தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2 முதற் பதிப்பு - 1957 இந்நூல் 2003இல் பூம்புகார் பதிப்பகம், சென்னை - 108. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. வீழ்ச்சியும் மீட்சியும் தமிழக வாழ்வின் திரும்பு கட்டங்களில் தலை சிறந்தது சோழப் பெரும் பேரரசர் காலமே. அதற்கு ஓரளவு இணையாகக் கூறக் கூடிய மற்ற இரண்டு ஊழிகள் சங்ககாலமும் நம் காலமாகிய இருபதாம் நூற்றாண்டுமேயாகும். சோழப் பெரும் பேரரசர் காலத்தில் தமிழர் அரசியல் வாழ்வு உச்ச நிலை எய்திற்று. சங்க காலத்திலோ தமிழரின் சமுதாய, கலை, அறிவியல் வாழ்வுகள் உச்ச நிலை கண்டன. நம் காலம் இவற்றுக்கு இணையாகக் கூறத்தக்க எத்தனைய உச்ச நிலைக்கும் உரியதாகவில்லை -அதற்கு நேர்மாறாக அடி அவல நிலையையே அடைந்துள்ளது. ஆயினும் இந்த இரு திசை வாழ்வுகளையும் இணைத்து ஒரு புது நிறை தேசிய வாழ்வு காணவிழையும் மறுமலர்ச்சி யார்வம் நம் காலத்தையும் ஒரு திரும்பு கட்டம் ஆக்கி வருகிறது. சங்க கால வாழ்விலிருந்து இடைக்காலப் பாண்டிய பல்லவ வாழ்வுக்கு நாம் வரும்போது ஓர் உலகத்திலிருந்து வேறோர் உலகத்துக்கே செல்லும் உணர்ச்சி நமக்கு ஏற்படாமலிருக்க முடியாது. ஆனால், பாண்டிய பல்லவர் காலத்திலிருந்து சோழப் பெரும் பேரரசர் காலத்துக்கோ, பிற்காலப் பாண்டியப் பேரரசர் காலத்துக்கோ செல்லும்போது நமக்கு இத்தகைய உணர்ச்சி ஏற்படுவதில்லை. ஏனென்றால் பாண்டியப் பல்லவப் பேரரசுக் காலத்தில் தொடங்கிய தமிழக மறுமலர்ச்சியே படிப்படியாக வளர்ச்சியுற்று, அக்காலங்களில் புது மலர்ச்சியாகிய புதிய உச்ச உயர் முகடளாவித் தழைத்தது. சோழப் பெரும் பேரரசின் இந்த உச்ச உயர்வு பிற்காலப் பாண்டியப் பேரரசுக் காலத்தில் முற்றிலுமே விழுந்து விடவில்லை ஆனால், அப்பேரரசின் இறுதியில் அது திடுமென மீண்டும் அடி அவல நிலைக்கு வீழ்ச்சியுற்றது. செங்குத்தாக உயர் முகட்டிலிருந்து விழுகிற நீர் மீண்டும் செங்குத்தாக மேலே எழுவதில்லை; அதே சமயம் அது விழுந்த இடத்தில் வாளா அமைந்து கிடப்பதுமில்லை; நிலமகழ்ந்து உட்சென்று மேலெழுந்து கிளர்ந்து சுழித்தோடி, அது வீழ்ச்சியின் வேக ஆற்றலைப் புதிய திசைகளில் செலுத்துவது உறுதி. விசய நகர ஊழியிலும், அதனையடுத்த மதுரை நாயக ஊழியிலும், இரண்டின் பின்னும் நிலவிய அரசியல் குளறு படிகளிலும், அதிலிருந்து புதிதாய் எழுந்துள்ள மறு மலர்ச்சியிலும் நாம் இந்தப் படிகளை -நிலமகழ்தல், கிளர்ந்தெழுதல், சுழன்றடித்தல், புதிய நீரோட்டத்தின் அமைதி வாய்ந்த பேராற்றல் மேற் கொள்ளல் ஆகிய இந்தப்படிகளைக் காண்கிறோம். இவை நம்மை மீண்டும் புது மலர்ச்சியின் பொலிவு நாடி இட்டுச் சென்று வருகின்றன. சங்க காலத்துக்குப் பின் திடுமென வீழ்ந்த தமிழகம் மீட்டும் சோழப் பேரரசுக் காலத்துக்குள் சங்க காலம் கனவு காணாத புது மலர்ச்சி பெற்றது கண்டோம். அது போலவே நம் வாழ்விலிருந்து தொடங்கும் வருங்காலத் தமிழகமும் அந்த இரு பேரூழிகளும் -சங்க காலமும் சோழப் பெரும் பேரரசுக் காலமும் -கனவிலும் சென்றெட்டாத புத்தம் புதிய உச்சப் புகழ்முகட்டைச் சென்று தடவி மேலெழுந்து பொங்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம். திரும்பு கட்டங்கள் மாறுதலின் செறிவையும் உச்ச நிலையை யுமே காட்டுகின்றன. ஆனால், தேசிய வாழ்வின் உயிர்நிலை மாறா நிலையுமல்ல. மாறுபாடும் அல்ல. அது தொடர்ச்சியும் வளமும் வளர்ச்சியுமேயாகும். சோழப் பெரும் பேரரசுக் காலத்துக்குப் பின் நாம் முனைப்பாகக் காண்பது இத்தகைய வளர்ச்சிக்குரிய மாறு பாடன்று. தளர்ச்சிக்கு, வீழ்ச்சிக்குரிய மாறுபாடே, ஆனால், இது கடந்து, இதன் உள்ளீடாக, நாம் தொடர்ச்சியையும் புது வளத்தையும், வளர்ச்சியையும் காணலாம். வீழ்ச்சி : கடல் வாழ்வு சரிந்தது சோழப் பெரும் பேரரசுக்குப் பின் நாம் காணும் தளர்ச்சி, வீழ்ச்சி பெரிது, மிகப் பெரிது! அது தமிழகத்தின் வீழ்ச்சியாக மட்டும் அமையவில்லை. தமிழக வாழ்வின் விரிவான தென்னாட்டு வாழ்வையும், கீழை உலக வாழ்வையும் அது பல நூற்றாண்டு களுக்கு உருத் தெரியாமல் மாற்றியுள்ளது. நாகரிகத்தின் முன்னணி யில் நின்ற கீழைப் பழம் பேரினங்களைப் புதிதாக வளர்ந்த மேலையுலகின் காலடியில் கிடந்து நெளிய வைத்துள்ளது. தமிழக நாகரிகம் - எகிப்திய, பினீஷிய நாகரிகங்களைப் போலக் கடலக நாகரிகமாகவே தொடங்கிற்று. பண்டைத் தமிழர் வேளாண்மைக்கும் தொழிலுக்கும் உள்நாட்டு வாணிகத்துக்கும் எவ்வளவு முக்கியத்துவம் அளித்திருந்தனரோ, அதே அளவு, அதில் குறையாத முக்கியத்துவத்தைக் கடல் வாணிகத்துக்கும் கடல் வாழ்வுக்கும், கடற்படைக்கும், கடலாட்சிக்கும் அளித்திருந்தனர். மீன் தொழில், உப்புத் தொழிலில் மட்டுமன்றி, முத்தெடுத்தல், சங்கெடுத்தல், பவளம் கண்டெடுத்தால் முத்துக்கோத்தல், சங்கறுத்து வளையல் செய்தல் முதலிய கடல் வாழ்வு சார்ந்த தொழில்களும் தமிழகத்தில் நீடித்துப் பழமையிலேயே பயின்றிருந்தன. அத்துடன் கரையோரப் பயணத்துக்குரிய சிறு கலங்கள் மட்டுமன்றி ஆழ் கடல் கடத்தற்குரிய பெருநெடு நாவாய்களும் அவர்களிடத்திலிருந்தன. கடல் கடந்த வாணிகத்திற்கு மட்டுமன்றி கடல் கடந்த தொலை நாடுகளை வென்றடக்கி ஆள்வதற்கும் போதிய அளவில் மாகடற் படைகளும் தமிழரசர் பேரரசர்களால் வைத்துப் பேணிக் காக்கப் பட்டிருந்தன. தமிழகத்தின் கடற்கரை எங்கும் இக்கடற்படைத் தளங்களும் உள்நாட்டு வெளிநாட்டுக் கடல் வாணிகத் தளங்களும் மிகுதியாய் இருந்தன. உலகக் கடல் வாணிகத்தின் நடு நாயகக் களமாகத் தமிழகம் விளங்கியிருந்தது. அந்நிலைகள் யாவும் சங்க காலத்துக்கு முன்னின்று தொடங்கிச் சோழப் பெரும் பேரரசர் பிற்காலப் பாண்டியப் பேரரசர் காலம் வரை நீடித்து வளர்ந்தே வந்தன. ஆனால், அக்காலத்துக்குப் பின் இவை பழங்கதைகளாகத் தொடங்கி விட்டன. சோழப் பெரும் பேரரசுடன் இவை உச்ச உயர் முகடெய்தி, அதன் பின் தமிழக வரலாற்றிலும், தென்னாட்டு வரலாற்றிலும், கீழ்திசை வரலாற்றி லும் தடமழிந்து தட்டுக் கெட்டுச் சாய்ந்தன. தென்னாட்டுக் கடற்கரையோரங்களும், கீழையுலகக் கடற்கரை யோரங்களும் மேலை யுலக வாணிக வேடர்க்கும், அரசியல் வேடர்க்கும் உரிய வேட்டைக் களங்களாய், கீழ் திசை அவற்றுக்கு அடிமையாக நேர்ந்தது இதனாலேயே யாகும். சோழப் பேரரசர் காலத்தில் உச்ச நிலை எய்திருந்த இக் கடலாட்சி பிற்காலப் பாண்டியப் பேரரசர் காலத்திலேயே சரியத் தொடங்கி விட்டதையும், விசய நகரப் பேரரசர் மதுரை நாயகர் காலத்தில் பின்னும் வீழ்ச்சியுற்று நொறுங்கி, படிப்படியாக அராபியர், போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், டேனியர் பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோர் ஆட்சிக்கு வாயில் திறக்கப்பட்டதையும் முனைவர் பேராசிரியர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் சுட்டிக் காட்டி விளக்கம் தந்துள்ளார்கள். “பெருஞ் சோழருடன் தமிழர் கடல் கடந்த வாணிக வளத்துக்கு மட்டுமின்றிக் கடலின் கரையாட்சிக்கே ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டு விட்டதென்று கூறலாம். ஏனெனில் பிற்காலப் பாண்டியப் பேரரசர் காலத்திலேயே அது அராபியர் கைப்பட நேர்ந்தது. அந்நாளைக்குள்ளேயே கடல் கடந்த தென் கிழக்காசிய வாணிக மட்டுமன்றி, கரையோர வாணிகமும் கரையாட்சியுமே அவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டு விட்டன என்று தோன்று கிறது. இதனைச் சோழப் பெரும் பேரரசர், பாண்டியப் பேரரசர் காலத்தில் இரு நிகழ்ச்சிகள் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. “கடைசிப் பெரும் பாண்டியன் குலசேகரன் காலத்தில், ‘ஷிராஸ்’ கோமகனான குதிரைப் பெருவணிகன் ஜமாலுதீன் தமிழகக் கரை வாணிகத்திலும் கரையாட்சியிலுமே பெரும் பங்கு கொண்டிருந்தான் என்று அறிகிறோம். பாண்டியர் ஆட்சி மன்றத் திலேயே அவனுக்கு உயர் இடம் அளிக்கப்பட்டிருந்ததாக இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் குறிக்கின்றனர். “பாண்டியர் காலத்தில் காயல் பட்டிணத்தில் தங்கி வாணிக ஆட்சி புரிந்த இந்த அராபிய வணிகன் கரையாட்சியுடன், சோழர் காலத்திய நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு சில தலைமுறைகளுக்குள் ஏற்பட்ட இம்மாறுபாடு எத்தகையது, எவ்வளவு பெரிது என்பது விளங்கும். “சோழப் பெரும் பேரரசுருள் முதல்வனான முதலாம் இராசஇராசன் காலத்தில் கடாரப் பேரரசன் அவனோ டொப்பான ஒரு கடல்கடந்த பேரரசை ஆண்டவன், ஜமாலுதீனைப்போல அவன் ஒரு வணிகக் கோமகனல்லன். அவன் சோழப் பேரரசின் கடற்கரை நகரங்களில் ஒன்றான நாகப் பட்டினத்தில் ஒரு புத்தப் பள்ளி கட்டவும், அதற்குத் தன் செலவிலேயே சில ஊர்களை விலைக்கு வாங்கி மானியம் விடவும் விரும்பினான். இவை அரசியல் பெருஞ் செயல்களல்ல, சமயச் சிறு செயல்களே. ஆயினும் இச்சிறு செயல் உரிமைகளுக்குக் கூட அவன் சோழப் பெரும் பேரரசனின் வெளி நாட்டமைச்சனை அணுகி, அவன் மூலமாகப் பெரும் பேரரசன் இணக்கம் பெற்றே செயலாற்ற முடிந்தது! (கடாரப்பேரரசன் சோழப் பெரும் பேரரசுக்கு அடங்கி வாழ நேர்ந்தது. இதன் பின்னரேயாகும் என்பது கவனிக்கத் தக்கது)” மதுரை நாயகர் வரலாறு; திரு. ஆர். சத்தியநாத ஐயர்; முனைவர் பேராசிரியர் கிருஷ்ணசாமி ஐய்யங்கார் அவர் களின் பதிப்புரை அடிக் குறிப்பு பக்கம் 90. பிற்காலப் பாண்டியப் பேரரசர் ஆட்சியில் அராபியர் கரையாட்சி யில் பங்கு கொண்டனரென்றால் -விசய நகர, மதுரை நாயகர் ஆட்சியில் கடற்கரைகள் முற்றிலும் போர்ச்சுக்கீ சியர் பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஏகபோக உரிமை வாய்ந்த வேட்டைக் களங்களாய் விட்டன. ஹைதர், திப்பு, ஆகிய இரு மைசூர் பேரரசர், பாஞ்சாலங் குறிச்சிக் கட்டப் பொம்மன் ஆகியோர் நீங்கலாக ஏனைய தென்திசை, வட திசை அரசர், பேரரசர் யாவரும் பிற்காலத்தில் கடலாட்சி, கரையாட்சிகளை மட்டுமன்றிக் கீழ்திசை வாழ்வையே தம் குறுகிய தன்னலப் போட்டிப் பூசல்களால் கோட்டை விட்டவராவர். வருங்காலத் தென்னாட்டு வரலாறும் இந்திய வரலாறும் இம் மூவரசரையும் சிவாஜியையும் மட்டுமே வருங்காலக் கீழ்திசை மறுமலர்ச்சி வாழ்வுக்குரிய மூதாதையர்களாகக் கொள்ளல் தகும். அவர்கள் பண்புகளே தேசியப் புது மலர்ச்சிக்குரிய கரு மூல விதைகளாகும். வாணிக, தொழில் முறை நாகரிகம் சரிந்தது; வடதிசை நிலப்பண்ணை முறை வளர்ந்தது சோழப் பெரும் பேரரசின் பின் தென்னாட்டில் ஏற்பட்ட மற்றொரு பெரிய மாறுதல் அணிமைக்கால ஊழிப் பேரரறிஞன் கார்ல் மார்க்ஸ் தவிர மற்றைய உலக அறிஞர் எவர்கண்களிலும் படாத ஒன்று ஆகும். உலக நாகரிக வளர்ச்சியில் அறிஞர் கார்ல் மார்க்ஸ் நான்கு முக்கிய படிகளைக் காண்கிறார். அவையே தொடக்கக் கால முதிராப் பொதுவுடைமை (ஞசiஅவைiஎந ஊடிஅஅரnளைஅ), நிலப்பண்ணை யாட்சி முறை (குநரனயடளைஅ), வாணிக கலைத் தொழில் முதலாளித் துவம் (ஆநசஉயவேடைந யனே ஹசவளையn ஊயயீவையடளைஅ), பெருந் தொழில் முதலாளித்துவம் (ஐனேரளவசயைட ஊயயீவையடளைஅ), என்பன. மேலை ஐரோப்பா தென்னாட்டுடன் தொடர்பு கொண்ட பின்பே திடுமென வாணிக முதலாளித்துவப் படியடைந்து, உடனடியாகவே புதிய இயந்திர ஆற்றலின் உதவியால் பெருந் தொழில் முதலாளித்துவத்தை நோக்கி வளர்ச்சியடைந்து வந்துள்ளது (இந்த நாகரிகமும் இன்று சரியத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது). ஆனால், தென்னாட்டுடன் மேலை நாடுகள் வாணிக, அரசியல், நாகரிகத் தொடர்பு கொள்ளுமுன் நீண்ட காலமாகத் தென்னாடே வாணிகக் கலைத் தொழில் முதலாளித்துவப் படியிலும், மேலை உலகம் நிலப்பண்ணை யாட்சியிலும் இருந்தன. மேலையுலகில் நிலப்பண்ணையாட்சி முறை உரோம ஆட்சி முடிவிலிருந்தே தொடங்கி இடையிருட்கால ஊழி முழுவதும் (கி.பி. 5முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை) அதாவது, தென்னாட்டுத் தொடர்பு ஏற்படும் வரை தங்கு தடையற்ற ஆட்சி நடத்திற்று. அதுபோலக் கீழ்திசையிலும் ஆரியர் வருகைக்குப் பின் பிரிட்டிஷ் ஆட்சித் தொடக்கம் வரை வடதிசை இந்தியப் பரப்பு நிலப் பண்ணை யாட்சி முறையிலும், தென்னாடு வாணிகக் கலைத் தொழில் ஆட்சி முறையிலும் நிலவின. ஆனால், சோழப் பெரும் பேரரசர் ஆட்சிக்குப் பின் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குள் இந்நிலை விரைந்து மாறலாயிற்று. விசயநகர காலத்திலிருந்து தொடங்கி 18-ஆம் நூற்றாண்டுக்குள் தென்னாட்டின் வாணிக கலைத் தொழில் நாகரிகம் சரிந்து, அதனிடமாக வடதிசைக்குரிய நிலப் பண்ணை யாட்சி முறை வந்து புகுந்தது. இவ்வாறு வட இந்தியப் பரப்பைப் போலவே தென்னாடும் நிலப்பண்ணை யாட்சிக்கு உட்பட்டதனால் தான். இரு மாநிலங் களும் ஒரே அயலாட்சிக்கு உட்பட்ட ஒரே அடிமை மாநிலமாகக் கருதப்பட நேர்ந்துள்ளது. அத்துடன் உலகிலேயே நாகரிக முன்னணி நிலையில் இருந்த தென்னாடும் தமிழகமும், கீழ்திசையில்கூட அந்த முன்னணி நிலையை இழந்தன. அதுமட்டுமன்று, தென்னாடு பொதுவாகவும், தமிழகம் சிறப்பாகவும் கீழ்திசைப் பரப்பின் ஒரு பகுதி என்ற தன் உரிமை நிலையைக்கூட இழக்கத் தொடங்கிற்று. அடிமைப் பரப்பிலும், உள்ளடிமைப் பரப்புக்களாய், அடிமைகளுக்கும் உட்பட்ட கொத்தடிமைகளாய், உரிமை மறந்தவர்களாய், தென்னாட்டவரும், தமிழரும் வாழத் தலைப்பட்டனர். இவ் வகையில் வடதிசைக்கு இயல்பான பிற்போக்குப் பண்புகளுடன், மேனாட்டவர் வாணிகப் போட்டியின் பகைமையும், உலகில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதிதாக எழுந்து பரந்த இயந்திரப் பேராற்றலும், ஒருவரை ஒருவர் எதிர்த்து இனத்தை விற்று வாழ எண்ணிய ஆட்சி வகுப்பைச் சார்ந்த தென்னாட்டவர், தமிழர் தன்னலப் போட்டிப் பூசல்களும் ஒருங்கிணைந்து செயலாற்றி யுள்ளன, செயலாற்றி வருகின்றன. நாகரிக மாறுபாடும் வீழ்ச்சியும் வடதிசைப் பண்ணைமுறை நாகரிகத்தின் அரசியல் கூறுதவிர, மற்றநலிவுக் கூறுகள் யாவும் சோழப் பெரும் பேரரசுக் காலத்துக்கு முன்பே சங்க காலத்திலேயே புகுந்து வளரத் தொடங்கி விட்டன. இதன் பயனாக, சங்க காலத்தின் முடிவில் தமிழக வாழ்வில் ஒரு பெரு வீழ்ச்சியும், அதன் பின்னர் மறுமலர்ச்சிக்கு இலக்காகிய அரசியல் வாணிகத் துறைகள் தவிர மற்றத் துறைகளில் படிப் படியான அழிவுகளும் உண்டாயின. இவ் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் முதலில் புத்த சமண சமயங்களும், பின்புத்த சமணசமய எதிர்ப்புகளாய் எழுந்த சக்திகளும் பெருந் தூண்டுதற் காரணங்களாய் உதவின. புத்த சமண சமயங்கள், சமயங்கள் என்ற நிலையில் தமிழர் பண்பாட்டுக்கு அயலானவையானாலும், சமுதாய வாழ்க்கைப் பண்புகள் என்ற முறையில் எதிரானவையல்ல. ஆயினும் அச் சமயத்தவர்கள் இயல்பாக வடதிசை நிலப்பண்ணை முறை நாகரிகத்தில் தோய்ந்து, அதைத் தம் சமயத்துடன் தென்னாட்டில் பரப்பி வந்தனர். மேலும் முற்காலப் புத்த சமணர் கனவு காணாத அளவில் பிற்காலச் சமண புத்தரும் இருகாலத்தவரும் கனவு காணாத அளவில் அச் சமயங்களை எதிர்த்துத் தாக்கிய பிற்காலத்தவரும் நிலப்பண்ணையாட்சி முறைப் பண்புகளிலும் கருத்துக்களிலும் ஊறித் தோய்ந்து, செறிந்து, அவற்றையே மாநிலத்தின் புதிய சமயமாகவும், தென்னாட்டு ஆட்சி வகுப்பினரின் பிறவிக் கடமையாகவும் மேற் கொண்டு பரப்பினர். சோழப் பெரும் பேரரசர் காலம்வரை அரசியல் மறுமலர்ச்சியினால் சிறிது அணையிட்டுத் தடுக்கப்பட்ட இப்புது வெள்ளம், அப்பெரும் பேரரசாகிய அணை உடைபட்ட பின் முன்னிலும் பன் மடங்காகத் தங்கு தடையின்றிப் பாய்ந்து பரவத் தலைப்பட்டது. தமிழகம், கீழ்திசை ஆகியவற்றின் பண்டைப் பெரு நாகரிகத்தடமே உலகுக்குத் தெரிய முடியாத வகையில் அவற்றின் மீது புதியதொரு மாயப் போர்வையாக இன்று வரை திகழ்வது இதுவே. சமயத்திலிருந்து தொடங்கி, மொழி, சமுதாய வாழ்வு, குடும்ப வாழ்வு ஆகிய எல்லாத் துறைகளிலும் இந்த நிலப் பண்ணை யாட்சி முறையின் மாய இருளைக் காணலாம். புதிய இந்திய மாநிலத் தேசியமும், இந்திய மாநிலத்தின் சமய வாழ்வும் பெருமையடைவதற்குரிய பல ஒளி மணிப்பண்புகள் இம்மாய இருளிடையே ஆங்காங்கே மின்னுவது உண்மையே. ஆனால், இவை அந்த இருளை அகற்றுவதற்குப் பயன்படுத்தப் படுபவையல்ல. அந்த இருட்டையே ஒளி என்று உலகுக்கு விளக்கி, இருட்டை வளர்ப்பதற்கே அவை பயன்படுத்தப் பெறுகின்றன. சமயத்துறையில் பண்டைத்தமிழர் வழிபட்ட கடவுள் சாதி, இனம், நாடு, காலம், இடம் ஆகிய வேறுபாடுகளற்ற கடவுள் மட்டுமல்ல; சமய பேதமும், மொழி பேதமும் கடந்த கடவுள். சமய பேதம் கடந்த கடவுளை வழிபட்ட அவர்கள் தேசியச் சமயமும் ‘சமயம் கடந்த’ சமயமாய் இருந்தது. இன்றைய அரசியல் மொழிப் பாணியில் கூறுவதானால் அவர்கள் கடவுளும் ‘சமயச் சார்பற்ற’ கடவுளே. சமயமும் ‘சமயச் சார்பற்ற’ சமயமே. அத்துடன் அவர்கள் அரசியல், சமயம். சமுதாயம், குடும்பம், கலை, இலக்கியம், நாகரிகம், அறிவியல் ஆகிய யாவுமே சமயச் சார்பற்றவை ஆகும். இப்பண்பை ஆரியருக்கு முற்பட்ட சிந்து வெளி நாகரிக கால இந்திய மாநிலப் பண்பாக (தற்போதைய) இந்திய மாநில முதல் அமைச்சர் பண்டித சவகர்லால் நேரு அழகுபட விளக்கிக் கூறி யுள்ளார். அவர் கருத்து வருமாறு; “அந்நாளைய சமய வாழ்வு பேரளவில் இந்நாளைய இந்திய மக்கள் சமய வாழ்வையே பெரிதும் ஒத்திருந்தது. இந்நாளைய சமயக் கருத்துக்கள் மட்டுமன்றி, இந்நாளைய மூட நம்பிக்கைகளில் பல கூட அன்று நிலவியிருந்தன. ஆனால், இந்நாளைய சமயத்துக்கும் அந்நாளைய சமயத்துக்கும் இடையே ஓர் உயர் முக்கியத்துவம் வாய்ந்த வேறுபாடு உண்டு. அந்நாளைய வாழ்வில் சமயம் ஒரு பகுதி. இன்றோ நம் வாழ்வு சமயத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அத்துடன் அந்நாளில் குருமார் இருந்தன ராயினும், அவர்கள் சமயப் பணியாளர், தொண்டர்களாகவே இருந்தனர். சமய வாழ்விலோ, அரசியல், சமுதாய வாழ்வுகளிலோ, கலை இலக்கிய அறிவியல் துறைகளிலோ, நாகரிகத்திலோ, அவர்கள் ஆட்சியும் ஆதிக்கமும் கிடையாது. குருமாரும் அன்று மற்ற மனிதரைப் போல மனி தராகவே சரிசம நிலையில் வாழ்ந்தனர்”. பண்டிதநேரு அவர்கள் தீட்டிக் காட்டும் ஆரியருக்கு முற் பட்ட கால இந்திய நாகரிகம் இதுவே. புத்த சமயத்தில் ஆரிய குருமார் ஆதிக்கம் ஏற்படும்வரை அதாவது வடகிழக்கிந் தியாவில் ஆந்திரப் பேரரசர் ஆண்டகாலம் வரை நிலவிய பழைய இந்திய நாகரிகமும் இதுவே. சங்ககாலத்திலும் ஓரளவு சோழப் பேரரசர் காலம் வரையும் நிலவிய தமிழர் நாகரிகமும் இதுவே. இந்த உயர் நாகரிகம் படிப்படியாகக் கெட்டழிந்து வந்த போக்கு உண்மையில் இந்நாளைய சீர்திருத்தவாதிகள் படிப்படி யாகச் சீர்த்திருத்த விரும்பும் படிகளின் நேர்எதிர் போக்கேயாகும். முதலாவது சமயம் சாராத கடவுள் -ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் -என்ற கருத்து, சமயங்கள் சார்ந்த கடவுள்கள்; சமயச் சார்பான பல கடவுள்களைக் கொண்ட புராண சமயக் கருத்துக்கு வழிவிட்டது. மொழி வாழ்வின் சீர் குலைவு: இலக்கிய வாழ்வின் பண்பு கேடு மொழி சாராக் கடவுள் -மக்கள் தாய் மொழிகளிலேயே அவர்கள் பக்திப் பாடலைக் கேட்டு வந்த கடவுள் -மொழி சார்ந்த கடவுளாய் -மக்கள் தாய் மொழிகள் எதனையும் பயின்றறியாத கடவுளாய் -தனிமொழி, தனக்கென ஒரு தனிமொழியுடைய கடவுள் ஆயினார். கடவுளுக்காக சமஸ்கிருத மொழி என்று ஒரு புதிய தெய்வீக மொழி படைத்து உருவாக்கப்பட்டது. சங்க காலத்தில் தெய்வமொழி என்ற பெயர் வேத மொழிக்கு மட்டுமே பெயராய், புத்தர், சமணர், வேத நெறியினர் ஆகிய மூவகுப்பினருக்கு மட்டுமே சமயச் சார்பான மொழியாய் இருந்தது. ஆனால், தமிழ் வாழ்வை இம்மொழி பாதிக்கவில்லை. ஏனெனில் அந்நாளில் தமிழைப் போன்ற இலக்கிய இலக்கண வளம் அதில் இல்லை. ஆனால், வடதிசையில் ஆந்திரப் பேரரசராலும், பல்லவர் முதலிய தென்னாட்டரசராலும் தொடக்கத்தில் பாளி மொழியம், அதன்பின் 4-5ஆம் நூற்றாண்டி லிருந்து புதிய சமஸ்கிருத மொழியும் தமிழைப்பின்பற்றி இலக்கிய மொழிகளாக வளர்க்கப்பட்டன. சமஸ்கிருதம் உயிரிலாச் செயற்கை மொழியானாலும், அது கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குள் தமிழுடன் போட்டியிட வல்ல இலக்கிய மொழியாயிற்று. பல்லவர் காலத்திலிருந்து பாளியும், சமஸ்கிருதமும் தென் கிழக்காசியா வெங்கும், இந்திய மாநிலத்திலும் தாய் மொழி வாழ்வை முழுதும் துடைத் தழிக்கத் தொடங்கின. சிறப்பாகச் சமஸ்கிருதம் தமிழின் பண்பாட்டுக்கும் தாய் மொழிகளின் வாழ்வுக்கும் தடங்கலாக ஆதிக்கம் செலுத்தலாயிற்று. இந்த ஆதிக்கம் தமிழ் மொழியின் பண்பாட்டையும் தமிழர் பண்பாட்டையும் மாற்றி யமைத்த அளவுக்கு, தமிழரின் வளத்தையோ வீரத்தையோ கெடுக்க முடியவில்லை. அத்துடன் தமிழகம் சூழ்ந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலிய தமிழின மொழிகளிலும், சிங்களத் திலும் -ஓளரவு இவை கடந்து மராத்தி, வங்காளி, இந்தி ஆகிய மொழிகளிலும், தமிழின் ஆற்றலே ஓரளவு புது வாழ்வு அளித்தது. ஆனால், தெற்கே அரைகுறையாகச் செலுத்தப்பட்ட சமஸ்கிருதத்தின் ஆதிக்க அழிவாற்றல் இவ்வெல்லை கடந்து வட மேற்கு, வடக்கு இந்தியாவில் தாய் மொழி வாழ்வுகளின் தடத்தையே அழித்து விட்டது. இந்திய மாநிலத்தின் பண்டைப் பழம் பெருமைகளை, புத்தர், அசோகன், ஹர்ஷன் ஆகியோர் பெருமித வாழ்வுகளை வானளவாவப் பாராட்டத் தயங்காத கீழ்திசை வரலாற்றாசிரியர் அப்பழம் பெருமாநிலத்தின் வடதிசைத் தாய்மொழிகளில் பெரும் பாலானவை பிரிட்டிஷ் ஆட்சியில் கூடப் பண்படா மொழிகளாய் நிலவியதைக் கண்டும், காணாது விட்டு விடுவது கீழ்த்திசை வரலாற்றாராய்ச்சியின் மாயங்களுள் ஒன்று ஆகும். இவ்வெல்லா மொழியாளரும் சமஸ்கிருதத்தையே இலக்கிய மொழியாகத் தொன்று தொட்டு ஏற்று, தம் தாய்மொழிகளை விலங்குப் படியினவையாய் அமைந்தவை என்பதை அவர்கள் எளிதாக நம்பி விடுகின்றனர்! சங்ககால இறுதியிலேயே எழுந்து, சோழப் பெரும் பேரரசர் ஆட்சித் தொடக்கத்துக்குள் முதிர்ச்சியுற்றுப் படர்ந்த சைவ வைணவ, பக்தி இயக்கங்களே தமிழகம் சூழ்ந்த மொழிகளின் புதிய இலக்கிய வளத்துக்குக் காரணம் என்பதையும் வரலாற் றாசிரியர் கண்களைத் திறந்து கொண்டே காணாதிருக்கின்றனர்! தமிழ் மொழியின் மரபு வளம் தமிழகத்திலும், தமிழகம் சூழ்ந்த நிலங்களிலும், தொலை வடதிசை நிலங்களான காசுமீரம், நேபாளம் ஆகியவற்றிலும் இலக்கிய வளம், கலைவளம் பரப்பு முடிந்ததானாலும், இலக்கியப் பண்பு வகையில் இப்பரப்பு முழுவதும் சமஸ்கிருத ஆதிக்கத்தால் மிக விசித்திரமான வகையிலே பாதிக்கப்பட்டன. தமிழைப் பின்பற்றி சமஸ்கிருதத்தில் தூய நல்லிலக்கியம் வளர்த்த சமஸ்கிருத பற்றாளர்கள் தாய்மொழிகளில் கூடப் பெரும்பாலும் மொழி பெயர்த்துப் பரப்ப எண்ணியதாக, விரும்பியதாகத் தெரியவில்லை. சமஸ்கிருத வாணராலேயே நல் இலக்கியமாக (ஸாஹித்யமாகக்)கருதப்படாத இதிகாச புராணங்களை மொழி பெயர்ப்பதுடனேயே பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் வரையும், அது கடந்தும் கூட முனைந்துள்ளனர். கீழ்திசை வரலாற்றாசிரியர் கண்களில் படாத நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. சங்க இலக்கியத்திலே மக்கள் அரசியல் வாழ்வு, குடும்ப வாழ்வுச் செய்திகளையும் அவர்கள் அறிவுக்கருத்துக்களையும் அவர் கால வெளியுலகச் செய்திகளையும் கூட நாம் காணலாம். சோழப் பேரரசர் காலத்தில் கூட ஒட்டக் கூத்தர் மூவருலா, சயங் கொண்டார் கலிங்கத்துப் பரணி போன்ற ஏடுகளில் இப்பண்பு ஓரளவு நீடிக் கிறது. ஆனால், பிற்காலத் தமிழிலக்கியத்தில் பெரும் பகுதியும், பிற தாய் மொழி இலக்கியங்கள் கிட்டத்தட்ட முழுவதும் வாழ்க்கைத் தொடர்பற்றவையாகவும் சமுதாய உயர்வு தாழ்வுக் கருத்து களைப் பரப்புபவையாகவுமே அமைந்தன. தமிழர் உழவுத் தொழில் அடிப்படை தேசியத் தொழிலாகக் கருதியிருந்தனர். ஆகவே அவர்கள் உழவருக்கு சமுதாயத்தில் உச்ச உயர்வு தந்தனர். ஆனால், பிற்காலச் சமய ஏடுகளும் இலக்கியங்களும் உழவரைக் கடை வருணத்தவர், கடைசியர் கீழோர் என இழித்துக் கூறலாயின. வேளாளரைச் சிறப்பித்து ஏரெழுபது எழுதிய கம்பரே தம் காவியங்களில் கடைசியர் அல்லது வேளாளப் பெண்டிரை இவ்வட திசை மரபு பின்பற்றிப் பொது மகளிராக வருணிக்கத் தயங்கவில்லை. கலைத் துறையில் கட்டடக் கலையில் வடக்கே இரசபுத்திரர் காலம் வரை சிந்து வெளிப் பண்பு நீடித்திருந்தது; சமயஞ் சாராத சிற்பக்கலை, ஓவியக்கலைகளை நாம் அவர்கள் வாழ்வில் காண்கி றோம். தென்னாட்டிலும் சமய மொழித் துறைகளில் அயல் பண்பே பேணிய பல்லவப் பேரரசர், கலையில் மட்டும் சங்ககாலச் செப்பமும் மனிதப் பண்புகளும் நன்கு பேணியிருந்தனர். ஆனால், விரைவில் தென்னாட்டிலும் வடதிசையிலும், கலை பொதுவாக மக்கள் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவைகளாகவே வளர்க்கப் பட்டு வருகின்றன. இவ்வெல்லா மாறுபாடுகளும் வாணிகக் கலைத்துறை நாகரிகத்தினின்றும் நிலப் பண்ணை முறை நாகரிகத்துக்குக் கீழ்திசைமாறி வந்த நிலையினைக் காட்டுவன ஆகும். கீழ்த்திசை மார்க்சீயவாதிகள் கூட இம்மாறுதல்களைத் திருவுளங் கூரவில்லை. சோழப் பெரும் பேரரசர் ஆட்சியில் தமிழகத்திலும், தமிழகம் சூழ்ந்த கீழ்திசைப் பரப்புக்களிலும் பரவி வந்த மாறுபாடுகளில் -வளர்ச்சி சாராத, தளர்ச்சிக்குரிய மாறுபாடு களில் -இவை சில. ஆனால், மாறுபாடுகளிடையே உயிர் வாழ்வு தடைப்படவில்லை என்பதைக் காட்டும் உயிர்த் தொடர்புச் சின்னங்களையும் நாம் காணலாம். அத்துடன் அடிப்படை உயிர்வளம் குன்றிவிட வில்லை. புதிய மறுமலர்ச்சி, புதிய மலர்ச்சிகளை எதிர் நோக்கி அது கருவளமாகவே இருந்து வந்துள்ளது என்பதையும் ஆழ்ந்த வரலாற்று நோக்கு விளக்க முடியும். தேசிய வாழ்வின் உள்ளார்ந்த தொடர்ச்சிப் பண்பு சங்க காலத்தில் பேரரசுப் போட்டி இரு திசைகளில் வலிமை பெற்றிருந்தது. ஒன்று அகநிலைப் போட்டி, இதில் தமிழக முடியரசர் மற்ற முடியரசர்களுடன் மட்டுமன்றி வேறு பல குடியரசர் அல்லது வேளிருடன் போராடினர். தமிழகப் பேரரசர் ஆற்றல், தமிழகம் கடந்து எளிதில் செல்லாமல் தடுத்த சூழ்நிலை இதுவே. ஆனால், அடிக்கடி பேரரசர் இது கடந்து கடற்பரப்பிலும் நிலப் பரப்பிலும் தம் ஆற்றலெல்லையை விரிவு படுத்தி வந்தனர். இதுவே அவர்கள் புற நிலைப் போட்டிக்குக் காரணமாக இருந்தது. இத்துறையில் தமிழகத்துடன் சரிசம நிலையில் போட்டியிட்டவர்கள், வட இந்தியாவில் கங்கை வெளியில் கி.மு. 7-ஆம் நூற்றாண்டு முதல் மகதப் பேரரசை ஆண்ட சிசுநாக மரபினர், நந்தர், மோரியர்; கங்கை நாட்டிலும் பர்மாவிலும் தம் ஆட்சி பரப்பிய ஆந்திர கலிங்கப் பேரரசர், புராண கலத்தவரான குப்தர், ஹர்ஷன் ஆகியவர்களே. பாண்டிய பல்லவர் காலத்தில் இப்போட்டி முறுகுவதைக் காண்கிறோம். போட்டியின் புற எல்லை அக எல்லையாகவே குறுகி விட்டது. ஆனால், அக எல்லை தென்னாட்டையும் இலங்கை யையும் அளாவி விரிவுற்றது. சேரரும் இலங்கை அல்லது ஈழ நாட்டு அரசரும் போட்டியில் அவ்வப்போதே கலந்து கொண்டனர். ஆனால், தலையாய போட்டி மூன்று பேரரசர்களின் போட்டியாகவே இயன்றது. பாண்டியப் பேரரசும், பல்லவப் பேரரசும் தமிழகத்திலிருந்து தொடங்கித் தென்னாட்டின் தென் பெரும் பகுதி முழுவதும் விரிவுற்று வந்தன. இவற்றை எதிர்த்து வட திசையில் சாளுக்கியப் பேரரசர் அல்லது இராஷ்டிரகூடப் பேரரசரும், அவர்களை எதிர்த்துக் கங்கை வெளியில் குப்தர் அல்லது ஹர்ஷனும் போரிட்டனர். சோழப் பெரும் பேரரசர் காலத்தில் அக எல்லையும் விரிவுறு கிறது. புற எல்லையும் விரிவுறுகிறது; ஆனால், அக எல்லை தெற்கே இலங்கை, மேற்கே அரபிக்கடல் தீவுகள், கிழக்கே கீழ்மா கடல் (பசுபிக்) வரையுள்ள கடாரப் பேரரசும், வங்காள விரிகுடாத் தீவுகளும், வடக்கே இமயமும் என விரிவுற்று விட்டது. புற எல்லை மேலைச் சாளுக்கியர் ஆண்ட பகுதி மட்டுமே; தெற்கே பாண்டியரும் அவர்கள் தூண்டுதலால் அடிக்கடி கிளர்ந்தெழுந்த சேரரும் ஈழ மன்னரும் பெரும் பேரரசுக்கு ஒரு முள்ளாகச் செயலாற்றி யிரா விட்டால், இந்த மேலைச் சாளுக்கியப் பரப்பும் தென்திசை பெரும் பேரரசில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும் என்று உறுதியாகக் கூறலாம். ஏனெனில் பேரும் பேரரசுக் காலத்திலேயே தமிழகப் பக்தி இயக்கம் அத்திசை கடந்து வடக்கே செல்லத் தொடங்கி யிருந்தது. சோழப் பெரும் பேரரசர் காலத்திலேயே கன்னட தெலுங்கு மொழிகள் இலக்கிய வளம் பெறத் தொடங்கியிருந்தன. ஆனால், சோழப் பெரும் பேரரசர் அவைப் புலவோர் அவர்களைத் தமிழில் பாடினர்; மேலைச் சாளுக்கிய விக்கிரமாத்தனின் அவைப் புலவனான பில்ஹணன் அவனைச் சமஸ்கிருதத்திலேயே பாடினான். அத்துடன் தமிழர் பாடல்கள் வரலாற்றுக்குப் பயன்படுவது போல, தென்னாட்டுப் பில்கணன் சமஸ்கிருத காவியமோ (விக்கிரமாங்க சரிதம்), வடதிசைப் பட்ட பாணன் காவியமோ (ஹர்ஷ சரிதம்) வரலாற்றுக்குப் பயன்படவில்லை. இரண்டுதிசைப் பேரரசுகளின் இரு திசைப் பண்பாடுகளின் போக்கை இவை காட்டுவனவாகும். பல்லவர் காலத்திலும் சோழப் பெரும் பேரரசர் காலத்திலும் தமிழகப் பேரரசுப் படைகளும் சாளுக்கிய பேரரசுப் படைகளும் சந்தித்துப் போராடிய போர்க்களங்களில் மிகப் பல துங்கபத்திரை ஆற்றங்கரையிலோ அல்லது கிருஷ்ணையாற்றங் கரையிலோதான் நிகழ்ந்தன. அப்போர்களிடையே அடிக்கடி கை மாறி வந்த புயற்களம் இரண்டு ஆறுகளுக்கும் இடையேயுள்ள பகுதி ஆகும். இது இன்று பம்பாய் மாகாணத்தில் இரேய்ச்சூர் மண்டலம் என்ற பெயருடன் நிலவுகிறது. பல்லவ சோழர் காலத்தில் இது கல்வெட்டுகளில் இடைதுறைநாடு இரண்டாயிரம் என்றும், விசய நகரப் பேரரசர் காலத்திலிருந்து இரேய்ச்சூர் இடை நிலம் (சுயiஉhரச னுடியb) என்றும் அழைக்கப்பட்டது. 14-முதல் 16-ஆம் நூற்றாண்டுகள் வரை இப்பகுதியே விசய நகரப் பேரரசுக்கும், அதன் வடக்கிலுள்ள பாமினிப் பேரரசுக்கும் இடையேயுள்ள போர்ப்புயல்களமாய் இருந்தது. அது போலவே 18-ஆம் நூற்றாண்டில் இவ்விடம் தென் திசையில் மைசூர்ப் பேரரசுக்கும் வடதிசையில் மராட்டிய, நிஜாம் அரசுகட்கும் இடையே யுள்ள போராட்ட நிலமாய் விளங்கிற்று. பழைய தமிழகப் பேரரசுகளான பாண்டிய பல்லவ சோழர் ஆண்ட எல்லையையே விசய நகரப் பேரரசரும், மைசூர்ப் பேரரசரும் ஆண்டனர் என்பதும், அவர்கள் எதிரிகளாய் இருந்த சாளுக்கியர் ஆண்ட எல்லையையே பாமினி அரசரும் பிற்கால மராட்டிய நிஜாம் அரசரும் ஆண்டனர் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கன. விசய நகரப் பேரரசரும், மைசூர் பேரரசரான ஹைதரும், திப்புவும் தமிழகத்தின் பழைய பேரரச எல்லையில் நின்று, தமிழகத்தின் பண்பாட்டுப் பிரதிநிதிகளாகவே வடதிசைத் தென்னாட்டரசு களுடன் போராட வேண்டியதாயிருந்தது. தம் காலங் கடந்து செயலாற்றும் தமிழகப் பேரரசுகளின் வலிமையையும் அவர்கள் ஆட்சிப் பண்புகளின் நீடித்த தொடர்பையும் இது எடுத்துக் காட்டு கிறது. தென்னாட்டின் தேசிய வலு தமிழகமே தவிர, விசயநகரப் பேரரசின் தலைமையிடமும், மைசூர் பேரரசின் தலைமையிடமும் தமிழகத்துக்கு வடக்கே இருந்தாலும் அவற்றின் உயிர் நிலைவலுவும், நீடித்தவாழ்வும், வளர்ச்சியும் தெற்கு நோக்கியவையாகவே நிலவின. விசய நகரப் பேரரசு தளர்ச்சியுற்றபோது, அதன் தமிழக மாகாணத் தலைவர்களான மதுரை, தஞ்சை, செஞ்சி நாயகர்களே அம்மரபின் வல்லரசர்களாக விளங்கினர். தலைநகரம் அழிவுற்றபின், தலைமையிடமும் தமிழகத்தை நோக்கியே பெனுகொண்டா, சந்திரகிரி, வேலூர் ஆகிய நகரங்களுக்கு மாற்றப்பட நேர்ந்தது. இறுதி நாட்களில் விசய நகரப் பேரரசு வேலூர் அரசாகவே நடைபெற்றது. இதன் சின்னமாகவே இன்றும் அந்நகரம் ஆர்க்காட்டு வேலூர், இராயவேலூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மாநிலத் தேசியத்தை வடதிசை இஸ்லாமியப்படை யெடுப் பினின்றும் காக்கவிரும்பிய தேசியவீரன் சிவாஜி 17-ம் நூற்றாண்டில் அவன் தன் புதிய தேசியத்துக்குத் தன்தாயகமான கொண்கானத்தை விடத் தமிழகமே சிறந்த தென்று கருதி, செஞ்சியிலும், வேலூரிலும் தன் சேமத் தலைமையிடத்தை வகுத்தான். அவன் தந்தையும் உடன் பிறந்தானும் தஞ்சையைத் தம் மரபின் புதிய தாயக அரசாக்கினர். வேறெந்த மன்னரையும் விட, சிவாஜியும் திப்புவுமே தமிழக மரபினைப் பேரளவு பேணித் தென்னகத் தேசியத்தைக் கனவு கண்டவராவர். ஆனால், சிவாஜியினும் முனைப்பாகத் திப்பு தேசீய வலுவைத் தென் திசையில் கண்டான். ஏனெனில் அவன் தமிழகத்தில் கூடத் தென் தமிழகத்தையே தன் மூலதளமாக்கத் திட்டமிட்டான். அவன் திருவாங்கூர்ப் படையெடுப்பின் நோக்கம் புது வழியில் அதை அடைவதே. இதில் அவன் வெற்றி பெறவில்லை. ஆனால், இதில் அவன் வெற்றியடைந்திருந்தாலோ அல்லது தமிழகத்தின் மறுமலர்ச்சித் தேசியமாகிய பாஞ்சாலங் குறிச்சித் தேசியத்துடன் அவன் தொடர்பு கொண்டிருந்தாலோ தென்னாட்டின் வரலாறும் வேறுவகையாய் மாறியிருக்கும் என்பதில் ஐயமில்லை. தொலை தூர பிரான்சுடனும் நெப்போலியனுடனும் தொடர்பு கொள்ளத் துணிந்த திப்பு, அவன் போராடிய காலத்திலேயே புரட்சி தொடங்கிய கட்டப் பொம்மனுடன் தொடர்புகொள்ள எண்ணாதது தென்னகத் தின், கீழ்திசையின் அவப்பேறேயாகும் என்னலாம். வழக்கமாக மாநிலத் தேசியத்திலும் அதன் இடைக்காலச் சமய வாழ்விலுமே அக்கரை காட்டும் வரலாற்றாசிரியர் பலர், இக்காலத்தின் கடைசி மூலதள அரண் என்ற முறையில் பொது வாகத் தென்னாட்டிலும், சிறப்பாக விசயநகரப் பேரரசிலும் மதுரை நாயக அரசிலும் புதிய அக்கரையும், புதிய கிளர்ச்சியும் காட்டுகின்றனர். ஆனால், அவர்கள் மாநிலச்சமய வாழ்வு என்று கொள்வது சமயப் பற்றுருவில் அந்நாள் எழுந்த தென்னகத் தேசிய மறுமலர்ச்சியினையேயாகும். விசயநகரப் பேரரசின் வகையிலும் இன்னும் முனைப்பாக, சிவாஜியின் வகையிலும் தேசியக்கனவு, காலச் சூழ்நிலையால் மாநிலச் சமய வாழ்வாக உருவெடுத்தாலும், அதுமாநிலச் சமய வாழ்வு அல்ல, தேசியமே. ஏனெனில் விஜய நகர, சிவாஜி மரபைப் பின்னாட்களில் முஸ்லிம்களான ஹைதரும். திப்புவுமே மேற்கொண்டனர். இது அதன் சமயங்கடந்த தேசியத் தன்மையைத் தெளிவுபடுத்தும். திப்பு காலத்திலேயே அம்மரபு பாஞ்சாலங் குறிச்சியில் முழுநிறை தேசிய உருக்கொண்டது. திப்பு தேசிய நோக்கம் கொண்ட பேரரசனாக மட்டுமே திகழ்ந்தான். அவன் போராட்டம் பேரரசுப் போராட்டமாகவே நின்றது. ஆனால், குறுநில மன்னனான கட்டப் பொம்மன் அதை முற்றிலும் மக்கட் போராட்டமாக்கினான். இதனாலே விசயநகர மைசூர் பேரரசுகள் அழிந்தபின் அவற்றின் வாழ்வு புத்தெழுச்சி களைத் தூண்டியதில்லை. ஆனால்,பாஞ்சாலங் குறிச்சித் தேசியம் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் தொடர்ச்சியாக வேலூரிலும் சென்னை யிலும் சீரங்கப் பட்டிணத்திலும் மீரத்திலும் வடதிசையெங்கும் புரட்சிக்கனலைப் பரப்பி, வெள்ளையரை வெளியேற்றும் இயக்க மாக ஒன்றரை நூற்றாண்டுக்குள் வளர்ச்சியடைந்தது. பாஞ்சாலங்குறிச்சிக் கட்டப்பொம்மனுடன் புதிய தேசிய மறுமலர்ச்சி முழு உருவில் தொடங்குகிறதென்றால், அதே பாஞ்சாலங் குறிச்சிக்கருகில் பிறந்த வ.உ.சிதம்பனாரின் கப்பல் போராட்ட இயக்கத்துடனும், தொழிலாளர் இயக்கத்துடனும், தமிழக தேசிய மரபின் மற்றொரு கூறு புதுமலர்ச்சியடையத் தொடங்குவது காணலாம். சோழப் பெரும் பேரரசர், பிற்காலப் பாண்டியர் ஆகியோருக்குப் பின் அவர்களின் கடற்படை மரபு வீழ்ச்சியடைந்து விட்டதானாலும், அதன் தூவானத்தை நாம் நெடுநாள் வரை காண்கிறோம். விஜயநகரப் பேரரசரும் மதுரை நாயகப் பேரரசரும் சேர சோழ பாண்டியப் பேரரசரைப் போல எந்தக் கடல் கடந்த நாட்டையும் வென்று ஆளவில்லை. ஆனால், அவர்கள் காலத்தில் கூடத் தமிழகப் பகுதியில் இலங்கைமீது படையெடுக்கவும் அதனிடமிருந்து திறை கொள்ளவும் போதிய கடற்படை இருந்தது. தவிர கடல் வாணிகமும் தெற்கே பேரளவில் தமிழகக் கடற்கரை வழியாகவும் மேற்கு மலையாள கொண்கானக் கரை வழியாகவுமே நடைபெற்றது. மேலைக் கரையில் சேரர் காலத்தில் கடம்பர் கடற் கொள்ளைக் காரராக வாழ்ந்து வந்தனர் என்று கண்டிருக்கிறோம். அந்த மரபில் மலையாளக் கரை மக்களும் கொண்கானக்கரை மக்களும் பிரிட்டிஷ் ஆட்சி வரை தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர் என்று தோற்றுகிறது. ஏனெனில் பாமினி அரசர் நாட்களில் ‘மக்கா’ விற்குச் செல்லும் முஸ்லிம் யாத்திரிகர்களை இப்பகுதிமக்கள் அடிக்கடி கடலில் தாக்கிக் கொள்ளையடித்ததாகக் கூறப்படுகின்றது. ஆந்திர கலிங்கருக்குப் பின் தமிழகக்கடற்படை மரபுடன் தொடர்பு கொண்ட ஒரே வடதிசை அரசன் சிவாஜி, வெள்ளை யரை ஒன்றிரண்டு கடற் போரில் முறியடிக்கப் போதிய கரை யோரக் கடற்படை அவனிடம் இருந்ததாகத் தெரியவருகிறது. 1756-ல் பிரிட்டிஷ் படைத்தலைவரே ‘அங்கிரியா’ என்ற கொள்ளைப் படைத்தலைவன் தாக்கி அவன் மூலதளமான செவண் துருக்கத்தை அழிக்க வேண்டி வந்தது. இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் கடம்பர் மூலதளத்தை அழித்த சேரர் செயலை இது நினைவூட்டுகிறது. பிரிட்டிஷ் ஆட்சித் தொடக்கம் வரை இந்தக் கடற் கொள்ளையில் மலையாளிகள் பேரளவாக இடம் பெற்றிருந்தனர். அவர்கள் மூலதளங்களில் ஒன்று பம்பாய்த் தீவின் ஒரு பகுதியில் அமைந் திருந்தது. பம்பாய் நகரில் இன்றும் அப்பகுதி இதனால் மலையாளக் குன்று (மலபார்ஹில்) என்று அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக 19-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து உயிர்த் துடிப்பறாதிருந்த தமிழர் கடலாட்சி மரபு, வ.உ.சி.யின் தேசிய இயக்கத்தால் மீண்டும் புது மலர்ச்சி நோக்கியுள்ளது. தற்கால மாநிலத் தேசியம் திப்புவின் பெருமையையோ, பாஞ்சாலங் குறிச்சியின் பெருமையையோ புறக்கணித்தது போல, மாநில விடுதலை இயக்கத்தின் இவ்வுயிர்க் கூற்றினையும் புறக்கணித்து வருகின்றது. ஆனால், வருங்காலத் தமிழகமும் வருங்காலத் தென் கிழக்காசியாவும் கீழ் திசையும் வ.உ.சி.யை ஒரு பெரிய கீழையுலக மறுமலர்ச்சியின் மூதாதை என்று போற்றாமலிருக்க முடியாது. தெலுங்கரும் தமிழரும்: முனைவர் சி.ஆர். ரெட்டியின் மதிப்புரை தென்னாட்டு வாழ்வில் தாழ்ச்சியும், மீட்சியும் கண்ட காலம் 14-முதல் 17 வரையுள்ள நூற்றாண்டுகள். அக்காலத்திலே தமிழகமும், ஆந்திரமும் ஒரு வியத்தகு வரலாற்றுப் புதிரைக் காணமுடிந்தது. தமிழகத்தின் அரசியல், கலை, இலக்கியப் பொற்காலங்கள், சோழப்பெரும் பேரரசுக் காலத்துக்குள் அழிந்து விட்டன. தெலுங்கரோ, ஆந்திரப் பேரரசுக் காலத்திலேயே, அரசியல் துறையில் பொற்காலம் கண்டனரெனினும், அரசியல், சமுதாயம், கலை, இலக்கியம் ஆகிய எல்லாத் துறைகளும் அடக்கிய முதல் முழு நிறை தேசிய வாழ்வின் மலர்ச்சியான பொற்காலத்தை, இக்காலத்திலேயே பெற்றனர். தமிழகம் உட்பட தென்னாட்டின் தென் பெரும் பகுதி முழுவதும் ஆந்திர நாயக மரபினரே பரவி ஆண்டனர் - எங்கும் குடியேறினர் -வீரவாழ்வும் கலை இலக்கிய வாழ்வும் பரப்பினர். ஆனால், இந்தத் தெலுங்கு மறுமலர்ச்சியில் ஆந்திரத் தாயகத்தைவிட ஆந்திரர் குடியேறிய வாழ்வகமாகிய தமிழகமே பெரும் பங்கு கொண்டது. மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர், மைசூர் ஆகிய நகரங்களில் ஆண்ட நாயக மரபின் இளைஞர் தம் செயலால் வீர காவியப் புகழாற்றினர். அதனுட னொத்து அக்குடிப் பெண்டிர் -வீரர் மனைவியரும் தங்கையரும் - தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் அப்புகழை வீரக் காப்பியங்களாக்கினர். தமிழகச் சங்ககாலம் தவிர வேறெக்காலத்தினும் இத்தனை பெண்பாற் புலவர் மணிகளை நாம் காண முடியாது. தெலுங்கு இலக்கியத்தின் ஒரு சிறந்த பகுதி - சிறப்பாகத் தெலுங்கு மொழியின் உரைநடை இலக்கியம், நாடக இலக்கியம் ஆகியவற்றின் பெரும்பான்மையான பகுதி -தமிழக நாயகராட்சி யில் நாயக ஆட்சி மரபினராலும், அவர்கள் ஆதரவாலும் இயற்றப் பட்டதேயாகும். தவிர, சிதைந்த நிலையில் இருந்த பழந்தமிழ் இசை இலக்கணத்தைப் பல்லவர் காலம் சமஸ்கிருதத்தில் புதிதாக வளர்த்ததென்றால், அந்த இலக்கணத்துக்கு மேலும் புதுமலர்ச்சி தந்து அதற்குத் தெலுங்கு மொழியில் இலக்கியம் யாத்த பெருமை இக்காலத்துக்குரியதே யாகும். இச்செயலைச் செய்து புதிய கருநாடக இசையின் முதல்வருள் தலைவராய் அமைத்தவர் திருவையாற்றில் வாழ்ந்த தியாகராசரே யாவர். 16,17 -ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் குடி புகுந்து வாழ்ந்த தெலுங்கு மரபினர் இன்றும் பாலாறு முதல் தண் பொருநை வரை எங்கும் வாழ்கின்றனர். ஆனால், மூவாயிர, நாலாயிர ஆண்டுகட்கு முன் இந்திய மாநிலத்துக்கு வந்த ஆரியரெனத் தம்மைக் கருதிக் கொள்ளும் மக்கள் தம் மொழி மறந்தும், இன்றும் மற்ற இந்திய மாநில மக்கள் வாழ்விலிருந்து விலகித் தண்ணீரும் எண்ணெயு மாகவே இயங்குவதைக் காண, நானூறு ஆண்டுகளுக்கு இப்பால் தமிழகம் வந்த இத்தெலுங்கு மரபினர்தம் தாய் மொழியைக் குடும்பச் சூழலில் பயன்படுத்திக் கொண்டே, முற்றிலும் தமிழருடன் தமிழராகி விட்டனர் என்பது வியப்புக்குரியதேயாகும். இது, பிற்காலத் தமிழக வரலாற்றில் நாம் காணும் பொன் வண்ணச் செய்திகளுள் ஒன்றாகும். திராவிட, அதாவது பெருந்தமிழின நாகரிக வரலாற்றை ஊன்றி ஆராய்ந்துள்ள ஆந்திர நாட்டுப் பெரும் பேரறிஞரான முனைவர் சி.ஆர்.ரெட்டி அவர்கள், தமிழகத்தில் தமிழர் தெலுங்கர் பொன்னிணைவு குறித்துக்கூறும் வாசகப் பகுதிகள், இரு இனக் கூறுகளையும் அவற்றின் இணைவாற்றலையும் நயம் பட மதிப்பிட்டுக் காட்டுகின்றன. “தமிழர் தனிப்பட்ட தற்பண்பு வளர்ச்சியில் மிக்கவர். அவர்கள் வகுத்துள்ள தனி முதன்மை வாய்ந்த பண்பாடு திராவிட இனத்தின் தலைசிறந்த அறிவு மலர்ச்சியையும், கலை மலர்ச்சியை யும் குறிக்கிறது. அவர்கள் சீரிய சிந்தனைக்கும் வனப்பார்ந்த கலையுயர்வுப் பண்புக்கும் சான்று வேறு வேண்டியதில்லை -சிலப்பதிகாரமும் மணிமேகலையுமே போதும்! இவற்றைத் தொலைவிலே சென்றடுக்கக் கூடிய எதனையும் தெலுங்கர் வாழ்விலே நாம் காண்பதற்கில்லை. அத்துடன் தமிழர் வகுத்துள்ள சைவசித்தாந்தக் கோட்பாடு, இந்திய மாநிலத்தின் பல்வண்ணக் கோட்பாட்டு, மாடகூடக் குவையிலேயே ஓர் ஒப்புயர்வற்ற முத்து மணிக் கோபுரம் ஆகும். பழமைப் பெருமையிலும் தற்பண்பு மேம்பாட்டிலும் தெலுங்கரைப் பன்மடங்கு விஞ்சிய தமிழர் வாழும் தமிழகத்திலே தெலுங்கர் பாலாறு முதல் தண்பொருநை வரை இவ்வளவு எளிதாகப் பரவி ஆட்சி செய்தனர் என்பதும், அத்துடன் அமையாது தமிழர் வாழ்வுடன் நகமும், சதையுமாக வேறு பிரிக்க முடியாத நிலையில் இரண்டறக் கலந்துள்ளனர் என்பதும் வியப்புக்குரியன. ஆனால், பண்பிலும் தனி முதன்மையிலும் தமிழர் மேம்பட்டவராயின், தெலுங்கர் வீரத்திலும் செயலார் வத்திலும் ஊக்க முனைப்பிலும் விஞ்சியவர் ஆவர். வீரமும் பண்பும் இணைந்த இம் மணிமிடை பவளமொத்த இணைப்புக் கவிஞர்களாலும் வருணித்து முடியாத பொன் வண்ணப் பொலி வுடையது தோழமையினத்தவரான தமிழர் பண்பு காத்து ‘திராவிட நாடு’ என்ற பண்பாட்டுக் கோட்டையின் வீரகாவலர் களாகப் பொன்னூழிக் காலத்திய நாடு கடந்த தெலுங்கர் விளங் கினர் என்னலாம். இவ்விளைவு இந்திய மாநிலத்தின் பல் கூட்டிணைவுத் திறத்துக்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.” -செஞ்சி வரலாறு: இராவ்பகதூர் ஸி. எஸ்.சீனிவாசச் சாரியார்: முனைவர் சி.ஆர். ரெட்டியின் சிறப்பு முன்னுரை. தெலுங்கர் வீரம் எலும்பாகவும் தமிழர் பண்பு தசையாகவும் ஒரே தமிழ்ப் பேரினக் குருதியால் இணைக்கப்பட்டுப் புதிய தமிழகத்தை ஆக்கிவரும் பண்பைக் கவிஞரினும் கனிவுடைய மொழிகளிலே பேரறிஞர் சி.ஆர். ரெட்டி அவர்கள் இங்கே தீட்டிக் காட்டியுள்ளனர். ஆனால், தெலுங்கர் வீரம் தமிழர் பண்பு என்று பேரறிஞர் இங்கே பகுத்துக் காட்டுவது சோழப் பெரும் பேரரசுக்குப் பிற்பட்ட காலநிலைக்கு மட்டுமே பொருந்து வதாகும். அதற்குமுன் தமிழர் பண்பு தெலுங்கரிடத்திலும் தெலுங்கர் வீரம் தமிழரிடத்திலும், இருவர் பண்பும் வீரமும் மற்ற எல்லாத் திராவிட இனத்தவரிடத்திலும் விரவியே காணப்படு கின்றன. தமிழர் தற்பண்பு வாய்ந்த இலக்கியத்தைப் போலவே. தெலுங்கருக்கும் தற்பண்பு வாய்ந்த திராவிடப் பேரிலக்கியம் சோழப் பெரும் பேரரசர் காலத்திலும், அதற்கு முன்னும் நிலவி யிருந்தது என்பதை அறிஞர் ரெட்டி அவர்களே பிறிதோரிடத்தில் (தெலுங்கிலக்கிய வரலாறு; செஞ்சையா: அறிஞர் ரெட்டி முன்னுரை) கல்வெட்டு இலக்கியச் சான்றுகளுடன் விளக்கி யுள்ளனர். கன்னட மொழியிலும் சங்க இலக்கிய காலத்தை அடுத்தே இத்தகைய திராவிடப் பெரும் பேரிலக்கியம் இருந்தbன்பதைக் கன்னட பேரரசர் காலத் தமிழிலக்கிய இலக்கணக் குறிப்புக்களும் காட்டும். அறிஞர் ரெட்டி மாநிலத்தின் வியத்தகு கூட்டிணைவுப் பண்பு என்று குறிப்பிட்டது உண்மையில் இந்திய மாநிலத்தின் அடிப்படைப் பழங்குடியினமாகிய திராவிடப் பேரினத்தின் உயிர்ப் பண்பேயாகும் என்பது நாகரிக உலகில் தமிழகம் இடம்பெற்ற பின்னரே அறிவுலகம் கண்டுணர வழி ஏற்படக் கூடும் காட்டும். அறிஞர் ரெட்டி மாநிலத்தின் வியத்தகு கூட்டிணைவுப் பண்பு என்று குறிப்பிட்டது உண்மையில் இந்திய மாநிலத்தின் அடிப்படைப் பழங்குடியினமாகிய திராவிடப் பேரினத்தின் உயிர்ப் பண்பேயாகும் என்பது நாகரிக உலகில் தமிழகம் இடம்பெற்ற பின்னரே அறிவுலகம் கண்டுணர வழி ஏற்படக் கூடும் என்னலாம். இஸ்லாமியரும் தென்னாடும் தென்னாட்டின் தேசிய உயிராற்றல் தமிழினத்தவராகிய தெலுங்கரையோ, மதமட்டுமே மாறிய தமிழினத்தவரையோ இணைத்துக் கொண்டது வியப்புக்குரியது அல்ல. வட இந்தியப் பரப்பு இன்றுகூட முற்றிலும் தன் தேசியத்துக்குள்ளேயே மத மாறிய இந்திய முஸ்லிம்களைக் கூடத் தன்னுடன் ஒன்றுபடுத்த முடியா திருப்பதை நோக்க, மதமாறிய தென்னாட்டவர் மட்டுமன்றி, அயல் நாட்டிலிருந்து வந்த அராபியரும், யூதரும், யவனரும் தென்னா டெங்கும் பரவித் தென்னாட்டவருடன் தென்னாட்டவராகக் கலந்துவிட்டசெய்தி வரலாற்றின் வியப்பார்வத்துக்குரிய புதுமைகளுள் ஒன்றேயாகும். பிற்காலப் பாண்டியப் பேரரசர் காலத்தில் ஜமாலுதீன் அராபியனாயினும் ஆட்சியுரிமை பெற்றுத் தமிழனாகவே வாழ்ந்தது மேலே குறிக்கப்பட்டது. முனைவர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் வடதிசைக் கண்ணோட்டத்துடன் குறிப்பது போல, இது சோழப் பெரும் பேரரசருக்குப் பிற்பட்ட தளர்ச்சிக்குரிய அறிகுறி மட்டுமன்று. சோழப் பெரும் பேரரசர் காலத்திலேயே இதுபோலச் சீனரும் கடாரமக்களும் நாகபட்டினத்தில் வந்து தங்கித் தம் புத்த சமயத்துடனும், புத்தப் பள்ளியுடனும் வாழ்ந்திருந்தனர். இடைக் காலப் பாண்டியர் ஆட்சியில் இஸ்லாமியர் மேல் கரையில் ‘அஞ்சு வன்னத்தார்’ என்ற சிறப்புரிமையுடன் வாழ்ந்து வந்தனர். கிட்டத் தட்டச் சங்க காலத்திற்கு அருகாமையிலேயே சேர அரசர் சிரியா நாட்டுக் கிருஸ்தவருக்கு இதுபோன்ற தனி உரிமை அளித்திருந்தனர். மற்றும் சங்க காலத்திலேயே யவனரும் உரோமரும் எகிப்தியரும் மேல்திசை முசிறியிலும், கீழ்திசைப் புதுச் சேரியிலும் தமிழருடன் தமிழராகக் கலந்து வாழ்ந்தனர். காவிரிப்பூம் பட்டினத்தின் பட்டினப்பாக்கம் பன்மொழிப் பாக்கமாகவே நிலவியதைப் பட்டினப் பாலை போன்ற சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. இங்கிலாந்தும் பிரான்சும் ஏசுவின் பெயரைக் கேட்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஏசுவின் நேர் மாணவருள் ஒருவரான திருமுதல்வர் தாமஸ் தமிழகக் கரையில் மயிலையில் கோயில் கட்டிச் சமயம் பரப்பி வாழ்ந்திருந்ததாய் கிறித்துவ மரபு குறிக்கின்றது. ஜமாலுதீன் வாழ்ந்த காயல் பட்டினத்திலேயே அவருக்கு நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின் புகழுடன் வாழ்ந்து தமிழ் வளர்த்த சீதக்காதி மன்னனைத் தமிழகத்தில் அறியாதவர் இல்லை. ஜமாலுதீனைப் போலவே செத்தும் கொடுத்த சீதக்காதியும் பண்பால் தலைசிறந்த தமிழர் -மரபால் “சையித் காதர்” என்ற அயலினப் பேரும் ‘மரக்கல ராயர்’ என்ற பட்டமும் உடைய தமிழக அராபிய குல திலகமேயாவர் என்பதை தமிழக வரலாற்றாசிரியர் மறத்தல் இயலாது. கடல் வழி தமிழகம் வந்த இஸ்லாமியர் தமிழகப் பண்பாடு தழுவி எளிதில் கீழ்திசையிலே சேதங்கடந்த தேசியவாதிகள், சமயங் கடந்த சமய வாதிகள், நாடு கடந்த உலகத் தமிழர் ஆகமுடிந்தது. பண்படா இனக் கலவைப் பரப்பாகிய வடமேற்கு வழி வந்த இஸ்லாமியர்களுக்கு இந்தப் பண்பாட்டு வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை. வட திசையிலும் ஓரளவு முகலாய மன்னர் இந்தியப் பண்பு தழுவ முயன்றனராயினும், வடதிசைத் தேசியம் தென் திசைத் தேசியத்தின் பொன் வண்ண இணைவுப் பண்பற்றதாக வளர்ந்ததாலேயே அக்பர் கனவு கைகூடவில்லை. ஆனால், தென்திசையில் தேசியக் கனவையே இஸ்லாமியரான மைசூர்ப் பேரரசர் எளிதில் மேற்கொள்ள முடிந்தது. வடதிசையிலிருந்து வந்த இஸ்லாமியரின் மிக மோசமான அரசியல் பேராளான கரு நாடகநவாபும், நிஜாமும், சிவாஜி மரபின் பெருமையுணராத பிற்கால மராட்டிய அரசியல் வேடரும் தென்னாட்டைக் கோட்டை விடவில்லையானால், மைசூர்ப் பேரரசர், விஜயநகரப் பேரரசின் புகழும் பின்னிட வல்ல ஒரு பெருந்தென்னாட்டுத் தேசியத்தைக் கட்டாயம் உருவாக்கி யிருப்பவர் என்னலாம். பக்தி இயக்கமும் இஸ்லாமும் மேலை ஐரோப்பாவின் வரலாற்றில் தலைசிறந்த நூற்றாண்டு எது என்று கேட்டால் 18, 19-ஆம் நூற்றாண்டுகளே என்ற விடையை யாவரும் ஒத்துக் கொள்வர். தென்னாட்டுத் தொடர்பு ஏற்பட்ட 16-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய மறு மலர்ச்சியின் உச்சமுகடு அந் நூற்றாண்டுகளே. ஆனால், அரசியல் வாழ்வையும், வாணிகத் தொழில் வாழ்வையும் நோக்க தமிழக வரலாற்றிலும் கீழ்திசை வரலாற்றிலும் மிக மோசமான நூற்றாண்டுகள் எவை என்று கேட்டால் அதே 18,19-ஆம் நூற்றாண்டுகளையே கூறுதல் வேண்டும். ஏனெனில் மேனாட்டுத் தொடர்பு ஏற்பட்ட 16-ம் நூற்றாண்டிலிருந்து தொடங்கிய வீழ்ச்சி உச்ச நிலை பெற்றது அந்நூற்றாண்டுகளிலேயேயாகும். ஆனால், தென்திசை, கீழ்திசை ஆகியவற்றில் இந்த இருண்ட நூற்றாண்டு களிலும் புது மலர்ச்சி தரும் ஒரு திருவிளக்கை தமிழகம் சங்க காலத்திலிருந்தே பேணி வளர்த்து வந்தது. அதுவே சைவ வைணவ பக்தி இயக்கமாகும். தமிழகத்தில் பக்தி இயக்கத்தின் முதல் தோற்றம் சங்க இலக்கிய இறுதிக் காலத்திலேயே, கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கும் 5-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே ஏற்பட்ட தென்ன லாம். அது பல்லவ பாண்டிய நாட்களில் தமிழகத்திலே உச்ச உயர் முகடெய்தி, சோழப் பெரும் பேரரசர் காலத்தில் இன்று “இந்து சமயம்” என்று கூறப்படும் அகல்பெருங் கோட்டையை உருவாக் கிற்று. இதிலிருந்து பரவிய பல கிளையலைகளே இந்திய மா நிலத்தின் சமய, பண்பாட்டு, கலை, இலக்கிய வாழ்வாகவும், கீழ்திசை வாழ்வாகவும் பரவியுள்ளது. முதல் அலை பல்லவர் காலத்திலேயே காஞ்சியிலிருந்து சைவப் பேரியக்க அலைகளாக மராத்தியம், காசுமீரம் நேபாளம், திபேத், அஸ்ஸாம், வங்காளம் ஆகிய பகுதிகளெங்கும் பரவிற்று. இந்த அலையின் தடங்களைத் தமிழக அலைத் தடங்களாக இன்று வரலாற்றாசிரியர் காண்ப தில்லை. காரணம் பிற்காலக் கிளையலைகளின் உயிர்த் தடங்களி னாலேயே அவை மங்கி மழுங்கிவிட நேர்ந்துள்ளது. இரண்டாவது அலை 8,9-ஆம் நூற்றாண்டுகளில் அதே காஞ்சியிலிருந்து புறப்பட்டது. அதுவே புத்த சமய எதிர்ப்பாக எழுந்த சங்கரரின் அறிவியக்க அலை. இது ஒருபுறம் வங்கத்தையும், மற்றொரு புறம் சிந்துவெளிப் பாஞ்சாலத்தையும் ஆட்கொண்டது. மூன்றாவது அலையே 12-ம் நூற்றாண்டிலிருந்து 19-ஆம் நூற்றாண்டு வரை பல கிளைப்பேரலைகளாக மீண்டும் மீண்டும் எழுந்து சென்று இன்றளவும் இந்திய மாநில மக்கள் வாழ்வின் ஆழ் தடத்தில் புதுப்புது இசை கிளப்பி வருகின்ற வைணவப் பேரலையாகும். புத்த சமண சமயங்கள் சிந்து கங்கை வெளியில் எழுந்தவை யாயினும், அவற்றின் அறிவலைகளும் தமிழகத்தினின்று இம் மூவலைகளுடன் கலந்து கீழ் திசையின் சமய வளர்ச்சிக்களமான காஞ்சியிலிருந்து பல்லவர் காலத்துக்கு முன்னிருந்தே தொடங்கி 11-ஆம் நூற்றாண்டு வரை வடக்கே செல்வது காண்கிறோம். திபெத்துக் கென்று தனிப்பட்ட ஒரு புத்த சமயப் பதிப்பைப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் அளித்த சமய முதல்வன் வங்கத்தில் விக்கிரம சீலப் பல்கலைக் கழகத்திலிருந்து சென்ற ஒரு தமிழனே என்றும், சீனாவுக்கும் சப்பானுக்கும், மலாயாவுக்கும் புத்த சமயங்களைக் கொண்டு சென்றவரும், பின்னாட்களில் மலாயாவுக்கு இஸ்லாத்தின் புத்தொளியைக் கொண்டு சென்றவரும் தமிழரே என்றும் அறிகிறோம். வைணவப் பேரலை தனிச் சிறப்புக்குரிய முறையில் தென் னாட்டு மொழிகளுக்கும், வட இந்தியத் தாய் மொழிகளுக்கும் இலக்கிய வாழ்வளித்த தமிழகப் பேரலையாகும். கன்னடம் நீங்கலானதென்னிந்தியத்தாய் மொழிகள் அனைத்திற்கும் 12-ஆம் நூற்றாண்டிலும். வங்களத்திற்கு 16-ஆம் நூற்றாண்டிலும் மராத்தி குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளுக்கு 18-ஆம் நூற்றாண்டிலும் இவ்வலை இலக்கிய வாழ்வளித்தது. கன்னட நாடே சமண சமயத்துக்குக் கடைசிக் கோட்டையாக விளங்கியதனால், அம் மொழியில் 12-ஆம் நூற்றாண்டு வரை சமண சமய அலையும் 16-ஆம் நூற்றாண்டு வரை சைவ அலையும், 19-ஆம் நூற்றாண்டு வரை வைணவ அலையும் இலக்கிய வாழ் வளித் துள்ளன. மாநிலத்தில் இந்த அலைகளில் முதல் அலையான புத்த அலை தமிழகத்துக்கு வெளியே பரவியதற்கு எங்கும் அறிகுறிகள் உண்டானாலும், அது இடைக் காலத்தில் பெரிதும் அழிந்து பட்டது. மணி மேகலை யுடன் புகழ் தோற்றுவித்துள்ள தமிழரின் புத்த இலக்கியமும், இலங்கை முதலிய தொலை நாடுகளின் இலக்கியங்களும் தான் அதன் தடம் காட்டுகின்றன. தமிழக வைணவ அலை பிற அலைகள் தாண்டி இந்திய மாநில மெங்கும் பரவியதற்கு இஸ்லாத்தின் துணை வலிமையே பெரிதும் காரணம் என்பதில் ஐயமில்லை. “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்” என்ற கொள்கையில் தமிழரினும் வீறிய உரமுடையவர் இஸ்லாமியர் என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். அதன் அரசியல் தாக்குதலை விடப் பண்பாட்டுத் தாக்குதலே வடதிசை மாநில வாழ்வை 17-ஆம் நூற்றாண்டிலிருந்து பெரிதும் அசைக்கத் தொடங்கிற்று என்பதில் ஐயமில்லை. தமிழக வைணவ அலை அதனை எதிர்த்துத் தற்பண்பு பேணும் காப்புக் கருவி யாகவும், அதனுடன் இணைந்து வடதிசையின் தளர்ச்சியைப் போக்கும் மறுமலர்ச்சிப் படையாகவும் புதுத் தேசியமாகவும் இயங்கிற்று. இவ்வலையைப் பல இடங்களில் இஸ்லாம் பகை யலையாகக் கருதாமல் எதிர் கொண்டு தழுவிற்று என்பதற்குப் பல சான்றுகள் காணலாம். இஸ்லாத்தை எளிதில் வரவேற்றவர்கள் இஸ்லாம் வரும் வரை சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவராக இருந்த பழங்குடி மக்களே. அவர்களிடையே தென்னாட்டுச் சைவ வைணவ இயக் கங்கள் பலரைப் பக்தராக்கியது போல, வட திசையிலும் வைணவ அலை துளசிதாசர் போன்ற பல பக்த மணிகளைத் தோற்று வித்தது. அத்துடன் இஸ்லாமிய மரபே கபீர்தாஸர் மூலம் வைணவ அலையின் வைரமணி ஒன்றை அளித்தது. இலக்கியத்தில் 12-ஆம் நூற்றாண்டிலேயே அமீர் குஸ்ரூவட திசையின் உருவிலா மொழியில் கவிதைக் கனவு கண்டு, மொழி உருவான காலத்தில் உருது, இந்தி, பஞ்சாபி ஆகிய மொழியாளர்களின் பொதுமூலக் கவிஞனானான். அரபு நாட்டிலும் பழம் பாரசீகத்திலும் வளர்ந்த “மறைஞான” இயக்கம் (சூபிகள் இயக்கம்) தென்னாட்டு அறிவுச் சமய ஒளியுடன் கலந்து சிற்றாறும் தண் பொருநையும் போல எளிதில் இணை வதையும் இங்கே குறிப்பிடலாகும். வைணவமும் இஸ்லாமும் கலந்து உருவாக்கிய புதிய ஒளிகளுள் 18-ஆம் நூற்றாண்டில் சீக்கிய சமய முதல்வரும் இலக்கிய முதல்வருமான குருநானக் ஒருவர். 19-ஆம் நூற்றாண்டில் ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்த தயானந்த சரஸ்வதி கூடச் சைவ அலையும் இஸ்லாமிய எதிர்ப்பலையும் சேர்ந்த உருவாக்கிய புத்தொளியே யாவர். இஸ்லாம்: தேசிய வாழ்வும் சமய வாழ்வும் இஸ்லாம், கிறித்தவம் ஆகிய மேலைச் சமயங்களைப் பொது வாகவும் முன்னதைச் சிறப்பாகவும் அயல் பண்பாக மட்டுமன்றிப் பகைப் பண்பாகவும் அழிவுப் பண்பாகவும் கொள்ளும் மரபு கீழ்திசை வரலாற்றாசிரியர் சிலரிடையே பெரு வழக்காகியுள்ளது. புத்த சமண சமயங்களும் வேத நெறியும் தமிழகத்துக்கு அயற் பண்பாடாவது போல, இவையும் இரு திசைக்கும் அயல்பண்பாடுகள் என்று கொள்வதில் தவறில்லை. ஆனால், முந்தியவற்றைத் தமிழகத்தின் சொந்தப் பண்பாடு போலவும், பிந்திய வற்றை மட்டும் அயல் பண்பாடு மட்டுமல்ல, எதிர்ப் பண்பாடு என்றும் கொள்வதில் வரலாற்று நேர்மையோ வாய்மையோ இருக்க முடியாது. உண்மை என்னவெனில், தென்னாட்டைப் பொறுத்த வரை, வடதிசைச் சமயங்களான புத்த, சமண நெறிகளும் மேல் திசைச் சமயங்களான இஸ்லாமிய கிறித்துவ நெறிகளும் அயல் வரவுகள் ஆனாலும், தமிழ்ப் பண்பாட்டுடன் ஒவ்வொரு வகையில் எளிதில் இணைபவையே யாகும். உலகின் இன்றைய நாகரிக சமயங்கள் யாவும் ஒரே உலகப் பகுதியில் ஒன்றுபட்ட பண்புகளுடன் தோன்றியதை நோக்க, இச்சமயங்கள் யாவும் தமிழ்ப்பேரினத்துடன் தொடர்பு கொண்ட ஓர் அகல் பேரின வாழ்வின் பல திசை மலர்ச்சிகளே என்று கொள்ள இடமுண்டு. இதன் விளக்கம் வருங்கால சமய ஒப்பியலாராய்ச்சி யாளர்களுக்கு உரியதாகும். குறிப்பாக இஸ்லாத்தின் பேரில் வரலாற்றறிஞர் பலருக் குள்ள தப்பெண்ணத்துக்கு இரு வரலாற்றுக் கூற்றுக்களே காரணம். ஒன்று அவர்கள் ஒரு கையில் வாளும் ஒரு கையில் குரானும் கொண்டு சமயத்துடன் அரசியலும், அரசியலுடன் சமயமும் இணைத்தனர் என்ற கருத்து. மற்றது இந்திய மாநிலத்தில் சைவ வைணவக் கோயில்களை அவர்கள் கொள்ளையிட்டனர் என்பது. சமயமும் அரசியலும் இணைந்தது ஓரளவு தொடக்க கால இஸ்லாத்தின் தனிப் பண்பு என்பதில் ஐயமில்லை. ஆனால், இது ஏழாம் நூற்றாண்டில் அராபிய நாட்டுச் சூழ்நிலை சார்ந்தது. நபி நாயகத்தின் கிளர்ச்சி அராபியர்க்கு ஒரு சமயக்கிளர்ச்சி மட்டுமல்ல; அது ஒரு தேசியக் கிளர்ச்சியுமாகும் என்பதைப் பல இஸ்லாமிய அறிஞர்கள் கூடக் காணத்தவறியுள்ளனர். ஆனால், அரசியலும், சமயமும் ஓரளவு இணைவதை எல்லாச் சமயங்களிலும், நாடு களிலும் காணலாம். அசோகன் புத்த சமயத்துக்கும், காரவேலனும், தென்னாட்டுப் பேரரசர் பலரும் சமண சமயத்துக்கும் தமிழகப் பேரரசர் சைவ வைணவ சமயங்களுக்கும், அவர்களைப் போலவே உரோமப் பேரரசன் கான்ஸ்ன்டைன் கிறித்து சமயத்துக்கும் பரப்புதல் தலைவரானதை நாம் மறந்து விட முடியாது. இது போலவே வாள் முனையில் சமயம் பரப்பியவரும் இஸ்லாமியர் மட்டுமல்லர். உண்மையில் தம் அரசியல் வெற்றிக்குத் தெய்வீகத் தோற்றந்தர விழைந்த எல்லா அரசர்களும், பேரரசர்களும் இதைச் செய்யத் தயங்கவில்லை. கிறித்துவ சைவ, வைணவ வரலாறுகள் இதனைக் காட்டும். மதமாற்றும் செயலில் பல்லவன் மகேந்திர வர்மன் தென் னார்க்காட்டுப் பாடலி நகரிலுள்ள சமணப்பள்ளியை அழித்ததை யும், கிருமி கண்ட சோழன் தில்லைப் பெருமானைக் கடலில் எறிந்ததையும் மேலை உலகில் ஆங்கில மன்னன் எட்டாம் ஹென்றி கத்தோலிக்க மடங்களை அழித்ததையும், கிறித்தவப் பழம் பேரரசன் சார்லிமேன் ஸ்பெயினில் இஸ்லாமிய நாகரிகத்தை அழித்ததையும் வரலாறு பதிவு செய்துள்ளது. தவிர சைவ வைணவக் கோயில்களை அவ்வச் சமயத்தவரே கொள்ளையிடத் தவறியதில்லை. காஞ்சியை விசய நகரப் பேரரசர் ஆட்சிக் காலத்தில் பாமினிப் பேரரசன் மட்டுமன்றி, ஓரிசாவை ஆண்ட கசபதி மன்னரும் கொள்ளையிட்டனர். மராட்டியர் கொள்ளைக்காளான கோயில்கள் பல. மராட்டிய இனத்தவரல்லாதவர், பிராமணராயிருந்தால் கூட அவர்கள் அழிக்கத் தயங்கவில்லை என்று காண்கிறோம். மற்றும், பல்லவரும் சோழரும் எதிரி நாட்டுச் செல்வத்துடன் செல்வமாகக் கோயில்களையும் கொள்ளையிட்டு தம் நாட்டு மக்களிடையே அதையே வெற்றிச் சின்னமாகக் காட்டும்படி சிலைகளைக் கொண்டு வந்தனர் என்பதையும் நாம் மறக்க முடியாது. சோம நாதபுரத்துக் கோயிலைக் கொள்ளையிட்ட மகமது கஜினி தன் நாட்டில் அச்செல்வத்தைக் கொண்டு மக்கள் வாழ்வும் கலையும் வளர்த்து நல்லரசனாவே ஆண்டான் என்று அறிகிறோம். ஆப்கன் நாட்டின் பொற்காலம் அவன் காலமே. ஆகவே கோயில்களை அழிக்கும் செயலைவிட அவ்வழிவுக்கு அயலவரைத் தூண்டும் வகையில் மக்கள் நல்வாழ்வுக்குச் செலவிட வேண்டிய மக்கள் பணத்தைக் கோயிலில் குவித்து வைக்கும் அரசர்களே தேசிய வாழ்வுக்குப் பெருங்கேடு செய்தவராவர். ஆட்சியின் குறை பாட்டிலிருந்து மக்கள் பார்வையைத்திருப்பி மறைப்பதற்கே பல மன்னர் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்னலாம். உலகில் வேறெந்நாட்டு மன்னரையும் விடத் தென்னாட்டு மன்னரும் தமிழக மன்னருமே இவ்வகையில். வருங்கால தேசிய, உலக சமுதாயத்தின் கண்களில் பெருங் குற்றவாளிகள் ஆவர் என்னலாம். ஆனால், அக்கோயில்களின் வாழ்விலிருந்தே தென் னாட்டு வரலாற்றுக்குரிய கல்வெட்டுக்களும், இலக்கியங்களும் நமக்கு வந்து சேர்ந்துள்ளதை நோக்க, இது தேசியமளாவிய குற்றமே என்னலாம். வனமல்லிகை மலரின் முட்போல அது அமைந்ததாயினும் வருங்கால அறிவால் செப்பம் செய்ய வேண்டிய ஒன்றேயாகும். இஸ்லாமும் ஆசிய தேசங்களும் தென்னாட்டு வாழ்வில் இஸ்லாமிய நாடுகளின் நாகரிகமும், இஸ்லாமிய நாகரிகமும் வடதிசை இஸ்லாமியத் தொடர்புக்கு உட்பட்டவையாகும். ஆனால், இஸ்லாமிய ஆட்சியும் பண்பாடும் வடதிசை கலவைப் பண்பாடுகளுடன் கலந்த பின்பே, அது தென்திசை அரசியல் வாழ்வின் அமைதியில் தலையிடத் தொடங்கிற்று. ஆகவே தென்னாட்டின் முதல் வடதிசைத் தாக்குதல் வடதிசை இஸ்லாமியத் தாக்குதலாகவே அமைந்தது. வடதிசைக் கலவைப் பண்பாடுகளின் பேராளாக அதன் முதல் தாக்குதல் செயலாற்றிற்று. இஸ்லாம், முதல் முதல் கிளர்ந்தெழுந்தது அராபிய இனத் திலேயே. அராபியர் தமிழ் இனத்தவரைப் போலவே உலகின் மிகப் பழமையான ஒரு கடலோடி இனத்தார். உவகின் பழமையான இனங்களுடன் தொடர்பு கொண்ட இனமாகவும் அது சிறப்புற்றோங்கி இருந்தது. ஆனால், பழங்காலத் தென்னாடு வாணிகத் தொழில் நாகரிகமாகவும், கடலக நாகரிகமாகவும் அமைந் திருந்தது. அராபிய இனமோ, வாணிக நாகரிகமாகவும், கடல் நாகரிகமாகவும் மட்டுமே இயங்கிற்று. இதற்குக் காரணம் அதன் நில இயல்பே. முந்நீர்க்கடலில் அவர்கள் அலைந்தோடியது போலவே பாலைவனங்களிலும் அவர்கள் அலைந்தோடினர். இதனால் அவர்கள் சமுதாய வாழ்வு ஓரளவு அரை நாடோடி வாழ்வாகவும், வீரக்குலமரபு முறை வாழ்வாகவுமே இருந்தது. அராபியரைப் போல நாகரிக உலகின் நாகரிகம் அனைத்தை யும் அறிவு கலை இலக்கியச் செல்வங்கள் அனைத்தையும் முன் னேற்றங்கள் அனைத்தையும் தமதாகக் கொண்ட இன்னொரு மனித இனக்கிளையை நாம் உலக வரலாற்றிலேயே காண்டல் அரிது. ஆனால், இத்தனை நிறை நாகரிக வாழ்வு இருந்தும் அவர்கள் 7-ஆம் நூற்றாண்டு வரை ஒரு தேசிய வாழ்வையோ, நிலையான வளர்ச்சி யுடைய ஒரு சமய வாழ்வையோ, தேசிய ஆர்வத்தையோ பெற்றிருக்கவில்லை. அவர்கள் நிலச் சூழலிலும் வாழ்க்கைச் சூழலிலும் அவர்களாக இயல்பாக இவற்றை என்றும் பெற்றிருக்க முடியா தென்பதை இன்றைய அவர்கள் வரலாறு கூட எடுத்துக் காட்டும். ஆனால்,7-ஆம் நூற்றாண்டில் அந்நாட்டில் தோன்றிய ஒரு தனிமனிதர் -வியக்கத்தக்க மனித எல்லை மீறிய ஆற்றல் கொண்ட ஒரு தனிப் பெரியார் -நபிநாயகம் -இத்தனையையும் அவர்களுக்கு அளித்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உலகுக்கே அவர்கள் உயிர்ப்பும், துடிப்பும் வழங்கும் படி செய்துவிட முடிந்தது! உலகின் தேசிய முதல்வர்களின் வரிசையில் அவருக்கு ஈடிணைக் காண்பதரிது -ஏனெனில், மன்னராக ஆளாமலே மன்னர் எழுப்புதற்கரிய தேசியத்தை அவர் எழுப்பினார், தேசிய வீரனாய் அமையாமலே தேச தேசங்கள் கடந்த ஒரு புதிய உலக தேசியத்தை அவர் உருவாக்கினார்! கவிஞராய் இருந்து பாடாமலே, அறிஞரா யிருந்து வாதிடாமலே -கவிஞர் எவரும் எழுப்பாத கனலை எழுப்பி, அறிஞர் எவரும் அமைக்காத அறிவுக் கோட்டையின் அடிப்படையை அவர் வெற்றிகரமாக அமைத்து முடித்தார்! அராபிய தேசியமாக எழுந்த இஸ்லாம் பாரசிக தேசியத்தில் உருக்கி வார்க்கப்பட்டு, துருக்கிய இனத்தின் பேரெழுச்சிக்கு உருவும் பண்பும் தந்து, வட இந்தியாவில் பரவி சிறிது தற்பண்பு மாறி, தென்னகத்தின் வடதிசையில் இவ்வெல்லா நாகரிகங்களின் ஒரு புதுக்கூட்டுறவாகச் சில காலம் நிலவிற்று, 18-ம் நூற்றாண்டுக் குள் தென்னகத் தேசிய மறுமலர்ச்சியுடன் அது முற்றிலும் ஒன்று பட்டுவிட்டாலும், அதன் வடதிசைப் பண்பு அதை வடஇந்தியத் தேசியத்துடன் மட்டும் முற்றிலும் இணைந்தமையாமல் போட்டி யிடச் செய்துள்ளது. வருங்கால உலகில் அது தமிழகத் தேசியத்தின் வழி நின்று வடதிசைத் தேசியத்திலும், அமைதியும், ஒருமைப் பாடும் உண்டு பண்ணக்கூடும் என்று நம்பலாம். ஏனெனில் தமிழகம் தாண்டிச் சென்ற தென்கிழக்காசிய நாடுகளில் இஸ்லாம் இதே அமைதி கண்டுள்ளது. வடமேற்கு இந்தியாவில் 9,10-ஆம் நூற்றாண்டுகளிலேயே அராபிய இஸ்லாமிய மரபினர் தாக்குதலால் கரையோரப் பகுதி யாகிய சிந்து மாகாணத்தின் வாழ்வும் அதனை யடுத்து குஜராத் மாகாணத்தின் வாழ்வும் சீர்குலையலாயின. ஆனால், 11,12-ஆம் நூற்றாண்டுகளில் ஆப்கன் நாட்டில் ஆண்ட கஜினிமாமூதும் கோரி முகமதும் வடமேற்கின் மலைக்கணவாய்களின் வழியாகப் படையெடுத்தனர். கஜினிமாமுது 18 தடவை படையெடுத்தானா யினும், சோழப் பெரும் பேரரசின் அந்நாளைய ஆற்றலெல்லை யான கங்கைக்கரை கடக்கவில்லை. அத்துடன் அவன் சமயம் மாற்றுவதையும், கோயில் செல்வங்களைக் கொள்ளை கொள் வதையும் மட்டுமே குறியாகக் கொண்டிருந்தான். ஆனால், கோரி முகமது இவ்விரு செயல்களுடனமையாது தில்லியிலேயே தன் ஆட்சிப் பேராளை அமர்த்திச் சென்றான். 