அப்பாத்துரையம் - 6 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) வரலாறு  சுபாசு சந்திர போசு  கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 6 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 20+284 = 304 விலை : 380/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 304 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலையிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் சுhhசு சந்திர போசு 1. முன்னணி வீரர் ... 3 2. இளமையும் கல்வியும் ... 7 3. நாடும் நாட்டியக்கமும் ... 15 4. அரசியல் பணி ஈடுபாடு ... 20 5. குடியேற்ற நாட்டுரிமையா? முழுநிறை விடுதலையா? ... 28 6. தியாக வாழ்வும் வெளிநாட்டுப் பயணங்களும் ... 37 7. வெளிநாட்டுப் பயணங்கள் ... 43 8. காங்கிரஸ் தலைமையும் தலைமைப் போட்டியும் ... 52 9. தேசிய முன்னணி இயக்கமும் மாய மறைவும் ... 62 10. வெளிநாடுகளில் புரட்சி இயக்கம் ... 69 11. தலைவர் பெருந்தகை வாழ்க்கையின் படிப்பினைகள் ... 84 நேதாஜியின் வீர உரைகள் ... 92 1. புரட்சியை வளர்ப்பது? ... 93 2. தற்காலிக சர்க்கார் பிரகடனம் ... 101 3. ஆம்; இந்தியா அளிக்கும்! ... 108 4. இழந்த உயிர் திரும்புமா? ... 112 5. இரத்தம் கொடு! சுதந்திரம் இதோ! ... 120 6. காந்திஜிக்குக் காணிக்கை! ... 124 7. ஐரோப்பாவைப் பாருங்கள்! ... 140 8. கற்றுக் கொண்ட பாடம்! ... 152 கன்னட நாட்டின் போர்வால் ஐதரலி 1. விடுதலைப் பாறை ... 161 2. காலமும் களனும் ... 166 3. குடி மரபு ... 173 4. தென்னக அரசியல் அமளி ... 179 5. புகழ் ஏணி ... 187 6. குடிலன் வீழ்ச்சி ... 197 7. வெற்றிப் பாதை ... 205 8. ஆங்கிலேயருடன் போர் ... 215 9. புலியின் பதுங்கலும் பாய்தலும் ... 225 10. விடுதலைப் போராட்டம் ... 235 11. மன்னவன் மாண்பும் ஆட்சியும் மாட்சியும் ... 244 சுபாசு சந்திர போசு முதற் பதிப்பு - 1949 இந்நூல் 2003 இல் கலைவாணன் பதிப்பகம், சென்னை - 88 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1 . முன்னணி வீரர் “பெருந்தகைத் தலைவர் நேத்தாஜி” இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய வீரர் எண்ணற்றவர். இந்திய மக்களுக்கு வழிகாட்டிய தலைவர்க்கு அவர்களை விடுதலை நோக்கி நடத்திச் சென்ற தளபதிகளும் பலர். தலைவர் பெருந்தகை சுபாஷ் சந்திரபோஸ் அவ்வீரர்களுள் ஓர் ஒப்பற்ற வீரர்; அத்தலைவர்களுள்ளும் தளபதிகளுள்ளும் முன்னணியில் வைத்தெண்ணத் தக்க தலைமைத் தளபதி. இந்தியா உள்ளளவும் அவர் புகழை மக்கள் என்றும் மறக்க முடியாது. இதனை உணர்ந்தே இந்தியப் பெருமக்கள் தலைவர் களிடையேயும் அவரைச் சிறப்பித்துத் தலைவர் பெருந்தகை நேதாஜி என்று அழைத்தனர். ‘தோன்றில் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவர் வாய் மொழிக்கு இலக்கான வாழ்வு உடையவர் தலைவர் பெருந்தகை போஸ். அவர் புகழ் அவர் பிறந்த தேசமாகிய இந்திய மாநில மெங்கும் நிரப்பி, ஆசியா கண்டமெங்கும் பரவி, உலகிலேயே பேரொளி வீசியுள்ளது. போஸ் முன்வைத்த காலைப் பின்வையாத வெற்றி வீரர். தோல்வி என்பது இன்னது என்பதையே, அச்சம் என்பது இன்னது என்பதையோ அவர் அறியமாட்டாதவர். நெப்போலியன் என்ற ஃபிரஞ்சு நாட்டுப் பெருவீரர் தம் அகராதியில் செயற்கரியது என்ற சொல்லே கிடையாது என்றாராம்! இந்தியாவின் நெப்போலியனான போஸ் வாழ்க்கை அகராதியிலும் அச்சொல் இடம் பெறவில்லையெனலாம். ஒப்பற்ற தியாகி போஸின் வாழ்க்கை இடையூறுகளும் இன்னல்களும் நிறைந்தது. உலகின் மிகப்பெரிய வல்லரசு ஆன பிரிட்டிஷ் ஆட்சி தன் முழு வலிமையுடன் அவரை அடக்கப் பார்த்தது. தீவிர வாதியும் வணங்காமுடி மன்னருமான அவரை, நாட்டின் பிற்போக்குச் சக்திகளும் மிதவாத சக்திகளும் எப்பக்கத்திலும் நின்று தாக்கின. ஆனால் அவர் அவை எவற்றிற்கும் சளைக்க வில்லை. அவர் ஓர் ஒப்பற்ற தியாகி; நாட்டு நலனையும் விடுதலையையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர். ஆகவே உடல் நலிவு, சிறைவாழ்வு, நாடுகடத்தல், தடியடி முதலிய எல்லாத் துன்பங்களையும் அவர் வரவேற்றார். அவர் தம் நாட்டின் உயர்வுக்காகவே ஒவ்வொரு வினாடியையும் செலவிட்டார். அவரது ஒவ்வொரு மூச்சும் நாட்டின் மூச்சாகவே இருந்தது. ‘என்பும் பிறர்க்கு உரிய’ராய்த் ‘தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்’ அவர். காந்தியடிகளும் போஸ் பெருந்தகையும் நீண்டகால அடிமைத் தளையில் வாடி நின்ற இந்திரியடையே பிறந்து, உலகுக்கு இந்தியாவின் பெருமையை எடுத்துக் காட்டியவர் காந்தியடிகள். அதுபோலவே இந்தியாவின் வீரத்தையும் தன் மதிப்பையும் பாரறிய நிலை நாட்டியவர் போஸ் பெருந்தகை. இந்திய பிடி வெளி நாட்டாரிலிருந்து 1947 ஆகஸ்டு 15-இல் விடுதலை பெற்றது. அதுவரை இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்நாடு பிரிட்டிஷார் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. 1858-இல் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் எழுந்தது. இதில் இந்தியர் அரிய பெரிய வீரச் செயல்கள் புரிந்தனர். ஆயினும் இறுதியில் அவர்கள் முறிவுற்றனர். “முன்னணி”வீரர் அதன் பின் 1885-இல் இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிற்று. நெடுநாளாக அரசியல் சீர்திருத்தம் கோரிய இப் பேரவை இயக்கம் பின்னால் தீவிரக் கிளர்ச்சியாகக் குமுறிற்று. அத்தீவிரப் புயலிலும் அதி தீவிரமாக முன்னேறிச் சென்று முன்னணியில் நின்று போராடியவர் போஸ். அவர் இந்தியாவில் ஏற்படுத்திய தீவிரக் கட்சிக்குத் தேசீய முன்னணிக் கட்சி எனப் பெயரமைந்தது பொருத்தமேயாகுமன்றோ? இருபோர் வீரர் : போஸும், வ.உ.சி.யும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளரை எதிர்த்து இயக்கங்களை நடத்தியவர் பலர். ஆனால், அவ் ஆட்சியை நேரடியாக எதிர்க்கத் துணிந்தவர் இருவரே. இவர்களுள் காலத்தால் முந்தியவர் ‘கப்பலோட்டிய தமிழர்’ என்று விதந்து கூறப்படும் வ.உ.சிதம்பரனார். மற்றவர் கிழக்காசியாவிலிருந்து கொண்டு இந்தியாவின் வீரக்கொடியை வானளாவப் பறக்கவிட்ட வீரர் சுபாஷ் போஸ். வ.உ.சி. பிரிட்டிஷார் கப்பல் தொழிலையும் கடல் வாணிகத்தையும் எதிர்ப்பதன் மூலம் ஆட்சியை எதிர்க்க முனைந்தார். ஆனால் போஸ் தரைப்படையும், கடற்படையும் விமானப்படையும் திரட்டிப் பிரிட்டிஷாரைப் போர்க்களத்திலேயே எதிர்த்த மாவீரர். உலகின் முதல்தர வல்லரசுகளுக்குத் தாக்குப் பிடித்த பிரிட்டிஷ் பேரரசு அவர் தாக்குதலால் அசைவுற்றது. அவர் வீர வெற்றி கண்டு உலகம் வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டது. ‘செயற்கரிய செய்த பெரியார்’ என அவரைப் பாராட்டியது. போஸின் வாழ்க்கை இந்தியாவுக்குப் பொதுவாகவும் அவரை ஈன்ற வங்க நாட்டிற்குச் சிறப்பாகவும் பெருமைதர வல்லது. வ.உ.சி.யின் வீரத்தால் தமிழகம் ஒளி பெறுவது போல, போஸ் வீரத்தால் வங்கம் புகழொளி வீசுகிறது. ஆனால் வங்கத்திற்கு அடுத்தபடி போஸ் வெற்றியில் தமிழகம் பெருமை கொள்ளத்தகும். ஏனெனில் போஸின் விடுதலைப் படையான இந்திய தேசிய ராணுவத்தில் பெரும்பாலராகச் சேர்ந்து உழைத்தவர்களும் அதற்குப் பெரும் பொருளுதவி செய்தவர் களும் தமிழர்களே. இந்திய விடுதலைப் போர்களும் தமிழகமும் வட நாட்டில் 1858-இல் முதல் விடுதலைப் போராட்டம் எழுவதற்கு நெடுநாள் முன்னரே. தமிழகம் வெள்ளையராட்சியை எதிர்த்துப் பாஞ்சாலங்குறிச்சியில் மறப்போராற்றிப் பெருமை யுற்றது. அதனுடன் இந்தியாவுக்கு வெளியேயுள்ள பிறநாட்டு இந்தியரின் பெரும்பான்மைத் தொகையினராய் இருப்பவர்கள் தமிழரேயாதலால், காந்தியடிகளின் தென் ஆப்பிரிக்க அறப்போரிலும் சுபாஷின் தேசியப் போரிலும் தமிழரே பெரும்பாலராக உடல் பொருள் ஆவி ஈந்து புகழ் நாட்ட நேர்ந்தது. இவ்வகைகளால் இந்தியாவின் விடுதலை இயக்கத்திலும் காந்தியடிகள் போஸ் பெருந்தகை ஆகியவர்கள் புகழிலும் தமிழகம் பெருந் தொடர்பு கொண்டுள்ளது. இது தமிழராகிய நமக்கு மிகவும் பெருமை தருவதேயாகும். போஸின் போராட்டத்தில் மட்டுமின்றி அவர் அரசியல் வாழ்விலும் தமிழகம் அவருடன் நல்ல தொடர்பு உடையது, 1938-இல் அவர் இரண்டாவது தடவையாக காங்கிரஸ் பேரவைக்குத் தலைவராய் நின்றபோது தமிழகம் அவரையே பெரும்பான்மை யாக ஆதரித்தது. போஸுக்குத் தலைமைப் பதவி அளிக்கப் பெரிதும் காரணமாயிருந்த அதே தமிழகமே, அவர் விடுதலைப் போராட்டத்திலும் பேருதவியளித்தது என்பது அருஞ்சிறப்பே யன்றோ? இளைஞர்களின் இலட்சிய வீரர் இந்திய இளைஞர் தலைவரான போஸின் வரலாறு தமிழ் இளைஞர்களுக்கு வீரமும் நாட்டார்வமும் தியாக உணர்வும் ஊட்டவல்லது என்பதில் ஐயமில்லை. அவர் வீர வரலாறு உண்மையில் ஒரு விடுதலைப் பெருங்காப்பியமேயாகும். அவர் அஞ்சா நெஞ்சமும் துணிபும் தன்னல மறுப்பும் எந் நாட்டவர்க்கும் படிப்பினைகளாகத் தக்க பண்புகள் ஆகும். 2. இளமையும் கல்வியும் வங்க நாட்டின் புகழ் மரபு காவிரியாற்றினால் வளம் பெற்றுள்ளது சோழ நாடு. அது போலக் கங்கையாற்றினால் வண்மை பெற்றது வங்கநாடு. நீர் நில வளங்களிலும் மக்கள் வாழ்க்கைப் பண்பிலும் இக்கங்கை நாடு காவிரி நாட்டுடன் மிகவும் ஒப்புமை உடையது. கலையும் கவிதையும் அறிவுச் செல்வமும் காவிரி நீரில் விளைவதாகச் சொல்வதுண்டு. அதுபோலவே இக்கங்கை நீரிலும் அவை விளைகின்றன எனலாம். பண்டை நாளிலேயே புத்தர், மகாவீரர் ஆகியவர்களின் சமயப் பரப்புக்கும் சந்திரகுப்தர், அசோகர் முதலிய பேரரசர்களின் ஆட்சிக்கும் நிலைக்களமாயிருந்தது வங்கநாடு. நாலந்தா, விக்ரமசிலா முதலிய பண்டைப் பல்கலைக்கழகங்கள் தழைத்ததும் இம்மாநிலத்திலேயே. தமிழகத்தில் இராமானுஜர் தோற்றுவித்த வைணவப் பேரியக்கத்திற்கு வடநாட்டில் புத்துயிர் கொடுத்த பெரியார் சைதன்னியர் இந்நாட்டவரே. 19-ஆம் நூற்றாண்டில் சமூக, சமய, அரசியல் சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டிய புதிய இந்தியாவின் முதல் தந்தையரான இராஜாராம் மோகன்ராயர், மகரிஷி தேவேந்திரநாத் தாகூர், கேசப் சந்திரசேனர் முதலியவர்கள் வங்கத்திலேயே பிரம சமாஜ இயக்கம் கண்டனர். அவர்களையடுத்து இந்தியாவின் சமயப் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டிய இராமகிருஷ்ணரும் விவேகானந்த அடிகளும் வங்கத்தின் எல்லை கடந்து இந்தியாவிலும் உலகிலும் தம் புகழ் வீசினர். கலையுலகில் வங்க இலக்கியத்தை உலக இலக்கியமாக உதவிய இரவீந்திரநாத் தாகூர், பங்கிம் சந்திரர், அறிவியல் துறையில் இந்தியாவுக்குப் பெருமை தந்த ஜகதீச சந்திரபோஸ், பிரபுல்ல சந்திரரே (பி.ஸி.