நண்பர்கள் ஒதுக்கியவற்றையும் விடாமல் ஆராய முற்பட்டான். தன் வாழ்க்கையில் தானாக வந்து பேரளவில் புகுந்ததாக அவன் கருதிய அணங்கைப் பற்றிக்கூட அவன் அடிக்கடி ஆலோசித்தான். எவ்வளவு தெளிந்த நம்பிக்கையுடன் தனக்காகக் காத்திருப்பதாக அவள் அமைதியுடன் கூறினாள்! அவள் நிலை பற்றி அவன் மிகவும் வருந்தினான். ஆனால் அவளுக்கு எழுதினால், எப்படியாவது உத்சுசேமி அதைக் கண்டு பிடித்துவிடக்கூடும். அது அவளைத் தான் என்றும் அடைய முடியாதபடி செய்துவிடும். ஆகவே அவன் எழுதத் தயங்கினான். பின்னாடி எழுதலாம். பின்னாடி என்றேனும் ஒரு நாள்....’ அவன் எண்ண அலை திடுமென முறிவுற நேர்ந்தது. திடுமென இச்சமயம் இயோ நோ சுகேயே கெஞ்சியைக் காண வந்தான். தன் மாகாணத்திலிருந்து அவன் இப்போதுதான் திரும்பியிருந்தான். திரும்பியதும் இளவரசனைக் காண விரைந்து வந்தான். படகில் நெடுந்தொலைப் பயணம் செய்ததனால் அவன் முகம் களைப்புற்றும் கருமை படர்ந்தும் காணப்பட்டது. ‘ஐயோ!’ இவன் சிறிதும் கவர்ச்சிகரமான தோற்றமுடைய வனல்லன். மோசமான ஆள்தான்’ என்று கெஞ்சி தனக்குள்ளாகக் கூறிக் கொண்டான். ஆயினும் கெஞ்சியால் அவனுடன் இன்று அருவருப்பின்றிப் பேச முடிந்தது. காலத்தாலும் செல்வ நிலையாலும் ஒருவன் எவ்வளவு முறிவுற்றாலும், அவன் நற்குடிப்பண்பும் பயிர்ப்பும் உடையவனாயிருந்தால், கருத்திலும் நடையிலும் என்றும் நயநாகரிகத்தை முற்றிலும் இழந்துவிட முடியாது - முழுவதும் வெறுப்புக்குரியவனாகிவிடவும் முடியாது. இதைக் கெஞ்சி இப்போது கண்டான். அவர்கள் இயாவுக்குரிய மாகாணச் செய்திகள் பற்றி வாதித்தனர் - கெஞ்சி அவனுடன் நகையாடி மகிழக் கூட முடிந்தது. இதனால் திடீரென்று அவனுக்கு ஓர் உணர்ச்சிக் குழப்பம் ஏற்பட்டது. பழைய நினைவுகள் இடையே வந்து அவனை ஏன் அப்படிக் கலக்கம் அடையச் செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்குக் கெஞ்சி தானே விளக்கம் தந்து தன் உணர்ச்சிக்கும் ஆறுதல் தேடினான். ‘அவன் வயது சென்றவன்தானே - தன் சிறு தவறுதலால் அவளுக்கு என்ன கெடுதல் நேர்ந்துவிடக் கூடு’மென்று எதிர்க்கேள்வி கேட்டு, இந்த மனச் சாட்சியின் குத்தல்கள் கேலிக் குகந்தவை என்றும் கூறிக் கொண்டான். அவர்கள் இணைவு தகுதிக் கேடானது. பொருத்தக் கேடானது என்று அவள் நினைத்தது சரியே. உமா நோகமியின் எச்சரிக்கை இப்போது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவள் கூறியபடியே தான் அவளை நடத்திய முறை மிக மோசமானதே என்று கெஞ்சி இப்போது உள்ளூர ஒத்துக்கொண்டான். அவள் வன்கண்மை தன்னை எவ்வளவு புண்படுத்தினாலும் இப்போது இயோவைக் கண்டபின் அவள் விட்டுக் கொடுத்து வளையா திருந்தது பற்றிக் கெஞ்சி கிட்டதட்ட ஆறுதலே அடைந்தான். இயோ இப்போதுகெஞ்சியிடம் தன் குடும்பத் தகவல்கள் கூறினான். ‘என் மகளுக்குத் திருமணமாக இருக்கிறது. ஆகவே நான் என் மனைவியை என்னுடன் மாகாணத்துக்கே இட்டுச் செல்லப் போகிறேன்’ என்றான். இது கெஞ்சிக்கு எதிர்பாரா இரட்டை அதிர்ச்சியாய் அமைந்தது, இனி எப்படியும் அவன் உத்சுசேமியைக் கண்டு தீர வேண்டும். இது பற்றி அவன் சிறுவனுடன் பேசினான். சிறுவன் அவனுடன் அது பற்றி வாதிட்டான். இளவரசருடன் எவரும் அன்றைய சூழ்நிலையில் இத்தகைய மறைவான தொடர்பு வைத்துக் கொள்வது என்பது கடினமானது. ஆனால் மதிப்புப் படியில் தாழ்ந்தும் சிக்கல்கள் சூழ்ந்தும் இருந்த உத்சுசேமியின் வகையில் இது முற்றிலும் எண்ண முடியாததாகவே அமைந்தது. ஆயினும் இச்சூழலிலும் அவனுடன் எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. முன்னைவிட நய இணக்கத்துடன் அவள் அவன் கடிதங்களுக்கெல்லாம் மறுமொழி வரைந்து வந்தாள். அத்துடன் மேற்பார்வைக்குக் கருத்தற்ற மொழிகளி லேயே உன்னிப்பாகக் கவனித்துச் சிறு சிறு குறிப்புகள் தீட்டுவதன் மூலம் தன் உள்ளத்தில் தான் அவனுக்குத் தந்துள்ள இடத்தையும் தெரிவிக்க அவள் முனைந்தாள். இவற்றுள் எதனையும் அவன் நோக்காது விடவில்லை என்றாலும் தன்னிடம் நெகிழ்ச்சி காட்டவில்லை என்ற வருத்தம் அவனுக்கு இருந்தே வந்தது. அவள் நினைவை மனத்தைவிட்டு அகற்றவும் அவனால் முடிய வில்லை. மற்ற அணங்கின் வகையில் கெஞ்சி கவலைப்படுவதை நிறுத்திக் கொண்டான். சரியான வகையில் ஒரு கணவனைப் பெற்ற பின் தனக்காக மனவேதனைப் பட்டு நலியும் பெண்ணல்ல அவள் என்பதை அவன் உணர்ந்தான். அவள் வகையில் இப்போது அவனுக்கு மொத்தத்தில் மன அமைதியே ஏற்பட்டது. இலையுதிர் காலம் தொடங்கிற்று. கெஞ்சியின் வாழ்க்கையில் மேன்மேலும் பெருகி வந்த சிக்கல்களால் நெடுமாடத்துக்கு அவன் போக்கு வரவுகள் மிகவும் தடைபட்டன. இதனால் அத்திசையில் அவன் அவப்பெயருக்கு ஆளாயிருந்தான். அத்துடன் பூங்காமாடத்திலுள்ள ரோக்கு ஜோ பெருமாட்டியின் தொடர்பு அவனுக்கு மிகவும் இக்கட்டுகள் தருவதாயிருந்தது. இப்போது தடைகள் தளர்வுற்று வெற்றி கிட்டிய இத்தருணத்தில் அவளை விட்டு விடுவதென்பது பொருளற்றதாயிருந்தது. இருந்த போதிலும் அவள் எட்டாக் கனியாய் இருந்த காலத்தில் அவள் வகையில் அவனைப் பிடித்தாட்டி வந்த கண் கால் தெரியாத அடக்க முடியாத ஆர்வ அவா இப்போது பெரிதும் மறைவுற்றே வந்தது. இதற்குரிய காரணங்களில் ஒன்று -அவள் எளிதில் உணர்ச்சிக்கு ஆளாகி விடுபவளாய் இருந்தமையே. அவர்கள் வயது ஏற்றத் தாழ்வு, மறை வெளிப்பட்டுவிடுமென்ற இடைவிடாத அச்சம் ஆகிய இவையும் வெறுப்பைப் பெருக்க உதவின. சிறப்பாகக் காலையில் அவர்கள் விடை பெற்றுப் பிரியும் நேர முழுவதும் இரகசியம் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்துக்குரிய நேரமாகவேயிருந்தது. மொத்தத்தில், இத்தொடர்பிலுள்ன நலங்களைவிடத் தீங்குகளே மிகுதியாயிருந்தன. ஒரு நாள் காலையில் மூடுபனி தோட்ட முழுவதும் திரையிட்டு மூடியிருந்தது. பலதடவை துயிலெழுப்பப்பட்ட பின், கெஞ்சி இறுதியாக ரோக்குஜோ பெருமாட்டியின் வீட்டிலிருந்து வெளிவந்தான். அவன் முகம் உறக்கச் சோர்வால் களையற்றும் சிடுசிடுப்புற்றும் இருந்தது. பணிப்பெண்களில் ஒருத்தி பலகணியின் மடக்குச் சட்டங்களைப் பாதி உயர்த்திக் கொண்டு கெஞ்சி செல்வதைப் பார்க்கும்படி தன் தலைவியான ரோக்குஜோ பெருமாட்டியை அழைத்தாள். அவளும் படுக்கையின் திரைகளை விலக்கிக் கூந்தலைத் தோள்களுக்குப் பின்னால் தள்ளிவிட்டுக் கொண்டு அவளை நோக்கினாள். தோட்டத்தின் எல்லையில் எத்தனையோ வனப்பு மிக்க மலர்கள் இருந்தன. கெஞ்சி சிறிது தங்கி அவற்றின் அழகில் ஈடுபட்டான். அப்போது அவன் எவ்வளவு கவர்ச்சிமிக்க தோற்றத்துடன் பொலிந்தான் என்று அவள் வியந்து பாராட்டினாள். தோட்டத்தின் வாயிற் படியை அவன் அணுகிய சமயம் மடக்குச் சட்டங்களைத் திறந்த அதே பணிநங்கை வெளியே வந்து அவனருகே நடந்தாள். அவள் அணிந்திருந்த மெல்லிய பச்சைச் சாயல் வாய்ந்த பாவாடை இடத்துக்கும் காலத்துக்கும் மிகப் பொருந்தியதாயிருந்தது. அதன் தொங்கல் குஞ்சங்கள் அவள் நடையின் நய நெகிழ்வுகளை நன்கு எடுத்துக் காட்டின. கெஞ்சி அவள் பக்கம் திரும்பி அவள் அழகு வடிவை உற்று நோக்கினான். ‘இங்கே மூலையில் இருக்கும் கம்பி வேலி மீது சிறிது உட்காருவோம்’ என்று அவள் மெல்லக் கூறினாள். ‘எவ்வளவு நாணமுடையவளா யிருக்கிறாள் இவள்? தோள் மீது புரண்டு விழும் இவள் கூந்தல் எவ்வளவு மனதுக்கு உகந்ததாயிருக்கிறது!’ என்று அவன் வியந்தான். வியப்பு ஒரு பாடலாக அவன் வாய்மொழியில் மிளிர்ந்தது. கருத்தற்று மலர்நின்று மலர்தாவும் போக்குடைய வண்டல்லேன் யான், எனினும் காலை ஒளி தேங்கிடும் இக் கதிர்வட்ட மலர் கொய்யக் கருதாது அமைகில, என் கைவிரல்கள் இவ்விடத்தே! இவ்வாறு பாடிக்கொண்டே அவன் அவள் கையை மெல்லப் பற்றினான். பண்பில் பயின்ற எளிமையுடன் அவளும் பாடலாகவே மறுமொழி பகர்ந்தாள். ‘மூடுபனியின் திரையகலு முன்பே காலைமலரின் கன்னிமையைத் துய்க்கக் ‘கருதி நீ மெல்ல விரைதியோ, காவருகே!’ தன்னைக் குறித்தோ பொதுப்படையாகவோ இருவழியும் பொருள்படும்படி திறமையாக அவள் கெஞ்சியின் பாராட்டுக்கு நயம்பட எதிர் பாராட்டளித்தாள். இச்சமயம் தளர்ந்த, ஆனால் மருட்சியூட்டும் காலுறைகளும் உடையும் அணிந்த நயநாகரிகமிக்க பணிப்பைதல் ஒருவன் மலர்களிடையே புகுந்தான். பனித்துளிகளுடன் ஊடாடி நடந்து கொண்டே அவன் கதிர் வட்ட மலர்களின் ஒரு கொத்தைக் கொய்து திரட்டினான். இவ் அழகுக் காட்சியை ஓர் ஓவியமாகத் தீட்ட விரும்பினான் கெஞ்சி. கெஞ்சியின் தோற்றம் கண்டு கண்டு அகமகிழாதவர் இல்லை. முரட்டு மலையாடுகூடத் தங்கி இளைப்பாறி மகிழும் இனிய நிழலையுடைய மலர் தரும் தருப்போன்றவன் அவன். அவனை உணர்ந்து அவனது மாயமருட்சியிலீடுபட்டவர்கள் தத்தமக்கு எதெது உயிரினும் அரிதாகத் தோற்றுகிறதோ, அதை அவனுக்குத் தந்து அவனுடன் உறவாட அவா ஆர்வம் கொண்டனர். அருமை பெருமையாக வளர்த்த செல்வப் புதல்வியை உடையவர், அவளை அவன் பணிப் பெண்ணாகக் காண்பதைவிட எதையும் உயர்வாக விரும்பியதில்லை. தகுதியிற் சிறந்த தங்கையுடையவர் தயங்காது அவளை அவன் இல்லத்தில் எவ்வளவு தாழ்ந்த குற்றேவலாகினும் செய்யும் ஏவற் பெண்டாகக் காணும் ஏக்கம் கொண்டனர். அவ்வப்போது அவனுடன் உரையாடி மகிழ்ந்து, மனங் கொண்ட மட்டும் அவனுடனிருந்து அவனைக் கண்டு ஊடாடும் தனி உரிமை பெற்ற அணங்குகள் - சிறப்பாக இளமை நலம் வாய்த்த நங்கையர்கள் - அவன் வருகை எல்லையில்லா மகிழ்வு கொண்டனர். அவன் தோழமையில் எக்காரணத்தாலேனும் சற்று அருகிக்குறைந்தால், அதற்காக அவர்கள் வருந்தாமலிருக்க முடியவில்லை. கெஞ்சியைத் தொடர்ந்து எங்கோ சென்று விட்டோம். ஆம். அவன் ஆணை பெற்றுச் சென்ற கோரெமிட்சுவைக் கவனிப்போம். தலைவன் தன்னிடம் ஒப்படைத்த பணியில் அவன் பொறுமையுடன் தொடர்ந்து விசாரணைகள் செய்து கொண்டே வந்தான். புலன் விசாரணையின் பயனை அவன் கெஞ்சியிடம் எடுத்துரைத்தான். ‘வீட்டுக்குத் தலைவி யார் என்று சிறிதும் விளங்கவில்லை. அதை மறைத்து வைக்க அவள் அரும்பாடு படுகிறாள். ஆனால் அந்த மனை வரிசைகள் கடந்து சில சமயம் ஒரு வண்டியின் ஓசை கேட்கிறது. பணிப்பெண்கள் அனைவரும் சென்று பாதையைக் கூர்ந்து நோக்குகிறார்கள். அச்சமயம் ஏற்படும் குளறுபடிகளில் சில பல தடவைகள் வீட்டுத் தலைவி என்று கருதத்தக்க ஓர் அணங்கும் அவர்களுடனே நழுவிச் செல்வது கண்டேன். அவளை நான் நன்றாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவள் நல்ல அழகியாகவே தோற்றினாள். ‘ஒருநாள் ஒரு வண்டி தொலைவில் வந்து கொண்டிருந்தது. அதன் முன்னோடிக் காவலர்கள் மனையை நோக்கியே வருவதாகத்தோற்றிற்று. பணிப் பெண்களுள் ஒருத்தி வெளியே ஓடிக்கொண்டே, ‘உகான், உகான் வா, விரைவில் வந்து பார். நம் படைநாயகத்தின் வண்டி இவ்வழி வருகிறது’’ என்று கூவினாள். அது கேட்டு இளமை கடந்த, ஆனால் இனிமை வாய்ந்த முகத்தையுடைய ஒரு மாது விரைந்து வெளியே வந்தாள். “பொறு, பொறு!”அது படைநாயகம்தான் என்று எப்படித் தெரியும்? நான் சென்று பார்க்கட்டும்”என்று கூறிக்கொண்டு அவளும் வெளியே வந்தாள். ‘தோட்டத்திலிருந்து சந்துக்குச் செல்லும் வழியில் ஒரு வகை இடைப்பாலம் இருந்தது. பரபரப்புடன் ஓடிய மாதின் ஆடைநுனி காலில் சிக்கி அவள் தலைகுப்புற விழுந்து, கீழேயிருந்த சிறு கால்வாயின் பள்ளத்திலே உருண்டாள். “ஐயையோ!”பாவத் தெய்வம் கத்சுராகியின் கைவரிசையைப் பார்!’ என்று அவள் முணுமுணுத்தாள். ஆனால் அவள் ஆர்வத்தை இந்த வீழ்ச்சி ஒரு சிறிதும் கெடுக்கவில்லை. விழுந்தபடியே எழுந்திருந்து அவள் வண்டியைத் தொலை விலிருந்தே கூர்ந்து நோக்கலானான். ‘வந்தவர் எளிய அகலமான மேலாடை போர்த்திருந்தார். அவருடன் ஏவலர் இருந்தனர். அவர்கள் கூப்பிடு தொலை அணுகியதும் உணர்ச்சி வேகத்துடன் பணிப்பெண்டிர் அந்த ஏவலர்களில் பலரைத் தனித்தனிப் பெயர் கூறி அழைத்தனர். இதில் புதுமை என்னவென்றால், அந்த ஏவலரின் பெயர்கள் பெரிதும் தோ நோ சூஜோவின் பணிமக்கள், வலவர் பெயர்களாகவேயிருந்தன. ‘அந்த வண்டியை நான் என் கண்ணாலே பார்க்க வேண்டும்” என்று கூறிக் கொண்டான் கெஞ்சி. மழை நாள் இரவின் உரையாடலில் தோ நோ சூஜோ தான் கைதுறந்து, பின் ஆர்வத்துடன் தேடியதாகக் குறிப்பிட்ட நங்கை இவளாகவே இருக்கக் கூடுமோ என்று அவன் ஐயுற்றான். தன் தகவல்களில் கெஞ்சி காட்டும் ஆர்வத்தை உணர்ந்த கோரெமிட்சு மேலும் பேசினான். ‘இம்மனையில் இப்போது எனக்கும் ஒரு தனி ஆர்வம் ஏற்படக் காரணம் இருக்கிறது. நானாக முதலில் விசாரணை செய்யும்போது மனைத் தலைவி மற்றப் பெண்களுடன் சரிசம நிலையிலேயே பேசிப் பழகியது கண்டேன். இந்த நாடகத்தை அப்படியே நம்பி விட்டதாகப் பாவித்து நான் அங்கே அடிக்கடி போய் வரத் தொடங்கினேன். அப்போது வயது சென்ற மாதர் மட்டுமே இவ்வகையில் தம் நடிப்பைத் திறம்படக் கொண்டு செலுத்தினர் என்பதைக் கண்டேன். இளம் பெண்களோ அவ்வப்போது தம்மையறியாமல் தலைவியை வணங்கினர். சில சமயம் ‘ஆண்டை’ என்று விளித்துவிட்டு, பின் அதை அடக்கி மழுப்பப் பார்த்தனர். மற்றத் தோழியர்களும் இத் தவற்றைத் தம்மாலான மட்டும் பூசிமெழுக வேறு ஏதாவது பொய் புனைந்துரை அளந்தனர். ‘இவற்றை நினைக்கும் போதே எனக்குச் சிரிப்பு வருகிறது’ என்று கோரெமிட்சு சொல்லி முடித்தான். ‘அடுத்த தடவை நான் உன் அன்னையாரைப் பார்க்க வரும் சமயம் நானும் அவர்களை உற்றுக் கவனிக்க வாய்ப்புப் பெற வேண்டும்’ என்று கெஞ்சி கோரெமிட்சுவிடம் தெரிவித்தான். இடிந்து தகர்ந்த அந்தப் புதுமை வாய்ந்த மனை அவன் மனக்கண்முன் வந்து நிழலாடிற்று. ‘அவள் அங்கே தற்காலிக மாகத்தான் வந்து வாழ்ந்து வர வேண்டும்; நிலையாக வல்ல. ஆயினும் எப்படியும் நண்பர் உரையாடலில் வாதத்துக் குரிய தல்ல என்று ஒதுக்கப்பட்ட கடைசி வகுப்புக்கே அவள் உரிய வளாதல் வேண்டும். ஆனால் நண்பர்கள் கூறிய முடிவு தவறு என்றும், எப்படியும் இத்தகைய இடத்தில் சுவைகரமாக ஏதாவது காணப்பட முடியுமென்றும் எண்பிப்பதில் எவ்வளவு உற்சாகம் எழ வழியுண்டு!’ - இவ்வாறு அவன் எண்ணமிட்டான். கோரெமிட்சு தன் இரகசியத் தொடர்பில் எவ்வளவு கருத்துச் செலுத்தினானோ, அதே அளவு தன் தலைவனின் ஒவ்வொரு அவாவையும் விருப்பத்தையும் நிறைவேற்றுவதிலும் அக்கறை கொண்டான். ஆகவே கெஞ்சி மாய அணங்கை இரகசியமாகச் சந்திக்கும்படி அவன் மறைமுக ஏற்பாடுகள் செய்து வந்தான். இத்திட்டத்தின் நுணுக்க விவரங்களை இங்கே விரித்துரைத்தால் அதுவே பெருங் கதையாகிவிடும். அவற்றை இங்கே முழுதும் வருணிக்காமல் வழக்கப்படி சுருக்கமாகவே கூறுகிறோம். அவளை என்ன பெயரிட்டு அழைப்பதென்று கெஞ்சி கேட்கவில்லை. அவளுக்கும் தான் இன்னானென்று கூறவில்லை. அவன் எளிய ஆடையுடன் வந்தான் - அது மட்டுமல்ல, வழக்கத்துக்கு முற்றிலும் மாறாகக் கால்நடையாக நடந்தே வர முனைந்தான். எத்தகைய முக்கியத்துவமும் அற்ற இந்த அணங்குக்காகக் கெஞ்சி தன்னை இவ்வளவு தாழ்த்திக் கொள்வதைக் கோரெமிட்சு விரும்பவில்லை. குதிரை மீதாவது வரவேண்டுமென்று வலியுறுத்தி, அக்குதிரையின் அருகில் தான் கால் நடையாகவே வந்தான். இதில் அவன் தன்மான உணர்ச்சியையே பேரளவு விட்டுக் கொடுத்தவன் ஆனான். ஏனெனில் அவன் தனித் திட்டத்தின்படி அம் மனையில் உள்ளவர்களிடம் அவன் தன் சுயமதிப்பைப் பேரளவு காத்துக் கொள்ள விரும்பியிருந்தான். கெஞ்சியுடன் நடந்து வருவதனால் இதற்கு மிகவும் ஊறு ஏற்பட வழியிருந்தது. நடந்து வரும் அவனை அம்மனையில் உள்ளவர்கள் மதிக்க முடியாது. ஆனால் நல்ல காலமாகக் கெஞ்சி இச்சமயம் ஒரே ஒரு ஏவலனை மட்டுமே இட்டுக் கொண்டு வந்தான் - முதல் முதல் வெண் மலர்கள் பறிக்க மனையில் புகுந்தவனே அவன். அவன் சிறுவனாதலால், அவனை எவரும் அடையாளம் காணவில்லை. அத்துடன் கெஞ்சி செவிலித்தாயின் இல்லத்துக்கு அவ்வளவு அருகாமையில் வந்த போதிலும், தன் இரகசியத்தைக் காப்பாற்றுவதற்காக அவளைக் கூடச் சென்று பார்க்காமல் மீண்டான். இந்த இரகசிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளால் மாதரசிக்கு மிகவும் அச்சம் ஏற்பட்டது. ஆகவே அவனைப் பற்றிய விவரங்களறிய அவள் பெரு முயற்சிகள் செய்தாள். தன்னைவிட்டுக் காலையில் செல்லும்போது அவன் எங்கே போகிறான் என்று காண்பதற்குக்கூட அவள் ஆட்களை அமர்த்திப் பார்த்தாள். ஆனால் கெஞ்சி எப்போதும் பின் தொடர்பவர்களுக்குத் தவறான திசை காட்டி ஏமாற்றி வந்தான்.ஆகவே அவனைப்பற்றி அவள் முன்போலவே எதுவும் தெரியாதவளாயிருந்தாள். அவளிடம் அவன் பாசம் வளர்ந்து வந்தது. சந்திப்புக்குத் தடையாக ஏதேனும் நிகழ்ந்தால் அவன் வேதனையடைந்தான். அடிக்கடி தன் போக்கை அவன் தானே கண்டித்துக் கலக்க முற்றாலும், தன்னையறியாமல் அவன் அவள் மனையையே சுற்றி வட்டமிட்டு வந்தான். மிகத்தெளிந்த அறிவமைதி உடையவர்கள்கூட வாழ்க்கையின் ஏதேனும் ஒரு பருவத்தில் இவ்வகையில் மயக்கமடைந்து அறிவு திரிந்து நடப்பதுண்டு. இது கெஞ்சி அறியாததன்று. ஆனால், அவன் இதுவரை எதிலும் அவ்வாறு அறிவு திரிவுற்றதுமில்லை. அது காரணமாகத் தவறான எதுவும் செய்ததும் இல்லை. ஆனால் இப்போதோ, காலையில் அவளை விட்டுப் பிரிந்திருக்கும் ஒருசில மணி நேரத்தில்கூட அவனால் இருக்கை கொள்ள முடியவில்லை. இது அவனுக்கே வியப்பும், மலைப்பும் அளித்தது. ‘இப்படி என்னைப் பைத்தியக்காரனாக்க அவளிடம் என்ன இருக்கக்கூடும்’ என்று அவன் அடிக்கடி எண்ணிப் பார்த்தான். அவள் வழக்க மீறிய அமைதியும் பணிவும் உடைய வளாகவே இருந்தாள். சில சமயம் உணர்ச்சியற்றவளோ, அவ்வகைப் பண்புத்திறங்களே முற்றிலும் இல்லாதவளோ என்று நினைக்குமளவு இப்பொறுமை பெரிதாயிருந்தது. அதே சமயம் அனுபவமற்ற சிறு பெண்ணின் தன்மை ஓரளவு அவளிடம் இருந்தாலும், கெஞ்சி எவ்வகையிலும் அவள் முதல் காதலனல்லன்; அவள் அவ்வகை அனுபவம் அற்றவளுமல்லள்; அவள் உயர் வாழ்க்கைப் பண்புடையவளுமல்லள்; பொது நிலை நங்கையர் இயல்புடையவளே. ‘இந்நிலையில் அவளுக்குரிய கவர்ச்சி யாதாயிருக்க முடியும்?’- இக்கேள்வியை அவன் மீண்டும் மீண்டும் தன்னை நோக்கிக் கேட்டுக் கொண்டான். அதற்கு ஒரு விடையையும் அவன் காணவில்லை. தாறுமாறாகக் கிழிந்த வேட்டுவ ஆடையில் முகத்தை மறைத்துக் கொண்டு, எவரும் எழுந்திருப்பதற்கு முன்னே இப்படி அரையிருட்டில் அவன் செல்வதை எண்ணி அவள் பெருமூச்சு விட்டாள். பழங்கதைகளில் வரும் பூத பிசாசக் காதலர் போலவே அவன் அவளுக்குத் தோற்றமளித்தான். இது அவளுக்கு ஓரளவு அச்சமும் தந்தது. அதே சமயம் அவன் சின்னஞ்சிறு அங்க அசைவுகள்கூட அவன் பொது நிலைக்கு மேம்பட்டவன் என்பதைக் காட்டின. கோரெமிட்சுவை இடையீடாகக் கொண்டு தன்னைக் காண வரும் ஓர் உயர் வகுப்பினனாகவே தன் காதலன் இருக்க வேண்டுமென்று அவள் ஊகிக்கத் தொடங்கினாள். ஆனால் கோரெமிட்சு தன்னுடன் வருபவரைப் பற்றித் தனக்கு எதுவும் ஒரு சிறிதுகூடத் தெரியாது என்று சாதித்தான். தன் சொந்த வகையிலும் அவன் அம்மனைக்கு அடிக்கடி சென்றுவரத் தயங்கவில்லை. ‘இதன் பொருளென்ன? அவன் யார்?’ - இவை தெரியாமல், புதுமை வாய்ந்த இக் காதல் அவளை மருளவைத்தது. அதே சமயம் அவள் பக்கமும் மாயமும் மருட்சியும் இல்லாமலில்லை. ‘இன்று இந்த இடத்தில் அவள் ஒளிந்திருப்பது போலவே, என்றேனும் ஒரு நாள் திடீரென மறைந்து விடுவாளோ, அவளைத் தன்னால் தேடிக் கண்டு பிடிக்க முடியாமலே போய் விடுமோ!’ என்ற கற்பனைக் கவலை கெஞ்சியையும் பிடித்தாட்டிற்று. இந்த மனையில் அவள் தங்கல் தற்காலிகமானது என்பதை எத்தனையோ அறிகுறிகள் காட்டின. மறைய வேண்டிய நேரம் வந்தால் அவள் அவனிடம் போகுமிடம் கூறப்போவதே யில்லை. அவ்வாறு மறைந்தால், அவள் நீடித்த நிலையான அன்புக்குத் தகுதி உடையவளல்லள் என்று தெளிவுபட்டுவிடும். கிடைத்த இன்பத்தை ஆதாயமாகக் கொண்டு, அவளைப் பற்றி அதற்குமேல் எதுவும் கவலையில்லாமல் விட்டுவிட வேண்டியதே அப்போது சரியான முடிவாக இருக்கும். ஆனால் இந்த முடிவின்படி தன்னால் நடக்க முடியாது என்பதை அவன் அறிந்தான். கெஞ்சியின் போக்குப்பற்றி மக்கள் இப்பொழுதே பெரிதும் ஐயுறவு கொள்ளத் தொடங்கி விட்டார்கள். அதன் பயனாக, பல இரவுகள் தொடர்ந்து அவன் அவளைச் சென்று பார்க்க முடியாமல் போய்விட்டது. இப்பிரிவை அவனால் ஒரு சிறிதும் பொறுக்க முடியவில்லை. அவளைத் தன் மாளிகையாகிய நிஜோயினுக்குக் கொண்டு வந்து விடலாமா என்று கூட எண்ணினான். அங்கே அவள் இருப்பது வெளிப்பட்டுவிட்டால், மிகப் பெரிய கூக்குரல் எழுப்பப்பட்டுவிடும். ஆனால் இதுபற்றிக்கூட அவன் கவலைப்படவில்லை, அவன் துணிந்தான். கடைசியில் ஒரு நாள் அவன் அவளிடம் மனம் திறந்துபேசினான். ‘நம் தொடர்பை எவரும் கலைக்க முடியாதபடி ஓர் இனிய இடத்துக்கு உன்னைக் கொண்டு செல்லப் போகிறேன்.’ என்றான் அவன். ‘வேண்டாம், வேண்டாம். உங்கள் போக்குப் புதிராயிருக்கிறது. உங்களுடன் வர நான் அஞ்சுகிறேன்’ என்று அவள் நடுங்கினாள். அவள் அச்சம் குழந்தைகளின் அச்சத்தையே நினைவூட்டிற்று. கெஞ்சி அது கண்டு குறும்புநகை நகைத்தான். ‘நீயோ, நானோ - நம்மிருவரில் யாராவது ஒருவர் நரிவேடமிட்டவராகத் தான் இருக்க வேண்டும். யாரது என்று காண இது ஒரு வாய்ப்பு’ என்றான். அவன் பேச்சில் அன்பே தொனித்தது. ஆனால் அவள் உடனடியாகவே முற்றிலும் தன் மறுப்புடன் பணிந்து, உங்கள் விருப்பம் எதுவானாலும். அதன்படி நான் நடக்கிறேன்’ என்ற போது அவன் வியப்படையாமலிருக்க முடியவில்லை. அவன் திட்டம் அவளுக்கு இடர் நிரம்பியதாகவும் அச்சமூட்டுவதாகவுமே இருந்திருக்க முடியும். அப்படியும் பேசாது அவனைப் பின்பற்ற அவள் இணங்கியது கண்டு அவன் இதயம் உருகிற்று. இப்போது அவன் மறுபடியும் மழை நாளிரவில் தோ நோ சூஜோ வருணித்த மாய அணங்குபற்றி எண்ணினான். ஆனால் அவள் தன் முன்னைய வாழ்க்கை பற்றிய எத்தகைய கேள்வியையும் விலக்க விரும்பினாள் என்று அவன் கண்டான். ஆகவே இது வகையில் தன் ஆர்வத்தை அவன் அடக்கிக் கொண்டான். இப்போது அவளை அவன் உணர்ந்த அளவில், ஓடிப் போகக் கூடுமென்ற முன்னைய அச்சத்துக்கு இடமேயில்லை. தான் உண்மையாயிருக்குமளவும் அவ்வாறு செய்ய அவளுக்கு முகாந்திரம் இருக்கக்கூடுமென்று அவன் எண்ணவில்லை. தோ நோ சூஜோ மாய அணங்கை மாதக் கணக்கில் கவனியா திருந்ததனாலேயே அத்தகைய முகாந்திரம் ஏற்பட்டது. அத்துடன் அவனிடமிருந்து அயலாக வேறெங்காவது அவளுக்கு நயப்பு இருப்பதாக அவன் ஐயுற்றால், அதன் விளைவு மோசமாய் விடுமென்ற எண்ணமும் அவனுக்கு ஏற்பட்டது. அன்று எட்டாவது மாதம் பதினைந்தாம் இரவு. நிர் மலமான முழு நிலவின் ஒளி, மோட்டின் பலகைகளிடையே யுள்ள இடைவெளிகளினூடாக அறையெங்கும் பரவிற்று. அவளுக்கு இதுவரை பழக்கமான அறைகளுக்கும் அதற்கும் எவ்வளவோ வேறுபாடு இருந்தது. மச்சின் நாற்புறமும் சுற்றிப் பார்த்துவிட்டு ‘நான் இப்போது படுத்திருப்பது என்ன விசித்திரமான இடம்’ என்று அவள் கூறிக் கொண்டாள். அப்போது கிட்டத்தட்டப் பகலாகி வந்தது. பக்கத்து வீடுகளில் மக்கள் எழுந்து நடமாடத் தொடங்கிவிட்டனர். உழவரின் பண்படாத முரட்டுக் குரல்கள் செவிகளில் விழுந்தன. ‘என்ன கடுங்குளிரப்பா இது? இந்த ஆண்டு நாம் பயிர்களில் அதிக வளம் காணப் போவதில்லை’ என்றான் ஒருவன். ‘என்னுடைய தெருவிற்பனைத் தொழில் என்ன ஆகுமென்று தெரியவில்லை. நிலைமை பார்வைக்கு மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது’ என்றான் மற்றொருவன். மூன்றாவது ஒருவன், பக்கத்து வீட்டுச் சுவர் மீது சாய்ந்து கொண்டு சுவர்கடந்து கூவினான். ‘எழுந்திரு, நண்பனே! புறப்பட நேரமாயிற்று. உனக்கென்ன, காது கேட்கிறதா?’ என்றான். ஒவ்வொருவரும் எழுந்து தம் வயிற்றுப் பிழைப்புக்குரிய ஒவ்வொரு வேலையை நாடி ஒவ்வொரு திசையில் சென்றனர். இத்தனை சந்தடியும் இறைச்சலும் மாதரசியின் அமைதியைக் கலைத்து அவளைத் துன்புறுத்தின. அவளைப் போன்ற மென்மையும் நுண்ணயமும் உடைய ஒருத்தி அந்தப் பஞ்சை மனையில் அனுபவித்த இது போன்ற இன்னல்கள் மிகப் பல. இவற்றைப் பொறுப்பதைவிடப் பூமிக்குள் புதைந்து விடுவது எவ்வளவோ மேலானது என்று அவள் கருதுமளவு அது அவளுக்கு உறுத்தலாகவே இருந்தது. ஆனாலும் எவ்வளவு துன்பந்தருகிற, வெறுக்கத்தக்க, வேதனை தூண்டத்தக்க செய்திகள் நிகழ்ந்தாலும், அவற்றின் பக்கம் கருத்துச் செலுத்தியதாகவே அவள் காட்டிக் கொள்ளவில்லை. எவ்வளவு சிறு செய்திக்கும் அதிர்வுற்று நடுங்கும் இயல்புடைய அம்மாது, நாற்புறமும் இங்கே ஓயாது தொல்லைப்படுத்தி வந்த இந்த இடி இடிப்பையும் கொட்டு முழக்கையும் எப்படி வாய்விடாமல் அமைதியுடன் பொறுத்துக் கொண்டாள் என்று கெஞ்சி வியந்தான். அவள் பண்பு நலங்களை அவன் ஆர்வமாகப் பாராட்டினான். ஒவ்வொரு சந்தடியிலும் அவள் நடுங்கித் துடித்திருந்தால்கூட, அவள் மென்னயம் இவ்வளவு தெள்ளத் தெளிய வெளிப்பட்டிராது என்று அவன் நினைத்தான். இப்போது கழனிகளில் சூடடிக்கும் இயந்திரங்கள் இடியைப் பழிக்கும் பேராரவாரத்துடன் முழங்கின. தலையணை களுக்கு உள்ளேயிருந்து தான் வருகின்றன என்று கூறத்தக்க வகையில் அவை மிக அருகிலிருந்து வருவன போலச் செவிகளைத் துளைத்தன. தன் அகச் செவிகளே வெடித்து விடுமோ என்று கெஞ்சி கருதினான். இன்னும் பலவகை ஓசைகள் இன்ன ஓசைகள் என்று பிரித்தறிய முடியாதவையாய் இருந்தன - ஆனால் யாவுமே புதுப்புது வகையாகவும் நடுங்கவைப்பவை யாகவும் விளங்கின. எல்லாம் இடிந்து தகர்வது போல, சடசடவென முறிந்து விழுவது போலத் தோற்றிற்று. சாயம் தோய்ப்பவனின் குறுந்தடியின் மெத்தென்ற சத்தம் ஒவ்வொரு பக்கத்திலிருந்து வருவதுபோல் தென்பட்டது. இவையன்றிக் காட்டு வாத்துகளின் கீச்சுக் குரல்கள் பொறியும் புலனும் கலங்க வைத்தன. அவர்கள் இருந்த அறை, மனையின் முன்புறத்தில் அமைந்திருந்தது. கெஞ்சி எழுந்திருந்து கதவின் மடக்குச் சட்டங்களைத் திறந்தான். இருவரும் அருகருகாக நின்று வெளியே நோக்கினார்கள். அவர்கள் முன்னிருந்த முற்றத்தில் மிக நேர்த்தியான சீன மூங்கில்கள் கொத்தாக வளர்ந்திருந்தன. அவற்றின் ஓரத்தில் தங்கிய பனிநீர்த்துளிகள் கெஞ்சி கண்டு பழகிய உயர் வட்டாரங்களிலுள்ள தோட்டங்களில் சுடர் வீசுவது போலவே சுடரிட்டன. ஊர்வனவும் அறுகால் பறவையினமும் ஒய்யென்று இரைந்தன. சுவர்க்கோழிகள் மதில்மேலிருந்து கிறீச்சிட்டன. சுவர்க்கோழிகளை அவன் இதற்குமுன் தொலைவிலிருந்து கேட்டதுண்டு. இவ்வளவு அருகே கேட்டபோது அந்த ஓசை வழக்கமாகக் கேட்பதை விடப் புதியதாகவும் இனிமையாகவும் இருந்தது. ஆனால் இந்த இசை இனிமைக்கு அணிமை மட்டுமே காரணமன்று. இந்த இடத்தில் அவன் விருப்பத்துக்குரிய பொருள் ஒன்று இருந்து எல்லா வற்றுக்கும் இனிமை தந்தது. அவற்றின் குறைபாடுகளை அகற்றி அவற்றின் இனிமைக்கு ஓர் இனிமைச் சாயலும் கவர்ச்சி வண்ணமும் தந்தது. அவள் ஒரு வெண்ணிறக் கச்சணிந்து, அதன் மீது மெல்லிய மங்கிய சாம்பல் நிற மேலாடை இட்டிருந்தாள். இது மிக எளிய ஆடையே யானாலும், அவள் வகையில் சிறப்பும் தனி எழிலும் தந்தது. இவற்றுக்குக் காரணமாக அவள் தோற்றத்தில் எதையும் குறிப்பிட்டுக் கூற முடியாது. அவள் நலிவிடையே காணப்பட்ட நயமும் நேர்த்தியும் மட்டுமே இவற்றுக்குத் தூண்டுதல் தந்தன. ஆனால் அவள் உண்மை அழகொளி அவள் வாய் திறந்து பேசிய சமயத்தில்தான் தழைத்தது. அதில் அத்தனை உணர்ச்சியும். அத்தனை அவா ஆர்வமும் தெறித்தன. அவளுக்கு மட்டும் இன்னும் சிறிது கிளர்ச்சி இருந்திருந்தால்! - ஆனால் இந்நிலையிலேயே அவள் கவர்ச்சி அள்ளிக் கொள்வதாய் இருந்தது. தம்மை யாரும் அணுகாத ஓரிடத்துக்கு அவளை இட்டுக் கொண்டு சென்று அமைதி குலையாத இடையறா இன்ப நுகரும் பேரவா அவனுக்கு ஏற்பட்டது. ‘மிகு தொலைவல்லாத ஓரிடத்துக்கு உன்னை இட்டுச் செல்லப் போகிறேன். அங்கே இரவின் மீந்த பகுதியை அமைதியுடன் கழிக்கலாம். இப்படி ஒவ்வொரு நாளும் நாம் விடியற் காலந்தோறும் பிரிந்து கொண்டு இருக்க முடியுமா?’ என்றான். ‘இத்திடீர் முடிவுக்கு இப்போது வருவானேன்?’ என்று அவள் கேட்டாள். ஆனால் அவள் தொனியில் பணிவு மிகுதியாய் இருந்தது. அப்போது அவன் ‘இந்தப் பிறப்பில் மட்டுமன்று, வரும் பிறவிகளி ளெல்லாம் நீயே என் உயிர்க் காதலாயிருக்க வேண்டும்’ என்றான். இதற்கு அவள் விடையளிக்கும் சமயம் அவள் உணர்ச்சி வேகம் கொண்டாள். இவ்வேகம் இதுவரை எதிலும் அக்கறையற்றிருந்த அவள் அவல நிலையை முழுதும் மாற்றி அவளுக்குப் புத்தெழுச்சி தந்தது. இத்தகைய உறுதிமொழிகள் அவளுக்குப் புதிதாயிருக்க முடியாது என்று இச்சமயத்தில் அவனால் எண்ணாதிருக்க முடியவில்லை. முன்னெச்சரிப்பை யெல்லாம் முற்றிலும் புறக்கணித்து விட்டு அவன் அவளது பணிப்பெண் உகானை அழைத்தான். அதன் பின் அவன் வேலையாட்கள் மூலம் ஒரு வண்டி கொண்டு வரும்படி உத்தரவிட்டான். இச்செய்தி விரைந்து மனை முழுவதும் தெரிய வந்தது. தங்கள் தலைவி இப்படி திடுமென எங்கோ கொண்டு செல்லப்படுவது கண்டு பெண்டிர் சிறிது கலவரமடைந்தனர். ஆயினும் அவளுக்குத் தீங்கு நாடுபவனாகக் கெஞ்சி ஒரு சிறிது கூடத் தோற்றமளிக்கவில்லை. இப்போது கிட்டத்தட்டப் பகலொளியாயிற்று. சேவல்கள் கூவி நிறுத்திவிட்டன. திருமலை செல்வதற்குப் புறப்பட்டிருந்த தீர்த்த யாத்திரியான ஒரு முதியவன் குரல் இப்போது சிறிது தொலைவில் காதுகளில் பட்டது. ஒவ்வொரு வணக்க வழிபாட்டுடனும் அவன் தலை நிலம் தோயக் குனிந்தெழுந்த தனால், அவனது ஒவ்வோரசைவிலும் அவனுக்கு எவ்வளவு நோவும் தளர்ச்சியும் இருந்தன என்பது தெளிவாயிற்று. காலைப் பனியில் அப்பனியிலும் நொய்தாகக் தோற்றிய வாழ்வினை நோக்க, இந்த முதியோன் தன் தொழுகையின் போது என்ன தான் வேண்டிக் கொள்ள முடியுமோ? - நமு தோரை நோ தோஷி - ‘வரவிருக்கும் பகவானுக்கு வெற்றி’ என்ற அவன் மொழிகள் அவர்கள் செவிகளில் விழுந்தன. ‘இதோ கேள்’ என்று கெஞ்சி கனிவுடன் அவள் கவனத்தை முதியவன் குரலின் பக்கம் திருப்பினான். ‘நம் காதல் வரும் பிறவிகள் பலவற்றிலும் நீடித்திருக்கும் என்பதற்குரிய நற்சகுன மல்லவா இது?’ என்று கூறி அவன் இப்பாடலை எடுத்துச் சுட்டிக் காட்டினான். ‘வருகின்ற பிறவிகளி லெல்லாம் நம் காதல் மாறாமல் நீடித்து வாழும் என்ற இன்சொல் தருகின்ற பெருமான்றன் அடியார் வாய் மொழியைத் தட்டாமல் மெய்வாழ்வு வாழ்தி நன்னெஞ்சே!’ ‘மாளாப்பழி’ என்ற பழங் கதையில் வரும் காதல் துணைவர்கள் ஒரு சிறகைப் பொதுவாகக் கொண்ட இரு துணைப் பறவைகளைப் போல வாழ வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்கள். அவ்வாறே தாமும் வேண்டிக் கொள்ள அவர்கள் எண்ணினர். ஆனால் அக்கதை துயர மிக்கதாக முடிவுற்றதை நினைத்து வேண்டுகோளை அவர்கள் மாற்றிக் கொண்டனர். “புத்தர் பிரான் மீட்டும் உலகில் மைத்திரேயராய் பிறக்கும் காலம் வரை எங்கள் காதல் நீடிக்குமா!”என்று அவர்கள் தம் நேர்வு தெரிவித்தனர். ஆனால் இன்னும் கெஞ்சியினிடம் அவள் கொண்டிருந்த ஐயுறவச்சம் முற்றிலும் அகலவில்லை. இதனைத் தன் எதிர் பாடலில் அவள் குறித்தாள். ‘இவ்வுலகில் துன்பத்தில் நைவேன்யான் அவ்வுலகில் இன்ப அவாக் கொள்வதெவ் வாறு?’ அவள் பாடல் ஓரளவு தொடக்கப் பயிற்சியாளர் நிலையிலேயே இருந்தது. காலையில் மேல் வானில் சாயும் வெண்மதி போகும் வழியில் எழிலொளி தரும் என்று அவள் மகிழ்வுடன் எதிர்பார்த்தாள். கெஞ்சியும் இதுவே எதிர்பார்த்ததாகக் கூறிக் கொண்டிருந்தான். ஆனால் அதற்குள் நிலா ஒரு பெரிய முகிற் பிழம்பின் பின் சென்று மறைவுற்றது. ஆனால் இதனாலும் எதுவும் கெடவில்லை. கீழ் திசையின் விடியல் வெள்ளொளி பேரழகுக் காட்சியாய் அமைந்தது. முற்றிலும் பகலொளியாகு முன் போய்விட வேண்டுமென்ற அவசரத்துடன் அவன் அவளை விரைவில் வண்டியிலேற்றி உகானையும் அவள் அருகே அமர்த்தினான். சிறிது தூரத்திலிருந்த ஓர் ஆளற்ற மாளிகை நோக்கி அவர்கள் சென்றார்கள். மனைக் காவலன் வருவதற்குக் காத்திருக்கும் சமயம் கெஞ்சி சுற்றுப் புறங்களை நோக்கினான். வாயில்கள் தகர்ந்து பொடிந்து கொண்டிருந்தன. மூடுபனி செறிந்து விழுகின்ற பனித்துளிகளின் பளுவைப் பெருக்கிற்று. கெஞ்சி வண்டியின் திரையைச் சிறிது விலக்கிப் பார்த்த ஒரு கணத்துக்குள்ளாக அவன் கையுறையின் நுனிகள் முற்றிலும் நனைவுற்றன. அத்தனை துயரார்ந்த காட்சி தரும் வாயிலைக் கெஞ்சி இதற்கு முன் கண்டதேயில்லை. நாணற்புல் அவற்றைச் சுற்றி அடர்த்தியாக வளர்ந்திருந்தது. ‘இத்தகைய ஓர் அரு நிகழ்ச்சி என் வாழ்வில் இது வரை நிகழ்ந்ததில்லை. இயல்பாக, இதனால் என் நெஞ்சு படபடப்பதைப் பார்’ என்றான் கெஞ்சி. ஒரு பாடலில் அவன் இக்கருத்தைத் தீட்டிக் காட்டினான். ‘உலகு தோன்றியது முதல் காதலின் மடமை நீடித்து இருந்து வந்துள்ளது. ஆயினும் பொழுது விடியுமுன் இப்படி எவரும் முன் பின் யோசியாமல் அறியா நிலம் புகுந்ததில்லை.’ என்பது அப்பாடலின் கருத்து. ‘ஆனால் உங்களுக்கு இது புதிதாயிரா தென்று நினைக்கிறேன்’ என்றாள் அவள். இது கூறு முன் அவள் முகம் நாணத்தால் சிவந்தது. அவளும் தன் கருத்தை ஒரு பாடாலாக்கினாள். கருமுகில் திடல்கள் எங்கெப்போது வரும், ஒளி விழுங்கும் என உணராது உருவெழும் வானில் செலவெழும் முழுமதி தரு நிலை என்நிலை, உயர்ந்தே செல்லினும்! பெருமாமுகிலகம் புதைந்து பிறங்கொளி தடைந்து மறைவுறும் வகையே! அவள் கிளர்ச்சியுற்று உள்ளூர நடுங்கிக்கொண்டுதான் இருந்தாள். ‘சிறு குடில்களிலே நெருங்கி முடங்கி வாழ்ந்த பழக்கத்தினால் இந்த அகன்ற மனை அவளுக்கு அச்ச மூட்டுகிறது போலும்.’ என்று அவன் எண்ணிப் புன்முறுவல் கொண்டான். வண்டி உள்ளே சென்ற பின்னும், அவர்களுக்காக ஓர் அறை சுத்தம் செய்யப்படும் வரை அவர்கள் வண்டிக் குள்ளேயே இருந்தனர். வண்டி புறவாரத்தின் கைப்பிடிச்சுவர் அருகிலே நிறுத்தப்பட்டிருந்தது. பணிப்பெண் உகான் இது சமயம் ஒன்றுமறியாதவள் போலத் தோற்றினாலும் அவள் உள்ளம் உண்மையில் தன் தலைவியின் தற்போதைய பயணத்துடன் இதுபோன்ற முந்திய ஒரு பயணத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. அணங்கின் கடைசிக் காதலன் வருகையின் போது மனைக் காவலன் அவனுக்குக் காட்டிய மதிப்பை அவள் கவனித்தாள். அவள் நிலை பற்றி இதற்கேற்பத் தனக்குள்ளாகத் தோழி ஒரு தனி ஊக முடிவு செய்து கொண்டாள். பனித்திரை அகலத் தொடங்கிற்று. அவர்கள் வண்டியை விட்டிறங்கித் தமக்கென ஒழுங்குபடுத்தப்பட்ட அறைக்குச் சென்றனர். திடுமென விரைந்து அவசர அவசரமாக எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டாலும், இடம் வியக்கத்தக்க முறையில் துப்புரவாக இருந்தது. ஏனெனில் மனைக் காவலனின் புதல்வன் இதற்குமுன் கெஞ்சியின் நம்பிக்கைக்குரிய பணியாளாய் இருந்தவன். பெரு மடத்திலும் அவன் நெடுநாள் தொண்டாற்றி யவன். இப்போது அவன் அறைக்குள் வந்து கெஞ்சியின் பரிவாரத்திலுள்ள நன் மக்கள் சிலரை வரவழைக்க விரும்புவதாகத் தெரிவித்தான். கெஞ்சி தனியாய் நேரம் போக்குவதை அவன் விரும்பவில்லை. ஆனால் இப்போது தன் நோக்கத்தைக் கெஞ்சி விளக்கினான். ‘நீ நினைக்கிறபடி எதுவும் செய்து விடாதே, என் அனுமதிக்குக் குந்தகம் இல்லாமல் இருக்க வேண்டுமென்று நான் விரும்பியதனாலேயே இங்கே வந்திருக்கிறேன். இந்த மனையை நான் பயன்படுத்தினேன் என்பதை உன்னைத் தவிர வேறு யாரும் அறிய வேண்டாம்’ என்று கூறி, அது வகையில் ஓர் உறுதியையும் மனைகாவலனிடமிருந்து பெற்றுக் கொண்டான். நேரடியான சாப்பாடு எதுவும் ஏற்பாடு செய்யப்பட வில்லை. ஆனால் மனைக்காவலன் சிறிது கஞ்சி உணவு கொணர்ந்தளித்தான். அதன்பின் பழக்கமில்லாத இந்தப் புதிய இடத்திலே முதன் முதலாகக் கெஞ்சியும் அணங்கும் ஒருங்கே பள்ளிகொண்டு உறங்கத் தொடங்கினர். அவர்கள் விழித்தெழுந்த சமயம் கதிரவன் வானில் நெடுந்தொலை ஏறியிருந்தான். கெஞ்சி தானே சென்று மடக்கு சட்டங்களைத் திறந்து நோக்கினான். தோட்டம் எத்தனையோ பாழ்பட்ட நெடுங் காடாகக் காட்சியளித்தது! இங்கே அவர்கள் மீது ஒற்றாட எவரும் வர முடியாது என்பது திண்ணம்! அவன் தன் பார்வையை இப்போது தொலைவில் செலுத்தினான். காடாய்க் கிடந்த தோட்டம் படிப்படியாகக் காட்டுடனே காடாகி எல்லையற்றுப் பரந்து கிடந்தது. வீட்டுக் கருகே பூவின் நிழல் கூடக் கிடையாது. பேணப் படாத புல்வெளியும், களைகள் வளர்ந்து பாதி மூடிக் கிடந்த ஒரு குளமுமே இருந்தன. அது பயங்கரமான தன்னந் தனிமையிடம் என்பது விளங்கிற்று. மனைக்காவலனோ அவன் ஆட்களோகூட மனைப்புறத்தில் எங்கோ தொலைவில் தான் வாழ்ந்தனர் என்று தோற்றிற்று. ஏனெனில் உயிர் வாழ்வின் தடமோ அடையாளமோ எதுவும் அருகாமையில் இல்லை. ‘நாம் வந்திருக்கும் இந்த இடம் ஆளரவமற்ற வனாந்தரமே. ஆனால் நான் இங்கே இருக்கும் வரை பேயோ கொடும் பிடாரியோ எதுவும் என்னை அணுக முடியாது’ என்று அவன் கூறினான். அவன் இன்னும் முகமூடி அகற்றாமலே இருந்தது அவள் உள்ளம் துளைத்தது. உண்மையில் பாசத்தில் அவர்கள் அடைந்துவிட்ட படியை நோக்க, இந்த ஒளிவு மறைவுக்குத் தேவையே இல்லை. இது ஓரளவு அவனுக்கும் கருத்தில் உறைத்திருக்க வேண்டும். ஏனெனில் முகத்தைப் பாதி திருப்பிக் கொண்டு அவன் அவள் பார்க்கும்படி முகமூடியைத் திறந்து காட்டினான். அச்சமயம் அவன் ஒரு பாடலையும் நினைவிற் கொண்டு பாடினான். ‘இந்தக் கணம் வரை எழிலரசி, நின் காதல் சந்தப் புதுமலர்தன் தனியிதழ் வாய்திறந்து மந்த மருள்மாலை மாயப் பனித்துளிக்கே கந்த மளிக்கவகை கண்டதெல்லாம் நீள்மறுகில் அந்த மனையகத்தே கண்ட கணக் காட்சியன்றோ?’ ‘பனித்துளியன்று, ஒளிர் பனித்துளி! இப்போது அது எப்படி இருக்கிறது?’ என்று அவன் குறும்பு நகையுடன் கேட்டான். விசிறி மீது அவள் எழுதி யனுப்பிய திருந்தாச் சிறு பாடலை அது அவனுக்கு நினைவூட்டிற்று. ‘ஆலும் பனித்துளியின் வண்ணஅழ கித்தனையென்று அரையிருள் மாலையில் அன்றறிய மாட்டாதேன், ஏலாவகை ஐயுற் றிடர்ப்பட்டு நொந்துள்ளம் மாலாயினேன், அந்தோ! வாழிஎன் நீள்மடமே!’ என்று அவள் திக்கித் தயங்கிய குரலில் எதிர் பாட்டாடினாள். பாடல் சிறிது இடர்ப்படினும் அது அவனுக்கு இன்பமே அளித்தது பாட்டின் யாப்பமைதி பற்றி அவன் கவலைப்பட வில்லை. அதன் பண்பமைதியையே நோக்கினான். அழிவின் கருமை படர்ந்த அந்தப் பாழிடச் சூழலில்தான் அவள் முதலில் அவனது திறந்த முகத்தைப் பார்க்க நேர்ந்தது. திடுமென அவள் காட்சிக்கு வெளிப்பட்ட அதன் அழகொளி இதுவரை அவள் கனவிலும் காணாத, காண எதிர்பாராததாய் இருந்தது. ‘நம்மிடையே உள்ள இந்தத் திரையை விலக்கும் வரை நான் விரும்பியவற்றை யெல்லாம் நீ வெளியிடாததில் நான் வியப்படையவில்லை. ஆனால் இப்போது நீ உன் பெயரும் விவரமும் கூறாமல் இருந்தால் அது அன்பற்ற செயலாகவே அமையும்’ என்று பேசி, அவளைப் பற்றி அறிய முயன்றான் அவன். ‘நான் பாடலில் வரும் மீனவ நங்கையைப் போன்றவள். எனக்குப் பெயரில்லை. வீடில்லை,’ என்று அவள் முனகினாள். அவனைப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றதற்காக அவள் மகிழ்ந்தாள். அவன் யார் என்று அறிந்ததனால் ஆறுதல் அடைந்தாள். ஆயினும் தான் யாரென்று அப்போதும் அவள் கூற விரும்பவில்லை. அவனும் நெடிது வற்புறுத்தவில்லை. ‘சரி, உன் விருப்பப்படியே’ என்று விடுத்தான். ஆயினும் இதனால் அவன் ஒரு சிறிது மனக்கசப் படையாம லில்லை. இந்த வேறுபாடு விரைவில் அகன்றது. பகலும் கழிந்தது. இச்சமயம் கோரெமிட்சு அங்கே வந்து அவர்களுக்குப் பழங்களும் பிற உணவு வகைகளும் அளித்தான். அவன் அறைக்குள்ளே வர மறுத்தான். ஏனெனில் உகானைக் காணவே அவன் தயங்கினான். அவள் தலைவியை இட்டுக் கொண்டு வந்ததில் உடந்தையாய் இருந்ததற்காக அவள் தன்னைக் கடிந்து கொள்வாளே என்று அஞ்சினான். தான் ஒரு சிறிதும் கண்டு கொள்ளாத உள்ளார்ந்த கவர்ச்சிகள் நங்கைக்கு இருத்தல் வேண்டுமென்ற முடிவுக்கு இப்போது கோரெமிட்சு வந்திருந்தான். இல்லை யென்றால் அவளை அடையக் கெஞ்சி இவ்வளவு பெருந் தொல்லைகளை மேற்கொண்டிருக்க மாட்டான் என்று அவன் எண்ணினான். தன் பெருந்தன்மை பற்றியும் இப்போது அவன் மன நிறைவு கொண்டிருந்தான். தனக்குள் தானே மகிழ்ந்து கொண்டான். ஏனெனில் அவன் அவளைத் தனக்கே உரிய பரிசாக வைத்துக் கொண்டிருக்க முடியும். அவ்வாறு இருக்கவில்லை. அதைத் தன் தலைவனுக்கே விட்டுக் கொடுத்திருந்தான். அன்று மாலை வியக்கத்தக்க அமைதியுடையதாயிருந்தது. கெஞ்சி அந்த வானின் அழகை நோக்கியிருந்தான். அணங்கு உள்ளறையிலேயே இருந்தாள். இது இருட்டுக் குகை போல மனத்தை அழுத்திற்று. இன்னதென்று தெரியாத சோகம் அவளை ஆட்கொண்டது. கெஞ்சி முன்னறைப் பக்கமுள்ள திரையை நீக்கிவிட்டு அவள் அருகே வந்து அமர்ந்தான். இருவரும் விழுவானின் வண்ண ஒளியை ஒருவர் கண்களி னூடாக ஒருவர் பார்த்து மகிழ்ந்தனர். அவனது அழகின் வியப்பிலும், அன்பின் கனிவிலும் ஈடுபட்டு அவள் தன் அவல அச்சங்களை யெல்லாம் மறந்தாள். இப்போது அவள் அவனிடம் கூச்சம் கொள்ளவில்லை. துணிந்து பழகிக் களிப்புடன் பேசினாள். இந்தக் கபடமற்ற களிப்பு அவள் பண்புக்கு மிகவும் இசைவாயிருந்தது. இரவு வரும் வரை அவள் அவன் அருகிலேயே அமைந்து கிடந்தாள். ஆனால் இரவு அணுக அணுக, அவள் மீண்டும் அச்சம் கொண்ட குழந்தையின் சோக முகம் கொண்டாள். ஆகவே அவன் விரைந்து இடைக்கதவை மூடிவிட்டு ஒரு பெரிய விளக்கைக் கொண்டு வந்து வைத்தான். ‘வெளித் தோற்றத்தில் நீ முன் போல என்னிடம் கூச்சம் கொள்ளவில்லை. ஆனால் உன் உள்ளத்தின் ஆழத்தில் கசப்பும் அவ நம்பிக்கையும் உறைந்து கிடப்பது காண்கிறேன். இப்படி என்னிடம் நடந்து கொள்வது அன்புடைமை அன்று’ என்றான். இத்துடன் மீண்டும் அவன் அவளிடம் சிறிது சிடுசிடுப்புக் காட்டினான். ‘அரண்மனையிலுள்ள மக்கள் இப்போது என்ன நினைத்துக் கொண்டிருப்பார்களோ? தனக்கு இதற்குள் அழைப்பு ஏதேனும் வந்திருக்குமோ? தூதர்கள் தன்னை எவ்வளவு தூரம் தேடத் துணிந்திருப்பார்கள்?’ - இக்கேள்விகள் கெஞ்சியின் உள்ளத்தை அரித்தன. கவலைக்கிடம் தருபவை இச்செய்திகள் மட்டுமல்ல. ‘ஆறாம் வளாகத்திலுள்ள பெரிய சீமாட்டி ரோக்குஜோ செய்தி என்னவோ, இப்போது அவள் என்ன கோபாவேசத்தில் இருப்பாளோ!’ இத்தடவை உண்மையிலேயே பொருமுவதற்கு அவளுக்குப் போதிய காரணம் உண்டு.’ இவையும் இவைபோன்ற இன்னா எண்ணங்களும் மொய்த்து அலைபாயும் உள்ளத்துடன், தன்னையே முழுதும் நம்பித் தன் அருகில் கிடந்த இள நங்கையை அவன் கூர்ந்து நோக்கினான். அவளது அகத்தே கொந்தளிக்கும் புயல் பற்றிய தடம் எதுவும் இல்லாமலே அவள் முகம் அமைதியாயிருந்தது. இது கண்டு அவனது இதயத்தில் அவள் மீது அன்பும் கனிவும் பொங்கி வழிந்தன. ‘இவளுக்கு நேர்மாறாக அந்தச் சீமாட்டி - எவ்வளவு எல்லையற்ற உணர்ச்சிக் கொந்தளிப்பு, எத்தனை பொறாமை பொருமல்கள், எத்தனை மயக்க தயக்க ஐயப்பாடுகள் அவளிடம் வளைந்து நெளிந்தன!’ எப்படியும் கொஞ்ச நாட்களாவது அவளை - அந்தச் சீமாட்டியைப் பார்க்காமலே இருப்போ’ மென்று அவன் தனக்குள்ளே கூறிக் கொண்டான். இரவு செல்லச் செல்ல உறக்கம் சிறிது சிறிதாக அவர்கள் விழிகளை ஆட்கொண்டது, அவர்கள் மெல்லத் துயின்றனர். திடுமெனக் கெஞ்சி எழுந்தான் - எழுந்தபோது அவன்முன் ஒரு மாது - நெட்டையான, கம்பீரமான மாதரசியின் உருவம் நின்றது. ‘ஆ’ பண்பார்ந்த நுண்ணய நேர்மையுடையவனென்று சொல்லிக் கொள்பவனாயிற்றே நீ! நீ இங்கே தெருவிலே கிடந்து கண்டெடுத்த இந்தக் காசு பெறாத பொது அணைங்கைக் கொண்டு வந்து ஒரு விளையாட்டுப் பொம்மைபோல் வைத்து எப்படி விளையாட முடிந்தது? நான் வியப்படைகிறேன், எல்லையற்ற வெறுப்பும் துன்பமும் கொள்கிறேன்!’ என்று கூறியது அவ்வுருவம். கூறியதுடன் நிற்கவில்லை. அணங்கை அவன் பக்கத்திலிருந்து இழுப்பது போலிருந்தது. இது ஒரு பொல்லாத கனவு அல்லது பயங்கர உருவெளிக் காட்சி என்று எண்ணி அவன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். விளக்கு ஏற்கெனவே அணைந்து விட்டது என்று கண்டான். சிறிது கலக்கத்துடன் அவன் தன் வாளை உருவி அருகே வைத்துக் கொண்டான். அத்துடன் உகானையும் கூவி வரவழைத்தான். அவள் தானும் கலவரமடைந்தவளாய் உடனே ஓடி வந்தாள். ‘பக்கத்துச் சிறையிலிருக்கும் காவலாளைக் கூப்பிடு.’ உடனே ஒரு விளக்கு கொண்டு வரச் சொல்’ என்றான். ‘எல்லாம் கும்மிருட்டாய் இருக்கிறதே!’ நான் எப்படிப் போவது?’ என்று மிரண்டாள் அவள். ‘என்ன குழந்தை நீ!’ என்று அவளைக் கடிந்த வண்ணம் அவன் அறைக்குள்ளிருந்தே கைதட்டிக் கூப்பிட்டான். தனிமை நிழல் சூழ்ந்த அந்த வெற்றுமனை ஒலியை நாற்புறமிருந்தும் எதிரொலித்துக் கேலி செய்தது. எவரும் அதனிடையே எதுவும் கேட்க முடியவில்லை. இதற்கிடையில் அணங்கு கால் முதல் தலைவரை நடுங்கத் தொடங்குவதை அவன் உற்று நோக்கி மேலும் குழம்பினான். ‘இப்போது என்ன செய்வது?’ - ஒன்றும் முடிவு செய்யாமல் அவன் தத்தளித்தான். அதற்கிடையே திடுமென அணங்கின் உடல் முழுதும் விறைத்து வியர்வை கொட்டிற்று. அவள் உணர்வே இழந்து வருவதாகத் தோற்றிற்று. ‘ஒரேயடியாக அஞ்ச வேண்டாம், ஐயனே!’ வாழ்நாள் முழுவதுமே என் தலைவி இது போன்ற பயங்கரக் கனவுகளாலும் அவற்றின் பயனான வலிப்பு நோயாலும் அவதியுற்று வருகிறாள்’ என்றாள் பணி மாது. காலையில் அவள் எவ்வளவு கலைப்புற்றிருந்தா ளென்பதையும். வேதனை தாங்க மாட்டாதவள் போலக் கண்கள் மேல் நோக்கிப் பார்த்த வண்ணம் படுத்திருந்தாளென்பதையும் அவன் இப்போதே நினைத்துப் பார்த்தான். கை கொட்டிக் கொட்டி எதிரொலி களையே கேட்டு அலுத்துவிட்டது. ‘இப்போது நானே போய் யாரையாவது எழுப்பி வருகிறேன். வரும் வரை நீ இவளை விட்டகலாதே!’ என்று கூறிவிட்டு அவன் அகன்றான். உகானைப் படுக்கையருகில் கொண்டு வந்துவிட்டு, மேற்குத் தலைவாசலின் திசையில் நடந்தான். மேற்கு வாயில் கடந்ததும் பக்கத்துச் சிறையிலும் விளக்கு அணைந்திருப்பது கண்டான். அது மட்டுமன்று; புதிதாக ஓர் ஊதைக் காற்றே எழுந்து உலவிற்று. அவன் தன்னுடன் கொண்டு வந்திருந்த ஏவலர் மிகச் சிலர். அந்தச் சிலரும் அதற்குள் உறங்கிவிட்டார்கள். தன்னிடம் மெய்க்காவலனாயிருந்த மனைக் காவலன், சிறுவனும் மட்டுமே அங்கே இருந்தார்கள். அவன் கூப்பிட்டவுடன் அவர்கள் திடுமென்று எழுந்து நின்று அவனுக்கு மறுமொழி கூறினார்கள். ‘ஒரு விளக்குக் கொண்டுவா.’ அத்துடன் உன் வில்லைக் கொண்டு வந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு உரத்து இடைவிடாது குணத்தொனி செய்து கொண்டிருக்கச் செய். இத்தகைய பாழ்பட்ட இடத்தில் இப்படி உறங்குகிறார்களே, இது அதிசயமாகத்தான் இருக்கிறது’ என்று அவன் மனை காவலன் புதல்வனிடம் கட்டளை யிட்டான். அத்துடன் கோரெமிட்சு எங்கே? அவனுக்கு என்ன நேர்ந்தது?’ என்றும் கேட்டான். ‘அவன் சிறிது நேரம் காத்திருந்து பார்த்தான். ஆனால் தான் தேவைப்படுவதாகத்தோற்றாதது கண்டு வீடு சென்றான். விடியற் காலத்துக்குள் திரும்பி வந்து விடுவான்’ என்று காவலன் சிறுவன் கேள்விக்குப் பதிலளித்தான். கெஞ்சியின் பணியாட்களில் ஒருவன் சக்கரவர்த்தியிடம் வில்லாளியாய் இருந்தவன். அவன் தன் வில்லின் நாணில் பயங்கரமான குணத்தொனி எழுப்பிக் கொண்டே தன் உச்சக் குரலில் ‘தீ! தீ!’ என்ற கூச்சலிட்டுக் கொண்டே மனையகம் வந்தான். வில்லின் குணத்தொனி கெஞ்சிக்கு அரண்மனையின் எண்ணம் கொண்டு வந்தது. ‘இச்சமயம் அரண்மனை வாணர் பெயர்ப் பட்டியல் வரிசை முடிந்திருக்கும். வில்லாளிகளின் வரிசை துவங்கி இருக்கும்!’ ஆனால் உண்மையில் நேரம் அவ்வளவு ஆகவில்லை. அவன் தட்டித் தடவித் திரும்பவும் அறைக்குச் சென்றான். அவள் அவன் விட்டுச் சென்றபடி கிடந்தாள். அது மட்டுமன்று. துணையிருந்த உகானும் அவளருகே தலை குப்புறக் கிடந்தாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நீ என்னதான் செய்து கொண்டிருக்கிறாய்? அச்சத்தால் உனக்கு மனப் பைத்தியம் பிடித்துவிட்டதா?’ ஆம், இத்தகைய தனி இடங்களில் ‘நரிப்பேய்கள்’ மனிதர் மீது மாயம் பரப்பு மென்று நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் என் அருமைச் செல்வங்களே, நீங்கள் இவற்றுக்கெல்லாம் அஞ்ச வேண்டியதில்லை. நான் திரும்பி வந்து விட்டேன். அத்தகைய எதுவும் உங்களை அண்டவிடமாட்டேன்.’ இவ்வாறு தானும் பாதி புலம்பிய வண்ணம் அவன் உகானைப் படுக்கையிலிருந்து பிடித்துத் தூக்கினான். ‘அந்தோ, ஐயனே! எனக்கு என்னவோ போலிருந்தது. மட்டற்ற பயத்தால் நான் முகங்கவிழ்த்துக் கீழே படுத்துவிட்டேன். பாவம், என் தலைவி என்ன பாடுபடுகிறளோ! அதை என்னால் நினைக்க முடியவில்லை’ என்றாள் உகான். ‘அப்படியானால் அவள் துன்பத்தை நீ வேறு அதிகப்படுத்தாமலாவது இரு’ என்று கூறிக் கெஞ்சி அவளை ஒரு புறம் தள்ளி விட்டுக் குனிந்து அணங்கின் நிலையைக் கூர்ந்து கவனித்தான். அவள் மூச்சே ஓடவில்லை. அவள் உடம்பில் கை வைத்தான். அவள் அவனை அடையாளம் தெரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. உடல் உயிரற்ற கட்டைபோல் கிடந்தது. அவள் ஆவியை ஏதோ பாழும் பேயோ, பூதமோ ஆட் கொண்டிருக்க வேண்டும். அவன் அவ்வளவு கதி கலங்கியும் குழந்தை போலத் தன் செயலற்றும் காணப்பட்டாள். பணியாள் விளக்குடன் வந்தான். உகான் இன்னும் ஆட அசையவில்லை, பயம் இன்னும் அவளை விட்ட பாடில்லை. கெஞ்சி படுக்கையை மறைத்து ஒரு தட்டியிட்டு, பணியாளை வரும்படி கட்டளை யிட்டான். கெஞ்சியை அத்தகைய ஒரு பொதுப் பணியாளர் நேரடியாக அடுத்துப் பணிசெய்வது அரண்மனை முறை மையல்ல. இதை எண்ணி அப்பணியாள் படுக்கை அமைந்திருந்த மேடையில் ஏறவே தயங்கினான். ஆனால் கெஞ்சியின் குரல் மீண்டும் பணித்தது. ‘இங்கே வா.. உன் சொந்த அறிவைப் பயன்படுத்து’என்றான். தயங்கித் தயங்கிப் பணியாள் விளக்கை நேரே கெஞ்சியிடம் கொடுத்தான். அதைப் படுக்கைக்கு மேலே தூக்கி அணங்கின் மீது ஒளி படும்படி காட்டினான். அவன் மீண்டும் தன் கண்களை நம்பமுடியவில்லை. கனவில் அவன் கண்டதாக நினைத்த அதே உருவம் அணங்கை அச்சுறுத்திக்கொண்டு தலையணை மீதே அமர்ந்திருந்தது. ஒரு கணம்தான் அவன் இக்காட்சியைக் கண்டான். அடுத்தகணம் அது மறைந்தது. இத்தகைய தோற்றங்களைப் பற்றியும் அவற்றின் பேராற்றல் பற்றியும் அவன் பழங்கதைகளில் வாசித்திருந்தான். ஆகவே அவனும் கலவரமடைந்தான். ஆனால் அந்தக் கணத்தில் அவன் அச்சம் படுக்கையில் ஆடாது அசையாது கிடந்த அணங்குக் காகவே. அவளைப் பற்றிய கவலையில் அவன் உருவத்தின் பயங்கரத் தோற்றத்தை மனத்திலிருந்து அகற்றிவிட்டு, அவள் அருகே படுத்த வண்ணம் அவள் உடலுறுப்புகளை அசைத் தாட்டி உயிர்ப்பு வருவிக்க முயன்றான். ஏனென்றால் இதற்குள்ளாக அவை படிப்படியாகக் குளிர் தட்டத் தொடங்கிவிட்டன. மூச்சின் நிழல் கூட இல்லை. இனி என்ன செய்வது? யாரை உதவிக்கு நாடுவது? இப்போது உதவத்தக்கவர் புரோகிதர் ஒருவர்தான். ஒரு புரோகிதரைத் தான் வரவழைக்க வேண்டும். அவன் தன்னை அடக்கிக் கொள்ள முயன்றான். ஆனால் அவன் இளைஞன். அசைவின்றி விளறிய முகத்துடன் அணங்கு கிடந்த நிலைகண்ட போது அவன் உணர்ச்சிகள் அடக்க முடியாதபடி பீறிட்டுக்கொண்டு வெளிவந்தன. அவன் அழுது அரற்றினான். ‘மீண்டும் வரமாட்டாயா, கண்மணி! மீண்டும் உயிருடன் வா. என்னை இப்படிக் கூர்ந்து நோக்காதே!’ உனக்காக நான் ஏங்குகிறேன்’ என்று புலம்பியவாறு அவன் அவளை வாரி அணைக்க முயன்றான். ஆனால் இப்போது உடல் முற்றிலும் தணுத்துப்போய் விட்டது. முகம் நிலையான, பொருளற்ற, கடைசிப் பார்வை பார்த்து விட்டது! தன் அச்சங்களிலேயே தனிப்பட்டு அழுந்திக் கிடந்தவள் உகான். இப்போது அவள் திடீரென்று தன்னுணர்வு பெற்று அதை மறந்து தன் தலைவி நிலை கண்டு கதறிப் புலம்பினாள். கெஞ்சி அவள் பிலாக்கணத்தைப் புறக்கணித்தான். அவன் நெஞ்சம் இப்போது வேறொரு சித்திரத்தில் ஆர்வமாகத் தோய்ந்தது. அது ஒரு பழங்கதை. ஓர் அமைச்சர் தென்மாளிகை வழியாகச் செல்லும் சமயம் ஒரு பூதம் அவரை வழி மறித்தது. அமைச்சர் அச்சத்தினால் விறைத்து இது போலவே நிலத்தில் கிடந்த காட்சி கெஞ்சியின் நினைவுக்கு வந்தது. ஆனால் கதை முடிவில் அமைச்சர் மெல்ல மீட்சியடைந்து உயிருடன் தப்பினார். ‘அணங்கும் இறந்திருக்க முடியாது, உண்மையில் உயிர் நீத்திருக்க முடியாது’ என்று கெஞ்சி ஆர்வமுடன் எண்ணினான். அவன் உகான் பக்கம் திரும்பி உறுதியான குரலில் அவளைக் கடிந்து கொண்டான். ‘இதோ பார், நள்ளிரவில் இது போன்ற வரட்டுக் கூச்சல் தேவையில்லை. இதை நிறுத்து’ என்றான். ஆனால் அவனளவில் இந்த ஆறுதலும் நம்பிக்கையும் கூட அவன் துயரைத் தணிக்கவில்லை - அத்துயரம் அவனை மரமரப்படைய வைத்தது. உகானுக்குக் கட்டளையிடும் சமயமே அவன் மூளை வேலை செய்யவில்லை, என்ன செய்கிறோம் என்பதே அவனுக்குத் தெரியாது. மனைக்காவலன் புதல்வனை அவன் அழைத்தான். இங்கே அச்சத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டு மிக மோசமானநிலை ஏற்பட்டிருக்கிறது. நீ கேரொமிட்சுவின் வீட்டுக்குப்போய் எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வரும்படி சொல்லு. புரோகிதராகிய அவன் உடன்பிறந்தார் அங்கே இருந்தால், அவரைத் தனியாகப் பார்த்து, நான் அவரை உடனே காண விரும்புவதாக மெள்ள அவரிடம் சொல்லு. எப்படியும் துறவு நங்கையாகிய அவர்கள் தாய் கேட்கும்படி எதுவும் சொல்லாதே. ஏனெனில் நான் ஈடுபட்டுள்ள இந்த முயற்சி முழுவதுமே அவள் அறியக் கூடாததாக இருத்தல் வேண்டும்’ என்று அவன் கட்டளையிட்டான். சொற்கள் தான் இவ்வாறு எப்படியோ தெளிவாக வெளி வந்தனவே ஒழிய, மூளை முற்றிலும் குழம்பியே இருந்தது. ஏனெனில் அணங்கின் முடிவுக்குத் தானே காரணம் என்ற எண்ணம் அவனைஒரு புறம் வாட்டிற்று, மறுபுறம் நிகழ்ச்சிக்கு இடமான சூழல் முற்றிலும் இன்னும் கோர உருவில் அவன் உள்ளத்தை அழுத்தி அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. நடு இரவு கழிந்துவிட்டது. வலங்கொண்ட புயலொன்று எழுந்து மனையின் நாற்புறத்திலும் உள்ள செந்தூர மரக் காடுகளினூடாகச் சுழன்றடித்து ஊளையிட்டது. ஆந்தைபோன்ற ஏதோ ஒரு பறவை இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு அலறிற்று. எங்கும் இருண்டபாழ், பாழ் இருட்டு - மனிதநாதம், பாசக்குரல் அற்ற வெற்றிடமாகக் காட்சியளித்தது. இத்தகைய பொல்லாத இடத்தைத் தங்குவதற்கு ஏன் தேர்ந்தெடுத்தேனோ என்று கெஞ்சி அங்கலாய்த்துக் கொண்டான். உகானுக்குத் தன் உணர்வு இல்லை. அவள் தன் தலைவியின் அருகே கிடந்தாள். அவளும் கிலியால் உயிரிழக்கப் போகிறாளோ என்னவோ? இல்லை, இல்லை! இத்தகைய நச்சு எண்ணங்களுக்கு இடங்கொடுத்து விடக்கூடாது!’ என்று அவன் தனக்குத்தானே தடை இட்டுக்கொண்டான். இப்போது செயல் செய்யும் ஆற்றலுடையவனாக அங்கே இருந்தவன் அவன் ஒருவன்தான். ஆனால் அவன் என்ன செய்ய முடியும்? ‘உடனடியாகச் செய்யக் கூடியது எதுவும் இல்லையா?’ விளக்கு மிக மங்கலாக எரிந்தது. அதை அவன் தூண்டினான். நடு அறையின் மூலையில் தட்டிக்குப்பின் எதுவோ அசைவதுபோலத் தோன்றிற்று. இதோ அது மீண்டும் வந்தது. ஆனால் இப்போது ஆங்காங்கே மெல்லக் காலடிகள் எடுத்துவைக்கும் அடங்கிய ஓசை மற்றொரு மூலையில் மற்றொருபுறம் செவிகளில் ஒலித்தது! இவ்ஒலி விட்டு விட்டுத் தொடர்ந்தது சிலசமயம் பின்புறமாக வந்து சென்றது..! கோரெமிட்சுவும் இதற்குள் திரும்பி வந்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்? ஆனால் கால்கள் எங்கும் பாவாத நாடோடி அவன். அவனுக்காகக் காத்திருந்து காத்திருந்து எவ்வளவோ நேரம் வீணாயிற்று. இந்த இரவு விடியாதா? இது பன்னிரண்டு மணி நேரத்தில் முடியும் இரவல்ல, ஆயிர ஆண்டு நீடிக்கும் இரவு போலும்!’ என்று கெஞ்சி வியப்புற்றான். இப்போது எங்கேயோ, நெடுந்தொலைவில் ஒரு சேவல் கூவிற்று. கெஞ்சியின் உள்ளம் பலவகையிலும் குமுறிற்று. ‘ஊழ் என்னை ஏன் இவ்வளவு கடுமையான சோதனை களுக்கு உள்ளாக்குகிறதோ, அறியேன்!’ ஒரு வேளை என்மீது இப்போது மோதுகின்ற இந்தப் பயங்கரப்புயல் என் தகாக்காதல் விளையாட்டுகளுக்குரிய தண்டனைதானே? சென்ற சில ஆண்டுகளாக, என் இயல்புக்கே மாறாக, பெரியோரால் தவறென்று விலக்கப்பட்ட, விசித்திரப் பாதையிலே சென்று, என்னையுமறியாமல் இந்த நிகழ்ச்சிகளில் சிக்கிவிட்டேனே! அந்தோ, இத்தகைய காரியங்களை ஒருவன் சிலகாலம் இரகசியமாக அடக்கிவைக்க முடியலாம். முடிவில் அவை வெளிப்பட்டே தீருமன்றோ? ‘முன்னோ, பின்னோ, என்றாவது ஒருநாள் இதையும் இதுபோன்ற பிற நிகழ்ச்சிகளையும் சக்கரவர்த்தி அறிய நேரலாம். இதை எண்ணியே நான் மிகமிக நடுங்குகிறேன். இதுமட்டுமோ? பொதுமக்கள் அலர் தூற்றல், இகழ்ச்சியுரை வேறு இருக்கிறது!’ என்று எல்லாரும் அறிவார்கள். சாக்கடைச் சிறுவர் முதல் என்னை நையாண்டி செய்து மகிழ்வார்கள். ‘இனி இத்தகு செயல்களில் நான் என்றென்றைக்கும், என்றைக்குமே ஈடுபடக் கூடாது! ஈடுபட்டால் என் புகழ்க்கோட்டை மாயக்கோட்டை மண்ணுடன்.....’ இந்த எண்ணச்சுழல்கள் அவனை அரித்துத்தின்று கொண்டிருந்தன. இறுதியில் ஒருவகையாக கோரெமிட்சு வந்து சேர்ந்தான். அந்தோ! தன் தலைவன் விருப்பம் எதுவாயினும் தான் அதை இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும் உடனடியாகச் செய்து முடித்துவிடுபவன் என்று அவன் பெருமை கொண்டிருந்தவன். ஆனால் ஒரே ஒரு தடவை அவன் அருகிலில்லாமலிருக்க நேர்ந்தது- அந்தச் சமயம் பார்த்தா கெஞ்சி தன்னை அவசர அவசரமாகத் தேடும்படி நேர்ந்திருக்க வேண்டும்! இது மட்டுமோ? எப்படியோ கேள்விப்பட்டதும் விழுந்தடித்து ஓடிவந்தபின், தலைவர் தனக்கு எத்தகைய ஆணையும் பிறப்பிக்காமல், பேச்சற்று மூச்சற்று நிற்கிறார்! அவன் உள்ளம் வெடித்துவிடும்போலிருந்தது! கோரெமிட்சுவின் குரல்கேட்டு உகான் உடனடியாக எழுந்து உணர்வு பெற்றாள். அடுத்த கணம் நடந்ததை நினைவில் கொண்டு கண்ணீர் விட்டுக் கோவென்று அழுதாள். இதுவரை தனிமையிலே தன்துயர் முழுவதையும் தன்னுள் அடக்கிக் கொண்டு அவதியுற்றான் கெஞ்சி. அழுதரற்றிய பணிப்பெண் உகானைக்கூட அவன் தேற்றி வந்திருந்தான். இப்போது கோரெமிட்சு வந்துவிட்டதுணர்ந்ததே, அவன் தன் உணர்ச்சி களை மேலும் கட்டுக்குள் அடக்க முடியாமல் வீறிட்டழத் தொடங்கினான். நடந்துவிட்ட நிகழ்ச்சியின் முழுப்பயங்கர உருவும் அவன்முன் இப்போதுதான் காட்சியளித்தது. அது தாளாது அவன் விம்மி விம்மித் தேம்பினான்! செய்தியைக்கூட அவனால் விளக்கமுடியவில்லை. இறுதியாக ஓரளவு தன்னைச் சமாளித்துக் கொண்டு அதைச் சுட்டித் தொட்டும் தொடாமலும் பேசினான். ‘துணுக்குற வைக்கும் செய்தி நிகழ்ந்துவிட்டது, கோரெமிட்சு! வாய்மொழியால் சொல்லி விளக்கமுடியாத அளவில் நடுக்கம் தரும் செய்தி! இத்தகைய பேரிடிகள் விழும்போது, சிலசமயத்தில் திருமொழிகள் படிக்கப்பட வேண்டுமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது நடைபெற வேண்டும், வணக்கவழிபாடுகள் நடத்தப்பட வேண்டும். இதனால் தான் உங்கள் உடன்பிறந்தாரையும் உடன் கொண்டுவரும்படி..........’’ கோரெமிட்சு ஏங்கினான். அந்தோ! அவர் நேற்றுத்தான் மலைக்குச் சென்றிருக்கிறார்! ஆனால் இங்கே உண்மையிலே பயங்கர நிகழ்ச்சிகள் தான் நடைபெற்றிருக்கக் காண்கிறேன். ‘ஐயனே!’ என்ன பித்தவெறியில் நீங்கள் இக்காரியத்தில் இறங்கினீர்களோ? அறியேன்....’ கெஞ்சி வாய்பேசவில்லை. வெறுமனே தலையசைத்து நின்றான். தன் தலைவர் வாய்பேசாது அழும் காட்சி காணப்பொறாமல் கோரெமிட்சு தானும் தேம்பித் தேம்பி அழலானான். அவன் வயது இன்னும் சிறிது சென்றவானாக, உலகியல் போக்கிறந்தவனாக இருந்திருந்தால், இத்தகைய நெருக்கடிகளை ஓரளவு சமாளிக்கப் பயன்பட்டிருப்பான். ஆனால் இருவரும் இளைஞராதலால், இருவரும் ஒருங்கே மலைப்பெய்தினர். இறுதியில் கோரெமிட்சு பேசினான். ‘ஒரு செய்தியைமட்டும் நாம் தெளிவாக முடிவு செய்துவிடவேண்டும். மனைக் காவலன் மைந்தன் இது ஒன்றும் அறியக்கூடாது. அவனளவில் அவன் நம்பகமானவனே. ஆயினும் அவன் இயல்புநோக்க, அவன் தன் உறவினர் அனைவரிடமும் தெரிவிக்கமாட்டான். அவர்கள் இவ்வகையில் குந்தகம் விளைவிப்பார்கள். ஆகவே எவ்வளவு சந்தடியில்லாமல் இந்த வீட்டைவிட்டுச் செல்ல முடியுமோ அந்த அளவும் நலம்’ என்றான். கெஞ்சி: இதைவிட ஒதுக்கமான மற்றோரிடத்தை நாம் எங்கே கண்டுபிடிப்பது? கோரெமிட்சு: எப்படியும் அவள் வீட்டுக்கு நாம் அவளை இட்டுச்செல்ல முடியாது. ஏனெனில் அவளை ஆர்வமுடன் நேசிக்கும் அவள் பாங்கியர், அவளுக்காக அழுதரற்றி ஆரவாரிக்காமல் இருக்க முடியாது. இதனால் அயலவர்க ளெல்லாம் கூடிவிடுவர், எல்லாம் வெட்ட வெளிச்சமாய் விடும். அருகே ஏதாவது மலைக் கோயில் மட்டும் இருந்தால் - அங்கே இது முழுவதும் வழக்கப்படி இயல்பாகி விடும், எவரும் எதுவும் அசாதாரணமாகக் கருதமாட்டார்கள். அவனே சிறிது நின்று தயங்கி ஆலோசித்தான். பின் பேசினான். ‘எனக்குத் தெரிந்த ஒரு சீமாட்டி உண்டு, அவள் துறவு நங்கையாகி ஹிகாஷியாமாவில் வசிக்கிறாள். அவள் என் தந்தையின் செவிலித்தாயாய் இருந்தவள். இப்போது கூனித் தளர்ந்து முதுமையடைந்துள்ளாள். அவள் தனியாய் வாழ வில்லை. ஆயினும் வெளியார் எவரும் அங்கே செல்வதில்லை’ என்றான். கீழ்வானில் விடியல் வெள்ளொளி ஏற்கெனவே மங்கலாகத் துலங்கிற்று. கோரெமிட்சு ஒரு வண்டியைக் கொண்டு வந்தான். கெஞ்சி நங்கையின் உடலைத் தானே எடுக்கப் பொறுக்க மாட்டான் என்றுணர்ந்து, அதைப் பாயில் சுருட்டி வண்டிக்குக் கொண்டு சென்றான்.இதில் அவன் எத்தகைய அருவருப்பும் கொள்ளவில்லை. ஆனால் அவள் கூந்தலை மட்டும் எப்படி மறைப்பதென்று அவனுக்குத் தெரியவில்லை. அவளைக் கொண்டு செல்லும் சமயம் அது தொங்கிக் கொண்டே தரைமீது புரண்டது. கெஞ்சி இக்கோரக்காட்சியைக் கண்டான். அவன் உடல்முழுதும் சொல்லொணா வேதனையால் துடி துடித்தது. கெஞ்சி உடலைத் தொடர்ந்து பின் செல்லவே முனைந்தான். ஆனால் கோரெமிட்சு அவனைத் தடுத்து எச்சரித்தான். ‘நீங்கள் கூடிய வேகத்தில் அரண்மனைக்கே குதிரை மீது விரைவது அவசியம். அங்கே புகைச்சல் தொடங்குமுன் நீங்கள் அங்கேபோய்ச் சேர்ந்து விடுவது நலம்’ என்று கூறி உகானை வண்டியிலேற்றியபின் கெஞ்சியிடம் தன் குதிரையை ஒப்படைத் தான். பின் தன் பட்டுக் காலுறையை முட்டுக்குமேல் சுருட்டி வைத்துக்கொண்டு அவன் கால் நடையாகவே வண்டியைத் தொடர்ந்தான். அது ஒரு விசித்திரமான பயணம். ஆனால் தன் தலைவனது ஆறாத்துயர்கண்டு கோரெமிட்சு தற்காலிமாகத் தன் தன் மதிப்பையே அகற்றிவிட்டு வண்டியைப் பின்பற்றி நடந்தான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று உணர்வே யில்லாத நிலையில், கெஞ்சி தன் மாளிகை வந்து சேர்ந்தான். அவன்முகம் பேயறைந்த முகம்போல் விளறிக் களையிழந்திருந்தது. கண்ட கண்டவர்கள் எல்லாம் வழியில் அவனை அடுத்து, உடம்புக்கு என்ன? எங்கிருந்து இத்தனை களைப்புடன் வருகிறீர்கள், ஐயனே?’ என்று கேள்விகள் கேட்டவண்ணமாயிருந்தனா. ஆனால் அவன் எவருக்கும் மறுமொழியே கூறாமல் நேராகத் தன் அறைசென்று திரையிட்டு அதன் பின் சென்று படுத்துக் கொண்டான். அவன் தன்னை அமைதிப்படுத்திக் கொள்ள முயன்றான். ஆனால் துணுக்குறும் எண்ணங்கள் அவனைத் தொல்லைப் படுத்திக் கொண்டே யிருந்தன. ‘அவளைப் பின் தொடர்ந்து செல்வேன் என்று நான் ஏன் வற்புறுத்தாமல் போய்விட்டேன்? அந்தோ, ஒரு வேளை அவள் மாளாமலிருந்து எழுந்து பார்த்து நான் அவளைக் கைவிட்டு விட்டதாக எண்ணினால் என்னாவது?’ இக்கோர நினைவுகள் அவன் மூளையில் ஒன்றையொன்று தொடர்ந்து கொண்டிருந்தன. அவன் தொண்டையையும் நெஞ்சையும் ஏதோ வந்து அடைப்பது போலிருந்தது. அவன் தலை நோவுற்றது. உடல் அனலாய் எரிந்தது. நங்கை உடலின் விசித்திர நிலைகண்டு தானும் அவளைப்போலத் திடுமென இன்ன தென்றறியமுடியாத நிலையில் இறந்துவிட நேருமோ என்றுகூட ஐயுற்றான். கதிரவன் வானில் நெடுந்தொலை ஏறிவிட்டான். ஆனால் கெஞ்சி எழுந்திருக்கவில்லை. அவனது துணைவர்கள் மலைப் புற்று முணுமுணுத்தனர். அவனைத் தட்டி எழுப்பத் தமக்குத் தெரிந்தவகையிலெல்லாம் முயன்றனர். ஆனால் அவன் மணிக்கணக்காக இருண்ட நினைவலைகளுக்கு ஆளாய்க் கிடந்தான். வகை வகையான நல்லுணவுகளைப் பணிமக்கள் கொண்டு கொண்டு வந்தனர். அவன் தொடாமலே அவை திரும்பிக் கொண்டு செல்லப்பட்டன. இச்சமயம் சக்கரவர்த்தியிடமிருந்து ஒரு தூதன் வந்தான். ‘நேற்றிலிருந்து மேதக்க மன்னர் மன்னர் தம் திருமேனியைத் தேட எங்கும் ஆள் அனுப்பியிருக்கிறார். தங்களைப் பற்றி மிகவும் கவலை கொள்கிறார்’ என்று வந்து கூறினான். நெடுமாடத்திலிருந்து பெருங்குடி இளைஞர் பலர் மற்றொருபுறம் வந்து கெஞ்சியைக் காணவிரும்பினார்கள். ஆனால் தோ நோ சூஜோவிடம்கூட அவன் திரைக்கு உள்ளே இருந்தபடிதான் பேசினான். ‘ஐந்தாம் மாதம்முதல் என் செவிலித்தாய் மிகவும் உடல்நலம் குன்றியிருக்கிறாள். அவள் தலையை மொட்டை யடித்தும் மற்ற நோன்புகளாற்றியும் அவற்றின் பயனாக (அல்லது அவற்றின்பயன் என்ற நம்பிக்கையுடன்) சிறிது தேறி எழுந் துள்ளாள். ஆனால் இன்னும் அவள் உடல் வலுவற்று நலிந்தே இருக்கிறாள். தான் இறப்பதற்குமுன் என்னைப் பார்க்க விரும்புவதாக அவள் சொல்லியனுப்பினாள். குழந்தைப் பருவ முதலே நான் அவள் மீது பாசமாயிருந்தவனாதலால், இதை என்னால் மறுக்கக்கூடவில்லை. ஆனால் நான் அங்கே சென்றிருக்கும் சமயம் மனையின் வேலையாள் ஒருவன் நோயுற்றுட் திடுமென உயிர்நீத்தான். என் நிலைமை எண்ணி இரவே உடலை அகற்றி அடக்கம் செய்துவிட்டனர்வீட்டார். ஆயினும் இதுகேள்விப்பட்ட போது நான் ஒன்பதாம் மாதத்து நோன்பு அணுகிவிட்டதென்பதை எண்ணினேன். என் தந்தையாராகிய சக்கரவர்த்தியை நான் சென்று காணாததற்குக் காரணம் இதுவே, இத்துடன் இன்று காலைமுதல் எனக்கு இருமலும் மிக மோசமான தலையிடியும் வந்து தொல்லைப்ப டுத்தி வருகின்றன. இந்நிலையில்தான் உன்னைக்கூட இவ்வளவு தொலைவாக வைத்துப் பேசவேண்டியவனாகிறேன். அதற்கு மன்னிப்பாய் என்றும் நம்புகிறேன்’ என்றான். சூஜோ: நீ கூறிய செய்தியைச் சக்கரவர்த்தியிடம் கட்டாயம் தெரிவிக்கிறேன். ஆனால் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் கூறுவதற்கு மன்னிக்க வேண்டும் - அவர் மிகவும் மனத்தாங்கலுடன் இருக்கிறார். இவ்வாறு கூறித் தோ நோ சூஜோ போக எழுந்தான். ஆனால் ஒருகணம் தயங்கி, திரும்பவும் படுக்கையண்டை வந்து குரலைத் தாழ்த்திக் கொண்டு மீண்டும் தொடங்கினான். ‘உண்மையிலேயே நேற்று இரவு நிகழ்ந்தது என்ன?’ நீ சற்றுமுன் கூறியது உண்மையாயிருக்கமுடியாது’ என்றான். ‘நீ விளக்கவிவரம் எதுவும் கூறவேண்டாம். என்னையறி யாமலே நான் தீட்டுக்கு ஆளாகியிருக்கிறேன் என்று மட்டும் கூறி உன்போக்கிலேயே அவரிடம் மன்னிப்புக் கோரிக்கொள்’ என்றான் கெஞ்சி. அவன் பேச்சில் சிறிது கண்டிப்பின் தொனி இருந்தது. ஆனால் அவன் உள்ளத்தில் விவரிக்க முடியாத சோகமே குடிபுகுந்திருந்தது. அவன் நாடிநரம்புகள் தளர்ந்து செயலற்றுக் கிடந்தன. பகல் முழுவதும் அவன் எவர் கண்ணிலும் படாமல் படுக்கையிலேயே கழித்தான். ஒரு தடவைமட்டும் தோநோ சூஜோவின் உடன் பிறந்தானான ‘குரோதோ நோபென்’னை வரவழைத்து அவன்மூலம் சக்கரவர்த்திக்கு முறைப்படி ஒருசெய்தி எழுதியனுப்பினான். இதே வகைச் சாக்குப்போக்கே நெடுமாடத்துக்கும் போதியதென்று கருதி, அங்கும் இதுபோலச் செய்தி தெரிவித்தான். தன்னை எதிர்பார்க்கத்தக்க மற்ற இடங்களுக்கும் இது போன்ற தகவல் எழுதியனுப்பினான். விளக்குவைக்கும் நேரத்தில் கோரெமிட்சு வந்தான். கெஞ்சிக்குத் தீட்டு என்ற செய்தி அவன் இல்லத்துக்கு வருகை தருபவர்களைத் தடுத்து நிறுத்தியது. இதனால் மாளிகையில் தனிமை நிலவிற்று. கோரெமிட்சுவை அருகிலழைத்துக் கெஞ்சி அவனிடம் ஆவலுடன் பேசினான். ‘என்ன நடந்தது?’ அவள் இறந்துவிட்டது இறந்துவிட்டதுதானா?’என்று கேட்டான். அதற்குள் கண்கள் பொலபொலவென்று நீருகுத்து அவன் சட்டை நுனியெல்லாம் நனைத்துவிட்டது. கோரெமிட்சுவும் அழுதுகொண்டே பதிலளித்தான். ‘எல்லாம் முடிந்துவிட்டது, ஐயனே!’ மயக்கதயக்கத்துக்கு எதுவும் இடமில்லை. உடலை இதன்பின் நீடித்து அப்படியே வைத்துக்கொண்டிருக்க முடியாதாதலால், நான் மதிப்பு வாய்ந்த ஒரு முதுமைசான்ற புரோகிதருடன் எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டேன். அவர் என் நண்பர். நாளை நல்ல நாளானதால், நாளையே இறுதிவினை நடைபெற ஏற்பாடு செய்திருக்கிறேன்’ என்றான். கெஞ்சி: அவள் தோழியின் செய்தி என்ன? கோரெமிட்சு: அவள் பிழைப்பது அருமை என்று அஞ்சுகிறேன். தன் தலைவியுடனே தானும் சென்றுவிட வேண்டுமென்று அவள் கதறுகிறாள். அத்துடன் இன்று காலை நான் மட்டும் விழிப்பாயிருந்து அவளைப்பிடித்துக் கொள்ளவில்லையானால், அவள் கொடும்பாறை ஒன்றிலிருந்து குதித்து இறந்திருப்பாள். இதுமட்டு மன்று. இச்செய்தியை மனையிலுள்ள பணியாட்கள் அனைவரிடமும் கூறிவிடப் போவதாகவும் அவள் அச்சுறுத்தினாள். ‘அவ்வாறு செய்யுமுன் அதன்விளைவு எதிர்விளைவுகள் பற்றிச் சிறிது நினைத்துப் பார்’ என்று கூறி நான் அவளைச் சமாதானப்படுத்தினேன். கெஞ்சி: பாவம்! அவள் இப்படி மூளைகுழம்பி விட்டதுபற்றி நான் வியப்படையவில்லை. நானும் கிட்டத்தட்ட அந்நிலையிலேயே இருக்கிறேன். இனி என் செய்தி என்ன ஆவது என்று எனக்கே தெரியவில்லை. கோரெமிட்சு: இன்னும் உங்களை நீங்களே இவ்வாறு வருத்திக்கொள்ள வேண்டாம். நடப்பவை எல்லாம் நடந்தே தீரும். உங்கள் காரியங்களையெல்லாம் நீங்கள் இல்லாமலே முடிக்க நான் இருக்கிறேன். எவருக்கும் எதுவும் தெரியப் போவதில்லை. கெஞ்சி: நடப்பவை நடக்கட்டும். நீ கூறுவது சரியே. இப்படித்தான் நானும் என்னைத் தேற்றிக் கொள்ள முனைகிறேன். ஆயினும் என் கட்டற்ற இன்ப வாழ்வை நாடி நான் தீங்கிழைத்ததுடன் நில்லாமல், ஒருவர் உயிர் இழப்பதற்கே காரணமாய்விட்டேன். இது பெருங்குற்றம். தீராப்பழியின் இச்சுமையுடனே நான் உலகவாழ்வில் உழலவேண்டும். இதை உன் சகோதரியிடம் கூறாதே. துறவுமாதாகிய உன் அன்னையிடம் இன்னும் விழிப்பாயிரு. ஏனெனில் இத்தகைய காரியங்களில் நான் ஈடுபட்டிருந்ததை அவள் என்றும் அறியத் தாளமாட்டேன். அது பற்றிய எனது தலைகுனிவு மிகப்பெரிது. கோரெமிட்சு: இத்தகைய அச்சம் எதுவும் வேண்டாம், ஐயனே! ஓரளவு இரகசியத்தைத் தெரிவிக்க வேண்டிய இடம் புரோகிதர்கள் பக்கமே. அவர்களுக்குக்கூட நான் ஒரு நெடுநீளக் கதைகட்டியே கூறியிருக்கிறேன். இது கேட்டுக் கெஞ்சியின் மனத்திலிருந்த பெரும்பளுவில் ஒரு பகுதி குறைந்தது. கெஞ்சியின் மாளிகையிலிருந்த அரண்மனைப் பாங்கியர்கள் மனவேதனையுடன் மலைப்பும் திகைப்பும் கொண்டார்கள். ‘தீட்டுப்பட்டுவிட்டேன், அரசவைக்குச் செல்ல முடியாது என்று கூறுகிறார். அதே சமயம் உட்கார்ந்து முணு முணுத்துக் கொண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டுமிருக் கிறார். இதற்கெல்லாம் பொருளென்ன?’ என்று அவர்கள் அங்கலாய்த்துக் கொண்டனர். கெஞ்சி மீண்டும் பேசினான். ‘செய்யவேண்டியதெல்லாம் வழுவின்றிச் சரிவரச் செய் என்று மட்டும் தான் நான் மீண்டும் உன்னை நினைவுப்படுத்த விரும்புகிறேன்’ என்றான். கெஞ்சிக்குத் தெரிந்த இறுதி வினைகளெல்லாம் அரண்மனைக்குரிய வினைமுறைகளே. வேறு எதுவும் அவனுக்குத் தெரியாது. ஆகவே இறுதி வினைபற்றிப் பேசும் போதெல்லாம் அவன் உள்ளத்தில் அத்தகைய அகல்விரிவான ஆரவாரக் காட்சிகளே நிழலாடின. கோரெமிட்சு இப்போது அவைபோன்ற பாரிய வினைமுறைகளையே நடத்த வேண்டிய வனாயிருந்தான் என்பதுஅவன் எண்ணம். ‘என்னால் இயன்றதனைத்தும் செய்கிறேன். ஆனால் அதில் ஒன்றும் பிரமாதம் இல்லை’ என்று விடையளித்துக் கோரெ மிட்சு போக எழுந்தான். இப்போது கெஞ்சிக்குத் திடீரென்று ஒரு நினைவு எழுந்தது - இனி அவளைத் தான் காண முடியாதென்று! நீ தவறான செயலென்று நினைக்கக்கூடும், கோரெமிட்சு. ஆனால் உன்னுடன் நான் வரவிரும்புகிறேன். குதிரை ‘மீதே வர எண்ணுகிறேன்’ என்று கோரெமிட்சு விடம் கூறினான். ‘அதுவே உங்கள் உறுதியான விருப்பமானால், நான் உங்களிடம் வாதாடுவதில் பயன் இல்லை. எப்படியும் விரைவில் புறப்படுவோம். அப்போதுதான் இரவு கழியுமுன் திரும்ப முடியும்’ என்றான். வேட்டைக்குரிய சாக்கில் அதற்கு வேண்டிய உடையில் தன்னை உருமாற்றிக் கொண்டு, கெஞ்சி புறப்பட்டான். ஏற்கெனவே அவன் மிகக் கொடிய வேதனைகளுக்கு ஆளாகியிருந்தான். இப்போது புதுமை வாய்ந்த இந்தப் பயணத்துக்கு அவன் புறப்பட்ட சமயம் புத்தம்புதிய இருண்ட கருத்துகள் அவன் உள்ளத்தை நிறைத்து அவனுக்குப் புதியதோர் அச்சம் எழுப்பின. அவளை அழித்த மறைபுதிரான ஆற்றல் இந்தப் பயணம் காரணமாக மீண்டும் சீறியெழக் கூடுமோ என்று அவன் பயந்தான். போகவேண்டுமா, போகாமலிருந்து விடுவதா என்று அவன் மீண்டும் தயங்கினான். ஆயினும் இப்பயணத்தால் அவன் துயரம் குறைவதற்கு வழி இருக்க முடியாதானாலும், இப்போது பார்க்காவிட்டால், இனி எப்போதும், ஒரு வேளை எப்பிறப்பிலும், தன் ஆர்வப் பாசத்துக்குரிய அந்த முகத்தையும், உருவையும் காண முடியாமல் போய்விடுமே என்று கருதி அவன் ஒரு முடிவுக்கு வந்தான். முடிவாக கோரெமிட்சுவுடனும் ஒரே ஒரு குதிரை வலவன் துணையுடனும் அவன் பயணமானான். வழி முடிவற்றதாகத் தோன்றிற்று. பதினேழாம் இரவுநிலா ‘கமோ’ச்சமவெளியெங்கும் ஒளி படர்வித்தது. அதன்பின்னும் முன்னோடிகளின் பந்த ஒளி டாரிபெனோ அருகிலுள்ள நாட்டெல்லைக்குக் கொண்டு சென்றது. ஆனால் நோயும் மனக்கசப்பும் இவற்றைக் கவனிக்க முடியாதபடி கெஞ்சியின் உணர்வைக் கலக்கின. அந்த அரைஉணர்வு நிலையிலேயே பயணம் முடிந்துவிட்டதறிந்து கெஞ்சி குதிரையை விட்டு இறங்கினான். துறவு நங்கையின் குடில் மரத்தாலமைந்த வீட்டினரு கேயுள்ள ஒரு கோவிலுடன் இணைந்திருந்தது. குடில் மிகத் தன்னந்தனியான பாழிடமேயானாலும் கோவில் மிக அழகு வாய்ந்ததாயிருந்தது. வருபவர் பந்தங்களின் ஒளி அதன் திறந்த வாயிலில் வீசிற்று. உள்ளறையில் தனித்து அழுது புலம்பிக் கொண்டிருந்த ஒரு பெண் குரலன்றி வேறு குரலில்லை. வெளியறையில் பல புரோகிதர்கள் ஒருங்குகூடிப் பேசிக் கொண்டோ, தொழுதுகொண்டோ இருந்தனர். பக்கத்திலுள்ள கோவில்களில் காலைவழிபாடு முடிந்து அமைதி நிலவிற்று. சிறிது தொலைவில் புண்ணியத் தலமாகிய கியோமிசுவில் மட்டும் போரொளியும் அதனைச் சூழ்ந்து மக்கள் திரளும் காணப்பட்டன. முதுமைவாய்ந்த துறவுமாதின் புதல்வனே தலைமைப் புரோகிதனாய் இருந்தான். அவன் திருநூலின் வாசகங்களைக் கம்பீரமான தொனியில் படித்துக் கொண்டிருந்தான். அதைக் கேட்கும்போதே கெஞ்சியின் கண்களில் நீர் ததும்பிற்று. அவன் உள்ளே சென்றான். உகான் ஒரு தட்டியின் பின்புறம் படுத்திருந்தாள். கெஞ்சி வருவதறிந்தே, அவள் விளக்கைச் சுவரின் பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். என்ன பயங்கர மாறுதலைத் தன்னிடமிருந்து மறைக்க எண்ணினாளோ என்று கெஞ்சி வியந்தான். அருகே வந்தபோது அணங்கின் தோற்றத்தில் எத்தகைய மாறுதலும் இல்லாதது கண்டு ஆறுதலடைந்தான். அவள் அமைதியுடனும் அழகொளியுடனும் உறங்குவது போலவே கிடந்தாள். அச்சமோ, நடுக்கமோ ஏதுவும் தேவையற்ற நிலையில், அவள் கையைத் தன் கையால் பற்றி மனமுருகிப் புலம்பினான்: ‘ஒரு தடவை என்னிடம், வாய் திறந்து, பேச மாட்டாயா? மிகக் குறுகிய காலமே என்னிடம் வந்து என் நெஞ்சில் மகிழ்ச்சி நிரப்பி, உன்னிடம் இவ்வளவு பாசங்கொண்ட என்னை இவ்வளவு விரைவில் ஏன் விட்டகன்றாய்?’ என்று மாழ்கினான். அருகிலிருந்தவாறே அவன் நெடுநேரம் மனங்கசிந்து அழுதான். அவள் யார் என்று புரோகிதர்களுக்குத் தெரியாது. ஆனால் அவனிடம் காணப்பட்ட ஆழ்ந்த மனமார்ந்த துயர் அவர்கள் கண்களிலும் நீர் ததும்ப வைத்தது. கெஞ்சி உகானைத் தன்னுடன் வந்துவிடும்படி அழைத் தான். ஆனால் அவள் மறுத்து விட்டாள். ‘அணங்கு சிறு குழந்தையாய் இருந்தது முதல் நான் அவளிடம் சேவை செய்து வருகிறேன். இடையே ஒரு மணிநேரம் கூட அவளை விட்டுப் பிரிந்து வாழ்ந்ததில்லை. இந்த அளவு எனக்கு அருமையாயிருந்த ஒருவரைவிட்டு நான் எப்படிப் பிரிந்து இன்னொரு மனை செல்ல முடியும்? அத்துடன் நான் சென்று அவள் ஆட்களிட மெல்லாம் அவள் என்னவானாள் என்று கூறவேண்டும். ஏனெனில் அவள் இறந்தவகை காண, நான் விரைந்து சென்று கூறவில்லையானால் குற்றவாளி நானே என்ற கூக்குரல் கிளப்பப் படலாம். அது எனக்கு இன்னும் பயங்கரமான தாயிருக்கும் ஐயனே!’ என்று கூறி அவள் மேலும் உரக்க அழுதரற்றினாள். இறுதியில் ‘நான் பாடையில் அவளுடனே கிடப்பேன். அவள் புகையுடன் என் புகையும் சேர்ந்து பரவட்டும்’ என்றாள். கெஞ்சி அவளுக்கு ஆறுதல்கூற விரும்பினான். ‘பரிதாபத் துக்குரிய பெண்ணே!’ உன் மனக்கசப்பைக் கண்டு நான் வியப்படையவில்லை. ஆனால் இதுவே உலகின் இயல்பு. அவள் சென்ற இடத்துக்கு முன்னோ பின்னோ, நாம் அனைவரும் செல்ல வேண்டியவர்களே! ஆகவே துன்பத்தை ஆற்றியிரு. என்னிடம் நம்பிக்கை கொள்’ என்றான். இது அவளை ஆற்றமுடியாது என்றுணர்ந்து மேலும் பேசினான். ‘இந்தச் சொற்கள் பொருளற்றவை என்பதை நான் அறிவேன். நானும் கூட இந்த வாழ்க்கைபற்றிக் கவலை கொள்பவன் அல்ல. அவளுடன் நானும் மகிழ்வுடன் செல்லவே விரும்புகிறேன்’ என்றான். இந்தச் சொற்கள் ஆற்றுவதற்கு மாறாக, அவள் துன்பத்துடன் அவன் துன்பத்தையும் இணைக்கவே பயன்பட்டன. கோரெமிட்சு இப்போது கெஞ்சியை அணுகினான். ‘இரவு நெடுநேரமாயிற்று. இப்போது நாம் புறப்பட வேண்டும்’ என்றான். பலதடவை பின்னோக்கி மறுகும் கண்களுடனும், துன்பச் செறிவால் விம்மி வெடிப்பது போலிருக்கும் இதயத்துடனும் அவன் அம் மனையை விட்டகன்றான். பனி மிகுதியாகப் பெய்திருந்தது. மூடு பனி எங்கும் அடர்த்தியாகப் பரவியிருந்தது. இவற்றிடையே பாதையைக் காண்பது அரிதாயிருந்தது. சென்றநாள் மாலைப்போதில் அவளுடன் அவன் அருகருகாகப் படுத்திருந்தபோது, அவனுடைய திண்சிவப்புப் போர்வையால் அவளை மூடியிருந்தான். அவள் இன்னும் அதே போர்வையைத்தான் அணிந்திருந்தாள் என்பது கெஞ்சிக்கு வழியிலேதான் நினைவுக்கு வந்தது. அவர்கள் இருவர் வாழ்க்கைகளும் எவ்வளவு பின்னிப் பிணைந்திருந்தன என்பதை இது குறித்துக்காட்டுவது போல் இருந்தது. குதிரையின் சேணத்தின்மீது கெஞ்சிக்குச் சரியாக இருக்கை கொள்ளவில்லை. இதுகண்ட கோரெமிட்சு அவனருகாக நடந்து சென்றதுடன், அவன் கையையும் பற்றிக் கொண்டான். ஆனால் ஒரு மண் மேட்டருகே வந்த சமயம் கைப்பிடி சற்றுத் தளர்ந்தது. கெஞ்சி தள்ளாடி நிலத்தின்மீது விழுந்தான். பெரு வேதனை யுடனும் கலக்கத்துடனும் அவன் விழுந்த இடத்திலேயே கிடந்தான். ‘இந்தப் பயணத்தை முடிப்பதுவரை நான் உயிருடனிருக்கப் போவதில்லை. அந்த அளவு உடல்வலு என்னிடம் இல்லை’ என்று அவன் ஏங்கினான். கோரெமிட்சுவின் உள்ளமும் கழிவிரக்கத்தால் உட்கிற்று. கெஞ்சி எவ்வளவு விரும்பியிருந்தாலும், நோய்ப்பட்டிருந்த நிலையில் அவனைத் தான் இட்டுக் கொண்டு வந்தது தவறு என்று அவன் எண்ணினான். இத்தகைய ஆபத்தான பயணத்திலிருந்து அவனைத் தான் உறுதியுடன் நின்று தடுக்காமல் போனதுபற்றி அவன் வருந்தினான். திகைப்பும் கலக்கமும் கலந்த உள்ளத்துடன் அவன் தன் கைகளை ஆற்றின் நீரில் தோய்த்தவண்ணம் கியோமிசுவி லமர்ந்த அன்னை ‘குவன்னாளை’ மனமார வணங்கி வழிபட்டான். கெஞ்சியும் நிலைமையின் கடுமையறிந்து தன்னைத்தான் ஊக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்து புத்தபகவானை உள்ளூர வேண்டிக் கொண்டான். தொழுகையின் ஆர்வம் தந்த வலுவுடன் அவர்கள் திரும்பவும் தம் பயணம் தொடங்கினர். கோரெமிட்சுவின் தளராத்துணையுடன் கெஞ்சி தன் மாளிகை வந்து சேர்ந்தான். இரவோடிரவாக மேற் கொள்ளப்பட்ட இந்தப் பயணம் மடமையிலும் உச்சநிலை மடமைகளுக்குரியதென்றே மாளி கையில் அனைவரும் கருதினர். சில காலமாகவே இராக்காலங் களில் போக்குவரவு மிகுந்து வருவதை அவர்கள் கவலையுடன் கவனித்து வந்தனர். ஒவ்வொரு பயணத்தின் பின்னும் அவன் களைத்த தோற்றத்துடனும் மாறுபட்ட இதயத்துடனும் வந்தாலும், அவன் அன்று போல் என்றும் அவ்வளவு பஞ்சடைந்த தோற்றம் அளித்ததில்லை. ‘இந்த இடைவிடாத அலைச்சல்களின் நோக்கம் என்னவாயிருக்க முடியும்?’ - நம்பிக்கையிழந்து கவலைதோய்ந்த முகத்துடன் அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கித் தலையசைத்துக் கொண்டனர். கெஞ்சி படுக்கையில் வந்து விழுந்தவன் பல நாட்களாகக் காய்ச்சலாலும் உடல்நோவாலும் அவதியுற்றான். அவன் நாடி மிகத் தளர்ந்து விட்டது. மேன்மேலும் தளர்ந்து வந்தது. இச்செய்தி அறிந்தபோது சக்கரவர்த்தி முழுதும் ஒளியிழந்தார். எல்லாக் கோவில்களிலும் அவனுக்காக வேண்டுதல் வழிபாடுகள் நடைபெறும்படி அவர் கட்டளையிட்டார். இவை தவிர, தனிப்பட்டவர்கள் முயற்சியால் பல்வேறிடங்களிலும் நடைபெற்ற வேண்டுதல் வழிபாடுகள், வணக்கங்கள், கழுவாய் வினைகள் ஆகியவற்றை இங்கே எடுத்துரைக்க முடியாது. அவை அந்த அளவு எண்ணிறந்தவை. அழகுக்கும் கவர்ச்சிக்கும் பேர்போன இந்த அருமை இளவரசன் இறக்கக்கூடுமென்ற ஐயம் ஏற்பட்ட போது, பேரரசெங்குமே பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது. இவ்வளவு நோக்காட்டிலும் கெஞ்சி உகானை மறந்துவிட வில்லை. அவளை வரவழைத்துத் தன் பாங்கியர் குழுவில் சேர்த்துக் கொண்டான். கோரெமிட்சு இப்போது தன் தலைவனின் நிலைபற்றி மிகவும் கவலை கொண்டிருந்தான். ஆனால் தலைவன் குறிப்பறிந்து அவன் தன் கவலையை அடக்கிக் கொண்டு உகானின் புதிய கடமைகளில் அவளுக்கு வேண்டிய துணை உதவிகளைச் செய்து பயிற்றுவித்து வந்தான். அவளது துணையற்ற அவல நிலையில் அவளிடம் தனிப்பட்ட முறையிலும் மிகவும் பரிவு கொண்டிருந்தான். கெஞ்சியும் அவ்வப்போது, ஒரு சிறிதே உடல்நலம் ஏற்பட்டபோதெல்லாம் தன் கடிதங்களைக் கொண்டு செல்லும் வேலையை அவளிடமே ஒப்படைத்தான். இதனால் அவளும் அவன் சேவையில் எளிதில் பழகினாள். அவள் திண்ணிய கறுப்பு உடை அணிந்திருந் தாள்.வனப்புடையவள் என்றுகூற முடியா விட்டாலும், அவள் தோற்றம் இனிதாகவே இருந்தது. கெஞ்சியின் உடல் மிகவும் பலவீனமாய் இருந்தது. பேசக்கூட அவனுக்குத் திராணியில்லை. ஆனால் இந்த நிலையிலும் அவன் அடிக்கடி அடங்கிய குரலில் தயங்கித் தயங்கி உகானிடம் பேசிவந்தான். அடிக்கடி கண்ணீருடன் பேசுவான். ‘உன் தலைவியின் வாழ்வை அவ்வளவு விரைவில் முடிவுக்குக் கொண்டுவந்த அதே ஊழ் என்னையும் தாக்கியுள்ளது என்று எண்ணுகிறேன். இந்த உலகில் நான் இனி நெடுநாள் இருக்கப்போவதில்லை என்று அது முடிவு செய்திருக்கிறது. அவள் உன்னைவிட்டுச் சென்றதனால் உனக்கு என்ன மாறாத் துயர் ஏற்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். அவள் அத்தனை ஆண்டுகளாக உனக்குத் தலைவியாக மட்டுமன்றித் துணைவியாகவும் இருந்தாள். இந்தப் பேரிழப்பின் பின் என்னால் இயன்ற முழு அளவிலும் அன்புடனும் உன்னிப்புடனும் உனக்கு வேண்டிய ஆறுதல்கள் அளிக்க வேண்டுமென்பதே என் நோக்கம். நான் இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கப் போகிறேன் என்பதில் எனக்கு உண்மையில் இந்த ஒரு காரணத்துக்காகவே தான் வருத்தம் ஏற்படுகிறது’ என்று அவன் புலம்பினான். அவன் மறைவு தன்னை மீண்டும் துணையற்றவளாக்கி விடும் என்பதற்காகவன்று, அவன் இறந்துவிடப்படாதே என்று உண்மையிலேயே அவள் வருந்தினாள். ஏனெனில் அவனிடம் அவளுக்கு இப்போது ஆழ்ந்த பரிவும் பற்றுதலும் ஏற்பட்டு விட்டன. அவன் பணிமைந்தர் மனக்குழப்பமுடன் அங்குமிங்கும் ஓடினர். சக்கரவர்த்தியின் தூதர்கள் செறிந்த மழைத்துளிகள் போல எங்கும் மொய்த்தனர். தந்தையின் கவலையையும் துயரத்தையும் கேள்வியுற்ற கெஞ்சி உடல் ஓரளவு தேறிவந்ததாக அல்லது குணமடைந்து விட்டதாக நடித்து அவருக்கு ஆறுதல் அளிக்க முயன்றான். அவன் மாமனாரும் அவன் நிலைபற்றி மிகமிக வருத்தமுடையவராயிருந்தார். ஒவ்வொரு நாளும் அவன் உடல் நலம் பற்றிய தகவலுக்காக அவர் தாமே வந்துவந்து போனார். அவன் நலம் பெறுவதற்காகவே பல வினைமுறைகளிலும் ஆற்றல் வாய்ந்த தெய்வ நேர்ச்சிகளிலும் ஈடுபட்டு அவற்றை நடத்துவித்தார். இவற்றின் பயனாகவோ என்னவோ, இருபது நாட்கள் ஆபத்தான நிலையில் நீடித்திருந்தபின், கெஞ்சியின் நிலை படிப்படியாகச் சீர்திருந்தத் தொடங்கிற்று. விரைவில் நோயின் அறிகுறிகள் முற்றிலும் மறைவுற்றன. முற்றிலும் குணமடைந்த அன்றே அவன் தீட்டுக்குரிய நாட்களும் முடிவடைந்தன. ஆகவே, சக்கரவர்த்தி இன்னும் தன்னைப் பற்றிப் பெருத்த கவலையுடனிருக்கிறா ரென்று கேள்விப்பட்டதே, அவன் அரண்மனையிலுள்ள தன் பணிமனைக்கே சென்று விடுவதன் மூலம் அவருக்கும் பேரவையோருக்கும் முழுத் தேறுதல் அளிக்க முடிவு செய்தான். இவ்விடத்துக்கு அவனை இட்டுச் செல்ல அவன் மாமனார் தம் சொந்த வண்டியுடன் தானும் வந்துவிட்டார். ஓரளவு அவனுக்கு மனச்சலிப்பே ஊட்டும் அளவில் அவர் அவன் உடல் நலத்துக்கான மருத்துவப் பண்டுவமுறைகளையும், பத்தியமுறை களையும் ஓயாது மீட்டும் மீட்டும் கூறிக் கொண்டே உடன் சென்றார். உலகில் உள்ள எல்லாப் பொருளுமே கெஞ்சிக்கு இது முதல் நெடுங்காலம் புத்தம்புதியனவாகத் தோற்றின. தன்னை நன்கு உணராதவன்போல அவன் ஒரு புதிய உலகில் நடமாடுபவன் ஆனான். ஆனால் ஒன்பதாவது மாதம் இருபதாவது நாளைக்குள் அவன் மீட்சி நிறைவுற்றது. அதன்பின்னும் நீடித்திருந்த முகத்தின் மெலிவும் விளறிய தோற்றமும் அவனுக்கு ஒரு புதுக் கவர்ச்சியளிப்பவையாக அமைந்தனவேயன்றி வேறல்ல.. அவன் இன்னும் அடிக்கடி வெட்டவெளியைக் கூர்ந்து உற்று நோக்கியதுண்டு. சில சமயம் காரணம் வெளிப்படாமல் திடுமெனக் கலங்கிக் கண்ணீர்விட்டுக் கதறி அழுவதுண்டு. இவற்றைக் கண்ட பலர் அவன் ஏதோ ஆவிகளின் செயலுக்கு ஆட்பட்டிருப்பது உறுதி என்று கருதினர். பல சமயம் அவன் உகானை வருவித்து அவளுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான். ஒரு தடவை மாலையில் பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்த பின் திடீரென்று அவளிடம் ஒரு தகவல் கேட்டான். ‘ஒரே ஒரு செய்தி இன்னும் எனக்குப் பெருத்த மனக்குழப்பம் உண்டு பண்ணுகிறது. தான் யாரென்று அவள் ஏன் என்னிடம் கடைசிவரை சொல்ல மறுத்தாள்? ஏனெனில் ஒருதடவை அவள் அணியழகுக்காகக் குறிப்பிட்டதுபோல, அவள் உண்மையிலேயே ஒரு மீனவன் மகளாயிருந்தால்கூட, அவளை இவ்வளவு உண்மையாகக் காதலித்த ஒருவனிடம் இவ்வளவு பிடிவாதமாக ஒளிவு மறைவு காட்டுவது விசித்திரமல்லவா?’ என்றான். உகான் மறுமொழி கூறினாள். ‘தன் பெயரை அவள் ஏன் கூறவில்லை யென்று கேட்கிறீர்கள்? கூறாததில் என்ன வியப்பு?’ பெயர் தெரிவதனால் உங்களுக்கு எதுவும் வந்துவிடப் போவதில்லை. ஆனால் அதை கூறத்தக்க வேளை என்று நீங்கள் எந்தக் காலத்தைக் குறிப்பிட முடியும்? தொடக்கத்திலிருந்தே நீங்கள் அவளை மிக விசித்திரமான அவநம்பிக்கையுடன் நடத்தினீர்கள். மறை வொளிவுடனும் இரகசிய இரகசியமாகவும் நீங்கள் வந்து கண்டதால், நீங்கள் இதே மனித உலகத்தவர் தானா என்று கூடக் கூறுவதரிதாக இருந்தது. இது மட்டுமன்று. நீங்கள் யாரென்று அவளிடம் ஒன்றும் சொல்லாவிட்டாலும், அவள் அதை நன்கு அறிந்து கொண்டு தானிருந்தாள். அவளை ஒரு தற்காலிக விளையாட்டுக் கருவியாகவோ, கவலை நேர ஆறுதல் பண்டமாகவோ மட்டுமே கருதியிராவிட்டால், இவ்வளவு இரகசியம் பேணியிருக்க மாட்டீர்கள் என்ற எண்ணம் அவளை உள்ளூர அறுத்து வந்தது’ என்றாள். ‘ஆ, ஒருவர் பற்றி ஒருவர் எத்தனை தொடர்ந்த தப் பெண்ணங்கள்?’ என்று தொடங்கினான் கெஞ்சி. ‘என்னளவில் அவளுக்கும் எனக்கும் இடையேயுள்ள தொடர்பைத் தொலைவுடையதாக்கும் எண்ணம் எனக்குச் சிறிதும் இருந்ததில்லை. உண்மை என்ன வென்றால் இது போன்ற செய்திகளில் எனக்கு அனுபவம் கிடையாது. என் நிலையில் உள்ளவர்களுக்கு இவ்வழியில் எத்தனையோ எதிர்பாராத தனிப்பட்ட இடைஞ்சல்கள் உண்டு. முதலாவதாக, முதன்மை யாக, சக்கரவர்த்தியாகிய என் தந்தையின் கோபத்துக்கு நான் அஞ்ச வேண்டும். அதற்கடுத்தபடி உலகமக்களின் அறிவில்லாக் கேலி உரைகளுக்கும் நான் அச்சங்கொள்ள வேண்டும். இவை தவிர அரண்மனை ஒழுங்கு முறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் நான் நாற்புறமும் சூழப்பட்டிருக்கிறேன். இவ்வாறு என் பதவி என்மீது சுமத்திய இந்த வெறுக்கத்தக்க ஒளிவு மாறாட்டங்களுக்கிடையே கூட, நான் என் உள்ளத்தை அவள் மீது ஓடவிட்ட முதல் நாள் மாலைப் போதிலிருந்து என் அறிவு என்னைத் தடுத்த போதிலும் நான் ஒரு சிறிதும் அவள் காதலில் முன்னேறத் தயங்கியதில்லை. உண்மையில் தற்போது என் இடைவிடாத வேதனைக்கும் கழிவிரக்கத்துக்கும் உரிய நடவடிக்கையைச் செய்யும்படி என் ஊழ்வலிதான் என்னைப் பிடர்பிடித்து உந்தியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆயினும் இப்போது அவளைப்பற்றி மேலும் தகவல்கள் அறிய அவாவுகிறேன். ஏனெனில் இச்சமயத்தில் ஒளிப்பு மறைப்புக்குரிய காரணம் எதுவும் இல்லை. மேலும் அவள் நற்கதியையும் அமைதியையும் முன்னிட்டு நான் வாரத்தின் ஒவ்வோர் ஏழாம் நாளிலும் புத்தர்களின் பெயர்களைத் திரு எழுத்தில் எழுதுவிக்க எண்ணுகிறேன். இவற்றிலும் என் தனி வேண்டுதல் வழிபாடுகளிலும் நான் அவளை எப்பெயரால் குறிப்பேன்?’ இவ்வாறு கெஞ்சி வாதாடினான். உகான் இப்போது மனந்திறந்து பேசினாள். ‘உங்களுக்கு இவற்றைச் சொல்வதில் தீங்கு எதுவுமே இல்லை. முன்பே நான் இவற்றைத் தெரிவித்திருக்கக்கூடும். ஆனால் என் தலைவி உயிருடனிருக்கும் போது நான் சொல்வதை விரும்பவில்லை யாதலால், அது வகையில் நான் எதுவும் வெளியிடுவது தவறு என்று இருந்துவிட்டேன். அவள் பெயர் யுகாவ். அவள் சிறுமியாய் இருக்கும் போதே தாய் தந்தையர் இருவரும் மறைந்து விட்டார்கள். அவள் அழகுமிக்கவளா யிருந்தாள். அவள் தந்தை சம்மி சூஜோ அவளிடம் உயிராயிருந்தார். ஆயினும் அவள் அழகுக்கேற்ற நலங்களை அளித்து அவளுக்குத் தன் கடமையைச் சரிவர ஆற்ற முடியாதே என்று வருந்தினார். அவள் வருங்காலத்தைப் பற்றிய மனச் சஞ்சலத்திடையிலேயே அவர் மாள நேர்ந்தது. ‘இதற்குச் சில நாட்களுக்குப் பின் தற்செயலாக அவள் தோ நோ சூஜோவுடன் பழக நேர்ந்தது. அவர் இச்சமயம் படைத் துறைத் துணைவராக மட்டுமே இருந்தார். மூன்றாண்டுகள் அவர் அவள் வாழ்வை இன்பகரமாக்கினார். ஆனால் மூன்றாம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் வலங்கை நெடுமாடத்திலிருந்து மனங்குலைய வைக்கும் கடிதங்கள் வரத் தொடங்கின. இயல்பாக அறிவமைதிக் கொவ்வாத முறையில் அச்சங்களுக்குத் திடீரென்று ஆளாகும் வழக்கமுடையவள் அவள். இதனால் பீதியுற்று நகரின் மேற்குப் பகுதிக்கு ஓடினாள். இங்கே அவள் தன் பழைய செவிலித்தாயின் இல்லத்தில் தன்னைப் புதைத்தாள். ‘இங்கும் அவளுக்கு அமைதி கிட்டவில்லை. அருகேயிருந்த குன்றுகளின் மீதுள்ள ஒரு சிற்றூருக்குப் போகத் திட்டமிட்டாள். ஆனால் அவ்வாண்டில் அத்திசையில் பயணம் செல்வது கோளமைதிகளுக்கு மாறானது என்று கண்டாள். ‘அவள் இத்தகைய மோசமான நிலையில் இக்கட்டான இடத்தில் தங்கும் சமயம் பார்த்து நீங்கள் அவளைச் சந்திக்க நேர்ந்தது. இது பற்றி அவள் எதுவும் வெளியிட்டுக் கூற வில்லையானாலும், அவளுக்கு இது ஒரு பெரு வேதனையா யிருந்தது என்பதை நான் அறிவேன். ஆனால் நன் நினைவுகளைத் தன் உள்ளத்திற் குள்ளாகவே அடக்கி வைத்துக் கொள்வதில் என் தலைவிக்கு யாரும் ஈடில்லை. மற்றவர் தன் மனத்தின் நிலையை அறிவதையே அவள் பொறுக்கமாட்டாள். இந்நிலையில் அவள் உங்களிடமும் மிக விசித்திரமாக நடந்து கொண்டாள் என்பதில் ஐயமில்லை. இதை நீங்களே நேரில் அறிவீர்கள்’ என்றாள். ‘ஆம், இது அனைத்தும் தோ நோ சூஜோ வருணித்த படியே உள்ளது’ என்று கெஞ்சி நினைத்தான். ஆனால் ‘ஒரு குழந்தை பற்றிய பேச்சு இருந்ததே அதைக் காணாமல் சூஜோ மிகவும் வருந்தினதாக அறிகிறேன். இது மெய்தானா?’ என்று அவன் கேட்டான். அவளைப்பற்றி மேன் மேலும் அறியும் ஆர்வம் அவனைப் பிடித்து உந்திற்று. உகான் மீண்டும் பேசினாள். ‘ஆம்! உண்மையே. அது சென்ற ஆண்டு இளவேனிற் பருவத்தில் பிறந்தது. அது ஒரு பெண், மிக இனிய தோற்ற முடையது’ என்றாள். ‘அது இப்போது எங்கே இருக்கிறது? எங்கே கொண்டு வருகிறாய் என்று வேறு யாருக்கும் தெரியாமல் அதை நீ கைப்பற்றி என்னிடம் கொண்டு வரமுடியுமா? இன்றைய என் மாளாத் துயரினிடையே அவளை நினைவூட்டும் சின்னமாக அதைப் பெறுவது ஒரு பெரிய ஆறுதலாயிருக்கலாம்’ என்று கேட்டான் கெஞ்சி. ‘சூஜோவிடம் இவற்றை நான் கூறுவது இயல்பான கடமையாகவே இருக்கும். ஆனால் இதன் மூலம் நடந்தவற்றையெல்லாம் பற்றி வாதிடும் துன்பகரமான அவசியம் ஏற்பட்டுவிடும். எனவேதான் எப்படியாவது அக்குழந்தையை இங்கே கொண்டு வந்து அரண்மனையில் வைத்து வளர்க்க விரும்புகிறேன். இதில் தீங்கு எதுவும் இராதென்றே தோற்றுகிறது. அத்துடன் அவளைத் தற்போது பேணிக்காப்ப வரிடமும் நீ எளிதாக வேறு ஏதேனும் கதை கட்டிக் கூறி விட முடியும்’ என்று அவன் மீட்டும் தொடர்ந்தான். ‘உங்கள் மனதில் இந்த எண்ணம் எழுந்ததற்கு மகிழ்கிறேன். ஏனெனில் தற்போது வாழும் இடத்திலேயே குழந்தை வளர்வது அவள் எதிர்காலத்துக்கு உகந்ததன்று. அங்கே அவளுக்கு உரியவராக எவரும் இல்லை. இடமும் நகரின் அத்தகைய ஒதுங்கிய பகுதி’ மாலையின் அமைதி அந்திவானத்துக்கு அகங்குளிர்விக்கும் அரிய அழகு தந்தது. அவன் மாளிகையின் முன்புற எல்லையில் அங்குமிங்கும் தும்பிகள், வண்டுகள் போன்ற சிற்றுயிர்கள் தம் சிறுகுரலெடுத்து இரைந்தன. இலைகள் இப்போதுதான் பழுப்புநிறம் கொள்ளத் தொடங்கியிருந்தன. மனோரம்மியமான இந்தச் சூழலுக்கும் மாண்ட அணங்கு யுகாவ் வாழ்ந்த சூழலுக்கும் இடையேயுள்ள பெருவேறுபாட்டை அவன் உளங்கொண்டு உள்ளூர உட்கினான். இச்சமயம் மூங்கில் புதர்களிடையே இருந்து ஒரு பறவை கிரீச் சென்று குரலில் கத்திற்று. துன்ப முடிவுக்குக் காரணமான அந்த மனையின் தோட்டத்தில் இதேவகைப் பறவை இதே குரலில் கத்தி யுகாவுக்கு நடுக்கமளித்ததை அவன் எண்ணினான். உடனே அவன் உகானிடம் விரைந்து சென்றான். ‘அவளுக்கு வயது என்ன இருக்கும்? அவள் துணையற்ற நிலையும் அச்ச அவநம்பிக்கைகளும் குழந்தையின் இயல்புக் கொத்தவையாய் இருந்தாலும், அவை உண்மையில் அவள் இவ்வுலகிலிருந்து அவ்வுலகிற்குத் தாவ இருந்தவள் என்பதன் அறிகுறிகளாகவே இருத்தல் கூடும்’ என்றான். ‘அவள் அச்சமயம் பத்தொன்பது வயதுடையவளாய் இருந்திருக்கவேண்டும். அவளது முதல் செவிலித்தாயாய் இருந்தவள் என் தாய்! என்தாய் இறந்தவுடன் நான் துணையற்ற வளானேன். அதுகண்ட என் தலைவியின் தந்தை என் மீது கருணை கூர்ந்து என்னையும் என் தலைவியுடன் இணைத்து வளர்த்தார். அந்தோ, ஐயனே! இவற்றை எண்ண எண்ண, அவளில்லாமல் நான் எப்படி வாழப் போகிறேன் என்று எனக்குச் சிறிதும் விளங்கவில்லை. இங்குள்ள மக்கள் மிகவும் அன்புடையவர்களாகவே இருக்கிறார்கள். ஆயினும் என்னால் அவர்களுடன் எளிதில் பழகிவிட முடியவில்லை. பாவம், என்தலைவி. எத்தனையோ ஆண்டுகளாக எனக்கு உற்ற துணைவியாகவும் இருந்து என்னுடன் இழைந்திருந்தாள். அவள் போக்கும் நடையும் நன்குணர்ந்து, அவற்றை நான் என்னுடையனவாகப் படியவைத்துவிட்டேன்’ என்றாள் உகான். கெஞ்சியின் நினைவுக்களத்தில் சாயக்காரனின் கைத்தடி யோசை கூடப் புனித அருநினைவாகியிருந்தது. அதைச் செவிமடுத்த வண்ணம் படுக்கையில் கிடந்தபோது, கவிஞன் மோ-சூயியின் அடிகளை அவன் இதழ்கள் முணுமுணுத்தன. ‘எட்டாவது ஒன்பதாவது மாதங்களிலே எட்டாது நீளும் இராக் காலங்களிலே தட்டுகின்ற சாயக்காரன் கைத்தடியோசை எட்டாயிரம், பத்தாயிரம் எனப் பெருகினவே!’ அவனுடன் இருந்த சிறுவன் தொடர்ந்து அவனிடமே பணிசெய்து வந்தான். ஆனால் அவன் முன் போல இப்போது கடிதங்கள் இங்கும் அங்கும் கொண்டு செல்வதில்லை. தான் அவனைக் கடுமையாக நடத்தியதன் பயனாக, கெஞ்சி தன் நட்புக்கு ஒரு முற்றுப்புள்ளிவைக்க முடிவு செய்துவிட்டானோ என்று உத்சுசேமி எண்ணினாள். இவ்வெண்ணம் அவளை உள்ளூரப் புண்படுத்திற்று. ஆனால் இதற்குள் அவன் கடும் பிணியின் செய்தி அவள் காதுகளுக்கு எட்டிற்று. அவள் வேதனை முழுதும் கழிவிரக்கமாகவும் கவலையாகவும் திகிலாகவும் மாறிற்று. அவள் தன் தொலைப்பயணம் தொடங்கும் தறுவாயில் இருந்தாள். ஆனால் அவள் கவனம் இப்போது அதில் இல்லை. கெஞ்சி தன்னை முழுவதுமே மறந்து விட்டானோ என்று சோதிக்கும் எண்ணத்துடன் அவள் அவனுக்கு ஒரு தூது அனுப்பினாள். அவன் நோயின் விவரமறிந்து தான் அடைந்த துயரை வருணிக்கும் சொற்கள் கிடையாதென்று அதில் அவள் குறித்தாள். அதனுடன் ஒரு பாடலும் இணைத்தாள். ‘தங்களைப் பற்றிய செய்தியை நானும் கோரவில்லை. தமியள் மௌனத்தின் காரணத்தைத் தாங்களும் உசாவியது கிடையாது. இந்நிலையில் நாட்கள் கழிகின்றன. துன்பத்திலும் மனக்குழப்பத்திலும் நான் மிதக்கிறேன்’ என்று அப்பாடல் குறித்தது. அவன் உண்மையில் அவளை மறக்கவில்லை. தன்துயர்கள் பெரியதாயினும் அவற்றிடையே கூட மறந்ததில்லை. அவன் பதில் இதற்குச் சான்றளித்தது. ‘உத்சுசேமியின் (அதாவது பொன்சிறைத்தும்பியின்) தோடுபோல நிலையற்ற நொய்மை யுடையது என்வாழ்வு. அதில் நான் ஏற்கெனவே முற்றிலும் அலுப்படைந்து விட்டேன். ஆனால் உன் செய்தி எனக்குப் புதுவலுத் தந்து புதுவாழ்வு அளிப்பதாய் உள்ளது’ என்று அவன் தெரிவித்தான். பாடல் வடிவில் அமைந்த இக்கடிதத்தின் கையெழுத்து நடுக்கமும் தடுமாற்றமும் உடையதாகவே இருந்தது. ஆயினும் அது அழகான தென்றே உத்சுசேமி மதித்தாள். பொன்சிறை வண்டு தோடுகழிப்பது போல அவள் தன் கைச் சதுக்கத்தை நழுவவிட்டதை அவன் இன்னும் மறக்கவில்லை என்பதை அது காட்டிற்று. இவ்வாறு கடிதங்கள் அனுப்பவதிலும் பெறுவதிலும் ஒரு தீங்கும் இருக்க முடியாதென்று இப்போது உத்சுசேமி கண்டாள். ஆயினும் நேரிடைச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும் எண்ணம் அவளுக்குச் சிறிதும் இல்லை. அதில் எத்தகைய பொருளும் இருக்க முடியாதென்பதை முடிவாக அவனே உணர்ந்து கொண்டான் என்று அவள் எண்ணினாள். உத்சுசேமியின் தோழிவகையில், அவள்திருமணம் நடைபெறவில்லை. உண்மையில் அவள் தோ நோ சூஜோவின் உடன்பிறந்தானான குரோதோ நோ ஷோவின் காதற் கிழத்தியாய்விட்டதாகக் கேள்வியுற்றான். தன் காதற்களத்தில் தான் முதல்வனல்ல என்று கண்டால் ஷோஷோ மனத்தாங்கலுறுவானோ என்று கெஞ்சி வருந்தினான். ஏனெனில் அவனைப் புண்படுத்தக் கெஞ்சி விரும்பவில்லை. ஆயினும் அதேசமயம் அப்பெண்மணியின் மனநிலையறியும் ஆர்வம் அவனுக்கு மிகுதியாயிருந்தது. ஆகவே உத்சுசேமியின் தம்பியிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினான். தன் நோய்பற்றிய செய்தியை நினைவூட்டி, அதுவிவரம் தெரியுமா என்று கேட்டிருந்தான். அத்துடன் ஒரு பாடலும் அனுப்பினான். அது பல உட்பொருள்கள் சுட்டுவதாய், ஒரு சித்திரக் கவியாய் அமைந்தது. ‘இறைவாரத்தின் மீது படர்ந்த வேலிப்பருத்தியின் பஞ்சில் குறைவற ஒருகைக்குத்து எடுத்து என் தலையணை நிரப்பி யிராவிட்டால், சிறு பனித்துளியினளவு கூட இச் செய்திக்குச் சாக்கு இராது’ கடிதத்தை நீண்ட ஒரு நாணற்கழியில் கோத்து அதை அவனிடம் இரகசியமாகவே ஒப்படைக்கும்படி சிறுவனைப் பணித்தான். ஆனால் சிறுவன் போனபின் அவன் இச் சிறுசெயல்பற்றிக் கூடக் கவலைப்பட்டான். சிறுவன் கவனக்குறைவால் அது தவறி ஷோஷோ கையில் சிக்கிவிட்டால், அதனுக்கு முற்பட இடம் பெற்றவன் கெஞ்சியே என்பது அவனுக்குத் தெரிந்துவிடக்கூடும். சிறிதுநேரம் அமைந்து சிந்தித்தபின் கெஞ்சிக்கு இந்தக் கவலையும் குறைந்தது. ஷோஷோ கெஞ்சிவகையில் இத்தகைய நிகழ்ச்சியைப் பற்றிக் கூட மிகத் தவறாக நினைக்கமாட்டான் என்று அவன் தற்பெருமை கூறிற்று. சிறுவன் கடிதத்தைக் கொடுக்கும்போது ஷோஷோ தொலைவிலேயே இருந்தான். கடிதம் அவளை ஒரு சிறிதும் புண்படுத்தாமலில்லை. ஆனால் அவன் தன்னை மறவாமல் நினைக்கவாவது செய்தானே அன்று சிறிது தன்னை ஆற்றிக் கொண்டாள். அவள் வேறொன்றும் பதிலாக வரையாமல் ஒரு பாடலை மட்டும் எழுதிச் சிறுவனிடம் நேரே கொடுத்தனுப்பி னாள்.இதுதவிர தனக்கு வேறு எதுவும் எழுத நேரம் இல்லை என்பதையே அதற்குரிய சாக்குப் போக்காக்கினாள். ‘உங்கள் அன்பாகிய காற்று மெல்ல ஒருசிறிதே வீசியதால், இறை வாரத்திலிருந்து எடுத்த பஞ்சினி கையுறைகூடத் துயர்ப்பட்டு இறுகிவிட்டது’ என்ற கருத்தை அப்பாடல் குறித்தது. அது மிகவும் மோசமாக எழுதப்பட்டிருந்தது. அதை அணி செய்த சித்திரக் கோடுகளும் கொம்புகளும் தவறான முறையில் அமைந்திருந்தன. நடையும் குறைபாடுடையதாகவே இருந்தது. ஆயினும் அதுவே விளக்கொளியில் முதலிரவு கண்ட அம்முகத்தைக் கெஞ்சிக்கு நினைவூட்டப் போதியதாயிருந்தது. அச்சமயத்தில் அவனுக்கு எதிரே அமர்ந்த பெண்ணோ நிமிர்ந்து உட்கார்ந்திருந்தாள். அவள் முகத்தின் உறுதிக் கிணங்க அவள் ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காதவளாகவே அமைந்தாள். வேலிப்பருத்தி நங்கைத் தொடர்பும் நெறி திறம்பிய சறுக்கலேயானாலும் அது மிகச் சிறு செய்தி. மனமார மேற்கொண்டதும் அல்ல. அதில் பெருங்கெடுதல் இருந்ததாகவும் கெஞ்சி எண்ணவில்லை. ஆயினும் இதில் கூடக் காரியம் மிஞ்சி விடுமுன் கட்டுப்பாடு செய்யாவிட்டால், அதுவும் ஏதாவது சிக்கலில் கொண்டு போய்விட்டுத் தன் புகழ் கெடுக்கக்கூடும் என்று அவன் நினைத்தான். யுகாவ் மறைவின் நாற்பதாவது நாளன்று கெஞ்சியின் ஆணைப்படி ஹியே மலை மீது ஹோக்கெய்டோ பள்ளியில் இரகசியமாக ஒரு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதன் திருவினைகள் மிக அகல்விரிவுடையவையாய் இருந்தன. அவற்றுக்கான எல்லாப் பொருள்களும் இளவரசன் பொருட்குவையிலிருந்தே அனுப்பித் தரப்பட்டன. சிறப்பு வழிபாட்டுக்காகச் சித்தம் செய்யப்பட்ட வழிபாட்டு ஏடுகள், திருப்படிவங்களின் ஒப்பனைகள்கூட மிகக் கவனத்துடன் செய்யப்பட்டன. சமயப்பற்று மிக்க கோரெமிட்சுவின் உடன் பிறந்தார் பொறுப்பிலேயே திருவினைகள் ஒப்படைக்கப் பட்டிருந்தன. அவை அப்பழுக்கின்றிச் சரிவர நிறைவேறின. அடுத்த படியாக, கெஞ்சியின் பழைய எழுத்தாசிரியரே வரவழைக்கப் பட்டிருந்தார். அவர் இலக்கியப் பேராசிரியர். கெஞ்சியின் பெரு விருப்புக்குரியவர். மாண்டவர்க்குரிய வழிபாட்டு வாசகம் எழுத அவரே கோரப்பட்டிருந்தார். ‘என்னால் மிகுதியும் நேசிக்கப்பட்டு அணிமையில் காலமான, பெயர் குறிக்கப்படாத ஒருவர் ஆன்மாவை நான் அமித புத்தர்பிரான் திருவடிக்காப்புக்கு ஒப்படைக்கிறேன் என்று கூறுக’ - இக்கோரிக்கையுடன், தானே வாசகம் எழுதி அப்பேராசிரியர் திருத்தத்துக்குச் சமர்ப்பித்தான். உணர்ச்சிகரமான அவ்வாசகங் களைக் கண்ட அப்பெருந்தகை அதில் திருத்த எதுவும் கிடையாது என்று அதை அப்படியே ஏற்றார். உண்மையில் அவ்வாசகங்கள் அவரை உருக்கின. ‘இம்மறைவு இளவரசன் உள்ளத்தில் இத்தனை துயர் விளைக்கின்றதே? இதுயார் மறைவாய் இருக்கக்கூடும்’ என்று அப்பெரியார் வியந்தார். ஏனெனில் கெஞ்சி இச்சமயம் எவ்வளவோ தன் துயரை மறைக்க முற்பட்டும், அவன் கண்களில் ததும்பிய கண்ணீர் அவனைக் காட்டிக் கொடுத்தது. ஹொக்கெய்டோ குருமாருக்குத் தகுதியான பரிசு தேர்ந்தெடுக்கும் எண்ணத்துடன், கெஞ்சி தன் களஞ்சியத்தைத் துழாவிப் பரிசீலனை செய்தான். அவன் கண்களில் கவர்ச்சிமிக்க ஓர் ஆடை தென்பட்டது. அதை அவன் எடுத்து மடிக்கும் போதே இப்பாடலைப் பாடினான். “கண்ணீருடன் இன்று கட்டுகின்ற வார்க்கச்சை நண்ணும் முடிச்சினை நான் மீட்டும் அவிழ்த்திட ஒண்ணுமோ மேலைப் புது வாழ்வில் யாம் மகிழ?” இதுவரை (புத்த சமய ஏடுகள் சாற்றுகிறபடி) அவள் ஆன்மா ஆவியுலக இடைவெளியிலேயே உலவியிருந்தது. ஆனால் இப்போது அவள் தன் புது வாழ்வுப் பாதையில் புறப்பட்டிருக்க வேண்டும். இப்பாதையில் அவள் தற்காப்புக் கோரி அவன் பற்றார்வத்துடன் வணக்க வழிபாடாற்றினான். அவன் தோநோ சூஜோவைச் சந்தித்த போது அவன் நெஞ்சு படபடத்தது. யுகாவின் குழந்தை பற்றியும் அதன் வளர்ப்புக்குரிய தன் திட்டம் பற்றியும் அவன் சூஜோவிடம் கூற வேண்டுமென்று உள்ளூர மிகுந்த ஆவல் கொண்டிருந்தான். ஆனால் கதையின் மீந்த பகுதிகள் அவனைப்பெரிதும் புண்படுத்திச் சீற்றம் கொள்ளச் செய்யும் என்று அவன் அஞ்சினான். கூற விரும்பியதை இதனால் அவன் கூறாமலே விடுத்தான். இதனிடையே யுகாவ் மனையின் பணியாட்கள் யுகாவைப் பற்றியோ உகானைப் பற்றியோ கூட எத்தகைய செய்தியும் கிடைக்காதது பற்றி மிகவும் வியப்புற்றனர். அது பற்றிப் பெரிதும் கவலைப்படவும் தொடங்கியிருந்தனர். ஆனால் அவள் காதலன் கெஞ்சியே என்பதற்கான தெளிவுகள் எதுவும் அவர்களுக்குக் கிட்டவில்லை. எனினும் அவர்களில் பலர் அவனை அடையாளம் கண்டு கொண்டதாகக் கருதினர். அவர்களிடையே அவன் பெயர் இரகசியமாகக் காதுக்குக் காது ஓதப்பட்டு வந்தது. கோரெமிட்சு இந்த இரகசியத்தை அறிந்திருக்க வேண்டும் என்றும் கருதப்பட்டது. ஆனால் யுகாவின் காதலனைப் பற்றியே தனக்கு எதுவும் தெரியாதென்று அவன் கை விரித்து விட்டான். இது பற்றிய அவர்கள் கேள்விகளை யெல்லாம் உதறித் தள்ளவும் அவனுக்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிட்டிற்று. தன்னளவில் முன்போல இன்றும் அந்த மனைக்குப் போய் வந்து கொண்டேயிருந்தான். அவன் அக்கறை கொண்ட செய்தி மனைத்தலைவி பற்றியதன்று என்று இது எல்லாரையும் நம்பவைத்தது. அது பற்றி அவனுக்கு எதுவும் தெரிந்திராததும் இயல்பே என்றும் கருத இடம் தந்தது. அவர்கள் ஐயப்பாட்டை வேறு திசைக்குத் திருப்புதல் இப்போது எளிதாயிற்று. அணங்கின் காதலன் சூரியோ குடிப்புதல்வனான ஏதோ ஒரு இளங்குறும்பனாகவே இருத்தல் கூடும் என்று அவர்கள் எண்ணினர். தோநோ சூஜோவின் தலையீட்டுக்கு அஞ்சி அவன் அவளைத் தன் மாகாணத்துக்கே இட்டுச் சென்றிருக்கலாம் என்றும் அவர்கள் எண்ணினர். மனையின் உண்மை உரிமையாளர் யுகாவின் இரண்டாவது செவிலித்தாயே யாவாள். அவளுக்குச் சொந்தமான புதல்வர் மூவர். உகான் அவர்களுடன் உடன் பிறப்புப் போல இணைந்தே வளர்ந்தாள். அவள் உண்மையில் தம் உடன் பிறந்தாளாய் இருந்திருந்தால் தன்னையும் தன் தலைவியையும் பற்றித் தமக்குக் கட்டாயம் எழுதியிருப்பாள்; உடன் பிறந்தவளல்ல வாதலால் தான் எழுதவில்லை என்று அவர்கள் நினைத்து உளங்கு முறினார்கள். இது அவர்களுக்கு மிகவும் நெஞ்சுறுத்தலாகவும் இருந்தது. தலைவியின் குழந்தை பற்றிய செய்தி அறிவதற்குக்கூட உகான் அந்த இல்லத்துக்குள் செல்லத் துணியவில்லை. போனால் பல கேள்விகள் சோனாமாரியாகக் கேட்கப்படும் என்று அவளுக்குத் தெரியும். கெஞ்சிக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறாமல் அவற்றுக்குப் பதில் சொல்ல முடியாது. குழந்தை எங்கோ வளரும்படி அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அது பற்றிய நினைவு அவளுக்கு முற்றிலும் மறைந்து போனது பற்றி அவள் வருந்தினாள். கனவில் ஒரு தடவையேனும் அணங்கின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்று கெஞ்சி பெரிதும் ஏக்கமுற்றான். ஆனால் ஹியே மலையில் நடந்த விழாவடுத்து இரவில் அவன் கண்ட காட்சி அவன் கோரிய காட்சிக்கு நேர்எதிரான இயல்புடைய தாயிருந்தது. அச்சுறுத்தும் நிலையில் முன்னாள் இரவில் காணப்பட்ட பரிதாபத்துக்குரிய அதே பயங்கர அணங்கின் உருவம் அன்றும் தோற்ற மளித்தது. அந்த இல்லத்தை ஆட்கொண்ட ஏதோ ஒரு பூதம் அந்தப் பயங்கர முடிவுக்குக் காரணமாயிருந்து, அது முதல் தன்னுள்ளும் புகுந்திருக்குமோ என்றெண்ணி அவன் கலங்கினான். இயோ நோ சுகே இறையிலா மாதத் தொடக்கத்தில் புறப்பட இருந்தான். மனைவியையும் உடன் கொண்டு போவதாக அவன் தெரிவித்தான். கெஞ்சி பிரிவுகாலப் பரிசுகளாகப் பல நல்ல பொருள்களை அனுப்பினான். அவற்றுள் தனிக்குறிப்பு உட்கொண்ட மிக நேர்த்தியான சீப்புகளையும் சேர்த்திருந்தான். பயணத் தெய்வத்துக்குக் காணிக்கை யளிக்கும்படி பல பட்டாடைகளும் இருந்தன. இவை மட்டுமன்று. உத்சுசேமி முன்பு நழுவ விட்டிருந்த கைச் சதுக்கத்தையும் அவன் அனுப்பி விட்டான். அதனுடன் ஒரு பாடலை அவன் இணைத்திருந்தான். சந்திக்கும் ஆர்வ நம்பிக்கை இருந்த அளவும் தான் அதை அவள் நினைவூட்டாக வைத்திருந்ததாகவும், வீணேவடித்த கண்ணீரால் நனைத்த பின் அதைத் திருப்பி அனுப்புவதாகவும் அதில் குறித்திருந்தான். பாடலுடன் நெடு நீளமான ஒரு கடிதமும் இருந்தது. ஆனால் அது இங்கே தரப்படவில்லை, அந்த அளவுக்கு அதில் எத்தகைய முக்கியத்துவமும் கிடையாது. பரிசுகளைக் கொண்டு வந்த மனிதனிடம் அவள் எத்தகைய விடையும் அனுப்ப வில்லை. ஆனால் தன் தம்பி மூலம் அவள் ஒரு பாடலை அனுப்பினாள். ‘மாறுபடும் பொன்சிறைத் தும்பிக்கு நீங்கள் வீறுபடும் வேனிலுடை மீட்டளிக்கும் வகையால் வேறு படுவீர் அல்லீர் மாறு படல் கண்டே ஊறுபடும் வேதனையால், சிற்றுயிரென் உள்ளம்!’ நீண்ட காலம் அவளைப்பற்றி அவன் எண்ணி எண்ணி நொந்தான். இறுதி வரை புரிந்து கொள்ள முடியாத விசித்திர உறுதியுடன் அவள் உள்ளத்தை அவனுக்கெதிராக எஃகாக்கிக் கொண்டிருந்தாள். இருந்த போதிலும் இனி மீளாத நிலையில் அவள் அகன்று விட்டாள் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் எழுந்தோறும், அவள் நெஞ்சம் மகிழ்ச்சி யிழந்து மறுகிற்று. பத்தாவது மாதம் முதல்நாள் அணுகிற்று. குளிர் காலம் தொடங்கி விட்டதென்பதைக் காட்டும் அறிகுறிபோல, கடுமழை பெய்தது. நாள் முழுதும் கெஞ்சி புயலார்ந்த வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆ, இலையுதிர்காலம் ஏற்கெனவே பயங்கரமான முறையில் ஒரு பேரிழப்பை உண்டு பண்ணி விட்டது. இப்போது குளிர் காலமும் அவனால் அருமையாக நேசிக்கப்பட்ட ஓருயிரை அவனிடமிருந்து பிரித்தது. ‘இருவழியும் சென்று கண்டே இடர்ப்பட்ட வழிப்போக்கன் ஒருவழியும் காணாது உழலுதல் போல் யானுமிங்கே இருபருவ இடர் கண்டு தேறாது திகைக்கின்றேன்’ தான் ஈடுபட்ட இரகசியக் காதல் விளையாட்டுகளால் மாளாத் துயரல்லாமல் வேறு எதுவும் விளையாதென்ற உண்மையைக் கெஞ்சி இப்போதாவது தெள்ளத் தெளியக் கண்டிருக்கக்கூடும்!. உலகின் பார்வையிலிருந்து கெஞ்சி மறைத்துவிட எண்ணிய செய்திகளையே நுணுக்கவிரிவுபட முழுவதும் விளக்கியுரைக்க உண்மையில் எமக்கு விருப்பமே யில்லை. ஆயினும் அவற்றுள் எதையேனும் யாம் கூறாது விட்டுவிடுவோமானால், வாசகராகிய நீங்கள் உடனே ‘ஏன், எதனால்?’ என்று கேட்டுவிடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். கெஞ்சி ஒரு சக்கரவர்த்தியின் திருமகன் என்பதற்காக, அவன் தவறுகளையெல்லாம் கத்தரித்து விட்டு அவன் நடத்தைக்கு ஒரு முலாம் பூச வேண்டுமா?’ என்ற கேள்வி எழாமல் இராது, இது மட்டுமோ? இது ஒரு வரலாறல்ல; பின்சந்ததியாரின் பகுத்தறிவு கூறவேண்டிய தீர்ப்பை மெல்லத் திரித்து உருவாக்குவதற்கென்று இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதை யென்றுகூடக் கூறிவிடுவார்கள். இதனால்தான் ஒரே வதந்திக் கோவையாக வம்பளப்பவர் என்று கருதப்பட்டால்கூடக் கேடில்லை என்று எண்ணி, எல்லாம் பட்டவர்த்தனமாகத் துணிந்து கூறிவிட்டோம்! 5. முரசாக்கி கெஞ்சி வெப்பு வலிக்கு ஆளாகிப் பெரிதும் அழன்றான். எத்தனையோ மருந்துகள், மாய மந்திரங்களின் துணைநாடியும் ஒரு சிறிதும் பயன் காணவில்லை.அச்சமயம் யாரோ சிலர் வடமலைத் தொடர்களின் பக்கம் இருந்த ஒரு துறவுப் பெரியார் பற்றிக் கூறினர். ‘சென்ற ஆண்டு இந்நோய் எங்கும் வீசியடித்த சமயம் வழக்கமான மருந்துமாயங்களால் பயன் ஏற்படாமல் மக்கள் பரிதவித்தனர். இப்பெரியார் அத்தகையோரில் மிகப் பலருக்கும் குறிப்பிடத்தக்க நலம் உண்டுபண்ணி உதவினார். ‘அவரை வரவழைத்துக் கலந்து கொள்வதில் ஒரு சிறிதும் நாட் கடத்தவேண்டாம். ஏனெனில் நீங்கள் பயனற்ற இந்த மருந்துகளை ஒன்றன்பின் ஒன்றாய் வழங்கிக் கொண்டிருக்கும் சமயமெல்லாம், நோய் ஒன்றுக்கு பத்தாகப்பெருகிக் கொண்டே போகும்’ என்றார்கள் அவர்கள். பெரியவரைச் சந்தித்து அழைத்துவர ஒரு தூதன் உடனடியாக அனுப்பப்பட்டான். ஆனால் ‘முதுமையின் கடுந்தளர்ச்சி காரணமாக எங்கும் வெளியே வரமுடியாதவனா யிருக்கிறேன்’ என்று அவர் மறுமொழி அனுப்பினார். ‘இனி என்ன செய்வது? நான் தான் இரகசியமாக அவரைச் சென்று காண்டல் நலம்’ என்று கெஞ்சி கூறினான். நம்பகமான நாலைந்து பணியாட்களுடன் விடியுமுன் எழுந்து புறப்பட்டான். அவர் வாழ்விடம் மலைகளிடையே சிறிது உட்பகுதியிலே இருந்தது. அப்போது மூன்றாம் மாதத்தின் கடைசி நாள், தலைநகரில் பூக்கள் யாவும் உதிர்ந்துவிடும் காலம் அது. ஆனால் இங்கே மலங்காந்தள் இன்னும் உதிர் பருவமெய்தவில்லை. திறந்த உயர்வெளிகளை அணுகுந்தோறும், மூடுபனி பலவகை அழகிய உருவங்களை மேற்கொண்டு அசைந்தியங்கிற்று. ஆசார அனுட்டானங்களால்கூட கட்டுண்ட இளவரசனுக்கு, அவற்றின் தங்குதடையற்ற வடிவுருவங்களைக் காண மிகவும் உவகை ஏற்பட்டது. ஏனெனில் இத்தகைய காட்சிகளை அவன் கண்டதில்லை. கோவில்களின் சிற்ப அமைதியிலும் அவன் ஈடுபட்டு மகிழ்ந்தான். உயர்ந்த மதில்போன்ற பாறையில் குடைந்து எடுக்கப்பட்ட ஒரு குகையிலேயே துறவி வாழ்ந்து வந்தார். கெஞ்சி தன் பெயரைக் குறிப்பிட்டனுப்பவில்லை, அத்துடன் அவன் பெரிதும் உருமாற்றிக் கொண்டும் இருந்தான். ஆயினும் அவன் முகம் எல்லாரும் நன்கறிந்த ஒன்றாயிருந்ததால் துறவி கண்டவுடனே அவனை அடையாளமறிந்து கொண்டார். ‘மன்னிக்கவேண்டும், ஐயனே! இரண்டொரு நாட்களுக்கு முன் என்னைக் கூப்பிட்டனுப்பியது தாங்கள்தான் என்று நினைக்கிறேன், அல்லவா? அந்தோ நான் இவ்வுலக நினைவுகளை விடுத்து நாட்கள் பல ஆய்விட்டன. என் பண்டுவ முறைகள்கூட மறந்து விட்டனவோ என்று அஞ்சுகிறேன். இவ்வளவு தூரம் வந்துவிட்டீர்களே என்று நான் மிகவும் வருந்துகிறேன்’ என்றார். உண்மையிலேயே குழப்பமடைபவர்போல அவர் கெஞ்சியை நோக்கியவாறு நகைத்தார். ஆனால் அவர் பக்தி எவ்வளவு உயர்ந்ததோ, அவ்வளவு அவர் அறிவு ஆழமானது என்பது விரைவிலேயே தெரியவந்தது. அவர் சில சக்கரங்கள் வரைந்து தாயித்துக்கள் பூணுவித்தார். சில மந்திரவாசகங்களை உச்சரித்தார். இதற்குள் கதிரவன் ஒளிபடர்ந்துவிட்டது. கெஞ்சி குகைக்கு வெளியே சென்று தன்னைச் சுற்றி நோக்கினான். அவன் நின்ற மேட்டிலிருந்து சிதறிக்கிடந்த எத்தனையோ துறவிகளின் திருமனைகளைக் காண முடிந்தது. வளைந்து வளைந்து செல்லும் ஒரு தடம் சற்றுத் தொலைவிலுள்ள வேறொரு குடிசை நோக்கிச் சென்றது. மற்றத் திருமனைகளைப் போலவே அதுவும் புத்தர்களால் கட்டப்பட்டிருந்தாலும், மற்றவற்றைவிட இடஅகலமாக அது திட்டமிட்டு அமைக்கப் பட்டிருந்தது. அதைச் சுற்றி மேற்கூரை வேய்ந்த ஓர் இன்பச் சாலையும், அதனையடுத்து நன்கு கத்தரித்துப் பேணப்பட்ட மலர்ப் பாத்திகளும் இருந்தன. ‘இது யார் மனை?’ என்று கெஞ்சி கேட்டான். மடத்துத் தலைவர் ஒருவர் அதில் இரண்டாண்டுகளாக வாழ்ந்து வந்ததாகக் கெஞ்சியின் ஆட்களில் ஒருவன் தெரிவித்தான். ஆனால் மடத்துத் தலைவர் பெயர் கூறியதும், கெஞ்சி வியப்புத் தெரிவித்தான். ‘ஆ, அவரை நான் நன்கு அறிவேன்’ என்றான். இந்த உடையுடனும் இத்தனை துணைவருடனும் நான் அங்கே செல்லமுடியாது. அவர் காது கொடுத்துக் கேட்க மாட்டாரென்றே அவன் பேசிமுடிப்பதற்குள் சிங்காரமாக ஆடையணிந்த சிறுவர் சிறுமியர் சிலர் வீட்டிலிருந்து வெளிவந்தனர். படிமங்களுக்கும் வழிபாட்டு மேடைகளுக்கும் உரிய மலர்களை அவர்கள் சென்று கொய்தனர். ‘அவர்களிடையே பெண்கள்கூட இருக்கிறார்களே! திருத்தந்தை பெண்களை வளர்க்க எண்ணுவார் என்று கூறுவதற்கில்லை. அவர்கள் யாராயிருக்கக்கூடும்?’ என்றான் கெஞ்சி. அவன் பணியாட்களில் ஒருவன் இதையறியக் குன்றுமேட்டில் இறங்கிச் சிறிது தூரம் சென்று அருகிலிருந்து பார்த்து வந்தான். ‘ஆம், அவர்களில் மிக அழகான பெண்கள் பலர் இருக்கிறார்கள். சிலர் குழந்தைகள், சிலர் வளர்ந்தவர்கள்’ என்று திரும்பியதும் தெரிவித்தான். காலையின் பெரும்பகுதியையும் கெஞ்சி தன் உடல் நலம்பேணுவதில் கழித்தான். இதற்கான நடைமுறைகள் முடிவுற்றபின், வெப்புவலி வழக்கமாக வரும் நேரத்துக்கு அஞ்சி, அதிலிருந்து மனம் திருப்பும் வகையில் நண்பர்கள் கெஞ்சியைக் குன்றுமேடு கடந்து சிறிது தொலை இட்டுச் சென்று வந்தனர். அங்கே மலையின் ஒரு பகுதியிலிருந்து கீழே தலைநகரின் தோற்றத்தைத் தெளிவாகக் காண முடிந்தது. அக்காட்சி கண்டு கெஞ்சி வியப்பும் களிப்பும் அடைந்தான். ‘ஆகா, என்ன அழகுச் சித்திரம்? மங்கலான தூரப் பார்வையில் நாற்புறமும் நெடுந்தொலை சூழ்ந்திருக்கும் காடுகளின் பளபளப்புடன் கலந்து நகரம் எவ்வளவு இரமணீயமாயிருக்கிறது? இத்தகைய இடத்தில் வாழ்பவர்களை ஒருகணம்கூடத் துன்பத்தின் நிழல் அணுகமுடியாது!’ என்றான். கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் இப்புகழ்மேல் புகழ் அடுக்கினான். ‘இது பெரியதன்று. மற்ற மாகாணங்களிலுள்ள மலைகளையும் ஏரிகளையும் மட்டும் நீங்கள் சென்று காண முடிந்தால், இங்கே நீங்கள் பாராட்டுவதை விடப் பன்மடங்காக அவற்றைப் பாராட்ட வேண்டி வரும்’ என்றான். முதலில் அவன் ஃவூஜி மலைபோன்ற பலகாட்சிகளைப் பற்றிக்கூறிப் பின் மேற்குப் பகுதியிலுள்ள இனிய கடற்கரைகள், அழகிய வளைகுடாக்கள், விரிகுடாக்கள் ஆகியவற்றைப் பற்றி வருணித்தான். இந்த வருணனைகளிடையே வெப்புவலிக்குரிய நேரம் வந்து சென்றுவிட்டதைக்கூடக் கெஞ்சி உணரவில்லை. வருணித்த அன்பன் மேலும் தொடர்ந்து வருணித்துக் கொண்டே சென்றான். ‘அதோ நம் அருகாமையில் தெரிவது ஹரிமாவிலுள்ள அகாஷி விரிகுடா ஆகும். அதை நன்கு குறித்து நோக்குங்கள். பார்வைக்கு அது அவ்வளவு ஓய்ந்தொதுங்கிய இடமல்லதான். ஆயினும் அங்கே சென்றுவிட்டால் நீங்கள் ஒரே நீர்ப்பரப்பின் எல்லையற்ற பாழ் தவிர வேறு எதுவும் காணமாட்டீர்கள். அங்கு நீங்கள் உணரும் தனிமை புதுமையையுடையது, விசித்திரமானது.’ ‘இந்த இடத்தில்தான் முன்பு மாகாண ஆட்சி முதல்வராயிருந்த ஒரு புறநிலைப் புரோகிதரின் மகள் வாழ்கிறாள். மட்டுமீறிய அகல்விரிவும், எதிர்பாராத ஒய்யாரப் பகட்டும் உடைய ஒரு மாளிகையில் அவள் தனித்துத் தலைவியாயிருந்து வருகிறாள். மாளிகைக்கு உரியவர் ஒரு முதலமைச்சர் குடிமரபில் வந்தவர். உலகில் மிக உயர்ந்த உச்சப் பதவி வகிப்பார் என்று எதிர்பார்க்கப் பட்டவர். ஆயினும் அவர் ஒரு தனிப் பண்புடையவர், சமுதாயத்துடன் எளிதில் பழகாதவர். ஆகவே அவர் சிறிது காலம் அரண்மனைக் கடற்படையில் ஒரு பணியாளராய் இருந்தபின் ஹரிமா மாகாணத் தலைமை யேற்று அங்கேயே சென்றார். ஆனால் இங்கும் அவர் மாகாண மக்களுடன் மோதிக் கொண்டார் மக்கள் தம்மை மோசமாக நடத்தியதனால் தலைநகருக்கே திரும்பிவிடப் போவதாக அறிவித்தார். ஆனால் அவர் போனது தலை நகரத்துக்கல்ல; உலகவாழ்விலிருந்தே ஒதுங்கி அவர் தலையை மொட்டை யடித்துப் புரோகிதரானார். வழக்கமாகத் திருக்குடில் அமைப்பவர்களைப் போல அவர் ஒதுங்கிய மலைப் பகுதியை நாடாமல், கடற்கரையையே தேர்ந்தெடுத்தார். இது உங்களுக்கு முதலில் முற்றிலும் பொருத்தமற்ற புதுமையாகத் தோற்றலாம். ஆனால் அம்மாகாணத்தில் மலைப் பகுதி மற்ற இடத்து மலைப் பகுதிகளைக் காட்டிலும் கிளர்ச்சியற்றதாகவும் தன்னந்தனி மையாகவும் உள்ளது. மிகப் பல துறவிகள் இங்கே மலையை நாடாமல் வேறு ஏதாவது இடங்களிலேயே தங்கள் இருப்பிடங் களை அமைக்கின்றனர். ஆட்சி துறந்த புரோகிதச் செல்வர் இந்த இரண்டு தன்மைகளுக்கும் இடைநிலைப்பட்ட சமரச இடமாகவே கடற்கரையைத் தேர்ந்தெடுத்திருந்தார். ‘ஒரு தடவை நான் ஹரிமா மாகாணத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது அவர் திருமனையைக் காணும் சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்திக் கொண்டேன். எதிர்பாராத முறையில், நகரத்தில் மிக எளிய வாழ்வு வாழ்ந்த அவர் இங்கே மிக ஒய்யாரமான, பகட்டாரவாரமான முறையில் பெரிய மாளிகை கட்டி வாழ்ந்தது கண்டேன். மாகாண ஆட்சிப் பொறுப்பின் தொல்லைகளிலிருந்து இவ்வாறு விடுபட்ட நிலையில், அவர் தம் முன்னைய எளிமைக்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து இப்போது ஆரவார வாழ்வின் இன்பம் நுகரக் கருதினார் என்றே தோற்றிற்று. இவ்வளவு ஆரவாரச் சூழல்களுக்கிடையிலும் அவர் வரப்போகும் உலகுக்குத் தம்மைச் சித்தம் செய்வதில் குறை வைக்கவில்லை. ஏனெனில் அவர் வாழ்வு மிகவும் கடுமையாகவும் சமயக் கண்டிப்புமிக்க தாகவும் இருந்தது.’ ‘அவர் மகளைப் பற்றியல்லவா பேச்சுத் தொடங் கினீர்கள்!’ என்று கெஞ்சி நினைவூட்டினான். அவன் மேலும் தொடர்ந்தான். ‘அவள் மட்டான இனிய தோற்றமுடையவள். அவள் அறிவும் புறக்கணிக்கத் தக்கதன்று. மாகாணத்தின் பல ஆட்சி முதல்வர்களும் பணி முதல்வர்களும் அவள் மீது விருப்புற்று அவளை மணஞ் செய்து கொள்ள வேண்டினர். ஆனால் அவள் தந்தை அவர்கள் அனைவரையுமே மறுத்தனுப்பிவிட்டார். தம்மளவில் அவர் உலகப்புகழ் ஆரவாரத்தை விரும்பவில்லை யானாலும், தம் அன்பு முழுமைக்குமுரிய இந்த ஒரே குழந்தைக்குத் தம் எளிமையை மங்க வைத்துவிடும் பெருமை யையே நாடினாரென்று தோற்றுகிறது. இது காரணமாக, அவள் என்றேனும் தம் விருப்பத்துக்கு மாறாக வரன் தேர்ந்தெடுத்தால் அல்லது தாம் மாண்டபின் தம் விருப்பத்தை அவமதித்துத் தன் கட்டளைக்கும் நோக்கத்துக்கும் மாறாக அவளது சிறு விருப்புக் கிணங்க நடக்க நேர்ந்தால், தம் ஆவியே எழுந்து வந்து அவளைக் கடலுள் ஆழ்த்திவிடும் என்று கூறியிருக்கிறாராம்!’ கெஞ்சி இக்கதையை மிகுந்த அக்கறையுடன் கேட்டான். பின் அது பற்றிச் சிரித்து நகையாடினான் ‘அப்படியானால் அந்த அணங்கு எப்போதும் கன்னியாகவே இருக்க வேண்டியதுதான். பூத வடிவினனாகிய கடலிறைவனைத் தவிர வேறு கணவனைப் பெற வழியிராது’ என்று முன்னாள் ஆட்சி முதல்வரின் விசித்திர ஆவலை எண்ணிச் சிரித்தான். இக்கதை கூறியவன் அச்சமயத்தில் ஹரிமா மாகாணத்தின் ஆட்சி முதல்வன் புதல்வனே. அவன் அரண்மனைக் கருவூலத்தில் ஒரு கணக்காயனாயிருந்து, சென்ற ஆண்டு தான் ஐந்தாம்படி நிலைக்குரிய பணி முதல்வனாகும் பேறு பெற்றிருந்தான். அவன் காதல் வேட்டைகள் வகையில் பேர் பெற்றவன். அவ்வளவு தொலை வழக்க மீறி அவன் அகாஷிக் கடற்கரைக்குச் சென்றதே தந்தையின் தடையை மீறும்படி அந்த அணங்கை வற்புறுத்தும் முயற்சிக்காகத்தான் என்றும் மற்றவர்கள் அடிக்கடி ஒருவருக்கொருவர் குசுகுசு வென்று பேசிக் கொண்டார்கள். அங்கிருந்த ஒருவன் அணங்கு பற்றிய தன் கருத்தைக் கூறினான். ‘அவள் பயிற்சிப் பண்பு நாட்டுப் புறப் பாங்காகவே பெரிதும் இருக்கக்கூடும். அவள் தாய் ஓரளவு சிறப்புடையவளா யிருந்ததாகத் தான் தோற்றுகிறது. ஆயினும் பழமைப்பட்ட பெற்றோர் ஆதரவில் வேறு நல்ல கூட்டுறவில்லாத நிலையில் அது வேறு எப்படி அமைய முடியும்?’ என்றான் அவன். ஆட்சி முதல்வன் புதல்வனாகிய யோஷிகியோ இதை ஒத்துக்கொள்ளவில்லை. ‘நீங்கள் கூறும் தத்துவம் சரியே. ஆனால் இதை அறிந்தவள் தான் அவள் தாய். அறிந்து தலை நகரத்தின் மிகச் சிறந்த குடும்பங்களிலுள்ள சிறுவர் சிறுமியர் களை அவ்வப்போது கடற்கரைக்கு வருகை தரும்படி அழைத்து, அவர்கள் மூலம் தன் சிறுமிக்குச் சரியான விளையாட்டுத் தோழமை கிடைக்கும்படி ஏற்பாடு செய்திருந்தாள். இவ் வகையாகச் சிறுமிக்கு மிக உயர்ந்த பண்பும் பயிர்ப்பும் கிட்டின’ என்றான். மற்றொருவன் இப்போது தலையிட்டுத் தன் கருத்து உரைத்தான். ‘பண்பறியாத எவரேனும் அப்பக்கம் சென்று அவளைக் கண்டால், தந்தையின் பழிக்குக்கூட அஞ்சாமல் அவள் கவர்ச்சியில் எளிதாகச் சிக்கிவிடக்கூடும் என்று எண்ணுகிறேன்’ என்றான் அவன். கெஞ்சியின் கற்பனை உள்ளத்தில் இந்தக் கதை தன் ஆழ் தடம் பதித்தது. மனித வாழ்விலும் சரி, நிகழ்ச்சிகளிலும் சரி எங்கெல்லாம் பொதுநிலை மீறிய புதுமை காணப்படுகிறதோ, அங்கெல்லாம் அவனுக்குக் கவர்ச்சி பெரிதாவது இயல்பு. இதை அவன் துணைவர் பலரும் நன்கறிந்திருந்தனர். ஆகவே அணங்கின் செய்தியை அவன் ஆர்வத்துடன் கேட்டது அவர்களுக்கு வியப்பளிக்கவில்லை. அவர்களில் ஒருவன் இப்போது வாய் திறந்தான். ‘நண்பகல் கழிந்து நெடுநேரம் ஆய்விட்டது. வழக்கமான உங்கள் வெப்பு வலி இன்று முழுவதும் வராது என்று நாம் திட்டமாகக் கொள்ளலாம். ஆகவே இப்போது நம் உறைவிடம் செல்வோம்’ என்றான் அவன். ஆனால் துறவி அவர்களைத் தடுத்து இன்னும் சிறிது தங்கியிருந்து செல்லும்படி வேண்டினார். ‘நோயின் தீய தடங்கள் இன்னும் முற்றிலும் அகன்றுவிடவில்லை. இரவிலும் மெல்ல வினைமுறைகள் நீடிப்பது நலம் தரும். ஆகவே நாளை காலையில் நீங்கள் உங்கள் மனை செல்லலாம்’ என்றார். கெஞ்சியின் துணைவர்களும் அவனைத் தங்கிச் செல்லும் படி வற்புறுத்தினார்கள். அவனுக்கும் இது வெப்பாயில்லை. ஏனெனில் அவ்விடத்தின் புதுமை அவனை முற்றிலும் கவர்ந்திருந்தது. ‘சரி, நாளைக்கே’ என்று அவன் ஏற்றான். ஆனால் இரவில் உறங்கும் நேரம்வரை இன்னும் எவ்வளவோ சமயம் இருந்தது. அதுவரை வேலை எதுவும் இல்லாததனால் அவன் மலைச்சாரலில் உலவச் சென்றான். மாலை மூடுபனி அடர்த்தியாயிருந்தது. அதன் மறைவில் புதர்வேலிக் கருகாகவே அவன் நடமாடினான். அவன் துணைவர்களில் மற்ற யாவரும் துறவியின் குகைக்குத் திரும்பி விட்டனர். கோரெமிட்சு மட்டும் அவனுடன் இருந்தான். மேற்குச் சிறையில் அவன் நின்ற பக்கம் ஒரு துறவுமாது வழிபாட்டில் ஆழ்ந்திருந்தாள். திரை பாதி திறந்திருந்தது. அதன் வழியாகத் துறவுமாறு ஒரு படிமத்தின் மீது மலர்கள் அருச்சித்து வந்தாளென்று தெரியவந்தது. அவளருகே நடுத் தூணில் சார்ந்து அருகிலுள்ள ஒரு கோக்காலி மீது ஒரு சூத்திரப் புத்தகத்துடன் இன்னொரு துறவு நங்கை உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் உரக்க வாசித்துக் கொண்டிருந்தாள். முகத்தில் எல்லையற்ற சோகம் படர்ந்திருந்தது. அவளுக்கு வயது நாற்பது இருக்கும் என்று தோற்றிற்று. அவள் பொதுநிலை மக்களில் ஒருத்தியல்லள் என்பதை அவள் தோற்றம் நன்கு எடுத்துக் காட்டிற்று. அவள் மேனி வெண்மையும் மென்மையும் வாய்ந்ததாயிருந்தது. மிகமெலிந்தாலும் அவள் கன்னங்களில் இன்னும் உருட்சியும் திரட்சியும் கெடாதிருந்தன. அவள் தலைமுடி கண்களின் மட்டத்துக்கு மிகவும் கட்டையாகத் தறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிலையிலும் அதன் அருகுகள் நுண்ணயமும் மென்மையும் உடையவையாய் இருந்தன. துறவு வேடத்துக்குரிய இந்த நிலையில் கூடக் கத்தரிக்கப்படாத முழுநீளக் கூந்தலையிட இந்தக் கத்தரித்த முடியே அவள் நாகரிகப் பண்பையும் புதுமைப் பாணியையும் நன்றாக எடுத்துக் காட்டிற்று. அவளைப் போலவே நல்ல நிலையிலுள்ள இரண்டு பணிப் பெண்கள் அவளிடம் சேவை செய்தனர். அவள் இருந்த அறையிலிருந்து வெளியிலும், வெளியிலிருந்து அறைக்குள்ளும் பல சிறு பெண்கள் சென்று ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடையே பத்து வயதுடைய சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் அறைக்குள் ஓடி வந்தாள். அச்சமயம் அவள் உள்ளே கெட்டிப் பொன்னிறமான விளிம்புடைய ஒரு வெள்ளை ஆடை அணிந்திருந்தாள். அவளை ஒத்த அழகுப் பிழம்பான ஒரு சிறுமியைத் தான் எங்குமே கண்டதில்லை. என்று கெஞ்சி நினைத்தான். வளர்ந்தால் அவள் எவ்வளவு பேரழகுடையவளாய்த் திகழ மாட்டாள்! அலையலையாகத் திரண்டு சுருண்ட அவள் முடிகள் விசிறிபோல அவள் தலையைச் சுற்றிலும் புரண்டாடின. அவள் முகம் கன்னிச் சிவந்திருந்தது. அவள் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. அதைக்கண்டு, ‘என்னம்மா இது? வேறு எந்தச் சிறுமியுடனாவது சச்சரவிட்டுக் கொண்டாயா?’ என்று துறவு நங்கை கேட்டாள். பேசிய சமயம் துறவு நங்கை தலை உயர்த்தினாள். அவள் முகத்துக்கும் சிறுமி முகத்துக்கும் பெரிதும் ஒற்றுமை இருந்தது என்று கெஞ்சி கருதினான். ‘ஆம், அவள் சிறுமியின் தாயாகவே இருக்கக் கூடுமென்று அவன் தனக்குள் கூறிக் கொண்டான். இதற்குள் சிறுமியின் குரல் கேட்டது. ‘ இனு என் சிட்டுக் குருவியை எடுத்து வெளியே விட்டுவிட்டான் - குருவிக் கூடையில் வைத்து நான் வளர்த்த சிட்டுத் தான் அது’ என்று சொல்லிவிட்டு அவள் மீண்டும் அறைக்கு வெளியே சென்று விட்டாள். பணிப் பெண்களில் ஒருத்தி இது பற்றி இனுவைக் கடிந்து கொண்டாள். ‘என்ன குறும்புகக்காரப்பயல் இந்த இனு! இம்மாதிரிப் போக்கிரித் தனத்துக்கு அவனைச் சரியானபடி கண்டிக்க வேண்டும்.’ சிட்டு இப்போது எங்கே போயிற்றோ? அதைப் பழக்கி வளர்ப்பதற்குத் தான் என்ன அரும்பாடு பட்டோம், எப்படியும் காகங்கள் அதை இரையாக்கி விடாமல் இருக்க வேண்டும்’ என்று கூறி அவள் அறைக்கு வெளியே சென்றாள். அவள் நீண்ட அலையலையான கூந்தலுடையவள். வசீகரமான தோற்றமுடையவள், செவிலி சோனகன் என்று அவளை யாவரும் அழைத்தார்கள். குழந்தை அவள் பொறுப்பில் விடப்பட்டிருந்ததாகத் தெரிந்தது. அவள் சிறுமியிடம் சென்று பேசினாள். ‘வாம்மா!’ நீ இன்னும் இப்படிச் சிறு குழந்தை போல் நடக்கப்படாது. சிறு சிறு காரியங்களிலேயே இன்னும் நீ உன் மனதை அலட்டிக் கொண்டிருக்கிறாய். இதோ பார்! என் உடம்பு சரியான நிலையில் இல்லை. எந்த நேரமும் உன்னை விட்டு நான் பிரிக்கப்பட்டு விடலாம். இந்த நிலையிலும் நீ என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. சிட்டுக் குருவியைப் பற்றித்தான் கவலைப்படுகிறாய். அத்துடன் அதனிடமும் நீ காட்டுவது அன்பல்ல. சிற்றுயிர்களைக் கூட்டில் அடைத்து வைப்பது எவ்வளவு பொல்லாச் செயல் என்று நான் எத்தனை தடவை சொல்லி யிருக்கிறேன்? அது கொடுமையல்லவா? சரி, வா இப்படி!’ என்றாள். சிறுமி அவள் அருகில் சென்று அமர்ந்தாள். அவள் முகத் தோற்றம் மிகவும் பொலிவுடையதாயிருந்தது. சிறப்பாக அவள் தலை முடி மேகத்திரள்போல் அடர்ந்து வளர்ந்து இரு கன்னங்களையும் வந்து மறைப்பவை போலப் புரண்டன. குழந்தை இயல்பு வழாது அதை அவள் ஓயாது பின்புறமாகத் தள்ளிக் கொண்டு வந்த நேர்த்தி கண் கொள்ளாக் கவர்ச்சி தந்தது. அவளையே கூர்ந்து கவனித்து, வளர்ந்த பின் அவள் எப்படி இருப்பாள் என்று கெஞ்சி தனக்குள் உருவகம் செய்து பார்க்க முயன்றான். அச்சமயம் அவனுக்குத் திடீரென்று ஓர் உண்மை புலப்பட்டது. தன் முழு உயிராற்றலுடனும்தான் நேசிக்கும் ஒருவருடன் - இளவரசி புஜித்சு போவுடன் - அவளுக்கிருந்த ஒப்புமை பெரிதாயிருந்தது. இதுகாண அவன் உள்ளூரக் கனிவுற்றுக் கண்கலங்கினான். துறவுநங்கை சிறுமியின் முடி கோதிக் கொண்டே மேலும் பேசினாள். ‘நல்ல அழகான தலைமுடி தான். ஆனால் நீ அதைக் கோதி முடிக்க விடாமல் அடம் பிடிக்கிறாய்! நீ இன்னும் பச்சைக் குழந்தைப் புத்தியுடன் இருப்பது பற்றித் தான் கவலையாயிருக்கிறது. உன் வயதிலுள்ள மற்றப் பிள்ளைகள் இப்படியா இருக்கிறார்கள்? உன் அருமை அம்மா அவள் தாய் இறக்கும்போது பன்னிரண்டு வயதாகத்தான் இருந்தாள். ஆனால் அந்த வயதிலேயே அவள் தன் காரியங்கள் எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொண்டாள். ஆனால் இந்தக் கணம் நான் போய்விட்டால், நீ எப்படி வாழப் போகிறாயோ, எனக்குத் தெரியாது’ என்று கூறி அவள் அழுதாள். தொலைவிலிருந்து இதைக் கேட்டிருந்த கெஞ்சிக்குக் கூடத் துயரம் பொங்கி எழுந்தது. குழந்தை மனப்பான்மையை ஒரு கணம் விட்டுவிட்டுச் சிறுமி துறவு நங்கையின் முகத்தைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தாள். அச்சமயம் அவள் தலை முடிகள் இரண்டு கரிய அலைத்திரள்கள் போல் இரண்டு கன்னங்களிலும் வந்து கவிந்தன. அவளை அன்புப் பாசத்துடன் கண் குளிரப் பார்த்துத் துறவு நங்கை ஒரு பாடலைப் பாடினாள். ‘இளந்தளிரைப் பேணுபவர் இனியாரோ என்றே உளங்கவன்று வானொளியில் கலவாமல் நின்றே துளங்குகின்ற பனித்துளி பாராய்! அதுவானேன் யான்!’ இப்பாடல் கேட்டு அருகிலிருந்த ஒரு பாங்கி பெருமூச்சு விட்டு அதற்கு எதிர் பாடல் பாடினாள். ‘துளங்குகின்ற பனித்துளியே!’ உளந் துவளல் வேண்டா இளந்தளிரின் முழு அழகும் வெளிப்படுமந் நன்னா ளளவும் அதுகடந்தும் உன்றன் வளங் குலவும் இனிதே!” இச்சமயம் திருமனைக்குரிய துறவி மறுதிசையிலிருந்து அறைக்குள் நுழைந்தார். ‘அம்மையீர், நீங்கள் இந்த அளவு மனைப்புறத்துக்கு வந்து தங்குவது சரியல்ல. பலகணிக்கு அருகாமையில் வந்துநிற்க இந்த நாளும் ஏற்றதன்று. அருகிலுள்ள துறவியிடம் வெப்புவலியைக் குணப்படுத்திக் கொள்ளும்படி கெஞ்சி இளவரசன் இங்கே வந்திருப்பதாக இப்போதுதான் கேள்விப்பட்டேன். அவர் மிகவும் எளிய தோற்றத்துடன் உருமாறி வந்திருப்பதனால்தான் நான் அவரை அறியாமல் போய் விட்டேன். அவர் இவ்வளவு அருகாமையில் வந்திருந்தும் அவரைச் சென்று காணமுடியாமல் போய்விட்டது’ என்றார். துறவுநங்கை இதுகேட்டுத் திடுக்கிட்டாள். ‘அந்தோ! என்ன அறியாத்தனம்! அவர் இவ்வழியாகச் சென்றிருந்தால் நம்மைப் பார்த்திருக்கக்கூட இயலுமே.!’ என்று கூறித் திரையை அவசர அவசரமாக மூடினாள். துறவி மேலும் தொடர்ந்தார். ‘கெஞ்சி இளவரசரைப் பற்றி நாம் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறோம். அவரைக்காண இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது பற்றி நான் மிகவும் மகிழ்கிறேன். அவர் அவ்வளவு பேரழகுவாய்ந்தவர் என்று கேள்வி. உலகவாழ்வின் பற்றுவிட்டுத் துறவுவாழ்க்கை மேற்கொண்டுள்ள என் போன்ற வயதுசென்ற துறவிகள்கூட அவ்வழகைப் பார்த்தபின் அதன்முன் உலகின் பழிபாவங் களையும் துயரங்களையும் ஒருசிறிது மறந்துவிட வழி ஏற்படும். இவ்வளவு அழகுக்கு உறைவிடமான இந்த உலகில் இன்னும் சிறிதுகாலம் இருக்கக்கூட எண்ணத் தோன்றும். ஆனால் இனி இதுபற்றி நீங்கள் அறிவீர்கள்’ என்றார். வயதுசென்ற அத்துறவி வெளிவருமுன் கெஞ்சி முதல் துறவியின் குகைநோக்கி விரைந்தான். அவன்கண்ட சிறுமியின் எழில்வடிவம் அவன் உள்ளத்தை நிறைத்தது. ‘எவ்வளவு கவர்ச்சிமிக்க சிறுமி!’ என்ன மாய அழகு! மழைநாளிரவில் நண்பர்கள் கூறியதில் ஒருசிறிதும் தவறில்லை - நாடுசுற்றிப் பயணம் செய்பவர்கள் எதிர்பாராத சமயங்களி லெல்லாம் எதிர்பாராத மூலை முடுக்குகளில் இத்தகைய பேரழகைக் காணக் கூடும். தற்செயலாக நான்வெளியே உலாவப் புறப்பட்டது எவ்வளவு நல்லதாயிற்று! இல்லாவிட்டால் இத்தகைய மாயப் புதையலைக் கண்டிருக்கமுடியுமா! இச்சிறுமி யாராய் இருக்கக்கூடும்? அவளை எப்போதும் அருகே வைத்துக் கொண்டால் - சோர்வில் கிளர்ச்சியும் துன்பத்தில் ஆறுதலும் தேவைப்படும் நேரமெல்லாம் முன்பு அரண்மனை மாதரசியின்பக்கம் திரும்பியதுபோல அவள்பக்கம் திரும்பும் வாய்ப்புப் பெற்றால்........? இவ்வாறு அவன் எண்ண அலைகள் எழுந்தெழுந்து ஓடின. துறவியின் குகைமனையில் கெஞ்சி படுத்துக் கொண்டிருந்தான். வயதுசென்ற இரண்டாம் துறவியின் மனை மிக அருகிலேயே இருந்தது. ஆகவே கெஞ்சி படுத்து ஒரு சிறிதுநேரம் கழிவதற்குள் அவர் சீடரின் குரல் அவன் செவிகளில் விழுந்தது. அவர் கோரெமிட்சுவிடம் வந்து பேசினார். ‘நீங்கள் இவ்வளவு அருகாமையில் வந்து தவமிருப்பது பற்றி என் தலைவர் கேள்விப்பட்டார். வழியிலேயே தம்மனைக்கு வருகை தரவில்லையே என்று அவர் வருத்தம் தெரிவிக்கிறார். அவராகவே இளவரசரை வந்து கண்டிருக்கக்கூடும். ஆனால் அவர் திருமனை அருகிலேயே உள்ளது என்பது இளவரசருக்குத் தெரியாமலிருக்க முடியாது. தன் பயண நோக்கத்தைத் தெரிவிக்க விரும்பாத ஒரே எண்ணத்தினாலேயே வரத் தயங்கியதாகவும் இருக்கக்கூடும். இதுவகையில் தங்கள் கருத்து அறியாத நிலையிலேயே, அவர் தங்களை அழைக்க இங்கே நேரே வரவில்லை. ஆயினும் தங்களிடம் இது தெரிவிக்கும்படி என் தலைவர் கட்டளையிட்டிருக்கிறார். எங்கள் மனை எளியதாயிருந் தாலும், தங்களுக்கு எங்களால் வைக்கோற் படுக்கையாவது அன்புடன் அளிக்க முடியும். எங்கள் மனைக்கு வருகை தராமலே நீங்கள் செல்வதாயிருந்தால், நாங்கள் மிகவும் வருத்த மடைவோம்’ என்றார் அவர். கெஞ்சி உள்ளிருந்தே மறுமொழிகூறி அனுப்பினான். ‘பத்து நாட்களாக நான் கொடிய வெப்புவலியால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறேன். அது திரும்பத் திரும்ப வருவதனால் நான் செய்வதறியாமல் திகைத்தேன். அச்சமயம் இம்மலையிலிருக்கும் துறவியிடம் வரும்படி யாரோ ஒருவர் அறிவுரை தந்தனர். நான் இங்கே வந்ததன் நோக்கம் இதுவே. ஆனால் ஒரு சாதாரண மாயாவியை நான் காணவந்திருந்தால், இவ்வளவு ஒளிவுமறைவு தேவைப்பட்டிராது. மலைத்துறவியின் புகழ் மிகப்பெரிது. என்போன்ற ஒருவர் அவரை அடுத்துக் குணம்பெற வில்லையானால், அப்புகழுக்கு அவப்பெயர் உண்டாகும். இதை எண்ணியே நான் இந்த மாற்றுருவில் வந்தேன். இந்த விளக்கம் கூறி என்னைத் துறவி மன்னிக்கும் படியும், குகைக்கு எழுந்தருளும்படி வேண்டுங்கள்’ என்றான். இவ்வாறு வேண்டிக் கொள்ளப்பட்டபின் முதிய துறவி வருகை தந்தார். அவர் மீது கெஞ்சிக்கு மதிப்புமட்டுமன்றி அச்சமும் இருந்தது. ஏனெனில் துறவியானாலும் அவர் ஒரு பெரிய மேதை அரசியல் உலகிலேயே அவர் பெருமதிப்புடையவர். ஆகவே உருமாற்றத்திற்காக மேற்கொண்ட அவல ஆடையுடன் அவரை வரவேற்க அவன் துணியவில்லை. தலைநகரை விட்டுத் தாம் ஒதுங்கிய மலைப்புறத்துக்கு வந்து துறவு மேற்கொண்டது வரையுள்ள தம் வாழ்க்கை விவரங்களை யெல்லாம் முதிய துறவி கெஞ்சியிடம் தெரிவித்தார். பின் தம்முடன் தம்மனைக்கு வந்து, தம் தோட்டத்திலுள்ள குளிர் நீருற்றைக் காணும்படி அழைத்தார். கெஞ்சி இணங்கினான். தன் கருத்தைக் கவர்ந்த பெண்டிரைக் காண இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கெஞ்சி எண்ணினான். அதே சமயம் முதியவர் அவர்களிடம் தன்னைப் பற்றி என்னென்ன கூறியிருப்பாரோ என்ற எண்ணம் அவனை ஒரு சிறிது தயங்கவைத்தது. ஆயினும் என்ன? என்ன வந்தாலும் அந்த அழகிளஞ் சிறுமியைக் கண்டுதானாக வேண்டுமென்று எண்ணியவனாய், அவன் துறவியைப் பின்தொடர்ந்தான். மலைப்பக்கங்களுக்கு இயல்பான செடி கொடிகள் தோட்டத்தில் நல்லமுறையில் அழகு படத் தொகுக்கப் பட்டிருந்தன. அன்றிரவு நிலவு இல்லை. ஆனால் நாற்புற அகழியின் இருமருங்கிலும் பந்தங்கள் ஒளிவீசின. தோட்டத்திலுள்ள மரங்களில் வானுலக விளக்குகள் போலத் தாளாலான ஒளிக்கூண்டுகள் தொங்கவிடப்பட்டிருந்தன முன்கூடம் மிக அழகுபட ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மறைவிடத்தில் வைத்துப் பேணப்பட்ட நறும் புகைக்கலங் களிலிருந்து மனையெங்கும் இனிய நன்மணம் கமழ்ந்தது. அந்நறும் புகைகள் வெளிநாட்டு மணப்பொருள்கள் கலந்தவை. கெஞ்சி இதற்குமுன் இதுபோன்ற மணம் நுகர்ந்ததில்லை. உள்ளறையிலிருந்த பெண்டிரின் அறிவுத்திறமும் கைத்திறங் களுமே இத்தகைய மாயக் கலவைகளை உருவாக்கியிருக்க வேண்டுமென்று அவன் நினைத்தான். வாழ்வின் நிலையாமை, வருகின்ற வாழ்வின் வினைப் பயன்கள் ஆகியவற்றை விளக்கும் பல கதைகளைத் துறவி எடுத்துக் கூறினார்.அது கேட்கும் சமயத்தில் கெஞ்சி தன் தீவினைகளின் பளுவை எண்ணி எண்ணி மன நைவுற்றான். தற்போதைய வாழ்விலே தன் மனச்சான்று தரும் தண்டனையே மிகப் பெரிதென்று அவன் எண்ணியிருந்தான். இப்போது வருங்காலத் தண்டனை வேறு உண்டு என்று கண்டான். என்ன பயங்கரம்!... துறவி பேசிக் கொண்டிருந்த சமயம் முழுவதும் அவன் தன் கொடுவினைகளையே எண்ணிக் கொண்டிருந்தான். இத்துறவியையே பின்பற்றி இதே இடத்தில் வந்து துறவு மேற்கொண்டு விட்டாலென்ன என்ற கருத்து இச்சமயம் அவன் உள்ளத்தில் மிதந்தது. ஆனால் மாலை நேரத்தில் கண்ட அழகுமுகம் நினைவுக்கு வந்தவுடனே இந்த எண்ணங்கள் மறைந்தன. அவளைப்பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அவன் அவனைப் பற்றித் தன் பேச்சைத் திருப்பினான். ‘பெரியீர், உங்களுடன் இங்கே யார் யார் வசிக்கிறார்கள்’ என்று அவன் தொடங்கினான். தன் ஆர்வத்துக்கும் அவன் ஓர் விளக்கம் கூறினான். ‘இவற்றை நான் அறிய விரும்புவதற்கு ஒரு காரணம் உண்டு. நான் கனவில் இவ்விடத்தை ஒரு தடவை கண்டிருக்கிறேன். அதையே திரும்பவும் நனவில் இங்கே வந்து கண்டபோது வியப்படைந்தேன்.’ என்றான். துறவி சிரித்தார். ‘உரையாடலிடையே உங்கள் கனவு திடீரென்று நினைவுக்கு வந்துவிட்டதுபோலும்! ஆயினும் இந்தக் கேள்வியில் நீங்கள் எதிர்பார்க்கிற நம்பிக்கை இல்லாது உவர்ப்பு ஏற்பட்டுவிடும் என்றே அஞ்சுகிறேன். அசேச்சி நோ தைநகன் என்பவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். அவர் இறந்து நெடுநாளாயிற்று. அவர் என் தங்கையை மணஞ்செய்து கொண்டார். அவர் மாள்வுக்குப்பின் என் தங்கை உலக வாழ்வின்மீது வெறுப்படைந்து அதைத் துறந்துவிட்டாள். அச்சமயம் எனக்கு ஏற்பட்டிருந்த சில சிக்கல்களால் நான் தலைநகர் செல்ல முடியவில்லை. ஆகவே அவள் என்னுடன் இந்த ஒதுங்கிய வாழ்வில் துணைபெற வந்து சேர்ந்தாள்.’ கெஞ்சி இப்போது இடையிட்டுக் கேள்விகேட்டான். ‘அசேச்சி நோ தைநகனுக்கு ஒரு புதல்வி இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது உண்மைதானா? இந்தக் கேள்வியைத் தவறான எந்த எண்ணத்துடனும் நான் கேட்பதாகக் கருதவேண்டாம். ஆகவே மன்னிக்கக் கோருகிறேன்’ என்றான். துறவி மேலும் தொடர்ந்தார். ‘அவருக்கு ஒரே புதல்விதான். அவள் பத்து ஆண்டுகளுக்கு முன் உயிர் நீத்தாள். அவள் தந்தை அவளை அரண்மனைப் பேரவையில் முன்னிலைப்படுத்த எண்ணி இருந்தார். ஆயின் அவள் இதற்கு இணங்கவில்லை. அவர் இறந்தபின்னரோ அவளை என் தங்கையே பேண வேண்டியிருந்தது. எவனோ ஒரு கவைக்குதவாத இடையீட்டாளன் மூலம் அவள் இப்புதல்வியை ஹியோபுகியோ இளவரசனிடம் அறிமுகப்படுத்தி, இளவரசன் காதற்கிழத்தியாக விட்டாள். ஆனால் இளவரசன் மனைவி இரக்கமற்றவள். தொடக்கத்திலிருந்து அவளைப் பல வகையிலும் அவமதிப்புக்கும் துன்பத்துக்கும் ஆளாக்கினாள். நாள் தவறாமல் இத்தகைய தொல்லைகளுக்கு ஆளாகி அவற்றைத் தாங்க முடியாமல் அப்பெண்மணி உளமுடைந்து உயிர் நீத்தாள். இரக்கமற்ற நடத்தை ஒருவரைக் கொன்றுவிடாதென்று கூறுவதுண்டு. அது தவறு. ஏனெனில் என் உறவு முறையினளான அப்பெண் இந்த ஒரு காரணமாகவே நோய்வாய்ப்பட்டு மடிந்தாள்’ என்றார் அவர். ‘சிறுமி இந்தப் பெண்மணியின் குழந்தையாகவே இருக்க வேண்டும், அரண்மனை மாதரசி இளவரசன் ஹியோபுகி யோவின் தங்கையாதலால், அவர்கள் ஒப்புமையும் இது காரணமானதேயாகும்’ என்று கெஞ்சி தனக்குள் கூறிக்கொண்டான். சிறுமி மீதுள்ள அவன் கவர்ச்சி இப்போது முன்னிலும் பன்மடங்காயிற்று. அவள் மரபு சீரியது. இது நன்று. அவள் நாட்டுப்புற எளிமைகூட அவன் பயிர்ப்புக்கு ஆளாகிவிட்டால், ஒரு சிறப்பே யாகி விடத்தக்கது - அவளைத் தன் மாணவியாக்கிவிடும் உறுதியும் இப்போது அவன் உள்ளத்தில் எழுந்தது. விருப்பு வெறுப்புகள், உணர்ச்சிகள் உருவாகாத கள்ளமற்ற அவ்வெள்ளையுள்ளத்தைத் தன் விருப்பம்போலப் பண்படுத்தி உருவாக்க முடியுமென்றும் அவன் கருதினான். ‘நீங்கள் கூறிய துயரக் கதைக்குரிய பெண்மணி தன் நினைவுச்சின்னம் எதனையும் விட்டுச் செல்லவில்லையா?’ என்று மேலும் கேட்டான் கெஞ்சி. உரையாடலைக் குழந்தை பக்கம் திருப்பிச் சிறுமிபற்றிய தன் ஐயத்தை அவன் தெளிவுபடுத்த எண்ணினான். துறவி தொடர்ந்தார். ‘குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் அது பிறந்த ஒரு சில கணங்களுக்குள்ளேயே அவள் இறந்தாள். அது ஒரு பெண் குழந்தை. அதன் பொறுப்பு என் தங்கைக்கே உரியது. ஆனால் அவள் மிகவும் உடல் நலிவுற்று அதை ஒரு சிறிதும் வகிக்க முடியாதவளாய் இருக்கிறாள்’ கெஞ்சிக்கு இப்போது யாவும் தெளிவாயிற்று. ‘எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது, அது உங்களுக்குப் புதுமையாகத் தோற்றலாம். இந்தக் குழந்தையை நான் எனதாகக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இதை உங்கள் தங்கைக்குத் தெரிவிக்கக் கோருகிறேன். என்னை இளமையிலேயே பிறர் மணவாழ்வில் சிக்க வைத்திருந்தாலும், அவர்கள் தேர்வு எனக்குப் பிடிக்கவில்லை. சமுதாய வாழ்வில் எனக்கு மிகுதி விருப்ப மில்லாத நிலையில் நான் தனியாகவே வாழ்கிறேன். அவள் இப்போது சிறு குழந்தையாகவே இருப்பதை அறிவேன். அவளை மணங்கோரவில்லை......’ இங்கே கெஞ்சி தயங்கினான். துறவி அதற்குள் மறு மொழி தொடங்கினார். ‘இந்த ஆர்வ உதவியுரைக்கு நான் நன்றியுடையேன். ஆனால் நீங்கள் குறிப்பிடும் குழந்தை இன்னும் மிக மிகச் சிறு குழந்தை என்பதை நீங்கள் கவனிக்கவில்லை. ஒரு சிறு பொழுது போக்குக்குக்கூட அவள் பயன்படாதவள். உண்மையில், அவளளவில், வளரும் பருவத்தில் அவள் முன்னேறுவதற்குரிய சக்தி வாய்ந்த பக்க ஆதரவு வேண்டுவதேயாகும். எனினும் இவ்வகையில் நான் எதுவும் நலமாக முடித்துவிடுவேன் என்று வாக்குறுதி தர முடியாதவனாயிருக்கிறேன். குழந்தையின் பாட்டியிடம் இதைக் கூறுவதற்கு மட்டுமே தற்போது நான் இணங்க முடியும்’ என்றார். துறவியின் தோற்ற நடையுடை பாவனைகளில் இப்போது சிறிது திடீர்க் கடுமையும் தயக்கமும் தோற்றின. உரையாடலை வரம்புமீறி நெடுந்தொலைகொண்டு சென்று விட்டதாக நினைத்துக் கெஞ்சி மௌனமாக இருந்தான். அவன் உள்ளத்தில் உள்ளூரக் குழப்பமும் ஏற்பட்டது. ‘எம்பிரான் அமிதபகவான் திருக்கூடத்தில் எனக்கு அலுவல் இருக்கிறது. ஆகவே சிறிது நேரம் நான் உங்களிட மிருந்து விடைபெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. என் வழிபாட்டு நேரமும் அணுகிவிட்டது. நான் பின்னால் வந்து உங்களைக் காண்கிறேன்’ என்று கூறித் துறவி வெளியேறி மலைமீது சென்றார். கெஞ்சி ஆறுதல் பெறமுடியாத அவல நிலையில் இருந்தான். இப்போது மழைபெய்யத் தொடங்கிவிட்டது. மலையினூடாகக் குளிர்வாடை வீசிற்று. ஒரு திசையிலிருந்து இடிமுழக்கம்போல ஒரு நீர்வீழ்ச்சியின் ஓசை வளரத் தொடங்கிற்று. மெல்லென்றிசைத்து வந்திருந்த அந்த அருவி மழையால் இத்தகைய பெரு நீர்வீழ்ச்சியாகப் பெருகி வந்தது. இத்தனைக் கிடையிலும், திருமறை வாசகங்களை ஓதும் குரலும் எழுந்தெழுந்து முழங்கிற்று. இத்தகைய சூழலில் கடுங்கல்லான உணர்ச்சியற்ற உள்ளங்கள்கூடச் சலிப்படையக் கூடும். கனிந்த பசுமண்போன்ற உள்ளம் படைத்த கெஞ்சி அடைந்த மனச்சோர்வுக்கு எல்லையில்லை. அவன் துயில்நீத்துப் படுக்கையில் உருண்டு புரண்டுகொண்டே இருந்தான். திட்டங்கள் எதிர் திட்டங்கள் அவன் கருத்துகளை ஓயாது அலைத்த வண்ணம் இருந்தன. துறவி வழிபாட்டு நேரம்பற்றிக் குறிப்பிட்டிருந்தார். வழிபாட்டு நேரம் உண்மையில் கழிந்து விட்டது. ஆயினும் துறவு நங்கை இந்த அகாலத்தில்கூடத் தூங்கவில்லை. தொழுது கொண்டே தான் இருந்தாள். அவள்குரல் ஒரு சிறிதும் கேட்கவில்லை யானாலும், தொழுகை மணிமாலை உருட்டிய போது ஒவ்வொரு மணியின் அசைவும் அது தொழுகை மேடையில் தட்டிய ஒலியும் இரவின் அமைதியிடையே தெளிவாகக் கேட்டன. இந்த மெல்லிய ஓசையிலே உள்ளத்தை உருக்கும் பல்வகை உணர்ச்சிகள் இருந்தன. அந்த நுண்ணிய ஒலி அருகிலிருந்து வருவதுபோல் இருந்தது. கெஞ்சியிருந்த கூடத்தையும் உள்ளறையையும் வேறுபிரிக்க ஒரு தட்டியே இருந்தது. அவன் அதன் ஒரு சிறிய இடை வெளியைச் சற்று விரிவுபடுத்தி, அதற்கு நேராகத் தன் விசிறியை அசைத்துச் சிறிது ஓசை உண்டு பண்ணினான். இந்த மெல் லோசை கேட்டு யாரோ மறுபுறத்தில் வந்து தயங்கி நின்று சிறிது நேரத்துக்குப்பின் செல்வது தெரிந்தது. ‘யாரும் இல்லை, ஆனாலும் ஏதோ தெளிவான ஓசை கேட்டதாகத் தான்..’ என்று அந்த ஆள் தனக்குள் கூறுவது போலிருந்தது. ஆனால் இறுதியில் திரும்பும் சமயம் ‘சரி, ஒரு வேளை அது என் கற்பனை’யாகக்கூட இருந்திருக்கக்கூடும்’ என்று கூறி அமைந்தது. இருட்டில் வந்த காலடிகள் திரும்புவது கேட்டுக் கெஞ்சி இதுதான் சமயம் என்று உரத்த குரல் கொடுத்தான். ‘புத்த பகவானைப் பின்பற்றுக. அப்போது நீங்கள் செல்வது காரிருட்டிலேயே என்றால்கூட, உங்கள் வழி தவறாது.’ என்றான். இந்தத் தெளிவான இளங்குரல் கேட்டபோது முதலில் உள்ளே வந்த அணங்குக்கு அச்ச மேலிட்டது, ஆயினும் எப்படியோ தேறிப் பதில் எழுப்பினாள். ‘அவர் எப்பக்கம் வரும்படி அழைக்கிறார் என்பதைத் தயவுசெய்து அறிய விரும்புகிறேன், அது தெரியாமல் தான் குழம்புகிறேன்’ என்றாள். ‘தங்களுக்குத் திடீரென்று வந்து அச்சம் உண்டு பண்ணியமைக்கு வருந்துகிறேன். எனக்குத் தங்களாலாக வேண்டியது ஒரு சிறு செய்தி, ஒரு சிறு வேண்டுகோள் உண்டு. நான் கூறும் பாடலை உங்கள் தலைவியிடம் சென்று அறிவிக்கவேண்டும். அப்பாடல் இது: ‘இளங்கொடியின் மென்தளிரைக் கண்ட கண முதலாய் ஏங்குகின்ற வழிப்போக்கன் இழையாடை நுனியில் தூங்கு பனித் துளி உலராது ஒளிர்கின்ற தன்றே! வேண்டுகோளை ஏற்க அணங்கு தயங்கினாள்: ‘நீங்கள் யாரை மனத்தில்கொண்டு பேசுகிறீர்கள், ஐயனே! இங்கே இத்தகைய செய்திகளை அறிபவர் யாரும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?’ என்றாள். கெஞ்சி மீண்டும் வற்புறுத்தினான். ‘உங்கள் தலைவியிடம் இத்தகைய செய்தியை நான் கூறுவதற்கு ஒரு தனிக்காரணம் உண்டு. அதை எப்படியும் கூறி உதவினால் நான் மிகவும் நன்றியுடையவனாவேன்’ என்றான். பாடல் அணங்கின் பேர்த்தியைப் பற்றியதென்றும், அதன் வயது பற்றிய தவறான தகவல் காரணமாகவே கெஞ்சி அவளிடம் காதல்கொள்ள எண்ணியுள்ளான் என்றும் அணங்கு ஊகித்துக் கொண்டாள். ஆனால் அப்படி ஒரு பெண் உண்டு என்பது அவனுக்கு எப்படித் தெரியவந்தது என்பதை அவள் அறியக்கூடவில்லை. சில கணங்கள் இதுபற்றி எண்ணி எண்ணி மலைப்புற்றபின் தொட்டும் தொடாமலும் திறமையாக ஒரு பாடலால் பதிலளித்தாள். ‘பனிபெய்யும் அகல் வெளியில் செல்லும் வழிப்போக்கன் தனிஇரவில் தங்குமலைத் தழைப்பாசி மீது நனி உறையும் அவர்வாழ்வு நுனித்தறிதல் ஆமோ?’ உவமைக்கு உவமையாகவே, அவன் குறித்த பொருள் வேறுபடும்படி. தீங்கற்ற முறையிலே எதிர்பாடல் அமைந் திருந்தது. இந்த மறுமொழி கிட்டியபின், கெஞ்சி வேறு வழியில் இப்போது வேண்டுகோளை வற்புறுத்தினான். ‘இப்படிச் சுற்றுவழியில் உரையாடல் நடத்தி எனக்குப் பழக்கமில்லை. உங்கள் தலைவி எவ்வளவு கூச்சமுடையவளானாலும், இச்சமயம் ஆசாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இதுபற்றி நேரிடையாக என் வாதங்களைக் கேட்டுப் பதில் அளிக்கும்படி வேண்டுகிறேன்.’ என்றான். துறவு நங்கை இப்போது மனக் குழப்ப மடைந்தாள். ‘யார் இப்படி இவருக்குத் தவறான தகவல் கொடுத்திருக்க முடியும்? என் பேர்த்தி ஒரு வளர்ந்த இளம் பெண் என்றே அவர் மதிப்பதாகத் தோற்றுகிறது’ என்று அவள் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். இவ்வளவு புகழும் பேரும் உடைய ஒருவர் நேரடியாக வரும்படி கட்டளையிடும் போது, எப்படி மீறிச் செல்வது என்றும் அவள் அஞ்சினாள். செல்லாமல் எப்படி என்ன சாக்குப் போக்குக் கூறமுடியும் என்றும் தெரியாமல் அவள் விழித்தாள். ஆனால் போகாமலிருந்தால் கெஞ்சி எப்படியும் மனம் புண்பட்டு வருந்தக்கூடும் என்று பணிப் பெண்கள் எடுத்துரைத்தார்கள். ஆகவே இறுதியில் அவள் பெண்கள் பகுதியிலிருந்து வெளிவந்து பேச இணங்கினாள். ‘நான் இளம் பெண்ணல்லவானாலும் இப்படி வந்து பேசுவது தகுமோ என்று அஞ்சுகிறேன். ஆயினும், உங்கள் காரியம் முக்கியமானதென்று நீங்கள் கூறியனுப்பியதனால், நான் மறுக்கத் துணியவில்லை’ என்று அவள் தொடங்கினாள். ‘ஒரு வேளை என் கோரிக்கை காலமல்லாத ஒன்று அல்லது அரைகுறை ஆர்வத்துடன் செய்யப்படுவது என்று நீங்கள் கருதக்கூடும். ஆனால் இது என் முழு மனமார்ந்த விருப்பமே யாகும். புத்தபகவான் சான்றாக...........’ இங்கே அவன் மேலும் பேச முடியாமல் தயங்கினான். புத்த அற நங்கையின் வயதும் உளப் பண்பும் எண்ணி மேலும் பேச அஞ்சினான். ஆனால் இப்போது அவள் அவனுக்கு உதவினாள். ‘உங்கள் கோரிக்கையைத் தெரிவிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட முறை புதுமையானதாகத் தான் இருக்கிறது. ஆயினும் நீங்கள் அது பற்றி எதுவும் இன்னும் பேசாவிட்டாலும், இது உங்கள் மனமார்ந்த ஆழ்ந்த விருப்பம் என்பதில் எனக்கு ஐயமில்லை’ என்றாள். இந்த அளவு ஊக்கம் பெற்றபின் கெஞ்சி தேறுதல் அடைந்து மீண்டும் தொடர்ந்தான். ‘தங்கள் இளமைக் காலக் கைம்மை நோன்பு பற்றியும் தங்கள் புதல்வியின் மறைவு பற்றியும் கேள்விப்பட்டு நான் மிகவும் மனநைவுற்றேன். இந்தச் சிறு குழந்தை போலவே நானும் இளமையிலே என்னைப் பெற்று அன்புடன் பேணி உயிரை இழந்தவன். இது காரணமாக என் குழந்தைப் பருவமுதல் நீடித்த தனிமையும் துன்பமும் துய்த்தவன். இருவர் நிலையிலும் உள்ள இந்த ஒப்புமையால் ஏற்பட்ட அனுதாபந்தான், இக்குழந்தை இழந்தவற்றுக்கு என்னாலான அளவு ஈடுசெய்யும் அவாவை என்னிடம் தூண்டியுள்ளது. ‘புதுமை வாய்ந்த முறையில் எக்கச்சக்கமான இந்த வேளையில் உங்கள் பொறுமையின் எல்லை கடந்தும் உங்களுக்கு நான் தொல்லை கொடுத்தற்குரிய காரணம் இதுதான் - இந்தக் குழந்தைக்கு ஒரு தாயின் இடத்தை நானே வகிக்க நீங்கள் இணக்கம் அளிப்பீர்களா என்று அறிய விரும்புகிறேன்’ என்று முடித்தான். அறநங்கை மறுமொழி கூறினாள். ‘உங்கள் எண்ணம் சீரியது, அன்பார்ந்தது. இதில் எனக்கு ஐயமில்லை. ஆனால் - இது கூறுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன் - உங்களுக்குக் கிடைத்துள்ள தகவல் தவறானது. என் பொறுப்பில் இங்கே ஒரு சிறுமி இருப்பது உண்மை. ஆனால் அவள் ஒரு சிறு குழந்தை. உங்களுக்கு அவளிடம் ஒரு சிறு தூசு கூட அக்கறை ஏற்பட அவள்நிலை இடம் தாரது. ஆகவே உங்கள் கோரிக்கைக்கு இணங்க முடியாது.’ கெஞ்சி தன் நிலையை மீண்டும் விளக்க முற்பட்டான். ‘எனக்குக் கிட்டிய தகவலில் தவறு எதுவும் இல்லை. விளக்க முற்பட்டான். நேர்மாறாக, இக்குழந்தை பற்றிய ஒவ்வொரு சிறு நுணுக்க விவரங்களையும் நான் நன்கு அறிவேன். ஆயினும் அவளிடம் நான் கொண்ட ஒத்துணர்வு மிகைப்படுத்தப்பட்ட தென்றோ, தவறான இடத்தில் செலுத்தப்பட்ட தென்றோ நீங்கள் நினைப்பதானால், நான் இது பற்றிக் குறிப்பிட்டது பற்றி மன்னிக்கக் கோருகிறேன்.’’ என்றான். மொத்தத்தில் தன் கோரிக்கை எவ்வளவு பொருந்தா முரண்பாடு உடையது என்பதைக் கெஞ்சி ஒரு சிறிதும் உணர முடியவில்லை. அவனை உணர வைக்க மேலும் முயல்வதில் அறஅணங்கும் எத்தகைய பயனும் காண முடியவில்லை. அத்துடன் துறவி இச்சமயம் திரும்பி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில், ‘எப்படியும் என் கோரிக்கைக்கு நீங்கள் உடனடியாக இணங்குவீர்கள் என்று நான் எண்ணியது கிடையாது. ஆயினும் விரைவில் நீங்களே அதனை வேறு கோணங்களிலிருந்து கண்டு உண்மை நிலை தெளிவீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு’ என்று கூறியவாறு தட்டியின் திறப்பை மீண்டும் மூடி விட்டுக் கெஞ்சி நடந்தான். இரவு கிட்டத்தட்டக் கழிந்தது. அருகிலுள்ள ஒரு கோயிலில் ‘அறமலர்’ என்னும் வினை முறை நடத்தப்பட்டது. வினைவலார்களின் குரல்கள் ஒருமிக்க ‘உய்தி முறை’யை உருவிட்டுக் கொண்டிருந்தன. அந்த அரவம் மலைக் காற்றில் கானாற்றின் அருவி ஓசையுடன் சேர்ந்து மிதந்து வந்தது. ‘என் கனவிடையே மலங்காற்றின் ஓர் அலை வீச்சினால் திடுக்கிட்டெழுந்து அருவி நீர் ஓசையைக் கேட்டேன். அதன் இசையின் இனிமை உணர்ந்து நான் கண்ணீர் மல்கினேன்’ என்று கெஞ்சி துறவியிடம் இரவில் தான் பெற்ற அனுபவத்தை எடுத்துரைத்தான். ‘நாள் தோறும் நான் கலத்தில் நீர் ஏந்தி நிறைத்துக் கொண்டு வரும் நீர்வீழ்ச்சிதான் அது. அது கண்டு நான் வியப்படையவோ, மகிழவோ, திடுக்கிடவோ வழியில்லை’ என்றார் துறவி. கூறியதற்குப் பின் விளக்கம் கூறுபவர் போல, ‘அது எனக்குப் பழகிப் போய் விட்டது என்று பின்னால் அதை மழுப்பினார். காலை வானை அடர்த்தியான பனிப்படலம் மறைத்துக் கொண்டிருந்தது. அதன் திரையிடையே மலைப்பறவைகளின் கலகலப்புக்கூட மிக அடங்கிய குரலாகவே கேட்டது. மலர்களும் மலர்ச்செடி கொடிகளும் அங்கே காடாகக் கிடந்தன. அவற்றின் பெயர்களோ வகைகளோ கூடக் கெஞ்சிக்குத் தெரியாதவை. அவை பாறைகளுக்கே பூ வேலை செய்த ஆடை போர்த்தது போன்ற தோற்றம் அளித்தன. மலைச் சரிவுகளில் மான்கள் அவ்வப்போது மென்னடை போட்டும், அவ்வப்போது துள்ளிக் குதித்தும் பாய்ந்தும் செல்வது கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது. அவற்றைப் பார்க்கும் மகிழ்ச்சியில் கெஞ்சிக்கிருந்த நோயின் கடைசித் தடம் கூட அகல்வது போலத் தோற்றிற்று’ துறவியின் கைகால்கள் முற்றிலும் தளர்ச்சியுற்றுக் கிட்டத்தட்டச் செயலற்றே யிருந்தன. ஆயினும் எப்படியோ தட்டித் தடவி அவர் காவல் மந்திரத்தின் முத்திரைகளைத் திறம்பட முடித்தார். அவர் முதுமைக் குரல் கரகரத்துத் தடுமாறினாலும், மந்திர வாசகங்களைக் கம்பீர நாதத்துடனும் உள்ளார்வத்துடனுமே வாசித்தார். கெஞ்சியின் நண்பர்கள் பலர் இச்சமயம் அவனை வந்து கண்டு, அவன் நலமடைந்தது பற்றி மகிழ்ந்து அவனைப் பாராட்டினர். அவர்களிடையே அரண்மனைத் தூதன் ஒருவனும் இருந்தான். கீழ்புறக் குடிசைக்குரிய துறவியும் இச்சமயம் வந்து விசித்திரத் தோற்றமுடைய ஒரு வேரை அவனுக்குப் பரிசாக அளித்தார். அதை எடுப்பதற்காக அவர் காலையில் கானாற்றின் ஆழ்கெவியிலேயே இறங்கிச் சென்றிருந்தார். மேலும் கெஞ்சியுடன் சென்று வழியனுப்ப முடியாமைக்கு மன்னிக்கும் படியும் அவர் கேட்டுக்கொண்டார். ‘அவ்வாறு செய்வது எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சி தந்திருக்கும். ஆனால் நான் மேற்கொண்டிருக்கும் நோன்பு அம்மகிழ்ச்சி யிலிருந்து என்னைத் தடுக்கிறது. இந்தஆண்டு முடிவுவரை அந்த நோன்பு நீடிக்க வேண்டும்!-’இவ்வாறு கூறி அவர் விடை கொள்ளலானார். விடை கொள்ளும் பிரியா ஆர்வம் குறித்த குடிகலம் ஒன்றும் அவர் பிரிவுப் பரிசாக நல்கினார். கலத்தைப் பணிந்து வாங்கிக் கொண்டு கெஞ்சி அன்புரை தந்தான். ‘என் விருப்பப்படி நான் நடப்பதானால், இந்தக் குன்றுகளையும் ஓடைகளையும் விட்டு நான் எங்குமே செல்ல மாட்டேன். ஆனால் சக்கரவர்த்தியாகிய என் தந்தையார் என்னைப் பற்றிக் கவலையுடன் விசாரணை செய்து வருவதாக அறிகிறேன். இந்நிலையில் நான் தற்போது செல்ல வேண்டியவனாகிறேன். ஆயினும் மலர்ப் பருவம் ஓய்வுறுமுன் நான் திரும்பி வருவேன்’ என்றான். இவ்வார்வ உரையுடன் ஒரு பாடலும் அவன் பாடினான். நகர்மாந்த ரிடம் சென்று விரைந்து வரப் பணிப்பேன் - நகருமவர் நடைதாண்டி வன்காற்று வீசிப் புகரருமிம் மலர்களைப் பூங் கொம்பரிட மிருந்து பொம்மெனவே றாக்கிவிடும் எனும்சேதி உரைத்தே! கெஞ்சியின் நா நயமும், குரல் நயமும், அவன் புகழ்ந்த புகழ் நயமும் முதியவரான துறவியின் உள்ளம் கவர்ந்து அவரை மகிழ்வித்தன. அவர் எதிர்பாடலால் மறுமொழி புகன்றார். ‘பொன்னவிர் கொன்றை மலர் நலம் கண்டான் கல்நவில் குன்ற மலர்த்திசை நாடான்; அந்நிலை என்நிலை ஆகிடப் பெற்றேன்.’ ‘பொன்னவிர் கொன்றை யளவு அரியனல்லனே நான்’ என்று உவமை குறை காண்பவன் போலப் பணிவுடன் நகையாடினான் கெஞ்சி. துறவி இப்போது இறுதி விடை குறித்த பிரிவின் அருங்கலம் ஒன்றை ஒரு பாடலுடனே கெஞ்சிக்குஅளித்தார். குகைமனையில் குறு மூங்கில் சிறு கதவம் திறந்து குன்றிடையே புறம் போதல் தானுமிக அறியேன். தகையார்ந்தார் பலர்தாமும் தம்வாழ்வில் காணா நகையார்ந்த உயிர்மலரென் கண்காணப் பெற்றேன்! இப்படிக் கெஞ்சியின் அழகுமுக நயம் பருகுவார் போல அவர் அவனை நிமிர்ந்து நோக்கினார். அச்சமயம் அவர்கள் இருவர் கண்களுமே நீர் ததும்பி நின்றன. வருங்கால வாழ்வில் தீங்கெல்லாம் அகற்றத் தக்க ஆற்றலுடைய ஒரு மாத்திரைக் கோலை அவர் கெஞ்சிக்கு அளித்தார். அதைக் கண்ட துறவு நங்கையின் உடன் பிறப்பாளர் கொரியாவிலிருந்து தாம் திரும்பிவரும் சமயம் சோதோகு இளவரசன் தமக்களித்த மணிமாலையை அவனுக்குப் பரிசாகத் தந்தார். அது மரகத மணிகள் கொண்டு இழைக்கப்பட்டிருந்தது. அது வைக்கப்பட்டிருந்த சீனப் பெட்டி கூட அதனுடனே அந்நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவே யிருந்தது. பெட்டி சிறந்த பணியிட்டுச் செய்த ஒரு பையில், ஐந்திலை கொண்ட ஒரு செந்தூரக் கொம்புடன் இணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனுடன் மருந்துகள் வைப்பதற்குரிய நீலப்பளிங்குப் புட்டில்களையும் நறுமணமிக்க மருந்துப் பூண்டுகளையும் பிற மலைப் பொருள்களையும் உடனளித்தார். மலைவாணர் தனக்கு அளிக்கும் பரிசுகளுக்கு எதிர் பரிசில்கள் வழங்கும் வண்ணம் கெஞ்சி தலை நகரிலிருந்து பல பொருள்கள் வரவழைத்திருந்தான். முதலில் துறவிக்குரிய பரிசளித்தபின், தன் பேரால் தொழுகையாற்றிய துறவிகளுக் கெல்லாம் திருவமுதளித்தான். அயலிடத்திலுள்ள ஏழைச் சிற்றூர் வாணர்களும் பல பயன் தரும் நன்கொடைகள் பெற்றனர். புறப்படுவதற்குரிய முன்னேற்பாடாக, திருமறை ஏட்டிலிருந்து சில பகுதிகளை அவன் வாசித்துக் கொண்டிருந் தான். அச்சமயம் முதிய துறவி மனைக்குள் சென்றார். தன் தங்கையாகிய துறவு நங்கையிடம், ‘இளவரசனுக்கு ஏதாவது செய்தி தெரிவிக்கவேண்டுமா?’ என்று கேட்டார். ‘தற்போது எதுவும் கூறுவது அரிது. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கழிந்தபின்னும் இதே விருப்பம் அவருக்கு இருக்குமானால், அது பற்றி ஆலோசிக்கலாம் என்று கூறுங்கள்’ என்றாள். ‘அதுவே நானும் நினைப்பது’ என்றார் அவர். தன் ஆவல் ஈடேறும் வகையில் எத்தகைய முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று காணக் கெஞ்சி மனம் அழுங்கினான். துறவு நங்கையின் செய்திக்கு மறுமொழியாகத் துறவியின் மனையிலேயே வாழ்ந்த ஒரு சிறுவனிடம் ஒரு பாடலை வரைந்தனுப்பினான். மாலை அரையிரு ளாயினும் மென்மலரை மேலை இரவில் விழிகுளிரக் கண்டேன். இன்று ஆலித்தடரும் பனித்திரை கண்மறைப்ப மாலுற் றுழன்று மறுகினேன் என்கொலோ? துறவு நங்கை உவமையையே தொடர்ந்து மறுமொழி அனுப்பினாள். செம்மலர் காணாது செல்லும் உங்கள் மனவருத்தம் எம்மா அளவினது என்று மதிப்பிடற்கே அம்மா பனிதுருவி வானோக்கி வாழ்வன்யான்’! என்று அவள் எதிர் பாடல் அனுப்பினாள். பாடல் உயர் குடிக்கேயுரிய அரும்பண்புகளுடன் குறிப்பிடத்தக்க சிறப்புடைய தாயிருந்தது. கையெழுத்து அழகாகவும் நடை செயற்கை யணி களில்லாமல் இயல்பான அழகுநயமுடைய தாகவும் இருந்தது. கெஞ்சியின் ஊர்தி புறப்பட ஆயத்தமாயிருந்த சமயம் நெடுமாடத்திலிருந்து பல இள நன்மக்கள் எதிர் வந்து குழுமினர். ‘நீங்கள் வந்து இவ்வளவு நாளாகியும் உங்களைப் பற்றிய செய்தி எதுவும் அறியாமல் கவலையுடன் புறப்பட்டு வந்தோம். இப்போது உங்களுக்கு வழித்துணைவராக வர விழைகிறோம்’ என்றார்கள். அவர்களிடையே தோ நோ சூஜோ, சச்சுபென் ஆகியோரும் வேறு பல உயர்குடிப் பெரு மக்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் இளவரசன் மீது கொண்ட அன்பின் காரணமாகத் தாமே விரைந்து வந்திருந்தனர்.அவர்கள் உருக்கமாகத் தம் பிரிவுத் துயரைத் தெரிவித்துக் கொண்டார்கள். ‘உங்களுக்குத் துணைவராயிருப்பது தவிர வேறு எதுவும் நாங்கள் விரும்பவில்லை. அப்படியிருக்க நீங்கள் எங்களை விட்டு வந்தது தகாது’ என்று கெஞ்சியை அவர்கள் கடிந்து கொண்டனர். மேலும், அவர்கள் நட்பாடிப் பேசினர். ‘இப்போது இவ்வளவு தூரம் வந்து விட்டோம். இனி ஒரு சிறிதாவது இந்த மலர்க் காமரங்களின் நிழலில் தங்காமல் போவது நன்றாயிராது’ என்றனர். அவர்கள் எல்லாரும் உயரமான ஒரு பாறையின் நிழலில் பாசிப்புல் படர்ந்த நிலத்தின் மீது வரிசையாக உட்கார்ந்தார்கள். மண்ணால் செய்த முரட்டுத் தேறல் கலம் ஒன்றைக் கைக்குக் கை மாற்றி இனிது உரையாடிக் கொண்டே அவர்கள் தேறல் பருகினார்கள். அவர்கள் அருகே ஓடை ஒன்று பாறை மீது குதித்தோடி அருவியாக விழுந்தது. தோ நோ சூஜோ தன் மடியில் செருகியிருந்த குழலெடுத்து அதில் சில பண்கள் வாசித்தான். சச்சு பென் தன் விசிறியினால் தட்டித் தாளமிட்டுக் கொண்டே ‘தோயோராத் திருக்கோவில்’ என்ற பாடலைப் பாடினான். கெஞ்சியை அழைத்துப் போக வந்திருந்த இளைஞர்கள் பலரும் பெரும் புகழ்வாய்ந்த உயர் குடிச் செல்வர்கள். ஆயினும் கெஞ்சி அவர்களிடையே அமர்ந்திருந்தபோது எல்லார் கண்களும் அவனையே நோக்கி இருந்தன. எவர் பார்வையும் வேறு பக்கம் சாயவில்லை. துயரார்ந்த முகத்துடன் கெஞ்சி பாறை மீது சாய்ந்திருந்த காட்சி அத்தனை சிறப்புடையார்கள் கண்களையும் அவள் பக்கமே ஈர்ப்பதாயிருந்தது. கெஞ்சியின் துணைவரில் ஒருவன் இப்போது நாணலால் செய்தபுல்லாங்குழல் வாசித்தான். மற்றொருவன் வாய்க்கருவி வாசித்தான். இதற்கிடையே முதிய துறவி மனைக்குள் சென்று ஒரு யாழ் எடுத்து வந்து கெஞ்சியின் கையில் கொடுத்து, ‘மலைப் பறவைகள் மகிழ்வுறும் வண்ணம்’ ஏதேனும் வாசிக்கும்படி வேண்டினார். தான் அதற்கான மனநிலையுடனில்லையென்று கெஞ்சி கூறியும் அவர் வலியுறுத்தவே, அவன் இணங்கினான். அவன் வாசிப்பு உண்மையிலே எவரும் போற்றத்தக்கதாகவே இருந்தது. அதன்பின் அனைவரும் திரும்பிச் செல்ல எழுந் தார்கள். கெஞ்சி இவ்வளவு குறுகிய காலத்தில் வந்து செல்வது பற்றித் துறவிகளில் கடைசிப்படித் துறவி வரை எல்லோரும் - புதுப் பயிற்சியாளரும்கூட - மிகவும் மனவருத்தமடைந்தார்கள். பலர் கண்ணீர் உகுத்தனர். மனைக்குள் அடைபட்டுக் கிடந்த முதுமை வாய்ந்த துறவு நங்கைகூட, ‘ஒரே ஒரு தடவை கண்மூடி விழிக்கும் நேரம் தானே பார்த்தோம், இனி எப்போதேனும் திரும்பப் பார்க்க நேருமோ?’ என்றெண்ணி மனங்கசிந்தாள். பழிசார்ந்த இந்தக் காலங்களில் இளவரசனை ஒத்த புண்ணியாத்மாக்களைக் காணப்பெறும் தகுதி இந்த உதயசூரியன் தேசத்துக்கு (ஜப்பானுக்கு) அடிக்கடி ஏற்பட முடியாது என்று கூறித் துறவி கண்கலங்கினார். சின்னஞ்சிறு சிறுமிக்குக்கூட இளவரசனிடம் மிகவும் பற்று இருந்தது. தன் தந்தையை விட மிகச் சிறந்த திருவாளன் அவன் என்று அவள் தன் மழலை மொழியில் கருத்துரைத்தாள். அவள் வளர்ப்புத் தாய் இது கேட்டுக் கேலி செய்தாள். ‘ஏன், அப்படியானால் தந்தையின் பிள்ளையாய் இருப்பதற்குப் பதில் அவர் பிள்ளையாய் விடுவது தானே!’ என்றாள். சூதறியாத பிள்ளை இதற்கும் தலையாட்டிற்று. அதுவும் ஒரு நல்லதிட்டம்தான் என்று அவள் கருதினாள். அவளிடம் இருந்த படங்களில் மிக நல்லாடையணியுடைய ஓர் உருவத்தின் கீழ் அது முதல் ‘இளவரசன் கெஞ்சி’ என்ற பெயர் தீட்டப்ப ட்டிருந்தது! அவள் பொம்மைகளில் மிக அழகிய பொம்மையும் அப்பெயர் தாங்கிற்று! தலைநகருக்குத் திரும்பியதும் கெஞ்சி நேரே அரண்மனை சென்றான். சென்ற இரண்டு நாட்களின் ஆர்வ அனுபவங்களை யெல்லாம் தன் தந்தையிடம் கூறினான். சக்கரவர்த்தி அவன் ஏக்கற்ற தோற்றம் கண்டு மிகவும் கவலைப்பட்டார். துறவியின் மந்திர ஆற்றல்பற்றி அவர் கேள்விமேல் கேள்விகள் கேட்டார். கெஞ்சி அவற்றுக்கெல்லாம் நுணுக்க விரிவுடன் மறுமொழி பகர்ந்தான். அதன்மீது சக்கரவர்த்தி தன் கருத்துரை கூறினார். ‘நெடுநாட்களுக்கு முன்பே அவர் தலைமை மந்திர வல்லுநர் ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவர் சேவைகள் எப்போதுமே அரும்பெரும் பயன் தந்திருக்கின்றன. ஆயினும் என்ன காரணத்தினாலோ அவை வெளிப்படையான பொதுப் பாராட்டை இன்னும் பெறவில்லை’ என்றார். இக் கருத்துடன் அவர் உடனே ஓர் ஆணை பிறப்பித்தார். சக்கரவர்த்தியின் திருமுன்னிலையிலிருந்து திரும்பிய சமயம் கெஞ்சியை இடங்கை அமைச்சர் எதிரே வந்து சந்தித்தார். தம் மக்களுடன் மலைக்கு வந்து அவரை இட்டு வராமைக்கு அவர் மன்னிப்புக் கோரினார். ‘நீங்கள் தனி மறைவாக அங்கே சென்றிருந்ததால் வெளிப்படையாக எதிர்கொண்டு அழைக்கப் படுவதை விரும்பியிருக்க மாட்டீர்க ளென்று கருதி இருந்து விட்டேன். இப்போது நீங்கள் என்னுடன் சிறிது காலம் இருந்து ஓய்வு கொள்வீர்கள் என்று அவாவுகிறேன். அதன்பின் உங்களை உங்கள் அரண்மனைவரை துணைதந்து இட்டுச் செல்லுவதை ஒரு மதிப்பாகக் கருதுவேன். என்றார். அங்கே போகும் விருப்பம் துளியும் கெஞ்சிக்குக் கிடையாது. ஆயினும் மாமனார் என்ற முறையில் அவருக்கு மறுப்புக்கூற வகையில்லை. கெஞ்சியை அவர் தம் ஊர்தியிலேயே இட்டுக் கொண்டு நெடுமாடம் சென்றார். மாளிகையடைந்ததும் காளைகளைத் தன் கையாலேயே அவிழ்த்து இட்டுச் சென்றார். இத்தகைய செயல்கள் கெஞ்சியிடம் அவர் கொண்டிருந்த தனிப்பெரும் பாசத்தைக் காட்டுபவையாக அமைந்தன. ஆனால் அத்தகைய பாசநேசங்கள் கெஞ்சிக்குத் தொல்லைகளாகவே தோற்றின. கெஞ்சி வருகையை எதிர்நோக்கி ஆய் இளவரசியின் அறைகள் முற்றிலும் சீராக்கப் பட்டிருந்தன. அவன் அவளைச் சந்தித்து நெடுநாட்கள் ஆய்விட்டன. அதற்குள் அவற்றின் தோற்றம் எவ்வளவோ மாறுபட்டிருந்தது. சீர்திருத்தங்கள் பலவற்றுள் ஒரு பகுதியாக, மிக அழகான ஒரு மட்டுப்பா அமைக்கப்பட்டிருந்தது. முற்றிலும் ஒழுங்கமைத்துச் செய்யப் பட்டிருந்த இந்தஅழகு வாய்ந்த பகுதியில் மாசுமறுவுக்கு இடமில்லாதிருந்தது. ஆனால் வழக்கப்படி இங்கே இளவரசி ஆயை மட்டும் எவரும் காணமுடியவில்லை. அவள் தந்தை அவளை மீண்டும் மீண்டும் வேண்டிக் கொண்ட பின்னரே அவள் தன் கணவன் முன்னிலையில் வர இசைந்தாள். படத்திலமர்ந்திருக்கும் இளவரசியரைப் போலவே அவள் ஆடாமல் அசையாமல் ஒய்யாரமாக வீற்றிருந்தாள். அவள் வடிவம் அழகின் திருவுருவமாகவே இருந்தது என்பதில் ஐயமில்லை. கெஞ்சி அவளை அணுகி உரையாட முயன்றான். ‘என்னுடைய மலைப் பயணத்தைப் பற்றி உன்னுடன் பேச நான் விரும்புதல் இயல்பு. ஆனால் அதில் உனக்கு அக்கறை இருக்குமோ, என்னவோ? சொல்லுக்குச் சொல் அதுபற்றி ஏதேனும் உரையாடுவாயோ, மாட்டாயோ? இதனை அறியாமல் தான் தயங்குகிறேன். ஆனாலும் இப்படியே போய்க் கொண்டிருப்பதில் எனக்கு ஒரு சிறிதும் விருப்பம் இல்லை. நீ ஏன் என்னிடம் இப்படி நெருங்காமல் பராமுகமாகவும் இறுமாப் பாகவும் தொடர்பற்ற அயலார்போல நடந்து கொள்ளுகிறாய்? ஆண்டு மேல் ஆண்டாக நமக்கிடையே சமரசமில்லாமலே போய்க் கொண்டிருக்கிறது. முன் என்றும் இருந்ததைவிட இப்போது நாம் வேறு வேறாகப் பிரிவுற்று வாழ்கிறோம். எப்படியோ சாதாரண முறைத் தொடர்பாவது நம்மிடையே நிலவ முடியாதா? நெடுநாள் நான் உடல் நலமில்லாமல் இருந்தேனே, நீ என் உடல் நலம் பற்றிக் கூடக் கேட்கவில்லையே! இது எவ்வளவு விசித்திரமான நிலை? ஒருவேளை இதுவே என் தகுதியாக இருக்கக்கூடும். ஆனாலும் இது மிகவும் வேதனை தரத்தக்கதேயாகும்’ என்றான். ‘ஆம், மனிதரைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாவிட்டால் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கும்.’ என்று அவள் தோளைக் குலுக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டே கூறினாள். ஏளனமும் இறுமாப்பும் கலந்த அந்தத் தோற்றத்திலும்கூட அவள் அழகு தனிச்சிறப்புடையதாகவே விளங்கிற்று. கெஞ்சி மனவெறுப்புடன் பேசினான். ‘நீ என்னுடன் பெரும்பாலும் பேசுவதேயில்லை. தவறி வாய் திறக்க நேர்ந்தால் ஏதாவது கடுமொழிதான் கூறுகிறாய். நான் கூறும் நல்ல செய்திகளையும் திரித்து அவமதிப்பாக எடுத்துக் கொள்கிறாய். உன் மனக்கசப்பைத் தணித்து உள்ளே மகிழ்வித்து இன்னுரையாட வைக்க நான் முயன்றால், நீ அதனாலும் முன்னிலும் அணுக முடியாதவளாகி விடுகிறாய். உன் உள்ளம் என்னை உணரும் நாள் என்றேனும் வருமா?..’ என்று கேட்டுக் கொண்டே, அவன் அவள் படுக்கையறை நோக்கி நகர்ந்தான். ஆனால் அவள் அவனை அங்கே பின் தொடரவில்லை. அவன் உள்ளம் வெம்பி வெதும்பிற்று. சிறிது நேரம் அவன் மிகுந்த மனவருத்தத்துடன் படுக்கையில் தங்கியிருந்தான். ஆனால் இந்நிலை நீடிக்கவில்லை. ஏனெனில் உள்ளூர அவன் அவள் விருப்பு வெறுப்புகள் பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. அவன் கண்கள் அயர்வுற்றன. அவன் சிந்தனைவேறு எங்கெல்லாமோ அரையுணர்வில் சுழன்றன. தான் கண்ட சிறுமியைத் தன்னிடமே கொண்டு வந்து அவள் பருவமடைவதைக் கண்டு களிக்க வேண்டும் என்ற ஆர்வமே அவனை இச்சமயம் ஆட்டிப் படைத்தது. ஆனால் அவள் பாட்டி சொன்னது சரி என்று இப்போது அவனுக்குத் தென்பட்டது. அவள் மிகவும் சிறு வயதுதான். ஆயினும் அவளை வேறு எப்படியாவது தலைநகருக்குக் கொண்டு வரும்படி செய்தாலென்ன? அதற்கான சாக்குப் போக்குக் கூறுவது எளிதாயிருக்கும். இந்த ஏற்பாட்டினால்கூட அவன் எவ்வளவோ இன்பம் பெற வழி உண்டு என்று நினைத்தான். சிறுமியின் தந்தையான ஹியோபுகியோ இளவரசன் நல்ல நடை நயமுடையவன்தான். ஆனால் அவன் அழகுடையவன் அல்லன. ஆயினும் குழந்தை அவனைப் போன்றிராமல் அவன் உடன் பிறந்தாளைப் போன்றதாக எப்படி அமைந்தது? ஹியோபுகியோ இளவரசனும் இளவரசி புஜித்சுபோவும் உடன் பிறந்தவர்கள் மட்டுமல்லர், ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள், மற்ற உடன்பிறந்தார்கள் தாய் வேறு பாடுடையவர்களா யிருந்திருக்க வேண்டும் என்று அவன் மதித்திருந்தான், அவனால் மிகவும் நேசிக்கப்பட்ட அணங்குடன் சிறுமி உறவும் ஒப்புமையும் ஒருங்கே உடையவளாயிருந்ததனால், அவளைக் கைப்பற்றும் திட்டத்தில் அவன் ஆர்வம் இன்னும் பன்மடங்கு பெருக்கமுற்றது. அதை நிறைவேற்றுவது எவ்வாறு என்று அவன் மேன்மேலும் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினான். மறுநாள் கெஞ்சி துறவிக்கு ஒரு முடங்கல் வரைந்தான். அதிலும் இத்திட்டம் பற்றிய சிறு குறிப்பை அவன் உட்படுத்தத் தவறவில்லை. அத்துடன் துறவு நங்கைக்கும் அவன் எழுதினான். ‘என் திட்டத்துக்கு நீங்கள் அவ்வளவு திடமான எதிர்ப்புடையவர்களாயிருந்தது கண்டே என் நோக்கங்களின் நேர்மையை நான் விரும்பிய அளவில் உங்களிடம் முற்றிலும் வலியுறுத்தி வாதாடவில்லை. ஆனாலும் நான் வெளியிடத் துணிந்த சில சொற்களின் மூலமே அதில் எவ்வளவு ஆழ்ந்த உறுதி எனக்கு இருந்தது என்பதை நீங்கள் அறிந்து கொண்டதாகக் கேள்விப்பட்டால், நான் எல்லையில்லா மகிழ்ச்சியுடையவனாவேன்’ என்று அவன் தெரிவித்தான். கடிதத்தில் செருகிய ஒரு தாள் நறுக்கில் ஒரு பாடலும் வரைந்திருந்தான். ‘குன்றாடு மலர்முகத்தை மறந்திட நான் முயன்றாலும் நின்றாடு கின்றதன்றி நெஞ்சில் அகன்றிலதே!’ பாட்டின் இனிமையும் ஆர்வ நலமும் கண்ட துறவு நங்கை அம்முதுமை நிறைந்த நிலையிலும் மகிழ்ச்சியுறாமலிருக்க முடியவில்லை, அப்புகழ்ச்சியில் பெருமையும் கொண்டாள். கையெழுத்து அழகியதாயிருந்ததுடன் மடிப்புகளும் மென்னய முடையவையாய் இருந்தன. எனவே அவன் நிலைகண்டு அவள் வருந்தினாள். மனச்சான்றும் கடமை யுணர்ச்சியும் மட்டும் தடுத்திராவிட்டால், அவள் மிக நயமிக்க விடையே அனுப்பி யிருப்பாள். ‘அருகாமையில் வந்த சமயம் எங்களையும் வந்து காண அருள் கூர்ந்தமைக்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்னும் இங்கே நேரிடையாக எங்களைக் காண வருவீர்கள் என்றும் நம்புகிறோம். ஆனால் அப்படி வரும் சமயம்கூட ஏற்கனவே கூறியதற்கு மேலாக நான் எதுவும் கூற முடியாது. உள்ளடக்கமாக நீங்கள் அனுப்பிய பாடல் வகையில், அவள் மறுமொழி எழுதுவாளென்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். அவள் இன்னும் தன் முதல் மேல் வரிப்பாடத்தைக் கூட எழுத்துக்கூட்டி எழுதத் தெரியாதவள். அதற்கு நானே விடை வரைய வேண்டும். ‘உங்கள் மனஉறுதி உன்னில், புயலாடும் தங்கமலர் சிதறுந் துணையதுவும் கண்டிலேன். பங்கமிலாது பகரின் மயலாடும் எங்கள்மனம் ஊசல் ஆடும் நிலையானதே!’ துறவியின் முடங்கலும் கிட்டத்தட்ட இந்தக் கருத்தையே குறிப்பாகக் காட்டிற்று. கெஞ்சியின் நெஞ்சம் பெருத்த ஏமாற்றம் கண்டது. இரண்டு மூன்று நாட்கள் சென்றபின் அவன் கோரெமிட்சுவை வரவழைத்து அவன் மூலம் துறவு நங்கைக்கும் ஒரு கடிதம் அனுப்பினான். அத்துடன் சிறுமியின் செவிலித் தாயாகிய சோனகனையும் கண்டு இயன்ற மட்டும் தகவல்கள் அறிந்து வரும்படி பணித்தான். கோரெமிட்சு கெஞ்சியின் உளப் பாங்கைப் பற்றித் தனக்குள் தானே பரிந்து பேசிக் கொண்டான். ‘என்ன மெல்லுணர்ச்சி வாய்ந்த பசுமை உள்ளம் இவருக்கு!’ என்று அவன் இரங்கினான். கோரெமிட்சு அவளை ஒரு கணம்தான் பார்த்தான். அவள் ஒரு சிறுகுழந்தை என்று முடிவு செய்ய அதுவே அவனுக்குப் போதுமாயிருந்தது. ‘ஆனால் இளவரசருக்கு! அவர் பசுமை வாய்ந்த உள்ளம் அவரை இன்னும் என்ன என்ன இக்கட்டில் கொண்டு சிக்கவைக்குமோ?’ என்று அவன் கவலைப்பட்டான். இவ்வளவு தனிப்பட்ட சிறப்புத் தூதன் மூலம் கடிதம் அனுப்பப் பெற்ற துறவி மிகவும் மனங்கனிவுற்றார். ஆனால் அதை அவரிடம் கொடுத்தபின் கோரெமிட்சு துறவு நங்கையைத் தேடிச் சென்றான். தலைவன் அவனிடம் சொல்லி யனுப்பியதை அவன் கூறியதுடனன்றி, அவனைப் பற்றிய பல தகவல்களும் அவளுக்குத் தெரியப்படுத்தினான். இயல்பாக அவன் பெரும் பேச்சுக்காரன். ஆகவே பேசிக் கொண்டேயிருந்தான். இடையிடையே சாதகமான பல செய்திகளையும் கூற வாய்ப்பு நாடினான். ஆனால் அத்தனையும் பேசி முடிந்த பின்னும் அவள் மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இவ்வளவு சின்னஞ்சிறு குழந்தையிடம் கெஞ்சிக்கு எப்படி அத்தனை அக்கறை ஏற்பட்ட தென்பதை முன்போலவே அவளால் அறியக்கூடவில்லை. அவன் கடிதம் மிகவும் பாசப் பரிவுடையதாகவே இருந்தது. ஒவ்வோர் எழுத்தெழுத்தாகச் சிறுமி எழுதுவது பற்றித் துறவு நங்கை முன்பு அவனுக்குத் தெரிவித்திருந்தாள். அந்தக் கையெழுத்தின் மாதிரியையே தான் காண விரும்புவதாக அவன் குறித்திருந்தான். முன்போலவே ஒரு பாடலையும் உள்ளடக்கமாக அனுப்பியிருந்தான். ‘நிலையற்ற விளையாட்டு நினைவென்றன் நோக்கமென மலையுற்ற சுனைநிழல்தா னோ உனக்கு மெல்லமெல்லக் குலவிற்று? கூறாய் என் குன்றாடுமென் மலரே!’ அவள் அதற்கு எதிர்பாடல் வரைந்தனுப்பினாள். ‘சுனையதன் நீர் மொண்ட சிலர் தொல்லைமிக உற்றார் பினையுமது வாமோ? இஃதுரைத்திடு மோ நிழலே!’ இப்பாடலுடன் வாய்மொழியாகவும் அவள் சில செய்திகள் கூறியனுப்பினாள். விரைவில் தான் தலைநகருக்கு வருவதாக இருந்ததனால், அங்கே வந்தபின் செய்தி தெரிவிப்பதாகக் கூறினாள். இத் தகவல் கெஞ்சிக்குக் கிளர்ச்சி யூட்டுவதாயிருந்தது. இச்சமயம் இளவரசி புஜித்சுபோ உடல் நலிவுற்றுச் சிறிதுகாலம் அரண்மனையிலிருந்து ஒதுங்கியிருந்தாள். இதனால் சக்கரவர்த்தி அடைந்த துயரும் கவலையும் காணக் கெஞ்சியின் மனம் உருகிற்று. ஆயினும் இதனால் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அவனால் புறக்கணிக்க முடியவில்லை. ஒரு நாள் முழுவதும் இருந்து நினைத்து நினைத்து அவன் மனம் பெரிதும் குழப்பமுற்றது. தன் மாளிகையிலோ, அல்லது அரண் மனையிலோ எங்கிருந்தாலும் அவனால் வேறுஎதையும் நினைக்கவோ, வேறு எவரையும் காணவோ முடியவில்லை. நாள்முழுதும் கழிந்த பின்னர் அவன் புஜித்சுபோவின் தோழி ஓமியோபுவை அணுகி, அவளுக்கு ஒரு கடிதம் கொண்டு செல்லும்படி பெரிதும் மன்றாடினான். அவர்களிடையே அத்தகைய தொடர்பு ஏற்படுவது தகாது என்று அந்நங்கை மதித்திருந்தாலும், கனவுலகில் திரிபவன் பார்வைபோன்ற அவன் கண்களின் தோற்றங்கண்டு அவள் அவன் மீது இரக்கங்கொண்டு இணங்கினாள். ஆனால் இளவரசியோ கெஞ்சியுடன் தான் முன்கொண்டிருந்த உறவு மிகவும் தவறானதென்று கருதியிருந்தாள். அதன் பயங்கர நினைவே அவளுக்கு ஓயாத் தொல்லையாக இருந்து வந்தது. இந்நிலையில மீண்டும் அத்தொடர்பு ஏற்படக்கூடாது என்று அவள் உறுதி கொண்டிருந்தாள். அவனைக் காணும் சமயம் அவள்முகம் கடுத்தும் துயர் தோய்ந்தும் இருந்தது. ஆனால் அவள் வசீகர ஆற்றலை ஒரு சிறிதும் குறைக்கவில்லை. தகுதிகடந்து தன் தோற்றத்தில் அவன் ஈடுபடுகிறான் என்று கருதிக் கடிந்து கொள்பவள்போல அவள் சிடுசிடுப்புடனும் வெறுப்புடனும் நடந்துகொண்டாள். ஆனால் அதேசமயத்தில் தன்னிடம் ஏதாவது குறைகண்டு. தன்னை வெறுப்பதன் மூலம் அவன் நினைவிலிருந்து தான் விடுதலை பெற்று அமைதிபெற முடியுமா என்று அவள் அவன் அழகிய முகத்தைத் துருவித் துருவி நோக்கினாள். அங்கே நடந்ததனைத்தையும் நான் இங்கே கூறத்தேவை யில்லை. அந்த இரவு மிக விரைவிலேயே ஓடிச் சென்றுவிட்டது. அவள் காதுகளில் அவன் தன் ஆர்வ அவாக்களைக் கொட்டினான். ‘எப்படியோ இறுதியாகச் சந்தித்துவிட்டோம். ஆனால் கனவுபோலத் தோற்றும் இந்த இரவு நீண்டு, இப்படியே இந்தக் கனவில் நாம் முழுதும் மறைந்து போய் விடக்கூடாதா?’ என்று அவன் ஏங்கினான். எனினும் அவள் ஏக்கம் வேறு திசையிலிருந்தது. ‘மீளாத்துயிலில் நான் ஒளிந்து மறைவதாயிருந்தால்கூட, என் மீளாப்பழி நாவிலிருந்து நாவுக்கு இந்த உலகில் நீடிக்குமே!’ என்றாள் அவள். அச்சம், கழிவிரக்கம் ஆகிய திடீர் உணர்ச் சிகளில் அவள் சிக்கியது காரணமற்றதல்ல என்றே அவனும் கருதினான். அவன் போகும்போது தன் போர்வை முதலியவற்றை மறந்துவிட்டுச் சென்றிருந்தான். தோழி ஓமியோபு அவன் பின் ஓடிவந்து அவற்றை அவனிடம் தந்தாள். அன்று முழுவதும் அவன் படுக்கையில் கிடந்து பெரு வேதனைகளுக்கு இரையானான். அவன் ஒரு கடிகம் அனுப்பிப் பார்த்தான். ஆனால் அது திறவாமலே திருப்பியனுப்பப்பட்டது. இத்தகைய செய்திகள் இதற்குமுன் எத்தனையோ தடவைகள் நடந்திருந்தன. ஆனால் இப்போது இதனால் அவன் அடைந்த துன்பம் இரண்டு மூன்று நாட்கள் அவனை அறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கவைத்தது. தன்னிடம் மிகவும் ஆர்வங் கொண்ட சக்கரவர்த்தி தன்நிலை உசாவி அறிந்து, ‘இப்போது என்ன புது இக்கட்டு நேர்ந்தது?’ என்று கேட்டு விடுவாரோ என்று அவன் ஓயாது நடுங்கிக் கொண்டிருந்தான். அதே சமயம் தன் அழிவு முழுதும் நிறைவேறிற்றென்று உறுதியாக எண்ணிய புஜித்சுபோ முற்றிலும் கிளர்ச்சியற்றவளாய் மனச்சோர்வுற்றாள். அவள் உடல்நலம் நாளுக்குநாள் மோசமாயிற்று. அரண்மனைக்குத் தாமத மில்லாமல் வரும்படி சக்கரவர்த்தியிடமிருந்து இடைவிடாது கடிதங்கள் வந்து கொண்டே இருந்தன. ஆனால் அவளுக்குப் போகும் துணிவு வரவில்லை. நோயின் போக்கும் அவளுக்கு உள்ளூரக் கலக்கமளிப்பதாகவே இருந்தது. நாள் முழுதும் அவள் எதுவும் செய்யவில்லை. ‘இனி என்னாவது’ என்ற ஒரே சிந்தனையில் அவள் ஏங்கியிருந்தாள். கடுவேனில் தொடங்கியபின் அவள் படுக்கையை விட்டே நகரவில்லை. இப்போது மூன்று மாதங்களாகிவிட்டன. அவள் நிலையில் இப்போது ஒளிவு மறைவு எதற்கும் வழியில்லாது போயிற்று. இனி விரைவில் இது எங்கெங்கும் தெரியவந்து விடுமே, எல்லாரும் இதுபற்றி விவாதிப்பார்களே என்று அவள் துடித்தாள். அவளுக்கு நேர்ந்த இடர் அவளைத் திகிலில் ஆழ்த்திற்று. அதே சமயம் இதில் இரகசியத்திற்கு என்ன இருக்கிறது என்று அறியாத நிலையில், சக்கரவர்த்திக்கு இதை அவள் கூறவில்லை என்பது கண்டு வேறு சிலர் வியப்புற்றனர். இதுபற்றிய ஆய்வு எதிராய்வுகள் பல நடைபெற்றன. ஆனால் இத்தகைய செய்திகளில் நெருக்கடியுடன் தொடர் புடையவர்கள் மட்டுமே அதுபற்றிய விளக்கம் கூறமுடியும். ஓமியோபுவும் முதியவளான செவிலித்தாயின் மகளும்தான் காலை ஒப்பனைவேளையில் குளிப்பறையில் அவளது மாறுபாட்டை முதலில் கண்டனர். அவர்கள் திடுக்கிட்டனர். ஆனால் ஓமியோபு இதுபற்றியே பேச விரும்பவில்லை. தான் ஏற்பாடு செய்த இரகசியச் சந்திப்புத்தான் இத்தகைய கொடிய எதிர்பாராத விளைவைத் திடுமென உண்டுபண்ணி விட்டதோ என்ற கிலியும் அச்சமும் அவளைப் பீடித்தன. ஆனால் வேறு சில பிணிகள் காரணமாகத் தான் அவள் உண்மை நிலை அறியப்படாமல் போயிற்று என்ற செய்தி அரண்மனை எங்கும் இயல்பாகப் பரவிற்று. இதனை எல்லாரும் ஏற்றனர். சக்கரவர்த்திக்கு இப்போது அவளைப்பற்றிய பரிவும் கவலையும் பெரிதாயின. தூதர்கள் அவள் நிலைபற்றித் கணந்தோறும் அறிவித்து வந்தாலும், அவள் நிலைபற்றிய ஐயமும் கற்பனை அச்சமும் அவரை வாட்டின. கெஞ்சிக்கு இச்சமயம் வழக்கமீறிய ஒரு பயங்கரக் கனவு உண்டாயிற்று. குறிகாரரைத் தருவித்து அவன் கேட்டான். அவர்கள் அதைச் சிறிதும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் அவர்கள் தெளிவாய் உணர்ந்து கூறினர். ‘கனவுக்குரியவன் ஒரு தகாச் செயலில் சறுக்கியுள்ளான். அது பற்றி விழிப்பாய் இருத்தல் வேண்டும்’ என்றனர். இது கேட்டுக் கிலிகொண்டு, ‘கனவு எனதன்று. ஒரு நண்பனுக்காகவே கேட்டேன்.’ என்று கெஞ்சி கூறினான். ஆனால் தனக்குள் இந்தச் சறுக்கல் எதுவாயிருக்கக்கூடும் என்று அவன் சிந்தித்து நோக்கினான். இளவரசி நிலைபற்றிய செய்தி தெரிய வந்ததே அவனுக்கு அதன் பொருள் புரிந்துவிட்டது. இதுதான் கனவு குறித்த சறுக்கல் என்று கருதினான். கழிவிரக்கம் அவன் உள்ளத்தில் கொந்தளித்தது. வேதனைத் தற்பழிப்புரைகளும் நீதி ஆய்வாராய்வுகளும் நிறைந்த நீண்ட கடிதம் ஒன்றை அவன் புஜித்சுபோவுக்கு உடனே எழுதினான். ஆனால் இத்தகைய கடிதம் இளவரசியின் கலக்கத்தை இன்னும் மிகைப்படுத்தவே உதவும் என்று கருதி ஓமியோபு அதைக் கொண்டுசெல்ல மறுத்தாள். ஓமியோபு தவிர வேறு நம்பகமான தூதர் இல்லாமையால் அவன் வாளா இருந்தான். இதுமுதல் அவனிடமிருந்து வரும் குறைகள் பழிப்புகள் சுட்டிய ஒன்றிரண்டு வரிகள் வருவதுகூட முழுவதும் நின்றுவிட்டது. ஏழாவது மாதத்தில் இளவரசி அரண்மனைக்குத் திரும்பி வந்தாள். அவள் வருகையால் எல்லையிலா மகிழ்வடைந்த சக்கரவர்த்தி அவள்மீது தம் அன்பைப் பல வழிகளிலும் பொழிந்தார். அவள் உருவம் இப்போது அடைந்த நிறை பருமையும் முகத்தின் விளறிய மெலிவும்கூட அவளுக்குப் புதிய, ஈடிணையற்ற கவர்ச்சி தந்தன என்றே அவர் நினைத்தார். முன்போலவே இப்போதும் அவரது ஓய்வு நேரம் முழுவதும் அவளுடனேயே கழிந்தது. இச்சமயம் பல அரண்மனைச் சிறப்பு விழாக்கள் நடைபெற்றன. கெஞ்சியின் பங்கு அவற்றில் ஓயாது தேவைப் பட்டது. சில சமயம் யாழ் எடுத்து வாசிக்கவும், சில சமயம் தந்தைக்கு வேண்டிய பிறஉதவிகள் செய்யவும் அவன் கோரப்பட்டான். இந்தத் தறுவாய்கள் ஒவ்வொன்றிலும் கலக்கமோ குழப்பமோ காட்டக்கூடாது என்று அவன் எவ்வளவு முயன்றாலும், பற்பல சமயங்களில் தன்நிலை தன்னைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று அவன் மிகவும் அஞ்சி அஞ்சி நடுங்கி வந்தான். அதே சமயம் இதே அச்சம் புஜித்சுபோவுக்கும் ‘இடைவிடாக் கவலை அளித்து வந்தது. துறவு நங்கை இப்போது சிறிது உடல் தேறியதனால், தலைநகரிலேயே வந்து தங்கியிருந்தாள். அவள் எங்கே தங்கியிருந்தாள் என்பதை உசாவியறிந்து கெஞ்சி அவளுக்கு அவ்வப்போது கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். அவளிட மிருந்து அவனுக்கு எத்தகைய புதுநம்பிக்கைக்கும் இடமில்லை. அவனும் எதுவும் எதிர்பார்க்கவில்லை. சென்ற சில மாதங்களில் சிறுமிபற்றிய அவன் ஏக்கம் குறையவில்லை. நேர்மாறாக அது பெருகியே வந்தது. ஆனால் நாட்கள் ஒவ்வொன்றாகக் கழிந்தன. நிலைமை மாற்றத்துக்கான எந்த அறிகுறியும் காணவில்லை. இலையுதிர் காலம் முடிவை அணுகுந்தோறும், அவன் மனச்சோர்வு வளர்ந்து வந்தது. ஒரு நல்ல நிலாவெறிக்கும் இரவில் நன்முடிவுகளுக்கெதிராக அவன் மறைவில் அவளைச் சென்று காண்பதென்று துணிந்தான். ஆனால் அவன் புறப்படுமுன் மழை பொழியத் தொடங்கிவிட்டது. அவன் அரண்மனையிலிருந்தே புறப்பட்டதாலும், அவன் செல்ல வேண்டிய இடம் ஆறாவது வளாகத்திலிருந்ததாலும், அவ்வளவு தொலை மழையில் செல்வது நல்லதல்ல என்று கருதினான். என்ன செய்வதென்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவன் கண்கள் நீண்ட மரச்சோலைகள் சூழ்ந்த ஒரு பாழ்ங்கட்டடத்தின் மீது விழுந்தன. இந்தத் துயரடர்ந்த பாழ்ங்குடில் யாருக்குரியதா யிருத்தல்கூடுமென்று அவன் கோரெமிட்சுவைக் கேட்டான். வழக்கப்படி அவனுடனே சென்ற கோரெமிட்சு விடை கூறினான். ‘ஆம். இதுதான் காலஞ்சென்ற அசேச்சி நோதைநகன் மனை ஆகும். ஒன்றிரண்டு நாளைக்குமுன் நான் இங்கே வந்து நலமுசாவினேன். துறவுநங்கை மிகவும் உடல் நலிவுற்றிருப் பதாகவும், தன்னுணர்வற்ற நிலை எய்தியுள்ளாளெனவும் கேள்விப் பட்டேன்’ என்றான். ‘இதை ஏன் என்னிடம் முன்பே கூறவில்லை?’ நான் அவள் குடும்பத்தாரிடம் என் ஒத்துணர்வு காட்டச் சென்றிருப்பேனே! இப்போதாவது உடனடியாகச் சென்று தகவலறிந்து வா’ என்றான். கோரெமிட்சு சிறுபணியாளன் ஒருவனை மனைக்குள் அனுப்பினான். நிலைமை உசாவுவதற்காகவே கெஞ்சி வந்திருப்பதாகத் தெரிவிக்கும்படியும் கூறினான். தகவலறிவதற்காகக் கெஞ்சி ஆளனுப்பியுள்ளானென்றும், தானே அதற்காக வந்து வெளியே காத்திருப்பதாகவும் பணியாள் கூறியதே, மனையில் கலக்கமும் பரபரப்பும் ஏற்பட்டன. பல நாட்களாகவே மனைத்தலைவி மிக ஆபத்தான நிலையில் இருந்து வருவதனால், அவர்களை வரவேற்கும் நிலையில் இல்லை என்று வருத்தப்பட்டனர். ஆனால் அதே சமயம் அத்தகு உயர் விருந்தாளியைத் திருப்பியனுப்பவும் துணியாமல், அவர்கள் அவசர அவசரமாகத் தெற்குக்கூடத்தை ஒழுங்குபடுத்தி அவனை அதற்குள் வருவித்தனர். ‘இந்த அந்தசந்தமற்ற அறைக்குள் உங்களை வரவேற்பதற்கு மன்னிக்கக் கோருகிறோம். இதை மதிப்பு வாய்ந்ததாக்க எங்களாலியன்ற யாவும் செய்துள்ளோம். தங்கள் திடீர் வருகையின் காரணத்தால் நாங்கள் மேற்கொண்ட இத்தகைய அவசர நடவடிக்கைக்கு எங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்’ என்றனர் அவ் ஏவலர்கள். அத்தகைய அறையில் அவன் என்றும் கால்வைத்து அறியாதவன் என்பது உண்மையே. ஆனால் அவன் கவனம் இப்போது இத்தகைய செய்திகளில் இல்லை. அவன் தன் வருகைபற்றியே குறிப்பிட்டான். ‘இந்த மனைக்கு வரவேண்டுமென்று நீண்ட நாட்களாகவே விரும்பினேன். ஆனால் நான் அடிக்கடி கடித மூலம் தெரிவித்துக் கொண்ட ஒரு கோரிக்கை முழுதும் மறுதலிக்கப் பட்ட நிலையே என் ஊக்கம் கெடுத்தது. ஆயினும் உங்கள் தலைவியின் உடல்நிலை இப்படிச் சீர்கேடடைந்திருப்பது தெரிந்திருந்தால்.........’ படுக்கையிலிருந்தே பதில் வந்தது. ‘தற்சமயம் என் மனம் தெளிவாகத்தான் இருக்கிறது. ஆயினும் எந்தக்கணமும் அதில் இருள்வந்து சூழலாம். ஆகவே என் இறுதிக் காலத்தில் என்னைப் பார்க்க வந்த தங்கள் பெருமித அன்புக்கு நான் இப்போதே ஆழ்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நேரடியாகத் தங்களிடம் பேசமுடியாமைக்கு வருந்துகிறேன். என்னுடன் தாங்கள் அடிக்கடி வாதிட்ட செய்தியில் எக்காரணத்தாலாவது இதுவரை எத்தகைய மனமாற்றமும் அடையாவிட்டால், குறித்த சமயம் வரும்போது, தாராளமாக அவளைத் தம் இல்லப் பெண்டிரில் ஒருத்தியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவள்பற்றிய பெருங்கவலையுடன் தான் நான் அவளை விட்டுச் செல்கிறேன். உலகிலுள்ள ஒரு பொருளுடன் நான் கொண்டுள்ள இத்தகைய பாசம் நான் இது நாள்வரை விரும்பி வேண்டிக்கொண்டுள்ள புதுவாழ்வை அடையும் வகையில் எனக்குத் தடையாய் இருக்குமோ என்றுகூட அஞ்சுகிறேன்’ என்று அவள் கூறியனுப்பினாள். துறவு நங்கையின் படுக்கையறை அருகிலேயே இருந்தது. இடையேயுள்ள திரையும் மெல்லியது. ஆகவே சோனகனிடம் துறவுநங்கை செய்திகூறியனுப்பிய சமயம் அவன் அவ்வப்போது அவளது தளர்ந்த, ஆர்வக்குரலைக் கேட்க முடிந்தது. சோனகன் இப்பால் வந்த பின்னும் அவள் யாரிடமோ பேசினாள். ‘எவ்வளவு தயவு அவருக்கு! எவ்வளவு கனிவுடன் விசாரிக்கிறார். நம் குழந்தை இதை அறிந்து நயமுடன் நன்றி தெரிவிக்கும் வயது அடையவில்லையே என்றுதான் வருந்துகிறேன்!’ என்றாள் அவள். இது கேட்ட கெஞ்சி சோனகனிடமே பேசினான். ‘இது தயவு பற்றிய செய்தியே யல்ல. இவ்வளவு ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் இந்தக் காரியத்தில் நான் உறுதியாயிருப் பதிலிருந்தே காணலாம், மிக ஆழ்ந்த உணர்ச்சி என்னை இதில் தூண்டுகிறது என்பதை! இந்தக் குழந்தையைக் கண்டதுமுதல் அதன் மீது விசித்திரமான ஏதோ ஒருபாசம் என்னை ஆட்கொண்டிருக்கிறது - அது இந்தப் பிறப்புக்குமட்டும் உரிய பாசமாய் இருக்கமுடியாது. உண்மையில் நீங்கள் எவ்வாறு வேண்டுமானாலும் கருதலாம், அச்சிறுமியின் குரலைக் கேட்க வேண்டுமென்று எனக்கு இப்போது ஆவலாய் இருக்கிறது. நான் போகுமுன் அவளைச் சிறிது வரவழைப்பீர்களா?’ என்று கேட்டான். சோனகன் மெல்ல மறுமொழி பகர்ந்தாள். ‘பாவம், சிறுபிள்ளை! இதற்குள் தூங்கிப் போய்விட்டது. தன்னைச் சூழ்ந்த இன்னல்களைக்கூட அது அறியவில்லை. என்றாள். ஆனால் அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, பெண்டிரறையில் ஒரு மெல்லடி ஓடிச் செல்வது கேட்டது. திடுமென ஒரு புதுக்குரலும் கேட்டது. ‘பாட்டி, பாட்டி! மலைப் பக்கத்தில் நம்மைக் காண வந்தாரே, இளவரசர் கெஞ்சி. அவர் இப்போது உங்களைப் பார்ப்பதற்கென்று வந்திருக்கிறாராம். அவரை ஏன் வரவழைத் துப் பேசக்கூடாது, பாட்டி!’ என்று அக்குழந்தை பேசிற்று. ‘உசு, சும்மா இரு, குழந்தை!’ என்று பணிப் பெண்கள் வாயமர்த்த முயன்றனர். கெஞ்சி கேட்க அதுபேசி மதிப்புக் குலைக்கிறதே என்று அவர்கள் கலவரமடைந்தனர். ஆனால் குழந்தை அமையவில்லை, மேலும் கலகலவென்று பேசிற்று. ‘ஊகூம்! நான் ஒன்றும் தெரியாமல் பேசவில்லை. இந்த இளவரசரைப் பார்த்ததனால் தன் உடல் நலம்கூடத் தேறிற்று. என்றுதான் பாட்டி சொன்னாளே! இப்போதும்....’ குழந்தையின் துடுக்குப் பேச்சுகள் இடத்துக்கும் சூழலுக்கும் ஒவ்வாதவை என்றே பெண்டிர் கருதினர். அவள் பேச்சைக் கேட்டும் கேளாததுபோலப் பேசாதிருந்தனர். ஆனால் இப்பேச்சு கெஞ்சிக்கு மகிழ்ச்சி ஊட்டிற்று. அவன் தான் கருதியபடி நேரே அவளைக் காணாமலே திரும்பித் தன் வீடு சென்றான். போகும் போது அவன் குழந்தையின் பேச்சுகளை நினைத்துக் கொண்டான். அது இன்னும் சிறு குழந்தைத் தன்மை நிரம்பியதே என்பதை அவன்கூட ஒத்துக்கொள்ள வேண்டியதா யிருந்தது. ஆயினும் அத்தகைய சூதற்ற குழந்தை உள்ளத்தைப் பழக்கி உருவாக்குவது எவ்வளவு எளிது என்று அவன் எண்ணிக் கொண்டான். மறுநாள் அவன் நேரடியாகவே சென்று பார்வையிட்டான். போனவுடன் வழக்கப்படி சிறு தாள்மடிப்பில் ஒரு பாடல் அனுப்பினான். ‘இளமை மடவன்னத்தின் இனியகுரல் கேட்டபின்னர் வளைய வளைய வந்தென் வன்படகு நாணலிடை நெளிந்து திரிவ தல்லால் நீள்நெறியில் செல்லாதே!’ இப்பாடல் சிறுமிக்காகவே எழுதப்பட்ட தோற்றத்துடன் குழந்தைப் பண்புடைய பெரிய பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அந்நிலையிலும் அது வனப்புமிக்க தாகவே இருந்தது. அதைக் கண்டதும் பெண்டிர் கலகலப்புடன் பேசிக் கொண்டனர். இது குழந்தையின் மேல்வரிச் சட்டத்துக்கு உகந்ததுதான் என்றார்கள். சோனகன் கெஞ்சிக்கு ஒரு குறிப்பு அனுப்பினான். ‘இந்த ஒரு நாள் முடியும்வரைகூடத் தன் உயிர் நில்லாதெனக் கருதி என் தலைவி தன்னை மலைக்கோயிலுக்கு எடுத்துச் செல்லும்படி பணித்தாள். இப்போதே பாதி வழி சென்றுள்ளாள். உங்கள் நல உசாவலை அவளிடம் உரியகாலம் வரும்முன் தெரிவிக்க வாய்ப்பு ஏற்பட்டால் கட்டாயம் தெரிவிப்பேன்’ என்று அவள் எழுதியிருந்தாள். இதை வாசிக்கும் நேரம் கெஞ்சியின் கண்கள் கலங்கின. இந்த இலையுதிர்காலத்து மாலை வேளைகளில் கெஞ்சியின் உள்ளம் ஓயாது கொந்தளித்துக் குமுறிற்று. அவன் வேறு ஒரு திசையில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தாலும், ஆழ்ந்த அவ் ஈடுபாட்டுக்குரிய ஆளுடன் சிறுமிக்கு இருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக, அவளைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் ஆவலும் மற்றொரு புறம் வளர்ந்து கொண்டே வந்தது. அவன் அவளை முதல் முதல் கண்ட மாலைப்போதையும், துறவுநங்கை அவளைப் பற்றி அச்சமயம் குறிப்பிட்ட பாடலையும் அவள் ஓயாது நினைத்துக் கொண்டிருந்தான். ‘இளந்தளிரைப் பேணுபவர் இனி யாரோ?’ என்று தொடங்கிய பாடலே அது. அவன் உள்ளத்தில் ஐயங்களும் எழுந்தன. அவள் என்றும் மகிழ்ச்சியளிப்பது உறுதி. ஆனால் தொடக்ககால அவா ஆர்வங்கள் அவளிடம் முழுதும் நிறைவேறாமல் போகக்கூடும். என்றாலும் இடர் துணிந்தாக வேண்டும். இடர்துணிபுக்கான தகுதி அவளுக்கு உண்டு. அவளைப் பற்றி அவன் இப்போது ஒரு பாடல் எழுதினான். ‘மருநிலத்தே உருமிகுத்த செவ்விளவேர் நின்று குருத்துயிரும் மெல்லிளம் புல்லிதழ் என்றன் கையில் திருத்தமுறக் காண்டகுநல் திருத்தகுநாள் என்றோ?’ பத்தாவது மாதம் செந்தழை விழாவை ஒட்டி சக்கரவர்த்தி ‘சுசக்குயின்’ மாளிகைக்குச் செல்லவேண்டியிருந்தது. உயர்குடி இளைஞர்கள் அனைவரும் ஆடலில் பங்குகொள்ள இருந்தனர். இளவரசர், அரண்மனை இளைஞர், பெருமக்கள் ஆகிய வரிடையே கலைத்திறன் நிறைந்த முதல்தர மக்கள் ஒவ்வொரு விழாப்பகுதிக்கும் சக்கரவர்த்தியாலேயே நேரில் பொறுக்கி எடுக்கப்பட்டனர். மன்னுரிமை இளவரசர், அரசியல் அமைச்சர்கள் முதல் குடிமக்கள் வரை எல்லாரும் இவ்விழாவுக் கான ஒத்திகைகளிலும் பயிற்சிகளிலும் ஆழ்ந் திருந்தார்கள். இச்சமயம் மலையிலுள்ள தன் நண்பர்களைப் பற்றி விசாரித்து நெடுநாளாயிற்றே என்ற எண்ணம் கெஞ்சிக்குத் திடீரென்று தோன்றிற்று. அவன் உடனே ஒரு தனித் தூதனை அங்கே அனுப்பினான். துறவி உடன் தானே மறுமொழி அனுப்பினார். அதன் முடிவில் அவர்தம் உடன் பிறந்தாளாகிய துறவுநங்கையின் சோகமுடிவு பற்றியும் தெரிவித்திருந்தார். ‘சென்ற மாதம் இருபதாம் நாளில் இறுதி அணுகிற்று. மனிதஇனத்துக்குரிய பொது நிகழ்ச்சிதான் இது. ஆனாலும் எனக்கு அதன் துயர் பெரிதாகவே உள்ளது’ என்று அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். அதை வாசித்தவுடன் கெஞ்சிக்கும் வாழ்வின் நிலையாமை பற்றியும் சிறுமை பற்றியும் பெருத்த வைராக்கியம் தோன்றிற்று. மாண்ட அணங்கு - குழந்தையின் எதிர்காலம் பற்றியே அவ்வளவு கவலை காட்டியிருந்தாள். தன் தாயின் மறைவு அவனுக்கு முற்றிலும் நினைவில்லை. ஆனால் அது பற்றிய ஏதோ ஓர் அவல உணர்ச்சி அவன் உள்ளுணர்வில் மிதந்துலவிக் கொண்டிருந்தது. இது அவன் துயர்த் தோழமையுணர்ச்சியை எழுப்பி அக்கடிதத்துக்கு ஆர்வமூட்டிற்று. அதற்கு மறுமொழி எழுதும்போது, அக்கடிதம் பெற்றது குறித்துப் பணி நங்கை சோனகன் சிறிது பெருமை கொள்ளாமலிருக்க முடியவில்லை. இறுதி வினை முறைகளும் துயர்க் கொண்டாட்டமும் முடிந்தபின் சிறுமி தலைநகருக்குக் கொண்டு வரப்பெற்றாள். இது கேட்டபின் சிலநாள் ஆறவிட்டு, கெஞ்சி தானாக ஒரு அமைதியான இரவில் அங்கே சென்றான். அந்த மனை பாதி பாழடைந்து தனிமையின் நிழல் படர்ந்ததாயிருந்தது. அழிவின் கை அதன் மீது படிந்திருந்தது. அதில் வாழவிருக்கும் சிறுமியின் உள்ளத்தில் அதன் சோகத்தடம் பதிவது நல்லதல்ல என்று அவனுக்குத் தோன்றிற்று. முன்அறிமுகப்படுத்தப்பட்ட அறைக்கே அவன் இட்டுச் செல்லப்பட்டான். இங்கே தேம்பித் தேம்பி அழுத வண்ணம் அழுகையின் இடையிடையே சோனகன் தன் தலைவியின் இறுதிப் பிரிவு பற்றிய முழுவிவரங்களும் எடுத்துரைத்தாள். அது அவனுக்கு மிகவும் உருக்கமாய் இருந்தது. அவள் உள்ளத்தையும் அது ஆட்டி அலைத்தது. சிறுமி பற்றிப் பேச்சுத் திரும்பிற்று. ‘என் இளந்தலைவியை நான் இயல்பாக அவள் தந்தையாகிய இளவரசர் பெருமானிடமே அனுப்பி வைத்திருப்பேன். ஆனால் அம்மாளிகையில் அவள் தாய் பட்டபாட்டை என்னால் மறக்க முடியவில்லை. என் இளந்தலைவி தான் செல்லும் இடத்தின் தன்மையும் மக்கள் உணர்ச்சிகளின் நன்மை தீமைகளும் அறியாத ஒரு கைக் குழந்தையாய் இருந்தால்கூட, அங்கே அனுப்பத் துணிந்திருக்கக்கூடும். ஆனால் இப்போது அவள அந்நிலை கடந்து வளர்ந்துவிட்டாள். அவளை அன்பில்லாது அயவலவராக நடத்தும் சிறுவரிடையே அவள் காலம் தள்ள நேரும். இறுதிநாள்வரை துயருக்காளான அவள் பாட்டியும் இதுதான் கூறிக்கொண்டிருந்தாள். அத்துடன் நீங்கள் அவளிடம் மிகவும் பரிவு காட்டியுள்ளீர்கள். அவள் உங்களிடம் வந்தால், ஒரு சில நாட்களுக்கு மட்டும் வருவதானால்கூட, என் நெஞ்சில் ஒரு பெரும்பளு குறையும். அவள் எதிர்காலத்தைப் பற்றிக்கூட கவலைப்படமாட்டேன். அதுப்பற்றிப் பேசி உங்களுக்குத் தொல்லை தரமாட்டேன். உண்மையில் அவள் நலத்தை உன்னினால், நீங்களே அவளைத் துணைவியாகக் கொள்ளும் அளவு அவள் சிறிது வயதேறியவளா யிருந்தாளில்லையே என்று மட்டும்தான் நான் வருத்த மடைகிறேன். ஆனால் அவள் வளர்ப்புமுறையே அவள் வயதுக்குக் கூடச் சற்று மிகுதியாக அவளுக்குக் குழந்தைப் பண்பு ஊட்டியுள்ளது.’ என்றாள். கெஞ்சி இடைமறித்தான். ‘அவள் குழந்தை இயல்புபற்றி ஏன் இவ்வளவு ஓயாமல் நினைவூட்டுகிறீர்கள்? அந்தப் பருவமும் துணையின்மையும் தான் என் மனத்தில் அவளைப் பற்றிய இரக்கப் பாசத்தை உண்டு பண்ணின. ஆயினும் எங்கள் உயிர்களிடையே அதைவிட ஆழ்ந்த பாச இணைப்பு உண்டு என்பதை முற்றும் நான் ஏன் உங்களிடம் ஒளிக்க வேண்டும்? நாம் இப்போது செய்த முடிவை நானே அவளிடம் நேரில் சொல்ல விரும்புகிறேன்.’ என்று கூறி அவன் ஒரு பாடலும் பாடினான். அந்தப் பாடலில் அவன் மெல்ல உவமை நயத்துடன் ‘நாணல் வளரும் கரையில் மீளுதற்கே மோதும் அலைபோலத்தான் நான் வந்து வந்து செல்ல வேண்டுமா?’ என்று கேட்டான். ‘நேரடியாகப் பார்த்தால் அவள் மிகவும் அஞ்சிவிடுவாளா?’ என்றும் வினாவினான். ‘இல்லை, இல்லை! சிறுமியை நான் வரவழைத்துக் காட்டத்தான் போகிறேன். அவளைக் காணாமலே உங்களைத் திருப்பி அனுப்பப் போகிறேன் என்று உங்களிடம் யார் சொன்னது?’ என்றாள் அவள். ஆனால் ‘சிறுமியாகிய நாணல், அலையுடன் மிதந்து சென்றுவிடும் என்று எதிர்பார்க்க முடியாது’ என்று அவள் தன் எதிர் பாடலில் கூறியபோது தான் அவன் அவள் உட்கோளை நன்கு உணரமுடிந்தது. அவள் பழகிய சரிசமத் தொனிகூட இப்போது அவனைப் புண்படுத்தவில்லை. சிறுமிக்காக அவன் காத்துக் கொண்டிருக்கும்போது தனக்குள் மெல்லப் பாடிக் கொண்டிருந்தான். ‘மலையது கடக்க இத்தனை மலைப்பு ஏன்’ என்ற பாடலே அது. அச்சமயம் பணிப்பெண்டிர் அவன் தோற்றத்தில் ஈடுபட்டு அவனை உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். அந்த இனிய கணத்தை அவர்கள் தம் வாழ்வில் நெடுநாள் மறக்கவில்லை. சிறுமி படுக்கையில் கிடந்து பாட்டியை நினைந்து அழுது கொண்டிருந்தாள். பணிப் பெண்களில் ஒருத்தி அவளருகே சென்று, ‘நீண்ட போர்வையணிந்த ஒரு பெருமகனார் உன்னுடன் பேசி விளையாட வந்திருக்கிறார். அவர் உன் தந்தை போலிருக்கிறார்’ என்று அவளை அழைத்தாள். இது கேட்டதும் அவள் குதித்தெழுந்தாள். ‘அம்மா, போர்வையணிந்த பெருமகனாரா! அவர் எங்கே? அவர் தான் என் தந்தையா?’ என்று கூறி அறைக்குள் ஓடிவந்தாள். கெஞ்சி புன்முறுவலுடன் அவளை வரவேற்றான். ‘இல்லை, உன் தந்தையல்ல நான், ஆனால் உன் அன்பைப் பெற மிகவும் விரும்பும் வேறொருவர். வாம்மா, இப்படி!’ என்று அழைத்தான். மற்றவர்கள் கெஞ்சி இளவரசனைப்பற்றிப் பேசுவதிலிருந்து அவர் யாரோ மிகப் பெரிய மனிதர் என்று அவள் எண்ணியிருந் தாள். ஆகவே ‘போர்வையணிந்த பெருமகனார்’ என்று தான் அவரைக் குறிப்பிட்டதுபற்றி அவர் கோபப்படக் கூடும் என்று அவள் அஞ்சினாள். செவிலியிடம் நேரே ஓடி, தனக்கு உறக்கம் வருவதாகக் கூறிப் பாசாங்கு செய்தாள். ‘என்னிடம் நீ இவ்வளவு வெட்கம் கொள்ளக்கூடாது. உனக்கு உறக்கம் வந்தால், என் மடிமீதே வந்து படுத்துக்கொள். என்னிடம் ஏதாவது பேச மாட்டாயா?’ என்று மீண்டும் பாசமுடன் பேசினான் கெஞ்சி. ‘பாருங்கள், என்ன பண்படாக் குழந்தை என்று பாருங்கள்’ என்று கூறிச் சிறுமியை அவனிடம் தள்ளினாள் சோனகன். அவள் பேசாமல் அவன்பக்கம் நின்றாள். அவன் கைவிரல்கள் அவள் மென் கூந்தலைப்பின் சென்று தட்டிவிட்டன. அது அவள் ஆடை மீது கொத்துக் கொத்தாக விழுந்தது. அவள் தோள்களைச் சுற்றி அது ஆடையினுள் சிக்கிக் கொண்டது. அவன் அவள் கையைத் தன் கையால் பற்றினான். ஆனால் பழக்கமில்லாத ஒருவர் தொட்டதுணர்ந்து அவள் உடனே கையை உதறிக் கொண்டு பெண்கள் அறைக்குள் பாய்ந் தோடினாள். ‘கண்ணே, இப்படி என்னைக் கண்டு ஓடாதே!’ இப்போது உன் பாட்டி போனதால், நீ அவளுக்குப் பதில் என்னை நேசிக்க வேண்டும்’ என்று கூறிக் கொண்டு அவளைக் கெஞ்சி பின்பற்றினான். ‘இது சற்று மிகையாய்விட்டது, ஐயனே! இவ்வளவு சிறு குழந்தையிடம் இதெல்லாம் கூறலாமா? மேலும் தன்னை நேசிக்கும்படி ஒருவர் கட்டளையிடவா முடியும்?’ என்று சோனகன் பிதற்றினாள். ‘உடனடியாக முடியாது தான். ஆனால் மனம் வைத்துச் செயலாற்றும் இத்தகைய இடத்தில் நாட்பட நாட்பட என்னென்ன புதுமைகள் நடக்கின்றன என்று பின்னால் நீங்கள் காணலாம்’ என்றாள் கெஞ்சி. மழை கல்மழையாக ஆலங்கட்டிகளைப் பெய்து கொண்டிருந்தது. அது புயலார்ந்த பயங்கர இரவு. இந்த ஆளற்ற சோகநிழல் படர்ந்த பகுதியில் சிறுமியை இவ்விரவில் விட்டுச் செல்ல மனமில்லாதவனாகக் கெஞ்சி மறுகினான். இதையே அவளருகில் இருப்பதற்குச் சாக்காகக் கொண்டான். ‘இடைத் தட்டிக் கதவை மூடிவிடுங்கள். இந்த அச்சந்தரும் இரவில் நான் இங்கேயே தங்கி இராக் காவலனாக இருக்கிறேன். எல்லாரும் என் அருகிலேயே வந்திருங்கள்’ என்று அவன் பெண்டிரிடம் கூறினான். இத்துடன் நில்லாமல், இயல்பாக எதுவும் பழக்கப்பட்டுச் செய்பவன்போல, சிறுமியைத் தன் கையில் தூக்கி எடுத்துக்கொண்டு படுக்கைக்கு இட்டுச் சென்றான். மெல்லியலார் இதுகண்டு மலைப்பும் திகைப்பும்கொண்டு வாளா இருந்து விட்டனர். அவனது ஆண்மைச் செயல்கள் சோனகனுக்குக் கலக்கமும் அச்சமும் உண்டுபண்ணினாலும், கவவரமடைய எதுவுமில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியவளாகவே இருந்தாள். சிறுமியின் உடல் நடுங்கிற்று. அவன் தன்னை என்ன செய்வானோ என்று தெரியாமல் அவள் மலைப்புற்றாள். அதே சமயம் அவளை அவன் வாரி எடுத்த சமயம் அவன் பட்டுப்போன்ற மென்மை வாய்ந்த உடலின் சில்லிட்ட தொடர்பு அவள் உடலெல்லாம் புல்லரிக்க வைத்தது. இதை அவன் கண்டான். கண்டும் உரிமையுடன் அவள் புற ஆடை அகற்றி மெல்லப் படுக்கையில் கிடத்தினான். அவள் அச்சம் தெளிய வில்லை என்று கண்டும் காணாதவன் போல அவளிடம் பாசத்துடனும் நயத்துடனும் உரையாடினான். ‘ஓரிடமிருக்கிறது, அழகான படங்களும் பொம்மைகளும் மற்ற விளையாட்டுப் பொருள்களும் நிறைந்தது. அந்த இடம் உனக்குப் பிடிக்குமோ என்னவோ, உன்னை அங்கே இட்டுச்செல்ல விரும்புகிறேன்’ என்றான். அவள் இயல்பாக விரும்பும் பலசெய்திகளைப் பற்றி அவன் பேசிக் கொண்டே இருந்தான். இதன்பயனாக அவள் அச்சம் முற்றிலும் தெளிந்து அவனுடன் அவள் அமைதியாக இருந்தாள். ஆனாலும் நெடுநேரம் அமைதியற்ற நிலையில் படபடத்தாள். தூக்கம் அவளை அணுகவில்லை. வெளியே புயல் விடாமல் தொடர்ந்தது. ‘இந்தச் சீராளர் இங்கே வராமல் போனால், நாம் எப்படித்தான் இங்கே பொழுது கழித்திருப்போமோ’ என்று பெண்களிடையே ஒருத்தி கூறினாள். அத்துடன் ‘அவர் வராவிட்டால் என்னளவில் எனக்கு மிகவும் பயமாகவேதான் இருக்கும். ஆனாலும் நம் இளந்தலைவி அவர் வயதுக்குச் சரியாய் இன்னும் சற்று வளர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்’ என்றாள். சோனகன் மட்டும் கெஞ்சியைவிட்டு அகலவில்லை. அவள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்த அவநம்பிக்கை இன்னும் முற்றிலும் அகலாதிருந்தது. ஒருமட்டாகப் புயல் அமைந்தது. இரவு நெடுநேரம் கழிந்துவிட்டது. ஆயினும் இவ்விருட்டில் பொழுது செல்வதுகூட யாருக்கும் அன்று வியப்புத்தரவில்லை. பிரியும் சமயம் அவன் சோனகனிடம் பேசினான். ‘அவள் இப்போது எனக்கு உயிருக்கு உயிராய் விட்டாள். சிறப்பாக, துன்பமிக்க இந்தச் சமயத்திலே, ஒரு சில மணி நேரத்துக்குக்கூட அவளைவிட்டுப் பிரிவது எனக்கு வருத்தமாகவே இருக்கிறது. நான் விரும்பும் போதெல்லாம் அவளைச் சென்று பார்க்கத்தக்க ஓரிடத்தில் அவளை வைத்துப் பேணவேண்டுமென்பது என் விருப்பம். இப்படிப்பட்ட இடத்தில் வாழ அவளுக்குப் பயமில்லாதிருப்பது எனக்கு அதிசயமாகவே இருக்கிறது’ என்றான் அவன். ‘அவளைவந்து இட்டுக் கொண்டுபோக அவள் தந்தை விரும்பியுள்ளார்! ஆயினும் இழவுநாட்கள் நாற்பத்தொன்பதும் முடியுமுன் அது நடைபெறக் கூடியதன்று என்றிருக்கிறேன்’ என்று சோனகன் கூறினாள். கெஞ்சி இது கேட்டுத் தன் கருத்துரைத்தான். ‘சாதாரணச் சூழ்நிலையில், அவளை அவள் தந்தை எடுத்து வளர்ப்பது இயல்பானதே. ஆனால் இதுவரை முற்றிலும் வேறு ஆட்களாலேயே வளர்க்கப்பட்ட நிலையில், அவளுக்கு அவரும் ஒன்றுபோலத்தான், நானும் ஒன்று போலத்தான். அதுமட்டு மன்று, அவளை நான் கண்டு பழகிய காலம் சிறிதானா லும், அவள் தந்தை அவள்மீது கொள்ளத்தகும் பாசத்தைவிட, என் பாசம் எவ்வளவோ பெரிதாகும். சிறுமியின் தலைமுடி கோதியாவாறே அவன் பேசினான். பின்னும் பல தடவை பின்னோக்கி ஏங்கியவாறே அவன் அறையைவிட்டு வெளியேறினான். இப்போது திண்பனியின் வெண்டிரை எங்கும் நீக்க மற நிறைந்திருந்தது. புல் பரப்பெங்கும் செறிந்து பனி உறைந்து கிடந்தது. இன்றைய நிகழ்ச்சி ஒரு மெய்யான காதல் தொடர்பாயிருந்திருக்க வேண்டும் என்று விருப்பம் திடீரென அவனுக்கு ஏற்பட்டது. போகும் வழியில் தனக்குப் பழக்கமான ஒரு மனை இருப்பதும் நினைவுக்கு வந்தது. அவன் அங்கே கதவைத் தட்டினான். யாரும் குரல் கொடுக்கவில்லை. உரத்த குரலுடைய பணியாள் ஒருவனை அழைத்து ஒரு பாடலைக் கூறி அதைப் பாடும்படி அவன் கட்டளையிட்டான். ‘காலை உறைபனி காரிருள் இரவென்ன மாலுறச் சூழினும் வாழுந் துணைவாயில் மேலுறச் செல்லாதென் மெல்லடிகள் தயங்கினவே!’ இரண்டு தடவை பணியாள் கூவியபின்னரே மனைத்தலைவி துடுக்குத் தனமிக்க தன் வேலையாளை அனுப்பினாள். ‘காலை உறைபனியில் மாலுற்றீ ராயின் கடுகி வரிச்சட்ட வாயில் தடையென்று மேலுறச் செல்லாது நிற்குமோ நல்லடிகள்’ இப்பாடலைப் பாடிவிட்டு மறுமொழிக்குக் கூடக் காத்திராமல் அவள் சரேலென்று உள்ளே சென்றுவிட்டாள். கெஞ்சி பின்னும் சிறிது தயங்கி நின்றான். யாரும் வாயில்பக்கம் வரவில்லை. நேரம் முற்றிலும் விடிந்துவிட்டது. கிளர்ச்சியற்ற நிலையில் அவன் தன் மாளிகைக்குப் போக இச்சமயம் விரும்பவில்லையானாலும், வேறுபுகலின்றி முகம் திருப்பினான். ஆனால் அரண்மனையில் சென்று படுக்கையில் கிடந்து சிறுமியின் மழலைப் பேச்சையும் நடையையும் எண்ணியபோது அவன் முகத்தில் மீண்டும் புன்னகை தவழ்ந்தது. நண்பகலில் அவன் எழுந்து அவளுக்கு ஒரு கடிதம் வரைய அமர்ந்தான். பலதடவை சரியான சொற்கள் வராததால் அடித்தடித்து எழுத முற்பட்டு, இறுதியில் தூரிகையை எறிந்தான். கடிதத்துக்குப் பதில் சில படங்களையே அனுப்புவதென்று முடிவு செய்தான். துறவு நங்கையின் மனைக்கு வருவதாக இளவரசன் ஹியோபுகியோ நீண்ட நாட்களாக உறுதி கூறி வந்தபின் அன்றைக்கே வருகை தந்தான். பல ஆண்டுகளுக்கு முன் கண்டதை விட அம் மனை மிகவும் பாழடைந்தும் பழமையடைந்தும் கிடந்ததாக அவனுக்குத் தோற்றிற்று. இடிந்து தகர்ந்த இப்பரப்பில் ஒருசிலராக வாழ்பவர் மன நிலையை அவன் ஊகித்துணர்ந்தான். தன்னைச் சுற்றிப் பார்த்தவாறு அவன் செவிலி சோனகனை நோக்கினான். ‘இத்தகைய இடத்தில் குழந்தையை ஒரு கணம்கூட வைத்திருக்கக் கூடாது. அவளை நான் உடனே கொண்டு போவது நல்லது. என் மாளிகையில் எவ்வளவோ இடவசதியிருக்கிறது. உனக்கும் அரண்மனைத் தோழியாக ஒரு வாய்ப்புத் தேடித் தந்துவிடுகிறேன். சிறுமிக்கு அங்கே நல்ல சூழலாகவே இருக்கும். ஏனென்றால் விளையாட நிறையச் சிறுவர் சிறுமியர் இருக்கிறார்கள். என்றான். அவன் சிறுமியைத் தன் அருகே அழைத்தான். கெஞ்சியின் கைகளில் அவள் தங்கியது முதல் அவள் ஆடையில் அவன் ஆடையின் நறுமணம் தங்கியிருந்தது. இளவரசன் ஹியோபு கியோ அதனைக் கூர்ந்து கவனித்த வண்ணம், ‘உன் ஆடை களுக்கு எவ்வளவு நறுமணம் ஊட்டப்பட்டிருக்கிறது’ என்றான். ஆனால் கூறி வாய்மூடும் சமயமே அவள் துயர் நிலையிலிருப்பது அவனது நினைவுக்கு வந்தது. இது அவனுக்கு மனக் குழப்பம் உண்டு பண்ணிற்று. அடிக்கடி நான் இக்குழந்தையின் பாட்டியிடம் கூறுவதுண்டு. ‘குழந்தையை இடையிடையே என்னிடம் அனுப்பி, எங்களுடன் பழகும்படி விடு’ என்று. ஏனெனில் ஆண்டாண்டாக நோயால் நலிவுற்ற ஒருவருடனேயே அடைந்து கிடப்பது இத்தகைய சிறு குழந்தைக்கு மிக விசித்திரமான வளர்ப்புச்சூழல் ஆகும். ஆனால் என்ன காரணத்தினாலோ அவள் என்னிடம் நேசமாயில்லை. அதுதவிர, வேறு ஒரு திசையிலும் வெறுப்பு இருந்தது. இன்னும் இந்தச் சூழ்நிலையிலுங்கூட அதை மாற்றமுடியுமோ என்னவோ.......’ அவன் பேசி முடிக்குமுன் சோனகன் தடுத்துரைத்தாள். ‘அப்படியானால் தன்நிலை சீர்ப்படுமுன் அவள் அங்கே வரத் தேவையில்லை’ என்று வெட்டிப்பேசினாள். நாட்கள் பல சென்றும் சிறுமியின் துயர் நிலை நீடித்தது. எதுவும் உண்ணாமல் பருகாமல் அவள் உடல் சருகாக மெலிந்தது. ஆனால் அந்நிலையிலும் அவள் அழகு ஒரு சிறிதும் வாட்டமடையவில்லை. கெஞ்சி அவளைக் கனிவுடன் நோக்கினான். ‘இனி நீ மனம் வருந்தி அழவே கூடாது. மனிதர் இறந்தால் திரும்பி வரப் போவதில்லை. அதைத் தீரத்துடன் தாங்கித்தான் ஆகவேண்டும். அத்துடன் இப்போது எல்லாம் நலமாகத்தான் இருக்கிறது. பாட்டி இருந்த இடத்தில் நான் வந்திருக்கிறேன்’ என்றுகூறி எழுந்தான். நேரம் அதிகமாய்விட்டது. அவனால் போகாமலிருக்க முடியவில்லை. ஆனால் அவன் திரும்பும் நேரத்திலும் அவள் அழுகை விட்டபாடில்லை. உண்மையில் அவன் ஆதரவில் நாட்கழிப்பது என்பது அவளுக்கு ஆறுதல் தந்ததாகத் தெரியவில்லை. அவள் மேலும் வாய்விட்டழுதாள். இளவரசனுக்கும் கண்ணீர் வந்தது. அவள் தன்னாலியன்ற மட்டும் அவளுக்கு ஆறுதல் கூற முயன்றான். ‘இவ்வளவு துயரம் வேண்டாம், குழந்தாய்!. நாளையோ, நாளை மறுநாளோ நான் உன்னை வரவழைத்து என்னுடன் வைத்துக் கொள்கிறேன்’ என்றான். அப்படியும் சிறுமி அழுது அழுது அரற்றிக் கொண்டு தானிருந்தாள். அவள் துயர் ஆற்றி வேறு சிந்தனைகளில் நினைவு ஓடவிடும் வழி யாருக்கும் தெரியவில்லை. உண்மையில் அவள் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலை கொண்டு தேம்பவில்லை. அதுபற்றி அவள் இன்னும் எண்ணவே தொடங்கவில்லை. பல ஆண்டுகளாக அவள் ஒரு கணங்கூடத் துறவுநங்கையைவிட்டுப் பிரிந்திருந்தவள் அல்லள். அத்தோழமை இழந்தே அவள் தவித்தாள். அவள் இளமையின் மென்னெகிழ்வுத் திறம்கூட அத்துயராற்ற உதவவில்லை. அதன் கொடுமையால் வழக்கமாக அவள் விளையாடும் விளையாட்டுப் பொருள்கள் கூடக் கவனிப்பாரற்றுக் கிடந்தன. பகல் நேரத்தில் ஒருசில கணங்கள் அவள் இப்பிரிவை மறந்தது போலத் தோற்றினாலும், இரவு அவள் ஒரே சோக உருவாகக் காட்சியளித்தாள். இந்நிலைமை எத்தனை நாள் நீடிக்குமோ என்று சோனகன் கதிகலங்கினாள். குழந்தையை ஆற்றும் வகையறியாமல் அவளே அடிக்கடி விம்மிவிம்மி அழுதாள். கெஞ்சியிடமிருந்து கோரெமிட்சு அவர்களுக்குச் செய்தி கொண்டு வந்தான். அவர்களைப் பார்க்க அவன் புறப்பட்ட சமயம் அரண்மனையிலிருந்து திடீரழைப்பு வந்ததால் அவன் பயணம் தடைப்பட்டது. ஆகவே கோரேமிட்சு மூலம் சிறுமிபற்றிய தகவல் கேட்டனுப்பினான். கோரெமிட்சுவுடன் கெஞ்சியின் சில பணியாளர்களும் வந்திருந்தனர். அவர்கள் இரவு மனைக்குக் காவலாய் இருக்கும்படி அனுப்பப்பட்டிருந்தனர். ‘இது அவர்கள் அன்புக்கு ஒரு சிறந்த அறிகுறிதான். ஆனால் இது காட்டப்படும் இடந்தான் தகுதியற்றது. ஏனெனில் இச்செயல் அவருக்குப் பெரிதல்லவானாலும், சிறுமியின் தந்தை இது கேட்டால் மணமான ஒருவரிடம் சிறுமியை ஒப்படைத்து விட்டோமென்று வேலையாட்களைக் கண்டிப்பார். இவை யெல்லாம் நாங்களே முன்னின்று ஏற்பாடு செய்தவை என்றே அவர் கருதுவார் என அவள் எண்ணினாள். அத்துடன் வேலைக்காரர் பக்கம் திரும்பி, ‘இந்தக் காவலர் செய்தி பற்றி நீங்களோ, சிறுமியோ அவரிடம் எதுவும் வாய்நழுவிக் கூறிவிடாமல் கவனித்துக் கொள்ளுங்கள்’ என்றாள். ஆனால் இத்தகைய தடைஎச்சரிக்கைகளை உணருப வளாயில்லை சிறுமி. பல குறைகள் கூறியழுதபின் சோனகன் மீண்டும் கோரெமிட்சுவிடம் பேசினாள். ‘இறுதியில் எப்படியாவது சிறுமி கெஞ்சி இளவரசனின் மனைவியாகவே போகிறாள் என்பதில் எனக்கு ஐயமில்லை. அது ஊழ் வகுத்த வகுப்பு என்றே தோற்றுகிறது. ஆனால் இப் போதோ இன்னும் நீண்ட காலம் வரையிலோ அத்தகைய பேச்சுக்கு இடமேயிருக்க மாட்டாது. இந்நிலையில் அவர் இப்படி அவசரக் குடுக்கையாக எதற்காகத்தான் துடிக்கிறாரோ, நானறியேன்! இன்று தான் இளவரசர் ஹியோபுகியோ இங்கே வந்திருந்தார். அவள்மீது எப்போதும் ஒரு கண்ணாயிருக்க வேண்டுமென்றும், எத்தகைய தவறான தொடர்புக்கும் இடமளிக்கக்கூடாதென்றும் எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறார். அவர் அவ்வாறு கூறியபோது உம் தலைவர் சில உரிமைகளை மேற்கொள்ளும்படி விட்டுக் கொடுக்க நேர்ந்ததுபற்றி என் உள்ளம் உண்மையிலேயே சுருக்கென்றது’ என்றாள். இதைக் கூறியதே, எங்கே கோரெமிட்சு இதைத் தவறான பொருளில் எடுத்துக் கொள்வானோ என்று அஞ்சியவளாய் அவள் சிறிதுநேரம் தலையை அசைத்துக் கொண்டு வாளா இருந்தாள். அவள் அஞ்சியது தவறன்று. ஏனெனில், அப்படி என்ன தவறான உரிமைகளை மேற்கொண்டாரோ என்று கோரெமிட்சு எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். கோரெமிட்சு வந்து கூறிய விவரங்கள் அறிந்ததும், குழந்தையின் நிலைபற்றிக் கெஞ்சிக்கு நிரம்ப இரக்கம் ஏற்பட்டது. அவளை உடனடியாகவே சென்று பார்க்கத் துடித்தான். ஆனால் இவ்வாறு அடிக்கடி செல்வதால், மூடமக்கள் ஏதேனும் தப்பெண்ணம் கொண்டுவிடுவார்களே என்றும் தயங்கினான். அவளைப்பற்றி இடைவிடாது கவலை கொள்ளாமலிருக்க ஒரேவழி- அவளைத் தன் மாளிகைக்குக் கொண்டுவந்து அங்கே வைத்துப் பேணுவதே என்பது அவனுக்குத் தெற்றென விளங்கிற்று. பகல் முழுவதும் அவன் பல கடிதங்கள் வரைத் தனுப்பினான். இரவில் கோரெமிட்சுவை அனுப்பினான். மறுபடியும் அவசர வேலைகள் தலையிட்டுத் தன் வருகையைத் தடைப்படுத்தியதாகவும், அதற்காக வருந்தி மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்தான். ஆனால் சோனகன் பதில் அவனைத் திடுக்கிட வைத்தது. மறுநாளே சிறுமியை அழைத்துச் செல்வதென்று அவள் தந்தை முடிவு செய்துவிட்டதாகவும், அதனால் எவரையும் வரவேற்க முடியாமல் புறப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் அவள் கண்டிப்பாகக் கூறியனுப்பியதாக தெரிவித்தான் அவன். ‘இந்தப் பஞ்சடைந்த பழைய வீட்டில் இருந்து நெடுநாள் ஆய்விட்டதனால், இதை விட்டுப் போக நேர்வதை எண்ணி வேலையாட்களெல்லாம் பரபரப்புடன் இருக்கின்றனர்..’ என்று வறண்ட குரலில் அவள் விளக்கம் வந்தது. கோரெமிட்சு மீண்டும் சென்றுபேச முயன்றபோது அவள் அவனைப் பாராமல் துன்னலிலேயே கருத்து முற்றும் செலுத்தியிருந்தாள். ஆகவே அவனும் பேசாது மீண்டான். கெஞ்சி இச்சமயம் நெடுமாடத்திலிருந்தான். வழக்கம் போலவே இன்னும் ஆய் இளவரசியின் திருவாயிலிருந்து ஒரு சொல்கூட அவனால் வருவிக்க முடியவில்லை. அவன் மனம் சோர்வடைந்து மறுகிற்று. அவன் யாழை எடுத்து அவலக் குரலில் பாடினான். ‘மழைநாள் இரவில் மலை நதி தாவி நிலமது அதிர - நீ ஓடுவ தேனோ?’ என்ற பண் மீட்டினான். பாட்டின் சொற்கள் ஆய் இளவரசியைச் சுடாது சுட்டன. அவள் பாடலிலும் உணர்ச்சி ததும்பி நின்றது. இந்நிலையிலே கோரெமிட்சு நெடுமாடத்துக்கு வந்தான். கெஞ்சி உடனே அவனை வரவழைத்து அவள் சென்ற விவரம் கேட்டான். ஆனால் அவன் கூறிய மாற்றம் கெஞ்சிக்குக் கலக்கம் தந்தது. தந்தையின் மாளிகைக்குச் சிறுமி ஒரு தடவை போய்விட்டால், பின் அவள் விரும்பினால்கூட அவளை அங்கிருந்து கொண்டு வருவ தென்பது இயலா நடவடிக்கையாவதுடன், குழந்தை கடத்திச் செல்லும் கீழ்த்தரத் திருட்டாகவே எங்கும் தூற்றப்பட்டுவிடும். அதைவிட இப்போதே துணிந்து, சிறுமியின் உரிமையில் போட்டியிடும் இவ்வெதிரியின் செயலுக்கு முந்திக் கொண்டு, அவளை உடன் தானே தன் மாளிகைக்குக் கொண்டுவந்து விடுவது எவ்வளவோ சிறந்தது என்று அவன் எண்ணினான். அவன் தன் துணிவைக் கோரெமிட்சுவுக்குத் தெரிவித்தான். ‘விடியற் காலமே நான் அங்கே போக வேண்டும். நான் வந்த வண்டியை அப்படியே இங்கே வரவழைத்து நிறுத்து. ஒன்றிரண்டு ஏவலர்களையும் என்னுடன் செல்லச் சித்தமாக்கி வை’ என்றான். கோரெமிட்சு வணக்கம் தெரிவித்தவாறு வெளியே சென்றான். எந்த வழியைப் பின்பற்றினாலும், வெளியே தெரிந்தால் பழியில் வேறுபாடு இராது என்பது கெஞ்சிக்குத் தெரியும். சிறுமி குழந்தையே யானாலும், இளவரசன் தன்னை ஏன் இட்டுச் சென்றான் என்று அறிந்தே இருக்கக்கூடும் என்று அவள்மீது வாயாடிகள் மாபெரும் புரளி எழுப்பாமல் இருக்கமாட்டார்கள். ஆனால் இதுகூடக் கெஞ்சிக்குப் பெரிய காரியமாகப் படவில்லை. ‘அவர்கள் என்னவேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும், அது பற்றிக் கவலையில்லை. ஆனால் இதில் இன்னொரு கிளைவிளைவுக்கும் இடம் ஏற்பட்டு விடும். ‘ஹியோபுகியோ அவள் செல்லுமிடம் கண்டுகொள்ள நேர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகும். இன்னொருவர் குழந்தையைக் கவர்ந்து செல்வது உச்ச அளவான அடாப்பழியாகவே தோற்றமளிக்கும்’ இவ்வெண்ணங்கள் அவனை மிகவும் அச்சுறுத்தின. ஆனால் அதே சமயம், இச்சமயம் தப்பினால் இனி என்றென்றும் இதை எண்ணி வருந்தவே நேரிடும் என்பதையும் அவன் அறிந்தான். ஆகவே அவன் விடியநெடுநேரமாயிருக்கும்போதே மனந் துணிந்து புறப்பட்டான். ஆய் எப்போதும்போலச் சிடுசிடுப்புடன் கற்சிலையாக அமர்ந்திருந்தாள். ‘வீட்டில் ஒரு வேலை இருந்தது. மறந்து விட்டேன். இப்போதுதான் நினைவுக்கு வந்தது. அதை உடனே கவனிக்கவேண்டும். விரைவில் வந்து அதை உடனே கவனிக்கவேண்டும். விரைவில் வந்து விடுகிறேன்’ என்று கூறியவாறு அவன் மெல்ல வெளியே நழுவினான். மாளிகை யிலுள்ள பணியாட்களுக்கு அவன் போனது தெரியவராதபடி அவ்வளவு சந்தடியின்றி வெளியேற்றம் நிகழ்ந்தது. அறைக்குள் இருந்த அவன் மேலாடைகூட அவன் பின்னாலேயே கொண்டு வரப்பட்டது. கோரெமிட்சுவும் ஒன்றிரண்டு ஆட்களும் உடன் தொடர அவன் விரைந்தான். கோரெமிட்சுமட்டும் பின்னால் குதிரையேறி வந்தான். நெடுநேரம் கதவு தட்டியபின்பே கதவு திறக்கப்பட்டது. வேலையாட்கள் பலர் இந்த இரகசிய மறிந்து உடந்தையாக்கப் பட்டவர்களே. ஆனால் கதவு திறந்த வேலைக்காரன் இதை அறியாதவன். கெஞ்சியின் வண்டியை அரவம் செய்யாமல் உள்ளே கொண்டுவரும்படி அவனைக் கோரெமிட்சு அனுப்பிவிட்டு, தானே முன் கதவின் பக்கம் சென்று அதைத் தட்டினான். தான் இன்னொனென்று சோனகன் அறியும்படி தொண்டையைக் கனைத்துக் கொண்டே கதவை ஆட்டினான். அவள் வந்ததும் மெல்லச் செய்தி கூறினான். “என் தலைவர் வந்து நிற்கிறார். காத்திருக்கிறார்” என்றான் அவன். சோனகன் முணுமுணுத்தாள். ‘என் இளந்தலைவி ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறாள். இரவு இந்நேரத்தில் இப்படி எழுந்து நடமாடுவது இளவரசர் பெருமானுக்கு அழகல்ல’ என்றாள். உண்மையில் அவள் நினைப்பில் கெஞ்சி வேறெங்கோ நேரம் கடத்திவிட்டுப் போகும் வழியிலே வந்து காண முயன்றான் என்ற எண்ணமே மேலிட்டிருந்தது. கோரெமிட்சு இதற்கு மறுமொழி கூற முற்படுமுன் கெஞ்சி தானேவந்து நின்று பேசினான். ‘சிறுமி தன் தந்தை மாளிகைக்கு விரைவில் கொண்டு செல்லப்படுவதாக நான் அறிந்தேன். அவள் போகுமுன் சில முக்கிய செய்திகள் அவளிடம் கூறவேண்டும்’ என்றான். சோனகன் அடங்கிய சீற்றத்துடன் குத்தலாய்ப் பேசினாள். “ஆகா, நீங்கள் கூறுவது எதுவானாலும் அதை அவள் கட்டாயம் முழுக் கவனம் செலுத்திப் பின்பற்றுவாள் - முக்கியமான செய்திகள், பத்து வயதுக் குழந்தையிடம்!’ என்று படபடத்தாள். கெஞ்சி அவள் கூறியதைச் செவியில் வாங்கிக் கொள்ளாமல் பெண்கள் கூடத்துக்குள் புகலானான். சோனகன் திகைப்புடன் விரைந்து தடுக்க முனைந்தாள். ‘நீங்கள் இப்போது உள்ளே போகமுடியாது. முதிய அணங்குகள் பலர் புற ஆடை யின்றி அயர்ந்து உறங்குகிறார்கள்’ என்றாள். ‘ஆம். அவர்கள் அயர்ந்து உறங்குகிறார்கள். சிறுமியைத் தான் நான் எழுப்பப் போகிறேன். அவர்கள் அதை அறியப்போவதில்லை’ என்றுகூறி முன்னேறினான் கெஞ்சி. குனிந்து சிறுமியின் காதுகளில் கூறுவதுபோல அவன் ‘பனி அகன்றது பார், விழித்தெழும் நேரம் இது’ என்று கூறிக்கொண்டே அவளைக் கையில் எடுத்து விழிப்பூட்ட முனைந்தான். இன்னும் அரைத் துயிலில், அரைக்கனவு கண்டு கொண் டிருந்தாள் சிறுமி. அக்கனவிடையே கனவாக, தந்தையாகிய மற்ற இளவரசரே தன்னை இட்டுச் செல்ல வந்திருப்பதாக எண்ணினாள். அவள் தலையைக் கோதிக் கொண்டிருப்பது கண்டு கெஞ்சி மீண்டும் பேசினான். ‘வா, விரைவில் வா, உன் தந்தை என்னை அனுப்பி, உன்னை இட்டு வரும்படி கூறியிருக் கிறார்’ என்றான். வந்திருப்பது தந்தையல்ல என்று கண்டதே அவள் கலவரமுற்று அஞ்சினாள். ஆனால் இப்போது கெஞ்சியின் துணிவு நிமிர்ந்த துணிவாயிற்று. ‘உனக்கு உன் தந்தையானால் என்ன, நான் ஆனால் என்ன? இரண்டும் ஒன்று தான்’ என்று கூறி அவளை உள்ளறையிலிருந்தே தூக்கிக் கொண்டு வந்தான். ‘என்ன இது?’ என்று வியப்புடன் திடுக்கிட்டு ஒரே குரலில் கூவினர், சோனகனும் பணிப் பெண்டிரும்! ‘இனி அடுத்தபடி என்ன செய்வானோ? என்னசெய்ய மாட்டானோ?’ என்று கலங்கினாள் சோனகன். கெஞ்சி இப்போது கோபமாகப் பேசினான். ‘அவளை நான் விரும்புமளவு இப்பக்கத்தில் வந்து அடிக்கடி காணமுடியவில்லை. என்றுதானே உங்களிடம் கூறியிருந்தேன். வேறு வாய்ப்பான இடத்துக்கு மாற்றவும் எண்ணியிருந்தேன். அது உனக்குப் பிடிக்கவில்லை. இனி நான் பார்க்கவே முடியாத இடத்துக்கு அவளை அனுப்ப முடிவுசெய்திருக்கிறாய் என்று கேள்விப்பட்டேன். ஆகையால்....’ இப்போது உங்களில் யாரேனும் ஒருவர் என்னுடன் வரச் சித்தம் ஆகுக!’ என்றான். கெஞ்சி இப்போது சிறுமியை இட்டுச் செல்லவே வந்திருக்கிறானென்ற செய்தி இப்போதுதான் சோனகனுக்கு விளங்கிற்று. அவள் பொறிகலங்க அலறித் துடித்தாள். ‘அன்புநல்லீர், இத்திட்டத்துக்கு இதைவிட இக்கட்டான நேரத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. இன்று தான் அவளை இட்டுச்செல்ல அவள் தந்தை வருகிறார். அவரிடம் நான் என்னதான் சொல்வது? கொஞ்சம்மட்டும் நீங்கள் காத்திருந்தால், எல்லாம் முடிவில் நன்றாக அமைந்துவிடும். இப்படி ஆத்திரப்படுவதால் உங்களுக்கும் நன்மை இராது, அப்பாவிப் பணிப்பெண்களுக்கும் பெருந்தொல்லை உண்டுபண்ணி விட்டவ ராவீர்கள்’ என்றாள். ‘அவ்வளவுதானே! சரி, எல்லாரும் இந்தக் கணமுதல் எப்போது வேண்டுமானாலும் என் பின்னால் வந்து விடலாம்’ என்று கூறிவிட்டுக் கெஞ்சி வண்டியை உள்ளே தருவித்தான். இதுகண்டு சோனகன் செயலற்றவளாய்த் திகைத்தாள். சிறுமியும் செய்தி என்ன என்று அறியாமல் திகிலுடன் நின்றாள். கெஞ்சியின் செயல்துணிவை எதுவும் மாற்றமுடியாது என்பது கண்டு, சோனகன் விரைந்து தான் துன்னிக்கொண்டிருந்த சிறுமியின் ஆடைகளைத் திரட்டினாள். தானும் நல்லுடை யணிந்துகொண்டு வண்டியில் ஏறினாள். கெஞ்சியின் மாளிகை அருகிலேயே இருந்தது. விடியுமுன் அவர்கள் அங்கே வந்து சேர்ந்தார்கள், மேலைச் சிறகத்தின் அருகே வண்டி வந்தவுடன் கெஞ்சி இறங்கினான். சிறுமியை மெல்லக் கைகளால் தூக்கி எடுத்து நிலத்தில் விட்டான். சோனகனுக்கு இந்நிகழ்ச்சிகள் யாவும் கனவுக் காட்சிகள் போலவே இருந்தன. அந்நிலையில் மாளிகைக்குள் நுழைவதா, வேண்டாமா என்று அவள் கால்கள் தயங்கின. இதைக் கெஞ்சி கவனித்தான். ‘உனக்கு வர விருப்பமிருந்தால் வந்தால் போதும், விருப்பமில்லாமல் வரவேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை. சிறுமி பத்திரமாக இங்கே வந்து சேர்ந்தவுடன் என் காரியம் நிறைவேறிவிட்டது. அதனுடன் நான் மன அமைதி பெற்று விட்டேன். நீ திரும்பிப் போக விரும்பினால், தயங்காமல் கூறிவிடலாம், நானே பாதுகாப்புத் தந்து கொண்டு விட்டுவிடுகிறேன்’ என்றான். அரைகுறை வியப்புடனேயே சோனகன் வண்டியிலிருந்து இறங்கினாள். திடீர் இடமாற்றம் ஒன்றே அவள் மன அமைதியைக் குலைக்கப் போதுமாயிருந்தது. அத்துடன் இளவரசன் ஹியோபுகியோ வந்து தன் குழந்தை காணாமல் போனதுபற்றி என்ன நினைப்பான் என்பது பற்றியும் அவள் உளைவுற்றாள். இறுதியாக, தன் நிலை தான் இனி என்ன ஆவது? அவள் தலைவியர் ஒருவர்பின் ஒருவராக அனைவரும் அவளை விட்டுப் பிரிந்து சென்று விட்டனர். இவற்றை எண்ணி எண்ணி அவள் ஓயாது அழுதாள். தன் அழுகையின் விளைவு யாதாமோ என்று எண்ணியபோதுதான், அவள் தானாகத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, இறைவனை வணங்கி வழிபட்டு நின்றாள். மேலைச் சிறகம் நீண்டநாள் ஆளற்றுக் கிடந்தது. அதில் தட்டுமுட்டுப் பொருள்களும் குறைவு. ஆனால் கோரெமிட்சு விரைவில் வேண்டிய வேண்டிய இடங்களில் தட்டிகளும் திரைகளும் மாட்டினான். கெஞ்சியின் ஒய்யாரத் தட்டியின் பக்கச் சிறைகளை விரித்து வளைத்து அவனுக்கும் அங்கே தற்காலிக இடம் வகுக்ப்பட்டது. இரவு நேர ஓய்வுக்குரிய மற்றப் பொருள்களையும் மாளிகையின் மற்றப் பகுதிகளிலிருந்து வருவித்துக் கெஞ்சி அங்கேயே படுக்கைக்கு ஆயத்தம் செய்தான். சிறுமியின் படுக்கை அருகாமையிலேயே இருந்தது. அச்சமும் திடீர்மாற்றத்தால் ஏற்பட்ட திகிலும் இன்னும் அவளை விட்டு அகலவில்லை. அவள் இதழ்கள் துடிதுடித்தன. ஆனால் வாய் திறந்து எதுவும் பேச அவள் துணியவில்லை. உரத்து அழக்கூட அவள் அஞ்சினாள். ‘சோனகன் என்னுடன் படுத்துக்கொள்ளவேண்டும்’ என்று அவள் மழலை மொழியில் வேண்டினாள். ஆனால் கெஞ்சி சிரித்தான். ‘செவிலியுடன் படுக்கும் வயது இப்போது கடந்து விட்டது. நீ அதுதாண்டிப் பெரியவளாய் விட்டாய். இப்போது படுத்திருக்கும். இடத்திலேயே இனி படுத்துக் கொள்ள நீ பழகிக்கொள்ள வேண்டும்’ என்றான். சிறுமிக்குத் தனிமை யச்சம் மிகுதியாய் இருந்தது. அவள் நெடுநேரம் அழுதாள். ஆனால் தன் அருகில் நிகழும் இந்நிகழ்ச்சிகள் எதனையும் சோனகன் உணரவில்லை. அவள் மன நிலையில் அவள் தூக்கத்தைப் பற்றியே எண்ணாமல் இரவு முழுவதும் வேலையாட்களின் கூடத்திலேயே உட்கார்ந்து கழித்தாள். காலை ஒளி தன் மீது பட்டபோதுதான்சோனகன் தன்னுணர்வு வந்து சுற்றுமுற்றும் பார்த்தாள். அரண்மனை போன்ற அகன்றுயர்ந்த மாளிகை வியத்தக்க வேலைப் பாடுகளுடனும் சித்திர நுணுக்கங்கள் வாய்ந்து ஓங்கிநின்ற தூண்களுடனும் அவள் கண்களைக் கவர்ந்தது. முற்றத்தில் விரித்த வெண்மணல் வயிரம் பதித்த வெள்ளிப் பாளமாக மின்னிற்று. இக்கண் கொள்ளாக் காட்சியில் அவள் தன் நிலையழிந்தாள். தற்பெருமை, தன் முனைப்பு நீங்கிற்று. அத்துடன் பெண்கள் குழாம் எதுவும் இல்லாதது கண்டு அவள் பெரிதும் மன அமைதி உற்றாள். பல தொழில்களில் ஈடுபட்ட பல்வேறு மக்களும் வெளியே பரபரப்புடன் திரியும் நேரம் அது, பலகணி வழியாக அத்தகையோர் சாரி சாரியாகச் செல்வதை அவள் கண்டாள். அவர்களில் ஒருவன் மற்றொருவனிடம் தனித்துப் பேசியதுகூட அவளுக்குக் கேட்டது. ‘யாரோ புதிய ஆள் இங்கே இப்போது நிலையாகத் தங்கி வாழ வந்ததாகக் கேள்வி. இது யாராயிருக்குமோ? ஏதாவது புகழ் சான்ற குடிகளின் அணங்காகத் தான் இருக்க வேண்டும். இதில் எனக்கு ஐயமில்லை!’ என்றது அக்குரல். எதிர்புறச் சிறையிலிருந்து குளிக்க நீர் கொண்டு வரப்பட்டது. காலையுணவும் அங்கிருந்தே வந்தது. ஆனால் கெஞ்சி காலை நெடு நேரம்வரை எழுந்திருக்கவில்லை. ‘சிறுமி தனிமையாய் இருப்பது நன்றல்ல’ என்று அவன் சோனகனிடம் கூறி, அது வகையில் தன் ஏற்பாட்டையும் விளக்கினான். ‘உங்களைப் பார்க்க நேற்று நான் அங்கே வருமுன்பே, பல சிறுவர், சிறுமியர்களை இங்கே வரவழைத்துச் சிறுமியுடன் வாழும்படி திட்டம் செய்திருக்கிறேன்’ என்றான். ஒரு பணியாளை அழைத்து மேலைச் சிறகிலிருந்து அச்சிறுவர்களை இட்டுவரும்படி பணித்தான். வயதிலும் உருவிலும் எவ்வளவு சிறியவர்களாக, சிங்காரமான தோற்ற முடையவர்களாகப் பொறுக்க முடியுமோ, அவ்வளவும் அவன் முனைந்து தேர்ந்து சிறுவர் சிறுமியர் குழாத்தைத் திரட்டியிருந்தான். அந்தச் சிங்காரச் சிறுபடை திரண்டு வந்தபோது அதன் அழகு கண்டு சோனகன் வியப்படைந் தாள். சிறுமி இதுமுதல் அவள் பெயரிட்டு முரசாக்கி என்றே அழைக்கப்பட்டாள். கெஞ்சியின் உடுப்பொன்றையே போர்த்திக் கொண்டு அவள் உறங்கினாள். அவனைக் கெஞ்சி அருமுயற் சியுடனேயே எழுப்பினான். அவள் அவ்வளவு அயர்ந்து தூங்கியிருந்தாள். ‘இனி நீ மனத்துயருக்கு இடமே தரக்கூடாது. நான் உன்னிடம் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறேன் பார்! இல்லாவிட்டால் இப்படி உன் பக்கத்திலேயே காத்திருந்து உன் வசதிகளைக் கவனிக்க முடியுமா? அத்துடன் உன்னைப் போன்ற சின்னஞ் சிறு பெண்கள் எப்போதும் தம்மிடம் பாசம் காட்டு பவரிடம் அமரிக்கையாகவும் இணக்கமாகவும் நடந்து கொள்வதே இயல்பு’ என்றான். முரசாக்கியின் பயிற்சிமுறை இந்தச் சொற்களுடன் மெல்லத் தொடங்கிற்று. செஞ்சியால் இப்போது அவளை ஆரஅமர அருகிருந்து கூர்ந்து கவனிக்க முடிந்தது. அந்நிலையில் இதுவரைஅவன் கருதியதைவிட அவள் அழகு எவ்வளவோ வியக்கத் தக்கதாயிருந்தது என்று கண்டான். அவளுடன் அவன் பாசத்துடன் பழகி உரையாடத் தொடங்கினான். அழகான படங்கள், விளையாட்டுப் பொருள்கள் தருவித்து அவளுக்குக் காட்டினான். படிப்படியாக அவளுக்குத் தன்னைப்பற்றிய உணர்வை அவன் வளர்த்தான். அவள் அப்போது அணிந்திருந்த ஆடை தாறுமாறான எளிய ஆடையேயானாலும், அதுகூட அவள் அழகுடன் இணைந்து கவர்ச்சி தந்தது. அத்துடன் உரையாடலிடையே அவளும் எளிதில் தன் துயரங்களை மறந்து அவன் நகைத்தபோது நகைத்து, அவன் அமைந்தபோது தானும் அமைந்தாள். அவள் இவ்வாறு வளர்வதைக் காண்பதே அவனுக்கு ஓர்எல்லையற்ற மகிழ்ச்சியாய் இருந்தது. அவன் மீண்டும் மாளிகையின் கீழ்சிறைக்குச் சென்ற சமயம் அவள் வெளியே இறங்கிச் சென்று தோட்டத்தில் உலவினாள். மரங்களிடையே சுற்றி ஏரிக் கரைகளிலே அவள் மெல்லத் தயங்கித் தயங்கிச் சென்றாள். மலர்ப்படுக்கைகள் ஓவியனின் வண்ணச் சாயங்களைப் பழிக்கும் எழிலுடன் காட்சி தந்தன. அவற்றைக் காண அவள் மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் அடைந்தாள். வகை வகையான வண்ணப் பூவாடை யணிந்த மக்கள் வீட்டுக்குள் ஓயாது வந்து சென்றனர். இவ்வுயிர்க் காட்சிகளினிடையே அவள் தன் புதிய சூழலில் முற்றிலும் ஒன்று பட்டு எவ்வளவு நல்ல இடம், என்று போற்றி அதில் பற்றுக் கொண்டாள். தட்டிகளிலும் பலகணிகளிலும் வரையப்பட்ட ஓவியங்கள் அவள் உள்ளத்தையே கொள்ளை கொண்டன. இரண்டு மூன்று நாட்கள் கெஞ்சி அரண்மனைக்கே செல்லாமல் சிறுமி முரசாக்கியுடன் பொழுதுபோக்கி, அவளுக்கு மகிழ்வூட்டித் தானும் அகமகழ்வுற்றிருந்தான். அவள் மேல்வரிப் பாட ஏட்டில் இணைப்பதற்காக வகை வகையான படங்கள் வரைந்தான். இணைக்குமுன் ஒவ்வொன்றாக அவளிடம் காட்டினான். அத்தகைய அழகுமிக்க படங்களை அவள் இதற்குமுன் எங்கும் கண்டதேயில்லை. அவளுக்கென்றேதான் அவன் தன் ‘முசாஷிநோ’ என்ற பாடலின் ஒரு பகுதியை இயற்றியிருந்தான். முசாஷி என்பது செந்துவர்ப் புல்லால் துவர் நிறம் தோய்ந்து எழிலுறக் காட்சியளிக்கும் புகழ்மிக்க ஓர் இடம். “அறியே னாயினும் அழகமர் முசாஷி மறுவறு காட்சி கண்டதும் மனத்தே மின்னென ஒளிர்ந்த வியத்தகு பாடல் துன்னுறும் அடிகள் இவையே! தோற்றும் இடமெலாம் புல், துவ ராடையின் எழிலே! திடமுற முசாஷித் திருவிடம் இதுவே! பாடலின் எழுத்துகள் திண்ணிய மைவரைகளாகத் துவர்நிறம் தோய்ந்த தாளின் பின்னணியில் மின்னின. பாடலின் பொருளுடன் சேர்ந்து இது அவளுக்கு மட்டின் இன்பம் அளித்தது. பாடலின் அடியில் சிறிய எழுத்தில் இன்னொரு பாடல் இணைக்கப்பட்டிருந்தது. முசாஷிப் பழனம் வளரும் பனிப்புல் நசை கொள்மூலம் நண்ணே னாயினும் இசை வுறும் இளந்தளிர் இனிதாம் எனக்கே! ‘முரசாக்கி’ என்பதன் பொருள் செந்துவர் நிறம் என்பதே. எனவே முசாஷித் திருவிடம் என்றது தன்னையே என்பதனை முரசாக்கி உணர்ந்தாள். ஆனால் மூலவேர் என்றது அதே நிறத்தையுடைய ‘புஜி’ மலரின் பெயர் தாங்கிய தன் தந்தையின் தமக்கை புஜித்சுபோ என்பது அவள் அறியாதது. ஆகவே பாட்டின் அழகை வியந்து மகிழ்ந்தாலும், அதன் முழுப் பொருளும் தோன்றாமல் அவள் தயங்கினாள். ஆனால் கெஞ்சி அத்துடன் விடவில்லை ‘இரு பாடல்கள் இதோ வரைந் திருக்கிறேன்.’ இப்போது உன் முறை. எதிர்பாடலாக ஏதேனும் எழுது’ என்றான். ‘எனக்கு இன்னும் ஒன்றும் எழுத வராது’ என்று அவள் நுடங்கி முடங்கினாள். அந்நிலையில் தன்னை வற்புறுத்தாதிருக்கும்படி கெஞ்சியவாறு அவள் அவனை நோக்கியபோது, அவள் தோற்றத்தில் மாயக் கவர்ச்சி பொங்கி வழிந்தது. அதுகண்டு அவன் மகிழ்வுடன் நகைத்தான். ‘சரியாக எழுதமுடியாவிட்டால் கேடில்லை. நீ நுடங்கி முடங்குவதுபோல உன் பாடலும் நுடங்கி முடங்கினால் எனக்கு மகிழ்வாயிருக்கும். அத்துடன் உன் தவறுகள் கண்டே நான் ஒரு பாடல் தொடங்கி விடுவேன்’ என்றான். இந்த இனிய வற்புறுத்தலுக்குப் பின் மான்போல அவனை மிரள மிரளப் பார்த்துக் கொண்டே அவள் தூரிகையைக் கைபோனபடி செலுத்தினாள். விளையாடும் பாவனையுடனேயே தன் குழந்தைக் கரங்களிலே தூரிகையை அவள் பிடித்த வகை காண அவன் உடலம் புல்லரித்தது - அவ் வுணர்ச்சியை இன்னதென்று அவனால் எடுத்துரைக்கக் கூட வில்லை. ‘ஐயையோ! நான் அத்தனையும் கெடுத்து விட்டேனே!’ என்று அவள் தன் எழுத்து வேலையை அரை குறையாக நிறுத்தி, எழுதியதையும் கெஞ்சியிடமிருந்து மறைக்க முயன்றாள். ஆனால் அதைப் பார்த்தேயாக வேண்டுமென்று கெஞ்சி அவளுடன் மல்லாடி அதைக் கைப்பற்றினான். ‘முன்னிய தெதனால் முசாஷிப் புல்லினை! என்னுடன் அதற்குள இனவுற வெதுவோ? இன்னன காணாது கலங்குமென் உள்ளம்!’ இப்பாடல் குழந்தைகளுக்கியல்பான பெரிய பெரிய எழுத்துகளில், பல இடங்களில் உருத்தெரியாதபடி கோணல் மாணலாக எழுதப்பட்டிருந்தது. ஆயினும் அதில் வருங்கால வளர்ச்சியின் நல்ல உயிர் விதைகள் காணப்பட்டன. அத்துடன் மாண்ட துறவுநங்கையின் எழுத்துகளுடன் அவை பெரிதும் ஒப்புமை யுடையவையாய் இருந்தன. புத்தம்புதிய முறையில் மேல்வரி ஏடுகள் வழங்கப் பெற்றால் நற்பயிற்சி பெற்று அவள் விரைவில் திருந்துவது உறுதி என்று கெஞ்சி கண்டான். கெஞ்சியும் முரசாக்கியும் இதனையடுத்துப் பொம்மை களுக்குரிய வீடுகள் கட்டுவதில் ஈடுபட்டனர். இந்த இனிய உழைப்பிடையே கெஞ்சி தற்காலிகமாகவேனும் தன் உள்ளத்தை உள்ளூர நின்றரிந்துவந்த புஜித்சுபோ பற்றிய ஏக்கத்தைச் சிறிது மறந்தான். முரசாக்கியின் பழைய இல்லத்துக்கு இளவரசன் ஹியோபுகியோ அவனை இட்டுச் செல்லும் எண்ணத்துடன் சென்றபோது, அங்கே பின் தங்கியிருந்த வேலையாட்களுக்குப் பெரிதும் சஞ்சலம் ஏற்பட்டது. ஏனெனில் நடந்த செய்திகளை எதனையும் சில காலத்துக்காவது எவரிடமும் சொல்லக்கூடாது என்று கெஞ்சி அவர்களிடம் உறுதிமொழி கோரிப் பெற்றிருந் தான். சோனகனும் இதுவே நலமென்று வற்புறுத்திச் சென்றிருந் தாள். இந்நிலையில், சிறுமியைச் சோனகன் எங்கோ திடீரென இட்டுச் சென்றாள் என்பது தவிர, இளவரசனுக்கு எத்தகைய செய்தியும் கிட்டவில்லை. அவள் சென்றவிடம் அறியாமல், செய்வது இன்னதென்ற துணிவின்றி அவள் திகைப்புற்றான். ஒருவேளை பெண்ணின் பாட்டி செவிலியின் உள்ளத்தை முன்பே கெடுத்திருக்க வேண்டும். என் மாளிகையில் எவரும் அமைதிகாண முடியாது என்று அச்சுறுத்தியிருக்க வேண்டும். அதனால்தான் குழந்தை என் மாளிகையில் நன்கு நடத்தப்பட மாட்டாது என்ற தன் அச்சத்தைச் சோனகன் என்னிடம் வெளிப்படையாகக் கூறாமலே சூழ்ச்சி நயத்துடன் செயலாற்றியிருக்கிறாள்! நான் வருமுன்பே, தனக்குக் கிடைத்த தறுவாயைப் பயன்படுத்தி அவள் குழந்தையுடன் வெளியேறி யிருத்தல் வேண்டும்- இவ்வாறு அவன் எண்ணி, மன வெறுப்புடன் சென்றான். மலைவாணரான துறவியிடம் ஆளனுப்பி அவன் உசாவிப் பார்த்தான். இதிலும் பயன் எதுவும் விளையவில்லை. குழந்தை மிகவும் அழகும் பாசநேசமும் வாய்ந்ததாயிருந்த செய்தி மட்டுமே அவன் நினைவுக்கு வந்தது. அதை இம்மாதிரிக் கைநெகிழ விட்டதுபற்றி அவன் வருந்தினான். அத்துடன் குழந்தையின் தாயிடம் அவன் மனைவி கொண்டிருந்த வெறுப்பும் பகைமையும்கூட இப்போது முற்றிலும் மாறியிருந்தன. குழந்தையிடம் தன் அன்புக் கடமையை ஆற்றுபவன் என்று தன்னை யாவரும் நம்பாதது பற்றி இளவரசன் மனைவிகூட மிகவும் வருந்தினான். முரசாக்கியின் பழைய வீட்டிலிருந்த அவள் பணியாட்கள் மெல்ல மெல்ல ஒவ்வொருவராக அவள் புது மாளிகைக்கு வந்து சேர்ந்தார்கள். அவளைப் புத்தார்வத்துடன் நேசித்துப் பழைய நண்பர்கள் போல ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர். இளவரசன் கெஞ்சி வேறு வேலையில் ஈடுபட்டோ, வெளியே சென்றோ அவளை விட்டகன்றிருந்த சமயங்களில், அவ்வப்போது முரசாக்கி தன் பாட்டியான துறவு நங்கையை எண்ணிக் கண்ணீர் வடிப்பதுண்டு. ஆனால் அவள் தந்தையை நினைத்த நாள் கிடையாது. ஏனென்றால் என்றோ எப்போதோ தான் அவனை அவள் கண்டிருந்தாள். இப்போது அவளுக்கு ஒரு புதிய ‘தொடர்பு’ ஏற்பட்டிருந்தது - கெஞ்சியிடம் நாளுக்கு நாள் அவள் பாசம் வளர்ந்தது. அவனை முதலில் வந்து வரவேற்பவள் அவளே. வந்தது முதல் மிக அரிய வேடிக்கை விளையாட்டுகள், உரையாடல்களிலே நேரம் கழியும். பெரும்பாலும் எவ்விதக் கூச்சமும் தயக்கமுமில்லாமல் நாழிகைக் கணக்காக அவள் அவன் மடியிலேயே ஒய்யாரமாக வீற்றிருந்து உரையாடுவாள். ஒரு வேளை வளரவளர இந்தத் தங்குதடையற்ற விளையாட்டுப் பருவத்து நம்பிக்கை தளர்வுறக்கூடும் என்று அவன் எண்ணுவதுண்டு. ஆனால் புதிய பல உணர்ச்சிகள் விரைவில் அவளிடம் இடம்பெற்று வளராமலும் இல்லை. எடுத்துக் காட்டாக வேறு யாரிடமோ அவன் ஈடுபட்டிருந்ததாக அறிந்தால் அவள் சீற்றமடையக் கூடும் என்று தோற்றிற்று. ஆனால் இப்புதுப் பண்புகள் முழுதும் உருவாகாத நிலையில் அவன் தோழமை தங்குதடைற்ற இன்ப விளையாட்டுத் தோழமையாகவே இருந்தது. அவள் அவன் புதல்வியாகவே இருந்திருந்தால், சமூக ஆசாரம் விரைவில் இத்தகைய நிறைநேசத்தொடர்புக்கு ஒரு இடையீடு உண்டுபண்ணியிருக்கும். ஆனால் அத்தகைய உறவு இல்லாத நிலையில், இம்மாதிரி இடர்ப்பாடு ஏற்படாதென்று அவள் தெளிந்து அமைதி பெற்று வாழ்ந்தாள். 6. குங்குமப் பூ எவ்வளவு முயன்றாலும், யுகாவின் திடீர் மறைவால் ஏற்பட்ட மனச்சோர்வு எளிதில் கெஞ்சியை விட்டகலவில்லை. மாதங்கள் பல கழிந்த பின்னும் அவளைப் பற்றிய எண்ணமும் ஏக்கமும் ஒரு சிறிதும் குறையவில்லை. இதனை மறக்கடிக்கத் தக்க பாசத்தை வேறிடங்களில் தேடினாலும், அங்கெல்லாம் கல்மனத்துடன் கல்மனம், தற்பெருமையுடன் தற்பெருமை இடையிடாது போட்டியிட்ட வண்ணமே இருந்தன. உண்மையில் கொந்தளிக்கும் உணர்ச்சியும் விடாப்பிடியும் உடைய இப்பெண்ணுருக்களிடமிருந்து கெஞ்சி விடுபடவே அவாவினான். விடுபட்டு, சிலகாலமாவது அவன் தனக்கு மிகுந்த இன்பமளித்த ஒரு வாழ்வுடன் இணைந்து தன் வாழ்வைப் புதுப்பிக்க விரும்பினான். ஆனால், அந்தோ, உலகில் ஒரு யுகாவையன்றி மறு யுகாவை அவன் எங்கும் காணவில்லை. ஏற்பட்ட அனுபவங்கள் கசப்பையே ஊட்டினாலும், இன்னும் அவன் நம்பிக்கையுடையவனாகவே இருந்தான். ஒளிவு மறைவு இல்லாமல் சென்று காணத்தக்க எளிய வாழ்வுடைய ஒரு நல்லழகியை என்றேனும் ஒரு நாள் கண்டு கிட்ட முடியாதா என்ற நைப்பாசை அவனுள் இருந்து கொண்டே வந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்த போதெல்லாம் அவன் ஆர்வத்துடன் அத்திசைகளில் கருத்துச் செலுத்தத் தவறியதில்லை. நற்பயனின் அறிகுறி தென்பட்டால், அவள் விசாரணைக் கடிதம் வரையும் முயற்சியளவும் முன்னேறும். ஏனெனில் அவன் கடிதங்களுக்கு என்றுமே வழக்கமாகத் தடங்கலான பதில் கிடைப்பதில்லை. சிலர் உணர்ச்சி நயத்தைவிடச் சமூகக் கட்டுகளே உயர்வு என்று கருதியவர்களாய், வளையாத நிமிர்ந்த பண்புடன் பதில் வரைவதுண்டு. வேறுசிலர் பண்புடைய சமுதாயத்தின் நடப்புகளை அறியாதவர்களாகத் தோற்றுவர். ஆனால் கெஞ்சியின் வகையில் அத்தகையவர்கள் கூட எதிர்பாராமல் திடுமென அவன் பாச வெள்ளத்தில் தலைகுப்புற வீழ்ந்து வந்தனர். கவர்ச்சியற்ற உலகில் ஒரு சாதாரண மனிதனை மணந்துகொள்ள நேர்ந்தபோது தான் அவர்கள் இத்தொடர் புக்கு ஒரு முடிவு காணலாயினர். இத்தகைய நிகழ்ச்சிகளில்லா வெறுமையான இடைநேரங்களில் சிறிது வருத்தத்துடன் அவன் உத்சுசேமியைப்பற்றி எண்ணுவதுண்டு. அவள் தோழிக்குக்கூட எதிர்பாராது ஒரு கடிதம் அனுப்பும் வாய்ப்பு ஏற்படாதா என்று அவன் விரும்புவதுண்டு. மங்கிய விளக்கொளியில், தாய ஆட்டத்தின் கட்டையுடன் அமர்ந்திருந்த அவள் உருவம் அவன் உள்ளத்தில் எழுவதுண்டு. ஒருதடவை பாசத்திலீடுபட்டபின் எவரையும் எளிதில் மறந்துவிடும் இயல்பு கெஞ்சிக்கு இருந்ததில்லை. தன் செவிலித் தாய்மாரிடையே, கோரெமிட்சுவின் தாய்க்கு அடுத்தபடியாக, கெஞ்சி சாயமன் என்பவளிடம் மிகவும் பரிவுடையவனாயிருந்தான். அவள் புதல்வி ‘தைபுநோ மியோபு’ அரண்மனையில் வேலை பார்த்து வந்தாள். சக்கரவர்த்தி குடும்பத்தினராகவும் போர்த்துறை அரங்கத் துணை யமைச்சராகவும் இருந்த ஒருவரே அச்செவிலித் தாயை அன்புக் கிழத்தியாகக் கொண்டிருந்தார். இம்முறையில் இளநங்கை அரண்மனைப் பழக்க முடையவளாய், இளமை நலத்துடன் பண்பு நலங்களும் உடையவளாய் இலங்கினாள். கெஞ்சிக்கு அவள் மனமுவந்த தோழியாய்ப் பலவகையிலும் உதவி வந்தாள். நங்கையின் தாயாகிய செவிலி இரண்டாவது தடவையாக எச்சிசன் மாகாண ஆட்சி முதல்வரை அடுத்து அவரையே மணம் புரிந்துகொண்டு அம்மாகாணம் சென்றாள். இது முதல் அரண்மனையில் ஓய்வு கிடைத்தபோதெல்லாம் அவள் அம்மாகாணத்திலுள்ள தன் மாற்றாந்தந்தை இல்லத்திலேயே கழித்தாள். ஒருநாள் அவள் கெஞ்சியுடன் உரையாடிக் கொண்டிருக் கும்போது மாண்ட இளவரசர் ஹிதாச்சியின் புதல்வி பற்றிக் குறிப்பிட நேர்ந்தது. இளவரசன் மிகவும் வயது கடந்த பின்னரே அவள் பிறந்தவளாதலால், சீமாட்டியின் பயிற்சியிலும் வளர்ச்சியிலும் அவன் தன் முழுக் கவனமும் செலுத்தியிருந்தான். தந்தை இறந்தபின் அவள் தனிமையில் வாழ்ந்து மிகவும் அவலமுற்று வந்தாள். கெஞ்சிக்குச் சீமாட்டியின் நிலைபற்றிய பரிவு ஏற்பட்டது. மியோபுவிடம் அவளைப் பற்றிப் பல கேள்விகள் கேட்டான். ‘மியோபு அவற்றுக் கெல்லாம் பொறுமையுடன் விடையளித்தாள். ‘அவள் தோற்றம்பற்றியோ பண்புகள் பற்றியோ எனக்கு மிகுதி தெரியவராது. ஆனால் அவள் மிகவும் ஒதுக்கமான பழக்க வழக்கங்கள் வாய்ந்தவள். சில சமயம் மாலை நேரங்களில் நான் அவளுடன் பேசுவதுண்டு. இச்சமயத்தில்கூட அவள் ஒரு திரையின் பின்னிருந்தே பேசுவாள். அவள் நம்பிக்கைக்குரிய ஒரே தோழன் அவள் யாழ்தான் என்று நான் நம்புகிறேன்.’ என்றாள் அவள். கெஞ்சிக்குப் போசூயீ இயற்றிய ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. அதில் யாழும், பாடலும், இனிய செந்தேனும் முப்பெருந் தோழராக வருணிக்கப்பட்டிருந்தன. இதைக் குறிப்பிட்டு அவன் மறுமொழி கூறத் தொடங்கினான். ‘கவிஞர் கூறும் நண்பர் மூவரில் ஒருவரேனும் அவள் வகையில் பொருத்தமுற்றவராயிருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். ஆயினும் அவள் யாழ் மீட்டி வாசிப்பது கேட்க நான் விரும்புகிறேன். ஏனெனில் அவள் தந்தை இக்கருவியில் அரும்பெருந் திறனுடையவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதன் ஒரு சிறு துணுக்கினையேனும் அவள் உரிமையாகப் பெறாமல் இருக்கமுடியாது’ என்றான் கெஞ்சி. மியோபு: நீங்களே சென்று கேட்பதற்குரிய அவ்வளவு தகுதி அவளுக்கு இராது என்று அஞ்சுகிறேன். கெஞ்சி: நீ ஏன் இவ்வளவு அவநம்பிக்கை ஊட்டுகிறாய்? எப்படியும் மறைந்திருந்தேனும் அவள் பாடலை ஒரு நாள் கேட்டேயாக வேண்டும். முழுநிலா நாளிரவாகப் பார்த்து, நிலா முகிலில் மறைந்திருக்கும் சமயமாக அணுகலாம். நீயும் என்னுடன் வரவேண்டும். மியோபு இதில் அவ்வளவு கிளர்ச்சி கொள்ளவில்லை. ஆனால் அரண்மனைச் சூழலின் பரபரப்பிடையேகூட அந்த இளவேனில் பருவத்தில் ஒரு நல்ல ஓய்வமைதி ஏற்பட்டிருந்தது. ஆகவே அவள் செல்ல இணங்கினாள். மியோபுவின் தந்தை வாழ்ந்த மாளிகை அந்த நகரத்துக்குச் சற்று வெளியே இருந்தது. வாய்ப்புக் கருதி அவர் சில சமயம் இளவரசன் ஹிதாச்சியின் அரண்மனையிலும் தங்குவதுண்டு. மியோபுவுக்கும் மாற்றாந் தாய்க்கும் ஒத்துக் கொள்ளாததனால், அவள் சீமாட்டியின் வீட்டில் ஓர் அறையைத் தன் தங்கிடமாக அமர்த்திக்கொண்டிருந்தாள். முழு நிலா நாளின் மறு இரவில் கெஞ்சி விரும்பியபடி நிலாமுகில் திரையினூடாக அரை நிழலொளி பரவியிருந்தது. அச்சமயம் அவர்கள் ஹிதாச்சி அரண்மனையை அடைந்தார்கள். அங்கே சென்ற பின்னும் மியோபு திட்டத்தை மேற்கொள்ளத் தயங்கினாள். ‘யாழிசை கேட்க இந்த இரவு அவ்வளவு உகந்ததன்று என்றே நினைக்கிறேன். ஓசை புறவெளியில் இன்று எளிதாக மிதந்து பரவாது’ என்றாள். ஆனால் கெஞ்சி திட்டத்தை ஒத்திப் போட இணங்க வில்லை. ‘அவள் அறைக்குச் சென்று, ஒரு சில பண்கள் மீட்டும்படி செய். நான் அவள் பாடல் கேட்காமலே திரும்பிப்போக நேரக் கூடாது’ என்றான். மியோபு சென்றபோது இளவரசி பலகணி அருகே அமர்ந்திருந்தாள். இரவு கருதிப் பலகணிக் கதவுகள் இன்னும் மூடப்படவில்லை. வெளியே தோட்டத்தில் பூத்து நின்ற பன்னீர் மரத்தின் மணத்தை அவள் காற்றுடன் காற்றாகப் பருகிக் கொண்டிருந்தாள். கூறக் கருதிய காரியத்துக்கு இதுவே சரியான வேளை என்று மியோபு கருதினாள். ‘இத்தகைய வேளையில் உன் யாழிசை எவ்வளவு செவ்வியுடையதா யிருக்கும் என்று என்னால் எண்ணாமலிருக்க முடியவில்லை. அது நாடியே உன்னைக் காண வந்தேன். அரண்மனைக்கும் மாளிகைக்கும் இடையே ஓயாது ஊசலாடும் என் வாழ்வில் நான் விரும்பும் அளவு உன் பாடலைக் கேட்கவும் எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. என்ன செய்வேன்’ என்றாள். இளவரசி புன்முறுவல் பூத்தாள். ‘இதுமாதிரி இசை அதைப் பயிலாதவர்களுக்கு இன்பம் தரமாட்டாது, கூடகோபுரம் நூறு கொண்ட கோநகரில் நாளெல்லாம் அங்குமிங்கும் திரிபவர்கள் அதுபற்றி எவ்வாறு கவலை கொள்ளக்கூடும்?’ என்று பேசினாள். அவள் மெல்லச் சில பண்களை மிழற்றினாள். அவள் தொழில்முறை தேர்ந்த யாழ்ப்பாடினி அல்லவானாலும், அவள் பாடல் கேள்விக்கு மிகவும் இனிமை தந்தது. ஏனெனில் அவள் யாழ் மிக உயர் நேர்த்தியுடையது. கெஞ்சிக்கு அவள் யாழிசை எல்லையிலா மகிழ்ச்சி தந்தது. அவள் தந்தை அவளுக்களித்த பயிற்சி முறை பழமைப்பட்ட ஆசார வினைமுறைகளும் கட்டுப்பாடுகளும் நிரம்பியது. அவள் தங்கிய இடமும் பாழடைந்த ஆளற்ற தனிமையுடையது. இந்நிலையில் அவள் வாழ்க்கையின் பெரும்பகுதி சென்றகால நினைவுகளும் கழிவிரக்கங்களும் அடங்கியதாய் இருந்தது இயல்பே. எதிர்பாரா நிகழ்ச்சிகளுக்கு நிலைக்களமாகப் பழங்கதைகளில் வரும் இடங்களுடன் அந்த அரண்மனை மிகவும் ஒப்புடையதாக இருந்தது. கெஞ்சியின் கற்பனையை இவ்வனுபவம் தூண்டிற்று. அவன் அவளுக்குச் செய்தி அனுப்ப எண்ணினான். ஆனால், அவள் ஒரு வேளை இதை ஒரு திடீர் நிகழ்ச்சியாகக் கருதிவிடக் கூடுமோ என்று அஞ்சினான். நாணமும் தயக்கமும் என்ன காரணத்தாலோ அவனைத் தடுத்தன. இவ்வளவுடன் யாழின்பத்தை நிறுத்திவிட்டால்தான் கெஞ்சி இளவரசிபற்றி ஆழ்ந்த ஆர்வத்துடன் செல்வானென்று மதித்து, கூரறிவுடைய மியோபு திரும்புபயணம் பற்றி நினைவூட்டினாள். ‘முகில் திரைகள் மூடுவதுபோலிருக்கின்றது. அத்துடன் புறப்படும் சமயத்தில் மறந்துவிட்டேன். என்னை காண ஒரு நண்பர் வருவதாக இருந்தார். அவரை மட்டுமீறிக் காக்கவைக்கக் கூடாது. எனக்கு இதுபோல வேலை நெருக்கடி இல்லாத சமயம் பார்த்து இன்னொரு தடவை.....’ என்றுகூறி, ‘நேரமாய்விட்டது. பலகணியை நானேஅடைத்து விடுகிறேன்’ என்று யாழ் வாசிப்புக்கு ஒரு முடிவு கட்டினாள். மேலும் வாசிக்கும் தூண்டுத லளிப்பதற்கு மாறாக அதன் அருமையை அத்துடன் நிறுத்திவிட்டு அவள் கெஞ்சியிடம் திரும்பவும் வந்தாள். ‘அந்தோ, இவ்வளவு சிரமப்பட்டு அவளை யாழ் மீட்டும்படி கூறி என்ன பயன்! அவ்வளவு சீக்கிரம் வாசிப்பு நின்றுவிட்டதே! அவள் பண்ணின் பொதுப் போக்கைக் கவனிக்கக்கூட நேரமில்லை. எவ்வளவு வருந்ததத்தக்க செய்தி?’ என்று கெஞ்சி அங்கலாய்த்துக் கொண்டான். பாட்டின் இனிமை நுகர்ந்தபின் அவள் அழகுபற்றிக்கூட அவன் எதுவும் ஐயுறவில்லை. ‘இன்னும் அருகாமையிலிருந்து கேட்கும்படி ஏற்பாடு செய்வாயென்று வேண்டிக் கொள்கிறேன்’ என்று மீண்டும் தொடங்கினான். ஆனால் இது வெற்றிபெறாமல் ஏமாற்றமே தரும் என்று மியோபு உணர்ந்திருந்தாள். ஆகவே அதை மறுத்தாள். ‘இளவரசி துறவிபோல வாழ்பவள். எப்போதும் கிளர்ச்சியற்ற நிலையில் சோர்ந்தடங்கி நாள் கடத்துபவள். எனவே புத்தம்புதிய ஓர் ஆளின் முன் பாட அவள் ஒரு போதும் இணங்கமாட்டாள்’ என்றாள். கெஞ்சி இவ் வாய்மையை ஒத்துக் கொண்டான். ‘ஆம். நீ கூறுவது உண்மையே. இம்மாதிரிச் செய்திகள் நன்கு பழக்கப்பட்டவர்களிடையிலோ அல்லது வெவ்வேறு வாழ்க்கைப் படியிலுள்ளவர்களிடமோ தான் நடை பெறமுடியும். நான் அறிந்த அளவில் இந்த இளவரசியின் நிலைநோக்கி நாம் மிகவும் நன்மதிப்புடன் நடக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆகவே என் ஆவலை மெல்லக்குறிப்பிடுவது போதும். அதற்குமேல் செல்லும் படி நான் உன்னைக் கேட்க மாட்டேன்’ என்றான். அன்றிரவே அவன் வேறொருவரைக் காண உறுதி கூறியிருந்தான். ஆகவே மிகு கவனத்துடன் உருமாற்றிக் கொண்டு அவன் போகப் புறப்பட்டான். அச்சமயம் மியோபு அவன் தோற்றம் கண்டு எள்ளி நகையாடினான். ‘உங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ கண்டிப்பும் கட்டுப்பாடும் சுமத்த நேர்ந்ததே என்று சக்கரவர்த்தி அடிக்கடி வருந்துகிறார்.’ அதை நினைக்க எனக்கு எவ்வளவோ சிரிப்பாயிருக்கிறது. நீங்கள் இந்த மாதிரி உருமாற்ற மேற்கொள்வதைக் கண்டிருந்தால் அவர் என்ன சொல்வாரோ?’ என்றாள். கெஞ்சி இது கேட்டுச் சிறிது அடங்கிய சினத்துடன் சிரித்தான். ‘என்னைக் குறைகூறுவதற்கு நீயல்ல சரியான ஆள். ஆடவனிடம் இத்தகைய நடத்தை கண்டிக்கத்தக்கது என்று நினைப்பவர்கள், பெண்களிடம் இதை இன்னும் மிகுதியாகத் தகாதென்றே கருதுவார்கள்’ என்றான். அவளுடைய தங்குதடையற்ற காதல் திருகு தாளங்களைப் பற்றிக் கெஞ்சி முன்பு எவ்வளவோ கண்டித்திருந்தான். இதை எண்ணி மியோபுவின் முகம் வெட்கத்தால் சிவந்தது. அவள் வாளா இருந்தாள். யாழணங்கை இன்னும் நேரடியாகக் காணலாம் என்ற நம்பிக்கையுடன் கெஞ்சி அவள் பலகணி அருகே நகர்ந்து சென்றான். மூங்கில்வேலி ஒரு சிறிது சிதைந்திருந்த பகுதியில் சென்று அவன் மறைந்திருக்க முனைந்தான். ஆனால் அந்த இடத்தில் இன்னோர் ஆடவன் பதிவிருக்கக்கண்டான். அது யாராயிருக்கக்கூடும்? பெரும்பாலும் அது அணங்கின் காதலர்களில் ஒருவராகவே இருத்தல் வேண்டும் என்று எண்ணி, இருளில் மறையும் நோக்குடன் பின்னடைந்தான். ஆனால் அயலான் அவனைப் பின் தொடர்ந்தான். அவன் வேறு யாருமல்ல, தோ நோ சூஜோவே என்பது அச்சமயம் விளங்கிற்று. அன்றுமாலை அவர்கள் இருவரும் ஒன்றாகவே அரண்மனையை விட்டுப் புறப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் பிரிந்த சமயம், கெஞ்சி நெடுமாடத்தின் திசையிலே செல்லவில்லை என்பதைத் தோ நோ சூஜோ கண்டான். இது அவன் ஆர்வம் கிளறிற்று. ஆகவே அச்சமயம் அவனுக்கு வேறொரு இரகசியச் சந்திப்புத் திட்டம் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது’ கெஞ்சியைப் பின் தொடர்ந்து அவன் ஈடுபாட்டின் விவரம் தெரிந்துகொள்வதே தன் முதல் அலுவலென்று துணிந்திருந்தான். ஆகவே புதியதொரு குதிரை மீது வேட்டைக்குரிய ஆடையணிந்து கொண்டு அவன் கெஞ்சியைப் பின் தொடர்ந்தான். தான் பின் தொடர்வதைக் கெஞ்சி ஒரு சிறிதும் அறியாதபடி அவன் அவ்வளவு திறமையாக உளவுமீது உளவு மேற்கொண்டான். எதிர்பாராத அவ்விடத்தில் கெஞ்சி நுழைவது கண்டதே, தன் நண்பனுக்கு இங்கே என்ன வேலை என்று அறியமாட்டாமல் தோ நோ சூஜோ திகைத்து நின்றான். ஆனால் அச்சமயம் யாழ் வாசிப்புத் தொடங்கிற்று. அதன் பின் கெஞ்சி திரும்பும் சமயம் அவனை வழிமறிப்பதென்ற எண்ணத்துடன் தோ நோ சூஜோ அங்கேயே பதுங்கியிருந்தான். ஆனால் இளவரசன் கெஞ்சிக்கு அவன் யாரென்று தெரியாத நிலையில், தன்னை அவன் அடையாளம் அறிந்துகொள்ளக் கூடாதே என்று அஞ்சியவாறு இருளில் பதுங்க முயன்றிருந்தான். ஆனால் சூஜோ அவனிடம் நேருக்கு நேர் நின்று குறும்பாகப் பாடினான். ‘நானான்கு நண்ணிய நளிர் மதியே! வானாடு கோமனையில் நின்றிரு வேமும் ஒன்றாகவே கிளர்ந்து சென்றனம், பினும் நன்றோ அடையுமிடம் என்றனிடம் நீ ஒன்றேனும் கூறா தொளித்த விதுவே!’ தான் நினைத்ததுபோலத் தான் இப்போது தனிமையில் இல்லை என்று கண்டு கெஞ்சி முதலில் சற்று அதிர்ச்சி யுற்றாலும், அது தோ நோ சூஜோ அன்றி வேறல்ல என்று கண்டதுமே அதிர்ச்சி நீங்கிச் சிரித்தான். ‘உன் துணையும் தயவும் எதிர்பாராதவை’ என்று கூறிவிட்டு, அந்த எதிர்பாராத் தயவால் தனக்கு ஏற்பட்ட சிறு எரிச்சலையும் ஓர் எதிர்பாடலாக வெளியிட்டான். ‘மங்கா முழுமதி எங்கு சென்றாலும் அதன் அமுதம் பொங்கார் அழகொளிதாம் விழைவார் அதைப் பின்தொடர்ந்து தங்காதல்தீர அதுசென்றடையும் மலைவரையும் எங்கேள்வனென்று சென்றேத்துவதன்றி என்செய்குவரே!’ சூஜோ மேலும் பேசினான். ‘இவ்வாறு நீங்கள் செல்வது பாதுகாப்பு அற்றது. இதை நான் விளையாட்டாகக் கூறவில்லை. உங்களுடன் ஒரு மெய்க்காவல் குழு எப்போதும் செல்ல வேண்டும். அப்போது என்ன நடந்தாலும் அது சரிப்பட்டு விட வழியுண்டு. ஒரு நாளில்லாவிட்டால் ஒரு நாள் இந்த இரகசியப் பயணங்களால் உங்களுக்குப் பேரிடர் உண்டாகும் என்றே அஞ்சுகிறேன்’ என்று அவன் சீரிய தொனியில் எச்சரித்தான். ஆனால் கெஞ்சியின் கவலை இதிலெல்லாம் இல்லை. அவனை உள்ளூர அரித்து வந்த எண்ணம் ஒன்றே - சூஜோ தன்னைத் தொடர்ந்து இப்போது வந்தது முதல் தடவையாய் இருக்கமுடியாது என்பதே! ஆனால் இதை பழக்கமாகக் கொண்டது உண்மையானால், யுகாவின் பிள்ளைபற்றி அவன் கெஞ்சியிடம் எதுவும் விசாரிக்காதது அவன் சூழ்ச்சி நயத்தின் பயனாகவே இருக்க வேண்டும் என்று கெஞ்சி நினைத்தான். இருவருக்குமே தனித்தனியாக வேறுவேறு இடத்தில் அலுவல் இருந்தாலும், அவர்கள் பிரியாமலே ஒருங்கு செல்லத் திட்டமிட்டனர். இருவருமே கெஞ்சியின் வண்டியில் ஏறிக்கொண்டனர். நெடுமாடத்துக்கு அவர்கள் செல்லும் வழியிலேயே வெண்ணிலா கருமுகிற் பாளங்களுக்கிடையே மறைவுற்றது. நண்பர்கள் இருட்டில் ஒருவர் மாறி ஒருவர் குழல் வாசித்து நட்புப் போட்டியிட்டு வழியைக் கழித்தார்கள். வாயிலுக்குள் வழிகாட்ட அவர்கள் பந்தக்காரர்களை அழைக்கவில்லை. மெல்ல நகர்ந்து ஒரு சிறு வாயிலை அணுகி,அங்கிருந்து தம் பொதுநிலை ஆடைகளைத் தருவித்து உடுத்தனர். பின் அப்போதுதான் அரண்மனையிலிருந்து வருபவர்கள்போல, தத்தம் குழல்களைப் பண்ணுற வாசித்த வண்ணம் உட்சென்றனர். அவர்கள் எவ்வளவு நேரம் சென்று வந்தாலும், அதைக் கண்டு கொண்டதாகச் சூஜோவின் தந்தை காட்டிக் கொள்வதில்லை. இப்போது அவர் தம் அருமைப் புல்லாங்குழல் எடுத்து வந்து அதை மிக இனிமையாக வாசித்தார். அதே சமயம் ஆய் இளவரசி தன் யாழைத் தருவித்து இசை பொழிந்தாள். தன் பாங்கியர்கள் அனைவரையும் அவரவர்கள் பயின்று திறம்பெற்ற கருவிகள் மூலம் ஒரே இசைமேளம் நடத்தும்படி செய்தாள். ஆனால் வீணையில் பேர்போன நகத்சுகாசா மட்டும் ஒன்றிலும் கலக்காமல் வாளா இருந்தாள். அவள் முதலில் தோ நோ சூஜோவின் காதலியாய் இருந்தவள். கெஞ்சியிடம் கொண்ட உள்ளார்ந்த வேட்கையால் அவள் அவனைப் புறக்கணித்துக் கைவிட்டாள். ஆனால் கெஞ்சியால் அவளுக்குக் கிடைத்த தொடர்பு நெடுமாடத்துக்கு வந்த சமயம் அவ்வப்போது காணும் வாய்ப்புமட்டுமே.. அவள் மறைவான உணர்ச்சிகள் ஆய் இளவரசியின் அன்னை பாங்கியருக்கும் தெரிந்திருந்தது. அவர்கள் அதனால் அவள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தனர். அவளுக்கு ஏற்பட்ட மனக்கசப்பில் அவள் வேறெங்கேனும் சென்று தங்கிக் கெஞ்சியைக் காணாமலே இருக்க உறுதி கொள்வதுண்டு. ஆனால் இதற்கான துணிவு அவளுக்கு இல்லை. இது அவள் துயரத்தைப் பெருக்கிற்று. இளவரசர் இருவரும் மாலையில் தாம் கேட்ட இசையையும் அச்சூழலின் மனோரம்மியமான சுற்றுப் புறக் காட்சிகளையும் இன்னதென்று வருணிக்க முடியாத அவற்றின் மாய அழகையும் எண்ணியவாறு மகிழ்ந்திருந்தனர். தன் கற்பனை வழி தானே நின்று, தனிமையான அந்த மாளிகை அணங்குக்குத் தோ நோ சூஜோ எல்லா வகைக் கவர்ச்சிக் கூறுகளையும் உரிமையாக்கிக் கண்டான். அத்துடன் மாதக் கணக்காகக் கூடக் கெஞ்சி இக்காதல் வேட்டத்தில் ஈடுபட்டிருந்தான் என்றே முடிவு செய்துகொண்டான். இம்மாதிரி ஒரு பெண்ணழகியிடம் கெஞ்சி கொண்ட அதே ஆர்வப் பாசத்தைத் தான் மட்டும் கொண்டிருந்தால், ஒரு சிறிது இகழோ பழியோ வந்தால்கூடத் துணிந்து அத்தோழமையை வெளிப்படையாக மேற்கொண்டே இருக்கக்கூடும் என்று அவன் எண்ணினான். இதுபற்றி அவன் கெஞ்சிமீது மன உளைச்சல் அடைந்தான். ஆனால் அதேசமயம் கெஞ்சி தன் காதல் கதையை இத்துடன் நிறுத்திவிடப் போவதில்லை என்றும் அவன் கருதினான். அவனுடன் அதில் சிறிது போட்டியிட்டு வேடிக்கை பார்க்கவும் அவன் துணிந்தான். இதுமுதல் இருநண்பர்களும் அணங்குக்குக் கடிதம் எழுதினார்கள். ஆனால் இவருவருக்கும் குழப்பத்தைத் தந்தது. இதற்குக் காரணம் என்னவாயிருக்கக் கூடும்? அவள் நாட்டுப்புறச் சூழலில் பயின்றவளாதலால், அச்சூழலுக்கேற்ற இயற்கைக் காட்சியின் உவமையணிகளே பொருத்தமாயிருக்கும் என்றெண்ணி இருவரும் மிகநுட்ப நயத்துடன் பலவகை மரஞ்செடி கொடிகள் பற்றியும் மலர்கள் பற்றியும் அழகுபட எழுதினர். இவற்றில் ஏதேனும் ஒன்று அவள் கவனந்தூண்டித் தம் காதலில் அவளை அக்கறை கொள்ளச் செய்யாதா என்று அவர்கள். ஆவலாகக் காத்திருந்தனர். நல்ல குடிப்பிறப்பும் கலைப்பயிற்சியும் அவளுக்கு இருந்தாலும், பரந்தகன்ற அம்மாளிகையின் தனிமையில் புதையுண்ட காரணத்தாலேயே ஒரு வேளை பதில் எழுதத்தக்க அறிவார்வம் அவளுக்கு இல்லாது போயிருக்கலாமோ என்று தோ நோ சூஜோ எண்ணினான். பதில் எழுதினால் என்ன, எழுதாவிட்டால் என்ன என்று அவள் சிலநாள் இருந்தாலும் இவ்விசித்திர நடவடிக்கையின் காரணம் என்னதான் என்றறியும் ஆவல் அவனுக்கு உண்டாயிற்று. அவனுக்கு வழக்கமான கள்ளங்கபடற்ற முறையில் அவன் கெஞ்சியிடம் இதுபற்றிய பேசினான். ‘உன் வகையில் அணங்கு பதில் எதுவும் அனுப்பினாளோ, என்னவோ - என்னால் அறியக் கூடவில்லை. ஆனால் சோதனை முறையாக நானும் ஒரு மெல்லிய குறிப்பு அவளுக்கு அனுப்பி வைத்தேன். வெற்றி எதுவும் கிட்டாததால், நான் மீண்டும் முயற்சி செய்யவில்லை’ என்றான். ‘சரி, சரி இவன் வேறு இதே முயற்சியில் ஈடுபட்டா இருக்கிறான்!’ என்று தனக்குள்ளே புன்முறுவலுடன் கூறிக் கொண்டான் கெஞ்சி. ஆனால் வெளியில் அவன் பேச்சை வேறு வகையாகத் தொடுத்தான். ‘என் கடிதம் பதில் தேவையில்லாத கடிதம். அதனால்தான் பதில் வரவில்லை என்று இயல்பாகக் கருதுகிறேன்’ என்றான். புதிருக்குள் புதிர்போன்ற இந்த விடையைக் கேட்டபின், எப்படியும் கெஞ்சிக்குப் பதில் கிடைத்தேயிருக்க வேண்டுமென்று தோ நோ சூஜோ எண்ணினான்.தனக்கில்லாத உரிமையை அணங்கு கெஞ்சிக்கு அளித்தது பற்றியும் அவன் உள்ளூரக் குறுகுறுப்பு அடைந்தான். மறுபுறம் கெஞ்சி இவ்வகையில் ஆழ்ந்த உணர்ச்சி ஈடுபாடு உடையவனாயில்லை. ஆயினும் சூஜோவின் சொல்லாற்றல் கவர்ச்சியை அறிந்தவன் அவன். அவன் தற்பெருமையும் இங்கே அவனைக் குத்திக் கிளறிற்று. ஆகவே அணங்கு தன் நாண எல்லைமீறி இதற்குள்ளாகக்கூட அவனுக்குப் பதில் எழுதத் தொடங்கியிருப்பாளோ என்று அஞ்சினான். தன்னிடமிருந்து தன்பாசத்தை அவள் அவன் பக்கமாகத் திருப்பி விடுவதாக அவனுக்குத் தெரிந்து விட்டால், அவன் தலைக் கனத்துடனும் இறுமாப்புடனும் தன்னிடம் வீம்பாக நடந்துகொள்ளக் கூடுமென்றும் கவலைப்பட்டான். இந்நிலையில் அவன் மீண்டும் மியோபுவை அடுத்து அவளை மேலும் தூண்டத் தொடங் கினான். ‘இளவரசி என் கடிதங்களின் பக்கம் ஏன் ஒரு சிறிதும் கவனம் திருப்பாமலிருக்கிறா ளென்பதை என்னால் உணரக் கூடவில்லை. நான் நிலையற்ற காதற் பொழுது போக்காளன், அவ்வகையில் சிறிது விளையாடிப் பின் மனமாறிச்சென்று விடுவேன் என்று அவள் நினைக்கிறாள் போலும்!’ ஆனால் உனக்குத் தெரியும் இது என் பண்பல்ல என்று! நான் உறுதியற்றவனாகத் தோற்றுவதற்குக் காரணம் என் கோரிக்கைகளுக்கு எதிர்பாரா வகையில் புறக்கணிப்பு ஏற்படுவதே. எனினும் இந்த அணங்கு வகையில் எனக்கு நம்பிக்கை இருந்தது. அவள் சூழலில் எங்கள் நட்பைத் தடைசெய்யத்தக்க பெற்றோர்களோ, உடன்பிறந்தார்களோ யாரும் இல்லை. அவள் மட்டும் என்மீது நம்பிக்கை வைத்துப் பார்க்கட்டும். அவள் தனிமையாயிருப்பது என் நேசத்துக்குத் தடையாக மாட்டாது - நான் அவளை உணர்ச்சியற்றவனாகக் கடுமையுடன் நடத்தி விடமாட்டேன். நேர்மாறாக, அத்தனிமையே என் வகையில், அவள் கவர்ச்சியைப் பன்மடங்காக்குகிறது’ என்றான். மியோபு அமைதியுடன் மறுமொழி கூறினாள். ‘சற்றுப் பொறுங்கள் ஐயனே! இச் சீமாட்டியை ஒரு சிறு பக்கக் கவர்ச்சியாக எண்ணி விடாதேயுங்கள். அவளை அணுகுவது கடினம் என்பதை நீங்கள் அவள் பதவிக்குரிய இயல்பாக ஏற்றுக்கொண்டாக வேண்டும். அவளிடம் போதிய மதிப்பும் பொறுமையும் காட்டப் பழகிக் கொள்ள வேண்டும்’ என்றாள். இளவரசிபற்றி மியோபு கண்ட அனுபவம் உண்மையில் இதற்கு உகந்ததாகவே இருந்தது. கெஞ்சியும் இப்போது இளவரசி சார்பில் விளக்கம் நல்கினான். ‘தன் சாதுரியத்தையோ திறமையையோ காட்டிக்கொள்ள வேண்டும் என்ற அவா அவளுக்கு இருக்கவில்லை என்பது தெளிவு. அவள் மிகவும் அமைதியுடையவள், பிறரையும் மன்னிக்கும் இயல்புடையவள் என்று எனக்குத் தோற்றுகிறது’ என்றான். அவன் உள்ளத்தில் யுகாவின் எண்ணம் இச்சமயம் தலைதூக்கி நின்றது. இதனை விரைந்தடுத்துக் கெஞ்சி காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தான். அதன்பின் இரகசியமிக்க செய்தி ஒன்றில் அவன் சில நாள் முழுதும் ஈடுபட்டிருந்தான். இக் காரணங்களால் இளவேனிலும் வேனிலும் முற்றிலும் முடியும்வரை அவன் இத் தனி மாளிகை அணங்கின் திசையில் கருத்துச் செலுத்த முடியாமலிருந்தது. ஆனால் இலையுதிர் காலத்தில் அவனுக்குச் சிந்திக்கும் ஓய்வு ஏற்பட்டது. ஆனால் இச்சமயம் மீண்டும் சாயக்காரரின் குறுந்தடி ஓசை அவனுள்ளத்தில் பழைய துயர அலைகளை எழுப்பத் தொடங்கிவிட்டது. அது பழைய ஏக்கங்களையும் கிளறிவிட்டது. யாழ் அணங்குக்கு அவன் இச்சமயம் பல கடிதங்கள் வரைந்தான். ஆனால் முன்போலவே இதில் அவன் வெற்றி காணவில்லை. அவன் உள்ளம் குமுறி எழுந்து அவனை அலைக்கழித்தது. ஆனால் முயற்சியைக் கைவிட்டுவிடும் எண்ணம் அவனுக்குச் சிறிதும் இல்லை. முன்னிலும் முனைந்து மேற்செல்லவே விரும்பினான். மியோபுவை அழைத்து, தனக்கு இவ்வகையில் எவ்வகை ஊக்கமும் அளிக்காதது பற்றி அவளை அவன் மிகவும் கடிந்து கொண்டான். ‘இம்மாதிரி நடத்தையை நான் இதற்கு முன் கேட்டதேயில்லை. இளவரசியின் மனப்போக்கு என்னவாகத் தான் இருக்கக்கூடும்?’ என்றான். அவன் தொனியில் மனக்கசப்பும் ஆர்வக் கொந்தளிப்பும் இருந்தன. ஆனால் மியோபுவின் உள்ளத்தில் இந்நிகழ்ச்சியின் போக்குப்பற்றி வேறு மனக்கவலை இருந்தது. அவள் பேச்சு ஆறுதலளிப்பதாய் அமைந்தது. ‘நீங்கள் செய்தவற்றில் தவறாகவோ, பொருத்தக் கேடாகவோ எதுவுமில்லை. இந்நிலையில் அவளும் எதுவும் தவறாகக் கொண்டிருக்க முடியாது. அவள் உங்கள் கடிதங்களுக்குப் பதில் தெரிவிக்கவில்லை என்றால், அதற்கு வேறு எதுவும் காரணமாய் இருக்கமுடியாது. புற உலகுடன் தொடர்புகொள்ளத் தயங்கும் அவள் பொதுத் தயக்கத்தில் இது ஒரு கூறன்றி வேறல்ல’ என்றாள். கெஞ்சி முற்றிலும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘எப்படியும் இந்த நடத்தை மிகவும் பண்பு கெட்டதாகும். முழுதும் காட்டுமிராண்டித் தனமாகும். அவள் வயதுவராத சிறுமியாய், தாய்தந்தையர் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வளாயிருந்தால், இந்த நாணமும் தயக்கமும் பொருந் துபவையாகும். அவனைப் போலத் தன்னிச்சையும் தன்னு ரிமையும் கொண்ட அணங்கினிடம் இத்தகு நடத்தை எதிர்பார்க்கத் தக்கதன்று. அவள் உலக அனுபவமுடைய வளென்று நான் இயல்பாகக் கருதியிராவிட்டால், இவ்வாறு எழுதியிருக்கவே மாட்டேன். ஓய்வுகாலச் சோம்பல் வேளைகளிலோ, கிளர்ச்சியற்ற நேரங்களிலோ ஒத்துணர்வு காட்டிக் கிளர்ச்சியூட்டுவாளென்றுதான் எதிர்நோக்கியிருந் தேன். காதல் வேடரின் மொழியில்கூட நான் ஒன்றும் எழுத வில்லை. தனி மாளிகையில் வந்து அவளுடன் அவ்வப்போது பேசியிருக்கும் உரிமை மட்டுமே கோரியிருந்தேன். ஆனால் அவள் இக்கோரிக்கையை இவ்வாறு உணர்ந்துகொள்ளும் ஆற்றலற்ற வளாயிருப்பதால், இனி அவள் இணக்கம் பெறாமலே என்ன செய்ய முடியும் என்றுதான் பார்க்க வேண்டும். நீ இவ்வகையில் உதவமுடியுமானால், நான் உன் செயலுக்கு எத்தகைய அவப்பெயரும் உண்டுபண்ண மாட்டேன்’ என்றான். மியோபு இதற்கு முன் அடிக்கடி தான் கண்டவர்களை, கேட்டவர்களைப் பற்றியெல்லாம் கெஞ்சியிடம் விரித்துரைக்கும் வழக்கமுடையவள். கெஞ்சியும் அவற்றைத் தணியா ஆர்வத்துடனும் புத்தவாவுடனும் கேட்டு வந்தான். ஆனால் நீண்டகாலமாக அவற்றில் அவன் கருத்துச் செலுத்தியதேயில்லை. ஆயினும் இச்சமயம் மட்டும் எக்காரணத்தாலோ இளவரசியின் பெயர் கேட்ட கணத்தி லிருந்தே அவன் உள்ளத்தில் ஆர்வத் தீ கொழுந்து விட்டெரிந்தது. இது விளக்க முடியாத ஒன்றாகவே இருந்தது. ஒரு வேளை அணங்கு அவனுக்குக் கவர்ச்சியற்றவளாகவே இருந்துவிடலாமோ என்று மியோபு அஞ்சியிருந்தாள். ‘அப்படி நேர்ந்தால், அவனை அவளுக்கு அறிமுகம் செய்து வைப்பதனால், அவளுக்கு மிகுதி பயன் ஏற்படமுடியாது. அதே சமயம் கெஞ்சி இவ்வளவு ஆர்வம் காட்டிய இடத்தில், அவனுக்கு உதவி செய்யாமலிருப்பதும் மிகவும் பண்புக்கேடான செயலாய்விடும்’ என்று அவள் கருதினாள். இளவரசி குழைவு நெளிவுப் பண்பற்றவள். பழம் பசலிப் பாங்குடையவள். இளவரசன் ஹிதாச்சி வாழ்ந்தபோதே அவள் இருந்த மாளிகையைச் சுற்றிப் புதர்கள் விரைந்து மூடி வந்தன. அங்கே வருபவர் எவரும் கிடையாது என்ற நிலை ஆயிற்று. எனவே மாளிகையிலிருந்த பாங்கியருக்கும் மற்றக் கீழ்த்தரப் பணியாளர்களுக்கும் கெஞ்சிபோன்ற ஒருவன் வரவு எவ்வளவு ஆர்வப் பரபரப்பை ஊட்டிற்று என்று கூறவேண்டியதில்லை. அவன் கடிதத்துக்குச் சாதகமான பதில் எழுதும்படி தம் தலைவியை அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தினர். ஆனால் அவள் நாணம் கோர உருவெடுத்து நின்றது, அது வளையவே மறுத்தது. கெஞ்சியின் கடிதங்களை வாசிக்கக்கூட அவள் இணங்கவில்லை. மியோபு காதுகளுக்கு இது எட்டிற்று. இடையே தட்டி வைத்து இளவரசியுடன் அவள் சில சமயம் விசித்திரமான முறையில் அயலார் போலப் பேசுவதுண்டு. அச்சமயம் சரியான வேளை பார்த்து அவளிடம் கெஞ்சியின் கோரிக்கையைத் தெரிவிப்பதென்று அவள் முடிவு செய்தாள். ‘அவள் இதில் வெறுப்புத் தெரிவித்தால், இந்தக்காரியத்தில் இதற்குமேல் நான் தலையிடவே போவதில்லை. ஆனால் அவள் மட்டும் இணக்கம் தெரிவித்துவிட்டால், அதற்குமேல் எல்லாம் அமைதியாகவே நடக்கும். அவர்களிடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு விட்டாலும், நல்லகாலமாக, அவளைக் கடிந்து கொள்வதற்கோ, என்னைச் சிக்கல்களில் மாட்டுவதற்கோ இங்கே யாரும் இல்லை’ என்று அவள் தனக்குள் கூறிக்கொண்டாள். இதுமாதிரிச் செய்திகளில் அவள் கைதேர்ந்தவளாதலால் இவ்வெண்ணங்களைத் தன் உள்ளத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டாள். யாரிடமும் - தன் தந்தையிடம் கூட - இதுபற்றி அவள் எதுவும் கூறவில்லை. ஒரு நாள் எட்டாவது மாதம் இருபதாவது நாளிரவு நெடுநேரமான பின்னும் இளவரசி நிலா உதயம் காணக் காத்திருந்தாள். விண்மீன்கள் நன்கு ஒளிவீசி வெளிச்சம் தந்தாலும், செந்தூர மரங்கள் வழியாக இரைந்து கொண்டிருந்த ஊதைக் காற்று அவள் உள்ளத்தில் துயர உணர்ச்சிகளைப் படிய விட்டிருந்தது. காத்திருந்து களைப்புற்ற நிலையில், அவள் மியோபுவிடம் முன் நாட்களின் நிகழ்ச்சிகள், மக்கள் பற்றிய பேச்சுகளில் ஈடுபட்டிருந்தாள். கெஞ்சியின் செய்தியை அறிவிப்பதற்கு இதுதான் தக்க சமயம் என்று கருதினாள் மியோபு, அவள் அழைப்பின் பேரில் கெஞ்சி வழக்கம்போல் மாளிகைக்கு அருகே வந்து மறைவில் காத்திருந்தான். நிலா அப்போதுதான் உதயமாயிருந்தது. மூங்கில் புதர்கள் சற்று நெருக்கம் குறைவாயிருந்த பகுதியில் வந்து நின்று அவன் உள்ளே நடப்பதைக் கூர்ந்து கவனித்தான். மியோபுவின் மெல்லிணக்கம் வாய்ந்த தூண்டுதலின் பேரில், இளவரசி ஏற்கெனவே யாழ் கையில் ஏந்தியிருந்தாள். தூரத்தில் இருந்து கேட்ட அளவில், பாடல் ஓரளவு இனிமையாகவே இருந்தது. ஆனால் அருகிலிருந்த மியோபு அதனைக் கவர்ச்சியுடையது என்று எண்ணவில்லை. ‘இளவரசி இதைவிடப் புதுமாதிரியாக ஏதேனும் பாடியிருக்கக்கூடாதா’ என்றே கருதினான். கெஞ்சி காத்திருந்த இடம் முற்றிலும் பார்வையிலிருந்து மறைந்திருந்தது. அதனை வாய்ப்பாகக் கொண்டு அவன் மெல்லமெல்ல நகர்ந்து, இறுதியில் மாளிகைக்குள்ளேயே நுழைந்துவிட்டான். தன் வரவைச் சந்தடி செய்து அவன் தெரிவித்தான். ‘ஆனால் அவன் வருகையை ஒரு சிறிதும் எதிர் பாராதவள் போல நடித்து மியோபு இளவரசியிடம் தன் வியப்பைக் காட்டிக்கொண்டாள், ‘அம்மணி, இப்படி நேர்ந்ததற்கு மிகவும் வருந்துகிறேன். இதோ என்னைத் தேடிக் கெஞ்சி இளவரசர் வந்துவிட்டார். அவருக்கு உன் நல்லெண்ணத்தை நான் பெற்றுத்தர இயலவில்லை என்பதற்காக அவர் என்னை மிகவும் நொந்து கொள்கிறார். ஆனால் நான் என்ன செய்வேன்? அவருக்கு ஊக்கம் தரும் முறையில் நீ எதுவும் என்னைப் பேசவிடவில்லையே! இப்போது அவர் தாமே நேரில் வந்து தன் காரியத்தைத் தானே பார்த்துக்கொள்ள நினைக்கிறார் என்று எண்ணுகிறேன், அவரிடம் இப்போது நான் என்ன சொல்ல? அவரைப் பற்றி ஒன்று மட்டும் நான் உனக்கு உத்தரவாதம் சொல்லமுடியும். அவர் எதுவும் வரம்பு கடந்து துடுக்குத் தனமாக நடந்து கொள்ள மாட்டார். ஆகவே அவர் எவ்வளவோ முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பதை நோக்கி, ஒரு திரையை இடையிட்டாவது நீ அவருடன் பேச இணங்குவாய் என்று நம்புகிறேன்’ என்றாள். இதைக் கேட்ட இளவரசி பெரிதும் கலவரமுற்றாள். ‘அந்தோ! அவரிடம் என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லையே’ என்று ஏங்கிக் கொண்டு அறையின் மறுபுறம் ஓடிச் சென்றாள். மியோபு அதுகண்டு சிரிக்காமலிருக்க முடியவில்லை. ‘நீங்கள் என்ன குழந்தை மாதிரி இதற்கெல்லாம் இவ்வளவு மனத்தாங்கல் கொள்கிறீர்கள், அம்மணி! மற்றப் பல இளம் பெண்களைப் போலத் தாய் தந்தையர், அண்ணன் தம்பியர் கடுமையான கண்காணிப்பில் நீங்கள் இருப்பதானால், இது ஓரளவு இயற்கையாகத் தோற்றலாம். ஆனால் உங்கள் நிலையிலுள்ள ஒருவர் உலகின் கண்ணில் விழிக்க இவ்வளவு அஞ்சுவது பொருந்தாத செய்தியாகும்’ என்றாள். அவள் மியோபுவின் கண்டிப்புக்கு எதிராக அவளால் எதுவும் கூறமுடியவில்லை. யார் அவளை என்ன செய்யச் சொன்னாலும் அதை எதிர்த்துப் பேச அவளுக்கு எத்தகைய திறமையும் கிடையாது. ஆகவே தன் அச்சம் இடம் கொடுக்கும் அளவுக்கு மியோபுவின் வேண்டுகோளுக்கு அவள் இணங்கினாள். ‘கதவு மட்டும் தாழிடப்படட்டும். கதவின் அழிக்கு இப்பாலிருந்து பேசுகிறேன். அத்துடன் நான் எதுவும் வாய் திறவாமல் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்க மட்டும் செய்வதானால் தான், நான் இதை ஏற்க முடியும்’ என்றாள். மியோபு மீண்டும் பேசினாள். ‘அவரை வேலைக்காரர்கள் இருக்கும் நெடும் பலகையிலா இருக்கச் சொல்வது ? அது முடியாது. அத்துடன் அவர் எதுவும் திடீரென்று வலிந்து செய்துவிடுவார் என்று நீ ஏன் அஞ்ச வேண்டும். அத்தகைய அச்சத்துக்கே இடமில்லை’ என்றாள். இவ்வளவு வற்புறுத்தலின் பின்னும் இளவரசி பெண்கள் பகுதிக்கும்,வெளிக்கூடத்துக்கும் இடையே உள்ள இரண்டாங் கட்டுக்குச் சென்று அதன் வாயிற்கதவைத் தானே தன் கையினால் இழுத்துத் தாழிட்டுக் கொண்டாள். அத்துடன் மனநிறைவடையாமல், அதன் விம்பு விளிம்புகளைக் கூட அடைக்கும்படி ஒரு மெத்தையை எடுத்து அதன் மீது சார்த்திக் கொண்டாள். அவளது அப்போதைய மனநிலையில் ஏதாவது பேச எண்ணியிருந்தால் கூடப் பேச முடியாதபடி அவன் உள்ளம் ஒரே கலவரமும் குழப்பமுமாய் இருந்தது. ஆனால் உண்மையில் அவள் பேச இணங்கி வரவில்லை. கெஞ்சி பேசுவதைக் கட்டாயம் கேட்கும்படி மியோபு சொன்ன படியால் அவனுக்குச் செவி கொடுக்க மட்டுமே இணங்கி அவள் இந்நிலை மேற் கொண்டாள். இரவான நேரத்திலிருந்து உள்ளறையில் செவிலியர் நிலையிலுள்ள பல முதிய வயதுடைய பணிப் பெண்டிர் அரைத் தூக்கத்தில் அயர்ந்திருந்தனர். ஆனால் இச்சமயத்திலும் கெஞ்சியைப் பற்றி எவ்வளவோ கேள்விப்பட்டிருந்த இளம் பெண்டிரும் ஓரிருவர் இருந்தனர். அவர்கள் எந்தக் கணத்திலும் கெஞ்சியுடன் பழகும் வாய்ப்புக்கு ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவர்கள் இப்போது தாமே சென்று தம் தலைவியின் மிகச் சிறந்த ஆடையணிகளை எடுத்துக் கொண்டு வந்தனர். தாமே அவளுக்கு ஒப்பனை செய்யவிடும்படி அவர்கள் அவளை வற்புறுத்தினர். இளவரசி இவ்வேற்பாடுகள் எவற்றிலும் கருத்துச் செலுத்தவில்லை. இத்தகைய இரவு நேர நடவடிக்கைகளுக்கென்று கெஞ்சி தன் உருமாற்றுடையிலும் தன்னை உன்னிப்பாக நன்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தான். அம்மாற்றுருவிலேயே அவன் எவ்வளவோ வனப்புமிக்க தோற்ற முடையவனா யிருந்தா னென்று மியோபு எண்ணாதிருக்க முடியவில்லை. இவற்றை நன்கு மதிப்பிட்டு உணர்வதற்குரிய வேறு ஏதாவது ஒருவர் வகையில், உருவை மேற் கொண்டானில்லையே என்றுகூட அவள் வருந்தினாள். அவளுக்கு இந்நிகழ்ச்சியில் இப்போதிருந்த ஒரே ஆறுதல் இளவரசியின் அமைந்த குணம் பற்றியதே. குறைந்த அளவு பெண்டிருக்கு இயல்பான சகிப்புக் கேட்டினாலோ, அதிக ஆசைகளினாலோ அவள் கெஞ்சிக்குத் தொந்தரவு தருபவளல்லள் என்று அவள் தனக்குள் கூறிக் கொண்டாள். ஆனால் அதே சமயம் இளவரசி பற்றி அவள் கவலைப்படா மலில்லை. ‘அந்தோ! இவள் கெஞ்சியிடம் காதல் கொண்டு விட்டால் என்ன செய்வது? அவர் வசவுக்கு நான் அஞ்சிய ஒரு காரணத்தினால் அவள் உள்ளம் முறிவுற நேர்ந்தால் என்ன செய்வது?’ என்று அவள் தனக்குள் தானே கேட்டுக் கொண்டாள். இளவரசியின் சமுதாயப் படியையும், அவள் பயிற்சி முறையையும் நோக்கி, காலத்துக்கொத்த நாகரிகம் வாய்ந்த ஓரணங்கின் நிமிர்ந்த நடையைக் கெஞ்சி அவளிடம் எதிர்பார்க்கவில்லை. அவள் உணர்ச்சியார்வமுடையவளாகவும் மயங்கிய தளர் நடையுடையவளாகவும் தோற்றக் கூடும் என்றே எதிர்நோக்கினான். மியோபு அவளைத் தள்ளாத குறையாகத் தள்ளியபின், புது ஆளுடன் உரையாடுவதற்குக் குறித்த இடைத்தட்டியருகே அவள் வந்து நிலை கொண்டாள். அச்சமயம் சந்தனத்தின் இனிய நறுமணம் அவன் மூக்கைத் துளைத்தது. இந்த ஆர்வக் காதற் சின்னம் அவன் உள்ளத்தில் ஆர்வ நம்பிக்கையே எழுப்பிற்று. அவன் உணர்ச்சி வேகத்துடனும் உள்ளார்ந்த கனிவுடனும் தன் காதலை வருணிக்கத் தொடங்கினான். ஓர் ஆண்டுக் காலமாகத் தன் உள்ளத்தில் அவளை இடைவிடாது வைத்துப் பூசித்ததாகக் கூறித் தன் ஆவலை எடுத்துரைத்தான். ஆனால் அவள் ஒரு சொல் கூட மறுமொழியாகக் கூறவில்லை . உண்மையில் அவள் எழுத்துத் திறமை இருந்த நிலையிலேயே பேசும் திறமையும் இருந்தது. இதனால் பெரிதும் மனம் வெம்பி அவன் ஒரு பாடல் இசைத்தான். ‘பாங்குறு மோன நோன்பு பாவைநீ கொள்ளல் கண்டும் பதின்முறை படையெ டுத்தேன் அயர்ந்திலேன் இன்னும், ஊமைப் பண்புறு தண்டம் வீழ்ததும் பதம் செவிப் படாத தாலே!’ என்று பாடினான். ‘ குறைந்தது போய்வருக என்று விடை கொடுத்தாவது அனுப்பு. என்னை இவ்வாறு ஏக்கத்தில் விட்டுவிட வேண்டாம்’ என்று இரந்தான். இளவரசியின் பெண்டிரிடையே அவளது முதிர் வயதுடைய செவிலியின் மகளான ஜிஜு என்று ஒருத்தி இருந்தாள். அவள் மிகுந்த சுறுசுறுப்பும் கூரறிவும் உடையவள். ஆகவே இளவரசியின் மதிப்பு அவ்வளவு குறை பட்டு விடுவதைக் காண அவள் மனம் ஒருப்படவில்லை. அவள் இளவரசியின் அருகே சென்று நின்று ஓர் எதிர்பாடல் மூலம் பாடலுக்கு மறுமொழி தந்தாள். ‘செஞ்சொல் மணியோசை கேட்டிருந்தேன் இந்நேரம், நெஞ்சமது மோனம் கொண்டிருந்த தந்நேரம்! இந்தச் சமயம்வரை காத்திருக்க வைத்ததற்கு நொந்த தெனதுள்ளம் நுவன்றேன் மதிஇதுவே!’ சொற்களை அவள் உச்சரித்த வகையே கெஞ்சியை முற்றிலும் கவர்ந்தது. ஏனெனில் இவ்வளவு பொருத்தமாய் உடனடியாகத் தன் பாடலுக்கு எதிர் பாடல் கூறியது இளவரசியே என்று அவன் எண்ணினான். பழமைப்பட்ட உயர்குடி நங்கையாகிய இளவரசியிடம் அவன் இவ்வளவு புத்தார்வத்கையும் புதுமுறுக்கையும் எதிர்பார்த்ததில்லை. எனவே மகிழ்ச்சி கலந்த வியப்பார்வத்துடன் அவன் ‘அம்மணி, தம்மைக் கண்ட இந்நாள் நன்நாள்’ என்று எதிர் மொழிந்தான். அத்துடன், ‘பேசு மொழிச் சொற்களிலும் பேசா மொழிச் சொற்கள் தேசுடைய வேனும் திகைப்பூட்டும் ஆரணங்கே!’ என்ற பாடலும் இசைத்தான். தன்னாலியன்ற மட்டும் இளவரசிக்குக் கிளர்ச்சியூட்டி மகிழ்விக்கும் எண்ணத்துடன் அவன் தன் மனத்தில் தோன்றிய சின்னஞ்சிறு செய்திகளை யெல்லாம் தேடி எடுத்துப் பேசிப் பார்த்தான். எதுவும் பயனில்லை. இந்த விசித்திரப் பிறவியின் மோனம் ஒருவேளை ஆழ்ந்த உணர்ச்சிக்குரிய ஒரு சின்னமாகத் தான் இருக்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு உண்டா யிற்று. அதற்குமேல் அவன் அவளைப் பார்க்கும் ஆர்வத்தை அடக்கி வைக்க முடியவில்லை. தாழிட்டபடியே கதவை மெல்ல உதைத்துத் தள்ளிக் கொண்டு அவன் திடுமென உள்ளே நுழைந்தான். அவன் கூறியிருந்த உறுதியெல்லாம் தகர்ந்து விட்டது கண்டு மியோபு கலங்கினாள். ஆனால் அதனையும் அதன் பின் நடக்கும் நிகழ்ச்சிகளையும் தெரிந்து கொள்ளாதது போலிருப்பதே நல்லது என்று எண்ணிக் கொண்டு, திரும்பிப் பாராமலே அவள் தன் அறைக்கு விரைந்தாள். ஜிஜுவும் மற்றப் பணிப் பெண்களும் கெஞ்சியைப்பற்றி எவ்வளவோ கேட்டிருந்தவர்களாதலால், அவனை நேரில் காணும் ஆர்வமிக்கவர்களாகவே இருந்தனர்.ஆகவே அவன் துடுக்குத் தனமிக்க நடத்தைக்காக அவர்கள் அவன் மீது கோபம் கொள்ளவில்லை. அவர்கள் கலக்கம் முழுவதும் எதிர்பாராத இக்கட்டை அவள் எப்படிச் சமாளிக்கப் போகிறாளோ என்று மட்டுமே அவர்கள் விழித்தார்கள். கெஞ்சி நுழைந்த சமயம் அவள் வெட்கம், குழப்பம் ஆகியவற்றின் உச்சியில் மிதந்து தத்தளித்துக் கொண்டிருந்ததைத் கண்டான். ஆனால் இது சூழலும் சந்தர்ப்பமும் நோக்க இயல்பானதே என்று அவன் கருதினான் அவள் பயிற்சி முறையின் கண்டிப்பும் ஒதுக்கமும் இதே பண்புகளைத்தான் வளர்த்திருக்க முடியும் இவற்றை எண்ணி அவன் பொறுமை காட்ட முற்பட்டிருந்தான். அறையின் மங்கிய அரை ஒளியில் கண்கள் பழக்கப் பட்டபின் அவன் அவளைக் கூர்ந்து கவனித்தான். அவள் ஒரு சிறிதும் அழகுக் கவர்ச்சியற்றவள் என்று அப்போது தான் கண்டான். ‘அந்தோ! இதுவரை காட்டிய ஆர்வத்துக்கும் முயற்சிகளுக்கும் ஈடாக, அவளிடம் ஏதேனும் ஒரு சிறப்புக் கூடவா கிடையாது? ஆம். எதுவுமில்லை. என்ன செய்வது? நேரம் ஆய்விட்டது. தங்குவதால் இனி பயன் எதுவும் இல்லை’ என்று கருதி, மிகுந்த மன வெறுப்புடன் அவன் மாளிகையை விட்டகன்றான். என்னென்ன நடக்கிறது என்று காணும் ஆர்வமிகுதியால் மியோபு உறங்காமல். எல்லாம் உற்றுக் கவனித்துக் கொண்டே இருந்தாள். அதே சமயம் கெஞ்சியின் நுழைவையே அறியாத பாவனையில் அவள் இருந்ததனால், அவன் வெளியே செல்வதை அவள் காதுகள் அறிவித்தபோதுகூட, அவள் வெளியே வந்து அவனுக்கு விடைதரவில்லை. எதுவும் பேசவுமில்லை. கெஞ்சி மெல்ல வெளியே வந்து தன் நிஜோயின் மாளிகையையடைந்து படுக்கையில் சாய்ந்தான். தான் இறங்கிய முயற்சியில் இப்போது செய்தது மட்டும்தான் சரியான நடவடிக்கை என்று அவன் கருதினான். ‘அந்தோ! எத்தகைய ஏமாற்றம்! அதிலும் அவள் ஓர் இளவரசி, உயர் பண்புடைய குடியின் நங்கை என்று எண்ணும்போது எவ்வளவு வியப்பு! இதனால் இப்போது ஏற்பட்ட சிக்கல் பொறியும் சிறிதன்று. என் செய்வது?’ இத்தகைய சிந்தனைகளுடன் அவன் கிடந்து புரண்டு கொண்டிருந்தான். இதற்கிடையே தோ நோ சூஜோ அந்த அறைக்குள் நுழைந்தான். ‘வர எவ்வளவு நேரம், அன்பரே! இதற்கு உண்மையில் என்ன காரணம் என்பதை என்னால் ஊகிக்க முடியாமலில்லை’ என்று அவன் கிண்டலாகப் பேசத் தொடங்கினான். கெஞ்சி அவன் பேச்சுக்கு இடங் கொடுக்க விரும்பாமல் எழுந்தான். ‘இங்கே தனியாக மிகவும் சுகமாகப் படுத்துத் தூங்கி விட்டேன். நேரம் போனதே தெரியவில்லை. சரி நீஅரண்மனையிலிருந்துதான் வருகிறாயா?’ என்று கேட்டான் . சூ ஜோ ‘ஆம்’ என்று ஒத்துக் கொண்டான். ‘ஆம். நான் வீட்டுக்குச் செல்லும் வழிதான் இது. ஸுசாக்குயின் மாளி கைக்குச் சக்கரவர்த்தி வருகைதர விருக்கிறாரல்லவா? அதை ஒட்டிய விழாவுக்கான ஆடகர்களையும் பாடகர்களையும் தேர்ந்தெடுக்கப் போகிறார்களென்று நேற்றுத்தான் கேள்விப்பட்டேன். இதை என் தந்தையாரிடம் போய்ச் சொல்ல எண்ணுகிறேன். திரும்பிவரும் வழியில் இங்கே வந்து பார்க்கிறேன்’ என்றான் அவன். சூ ஜோ நோ விரைவது கண்டு தானும் நெடுமாடத்துக்கு உடன் வருவதாகக் கெஞ்சி கூறி அவனை அமர்த்தினான். உணவை உடனே தருவித்து அவனையும் விருந்தினனாக்கி உடனிருந்து உண்ணும்படி அழைத்தான். அவர்களுக்கு இரண்டு வண்டிகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் அவர்களிருவரும் ஒரே வண்டியில் ஏறிக் கொண்டனர். போகும்போது அவன் கெஞ்சியிடம் கிண்டலாகவும் குத்தலாகவும் பேசினான். ‘உன் கண்களில் தூக்கம் நிழலாடுகிறதே! என்னிடம் கூற விரும்பாத ஏதோ சுவைகரமான நிகழ்ச்சியில்தான் நீ ஈடுபட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்’ என்றான். ஒரு நாள் கெஞ்சிக்கு அரண்மனையில் எத்தனையோ முக்கியமான கடமைகள் இருந்தன. அவன் இரவு நேரம் வரை அரண்மனையிலேயே இருந்து விட்டான். இரவு நெடுநேரம் சென்றபின்தான் அவனுக்குத் தோற்றிற்று, வழக்கமான கடிதமாவது அனுப்பியிருக்கலாம் என்று! இளவரசியின் மனையைப் போகவர இடைவழித் தங்கலாகவே அவன் பயன்படுத்தியது பற்றி மியோபு முந்திய நாள் தான் அவனை மிகவும் கடிந்து கொண்டிருந்தாள். ஆயினும் இன்று இடைவழியில் அங்கே தங்கும் விருப்பம்கூட அவனுக்கு இல்லாமல் போயிற்று. கடிதம் வரும், கடிதம் வருமென்று ஓரைகள் பல காத்துக் கழிந்த பின்னும் எதுவும் வராதது கண்டு, மியோபு மிகவும் கவலை கொண்டாள். கெஞ்சியின் இந்த மரியாதைக் குறைவினால் இளவரசி மிகவும் வருத்தப்படுவாளென்று அவள் எண்ணிக் கொண்டாள். ஆனால் உண்மையில் இளவரசியின் மனநிலை வேறு. வேறு எது பற்றியும் நினைக்கவே இடமில்லாமல், முந்திய இரவு நடந்த நிகழ்ச்சி பற்றிய வெட்கமும் கலக்கமுமே அவள் உள்ளத்தை நிரப்பிற்று. மாலையில் கெஞ்சியின் முடங்கல் வந்த போது, எதற்காகக் கடிதம் என்றே அவளுக்குப் புரியவில்லை. அது ஒரு கவிதையுடன் தொடங்கிற்று. ‘மாலைப் பனி விலகியும், இரவில் மழை சூழ்ந்து எங்கும் உடனே இருட்டாக்கி விட்டதால், சூழல் காட்சியை நான் ஒரு சிறிதும் காண முடியாது போய் விட்டது’ என்பது அப்பாட்டு. ‘மழை மேகங்கள் கலைவதற்கான சின்னத்தை நான் படபடப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறேன்’ என்று கடிதத்தை அவன் முடித்திருந்தான். மாளிகைப் பெண்டிருக்கு இக்கடிதத்தின் குறிப்பு உடனே விளங்கி விட்டது. கெஞ்சிஇனி திரும்பவும் வர எண்ணவில்லை. என்ற அதன் உட்கிடக்கை கண்டு அவர்கள் கலவர மடைந்தனர். ஆனால் எப்படியும் கடிதத்துக்குப் பதில் எழுதியேயாக வேண்டும் என்பதில் எல்லாரும் ஒருமனப்பட்டனர். அச்சமயம் அவர்கள் தலைவி இருந்த நிலையில் தாள்மீது மைக்கோல் கொண்டு செல்லவே முடியாத அளவில் அவள் முழுதும் குழப்ப மடைந்திருந்தாள். கடிதம் எழுதுவதில் காலம் தாழ்த்துவதும் தவறு என்று கண்டு, ஜிஜுவே இப்போது துணை தர முன் வந்தாள். ‘முகிலார்ந்த இரவிலும் முழுமதியைக் காண அவாவி நிற்கும் நாட்டுப்புற நன்மக்களை நினைத்துப் பாருங்கள். தம் உள்ளத்தினின்றும் அவர்கள் உள்ளம் எவ்வளவோ வேறுபாடு உடையது’ என்ற கருத்துடைய பாடலை அவள் உருவாக்கினாள். எல்லாப் பெண்டிருடனும் சேர்ந்து தலைவியின் கைபிடித்தியக்கி அதை எழுதுவித்தாள். எழுதிய தாள் முன்பு மிகச் சிவப்பாயிருந்து, இப்போது நிறமங்கியும் கசங்கியும் இருந்தது. எழுத்தின் வரிவடிவமோ திருந்தா முரட்டுப் பண்புடையதாக, மேல் கீழ்க் கோடுகள் வேறுபடுத்தப்படாத ஒரே திண்மையுடையனவாக இருந்தன. கெஞ்சி அதைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் ஒரு புறம் எறிந்து விட்டான். ஆனால் நிலைமையின் நெருக்கடி அவனுக்கு மிகுதியும் மன உளைச்சல் தந்தது. ‘அவள் உளத்தைப் புண்படுத் தாமல் எப்படிக் காரியமாற்ற முடியும்? எப்படியும் இந்நிகழ்ச்சி அவளை ஒரு வகையாக இடக்கில் கொண்டு போய் விடவே செய்யும். ஆயினும் என்னதான் செய்வது? - ஆம். எப்படியும் தொடர்ந்து அவளைச் சென்று பார்ப்பதுதான் நல்லது’ என்று அவன் துணிந்தான். இதற்கிடையில் இம்முடிவை அறியாத நிலையில், இளவரசி பட்டதுயர் பெரிதாயிருந்தது. அன்றிரவு கெஞ்சியின் மாமனார் அரண்மனையிலிருந்து திரும்பி வரும் சமயம் அவனை வந்து கண்டு, தம்முடன் நெடுமாடத்துக்கு இட்டுச் சென்றார். வரவிருக்கும் விழாவை ஒட்டி அங்கே இளைஞர் அனைவரும் ஒருங்கு கூடியிருந்தனர். ஒவ்வொருவரும் தத்தமக்குத் திட்டம் செய்யப்பட்டிருந்த ஆடல் பாடல் இனங்களில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். நெடு மாடம் இதுபோல என்றும் இடைவிடாத இசையாரவாரம் நிரம்பியதாக இருந்ததில்லை. புல்லாங்குழலும் வேய்ங்குழலும் முழு மூச்சுடன் குலவின. புறவாரத்திலேயே பெருங்கண் முரசம் உருட்டிக் கொண்டு வரப்பட்டு, அதில் இளைஞர் ஒருவர் மாறி ஒருவர் கையடி பயின்றனர். ஆனால் கெஞ்சியோ மிக நெருங்கிய நண்பர்களைத் தனி முறையில்அருமையாகச் சென்று பார்ப்பதற்குக்கூட நேரமில்லா –நிலையில் இருந்தான். இலையுதிர் காலம் முழுவதும் ஹிதாச்சி அரண்மனைக்குச் செல்லாமலே கழிந்தது. இளவரசிக்கு இது ஒன்றும் புரியவில்லை. இசைப் பயிற்சிகள் உச்ச நிலையிலிருந்த சமயத்தில் மியோபு கெஞ்சியை வந்து கண்டாள். இளவரசி நிலை பற்றிய அவள் செய்தி இதயம் பிளப்பதாயிருந்தது. ‘உங்கள் அருளற்ற நடத்தையால் இரங்கத்தக்க நிலையில் அவ் ஏழைப் பெண்ணரசி நாள் தோறும் நலிந்து வாடுவதைக் காண்கிறேன். அதைப் பார்த்து வருந்துகிறேன்’ என்று கூறி அவள் கண் கலங்கி அழுதாள். இப்போது கெஞ்சி இரு மடங்காக மனங் குழம்பினான் தன் சார்பில் கூறப்பட்ட உறுதிகளை யெல்லாம் மீறி இவ்வளவு முரட்டுத் தனமாக நடந்து கொண்ட பின், இளவரசி என்ன, மியோபுதான் என்ன நினைக்க மாட்டாள்!....ஏங்கிய உள்ளத்துடன் தனக்குள் தானே கேள்வியும் பதிலுமாக முனங்கிக் கொண்டிருக்கும் இளவரசியின் உருவம் அவன் கண்முன் வந்து நின்று காட்சி யளித்தது. ‘எனது இடைவிடா வேலை நெருக்கடி ஒன்றினால் தான் நான் அவளைக் காண வர முடியவில்லை என்பதை அவளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறி அவளை நம்பவைக்கும்படி கோருகிறேன். அத்துடன் இவ்வளவு நாணமும் இறுமாப்பும் காட்டாதிருக்கும் முறையில் அவளைப் பயிற்றுவிக்கவும் எனக்கு ஒரு வாய்ப்பு வருமென்று எண்ணுகிறேன்’ என்று அவன் ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டவாறு பேசினான். இது கூறி விட்டு அவன் மெல்ல ஒரு புன்முறுவலைக்கூட வருவித்துக் கொண்டான். அவன் இளமை நலத்திலும் அழகிய தோற்றத் திலும் இழைந்து மியோபு கூட அவன்மீது தனக்கிருந்த கோபத்தை மறந்து சிறிது புன்னகை பூத்தாள். ‘இந்த வயதில் இவ்வளவு அழகுடையவர் பிறருக்கு எப்படியும் ஓரளவு துன்பம் விளைவிக்காமல். இருக்க முடியாது’ என்று அவள் தனக்குள் கூறிக் கொண்டாள். அதனை யடுத்து மறுகணமே பிறர் துன்ப விளைவுகள் ஒரு சிறிதும் பாராட்டாமல் அவன் நடப்பதே சரி என்று கூட அவளுக்குத் தோற்றிற்று. நிகழ்ச்சிகள் நிரம்பிய அந்த விழா முடிவுற்ற பின், இளவரசன் கெஞ்சி ஹிதாச்சி அரண்மனைக்கு அடிக்கடி சென்று வரத் தவறவில்லை. ஆனால் இதற்கிடையே தான் முரசாக்கியை அவன் வரவேற்க நேர்ந்தது. அவ் விளங் கொழுந்தின் மென்னயங்கள் அவனை மேன் மேலும் கவர்ந்தீர்த்தன. அதனால் ஆறாவது அரங்கத்துச் சீமாட்டியாகிய ரோக்குஜோ அணங்கினிடம் அவன் செல்வது கூடப் பெரிதும் தடைபட்டது. இந்நிலையில் தனியே அரண்மனையிலிருந்து வாடிவதங்கிய இளவரசி வகையில் அவன் எவ்வளவோ இரக்கம் காட்டினாலும், அவளுக்காக மனம் வருந்தினாலும், அங்கே செல்லும் அவா வர வரத் தளர்ந்து விட்டது அவள் மட்டற்ற நாணத்தின் இரகசியம் என்ன என்று அறியவோ, அறிந்து அவளை உலகின் பகலொளிக்கு நடுவே வரும் படி தூண்டவோ கூட அவன் நெடுநாள் எண்ணமிடவில்லை. ஆனால் எப்படியோ இறுதியில் அவன் உள்ளத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அவளை இத்தனை நாளும் தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்க இடமிருக்கலாம் என்று அவனுக்குத் திடுமெனத் தோன்றிற்று. அவளை அவன் பார்த்தது அரையிருள் செறிந்த சமயத்திலே தான் கண் முன் ஏந்திய கையின் வரைகளை ஒருவர் காண முடியாத அரை ஒளியே அந்த அறையில் நிலவி யிருந்தது. இந்நிலையில் அவள் வடிவமைதியை அவன் நன்றாகக் கவனித்திருக்க முடியாது தான் நன்கு கவனித்துப் பார்க்கும்படி அவளைத் தூண்ட முடியுமானால் எவ்வளவோ நன்றாயிருக்கும். ஆனால் அவளோ பகலொளி காண்பதையே ஒரு கடுந்தேர்வாகக் கருதுபவள். எப்படியும் அவளைப் பார்த்துவிட அவன் திட்டமிட்டான். மாளிகையில் எவரும் எதிர்பாராத சமயமாகப் பார்த்து ஒரு நாளிரவு அவன் மெள்ள உட்புகுந்து ஒரு இடுக்கு வழியாகப் பெண்கள் பகுதியைக் கூர்ந்து நோக்கினான். அங்கே இளவரசி அவனுக்குத் தென்படவில்லை. ஆனால் அறையின் ஒரு கோடியில் சிதைந்து கிழிந்து வங்காரமாய்விட்ட ஒரு சிங்காரத் திரை இருந்தது. அதனை நோக்க அது ஆண்டுக் கணக்காக அந்த இடத்திலிருந்து ஒரு சிறிதும் அசைக்கப்படாதது என்று தோற்றிற்று. அறையில் வயது சென்ற நாலைந்து பெண்டிரே இருந்தனர். அரசவைக்குரிய பேர்போன நீலத்தட்டங்கள் போலக் காணப்பட்ட கலங்கள் இளவரசியின் உணவுக்காகக் காத்துக் கொண்டிருந்தன. ஆனால் அதில் வட்டிக்கப்பட்ட உணவு அக்கலங்களின் நேர்த்திக்கு ஒவ்வாததாய், அவற்றை அவமதிப்பதாய் இருந்தது. முதிய பெண்டிர் இப்போது பின்னறை சென்றனர். தங்கள் உணவுக்காகவே அவர்கள் போயிருக்க வேண்டும். இப்போது கூர்ந்து நோக்கிய போது, நடு அறையில் பாதி சார்த்தியிருந்த கதவுகளின் ஒடுங்கிய இடைவெளி வழியாக இன்னோர் அணங்கின் உருவம் தெரிந்தது. அவள் தோற்றத்தில் கிளர்ச்சி இல்லை. அசடு வழிந்த தோற்றமே இருந்தது. அவள் உடுத்தியிருந்த வெள்ளாடை புகை பற்றியதாய் அழுக்கேறி யிருந்தது. அதன் மேல் இடுப்பைச் சுற்றி இன்னும் அழுக்கேறிய அணையாடை கிடந்தது. ஆனால் இத்தனை அலங்கோலங்களுக் கிடையே தலைமுடி மட்டும் அருஞ் சிறப்புடையதாய் இருந்தது பண்டை நாள் அரசவைப் பணியாளர் மன்னரிளங்கோக்கள் உணவு மேடைப் பணியின்போது கோதிவிடும் பாணியில் அது ஒப்பனை செய்யப்பட்டு, முற்றிலும் முடிக்கப் பெறாத நிலையிலேயே தாறுமாறாய்க் கிடந்தது. இம்மாதிரியான உருவங்களை அவன் அரண்மனைக் கூடங்களைச் சுற்றிப் படங்களில் பார்த்ததுண்டு. அவை அத்தனை பழமையான முற்கால உருவங்கள். ஆனால் உயிர் வடிவில் நிகழ்கால மனித உலகிலேயே அத்தகைய வடிவத்தைக் காண முடியுமென்று இன்றுவரை அவன் எண்ணியதில்லை. அணையாடை யணிந்திருந்த அணங்கின் இதழ்கள் அசைந்தன. திடுமென அவள் குரல் எழுந்தது ‘அடியே அம்மடியோ! இது என்ன பேய்க் குளிரோ’ அம்மா? இம்மாதிரி நாட்களைப் பார்க்கும் வரை நான் ஏனம்மா நீடித்து வாழ வேண்டும்?’ என்று தேம்பியவாறு அவள் கண்ணீர் வடித்தாள். ‘பழய இளவரசர் காலத்திலிருந்தபடியே ஏன் எல்லாம் இருந்திருக்கக் கூடாது? இப்போது கட்டுப்பாடு எல்லாம் போய் விட்டது. மான மதிப்புகள் எல்லாமே போய் விட்டன. இன்னும் எத்தனை நாள் நான் இருந்து இதை யெல்லாம் கண்டு கண் கலங்க வேண்டுமோ?’ என்று அவள் புலம்பினாள். பறந்தோடிவிட விரும்பும் பறவைகளின் இறகுகள் போல அவள் அங்கங்கள் படபடத்தன. காலத்தின் கோளாறுகளைப் பற்றி இவ்வாறு அவள் அழாத குறையாக அழுது கொண்டே யிருந்தாள். செஞ்சியால் இதை மேலும் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. ஆகவே அப்போதுதான் வந்தவன்போலப் பாவித்து இடைத் தட்டிக் கதவைத் தட்டினான். வியப்பும் திகைப்பும் கலந்த குரல்களுடன் அப்பழங்கால அணங்கு ஒரு மெழுகு விளக்கேந்தி வந்து அவனை உள்ளே இட்டுச் சென்றாள். ஆனால் துரதிருஷ்டவசமாக, ஜிஜு அன்று தான் வெளிச் சென்றிருந்தாள். கன்னி அன்னை வழிபாட்டுக்குரிய குழுவினரில் ஒருத்தி இல்லாமல் மாளிகை முன்னிலும் நாட்டுப் புறமாகப், பழமைப் பட்டுக் கிடந்தது. முன்னைவிட அதன் அருவருப்பான தோற்றம் கெஞ்சியின் உள்ளத்தை அழுத்திற்று. உள்ளக் கிளர்ச்சியைக் கெடுக்கும் வகையில் பனி மேன்மேலும் வேகமாகப் பெய்து கொண்டிருந்தது வான மெங்கும் கருமுகிற் படலங்கள் மூடியிருந்தன. காற்று மூர்க்கமாக வீசிற்று. இல்லத்தின் பெரிய விளக்கு அணைந்து போயிற்று - அதை மீண்டும் ஏற்றி வைக்க எண்ணியவர்கள் அங்கே யாரும் இல்லை. முன்பு யுகாவ் பேயின் மாயைக்கு இரையான பயங்கர இரவே கெஞ்சி நினைவுக்கு வந்தது. ஏனெனில் மாளிகை கிட்டத்தட்ட அந்த மனை போலவே பாழாகக் காட்சியளித்தது. ஆயினும் இம்மாளிகை அவ்வளவு பெரிதாயில்லை, அந்த அளவு முற்றிலும் ஆளில்லாமல் போகவுமில்லை - இது கெஞ்சிக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது. எப்படியும் இத்தகைய வானிலையில், இரவு முழுதும் இதில் கழிப்ப தென்பது துயரார்ந்த செய்தியாகவே காணப்பட்டது. பனிப்புயலுக்குக்கூட ஒரு தனிப்பட்ட வீறார்ந்த கவர்ச்சியும் அழகும் இருந்ததென்பதை அவன் காண நெடுநேரம் ஆகவில்லை. ஆனால் அவன் தேடிக் காணவந்த அணங்கு அதன் வீறழகை அவனுடனிருந்து நுகரத் தக்கவளல்லவே, அத்தகைய உணர்ச்சியற்றமரக்கட்டையாகத் தோற்றினாளே என்று மறுகினான். பொழுது அப்போதுதான் விடியத் தொடங்கியிருந்தது. தானே எழுந்து பலகணியின் ஒரு கதவைத் திறந்து வெளியே பனி போர்த்த மலர்ப் பண்ணைகள் மீது அவன் பார்வையைச் செலுத்தினான். மலர்ப் பண்ணைக்கு அப்பால் கண்ணுக் கெட்டிய தூரம் வரை எவர் காலடித் தடமும் இல்லா வகையில் பனிப்பரப்பு எல்லையற்றுப் பரந்து கிடந்தது. இக்காட்சி புதுமையும் வனப்பும் மிக்கதாயிருந்தது. தான் விரைவில் போக வேண்டுமென்பதை நினைவில் கொண்டு, அவன் உள்ளறையிலிருந்த இளவரசியை அழைத்தான். ‘வெளியே எல்லாம் எவ்வளவு அழகு நிரம்பிக் கிடக்கிறது பார்!’ என்று கனிவுடன் பேசினான். ஆனால் இந்தக் கனிவைக்கூட அவள் உணர முடியவில்லை. ‘இன்னும் ஏதோ அறிமுகமில்லாதவளிடம் பேசுவது போலப் பேசுகிறீர்களே! இது நன்றா?’ என்று மட்டும் அவள் கேட்டாள். அரையிருள் இன்னும் விலகவில்லை. ஆனால் அறைப் பக்கம் திரும்பி வந்த பணிப் பெண்டிர் பனியொளியின் துணையாலேயே கெஞ்சியின் புத்திளமையையும் கட்டழகையும் கண்டுகளித்தார்கள். அவனைக் காணும் ஆர்வ மகிழ்ச்சியையோ வியப்பையோ ஒரு சிறிதும் மறைக்காமலே அவர்கள் தம் தலைவியை நோக்கிப் பேச்செடுத்தனர். ‘ஆம், அம்மணி! அவர் கூப்பிட்டால் நீங்கள் வரத் தான் வேண்டும். நீங்கள் நடப்பது சரியாயில்லை இளமை நலமுடைய சீமாட்டிகள் எப்போதும் அன்புக்கனிவும் அழகு நயமுமாக இலங்க வேண்டும்’ என்றார்கள். செய்ய வேண்டியது இன்னது என்று எவர் கூறினாலும் அதைச் செய்யத் தடை கூறும் வழக்கம் இளவரசிக்குக் கிடையாது. ஆகவே தன் பாங்கியர் கண்டித்துப் பேசியவுடனே தன் ஆடையணிகளை இங்கே சிறிதும், அங்கே சிறிதுமாகத் தொட்டுத் திருத்திக் கொண்டு அவள் சிறிது வேண்டா வெறுப்புடனேயே முன்னறைக்கு அசைந்தசைந்து வந்தாள். கெஞ்சி இன்னும் பலகணிக்கு வெளியே பார்ப்பதாகவே பாவனை செய்தான். ஆனால் திடுமெனத்திரும்பி அவள் மீது பார்வை செலுத்தினான். அவள் முதல் தோற்றத்தின் விளைவு அவனுக்கு அரைகுறை ஆறுதலாக மட்டுமே இருந்தது. அவளிடம் ஒரு சிறிதளவு தன்னம்பிக்கை, துணிவு இருந்தால் கூடக் கவர்ச்சிகரமா யிருந்திருப்பாள் என்று அவன் உள்ளூரக் கருதினான். அவளை நாடியதில் நாம் எவ்வளவு தவறு செய்து விட்டோம் என்று அவன் வருந்தினான். உட்கார்ந்திருக்கும்போது அவள் முதுகின் தோற்றம் ஒரு நெட்டையான பெண்ணின் தோற்றமாகத்தான் இருந்தது. ஆனால் முன்புறம் திரும்பிய பின் அத்தகைய இயற்கை வாய்ப்புடைய பெண் அவள்தானா என்று கேட்கத் தோன்றிற்று. அடுத்த கணம் அவள் குறைபாடு எது என்பது அவனுக்குப் பளீரெனத் துலங்க நேரமாகவில்லை அது அவள் மூக்குத் தான் - அது போதிசத்துவர் சமந்த பத்திரரின் ஊர்தியை - அவர் ஏறிச் சென்ற அவ்வெள்ளானையின் செக்கச் சிவந்த துதிக்கையை நினைவூட்டிற்று! அவள் மூக்கு மட்டுமீறி நீண்டிருந்தது. அதுமட்டு மன்று; அதன் நுனி கீழ்நோக்கி வளைந்து, செஞ்செவேலென்று பின்னும் சிவந்திருந்தது. மொத்தத்தில் அவள் நிறம் பனியைப் பழிக்கும் தூய வெண்மையாகவே இருந்த படியால், இந்த அருவருப்பை அது தூக்கிஎடுத்துக்காட்ட உதவிற்று. அவள் நெற்றியும் வழக்கமான அளவைவிட எவ்வளவோ உயரமாய் இருந்தது. அவள் பொதுவாகத் தலைசாய்த்திருந்த முறை இந்த நெற்றி உயரத்தைச் சிறிது மறைத்துக் காட்டினாலும், முகத்தின் நீளம் நெடு நீளமாகவே தெரிந்தது. அவள் உடல் முற்றிலும் மெலிவுற்று, எலும்புகள் இரங்கத்தக்க முறையில் வெளித் தெரிந்தன. சிறப்பாகத் தோளெலும்புகள் ஆடையையே கிழித்து விடுபவை போல முனைப்புடன் உந்திக் கொண்டிருந்தன. வருந்தத்தக்க அவள் நிலைகண்டு, அவளை ஏன் இவ்வளவு வல்லந்தமாக வெளியே அழைத்தோம் என்று கெஞ்சி வருத்தம் கொண்டான்.ஆனால் அக்காட்சியின் புதுமை காரணமாக, அவன் அவளை மேலும் நோக்கிக் கொண்டே தான் இருந்தான். ஒரே ஒரு வகையில் மட்டும், தலை நகரத்தின் தலை சிறந்த அழகிகளுக்குக் கூடஅவள் பின்னடையவில்லை. அவள் தலைமுடி மிகக் கவர்ச்சிகரமாயிருந்தது. அவள் அதைப் பின்னாலே தொங்கவிட்டிருந்தார். அவள் ஆடையின் நுனி கடந்து அது ஓரடிவரை தாழ்ந்து கிடந்தது. ஒருவர் அணிந்திருக்கும் உடையை முற்றிலும் வருணிப்ப தென்றால், அது கேட்கச் சுவைகரமானதாய் இருக்க முடியாது. ஆனாலும் இக்காலப் புதுக் கதைகளில் ஒரு கதை உறுப்பினரை அறிமுகப்படுத்தும் போதே அவர்கள் அச்சமயம் என்ன அணிந்திருந்தார்கள் என்று தெரிவித்தே அவர்களை மனக் கண்முன் கொண்டு வந்து காட்டுவது வழக்கமாகையால், அத்தகைய வருணனையை இங்கே தர வேண்டியவளாகிறேன். அவள் கச்சு, பேரரசருக்குரிய கருஞ்சிவப்பு நிற மாயிருந்தது. ஆனால் அந்நிறம் முற்றிலும் மங்கலாய் விட்டது. அதன்மேல் கவிந்து கிடந்த அங்கியிலும் அதே நிறத்தின் தடமிருந்தாலும், அது பழமைப்பட்ட நிலையில் முற்றிலும் கரு நிறமாகவே மாறி யிருந்தது. மேலாடை கருமையும் பளபளப்பும் வாய்ந்த தோலால் ஆக்கப்பட்டு, நறுமணம் செறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு சில தலைமுறைகளுக்கு முன் - இத்தகைய உடை கவர்ச்சிகரமாய் இருந்திருக்கக் கூடும். ஆனால் ஓர் இளம் பெண் அதை உடுத்தி உலாவுவது ஒரு புதிராகவே தோற்றமளித்தது. அவளைப் பார்க்கும் எவரும், இந்தப் பழமைப்பட்ட ஆடையில்லா விட்டால், அவள் குளிரால் வாடி வதங்கி விழுந்து விடுவாளோ என்று நினைப்பர். இவ் எண்ணம் அவள் மீது கெஞ்சிக்கு இரக்கம் உண்டு பண்ணிற்று. வழக்கம் போல, கெஞ்சி அவளிடமிருந்து எத்தகைய உரையாடலையும் எதிர்பார்க்க முடியவில்லை. அத்துடன் அவள் மௌனம் அவன் பேச்சாற்றலையும் பறித்துக் கொண்டது போலிருந்தது. அவள் மௌன விரதத்தை எப்படியும் முறித்தாக வேண்டுமென்ற கருத்துடன், அவன் துண்டுத் துணுக்காகப் பல தொடர்களை அடுக்கினான். இது அவளுக்கு மேலும் வெட்கமும் குழப்பமும் உண்டு பண்ணிற்று. அவள் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். இந்நிலை அவன் அடிக்கடி பார்த்திருந்த சடங்கு விழாக்களில் பழய பணிமுதல்வர்கள் தம் பதவிச் சின்னங்களை அணைத்துத் தாங்கியவாறு பெருமிதமாக வாய் பேசாது நடந்து செல்வர். இதை நினைத்ததும் அவனால் சிரிக்காமலிருக்க முடியவில்லை. அதே சமயம் இது அவளை அவமரியாதையுடன் நடத்தியதாகும் என்று கருதி அவன் தன்னை யடக்கிக் கொண்டான். அவள் குழப்பத்துக்கு ஓர் ஓய்வு தர எண்ணி அவன் வெளியே போக எண்ணினான். ‘நான் உன்னிடம் அக்கறை கொண்டு உன்னைப் பேணத் தொடங்கும் வரை, உன் இதயந் திறந்து பேசுவதற்கு உனக்கு யாரும் இருந்திருக்க முடியாது. ஆனால் இனிமேல் என்னிடம் ஒளிவு மறைவில்லாமல் பேச உறுதி கொள்ள வேண்டும். உன் உள்ளார்ந்த இரகசியங்களை எல்லாம் என்னிடம் தெரிவிக்கத் தயங்கக் கூடாது. நீ யாரோ எவரோ என்று உணர்ச்சியில்லாமல் ஒதுங்கி நடப்பது எனக்கு மிகவும் வருத்தந் தருகிறது’ என்று கூறி அவன் ஒரு பாடலையும் பாடினான். காலை இளம்பரிதிக் கதிரில் இறைவாரத்தே நாலுகின்ற பனித்துண்டு கனிந்துருகு கின்றதுவே! நாலுகின்ற பனித்துண்டு கனிந்துருகு மாயிடினும் மேலும் கனிந்ததுளி உறைகின்ற மாயமென்னோ? இது கேட்டு அவள் சிறு புன்முறுவல் பூத்தாள். ஆயினும் தன் கருத்தை ஒரு சிறிதுகூட வெளியிட முடியாத அவளது அவல நிலை கண்டு, அது பொறாமல் அவன் மனைவியை விட்டு நீங்கினான். அவன் வண்டி முற்றத்தின் வாயிலருகே நின்றிருந்தது. அவ்வாயிலின் கால்கள் ஆட்டங் கொடுத்துச் சாய்ந்தே நின்றன. காலை ஒளி மங்கலாயிருந்தும் இந்நிலை அவன் கண்களில் பட்டது. பகலொளியில் மாளிகையின் பராமரிப்பற்ற கிலமான நிலை இன்னும் மிகுதியாகக் காணப்படுமென்று அவனால் ஊகிக்க முடிந்தது. அம்மாளிகையைச் சூழ்ந்திருந்த பரப்பில்கூட., செந்தூரமரங்களில் உச்சி முதல் அடி வரை இன்னும் போர்த்திருந்த பனி ஒன்றுதான் காட்சிக்குச் சிறிது இனிமையும் ஆறுதலும் தருவதாயிருந்தது. மற்றப் பரப்பு முழுவதும் கவர்ச்சி தராத ஒரே பாழாகத் தான் இருந்தது. அன்று மழை நாளிரவில் அவன் நண்பர்கள் மலை நடுவிலுள்ள சிற்றூர் போல வெறிச்சென்ற தோற்றத்துடன், பசும் புதர்க்காட்டின் உள்ளாழத்தில் புதைந்து கிடக்கும் ஒரு மனை வாயிலைப் பற்றிப் பேசியிருந்தார்கள். ஆம், அந்தோ, அதே வகைப்பட்ட இடம்தான் இது! அவர்கள் கருதியபடி, இப்பாழ்மதில்களின் பின்னணியில், ஒரு கண்கவர் அழகுருவமட்டும் கரந்திருக்கக் கூடுமேயானால்....! எவ்வளவு ஆர்வக் கனிவுடன், எவ்வளவு பொறுமையுடனும் உள்ளப் பொலிவுடனும் அதன் காதல் வழிபாட்டில் அவன் ஈடுபட்டிருக்க மாட்டான்? அவன் உள்ளத்தை அச்சமயம் அரித்துத் தின்று கொண்டிருந்த, நிறைவேறும் நம்பிக்கையற்ற தகா இடத்து ஆசையின் வேதனையிலிருந்து, அத்தகைய ஒரு புத்தனுபவம் ஒரு சிறிதேனும் ஓய்வும் ஆறுதலும் தந்திருக்கக்கூடும். அத்தகைய ஓய்வுக்கும் ஆறுதலுக்கும் அவன் உள்ளம் ஏங்கித் தவியாய்த் தவித்தது, ஆனால் இந்த விசித்திர மாளிகைக்குரிய அணங்குக்கும் அத்தகைய ஆறுதலுக்கும் உள்ள தொலை பெரிது, மிகப் பெரிது! ஆயினும், விரும்பத்தக்க எந்தக் கவர்ச்சியும் அவளுக்கு இல்லை என்ற நிலையே, அவள் அவனைத் துறந்து கைவிட்டுச் செல்லாமல் தடுத்தது! இத்தகைய ஓர் அணங்குடன் பழகும் அவலவாய்ப்பு வேறு எவருக்கும் நேராமல், தன் மீது ஏன் வந்து சுமந்தது? அணங்கின் திக்கற்ற நிலைமையை எண்ணி, மாண்ட இளவரசன் ஹிதாச்சியின் ஆவிதான் தன்னை அதற்காகத் தேர்ந்தெடுத்து அவள்பால் இட்டு வந்ததா என்று அவன் எண்ணினான். பாதையின் அருகே கிட்டத்தட்ட முற்றிலும் பனி மூடிப் புதையுண்ட நிலையில் ஒரு நாரத்தை மரம் அவனுக்குத் தென்பட்டது. அதன்மீது பரிவுற்று, ஏவலரின் ஒருவனை அழைத்து அதனை அசைத்துப் பனி அகற்றும்படி கூறினான். அந்த ஒரு மரத்துக்கு மட்டும் மனிதர் கவனம் செல்வது கண்டு பொறாமைப்படுவது போல, அருகிலிருந்த செந்தூர மரம் ஒன்று தானும் தன் நெடுங்கிளைகளை அதிரச் செய்து பனிப்படலங் களை உகுத்தது. இக்காட்சி கண்டு மகிழ்வுற்ற கெஞ்சி, அவ் இன்பத்தில் பங்கு கொள்ளும் ஒரு தோழமையாளர் இல்லையே என்று ஏங்கினான். தன்னைப் போல அதில் ஆர்வ நுகர்வு அத்தோழமையாளருக்கு இல்லாதிருந்தால் கூடக் கேடில்லை. தன் ஆர்வத்தைப் பொது முறையில் எதிரொலிப்பவராய் இருந்தாலே போதியது என்றும் அவன் எண்ணினான். வண்டி செல்லும் வழி ஒரு வாயிலைக் கடக்க வேண்டி வந்தது. அது பூட்டிக் கிடந்தது. அதன் திறவுகோல் வைத்திருந்த மனிதன் தேடிக் கண்டு பிடிக்கப்பட்ட பின்னும், அவன் மிகத் தளர்ந்த முதுமையுடையவனாயிருந்ததால் அதைத் தானே திறக்க முடியாதவனாயிருந்தான். அவன் புதல்வி அல்லது பேர்த்தியாகத் தோற்றிய பாரிய, அந்தசந்தமற்ற உருவுடைய ஒரு சிறுமி அவனுடன் இருந்தாள். பனியின் தூய வெண்மை அவள் கந்தலாடையின் அழுக்கேறிய தோற்றத்தைப் பன்மடங்கு பெருக்கிக் காட்டிற்று. அவள் குளிரால் பேரவதிக் குட்பட்ட வளாகத் தோற்றினாள். ஒரு தணல் சட்டியை அதற்காக அவள் உடலோடு அணைத்துப் பிடித்த வண்ணம் வந்தாள். ஆனால் அந்தச் சட்டியில் ஒன்றிரண்டு கரிக் கட்டிகள் தான் இருந்தன. அவையும் நன்கு கனிவுறவில்லை. முதியவனுடன் சேர்ந்து அவளும் கதவைத் தள்ள முயன்றாள். அவர்கள் மீது பரிவு கொண்டு கெஞ்சியின் பணியாட்களில் ஒருவன் அவர்களுக்கு ஒத்தாசையாயிருந்து கதவை விரைவில் திறந்துவிட்டான். கெஞ்சிக்கு இக்காட்சி ‘போசூ’வின் ஒரு பாடலை நினைவூட்டிற்று. குளிர் மிக்க பருவத்தில் நாட்டுப் புறத்தவர் பாடும் துயரை உருக்கமாக எடுத்துரைத்த அந்தப் பாடலை அவன் தனக்குள் மெல்லப் பாடினான். ‘குளிரி லிள மதலையர்கள் அரையாடை யின்றி வெளிவருவர், முதியவர்கள் கந்தலென வாரார்’ இச்சமயம் திடீரென இளவரசியின் முக அமைதி கெடுத்த அந்தச் செந்நிற வழு அவன் நினைவுக்கு வந்தது. அதை எண்ணி அவனால் புன்னகை செய்யாமலிருக்க முடியவில்லை. அவளை என்றேனும் தோ நோ சூஜோவிடம் அறிமுகப்படுத்தக் கூடுமானால், அவன் அது பற்றி என்னென்ன புதுமை வாய்ந்த உவமைகள் கூற மாட்டான்? முதல் தடவை சூ ஜோ அவனை இவ்விடத்துக்குப் பின்பற்றி யிருந்தான். ஒரு வேளை இந்தக் கணத்திலும் அவன் எங்காவது மறைந்திருந்தது பார்ப்பவனாகக் கூட இருக்கக்கூடும். ஆனால் இந்த எண்ணமே அவனுக்கு உள்ளரிப்பாயிருந்தது. அவள் குறைபாடுகள் இவ்வளவு முனைப்பாக இல்லா திருந்தால், இத்தனை துன்பத்துடன் வருகை தரவே அவன் இணங்கி யிருக்க மாட்டான். ஆனால் அவளது முழு அவல நிலையையும் அவன் கண்ணாரக் கண்ட பிறகு, இரக்க உணர்வே மேலிட்டது, அதனால் இது முதல் அவன் அவளுடன் இடைவிடாத் தொடர்பே கொண்டான். அவளிடம் எல்லா வகையிலும் அன்பாதரவு காட்டினான். தன் கறுப்புடையை அவள் மாற்றுவதற்கு உதவக்கூடும் என்ற நம்பிக்கையால், அவன் அவளுக்குப் பட்டு பீதாம்பரங்கள், பஞ்சணைகள் ஆகிய பலவும் பரிசுகளாக வழங்கினான். முதியவர் அணியத்தக்க உடைகளில் சிலவற்றைக் கூட அனுப்பி வைத்தான் - வாயில் காக்கும் முதியவன் நல்லாடையில்லாது படும் அவதியை அவள் மூலம் நீக்கும் எண்ணமே இதனைத் தூண்டிற்று. உண்மையில், சமயம் வாய்த்த போதெல்லாம் மாளிகையில் உச்சப்பணியாளர் முதல் கடைசி ஏவலர் வரை எல்லாருக்கும் தனித்தனியாகவும் கூட்டாகவும் அவன் பல்வகைப் பரிசில்களை அனுப்பிக் கொண்டே இருந்தான். இவற்றை மறுக்க அவள் எத்தகைய காரணமும் கூறக்கூடவில்லை. அவனுக்கும் இச்சமயம் அவற்றை அனுப்புவது ஒரு நல் வாய்ப்பை அளிப்பதாகவே இருந்தது - தன் விசித்திரமான பாசத்தை இத்தகைய உதவிகளுடன் நிறுத்திக் கொள்வது அவனுக்கும் வசதியாகவே திகழ்ந்தது. முன்னாளில் மாலை நேரத்தில், உத்சுசேமி சரேலென்று கெஞ்சியிடமிருந்து தப்பியோடிய நேரத்தில், அவளும் கவர்ச்சியற்ற தோற்றமுடையவளாகத் தான் காணப்பட்டாள். ஆனால் தன் எளிமைத் தோற்றம் முனைப்பாகி விடாதபடி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையாவது அவள் உணர்ந்து கொண்டிருந்தாள். அந்த உத்சுசேமியைவிட இந்த இளவரசி எவ்வளவோ உயர்ந்த குடியிற் பிறந்தவள் என்று நம்புவதே கெஞ்சிக்கு அரிதாய் இருந்தது. இத்தகைய பண்புகள் பிறப்புடனோ, குடியுயர்வுடனோ ஒரு சிறிதும் தொடர் புடையவையல்ல என்பது அவனுக்கு இப்போது தெளிவாகப் புலப்பட்டது. ஏனெனில் ஓய்வு நேரங்களில் இன்னுங்கூட அவன் உத்சுசேமி யில்லாக் குறைபாட்டை நினைந்து ஏங்க முடிந்தது. மொத்தத்தில் அவளது இணங்காப் பிடிவாதமே இறுதி வெற்றி கொண்டு விட்டதை எண்ணி அவன் மிகப் பெருத்த மன உளைச்சலே கொண்டான். இவ்வாறாக, ஆண்டின் இறுதி அணுகிற்று. ஒரு நாள் கெஞ்சி சக்கரவர்த்தியின் அரண்மனையிலுள்ள தன் அறையிலிருந்த சமயம், மியோபு அவனைக் காண வந்தாள், தன் தலைமுடி திருத்துவது, கடிதம் கொண்டு போய் வருவது முதலிய சிறு பணிகளில் அவளை ஈடுபடுத்துவதில் அவன் விருப்பம் உடையவன். அவளிடம் அவனுக்குக் காதலுணர்ச்சியாக எதுவும் சிறிதும் கிடையாது. ஆயினும் அவள் அவனுடன் எளிதில் பழகினாள். அவள் உரையாடலில் அவன் பெருமகிழ்வு கொண்டான். ஆகவே தான் அவளுக்கு அரண்மனையில் வேறு வேலை எதுவும் இல்லாத சமயங்களில் கூடச் செய்தி ஏதேனும் இருந்தால், தாராளமாகத் தன்னை வந்து கண்டு போகும்படி அவன் அவளை ஊக்குவித்திருந்தான். அம்முறையிலேயே அவள் இன்று வந்து பேசினாள். ‘மிகவும் விரசமான ஒரு செய்தி குறித்து வந்திருக்கிறேன். என்னால் அதை உங்களிடம் வாய் திறந்து கூறக் கூட முடியவில்லை’ என்று அவள் தயங்கினாள். கெஞ்சி: என்னிடம் நீ கூற அஞ்சத்தக்க அத்தகைய செய்தி எதுவுமே இருக்க முடியாதென்றுதான் நினைக்கிறேன். மியோபு: அது என்னைப் பற்றிய எத்தகைய செய்தியானாலும் உடனே சொல்லி விடுவேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியுமே! இது அப்படியல்ல. இதைப் பேசவே நாக்குக் கூசுகிறது. கெஞ்சி நெடுநேரம் வற்புறுத்தியும் அவளிடமிருந்து எதையும் வெளிப்படுத்த முடியவில்லை. காரியம் கூறாமல் இத்தகைய அமளி பண்ணுவது குறித்து அவன் பல தடவை கண்டித்த பின், அவள் அவனிடம் ஒரு கடிதம் நீட்டினாள். கெஞ்சி அதை வாங்கிக் கொண்டான். ‘என்னிடம் இதைத் தரவா இத்தனை ஆரவாரம், இதில் தயக்கத்துக்கு என்ன இருக்கிறது?’ என்று கேட்டான். அவன் அதை வாசிக்கையில், அவள் அவன் முகத்தை ஆவலுடன் கூர்ந்து கவனித்தாள். கடிதம் மிகவும் முனைப்பாக மணம் செறிவிக்கப்பட்ட கெட்டியான தாளிலே, உறுதியாகப் பெரு எழுத்திலே எழுதப்பட்டிருந்தது. அதனுடன் ஒரு பாடலும் இருந்தது. ‘உங்கள் இதயக் கடுமை காரணமாக - இதயக் கடுமை காரணமாகவே, எனது சீனப் பட்டாடையின் விளிம்பு முழுவதும் கண்ணீரால் நனைந்துள்ளது’ இப்பாடல் குறிப்பிடுவது கடிதத்தில் கண்ட பொருளன்று; வேறு என்பதை அவன் ஊகித்துக் கொண்டான். அது என்ன வாயிருக்கக் கூடுமென்று அவன் ஆலோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் கண்கள் சாயமிட்ட பாய்த் துணியால் போர்த்தப்பட்ட ஒரு பழம் பஞ்சடைந்த ஆடைப் பெட்டி மீது திரும்பின. அது கண்ட மியோபு மீண்டும் பேசினாள். ‘நான் ஏன் தயங்கினேனென்பதை இப்போது நீங்கள் காணக்கூடும். நீங்கள் நம்புவீர்களோ, மாட்டீர்களோ? - இந்த உடுப்பை நீங்கள் புத்தாண்டுப் பிறப்பன்று அணிந்து கொள்ள முடியுமென்றே இளவரசி எண்ணுகிறாள். உண்மையில் என்னால் இதை அவளிடமே திரும்பக் கொண்டு கொடுத்துவிட முடியாது - அது மிகவும் கொடிய செயலாய்விடும். ஆனால், நீங்கள் இணக்க மளிப்பதானால், இதை வேறு யார் கண்ணிலும் படாமல் நானே வைத்துக் கொள்கிறேன். ஆயினும் இதை அவள் உங்களுக்காகவே அனுப்பியிருப்பதானால், அதை அனுப்பி விடுமுன், ஒரு தடவை கண்ணால் பார்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்’ என்றாள். ‘அதை அனுப்பிவிட நான் விரும்பவில்லை. அதை அனுப்பிய உள்ளம் நல்ல அன்பு உடையதே’ என்று கெஞ்சி கனிவுடன் மறுமொழி கூறினான். அவன் இதற்கு முன் கண்ணுற்ற எந்த வரிகளிலும் இல்லாத கல்லாச் சொற் கூளமாகவே அவள் பாடல் இருந்தது. இதற்கு முன் வந்த கடிதங்களெல்லாம் ஜிஜுவோ அல்லது வேறு பெண்களோ இயற்றினவாயிருக்க வேடுமென்பதையும், எழுத்துகளைக் கூட ஜிஜுவே கைப் பிடித்து எழுத்தாசிரியராய் இருந்து எழுதுவித்திருக்க வேண்டு மென்பதையும் அவன் இப்போது கண்டான். இந்த அவலப் பாடல் கூட அவள் உச்ச உயர் திறமை எல்லையைக் காட்டுவது என்று கண்டபோது, அதை உருவாக்க அவள் எவ்வளவு கடுமுயற்சி மேற்கொண்டிருக்க வேண்டுமென்பதை எண்ணிப் பார்த்து அந்தமுறையிலேயே அதை அவன் மதிப்பிட விரும்பினான். அவன் பெட்டியைத் திறந்து பார்க்க எழுந்தான். அவன் கண்கள் அதை நோக்குவதைக் கவனித்ததே மியோபு முகம் வெட்கத்தால் சிவந்தது. அது ஒரு முரட்டு உடுப்பு. அதன் துணி நல்ல இழையுடன் நெய்யப்பட்ட துணிதான். ஆனால் அது நன்கு வெட்டப்படாமலும் தைக்கப்படாமலும் காலத்துக்கு ஒவ்வாத பழம் பாணியில் அமைந்திருந்தது. இப்பரிசு மிக விசித்திரமா யிருந்தது என்பதில் ஐயமில்லை. அவன் கடிதத்தைத் திரும்ப எடுத்துத் தன் கருத்துகளை அவன் ஓரங்களிலேயே எழுதினான். அவன் தோள் பக்கம் வந்து நின்று மியோபு எட்டிப் பார்த்தாள். ‘உருவழகோ, வடிவழகோ எதுவுமற்ற இந்த மலர் மீது என் ஆடை நுனி உராய்ந்தவகை தான் என்னவோ?’ என்ற பாடலை அவன் எழுதியிருந்தான். மலர் மீது இவ்வளவு சினங் கொள்வதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்றறியாது மியோபு மலைப்புற்றாள். இளவரசியைக் கெஞ்சி வந்து கண்ட பல தறுவாய்களையும் மனத்திரையில் உருள வைத்துப் பார்த்தபின், தானே இரவின் நிலவொளியில் கவனித்த செய்தி அவள் நினைவுக்கு வந்தது. கெஞ்சியின் வசையார்ந்த நகைச்சுவை சற்றுக் கடுமை வாய்ந்ததாகத் தோற்றினும், அதன் நகைத் திறம் கண்டு அவள் மகிழாதிருக்க முடியவில்லை. தன் பயிர்ப்பின் பண்புடன் அவள் எளிதாக ஒரு பாடல் மூலம் அவனுக்கு எச்சரிக்கை தந்தாள். இந்த அரை விளையாட்டான காதல் கேளிக்கைகூடக் குறை கூறும் இயல்புடைய இந்த உலகின் கண்முன் கெஞ்சியின் நல்ல பெயரைக் கறைபடுத்திவிடக் கூடுமென்று அவள் அவனுக்கு நினைவூட்டினாள். ‘இளவரசியின் தன்னிச்சையான பாடல் குறையுடையதே. ஆனால் மியோபுவுக்கிருந்த முன்னறிவுணர்ச்சி மட்டும் இளவரசிக்கு இருந்திருந்தால், எல்லாம் எளிதாகி யிருக்கும். மொத்தத்தில் இவ்வளவு உயர்படியிலுள்ள ஒரு சீமாட்டியுடன் ஊடாடுவதில் ஒரு சிறு பிசகு ஏற்படினும் பேரிடர் விளையும்’ என்பதை அவன் உணர்ந்தான். இதற்குள் வெளியே ஆட்கள் வரும் அரவம் கேட்டது. கெஞ்சி சட்டையைக் காட்டிப் பரப்பரப்புடன் பேசினான். ‘தயவு செய்து இதை விரைந்து எங்கேனும் கண்மறை வாக்கிவிடு. இப்படி ஒரு பரிசை யாராவது அனுப்பியிருப்பதாக யாராவது நம்புவார்களா?’ என்று கூறி அவன் மீட்டும் ஏங்கினான். ‘அந்தோ, இதை ஏன் இவரிடம் காட்டினோம்? இதன் பயனாக, இவர் இளவரசியிடம் மட்டுமல்ல, என்னிடமும் கோபம் கொள்ளவே நேர்ந்தது’ என்று மியோபு வருந்தினாள். மறுநாள் மியோபு அரண்மனையில் சக்கரவர்த்தியின் பணியில் ஈடுபட்டிருந்தாள். மாதர்களின் பின்னறையில் மற்றப் பெண்டிருடன் அவள் பேசிக் கொண்டிருக்கும் சமயம் கெஞ்சி அவளைத் தேடிக் கொண்டு அங்கே வந்தான். ‘ஆ, நீ இங்கே தான் இருக்கிறாயா? நேற்றைய கடிதத்துக்குப் பதில் இதோ! சற்று நெடுங் கடிதமாய்த்தான் போயிற்று என்று எண்ணுகிறேன்’. என்று கூறி, கடிதத்தை அவளிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றான். அது என்ன இரகசியம் என்று அறியும் ஆர்வம் பெண்டிரிடையே இதனால் மிகுதியாயிற்று. ஏனெனில் கெஞ்சி ‘மிசாயாக் குன்றின் அணங்கு’ என்ற பாடலை முணுமுணுத்துக் கொண்டே சிரித்துக் கொண்டுசென்றான். சிரிப்பதற்குரிய அச்செய்தி யாதாயிருக்கும் என்று பெண்டிர் ஒருவருக் கொருவர் கேட்டுக் கொண்டனர். ‘இது ஏதேனும் விளையாட்டுச் செய்தியா?’ என்று கேட்டாள் ஒருத்தி. ‘அப்படி ஒன்றுமில்லை. காலைக் குளிரால் யாரோ ஒருவர் மூக்குச் சிவப்பா யிருந்ததை அவர் கண்டார் போலிருக்கிறது. அவர் பாடிய பாட்டு அதற்குப் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது’ என்றாள் மற்றொருத்தி. ‘இது என்ன சிறுபிள்ளைத் தனம். இங்கே யாரும் மூக்குச் சிவப்பாயில்லை. ஒரு வேளை அவர் சீமாட்டி சகோன் அல்லது ஹிகோ நோஉனேமே போன்ற வரலாற்றுப் பெண்டிரைத் தான் எண்ணியிருக்க வேண்டும்’ என்றாள் மற்றொருத்தி. ஆனால் இரகசியம் பற்றிய ஆர்வம் இதனால் முற்றிற்றே யன்றித் தளரவில்லை. கெஞ்சியின் பதிலை மியோபு ஹிதாச்சி அரண் மனையிலுள்ள பெண்டிருக்குக் காட்டியபோது, அவர்கள் அதன் அருமை காண வந்து குழுமினர். அதற்கேற்ப அது முயற்சியில்லாமல் அசட்டையாகவே வெள்ளைத்தாளில் எழுதப்பட்டிருந்தாலும், பண்பு நயமுடையதாகத் தான் இருந்தது. ‘இந்த ஆடைப் பரிசின் பொருள் நம்மிடையே உள்ள தொலை இன்னும் சற்று அதிகப் படவேண்டும் என்பதாகவேயிருக்கக் கூடுமா?’ என்று அவன் எழுதியிருந்தான். ‘ஆடையின் திண்மை யளவு கூடக் காதலர்க்கு இடையே நெடுந்தொலைவாகும்’ என்ற ஒரு பழம் பாடலை இக்கடிதம் நினைவூட்டிற்று. ஆண்டின் இறுதி நாளன்று தனக்குச் சட்டை வைத் தனுப்பப் பட்டிருந்த பெட்டியையே கெஞ்சி திருப்பியனுப் பினான். முன் அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்டிருந்த அரசவை உடை ஒன்று அதற்குள் இருந்தது. அது கொடி முந்திரி நிற இழையும், பொன்னறலி நிறஇழையும் கலந்து நெய்யப்பட்ட உயர் ஆடை. மியோபு அதைக் கொண்டு வந்தது கண்டதே, இளவரசியின் நிற உணர்ச்சியைக் கெஞ்சி மதிக்கவில்லை என்றும், அதுவகைப் படிப்பினையாகவே அதை அனுப்பி யிருந்தா னென்றும் பாங்கியர் உணர்ந்து கொண்டனர். ஆனால் அவர்கள் இவ்வாறு கூறாமல், வலிந்து வேறு கருத்துரை தந்தனர். ‘ஆகா, இப்போது புதிதாயிருப்பதனால், நல்ல சிவப்பு வண்ணம் தோய்ந்திருக்கிறது. பழகப் பழக மங்கத் தான் போகிறது, அது மட்டுமா! நம் தலைவியின் கவிதையில் எவ்வளவு பொருளமைதி இருந்தது! அவர்பதில் அதற்கு ஒரு சிறிது தான் ஈடு செலுத்த முடியும்?’ என்றார்கள். அப்பாவி இளவரசி இந்தக் கருத்துரையை அப்படியே ஏற்று அதையே தன் கருத்தாகக் கொண்டாள். இது இயல்பே. ஏனெனில் தன் பாடலை உருவாக்க அவள் எடுத்துக் கொண்ட முயற்சி பெரிது. அதை அனுப்பு முன் அவள் அதைத் தன் குறிப்பேட்டிலும் பதிவு செய்து கொண்டிருந்தாள். புத்தாண்டு விழா முழக்கமாகத் தொடங்கிற்று. உயர் குடிமக்களின் குழாம் ஒன்று அரண்மனையின் பல்வேறு பகுதிகளிலும் சென்று பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் முகமூடி நாடகமாடிற்று. ஏழாம் நாள் வெள்ளைக் குதிரை யாட்டத்துக்குப் பின், கெஞ்சி மாலையில் சக்கரவர்த்தியின் திருமுன்பிலிருந்து அகன்று அரண் மனையிலுள்ள தன் அறையில் இரவைக் கழிப்பவன் போலச்சென்றான். ஆனால் இரவு சிறிது நேரமான பின் அவன் ஹிதாச்சி அரண்மனைக்குத் தங்கலை மாற்றினான். இச்சமயம் அதன் வழக்கமான பாழ்ந் தோற்றம் குறைவுற்றிருந்தது. இளவரசி கூட இப்போது தன் தனி முனைப்பு களின்றிச் சுமுகமாக நடந்து கொண்டான். பருவத்தைப் போலவே, அவளும் புது வாழ்வைத் தொடங்கிவிடக் கூடும் என்ற நம்பிக்கை கெஞ்சியின் உள்ளத்தில் வளர்ந்தது. ஏனெனில் இதே சமயம் வழக்கமாக அவன் அரையிருளிலேயே கண்ட அறைக்குள் கதிரவன் பொன்னொளி தங்கு தடையின்றிப் புகுந்தது. சிறிது நேரம் உள்ளே தயங்கி நின்றபின் கெஞ்சி எழுந்து முன்னறைக்குச் சென்றான். கீழ் சிறையிலிருந்த மடக்குக் கதவுகள் அகலத் திறந்திருந்தன. கதிரவனொளியின் இரகசியம் இப்போது வெளிப்பட்டது. ஏனெனில் அதனை யடுத்த புறவாரத்தின் கூரை விழுந்து விட்டதால். வெயில் நேரடியாக உட்புக முடிந்தது. ஒரு சிறிது பனி இன்னும் சந்தடியின்றி விழுந்து கொண்டுதானிருந்தது. ஆனால் இது கதிரவனொளியை இன்னும் மிகுதியாக்கவே உதவிற்று. பளபளக்கும் பனித்துளியின் ஒளிகளும் கதி ரொளியுடன் சேர்ந்து கொண்டன. ஒரு பணியாள் கெஞ்சிக்கு உடுப்பை மாட்டுவதை இளவரசி கவனித்தாள். தலைமுடி பாதி படுக்கையிலும் பாதி அதற்கப் பாலுமாக நிலத்தில்படும் படி தலையை நீட்டிக் கொண்டு அவள் சாய்ந்து கிடந்தாள். இக்காட்சி கண்டு களிப்படைந்த கெஞ்சி, தன் கவர்ச்சியற்ற தன்மையைக்கூட அவன் இனி கடந்துவிடக் கூடுமென்று எண்ணினான். பெண்டிர் பகுதி அறையை மூடிவிட அவன் தொடங்கியிருந்தான். ஆனால் இதுவரை அவள் தோற்றம் பற்றித் தான் கொண்டிருந்த கடுமைக்கு ஈடு செய்ய விரும்பி, அதை முற்றிலும் மூடிவிடாமல் சிறிது திறந்தே வைத்தான். அதனருகே ஒரு தாழ்ந்த கோக்காலியைக் கொண்டு இட்டு, அதன் மீதிருந்து தன் தலையணியைச் சீர் செய்யத் தொடங்கினான். பணிப் பெண்களில் ஒருத்தி பெரிதும் கீறலான ஒரு நிலைக் கண்ணாடி, சீனச் சீப்புகள் முதலிய ஒப்பனைக் கருவிகளைக் கொண்டு வந்து வைத்தாள். பெண்களே நிரம்பிய அந்த மாளிகையில், அந்த இடிந்து தகர்ந்த நிலையிலும், ஆண் களுக்குரிய சின்னங்கள் இன்னும் இருந்தன என்பது நோக்கி அவன் உள்ளூரப் புன்முறுவல் பூத்தான். இப்போது இளவரசி எழுந்து ஆடை யணிந்து கொண்டிருந்தாள். இந்நிலையில் அவள் நாகரிக நங்கை போலவே காட்சி யளித்தாள். உண்மையில் அவள் அணிந்து கொண்டிருந்த அந்த ஆடை புது ஆண்டு விழாவுக்கு முன் அவன் அனுப்பியதே. இதை அவன் முதலில் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அந்த ஆடையும் அதன் மாதிரியும் அவன் கொடுத்த ஆடை போலிருந்தது என்று மட்டும் எண்ணினான். அவன் பேச்சின் நளினம் இதனைக் காட்டிற்று. ‘இந்த ஆண்டு முன்னைவிட உன் உரையாடல் தொடர்பு மிகுதியாயிருக்குமென்றே நான் ஆர்வமுடன் நம்புகிறேன். என் மீது இன்னும் எளிதாக நீ கனிவுடன் குழைவுறும் நாளை-கவிஞன் குயிலுக்கு ஏங்குவது போல் - நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். மாறியுள்ள ஆண்டுபோல் நீயும் மாறுவதானால் எவ்வளவு நன்றாகிவிடும்!’ என்று அவன் பேசினான். அவள் முகம் இப்போது புத்தொளி வீசிற்று. கொஞ்ச நேரமாக அவள் உள்ளத்திலிருந்த ஒரு வாசகம் இப்போது வெளி வந்தது. அதை வெளியிடும் முயற்சியில் அவள் உச்சி முதல் உள்ளங்கால் வரை படபடத்துத் துடித்தது. ‘காகங் கரையப் புத்துலகம் கருவுயிர்க்கும் காலை நேரம்’ என்ற அடியை அவள் மேற்கோளாகக் கூறினாள். அது கேட்டதும் கெஞ்சி கிளர்ந்தெழுந்தான். ‘ஆகா நன்று, நன்று! புத்தாண்டு பிறந்து விட்டது என்பதற்கு இதுதான் அறிகுறி’ என்று கூறி, புன்முறுவலுடன் அவளை ஊக்கிக் கிளர்ச்சி யூட்டியவனாய் அவள் மாளிகையை விட்டு வெளியேறினான். படுக்கையிலிருந்தபடியே அவள் கண்கள் அவனைப் பின் தொடர்ந்தன வழக்கம் போல அவள் முகத்தில் பாதியை ஒரு கை மூடியிருந்தது ஆனால் அதிருஷ்டக் கேடான அந்தச் ‘செம்மலர்’ அப்போது கூட முனைப்பாகவே இருந்தது. ‘அந்தோ, பரிதாபம்! அவள் தோற்றம் மிக மிக அருவருப்பானதே’ என்று கெஞ்சி தன்னுள் ஏக்கத்துடன் கூறிக் கொண்டே சென்றான். அவன் தன் நிஜோயின் மாளிகைக்குத் திரும்பிவந்த சமயம், முரசாக்கி அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அவள் எந்த ஆடவனின் உச்சக் கனவார்வங்களையும் நனவாகக் காட்டத்தக்க வண்ணம் வனப்பு மிக்கவளாகவே வளர்ந்து வந்தாள். அவள் வருங்காலம் வளமையுடையதாகவே தோற்றிற்று. அவள் குருதிச்சிவப்பான உடலொட்டிய ஆடை யணிந்திருந்தாள் அவள் தன்னை எதிர் கொள்ள வந்த சமயம் இந்த உடை மட்டுமின்றி அவள் கல்லா நடைநயமும், தோற்றத்தின் அசைவு ஒசிவு நயங்களும் கெஞ்சியின் உளத்துக்குப் பெரு மகிழ்ச்சி யளித்தன பழமைப் பற்று மிக்க அவள் பற்களுக்குக் கரிய மை தீட்டப்படவில்லை. ஆனால் அவள் புருவங்கள் மிகச் சாதுரியமாகச் சாயந் தீட்டப்பட்டிருந்தன ‘இத்தகைய அழகிய சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருக்கும் வாய்ப்பை விட்டு விட்டு, அருவருப்புமிக்க தோற்றமுடைய ஒரு மாதுடன் நான் ஏன் நேரம் போக்க வேண்டும்!’ என்று, அவளுடன் பொம்மைகளை வைத்து விளையாடிய சமயம் அவன் வியப்புடன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். முரசாக்கி பல வகைப் படங்கள் வரைந்து அவற்றுக்கு வண்ணங்கள் தோய்த்தாள். சிறிதுநேரம் புதுமை வாய்ந்த அந்த வேடிக்கைப் படங்களையே கெஞ்சி பார்த்துக் கொண்டிருந்தான். பின் அவன் திடுமென எழுந்தான். ‘இப்போது நான் உனக்கு வேறுவகைப் படம் வரைந்து காட்டப் போகிறேன், பார்’ என்று தொடங்கினான். நீண்ட தலை முடியுடைய ஒரு மாதின் படம் வரைந்தான். மாதின் மூக்கில் பட்டையாக ஒரு சிவப்புப் பொட்டிட்டான் சற்று விலகி நின்று அதைப் பார்த்த போது, படத்தில் கூட உருவம் மிகவும் விகாரமாகவே தோற்றிற்று. அதன் பின் என்ன நினைத்தோ அவன் கண்ணாடியின் முன் போய் நின்று தன் முகத்தைப் பார்த்தான். அதன் இயல்பான நிறத்தைஅவ்வளவாக விரும்பாதவன் போல, படத்திலுள்ள உருவத்தின் மீது இட்டதுபோலவே தன் மூக்கின் மீதும் ஒரு சிவப்புப் பட்டை யிட்டான். அதன் பின் முகத்தை மீண்டும் கண்ணாடியில் பார்த்தான். முகம் நகைப்புக் குரியதாகவும் அருவருப்பாகவும் மாறி யிருந்தது. அது கண்டு சிறுமி முதலில் சிரித்தாள். ‘நான் இவ்வளவு அருவருப்பாக மாறி விட்டால், நீ இப்போது விரும்புவது போலத் தொடர்ந்து விரும்புவாயா?’ என்று அவன் கேட்டான். இதை விளையாட்டுக் கேள்வியாக்காமல். உண்மையிலேயே அவள் மனமறிய விரும்பினான். செவ்வண்ணம் இனி அகலவே செய்யாது என்று தான் நம்புவதாகவே நடித்தான். அவள் அப்போதும், கலவர மட்டுமே கொண்டாள் ‘ஐயையோ? என்ன செய்து விட்டீர்கள்! அப்பப்பா! என்ன பயங்கரம்’ என்று கூவினாள். அதைத் துடைக்க முயன்று எவ்வளவு துடைத்தாலும் அது நீங்காதது போல நடித்தான். ‘என்ன செய்வது? உண்மையாகவே இதுபோக மாட்டேன் என்கிறதே! அந்தோ! விளையாட்டு இப்படியா வினையாக முடிய வேண்டும்! இனி அரண்மனைக்குச் சென்றால் சக்கரவர்த்தி தான் என்ன சொல்வார்?’ என்று அங்கலாய்த்தான். அவன் திறமையான நடிப்பின் பயனாக அவள் மிகவும் மனம் நொந்தாள். தவற்றைச் சரி செய்ய முயன்றாள். எழுது கருவிகளின் அருகே நீர்ச்சாடியிலிருந்த நீரால் மூக்கைத் தேய்க்கத் தொடங்கினாள். கெஞ்சிக்கு இப்போது ஒரு பழங்கதை நினைவுக்கு வந்தது ஹெய்ச்சு என்பவன் ஒரு புட்டி நீரைக் கொண்டு கண்ணிமை களைத் தோய்த்து, அழுவதாகப்பாவனை செய்து மனைவி உள்ளத்தில் கனிவூட்ட முயன்று வந்தான். புட்டியில் கறுப்பு மையை ஊற்றிவைத்து அவள் அவன் நடிப்புக்கு நல்ல தண்டனை தந்தாள். இதைச் சுட்டிக் குறிப்பிட்டுக் கெஞ்சி முரசாக்கியைக் கிண்டல் செய்தான். அதற்காக அவள் நீராலழிப்பதை மையாலழிப்பதாகத் தான் எண்ணியதாகவும் நடித்தான். ‘ஐயோ, ஹெய்ச்சுவுக்கு அவன் மனைவி அளித்த தண்டனையை எனக்குத் தந்து விடாதே! சிவப்பு மூக்கு இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும். கறுப்பு மூக்குத் தந்து விடாதே’ என்றான். இது கேட்டு முரசாக்கி குலுங்கக் குலுங்கச் சிரித்தாள். இவ்வாறு சிரித்து விளையாடி அன்பொத்த இவ்விருவர் நேரமும் எளிதாகக் கழிந்தது. இளவேனிற் பருவத்தின் மென் கதிரொளியில் மரங்களின் புத்திளந்தளிர்கள் தளதளத்து நின்றன. அவற்றிடையே பொன்னலரியே முதல் முதல் புது மலர்ச்சிக்குரிய அறிகுறிகளைக் காட்டுவது போலத் தன் சிற்றிதழ் திறந்து சிறுநகை செய்தது. மூடிய பாதையருகே ஒரு செவ்வலரி இன்னும் முந்திக் கொண்டு, முழு மலர்ச்சியுடன் ஒளிர்ந்தது. அக் காட்சிகூடக் கெஞ்சியின் உள்ளத்தில் ஓர் அபசூசனமாகத் தென்பட்டது. ‘மலர்ந்த செடி கவினுடையதே யாயினும், அதன் செம்மலர் என் உளத்துக்கு மிகவும் துயர்தருகிறது’ என்று அவன் பெரு மூச்சுடன் கூறிக் கொண்டான். அவன் கவலைக்குரிய அபசூசனத்தால் என்ன நேர்ந்ததென்று வருகின்ற இயலில் காண்போம். 7. செந்தழை விழா சக்கரவர்த்தி செங்குருகு மாடத்துக்கு வருகை தரும் காலம் இறையிலி மாதத்தின் பத்தாம் நாள் என்று உறுதி செய்யப் பட்டிருந்தது. முன் என்றுமில்லா அளவு அது ஆரவாரமிக்கதாக இருக்குமென்றும் தெரியவந்தது. ஆனால் அரண்மனைச் சீமாட்டிகள் வெளியே செல்ல முடியாததால் புஜித்சுபோ அதைப் பார்க்க முடியாததை எண்ணிச் சக்கர வர்த்தியும் வருத்தமடைந்தார். இதன் பயனாக இறுதி ஒத்திகையை மிக ஆடம்பரமாக அரண்மனையிலேயே நடத்துவ தென்று முடிவு செய்யப்பட்டது. இளவரசன் கெஞ்சி இவ்விழாவில் ‘நீலக்கடலலைகள்’ என்ற ஆடல் நிகழ்த்தினான். தோ நோ சூஜோவும் அவனுடன் ஆடலில் பங்கு கொண்டான். ஏனைய ஆடவரை நோக்க, தோ நோ சூஜோ திறமையிலும் வனப்பிலும் மேம்பட்ட வனேயானாலும், கெஞ்சியருகே அவன் ஆடிய போது, மலர் நறுங்கொன்றை மாமரத்தருகேயுள்ள ஒரு செவ்வந்திப் புதர் போலவே காட்சியளித்தான். அதிலும் சிறப்பாக, கெஞ்சியின் ஆடலின் ஒரு கட்டத்தில் பாட்டின் குரல் உச்ச நிலைக்கு எழுந்தது. அதே சமயம் இளஞ்சூரியனின் சாய்ந்த செம்பொன் நிறக் கதிர்கள் அவனைத் தழுவி பொன் முலாம் பூசின. அத்தகைய நளினமிக்க நடனத்தை, இனிய முகபாவத்தை அதற்கு முன் எவரும் பார்த்தது கிடையாது, கேட்டதும் கிடையாது. ஆடலின் முதல் ஆட்டம் கழிந்தவுடன் பாட்டின் இசைப்பு புத்தர் அறத்தையே பாடலாகக் கொண்ட வானுலகப் பறவை கலவிங்காவின் இசையோ என்னும்படி இனிமை ததும்பி அலையாடிற்று. இளவரசனது ஆடலின் உருக்கமிக்க உணர்ச்சியால் சக்கரவர்த்தியின் கண்களே நீர் ததும்பின. இளவரசரும் தலைப்பெருமக்களும் கண்ணீர் வார்த்து நின்றனர். பாடலின் முடிவில் மறுபாடல் தொடங்குவதை எதிர்பார்த்து அவன் தன் ஆடலுடையின் கோடிகளை நிமிர்த்துத் திருத்திக் கொண்டான். இரண்டாவது ஆட்டத்தின் எழுச்சிக் கீதம் தொடங்கிற்று. அச்சமயம் கெஞ்சியின் உணர்ச்சி மிக்க ஆர்வமுகத்துடன் அவன் ஆடிய உயிராட்டமே ஒளிமகன் கெஞ்சி என்ற அவன் பெயர்ச் சிறப்பை முன்னிலும் பன்மடங்காக மக்கள் உள்ளத்தில் பதிய வைத்தது. அவள் மாற்றான் மைந்தனின் வனப்பை இவ்வாறு எல்லாரும் ஆர்வமாகப் புகழ்வது கோக்கிடன் இளவரசிக்கு ஒரு சிறிதும் பிடிக்கவில்லை. அவள் சிறிது ஏளனப் புகழ்ச்சி செய்தாள். ஏழு வயதில் இதே போன்ற வனப்புமிக்க ஒரு சிறுவன் வானவர்க்கு விருந்தானான். அதை மனத்துட் கொண்டு கசப்புக் கலந்த குரலில், ‘இது மட்டிலா அழகு தான். விரைவில் ஒரு வானவன் வந்து அவனை இட்டுக் கொண்டு போய் விடக் கூடும்’ என்றாள். அவள் சொற்களில் முனைப்பாகத் தென்பட்ட பொறாமையையும் பகைமை உணர்ச்சியையும் கண்டு அவள் பாங்கியர் பெரிதும் மனக்குழப்ப முற்றனர். மற்றொரு புறம் புஜித்சுபோ உள்ளத்திலும் இதுபோன்ற ஒரு புயல் வீசிற்று. ‘அந்தோ, ஒரு புதையுண்ட மர்மப் பழி மட்டும் என்னுள்ளும் அவருள்ளும் இருந்து அரித்துக் கொண்டிரா விட்டால், இப்போது காணும் நடனம் என் உள்ளத்தை மகிழ்ச்சியாலும் வியப்பாலும் நிரப்பியிருக்கும்’ என்று அவள் தனக்குள் கூறிக் கொண்டாள். ஆனால் அந்நிலையிலும் அவள் முற்றிலும் தன்னை மறந்த கனவுலகிலேயே உலவினாள். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே அவளால் கவனிக்க முடியவில்லை. இப்போது அவள் தன் அறைக்கே வந்து விட்டாள். சக்கரவர்த்தி, அவள் அருகே வந்திருந்து பேசிக் கொண்டிருந்தார். ‘இன்றைய ஒத்திகையில் நீலக்கடலலைகள் மிகவும் நிறைந்த நேர்த்தியுடையதாய் இருந்தது’ என்றார். அவள் எதுவும் பதில் கூறாதது கண்டு, ‘நீ என்ன எண்ணுகிறாயோ?’ என்று மீண்டும் கேட்டார். ஏதோ ஒப்புக்கு வாய் திறப்பவள் போல அவள் பேசினாள். ‘ஆம், நேர்த்திதான்’ என்றாள். ஆனால் அவர் கிளர்ச்சியுடன் மேலும் தொடர்ந்தார். ‘கூட்டாளியாக ஆடியவர் கூடப் புறக்கணிக்கத் தக்கவர் அல்லர். கை கால் உடல் அசைவிலேயே தேர்ந்த தொழிற் கலைஞரிடமிருந்து உயர்குடி நன்மக்களைப் பிரித்தறியும் ஏதோ ஒரு சிறப்பு நயம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய தலை சிறந்த ஆடலாசிரியர்கள் சிலர் தத்தம் பிள்ளைகளையே சிறந்த ஆடற் கலைஞர் ஆக்கியுள்ளனர். ஆயினும் நம் வகுப்பினரிடம் காணப்படும் இத்தகைய புதுத் தளதளப்பு, இத்தகைய கவர்ச்சி நயம் அவர்களிடம் இருப்பதில்லை. மொத்தத்தில் அந்த ஒத்திகைக்கு அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சியின் அளவைப் பார்த்தால், விழா அவ்வளவு பெரிதாய் இருக்க முடியாதென்றே எண்ணுகிறேன். ஒத்திகைக்கான இவ்வளவு சிரமத்துக்குக் காரணம் நீ தான் என்று நினைக்கிறேன். ஏனெனில் விழாவை நீ இருந்து பார்க்கப் போவதில்லை. இதைத் தான் பார்க்கப் போகிறாய் என்பது அவர்களுக்குத் தெரியும்’ என்றார். மறுநாள் காலை கெஞ்சியிடமிருந்து அவளுக்கு ஒரு முடங்கல் வந்தது. ‘ஒத்திகை எப்படி இருந்தது? என் உள்ளத்தில் அச்சமயம் குமுறிக் கொண்டிருந்த கொந்தளிப்பின் அளவை ஆடலைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எத்தனை பேர் ஊகித்திருக்க முடியும்?’என்று அதில் எழுதி ஒரு பாடலையும் அவன் இணைத்திருந்தான். ‘காதலெனும் நோய் ஆழ்ந்தும் கடிதெழுந்து பிறருடனே ஆடும்போது, மோதுபுய லாடுகின்ற ஆடைநுனி அதிருமிசை அறிந்தாய் கொல்லோ?’ இப்பாடலின் பின்னும் எல்லாம் அறிவடக்கத்துடன் ஒளிவு மறைவாய் இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கடிதம் முடித்திருந்தான். அவள் அடைந்த மனக்கலக்கத்தை அவள் பதில் தெளிவாகக் காட்டிற்று. ஆனால் மற்ற எல்லார் கண்களையும் கவர்ந்த ஆடல் வனப்பின் நயம் அவளையும் கவர்ச்சியுட்படுத்தாமலில்லை என்பதை அக் கலக்கம்கூட மறைக்கவில்லை. ‘தொலைவிருந்தே சீனமகன் ஆடுநீள் ஆடையினை அசைத்தானேனும் கலைவிருந்தே அளித்தான் என் மெய் சிலிர்ப்பக் களி கிளர்ச்சி உயிர்ப்பளித்தே!’ அவளிடமிருந்து இத்தகைய கடிதம் வருவதென்பது அவனுக்கு வியப்பார்வத்தையே அளித்தது. அத்துடன் கடல்கடந்த ஒரு பெருநாட்டின் அரண்மனைப் பழக்க வழக்கமறியுமளவு பரந்த அவள் அறிவும் அவனைச் சொக்க வைத்தது. அவள் சீட்டில் இப்போது ஓர் அரச களை இருந்தது. ஆம். அவள் ஊழ் அவளுக்கு வகுத்திருந்த இலக்கையே அது சுட்டிக்காட்டிற்று. களி மகிழ்வால் அவன் தனக்குள்ளே புன்முறுவல் பூத்தவாறு கடிதத்தைத் தன் முன் பரப்பிவைத்து, மறைநூலை ஆவலுடன் விழுங்கும் மறைவாணன்போல, அதனையே தன்னை மறந்து நெடுநேரம் நோக்கிக் கொண்டிருந் தான். விழா நாளன்று மன்னுரிமை இளவரசர் அனைவரும் அரசவைப் பெருமக்களெல்லாரும் வந்து குழுமியிருந்தனர். அரசுரிமைக்குரிய இளவரசர்கூட ஊர்வலத்தில் கலந்து கொண்டார். ஏரியைச் சுற்றி இசைப்படகுகள் நீந்திவந்தபின், ஒருவகை ஆடலுக்குப் பின் மற்றொரு வகை ஆடலாக, கொரிய நாட்டு ஆடல்களும் பிற கடல் கடந்த பெருநாட்டு ஆடல்களும் ஆடப்பட்டன. இசை ஓசையும் முரசின் முழக்கங்களும் அகல் வெளியெங்கும் நிரம்பின. ஒத்திகையின் போது கெஞ்சி ஆடிய ஆடல் ஒரு தெய்விக அருநிகழ்ச்சியே என்பதையும், அது ஒரு விழாத் தொடக்க நல்லறிகுறியே என்பதையும் விடாப்பிடியாக வலியுறுத்தி, அதற்காகக் கோயில் தோறும் சிறப்பு வழிபாடுகள் ஆற்றும்படி சக்கரவர்த்தி ஆணை பிறப்பித்திருந்தார். இதனை மக்களில் பெரும்பாலோர் இயல்பான ஒரு செய்தி என்றே கருதினர். ஆனால் அதற்கான அவசியம் எதுவுமே புலப்பட வில்லை என்று கோக்கிடன் சீமாட்டி சீறினாள். சக்கரவர்த்தியின் விருப்பப்படியே, ஆடற்குழு வளையம் பெருமக்கள், பொதுமக்கள் ஆகிய இருசார்பிலுமே கலப்பாக, நாடெங்குமுள்ள திறமை நயமும் பண்பு நயமும் மிக்கவர் களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. விழா வினையின் தலைவர்கள் ‘சயேமோ கன் நோ கமி’ ‘உயே மோ கன் நோ கமி’ என்ற இருவர், பாட்டிசைக் குழுவின் இடது வலது சிறைகள் அவ்விருவர் பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தன. தனிச்சிறப்பு வாய்ந்த தகுதியுடையவர்களை விழாவாணர்களாகத் தேர்ந் தெடுத்து அவர்களுக்குத் தத்தம் இல்லங்களிலேயே விழாவுக்குரிய பயிற்சியளிக்கும் பொறுப்பு ஆடலாசிரியர் களிடமும் பிற ஆசான்களிடமும் ஒப்படைக் கப்பட்டிருந்தது. இறுதியில் விழாநாள் மலர்வுற்றது. இலையுதிர் பருவ மணுகிய நெடிய மரங்களின் செக்கர் நிறமான தழைகளின் நிழலில் நாற்பது விழா வாணர் தத்தம் இசைக்குழல்களுடன் வட்ட வளையமாக நின்றனர். அவர்கள் இசைக்கு விசையூட்டு பவைபோலச் செந்தூரமரக் காவணங்களினூடாக ஊதைக் காற்றுச் சில்லிட்டுக்கொண்டு வந்து புகுந்தது. காய்ந்து உலர்ந்து குவியல் குவியலாக எங்கும் மண்டிக் கிடந்த மென்சருகுகள் ஆடுபவர் கால்களைச் சுற்றிச் சுழன்று சுழன்றாடும் வண்ணம், விழாவாணர் ‘நீலக்கடலலைகள்’ என்னும் நடனம் பயின்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. காண்பவர்கள் ஊழிப் பெருவெள்ளத்தையே நேரில் கண்டாற்போன்ற இனிய அச்சம் கலந்த பெருமகிழ்ச்சியுள் ஆழ்ந்தனர். கெஞ்சி அணிந்திருந்த மாவிலங்கத் தளிர்க்கொடி காற்றில் பெரிதும் சிதைந்துவிட்டது. அதில் மீந்திருந்த பொன்னிறத் தளிர்கள் மிகச்சிலவாகவும் வாடிய தோற்றமுடையவையாகவும் இருந்ததுகண்ட இடங்கை அமைச்சர் சக்கரவர்த்தியின் அரியாசனத்தருகே தழைத்திருந்த பொற்கொன்றைக் கொடியி லிருந்து ஒரு பூந்துணர்க் கொத்து பறித்து, ஆடகன் மணிமுடியில் அணிந்து மகிழ்ந்தார். கதிரவன் விழுவான் அணுகியசமயம் எங்கும் முகில் மூடி மழை பொழியுமோ என்ற அச்சத்துக்கு இடம் இருந்தது. ஆனால் இன்றைய காட்சிகள் இன்னும் நெடுநாள் காணக் கிடையாத அருமையுடையவை என்பதை வானிலைகூட அறிந்து கொண்டது என்றே கூறும்படி, விழாமுடியும் வரை மழைத் துளிகள் கீழே வராமல் அந்தரத்திலேயே தூங்கிக் கொண்டு நின்றன. ஒத்திகை நாளன்று கெஞ்சியாடிய ஆட்டத்தில் விழு ஞாயிற்றுக் காட்சி எல்லாரையும் உடலும் உளமும் சிலிர்க்க வைத்திருந்தது. ஆனால் அதையும் வென்றது இன்றைய அவனுடைய வெளியேற்ற ஆடல் நயம். அவன் அணிந்திருந்த பன்னிற மலர்க் கொழுந்துகளாலான தலையணி வருணிக்க முடியாத பேரழகுடையதாய் இருந்தது. ஆடலோ வேறோர் உலகத்துக்கே காண்பவரை இட்டுச் சென்று அதன் இன்ப ஒளி வெள்ளத்தில் மிதக்க விடுவதாயமைந்தது. பெருமக்களும், அருகிருந்தோரும் மட்டுமன்றி, தொலைதூரத்தில் மரத் தடிகளிலும், பாறைகளருகிலும், சருகுக் குவியல் களிடையிலும் இருந்து கண்ட பொதுமக்கள் கூட - எதற்கும் அசையாத கன்னெஞ்சர்கள் முதற்கொண்டு -அன்று ஒரு துளிக் கண்ணீர் சிந்தாமலிருக்க முடியவில்லை. கெஞ்சியின் ஆட்டத்துக்குப்பின் குழந்தைப் பருவமே கழியாத சிறுவனான சீமாட்டி ஜோக்கியோதனின் புதல்வன் ‘கூதிர்ஊதை’ ஆட்டம் ஆடினான். ஆனால் இதிலோ, இதனைத் தொடர்ந்துவந்த சில்லறை நிகழ்ச்சிகளிலோ, எவரும் கருத்துச் செலுத்தவில்லை. அவர்கள் உள்ளங்களில் ஏற்கெனவே மகிழ்வும் வியப்பார்வமும் நீக்கமற நிரம்பித் ததும்பிக் கிடந்தன-வேறு எதற்கும் அவற்றில் இடமில்லாததுடன், வேறு எதுவும் அவற்றின் தூய அரும்பெரு நிறைவின் இனிமையை மிகுதிப்படுத்த முடியுமென்று அவர்கள் எண்ணவில்லை. அன்றிரவே கெஞ்சி பேரவையின் மூன்றாம்படித்தரத்தின் முதல் வகுப்புரிமைக்கு உயர்த்தப் பெற்றான். அதனுடன் இணைவாகவே தோ நோ சூஜோ நான்காம் படித்தரத்தில் இரண்டாம் வகுப்புரிமை, முதல் வகுப்புரிமை ஆகிய வற்றினிடைப்பட்ட நடுப்படிக்கு உயர்த்தப் பெற்றான். பேரவையிலுள்ள எல்லா உறுப்பினர்களுமே இந்த நல்ல வேளையின் அறிகுறியாக ஒருபடி உயர்வு பெற்றனர். ஆனால் வழக்கப்படி எல்லாரும் தங்கள் தங்கள் உயர்வுகளையும் சேர்த்தே பாராட்டி மகிழ்வுற்றாலும், எல்லா உயர்வுகளுக்கும் காரணமான உயர்வு கெஞ்சிக்குச் செய்யப்பட்ட சிறப்பே என்பதை அவர்கள் அனைவரும் உணர்ந்திருந்தனர். தங்கள் ஊழ் தங்களைக் கெஞ்சியின் காலத்தில் வாழச்செய்து, அவன் தொடர்பினாலேயே இவ்வுயர்வு தந்ததால், இந்த எதிர்பாராத மேம்பாட்டுக்குக் காரணமான நல்லூழைத் தமக்கு வழங் கியதற்காக அனைவரும் அவனை மனமார வாழ்த்தினார்கள். புஜித்சுபோ இப்போது தன் இல்லத்துக்கே சென்றிருந் தாள். அவளைக் காணும் முயற்சியிலேயே ஈடுபட்டிருந்த கெஞ்சி நெடுமாடத்தின் பக்கம் நாடுவது அருமையாயிற்று. அந்த அளவுக்கு அங்கே அவன் சோக நிழலையும் பிணக்கையுமே பரப்பி யிருந்தான். அத்துடன் குழந்தை முரசாக்கியை அவன் தன்மனையில் கொண்டு குடிவைத்த சமயமும் இதுவாகவே அமைந்தது. இது பற்றிய வதந்தி ஆய் இளவரசியின் காதுக்கும் எட்டிற்று. ஆனால் வதந்தி அதன் முழு வடிவத்தையும் வாய்மையுடன் தெரிவிக்கவில்லை. மனையில் இடம் பெற்றிருந் தது ஒரு சிறுமி என்பது அவளுக்குத் தெரியாது. கெஞ்சியின் மாளிகையிலேயே அவனோடு யாரோ வாழ்வதாக மட்டுமே அவள் கேள்விப்பட்டாள். அவள் உள்ளம் மிகவும் புண்பட்டது இதனாலேயே. இது இயல்பு என்றுகூடக் கூறலாம். ஆனால் இதே நிலையில் உள்ள வேறு எந்த அணங்கும் இதற்காகச் சீற்றமும் வசைமாரியும் மேற்கொண்டிருப்பாள். இவ்வாறு அவள் செய்திருந்தால், அவளுக்கு முழு உண்மை வெளிப்பட்டிருக்கும். நடந்ததெல்லாம் கூறி அவள் உள்ளத்துக்கு அவன் அமைதி அளித்திருப்பான். இது செய்யாத நிலையில், அவள் வெறுப்பு மிகுதியாயிற்று. அவனிடமிருந்து அவள் முன்னிலும் ஒதுங்கி, தீராத் தனி வாழ்வு வாழவே இது அவளைத் தூண்டிவிட்டது. அவள் கூறிய வெறுப்பு வாசகங்களும் இந்நிலையில் அவள் விரும்பியபடி அவனைத் திருத்தி அவள்பால் வளைப்பதற்கு மாறாக, வேறுவகைப் பொழுதுபோக்குகளையே நாடி அவளை விட்டு மேலும் தொலை செல்லும்படி அவனை இயக்கலாயிற்று. ஆனால் இந்நிலையிலும் அவன் மாசற்ற தூயஅழகு அவள் ஆர்வக் கவர்ச்சியைத் தூண்டாமலில்லை. இதுவும் அவளுடன் பழகிய பழக்கமும் அவளிடம் அவனுக்குத் தூய பாச உணர்ச்சியையும் கனிவையும் உண்டுபண்ணியிருந்தன. கெஞ்சியின் இவ்வுணர்ச்சிகளை அவள் அறியவில்லை, அது அவளிடம் கனிவுக்கு எதிர் கனிவைத் தூண்டவில்லை. கெஞ்சிமட்டும் அவள் கனிவை, உளமாற்றத்தை என்றும் எதிர்பார்க்கத் தவறவில்லை. ஏனென்றால் அவள் குறுகிய, பழிக்குப் பழி வாங்கும் மனப் பான்மையுடையவளல்லள் என்பது அவனுக்குத் தெரியும். நம்பிக்கையுடன் அவள் கனிவை எதிர்நோக்கி அவன் காத்திருந்தான். இதற்கிடையில் இயல்பாகச் சிறுமி முரசாக்கியுடன் பழகி அவளை அறியுந்தோறும் அவள் தோற்றம், குணம் ஆகிய இருவகையிலும் அவன் உள்ளம் மேன்மேலும் அமைதியும் நிறைவும் பெற்று வந்தது. அவள் ஒருத்தியாவது, தன் முழு உள்ளத்தையும் ஒளிவுமறைவு, தங்குதடையின்றி அவன்பால் ஒப்படைத்திருந்தாள். அதே சமயம் தற்காலிகமாகவாவது அவள் இன்னாரென்பதைத் தன் அரண்மனை வேலையாட் களுக்குக்கூடத் தெரியாமல் கெஞ்சி இரகசியமாக வைத் திருந்தான். அவள் தொடர்ந்து அவ்வரண்மனைப் பகுதியில் மேல் சிறையிலேயே வாழ்ந்து வந்தாள். வெளியே சற்று ஒதுக்குப் புறமாக இருந்த அப்பகுதிக்குக் கெஞ்சி அடிக்கடி வந்து அவளைப் பார்த்துப் பழகி வந்தான். அவளுக்கு அவன் எல்லாவகைப் பாடங்களையும் தானே கற்றுக் கொடுத்தான். பார்த்து எழுதுவதற்குரிய பாடங்களும் அவளுக்கு நிரம்ப இருந்தன. அவளை எல்லா வகையிலும் ஒரு குழந்தை போல, வளர்ப்பு தந்தையிடமிருந்து திரும்பத் தந்தையில்லமே மீண்டுவந்த குழந்தைபோல அவன் நடத்தினான். அவளுக்கான வேலையாட்களை அவன் மிக உன்னிப்பாகவே தேர்ந் தெடுத்தான். அவள் நல வாய்ப்புகளுக்கான எல்லாவற்றையும் தம்மாலியன்ற அளவும் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளை யிட்டான். ஆயினும் கோரெமிட்சு தவிர வேறு யாருக்கும் அவள் யாரென்றோ, எப்படி அங்கே வாழ நேர்ந்ததென்றோ தெரியவராது. அத்துடன் அவள் எங்கே, எப்படி இருக்கிறாள் என்பது அவள் தந்தைக்கும் தெரியாது. இப்போதும் சில சமயம் சிறுமிக்குத் தன் இறந்தகால வாழ்வின் நினைவு ஏற்படுவதுண்டு. அப்போது தன் பாட்டியில்லாத் தனிமை அவளை மிகவும் வருத்திற்று. கெஞ்சி அருகிலிருக்கும் போதெல்லாம் இந்தத் துயரை அவள் மறந்துவிடுவாள். ஆனால் மாலை நேரங்கள் பெரும்பாலும் அவன் இல்லாத நேரங்களாய் இருந்தன. அவனுக்கு அவ்வளவு வேலை நெருக்கடிகள் இருப்பதும், மாலை நேரங்களில் நாள்தோறும் தவறாமல் அவன் ஏதோ தனக்குத் தெரியாத ஒரு இடத்துக்கு அவசர அவசரமாகப் போய்விடுவதும் அவளுக்கு மிகவும் துயர் தந்தது. அச்சமயங்களில் அவன் இல்லாநிலை குறித்தும் அவள் மிகவும் உளைந்தாள். எனினும் இவற்றாலும் அவளால் அவன் மீது சீற்றங்கொள்ள முடியவில்லை. சில சமயம் தொடுத்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவன் அரண்மனையிலோ, நெடுமாடத்திலோ கழிப்பான். திரும்பிவரும் சமயம் அவள் கிளர்ச்சியற்றுக் கலங்கிய கண்ணோடிருப்பதைக் காண்பான். அச்சமயம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு தாயில்லாப் பிள்ளையைத் தான் கவனியாதிருந்தது போன்ற உணர்ச்சியே அவனுக்கு ஏற்பட்டது. தன் இரவு நேரப் பயணங்கள் குறித்து இதன்பின் அவன் கலவரமடைந்தான். கெஞ்சியின் பாதுகாப்பில் அவள் இருப்பதுபற்றி முரசாக்கியின் உறவினரான துறவி கேள்விப்பட்டபோது, அதன் இயல்பைப் புரிந்துகொள்ள முடியாமல் மனங்குழம்பினார். ஆனால் இதில் அவர் தீங்காக எதையும் காணவில்லை. அவள் அவ்வளவு நல்ல பாதுகாப்புடன் இருப்பதுபற்றி மகிழவே செய்தார். அத்துடன் மாண்டுபோன அவர் உடன்பிறந்தாளாகிய துறவு நங்கையின் நினைவு வழிபாடு சிறப்பான ஆரவாரத்துடன் நடக்க வேண்டுமென்று கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவர் மனநிறைவு இன்னும் மிகுதியாயிற்று. புஜித்சுபோ உடல்நிலைபற்றி யறியும்படி கெஞ்சி அவள் அரண்மனைக்குச் சென்றபோது, அவள் பாங்கியர்களின் கூட்டமொன்று அவனை இடைநின்று மறித்தது. மியோபுக்கள், சுனகோன்கள், நகாத்சுகாக்கள் பலர் அக்கும்பலில் இருந்தனர். இவர்களையன்றி புஜித்சுபோவை அவன் சந்திக்க முடியவில்லை. அவளும் வெளியே வருவதாகத் தோற்றவில்லை. அவள் உடல்நிலை திருந்தியுள்ளது என்று பாங்கியர் கூறுவது கேட்க அவனுக்கு ஆறுதலாகவே இருந்தது. பொதுச் செய்திகள் பலவற்றையும் அவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயம் இளவரசன் ஹியோபுக்கியோ வருகை அறிவிக்கப்பட்டது. கெஞ்சி அவனிடம் பேசுவதற்காக வெளியே சென்றான். அச்சமயம் இளவரசன் ஹியோபுக்கியோ தோற்றம் கெஞ்சியின் கண்களுக்கு மிகுந்த அழகுக் கவர்ச்சியும் மென்னயமும் உடையதாயிருந்தது. தான் எதிர்பார்த்ததை விட அவனிடம் கெஞ்சி மிகுந்த ஈடுபாடுகொண்டு ஆவலுடன் அவனை நோக்கினான். அதில் துலங்கிய பெண்மையின் ஒளிகண்டு அவன் இறும்பூதுகொண்டான். அவன் உள்ளத்தில் மிதந்து தத்தளித்த பெண்மையின் இருதிற வடிவங்களையும் - புஜித்சுபோவையும் முரசாக்கியையும் - அவன் தன் உறவு முறையால் இணைத்தது போலவே முகத்தோற்றத்திலும் இணைத்ததாக கெஞ்சி கருதினான். ஒரு நங்கைக்கு உடன்பிறப்பாகவும் மற்ற நங்கைக்குத் தந்தையாகவும் விளங்கிய இவ் இளவரசனுடன் பழகுவதில் திடுமென இருதலை முறைகளுடன் பழகியது போன்ற ஓருணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. நீடித்து இருவரும் உரையாடினர். இதுவரை என்றும் காட்டாத பாசம் திடுமெனத் தன்னிடம் கெஞ்சிக்கு ஏற்பட்டுள்ளது என்பதை ஹியோபுக்கியோ காணாமலில்லை. இது எவ்வாறு ஏற்பட்டதென்று அவன் அறியாவிட்டாலும், அதனால் அவன் அடைந்த மகிழ்ச்சி பெரிது. உண்மையில் கெஞ்சி இப்போது அவனுக்கு ஒரு மருமகனாகியிருந்தான் என்பதை அறியாமலே அத்தகைய பாசத்தை அவனும் கொண்டான். பொழுதேறிவிட்டது. ஹியோபுக்கியோ தன் உடன் பிறந்தாளைக் காண உள்ளே சென்றான். தனியே விடப்பட்ட கெஞ்சியின் உள்ளம் மிகவும் கசப்புற்றது. நெடுங்காலத்துக்கு முன் தன்னுடன் விளையாடுவதற்காக முதன் முதல் சக்கரவர்த்தி அவளை அழைத்து வந்த நிகழ்ச்சி அவன் நினைவுக்கு வந்தது. அந்நாட்களில் அவள் விருப்பப்படி அவன் அவள் அறைக்கு உள்ளும் புறமும் எங்கும் சென்று வர முடிந்தது. ஆனால் இப்போதைய நிலை நேர்மாறானது. எந்த நேரத்தில் என்ன இடர் நேருமோ என்ற துடிதுடிப்புக்கிடையே தான் இரகசியக் கடிதங்கள்கூட அனுப்ப வேண்டியிருந்தது. அவன் இன்று அவளிடமிருந்து எட்டாத் தொலைவில், ஒருவரிடமிருந்து மற்றொருவர் எவ்வளவு தூரத்திலிருக்க முடியுமோ அவ்வளவு தூரத்தில், துருவத்திலிருந்து துருவமாக இருந்தனர். தாங்க முடியாத இத்துயர எண்ணங்களை அடக்கிக் கொண்டே அவன் இளவரசன் ஹியோபுக்கியோவிடம் இணக்க நயமுடன் பேசினான். ‘தங்களை அடிக்கடி பார்க்கும் விருப்பம் எனக்கு உண்டு. ஆனால் பார்ப்பதற்கு ஏதேனும் தனி அவசியம் இருக்கும்போதல்லாமல், எவரையும் பார்க்க என் மனம் இடம் தருவதில்லை. ஆனால் எப்போதேனும் நீங்கள் என்னைக் காண விரும்பினால் எனக்குச் செய்தி தெரிவியுங்கள். மகிழ்ச்சியுடன்.......’ பாதி வாசகத்துடன் அவன் வெளியேறிச் சென்றான். புஜித்சுபோவுடன் கெஞ்சி சந்திக்கும்படி உதவி வந்தவள் ஓமியோபுவே. புஜித்சுபோ எப்போதும் முன்னெச்சரிக்கை யுடையவளாயினும், கெஞ்சி வகையில் அது காலங்கடந்தே செயலாற்றிற்று. அவன் உள்ளம் சென்ற வழி வாழ்க்கை செல்லாததால், அவன் மனக் குழப்பமடைந்தான். அவன் முகத்தில் துயர இருள் படிந்திருந்தது. இது கண்டு வருந்திய ஓமியோபு காதலர்களை மீண்டும் சந்திக்க வைக்கத் தன்னாலான மட்டும் முயன்றாள். ஆனால் நாட்கள், மாதங்கள் தான் சென்றன. அவள் முயற்சிகள் பயன் தரவில்லை. அதே சமயம் காதலர்களோ, தமக்குத் தீங்கின்றி வேறெதுவும் தராத இக்காதலை விட்டொழிக்கத் தம்மாலான மட்டும் போராடிக் கொண்டிருந்தார்கள். சிறுமியின் செவிலியாயிருந்த சோனகன் கெஞ்சியின் அரண்மனையில் செல்வச் சூழலினிடையேயும் இன்ப வாய்ப்பு வளங்களிடையேயும் வாழ்ந்தாள். தனக்குக் கிடைத்த இந்த எதிர்பாராத நலங்களால் அவள் மிகவும் அக மகிழ்வு கொண்டாள். அவை பகவான் புத்தரின் தனிப் பெருங் கருணை என்றே அவள் கருதினாள். மாண்ட துறவு நங்கை தன் பேர்த்தியைப் பாதுகாத்தருளும்படி பகவானை வேண்டியதன் பயனாக, அவரே இப்போது சிறுமிக்கும் தனக்கும் இத்தகைய நல்லேற்பாடுகளைக் கொண்டு கூட்டுவித்திருப்பதாக அவள் மகிழ்ந்தாள். இப்போதும் சில சில குறைகள் இல்லை என்று கூற முடியாது. ஆய் இளவரசியின் சீற்றம் தன்னளவிலே அச்சந்தருவதாக மட்டும் இல்லை. அதன் விளைவும் அஞ்சவருந் தன்மையுடைய தாகவே இருந்தது. அது கெஞ்சியை எங்கும் துரத்தி, கண்ட கண்ட இடமெல்லாம் நேரப்போக்குக் கவர்ச்சி தேடும்படி செய்தது. இவற்றை உணரும் பருவம் வந்த சமயம், சிறுமிக்கு இவை மிகவும் துன்பந்தரும் என்று சோனகன் அஞ்சினாள். அதே சமயம் அவள் இதனால் மனமுடையவில்லை. சிறுமியின் தோழமையில் அவன் கொண்ட ஆர்வம் அவளுக்கு நம்பிக்கையையும் ஆர்வத்தையும் உண்டு பண்ணிற்று. இறையிலி மாதத்தின் இறுதியில், துறவு நங்கை இறந்து மூன்று மாதங்களாய்விட்ட நிலையில் முரசாக்கியின் துயராடை அகற்றப்பட்டது. ஆயினும் தாய் தந்தையரற்ற குழந்தையாகவே அவள் பேணப்பட்ட காரணத்தினால், வழக்கமான அச்சடிச் சாயத் துணிகளை அவள் மேற்கொள்ளவில்லை. சிவப்பு, ஊதா அல்லது மஞ்சள் நிறமான தூய ஒருநிற அங்கியையே அவள் அணிந்து வந்தாள். ஆனால் இத்தகைய ஆடையில் கூட அவள் எடுப்பும் துடிப்பும் மிக்கவளாகவே காட்சியளித்தாள். புத்தாண்டு விழாவை ஒட்டிய அரசவை வரவேற்பில் கலந்துகொள்ளுமுன் கெஞ்சி அவளைப் பார்வையிடச் சென்றான். ‘இன்று முதல் நீ சிறு பிள்ளையல்ல, முழுநிறை மங்கை’ என்று அவன் அவளை நோக்கிப் புன்முறுவல்பூத்த முகத்துடன் பேசினான். அச்சமயம் அவன் ஒளியார்ந்த எழிலில் மயங்கி அவள் அவனை விட்டுப்பிரிய மனமில்லாதவளானாள். இன்னும் சிறிது நேரமாவது அவன் தங்கியிருந்து விளையாட மாட்டானா என்ற எண்ணத்துடன் அவள் தன் விளையாட்டுப் பொருள்களை எல்லாம் எடுத்து வந்தாள். மூன்றடியளவே உயரத்தில் எல்லாத் தட்டுமுட்டுப் பொருள்களும் நிரம்பப் பெற்ற ஒரு சிறு பொம்மை அடிசிற் களம் அவற்றுள் இடம் பெற்றிருந்தது. வீடுகள் ஏராளமாகவும் வகை வகையாகவும் கெஞ்சியால் அவளுக்குச் செய்து தரப்பட்டிருந்தன. அவற்றின் முழுத் தொகுதியும் இப்போது வெளியே பரப்பி அடுக்கப்பட்டது. இவற்றில் எதையும் மிதித்துத் தகர்க்காமல் கெஞ்சியால் வெளியே செல்ல முடியாத நிலையில் அவை அறையையே நிறைத்தன. ‘சின்னஞ்சிறு இனு இவற்றை யெல்லாம் உடைத்துப் போட்டான். அவற்றை நான் சீர்செய்யப் போகிறேன்’ என்று அவள் தன் செயலுக்கு விளக்கம் தந்தாள். அவள் முகம் அதே கலங்கிய உணர்ச்சி தெரிவித்தது. ‘என்ன குறும்புக்காரப்பிள்ளை இந்த இனு? சரி, இவற்றை நானே சீர் செய்து தருகிறேன். புத்தாண்டு நாளில் நீ அழாதே!’ என்று கூறிக் கொண்டே அவன் வெளியேறினான். அவன் வெளியே செல்வதைக் காண்பதற் காகவே வேலையாட்களில் பலர் இடை வழியின் கோடியில் வந்து காத்து நின்றார்கள். பேரவைக்குரிய ஆடையில் அவன் நடை கம்பீரமாய் இருந்தது. முரசாக்கியும் வெளியே ஓடி வந்து அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள். திரும்பி வந்ததும் அவள் தன் பொம்மைகளில் ஒன்றுக்கு அதே மாதிரி ஆடம்பர உடையணிந்தாள். ‘கெஞ்சியின் சக்கரவர்த்தி விஜயம்’ என்ற பெயர் சூட்டி அவள் ஒரு விளையாட்டு விழாவே நடத்தினாள். அவள் விளையாட்டுத் தனம் கண்டு சோனகன் கடிந்து கொண்டாள். ‘இந்த ஆண்டு முதலாவது நீ இப்படிச் சிறுபிள்ளைத் தனமாக நடப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பத்து வயதான பின் பெண்கள் பொம்மை வைத்து விளையாடுதல் தகாது. இவ்வளவு நல்ல பண்பாளர் உனக்குக் கணவனாவதற்கென்று விரும்பிக் காத்துக் கொண்டிருப்பதனால், நீ ஒரு நல்ல சீமாட்டியாக நடக்க முடியுமென்று அவருக்குக் காட்ட வேண்டும் இல்லையென்றால் அவர் காத்துக் காத்து அலுத்துப் போய்விடக் கூடும்’ என்றாள். இன்னும் முரசாக்கி விளையாட்டிலேயே கருத்தாயிருந்து, தான் சிறுமி என்பதைச் கெஞ்சிக்கு வலியுறுத்திக் கொண்டே இருக்கக்கூடாதென்று சோனகன் நினைத்தனாலேயே, இவ்வாறு பேச நேர்ந்தது. ஆனால் இதே எச்சரிக்கைக்கு இன்னொரு விளைவும் இருந்தது. கெஞ்சியே தன் கணவனாகப் போகிறாரென்று அவள் இப்போதுதான் அறிந்தாள். கணவன்மாரைப்பற்றி அவள் போதிய அளவு கண்டுணர்ந்திருந்தாள். பணி நங்கையர் பலருக்குக் கணவன்மார் இருந்தனர். ஆனால் அவர்களெல்லாம் அந்தசந்த மற்றவர்கள். தனக்குக் கணவனாக வரப் போகிறவர் அவர்களெல் லாரையும் விட இளமையும் அழகும் வாய்ந்தவரென்று கண்டு, அவள் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டாள். இதுவகையில் அவள் வருங்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க முடிந்ததென்பதே, அவள் வளர்ச்சிக்கு ஓர் அறிகுறியாயிற்று. ஆயினும் உண்மையில் அவள் சிறுபிள்ளைத் தனமும் குழந்தைத் தோற்றமும் சோனகன் கருதியது போல அவ்வளவு பெருந்தடையாயில்லை. குழப்ப மடைந்த கெஞ்சியின் குடும்பச் சூழலில் இக்குழந்தைத் தோற்றம் தான் அவனிடம் தப்பெண்ணம், ஐயப் புயல்கள் வீசி எழாமல் தடுத்து வந்தது. மன்னவையிலிருந்து திரும்பியதும் கெஞ்சி நேரே நெடுமாடம் சென்றான். ஆய் இளவரசி என்றும் போல் அப்பழுக்கற்ற நிறையழகியாகவே விளங்கினாள். ஆனால் எப்போதும் போல் உணர்ச்சியற்ற வரவேற்பே அவனுக்குக் காத்திருந்தது. இது கெஞ்சியை என்றும் போல் இன்றும் புண்படுத்தவே செய்தது. ‘புத்தாண்டுடன் நீயும் சிறிது புதுமையாக மாறியிருந்தால், உன் வெறுப்பும் உணர்ச்சியற்ற விறைப்பும் ஒரு சிறிது தளர்ந்திருந்தால், எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும்!’ என்று புலம்பினான். இதற்கு முன்பே கெஞ்சியுடன் யாரோ வாழ்ந்து வருவதாக அவள் கேள்விப்பட்டிருந்ததனால், தன்னிடத்தை வேறு ஒருவர் பெற்றுத் தன்னைப் புறமாக்கி விட்டதாகவே அவள் கருதி விட்டாள். இது அவள் வெறுப்பையும் கடுமையையும் இன்னும் பெருக்கிற்று. இதை ஒரு சிறிதும் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளாமல், அன்புக் கனிவுரையாலும் நய மொழிகளாலும் அவளறியாமலே அவள் கடுமையைச் சிறிதகற்றி, தன் பேச்சுக்கு எதிர் பேச்சைக் கொடுக்கு மளவு அவன் அவளை மாற்றினான். ஆனால் ஒரு சிறு வழுக்கூட இல்லாமல் எல்லாம் சரி ஒழுங்குப் படி நடந்து கொண்ட அவளை அவனால் எளிதில் அணுகவே முடியவில்லை. இதற்குக் காரணம் அவள் அவனைவிட நான்கு ஆண்டுகள் மூப்பாயிருந்தாள் என்ற ஒன்றுதானா? இது பொருத்தமாகத் தோற்றவில்லை. வேறு அவளிடம் என்ன குற்றம் இருக்க முடியும்? எவ்வழியிலும் அவள் குற்றமற்றவளாகவே காணப் பட்டாள். ஆகவே அவள் உணர்ச்சிகளுக்குரிய காரணம் தன் ஒழுங்குக்கேடு ஒன்றேயாகத் தான் இருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். ஆம், உண்மையில் அவள் ஓர் அமைச்சர் மகள், அதிலும் மற்ற எந்த அமைச்சரையும் விடச் செல்வமும் செல்வாக்கும் மிக்க அமைச்சரின் புதல்வி. அது மட்டுமன்று . சக்கரவர்த்தியின் உடன் பிறந்தாள் பெற்ற ஒரே பிள்ளை அவள். அவ்வகையிலே ஆடம்பரத்துடனும் உயர் மதிப்புடனுமே அவள் வளர்க்கப்பட்டாள். மிகச் சிறு மதிப்புக்கேடு, மிக இலேசான தவறுகூட அவளுக்கு எதிர்பாரா அதிர்ச்சியாய் அமைவது இயல்பே. ஆனால் கெஞ்சி இவற்றை யெல்லாம் எண்ணிப் பார்ப்பவன் அல்ல. இவற்றை அவன் பொருட்படுத்தாதது அவள் அகப் புயலை மேலும் கிளற மட்டுமே பயன்பட்டது. கெஞ்சியின் மேற் போக்கான ஏலா மடிமை போன்ற தோற்றம் கண்டு ஆய் இளவரசியின் தந்தை மிகவும் மன நொந்திருந்தார். ஆனால் அவனை நேரில் கண்டதே இக்குறையை அவர் முற்றிலும் மறந்து விட்டார். அவனிடம் மிகவும் நயநாகரிகமாகவே நடந்துகொண்டார். மறுநாள் கெஞ்சி வெளியே செல்லும் சமயம் அவர் கெஞ்சியின் அறைக்கே வந்து அவன் உடையணிவதில் அவனுக்கு தம் கைப்பட உதவ முற்பட்டார். அவர் குடும்ப மரபுரிமையாக வந்த புகழ் சான்ற ஒரு கச்சை அவர் கையிலிருந்தது. கெஞ்சியின் ஆடை முதுகுப் பக்கம் சிறிது கலைந்திருந்ததை அவர் நீவி நிமிர்த்தார். அவன் காலணிகளை எடுத்துவரத்தான் செய்ய வில்லை, மற்றப்படி எல்லா உதவிகளையும் நட்புரிமையுடனும் பாசத்துடனும் செய்தார். கச்சையையும் அரையில் சேர்க்க விரும்பினார். ஆனால் கெஞ்சி, ‘இது சக்கரவர்த்தி விழாவுக்கும் அதுபோன்ற பெரு நிகழ்ச்சிகளுக்கும் உரியது. அப்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்றான். எனினும் அமைச்சர் விடவில்லை. ‘சக்கரவர்த்தி விழாக்களுக்கெல்லாம் இது வேண்டியதில்லை. இதைவிட மதிப்பேறிய கச்சைகள் இருக்கின்றன. இது உண்மையில் அவ்வளவு பெரிதல்ல. இதன் பெருமை யெல்லாம் இதன் அரிய வேலைப்பாட்டினால் தான்’ என்று கூறி அதை அவன் அரையில் வலியுறுத்திக் கட்டினார். இம்மாதிரி அன்புச் செயல்களில் அவர் வாழ்நாள் ஆர்வ முழுதும் செறிந்திருந்தது. கெஞ்சியின் வருகை எவ்வளவு அரு நிகழ்வாய் இருந்து விட்டால் தான் என்ன? ‘இத்தகைய இனிமை வாய்ந்த நல்லிளைஞன் என் இல்லம் வந்து போவதென்பதே என் வாழ்நாளின் மிகப் பெரிய இன்பப் பேறாகுமே!’ என்று அவர் தமக்குள் கூறிக் கொண்டார். இத்தடவை கெஞ்சியின் புத்தாண்டுக்குரிய பேட்டிக் காட்சிகள் மிகச் சிலவாகவே இருந்தன. முதலில் அவன் சக்கரவர்த்தியையும், பின் மன்னுரிமை இளவரசரையும், முன்னாளைய சக்கரவர்த்தியையும் கண்டு, இறுதியில் மூன்றாம் அரங்கத்திலிருந்த புஜித்சுபோ இளவரசியின் மாளிகை அடைந்தான். அவன் புகுவதைக் கண்டதே, வேலையாட்கள் அவன் மாறுபட்ட புதுத் தோற்றம் பற்றிப் பேசிக் கொண்டனர். ‘முந்திய வருகையிலிருந்து இப்போது எவ்வளவு உருட்சிதிரட்சி ஏற்பட்டுள்ளது பாருங்கள் ‘ என்றனர். ஆயினும் இளவரசியைத் தொலைவிலிருந்து ஒரு சிறிதே தான் பார்க்க முடிந்தது. இது வருங்காலம் பற்றிய துயர எண்ணங்களை அவன் முன் நிழலாட வைத்தது. அவள் குழந்தை பன்னிரண்டாம் மாதத்தில் எதிர்பார்க் கப்பட்டது. அவள் நிலைமையும் மிகவும் கவலையளிப்ப தாயிருந்தது. அவள் ஆட்கள் எல்லாரும் எப்படியும் புத்தாண்டின் முதல் வாரங்களிலே பேறு நிகழ்ந்து விடும் என்று உறுதியுடன் நம்பி வந்தார்கள். ஆனால் முதல் மாதம் கழிந்தும் எதுவும் நடைபெறவில்லை. அவள் ஏதோ மாயத்தாலோ பேயாலோ பீடிக்கப்பட்டிருக்கிறாள் என்ற அலருரை பரவிற்று. இதற்கேற்ப இளவரசி முற்றிலும் சோர்வுற்றிருந்தாள். பேறு எப்போது நிகழ்ந்தாலும் அதன் பின் தான் வாழ முடியாதென்றே அவள் எண்ணினாள். இது பற்றிய கவலையே அவள் நோவைப் பெரிதாக்கிற்று. பேறுகாலத் தாமதம் கெஞ்சிக்குத் தன் தவற்றையும் அதற்கான பொறுப்பையும் முன்னிலும் தெளிவாக்குவதாக இருந்தது. எல்லாப் பெரிய கோயில்களிலும் அவள் சார்பில் வழிபாடுகள் நடக்க அவன் ஏற்பாடு செய்தான். ஆனால் குழந்தையின் நிலைமை யாதாயினும், இளவரசி பற்றிய மட்டில் எத்தகைய நம்பிக்கைக்கும் இடமில்லை என்றே அவன் முடிவுகட்டியிருந்தான். இரண்டாம் மாதம் பத்தாம் நாளில் அவள் இடையூறின்றி ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள் என்று கேட்டதன் பின்னும், அவன் மனநிலை இவ்வுறுதியிலிருந்து மாறவில்லை. ஆனால், இச்செய்தி சக்கரவர்த்திக்கும் அரசவையினர் அனைவருக்குமே பேரளவில் மனநிறைவு அளித்தது. தனக்காகவும் குழந்தைக்காகவும் சக்கரவர்த்தி மனமாரக் கடவுளை வழிபட்ட செய்தியே இளவரசிக்கு மிகுந்த குழப்பம் அளித்தது. ஏனெனில் குழந்தையைத் தமதென்று சக்கரவர்த்தி கருதினாலும், அது அவருடையதன்று என்பது அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது. அதே சமயம் இதற்கு நேர்மாறான ஓர் உணர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டது. கோக்கிடன் சீமாட்டியும் அவள் கூட்டாளிகளும் தம் பகைமை காரணமாக, என்ன துயர முடிவை ஆவலுடன் எதிர்பார்த்தார்களென்பதை அவள் கேட்ட போது, அவள் சீற்றம் பீறிட்டது. அதை விருப்புடன் கேட்டவர்கள் கண் முன்னாலேயே கோக்கிடன் சீமாட்டியைக் கேலிக்குரியவளாக்க வேண்டும் என்ற அவா அவளுக்கு மேலிட்டது. இது காரணமாக, அவளுக்குத் தன் மீதே செறிந்திருந்த அகவெறுப்பை அவள் உதறித் தள்ளிவிட்டு, மெல்ல மெல்ல வாழ்வை அவாவி உடல் நலம் பெறத் தொடங்கினாள். புஜித்சுபோவின் குழந்தையைக் காணும் வரை சக்கரவர்த்திக்குப் பொறுமையாயிருக்க முடியவில்லை. கெஞ்சிக்கும் அதே நிலைதானானாலும் அவன் அவ்வுணர்ச்சியை முற்றிலும் மறைத்துக் கொள்ள வேண்டிய வனாயிருந்தான். ஆகவே யாரும் நடமாடாத நேரம் பார்த்து அவன் அவளது அரண்மனைக்குச் சென்று ஒரு குறிப்பு அனுப்பினான். ‘குழந்தையைப் பார்க்க சக்கரவர்த்தி துடியாய்த் துடித்தாலும், பல வாரங்கள் பார்க்க வழியில்லாதபடி ஆசாரம் தடுக்கிறது. ஆகவே அவருக்குப் பதிலாக நான் பார்த்த, சக்கரவர்த்திக்கு அது பற்றித் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ‘ என்று அக்குறிப்பில் தெரிவித்திருந்தான். ஆனால் இளவரசியோ, குழந்தை அவ்வளவு சண்டித்தனம் செய்வதால், மற்றொரு சமயம் பார்க்கலாம் என்று மறுத்தனுப்பி விட்டாள். உண்மையில் அவள் மறுப்புக்கும் குழந்தையின் நிலைமைக் கும் யாதொரு தொடர்பும் கிடையாது. கெஞ்சி அதைப் பார்ப்பதுதான் அவளால் தாங்க முடியாத துன்பந் தருவ தாயிருந்தது. ஏனெனில் இவ்வளவு இளம் பருவத்திலேயே அது வியக்கத்தக்க முறையில் அவனைப் போன்றிருந்தது. இவ்வொப் புமை பற்றி அவளுக்கு ஒரு சிறிதும் ஐயமில்லை. தான் கண்ட இச் செய்தியைப் பிறரும் பார்ப்பார்களே, பார்த்து விட்டால் தன் திடீர்ச் சறுக்கல் எல்லாருக்கும் ஐயத்துக்கிடமில்லா நிலையில் வெளிப்பட்டு விடுமே என்ற பயங்கர எண்ணம் அவளை அரித்துக் கொண்டிருந்தது. ‘உயர்குடியிலுள்ளவரின் வாழ்வு ஒரு மயிரிழை கோணினால் அது பற்றி இடைவிடாது வம்பளக்கும் இவ்வுலகம், இத்தகையதொரு பெருங் குற்றத்தைப் பெருந்தன்மையுடனா பொறுத்துக் கொண்டிருக்கும்?’ - இந்த இடைவிடாத சிந்தனை அவளை வாழ்க்கையிலேயே வெறுப்புக் கொள்ளும்படி செய்திருந்தது. ஓமியோபுவை அவன் அடிக்கடிச் சென்று பார்த்தான். ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி அவளை எவ்வளவோ மன்றாடியும், அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை. குழந்தையின் நிலைபற்றியும் அவன் ஓயாது கேள்விகள் கேட்டு அவளை நச்சரித்து வந்தான். அது பொறாமல் ஒரு நாள் அவளும் எரிந்து விழுந்தாள். ‘என்னை ஏன் இப்படி ஓயாது தொந்தரவு செய்கிறீர்கள். அரசவையில் கொண்டுவரப்படும் சமயம் நீங்களாகப் பார்த்துக் கொள்வது தானே!’ என்றாள். ஆனால் இப்படி ஆத்திரத்தில் பேசினாலும் அவன் துன்பத்தின் எல்லையை அவள் அறியாதவளல்லள். அவனிடம் அதற்காக அவள் மிகவும் இரக்கமும் கொண்டாள். கெஞ்சி இது பற்றிப் பேசக் கூடிய ஆள் ஒரே ஒருவர் தான், அது புஜித்சுபோவே -அவளைத் தான் பார்க்க முடியாது! இதை அவன் உணர்ந்து கொண்டான். ஆனால் தூதும் குறிப்பும் அல்லாது, அவளை அவன் இனி எப்போதேனும் காண முடியுமென்று கூற முடியுமா? -இதே எண்ணங்களால் கெஞ்சி மனமுறிவுடன் திரும்பினான். திரும்புகைகளால் கெஞ்சி மனமுறிவுடன் திரும்பினான். திரும்புகையில் அவன் தன் உணர்ச்சியைப் பாடலாகவும் பாடினான். ‘வெற்பாக எம்மிடையே மேவுமித் தடை நோக்கில் உற்பாத மிது தோன்ற ஓரா திருவேமும் முற்பிறவி தனில் ஏது முறைகேடு செய்தோமோ?’ அவனது இந்த ஏக்கம் கண்டும், அவனைக் காண மறுத்த தலைவி அம்மறுப்பினால் அடையும் மாதுயரை எண்ணியும் ஓமியோபுவோ இப்பிரிவைக் கடுமையாக்க விரும்பவில்லை. அவன் பாடலுக்கு எதிர்பாட்டாக, அவள் ‘காணிற் குழந்தையை நீ காரிகை வெந் துயருறுவாள் காணா தகலுதியேல் கலுழுயெமன் மென் னெஞ்சம் வீணாம் உரைகொலோ மேவும் கருவுருவம் மாணாக் கருந்தனந் தாய்தந்தை தமக்கெனவே!’ என்று அவள் ஆறுதலுரை பகர்ந்தாள். அத்துடன் சற்று அருகாமையில் நடந்து வந்து ‘அந்தோ பாவம் உங்கள் இருவரையும் ஒருங்கே ஊழ் எவ்வளவு கொடுமைப் படுத்துகிறது?’ என்று இரங்கினாள். பல தடவை மீண்டும் மீண்டும் சென்று, அவன் இவ்வாறு மனக்கசப்புடன் தன் மாளிகை திரும்பினான். கெஞ்சியின் இந்த இடைவிடாத போக்குவரவை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற கிலி இதற்கிடையில் புஜித்சுபோவை வாட்டிற்று. இந்த ஓயா வருகைக்கு ஓமியோபு மறைமுகமாக அவனுக்குக் காட்டும் ஆதரவுதான் காரணமாயிருக்க வேண்டுமென்றும் கருதி, அவளிடமும் தன் அன்பார்வத்தை அவள் குறைத்துக் கொண்டாள். இதை அவள் ஓமியோபுவிடம் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள எண்ணவில்லை யானாலும், நைந்து நோவுற்றஅவள் உள்ளம் அதை அடக்கி வைத்துக் கொள்ள முடியாமல் அடிக்கடி வெளிப்படுத்திற்று. தன் தலைவி தன்னிடம் கொள்ளும் அவநம்பிக்கையையும் வெறுப்பையும் கண்டு, ஓமியோபு சொல்லொணா வேதனையடைந்தாள். பிறந்து நான்காம் மாதத்திலேயே குழந்தை அரண் மனைக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் வயதுக்கு அது பெரிதாயிருந்தது. அத்துடன் அதற்குள்ளாகவே அது தன் சூழல் மீது பார்வை செலுத்தி அவற்றின் மீது தன் ஆர்வ அக்கறையைக் காட்டத் தொடங்கிற்று. அது எதிர்பாராத அளவுக்குக் கெஞ்சியை ஒத்திருந்தது என்பது சக்கரவர்த்தியின் காட்சிக்குப் படவில்லை. ஏனெனில் இளம் பருவத்தில் அழகான குழந்தைகள் யாவும் கிட்டத்தட்ட ஒரே தோற்றமுடையவையாகத் தானிருக்க முடியும் என்று அவர் எப்படியோ எண்ணியிருந்தார். குழந்தையினிடத்தில் அவர் கொண்ட பாசம் பெரிது. அதன் மீது அவர் தம் கவனமும் ஆர்வமும் முற்றும் சொரிந்தார். முன்பு கெஞ்சியிடமும் அவருக்கு இதே வகைத் தனிப்பாசம் இருந்தது. எதிர்ப்புகளுக்கு அஞ்சியிராவிட்டால் அவர் அவனையே கட்டாயம் மன்னுரிமை இளவரசனாக முடி சூட்டியிருப்பார். அவ்வாறு செய்யாதது அணிமைவரை அவரை மிகவும் துன்புறுத்தியே வந்தது. இவ்வளவு சீர்சான்ற புதல்வனை ஈன்றெடுத்து விட்டு, பின் அவன் முற்றிலும் ஒரு பெருமகன் வீட்டுப் பிள்ளையின் நிலையிலே வளர்வது காண அவர் உள்ளம் கசப்புற்றது. ஆனால் முதுமை வாய்ந்த இந்த நாளில் அது போலவே அழகான புதல்வனாக ஒரு பிள்ளை பிறந்து விட்டது. அது மட்டுமன்று. இத்தடவை குழந்தைக்கு ஒரு பொது நிலை மாதைத் தாயாகக் கொள்ளும் அவப் பேறில்லை. மாசற்ற மணி முத்தாகிய இப்பிள்ளை மீது தன் முழுப் பாசமும் பொழிய முடியும் என்றும் அவர் கண்டார். தந்தையின் இந்த மகிழ்ச்சி நீடிக்கும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாமல், தாய் அச்சமும் கிலியும் வேதனையும் கொண்டு வாடி வதங்கினாள். ஒரு நாள் சக்கரவர்த்தியின் கட்டளைக் கிணங்க வழக்கப்படி கெஞ்சி புஜித்சுபோவுக்காகப் பாடிக் கொண்டிருந் தான். அப்போது சக்கரவர்த்தி குழந்தையைக் கையிலெடுத்துக் கொண்டு கெஞ்சியை நோக்கியவாறு பேசினார். ‘எனக்குக் குழந்தைகள் எத்தனையோ இருந்திருக்கின்றன. ஆனால் இந்தக் குழந்தையைப் போல நான் நேசித்த இன்னொரு குழந்தை உண்டென்றால், அது நீ தான். இந்தப் பற்றுதல் தான் ஒரு வேளை என் கண்ணுக்கு ஒரு மாயம் அளித்திருக்கக் கூடும் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் இதே வயதில் நீ எப்படி இருந்தாயோ, அதே அச்சில் தான் இந்தக் குழந்தையும் இருக்கிறது என்று எனக்குத் தோற்றுகிறது. ஆயினும் மொத்தத்தில் இவ்வளவு சிறுவயதில் குழந்தைக்குக் குழந்தை அவ்வளவு வேறுபாடு இருக்காது என்றும் கூறலாம்’ என்று அவர் முடித்தார். பேச்சுக்கியைய அவர் கண்கள் குழந்தையை ஆர்வமாக அள்ளிப் பருகுவது போலப் பார்த்தன. சக்கரவர்த்தி இவ்வாறு பேசிய சமயம் கெஞ்சியின் உள்ளத்தில் நடுக்கம், நாணம், பெருமித இறும்பூது, பாசம் ஆகிய பல்வேறு முரண்பட்ட உணர்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக அலை பாய்ந்தன. ஒவ்வோர் அலையும் அதற்குரிய நிறபேதங்களை மாறி மாறி அவன் முகத்தில் வந்து வந்து மறையச் செய்தன. அவை அவன் கன்னங்களைக் கண்ணீரால் நிறைத்தன. தானாகத் தனக்குள்ளேயே மகிழ்ந்து புன்முறுவல் செய்து கொண்டும் கீச்சுக் கீச் சென்று குரல் கொடுத்துக் கொண்டும் கிடந்த அந்தக் குழந்தையின் அழகைப் பார்க்க அது தன்னையே ஒத்திருந்தது என்ற செய்தி அவனுக்கே உவகையூட்டாதிருக்க முடியவில்லை. அருகே அமர்ந்திருந்த புஜித்சுபோவும் அதே சமயம் மனக்குழப்பமும் கலவரமும் கொண்டு பெருத்த மனவேதனை யடைந்தாள். பனித் துளிகள் படர்ந்தது போல அவள் முகமெல்லாம் குப்பென்று வியர்த்து விருவிருத்தது. எதிரெதிரான தன் உணர்ச்சிகளின் முரண்பாடு கெஞ்சிக்கும் தாங்க முடியாததாயிருந்தது. அவன் எழுந்து தன் மாளிகைக்கே சென்றான். இங்கே அவன் படுக்கையில் கிடந்து எவ்வளவோ புரண்டு பார்த்தும் அமைதி காண முடியாமல் திண்டாடினான். சிறிது நேரங் கழித்து அவன் நெடு மாடத்துக்குச் செல்லத் தீர்மானித்தான். மாளிகையின் முன்புறமுள்ள பூம்படுகைகள் வழியாக அவன் சென்ற சமயம் செடிகள் யாவும் இதற்குள்ளாகவே மெல்லிய பசுமை நிறம் படரத் தொடங்கிவிட்டது கண்டான். அவற்றினிடையே ‘நெஞ்சார் மதலை’ என்று பெயரிட்டழைக்கப் பெறும் செடி வகை மலர்ச்சியுற்று மணம் வீசிக் கொண்டிருந்தது. அவன் அம்மலர்களில் ஒன்றைக் கொய்து அதனை ஒரு நீண்ட கடிதத்துடன் ஓமியோபுவிடம் அனுப்பி வைத்தான். குழந்தை அம்மலரை ஒத்திருப்பது மகிழினும், அது தன்னையும் நினைவூட்டுவதுணர்ந்து தான் கலங்குவதாகப் பாடல் தெரிவித்தது. இக்கருத்தைத் தொடர்ந்து கடிதம் பேசிற்று. ‘இம்மலரிலே உன் அழகு செறிவுற்றிருக்குமென்று நான் மனப்பால் குடித்தேன். ஆனால் இப்போது அது எனதாகியும் எனதாகாதிருக்கும் நிலை காண்கிறேன். இப்போது அதன் காட்சி எனக்கு ஆறுதல் தரவில்லை.’ வாய்ப்பான நேரம் வரும் வரை சிறிது காத்திருந்து ஓமியோபு கடிதத்தைத் தன் தலைவியிடம் காட்டினாள். அதே சமயம் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவள் வாய் முணு முணுத்தது. ‘நீரின்றி வறட்சியுறும் இம்மலரின் மெல்லிதழ்களுக்குத் தங்கள் மறுமொழி தூளிப்படலமாயமைந்து விடுமோ என்று என்னால் அஞ்சாதிருக்க முடியவில்லை’ என்று அவள் இதழ்கள் பேசின. ஆனால் புஜித்சுபோவின் உள்ளத்திலும் புத்திளவேனிலின் சூழல் எண்ணற்ற இளந்தளிர் நினைவுகளை எழுப்பியிருந்தது. அவள் பாடலுக்கு எதிர்பாடல் எழுதினாள். ‘எளிய இக்கையுறைகள் பனியால் நனைவுறுவதற்கு இதுவே காரணமானாலும், ‘யாமதோ மேனிலத்துக்குரிய இக்குழந்தை மலருடனே என் உள்ளமும் இணைந்தே இன்னும் செல்கிறது’ என்பதே அப்பாடல். இப்பாடலன்றிக் கடிதத்தில் வேறு எதுவுமில்லை. அதுவும் வலிமையற்ற கரங்களால் மேலீடாகவே மென் கோடுகளால் வரையப்பட்டிருந்தது. ஆனால் இந்த அளவிலாவது திரும்பிக் கொண்டு சொல்ல ஒரு மறு மாற்றம் கிடைத்ததே என்பது ஓமியோபுவுக்குப் பேரளவில் ஆறுதல் தந்தது. கெஞ்சிக்கு மட்டும் இத்தகைய பதில்களில் நம்பிக்கையோ ஆர்வமோ கிடையாது-எத்தனையோ தடவை இத்தகைய பதில்களை அவள் அனுப்பியிருந்தும், அவற்றால் எதுவும் பயன் விளையவில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். ஆயினும் உணர்ச்சியற்ற நிலையில் அக்கடிதத்தின் மீதே கண்ணாக அவன் கிடந்த சமயம், அவள் வெறுங் கையெழுத்தே எப்படியோ அவன் உள்ளத்தில் பொருளற்ற எதிர்பாராக் கிளர்ச்சியும் எழுச்சியும் உண்டு பண்ணிற்று. சிறிது நேரம் அவன் படுக்கையிலே கிடந்து புரண்டான். அப்படியே நெடுநேரம் செயலற்றுக் கிடக்க முடியாதவனாய்த் திடுமென எழுந்தான். அவனுக்குக் கலக்க மூட்டி அவனை விரட்டி வேட்டையாடி வந்த சிந்தனைகளிலிருந்து சற்று ஓய்வு பெறும் எண்ணத்துடன் வழக்கம் போல அவன் தன் மாளிகையின் மேல் சிறைநோக்கிச் சென்றான். பெண்டிர் இருக்கைகள் அமைந் திருந்த அப்பகுதியை அவன் அணுகும் சமயம், அவன் தலைமுடி கட்டவிழ்ந்து அவன் தோள்கள் மீது புரண்டு கொண்டிருந்தது. விசித்திரமான ஓர் அங்கியை அணிந்து கொண்டு, முரசாக்கிக்கு மகிழ்வளிக்கும் முறையில் அவன் தன் புல்லாங்குழலை வாசித்தவாறு நடந்து கொண்டிருந்தான். சற்றுமுன் தான் பறித்தெடுத்த புதிய பனி மலர் தானோ என்னும்படி அவ்வளவு மென்னயமுற அவள் படுத்திருந்தாள். மட்டற்ற இளக்கரத்தால் அவள் ஓரளவு கட்டு மீறிய பண்புகேடு உடையவளாகவே இருந்தாள். இந்நிலையில் சிறிது நேரத்துக்கு முன்பே அவன் அரசவையிலிருந்து வந்து விட்டான் என்று சிறிது கோபம் அவளுக்கு ஏற்பட்டிருந்தது. ஆகவே வழக்கம் போல அவள் ஓடிச் சென்று அவனை வரவேற்கவில்லை. முகத்தைத் திருப்பியவாறு கிடந்தாள். அறையின் மறு கோடியில் வரும் போதே தன்னிடம் வரும்படி அவன் அவளைக் கூவி அழைத்தான். ஆனால் அவள் அசையவில்லை. அவள் தனக்குள்ளாகப் படித்த ஒரு பாடலின் அரவம் அவன் செவிகளில் பட்டது. ‘ஆழ்கடல் வேலி சூழ்தருபோது மாழ்குறு கடல் மலர் வாழ்வது போலே!’ என்ற பாடலடியை அவள் முணு முணுத்துக் கொண்டிருந்தாள். அது அவளுக்கு அவன் கற்றுக் கொடுத்திருந்த ஒரு பாடலே. தன் காதலன் தன்னைப் புறக்கணிப்பதாக ஒரு காதலி குறைபட்டுக் கொண்டு பாடும் பாடல் அது. ஊடலால் கையுறையில் ஒரு பாதி புதையுண்டு, புண்பட்ட உள்ளத்தின் சீற்றத்தால் ஒரு பாதி அவனை நோக்கியும் இரு நிலைப்பட்ட அவள் முகத்தோற்றம் தடுக்க முடியாத கவர்ச்சியுடையதாக அவனுக்கு தோன்றிற்று. ‘என்ன முட்டாள் தனம் செய்கிறாய் நீ! வர வர உன் குறும்பும் குறுகுறுப்பும் பெரிதாகி வருகிறது. ஆனால் நான் ஒன்று கூறுவேன் - நீ இன்னும் அதிகமாக என்னுடன் பழகினால், என்னை ஒருவேளை வெறுத்து விடவும் கூடும்’ என்று அவன் மெல்லக் கடிந்து கொண்டான். அவன் தன் பெரிய யாழைக் கொண்டுவரச் சொல்லி அதை மீட்டும்படி அவளை வேண்டினான். அது பதின் மூன்று நரம்புகள் வாய்ந்த மிகப் பெரிய சீனக் கருவி. நடுவேயிருந்த ஐந்து நரம்புகளும் மிக மென்மையும் நுண்ணயமும் உடையனவா யிருந்தன. அவற்றில் சரியானபடி குரலெழுப்பமுடியாமல் அவள் குழப்ப முற்றாள். கெஞ்சி அதை அவள் கைகளிலிருந்து வாங்கித் தாழ்குரற் பாலையில் ஒரு சில வண்ணங்களை இசைத்துக் காட்டியபின் அவளை மீண்டும் மீட்டும்படி கூறினான். அத்துடன் அவள் பிணக்கும் குணக்கும் இருந்த இடந் தெரியாமல் மறைந்தன. அவள் மிக அழகாக வாசித்தாள். தன் சிறு கையில் எட்டித் தடவ முடியாத அகல இடை வெளிகளில் கூட அவள் மறு கை வாங்கித் திறம்பட வாசித்த அருமை கண்டு அவன் சொக்கினான். அதன் பின் அவன் குழலெடுத்து அவளுக்குப் புதிய பண்கள் பல பயிற்றுவிக்கத் தொடங்கினான். அவள் எதையும் நொடியில் உளத்தில் வாங்கித் திறம்படப் பற்றியதுடன், எவ்வளவு சிக்கலான சந்தங்களையும் ஒரு தடவை கூர்ந்து கவனித்தவுடன் எளிதில் பின்பற்றினாள். அவள் எவ்வளவு திறம்பட முன்னேற வேண்டுமென்று அவன் நினைத்தானோ, அந்த நினைவுக்கு ஒரு சிறிதும் பின்னடையாமல் இசைத் துறையிலும் சரி, மற்றெந்தத் துறையிலும் சரி- அவள் தளராமல் விரைந்து முன்னேறி அவனைப் பெரு மகிழ்வில் ஆழ்த்தினாள். ‘ஒஸோரே குசெரி’ என்ற பண்ணின் பெயர் உச்சரிப்பில் கரடு முரடாயிருந்தாலும், செவிக்கு மிகவும் இன்பந்தருவதொன்று. கெஞ்சியுடன் அதைப் பயிலும் போது, குழந்தையின் மழலைநடைப் பண்பு அவள் குரலில் தென்பட்டாலும், தாளத்தில் அவள் ஒரு சிறிதும் விடாமல் பாடி முடித்தாள். பெரிய விளக்கொன்று கொண்டுவரப்பட்டது. அவர்கள் இருவரும் ஒருங்கிருந்து படங்கள் பார்க்கத் தொடங்கினர். ஆனால் கெஞ்சி அன்று வெளியே போக ஏற்பாடாகியிருந்தது. ஏற்கெனவே கெஞ்சியின் ஏவலர்கள் வெளி முற்றத்தில் குழுமி இருந்தனர். புயல் வரும் அறிகுறிகள் காணப்பட்டதாக ஒருவன் கருதினான். இனி மேலும் காத்திருப்பது தவறு என்று அவன் கூறினான். ஆனால் முரசாக்கி முகம் கோணிற்று. அவள் படங்களில் கருத்துச் செலுத்த மறுத்துக் கைகளின் மீது தலையைச் சாய்த்த வண்ணம் நிலத்தையே நோக்கியிருந்தாள். அவள் மடி கடந்து முன்புறமாகக் கவிந்து கிடந்த கூந்தலை நீவிய வண்ணம் கெஞ்சி பேசினான். ‘நான் இல்லாத சமயம் நீ என்னையே எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தாயா?’ என்று கேட்டான். அவள் தலை அசைத்தாள். ‘என் நிலையும் அதுதான். ஒரு நாள் உன்னைக் காணாவிட்டால் என் உள்ளம் துன்பத்தில் கிடந்து துவள்கிறது. ஆனால் நீ இன்னும் சிறு குழந்தை. ஆகவே நான் எது செய்தாலும் நீ என்னைப் பற்றி எதுவும் மோசமாக நினைத்துக் கொள்ளக் கூடாது. அதே சமயம் நான் சென்று காணும் சீமாட்டி சிறிதும் பொறுதியற்றவள்; முன் கோபமுடையவள். இங்கே நான் மிக நீண்ட நேரம் தங்கினால் அவள் மனமுடைந்து போவாள். உண்மையில் எனக்கு அங்கே போகவே சிறிதும் மனமில்லை. அதனால்தான் அவ்வப்போது இப்படி இடை இடையே சிறிது சிறிதளவு போய் வந்துவிட முயல்கிறேன். நீ இன்னும் சற்று வளர்ந்துவிட்ட பிற்பாடு நான் ஒரு சிறிதும் வெளியே போகவே மாட்டேன். இப்போது நான் போவதற்குக் கூடக் காரணம் வேறொன்றுமில்லை. நான் போகாவிட்டால் அவள் கொள்ளும் கடுஞ்சீற்றம் என்னைக் கொன்று விடும். அப்படி நேர்ந்தால் உன்னை நேசித்து உன்னைக் கவனிக்க இங்கே யார் இருப்பார்கள்’ என்று அவன் பேசினான். அவன் எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவள் மனத் தாங்கல் ஆறவில்லை. அவள் வாய் திறந்து எதுவும் பேச மறுத்தாள். கடைசியில் அவன் அவளை வாரி எடுத்துத் தன் மடிமீது கிடத்திக் கொண்டான். ஆனால் அங்கே அவள் தூங்கிவிட்டது கண்டு அவன் விசித்திரமான நிலையில் கலக்கமுற்றான். சிறிது நேரம் சென்றபின் சேடியராக அருகில் நின்ற மாதரை நோக்கி, ‘எப்படியும் இனி போகமுடியாது, நேரமாகிவிட்டது’ என்று அலுப்புடன் கூறினான். சேடியர் எழுந்து உணவு கொண்டுவரச் சென்றனர். அவன் சிறுமியை எழுப்பினான். ‘இதோ பார், நான் போகவில்லை, உன்னுடன் இருந்து விட்டேன்’ என்றான். அவள் முகம் மலர்ச்சியுற்றது. அவர்கள் ஒருங்கிருந்து உண்டனர். சமயோசிதமான அந்த விசித்திர முறையான உண்டி அவளுக்குப் பிடித்திருந்தது. அதன் முடிவில் அவள் அவனையே கூர்ந்து நோக்கினாள். ‘உண்மையாகவே நீங்கள் வெளியே செல்ல வில்லை யானால், இப்போதே சென்று படுக்கலாமே!’ என்றாள். ஆனால் அவளைவிட்டுத் தன் அறைக்குச் செல்வதுகூட அவனுக்கு ஒரு நீண்ட இடர் நிறைந்த பயணத்தில் இறங்குவது போலவே இருந்தது. இவ்வாறு அடிக்கடி கடைசி நிமிடத்தில் அவன் வெளியே போகாமல் அவளுடன் இருக்க நேர்ந்தது. இந்நிலையில் அவனுடைய இந்தப் புதிய தொடர்பு பற்றிய செய்தி மெல்ல வெளியே பரவி நெடுமாடத்துக்குக் கூட எட்டாதிருக்க முடியவில்லை. ‘அது யாராகத்தான் இருக்கக்கூடும்?’ ஏதோ பெரும் புதிராகத்தான் இருக்கிறது’ என்று ஆய் இளவரசியின் மாதருள் ஒருத்தி வியப்புடன் கூறினாள். முன்பு கண்டு கேட்டறியாத ஒருவரிடம் அவர் இவ்வாறு எப்படி முற்றிலும் ஈடுபட்டிருக்கக் கூடும்? தன்மதிப்புள்ள எந்த நற்குடி நங்கையும் இவ்வாறு இருக்க முடியாது. பெரும்பாலும் இது ஏதோ அரண்மனைப் பணியணங்காகத் தான் இருக்க வேண்டும். செய்தி வெளியே பரவாமலிருப்பதற்காக அவர் இப்படி அவளைத் தன்னுடன் வைத்துக்கொள்ள முற்பட்டிருக்க வேண்டும். உண்மை ஊகிக்கப் படாமலிருப்பதற்காக அது வயது வராத சிறுமி என்று அவர் சரடுகட்டி விட்டிருக்க வேண்டும்’ என்றாள். இக்கருத்தே பொதுவாக எல்லோராலும் ஏற்கப்பட்டு வந்தது. கெஞ்சியுடனே யாரோ வாழ்ந்து வந்த செய்தி சக்கரவர்த்திக்கும் எட்டிற்று. அதுபற்றி அவர் வியப்புற்றார். கெஞ்சியிடமே அது பற்றிப்பேசினார். ‘இடங்கை அமைச்சரிடம் நீ நடந்து கொள்வது மிகவும் தவறானது. நீ குழந்தையாயிருந்த நாள் முதற்கொண்டு அவர் உன்னிடம் எவ்வளவோ உண்மைப் பாசம் காட்டி வந்திருக்கிறார். பெரிய பிள்ளையாகி அறிவறிந்த வயதில் அவரிடமும் அவர் குடும்பத்தினரிடமும் நீ இவ்வாறு நடக்கலாமா? இது முற்றிலும் நன்றிகெட்ட தனமாகும்,’ என்று அவர் கூறினார். கெஞ்சி மதிப்பார்வத்துடன் எல்லாம் கேட்டுக் கொண்டான். மறுமொழி எதுவும் கூறவில்லை. அவன் திருமண வாழ்வே அவனுக்கு வெறுப்புக்குரியதாகியிருக்கக் கூடுமோ என்ற ஐயம் இப்போது அவருக்கு ஏற்பட்டது. அப்படியானால் அதற்கு நாம் ஏற்பாடு செய்ததுதான் தவறாகக் கூடும் என்று அவர் மனம் வருந்தினார். சிறிது ஆழ்ந்து சிந்தித்தபின் அவர் மீண்டும் பேசினார். ‘உன்னை என்னால் முற்றிலும் புரிந்துகொள்ள முடியவில்லை. பெண்கள் சமுதாயத்தினிடம் எப்படி நடந்து கொள்வது நாகரிகம் என்பதே உனக்குத் தெரியாது போலத் தோன்றுகிறது. அரண்மனை மாதர் எத்தனையோ பேர் கவர்ச்சியுடையவராயிருக்கிறார்கள். அப்பக்கம் நீ திரும்பு வாயென்றுதான் எவரும் எதிர்பார்ப்பர். நான் அறிந்தவரை நீ அவர்கள் ஒருவரிடமும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. நகரத்திலும் பல பகுதிகளில் பல அழகிகளை மக்கள் நாடிப் போற்றுகிறார்கள். இத்தனை பேரையும் விட்டுவிட்டு எங்கிருந்தோ ஒருத்தியைப் பொறுக்கி ஏற்றுக் கொள்வதன் மூலம் எத்தனையோ பேர் உள்ளத்தைப் புண்படுத்துகிறாய்’ என்றார். சக்கரவர்த்திக்கு இப்போது வயது மிகுதியாகி வந்த போதிலும் இத்தகைய செய்திகளில் உள்ள அக்கறை அவருக்கு இன்னும் முற்றிலும் அகன்று விடவில்லை. அரண்மனையில் பாங்கியரையும் சரி, பணிமாதரையும் சரி, நல்ல தோற்றமுடைய வர்களாகவும் அதே சமயம் கூரிய அறிவுடையவர்களாகவும் தேர்ந்தெடுப்பதில் அவர் மிக்க கவனம் செலுத்தி வந்திருந்தார். மிகச் சிறந்த மாதர் அரண்மனையில் இடம் பெற்ற காலமாகவும் இச்சமயம் அமைந்திருந்தது. கெஞ்சியின் ஒரு சிறு சொல் அல்லது சைகைமீது அவனுக்கே உரியவளாயிருக்க விரும்பாதவர்அவர்களிடையே மிகமிகச் சிலராகவே இருக்க முடியும். ஆயினும் ஒரு வேளை அவன் அவர்களிடையே மிகுதி பழகியதனால்தான் அவர்கள் கவர்ச்சியை ஒரு சிறிதும் கவனிக்க வில்லை எனலாம். இந்த ஐயப்பாடுடனேயே அவர்களில் பலர் அவனைச் சோதனைக்கு ஆளாக்கியதுண்டு. ஆனால் இவ்வாறு அவனுடன் பிணங்கி ஊடாட முயன்றவர்கள் அவன் உணர்ச்சியற்ற, வறண்ட தற்செருக்குடைய இளைஞன் என்ற முடிவுக்கே வந்திருந்தனர். பள்ளி அரங்கத்தில் சிறிது வயதேறிய ஒரு மாது இருந்தாள். அவள் எல்லா வகையிலும் சிறப்புடையவள், எல்லாராலும் நன்கு மதிக்கப்பட்டவள். ஆயினும் அவள் தீராத காதலூடாட்ட ஆர்வமுடையவள் என்று வெளிப்படையாகப் பெயரெடுத்திருந்தாள். எவ்வளவு வயது கடந்த பின்னும் தங்குதடையற்ற காதல்விளையாட்டுகளின் வகையில் அவள் அமைந்து திருத்தம் பெறாதது பற்றிக் கெஞ்சி பெருவியப் படைந்தான். ஆயினும் விளையாட்டாக அவள் போக்கைக் காணும் எண்ணத்துடன் அவன் ஒரு நாள் கேலி பேசினான். வயது சந்தர்ப்ப வேறுபாடுகளை ஒரு சிறிதும் கவனியாமலே அவள் விளையாட்டை வினையாகக் கொண்டு அவனைத் தன் காதலனாக நடத்தத் தொடங்கினாள். கெஞ்சிக்கு இப்போக்குச் சிறிது கலவரம் ஊட்டினாலும், அவள் சமுதாயப் பழக்க வகையில் நலமுடையவள் எனக் கருதி அடிக்கடி தயங்காது பேசி வந்தான். ஆயினும் யாரேனும் தன் போக்கைக் கண்டு கேலி செய்து விடுவார்களோ என்ற அச்சத்தால் அவன் முழுதும் காதலனாக நடிக்க மறுத்தான். இது கண்டு அவள் அவன்மீது சினமடைந்தாள். ஒரு நாள் மாது சக்கரவர்த்தியின் தலை வாரி ஒப்பனை செய்து கொண்டிருந்தாள். அது முடிவடைந்ததும் சக்கரவர்த்தி தம் உழையருடன் அடுத்த அறைக்குச் சென்றார். கெஞ்சி மாதுடன் தனியாக விடப்பட்டான். அவள் வழக்கம் போல் நாணிக்கோணி நெளிந்து நடக்கலானாள். அவள் ஆடையும் அணிமணிகளும் அதற்கிசைந்தமுறையில் நேர்த்தியானவை யாகவும் நவநாகரிக மிக்கவையாகவும் அமைந்திருந்தன. ‘பாவம், நடிக்கிற நடிப்புக்கு இது வேறு குறையாய் விட்டதாக்கும்’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டே அறையைவிட்டு வெளியே போகமுனைந்த கெஞ்சி அடக்கமாட்டா குறும்பினால் அவள் முன்தானையைப் பிடித்து இழுத்து விட்டான். அவளும் அதையே எதிர்பார்த்தவள் போல நடித்து, ஓவியர் தீட்டிய இளவேனில் விசிறியால் முகத்தைப் பாதி மறைந்தவாறே சாய்வாக அவன் மீது கடைக் கண் பார்வை செலுத்தினாள். அவள் கண்ணை உருட்டியபோது கரு விழிகள் குழி விழுந்தவை போலத் தோன்றின. அவள் நெற்றியிலே பல மயிர் முடிகள் புதர்கள் போலச் சிலும்பிக் கொண்டன. அவள் காதலூடாட்டத்துக்குரிய விசிறி பகட்டாயிருந்தாலும் ஏதோ நகையூட்டத்தக்க பொருத்தக் கேடுடையதாகவும் இருந்தது. தன் விசிறியை அவளிடம் கொடுத்து விட்டுக் கெஞ்சி அதை வாங்கிப் பரிசோதித்துப் பார்த்தான். அது கண்ணாடி போல வழவழப்பாகத் திண்ணிய சிவப்புச் சாயம் தீட்டப்பட்ட தாளால் ஆக்கப்பட்டிருந்தது. அதன் மீது பொன் வண்ணத்தில் நெடிய காட்டு மரங்கள் தீட்டப்பட்டிருந்தன. அதனருகே பழம்பாணி யுடையதாயினும் குறைகூற முடியாத நயத் திறத்துடன் ஒவராகிக் காட்டைப்பற்றிய பாடல் வரையப்பட்டிருந்தது. காட்டகத்தே வளர் கடும்புல் காய்ந்துலர்ந்த தாதலினால், கன்றுகள் மேயாது, அரிவோர் தாமும் அருகணையலரே! கெஞ்சி மறுத்துக் காதல் பசப்புரை கூறுவானென்று எதிர்பார்த்தே விசிறிக்குரிய மாது தன் வயதேறிய நிலையைத் தானே இவ்வோவிய மூலம் குறிப்பிட்டிருந்தாள் என்பதில் அவனுக்கு ஐயமில்லை. இவ்விசித்திரப் பிறவியின் விசித்திர ஆர்வத்துடிப்புக்கு எவ்வாறு சரியான நகைத்திறம் வாய்ந்த பதில் கூறலாமென்று அவன் ஆலோசித்து, மேற் சொன்ன காட்டையே குறித்த மற்றொரு பாடலைத் தீட்டினான். இதை எடுத்துக் காட்டியது நயநாகரிக முறையல்ல என்றே கூறலாம். ஆனால் இதே சமயம் அவளுடன் தான் இருந்து அளவளாவுவதை யாரேனும் இடையே வந்து பார்த்துவிடப் போகிறார்களே என்ற கலவர உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டிருந்தது. விசிறி மாதுக்கு இத்தகைய பரபரப்பு எதுவுமில்லை. அவள் பேசாதிருப்பது கண்டு பலவகை நெளிவு குழைவுகளுடன் ஒரு பாடலை இசைத்தான். ‘என்னுடன் காடணைக! காலங்கடந்து விட்டாலும், அடித்தண்டு வளர்ச்சி அரிந்திட்டு உன் குதிரையை நான் அருத்துவேன்’ என்று அப்பாடல் குறித்தது. ‘உன் சோலை வனத்தில் நான் சுகம்பெற எண்ணினால், என் பெயருக்கு மாசு விளையாதிராது. ஏனெனில் குளம்படிகளின் ஆர்வம் மாறாத சாலை அது’ என்று அவன் எதிர்பாடல் சுட்டிக் காட்டிற்று. இப்பாடலுடன் கெஞ்சி வெளியேற முயன்ற போது, அவள் அவனைத் தடுத்து நிறுத்தினாள். ‘என்ன திருகுதாளக்காரர் நீங்கள்? நான் குறித்த கருத்து இதுவல்லவே! என்னை இதுவரை எவரும் இவ்வாறு மொட்டையாய் அவமதித்ததில்லை’ என்று கூவியழுதாள். இது முதிய மாதின் எண்ணற்ற காதலரைச் சுட்டிக் காட்ட உதவிற்று. இளவேனில் அது கடந்து முதுவேனில் தன்னிலுமே வளமுடைய கிளை தழையின் நிழல் நீங்கா, புட்குலமே! கெஞ்சி கை யமர்த்தியவாறு பேசினான். ‘இது பற்றி இன்னொரு சமயம் பேசிக் கொள்ளலாம். உண்மையில் நான் அப்படி யொன்றும்...’ பேச்சை முடிக்காமலே அவன் அவள் பிடியைத் தட்டிக் கொண்டு வெளியேறினான். இதனால் அவள் முற்றிலும் திகைத்து நின்றாள். இந்தத் திடீர் முறிவின் பின்னரே தான் உண்மையிலே கிழடு தட்டி விட்டது போல அவள் கலங்கினாள். சக்கரவர்த்தியின் நாளொப்பனை இதற்குள் முடிந்து விட்டது. இசைவும் பொருத்தமுமற்ற சோடிகளிடையே நடைபெற்ற மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் அரசவை மறை தட்டிகளின் பின்னாலிருந்து அவர் நகை ததும்பும் உள்ளத்துடன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். ‘அந்தோ, அரண்மனை மாதரிடம் என் சிறுவன் ஒரு சிறிதும் கருத்துச் செலுத்துவதில்லை என்றல்லவா கேள்விப்படுகிறேன்! ஆனால் அவன் என்றும் வெட்கப்பட்டவன் அல்லவே அல்ல என்பதை இதோ கண்டு கொண்டேன்’ என்று கூறி அவர் தனக்குள் நகைத்துக் கொண்டார். பள்ளியரங்க மாது ஒரு கணந்தான் மனக் கலவரத்துடன் இருந்தாள். அதன் பின் அவள் சக்கரவர்த்தியின் கேலிப் பேச்சுக்கும்கூட மறுப்போ விளக்கமோ எதுவும் கூற முனையவில்லை. கெஞ்சி இளவரசனுடன் ஒருத்திக்கு எத்தகைய தொடர்பு இருந்தாலும் - அவனால் வெளிப்படப் புறக்கணித்துத் தள்ளப்படுவதாக இருந்தால் கூட - அது அவள் புகழ் முடி மீது ஒரு புகழ் மலராகவே அமையும் என்று கருதினாள். இச்செய்தி அரசவை முழுவதும் பரவிற்று. அது வேறு எவரையும் காட்டிலும் தோ நோ சூஜோவுக்கு மிகுதியான வியப்புத் தந்தது. கெஞ்சி விசித்திரமான சோதனை விளையாட்டு களில் ஈடுபடுபவனென்பது அவனுக்குத் தெரியாததன்று. ஆனால் ஊர் வாய் குறிப்பிட்ட அளவுக்கு அவன் இத்தகைய கேலிக் கூத்தான விளையாட்டுக்கு ஆளாயிருப்பானென்று அவனால் நம்பமுடியவில்லை, மாதரசியுடன் கெஞ்சிக்கு இத்தகைய தொடர்பு இருந்திருக்கக்கூடுமா என்று பார்க்க அவனுடன் தானும் காதல் விளையாட்டில் ஈடுபடுவது தவிர அவனுக்கு வேறு வழி தோன்றவில்லை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த காதலைப் பெற்றது கெஞ்சியிடம் மாதரசி பெற்ற தோல்விக்குக்கூட ஒரு சிறந்த ஆறுதலாய் விளங்கிற்று. ஆயினும் இப்புதிய காதலாட்டம் மறைவாகவே நடைபெற்றதனால் கெஞ்சி எதுவும் அறியவில்லை. அடுத்த தடவை அவளை அவன் சந்தித்தபோது அவள் வயது கருதி அவன் அவள் மீது பெரிதும் இரங்கி ஆறுதலளிக்க முற்பட்டான், ஆனால் அவன் எதிர்பாராத வகையில் அவள் முகம் கோண வைத்துக் கொண்டாள். இதன் பின் பல நாட்களாகக் கெஞ்சி பலவகையிலும் தொல்லை தரும் அலுவல்களில் ஈடுபட்டிருந்தான். இறுதியில் மழை மேகம் கவிந்து இருளார்ந்த ஒரு மாலைப் பொழுதில் அவள் ‘உம் மெய்தன்’ அதாவது பள்ளியரங்கத் தருகே உலவிக் கொண்டிருந்தான். மாது அச்சமயம் யாழில் மிகஇனிமையாகப் பாடிக் கொண்டிருப்பது அவன் செவிப்பட்டது. அவள் இத்துறையில் குறிப்பிடத்தக்க மேம்பாடுடையவள். இது காரணமாகப் பேரரசரின் இசைக் குழுவில் இசையே தொழிலாகக் கொண்ட ஆடவ இசை வல்லுநர்களுடன் இணையாக அடிக்கடி அவள் பாடும்படி கோரப்படுவதுண்டு. அத்துடன் இன்று அவள் மிகவும் மனச் சோர்வுற்று எழுச்சி குன்றியிருந்தாள். பாடல் இந்நிலையுடன் இணையவே, அவள் வழக்கத்துக்கு மேற்பட்ட உணர்ச்சியுடனும் உள அதிர்வுடனும் பாடினாள். அவள் பாடியது ‘நீர் முள்ளிப் பண்ணை வாணன்’ பாட்டு. அவள் வயதுக்கு அது ஒவ்வாததாயிருந்தாலும் கூட, அதை அவள் மிகத் திறம்படவே இசைத்தாளென்று கெஞ்சி கருதினான். பழங்காதையில் வரும் மாய அணங்கான ‘ஓச்சூ’ இரவில் தன் படகிலிருந்து பாடியபோது, அவள் குரல் ‘போச்சுயீ’யின் செவிகளில் அதிர்ந்தது போலவே, அவள் இசை அவன் காதுகளைத் தடவிற்று. பாடல் முடிவில் காதற் பாடலின் உணர்ச்சி வேகத்தால் முற்றிலும் தளர்ந்து விட்டவள் போலப் பாடலணங்கு ஆழ்ந்த நெடு மூச்சு விட்டாள். கெஞ்சி இச்சமயம் ‘அசுமாயா’வை வாய்க்குள்ளாகப் பாடிக்கொண்டே அணு கினான். ‘கீழ்திசை மாளிகையின் வாயிலில் வீசியடிக்கும் மழையி டையே காத்துக் கிடக்கின்றேன். வருக, என்காதல் மடந்தையே! வந்து கதவு திறந்து என்னை உள்ளே விடுக!’ என்ற பாட்டொலி கேட்டதும், சந்தர்ப்பத்துக்கு மேற்பட்ட விரைவுடன் அவள் காதையணங்கின் பாடல் வடிவிலேயே பாடினாள். அத்துடன் ஒரு சமயோசிதப் பாடலையும் இணைத்தாள். ‘இடமகன்ற இவ்வாயில் முகப்பின் எல்லையிலே மழையின் வீச்சுக்கு எவரும் ஆளானதில்லை’ என்று குறித்ததன் பின் அவள் மேலும் எவ்வளவோ அவல உணர்வுடன் பெரு மூச்சுவிட்டாள். இப்பெரு மூச்சுக்குத் தான் மட்டிலுமே காரணமல்ல என்று கெஞ்சி எண்ணினாலும், அதை அவள் மட்டுமீறி மிகைப்படுத்திக் காட்டினாள் என்றே கருதினான். ‘உன் பாடல் எப்படி யிருப்பினும் நீ மாற்றானுக்குரிய மணமகள் என்பதை உன் பெரு மூச்சே காட்டுகிறது. ஆகவே நான் என்னளவில் உன் கீழ் திசை மாளிகையின் சுற்று வட்டத்தில் உலவப் போவதில்லை’ என்று கூறிவிட்டு அவன் அப்பாற் செல்லப் புறப்பட்டான். எனினும் இது மிகக் கடுமையா யமையுமே என்று தயங்கினான். அச்சமயம் வேறு யாரோ வரும் அரவம் கேட்டு மீண்டும் உட்சென்று பொது நிலைச் செய்திகள் பற்றிப் பேசினான். இப்பேச்சு இயல்பாக எழவில்லை யானாலும், அதன் பாணி அவளுக்கு மிகவும் மனதுக்குகந்ததா யிருந்தது. கெஞ்சி எப்போதும் ஆர்ந்தமர்ந்த பண்புடைய இளைஞ னென்று போற்றப்படுவது தோ நோ சூஜோவுக்கு உறுத்தலாகவே இருந்தது. ஏனெனில் அவன் ஒரே சமயத்தில் எத்தனையோ சுவைகரமான காதற் கேளிக்கைகளில் ஒருங்கே ஈடுபட்டு, தன் நற்பெயருக்குக் காரணமாக அவற்றைத் தன் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டிருந்ததைத் தோ நோ சூஜோ கண்டான். அத்துடன் தோ நோ சூஜோ விளையாட்டுத் தன மிக்கவனென்று அவனைக் கண்டிக்கவும் கெஞ்சி தயங்கியதில்லை. இந்த உருத்திராக்கப் பூனைத்தனத்தை உடைத்து வெளிப்படுத்தத் தக்க தொரு தறுவாய் நோக்கித் தோ நோ சூஜோ காத்துக் கொண்டிருந்தான். ஆகவே தற்பொழுது பள்ளியரங்க மாதின் அறையில் கெஞ்சியைக் கண்டதே அவன் எல்லையற்ற உவகை கொண்டான். இதுவரைஅவன் காட்டி வந்த நட்புக் கேடுகளுக்கு இச்சமயம் அவளைச் சிறிது அச்சுறுத்திக் கிலியூட்டுவது சரியான தண்டனையாயமையும் என்று கருதி அவன் வெளியே தங்கி யாவும் கூர்ந்து கவனித்தான். காற்று மரங்களில் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரவு நேரம் ஏறி விட்டது. இப்போது கெஞ்சி உறங்கப் போவது உறுதி என்று அவன் கருதினான். கருதியபடியே கெஞ்சி உறங்கி விழுந்தது போலக் காணப்பட்டான். சூஜோ பெரு விரலூன்றிச் சந்தடி செய்யாமல் உள்ளே புகுந்தான். ஆனால் கெஞ்சி முற்றிலும் உறங்கிவிடவில்லை. அரை யுறக்கக் கனவிலேயே மிதந்திருந்தான். ஆள் வரும் அரவம் அவன் செவியிற்பட்டது. தன்னைப் பின் தொடர்ந்து சூஜோ வந்தது அவனுக்கு தெரியாது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் பணியரங்க ஆணையாளர் ஒருவர் பள்ளியரங்க மாதிடம் காதலாடி வந்தது அவனுக்குத் தெரியும். அவரே இப்போதும் வந்திருக்கக் கூடும் என்று அவன் உளங் கொண்டான். இவ்வளவு முக்கியமான ஒருவர் இந்த இடத்தில் காணப்பட்டால், அது ஒரு பயங்கர நெருக்கடியைக் கொண்டு வருவது உறுதி. மாது இந்நிலையை வருவித்து அவனை இக்கட்டுக்கு ஆளாக்கியதற்காக அவன் அவள் மீது சினங்கொண்டான். ‘சீ, எவ்வளவு மோசம் இது! நான் இதோ என் மாளிகை செல்கிறேன். வேறு ஒருவர் வருகிறார் என்று தெரிந்திருந்தும், அதே இரவில் என்னை வரவிட உன்னிடம் அப்படி என்ன குடி புகுந்துவிட்டதோ, அறியேன்!’ என்றான். ஆனால் கூறியபடி நடக்க அவனுக்கு நேரமில்லை. சூஜோ உள் நுழைவதற்கு முன் தன் மேலாடையை எடுத்துக் கொண்டு ஒரு மடக்குத் தட்டியின் பின் ஒளியவே நேரமிருந்தது. சூஜோ உள் நுழைந்ததும் நன்கு பழகிய தோற்றத்துடன் தட்டிகளை மடக்கத் தொடங்கினான். பள்ளியரங்க மாதும் நாகரிக நடை பயின்றவள். இளம் பெண்ணல்லளானாலும், இந்த நெருக்கடி நேரத்தில் பரபரப்படையாமல் தன்னிலை கொண்டாள். இதுபோன்ற இக்கட்டான நிலைகள் இதற்கு முன்னும் ஏற்பட்டு, அவள் அவற்றைச் சமாளித்திருந்தாள். முதல் வியப்புத் தீர்ந்தவுடன் நிலைமையை நன்கு ஆராய்ந்து செயல் துணிந்தாள். புதிய வருகையாளனைச் சட்டையின் பின்புறத்தால் பற்றித் தட்டிக்கு அப்பால் அவனைத் தள்ளினாள். அவள் கைகள் சிறிது நடுக்கமுற்றனவாயினும், பயிற்சி காரணமாக அது செயல் தளராது அமைந்தது. புதிய ஆள் சூஜோ என்பது இப்போதும் கெஞ்சிக்குத் தெரியாது. துணிந்து தன்னை வெளிக் காட்டிக் கொள்வதென்று அவன் ஒரு கணம் எண்ணினான். ஆனால் தன் ஆடையலங் கோலமும் தலையணியின் தாறுமாறான தன்மையும் அடுத்த கணம் நினைவுக்கு வந்தது. விரைந்து வெளிச் செல்வதானாலும் தன் தோற்றம் மிக விசித்திரமாயிருக்கும் என்றறிந்து அவன் தயங்கினான். கெஞ்சி எவ்வளவு நேரம் இப்படி ஆளடையாளம் தெரியாமலிருக்கப் போகிறான் என்று சூஜோ துணிய முடியவில்லை. ஆயினும் வாயாடாமல் தன் வாளையுருவிக் கொண்டு கோப நடிப்பில் முனைந்தான். அதன் மீது இருவருக்கு மிடையே பணியரங்க மாது புகுந்து ‘ஐயன்மீர், நன்மக்களே!’ என்று கூவி இளங்காதலியர் போல உணர்ச்சியுடன் பேசினாள். அந்நடிப்புக் கண்டு இருவருமே தம்மை அடக்கிக் கொள்ள முடியாமல் சிரித்து விட்டனர். மாயச் சாயங்களின் மூலம் பகல் நேரத்தில் தான் மாதரசிக்கு வெளித் தோற்றத்திலாவது ஒரு சிறிது இளமை முறுக்கு மீந்திருந்தது. ஆனால் ஐம்பத்தேழு ஐம்பத்தெட்டுக் கடந்த இந்த மாதரசி தன் காதல் கேளிக்கையிடையே கலவர மடைந்ததாக நடித்து, இளைஞர் இருவரிடையே ஓர் இளம் பெண் போல நெளிந்தொசிந்து நின்று ‘எனக்காகக் கலகம் விளைத்து உங்கள் விலையேறிய உயிருக்கு ஊறு தேடிக் கொள்ளாதீர்கள்’ என்று வேண்டிக் கொண்ட போது, அக்காட்சி காண்டற்கரியதாகவே இருந்தது! ஆனால் தன் நகையுணர்ச்சியை முற்றிலும் வலிந்தடக்கிக் கொண்டு சூஜோ தன்வீறாப்பு நடிப்பைத் தொடர்ந்து நீடித்தான். ஆனால் அவன் எவ்வளவு கடுங் கோபத் தோற்றம் மேற்கொண்ட போதிலும் முழுதும் வெளிப்பட வந்து நின்றதால் கெஞ்சி அவனை அடையாளம் கண்டு கொண்டான். அத்துடன் இவ்வளவு நேரமும் சூஜோ தன்னை இன்னொ னென்று தெரிந்து கொண்டே தன்னிடம் கேலி விளையாட்டு விளையாடி வந்திருக்கிறான் என்பதையும் அவன் ஒரு கணத்தில் உணர்ந்து கொண்டான். புதிய விழிப்பின் மூலம் அவன் பழைய அச்சம் விலகிற்று. தன் நண்பன் இப்போது ஓடிவிடாமல் தடுக்கும்படி உருவிய வாளுக்குரிய உறையை அவன் இறுகப் பற்றிக் கொண்டான். சூஜோ தன்னைப் பின் தொடர்ந்தது பற்றி உள்ளூர அவனுக்குக் கோபமிருந்தாலும், அதை நினைத்தவுடன் அவனால் விலாப்புடைக்க நகைக்காமலிருக்க முடியவில்லை. ஆயினும் நகைப்பின் முடிவில் அவன் சூஜோவைக் கடிந்துரைக்கத் தலைப்பட்டான். ‘உன் மூளை ஏன் இப்படி வேலை செய்கிறது, சூஜோ! இது விளையாட்டானால் இதில் என்ன சுவை இருக்கிறது என்று தெரியவில்லை. இப்போது நான் என் மேலாடையைப் போர்த்துக் கொள்ளவாவது விடுவாயா?’ என்று கேட்டான். ஆனால் சூஜோவோ மேலாடையைப் பறித்துக் கொண்டு அதைத் தர மறுத்தான். ‘ஆகா, அப்படியாசேதி! என் மேலாடையை நீ பறிப்பதானால் உன்னுடைய தொன்று என்னிடம் இருக்கட்டும்’ என்று அவன் சூஜோவின் அரைச் கச்சையைப் பற்றிக்கொண்டு அவன் தோள்களிலிருந்து தன் மேலாடையை இழுத்தான். சூஜோ இதை மறிக்கவே இருவரிடையே நிகழ்ந்த போராட்டத்தில் மேலாடை கந்தல் கந்தலாகக் கிழிந்துவிட்டது. ‘இப்போது உன் மேலாடைக்குப் பதில் என்னுடையதை நீ எடுத்துக் கொள்வதானால் நீ மூடி மறைக்க விரும்பும் இரகசியங்களை வெளிப்படுத்துவதாகவே அது அமையும்’ என்று சூஜோ பாடினான். அதற்கெதிராகக் கெஞ்சியும் ஒரு புதை பாடல் இசைத்தான். ‘எத்தனையோ இரகசியங்களில் என்னுடன் பங்கு கொண்ட நீ, இப்படி என்னை ஒற்றாட வேண்டிய அவசியம் என்னதான் நேர்ந்ததோ’ என்று அப்பாடல் குறித்தது. ஆனால் இதற்குமுன் இருவரிடையேயும் இருந்த கோபம் இதற்குள் பெரிதும் பறந்து போய் விட்டது. ஆகவே அவரவர் ஆடையை அவரவர் சீர்செய்து கொண்டு இருவரும் வெளியேறினர். தன் போக்கு வரவுகளை இன்னொருவர் கவனித்துவிட நேர்ந்த தென்ற செய்தி கெஞ்சிக்கு உள்ளூர அதிர்ச்சி தந்தே இருந்தது. இதன் பயனாகத் தனிமையில் அவன் மன அமைதியுடன் தூங்க முடியவில்லை. அதே சமயம் மாதரசியும் நிகழ்ச்சியால் குழப்பமே அடைந்திருந்தாள். அந்நிலையில் தரையில் ஓர் அரைக்கச்சையும் உறை மாட்டியும் கிடக்கக் கண்டு அவள் அவற்றை மறு நாளே கெஞ்சிக்கு அனுப்பி வைத்தாள். அதனுடன் பலபடத் தொகுத்த ஒரு புதை பாடலையும் அனுப்பினாள். அதில் கடலில் புயலில் அலைக்கழிக்கப்பட்டுக் கரையில் ஒதுக்கப்பட்ட கடற்பாசிகளுக்கு இத்தகைய பொருள்களை ஒப்பிட்டாள். உவமையுடன் உவமையாக அவள் தன் கண்ணீரையும் படிக நீரோடையாகக் குறிப்பிட்டிருந்தாள். அவளுடைய பிடிவாதக் காதல் நடிப்பு அவனுக்கு உள்ளுறுத்தலாகவே இருந்தது. ஆயினும் சூஜோவின் அறிவிலாக்கேலிக் கூத்தினால் அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி வகையில் அவன் அனுதாப முற்றான். இந்நிலைக் கேற்பவே அவன் முடங்கற் பாட்டு அமைந்திருந்தது. ‘பித்தேறி ஆடிய அலையின் வெறியாட்டத்தின் மீது நீ சீறுவது இயல்பே. ஆயினும் அதன் வீச்சுக்கு ஆளாகிய மணற் கரை குற்றமெதுவும் அறியாததாகும்.’ கச்சை சூஜோவினுடையது. கெஞ்சியின் மேலாடையை விட அது திண்ணிய நிறமாயிருந்ததனால் இது தெளிவாக வெளிப்பட்டது. மேலும் தன் மேலாடையை அவன் ஆராய்ந்து பார்த்தபோது அதன் கையுறையின் கீழ்பாகம் கிழித்தெறியப் பட்டிருந்தது. மொத்தத்தில் எல்லாம் சேர்ந்து என்ன பெருங் குழப்பமாய் விட்டது! ‘அந்தோ! நான் ஓர் இரவு சுற்றிக்கு, ஒரு வெறியாட்டப் பேர் வழிக்கல்லவா ஒப்பாகப் போய் விட்டேன்; இத்தகையவர்கள் அல்லவா தம் ஆடையைக் கிழித்துக் கொண்டு கேலிக் குரியவர்களாய்த் திரிவார்கள்’ என்று அவன் தன்னைத்தானே நொந்து கொண்டான். ‘இனி இந்நிலை மாறித் திருத்தம் அடையாமல் போனால் மிகவும் கேடாகும்’ என்றும் உறுதி கொண்டான். கிழிந்துபோன கையுறைப் பகுதி சூஜோவின் அறை களிலிருந்து ஒரு செய்தியுடன் இணைந்து வந்தது. ‘உன் மேலாடையை அணிந்து நீ புறப்படுவதற்கு முன்பாக இதைத் தைத்திணைத்துக் கொள்வது நல்லதல்லவா?’ என்று அது கேட்டது. ‘இது எப்படி அவன் கையில் சிக்கியது?’ என்று கெஞ்சியின் உள்ளம் வினாவிற்று. ‘சீ, இதெல்லாம் எவ்வளவு கீழ்த்தரமான சூழ்ச்சித் திறங்கள்!’ என்று அவன் வாய்விட்டுக் கூறினான். ஆயினும் இப்போது கச்சையை அனுப்பி விடுவதே நலம் என்று முடிவு செய்து, அக்கச்சையின் நிறமே உடைய தாளில் அதைப் பொதிந்து புதிரிடும் ஒரு பாடலுடன் அதை அனுப்பினான். ‘உனக்கும் அணங்குக்கு மிடையே பிணக்கு இதனால் ஏற்பட்டு விடக் கூடுமாதலாலே இதை நான் வைத்துக் கொள்ள மாட்டேன்.’ ஆனால் சூஜோவின் மறுமொழி அம்பை மாறி எய்தது. ‘பூசலிடையே கச்சையை நீ என்னிடமிருந்து பறித்தது அவளை என்னிடமிருந்து கைப்பற்றிக் கொண்டதற் குரிய சின்னமே யாகும்’ என்பது அவன் எதிர்பாடலாயிற்று. அத்துடன், ‘உன்னிடம் கோபங் கொள்வதற்கு இந்த ஒரே காரணம் போதாதா!’ என்றும் இணைத்தெழுதி யிருந்தான். காலையில் இதன் பின்னர் அவர்கள் அரண்மனைத்திரு முன் கூடத்தில் சந்தித்தனர். கெஞ்சி நிமிர்ந்த இறுமாந்த தோற்றத்துடனிருந்தான். சூஜோவும் முந்திய இரவின் கேலிக்குரிய காட்சிகளை மறக்க முடியவில்லை. இருந்த போதிலும் அன்று பொது நிலைப்பணிகள் ஏராளமாக முடிவுற வேண்டிய தாயிருந்தது. விரைவில் அவன் அக்கடமைகளில் தன்னை மறந்து ஆழ்ந்து விட்டான். இடைக்கிடையே அவ்வப்போது அவர்கள் ஒருவர் வீறார்ந்த முகத்தையும் பணிமுறை விறுவிறுப்பையும் மற்றொருவர் ஏறிட்டுப் பார்த்துக் கொள்வர். அவர்களால் அத்தறுவாய்களில் சிறிது புன்முறுவல் கொள்ளாமலிருக்க முடியவில்லை. இத்தகைய இடைவேளை களில் ஒரு தடவை சூஜோ கெஞ்சியருகே வந்தான். ‘இனி உன் காரியங்களில் முன்னைவிட ஒளிவு மறைவில்லாமல் நடந்து கொள்வாயல்லவா?’ என்று கேட்டான். ‘அதெல்லாமில்லை’ என்று தலையசைத்தான் கெஞ்சி. ‘ஆயினும் நீ சந்திக்க வந்த மாதுடன் அமைதியாயிருக்க வொட்டாமல் உன்னைத் தடுத்து விட்டதற்கு நான் மன்னிப்புக் கோர வேண்டும். எப்படியோ வாழ்க்கையில் நம் திட்டமெல்லாம் சில சமயம் குலைந்து விடுகிறது!’ என்றான். இவ்வாறு அவர்கள் தமக்குள் பேசிக் கொண்டனர். சென்ற நிகழ்ச்சியை எவருக்கும் வெளியிடுவதில்லையென்றும் ஒருவருக்கொருவர் உறுதி யளித்தனர். ஆயினும் இதே செய்தி அவர்களுக்கு நெடுநாட்களுக்கு வேடிக்கை விளையாட்டுக்குரிய நகைச் சுவை யூற்றாயமைந்தது. இருவரிடையே கெஞ்சியிடம் தான் அதன் நினைவு வேரூன்றிப் போயிருந்தது. இம்மாதிரித் தொல்லை பிடித்த ஆட்களுடன் இனித் தொடர்பு கொள்ளக் கூடாதென்று அவன் முடிவு கொண்டிருந்தான். அதே சமயம் மாதரசி மிகவும் கலவரமடைந்திருந்தாள் என்பதையும், யாரும் ஆறுதல் தர முன்வரவில்லை என்பதையும் அறிந்தவுடனே, அங்குச் செல்லாதிருக்கும் உறுதி தகர்ந்துவிட்டது. தன் வாக்குறுதிப்படியே சூஜோ, தான் கண்ட காட்சியை எவரிடமும், தன் தங்கையிடம்கூட, குறிப்பிடவில்லை. ஆனால் எப்போதாவது கெஞ்சி மீண்டும் வீறாப்பான ஒழுக்க வேதாந்தம் பேசுவதானால், அச்சமயங்களில் அவனுக்கெதிராக வழங்கத்தக்க ஒரு படைக்கலமாக அதைச் சேமித்து வைத்திருந்தான். வேறு எவரையும் விடக் கெஞ்சியைச் சக்கரவர்த்தி மிகவும் பாசத்துடன் நடத்தி வந்தார். இதனால் அரசுரிமைக் குருதி மரபுடைய இளவரசன் முதலாக எல்லாரும் அவனிடம் பயபக்தி கொண்டிருந்தனர். ஆனால் தோநோ சூஜோ எந்தச் செய்தியிலும் அவனுடன் எதிர்த்து வாயாடக் கச்சை கட்டிக் கொள்பவனாக இருந்தான். எதிலும் அவன் மனம் போல விட்டுக் கொடுக்கச் சித்தமாயில்லை. அவனும் ஆயும் சக்கரவர்த்தியின் உடன் பிறந்த நங்கைக்கே பிறந்த பிள்ளைகள். மேலும் கெஞ்சி சக்கரவர்த்தியின் பிள்ளையாகவும் சூஜோவின் தந்தை ஓர் அமைச்சராகவும் மட்டுமே இருந்தாலும், பிந்தியவரே மற்றெல்லா அமைச்சர் களையும் விடச் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். இத்தகைய செல்வாக்கு மிக்க தந்தைக்கும் மன்மரபுடைய இளவரசிக்கும் உரிய புதல்வன் என்ற முறையில் எவர் வணக்க இணக்கத்துக்கும் உரிய வகையில் அவன் நடத்தப் பட்டிருந்தான். தான் கெஞ்சிக்குக் குறைந்தவன் என்ற எண்ணம் அவனுக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. ஏனெனில் தோற்றத்தில் அவன் தன்னிடம் எக்குறையும் கண்டதில்லை. மற்றப் பண்புகளிலோ, குணம் அறிவு முதலிய செய்திகளிலோ அவன் தன்னிடம் போதிய நிறைவே கண்டான். இக்காரணங்களால் நட்பிடையேயும் இவ்விரு வரிடையேயும் ஒரு போட்டிப் பண்பு வளர்ந்து பலவகைச் சுவைமிக்க இடைநிகழ்ச்சிகளுக்கு வழிவகுத்தது. இவை முழுவதையும் நம்மால் விரித்துரைக்க முடியாது. ஏழாவது மாதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் நிகழ்வுற்றன. முதலாவது செய்தி புதிய பேரரசி1 அமர்வு பெற்றதாகும். அதே சமயத்தில் கெஞ்சி ஒரு பேரவையாளனாக உயர்த்தப் பெற்றான். சக்கரவர்த்தி விரைவில் தவிசு துறக்க உளங்கொண்டிருந்தார். தம் பேரரசுரிமை இளவரசனாகக் கோக்கிடன் சீமாட்டியின் புதல்வனுக்குப் பதில் புதிய இளவரசனையே அமர்விப்பதானால் அவருக்கு மெத்த மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். ஆனால் இது செய்தற்கியலாத ஒன்று. ஏனெனில் இத்தகைய தேர்வை ஆதரிக்கத்தக்க அரசியல் கட்சி எதுவும் கிடையாது. புஜித்சுபோவின் உறவினர் யாவருமே சக்கரவர்த்தியின் குடும்பத்தினர்.2 கெஞ்சி மினமோடோக் குல மரபினனென்ற முறையில் ஆதரவு தர முன்வரக் கூடுமென்று எதிர்பார்க்கத் தக்கவனாயினும், எதிர்பாரா வகையில் அவன் அரசியல் சூழ்ச்சிச் சுழல்களில் ஒரு சிறிதும் பங்கு கொள்ளா தவனாயிருந்தான். இந்நிலையில் சக்கரவர்த்தியால் செய்யக்கூடிய தெல்லாம் புஜித் சுபோவின் நிலையை உயர்த்தி, அவள் வருங்காலச் செல்வாக்கின் வாய்ப்புக்கே எல்லாவற்றையும் விட்டுவிடுவது என்பதே. சக்கரவர்த்தியின் உள் எண்ணங்களை யெல்லாம் கோக்கிடன் சீமாட்டி கேள்விப்பட்டாள். அவளுக்குத் திகைப்பும் மனக் கலக்கமும் ஏற்பட்டன என்பதில் வியப்பில்லை. சக்கரவர்த்தி அவளுக்கு ஆறுதலளித்து அமைதிப் படுத்த அரும்பாடு பட்டார். இன்னும் சிறிது காலத்துக்குள் அவள் அரசிருக்கையேறப் போவதையும் அப்போது பேரரசியின் படிக்கு முற்றிலும் ஒப்பான தாய்ப்பேரரசியின் படிநிலை அவளுக்குக் கிட்ட இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். ஆனால் எப்படியும் பேரரசுரிமைக் குரிய இளவரசரின் தாய் நிலைகடந்து இருபது வயதுக்கு மேற் படாத ஒரு காமக் கிழத்தி இடம் பெறுவது என்பது பொறுப்பதற்கரிதாகவே இருந்தது. பொதுமக்கள் கோக்கிடன் சீமாட்டியின் பக்கமாகவே அனுதாப முடையவராயிருந்தனர். எங்கும் மனக்குறையும் பெரிதாயிருந்தது. புதிய பேரரசி பதவி யேற்றப்பட்ட நாளிரவில் அரசவை உறுப்பினனென்ற முறையில் அவளுடன் ‘நடுவரண்மனை’ மாடம் சென்ற குழுவில் கெஞ்சியும் ஒருவனாயிருந்தான். புஜித்சுபோவும் முன்னாளைய ஒரு பேரரசியின் புதல்வி என்ற முறையிலும், அழகமர்ந்த ஓர் இளவரசனின் தாய் என்ற முறையிலும் புதிய பதவிக்கு மேற்பட்ட அளவில் அரசவையின் அன்பு மதிப்பைப் பெற்றிருந்தாள். ஆனால் அவள் பரிவாரத் திற்பட்ட மற்றப்பெருமக்கள் இவ்வாறு ஆர்வப் பாராட்டுடன் அவளைப் போற்றினரென்றால், அவள் ஏறிச் சென்ற சிவிகையைப் பின்பற்றி நடந்த கெஞ்சியின் உள்ளத்தில் எத்தனை அன்புப் பாராட்டுகள், எத்தனை வேதனைமிக்க எண்ணங்கள் உலவியிருக்கும் என்று கூறத் தேவையில்லை. இறுதியாக எட்ட முடியாத பேருயரத்திற்கு அவள் உயர்த்தப்பட்டு விட்டாள். இதை முற்றிலும் உணர்ந்த நிலையிலேயே அவன் நாக்கு ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டு சென்றது. மருளார்ந்த காதல் நெறி தழைக்குமாறு தெருளார்ந்த பரிதி ஒளி படாமலிங்கே ‘கருங்கும்’ மென்றே கவிந்த தந்தோ! இன்று மருங்காரும் அணையாத வான் முகில், அதில் ஒருங்கார ஓங்கிவிட்டாய் எனைவிடுத்தே! நாட்கள், மாதங்கள் சென்றன. குழந்தை இளவரசன் வளரவளர மேன்மேலும் கெஞ்சியை ஒத்த தோற்றம் பெற்றே வளர்ந்தான். புதிய பேரரசி இது கண்டு மனமுளைந்தாள். ஆயினும் வேறுயாரும் இவ்வொப்புமையை மிகவும் கவனித்த தாகத் தெரியவில்லை. குழந்தையிடம் முழு வடிவழகும் இல்லை - அதன் நிலையில் அது எப்படித்தான் அமைய முடியும்? ஆனால் இரு உருவமுமே வனப்புடையவையா யமைந்தன. உலகம் இரு அழகுருக்களையும் அழகுருக்களாக மட்டுமே ஏற்றமைந்தன. வானத்தில் செங்கதிரையும் தண்கதிரையும் ஒளி யுருக்களாக எவரும் ஒருங்கேற்பது போல, அவற்றிடையே எத்தகைய ஒற்றுமை வேற்றுமைகளும் காணாமலே இரண்டையும் மக்கள் ஒரு சேரப் பாராட்டினர். அடிக்குறிப்பு ¹1. பேரரசிப் பதவி ஒரு சக்கரவர்த்தியின் ஆட்சி நீடித்தபின்னரே நடைபெறுவது வழக்கம். இங்கே குறிக்கப்பட்ட பேரரசி புஜித்சுபோவோவேயவள். 2. சக்கரவர்த்தியின் குடும்பத்தினர் அரசியற் கட்சிகளில் சேரும் உரிமையற்றவர்கள். 8. பூ விருந்து இரண்டாவது மாதத்தின் இருபதாவது நாளில் சக்கரவர்த்தி தெற்கு வளாகத்திலுள்ள பாரிய சீமை இலந்தை மரத்தினடியில் ஒரு சீனப்பெருவிருந்து நடத்த ஏற்பாடு செய்தார். பேரரசி புஜித் சுபோவும் பேரரசுரிமை இளவரசரும் அதில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. பேரரசி வருவ தொன்றே கோக்கிடன் பெருமாட்டியின் அக மகிழ்ச்சியைச் சிதறடிக்கப் போதியதாயிருந்தது. ஆயினும் பொதுக் கிளர்ச்சிக்குரிய அவ்விழாவில் கலக்கா மலிருந்துவிடவும் அவளுக்கு மனமில்லை. விழாவிலும் சிறிதுநேரம் மழை வந்து கெடுத்து விடுமோ என்னும் நிலை உண்டாயிற்று. ஆனால் விரைவில் இளவெயில் எரிக்கத் தொடங்கிற்று.பறவைகள் மரங்கள்தோறும் இருந்து பாடின. மன்னுரிமை இளவரசர், பெருமக்கள், கவிதையிலேயே ஈடுபட்டு வாழும் கவிஞர்கள் ஆகிய எல்லாவகைப்பட்டோரும் வந்து போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களுக்குரிய எதுகையடிகளைச் சக்கரவர்த்தி திருவுளச் சீட்டு போட்டுத் தேர்ந்தெடுத்து அவரவருக்கு வழங்கினார். கெஞ்சிக்குரிய சீட்டு வந்ததும் அவன் அதை ‘வேனில்’ என்று மணிக்குரலில் கணீரென வாசித்தான். அவனுக்கு அடுத்தபடியாக வந்தவன் சூஜோ. எல்லாரும் அவனையே நோக்கினர். இதை யுணர்ந்து அவனும் பெருமிதமாக நடந்து வந்தான். தன் சீட்டை ஏற்றதும் எல்லாரும் கேட்கத் தன் பெயரையும் பதவிகளையும் சிறப்புரிமைகளையும் எடுத்துரைத்த துடன், தெளிவாகவும் இனிமை நயத்துடனும் பேச முயற்சி எடுத்துக் கொண்டான். மற்றப் பெருமக்களிலும் பலர் சிறிது அவை நடுக்கமுடையவராய் விளறிய முகத்துடன் முன்னேறினர். ஆயினும் மொத்தத்தில் அவர்கள் தம் கடமைகளை நன்கு நிறை வேற்றினர். சக்கரவர்த்தியும் பேரரசுரிமை இளவரசரும் இச் சமயம் சீனக் கவிதையில் மனமார்ந்த அக்கறை கொண்டு ஊக்கம் செலுத்தி வந்ததால், அத்துறையில் தேர்ச்சி உச்ச தளஎல்லை அடைந்திருந்தது. இது காரணமாகத் கவிதை வாழ்விலீடுபட்ட கவிஞர்கள் மிகவும் மன உளைவுற்றனர். தங்கள் தங்களுக்குரிய எதுகைச் சீட்டுப் பெறுவதற்கு நீண்ட தோட்ட இடைவெளியைக் கடந்து செல்லும் போது, அவர்கள் முகத்தில் ஒருசிறிது கூட நம்பிக்கை ஒளி வீசவில்லை. கவிதையே வாழ்வாகக் கொண்டவர் களிடம் ஒரு சிறு சீனப்பாடல் கோருவது குறிப்பிடத்தக்க ஒரு செய்தியல்லதான், ஆனால் அவ்வெண்ணம் அவர்கள் உள்ளத்தில் படரச் செய்த நிழல் பெரிதாகவே இருந்தது. மேலும் வயதேறிய புலவர்கள் நடையுடை தோற்றங்களில் விசித்திரமாயிருப்பது இயல்பே. பேரரசிருக்கையை அணுகும் சமயத்தில் அவர்களின் நடைநயமற்ற போக்கையும் ஒழுங்கு முறைமை தவறிய வருகையையும் காணச் சக்கரவர்த்தி ஒருபுறம் புன் முறுவலும், மற்றொருபுறம் இரக்க மதிப்பும் கொண்டார். இதை அக்கறையுடன் யாவரும் கூர்ந்து கவனித்தனர். இச்சமயம் ஏராளமான இசைமுறை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பது எதிர்பார்க்கத் தக்கதே. மாலை அணுகிய சமயம் ‘குயிலின் இளவேனிற் குலவை’ என்னும் எழுச்சிதரும் நடனம் ஆடப்பட்டது. அதன் முடிவில் பேரரசுரிமை இளவரசன் செந்தழை விழாவை மனத்துட் கொண்டு கெஞ்சியின் முடிமீது ஒரு மலர்ச்சூட்டு அணிவித்து அதில் கலந்து கொள்ளும்படி அன்புடன் வற்புறுத்தி வேண்டினான். அதனை மறுக்க மாட்டாமல் அவன் எழுந்து அலை ஆடல் நடனத்தின் கையுறை மாற்றுப் பகுதியின் ஒரு கூற்றினை அமைதியுடன் ஆடிக்காட்டினான். இச்சமயம் முற்றிலும் மன மகிழ்வுடனிரா நிலையிலும், அவன் மாமனார் இதில் முழுதும் ஈடுபட்டுத் தம்மை மறந்திருந்தார். தம் கண்களில் தம்மை மீறி எழுந்த நீர்த்துளியை அவர் துடைத்துக் கொண்டார். ‘தோ நோ சூஜோவை ஏன் இப்போது காணவில்லை’ என்று இளவரசர் கேட்டார். அது கேட்டு அவன் முன் வந்து ‘காற்றாடி மலர்வண்ணப் பூங்கா’ என்ற நடனம் தொடங்கி கெஞ்சியைவிட மேம்பாடு காட்டும் உறுதியுடன் அதை ஆடினான். ஏனெனில் கெஞ்சியும் அழைக்கப்படு வானென்பது அவனுக்குத் தெரியும். கெஞ்சி அதற்கு வேண்டிய முன் பயிற்சியுடனிருப்பான் என்பது அவன் எதிர்பார்த்ததே. அவன் ஆடல் பெருவெற்றி கண்டது. சக்கரவர்த்தி அவனுக்குப் பரிசாக ஒரு மேலாடை யளித்தார். வழக்கத்திற்கு மேற்பட்ட இச்செயல் அவ்வெற்றியின் அருஞ் சிறப்பை எடுத்துக் காட்டிற்று. இதன் பின் ஆடிய இளைஞர் வகையில் எந்த ஒழுங்கு முறையும் பின் பற்றப்படவில்லை. அத்துடன் இருட்டாகி விட்டபடியால் ஆட்டங்களை எவரும் சரிவரப் பார்த்து மதிப்பிட முடியா மலிருந்தது. பாட்டுச் சீட்டுகள் யாவும் ஒவ்வொன்றாக உரத்து வாசிக்கப்பட்டன. கெஞ்சியின் பாடல்கள் வாசிக்கப்படும் போது இடை இடையே மக்கள் திரள் கலகல வென்று ஆரவாரித்து மகிழ்ச்சி தெரிவித்தது. கவிஞர்கள்கூடப் பாடலைக் கேட்டு மதிப்பார்வம் கொண்டு மகிழ்ந்தனர். எப்போதுமே கெஞ்சி சக்கரவர்த்தியின் பேராதரவுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியவனாயிருந்த நிலையில், அவர் இச்சமயம் எவ்வளவு ஆர்வத்துடன் கெஞ்சியை நோக்கிக் கொண்டிருந்தார் என்று கூறத் தேவையில்லை. கெஞ்சி பக்கமாகப் பார்வை தன்னை மீறித் திரும்பிய நேரத்திலெல்லாம் புஜித் சுபோவின் உள்ளமும் பூரிப்படைந்தது. இத்தகைய சிறப்புடையவனிடம் கோக்கிடன் சீமாட்டி எப்படித்தான் வெறுப்புக் கொள்ள முடியுமோ என்று வியப்புற்றாள். ‘ அவர் என்னிடம் இவ்வளவு பாசமுடைய வராயிருப்பது தான் அத்தகைய வெறுப்புக்குக் காரணமா யிருக்கக்கூடும், வேறு காரணம் இருக்க வழி இல்லை’ என்ற முடிவுக்குக்கூட அவள் வந்தாள். ‘நான் மட்டும் இந்த உயர்பதவி பெறாமல், எல்லாரையும் போல ஒரு சாதாரண மாதாயிருந்தால், ‘இந்த அழகு மலரை இன்று பார்த்துக் கொண்டிருப்பது போல, வாளா பார்த்துக் கொண்டிருப்பதென்பது முடியாத காரியம். காதலெனும் பனி அவர்மீது மேவாமல் நெடிது தடுத்து வைத்திருப்பதென்பது அப்போது என்னாலாகாத காரிய மாகவே இருந்திருக்கும்’ என்று அவள் தன் வாய்க்குள் முனகிக் கொண்டாள். ஆனால் இதை வாய்விட்டு உரத்துக்கூற அவள் துணிய வில்லை. விருந்து முடிந்தது. நேரமும் நெடுந்தொலை சென்று விட்டது. விருந்தினர் யாவரும் கலைந்து சென்று விட்டனர். பேரரசியும் பேரரசுரிமை இளவரசரும் அரண்மனைக்குள் சென்று விட்டனர். எங்கும் அமைதி நிலவிற்று. வெண்ணிலா எங்கும் பாலொளி வீசிற்று. இன்தேறல் மாந்தி அதனால் உளம் வெதுப்புற்ற நிலையில் கெஞ்சி இவ் அழகுக் காட்சியை விட்டகல முடியவில்லை. அரண்மனையிலுள்ள மக்கள் எல்லாருமே இதற்குள் ஆழ்ந்த துயிலுக்கு ஆட்பட்டு விட்டனர். இத்தகைய இரவில் யாராவது முன்னெச்சரிக்கை தவறி ஏதேனும் ஒரு கதவைத் தாழிடாமல் விட்டிருப்பர் என்பது கூடாததன்று. ஏதேனும் பலகணிக் கட்டைகளைப் பூட்டிடாமல் விட்டிருத்தலும் கூடியதே. இந்நம்பிக்கையுடன் கெஞ்சி பதுங்கி மெள்ள மெள்ளச் சென்று புஜித்சுபோ அறைகளின் பக்கம் சென்று தட்டித்தடவினான். கோக்கிடன் சீமாட்டியின் மாளிகையின் சுற்றுச் சிறையை அணுகிய போது மூன்றாவது வளைவின் பலகணிகள் சார்த்திப் பூட்டப்படாதது கண்டான். விருந்தின் பின் கோக்கிடன் சீமாட்டி நேரே சக்கரவர்த்தியின் அறைக்கே சென்றிருந்தாள். வேறு எவரும் அப்பக்கம் இருந்ததாகக் காணவில்லை. சுற்றுச் சிறையிலிருந்து மாளிகை உட்புறம் செல்லும் கதவுகளும் ஏனோ அன்று திறந்திருந்தது. உள்ளே அரவம் எதுவும் கேட்க வில்லை. ‘பெரும்பாலும் இத்தகு தறுவாய்களில்தான் நாம் எக்கச்சக்கமான சுழல்களில் சிக்க நேர்கிறது’ என்று கெஞ்சி மனத்துக்குள் எண்ணிக்கொண்டான். ஆனால் கைபிடிச் சுவர் தடவி ஏறி நின்று பார்ப்பதை இந்த எண்ணம் தடுக்கவில்லை. எல்லாருமே தூங்கிப்போய் விட்டார்களென்றுதான் அவன் முதலில் நினைத்தான். ஆனால் இது சரியன்று என்று தெரிந்து ஓரினிய குரல் ‘ஓபோரோ சுகியோ’ப் பாடலின் இறுதி இரண்டடிகளை மெல்ல வாய்க்குள்ளாகப் பாடிக் கொண்டி ருந்தது. அது பாங்கியர் அல்லது பொது நிலையானவர் என்று அக்குரலால் தோற்றவில்லை. அத்துடன் அதுவும் அவனை நோக்கி வந்து கொண்டிருந்ததாகவே காணப்பட்டது. அரவம் வந்த திசையில் அவன் கையை நீட்ட அது ஒரு சீமாட்டியின் கையுறையைப் பற்றிற்று. ‘ஆ, என்னை எவ்வளவு அச்சுறுத்தி விட்டீர்கள், நீங்கள்!’ என்றது குரல். ‘யாரது!’ என்றான் அவன். அவள் ‘கலவரப்பட்டு விடாதீர்கள்; விடை கொண்டு சென்று வரும் இந்த இரவின் மாய அழகை விடாது நுகர முற்பட்டிருப் பதொன்றே நாம் இருவரும் இந்த இரவில் சந்திக்கப்பிறந்தோம் என்பதை அரை நிலாவினும் தெளிவாகப் பாடுகின்றதன்றோ?’ என்று அவள் மென்மொழி புகன்றாள். பேச்சுடன் பேச்சாக அவன் மெல்ல அவள் கரம் பற்றி அவளை மாளிகை யில்லத்தின் பின்புறம் இட்டுச் சென்று உள்ளிருந்து கதவைத் தாழிட்டான். அவள் வியப்பும் திகைப்பும் அவனுக்குக் கவர்ச்சியளித்தன. உள்ளுறையைச் சுட்டிக் காட்டிய வண்ணம் நடுங்கிக்கொண்டே அவள் ‘அங்கு வேறு ஒருவர் இருக்கிறார்’ என்றாள் . ‘குழந்தாய்! எனக்கு எங்கும் செல்லும் உரிமை உண்டு. உன் நண்பர்களையே அழைத்துக் கேட்டால் தெரியும், நான் விரும்பியபடி எல்லா இடங்களுக்கும் செல்லும் உரிமை எனக்கு உண்டென்று! ஆனால் நீ சந்தடி செய்யாமலிருந்தால்........’ அவன் குரலால் அவன் கெஞ்சி என்று அவள் உணர்ந்து கொண்டாள். அவள் கலவரம் தெளிவடைந்தது. அவன் நடத்தை அவளுக்குப் புதிதாக இருந்தது. ஆயினும் தான் தற்பெருமையுடையவள், வசதை கெட்டவள் என்று அவன் நினைக்கும்படி நடக்க அவள் ஒருப்படவில்லை . அத்துடன் மாலை நிகழ்ச்சிகளின் பின் அவனும் சற்று மட்டுமீறிய எழுச்சியுடையவனாயிருந்தான். அவள் இளமையும் இசைவிணக்கப் பண்பும் அவன் விருப்பத்துக்கு மிகுதி எதிர்ப்புத் தரத்தக்க நிலையை அவளுக்கு அளிக்கவில்லை. அவன் விருப்பமே அவளை ஆட்கொண்டது. திடுமெனக் கீழ் வானில் விடியொளி மெல்லப் பரவுவது கண்டு அவர்கள் கலக்க முற்றனர். அவள் மனத்திலும் பல கலவர எண்ண அலைகள் வந்து குமுறியதைக் கெஞ்சி கண்டான். ‘உன் பெயரை எனக்குத் தெரிவிக்க மாட்டாயா? அது தெரியாமல் நான் உனக்கு எப்படி கடிதமெழுத முடியும் . எப்படியும் இது ஒன்றே நம் சந்திப்பாக இராதென்று நினைக்கிறேன்’ என்றான் அவன். அவள் அதற்குப் பிடிகொடாமலே ஒரு பாடல் வகுத்துரைத்தாள். ‘பெயர்கள் இவ்வுலகுக்கே உரியன . நம் பாசம் வரும் உலகங்களும் அளாவியதென்று கெஞ்சி நினைப்பதானால், பெயர் பற்றியே அவன் கவலைப்படத் தேவையில்லை’ என்று அது குறித்தது. இது ஒரு சாக்குப் போக்கு என்பதை அவன் அறிந்து கொண்டான். அவள் விரைந்த கற்பனைத் திறன் கண்டும் அவன் மகிழ்ந்தான். ‘நீ கூறியது சரியே. நான் கேட்டது தவறுதான்’ என்று தானும் சமாளித்துக்கொண்டு அவன் ஒரு பாடலை இசைத்தான். ‘பனித்துளி’ புல்லின் எந்த அலகில் தங்கிற்று என்று ஆராயப் புகுந்த சமயம், திடீரென ஒரு காற்றுப் புகுந்து புல் திரளின் பரப்பையே நிலைகுலையச் செய்தது.’ இவ்வாறு பாடிய வண்ணம் சிறிது தயங்கியபின் அவன் மீண்டும் தொடர்ந்தான். ‘எப்படியும் இந்தச் சந்திப்பு மூலம் உனக்கு மனவருத்த மில்லையானால் , நீ யார் என்பதை எனக்குக் கட்டாயம் தெரிவித்திருப்பாய். ஆனால் இது உனக்கு விருப்பம் என்று எனக்குத் தோற்றவில்லை........’ பேச்சு முடிவதற்குள் அடுத்த அறையில் ஆட்கள் எழுந்து நடமாடும் அரவம் கேட்டது. அதன் பரபரப்பிலிருந்தே கோக்கிடன் சீமாட்டியை அரண்மனையிலிருந்து அழைத்துவர ஏற்பாடாகி வந்ததென்று தோன்றிற்று. எனவே கெஞ்சி விரைந்து அவசர அவசரமாக அறையிலிருந்து வெளியேற வேண்டியவனானான். ஆயினும் வெளியேறுமுன் அவனும் சீமாட்டியும் தம் புதுநட்புக்கு அறிகுறியாகத் தம் விசிறிகளை மட்டும் மாற்றிக்கொண்டனர். கெஞ்சியின் அறையில் அவன் பாங்கர் பலர் அவனை எதிர்பார்த்துக் கொண்டே காத்திருந்தனர்; சிலர் கண்ணயரா மலே விழித்துக் கொண்டிருந்தனர். கெஞ்சி உள்ளே நுழைந்ததும் அவர்கள் ஒருவரை ஒருவர் சாடையாக இடித்துக் கொண்டார்கள். இந்த மாதிரி இரகசிய உலாக்கள் என்றுதான் ஒரு முடிவுக்கு வருமோ?’ என்று தெரிவிப்பது போலிருந்தது அந்தக் குறிப்பு. ஆனால் அதே சமயம் தாம் இவ்வாறு விழித்துக் கொண்டிருந்ததையும் வரவைக் கவனித்ததையும் அவர்கள் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை. இவற்றை அறியாமலே தூங்குவதாக நடிக்கும்படி அவர்கள் நல்லறிவும் அவன் மீதுள்ள நல்லெண்ணமுமே தூண்டின. கெஞ்சியும் இவற்றுள் எது பற்றிய சிந்தனையுமில்லாமல் படுக்கையில் சென்று கிடந்தான். ஆனால் அவனால் அமைதியுடன் துயில் கொள்ள முடியவில்லை. ஓரிரவு முழுதும் இவ்வளவு இன்பகரமாகத் தன்னுடன் இருந்த அந்த இளமாதின் அழகிய முகத் தோற்றத்தை ஒரு தடவை மனக்கண் முன் கொணர்ந்து காண அவன் அருமுயற்சி செய்து பார்த்தான். ‘அவள் யாராகத்தான் இருக்கக்கூடும்? கோக்கிடன் சீமாட்டியின் தங்கையர்களுள் ஒருத்தியாகத்தான் இருக்க வேண்டும். ஐந்தாவது, ஆறாவது நங்கையர்கள் இன்னும் மணமாகாதவர்கள் அவர்களில் ஒருத்தியாகவே இருக்கக் கூடும். ஆனால் சோச்சி இளவரசன் மனைவியாயிருந்த நான்காவது நங்கையே அவர்களனைவரிலும் அழகில் சிறந்தவள். அவளுடன் தான் இப்போது தோநோசூஜோ எவ்வளவோ இடர்ப்பட்ட வாழ்வு வாழ்ந்தான். அந்தோ! அவள் தோநோசூஜோவின் மனைவியாகவே அமைந்து விட்டால், அது பெருங்கேலிக் கூத்தாகவே நேரும். அன்றி ஆறாவது நங்கைகூடப் பேரரசின் உரிமை இளவரசருக்கு விரைவில் மணம் செய்விக்கப்பட இருந்தாள். இதனாலும் எவ்வளவோ இடர்ப்பாடு ஏற்படவே இடம் உண்டு.’ இன்ப இரவுக்குரிய நங்கை இவர்களுள் யாரென்று கெஞ்சியால் இன்னும் உறுதிப்படுத்தமுடியவில்லை. அவள் நடந்துகொண்ட மாதிரியிலிருந்து திரும்ப அவனைச் சந்திக்க விரும்பாதவள் என்று அவனுக்குத் தோன்ற வில்லை.. ஆனால் அதே சமயம் கடிதப் போக்குவரவுக்குரிய வாய்ப்பைக் கூட அவள் ஏன் மறுக்க வேண்டும்? இவ்வாறு இருவழியும் சிந்தனையைப் புரட்டிப் புரட்டி ஆராய்ந்து அவன் தன் உள்ளத்தைப் புண்படுத்தினான். அவள் மீது அவன் தன்னை யறியாமல் காதல் கொண்டுவிட்டான் என்பதை இது தெள்ளத் தெளியக் காட்டிற்று. எனினும் இந்நிலையிலும் புஜித்சுபோவின் அமைதி வாய்ந்த, ஆனால் கடுகடுத்த நடத்தை அவன் நினைவில் நுழைந்தது. புதுக் காதலின் கொந்தளிப்பை விட அது எவ்வளவு ஆழ்ந்த உணர்ச்சியுடையது என்பது இப்போது அவனுக்குத் தெளிவாகப் புலனாயிற்று. அன்று விருந்தின்பின் நடைபெற்ற நிகழ்ச்சி இரவு நெடுநேரம்வரை அவன் உள்ளத்தில் அலையாடிற்று. சக்கரவர்த்தியின் கட்டளை மீது அவன் பதின்மூன்று நரம்புகளையுடைய தன் யாழ் மீட்டிப் பாடினான். இது முந்திய நாள் ஆடலைவிடப் பெருவெற்றியாய் அமைந்தது. விடியற் காலத்தில் புஜித்சுபோ பேரரசர் அறைக்கே மீண்டும் எங்காவது எப்படியாவது காட்சிதரக்கூடுமென்ற நைப்பாசை அவனுக்கு இருந்தது. இதில் அவன் ஏமாற்றமே அடைந்து வந்தான். இவ்வாறான காரியங்களில் அவன் எப்போதும் யோஷிகியோ, கொரெமிட்சு ஆகியவர்களுடன் எல்லா இரகசியங்களும் பங்கிட்டுக்கொள்வது வழக்கம். இப்போது அவன் அவர்களை வரவழைத்து அணங்கின் குடும்பத்தினர் மீது ஒரு கண் செலுத்தும்படி கட்டளையிட்டான். மறுநாள் அரண்மனை அலுவல் முடிந்து திரும்பிய போது அவன் அவர்களைச் சந்தித்தான். இராக் காவல் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வண்டிகள் பலவும் புறப்பட்டுச் சென்று விட்டதைக் கண்டதாக அவர்கள் அவனிடம் கூறினர். வண்டிகள் அதுவரை யாருக்காகவோ காத்திருந்ததாகத் தோற்றின. காத்திருந்த ஏவலரிடையே இரண்டு பெருமக்கள் விரைந்துவந்து உட்புகுத்தனர். இவர்கள் ஷீ நோ ஷோபோவும் உச்சு பெனுமே யென்று கெஞ்சியின் ஆட்கள் அடையாள மறிந்தனர். வண்டிகள் கோக்கிடன் சீமாட்டிக்குரியனவே என்பதை இது தெளிவாக்கிற்று. அவற்றுள் மூன்று வண்டிகளில் அழகுமிக்க அணங்குகள் இருந்தனர் என்பதையும் அவர்கள் கவனித்தனர். கெஞ்சியின் நெஞ்சு இப்போது வேகமாக அடித்துக் கொண்டது. ஆனால் உடன்பிறந்த நங்கையர்களிடையே தான் கண்ட நிலையில் இன்னும் எத்தகைய மாறுதலும் இல்லை. அத்துடன் இச்செய்திபற்றி அவர்கள் தந்தையான வலங்கை அமைச்சர் ஏதேனும் அறிய நேர்ந்தால் எவ்வளவோ குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதும் அவனுக்கு விளங்கிற்று. அது அவனுக்கு முற்றிலும் அழிவு கொணர்வது உறுதி என்று அவன் எண்ணினான். அதே சமயம் அந்த இன்ப இரவில் அழகியின் முகத்தைத் தெளிவாகத் காணும்படி நிலா வரும் வேளைவரை இருந்தோமில்லையே என்ற ஏக்கம் அவன் கருத்தில் மற்றொருபுறம் போராடிற்று. ஆம். அவள் முகத்தை அவன் பார்க்கவில்லைதான். ஆயினும் எப்படியோ அவளை அடையாளங் காண முடியுமென்று அவன் கருதினான். இது எப்படி? இவ்வகையில் எண்ணற்ற திட்டங்களையும் ஏற்பாடுகளையும் உருவாக்கிக் கலைத்து, மீண்டும் மீண்டும் உருவாக்கி, இரவு முழுவதும் ஒரு முடிவு காணாமலே அவன் படுக்கையில் கிடந்து புரண்டான். எனினும் இதே சமயத்தில் முரசாக்கி மற்றொருபுறம் பொறுமையிழந்து கொண்டிருப்பாளே என்று அவன் உளம் துடித்தது. அவள் அவனைக் கண்டு நாட் கணக்காயிற்று அவன் உடனிராத சமயங்களில் அவள் முகம் எவ்வளவு பொலிவிழந்திருந்தது ! இதை எண்ணவே அவன் உள்ளம் உருகிற்று. இவ்வளவு எண்ணங்களுக்கிடையிலும் அவன் மனம் அந்தப் புதுநங்கை பக்கமே துடித்தோடத் தொடங்கிற்று. அவள் விசிறி இன்னும் அவனிடமே இருந்தது. அது ஹிநோகிமாவின் ஈர்க்குகளால் புனையப்பட்டு , ஓரங்களில் முழுவதும் இழைகள் குஞ்சங்களாக முறுக்கப்பட்ட ஒரு மடக்கு விசிறி. ஒரு புறம் வெள்ளித்தாள் பொதியப்பட்டு, மங்கல நிறத்தில் நிலாவின் ஓவியம் தீட்டிப்பட்டிருந்தது இது நீரில் நிழலாடிய நிலாவின் தோற்றம் தந்தது. இத்தகைய ஓவிய முறை அவனுக்கு முன் கண்டறியாத ஒன்றன்று. ஆனால் இப்போது அது அவன் கருத்துக்கு உகந்ததாக அமைவுற்றது. அத்துடன் அறையிலிருத்த சமயம் அவள் பாடிய பாடலில் ‘மருவெளியின் புல் பரப்பை’ அவள் உவமையாக வழங்கியிருந்தாள். இவ்வுவமையையே அவன் விசிறிமீது தன் பாடலிலும் பயன் படுத்தினான். ‘விடியற் காலையில் வானத்தை விட்டகலும் நிலா எங்கே செல்கிறது என்ற கேள்வியைக் கேட்டுக் கேட்டு மூளை குழம்பும் மனிதன் எங்காவது உண்டா?’ - இப்பாடலுடன் அவன் விசிறியை ஒரு புறமாக வைத்தான். நெடுமாடத்துக்கு நீண்ட காலம் செல்லவில்லையே என்று கெஞ்சியின் மனச்சான்று அவனை உள்ளாரக் குத்திக்கிளறிக் கொண்டேயிருந்தது . ஆனால் முரசாக்கி படும் துயரை அவன் முதலில் நினைத்து வீடு சென்று அவள் பாடங்களைக் கவனிக்கலானான். ஒவ்வொரு நாளும் அவள் தோற்றத்தில் மட்டுமன்றிக் குணத்திலும் பாச நேசங்களிலும் வளர்ச்சியுற்றே வந்தாள். அவள் குண அழகே உடலழகினும் மிகுதியாக எங்கும் எளிதில் காணக்கிடையாத ஒன்றாய் விளங்கிற்று. இவ்வளவு முழுநிறை பண்பு வாய்ந்த ஓர் அழகுச் செல்வம் தன் மனம்போல மேலும் பண்படுத்தி உருவாக்கும் நிலையில் தன் வசமிருந்ததே என்ற எண்ணம் கெஞ்சியின் மனத்துக்கு மிகவும் இனியதா யிருந்தது. ஆயினும் முற்றிலும் ஓர் இளைஞனிடமிருந்தே முழுப்பயிற்சியும் பெறவேண்டும் நிலையிலுள்ள ஒரு நங்கைக்கு மட்டுமீறிய தன்முனைப்பும் தன்னாண்மையும் ஏற்பட்டுவிடுவது இயல்பு என்றும் அவன் அஞ்சினான். முதன் முதலாக, சென்ற சில நாட்களில் அரசவை விருந்துகளில் என்னென்ன நடைபெற்றன என்பதைக் கெஞ்சி அவளிடம் எடுத்துரைத்தான். அதன் பின் இசைப் பாடங்கள் தொடங்கின. ஆனால் இதற்குள்ளாக அவன் வெளிச் செல்ல வேண்டும் வேளை வந்தது. ‘அந்தோ! இவர் ஏன் எப்போதுமே என்னை விட்டு அகன்று அகன்று செல்ல வேண்டியதா யிருக்கிறது!’ என்று அவள் ஏங்கினாள். எனினும் பல நாட்கள் இவ்வாறு பழகிவிட்டபின் அவள் முன் போலத் துடிதுடிப்ப தில்லை. நெடுமாடத்தில் வழக்கம் போலவே ஆயிடமிருந்து அவனுக்கு ஒரு வாய்ச்சொல்கூடக் கிட்ட வில்லை. அதே சமயம் வாளா இருக்கும் நேரமெல்லாம் அவன் மனத் திரையில் ஆயிரம் ஐயங்கள், ஆயிரம் புரியாப் புதிர்கள் எழுந்து சுழன்றன. இத்தகைய சமயங்களில் அவன் யாழெடுத்துப் பாடுவது வழக்கம். ‘நூக்கி’ நீர்வீழ்ச்சி ஊடறுத்துச் செல்லும் நுண்முனைக் கூர்ங்கல்கள் தம்மைத் தலைக்கணை ஆக்கினேன் கொல் என்னும் ஆரமைதி தந்திடும் அன்பிலா மெல்லியல், நின் அருகிருக்கும் என்னுளமே! இச்சமயம் ஆயின் தந்தை அவ்விடம் வந்தார்! அணிமையில் நிகழ்ந்த விழாக் காட்சிகளிடையே கெஞ்சிக்கு வழக்கத்தையும் மீறிக் கிடைத்த பெரு வெற்றிகளைப் பாராட்டி அவர் பேசினார். ‘ வயது சென்றவன் நான். மாட்சிமைமிக்க பேரரசர் நால்வர் ஒருவர்பின் ஒருவராகத் தவிசேறி வாழும் வாழ்வைக் கண்டவன் தான் நான். ஆயினும் இத்தனை நாட்களிலும் இவ்வளவு எழுச்சி மிக்க ஆடலையோ, கிளர்ச்சி யூட்டும் பாடல்களையோ நான் கண்டதுமில்லை. கேட்டதும் இல்லை. இற்றை நாளில் ஏராள மானவர்களிடம் ஏராளமான பல்வகைத்திறங்களும் நயங்களும் அமைந்திருக்கின்றன என்பது உண்மையே. இவற்றை நன்கு பயன்படுத்தும் ஆட்சியாளரின் திறமையும் பெருஞ் சிறப்புக்குரியதே. எனினும் என்னளவில் இதில் என் உவகைதான் மிகமிகப் பெரியது - என் வயது ஒரு சில ஆண்டுகள் குறைந் திருந்தால்கூட, இவற்றில் நானும் கட்டாயம் கலந்து கொண்டிருப் பேன்’ என்றார் அவர். ‘ஆடல் திறமை யுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்க அப்படி எந்தத் தனிப்பட்ட முயற்சியும் மேற்கொள்ளப்பட வில்லை யென்றே கருதுகிறேன். என் கருத்துரை பகர்வதானால், அத்தனையிலும் பார்ப்பவர் உள்ளத்தில் ஆழ்தடம்பதித்த செய்தி சூஜோவின் காற்றாடிவண்ண நடனம்தான். மிகச் சிறந்த பகுதியாக உள்ளத்தில் நீடித்து நிலவும் காட்சியும் அதுதான். ஆயினும் ஐய, தாங்கள் எங்களுடன் கலந்துகொண்டிருந்தால் எம் தந்தையர் ஆட்சிக் காலத்துக்குக் கட்டாயமாக ஒரு தனிப்பேரொளி கிட்டியிருக்கும்’ என்று கெஞ்சி பாராட்டினான். இதற்குள் ஆயின் உடன் பிறந்தார்கள். வந்துவிட்டார்கள் மாடிப் படிகளிலேயே அமர்ந்த வண்ணம் அவர்கள் தத்தம் பல்வேறு கருவிகளையும் இயக்கி அவற்றின் கலவையாய் ஒரு சிறிய இசை விருந்து அளித்தனர். இன்னாரென்று அறியாத அணங்குடன் கெஞ்சி கொண்ட சந்திப்பு தற்செயலானதாகவும் மிகக் குறுகிய காலமே நிலவியதாகவும் அமைந்தாலும், அதுவே அவன் உள்ளத்தை ஆழ்ந்ததுயர அலைகளில் தோய்விக்கப் போதியதாயிருந்தது. ஏனெனில் நான்காவது மாதத்தில் பேரரசின் உரிமைபெற்ற இளவரசனுக்குரிய இளமனைவியாக இருந்தவள்அவளே. அவள் மூளையும் ஒரே குழப்ப நிலையில்தான் இருந்தது. ‘கெஞ்சி ஏன் தன்னை மறுபடியும் சந்திக்கவில்லை? தான் யார் புதல்வி என்பதை அவன் அறியாமலா இருக்கமுடியும்?’ - இவ்வாறு அவள் சிந்தனை சென்றது. புதல்வி என்பது தெரிந்தும் புதல்வியாரில் எந்தப் புதல்வி என்று தெரியாமல் அவன் குழம்பியதை அவள் எவ்வாறு அறிவாள்? அத்துடன் மிக விசித்திரமான நிலைகள் ஏற்பட்டாலன்றி, கோக்கிடன் சீமாட்டியின் மாளிகை அவன் நடமாட்டங்களுக்கு உகந்த இடமாக அமையுமென்று எவரும் கூறடிமுயாது. இந்நிலைமைகளிடையே அவள் பொறுமையிழந்து கடுந்துயரிலாழ்ந்தாள். கெஞ்சிக்காகவே இதயப் படபடப்புடன் காத்திருந்து காத்திருந்து அவள் உளமாழ்கினாள். மூன்றாம் மாதத்தின் இருபதாம் நாளில் அவள் தந்தையாகிய வலங்கை அமைச்சர் ஒரு வில்லாண்மைப் போட்டி நடத்தினார். ஆடவர் பெண்டிர் பலர் அதில் கலந்து கொண்டனர். அதன் முடிவில் ஒரு மலர்விழா நடைபெற்றது. அச்சமயம் செவ்வலரிப் பூக்களின் காலம் கடந்து விட்டது. ஆயினும் எல்லாச் செடிகளின் பருவமும் கழிந்தபின் இரண்டு செடிகள் மட்டும் மலர் விட்டுக் கண்ணைக் கவரும் காட்சியளித்தன. கோக்கிடன் சீமாட்டியின் பேர்த்தியரின் புகுமுக விழா அணிமையிலே நடைபெற்றிருந்தது. அதை ஒட்டி வலங்கை அமைச்சர் தம் மாளிகையைப் புதுப்பித்துப் புது மாளிகையாகக் கட்டியிருந்தார். அதன் ஒவ்வொரு கூறும் காலத்துக்கேற்ற புத்தம்புதிய வண்ணங்கள் உடையதாயிருந்தது. அவர் சில நாட்களுக்கு முன் அரண்மனைக்கு வந்திருந்த சமயத்தில் விழாவில் கலந்து கொண்டு இம்மாளிகையை வந்து காணும்படி கெஞ்சியை அழைத்திருந்தார். ஆனால் விழாவின்போது கெஞ்சி வராதது கண்டு அவர் மனமுளைந்தார். எப்படியும் கெஞ்சி வராமல் விழா வெற்றி பெறாது என்று கண்டு, அவர் தம் புதல்வன் ஷீநோ ஷோஷோவை ஒரு பாடலுடன் கெஞ்சியிடம் அனுப்பினார். ‘ என் மலர்கள் எங்கும் தோட்டங்களில் காணத்தக்கவையாக மட்டும் இருந்தால், நான் உங்களை அழைக்கத் துணிவு கொண்டிருக்கவே மாட்டேன்’ என்று அவர் பாடல் தெரிவித்தது. அழைப்பு வந்த சமயம் கெஞ்சி சக்கரவர்த்தியின் பணிவிடையில் ஈடுபட்டிருந்தான். கெஞ்சி அமைச்சர் முடங்கலை அவரிடம் காட்டியபோது அவர் புன்முறுவல் பூத்தார். ‘தம் மீதும் தம் மலர்கள் மீதும் அவருக்குத் தான் எவ்வளவு பெருமை!’ என்ற சொற்களுடன் அவர் கெஞ்சி பக்கமாகத்திரும்பி மீட்டும் தொடர்ந்தார். ‘அவர் உன்னை இவ்வளவு வருந்தி அழைப்பதால் நீ கட்டாயம் போகத்தான் வேண்டும். அத்துடன் உன் அரை உடன் பிறந்தார்கள். அவர் வீட்டில் வளர்ந்தவர்கள் ஆகவே நீ அவரை முற்றிலும் அயலாராக நடத்தக்கூடாது’ என்றார். கெஞ்சி தன் அறைக்குச் சென்று உடையணிந்து கொண்டு புறப்பட்டான். விழாக்கூடத்தில் அவன் சென்று கலந்து கொள்வதற்குள் நேரம் ஆய்விட்டது. ஆயினும் அவன் வருகை அரசருக்குரிய வீறமைதியுடையதாயிருந்தது. அவன் மேலாடை உட்புறம் மஞ்சட் சாயலான வெண்மை நிறமான சீனப் பட்டாயிருந்தது. அவனது அடர்த்தியான தேறல்சிவப்பான அங்கியை அது நன்கு எடுத்துக் காட்டிற்று. அங்கியின் பின்தானை பின்புறம் மெல்லக் காற்றில் அசைந்தாடிற்று. மொத்தத்தில் பூ வேலை செய்யப்பட்ட பொன்னாடை அணிந்துவந்த அமைச்சர்களிடையே கூட, அவன் தோற்றம் வீறமைதி மிக்கதாயமைந்தது. அவன் வருகையே விழாக் கூட்டத்துக்கு வெற்றி தருவதாயிருந்தது. கெஞ்சி வந்ததன்பின் செவிக்கினிய பாடல்கள் பல பாடப்பட்டன. விருந்தில் தேறல் தாராளமாகப் பரிமாறப் பட்டது. இரவு நெடு நேரம் வரை விழித்திருந்து குடித்ததனால், கெஞ்சிக்குத் தலைவலி உண்டாயிற்று. ஆகவே சிறிது காற்றில் உலாவலாமென்று புறப்பட்டான். கோக்கிடன் சீமாட்டியின் புதல்வியர்கள் அரண்மனையின் உட் கூடத்திலிருந்தனர் என்பது அவனுக்குத் தெரியும். அவர்கள் அவனுக்கு உடன் பிறந்த நங்கையர் போன்ற உறவுடையவராதலால், அவன் அவ்வுரிமை யுடன் கீழ் வாயிலை அணுகி அங்கே ஓய்வு கொண்டு அமைதி நாடினான். அமைச்சர் பெருமையுடன் பாராட்டிக் கொண்ட கொடிமுல்லை மலர்கள் படர்ந்திருந்த பகுதி இதுவே. மரத்தாலான தட்டிகளை விலக்கிக் கொண்டு, மாடத்தின் பெண்டிர் சிலர் அக்காட்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இன்னும் புத்தாண்டு விழாவின் நடன உடையிலேயே இருந்தனர். அத்துடன் இச்சமயம் அவர்கள் தங்கள் வண்ண மேலங்கிகளைப் பலகணிச் சட்டத்தில் உலாவிட்ட வண்ணம் தனிமை யுரிமையுடன் ஊடாடியிருந்தனர். புஜித்சுபோ மாளிகை யிலிருந்த கட்டுப்பாட்டுக்கு இது முற்றிலும் மாறுபட்டிருந்தது. தன் வருகைக்குக் கெஞ்சி உரக்க விளக்கம் கூறிக் கொண்டான். ‘மலர்விழாக் குழுவின் ஆர்ப்பாட்டங்களினால் நான் மிகவும் களைப்புற்றிருக்கிறேன். என் உடன்பிறந்த நங்கையர்களுக்கு நான் தொல்லை கொடுக்க விரும்ப வில்லையானாலும் வேறு புகலிட மில்லாமல் வந்துள்ளேன்’ - இவ்வாறு கூறிக்கொண்டே அவன் பெண்களின் கூடத்துத் தலைவாயிலை அணுகினான். அத்துடன் அதன் இடைத் தட்டியை அவன் தன் தோள் கொடுத்துத் தள்ளினான். இச்சமயம் அணங்குகளில் ஒருத்தி சிரித்துக் கொண்டே மறுமொழி பகர்ந்தாள். ‘புகலிடமா, நல்ல புகலிடம்தேடினீர்கள். ஏழை உறவினர்கள்தான் குடும்பத்தின் வளமான உறுப்பினர்களைத் தேடிப் புகலிடம் நாடுவார்கள். இது நீங்கள் அறியாததன்று. ஆனால் நீங்கள் என்ன நினைத்து இந்தத் தொந்தரவுக்கு ஒருப்பட்டீர்களோ?’ என்றாள். ‘என்ன குறும்புக்காரிகள் இவர்கள்!’ என்று கெஞ்சி தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் தான் முதலில் கருதியதுபோல அவர்கள் பணி நங்கையர்கள் அல்லர் என்று கண்டான். அவர்கள் மேனிலைப்பட்டவர்களே என்பதை அவர்கள் நடையுடை தோற்றச் சாயலுந் தொனியுமே காட்டின. உண்மையில் உயர்ந்த மணப் பொருள்களின் மெல்லலைகள் கூடமெங்கும் பரவின. பட்டாடைகளின் சலசலப்பு இருளினூடாக மெல்ல வந்து இரகசியம் பேசின. அணங்குகள் கோக்கிடன் சீமாட்டியின் தங்கையரும் தோழியருமே என்பதில் இப்போது அவனுக்கு ஐயமில்லை. அக்குடும்பத்தினர் அனைவருமே காலத்தின் புத்தம்புதுப் பாணிக்குரிய இன்பப் பழக்கவழக்கங்களில் மிதந்தவர்கள். நங்கையர்களும் பொது மக்களிடையே காணப்படும் அடக்கப் பண்புக்குக் கட்டுப் படாத நிலையில் தாராளமாகப் பலகணிகளில் வந்திருந்து வெளியில் நடமாடுபவர்களை நோக்கும் வழக்கமுடையவர்கள். இவை அவனுக்குத் தெம்பு தந்தன. தன் ஆர்வக் கனவு நிறைவேறுமென்ற நம்பிக்கை இச்சமயம் கூட அவனுக்குச் சிறிதும் ஏற்படவில்லை ஆயினும் முந்திய சந்திப்பின் நினைவால் உள்ளார உந்தப்பட்டு அவன் தன் வாய்க்குள்ளாகவே ஒரு பாடலைப் பாடியவாறு முன்னேறினான். இஷிகாவாவிலே இஷிகாவாவிலே கோமா நாட்டானொருவன் கொண்டேகினான், என் அரைக்கச்சையை.....’ அவன் பாட எண்ணிய பாடல் இதுவே. ஆனால் தறுவாய்க்கிசைய அவன் ‘அரைக் கச்சையை’ என்ற தொடரினிடமாக ‘தாள் விசிறியை’ என்ற தொடரைப் புகுத்திப் பாடினான். அணங்குகளில் தன் காதல் துணைவியார் என்று கண்டுணர இக்குறிப்பு மூலம் வழி ஏற்படும் என்று அவன் நம்பினான். ‘ஐயையோ! என்ன தவறான பாடல்? அப்படிப்பட்ட கோமா நாட்டவனை இங்கு யாரும் காணவில்லையே!’ என்று விடையிறுத்தது ஒரு நங்கை குரல். அவன் கருத்திலிருந்தவள் அவளல்லள் என்று இதனால் தெரிந்தது. ஆனால் மற்ற நங்கையிடமிருந்து எத்தகைய மாற்றமும் வெளி வரவில்லை. ஆயினும் தனக்குள்ளாக அவள் கொண்ட ஏக்க நெடுமூச்சின் அரவம் அவன் செவிப்பட்டது. அவள் அமர்ந்திருந்த வண்ணத் தட்டியின் பக்கமாக அவன் மெல்ல நகர்ந்து சென்று, திடுமெனத் துணிவுடன் அவள் கையைப் பற்றியவாறு பாடினான்: ‘வேட்டைவிரும்பு கின்ற இந்நாளில் என்னம்பு கோட்டமுற்றுக் குறிதவறுமாகில், குறியதுவே தேட்டமுற்ற அற்றைக் காலையரை யிருளின் நாட்டக்குறை யென்றே நாடு நீ நன்னெஞ்சே!’ இப்பாடல் கேட்ட பின் அணங்கும் தன்னை மேலும் மறைக்கக் கருதாமல் அவன் குறிப்புக்கு எதிர்குறிப்பு விடுத்தாள்: ‘நெஞ்சறிந்த மெய்யம்பே எய்தனை நீயாகில் பிஞ்சுநிலா விளிம்பின் பேதைஒளி பொய்த்தாலும் கொஞ்சுங் குறிதவற நேராதிளமனமே!’ அவன் அகமகிழ்ந்தான். ஆம். இது அவள் குரல்தான் ஆயினும்............ 9. ஆய் புதிய சக்கரவர்த்தியின் தவிசேற்றம் பலவகையிலும் கெஞ்சிக்கு எதிராகவே அமைந்தது. ஏனெனில் அவன் பெற்றிருந்த பதவி உயர்வுடனே புதிய பல பொறுப்புகளும் அவனை வந்து சார்ந்தன. அவன் இரகசிய நட்புத் தொடர்பு களுக்கு இவை குந்தகமாயின. அவன் தம்மைப் புறக்கணித்து விட்டானென்றும், முற்றிலும் மறந்து தம் நெஞ்சம் முறித்து விட்டானென்றும் பல திசைகளிலிருந்தும் பல முறையீடுகள் எழுந்தன. அத்துடன் ஊழே அவனுக்கெதிராகத் திரும்பியது போலிருந்தது - அவன் காதல் உள்ளத்தின் ஆழ்ந்த ஏக்கத்துக்குக் காரணமான ஒருவர் அவனைவிட்டு நொடுந்தொலை சென்றுவிட நேர்ந்தது. பழைய சக்கரவர்த்தி தாம் விரும்பியபடி வாழும் உரிமையை இப்போது முழுவதும் பெற்றுவிட்டதனால், அவ்வணங்கு முன்னிலும் இடைவிடாது அவருடன் தங்கி வாழ நேர்ந்தது. இந்தக் கூட்டுறவில் அவர் மன அமைதியைக் குலைக்க கோக்கிடன் சீமாட்டியும் அருகிலில்லை. ஏனெனில் அவர் புறக்கணிப்பினால் கடுஞ்சினங் கொண்டு, அவள் இப்போது தன் புதல்வன் அரண்மனையைவிட்டு வெளியே வருவதையே நிறுத்திக் கொண்டாள். முன்னாள் சக்கரவர்த்தியின் ஒதுங்கிய வாழ்விடையே பல கேளிக்கைகளும் விருந்துக் கூட்டங்களும் அவருக்கு அகமகிழ்வு உண்டுபண்ணின. நாடெங்கும் இவைபற்றிய பேச்சாகவே இருந்தது. தம் புதிய நிலையில் இவையே அவருக்கு மனநிறைவும் அளித்தன. ஆயினும் அவருக்கு இப்போது ஒரே ஒரு வருத்தம் இருந்தது - அது பேரரசுரிமைக்குரிய இளவரசரைப் பற்றியது. அரண்மனைச் சூழலுக்கு வெளியே இளவரசருக்கு ஆதரவு எதுவும் இல்லாததால், அவன் நிலை மிகவும் பலவீனமாய் இருந்ததாக அவர் கருதினார். இதுபற்றி அவர் அடிக்கடி கெஞ்சியிடம் பேசுவதுண்டு. அத்துடன் மினமோட்டாக்குடியின் ஆதரவைத் தமக்குத் தேடித்தரும்படி அவர் மீண்டும் மீண்டும் கெஞ்சியை வற்புறுத்தி வேண்டினார். இத்தகைய உரையாடல்கள் பல சிக்கல்களுக்கு வழி வகுத்தன. ஆனால் இளவரசர் நன்மைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள , கெஞ்சிக்கு இது வாய்ப்பளித்தது அந்த அளவில் அவன் மகிழ்வே அடைந்தான். இச்சமயம் எதிர்பாரா நிகழ்ச்சி ஒன்று ஏற்பட்டது ரோக்குஜோ சீமாட்டிக்கு மாண்ட அவளது கணவன் செம்போ இளவரசன் மூலம் ஒரு புதல்வி இருந்தாள். அவள் இப்போது ஈசேயின் இறைநங்கையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள். இத்தேர்வு அறிவிக்கப்பட்ட சமயத்தில் சீமாட்டி கெஞ்சியிடம் மிகவும் மனக்கடுப்புக் கொண்டிருந்தாள். அவன் தன்னிடம் சரிவர அன்புடன் நடந்துகொள்ளவில்லை என்று அவள் மனநைவுற்றதே இதற்குக்காரணம். இதன் விளைவாக, தன் புதல்வியின் முதிரா இளமையைச் சாக்கிட்டு அவள் தலைநகரினின்றும் வெளியேறி அப்புதல்வியுடன் ஈசேயில் சென்று நிலையாகத் தங்க உறுதிகொண்டாள். தன் அடங்காக் கோபத்தில் அவள் இச்சமயம் உளந்திறந்து தன் மனக்குறைகளை எல்லாரிடமும் கொட்டினாள். நகரை விட்டுச் செல்வதற்கான உண்மையான நோக்கம் எங்கும் அம்பலமாயிற்று. செய்தி விரையில் முன்னாள் சக்கரவர்த்தியின் காதுகள் வரை சென்றெட்டிற்று. அவர் கெஞ்சியை வரவழைத்துப் பேசினார். ‘ எனது உடன் பிறந்தாராகிய மாண்ட இளவரசர் மக்கள் அன்புக்கும் நன்மதிப்புக்கும் எவ்வளவோ உரியவர் என்பதை நீ அறியாதிருக்கமுடியாது. அப்படியிருந்தும் ஆய்ந்தோய்ந்து பாராத உன்னுடைய இத்தகைய துடுக்குத்தனத்தால் நீ அவர் குடும்பத்தின்மீது ஒரு கறை உண்டு பண்ணிவிட்டாய். என்பிள்ளைகள் வகையில் எனக்கு எவ்வளவு பொறுப்பு உண்டோ, அவ்வளவும் அவர் புதல்வி வகையிலும் எனக்கு உண்டு. ஆகவே அப் பெண்மணியின் நற் பெயரைக் காப்பதில் இனிமேலாவது நீ உன் முழு ஆற்றலையும் பயன்படுத்துவாய் என்று நம்புகிறேன். சிறுபிள்ளைத்தனமான உன் உணர்ச்சிகளை நீ கட்டுப் படுத்தாவிட்டால், விரைவில் மிகப் பெரிய இகழுக்கு ஆளாய்விட நேரும்’ என்றார். தந்தை ஏன் இவ்வகையில் இவ்வாறு தலையிட்டு மனக்கலக்கமடைகிறார் என்று கெஞ்சியால் உணர முடியவில்லை. அவர் கண்டிப்பினால் புண்பட்ட மனத்துடன் அவன் ஏதோ கூற வாயெடுத்தான். ஆனால் தன் உண்மைத் தகுதிக்கேடுகளை நோக்க இது கடுமையானதன்று என்று கருதியவனாய்த் தன்மதிப்பைமட்டும் காத்து விலகி நின்றான். முன்னாள் சக்கரவர்த்தி மேலும் தொடர்ந்து பேசினார்: ‘இம்மாதிரி காரியங்களிலெல்லாம் நம் ஈடுபாட்டுக்குரிய மாது எத்தகையவளானாலும் தன் தன்மதிப்புக்கு ஊறு ஏற்பட்டு விட்டதாக அவள் கருத இடந்தரக் கூடாது. உணர்ச்சியும் ஒத்துணர்வும் இல்லாமல் அவள் நடத்தப்பட்டுவிட்டதாக அவள் எண்ணவும் நேரலாகாது. இவ் வெச்சரிக்கைகளைப் பொருட் படுத்தாவிட்டால், அப் பெண்டிரால் கேடு விளையா மலிராது.’ தந்தை இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் நேரமுழு வதும் கெஞ்சியின் உள்ளம் அவனுக்கு உள்ளாக வேறு குரலெழுப்பிக் கொண்டிருந்தது. ‘இந்தச் சிறுசெய்தியிலேயே தந்தை என்னைக் கெட்டவனென்று கருதிவிட்டாரே! அவருக்குத் தெரியாத பெருந்தவறுகள் எத்தனை? - அவற்றை அவர் அறிந்துவிட்டால்! தன் பயங்கர இரகசியம் அவருக்குத் தெரியவந்தால்! என்ன நடக்குமோ’ என்ற நினைவே அவன் மூளையைக் கலக்கிற்று. தந்தைக்கு வணக்கம் கூறியவண்ணம் அவன் வெளி யேறினான். பிறர் நற்பெயர் கெடுப்பது பற்றிய தந்தையின் பேச்சு கெஞ்சியின் உள்ளத்தைச் சுட்டறுத்தது. ரோக்குஜோ சீமாட்டியின் பதவி ஒருபுறம், கணவனிழந்த அவள் நிலை மற்றொருபுறம் அவளுக்கு உச்சநிலை மதிப்புத் தந்திருந்தது என்பதை அவன் இப்போது கண்டான். ஆயினும் அவள் செய்தியை எல்லாருமறிய அம்பலப்படுத்தியது அவனல்ல. நேர்மாறாக அது வெளிவராமல் தடுப்பதிலேயே அவன் அரும்பாடுபட்டிருந்தான். அத்துடன் அவள் அவனிடம் தட்டிக் கொடுத்து வேடிக்கை பார்க்கும் மனப்பான்மையே காட்டி வந்ததாக அவன் கருதினான். இது ஒருவேளை அவர்களிரு வரிடையே இருந்த வயது வேறுபாடு காரண மாயிருந்திருத்தல் கூடும். இறுதியில் அவளிடமிருந்து அவன் நெடிது பிரிந்திருந்ததுகூட அவள் அவனிடம் காட்டிய உணர்ச்சியற்ற கடுமையின் காரணமாகவே தான். இந்நிலையில் அவர்கள் உறவு பற்றிய எல்லாச் செய்திகளும் முன்னாள் சக்கர வர்த்திக்கும் அரசவையினர் அனைவருக்கும் தெரியவந்து விட்டது பற்றி அவனுக்கு மிகுந்த மன வருத்தமே ஏற்பட்டது. இத்தனையும் தன் அடக்கக்கேட்டின் பயனே என்று அவன் தன்னைத்தானே நொந்துகொண்டான். இச்செய்தியைச் செவிமடுத்துக் கொண்டவர்களில் அசகாவ் இளவரசி ஒருத்தி. தானாவது இத்தகைய நடத்தை களுக்கு ஆளாகாமலிருக்க வேண்டுமென்று அவள் எண்ணினாள். ஆகவே அவன் கடிதங்களுக்குப் பதிலாக அவள் இதுவரை அனுப்பிவந்த குறுகிய பொதுநிலைக் குறிப்பு களையும் அவள் நிறுத்திவிட்டாள். மெல்லியல்புமிக்க இத்தகைய பெண்டிர்கூட தன்னைப் பற்றி இவ்வாறு எண்ணமுடியும் என்பதைச் கெஞ்சி எளிதில் நம்பமுடியவில்லை. அவளிடமும் அவன் ஆர்வப்பாசம் ஒரு சிறிதும் குறைவுறாமல் நீடிக்கவே செய்தது. இதே நிகழ்ச்சி ஆய் இளவரசிக்கும் தெரியவந்தது. கெஞ்சியின் நிலையற்ற அன்பின் இந்தப் புதிய உதாரணம் கண்டு அவள் அடைந்த துயரம் பெரிதாகவே இருந்தது. ஆயினும் ஒளிவு மறைவு மீறி வெளிப்பட்டுவிட்ட இந்த ஒரு தவற்றைமட்டும் குறிப்பிட்டுக் கடிந்து கொள்வதில் யாதொரு பயனும் இல்லை என்றே அவள் கருதினாள். இது பற்றி வெளிக்கு அவள் முற்றிலும் பராமுகமாய் இருந்தது கண்டு கெஞ்சி வியப்புற்றான். ஆயினும் அவள் நிலை இப்போது அவனுக்குத் தாங்க வொண்ணாததாகவே இருந்தது. அவன் உள்ளத்தில் எத்தகைய கிளர்ச்சியும் இடம்பெறவில்லை. பெற்றோர் அவளை வந்து காண இருப்பதாகச் செய்தி வந்தபோது, அவளும் அவள் நண்பர்களும் ஒருபுறம் வியப்பும், ஒருபுறம் மகிழ்ச்சியும் கொண்டனர். ஆனால் எல்லா உள்ளங்களிலும் மகிழ்ச்சி யிடையே தீமையின் முன்னிழல்களும் படர்ந்தன. ஆய் இளவரசியின் உடல் நலமவாவி எங்கும் வழிபாடுகள் நடைபெற்றன. எல்லாத் திருக்கோயில்களிலும் சிறப்பு வேண்டுதல் நிகழ்த்த ஏற்பாடாகி யிருந்தது. இத்தகைய சமயங்களில் கெஞ்சி அவளைவிட்டு அகல்வது முடியாத செயல். ஆனால் இது காரணமாகவே அவனிடம் ஆர்வங்குன்றாத பலர் தம்மை அவன் புறக்கணிப்பதாக எண்ண இடமுண்டாயிற்று. காமோவுக்குரிய இளநங்கை இன்னும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. பலநாட்கள் கடந்து இறுதியில் கோக்கிடன் சீமாட்டியின் புதல்வி சான் நோ மாயா மீது அது வந்தமைந்தது. புதிய சக்கரவர்த்தியாகிய அவள் உடன்பிறந்தானும் தாய்ப் பேரரசியும் அவளிடம் மிகுந்த பற்றுதலுடையவர்கள். உலக வாழ்விலிருந்து அவள் ஒதுங்குவது அவர்களுக்கு ஒரு பேரிடியாகவே தோற்றிற்று. அத்துடன் மன்னுரிமை இளவரசி களிடையே அதற்குரிய தகுதியுடையவர்களாக வேறு யாரும் கிடையாது. வேறு வழியின்றி அவர்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. இறைநங்கையின் அணிசூட்டு விழாவைச் சக்கரவர்த் தியாலும் மாற்ற முடியவில்லை. ஆனால் அதை உச்ச அளவு ஆடம்பரமுடையதாக்கச் சக்கரவர்த்தி உறுதி கொண்டார். அத்துடன் வழக்கமான காமோ விழாவில் அவர் சிறிது சிறிதாக இணைத்துச் சேர்த்த கவர்ச்சிக் கூறுகள் அதையும் ஈடிணையற்ற ஒரு பெரு விழாக்காட்சியாக்கிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னியிடம் அவர் கொண்ட பற்றுதலே இம் மாறுதலுக்குக் காரணமாயிற்று. விழாவின் தலைநாளன்று விழாநங்கையுடன் குறிப்பிட்ட சில பெருமக்கள், இளவரசர் பரிவாரத்துடன் பரிவாரமாகச் செல்வது வழக்கம். பேரவையில் கட்டிளமையும் வடிவழகும் மிக்கஇளைஞரை இவ்வகைக்குத் தேர்ந்தெடுக்க, சக்கரவர்த்தி பெருமுயற்சிகள் மேற்கொண்டார். அத்துடன் அவர்களில் ஒவ்வொருவரும் என்னென்ன நிற ஆடை உடுக்கவேண்டும், காலுறைகள் மீது என்னென்ன படிவங்கள் தீட்டவேண்டும், குதிரைகள் மீது எவ்வகைச் சேணங்கள் மாட்டவேண்டும் என்பவற்றையெல்லாங்கூட அவர் தாமே முன்னின்று முடிவுசெய்தார். இளவரசன் கெஞ்சியும் இந்தப் பரிவாரத்துடன் செல்லவேண்டுமென்பது அவர் தனிக்கட்டளை. இது ஊர்வலம் பார்ப்பவர்களின் ஆர்வத்தைப் பன்மடங்காகப் பெருக்கி விட்டது. வழிநெடுக இருந்து பார்ப்பதற்குரிய வண்டிகளை அமர்த்திக் கொள்ளப் பலரும் முந்திக்கொண்டு போட்டி யிட்டனர். முதல் வளாகத்தை அடுத்த அரச வீதியில் ஊர்வலம் வரும் சமயம் அக்காட்சி வருணிக்க முடியாத ஆடம்பர ஆரவார முடையதாயிருந்தது. இருபுறமும் ஒதுக்கி வகுக்கப்பட்டிருந்த ஒடுங்கிய இடைவழியினூடாக மக்கள் திரள்திரளாக நெருக்கியடித்துக்கொண்டு சென்ற வண்ணமாயிருந்தனர். ஊர்வலத்தின் பாதையில் ஆங்காங்கே வண்ணப்பட்டுகள், சால்வைகள் கொண்டு புனையப்பட்ட தங்கு பந்தல்கள் வகை வகையான புத்தழகுப் பாணியில் ஒப்பனை செய்யப்பட்டிருந்தன. தனிப்பட்ட விழாக் காட்சியினுள் ஒரு விழாக் காட்சியாக அவை வியக்கத்தக்க மாயக் கவர்ச்சி யுடையவையாயிருந்தன. இத்தகைய தறுவாய்களில் பொது மக்களிடையே வந்து கலந்து கொள்ளும் வழக்கம் ஆய் இளவரசிக்குக் கிடையாது. தற்போதைய உடல்நிலையில் அவள் அதைக் கனவு கண்டிருக்கவும் மாட்டாள். ஆனால் அவள் பாங்கியர் அவளைச் சூழ்ந்து பலவாறு நெருக்கினர். ‘அம்மணி , நாம் போகத்தான் வேண்டும். இன்று இத்தனை மக்கள் திரண்டு செல்கிறார்க ளென்றால், அது கெஞ்சியைக் காண்பதற்குத்தானே! மலைப் பக்கத்திலிருந்து காட்டுப் பழங்குடியினர் முதல் எவ்வளவோ தொலை மாகாணங்களிலிருந்து பல்வேறு வகைப்பட்டவர்கள் தம் மனைவி மக்களுடன் வந்து குழுமுகின்றனர். கெஞ்சியுடன் எத்தகைய தொடர்பு மற்றவர்களே இவ்வளவு தொலை நடந்து இவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்ளும்போது, அவருக்கே உரிய அணங்காகிய தாம் அங்கே இல்லாதிருப்பது தகாது’ இவ்வாறு அவர்கள் வாதிட்டனர். இதை அருகிருந்து கேட்ட ஆயின் தாயும் அவர்கள் பக்கமே பேசினாள் ‘உனக்குத்தான் இப்போது உடல்மிகவும் நலமடைந்திருக்கிறதே! இப்போது நீ போவது தான் நல்லதென்று நான் நினைக்கிறேன். அத்துடன் நீ போகா விட்டால் உன் பாங்கியருக்கும் மன ஏக்கம் உண்டாகும்’ என்றாள். கடைசி நேரத்தில் தன்மனத்தை மாற்றிக் கொண்டு ஆய் போக இணக்கம் தெரிவித்தாள். ஆனால் இதற்குள் நேரம் கடந்துவிட்டதால் வண்ண விழாவுக்குரிய ஆடை அணிந்து கொள்ளக்கூட இயலாது போயிற்று. அத்துடன் பார்வை யாளருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடமுழுதும் எள்விழ இடமின்றி வண்டிகள் நிரம்பிவிட்டன. ஆய் இளவரசியின் பரிவாரங்களுக்குரிய பல்வேறு வண்டிகளுக்கும் அவற்றுக் கிடையே இடங்காண்பது அரிதாயிற்று. ஆயினும் ஓரிடத்தில் பின்புறம் ஓர் இடைவெளி எதற்காகவோ விடப்பட்டிருந்தது. ஆய் இளவரசிக்காகப் பல சீமாட்டிகள் தம் வண்டிகளையே அப்பக்கமாகப் பின்வாங்கிக் கொள்ள உவந்து முன்வந்தனர். ஆனால் அவற்றின் நடுவே சூரல் வேய்ந்த தனிச்சிறப்பு வாய்ந்த இரண்டு வண்டிகள் நின்றன. அவை பழம் பாணியிலமைந்த நாட்டுப்புற வண்டிகள் போலத் தோற்றினாலும் ஏதோ ஓர் உயர்குடியைச் சுட்டிக்காட்டும் திரைகள் இடப்பட்டிருந்தன. பூவேலைகள் செய்த தட்டிகளும் துணிமணிகளும் திரையினடி யில் ஒரு சிறிதே மின்னிமினுங்கின. இடையிடையே தெரிந்த கையுறைகள், பாவாடை விளிம்புகள், கைக்குட்டைகள் ஆகியவை வியப்பார்வம் தூண்டும் வனப்பும் கவர்ச்சியும் உடையவையாய் விளங்கின. மிக உயர்நிலையிலுள்ள ஏதோ ஒரு குடியினர் தம்மை யாரும் அடையாளம் அறிந்து கொள்ளா திருப்பதற்காக இத்தகைய வண்டியில் வந்துள்ளனர் என்று கருத இவை இடந்தந்தன. மற்றவர்கள் அணி அணியாக ஆய் இளவரசியை எண்ணி மனமாரப் பின்வாங்கியபோது, இவ் வண்டியிலுள்ளவர்கள் ஒருவிரல்கூட அசைந்து பின்செல்ல மறுத்தனர். ‘எங்களைப் போன்றவர்கள் விலகத்தக்கவர்களல்ல’ என்று அவர்கள் இறுமாப்புடன் கூறினர். ஆயினும் இருசார்புகளிலும் ஏவலர் அச்சமயம் குடித்து அரைவெறியில் இருந்தனர். பூசல் விளைவிக்கத் துடித்துக் கொண்டிருந்த அவர்களைக் கட்டுக் குட்படுத்தி வைப்பது கடினமாயிருந்தது. முதுமையும் அமைதியும் வாய்ந்த மெய்காப்பு வீரர்கள் அவர்களைப் பின்னுக் கிழுத்து நிறுத்த முயன்றும் பயன் ஏற்படவில்லை. வண்டிகளுக்கு உரியவர் இளவரசி ரோக்குஜோவே. தன் மனத்துயர்களிலிருந்து சிறிது விடுதலை கிட்டாதா என்ற நைப்பாசையினாலேயே அவள் விழாவுக்கு வந்திருந்தாள். ஆனால் எவரும் அறியாதபடி அவள் அவ்வளவு இரகசியமாக வந்தாலும், ஆய் இளவரசியின் பரிவாரத்தில் சிலர் அவளை எப்படியோ அடையாளங் கண்டு கொண்டார்கள். ‘நீங்கள் இப்படி எதிர்த்துப் பேசத்தக்க வண்டியல்ல இது. இன்றைய விழாத் தலைவரின் மனைவிக்குரிய மதிப்பை நீங்கள் காட்டாவிட்டால், அது நன்றாயிருக்காது’ என்று அவர்கள் வாதிட்டார்கள், இச்சமயம் கெஞ்சியின் பணியாளர் சிலர் வந்து பூசலில் கலந்து கொண்டனர். ரோக்குஜோ சீமாட்டியின் ஆட்களை அறிந்து கொண்டபோதிலும், இதை வெளிக்காட்டி எதிரிக்கு உதவ வேண்டாமென்று வாளா இருந்துவிட்டனர். புதிய ஆள் பலத்தின் காரணமாக ஆய்இளவரசியின் பக்கமே வெற்றி ஏற்பட்டது. அவள் வண்டியில் அவள் பாங்கியரின் வண்டிகளும் ஒருங்கே முன் வரிசையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. ஆனால் ரோக்குஜோவின் வண்டிகள் பல பெரிய சிறிய வண்டிகளுக்குப்பின் தள்ளப்பட்டன. அங்கிருந்து அவள் எதுவும் காண முடியவில்லை. பார்க்கவந்த காட்சிகளை அவள் பார்க்க முடியாமற் போனதுடன், அடையாள மறியாம லிருப்பதற்காகச் செய்த முயற்சிகளும் யாவும் வீணாயின. அவமானத்துக்கும் அவள் பெரிதும் ஆளாக நேர்ந்தது. அவள் உள்ளம் நைவுற்றுப் புண்பட்டது. இவை போதாமல் அவள் வண்டியின் இருசும், சக்கரங்களில் ஒன்றும் முறிந்து விட்டபடியால். பொதுமக்களில் ஒருவருக்குரிய வண்டிச் சக்கரத்தின் மீதே அதைச் சார்த்திவைக்க வேண்டிவந்தது. இந்தப் பாழாய்ப்போன மக்கள் திரளினுள் ஏன் கலந்து கொண்டோம் என்று சீமாட்டி தனக்குள் தானே கேட்டுக் கொண்டாள். ‘இப்போதே வீட்டுக்குப்போய் விடலாமா? ஊர்வலம் வரும்வரை இம்மாதிரி காத்திருப்பதில் என்ன பயன்?’ என்றும் அவள் எண்ணினாள். ஆனால் கூட்டத்தின் நெருக்கத்தில் திரும்பிச் செல்வதும் கடினமாகவே இருந்தது. அவ்வாறு முயல்வதற்குள்ளாகவே ஊர்வலமும் கண்ணுக்கெட்டிய தொலைவுக்குள் வந்துவிட்டது. ‘அதோ ஊர்வலம்’ என்று கூக்குரல் எழுந்தது. திரும்பிச் செல்லவேண்டு மென்ற சீமாட்டி யின் முடிவும் இதற்குள் தளர்ந்துவிட்டது. கெஞ்சி தன்னைக் கடந்து செல்லுமளவாவது காத்திருக்க அவள் விழைந்தாள். கெஞ்சி அவளைப் பார்க்கவில்லை. அவன் கண் முன் மக்கள் திரளின் தோற்றம் பாய்ந்தோடும் வெள்ளத்தில் கணந்தோறும் மாறிக்கொண்டே செல்லும் நிழற்படிவ உருக்கள் போலிருந்தது. அந்நிலையில் அவன் கண்களில் அவள் எப்படி படமுடியும்? இந்நிலைமை சீமாட்டிக்குத் தெரியாததன்று. ஆயினும் அவள் அடைந்த ஏமாற்றம் இதனால் ஒரு சிறிதும் குறைபடவில்லை. இருவரிசைகளிலும் அணிவகுத்து நிறுத்தப்பட்ட வண்டிகள் மலர்மாலைகள் தூக்கப்பட்டு விழாக்கோலத்தில் ஒப்பனை செய்யப்பட்டிருந்தன. ஆர்வமிக்க சீமாட்டிகள் அதில் எள்விழ இடமின்றி எங்கும் நிறைந்து எப்புறமும் பொங்கி ஆர்ப்பரித்தனர். நிற்க இடமில்லா நிலையில் கூடப் பின்தள்ளப் பட்டுவிட விருப்பமின்றி யாவரும் முன்னே நெருக்கித் தள்ளிக்கொண்டிருந்தனர். இதனால் மக்கள் வெள்ளம் நிலைகொள்ளாது கொந்தளித்தது. ஊர்வலத்தில் செல்லும் பெரிய மனிதர்கள் தம்மைக் கண்டறிந்தார்களா இல்லையா என்பது பற்றிச் சிறிதும் கவலைகொள்ளாமல், பல்வேறு மாதரும் தம்முகத்திரையை விலக்கிப் புன்முறுவல் செய்து வணக்கம் கூறினர். அவ்வப்போது ஊர்வலத்திலும் ஒருவரிருவர் பதில் வணக்கம் செய்தும் புன்னகை காட்டியும் சென்றனர். பார்க்க வந்தவர்களிடையே ஆய் இளவரசியின் பரிவாரந்தான் அளவிலும் தோற்றத்திலும் முனைப்பாயிருந்தது. அதைக் கடந்து செல்லும்போது கெஞ்சியே முகந் திருப்பி அதிலுள்ளவர்களைத் தனித்தனி கவனித்து வணக்கம் தெரிவித்தான். அதன்பின் குதிரை மீது இவர்ந்து சென்ற ஒவ்வொருவரும் ஒருவர்பின் ஒருவராக அந்த இடத்துக்கு வந்தவுடன் நின்று, அவ்வண்டியிலிருந்தவர்களை ஆரஅமர நோக்கி வணக்கம் செய்தேசெல்லலானார்கள். இவற்றை யெல்லாம் கண்ணுக்கெட்டாத தொலைவில் பின்புறத்தில் ஒரு மூலையிலிருந்து கண்டுவந்த ரோக்குஜோ சீமாட்டியால் தன் அவலநிலையின் அவமதிப்பைத் தாங்க முடியவில்லை. அதே சமயம் கெஞ்சி தன் முழுப் புகழொளியுடன் அச்சமயம் அளித்த காட்சியைக் கண்டபின் அவள் ஒரு சிறிதும் காத்திருக்க ஒருப் படவில்லை. ஊர்வலத்தில் ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கேற்றபடி ஆடம்பரமாகவே அணிமணி ஆடைகள் பூண்டிருந்தனர். சிறப்பாகச் சக்கரவர்த்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த உயர்குடி இளைஞர் மிகச் சிறந்த தோற்றமளித்தனர். கெஞ்சியின் அழகொளி ஒன்றே விஞ்சி நின்றது. வழக்கமாக இத்தகைய மெய்காப்புப் படையின் தலைவருக்கு அரண்மனைப் பணிமுதல்வர் தனித் துணைவராகச் செல்வதில்லை. ஆனால் இத்தறுவாய் தனி முக்கியத்துவமுடையதாகக் கருதப்பட்டி ருந்தது. ஆகவே கெஞ்சியினருகே பேரரசின் கருவூலமுதல்வரே குதிரை மீதிவர்ந்து சென்றார். இத்தனை பொதுச்சிறப்புகள் கெஞ்சிமீது வந்து குவிந்தவண்ணமிருந்ததை நோக்க, அப்பொதுத் தென்றலின் வீச்சிலே தனிச் சிறப்புகள் யாவும் நிலைகொள்ளாமல் அதனுடன் அவனைத் தொடர்ந்து சென்றனவோ என்று நினைக்கும்படியாக இருந்தது. உலாவுவதற்கேயுரிய மெல்லிய நயமிக்க பாவாடை மேலாடையணிந்து, அவற்றுடன் நெடுந்தொலை நடந்தே வந்திருந்த நற்குடி நங்கையர் எத்தனையோ பேர் அக்கூட்டத்தில் வந்து குழுமியிருந்தனர். மடத்து நங்கையரும் துறவு நங்கையரும் அவர்களருகிலேயே விரவி நின்றிருந்தனர். ஊர்வலத்தில் எதையும் உற்றுப்பார்க்க முனைந்தவர்களை யெல்லாம் கூட்டம் அக்காட்சி காணும் முன்பே நெடுந்தொலை இழுத்துச் சென்று வந்தது. வழக்கமாக இத்தகைய காட்சிகளைக் காணும் ஆசை சிறிதும் இல்லாத துறவு நங்கையர்களே, இன்றைய காட்சி களைப் பார்க்காமலிருந்தால் தங்கள் வாழ்வு பாழ் என்று மனமாரக் கூறி வந்தனர். இதுபோலவே புன்முறுவல் செய்யும்போது தம் பொக்கை வாய் முழுதும் திறந்து காட்டும் முதியோர்கள், கந்தலான மேலாக்கினுள் தம் முகத்தையும் முடியையும் மறைத்துக்கொண்டு வந்த விசித்திர நங்கையர்கள், தொழுவதற் கென்றே அமைந்த கைகளைக் கூப்பியவண்ணம் நின்ற கட்டமைந்த இளநலமுடைய நகைமுகச்சிறுவர்கள் ஆகிய பல்வகையோரும் இச்சமயம் வந்து ஒருங்குக்கூடி குலவித் திரிந்தனர். அழுக்கடைந்து வாடிய எத்தனையோ முகங்கள் ஊர்வலத்தைக் கண்ணுற்றதே வியப்பாலும் மகிழ்ச்சியாலும் திடுமென ஒளி வீசின. வெளிமாகாண முதல்வர்கள், மண்டலத் தலைவரின் புதல்வியர்கள் அன்று வந்திருந்தனர். நகரில் அவர்களுக்கு யாரும் தெரிந்தவர்கள் இருக்க வழி கிடையாது. ஆயினும், தம் காதல் தேர்வை நாடி வந்ததுபோல அவர்கள் அவ்வளவு பகட்டார வாரமாகத் தங்களை ஒப்பனை செய்து கொண்டு வந்தனர். அவர்கள் மட்டுமன்றி அவர்கள் வண்டிகளும் துணைக்கருவி கலங்களும் இதேவகைப் பகட்டு வண்ணம் தோய்ந்திருந்தன. முற்றிலும் இனமறியாத அயலார்களே இவ்வாறு ஆர்ப்பாட்டமாக வந்திருந்தார்களென்றால், கெஞ்சியுடன் தனித் தொடர்பு கொண்டிருந்த அணங்குகள் எவ்வளவு அணிமணி யாரவாரத்துடன் ஊர்வலத்தில் வந்து அங்குமிங்குமாகப் பல்வேறிடங்களிலும் ஆர்வத்துடன் காத்துக் கிடந்து கூர்ந்து நோக்கி யிருப்பார்களென்று கூறத்தேவையில்லை. ஊர்வலத்தின் பாதையிலே அன்று எத்தனையோ, மெல்லிய இதயங்களி லிருந்து நீண்ட பெருமூச்சுகள் எழுந்து உலவின. நிலைத்தளங்களில் ஒன்றில் அவ்வேளையில் மொமோசோனோ இளவரசர் அமர்ந்திருந்தார். தம் அண்ணன் மகன் இவ்வளவு வியப்பார்வம் தூண்டவல்ல அழகமர்ந்த இளைஞனாக வளர்ந்து விட்டதுகாண அவர் அகமகிழ்வுற்றார். அவன் மீது வானவரின் கண்ணூறு ஏற்பட்டு விடுமோ என்றுகூட அவருக்கு நடுக்கம் ஏற்பட்டது. அத்துடன் அவரருகே இருந்த அசகாவ் இளவரசி உள்ளமும் பாகாய் உருகிற்று. ஆண்டு தவறாமல் இத்தனை அழகுக் கவர்ச்சிகளுக்குமுரிய கெஞ்சி தன் காதலுக்காக வந்து காத்து மன்றாடிநின்ற தோற்றம் அவள் கண்முன் நிழலாடிற்று. ஒருவன் அந்தசந்த மற்றவனாயிருந் தால்கூட, இவ்வளவு விடாமுயற்சியுடையவனை உதறித் தள்ளிவிட எந்த நங்கையின் மனமும் ஒப்பியிருக்காது என்ற அவள் தனக்குள் கூறிக்கொண்டாள். கெஞ்சி தன் முழு அழகார்ஒளியுடன் அவளைக்கடந்து சென்ற சமயம், இத்தகையவனை இவ்வளவு நாள் தடுத்துவைத்திருந்த தன் உணர்ச்சியற்ற நிலைபற்றி அவள் வியப்புற்றாள். ஆயின் இப்போதுகூடத் தன்னை அவனிடம் முழுதும் ஒப்படைக்குமுன் அவனை இன்னும் நன்கு தேர்ந்தறிந்துகொள்ள வேண்டுமென்று தான் அவள் தீர்மானித்தாள். ஆனால் அவளைச் சுற்றியிருந்த இளம் பாங்கியர்கள் அவள்மீது ஒரு கண் வைத்துக்கொண்டே கெஞ்சியை வாயாரப் புகழ்ந்தார்கள். விழாநிகழ்ச்சிக்கு ஆய் நேரடியாக வரவில்லை. ஆனால் அதற்குமுன் அவள் பணியாட்களுக்கும் ரோக்குஜோ சீமாட்டியின் ஆட்களுக்கும் இடையே நடைபெற்ற பூசல் பற்றிய தகவல் கெஞ்சிக்கு எட்டிற்று. இத்தகைய ஒரு செய்தி நிகழ்ந்து விட்டதே என்று அவன் மிகவும் மன உளைவுற்றான். நேர்மைப் பண்பும் மென்மைப் பயிர்ப்பும் வாய்ந்த ஆய் இளவரசி இத்தகைய சச்சரவுகளில் தொடர்புகொண்டிருக்க முடியாது என்பதை அவன் அறிவான். ஆகவே அது முரட்டுத்தனமிக்க ஏவலாளர்களின் வேலையாகத்தான் இருக்கவேண்டுமென்று அவன் கருதினான். மேலும் இரு குடும்பங்களுக்குமிடையே சுமுகமான நேசத்தொடர்பு இல்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். தலைவர் கட்டளையில்லாமலே, தலைவர் பக்கமான தம் ஆதரவைக் காட்டி நல்ல பெயர் எடுக்க அவர்கள் முனைந்திருப்பது இயல்பு. அத்துடன் துயருக்கு ஆட்பட்ட ஆரணங்கின் தற்பெருமையும் எளிதில் கடுப்புக் கொண்டுவிடும் இயல்பும், கெஞ்சிக்குத் தெரியாதன அல்ல. இந்நிலையில் இந்நிகழ்ச்சிமூலம் சீமாட்டிக்கு எவ்வளவு மனவேதனை ஏற்பட்டிருக்குமென்பதை உணர்ந்து அவன் அவள் மாளிகைக்கே சென்று ஆதரவு கூறமுற்பட்டான். ஈசே தெய்வத்தின் கன்னியாகக் குறிக்கப்பட்ட ரோக்குஜோ சீமாட்டியின் புதல்வி இச்சமயம் தாயுடனேயே இருந்தாள். இதைச் சாக்கிட்டு மேலீடான சில ஆசார உரைகளுடன் சீமாட்டி கெஞ்சியை அனுப்பி வைக்கத் துணிந்தாள். அவளிடம் கெஞ்சிக்குள்ள அனுதாபம் பெரிதானாலும், அவளைப் போலத் தொடுமுன் புண்பட்டுவந்த உள்ளங்களுக்கு ஆறுதல் தேடித்தேடி அவனுக்கு இப்போது அலுப்புத் தட்டத் தொடங்கிற்று. நேரே நெடுமாடம் செல்ல அவன் மனம் இப்போது துணியவில்லை. அத்துடன் அன்று காமோப் பண்டிகை நாள். ஆகவே அவன் தன் மாளிகைக்கே சென்று தன் வண்டியைச் சித்தம் செய்யும்படி கோரெமிட்சுவுக்குக் கட்டளையிட்டான். இச்சமயம் முரசாக்கி தன் முழு ஆடையணி ஒப்பனையுடன் தன் விளையாட்டுத் தோழரான சிறுவர் சிறுமியர் புடைசூழ அவன் முன் வந்து புன்முறுவலுடன் நின்றாள். அதுகண்டு கெஞ்சியும் புன்முறுவல்பூத்த முகத்துடன் பேசினான். ‘இதோ பார், இந்தப் பெண்ணை! இத்தனை பாங்கியரும் துணைவரும் புடைசூழத்தான் அவள் வர வேண்டுமாம்!’ என்று சாடையாகக் கூறியவண்ணம் அவள் தலைமுடி மீது கைபடிய வைத்து நீவினான். ஸோனகன் வழக்கத்துக்கு மேலாகவே அன்று அவளது தலைமுடியைச் சிங்காரித்திருந்தாள். அதை மனத்துட் கொண்டு அவன் மீட்டும் பேசினான். ‘தலைமுடி எவ்வளவு நெடுநீளமாக வளர்ந்து விட்டது. இதை வெட்டிவிட வேண்டிய நாள் வந்துவிட்டதென்றே கருதுகிறேன்’என்றான். கூறியதுடன் அவன் அமையவில்லை. உடன்தானே தன் கணியரை வரவழைத்து, ஏட்டையவிழ்த்து முடி வெட்டு வதற்கான ஒரு நல்லோரை பார்க்கும்படி கட்டளை யிட்டான். ஆனால் முரசாக்கி, ‘முதற்சேவை பாங்கியருக்கே’ என்று தன் அழகுச் சிறுமியர் பக்க நோக்கியவாறு தலையசைத்துக் கொண்டு கூறினாள். விடுமுறை கருதி அவர்கள் அனைவரும் மணிக்கட்டமுடைய மேலாடையணிந்திருந்தனர். அதன் மீது அழகுறத் தொங்கிய அவர்கள் இளமுடிகள் வெட்டப்பட்டன. அதன்பின் கெஞ்சி முரசாக்கியை நோக்கி ‘ஆ, உன்முடியை நானே வெட்டப்போகிறேன்’ என்று எழுந்தான். முடியை நீவிய வாறே, ‘ஆ, எவ்வளவு அழகான கூந்தல் இது! இன்னும் எவ்வளவு அடர்த்தியாகவும் நீளமாகவும் இது வளரப் போகிறதோ?’ என்று பேசினான். வெட்டும் வேலை மிகப் பெரிதாகவே இருந்தது. ‘மிக நீண்ட முடியுடையவர்களெல்லாம் அதைக் கன்னம் வரை வரும்படி வெட்டுவதுதான் முறை. ஆனால் உன்முடியை என்னால் இதைவிடக் குறுகியதாக வெட்ட மனம் வரவில்லை’ - இவ்வாறு பேசிக்கொண்டே அவன் கத்திரியைக் கீழே வைத்தான். இறுதியில் முடிவெட்டு விழா முடிந்தபின் பாடப்படும் பாட்டைக் கெஞ்சி பாடினான். அதைக் கேட்ட ஸோனகனின் அகமகிழ்வு எல்லையற்றதாயிருந்தது. பெண்டிர் முடி ஒப்பனையில் பயன்படும் பாசிவகை ஒன்று இருபொருள்பட ‘விழி’ என்று அழைக்கப்பட்டுள்ளது. இச்சிலேடையைக் கெஞ்சி பயன்படுத்தினான். ‘உன் முடி விழியால் கழுவப்பட்டுள்ளது. அது மேலும் என் அன்பு நோக்கின்வழி வளருமென்பதற்கு இது ஓர் அறிகுறியாகும்.’ அவன் பாடலின் சிலேடைத் திறத்தையே அவள் அவனுக்கு எதிராகத் திறம்படக் கையாண்டாள். ‘கழிகளவை தாவிக் கடும்பாறைப் பிளவிடையே கடுகிநடை போடும் கடல்வேலி நீர்போல ‘விழி’களவை தாவி வந்துவந்து செல்லும்அவ் ‘விழி’களுணராமே வளருமென் விறல்முடியே!’ பாடலின் சொற்கள் ஒரு தாள் நறுக்கில் அழகுபட எழுதப்பட்டிருந்தன. பாட்டில் அவ்வளவு ஆழ்செறிவு இல்லாவிட்டாலும் குழந்தை மனப்பாங்கை அது கவர்ச்சியுடன் எடுத்துக்காட்டியதனால் கெஞ்சி மிகவும் மகிழ்ச்சியடைந்தான். என்றும்போல இன்றும் மக்கள் திரள் மிகவும் நெருக்கமாகவே இருந்தது. தன் வண்டியை அவன் அதனிடையே பெருமுயற்சியுடன் செலுத்தி மன்னுரிமைக் குதிரைக் கொட்டி லருகில் கொண்டு நிறுத்தினான். அங்கே இங்குமங்கும் துள்ளி ஓடும் பெருங்குடி இளைஞர் சூழ்ந்திருந்தனர். அவர்கள் இதனினும் அமைதிமிக்க ஓர் இடம் தேடிக் கொண்டிருக்கும் சமயம், சீமாட்டிகளே நிறைந்த ஓர் அந்தசந்தமான வண்டி பக்கத்தில் வந்து நின்றது. அதிலிருந்து யாரோ ஒருத்தி கெஞ்சியின் பணியாட்களில் ஒருவரை அழைத்தாள். ‘நீங்கள் இப்பக்கமாக நாங்கள் இருக்குமிடத்துக்கு வருகிறீர்களா? நாங்கள் உங்களுக்கு மகிழ்வுடன் இடம் ஒதுக்கித் தருவோம்’ என்று அவள் சொல்லியனுப்பினாள். இச்செயல் பெண்கள் வகையில் சற்றுத் துணிச்சலாகக் காணப்பட்டாலும், இடம் மிக நல்லதாகவே இருந்தது. ஆகவே கெஞ்சி ஒப்புக்கொண்டான். ‘உங்களுக்குரிய இடத்தை இவ்வாறு நாங்கள் எடுத்துக்கொண்டது சரியல்ல என்றே நினைக்கிறேன்’ எனக் கெஞ்சி நயநாகரிகப் பேச்சுத் தொடங்கினான். அதற்குள் பெண்டிருள் ஒருத்தி மூலைமடித்து மடக்கப்பட்ட ஒரு விசிறியை நீட்டினாள். அதில் ஒரு பாடல் இருந்தது. ‘இம்மலரணி நாளின் சந்திப்புக்கு நான் எவ்வளவோ காத்திருந்தேன். ஆனால் பெருந்தெய்வம் தன் நற்குறிகளைக் காட்டியதெல்லாம் வீணாயிற்று. ஏனெனில் அந்தோ, உன் அருகே வேறோர் ஆள் இருக்கிறது’ என்று அவள் குறித்தாள். கையெழுத்து அவனுக்கு நன்கு பழக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது - ஆம். அது பழைய பள்ளியரங்க அணங்குதான். இத்தகைய குறும்புகளை அவள் இனிமேலாயினும் நிறுத்திக் கொள்ளும்படி செய்ய வேண்டுமென அவன் எண்ணினான். எனவே அவன் குரலில் சிடுசிடுப்பு இருந்தது. ‘மாலையிட்டு ஆர்வமீதூர எண்பது குலங்களும் வந்துகுழுமும் இந்தநாள் நமதன்று,’ இச்சொற்கள் கேட்டு அவள் மனங்கோணினாள். ‘ஏய்க்கும் ஒப்பனைசெய்து கொண்டதற்காகவே மனம் வருந்துகிறேன். ஏனெனில் பெயரளவில் தான் இது சந்திப்பு நாளாய் அமைந்தது என்றாள் அவள். அவர்கள் வண்டிகள் அருகருகாக நின்றன. ஆனால் கெஞ்சி பக்கத் திரையைக்கூட விலக்கவில்லை. இது ஒருவருக்கல்ல, பலருக்கே மனவருத்தமளித்தது. ஒரு சில நாட்களுக்குமுன் எல்லாரும் காண அவன் அழகுப்பிழம்பாகத் திறந்தவெளியில் சென்றான். இப்போது நேர்மாறாக எல்லார் நடுவிலும் மூடாக்குடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை அனைவரும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டனர். இவ்வேறு பாட்டுக்குக் காரணமாக இப்போது அவனுடன் செல்வது யார் என்ற தெரியாவிட்டாலும், அது ஏதோ ஒரு பெரிய இடத்துச் சீமாட்டியாகத்தான் இருக்கவேண்டுமென்பதில் அவர்களிடையே கருத்து வேற்றுமையில்லை. இதேசமயம் தன் அருகிலிருந்த சீமாட்டி தொல்லை தராமலிருக்க மாட்டாளென்று கெஞ்சி கவலைப்பட்டுக்கொண்டுதான் இருந்தான். ஆனால் நல்ல காலமாகத் தலைவியைவிடப் பாங்கியர்கள் குறிப்பறிபவர்களாய் இருந்தனர். அத்துடன் கெஞ்சியுடனிருந்த இனமறியாத் துணைவரிடம் கூட அவர்கள் அனுதாபம் கொண்டு, தம் தலைவியையும் அவ்வகையில் தடுத்தாட்கொள்ள முனைந்தனர். முந்தின ஆண்டுகளைவிட இவ்வாண்டிலேயே ரோக்குஜோ சீமாட்டியின் துயரங்கள் மிகுதியாயிருந்தன. கெஞ்சி நடத்தியமுறையில் அவள் எவ்வளவோ கடுமைகளைப் பொறுத்துகொண்டிருக்க நேர்ந்தாலும், இப்போது அவனை விட்டுப்பிரிந்து தொலை செல்வது அதைவிடக் கடினமாகவே தோற்றிற்று. அவளுக்கு இதனால் ஏற்பட்ட மனக்கலக்கம் பயணத்தை அடிக்கடி ஒத்திப்போட ஏதுவாயிற்று. அத்துடன் கெஞ்சியின் புறக்கணிப்பால் உந்தப்பட்டு ஓடியதாக எவராவது நினைத்தால் அதுவும் கேலிக்குரியதாகுமென்று அவள் அஞ்சினாள். அதேசமயம் கடைசி நேரம்வரை மனமாறிப் போகாமலிருந்துவிடவும் அவளுக்குத் துணிவில்லை. அதனால் மக்கள் தன் நடத்தையைப் புரிந்து கொள்ள முடியாமல் தன்னை அவமதிப்புக்கு ஆளாக்கிவிடுவர் என்று கருதினாள். இவ்வாறு இருதிசையும் துணிய முடியாமல் இரவு பகலாகப் பலநாட்கள் அவளுக்கு ஊசலாட்டத்திலும் வேதனையிலுமே கழிந்தன. ‘ஈசேக் கரையில் செம்படவர்களின் வலை அலையிலிருந்து அலைக்குத் தாவி மிதப்பதுபோல, என் நெஞ்சம் எண்ணங் களிலிருந்து எண்ணங்களுக்கு மிதந்து கொண்டே இருக்கிறது’ என்று அவள் அடிக்கடி தனக்குள்ளே பாடலானாள். உணர்ச்சி வேகங்கள் அவள் கட்டுக்குள் அமையவில்லை, அவளை அப்புறமும் இப்புறமும் ஆட்டி அலைத்துத் தீராநோய் செய்தன. சீமாட்டி அவ்வளவு தொலை செல்லும்படி நேர்ந்த தேயென்று கெஞ்சி மனம் வருந்தினாலும், அவள் பயணத்தை அவன் தடைசெய்ய விரும்பவில்லை. ‘கவைக்குதவாத என்னை மனத்தடத்திலிருந்து நீங்கள் அகற்ற எண்ணுவது புரியத்தக்க செயலே. ஆயினும் உங்களை நான் காண்பதால் வேறு எப்பயனும் இல்லாவிட்டாலும், போகுமுன் ஒரு தடவை அவ்வாய்ப்பளிக்கும்படி வேண்டுகிறேன். நீங்கள் நினைப்பதைவிட உங்கள் வாழ்வில் நான் கொள்ளும் அக்கறை எவ்வளவோ பெரிது என்பதை நம் சந்திப்பு உங்களுக்குக் காட்டும்’ - இவ்வாறு அவன் கடிதமூலம் எழுதியிருந்தான். ஆனால் இச்சமயம் அவள் உள்ளம் வேறு நினைவுகளில் தத்தளித்தது. அன்று தன்மனக் கலக்கங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் சிறிது ஓய்வு நாடிய சமயம் முரட்டு அலைகள் எழுந்து அவளை மீளா அவமதிப்பாகிய கொடும்பாறைகளில் மோதிவிட்டன. இதை அவளால் மறக்க முடியவில்லை. இந்த அநீதியையே நினைத்து நினைத்து அழுங்கிய அவள் உள்ளத்தில் வேறு எந்த நினைவுக்கும் இடமில்லாது போயிற்று. இதற்கிடையில் ஆய் விசித்திரமான நிலையில் அமைதி குலைவுற்று வந்தாள். அவ்வப்போது ஏதோ தீய ஆவி அவள் மீது ஏறி ஆட்கொண்டதுபோலத் தோற்றிற்று. அவள் மாளிகை முழுவதுமே கவலையிலும் துயரத்திலும் தோய்ந்திருந்தது. இந்நிலைமைகளுக்கிடையே ஒரு சில மணி நேரங்களுக்குமேல் அவ்விடம் விட்டு அகலக் கெஞ்சிக்கு மனம் வரவில்லை. தன் மாளிகைக்குக்கூட அவன் சிற்சில சமயங்களில்தான் செல்ல முடிந்தது. இது இயல்பே. ஏனெனில் ஆய் இளவரசிக்கும் அவனுக்குமிடையே எத்தனை வேறுபாடுகள் ஏற்பட்டிருந் தாலும், அவளிடம் அவன் பாசம் பெரிதாகவே இருந்தது. அவளது தற்போதைய நிலையில் இயல்பான வாய்ப்புக்கேடுகள் மட்டுமன்றி வேறும் ஏதோ கோளாறு இருக்க வேண்டுமென்று அவனுக்கு ஒளிவுமறைவின்றித் தெரிந்தது. அவன் சஞ்சலத்தை இது பெருக்கிற்று. அவன் செய்த ஏற்பாட்டின்படி குறி சொல்பவர்களும் பேயோட்டுபவர்களும் வந்து தத்தம் வினைமுறைகளில் ஈடுபட்டனர். சூழல்கள், அறிகுறிகளைப் பார்க்க, ஏதோ உயிருடன் இருப்பவரது ஆவிதான் ஆய் இளவரசியை ஆட்டிப் படைப்பதாகக் கருத இடமிருந்தது. இவ்வகையில் ஊகமாகப் பல பெயர்கள் குறிக்கப்பட்டன. ஆனால் மந்திரவாதிகளின் எந்தப் பெயரழைப்புக்கும் அது எதிர் குரலளிக்கவில்லை. எத்தகைய மந்திரிப்புக்கும் அது அசையவுமில்லை. ஏதோ தனக்கயலான ஒன்று தன்னுள் புகுந்திருப்பதை ஆய்கூட உணர்ந்திருப்பதாகத் தெரிந்தது. தெளிவாக நோய்க்குறியோ அச்சக்குறியோ இல்லாவிட்டாலும், அத்தகைய ஓர் உரு உடனிருந்த தென்ற எண்ணத்தை அவளால் ஒரு கணம்கூட விலக்க முடியவில்லை. அந்நாளைய சிறந்த மாயக்காரர்கள்கூட அதை ஓட்டிவிடும் ஆற்றலற்றவராயினர். ‘ஆவி’ சாதாரண ஆவி அல்ல என்பது எல்லாருக்கும் தெளிவாயிற்று. ஆய் இளவரசியின் நண்பர்கள் இயல்பாகவே கெஞ்சியின் பாசத்துக்குரியவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்தவர்கள் பெயர்களையெல்லாம் ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தார்கள். இத்தகைய பேரிடர் தரத்தக்க அளவு கடும்பொறாமைக்கு உரியவர்கள் ரோக்குஜோ சீமாட்டி, ‘நிஜோயின்’ மாளிகை நங்கை ஆகிய இருவரில் ஒருவராகத்தான் இருக்கவேண்டுமென்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். ஆனால் மாயம்வல்லோர் இந்தப் பெயர்களிட்டழைத்த போதும் எத்தகைய தெளிவான எதிர்குரலும் எழவில்லை. ‘மனமார ஆய் மீது சூனிய முயற்சி செய்யத்தக்க எத்தகைய பகைமையும் அவளுக்கு இருந்திருக்க முடியாது. எவரேனும் முந்திய கால ஏவலர் அல்லது செவிலியர் செயலால் இந்நிலை ஏற்பட்டிருத்தல்கூடும், அல்லது ஆயின் தந்தையாகிய அமைச்சரால் தீங்குக்கு ஆட்பட்ட யாருடைய ஆவியாவது இவ்வாறு செயற்பட்டிருக்கலாம்.’ இங்ஙனம் ஒன்றன்மேல் ஒன்றாக ஊகங்கள் பல எழுந்தாலும், கடைசியில் எல்லாம் தவறாகவே முடிந்தன. இத்தனைக்குமிடையில் ஆய் அழுதகண்ணுடனேயே காட்சியளித்தாள். சிற்சில சமயம் அவள் தேம்பித் தேம்பிக் கதறியழுவதுண்டு. அழுகையில் உக்கிர வேகத்தில் அவ்வப்போது அவள் மூச்சே தடைப்பட்டுவிடும். உறவினர் யாவரும் அச்சமயங்களில் இன்னது செய்வது என்று அறியாமல் சூழ்ந்துநின்று கண்கலங்கினர். இளவரசியின் நிலைபற்றி முன்னாள் சக்கரவர்த்தி இடைவிடாது விசாரித்து வந்தார். அவள் பெயரால் தனி வழிபாடுகள் நடத்தவும் அவர் கட்டளைகள் பிறப்பித்திருந்தார். அவளிடம் அவர் கொண்டிருந்த மதிப்பை இது அவள் பெற்றோருக்கு எடுத்துக்காட்டிற்று. நண்பர் சூழல்களிடையே மட்டுமன்றி நாடுநகரம் எங்குமே துயரம் பரவியிருந்தது. ரோக்குஜோ சீமாட்டியே நிலைமையறிந்து வருந்தியதாகத் தெரியவந்தது. ஆய், ரோக்குஜோ சீமாட்டி ஆகியவர்களிடையே பல ஆண்டுகளாகவே கெஞ்சியின் நட்பை முன்னிட்டுப் பெரும் போட்டியுணர்ச்சி இருந்துவந்தது. விழா வண்டிகள் பற்றிய புயலலை மேலும் சினமூட்டியிருந்தது. ஆனால் இத்தனைக்குப் பின்னரும் இளவரசிக்குத் தீங்கு கருதுமளவுக்கு அவள் தன் உணர்ச்சிகளைச் செல்லவிட்டதில்லை. அவளே இப்போது நல்ல உடல்நிலையில் இல்லை. தாறுமாறாக உள்ளத்தை அலைக் கழித்துவந்த உணர்ச்சிகள் ஏதோ நுட்பமான வகையில் அவள் உள்ளந் துளைத்து மூளையிலேயே கோளாறு விளைவித்து வந்தன. இதுவகையில் ஆன்மிகத் துணைவலுத் தேடித் தன் மாளிகையிலிருந்து சில நாழிகை தொலைவிலிருந்த ஓரிடத் துக்குச் செல்ல எண்ணினாள். கெஞ்சி இது கேட்டுப் பெருங் கவலைப்பட்டான். அவள் இருந்ததாகத் தெரியவந்த இடத்துக்கு உடனே புறப்பட்டான். அது நகர எல்லைக்கு அப்பாலிருந்தது. ஆகவே அவன் மிக இரகசியமாகவே போக வேண்டியிருந்தது. இவ்வளவு நாள் தான் காணச் செல்லாதிருந்தது பற்றி, இப்போது அவன் அவளது மன்னிப்பைக் கோரினான். ஆய் இளவரசியின் நிலையையும் தன் துயரங்களையும் எடுத்து விளக்கினான். ‘வேறு பொழுது போக்கை முன்னிட்டு நான் இப்படிப் பிரியவில்லை. இன்றியமையாக் கடமைகளே குறுக்கிட்டன’ என்று உணர்த்தினான். ‘என் தற்போதைய உடல் தளர்ச்சிகூட நேரடியாக அவள் நோய் காரணமானதன்று. அது காரணமாக அவள் பெற்றோர் அடைந்துள்ள துணையற்ற அவலக் காட்சிதான் என் நெஞ்சைத் துளைக்கிறது. நோய்ப் படுக்கையருகிலுள்ள இந்தப் பயங்கர எண்ணங்களிலிருந்து ஒரு சிறிது ஓய்வு கொள்ளத்தான் நான் இன்று இங்கே வந்திருக்கிறேன். இதற்காகவாவது என் குற்றங்கள் யாவற்றையும் பொறுத்து என்னிடம் சிறிது தயவு....’ அவன் பேசி முடிக்கவில்லை, பேசிப் பயனில்லை என்பதை அதற்குள் கண்டான். அவள் போக்கு முன்னிலும் கடுமையுடைய தாயிருந்தது. இதற்காக அவள்மீது அவன் கோபமடையவில்லை. இதுகண்டு வியப்பு கூடக் கொள்ளவில்லை. அவன் மாளிகைக்குத் திரும்பும் சமயம் கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவன் செல்வதைக் கண்டபோதே அவள் உள்ளத்தில் அவனது அழகமைதி எழுப்பிய புயல் அவளது துணிவு முழுவதையும் சிதறடித்து விட்டது. அவனை விட்டுச் செல்வதைப் போன்ற பைத்தியக்காரத்தனமான செயல் வேறு எதுவுமில்லை என்று அச்சமயம் அவள் கருதினாள். ஆயினும் போகாமலிருப்ப தனால்தான் என்ன பயன்? ஆய் இப்போது வயிற்றில் குழந்தை யுடனிருந்தாள். கெஞ்சியுடன் அவள் இணக்கமாகிவிட்டாள் என்பதற்கு இது போதியசான்று. ‘இனி அவன் அப்பழுக்கற்ற அமைதியான வாழ்க்கையே வாழக்கூடும். இன்று வந்ததுபோல் எப்போதாவது ஒரு தடவை மன்னிப்புக் கோரி வரலாம். இது ஆர்வங்களைக் கிளறிவிடுவதைத் தவிர வேறு என்ன செய்துவிட முடியும்?’ - இத்தகைய எண்ணங்களுள் அவள் ஆழ்ந்திருந்ததால், மறுநாள் கெஞ்சியின் கடிதம் வந்தபோதுகூட அவள் கடுஞ்சினம் மாறவில்லை. ‘சின்னாட்களுக்கு முன்வரை சிறிது தேறிவந்த நோயாளி இப்போது கடுநோய்க்காளாகியுள்ளாள். நான் அவள் பக்கம் விட்டகல முடியாதவனாயிருக்கிறேன்’ என்பது கெஞ்சி அனுப்பிய செய்தி. இது வெறுஞ்சாக்கு என்று எண்ணி அவள் அதற்கேற்ப மறுமொழி வரைந்தாள். குருத்துவரும் நெற்பயிரின் இடையே மட்டின்றிக் குனிந்திட்ட அரிவையைப் போல் கோடுகின்ற காதல் இருட்பாதை தனில்என்கை உறை கறைப்பட்டதுவேல். என்பிழை அப்பிழை; துயரும் என் துயரம், பெரிதே! கடிதத்தின் முடிவில் அவள் மீண்டும் பழம்பாடலொன்றை நினைவூட்டியிருந்தாள். உறைகறைப்படு மளவுமாழமென்று உணர்ந்து மாமலைச் சுனைத்தடத்திலென் குறைகுடங் கொடுவீசி வந்தஎன் குறைகண்டே குறைப் படுவனே! நுண்ணயமிக்க அவள் கையெழுத்து அவன் கண்களை ஈர்த்தது. அவளுக்குரிய உயர்குடியின் உயர்பண்பாட்டுச் சூழலிடையேகூட இச்சிறுமுடங்கலில் காணுமளவில் நய நேர்மையுடன் எழுதத்தக்கவர் வேறு யார் உளர்? புறஅழகும் அக அழகும் ஒருங்கமைந்து தன்னை இவ்வளவு வலிமையுடன் கவரத்தக்க ஒருவரையா நான் ஏன் செயலாலேயே இழக்க நேர்ந்தது என்று அவன் மனமுளைந்து வருந்தினான். இப்போது பொழுது முற்றிலும் இருட்டிவிட்டது. ஆயினும் அவன் கீழே உட்கார்ந்து எழுதினான். ‘நீ உறையைமட்டுமே நனைத்தது என்று கூறவேண்டாம். ஆழமற்ற தன்மை உங்கள் உவமையிலேயேயன்றி என் அன்பிலன்று’ என்று வரைந்து அதன்மீது ஒரு பாடலும் இணைத்தான். மட்டான நீர்த்தடத்தில் உலவியவள் நீயே! வளர்காதல் ஆழ் கசங்கள் அளாவியதனாலே முட்டமுட்டவே நனைந்து முள்ளார்ந்த காதல் புதர்நெறிப்பட் டலமந்து புண்பட்டேன் நானே! இத்துடன் முடிவில், துயரிருள் தோய்ந்த இம் மாளிகையில் துளிபெறும் ஆறுதல் பரந்திடினும் மயலுறும் முடங்கலிங்கிதனை யானே வந்தவண் வழங்கிட முனைந்திடுவேன்! என்று தீட்டியிருந்தான். ஆய் இளவரசியைப் பற்றியிருந்த ஆவி இதற்குள் முழுவேகங் கொண்டுவிட்டது. அவள் நிலை இரங்கத்தக்க தாயிற்று. தன் உயிராவியின் செயலாலேயே ஆய்க்கு நோய் நேர்ந்ததாகப் பிறர் கூறிக்கொள்வது ரோக்குஜோ சீமாட்டியின் காதுகள்வரை சென்றெட்டிற்று. ரோக்கு ஜோ சீமாட்டியின் தந்தைக்குரிய ஆவிதான் தன் புதல்விக் கிழைக்கப்பட்ட தீங்குக்குப் பழி வாங்குகிறது என்று வேறு சிலர் கூறியிருந்தனர். இவற்றைக் கேள்விப் பட்டபின் ரோக்குஜோ சீமாட்டி அடிக்கடி தன் உள்ளுணர்ச்சிகளையே அகமுகமாக ஆய்ந்து காணத் தலைப்பட்டாள். ஆய் இளவரசியின் மீது ஒரு சிறு பகைமையின் தடங்கூடத் தன் உள்ளத்தில் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. ஆயினும் வெம்பிய அகவேதனையால் துடிதுடிக்கும் ஓர் உள்ளுயிரின் ஆழ்தடத்தில் காழ்ப்பின் ஒரு சிறுபொறி எங்கேனும் புதைந்திருக்க முடியாதென்று அவளால் உறுதியாகக் கூறமுடியவில்லை. காதலுற்று அதன் பயனாகக் கடுந்துயரை அவள் அனுபவித்த ஆண்டுகள் பல. உலகில் எங்கும் எவருமே அந்த அளவு துயர் கண்டிருக்க முடியாது என்றே அவள் எண்ணியிருந்தாள். ஆயினும் அந்நாட்களில்கூட இப்போது அவள் அனுபவித்ததுபோன்ற முழு உள் வேதனையையும் உள்ளழிவையும் அவள் அறிந்ததில்லை. எல்லாம் வண்டிகள் பற்றிய பூசலிலிருந்துதான் தொடங்கியிருந்தன. வாழ்வதற்கே அவளுக்கு உரிமையில்லை என்று கருதப்படும் அளவுக்கு அன்று அவள் இழிவுபடுத் தப்பட்டாள்; கடுமையுடன் நடத்தப்பட்டாள். ஆம். திருநிலைப் பாட்டு விழாநாள் முதல்தான் அவள் மனம் முரண்பட்ட உள்வேகங்களுக்கு ஆட்பட்டு நாலா திசைகளிலும் உந்தப்பட்டுக் குமுறி வந்தது என்பது உண்மை. சிற்சில சமயங்களில் தன் எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் தனக்கு ஒரு சிறிதும் இல்லை என்பதையும் அவள் உணர்ந்தாள். ஒரு நாள் இரவு வேதனைமிக்க பல ஐயப்பாடுகள், தயக்கங்களுக்கிடையே தான் ஏதோ கனவு கண்டு கொண் டிருப்பதாக அவள் திடுமென உணர்ந்தாள். இடமகன்ற ஒரு பெருங்கூடத்தில் ஓர் அணங்கு படுத்திருந்தாள். அவள் சாயல் ஆய் இளவரசி போன்றே இருந்தது. அவளைத் தன்னையே உரித்தெடுத்தாற் போன்ற ஓர் உருவம் பிடித்து ஈர்த்துக் கிடந்தபடியே நிலத்தின் மீது பரபரவென்று இழுத்ததாக அவளுக்குத் தோன்றிற்று. விழித்திருக்கும் நிலையிலே இத்தகைய கொடுஞ்செயல் புரிவது என்பது அவள் இயல்புக்கு முற்றிலும் அயலானது. ஆனால் இக்காட்சி ஒரு தடவையன்றிப் பல தடவை அவள்முன் நிழலாடிற்று. ‘அந்தோ, எவ்வளவு பயங்கரமான உண்மை இது! விழித்திருக்கும் உடலிலிருந்தே ஆவி பிரிந்து சென்று ஒரு போதும்துணியாத அளவில் செயல் செய்ய முற்படக்கூடும் என்பதும்; இவ்வாறு உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் மிதந்து அது தன்னிலை யழியக்கூடும் என்பதும் இப்போதே அவளுக்குத் தெளிவாயிற்று. ‘மக்கள் குறையற்ற செயல்களையே பிறர் செய்துவரும் காலத்தில்கூட, அவர்கள் செய்த நன்மைகள் எல்லாவற்றையும் மறந்து, செய்ய நேர்ந்த தீமைகளை மட்டும் உள்ளத்தில் வைத்துப் பெருக்கி வளர்க்கும் உள்ளார்ந்த பேய்த்தனம் உடையவர்களாகின்றனர். அப்படியிருக்க, உண்மையிலேயே இத்தகைய பேய்த்தனமான நிகழ்ச்சி கட்புலப்பட்டால், அவர்கள் எவ்வளவு இதைப் பற்றிப் பெருக்கமாட்டார்கள்!’ என்று அவள் தனக்குள் கூறிக் கொண்டாள். ‘ஒருவரது மறைவுக்குப்பின் அவர் ஆவி அவரது வாழ்வுக்கால எதிரிகளைத் தாக்கி அலைக்கழிப்பதுதான் உலகில் பெரும்பாலாகக் கேட்கப்படும் செய்தி. இங்கேகூட மாண்ட மனிதர் நச்சுப்பகைமைக் கு™மும் பேய்த்தன்மையும் உடையவர்கள் என்றே கருதப்படுகிறார்கள். தம் புகழின் நற்பெயர் கெடுத்தே அவர்கள் ஆவியுருவிலும் பேய்த்தன்மை மேற்கொள்கிறார்கள். அப்படி யிருக்க, உயிருடனிருக்கும் போதே நான் இத்தனை பெரும்பழிக்கு ஆளாய்விட்டேனே! இனி என் நிலை என்னாவது?’ என்று சீமாட்டி மனமாழ்கிறாள். ‘அந்தோ, என் விதியை நானாகத்தான் ஏற்றாகவேண்டும். கெஞ்சியை இனி நான் முற்றிலும் இழந்துதீர வேண்டும். அத்துடன் இனி என் உள்ளம் என்னதாக இருக்க வேண்டுமானால், எப்படியாவது அவரை மறக்க வழிதேடவேண்டும்’ - இத்துணிவுடன் அவள் ஓயாது கெஞ்சியை மறந்துவிடும் பணியில் தலைநின்றாள். ஆனால் அந்தோ, மறந்துவிடும் முயற்சியே அவள் உள்ளத்தை அவன்பால் கட்டுப்படுத்திவிட உதவிற்று. முறைப்படி ஈசேயின் கன்னி ஆண்டு முடிவுக்குப் முன்பே தன் வினைமுறைகளைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இடையே ஏற்பட்ட பல இக்கட்டுகள் காரணமாக இலையுதிர் காலம்வரை அவள் பணியேற்க முடியவில்லை. ஒன்பதாவது மாதத்தில் பதவிப் பயிற்சிப் பருவத்துக்குரிய கழனி மாடத்தில் அவள் இடம்பெற ஏற்பாடாயிற்று. இதுபற்றிய இறுதி முடிவும் மிகவும் காலந்தாழ்ந்துவிடவே, அவளது இரண்டாம் திருநிலை விழா அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இத்தகைய நெருக்கடி நேரங்களில் எல்லா ஏற்பாடுகளையும் நேரே மேற்பார்வை செய்தவதற்கு மாறாக, அவள் தாய் இடையறாத படுக்கையிலே கிடந்து துணையற்ற நிலையில் புரண்டு புலம்பிக் கொண்டிருந்தாள். கடைசி நேரத்தில் நங்கையை அழைத்துச் செல்லக் குருமார் வந்து சேர்ந்தனர். தாயின் நிலைகண்டு அவர்கள் மனமுருகி னார்கள். தம்வருகையை அவர்கள் அவள் வகைக்காகவும் பயன்படுத்தி அவளுக்காகவும் தனிப்பட்ட வழிபாட்டு வினைமுறைகள் நடத்தினார்கள். ஆனால், வாரத்தின்பின் வாரமாகப் பல வாரங்கள் சென்றும் அவள் நிலையில் மாறுதல் தெரியவில்லை. ஆபத்தான நோய் எதுவும் இருந்ததாக எந்த அடையாளமும் அவளிடம் தென்படவில்லை. ஆயினும் இன்னதென்றறிய முடியாத எதோ ஒரு மாய நோய்க்கு அவள் உள்ளூர இரையாகி வந்ததாகத் தோன்றிற்று. கெஞ்சி அவ்வப்போது அவளைப் பற்றி விசாரித்து வந்தான். ஆனால் படிப்படியாக அவன் கவனம் வேறு திசையில் திரும்புவதை அவள் கவனிக்காமலில்லை. ஆய் இளவரசியின் பேறு காலம் இன்னும் வந்துவிட வில்லை. அதில் எவர் மனமும் ஈடுபடவும் தொடங்கவில்லை. ஆனால் திடுமென அதற்குரிய அடையாளங்கள் தென்பட்டன. அவள் துன்பம் பெரிதாயிருந்தது. மந்திர மருத்துவர் இடைவிடாது செயலாற்றி வந்தனர். குருமார்கள் வேண்டுதல் விண்ணப்பங்களின் மேல் வேண்டுதல் விண்ணப்பங்களாகப் பல ஆற்றினர். ஆயினும் மூர்க்கப் பகைமை வாய்ந்த அந்த ஆவியிடமிருந்து அவளை எவராலும் ஓர் இம்மியும் காக்க முடியவில்லை. நாட்டின் தலைசிறந்த மந்திரிதந்திரிகள் வந்திருந்து தங்கள் உழைப்பும் திறமையும் முழுவதுமே தோல்வியுற்றதுகண்டு மனமுடைந்து பொருமினர். இறுதியில் வேண்டுதல் விண்ணப்பங்கள், மந்திர தந்திரங்கள் ஆகியவற்றின் மொத்த விளைவாக ஆவி உள்ளூரத் திணறிக் குரல் கொடுக்கத் தொடங்கிற்று. கோவெனக் கதறியழுதவண்ணம் அது பேசிற்று. ‘எனக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். இளவரசன் கெஞ்சியிடம் நான் தனித்துப்பேச வேண்டிய செய்தி ஒன்று உண்டு’ என்று அது கூறிற்று. இது கேட்டு மந்திரவாதிகள் ஒருவரை ஒருவர் நோக்கித் தலையாட்டிக் கொண்டனர். ‘ஆ, இப்போது நமக்கு ஏதேனும் துப்புத் துலங்காமல் போகாது’ என்று அவர்கள் எழுந்தனர். ஆயின் நாவிலிருந்து இப்போது பேசியது ஆவிதான் என்ற உறுதியுடன் அவர்கள் கெஞ்சியை அவள் படுக்கையருகே விரையும்படி தூண்டினர். அதே சமயம் தன் இறுதியணுகிவிட்டதாக ஆய் உணர்ந்ததனாலேயே கெஞ்சியிடம் தன் இறுதித் தகவல்கூற முற்பட்டிருக்கிறாள் என்று அவள் பெற்றோர் எண்ணிப் பின்புறமாக ஒதுங்கிச் சென்றனர். குருமாரும் தங்கள் உரத்த மந்திரிப்பை விட்டுவிட்டுத் தாழ்ந்த குரலில் ‘ஹேக்கேசியோ’ அறச்சூத்திரங்களைப் படிக்கலாயினர். கெஞ்சி படுக்கையின் திரை விலக்கினான். கருவளர்ச்சி காரணமாக அவள் உடல் ஊதியிருந்தாலும், எப்போதும் உள்ள அழகொளி சிறிதும் குறையாமலே இருந்தது. காண்பவர் உள்ளத்தை இந்தச் சமயத்தில்கூட இது இன்னதென்றறியா வகையில் குடைவதாக இருந்தது. வெள்ளைக் கச்சுக் கெதிராக அவளது பின்னிவிடப்பட்ட கருங்குழல் சுருள்கள் கவர்ச்சி யளித்தன. நோயாளிகளுக்கு அணியப்படும் தளர்ந்த வெள்ளாடை கூட அவள் அழகுக்கு ஒரு புதிய பாணியாக அமைந்தது போலவே இருந்தது. அவன் அவள் கையைப்பற்றினான். ‘நீநினைக்குமளவு நிலைமை மோசமல்ல; விரைவில் நீ இவ்வளவு துன்பப்படுவதைக் காண என்னால் பொறுக்க முடியவில்லை....’ என்று ஏதோ கூறத்தொடங்கியவன் அதற்கு மேல் பேச முடியாதவனானான். அவனையே அவள் கண்கள் இமையாது நோக்கின. கண்ணீர்ப் படலத்தின் மூலமாகவே அவன் உருவம் அவள்கண்முன் நிழலாடிற்று. ஊறுபட்ட மான் போன்ற அவளது வழக்கமான அவலக் கோபப் பார்வை இப்போது அவள் முகத்திலில்லை. பொறுமையுடன் கூடிய அன்புக் கனிவுதான் அதில் இடம் பெற்றிருந்தது. அவன் அழுவதுண்டு அவள் கண்களும் நீர்ததும்பின. இவ்வாறு இன்னும் அழுது கொண்டிருப்பது நல்லதல்ல என்று அவன் கருதினான். அதனால் அவள் பெற்றோர்கள் கலக்கம் பெரிதாகி அவள் அமைதியையே அது கெடுத்துவிடக்கூடும். இவ்வாறு எண்ணியவனாய் அவன் அவளுக்குக் கிளர்ச்சியூட்ட முயன்றான். ‘இதோ, வீணாக அழாதே! நீ குணப்படப் போகிறாய். அத்துடன் மேலுலகில் - பல உலகங்களிலே - நாம் மீண்டும் மீண்டும் இணையப் போவது உறுதி. உன் தாயும் தந்தையும் இன்னும் எத்தனையோ பேர்களும் உன்னிடம் உயிரை வைத்திருக்கிறார்கள். உன் உயிருக்கும் அவர்கள் உயிருக்கு மிடையே நிலவும் பாசத் தொடர்புகள் ஒரு வாழ்விலல்ல, பலபல வாழ்வுகளிலே உன்னை எங்களிடம் கொண்டுவராமலிருக்க மாட்டா...’ இவ்வாறு அவன் பேசிக்கொண்டே போனான். ஆனால் அவன் பேச்சுத் திடுமென இடை முறிக்கப்பட்டது. ‘அதெல்லாம் இருக்கட்டும். முதலில் இந்த வணக்க வழிபாடுகளை நிறுத்துங்கள். அவை எனக்கு பெருங்கேடு செய்கின்றன’ என்றது அக்குரல். அவனை அவள் இன்னும் நெருங்கி அணுகிப் பேசினாள். ‘நீங்கள் வருவீர்களென்றே நான் எண்ணவில்லை. முதலில் உங்களுக்காகக் காத்திருந்து காத்திருந்து என் உள்ளுயிரெல்லாம் அந்த ஆவலிலேயே கொதிப்பேறிற்று.’ அவள் குரலில் கனிவும் அக்கறையும் கலந்திருந்தன. அதே தொனியில் அவள் பாடினாள். நைந்து கிழிந்து நழுவுமருகது காணாச் செந்துவர் ஆடை அதுபோல் தனிமையில் நொந்தேங்கும் உள்ளம் காணாக் குருடாய் நீ சிந்தினை வாழ் நாளெல்லாம் சிதற விடுத்திங்கே! இந்தப் பேச்சுகள் ஆய் குரலில் கூறப்பட்டாலும் ஆய்க்குரியதன்று, பேசும் முறையும் அவளுடையதன்று என்று கெஞ்சி கண்டான். அவன் நன்கறிந்த ஒருவர் குரல் அது - யார் அது? ஆம், ஆம், அவள் குரலேதான் - ரோக்குஜோ சீமாட்டியின் ஆர்வத் தொனியே அது. ஒரோவொரு சமயம் நடப்பு இதுதான் என்று மக்கள் குறிப்பாகக் கூறுவதை அவன் கேட்டிருந்தான். ஆனால் இது கருத்துக் கொவ்வாத பயங்கரக் கற்பனை என்றே அவன் எண்ணியிருந்தான். யாரோ அவன் மீது பொறாமை கொண்ட எதிரிகள் கட்டிவிட்ட கதை அது என்றும், ஆவி ஒன்று பிடித்துள்ளது என்பதே உண்மையன்று என்றும் கூறி அவன் மறுத்து வந்திருந்தான். ஆனால் இப்போதோ எல்லாம் அவன் கண் முன்னாலேயே காட்சியளித்தது! நம்பமுடியாத கோரத் தோற்றம்தான் இது. ஆனால் மெய்வாழ்வில் இப்படியும் நிகழ்வது உண்டு. பெருமுயற்சியுடன் தன்னைத்தானே அடக்கிக் கொண்டு அவன் தணிந்த குரலில் பேசினான். ‘என்னிடம் பேசுவது யார் என்று எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. என்னை ஐயுறவு நிலையில் விட்டுவிடாதே’ என்றான். அவன் ஊகம் முற்றிலும் சரியென்றே அவள் மறுமொழி உறுதிப்படுத்திற்று. ஆய் இளவரசியின் பெற்றோர் இதற்குள் படுக்கை யண்டைவந்துவிட்டது அவன் நடுக்கத்தை இன்னும் மிகுதிப்படுத்திவிட்டது. ஆயினும் இதற்குள் பேச்சு அடங்கிவிட்டது அமைதியாய ஆய் படுத்திருந்ததை நோக்கி நோய் அடங்கிவிட்டது என்று ஆயின் தாய் எண்ணினான். வெந்நீர் வட்டில் ஒன்றை ஏந்தியவண்ணம் ஆயின் தாய் அவளருகே சென்றாள். ஆனால் அதற்குள் ஆய் திடுக்கிட்டெழுந்து ஒரு குழந்தையை ஈன்று புறந்தந்தாள். அந்தக் கணத்தில் எங்கும் மகிழ்ச்சியும் ஆரவாரமும் நிரம்பின. அதே சமயம் ஆயைப் பிடித்தாட்டிய ஆவி தற்காலிகமாகத்தான் ஓய்ந்திருந்தது. இது விரைவில் தெளிவாயிற்று. ஏனெனில் இதுவரையில் காணாத அளவில் பெருங்கிலி ஆயின் முகத்தில் இப்போது படர்ந்தது. ஆவி யாராக இருந்தாலும் இருக்கட்டும் - சற்றே விலக நேர்ந்ததற்காக அது இரட்டிப்பு மடங்கு கோபம் கொண்டதாகத் தென்பட்டது. ‘இனி என்ன!’ என்ற கவலை மீண்டும் எழுந்தது. ‘தெந்தைத்’ திருமடத்துத் தலைவரும் பிற திருமறை வாணரும் அறையில் வந்து குழுமியிருந்தனர். தங்கள் வேண்டுதல் மந்திரிப்பு வேலைகளின் பலனாகவே குழந்தைப்பேறு இவ்வளவு எளிதாக அமைந்தது என்று அவர்கள் கருதினர். இதனால் பெருமையும் வீறமைதியும் கொண்டவர்களாய் அவர்கள் தம்நெற்றியில் குருத்திருந்த வியர்வை வெள்ளத்தைத் துடைத்துக் கொண்டு, களையாற உணவும் ஓய்வும் கொள்ளும்படி வெளியே சென்றனர். நாட்கணக்காகத் துயரத்தில் தோய்ந்து கிடந்த ஆயின் தோழியர்களும் இப்போது சிறிது தெம்பு கொண்டனர். இன்னும் தெளிவான முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரியா விட்டாலும், பேறு எளிதாகிய நிலையில் இனி நிலைமை ஏறுமுகமாகவே இருக்கமுடியும் என்று அவர்கள் கருதி யமைந்தனர். தொழுகையும் மந்திரிப்புகளும் மீண்டும் தொடங்கின. ஒரு புது நம்பிக்கை அவற்றினிடையே சுடர்வீசிக் கொண்டிருந்தது. பல நாள் கட்டுண்டிருந்த துயரச் செறிவு குழந்தையைக் காணும் மகிழ்ச்சியால் தளர்வுற்று, இடையே இன்பக் கனவு நெளிந் தோடிற்று. முன்னாள் சக்கரவர்த்தி வண்ணப் பரிசுகள் அனுப்பியிருந்தார். மன்னுரிமை இளவரசர்கள், மன்னவை இளங்கோக்களின் பரிசுகளுடன் கலந்து அவை இரவில் மின்னொளி பெருக்கின. குழந்தை ஆணாக அமைந்தது இப்போது காலத்துக்குரிய வழக்கமான மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி அதற்கு நிறைவும் பொங்கார்வமும் அளித்தன. இந் நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் கேட்டு ரோக்குஜோ சீமாட்டி திடுக்கிட்டாள். நெடுமாடத்திலிருந்து அவளுக்கு வந்த அதற்கு முந்திய கடைசிச் செய்தி - பேறு கட்டாயம் கடும் பேறாயிருக்கும் என்பதே.