12-ஆம் நூற்றாண்டுக்குள் சோழப் பேரரசர் கை வடதிசையில் தளர்ந்து விட்டது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. தில்லியில் 12-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி நான்கு நூற்றாண்டுகள் (1193 -1526) ஆப்கானிய மரபினரும், அதன் பின் பிரிட்டிஷ் மன்னராட்சி ஏற்படும் வரை (1526 - 1858) நடு ஆசிய துருக்கி இனத்தவரான மொகலாய மரபினரும் ஆண்டனர். ஆப்கானியருள் ஐந்து மரபினர் ஒருவர் பின் ஒருவராகத் தில்லியில் ஆண்டனர். அவர்கள் அடிமை மரபினர் (1193 - 1287) கில்ஜி மரபினர் (1290 - 1320) துக்ளக் மரபினர் (1320 - 1412) சயித் மரபினர் (1412 - 1443) லோடி மரபினர் (1443 - 1526) ஆகியவர்கள். மெகலாயர்களில் பாபர் (1526 - 1530) ஹுமாயூன் (1530 - 1540, 1555 - 1556) இடைமறித்து ஆண்ட ஆப்கன் மரபினனான ஷெர்ஷா (1540 - 1555) அக்பர் (1556 - 1605) ஜெஹாங்கீர் (1605 - 1627) ஷாஜஹான் (1627 - 1658) ஒளரங்கசீப் (1658 - 1707) வரை பேரரசாக ஆண்டனர். ஓளரங்கசீப்புக்குப் பின் அவர்கள் ஆட்சி தளர்ந்தது. 1858 வரை பெயரளவில் பேரரசராக, ஆனால், சிற்றரசரின் ஆற்றல் கூட அடிக்கடி இல்லாதவராய் அவர்கள் ஆண்டனர். இவ்வரசர்களுள் வட திசையில் பெரும் பகுதியும் அடக்கி யாண்ட பேரரசர் ஒரு சிலர் மட்டுமே தென்னாட்டில் கவனம் திருப்ப வழியிருந்தது. இத்தகையவர் 14-ம் நூற்றாண்டில் ஆண்ட கில்ஜி, துக்ளக் மரபினரும், 17-ஆம் நூற்றாண்டில் ஆண்ட கடைசி முகலாயப் பேரரசர் நால்வருமேயாவர். இவர்களும் தென் திசையில் கால் வைத்தபின், வட திசையிலேயே தங்கள் பேரரசாட்சியின் வலுவை இழந்து விட்டனர் என்று காண்கிறோம். தென்னாட்டில் தேசிய வலுவை இது குறித்துக் காட்டுவதாகும். ஆனால், 14-ஆம் நூற்றாண்டில் ஆப்கானிய மரபினரான கில்ஜி, துக்ளக் பேரரசர்களின் தாக்குதலால் தென்னகத்திலேயே முஸ்லிம் அரசுகள் ஏற்பட்டன. வடதிசைப் பேரரசு சரிந்த பின்னும் இவை நீடித்துத் தென்னகத்தின் வடகோடியில் இடம் பெற்றுத் தெற்கும் கிழக்கும் நோக்கி விரிவடையத் தொடங்கின. ஆனால், 17-ஆம் நூற்றாண்டில் மீண்டும் வடதிசை மொகலாயப் பேரரசின் படை யெடுப்புக்கு இம்முஸ்லீம் அரசுகள் ஆளாயின. ஆனால், இங்கும் வடதிசைப் பேரரசே சரிய நேர்ந்தது. படை யெடுப்பின் ஒரே பயன் தென்னாட்டின் முஸ்லீம் அரசர் தொகையைப் பெருக்குவதாக மட்டுமே அமைந்தது. தென்னக வாழ்வில் தலையிட்ட கில்ஜி மரபின் அரசர்கள் ஜலாலுதீன் (1290 - 1296) அலாவுதீன் (1296 - 1316) முபாரக்ஷா (1316 - 1320) ஆகியவர்களும், துக்ளக் அரசர்கள் கியாசுதீன் (1320 - 1325) முகமது (1325 - 1351) ஆகியவர்களும் ஆவர். தென்னகத்தில் வடதிசை இஸ்லாமியர் தலையீடு ஜலாலுதுதீன் காலத்திலேயே அவன் மருகனான இளவரசன் அலாவுதீன் திடுமென 1303-ல் தேவகிரி மீது தாக்கினான். தேவ கிரியை இச்சமயம் ஆண்டவன் இராமதேவன். அவன் புதல்வனான சங்கமன் படையுடன் தொலை நாடுகள் சென்றிருந்ததனால், முதியவனான இராமதேவன் பணிந்து பெரும் பொருளைத் திறையாகக் கொடுத்துச் சந்து செய்து கொள்ள வேண்டி வந்தது. அத்துடன் இராமதேவன் இளவரசன் அலாவுதீனுக்குத் தன்புதல்வியையும் மனைவியாக அளித்ததாக அறிகிறோம் எனினும் சங்கமன் இந்த ஏற்பாட்டை ஒத்துக் கொள்ளாமல் திறையையும் நிறுத்தினான். அத்துடன் அலாவுதீன் எதிரியான குஜராத்தரசனுக்கும் அவன் புதல்விக்கும் தன்னிடம் அடைக்கலம் அளித்தான். இதனால் வெகுண்டு 1307-ல் அலாவுதீன் மீண்டும் படையெடுத்துத் தேவகிரி நகரைக் கொள்ளையடித்தான். இராமதேவன் இவ்வெதிர்ப்பில் கலக்காமல், அலாவுதீனுக்குப் பணிந்தான். அலாவுதீன் அவனைச் சிறைப்பிடித்துச் சென்றாலும், விடுவித்து அவன் நாட்டை மட்டு மன்றி, பகைநாடாகிய குஜராத்தையும் அவனுக்கே தந்து ஆளும் படி செய்தான். இந்நட்பு அலாவுதீனுக்கும் தென் திசைப் படை யெடுப்பில் பயன்பட்டது. 1309-ல் அலாவுதீன் படைத்தலைவனான மாலிக்காபூர் தேவகிரி மன்னன் உதவியுடன் வாரங்கல் நாட்டையாண்ட இரண்டாம் பிரதாபருத்திரனைப் பணியவைத்து அவனிட மிருந்து திறைபெற்றான். இதனை யடுத்தே அவன் தெற்கே திரும்பி ஹொய் சளரையும் பாண்டிய நாட்டையும் தாக்க முற்பட்டான். ஹொய்சள மன்னன் மூன்றாம் பல்லாளன் இப்போது பாண்டியர் உள் வீட்டுக் கலகத்தைப் பயன்படுத்தித் தமிழகத்தில் தன் ஆட்சியை விரிவு படுத்துவதில் ஈடுபட்டிருந் தான். மாலிக்காபூர் படையெடுப்புக் கேட்டு அவன் விரைந்து தலைநகரான துவார சமுத்திரத்துக்கு வந்தாலும், போர் புரிய விரும்பாமல் பெரும் பொருள் கொடுத்துப் பணிந்துவிட்டான். பாண்டியருள் சுந்தர பாண்டியனும், அவன் சிற்றப்பன் விக்கிரம பாண்டியனும் மாலிக் காபூரை எதிர்த்து நின்று வெற்றி பெற்று மதுரையைக் காத்தனர். ஆனால், சோழ நாட்டுப் பகுதியில் வீரதவளப்பட்டினத்திலிருந்து ஆண்ட பாண்டியன் தலை நகரைவிட்டோடி விட்டான். அவன் செல்வக்குவையுடன் இரா மேசுரக் கொள்ளையின் பொருளும் கொண்டு மாலிக்காபூர் தில்லி திரும்பினான். இது முன்இயலில் குறிப்பிடப்பட்டது. 1312-ல் சங்கமன் தேவகிரியின் அரசனானான். அவன் மீண்டும் திறை நிறுத்தித் தங்குதடையற்ற தன்னாட்சி செலுத்தத் தொடங்கினான். முபாரக் மீண்டும் படையெடுத்து அவனை வென்று சிறைப்படுத்தினான். ஆனால், தேவகிரியை முற்றிலும் அடக்கியாள அவனால் முடியவில்லை. தேவகிரியின் தென் திசையில் இதற்குட் பட்ட சிற்றரசான காம்பிலி இப்போது முபாரக்கை எதிர்த்து நின்றது. அதன் மன்னன் சிங்கய நாயகன் காம்பிலியில் ஒரு வலிமை வாய்ந்த அரசை நாட்டினான். மாலிக்காபூர் 1316-ல் காம்பிலி மீதும் படையெடுக்கப் புறப்படுமளவில், தில்லியில் ஏற்பட்ட அரசுரிமைக் குழப்பம் அவனை உடனே அப்பக்கம் செல்லும்படி செய்தது, இக்குழப்பத்திலேயே மாலிக்காபூர் மாண்டதும் மேலே குறிக்கப் பட்டது. அலாவுதீனுக்குப் பின் முபாரக்ஷா 1316-ல் தில்லி அரசனானான். இரண்டாண்டுகளுக்குள் தேவகிரி மன்னன் இராம தேவனின் மருமகனான ஹரபாலதேவன் தேவகிரியை மீண்டும் கைக்கொண்டான். ஆனால், முபாரக்ஷாவின் படைத் தலைவனான குஸ்ரூகான் தேவகிரி மீது மீட்டும் படையெடுத்து அதை வென்றான். ஹரபாலதேவனைக் குஸ்ரு உயிருடன் தோலை உரித்துக் கொன்று கொடுமை செய்தான். இதன் பின் தேவகிரி தில்லியின் நேரடி ஆட்சிக்குரிய ஒரு மாகாணமாக்கப்பட்டது. மாலிக்யாக் வக்கீ என்பவன் அதன் மாகாணத் தலைவனாக்கப் பட்டான். குஸ்ரு அவ்வாண்டிலேயே திறைதர மறுத்த வாரங்கல் அரசன் இரண்டாம் பிரதாபருத்திரனைப் பணியவைத்தான். அதன் பின் தமிழகத்தில் பாண்டி நாட்டின் மீதும் படையெடுக்கத் திட்டமிட்டான். வீரதவளப் பட்டினப்போர் : 1318 சுந்தர பாண்டியனை எதிர்த்தொழிக்கும் எண்ணங் கொண்ட வீர பாண்டியன் திருவாங்கூர் அரசனான இரவிவர்மன் குல சேகரனின் உதவியையும் பெற்றிருந்தான். ஆனால், வீரதவளப் பட்டினப் போரில் சுந்தர பாண்டியன் இருவரையும் முறியடித்தான். வீரபாண்டியன் மீண்டும் குஸ்ருவின் உதவியுடன் அரசுரிமை கைப்பற்ற எண்ணி அவனை வரவழைத்தான். குஸ்ரு இதனை ஏற்றுத் தமிழகம் நேர்க்கினான். ஆனால், அவன் எண்ணம் நிறைவேற வில்லை. தில்லி மன்னன் முபாரக்குக்கு எதிராக அவன் நடத்திய சூழ்ச்சிகள் இச்சமயம் அம்பலமாயின. அவன் படை வீரரே அவனைச் சிறைபிடித்துத் தில்லிக்கு இட்டுச் சென்றனர். மதுரையில் சுல்தான்கள் ஆட்சி 1336 - 1377 துக்ளக் மரபின் முதல் அரசனான கியாசுடீன் தவிசேறியவுடன் அவன் தன் புதல்வன் உலுக்கானை வாரங்கல் மீது படையெடுக்கும் படி அனுப்பினான். வாரங்கல் அரசன் இரண்டாம் பிரதாபருத்திரன் மீண்டும் திறை மறுத்ததே இதற்குக் காரணம். உலுக்கான் ஆறு மாதங்களுக்கு மேல் முயன்றும் வாரங்கலை முற்றுகையிட்டு வெல்ல முடியவில்லை. ஆனால், துக்ளக் படைத்தலைவன் மஜீர் அபுரிஜா தோல்வியை மீட்டும் வெற்றி ஆக்கி விட்டான். வாரங்கல் அரசன் குடும்பத்துடன் சரணடைந்தான். ஆனால், சிறைப்பட்ட நிலையில் தில்லிக்குக் கொண்டு செல்லப்படும் சமயம் அவன் தற்கொலை செய்து கொண்டு மடிந்தான். மஜீர் அபுரிஜா வெற்றிப் படையின் ஒரு பகுதியுடன் கீழ்கரை யோரமாகவே தமிழகத்தின் மீது படையெடுத்தான். முன் மாலிக்காபூர், குஸ்ரு படையெடுப்புக்களிலிருந்து தமிழகம் மீட்சியடைந்தது போல இப்போது அடைய முடியவில்லை. பாண்டியன் பராக்கிரம தேவன் 1326-ல் போரில் தோற்று சிறைப்பட்ட நிலையிலேயே தில்லிக்குக் கொண்டு செல்லப் பட்டான். தமிழகம் முழுவதும் முஸ்லிம்களால் அடக்கப்பட வில்லை யானாலும், அரசியல் வாழ்வு தற்காலிகமாகக் குலைக்கப்பட்டது. அத்துடன் பாண்டியர் ஆட்சி மதுரைநகரில் இடம் பெறாது போயிற்று. ஏனெனில் மதுரையிலே துக்ளக் படைத்தலைவன் சில படை வீரர்களையும் ஓர் ஆட்சித் தலைவனையும் விட்டுச் சென்றிருந்தான். மதுரையில் அவர்கள் தங்கள் பிடியை உறுதிப்படுத்தப் பத்து ஆண்டுகள் ஆயின. அதன் பின்னும் நகரும் நகரைச் சுற்றிய இடமும் தவிர வேறு எங்கும் முஸ்லிம்கள் நேரடியாக ஆளவில்லை. ஆனால், தமிழகமெங்கும் முஸ்லிம் படை வீரர்களின் கொள்ளையும் கிலியும் பரவின. சிறப்பாகக் கோயில்கள் முஸ்லிம் ஆதிக்க வேட்டைக்காரரின் சூறை யாட்டுக்கும், அழிவுக்கும் இலக்காயின. கல்வெட்டுக்களிலும், பிற்கால வரலாற்றுச் சார்பான ஏடுகளிலும், கோயில் ஒழுகு என்ற கோயில் வரலாறுகளிலும் இக்காலக் கொடுமைகள் மயிர்க் கூச்செறியவைக்கும் முறையில் வரையப் பட்டுள்ளன. முகமது துக்ளக் ஆட்சித் தொடக்கத்திலேயே தில்லியரசின் தென் மாகாணங்கள் ஐந்தினுள் தமிழகம் ஒன்றாகக் குறிக்கப் பட்டது. இவ்ஐந்து தென் மாகாணங்கள் தேவகிரி, தெலுங்கானா, காம்பிலி, துவார சமுத்திரம், மாபார் அல்லது தமிழகம் ஆகியவை. ஆனால், தாகஜாஜ் நகர் அல்லது ஒரிசாவைக் கூடச் சில முஸ்லிம் வரலாற்று ஆசிரியர் குறித்துள்ளனர். எனினும் முதல் ஐந்தில் கூடப் பல செல்வாக்குத் தளங்கள் மட்டும். முஸ்லிம் வரலாற்றாசிரியர்களால் தமிழகம் ‘மாபார்’ என்றழைக்கப்பட்டுள்ளது. ஆயினும் மாகாண ஆட்சியாக எதுவும் நடைபெறவில்லை. மதுரையை மூலதளமாகக் கொண்ட கொள்ளையாட்சியே நடைபெற்றது. 1336 முதல் 1377 வரை நாட்டு மக்களுடனும் தமக்குள்ளும் குத்து வெட்டுப் போர்கள் நடத்திக் குருதிக்களங்களில் மிதந்த தலைவர்கள் தம்மைத் தன்னாண் மையுடன் சுல்தான்கள் என்றே குறித்துக் கொண்டார்கள். ஏனெனில் வடதிசைப் பேரரசில் மீண்டும் குழப்பம் ஏற்பட்ட தாலும், தமிழகத்துக்கும் வட திசைக்கு மிடையே ஹொய்சளப் பேரரசு வளர்ந்து வந்ததாலும், தமிழக முஸ்லிம்கள் மீது தில்லியின் ஆதிக்கக் கரம் எட்டவில்லை. ஆனால், இந்தத் தன்னாண்மை மதுரை சுல்தான்களுக்குச் சாதகமாக இல்லை. தில்லி முஸ்லிம் அரசின் உதவி அவர்களுக்குக் கிட்டாமல் அது அவர்களைத் துண்டு படுத்தி, மீண்டும் எளிதில் வீழ்ச்சியடைச் செய்தது. சுல்தான்கள் என்ற பெயருடன் மதுரையில் ஆண்டவர்களில் எண்மர் பெயர்கள் நமக்கு வந்தெட்டியுள்ளன. அவர்கள் ஜலாலுதீன் அஃசன்ஷத (1336), அலாவுதீன் அரோகர் அல்லது அதூஜிஷா, குத்புதீன் பிருஜ்ஷா, கியாஸுதீன் முகமது தம்கான்ஷா (1339), நாசிருதீன் முகமதுஷா (1344), ‘அமைதியாளன்’ அதில்ஷா (1358), ‘உலக மன்னன்’ முபாரக்ஷா (1363 - 1368), அலாவுதீன் சிக்கந்தர்ஷா (1372 - 1377) ஆகியோர். தவிர, நஸ்ரத்துதீன், ஷம்ஸுதீன், நாசிருதீன் இஸ்மாயில் ஃவத் ஆகியோர்களும் மதுரை முஸ்லிம் அரசுக் குரியவர்களாகக் குறிக்கப் பட்டுள்ளனர். கோதாவரிப் போர் : 1326 காம்பிலி அரசை நிறுவிய சிங்கய நாயகன் காலத்திலும் அவன் மகன் காம்பிலி தேவன் காலத்திலும் காம்பிலி அரசு மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. தேவகிரிக்கும் ஹொய்சளருக்கும் நடைபெற்ற போர்களில் காம்பிலி அரசர் தேவகிரியை ஆதரித்து ஹொய்சளரை எதிர்த்து வந்தனர். இதனால் ஹொய்சளருக்கும் காம்பிலிக்கும் எப்போதும் பகைமைப் போட்டி மிகுதியாய் இருந்தது. காம்பிலி நகரம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ளது. சோழப் பெரும் பேரரசர் ஆட்சிக் காலத்தில் அதில் சாளுக்கியர் அரண்மனை இருந்ததையும், அரண்மனையும் நகரும் அடிக்கடி எரியூட்டப் பட்டதையும் கேள்விப் பட்டிருக்கிறோம். காம்பிலி அரசு இந் நகரையே தலை நகராகக் கொண்டு, தற்காலப் பெல்லாரி மாவட்டம், பம்பாய் மாகாணத்தின் இரேய்ச்சூர் இடை நிலம், தார்வார் மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய தாக இருந்தது. 1325-ல் முகமது துக்ளக் தவிசேறினான். அவன் ஆட்சித் தொடக்கத்திலேயே காம்பிலிதேவன் தில்லி அரசுக்குத் திறை அனுப்ப மறுத்துத் தன்னாண்மையுடன் தன் வல்லமை பெருக்க முயன்றான். இச்சமயம் முகமதுக்கு எதிராக அரசுரிமை கோரிச் சாகர் மாகாண ஆட்சியாளனாகிய பகாவுதீன் கார்ஷப் கிளர்ந் தெழுந்தான். காம்பிலிதேவன் அவனுக்கு உடந்தையாக இருந்து வந்தான். கார்ஷப்பை அடக்குவதற்காக முகம்மது குஜராத்தின் ஆட்சித் தலைவனான மாலிக் சாதாவையும், தேவகிரி ஆட்சித் தலைவ னான மஜீர் அபு ரிஜாவையும் பெரும் படையுடன் அனுப்பினான். அப்படைத் தலைவர்கள் பகாவுதீன் கார்ஷப்பைக் கோதாவரிப் போரில் முறியடித்து அவனை அவனாண்ட சாகர் வரையும் விடாமல் துரத்திச் சென்றனர். துணையற்ற நிலையில் கார்ஷப் தன் குடும்பத்துடன் காம்பிலி தேவனிடம் அடைக்கலம் புகுந்தான். காம்பிலி வீழ்ச்சி: 1327 காம்பிலி அரசனுக்குக் கும்மடம், ஹொச துர்க்கம் என்ற இரண்டு வலிமை வாய்ந்த கோட்டைகள் இருந்தன. துக்ளக் படைகள் இரு தடவைக் கும்மடக் கோட்டையைத் தாக்கி முற்றுகையிட முயன்றும், அதனைக் கைப்பற்ற முடியாமல் திரும்ப வேண்டி வந்தது. ஆனால், மூன்றாவது தடவை குஜராத்து மாகாணத் தலைவனான மாலிக் சாதா அக்கோட்டையை மும்முரமாகத் தாக்கிக் கைப்பற்றினான். அத்துடன் ஹொச துர்க்கத்தையும் முற்றுகையிட ஏற்பாடுகள் செய்தான். காம்பிலிதேவன் தென்னாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துக் களால் பொறிக்கத்தக்க வீரமும் தன்மானமும் உடையவன். அடைக்கலம் புகுந்தவரை ஆருயிரளித்தும் ஆதரிக்க அவன் முனைந் தான், ஆகவே ஹொச துர்க்கம் பிடிபட்டுத் தானழிந்தாலும், அடைக்கலம் புகுந்த இஸ்லாமிய நண்பனை அழியவிடக் கூடாது என்று திட்டமிட்டான். ஹொய்சளர் தனக்குப் பகைவரென்று தெரிந்தாலும், நிலைமையை விளக்கி அவனுக்கு ஆதரவு தருமாறு மூன்றாம் பல்லாளனுக்குக் கடிதம் எழுதினான். கார்ஷப்பையும் அவன் குடும்பத்தையும் துவார சமுத்திரத்திற்குப் பாதுகாப்புடன் அனுப்பிவிட்டு, அவன் வீரமாள்வுக்கு முனைந்தான். எதிரிகள் கைப்பட நேராதபடி பெண்டு பிள்ளைகளை அவன் தீக் குளிக்கும்படி செய்தான். பின் வீரமாகக் கோட்டைக் காவல் போரிலே சாவுடன் மல்லிட்டு, உலகில் புகழ் நிறுவி மாண்டான். ஹொச தர்க்கம் பிடிபட்டது. காம்பிலி வீழ்ச்சியுற்று இஸ் லாமிய வெற்றி வீரர் காலடியில் கிடந்தது. ஆனால், தேடி வந்த கிளர்ச்சிச்காரன் கர்ஷப் அகப்படவில்லை. அவனும் அவன் குடும்பத்தினரும் ஹொய்சளரிடம் சேர்க்கப்பட்டிருப்பதறிந்த மாலிக் சாதா துவார சமுத்திரத்தின் மீது பாய்ந்தான். காம்பிலி தேவனின் புறநானூற்று வீரப் பண்புக்கு ஹொய்சளப் பல்லாளன் அயலவனா யிருந்தான். அவன் காம்பிலி தேவன் பகைமையையும் இச்சமயம் பேணினான். அவன் தன்னிடம் கொண்ட மதிப்பையும் நம்பிக்கையையும் குலைத்தான். பேரரசனைப் பகைக்கவும் அஞ்சினான். ஆகவே அவன் மாலிக் சாதாவுக்குப் பணிந்து அடைக்கலமாக அளிக்கப்பட்ட பகாவுதீன் கார்ஷப்பையும் அவன் குடும்பத்தினரையும் எதிரிகள் வஞ்சத்துக்கு இரையாகும்படி ஒப்படைத்தான். தென்திசைப் புதிய தேசிய ஒளி : வீரசைவப் பேரியக்கம் : விசயநகரப் பேரரசு நிறுவனம்: 1336 காம்பிலி தேவனின் வீரமறைவு வீண் போகவில்லை. அது தென்னாட்டின் வரலாற்றிலே ஒரு புதிய திருப்பத்தை உண்டு பண்ணும் பேரொளியாயிற்று. தென்னகத்தின் வடதிசை வாழ்வைக் குலைத்துப் பரவி வந்த இஸ்லாமிய சக்தியை எதிர்த்து நிற்க இது பல தென்னாட்டு வீரரையும் குடிமக்களையும், அரச மரபினரையும் பெருமக்களையும் தூண்டிற்று. இது வெறும் போர் நடவடிக்கையாக மட்டுமோ, வெறும் அரசியல் இயக்கமாக மட்டுமோ அமையவில்லை. ஏனெனில் தமிழகம் கடந்து கன்னட நாட்டிலும், தெலுங்கு நாட்டிலும் இப்போது பக்தி இயக்கத்தின் சைவ அலை ஒன்று கொழுந்து விட்டெரிந்து பரந்தது. அதுவே வீர சைவ இயக்கம் என்ற பெயருடன் கன்னட நாட்டு வரலாற்றில் நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தழைத்த பெருவாழ்வு ஆகும். சமயச் சார்பான இந்த இயக்கம் மக்கள் வாழ்வு, கலை, இலக்கியம் ஆகியவற்றை எல்லாம் ஒருங்கே தூண்டி அரசியல் போர்க்கிளர்ச்சி களுக்கு ஆதரவு நல்கியதனால், அதன் முழுத் தேசிய ஆற்றலின் முன் இஸ்லாமிய அரசியல் வேட்டையின் வேகம் நூற்றாண்டுக் கணக்காகத் தடைபட்டு நின்று பின்னடையலாயிற்று. இச்சமயம் துக்ளக் மரபின் ஆதிக்கம் தென்னாட்டின் வடக்கில் தேவகிரியையும், வடமேற்கில் மராட்டியத்தையும் மட்டுமே முற்றிலும் கைக்கொண்டிருந்தது. கிழக்கே தெலுங்காணத்திலுள்ள வாரங்கலும், அதற்குக் கீழ் திசையில் இருந்த கலிங்கம் அல்லது ஒரிசாவும் முற்றிலும் அவர்கள் கைப்படவில்லை. வாரங்கலை நிலையாகத் தம் கைவசமாக்க முஸ்லிம்கள் ஒரிசா மீதும் படையெடுத்தனரானாலும் இரண்டுமே வெற்றி பெறவில்லை. காம்பிலி வீழ்ச்சிக்குப் பின் சிற்றரசர்களாக நாயக மன்னர் 75 பேருக்குக் குறையாமல் ஒரே கூட்டாக ஒன்று திரண்டனர். அவர்களுக்குத் தலைமை வகித்தவர்கள் காபய நாயகன் என்பவனும் அவன் மைத்துனனான புரோலய நாயகனுமே. பின்னாட்களில் கொண்ட வீடு, அட்டங்கி ஆகிய இடங்களில் ஆண்ட ரெட்டி அரச மரபின் முன்னோனான புரோலய வேமனும் இதில் இடம் பெற்றான். பண்டைய சாளுக்கிய மரபுரிமை யுடையவனும், விசயநகரப் பேரரசின் இறுதி மரபான அரவீட்டு வழியின் முன்னோனுமான சோம தேவனும் இக்கூட்டில் சேர்ந்திருந்தனர். இப்பெயர்கள் கூட்டின் தேசிய வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன. இவர்களனைவரும் சேர்ந்து, வீர காம்பிலி தேவன் ஆண்ட பகுதியின் முஸ்லிம் மாகாணத் தலைவனான மாலிக் மாமூதை முறியடித்து வென்றனர். கர்னூலைத் தலைமையிடமாகக் கொண்டு இத்தேசியக் குழுவினர் ஆனகுண்டி, இரேய்சூர், முட்கல் ஆகிய கோட்டைகளைப் பிடித்து அரண் செய்தனர். இக்கிளர்ச்சியால் புத்தெழுச்சி யுற்ற ஹொய்சள மன்னன் மூன்றாம் பல்லாளனும் துக்ளக் ஆட்சியின் மேலுரிமையை வீசி எறிந்து விட்டுக்காம்பிலியைத்தாக்கினான். மாலிக் மாமூது சூழ்வலிமையறிந்து ஹொய்சள மன்னனுடனும் காம்பிலி யரசனுடனும் தொடர்பு கொண்டிருந்த ஹரிஹரன், புக்கன் முதலிய உடன்பிறப்பாளர் ஐவரைக் காம்பிலியிசிருந்து துக்ளக் மரபினர் பெயராலும் தன் பெயராலும் ஆளும்படி கூறினான். தன் மேலுரிமையைப் பணிந்து ஏற்பதாக அவர்களிடம் உறுதி பெற்றுக் கொண்டு அவன் வெளியேறினான். அந்நாளில் வலிமை பெற்றிருந்த ஹொய்சளரே புதிய தேசிய எதிர்ப்புக்குத் தலைமை ஏற்பது பொருத்தம் என்று தேசியக் குழு கருதிற்று. ஆனால், மூன்றாம் பல்லாளன் அதை ஏற்கவும் தயங்கினான். மறுக்கவும் விரும்பவில்லை. ஏனெனில் தில்லி ஆட்சியை அவன் எதிர்க்க விரும்பினாலும் உடனடியாக அதனைச் சமாளிக்க முடியுமா என்று அஞ்சினான். இந்நிலையிலே அவன் ஹரிஹரன் முதலிய ஐவரையும் ஆதரிப்பதாகக் கூறினான். தில்லியின் தற்காலிக இணக்கம் பெற்ற அந்த ஐவருமே தேசியக் குழுவின் பொறுப்பை ஏற்க முன் வந்தனர். குழு தான்வென்ற கோட்டைகளைக் காம்பிலியின் ஆட்சிப் பெறுப்பேற்ற அவர்களிடமே விட்டு விட்டது. இச்சமயம் தென்னாட்டுச் சமய இயக்கப் பேரலையின் தலைவர்களுள் ஒருவரான வித்தியாரண்யர். இத்தேசியக் குழுவின் சார்பில் உடன் பிறந்தார் ஐவரின் புதிய தேசிய அரசியலுக்கு மக்கள் ஆதரவு திரட்டித் தர முன் வந்தார். அவர் உடன் பிறந்தாரே வேதங்களுக்கு முதன் முதலாக உரையியற்றிய சாயணாச்சாரியார் என்று அறிகிறோம். இவ்வாதரவுகளுடன் இஸ்லாமிய ஆட்சி எதிர்ப்பின் தலைவர்களாய் அம் மேலுரிமையை ஐவரும் வீசி எறிந்தனர். புதிய அரசின்தலை நகராக அவர்கள் ஆனகுண்டிக் கோட்டைக்கு எதிரிலே ‘விசய நகரம்’ என்ற புதிய நகரத்தையும் நிறுவினார்கள். இது தங்கள் குருவும் துணைவருமான வித்யாரண்யரின் பெயரால் வித்யாரண்ய நகரம் என்றே பெயரிடப் பட்டது என்றும் கூறுவதுண்டு. வடதிசை இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரான வெற்றி குறித்த நகரம் என்ற முறையில் அப்பெயர் பெற்றதாகக் கொள்பவரும் உண்டு. விசயநகரம் விரைந்து ஹொய்சள அரசையும் தமிழகத்தையும் வென்று, தென்னாட்டின் தென் திசைப் பேரரசாக மூன்று நூற்றாண்டு களுக்கு மேல் புகழுடன் விளங்கிற்று. விசயநகரப் பேரரசை ஆண்ட மரபுகள் நான்கு. அவையே சங்கம் மரபு (1336 - 1485), சாளுவ மரபு (1486 - 1491), துளுவ மரபு (1491 - 1542) அரவீடு மரபு (1542 - 1649) ஆகும். உடன் பிறந்தார் ஐவரின் தந்தை பெயர் சங்கமன் என்பது. அதுவே முதல் மரபின் பெயராய் அமைந்தது. அதன் முதல் அரசனாக ஐவர் உடன் பிறந்தாரில் முதல்வனான முதலாம் ஹரிஹரன் (1336 - 1357) ஆண்டான். ஆனால், அவன் ஆட்சிக் காலத்திலேயே ஐவருள் மூன்றாமவனான அவன் இளவல் முதலாம் புக்கன் (1344 -1377) பேரரசின் ஒரு பகுதியைத் தனியாக ஆண்டு. தமையனுக்குப்பின் முழு ஆட்சியையும் நேரே கைக் கொண்டான். முதல் புக்கன் கூட்டாட்சியின் தொடக்கம் வரை (1344) பழமையான ஹொய்சளப் பேரரசு நீடித்துத் தழைத்தே வந்தது. திருவண்ணாமலைப் போர் : 1341 துக்ளக் பேரரசன் முகமதுவுக்கு எதிராக எழுந்த சாகர் மாகாணத் தலைவன் பாகவுதீன் கிளர்ச்சியும், அதன் பின்காம்பிலி வீர மன்னன் புகழ் மாள்வின்பின் தோன்றிய தேசிய எழுச்சியும் தில்லி முஸ்லிம் பேரரசினிடமிருந்து மதுரை முஸ்லிம்களைத் துண்டு படுத்திற்று. இது தென்திசை முஸ்லிம்களின் தன்னாண்மையை வளர்த்தது. ஆனால், அதே சமயம் புறத் தொடர்பும் உதவியும் இல்லாத நிலையில் அவர்கள் வலுவையும் நாளடைவில் தளர்வடையச் செய்தது. ஹொய்சளர் பாண்டியப் பேரரசர் காலத்திலிருந்தே தமிழகத்தின் அரசியல் வாழ்வில் தலையிட்டுத் தமிழகத்தின் கீழ்திசையில் புகுந்து வந்தவர்கள். பாண்டியர் அரசுரிமைப் போரிலும் மூன்றாம் பல்லாளன் இது செய்யத் தவறவில்லை. ஆனால், முஸ்லிம்படை யெடுப்பே அதைச் சிறிது தடுத்திருந்தது. இப்போது மாறுபட்ட சூழலைப் பயன்படுத்தி அவன் மீண்டும் தமிழகத்தின் கீழ்த்திசையில் முன்னேறத் தொடங்கினான். இச்சமயம் தமிழகத்தில் திருநெல்வேலியில் சிற்றரசராக ஆண்ட பாண்டியர் சிலரைத் தவிர வேறு பேரரசரோ, அரசரோ கிடையாது. ஆனால், வலிமை வாய்ந்த சிற்றரசரான சாம்புவராயர் குடி கீழ்த் திசையில் வளர்ச்சி யடைந்திருந்தது. 1339-ல் இம்மரபினன் ஒருவன் ‘சகலலோகச் சக்கரவர்த்தி இராசநாராயண சாம்புவராயன்’ என்ற ஆரவாரப் பெயருடன் ஆட்சி செய்யத் தொடங்கியிருந்தான். தமிழகத்தின் பல பகுதிகளிலும் மதுரையைச் சுற்றிலும் இம்மரபினர் பலர் ஆட்சி செய்திருந்தனர். தென்னகத்தின் வடதிசை தேசியக் குழுவினரும் ஹொய்சளரும் தமிழக முஸ்லிம்களுக் கெதிராக இவர்களை ஊக்கியிருந்தனர். மூன்றாம் பல்லாளனும் அவர்கள் நட்புடனே தமிழகத்தில் தன் ஆட்சியை வலுப்படுத்தினான் என்று தோற்றுகிறது. மூன்றாம் பல்லாளன் தமிழகத்தில் திருவண்ணாமலையையே தன் மூலதளமாகக் கொண்டிருந்தான். அங்கிருந்து தமிழகத்தின் வட எல்லை முழுவதையும் உட்கொள்ளும் முறையில் மூன்று வரிசைகளாகப் பல வல்லரண்களை அமைத்தான். மற்றொருபுறம் திருச்சிராப்பள்ளி, புதுக் கோட்டை, இராமநாத புரம் வழியாக இராமேசுவரம் வரை தன் படைத் தளங்களை அமைக்கவும் முயன்றான். மதுரை முஸ்லிம் மரபினர் கொள்ளையிலும் ஒருவர்க் கொருவர் அரசுரிமைப் பூசலிடுவதிலும் நேரம் கழித்தனராதலால், தம்மைச் சூழ்ந்து அமைக்கப்பட்டு வரும் முற்றுகை நடவடிக்கை யைக் கவனியா திருந்தனர். ஆனால், 1340-ல் மதுரையில் ஆண்ட ஜலாலுதீன் ஹசன்ஷாவைக் கொன்று ஆட்சி கைக்கொண்ட அலாவுதீன் உதௌஜீ திருவண்ணாமலை மீது படையெடுத்து மூன்றாம் பல்லாளனைத் தாக்கினான். 1341-ல் நடைபெற்ற இப்போரில் உதௌஜீயின் கையே ஓங்கிற்று. ஆனால், வெற்றி பெற இருக்கும் தறுவாயில் வில்வீரன் ஒருவன் எய்த அம்பு அவன் கண்ணில் பாய்ந்தது. கண்ணனூர்க் குப்பம் முற்றுகை: 1342 ஹொய்சளர் வீழ்ச்சி: 1344 திருவண்ணாமலை வெற்றியை அடுத்து மூன்றாம் பல்லாளன் பழய ஹொய்சளர் தென் தலைநகரான கண்ணனூர்க் குப்பத்தை முற்றுகையிட்டான். ஆறுமாத முற்றுகையால், கோட்டையினுள்ளி ருந்த முஸ்லிம் வீரர்கள் எதிர்ப்புத் தளர்ந்து பேரவதிக்காளாயினர். உதௌஜீக்குப் பின் அவன் மருமகன் ஆளத் தொடங்கிய சில நாட்களிலேயே கொல்லப்பட்டான். அடுத்த ஆட்சியுரிமையாள னாக வந்த கியாஸுதீன் தம்கானி மதுரை முஸ்லிம்களிடையே கூடக் குருதி வெறியாட்டத்தில் ஈடிணை யற்றவன். அவன் தன்மை யறியாத ஹொய்சள மன்னன் எளிதில் அவன் சூழ்ச்சிக்கு உட் பட்டான். கோட்டைக் குள்ளிருந்த முஸ்லிம் வீரர் சரணடைவதாக வாக்களித்தனர். இச்சூழ்சிலை ஹொய்சளர் வெற்றிக்கு உகந்தவை யாகவே தோற்றிற்று. ஆனால், தம் தலைவனுடனேயே இதுபற்றிப் பேசுவது நலம் என்று முஸ்லிம் வேண்டினர். சூதறியாத பல்லாளன் இதற்கு இசைந்தான். போர் நிறுத்தி அவன் வீரர் மதுரை முஸ்லிம் மன்னன் வருகைக்காகக் காத்திருந்தனர். ஆனால், தம்கானி இரவோடிரவாக நானூறு படை வீரருடன் ஹொய்சளர் பாசறை மீது பாய்ந்தான். வெற்றி வாயிலில் நின்ற ஹொய்சளர் படுதோல்வி யடைந்தனர். தம்கானியின் மருமகனும் அடுத்த உரிமையாளனு மான நாசிருதீன் முதுமை வாய்ந்த மூன்றாம் பல்லாள மன்னனைக் கைப்பற்றி அவன் யானை, குதிரைகளையும் செல்வக்குவைகளையும் கொள்ளையிட்டபின், அவனையும் உயிரோடு தோலுரித்து வதைத்துக் கொன்றான். உரித்த மேனியாகவே வீர ஹொய்சள மன்னன் உடலம் மதுரைக் கோட்டை வாயிலில் நெடுநாள் தொங்கவிடப் பட்டிருந்ததாம்! இஸ்லாமிய வரலாற்றாசிரியர் இபுன் பத்தூதா மதுரைக்கு வந்த போது, கோட்டை வாயிலில் இந்தக் கோரக் காட்சியைத் தம் கண்ணாரக் கண்டதாகக் குறிப் பிட்டுள்ளார். 11-ம் நூற்றாண்டிலிருந்து மூன்று நூற்றாண்டுகள் வரை சாளுக்கியருடனும் சோழருடனும் பாண்டியருடனும் போராடி அப் பேரரசுகள் எல்லாம் அழிந்த பின்னும் நீடித்து நிலவியிருந்த ஹொய்கள் அரசு தன் வாழ்வின் உச்சநிலை கடவாமலே மூன்றாம் வீர பல்லாளன் முடிவுடன் முடிவடைந்தது. அவன் இறந்த பின்னும் அவன் மகன் நான்காம் பல்லாளன் கலைந்த வாழ்வை நிலைநாட்ட முயன்றதுண்டு. ஆனால், இரண்டாண்டுகளுக்குள், 1344-ல் முதலாம் ஹரிஹரன் ஆட்சியுடன் தன் ஆட்சியை இணைத்து ஆண்ட முதலாம் புக்கன், ஹொய்சள அரசரை முறியடித்து அதை தன் புதிய விசய நகரப் பேரரசின் ஒரு பகுதியாக்கினான். ‘ஹொய்சளர் குடி மரபுக்குரியதாயிருந்த நிலவலய மேகலை விசய நகர மரபுக்கு உரிய வண்ணமேகலையாயிற்று’ என்று அந்நாளையக் கல்வெட்டுக்கள் இவ்வெற்றியை அழகுபடக் குறிக்கின்றன. ஹொய்சளப் பேரரசின் அருகே சிறிய அரசாக நிலவிய விசய நகர அரசு அதை விழுங்கிய பின் விரைந்து தென்பேரரசாக வளரத் தொடங்கிற்று. ஏற்கனவே 1340-ல் பண்டைச் சாளுக்கிய தலைநகரான வாதாபி கைக் கொள்ளப் பட்டிருந்தது. ஹொய்சளப் பேரரசின் மேலுரிமையை ஏற்றிருக்க துளுநாடு 1345-லேயே விசய நகரத்துக்கு அடிபணிந்து அதன் மேலுரிமையை ஏற்றுக் கொண்டது. 1346-க்குள் பேரரசு மேல் கடலிலிருந்து கீழ் கடல் வரை பரவிவிட்டது. பண்டைச் சேர அரசர் மரபைப் பின்பற்றி விசய நகராண்ட உடன் பிறப்பாளர் ஐவரும் சிருங்கேரியில் ஒருங்குகூடி இவ்வளர்ச்சிப் படியை ஒரு விழாவாகக் கொண்டாடியதாக அறிகிறோம். அவர்கள் தென் திசையில் இஸ்லாமிய எதிர்ப்புப் பேரரசின் வளர்ச்சி விழாக் கொண்டாடியதற்கு அடுத்த ஆண்டிலேயே அவர்களுக்கு வட திசையில் தென்னாட்டிலேயே ஒரு முஸ்லிம் பேரரசும் எழுந்தது. பாமினிப் பேரரசின் பிறப்பு : 1347 தில்லிக்கும் தென்னாட்டின் வடகோடிக்கு மிடையே 14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் முதலாக ஏற்பட்ட தொடர்பு 30 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. இஸ்லாமிய வரலாற்றாசிரியர் பெருமிதத்துடன் வகுத்துரைத்த வடபேரரசின் தென் மாகாணங்கள் ஐந்தில் உண்மையிலே, பேரரசுடன் இணைந்திருந்த மாகாணம் தேவகிரி ஒன்றே. இது 1316-ல் தோன்றி, 1347-க்குள் தென்னகத்தின் ஒரு தனிப் பேரரசாகி இரண்டு நூற்றாண்டு வாழ்ந்தது. அதனை உட்கொண்டிருந்த வட பேரரசு மீண்டும் தென் திசைப் பக்கம் நாட முடியாத நிலையில் பேரரசு நிலை இழந்தது. துக்ளக் பேரரசின் மாகாணங்களில் வரி பிரித்து அனுப்பும் பொறுப்பு “நூற்றுவர்” என்று அழைக்கப்பட்ட பணியாளர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டது. முகமது துக்ளக் ஆட்சியின் மாலைப் போதிலே மாளவத்தின் நூற்றுவர் வரி பிரித்தனுப்பாத குற்றத்துக்காகப் படுகொலைத் தண்டனைக்காளாயினர். தேவகிரியிலிருந்து அம் மாகாண ஆட்சியாளர் இதைக் கேள்விப்பட்டதே கிலி கொண்டு கிளர்ந்தெழுந்தனர். காவலரை ஒழித்து விட்டுத் திரும்பத் தேவ கிரிக்குச் சென்று மாகாண ஆட்சியாளரையும் கொன்றனர். இஸ்மாயில் முக் என்ற தம் தலைவனையே நாசிருதீன்ஷா என்ற அரசுப் பெயருடன் தென் மாகாண (தெக்காண) மன்னர் ஆக்கினர். பேரரசன் முகமது இதுகேட்டுத் தானே வந்து கிளர்ச்சி செய்த அனைவரையும் இஸ்மாயில் முக்கையும் சிறைப்படுத் தினான். ஆனால், காவலிலிருந்து பலர் ஒன்றுபட்ட முயற்சியினால் வெளியேறினர். வெளியேறியவர்களிடையே தலைமை தாங்கியவன் ஹஸன்கங்கு என்ற சபர்கான் ஆவன். முகமது இச்சமயம் குஜராத் தில் ஒரு கிளர்ச்சியை அடக்கும்படி சென்றிருந்தான். அவன் வருவதற்குள் ஹஸன் படைதிரட்டிப் பேரரசன் படையை முறியடித்துத் தன்னையே தெக்காண அரசனாக்கிக் கொண்டான். முன்னமே அவ்வுரிமை அளிக்கப்பட்டிருந்த இஸ்மாயில் முக் அல்லது நாசிரு தீனும் அவனுக்கே தன் உரிமையை விட்டுக் கொடுத்து அவனை மன்னனாக ஏற்றான். இவ்வாறு 1347-ல் ஹஸன் கங்கு என்ற சபர்கான் அமைத்த அரசே விரைவில் பாமினிப் பேரரசாக வளர்ந்தது. பாமினி என்பது மன்னனானபோது ஹஸன் கங்கு மேற்கொண்ட குடிப்பெயரே. அவன் முழு அரசுரிமைப் பெயர் கல்தான் அபுல்முசபர் அலாவுதீன் பாமினிஷா என்பது, தலை நகரான தேவகிரியும் இப்போது தௌலதாபாத்து என்று மாற்றப்பட்டது. முகமது காலத்தில் குல்பர்காவுக்குத் தலை நகரம் மாற்றப்பட்டது. பாமினிப் பேரரசர் 1347 முதல் 1527 வரை கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் பேரரசாண்டனர். விசய நகரப் பேரரசைப் போலவே அவர்கள் பேரரசும் முழுவளர்ச்சி யடைந்த சமயம் தென்னாட்டின் மேல் கடலிலிருந்து கீழ் கடல் வரை பரவியிருந்தது. ஆனால், முதல் முதல் அது மேல் கடலோரத்தையே அளாவிற்று. கீழ்த்திசையில் வாரங்கல் கடந்து செல்ல முடியாமல் ஒரிசா ஆண்ட கஜபதி அரசர் அதற்கு நீடித்த தடையாய் இருந்தார். பாமினிப் பேரரசர் அரசவை வாழ்வு தென்னகத்தின் வேறெந்த அரசர் பேரரசர் அரசவை வாழ்வையும் விட -குறுகிய வாழ்வுடைய மதுரை முஸ்லிம் ஆட்சியாளர்கள் வாழ்வைப் போல - போட்டி பூசல் குருதிக்களரி நிறைந்ததாயிருந்தது. ஆட்சியும் கிட்டத்தட்ட அப்படியே அமைந்தது. பல அரசர் உண்மையில் ஓர் ஆண்டு, ஒரு மாதம் அல்லது ஒரு நாள் ஆள நேர்ந்தது. முதல் பாமினி அரசன் அலாவுதீன் (1347 - 1358) ஆட்சியிலே ஆட்சி பேரரசாட்சியாகத் தொடங்கி மேல் கடற்கரை முதல் கிழக்கே பேலங்கிர் வரை பரவியிருந்தது. பெனுகங்கா ஆறும் கிருஷ்ணா ஆறும் அதன் வட தென் எல்லைகளாயின. குறிப்பிடத்தக்க முறையில் இம் முதல் பாமினி அரசன் முந்திய ஆட்சியை ஆதரித்த பெருமக்களிடம் தாராள மனப் பான்மையுடன் நேசமாக நடந்து கொண்டான். வாரங்கலண்ட காபய நாயகன் திறை தந்து பணிந்ததுடன் கௌலாக் கோட்டையை யும் பேரரசுக்கு விட்டுக் கொடுத்தான். அவன் ஆட்சியிலேயே கோவா தபோல்போன்ற துறை முகங்கள் பாமினிப் பேரரசில் சேர்ந்து விட்டன. விசயநகரப் பேரரசினிடமிருந்து இரேய்ச்சூர் கைப்பற்றப்பட்டது. அடுத்த பாமினி அரசன், முதலாம் முகமது (1358 - 1377). இவன் ஆட்சி முறையை ஒழுங்குபடுத்தியதுடன், மாகாண வட்ட ஆட்சிகளைப் பொறுப்பாட்சியாக்கித் திசையாட்சி (னுநஉநவேசயடளையவiடிn) நிறுவினான். இது திறமையும் வலிமையும் மிக்க அரசன் காலத்தில் நல்லாட்சிக் குகந்ததாகவே இருந்தது. ஆனால், திறமை குறைந்த அரசர் கீழ் ஒற்றுமை கெடுத்தது. தெலுங்காணத்துடனும் விசயநகருடனும் இவன் ஓயாது போர் தொடுத்தான். தமிழக விடுதலைப் போராட்டம் :மரகத நகரம் அல்லது விரிஞ்சிபுரம் போர்: 1365 - 1366 சமயவரம் போர்: 1367 தமிழகத்தில் ஹொய்சளர் ஆண்ட பகுதியையே முதல் விசய நகரப் பேரரசன் முதலாம் ஹரிஹரன் ஆட்சியில் அவன் இளவலான முதலாம் புக்கன் ஆண்டதாகத் தெரிகிறது. முதலாம் புக்கன் முழுப் பேரரசாட்சியைக் கைக் கொண்ட பிறகு அதே ஆட்சியை அவன் மகன் கம்பணன் அல்லது கம்பன் மேற் கொண்டான். அவனுடன் கோபணன் அல்லது கோபணார்யனும் விசயநகரப் பேரரசின் இரண்டாம் மரபான சாளுவமரபின் முன்னோனான சாளுவ மங்குவும் படைத்தலைவராக அமைந் திருந்தனர். இவர்கள் கூட்டு முயற்சி தமிழகத்தின் இரு பெருஞ் செயல்களுக்குக் காரணமாய் இருந்தது. ஒன்று சாம்புவராயர் கீழடக்கப் பட்டது. அடுத்தது மதுரை முஸ்லிம் ஆட்சி ஒழிந்து, தமிழகத்தின் கோயில்களுக்கும் மக்கள் வாழ்வுக்கும் அமைதி ஏற்பட்டது. இவ்விரண்டு செயல்களையும் தனித்தனி நிறைவேற்றியதன் மூலம் கம்பணன் ஒரு சிறந்த படைத்தலைவ னாகவும், தேசிய அரசியல் வாதியாகவும் காட்சியளிக்கிறான். ஏனெனில் முதல் செயல் தமிழகத்தை ஒரே வல்லாட்சிக்குக் கொண்டுவந்தது. அடுத்த செயலால் அதுவே தமிழகத்தின் ஒன்றுபட்ட ஆற்றலை மதுரை முஸ்லிம் ஆட்சிக்கு எதிராகத் திரட்டிற்று. ஏனென்றால் கீழடக்கப்பட்ட சாம்புவராயனே, முஸ்லீம்களை எதிர்ப்பதில் ஒரு சிறந்த துணை வலு ஆயினான். மரகத நகரம் என்பது காஞ்சிபுரத்தை அடுத்த விரிஞ்சி புரத்தின் பழம் பெயர். கோபணன். சாளுவமங்கு, சோமப்பன், கோவிந்தராசர் ஆகியோர் உதவியுடன் பல போர்களில் கம்பணன் சாம்புவராயனை எதிர்த்து நின்றான். மரகத நகரம் அல்லது விரிஞ்சிபுரப் போரிலேயே அவனை இறுதியாக முறியடித்துப் பணிய வைத்தான். சாம்புவராயனைச் சிறைப் பிடித்துக் கம்பணன் முன் கொண்டுவந்தவன் படைத்தலைவன் சோமப்பன் மகனான மாரையன் என்பவனே. ஆனால், பணிய வைத்த பின் கம்பணன் அவனைத் தன்னுடன் ஆட்சியில் சேர்த்துக் கொண்டு அவனுதவியுடன் அடுத்த எதிரியைத் தாக்க முற்பட்டான். விசயநகரப் பேரரசின் வீரப்படைத்தலைவர்களுள் கம்பணன் தலை சிறந்த ஒருவன். அத்துடன் தமிழகத்துக்கு அவன் ஒரு சிறந்த தேசிய வீரனாகவும், நாட்டுக்காவலனாகவும் விளங்கினான். முனைவர் ஸி.ஆர்.ரெட்டி அவர்கள் தெலுங்கரைத் தென்னாட்டின் காவல வீரர் என்று கூறியது, அவன் வகையில் இன்னும் சிறப்புடன் பொருந்துவது ஆகும். இத்தகைய வீரகாவியத் தலைவனாகிய கம்பணன் மனைவி கங்காதேவியும் ஒருவீர காவியத் தலைவியாய் அமைந்தது வியத்தகு பொருத்தமே யாகும். ஏனெனில் அவள் சமஸ்கிருதப்புலமை நிரம்பியவளாய் இருந்தாள். மதுரையை வென்று தமிழக விடுதலை தந்த கணவன் பெருஞ் செயலையே அவன் வாழ்வின் வீறார்ந்தமைய நிகழ்ச்சியாக்கி, அவள் அவன் மீது ‘மதுராவிஜயம்’ (மதுரை வெற்றி) என்ற ஓர் ஒப்பற்ற காவியம் இயற்றினாள். தமிழக வரலாற்றில் அக்கவிதையஞ் செல்வியின் கணவன் ஆற்றிய பங்கையும், அந்நாளைய சூழ்நிலையையும் அறிய இது பேரளவில் உதவுவது ஆகும். சமஸ்கிருத காவிய மரபில் குன்றாத ஏடாயினும் தமிழர் தென்திசை மரபில் நின்று வரலாற்றுப் பண்பும் உடையதாக அது திகழ்கிறது. மதுரையைத் தாக்க நேர்ந்ததற்குரிய காரணத்தை இக்கவிதை யஞ் செல்வி புராணங்களைப் பழிக்கும் அழகுக் கற்பனையாக்கி யுள்ளாள். “சம்பவராயனை வென்றபின் கம்பணன் காஞ்சிபுரத்தில் ஓய்வு கொண்டிருந்தான். ஒரு நாள் அரசியரிடையே ஒரு வானணங் கையும், வானணங்குகளிடையே ஒரு அரசியையும் ஒத்த ஒரு எழில் வடிவம் அவன் துயிலிடையே வந்து தோற்றிற்று. ஆனால், அதன் முடி மாசு படிந்திருந்தது. முகமும் பொலி வீழ்ந்திருந்தது. கண்கள் அழலெனச் கன்னியிருந்தன.” கவியாரணங்கு கற்பனையிற் படைத்துருவாக்கிய இத்தமிழ்த் தெய்வம், மதுரைமாதேவியே, இம்மாசூர்ந்த ஒளி வடிவம் தமிழகத்தின் அன்றைய நிலையைக் கவிதை புனை வரலாறாகத் தீட்டிக் காட்டுகிறது. “தேவி மதுரையின் அலங்கோல நிலையை வருணித்தாள். பின் மனித உலகம் கண்டிராத ஒரு ஒளி மணி வாளைக் கம்பணன் கையில் தந்து மறைந்தாள்” கவிஞரின் புராண மரபுப்படி அவ்வாள் அகஸ்தியர் பாண்டிய ருக்களித்த இந்திரனின் வீரவாள். “பாண்டியர் தம் ஆட்சிப் பொறுப்பைக் கை நெகிழவிட்டு விட்டனர். அவர் கடமையும் பொறுப்பும் இனி நீ ஏற்று நடத்திடுக!” என்று தேவியின் பரிசு குறித்தது. கம்பணன் 1374லேயே புகழ் வாழ்வு பெற்றான். ஆனால், அவன் தமிழக ஆட்சியாளனாய் இருந்தது 1365 முதல் 1370 வரைதான். மதுரை முஸ்லிம் ஆட்சியினரை அவன் இக்காலத்தில் வென்றதாக ‘மதுரா விஜயமும்’ ‘கோயில் ஒழுகு’ களும் புகழ்கின்றன. ஆகவே அது இக்காலத்துக்குள்ளேயே நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால், மதுரை முஸ்லிம் ஆட்சியாளர் ஆட்சி விவரங்கள் 1377 வரை நீடிக்கின்றன. 1344-க்கும் 1358-க்கும் இடையே முஸ்லிம் ஆட்சியில் ஒரு இடைவெளி காணப்படுவதால், அக்காலத்தில் பெரும்பாலும் 1358-ல் மதுரை கைக் கொள்ளப் பட்டிருக்கலாம் என்று முனைவர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் கருதியுள்ளார்கள். ஆனால், அது 1370-க்கு சற்று முன்பே நிகழ்ந்திருத்தல் இயல்பு. மதுரை ஆட்சியிழந்த பின்னும் சில பகுதிகளில் முஸ்லிம் ஆட்சியாளர் சில காலம் வலி குன்றியவராய் நிலவி இறுதியில் அழிந்துபட்டிருத்தல் கூடும் என்னலாம். மதுரை தலவரலாறு கம்பணன் மதுரையை விடுவித்தது 1371 ம் ஆண்டு என்றே குறிக்கிறது. இக்குழப்ப காலத்தினிடையே சீரங்க நாதர் திருவுரு தமிழகம் எங்கும் பக்தர்களால் பாதுகாப்புக்காகக் கொண்டோடப் பட்டுத் திருப்பதியில் இருந்ததாகவும், பின் செஞ்சி வந்து திரும்பியதாக வும், மதுரை விடுதலையின் பின்பே அது திரும்பத் திருவரங் கத்துக்குக் கொண்டுவரப் பட்டதாகவும் அறிகிறோம். மதுரைத் தெய்வம்கூட நாஞ்சில் நாட்டில் சிலகாலம் கொண்டு சென்று பாதுகாக்கப் பட்டதாக மதுரைத் தலவரலாறு குறிக்கிறது. சமயவரம் போரில் கம்பணனின் படைத் தலைவன் கோபணார்யனே மதுரை ஆட்சியாளரை வென்றழித்ததாகப் பிரபன்னாமிர்தம் என்ற வைணவ சமய ஏடு குறித்துள்ளது. இக்காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த வைணவருள், இக்காலக் குழப்ப நிலையில், பிள்ளை லோகாச்சாரியார் மயிலைக்கும், வேதாந்த தேசிகர் மைசூருக்கும் ஓடினர். வேதாந்த தேசிகர் திரும்பி வந்ததும் கோபணார்யனை வாழ்த்திப் பாடினராம்! சாம்புவராயனைச் சமஸ்கிருத ஏடுகள் சம்பராயன் என்று குறிக்கின்றன. அவன் தலைமைக் கோட்டை இராச கம்பீரம் என்றும், அவன் நாடு இராச கம்பீர நாடு என்றும் வழங்கிற்று. இராச கம்பீரம் என்பது தற்போது படை வீடு என்றழைக்கப்படும் ஊரே யாகும். முதலாம் புக்கன் ஆட்சிக்குள் தமிழகத்தின் பெரும் பகுதி யிலும் விசய நகரப் பேரரசின் ஆட்சி பரவி விட்டதாக அறிகிறோம். பேரரசு இப்போதே ஏழு மாகாணங்கள் அல்லது இராச்சியங் களாகப் பகுக்கப்பட்டிருந்தது. அவை உதயசிரி இராச்சியம் (நெல்லூர், கடப்பை), பெனுகொண்டா இராச்சியம் (பெல்லாரி அனந்தப்பூர், வடமைசூர்க் கணவாய்கள்), மூலபாகல் இராச்சியம், (மைசூர்ப் பகுதிகள், சேலம், தென்னாற்காடு), ஆறக அல்லது மாலேக இராச்சியம் (பனவாசி, சந்திர குத்தி, கோவா) துளு அல்லது பரகூர் இராச்சியம், அல்லது பங்களூர் இராச்சியம், இராச கெம்பீர இராச்சியம் ஆகியவை. இவற்றைப் பேரரசின் இளவரசர் களோ, அல்லது பேரரசின் நன்மதிப்புப் பெற்ற படைத்தலைவர் களோ, ஆட்சி தலைவர்களாயிருந்து ஆண்டனர். கௌதல் போர் 1367 பாமினிப் பேரரசன் முதலாம் முகமதுக்கும் அவன் பேர ரசுக்குக் கிழக்கில் உள்ள தெலுங்காணத்துக்கும் இடையே மூண்ட நீடித்த கடும் போராட்டம் பல வீரப் பகைமை விளையாட்டுக் களைக் கிளறி இறுதியில் விசய நகரப் பேரரசின் மீதும் மோதிற்று. முகமது தன் பேரரசின் வீறு தோன்றத் தங்க நாணயங்களை அடித்து வெளியிட்டான். இது தம் ஆட்சிகளை அவமதிக்கும் செயலென்று தெலுங்காண, விசயநகர மன்னர் கருதினர். பாமினி ஆட்சிப் பகுதியிலும் காசுக் கடைக்காரர் முஸ்லிம், அல்லா தவர்களாக வேயிருந்ததால், இவ்வரசர் அவர்களைத் தூண்டித் தங்க நாணயங்கள் யாவற்றையும் உருக்கும்படி செய்தனர். இதனை யுணர்ந்த முகம்மது வடதிசையிலிருந்து கத்ரிகள் என்ற வகுப் பினரைத் தருவித்துக் காசுக்கடை வாணிகத்தை அவர்களிடம் ஒப்படைத்தான். எதிரரசுகள் இப்போது தம் பகைமையை மெள்ள மெள்ள உரத்த குரலில் காட்டத் தொடங்கின. வாரங்க லாண்ட காபய நாயகன் தான் முன் விட்டுக் கொடுத்திருந்த ‘கௌலா’க் கோட்டை யைத் திருப்பித் தரும்படி அறைகூவல் விடுத்தான். விசய நகரும் இரேய்ச்சூர் மண்டல உரிமை பற்றி வலியுறுத்தத் தொடங்கிற்று. இவற்றைத் திருப்பித் தரா விட்டால் வடதிசை துக்ளக் அரசருடன் சேர்ந்து அவரை வரவழைப்பதாகவும் இரு அரசுகளும் அச்சுறுத்தித் தூதனுப்பின. முகமது 18 மாதங்கள் தூதருக்கு எவ்வகை மறுமொழியும் அனுப்பாமல் அவனைத் தன்னிடமே நிறுத்திக் கொண்டான். ஆனால், அதே சமயம் அவன் போருக்கான மறை ஏற்பாடுகளைச் செய்து படைகளைப் பெருக்கினான். 18 மாதங் கழித்துத் தூதர் மூலமாக எதுவும் கொடுக்க முடியாதென்ற ஆணவ அவமதிப்பான மறுமொழியனுப்பினான். காபய நாயகன் தனக்குரியதாகக் கூறி அனுப்பிய ‘கௌதல்’ கோட்டையை கைப்பற்றும்படி தன் மகன் வினாயக தேவின் தலைமையில் ஒரு படையை அனுப்பினான். விசய நகரப் பேரரசன் முதலாம் புக்கனின் 20,000 குதிரை வீரரும் அவனுக்குத் துணையாக அனுப்பப்பட்டிருந்தனர். (வாரங்கல் படைத் தலைவன் வினாயக தேவல்ல; நாகதேவ் என்றும் சில ஏடுகள் குறிக்கின்றன.) பாமினி அரசனின் படைத் தலைவன் பகதூர்க்கான் வினாயக தேவை முறியடித்துத் துரத்தியதுடன் வாரங்கலுக் குள்ளேயே புகுந்து 20 யானைகளையும் 100 ஆயிரம் பொன்களையும் சூறையாக வாரிச் சென்றான். முதல் தாக்குதலில் ஒரு சார்பு வென்றும் பகைமைச் செயல்கள் ஒரு சிறிதும் ஓய்வுறவில்லை. எதிர் எதிர் செயல்களாகப் பெருகியே வந்தன. பாமினி அரசருக்காக வணிகரால் கொண்டு செல்லப்பட்ட 1362 குதிரைகளை வினாயகதேவ் வழிமறித்துப் பலவந்தப்படுத்தி விலைக்கு வாங்கினான். இதனால் சீற்றங் கொண்ட முகமது வினாயக தேவைத் தண்டிக்கும்படி வாரங்கல் மீது மீண்டும் படையெடுத்தான். அவன் நோக்கம் நிறைவேறிற்று. வினாயக தேவ் சிறைப் பிடிக்கப்பட்டுத் தூக்கிலிடப் பட்டான். ஆனால், இச்செயலால் அவனடைந்த இன்னல்களும் இழப்புக்களும் கொஞ்ச மல்ல. இச்சமயம் தௌலதாபாத்தில் (தேவகிரியில்) முகமதின் மைத்துனனான பேராம்கான் மசந்தராணி என்பவன் கிளர்ச்சி செய்யத் தொடங்கினான். காபய நாயகன் அவனுக்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவித்தன்றி வடதிசை துக்ளக் அரசனையும் வரவழைக்க முற்பட்டான். துரதிர்ஷ்டவசமாக வடதிசை அரசு இப்போது தெற்கே கவனம் செலுத்தும் நிலையில் இல்லை. ஆனால், இச்செயல் முகமதின் வெஞ்சினம் கிளறிற்று. அவன் தௌலதாபாத்துக்கு ஒரு படையை அனுப்பிவிட்டுத் தானே தெலுங்காணத்துக்குச் சென்று, வாரங்கலையும் கோல கொண்டா வையும் தாக்கி முற்றுகையிட்டான். இவ்விரண்டாம் போரிலும் காபய நாயகன் முழுதும் தோற்றுக் காடுகளை நோக்கி ஓடினான். பிடிபட்டபின் அவன் மீட்டும் ஆட்சியையும், அமைதியையும் பெற மிகப் பெருவிலை தரவேண்டி வந்தது, அவன் கோலகொண்டா நகரை விட்டுக் கொடுத்தான். பேரளவான பொன்னும் யானைத் தொகுதியும் திறையாகக் கொடுத்தான். இவை மட்டுமல்ல. முன்னைய ஆணவ எதிர்ப்புச் சமயத்தில் தில்லிப் பேரரசனை அழைத்தபோது அப்பேரரசனுக்குப் பரிசாக அளிப்பதற்கென்று நவமணி பதித்த அரியணை ஒன்று சித்தம் செய்திருந்தான். இதையும் எதிர்பாரா இடத்தில் -முகமதுவுக்கு - பரிசாக அளிக்க நேர்ந்தது. இப்பெரு வெற்றியின் பின் 1765-ல் (மார்ச் 21-ஆம் நாள் முகமது தான் கொள்ளை கொண்ட பணத்தையெல்லாம் வாரியிறைத்து மிகப் பகட்டாரவாரமாக, ஆடல்பாடல் நங்கையர்கள், இசைவல்லு நர்கள், நாடக நடிக, நடிகையர்களை வர வழைத்து விழா வெறியாட்டயர்ந்தான். ஆனால், வெறியாட்டுடன் வெறியாட்டுக் குறும்பாக, ஆடல் வல்லார்க்குப் பரிசாக விசய நகரப் பொருள் மனைகளின் பெயராலேயே பண ஆணை முறி அளித்தான். விசய நகரப் பேரரசன் முதலாம் புக்கன் குறும்புக் கெதிர் குறும்பு சூழ்ந்தான். பொருளக மனையில் பொருள் பெறவந்த ஆடல் பாடல் அழகர்களைக் கழுதை மீது வால் புறமாக முகந் திருப்பிக் கட்டி யனுப்பினான். அத்துடன் தன் படைகளை யனுப்பி முட்கல் கோட்டையை உடனடியாகக் கைப்பற்றினான். பின் பெரும் படையுடன் அடோனி நோக்கித் தண்டெடுத்துச் சென்றான். கௌதல் துங்க பத்திரையின் தென்திசையிலுள்ள ஓர் இடம். அங்கே நடைபெற்ற போரில் முஸ்லிம்களே மிகப் பெரிய வெற்றி பெற்றனர். அவர்கள் வெற்றிக்கு அவர்களிடம் எதிரிகளைக் காட்டிலும் சிறப்பான குதிரைப் படைகளும், துப்பாக்கி, பீரங்கிகளும் இருந்ததே காரணம் என்று கூறப்படு கிறது. இப்போரில் இரு தரப்புகளிலுமே பீரங்கிகள் இருந்தன வென்றும், ஆனால், இரு தரப்புக்களிலும் ஐரோப்பியரோ அல்லது துருக்கியரோதான் அவற்றை இயக்கின ரென்றும் இஸ்லாமிய வரலாற்றாசிரியரான பெரிஷ்டா குறித் துள்ளார். போரில் நடைபெற்ற கொள்ளை சூறையாட்டில் நாலு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களும், பதினாயிரத்துக்கு மேற்பட்ட உயர்பணியாளர்களும் படுகொலை செய்யப்பட்டனர். தௌலதாபாத் கிளர்ச்சி இவ்வெற்றியின் பின்னரே முழு மூச்சுடன் அடக்கப்பட்டது. பாமினிப் பேரரசரில் ஆட்சிச் சிறப்புக்கும் போர் வெற்றிக்கும் ஒருங்கே பேர்போன பேரரசன் முகமதே. அதற்குக் காரணமாக இருந்த அறிவார்ந்த அமைச்சன் சைபுதீன் கோரி என்பவன் அவன் நூறு வயதுக்கு மேல் வாழ்ந்திருந்தவனாதலால், முதல் பாமினிப் பேரரசன் காலத்திலிருந்து ஆறு பேரரசர் காலம் வரை பணியாற்றிய தாகக் கூறப்படுகிறது. விசயநகரப் பேரரசுக் காலத்தில் தமிழ்த் தென்னகமும், இலங்கையும் முதலாம் புக்கன் ஆட்சி முடிவதற்குள் தமிழகம் முஸ்லிம் அரசியல் வேட்டுவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விசய நகரப் பேரரசின் பகுதியாய் விட்டது கண்டோம். இதே சமயம் பாண்டியர் சோழர் காலத்திலேயே இலங்கைத் தொடர்பு தமிழ்த் தென்னகத்துடன் நீடிப்பது காண்கிறோம். சோழர் காலமுதல் இலங்கையின் பழந் தலை நகரமான அனுராதபுரம், சோழர் காலத்திலிருந்து புதுத் தலைநகரமான பொலன்னருவா ஆகிய இரு நகரங்களையும் உள்ளடக்கிய இலங்கை யின் வட பெரும் பகுதி தமிழரர் கையிலும், தென்கோடிப் பகுதியே சிங்கள அரசர் கையிலும் பிரிவுற்றிருந்தன. இலங்கையின் சிறப்பு வாய்ந்த பேரரசன் பராக்கிரம பாகுவின் கையில் இலங்கை முழுதும் ஒரு சில நாள் ஒன்றுபட்டிருந்தது. ஆனால், அவனுக்குப் பின் இரண்டும் மீண்டும் தனித் தனி பிரிவுற்றன. யாழ்ப்பாண அரசு என்று குறிக்கப்பட்ட வடதிசை யரசே வலிமையுடையதாகி, தென்திசைச் சிங்கள அரசன் மீது மேலுரிமை கொண்டிருந்தது. மதுரை முஸ்லிம் ஆட்சியால் அவதியுற்ற சமயம் தெலுங்க வீரர் பலர் தமிழகத்தில் வந்து வீரப்பணி யாற்றியது போல, தமிழர் பலர் இலங்கை சென்று தமிழரசர் கீழும், சிங்கள அரசர் கீழும் வீரத் தொண்டாற்றினர். இவர்களில் சிங்கள அரசரிடம் படைத் தலைவ னாக அமர்ந்த சோழ நாட்டுத் தமிழனான அழகக் கோனானே 1385-ல் யாழ்பாண அரசுக்குத் திறை கொடுக்க மறுத்து அதனை முறியடித்து அதன் மேலுரிமையை ஒழிக்கக் காரணமாயிருந்தான். இவனே பிற்பட வீர அளகேசுரன் என்ற பெயருடன் சிங்கள அரசனானான். சில கல்வெட்டுக்கள் அவனை மலையாள நாட்டிலுள்ள வஞ்சி புரத்திலிருந்து இலங்கை வந்ததாகக் குறிக்கின்றன. ஆனால், சீன ஆதாரங்கள் அவனைச் சோழ நாட்டுத் தமிழன் என்று கூறுகின்றன. சோழ பாண்டிய காலத் தமிழ் மரபுத் தொடர்ச்சி: விசயநகரப் பேரரசரின் முதல் இலங்கை வெற்றி: 1385 முதலாம் புக்கனுக்குப் பின் அவன் மூன்றாம் புதல்வனான இரண்டாம் ஹரிஹரன் (1377 - 1404) பட்டத்துக்கு வந்து 27 ஆண்டுகள் ஆட்சி செய்தான். இதே காலத்துக்குள் பாமினிப் பேரரசில் முதலாம் முகமதுவுக்குப் பின் முஜாஹித் (1377-1378) தாவூத் (1378) இரண்டாம் முகமது (1378 - 1397) கியாசுதீன் ஆகியோர் ஆட்சி முடிவுற்று பிரூஸின் ஆட்சி (1397 - 1422) தொடங்கி விட்டது. பேரரசன் ஹரிஹரன் ஆட்சிக் காலத்திலேயே அவன் மூத்த புதல்வனான இளவரசன் (முதலாம்) விருபாட்சன் 1385-ல் தமிழகம் கடந்து சென்று இலங்கை மீது படையெடுத்து, அந்நாட்டரசனைத் திறை கொடுக்கும்படி செய்தான் என்று அறிகிறோம். முதலாம் விருபாட்சன் ஆட்சி செய்தது ஒரு ஆண்டே (1404 - 1405). ஆனால், தந்தை ஆட்சிலேயே அவன் பலவகையில் தன் புகழை நாட்டினான். நாராயண விலாசம் என்ற சமஸ்கிருத காவியம்கூட அவனாலேயே இயற்றப்பட்டதாக அறிகிறோம். மற்றும் துண்டீர நாடு (தொண்டடை நாடு), சோழ, பாண்டிய நாடுகளை வென்று பெரும் பொருளைத் திறையாகப் பெற்றுத் தலைநகர் வந்ததாக அவனது ஆலம் பூண்டிப் பட்டயம் கூறுகிறது. அவனது இலங்கைப் படையெடுப்பு இச்சமயத் திலேயே இதனை யடுத்து நடைபெற்றிக்க வேண்டும். விசய நகரப் பேரரசு இச்சமயத்திலோ, இதற்கு முன்னோ பின்னோ கூட, கடல் கடந்து போர் நடத்தும் அளவில் கடற்படை எதனையும் பெற்றிருந்ததாகத் தோற்றவில்லை. சோழ, பாண்டியர் காலத்துக்குப் பிற்பட்ட எல்லாத் தமிழக, தென்னக அரசு பேரரசு களின் நிலையும், கீழ்திசை அரசு பேரரசுகளின் நிலையும் அதுவே. ஆனால், பாண்டியர் இச்சமயம் கீழடங்கிய சிற்றரசராக இருந்தாலும் அவர்களிடமும், இலங்கைத் தமிழகமாகிய யாழ்ப்பாண அரசை ஆண்ட தமிழரசரிடமும் கடற்படை இந்நாளிலும் இருந்ததாகத் தெரிகிறது. ஆகவே இரண்டாம் ஹரிஹரன் காலத்திய இந்த இவங்கை வெற்றியும், இதுபோன்ற இரண்டாம் தேவராசன் காலத்திய வெற்றியும், இவற்றைத் தொடர்ந்து மதுரை நாயகர் காலத்திய இலங்கை வெற்றியும், அவ்வக்கால மேலுரிமைக்குரிய பேரரசர் அல்லது வல்லரசர் துணையுடன் பாண்டியர் அடைந்த வெற்றியே என்னலாம். இதற்கேற்ப, இம் மூன்றிலும் இடைப்பட்ட கால வெற்றியில் பராக்கிரம பாண்டியனே பெரும் பங்கு கொண்டதாக அறிகிறோம். இவ்விரண்டாம் வெற்றியில் பாண்டியன் வெற்றிப் போர்க்களங்களும் ஒரே பாண்டியன் காலத்துக்குரிய ஒரே தொடர்ந்த போரின் வெற்றிகள் தாமோ என்று கூடக் கருத இடமுண்டு. கேரள இலங்கை வெற்றிகளுடன் விசயநகரப் பேரரசின் எல்லை கிட்டத்தட்ட உச்சநிலை அடைந்ததென்னலாம். தென்னகத்துக்கு வந்த பாரசீகத் தூதரான, அப்துல்ரசாக் அப் பேரரசு தென் வடலாக இலங்கை முதல் குலபர்கா வரைக்கும் மேற்கு கிழக்காக மலபாரிலிருந்து வங்காளம் வரைக்கும் பரவியிருந்த தென்று கூறுகிறார். வங்காளம் என்றது ஒரிசாவாகக் கொண்டால் கூட இச்சமயத்தில் இது பொருந்தா மிகையுரையே ஆகும். நூனிஸ் என்ற போர்ச்சுக்கீசிய ஆசிரியர் கொல்லமும் இலங்கை யும் புலிக்காடும் பெருவும் தெனாசரிமும் பேரரசுக்குத் திறை தந்த நாடுகள் என்று புகழ்கிறார். இங்கும் முதலிரண்டு தவிர மீதி மிகையுரைகளே யாகும். இரண்டாம் ஹரிஹரனின் வடதிசைப் போர்கள் 1382 - 1397 இரண்டாம் ஹரிஹரன் பட்டத்துக்கு வருமுன்பே பாமினிப் பேரரசனின் நேசனான இராசகொண்டாவின் வேலம மரபுத் தலைவன் அளபோதன் தெலுங்காண மன்னன் காபய நாயகனைத் தாக்கிக் கொன்றான். இதனால் பாமினியின் செல்வாக்கு வளர்ந்தது. அண்டையில் உள்ள சிற்றரசாகிய கொண்ட வீட்டுக்கும் விசயநகரப் பேரரசுக்கும் இது இடையூறாயிருந்தது. இந்நிலையைச் சமாளிக்கும்படி இரண்டாம் ஹரிஹரன் தன் புதல்வன் இளவரசன் (இரண்டாம்) புக்கனை1390 -ல் வாரங்கல் மீது இருதடவை படையெடுக்கச் செய்தான். இப்படையெடுப்புகள் வெற்றி தரவில்லை. 1397-ல் பாங்கல் தற்காலிகமாக விசய நகரத்தின் வசமாயிற்று. இது நிலைக்கவில்லையெனினும், இக்காலப் பாமினி மரபினர் ஆட்சி குறுகலாயிருந்ததாலும், சிறப்பாக இரண்டாம் முகம்மது அமைந்த சமய ஆர்வப் போக்குடையவனாக இருந்ததாலும் விசயநகரப் பேரரசர் தெற்கிலும் தம் ஆட்சி பரப்ப முடிந்தது. மேல் திசையில் கோவா, சௌல், தபோல், காரிப் பட்டினம் (முhயசiயீயவயேஅ) ஆகிய துறைமுகங்கள் விசயநகர் வசப்பட்டன. தொன்று தொட்டுச் சோழப் பெரும் பேரரசர் கால முதல் மேல் புறத்தில் தென் பேரரசுகளின் வட எல்லையாயிருந்த கிருட்டிணை யாறே இப்போதும் விசயநகரின் வட எல்லையாயிற்று. தென்கிழக்கில் கொண்ட வீட்டு ரெட்டி மரபினரிடமிருந்து விசய நகரப் பேரரசு 1382-க்கும் 1385-க்கும் இடையே கர்நூலையும் நெல்லூரையும் குண்டூரின் ஒரு பகுதியையும் வென்று கைக் கொண்டது. பாமினிப் பேரரசன் பிரூஸின் வீரப் போராட்டம்: 1398 - 1399 இரண்டாம் யரிஹரன் ஆட்சியின் பிற்பகுதியில் அவனுக்குப் பாமினிப் பேரரசன் பிரூஸுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டது. பாமினிப் பேரரசன் பிரூஸுக்கு இச்சமயம் பேரரசின் அகத்தும் புறத்தும் வேறு பல தொல்லைகள் ஏற்பட்டிருந்தன. பேரரசின் வடமேற்கில் ‘கோலி’ மரபினர் கிளர்ச்சிக் கொடி உயர்த்தியிருந்தனர். வடகிழக்கிலோ கோண்டு மரபினனான கேர்ளாவின் அரசன் நரசிங்கன் பீரார் மீது படையெடுத் திருத்தான். இச்சமயம் பார்த்தே விசயநகரப் பேரரசன் இரண்டாம் ஹரிஹரன் தென் திசையில் இரேய்ச்சூர் மண்டலத்தின் மீது படையெடுத்தான். பிரூஸ் முதலில் கோலியர் கிளர்ச்சியை எளிதில் அடக்கி விட்டான். ஆனால், கேர்ளாப் படையெடுப்பைச் சமாளிக்க அவன் பேரரார், தௌலதபாத் ஆகிய மாகாணங்களில் உள்ள படைகள் அத்தனையையும் ஈடுபடுத்த வேண்டியதாயிருந்தது. ஆகவேதான் படைத்தலைவனான காசி சிராஜுதீனை ஒரு சில படை வீரருடன் தெற்கே சென்று சமாளிக்கும் படிவிட்டு விட்டு, அவன் கேர்ளா சென்றான். பாமினிப் படைத்தலைவன் சிராஜுதீன் சூழ்ச்சியாலேயே எளிதில் வெற்றி பெற்றான். அவன் பாடகனாக மாற்றுருக் கொண்டு விசயநகரப் பாசறையின் உள்ளே புகுந்தான். அம் முறையிலே உள்ளே குழப்பம் விளைவித்த சமயம் அவன் வீரர் திடுமெனப் பாய்ந்து பாசறையிலேயே வெற்றி நாட்டினர். சிறைப் பட்டவர் எண்ணற்றவர்கள். அவர்கள் விடுவிப்புத் தொகையே பாமினிக்கு ஒரு பெருந்திறையாயிற்று. பிரூஸ், கேர்ளா அரசன் நரசிங்கனை இதற்குள் முறியடித் திருந்தான். நரசிங்கன் பணிந்து பெரும் பொருட் குவையுடன் 40 யானைகளைத் திறையாக அளித்தான். அத்துடன் தன் புதல்வியை அவன் பிரூஸின் மனைவியாக மணஞ் செய்து கொடுத்தான். கேர்ளா வெற்றியின் பின் பிரூஸ் விசயநகரப் படைகளைக் கிருஷ்ணை யாற்றங்கரையிலிருந்து விசய நகரத் தலைநகர் வரை விடாது துரத்தியடித்தான். இரேய்ச்சூர் மண்டலம் மீண்டும் பாமினி வசமாயிற்று. அடிக்கடி போர்க்களமாகி வந்த அந்த மண்டலத்தை அதற்கேற்ற முறையில் பிரூஸ் ஒரு படையாட்சி மாகாணமாகவே ஆக்கி, பௌலாத்தான் என்பவனைப் படையாட்சித் தலைவன் (ஆடைவையசல ழுடிஎநசnடிச) ஆக அமர்த்தினான். விசயநகரப் பேரரசு இப்பெருந் தோல்வியால் பாமினிப் பேரரசுக்குப் பணிந்து திறை கொடுக்க இணங்க வேண்டிய தாயிற்று. ஆனால், பின்னால் பாமினி அரசின் வடக்கிலும் வட மேற்கிலும் இருந்த வல்லரசான மாளவ கல்தானுடனும், குஜராத் சுல்தானுடனும் விசயநகரம் நேச ஒப்பந்தம் செய்து கொண்டு இம்மேலுரிமையையும் திறைக் கடனையும் உதறித் தள்ளிற்று. ஒரு பெண்ணழகிக்கான பேரரசின் போராட்டம்: 1406 - 1412 இரண்டாம் ஹரிஹரனுக்குப் பின் அவன் புதல்வர் மூவருள் முதல் இருவரான முதலாம் விரு பாட்சனும் இரண்டாம் புக்கனும் அடுத்தடுத்து ஆண்டு, இரண்டு ஆண்டுகளுக்குள் மடிந்தனர். மூன்றாம் புதல்வனான முதலாம் தேவராயன் (1406 - 1427) ஆட்சி பிரூஸ் ஆட்சியுடன் சமகாலமானதாய் அமைந்தது. இரேய்ச்சூர் மண்டலம் இப்போது பாமினி ஆட்சியில் இருந்தது. அதன் கோட்டை நகர்களுள் ஒன்று முட்கல். அந்நகரின் பொற் கொல்லன் ஒருவனுக்கு அழகிற் சிறந்த புதல்வி ஒருத்தி யிருந்தான். இந்தத் தொழிலாளர் குடும்பப் பெண் எப்படியோ விசயநகரப் பேரரசன் தேவராயன் பார்வையில் பட்டு, அவள் மையலால் அவன் பாமினிப் பேரரசு மீது போர் தொடுக்கவும், அதனால் பேரழிவுக்கும் பேரவமதிப்புக்கும் ஆளாகவும் நேர்ந்தது. இப்போர் 1412 -க்கு முன் நிகழ்ந்தது ஆகும். ஏனெனில் இப்போரில் தோற்ற முதலாம் தேவராயன், பாமினி அரசனுக்குப் பங்கப்பூர் கோட்டையையும் விட்டுக் கொடுத்துத் தன் புதல்வியையும் அவனுக்கு மனைவியாகத் தர நேர்ந்தது. அது மட்டுமன்று. எந்தப் பெண்ணழகிக்காக அவன் இத்தனை அவதியுற்றானோ அதே பெண்ணழகினையும் பிரூஸின் மகன் கையில் பிடித்துக் கொடுக்கும் படி கட்டாயப்படுத்தப்பட்டான்! இன்ப துன்பங்கள்: 1412 - 1422 இரு பேரரசரின் வெற்றி தோல்விகள் : ஒரு பெண்ணுக்காகப் போர்புரிந்த முதலாம் தேவராயன் பிரூஸ் ஆகிய இரு பேரரசர்களும் அரசியல் துறையில் அடிக்கடி ஒருவருடன் ஒருவர் முரணிப் போராடினர். அரசியல் வாழ்விலும் தனி வாழ்விலும் முதலில் பிரூஸ் மதிப்பும் வெற்றியும் பெற்றாலும் இறுதியில் தேவராயனே இரண்டுக்கும் உரியவனாக நேர்ந்தது. கிருஷ்ணை, கோதாவரி ஆறுகளுக்கிடையிலிருந்த கொண்ட வீட்டு அரசைத் தெலுங்குச் சோட மன்னனான அனதேவன் ஆண்டு வந்தான். அவன் பிரூஸுடனே நண்பனாக இருந்தான். இது பிரூஸின் செல்வாக்கை வளர்க்க ஏதுவா யிருந்தது. இதற்கு எதிரீடாகத் தேவராசன் அனதேவன் மைத்துனனான இராச மகேந்திரவரத்தின் (தற்கால இராசமண்ட்ரி) ரெட்டி மன்னன் காத்திய வேமனுடன் நேச ஒப்பந்தம் செய்து கொண்டு அனதேவன் ஆட்சிப் பகுதியைத் தாக்கினான். பிரூஸ் அனதேவனுக்கு நண்பனாதலால் நானும் 1415 -ல் களம்புகுந்தான். இரு பேரரசுகளும் மீண்டும் கீழ்திசையில் தெலுங்காண மண்ணின் மீது போரிட்டன. இப் போரிலும் இறுதியாக 1417-ல் பிரூஸே வெற்றி பெற்றுத் தன்தெலுங்காண மேலுரிமையாட்சியின் செவ்வாக்கை முன்னிலும் வலியுறுத் தினான். போரில் இராசமகேந்திரபுரத்து ரெட்டிமன்னன் காத்திய வேமன் கொலையுண்டான். அவன் ஆட்சியும் பாமினியின் மேலுரிமையை ஏற்க நேர்ந்தது. முதலாம் தேவராயன் இத்தோல்வியை வாளா ஏற்றமைய வில்லை. எதிர்த்தாக்குதல் நடத்திப் பாங்கலைக் கைப்பற்றினான். பிரூஸ் பாங்கலை மீட்க எண்ணி அதை முற்றுகையிட்டான். இம் முற்றுகை இரண்டாண்டுகள் நீடித்தது. பிரூஸ் பக்கமிருந்த இராசம கேந்திரபுரத்து வேலமர் இப்போது பக்கமாறி மீண்டும் தேவ ராயனுடன் சேர்ந்து கொண்டதால், தேவராயன் பிரூஸை நைய முறியடித்துப் பெரு வெற்றி கொள்ள முடிந்தது. 1420 -ல் பிரூஸ், பாங்கனை மீட்க எண்ணிப் பின்னும் தோல்வியுற்றான். மன்னன் காத்திய வேமன் மாள்வுக்குப் பின் வீரமிக்க போரிலும் திறமிக்க அரசியல் சூழ்ச்சியிலும் ஈடுபட்டு இராசம கேந்திரபுரத்தின் நிலையை உயர்த்தியவன் காத்தியவேமனின் படைத்தலைவனான அல்லாதனே. அவன் காத்தியவேமனின் புதல்வன் குமாரகிரியின் காவலனாயிருந்து அவன் அரசுக்கு மீட்டும் வலுத்தந்தான். விசயநகர வெற்றிக்குப் பின் கொண்ட வீடு ஒரு தனியரசு என்ற நிலையிழந்து ஒழிந்தது. அதன் நிலப்பரப்புத் தேவராயனின் விசயநகர ஆட்சிக்கும், இராசமகேந்திரபுரத்து வேலமர் ஆட்சிக்கும் இடையே பங்கிடப் பட்டுவிட்டது. அரசியல் புறவாழ்வில் வீழ்ச்சிற்று மதிப்பிழந்த பிரூஸுக்கு அகவாழ்விலும் ஒரு மாய அல்லல் வந்து புகுந்தது. நெடுஞ் சேரலாதன் பேரவையில் செங்குட்டுவனையும், இளங்கோவையும் ஒருங்கு கண்ட அறவோர் ஒருவர் இளையவனுக்கே அரசயோகம் எனக் கூறியதாக நாம் சிலப்பதிகாரத்தில் கேள்விப்பட்டிருக் கிறோம். அதேபோல பிரூஸின் போர்க்களங்களில் எல்லாம் அவனுடன் உற்ற வீரத்துணைவனாக நின்ற அவன் இளவல் அகமதுடன் அவனைக் கண்ட இஸ்லாமிய ஞானி ஜமாலூதீன் ஹுசைனி அவ்விளவலே விரைவில் அரசனாவதற்குரிய கோள் வாய்ப்பு உடையவனென்று குறியுரைத்திருந்தான். அகமது இதன் பின்னும் தமையனிடம் பற்றுமாறாமலே யிருந்தாலும், இது தமையன் மனம் கெடுத்தது. அவன் தம்பியிடம் காட்டிய பரிவும் மதிப்பும் குறைந்தன. அவனுடன் தோழமை கொண்டிருந்த இரண்டு அடிமைகளிடம் அப்பரிவும் மதிப்பும் சென்றுபாய்ந்தன. அவர்களுக்கு அவன் அயினுல்முல்க் என்றும் நிஜாம் உல்முல்க் என்றும் பட்டமளித்து அவர்களுக்கு உயர் பதவியும் தந்தான். இதனால் அகமது மனக்கசப்புற்று அகமது கலப் ஹசன் என்ற பஸ்ரா நகரத்துச் செல்வ வணிகன் ஆதரவாலும் தூண்டுதலாலும் கலியாண் நகர் சென்று தன்னையே அரசனாக முடிசூட்டிக் கொண்டான். அவன் கைப்பட்ட பிரூஸ் முடிதுறந்து அதை அவனுக்கே அளித்து விட்டு, மனமுறிவுடன் உயிர் நீத்தான். துங்கபத்திரை யாற்றுப் போர் 1422 - 1426: முதலாம் தேவராயனுக்குப் பின் விசயநகரம் திறமை குன்றிய அவன் மகன் முதலாம் விசயராசன் (1422 - 1426) ஆட்சிக்கும், பிரூஸுக்குப் பின் பாமினிப் பேரரசு அவன் வீரஇளவல் அகமதுஷா (1422 - 1435) ஆட்சிக்கும் வந்தன. முந்திய ஆட்சியில் தன் தமையன் மூலம் பாமினிக்கு ஏற்பட்ட அவமதிப்பைப் போக்கும் எண்ணத் துடன் அவன் பட்டத்துக்கு வந்த உடனேயே விசயநகரத்தின் மீது படையெடுத்தான். துங்கபத்திரை ஆற்றின் கரையிலே வந்து விசயநகரப் படைகளும் தங்கல் அமைந்திருந்தன. ஆனால், திடு மென எதிர்பாராவகையில் அகமதுஷா பாசறை மீது தாக்குல் நடத்தினான். விசய நகரப் படைகள் சின்னா பின்னமாகத் தெறித் தோடின. பேரரசன் விசயராசனே கந்தலான ஆடைகளுடன் ஆற்றின் மறுகரையிலுள்ள ஒரு கருப்பங் கொல்லையில் சென்று பதுங்கித் திரிய வேண்டியதாயிற்று. பாமினிப் படை வீரர் சிலர் அச்சமயம் அவனைக் கண்டன ராயினும், அவன் பேரரசன் என்று அறியாமல் யாரோ கரும்புக் கொல்லையின் தொழிலாளி என்று கருதி விட்டுச் சென்றனராம். போரில் அகமது பெரு வெற்றி பெற்றதுடன் அமைய வில்லை. விசய நகர எல்லைக்குள்ளேயே புகுந்து படை வீரரையும், பொது மக்களையும், ஆண்களையும் பெண்களையும் முதியவர் களையும், குழந்தைகளையும் வேறுபாடின்றி எங்கும் தீக்கும் வாளுக்கும் இரையாக்கினான். இறந்தவர் எண்ணிக்கை இருபதினாயிரம் என்ற தொகை யெட்டுந்தோறும், படுகொலை வேலையைச் சிறிது நிறுத்தி அந்தக் கொலை வெற்றியைக் கொண்டாடிய பின்னரே, அடுத்த இருபதினாயிரக் கொலை நடத்தினானாம். இப்படிப் பல தடவை பல நூறாயிர மக்களைக் கொன்றும், பிராமணர்களை அழித்தும், கோயில்கள், பள்ளி கல்லூரிகளை இடித்தும் அவன் விசயநகர வாழ்விலே மறக்க முடியாத கொடுமை யாட்சி பரப்பினான். தபதி யாற்றுப் போர்: 1428 நடு ஆசியாவில் தன் வாள் வலியால் ஒரு வீரப் பேரரசு நிறுவி ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரந்தகன்ற ஒரு பேராட்சி நாட்டியவன் தைமூர். அவன் பெயர் அந்நாளைய மேலை உலகத் திலும் கீழையுலகத்திலும் கிலியூட்டும் பெயராக நிலவிற்று. 