ரே). அரசியல் கிளர்ச்சியில் இந்தியாவைத் தட்டியெழுப்பிய பின் சந்திரபோஸ், சித்தரஞ்சனதாஸ் ஆகிய ஈடும் எடுப்பும் அற்ற மாணிக்கங்கள் வங்க மரபில் வந்த வளங்கள் ஆகும். இத்தகைய பல்வகை வண்மைகள் நிறைந்த நாட்டுக்கும் போஸ் ஒரு பெரு விளக்கம் தந்தனர் எனில் அவர் பெருமையை என்னென்று கூறுவது. தாய் தந்தையர், குடும்பம் போஸ் மரபுரிமையால் வங்கத்தினராயினும் அவர் பிறந்த நாடு வங்கமன்று; வங்க நாட்டை அடுத்துத் தென்பாலுள்ள கலிங்கநாடு. இது ஒரிசா என்றும் உத்கலம் என்றும் இன்று வழங்குகிறது. இதன் தலைநகரான கட்டாக்கில் போஸ் குடும்பத்தினர் நீண்ட நாளாக வாழ்ந்து வந்தனர். போஸின் தந்தையாரான ஜானகிநாத போஸ் இந்நகரில் அரசாங்க வழக்கறிஞராக (ஞரடெiஉ ஞசடிளநஉரவடிச) அலுவல் பார்த்து வந்தார். அதனுடன் அவர் அந்த நகரில் நகரவைத் தலைவராகவும் அம்மாவட்டத்தின் தலைவராகவும் அமர்வு பெற்று நாட்டுப் பணியிலும் ஈடுபட்டு வாழ்ந்தார். போஸின் அன்னையாரான பிரபாவதி அம்மையார் எளிய பழக்க வழக்கங்களும் ஆழ்ந்த சமயப் பற்றும் உடையவர். போஸின் நேர்மைக்கும் கொள்கையுறுதிக்கும் அவர் அன்னையாரின் பயிற்சியே பெரிதும் காரணமாயிருந்தது என்று கூறப்படுகிறது. பிறப்பும் உடன் பிறப்பும் சுபாஷ் சந்திர போஸ் 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் நாளில் பிறந்தார். அவருடன் பிறந்த ஆண்கள் அறுவர்; பெண்கள் ஐவர். பிற்காலத்தில் இவர்கள் அனைவருமே தந்தையைப் போல் நாட்டின் உயர்பணிகளில் ஈடுபட்டுப் பெருமையுற்றனர். அவர்களுள் போஸின் தமையனாரான சரத்சந்திர போஸ் சுபாஷுடன் பல வகைகளில் நெருங்கிய தொடர்புடையவர். இருவரும் தம் வாழ்க்கைத் தொடக்கத்திலிருந்தே நெருங்கிய அன்பும் ஒத்துழைப்பும் உடையவராயிருந்தனர். எனவே போஸின் நாட்டார்வத்திலும் நாட்டுப் பணியிலும் சரத்சந்திரர், போஸின் ஒரு நிழல்போல அவர் இணைபிரியாத் தோழராக விளங்கினார். வாழ்விலும் தாழ்விலும், இளமையிலும் முதுமையிலும் ஒரே நிலையில் மாறுபாடில்லாமல் துலக்கமுற்ற அவர்கள் ஒற்றுமை, உடன்பிறப்புரிமைக்கு ஒரு கலங்கரை விளக்கமெனலாம். தெய்வக் குழந்தை சுபாஷ் வனப்பான தோற்றமுடையவர். அவர் முகம் முழுமதி போன்ற மென்மையும் ஒளியும் உடையது. குழந்தைப் பருவத்தில் பலவிடங்களிலும் காணப்படும் இவ்வமைதி வளர்ச்சியுற்றபின் மனிதரிடம் மாறிவிடக்கூடியது. குழந்தையழகு மட்டுமன்றி இளமையழகும் யாரிடமும் நிலைத்திருப்பதில்லை. ஆனால் போஸின் முகம் குழந்தைப் பருவத்தைப் போலவே இளமையிலும் முதிர் பருவத்திலும் குழந்தையமைதி குன்றாதிருந்தது. இந்திய அன்னை அவரை என்றும் தன் அன்புக்குரிய குழந்தையாகவே பாவித்தாள் போலும்! இத்தோற்றங் காரணமாக இவரை இந்தியாவின் ‘தெய்வக் குழந்தை’ (கூhந உhநசரb டிக ஐனேயை) என்று வெளிநாட்டார் பாராட்டுவதுண்டு. போஸின் உடல் இளமையிலேயே மிக நலிவுற்றிருந்தது; அவர் வாழ்க்கையின் கடுமைகளும் இன்னல்களும் இந்நலிமைப் பெருக்க உதவின. சிறை வாழ்வு, போராட்டம். அடக்குமுறைகள், தன்னல மறுப்பு ஆகியவற்றினிடையே அவர் உடலுக்கு ஏற்பட்ட தொல்லைகள் எண்ணித் தொலையா. ஆனால் இத்தனைக் கிடையிலும் அவர் தாம் எடுத்த காரியத்தை முடிக்கும் மன உரமுடையவராயிருந்தார் என்பது வியப்புக்கிடமானதே. சுபாஷ் இளமையிலிருந்தே மிகக்கூரிய அறிவுடைய வராயிருந்தார். வருங்காலத்தில் அவர் பெரும் புகழடைவார் என்று அவரைக் கண்டவர் யாவருமே கூறிவந்தனர். ஆனால் உண்மையில் அவர் தம் நாட்டு மக்கள் எவருமே செய்திராத செயற்கருஞ் செயல்களைச் செய்து முடிப்பார் என்று அவர் பெற்றோரும் உற்றோரும் கனவில் கூடக் கருதியிருக்க மாட்டார்கள்! கல்விப்பள்ளி வாழ்வு சிறுவராயிருக்கும்போது சுபாஷ் தம் நகரில் ஐரோப்பியச் சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த புரோட்டஸ்டண்டு ஐரோப்பியப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இங்கு ஏழாண்டுகள் பயின்றபின் அவர் ராவென்ஷா காலேஜியெட் பள்ளி என்ற கல்விச்சாலையில் சேர்ந்து பள்ளியிறுதிப் படிப்புத் தேறினார். இத்தேர்வில் அவர் தம் பல்கலைக்கழகத்திலேயே இரண்டாம் இடம் பெற்றார். பள்ளிக் கல்வியில் சிறப்புப் பெற்றவர்கள் எல்லாருமே வாழ்க்கையில் சிறப்புற்று விடுவார்கள் என்று கூற முடியாது. பள்ளியில் சிறப்புறாமல் பிற்காலத்தில் சிறப்புற்றவர்களும் உண்டு. ஆனால் போஸ் சென்றவிடமெல்லாம் சிறப்புப் பெற்றவர். அவர் வாழ்க்கை எல்லா வகையிலும் நிறைவுடையது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ஒருவர் வாழ்க்கையில் உயர்வுக்குப் பெரிதும் உதவுபவர் தாய், தந்தை, ஆசிரியர் ஆகிய முத்திறத்தார்களே. போஸ் தம் தாயின் மூலம் ஒழுக்கம், மன உறுதி, கடவுட்பற்று ஆகிய பெருங் குணங்களை அடையப்பெற்றார். தந்தை மூலம் அறிவார்வம், விடா முயற்சி, நாட்டுப்பற்று, நாட்டுப்பணியார்வம் ஆகியவற்றில் சிறப்பெய்தினார். இவற்றோடொப்பாக அவர் வாழ்க்கைக்கு விளக்கங்களாயமைந்தவை அவர் பள்ளித் தலைமையாசிரியரின் சீரிய வாழ்வும் அறிவுரைகளும் ஆகும். ஹனுமந்த குமார் என்னும் ஒரு நண்பரும் பள்ளி வாழ்வில் அவருக்குத் துணை தந்தார். தன்னலமற்ற வாழ்வு வாழ்வதே பிறப்புரிமையின் பயன் என்ற படிப்பினையைப் பசுமரத்தாணிபோல் போஸ் மனதில் பதிய வைத்தவர்கள் அவர் பள்ளித் தலைவரும் இந்நண்பருமே என்று கூறப்படுகிறது. சமயப் பற்று குழந்தைப் பருவத்திலும் பள்ளி வாழ்விலும் போஸ் வாழ்க்கை மற்ற பிள்ளைகள் வாழ்விலிருந்து மாறுபட்டதாகவே யிருந்தது. அவர் மற்றவர்களைப் போல ஓடியாடுவதோ குறும்பு செய்வதோ கிடையாது. இன்ப வாழ்வில்கூட அவர் நாட்டம் செலுத்தவில்லை. சின்னஞ்சிறு யோகி போல் எப்போதும் அவர் ஆழ்ந்த சிந்தையிலும் நூலாராய்ச்சிலும் ஈடுபட்டிருப்பார். ஆனால் சமயப் பற்றுச் சார்பான இம்மனநிலையால் அவர் பள்ளி வாழ்க்கைப் போக்கில் எத்தகைய இடையூறும் ஏற்படவில்லை. எனினும் பள்ளிப் பருவம் கடந்து கல்லூரியடைந்தபின் அவர் சமயப்பற்றும் நாட்டுப் பற்றும் இரண்டுமே பல தொல்லைகளை வருவிப்பவையாயிருந்தன. கல்லூரி வாழ்வு சுபாஷ் 1913-ஆம் ஆண்டு கல்கத்தா சென்று அங்குள்ள மாகாணக் கல்லூரியில் (ஞசநளனைநnஉல ஊடிடடநபந) சேர்ந்தார். இங்கே பயிலும் போது அவர் விவேகானந்த அடிகளின் சமயக் கோட்பாடுகளில் பெரிதும் ஈடுபட்டுக் கல்லூரிப் பாடங்களைவிட அவற்றிலேயே கருத்தூன்றினார்;அக்கோட்பாடுகளை வாய்ப்பறை யறைவதற்காக மட்டும் பிறரை போல் அவர் கற்கவில்லை. கற்றபடி அனுபவத்தில் கொண்டுவர எண்ணினார். ஆகவே புலனடக்கம், சமாதி முதலியவற்றில் ஆழ்ந்து ஈடுபடலானார். இதன்மூலம் தற்காலிகமாக அவர் கல்லூரி வாழ்வுக்கு இடையூறும் ஏற்பட்டது. துறவு வாழ்வு ஆழ்ந்த கடவுட் பற்றுக் காரணமாக போஸ் தம் கல்லூரிப் பயிற்சியின் இரண்டாம் ஆண்டில் திடுமெனத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு எவருக்கும் அறிவிக்காமல் கல்லூரியை விட்டோடிக் காடும் மேடும் நடந்து இமயமலைப் பகுதி சென்றார். பழங்காலப் புத்தர் போல் அவர் ஞானகுருவை நாடிப் பல நாள் மலைகளில் கடுநோன்பிருந்தார். துறவு வாழ்வினால் புதிய அறிவு எதுவும் பெற முடியாது என்று கண்டு அவர் காசி, கயா, பிருந்தாவனம் ஆகிய இடங்களில் சுற்றியலைந் தார். இவற்றாலும் எப்பயனும் காணாமல் உடல் நலத்தையும் சீர்குலைத்துக் கொண்டு அவர் தம் ஊருக்குத் திரும்பி வந்தார். போஸ் கல்லூரிப் படிப்பை விட்டேகியது கேட்ட பெற்றோரும் உற்றோரும் பேரதிர்ச்சியடைந்தனர். தம் பிள்ளை கல்லூரிப் படிப்புத் தேறிப் பெரிய பதவி வகிப்பான் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு அவர் சமயப் போக்கு பேரிடியாயிருந்தது. ஆனால் அவர்கள் கவலையிடையே பால் வார்த்ததுபோல் அவர் திரும்பி வீடு வந்ததும் அவர்கள் எல்லையிலாக் களிப்படைந்தனர். ஆயினும் மென்மையான வாழ்க்கையிலேயே பழகிய அவர் நொய்ய உடல் மிகவும் சீர்குலைவுற்று அவர் கல்லூரிக்கு செல்ல முடியாமல் நெடுநாள் படுக்கையிலிருக்கும்படி நேர்ந்தது. போஸின் துறவு வாழ்வு புண்ணிய யாத்திரையும் அவருக்கு நாளடைவில் பயன்படாமல் போகவில்லை. கடவுளைக் காணும் ஆர்வம் பிற்காலத்தில் நாட்டின் விடுதலையைக் காணும் ஆர்வமாக மாறிற்று. துறவு வாழ்வில் கடுமை போர்வீரர் வாழ்வின் கடுமையை அவர் மேற்கொள்ள நல்ல பயிற்சியாயிற்று. துறவிகள் வாழ்விலிருந்து அவர் கற்ற படிப்பினை மக்களிடையே ஒருவர் பெருமையுடையவர் மற்றவர் சிறுமைப்பட்டவர் என்ற வேறுபாடு காட்டாமல் எளியோர்க்கு உதவும் எளியோனாக, மக்கள் தொண்டனாக வாழ்தல் வேண்டும் என்பதே. போஸின் சமயப்பற்று அவர் நாட்டுப் பற்றுக்கு உறுதியே தந்தது என்பதை அவர் வீடு திரும்பிய பின் 1915-இல், ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தால் உணரலாம். “எனது பிறப்பும் எனது உடலும் கவலையற்ற இன்ப வாழ்வுக்காக அமைந்தவையல்ல என்பதையும்; ஏதோ ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நோக்கத்திற்காகவே நான் பிறந்துள்ளேன் என்பதையும், நான் நாளுக்கு நாள் தெளிவாக உணர்ந்து வருகிறேன்; உலக மக்கள் என்னைப் பற்றி என்ன கூறுவார்கள் பாராட்டுவார்களா, இகழ்வார்களா என்பது பற்றி எனக்கு எள்ளத்தனையும் அக்கறையில்லை. நான் விரும்புவது, பின்பற்றுவது வேறு எவர் விருப்பத்தையும் அன்று; எனது இவ்விருப்பத்தையும் இக்குறிக்கோளையுமே” என்று அவர் அக்கடிதத்தில் குறிக்கிறார். அஞ்சா நெஞ்சம் படைத்தவரையும் துணுக்குறச் செய்யும் இடுக்கண்களைக் கடந்து வெற்றி நோக்கிச் சென்ற போஸின் வாழ்க்கைக்குத் திறவுகோல் இக்கடிதத்திலுள்ளது! நாட்டார்வம் தன்மதிப்பு உடல் நலமடைந்தபின் போஸ் மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார். சமய ஆர்வம் காரணமாக முன்பு தடை ஏற்பட்டது போலவே இப்போதும் நாட்டார்வம், தன்மானம் ஆகியவற்றின் காரணமாக அவர் படிப்புத் தடைப்பட்டது. தொடக்கப்புலமை (ஐவேநசஅநனயைவந) தாண்டி இளம் புலமை வகுப்பில் (க்ஷ.ஹ.) கற்கும்போது திரு.ஸி. எஃவ். ஓட்டன் என்னும் ஆங்கில ஆசிரியர் ஆணவத்தை எதிர்த்து அவர் போராடினார். நிற இறுமாப்புக் கொண்ட இவ்வெள்ளையர் இந்தியரைக் கறுப்பர் எனக் கூறி இழிவு செய்தும் மாணவர்களை அவமதித்தும் வந்தார். அவரை எதிர்த்த மாணவர்களுள் போஸ் ஒருவராயிருந்ததுடனன்றி அவ்வெதிர்ப்பில் பிறரைத் தூண்டித் தலைமையும் வகித்தார். மேலதிகாரிகள் ஆசிரியரைச் சற்று நயமாக எச்சரித்துக் கண்டித்துவிட்டனர். இதனால் மதிப்பிழந்த ஆசிரியர் போஸ் மீது கறுவிக் கொண்டார். அடுத்த வாய்ப்பு ஏற்பட்டதும் அவர் போஸை இரண்டாண்டுகள் கல்லூரியினின்று நீக்கி வைத்து வஞ்சம் தீர்த்துக் கொண்டார். பிற்காலத்தில் எத்தகைய தலைவர்க்கும் அஞ்சி ஒடுங்க மறுத்த வணங்காமுடி மன்னராகிய போஸ் வாழ்க்கைப் பண்பின் ஒரு கூற்றினை இச்செய்தியில் காணலாம். கல்லூரிப் படைப் பயிற்சி இரண்டாண்டுகள் கல்லூரிப் படிப்பை விட்டு விலகி நின்று போஸ் திரும்பக் கல்கத்தா ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் படித்து 1919-இல் இளம்புலவர் (க்ஷ.