ஆனால் ஒரு சிறு இடர்ப்பாடுகூட இல்லாமல் எல்லாம் நடந்துவிட்டதென்ற செய்தி அவளுக்கு ஒரு புதிரிடுவதாயிருந்தது. மிகவும் அலைக்கழிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு அவள் இது வரை ஆளாகி வந்திருந்தாள். தன் உள்ளுயிர் முற்றிலும் உருமாறிவிட்டதாக அடிக்கடி அவளுக்குத் தோற்றிற்று. தானே தனக்கு அயலாகி விட்டதுபோன்ற உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான், இன்னதென்று காண முடியாத நிலையில் தன் ஆடை, தலைமுடியெங்கும் வெண்கடுகு வாசனை வீசியதை அவள் கவனித்து வந்தாள். வெந்நீரில் குளித்துப் புத்தாடை யணிந்த பின்பும் அது அவளை விட்டகலவில்லை. தன்னைவிட்டுத் தான் சென்றுவிட்டது போன்ற உணர்ச்சியையும் இம்மணத்தையும் அவளால் தாங்க முடியவில்லை, இரண்டையும் அடக்கவோ அகற்றவோ முடியவில்லை. இந்த உள்ளார்ந்த உணர்ச்சி ஆட்டபாட்டங் களின் விளைவு அவள் பாங்கியர் கண்களுக்குப்படாமல் தப்ப இயலாதுபோயிற்று - இதுபற்றி அவர்கள் அவள் காணாமல் மறைவில் பேசவும் தலைப்பட்டனர். அந்தப் பாங்கியர் குழுவில் அவளுக்கு உயிருக்கு உயிரான ஒரு நண்பர் கிடையாது - இருந்திருந்தால் அடக்கிவைத்து மூடிய தன்துயரங்களை யெல்லாம் அந்த ஒருவரிடமாவது திறந்துகாட்டி வெளியிட்டுப் பேசி ஒரு சிறிது ஆறுதல் பெற்றிருக்கலாம். இத்தகைய துணையற்ற நிலை அவள் உள்ளே நிகழத்தொடங்கிய விசித்திர உருவேறுபாட்டின் மாயத்துயரை மிகுதிப்படுத்தவே உதவிற்று. கெஞ்சிக்கு ஆயின் நெருக்கடிநிலை பற்றிய கவலை இப்போது ஒரு சிறிது தளர்ந்திருந்தது. ஆனால் அந்நெருக்கடிக் கட்டத்தில் கேட்ட ரோக்குஜோ சீமாட்டியின் அபூர்வஆவி உரையாடல் அவன் மனத்தில் ஓயாது வந்து உறுத்திக் கொண்டேயிருந்தது. அவன் அவளுடன் கொண்ட தொடர்பை விட்டு நெடுநாளாகி விட்டது. ஆயினும் இனி அவளைப் பார்ப்பதென்பது முடியாத காரியம் என்பது அவனுக்குத் தெளிவாயிற்று. எப்படியும் இவ்வளவு கடுந்துயரங்களுக்கு இவ்வளவு நீடித்து ஆட்பட்டுவிட்ட இளவரசியிடமிருந்து பிரிவதே எண்ணக் கூடாத செய்தி. மற்றொருபுறம் அவன் நண்பர்கள் அவளைப் பற்றிய கவலையால் எழுச்சி முற்றிலும் அடங்கி இன்னும் கவலை முற்றிலும் குறையாமலே மனமழுங்கியிருந்தனர். அவர்களைவிட்டுச் செல்வதும் கனவுகாணத் தக்கதன்று. எனவே எவ்வழியிலும் இனி தன் இரகசிய உலாக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலே நலமென்று அவன் உறுதி கொண்டான். இன்னும் நேரில் சென்று காணுமளவு ஆயின் நிலை திருந்திவிடவில்லை குழந்தை எவர் அவா ஆர்வத்தையும் ஒருபடி மேற்சென்று விஞ்சிய வனப்புடையதாகவே இருந்தது. அதனிடம் கெஞ்சி கொண்ட ஈடுபாடும் அதன் நலத்துக்காக அவன் கொண்ட ஆர்வ அக்கறையும் ஆயின் தந்தை உள்ளங் குளிர்வித்தது. கணவனுடன் தன் மகளின் தொடர்பில் மீண்டும் நட்பின் பாசம்வளர்ந்து வந்ததென்பதற்கு இதுவும் ஓர் அறிகுறி என்று அவர் கருதினார். மகள் உடல் தேறுவதில் ஏறபட்டுவந்த தாமதம் அவருக்கு வருத்தம் அளித்தது. ஆயினும் அவளை ஆட்கொண்ட கண்டத்தின் உக்கிர வேகங்காண, அது விலகியபின் கூட அதன் தடங்கள் முற்றிலும் அகல நெடுநாள் செல்வது இயல்புதானென்று அவர் தனக்குள்ளாக ஆறுதல் கூறிக்கொண்டார். மேலீடான தோற்றம் இப்படி இருந்தாலும் உள்ளார்ந்த நிலை ஆறுதல் தரக் கூடியதாகவே இருக்கக் கூடுமென்றும் அவர் நம்பினார். குழந்தையின் தோற்றம் உரிமை இளவரசரை முற்றிலும் நினைவூட்டுவதாக இருந்தது. புஜித்சுபோவின் சிறுமகவைப் பார்க்ப வேண்டுமென்ற ஏக்கத்தை இது அவன் உள்ளத்தில் கிளறிவிட்டது. வலங்கொண்டெழுந்த இந்த ஆவலை அடக்கமாட்டாமல் அவன் ஆய் இளவரசிக்கு ஒரு கடிதம் எழுதினான். ‘நான் அரண்மனைக்குப் போய் நெடுநாளாயிற்று. நெடுநாளாக எந்த நண்பரையும் பார்க்கவில்லை. சிறிது மனதுக்கு ஓய்வு பெறுவதும் அவசியம். ஆகவே நான் வெளியே செல்ல விரும்புகிறேன். செல்லுமுன் நான் உன்னைப் பார்க்கவேண்டும். நம்மிடையே உள்ள தொடர்பு அற்றுவிடவில்லையென்ற ஆறுதல் பெற்றுப் போக விரும்புகிறேன்’ என்று அவன் மன்றாடினான். ஆயின் பாங்கியரும் இப்போது அவன் பக்கமாகப் பேசினர். ‘ எப்படியும் கெஞ்சி உன் கணவர். அவரிடம் நீ இவ்வளவு கடுகடுப்பாகவும் இறுமாப்பாகவும் ‘நடந்துகொள்ளக்கூடாது’ என்று அவர்கள் கூறினார்கள். ‘நோய் என் தோற்றத்தையே மாற்றியிருக்கிறது. ஆகையால் இடையே ஒரு திரையிட்டு அதன்பின் இருந்து நான் பேசுகிறேன்’ என்று அவள் கூறிப் பார்த்தாள் . அவள் படுக்கையருகே ஒரு கோக்காலி கொண்டு வந்து போடப்பட்டது. அதில் அமர்ந்தவண்ணம் அவன் அங் கொன்றும் இங்கொன்றுமாகப் பொதுச் செய்திகள் பற்றிப் பேசினான். அவ்வப்போது இடையிடையே அவள் ஒன்றிரண்டு சொற்களே பேசினாள். உண்மையில் அவள் உடல் இன்னும் மிகவும் பலவீனமாகவே இருந்தது. ஆயினும் இப்போது அவளைப் பார்த்த எவரும் சற்றுமுன் சாவின் வாயிலை எட்டிப் பார்த்தவள் அவள் என்று கூறி விடமுடியாது. நோயின் மிக மோசமான கட்டங்களைப் பற்றிக் கூட அவர்களிருவரும் மிக அடங்கிய குரலில் பேசிக்கொண்டனர். அச்சமயம் சாவின் அண்மை என்று தோற்றிய நிலையில் அவள் வாய்வழி எழுந்த பேச்சுகள் அவன் நினைவுக்குவந்தன. இதை எண்ணியதே அவன் முகங்கடுத்தது. ‘உன்னோடு நான் ஒருநாளைக்குப் பேச வேண்டுமென்று வைத்திருக்கும் செய்திகள் உண்டு. ஆனால் அதற்கு இது தருணம் அல்ல. நீ இப்போது மிகவும் களைத்திருக்கிறாய். இச்சமயம் நான் விடை பெற்றுச் செல்வதே நன்று’ என்று அவன் கூறினான். அவள் தலையணைகளை இப்போது அவன், தானே தன் கையால் ஒழுங்குபடுத்தினான். அவள் முகங் கழுவுவதற்கான வெந்நீர்த் தட்டத்தையும் அவன், தானே கொண்டுவந்தான். ஒரு தாதி செய்யும் வேலைகள் யாவற்றையும் அன்புடனும் திறத்துடனும் அவன் செய்தது கண்டவர்கள் வியப்படைந்தனர். இக்கலைகளை அவன் எங்கிருந்து கற்றானோ என்று அவர்கள் அவனை வாயாரப் பாராட்டினர். அவள் வலுவிழந்தவளாய், செயலற்றவள் போலவே கிடந்தாள். ஆயினும் அவள் அழகு இப்போதும் ஈடிணையற்ற தாகவே இருந்தது. சில சமயங்களில் வாடிய மலர் போன்றிருந்த அவள் மேனி அப்படியே வதங்கி பட்டு விடுமோ என்ற நிலையில் தோற்றமளித்தது. அவள் அழகினைக் கண்டு அவன் வியப்படையாத நாள் கிடையாது. ஆயினும் இன்று போல் என்றும் அவள் அழகு அவன் உள்ளத்தை உருக்கியதில்லை. இப்படிப்பட்ட ஓர் அழகாரணங்கு ஆண்டாண்டாகத் தன்னைவிட்டு நழுவிச் செல்லும்படி தன்னால் எப்படித்தான் விட்டிருக்க முடிந்ததோ என்று அவன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். நெடுநேரம் அவள் மீது வைத்த கண் வாங்காமலே அவன் நின்றான். இறுதியில் அவன் அவளிடம் வாய்திறந்து பேசினான். ‘நான் இப்போது அரண்மனைக்குப் போகவேண்டும் ஆனால் நீடித்து அங்கே தங்கமாட்டேன் விரைந்து திரும்பிவிடுவேன்.இப்போது உன்நிலை ஓரளவு சரிப் பட்டுவிட்டது. உன் தாய் வந்து உன்னைப் பார்ப்பதற்குள் அவள் மனக்கவலையைக் குறைக்க நீ வகைசெய்ய வேண்டும். வெளிக்கு அவள் எதுவும் காட்டிக் கொள்ளா விட்டாலும், உள்ளார உன்கவலையால் முற்றிலும் வாடிப் போயிருக்கிறாள். கொஞ்சங் கொஞ்சமாக முயன்று ஒவ்வொரு நாளும் நீ சிறிது நேரமாவது எழுந்து உட்கார்ந்திருக்க முயலவேண்டும். உன் உடல் தேற இவ்வளவு தாமதமாவதற்கு உன் தாய் உனக்கு அளிக்கும் மட்டற்ற இளக்காரம் தான் காரணம் என்று நினைக்கிறேன்’ என்று அவன் நயமாகப் பேசினான். முழு அரண்மனை ஆடையலங்காரங்களுடன் புறப்பட்டு அவன் எழுந்துநின்ற சமயம் அவள் கண்கள் அவன் மீது படர்ந்தன. இதற்குமுன் தன் வாழ்நாளில் அவனை என்றுமே பார்த்தறியாதவள் போல, அவன் சென்ற வழியே அவள் தன் பார்வையைச் செல்லவிட்டிருந்தாள். இலையுதிர்கால அரசவை மரபுக்கேற்ப, கெஞ்சியுடன் துணை செல்லுவதற்காகப் பணிமக்கள் யாவரும் வந்து புடைசூழ்ந்தனர். அவர்களுடன் ஆயின் தந்தையும் அரண்மனைக்குச் செல்ல எழுந்தார். வருகிற ஆண்டு விழாவுக்குரிய ஏற்பாடுகளைச் செய்ய அவர் உதவிநாடி ஆயின் உடன்பிறந்தார்களும் புறப்பட்டனர். நெடு மாடத்தின் பணிமக்களிலும் பலர் சென்றுவிட்டதனால் அவ்விடம் வெற்றிடம்போல துயரார்ந்த காட்சியளித்தது. ஆய் இளவரசியை முன்னர்த் தாக்கிய மாரடைப்பு வலி இப்போது மீண்டும் அவளைப் பிடித்தாட்டத் தொடங்கிற்று அவள் நிலைமை மீண்டும் நெருக்கடிக்கு உட்பட்டது. அரண்மனையிலிருந்தே இச்செய்தி கேட்டுக் கெஞ்சி உடனடியாகத் தன் அரசவைப் பேட்டியை நிறுத்திவிட்டு விரைந்தான். ஆனால் அவ்விரைவுக்கு மேல் விரைவாக இப்போது எல்லாம் நடைபெற்றது. அன்று பணியாளர் அமர்வுக்குரிய மாலை. ஆயினும் நெடுமாடத்திலுள்ள நெருக்கடியை உன்னி யாவரும் அங்கே செல்வதை நிறுத்தினர். முன்னைய நெருக்கடியின் போது பேருதவி செய்த தெந்தை மலையின் திருமடத்துத் தலைவரை இப்போது வரவழைக்க முடியவில்லை. அதற்குரிய நேரம் கடந்துவிட்டது. நெருக்கடி தீர்ந்து முன்னேற்றமேற்படத் தொடங்கி விட்டதென்று கருதப்பட்ட அந்த நேரத்துக் குள்ளேயே ஆய், திடுமென மீண்டும் சாவின் வாயிலை அணுகினாள். நெடுமாட மக்களுக்கு இது தாங்கொணாத் துயர்தந்து அவர்களைத் துடிக்க வைத்தது. அவர்கள் முற்றிலும் மனமுடைந்து செயலற்றுப் போயினர். திசை திசைதோறும் பல இடங்களிலிருந்தும் பணியாளர்கள் பலரிடமிருந்து நிலைமையை உசாவியும் அனுதாபம் தெரிவித்தும் தூதாட்கள் நெடுமாடத்தில் வந்து வந்து குழுமி மொய்த்தனர். ஆனால் அன்றைய நெருக்கடி நிலையிடையே வீட்டில் எவரிடமிருந்தும் எந்தச்செய்தியும் எவரும் அறியமுடியவில்லை. இன்னது செய்வதென்றறியாமல் எல்லாருமே வெறிபிடித்தவர்கள் போல இங்கு மங்கும் ஓடிய வண்ணமாயிருந்தனர். இந்நிலைமை பார்க்கக் கலவரம் தருவதாயிருந்தது. ஆய் இளவரசி அடிக்கடி பேய்பிடித்த நிலையடைந்து முற்றிலும் உணர்விழந்தவளானாள். அந்நிலையில் அவள் உடலைச் சரிசெய்யவோ, தலையணைகளைத் தொட்டுப் புரட்டவோ நெடுநேரம் யாரும் எண்ணவில்லை. ஆனால் இரண்டு மூன்று நாட்கள் இந்நிலை நீடிக்கவே, உடலை விட்டு உயிர் ஓடி விட்டதென்பது எல்லாருக்கும் ஐயத்துக்கு இடமின்றித் தெளிவாயிற்று. எங்கும் அழுகையொலியே நிரம்பிற்று. கெஞ்சியின் மனக் கசப்பு முற்றிலும் வாழ்க்கை மீதே வெறுப்பாக மாறிற்று. அடுத்தடுத்து அவன் கடந்துவந்த துயர அலைகள் பல . வாழ்க்கையே துயரங்களின் ஓர் எல்லையற்ற சங்கிலி என்றும், அது பயனற்ற பாலைப்பரப்பு என்றும் இப்போது அவனுக்குத் தோன்றிற்று. அரசவையிலிருந்தும் நகரமெங்குமிருந்தும் ஆறுதலுரைகள், அனுதாபச் செய்திகள் வந்துவந்து குவிந்தன. இவைகூட அவன் வேதனைகளைக்கிளறி அவன் உணர்வைக் கலங்க வைத்தன. முன்னாள் சக்கரவர்த்தி அடிக்கடி அனுப்பிய செய்திகள் ஆயின் பிரிவினால் அவர் அடைந்த தனிப்பட்ட துயரத்தை நன்கு எடுத்துக்காட்டின. ஆயின் தந்தை இடைவிடாது கண்ணீர் வடித்தபடியே இருந்தார். முன்னாள் சக்கரவர்த்தி காட்டிய ஆர்வ அனுதாபத்தின் மதிப்பு அவர் துயரிடையேகூட அவருக்கு ஒருசிறிது ஆறுதலளித்தது. கடைசி நேரத்திலாவது உடலில் உயிர்ப்பு ஏற்படக்கூடாதா என்று சில நண்பர்கள் தூண்டுதலின்மீது தீவிர முயற்சிகள் நடைபெற்றிருந்தன. ஆனால் எல்லாம் கடந்துவிட்டதென்று நம்பாதவர்களும் கடைசியில் நம்பினர். துயரம் பொறுக்காமல் பாரமாகத்தோன்றிய உள்ளத்துடன் அவர்கள் உடலைத் தோரிபெனோவுக்குக் கொண்டு சென்றனர். இங்கே நகரத்துக்கு நெடுந்தொலைவிலிருந்து நன்காட்டுக்கு வந்தபின் எல்லார் உள்ளங்களிலும் அழலெழுப்பிய காட்சி தொடங்கலாயிற்று. நன்காடு எவ்வளவோ நீள அகலமுடைய வெட்ட வெளியாகத்தான் இன்றுவரை காட்சியளித்திருந்தது. ஆனால் இன்று நகரின் அரண்மனைகள், மாடங்கள் எல்லாவற்றிலுமுள்ள மக்களின் திரள் பாடையின் பின்னே வந்து நிரம்பியிருந்தது. அத்துடன் அண்டையயலிலுள்ள எல்லாத் திருக் கோயில்களிலிருந்தும் குருமாரும் துறவிகளும் தத்தம் மந்திர வாசகங்களை முனகிக்கொண்டே தொடர்ந்து வந்திருந்தனர். இதனால் அவ்வகல்வெளி யெங்குமே நிற்பதற்கும் இடமில்லா திருந்தது. முன்னாள் சக்கரவர்த்தி தன் பிரதிநிதியை அனுப்பி யிருந்தார். கோக்கிடன் இளவரசியும் உரிமை இளவரசரும் தத்தம் ஆட்களை அனுப்பிப் பிரிவுக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். முதல்தரப் பெருங்குடிமக்கள் எத்தனையோ பேர் தாமே நேரில் வந்து திரளுடன் திரளாகக் கலந்து நின்றனர். மக்கள் அனுதாபம் இவ்வளவு பேரளவாகத் திகழ்ந்த முழு நிறைவான எரியூட்டு விழாவை இதுவரை யாரும் கண்டதில்லை. ஆனால் ஆயின் தந்தைமட்டும் எரியூட்டிய இடத்துக்கு வராதிருந்தார். ‘தளர்ந்த இந்த முதுவயதிலே, இவ்வளவு இளமை வாய்ந்த, இவ்வளவு நலமிக்க இளஞ் செல்வத்தை இழப்ப தென்பது தாங்கமுடியாத வேதனையே’ என்று கூறி அவர் அழுதார். தம் கண்ணீரைத் தடுக்க அவர் எவ்வளவு முயன்றும் அது சிறிதும் தடைபடாது கன்னங்களில் ஒழுகிக் கொண்டே யிருந்தது. அவர் துயர் காண்போர் உள்ளத்தையே பிளப்ப தாயிருந்தது. துயர் விழாவின் வினைமுறைகள் இரவுமுழுதும் நடைபெற்றன. மாண்ட உயிரின் எச்சமாக ஒருபிடி சாம்பலை மட்டும் கிடக்கவிட்டுத் துயருழந்தோர் அனைவரும் தத்தம். இல்லங்களுக்கு மீண்டனர். துயர் விழா வேறெந்தத் துயர் விழாவும் நடந்திராத முறையில் பெரு விழாவாக நடைபெற்ற தாயினும், கெஞ்சிக்கு அதுமுற்றிலும் துயர் விழாவாகவே அமைந்தது. அத்துடன் முன்னைய ஒரு நிகழ்ச்சி நீங்கலாக அவன் வாழ்வில் சாவு குறுக்கிட்ட தறுவாய் வேறு கிடையாது. அந்நாளைய நிகழ்ச்சி இது காரணமாக அவன் உள்ளத்திரையில் நெடுநாள் நிலவி ஓயாமல் மீண்டும் மீண்டும் வந்து காட்சியளித்தது. இறுதி வினைமுறைகள் எட்டாவது மாதம் கடைசி நாளில் நடைபெற்றன. இலையுதிர் காலத்தின் காலைக் கனிவெல்லாம் ஆயின் தந்தைக்கு அவர் துயர்முகிலின் மாலையில் மறைப் புண்டது போலிருந்தன. இது கண்டு வருந்திய கெஞ்சி அவரிடம் வானத்தைச் சுட்டிக்காட்டி உளநெகிழ்வுடன் பாடினான். இலையுதிர் காலத்து எழில்முகிற் படலங்கள் எண்ணற்றவை வான்படரினும் எம் அணங்கின் அலைபாயு மாவி யதனின் றெழுந்த தெது என உணராததனால் இவ் வான்முகிலெலாம் கலையா அவள் உருவென் றெண்ணி என் கண்கள் இன்று அலையும், உலவும் அவற்றின் தடமெல்லாம்! கடைசியில் அவன் தன் அறைக்கே வந்து சேர்ந்தான். தன் உடலை அவன் படுக்கையில் கிடத்தினாலும் துயிலை வரவழைத்துக் கொள்ள முடியவில்லை. அவளைத் தான் அறிந்த நாள் முதல் கடந்த ஆண்டுகள் எல்லாவற்றினூடாகவும் அவன் மனம் பறந்தோடிற்று. அவ்வளவு காலமும் எல்லாம் தானாகச் சரிப்பட்டுவிடும் என்று கருதிக்கொண்டே யாதொரு செயலோ, நினைப்போ, முயற்சியோ இல்லாமல் அவன் வாளா இருந்துவந்தான். ‘அந்தோ, ஏன் இப்படி இருந்தேன்? அவள் மனப்பாங்கை உணரமுயலாமல் நான்மட்டும் ஏன் இன்பமாகப் பொழுது போக்குவதில் முனைந்திருந்தேன்? அவளுடன் உண்மையான நேசமோ, சமரசமோ ஏற்படுத்திக் கொள்ள முற்படாமல் ஏன் நாட்கடத்தினேன்?’ என்றிவ்வாறு தனக்குள் தானே கேட்டுக் கேட்டு அவன் மாளாக் கழிவிரக்கத்தில் அழுந்தினான். ஆனால் இவற்றாலெல்லாம் என்ன பயன்? மங்கிய சாம்பல் நிறமுடைய துயராடையை அவன் பணியாட்கள் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போயினர். அச்சமயம் அவன் மனம் புதிதாகத் தற்கண்டனத்தில் மேலும் இறங்கிற்று. ‘அந்தோ! அவளுக்குப் பதில் நான் இறந்து அவள் இருந்திருக்கப்படாதா? அப்படி யிருந்திருந்தால் அவள் இந்தச் சாம்பல் நிற ஆடை யணியாமல் பெண்டிருக்குரிய திண்ணிறச் கருஞ்சாயந் தோய்ந்த துயராடை அணிந்திருப்பாளே! - இந்த ஏக்கத்தை அவன் ஒரு பாடல் வடிவாக்கினான். ‘மரபுவழி துயராடை மென்சாயல் மருவிடினும் உரிய அவள் உடைநிறமன்றோ உடையது உளத் துயரே!’ வெளியார் பார்வையில் அவன் உடையின் தோற்றம் அவனது கற்பனை அவாவுக்கு நேர்மாறாகவே இருந்தது. அந்த மங்கல்நிற உடையுடன் அவன் அக்க மணிமாலையை உருட்டிக் கொண்டிருந்த சமயம், யாரும் அவனிடம் சோகத்தையோ, சோர்வையோ காணவில்லை. உடை அவன் வீறமைதியையும் வனப்பையும் பெருக்குவதாகவே அமைந்தது. அறவாழி அந்தண்மையின் அமைப்பு முதல்வரென்ற முறையில் போதி சத்துவராகிய சமந்தபுத்திரருக்குரிய வணக்க மந்திரங்களை அவன் உருவிட்ட சமயம் அம்மந்திரங்களை உச்சரிப்பதே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட குருமார் குரலைவிட அவன்குரலே உருக்கமாக இருந்தது. இவ்வினை முடிவில் அவன் சென்று தன் புனிற்றிளங்குழவியைப் பார்வையிட்டான். ஆயுடன் தான் நடத்திய காதல் வாழ்வின் சின்னமாக இக்குழந்தையையேனும் அவள் பெற்றுத் தந்துவிட்டுச் சென்றாளே என்பதில் அவனுக்குச் சிறிது ஆறுதல் ஏற்பட்டது. நிஜோயின் மாடத்துக்கு அன்றும் அவன் போக முடியவில்லை. மனைவியைப் பற்றிய துயர எண்ணங்களிலேயே அவன் பொழுது கழிந்தது. அவள் ஆன்ம நலத்துக்குரிய வழிபாட்டு மந்திரங்களுக்கான ஏற்பாடுகளையும் அவன் மறந்துவிடவில்லை. அவன் சில கடிதங்களும் எழுதினான். அவற்றுள் ரோக்குஜோ சீமாட்டிக்கும் ஒன்று இருந்தது. திருநங்கை இதற்குள்ளாகத் திருவாயில் காப்பாளரின் பொறுப்பில் விடப்பட்டிருந்தாள், ‘செறுவில்’ மாட அரண்மனைக்கே அவள் அனுப்பப்படும் வேளை குறுகிவந்தது. தான் மறுமொழி யெழுத முடியாமைக்குரிய சாக்காக ரோக்குஜோ சீமாட்டி தன் புதல்வியின் இந்த நிலையையே சுட்டிக்காட்டியிருந்தாள்.1 வாழ்க்கைத் துயரங்கள் இச்சமயம் கெஞ்சிக்குச் சொல்லொணாச் சோர்வையும் மனக்கசப்பையும் உண்டுபண்ணி யிருந்தன. துறவு நோன்பு மேற்கொண்டு விடவும் இச்சமயம் அவன் முனைந்திருந்தான். ஆயினும் உலக வாழ்வுடன் அவனை இறுகப்பிணித்த மற்றொரு பிணைப்பு இச்சமயம் அவன் நினைவுக்கு வந்தது. ஒருசில கணங்களில் சின்னஞ்சிறு பெண்ணான முரசாக்கியின் உருவமும் அடுத்து அவன் மனத் திரையில் ஆடிற்று. இவையே அவன் முனைப்பைத் தடை செய்தது. அரண்மனைப் பக்க மாடத்தில் அச்சிற்றுருவம் இன்னும் அவனை எதிர் நோக்கிக் கொண்டே யிருக்கும் என்ற எண்ணம் இப்போது மேலிட்டது. அந்தோ, இவ்வளவு காலம் அவள் எவ்வளவு மனவேதனையுடன் இருந்திருக்கவேண்டும்! நகர்காவலர் தம் காவற்பணியில் ஈடுபட்டு அணிமையில் தான் சுற்றிக் கொண்டிருந்தனர். அரண்மனைத் திரைகளுக்கு இப்பால் படுக்கையில் கிடந்த கெஞ்சியின் தனிமையை இது ஒருசிறிதும் குறைக்கவில்லை. இலையுதிர்காலம் தனிமைக்கு உகந்ததல்ல என்னும் முதுமொழியை யெண்ணி அவன் இனிமைமிக்க குரலுடைய தன் அரண்மனைப் பணிமாதருள் ஒருத்தியை வரவழைத்தான். காலை இன்னோசையுடன் கலந்த அவள் குரல் மிகவும் கனிவும் உருக்கமும் உடையதாகத்தான் இருந்தது. ஆயினும் இலையுதிர்காலத்தின் இறுதிக் கட்டத்துக் குரிய மனச்சோர்வு காற்றின் எழுச்சியுடன் சேர்ந்து அவனைப் பீடித்தது. தனிமையாகப் படுக்கையில் கிடக்கும் பழக்கமற்ற அவனுக்கு விடியும்வரை முற்றிலும் தனிமையாய்க் கழிப்ப தென்பது முடியாததா யிருந்தது. அவன் வெளியே எட்டிப்பார்த்தான். தோட்டத்தின் படுக்கைகள் யாவும் திண்பனி ஆவியினால் மூடப்பட்டிருந்தன. அந்நிலையிலும் சிறிது தொலைவிலுள்ள செவ்வலரி மலர்க்கொத்துடன் ஏதோ கட்டுண்டுகிடப்பது தெரிந்தது. அது உண்மையில் கருநீலத்தாளில் எழுதப் பட்ட ஒரு கடிதமே. தூதர் யாராயினும் அதை அங்கேயே விட்டுச் சென்றிருக்கவேண்டும். ‘ஆ’ என்ன அபூர்வ யோசனை!’ என்று அவன் அச்செயலின் அழகுநயத்தை வியவாமலிருக்க முடியவில்லை. வியந்து பாராட்டியவாறு அவன் அருகில் சென்றான். எழுத்து இன்னாரது என்பது அவனுக்கு உடனே புலப்பட்டுவிட்டது - அது ரோக்குஜோ சீமாட்டியினதே. ‘என் மகள் நிலையை மனதிற்கொண்டு உங்கள் முந்திய குறிப்புக்கு மறுமொழி அனுப்ப இயலாமல் இவ்வளவு காலந்தாழ்த்த நேர்ந்தது. அதுபற்றி நீங்கள் என்னைத் தவறாக நினைக்க மாட்டீர்களென்று கருதுகிறேன்’ என்று அவள் தொடங்கி யிருந்தாள். அதன்பின் செவ்வலரி என்ற பெயருடன் விளையாடிய ஒரு சிலேடைக் கவிதை தொடர்ந்தது. ‘தங்கள் பிரிவால் தகதகத்த என் கண்கள் பொங்குகின்ற செவ்வலரிப் பூப்போல் அவிழ்ந்தனவே!’ ‘காலை வனப்பிடையே என் எண்ணங்கள் தங்களையும் தங்கள் துயரங்களையும் நினைவூட்டின. இதனாலேயே தங்களுக்கு மறுமொழி வரையாமல் என்னால் இருக்கமுடிய வில்லை’ என்றும் அவள் எழுதியிருந்தாள். எழுத்து வழக்கத்துக்கு மேம்பட்ட நயநேர்த்தி உடையதாயிருந்தாலும், அவன் வெறுப்புடன் முடங்கலை எடுத்து அப்புறம் வீசினான். அவள் ஆறுதல்கள் அவனைப் புண்படுத்தவே செய்தன. அவற்றில் உள்ளுணர்ச்சி இருக்க முடியாதென்பதை அவன் கண்ட காட்சிகளே அவனுக்கு நினைவூட்டின. ஆயினும் அவள் தொடர்பை முழுதும் முறித்துக்கொள்வது பொருத்தக் கேடானது என்று அவன் எண்ணினான். அவ்வாறு செய்தால் அதுவே அவள் மீது குற்றப்பத்திரிகை சுமத்தியது போலாகும். அவன் உள்ளார்ந்த விருப்பமும் அத்திசையில் இல்லை. தவிர, துன்பகரமான அம்முடிவுக்கு அவள் பற்றிய அந்தச் செய்தியே காரணமல்லாமலும் இருக்க இடமுண்டு. ஆயின் ஊழ் அதைச் சாராமலே திண்ணமான முடிவுடையதாயிருக்கலாம். ஆயினும் ஆவி பேசுவதையும் செய்வதையும் அவன் கேட்காமலோ, காணாமலோ இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்கும். கண்டு கேட்ட நிலையில், அந்தப் பயங்கரக் காட்சியின் கோரத் தடத்தை அவன் தன் உள்ளத்திலிருந்து என்றுமே அகற்றிவிட முடியவில்லை. துயரக் கொண்டாட்ட நாட்களின் நடுவில் அவன் கடிதம் எழுதுவதனால் திருநங்கையின் திருநிலை விழாவின் தூய்மை நிலைக்குக் கேடுவந்துவிடக் கூடும் - இவ்வாறு சாக்குக்கூறியே அவன் எளிதில் அவளுக்கு மறுமொழி அனுப்பாமலிருக்க இடமிருந்தது. ஆனால் அவனுக்கு ஒரு சிறிதேனும் ஆறுதலும் மகிழ்ச்சியும் தருவதற்கென்றே அவள் முடங்கல் வரைந் திருந்தாள். இதை மனத்தில் கொண்டு நன்கு சிந்தித்துப் பார்த்தபின் எழுதாமலிருப்பது உணர்ச்சியற்ற செயலாய்விடும் என்று அவன் முடிவு செய்தான். ஆகவே மெல்லிய பாக்குவண்ணம் உடைய தாளை எடுத்து எழுதினான். ‘எத்தனை நாட்களோ நழுவிச் செல்லும்படி விட்டுளேனானாலும், என் நினைவுகளிலிருந்து தாங்கள் ஒரு சிறிதும் அகன்றதில்லை என்பது உறுதி. தங்கள் கடிதத்துக்கு உடனடியாக மறுமொழி அளிக்காது நான் காலந்தாழ்த்த நேர்ந்ததென்றால், தங்கள் குடும்பத்தைத் தற்போது சூழ்ந்துள்ள தெய்விக ஒளிக்கு ஊறுசெய்யத் துணியவில்லை என்பது ஒன்றே காரணம் ஆகும். இதை நீங்களும் குறிப்பாய் உணர்ந்திருப்பீர்களென்றே நம்புகிறேன். நடந்தது பற்றி ஓயாது சிந்தித்து மனம் புண்படுத்திக் கொள்ளவேண்டாம். ஏனெனில் முந்தியோ, பிந்தியோ, யாவரும் இங்கிருந்து செல்ல வேண்டியவர்களே. காலை ஒளியில் தூங்கும் பனித்துளிகளின் நிலைக்கு வேறு பட்டனவல்ல, நம் வாழ்க்கைகள். தற்போதைக்கு நான் வேண்டுவதெல்லாம், சிந்தனைக்கிடங் கொடாதிருங்கள். தற்போது நாம் சந்திக்க முடியாத நிலையிலிருக்கிறோம் என்பதனை எண்ணியே இதை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன்’ தன் புதல்வியின் திருநிலை ஏற்பாட்டுக்குரிய இடத்திலேயே கடிதம் அவளிடம் தரப்பட்டது. ஆயினும் திரும்பத் தன் வீட்டுக்கே வந்து சேரும்வரை அவள் அதை வாசிக்கவில்லை. முதற்பார்வையிலேயே அவன் குறிப்பாகச் சுட்டியதை அவள் உணர்ந்தாள். ‘ஆ, குற்றஞ் சாட்டுபவருள் இவரும்தான் ஒருவர்!’ என்று தன்னைமீறி அவள் தனக்குள் கூறிக் கொண்டாள். இப்போது கடைசியாகத் தன் குற்றத்தின் பயங்கரத்தன்மையையும் அளவையும் அவளால் காணமுடிந்தது. தானே அதை ஒத்துக் கொள்ள நேர்ந்தபோது அவள் அகவேதனை பதின்மடங்காகப் பெருகிற்று. கெஞ்சியே தன் குற்றத்தில் நம்பிக்கை கொண்டுவிட்ட நிலையில், அவள் மைத்துனரான முன்னாள் சக்கரவர்த்திக்கும் அது தெரிந்தே போயிருக்க வேண்டும். அவர் அவளைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ! அவள் மாண்ட கணவன் ஜெம்போ இளவரசனே அவர் உடன்பிறந்தார்களில் அவருக்கு உயிருக்குயிரானவர். தற்போது திருநிலை ஏற்பாட்டுக்குரியவளாயுள்ள புதல்வியின் பாதுகாவலர் உரிமையை அவர் உவந்து ஏற்றவர். தம் உடன்பிறந்தார் ஆர்வ வேண்டுதலின்படி அவளது கல்விப் பயிற்சிக்கான முழுப் பொறுப்பும் எடுத்துக்கொள்ள உறுதி கூறியவர் அவரே. அவளைத் தம் புதல்வியாகவே நடத்திவந்தார் அவர். தொடக்கத்தில் புதல்வியையும், கைம்பெண்ணாய்விட்ட தாயையும் தம்முடன் அரண்மனை வந்து வாழும்படி மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார். அதை அவள் ஏற்கவில்லை; ஏற்றிருக்கவும் முடியாது. ஆனால் அதனோடு நிற்காமல் இளமை வாய்ந்த கெஞ்சியின் காதல் மொழிகளுக்குச் செவி சாய்த்து, அந்த மறைகாதல் வெளிப்படாமல் மறைக்க ஓயாக் கவலையும் கலக்கமும் மேற்கொண்டிருந்தாள். இந்த மறைகாத லொழுக்கம் நிகழ்ந்த காலமுழுவதும், அவள் உள்ளம் இன்னதென்றறியாத ஒரே பரபரப்பில் துடித்துக் கொண்டிருந்தது. அதனிடையே ஒருபுறம் மறை வெளிப் பட்டுவிடுமோ என்ற அச்சமும், மற்றோருபுறம் இளமை ஆர்வக் கிளர்ச்சியும் அவள் உள்ளத்தில் குதித்தாடின. உலகெங்கும் அழகுக்குப் பேர்போனவள் அவள். அவள் குடிமரபும் உச்ச உயர்நிலை சார்ந்தது. இவை காரணமாகச் செறுவில் மாடத்துக்குப் புதல்வியுடன் அவள் வந்திருக்கிறாள் என்ற செய்தி பரவியது முதல் அரண்மனையிலுள்ள இளமையும் செல்வமுமிக்க இன்பவேடர்கள் அப்பக்கம் வந்து ஊடாடத் தலைப்பட்டிருந்தனர். தம் நாகரிகத் தோற்றத்தை அவள் கண்ணுக்கு இலக்காக்குவதையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர்கள் போல அவர்கள் திரிந்தனர். இவை யாவும் கெஞ்சி அறியாதவையல்ல, இவற்றுக்காக அவன் அவளைக் குறைகூறவும் இல்லை. அவன் வருத்தமெல்லாம் ஒன்றே ஒன்று தான் - ‘அந்தோ அழகெல்லாம், அறிவின் திறமெல்லாம் திரண்டு வந்தாற்போன்ற இம்மாதரசி உலக வாழ்வை வெறுப்பதா, அதை ஒதுக்கிவிட்டு இவ்வாறு தொலைதூரஞ் சென்று வாழ்வதா, என்ன பரிதாபம்’ என்ற ஏக்கம்தான். ஈசே மடத்திற்குப் போனபின், அதில் அவள் முற்றிலும் வெறுப்படைவது திண்ணம் என்று அவன் கருதினான். ஆய் இளவரசியின் ஆன்மநலங் கருதிய வணக்க வழிபாடுகள் யாவுமே முடிந்துவிட்டன. ஆயினும் அவற்றுக்காகக் குறித்த ஏழு வாரங்களும் முற்றிலும் முடியுமட்டும், அவன் புறவாழ்வில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தான். ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பது அவன் இயல்புக்கு ஒத்ததன்று. நேரம்போவது அவனுக்கு ஒரு பெருஞ் சுமையாக அழுத்தத் தொடங்கிற்று. அடிக்கடி அவன் தோ நோ சூஜோவை அழைத்து உலக நடப்புகளை விரித்துரைக்கச் செய்வான். இத்தகைய ஆர்ந்தமைந்த உரைகளிடையே உணர்ச்சி தளர்த்துவதற்காக இருவரும் பங்கு கொண்டிருந்த பழைய மறை உலாக்களைப் பற்றி அவன் பேசுவான். இத்தகைய தருணங்களில் ஒரு சமயம் கெஞ்சி தன் நலங்கெடுத்து ஈடுபாடு கொண்டிருந்த பழைய பள்ளியரங்க மாதின் பேச்சு வந்தது. அவளைப்பற்றித் தோநோ சூஜோ கேலியாகப் பேசினான். கெஞ்சி இதுகேட்டு நண்பனைக் கடிந்துரைத்தான். ‘பாவம்!’ அவளைப் பற்றி இப்படிப் பேசுவது சரியல்ல; தயவுசெய்து அவள் பேச்சு எடுக்கவேண்டாம்’ என்றான். ஆனால் அதே சமயம் அவளை நினைக்கும்போது தன்னாலும் அடங்கிய நகையாவது செய்யாமலிருக்க முடியவில்லை என்பதை அவன் ஒத்துக்கொண்டான். அன்று முழுநிலா முதல் நாளில் இலையுதிர்கால இரவில் கெஞ்சியைத் தான் மறைந்து தொடர்ந்தது, அடுத்திருந்து எல்லாம் உற்றுக் கேட்டறிந்தது ஆகிய கதைகளை யெல்லாம் சூஜோ இப்போது கெஞ்சியிடம் வெளியிட்டான். அதனை யடுத்து இது போன்ற தன் கதைகள், பிறர் கதைகள் பலவும் எடுத்துவிரித்தான். ஆனால் இறுதியில் இருவரும் பொதுவில் இழந்த பேரிழப்புப் பற்றிய பேச்சிலேயே அவர்கள் முடித்தனர். மொத்தத்தில் வாழ்க்கை என்பது ஒரு தாங்க முடியாச் சுமை என்ற கருத்திலேயே இருவரும் ஒத்துக், கண்களில் நீர்ததும்பும் நிலையில் பிரிந்தனர். சில வாரங்கள் கழித்து மழை சிலுசிலுத்துக் கொண்டிருந்த மாலைப் போ தில்சூஜோ அறைக்குள் நுழைந்தான். அவன் அன்று முதல் தடவையாகக் கார்காலத்துக்குரிய மங்கிய சாயல்நிற மேலங்கி அணிந்திருந்தான். அவன் நடையில் ஓர் கிளர்ச்சியும் தற்பெருமையும் காணப்பட்டன. கெஞ்சி அச்சமயம் மேலைத் தலைவாயிலின் அருகே மாடிப்படிச் சுவரில் சாய்ந்து கொண்டிருந்தான். நெடுநேரம் வீட்டைச் சுற்றியிருந்த உறைபனி போர்த்த தோட்டத்தையே கூர்ந்து நோக்கி நின்றான். புயலடித்துக் கொண்டிருந்தது. புயலுடன் கூடிய மழைவீச்சு மரங்களில் மோதிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்டக் கண்ணீருடன், யூ - லியாங்கின் கோபுரப்பலகணிமீதே முதல்நாள் உனைக்கண்டேன் மேலாம் உச்சியாங் அதன்மேல் வளரும் வஞ்சிக்கொடியோ உன்றன்இசை மாலாம் கனவோஉன்மீதியான்கொள்காதல்என நான் கவல்கின்றேன் ஆலும் முகிலோமழையோஅருளாய்,உனதாருயிர்தான் உலவுவதே! என்ற பாடலில் கருத்தோட விட்டு, ‘ஆலும் முகிலோ, மழையோ அருளாய் உனதாருயிர்தான் உலவுவதே!’ என்ற கடைசியடியைத் தனக்குள்முணுமுணுத்துக் கொண்டான். கன்னத்தில் வைத்த கைகளுடன் அவன் அமர்ந்திருந்த நிலையைச் சூஜோ கூர்ந்து நோக்கினான். இத்தனை கவர்ச்சிமிக்க இளைஞனுடன் இணையப்பெறும் பேறு கொண்ட உயிர் ஒருபோதும் அவ்வாழ்வுக்குரிய நிலவுலகச் சூழலைவிட்டு நெடுந்தொலை சென்றிருக்க முடியாது. அருகாமையிலேயே உலவிக் கொண்டிருக்க வேண்டுமென்று அவன் நினைத்தான். அவனையே ஆர்வப் பாசத்துடன் நோக்கியவாறு அவன் கெஞ்சியை அணுகினான். அவன் உடைமீது சூஜோவின் கவனம் சென்றது. அதில் வேறு மாறுதல் இல்லாவிட்டாலும், ஒரு வண்ணக் கச்சை புதிதாகச் சேர்க்கப்பட்டிருந்தது. வேனில் காலத்தில் அவன் அணிந்த கச்சை நிறம் தான் இது, எனினும் இப்போது அதன் செவ்வண்ணம் முன்னிலும் பகட்டான தாயிருந்தது. மேலங்கியின் மங்கிய சாம்பல் நிறத்தின் மீது அதுமிகக் கவர்ச்சியை அளித்தது. நன்னாட்களில் கெஞ்சி அணிந்த ஆடம்பர ஆடைகளுக்கு இன்றைய ஆடை எவ்வளவோ மாறுபட்டதாயினும் இப்போது இந்த ஆடையில் கூடச் சூஜோ கெஞ்சியை நோக்கிய நோக்கை வேறுதிசையில் திருப்பமுடியவில்லை. இறுதியில் அவன் நோக்கும் கெஞ்சியின் நோக்குடன் இணைந்து வான் நாடிற்று. கெஞ்சி முன் பாடிய பாடலை உளங்கொண்டு அவன் பாடினான். மழையாக மாறிற்றுவளா ருயிரென்னில் இழைமா முகிலின் எவ்விழை மாறிற்றென்றே பிழையா துரைக்கப் பெறுதியோ? கெஞ்சி பாடலையும் முடித்து மறுமாற்றமும் கூறினான்.பெற்ற திரு தழைமாமுகில் கடக்கத் தாவும், இவண் புயலிருளே! கெஞ்சியின் பாசம் எவ்வளவு ஆழமானது என்பதை இப்போது சூஜோ கண்டான். வரவர ஆயின் உறவு கெஞ்சிக்குப் பெருந் தொல்லையாகவே வளர்ந்திருந்ததென்றும், முறிக்க மனமில்லாததனாலேயே அவன் அதை வேண்டா வெறுப்பாக மேற்கொண்டிருந்தானென்றும் சூஜோ எண்ணியதுண்டு. முன்னாள் சக்கரவர்த்தியின் கண்டனம் பற்றிய அச்சம், தன் தந்தையின் தொடர்ந்த அன்புப் பாசத்தின் கடப்பாடு, தன் தாயான இளவரசியின் மெல்லிய அன்பாதரவு ஆகியவை இல்லாவிட்டால், தன் தங்கை உறவைக் கெஞ்சி ஒதுக்கித் தள்ளியிருக்கக்கூடுமென்றும் அவன் கருதியிருந்தான். இந்நிலை யில் அடிக்கடி ஆயிடம் அவன் புறக்கணிப்புக்கூட அவன் நெஞ்சை அறுத்துவந்திருந்தது. ஆனால் தன் தங்கைக்குக் கெஞ்சியின் உள்ளத்தில் என்றும் பசிய இடம் இருந்து வந்துள்ளது என்பதை அவன் இப்போது உணர்ந்தான். இது தங்கையின் திடீர் மறைவின் பேரிழப்புத் துயரை இன்னும் பெருக்கவே உதவிற்று. எது செய்தாலும், எதை எண்ணினாலும் தன் வாழ்வினின்று ஓர் ஒளி அகன்று விட்டது என்ற உணர்ச்சியை அவனால் விலக்க முடியவில்லை. அவன் சோகம் பெரிதா யிருந்தது. தோட்டத்தில் உள்ள நீலப் புதர் வளர்ச்சியிடையே இன்னும் சில பொன்மலர்கள் பூத்திருப்பதுகண்டு கெஞ்சி மகிழ்ந்தான். சூஜோ போனபின் அவன் அவற்றுட் சில பொறுக்கி யெடுத்து, குழந்தையின் நற்றாய் சேய்சோ மூலமாக அதன் பாட்டியிடம் ஒரு பாடலுடன் அனுப்பினான். “வாடியபுற் புதரிடையே கூடியஇப் பொன்மலரை நீடியஇவ் இலையுதிர் காலத்தின் நினைவாக நாடிய நல் அமைதியென நலமுடன் அனுப்புகின்றேன்!’ஆயினும்” ‘நீடாது உமையகன் றோடிய வண்ணத்துக்கு ஈடாகா தெந்த மலரும் இது அறிவேன்!’ என்று வரைந்தான். இளவரசி தன் பெயரனின் மாசற்ற ஒளி முகத்தை நோக்கி மாண்ட தன் மகவின் அழகுக்கு அது குறைந்த அழகுடையதல்ல என்று தனக்குள் கூறிக்கொண்டாள். ஆனால் இந்த ஆறுதல் உரை எழுமுன்பே வாடிய மரத்தின் இலைகள் புயலால் அலைப்புண்டு விழுவதுபோல அவள் கண்களிலிருந்து வெம்பிய கண்ணீர்த்துளிகள் சரசரவென்று ஒழுகிக்கொண்டிருந்தன. கெஞ்சியின் செய்தி நோக்கியதே கண்ணீர்ப் பெருக்கு இரட்டிப்பாகியது. அதனிடையே அவள் மறுமொழி எழுதியனுப்பினாள். கூருங்கணீர், கணீர் புத்தின்ப மென்னினும் நீடுங்கணீர் மல்கும் குலாமல ரிங்கிதனால் கோடுங்கணீர்ப் புயல் அடித்த வறும் பாலை ஊடுங்கணீர் மைக்கு உரியதிதுவெனவே! மனத்துயரைத் தளர்த்துவதற்கான முயற்சிகளை மேலும் தேடியவனாய், இரவின் இருள் அணுகி வருவதையும் பாராமல் அவன் அசகாவ் இளவரசிக்கு எழுத முற்பட்டான். இதற்குள் துயர்ச்செய்தி அவளுக்கு எட்டியிருப்பது உறுதி. அவளுடன் தொடர்புகொண்டு நெடுநாளாய் விட்டபோதிலும், அவன் அத்தொடர்பு குறிக்கவேயில்லை. கடிதம் முற்றிலும் உணர்ச் சியற்றதாயிருந்தது. தூதனை விட்டு அதை வாசிக்கச் சொன்ன பின்னரே இது கண்டு அவள் வியப்புற்றாள். அது வானீலச் சாயல் தோய்ந்த சீனத்தாளில் எழுதப்பட்டிருந்தது. அதனுடன் ஒரு பாடலும் இணைக்கப்பட்டது. துயர்பல தோய்ந்த இவ் இலையுதிர் காலத்தே உயர்வுறு மென் கணீர் பாவிப் படர்ந்து மயர்வுறூ உம் மாலை இதுபோல் பிறிதில்லை! கையெழுத்து நயத்தில்கூட இதில் அவன் எடுத்துக் கொண்ட முயற்சி சிறிதன்று. இவ்வளவு நேர்த்தியான முடங்கலுக்கு மறுமொழி யனுப்பாதிருப்பது வெட்கக்கேடு என்று இளவரசியின் பாங்கியர் வாதிட்டனர். அவளும் இறுதியில் அதே முடிவுக்கு வந்தாள். ‘உங்கள் துயரில் பங்குகொண்டு என் நெஞ்சம் தங்கள் நெஞ்சம் நாடுகின்ற தாயினும், என் பழய தயக்கத்தை நீக்கப் புதிதாக எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை’ என்று அவள் எழுதினாள். அதனுடனே ஒரு பாடல், ‘இலையுதிர் காலத்தின் பனித்திரை தம்மனையில் கலைந்துகார் காலவெண் பனிப்பாலை படர்ந்ததெனும் நிலை கண்டென் உள்ளம் நீள் வாழ்வின் வானம் பலகால் பரவும் பரிசில் தமைநினைந்தே’ எனக்கூறி முடித்தது. விரைந் தெழுதப்பட்ட முடங்கலின் வாசகம் இத்துடன் திடுமென முடிந்துவிட்டது. ஆனால் அவளிடமிருந்து நெடுநாள் எந்தச் செய்தியும் பெறாத நிலையில் கெஞ்சிக்கு நீண்ட ஆர்வக்கலை முடங்கல்கள் எதையும் தராத மகிழ்வை இதுவே அளித்தது. பொதுவாக நன்கறியப் படாதவற்றுக்கே நம்மைக் கவரும் ஆற்றல் மிகுதி. கெஞ்சியின் காதலும் அதனை ஒரு சிறிதும் வரவேற்று ஊக்காதவரிடமே முழு ஆற்றலுடன் ஓடிற்று. ஒரு பெண்ணுக்கு அவன் பாசத்தைத் தொடர்ந்து பெறுவதற்குரிய சிறந்த வழி- வேறெங்கோ உள்ளத்தை ஈடுபடுத்தி எப்போதோ ஒரு தடவை அவனுக்குச் சிறிய ஆதரவு காட்டுவதே. இந்த இலக்கணங்களைச் சீரிய வகையில் கொண்ட ஒருத்தி உண்டு. ஆனால் அவளின் உயர்குடிப்பிறப்பும் உச்சஉயர் பதவியும் சமுதாய முறையில் அத்தொடர்புக்குப் பெருத்த இக்கட்டுத் தந்தன. அதே சமயம் சிறுமி முரசாக்கியின் நிலை இது வன்று. இந்த இலக்கணங்களுக்கு இலக்காக அவளை உருவாக்கும் தேவைகூட இல்லாதிருந்தது. நீண்ட இழப்புத் துயர நாட்களில்கூட அவன் அவளை மறந்ததில்லை. தான் இல்லாமல் அவள் மிகவும் கிளர்ச்சி குன்றியவளாகவே இருத்தல் வேண்டும் என்பதை அவன் அறிவான். ஆயினும் தான் பொறுப்பேற்று வளர்த்துவரும் ஒரு தாயில்லாச் சிறுமியாகவே அவளை அவன் இன்னும் பாவித்து வந்தான். இந்த ஓரிடத்திலாவது சிறிது காலம் விட்டுப் பிரிந்திருக்கவும் அதனால் தொல்லைகளுக்கு ஆளாகும்படி நேராதிருக்கவும் முடியும். அத்தகைய ஒருத்தி கிடைத்திருக்கும் வாய்ப்பு அவனுக்கு ஒரு பெரிய ஆறுதலாயிருந்தது. இப்போது முற்றிலும் இருட்டிவிட்டது. பெரிய விளக்கினடியில் எல்லாரையும் கொண்டு வந்து கூட்டி அவர்களைக் கதைகள் கூறும்படி அவன் தூண்டினான். அவர்களில் சூனாகன் என்றோர் அணங்கு இருந்தாள். அவளுடன் பல ஆண்டுகளாகக் கெஞ்சி காதல் தொடர்பு கொண்டிருந்தான். இப்போதும் அவளிடம் அவனுக்குக் கவர்ச்சி இருக்கத்தான் செய்தது. ஆனால் கவர்ச்சியை அதனினும் மிகுதியான தொடர்புடையதாக்கக் காலம் மட்டுமே தடையாயிருந்தது. அவன் கிளர்ச்சியற்றிருப்பது கண்டு அவள் அவனை அணுகினாள், பலசெய்திகளைப் பற்றிப் பேசியிருந்தபின் கெஞ்சி அவளிடம் கூறினான்; ‘சென்ற சில வாரங்கள் நான் வீட்டின் தனிமையிடையே சீமாட்டிகளாகிய உங்கள் போன்றவருடன் நெருங்கித் தோழமை கொண்டு பழகிவிட்டேன். ஆனால் இப்படி அடிக்கடி சந்திக்க வாய்ப்பு இல்லாது போகும் சமயம், உங்கள் தோழமைக்கு நான் மிகவும் அலப்புறுவேன். நான் கிளர்ச்சி குன்றியிருந்ததன் காரணம் இதுவே. இதுமட்டுமன்று. நான் இப்போது எந்தவழியில் திரும்பினாலும் துயராதலுக்குரிய எந்தச் செய்தியும் காணமுடியவில்லை. இது கூறி அவன் பேச்சிடையே சிறிது தயங்கினான். சீமாட்டிகளில் சிலர் தம்மையறியாது சில துளிக் கண்ணீர் உகுத்தனர். கடைசியில் ஒருத்தி பேசினாள். ‘ஆயனே! உம் வாழ்வின்மீது எவ்வளவு பாரிய துன்ப மாமுகில் படர்ந்துள்ளதென்று நான் அறிவேன். எங்களுக்கும் துயருண்டாயினும், தங்கள் துயரை நோக்க அது சொல்லும் தரமன்று. ஆயினும் இனி நீங்கள் என்றுமே... எங்களுக்கு...? அவள் தேம்பித் தேம்பியழுதாள். ஆனால் கெஞ்சி அன்பாதரவுடன் தலையிட்டான். ‘என்றுமே என்ற சொல்லுக்கு இடமே கிடையாது. அவ்வளவு எளிதாக நான் நண்பர்களை மறப்பவன் அல்லன். சென்ற காலத்தை எண்ணி உங்களில் யாராவது இன்னும் இந்த மாளிகையிலேயே சேவைசெய்ய விரும்பினால், நான் வாழும்வரை நான் அவர்களைக் கைவிடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.’ இவ்வாறு கூறியபின் விளக்கொளியையே நோக்கிக்கொண்டு அவன் மின்னி மினுங்கும் கண்ணீர்த் திவலைகளுடன் அவன் வீற்றிருந்தபோது, ‘இவ்வளவு நல்ல காப்பாளரைப் பெற்றது நமக்கு ஒரு பேறுதான்’ என்று அனைவரும் எண்ணினார்கள். சீமாட்டிகளிடையே ஆயின் தனிப் பாசத்துக்கு ஆளான ஒரு துணையற்ற சிறுமி இருந்தாள். அவள் தனிமை இப்போது எவ்வளவு கொடியது என்பதை உன்னி அவன் அவளிடம் அன்பாதரவாகப் பேசினான் ‘சின்னஞ்சிறு செல்வி ஆதேயை கவனிக்கும் பொறுப்பு இனி எனது, வேறுயாருடையது?’ என்றான். சிறுமி இதுகேட்டுத் தேம்பித்தேம்பி அழுதாள். மற்றவர்கள் அணிந்திருந்ததைவிடக் கறுப்பான உள்ளு டையையும், கறுப்புக் கழுத்துக் குட்டையையும் கருநீலக் காலுறைகளையும் அணிந்து அவள் மிகவும் கவர்ச்சிகரமான வனப்புடையவளாகவே காட்சியளித்தாள். கெஞ்சி தொடர்ந் தான்: ‘இந்த மாளிகையில் வாழ்வைக் கழிப்பது இனி கிளர்ச்சியற்ற ஒன்றே யானாலும், சென்றகால நினைவை மனங் கொண்டு நான் இங்கே விட்டுச்செல்லும் சின்ன இளவரசனைக் கவனிப்பதில் தம்மை முழுதும் ஈடுபடுத்துவீர்களென்று நான் நம்புகிறேன்.’ என்றான். ‘உங்களை என்றும் மறக்கமாட்டேன்’ என்று அவன் மீண்டும் உறுதி கூறினான். ஆயினும் இனி எப்படியும் அவன் வருகை ஆடிக் கொன்றும் ஆவணிக் கொன்றுமாகக் குறுகிக் குறுகித் தேயவே வழியுண்டு என்றெண்ணி அவர்கள் உள்ளழிந்தனர். அன்றிரவு அவன் பாங்கியர்களையும் மற்றும் பல வகைப் பணியாளர்களையும் அழைத்து அவரவர் தரத்துக்கும் சூழலுக்கும் தக்கவாறு நினைவுப் பரிசுகளும் நன்கொடை களும் வழங்கினான். மாண்ட இளந்தலைவருக்குரிய பொருள்களை யெல்லாம் அவள் நினைவை நீட்டிக்கும் தகுதி யொன்றையே யுன்னி அவன் அவர்களிடையே பங்கிட்டான். இவ்வகையில் அக்குடும்பத்திலுள்ள தன் விருப்பு வெறுப்புக ளெதற்கும் அவன் இடம் கொடுக்கவில்லை. இம்மாதிரி வாழ்க்கையை இனியும் நீடித்து நடத்த முடியாதென்றும், தன் அரண்மனைக்கு இனி தான் திரும்பிவிட வேண்டியதே என்றும் கெஞ்சி இப்போது துணிந்தான். அவன் பிரிவு நேரத்தைக் கூடியமட்டும் தாமதப்படுத்த முனைபவர்கள் போல, அவன் பணியாட்கள் வீட்டு வாயிலுக்கு அவன் வண்டியை இழுத்துக் கொண்டிருந்தனர். பாங்கமை தோழப் பெருமக்கள் முன் கூடத்தில் வந்து குழுமிக் கொண்டிருந்தனர், இச்சமயம் திடுமென ஒரு கடும்புயல் மழை எழுந்தது. மரங்களின் கடைசி வாடல் இலைகளையெல்லாம் காற்று வாரிக்கொண்டு நிலப்பரப்பில் சுழற்றிற்று. முன் கூடத்தில் குழுமியவர்கள் ஆடைகளெல்லாம் ஒருகணத்தில் முழுக்க நனைந்து உடலோடு ஒட்டின. முதலில் அரண்மனைக்கும் பின் நிஜோயினுக்கும் சென்று இரவே நெடுமாடத்துக்குத் துயில் கொள்ள வந்துவிடுவதென்றுதான் அவன் திட்டமிட்டிருந்தான். ஆனால் இத்தகைய இரவில் இது முடியாத செயலென்று கண்டு, அவன் பெருமக்களே நிஜோயின் சென்று தன் வருகை எதிர்பார்க்கும் படி அனுப்பினான். பெருமக்களில் எவரும் நெடுமாடத்துக்கு இனிமேலும் மீண்டும் செல்லாதவர்கள் என்று கூற முடியாது. ஆயினும் கெஞ்சியின் வாழ்வில் ஓர் அத்தியாயம் இன்றுடன் முடிந்தது என்று பேசிக்கொண்டே அவர்கள் அணியணியாக வெளியேறிச் சென்றனர். இதற்கிடையில் கெஞ்சி அன்றைய இரவு மீட்டும் தம் மாளிகை வரமாட்டான் என்று கேள்விப்பட்டதே, அமைச்சரும் அவர் மனைவியும் முன்பே தொடங்கிவிட்ட தம் துயர் வாழ்விலும் இப்போது துயரமிகுந்த ஒரு புதுப்பிரிவு தொடங்கிவிட்டதென்று மனமாழ்கினர். ஆயின் அன்னைக்குச் கெஞ்சி முடங்கல் வரைந்திருந்தான். ‘என்னைப் பார்க்கப் பேரவாக் கொண்டுள்ளதாக முன்னாள் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ஆகவே நான் அரண்மனைக்குப் போய்த்தீரவேண்டியவனாயிருக்கிறேன். நான் வர நெடுநாள் செல்லாதாயினும் இந்த மாளிகையைவிட்டு நெடுநாள் செல்லாதிருந்துவிட்ட நிலையில் அவ் உலகில் சென்று முகங்கொடுப்பது எப்படி என்றே கவல்கிறேன். என் பயணத்தைத் தங்களுக்குத் தெரிவிக்காமல் நான் போக முடியாது. ஆனால் தங்களை வந்து காணும் நிலையில் நான் இல்லை’ என்று அவன் வரைந்தான். இளவரசி இன்னும் கண்களை மூடியபடியே படுத்திருந்தாள். அவள் உள்ளம் வேதனை தரும் சூழலிலேயே தோய்ந்திருந்தது. அவள் மறுமொழியும் எதுவும் அனுப்பவில்லை. ஆனால் ஆயின் தந்தை உடனடியாகச் கெஞ்சியின் அறைக்கு வந்தார். பிரிவை ஏற்பதென்பது அவருக்கு தாங்க முடியாத துன்பமாக யிருந்தது. விடைபெறும் வேளையில் அவர் கெஞ்சியின் கையுறைகளையே பற்றிக்கொண்டு வேறு பற்றுக்கோடு அற்றவராகத் தோற்றிய காட்சி பரிதாபமுடைய தாகவே இருந்தது. பல தயக்கங்களுக்குப் பின் அவர் பேசினார். ‘முதியவராகிய என்போன்றவர்கள் மிகச் சிறிய இடையூறுகள் நேர்ந்தபோது கூட கலங்கிக் கண்ணீர்வடிப்பது இயல்பு. எனவே இவ்வளவு பாரிய துயரம் தாங்காமல் சிற்சில சமயம் நான் அழுகையை அடக்க முடியாது போய் விட்டால், நீங்கள் அதுகண்டு வியப்படைதல் கூடாது. கையிழந்த இத்தகைய பலவீனமான வேளைகளில் யாரும் காணமுடியாத தனியிடத்தில் நான் இருப்பதே நல்லது. இதுவரை உங்கள் நலமார்ந்த தந்தையான பெருந்தகையின் முன்னிலையில் வந்து என் வணக்கம் தெரிவிக்க என்னைத் தடுப்பது இதுவே. இதை நீங்கள் அவருக்கு விளக்கிக் கூறும்படி வேண்டுகிறேன். வாழ்க்கையின் இந்தக் கடைசி நாட்களில் இப்படித் தனிமைப்பட்டு அவதிப்படுவது என்பது ஒரு பெருத்த சோதனைதான்.....’ பெருத்த சோதனைதான்...’ இந்த வாசகத்தை முடிப்பதற்குள் அவர் பட்ட அவதி காணப்பொறாமல் கெஞ்சி அவருக்கு ஊக்குரை கூற விரைந்தான். ‘அரசவையில் எல்லாம் விளக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தங்கள் வராமைக்குரிய மெய்ந்நிலைக் காரணத்தை ஏற்கெனவே என் தந்தை சரியாக ஊகித்திருப்பார் என்றே நம்புகிறேன்!’ என்றான். இன்னும் மழை பெய்து கொண்டிருந்தது. ஆகவே மேலும் இருட்டிவிடுமுன் புறப்படும்படி அமைச்சர் கெஞ்சியை வற்புறுத்தினார். எனினும் உள்ளறைகளைக் கடைசியாக ஒருமுறை பார்க்காமல் கெஞ்சி மாளிகையை விட்டுச் செல்ல முடியவில்லை. மாமனார் அவன்பின் தொடர்ந்து சென்றார். ஆயின் திரைமறைவிருக்கைக்குப் பின்னால் கருஞ் சாம்பர் வண்ணக் கூறையாடையணிந்து முப்பதுக்கு மேற்பட்ட மாதரசியர் தனிமையச்சத்துடனும் அழுகை தோய்ந்த கண்களுடனும் குழுமியிருந்தனர். அவர்களைச் சுட்டியவாறு அமைச்சர் கெஞ்சியிடம் பேசினார். ‘நீங்கள் இங்கே விட்டுச்செல்கிற ஓர் உயிருக்காக அவ்வப்போது நீங்கள் இம்மனைக்கு வந்து போவீர்கள் என்ற எண்ணமே இம்மாதரசியர்க்கு இப்போது ஓர் ஆறுதலா யிருக்கிறது. ஆயினும் இந்த மாளிகை இனி உங்கள் உரிமை மாளிகையா யிருக்க முடியாது என்பது கருதி, தங்கள் அருமைத் தலைவியின் இழப்பினால் அடையும் துயரத்துக்கு மேலாக அவர்கள் துயரில் ஆழ்கின்றனர். பல ஆண்டுகளாக உங்களிடையே மீண்டும் நேச அமைதி ஏற்படுவதில் நீடித்த நம்பிக்கையுடன் போராடியவர்கள் இவர்கள். அப்படியிருக்க, நீங்கள் இறுதியாக விடைபெற்றுச் செல்லும் இந்நாள். அவர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை’ என்றார் அவர். ‘இதுபற்றி அவர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை’ என்று கெஞ்சி நன்மொழி தொடங்கினான். ‘என் துணைவி உயிருடன் இருந்த நாளையில் என் வருகையின்போது அவள் கடுமை குறையவேண்டுமென்ற போலி நம்பிக்கையினாலேயே நான் நீடித்து வராதிருப்பது வழக்கமாயிருந்தது. ஆனால் அவள் மாண்டபின் இங்கே வருவதைத் தடுக்க எதுவும் இல்லை. இதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்’ என்றான். கெஞ்சி வண்டியிலேறிச் சென்றபோது ஆயின் தந்தை அவனை வழியனுப்பி அவனையே நோக்கியிருந்தார். அதன்பின் அவர் ஆயின் படுக்கையறைக்குச் சென்றார். அவள் பொருள்கள் யாவும் அவள் விட்டுச் சென்றபடியே கிடந்தன. படுக்கையின் முன்புறம் எழுது சாதனங்கள் சிதறிக்கிடந்தன. கெஞ்சியின் கையெழுத்து நிறைந்தவை சில இருந்தன. இவற்றை அவர் பேராவலுடன் கையில் அள்ளி எடுத்தார். இதை நோக்க அத்தனை துயரச் சூழலிலும்கூடப் பாங்கியர்கள் உள்ளூரப் புன்முறுவல் செய்யாமலிருக்க முடியவில்லை. கெஞ்சி இதற்கு முன் எழுதியவை யெல்லாமே இலக்கிய ஏடுகளாய் இருந்தன. சில சீன மொழியிலும் சில சப்பானிய மொழியிலும் இருந்தன. சில வரை எழுத்திலும் சில நிறையெழுத்திலும் எழுதப் பட்டிருந்தன. அவற்றின் பல்வளப் பெருக்கம் அவன் எழுத்தாண் மையின் பல்திசை நிறைவுக்குச் சான்று பகர்ந்தன. கெஞ்சியின் கைத்திறம் காட்டும் இச்செல்வங்களை அமைச்சர் கிட்டத்தட்டச் சமய ஆர்வத்துடன் நோக்கினார். தம் ஆர்வமதிப்புக்குரிய இவ்வினைஞனை இனிமேல் தம் குடும்ப உறுப்பினருள் ஒருவராகத் கணிக்க முடியாது என்று அவர் எண்ணியபோது, அது அவருக்கு மிகவும் வேதனை தரும் கருத்தாயிருந்தது. கையெழுத்துப் படிகளிடையே ‘போ -சூ -யீ’ யின் ‘மாளாப் பழி’ யின் படி ஒன்று கிடந்தது. அதில் ‘பழயமலரணை, பழயமலர்ச் சேக்கை - அவற்றை இனி யார் தான் அவளுடன் பங்கு கொள்வார்’ என்று அடிக்கெதிராக’ ‘அறியாப் புலங்களில் அலையுமவள் ஆவி முன் ஓய்ந்து சார்ந்த இம்மலரணையை விட்டகன்றதே. என்ன துயரம்’, என்று கெஞ்சி எழுதியிருந்தான். அதுபோல ‘உறைபனியின் வெள்ளிதழ்கள்’ என்ற வரியருகே ‘இனி இப்படுக்கைமீது தூசி படியாதிராது; ஏனெனில் இரவுதோறும் வடியும் என் கண்ணீரை இதிலிருந்து அகற்ற நான் பொறுக்கமாட்டேன்’ என்று வரைந்திருந்தான். ஆயின் பாங்கியர்கள் இருவர் மூவராகத் தனித்தனிக் கும்புகூடிப் பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தம் குறைகளையும் துயரங்களையும் அடுத்தவர்களிடம் கொட்டிக் கொண்டிருந்தார்கள். மாட்சிமை தங்கிய அமைச்சர் கூறியது போல, கெஞ்சி இளவரசர் குழந்தையைப் பார்ப்ப தற்காகவாவது இங்கே அவ்வப்போது வராமலிருக்கமாட்டார். ஆனால் இத்தகைய வருகைகளால் அவருக்கு என்ன ஆறுதல் கிடைக்கப் போகிறது?’ இவ்வாறு ஒருத்தி பேசினாள். விரைவில் அவர்களிடையே உருக்கந்தரும் பல சிறுசிறு பிரியாவிடைக் காட்சிகள் நிகழ்ந்தன. ஏனெனில் தற்காலிகமாக யாவருமே அவரவர் வீடு செல்வதென்று ஏற்பாடாகியிருந்தது. கெஞ்சி இச்சமயம் அரண்மனையில் தன் தந்தை யுடனிருந்தான். அவனைக் கண்டதும் முன்னாள் சக்கரவர்த்தி அன்பொழுகப் பேசினார். ‘உன் முகமே வாட்டமுற்றிருக்கிறது.’ நோன்பு வழிபாடுகளால் உன் உடல் வலுவை அளவுமீறிக் குறைத்துக் கொண்டிருக்கிறாய் என்று அஞ்சுகிறேன்’ என்று கூறியவாறு ஆர்வமும் கவலையும்மீதூர்ந்த நிலையில் அவனுக்கு வகை வகையான சிற்றுண்டிகளையும் பருகு சாதனங்களையும் அருத்தினார். உன் உடல்நலம், தன் வாழ்க்கைச் செய்திகள் யாவற்றினும் தந்தை காட்டிய அன்புப்பரிவு கெஞ்சியின் உள்ளங்கனிவித்தது. இரவு நெடுநேரம் கழித்துக் கெஞ்சி நிஜோயினுக்கு வந்து சேர்ந்தான். இங்கே யாவும் துப்புரவாகப் பெருக்கி மெழுகி மெருகிடப்பட்டிருந்தன. பணியாட்களும் பணிப்பெண்களும் வாயிலில் வந்து நின்று அவனை எதிர்நோக்கியிருந்தனர். குடும்பத்தின் பாங்கியரான பெருமாட்டிகள் அவன் அறையில் வந்து சூழ்ந்து காட்சியளித்தனர். அவர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டுப் பகட்டு வண்ண ஆடைகளில் தம்மை ஒப்பனை செய்து கொண்டிருந்தனர். நெடுமாடத்தில் தான் விட்டுப் பிரிந்த மாதரின் கிளர்ச்சியற்ற சோர்ந்த ஆடையணிகளின் நிலையை நோக்க இது குறிப்பிடத்தக்க மாறுதல் உடையது என்று அவன் எண்ணினான். அரண்மனை யாடைகளை மாற்றியுவுடனே அவன் மேலைச்சிறகு சென்றான். முரசாக்கியின் கார்கால உடை மிக நேர்த்தியான வேலைப்பாடமைந்ததா யிருந்தது. அத்துடன் அவள் பாங்கியர் தோழர் தோழியர் ஒவ்வொரு வருமே தனித்தனி வனப்புமிக்க நல்லாடை யணிவிக்கப் பட்டிருந்தனர். இவை யாவுமே ஷோனகனின் கைநேர்த்தியைக் காட்டின - இம்மாதிரி காரியங்களை இனிக் கவலையின்றி அவளிடமே விட்டுவிடலாம் என்று அவன் மன நிறைவமைதியுடன் கூறிக் கொண்டான். முரசாக்கியின் ஆடையணி அப்பழுக்கற்ற ஒப்பனையுடைய தாயிருந்தது. ‘ஆ, முன் கண்டதைவிட நீ இப்போது எவ்வளவு நெட்டையாக வளர்ந்திருக்கிறாய்’ என்று பாராட்டியவாறு அவளது சிறிய அலங்கார முகத்திரையை நீக்கினான். மிக நீண்ட காலம் வராதிருந்தமை கருதி அவள் வெட்கத்துடன் முகம் திருப்பினாள். ஆயினும் அந்தக் கணத்தில் அவள் அழகைவிட வேறு எதையும் அவன் விரும்பியிருக்க முடியாது. விளக்கொளியில் பக்கச்சாய்வாக அவன் முகவடிவைப் பார்த்தவுடன் தான் முதன் முதல் காதலித்த அழகு வடிவின் மறுவடிவாகவே அவள் வளர்ந்து வந்தது கண்டு மகிழ்ந்தான். அவளை அணுகி அவன் அடங்கிய குரலில் பேசினான். ‘நான் போனது முதல் நடந்த யாவற்றையும் என்றோ ஒரு நாள் உனக்குச் சொல்ல இருக்கிறேன். ஆனால் அவை அவ்வளவு பயங்கரமான செய்திகள். இப்போது நான் மிகவும் களைத் திருப்பதனால் கூற முடியாது. இப்போது என் அறையில் சென்று சிறிது ஓய்வுகொள்ளப் போகிறேன். நாளை முதல் நாள்முழுதும் நான் உன்னுடன் இருப்பேன். உண்மையில் நீ மிக விரைவிலேயே என்னிடம் வெறுக்க வெறுக்கப் பழகப் போகிறாய்! ‘நடந்தவரை எல்லாம் நலமே!’ என்று இப்பேச்சைக் கேட்டதும் ஷோனகன் கூறிக் கொண்டாள். ஆனால் அவள் மனம் முற்றிலும் அமைதியாயில்லை. கெஞ்சியின் பாசத்துக்கு ஆளான செல்வாக்குமிக்க சீமாட்டிகள் பலர் இருந்ததை அவள் அறிவாள். இரண்டாம் மனைவியாக ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் நாள் வரும்போது தன் சிறு தலைவியையன்றி வேறு யாரையேனும் தேர்ந்தெடுத்துக் கொள்வான் என்றே அவள் அஞ்சினாள். அவள் மனம் குறைபட்டுக் கொண்டது. கெஞ்சி கீழைச்சிறைக்கு ஓய்வுகொள்ளச் சென்றபின் சூஜோ என்ற மாதரசியை அழைத்து உடலைத் தேய்த்து விடச்சொல்லிப் பின் படுக்கை மேற்கொண்டான். மறு நாள் காலையில் அவன் ஆயின் குழந்தையைக் கவனித்து வந்த செவிலியருக்கு முடங்கல் வரைந்தான். அதன் அழகு, வளர்ச்சி ஆகியனபற்றிய உருக்கமான பதில் வந்தது. ஆனால் பயனற்ற பழய நினைவுகள் கழிவிரக்கங்களைத் தூண்டவே இது முழுதும் பயன்பட்டது. பிற்பகலில் அவன் மனம் அமைதியிழந்து படபடப்புற்றது. நேரம் போவது மிகவும் கடுமையாயிற்று. மறையுலாவை மீட்டும் தொடங்கும் மன நிலையோ, அந்த நினைவோகூட இப்போது அவனிடம் இல்லை. முரசாக்கியிடமோ இது வரை அவன் எதிர்பார்த்த எதுவும் வீண்போகவில்லை. அவள் அழகும் கவர்ச்சியும் அவன் விருப்பம் கடந்தவை. அவள் காதலுக்கு வயதும் இப்போது தடையென்று கூற முடியாது. ஆனால் அவன் அடிக்கடி இதைக் குறிப்பாகச் சுட்டியே பேசி வந்தும், அவன் குறிப்பை அவள் சரிவர உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவனுக்கு இப்போது போதிய ஓய்வுநேரம் இருந்தது. அது முழுவதும் அவளுடனே கழிந்தது. பகல் முழுவதும் அவர்கள் ஆட்டம் அல்லது சொல் மாற்றுப்போட்டி நிகழ்த்தினர். இந்தச் சிறு செய்திகளில் கூட அவளது கூரிய அறிவுப் பண்பும் கவர்ச்சியும் அவளுக்கு இடைவிடா மகிழ்ச்சி தந்தன. ஆயினும் அவள் முற்றிலும் ஒதுங்கிய தனிவாழ்வு வாழ்ந்ததால், வயதுவந்த பிற பெண்களைப்போலத் தன் கவர்ச்சியைப் பயன்படுத்தும் வழிகளை உணரவில்லை. நிலைமை அவனுக்கு மேலும் தாங்கமுடியாததாயிற்று அவளுக்கு எவ்வளவு அதிர்ச்சி ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் தன் திட்டத்தை எவ்வழியிலாவது நிறைவேற்றுவதென்று அவன் துணிந்தான். ஒரு நாள் காலை அவன் எழுந்து உலவினான். அவள் இன்னும் படுக்கையிலேயே கிடந்தாள். வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடந்ததென்று பணியாட்கள் எவரும் கருதவில்லை. ஏனெனில் கெஞ்சி விரும்பிய நேரம் அவளது அறைக்குள் போகவும் வரவும் செய்வதுவழக்க மாயிருந்தது. ஆகவே அவளுக்கு உடல் நலமில்லை யென்று கருதி அனுதாபத்துடன் அவனை நோக்கினர். அச்சமயம் கெஞ்சி எழுதுபேழைடன் வந்து அதை அவள் படுக்கையின் திரைமறைவில் வைத்துச் சென்றான். அவன் ஓய்வுகொள்ளச் சென்றவுடன் மற்ற அணங்குகளும் தங்கள் தங்கள் அறைகளுக்குச் சென்றனர். தான் தனிமையாகிவிட்டறிந்து முரசாக்கி தலையுயர்த்தினாள். அவள் படுக்கையறையில் தலையணையின் அருகே எழுத்துப் பேழையுடன் ஒரு சிறு கடிதம் கட்டப்பட்டிருப்பதைக் கண்டாள். பராமுகமாகவே அதைக் கையில் எடுத்து விரித்து விரைவில் வாசித்து முடித்தாள். ‘இரவின் பின் இரவாக இடையே ஒரு தட்டியிட்டுப் படுத்து வருகிறோம். புதுமுயற்சியில் இறங்காமல் இனி நெடுநாள் கழிக்க முடியாது’. இதுகாறும் கெஞ்சி பன்னிப் பன்னிச் சொல்லிவந்த தெல்லாம் இதுதான் என்று கண்டு அவள் வியப்படைந் தாள்.சென்ற இரவு நடைபெற்ற வருந்தத்தக்க நிகழ்ச்சியே ஒரு புதிய நெருங்கிய உறவுக்குத்தொடக்கம் என்று அவன் ஏன் கருதவேண்டும் என்பதும் அவளுக்குப் புரியவில்லை. காலையிலேயே சிறிது நேரம் கழித்து அவன் மறுபடியும் வந்தான். ‘உனக்கு உடம்புக்கு ஏதாவது அசதியாக இருக்கிறதா? இன்று நீ என்னுடன் ஆட்டம் ஆடாவிட்டால் எனக்குப் பொழுது போவது மிக மிகக் கடுமையாகவே இருக்கும்’ என்றான். ஆனால் அவன் அவளை அணுகியபோது அவள் தன் படுக்கை விரிப்புகளிடையே தன்னை ஆழப் புதைத்துக் கொண்டாள். அறையிலிருந்து மற்ற எல்லாரும் வெளியேறும் வரை காத்திருந்து பின் அவளருகே குனிந்துநின்று அவன் பேசினான். ‘ நீ ஏன் இவ்வளவு சிடு சிடுப்பாக என்னிடம் நடந்துகொள்கிறாய்; இன்று காலை இவ்வளவு மோசமான நிலையில் நடப்பாய் என்று நான் எதிர்பார்க்கவே யில்லை. பகல் முழுதும் நீ இப்படிப் படுத்துக்கொண்டிருந்தால் மற்றவர்கள் விபரீதமாக ஏதேனும் நினைத்துக்கொள்வார்கள்’ என்று கூறி அவன் அவள் சுற்றிப் போர்த்திக்கொண்டிருந்த விரிப்புகளைப் பிடித்திழுத்து அகற்றினான். ஆனால் அவள் முற்றிலும் வியர்வைக் காட்டில் முழுகியிருப்பது கண்டு அதிர்ச்சியுற்றான். கன்னத்தைச் சுற்றிலும் படர்ந்திருந்த முடிகூட முற்றிலும் நனைந்திருந்தது. ‘சேச்சே! இது மிகவும் மோசம். எந்த அளவுக்கு நீயே உன்னை அலட்டிக்கொள்கிறாய்?’ என்று அவன் கடிந்துகொண்டான். ஆனால் அவன் கடிந்துகொண்டாலும் கெஞ்சினாலும் அவள்எதுவும் பேசாமலே இருந்தாள். இறுதியில் அவன் கோபம் கொண்டவன் போல் எழுந்தான். ‘சரி அப்படியே ஆகட்டும். நீ இவ்வளவு அடம் கொள்வதானால், நான் இனி உன்னைக் காண வரப்போவதில்லை’ என்று மிகநொந்து வருந்திய குரலில் பேசுவதாகப் பாவித்தான். பின் வேறு திசை திரும்பி எழுந்து பேழையைத் திறந்து அவள் ஏதாவது தன் பதிலுக்கு மறுமொழி எழுதியிருக்கிறாளா என்று பார்த்தான். அவள் ஒன்றும் எழுதியிருக்கவில்லை. அவன் மனவேதனை உண்மையில் அவளது பேரிளமைக்கும் அனுபவமின்மைக்கும் உரியது என்று நினைத்ததனால் உள்ளூர அவன் கோபம் எதுவும் கொள்ளவில்லை. பகல் முழுதும் அவள் அருகே உட்கார்ந்து அவள் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற முயன்றான். இதில் அவன் மிகுதி வெற்றி காணவில்லை. ஆயினும் அவளிடம் தோல்வியுறுவது கூட அவனுக்கு எவ்வளவோ இனிமை தந்தது. அன்று கானத்து ஏனலின் நாள். அந்நாளுக்குரிய மரபு வழக்கப்படி விழாப் பண்டங்கள் 2 செய்யப்பட்டன. கெஞ்சியின் பெருந்துயர்க் கொண்டாட்டத்தை முன்னிட்டு எந்த ஆடம்பரமும் செய்யப்படவில்லை. ஆனால் ஒரு நேர்த்தியான வன உண்டிக் கூடையில் சில பண்டங்கள் முரசாக்கியின் உள் அறைக்கு அனுப்பப் பட்டிருந்தன. பலவகைகளும் ஒன்று கலந்திருப்பது கண்டு கெஞ்சி வீட்டு முன்வாயில்சென்று கோரெமிட்சுவை அழைத்துப் பேசினான். ‘இந்தப் பண்டங் களைக் கொண்டுபோய்விடு. ஆனால் நாளையே இன்னும் சில கொண்டுவருக. எனினும் இத்தனை பண்டங்கள் வேண்டாம், எல்லாம் ஒருவகையாய் இருக்கட்டும்3; நாளும் இன்று சரியன்று, நாளையாகட்டும்’ என்றான். இது கூறும்போது கெஞ்சியின் முகம் உள்ளூரப் புன்னகை பூத்தது. கோரெமிட்சு கூரறிவுடைய வனாதலால், என்ன செய்தி என்று ஊகித்துக்கொண்டான் வாசகங்களால் நலம் பாராட்டுவது பொருத்தமாயிராது என்றும் கண்டான். ஆகவே அவன் பேச்சு குறிப்பு மொழியில் அமைந்தது. ‘உங்கள் வாழ்வுக்கு நற்றொடக்கம் வேண்டு மென்று நீங்கள் அவாவினால், சரியான நாள் பார்த்துத் தான் நீங்கள் தின்பண்டங்கள் அருந்துதல் வேண்டும். எலிநாள்4 ‘ அதற்கு மிகவும் பொருத்தமானதே. ஆனால், நான் எத்தனை கொண்டு வரவேண்டும் ஐயனே’ என்றான். கெஞ்சியும் குறிப்பு முறையிலேயே பதில் கூறினான். ‘மூன்றால் வகு,5 உனக்கே விடை கிடைக்கும்’ என்றான். கோரெமிட்சுவுக்குஇப்போது ஐயமுழுதும் தீர்ந்தது. அவன் விரைந்து வெளியேறினான். இம்மாதிரிக் காரியங்களில் அவன் காட்டிய தேர்ச்சி யெளிமை கண்டு கெஞ்சி வியப்படைந்தான். கோரெமிட்சு யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஆனால் தன் தனிமுறை இல்லம் சென்று அங்கே தன் கையாலேயே பண்டங்கள் பண்ணினான். முரசாக்கியின் இழந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் இனி மீண்டும் பெறமுடியுமா என்பது பற்றி இப்போது கெஞ்சி முற்றிலும் அவநம்பிக்கைகொள்ளத் தொடங்கினான். முதன் முதலாக அவளை அவன் தாயகத்திலிருந்து திருட்டுத்தனமாகக் கொண்டுவந்த அன்று அவளிடம் காணப்பட்ட அதே நாணம் இன்றும் காணப்பட்டது. ஆயினும் அதன் அழகுகூட அவனை முற்றிலும் வசமாக்கிற்று. சென்ற காலத்தில் அவளிடம் அவன் கொண்ட பாசமெல்லாம் முன்னாளிலிருந்து கொண்டுள்ள காதலின் ஒரு துகளுக்கே ஒப்பாகும் என்று அவன் கண்டான். மனித இதயம் எவ்வளவோ விசித்திரமானது; ஏனெனில் இப்போது ஓரிரவு முரசாக்கியிடமிருந்து பிரிவதாக நேர்ந்தாலும், அதுஅவனுக்கு ஒரு பேரிடி போன்றிருந்தது. ஆனால் ஒருசில நாட்களுக்கு முன்னோ....... கெஞ்சி கட்டளையிட்டபடி தின்பண்டங்களைக் கோரெமிட்சு அடுத்த இரவு நெடிது சென்றபின் கொணர்ந்தான். ஏனெனில் முதிர் வயதுடைய ஒரு மாதுக்கு அப்பொறுப்பு ஏற்றதன்று என்று அவன் கருதினான், அவள் புதல்வி செல்வி பென்னை அவன் வரவழைத்து. ஒரு மணப்பொருள் பேழையில் பண்டங்களையிட்டு, அவற்றை இளந்தலைவியிடம் இரகசியமாகக் கொடுக்கும்படி கூறினான். ‘ இவற்றைஅவள் தலையணைக்கு மிக அருகாமையில் வைக்கத் தவறி விடாதே. ஏனெனில் அவை நல் வாய்ப்புடையவை. வீட்டில் கண்ட கண்ட இடங்களில் காணப்படக்கூடாது. இவற்றின் வகையில் சிறு பிள்ளைத்தனமாக எதையும் செய்துவிட மாட்டாய் என்றும் உறுதிகொள்கிறேன்’ என்று கூறி அவளைப் பேழையுடன் அனுப்பினான். அவள் மிகச் சிறு குழந்தையா யிருந்ததாலும் இவ்வகைச் செய்திகளின் அனுபவமறியதவளாத லாலும் அவள் நேரே இளந் தலைவியின் படுக்கையண்டை சென்றாள். கோரெமிட்சுவின் எச்சரிக் கைகளைக் கருத்தில் கொண்டு திரை வழியாகப் பேழையை உள்ளேதள்ளி அதைக் கவனமாகத் தலையணை யருகில் வைத்தாள். ஆனால் அங்கே உள்ளே முரசாக்கி மட்டுமன்றி வேறும் யாரோ இருந்ததாக அவளுக்குத் தோற்றிற்று. ஆனால் அடுத்தகணமே அவள் எளிய இயல்பான விடையும் கண்டாள். ‘ஆம், வழக்கப்படி அவள் பாடங்களைக் கற்பிக்கச் கெஞ்சி இளவரசன் தான் வந்திருக்கவேண்டும்’ என்று அவள் தனக்குள் கூறிக்கொண்டாள். குடும்ப மனையில் இதுகாறும் கோரெமிட்சுவைத்தவிர வேறுயாருக்கும் இந்த மணக்கூட்டுச் செய்தி தெரியவராது. ஆனால் மறுநாள் படுக்கையருகே பேழைகிடந்தது காணப்பட்டு, அது பணியாட்கள் கூடத்துக்கு வந்துசேர்ந்தது. கெஞ்சியுடன் நெருங்கிப் பழகியிருந்த சிலருக்கு அப்போது இரகசியம் விளங்கிவிட்டது. ஆனால் ‘இந்தச் சின்னஞ்சிறு பண்டங்கள், அவற்றுக்கேற்ற சின்னஞ்சிறு கண்ணறைகள் வாய்ந்த பேழைச் சட்டங்கள் ஆகிய இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? இவ்வளவு இனிமையுடனும் நயத்துடனும் யார் இதைச்செய்தார்கள்!’ - எவருக்கும் இவை தெரியவரவில்லை. இவ்வளவு எளிதாக மணக்கூட்டு நடைபெற்ற செய்தி ஷோனகனுக்கு அதிர்ச்சி தந்ததாயினும், தன் இளந் தலைவியிடம் கெஞ்சி கொண்ட ஆதரவு இவ்வாறு மணக்கூட்டில் வந்து நிறைவெய்தியது பற்றி அவள் மட்டற்ற மகிழ்ச்சியே கொண்டாள். உவகை, நன்றி ஆகியவற்றின் காரணமாக அவள் கண்களில் நீர் ததும்பியது. ஆயினும் குழந்தையின் பழைய செவிலி என்ற முறையில் தன்னிடம் குறைந்த அளவில் இந்தத் தகவலாவது கூற அவன் முயன்றிருக்க வேண்டும் என்று அவள் முனகினாள். முதல் தகவல் பெற்றவன் குடும்பத்துக்குப் புறம்பான கோரெமிட்சு போன்ற பொதுநிலைப்பணியாளனாய் அமைந்தது பற்றிக் குடும்பமனை முழுவதிலுமே மனக்குறை நிரம்பி யிருந்தது. அடுத்த பலநாட்களிலும் அரண்மனையில் சென்று தந்தை அறையிலிருக்க வேண்டிவந்த சிறிது நேரங்களில் கூடக் கெஞ்சிக்கு அங்கே இருப்புக் கொள்ளவில்லை. அவள் முன்னிலையிலன்றி வேறெங்கும் ஒருகண அமைதி கூடப் பெற முடியவில்லை என்பது காண அவனே வியப்படைந்தான். அவன் வழக்கமாகச் சென்று காணும் நண்பர்கள் அவனது புரியாத புறக்கணிப்புப் போக்குக் கண்டு வியப்பும் மனக்கசப்பும் அடைந்தனர். அவர்கள் வெறுப்பைத் தூண்டும் விருப்பம் அவனுக்குச் சிறிதும் இல்லையென்றாலும், ஒருநாள் இரவு தன் மாளிகை யிலிருந்து வெளியே தங்க இடமேற்பட்டுவிடக் கூடும் என்று ஐயப்பாடு தோன்றினால் கூட, அவன் தன்னிலை மறந்து ஏதோ கடுநோய்க்காளானவன் போல முகம் விளறி நாடியடங்கப் பெற்றவனானான். எல்லா வாழ்த்து வணக்கங் களுக்கும் அவனது ஒரே பதில் சமுதாயத்தில் பங்கு கொள்ளும் மனநிலையில் தான் இல்லை என்பதே. இதைச் சிலர் அணிமை இழப்புக் குறித்தாகக் கருதினர். வேறு சிலசமயம் மிக நெருக்கடியான அலுவல் காரணமாக உடனே வெளியே போக வேண்டுமென்று சாக்குக் கூறிவந்தான். வலங்கை அமைச்சருக்குத் தம் கடையிளம் புதல்வி இன்னும் கெஞ்சியையே நாடி இளைத்துவருவது தெரியவந்தது. ஒருநாள் அவர் கோக்கிடன் இளவரசியிடம் இதுபற்றிப் பேசினார். ‘கெஞ்சியின் மனைவி உயிருடன் இருந்தவரை நம்மால் இயன்றவரை இந்த நேசத்தைத் தடுத்துவிடவே விரும்பியது சரி. ஆனால் இன்றைய நிலையில் இந்தஉறவு விரும்பத்தக்கது என்றே கருதலாம்’ என்றார். ஆனால் கோக்கிடன் சீமாட்டி எப்போதும் கெஞ்சியை வெறுத்தவள். அத்துடன் தன் தங்கை அரண்மனை செல்ல வேண்டுமென்று தானே ஏற்பாடு செய்தபின், அதை அவள் மாற்ற விரும்பவில்லை. இந்தக் கணமுதல் அவள் உறுதி இரட்டிப்பாகித் தங்கை சக்கரவர்த்தியை யன்றி வேறு யாரையும் மணக்கக் கூடாதென்று துணிந்தாள். கெஞ்சி இன்னும் அந்நங்கையிடம் ஓரளவு பாசம் வைத்தவனாகவே இருந்தான். அவளுக்குத் துயர் உண்டு பண்ணும் எண்ணமும் அவனுக்குக் கிடையாது. ஆயினும் அவள் துயர்கண்டு அவன் வருந்தினானே யன்றி, உள்ளத்தில் அவளுக்கு இடமில்லை என்பதை அறிந்தான். வாழ்க்கை குறுகியது, உலாக்களுக்கும் காதல் விளையாட்டுகளுக்கும் அதில் எப்போதும் நேரம் இருப்பதில்லை என்றும், இப்போது ஒன்றிலேயே உளமூன்றி நிற்கவேண்டுமென்றும் அவன் கருதினான். மேலும் அவன் பழய வாழ்க்கை அவனுக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டிய பயம் ஒன்று உண்டு. பெண்டிர் பொறாமை புழுக்கங்களால் என்ன பயங்கர விளைவுகள் ஏற்படக்கூடும் என்று அவன் கண்டு கொண்டான். ரோக்குஜோ சீமாட்டியின் கடுந்துயரம் பற்றிய கவலையும் கனிவும் அவன் உள்ளத்தில் படர்ந்தன. அதே சமயம் தன்னை அடைக்கலத்துக்குரிய ஓர் அமைதியிடமாக அவள் கொள்ளும்படி இனிவிடப்படாதென்றும் முன்னெச்சரிக் கையாக உறுதிகொண்டான். ஆயினும் புதிய முறையில் அவள் தன் நேசத்தைப் புதுப்பித்து அவள் வாய்ப்பு வசதிக்கேற்ப ஓய்வு நேரங்களில் தன் தோழமையையும் உரையாடலையும் அளிப்பதாயிருந்தால், அது செய்தல் கூடியதே. அவ்வகையில் அவர்கள் சந்திப்பதில் யாதொரு கேடுமிராது என்று அவன் எண்ணினான். பெயர் ஊர் தெரியாவிட்டாலும் யாரோ ஒருவர் அவனுடன் வாழ்ந்துவந்தார் என்று பொதுவாகச் சமுதாய முழுதும் அறிந்திருந்தது. இதில் கவலைக்கிடம் ஒன்றுமில்லை. ஆனால் முன்னோ பின்னோ, என்றோ ஒருநாள் ஹியோபுக்கியோ இளவரசருக்கு அவர் புதல்வி என்னவானாள் என்று தெரிவித்தே யாகவேண்டும். அதற்குள் அவள் புகுமுகவிழாவை நடத்திவிடுவதே நலம் என்று கெஞ்சி தீர்மானித்தான். இது தனிமுறையில் செய்யப்பட்டது. ஆயினும் தக்க ஆடம்பரத்துடனும் முறைமையுடனும் இது நடக்க வேண்டுமென்பதிலும், வினைமுறைகளிலும் ஒவ்வொரு விரிவு நுணுக்கமும் சரிவர நிறைவேற்றப்படவேண்டுமென்பதிலும் அவன் போதிய அக்கறை எடுத்துக் கொண்டான். இதன்படியே வெளி உலகம் இதுபற்றி ஒன்றுமறியாவிட்டாலும் அது நல்ல கொண்டாட்டமாகவே நடைபெற்றது. மணக் கூட்டு வினைக்குப்பின் முரசாக்கி அவனிடம் மிகுவெட்கத்துடனும் அவநம்பிக்கையுடனுமே நடந்து கொண்டிருந்தாள். இவ்வளவு நாள் தன்னுடன் இவ்வளவு நேசமாகப் பழகியபின் திடுமென அவன் இத்தகைய புதிய எண்ணங்கொள்வானேன் என்று அவள் வருந்தாமலிருக்க முடியவில்லை. ஆகவே அவன் கண்களை அவள் கண்கள் நோக்கிய போதெல்லாம் அவள் முகந்திருப்பிக் கொண்டாள். இதை ஒரு விளையாட்டாகப் பாவித்துவிட அவன் எவ்வளவு முயன்றாலும் அவளுக்கு அது வினையமாகவே இருந்தது. இது அவன் உள்ளத்தை ஒரு பளுவாகவே நின்று அழுத்திற்று. அவளது இம்மாறுபாடு வேடிக்கையாகவே இருந்தது. ஆனால் அது காண்பவர்க்குத் துயர் தருவதாகவும் இருந்தது. சில சமயங்களில் அவன் வாய்விட்டு அரற்றினான். ‘நீண்ட பல ஆண்டு நேசத்தின் பின் நீ திடுமென அத்தனையையும் மறந்து என்னைத் தொடக்கத்திலிருந்தே அயலானாக நினைத்தது போல இருக்கிறது’ - இவ்வாறு அவளைக் கடிந்துரைக்கும் நிலையிலேயே ஆண்டும் முடிவுற்று வந்தது. புத்தாண்டு நாளில் அவன் வழக்கம்போலத் தன் தந்தையையும், சக்கரவர்த்தியையும், உரிமை இளவரசரையும் சென்றுபார்த்தான். அதன்பின் அவன் நெடுமாடம் சென்றான். முதியவரான அமைச்சர் புத்தாண்டு பற்றிக் குறிப்பிடவேயில்லை. உடனடியாகவே இறந்த காலம் பற்றிப்பேசத் தொடங்கினார். கெஞ்சி வருகை நெடுநாட்கழித்ததாகவும் குறுகலாகவும் இருந்தபோதிலும்கூட, அதனால் அவர் உணர்ச்சிப் பெருக்குடையவராகி, எவ்வளவு முயன்றும் தம் அமைதி நிலை காத்துக் கொள்ள முடியாதவரானார். ஆவலுடன் தம் மருமகனை நோக்கி, ஆண்டு செல்லுந்தோறும் அவன் அழகு புதுமை ஒளி பெற்று வருவதைக் கண்டார். இருவரும் ஒருங்கே உள்ளறை சென்றபோது, வெளியே போகாமல் நீடித்து உடன் தங்கிய சீமாட்டிகள் வியப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கே கொண்டனர். இதனையடுத்து அவர்கள் இளவரசனைச் சென்று கண்டனர். அவன் வளர்ச்சி மிக நேர்த்தியுடையதாகவே இருந்தது. அவன் நகைமுகம் காண்பவர் உள்ளங்களில் உவகை பொங்கவைத்தது. உரிமை இளவரசருக்கும் அவனுக்கும் உள்ள ஒற்றுமை பெரிதாகவே இருந்தது. பிறர் இதைக் கவனித் தார்களோ என்று கெஞ்சி கவலையுற்றான். ஆய்க்குரிய பொருள்கள் இன்னும் அவள் விட்டுச் சென்றபடியே கிடந்தன. சென்ற ஆண்டுகளில் தொங்க விட்டிருந்தபடியே அவன் புத்தாண்டுடைகள் சுவரில் உடைமாட்டியில் தொங்கவிடப்பட்டிருந்தன. ஆனால் அதன் அருகே ஆயின் உடைகள் மாட்டப்படுவற்குரிய உடை மாட்டிகள் மட்டும் வெறுமென வெறிச்சென்றிருந்தன. ஆயின் தாயான இளவரசியிடமிருந்து இச்சமயம் ஒரு முடங்கல் கொண்டு வரப்பட்டது. ‘நம் பொது இழப்பு வேறு எந்த நாளையும்விட இந்நாள் என் மனத்தில் உறுத்துகின்றது. பழைய துயர எண்ணங்கள் இன்று எழுந்து உள்ளத்தில் குதித்தாடுகின்றன’. அவள் மேலும் தொடர்ந்து பேசினாள். ‘ஒவ்வொரு புத்தாண்டு நாளிலும் உங்களுக்கு ஒரு புதிய உடையளிக்கும் என் வழக்கத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் சென்ற மாதங்களில் என் கண்களில் ஒழுகிய கண்ணீர் மறைத்ததனால் வண்ணங்களை முன் போல் இழைத்தேனோ என்னவோ, அது எனக்குத் தெரியாது. ஆயினும் ஒன்று வேண்டிக் கொள்கிறேன். இன்று ஒரு நாளைக்காவது இந்த ஆடை தங்கள் ஒப்பனையைக் குலைக்கட்டும்.’ கெஞ்சியின் முன்பணியாள் ஒருவன் மற்றொரு6 உடையை ஏந்திக் கொண்டிருந்தான். அன்று அவன் உடுக்கவேண்டுமென்று குறிப்பிடப்பட்ட உடை அதுவே. அதன் உள்துணி வழக்கத்துக்கு மாறான பாணியில் பல வண்ணம் இழைத்ததாயிருந்தது. அது அவனுக்குப் பிடிக்கவில்லை யென்றாலும், இளவரசிக்குத் தன் உழைப்பு வீண் ஆயிற்றென்ற எண்ணம் உண்டாக்க விரும்பாததனால் அதை உடனே அணிந்து கொண்டான். அன்று அவன் நெடுமாடத்துக்கு வந்தது நலமாயிற்று. ஏனெனில் இளவரசி அதனை உறுதியாக எதிர்பார்த்தாள். அதற்கிசைய அவன் பதில் அமைந்தது. ‘இந்த இளவேனிலில் நான் சந்திக்கும் முதல் நண்பர் தாங்களே என்ற நம்பிக்கையுடனேயே இங்கு வந்தேன். ஆனால் இங்கே வந்தபின் எத்தனையோ பழைய துயர அலைகள் என்மீது வந்து மோதுகின்றன. இந்நிலையில் தங்களைச் சந்திக்காமலே போதல் நலம் என்று கருத வேண்டியவனாகியுள்ளேன்’ என்றான். இதனுடன் ஒரு சொற்பொறிப் பாடல் இணைக்கப்பட்டிருந்தது. ‘இப்போது நான் அகற்றியுள்ள பிரிவாடையுடன் எத்தனையோ நட்புகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இத் தோற்றத்துடன் தங்களை வந்து காண்பதாயின் கண்ணீர் விடாமலிருக்க முடியாது’. இதற்கு மறுமொழியாக இளவரசி அனுப்பிய கடிதத்திலும் இதுபோன்ற சொற்பொறிப் பாடல் ஒன்று இணைக்கப் பட்டிருந்தது. ‘இந்தப் புதிய பருவ காலத்தில், எல்லாம் நிறமாறியுள்ளன. ஒன்று மட்டும் ஒரு சிறிதும் மாறுபடவில்லை. போகின்ற ஆண்டைப் போலவே கண்மறைந்து போன குழந்தை பற்றிய ஏக்கம் - அது ஒருசிறிது கூடச் சாயல் மங்கவில்லை.’ மிகப் பெருந்துயர் இளவரசியினுடையதே. ஆனால் இரு திசையிலும் அன்று ஆழ்ந்த உணர்ச்சிகள் இருந்தன என்பதில் ஐயமில்லை. அடிக்குறிப்பு. 1. துயர்க் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவருடன் கடிதப் போக்குவரவு கொள்பவர்களும் தீட்டுக்கு ஆளாகிவிடுவர். இந்நிலையில் ரோக்கு ஜோ சீமாட்டி தெய்வப்பணி நங்கையான தன் புதல்வியுடன் செல்லும் தகுதி இழந்துவிடுவாள். 2. பத்தாம் மாதத்தில் ஏனல் நாளில் பலநிறப் பொருள்கள் கொண்டு ஏழுவகைச் சிறுசிறு பண்டங்கள் செய்து அளிப்பது வழக்கம். 3. முதல் காதற் சந்திபின் மூன்றாம்இரவு இஜநாசி இறைவனுக்கும் அவர் உடன்பிறப்பு நங்கை இஜநாமிக்கும் ஒரே நிறமும் வண்ணமுமுடைய பண்டங்கள் அளிப்பது மரபு. 4. முதலாவதாக 12 உயிரினக் குறியீடுகளிலும் முதலாவது ‘எலி’யே. அத்துடன் ‘எலி’ என்பதற்கான வரி வடிவம் ‘குழந்தை’ என்ற பொருளுடைய சொல்லையும் குறிக்கும். 5. மூன்றால் வகு என்ற வாசகத்தின் மூலத்திற்கு மூன்றில் ஒன்று என்ற பொருளும் உண்டு.மூன்று மூவா மறை மெய்ம்மைகள்: பிறப்பு, திருமணம், இறப்பு என் பவையே. இதனாலேயே விடை கேட்டதும் கோரெமிட்சுவின் ஐயம் தீர்ந்தது. ஆயினும் இப்பகுதிக்கு வேறு விளக்கங்களும் உண்டு. கெஞ்சியின் இலக்கிய உரைகாரர்களின் கடு முடிச்சுகளில் இப் பகுதி ஒன்று. 6 சுவர்மாட்டியில் தொங்கியதன் வேறான மற்றொன்று. அப்பாத்துரையம் - 22 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) மொழிபெயர்ப்பு  கெஞ்சி கதை ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 22 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+416= 432 விலை : 540/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 432  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் 1. கிரித்சுபோ ... 7 2. முள் மரம் ... 43 3. உத்சுசேமி ... 109 4. யுகாவ் ... 125 5. முரசாக்கி ... 190 6. குங்குமப் பூ ... 255 7. செந்தழை விழா ... 299 9. ஆய் ... 355