1401-ல் பாமினி அரசன் பிரூஸ் அவ் இஸ்லாமியப் பேரரசனுக்குச் சில பரிசுகள் அனுப்பி யிருந்தான். அதனால் மகிழ்ச்சியடைந்த தைமூர் ‘தெக்காணம், மாளவம், குஜராத் கல்தானும், மாளவ சுல்தானும் நடுநடுங்கி, விசயநகரப் பேரரசுடன் நேச ஒப்பந்தம் செய்து தம்மை வலிமைப்படுத்திக் கொள்ள முன்வந்தனர். பிரூஸ் காலத்தில் இதனெதிரொலி எதுவும் கிளம்பவில்லை. ஆனால், அகமதுஷா அந்த இரு நாடுகளையுமே கைப்பற்றுவதற்கான பெரும் போர் ஏற்பாடு களில் முனைந்தான். இரு நாடுகளும் கைப்பற்ற முயன்று வந்த இடைநாடு காந்தேஷ். எனவே இயல்பாக அது இரு நாடுகளையும் பகைத்திருந்தது. அகமதுஷா காந்தேஷுடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். காந்தேஷ் அரசன் நாசிர்கான் புதல்வியே அவன் மூத்த மகன் இளவரசன் இரண்டாம் அலாவுதீனுக்கு மணம் செய்து வைக்கப்பட்டாள். கேர்ளா நாட்டைப் பாமினியின் மேலுரிமையுடன் நரசிங் கனே இன்னும் ஆண்டு கொண்டிருந்தான். அகமதுஷாவின் வலுக் குறைக்கும் எண்ணத்துடன் மாளவ அரசன் ஹுஷங்ஷா 1428-ல் கேர்ளா மீது படையெடுத்தான். நரசிங்கன் தனக்கு உதவி புரியும் படி அகமது ஷாவை அழைத்தான். தபதி ஆற்றங் கரையில் நடைபெற்ற போரில் மாளவ மன்னன் மண் கௌவ நேர்ந்தது. 200 யானைகளும் அவற்றின் அணிமணி அம்பாரிகளும் பெருஞ் செல்வக்குவைகளும் அகமதுஷா வசமாயின. படையெடுத்த எதிரியை யழித்து நாடு காத்த தன் மேலுரிமையாளனான பேரரசன் அகமதை நரசிங்கன் தன் நாட்டுக்கழைத்துச் சென்று மேலும் பரிசுகளளித்துப் பெருமைப்படுத்தினான். ஆனால், மாநிலத்தின் தொல் பழங்குடி (கொண்டு) மரபில் வந்த அம்மன்னன் தோல்வியுற்ற மாளவ அரசனையும் குடும்பத்தினரையும் வீரரையும் பாதுகாப்புடன் தாயகம் அனுப்பி வைத்துத் தன் பழம் பண்பாட்டின் மூலம் வடதிசை, தென்திசை அரசர் இருவரும் வெட்கப்படும்படி செய்தான். அகமதுஷா ஆட்சித் தொடக்கம் முதல் அவனை அரவனைத்து வந்த வெற்றிச் செல்வி இப்போது அவனைக் கைவிட்டாள். 1430-ல் அவன் குஜராத்தின் மீது படையெடுத்துத் தோல்வியுடன் மீண்டான். குஜராத்துப் படைகள் எதிர் தாக்குதலின் முனைந்து பாமினி அரசியல் வலுவுக்கே ஆட்டம் தந்தன. இதனிடையே மாளவ அரசன் மீட்டும் கேர்ளா மீது படையெடுத்து நரசிங்கனைக் கொன்றான். அவனும் ஏற்கனவே குஜராத்துப் படைகளால் அலைக்கழிக்கப்பட்ட பாமினி மீது தாக்கினான். இதில் அகமதுஷா அவன் படையெடுத்துத் தாக்கினான். இதில் ஓரளவு வெற்றி பெற்றாலும் கேர்ளாவின் பெரும் பகுதியை மாளவத்துக்குக் கொடுத்து மீந்த பகுதியை மட்டுமே தன் பீரார் மாகாணத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டி வந்தது. கலிங்க எழுச்சி: கஜபதி மரபின் வளர்ச்சி விசய நகரப் பேரரசன் முதலாம் விசயராசனுக்குப் பின் அவன் புதல்வன் இரண்டாம் தேவராயன் (1422 - 1446) பேரரசனானான். முதலாம் தேவராயன் காலத்தில் விசயநகரப் பேரரசு கொண்ட வீட்டரசைக் கைக்கொண்டதனால், அவ்வெற்றியைத் தொடர்ந்து ஒரிசாவில் ஆண்ட கஜபதி மரபினரையும் தாக்க அவன் எண்ணின் னான். ஆனால், இச்சமயம் இராச மகேந்திரபுரத்தை ஆண்ட அல்லத ரெட்டி தலையிட்டு நேச இணக்கம் உண்டு பண்ணி வைத்தான். எனினும் அல்லதரெட்டியின் மறைவுக்குப் பின் அவன் புதல்வர் களான அல்லய வேமன், வீரபத்தின் ஆகியவர்கள் தாமே ஒரிசாவைத் தாக்க முற்பட்டனர். ஆயினும் 1435-ல் கஜபதி மரபின் புத்திள ஞாயிறாகக் கபிலேசுரன் என்ற வீரமன்னன் பட்டத்துக்கு வந்ததனால், தாக்குபவர் தாக்கப்படுபவர் நிலை தலைகீழ் ஆயிற்று. கபிலேசுவரகஜபதி இராச மகேந்திரபுரத்தையே தாக்க முற்பட்டான். அல்லயத் துணைவர் இச்சமயம் இரண்டாம் தேவ ராயனின் உதவி கோரினர். தேவராயன் படைகளுடன் விரைந்து சென்று தென்கலிங்க அதாவது தெலுங்கக் கரும்புத் தோட்டத்தில் நுழைந்து வடகலிங்க மத யானையை வெளியேற்றியுதவினான். தேவராயன் தந்த இப்பாதுகாப்பு அல்லயத் துணைவருக்கு நிலையான பாதுகாப்பாய் அமையவில்லை. விரைவில் கஜபதி அரசனின் பேரரச வாழ்வுக்கு இராசமகேந்திரபுரம் இரையாயிற்று. வேழநாடு வென்ற வேழ வேட்டைக்காரன் : 1435 இரண்டாம் தேவராயனுக்கு வேழ வேட்டைக்காரன் (கஜபேட கார) என்ற ஒரு பட்டப் பெயர் உண்டு. வேழ நாடாகிய கேரளத்தை வென்றவன் என்ற பொருளிலேதான் இப்பெயர் ஏற்பட்டதோ என்று நாம் ஐயுற இடமுண்டு. கிழக்குத் தென்னக அரசியலில் வெற்றிகரமாகப் பங்கு கொண்ட பின் பேரரசன் இரண்டாம் தேவராயன் தெற்கு நோக்கித் தமிழகத்தில் வீர உலா வந்தான். தமிழகம் ஏற்கெனவே பேரரசின் மேலாட்சியில் இருந்ததால் அவன் பேரரசு நோக்கு மேல் திசையிலும் தென்திசையிலும் சென்றன. அவன் மேல் திசை சென்று கொல்லத்தில் ஆண்ட அரசனையும் அதற்கு வடக்கேயுள்ள பல சிற்றரசர்களையும் வென்றடக்கினான். பேரரசெல்லை இப்போது வடக்கிலும் தெற்கிலும் மேல் கடலளாவிற்று. ஆயினும் இடையே கள்ளிக் கோட்டையில் ஆண்ட சாமூதிரிப்பாடு என்ற வலிமை வாய்ந்த சிற்றரசன் மட்டும் தன்னாண்மையுடன் தனியாட்சியே செலுத்தி வந்தான். பாரசீக அரசனிடமிருந்து தென்னாட்டுக்கு அரசியல் தூதனாக அனுப்பப்பட்ட இஸ்லாமிய வரலாற்றாசிரியன் அப்துல்ரசாக் முதலில் இந்த காமூதிரிப் பாட்டின அரண்மனையிலேயே வந்து தங்கினதாக அறிகிறோம். பேரரசன் தேவராயன் அத்தூதனைத் தன்னிடம் அனுப்பும்படி சாமூதிரிப் பாட்டுக்குத் தெரிவித்தவுடனே, அவன் அட்டியின்றி அவ்வாறே அனுப்பி வைத்தான். ‘தனியாட்சி செலுத்தியவனாயினும் சாமூத்திரிப் பாடு விசயநகரப் பேரரசன் என்றால் அஞ்சி நடுங்குபவனே’ என்று இந்நிகழ்ச்சி பற்றிக் கூறுகையில் அப்துர் ரசாக் குறிப்பிட்டுள்ளான். சோழபாண்டியத் தமிழ் மரபின் தூவானம் : இலங்கை வெற்றிகள் : சிங்கை, இராசை, செண்யை,முதலை,வீரை,வைப்பாறு, அனுரை, விருதை, அறந்தைப் போர்கள் - 1435 தமிழகத்தில் பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்ற பின்சோணாட்டிலும் தொண்டை நாட்டிலும் சம்புவராயர் என்ற சிற்றரசர் ஆற்றலுடன் விளங்கியது போலவே, வட பாண்டிய நாட்டில் வாணாதிராயர் என்ற வாணகுலச் சிற்றரசர் ஆற்றலுடையவர்களாகியிருந்தனர். முஸ்லிம் ஆட்சியாளர் அகற்றப்பட்டபின் கூட, விசய நகர ஆட்சியின் கீழ் மதுரையிலும் அதனைச் சூழ்ந்த இடங்களிலும் அவர்களே உயர் பதவியிலிருந்தவர்களாகவே திருநெல்வேலி நகர், தென்காசி, கொற்கை, கரிவலம் வந்த நல்லூர் முதலிய திருநெல்வேலி மாவட்ட நகரங்களிலிருந்து ஆட்சி செய்து வந்தனர். தமிழக முழுவதும் இந்நாளில் விசயநகரப் பேரரசின் மேலாட்சியில் இருந்ததாயினும், இப்பாண்டியர்கள் அவ்வப்போது கீழடங்கிய சிற்றரசர்களாகவும் அவ்வப் போது நட்புறவுடையவர்களாகவும், ஒருசில சமயம் தன்னாண்மை கொண்டு பண்டை வாழ்வின் நினைவில் கிளர்ந்தெழுபவராகவுமே இருந்து வந்தனர். 14 முதல் 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அவர்களைப் பற்றிய செய்தி களும் நிகழ்ச்சிகளும் இத்தகைய மாறுபட்ட நிலைகளையே காட்டுகின்றன. இத்தகைய பிற்காலப் பாண்டியர் பலர் 14-ஆம் நூற்றாண்டி லேயே மதுரையிலும், வடக்கு கிழக்குத் தமிழகத்திலும் பரவிவந்த குழப்பச் சூழ்நிலைகளால் கூடப் பாதிக்கப்படாமல் தென்கோடித் தமிழகத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால், 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சடையவர்மன் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் (1422 - 1463) பிற்காலப் பாண்டியர்களிலே தலை சிறந்த வீரப்பெருமையும் புகழும் உடையவனாகக் காணப்படுகிறான். இவன் ஜாதவர்மன் விக்கிரம பாண்டியன் (1401 - 1422) புதல்வன். கொற்கையைத் தலை நகராகக் கொண்டு இவன் திருநெல்வேலி மாவட்டத்தையும் இராமநாதபுர மாவட்டத்தையும் ஆண்ட வலிமைவாய்ந்த அரசன். விசயநகரப் பேரரசையே எதிர்த்து ஒரு சிறிதுகாலம் மதுரையைக் கூட ஆண்டு பின் அதனைத் தோற்றிழந்தான் என்றும் அறிகிறோம். வீரத்திலும், தெய்வப் பற்றிலும் தமிழார்வத்திலும் ஒருங்கே சிறந்தவன் இவன். இவன் குடிகள் நலத்துக்காக விசுவநாதப் பேரேரி போன்ற நீர்நிலைகளை ‘நவமாக’ (புதிதாக) வகுத்தவன். தென்காசியில் பதினேழு ஆண்டு அரும்பெருந் திருப்பணிகள் செய்து அதனைத் தன் மரபினரும் குடிமக்களும் பின்னோரும் பாதுகாக்கும் படிக் கல்வெட்டிலே செந்தமிழ்ப் பாக்களால் வேண்டிக் கொள்ளும் வாசகங்கள் எவரையும் உருக்கும் ‘திருவாசகப் பண்பு’ உடையன ஆகும். சேல் ஏறிய வயல் தென்காசி ஆலயம் தெய்வச் செய லாலே சமைந்தது, இங்கு என் செயலல்ல! அதனை இன்னம் மேலேவிரிவு செய்தே புரப்பார் அடி விழ்ந்து அவர் தம்- பால் ஏவல்செய் பணிவன் பராக்கிரம பாண்டியனே!” என்ற அரசன் பக்திப் பணிவு. அவன் அரசெல்லை சிறிய தாயினும் பண்பெல்லை அசோகனுக்கு மேம்பட்டது என்பதை உணர்த்தா நிற்பதாகும். பிற்காலப் பாண்டியர் அனைவருமே இப்பாண்டியனைப் பெருமைப்படப் போற்றினர். அவன் கட்டிய தென்காசிக் கோயிலிலேயே பிற்காலப் பாண்டியர் அனைவரும் முடிசூட்டிக் கொண்டனர். திருக்குற்றாலம், திருப்புடைமருதூர் (அம்பா சமுத்திரம்) முதலிய இடத்துச் சிவன் கோயில்களிலும் இவன் சிறப்புத் திருப் பணிகள் செய்தான். விந்தனூர் முதலிய ஐந்து ஊர்களில் அந்தணர்க்கு அகங்கள் வகுத்தான். இப்பாண்டிய வேந்தன் காலத்தில் விசய நகரப் பேரரசர் ஆட்சியின் பேராளாய்த் தமிழகத்தில் மாகாணத் தலைவராகவும், படைத் தலைவராகவும் இருந்தவர் தண்ட நாயகர் இலக்கண்ணரே யாவர். விசய நகரப் பேரரசருடனும், தண்ட நாயகருடனும் பராக்கிரம பாண்டியன் நேசத் தொடர்பு கொண்டு பேரரசர் சார்பிலே இலங்கைப் படையெடுப்பை நடத்தினான். இலங்கையில் நடைபெற்ற போர்களின் வெற்றி இக்காரணத்தால் இருவர் கல்வெட்டுக்களிலும் குறிக்கப் பட்டுள்ளன. “சிங்கையில் அனுரையில் இராசையில் செண்பையில் விந்தையில் அறந்தையில் முதலையில் வீரையில் வைப்பாற் ...... மன்னரை வெந் கண்டு” எனச் சிதைந்த நிலையிலும் அவன் மெய்க்கீர்த்தி அவன் இலங்கைப் போர் வெற்றிகளைத் தொகுத்துரைக்கின்றன. “கோதற்ற பக்தி அறுபத்து மூவர்தம் கூட்டத்திலோ, தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ, செம்பொன் அம்பலத்தோ, வேதத்திலோ, சிவலோகத்திலோ, விசுவநாதன் இரு பாதத்திலோ சென்றுபுக்கான் பராக்கிரம பாண்டியனை!” என்ற இப்புகழ் வேந்தன் மறைவு பற்றிய இரங்கற்பா தென்காசிக் கோயிலில் பொறிக்கப் பெற்றுள்ளது. இப்போர் வெற்றிகளின் பயனாகவே 1438-ல் இலக்கண்ண தண்ட நாயகன் தனக்குத் ‘தட்சிண சமுத்திராதிபதி’ என்ற பட்டத்தை யும், விசய நகரப் பேரரசன் இரண்டாம் தேவராயன் ‘ஈழம் திறை கொண்ட’ என்ற அடைமொழி விருதையும் மேற் கொண்டனர். விசய நகர காலத்திலேயே 1385-ல் நடைபெற்ற இளவரசன் விருபாட்சனின் வெற்றியும் இவ்வெற்றியும் ஒரே தொடர்ப் போராட்டத்தின் வெற்றியாக இருக்குமோ என்று ஐயுற இடமுண்டு என்று மேலே கூறியுள்ளோம். எப்படியும் இவ்விரண்டு வெற்றிகளும் மதுரை நாயகர் கால வெற்றிகளும் பாண்டியர் கடல் மரபு தமிழகத்தில் பாண்டியராட்சி மூலமாகவோ வேறு காரண மாகவோ முற்றிலும் அழியாது நிடித்திருந்தது என்பதைக் காட்டு கிறது. சங்கர நமினார் கோயில் போர் : திருக்குற்றாலப் போர் : முதலைக்குளப் போர் : வீரகேரளம்புதூர்ப் போர் : (1422 - 1463) சங்கர நயினார் கோயில், திருக்குற்றாலம், முதலைக்குளம், வீர கேரளம் புதூர் முதலிய இடங்களில் இலங்கை வெற்றி களுக்குரிய அரிகேசரி பராக்கிரம பாண்டியன் தன் பகைவர்களை வென்று புகழெய்தினான் என்று அவன் கல் வெட்டுக்கள் சில பொதுவாகக் கூறுகின்றன. திருக்குற்றாலப் போர் சேரனை எதிர்த்துவென்ற போராகத் தெரிவதால், மற்றவையும் அதே அரசனை வென்ற போர்களாக இருக்கக் கூடும் என்று கூறலாம். பாமினிப் பேரரசில் உட்கட்சிப் பிளவு அகமதுஷாவுக்குப் பின் அவன் மூத்த புதல்வனான இரண்டாம் அலாவுதீன் (1436 - 1458) பாமினிப் பேரரசனான, அவன் 1437 -ல் கொண்கானக் கரையின் பல பகுதிகளை வென்று அடக்கிப் பேரரசை விரிவுபடுத்தினான். இச்சமயம் சங்கமேசுவரா அரசன் தன் புதல்வியை அவனுக்கு மணம் செய்து கொடுத்தான். இம்மனைவி யிடம் மன்னன் கொண்ட மட்டற்ற பற்றுதலால் காந்தேஷ் அரசன் நாசிர்கான் புதல்வியாகிய முதன் மனைவியை அவன் புறக்கணிக்க நேர்ந்தது. அவன் பகைமை இச்சமயம் நாட்டு முஸ்லிம்கள் (தெக்காணி)கட்சி, அயல் முஸ்லிம் கட்சி என்ற உட்கட்சி வேறு பாட்டை வலுப்படுத்திற்று. இது நாளடைவில் பாமினியின் வாழ்வையே குலைக்க ஏதுவாயிற்று. இரேய்ச்சூர்ப் போர் ஐ : 1443 பாமினிப் பேரரசன் இரண்டாம் அலாவுதீன் இரண்டு தடவை விசய நகரத்துடன் மோத நேர்ந்தது. முதல் தடவை திறை நீண்ட நாள் தரப்படாததை ஒட்டி அவன் தன் இளவலான முகமதை விசய நகரத்துக்கு அனுப்பினான். ஆனால், முகமது நேசமுறையிலேயே விசயநகரப் பேரரசன் இரண்டாம் தேவராயனுடன் தொடர்பு கொண்டு திறைப் பணத்தை வெற்றிகரமாக மீட்டுக் கொண்டு வந்தான். ஆனால், இச்செயலால் அவன் செருக்கடைந்து ஆட்சியில் பாதி தனக்கு வேண்டுமென்று கோரலானான். அலாவுதீன் அவனை எளிதில் அடக்கிப் பின் அவன் கிளர்ச்சிப் போக்கை மன்னித்து அவனை இரேய்ச்சூரின் மாகாண ஆட்சியாளன் ஆக்கினான். பாமினிக்கும் விசய நகருக்கு மீட்டும் பகைமை ஏற்பட்ட தற்கு விசயநகரின் உள்நாட்டு நிலைகளை அலாவுதீன் அறிந்து அது வலிமை குன்றியிருந்தது என்று நினைத்ததே காரணம் ஆகும். பேரரசன் தேவராயனைத் தாக்கிக் கொலை செய்யப் பேரரசன் தம்பியே முனைந்திருந்தான். இம் முயற்சி வெற்றி பெறவில்லை யானாலும், அதனால் உள்நாட்டு அரசியல் சூழலில் பெருங் கல கலப்பு ஏற்பட்டது. பேரரசன் அரண்மனையிலே இச்சமயம் தங்கியிருந்த பாரசீக மன்னன் தூதன் அப்துர்ரசாக் இம்முயற்சியின் போது பேரரசனுடனேயே இருந்தான். அலாவுதீன் இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு வலிந்து பூசல் வளர்க்க எண்ணினான். ஆகவே கொடுத்ததிறை போதா தென்று மேலும் ஏழு லட்சம் வராகன் கோரினான். தேவராயன் இது கேட்டு உடனே போர்க்கெழுந்தான். இரேய்ச்சூரில் நடைபெற்ற இப்போரே முதல் இரேய்ச்சூர் போர் ஆகும். இப்போரில் தேவராயன் படைத்தலைவன் தமிழ கத்தில் தலைவனாயிருந்து இலங்கைப் புகழ்பெற்ற இலக்கண்ண தண்ட நாயகனே. பாமினிப் பேரரசன் படைத் தலைவனா யிருந்தவன் மாலிக் அல்கிஜார். போர் விசயநகரத்தின் பக்கம் வெற்றியாகவே தொடங்கிற்று. இலக்கண்ண தண்டநாயகன் குல்பர்க்காவைச் சூழ்ந்த இரேய்ச்சூர் மண்டலப் பகுதியில் புகுந்து முட்கல் கோட்டையைக் கைப் பற்றினான். இரேய்ச்சூர், பங்காப்பூர் கோட்டைகளை முற்றுகை யிட்டான். பீஜப்பூர் வரை அவன் படைகள் பாமினிப் பேரரசின் ஆட்சிக்குரிய பகுதிகளைத் தீக்கிரையாக்கின. போரின் போக்குக்கண்ட பாமினிப் படைத் தலைவன் மாலிஆல் திஜார் கிளர்ந்தெழுந்து இரேய்ச்சூர், பங்காப்பூர் முற்றுகைகளை உடைத்தெறிந்தான். இதன்பின் இரேய்ச்சூர் அருகே நடைபெற்ற கடும் போரின் மூன்று தாக்குதல்களில் முதல் தாக்குதல் விசயநகரத்தின் பக்கமே வெற்றிதந்தது. ஆனால், இரண்டாவது மூன்றாவது தாக்குதல்களில் பாமினிப் படைகளின் பக்கமே வெற்றி சாய்ந்தது. பேரரசன் தேவராயனின் மூத்த புதல்வனான மல்லிகார்சுனன் போரில் காயமுற்றதுடன் எதிரி களால் சிறைபிடிக்கப் பட்டான். போரில் பாமினிப் படையின் பக்கமும் இரண்டு தலைவர்கள் சிறைப்பட்டனர். ஆயினும் பாமினிப் படைகள் வெற்றியடைந்ததே விசயநகரப் படைகளையும் மக்களையும் சுழன்று சுழன்று தாக்கி, இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர் களைப் படுகொலைக்காளாக்கின. தேவராயன் பாமினிப் பேரரசுக்குப் பணிந்து போர் தொடங்கு முன் கேட்ட மிகுதித் திறைப்பணத்தையே கொடுக்க வேண்டிய தாயிற்று. இரண்டாம் தேவராயன் படைத்துறைச் சீரமைப்பு இரண்டாம் தேவராயன் இஸ்லாமியரையும் பேரளவில் படை வீரராகச் சேர்த்துக் கொண்டான். படையில் சேரும் வீரர் மன்னருக்குக் கடமை யுறுதிமொழி எடுக்கும் சமயம் தத்தம் திருநூலையே பயன்படுத்த முடியமாதலால் இந்த இஸ்லாமிய வீரர் உறுதிமொழிக்காகப் படைத்துறை மனையில் நிலையாகவே ‘குரான்’ ஏட்டை வைப்பதற்கு ஏற்பாடு செய்தான். தமிழர் பண்பார்ந்த நோக்குப்படியும் தற்கால நாகரிகப் பண்பின் நோக்குப்படியும் சமய வேறுபாடு நோக்காத இந்தச் செயல் பாராட்டக் கூடியதேயாகும். ஆயினும் சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் சோழப் பெரும் பேரரசுக் காலம் வரையிலும் தமிழகத்திலிருந்த சமரசப்பண்பு அந்நாளில் தென்னகப் பொதுவாழ்வில் சீர்குலைந்திருந்தது. ஆகவே தேவராயனின் சீரமைப்பு காலங் கடந்த நல்ல உயரிய செயலாயினும், திருடர் ஊருக்குத் திருடாமை குற்றமாய் விடுதல் போல, ஒரு குறைபாடாகவே பின்னாளில் செயற்பட நேர்ந்தது. முஸ்லிம் வீரரும் படைத்தலைவரும் முஸ்லிம் அரசர் பக்கமும் அதுவல்லாத வீரரும் தலைவரும் அதுவல்லாத பக்கமும் மாறிக் கடமைப் பகை செய்யும் போக்கை 16 முதல் 18-ம் நூற்றாண்டு வரை மிகுதியாகக் காண்கிறோம். இன்று கூட வடதிசைச் சிந்து கங்கை வெளியின் தேசியத்தின் போக்கு இதுவாகவே இருந்து வருகிறது. உலகறியச் சமயஞ்சாரார் அரசியல் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ளமறியச் சமயஞ் சார்ந்த அரசியலாகவே அமைகின்றது. பெருந்தன்மையான செயல் செய்து அழிந்தவர் அந்நாளில் முஸ்லிமல்லாத பேரரசர் மட்டுமே என்றும் கூற முடியாது. தென்னக இஸ்லாமிய அரசர் எல்லோருமே - பீஜப்பூர் கோல கொண்டா மன்னர் கால முதல் ஹைதர், திப்பு வரை இத்தேசியப் பண்பைப் பின்பற்றியே கறைப் பட்ட ஒரு தேசிய வாழ்விற் கேடுற்றனர். தென்னாட்டு அரசியல் வாழ்வு மன்னரின் தேசியப் போக்குக் குப் பிற்பட்ட முதிராத் தேசியமாகவும் சமயப் பூசலின் கறைபட்ட தேசியமாகவுமே இருந்ததென்பதை இது காட்டுகிறது. ‘தவமும் தவமுடையார்க்கேயாகும்’ என்ற பழமொழிக் கிணங்க. பண்பும் பண்புடைய கால இடச் சூழலமைந்தே பண்பார்ந்த வெற்றி தரும் என்னலாம். விசயநகரப் பேரரசர் வண்மை விசய நகரப் பேரரசர் காலத்தில் தெலுங்கிலக்கியம் தழைத்தது. சிறந்த கவிஞர் அவைப் புலவராய் இருந்தனர். இரண்டாம் தேவராயன் காலத்தில் அவைப் புலவரை விஞ்சிப் புகழ் நாட்டிய கவிஞர் சிரீநாதரை அரசன் ‘தங்காக்கள்’ அதாவது பொன் காசுகளால் திருமுழுக் காட்டினான் என்று அறிகிறோம். கலிங்கப் பேரரசின் தொடர்ந்த வளர்ச்சி விசயநகரப் பேரரசன் இரண்டாம் தேவராயனுக்குப் பின் அவன் மூத்த புதல்வன் இரண்டாம் தேவராயன் ஓராண்டு ஆட்சிக் குள் மாண்டான். அவனையடுத்து வந்த பேரரசன் மல்லிகார்ச்சுனன் (1447 - 1465) திறமையற்றவனும் சோம்பேறியாக இன்பவாழ்வில் அழுந்தியவனுமாக இருந்தான். இதன்பயனாக அடுத்து நாற்பது ஆண்டுக் காலத்துக்குச் சாளுவ நரசிம்மனால் அது மீட்டும் உயரும் வரை விசயநகரப் பேரரசின் மதிப்பே மிகத் தாழ்ந்து விட்டது. தென்னகத்தின் அரசியல் மையம் இத்தறுவாயில் சில காலம் இரேய்ச்சூர் மண்டலத்திலிருந்து விலகிக் கிழக்குக் கரையில் வட பகுதியாகிய ஆந்திரப் பகுதிக்கு மாறிற்று. இங்கே பாமினிப் பேரரசையும் புதிதாகத் தழைத்துவந்த ஒரிசாவின் கஜபதிப் பேரரசையும் தவிர மற்ற அண்டை அயல் அரசுகள் யாவும் வலிகையற்ற னவாகவே இருந்தன. இந்தச் சூழ்நிலையை இருவரும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினர். ஆனால், இச்சமயம் அத்துணிவு கஜபதிப் பேரரசன் கபிலேசுவரனுக்கு மட்டுமே இருந்தது. இராச கொண்டாவிலிருந்து கபிலேசுவர கஜபதியால் துரத்தப்பட்ட வேலம மரபினர் கர்னூல் மாவட்டத்திலுள்ள வேலு கோட்டில் புதிய தாயகம் அமைத்துக் கொண்டிருந்தனர். கபிலேசுவர கஜபதி போரைத் தொடர்ந்து நடத்தி 1454-க்குள் இராசமகேந்திரவரம், கொண்ட வீட்டு ஆட்சிப் பகுதிகள் அத்தனையும் கைப்பற்றினான். அத்துடன் அமையாமல் அவன் தன் வெற்றிகளைக் கர்நூல் வரைக்கும் சிரீசைலம் வரைக்கும் கொண்டு சென்றான். பின் அவன் தெற்குக் கிழக்காகத் திரும்பி 1463-க்குள் நெல்லூர்க்கருகிலுள்ள உதயகிரி, காஞ்சீபுரம், திருச்சினாப்பள்ளி ஆகிய இடங்களைத் தாக்கிக் கொள்ளை யிட்டான். தமிழக வெற்றிகள் நிலைக்கவில்லையானாலும் தெலுங்கு நாடு முழுவதும் உள்ளடக்கிய கஜபதியின் வெற்றிகள் அவன் பேரரசின் பகுதியாக அமைந்து விட்டன. கந்தார்ப் போர்: (1461 - 1463) பாமினிப் பேரரசன் இரண்டாம் அலாவுதீனுக்குப் பின் அவன் மகன் ஜாலிம் (அதாவது கொடியோன்) ஹுமாயூனும் (1458 - 1461) அவனுக்குப் பின் அவன் புதல்வர் நிஜாம்ஷாவும் (1461 - 1463) மூன்றாம் முகமது லஷ்கரியும் (1463 - 1482) ஆண்டனர். ஹுமாயூன் காலத்தில் அயலார்கட்சி ஆதரவு பெற்றது. பீசப்பூர் மாகாணத் தலைவனும் உள் நாட்டமைச்சனுமான் மகமத் கவான் அதன் தலைவனாக விளங்கினான். நாட்டுக் கட்சியின் இரு கிளர்ச்சிகள் ஹுமாயூனால் குருதிக் கொடுமையுடன் அடக்கப் பட்டன. நிஜாம்ஷா, தவிசேறும் சமயத்திலே 8 வயதும், இறக்கும் போது 10 வயதுமே உடையவன். திறமைமிக்க மாதரசியாகிய அவன் தாயே குவாஜா ஜஹான் என்ற மாலிக்ஷா துர்க், முகமது கவான் ஆகியோர் உதவியுடன் ஆண்டு வந்தான். ஒரிசாவும், தெலுங்காணமும் இச்சமயம் பாமினி மீது படையெடுத்து முறிவு பெற்றன. ஆனால், மாளவ அரசன் பாமினி மீது படையெடுத்துக் கந்தார்ப் போரில் பாமினிப் படைகளை முறியடித்தான். ஆனால், குஜராத் அரசன் முகமது பர்கஸாவின் உதவி கோரப்பட்டதே மாளவப் படைகள் வெளியேறின. மேற்குக் கரைக் கொள்ளைக்காரர் தொல்லை: (1463 82) மூன்றாம் முகமது கொண்கானக் கரை மீது படையெடுத் தான். மக்கா நகருக்குப் புண்ணிய யாத்திரைக்காகச் செல்லும் முஸ்லிம்களை இக்கரையோரத்திலிருந்து செல்லும் கடற் கொள்ளைக் காரர்கள் கொள்ளையடித்து வந்தனர். இதனைத் தடுக்கவே முகமது இம்முயற்சியில் ஈடுபட்டான். பல நடவடிக்கைகளின் பின் விசய நகரத்தின் கீழ்திசைத் துறைமுக நகரமான கோவாவை அவன் கைப்பற்றினான். கஜபதி அரசர் சாய்வு : பாமினியின் சரிவு விசய நகர மறுமலர்ச்சி விசயநகரப் பேரரசன் மல்லிகார்ச்சுனனுக்குப் பின் அவன் சிற்றப்பன் புதல்வனான இரண்டாம் விரூபாட்சன் (1465 - 1485) தவிசேறினான். முந்திய பேரரசனைவிட அவன் திறமையிலும் குறைந்தவன். அவனைவிடப் பன்மடங்கு சோம்பல், இன்ப வாழ்வில் ஆழ்ந்தவன். அவன் பெயரளவிலேயே பேரரசனா யிருந்தான். பேரரசு முற்றிலும் ஒற்றுமை குலைந்தேயிருந்தது. ஆயினும் ஆற்றல் மிக்க மாகாணத் தலைவர்களே தத்தம் தனி யாற்றல் வளர்த்துப் பேரரசு சரியாமல் காத்தனர். இவர்களுள் பேரரசின் நடு ஆட்சியையும் கிழக்கு மாகாணமாகிய சந்திரகிரி இராச்சியத்தையும் ஆட்சி செய்த சாளுவநரசிம்மனும்; திருச்சினாப் பள்ளி, தஞ்சை, புதுக்கோட்டைப் பகுதிகளை ஆண்டுவந்த சாளுவ கோப திம்மண்ணனுமே முக்கிய மானவர்கள். சாளுவநரசிம்ம னிடம் துளுவ மரபைச் சேர்ந்த ஈசுவரன் என்ற ஒரு திறமையான படைத் தலைவன் துணை வலுவாய் இருந்தான். பின்னாளைய துளுவ மரபின் மூல முதல்வன் இவனே. இரண்டாம் விருபாட்சன் ஆட்சி கிட்டத்தட்டச் சாளுவ நரசிம்மன் ஆட்சியாக வேயிருந்தது. விரூபாட்சன் ஆட்சிக்குப் பின் அவனே ஆட்சியைக் கைப்பற்றி விசய நகரத்தின் இரண்டாம் மரபான சாளுவ மரபின் முதல்வனானான். சங்கம மரபு பெரிதும் விரூபாட்சனுடனே முடிவுற்றது. கபிலேசுவர கஜபதிக்குப் பின் ஓட்டப் பேரரசு என்று அழைக்கப் பட்ட ஒரிசா அல்லது கலிங்கப் பேரரசு சீரழிவுற்றது. ஹம்பீர், புருஷோத்தமன் என்ற இருவரிடையே அரசுரிமைப் போர் எழுந்தது. கீழ்திசையில் சந்திரகிரி மாகாண ஆட்சியாள னாயிருந்து நடு அரசியலையே கைப்பற்றியிருந்த சாளுவ நரசிம்மன் தொடக்கத்தில் இதனால் பாதிக்கப்பட்டான். ஏனென்றால் பாமினியின் சார்பாக மூன்றாம் முகமதுவின் படைத்தலைவன் மாலிக் ஹசன் ஹம்பீருக்கு உதவிசெய்து அவனையே கஜபதி அரசில் தவிசேற்றினான். ஆனால், விரைவில் சாளுவ நரசிம்மனும் அவ்வரசுரிமைப் போரைப் பயன்படுத்திக் கொண்டு, புருஷோத்தமனுக்கு ஆதரவளிக்கத் தொடங்கினான். இந்தச் சாக்கிலேயே அவன் எளிதாக உதயகிரிக் கோட்டையைப் பிடித்துக் கொண்டான். இதே சமயத்தில் தமிழகத் திலே அவனுக்குகெதிராகக் கிளர்ச்சி எழுந்தது. அப்போதுகூடத் தளராமல் அதை விரைவில் சென்று அடக்கி விட்டு மீண்டு வந்து கோதாவரி வரையுள்ள கீழ் கரைப்பகுதி முழுவதையும் வென்றடக் கினான். 1471-ல் கொண்ட வீடும் மசூலிப் பட்டணமும் அவன் கைப்பட்டன. அதன் பின் அவன் உதவியால் புருஷோத்தமன் வெற்றிபெற்றான். ஆனால், அரசியல் திறமையுடைய சாளுவ நரசிம்மன் எதிரி ஹம்பீரனை அழித்து விடவில்லை. புருஷோத்த மனுடன் அவனை இணங்குவித்து அவனுக்குக் கும்மிடியை வழங்கிப் புருஷோத்தமன் கீழிருந்து ஆண்டு வரச் செய்தான். மேல் திசையில் விசய நகரப் பேரரசன் விரூபாட்சனின் திறமைக் கேட்டால், கோவா, சௌல், தபோல் முதலிய கரையோரத் துறைமுகங்கள் பாமினிப் படைகளின் கைவசமாயின. விரூபாட்சன் பெல்காம், பங்காப்பூர் ஆண்ட அரசனைக் கோவாவைப் பிடிக்கும் படி தூண்டினான். ஆனால், இதனால் ஏற்பட்ட பலன் அவன் எதிர் பாராத ஒன்றாயிற்று. மூன்றாம் முகமது தன் அமைச்சன் முகமது கவான் உதவியுடன் அவ்வரசனை வென்று பங்காப்பூரை அவனிட மிருந்து பறித்துப் பாமினிப் பேரரசுடன் சேர்த்துக் கொண்டான். 1476-ல் கொண்ட வீடு கிளர்ந்தெழுந்து தனியாட்சி யமைத்துக் கொண்டது. கும்மிடியை ஆண்டஹம்பீரின் புதல் வனையே அது ‘தட்சிண கபிலேசுவர ஹம்பீர மகா பாத்திரன்’ என்ற பட்டத்துடன் அரசனாக ஏற்றது. இவ்வாறு கலிங்கக் கஜபதிப் பேரரசு ஒரு தலைமுறைக்குள் மீண்டும் குறுகிற்று. விசய நகரத்தின் கீழ்திசை அரசியல் செல்வாக்கைக் குறைக்கும் முறையில் மூன்றாம் முகமது அப்பேரரசின் கீழ் மாகாணங்கள் வழியாகத் தெற்கே காஞ்சிபுரம் வரை சென்று பெரும் பொருள் கொள்ளையிட்டான். ஆனால், அக்கொள்ளைப் பொருளுடன் திரும்பி வரும் வழியில் சாளுவ நரசிம்மன் அக்கொள்ளைப் பொருளை யெல்லாம் அவனிடமிருந்து தட்டிப் பறித்துக் கொண்டான். மகமது கவான் பாமினிப் பேரரசின் பேரெல்லையைப் பல மாகாணங்களாகப் பிரித்து நல்லாட்சிக்கான ஏற்பாடுகளை யெல்லாம் செய்துவந்தான். ஆனால், அவனுக்கும் அவன் எதிரி யாகிய மாலிக் ஹசனுக்கும் ஓயாமல் போட்டிப் பூசல்கள் ஏற்பட்டன. அரசனும் அவன் தாயும் கவானையே ஆதரித்ததனால் மாலிக்ஹசன் அரசனைக் கொல்லும் சதியில் ஈடுபட்டான். இதில் அவன் பிடிபட்டு அயல் கட்சித் தலைவனான கவானால் தூக்கிலிடப் பட்டான். பாமினிப் பேரரசன் மூன்றாம் முகமதுவுக்குப் பின் மாமூது (1482 -1518), அவன் நான்கு புதல்வர்கள் (1518 -1527) ஆகியோர் ஆட்சியுடன் பாமினிப் பேரரசு அழிந்தது. அகமதுநகராண்ட மாவிக் அகமது நிஜாம் உல்முல்கும், பீஜப்பூர் ஆட்சியாளனான யூசுப் அடில்கானும் பேரார் ஆட்சித் தலைவனான இமத்உல்முக்கும் 1849 -லேயே தன்னாண்மை பெற்றுத் தனியாட்சி தொடங்கினர். கோல கொண்டா ஆண்ட குதுப் உல்முல்க் 1512-லும் பீடார் ஆண்ட பாரீத் உல்முல்க் 1527-லும் தன்னாட்சி நிறுவினர். இவ்வாறு 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாமினிப் பேரரசு ஐந்து தனி யரசுகளாகச் சிதறிற்று. ஆயினும் அடுத்த இரண்டு நூற்றாண்டு களிலும் இந்த ஐந்து அரசுகளும், சிறப்பாக பிஜப்பூர், கோல் கொண்டா, அகமது நகர் என்ற மூன்று அரசுகளும் வல்லரசு களாகவே விளங்கின. பாமினி வீழ்ச்சியடைந்த அதே சமயத்தில் விசய நகரப் பேரரசு தலை தூக்கிப் புதுவாழ்வு நோக்கி வளரத் தொடங்கிற்று. விசய நகரப் பேரரசனாகப் பெயரளவிலேயே விளங்கிய இரண்டாம் விரூபாட்சன் ஆட்சியிறுதியுடன், அப்பேரரசின் முதல் ஆட்சி மரபான சங்கம மரபு முடிவுக்கு வந்தது. சாளுவ நரசிம்மனே (1486 - 1491) புதிய சாளுவமரபின்முதற் பேரரசனானான். அவனுக்குப் பேருதவியாயிருந்த துணைவன் துளுவ மரபினனான ஈசுவரனே. அவன் மகன் நரச நாயகனே அவனது ஒப்பற்ற படைத் தலைவனானான். சாளுவ நரசிம்மன் தன் ஆட்சியிறுதியில் தன் மக்கள் திருமலை என்ற திம்மன், தம்மராயன் என்ற இம்மடி நரசிம்மன் ஆகியவர்களை நரச நாயகன் பாதுகாப்பிலேயே விட்டுச் சென்றான். ஆனால், திருமலை 1491-லேயே கொலை யுண்டான். இம்மடிநரசிம்மன் 1491 முதல் 1505 வரை பெயரளவில் வாழ்ந்தாலும், சாளுவ நரசிம்மனுடனேயே சாளுவ மரபை ஒழித்து நரச நாயகன் பேரரசின் மூன்றாம் மரபாகிய துளுவ மரபின் முதல்வனானான். சாளுவ மரபில் மறுமலர்ச்சியுற்ற விசய நகரப் பேரரசு உச்சநிலை எய்தியது இத்துளுவ மரபுக் காலத்திலேயேயாகும். பேரரசைக் கட்டமைத்த பெருஞ் சிற்பிகள்: -சாளுவ நரசிம்மனும் - நரச நாயகனும் தென் பேரரசான விசய நகரப் பேரரசைத் தென்னகத்தின் புகழ் சிறந்த முதற் பேரரசாக்கிய மாவீரர் சாளுவ நரசிம்மனும் நரச நாயகனுமே. இரண்டாம் விரூபாட்சன் ஆட்சியிலே பாமினிப் பேரரசைப் போலவே சரிய இருந்த விசய நகரப் பேரரசை ஓரளவு தடுத்து நிறுத்திய பெருமை தமிழக ஆட்சியாளன் சாளுவ கோப திம்மனுக்கும், சந்திரகிரி ஆட்சியாளனாயிருந்த சாளுவ நரசிம்மனுக்குமே உரியது. ஆனால், பேரரசின் பொறுப்பேற்ற பின் சரிவின் வேகமும் பெரிதாயிற்று. சாளுவ நரசிம்மன் பொறுப்பும் பெரிதாயிற்று. முதலாவதாக, மேல்திசையில் கோவா, தபோல் ஆகிய துறைமுகங்களை விசயநகரம் இழந்தது. அதன் உயிர் நிலையையே பாதித்தது. இவற்றின் வாணிக வளம் பேரரசின் செல்வத்துக்கு மட்டும் காரணமாக இல்லை. அவற்றின் மூலம் இறக்குமதியாகும் குதிரைகள் அதன் போர் வலிமைக்கு இன்றியமையாததா யிருந்தன. ஆனால், சாளுவ நரசிம்மன் மேல் கரையிலேயே சற்றுத் தெற்கிலுள்ள ஹோனாவர், பட்டகுலம் (பட்கல்), பாகனூர், மங்களூர் முதலிய துறைமுகங்களிலிருந்து புதிய குதிரை வாணிக நெறிகளை உண்டு பண்ணினான். பேரரசின் உயிர் மூச்சு இவற்றால் மீண்டும் ஓடத் தொடங்கிற்று. பேரரசன் கீழ்திசையிலும் நடுப்பகுதி யடுத்தும் பல பெருந் தலைவர்கள் சாளுவன் வன் பிடியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். இவர்களில் மைசூர் அடுத்த உம்மத்தூர்ப் பாளையக் காரரும், கடப்பையிலுள்ள பேரணிப் பாட்டுச் சம்பேதரும் முனைப்பானவர்கள். இவர்களைச் சாளுவ நரசிம்மன் ஓரளவு சமாளிக்க முடிந்ததானாலும், வடகிழக்கில் மீண்டும் வளர்ச்சி பெற்றுவிட்ட கஜபதி மரபுக்குரிய புருஷோத்தமன் பாமினிப் பேரரசின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கிழக்குக்கரை முழுவதும் மீண்டும் வென்றான். நெல்லூரை அடுத்து குண்ட்லகம்மா ஆற்றங் கரை வரையும் அவன்கைக் கொண்டதுடன் உதயகிரிக் கோட்டையையும் கைப்பற்றினான். பேரரசன் நரசிம்மனே புருஷோத்தமன் கை வசமாகிச் சிறைப்பட நேர்ந்தது. உதயகிரியையும் கீழ்திசை வெற்றி களையும் எதிரிக்கு விட்டுவிட ஒப்புக் கொண்ட பின்பே அவன் விடுதலை பெற முடிந்தது. இரேய்ச்சூரையும் உதயகிரியையும் மீட்டும் கைப்பற்றுவதே சாளுவ நரசிம்மனின் தீராக் கடைசி ஆர்வமாய் இருந்தது. தன்னால் தன் வாழ்வில் செய்து முடிக்க முடியாத இச்செயலை நிறை வேற்றும் படி அவன் தன்வீரத்துணைவன் நரச நாயகனிடம் சாப் படுக்கையில் வேண்டிக் கொண்டான். நரசநாயகன் (1491 - 1503) ஆட்சியின் தொடக்கத்திலேயே எளிதில் இரேய்ச்சூரையும் முட்களையும் கைப்பற்றும் வாய்ப்பும் நம்பிக்கையும் எழுந்தன. அச்சமயம் பாமினி அரசுகளில் மைய அரசில் பெயரளவிலே பேரரசனாயிருந்த மாமூதின் அமைச்சனா யிருந்தவன் பீடார் அரசின் முதல்வனான காசிம் பரீத் ஆவன். அவன் வலிமை மிக்க பிஜப்பூர்த்தலைவனும் பிஜப்பூர் அரசின் முதல்வனுமான யூசூப் ஆதில்ஷாவை எதிர்த்துப் போராடி வந்தான். இப்போரில் தன்னுடன் சேர்வதாயிருந்தால் இரேச்சூர், முட்கல் கோட்டைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று காசிம்பரீது நரச நாயகனுக்கு ஆவலூட்டினான். நரசநாயகன் இப்போது பிஜப்பூரைச் சார்ந்த பகுதியான இரேய்ச்சூர் மண்டலத்தைத் தாக்கி அழித்து. இரேய்ச்சூர் முட்கல் கோட்டைகளைப் பிடித்தான். ஆதில்ஷா அவற்றைத் திரும்பவும் கைப்பற்ற முடியாமல் மாண்ட்லிக் கோட்டையில் பதுங்கினான். ஆனால், பணிந்து விடுவதாகப் பாவித்து நரச நாயகனையும் எழுபதுக்கு மேற்பட்ட தோழப் பெருமக்களையும் அழைத்துச் சூழ்ச்சியால் கொன்றொழித்தான். இச்செயலால் இரண்டாண்டுகள் மீட்டும் பேரரசுக் குழப் பத்தில் ஆழ்ந்தது. 1505-லேயே நரச நாயகனின் மூத்த புதல்வன் வீர நரசிம்மன் அல்லது இம்மடி நரசிம்மன் தவிசேற முடிந்தது. நரசநாயகனின் தமிழகத் திருஎழுச்சி : 1496 தன் குறுகிய ஆட்சியிடையே கூட நரசநாயகனுக்குத் தமிழகக் காரியங்களைக் கவனிக்க நேரமிருந்தது. ஏறத்தாழ 1496-ஆம் ஆண்டில் திருச்சி தஞ்சை ஆண்ட தலைவன் கோனேடி ராசன் கொடுங் கோன்மை குறித்துச் சீரங்கத்து வைணவர்கள் குறைகிளர்ந்தனர். அவர்கள் குறை தீர்ந்தபின் நரசநாயகன் குமரி முனை வரை சென்று பேரரசின் ஆணையை நிலை நாட்டினான். சேர சோழர்களுக் கிடையே இச் சமயம் ஏற்பட்ட பூசலைத் தணித்தான். பாண்டியன் மானபூஷனை நரசநாயகன் இச்சமயத்தில் போர் செய்து அடக்க வேண்டி வந்தது என்று அறிகிறோம். பராக்கிரம் பாண்டியனுக்குப் பின் பாண்டியர் வளர்ந்து ஏற்பட்ட சூழலைப் பயன்படுத்தித் தன்னாட்சிக்குக் கிளர்ந்து வந்தனர் என்பதையும் இது காட்டுகிறது. நரசநாயகன் அடக்கிய பின்னும் தமிழகத்திலும் கேரளத்திலும் சிற்றரசரும் மாகாணத்தலைவரும் பின்னாட்களிலும் அடிக்கடி தொல்லை விளைவித்தே வரலாயினர். சீரங்கப்பட்டணப் பகுதியில் ஹென்ன மரபுத் தலைவனான நஞ்சராசன் நரசன் ஆட்சித் தொடக்கத்திலேயே கிளர்ச்சியிலீடுபட்டிருந்தான். நரசநாயகன் காவிரி மீது பாலம் அமைத்துச் சென்று சீரங்கபட்டிணத்தைத் தாக்கி அவனை அடிமைப்படுத்தினான். மேல் கரைக் கரையோரமாகக் கோகர்ணம் வழியே நரச நாயகன் 1497-ல் திரும்பவும் பேரரசின் தலைநகர் சென்றான். புருஷோத்தம கஜபதி 1496-ல் இறந்தான். அதன்பின் பிரதா பருத்திரன் ஆட்சிக்குவந்து, தென்கிழக்குத் தென்னகப் பகுதியைக் கைப்பற்ற மீண்டும் முயற்சிகள் செய்தான். ஆனால், இவை இயலா முயற்சிகளாயின. பெயரளவில் கடைசிச் சாளுவ மரபினனான இம்மடி நரசிம்மன் 1505-ல் இறந்த பின் நரசநாயகனின் மூத்த மகன் வீர நரசிம்மன் அல்லது இம்மடி நரசிம்மன் (1505 - 1509) பேரரசனானான். விசயநகரப் பேரரசின் பொன்னூழி: (1500 - 1565) விசயநகரப் பேரரசின் பொன்னூழி அதன் மூன்றாம் மரபின் ஆட்சிக் காலமே என்னலாம். அது வீர நரசிம்மன் அல்லது இம்மடி நரசிம்மனுக்குப் பின் வந்த கிருஷ்ண தேவராயன் (1509 - 1526) ஆட்சியிலேயே உச்சநிலை எய்தி, அவனுக்குப் பின் அச்சுததேவ ராயன் (1530 - 1542) ஆட்சியிலும், அதன் பின் பெயரளவில் துளுவமரபின் கடைசி அரசரான முதலாம் வேங்கடன் (1542), சதாசிவன் (1542 - 1572) ஆகியோர் பெயரால் ஆட்சி செய்த அரவீட்டு மரபு முதல்வன் இராமராயன் (1542 - 1566) காலத்திலும் வீழ்ச்சியுறாதிருந்தது. இப்பொன்னூழியின் பெருஞ் சிற்பிகள் சாளுவ நரசிம்மனும் துளுவநரசநாயகனுமேயானாலும், அதைத் தொடங்கி வைத்த பெருமை நரசநாயகனின் முதல் புதல்வன் இம்மடி நரசிம்மனுடைய தேயாகும். அடுத்த இரு பேரரசர்களும் அவன் உடன் பிறந்தார்களே யாவர். அரவீடு மரபின் முதல்வன் இராமராயன் உயர்பதவி பெற்றுத் தன்பெரும் சேவையைத் தொடங்கியது இம்மடிநரசன் காலத் திலேயே. நயவஞ்சகனான அடோனிக் கோட்டைத் தலைவன் உதவியுடன் பீஜப்பூர் சுல்தான் யூசுப் ஆதில் ஷா (1490 - 1510) துங்கபத்திரை கடந்து கர்நூலைக் கைப்பற்ற முயன்றபோது, இராமராயனும் அவன் மகன் திம்மனும் ஆதில்ஷாவை முறியடித்துத் துரத்தியதுடன், அடோனியின் நயவஞ்சகத் தலைவனையும் அழித்தனர். இச் செயல்களால் மகிழ்வுற்ற பேரரசன் இராமராயனுக்கே அடோனி, கர்நூல்கோட்டைகளை அளித்தான். இம்மடி நரசன் காலத்திலேயே போர்ச்சுகீசியர் கண்ணனூர்ப் பக்க மிருந்து கடற்கரையோரமாகத் தம் வாணிக, சமய, அரசியல் ஆட்சியைப் பரப்பி வந்தனர். இம்மடி நரசன் அவர்களுடன் நட்பாயிருந்ததுடன் தன்படைகளை மேலை முறையில் பயிற்று விப்பதற்குரிய உதவிநாடி அவர்களிடம் தூதும் அனுப்பினான். ஆயினும் பேர்ச்சுக்கீசிய ஆட்சித் தலைவனான அல்மேடா பட்கலில் ஒரு கோட்டை கட்ட இணக்கம் கோரிய போது, பேரரசன் இணக்கமும் அளிக்கவில்லை. மறுக்கவும் இல்லை. துளுவ மரபுப் பேரரசர் எல்லாரிடமுமே நாம் இந்தத் தேசிய எச்சரிக்கை நிலையைக் காண்கிறோம். தமிழகக் கடல் மரபுத் தொடர்பையும் மேல்கரைக் கடல் மரபுத் தொடர்பையும் மட்டும் அவர்கள் வளர்த்திருந்தால், அவர்கள் வடதிசை யரசுகளையும் வென்று, கீழ்திசை வாழ்வையே மாற்றியமைத்திருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை. படைத்துறையில் மட்டுமன்றி, பெருமக்களிடையேயும் பொது மக்களிடையேயும் வீரமரபு வளர்ப்பதில் பேரரசன் காட்டிய அக்கரை சிறிதன்று. அவர்களிடையே மற்போர் அரங்கப் போட்டிகளை வளர்த்தும், அதில் வெற்றி யடைந்தவர்களுக்கு அவர்கள் அவாவும் அழகியரை மணக்கும் உரிமையளித்தும் அவன் இம்மரபை வளர்த்தான். அவன் ஆட்சி இறுதிப்பகுதியில் உம்மத்தூர் ஹென்ன மரபுத் தலைவன் மீண்டும் சீரங்கப்பட்டிணத்தில் கிளர்ச்சி தொடங்கினான். இதன் பயனாக இம்மடி நரசிம்மன் நடத்திய படையெடுப்பில் துளுநாடு நேரடி யாட்சியால் வலுப்படுத்தப் பட்டது. ஆனால், 3 மாதங்களுக்குப் பின்னும் சீரங்கப் பட்டண முற்றுகை முற்றுப் பெறவில்லை. பேரரசனும் அது முற்றுப் பெறாநிலையிலேயே புகழ் வாழ்வுற்றான். தீவானிப் போர்: 1509 பாமினிப் பேரரசின் இறுதிக் காலத்திலே அப்பேரரசின் மாகாணத் தலைவர்கள் பேரரசப் பரப்பை ஐந்து தனியாட்சி களாகப் பிரித்துக் கொண்டனர். இவர்களில் பீஜப்பூர் அதில்ஷா மரபினர் ஆட்சியிலும் (1490 - 1690), கோல்கொண்டா குத்ப்ஷாஹி மரபினர் ஆட்சியிலும் (1512 - 1672), அகமது நகர் நிஜாம் ஷாஹி மரபினர் ஆட்சியிலும் (1490 - 1595), பீடர் பாரீத்ஷாஹி மரபினர் ஆட்சியிலும் (1492 - 1609), பேரார் இமத் ஷாஹி மரபினர் ஆட்சியிலும் (1485 - 1568) வலிமை வாய்ந்த அரசுகளாகவே நிலவி வந்தன. இஸ்லாமியப் பேரரசை வீழ்த்திய இம்மன்னர்கள் எல்லோரும் ஒருங்கு சேர்ந்து ஒரு புதுவகையான இஸ்லாமிய ஒற்றுமையை 1501-ல் ஏற்படுத்தியிருந்தனர். ஆண்டுதோறும் ஒரு நாள் ஐந்தாம் மன்னரும் பெருமக்களும் படைவீரருடன் தலைமையிடமாகிய பீடாரில் கூடி, அத்திருநாளையே இஸ்லாமிய தெய்வீகத் திருப் போர் (ஜிஹாத்) நாளாக்கினர், இந்துப் பேரரசாகிய விசயநகரத்தை தாக்கி அந்த ஒரு திருநாளிலாவது ஆண்டுதோறும் இஸ்லாம் வளர்க்க அவர்கள் திட்ட மிட்டனர். பெரும்பாலும் விசய நகரப் பேரரசர் மட்டுமன்றி மற்ற ‘இந்து’ அரசர் பேரரசர் பலரின் மரபுப் பண்பு இத்தகைய இஸ்லாமியப் படையெடுப்பையும், மராட்டியப் படை யெடுப்பையும் பணிந்து பணம் கொடுத்துச் சமாளிப்பதென்பதே, ஆகவே இவ்ஏற்பாடு உண்மையில் கொலை, கொள்ளைக்கும் பணம் பறிப்புக்கும் உரிய ஓர் அரசியல் கூட்டு ஏற்பாடாகவே அமைந்தது. பேரரசன் கிருஷ்ணதேவராயன் ஆற்றிய தீவானிப்போர் இஸ்லாமிய அரசுகளின் இந்தக் கோழைத்தனமான திட்டத்துக்கு ஒரு சவுக்கடி கொடுத்தது. ‘தீவானி’ என்ற இடம் எதுவென்று திட்டவட்டமாகத் தெரிய வரவில்லை. ஆனால், அது பீடாரிலிருந்து இரேய்ச்சூர் வரும் வழியிலேயே இருந்திருக்க வேண்டும். ஏனெனில் தன் எல்லையணுக்கு முன்பே கிருஷ்ணதேவராயன் எதிரிகளை அவ்விடத்தில் சென்று தடுத்ததாக அறிகிறோம். கிருஷ்ண தேவராயன் போர் முறை கண்டு இந்திய மாநிலத்திலேயே ‘இஸ்லாம் மரபு’ முதல் தடவையாகத் திகைப்புற்றது. போர் தொடுக்காமலே வெருண்டோடுதல், ஒரு தாக்குதலுக்குள் கலைந்தோடுதல் ஆகிய மரபுகளையே அது பெரும்பாலும் ‘இந்து’ என்ற பெயரால் அறிந்திருந்தது. வீரத்துடன் போர் புரிந்து மாளும் மரபை அது இராஜபுத்திரர்களிடம் கண்டிருந்தது. வீரமும், சூழ்ச்சியும் கலந்த புதுப் போர் முறையை அது மராட்டியரிடம் பார்த்திருந்தது. ஆனால், விசயநகரம் கண்ட புதுப் படைத் திறமையும் கிருஷ்ண தேவராயனின் மரபில் வந்த புதுப் படைத் தலைமைத் திறமையும் அவர்கள் வீம்புத் தருக்கை அடக்கிவிட்டன. பாதுகாப்பற்ற நாடுகளை, சூறையாடும் தம் உரிமைக்கு எதிர்ப்பு இந்த ஒரு பேரரசில் எழுந்து விட்டது என்பது அவர்களுக்குப் புலப்பட்டது. இது தமிழர் பழைய மரபே -ஆனால், இஸ்லாமியக் குழுவின் படைகளின் தாக்குதல் தளர்ந்தது -அழிக்கும் வெறிகுழப்ப வெறியா யிற்று. ஐந்தரசர் படைகளுக்கும் தலைவனான பீஜப்பூர் மன்னன் யூசுப் ஆதில்கானே படுகாயங்கள் பலவற்றுக்கும் ஆளாய்க் குதிரைமீதிருந்து வீழ்த்தப்பட்டான். அதன் நலிவிலிருந்து அவன் மீள நெடுநாளாயிற்று -அழிவுப் பெருவிழாவின் தலைவன் திரும்ப அந்த அழிவுத் திருநாள் திட்டத்தை எண்ணவே இல்லை! எளிய வெற்றியும் கொள்ளையும் நாடிவந்த அந்தப் பெருமரபின் பெரு மக்கள் தலைவன் நிலை கண்டு ‘போர்க் கம்பளத்தை மடித் தெடுத்துக் கொண்டு பீடாரிலேயே சென்று படுக்க’ விரைந் தோடினர்! கோயில் கொண்டாப் போர்: 1509 தீவானிப் போரில் தோற்றோடிய படைகளை, சிறப்பாக அவற்றின் தலைவன் யூசுப் ஆதில்கான் படைகளை, கிருஷ்ண தேவராயன் பின்பற்றித் துரத்தினான். கோயில் கொண்டா அருகில் யூசுப் எதிர் தாக்குதல் போர்செய்து அதிலேயே மாண்டான். கிருஷ்ணதேவராயன் கோயில் கொண்டாவைக் கைப்பற்றித் தன் பேரரசில் சேர்த்த பின்னரே தலைநகரம் திரும்பினான். சோழப் பேரரசர் அரசியல் திட்ட மரபு தீவானிப்போரின் தொடக்கத்திலேயே போர்ச்சுகீசிய ஆட்சித் தலைவன் அல்புகர்க், இம்மடி நரசிம்மன் காலத்திலேயே கோரப் பட்ட பட்கல் கோட்டைகட்டும் உரிமையை மீண்டும் வற்புறுத்திக் கோரியதுடன், அதற்கு மாறாகப் போரில் விசய நகரத்தின் பக்கம் நின்று உதவுவதாகவும், குதிரைகளை எதிரிகளுக்கு விற்காது விசயநகரத்துக்கு மட்டுமே விற்பதாகவும் ஆவலூட்டினான். போர்ச்சுகீசியர் உதவியின் வலு அறிந்தும், குதிரைகளின் குத்தகை யின் மதிப்பறிந்தும் அவ்வுதவியையோ அதற்கு மாற்றீடான கோட்டை உரிமையையோ கிரஷ்ண தேவராயன் மறுக்கவில்லை -அளிக்கவில்லை. ஆனால், பீஜப்பூரிடமிருந்து போர்ச்சுகீசியர் கோவாவைக் கைப்பற்றிய பின் 1510 -ல் குதிரை வாணிகத் தனியுரிமை மட்டுமன்றி வாணிகத் தனியுரிமையும் முற்றிலும் பெற்ற பின் இவ்வுரிமை அளிக்கப் பட்டது. படைத்துறை சார்ந்த தமிழ், மேலை நாட்டு மரபு வடதிசை நிலப் பண்ணையாட்சிமுறை யடிப்படையான அரசியல் சமுதாய நாகரிகம், பாளையக்காரர் முறை மூலம் விசய நகர ஆட்சியிலேயே பெருவளர்ச்சியுற்றது. ஆயினும் படைத் துறையில் நிலப்பண்ணையாட்சியின் கந்தறுகோலப்படை நடவடிக்கை முறையை ஒழித்து, சோழப் பெரும் பேரரசர் பாண்டியப் பேரரசர் காலத்திலிருந்த நிலவரப் படைப் பயிற்சி முறையை மேனாட்டவரைப் பார்த்துத் துளுவ மரபுப் பேரரசர் இம்மடி நரசிம்மனும் கிருஷ்ணதேவராயனும் பின்பற்றிப் படைக்குப் பயிற்சியளித்திருந்தனர். வீரத்தில் அவர்களில் குறையாத அரவீட்டு மரபு முதல்வன் இராமராயன் காலத்தில் இம்மரபு மீண்டும் வழக்கிழந்ததே விசய நகர வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. தென் மைசூர் வெற்றி: 1510 - 12 தென் மைசூரில் உம்மத்தூர்த் தலைவனை முறியடிக் காமலே இம்மடி நரசிம்மன் மாள்வுற்றிருந்தான். வடதிசைப் போரில் இடை ஓய்வு ஏற்பட்டதே, கிருஷ்ணதேவராயன் தெற்கே திரும்பினான். உம்மத்தூர்த் தலைவன் கங்கராசன் இதற்குள் பெனுகொண்டாவையும் பெற்றுக் கைக் கொண்டிருந்தான். கிருஷ்ணதேவராயன் பெனு கொண்டாவையும் உம்மத்தூரையும் தலைநகராய் இருந்த சிவ சமுத்திரத்தையும் வென்றான். கங்கராயன் தோற்றோடிக் காவிரியில் விழுந்திறந்தான். பழைய தலைநகரத்தைத் தரை மட்டமாக்கிபின் சீரங்க பட்ட ணத்தைத் தலை நகரமாகக் கொண்ட புது மாகாணமாக இப் பகுதி வகுக்கப்பட்டது. சாளுவ கோவிந்தராயன் அதன் ஆட்சித் தலை வனாகவும், பங்களூரிலுள்ள குடித்தலைவன் கெம்பகௌட அவன் உதவியாளனாகவும் அமர்த்தப்பட்டனர். கீழ்திசைக் கலிங்க வெற்றிகள் : கிருட்டிணையாற்றுப் போர் ஐ: 1513 - 1516 கஜபதி அரசனான பிரதாபருத்ரன் ஆட்சி இச்சமயம் நெல்லூர் வரைக்கும் சென்றிருந்தது. அவன் வெற்றி எல்லை காஞ்சி தாண்டித் தஞ்சை வரை சென்றிருந்தது. கிருட்டிண தேவராயன் முன் இழந்த கீழ்ப் பகுதியை மீட்க முனைந்து 1513-ல் உதயகிரிக் கோட்டையை முற்றுகையிட்டான். ஒன்றரையாண்டு முற்றுகைக்குப் பின், மலை வழியாகப் புதுப் பாதைகள் வகுத்து அதைக் கைக்கொண்டான். பண்டைத் தமிழ் அரசர் மரபு பின்பற்றி அவ்வெற்றிச் சின்னமாக உதயகிரிக் கோட்டையிலிருந்த ஒரு பாலகிருஷ்ணன் வடிவத்தைக் கொண்டுவந்து விசயநகரத்தில் பதிப்பித்தான். உதயகிரி முற்றுகையைக் குலைக்கச் செய்த முயற்சிகள் யாவும் தகர்ந்தன. அத்துடன் உதயகிரியிலிருந்து அவன் படை களைத் துரத்திக் கொண்டே கிருஷ்ண தேவராயன் படைகள் கலிங்கப் பேரரசின் எல்லை முழுதும் வெற்றி ஊர்வலம் செல்வது போல் குதூகலத்துடன் சென்றன. கஜபதிப் பேரரசின் தென்திசைப் பெருநகராக இப்போது கொண்ட வீடு விளங்கியிருந்தது. முதலில் விசயநகரப்படைத் தலைவன் சாளுவதிம்மரசனும், பின் கிருட்டிண தேவராயனும் அதன் முற்றுகையிலீடுபட்டனர். பல மாதங்கள் சென்றபின் விசயநகரப் படைகள் மதிலேறி உட்சென்று காவற்படைகளின் கட்டுக் குலைத்தன. கஜபதிப் பேரரசன் மனைவியும் ஒரு மகனும் உட்பட, ஒரிசாவின் (கலிங்கப்) பெருமக்கள் பலர் சிறைப்பட்டனர். சிறைப்பட்டவர்கள் நேரே விசய நகருக்கு அனுப்பப் பெற்றனர். கொண்ட வீட்டுப் பகுதியின் ஆட்சி சாளுவதிம்மனிடமே ஒப்படைக்கப்பட்டது. விசயவாடா பிடிபட்டபின் அதுவே படையெடுப்பின் அடுத்தபடிகளுக்கான மூலதளமாயிற்று. கோளப் பள்ளி முற்றுகையின்போது அதைத் தடுக்கவந்த பிரதாபருத்திரன் படைகள் பெனுகங்கை யாற்றங்கரையில் நடைபெற்ற போரில் முறியடிக்கப்பட்டன. நல்கொண்டா, வாரங்கல் முதலிய இடங்கள் பிடிப் பட்டபின் பேரரசின் தலை நகரத் தாக்குதல் தொடங்கிற்று. கலிங்கத்தாயக நாட்டின் முதல் நகரமான இராசமகேந்திரவரம் கடந்தபின் போதனூரில் ஒரு வெற்றித் தூணையும் விசயநகரப் பேரரசன் நிறுவினான். தலைநகர் கட்டாக் பேரவதிக்காளான பின்பு கஜபதிப் பேரரசன் பிரதாபருத்திரன் பணிந்து, தன் புதல்வியை விசய நகரப் பேரரசனுக்கு அளித்து நேசம் நாடினான். கிருஷ்ண தேவராயனும் மனமுவந்து அவனுக்கு வடக்கேயுள்ள அவன் பழைய ஆட்சிப் பகுதியைத் திரும்பவும் அளித்தான். இஸ்லாமிய அரசமரபின் காவலன் தீவானி, கோயில் கொண்டாப் போர்களுக்குப் பின் பீஜப் பூருக்கும் பாமினி மரபின் மைய அரசாகிய பீடாருக்கும் இடையே வேற்றுமைகள் மிகுந்தன. இதனைப் பயன்படுத்திக் கிருஷ்ண தேவராயன் இரேய்ச்சூர்க் கோட்டையையும் அது சூழ்ந்த ஆற்றிடை மண்டலத்தையும் வென்று கைக்கொண்டிருந் தான். யூசுப் ஆதில் கானுக்குப் பின் ஆண்ட அரசன் இஸ்மாயில் (1510 - 1534) வயதுவராத இளைஞன். கமால்கான் என்பவன் ஆட்சிப் பேராளாயிருந்து ஆட்சிப் பிடியை முற்றிலும் கைக் கொண்டு அரசுரிமையில் கண் வைத்திருந்தான். இதனால் கட்சிப் பிணக்கும் வலிமைக் கேடும் மிகுதியாய் இருந்தது. ஆனால், 1511-ல் மன்னன் தாய் கமால்கானைக் கொலை செய்வித்த பின் இது குறைவதற்கு மாறாகக் கூடிற்று. கமால்கானின் நண்பர்களான அயல் நாட்டுப் பாரசீக, குராசானியப் பெருமக்கள் முன்னிலும் சீறிக் குமுறினர். பிஜப்பூரின் தளர்ச்சியைப் பயன்படுத்தி, கிருட்டிண தேவராயன் அப்போது மைய அரசாயிருந்த பீடாரின் மீதே படையெடுத்தான். இங்கே பெயரளவில் இன்னும் மாமூதே அரசனானாலும் அவனைக் காவலில் வைத்து அமைச்சனா யிருந்த அமீர்பாரீதே ஆட்சியுரிமை செலுத்தியிருந்தான். கிருஷ்ண தேவராயன் தலைநகர் குல்பர்க்காவைத் தாக்கி அமீர்பார்தை முறியடித்தான். முறைப்படி அரசுரிமை யுடைய மாமூதை விடுவித்து அவனையே அரசனாக்கினான். முன்பு தமிழகத்தில் ஹொய்சள மன்னர் ‘சோழ வம்ச ஸ்தாபனாசாரியார்’ ‘பாண்டிய வம்ச ஸ்தாபனாசாரியார்’ என்ற பட்டங்கள் மேற்கொண்டது போலவே, இது முதல் கிருஷ்ண தேவராயனும் ‘யவன அரசு விடுவித்துக் காத்தவன்’ என்ற சிறப்புப் பெயர் மேற்கொண்டான். கிருஷ்ணையாற்றுப் போர் ஐஐ : அல்லது இரேய்ச்சூர் போர் ஐஐ: - 1520 - (மே 19) பிஜப்பூர் அரசன் இஸ்மாயில் ஆதில்கான் வடக்கே பீடாரில் கிருட்டிண தேவராயன் ஈடுபட்டிருந்த சமயம் பார்த்து இரேய்ச் சூரைத் திரும்பவும் கைப்பற்றிக் கொண்டான். அதை மீட்கக் கிருட்டிண தேவராயன் ஆற்றிய இரண்டாம் கிருட்டிணை யாற்றுப் போர் அல்லது இரேய்ச்சூர்ப் போர் விசயநகரப் பேரரசின் புகழைத் தென்னகமெங்கும் பரப்பிய பெரும் போர் ஆகும். போர்ச்சுக்கீசியர் பேரரசுக்குக் காட்டிவந்த ஆதரவு இதன்பின் ஆர்வ ஆதரவாயிற்று. தென்னகத்தை ஆக்கவும் அழிக்கவும் வல்ல பேரரசு விசயநகரப் பேரரசே என்பதை அவர்கள் இதன் மூலமே கண்டனர். போர்ச்சுகீசியர் வாணிக மூலம் விசயநகரப் பேரரசு வளமும். பேரரசு வளமூலம் போர்ச்சுக்கீசியர் ஆட்சிவளமும் பெருகின. இதனாலேயே ‘கோவா எழ விசயநகரின்மூன்றாம் மரபும் எழும்; மூன்றாம் மரபு தாழ கோவா தாழும்’ என்ற வாசகம் போர்ச்சுகீசிய எழுத்தாளரால் வழங்கப்பட்டுள்ளது. போர்ச்சுகீசிய ஆசிரியர் நூனிஸ் இப்போரை நேரடியாகக் கண்டு விரித்துரைத்துள்ளார். கிருட்டிண தேவராயன் இரேய்ச்சூரை முற்றுகையிட்ட போது, இஸ்மாயிலின் படைகள் அதைக் குலைக்க முன்வந்தன. பீஜப்பூர்ப் படைகள் கிருஷ்ணையாறு கடந்து ஐந்து கல் வந்த பின் விசயநகரப் படைகள் இரேய்ச்சூரிலிருந்து ஒன்பது கல்வந்து அவற்றைத்தடுத்தன. இவ்விடத்திலேயே போர் மூண்டது. கிருஷ்ண தேவராயனின் படைவீரர்கள், துணைவர்கள் உள்பட ஆள் தொகை 10 இலட்சம் என்றும், அவன் யானைகள் 500 என்றும் கூறப்படுகிறது. இப்போரில் மற்றமுஸ்லிம் அரசர்களின் உதவியைக் கிருஷ்ண தேவராயன் கோரியிருந்தான், இஸ்லாம் சமயத்தின் ஷீயாக் கிளை சார்ந்தவனான அகமது நகர் மன்னன் பர்ஹான் நிஜாம் உல்முல்க் சேர மறுத்துவிட்டான். மற்ற மூவரும் போரில் துணை தந்தனர். விசய நகரப் படைகளின் முதல் தாக்குதலால் பீஜப்பூர்ப் படைகள் பின்னடைந்து அகழ் அரண்களில் தஞ்சம் புகுந்தன. ஆனால், போரின் அடுத்த கட்டத்தில் எதிரிகளின் துப்பாக்கி பீரங்கி வரிசைகள் செறிவுற்ற விசய நகர அணிகளில் பெரும் சேதம் விளைவித்தன. ஆனால், இரண்டாவது படைவரிசையைத் தலைமை வகித்து நடத்திய கிருஷ்ண தேவராயன் படையணிகள் எல்லா வற்றையும் ஒரு முகமாகத் தாக்குதலிலீடுபடும்படி கட்டளை யிட்டான். இதன் முன் எதிரிபடைகள் சின்னா பின்னமாகச் சிதறுண்டோடின. கிருஷ்ணையாறு வரைக்கும் பீஜப்பூர்ப் படை களை விசயநகரப் படைகள் துரத்தியடித்தன. பிஜப்பூர் மன்னனின் பாசறையிலுள்ள பொருள்கள் யாவும் கொள்ளையிடப் பட்டன. மன்னன் இஸ்மாயில் ஒரு யானை மீதேறி உயிர்தப்பி யோடினான். வெற்றியுடன் பெரும் பொருட் குவையும் கிருஷ்ண தேவராயனுக்குக் கிட்டின. இரேய்ச்சூர்க் கோட்டையும் இதன் பின் விரைவில் கைப் பற்றப் பட்டது. கோட்டை முற்றுகையில் போர்ச்சுகீசியப் பெருஞ் செல்வ வணிகனாகிய கிரிஸ்தோவாவ்தே பிரிகடோ என்பவன் (ஊhசளைவடிஎயடி னந குபைரஉசைந னடி) ஒரு சிறிய போர்ச்சுகீசியப் படையுடன் வந்திருந்து பேருதவி செய்தான். பேரரசன் அடுத்த மகாநவமி விழாவின்போது நகரமக்கள் முன்னிலையில் அவனுக்குப் பெருஞ் சிறப்புச் செய்து பரிசுகள் அளித்துப் பாராட்டினான். இவ்வெற்றியின் பெரும் புகழ், பேரரசன் கிருஷ்ணதேவ ராயனுக்குக்கூட மாற்றாரைச் சிறிதும் மதியாத செருக்கு அளித் திருந்தது. பேரரசு மரபில் இச்செருக்கே பின்னாளில் ராமராயன் காலத்தில் பேரரசுக்குப் பெருந்தீங்கு விளைவிக்கக் காரணமா யிருந்தது. இப்போரின் பின்னும் பீஜப்பூர் அரசன் நட்பு நாடிய போது பணியும்படி வற்புறுத்தப்பட்டான். அசத்தான் என்ற ஒருவன் போதனையால் தன் எல்லையிலேயே ஒரு குறித்த நாள் வந்து பணிவதாக பீஜப்பூர் மன்னன் கூறியனுப்பி, கூறியபடி வராமல் அவமதித்தான். கிருஷ்ணதேவராயன் பீஜப்பூர் மீதும் பீடார் மீதும் படை யெடுத்துத் தலைநகர் குல்பர்க்காவை அழித்தான்; பிருஸ்பாத், சாகர்க் கோட்டைகளைப் பிடித்தான். பீடாரில் சிறைப்பட்டிருந்த மாமூதின் புதல்வர் மூவரில் மூத்தவனை அரசனாக்கி மற்ற இருவரையும் தன்னுடன் கொண்டு வந்து பாதுகாத்தான். ஆட்சியின் கடைசி ஆண்டுகளில் கிருஷ்ணதேவராயனுக்கு உடல் நோயும், குடும்பப் பூசல்களும் தொல்லை விளைவித்தன. இரேய்ச்சூர்ப் போருக்கு முன்னும் பின்னும் அவன் தென்திசை சென்று அங்கே ஆட்சிக்கான புது ஏற்பாடுகளைச் செய்திருந்தான். கிருஷ்ண தேவராயனு தெலுங்கு தமிழ் இலக்கியமும் தெலுங்கிலக்கியம் விசயநகரப் பேரரசர் காலத்தில் பொது வாகவும், கிருஷ்ண தேவராயன் காலத்தில் சிறப்பாகவும் தழைத்தது. அரசனே தெலுங்குப் புலமையுடையவன். அவன் பெயராலேயே “ஆமுத்த மால்யத” என்ற காவியம் இலங்குகின்றது. சிலர் அது அல்லசானி பெத்தண்ணா என்ற அரசவைக் கவிஞரால் இயற்றப் பட்டு அரசன் பெயர் சூட்டப்பட்ட தென்பர். கன்னட, தமிழிலக்கியங்களும் அவன் காலத்தில் தழைத்தன. கிருஷ்ண தேவராயனையே பாடிய யாரோ ஒரு தமிழ்ப் புலவர் பாடல் பெருந்தொகையில் (1283) இடம் பெற்றுள்ளது. அது அவன் போர்த்திறமையைப் பாராட்டுகின்றது. “படைமயக் குற்ற போதும் படைமடம் ஒன்றி லாதான் மடைசெறி கடகத் தோளான் மதிக்குடை மன்னர் மன்னன்” என்று அப்பாடல் மன்னன் வீரம் சிறப்பிக்கின்றது. தமிழக நாயக மரபுகளின் தோற்றம் நரச நாயகன் காலத்தில் தொண்டை மண்டலமும் சோழ நாடும் கிளர்ந்தெழுந்தன. அவற்றை அவன் கீழ்டக்கினான். கிருஷ்ண தேவராயன் காலத்தில் செஞ்சிப் பகுதியில் மீண்டும் பல தலைவர்கள் எதிர்த்தனர். கிருஷ்ண தேவராயன் அவர்கள் மீது வையப்பநாயகன், துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயகன், வெங்கடப்ப நாயகன் என்ற மூன்று படைத்தலைவர்களின் கீழ், 1,00,000 வீரர் கொண்ட பெரும்படை அனுப்பினான். அவர்கள் வேலூரை வென்று, காளத்தித் தலைவன் பொம்மரெட்டி உட்பட எல்லாத் தலைவர்களையும் அடக்கினார்கள். தமிழகம் மூன்று மண்டலத் தலைவர்கள் கையில் ஒப்படைக்கப் பட்டது. நெல்லூர் முதல் கொள்ளிடம் வரையுள்ள பகுதி செஞ்சியைத் தலைநகராகக் கொண்ட துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயகன் கீழும், தஞ்சையைத் தலைநகராகக் கொண்ட பகுதி விஜயராகவ நாயகன் கீழும், காவிரிக்கு இப்பாலுள்ள பகுதி மதுரையைத் தலைநகராகக் கொண்ட வெங்கடப்ப நாயகன் கீழும் ஒழுங்கமைக்கப்பட்டன. நாகமன் ஆட்சியும், பாண்டியர் - சோழர் போராட்டமும் கிருஷ்ண தேவராயன் ஆட்சியில் இறுதிப் பகுதியில் தமிழகத்திலே நடைபெற்ற பல நிகழ்ச்சிகளைத் தெலுங்கிலே எழுதப் பெற்ற தமிழக வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன. அந்நாளில் பாண்டிய மரபினர் மட்டுமன்றிச் சோழமரபினர் கூடச் சிற்றரசராக, கிட்டத் தட்டத் தங்குதடையற்ற தன்னுரிமை யுடையவராக, ஆண்டு வந்தனர் என்று தோற்றுகிறது. ஏனெனில் வீரசேகரன் என்ற சோழ மன்னன் சந்திர சேகரன் என்ற பாண்டிய மன்னன்மீது படையெடுத்து, அந்நாட்டைக் கவர்ந்து கொண்டான். சந்திரசேகரன் கிருஷ்ணதேவராயனிடம் முறையிட்டு, தனக்குரிய தன் நாட்டைப் பெற்றுத்தந்து உதவும்படி வேண்டியனான். இதன் பயனாகக் கிட்டத்தட்ட கி.பி. 1525-ல் கிருஷ்ண தேவராயன் தன் நம்பிக்கைக் குரிய நாகமநாயகன் என்ற ஒரு பெருமகனை மதுரைப் பகுதியின் தலைவனாக அனுப்பி, பாண்டியனுக்கு நீதி வழங்கும்படி கூறினான். நாகமன் சாளுவ நரசிம்மன் ஆட்சியிலேயே அவனிடம் நரச நாயகனை ஒத்த உற்ற துணைவனாயிருந்தான். பேரரசன் இம்மடி நரசிம்மன் ஆட்சியிலும் கிருஷ்ண தேவராயன் ஆட்சியிலும் அவன் சேமப் பொருள் காப்பாளனாகவும் (கோடியன்) பொருள் காப்பானாகவும் (தோசேகானா அதிகாரி) வரி தண்டலாள னாகவும் ஆட்சி பார்த்திருந்தான். தமிழகத்தின் மதுரை மண்டலத்தின் அலுவல் தலைவனாகவே அவன் அமர்வு பெற்றான். நாகமன் சோழனை அடக்கிப் பாண்டியன் நாட்டை மீட்டு விட்டான். ஆனால், எக்காரணத்தினாலோ பாண்டியனிடம் ஒப்படைக்க வில்லை. பாண்டியன் மறுபடியும் கிருஷ்ணதேவ ராயனிடம் சென்று முறையிட்டான். இது கிட்டத் தட்ட அவன் ஆட்சி யிறுதியிலேயே நடைபெற்றிருக்க வேண்டும். முதிர் வயதும் நோயும் பேரரசனுக்குப் பொறுதியின்மையையும் முன் கோபத்தையும் அளித்திருக்க வேண்டும்.‘இந்த ஆணவக் காரனைச் சென்று அடக்கிக் கைப்பற்றிக் கொண்டுவர எவராலும் முடியாதா?’ என்று கேட்டான். நாகமனை எதிர்க்கும் துணிவு எவருக்கும் வரவில்லை. ஆனால், நாகமன் மகனான விசுவநாதன் ‘இதோ நான் கொண்டு வருகிறேன்!’ என்றான். கிருஷ்ண தேவராயன் அவன் துணிச்சலும் பெருந்தன்மையும் வியந்து அவனையே மதுரை நாயகனாக்கி அனுப்பினான். விசுநாதன் தந்தையைப் போரில் வென்றடக்கிக் கைப் பற்றினான். பாண்டியனுக்கு அரசளித்துவிட்டு, பேரரசன் முன்பு தந்தையை ஒப்படைத்தான். இதனால் மகிழ்வுற்ற பேரரசன் விசுவநாதனையே நிலையாக மதுரை நாயகனாக ஆக்கினான் என்று தோற்றுகிறது. இச்செயல் 1529 -லேயே நடைபெற்றிருக்க வேண்டும். அரசுரிமைப் பூசல் கிருஷ்ண தேவராயன் வாழ்வின் இறுதி ஆண்டுகளில் அவன் ஆறு வயதுள்ள தன் புதல்வனுக்கு அரசுரிமை தர முயன்றதாக அறிகிறோம். பேரவாவுடைய அரசவைப் பெரு மக்களுள் ஒருவ னான சாளுவதிம்மன் அச்சிறுவனை நஞ்சிட்டுக் கொன்றதனால் அவன் குடும்பத்தினர் அனைவரும் காவலில் வைக்கப்பட்டனர். அத்துடன் ஒரு மகன் தப்ப முயன்றதைச் சாக்காகக் கொண்டு குடும்பத்தினர் அனைவரின் கண்களுமே குருடாக்கப்பட்டன. கிருஷ்ணதேவ ராயனுக்குப் பின் அவன் இளவல் அச்சு தராயனின் அரசுரிமை ஏற்பிற்கும், எதிர்ப்பும் போட்டியும் இல்லாம லில்லை. இராமராயன் என்ற ஆற்றல் வாய்ந்த தலைவன், கிருஷ்ண தேவராயனின் பதினெட்டு மாதக் குழந்தையின் அரசுரிமையை ஆதரித்தான். குழந்தையின் பெயரால் தானே ஆள அவன் எண்ணி னான். ஆனால், சாளுவ வீரநரசிம்மன் அச்சுதராயனையே ஆதரித் தான். கிருஷ்ணதேவராயன் இறுதிப் படுக்கையின் போதே கலவரங் களைத் தடுத்து அமைதி காப்பதற்காக முக்கியமான அரச குடும்பத்தினர் சந்திரகிரியில் காவலில் வைக்கப் பட்டிருந்தனர். அரசுத் ராயனும் அவர்களில் ஒருவன். ஆகவே அவன் விடுவிக்கப்பட்டு வந்து சேருமளவும், சாளுவ வீர நரசிம்மன் அரசுரிமையை எவரும் கைப்பற்றாதபடி அவனுக்காகப் பேணிக் காத்து நின்றான். அரசுரிமை பெறுவதில் யாரும் முந்திக் கூடாதென்பதற் காகவே அச்சுதராயன் வரும் வழியிலே திருப்பதியிலும், காளத் தியிலும் விரைந்து முடி சூட்டுவிழா ஆற்றிவிட்டு வந்தான். ஆயினும் இராம ராயனையும் இணக்குவித்துத் தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்ள அவன் எண்ணினான். இந்நோக்கத் துடன் அவன் இராம ராயனுடனே ஆட்சிப் பொறுப்பைப் பங்கு கொள்ள எண்ணினான். இது அச்சுதராயனையே ஆதரித்து நின்ற சாளுவ நரசிம்மனுக்கு மனக் கசப்பை ஊட்டிற்று. பேரரசுக்கு எதிராகத் தமிழகம் சென்று கிளர்ச்சி செய்வதற்கு இதுவே அவனைத் தூண்டிற்று. விசுவநாத நாயகன் மதுரை ஆட்சிப் பொறுப்பு : முதற்பகுதி: 1529 - 1530 இடைப் பகுதி: 1533 - 1542 விசுவநாத நாயகன் கிருஷ்ணதேவராயன் காலத்திய தமிழகப் பிரதிநிதி நாகம நாயகர் புதல்வன். அவன் ஏறத்தாழ 1495-ல் பிறந்தவன். 16 வயதுடைய இளைஞனாயிருக்கும் போதே கிருஷ்ண தேவராயனின் அடைப்பக்காரனாக அவனுக்குத் தொண்டனாகி, அப்பேரரசனுடன் கலிங்கப் போர்களில் சென்று பணியாற்றியவன். பேரரசனின் நன்மதிப்பைப் பெற்றதனாலே அவன் இரேய்ச்சூர்ப் போரில் ஒரு சிறு படையின் தலைமை யளிக்கப் பட்டான். அவன் 1529-ல் கிருஷ்ண தேவராயன் ஆட்சியின் கடைசி ஆண்டிலேயே மதுரைப் பிரதிநிதியாக அமர்வு பெற்றிருந்தான். 1509 -முதல் 1532-வரை ஒரு தடவையும், 1533- முதல் 1542- வரை ஒரு தடவையும் அவன் பிரதி நிதியாக இருந்து நல்ல சேவை செய்தான். அவன் ஆட்சிப் பகுதிகளுக்கு இடைப்பட்ட காலமே அச்சுதராயன் தென் திசை வெற்றிக்குரிய காலம் ஆகும். அவ்வெற்றியின் பின் அவன் ஆட்சி எல்லையும் சற்று விரிவு பட்டிருந்தது. ஆனால், அச்சுதராயன் ஆட்சிக்குப் பின்னரே அவன் மாமண்டல நாயனாக்கப்பட்டான். மலையடி வாரப் போர் : 1533 அரசுரிமைப் பூசலின் முடிவில் பேரரசுமீது பகைமையுற்ற சாளுவ வீர நரசிம்மன் என்ற செவ்வப்பன், தான் ஆட்சி புரிந்து வந்த சோணாட்டுக்குச் சென்று கிளர்ச்சிக் கொடி உயர்த்தினான். இக்கிளர்ச்சியில் உம்மத்தூர்த் தலைவனும், திருவாங்கூர் அல்லது வேணாட்டு அரசனான திருவடி ராஜா உதய மார்த்தாண்ட வர்மனும் கலந்து கொண்டனர். பேரரசன் அச்சுதராயன் 1532-ல் காஞ்சிபுரம் வந்து தன் எடை பொன் கொடை வழங்கும் துலாபார விழா வாற்றிய பின், படையுடன் திருவரங்கம் வரை வந்தான். ஆனால், சாளுவ வீரநரசிம்மன் இதற்குள் தண்டனைக்கு அஞ்சித் திருவாங்கூருக்கே ஓடி ஒளிந்து கொண்டான். இச்சமயம் தென் பாண்டி நாட்டை ஆண்டவன் சடைய வர்மன் சீவல்லப் பாண்டியன் (1534 - 1543). கிளர்ச்சியின் சூழ் நிலையைப் பயன்படுத்திக் கொண்டு திருவாங்கூர் மன்னன் அவனுக்குரிய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். தென் பாண்டி நாடெங்கும் அம்மன்னன் கல்வெட்டுக்கள் இக்காலத்தனவாய் அகப்படுகின்றன. இவ்வாறு உரிமையிழந்த பாண்டியனும் பேரரசன் அச்சுராயனிடம் முறையிட்டான். திருவரங்கத்திலிருந்து பேரரசன் தன் மைத்துனனான சாலக ராஜு திம்மராஜு என்ற சாலகம் திருமலையையும், அவன் மகன் சாலகம் திம்மனையும் படைத் தலைவர்களாக அனுப்பினான். அவர்கள் வெற்றிகரமாகத் தென்பாண்டி நாட்டைப் படையுடன் கடந்தனர். பின் திருவாங்கூருக்குள் புகுந்தனர். மலையருகில் நடை பெற்றதாகக் குறிக்கப்படும் போரில் திருவாங்கூர் அரசனும் சாளுவ வீர நரசிம்மனும் தோல்வியுற்றனர். விசய நகரப் படைத்தலை வர்கள். இருவரையும் சிறைப்படுத்தி அச்சுதராயனிடம் கொண்டு சென்றனர். இருவருக்கும் தக்க தண்டனை அளிக்கப்பட்டது. தாம்பிரவருணி ஆற்றங்கரையில் இவ்வெற்றியின் அறிகுறியாக வெற்றித் தூண் நிறுவப்பட்டது. நாடிழந்த பாண்டியனிடம் அவன் ஆண்ட தென்பாண்டிப் பகுதி மீண்டும் ஒப்படைக்கப் பட்டது. அத்துடன் பாண்டியன் நன்மகளைப் பேரரசனுக்கு மணம் செய்து கொடுத்தான். திரும்ப நாடு பெற்றதனாலும், பேரரசர் உறவு பெற்ற தனாலும் இப்பாண்டியன் பெரிதும் நன்மதிப்பு உடையவனா னான். தன் கல்வெட்டுக்களில் அவன் “இறந்த கால மெடுத்தவன்” “பாண்டிய ராஜ்ய ஸ்தாபனாசாரியன்” ஆகிய பட்டங்களை மேற் கொண்டான். சாளுவ நரசிம்மன் ஆண்ட சோணாட்டுப் பகுதி அச்சுதராயன் மனைவி திருமலாம்பாளின் உடன் பிறந்தாளுக்குச் சீதனமாக வாக்களிக்கப்பட்டிருந்தபடி, அவள் கணவனான செவ்வப்ப நாயகன் அதன் மண்டலத் தலைவனாக அமர்த்தப் பட்டான். ஆனால், தமிழகத்தின் இரு மாகாணங்களான மதுரை, தஞ்சை ஆகியவற்றை தஞ்சை சார்ந்த திருச்சிராப்பள்ளி மதுரைக்கும், மதுரையைச் சார்ந்த வல்லம் தஞ்சைக்கும் மாற்றப் பட்டன. உம்மத்தூர்த் தலைவனும், பிறரும் பணிந்தளிக்கும் வணக் கத்தை ஏற்கும் வண்ணம் பேரரசன் அவ்வழி தலைநகரத்துக்குத் திரும்பினான். அச்சுதராயனின் இத் தென்திசை வெற்றியையே பொருளாகக் கொண்டு விசயநகர அரசவைக்கவிஞனான இராசநாதடிண்டிமன், அச்சுதராயப் யுதயம் என்ற ஒரு சமஸ்கிருத காவியம் இயற்றினான். அச்சுதராயனின் வடதிசைப் போர்கள் ஒரிசாக் கஜபதியரசன், கோலகொண்டாவின் முதல் அரசனான குலீ குட்ப் ஷா (1512 - 1533) ஆகியவர்கள் 1534-க்கு முன் விசய நகரத்தின் மீது படையெடுத்துத் தோல்வியுற்றார்கள். எனினும் பிஜப்பூரின் அரசன் இஸ்மாயில் ஆதில்கான் (1510 - 1534) இரேய்ச் சூரையும் முட்கலையும் கைப்பற்றியிருந்தான். எனினும் அடுத்த பிஜப்பூர் அரசனான மல்லூ ஆதில்கான் (1534 - 1535) ஆட்சியில் அசத்கான் லாரி என்பவனது கிளர்ச்சியால் ஆட்சி வலுவிழந் திருந்தது. ஆகவே அச்சுதராயன் இரேய்ச்சூர் மண்டலம் முழுவதும் மீண்டும் பிடித்தடக்கினான். 