ஹ.) என்ற பட்டத்துடன் வெளிவந்தார். இத்தறுவாயில் கல்லூரிப் படைப்பயிற்சிப் பிரிவில் அவர் கலந்து போர்ப் பயிற்சி பெற்றார். இப்பயிற்சி அவர் பிற்கால விடுதலைப் போர் வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்பட்டது. அரசியல் ஈடுபாடு கல்லூரி வாழ்விடையே சமயப்பற்றில் ஈடுபட்ட போஸ் இப்போது நாட்டின் அரசியல் இயக்கங்களில் ஈடுபடலானார். மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்து ஆங்கில ஆட்சியின் அடக்கு முறையை எதிர்க்கத் தொடங்கிய காலம் இதுவே. போஸ் இப்போரில் குதித்து நாட்டுக்குப் பணி செய்யத் துடிதுடித்தார். ஆனால் பெற்றோர் அவரை மாவட்டத் தலைவர் பணிக்குரிய (ஐ.ஊ.ளு.) தேர்வில் சேரும்படி வற்புறுத்தினர். போஸ் அதனை வெறுப்பது கண்ட சில நண்பர்கள் அத்தேர்வினால் ஏற்படும் அரசியல் சூழ்ச்சியறிவு எதிர்கால வாழ்வில் அவருக்குப் பயன்படும் என்று பரிந்துரைத்தனர். இது போஸின் உள்ளத்துக்கு இசைந்த எண்ணமாயினும் பதவியை விரும்பிய பெற்றோரை ஏமாற்றக் கூடாதே எனப் பெரிதும் தயங்கினார். ஐ.ஸி.எஸ். பயிற்சியும் பட்டத் துறப்பும் போஸின் ஆங்கில நாட்டுப்பயிற்சி உண்மையில் அவருக்குச் சிறந்த அரசியல் அனுபவமளித்தது என்பதில் ஐயமில்லை. அதனுடன் அவர் கூரிய கண்கள் ஆங்கில மக்களின் வாழ்க்கை நிலை, செல்வநிலை, இந்தியா பற்றி அவர்கள் கொண்ட கருத்துக்கள் ஆகியவற்றை நன்கு கவனித்தன. இந்தியாவுக்கு வரும் ஆங்கிலேயர் இங்கிலாந்தின் நலத்தையும் புகழையுமே குறியாகக் கொண்டு இந்தியாவை ஆராய்ந்து கவனிப்பார். ஆனால் இதேபோல இந்தியாவின் நலம், புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிறநாடுகளை ஆராய்ந்து உணர்ந்த இளைஞர் போஸ் ஒருவரே எனலாம். 1910 ஆம் ஆண்டு சுபாஷ் தம் தேர்வில் வெற்றியடைந்தார். இந்தியர், வெள்ளையர் ஆகிய இரு திறத்தினரும் கலந்து கொண்ட இப்பேட்டித் தேர்வில் அவர் நான்காமிடம் பெற்றார். இத்தேர்வு இந்தியர் பலரால் பூவுலக இந்திர பதவியாகக் கருதப்பட்ட மாவட்டத் தலைவர் பணிக்கு நுழைவுச்சீட்டு ஆகும். இதைக் கைக்கொண்டு இந்தியர் வந்தால், நாட்டுப் பணி செய்வதற்கு மாறாக நாட்டுப் பணி செய்பவர்களையும் ஏழைகளையும் அடக்குமுறையால் கொடுமைப்படுத்த வேண்டும் என்பதை அவர் எண்ணிப் பார்த்தார். ஆகவே அச்சீட்டை வருமுன்னரே துறந்துவிட எண்ணி அதற்குரிய அதிகாரியான இந்தியா மந்திரியிடம் தம் தேர்வுப் பட்டத்தைத் துறந்து விடுவதாக அறிவித்தார். இளைஞர் போஸின் நாட்டார்வம் கண்டு மகிழவும் அவர் தன் மதிப்புணர்ச்சி கண்டு அச்சமும் கொண்ட அவ்வுயர் பணியாளர் அவருக்கு எவ்வளவோ நயமான அறிவுரைகள் தந்தும் போஸ் அப்பதவித் துறப்பில் உறுதியாக நின்றுவிட்டார். பதவி ஆசை தூண்ட நாட்டைப் புறக்கணிக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் போஸுக்கும் எவ்வளவு வேறுபாடு! கண்காணா உலகுக்குக் கல்வியைத் துறந்த அதே சிறுவர் நாட்டு விடுதலைக் குறிக்கோளுக்காக அக்கல்வியின் பயனாகப் பலர் கருதும் உயர் பதவியையே துறக்கத் துணிந்தார். இது தியாக வீரரிடையேகூட எளிதில் காணமுடியாத விழுமிய தியாகமே யாகும். 3. நாடும் நாட்டியக்கமும் விடுதலை இயக்க வரலாறு : பேரவை போஸின் வாழ்வு இந்திய விடுதலை இயக்க வரலாற்றின் ஒரு பகுதியேயாகும். போஸின் வாழ்க்கைப் பணியை உணர அவர் இளமை எப்படிப் பின்னணியாய் அமைந்துள்ளதோ, அப்படியோ நாட்டியக்க வரலாற்றின் முற்பகுதியும் அதன் பின்னணியாகவே அமைந்துள்ளது. முதற் பின்னணியாகிய அவர் இளமைக்கால அனுபவங்களைக் கண்டோம். அடுத்த பின்னணியாகிய நாட்டு விடுதலை இயக்கத்தின் தோற்ற வளர்ச்சிகளை இனி ஆராய்வோம். இந்திய விடுதலைப் போராட்டத்தில் முனைந்து நின்ற காங்கிரஸ் பேரவை 1885-இல் ஒருசில முன்னேற்றக் கருத்துள்ள ஆங்கிலேயராலும் படித்த இந்தியராலும் நிறுவப்பட்டது. ஆனால் இந்திய விடுதலை இயக்கத்தின் இரண்டு படிகள் காங்கிரஸ் தோன்று முன்பே ஏற்பட்டுவிட்டன. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி வேரூன்று முன்னரே தென்னாட்டில் பாஞ்சாலங்குறிச்சி வீரர் கிளர்ச்சி செய்து அடக்கப்பட்டனர். இதற்குப் பின்னர் 1857 இல் வட இந்தியாவெங்கும் படைவீரர் கிளர்ச்சி எனப்படும் முதல் இந்திய விடுதலைப் போர் எழுந்தது. இதுவும் பெரு முயற்சியுடன் அடக்கப்பட்டது. ஆனால் அதனால் எழுப்பப்பட்ட விடுதலையார்வம் உள்ளூர மக்களிடையே புரட்சிக்கனலை எழுப்பிக் கொண்டே யிருந்தது. மறைவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சக்திகள் குமுறிக் கொண்டிருந்தன. இவற்றை அரசியல் சீர்திருத்த நெறியில் திருப்பும் நோக்கத்துடனேயே ஆட்சியாளர்கள் காங்கிரஸ் பேரவைக்கு ஓரளவு ஆதரவு தந்தனர். தீவிரக் கிளர்ச்சியும் மிதவாதிகளும் 1907-ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் பெரிதும் அரசியல் சீர்திருத்தம் கோரிய சபையாகவே இருந்தது. அதனுடன் அஃது இந்தியர்களுக்கு உயர்பணிகள் வழங்க வேண்டுமென்றும் மன்றாடி வந்தது. ஆனால் இந்தியாவின் தலை முதல்வர் (ழுடிஎநசnடிச ழுநநேசயட) கர்ஸன் பெருமகனாரின் வங்காளப் பிரிவினையின் பயனாக சுதேசி இயக்கம் என்ற தீவிரக் கிளர்ச்சி ஏற்பட்டது. வங்கத்தில் பிபின் சந்திரபாலரும், மகாராஷ்டிரத்தில் திலகரும் அதனை நடத்தினர். தமிழகத்தில் வ.உ.சிதம்பரனார் கப்பல் வாணிக இயக்கம் நடத்திப் புகழ் பெற்றதும் இக்காலத்திலேயே. இதன் பிற்பகுதியில் கோகலே போன்ற சிலர் அரசியலெதிர்ப்பிலிருந்து விலகி ஆக்க வேலையில் ஈடுபட்டனர். சென்னையில் அன்னிபெஸண்டம்மையார் ‘தாயக ஆட்சி’ (ழடிஅந சுரடந) இயக்கம் தொடங்கினார். காங்கிரஸில் தீவிரவாதிகளிடமிருந்து கோகலே போல் விலகி நின்றவர்கள் மிதவாதிகள் எனப்பட்டனர். இவர்கள் தவிர, வகுப்புப் பிரதிநிதித்துவம் கோரிய முஸ்லிம்கள் தனியாக முஸ்லிம்லீகும் அதனை எதிர்த்து இந்துக்கள் இந்துப் பேரவையும் அமைத்திருந்தனர். தென்னாட்டில் அரசியல் சீர்திருத்தம் வகுப்பு நேர்மை ஆகிய நோக்கங்களுடன் நேர்மைக் கட்சி (துரளவiஉந ஞயசவல) என்ற மற்றொரு மிதவாதக் குழு ஏற்பட்டது. ரௌலத் சட்டம்: ஜாலியன் வாலாபாக் படுகொலை 1907-இல் பிரிட்டிஷார் வழங்கிய மிண்டோ-மார்லிச் சீர்திருத்தத்தையும் 1919-இல் தரப்பட்ட மாண்டேகு செம்ஸ் போர்டுச் சீர்திருத்தத்தையும் மிதவாதிகள் பலரும் ஏற்றுக் கொண்டு நடத்த விரும்பினர். திலகர் தலைமையில் தீவிரவாதிகள் அதனை எதிர்த்தனர். போர்க்காலத்தில் பிரிட்டிஷாருடன் இந்தியர்கள் ஒத்துழைத்ததற்காக இந்தியாவுக்குத் தன்னாட்சி வழங்குவோம் என்று ஆட்சியாளர் உறுதி கூறியிருந்தனர். போர் முடிந்தபின் தரப்பட்ட சீர்திருத்தத்தில் அவ்வுறுதி நிறைவு பெறவில்லை. இதனால் எங்கும் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. இவற்றை ஈவிரக்கமின்றி அடக்குவதற்காக அரசியலார் ரௌலத் சட்டம் என்ற அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தனர். ரௌலத் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் பெருவாரியாகக் கிளர்ச்சிகளும் கூட்டங்களும் நடைபெற்றன. பாஞ்சாலத்தில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் படைத்தலைவர் டயர் மக்களை வளைத்தடித்துச் சுட்டுத் தள்ளிப் படுகொலை புரிந்தான். இச்செய்தி எங்கும் பரவாமல் அரசியலார் வாய்ப்பூட்டு நடவடிக்கையும் 144 தடையுத்தரவும் பிறப்பித்தனர். ஆயினும் எதிர்ப்புத்தீ உள்ளத்தினின்று உள்ளம் தாவிப் படர்ந்து நாடெங்கும் பரந்தது. டயர் என்னும் அக்கொடியோனுக்குத் தண்டனை எதுவுமில்லாததுடன் வெள்ளையர் நாட்டில் அரசியலார் அவனைப் பாராட்டி வீரப்பதக்கம் அளித்தனர். அது கண்டு தேசத்தின் சீற்றம் கடலகத்தெழும் எரிமலைப் புயல்போல் கொந்தளித்தெழுந்தது. தென் ஆப்பிரிக்காவில் நிறவேறுபாடுகளை எதிர்த்து அமைதியாக அறப்போராற்றி வெற்றியுடன் மீண்டும் இந்தியா வந்திருந்த காந்தியடிகள் இதற்குத் தலைமை வகித்து ஒத்துழையாமை இயக்கக் கொடி ஏற்றினார். போஸ் இந்தியாவுக்கு வரும் சமயம் இப்போர் உச்சநிலையடைந்திருந்தது. போஸ் ஆங்கில நாட்டுப் படிப்பினைகள் இங்கிலாந்திலிருக்கும்போதே போஸ் இந்தியாவில் நடந்து வரும் காரியங்களில் மிகவும் கவனம் செலுத்திவந்தார். இந்தியாவில் வறுமை, ஆங்கில மக்களின் செல்வநிலை, இந்தியாவில் அன்னிய ஆட்சியின் அடக்குமுறை, ஆங்கில நாட்டில் தன்னாட்சியின்கீழ் மக்களுக்கிருந்த குடியுரிமை, இந்தியர் அடிமை மனப்பான்மை அச்சம், ஆங்கில நாட்டார் தற்பெருமை, இந்தியா பற்றி அவர்கள் கொண்டிருந்த அவமதிப்பு எண்ணங்கள் ஆகிய வேறுபாடுகள் அவர் மனத்தை உறுத்தின. இவ்வளவுக்கிடையிலும் ‘இந்தியாவில் தன்னாட்சி ஏற்படுவதற் கான வகைதுறைகள் யாவை; நல்லாட்சி முறையின் ஒழுங்குகள், சட்டதிட்டங்கள், நிலையங்கள் ஆகியவற்றின் நடைமுறைகள் எவை’ என்பனவற்றை ஆங்கில ஆட்சியினின்றே அறியவும் அவர் பாடுபட்டார். இந்தியாவில் தமக்குக் கீழ்ப்பட்டிருக்கும் இந்தியரிடம் பிரஸிடென்ஸிக் கல்லூரியாசிரியர் போன்ற வெள்ளையர் தம்நாட்டுச் செருக்கைக் காட்டுவது போஸ் உள்ளத்தை உறுத்திக் கொண்டேயிருந்திருக்க வேண்டும். ஏனெனில் இங்கிலாந்தில் தமக்குக் கீழ்ப்பட்ட நிலையிலுள்ள தம் வேலையாட்களான வெள்ளையர் தம் பாதுகைகளை மெருகிடுவதையும் தம்மிடம் கெஞ்சி வணங்குவதையும் கண்டு மன அமைதி பெறுவதாக அவர் தம் நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா பற்றிய நம்பிக்கை தாய்நாட்டின் பெருமை மதிக்கப்படக்கூடும் இடங்களிலும் போஸ் மகிழ்ந்து ஈடுபட்டார். லண்டன் இந்திய மஜ்லிஸில் திருமதி ரே, திருமதி ஸரோஜினி நாயுடு ஆகிய இந்திய மாதர் திலகங்களும் இந்திய அறிஞர்களும் வெள்ளை அறிஞர்களிடையே சொற்பொழிவாற்றுவதையும் தங்குதடையற்ற பாராட்டுப் பெறுவரையும் கண்டு போஸ் அவ் இந்தியர் பெருமையால் அகம் பூரித்துப் போவார். எடுத்துக்காட்டாக திருமதி ஸரோஜினி பேசியபோது அவர், “திருமதி ஸரோஜினி நாயுடு இங்கே பேசியதைக் கேட்டு என் நெஞ்சு பெருமிதத்தால் இறும்பூது எய்தியது. தன் பண்பாடு, அறிவுத் திறம் ஆகியவற்றின் மூலம் இந்திய மாதர் மேனாட்டினர் உளமார்ந்த நன்மதிப்பைப் பெறமுடியும் என்பதை நான் காண்கிறேன். இத்தகைய மாதரைப் பெற்ற நாடு எதிர்காலத்தில் பெருமையடைவதற்குரியது என்பதில் ஐயமில்லை” என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். மகாத்மா காந்தியுடன் பேட்டி அல்லும் பகலும் இந்தியா ஒன்று பற்றியே சிந்தித்து வந்த போஸ் இந்தியா வந்து சேர்ந்ததும் வருங்கால அரசியல் திட்டங்களை அறிந்து கொள்ளும் அவாவுடன் மகாத்மா காந்தியடிகளைச் சென்று கண்டார். அவர்கள் சந்திப்பு இந்தியாவின் இறந்த காலப் புகழும் எதிர்காலப் புகழும் நிகழ்காலமென்னும் மேடையில் சந்தித்த சந்திப்புப் போன்றது. இதற்கு முன்பே பேரும் புகழும் வெற்றியும் கண்டு மேலும் வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்த மகாத்மாவின் முன்னால், வருங்காலப் புகழின் சிறு விதையாகிய போஸ் நின்று பணிவுடனும், ஆர்வத்துடனும், ஆயின் தன் மதிப்புடனும் அறிவுத் திறத்துடனும் பலவகைக் கேள்விகள் கேட்டார். காந்தியடிகள் கூறிய மறுமொழிகளால் போஸ் காந்தியடிகளின் பெருந்தன்மையை உணர்ந்துகொண்டார். ஆனால் அவர் மனத்திற்கு அம்மொழிகள் நிறைவு தரவில்லை. போஸின் துடிதுடிக்கும் இளமையார்வம், ஆர்ந்தமர்ந்த காந்தியடிகளின் அமைதி கடலில் நிலை காணமுடியவில்லை. ஆனால் சிறிது காலத்திற்குள் அவர் காந்தியடிகளுக்கடுத்த படியான பெருந் தலைவரும் வங்கத்தின் முடிசூடா மன்னருமான தேசபந்து ஸி.ஆர்.தாஸைக் கண்டு இதுபோலவே அளவளாவினார். தேசபந்து ஸி.ஆர்.தாஸ் நாட்டின் நாடியையும் மக்கள் நெஞ்சத் துடிப்பையும் இளைஞர் கனவுகளின் போக்கையும் கண்டுணர்ந்த தேசபந்து தாஸ், நீறுபூத்த நெருப்புப் போல் இளைஞர் போஸ் உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கும் தேசிய ஆர்வத்தையும் செயல் திறத்தையும் நுனித்தறிந்து கொண்டார். ஆகவே அவர் ஆர்வத்திற்கு உகந்த தம் கனவியல் திட்டங்களைச் சுருக்கமாக அவருக்கு விளக்கி அவர் ஐயங்களை அகற்றினார். அதனுடன் போஸின் இளமையுள்ளத்தில் அவர் தம் தேசியத் திட்டங்களைப் பசு மண்ணில் பொறித்த பொறிப்புப் போல் பதிய வைத்தார். காந்தியடிகளின் மரபுரிமையாளராகப் பண்டித ஜவஹர்லால் நேரு பிற்காலங்களில் விளங்கியது போல, இது முதல் போஸ் ஸி.ஆர். தாஸின் முடிசூடா மன்னர் பதவிக்கு இளவரசுரிமை யாளராக விளங்கினார். 4. அரசியல் பணி ஈடுபாடு காந்தி ஊழி: போஸ் வாழ்வு இந்திய அரசியல் வாழ்வில் 1918-க்கும் 1948-க்கும் இடைப்பட்ட முப்பதாண்டுக் காலத்தையும் காந்தி ஊழி என்றழைப்பதுண்டு. இந்தியாவில் இவ் ஊழி தொடங்குமுன் காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் தமிழரிடையேயிருந்து சத்தியாக்கிரகம் செய்து வெற்றிப் புகழ் கண்டிருந்தார். 1918-இல் இந்திய அரசியல் வானில் அவர் ஒரு கதிரவன் போல் தோன்றி 1930-ஆம் ஆண்டில் தம் புகழின் உச்ச நிலைக்கு வந்து 1940-க்குப் பின் உலகெலாம் போற்றும் ‘செக்கர் வான்’ புகழுடன் விளங்கி 1948 ஜனவரியில் தேசத்தின் பிற்போக்குச் சக்திகளால் நெருக்குண்டு மறைவுற்றார். இதே காந்தியூழியில் சுபாஷ்போஸ் இந்திய வாழ்விடையே வால் வெள்ளிபோல் திடுமெனத் தோன்றி வளைந்தோடிக் கோடி ஞாயிற்றொளியுடன் ஒளி வீசி, 1942-இல் மக்கள் கண்ணையும் கருத்தையும் பறித்துக் கொண்டு மங்காப் புகழுடன் மாயமாக மறைந்தனர். அவர் புகழின் முழு அளவை நாம் இப்போதுதான் படிப்படியாகவே அறிந்து வருகிறோம். அங்ஙனம் அறிய அறிய அவர் காலங் கடந்த வீரர் என்பதை உணர்கிறோம். ஏனெனில் சாதாரண மக்களைப்போல் அவர் வாழ்க்கையில் நீரோட்டத்தில் மிதந்து சென்றவரோ, அல்லது பெரும்பான்மை வீரர்களைப் போல் குறுக்காக வெள்ளத்தைக் கடந்து புயல்களையும் ஒருங்கே எதிர்த்துச் சென்று எதிர் நீச்சுப் பழகிய ஒரு சில வீரப் பெருந்தகைகளுள் அவர் ஒருவர். போஸ் வாழ்வின் மூன்று பகுதிகள் காந்தியடிகளின் வாழ்க்கையைப் போல் போஸின் வாழ்க்கையையும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதற்பிரிவு காங்கிரஸ் தலைவர்களுடன் தலைவராக நின்று அவர் அதன் கொள்கையையும் நோக்கத்தையும் திருத்தியமைக்கப் பாடுபட்ட காலம் ஆகும். இது 1920-இல் தொடங்கி 1929-இல் முடிவுறுகிறது. அது முதல் 1938 வரை அவர் தம் தியாகங்களால் நாட்டின் பொதுமக்கள் உள்ளத்தில் அசைக்க முடியாத இடம் பெற்று, நாட்டின் பெருந்தலைவர்களுடன் போட்டியிட்டுப் பாராட்டு தலுக்கும் உரியவரானார். 1938 முதல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்தையும் நாட்டின் எதிர்ப்பு சக்திகளனைத்தையும் ஒருங்கே தன்னந்தனயராய் எதிர்த்து நின்று, உலக வரலாறே என்றும் எங்கும் காணாத மின்னல் வெற்றிகள் கண்டார். வெற்றிக் கொண் டாட்டத்தில் கலவாது மாயமாய் மறைந்த அவர் வெற்றி எவரும் பங்கு கொள்ள முடியாத, எவர் பொறாமைகளுக்கும் எட்டாத உச்சநிலை வெற்றியாமைந்துள்ளது. அரசியல் நுழைவு : ஒத்துழையாமைப்போர் சுபாஷ் சந்திர போஸின் அரசியல் பணி தேசபந்து ஸி.ஆர். தாஸின் ஒப்பற்ற தலைமையில் தொடங்கிற்று, மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போரை வங்கத்தில் முன்னின்று நடத்திய அவ்வொப்பற்ற தலைவருக்குப் போஸ் அந்நாளில் ஒரு வலக்கையாக உதவினார். தலைவர்களின் அழைப்புக் கிணங்கி அன்று வழக்கறிஞர்கள் பலர் வழக்கு மன்றத்தைத் துறந்தனர். உயர் பணியாளர் பலர் தம் பணிகளைத் துறந்தன. மாணவரும் ஆசிரியரும் பலர்தம் பள்ளிகளையும் துறந்து நாட்டு மக்கள் போரில் பங்கு கொண்டனர். இங்ஙனம் கண் திறக்கும் கல்வி வளர்ச்சியிழந்த மாணவர்கட்குத் தேசச் சார்பாக கல்வியூட்ட வேண்டுமென்று நினைத்த தலைவர்கள் பல தேசியப் பள்ளிகள், கல்லூரிகள் ஏற்படுத்தலாயினர். வங்க நாட்டுத் தலைநகராகிய கல்கத்தாவிலும் அத்தகைய தேசியக் கல்லூரி ஒன்று திறக்கப் பட்டது. ஸி.ஆர். தாஸ் இக்கல்லூரிக் கேற்ற தலைவர் போஸ் தான் எனக் கண்டு அவர் பொறுப்பில் அக்கல்லூரியை விட்டு வைத்தார். மேல்நாடுகளில் போஸ் படிக்கும்போதும், அந்நாடுகளைச் சுற்றிப் பார்வையிடும்போதும் இந்தியாவுக்கு எது தேவை, எது இந்தியாவின் நலத்துக்கு உகந்தது என்ற குறிக்கோளுடனேயே அவர் எதையும் கவனித்தார். ஆகவே பிற நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தாம் கண்டறிந்த மெய்மைகளையெல்லாம் தம் பொறுப்பில் விடப்பட்டிருந்த கல்லூரியில் அவர் பயன்படுத்தினார். ஈடும் எடுப்புமற்ற தம் அனுபவத்தை அவர் நம் நாட்டார்வம், கல்வியார்வம் ஆகியவற்றுடன் கலந்து இளைஞர்கள் உள்ளங்களில் கல்வியையும் தேசிய ஆர்வத்தையும் சேவையுணர்ச்சியையும் ஒருங்கே ஊட்டினார். அவர் பயிற்சி முறைக்கு உட்பட்ட இளங்காளைகள் தேசிய வாழ்வினை இயக்கும் ஆற்றலுடையவராயினர். அவர் புகழ் தாஸின் புகழின் புதுப் பதிப்பென வளரலாயிற்று. கறுப்புக் கொடியியக்கம் : சிறை புகுதல் 1922-இல் வேல்ஸ் இளவரசர் (பிற்கால எட்டாம் எட்வர்டு மன்னர்) இந்தியாவைப் பார்வையிட வந்தார். பிரிட்டிஷாரின் அடக்கு முறையைக் கண்டிக்குமுகமாக அவருக்குக் கறுப்புக் கொடி பிடிக்க வேண்டுமென்று தலைவர்கள் கட்டளை பிறந்தது. இக்கறுப்புக் கொடியியக்கத்தில் ஈடுபட்டதற்காகப் போஸ் ஆறுமாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். வெள்ள நிவாரண நிதி போஸ் சிறையிலிருக்கும்போது வங்கத்தில் பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டது. வங்க மக்களிற் பலர் இதனால் வீடிழந்தும் பொருளிழந்தும் தவித்தனர். அரசியற் கொந்தளிப்புக்களினால் அல்லல்பட்ட மக்கள் வாழ்வில் இயற்கையின் கொந்தளிப்பும் சேர்ந்து அமளி பண்ணிற்று. சிறையிலிருந்து வெளிவந்த போஸ் மக்கள் துயரம் கண்டு மனந்துடித்தார். நாட்டுப் பணி என்பது அரசியற் பணிமட்டுமன்று என்று உணர்ந்த போஸ் உடன் தாமே மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து வெள்ள உதவி நிதி திரட்டப் புறப்பட்டார். போர் வீரரான போஸ் இவ்வளவு எளிதாகச் செயல் வீரராக மாறிப் பணி செய்ததன் பயனாக, மக்கள் உள்ளத்தில் அவர் நீக்கமிலா இடம் பெற்றார். வங்க மாகாணத்தின் தலைவரான (ழுடிஎநசnடிச) லிட்டன் பெருமகனார் அவர் தம் அரசியலின் எதிரி என்றும் பாராமல் இவ்வரும்பணிக்கு அவரை வாயார வாழ்த்தினார். ‘அன்பிற்கு முண்டோ அடைக்கும் தாழ்? ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்’ என்ற வள்ளுவர் மணிவாக்கின்படி, அன்பு என்பது கட்சி, சமயம், நாடு, இனம், வகுப்பு ஆகியவற்றையும் கடந்து செல்லுமன்றோ? சுயராஜ்யக் கட்சித் தோற்றம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கக் கோட்பாட்டின் படி காங்கிரஸ்காரர் சட்டசபைக்குச் செல்வதைப் புறக்கணித்தனர். மிதவாதிகள் மட்டுமே தேர்தலுக்கு நின்று சட்டசபைகளைக் கைப்பற்றியிருந்தனர். ஆனால் 1922-இல் காந்தியடிகள் திடீரென்று போராட்டநடுவில் சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிட்டார். மக்கள் உணர்ச்சி பெருகிச் செயலுக்குத் துடிக்கும் நேரத்தில் சௌரி சௌரா என்னுமிடத்தில் ஒரு பலாத்காரக் கொடுமை நிகழ்ந்ததைக் கண்டே காந்தியடிகள் இப்போரை நிறுத்தக் கட்டளையிட்டார். இங்ஙனம் மக்கள் உணர்ச்சி மீது நீரூற்றுவது தவறு எனத் தீவிரவாதிகள் கருதினர். காந்தியடிகளோ தம் அஹிம்சை நெறியை மக்கள் உணர்ந்து கொண்டு உரம்பெறு முன்பு இயக்கம் நடத்தியது தம் ‘இமாலய பிழை’ என்று எதிரிகள் மனங்குளிர ஒத்துக் கொண்டு விட்டார். “முன்னோக்கு” பத்திரிகாசிரியர் தீவிரவாதிகள் அதிருப்தி ஒரு புறமிருக்க மறுபுறம் சட்ட சபைக்கு சென்று உழைக்கவேண்டும் என்றும் பலர் விரும்பினர். சித்தரஞ்சன்தாசர் இச்சமயத்துக்கு இதுவே தக்கதெனக் கொண்டு இத்தரப்பு வாதிகளுக்குத் தலைமை வகித்தார். கயாவில் நடந்த காங்கிரஸில் ஸி.ஆர். தாஸே தலைமை வகித்துக் காந்தியடிகள் கோட்பாடுகளுக்கு எதிராகப் பெரும்பான்மை ஆதரவு பெற்றார். காங்கிரஸுக்குள்ளேயே அவர் தலைமையில் ‘சுயராஜ்யக் கட்சி’ அமைக்கப்பட்டது. போஸ் இக்காங்கிரஸில் ஸி.ஆர். தாஸின் துணைவராயிருந்து ஆதரவு தந்தார். புதிய கட்சிச் சார்பாகத் தொடங்கப்பட்ட ‘முன்னோக்கு’ (குடிசறயசன) என்ற ஆங்கிலத் தினசரிப் பத்திரிகைக்கும் போஸ் ஆசிரியரானார். பத்திரிகைத் துறையிலும் வெளியிலும் போஸும் தாஸும் செய்த தீவிரப் பிரசங்கங்களின் பயனாக மத்திய சட்டசபையிலும் சென்னை நீங்கலாக மற்றும் மாகாணச் சட்டசபைகளிலும் சுயராஜ்யக் கட்சிக்குப் பெருவாரியாக ஆதரவு கிடைத்தது. போஸின் புகழ் இவ்வெற்றிகளினால் இன்னும் பரவிற்று. நகரவை அதிகாரி : நாட்டுப்பணி 1924-இல் சுயராஜ்யக் கட்சி கல்கத்தா நகரப் பேரவைத் தேர்தலுக்கும் நின்று பெருவெற்றி கண்டது. தேசபந்து தாஸ் நகரப் பேரவைத் தலைவர் (ஆயலடிச) ஆனார். போஸ் தலைமைச் செயல் அதிகாரியாக (ஊhநைக நுஒஉரவiஎந டீககiஉநச) அமர்வு பெற்றார். இப்பணிக்கு மாதம் ரூ. 1500 ஊதியமாயிருந்தது. இவ்வுயர்ந்த ஊதியத்தின் பெரும் பகுதியையும் போஸ் ஏழை மாணவர் உதவிச் சம்பளத்திற்காகப் பயன்படுத்தி உண்மைத் தியாகத்திற்கு ஒரு வழி காட்டினார். ஐ.ஸி.எஸ். பட்டம் பெறாது, பட்டத் தகுதி பெற்ற போஸ் தம் பயிற்சியை நன்கு பயன்படுத்திக் காட்ட இஃது ஒரு நல்ல வாய்ப்பாயிற்று. இவ்வளவு இளமையில் அப்பணிக்கு இதற்கு முன் யாவரும் வந்ததில்லை. அப்படியிருந்தும் இப்பதவிக்கு இவரே தகுதி என யாவரும் கருதும் வகையில் போஸ் திறம்படச் செயலாற்ற அரசாங்கத்தாரும் மதிக்கும் நிலையை உண்டு பண்ணினார். உடல் நலம், கல்வி முதலிய துறைகளில் அவர்கொண்டு வந்த சீர்திருத்தங்கள் மக்களிடையே பேராதரவு பெற்றன. தாஸும் போஸும் சேர்ந்து நடத்திய இந்நகர சபை ஆட்சி பிரிட்டிஷ் அதிகாரிகள் கண்களை உறுத்தும் அளவு காங்கிரஸ் மயமாயிருந்தது. நகரத் தலைவர் முதல் கையாட்கள் வரை யாவரும் ஒரே கதர் மயமாயிருந்தனர். பிரிட்டிஷ்காரராயிருந்த அதிகாரிகளுக்கு நிறங் காரணமான தனிமதிப்பும் சிறப்புரிமையும் போய்ப் பணியுரிமைகள் மட்டுமே மீந்தன. இவற்றைக் கண்டு ஆட்சியாளர் மனம் வெம்பினர். 