1536-ல் விசய நகரத்திலேயே குத்தியில் எழுந்த ஒரு கிளர்ச்சி அடக்கப்பட்டது. போர்ச்சுகீசியத் தொடர்புகள் போர்ச்சுகீசியர் விசயநகரக் கடற்கரை யோரமாகத் தம் பேரரசை வளர்த்து வந்தனர். ஆனால், மேலீடாக விசய நகரத்துடன் அவர்கள் நட்பாகவே யிருந்தார்கள். தெற்கே தமிழகத்தில் அவர்கள் அடிக்கடி கடற்கரை கடந்து நெடுந்தொலைவரை சென்று கோயில் களைக் கொள்ளை யடித்தனர். இராமராயன் பதவி வேட்டையும் குழப்பங்களும் அச்சுதராயன் ஆட்சியின் பிற்பகுதியில் அரசுரிமைக்குப் போட்டியாய் நிறுத்தப்பட்ட கிருஷ்ண தேவராயனின் சிறுவன் உயிர் நீத்தான். இதனால் அச்சுதராயன் இராமராயன் பற்றிய அச்சமின்றி ஆள முற்பட்டான். ஆனால், இராமராயனுக்கு இதுவரை தன் பேரவாவை மறைப்பதற்கு இருந்த சாக்கு அகன்று விட்டதால், வெளிப்படையாகவே கட்சிதிரட்டித் தன் ஆதிக்கத்தை வளர்த்து வந்தான், கிருஷ்ண தேவராயனுக்கு அவன் மருமகனாதலாலும், அவனும் அவன் உடன் பிறந்தார் இருவரும் கிருஷ்ண தேவராயன் உடன் பிறந்தாராகிய அச்சுராயனுக்கும் ரங்கனுக்கும் மைத்துன ராதலாலும் அரசியர், அரண்மனை மாதர் ஆதரவு அவன் பக்கமே இருந்தது. அவன் தன் ஆதிக்கத்தை வளர்க்க, எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் பிற்காலத்தில் அவனே ஆட்சியாளனாயிருக்கும் போது அவ்வாட்சியின் வலுக்குறைக்கக் காரணமாயிருந்தன. பேரரசன் இம்மடி நரசிம்மனும் கிருஷ்ண தேவராயனும் திறமையும் பயிற்சியும் தேர்ச்சியும் உடையவர்களையே பதவியில் அமர்த்திப் பேணி வந்திருந்தனர். இராமராயன் கூடுமான இடங்களில் எல்லாம் அவர்களை நீக்கித் தன் ஆட்களைப் புகுத்தினான். மற்றும் வாய்ப்பு ஏற்பட்ட போதெல்லாம் படைத்துறையில் முஸ்லிம் வீரர்களைச் சேர்த்துக் கொண்டான். விசயநகரத்தின் முதிராத் தேசியச் சூழலில் இத்தீங்கு இம்மடி நரசிம்மன் ஆட்சியிலேயே தொடங்கி விட்ட தானாலும், அது இப்போது பேரிடர் தரும் அளவில் பெருகிற்று. இச்சமயம் தெற்கே நடைபெற்ற கிளர்ச்சிகளையடக்க இராம ராயன் செல்ல வேண்டி யிருந்தது இவ்வேளை பார்த்துக் காவலிலிருந்த அச்சுதராயன் தன் காவலனையே அமைச்ச னாக்கித் தன்னுரிமை ஆட்சி நடத்தத் தொடங்கினான். தெற்கே திருவாங்கூர் வெற்றிப் புகழ்பெற்ற சாலகராஜுதிருமலை அக்காவலனை ஒழித்து ஆட்சியைத் தானே கைக் கொண்டான். இராமராயன் தெற்கே எதிரிகளுடன் சமரசம் செய்து கொண்டு தலைநகர் வந்தபோது நாட்டாட்சியில் எதிர்க்கட்சி முனைந்திருக்கக் கண்டான். இரு கட்சிகளும் சரிசமமாகப் போராடத் தொடங்கவே, உள் நாட்டு ஆட்சியில் இமைக்க முடியாத குழப்பம் ஏற்பட்டது. இதைத் தீர்த்து வைப்பதற்காகத் தலைவர்கள் பிஜப்பூரை இச்சமயம் ஆண்ட இரண்டாம் இப்ராஹிம் ஆதில்கானை (1535 - 1537) வரவழைத்தனர். விசயநகரப் பேரரசின் உள்நாட்டுக் காரியங்களில் தலை யிடுவதற்கான இந்த வாய்ப்பை இப்ராஹிம் பயன்படுத்தவே விரும்பினான். ஆனால், அதைப் பயன்படுத்த அவனுக்கு நேர மில்லாது போயிற்று. அவன் இல்லாத சமயம் அகமது நகரை அகமது (1490 - 1508) -க்கும் பின் ஆண்ட முதலாம் புர்ஹான் (1503 - 1554) கிளர்ச்சிக்காரனான அசத்கான் அழைப்பின் மீது படை யெடுத்திருந்தான். ஆகவே அவசர அவசரமாக இரு கட்சி களையும் இணைத்து வைத்து விட்டு அவன் திரும்பிச் சென்றான். இராமராயன் ஆதிக்கம் முன்னிருந்தபடியே நீடித்தது. அரவீட்டு மரபின் புரட்சி : துங்கபத்திரைப் போர் அச்சத தேவராயன் 1542-ல் உலக வாழ்வு நீத்தான். வயது வராத அவன் புதல்வன் முதலாம் வேங்கடனுக்கு அரசுரிமை தரப்பட்டு அவன் பெயரால் அவன் தாய் மாமனான சாலகம் திருமலை ஆட்சிப் பேரரசனானான். ஆனால், தாயரசியான வரதாதேவி தன் உடன்பிறந்தான் மீது ஐயம் கொண்டு பிஜப்பூர் அரசன் முதலாம் அவி ஆதில்கானை (1537 - 1579) வரவழைத்தாள். ஆனால், வரும் வழியிலேயே திருமலை பணம் கொடுத்து பிஜப்பூர் அரசனைத் திருப்பி அனுப்பிவிட்டு அரசியின் செயலுக்கு எதிர் செயலாகக் குத்தியில் காவலில் வைக்கப்பட்டிருந்த அச்சுதன் தம்பி புதல்வன் முதலாம் சதாசிவனை அரசிருக்கையில் அமர்த்தி அவனுக்கு ஆதரவாக மறுபடியும் பிஜப்பூர் அரசனையே படை யெடுக்கும்படி தூண்டினான். ஆட்சி நிலை பற்றிக் கிலிகொண்ட நகரமக்கள் திரண் டெழுந்து நிலைமையை அவசரமாகச் சமாளிக்கும்படி திரு மலையை ஆட்சியாளனாக ஒத்துக் கொண்டனர். இதனால் திருமலை முன்பு தானே அழைத்த அயலரசனைத் தானே முறி யடித்துத் துரத்தினான். ஆனால், அரிதில் பெற்ற இவ்வாட்சியை அவன் நீடித்துத் துய்க்க முடியவில்லை. முதலாம் வேங்கடனையும், சதாசிவன் நீங்கலான அரச குடும்பத்தினர் அனைவரையும் அவன் கொன்று குவித்துக் கொடுங்கோல் ஆற்றினான். பெருமக்கள் கிளர்ந்தெழுந்து மீண்டும் பிஜப்பூர்ப் பேரரசன் உதவி நாடினர். இதுவரை புரட்சியின் போக்கை விலகி நின்று பார்த்துக் கொண்டிருந்தான். முன்பே ஆதிக்கக் கயிற்றைக் கைப்பற்றியிருந்த இராமராயன். அவன் திடுமெனப் பெனு கொண்டாவைக் கைப்பற்றிப் பல போர்களில் திருமலையை முறியடித்தான். துங்கபத்திரையருகே நடத்திய போரில் அவனைக் கொன்று சதாசிவனை முடி சூட்டினான். சதாசிவன் பெயரால் இராமராயனே ஆட்சி செய்யத் தொடங் கினான். சதாசிவன் பெயரளவில் பேரரசனாக 1576 வரை உயிருடன் இருந்தாலும், இராமராயனே உண்மையில் பேரரசனாகி (1542 - 1565) அரவீட்டுமரபின் முதல்வனானான். வைதிக இயக்கம்: 16 -18 நூற்றாண்டுகள் 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தென்னாட்டு அரசியல் வாழ்வின் மையமும் விசயநகரப் பேரரசின் தாயகத் தலைமை யிடமும் தமிழகத்திலிருந்து அதன் வட திசைக்குமாறி விட்டது. இந்நிலை அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் கூட மாறவில்லை. கசபதி மரபினர் ஆட்சி அதை இன்னும் கிழக்கு நோக்கி இழுத்து வந்தது. எனவேதான் கடப்பை, கர்நூல், பல்லாரி, அனந்தப் பூர்ப்பகுதிகள் இன்றளவும் இராயலசீமா என்ற பெயருடன் இலங்கு கின்றன. இப்பகுதியும் இதனையடுத்த வடதிசைப் பகுதிகளான மராட்டியமும், ஆந்திரப் பகுதிகளும் அரசியல் போராட்டக் களங்களாக மட்டுமன்றிச் சமுதாய சமயப் பண்பாட்டுப் போர்க் களங்களாகவும் நிலவின. இதனால் மக்கட் சார்பான இந்திய மாநிலத்தின் பக்தி இயக்கம் தென்திசையிலிருந்து இமயம் வரை பரவிய இதே காலத்தில், இதனை எதிர்த்த வைதீக இயக்கமொன்று ஆந்திர நாட்டிலிருந்து விசயநகர ஆட்சியிலேயே வட தமிழகம், கீழ்திசைமலபார், கன்னடம், தென் மராட்டியம் ஆகிய பகுதிகளிலே ஆதிக்க வகுப்பினர் இயக்க மாய்ப் பரவ இடம் ஏற்பட்டது. பக்தி இயக்கம் சமய இலக்கியத் துறைகளில் தாய் மொழி வாழ்வும், சமுதாயத்துறையில் சமத்துவமும், பெண் கல்வி, பெண்ணுரிமை யும் பரப்பிய தென்றால், இவ்வைதீக இயக்கம் மேனாட்டுக் கல்வி வரும்வரையும் அதுகடந்து இன்றும் கூட, அவ்வெல்லாத் துறை களிலுமே வினைமுறைகள் மூலம் சமஸ்கிருத ஆட்சியையும், வேதபுராண சுமிருதி ஆட்சிகளையும், வருணாசிரம ஒழுக்க முறையையும் பரப்பத் தொடங்கியுள்ளது. மேனாட்டுக் கல்வியால் ஏற்பட்ட பகுத்தறிவொளியும் தமிழகத் தேசிய மறு மலர்ச்சி இயக்கமுமே நம் நாளில் இதை மாற்றி வருகிறது. தேசிய வாழ்வின் இப்புது மலர்ச்சித் தொடக்கத்துக்குரிய தடத்தை 15-ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியிலே தென்னக வாழ்விலும், விசய நகரப் பேரரசர் வாழ்விலும் கூடக் காணலாம். தேசிய வலுவும் அரசியல் வலுவும் படிப்படியாகத் தமிழகம் நோக்கி மீண்டும் படர்ந்தன. இதனை முதன் முதலில் நன்கறிந்து பயன் படுத்த முனைந்தவர் போர்ச்சுகீசியர்களே யாவர். போர்ச்சுகீசியர் வளர்ச்சி: இராமராயன் எதிர் நடவடிக்கைகள்: 1542 - 1547 தென்னகத்திலும் கீழ் திசையிலும் உலகிலும் போர்ச்சுசீசிய வாழ்வின் பொற்காலம் 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகிய விசயநகரப் பேரரசின் மூன்றாம் மரபுக் காலமே. அந்நூற்றாண்டின் நடுவில் அது உச்சநிலை எய்திற்று. கத்தோலிக்க சமயத்தை உலகில் பரப்பிய பெரியாருள் இந் நூற்றாண்டில் மேல்திசையில் எழுந்த ஒளியான இக்னேஷியஸ் லாயொலாவின் மாணவரான பிரான்ஸிஸ் மாணவரான பிரான்ஸிஸ் ஸேவியர் கீழ்திசை ஒளியாக விளங்கினார். தமிழகத்தின் முத்திசைக் கடற்கரை களையும் சுற்றிப் பரவை வாழ்வில் ஈடுபட்ட மீனவர்களையும், முத்துக் குளிக்கும் முத்துப் பரவரையும் தென்னகத்திலே ஒரு புதிய சமய, சமூதாய, அரசியல் சத்தியாக்க அவர் பாடுபட்டார். வைதீக சமயத்தின் சமுதாயக் கொடுமைகளையும், முஸ்லிம்களின் போர் வெறிக் கொடுமை களையும் எதிர்த்து நிற்கப் போர்ச்சுகீசிய அரசன் குடிகள் என்ற உரிமையையே கைகாவற் படையாக வழங்கும்படி அவர் மீனவர் களைத் தூண்டி எழுப்பினார். இதன் எதிரொலியாக, கத்தோலிக்க அரசியல் வேட்டுவரும், முஸ்லீம்களைப் போலவே கோயில்களைக் கொள்ளையிட்டுச் சமயப்பணி பரப்பும் புண்ணியத்துடன் கொள்ளைப் பொருளும் பெற்று அரசியலில் ஆதிக்கமும் பெறும் சமய சஞ்சீவியை மேற்கொண்டார்கள். 1542-ல் போர்ச்சுகீசிய ஆட்சியாளர் மார்டின் அல்பான் சோடி சூசா பட்கலைக் கொள்ளையடித்தான். கரையோரங்களி லிருந்து தொடங்கி மீனவர் உதவியுடனும் கிருஸ்தவப் பணியாளர் ஊக்கு தலுடனும் போர்ச்சுகீசியர் உள்நாட்டுக் கோயில்களைக் கூடக் கொள்ளையிடுதல், கொலை, கொள்ளை வல்வந்தச் செயல்கள் மூலம் சமய மாற்றுதல் ஆகியவற்றைச் செய்யலாயினர். 1545-ல் திருப்பதி கூட இச் செயல்களுக்கு ஆளாயிற்று. ஆனால், 1547-ல் போர்ச்சுக்கீரிய ஆட்சித் தலைவர் ஜோவாடி காஸ்ட்ரோ காலத்தில் பேரரசின் காதுகள் செவிடுபடும் அளவு இந்த அட்டூழியங்களின் குரல்கள் எழுந்தன. அடுத்த ஆண்டு இராமராயன் மயிலை சாந் தோம் மீது திடுமெனத் தாக்கிக் கொள்ளை யடித்துக் கத்தோலிக்கக் குருமார்கள் சேமித்து வைத்திருந்த செல்வக் குவைகளைச் சூறை யாடியதுடன் ஓர் இலட்சம் வராகன் திறையும் பெற்றான். இதே சமயம் சாந்தோமுக்கு உதவியனுப்ப முடியா வண்ணம் விசய நகரப் படைத் தலைவன் விட்டலராசன் இக்கேரித் தலைவன் சங்கண்ண நாயகன் துணையுடன் கோவாவையும் தாக்கினான். கயத்தாற்றுப் போர் ஐ , ஐஐ : (1550 -1559) இராமராயனின் புதிய ஆட்சியைச் சந்திர கிரிக்குத் தெற் கேயுள்ள தமிழக முழுவதும் ஏற்காமல் கிளர்ந்தெழுந்தது. திருவாங்கூர் அரசன் இதே சமயம் போர்ச்சுகீசியக் கத்தோலிக்கருடன் சேர்ந்து தன் செல்வாக்கைக் கரையோரப் பகுதிகளில் தூத்துக்குடி வரை பரப்பினான். தென்பாண்டி நாட்டில் நேருரிமையுள்ள தென்காசிப் பாண்டியன் பூதல வீரராம வர்மன் விசயநகர ஆட்சியை எதிர்க்கா திருந்தாலும் வேறு ஐந்துபாண்டியர் அவனைத் துரத்தி விட்டு விசயநகரத்துக் கெதிராகக் கிளர்ச்சி மேற்கொண்டனர். ஐவருக்கும் தலைமை வகித்தவன் கயத்தாறும் தூத்துக்குடியும் ஆண்ட கயத்தாற்றுத் தலைவன் பட்டம் பெருமாள் என்பவன். இக்கிளர்ச்சி தொடங்கிய காலம் 1545 - 1546 ஆண்டுகளா யிருக்க வேண்டும். ஏனென்றால் அவ்வாண்டுகளிலேயே மூன்றாவது தடவையாக மதுரைப் பிரதிநிதி ஆக்கப்பட்ருந்த விசுவநாத நாயகன் அதை முதலில் அடக்க முற்பட்டான் என்று அறிகிறோம். விசுவநாத நாயகன் தன்னுடன் அமைச்சராகவும் (தளவாய்) படைத் தலைவராகவும் இருந்த அரிய நாயக முதலியாரைத் தென்பாண்டி நாட்டுக்கு அனுப்பிவைத்தான். ஆனால், பாண்டியர் கயத்தாற்றில் நடைபெற்ற முதற்போரில் ஒருங்குகூடி நின்று அரிய நாயக முதலியாரை முறியடித்தனர். விசுவநாத நாயகனுக்கு மேலாளாக இப்போது விட்டலராசன் தென்னகத்தின் முழுநிறை ஆற்றல் வாய்ந்த மண்டலத் தலைவனாக அனுப்பப்பட்டான். அத்துடன் வடதிசையிலிருந்து இராமராயன் தன் மைத்துனன் சின்ன திம்மன் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான். சின்ன திம்மன் முதலில் சந்திரகிரி யருகிலுள்ள கிளர்ச்சிக் காரரை அடக்கி அந்நகரைப் பேரரசுக்கு உரியதாக்கினான். சோழ நாட்டில் புவனகிரிக் கோட்டையைக் கைப்பற்றிக் கத்தோலிக்கர் களால் சேதமுற்ற திருவரங்கக் கோயிலைச் செப்பம் செய்தான். தஞ்சை, புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள அடங்காத் தலைவர் களை அடக்கியவாறு பாண்டி நாட்டிக்கு வந்து இரண்டாவது கயத் தாற்றுப் போரில் ஐந்து பாண்டியர்களையும், கயத்தாற்றுத் தலைவன் பட்டம் பெருமாளையும் தருக்கடக்கினான். இப்போரிலும் இதனை யடுத்த திருவாங்கூர்ப் படை யெடுப் பிலும் விட்டலராசனே உரிமைத் தலைவனாயிருந்து இயக்கினான். அத்துடன் விசுவநாத நாயகனின் இளமைந்தன் கிருஷ்ணப்ப நாயகனும் இப்போரில் பங்கு கொண்டு புகழ் பெற்றான். தென்காசிப் பாண்டியனான பூதலராமவர்மனின் சுசீந்தரம் கல்வெட்டுக்கள் மூலம் அவன் விசய நகரத்துக்கு இக்காலத்தில் கீழடங்கிய நண்பனாகவே இருந்தான் என்று அறிகிறோம். போர் முடிந்த பின், அடக்கப்பட்ட பாண்டியர்களையும் விசுவநாத நாயகன் இணக்குவித்துத் தன் பாளையத் திட்டத்தில் இடமளித்தான் தோவாளைக் கணவாய்ப் போர்: (1550 - 1559) திருவாங்கூர் அரசர்களும் இச்சமயம் ஐவர் இருந்ததாகத் தெரிகிறது. ஐந்து திருவாங்கூர் அரசர் அல்லது திருவடிகளும் தோவாளைக் கணவாய்ப் போரில் கீழடக்கப்பட்டனர். தோவாளைக் கணவாய் என்பது, தென்பாண்டி நாட்டி லிருந்து நாஞ்சில் நாடு அல்லது தமிழ்த் திருவாய்கூர்ப் பகுதியான நாகர்கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள மலை இடைவழி ஆகும். அது இன்று ஆரல்வாய் மொழிக் கணவாய் என்று அழைக்கப்படுகிறது. அந்நாளிலும் அணிமைக்காலம் வரையிலும் நாகர் கோயிலின் பழம் பெயர் கோட்டாறு என்பதே. கத்தோலிக் கர் எழுதிய கடிதங்களில் இந்நகர் வாழ்வு பற்றிய பல செய்திகள் தெரிய வருகின்றன. போரின் பின் படைத் தலைவன் சின்னத் திம்மன் உள்நாடு சென்று திருவனந்தபுரத்தை அழித்து, தமிழ்த் தெய்வமாகிய தமிழன்னை கோயில் கொண்டுள்ள கன்னியாகுமரியில் ஒரு வெற்றித் தூண் நாட்டியதாக அறிகிறோம். வென்ற பகுதிகளைச் சீரமைத்து விசுவநாத நாயகனின் மதுரை ஆட்சியில் சேர்க்கும் பொறுப்பு விட்டலராசனுக்கு விடப்பட்டது. மதுரை நாயகமும் அரிய நாயகமும் ஆற்றிய பணி நாயகங்கள்: 1550 - 1584 விசுவநாத நாயகன் 1559-க்கு முன்பே மூன்று தடவைகள் மதுரைப் பிரதிநிதியாகப் பொறுப்பு வகித்தாலும், கயத்தாறு தோவாளைக் கணவாய்ப் போர்களின் பின்னரேஅவன் பதவி அப்பகுதிகளையும் உட்கொண்டு ஒரு மாமண்டல ஆட்சியாயிற்று. அரிய நாயக முதலியார் விசுவநாதனைப் போலவே விசய நகரப் பேரரசில் உயர் பதவி வகித்தவர். தென் மாமண்டலத்தில் விசுவ நாதனுக்கு அவர் அமைச்சர் ஆகவும் (தளவாய்) படைத் தலைவர் ஆகவும் (பிரதானி) இருந்ததுடன் தென்பாண்டி நாட்டின் தனிக் காவலராகவும் இருந்தார். இருவரும் சேர்ந்தே சில திருத்தங்களும் ஆட்சி நலங்களும் செய்தனராதலால் எது யார் செய்த செயல் என்று கூற முடியாத அளவு அவர்கள் பெயர்களும் புகழும் பின்னப் பட்டுள்ளன. ஆயினும் அரிய நாயக முதலியார் விசுவநாத நாயகன் காலத்திலும் அவனுக்கடுத்த இரண்டு மதுரை நாயகர் காலத்திலும் பதவி வகித்து நீண்ட நாள் வாழ்ந்ததாக அறிகிறோம். அவர் 80 ஆண்டுகளுக்குக் குறையாமல், ஒருவேளை 100 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கக் கூடும். விசுவநாத நாயகன் ஆட்சியில் கம்பம் கூடலூர்ப் பள்ளத்தாக் குச் சோழனால் கைப்பற்றப்பட்டு, அதனால் மதுரை நாயகத்துக் குரிய திறை கட்டாதிருந்தது. விசுவநாதனின் படைத் தலைவனான இராமபத்திர நாயகன் கம்பம் கோட்படைத் தலைவனான இராம பத்திர நாயகன் கம்பம் கோட்டையை முற்றுகையிட்டு அப்பகுதியைக் கீழடக்கி வழிக்குக் கொண்டு வந்தான். இச்செயலுக்குப் பரிசாக அப்படைத் தலைவனுக்கு வடகரைப் பாளையம் அளிக்கப்பட்டது. அரியநாயக முதலியார், கேசவப்ப நாயகன் ஆகிய இருவர் உதவியுடன் விசுவநாத நாயகன் மதுரைக் கோட்டை கொத்தளங் களைச் செப்பம் செய்தான். கோயிலின் பல பகுதிகள் அவர்களால் கட்டப்பட்டன. ஆயிரக்கால் மண்டப வேலைப்பாடு அரிய நாயகத்தின் தனித்திறனுக்குரியதாயிருந்தது. அதற்கேற்ப, குதிரை மீதமர்ந்த நிலையிலுள்ள அரியநாயகத்தின் சிலை புது மண்டபத்தை அணி செய்து அவர் பெயரையும், புகழையும் இன்னும் நிலை நாட்டி வருகின்றது. திருச்சியில் இரட்டை மதிலுள்ள கோட்டையையும், அகழியை யும் அமைத்து விசுவநாதன் நகரை வலுப்படுத்தினான். திருச்சிக் கோயிலையும் இன்னும் விரிவான அளவில் சீரங்கம் கோயிலையும் அவன்கட்டுவித்தான். திருச்சி நகரத்தை இன்றும் தனியழகுடைய தாக்கி இயங்கும் தெப்பக்குளம் விசுவநாத நாயகன் கட்டியதே. புண்ணிய யாத்திரிகர்களுக்குத் தொல்லைதரும் திருடர்களை ஒழித்தும், காவற்படை ஏற்பாடு செய்தும், திருடர்களுக்குக் காப்பளித்த காடுகளைக் காவிரி இருமருங்கும் அழித்தும், அவன் அரும்பணி யாற்றினான். திருநெல்வேலியையும் கோயிலையும் திருவீதிகளையும் இன்றைய அழகிய நிலையில் விரிவுபடுத்தியவர் அரியநாயக முதலியாரே. இன்னும் அவர் அரண்மனையிலேயே அவர் மரபினர் மேடை தளவாய் முதலியார் என்னும் பட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். வேளாண்மைக்கான ஏரி, குளம், கால்வாய் சிற்றூர் வாய்ப்பு வசதிகள் ஆகியவற்றிலும் அவர் கருத்துச் செலுத்தினார். விசுவநாதநாயகன் ஆட்சியில் பாளைய முறையைத் தமிழ கத்தில் திட்டமிட்டு நிறுவியவர் அரியநாயகமே என்று தோற்று கிறது. பாளையங்கள் அவ்வப்போது புதிதாக அமைக்கப் பட்டனவாயினும் தமிழகத்தில் 72 பாளையங்கள் என்னும் நிலையான மரபை அவை நாளடைவில் அடைந்தன. பாளைய மரபு கால நிலைக்கேற்ற சிறந்த திட்டமே யானாலும் பின்னாட்களில் நாட்டின் ஒற்றுமைக்குக் கேடாய் அமைந்துள்ளது. தவிர அம்முறை நிலப்பண்ணை முறை நாகரிகத்தை வளர்த்து, தமிழகத்தையும் அது சூழ்ந்த நாடுகளையும் பிற்போக்கு நிலைக்குத் தள்ளக் காரணமாய் இருந்து வந்துள்ளது. இராமராயனின் வடதிசைத் தொடர்ப்புகள் ஐ : (1542 - 1560) இராமராயன் தன் மாமனான விசய நகர முன்னோன் கிருஷ்ண தேவராயனைப் போலவே ஒப்பற்ற படைத்தலைவன், ஈடிணை யற்ற வீரன். கிருஷ்ணதேவராயனைப் போலவே, அவனைவிட முனைப்பாக, முஸ்லிம் மன்னர்களின் மதிப்பையும் அச்சத்தையும் நட்பையும் அவனால் பெற முடிந்தது. பெருமிதமும் தாராள சிந்தையும் அவனுக்கு இன்னும் சிறப்பளித்தன. ஆனால், அவன் பேரவாவும், செருக்கும், அவன் அளவு மீறிய சூழ்ச்சி நயமும் அவன்அரசியல் வாழ்வின் கோட்டையைக் கெடுத்தன. 1542 -ல் பிஜப்பூர் அரசன் முதலாம் அலிஆதில் ஷாவும் (1537 - 1579) அகமதாபாத் அரசன் முதலாம் புர்ஹானீ நிஜாமும் (1508 - 1554) தமக்குள் ஒரு நேச உடன்படிக்கை செய்து கொண்டனர். இதன்படி பீஜப்பூர் விசயநகர் மீதும், அகமதுநகர் பீடார் மீதும் தாக்கும் தடையற்ற உரிமை பரிமாறிக் கொண்டன. ஆனால், பீஜப்பூர் தாக்கியபோது விசய நகரப் படைத் தலைவனான கேலாதித் தலைவன் சதாசிவநாயகன் அதைத் திறம்பட முறி யடித்துவிட்டான். அதே சமயம் அகமது நகர் பீடாரைத் தாக்கிய போது இராமராயன் அதனுடன் துணை நின்றான். பீடாரிடமிருந்த கல்யாணிக் கோட்டை அகமதுநகர் வசமாயிற்று. ஆனால், புர்ஹானீ ஆட்சிக்குப் பின் கல்யாணி மீண்டும் கைமாறிற்று. அகமது நகரின் அடுத்த அரசன் ஹுசைனி நிஜாம் ஷா(1554 - 1565) கோலகொண்டா அரசன் இப்ராஹிம் குத்ப்ஷாவுடன் (1550 - 1581) சேர்ந்து பீஜப்பூரை 1557-ல் தாக்கித் தலைநகரான குல்பர்க் காவையும் முற்றுகையிட்டான். பீஜப்பூர் அரசன் அலி ஆதில் ஷாவிசய நகரத்தின் உதவி கோரினான். இராமராயனும் தானே படையுடன் சென்று உதவி செய்து தாக்கிப் பகைவரை வென்றடக் கினான். அத்துடன் போர் முடிவில் விசயநகரம், பீஜப்பூர், அகமது நகர், கோலகொண்டா ஆகிய நான்கு அரசுகளும் ஒருவரை ஒருவர் தாக்காமல் நேசமாகவும், பிறர் தாக்கினாலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதாகவும் கூட்டு நேசப் பொறுப்பு ஒப்பந்தம் செய்யும்படி தூண்டினான். இதன் பின் அந்நாளைய சூழ்நிலைகளிடையே மறக்க முடியாத ஒரு பொன் நிகழ்ச்சி ஏற்பட்டது. இராமராயனின் புதல்வன் ஒருவன் அச்சமயம் காலமாய் இருந்தான். உறவினர் ஒருவருக் கொருவர் துயரில் பங்கு கொள்வது போல பீஜப்பூர் அரசன் அலி ஆதில்ஷா இராமராயன் அரண்மனையில் வந்து துயருசாவினான். இதற்கேற்ப இராமராயன் மனைவியும் அவனை ஆவலுடன் வரவேற்றுப் பாராட்டினாள். அத்துடன் இழந்த மகனின் இடத்தில் அவனையே மகனாகத் தேர்வு செய்து கொண்டான். இந்த இனிய அன்பு நிகழ்ச்சியிலேகூட இராமராயன் இயல் பான பெருமிதப் போக்கு அலி ஆதில் ஷாவின் மனத்தில் ஓர் ஆறாப்புண் உண்டு பண்ணிற்று. மகனாக ஏற்றபின்பு அன்புத் தந்தை என்ற புதிய உரிமை காட்டி அவன் போகும்போது இராமராயன் அவனைச் சென்று வழியனுப்பவில்லை. ஜம்கெட் போர்: 1560 அகமது நகர் அரசன் ஹுசேனி நிஜாம் ஷா கூட்டு ஒப் பந்தத்தை மதியாமல் 1560-ல் பீஜப்பூரின் மீது படையெடுத்துத் தலைநகரான குல்பர்க்காவை முற்றுகையிட்டான். அலி ஆதில் ஷா தோற்றோடி வந்து விசய நகரில் தஞ்சம் புகுந்தான். இராமராயன் உடனே கூட்டொப்பந்தத்தின் வாசகத்தை நினைவூட்டிக் கோல்கொண்டாவை உதவிக்கு வரும்படி அழைத்தான். வேண்டா வெறுப்பாகவே கோல கொண்டா அரசன் அழைப்பை ஏற்று உதவ ஒத்துக் கொண்டான். உசேன் இந்த ஒற்றுமையை எதிர்பார்க்கவில்லை. ஆகவே அவன் தான் முற்றுகை இட்டுக் கொண்டிருந்த கல்யாணிக் கோட்டையின் தாக்குதல் பொறுப்பைத் தன் படைத் தலைவன் போபால் ராஜிடம் விட்டுவிட்டு அகமது நகருக்கு சென்றான். விசயநகர நேசப்படைகள் அவனைத் துரத்திச் செல்ல முனைந்தன. ஜம்கெட் என்னும் இடத்தில் ஜுசேன் எதிர்த்துத் தாக்கினான். ஆனால், இப்போரில் அவன் படைகள் தோல்வியுற்றுக் கலைந்தோடின. நேசப்படைகள் அவற்றை விடாது தௌலதாபாத் வரை பின் தொடர்ந்தன. ஹுசேன் இனி எதிர்ப்பதில் பயனில்லை என்று கண்டு கல்யாணி கோட்டையைத் திருப்பித்தந்து இணக்க உடன் படிக்கை செய்து கொண்டான். இராமராயன் வடதிசைத் தொடர்புகள் ஐஐ : 1560 - 1564 தென்னக இஸ்லாமிய மன்னரிடையே இராமராயன் வீரம் விசய நகரம் கூட இதுவரை கண்டிராத பெரு வெற்றிகளையும், பெரு மதிப்பையும் அவனுக்குத் தந்திருந்தது. சில நாட்களுக்குள் இந்து -முஸ்லீம் என்ற வேறுபாடகற்றி ஒரு புதிய தென்னகத் தேசியத்தைக்காணவும், ஆற்றலும் பண்பும் அவனிடம் இருந்தன. ஆனால், அவன் பேரவா இதனைத் தடுத்தது. அவனது பெருமிதப் போக்கே தென்னகத் தேசிய வாழ்வில் உள்ளூர வடக்கிருந்து வந்து அரித்து வந்த போலிப் பண்புகளை -மத மார்ச்சரிய உணர்ச்சியை -முஸ்லீம்கள் மராத்தியர் போன்ற இனங்கள் கொள்ளையடிக்கவும், பிறர் கொள்ளை கொடுக்கவுமே பிறந்தவர்கள் என்ற இனச் செருக்கையும், அதற்கு ஆட்பட்டுச் செயலற்று நலிந்த பிற இனங்களின் ஏலாக்கோழைமையையும் அவன் உணர்ந்து கொள்ள வில்லை. ஆகவே மேலும் மேலும் தன் தனி வெற்றிகளைப் பெருக்கி முஸ்லீம் அரசுகளின் பொறாமைக்கும் பகைமைக்கும் வழி வகுத்தான். தலைக் கோட்டைப் போரின் அழிவு நோக்கி இது அவனைக் கொண்டு சென்றது. ஜம்கெட் போருக்குப் பின் இராமராயன் பீடார் மீது படை யெடுத்து, அதன் அரசன் அலீபரீத்ஷா (1538 - 1582) வை வென்றான். ஆனால், தன்னுடன் கூட்டுநேச ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி தூண்டுவதற்கு மட்டுமே இவ்வெற்றியை அவன் பயன்படுத்தினான். இப்பெருந்தன்மையைப் பிரித்தாளும் சூழ்ச்சி என்று மட்டுமே பீடாரும், மற்ற முஸ்லீம் அரசுகளும் கருதியிருக்கக் கூடும். இராமராயன் அரசியல் வாழ்வு கோல கொண்டாவிலேயே தொடங்கியிருந்தது. கோல கொண்டாவின் அரசியல் சூழலில் அவனுக்கு நண்பர்களும் மிகப் பலராகவே இருந்தனர். சிறப்பாக, இப்ராஹிம் குத்ப் ஷா, அரசுரிமைப் போராட்டச் சமயம் தமயன் சீற்றத்துக் கஞ்சி விசய நகரத்துக்கே வந்து இராமராயன் ஆதரவும் உதவியும் பெற்றான். இராமராயன் உதவியுடனேயே அவன் ஆட்சி (1550 - 1571) தொடங்கிற்று. ஆயினும் அகமது நகரை எதிர்க்க இராமராயன் அழைத்தபோது அவன் மனமில்லாமலே இணங் கினான். ஏனெனில் இராமராயன் மீது உள்ளூர அவன் பொறமை கொள்ளலானான். ஆகவே அவன் மிக விரைவில் அகமது நகருடன் சேர்ந்து கொண்டு கல்யாணிக் கோட்டையை மீட்டும் தாக்க முற்பட்டான். இராமராயன் அவனுக்குப் பாடம் படிப்பிக்க எண்ணி முற்றுகை தகர்க்கத் தான் புறப்படும் சமயம், தன் தம்பி வேங்கடாத்திரியின் தலைமையில் ஒரு படையைக் கோல் கொண்டாவின் மீதே ஏவினான். இராமராயன் படைகளும் பீஜப்பூர் படைகளும் சேர்ந்து கல்யாணி முற்றுகையைத் தகர்த்தன. அகமதாபாதுப் படைகளும் கோல கொண்டாப் படைகளும் தத்தம் நகர்களுக்கு கலைந்தாடத் தொடங்கின. இராமராயன அகமது நகர்ப் படை களையும், பீஜப்பூர் மன்னன் கோலகொண்டாப் படைகளையும் துரத்திக் கொண்டே அவரவர் நாடுகள் சென்றார்கள். அகமது நகரைச் சூறையாடிப் பணியவைத்தபின் இராம ராயனும் பீஜப்பூர் மன்னனும் சேர்ந்து கோல கொண்டாவைப் பல போர்களில் முறியடித்துத் தாக்கினர். ஏற்கெனவே வேங்கடாத் திரியால் அவதியுற்று வந்த கோல்கொண்டாமேலும் அல்லோல கல்லோலப்பட்டது. எதிரிகள் கவனத்தைத் திருப்ப அவன் கொண்ட வீட்டைத் தாக்க முற்பட்டான். ஆனால், இதிலும் தோல்வியடைந் தான். இறுதியில் 1563-ல் கோல் கொண்டா, கஞ்சரா, பாங்கல் ஆகிய கோட்டைகளை விட்டுக் கொடுத்து அவன் பணிய நேர்ந்தது. இப்ராஹிம் குத்ப்ஷாவின் உள்ளம் இப்படுதோல்வியால் வேதனையிலும், தாங்கமாட்டா அவமதிப்பிலும் கிடந்து தத் தளித்தது. அந்தத் தத்தளிப்பிலிருந்து அதற்கு ஒரு புதிய படிப்பினை ஏற்பட்டது. ஒரு புதிய கொள்கையும் உருவாயிற்று. ‘தென்னக முஸ்லீம் அரசுகள் இனி தனித்து வாழமுடியாது -வாழ முயன்றால் வளர்ந்துவிட்ட இந்தப் பேரரசின் காலடியில் கிடந்து தன் மதிப் பிழக்கவே நேரும்’ -இதுவே அவன் பெற்ற படிப்பினை, ‘எப்பாடு பட்டாவது எல்லா முஸ்லிம் அரசுகளும் சேர்ந்து இந்த ஆணவ மிக்க பேரரசை ஒழித்தாக வேண்டும்’ -இது அவன் உள்ளத்தில் உருவாகிய புதிய கொள்கை. தலைக் கோட்டைப் போரின் மூலம் குறுகிய எல்லையில், இப்ராஹிமின் படிப்பினையும் கொள்கையும் பயன் கண்டன. ஆனால், அதன் பயனைத் துய்க்கத் தென்னக முஸ்லிம் அரசுகள் நீடித்து வாழவில்லை. அது மட்டுமன்று. தென்னக முஸ்லிம் அரசுகளும், அவற்றை அழிக்கவந்த வடதிசை முஸ்லிம் பேரரசு கூட, நீடித்து வாழவில்லை. தொலைத் தேசிய நோக்கு -படிப் படியாக விரிந்து செல்லும் தற்பண்பிலூறிய சங்க காலத் தமிழத் தேசியப் போக்கு -தென்னகத்தை இன்னும் அணையவில்லை. தலைக்கோட்டைப் போர் அல்லது இராட்சத் தங்கடிப் போர்: 1565 இப்போர் நடந்த இடம் கிருட்டிணை யாற்றுக்குத் தெற்கே யாகும். ஆற்றுக்கு மறுகரையில் இதற்கு அருகாமையாக இராட்சச, தங்கடி என்ற இரு சிற்றூர்கள் இருந்தன. அவை ஒன்றுக் கொன்று பத்துக்கல் இடைவிட்டுக்கிடப்பவை. முஸ்லிம் அரசுகளின் படைகள் தங்கியிருந்த இடம் தலைக்கோட்டை என்ற ஊருக்கு அருகில் இருந்தது. அங்கிருந்து கிருஷ்ணையாற்றைக் கடந்து வந்த பின்னரே போர் நடைபெற்றது. கன்னடமொழியின் பழைய வரலாற்றோடு ஒன்று இந்நிலைகளை விளக்கி, போர், தலைக்கோட்டைப் போர் என்று அழைக்கப் படுவதைவிட, அருகில் உள்ள இரு சிற்றூர்ப் பெயர்களையும் இணைத்து இராட்சச தங்கடிப் பேர் என்று கூறுவதே பொருத்தமென்று வாதிக்கிறது. கிராண்ட் டஃவ் போன்ற வரலாற்றா சிரியர் சிலர் இதனை ஏற்று இப்பெயரை மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் தலைக்கோட்டைப் போர் என்ற பெயரே பெரு வழக்காகப் பரந்து புகழ் அமைந்துள்ளது. மேனாட்டு வடநாட்டு வரலாற்று முக்கியத்துவம் உடைய போர்களுடன் இணையாகத் ‘தென்னாட்டுத் திரபால்கர் போர்’ ‘தென்னாட்டுப் பானிபட்டு’ என்று இப்போர் குறிக்கப் பட்டுள்ளது. இப்போருக்கு மூலகாரணமாய் இருந்தவன் கோல் கொண்டா அரசன் இப்ராஹிம் குத்ப ஷாவே யாவன். அவனும் அகமதுநகர் அரசன் ஹுசேன் நிஜர்ம் ஷாவும்தான் இராமராயனின் பேரவாவாலும் பெருமித வீரப் போக்கு களாலும் மிகவும் துயரத்துக் குள்ளானவர்கள். எனவே இருவரும் முதலில் கலந்து பேசி ஐந்து முஸ்லீம் அரசுகளையும் விசய நகருக் கெதிராக ஒன்றுபடுத்த அரும்பாடு பட்டனர். மாதக் கணக்காக இஸ்லாமிய அரசியல் தூதர்கள் அவற்றிடையே போக்குவரவு நடத்தினர். இதன் பயனாக, கோல கொண்டா, அகமதுநகர், பீடார் அகியவற்றின் முழு ஒத்துழைப்பும் கிடைத்தது. பீஜப்பூர் அரசன் அலி ஆதில்ஷாவையும் கூட்டில் இணைக்க அரசியல் தொடர்புகள் மட்டுமன்றி மணத் தொடர்புகளும் நாடப்பட்டன. அலி ஆதில்ஷாவுக்கு அகமதுநகர் அரசன் ஹுசேன் நிஜாம் ஷாவின் புதல்வி சாந்து பீபியையும், அகமதுநகர் இளவரசனுக்கு பீஜப்பூர் அரசன் அலியின் உடன் பிறந்த நங்கையருள் ஒருத்தியையும் மணம் முடிக்கப் பட்டது. இவ்வாறு அரசியல் நேச இணைப்புடன் குடும்பமண உறவிணைப்புகளும் சேர்ந்த பின்னும்கூட போர்க்களத்தில் சந்திக்கும்வரை பீஜப்பூர் அரசன் அலி இரு திசையிலும் இரண்டகமாகவே நடந்து கொண்டான். ஆனால், போக்களத்தில் இறுதியாக அவன் முஸ்லிம் அரசுக் கூட்டுடன் சேர்ந்து போரிட்டான். முஸ்லிம் அல்லாதவரின் வரலாற்றாதாரங்கள் இஸ்லாமிய மன்னர் ஐவருமே இப்போரில் ஒன்றுபட்டதாகக் கூறுகின்றன. ஆனால், முஸ்லிம் ஆதாரங்கள் காட்டுகிறபடி அக்கூட்டில் இறுதி வரை பீடார் கலந்து கொண்டதாகத் தெரிய வில்லை. முஸ்லிம் மன்னர்களின் படைகள் பிஜப்பூரில் ஓரிடத்தில் வந்து கூடி 1564-ஆம் ஆண்டு இறுதியில் புறப்பட்டன. விசய நகரத் திலும் மகாநவமி நாளன்றே இராமராயன் பெருமக்களிடம் வரவிருக்கும் பெரும் போர் பற்றிய தகவலறிவித்து பேரரசின் முழு வலிமையையும் திரட்ட ஏற்பாடுகள் செய்யும்படி கட்டளை யிட்டான். முஸ்லிம் மன்னர் படைகள் டிசம்பர் 24லேயே கிருட்டிணை யாற்றங்கரையில் உள்ள தலைக்கோட்டையருகே வந்துதங்கின. விசயநகரப் பேரரசின் படை வீரர்களும் நாலாபக்க மிருந்து வந்து குழுமினர். விசயநகரப் படைவீரரின் மொத்த எண்ணிக்கை பத்து இலட்சம் என்று இஸ்லாமிய வரலாற்றாசிரியர் பிரிஷ்டா கூறுகிறார். போரில் இராமராயன் மட்டுமன்றி அவன் உடன் பிறந்தார்களான திருமலையும் வெங்கடாத்திரியும் தத்தம் படைகளின் தலைமையில் வந்து கலந்து கொண்டார்கள். தோல்வியே கண்டிராத இராமராயன் வீறமைதியுடனும், அசையா வெற்றி யுறுதியுடனுமே படைக்களத்தை அணுகினான். அவன் இச்சமயம் வயது முதிர்ந்து தளர்ந்த உடலுடைய வனாயினும், தானே நேரில் இருந்து போர் நடவடிக்கைகளை நடத்த வேண்டுமென வற்புறுத்தினான். அவன் ஏறியிருந்த சிவிகை போர்க்கள மெங்கும் துழாவிக் கொண்டிருந்தது. இருதரப்புகளின் பெரும் படைகளும் எதிர் எதிராகப் போரை எதிர்பார்த்த வண்ணம் ஒரு மாத காலம் தங்கியிருந்தன. போ ராட்டம் 1565 ஜனவரி 23லேயே நடைபெற்றது. போர் தொடங்குமுன் இரு பக்கங்களிலுமிருந்து சிறுசிறு தாக்குதல் எதிர் தாக்குதல்கள், வலிமைத் தேர்வுகள் நடைபெற்றன. அவற்றுள் ஒன்றில் அகமது நகர மன்னன் நிஜாம்ஷாவும், கோல் கொண்டா மன்னன் குத்ப்ஷாவும் விசயநகரப் படைகளால் முறியடிக்கப்பட்டுச் சிதறியோடினர். விசய நகரின் பேராற்றலை இவ்வாறு தொடக்கத்திலேயே அறிந்த பின் எதிர்த்து வெற்றி பெற்று விடமுடியும் என்ற நம்பிக்கை முஸ்லிம் அரசுகளுக்குத் தளர்வுற்றது. எப்படியும் சூழ்ச்சியால் எப்பாடுபட்டாவது இவ் வலிமை வாய்ந்த பேரரசினை வென்று அழித்துவிட வேண்டு மென்று இருமன்னரும் திட்டமிட்டனர். அதன்படியே நேசமாக இணங்கிப் போக விரும்புவதாக இரு மன்னரும் பேச்சுறவு தொடங்கினர். ஆனால், இந்த நயவஞ்சகத்திரைக்குப் பின்னால் மூன்று பகைச் செயல்கள் திறம்படச் செய்து முடிக்கப்பட்டன. முதலாவது பிஜப்பூர் அரசன் அலி படையுடன் களம் வந் திருந்தானே ஒழிய எப்பக்கம் சேர்வதென்று இன்னும் முடிவு செய்யாமலேயே ஊசலாடி வந்தான். மற்ற இரு அரசரும் நேச இணக்கப் போர்வையில் கிடைத்த நேரத்தில் அவனுடன் நெருங்கி உறவாடி அவன் ஆதரவைப் பெற்றனர். இரண்டாவது கோல் கொண்டா அரசனின் ஆட்கள் அதே போர்வையில் விசயநகரத்தின் முஸ்லிம் படைத்தலைவர்களைச் சந்தித்து அவர்கள் உள்ளத்தை தம் பக்கமாகக் கரைத்தனர். மூன்றாவதாக இணக்க நேச நடவடிக்கைகளில் ஒன்றாகக் கிருட்டிணையாற்றைக் கடக்க இருந்த இடத்தி லிருந்து முஸ்லிம் மன்னர் படைகள் விலகிச் செல்வதாகப் பாவிக்கப் பட்டது. இதை நம்பிய விசய நகரப்படைகள் அத்திசையிலிருந்த காவலை வேறு திசைக்கு மாற்றிற்று. இதற்கே காத்திருந்த முஸ்லிம் மன்னர் படைகள் ஆற்றைக் கடந்து வந்து படைப் பாசறையையே தாக்கத் தொடங்கின. திடீர்த் தாக்குதலால் ஏற்பட்ட குழப்பத்தை இராமராயன் மிக எளிதில் சமாளித்தான். விசயநகரப் படைகளின் நடுப் பேரணியின் களப்போரில் இராமராயனே தலைவனாயிருந்தான். அவனை எதிர்த்து மறு பக்கத்தில் அகமது நகர் அரசன் நிஜாம் ஷாவும் அவன் படைகளும் நின்றன. இராமராயன் இடது புற அணி அவன் தம்பி திருமலை தலைமையிலும், வலதுபுற அணி மற்றத் தம்பியான வெங்கடாத் திரியின் தலைமையிலும் நின்றன. திருமலையை எதிர்த்து மறுபுறம் பீஜப்பூர்ப் படைகளும் நிறுத்தப்பட்டிருந்தன. தென்னகத்தின் வரலாற்றையே பெரிதும் மாற்றியமைத்த இப்பெரும் போர் நான்கு மணி நேரத்துக்குள்ளாகவே முடி வடைந்து விட்டது என்று தெரிகிறது. போர் வெற்றி விசய நகரத்தின் பக்கமே மேன்மேலும் சாய்ந்து வருவது கண்டு இஸ்லாமிய மன்னர் தம் கடைசிச் சூழ்ச்சித் துருப்பையே தட்டி விட்டனர். போரின் உயிர் நெருக்கடியான கட்டத்தில் விசயநகரத்தின் முஸ்லிம் பெரும்படைத் தலைவர்களில் இருவர் திடுமென எதிர்ப் பக்கம் சேர்ந்து தம் மன்னனையே எதிர்க்கத் தொடங்கினர். அவர்கள் ஒவ்வொருவர் கீழும் எழுபதினாயிரம் எண்பதினாயிரம் படைவீரர் இருந்ததனால், இது போரின் போக்கையே மாற்றிற்று. இதனைக் கண்டு இராமராயன் சிறிது நேரம் அதிர்ச்சியுற்றுத் திகைப்படைந்தான். பின் அதனால் ஏற்பட்ட குழப்பத்தைச் சமாளிக்க அரும் பாடு பட்டான். ஆனால், துரதிருஷ்ட வசமாக, அக்குழப்பத்தினிடையே அவன் அகமது நகர் அரசன் கையில் சிறைப்பட்டான். நிஜாம் ஷா அக்கணமே அவன் தலையை வெட்டி ஓர் ஈட்டியில் குத்தி விசய நகரப் படைகளெல்லாம் காணும்படி உயர்த்தினான். இராமராயன் வீரப்படைத் தலைமை ஒன்றையே அரணாகக் கொண்டிருந்த விசயநகரப் பேரரசின் வலு அக்களத்திலேயே உடைவுற்றது. ஓடுவது ஒன்றையே குறியாகக் கொண்டு விசயநகரப் படைகள் சிதறிப் பின்னடைந்தன. அப்படைவீரர்களைக் கொன்று குவித்து, ஓடுபவர்களைத் துரத்திக் கொண்டே இஸ்லாமியப் படைவீரர்கள் விசய நகரம் வரை தொடர்ந்தனர். போர்க்களத்தின் கிலியும் குழப்பமும் பேரரசெங்கும் பரந்து நகரினுள்ளும் புகுந்தது. படைகளைச் சீரமைத்துப் பாதுகாப்புப் போர் நடத்தவோ, பேரரசினுள்ளும் நகரினுள் வரும் பாதைகளைக் காக்கவோ யாரும் எத்தகைய நடவடிக்கைகளிலும் முனையவில்லை. அவைபற்றி எண்ணவுமில்லை. வழி திறந்து வாயில் திறந்து வைத்திருந்த நகரத்துக்குள் முதல்முதல் புகுந்தவர்கள் தலைபிழைத்துத் தோற்றோடி வந்த வீரரும் தலைவர்களுமே. அவர்களும் கிலியைப் பரப்புவதன்றி வேறெதுவும் செய்யவில்லை. களத்திலேயே விசயநகரத்து வீரர் ஓர் இலட்சம் பேர் படு கொலைக் காளாயினர் என்று கூறப்படுகிறது. நிலைமையைத் தமக்குச் சாதகமாகத் கொண்ட திருடர் கொள்ளைக்காரர் குழாங்களே துரத்திவரும் எதிரி படைகளின் முன்னணிக் குழாங்கள் ஆயின. தென்னகத்தின் தலைசிறந்த செல்வநகர் நாட்கணக்காக, வாரக் கணக்காகப் பகற்கொள்ளை, கொலை, சூறையாட்டு முதலிய அவதிகளுக்கு இரையாயிற்று. முஸ்லிம் அரசர் படைவீரர்களில் களத்தில் சாகாது பிழைக்கும் பேறு அடைந்த ஒவ்வொருவரும் இப்போரின் பின் தம் காலம்வரை பெருஞ் செல்வராயிருந்து வந்தனர் என்று முஸ்லிம் வரலாற்றாசிரியர் பெரிஷ்டா குறித் துள்ளார். மதுரையில் விசுவநாதநாயகனின் அமைச்சரும் படைத் தலைவருமாயிருந்த அரியநாயக முதலியார் இப்போரில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்துச் சென்றவருள் ஒருவர் என்று கூறப் படுகிறது. போரிலிருந்து மட்டுமன்றி நகரிலிருந்தே தப்பிச் சென்ற வர்களில் இராமராயன் உடன் பிறந்தார்களான திருமலையும் வெங்கடாத்திரியும் குறிப்பிடத்தக்கவர்கள். நகரத்தையும் நகர மக்களையும் அவரவர் தலைவிதிக்கே விட்டுவிட்டுப் பெயரள விலேயே பேரரசனாகச் சிறைப்பட்டுக் கிடந்த சதாசிவனுடனும், பேரரசின் பெருஞ் செல்வத் திரளுடனும் அவர்கள் விரைந்து பாதுகாப்பாகப் பெனுகொண்டா சென்று சேர்ந்தனர். இராமராயன் குவித்து வைத்த செல்வங்கள் 1550 யானைகளில் ஏற்றிச் செல்லப் பட்டனவாம்! திருவாரூரில் பிறக்கமுத்தி, தில்லையில் இறக்கமுத்தி என்று பல நகரங்களுக்குச் சிறப்பு ஊழ்வலியுண்டு என்று தமிழர் கூறுவ துண்டு. அது அவ்வளவு கண்கண்ட உண்மையானாலும் ஆகாவிட் டாலும், 1565-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆந் தேதி வரை விசயநகரத்தில் வாழும் தலையெழுத்து உடையவர் அனைவரும் மனையிழந்து, பொருளிழந்து, மானமிழந்து, சுற்றமிழந்து மாண்டு மடிந்தனர் என்பது அந்நாளைய உலகுக்குக் கைகண்ட உண்மையாயிற்று. அந்நகர் திரும்பவும் என்றென்றுமே தலையெடுக்கவில்லை. சிற்றூராகக் கூட வாழவில்லை. ஏனெனில் அந்த ஒருநாள் நிகழ்ச்சி அதனருகே கூட மக்கள் செல்ல விடாமல் நெடுநாள் தடுத்தது. திருமலை அதை எப்படியும் தலைநகரமாக்கப் பாடுபட்டும் அதில் எவரையும் குடியேறச் செய்ய முடியவில்லை என்று அறிகிறோம். வெள்ளையராட்சியில் வரலாற்று ஆராய்ச்சி மீண்டும் அதன் பெயர் கூறும் வரை தென்னாட்டவரும், வரலாறும் கூட அந்த நகரையும், நகர வாழ்வையும், அதில் ஆண்ட பேரரசரையும் முழுக்க முழுக்க மறந்தன. ஆந்திர நாட்டின் சிற்றூர்க் குடியான மக்கள் கூட இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கரிகாலனைப் பற்றிய செய்திகளை மறவாது மனதில் கொண்டு கூறும் தென்னக வாழ்வில், நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே பெரும் வாழ்வு வாழ்ந்த நகரையும் பிரிட்டிஷ் ஆட்சி வரையும் மரபு நீடித்திருந்த அதன் பேரரசாட்சியையும் முற்றிலும் மறந்தே போய்விட்டனர். வரலாற் றாய்ச்சிக்குப் பின்னும் கூட 15-ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியத் தூதன் பேஸும் (யீயநள) அந்நகரின் பெருஞ் செல்வப் பகட்டார வாரத்தைப் படம் பிடித்துப் போகாமல் இருந்தால், அதை நாம் மனக்கண்ணால்கூட மதிப்பிட்டுக் காண முடியாது. அந்நகரின் அழிபாடுகளிடை யேயும் தென்னகமெங்கும் விசயநகரப் பேரரசர் பாரிய கோயில் பணிகளிலேயும் அவர்கள் கலைப் பெருமையை இன்னும் காண்கிறோம். நகரின் சுற்றளவு 28 கல்லென்பது அதன் பெருமையை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தும்பிச்சி நாயகன் எழுச்சி: 1565 மதுரை மாமண்டலத்தில் விசுவநாத நாயகனுக்குப் பின் மதுரை அரசு மரபு இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் தமிழகத்தின் வல்லரசாக நீடித்தது. விசுவநாத நாயகன் புதல்வன் முதலாம் கிருட்டிணப்ப நாயகன் (1569 - 1572) தலைக்கோட்டைப் போருக்கு முந்திய ஆண்டே அரசிருக்கை ஏறினான். பெயரளவில் அவன் பின்னோருள் பலரும் விசயநகரப் பேரரசின் மேலுரிமையை ஒப்புக் கொண்டு அவ்வப்போது திறையனுப்பி னாலும், அவர்கள் சிறிது பழம் பாசத்தொடர்புடைய தனி வல்லரசாகவே பெரிதும் இருந்தனர் என்னலாம். கிருட்டிணப்பன் ஆட்சியின் இரண்டாம் ஆண்டிலேயே தொட்டியர் தலைவனாகிய தும்பிச்சி நாயகன் துரை நாயகத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான். இதற்கு முக்கியமான காரணம் பாளையக்காரர்களுள் ஒருவராக அவன் நடத்தப்பட விரும்பாததே யாகும். வரலாற்று ஆதாரங்கள் அவனைச் ‘சில்லவார் கோமான்’ ‘வங்கமன்னன்’ என்று புகழ்கின்றன. அச்சுதராயன் காலத் தமிழகக் கிளர்ச்சியிலேயே அவன் மரபினர் ஈடுபட்டிருந்தனர். மதுரைக்குக் கீழ்ப்படாமல் தன்னாண்மை பெற அவன் எண்ணினான். தன் பரமக்குடிக் கோட்டையைச் செப்பம் செய்து வலுப்படுத்திக்கொண்டு வீரர் பலரைத் திரட்டிச் சுற்றிலும் உள்ள மதுரையாட்சிப் பகுதிகளைச் சூறையாடத் தொடங்கினான். கிருட்டிணப்ப நாயகன் இக்கிளர்ச்சியை அடக்குவதில் விரைவும் திறமும் காட்டினான். விசுவநாதன் காலத்திலிருந்தே திறம்படப் பணியாற்றிய தளவாய் பெத்த கேசவப்ப நாயகன் மகன் சின்ன கேசவனை அவனை அடக்கும்படி அனுப்பினான். மதுரைப் படைகளுடன் மதுரையாட்சிக்கு ஆதரவான பாளையக்காரர் பதின்மூவர் படைகளும் சேர்ந்து கொண்டன. மிகக் கடும் போரிட்ட வண்ணமே தும்பிச்சி நாயகன் இறுதியில் பிடிபட்டுத் தூக்கப் பெற்றான். மதுரை நாயக அரசன் தும்பிச்சி நாயகனின் இரு புதல்வர்களையும் பெருந்தன்மையுடன் நடத்தி அவர்களுக்கு பரமக்குடி கோட்டையையும், பாளையத்தையும் அளித்தான். ஆனால், பிற பாளையங்களின் அளவுக்கு மேற்படத் தும்பிச்சி நாயகன் கொண்டிருந்த பெரும் பரப்பையும் கிளர்ச்சியின்போது வென்ற பரப்புக்களையும் மதுரை நேரடியாட்சிக்கு மாற்றினான். இலங்கைப் படையெழுச்சி : புத்தளம் போர் தமிழக வரலாறு கூறும் தெலுங்கு மொழி ஏடுகள் பல வற்றுள் ஒன்று ‘சிங்கள த்வீசுபதா’ என்பது. அது கிருஷ்ணப்பனின் இலங்கை வெற்றி பற்றி விரிவாகவும் விளக்க நுணுக்கமாகவும் எடுத்துக் கூறுகிறது. இலங்கை ‘மகாவம்சோ’ ஏட்டிலோ கல் வெட்டிலோ இதற்கு மிகுதியான சான்றுகள் கிட்டவில்லை. இதனால் இது அரசனாகுமுன் கிருட்டிணப்பன் விட்டலராசன் படைகளுடன் சென்று ஆற்றிய ஒரு போரா யிருக்கக் கூடும் என்று சில வரலாற்றாசிரியர் கூறுகின்றனர். ஆனால், சமகால வரலாற்றேடு கூறும் விளக்க நுணுக்கமான செய்திகளை மறுக்க ஏது எதுவும் இல்லை. பெயரளவிலே விசயநகரப்பேரரசனான சதாசிவராயனின் கல்வெட்டுக்கள் 1564 - 1565 லேயே அவன் இலங்கையில் போர் நடத்தியதாகக் குறிக்கின்றன. 1567க்குரிய திருமங்கலம் கல்வெட்டொன்று ‘வீரவசந்தராயன்’ என்ற ஒரு தலைவன் இலங்கையை வென்றதாகக் குறிக்கிறது. கிருட்டிணப்ப நாயகன் ஆட்சியின் முதலிரண்டாண்டுகளுக்குள்ளேயே இது நிகழ்ந்திருக்க வேண்டு மென்பதை இது காட்டுகிறது. தவிர வரலாற்றேடு இவ்வெற்றி யுடன் தும்பிச்சி நாயகன் கிளர்ச்சியை இணைத்தே கூறுகிறது. கண்டியிலிருந்து கொண்டு இலங்கையாண்ட அந்நாளைய அரசன் தும்பிச்சி நாயகனின் பெரு நண்பன் என்று வரலாற்றேடு குறிக்கிறது. தும்பிச்சி நாயகனைக் கொலைத் தண்டனைக் காளாக்கிய செயல் பற்றி அவன் இழிவாகப் பேசியதாலேயே படையெடுப்பு நடந்ததாக அது குறிக்கிறது. ஆனால், வெறும் பேச்சுடன் நில்லாமல் விசயநகரப் பேரரசின் பிரதிநிதி என்ற முறையில் மதுரைநாயகனுக்குத் திறையனுப்பாமலிந்ததே படையெடுப்பின் காரணமாயிருந் திருக்க வேண்டும் என்பதைப் போரின் போக்கும் முடிவும் காட்டுகின்றன. கிருட்டிணப்ப நாயகன் தமிழகத்தின் 52பாளையக்காரரை அவர்கள் படைகளுடன் அனுப்பினான். அவர்கள் நவபாடாணத் துறைமுகத்தில் கப்பலேறி மன்னார் துறைமுகத்தில் சென்று இறங்கினார்கள். அங்கிருந்து அனுப்பப்பட்ட தூதனிடம் திறை தந்து பணிய மறுத்துக் கண்டி அரசன் நான்கு அமைச்சர் களையும் எட்டு மாகாணத் தலைவர்களையும் (தேச நாதர்களையும்), 40,000 படை வீரருடன் நாயகப் படைமீது ஏவினான். நாயகப் படைகளின் தலைவன், தும்பிச்சி நாயகனை அடக்கிய சின்ன கேசவ நாயகனே. அவன் புத்தளத்தில் ஆற்றிய போரில் வெற்றி கண்டு இருபதினாயிரம் வீரரையும், அமைச்சர்களில் இருவரையும், மாகாணத் தலைவர்களில் ஐவரையும் சிறைப் பிடித்தான். சிறைப்பட்டவர்களைச் சின்ன கேசவ நாயகன் நல்லாதர வுடன் நடத்தி அவர்களில் சிலரையே மீண்டும் தூதராக அனுப் பினான். பணிந்து போகும்படி அவர்கள் கண்டி அரசனை மீண்டும் பணிந்து வேண்டினர். ஆனால், அவன் பணியாது மறுத்து மீண்டும் போருக்கெழுந்தான். இரண்டாவது போர் முன்னிலும் கொடியதாயிருந்தது. கண்டிப் படைகளில் 60,000 நாட்டு வீரரும் 10,000 அயலவரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அயலார் (காபிரிகள்) என்று இங்கே குறிக்கப்பட்டது போர்ச்சுகீசயராய் இருத்தல் கூடும். இப்போரிலும் 8,000 நாட்டு வீரரும் 8,000 அயலவரும் உயிரிழந்தனர். ஆனால், கண்டியரசன் பணிந்து கொடுக்கவு மில்லை. உயிருடன் சிறைப் படவும் மறுத்தான். அவன் உயிரற்ற சடலமே நாயகப்படைத் தலைவன் கைப்பட்டது. ஆனால், இங்கும் படைத்தலைவன் பெருந்தன்மை காட்டி அரசனுக்குரிய மதிப்புடன் அவ்வுடலைத் தலை நகருக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தான். இறந்த அரசன் குடும்பத்தினர் இலங்கையின் பழைய தலை நகரத்துக்கு மதிப்புடன் அனுப்பப்பட்டனர். மதுரை மன்னன் கிருட்டிணப்பன் இலங்கையில் மூன்று நாள் தங்கியிருந்தான். தன் மைத்துனனான விசய கோபாலனையே தன் ஆட்சிப் பேராளாக இருந்து திறையை ஒழுங்காகப் பிரித்து அனுப்பும்படி ஏற்பாடு செய்து விட்டுக் கிருட்டிணப்பன் மதுரை திரும்பினான். மாவலி வாணாதிராயன் கிளர்ச்சி: (1572 - 1595) ஹொய்சள பல்லாளன் காலத்தில் சோழ நாட்டில் சம்புவ ராயர் வலிமை வாய்ந்தவரா யிருந்ததுபோல, பாண்டிய நாட்டில் மதுரை ராமநாதபுரம் வட்டங்களில் வாணாதிராய மரபினர் ஆற்றலுடையவர்களாயிருந்தனர். மதுரை முஸ்லிம் ஆட்சிக்கு முன்னும் பின்னும் மதுரையிலும், மதுரை சூழ்ந்த பகுதிகளிலும் சுந்தரத்தோள் மாவலி வாணாதிராயன் என்பவன் பாண்டிய மரபுடன் தொடர்பு கொண்டு அம்மரபுரிமை கோரியிருந்தான். 16-ஆம் நூற்றாண்டில் இராமநாதபுர மாவட்டத்தில் திருப்புல்லாணி, காளையார்கோவில், தேவிபட்டணம் ஆகிய பகுதிகளில் வாணா திராயர் ஆட்சி புரிந்தனர். அக்காலத்துக்கு முன் அவர்கள் பாளைய முறையில் சேர்க்கப்பட்டிருந்தனர். கிருட்டிணப்ப நாயகனுக்குப் பின் மதுரை நாயக மன்னனானவன் வீரப்ப நாயகன் (1572 - 1595), முந்திய ஆட்சியில் தும்பிச்சி நாயகன் கிளர்ச்சி செய்தது போலவே அவன் காலத்தில் ஒரு வாணாதிராய மரபினன் மதுரை ஆட்சியை மீறி எழுந்தான். மானாமதுரையிலும் காளையார் கோவிலிலும் கோட்டை கட்டித் தன்னை வலுப்படுத்திக் கொண்டு, அவற்றைச் சூழ்ந்த நாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றலானான். ஆனால், வீரப்ப நாயகன் தன் முழு ஆற்றலையும் தொடக்கத்திலேயே அவன்மீது செலுத்தி அவனை வென்றதுடன் அவன் பாளையத்தையே அவனிடமிருந்து பறித்தான். அவன் வென்ற பகுதிகளும் பாளையமும் நேராட்சிப் பகுதிகளாயின. மும்மொழி மண்டலங்கள் தலைக்கோட்டைப் போருக்குப்பின் ஆறு ஆண்டுகள் விசயநகரப் பேரரசு ஒழுங்கான தலைமையாட்சியில்லாமலேயே இருந்தது. மாகாண ஆட்சித் தலைவர்கள் அச்சமயம் கிட்டத்தட்டத் தன்னாட்சியாளராயினர். ஆயினும் அவர்களே பேரரசு சிதறாமல் பார்த்துக் கொள்ள முடிந்தது. கிருட்டிண தேவராயன் காலத்தி லிருந்த பயிற்சிபெற்ற பணியாளர்களை நீக்கி இராமராயன் உறவினர்களை அமர்த்தாமல் இருந்திருந்தால் மைய ஆட்சியும் கெட்டிருக்காது என்றும்; உரிமை முழுவதையும் அவன் தன் கைக்குள்ளேயே கொண்டுவராமலிருந்தால் தலைக்கோட்டைப் போரில்கூட அவ்வளவு முழுத்தோல்வி ஏற்பட்டிராது என்றும் கூறலாம். இராமராயனின் தம்பியான திருமலையின் அரசுரிமைக் கெதிராக இராமராயனின் புதல்வனான பெத்த திருமலை அரசுரிமையில் போட்டியிட்டு, பீஜப்பூர் அரசன் அலிஆதில் ஷாவை உதவிக்கு அழைத்தான். பெனுகொண்டாவின் தலைவன் சிவராம சின்னப்ப நாயகன் போர்த்திறமையே அச்சமயம் அவனைக் காத்தது. ஆனால், திருமலை அகமது நகர், கோல கொண்டா அரசர் உதவியை அழைத்தபோது பீஜப்பூர் அரசர் அவர்களுடன் நேச ஒப்பந்தம் செய்து கொண்டு அடோனியைக் கைப்பற்றிக் கொண்டான். தென் திசை அரசுகளின் அரைகுறைத் தன்னாண்மையை மதித்து நடந்தது மூலம் பேரரசு மேலும் சரியாமல் திருமலை பார்த்துக் கொண்டான். அத்துடன் பேரரசின் மூன்று பெரும் பகுதிகளையும் மூன்று மண்டலங்களாக்கி அவற்றில் தன் மூன்று புதல்வர்களையும் மாமண்டல முதல்வர்கள் ஆக்கினான். அதன்படி மூத்த புதல்வன் (முதலாம்) சீரங்கன் பெனுகொண் டாவைத் தலைநகராகக் கொண்ட தெலுங்கு நாட்டையும், இரண்டாம் புதல்வன் இராமன் சீரங்கப்பட்டினத்திலிருந்து கன்னட நாட்டையும் மூன்றாம் புதல்வன் வேங்கடபதி சந்திரகிரியைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தையும் ஆண்டனர். சென்னைப்பட்டினத்தை ஆங்கிலேயருக்களித்த சென்னப்ப நாயகன் இந்தச் சந்திரகிரித் தமிழரசன் மரபினனேயாவன். தன்சீரமைப்பில் பெருமை கொண்டு ‘திருமலை கருநாடகப் பேரரசுக்கு புது வாழ்வு தந்தவன்’ என்ற பட்டம் மேற்கொண்டான். முதல் தலைநகர் மாற்றம் அரவீட்டு மரபில் திருமலைக்குப்பின் அவன் மூத்த புதல்வன் முதலாம் சீரங்கன் (1572 - 1585) ஆட்சியில் பீஜப்பூர் அரசன் அலிஆதில்ஷா அடோணியிலிருந்து 1576-ல் பெனு கொண்டா வைத் தாக்கினான். அதன் பாதுகாப்பைத் தன் படைத்தலைவன் சென்னப்ப நாயகனுக்கு விட்டுவிட்டு முதலாம் சீரங்கன் தலை நகரைச் சந்திரகிரிக்கு மாற்றிக் கொண்டான். சீரங்கன் உதவியுடன் சென்னப்ப நாயகன் பீஜப்பூரைப் போரில் முறியடித்தான். கோல்கொண்டா அரசனையும் சீரங்கன் உதவிக்கு அழைத் திருந்தான். ஆனால், 1573 -ல் பீஜப்பூரும் கோலகொண்டாவும் ஒரு மறை கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தனவாம்! அதன் படி தென்னகத்தின் மேல்திசை பீஜப்பூர் வெற்றிகட்கும், கீழ்திசை கோல்கொண்டா வெற்றிகட்கும் உரியனவாக ஒப்புக் கொள்ளப் பட்டிருந்தன. ஆகவே கோல் கொண்டா உதவ முன்வரவில்லை. ஆனால், கோல்கொண்டாவிடம் படைத்தலைவனாயிருந்த மராத்திய பிராமணர்களுள் ஒருவனான முரஹரி ராவ் 1579-ல் சீரங்கன் கீழுள்ள பெருமக்களுடன் சேர்ந்து அவனைத் தாக்கிய துடன் அகோபிலத்தில் நரசநாயகன் கட்டியிருந்த செல்வவள மிக்க நரசிங்கர் கோவிலைக் கொள்ளையிட்டான். வினுகொண்டா, கொண்ட வீடு, உதயகிரி ஆகிய கோட்டைகளையும் அது சூழ்ந்த இடங்களையும் கைக் கொண்டான். பெண்ணையாற்றுப் போர்: (1586 - 1589) முதலாம் சீரங்கனுக்குப் பின் அவன் புதல்வர்கள் மிகச் சிறு குழந்தைகளாய் இருந்ததனால் அவன் தம்பி இரண்டாம் வெங் கடன் (1586 - 1614) அரசுரிமை ஏற்றான். சீரங்கப்பட்டினத்தி லிருந்து கன்னடப் பகுதியின் மண்டலத் தலைவனாயிருந்த அவன் தமையன் இராமன் இதற்குள் உலகு நீத்திருந்தான். எனவே அம்மண்டலம் அவன் மூத்த புதல்வாகிய திருமலைக்கு அளிக்கப் பட்டது. அவன் ஆட்சியில் விசயநகரமரபு ஒரு சிறிதே மறுமலர்ச்சி யடையத் தொடங்கிற்று. ஆனால், அது நீடிக்க வில்லை. இப்ராஹிம் குத்ப்ஷாவுக்குப்பின் கோலகொண்டா அரசு முகமது குலீகுத்ப்ஷாவின் (1581 - 1611) ஆட்சிக்கு வந்தது. அவனிடமிருந்து கொண்ட வீட்டை மீட்கும் முயற்சியில் வெங் கடன் ஈடுபட்டான். இதற்கெதிராக முகமது குலீ கர்நூல் மாவட்ட மெங்கும் வென்று,கடப்பை, அனந்தப்பூர்ப் பகுதிகளையும் தாக்கிக் கைப்பற்றிக்கொண்டு பெனுகொண்டாவையும் முற்றுகையிட்டான். வெங்கடன் இப்போது பணிந்து நேச இணக்கம் செய்து கொண்டான். ஆனால், பெற்ற ஓய்வை நன்கு பயன்படுத்திப் படை வலுவைப் பெருக்கிக் கொண்டான். குத்தி, கண்டி கோட்டா ஆகிய கோட்டைகளும் விரைவில் விசயநகர் வசமாயின. இவ்வெற்றிகளைச் சமாளிக்க முகமது குலீ விரைந்து ரஸ்டம்கான் என்ற படைத்தலைவனுடன் அனுப்பிய படை களையும் இரண்டாம் வெங்கடன் பெண்ணையாற்றங் கரையில் முறியடித்தான். வல்லம் பிரகாரம் போர் அல்லது வல்லத்துப் போர் ஐஐ: 1583 சங்க காலத்தில் தமிழர் ஆரியரை முறியடித்த பழம் போர்ப் பெருமையுடையது வல்லம். தஞ்சையை அடுத்துள்ள இது ஒரு வலிமை வாய்ந்த கோட்டை நகரமாய் இருந்தது. அச்சுதராயன் காலத்தில் மதுரை மண்டலத்தைச் சார்ந்ததாயிருந்த இக்கோட்டை தஞ்சை மண்டலத்துக்கும், தஞ்சை மண்டலத்தைச் சார்ந்ததாய் இருந்த திருச்சிராப் பள்ளி மதுரை மண்டலத்துக்கும் பேரரசின் மைய ஏற்பாடாகவே மாற்றப்பட்டதாக அறிகிறோம். முதலாம் கிருட்டிணப்ப நாயகன், வீரப்ப நாயகன் மதுரை யில் ஆண்ட நாட்களில் வாணாதிராயர் குடிகளில் ஒன்று கிளர்ச்சி செய்து அழிக்கப்பட்டது கண்டோம். இதன் பின்னும் மதுரை யடுத்த பொட்டைத் தஞ்சை என்று நகரத்தில் ஒரு வாண அரசன் ஆண்டு வந்தான். இவனைப் பொய்யா மொழிப் புலவர் என்ற தமிழ்க் கவிஞர் தஞ்சை வாணன் கோவை என்ற சிறந்த தமிழிலக் கிய ஏட்டில் பாடியுள்ளார். இதனால் இவன் தமிழ்ப் புலவர்களை ஆதரித்துத் தமிழிலக்கியத்தை வளர்த்த புகழ்வாய்ந்த சிற்றரசன் என்பது விளங்குகிறது. இவன் பெருவீரனாகவும் இருந்தான். இக்காலத்தில் அரசியல் பேரரசின் அவாவை இலக்கியப் பேரரசின் மீதும் அருளாட்சிப் பேரரசின் மீதும் திருப்பிப் புகழுடன் திருநெல்வேலிப் பகுதியில் பல பாண்டியர் ஆண்டிருந்ததாக அறிகிறோம். கொற்கையைத் தலைநகராகக் கொண்டு அதிவீரராம பாண்டியன் (1564 - 1604) ஆட்சி செய்து வந்தான். தமிழில் நைடத காவியம், கூர்மபுராணம், வாயு சங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம் ஆகிய அரும்பெரும் நூல்களும் பள்ளிப் பிள்ளைகளின் நீதிநூல்களுள் ஒன்றாகிய நறுந்தொகை அல்லது வெற்றி வேற்கை யும் இயற்றியவன் இவனே. வெற்றி வேற்கை வீரராமன் கொற்கையாளி குலசேகரன் புகல்...... நறுந்தொகை’ என்று நறுந்தொகையின் அவையடக்கப் பாடலின் முதல் தொடரான வெற்றி வேற்கையே இன்று அந்நூலின் பெயராக விளங்குகிறது. அவன் தன் தந்தையாகிய திருநெல்வேலிப் பாண்டியன் என்ற அபிராம பராக்கிரம பாண்டியன் (1552 - 1564) பெயரை நினைவு கூர்வதற்காகத் தென்காசி நகரில் குலசேகரமுடையான் கோயில் எழுப்பியிருந்தான். இவன் தமயன் என்று தமிழ் மரபில் குறிக்கப்படும் இவனுடைய தம்பி வரதுங்கராம பாண்டியன் எக்காரணத்தாலோ 1588 -லிருந்தே கரிவலம் வந்த நல்லூரிலிருந்து அரசாண்டான் என்று அறிகிறோம். இவனும் தமிழ் இலக்கியப் பேரரசனே. பிரமோத்திர காண்டம், கருவைக் கலித்துறை அந்தாதி, கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி முதலிய சிறந்த நூல்கள் இவனால் எழுதப்பட்டன. இவற்றுள் கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி தமிழின் தலைசிறந்த பக்தி நூல்களுள் ஒன்று. ‘குட்டித் திருவாசகம்’ என்ற அதன் சிறப்புப் பெயரே இதனைக் காட்டுவதாகும். அதி வீரராம பாண்டியனுக்குச் சாமித்தேவரும் வரதுங்கராம பாண்டியனுக்கு வேம்பற்றூர் ஈசான தேசிகரும் சைவத் திருவருள் நெறிக்குரிய ஞானாசிரியரா யிருந்தனர் என்று அறிகிறோம். சைவ சமயத்துறையில் இவ்விருவருக்கும் இருந்த பெருத்த ஈடுபாட்டை இது காட்டுவதாகும். வல்லத்துப் போரில் அதிவீரராமபாண்டியன். வரதுங்கராம பாண்டியன் ஆகிய இரு பாண்டியருடனும் சேர்ந்து தஞ்சையை ஆண்ட வாண அரசன் அச்சுதப்ப நாயகன், வீரப்ப நாயகன் என்ற நாயக மரபினர் இருவருடன் போரிட்டு வெற்றி கண்டான். சீவல்லப பாண்டியனால் வெளியிடப்பட்ட கல்வெட்டொன்று இவ்வெற்றியைக் குறிப்பிடுகின்றது. சீவல்லபன் என்பது அதி வீரராம பாண்டியன் பட்டப் பெயரேயாகும். அழகன் சீவல்லவேள் என்றும் அவன் வழங்கப் பட்டுள்ளான். ஆனால், சீவல்லபன் என்பது அவன் மகன் பெயராகவே இருக்க வேண்டு மென்று கருதிக் கொண்டு தலை சிறந்த வரலாற்றாசிரியர்களில் கூடப் பலர் இக் கல்வெட்டில் கொடுத்த ஆண்டைக் காரணமின்றி 1610 என்று திருத்தி இப்போரையும் இரண்டாம் சீரங்கன் ஆட்சிக்குப் பிற்பட்ட அரசுரிமைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக்க விரும்பி அவதிப் படுவர். ஆனால், வலிந்த இத்திருத்தத்தின் பின்னர்க் கூட அது அப்போர்க் காலமாகிய 1614-ஐ எட்டவில்லை என்பது குறித்துக் காரணத்தக்கது. இப்போருக்குரிய மெய் விளக்கத்தை அது குறித்த கல் வெட்டுக் காலமாகிய 1583-ன் சூழ் நிலைகளே காட்டவல்லன. விசயநகரப் பேரரசின் ஆற்றல் தெற்கே செல்லுபடியாகாத காலம் அது. மதுரை யாண்ட வீரப்ப நாயகனோ இராமநாத புரம் பகுதியிலே ஒரு ஆற்றல் வாய்ந்த வாணாதி ராசனை வென்று அவன் பாளையத்தையே கைக் கொண்டிருந்தான். வல்லத்துப் போரின் எதிரிகளில் ஒருவனான அச்சுதப்ப நாயகன் உண்மையில் அச்சுத ராயன் காலத்தில் தஞ்சை மண்டலத்தின் தலைவனாக அமர்வு பெற்றிருந்த அச்சுதராயன் சட்டகன் செவ்வப்ப நாயகனின் புதல்வனே யாவன். வாணாதிராயன் கிளர்ச்சியின் பேரால் மதுரை மண்டலத்தின் மீது தஞ்சை மண்டலத் தலைவனான அச்சுதப்ப நாயகன் தலையிட எண்ணிக் கிளர்ச்சியை ஆதரித்திருத்தல் இயல்பு. இதற்கெதிராக முன் மதுரை மண்டலப் பகுதியாக இருந்த வல்லத் தின் மீது தன்னுடன் நேசமாயிருந்த தஞ்சை வாணனையும் அவன் துணைவராகிய பாண்டியரையும் வீரப்ப நாயகனே ஏவிவிட்டுத் தான் விலகி யிருந்திருக்க வேண்டும் என்னலாம். தஞ்சை வாணன் பாண்டியரை மேலுரிமையை ஏற்றவன். தலைவராகிய பாண்டியரை மதியாத பகைவர் மாள அவன் வல்லத்துப் போர் புரிந்து வென்றானென்று தஞ்சை வாணன் கோவை அவனைப் புகழ்கின்றது. தவிர, போர்க்காலக் கல் வெட்டுக்களிலேயே இடம் பெற்றுள்ள தென்காசிக் கவிஞன் கவியன் கவிராயன் வரதுங்கராம பாண்டியன் முடிசூட்டு விழா வில் பாடிய மங்கலப் பாடல்களில் (நாள் மங்கலம், குடை மங்கலம், வாள் மங்கலம் என்ற மும் மங்கலப் பாடலில்) பற்றலர் மண் கொள்ளும், பணிந்தார்க்கு அரசளிக்கும் கொற்றம் உயர்க்கும், அறங்கூறுமே -வில்தடம் தோள் வில்லவனை வென்று கொண்ட வீரமாறன் செழியன் வல்லம் எறிந்தான் ஏந்து வாள் என்று வல்லத்து வெற்றியையும் குறித்துள்ளது. வாண மரபினர்க்குரிய பழைய தலை நகர் வட ஆர்க்காட்டு வல்லமே. தஞ்சை வல்லமும் அவர்கள் தென்திசை வெற்றிகட்குரிய தாகலாம். வாணாதிராயன் அழிவுற்ற பின்தஞ்சை வாணன் இப்பழம் பகுதியை வெல்ல எண்ணிப் பாண்டியர் ஆதரவைப் பெற்றிருத்தலும், மதுரை நாயகர் இதற்கு மறைமுகத் துண்டுதலா யிருத்தலும் இயல்பு, வல்லம் வென்ற பின் அதனைத் தஞ்சை வாணனுக்கே வரதுங்க ராமன் அளித்திருக்க லாம். ‘பணிந்தார்க்கு அரசளிக்கும்’ என்ற வெண்பாத் தொடர் இதனைக் குறித்திருத்தல் கூடும். ஜம்புலமதுகுப் போர்: 1598 பெண்ணை யாற்றுப் போருக்கும் பின் கோல் கொண்டா அரசன் இதுவரை வென்ற பகுதிகளில் வேறுபல கோட்டைகளை யும் இரண்டாம் வெங்கடன் கைப்பற்றி அப்பகுதிகளில் தன் ஆட்சி நிறுவினான், இதன் பின் கோல் கொண்டா அரசன் கிருட்டிணை யாற்றையே மீண்டும் கோல்கொண்டாவுக்கும் விசயநகரத்துக்கும் எல்லையாக ஏற்று ஒப்பந்தம் செய்து கொண்டான். புற எதிரியாகிய கோல்கொண்டாப் பகைவனைச் சமாளித்த பின்னும் இரண்டாம் வெங்கடன் அக எதிரிகளாகிய பெருமக்களை எதிர்க்க வேண்டி யிருந்தது. கொண்ட வீடு இன்னும் கோல கொண்டாவின் கையிலேயே இருந்தது இதற்கு உகந்ததாயிற்று. ஆனால், 1589-ல் உதயகிரி விசய நகரப் பகுதியாயிற்று. கோலாற்றுப் பகுதியில் கிளர்ந்தெழுந்த திம்மய்யக் கௌடன் இதனை யடுத்துக் கீழடக்கப் பட்டான். அதன் பின் நந்தேலா (தற்கால நந்தியால்) கோட்டையின் தலைவனான கிருஷ்ணம ராயன் (1592 - 1598) அருகில் உள்ள பல தலைவர்களைச் சேர்த்துக் கொண்டு பேரரச மரபினனை எதிர்த்தான். ஆனால், ஜம்புலமதுகுப் போரில் அவன் தோல்வியுற்றான். நந்தேலாக் கோட்டையும் மூன்று மாதங்களுக் குள் பிடிபட்டது. கிருஷ்ணமராயன் சிறைப்பட்டுத் தன் வாழ் நாள் முழுவதும் சந்திரகிரிக் கோட்டையிற் காவற் கிடங்கிலே கழித்து அங்கேயே உயிர் விட்டான். வேலுகோடி மரபின் செயல் வீரகாவியம்: 1598 - 1617 இரண்டாம் வெங்கடனின் வீரமும் திறமையும் பல வீரப் பெருமக்களின் நன்மதிப்பையும், ஆதரவையும் அவனுக்குத் தந்தன. அங்ஙனம் ஆதரித்தவர்களில் பேரரசர், அரசர்களுக்கு அருகே தன் வீரச் சின்னங்களைப் பொறித்த ஒரு வீரப் பழப் பெருங்குடி. பெரும் பேட்டுச் சீமையில் (செங்கற்பட்டு, மதுராந்தகம் பகுதியில்) ஆண்ட வேலு கோடி மரபு ஆகும். இதில் இருபத்திரண்டாம் தலை முறையினனும் வேலுகோடிகஸ்தூரி ரங்கப்பா என்பவன் புதல்வனுமான வேலு கோடியாசம நாயுடு விசயநகரப் பேரரசின் வரலாற்றிலும் தென்னக வரலாற்றிலும் 16,17 -ஆம் நூற்றாண்டு களிடையே ஒரு செயல் வீர காப்பியத்தை நடைமுறைப் படுத் தினான். ஜம்புல மதுகுப் போரிலிருந்து (1598) தொடங்கி, உத்தர மேரூர்ப் போர் (1601) மின்னல் போர் (1603), வேலூர்ப் போர் (1603), செங்கற்பட்டுப் போர், திருச்சிராப் பள்ளிப் போர், மதுரைப் போர், செஞ்சிப் போர் (1608), தோப்பூர்ப் போர் (1617) பாளையங் கோட்டைப் போர் (1617) ஆகிய வரலாற்றுப் பெரும் போர் வெற்றிகள் பலவும் வேலு கோடி யாசம நாயுடுவின் செயல் வீர காப்பியப் பகுதிகளேயாகும். அகமது நகர் வீழ்ச்சி : வீர அரசி சாந்து பீபி : 1600 தலைக் கோட்டைப் போருக்குப் பின் விசயநகரப் பேரரசு மட்டும் சரியவில்லை; அதனை யழித்த இஸ்லாமியப் பேரரசுகளின் அழிவும் அதனுடனேயே தொடங்கிற்று என்னலாம். ஆனால், சரிந்து வந்த விசயநகரப் பேரரசின் வடபகுதி அழிந்த பின்னும் தென் பகுதியே புது மலர்ச்சி யுற்றதுபோல, ஐந்து முஸ்லிம் அரசுகளான, பீடார், பீரார், அகமது நகர், பீஜப்பூர், கோல் கொண்டா அரசு களிலும் வடகோடியில் உள்ள பேராரும், பீடாரும் முறையே முக்கால் நூற்றாண்டும், ஒரு நூற்றாண்டும் வாழ்ந்து 16-ஆம் நூற்றாண்டுக்குள் மரபழிந்தன. ஆனால், அவற்றை விழுங்கி அழிக்க முயன்ற அகமது நகர் பீடாரின் அழிவுக்கும் முற்பட்டே வட இந்தியாவின் புதிய முகலாயப் பேரரசால் அலைக்கழிக்கப்பட நேர்ந்தது. தில்லியில் ஆண்ட ஆப்கானிய மரபுகளில் கடைசி மரபு லோடி மரபே அயல் மரபுகளால் தேசிய வாழ்வமைதியும் பண் பமைதியும் இழந்து வந்த வடதிசை அந்த அயல் மரபுகளையும் நெடுநாள் தாக்காமல் இருந்ததில்லை. ஆப்கானிய மரபுகளில் பழமரபைப் புதுமரபு படிப்படியாக அழித்து வந்தது போலவே, ஆப்கானியத் தாயகமான ஆப்கானிஸ் தானத்திலும் அயல் மரபு ஆப்கன் மரபை அழித்தது. ஆப்கானிஸ்தானத்துக்கே அயல் மரபாக வந்தமைந்த இந்த மொகலாய மரபு, வடஇந்திய வெளியிலும் ஆப்கானிய மரபழித்து வட இந்தியாவின் ஆட்சியைக் கைக் கொண்டது. நடு ஆசியாவிலிருந்து ஆப்கானிஸ்தானத்தைக் கைக்கொண்டு பின் தில்லியையும் கைக்கொண்ட முதல் முகலாய அரசன் பாபர் (1526 - 1530). அவன் மகன் ஹுமாயூன் (1530 - 1556) ஆட்சி நடுவே வங்க நாட்டில் ஆண்டிருந்த ஆப்கன் மரபினானான ஷெர்ஷா(1542 - 1555) ஹுமாயூனைத் துரத்தி 13 ஆண்டுகள் ஆட்சி செய்திருந்தான். வங்கத்தில் முற்றிலும் மாறாதிருந்த தமிழ் மரபு சார்ந்த பண்பாடுகளையும், ஆட்சிப் பண்பையும் அவன் பரப்பி, வட இந்தியாவில் முதல் முதலாக நல்லாட்சியின் அடிப்படைத் திட்டங்களை வகுத்தான். இவ்வாட்சியின் அடிப்படைக் கூறும் பண்புகளும் மொகலாய ஆட்சியிலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் நீடித்து இன்று வரை நிலவியுள்ளன. அவனுக்குப் பின் வந்த முகலாய ஆட்சி, முன் சென்ற ஆட்சியைவிடத் தேசிய மரபில் தோய்ந்ததற்கும் ஓரளவு பண்பமைவுற்ற மரபானதற்கும் இதுவே காரணம். ஹுமாயூனுக்குப் பின் அக்பர் (1556 - 1605) ஆட்சியில் மொகலாயப் பேரரசு கிட்டத்தட்ட கில்ஜிப் பேரரசன் அலாவுதீன் ஆட்சியைப் போல வடதிசை முற்றிலும் பரவித் தென் திசையிலும் நோட்டம் ஓடவிடும் தகுதி யுடையதாயிற்று. அவன் அகமதுநகர் வாழ்வைக் குலைக்க முற்பட்டுத்தன் புதல்வன் மூராதைப் பெரும் படையுடன் அத்திசைக்கு 1595-ல் அனுப்பினான். தலைக் கோட்டைப் போருக்கு முன் அகமது நகர் அரசன் ஹுசேன் புதல்வி சாந்து பீபி பிஜப்பூர் அரசன் அலியை மணந் திருந்தான். பீஜப்பூரில் அலியின் புதல்வன் இரண்டாம் இப்ராஹிம் (1579 - 1626) ஆட்சிக் காலத்திலேயே அகமது நகரில் இரண்டு தலைமுறை சார்ந்த ஆறு அரசர் ஆட்சி முடிந்து விட்டது. சாந்து பீபியின் மருமகன் இரண்டாம் பர்ஹாமின் குழந்தையாகிய பகதூரே ஆட்சிக்கு உரியவனாக மீந்தான். தாயகம் வந்து வாழ்ந்த பீபி மூதரசியாயினும் வீர மாதரசி யாகவே விளங்கினான். அவள் தன் பெயரனின் பெயரால் ஆட்சியை நடத்தி வந்தாள். மூராதின் தாக்குதல் 1595லும் 1596-லும் இரு தடவைகள் மும்முரமாக நடைபெற்றன. வீர அரசி சாந்து பீபி இரு தடவையும் மொகலாய இளவரசனை முறியடித்துத் திருப்பியனுப்பினாள். 1597-ல் அக்பர் ஒரிஸ்ஸா அல்லது கலிங்கத்தைக் கீழடக் கினான். அதன் பின் பீரார், பீடார் பகுதிகளையும் தாக்கிப் பிடித்த வண்ணம் அகமது நகர் மீது பேரரசின் முழுவலிமையுடன் மும் முரமாகத் தாக்கினான். அக்பராலும் சாந்து பீபியை நேரடியாக எதிர்த்துத் தாக்குவது அரிதாயிற்று. ஆனால், தன் பேரரசின் மதிப்பை அவ்வளவு எளிதாக இழந்து விட அக்பர் ஒருப்பட வில்லை. வீரத்தால் சாயாததைச் சூழ்ச்சியினால் சாய்க்க முற் பட்டான். இதன் பயனாகச் சாந்து பீபியின் படை வீரர்களே அவளிடம் வஞ்சனையாக நடந்து கொண்டு அவளைக் கொலை செய்தனர். சாந்து பீபி போன்ற உயர் பண்புடைய வீரப் பெண் மணியை ஈன்ற அகமது நகர்ப் பேரரசு வீழ்ந்தது -சிறு செயல் செய்து வெற்றிகண்ட அக்பரை ஈன்ற வடதிசைப் பேரரசு தற்காலிகமாக அதை விழுங்கி ஒருபடி வளர்ந்தது. 1600 -ல் அகமது நகரின் பெரும்பகுதி, தில்லி மொகலாயப் பேரரசின் தென்கோடிப் பகுதி யாயிற்று. ஐந்து முஸ்லிம் அரசுகளில் வடபகுதி அரசுகளை வடதிசைப் பேரரசு கைக்கொண்ட பின்னும் தென்திசை அரசுகளான பிஜப்பூர், கோல கொண்டா ஆகியவை வளர்ந்தே வந்தன. ஆனால், அவை யும் தற்காலிகமாகவே வளர்ந்து வந்தன -வட திசைப் பேரரசினால் பின் புறமிருந்து விழுங்கப் பட்டு, மேல் திசை மகாராஷ்டிரத்தினால் உள்ளூர அரிக்கப் பட்டே சாவு நோக்கி அவை முன்னேறின. சேதுபதி மரபின் தோற்றம்: 1605 வீரப்ப நாயகனுக்குப் பின் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயகன் (1595 - 1601) முத்துக் கிருஷ்ணப்ப நாயகன் (1601 - 1609) ஆகியோர் மதுரை நாயகராக ஆண்டனர். இன்றைய இராமநாதபுர மாவட்டப் பகுதி அந்த நாட்களில் மறவர் நாடு என்றழைக்கப்பட்டது. அந்நாட்டில் பழங் காலத்தி லிருந்தே பாண்டியர் கீழ் பல தலைவர்கள் ஆண்டு வந்தனர். பாண்டியப் பேரரசர் காலமுதல் மதுரை நாயகர் காலத் தொடக்கம் வரை இந்நாடும் இதுபோன்ற கரையோரப் பகுதிகளும் போர்ச்சுகீசியர் போன்ற அயல் நாட்டவர் ஆதிக்கத்தில் பட்டிருந்தன. இதனால் இங்கே குழப்பநிலை மிகுதியாக இருந்தது. இந்நாடு கடந்தே புண்ணிய யாத்திரிகர் இராமேசுவரம் செல்ல வேண்டி யிருந்தது. குழப்பநிலை அவர்களுக்குப் பேரிடர் தந்தது. திருடரும் கொள்ளைக் கூட்டத்தினரும் அரசியல் வேடரும் எங்கும் திரிந்து தொல்லை தந்தனர். விசுவநாதன் காலத்திலிருந்தே காடு வெட்டியும் காவலர் அமைத்தும் இப்பாதைகளைப் பாதுகாக்க முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அடுத்த ஆட்சிகளில் நாடு காவலராக மதுரை நாயகரின் ஆணையாளர்கள் அமர்த்தப் பட்டிருந்தனர். முத்துக் கிருஷ்ணப்பன் ஆட்சியிலேயே இராமேசுவரம் பாதையின் பாது காப்புக்காக இராமநாதபுரம், போகலூர்க் கோட்டைகள் அரண் செய்யப்பட்டன. யாத்திரிகர்களுக்குத் துணை செல்ல பாதுகாப்புக் குழுக்கள் வகுத்தமர்த்தப் பட்டன. ஆனால், இவை எவையும் அப்பகுதியில் நிலவிய அரசியல் குழப்பத்தைச் சிறிதும் மாற்ற வில்லை. முத்துக் கிருஷ்ணப்ப நாயகன் கடைசியாக ஏறத்தாழ 1605ல் சடைக்கத் தேவர் (1605 - 1623) என்ற தலைவனுக்கு உடையான் சேதுபதி என்ற பட்டம் தந்து மறவர் நாடுமுழுவதன் தலைமை யாட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தான். இந்த ஏற்பாடு தற்காலிகமாக யாத்திரிகர்களுக்குப் பாதுகாப்பும் நாட்டுக்கு அமைதியும் தந்தது. மதுரை நாயகனுக்கு அவன் கீழ்ப்படிந்து மதுரை நாயகன் போர்களிலும் உதவிவந்தான். ஆனாலும் பின்னாட் களில் பல சமயம் மறவர் நாட்டின் வலிமை மதுரை யாட்சிக்குக் குந்தகமாக இருந்தது. உத்தர மேரூர்ப் போர் : 1601 இராமராயன் இளவல் வேங்கடாத்திரியின் பெயரன் கந்தனவோலு கோபாலராயன் இரண்டாம் வேங்கடனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினான். வேலு கோடியாசம நாயகன் உதவியுடன் இரண்டாம் வேங்கடன் அவனைக் கீழடக்கினான். இதன்பின் செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப நாயகன் கீழ் வேலூரை ஆண்ட லிங்கமன் எதிர்த்தெழுந்தான். தென்னகத்தின் தலை சிறந்த சமஸ்கிருதக் கவிஞர்களுள் ஒருவரான அப்பய்ய தீட்சிதரை ஆதரித்தவன் லிங்கமனின் தந்தை யாகிய சின்ன பொம்ம நாயகனே. லிங்கமனின் துணைத் தலைவர்களுள் ஒருவனான நாகனிட மிருந்து, வேலு கோடியாசம நாயுடு உத்தரமேரூர்க் கோட்டையைக் கைப்பற்றினான். அதனை மீட்கும் முயற்சியில் லிங்கமன் முனைந்து போராட்டம் தொடங்கினான். இதுவே உத்தர மேரூர்ப் போர், இதில் லிங்கமன் அண்டையிலுள்ள கோட்டைத் தலைவர்களின் படைகளைத் திரட்டுவதுடன் நிற்கவில்லை. தொலைவிலுள்ள மதுரை, தஞ்சை, செஞ்சி நாயகர் உதவியையும் நாடி அவர்கள் பெரும் படையையும் துணைக் கொண்டான். தமிழக முழுவதுமே கடலாகப் பொங்கி எழுந்தது போன்ற இம்மாபெரும் படைக்கு நாக நாயகனின் மைத்துனனான தாவுள பாப்பய்ய நாயுடுவே படைப் பெருந்தலைவனாய் இருந்தான். இக்கடற் பெருந்தானையைக் கண்டு கூட வீர யாசம நாயுடு சிறிதும் அஞ்சவில்லை. அவனும் அவனுக்கு வீரத்துணை தந்த அவன் இளவல் சிங்கனும் வியக்கத்தக்க முறையில் அரும் போர் ஆற்றினர். போரிலேயே தாவுள பாப்பய்ய நாயுடு கொலை யுண்டான். இப்போர்மூலம் இரண்டாம் வேங்கடன் கண்ட பேரர சின் மறுமலர்ச்சிக்கு யாசமன் பெரிதும் உதவினான். மின்னல் அல்லது முன்னிலைப்போர் : 1603 இரண்டாம் வேங்கடனின் படைத்தலைவர்களுள் தாமர்லசென்ன என்ற வேங்கடன் ஒருவன். அவன் தன் தந்தை தாய் பெயரால் சென்ன சாகரம் என்ற ஓர் ஏரி கட்டுவித்தான். அவன் காளத்திக் கோமானான அங்க பூபதியின் உடன் பிறந்தான். அவன் உடன் பிறந்தார்களில் மற்றும் இருவர் வந்த வாசித் தலைவன் தாமர்ல வேங்கடப்பனும் பூவிருந்தவல்லித் தலைவன் தாமர்ல ஐயப்பனுமே. இரண்டாம் வேங்கடன் வேலூர்க் கோட்டையைப் பிடிக்கும் படியே சென்ன வேங்கடனுக்கு உத்தரவிட்டிருந்தான். ஆனால், போகும் வழியிலேயே அவன் லிங்கமன் படைகளை வேலூருக்கு அருகில் உள்ள மின்னல் அல்லது முன்னலி என்ற இடத்தில் சந்திக்க நேர்ந்தது. அங்கே நடைபெற்ற போரில் லிங்கமன் முறியடிக்கப் பட்டான். வேலூர்ப் போர் : 1603 சென்ன வேங்கடன் லிங்கமனை வேலூர் அருகில் இன்னொரு போரிலும் முறியடித்தான். இதன்பின் இரவோடிரவாக வேலூர் வந்து காலையில் அதைத் தாக்கிவிட வேண்டுமென்று சென்ன வேங்கடன் விரைந்தான். ஆனால், அவன் படைகள் அந்த அளவு விரைவுபட முடியவில்லை. அத்துடன் வந்த பின்னும் கோட்டைக் காவலர் துப்பாக்கிக் குண்டுகள் முற்றுகையாளரைத் திணறடித்தன. ஆயினும் விசயநகர வீரர் முறுகிப் போர் உடற்றினர். இரண்டு மாத முற்றுகைக்குப் பின்னும் நகரைக் கைப்பற்ற முடியாமல் போயிற்று. இறுதியில் சென்ன வேங்கடனின் சூழ்ச்சியால் லிங்கமன் தன் அரண்மனை வாயிலிலேயே பிடிபட்டான். புதிய தலைநகர் மாற்றம் லிங்கமன் சிற்றரசனேயானாலும் வலிமையிலும் செல்வ வளத்திலும் பேரரசை விஞ்சியவன். அவன் தலைநகராகிய வேலூரும் செல்வச் சிறப்பிலும், கலைத்திறத்திலும் பேரரசுகளைக் கூடக் கேலி செய்வனவாய் இருந்தன. வெண்சலவைக் கல்லாலான கொற்ற மண்டபத்திலுள்ள அவன் அரியணை பேரரசர்க்கும் எளிதில் கிடைத்தற் கரிய பொன்மணித் தவிசாய் அமைந்தது. வேலூர் முற்றுகையிடப் பட்டபோது முற்றுகை கைவிடுவதற்காக அவன் இருபது லட்சம் பொன்வரை தருவதாக ஆசை காட்டியும் சென்ன வேங்கடன் இணங்கவில்லை என்று அறிகிறோம். லிங்கமனை ஒழித்தபின் இவை எல்லாவற்றையும் பேரரசன் இரண்டாம் வேங்கடன் எடுத்துக் கொண்டதுடன், வேலூரையே தன் தலைநகராக்கி அச்செல்வத்தைத் தன்பேரரசுக்கு உரியதாக்கினான். மைசூர் எழுச்சி : 1610 - 1612 இரண்டாம் வேங்கடன் ஆட்சிக்கு வந்த சமயம் மதுரை ஆண்ட வீரப்ப நாயகன் திறை கொடாதிருந்தான். இரண்டாம் வேங்கடன் சீரங்கப்பட்டணத்திலிருந்த கன்னட மண்டலத் தலை வனான தன் அண்ணன் மகன் திருமலையை இதற்காகப் படையுடன் மதுரைக்கு அனுப்பியிருந்தான். திருமலை மதுரை நாயகனை அடக்கித் திறை கொண்டான். ஆனால், முறைப்படி தலைநகர் சென்று பேரரசனிடம் அதை ஒப்படைக்காமல், தன் மண்டலத்துக்கே சென்று தங்கிவிட்டான். தானே பேரரசுக்கு அடங்காமல் தனி அரசு புரியும் நோக்க முடையவன் அவன் என்பது இதனால் பேரரசனுக்கு விளங்கிற்று. மைசூரில் இச்சமயம் ஆண்ட சிற்றரசன் இராச உடையார் (1578 - 1617), திடுமென 1610-ல் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டு அதைப் பேரரசினிடமிருந்து கைப்பற்றிக் கொண்டான். இப்பேரரசுப் பகுதியை மீட்கப்பேரரசன் சிறிதும் முயற்சி செய்யாமல் வாளா இருந்து விட்டான். எதிர்த் தெழும் உறவினனைவிடப் புதிய அயலான் வாழ்வே சிறப்புடையது என்று இரண்டாம் வேங்கடன் இச்சமயம் எண்ணியிருக்க வேண்டும். ஏனெனில் 1612-ல் மைசூர் அரசன் இப்புதிய வெற்றியைத் தனக்கே நிலவர உரிமையாக்கித் தரும்படி பேரரசனை வேண்டினான். புதிய நட்பை மதித்துப் பேரரசனும் அவன் உரிமையையே ஏற்றுத் தன் அண்ணன் மகன் ஆணவத்திற்கு ஒரு நன்முடிவு கண்டான். இது தற்காலிகமாக இருதரப்பினருக்கும் பயனுடைய தொடர் பாகவே இருந்தது. ஏனெனில் இவ்வெற்றியின் பின் மைசூர் அரசின் எல்லை மதுரை அரசின் எல்லையாயிற்று. மைசூர் மன்னரின் பேரவா, பேரரசை எதிர்த்து வலிமை பெற்று வந்த மதுரை அரசைத் தாக்கி முன்னேற இது வழி வகுத்தது. மதுரை நாயகன் முத்துவீரப்பன் இச்சமயம் தஞ்சை யரசனுடன் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தான். அதைப் பயன்படுத்திக் கொண்டு மைசூர் அரசன் முகிலன் என்ற படைத் தலைவனைத் திண்டுக்கல் வட்டாரத்தைத் தாக்கும்படி அனுப்பினான். அரசன் நாட்டகத்திலில்லாத இச்சமயத்தில் நாட்டின் பெருமக்களான விரூபாட்சிப் பாளையக்காரனும், கன்னிவாடிப் பாளையக்காரனும் இப்படையெடுப்பைச் சிதறடித்து நாட்டைக் காத்தனர் என்று அறிகிறோம். இவ்வருஞ் செயலுக்காக மதுரை நாயகன் விரூபாட்சிப் பாளையக்காரனுக்குப் ‘பாதைகாவல்’ என்ற பட்டமும், கன்னி வாடிப் பாளையக் காரனுக்குச்’ ‘சின்ன மைசூரான்’என்ற பட்டமும் அளித்துப் பெருமைப் படுத்தினான். வீரமா முனிவர் : 1606 - 1623 முத்து வீரப்ப நாயகனுக்கு முந்திய ஆட்சியிலே மதுரைக்கு வந்து கிறிஸ்தவ சமயப் பிரசாரம் செய்ய முனைந்தவர்களுள் ராபர்ட்டு டி நோபிலி என்ற வீரமா முனிவர் ஒருவர். 1610-ல் அவர் மதுரையில் புதிய கிறிஸ்தவக் கோயில் ஒன்று கட்டினார். மதுரை யிலும், சேலம், திருச்சிராப் பள்ளி முதலிய மாவட்டங்களிலும் அவர் பல திருப்பணிகள் செய்தார். ஆனால், ஒருபுறம் சமயத் தலைமையிடத்திலும் மறுபுறம் நாட்டு மக்கள், பெரு மக்களிடத் திலும் பேரெதிர்ப்புக்கு அவர் ஆளானார். ஆனால், இரு திசையிலும் அவருக்கு நண்பரும் இருந்ததால், 1623-ல் கத்தோலிக்கரின் உலகத்திருத்தந்தை (போப்) பதினைந்தாம் கிரகரி அவர் திருப்பணிக்கு ஆதரவளித்தார். கீழ்த்திசை மொழி பலவும் கற்றுவல்ல பன்மொழிப் புலவராய் அவர் திகழ்ந்தார். அத்துடன் தமிழுக்கு இப்பெரியார் செய்த பணி சிறிதல்ல. உயர்ந்த புதுமுறை இலக்கணம், உரைநடை நூல்கள் ஆகியவையன்றி இயேசுவின் சரிதமாகிய தேம்பாவணி என்ற தமிழ் கிறிஸ்தவப் பெருங்காப்பியமும் அவரால் இயற்றப்பட்டுள்ளது. மதுரை மண்டலத் தலைநகர் மாற்றம் 1616 மதுரை நாயகர் அடிக்கடி தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கும் பின் மறுபடி மதுரைக்கும் மாற்றி வந்தனர் என்று தெரிகிறது. முத்து வீரப்ப நாயகன் காலத்திய மாற்றத்துக்கு அவன் தஞ்சைப் போர்களே காரணம். திருச்சிராப்பள்ளி தஞ்சைக்கு அருகிலேயே இருந்தது. பொதுவாக மதுரையைவிடத் திருச்சிராப் பள்ளிக்குச் சிறந்த பாதுகாப்பு வாய்ப்பு மிகுதியாயிருந்தது. ஆயினும் 17- 18-ஆம் நூற்றாண்டுகளில் திருச்சிராப்பள்ளி வடக்கிலிருந்து வரும் படையெடுப்புகளின் நேர்வழியில் இருந்ததால், அடிக்கடி அழிவுப் போர்களுக்கு இலக்காயிற்று. மதுரை பாதுகாப்பு வகையில் சிறிது பிற்பட்டிருந்தாலும், இத்தகைய படையெடுப்புத் தளங்களி லிருந்து பெரிதும் ஒதுங்கியிருந்தது. தஞ்சை செஞ்சி நாயக மரபுகள் இச்சமயம் தஞ்சையாண்ட நாயக மரபினன் விசய இரகுநாத நாயகன் ஆவான். அவன் அச்சுதராயன் காலத்திய செவ்வப்ப நாயகனின் பேரனும், வல்லத்துப் போர்க் காலத்திய அச்சுதப்ப நாயகனின் மகனும் ஆவான். நாயக மரபினர் பலரும் பேரரசுக்கு எதிராகக் கிளர்ந்து வந்து காலங்களில் பலகாலும் பேரரசுக்கு உண்மையாயிருந்து உதவியது அவன் மரபே. இவன் காலத்தில் செஞ்சி மண்டலத்தை (வடசோழநாடு, தொண்டை நாடு அடங்கிய பகுதியை) ஆண்டவன் கிருஷ்ணப்ப நாயகன். செங்கற்பட்டு போர்: திருச்சிராப்பள்ளிப் போர்: மதுரைப் போர்: 1603 - 1607 தாமர்ல சென்ன வேங்கட நாயகன் வேலூர் முற்றுகையில் ஈடுபட்டிருந்த சமயம் இரண்டாம் வேங்கடனும் வேலுகோடி யாசம நாயுடுவும் தெற்கே தொண்டை மண்டலம் சோணாடு ஆகியவற்றின்மீது தாக்குதல் நடத்தினார்கள். உத்தரமேரூர்ப் போரில் கிளர்ச்சிக்காரர் பக்கம் ஆதரவு தந்த மதுரை, தஞ்சை, செஞ்சி நாயகர்களைத் தண்டிப்பதே இதன் நோக்கமாய் இருந்தது. செங்கற்பட்டுப் போர் திருச்சிராப்பள்ளிப் போர், மதுரைப் போர் ஆகிய மூன்றிலும் யாசம நாயகன் இத்தென் திசை நாயக மரபுகளை முறியடித்தான். செஞ்சிப் போர் : 1607-1608 இப்போரில் பேரரசனும் யாசம நாயுடுவும் கிருஷ்ணப்பனை முறியடித்துச் செஞ்சியையும் முற்றுகையிட்டுக் கைப்பற்றினர். கிருஷ்ணப்ப நாயகன் இப்போரில் சிறைப் பட்டான். ஆனால், தஞ்சை ரகுநாதநாயகன் போர் நடுவில் பேரரசன் பக்கம் சேர்ந்து கொண்டதாலும் பெனுகொண்டா முற்றுகையின்போது பேரரசனுக்கு உதவி செய்ததாலும் பேரரசனிடம் செல்வாக்குப் பெற்றான். அச்செல்வாக்கைத் துணைக் கொண்டு அவன் சிறைப்பட்ட தன் நண்பன் கிருஷ்ணப்ப நாயகனின் சிறை விடுதலைகோரி அவனை விடுவித்தான். விசயநகர அரசுரிமைப் போராட்டம் : 1614 - 1618 இரண்டாம் வேங்கடனுக்கு மனைவியர் பலர் இருந்தனர். ஆனால், குழந்தைகள் இல்லை. அவன் மனைவியருள் ஒருத்தி கொப்பூர் ஜக்கராயன் என்ற பெரு மகனின் உடன்பிறப்பாயிருந் தாள். மன்னன் அவளிடம் உயிர்ப்பாசம் வைத்திருந்தான். அவன் தான் பெறாத மகவைப் பெற்றதாகப் பாவித்து மற்றொருவர் பிள்ளையை எடுத்து வளர்த்தாள். அரசன் அது போலி மகவென்று தெரிந்தும் மனைவியிடம் கொண்ட பாசத்தினால் தெரியாதவன் போலிருந்தான். ஆனால், அரசுரிமைக்கு அவன் தன் அண்ணன் இராமன் மக்களுள் கன்னட மண்டல மாண்ட திருமலையின் தம்பி இரண்டாம் சீரங்கனையே (1614) உரியவனாகத் தெரிவித்து மாண்டான். ஆயினும் ஒரு மருமகன் பெயரை வைத்து அரசுரிமைச் செல்வமாளும் அவாவால் கொப்பூரி ஜக்கராயன் போலி மகவையே அரசனாக்க முனைந்து கிளர்ந்தெழுந்தான். ஆனால், வேலுகோடி யாசம நாயுடு இரண்டாம் சீரங்கனையே ஆதரித்து அவனை எதிர்த்தான். ஜக்கராயன் தன் துணைவர்களான திம்மநாயகன், மகாராஜன் ஆகியோர் துணை கொண்டு இரண்டாம் சீரங்கனையும் அவன் குடும்பத்தாரையும் கைப்பற்றிச் சிறைப்படுத்தினான். போலி மகவுக்கே முடிசூட்டினான். வேறுகோடி யாசம நாயுடு பரபரப்படைந்து பெருமுயற்சி செய்து, துணி வெளுப்பவன் ஒருவன் துணைகொண்டு இரண்டாம் சீரங்கன் புதல்வனான இராமதேவராயன் என்ற குழந்தையை மீட்டு வெளிக் கொண்டு வந்தான். அத்துடன் சீரங்கனையே தப்புவிக்க முயன்றான். ஆனால், இம் முயற்சியும், இதனையடுத்துச் சிறைக் கோட்டத்தையே அடர்த்துத் தப்புவிக்கும் முயற்சியும் இரண்டும் தோல்வியுற்றன. அத்துடன் அம்முயற்சிகளின் பயனாகவே ஜக்ககையன் சிறையிலிருந்த சீரங்கனையும் அவன் குடும்பத்தினரையும் ஒருவரையும் விடாமல் கொல்ல நேர்ந்தது. தப்பிப் பிழைத்திருந்த குழந்தை இராம தேவனையும் அழிக்க அவன் முற்பட்டான். அக்குழந்தையைக் காக்கும் முயற்சியில், யாசமன் தஞ்சையரசன் இரகுநாதனைத் தேடி ஓடினான். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே அவன் தஞ்சையில் தஞ்சம் நாட நேர்ந்தது. ஏனெனில் அவனைத் தொடர்ந்து ஜக்கராயனின் ஆட்களும் படைவீரரும் வேட்டையாடினர். குழந்தைப் பேரரசனைக் கைப்பற்றவும்; அம்மகவுடன் யாசமன் தஞ்சை நாயகனை அடைந்து ஆதரவு பெறவிடாமல் தடுக்கவும் அவர்கள் அருமுயற்சிகளை மேற் கொண்டனர். ஆனால், அவர்கள் நிலை யறிந்து தஞ்சை நாயகனும் அவர்களை வழியில் சென்று தேடிய தனால் யாசமனும் குழந்தை இராம தேவனும் பாதுகாப்புடன் அவன் ஆதரவில் சென்று சேர முடிந்தது. தோப்பூர்ப் போர் : 1616 - 1617 தோப்பூர் என்பது காவிரியின் தென்கரையில் பேரணைக் கட்டுக்கு அருகில் இருக்கிறது. அது இப்பொழுது தோகூர் என்று அழைக்கப் பெறுகிறது. இங்கே நடைபெற்ற போர் தமிழக வரலாற்றிலேயே தலைசிறந்த முக்கியத்துவம் உடையது. ஏனெனில் அதில் தமிழகத்திலுள்ள எல்லா அரசியல் குழுக்களும் பங்குகொண்டு போராடின. அதிலிருந்து விலகியிருந்தவர்கள் தமிழகத்துக்கு வடக்கிலுள்ள மைசூர் அரசன், இக்கேரி நாயகன், இஸ்லாமிய அரசர்கள் ஆகியவர்களே. குழந்தைப் பேரரசன் இராமதேவன் சார்பில் போராடிய வர்கள் யாசம நாயுடுவும் தஞ்சை நாயகன் இரகுநாதனும் மட்டுமே. ஆனால், எதிர்பக்கத்தில் போலி மகவுக்காக ஜக்கராயனும், செஞ்சி மதுரை நாயகரும், மதுரை நாயகரின் துணை வர்களான திருநெல்வேலிப் பாண்டியர்களும், தொலை தூரத்திலிருந்து வந்த திருவாங்கூர் அரசனும், இச்சமயம் மதுரை நாயகர் ஆதரவாளராயிருந்த போர்ச்சுக்கீ சியரும் ஆவர். எதிரிகளின் தொகையும் அவர்கள் கூட்டுப் படைகளின் அளவும் மிகப் பெரிதாய் இருந்தபோதிலும் அந்நாளைய தமிழகத் தின் தலை சிறந்த இரு வீரர்களான யாசமனும் தஞ்சை நாயகன் இரகுநாதனும் சேர்ந்து இப்போரில் தமக்குப் பெரும் புகழும் பேரரசுக்குப் பெருவெற்றியும் தேடிக் கொண்டனர். இரகுநாத நாயகனின் படைகள் முதலில் பலமானேரி என்னும் ஊருக்குகே கூடாரமிட்டுப் பின் போருக்குச் சித்தமாகத் தோப்பூர் நோக்கிச் சென்றன. யாசம நாயகனின் படைகளும் அங்கே வந்து திரண்டன. எதிரிகளின் படைகளிடையே மதுரை நாயகன் வீரர்களே முன்னணியில் நின்ற படைகள் களம் விட்டோ டின. தன் நேசப் படைகள் தோற்றோடுவது கண்டு பொறாத ஜக்கராயன் இரகுநாதனை நோக்கி விரைந்து சென்று தாக்கினான். ஆனால், தஞ்சை மன்னனின் காலாட்படைகள் பாறைகள் போல நின்று தாக்குதலைச் சமாளித்ததுடனன்றி, எதிர்த்துத் தாக்கின. இத்தாக்குதலே போரின் திரும்பு கட்டமாயிற்று. ஏனெனில் அதனிடையே ஜக்கராயனும் அவன் துணைத்தலைவர்களிருவரும் வெட்டுண்டு வீழ்ந்தனர். செஞ்சிநாயகன் கிருஷ்ணப்ப நாயகன் தன்படைகளுக்கு முந்தித் தானே ஓடித் தலைவர்களின் அவமதிப்புக்கு இலக்காக நேர்ந்தது. மதுரை நாயகன் மட்டும் தன் முதல் வலிமைக் கேட்டைச்சமாளித்துக் கடைசிவரை நின்று போரிட்டான். ரகுநாத நாயகன்வீரர்கள் அவனைச் சிறை செய்தாலும், ரகுநாதன் பெருமிதமான பண்புடன் அவனை விடுதலை செய்தான். இப்போர் வெற்றியின் சின்னமாக இரகுநாத நாயகன் காவிரிக் கரையில் ஒரு தூண் நாட்டினான். இவ்வெற்றியின் பயனாக, இரகுநாதன் குழந்தைப் பேரரசன் இராமதேவ நாயகனைக் கும்பகோணத்திலே கொண்டு சென்று முடிசூட்டி அவனையே பேரரசனென்று விளம்பரப்படுத்தினான். இதனால் முந்திய அரசன் இரண்டாம் சீரங்கன் 1614 -லேயே கொல்லப் பட்டாலும் இராமதேவ நாயகன் (1618 - 1630) அதற்கு நாலு ஆண்டுகளுக்குப் பின்னரே பதவியேற்றான். 1620 -ல் இராமதேவ நாயகனுக்கு வேலூரிலேயே மீண்டும் பேராரவாரத்துடன் முடிசூட்டு விழா நடத்தப்பட்டது. பாளையங்கோட்டைப் போர்: 1617 தோப்பூர்ப் போரின் பின் தஞ்சை நாயகன் செஞ்சிக் கெதிராக ஒரு படைத்தலைவனை அனுப்பினான். அவன் செஞ்சி நாயகனுக்குரிய புவனகிரியையும் மற்றக் கோட்டைகளையும் ஒவ்வொன் றாகக் கைப்பற்றினான். இறுதியில் செஞ்சி தவிர அவனுக்கு எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டது. அப்போது கூடக் கிருஷ்ணப்ப நாயகன் பணியாமல் எதிர்ப்புக் காட்டிக் கொண்டே இருந்தான். இழந்த இடங்களை மீட்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தான். ஜக்கராயன் இறந்தபின் அவன் இளவல் எதிராசன் அரசுரிமைப் போரை விடாது நடத்தினான். கிருஷ்ணப்ப நாயகனுடன் சேர்ந்து அவன் பாளையங்கோட்டையில் தஞ்சை நாயகன் படைகளுடனும், யாசமநாயகன் படைகளுடனும் மீண்டும் மோதினான். பாளையங்கோட்டை என்பது தென் ஆர்க்காட்டு மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் சிதம்பரத்துக்கு வடமேற்கில் வெள்ளாற்றங் கரையில் உள்ளது. இப்போரிலும் யாசமனே பெருவெற்றி கண்டான். கிருஷ்ணைப்ப நாயகன் சிறைப்பட்டான். அரசுரிமைப் போர் முடிவு : யாசம காவிய முடிவு 1617-க்குப் பின் அரசுரிமைப் போரின் வேகம் குறைந்து விட்டது. மதுரை நாயகன் முத்துவீரப்பன் தன் புதல்வியை இரகு நாத நாயகனுக்கு மணம் செய்து கொடுத்து அவனுடன் தற்காலிக மாகவேனும் இணக்கம் உற்றான். செஞ்சிநாயகன் கிருஷ்ணப்பனும் இரகுநாதன் பரிந்துரையால் விடுதலை பெற்று 1629 -க்குள் பேரரசின் உற்ற தோழனாய் விட்டான். எதிராசன் மட்டும் நாயகர்களிடையே வேறுபாடு உண்டு பண்ணும் முயற்சியைக் கைவிடாமலே இருந்தான். ஆனால், 1619-ல் அவன் ஆதரவு பெற்ற போலிமகவு இறந்துவிட்டதால் எதிர்ப்பின் முனை மழுங்கலுற்றது. இராமதேவன் எதிராசன் புதல்வியை மணம் செய்து கொண்டு அவனுடன் நேசமானான். அரசுரிமைப் போரின் முடிவால் முற்றிலும் மனக்கசப்பு உற்றவன் அதன் அணையா வீர விளக்காகிய வேலுகோடியாச மனே. எதிராசனுடன் நேசமாகிப் பேரரசன் கொப்பூரி குடும்பத் துடன் ஒன்றுபட்டது, அவனுக்கு ஒரு சிறிதும் பிடிக்க வில்லை. இவ்வெறுப்பைக் கசப்பாக்கிய மற்றொரு செய்தி இருந்தது. அரசுரிமைப் போரின் வெற்றியால் தனக்குப் புகழ் மட்டுமன்றி, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கொப்பூரி குடும்பத்தின் பெருஞ் செல்வமும் கைவரும் என்று அவன் மனப்பால் குடித்திருந்தான். அவ்வாசை மீதும் மண் விழுந்துவிடவே, அவன் உயிர் கொடுத்துப் பல்லாயிரங் களங்களில் காத்த பேரரசனையே எதிர்க்கலானான். புதுவலுப் பெற்ற இராமதேவன் அவனை எளிதில் அடக்கி விட்டான். ஆனால், மக்கள் உள்ளத்தில் பேரரசரும் செல்வரும் பெறாத உயரிடம் அவனுக்குக் கிட்டிற்று. பேரரசர் பெருஞ் செல்வத்தாலும் பெறமுடியாத மக்கள் அன்புச் செல்வமும் அவனுக் குக் கிடைத்தது. அந்நாளைய சமஸ்கிருத காவியமாகிய சதுபத்ய ரத்னாகரம், அவன் வீரப் புகழின் அருமையைக் காவிய முறை யிலேயே உவமை அணி அழகு நயங்களுடன் ஒரு பாடலில் மதிப்பிட்டுக் காட்டுகிறது. “கோடி ஜக்கராயர்களும், எழுபதுகோடி மக்கராயர்களை ஈன்ற தந்தையரும், ஓரிலக்கத்து ஒரு பதினாறு இராவில்லா வெங்கட நாயகர்களும் ஒன்று திரண்டு கூடியனாலும், இப்பர கண்டன் என்ற புகழ்ப் பெயர் நாட்டிய ஒரு யாசமனுக்கு ஈடாவரோ? வெள்ளாடுகள் எத்தனை எத்தனை சேர்ந்தாலும் வீரமிக்க ஒரு செங்கட் புலியேற்றுக்கு ஈடாகுமோ?” என்று அது அவனைப் பாராட்டியுள்ளது. கர்நூல் கைதுறப்பு : 1619 - 1724 அரசுரிமைப் போராட்டத்தைப் பயன் படுத்திக் கொண்டு முகமது குலீக்குப் பின் வந்த கோல்கொண்டா அரசன் அப்துல்லா (1611 - 1672) தன் படைத் தலைவனான அப்துல்வஹாப் கானை 1619-ல் கர்னூல் மீது படையெடுக்கும்படி செய்தான். அக்கோட்டையின் வீர காவலன் கோபாலராயன் அப்துல்லாவஹாபை முறியடித்த துடன், துங்கபத்திரையையே எல்லையாக உடன்படிக்கையில் கையொப்ப மிடும்படியும் செய்தான். ஆனால், 1624-ல் அப்துல் வஹாப் மீண்டும் படையெடுத்தான். அண்டை அயல் தலை வர்களின் துணைகொண்டு கூட இச்சமயம் கோபாலராயன் கோட்டையைக் காக்க முடியவில்லை அதனைக் கைவிட்டு அவன் ஓட வேண்டியதாயிற்று. அவன் 1630-ல் இறக்க நேர்ந்ததால், கர்னூல் நிலையாகக் கோல் கொண்டாவின் கைப்பட்டது. முதல் மதுரை மைசூர் மோதுதல்: 1625 மதுரையில் முதலாம் முத்து வீரப்ப நாயகனுக்குப் பின் தலை சிறந்த புகழ் வேந்தனான திருமலை நாயகன் (1621 - 1659) பட்டத் துக்கு வந்தான். இதே காலத்தில் மைசூரை இராஜ உடையாருக்குப் பின் ஆண்ட மன்னர்கள் முதலாம் சாமராஜ உடையார் (1617 - 1637), இம்மடி ராஜன் (1637 - 1638) கண்டீரவநரச உடையார் (1638 - 1659) ஆகியோர் ஆவர். முதலாம் சாமராஜனின் படைத் தலைவனான ஹரசூரன் அல்லது கரசூரி நந்திராஜன் மதுரை அரசின் பகதியான திண்டுக்கல் மீது 1625-ல் படையெடுத்தான். மதுரைத் தலைவாய் இராமப் பையனும் கன்னிவாடிப் பாளையக்காரன் இரங்கண்ண நாயகனும் அவனைத் தோற்கடித்ததுடன் மைசூர்த் தலைநகர்வரைக்கும் விடாமல் தொடர்ந்து துரத்தினர். திருவாங்கூர்ப் படையெடுப்பு : 1634 திருவாங்கூர் அரசன் உண்ணி கேரளவர்மன் 1631-ல் பட்டத் துக்கு வந்தான். இராமராச விட்டலராசன் 1547-ல் படையெடுத்து வென்ற நாள் முதல் திருவாங்கூர் அரசர் வியநகரத்துக்கும் அதன் சார்பில் மதுரை நாயகருக்கும் திறைகட்டி வந்தனர். உண்ணி கேரளன் அதை நிறுத்திட முயன்றான். இது காரணமாக நடைபெற்ற மதுரைப் படையெடுப்பில் திருவாங்கூர் அரசன் முற்றிலும் பணிந்து அது முதல் ஒழுங்காகத் திறைகட்டி வந்தான். இப்படையெடுப்பின் அச்சம் நீண்ட காலம், மங்கம்மாள் காலம்வரை, திருவாங்கூரை விட்டகலவில்லை என்று அறிகிறோம். சேதுபதி மரபின் அரசுரிமைப் போராட்டம் : 1637 - 1645 முதல் சேதுபதியான தளவாய் சேதுபதி என்ற முதலாம் சடைக்கத் தேவன் ஆட்சிக்குப் பின் அவன் புதல்வன் கூத்தன் சேதுபதியும் (1623 - 1635) அவனுக்குப் பின் அவன் மகன் தளவாய் சேதுபதி இரண்டாம் சடைக்கத் தேவனும் ஆட்சி செய்தனர். சடைக்கத் தேவனின் ஆட்சியின் இரண்டாம் ஆண்டிலிருந்து முந்திய அரசன் அன்புரிமைப் புதல்வனான ‘தம்பி’ என்பவன் அரசுரிமை கோரிப் போராடியதுடன் மதுரைநாயகர் ஆதரவையும் பெற்றான். தளவாய் சேதுபதிக்கே நாட்டு மக்கள் ஆதரவு பெரிதாயிருந்ததனால், மதுரை நாயகன் தம்பிக்காகப் போராட வேண்டி வந்தது. இப்போரிலும் திருமலை நாயகன் படைத்தலைவன் இராமப் பையனே. இராமப் பையன் அம்மாளே என்ற அந்நாளைய தமிழ் நாட்டுப் பாடல் இப்படைத் தலைவன் வீர வெற்றி வாழ்வைப் பொதுவாகவும், சேதுபதி நாட்டின் போராட்டத்தைச் சிறப்பாகவும் விரித்துரைத்துள்ளது. இப் போராட்டத்திலும் தளவாய் இராமப் பையனுடன் கன்னிவாடிப் பாளையத் தலைவன் இரங்கண்ண நாயகன் துணைத் தலைவனாகச் சென்றான். இதே போரில் நாஞ்சில் நாட்டு அரசனும் பங்கு கொண்டதாகக் கூறப்படுகிறது நாஞ்சில் நாட்டு அரசன் என்பது இங்கே திருவாங்கூர் அரசனாகவே இருத்தல் கூடும். அல்லது திருவாங்கூர் அரசன் கீழ் நாஞ்சில் நாடாண்ட ஒரு வீரப் படைத் தலைவனாகவும் இருத்தல் கூடும். மதுரைப் படைகள் இராமநாதபுரம்வரை பெரும் போரிட்டுக் கீழடக்கிய பின்னும், சேதுபதி சடைக்க தேவன் இராமேசுவரம் தீவில் சென்று எதிர்ப்புச் செய்தான். படைகளை அத் தீவினுள்கொண்டு செல்வதற்காகப் பாம்பன் மீது ஒரு பாலம் கட்டமைக்கப்பட்டது. சேதுபதி சிறைக்கப்படுத்தப்பட்டு மதுரைக்குக் கொண்டு வரப் பட்டான். இப்போர் 1639-க்குள் முடிவடைந்துவிட்டது. இந்நட வடிக்கை களில் போர்ச்சுகீசியர் திருமலை நாயகனையும், டச்சுக்காரர் சேதுபதியையும் ஆதரித்துப் போரில் கலந்து கொண்டதாக அறிகிறோம். போரில் சில கட்டங்களில் இரு தரப்பாருக்கும் கடற் போர்களும் நடைபெற்றன என்று அம்மானை கூறுவதுடன், போர்ச்சுகீசிய டச்சு ஆதாரங்களும் இவற்றை வலியுறுத்துகின்றன. போர்ச்சுகீசியக் கீழ்திசைத் தலைவனிடம் மதுரை நாயகன் இராமப் பையனையே அரசியல் தூதுவனாக அனுப்பி, போரில் போச்சுகீசிய அரசன் படைகள் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த தாகவும், போர்ச்சுகீசியருக்கு இதற்குப் பதிலீடாக ஒரு கோட்டை யும் ஏழு கோயில்களும் கட்டித் தருவதுடன், பிற உரிமைகள் அளிப்பதாகவும் உறுதி கூறினான். சேதுபதியின் மறவர் வெள்ளையரை விடச் சிறந்த வீரர் என்று டச்சு ஆதாரங்களும் குறிப்பிடுகின்றன. அரசுரிமைப் போருடன் இராமநாதபுரம் அமைதி காண வில்லை. தளவாய் சேதுபதியின் மறு புதல்வர்களான இரகுநாத தேவன், நாராயண தேவன் ஆகியோர் மக்கள் துணை கொண்டு தம்பிக் கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். திருமலை நாயகன் இப்போது சேதுபதி மரபின் வாழ்வில் தன் தலையீட்டால் வந்த பிழை உயர்ந்தான். நாட்டில் அமைதி பேணவல்லவன் சேதுபதி சடைக்கனே என்றுணர்ந்து அவனையே (விடுதலை செய்து) மன்னனாக்கினான். அவன் 1640-முதல் 1645 வரை யாதொரு வில்லங்கமும் இல்லாமல் ஆண்டான். ஆனால், 1645-ல் தம்பியால் அவன் கொலை செய்யப் படவே மீண்டும் அமைதி கெட்டது. திருமலை நாயகன் இப்போது நாட்டை மூன்று கூறுகளாகப் பிரித்து, தம்பி ஒரு கூற்றையும், இரகுநாத தேவன், அவன் தம்பி தனக்கத்தேவன் ஆகிய இருவரும் இரு கூறுகளையும் ஆளும்படி செய்தான். ஆனால், தம்பியும் தனக்கத்தேவனும் விரைவில் இறந்ததால், சேதுநாடு மீண்டும் இரகுநாத தேவன் ஆளுகையில் ஒன்று பட்டது. இரகுநாததேவன் இதன்பின் திருமலைநாயகனுக்குச் செய்த உதவி சிறிதன்று. திருமலை நாயகன் ஆட்சி இறுதியில் முஸ்லிம் படைகள் எதிர்த்தபோது அவன் அவற்றை முறியடித்துத் துரத்தினான். தெற்கே எட்டயபுரத்துக் கோமான் தலைமையில் பாளையக்காரர் கிளர்ச்சி செய்தபோது அதனை அடக்கி நாயக அரசு காத்தான். முந்திய சேவைக்காக அவன் மதுரைத் தலைநகரின் நவராத்திரி விழாவுடன் சரிசமமான ஆடம்பரத்துடன் தன் தலைநகரான இராமநாதபுரத்திலும் விழாக்கொண்டாடும் உரிமை பெற்றான். பிந்திய சேவைக்காக மன்னார் கோயில் பகுதியில் மானிய நிலமும் முத்துத் துறை வருவாயில் பங்கும் பெற்றான். இராமமேசுவரத் திருப்பணியில் இரகுநாதன் கொண்ட பெரும் பங்கு ‘சேது காவலன்’ என்ற பெயரை அவனுக்குத் தந்தது. பேரரசமரபின் வாழ்வு தாழ்வுகள் : 1630 - 1642 இராமதேவராயனுக்குப் பின் விசயநகர மரபின் உரிமை முதலாம் சீரங்கனின் பேரனும் திருமலைராயனின் கொள்ளுப் பேரனுமான பெத்த வேங்கடன் என்ற மூன்றாம் வேங்கடனுக்கு உரிமையாயிற்று. ஆனால், இராமராயனின் பேரனான திம்மராயன் அதே உரிமைக்குப் போட்டியிட்டார். மதுரை தஞ்சை நாயகரும் செஞ்சிநாயகனும் பேரரசன் தம்பி மகன் அடுத்த உரிமையாளனான இளவரசன் (மூன்றாம்) சீரங்கனும் மூன்றாம் வேங்கடனுக்கு உதவியாயிருந்தனர். இளவரசன் சீரங்கனால் முறியடிக்கப்பட்ட பின்னும் அவன் கிளர்ந்தெழுந்து 1675-ல் செஞ்சி நாயகனால் போரில் கொலை யுண்டான். இந்தச் சுமுகமான சூழ்நிலை 1637-ல் கலைவுற்றது. பெனு கொண்டாவின் மீது பீசப்பூரின் கண் திரும்பிற்று. அதன் பாதுகாப்பைக் கொண்டி நாயகனிடம் விட்டு விட்டுப் பேரரசன் மூன்றாம் வேங்கடன் வேலூருக்கு மீண்டான். கொண்டி நாயகன் 15 ஆண்டுகள் வரை பெனுகொண்டா எதிரிகள் கையில் சிக்காமல் காத்துவந்தான். செஞ்சிநாயனுடன் பேரரசன் மிக நெருக்கமாகப் பழகுவது காணப் பொறாமல் மதுரை நாயகர்கள் பேரரசன் வேங்கடனுக்கு எதிராகச் சதி செய்தனர். இச்சதி வெற்றி பெறவில்லை. இதேசமயம் எக்காரணத்தாலோ, இளவரசன் (மூன்றாம்) சீரங்கன் பீசப்பூர் அரசனுடன் சேர்ந்துகொண்டு விசய நகரத்தின் மீது இரு தடவை படையெடுத்தான். 1638-ல் நடைபெற்ற முதற் படையெடுப்பில் பங்களூர் முற்றுகையிடப்பட்டது. மூன்றாம் வேங்கடன் பெரும் பொருள் கொடுத்து இணக்க அமைதி பெற்றுக் கொண்டான். அத்துடன் தஞ்சை நாயகர்களுடன் ஒற்றுமைப் பட்டுத் தன்னைப் பலப்படுத்தக் கொண்டான். இளவரசன் (மூன்றாம்) சீரங்கன் 1641-ல் பீசப்பூர்ப் படைத் தலைவன் ரணதுல்லாகானுடன் படையெடுத்து வேலூருக்குப் பன்னிரண்டு கல் தொலைவரை முன்னேறி யிருந்தான். இத்தடவை தமிழக நாயகர் உதவி வேலூரைக் காத்தது. ஆயினும் இதே சமயத்தில் கோல் கொண்டா அரசனும் கீழ்கரையோர மாகப் படையெடுத்து வந்தான். சரிகின்ற பேரரசில் மேல் திசையில் பீஜப்பூர் முன்னேறுவதுடனொத்துக் கீழ்திசையில் முன்னேறி அதைப் பங்கிடவே அவன் எண்ணினான். நெல்லூர்ப் பகுதியில் அருமகோவனின் தலைவன் வேலுகோடி திம்மராயனும் பூவிருந்த வல்லியிலிருந்து சென்னைப் பகுதியை ஆண்ட தாமால் வேங்கடனும் கோல கொண்டாவை ஓரளவு எதிர்த்து நின்றாலும், அதன் முன்னேற்றத்தை அவர்கள் தடுத்து நிறுத்த முடியவில்லை. இத்தகைய நெருக்கடித் தறுவாயிலேயே பேரரசன் நம்பிக்கை யிழந்து வேலூரைக் கைவிட்டுச் சித்தூர்க் காடுகளிடையே திரிந்து மனமுறிவால் மாண்டான். மைசூர், இக்கேரி, பீசப்பூர் எழுச்சிகள் : மராட்டிய இனப் புதுமலர்ச்சி மைசூரில் இராஜ உடையார், முதலாம் சாமராஜ உடையார் ஆகியவர் காலங்களில் 1630-க்குள் மைசூர் தென்பகுதியிலுள்ள சென்னப்பட்டண மண்டலத் தலைமைப் பகுதியில் பாரா மகால் (சேலம் பகுதி) நீங்கலான பரப்பு மைசூரில் நிலையாகச் சேர்க் கப்பட்டு விட்டது. ஆனால், மைசூருக்குப் போட்டியாக இச்சமயம் வீரபத்தரன் என்ற நாயக அரசன் (1629 - 1645) கீழும் செவ்வப்ப நாயகன் (1615 - 1660) கீழும் இக்கேரி வலுவடைந்து வளர்ந்து வந்தது. சாமராஜ உடையார் நாகமங்கலத்திலாண்ட சிற்றரசன் சென்னையனை அவன் நாட்டைவிட்டுத் துரத்தியிருந்தான். சென்னையன் பீசப்பூர் அரசனிடம் உதவிகோரி அவனிடம் தஞ்சம் புகுந்திருந்தான். அடுத்த மைசூர் அரசன் கண்டீரவராசன் பசவ பட்டணத்தில் ஆண்ட சிற்றரசன் கெங்கஹனுமனை வீரபத்திர நாயகனுக்கெதிராகத் தூண்டிவிட்டான். வீரபத்திரன் கெங்க ஹனுமனை இதுபோல நாட்டைவிட்டுத் துரத்தினான். அவனும் பீசப்பூரிடமே உதவி கோரிச் சரண் புகுந்தான். வலிமை வாய்ந்த மைசூர், இக்கேரி அரசுகளைக் கடந்து தெற்கே பரவ முடியாமல் விருவிருத்துக் கொண்டிருந்த பீசப்பூருக்கு இது நல்ல வாய்ப்பாயிற்று. பீசப்பூர், கோலகொண்டா, அகமது நகர் ஆகிய தென்னக முஸ்லிம் அரசுகள் இக்காலத்தில் ஒரு புறம் வட திசை முகலாயரால் அலைக்கழிக்கப்பட்டும், அதன் இடை வேளைகளில் தென்திசை பரவித் தம் வாழ்வைப் பாதுகாக்க முனைந்தும் வந்தன. இம்முயற்சி கள் காரணமாக மராட்டிய வீரரைப் படைத் துறையிலும் மராட்டிய பிராமணரை அமைச்சர் முதலிய பணித் துறைகளிலும் பேரளவாகச் சேர்த்துக் கொண்டிருந்தனர். தென் திசைப் பக்தி இயக்கத்தின் சைவ, வைணவ அலைகள் இரண்டுக்கும் இலக்காகி இயல் மலர்ச்சி பெற்றிருந்த மராட்டிய இனம் இதனால் அரசியலிலும் மலர்ச் சியுற்றுப் புதிய தேசியமாக வளரத் தொடங்கிற்று. இம்மலர்ச்சியில் பீசப்பூர்ப் படைத்தலைவனாய் இருந்த ஷாஜி பான்ஸ்லே (பிறப்பு 1594 மறைவு 1664), அவன் இரண்டாம் மகன் சிவாஜி (பிறப்பு 1627 மறைவு 1680), ஒரளவு ஷாஜியின் மூத்த புதல்வன் வெங்காஜீ என்ற எக்கோஜி (ஆட்சி 1675 - 1684) ஆகியோர் பேரிடம் வகிக்கத் தக்கவராவர். ஷாஜி தன் இளமையில் (1624 - 1636) பல ஆண்டுகள் அகமது நகர், முகலாயப் பேரரசு, பிஜப்பூர் ஆகியவற்றின் படைத்தலைவனா யிருந்து அருந்தொண்டாற்றிப் பெரும் புகழும் செல்வாக்கும் பெற்றிருந்தான். அடுத்த 28 ஆண்டுகளில் (1636 - 1664) அவன் பீசப்பூரின் படைத்தலைவர்களுள் ஒருவனாக இருந்து கொண்டே தென்னகத்தில் ஒரு புதிய மராட்டிய மரபை நிலைநாட்ட முடிந்தது. மைசூரின் தென்திசை வெற்றிகள் 1642-க்குள் மைசூரின் எல்லையை மதுரை அரசின் எல்லைக்குக் கொண்டு வந்து விட்டன. ஆனால், கெங்க ஹனுமனின் தூண்டுதலால் 1638 - 1639ல் தொடங்கிய பீசப்பூர் படையெடுப்பினால் இக்கேரி அரசின் பகுதியும் மற்றப் பல சிற்றரசுப் படிப்படியாகப் பீசப்பூர் வசமாயின. பீசப்பூர் படைத்தலைவன் ரணதுல்லாக்கானுடன் இப்போர்களில் துணைப் படைத் தலைவனாக வந்த ஷாஜியிடமே இவற்றின் ஆட்சி ஒப்படைக்கப் பட்டது. பெயரளவில் பீசப்பூர் அரசன் மேலுரிமையுடன், ஆனால், பேரளவு தன்னாண்மையுடனேயே, ஷாஜி இப்பகுதியை ஆண்டு வந்தான். ஷாஜியின் ஆட்சியிலிருந்த இப் பரப்பில் இன்றைய பெல் லாரி மாவட்டமும் இன்றைய மைசூர்த் தனியரசுப் பகுதிகளாகிய சித்தலதுருக்கம், தும்கூர் கோலார் மாவட்டங்களும், பங்களூர் மாவட்டத்தில் பாதியும் அடங்கியிருந்தன. உதயகிரிப் போர் : 1644 மூன்றாம் வேங்கடனுக்குப் பின் பேரரச மரபுக்கு மூன்றாம் சீரங்களே (1642) உரியவனானான். அவன் துணிகர வீரமும் சூழ்ச்சியும் உடையவன். ஆனால், அவன் பேரவாவும் சூழ்நிலை யறிந்து நடக்கும் நெளிவு குழைவுப் பண்பின்மையும் அவன் காலத்திலேயே பேரரச மரபுக்கு ஒரு முடிவு உண்டு பண்ணின. பேரரசனாகு முன் அவன் பேரரசை எதிர்த்துப் படையெடுத்த பீசப்பூர்ப் படையுடனே இருந்தான் ஆனால், முந்திய பேரரசன் மறைவுற்றது கேட்டதே அவன் ஆட்சியுரிமை மேற்கொள்ள விரைந் தான். தாமர்லாத் துணைவர்களும் செஞ்சி நாயகனும் வேறு ஓர் உரிமையாளனை ஆதரித்து, தமக்கு உதவும்படி கோல் கொண்டாவை அழைத்திருந்தனர். மூன்றாம் சீரங்கன் அவர்களுக் கெதிராகப் பீசப்பூர்ப் படைகளை உதவிக் கழைத்தான். பீசப்பூரின் துணைப் படைத் தலைவனாயிருந்த ஷாஜி இச்சமயம் பேரரசனை ஆதரிக்கும் படி தமிழக நாயகர்களாகிய மதுரை, தஞ்சை, செஞ்சி அரசர்களை மட்டுமன்றி, இக்கேரி, ஹார்ப்பன ஹள்ளி ஆகிய நாயக அரசுகளையும் ஒருங்கு திரட்டி உதவியதாக அறிகிறோம். இவ்வுதவிகளுடன் மூன்றாம் சீரங்கன் கோல் கொண்டாப் படைகளை 1643 -ல் உதயகிரிப் போரில் முறியடித்தான். தமிழக நாயகர்கள் இச்சமயம் உதவிய திறைப் பணத்தையே பீசப்பூர்ப் படைகளின் உதவிக்குக் கைம்மாறாகப் பேரரசன் அளித்தான். இதே சமயம் டச்சுக்காரனிடம் தாசனாயிருந்த வணிக கோமகனான் மல்லய்யன் என்பவன் தாமர்லாத் துணைவர் களைக் கீழடக்கி அவர்களிடமிருந்த கீழ்க் கரையோரக் கோட்டைகளைக் கைப்பற்றினான். உதயகிரிப் போரின் பின் உதயகிரிக் கோட்டையும் அவன் வசமே விடப்பட்டது. வேலூர்ப் போர் : 1645 மூன்றாம் சீரங்கன் பேரவாவும் ஆத்திர புத்தியும் முந்திய பேரரசர் களைப் போலத் தமிழக நாயகர் மீது பெயரளவில் மேலுரிமையுடன் அமையாமல் முழுப்பணிவும் கோரும்படி செய்தது. இதனைப் பெறும்படி அவன் ஒரு பெரும் படையுடன் தெற்கே புறப்பட்டான். ஆனால், மதுரையாண்ட திருமலை நாயகன் பேரரசைச் சாராமல் தன்னாண்மை பெறவும், பேரரசை எதிர்த்து வளர்ச்சி யடையவும் விரும்பினான். எனவே இவ்வெதிர்ப்பில் மற்றத் தமிழக நாயகர்களையும் சேர்க்கத் திட்டமிட்டான். தஞ்சை அரசன் இதில் சேர மறுத்ததுடன் நில்லாமல், திட்டத்தின் முழு விவரத்தையும் பேர ரசனுக்கு அறிவித்தான். பேரரசனும் தஞ்சை அரசனும் சேர்ந்துவிட்டால் தன்நிலை இன்னும்மோசமாய்விடும், என்றறிந்த திருமலை நாயகன் பேரரசின் தலைமை யிடத்தைத் தாக்கும்படி கோல கொண்டாவைத் தூண்டினான். அவனது இந்த நடவடிக்கை தற்காலிகமாக வேனும் பயனளித்தது. 1645-ல் கோல் கொண்டாவின் படைத்தலைவனான மீர்ஜம்லா ஒங்கோல், நெல்லூர், சித்தூர் ஆகிய இடங்களைக் கடந்து வேலூர் மீது படையெடுத்தான். உதயகிரிக் கோட்டைக் காவலைச் சீரங்கன் மல்லய்யா விடம் ஒப்படைத் திருந்தான். எதிரியுடன் பேரம் செய்து கொண்டு மல்லய்யா கோட்டையை அவனிடம் ஒப்படைத்து விட்டதால், தலைநகர் விரைவில் ஆரிடருக்கு உள்ளாயிற்று. மூன்றாம் சீரங்கன் இச்சமயம் இக்கேரி நாயகனின் உதவி நாடினான். இக்கேரி நாயகன் வீரபத்திரனின் மகன் செவ்வப்ப நாயகன் 40,000 க்கு மேற்பட்ட வீரர்களடங்கிய தன் வலிமை வாய்ந்த படைகளுடன் பேரரசனுக்கு உதவியாக வந்தான். வேலூர் எளிதாகப் பேரரசன் ஆட்சிக்கு உட்பட்டது. அதனைச் சூழ்ந்த இடங்களையும் அடக்கச் செவ்வப்ப நாயகன் பேரரசனுக்கு உதவினான். உற்றவிடத்து உதவிய இப்பெருஞ் செயலால் பெரு மகிழ்வுற்ற பேரரசன் செவ்வப்ப நாயகனுக்கு ‘இராமபாணம்’ ‘பரவாரண வாரணன்’ முதலிய பட்டங்களை அளித்துப் பெருமைப் படுத்தினான். பீசப்பூரின் புதிய படையெழுச்சிகள் 1644 - 1646 இக்கேரியில் செவ்வப்ப நாயகனின் வலிமையைக் குறைக் கும் எண்ணத்துடன் பீசப்பூரரசன் 1644-ல் முஸ்தாபாகான் என்ற நவாப்கான் பாபாவின் தலைமையில் ஒரு படையை அனுப் பினான். அது இக்கேரி, சாகர்க் கோட்டைகளைக் கைப்பற்றியது. முஸபர் உதீன் அல்லது கானீகான் என்ற தலைவன் இவ்வெற்றியைத் தொடர்ந்து செஞ்சியை அடுத்த பாராமகால் (சேலம் மாவட்டம்) வரை முன்னேறினான். பீசப்பூர் - கோலகொண்டா புதிய ஒற்றுமை இச்சமயம் ஏற்பட்டது. பேரரசின் தலைமையிடத்தை இருவரும் சேர்ந்து படையெடுப்பதென்று இரு அசரர்களும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். விரிஞ்சிபுரம் போர்: ஐஐ 1646 இருமுஸ்லிம் அரசுகளும் ஒன்று சேர்ந்து பேரரசை எதிர்ப் பதாக அறிந்தபோது, மதுரை நீங்கலான மற்ற நாயக அரசுகள் பேரரசுக்கு ஆதரவுதர முன் வந்தன. ஆனால், அவற்றின் ஆதரவு பெற்றும் சீரங்கன் விரிஞ்சிபுரத்தில் நடைபெற்ற போரில் படுதோல் வியுற்றான். தலைநகரின் மீதே தாக்குதல் தொடங்கிற்று. வேலூர் முற்றுகை 1647 கோல் கொண்டாப் படைத் தலைவன் மீர்ஜம்லா கடப்பை, நெல்லூர்ப் பகுதிகளையும் பழவேற்காட்டுக் கோட்டை வரையுள்ள கரையோரப் பகுதிகளையும் வென்றான். பழவேற்காட்டிலுள்ள டச்சுக்காரர் மட்டுமே அவன் புதிய வெற்றிகளை மதித்துப் பணிய மறுத்தனர். அதன் பின் அவன் ஒரு திசையிலிருந்தும், பீசப்பூர்ப் படைகள் மற்றொரு திசையிலிருந்தும் வேலூரை முற்றுகையிட்டனர். வேலூரில் காலூன்றிய விசயநகரப் பேரரசின் கடைசிக் காவலனைக் காக்க வேலூர்ப் பகுதி மக்களும் சூழ்புல மக்களும் பல தியாகங்களைச் செய்தனர் என்று அறிகிறோம். நகரின் பெருங் குடிப் பெண்டிரும் அரசகுடி மாதரும் தம் அணி மணிகளைப் பாதுகாப்புச் செலவுக்காக அளித்தனர். திருப்பதி கோயிலின் கருவூலக் காவலர் கருவூலப் பணத்தைக் கூட எடுத்துக் கொடுத்துதவினர். ஆனால், இவை எவையும் நகரைக் காக்கவில்லை. நகர முற்றுகையில் ஷாஜி பீசப்பூர் படைகளின் இடது புற அணியை நடத்தினான். நகர மக்களில் பலர் கொலையுண்டனர். பேரரசனிடமிருந்து 50 இலட்சம் பொன்னும், 150யானை களும் போர்த் தண்டமாகப் பறிக்கப்பட்டன. ஆனால், ஷாஜி பேரரசனை மட்டும் தப்பியோடும்படி செய்ததாக அறிகிறோம். தமிழக நாயகர்களை மீட்டும் ஒன்று திரட்டும் முயற்சியில் பேரரசன் ஓராண்டு கழித்தான். பின் அவர்கள் கைவிட்ட பின் தஞ்சைக் காடுகளில் திரிந்தான். இதன் பின்னர் அவன் மீண்டும் சில நாள் இக்கேரியிலும் சிலநாள் மைசூரிலும் சென்று அவ்வரசர் ஆதரவில் தங்கியிருந்தான். ஷாஜி முஸ்லீம் அரசுகளின் சேவையிலிருந்தாலும், தென் திசை அரசுகளை ஒன்றுபடுத்துவதில் கருத்துச் செலுத்தியிருந்தான். ஆயினும் அவன் கடமை யுணர்ச்சி இப்படையெடுப்பில் பீசப்பூர் வெற்றிக்குப் பெரிதும் உதவிற்று. ஆகவே போர் முடிவில் பீசப்பூர் அரசன் அவனுக்கு “மகாராஜ்” “பர்சந்த்” அல்லது ‘மன்னர் மகன்’ என்னும் பட்டங்களை அளித்துப் பெருமைபடுத்தினான். செஞ்சி முற்றுகையும் வீழ்ச்சியும்: 1648 - 1649 வேலூர் முற்றுகைக்குப் பின் மீர்ஜம்லாவின் கோல கொண் டாப்படைகள் விரைந்து செஞ்சியை நோக்கி முன்னேறி அத்தலை நகரையே முற்றுகைக்கு ஆளாக்கின. தமிழக நாயக அரசுகளுள் ஒன்றான செஞ்சிக்கு நேர்ந்த இடர் மற்ற நாயக அரசுகளுக்கு அதிர்ச்சி யூட்டின. தஞ்சை அரசன் அம்முதலதிர்ச்சியில் கோல் கொண்டாவுக்குப் பணிந்து தன்னைக் காத்துக் கொள்ள முயன்றான். ஆனால், மதுரையாண்ட திருமலை நாயகனோ பீசப்பூரின் உதவியை நாடினான். மீர்ஜம்லா முன்கூட்டிப் பீசப்பூருடனும் மைசூருடனும் நேச ஒப்பந்தம் கோரியிருந்தாலும், பீசப்பூர் இச்சமயம் நவாப் முஸ்தாபாகான், ஷாஜி ஆகியவர்கள் தலைமையில் 17,000 குதிரை வீரர்கள் அடங்கிய ஒரு படை அனுப்பத் தயங்கவில்லை செங்கம், திருவண்ணணாமலைக் கோட்டைகளைப் பிடித்துக் கொண்டு அவர்கள் செஞ்சி வந்தனர். ஆனால், பீசப்பூரின் முஸ்லீம் படைத் தலைவர்களுடன் கோலகொண்டாவின் முஸ்லீம் படைத்தலை வர்கள் தனிப்பேச்சு நடத்தினர். ஷாஜிபல காரணங்களை முன்னிட்டு இச்சமயம் பூசப்பூர் அரசனால் சிறையிடப்பட்டான். பீசப்பூர் படைத்தலைவர்கள் கோலகொண்டாப் படைத் தலைவர்களுக்குப் பணம் கொடுத்து முற்றுகையைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி தூண்டினர். தன் வடதிசை வேலூர் வெற்றியை முடிக்கும் விருப்புடன் மீர்ஜம்லாவும் இதற்கு இணங்கினான். 1649-ல் செஞ்சி பீசப்பூர் ஆட்சிக்கு உட்பட்டது. செஞ்சிநாயகன் செல்வமும் அணிமணிகளும் பல கோடிப் பொன்னளவில், பீசப்பூர் வசமாயின. மதுரை தஞ்சை அரசுகளும் பீசப்பூரும் செஞ்சி வீழ்ச்சியின் பின் பீசப்பூர்ப் படைகள் தஞ்சை அரசுப் பகுதிகளிலும் மதுரை அரசுப் பகுதிகளிலும் புகுந்து கொலையும் கொள்ளையும் சூழத் தொடங்கின. இவ்வகையில் அம்முஸ்லிம் படைத்தலைவர் தம்மை அழைத்த மதுரை, செஞ்சி அரசுகளுக்கும் தம்மிடம் பணிந்துவிட்ட தஞ்சை அரசுக்கும் எத்தகைய வேற்றுமை யும் காட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி, இம் முஸ்லிம் அரசின் படைகளை மதுரை எல்லையிலிருந்த சேதுபதியும் அவன் மறவர் படைகளும் துரத்தித் தென் தமிழகத்துக்குப் பின்னும் நீடித்த ஓய்வு தந்தனர். மூக்கறுத்தான் போராட்டம்: மைசூர், மதுரை பூசல் 1656 - 1659 திருமலைநாயகன் ஆட்சியிறுதியில் அவன் உடல் நலம் கெட்டுப் படுக்கையாய் இருந்தான். இச்சமயம் பார்த்து மைசூர் அரசன் முதலாம் கண்டீர நரசன் மதுரை அரசைத் தாக்கும் படி ஒரு படையை அனுப்பினான். மதுரைநாயகன் பீசப்பூர்ப் படைகளைத் தெற்கே அழைத்தன் மூலம் தன் அரசுக்கு நேர்ந்த இடர்களே அவனை இச்செயலில் தூண்டியிருக்கக் கூடும். ஆனால், அவன் தன் படைத்தலைவன் தளவாய் ஹம்பையாவுக்கு கொடுத்த கட்டளையே இப்போருக்குத் தனிப் பண்பும் பெயரும் தந்துள்ளது. ஹம்பையா 1656-ல் மதுரையின் வட எல்லை மாகாண மாகிய சத்திய மங்கலத்தைக் கைப்பற்றித் தடையில்லாமல் சரசர வென்று மதுரையை நோக்கி வந்தான். எல்லைப்புற நகர்களிலும், வழி எங்கும், மைசூர் மன்னன் கட்டளைப்படி அவன் ஆண், பெண் குழந்தைகளை ஆயிரக்கணக்கில் பிடித்து மூக்கரிந்து மைசூருக்கு அனுப்பி வைத்தான். இவ்வட்டூழியங்களையும் அதனால் ஏற்பட்ட மக்கள் கூக் குரலையும் கேட்டுத் திருமலை நாயகன் நோய்ப் படுக்கையில் கிடந்து தத்தளித்தான். தன் நண்பன் ரகுநாத சேதுபதிக்கு உடனே சொல்லியனுப்பினான். 25,000 மறவர் படையுடனும் 35,000 மதுரை அரசன் வீரருடனும் அவன் மதுரைமா நகரத்தைத் திறம்படக் காத்ததுடன் எதிரிகளை எல்லைவரை துரத்தினான். எல்லைப் புறத்தருகே நடந்த பெரும் போரிலும் முறியடித்தான். இப்போரில் இருதரப்பிலும் தலைக்கு 12,000 வீரருக்குக் குறையாமல் மாண்ட தாகத் தெரிகிறது. இப்போரில் மதுரை அரசன் தம்பி அல்லது மகன் குமார முத்துவும் கன்னிவாடிப் பாளையத்தலைவன் இரங்கண்ண நாய கனும் கலந்து கொண்டனரென்றும், மைசூர்த் தலைநகர் வரை போரைக் கொண்டு சென்று, மதுரையில் நிகழ்த்திய மூக்கறுப்பு வேளையை மைசூரிலும் நடத்திப் பழிக்குப்பழி வாங்கின ரென்றும் கர்நாடக இராசாக்கள் வரலாறு குறித்துள்ளது. மதுரை அரசின் இரண்டாம் தலைநகர் மாற்றம்: 1640 -44 மதுரை அரசின் தலைநகரைத் திருமலை நாயகன் மீண்டும் திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரைக்கு 1640 - க்கும் 1644 -க்கும் இடையே மாற்றியதாகத் தெரிகிறது. தஞ்சை அரசனுடன் தொடங்கி யிருந்த போராட்டமே இதற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். சோழப் பெரும் பேரரசரும், பாண்டியப் பேரரசரும், விசய நகரப் பேரரசரும் படிப்படியாகப் பாரிய சிற்பக்கலை வளர்த்தனர். ஆயினும் பல்லவர் காலத்துச் சிற்பங்களுக்குப் பிறகு தமிழகத்தின் தலைசிறந்த சிற்பக்கலைப்படைப்பு திருமலை நாயகனுக்குரிய மதுரைத் திருமலைநாயகன் மகாலேயாகும். அடுத்த மதுரை அரசர் ஆட்சியிலேயே இதன் பெரும்பகுதி திருச்சிராப்பள்ளியில் சில பணிகளுக்காக அழிக்கப்பட்டு விட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னும் அவ்வாட்சித் தொடக்கத்திலும், பின்னும் பெரும்பகுதி அழிந்தது. எஞ்சி யிருக்கும் ஒன்றிரண்டு மாடங்களே வடதிசைத் தாஜ்மஹாலுக்கு இணையாகக் கூறத்தக்க தென்திசைக் கலையாக மதிக்கப் படுகிறது. பல்லவர் சிற்பத்தில் தமிழர் நுண்கலைத் திறத்தையும் திரு மலை நாயகன் காலச் சிற்பத்தில் அதன் பாரக் கலைத்திறத்தையும் காண்கிறோம். இவ்விரண்டையும் சோழப் பெரும் பேரரசர்காலத் தஞ்சைப் பெருவுடையார் கோயில் இணைத்து நிற்கிற தென்னலாம். பஞ்சமும் போரும்: 1659 திருமலை நாயகனுக்குப் பின் இரண்டாம் முத்து வீரப்ப நாயகனும் (1659) சொக்கநாத நாயகனும் (1659 - 1682) மதுரையில் ஆண்டனர். இரண்டாம் முத்துவீரப்ப நாயகன் ஆட்சியில் பீசப்பூர் அரசன் இடல் கான் என்ற இரண்டாம் அலி ஆதில்ஷா, சகோசி, மூலம் ஆகிய படைத்தலைவரின் கீழ் தமிழக நாயக அரசுகளைக் கீழடக்கும்படி பெரும்படை ஒன்றை அனுப்பினான். இப்போரில் ஒத்துழைக்கும்படி மதுரை அரசன் தஞ்சை அரசனை அழைத்தும், அவன் மறுத்து விட்டான். மதுரையின் படைத்தலைவன் லிங்கம் நாயகன் போருக்குப் பெருத்த ஏற்பாடுகள் செய்தான். இவற்றைக் கேள்வியுற்ற பீசப்பூர்ப் படைத்தலைவர்கள் திருச்சியைத் தாக் காமல் தஞ்சையையே தாக்கினர், தஞ்சைப் படைத்தலைவரின் போதாத் திறமையால் தஞ்சை மட்டுமன்றி, வல்லமும், மன்னார் கோயிலும் வீழ்ச்சியடைந்தன. ஆனால், முன்கூட்டியே மறவர் படைகள் அப்பகுதிகளின் செல்வத்தைக் கொள்ளையடித்திருந்த தால், பீசப்பூர் படைகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அவை திருச்சிராப்பள்ளியைத் தாக்க முடியாவிட்டாலும், சூழ் பகுதி களைச் சூறையாடி மதுரை அரசனை அச்சுறுத்திச் சிறிது பணம் பெற்று வெளியேறின. புயலால் எழுந்த பஞ்சம் தாக்குதல் படைகளைக் கூட வெருண்டோடச் செய்தன. ஆட்சிக்குழுவின் அட்டூழியம்: முஸ்லிம் படையெடுப்பு 1659 - 1663 சொக்கநாத நாயகன் ஆட்சிக்கு வந்தபோது 16 வயது இளைஞனா யிருந்ததால் படைத்தலைவன் (தளவாய்) லிங்கம் நாயகன், பெரியமேலெழுத்து (இராயசம்), அமைச்சர் (பிரதானி) ஆகியவர் அடங்கிய ஆட்சிக்குழு உரிமை கைக்கொண்டது. அது கொடுமைகளாலும் அட்டூழியங்களாலும் பணம் ஈட்டும் செயலில் முனைந்தது. முஸ்லிம் படையின் எதிர்ப்புக் கென்று ஏற்பாடுகள் செய்தது. வேண்டுமென்றே போரை நீட்டி, எதிரி படைத் தலை வரிடமிருந்து கைக்கூலி பெற்று மக்களை அவர்கள் ஏய்த்து வாழ்ந்தனர். சொக்கநாதன் இதையறிந்து மேலெழுத்தைக் கொன்றும், அமைச்சர் கண்கெடுத்தும் குழுவைச் செயலற்ற தாக்கினான். சில நாட்களில் படைத் தலைவனையும் நீக்கித் தானே படைத் தலைவனானான். இச்சமயம் தஞ்சை அரசனாயிருந்த விசயராகவ நாயகன் வீரனானாலும், அரசயலில் கருத்துச் செலுத்தாத பக்தி வெறியனாய் இருந்தான். அவன் செயலால் மதுரைக்கு நேர்ந்த இடரை விட அவன் நாட்டுக்கு நேர்ந்த இடரே மிகுதி. ஆயினும் அவனைத் தண்டிக்கும் நோக்கத்துடன், சொக்கநாதன் 70,000 படை வீரருடன் படையெடுத்துத் தஞ்சையைப் பணியவைத்தான். 1663-ல் பேர் போன பீசப்பூர்ப் படைத்தலைவனான வானாமி யான் படையெடுத்துப் பெருந் தொல்லைகள் விளைவித்தான். சொக்கநாதன் வீரப் பாதுகாப்பில் திருச்சிராப்பள்ளியை அவன் தாக்க முடியவில்லை யானாலும், சூழ்புல அழிவு காக்கும் படி அவன் ஒரு பெருந்தொகை அளித்து அனுப்பப்பட்டான். இத்தடவையும் பகைவனுக்குதவிய ‘பக்த’ விசயராகவனைத் தண்டிக்கப் புறப்பட்டுச் சொக்கநாத நாயகன் வல்லத்தைக் கைக் கொண்டு அங்கே தன்படைகளைக் காவலில் வைத்துவிட்டு வந்தான். வல்லம் சில காலத்துக்குள் தஞ்சையால் மீட்கப்பட்டது. சேது நாட்டுப் போர் : 1665 முஸ்லிம் படையெழுச்சியின் போது தனக்கு உதவாத தற்காகத் திருமலை சேதுபதியைச் சொக்கநாத நாயகன் தண்டிக்க எண்ணித் திருப்பத்தூர், புதுக்கோட்டை, மானாமதுரை, காளை யார் கோயில் ஆகிய கோட்டைகளைக் கைக்கொண்டான். ஆனால், குரங்குப் போர் முறையைப் பின்பற்றிப் பின் வாங்கி ஒதுங்கிய சேதுபதி, சொக்கநாதன் முதுகு திரும்பியதே அவற்றைக் கைப் பற்றிக் கெண்டான். மதுரை அரசின் மூன்றாம் தலைநகர் மாற்றம் 1665 போர்களால் ஏற்பட்ட பஞ்சம் திருச்சிராப்பள்ளி சூழ்ந்த பகுதிகளையே பெரிதும் வாட்டிற்று. பஞ்ச ஒழிப்பு திட்டங்களைக் கவனிப்பதற்காகச் சொக்கநாதன் தலைநகரை மீண்டும் மதுரையி லிருந்து திருச்சிராப் பள்ளிக்கு மாற்றினான். திருச்சிராப்பள்ளியில் அரண்மனை முதலிய பொதுப் பணிகளுக்காகவே திருமலை நாயகன் கட்டிய கலைக் கோயில் மாளிகையின் பகுதிகளை அவன் அழித்துப் பயன்படுத்தியதாக அறிகிறோம். கலைமாமன்னன் பிறந்த அதே மரபுக்குள்ளேயே கலைப் பண்பறியாக் கலை அழிவாளன் சொக்க நாதனும் தோன்றினான் என்று காண்கிறோம். மைசூர்ப் போர் : 1667 கண்டீரவ நரசனுக்குப் பின் மைசூரை ஆண்ட தேவராயன் (1659 - 1673) ஆட்சியில் சொக்கநாத நாயகன் மைசூரை வெல்லும் அவாவால் அந்நாட்டின்மீது படையெடுத்தான். ஆனால், புதுநிலம் கைப்பற்றுவதற்கு மாறாக 1667-ல் சேலம், கோயம்பத்தூர்ப் பகுதிகளை இழந்தான். அடுத்த மைசூர் அரசன் சிக்க தேவராயன் (1679 - 1704) மைசூரை மிகவும் விரிவுபடுத்தியவன். அவன் கால மைசூர் அரசின் எல்லை சத்தியமங்கலத்தையும் உட் கொண்டதா யிருந்தது. இந்நிலைக்குக் காரணமான போர் ஈரோட்டுப் போரேயாகும். ஈரோட்டுப் போர்: 1672 மைசூரின் விரைந்த முன்னேற்றத்தைத் தடுக்கும் எண்ணத் துடன் இப்போரில் மதுரை நாயகன் சொக்கநாதன், தஞ்சை நாயகன் விசயராகவன், இக்கேரி நாயகன் ஆகியோர் பீசப்பூர் படைகளுடன் ஒன்று சேர்ந்து எதிர்த்தனர். மைசூர்ப் பக்கம் நின்று போரிட்டவன் அப்போது இளவரசனாயிருந்த சிக்க தேவராயனே. தஞ்சை அரசன் படைத்தலைவனாக அனந்தோஜீ என்ற மற்றொரு படைத்தலைவனும் இருந்தனர். எதிர்ப்புக் குழுவிலேயே பேரரசன் மூன்றாம் சீரங்கனும் இருந்தான். எதிர்ப்பவர் பெயரளவில் பேரரசனுக்காகவே எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டனர். மைசூர் இளவரசன் சிக்க தேவராயனே வெற்றி பெற்றான். எதிர்ப்புக் குழு முற்றிலும் தோல்வியுற்றது. ஈரோடு, தாராபுரம் பகுதிகள் சிக்க தேவராயன் ஆட்சி யுட்பட்டன. திருச்சிராப் பள்ளிப் பகுதியில் வடச் சிக்க தேவராயன் திறை கைப்பற்றிய தாகத் தெரிய வருகிறது. மைசூர்க் கல்வெட்டுக்கள் சொக்க நாதனைப் பாண்டிய அரசன் என்றே குறித்துள்ளன. இப்போரின் பின் பேரரசு மரபுக்குரிய மூன்றாம் சீரங்கன் மீண்டும் இக்கேரி சென்று செவ்வப்ப நாயகனிடம் தஞ்சம் புகுந்தான். சக்கரப் பட்டணம் போர்: 1675 மூன்றாம் சீரங்கன் ஆதரவின் பேராலேயே இக்கேரி நாயகன் செவ்வப்பன் மைசூர் அரசன் சிக்கதேவ ராயனுடன் இப்போரில் கை கலந்தான். இதில் இக்கேரி தோல்வியுற்றது. மூன்றாம் சீரங்கன் இப்போருக்குப் பின் மாள்வுற்றிருக்கக் கூடும். ஆனால், 1653 -லேயே அவன் வடதிசை முகலாயப் பேரரசன் உதவியை மிகவும் பணிந்து வலியுறுத்திக் கோரியிருந் தான். முகலாயர் கை அவ்வளவு தொலை தென்திசை வருமுன் அவன் வாழ்வு நீத்தான். ஆனால், விசய நகரப் பேரரசின் புகழ் மரபுத் தூவானம் நீடித்திருந்து, பேரரசன் மாள்வுச் சமயத்திலே சிவாஜி அம்மரபுக்குத் தன்னை உரியவனாக்கத் தூண்டிற்று என வரலாற் றாசிரியர் பலர் குறிக்கின்றனர். ஹாசன் அல்லது ஆசனாப் போர்: 1677 விசய நகரப் பேரரச மரபின் பேரால் நடைபெற்ற கடைசிப் போர் ஆசனப் போரே. இதில் சீரங்கன் அண்ணன் மகனான கோதண்டராமன் மைசூர்ப் படைத்தலைவன் தளவாய் குமாரை யாவைத் தோற்கடித்ததாக கூறிக் கொள்கிறான். ஆனால், பின் விளைவுகளை நோக்க இது முடிவான வெற்றியாகத் தோற்ற வில்லை. மைசூரே இறுதி வெற்றி அடைந்திருக்க வேண்டும். தஞ்சை நாயக மரபின் வீழ்ச்சி: 1673 மதுரை - தஞ்சை இறுதிப் போராட்டத்தின் காரணம் மதுரை யரசனுக்குத் தஞ்சை அரசன் தன் புதல்வியை அளிக்க மறுத்ததே என்று கூறப்படுகிறது. ஆனால், மைசூர்ப் போரின் தோல்வியின் பின் ஏற்பட்ட இயல்பான பிளவுதான் இச்சாக்குப் போக்கைக் கிளறி யிருக்க வேண்டும் என்னலாம். மதுரைப் படைத் தலைவனாக இப்போரில் தளவாய் வேங்கட கிருஷ்ணப்பநாயகனும் அவனுடன் வரிதண்டவாளன் அல்லது கருவூல முதல்வன் (பேஷ்கார்) சின்னத்தம்பி முதலியாரும், கன்னிவாடிப்பாளைய முதல்வன் சின்ன கண்டீர நாயகனும் சென்றிருந்தனர். தஞ்சை முற்றுகையிடப்பட்டது. பெண்டிரை உவளகத்திலேயே குறித்த நேரத்தில் வெடித் தழிக்கும் சுரங்க வெடியின் கீழ் வைத்துவிட்டு விசய ராகவனும் அவன் வீரப் புதல்வனும் கோட்டைக்கு வெளியே வந்து களப்போர் செய்து வீரர் அனைவரையும் பறிகொடுத்துத் தாமும் புகழ் மாள்வு மாண்டனர். பகைவர் புகுமுன் கட்டளைப்படி உவளகத்தில் பெண்டிரும் அழிக்கப்பட்டனர். விசய ராகவனின் சிறு மதலையாகிய செங்கமல தாஸ் என்பவன் மட்டுமே மறைவில் நாகபட்டினத்தில் ஒரு வணிகன் ஆதரவில் அனுப்பப்பட்டிருந் தான். தஞ்சை மதுரை அரசன் கைப்பட்டது. மதுரைப்படைத் தலைவர்களுக்குப் பாராட்டும் பரிசும் வழங்கிய பின் சொக்கநாதன் தன் மாற்றாந் தம்பி அளகிரி நாயகனிடம் தஞ்சை ஆட்சியை ஒப்படைத்துவிட்டு மதுரை மீண்டான். தஞ்சையில் மராட்டிய மரபு : ஏக்கோஜி 1674 அளகிரி சொக்க நாதனுக்கு எதிராகத் தன்னைத் தனியர சாக்கிக் கொள்ள முனைந்தான். இது தஞ்சையுடன், மதுரைக்கு இருக்க வேண்டிய நட்புறவைக் கெடுத்தது. அளகிரியின் மேலெழுத்து முதல்வன் (அராயசம்) ஆன வெங்கண்ணா இதைப் பயன்படுத்தி முந்திய அரசனின் மதலை செங்கமலதாஸை முடிசூட்டிச் சதி செய்தான். இதற்காகப் பீசப்பூர் சுல்தான் உதவியும் கோரினான். ஷாஜி 1765-லே காலமாய் விட்டபின் அவன் மூத்தமகன் ஏக்கோஜி இப்போது ஷாஜியினிடமாகப் படைத் தலைவனா யிருந்தான். பீசப்பூர் அரசன் செங்கமல தாஸை அரசனாக்கும்படி அவனைப் பணித்தான். அளகிரிக்குச் சொக்கநாதன் உதவி கிடைக் காததால் அவன் எளிதில் தோல்வியுற்றான். ஏக்கோஜி செங்கமல தாஸுக்கு முடிசூட்டி வெங்கண்ணாவிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டுச் சென்றான். விசய ராகவன் பெருஞ் செல்வக்குவை பழைய குடும்ப நண்பரால் எடுத்துச் செங்கமல தாஸுக்கு அளிக்கப்பட்டது. எனவே ஏக்கோஜிக்குச் சிறந்த பரிசுகள் தரப்பட்டன. செங்கமல தாஸ் தன்னை வளர்த்த நாகப்பட்டினத்து வணி கனையே மேலெழுத்து முதல்வன் ஆக்கினான். இதனால் பதவி யிழந்த வெங்கண்ணா தஞ்சையை மீண்டும் தாக்கிக் கைப்பற்றும் படி ஏக்கோஜியை வேண்டியனான். பீசப்பூர் அரசன் இரண்டாம் அலி ஆதில்ஷா இப்போது இறந்துவிட்ட நிலையில், ஏக்கோஜி துணிந்து வந்து படையெடுத்தான். செங்கமலதாஸ் போரிடாமலே வெங்கண்ணாவால் அச்சுறுத்தி ஓட்டப்பட்டான். ஆனால், இரண்டு அரசர்களைக் கெடுத்த அவனை ஏக்கோஜி நம்பவில்லை யாதலால் அவனும் தண்டனைக் கஞ்சி ஓட நேர்ந்தது. தஞ்சை நாயக மரபின் தடம் அழிந்து, மராட்டிய மரபு ஆட்சியைக் கைக்கொண்டது. தஞ்சை மராட்டிய மரபுக்குரிய அரசர் 1674- லிருந்து 1855 வரை சிற்றரசாகவே ஆண்டனர். பிரிட்டிஷ் வாணிக, ஆட்சியின் இறுதி யிலே மரபுமற்றுப் போனபின், ஆங்கில ஆட்சியாளரின் புது மகவுரிமை மறுப்புச் சட்டத்தால் அவர்கள் ஆட்சி பிரிட்டிஷாரால் கைப்பற்றிக் கொள்ளப்பட்டது. தஞ்சை மராட்டிய மரபினர் சிற்றரசரே யானாலும் கலையும், நாகரிகமும் வளர்ப்பதில் கிட்டத்தட்டக் கடைசிப் பாண்டிய மரபினருக்கு ஒப்பாக விளங்கினர். தமிழ், மராத்தி சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுடன் அயல் மொழிகளும் வளர்க்கப்பட்டன. பழைய கலைகளுக்குப் புது மலர்ச்சி தரவும் அவர்கள் அரும்பாடு பட்டனர். இவற்றின் சின்னமாகத் தஞ்சை சரபோஜி மன்னனின் ஏட்டுக் குவையும் சரஸ்வதி மகால் என்ற ஏடகமும் இன்றளவும் இயங்குகின்றன. கடக் போர்: 1617 ஷாஜி பீசப்பூர் அரசின் படைத் தலைவனாய் இருந்து கொண்டே மராத்திய இனப் புது மலர்ச்சிக்கு தூண்டுதல் தந்தான். அதன் கிளை ஒளியே அவன் மூத்த புதல்வன் ஏக்கோஜி கண்ட தஞ்சை மராட்டிய மரபு. ஆனால், மராட்டிய இனப் புது மலர்ச்சியைத் தேசிய அளவில் மாமலர்ச்சியாக்கிய வீரத் தலைவன் ஷாஜியின் இரண்டாம் புதல்வனாகிய சிவாஜியே. தென்னகத்தின் வட பாதியை அலைக் கழித்து வந்த வடதிசை மொகலாயப் பேரரசை எதிர்த்து, தென்னக முஸ்லிம் அரசுகளின் கண் பார்வையிலேயே அவன் ஒரு வலிமை வாய்ந்த கெண்கானப் பேரரசை அமைத்தான். ஆயினும் மொகலாயர் முன்னேற்றத்தைத் தடுப்பதில் கடைசித் தளமும் நிலையான மூலதளமும் தமிழகமே என்று கண்டு தமிழகத்திலே காலூன்ற அவன் கனவுக் கோட்டை கட்டிக் கொண்டிருந்தான். அச்சமயம் தஞ்சையில் அவன் தமையன் ஏக்கோஜியின் செயலாளனான ரகுநாத் ஹனுமந்தே என்பவன் போலகொண்டா அமைச்சன் மத்தண்ணாவுடனும், செயலாளன் பிரகலாத நிரால்ஜியுடனும் பேரம் பேசிக் கோல கொண்டா சார்பிலும் அதன் உதவியுடனும் வடகிழக்குத் தமிழகத்தில் ஓர் அரசமைக்கும் திட்டத்தை உருவாக்கினான். சிவாஜி அதனை ஆர்வமுடன் தழுவினான். 1676-ல் 20,000 குதிரை வீரருடனும் 40,000 காலாட்களுடனும் அவன் கோல் கொண்டாவுக்குப் புறப்பட்டான். கோல்கொண்டா அரசன் சிவாஜியையே தன் சார்பில் படைத் தலைவனாக்கி 5,000 பட வீரர்களை உதவிக்கு அளித்தான். நாள் ஒன்றுக்கு 3,000 பொன் வீதம் செலவுக்கு அளிப்பதாகவும் வாக்களித்தான். இவற்றுடன் அவன் செஞ்சியையும், வேலூரையும் நோக்கிப் புறப்பட்டான். சிவாஜியின் படைத் தலைவனான ஹம்பீர் ராவ் மோகிதே வேறொரு வழியில் பீசப்பூர் அருகாக வந்தான். வழியில் கடக் என்ற இடத்தில் ஹுசேன் கான் மாயெனா என்ற பீசப்பூர் படைத் தலைவனை வென்று அவனைச் சிறைப் பிடித்துக் கொண்டு சிவாஜியிடம் ஒப்படைத்தான். வாலிகண்டபுரம் போர்: 1677 - 1678 சிவாஜிக்கு அவனுடைய மற்றோர் உடன் பிறந்தானான சாந்தாஜி உடந்தையாயிருந்தான். சாந்தாஜியும் ரகுநாத பந்தும் தான் சிவாஜியின் படையெழுச்சிக்குக் காரணமென எண்ணி, அவர்கள் சிவாஜி சார்பில் கோரிய வேண்டுகோள்களை ஏக்கோஜி மறுத்தான். அவ்விருவரையும் அவன் வாலிகண்ட புரம் போரில் எதிர்த்துப் போர்க்களத்தில் கிட்டத்தட்ட வெற்றி நாட்டினான். ஆனால், எதிரிகள் புதர் மறைவிலிருந்து அவனைத் தாக்கி முறியடித்தனர். அவன் வெற்றி தோல்வியாயிற்று. சிவாஜியின் செஞ்சி வெற்றி: 1678 செஞ்சிக் கோட்டை 1659 -முதல் 1678 வரை பீசப்பூர் ஆட்சி யிலேயே இருந்தது. ஆனால், அதன் காவல் தலைவர்களிடையே இருந்த பூசல் பிளவுகளும், அவர்கள் ஆட்சியில் மக்கள் அடைந்த கொடுமைகளும் ‘தென்னகத்தின் டிராய்’ ‘கீழ்த்திசையின் வெல்ல முடியாத கோட்டை’ என்று புகழ் பெற்ற செஞ்சியை வலிமை யற்றதாக்கியிருந்தது. எனவே சிவாஜியின் முதல் முன்னணிப் படையின் தாக்குதலிலேயே அது வீழ்ச்சியுற்றது. சிவாஜியின் பெரும்புகழும், உள்ளே இருந்தவர் பணம்பெற்று உதவியதும் இத்தகைய எளிய வெற்றிக்கு மேலும் உதவின. செஞ்சி மராட்டியர் ஆட்சியில் (1678 - 1698) இருபது ஆண்டுகள் இருந்தது. சிவாஜி தன் தம்பி சாந்தாஜியையே அதன் தலைவனாக அமர்த்திச் சென்றான். ஆனால், 1680 -ல் சிவாஜி இறந்த பின் அவன் மகன் சாம்பாஜி, ஹாஜி மகாதிக் என்பவனைத் தலைவனாக்கினான். அவன் கிட்டத்தட்டத் தன்னாண்மை யுடனே 11 ஆண்டுகள் ஆட்சி செய்து மாண்டான். அதன்பின் சாம்பாஜி முகலாயரிடம் சிறைப்பட்ட பின் அவன் பெயரால் செஞ்சியையே தலைமையிடமாகக் கொண்டு அவன் தம்பி ராஜாராம் ஆண்டான். அவன் ஆட்சியிலேயே முகலாயர் செஞ்சியை முற்றுகையிட்டனர். இம் முற்றுகை 1690 முதல் 1698 வரை எட்டு ஆண்டுகள் நீடித்தது. வேலூர் முற்றுகை 1678 செஞ்சி வெற்றியின் பின் சிவாஜி வேலூரை முற்றுகை யிடும்படி படைத் தலைவன் நரஹர் ராவை அனுப்பினான். வேலூரின் பீசப்பூர் ஆட்சித் தலைவன் அப்துல்லாகான் வீரமாகப் போரிட்டதால், முற்றுகை நீடித்தது. 14 மாதங்களுக்குப் பின் அதில் சிவாஜியின் ஆட்சிக் கொடி ஏற்பட்டது. ஏக்கோஜியுடன் சிவாஜி 1677-ல் செய்து கொண்ட ஒப்பந்தப்படி சிவாஜி மூன்று இலட்சம் பொன் பெற்று ஏக்கோஜியைத் தஞ்சை அரசுக்குத் தலைவனாக்க ஒப்புக் கொண்டான். தந்தை வென்ற மைசூர் அடுத்த பகுதியையும், செஞ்சி வேலூர்ப் பகுதிகளையும் தன் ஆட்சிக்கு உரிமையாக் கினான். சிவாஜி வேலூரில் விசயநகரப் பேரரச மரபில் வந்த தென் பேரரசுத் தலைவனாகத் தன்னை முடிசூட்டிக் கொண்டான் என்றும், பேரரச மரபின் கடைசி ஏந்தலான மூன்றாம் சீரங்கன் அதைக் கேள்விப்பட்டு மன ஆறுதலுடனே தான் இறந்திருக்க வேண்டுமென்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கருதியுள்ளனர். கிழவன் சேதுபதி : புதுக்கோட்டை மரபின் தோற்றம் மதுரை சொக்கநாத நாயகனால் திருமலை சேதுபதியைக் கீழடக்க முடியாமல் போகவே, அவன் கிட்டத்தட்டத் தன்னிச்சை யாக ஆண்டான். 1674-ல் அவன் உடன் பிறந்தான் மகன் உரிமை பெற்றான். தஞ்சைப் போரில் இவன் எதிரி பக்கம் ஆதரவு செய்து, மதுரைத் தளபதி வேங்கட கிருஷ்ணப்ப நாயகனால் சிறையிடப் பட்டுக் காவலிலேயே மாண்டான். அவனுக்கு நேர்மரபு இல்லாத நிலையில் அவன் அன்புரிமைப் புதல்வன் ரகுநாத தேவனைச் சொக்கநாதனே சேதுபதியாக்கினான். கிழவன் சேதுபதி என்ற பெயரால் இவன் புகழ் பெற்றான். புதுக்கோட்டைத் தலைவன் பல்லவராயன் தொண்டை மான் என்பவன் இச்சமயம் தஞ்சை மராட்டிய அரசனுடன் தொடர்பு கொண்டிருந்தான். கிழவன் சேதுபதி அவனைத் துரத்திவிட்டுத் தன் மைத்துனன் ரகுநாதனையே புதுக்கோட்டைத் தலைவனாக்கினான். இவனே அணிமைக்காலப் புதுக் கோட்டைத் தனியரச மரபின் முதல்வனானான். சொக்கநாதன் ஆட்சியின் கடைசி யாண்டுகளில் மதுரை யரசின் வடபகுதி முழுமையையும் மைசூர் அரசன் ஆண்டான். மற்ற இடங்களில் குழப்பம் மிகுந்திருந்தது. அரசன் தம்பியாகிய முத்து அழகாத்திரி 1678 -ல் சொக்கநாதனைக் காவலில் வைத்து அரசைக் கைப்பற்ற முயன்றான். ஆனால், அவன் திறமை யின்மையைப் பயன்படுத்தி, சொக்கநாதனை விடுவித்துப் பெயரளவில் அரசனாக்கி, ரஸ்டம்கான் என்ற படைவீரன் தன்னை அரசனாக்க முயன்றான். இச்சமயம் தளவாய் கோவிந்தப்பையன் என்ற படைத்தலை வனுடனும் சில பாளையக்காரருடனும் சேர்ந்து கிழவன் சேதுபதி ரஸ்டம்கானை ஒழித்து மதுரை அரச மரபைக் காத்தான். சொக்கநாதனுக்குப் பின் மதுரை யாண்டவன் ரங்க கிருஷ்ணன் என்ற மூன்றாம் முத்துவீரப்ப நாயகன் (1682 - 1689). அவன் ஆட்சியில் கிழவன் சேதுபதி தஞ்சை மராட்டிய அரசருடன் சேர்ந்து மதுரையைத் தாக்க முயன்றான். அவன் படைத்தலைவனான குமார பிள்ளை மதுரை நாயகனை ஆதரித்ததால் இது வெற்றி பெறவில்லை. ஆயினும் சேதுபதியைத் தண்டிக்க மூன்றாம் வீரப்பன் நடத்திய போரில் மதுரைப் படைகளே தோல்வியுற்றன. தென்னக முஸ்லிம் அரசுகளின் வீழ்ச்சி: 1686 - 87 அக்பர் காலத்தில் தொடங்கிய அகமது நகரத் தாக்குதல் ஷாஜஹான் காலத்துக்குள் முற்றிலும் வெற்றிகண்டது. ஒளரங்கசீப் ஆட்சியில் 1687 -ல் கோல் கொண்டாவும் முகலாயப் பேரரசின் பகுதிகளாயின. விரைவில் முந்திய ஆப்கானிய வெற்றிகளைப் போலவே இந்த முகலாய வெற்றியும் 18-ஆம் நூற்றாண்டுக்குள் புதிய தென்னக ஆட்சிகளாகவே மாறினாலும், 17-ஆம் நூற்றாண்டில் தென்னகத்தின் முஸ்லிம் முன்னேற்ற முழுதும் முகலாயப் படையின் முன்னேற்ற மாகவே அமைந்தது. வந்தவாசிப் போர் ஐ: 1678 - 79 செஞ்சியில் ஹாஜி மகாதிக் கிட்டத்தட்டத் தன்னாண்மை யுடன் ஆட்சி செய்வது கண்ட மராட்டிய அரசன் சாம்பாஜி அவனிடமிருந்து கோட்டைத் தலைமையை மேற்கொள்ளும்படி கேசவ திரியம்பக் பிங்களே என்பவனை அனுப்பியிருந்தான். ஆனால், அவனால் செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்ற முடிய வில்லை. ஆயினும் ஹர்ஜி ஒருபுறமும், பிங்களே மற்றொரு புறமும் தொண்டை நாடுவரை தமிழகப் பகுதிகளைக் கொள்ளை யிடுவதில் ஒத்துழைத்து வந்தனர். 