1924 அக்டோபர் 24-ஆம் தேதியன்று நாட்டின் தலை முதல்வர் (ழுடிஎநசnடிச ழுநநேசயட) நாட்டில் எவரையும் கலந்து கொள்ளாமல் திடுமென வங்க அவசரச் சட்டமொன்றைப் பிறப்பித்தார். அதன்படி அதே நாள் இரவு போஸும் பல முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் சட்டசபை உறுப்பினர்களும் கைதாகிக் காவலில் வைக்கப்பட்டனர். அலிப்பூர் மாந்தலேச் சிறைகள் நகரவைத் தலைவரான தாஸ் இச்சட்டத்தையும் அதன்படி தலைவர்கள் விசாரணையில்லாமல் தண்டிக்கப்பட்டதையும் கண்டித்தார். போஸும் மற்றத் தோழர்களும் குற்றவாளி களானால், அதே குற்றத்துக்குத் தாமும் பொறுப்புடையவரே என்று கூறித் தம்மையும் சிறைப் பிடிக்கும்படி கோரினார். தங்கள் செயலுக்கு இவ்வளவு எதிர்பாரா எதிர்ப்பு ஏற்பட்டது கண்டும் ஆட்சியாளர் போஸை விடுவிக்கத் துணியாமல் அலிப்பூர் சிறைக்கும் அங்கிருந்து அலெக்ஸர்ஹாம் சிறைக்கும் மாற்றினார்கள். அதன் பின் இந்தியாவில் அவர் இருந்ததால் அடிக்கடி தொல்லை ஏற்படுகிறது என்று எண்ணி அவரை மாந்தலேச் சிறைக்கு மாற்றினார்கள். மாந்தலேச் சிறை உரம் பெற்ற கொலைக் குற்றவாளிகளின் நெஞ்சத்தையும் துணுக்குறச் செய்யத்தக்க கோர அனுபவம் நிறைந்ததாயிருந்தது. ஆயினும் போஸும் அவர் தோழர்களும் மனமகிழ்வுடன் அச்சிறை வாழ்வை ஏற்றனர். தம் நாட்டின் விடுதலைக்குரிய விலை கொடுக்கிறோம் என்ற எண்ணம் அவர்களை ஊக்கியது. “இவ்விடத்திலேயே லோகமானிய திலகர் ஆறு ஆண்டுகள் நாட்டு விடுதலைக்காகக் கழித்தார். அதன்பின் லாலா லஜபதி ராய் இதே இடத்தில்தான் ஓராண்டு நோன்பியற்றினார். இந்நினைவுகள் எமக்கு ஆறுதல் அளித்தது மட்டுமன்று; பெருமையும் தந்தன” என்று போஸ் இச்சிறை வாழ்வு பற்றிக் குறிப்பிடுகிறார். இவ்விடம் இன்னொரு வகையிலும் இந்தியாவின் விடுதலைக் கோயில் என்று கூறத்தக்கது. 1858-ஆம் ஆண்டு நடந்த முதல் இந்திய விடுதலைப் போரில் கலந்ததற்காக இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசரும் அவர் இளம் புதல்வியாரும் மடிந்தழியும் வரை சிறைவாசம் செய்த இடமும் இதுவே. போஸ் உண்ணா நோன்பு மாந்தலே வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சி போஸின் உண்ணா நோன்பு ஆகும். போஸும் சிறையிலுள்ள வங்க நாட்டுச் சிறையாளிகளும் தங்கள் நாட்டு விழாவாகிய நவராத்திரியைச் சிறையில் கொண்டாட விரும்பி இணக்கம் கோரினர். சிறை மேற்பார்வையாளர் (ளுரயீநசiவேநனேயவே) ஒருவர் அவர்கள் பக்கம் நின்று அதனை ஒழுங்காக நடத்தும் பொறுப்பைத் தாம் ஏற்பதாகக் கூறினார். ஆனால் சிறை ஆணையாளர் (ஞசளைடிn ஊடிஅஅளைளiடிநேச) திரு. பாட்டர்ஸன் இதற்கு இணக்கந்தர மறுத்துவிட்டார். வங்காளிகளாகிய அவ் எட்டுச் சிறையாளிகளும் மிகப் பொல்லாத புரட்சியாளர்கள் என்று அவர் அதற்குக் காரணம் கூறினார். கேடில்லாத ஒரு விழாக் கொண்டாட உரிமைகூட மறுக்கப்பட்டது கண்ட போஸும் அவர் தோழர்களும் 1925-பிப்ரவரியில் உண்ணா நோன்பு மேற் கொண்டனர். சிறைச் செய்திகள் எதுவும் வெளிவராமல் காக்கப்பட்ட நிலைகளிலும் இஃது எப்படியோ நாட்டு மக்களுக்கு எட்டிற்று. அவர்கள் எழுப்பிய கூக்குரலின் பயனாக அதிகாரிகள் அச்சங்கொண்டு விழாவுக்கு இணக்கம் தந்தனர். உண்ணா நோன்பு என்பதை ஓர் அரசியல் கருவியாகப் பலர் பயன்படுத்தியதுண்டு. இந்தியாவில் காந்தியடிகள் அதனை ஓர் ஒழுக்கமுறையாகவே பின்பற்றினார். போஸின் உண்ணா நோன்பு காந்தியடிகளின் உண்ணா நோன்பு போல ஓர் ஒழுங்கு முறையன்று. அநீதியின் அடக்கு முறைக்கு உட்பட்டு வேறு செயலற்ற நிலையிலுள்ளவர்களின் கடைசிக் கருவியாகவே அவர் அதனைப் பயன்படுத்தினார். காந்தியடிகளின் உண்ணா நோன்பின் அடிப்படை தன் ஒறுப்பும், நண்பர்கள் மீது அன்பு ஒறுப்பும் ஆகும், ஆனால் போஸ் மேற்கொண்ட உண்ணா நோன்பின் அடிப்படை தன் மதிப்பும் தன்மான உறுதியுமேயாகும். உயிரைவிடத் துணிந்தும் மானம் காக்கும் உறுதியே இவ்வுண்ணா நோன்பை ஊக்கியது. காந்தியடிகள் நோன்பின் நோக்கம் அவரைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்கள் தவறுகளைக் கண்டித்து அவர்களைப் பணிய வைப்பதேயாகும். தம் நாட்டு மக்களையன்றி எதிரிகளைப் பணிய வைக்க அவர் நோன்பாற்ற வில்லை. போஸ் நோன்பு கொடுங் கோலரையும் எதிரிகளையும் பணியவைக்கும் நோக்கம் உடையதாகும். காந்தியடிகள் உண்ணா நோன்பு மேனாட்டினராலோ தற்கால அறிவுலகத்தினாலோ எளிதில் உணரமுடியாத ஆன்மிக இயல்புடையது. போஸினதோ உலகெங்கும் தன்மதிப்பு உறுதி உடைய மாவீரரால் கையாளப்படுவதும் மதிக்கப்படுவதும் ஆகும். சிறைக்குள்ளிருந்தே தேர்தலில் வெற்றி போஸ் விடுதலை பற்றிய நாட்டு மக்கள் கிளர்ச்சியை ஆட்சியாளர் இரண்டு ஆண்டுகளாகப் புறக்கணித்து வந்தனர். ஆகவே அரசியலாரின் தவற்றைக் கண்டிக்க நாட்டு மக்கள் ஒரு புது வழி கண்டனர். 1926 நவம்பரில் வங்க சட்டசபைத் தேர்தல் வந்தது. சிறையிலிருந்தே போஸையும் அவர் தோழர்களுள் ஒருவரான எஸ்.ஸி. மிதராவையும் நாட்டு மக்கள் இரண்டு தொகுதிக்குப் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுத்தனர். புதிய அவை உறுப்பினர் என்ற முறையில் அவர்களை விடுவிக்கும் படி சட்டமன்றமும் வற்புறுத்த நேர்ந்தது. இதற்கும் அரசாங்கம் செவி சாய்க்க மறுத்தது. ஆனால் 1927 ஏப்ரலில் போஸ் கடுஞ்சிறை வாழ்வின் கொடுமையால் அவர் ஈரலில் பழுப்பேறியது. அவர் நிறை 40 கல்லெடை (பௌண்டு) களாகக் குறைந்தது. மருத்துவ அறிஞர் அனைவரும் அவர் நிலை அபாயகரமான தென்று எச்சரித்தனர். நோய் நலிவும் விடுதலையும் விடாக்கண்டர்களாக மக்கள் வற்புறுத்த கொடாக் கண்டர்களாக அரசியலார் மேன்மேலும் பிடிவாதமே காட்டினர். அவர் உடல் நிலையைச் சரிப்படுத்திவிடும் நோக்குடன் அரசியலார் அவரை இரங்கூன் கொணர்ந்து அவரது உடன் பிறந்தார் டாக்டர் ஸுஸீல் சந்திரபோஸ் உள்ளிட்ட ஒரு மருத்துவக் குழாத்தினை அமர்த்தி அவர் உடலைப் பரிசோதித்தனர். அக்குழாத்தினரின் கருத்துரை மீது அவர்கள் போஸ் தம் சொந்தச் செலவில் மருத்துவம் செய்து கொள்வதானால் ஸ்விட்ஸர்லாந்துக்கு அவரை அனுப்ப இணங்குவதாகக் கூறினர். ஆனால் போஸ் இதற்கு இணங்க மறுத்தார். நிபந்தனை மீது தொலை செல்லுவதைவிட நாட்டிற்காக அதனருகிலேயேயிருந்து சிறையில் மாள்வதே மேல் என்று அவர் துணிந்தார். மே 15-ஆம் நாளில் வேறு வகையின்றி அரசியலார் போஸை இந்தியாவுக்குக் கொண்டுவந்து மாவட்டத் தலைவர் மாளிகையில் மீண்டும் மருத்துவ சோதனை செய்தனர். அதன்பின் மறுநாள் அவர் அவருக்கு நிபந்தனையற்ற விடுதலை தந்தனர். இங்ஙனம் போர் வீரராக ஆட்சியாளர் விருந்தினராய் மாந்தலே சென்ற போஸ், மூன்றாண்டுகட்குப் பின் நோய் வீரராகத் தாய்நாட்டிற்குத் திரும்பி வந்தார். அவர் விடுதலைக் காகப் பாடுபட்ட வங்க மக்கள், அரசாங்கம் அவரை விடுவிக்க மறுத்த மறுப்பு மூலம் அவர் உண்மை மதிப்பை நன்கறிந்து கொண்டனர். நண்பர் அன்பின் அளவு பகைவர் எதிர்ப்பின் அளவினால் மட்டுமே அளக்கப்படல் கூடும் அல்லவா? 5. குடியேற்ற நாட்டுரிமையா? முழுநிறை விடுதலையா? வங்க சிங்கத்தின் `வாரிசு’காங்கிரஸ் பதவிகள் போஸ் மாந்தலேச் சிறை வாழ்விலிருந்து வங்க நாட்டு வாழ்வில் புகுந்த சில நாளைக்கெல்லாம் வங்க சிங்கம் ஸி.ஆர். தாஸ் உலக வாழ்வை நீத்தார். அவர் மறைவுடன் வங்க அரசியல் வானில் பேரிருள் சூழ்ந்தது போலாயிற்று. வங்க மக்கள் கண்ணீர் விட்டுக் கதறினர். தேச பந்துவாகிய அவர் வகித்து வந்த மாபெரும் பொறுப்புகளைத் தாங்க அவர்கள் அவர் அரசியல் மடி தவழ்ந்த சிங்கக் குருளையாகிய போஸையே எதிர்பார்த்தனர். அவரும் உடல் சற்று நலமடைந்தே வெளி வந்து அப்பொறுப்பை ஏற்றார். அவ்வாண்டிலேயே அவர் வங்க மாகாணக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார். போஸ் விடுதலையான ஆறு மாதத்திற்குள் காங்கிரஸ் பேரவையின் ஆண்டுக் கூட்டம் சென்னையில் டாக்டர் அன்சாரி தலைமையில் கூடிற்று. இப்பேரவைக்கு வங்கத்திலிருந்து வந்த பிரதிநிதிக் குழுவையும் ஸி.ஆர் தாஸின் இடத்திலிருந்து போஸே தலைமை வகித்து வரவேற்றார். தேசியக் காங்கிரஸ் பேரவையில் தலைவர்களும் அவர்தம் ஒப்பற்ற தியாக வாழ்க்கையையும் திறனையும் பாராட்டி அவரைப் பண்டித ஜவஹர்லாலுடன் காங்கிரஸ் பொதுக் காரியதரிசியாக நியமித்தனர். 1928 : காங்கிரஸ் வரலாற்றில் ஒரு கட்டம் 1928-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டம் ஆகும். 1919-இல் இந்தியாவுக்குத் தரப்பட்ட மாண்ட்ஃபோர்டுச் சீர்திருத்தங்களின்படி 10 ஆண்டுக்கு ஒருமுறை இந்திய நிலைமைகள் ஆராயப்பட்டு அவ்வனுபவத்தின் மீது புதிய சீர்திருத்தங்கள் வழங்கப்படல் வேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. அதைப் பின் பற்றி 1928-இல் பேரரசின் ஆட்சியாளர் ஓர் ஆணைக்குழு (ஊடிஅஅளைளiடிn) அனுப்பியிருந்தனர். இதன் தலைவர் ஸர்ஜான் சைமன் பெயரால் இது சைமன் குழு என்று அழைக்கப்பட்டது. இக்குழுவில் இந்தியர் எவருமில்லாத தால் காங்கிரஸும் பிற இந்திய அரசியல் கட்சியினரின் பெரும்பாலோரும் இதனை எதிர்த்துப் புறக்கணிப்புக் காட்டினர். இக்குழுவினர் நோக்கம் இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டுரிமையையே தொலை யிலக்காகக் கொண்டு அதனை எந்த அளவுக்கு உடனடியாகத் தரலாம் என்று பார்ப்பதேயாகும். காங்கிரஸின் மட்டான போக்கினர் உடனடியாக அல்லது விரைவில் குடியேற்ற நாட்டுரிமை கோரினர். ஆனால் தீவிரவாதிகள் அந்நோக்கமே இந்தியாவுக்குப் போதாது; உடனடியாகக் கொடுத்தாலும் இந்தியாவின் அவாவை அது நிறைவேற்றாது என்று கருதினர். இவ்வாண்டின் மற்ற இரு நிகழ்ச்சிகள் நேரு குழுவின் கூட்டங்களும் எல்லாக் கட்சி மாநாடுகளும் ஆகும். பண்டித ஜவஹர்லாலின் தந்தையாரான பண்டித மோதிலால் நேருவைத் தலைவராகக் கொண்ட நேரு குழுவைக் காங்கிரஸின் மட்டான போக்குடைய கட்சி ஆதரித்தது. அக்குழுவின் முடிவுகள் அமைந்த நேரு அறிக்கை இந்தியாவுக்குக் குடியேற்ற உரிமை கோரி அதற்கான விரிவான திட்டம் வகுத்திருந்தது. லக்னோவில் கூடிய எல்லாக் கட்சி மாநாட்டில் பெரும்பான்மையோர் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். “முழு விடுதலைக் குழாம்” எல்லாக் கட்சி மாநாட்டில் தீவிரக் கட்சியினர் இடது சாரியாகப் பிரிந்து நின்று குடியேற்ற நாட்டுரிமை கோருவதை எதிர்த்தனர். இக்குழுவினரில் சுபாஷ் சந்திரபோஸும் பண்டித ஜவஹர்லாலும் முக்கியமானவர்கள். எல்லாக் கட்சி மாநாட்டின் போக்கையும் முடிவையும் கண்ட அவர்கள் லக்னோவிலேயே தனியாகக் கூடித் தம் நிலையைப் பரிசீலனை செய்தனர். அதில் பண்டித ஜவஹர்லால், சுபாஷ் போஸ் ஆகிய இருவரின் முயற்சியால் முழு விடுதலைக் குழாம் (ஐனேநயீநனேநnஉந டுநயபரந) ஒன்று நிறுவப் பட்டது. நேரு குழுவின் முடிவுகளையும் அதனைப் பின்பற்றிய எல்லாக் கட்சி மாநாட்டின் துணிவையும் கண்டிப்பதே இக்குழாத்தின் நோக்கமென வரையறுக்கப்பட்டது. மிதவாதிகள் 1919-இல் காங்கிரஸை விட்டு வெளியேறி வேறு கட்சி கண்டபின் மீண்டும் ஒரு மிதவாத அலை காங்கிரஸில் பின்னடைந்து நிற்கிறது என்று இதுபோது போஸ் கருதத் தொடங்கினார். தாம் கொண்ட கொள்கைக்காக, நாட்டு நலனை முன்னிறுத்தி நாட்டுப் பேரவையின் போக்குக்கு எதிராக முன்னணிக் கொடியைப் போஸ் பிடிக்கத் தொடங்கியதும் இது முதற் கொண்டே என்னலாம். ஸைமன் குழு எதிர்ப்பும் போஸும் ஸைமன் குழுவினரைக் கிட்டத்தட்ட எல்லாக் கட்சியினருமே எதிர்க்கத் துணிந்தனராயினும் எதிர்ப்பு முறை பற்றிய மட்டில் போஸும், அவர் தீவிரவாத நண்பர் சிலரும் அடிப்படையிலேயே மாறுபட்ட கருத்துடையவராயிருந்தனர். மகாத்மா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் காட்டிய எதிர்ப்பு ஒத்துழைப்பு மறுப்பு (பகிஷ்காரம்), கறுப்புக் கொடி காட்டல் ஆகிய எதிர்மறை நடவடிக்கை மட்டுமே. போஸே அக்குழுவின் எதிர்ப்புடனேயே சத்தியாக்கிரக இயக்கம் தொடங்க வேண்டு மென்று காந்தியடி களிடம் நேரில் சென்று வற்புறுத்தினார். அவரே இதுபற்றிப் பிற்காலத்தில் கூறியுள்ளதாவது: “காங்கிரஸ் செயற்குழு போதிய ஊக்கங் காட்டியிருந்தால் 1928-இல் நடத்தப்பட்ட இயக்கத்தை இரண்டாண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்கலாம் என்பதிலும், சைமன் குழு நியமனமே அதற்குப் போதிய காரணமாயிருந் திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. 1928 மே-யில் நான் மகாத்மா காந்தியைச் சபர்மதி ஆசிரமத்தில் கண்டபோது மாகாணங் களிலிருந்து வரும் மக்களுணர்ச்சியை அவருக்கு எடுத்துரைத்து நாட்டின் தலைமையை ஏற்று நடக்க முன்வரும்படி வற்புறுத்திக் கோரினேன். அவ்வமயம் அவர் இன்னும் தமக்கு இதுவகையில் அருளொளி தோன்றி வழி காட்டவில்லை யென்று கூறினார். ஆனால் அதே சமயத்தில் பார்டோலி மக்கள் வரிகொடா இயக்கம் நடத்தித் தாங்கள் போருக்குச் சித்தமாயுள்ளதை அவர் கண்முன் காட்டினர்.” மாகாண இளைஞர் மாநாடுகள் காந்தியடிகளிடம் போஸ் மாகாண மக்கள் உணர்ச்சியைப் பற்றிக் கூறியது கேள்வியிலிருந்ததன்று. அவ்வாண்டில் அவர் பல மாகாணங்களில் சென்று, நேரடியாக மக்களுணர்ச்சியில் பங்குக் கொண்டிருந்தார். மே மாதத்தில் பூனாவில் நடைபெற்ற மகாராஷ்டிர மாகாண மாநாட்டில் அவர் தலைமை வகித்தார். ஆகஸ்டில் கல்கத்தாவில் பண்டித ஜவஹர்லால் தலைமையில் கூடிய வங்க மாகாண மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். டிஸம்பரில் அதே நகரில் கே.எஃப் நரிமன் தலைமையில் நடந்த அகில இந்திய வாலிபர் காங்கிரஸில் அவர் திறப்புரையாற்றினார். இம்மாநாட்டின் திறப்பு விழாவுரையில்தான் முதன்முதலாகக் காந்தியடிகளின் ஆன்மார்த்தப் போக்கு நாட்டின் அரசியலுக்கு உகந்ததன்று என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். “சபர்மதி ஆசிமரத்து மகாத்மாவும் பாண்டிச்சேரி ஆசிரமத்து அரவிந்த கோஷும் காட்டும் செயலுருவற்ற எதிர்ப்பை விடத் தீவிரச் செயலுருவான எதிர்ப்பே நற்பயன் தரத்தக்கது” என்று அவர் கூறினார். வாழ்க்கை முறையிலும் ‘இக்காலத்தில் வேண்டப் படுவது பழங்கால ஆன்மிக முறையன்று; தற்கால நவீன உலகாயத முறையே’ என்று அவர் கூறினார். அரசியலனுபவமும் மேனாடுகளில் அவர் கண்ட காட்சிகளும் முன் துறவு நாடிச் சென்ற யோகியின் மனத்தில் பெருத்த மாறுதல் செய்திருந்தன என்பதைக் காணலாம். கல்கத்தா காங்கிரஸ் : குடியேற்றவுரிமையா? விடுதலையுரிமையா? வலதுசாரிப் போக்குடையவர்கட்கும், இடதுசாரி யினருக்கும் உள்ள முரண்பாடு 1928-ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸில் முன்னணிக்கு வந்தது. பண்டித மோதிலால் நேருவும் அவர் தோழர்களும் நேரு அறிக்கையை அப்படியே ஏற்கச் சித்தமாயிருந்தனர். இதன்படி காங்கிரஸின் முடிந்த முடிவான அரசியல் குறிக்கோள் பிரிட்டிஷ் பேரரசுக்கு உட்பட்ட குடியேற்ற நாட்டுரிமையேயாகும். சுபாஷ் போஸ், பண்டித ஜவஹர்லால் நேரு, எஸ். சீனிவாச ஐயங்கார் முதலிய இடதுசாரியினர் முழு விடுதலை உரிமையே காங்கிரஸின் உடனடிக் குறிக்கோளாக வேண்டும் என்று வற்புறுத்தினர். நாட்டின் இளைஞர் பேராதரவு பெற்ற இக்கோரிக்கைக்குக் கல்கத்தாக் காங்கிரஸ் பேராதரவு காட்டிற்று. இந்நிலையில் அதுவே காங்கிரஸில் நிறைவேற்றப்படும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் இடதுசாரியினர் வெற்றியடைய இருக்கும் சமயம் மகாத்மா காந்தி ஒரு சமரஸத் தீர்மானம் கொண்டு வந்தார். 1929 டிஸம்பர் 31 அன்று அல்லது அதற்குள்ளாகப் பிரிட்டிஷ் அரசியல் மன்றம் குடியேற்ற நாட்டுரிமை வழங்கினால் அதைக் காங்கிரஸ் சார்பில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அத்தேதி வரை அதனை வழங்காவிட்டாலோ அல்லது அத்தேதிக்கு முன் அதை மறுத்துவிட்டாலோ முழு விடுதலை யுரிமையைத் தடையின்றிக் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளலா மென்றும் அவர் வாதாடினார். மேலும் அவர் தம் சொந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி இடதுசாரியினரான பண்டித ஜவஹர்லால் நேருவையே தம் தீர்மானத்தை ஆதரிக்கும்படி செய்தார். இவையனைத்தும் போதாமல், இத்தீர்மானம் நிறைவேறாவிட்டால் காந்தியடிகள் காங்கிரஸை விட்டு விலகிவிடவிருக்கிறார் என்ற ஒரு வதந்தியும் எழுப்பப்பட்டது. இவற்றின் பயனாக, சமரஸத் தீர்மானம் பெரும்பான்மை மொழிகளால் நிறைவேற்றப்பட்டது. பெயரளவில் இக்காங்கிரஸின் முடிவு போஸுக்கும் இடதுசாரியினருக்கும் தோல்வியாயினும், அம்முடிவு அவர் செல்வாக்கின் வளர்ச்சியையும் நாட்டுப் போக்கையும் நன்கு எடுத்துக்காட்ட உதவிற்று. தீர்மானத்தை ஆதரித்தவர்கள் 1350 பேர். எதிர்த்தவர்கள் 973. எத்தனையோ எதிர் சூழ்நிலைகளிடையேயும் தீர்மானத்திற்கு ஆதரவு நூற்றுக்கு 58-க்கும் மேல் ஏற்பட முடியவில்லை. லாகூர் காங்கிரஸ் கூடிய ஆண்டாகிய 1929-இல் இளைஞர் ஆர்வம் பின்னும் தொடர்ந்து பெருகியது. சுபாஷ் சந்திர போஸ், பண்டித ஜவஹர்லால் நேரு, கமலாதேவி, சட்டோபாத்யாயா முதலிய இடதுசாரியினர் தலைமையில் பூனா, அகமதாபாது, நாகபுரி, லாகூர் முதலிய பல இடங்களில் இளைஞர் கூட்டங்களும் மாணவர் மாநாடுகளும் கூடின. லாகூர் மாணவர் மாநாட்டில் போஸே தலைமை வகித்தார். லாகூர் காங்கிரஸ் : ஜவஹர் தலைமைத் தேர்வு காங்கிரஸ் கூடுமுன்பே தீவிரக் கட்சியின் கை அதில் மிகவும் ஓங்கியிருக்கும் என்று கண்ட தலைவர்கள் அவர்களிடம் செல்வாக்குப் பெற்று அவர்களைக் கட்டுப்படுத்தவும் சமாளிக்கவும் ஆற்றல் வாய்ந்தவரான ஒருவரையே கூட்டத் தலைவராக்க நாடினர். முதலில் அவர்கள் காந்தியடிகளின் பெயரையே குறிப்பிட்டனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். ஸர்தார் பட்டேல் இடதுசாரியினர்கட்கு உகந்தவரல்லராதலால் காந்தியடிகளே அவர் பெயரைத் தடுத்தார். இறுதியில் இடது சாரியின் தலைவருள் ஒருவரும் காந்தியடிகளுக்குப் பேரளவு விட்டுக் கொடுத்துள்ளவருமான பண்டித ஜவஹர்லால் நேருவையே காந்தியடிகள் ஆதரித்தார். சமரஸ முயற்சி முறிவு குடியேற்ற நாட்டுரிமையா, முழு விடுதலையா என்ற பிரச்சினை மீது எழுந்த விவாதத்தைக் கருத்திற் கொள்ளாதது போலவே பிரிட்டிஷ் அரசாங்கம் இருந்து வந்தது. ஆனால் அக்டோபர் 31 அன்று தலை முதல்வர் இர்வின் பெருமகனார் ஓர் அறிக்கை வெளியிட்டார். 1917-இல் செய்யப்பட்ட பிரிட்டிஷ் அரசியலார் அறிக்கையின் வாசகத்திலேயே இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டுரிமை அளிப்பது என்ற கோட்பாடு அடங்கி யுள்ளது என்பதே அதன் போக்கு அதோடு சைமன் குழு அறிக்கை வெளியானவுடன் ஒரு வட்ட மேஜை மாநாடு நடத்தப் படுமென்றும் அடுத்த அரசியல் சீர்திருத்தம் பற்றி அதில் ஆலோசிக்கப்படு மென்றும் அவர் குறித்தார். தலை முதல்வர் அறிவிப்பிற்கு மறுமொழித் தெரிவிக்குமாறு டில்லியில் எல்லாக்கட்சி மாநாடு ஒன்றுக் கூட்டப்பட்டது. அதில் காந்தியடிகள், பண்டித மோதிலால், பண்டித ஜவஹர்லால், பண்டித மாளவியா, டாக்டர் அன்ஸாரி, சர்தார் படேல் முதலிய காங்கிரஸ் தலைவர்களுடன் டாக்டர் மூஞ்சே, கனம் சீனிவாச சாஸ்திரி, ஸர்தேஜ்பகதூர் சாப்ரூ, திருமதி பெஸண்ட், திருமதி சரோஜினி நாயுடு ஆகியவர்கள் கலந்துக் கொண்டனர். அவர்கள் முயற்சியால் தலை முதல்வர் திட்டத்தை இந்தியர் ஏற்பதென்று முடிவுச் செய்யப்பட்டது. ஆனால் இத்திட்டத்தை யேற்கவோ, வட்டமேடை மாநாட்டில் கலக்கவோ போஸ் ஒருவர் மட்டும் ஒரு சிறிதும் இணங்கவில்லை. அவர் தம் தோழர்களுடன் வேறு தனி அறிவிப்பு ஒன்று அனுப்பி வைத்தார். போஸின் வலிமையை யுணர்ந்த வி.ஸே. பட்டேல் மற்றத் தலைவர்களிடம் மீண்டு மொருமுறை இர்வின் பெருமகனாரைக் காணும்படி தூண்டினார். இது பயன்பெறாமல் போகவே, போஸ் முடிவே சரியான முடிவு எனக் கண்டு யாவரும் அதனை வரவேற்றனர். முழுவிடுதலைத் தீர்மானம்: போஸ் நிலைமை லாகூர் காங்கிரஸ் பேரவைக் கூட்டத்தில் முழு விடுதலைத் தீர்மானம் மகாத்மா காந்தியாலேயே கொண்டுவரப்பட்டு நிறைவேறிற்று. ஆனால் அத் தீர்மானத்தை ஒட்டிய நிகழ்ச்சி ஒன்று காந்தியடிகள் போக்கையும், போஸ் போக்கையும் நன்கு எடுத்துக்காட்டிற்று. காந்தியடிகள் முழு விடுதலைத் தீர்மானத்தைத் தனித் தீர்மானமாகக் கொண்டு வரவில்லை. புரட்சிக்காரர் செயலால் இர்வின் பெருமகனார் சென்ற புகைவண்டியில் ஒரு வெடிகுண்டு விபத்து ஏற்பட்டது. அவர் அதில் தப்பியதற்காக இறைவனுக்கு நன்றி கூறுவதும் அத்தீர்மானத்துடன் பிணைக்கப் பட்டிருந்தது. போஸ் தலைமையில் தீவிரவாத இளைஞர் இதனைப் பெரிதும் எதிர்த்தனர். ஆயினும் கூட்டுத் தீர்மானம் என்ற முறையில் அது நிறைவேறிற்று. காந்தியடிகளின் ஆதரவைப் பெற்ற பண்டித மோதிலால் நேரு குழுவுக்கும், போஸ் தலைமையிலுள்ள இளைஞர் குழுவுக்கும் இடையே உள்ள பிளவு லாகூரில் விரிவடையத் தொடங்கிற்று. ஜவஹர்லால் தலைவரானபின் அவர் மேன் மேலும் காந்தியடிகள் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்டு இடது சாரிகளிடமிருந்து விலகலானார். 