1687-க்குள் முகலாயரின் முன்னேற்றம் சிலந்தியின் கரங்கள் போலத் தென்னகத்தின் தென்பகுதிமீது குவிந்து வந்தன. பீசப்பூர், கோலகொண்டா ஆகிய இரு அரசுகளும் வீழ்ச்சியுற்றபின் கடப்பை ஆண்ட கோலகொண்டாத் தலைவனும், சாஞ்சிவரம், பூவிருந்த வல்லி நாயகமும் தாமாக முகலாயர் மேலுரிமையை ஏற்றுப் பணிந்து அப்பேரரசின் ஏவலர் ஆயினர். 1688-ல் செஞ்சிப் பகுதியைத் தாக்குவதற்கென்றே இஸ்மாயில்கான், மகா யச்ப்ப நாயகன், ரஸ்டம்கான், முகமதுசாதிக் என்ற நான்கு படைத் தலைவர்கள் 4000 குதிரை வீரருடனும் 7,000 காலாட்களுடனும் காஞ்சீபுரத்தில் வந்து தங்கல் அமைத்தனர். வடதிசையில் முன்னேறி வந்த மராட்டிய வீரர் இவ்விடத்திலிருந்து பின் வாங்கிப் பாலாற்றங்கரையில் தங்கி விட்டனர். ஒரு முழு ஆண்டு முதல் படைகள் சேற்றுப்பட்டிலும், மராட்டியப் படைகள் வந்தவாசியிலுமாகத் தாக்குதலை எதிர்பார்த்துக் காத்திருந்தன. ஆனால், 1689-ல் வந்தவாசியில் நடை பெற்ற பெரும்போரில் கேசவ் பிங்களே ஹர்ஜிராஜா ஆகிய இரு தரப்பினருக்குமுரிய மராட்டியப் படைகள் முறியடிக்கப்பட்டுப் பின்னிடைந்தன. செஞ்சி முற்றுகை 1690 - 1698 ஹர்ஜி மகாதிக் 1689-ல் உயிர் நீத்தான். அவன் மனைவி அம்பிகாபாய் சிவாஜியின் வீரப்புதல்வி. இவள் தன் சிறுவன் பெயரால் தானே ஆட்சி செய்ய முயன்றாள். ஆனால், அதற்குள் அவள் உடன்பிறந்தானான இராஜாராம் தானே கோட்டைப் பொறுப்பை அவளிடமிருந்து கைக்கொண்டான். அச்சமயம் சிவாஜியின் மூத்த புதல்வன் சாம்பாஜி முகலாயரால் சிறைப் படுத்தப் பட்டிருந்ததை முன்னிட்டு, அவன் தன்னையே அரசனாக்கிச் செஞ்சியிலேயே மராட்டிய மாமண்டலத் தலைமை ஆட்சியை வைத்து ஆளத் தொடங்கினான். தென்னகத்தின் வடமேற்கிலுள்ள சிவாஜியின் தாயக அரசுப் பகுதிகள் இதற்குள் பேரளவில் அரங்கசீப் கைப்பட்டிருந்தன. இந்நிலையில் மராட்டியர் தெற்கே புதுத்தளம் கண்டு மேலும் வளர்வதை அவன் தடுக்க விரும்பினான். அவன் தன் கருவூலப் பேரரமைச்சனான (வஜீர்) அசத்கானின் புதல்வன் ஜுல் பிகாகானைப் பெரும் படையுடனும் தளபதிராவ் என்ற படைத் தலைவனுடனும் 1690-ல் தெற்கே அனுப்பினான். ஒளரங்கசீப்பின் புதல்வனான காம்பக்ஷும் இப்படை யெடுப்பில் கலந்து கொண்டான். செஞ்சி முற்றுகை தொடங்கிற்று. 1692-ல் இப்பேரிடரைச் சமாளிப்பதற்காக சாந்தாஜி கோர்ப் படே, தானாஜியாதவ் ஆகியஇருமராட்டியப் படைத் தலைவர்கள் 80,000 குதிரைப் படைகளுடன் செஞ்சிக்கு வந்து அதன் காவலை வலுப்படுத்தினர். கோட்டையைப் பாதுகாப்பவர்களுக்குள்ளேயும் தாக்குப வர்க்குள்ளேயும் ஒற்றுமையில்லாமலே இருந்ததால், இந்த முற்றுகை பெரிதும் வெற்றாரவாரத்துடனேயே ஆண்டுக் கணக்காகக்கழிந்தது. உண்மையில் தாக்குதல் தலைவனான ஜுல்பிகர்கான் தன் பதவியையும் பெருமையையும் நீட்டிப் பதற்காக வேண்டு மென்றே முற்றுகையை நீட்டிக் கொண்டு போனதாக அறிகிறோம். இளவரசன் காம்பக்ஷும் இன்னொரு திசையில் இராஜாராமுடன் தொடர்பு கொண்டு மராட்டியர் ஆதரவால் தென் திசையில் தனியரசு நாட்டும் எண்ணத்துடன் ஊடாடினான். அரசங்கசீப் இறந்து விட்டதாகத் தவறான செய்தி பரப்பி ஜுல்பிகர் இந்த எண்ணத்தை வளர்த்தான். அதே சமயம் பேரரசர் மனத்தை அவன் செய்திகளைப் பெருக்கிக் கூறிக் கலைத்து, தக்க சமயம் பார்த்து அவனைச் சிறைப்படுத்தினான். தளபதி ராவ் ஜுல்பிகரைத் தட்டிக் கொடுத்துத் தானே புகழுச்சியடையத் திட்டமிட்டு வந்தான். கோட்டைக்குள்ளும் சாந்தாஜி, தானோஜி ஆகிய வரிடையே யார் படைத்தலைவனாவது என்பது பற்றிப் போட்டி நீடித்தது. இறுதியில் தானோஜி மராட்டியத் தாயகத்துக்கே மீண்டான். 1798-க்குள் அரங்கசீப் பொறுமையிழந்தான். செஞ்சியைத் தாமதமின்றிப் பிடிக்கும்படி அவசரக் கட்டளை பிறப்பித்தான். பணக்குவை உதவியும் புதுப்படைகளும் தாவூத்கான் பன்னியின் தலைமையில் அனுப்பப்பட்டன. எதிரிகளுடன் உறவாயிருந்து பெரும் பணம் பெற்று வந்த ஜுல்பிகர்கான் இந்த மாறுதலை ராஜாராமுக்கறிவித்து அவனைத் தப்பியோடும்படி செய்தான். ராஜாராம் நேரே வேலூர் சென்று இறுதியில் பூனாவுக்கே ஓடித் தாயகத்தில் தஞ்சம் புகுந்தான். செஞ்சிக் கோட்டை வீழ்ச்சியுற்றது. மொகலாயர் புகுந்த வாயில் வெற்றி வாயில் (பதஃகு தர்வாஜா) என்று பெயர் சூட்டப் பட்டது. பெண்டிர் வாழ்வும் மானமும் கோரிப் பாதுகாப்புடன் வெளியேறினர், ஆனால், ராஜாராமின் மனைவி ஒருத்தி எதிரிகளை நம்ப மனமின்றிப் பாறைமீதிருந்து குதித்து மாண்டாள். செஞ்சிக் கோட்டை காவலனாகக் காசர்க்கானும் செஞ்சிப் படைத்தலைவனாக கஜனபர் அலிகானும் அமர்வு பெற்றனர். தாவூத்தான் பன்னியே பெருஞ் சோழ மண்டலத்தின் (கர்நாடகத் தின்) படைத் தலைவனாக நியமனம் பெற்றான். ஜுல் பிகர்கான் தன் பட்டப் பெயரான நஸ்ரத்ஜங் என்பதனடிப்படையாக செஞ்சிக் கோட்டைக்கு நஸ்ரத்கட் என்று புதுப் பெயரிட்டான். கஸ்னபர் அலிகான் செஞ்சியை இரண்டு ஆண்டுகளே ஆண் டான். அதற்குள் ஒளரங்கசீப் தன்னிடம் இருந்த புந்தேலா வீரப் படைத்தலைவனான ராஜா சரூப் சிங்குங்கு (1700 - 1714) அக் கோட்டையை உரிமையாக்கினான். தமிழகப் புகழ்பெற்ற ராஜா தேசிங்கின் தந்தை இவனே. தேசூர்ப் போர், லக்கி ரெட்டிப்பள்ளிப் போர், ஆரணிப் போர் ஆகியவை செஞ்சி முற்றுகைப் போராட்டத்தின் பகுதி களேயாகும். தேசூர்ப் போர்: 1693 செஞ்சி முற்றுகையின் போது முகலாயரின் இன்னல்கள் பல, அவற்றுள் உணவுப் பொருள் முடையே தலையானது. முகலாயப் படைத் தலைவன் ஜுல் பிகர்கான் வந்தவாசிக்கருகே சில வணிகரிடமிருந்து உணவுத் தானியங்களைக் கொள்ளை யிட்டு அவற்றைத் தன் பாசறைக்குக் கொண்டுவர முயன்றான். ஆனால், அதற்குள் சாந்தாஜியின் மராத்திப் படைவீரர் அவர்களை மறித்தனர். தேசூருக்கருகே நடந்த கடும் போராட்டத்தில் முகலாயர் பெருத்த தோல்வியடைந்தனர். தளபதிராவும் அவனிடமிருந்த புந்தேல வீரரும் அச்சமயம் வந்து முகலாயப் படைகளுக்கு வீரப்பாதுகாப் பளித்திராவிட்டால், அவர்கள் மீந்த ஓரளவு தானியங்களுடன் கூடத் தேசூரை அடைந்திருக்க முடியாது. லக்கி ரெட்டிப்பள்ளிப் போர்: 1693 ஒளரங்கசீப்பினிடம் பெருமதிப்புப் பெற்றிருந்த தமிழகத்துத் தலைவருள் ஒருவன் ராஜா பங்காரு யாசம் நாயுடுபகதூர் என்ப வன். அவன் சாத்தூர் மாவட்டத்திலுள்ள மன்னாரின் தலைவன். அதனையடுத்துள்ள பல வட்டங்கள் அவன் ஆட்சியில் இருந்தன. செஞ்சிப் படையெடுப்பில் ஜுல்பிகர்கான் போதிய அளவு முன் னேறாததனால் மனக்கசப் படைந்த பேரரசன் இப்பெரும் வீரனையே அவனுக்குப் பதிலாக அனுப்ப முனைந்திருந்தான் என்று அறி கிறோம். இதனால் அவன் மீது பொறாமையும் புழுக்கமும் அடைந்த ஜுல்பிகர்கான் கலைமகள் திருநாளன்று அவன் படைக் கலமில்லாத சமயம் பார்த்து அவனை விருந்துக்கு அழைத்துச் சூழ்ச்சியால் கொன்றான். இது நடைபெற்றது 1694-ஆம் ஆண்டிலேயே ஆகும். இதற்கு முந்திய ஆண்டிலேயே யாசம் நாயுடு லக்கிரெட்டிப் பள்ளிப் போரில் பேரரசுக்குப் பெரும் புகழ் வெற்றி தேடித் தந்திருந்தான். இப்போரில் தோற்றவன் கோல கொண்டா அரசன் கீழிருந்த ஒரு தலைவன். அவ்வரசனிடமிருந்து வீரக் கோமான் (ராஜாபகதூர்), ஆயிரவேள் (ஷாஹஜாரி மன்சப்), கோஷ், பஞ்சராசிப் ஆகிய தனியுரிமைகள் பலவற்றையும் பெற்றிருந்தான். ஒளரங்கசீப்புக்கு அவன் மீது பெரும் புகழ் ஏற்படுவதற்கு இது காரணமாக இருந்தது. ஆரணிப் போர்: 1696 செஞ்சி முற்றுகையின்போது மராத்தியப் படைத் தலைவன் சாந்தாஜி புதுப்படையுதவியுடன் செஞ்சியை நோக்கி வந்து கொண்டிருந்தான். அச்சமயம் பேரரசனிட மிருந்து ஜுல்பிகர் கானுக்குக் கடப்பையிலிருந்து படைச் செலவுக்காகப் பெரும் பொருட்குவை அனுப்பப்பட்டிருந்தது. ஆரணியில் நடைபெற்ற போரில் சாந்தாஜி ஜுல்பிகரை முறியடித்து அக்குவையைப் பறித்துக் கொண்டான். கடப்பை வழியாக ஓடிய ஜுல்பிகர் படைகளையும் அவன் விடாது துரத்தினான். ஆனால், அச்சமயம் பேரரசன் மைந்தனான பிடேர்பக்த் படையுடன் அவ்வழி வந்த தனால், ஜுல்பிகர் படைகள் பேரிடரிலிருந்து தப்பின. மதுரை வீர அரசி மங்கம்மாள்: 1689 - 1706 மூன்றாம் முத்துவீரப்பன் இறக்கும்போது அவன் மனைவி முத்தம்மாள் கருவுற்றிருந்தாள். இதனால் அவள் விரும்பியபடி உடன்கட்டை ஏறாமல் உறவினர் தடுத்தனர். ஆயினும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த உடனே அவள் தன் விருப்பத்தை வலியுறுத்தி உடன்கட்டை ஏறிவிட்டாள். இக்குழந்தையே பின் னாளைய விஜயரங்க சொக்கநாதன், அவனுக்கு வயது வரும்வரை அவன் பாட்டியும் மூன்றாம் முத்துவீரப்ப நாயகன் தாயுமான மங்கம்மாளே ஆட்சிப் பொறுப்பை (1689 - 1706) மேற் கொண்டாள். தமிழ்ப் புராணமரபின் தொடக்கத்திலே ஒரு தடாதகைப் பிராட்டியாரும், பாரத இதிகாச மரபின் முகிலிடையே ஓர் அல்லி அரசியும், பாண்டிய நாட்டில் பெண்ணுரிமையாட்சி நடத்திய தாகக் கேள்விப்படுகிறோம். வடதிசையிலும் மேல்திசைக் கிரேக்கருகிலும் ஷேக்ஸ்பியர் காலம்வரை நிலவிய மேலை நாட்டுப்புராண மரபுகளிடையேயும்; பாண்டி நாடு பெண்ணாட்சி நாடு, கந்தருவ விஞ்சையர் நாடு என்றே கருதப்பட்டிருந்தது. ஆயினும் வரலாற் றொளிக்குள்ளே தமிழகத்தில் மதுரையில் அப்புகழ் மரபுக்குரியதாக நாம் காணும் பெண்ணுரிமை ஆட்சி மங்கம்மாள் ஆட்சியேயாகும். மதுரை நாயக மரபில் திருமலை நாயகனுக்கு அடுத்த புகழாட்சி மங்கம்மாள் ஆட்சியேயாகும். தமிழக மக்கள் உள்ளத் தில் திருமலை நாயகன் வீறாட்சியினும் மங்கம்மாள் செலுத்தும் ஆர்வ அன்பாட்சியே பெரிது என்னலாம். முகலாயப் பேரரசன் அரங்கசீப் சிவாஜியின் வேலூர் முடிசூட்டு விழாவைக் கேலி செய்யத் தென்னாடெங்கும் தன் பாதுகைகளில் ஒன்றை அனுப்பி அரசர் சிற்றரசர் வணக்கத்தை அதற்கு உரிமைப் படுத்தினான் என்று அந்நாளைய கதை மரபு கூறுகிறது. மூன்றாம் மூத்துவீரப்பன் அப்பாதுகையை தன் கால்களில் ஒன்றில் மாட்டிக் கொண்டு ‘பேரரசர் எனக்கு ஏன் இன்னொன்று அனுப்பவில்லை’ என்று கேட்டதாக மதுரை வரலாற்று மரபுரை ஒன்று கூறுகின்றது. ஆனால், மங்கம்மாள் காலத்தில் இந்த நகை மரபுக்கு இடமில்லா திருந்தது. செஞ்சி முற்றுகையில் ஈடுபட்டிருந்த ஜுல்பிகர்கான் தஞ்சையிலும் திருச்சிராப்பள்ளியிலும் புகுந்து திறை தெண்டி வந்தான். புயலாக அடித்த இந்த வடதிசை வாடையைத் தன் அரசியல் பயிருக்கிசையத் திருப்ப மங்கம்மாள் முயன்றாள். 1702ல் புதிய பெரும் படைத்தலைவன் தாவூத்தானுக்கும் அவன் துணைவருக்கும் பரிசுகள் அனுப்பியதுடன் தன் எதிரியான தஞ்சை அரசனைத் தண்டித்து உதவ வேண்டுமென்றும் நயமாகவேண்டிக் கொண்டாள். தாவூத்கானும் நயமாகவே நேரில் வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்து, சில படை வீரரை மட்டும் உதவிக்கு அனுப்பினான். தஞ்சைப் போராட்டம் முகலாயர் படையுதவியை மங்கம்மாள் பயன்படுத்தித் தஞ்சையை எதிர்த்தாலும் அதில் அவளுக்கு வெற்றி கிட்ட வில்லை. தஞ்சை யரசன் ஷாஜி ஓயாது மதுரை அரசின் எல்லையில் கொள்ளையடித்துக் கொண்டேயிருந்தான். இறுதியில் மங்கம்மாள் 1700-ல் தஞ்சைமீது போர் தொடுத்து, படைத் தலைவன் தளவாய் நரசப்பையனைப் படையுடன் அனுப்பினாள். எதிரி கொள்ளையிட்டுத் தாக்காதபடி கொள்ளிடக் கரையை அரணாக்கிக் கொண்டு நரசப்பையன் சிலநாள் தற்காப்புப் போர் ஆற்றினான். ஆனால், தஞ்சை மராத்தியக் குதிரை வீரரின் போர் வேகத்தை இப்பாதுகாப்பு முறை சமாளிக்க முடியவில்லை. ஆகவே தாக்குதல் முறை தொடங்கி நரசப்பையன் தானும் திறம்பட எல்லை கடந்து சென்று பல தடவை கொள்ளையடித் தான். தஞ்சைப் படைகள் இதனால் கலவர முற்று நகரின் காவலை மறந்து ஆற்றைக் கடக்க முயன்றன. ஆழமான இடத்தில் கடக்க நேரிட்டதால் வெள்ளத்திலேயே பலர் அடித்துக் கொண்டு போகப் பட்டனர். மதுரைப் படைகளும் அவை ஆறு கடக்குமுன் தாக்கிப் பேரழிவு செய்தன. தஞ்சை அரசனும் மக்களும் இத்தோல்விக்கு அமைச்சன் பாலோஜி என்ற லாகோஜிப் பண்டிதனையே பழிவாங்க எண்ணினர். ஆனால், அவன் வெற்றிகரமான நேச ஒப்பந்தமே செய்துவிடுவதாகக் கூறி வணிகரிடமிருந்து பெரும் பொருள் கடனாகப் பெற்று மதுரைப் படைகளை அமைதிப்படுத்தினான். காந்தமன் மரபு நாட்டில் ஏற்கனவே இருந்துவந்த பஞ்சநிலை மேலும் வளரக் கூடும் என்ற கிலி இச்சமயம் தமிழகம் எங்கும் ஏற்பட்டது. இதற்குக் காரணம் மழைவந்த பின்னும் காவிரி வரண்டு வந்த தேயாகும். ஆனால், இவ்வரட்சி இயல்பானதல்ல. மைசூர்ச் சிக்கதேவராயன் கட்டிவரும் அணைக்கட்டே வரட்சியை உண்டு பண்ணிற்று என்பதறிந்ததே, புதிதாக ஒன்று பட்ட மதுரை, தஞ்சைப் படைகள் மைசூர்ப் மீது படையெடுக்க முனைந்தன. ஆனால், புறப்படுமுன்பே வரட்சித் தொல்லை வெள்ளத் தொல்லையாக மாறிற்று. ஏனெனில் சிக்கதேவராயன் கட்டிய அணை வெள்ளப் பெருக்குத் தாங்காமல் இடிவுற்றது. மைசூர்ப் போராட்டம் சிக்கதேவராயன் 1696-க்குள் சேலம் கோயம்புத்தூர்ப் பகுதி களை வென்று அவ்விடங்களிலுள்ள தலைவர்களை அடக்கித் தன் பெயரைக் காவிரிவரை கொண்டு வந்து விட்டான். அத்துடன் அமையாமல் திருச்சிராப்பள்ளியையும் வெல்லும்படி படைத் தலைவன் தளவாய் குமாரையாவை அனுப்பினான். ஆனால், மைசூரை இச்சமயம் மராட்டியர் தாக்கியதால் அவன் மீள வேண்டிய தாயிற்று. சேதுபதி போராட்டம் கிழவன் சேதுபதி 1698 -ல் மதுரையையே முற்றுகையிட முனைந்தான். தளவாய் நரசப்பையன் அவனைத் துரத்தியடித் தாலும், அதன் பின் நடைபெற்ற தஞ்சைப் போரில் அவன் எதிரியக்கம் உதவியிருந்தான். 1700 -க்குப் பின் தஞ்சையும் மதுரையும் நேச அரசுகளாயிருந்தபடியால் 1702-ல் தஞ்சைப் படைகளின் உதவியுடனேயே தளவாய் நரசப்பையன் சேது நாட்டின் மீது படையெடுத்தான். ஆனால், இதில் தளவாய் நரசப்பையனே உயிர் துறக்க நேரிட்டது. கிழவன் சேதுபதி மதுரைப்படைகளை வெளியே துரத்தித் தன் ஆட்சியைத் தனியரசாட்சி யாக்கினான். அத்துடன் 1709-ல் தன் மீது மீண்டும் படையெடுத்து வந்த தஞ்சையரசன் ஏக் கோஜியை வென்று அவனிடமிருந்து அறந்தாங்கியைக் கைக் கொண்டு அவனைப் பணிய வைத்தான். திருவாங்கூர்ப் படையெடுப்பு திருவாங்கூர் அரசர்கள் திருமலை நாயகன் காலமுதல் ஆண்டு தோறும் ஒழுங்காகத் திறை செலுத்தி வந்தனர். மூன்றாம் முத்து வீரப்பன் நாட்களில் அவன் திருநெல்வேலி சென்றிருந்த சமயம், திருவாங்கூர் அரசன் அவனுக்கு விலையேறிய பரிசுகள் அளித்தான். ஆனால், மங்கம்மாள் ஆட்சித் தொடக்கத்திலிருந்து ஆண்டுதோறும் மதுரைப் படைகள் சென்றே திறை பிரிக்க வேண்டி வந்தது. 1696-ம் ஆண்டில் மன்னன் இரவிவர்மன் துணிகரச் சூழ்ச்சியால் மதுரைப் படைகளுக்குப் பேரழிவு உண்டுபண்ணினான். திருவாங்கூர் அரசன் அந்நாளில் எட்டுவீட்டுப் பிள்ளைமார் என்ற அமைச்சர் கையில் பாவையாய் இருந்தான். ஒரே கோயில் இரு பறவைகளை வீழ்த்த எண்ணிய அவன், அவ்வமைச்சர்களை அடக்கினால் திறைமட்டுமின்றி நாட்டின் பாதியே தருவதாக மதுரைப் படைத் தலைவனுக்கு ஆசை காட்டினான். ஆனால், அமைச்சர்கள் அழிவுறும் சமயத்தில் படை திரட்டித் திடுமென மதுரைப் படைகளையும் தாக்கித் துரத்தினான். இத்துணிகர அவமதிப்புக்காக அரசி மங்கம்மாள் திருவாங் கூர் அரசனைத்தண்டிக்க எண்ணினாள். தளவாய் நரசப்பையன் திருவாங்கூர் அரசனைப் பல இடங்களில் முறியடித்த பின்னர் திறைப் பாக்கி முழுவதும் மீட்டதுடன் விலையுயர்ந்த பரிசுப் பொருள்களும் பெற்றுத் திரும்பினான். கதலி மலைப்போர்: ராஜாதேசிங்கின் வீர காதை : 1714 தமிழக நாட்டுப் பாடல்களில் பாஞ்சாலங் குறிச்சி வீரகாதை யுடன் இணையாகக் கூறக்கூடிய புகழ்க்காதை ராஜாதேசிங்கின் வீறாப்புமிக்கப் போராட்டமே; வரலாற்று நோக்கிலும் அதன் எழுச்சி குறைந்தென்று கூறமுடியாது. ஏனென்றால் அது நடை பெற்ற காலத்திலேயே அது எதிரிகள் கூடாரத்தையும் ஆட்கொண்டு வீர வணக்க மரபை ஏற்படுத்திவிட்டதென்று உணருகிறோம். தேசிங்கு என்ற தமிழ் மக்கள் மரபு வழக்குக்கு மூலமான பெயர் தேஜ்சில் என்பதாகும். அவன் ஓராண்டுக்குள் நிகழ்த்திய வீரகாவிய நிகழ்ச்சி பற்றி நமக்கு இரண்டு வரன் முறை மரபுகள் கிடைத்துள்ளன. ஒன்று தேசிங்கை தெய்வீக வீரனாக்கி தமிழ் நாட்டுப் பாடல், மற்றொன்று பிரிட்டிஷ் ஆட்சித் தொடக்க காலத்தில் நாராயணப் பிள்ளை என்னும் வரலாற்றாசிரியன் இயற்றிய கர்நாடக ராசாக்கள் சரித்திரம் தருவது. பிந்தியது வீர வணக்க உணர்ச்சியற்ற தேசிங்கின்வீரச் செயலையே பாராட்டாத வரலாறானாலும் வீர வெற்றியை எடுத்துக்காட்ட அதுவே போதியது. இரு மரபுகளுக்குமிடையே சிறு வேறுபாடுகள் இல்லாமல் இல்லை. தமிழ்ப் பாடல் தேசிங்கின் தந்தை தேரணிசிங்கு என்றும், உடன் பிறந்தான் தரணிசிங்கு என்றும் கூறுகிறது. அவன் செஞ்சியிலேயே பிறந்து தந்தை இறக்கும் போதும் செஞ்சியிலேயே இருந்ததாகக் கூறுகிறது. ஆனால், தமிழ் வரலாற்றேடும் நாமறிந்த வரை பிற வரலாற்றாதாரங்களும் அவன் தந்தை 1700 முதல் 1714 வரை செஞ்சி யாண்ட சரூப்சிங்கு என்றும், தந்தை இறந்தபோதும் அவன் தன் தாயகமாகிய புண்டேல் கண்டில் இருந்தானென்றுமே கூறுகின்றன. தவிர நாட்டுப் பாடல் அவன் தந்தை தில்லிப் பேரரசனால் திறை கொடாததற்காகச் சிறைப் பட்டிருந்தா னென்றும், பேரரசனிடமிருந்த அடக்க முடியாத குதிரையை அடக்கித் தந்தையைதேசிங்கு சிறைமீட்டு வந்தானென்றும் கூறுகிறது. தமிழ் வரலாற்றோடு தேசிங்கு செஞ்சிக்கு வரும் வழியில் பேடனூர் (இக்கேரி) அரசனின் பகைவரை வென்று, அவனிட மிருந்த அடங்காக் குதிரையை அடக்கிப் பரிசாகக் கொண்டு செஞ்சி வந்தானென்றே கூறுகிறது. மற்றச் செய்திகளில், சிறப்பாகப் போராட்டச் செய்திகளில் வேறுபாடு மிகுதியில்லை. நாட்டுப் பாடலைவிட வரலாற்றேடே இவ்வகையில் விளக்கமிக்கது என்று கருதலாம். பேனூர் அரசன் அளித்த குதிரை 12,000 வெள்ளிவிலை பெறுமானம் உடையது. இது தவிர அவ்வரசன் தேசிங்குக்கு ஒரு இலட்சம் வெள்ளியும் நன்கொடையாக அளித்தான். இவற்றுடன் அவன் செஞ்சிக்கோட்டை புகுந்தான். இச்சமயம் கருநாடகத் தளபதியா யிருந்தவன் சாதத் உல்லா கான். அவன் கீழ்த் தாவூத்கான் துணைத் தலைவனாய் இருந்தவன் பின்னாளில் தமிழகப் பெரும்பகுதிக்கு உரிமையாளனான கரு நாடக நவாப் மரபின் முதல்வன் அவன். தேசிங்கின் வீறாப்பான எதிர்ப்புக்கு ஆளாக நேர்ந்தவர்கள் இவர்களே. நாராயணசாமிப் பிள்ளையின் வண்ணந் தோயா வரலாற்று விரிவுரை நமக்குத் தேசிங்கின் வாழ்வில் தமிழ் மக்கள் கண்ட வீர வணக்கப் பண்பின் மறை திறவையே காட்டுகிறது. தேசிங்கு இயல்பான வீரமரபிலும் மானமரபிலும் வந்தவன் - ஆனால், உலகியலனுபவமற்ற இளைஞன். பேரரசன் ஆட்சிமுறை மரபுப்படி இன்றுபோல் அன்றும் சில வினை முறைகள், நடைமுறைகள் சமுதாயத்தில் இன்றியமையா தவையாகக் கருதப்பட்டன. பேரரசனிடம் பணிவுகாட்டி அவன் பேராட்களான தாபூத்கான், சாதத் உல்லாகான் ஆகியவர்களின் ஆணையும் இணக்கமும் பெற்றே தேசிங்கு பதவி ஏற்றிருக்க வேண்டும். ஆனால், பயமறியாக் காளையான புந்தேல இளைஞன் தேசிங்கு நேரே கோட்டைக்குச் சென்றான். கோட்டைக் காப்பாளரும் வீரரும் அவனை வணங் கினர். அவன் பதவி மேற்கொண்டான். கோட்டையிலேயே உள்ள மொகலாய வீரர் கண்டு வியந்தனர் - வணங்கவில்லை. வாய் பேசவுமில்லை. புந்தேல வீரன் துணிகரத் துடுக்குத்தனம் ஏற்கனவே பலருக் கும் தெரிந்திருந்ததென்று தோற்றுகிறது. ஏனெனில் பேரரசனிடம் இருந்து இச்சமயம் தேசிங்குக்கு ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டி ருந்தது. பதினான்கு ஆண்டுகள் ஆண்ட அவன் தந்தை அத்தனை ஆண்டுகளும் திறை அனுப்பாமலே திறமையாக நாட் கடத்தி வந்திருந்தான். அதைக் கொடுக்கும் படி தேசிங்குக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. தாவூத்கான் இதை நேரில் அனுப்ப மனமில்லாமல் சாதத் உல்லாகானிடம் கொடுத்தான். சாதத் உல்லாகான் வரிமா முதல்வன் (ஷெரிஸ்டாதார்) ஆனலாலா தோடர்மாலிடம் அதைக் கொடுத்து, கூடிய மட்டும் நய இணக்க மாகச் செய்தியை எடுத்துரைத்துக் காரிய மாற்றும்படி கூறினான். தோடர்மால் வருமுன்பே அவன் செயலாளன் (வாக்னிஸ்) ஆன பய்யா ராமகிருஷ்ணா தேசிங்கினிடம் நயமிக்க நல்லுரைகள் பல கூறினான். ‘இது வெறும் நடைமுறை வினைதான். தோடர் மால் மிக நல்லவர். அவரிடம் இணங்கமாகப் பேசினால், அவர் உங்கள் பதவியை உறுதிசெய்ய ஆவன செய்வார்’ என்று கூறினான். இந்நல்லுரைகளின் பயனாகத் தோடர் மாலைச் சென்று பார்க்க அவன் எப்படியோ இணங்கினான். ஆனால், ‘தந்தை பெற்ற பதவி மகன் உரிமையே’ என்ற உறுதியில் நின்ற தேசிங்கு திறை என்ற சொல்லைக் கேட்டதே தோடர்மால் மீது பேரரசன் ஆணைப் பத்திரத்தை வீசி யெறிந்துவிட்டுச் சீற்றத்துடன் சென்றான். மறுநாள் வெளியே அவரைச் சந்தித்தபோது கூட உயர் பணியாளரென்ற முறையில் வணக்கம் கூறாது சம நிலையிலேயே பேசினான். தோடர்மால் இவற்றை மேலிடத்துக்கு விளக்கி அறிவித்தான். சாதத் உல்லாகான் செஞ்சிக்குத் தன் படையுடன் புறப் பட்டான். திமிரிப் பெருவெளியில் பல தலைவர்கள் படைகள் வந்து கலந்தன. 5000 குதிரைகள், 10,000 காலாள் வீரர்கள் படை யெடுப்பை எதிர் நோக்கி நின்றனர். வெங்கடகிரிக் கோமான் பங்காரு யாசம நாயுடுவின் வீரர்களுடன் இணைந்து படை 30,000 ஆகப் பெருகி ஆரணியை அடைந்தது. ஆரணிக் கோட்டைத் தலைவன் வெங்கடராவும், சேற்றுப் பட்டுத் தலைவன் சலாபத் கானும் இவ்விடத்தில் சாதத் உல்லாவின் படையுடன் சேற்றுப்படை அடைந்தனர். இங்கே தோடர்மால் அவர்களை வரவேற்றான். படைகள் கதலிமலை என்ற இடத்தினருகே வந்ததும் கூடார மிட்டுத் தங்கின. இது செஞ்சியிலிருந்து 4 கல் தொலைவிலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். படைகள் பேரரசன் படைகளாதலால், கோட்டைக் காவல் படைவீரர்கள் எவரும் இப்படையை எதிர்க்கவில்லை. மதிப்புக் காட்டி ஒதுங்கியே நின்றனர். படைகளின் வரவைக் கேள்வியுற்ற ராஜா தேசிங்கு வெளிப் படையாக எந்த உணர்ச்சிகளையும் காட்டவில்லை. ஆனால், அவன் உள்ளம் உள்ளூர்ச் சீறி எழுந்தது. எல்லா அரசரையும்போல் அவன் போருக்கு வரும்படி எல்லாரையும் உத்தரவிடவில்லை. ‘சாகத் துணிந்தவர்கள் என்னுடன் வரலாம். வாழ விரும்புகிறவர்கள் வரவேண்டாம்’ என்று கூறிக் கொண்டு புறப்பட்டான். அவன் நண்பர்கள் இருவர் ஐம்பது குதிரை வீரர்களுடனே அவனைப் பின் தொடர்ந்தனர். வழுதாவூர்க் கோட்டைத் தலைவன் அவன் தந்தையின் உயிர் நண்பன். தன்பேரெழுச்சி பற்றித் தேசிங்கு அவனுக்கு செய்தி சொல்லி யனுப்பியிருந்தான். அவன் தன் புதல்வனாகிய மகாபத்கானை ஒரு சில குதிரை வீரருடன் அனுப் பினான். கோட்டைக்கு வெளியே புறப்படும் சமயம் தேசிங்குடன் இந்த மூன்று உயிர் நண்பர்களும் 200 குதிரை வீரரும் மட்டுமே இருந்தனர். போகும்போது அவன் தன் உயிர்த் துணைவிடம் ஒரு வாச கத்துக்குமேல் பேசவில்லை. “போருக்குப் போகின்றேன். நான் திரும்பி வராமல் போய்விட்டால், பகைவரிடமிருந்து உன் மதிப்பைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமென்று உனக்குக் கூற வேண்டியதில்லை. உன் அறிவே அதைத் தெரிவிக்கும்” என்று கூறி அகன்றான். நவாப் சாதத்கானின் படை வீரர்கள் பலவிடத்தும் குழுமி நின்றனர். தேசிங்கு அவர்களை கவனிக்க வேயில்லை. நேராகக் களம் நோக்கிச் சென்றான். வராக நதியின் வெள்ளம் அச்சமயம் கரை பொருமி ஓடிற்று. அந்த ஆறுமிகுதி ஆழமற்றது. ஆனால், வேக மிக்கது. வெள்ளம் வருவது அருமை, வந்தாலும் ஓரிருமணி நேரத்திற்கு மேல் வடியா திருப்பதில்லை. எனவே சிறிது காத்திருந்து கடப்பதே எவரும் இயல்பாக எளிதில் பின் பற்றத்தக்க மரபு. ஆனால், செயல் வீரன் தேசிங்கு சிந்தனை செய்யும் இயல்பினன் அல்லன். அவன் பொங்கி ஓடும் வெள்ளத்தின் ஊடாகத் தன் குதிரையைச் செலுத்தினான். பின் வந்த குதிரை வீரரில் பலர் பின் தங்கிக் கரையில் நின்றுனர். ஆனால், பாதிக்கு மேற்பட்ட வீரர் பின் தொடர்ந்தனர். மகாபத்கானும் நண்பரும் அவன் நிழல்களோ என்னும்படி பின் தொடர்ந்தனர். ஆறு கடந்த பின்னும் அவர்களுடன் நூறு குதிரை வீரர் இருந்தனர். சாதத் உல்லாகான் உள்ளூர இளைஞன் தேசிங்கின் வீறாப்பான போக்கை உணர்ந்தவன். வீறாப்பைத் தண்டித்து அடக்க விரும்பினானே யன்றி வீரத்தை அழிக்க விரும்பவில்லை. ஆகவே அவனை உயிருடன் பிடித்து வரும்படி தாவூத்கானுக்குக் கட்டளையிட்டு ஒரு படையுடன் அவனையனுப்பிருந்தான். இக் கட்டளையே தேசிங்கு வகையில் ஒரு பெருத்த இடையூறாய் அமைந்தது. தேசிங்கு தன் படையளவும் எதிரியின் படையளவும் பாராமல் தாவூத்கான் படைகளை மும்முரமாகத் தாக்கிக் கொண்டே அவனை நோக்கி முன்னேறினான். தாவூத்கான் உத்தரவுப்படி அவன் படைகள் தேசிங்கையும் அவன் படைவீரர்களையும் வளைத்துப் பிடிக்க முயன்றன. ஆனால், தேசிங்கின் வீரரது தாக்குதலால் இரு தரப்பிலும் 50 பேருக்கு மேல் மாண்டனர். அச்சிறு படையில் சிலர் தப்பிப் பிழைக்க இடம் கிடைத்தவழியே சிதறியோடினர். ஆயினும் பெரும்பாலோர் தேசிங்கைச் சூழ்ந்து நின்று போராடினர். மகாபத்கான் தேசிங்கின் வலக்கையாக விளங்கினான். தம்மால் எத்தனை எத்தனை பேரைக் கொன்றொழிக்க முடியுமோ, அத்தனை பேரையும் ஒழித்தவாறு ஒவ்வொருவராகத் தேசிங்கைச் சுற்றிலும் சாய்ந்து விழுந்தனர். எவரும் காயமுற்றவர்களாக, குற்றுயிராளராக விழவில்லை - உயிரற்ற பின்பே விழுந்தனர். நண்பர்களும் வீழ்ந்தனர் - மகாபத் கானும் வீழ்ந்தான் - தேசிங்கு மட்டுமே மீந்தான். அப்போதும் வீரன் போரை நிறுத்தவில்லை - தயங்க வில்லை - வலசாரி இடசாரியாக வீரரைக் கொன்று குவித்த வண்ணமே தாவூத்கான் இருந்த யானையை நோக்கி விரைந்தான். அச்ச மயத்திலும் அவனை எவரும் கொல்ல வேண்டாம் என்றே தாவூத்கான் ஆணையிட்டான். ஆனால், தேசிங்கின் துணிச்சலை அவன் கனவில்கூட எதிர்பார்க்கவில்லை. அவன் குதிரையின் முன் கால்கள் தாவூத்கான் யானையின் விலாமீது தாவின. குதிரை மீதிருந்த வீரன் அந்நிலையிலேயே தன் ஈட்டியைத் தாவூத்கான் உடல் மீது செலுத்தினான். அவ்வீட்டி தாவூத்கானின் உடலை ஊடுருவி உடலின் இருபுறமும் சமநீளமாக நின்றது! ஈட்டியேற்ற தாவூத்கானின் முகத்தைப் போலவே, வீரர் அனைவர் முகங்களும் திகிலடைந்து செயலற்றிருந்தன. ஈட்டியைப் படைத்தலைவன் உடலுடனே போராடவிட்டு வந்தபடியே தேசிங்கு குதிரையை ஊக்கிக் கோட்டைக்குள் சென்றான். ஆனால், தோழருடனும், வீரருடனும் வந்த அவன் சீற்றமே தோழராகவும், அஞ்சா உறுதியே படை வீரராகவும் சென்றான். தாவூத்கான் படைகளின் சீர் குலைவும் தாவூத்கான் மறைவும் செவியேற்ற சாதத் உல்லாகான் தன் முழுப் படைகளுடனும் கோட்டை நோக்கி வந்தான். ஆனால், தேசிங்கு ஈட்டி மாற்றவே கோட்டைக்குள் சென்றிருந்தான். முன் போராடிய இடத் தருகிலேயே அவன் சாதத் உல்லாகானின் பெரும் படையைச் சந்தித்தான். தனியொருவனாக முன்போல் சாதத் உல்லாகானின் யானையை நோக்கிப் பாய்ந்தான். இத்தடவை யானை மீதிருந்த வீரர் எச்சரிக்கையா யிருந்தனர். அவர்களில் ஒருவன் தேசிங்கு ஏறிவந்த குதிரையின் முன்கால் இரண்டையும் வெட்டி வீழ்த்தினான். குதிரை வீரன் இப்போது காலாள் வீரன் ஆயினான். படைகள் தொலைவாகவே நின்று அவனை நாற்புறமும் சூழ்ந்தன. ஆனால், வேட்டை நாய்களை எதிர்த்துச் சீறும் புலிபோல அவன் நாற்புறமும் கழன்று, சுழன்று கைக் கெட்டியவர்களையெல்லாம் வீழ்த்தினான். சாதத் உல்லாகான் இப்போதுகூடத் தேசிங்கைக் கொல்லா மலே பிடிக்கும்படி உத்தரவிட்டான். யாசமனின் துணைத் தலை வர்களுள் ஒருவன் கேடயத்தால் தன் உடலைக் காத்தவண்ணம் தேசிங்கைப் பிடிக்குமாறு அணுகினான். ஆனால், தேசிங்கு ஓங்கிய ஈட்டி கேடயத்தையும் அதன் மறைவிலிருந்து தலைவனையும் ஒரே பாய்ச்சலில் ஊடுருவிப் பாய்ந்தது. இதன் பின் எவரும் அருகே நிற்க அஞ்சினர். யாசமன் இச்சமயம் ‘கொல்லுங்கள், விடாதேயுங்கள்’ என்று உத்தரவிட்டான். துப்பாக்கி வேட்டுக்கள் தாம் நாற்புறமிருந்தும் வந்தன. ஒரு குண்டேற்று, உலையாத வீரன் உடல், உயிர் அற்று உணர்விழந்து வீழ்ந்தது. கோட்டை முகலாயப் படைகள் வசமாயிற்று. தேசிங்கின் தந்தை சரூப்சிங்கு ஈட்டி வைத்திருந்த செல்வ குவைகளில், களத்தில் வீழ்ந்த அவன் செல்வன் நீங்கலாக யாவும் சாதத் உல்லாகானால் கைப்பற்றப்பட்டன. ஆனால், சாதத் உல்லாகான் தன் படைத் தலைவன் தாவூத்கானின் மாள்வை எண்ணவில்லை -தன் படைகளின் குலைவை எண்ணவில்லை - மனித உலகம் கண்டிராத தேசிங்கின் வீரப் போராட்டமே அவன் உள்ளத்தில் ஒளி வீசிற்று. தேசிங்கின் பணியாட்கள், வீரர் அனைவரும் முன்போலவே தத்தம் பதவிகளில் இருக்கும்படி உரிமையளித்தான். ஆனால், அவ் வீரனிடம் பணி செய்தவர்கள் பின்னும் பணிசெய்ய விரும்பவில்லை. அவன் வீழ்ந்த இடத்திலேயே ஒரு நகரம் அமைத்து அதில் வாழவே விரும்பினர் - இது அவர்களுக்கு உரிமையாய் அளிக்கப்பட்டது. பெண்டிர் அனைவரும் பாதுகாப்புரிமையுடன் தத்தம் விருப் பப்படி செல்லவோ பணியேற்கவோ, இணக்கமளிக்கப் பட்டனர். தேசிங்கின் மனைவிக்கு வேண்டிய செல்வம், மாளிகை ஆகியவை வாக்களிக்கப்பட்டன. ஆனால், கணவன் இறந்த இடத்தருகே உள்ள செட்டிகுளத்தின் கரையிலேயே அவனுடலுடன் எரி மூழ்குவதையே அவள் பிடிவாதமாக வேண்டினாள். அவள் விருப்பப்படி பலர் அழுத கண்ணீருடனும், வணங்கிய உள்ளத்துடனும் நின்று காண அவள் தன் கணவனுடலுடன் ஒன்றுபட்டு ஆவியானாள். அவள் உடன்கட்டை ஏறிய இடத்தில் ஒரு அரசும், வேம்பும் நடப்பட்டன. ஒரு மலர்ப்பொழில் உண்டு பண்ணப்பட்டது. வீர அரசியின் நினைவாக சாகத் உல்லாகான் தன் தலைநகர் ஆர்க்காட்டின் அருகே ‘இராணிப்பேட்டை’ என்ற ஒரு நகரம் உண்டு பண்ணினான். அரசியின் புகழ் உருவாக இன்னும் அது ஆர்க்காட்டு இராணிப் பேட்டையாக விளங்குகிறது. அரசி எரிபுகுந்த இடத்தில் இன்று பூங்கா காணப்பட வில்லை. ஆனால், மரங்கள் உள்ளன. அதனுடன் ராணி குளிக்குமிடமாக ஒரு கல் துறை இன்றும் மக்களால் ஆர்வத்துடன் பேணப்பட்டு வருகிறது. கதலிமலைப் போர்க் காட்சியின் படமமைந்த சலவைக் கல்லொன்று சென்னைப் பொருட்காட்சி சாலையை அணி செய் கின்றது. அதன் கீழுள்ள பாரசீகமொழிக் கல்வெட்டு சாதத் துல்லாக்கானால் செஞ்சிக் கோட்டை பிடிக்கப்பட்டதென்பதை உணர்த்துகின்றது. புராணக் கதைகள், கதைகள், கட்டுக்கதைகள் எதிலும் தமிழர் காட்டாத ஆர்வத்தைத் தமிழக நாயகர் மரபினரான பாஞ்சாலங் குறிச்சி வீரர் பாடலிலும், தமிழக இராசபுத்திர வீரனான தேசிங் குராசன் வீரப்பாடலிலும் காட்டி வந்துள்ளனர் - தேசீய வீரக் கதைகளும் இயங்குகின்றன. சேதுமரபின் அரசுரிமைக் கலவரம் மங்கம்மாளுக்குப்பின் அவளால் வளர்க்கப்பட்டு வயது வந்த பெயரன் விஜயரங்க சொக்கநாதன் (1706 - 1732) மதுரை நாயகனானான். அவன் கோயில்களில் மட்டுமே கருத்துக் கொண்டு அரச செல்வத்தைச் சீரழித்ததுடன், அரச காரியங்களைக் கவனியாது குலையவிட்டான். அவன் ஆட்சியின் முக்கிய நிகழ்ச்சிகள் சேது நாடு பற்றியவையே. கிழவன் சேதுபதிக்குப்பின் (1694 - 1710) அவன் புதல்வன் விஜயரகு நாதன் ஆட்சி செய்தான். கிழவன் சேதுபதியின் அன்பரிமைப் புதல்வனான பவானிசங்கரன், விஜயரகுநாதன் அரசுரிமையை எதிர்த்தாலும், மக்கள் விஜயரகுநாதனையே விரும்பி ஏற்றனர். அவன் ஆட்சிநாளில் கரையோரப் பகுதியில் கிருஸ்தவ சமயம் பேரளவு பரவிற்று. அவன் உடன் பிறந்தானான வடுகநாத தேவனும் மைத்துனனான திருவள்ளுவ நாதனும் அச்சமயத்தின் பால் கனிவுடையவராயிருந்தனர். ஆனால், 1720 -ல் புதுக்கோட்டை அரசன், தஞ்சாவூர் அரசன் ஆகியோர் உதவி பெற்றுப் பவானி சங்கரன் அறந்தாங்கியைத் தாக்கினான். இப்போரிடையே அந் நாளில் பரவி வந்த ஒரு கொள்ளை நோய்க்கிரையாகி விஜயரகு நாதன் மாண்டாள். விஜயரகுநாதனால் தேர்வு பெற்றுத் தண்டன் என்பவன் தவிசேறினான். ஆனால், பவானி சங்கரனின் உறவு முறையான விஜயரகுநாதன் மனைவியும் மக்களும் அவனை ஆதரிக்கவே, அவன் அரசுரிமையைக் கைப்பற்றினான். தண்டத்தேவன் மதுரை நாயகன் உதவியும் புதுக்கோட்டை அரசன் உதவியும் பெற்றுப் பவானி சங்கரனை மீண்டும் துரத்தினான். பாம்பாற்றுக்கு வடக்கிலுள்ள பகுதி முழுதும் தஞ்சைக் களிப்பதாக உறுதியளித்துப் பவானி சங்கரன் தஞ்சையரசன் உதவி பெற்றான். தஞ்சைத் தளபதி மதுரைப் படைகளை எளிதில் வென்றான். அத்துடன் புதுக்கோட்டை மன்னன் இரு புதல்வர்களைக் கைப்பற்றியது மூலம் அவனைத் தன் பக்கமாக்கினான். தண்டத்தேவனும் அவன் ஆட்களும் கொலை செய்யப்பட்டுப் பவானி சங்கரனே சேதுபதியானான். உறையூர்ப் போர்: 1729 பவானி சங்கரன் சேதுநாட்டின் பல தலைவர்களின் உடைமை பறிமுதல் செய்து அவர்களைப் பகைத்தான். அவர்களில் தண்டத் தேவனின் தாய் மாமனான கட்டயத் தேவனும் மற்றொருவனும் தஞ்சையரசனிடம் சென்றனர். பவானி சங்கரன் வாக்களித்தபடி பாம்பாற்றுக்கு வடக்கேயுள்ள நாட்டைத் தஞ்சைக்கு அளிக்க வில்லை என்பது அவர்கள் அவனுக்கு நினைவூட்டினர். அதை அட்டியின்றி அளிப்பதாக வாக்களித்துத் தஞ்சை அரசன் உதவி பெற்றனர். தஞ்சைப் படைகள் பவானி சங்கரனை உறையூர்ப் போரில் முறியடித்துத் தஞ்சைக்கே சிறைப்படுத்திக் கொண்டு சென்றனர். சிவகெங்கை மரபின் தோற்றம்: 1729 உறையூர்ப் போரின் பின் வாக்களிக்கப்பட்டபடி பாம் பாற்றுக்கு வடக்கேயுள்ள பழைய சேதுபதிகளாண்ட நிலம் தஞ்சைக்களிக்கப்பட்டது. ஆனால், உதவி கோரிய இருவருக்கும் மீந்த பகுதி இரு கூறாக்கப்பட்டது. அப்பகுதியின் ஐந்து சரி கூறுகளில் மூன்றான பாகம் கட்டியத் தேவனுக்கு அளிக்கப்பட்டது. அவன் குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி என்ற அரசுரிமைப் பெயருடன் சேதுபதியானான். மற்றவன் ஐந்தில் இருபகுதி பெற்றுச் சிவகங்கை மரபின் முதல்வனானான். மதுரை அரசின் வீழ்ச்சி: 1732 - 1736 மதுரைநாயகன் விஜயரங்க சொக்கநாதனுக்கு ஆண்மகவு இல்லாததால், அவன் மனைவி மீனாட்சியே ஆட்சிப் பொறுப் பேற்றாள், அவள் அரசியல் பேரவாவுடையவளாகவே இருந் தாலும், சரிந்துவந்த தமிழக அரசியல் சூழலால் பேரவதிக் குட்பட்டாள். திருமலை நாயகன் இளையவன் மரபில்வந்த பங்காரு திருமலைநாயகன் என்பவன் புதல்வன் விஜயகுமாரனை மகன்மையுரிமையில் தேர்ந்து அவன் சார்பில் அவள் ஆளவில்லை. மகன்மைத்தேர்வு பெற்ற விஜயகுமாரன் தந்தையாகிய பங்காரு திருமலையே அமைச்சனான தளவாய் வேங்கடாச்சாரியுடன் சேர்ந்து அவன் ஆட்சியைக் கைப்பற்றக் கிளர்ச்சி செய்தான். அச்சமயம் திறை பெறுவதற்காக ஆர்க்காட்டு நவாபான சாதத் உல்லாக்கான் தன் மகன் சஃவ்தர் அலியையும் மருமகன் சந்தா சாகிபையும், தஞ்சைக்கும், மதுரைக்கும் அனுப்பியிருந்தான். பங்காரு திருமலை அவ்விருவருக்கும் மையுறைப் பொருள் தந்து மீனாட்சிக் கெதிராகத் தூண்டினான். ஆனால், போட விரும்பாத நிலையில் சஃவ்தர்அலி நடுநிலைத் தீர்ப்புச் செய்வதாகப் பாவித்துப் பங்காருவிடமே அரசை ஒப்படைத்தான். இத்தீர்ப்பை நடைமுறைப் படுத்தும்படி தன்மைத்துன்ன சந்தாசாகிபிடம் கூறியிட்டு அவன் அகன்றான். மீனாட்சி ஒரு கோடி வெள்ளி தருவதாக வாக்களித்து சண்டாசாகிப் உதவி கோரினாள். ஆனால், அவன் போக்குக் கண்டு ஐயம்கொண்டு அவள், பங்காரு திருமலையிடம் சமரசமாகிக் சந்தாசாகிபைப் புறக்கணித்து ஒடுக்க முயன்றாள். ஆனால், கரடியைப் பற்றுவது எளிது, அதனின்றும் விடுபடுவது எளிதல்ல வென்பதை அவள் விரைவில் காண நேர்ந்தது. அம்மைய நாயக்கனூர்ப் போர்: 1736 சந்தாகிப் ஆர்க்காட்டுக்குச் சென்று புதுத் திட்டத்துடனும் உதவியுடனும் திரும்பத் திருச்சிராப்பள்ளிக்கு வந்தான். ஆட்சியை அவன் முற்றிலும் தன் கைவசப்படுத்தினான். கோவிந்தையன், இராவணையன் என்ற இருபடைத் தலைவர்களையும் தன் வயப் படுத்தி, அவர்கள் தலைமையில் 80,000 குதிரை வீரர்களையும் காலாட்படைகளையும் அனுப்பித் திண்டுக்கலைப் பிடித்தான். பின் மதுரையையும் கைப்பற்ற எண்ணி அப்படைகள் அந்நகரை நோக்கிப் புறப்பட்டன. பங்காரு திருமலை அவசர அவசரமாகச் சில படைகளைத் திரட்டிக் கொண்டுவந்து சந்தாசாகிப் அனுப்பிய படைகளை எதிர்த் தான். ஒரு சில பாளையக்காரரும் அவனுடன் நின்று போராடினர். ஆனால், அம்மையநாயக்கனூரில் நடந்த இப்போரில் பங்காரு தீவிரமாகக் கடும் போரிட்டாலும் இறுதியில் தோற்றோட நேர்ந்தது. அவன் சிவகங்கையில் அடைக்கலம் புகுந்து, சிவகங்கை அரசன் அளித்த வெள்ளிக் குறிச்சிக் கோட்டையிலே தன் மீந்த நாட்களைக் கழித்தான். சந்தாசாகிப் தன் வாக்குறுதிகளைக் காற்றிலெறிந்து நாட்டைக் கைக்கொண்டு மீனாட்சியைத் திருச்சிராப்பள்ளியில் சிறையிட்டான். பேரவாவும் பெருமித வீரமும் உடைய அவ்வரசி உளமுடைந்து சிறையிலேயே மாண்டாள். மூன்று நூற்றாண்டு களாகப் பாண்டியர் பழம்புகழ் மதுரைக்குப் புதுப்புகழ் தந்த மரபு அவளுடன் முடிவுற்றது. பால்கேத் போர்: 1720 சிவாஜி ஊக்கிய மராத்திய இனமலர்ச்சி பிரிட்டிஷ் ஆட்சித் தொடக்கம்வரை தளர்வுறவில்லை. ஆனால், அவன் கட்டமைத்த தேசிய இன ஒற்றுமை சிதறிற்று. இந்நிலையிலும் அவன் கண்ட ஒரு தேசியக் கனவொளி பின்னோர்களால் எளிதில் மறக்கப்பட வில்லை. தமிழகத்தில் அமைக்கப்படும் பேரரசே தென்னகத்தின் முதல் அரசாயிருக்கும் என்ற சிவாஜியின் ஆர்வத்தைப் பின் னோர்களும் மேற்கொள்ளத் தவறவில்லை. மராட்டியத் தாயகத்திலிருந்து தமிழகம்வரை மராத்திய அரசுகள், சிற்றரசுகள் தொடர்பாகப் பரவிக் கிடந்தன. பெல்காம், கொப்பல், சாந்தூர், பெல்லாரி, சிரா, பங்களூர், கோலார் ஆகியவை இவற்றுட் சில, சாம்பாஜிக்குப் பின் மராட்டிய மரபுக்கு வந்த மகாராஜாஷாஹு இவை கடந்து சிவாஜியின் தமிழ் அரசுக் கனவும் கண்டு வந்தான். ஆனால், அவன் ஆட்சிக்குள்ளே பொருமி வந்த பூசல் பிளவுகள் மராத்திய வாழ்வுக்கே தொல்லை விளை வித்தன. முகலாயப் பேரரசின் தளர்ச்சி அரங்கசீப் ஆட்சியிறுதி ஆண்டான 1707 -லேயே தொடங்கிற்று. தென்னகத்தில், அதன் பயனாக எழுந்த புதிய முஸ்லிம் தனியாட்சி மரபுகளுள் முக்கிய மானது நிஜாம் மரபே. அதன் முதல் அரசன் நிஜாம் உல்முல்க் அசஃவ்ஜா, அவன் மராத்தியர் பிளவுகளைப் பெருக்கிப் பயன் படுத்த எண்ணினான். பேராரைத் தருவதாக வாக்குறுதி கூறி அவன் மராத்தியப்படைத் தலைவன் சிரிபத்ராவைத் தன்வய மாக்கி அவனை ஊக்கினான். இங்ஙனம் பிளவைப் பெருக்கிக் கொண்டே பிளவைச் சாக்குக் கூறிக்கொண்டு மராத்தியர் கொள்ளைப் பாதுகாப்பு வரிகளையும் கொடாது நிறுத்தினான். இந்நிலைக்கு 1726 ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. ஏனெனில் அவ்வாண்டு பால்கேத் போரில் மராத்திய மன்னன் மகாராஜா ஷாஹு; நிஜாமையும், கீரீபத்ராவையும் முறியடித்துப் பெரு வெற்றி கண்டான். இதனால் மராட்டிய அரசின் பிளவு அகன்றது. ஒற்றுமை வளர்ந்தது. போரின் பின் இவ்வாண்டு ஷாஹுவுக்கும் நிஜாம் உல்முல்க் குக்கும் இடையே நிறைவேற்றப்படை முங்கி சிவக்கிராம உடன் படிக்கை மராத்திய மண்டலத்தை மீண்டும் ஷாஹுவின் ஒன்று பட்ட ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்தது. தென்னகத்தின் உயிர் நிலையாகிய தமிழகத்துக்குப் பரவ மராட்டியர் துடித்தது போலவே நிஜாமும் தென்னகத்தின் உயிர் நிகழ்ச்சிகளுடன் இடைவிடாத் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பியிருந்தான். இவ்வாண்டில் அவன் ஒளரங்க பாத்திலிருந்து வடபகுதித் தமிழகத்துக்கு அருகாமையிலுள்ள ஹைதராபாதுக்குத் தன் தலைநகரை மாற்றிக் கொண்டான். தவிர 1721-லேயே முதல் நிஜாமான நிஜாமூல்முல்க் கத்துக்கு வருகை தந்து அதன் பெரும் பகுதியாண்ட முதல் கருநாடக நவாப் சாதத் உல்லாகான் (1708 - 1733) மீது தன் மேலுரிமையையும் தன் செல்வாக்கையும் நாட்டி, அவனிடமிருந்து திறையும், தன் புடைவரு சுற்றத்தினரான ஓர் இலட்சம் பேருக்கும் பங்கிட்டளிக்கப் பரிசாக ஐந்து இலட்சம் பொன்னும் பெற்று மீண்டான். தமிழகத்தின் 84 கோட்டைகள் மதுரை நாயகர் ஆட்சியின் போது தமிழகப் பாளையங்கள் 72-என்று மரபு முறையாக வகுக்கப்பட்டிருந்தது போல, 18-ம் நூற்றாண்டில் சாத்த் உல்லாகான் ஆட்சியின் போது தமிழகக் கோட்டைகள் 84 என்று வரையறுக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஏழு கோட்டைகள் செஞ்சியைச் சார்ந்தவை. அவற்றின் பட்டி வருமாறு தளவாய் கட், கிடங்கல், பெருமுக்கல்; வழுதாவூர், விருத் தாசலம், பாளையங்கோட்டை, இறஞ்சன்குடி, கெம்பகட், போனார், முஸ்தாபகட் அல்லது சங்கராபுரம், வேப்பூர்த்துருக்கம், இராவுத்த நல்லூர், சிதம்பரம், திருவண்ணாமலை, எலையா நாசூர், கர்நாடககட், பென்னாத்தூர், திம்மப்பையதுருக்கம், மல்லிகார்ஜுனகட், ஆரணி, சேற்றுப்பட்டு, செங்கற்பட்டு, கருங்குழி, பூவிருந்தவல்லி, மயிலாப்பூர் (சாந்தோம்), திருப்பாச் சூர், தாமரப் பாக்கம், திமிரி, ஆர்க்காடு, வேலூர்த்துருக்கம், வேலூர்க்கோட்டை, வந்தவாசி, கயிலாசகட, படைவீடு, வண்ணான் துருக்கம், சக்கிலித்துருக்கம், வாஜேந்திரகட், ஆம்பூர்கட், சந்திரகிரி, உதயகிரி, இராணிப்பூர், சத்தியவேடு, செக்கு, தேவகட், சுலுபகட், கிருஷ்ணகிரி முதலியன. தாமல் செருவுப் போர்: 1740 தென்னகத்தின் வடமேற்குத் திசையில் ஆண்ட மராத்திய மன்னன் மகாராஜா ஷாஜூ தன் படைத்தலைவர்களான ரகோஜி பான்ஸ்லே, ஃவதஃசிங் ஆகியவருடன் அவன் தாயகத்தின் தென்திசையில் உள்ள ஜஜீரிக் கோட்டையைத் தாக்கி வென்றான். இதன்பின் அம்மூவரும் படைகளுடன் தென்மைசூர்ப் பகுதி அடுத்துள்ள தாமல் செருவுக் கணவாய் வழியாகத் தமிழகத்துக்குள் புகும்படியும், ஆர்க்காட்டையும், தஞ்சையையும் நோக்கி முன்னேறி அவற்றைக் கைப்பற்றும் படியும் ரகோஜி பான்ஸ்லே அவர்களுக்குக் கட்டளையிட்டான். தமிழகத்தில் முதல் கருநாடக நவாபான சாதத் உல்லாகான் (1708 - 1733) ஆட்சிக்குப் பின் அவன் உடன் பிறந்தான். புதல்வன் அலிதோஸ்த்தான் (1733 - 1740) நவாபாயிருந்தான். தன் தலைநகரை நோக்கி மராத்தியர் படையெடுப்பதறிந்ததும் அவன் அவர்களைத் தமிழகச் சமவெளிக்கே வராமல் தாமல் செருவுக் கணவாயிலேயே தடுத்து நிறுத்த எண்ணினான். இந்நோக்கத்துடன் தன்னிடத்தி லிருந்த சிறு படையுடன் வேக வேகமாகத் திரட்டிய புதுப் படைகளையும் சேர்த்துக் கொண்டு அவன் தாமல் செருவை நோக்கி விரைந்தான். அவன் மகன் சஃவ்தர் அலி அச்சமயம் தஞ்சையிலிருந்தான். அவனையும் விரைந்து தன் படைகளுடன் தாமல் செருவுக்கு வந்து தன்னுடன் சேர்ந்து கொள்ளும்படி அவன் தகவல் அனுப்பினான். சஃவ்தர் அலி வருவதில் மிகவும் காலம் தாழ்த்தான். ஆகவே மராத்தியப் படைகளை அலிதோஸ்த்தான் தானே தனித்து நின்று போராட வேண்டியதாயிற்று. தாமல் செருவுக்கணவாயில் மலை களிடையே மலையடிவாரத்தில் நடைபெற்ற இப்போரில் தோஸ்த் அலிகானும் அவன் அரசுரிமைக்குரிய மூத்த மைந்தனும் வீரமாகப் பொருது மாண்டனர். மராத்திரியர் தங்கு தடையின்றித் தமிழகம் புகுந்து ஆர்க்காட்டை நோக்கி முன்னேறினர். ஆர்க்காட்டையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் கொள்ளை யிட்டுப் பலவகைக் கொடுமைகளுக்கு உட்படுத்தினர். சஃவ்தர் அலி போர் முடிந்த பின்பே தாமல் செருவுக் தளத்துக்கு வந்தான். தந்தையும், தமையனும் இறந்ததால் இனி தனக்கே அரசுரிமை கிடைக்கக்கூடும் என்று அவன் கருதினான். ஆனால், அவன் மைத்துனர்களுள் ஒருவனான சந்தா சாகிபின் போட்டிக்கே அவன் மிகவும் அஞ்சினான். ஆகவே அவனுக்கு முந்திக் கொண்டு விரைந்து மராட்டியரிடம் பணிய முனைந்தான். மராத்தியப் படைத்தலைவன் ரகோஜி பான்ஸ்லே, சஃவ்தக் அலியின் நட்பை இருகையேந்தி ஆர்வத்துடன் வரவேற்றான். இதற்கு மராட்டிய மண்டலத்தில் உருவாகிவந்த சூழ்நிலையே காரணம். சிவாஜியின் வீரமரபில் வந்த மன்னரிடமிருந்து மராத்திய பிராமணரான அமைச்சர் அல்லது பேஷ்வாக்களே நெடுநாளாக ஆட்சிக் கயிற்றைத் தமதாக்கியிருந்தனர். ஆனால், பாஜிராவ் பேஷ் வாவும் அவன் தம்பி சின்னாஜி அப்பாவும் மாண்டபின் புதிய பேஷ்வாவை எதிர்த்துத் தானாக ஆட்சியைக் கைக்கொள்ள வேண்டுமென்று ரகோஜி பான்லே திட்டமிட்டிருந்தான். ஆகவே அவன் சஃவ்தர் அலிக்கு அவன் ஆட்சிப் பகுதியைக் கொடுத்ததுடன் அமைய வில்லை. புதிய பேஷ்வாவுக்கு வழக்கமான கொள்ளை வரிகள் செலுத்த வேண்டாமென்றும் தனிப்பட வற்புறுத்திவிட்டுச் சென்றான். தென்னாட்டு அரசியலில் நடைபெறத் தொடங்கிய உள்ளுக்கு உள்ளான புதைகபடமான நாடகங்களின் போக்கை இத்தகைய செயல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. தன் கையே தன் கண்ணைக் குத்தும் நிலைக்குத் தென்னகத் தேசீய அரசியல் வளர்ந்து வந்தது. கொடுத்தலம் போர்: சந்தாசாகிபின் மராத்திய மண்டலச் சிறைவாழ்வு: 1746 கொடுத்தலம் என்பது - திருச்சிராப்பள்ளியிலிருந்து 4கோசம் (ஏறத்தாழ 12 கல்) தொலைவிலுள்ள ஓர் ஊர். மதுரை அரசி மீனாட்சியை வஞ்சித்த தமிழக வல்லாள கண்டனை இப் போர் தற்காலிகமாகத் தமிழகத்திலிருந்து அகற்றி மராத்தி மண்டலத்தில் கட்டிவைத்தது. சஃவ்தர் அலி மராத்தியர் நேசத்தை நாடியதற்குக் காரணம் அவன் தன் மைத்துனனை அவர்களைக் கொண்டே அழிக்க விரும்பியதுதான். இதில் அவன் வெற்றியடைந்தான். திருச்சிராப் பள்ளியிலிருந்த சந்தாசாகிபின் மீது மராத்தியப் படைகள் திரும்பின. சந்தாசாகிப் திண்டுக்கலிலும் மதுரையிலும் தன் தம்பி பதேசா கிபையே தலைவனாக்கியிருந்தான். படைகளைத் திரட்டிக் கொண்டு தன் உதவிக்கு வரும்படி சந்தாசாகிப் அவனுக்கு அவசரச் செய்தியனுப்பினான். ஆனால், இருவர் படைகளையும் கொடுத் தலத்தருகில் மராத்தியப் படைகள் எதிர்த்துத் தாக்கி முறியடித்தன. சந்தாசாகிப் மராத்தியப் படைத்தலைவன் ரகோஜி பான்ஸ்லேயிடம் சிறைப் பட்டான். தம் தமிழக நண்பன் சஃவ்தர் அலிக்கு அவனால் போட்டி ஏற்படாத வண்ணம் அவனை மராத்தியர் தம் மண்டலத் திலேயுள்ள பூனாவுக்கே கொண்டு சென்று சிறை வைத்தனர். திருச்சிராப்பள்ளியின் ஆட்சிப் பொறுப்பு ஊட்டியிலிருந் தாண்டுவந்த மராத்தியத் தலைவன் முராரி ராவிடம் ஒப்படைக் கப்பட்டது. மதுரைநாயக மரபின் ஆட்சியிலிருந்த திருச்சிராப் பள்ளி இங்ஙனம் சந்தாசாகிப் ஆட்சிக்கு மாறி அதன் பின் மராட்டிய ஆட்சிக்கு உட்பட்டது. ஆம்பூர்ப் போர்: 1749 கருநாடக நவாபான சஃவ்தர் அலி (1740 - 1742) ஆட்சிக்குப் பின் அவன் மகன் முகமது சயீறு (1743 - 1744) ஆட்சியுடன் சாதத் உல்லாகானின் முதல் கருநாடக நவாப் மரபு முடிவுற்றது. புதிய மரபு முதல்வனாக நவாப் சிராஜ் உத்தௌலா முகமது அன்வருதீன் (1741 - 1749) ஆட்சியுரிமை ஏற்றான். இதே சமயத்தில் முதல் நிஜாம் ஆன நிஜாம் உல்முல்க் அசஃவ்ஜா 1748-ல் உலக வாழ்வு நீத்தான். நிஜாம் உல்முல்க் அசஃவ் ஜாவின் புதல்வன் நசீர்ஜங் 1741-ல் தன் தந்தைக் கெதிராகக் கிளர்ச்சி செய்திருந்தான். அச்சமயம் அசஃவ் ஜாவில் மருமகனான மோலேர் மாகாணத் தலைவன் முதவாசில்கான் அவனுக்குப் பேருதவி செய்திருந்தான். இதற்குக் கைமாறாகக் கருநாடக நவாப் ஆட்சிப் பகுதியைத் தனக்கு அளிப்பதாக அசஃவ்ஜா வாக்களித்திருந்தான் என்று முதவாசில் கான் உரிமை கோரினான். அதைப் பெறும் படி தன் மைந்தன் முசபர் ஜங்கை 20, 000 குதிரை வீரருடனும், 50,000 காலாட்படை வீரருடனும் தமிழகத்துக்கு அனுப்பினான். அவனுக்குத் துணை யாக தமிழக அனுபவமிக்க சந்தா சாகிபையும் பூனாச் சிறையி லிருந்து விடுவித்து அவனுடன் அனுப்பினான். சந்தாசாகிபின் புதல்வன் ரஜ்ஸா அலி இச்சமயம் புகழ் மிக்க பிரஞ்சு ஆட்சித் தலைவன் தியூப்ளேயின் நண்பனாகப் புதுச்சேரியில் தங்கியிருந்தான். தியூப்ளேயிடமிருந்து ஒரு பிரஞ்சுப் படையின் உதவியைப் பெற்று அப்படையுடன் அவன் தந்தையிடம் வந்து சேர்ந்தான். வயது சென்ற கருநாடக நவாப் அன்வருதீன் இச்செய்திகள் கேட்டுப் பரபரப் படைந்தான். அச்சமயம் அவன் தமிழகத்தின் தென் பகுதியில் தங்கியிருந்தான். விரைந்து படைகளைத் திரட்டிக் கொண்டு வடதிசை நோக்கி முன்னேறினான். மூத்தமகன் மஃபூஸ் கானைத் தலை நகரிலேயே இருந்து நகரைக் காக்கும்படி கட்டளை யிட்டான். இரண்டாவது அன்புரிமை மகனான முகமது அலியைத் தக்க துணைப்படைகள் திரட்டிக் கொண்டு தன்னுடன் வந்து சேரும்படி ஆணை பிறப்பித்தான். நாஜிப்கான், ஹுசேன்கான் தாஹிர் ஆகிய படைத் தலைவர்களுடன் அவன் முன்னேறினான். ஆம்பூர் அருகே நடைபெற்ற போரில் மூதரசன் அன்வருதீன் மாண்டான். அவன் மூத்த புதல்வன் மஃபூஸ்கான் ஆர்க்காட்டைக் கைவிட்டு ஓடி ஹைதராபாத்தில் சென்று தஞ்சமடைந்தான். ஆனால், இரண்டாம் புதல்வனான முகமது அலி போளூர்ச் சமவெளிப் பக்கமாக விரைந்து தெற்கே பிரிட்டிஷாரின் தளமான சென்ட் டேவிட் கோட்டையை அடைந்தான். இங்கே ராஜா அனந்ததாஸ் என்பவன் துணையால் அவன் பிரிட்டிஷாரிட மிருந்து படை முகவன் (காப்டன்) ஹோப் என்பவன் தலைமையில் ஒரு பிரிட்டிஷ் படையும், சில பீரங்கிகளும் வெடிமருந்தும் பெற்றுத் திருச்சிராப் பள்ளிக்குச் சென்றான். திருக்சிராப்பள்ளிக் கோட்டையின் பாதுகாப்பைப் படைமுகவன் ஹோப்பிடமே ஒப்படைத்தான். அத்துடன் பல ஆண்டுகளுக்கு முன் அந்நகரைக் கைக்கொண்டு ஆண்டது போல் ஆளத்தொடங்கினான். திருச்சிராப்பள்ளி நீங்கலாக ஆர்க்காட்டு அரசுப் பகுதி முழுவதும் முசபர்ஜங், சந்தாசாகிப் ஆகியவர்கள் கைப்பட்டன. அவர்கள் வெற்றி வீறுடன் ஆர்க்காட்டில் புகுந்த பின் சந்தாசாகிப் ஆர்க்காட்டின் ஆட்சியை மேற்கொண்டான். ஏனெனில் முசபர்ஜங் இதற்குள் தன் பேரவாவை நிஜாம் ஆட்சியைக் கைப் பற்றும் அளவுக்கு உயர்த்தினான். டுயூப்ளேயிடம் செயலாளராக இச்சமயம் இருந்த தமிழகப் பெரியோர் ஆனந்தரங்கம்பிள்ளை யாவர், அவர் தமிழ் நாட்டு குறிப்பேடு, தமிழக வரலாற்றாசிரியர்களால் இன்று பொன்போல பாராட்டப்படுகிறது. முசபர்ஜங் வெற்றியடைந்த பின் அவருக்கு அவன் வஜ்ஸாரத் விஜய ஆனந்தரங்கராவ் என்ற பட்டமும் கர்நாடக அமீர் என்ற பதவியும் சிவிகை கொடி முதலிய விருது களும், செங்கற்பட்டுக் கோட்டைத் தலைமை நிலையும் அளித்துப் பெருமைப் படுத்தினான் என்று அறிகிறோம். திருவாதிப் போர் ஐ: 1750 (ஜுலை 19) 11: 1750 (ஆகஸ்டு 20) தந்தை இறந்தது கேட்டு நிஜாம் உல்முல்க் அசஃவ்ஜாவின் புதல்வன் நசீர்ஜங் நிஜாம் தலைநகருக்கு விரைந்தான். ஆனால், தென்னகத்தின் உயிர்ப் போராட்டங்கள் தமிழகத்தைக் களமாகக் கொண்டு விட்டதறிந்து அவன் பெரும்படையுடன் தெற்கே விரைந்தான். தென்னக வேந்தர் போராட்டங்களில் தென்னக வேந்தரை விட மிகவும் ஈடுபட்ட பெருந்தலைவன் பிரஞ்சு ஆட்சி முதல்வனான தியூப்ளே தென்னகத்தை மையமாகக் கொண்டு கீழ்த் திசையில் ஒரு மாபெரும் பிரெஞ்சுப் பேரரசை விரைந்தமைக்க அவன் சிந்தனைக் கோட்டை அமைத்து அதனைச் செயற்கோட்டையாக்க விதிர் விதிர்த்தான். ஆகவே முசபர் ஜங்கும் சந்தாசாகிபும் ஆம்பூர்ப் போருக்குப் பின் தம் முதல் வெற்றியைத் தொடர்ந்து திருச்சிராப் பள்ளியை உடனடியாகக் கைப்பற்ற வேண்டும் மென்றும், ஈசீர் ஜங்கின் படைகளை முன்னேற வொட்டாமல் சென்று தடுக்க வேண்டுமென்றும் அவன் வற்புறுத்தினான். ஆனால், அவன் அறிவார்ந்த அரசியல் நல்லுரை போலவே, கீழ்த்திசை அரசர் செவிகளிலும் ஏறவில்லை. அவர்கள் தஞ்சை முற்றுகையில் வீண் நேரம் கடத்தினர். கொள்ளையிட வாய்ப்புள்ள இடத்தில் அவர்கள் கொள்ளையிட்டனர். கடன் கொடுப்பவரிடத்தில் கடன் வாங்கினர். நிலங்கள், ஆட்சியுரிமைகள், பட்டம் பதவிகள் யாவும் பணம் தருபவருக்கு வாரிவழங்கப்பட்டன. நசீர் ஜங்கின் படைகள் செங்கமம் கணவாயை அணுகிவிட்டன என்று கேட்டபின்பே அவர்கள் தஞ்சையை விட்டுப் புறப்பட்டனர். இச்சமயம் பிரஞ்சுப் படைகளிடையே ஏற்பட்ட ஒரு பிளவின் காரணமாக, முசபர் ஜங் மன உறுதியிழந்து நசீர் ஜங்கிடம் சரணடைய முற்பட்டான். நசீர் ஜங்கும் அவனை ஆதரித்து மதிப்புடனேயே காவலில் வைத்தான். பிரஞ்சு மக்கள் மதிப்பை இது மிகவும் தாழ்த்தி அவர்கட்குப் பலவீனமும் உண்டு பண்ணிற்று, ஆயினும் அறிவார்ந்த செயல் வீர மேதையாகிய தியூப்ளே இச்சமயத்திலும் மனந்தளராமல் புது முயற்சியில் முனைந்தான். வெல்ல முடியாத கோட்டை என்று பெயர் பெற்ற செஞ்சியைப் பிரஞ்சுப் படைத் தலைவன் புஸி எளிதில் தாக்கிக் கைப்பற்றத் தொடங்கினான். பிரஞ்சுக்காரர் மதிப்பை மீண்டும் உச்ச நிலைக்கு உயர்த்த இது உதவிற்று. மற்ற பிரஞ்சுப் படைத் தலைவர்களும் இதே சமயம் வடக்கே மசூலிப் பட்டணத்தையும், தெற்கே திருவாதியையும் கைக்கொண்டு பிரஞ்சுச் செல்வாக்கைப் பரப்பினர். திருவாதி, கெடிலம் ஆற்றின் கரையிலுள்ள நகரம், அது பிரஞ்சு மக்கள் கைப்பட்டதறிந்து முகமது அலி 20,000 படை வீரரடங்கிய ஒரு படையுடன் அதை நோக்கிச் சென்றான். அவனுடன் 600 பிரிட்டிஷ் வீரரோடு முகவர் ஹோப்பும் துணை சென்றான். 1750 ஜூலை 19-ல் நடைபெற்ற முதல் திருவாதிப் போரில் முகமதலி படையையும், பிரிட்டிஷ் படையையும் பிரஞ்சுப் படைகள் ஒருங்கே முறியடித்தன. இத்தோல்வியின் பின் பிரிட்டிஷ் படைகள் முகமதலியைத் தனியே போராடவிட்டு விட்டுத் திரும்பினர். ஆகஸ்டு 20-ல் நடைபெற்ற 2-ஆம் திருவாதிப்போரில் முகமதலி முன்னிலும் கடுந்தோல்வி கண்டான். அவன் படைகள் சிதறி யோடின. அவன் கூடாரங்கள் எரியூட்டப்பட்டன. அவன் தப்பிப் பிழைப்பதே அரும்பாடாகப் போய்விட்டது. நசீர் ஜங் செஞ்சிப் பக்கமாக அவனுக்குப் படையுதவுவதாக வாக்களித்திருந்தான். தப்பியோடிய முகமதலி அப்பக்கமாகக் கூட ஓட முடியவில்லை. ஏனெனில் செஞ்சியில் இச்சமயம் பிரஞ்சுப் படைபலம் மேலோங்கியிருந்தது. அவன் பல படியாகச் சுற்று வழிகளில் மறைந்தோட வேண்டியதாயிற்று. செப்டம்பர் 11-க்குள் செஞ்சி முற்றிலும் பிரஞ்சுக்காரர் வசமாயிற்று. செஞ்சிப் போர் அல்லது வெள்ளி மேட்டுப் பேட்டைப் போர் அல்லது புத்தனந்தல் போர் : 1750 (டிசம்பர் 15) செஞ்சியருகே நடைபெற்ற இவ்வரலாற்றுப் பெரும் போருக்கு ஒருபெயர் சூட்டுவதிலோ, போர் நடைபெற்ற இடத்தை வரையறுத்துக் காண்பதிலோ வரலாற்றாசிரியர் வேறுபாடுகளும் குழப்பங்களும் அடைகின்றனர். ஆயினும் போர் நிகழ்ந்த இடம் சேற்றுப்பட்டுக்கு 20 கல் தொலைவிலுள்ள தேசூருக்குத் தெற்கே வந்தவாசிக்கு மேற்கே, செஞ்சிக்கு வடக்கே, கிட்டத் தட்டப் புத்தனந்தல் என்ற ஊருக்கு அருகிலுள்ள வெள்ளிமேட்டுப் பேட்டை என்ற இடமாகவே இருக்கவேண்டு மென்று கூறலாம். இப்போர் நடந்த இடத்திலே டுயூப்ளே வீர வெற்றி குறித்த பட்டயங்களை உள்ளடக்கம் செய்து அவற்றின் மீது ஒரு பெரிய வெற்றித் தூணும் ஒரு பெரிய வழிப்போக்கர் தங்கல் மாளிகையும் தன் பெயராலேயே டுயூப்ளே - ஃவத் - அபாத் என்ற நகரமும் அமைத்தான் என்று அறிகிறோம். ஆனால், பிரஞ்சு வெற்றி குறித்த இச்சின்னங்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிப்படைக் கல்நாட்டிய ராபர்ட் கிளைவ் 1752 மார்ச் 8 -10 நாட்களில் அழித்தொழித்து விட்டான், போர் நிகழ்ச்சிக்குரிய இடம் பற்றி இதனாலேயே தலை மயங்க நேர்ந்துள்ளது. ஆனால், அப்பக்கம் இன்னும் இருக்கும் தங்கல் மாளிகை டுயூப்ளே கட்டியதே என்று நம்ப இடமுண்டு. தென்னக மறவரின் உள்ளார்ந்த புறநானூற்று வீரப்பண் பறிந்து காலத்திற்கேற்ற புதுப் பயிற்சி முறை மூலம் அதை மேலை ஏகாதிபத்திய ஆட்சி விரிவுக்குப் பயன்படுத்தும் வழியைக் காட்டிய முதல்வன் டுயூப்ளேயே. தேசிய நோக்க மற்ற தென்னக அரசர்களின் போட்டி பூசல்களில் கலந்து அவற்றின் மூலமே மேலை ஏகாதி பத்திய நோக்கத்தை வளர்க்கப் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழிவகுத்துக் கொடுத்தவனும் அவனே. எனவே முஸபர் ஜங் சந்தா சாகிப் ஆகியோருக்கு அவன் உதவி யளித்து ஊக்கிய பின்பும், அவர்களை எதிர்த்து நின்ற முகமதலியும், நசீர் ஜங்கும் ஒன்று படாமலும் மனமார்ந்த பிரிட்டிஷ் உதவி பெறாமலுமே இருந்தனர். மகமதலி தன் சார்பிலும் நசீர் ஜங்கின் சார்பிலும் உதவி கோரியும் பிரிட்டிஷார் அவனுக்கு மட்டுமே சிறிதளவு உதவியளித்து, நசீர் ஜங்குடன் நேரடி உறவு கொள்ளாமலுமே இருந்தனர். நசீர் ஜங்கும் பெரும் படையுடனே மெல்ல நகர்ந்தானேயன்றி எத்தகைய செயலும் ஆற்றவில்லை. தொடக்கத்திலேயே நசீர் செஞ்சியையும் திருவாதியையும் கைப்பற்றிக் கொண்டு விழுப்புரத்தருகே தாவளமிட்டிருந்தான். ஆனால், செஞ்சியும் திருவாதியும் பிரஞ்சுக்காரர் கைப்பட்ட தென்று கேட்ட பின்பே அவன் போரில் முனைந்தான். அத்துடன் பிரஞ்சுக் காரர் செல்வாக்கு தென்னக அரசுகளிடையே எல்லையற்று வளர்வது கண்டு பிரிட்டிஷாரும் ஓரளவு மனமாற்ற மடைந்து வந்தனர். நசீர் ஜங்கின்படைப் பெருங்கடலின் அளவு கண்டும், அவன் தங்களுக்குக் கரையோர உரிமைகள் வழங்குவதாக ஒத்துக் கொண்ட பின்பும், அவர்கள் ஆதரவு ஆர்வ ஆதரவாகப் பெரு கிற்று. அதன் பின்னரே அவர்கள் இணக்கம் பெற்று முகமதலி 6000 குதிரை வீரருடன் நசீர் ஜங்கின் படையுடன் வந்து கலந்து கொண்டான். நசீர்ஜங்கின் படையணிகள் விழுப்புரத்துக்கும் கோலியனூருக் கும் இடையே தென்வடல் நீளம் 5 கல்லாகவும், கிழக்கு மேற்கு அகலம் மூன்று கல்லாகவும், சுற்றளவு 28 கல்லாகவும் ஆரவாரிக்கும். வீரமா கடலாகப் பரந்திருந்த தென்று அறிகிறோம், அதில் மூன்று இலட்சம் படைவீரரும், குதிரை வீரரும், 1300 யானைகளும், 800 பிரங்கிகளும் இருந்தன. தென்னகம் அணிடைக் காலங்களில் கண்டிராத அம் மாபெரும் படை கண்டு தொடக்கத்தில் பிரிட்டிஷார் மலைப்பெய்தின ரென்றும் ‘ஆ, இதுவா தென்னகத்துச் சுபேதாரின் பதவி மதிப்பு’ என்று வியப்பார்வ முற்றதாகவும் அறிகிறோம். ஆனால், அளவின் பெருமை வீரத்தின் பெருமையோ, திறமையின் வலிமையோ ஆகாதென்பதைப் போர்களின் போக்குக் காட்டிற்று. தொடக்ககாலச் சில்லறை நடவடிக்கைகளிலேயே இக்கடற் பெரும்படையின் அளவு பெரிதும் கரையலாயிற்று. புத்தனந்தல் போருக்குமுன் 60,000 காலாள், 45,000 குதிரை வீரர், 700 யானைகள், 360 பீரங்கிகள் என்ற அளவில் அது குறைந்து விட்டது. ஒரு சில நாட்களுக்குள் 600 பிரிட்டிஷ் வீரருடன் மேஜர் லாரன்ஸும் அப்படையுடன் வந்து கலந்து கொண்டான். ஏலங்காட்டுச் சமவெளியை அவர்கள் அடைந்தபோது வந்தவாசிக் கோட்டைக் காவலன் குலாம் தகியா கானவந்து அப்படையுடன் கலந்து கொண்டான். அவன் புதல்வன் ஏற்கெனவே நசீர்ஜங்கிடம் பணி பெற்றமர்ந்திருந்தான். செப்டம்பரில் விழுப்புரத்தருகேயிருந்து புறப்பட்ட பெரும் படை டிசம்பர் மாதத்துக்குள் செஞ்சிக்கு வடகிழக்கேயுள்ள வெள்ளி மேட்டுப் பேட்டையை அணுகின. சுபேதார் நசீர்ஜங்குடன் இருந்த கோமக்கள் (அமீர்கள்) 23 பேர் என்று அறிகிறோம். அவர்களிலேயே நண்பர் சிலர். நட்பின் இனிய போர்வையினுள் நச்சுப் பகைமை பேணியவரும் பலர் இருந்தனர். அந்த உட்பகைகளின் தலைவன் கர்நூல் நவாபான ஹர்மத் பகதூர் என்பவன். அவன் செஞ்சியிலுள்ள பிரஞ்சுப் படைத் தலைவன் லாதூஷுக்குப் போர் நடத்துவதற்கு வாய்ப்பான நேரம், இடம் சூழல் ஆகியவை பற்றிய தகவல்களையும் தன் சதித் திட்டங் களையும் தெரிவித்திருந்தான். முகமதலி முதலிய மற்ற நண்பர்கள் எச்சரிப்புரையைக் கேளாமல் அவனிடம் பெருநட்புக் கொண்ட டிருந்த நசீர்கான் போர்க்களத்தில் அவனருகிலேயே சென்று நின்றான். நல்லதொரு தறுவாயில் ஹிம்மத்தான் கைத் துப்பாக் கியால் அவனைச் சுட்டுக் கொன்றான். சிறிது தொலைவில் நின்றிருந்த நிஜாமின் உடன் பிறந்தான். சலாபத் ஜங்கும், பஸாலத் ஜங், நிஜாம் அலிகான் முதலிய நண்பர்களும் உதவிக்கு ஓடோடியும் வந்தனரானாலும் நிஜாமின் உயிரைக் காக்க முடியவில்லை. படைகள் இக்கோர நிகழ்ச்சியால் வெருண்டு சிதறியோடியன. முகமதலி தலைமறைவாகத் தேசூர், பெண்ணாத்தூர் முதலிய ஊர்கள் வழியாகத் திருச்சிராப்பள்ளிக்கே ஓடினான். கிளைவ் அருந்திறற்பணி: ஆர்க்காட்டு முற்றுகை: 1751, ஆரணிப் போர், காவேரிப்பாக்கம் போர்: 1752. பாகூர்ப் போர்: 1753 கடல் கடந்த பிரிட்டிஷ் தேசிய வாழ்வின் மறுமலர்ச்சிக்குரிய ஒரு வீர காவியம் கிளைவின் ஆர்க்காட்டு முற்றுகை. தேசிய வரலாற்றெழுத்தாளனான மெக்காலே சற்று மிகைபட ஏற்றத் தாழ்வுகளைப் பெருக்கி வருணித்தாலும், அதை ஓர் உயிரோவியமாக ஆங்கில மொழியில் தீட்டிக் காட்டியுள்ளான். அதே சமயம் கடல் கடந்த பிரஞ்சுத் தேசியத்தைப் போல தமிழரின் உள்ளார்ந்த பண்புகளைக் காணும் திறம்பிரிட்டிஷ் தேசியத்துக்கு இல்லை என்பதையும் அதே சித்திரம் காட்டுகிறது. ஏனெனில் தமிழர் வீரராகவோ, விடுதலை யுணர்வும் தன் மதிப்புணர்வும் உடைய மாந்தராகவோ காட்டப்பட வில்லை. பிரிட்டிஷ் தேசிய ஏகாதி பத்தியத்தின் அடிமைகளாக மட்டுமே காட்டப்பட்டுள்ளனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியும் பயன்படுத்திய அந்நாளைய தமிழரின் ஒரு குறைபாடு இது என்பதிலும், அது இக்குறைபாட்டை வளர்க்க என்றும் பாடுபட்டே வந்துள்ளது என்பதும் உண்மை. ஆனால், தமிழகத்தை மட்டுமின்றிக் கலைவளம் மலிந்த வங்கத்தையும் வீரம் செறிந்த மராத்திய இனத்தையும் மெக்காலே இதே வண்ணத்தில் தான் தீட்ட முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னக அரசியலில் ஒற்றுமை கெட்டு, தேசிய ஆர்வம் கெட்டு, வழிவகை தெரியாது திகைத்து நின்ற அந்நாளைய பிரிட்டிஷாருக்குக் கிலைவ், திடுமென ஒரு மின்னொளியாகத் தோன்றி, கண்ணாயிருந்து கண்டு, பிறருக்கும் வழிகாட்டினான். திருச்சிராப்பள்ளியில் சந்தா சாகிப்னால் முற்றுகையிடப் பட்டு மருகிய முகமதலிக்கு உதவிச் சிறந்த வழி ஆர்க்காட்டை முற்றுகை யிடுவதுதான் என்று கூறி அவன் அதனைத் தானே செய்து முடித் தான். இதனால் திருச்சிராப்பள்ளி நெருக்கடி தளர்ந்தது. 50 நாள் எதிர் முற்றுகையைத் தமிழ் வீரர் உதவியுடன் கிளைவும் அவன் பிரிட்டிஷ் வீரரும் வெற்றிகரமாக முடித்து கீழ்திசைப் பிரிட்டிஷ் பேராட்சியின் அடித்தளக் கல்லில் காலூன்றினர். ஆர்க்காட்டு முற்றுகையைப் பின்பற்றி ஆரணியிலும் காவேரிப் பாக்கத்திலும் பிரிட்டிஷாருக்கு வெற்றிகள் கிட்டின. லாரன்சும், கிளைவும் தளர்ச்சியுற்ற திருச்சிராப்பள்ளி முற்றுகை கடந்து முகமதலிக்கு உணவும் படையுதவியும் அளிக்க முடிந்தது. முற்றுகை முறிவுற்ற பின் முகமதலிக்கு ஆதரவாளனாகச் செயலாற்றிய தஞ்சையரசன் சந்தா சாகிபைச் சிறைப்பிடித்துக் கொலை செய்தான். தோல்விகளிலே தளராத நின்று வெற்றி காணும் திறமுடைய டுயூப்ளே இப்போது பிரிட்டிஷாரின் நண்பரிடையே பூசல்விளைத் தும், மராத்தியரைப் படையெடுக்கத் தூண்டியும், புதிய வழிகளில் போரின் போக்கைத் திருப்ப முயன்றான். ஆயினும் 1753-ல் பிரஞ்சுத் தலைவன் தேகர்ழானைப் (னுநமநசணநயn) பாகூர்ப் போரில் வென்ற தன் மூலம் பிரஞ்சு வலிமை நிலையாகத் தளர்வுறத் தொடங்கிற்று. இந்த ஆண்டிலேயே அரசியல் சூழ்ச்சிகளில் வல்ல பிரஞ்சுத் தலைவன் புஸி, வட சர்க்கார் என்ற கரையோர ஆந்திரப் பகுதி களின் வரி வருமான உரிமையை நிஜாமிடமிருந்து பெற்று பிரஞ்சு மதிப்புத் திடுமென முற்றிலும் சரியாமல் காத்தான். வந்தவாசிப் போர்: 1760 கீழ்த்திசையில் மேல் திசை ஏகாதிபத்தியம் நிலை கொள் வதற்கு உகந்த பண்புகளில் ஒன்று கடலாட்சியேயாகும். இதனைக் கண்டுணர்வதிலும் பிரிட்டிஷாருக்குப் பிரஞ்சுத் தலைவர்களே வழிகாட்டியாய் இருந்தனர். முதல் பிரஞ்சு ஆட்சி முதல்வன் லாபோர்டனாய் அத்தகைய கடற்படையை அருமுயற்சியால் படைத்துருவாக்கியிருந்தான். ஆனால், ஆங்கிலேயரிடம் தொடக் கத்தில் இருந்ததைவிட, பிரஞ்சுகாரரிடம் மிகுதியான ஒற்றுமைக் கேடும், போட்டி பொறாமை, பூசல்களும் இருந்ததாலும் தனி மனிதர் கடல்கடந்த தேசிய நோக்கு பிரஞ்சு மக்களிடையே பரவாததாலும், தென்னகத்தில் இதன் பயனைப் பிரிட்டிஷாரே கைக்கொள்ள முடிந்தது. 1758-ல் பிரஞ்சு ஆட்சியாளர் கரையிலும் கடலிலும் கவிந்து கீழ்த்திசையில் சென்னையையே முற்றுகையிட்டனர். ஆனால், கடல் வெற்றிகளை பிரஞ்சுக்காரர் சரிவரப் பயன்படுத்தாததால் பிரிட்டிஷ் கடற்படை சென்னை முற்றுகை தகர்த்ததுடன் அமையாது, எதிர் தாக்குதலே நடத்த முடிந்தது. அச்சமயம் வங்கத்திலே ஆட்சி யாளனாயிருந்த கிளைவ் தென்னகத்தின் சூழலறிந்து பிரிட்டிஷ் பெரும் படைத்தலைவனான சர்அயர் கூட்டை உடனே சென்னைக்கு அனுப்பினான். வரும் வழியிலேயே வந்தவாசிக் கருகில் 1760-ல் அவன் பிரஞ்சுப் படைத்தலைவன் புஸியுடன் போர் செய்து பெரும் புகழ் வெற்றி நாட்டினான். இதில் சிறைப்பட்ட புஸி பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டாலும் திரும்ப கீழ்த்திசை மீளவில்லை. தாய் நாட்டி லேயே, அவன் அருமையை அறிய முடியாத ஒரு முதிராத் தேசியத்தால் அவன் தூக்கிலிடப்பட்டு மாண்டான். சென்னை முற்றுகைக்கு மாறாக, இப்போரின் பின் பாண்டிச் சேரியே முற்றுகையிட்டுப் பிடிக்கப்பட்டது. போர் முடிவில் அது திருப்பித் தரப்பட்டாலும், அது என்றும் திரும்ப வலுப்பெற முடியவில்லை. ஏனெனில் பிரிட்டிஷார் பிடித்த சமயம் அதன் கோட்டை கொத்தளங்கள் தகர்க்கப்பட்டன. கிளைவின் தூண்டுதலால் போர் முடிவில் ஏற்பட்ட உடன் படிக்கை, கோட்டை கட்டுதல், படைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஒரு தடையிட்டது. செஞ்சி வீழ்ச்சி: 1761 செஞ்சிக் கோட்டையின் பிரஞ்சுக் காவலாளன் மாக்கிரார் 1761-ல் செஞ்சிக் கோட்டையை இழக்க வேண்டிய தாயிற்று. ஐந்து மாத முற்றுகைக்குள் கையூட்டு, உட்பிளவு ஆகியவற்றின் உதவி யால் பிரிட்டிஷ் படைத்தலைவன் படை முகவன் ஸ்மித் செஞ் சியைக் கைப்பற்றினான். வரலாற்றுப் பெருமைமிக்க செஞ்சி, கீழ்த்திசையின் திராய் என மேலை உலக இலக்கியப் புகழ் பெற்ற செஞ்சிக் கோட்டை - ஒரு நாளில் புகழுச்சி யடைந்த தேசிங்கு ராஜனின் வீரவரலாறு கண்ட தமிழர் புரிசை - பிரிட்டிஷார் கைப்பட்ட அன்றே அதன் பெருமையை முற்றிலும் இழந்தது. இன்று அது பழமையார்வலர், கலையார்வலர் காட்சிப் பொருளாக மட்டுமே நிலவுகிறது. செஞ்சியின் பழமை எல்லை நமக்கு வந்து எட்டவில்லை - இடைக்காலத்தில் அது அடைந்த பெருமைகூட இன்று நிலவ வில்லை. புதிய தமிழகத்தின் அறிவே -தேசியப் புத்துணர்வே கலையார்வம் கடந்த புது வாழ்வை அதற்கு அளிக்கக் கூடும். புதிய தேசியத்துக்கே இது இன்றியமையாத தேவையாகும். ஏனெனில் செஞ்சி தமிழகத்தின் தலைசிறந்த கோட்டையாயினும் ஒரே கோட்டையல்ல. தூங்கெயிலும், கானப்பேரெயிலும் கண்ட பண்டைத் தமிழகத்தின் கோட்டை மரபில் வந்த பல கோட்டை களில் அது ஒன்று. அயலாட்சியாளர் இத்தகைய கோட்டைகளை நாட்டு ஒற்றுமைக்குக் கேடாகக் கொள்ளலாம். நாட்டுத் தேசியத்திலே ஏகாதிபத்தியப் பண்புடைய வலிமைத் தேசியம் அதை வெறுக் கலாம். ஆனால், தமிழர் பண்டைக் குடியாட்சி மரபு பரப்பு வலிமையையும், சமத்துவத்தையும் பேண இத்தகைய கோட்டை வாழ்வுகள் புதுமுறையில் பெரும் பயன் தருவது ஆகும். நாட்டுப்புற வாழ்வை அழித்து வாழும் தற்கால நகரங்களைப் போலன்றி, அவை அதற்குரிய முதுகெலும்பாகவும், வளர்ப்புப் பண்ணைகளாக வும் விளங்குவது உறுதி. 2. தேசிய வாழ்வும் புது மலர்ச்சியும் ‘எல்லாப் பொருளும் தோற்றியபடியே ஒடுங்கும்; ஓடுங்கி யபடியே தோற்றும்’ என்பது அறிவுத் துறைச் சமய வாணர் கொண்டுள்ள கோட்பாடு தமிழ்த் தேசிய வாழ்வின் வளர்ச்சி பற்றிய மட்டில் இது பெரிதும் வாய்மையுரையேயாகும். அது ஓயாது அலை எதிர் அலையாக, அகத் தேசியம் அல்லது தமிழகத் தேசீய எல்லையிலிருந்து, அது கடந்த பலபடி உலகத் தேசீயங் களாகவும்; அதே சமயம் புறத் தேசீயம் அல்லது தமிழகத் தேசிய மாகவும் மாறி மாறி வளர்ந்து கொண்டே வந்துள்ளது. ஒவ்வோர் அலை எதிர்அலையும் ஒரு மலர்ச்சியாக மறுமலர்ச்சி, புது மலர்ச்சி யாக, அது என்றும் தோன்றாது. என்றும் முடிவுறாத ஒரே எல்லையற்ற வளர்ச்சியாக நிலவி வந்துள்ளது. திருகு வளையம் போல், தோன்றிய இடத்துக்கே மீண்டும் மீண்டும் வரினும் ஒவ்வொரு சுற்றிலும் அது ஒரு படி உயர்ந்து கொண்டே செல்லும் வளர்ச்சியாக இயங்குகிறது. தேசியக் கண்ணோட்டத்துடன் பார்ப்பவருக்கு, இது தமிழகத் தேசியத்துக்கு மட்டும் உரிய தனிச்சிறப்பல்ல என்பது விளங்கும். எல்லா ஆக்கத் தேசியங்களின் இயல்பும் பண்பும் இதுதான் இந்த இயல்பிலும் பண்பிலும் மாறுபட்ட அல்லது குன்றிய இனங்கள் எவ்வளவு வளர்ச்சி பெறினும் ‘உயிர் வாழ்வு’ அதாவது இடையறா வாழ்வு பெற மாட்டா, மறந்து பட்ட சிந்துவெளி, சுமேரிய, காலடிய, எகிப்திய நாகரிகங்களும், புகழ்மிக்க கிரேக்க, உரோம, ஐஸ்லாந்திய, மய இங்கா நாகரிகங்களும் இவ்விருதிசைப் பண்பலைகளைப் பேணாது. தனிவாழ்வோ, பொது வாழ்வோ மட்டும் வாழ்ந்ததனாலேயே அழிவுற்றன. தமிழகத்துக்கே உரிய உண்மைத் தனிச் சிறப்பை இது சுட்டிக் காட்டுகிறது. பல காலங்களில் அது தனி வாழ்விலோ பொது வாழ்விலோ தேங்குவதாகவோ, வளர்ச்சி தடைப் படுவதாகவோ தேய்வதாகவோ, தோற்றினாலும், வரலாற்றுக் கண்ணுடன் ஆழ்ந்து நோக்குவோர்க்கு அவையாவும் அலைமாற்றங்கள் அல்லது எல்லை மாற்றங்கள் அல்லது திசை மாற்றங்களின் மயங்கிய தோற்றங்களே என்பது தெரிய வரும். இவ்வகையிலேயே சோழப் பெரும் பேரரசுக்குப் பிற்பட்ட தமிழகத்தின் பெரு வீழ்ச்சியை நாம் தேசிய முறையில் ஒரு வளர்ச்சிக் கூறாக உணர முடிகிறது. சங்க காலத்தின் மிகப் பெருங்குறை ஒன்று உண்டு. அது பண்பில் மிக அகன்றதாயினும் எல்லையில் மிகமிகக் குறுகியது. அந்நாளில் தமிழர் தம் நில எல்லைகடந்து விரிவுறுவதற்கு மாறாக, தம் எல்லையிலேயே கொடுந்தமிழ் நிலம் விலக்கிச் செந்தமிழ் நிலம் குறுக்க முற்பட்டனர். இதன் சுவட்டை அந்நாளைய வாழ் விலே காணலாம். தமிழர் நாகரிகத்துடன் ஒத்த நாகரிகங்களை நாம் அக்காலத்தில் தேடினால், அணிமையில் காணமுடியாது நில எல்லை அணிவியிருந்த வடதிசையில் பரவியதைவிட, அது கடல் கடந்து தொலை நாடுகளில் தான் மிகுதி பரவிற்று. இக் கேட்டின் பயனை, படிப்படியாகத் தமிழர் எல்லைக் குறுக்கத்தை, உள் வருந்தோறும் படிப் படியாகச் செறிந்த அடிமைத் தனத்தை, உள் வீட்டுப் போட்டி புழுக்கங்களை நாம் தமிழக வாழ்விலும் வரலாற்றிலும் இன்றளவும் காண்கிறோம். இவற்றை நம்மால் எளிதில் விளக்க முடியவில்லை. ஏனெனில் இவை நம் தனிப்பட்ட குறைபாடுகளல்ல -நம்காலக் குறைபாடுகள் கூட அல்ல. நம் மறுமலர்ச்சியாளர் உச்சி மேற்கொண்டு போற்றும் சங்க காலத்திலிருந்து -தொல்காப்பியர் காலத்தி லிருந்து வந்த நம் ஆழ்ந்த இனக்குறைபாடு ஆகும். புதுக்குறை பாடுகளை நீக்குமளவு எளிதாக நம்மால் நம் குருதியினுள்ளும், நாடி நரம்புகளுள்ளும், கருவக அணுக்களினுள்ளும் தோய்ந்த இத்தகைய குறைபாடுகளை அகற்ற முடியாது. வரலாற்று நோக்கோடியைந்த உலகநாகரிக அறிவே - புதுமலர்ச்சித் தேசியமே இவற்றைப் படிப்படியாக வேனும் அகற்ற நமக்கு வழிகாட்ட முடியும். பண்புத் தளர்வு : உறுதிச் செறிவு தமிழினத்தினும் பண்பாட்டில் குறைந்த இனங்கள் -சில சமயம் தமிழினத்திலேயே பண்பில் பிற்பட்ட கிளையினங்கள் தமிழகத்துடன் கொண்டுள்ள கூட்டுறவு இவ்வகையிலேயே தமிழினத்துக்குப் பேருதவியாய் இயங்கி வந்துள்ளது. அவற்றின் குறைபாடுகள் தமிழர் நற்பண்புகளின் செறிவைக் குறைத்தது உண்மையே. ஆனால், செறிவிற் குறைந்த பண்பு, எல்லையில் விரிவுற்றது. அதன் மொத்த ஆற்றல் அழிவில்லை. அதுமட்டு மன்று, பண்பில் உயர்ந்த இனத்தின் குறைபாட்டைப் பண்பில் தாழ்ந்த இனங்கள் நிறைவுபடுத்த முடியும். ஏனெனில் ‘உயர்ந்த’ ‘தாழ்ந்த’ என்ற சொற்கள்; தற்பற்று, இனப் பற்றுக் காரணமாக மனிதன் வகுத்துக் கொண்ட சொற்களே அவை நாம் விரும்புகிற அல்லது வெறுக்கிற, வளர்த்துள்ள அல்லது வளர்க்க வேண்டிய வேறுபாடுகளை உணர்ச்சி வசமாகக் குறிப்பவைகளே. இதனை நாம் ஓர் உவமைமூலம் விளக்கலாம். நெடியவனுக்கு எட்டும் பொருள்கள் குறியவனுக்கு எட்டா திருக்கக்கூடும். ஆனால், குறியவன் நுழையும் இடங்களில் நெடியவன் வளைந்து கொடுத்தே நுழையவேண்டும். இயற்கையில்-, வரலாற்றில்-, பண்பாட்டில் உயர்வு தாழ் வுகளாகத் தோற்றுவன வெல்லாம், உண்மையான உயர்வு தாழ்வுகளல்ல; சில சமயம் ஆக்கப் பண்பாகவும், சில சமயம் அழிவுப் பண்பாகவும் மாறி மாறிவரும் திசை மாறுபாடுகளே அவை என்பதை இது உணர்த்தும். பண்புகளிலேகூட, இயல்பாக அழிவுப் பண்பு என்றும் ஆக்கப் பண்பு என்றும் வேறு வேறு கிடையாது. நம் குழலில் அழிவும் ஆக்கமும் தூண்டும்போது அவற்றை நாம் அழிவுப் பண்புகள், ஆக்கப் பண்புகள் என்கிறோம். எடுத்துக்காட்டாக, சங்ககாலத் தமிழரால் பண்பற்றவர் என்று கருதப் பட்ட களப்பிரர் வரவே, சங்ககால இறுதிப் பகுதியில் தமிழரிடம் காணப்படாத ஓர் உறுதிப்பாட்டை இடைக்காலத் தமிழருக்கு அளித்திருந்தது. இது முற்றிலும் அயற் பண்பல்ல. தமிழகத்திலேயே முன்னும் பின்னும் இன்றளவும்கூட உலக மெங்கும் -எயினர், வேடர், குறவர் ஆகியவரிடம் காணப்படும் பண்பே. ஆனால், தமிழகம் வளர்த்தபண்பு களில் வேறுபாட்டுத் தொலை மிகுந்தது. தேசிய வாழ்வில் உயர் தாழ்வு எல்லை அல்லது வேறுபாட்டைப் பெருக்குந்தோறும், தேசிய வாழ்வின் வலுக்குறைவது உறுதி சங்க காலத்துக்குப் பின் ஏற்பட்ட புறவீழ்ச்சி இவ்வகையில் அகநிலைச் சமத்துவத்தையும் உறுதிப்பாட்டையும் எல்லை விரிவையும் நோக்கிய இரு வகைப் பட்ட வளர்ச்சியின் மறுவடிவமேயாகும். அரசியல் துறையிலேயே நாம் இந்த உறுதிப்பாட்டின் வளர்ச்சியையும், ஒற்றுமையின் வலுவையும் தெளிவாகக் காணலாம். சங்ககால அரசியல் போட்டிகளில் எல்லாம் தமிழர் தமிழருடன் நடத்திய போட்டிகளே முனைப்பானவை. இடைக்காலப் பாண்டி யரிடத்தும் பல்லவரிடத்தும் நாம் காணும் பண்பு இதுவல்ல; தமிழர் பிற தமிழினத்தவருடன் நடத்தும் போட்டியாக அது மாறிற்று. எல்லை விரிவுற்றது. இது தென்னக ஒற்றுமை பேணாவிட்டாலும் தமிழக ஒற்றுமையைக் கட்டாயம் வளர்த்தது, வளர்க்க உதவிற்று. சங்ககாலமும் இடைப்பட்ட பாண்டிய பல்லவ காலமும் காணாத ஒரு வளர்ச்சியைச் சோழப் பெரும் பேரரசு கண்டெய்திற்று. போட்டி தமிழனுக்கும் தமிழனுக்கும் என்ற எல்லை கடந்து, தமிழனுக்கும், தமிழினத்துக்கும் என்ற எல்லை கூடத் தாண்டித் தமிழனுக்கும் உலகத்துக்கும் என அந்நாளில் விரிவுற்றது. சோழப் பெரும் பேரரசு தாண்டி இவ்வெல்லை வளர்ச் சியோ, போட்டி வளர்ச்சியோ இன்னும் செல்லவில்லை. இதன் காரணங்களே தமிழரால் ஆழ்ந்து சிந்தித்தற்குரியன. இடைக் காலம் வளர்த்த இரண்டு பண்புகள் சங்ககால இறுதியிலிருந்து தோன்றி இடைக்காலத்தில் இரண்டு பண்புகள் வளர்ந்தன. ஒன்று: அழிவுப் பண்பு, இன்றளவும் கீழ்த்திசையாக்கிய பண்பும், மேல் திசையைவிட நெடுநாள் பாதித்து வந்துள்ள பண்பும் இதுவே, மற்றது: ஆக்கப்பண்பு, இன்றளவும் கீழ்த்திசை வாழ்வில் மலர்ச்சி யூட்டி வரும் பண்பு இது. தமிழரின் தமிழகம் கடந்த வாழ்வில், நல்ல காலமாக அவர்கள் தம் தாய்மொழியைப் பரப்பி மற்ற மொழியாளர் மீது அயல்மொழி ஆட்சி சூழவில்லை. ஆனால், இதனினும் கேடான ஒரு நிலையைத் தமிழர் உலகிலேயே பரப்பினர். உலகத் தாய் மொழிகள் யாவற்றையும் கொடுந்தமிழ் நிலையில் வைத்து மதித்து, கொடுந்தமிழ் நிலையிலேயே பண்படாப் பேச்சு மொழிகள் (சமஸ்கிருத வழக்கில் பாகதங்கள்) ஆக்கி, செந்தமிழோடொத்த உயர்மொழி (வடதிசை வழக்கில், ‘சமஸ்கிருதம்’) வகுத்து அதை உலகில் பரப்பினர், கீழ்த்திசை இஸ்லாமிய நாடுகள் இதனைப் பின்பற்றியே முதலில் அரபையும், பின் அரபு பாரசீக மொழிகளையும் உயர்மொழிகளாகக் கொண்டு, தாய்மொழி வாழ்வை நெடுங்காலம் தடுத்து நிறுத்தின. மேல் திசையிலும் நெடுநாள் இலத்தீன், கிரேக்க மொழிகள் இவ்வகையில் பயன்படுத்தப் பட்டன. இன்றுகூட, ஆங்கிலம் முதலிய மேல் திசை மொழிகளும், இந்தி போன்ற கீழ்த்திசை மொழிகளும் இத்தகையை ‘வழக்கிறந்து பட்ட’ மொழிகளின் போக்கை மேற்கொண்டு வருவது காண் கிறோம். இச்செயலால் உலக வாழ்வில் அல்லல் பெருகுவது மட்டு மல்ல, வருந்தீங்கு, அப்பொது மொழிகளும் வழக்கிறந்து படவே இடமேற்படும். இதை இந்நாளைய உலக ஆட்சி வகுப்பினரோ, அவ்வகுப்புக்கு அடிமைப்பட்ட அறிஞரோ காணத் தவறுகின்றனர். இவ்வழிவுப் பண்புக்கு எதிராக இடைக்காலம் வளர்த்த ஆக்கப் பண்பு பக்தி இயக்கமே. இது சமயத்துறையில் மக்கள் வாழ்வும் உணர்ச்சியும் அளாவி வாழ்வைச் சமயத்துடனும் சமயத்தை வாழ்வுடனும் இணைத்தது. இவ்வாக்கப்பண்பே கீழ்திசை வாழ்வு முற்றிலும் கெடாமல் தடுத்தாட்கொண்ட பண்பு ஆகும். ஏனெனில் பிற்பட்ட பல்லவர் காலத்திலிருந்தே இது தமிழகத்தில் மேற் கூறப்பட்ட அழிவுப்பண்பின் செயலைத் தளர்த்தத் தொடங்கி விட்டது. தென்னக வாழ்விலும், அது கடந்து வட திசையிலும் சோழப் பெரும் பேரரசர் காலத்தில் இந்த ஆக்கப்பண்பு அழிவுப் பண்பை வென்று தாய்மொழி வாழ்வில் எங்கும் புதுமலர்ச்சி ஊக்கிற்று. சோழப் பெரும் பேரரசுக் காலத்துக்குப் பின் தமிழகம் கண்ட படுவீழ்ச்சி சங்க காலத்துக்குப்பின் ஏற்பட்ட வீழ்ச்சியிலும் மாபெரிது என்பதைப் பலரும் எளிதில் காண்பர். ஆனால், இங்கே வீழ்ச்சியின் அளவு உண்மையில் எல்லை விரிவின் அளவை நோக்கப் பெரி தன்று என்னலாம். இமய எல்லைவரை தமிழகப் பண்பாடும், நாகரிகமும் பரவுவது என்பது உண்மையில் அதன் உலகளாவிய பரப்பினும் அருமையில் குறைந்ததல்ல. ஏனெனில் உலகின் தலைசிறந்த ஆக்கப் பண்புகளின் சேமப் பண்ணையான தமிழகம் இந்திய மாநிலத்திலும், கீழ்த்திசையிலும் ஒரு கோடியிலிருந்து ஒளிபரப்புகிறதென்றால், அதன் மறு கோடியிலிருந்து உலகின் கடைப்பட்ட அழிவுப் பண்புகளின் சேமப்பண்ணையாக, வட மேற்கில் அயலினக் கலப்பு ஓயாது வளர்ந்து உலகில் அரையிருள் பரப்பி ஒளி குறைத்துக் கொண்டே வந்திருக்கிறது. வடமேற் கெல்லை கடந்து அதற்கு வடக்கே நாகரிகமும் பண்பும் பரவும் நாளே மாநிலவாழ்வு சீர்படும் நாளாகும். ஆனால், இன்றும் அவ்வடமேற்கடுத்த பகுதியே மனித நாகரிகமையங்கள் அனைத்தி லிருந்தும் நெடுந்தொலை விலகிய பகுதியாய் உள்ளது. வடதிசைப் புதுப் பேரினமான இரஷ்ய இனமலர்ச்சி வட இப்பகுதியை இன்னும் முற்றிலும் ஆக்கப் பண்புடையதாக்கி விடவில்லை - விரைவிலே ஆக்கும் என்று மட்டும் தான் நம்மால் நம்ப முடியும், விழைய முடியும். உலகில் தமிழகம் தன் நீடித்த வாழ்வில் கண்ட அனுபவப் பண்புகளை, தமிழகம் வரலாறும், பண்பாடும் உணர்த்தும் பண்பு களை உலகளாவ வளர்த்துவரும் காரணத்தினாலும், தமிழரிடம் குன்றிவிட்ட அல்லது குறைபாடாக வளர்ந்து விட்ட இனக்குறைப் பண்புகளை உலகளாவிய அடிமை வாழ்விலேயே அதுபெற்று வருவதனாலுமே, சோழப் பெரும்பேரரசினை யடுத்து பிற்காலமும் நம்காலமும் தமிழகத்தின் வீழ்ச்சிக்காலமாக, அடிமைக்காலமாகத் தோன்றுகின்றன. மெய்ம்மையில் இந்த அடிமைக் காலங்களிலேயே தமிழகம் தன் கருவில் தன் புது மலர்ச்சி விதையை மட்டுமன்றி, உலகின் புது மலர்ச்சி விதையையும் வளர்த்து வருகிறது என்னலாம். அகஅலை : புறஅலை: தமிழகத்தின் நாகரிகத் தொடக்கம் தொடக்கக்கால மனித நாகரிகமே. அதன் நாகரிக வளர்ச்சி பெரிதும் உலக நாகரிக வளர்ச்சியே. ஆனால், தமிழர் பேச்சு முறையில் தான் -தமிழகத்தி லிருந்து காணும் கண்ணோட்டத்தில்தான் இது முற்றிலும் தமிழகத் தினின்று பரவிய வளர்ச்சியாகும். இதனோடொப்ப உலகின் புறக்கோடிகளிலிருந்து தமிழகம் நோக்கி வளரும் வளர்ச்சிகளும் உண்டு. பண்பில் மிகுந்தோறும் உறுதியில் குன்றிய தமிழகம், பண்பை உலகளாவப் பரவலாக்கி உலகளாவிய உறுதியை மீட்டும் பெற்று வந்துள்ளது. இப்பிற்பகுதி வளர்ச்சியே சோழப் பெரும் பேரரசுக் காலத்திலிருந்து’ நம்காலம்வரை தளர்ச்சியினூடாகக் காணப்படும் வளர்ச்சியாகும். சங்க காலம் வரை தமிழகம் தன் பண்பை உலகப்பண்பாக விரிவுறுத்திற்று. இது அக அலைக்காலம். அக அலை புறநோக்கிச் சென்று விரிவுற்று, இடைக்காலத்திலும் சோழப் பெரும் பேரரசுக் காலத்திலும் அக அலை புறத்தும், புறஅலை அகத்தும் ஒருங்கே ஒழுக்கெதிர் ஒழுங்காகப் பின்னிப் பாய்ந்தன. இது ஈரலைக்காலம், சோழப் பெரும் பேரரசுர் காலத்திலிருந்து நம் காலம்வரை புற அலைகளே பெரிதும் அகநோக்கி, தமிழக நோக்கிப் பாய்ந்தன. இது புற அலைக் காலம். புற நின்று தமிழக நோக்கிய இவ்வலைகள் பண்பலைகளல்ல - பண்படிப்படையில் நோக்கினால்அவை வளர்ச்சிப் பண்புகளும் அல்ல. ஆனால், அவை தமிழகத்துக்கு உறுதிப்பாடு அளிக்கும் அலைகள். அம்முறையிலேயே அவை தமிழகத் தேசிய மறுமலர்ச்சிக்கும் உறுதுணைகளாகியுள்ளன. அத்துடன் தமிழகத்துக்கு உள்ளே நிலவும் உயர்வு தாழ்வு தமிழகத் தேசியத்துக்கு வலுக்குறை வாவதுபோல, உலகில் தமிழக மடுத்துள்ள நாடுகள், தொலை நாடுகள் ஆகியவற்றினிடையே சோழப் பெரும் பேரரசுக் காலம்வரை நிலவிய பண்பாட்டு வேற்றுமையும், செல்வ நிலை வேறுபாடும், உலகவாழ்விற்கு வலுக்குறைவாய் இயங்கின. தமிழகத்தின் தொல் பழங்காலக் கடல் கடந்த வாழ்வின் மறுமலர்ச்சியாக மேல் திசையில் படிப்படியாக எழுந்துள்ள இஸ்லாமிய நாகரிக எழுச்சி, தென் ஐரோப்பிய நாகரிககலை வாணிக மறு மலர்ச்சி, தற்கால மேலை ஐரோப்பிய நாகரிக ஆட்சி ஆகியவை பழங்கால உலகின் உயர்வு தாழ்வைத் தலைகீழாகத் திருப்பிச் சரிசெய்யும் ஓர் எதிர் அலை இயக்கக் கூறுகளேயாகும். தமிழக, உலக வரலாற்றின் அக அலைக்காலம், மனித நாகரிகத் தோற்றக் காலம் என்பது கண்டோம். அத்தோற்றத்தில் தமிழ்ப் பண்பலையே உலகப் பண்பலையாக விரிவுற்றது என்பதும் தேற்றம். ஆனால், முதலலை தோன்றியவாறே அதனை அடுத்த ஒடுக்கப்படி நடைபெற வேண்டுவது இயல்பு. புற அலைக் காலத் தில் நாம் காண்பது இதுவே. இக்காலத்தில் உலகப் பண்பலை மீண்டும் தமிழக அலையாக இயங்கியுள்ளது. சோழப் பெரும் பேரசுக்குப் பிற்பட்டகாலம் தமிழகம் தனி வாழ்விழந்து, சூழ்புல வாழ்வாகிய கீழ்திசை வாழ்வும் கெடுத்து, உலக வாழ்வின் ஒரு பகுதியாகத் தன்னிலை யழிந்து நிலைவியதன் காரணம் இதுவே. ஆனால், இந்நிலை மாறத் தொடங்கிவிட்டது. மாறிவருகிறது. இம் மாறுபாட்டின் தொடக்கம் 1760 - 1761-ம் ஆண்டுக்குரியது என்னலாம். 1760 : கீழ்திசை வாழ்வின் திரும்பு கட்டம் - போலித் தேசியத்துக்கு ஒரு படிப்பினை! 1760 -மாநிலத் தேசியத்துக்கு இந்து முஸ்லிம் வேற்றுமை யடிப்படையில் உருவும் வடிவும் தரப்பாடுபடும் நம் கால மாநிலத் தேசியவாதிகள் உண்டு. ஆனால், வரலாற்றில் அத்தேசியத்தின் பிறப்பை அவர்கள் விசயநகரப் பேரரசிலும், சிவாஜியின் மராட்டியத் தேசியத்திலுமே கண்டுள்ளனர். இவை இரண்டும் தென்னகத்தின் இரண்டு பெருமைமிக்க இடைக்காலத் தேசிய எழுச்சிகள் என்பதில் ஐயமில்லை. ஆனால், இவற்றை மட்டும் மாநிலத் தேசியத்தின் முன்னோடிகளாக்கி, இவற்றுக்கு இந்து - முஸ்லிம் சாயமடிக்க விரும்பும் தேசியவாதிகளுக்கும் வரலாற்றா சிரியர்களுக்கும் வடதிசை வாயிலாகவே 1760 ஒரு நல்ல படிப்பினை தருவதாகும். இந்துப் பேரரசு வகுத்த மராத்தியர் தம் எதிரிகளான முகலாய முஸ்லிம் பேரரசுடன் இணைந்து நின்று மற்றோர் அயல் முஸ்லிம் படையெடுப்பாளனான ஆப்கன் அரசன் அகமது ஷா ஆப்து ராணியின் கையிலிருந்து ஒரே தேசியப் பேரிடியைப் பெற்றனர் - மூன்றாவது பானிபட்டுப் போர் வடதிசை வகுக்க எண்ணிய இந்து தேசியம், முஸ்லிம் தேசியம் ஆகிய இரண்டுக்கும், அவை கருவில் இருந்த அன்றே, ஒரே கடும் படிப்பினை அளித் திருந்தது! ஆனால், இன்றளவும் மாநிலத் தேசியமும் அதன் சார்பில் வரலாறு வகுக்கத் துணிந்த தென்திசை, வடதிசை வரலாற்றா சிரியரும் இந்தக் கடும் படிப்பினையை ஒரு சிறிதும் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. பேராசிரியர் முனைவர் எஸ் கிருஷ்ணசாமி ஐயங்கார், இராவ்பகதூர் ஸி.எஸ்.சீனிவாசாச் சாரியார், பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் முதலியோர் வகுத்துள்ள தென்னாட்டு வரலாறுகளில் இப்போலித் தேசியக் கோட்பாடு வரலாற்று நிகழ்ச்சிகளின் உருவை வளைத்துத் திருகி, அவற்றைச் சுற்றி நெளிவது காணலாம். தவிர வீர மராத்திய மரபில் வந்த ஜாதுநாத் சர்க்கார் போன்ற வரலாற்றாசிரியர்கள் சிவாஜி மரபுக்கு இராஜபுத்திர மரபின் குலப் பெருமையையும் உயர் வருணமாகிய க்ஷத்திரிய மரபினன் என்ற பிறப்பு உயர் பெருமையையும் நிலை நாட்டப் பாடுபடும் ஆராய்ச்சி களும், முனைவர் கிருஷ்ணசாமி போன்றார் அதனை மறுத்தெழுதும் எதிராராய்ச்சிகளும் தமிழர் இரக்கத்துக்கும் நகைச்சுவைக்கும் அருவருப்புணர்ச்சிக்கும் ஒருங்கே உரியவை ஆகின்றன. ஏனெனில், சிவாஜி போன்ற பெருவீரன் மரபு அவன் பிறந்த குடியை மட்டு மன்றி, நாட்டையும் நாடு கடந்த திசையையுமே உயர்த்த வல்லது. சிவாஜி க்ஷத்திரியனல்லவானால், க்ஷத்திரிய வருணமும் அவ்வருண வேறுபாடு வகுத்த போலி இந்து சமயமும்தான் இழிவுடையன ஆகக் கூடுமே யன்றி, அவன் மரபு இழுக்குறாது என்று தான் எவரும் கருதுதல் தகும். பகுத்தறிவுடைய, பண்பாடுடைய எந்த இனத்தவரும் இந்த முடிவுக்கே வருவர். ஆனால், சிவாஜியின் பண்புடன் தொடர்பற்ற குல மரபுகளில் பெருமை கொண்ட பேராசிரியர்கள், பேரறிஞரா யிருந்தும் இம்முடிவு காண இயலாது அலமருகின்றனர். மற்றும் வரலாற்றாசிரியர் சர்க்கார் போன்ற மராத்திய மரபின் அறிஞர் ஆங்கிலப் படிப்பால் வந்த தன் மதிப்பைச் சிறிதே பேணி யிருந்தால், சிவாஜி மரபு இந்தியாவில் தலை சிறந்த மரபு என்று கூறிப் பெருமைப் பட்டிருப்பாரே யன்றி, அம் மரபைப் பண்பில் இழிந்த குலமரபினருள் இணைக்க இவ்வளவு பாடுபட்டிருக்க மாட்டார்கள் ! வீரப்பண்பில் இராசபுத்திர மரபு சிறந்ததே யாயினும், தேசியப் பண்புகளில் அது மராட்டியரிடமும், மராட்டியரின் ஒப்பற்ற வீரத் தலைவன் சிவாஜியிடமும் மண்டியிட்டுப் பயிற்சி பெற வேண்டிய மரபே என்றால் தவறாகாது. உண்மையில் விசயநகரப் பேரரசும் சிவாஜி கண்ட பேரரசும் தென்னகத் தேசியத்தைத் தூண்டிய மரபுகள் மட்டுமே, ஆயினும் அவை பிறப்பிலேயே வடதிசைத் தேசியமாகிய நோயினால் பீடிக்கப்பட்டு நலிந்த தேசியங்கள் ஆகும். அவ்வடதிசை இஸ்லா மியர் படையெடுப்புகளுக்கு மட்டுமன்றி எல்லா அயலினப் படையெடுப்புகளுக்குமே வாயிலும் வளர்ப்புத் தளமுமாக அமைந் திருந்தது. ஆனால், அந்த வட திசையே இஸ்லாமியரை மட்டும் அயலினம், மற்ற எல்லா இனங்களும் அந்த இஸ்லாமியர் கொடுத்த ‘இந்து’ என்ற பெயரால் ஒரே தேசிய இனம் என்ற கோட்பாட்டை மெல்லத் தன் படையெடுப்புக் காலத்திலே தென் திசையில் பரப்பிற்று! இக்கோட்பாட்டால் விசயநகர மராத்தியப் பேரரசுகள் தாம் வலிமையிழந்ததுடன் நில்லாது, பின்வரும் தேசிய இயக்கங் களைக் கூட எளிதில் வளர முடியாமல் தடை செய்துள்ளன. தென்னகத்தின் உண்மைத் தேசிய இயக்கம் - இந்துக்களை யல்ல, முஸ்லிம்களையல்ல - அயலாட்சியையே எதிர்த்த தேசிய இயக்கம் ஆகும். அது தென்னகத்தின் முஸ்லிம் பெரு வீரனான ஹைதராலே தொடக்கப்பட்டது. அதனுடன் தென்னகத்தின் வாழ்வில் மீண்டும் அக அலை தொடங்கிற்று. புதுமலர்ச்சி ஊழியும் அதன் கருவில் பிறந்தது. தென்னகத் தேசியமும் மறுமலர்ச்சி இயக்கங்களும் தமிழகத்தின் புது வாழ்வாகிய புதிய அக அலையில் நாம் இரண்டு கூறுகளைக் காணக்கூடும், ஒன்று தேசிய அலை. மற்றது: புதுமலர்ச்சியலை. இரண்டும் இணைந்து நம் காலத்திலேயே (20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே) முழுநிறை தேசிய அலையாக, வருங்கால உலக வாழ்வை வளப்படுத்தத் தக்க புதிய தமிழக, தென்னக, கீழ்த்திசைத் தேசிய அலையாக உருவாக்கத் தொடங்கி யுள்ளது என்னலாம். தேசிய அலை கன்னட நாட்டில் (மைசூரில்) தொடங்கித் தமிழகம் அளாவி வளர்ந்து, கீழ்திசை மாநிலங்கள் பலவற்றைக் கண்ட பிரிட்டிஷ் அயலாட்சியை ஒழிப்பதைக் குறிக்கொண்டு இந்திய மாநில அலையாக வளர்ந்து செயலாற்றியுள்ளது. ஆனால், அது கீழ்த்திசையைத் தொல் பழங்கால நிலைக்கு உயர்த்த வேண்டுமானால், அது மீண்டும் தமிழ்த் தேசிய அலையாக வளர்தல் இன்றி யமையாதது. இவ்வளர்ச்சி தொடங்கிவிட்டாலும் நாம் இன்னும் அதன் இளம் பயிர்ப்பு நிலையிலேயே இருக்கிறோம். மைசூர் எழுச்சி (1753 - 1799) பாஞ்சாலங் குறிச்சி வீரப் போராட்டம் (1798 - 1802). இவற்றைத் தொடர்ந்து வேலூர்க் கிளர்ச்சி சென்னைக் கிளர்ச்சி, சீரங்கப் பட்டினம் கிளர்ச்சி, 1857-ல் நடை பெற்ற வடதிசை விடுதலைப் போராட்டம் இவற்றினூடாக மாநிலமெங்கும் கிளர்ந்த பொதுத் தேசியப் போராட்டம் (1885 - 1947). இப்பொதுப் போராட்ட அலையின் முகட்டில் எழுந்த வ.உ. சிதம்பரனாரின் கப்பல் போராட்டம், தொழிலாளர் போராட்டம் ஆகியவையே தமிழக அக அலையின் தேசியக் கிளை அலைகள் ஆகும். இவற்றுள் வ.உ. சிதம்பரனாரின் போராட்டம் வருங்காலத் தமிழகத் தேசிய இயக்கத்தின் ஒரு விடிவெள்ளி எனத் தக்கது ஆகும். பக்தியியக்கத்தின் தமிழக மறுமலர்ச்சியாக எழுந்த தாயு மானார் (18-ம் நூற்றாண்டு), இராமலிங்க வள்ளலார் (19 -நூற்றாண்டு) ஆகியவர்களின் தமிழக அருளியக்கங்களும், இவற்றின் எதிரொலிகளாக வங்கம் தோற்றுவித்த இராம கிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்த அடிகள், அரவிந்தர் ஆகியோரின் கீழ்த்திசை அருளியக்கங்களும், பிரம்மஞான சங்க இயக்கமாகிய உலக இயக்கமும் தமிழக மறுமலர்ச்சியின் அலை ஒளி இயக்கங்கள் ஆகும். இவை சமயத்துறைசார்ந்த இயக்கங்கள். தமிழக இஸ்லாமியரையும், கிறிஸ்த்துவரையும் கூட இவ்வியக்கம் தூண்டியுள்ளது -சீராப் புராணமும், தேம்பாவணியும், இரட்சணிய யாத்திரிகமும், மஸ்தான் சாகிபுபாடல், பீர்முகமது சாகிபுபாடல் போன்ற பிறபாடல்களும் அதன் தமிழிலக்கியத் தடங்கள் ஆகும். இதுவே புற உலகில் மேலை நாடுகளில்கூட அகநிலை மெய் விளக்கக் கோட்பாடுகள் (ஐனநயடளைவiஉ ளுஉhடிடிடள டிக யீhடைடிளடியீhல), மேலைப் புதுநெறி அல்லது உயிர்நெறி (சூநற கூhடிரபாவ டிச ழiபாநச கூhடிரபாவ) ஆகியவற்றையும் தூண்டியுள்ளன. சமயத்துறையிலிருந்து அக அலை மொழித்துறையளாவிச் சங்க இலக்கிய மறுமலர்ச்சியையும் மறைமலை யடிகளாரின் தனித் தமிழியக்கத்தையும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தூண்டிற்று. இத்தமிழியக்கத்தின் எதிரொலியே உலக அரங்கில் அடிப்படை மொழி இயக்கமாகப் பரவியுள்ளது; பரவி வருகிறது. சமயம், மொழி கடந்து சமுதாயத் துறையிலும் இவ்வலை தமிழகத் தின் மதிப்பியக்கத்தையும் தமிழகப் பகுத்தறி வியக்கத்தையும் வீறுடன் தோற்றுவித்துள்ளது. தனித் தமிழியக்கமும் சங்க இலக்கிய மறுமலர்ச்சியும் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மொழி இலக்கியத் துறையில் புதிய தேசிய ஆர்வத்தையும், மொழி இலக்கிய மறுமலர்ச் சியையும் ஒருங்கே தூண்டியுள்ளது. இவ்வெல்லா அக அலைகளின் இணைவான தமிழக முழு நிறைதேசிய இயக்கத்தின் இரு கூறுகள் - தமிழ் நாட்டுத் தேசிய இயக்கம். தமிழின அதாவது திராவிடத் தேசிய இயக்கம் என்று இரு கிளைகளாக ஒழுகி ஒருங்கிணையும் ஒரே பேராறாக, அகண்ட காவிரியாகப் பொங்கி எழுகின்றன. அதன் ஆக்கவளம் வருங்காலத் தமிழகமும் வருங்கால உலகமுமே முழுதும் காணத்தக்க ஒன்றாகும். தென்னகத்தின் முதல் தேசிய அலை: மைசூர் எழுச்சி: 1763 - 1798 சோழப் பெரும் பேரரசர் காலத்துக்குச் சற்று முன்பிருந்தே தமிழகத்தின் வட எல்லையடுத்த மைசூரும் இராயலசீமாப் பகுதியும் தென்னகத்தின் புதிய தேசிய எழுச்சிகளுக்கும் புதிய பேரரசுகளுக்கும் தாயகமாக வளர்ச்சியுற்று வந்தன. ஹொய்சளர், விசய நகரப் பேரரசர் வாழ்வு தாழ்வுகளுக்குரிய கருமுதல் நிலம் அதுவே. இதேபரப்பின் நடுமையமான கோலார்ப் பகுதியில் தான் மைசூர்ப் பேரரசின் முதல்வனான ஹைதர் அலியின் வாழ்வும் தொடங்கிற்று. அவன் கடைசிப் போராட்டமும் மாள்வும் அதே இடத்தருகில் தமிழக வட எல்லையாகிய சித்தூர்ப் பகுதியிலே நிகழ்வுற்றது. மைசூர் அரசியலிலும் தென்னக வாழ்விலும் ஹைதர் ஒரு புதிய தேசிய ஒளியை ஏற்றினான். இதற்கு அவன் பிறப்புச் சூழ லிலேயே அருந்தகுதி உண்டு. ஏனெனில் குடிமக்கள் மரபிலேயே பிறந்து, குடியின வீர மரபினாலும், தன் வீரத் திறத்தாலும் அரசிய லாற்றல் பெற்ற முதல் தென்னகப் பேரரசன் அவனே என்னலாம். மேலையுலகில் நெப்போலியன் ஒருவனே இவ்வகையில் அவனுக்கு இணையாகக் கூறக்கூடியவன். தாமே தோற்றுவித்த இப் பேரரசாற்றலை ஹைதரும் அவன் மைந்தன் திப்புவும் 1763- முதல் 1798 வரை முப்பத்தைந்து ஆண்டுகள் பேணி வளர்த்துத் தென்னக அரசியல் தேசிய வாழ்வின் நடுமையச் சக்திகள் ஆயினர். முகலாயப் பேரரசரிடையே அக்பர், ஜெஹாங்கீர், ஷாஜஹான் ஆகிய மூன்று பேரரசர் ஆட்சியிலும் தென்னாடு படையெடுப்பு களுக்கு ஆளானாலும், தமிழக எல்லை கடந்த அதன் வடபெரும் பகுதியின் அரசியல் நிலைகளைக் குலைத்துத் தமிழகத்தையும் கைப்பற்ற விரும்பியவன் அரங்கசீபே யாவன். ஆனால், அவன் ஆட்சியே முகலாயரின் பேரரசு சரியத்தொடங்கிய ஆட்சியாகவும் அமைந்தது. அவனுக்குப்பின் வடதிசையிலேயே அப்பேரரசு வலிமையிழந்தது. தென்னகத்தின் வட பகுதியில் ஹைதராபாத்தில் ஆண்ட நிஜாமும், தமிழகத்தில் ஆர்க்காட்டை ஆண்ட நவாபும் கிட்டத்தட்டத் தனியரசரேயாயினர். சிவாஜிக்குப் பின் மராத்திய அரச மரபின் இரு தலை முறைகள் ஒளரங்கசீபின் அரசியல் சூதாட்டங்களுக்கு ஆளாகி அலைக் கழிவுற்றன. ஆனால், இந்தப் புற எதிரியின் அலைக் கழிப்பைவிட அதைப் பயன்படுத்தி வளர்ந்த அக எதிரிகளே சிவாஜியின் வீர மரபை ஏலமாட்டாச் சமரச மரபாக்கினர். அவர்கள் பிராமண அமைச்சர்களான பேஷ்வாக்கள். தவிர இந்நிலையே மராத்தியப் பேரரசையும் கேய்க்வார், ஹொல்கார் சிந்தியா என்ற பல கிளை மரபின் ஆட்சிகளாகப் பிரித்தது. மைசூர்ப் பேரரசு தோன்றிய காலத்தில் தென்னகத்தில் ஆட்சி செய்த மற்றப் பேரரசுகள் மராத்தியர், நிஜாம், ஆர்க்காட்டு நவாப் ஆகிய இம்மூவருமே. மைசூர் இந்நாள் இந்நான்கின் நடுவே தென்னகத்தின் நடுநாயக வல்லரசாக வாழ்வு தொடங்கிற்று. வடதிசை அயலரசான முகலாயப் பேரரசின் மரபில் பிறந்த நிஜாம் அரசும் ஆர்க்காட்டு அரசும் பெயரளவில் தனியரசு களாய் இருந்தாலும், வீரமரபு பேணாது அயலரசுகளைச் சார்ந்தே வாழும் அடிமையரசுகளாய் இருந்தன. மராத்திய அரசும் அகவாழ்வில் ஒற்றுமை கெட்டும், புற வாழ்வில் சூழ் புலங்களைக் கொள்ளை யிட்டுமே வாழ்ந்தது. மூன்று அரசுகளுமே தென்னகத்தின் மூன்று திசையில் உள்ள மூன்று அக நோய்களாக இயங்கி, பிரஞ்சுக்காரர் பிரிட்டிஷார் ஆகிய வெளி ஆதிக்க சக்திகளின் சதுரங்கக் காய்களாக நிலவினவேயன்றி, நாட்டு மக்கள் ஆட்சி கைக்கொண்ட தேசிய அரசுகளாக அமையவில்லை. இம்மூன்று நோயரசுகளுக்கும் இடையே எழுந்த புதிய மைசூர்ப் போராக ஒன்றுதான் பிற்காலத் தென்னக வாழ்வில் தேசிய ஆட்சியும் தேசிய ஆற்றலும் உடையதாய் இருந்தது. ஹைதர் - திப்பு : நிறைவு குறைவுகள் ஹைதர், பிரிட்டிஷ் ஆட்சியாளர் மீது வெறுப்புக் காட்ட வில்லை. அவர்களிடமும் நேசமாகக் கூட இருந்தான். ஆனால், அவன் நிஜாமைப் போலவோ, ஆர்க்காட்டு நவாபைப் போலவோ, அயலவர் தயவில் வாழ விரும்பவில்லை. அவர்களைச் சார்ந்து வளரவும் முனையவில்லை. மராத்தியரைப் போல, தன் தற்காலிக நலனை மட்டும் கருதவில்லை. அவன் தன் மதிப்புடன் தன் வலிமையை மட்டுமே நம்பித் தன் ஆட்சியைப் பரப்பினான். அயலவர் திறமையால் அவர்கள் ஆற்றல் பெருகி வருவதைக் கண்டும், அதற்காக அவன் அவர்களைப் பகைக்க வில்லை. காரணம், அவர்கள் வளர்ச்சிக்குரிய உண்மைக் காரணம் நாட்டில் திறமை யுடைய நல்லாட்சி இல்லாமையே என்பதை உணர்ந்தான். வெள்ளையரும் கண்டு வியக்கும் வீரம் அவனிடம் இருந்தது. படை வீரருடன் படைவீரனாகப் பழகி அவன் அவர்கள் நேசத்தையும் பெற்றிருந்தான். தென்னகப் படைகளிடையே ஒற்றுமை வகையிலும் பயிற்சி வகையிலும் அவன் படைகளே தலை சிறந்தன என்பதை ஆங்கிலேயரே ஒப்புக் கொண்டுள்ளனர். படைப் பயிற்சி, நல்லாட்சிக் காண வழிதுறைகள் வாணிகத் தொடர்பு ஆகிய வகைகளில் பொதுவாக வெள்ளையரும், சிறப்பாக பிரிட்டிஷாரும் பிரஞ்சுக்காரரும் நன்கு உதவ முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான். அவ்வுதவியைக் கூடிய மட்டும் பயன் படுத்திக் கொள்ளவே அவன் பிரிட்டிஷார், பிரஞ்சுக் காரர் ஆகிய இரு சாராரையும் நேசமாக நடத்த விரும்பினான். வெள்ளையர் ஆட்சியை விரும்பாமல் வெள்ளையரை மட்டும் அவன் விரும்பி நேசித்ததன் மறைதிறவு இதுவே. ஹைதரைப் போலவே திப்புவும் சிறந்த வீரன், படைத் தலைவன். ஆட்சித் திறமையிலும் அரசியல் சூழ்ச்சிகளிலும் தேசிய ஆர்வத்திலும் அவன் ஹைதரைவிடக் குறைந்தவனல்லன். ஆனால், ஹைதரின் கடுவாழ்வின் பயிற்சி அவனிடம் இல்லை. இதனால் சுற்றிலும் உள்ளவரை உள்ளவாறு மதிப்பிடும் பண்பும் அவர்களைப் பயன்படுத்தினாலும் அவர்கள் வசமாய் விடாமல் அவர்களை அடக்கியாளும் பண்பும் அவனிடம் ஹைதரளவு இல்லை. பிரிட்டிஷார் தன்னை எதிர்த்தாலும் கூடிய மட்டும் அவர்களை எதிர்ப்பதில் தன் வலிமையைச் சீரழிக்காமல் காத்துக் காலம் கருதியிருந்தவன் ஹைதர். திப்பு சிறிது ஆத்திர அவசரம் காட்டிப் பிரிட்டிஷார் விரித்த வலைக்குள் விழநேர்ந்தது. ஹைதர் - திப்பு எழுச்சி சில வகையில் குடிமன்னர் நிகழ்த் திய தென்னகத்தின் - மாநிலத்தின் - முதல் தேசீயப் போராட்டம் ஆகும். இதில் அவர்கள் முழுவெற்றி கண்டு விடவில்லை. இதற்கு மேற் குறிப்பிட்ட திப்புவின் குறைபாடுகள் மட்டும் காரணமல்ல. ஹைதர் -திப்பு இருவருமே படைவீரரிடம் காட்டிய அதே அன்பை நாட்டு மக்களிடம் காட்ட முடியாது போயிற்று. அத்துடன் தன் ஆட்சிக்கு வெளியேயுள்ள மக்கள் -சிறப்பாக மலபார், குடகுப் பகுதி மக்கள் - ஆதரவைப் பெறுவதிலும் அவர்கள் அருமை வாய்ந்த போர் முறைகள், ஆட்சி முறைகள் குந்தகமாயிருந்தன. இது முற்றிலும் அவர்கள் குறையன்று - அவர்கள் காலநிலையின், 16-முதல் 18-ஆம் நூற்றாண்டுவரை இருந்த தென்னக அரசியல் சூழலின் குறையே அது. மக்களைக் கொள்ளை யடிப்பதே அந்நாள் போர்முறையாகவும் வெற்றிகண்ட அரசர் புதுவெற்றிகளை உறுதிப்படுத்தும் முறை யாகவும் இருந்தது. இக்குறைபாடுகள் பேரரசின் வலுவை மட்டுமே குறைத்தன. தென்னகத்துக்குத் தேசிய வாழ்வின் வீழ்ச்சியை, மேலை வெள்ளை யரின் அயலாட்சியை -அளித்த பண்பு இதுவல்ல. ஹைதர் -திப்புவின் தேசிய போராட்டங்களுக்கும் தேசிய ஆட்சியியல்புக்கும் முற்றிலும் மாறான அடிமைப் பண்புகளும் குறுகிய தன்னலப் பண்புகளும், கோழைப் பண்புகளும் திறமையின்மையும் தென்னகத்தின் மற்ற மூன்றரசுகளையும் ஆட்கொண்டிருந்தன. அந்த மூன்றின் உதவிகொண்டும், திருவாங்கூர் அரசர் போன்ற ஏல மாட்டாச் சிற்றரசர் உதவி கொண்டுமே பிரிட்டிஷார் -வீரமாக அல்ல - கோழைத்தனமாக - மேல்திசையில் நெப்போலியனைச் சூழ்ந்து பற்றியழித்தது போல, திப்பு ஆட்சியை அழித்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடித்தளக்கல் நாட்டியவன் ராபர்ட் கிளைவே என்று ஆங்கில வரலாற்றாசிரியர் கூறுவதுண்டு. ஆனால், திப்புவை வீழ்த்த உதவிய சிறு பண்புடைய பெருங்குடி மன்னரான மராத்தியர், நிஜாம், ஆர்க்காட்டு நவாப், திருவாங்கூர் அரசர் ஆகிய நால்வர்களே பிரிட்டிஷ் ஆட்சியமைப்புக்கு ஆதாரமாய் அமைந்த நான்கு நாட்டுப் பகைத் தூண்கள் ஆயினர் என்னலாம். தென்னகத்தில் மட்டுமன்று கீழ்த்திசையிலேயே -பிரிட்டி ஷாரை மட்டுமன்று - மேலைநாட்டவர் ஆதிக்க வேட்டையையே - எதிர்த்துநின்ற பேரரசர் ஹைதர் -திப்புமட்டுமே யாவர். எவர் துணையுமின்றி அவர்கள் தனியே அவராதிக்க ஆட்சியை எதிர்க்க முற்பட்டனர் -ஆனால், ஆதிக்க ஆட்சி தனித்து நின்று அவர்களை வெல்ல முடியவில்லை. நாட்டின் காளாள் ஆட்சிகளை எல்லாம் திரட்டியே அது தென்னகத்தின் அந்நாளைய வீரப் பேரரசை அழிக்க முடிந்தது. ஹைதர் -திப்புவின் வீழ்ச்சி மைசூர் வீழ்ச்சி மட்டுமல்ல - தென்னக வீழ்ச்சி மட்டுமல்ல -கீழ்த்திசையின் கடைசித் தூணின் வீழ்ச்சி ஆகும். ஆனால், குடிமன்னரான அவர்கள் வீழ்ச்சியே குடிமக்களின் எழுச்சிக்குரிய முதல் தூண்டு தலாய், தேசிய இயக் கத்தின் முதல் அலையாய் அமைந்தது. பிரிட்டிஷ் ஆதிக்க வளர்ச்சி தென்னகத்துக்கு முதல் முதல் வந்த மேலை வாணிக ஆட்சி யாளர் போர்ச்சுகீசியரே, தென்னகத்துக்கும் கீழ்த்திசைக்கும் வருவதற்குரிய கடல் வழியை முதன்முதல் 15-ம் நூற்றாண்டில் கண்டவர்களும் அவர்களே 15-ம் நூற்றாண்டு வரை கீழையுலகக் கடல் வாணிகம் சீனர், மலாய் நாட்டவர், தமிழர், அராபியர் ஆகிய நான்கு இனத்தவர் கைகளிலே இருந்தன. ஐரோப்பிய நாடுகளுக்கு இவ்வாணிகத்தைக் கொண்டு சென்றவர் அராபியர்களே, அராபியர் களிடமிருந்து இத்தாலி நாட்டிலுள்ள கடல் வாணிக இனத்தவரான வெனிஸ் நகரமக்கள் இதைக் கைக்கொண்டு ஐரோப்பா வெங்கும் பரப்பிப் பெருஞ் செல்வம் திரட்டினர். ஆனால், 15-ம் நூற்றாண்டில் இந்நிலையில் ஒரு பெரு மாற்றம் ஏற்பட்டது. துருக்கியர் பேரரசாட்சி மேற்கொண்டு மேலை ஆசியா, கீழ்கோடி ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா எங்கும் கைக் கொண்டனர். மேலை ஐரோப்பாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் கலைக் களஞ்சியமாக விளங்கிய கான்ஸ்டாண்டினோபிள் நகரமும் அவர்கள் கைப்பட்டது. இதன் விளைவாக அராபியர் வாணிகம் தடைபட்டது. மேலை நாடுகளிடையே இக்காலம் எழுந்த கலை மலர்ச்சி. சமய மறுமலர்ச்சி தேசிய மலர்ச்சி ஆகியவற்றுடன் கீழ்திசையோடு நேரிடை வாணிகம் செய்யும் ஆர்வத்தையும் கீழ்திசைக்கு நேர்வழி காணும் ஆர்வத்தையும் இது தூண்டிற்று. இந்தியாவுக்கு வழிகாண எண்ணி ஸ்பெயின் நாட்டின் சார்பாக மேற்கே சென்ற கொலம்பஸ் அமெரிக்காக் கண்டத்தைக் கண்டு பிடித்து, அங்குள்ள மக்களுக்கு ‘இந்தியா’ என்ற பெயரை உரிமைப் படுத்தினான். அதனையடுத்து 1498-ல் வாஸ்கோடகாமா என்ற மீகாமன் ஆப்பிரிக்காக் கரையைச் சுற்றித் தென்னகத்தின் மேல் கடற்கரையிலுள்ள கள்ளிக் கோட்டை அல்லது கோழிக் கோட்டுத் துறைமுகத்தில் வந்து இறங்கினான். தென்னகத்துக்கு வழிகாணும் ஆர்வமே பிரிட்டிஷாரையும் பிற மேனாட்டாரையும் ஆப்பிரிக்கா, ஆஸ்டிரேலியா, அமெரிக்காக் கண்டங்களைக் காணவும் கண்டு கைப்பற்றவும் வழி வகுத்தது. 16-ஆம் நூற்றாண்டில் தென்னகத்துக்கு டச்சுக்காரரும் வந்து வாணிகத் தொடர்பு நாடினர். அந்நூற்றாண்டு முழுவதும் தென்னகக் கடற்கரை ஆட்சிக்காகப் போர்க்சுகீசியரும், டச்சுக்காரரும் ஓயாது போராடிக் கொண்டே வந்தனர். பிரஞ்சுக்காரரும், பிரிட்டிஷாரும் தென்னகத்துக்கு வந்தது 17-ஆம் நூற்றாண்டிலேயே, பிரிட்டிஷார் நூற்றாண்டுத் தொடக்கத்தில் டச்சுக்காரருடனும் நூற்றாண்டு முழுவதும் போர்ச்சுகீசியருடனும் டச்சுக்காரருடனுமே பெரும் போட்டி யிட்டனர். ஆனால், 18 -ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே வாணிகத்துறையிலும், பிற் பகுதியில் அரசியல் துறையிலும் பிரஞ்சு - பெரும்போட்டி நிலவிற்று. இப்போட்டியினிடையே தான் அதில்வென்று வந்தபிரிட்டிஷாரிட மிருந்து ஹைதரும் திப்புவும் தென்னகத்தை மீட்கப் பாடுபட்டு, மற்றத் தென்னக அரசுகளின் ஏலமாட்டாக் கோழைமை, திறமைக் கேடு, அடிமைத்தனம், தன்னலப் போட்டி, பகைமை, உட்பகை மைகள் காரணமாக அதை அரசியல் துறையிலேனும் இழக்க நேரிட்டது. மைசூர் எழுச்சி படுத்திராவிட்டால், தென்னகம் கட்டாய மாக வீழ்ச்சியுற்றிராது. தென்னகம் வீழ்ச்சியுறா விட்டால், பிரிட்டிஷார் தென்னகமடைந்து இவ்வளவு எளிதாக அரசியல் தேசியக் கட்டுக் கோப்பற்ற வடதிசைப் பரப்பையோ, பர்மா, இலங்கை, ஏடன், மலாயா, சிங்கப்பூர் ஆகிய பரப்புக்களையோ வென்றிருக்கவும் முடியாது. தென்னாட்டின் வலுவே பிரிட்டிஷார் இப்பரப்புக்கள் எல்லாவற்றையும் கீழடக்குவதற் குரிய மூலதன மாய் அமைந்தது. மேலை வாணிக வேட்டையாளர் பொதுவாகக் கீழை நாட்டு வாணிகம் நாடிவந்தனரானாலும், அவர்கள் கவனத்தைச் சிறப்பாகத் தென்னகமும், தென்கிழக்காசியாவுமே ஈர்த்தன என்பதில் ஐயமில்லை. இன்றுவரை பல மேலைநாட்டுத் துறை முகப் பட்டணங்கள் இப்பகுதியிலேயே உள்ளன. அவர்கள் முதல் முதல் களங்கள் அமைத்ததும் நீடித்துப் போராடியதும் தென்னகத் திலேயேயாகும். பிரிட்டிஷார் சென்னையை 1639-லும், பம்பாயை 1661-லும், கல்கத்தாவை 1690-லும் மூலதளங்களாகக் கைக் கொண்டனர். பிரெஞ்சுக்காரர் பாண்டிச் சேரியில் 1674-லும் சந்திர நாகூரில் அதே ஆண்டிலும், மாஹியில் 1725-லும் காரைக்காலில் 1739 -லுமே நிலைகொண்டனர். போர்ச்சுகீசியர் கோவாவையும், பிரஞ்சுக்காரர் பாண்டிச்சேரியையுமே பெரிதும் இலக்காக்கி யிருந்ததை இது காட்டும். தென்னகமே அந்நாளில் தொழிலிலும் வாணிகத்திலும் கீழ்த்திசையின் மையமாய் இருந்தது. அரசியல் வாழ்விலும் அப்படியே. இந்நிலையில் நாட்டரசருடன் பிரிட்டிஷார் நிகழ்த்த வேண்டி வந்த தேசியப் பெரும்போர் மைசூர்ப் போர் ஒன்றேயாகும். அதன்பின் அவர்கள் சரிசமப் போராட்டம் எதுவும் இல்லாமலேயே கீழ் திசையில் பரவ முடிந்தது. தமிழ்த் தேசியமும் பிரிட்டிஷாட்சியும் தென்னகத்துக்குப் பிரிட்டிஷ் ஆட்சியாளர் கொடுத்த தொடக்கக் கால முக்கியத்துவத்தையும், பிற்காலத்தில் அதை வடதிசைப் பரப்புக்குக் கொண்டு சென்றதையும் தென்னகத்தேசிய வரலாற்றா சிரியர்கள் மட்டுமன்றி, கீழ்திசைத் தேசிய வரலாற்றாசிரியர்களும் நுணுகிக் கவனித்தல் வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியில் கீழ்த்திசையில் முதல் முதல் அமைந்த மாகாண ஆட்சி சென்னை மாநில ஆட்சியே. 1653-ல் இது அமைக்கப் பட்ட பின்பே, 1698-ல் வங்கத்தில் வங்க மாநில ஆட்சி ஏற்பட்டது. ஆனால், சென்னையே கீழ்த்திசைத் தலைமை ஆட்சியிடமாய் இருந்தது. வங்கம் சென்னையைத் தலைமை மாகாணமாகக் கொண்டு அதன் கீழ்ப்பட்ட ஒரு சிறு ஆட்சிப் பகுதியாகவே இருந்தது. வங்கம் ஒரு மாகாணமாக அமைக்கப் பட்டது 1701-லேயேயாகும். கல்கத்தா இந்தியாவின் தலைநகர மானது 1784 முதலேயாகும். 1910-ல் விக்டோரியா அரசி -பேரரசி ஆட்சிமுடிந்து ஏழாம் எட்வர்டு அரசர் -பேரரசர் ஆன சமயத்திலேயே இந்திய மாநிலத் தலைநகரம் வட இந்தியாவின் அயலாட்சித் தலைநகரமாகிய தில்லிக்கு இறுதியாக மாற்றப்பட்டது. கடலக அரசாகிய பிரிட்டன் கீழ்திசைத் தலைமை யாட்சியைக் கடற்கரை நகரங்களிலிருந்து உள் நாட்டுக்கும், கடற்கரைப் பகுதியான தென்னாட்டிலிருந்து நிலப் பெரும்பரப்பான வட திசைக்கும் கொண்டு சென்றது பற்றி ஆராய்ச்சியாளர் இதுவரை சிந்தித்தது கிடையாது. ஆனால், தென்னகத் தேசிய வாதிகள் இதில் கருத்துச் செலுத்துவது பயன் தரத்தக்கதாகும். பிரிட்டன் கடல் வல்லரசான பின்பும் கீழ்திசையில் பிரிட்டன் ஆண்ட பகுதிகள் கடலக வாழ்வின் தொடர்பற்றதாய் இருப்பதையே பிரிட்டிஷ் ஆட்சியாளர் விரும்பினர். தென்னகத்தின் கடல்வாணிக, தொழில் மரபுகள் அழிக்கப்படும் வரை அவர்கள் தென்னகத்தைத் தலைமை யிடமாகக் கொண்டிருந்து அதன்பின் வடதிசை நோக்கியும் உள்நாடு நோக்கியும் தலைநகரை மாற்றியதற்குரிய காரணங்களில் இது ஒன்று ஆகும். பிரிட்டிஷ் ஆட்சி வேரூன்றியபின் நாட்டு மக்கள் கரையோரக் கப்பல் தொழிலிலிருந்தே சட்ட மூலம் தடை செய்யப்பட்டனர். தலைநகர் கல்கத்தாவிலிருந்து கூட மாற்றப்படுவதற்கான சூழ்நிலை கீழ்திசை வரலாற்றின் ஒரு படிப்பினையை வலியுறுத்து கிறது. தில்லிப் பேரரசின் பழைய தலைநகர மரபையும் வடமேற்கு எல்லைப்புறப் பாதுகாப்பையும் இம்மாற்றத்துக்குரிய காரணமாக மேலை வரலாற்றாசிரியர் காட்டுவதுண்டு. இந்துக்கள் கிளர்ச்சி களுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆதரவைப் பெற்றும், தேசிய இயக்க மையமான வங்கத்திலிருந்து விலகவுமே இம்மாற்றம் எற்பட்ட தென்று மாநிலத் தேசிய வாதிகளும் மாநிலத் தேசிய வரலாற்றா சிரியரும் சுட்டிக் காட்டுகின்றனர். மாநிலத்தேசிய வாதிகள் கூற்று இங்கே பேரளவில் உண்மையேயாகும். அதனால் அதன் முழுப் பொருளையும் அவர்கள் கூடக் காணத் தவறியுள்ளனர். மாநிலத் தேசியத்தின் மையங்கள் தெற்கும் கிழக்கும் ஆகும் -அவையே சோழப் பெரும் பேரரசாண்ட பகுதிகள், இம்மையத்திலிருந்து எவ்வளவு தொலைவிலிருக்க முடியுமோ அவ்வளவு தொலை விலகுவதும், இந்திய மாநிலத்தின் இந்து முஸ்லிம்தேசியப் பிளவை மிகுத்து, முஸ்லிம்களையும் நிலையாகத் தம் ஆட்சி வலுவின் கருவிகளாக்கிக் கொள்வதும் அவர்கள் நோக்கமாய் இருந்தது. இதற்காகவே தேசியப் பற்றுடன் வீரம் கலந்த இனங்களாகிய தென்னாட்டவர், வங்காளியர், மராத்தியர் ஆகியோர் படைத் துறையிலிருந்து பெரிதும் ஒதுக்கிவைக்கப் பட்டனர். முஸ்லிம்கள் - சிறப்பாக, தேசிய ஆர்வ நோக்கமின்றிப் பிழைப்புத் தொழிலாகவே படைத் துறையைக் கருதும் வடமேற்கு முஸ்லிம்கள் படைத் துறையின் மிகப் பெரும்பான்மையினர் ஆக்கப்பட்டதும் இதனாலேயேயாகும். இந்திய மாநிலத்தின் தேசியமும், தேசிய நாகரிகமும் பரவாத, தேசியமையங்களிலிருந்து மிகுதொலை விலகிய வட மேற்கின் மூலதள ஆதரவு கருதியே அயலாட்சியாகிய பிரிட்டிஷ் ஆட்சி தலைநகரைத் தெற்கு நின்றும் விட்டு, வடக்கினின்றும் வடமேற்கு நோக்கிக் கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாட்டு மறவர் படைத்துறைக்குத் தேர்வு பெறாதவராய் மட்டும் நின்று விடவில்லை - அவர்கள் குற்றப் பரம்பரையினராக அடக்கியொடுக்கப்பட்டனர் என்பது இவ்விளக்கங்களுக்கு ஒளி தருவதாகும். தமிழர் வீரமற்றவர் என்ற குற்றச் சாட்டு ஒரு புறமும், தமிழ் மறவர் அடக்கி ஒடுக்கப்பட புறமும் கூறப்பட்டன. இரண்டை யும் ஆங்கில அறிஞர், ஆங்கிலம் படித்த சிந்தனையற்ற நம் தலையாட்டிப் பொம்மையறிஞர் மூளைக்குள் எளிதாகச் செலுத்தி விட முடிந்தது. பிரிட்டிஷ் ஆட்சி வடதிசைப் பண்ணையாட்சி முறைக் குரிய வருணா சிரம உயர்வு தாழ்வு அநீதிகள், மக்கட்கல்வி ஏறுதல், மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை ஒழிப்பதில் தமிழர் பழைய பகுத்தறிவு மரபுடன் இணைந்தனர். இவை பொதுவாக மேலை நாகரிகத்தின் இயல்பான பகுத்தறிவு வளர்ச்சியின் பயன்களே யானாலும் கீழ்திசையில் மேலை நாட்டு ஆட்சியில்லாப் பரப்புக்களைவிட அவ்வாட்சிப் பரப்புக் களிலேயே மிகுதியாய் உள்ளதும், மேலை யாட்சியிலேயே, பிரஞ்சு பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதிகளிலேயே, முனைப்பாய் அமைந் துள்ளதும் மறுப்பதற்குரியன அல்ல. ஆனால், இயல்பாக சமுதாய அடிப்படையிலன்றித் தேசிய அடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சியினரும் சரி, மேலைத் தொடர்பும் சரி தமிழ் மொழி, தென்னக நாகரிகம் ஆகியவற்றைப் பெரிதும் புறக்கணித்தும், வடதிசை மொழிகள், பண்பாடுகள் ஆகிய வற்றுக்குப் பேராதரவு தந்தும் வந்துள்ளன. தென்னகத் தேசியம் கீழ்த்திசையை உயர்த்தி மேலைநாடுகளின் சுரண்டல் வாழ்வைக் குறுக்கிவிடும் என்பதை யும் மேலையுலக ஆட்சியாளர் நன்கு அறிந்துள்ளனர் என்னலாம். தண்டுல்சாப் போர்: 1763 நிஜாம் சலாபத் ஜங்கை வீழ்த்தி அவன் இளவல் நிஜாம் அலி 1761-இல் ஹைராபாத் அரசைக் கைப்பற்றி இருந்தான். 1763-ல் பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் இடையே, பாரிஸ் உடன்படிக்கை ஏற்பட்டது. இரண்டு நாட்டு வாணிக ஆட்சியினரும் அரசியல் சூழல்களில் சிலகாலம் தலையிட மாட்டார்கள் என்ற நிலையுணர்ந்த புதிய நிஜாம் அரசன் இவ்வாண்டிலேயே தன் தமையனைக் கொலை செய்து தன் ஆட்சியை வலுப்படுத்திக் கொண்டான். அதன் பின் அவன் மராத்தியர் அரசியலில் தலையிட்டு மராத்திய மைய ஆட்சியிலிருந்து. பேரரசை ஆண்ட ஜானோஜி பான்ஸ்லேயைப் பிரித்துத் தன் வயப்படுத்தினான். இதன் பின் அவன் உதவியுடன் மராத்தியர் மீது போர் தொடுத்தான். தண்டுல்சாவில் நடைபெற்ற போரில் நிஜாமுக்கு அவன் எதிர் பார்த்த வெற்றி கிட்டவில்லை. ஏனெனில் ஜானோஜீ போரின் முக்கிய கட்டத்தில் மறுபடியும் திசைமாறினான். அத்துடன் நிஜாம் அலியின் திறமை வாய்ந்த அமைச்சனாகிய ராஜா பிரதாப் வந்த் என்ற விட்டல் சுந்தர் இப்போரில் மாள நேர்ந்தது. முதல் மைசூர்ப் போராட்டம் : 1767 - 1769 தேசிய நோக்கமோ அரசியல் வாய்மையோ அற்ற, மற்றத் தென்னக அரசுகளை நம்புவதை விட வணிகராக வந்து கரையோரப் பகுதிகளில் பரவிய பிரஞ்சு, பிரிட்டிஷ் ஆட்சித் தலைவர்களை நம்புவது பயன் தருவது என்பதே ஹைதரின் நிலையான கோட்பாடு. ஆனால், ஆர்க்காட்டு நவாப்பாகிய முகம்மது அலி பிரிட்டிஷ் ஆட்சியாளரைத் தன் வயப்படுத்தி ஹைதருக் கெதிராக அவர்களை ஏவிக் கொண்டே இருந்தான். அவனுக்கு கன்னட வீரனாகிய ஹைதரின் வளர்ச்சிகண்டு அச்சமும் கிலியும் பொறாமையும் மிகுதியாக இருந்தன. இதே நிலை நிஜாமுக்கும் இருந்ததானாலும், அவன் மராத்தியர் வளர்ச்சி கண்டும் அஞ்சினான். ஆகவே ஹைதரை ஆர்க்காட்டு நவாப்மீதும் சென்னை பிரிட்டிஷரார் மீதும் திருப்பி விட்டுத் தன்னை வலுப்படுத்தினான். நிஜாம், மராத்தியர், மைசூர் மூன்றும் ஒன்றுபடா வண்ணம் காப்பது பிரிட்டிஷாருக்கு இச்சமய அரசியல் தந்திரமாய் இருந்தது. 1765-ல் அவர்கள் நிஜாமுடன் உடன் படிக்கை செய்து, ஹைதரிட மிருந்தும் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கூறி யிருந்தனர். ஆனாலும் நிஜாம் மைசூரைத் தாண்டி, ஹைதர் உதவியுடன் ஆங்கிலேயரை எதிர்க்கத் திட்டமிட்டான். ஆந்திரக் கடற்கரைப் பகுதியை நிஜாமும், தமிழகக் கரைப்பகுதியை ஹைதரும் எதிர்ப்பதென்று முடிவு செய்யப்பட்டது. இப்போராட்டத்தில் நிஜாம் உதவி ஹைதருக்குச் சிறிதும் பயன்படவில்லை. அவன் படைகள் பெரிதானாலும், பிரிட்டிஷ் தாக்குதலுக்கு முன் கலைந்தோடி ஹைதருக்கு அடிக்கடி தொல்லைகளே தந்தது. ஆனால், இந்த நிலையிலும் நிஜாம் நீடித்துப் போராடாமல் இடையே 1768-ல் பிரிட்டிஷாருடன் உடன்படிக்கை செய்து கொண்டு விலகினான். காக்கன் கரைப் போர்: 1767 ஹைதர் செங்கம் கணவாய் வழியாகத் தமிழகப் பகுதிக்குள் 1767 ஆகஸ்டு 25-ல் முன்னேறினான். கர்னல் ஸ்மித் என்ற படைத் தலைவர் கூடாரத்திலிருந்த உணவுப் பொருள்களையும் கால் நடைப் பந்திகளையும் அவன் கைப்பற்றிக் கொண்டான். இவற்றை மீட்க முயன்ற முகமதலியின் குதிரைப் படைகள் காக்கன் கரை என்னும் சிற்றூரருகே நடைபெற்ற போரில் நையப் புடைக்கப் பட்டன. இது கடந்து ஹைதர் கிருஷ்ணகிரிக் கோட்டையையும் கைப்பற்றினான். செங்கம் கணவாய்ப் போர்: 1767 (செப்டம்பர் 2) ஹைதரும் நிஜாமும் செங்கம் கணவாயில் நடைபெற்று போரில் ஒன்றுபட்டு நின்று போராடினர். படை முகவர் ஸ்மித்தின் பிரிட்டிஷ் படைகளுடன் முகமதலியின் படைகளும் சேர்ந்து கொண்டன. பிரிட்டிஷ் படைகள் திருச்சிராப் பள்ளியிலிருந்து வரும் லெப்டினன்ட் கர்னல் வொர்ஸ்டின் படைகளைத் திருவண்ணா மலையில் சென்று சந்திப்பதற்காக விரைந்து கொண்டிருந்தன. ஹைதர் அப் படைகளைத் தொடர்ந்து தொல்லை கொடுத்தான். செங்கம் கணவாய் அருகில் நடைபெற்ற முதல் தாக்குதலிலேயே நிஜாம் படைகள் சீர்குலைவுற்றோடின. இதன் பயனாக ஹைதர் படைகள் பெருந் தொல்லைக்கு ஆளாயின. பீரங்கிகளைக் களத்தில் விட்டுவிட்டே பின் நோக்க வேண்டி வந்தது. களத்தில் இவ்வாறு ஹைதர் தோல்வியுற்றாலும், வெற்றியின் பயனைப் பிரிட்டிஷ் படைகள் அடைய முடியவில்லை. இரவும் பகலும் ஹைதர் படைகள் அவர்களைத் தாக்கிப் பேரழிவு செய்தன. திருவண்ணாமலைப் போர்: 1767 (செப்டம்பர் 26) திருவண்ணாமலையில் நடைபெற்ற போரிலும் நிஜாம் தன் படைக் கலங்களைத் தன் அமைச்சனும் படைத் தலைவனுமான ருக்னுத் தௌலாவிடம் ஒப்படைத்து விட்டுக் களம்விட்டோடி னான். ஆனால், அதன்பின் ஹைதர் காட்டிய படைத் தலைமைத் திறமை பிரிட்டிஷார் அனைவரும் கண்டு மலைப்படையத்தக்க தாயிருந்தது. தென்னகம் கண்ட தலைசிறந்த படைத்தலைவன் என்று பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் அவனை வாயாரப் பாராட்டியுள்ளனர். போரில் கர்னூல் நவாப் ஒரு தோளில் படுகாயமுற்றான். நிஜாமின் பாரிய யானை களத்தில் மாண்டது. களத்தில் ஹைதர் வெற்றி நாட்ட முடியாவிட்டாலும் நிஜாம் ஓடியதால் ஏற்பட்ட போர்த் தோல்வியைத் தடுத்து நிறுத்திப் புகழ் நாட்டினான். இப்போரின் பின்னரே நிஜாம் பிரிட்டிஷாருடன் தனியாக மறை பேச்சுக்கள் தொடங்கினான். ஆனாலும் முன் பிரிட்டி ஷாரை ஏய்த்தது போலவே அவன் இன்னும் தான் கட்சி மாறியதாகக் காட்டிக் கொள்ளாமல் ஹைதரை ஏமாற்றி வந்தான். ஆம்பூர் முற்றுகை: 1767 (டிசம்பர் 6) ஹைதர் ஆம்பூரை முற்றுகையிட்டுக் கைப்பற்ற முயன்றான். ஆனால், இம்முயற்சி வெற்றி பெறவில்லை. வாணியம்பாடிப் போர்: 1767 (டிசம்பர் 8) ஹைதர் வாணியம்பாடிப் போரில் காட்டிய வீரசூரத் திறமைகள் முற்றிலும் வீணாயின. அவன் இறுதியில் பின்வாங்க நேர்ந்தது. இப்போரில் நிஜாம் ஒத்துழைக்கவில்லை. அவன் ஒளிவு மறைவின்றி நேரடியாகப் பிரிட்டிஷாருடன் 17 (பிப்ரவரி 23) -ல் உடன் படிக்கை செய்து கொண்டான். இதன்படி நிஜாம் ஆர்க் காட்டின் மீதுள்ள தன் பேருரிமையை விட்டுக் கொடுத்தான். அவன் உடல் பிறந்தாருள் ஒருவனாகிய சலாபத்ஜங் கைப்பற்றி யிருந்த குண்டூரை அவன் வாழ்நாளளவும் அவனிடமே விட்டு வைக்கவும் நிஜாம் இணங்கினான். மூலபாகல் போர்: 1768 (அக்டோபர் 4) ஹைதர், மூலபாகல் கோட்டையைப் பிடித்துக் கொண்டான். பிரிட்டிஷ் படைமுகவர் வொர்ஸ்ட் இந்நகரின் கோட்டையைத் திருப்பவும் கைப்பற்றிக் கொண்டு முன்னேறினான். ஆனால், இறுதியில் புதுப்படைகள் வந்திருப்பதாக ஒரு பிரிட்டிஷ் தலைவன் பாலனை காட்டியே ஹைதர் படைகளை ஏமாற்றினான். ஹைதர் எதிர் பாராத திடீர்த் தோல்வியின் பயனாக விழுந்தடித்து ஓட வேண்டியதாயிற்று. களப்போர்களில் சுழன்று ஹைதர் பிரிட்டிஷாரை மூர்க்கமாக எதிர்த்தும் சுழன்று சுழன்று தாக்கியும் பேரிடர்கள் தந்தான். போர்க்களங்களில் ஒரு சிலவற்றில் பெயரளவில் அவன் வெற்றியை எதிர்க்க விட்டுக் கொடுக்க நேர்ந்தாலும், இவற்றால் அவனுக்கு நேர்ந்த அழிவைவிடப் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்ட இன்னலே மிகுதியாயிருந்தது. பிரிட்டிஷார் ஹைதரை விட்டு விலகி ஹைதர் வென்றுகைக் கொண்டிருந்த சேலம், கிருஷ்ணகிரி, வேங்கடகிரி, மூலபாகல், கோவார், ஹோசூர் முதலியபகுதிகளை மீட்டனர். ஆனால், ஹைதர் இச்சமயம் பிரஞ்சு உதவி பெற்று ஈரோடு, கரூர்ப் பகுதிகளைப் புதிதாகக் கைக்கொண்டு, வட தமிழகம் முழுவதும் தன் புயல்வேகப் போர்க்களம் ஆக்கினான். அத்துடன் தன்படைகளின் பெரும் பகுதியை மகன் திப்புவுடனும் படைத் தலைவருடனும் மைசூருக்கே அனுப்பிவிட்டு, 6000 படை வீரருடன் இராப்பகலாக மின்னலாகத்தாவிச் சென்னை சாந்தோம் வரைப் பாய்ந்து சென்றான். கிலிகொண்டு நடு நடுங்கிய பிரிட்டிஷாருடன் அவன் 1769-ல் “சென்னை ஒப்பந்தம்” செய்துகொண்டான். இதன்படி இருதரப்பாரும் ஒருவருக்கு ஒருவர் காப்புப் போரிலும் தாக்குதல்களிலும் உதவ வேண்டுமென்ற முடிவு ஏற்றுக் கொள்ளப் பட்டது. போராட்டத்தின் முடிவு ஹைதருக்குப் பெரு வெற்றியாய் அமைந்தது. நிஜாம்: - மராத்தியர் போராட்டம்: சிங்குர்லிப் போர்: 1771 (மார்ச்சு 6) மராத்தியர் ஹைதர் ஆட்சியின் பல தடவை மைசூர் மீது படையெடுத்தனர். படைகள் கொள்ளைப் படைகளாதலாலும், மிகப் பெரியனவாயிருந்ததாலும் ஹைதர் அடிக்கடி அவர்களைக் குரங்குப் போர் முறைகளாலேயே சமாளித்தும், பல சமயம் பெரும் பொருள் கொடுத்தனுப்பியும் வந்தான். மைசூரின் அமைதிக்கும் அண்டை அயல் நாடுகளின் மக்கள் வாழ்வுக்குமே அவர்கள் பெருந் தொல்லையாய் இருந்தார்கள். 1771-ல் அவர்கள் மைசூர் மீதுபடை யெடுத்து வந்தனர். சென்னை உடன் படிக்கையின்படி ஹைதர் பிரிட்டிஷார் இச்சமயம் ஆர்க்காட்டு நவாப் முகமதலியின் கைப் பாவைகளாக இருந்தனர். அரசியல் நேர்மையை வீசியெறிந்து உடன் படிக்கையை மதியாதிருந்தனர். ஹைதர் தனித்து நின்றே மராத்தியர் அழிவுகளை ஏற்க வேண்டியதாயிற்று. மராத்தியர் மைசூர் முழுவதையும் தம் சூறையாட்டுக்கு ஆளாக்கினர். ஹைதர் பலதடவை போரிட்டும், அவர்கள் முற் போக்கைத் தடுக்க முடியவில்லை சீரங்கப் பட்டினத்துக்கு 11 கல் தொலைவிலுள்ள சிங்குர்லியில் நின்று ஹைதர் வீரப் போராற் றினான். தற்செயலாகப் பல இயற்கை நிகழ்ச்சிகள் ஹைதர் படைகளுக்கு இச்சமயம் தோல்விமேல் தோல்வி தந்தது. எதிரிகள் வீசிய வாணவெடி ஒன்று ஹைதரின் வெடி மருந்துப் பெட்டிகளில் வீழ்ந்து பேரார்ப்பரிப்புடன் வெடித்து அழிவு செய்தது. ஹைதரின் தமையன் மருமகனான லாலாமியான், நாராயணராவ் முதலிய படைத் தலைவர்களும், கருவூலக் காவலனான சீனிவாச ஜீவாஜி யும் போரில் கொலையுண்டனர். மீர் ரஜா அலிகான், அலிஜமான் கான், அப்துல் முகமது மிர்து ஆகிய புகழ்மிக்க படைத்தலைவர்கள் படுகாயமுற்றனர். ஹைதர் தன் உயிரைக் காத்துக் கொள்ளவே பல கல் தொலை ஓட வேண்டியதாயிற்று. ஆனால், அப்படியும் அவனிடம் பற்றுதல் கொண்ட வீரத் தலைவன் யாகின்கான் திறமையே ஹைதரை எதிரிகள் வேட்டையாடிப் பிடிக்காமல் தடுத்தது. இயல்பாக ஹைதர் போன்ற தோற்றம் யாகின்கானுக்கு வாய்த்திருந்தது. ஆனால், ஹைதருக்கு இல்லாத நீண்டதாடி அவனுக்கு உண்டு. இதுபற்றி ஹைதரும் பிறரும் அவனைக் கேலி செய்வதுண்டு. அவனும் ஹைதரிடம் அடிக்கடி குறும்பாகப் பேசுவான். “உங்களுக்கும் எனக்கும் என்ன வேற்றுமை, ஒரு தாடிதான்! தாடியை எடுத்துவிடத் துணிந்தால் நானும் மைசூரை ஆண்டுவிடுவேன்” என்பான். அவன் கேலிப்பேச்சு சிங்குர்லிப்போர் முடிவில் உண்மை யிலேயே மைசூர் அரசன் உயிரைக் காத்தது. அவன் தாடியை எடுத்துவிட்டு ஹைதராக நடித்துக் களத்தில் சுற்றித் திரிந்தான். மராத்தியர் அவனைப் பிடித்துச் சிறைப்படுத்தியதனால், ஹைதரே சிறைப்பட்டானென்று மகிழ்ந்திருந்தனர். மைசூர் அரசனுக்குரிய மதிப்பை எல்லாம் பெற்று யாகின் சிறையில் மகிழ்ந்திருந்தான். சிதறிய படையைத் திரட்டி மீண்டும் போர் தொடங்க இது ஹைதருக்கு வாய்ப்பளித்தது. தம் தவறுணர்ந்த மராத்தியர் வெட்க மடைந்து யாகினை விடுவித்தனர். 1772-ல் ஹைதருடன் மராத்தியர் இணக்க உடம்படிக்கை செய்து கொண்டு வெளியேறினர். மராத்தியர் படையெடுப்பால் ஏற்பட்ட குழப்பம் நீடிக்க வில்லை. அவர்கள் திரும்பிச் சென்றதே ஹைதர் சித்தலத் துருக்கம் (1772) ஹார்ப்பன ஹள்ளி (1772), மலபார் (1773), குடகு ஆகிய நாடுகளை வென்றான். 1776-ல் குத்தியைத் தாக்கி அதை ஆண்ட மராத்திய தலைவன் முராரிராவை வீழ்த்தினான். மைசூர்ப் பேரரசு இங்ஙனம் நாற்றிசையிலும் விரிவடைந்தது. சாவனூர்ப் போர்: 1776 ஹைதரின் குத்தி வெற்றி மீண்டும் மராத்தியர் படை யெடுப்புக்கு வழி வகுத்தது. அவர்கள் சாவனூர்வரை முன்னேறினர். ஆனால், ஹைதரின் படைத்தலைவன் முகமது அலி சாவனூர்ப் போரில் அவர்களை முறியடித்துத் துரத்தினான். ராரவிப் போர்: 1777 சாவனூர் வெற்றியால் வெகுண்டெழுந்த மராத்தியர் ஹரிபந்த் என்பவன் தலைமையில் கடல் போலகன்ற ஒரு பெரும் படையை அனுப்பினர், மற்றும் நிஜாமுடன் உடம்படிக்கை செய்து கொண்டு அவன் உதவியையும் வரவழைத்திருந்தனர். ஆனால், ஹைதர் முதலில் ஹரிபந்துடன் இருந்த துணைத் தலைவனான மானாஜி பாட்கேக்கு 6 இலட்சம் வெள்ளி வாக்களித்து அவனை வசப்படுத்தினான். நிஜாம் படைகள் வருவதற்குள் ராரவி என்னுமிடத்தில் ஹைதர் போர் தொடங்கினான். போர் நடுவிலேயே மானஜி பாட்கேயின் படைகள் களத்திலிருந்து விலகிச் சென்றதனால், மராத்தியப் படைக் கடல் கலவரமுற்றது. அந்நிலையில் ஹைதரின் தாக்குதல் அதை வெகுண்டோடச் செய்தது. மராத்தியப் படைப் பெருங்கடலே மறிந்தோடியது கேட்டு ராரவிக் களத்துக்கு மெல்ல வந்து கொண்டிருந்த நிஜாம் திரும்பிச் சென்றுவிட்டான். ஹைதர் அவன் நாட்டின் ஒரு பகுதியையும் கைப்பற்றி மீண்டான். இரண்டாம் மைசூர்ப் போராட்டம்: 1780 - 1782 ஹைதர் பிரிட்டிஷாருடன் எவ்வளவு நேசமாக நடக்க முயன்றும், பிரிட்டிஷார் முகமது அலியின் தூண்டுதலால் தொடர்ந்து பல பகைச் செயல்களில் முனைந்தனர். மராத்தியர் படையெடுப்பின் போது உதவாதது இதில் ஒன்று. பிரஞ்சுத் துறை முகமாகிய மாகியிலிருந்தே ஹைதர் தன் படைத் துறைகளுக்கு வேண்டிய குதிரைகளைப் பெற்று வந்தான். மாகியும் அவன் ஆட்சி எல்லைக் குள்ளேயே இருந்தது. ஆனால், பிரிட்டிஷார்அவன் இணக்கமின்றி அதைப் பிடித்தனர். இதனால் ஏற்பட்ட மனக் கசப்புகளை மாற்ற பிரிட்டிஷார் மறைத்திரு ஷ்வார்ட்ஸைத் தூதராக அனுப்பியிருந்தனர். ஆனால், இது பயன் படவில்லை. இச்சமயம் மராத்தியர் மேற்கிலும் கிழக்கிலும் இருவேறு சக்திகளாகப் பிரிவுற்றிருந்தனர். ஹைதர் இவ்விரு பிரிவினருடனும் நிஜாமுடனும் ஒன்றுபட்டு ஒரு நால்வர் நேச உடம்படிக்கை செய்து கொண்டான். பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்து துரத்து வது அவ்வுடம் படிக்கை யாளரின் நோக்கமாகக் குறிக்கப் பட்டது. ஹைதர் தமிழகப் பகுதிமீது படையெடுத்தான். அவன் மகன் திப்புவே படைகளின் தலைமை தாங்கி ஆரணி, திமிர், திருவத்தூர், கருங்குழி ஆகிய இடங்களை வென்று ஆர்க்காட்டை முற்றுகை யிட்டான். சர்ஹெக்டார் மன்ரோ இப்போராட்டத்தில் பிரிட்டிஷ் படை முதல்வனாயிருந்தான். பேரம்பாக்கம் போர் ஐ : 1780 (செப்டம்பர் 8 -9) மக்லியாட் பெருமகன், கர்னல் பிரேய்த் வெயிட், ஹார் போக் ஆகிய பிரிட்டிஷ் படைத் தலைவர்கள் காஞ்சிபுரத்தில் படைகளுடன் கூடார மிட்டிருந்தனர். 