1920 முதல் காங்கிரஸில் கலந்து 1926-இல் காங்கிரஸ் தலைவராயிருந்த சென்னை சீனிவாச ஐயங்கார் போஸை ஆதரித்தார். ஆனால் ஜவஹர்லால் தம் செயற்குழுவில் அவரைச் சேர்க்காது விலக்கினார். போஸின் பிற திட்டங்கள் முழு விடுதலைத் தீர்மானத்தின் திருத்தமாக, போஸ் சில கோரிக்கைகள் கொண்டுவந்தார். அவற்றில் அவர் வெளிநாட்டுச் சரக்குகளின் பூர்ண பகிஷ்காரம், போட்டி அரசாங்கம் அமைத்தல் முதலியக் கோட்பாடுகளை வற்புறுத்தினர். இளைஞர், தொழிலாளர், குடியானவர்கள் ஆகியவர்களின் சங்கங்கள் அமைத்து இயக்கங்கள் நிறுவவேண்டும் என்று முழங்கினார். காங்கிரஸ் இவற்றை நிறைவேற்றவில்லையாயினும் இவை மக்கள் சிந்தனையைத் தூண்டப் பெரிதும் உதவின. இத்தீர்மானங்கள் தோல்வியுற்றப் பின் போஸ் பேசியதாவது: “இத்தீர்மானங்களோ அல்லது இவற்றின் சாராம்சமோ வருகிற காங்கிரஸில் நிறைவேற்றப்படுமென்பதில் எனக்கு உறுதி உண்டு. அதற்கிடையே உங்கள் பரிசீலனைக்குப் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. ஆனால் நான் வருந்துவ தெல்லாம் அதுவரையில் எவ்வளவோக் காலம் வீணாகப் போகிறதே என்பதுதான். ஆனால் இது தவிர்க்கக் கூடாதத் தடங்கலே. பொதுமக்களிடையே அரசியலறிவுப் பரவுவது என்பது சாவதானமானச் செயலாகவே இருப்பது இயல்பு. அதிலும் இப்போதுபோல் எல்லாச் செல்வாக்கு மிக்க தலைவர்களும் எதிரிடையாயிருக்கும்போது கேட்க வேண்டியதில்லை.” செயற்குழு உறுப்பினர் நியமனம் : போஸ் கோரிக்கை போஸ் கொண்டுவந்த இன்னொருத் தீர்மானம் செயற்குழு உறுப்பினர் நியமனம் பற்றியது. இதுவரை அவர்கள் தலைவரால் அமர்த்தப்பட்டு வந்தனர். இனி அவர்கள் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று போஸ் கோரினார். இத்தீர்மானத்தை வலதுசாரியினர் மும்முரமாய் எதிர்த்து முறியடித்தனர். இத்தோல்வி போஸின் எதிர்ப்புக்கு உரம் தந்தது. இனி காங்கிரஸிற்குள்ளே இளைஞர் இருந்து தனித்தனியாக நின்று ஒன்றுபட்ட முதியோர் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது என்று அவர் கண்டார். ஆகவே அவர் காங்கிரஸினுள்ளேயே ஒரு தனிக் கட்சித் தொடங்கி வலதுசாரியினின்றும் பிரிந்து நிற்க முனைந்தார். 1922 கயா காங்கிரஸில் ஏற்பட்ட சுயராஜ்யக் கட்சியைப் போன்ற புதியக் கட்சித் தோற்றுவிக்க வேண்டும் என்று அவர் எண்ணமிட்டார். இக்கட்சிக்கு அவர் 1929-இல் இட்ட பெயர் காங்கிரஸ் குடியாட்சிக் கட்சி (ஊடிபேசநளள னுநஅடிஉசயவiஉ ஞயசவல) என்பதாகும். சென்னைத் தலைவர் சீனிவாச ஐயங்கார் காங்கிரஸ் மேலிடத்திலிருந்து விலகி, போஸின் புதியக் குழுவில் சேர்ந்தார். இவர் இதன்பின் என்றும் காங்கிரஸில் நேரடியாகக் கலந்து கொள்ளவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வங்கக் காங்கிரஸ் பிரச்சினை : போஸ் பெருந்தன்மை லாகூர் காங்கிரஸுடன் சேர்த்துக் கவனிக்க வேண்டிய மற்றொரு நிகழ்ச்சி வங்கமாகாணக் காங்கிரஸினுள் ஏற்பட்ட இரு கட்சிகளின் பூசல் ஆகும். வங்கக் காங்கிரஸில் 1927 முதல் போஸ் குழுவொன்றும், சென்குப்தா குழுவொன்றும் இருந்து வந்தன. இவற்றின் தலைவர்களான சுபாஷ் போஸ், ஜே.எம்.சென் குப்தா ஆகிய இருவரும் ஸி.ஆர்.தாஸின் இரு கைகள் போன்று ஒத்துழைத்தவர்களே, தீவிரவாதியான போஸ் சிறை சென்ற போதெல்லாம் அவரது இடத்திலிருந்து காரியங்களை நடத்தியவர் சென்குப்தா. போஸின் மாந்தலே சிறை வாசம் நீடித்ததினால் சுயராஜ்யக் கட்சிக்கும் அதன் சார்பில் வங்கச் சட்ட மன்றத்துக்கும் கல்கத்தா நகரவைக்கும் அவர் ஐந்து தடவை தொடர்ந்து தலைவராயிருந்து பேரும் புகழும் பெற்றார். ஆனால் போஸ் சிறையிலிருந்து வந்ததும் அவர் விலகி நிற்க வேண்டி வந்தது. வங்கக் காங்கிரஸ் தலைமைப் பதவியைத் தகர்ப்பதின் மூலம் அகில இந்தியாவில் போஸுக்குப் பலக் குறைவை உண்டு பண்ண எண்ணிய வலது சாரியினர் சென்குப்தா குழுவினுக்கு ஆதரவு தந்தனர். இக்கட்சிப் பூசலைச் சாக்காகக் கொண்டு வங்க அரசியலில் நுழைவுற்ற மேலிடத்தார் அவர்கள் வழக்கைத் தீர்த்துவைக்கும் நடுவராகப் பட்டாபி சீதாராமையாவை அனுப்பினர். ஆனால் போஸ் இதனை ஏற்க விரும்பவில்லை. பதவிப் போட்டிக்காக நின்று வங்க நாட்டொற்றுமையைக் கெடுப்பதைவிடக் தாமே விலகி விடுவதென்று துணிந்தார். இவ்வுயர் மனப்பான்மையைக் கண்டு மனமாற்றமடைந்த சென்குப்தா குழுவினர் போஸுடன் சமரசம் செய்து கொண்டனர். இதுவன்றோ உயர் நாட்டுப் பற்றினுக்கு அறிகுறி! விளக்கொளி பிற விளக்குகளை ஏற்றித் தானும் ஒளிமிக்கு விளங்குவதுபோல் உண்மையான நாட்டுப்பற்றும் பெருந்தன்மையும் அதனை உடையவர்க்கும் மற்றோர்க்கும் ஒருங்கே நன்மை பயப்பதாகும் என்பதை இச்செய்தி எடுத்துக்காட்ட வல்லது. 6. தியாக வாழ்வும் வெளிநாட்டுப் பயணங்களும் தீவிரவாதிகளும் சட்ட மறுப்பியக்கமும் தலைமைப் பதவியும் அரசியல் பதவியும் எங்குமே போட்டியையும் வேற்றுமையையும் விளைவிக்கும். ஆனால் தியாகம் அவற்றை ஒழிக்கும் ஒப்பற்ற மருந்து ஆகும். பதவிக்குப் போட்டியிடுபவர் தியாகத்துக்குப் போட்டியிடத் துணிய மாட்டார். பதவியில் மிதவாதிகள் போட்டிக்கு இடமுண்டு; அவர்கள் மேம்படுவதற்கும் சூழ்நிலை உதவக்கூடும். ஆனால் தியாகத்தின் சூழ்நிலை தீவிரவாதிகளுக்கே உரியது. போஸின் வாழ்க்கை மீண்டும் மீண்டும் பலகால் இவ்வுண்மையை வலியுறுத்தி விளக்கிக் காட்டும் தன்மை உடையது. இடதுசாரியினர் பொதுவாகவும் போஸ் சிறப்பாகவும் வற்புறுத்தி வந்த முழு விடுதலைத் தீர்மானம் நிறைவேறியது புதிய ஒற்றுமையின் முதற்படியாய் அமைந்தது. ஆனால் போஸும் அவர் தோழரான சீனிவாச ஐயங்காரும் இவற்றுடன் மன நிறைவு பெறவில்லை. அவர்கள் பொறை எதிர்ப்புமுறை என்ற அறப்போர் (சத்தியாக்கிரகம்), வரிகொடா வற்புறுத்தினர். நாட்டில் இளைஞர் மனத்தில் குமுறும் அடக்க முடியாத உணர்ச்சி வேகம் பெருத்ததொரு நாட்டு வெறியாகிப் பயங்கரப் புரட்சி இயக்கத்தையும் வெடிகுண்டு வழக்கு, படுகொலை வழக்கு ஆகியவைகளையும் பெருக்கி வந்தன. இவற்றைத் தேசிய முறையில் பயனுடையவையாக்கத் தீவிர இயக்கங்களே நல்ல வழி என்பதை அவர்கள் வற்புறுத்தினர். பயங்கர இயக்கத்தின் உயர் நோக்கங்களை விட்டு அவர்கள் முறைகளை மட்டும் கண்டிப்பது நாட்டார்வத்தின் மீது தண்ணீருற்றும் வேலையாகும் என்றும் அவர்கள் கருதினர். தீவிரவாதிகளின் திட்டங்கள் முழுவதையும் வலது சாரியினர் ஏற்க முடியவில்லை; காந்தியடிகளும் ஏற்கத் துணியவில்லை. ஆயினும் மக்கள் விருப்பத்தை மதிக்க மறுக்கும் ஆட்சியைப் பணிய வைக்க அவற்றைப் படிப்படியாகவாவது கையாள வழியில்லை என்பதைக் காந்தியடிகள் கண்டு பொறுமை எதிர்ப்பியக்கம் தொடங்கத் துணிந்தார். ஆழ்ந்த ஒன்றிரண்டு துறைகளில் மேற்கொள்வதாக முடிவு செய்தார். அவர் தேர்ந்தெடுத்த துறைகள் உப்புச்சட்டம் காட்டுச் சட்டம். குடிவரிச் சட்டம் ஆகிய மூன்றின் எதிர்ப்புமே. 1920-இல் பேரளவில் நடத்தப்பட்ட வெளிநாட்டுத் துணி மறுப்பு, சர்தார் பட்டேல் தலைமையில் வெற்றிகரமான நடத்தப்பட்ட வரிகொடா இயக்கம் ஆகியவை துணியப்படவில்லை. ஆயினும், போட்டி அரசியல் சிறிய அளவில் சில பகுதிகளில் நடைபெற்றது. புதிய பாரதப் போரின் `போர்வாள் அபிமன்னன்’ தண்டியில் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட உப்புப்போர் அரசியலார் எதிர்பாராவகையில் ஒரு பெரிய தேசியப் போராட்டமாகப் பரவிற்று. இப்போராட்டம் உண்மையில் தற்கால இந்தியாவின் ஒரு புதிய பாரதப் போரேயாகும். புராண காலப் பாரதத்தின் எழுச்சியுடனும் பெருமிதத்துடனும் வரலாற்று வாய்மையின் வீறும், உணர்ச்சியும் இதில் இடம் பெற்றன. இப்பெருங்காப்பியத்தில் காந்தியடிகள், பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியவர்கள் கொண்ட பங்கை வீமன், விசயன் ஆகியவர்கள் பங்கு என்று கூறலாமானால், போஸ் பங்கைப் போர்வாள் அபிமன்னன் பங்கு என்று கொள்ளல் பொருந்தும். ஆனால் அபிமன்னன் போரில் முடிவுற்றான். போஸோ நாடுகடத்தப்பட்டு மீண்டும் இரண்டு பெரிய இதிகாசப் போராட்டங்கள் நடத்த வேண்டியவராயிருந்தார். சிறை : சிறையிலும் எதிர்ப்பியக்கம் சட்டமறுப்புப் போரில் வங்கத்தின் பங்கைக் குறைவற நிறைவேற்ற சுபாஷ் போஸும், சென்குப்தாவும் இளஞ் சிங்கங்கள் போல முழக்கமிட்டு முன் வந்தனர். பல இளைஞர்களுடன் இரு தலைவர்களும் 124-ஏ பிரிவின்படி 9 மாதம் சிறைத்தண்டனை பெற்று அலிப்பூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். “விடுதலை” (டுiநெசவல)ப் பத்திரிகை ஆசிரியரும் வங்கக் காங்கிரஸ் செயலாளர் கிரண்சங்கரராயும் அவர்களுடன் சிறைப்பட்டனர். அலிப்பூர்ச் சிறைவாசத்தில் நடந்த நிகழ்ச்சியொன்று போஸின் தன்மான உணர்ச்சியையும் அஞ்சா நெஞ்சுறுதியையும் நாடறிய எடுத்துக் காட்டிற்று. சட்டமறுப்புப் போராட்டத்துக்கு முன்னிருந்தே நாடெங்கும் நடைபெற்று வந்த புரட்சி இயக்க நிகழ்ச்சிகளுள் ஒன்று மச்சுவா பஜார் வெடிகுண்டு வீச்சு என்பது. அது பற்றிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிறையாளிகள், அதிகாரிகள் கொடுமையை எதிர்க்கும் முறையில் வழக்கு மன்றத்துக்குச் செல்லவிருக்கும் சிறை வண்டியில் ஏற மறுத்தனர். உடனே போலிஸின் அபாயக்குழல் ஊதப்பட்டது. அதிகாரிகள் அப்பக்கம் கூடினர். மற்றைய சிறையாளிகளும் வேடிக்கை பார்க்க வந்தனர். சிறையாளிகளுக்கிடையில் போஸும் சென்குப்தாவும் இருந்தனர். குற்றவாளிகளைப் பட்டாணியப் படை வீரர் உதவியால் பலவந்தமாக வண்டியிலேற்ற எண்ணி அதிகாரிகள் போஸையும் அவர் தோழர்களையும் அப்புறம் போகும்படி கட்டளையிட்டனர். ஆனால் போஸ் சிறையாளிகளைப் பலவந்தப்படுத்துவது தவறு என்று கண்டித்துப் போக மறுத்தார். அவர்களைக் கலைக்கத் தடியடி உத்தரவிடப்பட்டது. போஸ் இச்சமயம் தாக்கிய அடியால் அவர் கீழே விழுந்து ஒரு மணி நேரம் உணர்வற்றுக் கிடந்தார். மற்றும் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டன. சிறை மேற்பார்வையாளர் இந்த நிகழ்ச்சியைச் சிறிது படுத்த முயன்றனர். ஆனால் நாடெங்கும் பெருத்த கண்டனத் தீ கிளம்பிற்று. மாபெருங் கூட்டங்களில் மக்கள் கூடித் தீர்மானங்கள் நிறைவேற்றினர். வேலை நிறுத்தங்கள், கடையடைப்புக்கள் பெருகின. இறுதியில் அரசியலார் போஸை வேறு சிறைக்கு மாற்றும் படியாயிற்று. நகரின் பரிசும் நாட்டின் பரிசும் சுபாஷ் சிறையிலிருக்கும்போதே கல்கத்தா நகர மக்கள் அவரைத் தங்கள் நகரப் பெருந்தலைவராக (ஆயலடிச)த் தேர்ந் தெடுத்தனர். விடுதலையடையுமுன் வங்கம் செய்த இச்சிறப்பை யடுத்து விடுதலையடைந்ததும் நாடு அவரைச் சிறப்பித்தது. இந்தியாவின் தேசியத் தொழிலாளர் அமைப்பான அகில இந்திய தொழிற்சங்க இணைப்புக்கு (ஹடட ஐனேயை கூசயனந ருniடிn ஊடிபேசநளள) அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போஸ் இத்தொழிலாளர் அமைப்பின் தலைவராயிருந்த காலத்தில்தான் தொழிலாளர் அமைப்பு தேசிய அமைப்பாகிய காங்கிரஸுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது என்பது நினைவில் வைக்கத்தக்கது. விடுதலை நாள் விழாவில் மீண்டும் சிறை போஸ் விடுதலை பெற்றது 1930 செப்டம்பரிலேயே. ஆனால் 1931 ஜனவரியில் அவர் மீண்டும் மார்தாவட்டத்தில் சிறைப்பட்டார். லாகூர்க் காங்கிரஸுக்குப் பின் ஆண்டுதோறும் ஜனவரி 26 விடுதலை நாளாக நாடெங்கும் கொண்டாடப்படும் வழக்கம் ஏற்பட்டது. இவ்விழாவில் காங்கிரஸ் செயற்குழுவினர் திட்டப்படுத்திய விடுதலை மொழியுறுதி எங்கும் படித்து, மீண்டும் உறுதி செய்யப்பட்டது. 