2863 வீரருடன் கர்னல் பெய்லி வடதிசையிலிருந்து புறப்பட்டுக் காஞ்சிபுரத்தை நோக்கி முன்னேறினான். வழியில் நெல்லூரைக் கைப்பற்றிக் கொண்டு சென்னையிலிருந்து 27 கல் தொலைவிலுள்ள கும்மிடிப் பூண்டியை அடைந்தான். அடுத்துள்ள ஆற்றில் வெள்ளம் வந்ததால் அவன் அதை மாதக் கணக்காகக் கடக்க முடியாமல் தடைபட்டிருக்க வேண்டியதாயிற்று. அதன் பின்னும் ஹைதர் அவர்களை ஓயாது துரத்தித் தொல்லைகளுக்கு உட்படுத்தினான். பேரம்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போரில் கர்னல் பெய்லியும் அவன் பிரிட்டிஷ் படை வீரரும் பெருந் தோல்வி கண்டனர். ஹைதரிடம் 5000 காலாள் வீரருள், 6000 குதிரை வீரரும், 12 சிறு பீரங்கிகளும், 6 பெரும் பீரங்கிகளும் இருந்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. பிரிட்டிஷ் படையில் 27 பணி முதல் வரும், 2600 தென்னக வீரரும், 6 பெரும் பீரங்கிகளும், 4 சிறு பீரங்கிகளும் இருந்தன. இப்போரில் பிரிட்டிஷார் படுதோல்வி கண்டனர். பீரங்கி, படைக்கலங்கள் யாவும் ஹைதர் வசமாயின. இறந்தவர் போகப் பெரும்பகுதி படை வீரரும் கர்னல் பெய்லியும் சிறைப் பட்டு ஹைதரால் தக்கோலம் சிறைக்கூடத்துக்கு அனுப்பப் பட்டனர். படுகாய முற்ற மக்களில் சிறைப்பட்ட பெய்லியும் ஒருவராயிருந்தார். இப்போர் ஹைதருக்கு வீரப்புகழ் தந்தது. பிரிட்டிஷார் படைத்துறை வரலாற்றில் இத்தோல்வி அவர்களுக்கு ஒரு நீண்ட நாள் கறையாய் இயங்கிற்று. பேரம்பாக்கம் போர் ஐஐ அல்லது புள்ளலூர்ப் போர் ஐஐ (ஆங்கில வரலாறுகளின்படி ) ஐ : 1780 (செப்டம்பர் 10) இப்போரில் பிரிட்டிஷ் படைமாமுதல்வன் ஜெனரல் மன்ரோ ஹைதர் படைகளின் முன் மாபெரும் தோல்வி கண்டான். படையில் துணைத் தலைவர் 86 பேர்களுள் 16 பேரே உயிருடன் தப்பினர். பிரிட்டிஷ் படைவீரர்களுடன் தலைவர் மன்ரோ ஓட்டமும் நடையு மாகச் சென்னைக்குக் கம்பி நீட்ட நேர்ந்தது. போகும் வேகத்தில் பீரங்கிகளைத் தூக்கிக் கொண்டு ஓட முடியாமல் அவற்றைச் செங்கற்பட்டு ஏரிக்குள் எறிந்து விட்டுச் சென்றனர். இப்போரில் ஹைதர் குண்டுகள் பட்ட தடங்கள் போர்க் களத்திலுள்ள பனைமரங்களில் இன்னும் உள்ளன என்று கூறப் படுகிறது. இதே சமயம் இரண்டரை மாத முற்றுகைக்குப் பின் ஹைதர் ஆர்க்காட்டைக் கைப்பற்றினான். முகமது அலிக்குப் பதிலாகத் திப்புவே ஹைதரால் ஆர்க்காட்டு நவாபாகப் பட்டம் சூட்டப் பட்டான். செஞ்சியில் ஹைதர்: 1780 (நவம்பர்) 90,000 வீரருடனும், புயின்மோரின் என்ற பிரஞ்சுப் படைத் தலைவருடனும், ஹைதர் இச்சமயம் செஞ்சியைத் தாக்கினான். கோட்டையைக் காக்கும்படி பிரிட்டிஷ் தலைவன் மக்காலே அனுப்பப் பட்டிருந்தான். கீழ்க் கோட்டை பிடிபட்ட பின்னும் அவன் இராசகிரிக் கோட்டை உச்சியில் சென்று போராடினான். ஆனால், இறுதியில் ஐரோப்பாவுக்கே தம்மை அனுப்பிவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவனும் இறுதியாக மீந்த படைவீரரும் சரணடைந்தனர். நேச உடம்படிக்கையை மதியாத பிரிட்டிஷார் பண்பு கேட்டிற்குத்தக்க பாடம் கற்பிக்கும்படி ஹைதர் அவர்களைச் சீரங்கப் பட்டினம் சிறைக் கூடத்திலேயே கிடந்து வதங்கும்படி செய்தான். போர் இறுதியிலேயே செஞ்சி மீண்டும் பிரிட்டிஷார் கைக்கு வந்தது. ஆனால், அதன் அருமையறியாத பிரிட்டிஷார் அதை 1803-ல் தகர்த்துத் தரை மட்டமாக்க எண்ணியிருந்ததாக அறிகிறோம். நல்ல காலமாக நாட்டு மக்கள் அச்சமயம் காட்டிய எதிர்ப்பு இத்திட்டத்தைத் தகர்த்தது. சிதம்பரம் போர்: 1781 (ஜூன் 18) ஹைதர் திருச்சிராப்பள்ளியை நீண்ட நாள் முற்றுகை யிட்டிருந்தான். திருச்சிராப்பள்ளியே அந்நாளில் தென் தமிழகத்தின் வாயில் கதவாயிருந்தது. அது கிட்டத் தட்ட விழும் நிலையை அடைந் திருந்தது. அதை ஹைதர் அன்று கைப் பற்றியிருந்தால், மைசூரின் வரலாறும், தென்னக வரலாறும் வேறு வகையாய் அமைந் திருக்கும். ஏனெனில் திருச்சிராப்பள்ளி கடந்து அன்று ஆர்க்காடடு நவாபின் கையோ பிரிட்டிஷ் வாணிக ஆட்சியாளர் ஆற்றலோ சென்றதில்லை. தென் தமிழகத்தின் பிடி அச்சமயம் ஹைதரை வெற்றிகரமான தேசியப்போர் தளபதி யாக்கியிருக்கும். ஆனால், சர் அயர்கூட்டை வென்றடக்கும் ஆர்வம் அவனைச் சிதம்பரத்துக்கு இட்டுச் சென்றது. சர் அயர் கூட்மூர்க்கமாகப் போர் ஆற்றினான். இப்போரில் கோயிலே கோட்டையாய் உதவிற்று. முதல் இரண்டு வாசல்களைப் பிரிட்டிஷார் கடந்தனர். ஆயினும், மூன்றாவது வாசல் கதவுமணல் குவியல்களால் பின்னால் வலுப்படுத்தப் பட்டிருந்தது. கூட்டின் படையில் ஏற்பட்ட வெடி விபத்து ஒன்று அவன் இரண்டாம் வாயிலில் அடைந்த தோல்வியைப் பெரிதாக்கி அவனைக் குலைந்தோடச் செய்தது. புத்தந்துறை (போர்ட்டோ நோவா) போர் : 1781 (ஜூலை1) புத்தந்துறையருகில் ஹைதர் எட்டுத்தடவை பிரிட்டிஷ் படைகளைத் தாக்கியும் இறுதியில் அவன் படைகள் கலைந்து வெருண்டோடின. தோல்வியை ஏற்கவிரும்பாமல் களத்திலேயே நின்ற வீரமன்னனை அவன் படைத்தலைவர்களே குதிரை ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டியதாயிற்று. இப்போரில் ஹைதரின் படையழிவு 10,000 க்கு மேற்பட்ட தென்று கூறப்படுகிறது. புள்ளலூர்ப் போர் ஐஐஐ (ஆங்கில வரலாற்றாசிரியர் கூற்றுப்படி ஐஐ: 1781 (ஆகஸ்டு 27) இப்போரில் பிரிட்டிஷாரிடம் வெள்ளையார், தென்னாட்டவர் உட்பட 11,000 வீரர் இருந்தனர் என்றும், ஹைதரிடம் 1,50,000 வீரரும் 80 பீரங்கிகளும் இருந்தன என்றும் கூறப்படுகிறது. தென்ன கத்தின் சிறந்த படைத்தலைவரான ஹைதரும், பிரிட்டனின் போர்ப் பயிற்சியும் திறமையுமிக்க படைத்தலைவரான கூட்டும் இதில் தம் திறமையெல்லாம் காட்டி ஒருவரை யொருவர் தாக்கினர். ஹைதர் வீரருள் 2000 பேருக்குமேல் மாண்டனர். அவன் களத்தில் தோல்வியுற நேர்ந்தது. சோளிங்கர்ப் போர்: 1781 (செம்டம்பர் 27) திப்புவின் வேலூர் முற்றுகையால் அவதியுற்ற பிரிட்டிஷ் தளபதி கர்னல் லாங் அவசர அவரசமாக வந்து உதவும்படி ஸர் அயல் கூட்டை வேண்டினான். கூட் வேலூரை நோக்கிப் புறப் பட்டான். ஆனால், சோளிங்கர்க் கணவாய் அருகே ஹைதர் புலி போல் பதுங்கியிருந்து தாக்கினான். படையணிகளில் ஹைதர் மையத்தையும், திப்பு இடது சிறுகையும் தலைமைவகித்து நடத்தினர். வலப்புறம் துப்பாக்கிப் படை வீரரைப் பீரஞ்சுப் படைத்தலைவன் லாலி நடத்தினான். மாலைவரைபோர் இருதிசையிலும் சாயாது நடைபெற்றது. ஆனால், மாலையில் ஹைதர் படைகள் காவேரிப் பாக்கத்தை நோக்கி விரைந்தோட நேர்ந்தது. இவ்வாண்டிலேயே வேலூர் முற்றுகை தகர்க்கப்பட்டு அந்நகரமும் பிரிட்டிஷார் கைப்பட்டது. ஹைதரின் மலபார்ப் போரில் வெற்றிப் புகழ்பெற்ற படைத் தலைவன் சர்தான்கான் இப்போரில் மாண்டான். அன்னகுடிப் போர் : 1782 (பிப்ரவரி 17 - 18) இப்போரில் ஹைதர் பெற்ற இளஞ்சிங்கமாகிய திப்புவின் கையில் பிரிட்டிஷார் தளபதி பிரெத்வெய்ட் சிறைப்பட்டான். இருபத்தாறுமணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற இப்போரில் பிரிட்டிஷ் படைகள் பெருஞ் சேதத்துடன் கலைந்தோடின. 20 படைத் தலைவர்களுள் பிரெய்த்வெய்ட் உட்பட 12 பேர் களத்தில் சிறைபட்டுச் சீரங்கபட்டினம் அனுப்பப் பட்டனர். போரில் படுகாய முற்றவர்களில் படைத்தலைவர் பிரெத் வெய்ட்டும் ஒருவர். ஹைதர் இப்போரின் பின் கூடலூரைக் கைப்பற்றினான். இதே சமயம் பிரிட்டிஷாருக்கும் பிரஞ்சுக்காரருக்கும் இப் போரின் ஒரு பகுதியாகவே பல கடற் போர்கள் நடை பெற்றன. இது போரின் போக்கைப் பாதிக்கவில்லை. ஏனெனில் இருபுறமும் சரிசம நிலையிலிருந்தன. ஆயினும் ஹைதருக்கு 2000 பிரஞ்சு வீரர்களிடம் படைத்துணை வந்தது. இச்சமயம் டச்சுக்காரருடனும் பிரிட்டிஷாருக்குப் போர் ஏற்பட்டது. ஆனால், இதன் பயனாகவே இலங்கையின் தலை சிறந்த கடற்படைத்தளமான திரிகோணமலை பிரிட்டிஷார் வசப் பட்டது. திரிகலூர்ப் போர்: 1782 (ஏப்ரல் 7) பிரிட்டிஷார் இச்சமயம் பம்பாயிலிருந்து படை வீரர்களை யனுப்ப மலபாரில் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டனர். ஹைதர் சயித்மக்தூமை அத் திசைக்கு அனுப்பினான். அவன் மலபார் வீரரைத் துச்சமாக மதித்து ஓர் ஆற்றோரமாக நின்று போரிட்டான். ஆனால், படுதோல்வியடைந்த வீரர் ஓடிய வேகத்தில் ஆற்றல் விழுந்து பெருந்தொகையாக உயிரிழந்தனர். புகழ் மிக்க படைத் தலைவனான மக்தூமையும் இப்போரில் ஹைதர் இழக்க நேர்ந்தது. தோபிகர்ப் போர்: 1782 (மே 31) ஹைதருடன் நால்வர் ஒப்பந்தத்தில் கலந்து கொண்டிருந்த மராத்தியரைப் பிரிட்டிஷார் ஹைதர்மீது ஏவினர். ஹைதர் போரைப் பிரிட்டிஷார் பக்கம் சிறிது தளர்த்திக் கொண்டு தோபிகரில் அவர்களைத் தாக்கி முறியடித்தான். ஆரணிப் போர்: 1782 (ஜூன் 2) ஹைதர் இப்போரில் பிரிட்டிஷாரை வேலூர் நோக்கித் துரத்தினான். நெடுங்கல் போர்: 1782 (ஜூன் 8) ஹைதர் 6000 குதிரை வீரருடன் மறைந்திருந்த படைத் தலைவர் கூட்டின் படைகளைத் தாக்கிப் பேரழிவுகளுக்கு ஆளாக் கினான். படைத்தலைவர்களுள் முக்கியமானவரான லெப்டி னண்டு குருயிட்சர் சிறைப்பட்டான். பணியானிப் போர்: 1782 (நவம்பர் 29) திப்பு மலபாருக்கு உடனே சென்று போர் செய்தான். தொடக்கத்தில் அவன் பிரிட்டிஷ் படைத்தலைவன் ஹம்பார்ட் டனைத் தோற்கடித்துப் பின் வாங்கச் செய்தான். ஆனால், பனியானிப் போரில் கர்னல் மக்லியோட், கர்னல் ஹமபார்ட்டன் ஆகிய இருவரும் அவனை முறியடித்தனர். ஹைதர் மறைவு: 1782 (டிசம்பர் 7) இச்சமயம் முதுகில் பிளவை நோயால் ஹைதர் போர்க் களத்தருகே திடீரென்று மாண்டான். இச்செய்தி எவருக்குமே தெரியாமல் ஹைதர் படை வீரர் மறைத்ததுடன், முடிவு தெரி வியாமலே திப்புவை அழைத்து வந்து பொறுப்பை ஒப்படைத் தனர். போர் தொடர்ந்து ஹைதர் நடத்தியது போலவே நடந்தது. பிரிட்டிஷாருக்குக் கூட மாதக்கணக்காக மாவீரன் ஹைதர் மறைவு தெரியாமலே இருந்தது. ஹைதர் படைத்தலைவர்களின் திறமையையும் ஹைதர் மீதும் அவன் அரசு மீதும் அவர்கள் வைத்திருந்த மாறாப் பற்றுறுதியையும் பெரிதும் விளக்க இதனினும் சிறந்த சான்று வேண்டா. ஹைதர் மாள்வுக்குச் சற்று முன்பே அவனை மதித்த, அவனால் மதிக்கப்பட்ட பெரும்படைத் தலைவன் சர் அயர் சுட்டும் மாண்டான். போரின் திரும்பு கட்டம்: 1782 சென்னை - பம்பாய் பிரிட்டிஷாரும், மராத்தியரும் சேர்ந்து போர் நடத்தியும் திப்பு ஹைதரை விடத் திறமையாகப் போரை நடத்தினான். பிரிட்டிஷார் கைப்பற்றியிருந்த பேடனூரை அவன் மீட்டான். ஆயினும் நாட்செல்லச் செல்ல கிழக்கு மேற்கு இரு திசைப் போராட்டம் கிழக்கு மேற்கு, வடக்கு தெற்கு என்ற நால் திசைப் போராட்டமாக அவனைச் சூழ்ந்தது. தெற்கே கர்னல்லாங் கரூர், அரவக் குறிச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களைக் கைப் பற்றினான். கர்னல் மாத்யூஸ் மேல்திசையில் மலபாரைப் பிடித்தடக்கினான். 1783-ல் கர்னல் புல்லார்ட்டன் தென்திசைத் தலைமை ஏற்று சீரங்கப் பட்டினத்தை முற்றுகை செய்யும்படி கூடலூரில் வந்து படை திரட்டினான். பெரிய பட்டினம் போர்: 1783 திப்பு மங்களூர் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் சமயம் கர்னல் புல்லார்ட்டன் பாலக்காட்டையும், கோயம்புத்தூரையும் கைவசப் படுத்திச் சீரங்கப்பட்டினத்தைத் தாக்க முற்பட்டான். அதே சமயம் மங்களூர் முற்றுகை நீட்டிப்பைப் பயன்படுத்திக் கொண்டு பேடனூர் அரசன் மைசூர்ப் படைகளை முறியடித்து ஓட்டி நாட்டைக் கைக்கொண்டான். சீரங்கப்பட்டினம் வீழ்ச்சியடையுமுன் பிரிட்டிஷார் திப்பு விடம் நேசஒப்பந்தம் செய்து கொண்டனர். படைத்தலைவர்கள் மைசூர் அரசையே அழிக்க விரும்பினாலும், மராத்திய, நிஜாம் அரசுகள் அதனால் மட்டுமீறி வளர்ந்துவிடக் கூடுமென்று அஞ்சி, அரசியல் தலைவர்கள் திப்புவின் முழுத் தோல்வியைத் தடுத்து நிறுத்தினர். ஒப்பந்தம் முடியுமுன் திப்பு மங்களூரைப் பிடித்துத் தன் மதிப்பை நாட்டினான். போரில் இறுதி வெற்றி தன் பக்கம் என்பதை அறிந்தே அவன் ஒப்பந்தத்தைக் கூடியமட்டும் கடத்தி வந்தானென்றும், பிரிட்டிஷாரின் வற்புறுத்தலுக்கு இணங்கியே நிஜாம், மராத்திய தூதர் முன்னிலையில் அருளிரக்கம் காட்டி அவர்கட்கு விட்டுக் கொடுத்தானென்றும் அறிகிறோம். பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் பிரிட்டிஷ் வெற்றி களையே பெருக்கி வந்தனர் என்பதையும், அவர்கள் போர்க் களத்தின் வீரவெற்றி யடையாமலே, பிரசாரத்தால் வெற்றி நாட்டுவதில் திறமை மிக்கவர்கள் என்பதையும் இது சுட்டிக் காட்டுகிறது. மங்களூர் ஒப்பந்தம்: 1784 (மார்ச்) ஒப்பந்தப்படி இருதிசையிலும் வென்ற இடங்கள் திருப்பித் தரப்பட்டன. திப்புவின் மைசூர் மராட்டியப் போராட்டம்: 1786 சாவனூர்ப் போர் ஐஐ : கண்டகிப்போர் 1786 மங்களூர் ஒப்பந்தப்படி குடகு தனியரசாகி யிருந்தது. ஆனால், திப்பு அதை வென்று கைக் கொண்டான். அதனுடன் நார்க்கண்டு, சித்தூர், தார்வார், அடோணி, பாதாமி ஆகியவற்றையும் கைப் பற்றி மராத்தியர் உள்நாட்டை நோக்கி முன்னேறினான். இரண்டாம் மைசூர்ப் போரில் உடன்படிக்கை மீறிய மராத்தியருக்கு இது தண்டனையாய் அமைந்தது. ஆனால், இதைத் தடுக்க நிஜாமுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்கள் முன்னேறி வந்தனர். சாவனூர்ப் போரிலும் கண்டகிப்போரிலும் நிஜாம் படை யுடன் மராத்தியர் திப்புவிடம் படுதோல்வியுற்றனர். களத்தில் எதிரியின் படைத் தளவாடங்களும் பொருட்குவையும் ஏராளமாகத் திப்புவின் கைப்பட்டன. 1782-ல் இருவருமே திப்புவுடன் நேச இணக்கம் செய்து கொண்டு பின்வாங்கிச் சென்றனர். மூன்றாவது மைசூர்ப் போராட்டம்: 1790 - 1792 ஹைதர் -திப்பு பிரிட்டிஷ் ஆட்சியாளரைச் சரிசம நிலையில் எதிர்த்துப் போராடும் சமயத்திலேயே, தென் தமிழகத்தில் வீரப் பாளைய மரபில் வந்த சிவகங்கை, பாஞ்சாலங்குறிச்சிப் பகுதியில் மக்கள் சக்தி அதற்கெதிராகக் குமுறிக் கொண்டிருந்தது. ஹைதர் பாளையக்காரரிடம் தென்திசைப் போராட்டத்தில் ஒரு தடவை தொடர்பு கொண்டும் அம் மக்கள் சக்தியின் வலிமையை உணர்ந்து கொள்ளத் தவறினான். திருச்சிராப்பள்ளி முற்றுகையைக் கைவிட்ட அவன் பெரும் பிழைக்கு இதுவே காரணம் ஆகும். தவிர, மைசூர் அரசைத் தென்னகத்தின் பேரரசாக்கிய பின்பே பிரிட்டிஷாரைத் துரத்த முடியும் என்று ஹைதர் கருதினான். ஆகவே அவன் முதல் எதிர்ப்பு பிரிட்டிஷாரின் ஏலமாட்டாக் கையாளும், அதே சமயம் அவர்களையே ஆட்டிப்படைத்த சூதாடியுமான முகமதலி மீதே சென்றிருந்தது. திப்பு தென் தமிழகத்தின் தேசிய உயிர் நிலையை நன்கு உணர்ந்திருந்தான். ஆனால், முகமதலியின் கை கடந்து தெற்கே செல்வதைவிட, மேல்கடலோரமாக வளைந்து செல்வது பெரும் பயன்தரும் என்று அவன் கருதினான். இது சிவாஜி கொண்ட கருத்தின் ஒரு தென்திசைப் பதிப்பு என்பதில் ஐயமில்லை. ஆனால், இருவரும் அதில் முழுவெற்றி காணவில்லை. சிவாஜி தமிழக வெற்றியைப் பயன்படுத்த உயிர்வாழவில்லை. திப்புவோ மேல் கடற்கரையில் மலபார் முழுவதையும் கொச்சியையும் வென்றபின் 1789-ல் திருவாங்கூர் மீது பலதடவை படையெடுத்தான். திரு வாங்கூர் அரசியல் வாழ்வே இதனால் கிடுகிடுத்தது. ஆனால், திருவாங்கூரின் வீரத்தளபதி இராமையன் தளவாய் பிரிட்டிஷ் உதவியுடன் அத்திசையில் திப்புவைத் தடுத்து நிறுத்தினான். அடிமைத் திருவாங்கூர் வாழ்வு இதனால் நீடித்தது -ஆனால், தென்னகத்தின் அடிமைத்தனமும் இதனாலேயே நீடிக்க நேர்ந்தது. பிரிட்டிஷார் 1790-ல் நிஜாமுடனும், மராத்தியருடனும் ஒப்பந்தம் செய்து கொண்டு போரில் இறங்கினர். சத்தியமங்கலம் போர்: 1790 (செப்டம்பர் 13) பிரிட்டிஷ் படைத்தலைவன் மீடோஸ் 1790 -ல் கரூர், அரசவக் குறிச்சி, தாராபுரம் ஆகிய பகுதிகளையும் திண்டுக் கல்லையும், கோயமுத்தூரையும் வென்று, திப்பு தென்திசை வராமல் தடுக்க முனைந்தான். ஆனால், அவன் தென்கிழக்கி லிருந்த மைசூர்த் தாயகத்துக்குள்ளும் புகுந்து தாக்கத் திட்டமிட்டிருந்தான். இது முடியவில்லை. ஏனெனில் அப்பகுதியிலிருந்த கஜ்ஜலஹத்திக் கணவாய் திப்புவின் அரண் வாயிலாய் அமைந்திருந்தது. அத்துடன் பவானியாற்றின் வடகரையில் சத்தியமங்கலத்தருகே நடந்த போரில் பிரிட்டிஷ் படைத் தலைவன் பிளாயிட், திப்புவுக்குமுன் தலைதெறித்தோடிக் கோயமுத்தூர் சென்று தஞ்சமடைந்தான். அரிகேராப் போர்: 1791 (மே 15) மைசூரைத் தாமே தனித்துநின்று எதிர்க்க முடியாதென்று சென்னை பிரிட்டிஷார் இச்சமயம் உணர்ந்தனர். இந்திய ஆட்சி முதல்வர் கார்ன்வாலிஸ் பெருமகனார் தாமே நேரடியாகச் சென்னைவந்து படைத்தலைமை ஏற்றார். அவர் ஆணைப்படி சென்னையிலிருந்து படைத்தலைவர் மீடோஸ் தென்புறமும், பம்பாயிலிருந்து படைத்தலைவர் ஆபர்காம்பி மேல் திசையில் மலபாரில் மறுபுறமும் தாக்கினர். வடக்கே பாதுகாப்பற்ற வட எல்லைகளைத் தாக்கும்படி மராத்தியரும் நிஜாமும் தூண்டப் பட்டனர். ஆட்சி முதல்வர் கார்ன்வாலிஸ் தாமே கீழ்த்திசைத் தாக்குதலை ஏற்று வேலூரில் வந்து பெரும் படை திரட்டினார். ஆம்பூர்க் கணவாய் வழியே மைசூரினுள் புகுந்து அவர் அரிகேராப் போரில் திப்புவை முறியடித்தார். இதன்பின் பல கோட்டைகளைப் பிடித்து, அவர் சீரங்கப்பட்டினத்தையே தாக்க முற்பட்டார். நாற்புறமும் படைசூழ்ந்த நிலையில் திப்பு பணிந்து ஒப் பந்தத்துக்கு இணங்கினான். திப்பு தன்பேரரசில் பாதியை விட்டுக் கொடுக்கும்படியும், போர்க்கடன் தீரும்வரை தன் இரு புதல்வரையும் பிரிட்டிஷாரிடம் பணையமாக விட்டு வைக்கும்படியும் வற்புறுத்தப் பட்டான். நிஜாமையும் மராத்தியரையும் நம்பமுடியாத நிலையிலேயே பிரிட்டிஷார் விரைந்து ஒப்பந்தத்துக்கு இணங்கினர். அவர்கள் படையழிவும் படைத்தளவாட அழிவும் இதனைப் பின்னும் ஊக்கின. பிரிட்டிஷாருக்கு இப்போர் வெற்றி மூலம் மலபார் ஆட்சி யும், குடகு அரசன்மீது மேலுரிமையும் கிட்டின. கர்டா அல்லது கர்ட்லாப் போர்: 1795 (மார்ச் 11) மராத்தியர் - நிஜாம் போராட்டம் கார்ன்வாலிஸுக்குப்பின் வந்த ஆட்சி முதல்வன் ஸர் ஜான்ஷோர் வாணிக ஆட்சியில் வாணிக ஆதாயம் தவிரப் போர் எதிலும் ஈடுபாடு கூடாது என்ற கொள்கையை உறுதிப் பிடியாகக் கொண்டிருந்தான், இதை உணர்ந்த மராட்டியர் படைத்திறம் அற்றவனாய், பிரிட்டிஷாரையே நம்பியிருந்த நிஜாம்மீது படை யெடுத்தார்கள். மராத்தியர் அச்சமயத்தில் பிளவுற்றிருந்தாலும், தில்லி முகலாயப் பேரரசரைக் கூடத் தம் கைப்பாவை யாக்குமளவு வலிமை பெற்றிருந்தனர். வடக்கே தில்லி வரை சிந்து கங்கை ஆறுகளுக்கு இடைப்பட்ட எல்லையிலும், மேற்கு கிழக்கு கட லெல்லையிலும் அவர்கள் ஆட்சி பரந்து தென்னாட்டை வட இந்தியாவிலிருந்து பிரிக்கும் எல்லையரசாய் அமைந்திருந்தது. இத்தகைய அரசின் பெரும்படையை எதிர்க்க அஞ்சி பிரிட்டிஷார் உதவியை கோரியும், சர்ஜான்ஷோர் மறுத்து விட்டான். நிஜாம் மனமொடிந்து பிரஞ்சுக்காரரை அணுகினான். ரேய்மண்ட் என்ற பிரஞ்சுப் படைத்தலைவன் அப்பொறுப்பை ஏற்றுப் படைகளைப் பயிற்றுவித்துக் களத்திலும் உதவினான். மராத்தியப் படைகள் நாடெங்கும் பரந்து கைப்பற்றிக் கர்டாவில் நிஜாமைச் சூழ்ந்தன. ஆனால், கர்டாப் போரில் ரேய்மண்டின் ஒப்பற்ற படைத்திறமை மராத்தியப் படைத் தலைவன் பரசுராம் பாவேயைக் கிட்டத்தட்டப் பின்னடையச் செய்தது. ஆயினும் பல பழங்கால அரசரைப் போலப் போர்க் களத்துக்கே தன் குடும்பஞ்சூழ வந்திருந்த நிஜாம், பெண்டிர் பாதுகாப்பைக் கருதிக் களம் விட்டோட விரும்பினான், ரேய்மண்டின் அறிவுரையை மீறி நிஜாம் அவனையே தனக்கும் தன் பெண்டிருக்கும் பாது காப்பாக உடன் கொண்டு ஓடினான். இப்போரில் நிஜாமிடம் 1,30,000 படைவீரரும், மராட்டி யரிடம், 1,10,000 படைவீரரும் இருந்ததாக அறிகிறோம். தோல்வியை வரவேற்றதற்கேற்ப, நிஜாம் மராத்தியருக்கு மூன்று இலட்சம் வருமானமுள்ள ஆட்சிப் பகுதியைவிட்டுக் கொடுத்ததுடன், தன் அமைச்சன் முன்ஹீர் உல்முல்கையே பிணைய மாகவும் அனுப்பி வைத்தான். ரேய்மண்டின் உதவிக்கு நிஜாம் அவனைப் பாராட்டி அவனுக் குக் கடப்பையைப் பரிசளிக்க முன்வந்தான். ஆனால், போரில் தாம் உதவாததனால் பிரஞ்சு ஆதிக்கம் வளரவிட்ட பிழை இப்போது பிரிட்டிஷாரை உறுத்திற்று. நிஜாமின் புதல்வன் அலிஜா இச்சமயம் பார்த்துக் கிளர்ச்சி தொடங்கினான். திப்பு அவனுக்கு உதவ வாக்களித்தான். நிஜாம் மீண்டும் பிரிட்டிஷாரையும், ரேய்மண்டையும் உதவிக்கழைத் தான். பிரிட்டிஷார் உதவியனுப்பினர். ஆனால், அது வந்து சேருமுன் மீண்டும் ரேய்மண்ட் உதவியால் நிஜாம் கிளர்ச்சியை அடக்கி விட்டான். ஆயினும் அச்சமயத்தை நழுவவிடாமல் பிரிட்டிஷார் நேச ஒப்பந்தம் செய்து சமயத்தில் உதவிய வீர ரேய்மண்டின் உரிமைப் பரிசையும் தட்டிப் பறித்தனர். நான்காம் மைசூர்ப் போராட்டம்: 1799 கீழ்த்திசையில் தென்னகத்தை ஒரு வலிமைவாய்ந்த பேர ரசாக்கக் கனவு கண்டவன் ஹைதர், ஆனால்; அது அவன் தொலை அரசியல் நோக்கமாக மட்டுமே இருந்தது. அவன் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. திப்பு அதே போராட்டத்தை ஆத்திரப் பட்டுப் பறைசாற்றினான். இதனால் விழிப்புற்ற பிரிட்டிஷ் அரசியல் விரைந்து அவனை அழித்துக் கீழ்த்திசையை உடனடியாகக் கைக் கொண்டு வளர எண்ணிற்று. மேற்கே அமெரிக்க குடியேற்றங்களின் மேலாட்சியைப் பிரிட்டன் இச்சமயம் இழந்ததும், ஸர் ஜான்ஷோர் வாணிகக் கோட்பாடு முறிவுற்றதும் இவ்வெண்ணத்தை வளர்த்தன. ஐரோப் பாவைத் தன் காலடியிலிட்டு ஆட்டிவந்த நெப்போலியன் எழுச்சி யும் கீழ்த்திசையில் அதே வகை ஆதிக்கத்தை நிறுவிவிடும் துடிப்பைப் பிரிட்டிஷாருக்குத் தந்தது. தென்னக அரசுகளின் ஏலாமடமைகளையும் பிற்போக்கு களையும் கண்ட திப்பு அரேபியா, காபூல், கான்ஸ்டாண்டி னோபிள் ஆகிய கீழ்த்திசை முஸ்லிம் ஆட்சியாளர்களுக்குத் தூதர் அனுப்பி அவர்கள் ஆதரவைப் பெறத் தொடங்கினான். அத்துடன் 1715-லிருந்து பிரஞ்சுக்காரர் கைவசமிருந்த மோரிஸ் தீவின் ஆட்சியாளருக்கும் தூதனுப்பி, பிரிட்டிஷ் கடற்படையை எதிர்க்க வல்ல ஒரு பெருங்கடற்படையை அனுப்பும்படியும், தனக்கு ஒரு கடற்படை அமைத்துத் தரும்படியும் முடங்கல் வரைந்தான். இந்நேரம் பிரஞ்சுப் புரட்சி கொழுத்துவிட்டு எரியத் தொடங்கி யிருந்த சமயம் ஆகும். புரட்சியார்வம் மேல்திசையில் நிரம்பிக் கிழ்த்திசையில் பிரஞ்சு ஆட்சியிடங்களிலும் வழிந் தோடத் தொடங் கியிருந்தது. ‘சமத்துவம், சகோதரத்துவம், சதந்திரம்’ என்ற குறிக்கோள்களும் சுதந்தரக் கொடியும் தாங்கிய புரட்சிக் கழகங்கள் உலகமெங்கும் அன்று பரவிவந்தன. இச்சூழ்நிலையில் ஒரு தென்னக வேந்தனே புரட்சியை ஆதரிக்க முன்வந்தான் என்ற மகிழ்ச்சியில், மோரீஸ் ஆட்சி முதல்வர் திப்புவின் முடங்கலின்படி ஒன்றை பிரான்சின் புரட்சி அரசியல் தலைவனான நெப்போலியனுக்கு அனுப்பி வைத்ததுடன், அதை மொழி பெயர்த்து அச்சிட்டு பிரஞ்சு உலகெங்கும் பரப்பினர். அத்துடன் பிரிட்டிஷ் கடற்படையை எதிர்க்கும் கடற்படை அவர்களிடமில்லாத நிலையில், மைசூரில் புரட்சி அரசியலை ஆதரித்த எவரும் போகலாம் என்ற விளம் பரமும் செய்தனர். இதன் பயனாக மைசூரில் ஒரு புரட்சிக் கழகம் திப்புவின் தலைமையிலேயே அமைந்தது. புரட்சி மரபின்படி பொது மனித உடையணிந்து தோழர் திப்புவாகப் பேரரசன் திப்பு ஊடாடினான். ஒரு புரட்சிப் படையும் சில கப்பல்களும் சித்தம் செய்யும் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் தொகை பற்றி ஆங்கில வரலாற்றாசிரியர்கள் கேலிக்கே உறுதியாயிற்று. இச்சமயம் எகிப்துமீது படையெடுத்துக் கெய்ரோவிலிருந்த நெப்போலியன் திப்புவுக்கு விரைந்து உதவுவதாக மறுமொழி எழுதியிருந்தான். ஆனால், இது திப்புவுக்குக் கிடைக்கவில்லை. பிரிட்டிஷார் அதனை இடையிலேயே கைப்பற்றியிருந்தனர். வரலாற்றாசிரியர் கேலி செய்தபடி பிரிட்டிஷ் ஆட்சி முதல் வரான வெல்லெஸ்லிக் கோமான் திப்புவின் ஏற்பாடுகளைக் கேலி செய்தமையவில்லை. அவன் போருக்கான பெரிய ஏற்பாடுகளில் ஆண்டுக்கணக்காக முனைந்தான். மைசூர் இச்சமயம் முந்திய போர்களாலேயே சிறகற்ற நிலை எய்தி இருந்தாலும், அதனை எதிர்க்கும் பொறுப்பை அவன் சென்னை மாகாண அரசியலுக்கு விடவில்லை. கீழத்திசையில் பிரிட்டிஷாரின் முழு மூலதளப் படைகளையும் திரட்டி, பிற அரசுகளையும் தன் பக்கம் கொண்டு வரப் பாடுபட்டான். பிரிட்டிஷார், நிஜாம், மராத்தியர் ஆகியோரால் 1790-ல் செய்யப்பட்ட முக்கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தான். மைசூர் வெற்றியின் பின் வென்ற பகுதிகளை மூவருக்கும் பங்கிட்டுத் தருவதாக அவர்களுக்கு ஆவல் தூண்டினான். தவிர, பேரளவில் பிரஞ்சுப் படைகள் வைத்திருந்த நிஜாமை வெல்லஸ்லி தான் புதிதாக வகுத்த ஏகாதிபத்திய அடிமைச் சங்கிலியில் (துணைமை நேசப் பாதுகப்பு முறை) முதல் காட்சி விலங்காக மாட்டி அந்த பிரஞ்சுப் படைகளை அனுப்பிவிடும்படி செய்தான். திப்புவை எதிர்க்க பிரிட்டிஷார் திரட்டிய படைகளும் பொது நிலைப் படைகளல்ல; படைத்தலைவர்களும் தென்னக வாணிகக் களங்களுக்குரியவரல்ல; உலகக் களங்கண்ட பிரிட்டனின் முதற் பெருந் தலைவர்கள் அதில் இடம் பெற்றனர். ஆட்சி முதல்வரின் உடன் பிறந்தான் ஆர்தர் வெல்லஸ்லி என்ற வெலிங்கடன் கோமகன் அந்நாளைய ஐரோப்பாவின் தலை சிறந்த படைத்தலைவன். பின்னாட்களில் நெப்போலியனை வென்ற வீரன் அவனே. அவன் நிஜாம் படைகளின் தலைமையில் கிழக்கிருந்து முன்னேறினான். தலைமையரசின் மாபெரும் படைகள் படைத்தலைவன் ஹாரிஸின் கீழ் வடகிழக்கிலிருந்து அணிவகுத்து முன்னேறின. மேற்கே பம்பாயிலிருந்து லெப்டினன்ட் ஜெனரல் ஸ்டியூவர்ட்டின் தலைமையில் அனுப்பப்பட்ட மற்றொருபடை மலபாரையும், குடகை யும் பக்கத் தளமாகக் கொண்டு மேல்திசையில் மைசூர் எல்லை புகுந்தது. படைத்தலைவன் ஹாரில் 21,000 படைவீரருடன் வேலூரி லிருந்து புறப்பட்டு ஆம்பூரில் 16,000 வீரரடங்கிய நிஜாம் படை களுடன் இணைந்து முன்னேறினான். இந்த நிஜாம் படைகளை நிஜாமின் அமைச்சனான மீர்ஆலன் பகாதூரே நடத்தினான். அவர்களுக்கு முன்பே ஒரு முன்னணிப் படையுடன் படைமுகவன் பிளாயட் முன்னேறிச் சென்றிருந்தான். சீரங்கப்பட்டினம் சிறையிலே யேயிருந்து அவதிப் பட்ட படைத்தலைவனின் பேயார்கூட்டை மீட்க ஒரு வெள்ளையர் படையையும் படைத்தலைவன் ஹாரில், ஆர்தர் வெல்லெஸ்லியுடன் அனுப்பினான். இத்தனை பெருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே ஆட்சி முதல்வன் வெல்லெஸ்லி திப்புவுக்குப் போர் அறிவிப்பு முடங்கல் அனுப்பத் துணிந்தான். அதில், எந்தவகையான கட்டுப் பாடுகளும், உறுதிகளும் இல்லாமலே சரணடைய வேண்டு மென்றும், அடையாவிடில் போர் என்றும் தீட்டியிருந்தான். பிளந்தாலும் வளையாத கற்பாறை போன்ற உறுதியுடைய வீரத்திப்பு, இவ்வாணவத்துக்கு முதலும் வட்டியுமாக ஆணவத் துடன் பதிலனுப்பிவிட்டுக் களம் கிளம்பினான். கால் முறிவுற்றுக் கிடக்கும் சிங்கக்குட்டியைச் சூழ்ந்த சிறு நரிகள், குறுநாய்கள்போல நாற்புறமும் அடர்ந்த பகைவரிடையே கலங்கா உறுதிகொண்ட திப்புவின் அந்நாளைய வீரசித்திரம் காண்டல் அரிதன்று -ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியாளரின் பிரசாரக ரான வரலாற்றாசிரியர் எப்படியோ சித்திரத்தைத் தந்து அது தெரியாது மறைக்கும் கோடுகளையும், கீற்றுகளையும் அதன் மீது நிறைத்துள்ளனர். சித்தேசுவரப் போர்: 1799 (மார்ச் 6) திப்பு, கீழ்த்திசைப் பேரெதிர்ப்பை அவ்வளவாகச் சட்டை செய்யவில்லை. முதலில் பின்னணி அரங்கத்தைச் சரிசெய்து காக்க விரும்பினான். ஆகவே, தன் அமைச்சன் பூரணய்யாவையும் படைத் தலைவன் சய்யிது சாகிபையும் 3000 குதிரை வீரருடனும் சில காலாட்படைகளுடனும் கீழ்த்திசையைப் பார்த்துக் கொள்ளும்படி விட்டுவிட்டு. மேற்கரங்கத்துக்கு விரைந்து தாவினான். தாக்குதல் எதிர்பாராது பின்னிருந்து நிகழ்ந்தாலும், அதை மலை முகட்டி லிருந்து பார்த்துக் கொண்டிருந்த குடகின் (அடிமை) அரசன் அதை பிரிட்டிஷாரிடம் கூறினான். திப்புவுடன் இத்தாக்குதலில் கலந்துகொண்ட படைத் தலை வர்கள் சய்யித் கபார், ஹுசேன் அலிகான், பந்தி நவாப் என்ற முகமத் ரஜா ஆகியோர் ஆவர். பிரிட்டிஷ் படைவீரர் இத்தாக்கு தலை உறுதியுடன் நெடுநேரம் சமாளித்தும் இறுதியில் தளர்வுறத் தொடங்கினர். ஆனால், அச்சமயம் படைமுகவர் ஸ்மித் துணைப் படைகளுடன் வந்ததால், திப்புவின் படைகள் இந்த மேற்கரங் கத்திலே சிதறியோடி பழையபடி கிழக்கரங்கம் நோக்க நேரிட்டது. மாண்டவரும் காயமுற்றவருமாக 1500 பேரைக்களத்தில் இழந்தவனாகத் திப்பு மீண்டான். மழவள்ளிப் போர்: 1799 (மார்ச் 27) மழவள்ளி, சீரங்கப்பட்டணத்துக்குக் கிழக்கேயுள்ள ஒரு கோட்டை, அதன் அருகே நடைபெற்ற போரில் திப்புவின் படைகள் படுதோல்வியடைந்தன. அவன் சீரங்கப்பட்டணம் கோட்டைக்குள் புகுந்து, அதன் பாதுகாப்பில் நின்று இறுதிப் போராடினான். சீரங்கப்பட்டணம் வீழ்ச்சி: 1799 (மே 4) சீரங்கப்பட்டணம் முற்றுகையில் படைவீரருடன் படை வீரனாக நின்று வீரப்போரிட்டு மைசூர் மன்னன் திப்பு புகழ் மாள் வெய்தினான். அவன் கடைசிப் போராட்டம் அந்நாளைய ஆங்கிலக் கலைஞனொருவனால் ஓவியமாகத் தீட்டப்பட்டு இறவாப் புகழுடன் இயங்குகின்றது. தென் தமிழகத் தேசிய எழுச்சி: 1750 -1834 இந்திய மாநிலத்திலே தென்னகமும் தமிழகமும் எந்த அளவுக்கு நிலச்சார்பான அயலவர் படையெடுப்புக்கும் பண்பாட்டுத் தாக்குதலுக்கும் ஒதுங்கி நீடித்த தேசிய வாழ்வு பெற்றுள்ளனவோ, அதே அளவு விசயநகர கால முதலே தென்னகத்திலும் தமிழகத் திலும் தென் தமிழகம் அதன் பகுதியாகிய தென்பாண்டிநாடும் திருவாங்கூரும் ஒதுங்கிய நீடித்த தேசிய வாழ்வுடையவையாகவே இருந்து வந்துள்ளன. அதே சமயம் இப்பகுதி உலகப் பண்பாட்டுக் கும் உலகத் தொடர்புக்கும் ஒதுங்கிவிடவில்லை. தென்கோடியில் இளையான்குடியருகே இருந்த உவரித் துறைமுகமே ஒஃவிர் என்ற பெயரால் நாலாயிர ஆண்டுகட்குமுன் எகிப்தியருக்குப் பொன்னும் அகிலும் மணப்பொருள்களும் அனுப்பிவந்த கீழ்த் திசையின் மிகப் பழமையான கடல் வாணிகக் களம் ஆகும். அராபியரும் தொடக்க காலக் கிருஸ்தவ, இஸ்லாமிய சமயத்தவரும், ஈழத்தவரும், கடாரத்தவரும், அணிமைக் காலத்திலே போர்ச்சுகீசியரும், டச்சுக்காரரும் இங்கே சமய நாகரிக, வாணிகத் தொடர்புகள் கொண்டிருந்தனர். ஆனால், வடதிசைத் தொடர்புகளைப் போல இவை இப்பகுதியின் தேசிய வாழ்வை ஒரு சிறிதும் குலைக்க வில்லை. ஏனெனில் இவை வடதிசைப் பண்படாத தேசியக் கலவையுடன் தொடர்பற்றவை. தென் தமிழகத்தின் தேசியப் புதுமலர்ச்சி, மைசூர் எழுச்சி கடந்து நீடித்துத் தழைத்ததாயினும், அது திப்புவுக்கு முன்னும், ஹைதருக்கு முன்னும் தொடங்கிவிட்டது என்னலாம். அது 1750- லிருந்தே திருநெல்வேலி மாவட்டத்தின் மேலைச்சீமையில் புலித்தேவர் தலைமையில் நெல்கட்டுஞ் செவ்வலில் முகிழ்த்து, மைசூர் ஆட்சியை ஹைதர் கைப்பற்று முன்பே அவனுடன் தொடர்பு நாடிற்று. பின் அவ்வெழுச்சி இராமநாதபுரத்தில் படர்ந்து, சிவகங்கையில் 1772 முதல் கொழுந்து விட்டெரிந்து, 1790-க்குப் பின் பாஞ்சாலங்குறிச்சியில் புயல்வேகத்தில் வீசி ஆர்ப்பரித் தெழுந்தது. அதன் இறுதிக் கொழுங்கனல் 19-ஆம் நூற்றாண்டின் முதலிரண்டு ஆண்டுகளில் பாஞ்சாலங்குறிச்சியையும் சிவகங்கையையும் உட்கொண்டு மீண்டும் தென் தமிழகமெங்கும் அழன்றெரிந்து புறமடங்கிற்று. ஆனால், தென் தமிழகத்தில் அடங்கிய தீ அடுத்த ஐம்பது ஆண்டுகளில் தென்னகமெங்கும் பரவி இந்திய மாநில மெங்கும் விடுதலைப் பேரியக்கங்களை வளர்த்தது. பிரிட்டிஷ் வாணிக ஆட்சியும் ஆர்க்காட்டு நவாப் ஆட்சியும் பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவுரை திருச்சிராப் பள்ளி கடந்து தென்திசை வரவில்லை. ஹைதர் திருச்சிராப் பள்ளியைக் கைப்பற்றி யிருந்தாலோ, அல்லது ஹைதரும் திப்புவும் தென்னகப் பாளையக்ககாரருக்குச் சரிசம அடிப்படையிலே தேசிய ஆதரவு தர முன்வந் திருந்தாலோ அது என்றும் தென் தமிழகத்திலும் படர்ந்திராது, கீழ்திசையிலும் நிலைத் திருக்காது என்றே கூறலாம். இப்பகுதிக்கு அத்தகைய தேசிய முக்கியத்துவம் உண்டு என்பதை இரு செய்திகள் சுட்டிக் காட்டுகின்றன. ஒன்று- பிரிட்டிஷாரே 1760 -ல் இப்பகுதியை பிடித்தடக்குவதைவிட, ஹைதருக்கெதிராக உதவ வேண்டுமென்ற கட்டுப்பாட்டுடன், டச்சுக்காரரிடம் பேரம் செய்து அவர்களுக்கே கொடுத்து விடலாமா என்று நினைத்திருந்தனர் என்பது, இச்சமயம் டச்சுக்காரருடன் போர் தொடங்கியதனாலேயே இந்த யோசனை கைவிடப்பட்டிருந்தது. இரண்டாவதாக, திருநெல்வேலிப் பாளையக் காரரும் மதுரைப் பாளையக் காரரும் ஒன்றுபட்டிருந்த சமயம் அவர்கள் ஒரு முடிவு செய்திருந்தனர். மதுரைவரை கைப்பற்றி விடுவித்துவிட்டால், அதன்பின் நாட்டைத் தம்மில் எவரும் கைக்கொள்ளாமல், பழைய மதுரைநாயகர் மரபினன் ஒருவனிடமே விட்டுவிடுவது என்று அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதுவும் வெற்றியுற நடைபெறவில்லை, ஆனால், முற்றுப் பெறாத இவ்விரு திட்டங்களுமே தென் தமிழகத்தின் தேசிய முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. கடல்கடந்த தென்னாட்டினரில் பெரும்பகுதியினர் இன்றள வும் மிகப் பெரும்பாலாக இம்மாவட்டங்களுக்குரியவர்களே, வ.உ. சிதம்பரனாரின் கப்பல் போராட்டத்தை நேரிடை யாகவும், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் விடுதலைப் போரைக் கடல் கடந்த தமிழக மூலமாகவும் ஊக்கிய சீமையும் இதுவே. மாநிலத் தேசியத்துக்கு வித்து நிலமாக இயங்கியதுடன் அதன் ஒவ்வொரு புது வளர்ச்சிக்கும் அது தூண்டுதல் நிலமாகவும் விளங்கிவந்துள்ளது வருகிறது. குமரி முனையில் குடிகொண்டுள்ள தமிழ்த் தெய்வமும், கடலுள் ஆழ்ந்துவிட்ட தொல் பழங்காலக் குமரி நாட்டின் தொடர்பும் இத்தென்பாண்டி நிலத்தின் உயிர்மூலத் தொடர்பைச் சுட்டிக் காட்டுவனவாயுள்ளன. பூலித்தேவர் போராட்டம்: 1750 - 1760 மதுரை நாயகமரபை அழித்து மதுரை திருச்சிராப்பள்ளிப் பகுதிகளைக் கைப்பற்றிய சந்தாசாகிபு மதுரை நகரில் தன் ஆளாக ஆலம்கான் என்பவனை அமர்வித்திருந்தான். அவன் 1752 -ல் திருச்சியில் முகமதலியை முற்றுகையிட முனைந்த சமயம், ஆலம் கானையும் துணைக்கு அழைத்திருந்தான். ஆலம்கான்மூன்று பட்டாணியரிடம் மதுரையாட்சியை ஒப்படைத்துவிட்டுச் சென்றான். சந்தாசாகிபு இப்போரிலேயே மாண்டதால், மதுரைப் பகுதி இப்பட்டாணியர் கையிலேயே நீடித்தது. போரில் வெற்றி பெற்ற ஆர்க்காட்டு நவாப் முகமதலியை (1749 - 1795) அவர்கள் பெயரள வில் மேலாளாக ஏற்றாலும், அவனுக்கெதிராகத் தென்திசையில் சூழ்ச்சிகளில் முனைந்து வந்தார்கள். பட்டாணியர் மூவரில் மூடேமியான் என்பவன் திருநெல் வேலிப்பகுதியில் தன்பிடியை வலுப்படுத்த முயன்றான். அந் நாளைய திருவாங்கூர் அரசன் மார்த்தாண்டவர்மனுக்குக் களக் காட்டுப் பகுதியை அளிப்பதாக வாக்களித்து அவன் ஆதரவையும் பெறப்பாடுபட்டான். 1751-லே முகமதலி தன் தம்பி அப்துல் ரஹிமைத் தென் தமிழகத்துக்கு அனுப்பி ஆட்சிக்கட்டுப்பாட்டையும், வரி வரு வாயையும் சீர்ப்படுத்தி வரும்படி ஏவினான். ஆனால், தென் தமிழகம் அன்று எவர் பிடிக்கும் எளிதில் மசியாத முரட்டுத் தமிழகமாய் இருந்தது. முகமதலி மீண்டும் தன் தமையன் மஃபூஸ் கானை 1755-ல் அனுப்பினான். அவனுடன் நவாபின் முழு உரிமை பெற்ற படைத்தலைவன் யூசுப்கானும் பிரிட்டிஷ் படைத் தலைவன் கர்னல் ஹீரானும் துணை வந்தனர். திருநெல்வேலி மாவட்டப் பகுதியிலுள்ள பாளையங்களில், மேல் சிறையில் நெல்கட்டுஞ் செவ்வலும் கீழ் சிறையில் பாஞ்சாலங் குறிச்சியுமே தலைமை நிலை பெற்றிருந்தன. நெல்கட்டும் செவ்வலின் தலைவர்கள் பூலித்தேவர் என்றும் பாஞ்சால குறிச்சித்தலைவர்கள் வீரபாண்டியக் கட்டப் பொம்மு என்றும் பட்டம் தாங்கியிருந்தனர். அந்நாளில் பாஞ்சாலங் குறிச்சியாண்ட தலைவன் விடுதலைப் போராற்றிய வீரகட்டப் பொம்மனின் பாட்டனாகிய பொல்லாப் பாண்டிய நாயகன் (1736 - 1760) என்னும் இரண்டாவது கட்ட பொம்மன் ஆவான். அவன் நவாபுக்குத் திறைதர ஏற்றுக் கொண்டு, நாட்டுப் பஞ்சநிலை விளக்கித் தவணை மட்டுமே கேட்டான். திறைகொடுக்கும்வரை சில முக்கிய பாளையத்து ஆட்களை யூசுப் பிணையாகக் கொண்டான். ஆனால், பாஞ்சைத் தலைவன் எதிர் பாராதபடி யூசுப் பிணையாட்களைத் திருச்சிராப்பள்ளிக்கே இட்டுச் சென்றான். யூசுப்கானால் பாளையங்களின் திறைப்பணமாக மிகுதி பிரிக்க முடியவில்லை. படைகளுக்குச் சம்பளம் தரவே பணமில்லாமல் படை வீரர் முணுமுணுத்து வந்தனர். இதற்கிடையே வட தமிழகத்தில் எழுந்த போர் காரணமாக, படையுடன் திருச்சிராப் பள்ளி வரும்படி அவனுக்கு அவசர அழைப்பும் வந்துவிட்டது. இவற்றையெல்லாம் உளவறிந்து வைத்துக் கொண்ட பூலித்தேவன் திறை சிறிதும் தரமறுத்து விட்டான். பூலித்தேவன் கோட்டையைத் தாக்குவதாக அச்சுறுத்தியும் அவன் அசையவில்லை. கோட்டையைத் தாக்குவதற்கு வேண்டிய பீரங்கிகள்கூட அவனிடம் இல்லை யென்பதைப் புலித்தேவன் அறிந்திருந்தான். தாக்குதல் தோல் வியுற்றபின் யூசுப் மதிப்பிழந்து திரும்பினான். பூலித்தேவன் இப்போது திருநெல்வேலிப் பாளையங்கள் அனைத்தையும் தன் பக்கமாகத் திரட்டி வரிகொடாப் போராட்டத் துக்குச் சித்தம் செய்தான். மதுரைப் பாளையக்காரர் கூட அவன் தலைமையிலுள்ள திருநெல்வேலிப் பாளையக் காரருள் சேர இணங்கினர். பாளையக்காரர் கூட்டுப்படையில் 1000 குதிரை வீரரும் 25,000 காலாள் வீரரும் திரண்டனர். இதில் சேராதிருந்தது பாஞ்சாலங்குறிச்சி மன்னன் பொல்லாப் பாண்டியன் இரண்டாம் கட்டப்பொம்மன் மட்டுமே . அவன் பிணையாட்கள் எதிரி வசம் இருந்தது. இதற்கு ஒரு காரணம் ஆனால், இது மட்டுமே காரண மன்று. அதன் பின்னோர்களைப் போலன்றி அவன் மனமார நவாப் மேலாட்சியின் ஆதரவாள னாகவே இருந்தான். 1756 -ல் திரும்பிவந்த யூசுப் கான் சில ஊர்களைப் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துடன் சேர்த்து அவன் ஆதரவைப் பெற்றான். ஆகவே அவ்வாண்டில் அவன் யூசுபுடன் சேர்ந்து திருநெல்வேலிக்கருகே ஒரு கல்தொலைவில் நடந்த ஒரு போரில் பூலித்தேவன் தலைமையில் கூடிய பாளையக் காரர் படைகளை முறியடிக்க உதவினான். அத்துடன் மதுரையை நவாப் ஆட்சிக்கு மீட்பதிலும் அவன் யூசுபுக்குப் பேருதவியாய் இருந்தான். ஆனால், இவ்வுதவிக்குப் பின்னும் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் திறை முழுதும் கொடுத்த பின்னரே, யூசுப்கான் பிணையாட்களை விடுவித்தான். பின்னாட்களில் பிரிட்டிஷ் ஆதரவாளராயிருந்த எட்டையபுர மரபினர்கூட இச்சமயம் திறைகொடுக்க முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பூலித்தேவன் களக்காட்டுப் பகுதியைத் திருவாங்கூர் அரசனுக்கு உறுதிப்படுத்துவதாகக் கூறி அவ்வரசனையும் தன் கூட்டில் சேர்க்க முயன்றான். ஆனால், யூசுப் அதனை அவனே கொள்ள விட்டதுடன், திருவாங்கூர் அரசன் பகைவருள் வடகரைப் பாளையக்காரனை வென்று துரத்தவும் உதவினான். வடகரைப் பாளையக்காரன் பூலித்தேவனிடமே அடைக்கலம் புகுந்தான். பூலித்தேவனின் கோட்டையான வாடாதேவ நல்லூரை இதன் பின் திருவாங்கூருடன் சேர்ந்து யூசுப் முற்றுகையிட்டும் அதில் வெற்றி பெறாமல் பின்னடைய நேர்ந்தது. ஆனால், 1766-ல் திருவாங்கூர் அரசன் களக்காட்டுப் பகுதியை நிலையாக நவாபுக்கே விட்டுக் கொடுக்க வேண்டி வந்தது. பூலித்தேவன் தலைமையில் பாளையக்காரர் வலிமை வியக்கத் தக்க முறையில் நீடித்து வளர்ந்தே வந்தது. மஃபூஸ்கானை அவர்கள் முற்றிலும் தம் வயப்படுத்தித் தம் கைப்பாவை ஆக்கியிருந்தனர். 1760 -ல் பொல்லாப் பாண்டியன் இரண்டாம் கட்டப் பொம்மனுக்குப் பின் பட்டத்துக்குவந்த பாஞ்சாலங் குறிச்சி மன்னன் ஜகவீர பாண்டியனான மூன்றாம் கட்ட பொம்மனும் (1760 - 1791) அவர்கள் பக்கமாக ஆதரவுதரத் தொடங்கினான். டச்சுக்காரர் பாளையக்காரருக்கு ஆதரவு தருவதாக வாக்களித் திருந்தனர். ஹைதர் தம் பக்கம் சேர்வதனால், முகமதலியையும் பிரிட்டிஷ் ஆட்சியையுமே தமிழகத்திலிருந்து துரத்த உதவுவதாகத் தகவல் அனுப்பிவந்தான். பிரஞ்சு ஆட்சித் தலைவன் டூயூப்ளே முகமதலியை நீக்கி மஃபூஸையே நவாபாக்க உதவுவதாகப் பூலித் தேவருக்கு எழுதினான். ஆனால், இந்த ஆதரவுரைகள் எவையும் நிறைவேற வில்லை. டச்சுக்காரர் விரைவில் தமிழகத்திலிருந்த தம் பிடியை மட்டு மன்றி, இலங்கையையும் பிரிட்டிஷார் கைக்கு மாற்றினர். ஹைதரும் திப்புவும் தென் தமிழகத்தை எட்ட முடியாது போயிற்று, பாளையக் காரர் பிரிட்டிஷாரை எதிர்ப்பதற்காகக் கூட இவ்வயலவர் எவர் கையிலும் பணிந்துவிட விரும்ப வில்லை. இவை தவிரத் தென்னகப் பாளையங்களின் தலைமை மெல்லப் பாஞ்சாலங் குறிச்சிப் பக்கமாக மாறிற்று; பாஞ்சாலங் குறிச்சி மன்னர் வெளியாதரவை எதிர்பாராமலே செஞ்சி மன்னன் தேசிங்கைப் போலவும், முதல் உலகப் போரில் பெல்ஜியத்தைப் போலவும் வலிமை வாய்ந்த எதிரியைத் தம் தனி வீரத்தாலேயே எதிர்த்துப் போரிட்டனர். சிவகங்கை எழுச்சி: 1772 - 1780 தென் தமிழகத்தேசிய எழுச்சி அரங்கத்தின் இரண்டாவது கட்டம் இராமநாதபுரத்துக்கும், சிவகங்கைக்கும் தற்காலிகமாக மாறிற்று. ஜகவீர பாண்டியன் மூன்றாம் கட்டபொம்மன் எதிரியாகச் செயலாற்றியதால் பிரிட்டிஷார் பாஞ்சாலங்குறிச்சியை மீண்டும் மீண்டும் தாக்கினர். சிவகிரிப் பாளையத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர். தாக்குதல்களின் பின்னும் அவர்கள் பணிய மறுக்கவே, இருவரையும் நாடு கடத்தினர். இராமநாதபுரம் சேதுபதி அவர் களுக்கு ஆதரவு கொடுத்திருந்தான். பாஞ்சாலங் குறிச்சியில் ஒரு புதிய பாளையக்காரனை நியமித்த போது, மக்கள் அவனை ஏற்க மறுத்தனர். மூன்றாம் கட்டபொம்மனும் திரும்பிவந்து பாளையத்தைக் கைக் கொண்டு, பிரிட்டிஷார் நியமித்த புதிய பாளையக் காரனைக் கொன்றான். இராமநாதபுரம் இத்தகைய ஆதரவு கொடுத்ததுடன் நிற்க வில்லை. அச் சீமை முழுவதிலும் அதனைச் சார்ந்த சிவகங்கைச் சீமையிலும் திறை பிரிக்க முடியாத நிலை இருந்து வந்தது. இதையுணர்ந்த நவாப் பிரிட்டிஷ் படையுடன் தன் படை ஒன்றையும் ஜோஸப் ஸ்மித் என்பவன் தலைமையில் இராமநாத புரம் அனுப் பினான். புதுக்கோட்டைத் தொண்டைமான் படைகளும் பிரிட்டி ஷாருக்கு, இந்நடவடிக்கைகளில் உதவின. 9 வயது சிறுவனா யிருந்த சேதுபதியையும் அவன் தாய் தங்கையரையும் சிறைப்படுத்தி விட்டு நவாப் இராமநாத புரத்தையே தென் தமிழகத்தின் தலை நகராக்கி நேரடியாகப் பாளையக்காரர் மீது ஆட்சி செலுத்தத் தொடங்கினான். நவாப் படையும், பிரிட்டிஷ் படையும், புதுக்கோட்டைப் படை உதவியுடன் இராமநாதபுரத்திலிருந்து சிவகங்கைக்கும் சென்று, அதன் தலைசிறந்த கோட்டையாகிய காளையார் கோயிலை முற்றுகையிட்டன. இப்போரில் சிவகங்கை மன்னன் முத்துவடுக நாதனும் (1750 - 1772) அவன் வீர மனைவி வேலு நாச்சியும் அவர்கள் அமைச்சரான மருதுத் துணைவர்களும் கடும் போரிட்டனர். மன்னன் முத்துவடுகநாதன் அப்போரிலேயே மாண்டான். மற்றவர்கள் நாடிழந்து ஓடி, அச்சமயம் திண்டுக்கலில் இருந்த ஹைதர் அலியிடம் அடைக்கலம் புகுந்தனர். நாட்டை அயலவர் ஆண்டாலும், மக்கள் உள்ளத்தில் அரசியும் மருதிவருமே ஆண்டனர். நவாப், பிரிட்டிஷார், புதுக்கோட்டைப் படைகளால் மக்கள் ஆதரவைப் பெறவும் முடியவில்லை, திறையும் திரட்ட முடியவில்லை. ஆகவே அவர்கள் அரசி வேலுநாச்சியையே வரவழைத்து 1780-ல் அவரிடமே நாட்டை ஒப்படைத்தனர். ஆனால், வேலுநாச்சியோ அதை மருதிவரிடம் ஒப்படைத்தார். மருதிருவர் நாடாள்வதை நவாபும் பிரிட்டிஷாரும் விரும்பாவிட்டாலும், வேறு வழியின்றி வாளாவிருந்தனர். திறை கொடாமலே மருதிருவர் நாட்டை அமைதியுடன் ஆண்டுவந்தனர். நவாபும் பிரிட்டிஷாரும் தம் முழுக் கவனத்தைத் தெற்கே பாஞ்சாலங் குறிச்சியில் செலுத்த வேண்டி யிருந்ததால், சிவகங்கைப் பக்கம் நெடுநாள் நாடவில்லை. பாஞ்சாலங் குறிச்சிப் புரட்சி: 1785 - 1801 : ஐ மன்னன் போராட்டம்: 1785 - 1798 பிரிட்டிஷார் 1781 -ல் நவாபிடமிருந்து நாட்டின் வரிவசூ லிப்பைத் தாமே நேரில் எடுத்துக் கொண்டு தென்தமிழகத்துக்கு ஒரு வரிமுதல்வனை (ஊடிடடநஉவடிச) நியமித்தனர். வரி முதல்வன் இர்வின் ஆலோசனையின் பேரில் 1783-ல் அவர்கள் பாஞ்சாலங் குறிச்சியைப் படையெடுத் தடக்கக் கர்னல் புல்லார்ட்டன் என்பவனை ஒரு பெரும் படையுடன் அனுப்பினர். மூன்றாம் கட்டபொம்மன் பணிந்து அவனை வரவேற்க இணங்காததனால், கோட்டை முற்றுகையிடப்பட்டது. பீரங்கிகள் ஒருநாள் முழுதும் குண்டுகள் வீசிக்கோட்டையைத் தகர்த்தன. எதிரிகள் இனி உள்ளே நுழைந்து விடுவர் என்று தெரிந்தபின், மன்னனும் படைவீரரும் முற்றுகைவீரர் தளர்ந்து உறங்கிய சமயம் வெளியேறிச் சிவகிரிக்குச் சென்று தஞ்சம் புகுந்தனர். சிவகிரியும் முற்றுகைக்கு ஆளாயிற்று. இப்போராட்டம் முடியுமுன் ஹைதரின் போர் நிலவரத்தை முன்னிட்டு, புல்லார்ட்டன் மீண்டும் வடக்கே அழைக்கப்பட்டான். ஆகவே விரைவில் திறை கொடுக்கும்படி பாளையக்காரரை அச்சுறுத்திவிட்டு அவன் திரும்பினான். இதன் பின் 1785-க்கும் 1890 -க்கும் இடையில் நவாப் மீண்டும் வரி வசூலைத் தானே எடுத்து நடத்த முயன்றதால், பாளையக் காரரின் பிடி மீண்டும் வலுத்தது. ஆனால், 1790- லிருந்து 1795 -க் குள்ளாகப் பிரிட்டிஷ் வாணிகக் கழகம் படிப்படியாக நவாபின் உரிமைகளை ஒதுக்கி வைத்து நாட்டாட்சியை நேரடியாகத் தன் கைக்குக் கொண்டு வந்தது. இதனிடையே மூன்றாம் கட்டபொம்மன் மாள்வுறவே, அவன் மூத்தபுதல்வன் கருத்தையா என்ற வீர பாண்டிய நான்காம் கட்ட பொம்மன் பட்டத்துக்கு வந்தான். அவனுக்குக் குமாரசுவாமி அல்லது சிவத்தையா, துரை சிங்கம் அல்லது ஊமைத்துரை என்ற இரு வீரமிக்க தம்பிமார் இருந்தார்கள். நான்காம் கட்டபொம்மன் அவன் தந்தையளவு பிரிட்டி ஷாரை வெறுக்கவில்லை. ஆனால், அவன் தன்மதிப்புணர்ச்சியும் பெருந் தன்மையும் உடையவன். அடிமைத் தனத்தையே அனை வரிடமும் விரும்பி எதிர்பார்த்த பிரிட்டிஷ் ஆட்சியாளருடன் இது காரணமாகவே அவன் தந்தையினும் மிகுதியாக முரண்பட நேர்ந்தது. இச்சமயம் சிவகிரியில் நடைபெற்ற ஓர் அரசியல் நிகழ்ச்சி இதனை வலியுறுத்திற்று, சிவகங்கைப் பாளையக்காரருக் கெதிராக அவர் புதல்வனும் மாப்பிள்ளை வன்னியர் என்று அழைக்கப்பட்ட அவர் மருமகனும், சங்கரலிங்கம் பிள்ளை என்ற செயலாளரும் கிளர்ந்தெழுந்தனர். பாளையக்காரனை ஆதரித்த பிரிட்டிஷ் படைத் தலைவன் கர்னல் மாக்ஸ்வெல் செயலாளரை நாடு கடத்தியும், கட்டபொம்மன் அவருக்கு ஆதரவளித்து, பாளையக்காரன் மகனையே மீண்டும் பதவியேற்றினான். படைத் தலைவர் கிளர்ந்தெழுந்து மகனைத் துரத்திவிட்டு மீண்டும் தந்தையையே பாளையக்காரனாக்கினர். செயலாளர் நாடு கடத்தப்பட்டுச் சுமத்ராத் தீவுக்கே அனுப்பி வைக்கப்பட்டார். 1797 -ல் இராமநாதபுரத்தில் பாளையக்காரர் பெருங் கலகம் செய்தனர். இதனை பிரிட்டிஷார் அரும்பாடுபட்டு அடக்கி தென் தமிழகத்தின் தலைமை அதிபதியாக அங்கே ஜாக்ஸன் என்ற வெள்ளையரை நியமித்தனர். இவன் தன்னைப் பேட்டி காணும்படி கட்டபொம்மனை அழைத்து விட்டு, அவனுக்குப் பேட்டியளிக் காமல் கடத்தினான். சொக்கப்பட்டி, சேற்றூர், சீவிலிப்புத்தூர், பேறையூர், பாவாலி, பள்ளிமடை, கமுதி ஆகிய இடங்களுக்கு அவனைச் சுற்றுவித்து அலைத்தான். அத்துடன் இராமநாதபுரத்தில் அவனுக்குப் பேட்டி யளித்தபோதும் அவனைச் சிறைப் பிடிக்க முனைந்தான். கட்டபொம்மனும் அவன் வீரத்துணைவரும் வீரமாகப் போரிட்டு வெளியேறித் தம் கோட்டைக்கு மீண்டனர். போராட்டத்தில் படைத் தலைவன் கிளார்க் வாளால் வெட்டுண்டு மாண்டான். கட்டப்பொம்மன் வீரர்களில் தலை சிறந்தவருள் ஒருவனான வெள்ளைத்தேவன் அல்லது பாதர் (பகதூர்) வெள்ளை இப் போராட்டத்தில் பெருஞ் செயல் வீரனாக விளங்கினான். பாஞ்சாலங்குறிச்சிச் செயலாளனான சுப்பிரமணிய பிள்ளை இச்சமயம் எதிரி கையில் பட்டு, திருச்சிராப்பள்ளிக்கு அனுப்பிக் காவலில் வைக்கப்பட்டான். பிரிட்டிஷார் இந்நிகழ்ச்சியில் ஜாக்ஸன் நடவடிக்கை மீதே குறைகண்டு அவனை நீக்கினார்கள். பாஞ்சாலங் குறிச்சிச் செயலாளன் சுப்பிரமணிய பிள்ளையும் விடுவிக்கப்பட்டான். ஆனால், அடுத்த தலைவன் லூஷிங்கடனும் கட்ட பொம்மன் பெருமிதப் பணியாகப் போக்கைக் கண்டு குமுறினான். மீண்டும் போர் மூண்டது. மேஜர் பாளர்மன் தலைமையில் ஒரு பெரும்படை 1798-ல் பாஞ்சாலங் குறிச்சியைத் தாக்கப் புறப்பட்டது. படை பாளையங் கோட்டை வரும்n பாதே கட்டபொம்மனுக்குச் செய்தி எட்டிற்று அவன் நள்ளிரவே எங்கும் போர் முரசம் அறைவித்தான். அதனால் அண்டை அயலிலுள்ளவர் களெல்லாம் திரண்டு வந்து கோட்டை முற்றுகைக்குச் சித்தமாயினர். ஆனால், திருச்செந்தூர் விசாக விழாவை முன்னிட்டுக் கட்டப்பொம்மனின் வீர இளவல்களான சிவத்தையா என்ற குமாரசாமியும், ஊமைத்துரை என்ற துரை சிங்கமும் சென்றிருந்தனர். அவர்களில் முன்னவன் மட்டுமே எப்படியோ செய்தி கேட்டு உட்கடந்து வந்திருந்தான். செயலாளன் சுப்பிரமணிய பிள்ளை இச்சமயம் சீவை குண்டத்துக்கு அருகிலுள்ள ஆற்றூரில் இருந்தான். ஆனால், அவன் இளவல் வீரபத்திர பிள்ளை கோட்டையிலேயே இருந்தான். கணக்கன் பொன்னப்ப பிள்ளையும் உடனிருந்தான். முற்றுகைப் படைக்கு லெப்டினண்ட் டல்லஸே தலைவனா யிருந்தான். காலன் துரை என்று தமிழ் ஏடுகளால் குறிக்கப் பட்ட படைத் தலைவன் காலின்ஸும் முற்றுகைப் படையில் இடம் பெற்றிருந்தான். இவர்கள் நீங்கலாக ஓரெய்லி, புரூஸ், டக்ளஸ், டார்மிக்ஸ், பிளேக், பிரௌன் முதலிய தலைவர்களும் கோட்டை யைச் சுற்றி ஒவ்வொரு பகுதியிலும் போராடினர். பீரங்கிகளால் கோட்டை தகர்க்கப்பட்டது, மண்கோட்டையானாலும் ‘தென் தமிழகத்தின் டிரபால்கர்’ என்று அழைக்கப்பட்ட இவ்வரண் ஒரு பகல் முழுதும் தாக்குதலுக்குள்ளான பின்பே கட்டுத் தளர்ந்தது. தெற்கு வாயிலைத் தகர்த்து உள்ளே நுழைய முயன்ற படைத் தலைவன் காலின்ஸைப் பாதர் வெள்ளை என்ற வெள்ளையத்தேவன் தன் ஈட்டியால் குத்தி ஊடுருவினான். இதனால் கோட்டை பிளவுற்ற பின்பும் எதிரிகள் உள்ளே புக முடியவில்லை. கோட்டையினுள் இருந்தவர்கள் தமிழகம் முன் என்றும் கண்டிராத வகையில் எதிரிகளின் உயிர்களைப் பலி வாங்கினர். ஆனால், அவர்கள் வீரரும் எண்ணற்றவர் இக்கோரப் போர்ப் புயலில் சாய்ந்தனர். பாஞ்சாலங் குறிச்சி வீரர் கோட்டையினுள்ளேயே இறுதிப் போரை நடத்துவதைவிட, காயம் பட்டவர் பெண்டு பிள்ளை களுடன் வெளியேறிச் சென்று நீடித்து இப்போர் நடத்த விரும்பினர். ஆகவே அவர்கள் இரவோடிரவாகத் தப்பியோடினர். மேஜர் பானர்மன் ஓடியவர்களைத் தேடிக் கண்டு பிடிக்க எங்கும் வீரர்களை அனுப்பினான். பாளையங்களுக்கும் அவரைக் கண்டு ஒப்பவிக்கும்படி கடிதங்கள் எழுதினார். ஆனால், எட்டய புரம் பாளையக்காரன் தானே இப்பொறுப்பை ஏற்பதாகத் தெரிவித்தான். அதன்மீது மேஜர் பானர்மன் அவனுடன் செய்து ஓடியவரைத் தேட உதவும்படி ஒருபடையை லெப்டினண்ட் உல்லாயிமேன் தலைமையில் அனுப்பி வைத்தான். மேஜர் பானர்மன் ஏற்கெனவே செயலாளரைச் சிறைப் பிடிக்க ஆள் அனுப்பியிருந்தான். அவர் அகப்படவில்லை. ஆனால், அவரி குடும்பத்தினர் சிறைப்படுத்தப் பட்டனர். எட்டயபுரப் பாளையக்காரன் கட்டபொம்மன் சென்ற இடம் உசாவிச் சென்று கோலார்ப் பட்டிக் கோட்டையில் அவனைக் கண்டு பிடித்தான். பிரிட்டிஷ் படைத் தலைவனுக்குத் தகவல் தெரிவித்தாலும் அவன் வரும்வரை காத்திராமல் அவர்களைக் கைப்பற்ற முயன்றான். ஆனால், கட்டப் பொம்மனும் அவனுடன் ஆறுபேரும் போரிட்ட வண்ணமே குதிரை ஏறித் தப்பியோடினர். மீந்திருந்த முப்பத்து நான்கு பேர் சிறைப் பட்டனர். இவர்களைப் பிரிட்டிஷ் படைத் தலைவன் விடுவிக்க உத்தரவிட்டான். ஆனால், அவர்களிடையே இருந்த செயலாளர் சுப்பிரமணிய பிள்ளையையும் அவன் உடன் பிறந்தானையும் மட்டும் தண்டனை செய்யும் எண்ணத்துடன் மீட்டும் காவலில் வைத்தான். கட்டபொம்மனுக்கு உடந்தையாகப் பாளையக்காரர் ஐவர் இருந்தனர். அவர்களே நாகலாபுரம் கோவார்பட்டி, ஏழாயிரம் பண்ணை, காடல்குடி, குளத்தூர் ஆகியவற்றுக் குரியவர்கள் இவர்களில் காடல்குடிப் பாளையக்காரன் தப்பியோடி விட்டான். மற்றவர்கள் சரணடைந்தனர். நாகலாபுரம் பண்ணையின் செயலாளனான சௌந்தர பாண்டியன் பிடிபட்டவுடன் அவனும் பாஞ்சாலங்குறிச்சிச் செயலாளனும் பாளையக்காரர்களைத் தூண்டிய முக்கிய குற்றவாளி என்று குற்றஞ்சாட்டப்பட்டுத் தூக்கிலிடப் பட்டார்கள். படைத் தலைவன் காலின்ஸைக் கொன்ற வெள்ளைத் தேவனைப் பிடித்துக் கொடுப்பவருக்கு 1000 வெள்ளி பரிசு தரப்படு மென்று அறிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளைத்தேவனின் மாமனே அச்சிறு பணத்துக்கு ஆசைப்பட்டு மருமகனைப் பிடித்துக் கொடுத் தான். மீண்டும் தப்பிவிட்ட கட்டபொம்மனைத் தேடும் முயற்சியில் பிரிட்டிஷார் புதுக்கோட்டை அரசனை ஊக்கியிருந்தனர். புதுக்கோட்டை யடுத்த கலியபுரத்தில் வந்து தங்கியிருந்த சமயம் அவன் அவர்களைப் பிடித்துக் கொடுத்தான். 1798 அக்டோபர் 16-ல் கயத்தாற்றில் எல்லாப் பாளை யக்காரர்களையும் வரவழைத்து அவர்கள் முன்னிலையில் படைத் தலைவன் ஒரு போலி விசாரணை நடத்திக் கட்டபொம்மனுக்குத் தண்டனை விதித்தான். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு அருகில் ஒரு புளிய மரத்தில் தமிழகத் தேசிய மாவீரன் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான். ஆனால், அவன் தூக்கிலிடப்படு முன்பே மேஜர் பானர்மன் பாளையக் காரர்களைத் தன்னிடம் பத்துநாள் வைத்துக் கொண்டு அவர்கள் ஆணையாலேயே அவர்கள் கோட்டைகளை இடித்துத் தரைமட்டமாக்கி யிருந்தான். அவர்களிடமுள்ள படைக் கலங்களனைத்தையும் கைப்பற்றியு மிருந்தான். தமிழகத்தில் கோட்டை கட்டுவதும் படைக்கலம் வைத்திருப்பதும் அதன் பின்னரே சட்டத்துக்குக்கு எதிரான செயலாக்கப்பட்டது. பாஞ்சாலங் குறிச்சிப் பாளையம் இப்போது எட்டய புரம், மணியாச்சி முதலிய பாளையங்களிடையே பங்கிடப்பட்டது. பழைய கணக்கு ஏடுகளில்கூடப் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயர் எடுக்கப் பட்டு விடும்படி உத்தரவிடப்பட்டதாக அறிகிறோம். பாஞ்சாலங் குறிச்சி என்ற பெயர் தமிழருக்கு ஒரு தேசிய மந்திரம் என்பதைப் பிரிட்டிஷார் அறிந்திருந்தனர் என்பதை இது காட்டுகிறது. பாஞ்சாலங்குறிச்சிப் புரட்சி 1785 - 1801 : ஐஐ தமிழக மக்கட் போராட்டம் 1081 (பிப்ரவரி 2 -மே 25) கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்னும் அவன் வீர இளவலர் சிவத்தையா என்ற குமாரசாமியும், துரைசிங்கம் என்ற ஊமைத்துரையும் வேறு பல பாளையக்காரரும் பாளையங் கோட்டைச் சிறையில் நீடித்து அடைக்கப்பட்டிருந்தனர். வெளியே எங்கும் அமைதி நிலவுவதாகக் காணப்பட்டாலும் மக்கள் உள்ளத் தின் ஆழ்தடங்களில் அவ்வீரக் கைதிகள் பதினாறு மாதங்களாக இடைவிடாத ஆட்சி செலுத்தினர். திடுமென ஒருநாள் ஆயிரக் கணக்கான மக்கள் வெளியிலிருந்தும் உள்ளேயிருந்தும் ஒரே சமயத்தில் சிறையைத் தாக்கி உடைத்தனர். ஆனால், அவர்கள் தம்மைச் சிறையிட்டவர்கள் மீது பழிகொள்ள விரும்பவில்லை, கலகம் செய்ய விரும்பவில்லை. அவர்கள் ஒரே ஆசை கோட்டைத் தடைச் சட்டத்தை மீறிப் பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டையை மீண்டும் கட்டிவிட வேண்டும் என்பதே. இதை அவர்கள் உலகம் வியக்கும் ஒரே அன்பு வீரச் செயலாக்கினர். நேரே பாஞ்சாலங் குறிச்சி சென்று ஆயிரக்கணக்கான கைகள் -பல்லாயிர மக்கள் உழைப்பும் பொருளும் சேர்த்து- இரண்டே வாரங்களில் முன்னிலும் பெரிய அழகிய கோட்டை ஒன்றைக் கட்டி முடித்தனர். அவர்கள் மீது படை யெடுத்துவந்த முதற் படைத்தலைவன் மக்காலே. இப்படையைப் புதிய கோட்டை வீரர்கள் வழியிலேயே பலவிடங்களில் தாக்கிப் பேரழிவு செய்தனர். மக்காலேயின் வீரர்கள் எதிர்பார்த்ததுபோலப் புதிய கோட்டையை எளிதில் பிடிக்க முடியவில்லை. அவர்கள் தப்பிச் செல்வதே பெரு முயற்சியாய்விட்டது. இரண்டாம் படை வருமுன் கோட்டை வீரர்கள் அருகிலிருந்த பிரிட்டிஷ் கோட்டைகள் பலவற்றைப் பிடித்தனர். தூத்துக்குடி நகரமும் அவர்கள் கைப்பட்டது. இச்சமயம் சிறைப்பட்ட பாகட் என்ற வெள்ளையரை அவர் மனைவியின் வேண்டு கோளுக்கிணங்கி ஊமைத்துரை விடுவித்தானென்று அறிகிறோம். கோட்டை முற்றுகையில் போதும், எதிரிகள் இறந்தவரை அடக்கம் செய்ய அனுமதி கேட்டபோது கோட்டை வீரர் அனுமதியளித்ததனுடன் அமையாது, தாமும் உடனிருந்து உதவினர்! இப்பெருந்தன்மை கண்ட பல வெள்ளையர் இத்தகைய வீரமும் பண்பும் இயைந்த இனத்தவர் மீது ஆட்சி செலுத்த வந்தோமே என்று வருந்தினராம்! இரண்டாவது தாக்குதலில் கோட்டையைப் பிளவுசெய்ய முன்னிலும் மிகுதி நேரம் பிடித்ததாக அறிகிறோம். மன்னர் ஆர அமரக் கட்டிய கோட்டையைவிட மக்கள் ஆர்வத்துடன் விரைந்து எழுப்பிய மாயக் கோட்டை வலுமிக்கதாகவே இருந்தது. இத்தடவையும் கோட்டை இனி நில்லாது என்று கண்டவுடன் உள்ளிருப்போர் வெளியேறிப் போராட்டம் நீட்டிக்கவே விரும்பினர். ஆனால், இத்தடவை தப்பிச் செல்ல வழியில்லை. எதிரிகள் முன்னிலையிலேயே, பீரங்சிகளின் குண்டு மாரியிடையேயும், துப்பாக்கி ஈட்டித் தாக்குதலிடையேயும் அவர்கள் வெளியேறினர். நடுவில் பெண்களையும் பிள்ளை களையும் காயம் பட்டவர் களையும் விட்டு முன்னும் பின்னும் இருபுறமும் வீரர் போரிட்ட வண்ணமே வெளியேறினர். வயிற்றில் ஒரு பிள்ளையும், அருகிலும் இடுப்பிலும் இரண்டு பிள்ளைகளுமாகத் தலையில் குலதெய்வத்தைக் கூடையில் சுமந்து கொண்டு ஊமைத்துரையின் மனையாட்டி சென்றாள்! அவர்கள் கோட்டைக்கருகில் ஒரு தடவையும், ஒரு கல் தொலைவில் ஒரு தடவையும் தாக்குதலுக்காளாயினர். இரண்டாவது தாக்குதலில் தப்பியோடியவர் சிலர் நீங்கலாக ஏனையோர் இறந்தும் காயமுற்றும் களத்தில் குவிந்து கிடந்தனர். பாளையத்து மக்கள் அப்பிணக்குவியல்களைப் புரட்டி இறந்தவர், காயம்பட்டவரிடையே தத்தம் கணவர், உடன் பிறந்தார், குழந்தைகளைத் தேடினர். அவர்களில் ஒருத்தி குற்றுயிருடன் கிடந்த தன் மகனைக் கண்டெடுத்துத் தூக்கிச் செல்ல முயன்றாள். ஆனால், உடல் அசையப்பெறாத நிலையிலிருந்த அந்த மகன் அருகே குற்றுயிராய்க்கிடந்த ஊமைத் துரையைச் சுட்டிக்காட்டி, அவனையே தூக்கும்படி கூறி மாண்டான். தாய், மகனை மாளவிட்டு அவனை மற்றப் பெண்டிர் உதவியுடன் வீட்டுக்கு இட்டுச் சென்று பண்டுவம் பார்த்தாள். போர்க்களங்களிலும் அயலிடங்களிலும் விடாமல் தம் இனத்தவர்களைத் தேடி அலைந்தனர், வெள்ளை எசமானர் களுக்காக உழைத்த எட்டையபரப் பாளையக்காரனின் வீரர்கள்! அவர்கள் வருவது கண்டு ஊமைத்துரையைக் காத்த பெண்டிர் கலங்கினர். ஆனால், அவர்கள் ஆர்வம் ஒரு வழிகண்டது. ஊமைத் துரையின் குற்றுயிரான உடலைத் துணியால் மூடி அழத் தொடங் கினர். வைசூரியால் இறந்த மகன் என்று வீரரிடம் கூறி அவர்களை விரைந்து ஓட வைத்தனர்.! கட்டபொம்மனுக்குப்பின் அரசனாக வேண்டிய அவர் மூத்த இளவல் சிவத்தையா குமாரசாமி இப்போர்க்களத்திலே மாண் டான். ஊமைத்துரையே மரபுரிமையாக வந்த போராட்டச் செல்வத்தின் பொறுப்பேற்றான். காயம் ஒரு சிறிது ஆறியதே அவன் மீண்டும் களம் விரைந்தான். மருது காவியம்: 1801 (மே 28 -அக்டோபர் 1) ஊமைத்துரை நேரே மருது வீரரிடம் சென்றான். புகழ் மாள் வின் தூதுவனாக, புகழ்த் தெய்வமாக வந்த அவனைப் புகழ் வீரர் இருகை அளாவி வரவேற்று அவனுடன் புகழ் மாளப் புறப்பட்டனர். போர்க்களம், திருநெல்வேலிச் சீமையிலிருந்து சிவகங்கைச் சீமைக்குமாறிற்று. அவர்களிடம் இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட போர்வீரர் இருந்தனர். பத்தொன்பதாண்டுகள் ஆண்டு, மக்கள் உள்ளத்திலே அவர்கள் தேசிய வாழ்வின் நல்லார்வம் பரப்பி யிருந்தனர். ஆகவே அவர்கள் போராட்டம் பாஞ்சாலங் குறிச்சிப் போராட்டத்துக்கே ஒரு மணிமகுடமாய் அமைந்தது. மண்டியிட்டு மாற்றார் உரிமையின் கீழ் நல்வாழ்வே வாழ்வதிலும், பாஞ்சைப் புகழ்ப் பயிரைச் சிவகெங்கையிலும் பன்மடங்கு வளம்பெறப் பெருக்குவதே வள்ளுவர் மரபுக்குரிய மாண்பெனக் கொண்டு அவர்கள் களம் பல சூழ்ந்து போராடினர். கமுதி - கானப் பேரெயில் என்ற பெயருடன் சங்ககாலப் புகழ்கண்ட காளையார் கோயில், சிறுவயல் ஆகிய வீரக்களங் களில் வெள்ளையருடன் வீறார்ந்து போரிட்ட வண்ணம் அவர்கள் தியாக உலா ஆற்றி, வீரத்தெய்வத்துக்குப் பலிகள் பல தந்து, இறுதியில் எதிரிகள் கைப்பட்டனர். மருதுத் துணைவர்கள் தாம் ஆண்ட நிலத்திலேயே திருப் பத்தூர்க் கோட்டையருகில் தூக்கிலிடப்பட்டனர். உலகாளப் பிறந்த ஊமைத்துரை பாஞ்சாலங் குறிச்சியின் புதிய கோட்டையைத் தகர்த்த பீரங்கிகள் வைக்கப்பட்டிருந்த மேட்டியிலேயே தூக்கிலிடப்பட்டான். தமிழகப் புண்ணிய பூமிகள் கட்டப்பொம்மனைத் தூக்கிலிட்ட புளியமரம் இப்போது இல்லை. வீரனை இழந்த வெப்புப் பொறாது அது பட்டழிந்து விட்டது. ஆனால், அவன் தூக்கிலிடப்பட்ட இடமும் ஊமைத் துரை தூக்கிலிடப்பட்ட இடமும் இன்றும் அடையாளமற்ற இடமாய் விடவில்லை. இருவர் மாண்ட இடத்திலும் கற்குவியல்கள் வளர்ந்து கொண்டே வருகின்றன. போவார் வருவார் எல்லாம் அவ்விடத்தில் ஒவ்வொரு கல்லிட்டு வருவதால் ஏற்படும் வளர்ச்சி இது. சிற்பிகளால் கட்டப்பட்டு வளராது ஓங்கிய தூபிகள் பிறருக்கு - மக்களே ஓயாது கட்டி வளர்த்து வரும் தூபிகளாக இவை அவர்கள் நினைவைத் தமிழகத்தில் வளர்க்கின்றன. இறந்தவர்க்கு வீரக்கல் எடுத்தனர் பழந்தமிழர் -கற்குவியல்கள் குவித்தனர். உலகின் முற்கால மக்கள் என்று அறிகிறோம். பாஞ்சாலங் குறிச்சிப் பழக்கம் தொல்பழங்கால மனிதனின் உள்ளத்தின், பழக்கத்தை மாறாப் பழக்கமாக, ஆனால், புதிய தேசியமாக வளர்த்துவருகிறது. செஞ்சி மன்னன் புகழ்பாடிய மக்கட் கவிஞர் பாஞ்சை வீரத் தையும் பாடியுள்ளனர்; ஆனால், முன்னது வீரப்பாடலாக மட்டும் இயன்றது - பின்னது தேசிய வீரப்பாடலாக, நாடகமாக - மக்களே நடிகராகவும் காட்சியாளராகவும் பாடப் பட்டு, நடிக்கப்பட்டு வருகின்றது. மைசூர், தென் தமிழக எழுச்சிகளின் தமிழகங் கடந்த தேசிய எதிரொலிகள்: 1801 - 1947 மைசூர் எழுச்சியும், தென் தமிழகப் புரட்சிப் போராட்டங் களும் வீண் போகவில்லை. அவற்றின் கால்வழி மரபுகள் பல. அவற்றை ஒரு சிறிதே நாம் இங்கே கட்டிக்காட்ட முடியும். ஏனெனில் தொலை அயலாட்சியாகிய பிரிட்டிஷ் ஆட்சியின் வரலாற்றாசிரியர்களும், அண்டை அயலாட்சியாகிய வடதிசை மாநிலத் தேசியத்தின் அரையிருளாட்சியும் அவற்றின் தடங்களை நெடுங்காலம் மூடியுள்ளன. தமிழகத்திலே பாஞ்சாலங் குறிச்சி மரபின் போராட்டத் திலும், மைசூர்ப் போராட்டத்திலும் நாட்டு வீரர்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் புதிய ஆளரசர் ஆக்கப்பட்டனர். அஞ்சி நடுங்கிய அடிமைகளும் ஒதுங்கியிருந்த தன்னலக் கும்பல்களும் புதிய ஆட்சி வகுப்பினராக வளர்க்கப்பட்டனர். அயலாட்சிப் பிரசாரமே பள்ளி கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில், கலைக்கூடங்களில், பத்திரிக்கைகளில் வரலாற்றுக் கல்வியா யிற்று; செய்தித் திரட்டுக்கள், கருத்துத் தொகுதிகள் ஆயின. ஆனால், இத்தனையும் கடந்து தென்னகத் தேசீய வாழ்வின் எதிரொலி பலதிசைகளிலும், தென்னகம் கடந்து இமயமும் கங்கையும் சிந்துவும் அளாவிப் பீறிட்டுத் தழைத்தது. 1806 (ஜூலை 10) வேலூரில் படை வீரர் கிளர்ச்சி செய்தனர். 600 படை வீரர் கிளர்ச்சிகளிடையே அடக்கு முறைகளுக்கு ஆளாகி உயிரிழந்தனர். 200 பேர் கிளர்ச்சிக் குற்றவாளிகளின் தலைவர்களாகத் தூக்கிலிடப்பட்டனர். அதே நாளில் சென்னையிலும் இதன் எதிரொலி கிளர்ச்சி களைத் தூண்டிற்று. இக்கிளர்ச்சிகளில் திப்புவின் உறவினர் பலர் ஈடுபட்டிருந் தனர். திப்புவின் கொடியே கிளர்ச்சிக் கொடியாய் இருந்தது. 1824 (நவம்பர்)அன்று பரக்பூரில் இதே போன்ற கிளர்ச்சி ஒன்று அடக்கப்பட்டது. 1834 (ஏப்ரல் 10)-ல் திப்புவுக்கு எதிராகப் பிரிட்டிஷாருக்கு உதவிய குடகு அரசன் மரபே அரசுரிமையிலிருந்து அகற்றப்பட்டது. 1835 (அக்டோபர் 8) -ல் பிரிட்டிஷ் தானாதிபதியான பிரே சரைக் கொலை செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு நவாப் ஷம்ஸுதீன் தூக்கிலிடப்பட்டான். 1850 (பிப்ரவரி 27)-ல் வடதிசையில் வங்க மாகாணத்தில் கிளர்ச்சி செய்ததற்காக 66-வது வங்கப் படைப்பிரிவு கலைக்கப் பட்டது. அதே ஆண்டில் (மார்ச் 20-ல்) வங்கப் படைத் தலைவன் ஹீலி அப்ரிதியரால் கொலையுண்டான். 1857 -ல் சிந்து கங்கைப் பெருவெளி முழுவதும் புரட்சி கிளர்ந் தெழுந்து பெரிய எரிமலையாக எரிந்து வெடித்தது. பிரிட்டிஷ் ஆட்சியையே ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் அளவில் இது கோரமாய் இருந்தது. ஆனால், 1858-க்குள் இது பெரும் போரிட்டு அடக்கப்பட்டது. தெற்கே பாஞ்சாலங் குறிச்சி மைசூர்ப் போராட்டங்களில் காட்டிக் கொடுத்தவர்களும் அதில் ஒதுங்கி யிருந்தவர்களுமே புதிய நாட்டரசரும் புதிய ஆட்சி வகுப்பினரும் ஆக்கப் பட்டது போல, வடதிசையிலும் புது மரபுகள் சூழப்பட்டன. இத்தனையையும் மீறிப் புரட்சிச் சங்கங்கள் எங்கும் கிளர்ந் தெழுந்தன. மாநிலத்தின் அடங்கிய தேசிய வெப்பத்தை வெளிக் கொணர்ந்து தணிக்கும் கருவியாகவே மாநிலத் தேசியக் கழக (ஐனேயைn சூயவiடியேட ஊடிபேசநளள) இயக்கத்துக்குத் தொடக்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர் ஆதரவு நல்கினர். ஆனால், அதன் நிழலிலேயே எங்கும் இருபதாம் நூற்றாண்டின் முதற்கால் பகுதி வரை புரட்சிக் குழுக்களும் கழகங்களும் நீடித்து ஆங்காங்கே உழைத்தன. ஆனால், 1907- லிருந்து 1932 -க்குள் மாநிலத் தேசியக் கழகமே அவற்றின் ஆற்றலின் பெரும் பகுதியைத் தனதாக்கி வளர்ந்தது. 1947-ல் அது பிரிட்டிஷாரின் அரசியல் பிடியை மாநிலத்தினின்றும் வெளியேற்றிற்று. முடிவுரை மாநிலத் தேசிய இயக்கத்துக்குள் இயக்கமாக மூன்று தனிச் சத்திகளும் அதற்கருகாமையிலேயே வேறு இரு சக்திகளும் தோன்றியுள்ளன. அவற்றின் ஆற்றல் வருங்கால மாநிலத் தேசியத்துக்கும், தமிழக, தென்னகத் தேசீயங்களுக்கும் வழி காட்டிகள் ஆகும். மாநிலத் தேசியத்தைப் புரட்சிகரமாகத் திருப்பியவர் களில் தலைசிறந்தவர் வ.உ.சிதம்பரானாரேயாவர். அவர் தோற்றுவித்த கப்பல் போராட்ட இயக்கமும், தொழிலாளர் இயக்கமும் வருங் காலத் தமிழகத் தேசியத்தை உருவாக்கும் விடியல் ஒளிகள் ஆகும். தென்னாடு தந்த அறிவுச் செல்வம் எஸ் சீனிவாச ஐயங் காரும், வங்கம் தந்த வீரச் சிங்கம் சுபாஷ் போஸும், தன்னாண்மையும் தன்னுரிமையும் தற்காப்பும் மிக்க ஓர் ஆசியத் தேசியத்தைக் கனவு கண்டனர். சுபாஷ் போஸ் அதற்காகக் கடல் கடந்த தமிழகத்தையே திரட்டிப் பிரிட்டனை எதிர்த்துப் போராடினார். இவ்விருவர் குறிக்கோளையும் நோக்கி வருங்காலத் தமிழகமும் மாநிலமும் கீழ்த்திசையும் தன்னாண்மை யுடன் முன்னேற வேண்டும். இம் மூன்றினுக்கும் வெளியே சமுதாய சமத்துவம், தொழில் மகத்துவம், மொழித் தேசீய வாழ்வு, தற்பண்பு ஆகியவற்றைப் பேணும் தன் மதிப்பியக்கம் வாழ்க்கை யோடியைந்த இலக்கியப் பண்பார்த்த மறுமலர்ச்சி இயக்கம், தற்பண்பு சான்ற தனித் தமிழி யக்கம் ஆகியவை வளர வேண்டும். மனித இனத்துக்குள்ளேயே பகைவரைக் காணும் புறப் போர்ப் பண்பு நீக்கித் - தமிழகம் உலகில் அகப்பகைப் பண்புகளை எதிர்க்கும் அறிவுப் போர் முறைகளை வகுத்து முன்னேற்றம் காண வேண்டும். அப்பாத்துரையம் - 17 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) ஆய்வுகள் தென்னாட்டுப் போர்க்களங்கள் -2 ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 17 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+272 = 288 விலை : 360/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 288  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் 1. வீழ்ச்சியும் மீட்சியும் ... 3 2. தேசிய வாழ்வும் புது மலர்ச்சியும் ... 197 குறிப்பு: தென்னாட்டுப் போர்க்களங்கள் எனும் இந்நூலை 2003இல் பூம்புகார் பதிப்பகம் ஒரே நூலாக 11 உள்தலைப்புகளாக (544 பக்கம்) வெளியிட்டுள்ளது. இதனை முதல் தொகுதியில் ஒன்பது தலைப்பு களாகவும், இரண்டாம் தொகுதியில் இரண்டு தலைப்புகளாகவும் படிப்போர் நலன் கருதி வெளியிட்டுள்ளோம்.