1931ஆம் ஆண்டிலும் கல்கத்தா இவ்விழாவைப் பெருமுழக்கத்துடன் கொண்டாடிற்று. ஆனால், விழா ஊர்வலம் சட்டத்துக்கு மாறானதெனப் போலீஸ் அறிவித்தது. பரியூர்ந்த போலீஸ் படைகள் தடியடியால் கூட்டத்தைக் கலைத்தன. ஊர்வலத் தலைவரான போஸுக்கும் வேறு பலருக்கும் காயங்கள் ஏற்பட்டன. அவருடன் மற்றும் 11 பேர் சிறை செய்யப்பட்டனர். ஆனால் தண்டனைக் காலம் முடியுமுன் சட்டமறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டுக் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆகவே, அவர்களை அரசாங்கம் விடுதலை செய்தது. சட்ட மறுப்புப் போர் நிறுத்தம் சட்ட மறுப்பியக்கம் நடக்கின்ற காலத்திலேயே தென் இந்திய நேர்மைக் கட்சியினர், மிதவாதிகள் ஆகியவர்கள் ஒத்துழைப்பின் மூலம் வட்டமேசை மாநாட்டின் முதல் கூட்டம் நடைபெற்றது. தாய்நாட்டில் எதிர்ப்பியக்கம் நடக்கும்போது அதன் அரசியலமைப்பை வெளியிலிருந்து உறுதிப்படுத்துதல் இயலுவதன்று என்று கண்ட வெள்ளையர் போராட்டத்தை நிறுத்திக் காங்கிரஸை அதில் ஈடுபடுத்த நினைத்தனர். ஸர். தேஜ்பகதூர்சாப்ரூ, எம்.ஆர்.ஜயகர் முதலிய வடநாட்டு மிதவாதத் தலைவர்கள் சிறையிலேயே காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துச் சமரஸம் பேசினர். அதன் பயனாகக் காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி வட்ட மேசை மாநாட்டின் இரண்டாம் சந்திப்பில் கலந்தார். பகத்சிங் தியாகம் : கராச்சிக் காங்கிரஸும் நவஜவான் சபையும் வட்ட மேடை மாநாடு கூடி முன்பே இந்தியாவில் இரு பெருமாநாடுகள் கூடின. ஒன்று கராச்சிக் காங்கிரஸ் பேரவைக் கூட்டம்; மற்றொன்று இளைஞர் சார்பில் அமைக்கப் பட்ட அகில இந்திய புத்திளைஞர் (நவஜவான்) கழக மாநாடு. ஒன்றிரண்டாண்டுகளாக நடந்து வந்த பஞ்சாப் சதி வழக்கில் குற்றவாளிகளான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு முதலிய வீர இளைஞர்கள் இச்சமயம் தூக்கிலிடப்படும்படி தீர்ப்புச் செய்யப் பட்டிருந்தது. சட்டப்படி குற்றவாளிகளாயினும் நாட்டின் விடுதலையார்வத்தினாலேயே தூண்டப்பட்ட இந்த நாட்டு வீரர்களின் உயிர்கள் வீணாக்கப்படக் கூடாதென இளைஞரனைவரும் துடித்தனர். மகாத்மா காந்தியும் அவர்கள் உயிர்களைப் பாதுகாக்காமல் வட்ட மேடை செல்வதில்லை என்று உறுதி கூறியிருந்தார். ஆனால், காந்தியடிகள் இவ் வுறுதியைக் காக்க முடியவில்லை. அரசியலார் பல சாக்குப் போக்குக் கூறிக் கராச்சி காங்கிரஸ் கூடும் அதே நாளில், அதாவது மார்ச் 23-ஆம் தேதியில் அவர்கள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றினார்கள். இக்கொலை வழக்குத் தண்டனை வகையில் ஓர் உறுதிமொழி பெறாமல் காந்தியடிகள் இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று இளைஞர் சார்பில் போஸ் வேண்டிக் கொண்டிருந்தும் அது பயன்படாமல் போயிற்று. இவ்வுரமற்ற கோழை மனப்பான்மையைக் கண்டிப்பதற்காக நாட்டின் இளைஞர் காங்கிரஸ் பந்தலிலேயே அகில இந்திய நவஜவான் பாரத் சபைக் கூட்டத்தையும் நடந்தினர். இதற்கு சுபாஷ் சந்திர போஸே தலைமை வகித்தார். அதே பந்தலில் அகில இந்திய அரசியல் துயருற்றோர் மாநாடும் (ஹடட ஐனேயை ஞடிடவைiஉயட ளுரககநசநசள) அவர் தலைமையிலேயே கூடிற்று. காங்கிரஸ் பந்தலில் இளைஞர் குழுவொன்று காந்தியடிகளின் சமரச மனப்பான்மையைக் கண்டிப்பதற்கறிகுறியாக அவருக்கு ஒரு கறுப்பு மலர் அளித்தனர். அகில இந்திய அரசியல் துயருழந்தோர் மாநாட்டுத் தலைமைப் பேருரையில் போஸ், காந்தியடிகள் சட்டமறுப்புப் போரை நிறுத்தியது பெருந்தவறென்றும், நாட்டு மக்கள் விடுதலைப் போக்கு முன்னிலும் மிகுதியாக ஒடுங்கி நின்று சமயம் அங்ஙனம் நிறுத்திச் சமரசம் செய்வதென்பது மக்கள் உரிமைகளை விட்டுக் கொடுத்து விட்டதாகவேயாகும் என்றும், ஆகவே, சமரச ஒப்பந்தம் கண்டிக்கத் தகுந்ததென்றும் தீவிரமாகப் பேசினார். வட்டமேடை ஏமாற்றம் : போஸ் சிறை வாழ்வும் நாட்டு நடப்பும் 1932-இல் காந்தியடிகளும் அவர் துணைவர்களும் இரண்டாம் வட்ட மேடையில் எதுவும் சாதிக்க முடியாமை கண்டு வெறுங்கையுடன் திரும்பினர். பம்பாயில் வந்திறங்கியதும் அவர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் ஒன்று கூட்டினார். லாகூர் காங்கிரஸ் காலத்திலிருந்து போஸ் காங்கிரஸ் செயற்குழுவில் இடம் பெறாதிருந்தார். ஆயினும், வட்ட மேசைத் தோல்விக்குப் பின் அவர் கொள்கைக்குத் தனி உயர்வு ஏற்பட்டிருந்தது. ஆகவே அவரை மகாத்மா காந்தி தனிப்படச் செயற்குழுக் கூட்டத்திற்கு அழைத்தார். ஆனால், காங்கிரஸ் தலைமை போஸுக்குக் காட்டிய மதிப்பை விடப் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு மிகுதியாக மதிப்பைக் காட்டிற்று. ஏனெனில், காந்தியடிகளை அவர் சந்திக்குமுன்பே அவரை அரசாங்கம் சிறை செய்தது. சிறையில் இத்தடவையும் போஸின் உடல் நலிவுற்றுக் கடுங்காய்ச்சல் கண்டது. ஆகவே, 1938-இல் அரசாங்கம் அவரை மீண்டும் விடுதலை செய்தது. ஆனால் இத்தடவை செய்த விடுதலை பல நிபந்தனைகளுக்கு உட்பட்டதாயிருந்தது. உடல் நலம் கருதியே அவர் விடுவிக்கப்பட்டனராதலின் அவர் உடல்நலத்தை மேற்கொண்டு ஐரோப்பா செல்லவே அனுமதிக்கப்பட்டார். இந்தியாவில் இருக்க அனுமதிக்கப்பட வில்லை. அதுமட்டுமன்று. ஐரோப்பாவிலும் ஜெர்மனி, பிரிட்டன் முதலிய ஒரு சில நாடுகளுக்குச் செல்வது தடை செய்யப் பட்டிருந்தது. போஸ் இந்நிபந்தனைகளை ஏற்று மேல் நாடுகளுக்குச் சென்றார். 7. வெளிநாட்டுப் பயணங்கள் வியன்னாவீரர், போஸ்: வி.ஜே. பட்டேல் போஸ் ஐரோப்பாவில் பல நாடுகளுக்கும் நகரங்களுக்கும் சென்றாரானாலும் முதலில் சென்று தங்கியதும் நெடுநாள் தங்கியதும் வியன்னாவிலேயே யாகும். மேனாடுகளில் மற்றெந்த நகரத்தையும்விட வியன்னாவே அவர் வாழ்க்கையுடன் மிக நெருங்கிய தொடர்வுடைய நகரம் ஆகும். ஆஸ்டிரியாவின் தலைநகரான இஃது ஐரோப்பாவின் கலைத் தலைநகரங்களுள் ஒன்று. மருத்துவக்கலையும் அரசியல் துறையும் அந்நகர வாழ்வில் மிகுதியாக இடம் பெற்றன. பலநாடுகளில் அறிஞர்கள் அங்கு வந்து கூடினர். இந்தியாவிலிருந்தும் போஸ் வருவதற்கு முன்பே இன்னொரு இந்தியப் பெரியார் உடல் நலத்திற்காக அங்கே வந்திருந்தார். அவர் வி.ஜே. படடேல்; பர்டோலி வீரர் சர்தார் வல்லபாய் பட்டேலின் தமையனார். இந்திய சட்டசபையின் தலைவராகயிருந்து நாட்டுப் பணிக்கு வெளிவந்த பெரியார் அவர் போஸைப் போன்றே நாட்டார்வமும் தீவிரப் புரட்சிக்கருத்தும் கொண்ட அவர் ஒத்துழைப்பும் போஸுக்கு உதவியாயிருந்தது. வியன்னா நகரவை யாட்சித் திறம் ஆஸ்டிரியாவில் இப்போது தேசிய சமதர்மக் கட்சியாகிய நாஸிக் கட்சி வலுத்திருந்தது. உலக அரசியலில் அவர்கள் பல நாடுகளுக்குப் பகைவராயிருந்த போதிலும் உள்நாட்டு நிர்வாகத்தில் அவர்கள் பல நல்ல சீர்திருத்தங்களும் திறம்பட்ட நடவடிக்கைகளும் உடையவராயிருந்தனர். சிறப்பாக வியன்னா நகரசபையில் அவர்கள் கொணர்ந்த புதுமுறைகள் போஸின் கருத்தைக் கவர்ந்தன. ஐரோப்பியக் கட்சி வேற்றுமைகளுக்குள் மாட்டிக் கொள்ளாமலே போஸ் எல்லா நாடுகளிலிருந்தும் இந்தியாவின் நலத்துக்கான கூறுகளைக் கூர்ந்து கவனித்து வந்தார். வியன்னாவின் நகரவைப் பெருந்தலைவரான கார்ல் சீட்ஸ் (முயசட ளுநைவண) போஸுடன் அளவளாவித் தம் கட்சியின் முறைகளைக் காட்டினார். முன்பு கல்கத்தா நகரப் பெருந் தலைவராயிருந்த போஸ் இந்நகர் நிலைமைகளை கல்கத்தா நகருடன் இணைத்துப் பார்த்து அவற்றின் சிறப்பை உணர்ந்தார். இந்தியாவில் தம் பிற்காலத்தில் இவற்றைக் கையாள வேண்டும் என்று அவர் மனத்தில் உறுதி செய்து கொண்டாராம்! துருக்கியருக்கெதிராக ஆஸ்டிரியர் அடைந்த வெற்றியின் நினைவு நாள் ஒன்று போஸ் வியன்னாவிலிருக்கும் போது கொண்டாடப்பட்டது. அச்சமயம் நடந்த படை அணிவகுப்பினை போஸ் பார்வையிட்டார். அந்நாட்டினரின் படை ஒழுங்குத் திறம் அவர் கண்களுக்கு விருந்தாயிருந்தது. பிற்காலத்தில் விடுதலை இந்தியாவின் படைத் தளபதியாகவிருந்த அவருக்கு இது மிகவும் நல்ல தூண்டுதலாயிருந்திருக்க வேண்டும். போஸ்-பட்டேல் நட்பும் அரும்பணியும் சுபாஷின் வெளிநாட்டு வாழ்வில் வி.ஜே. பட்டேலின் நட்பே மிகச் சிறப்பாகக் குறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சியாகும். போஸ் பட்டேலுடனேயே தங்கினார். பட்டேலைவிட போஸ் உடல்நிலை சற்று மேம்பட்டதாய் இருந்ததினால், போஸே தம் உடலைப் பேணியதுடன் அவருக்கும் வேண்டிய உதவிகளை யெல்லாம் செய்ய முடிந்தது. தொலைதூர நாட்டில் இவ்விரு இந்தியர்களின் தோழமை அவர்களுக்கு மட்டுமின்றித் தாய் நாட்டுக்கே பெரு நன்மையாயிருந்தது. அவர்கள் இருவரும் இந்தியாவின் இரு வேறு துறைகளிலிருந்து நாட்டுப் பணி செய்தவர் களாயினும் கோட்பாடுகளிலும் முடிவுகளிலும் பேரளவு ஒற்றுமையுடையவர்களாயிருந்தனர்; இந்திய அரசியலில் இருவருமே காங்கிரசில் மேலிடத்தின் பழமை, மிதவாதத் தளை ஆகியவற்றை அகற்றி அதன் நடைமுறையைத் தீவிரமாக்க முயன்றனர். ஆனால் இச்செயல் தொலைவிலிருந்து செய்யக் கூடியதன்று. ஆயின் தொலை தூரத்திலும் தாய் நாட்டிற்குப் பணி செய்யும் ஒன்று இருந்ததென அவர்கள் கண்டார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர் இந்தியா பற்றித் தவறான எண்ணங்களைப் பரப்பித் தங்கள் ஆட்சியின் குறைகளை மறைத்துத் தங்கள் பிடியை வலுப்படுத்தப் பார்த்தனர். பட்டேலும் போஸும் அரும்பாடு பட்டு எல்லா நாடுகளிலும் இந்தியாவுக்கான பிரசாரம் நிலையங் களை அமைத்து நாட்டின் மெய்ந்நிலைகளை விளக்கினர். இத்துறையில் இவ்விரண்டு தலைசிறந்த இந்தியத் தலைவர்களும் இந்தியாவுக்குச் செய்த அரும்பணி மறத்தற்குரியதன்று. 1933 மே-யில் இந்தியாவில் மகாத்மா காந்தி மீண்டும் தம் இயக்கத்தை நிறுத்திச் சமரசம் பேசுகிறார் என்று தெரிய வந்தது. அச்சமயம் போஸும் பட்டேலும் அத்தகைய இயக்க நிறுத்தம் தவறானதென்று வற்புறுத்தி ஒரு பொது அறிவிப்பு விடுத்தனர். அச்சமயமுள்ள காங்கிரஸ் தலைமை நாட்டை முன்னோக்கி நடத்திச் செல்லத்தகுதியற்றதென்றும், தலைமை மாறவேண்டும் அல்லது கட்சியேனும் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் அவ்வறிவிப்பில் குறிப்பிட்டிருந்தனர். வெளிநாட்டுறவு, வெளிநாட்டுப் பிரசாரம் ஆகிய இரண்டு செய்திகளிலும் பண்டித ஜவஹர்லால் நேரு மிகவும் ஈடுபட்டுக் கவனம் செலுத்தி வந்துள்ளார். இவ்வகையில் அவருக்குப் பேரளவு வழிகாட்டிகளாய் இருந்தவர்கள் போஸும் பட்டேலுமே. அவர்கள் முயற்சியால் ஜவஹரின் அப்பிரசார முறைக்கு வேண்டிய அமைப்புகள் முன்னேற்பாடாக நிறுவப்பட்டிருந்தன. புத்தியக்கம் மேனாட்டில் போஸ் வியன்னாவிலிருக்கும்போது பிரிட்டனில் இந்தியர் களால் லண்டன் நகரில் எல்லாக் கட்சி இந்தியர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அதற்கு போஸையே தலைவராக வரும்படி இந்தியவர்கள் அழைத்தனர். போஸும் போகவிருந்தார். எனினும் பிரிட்டிஷ் அரசியலார் அவரை வரவிடவில்லை. ஆகவே அவர் தம் தலைமையுரையை எழுதியனுப்பினார். டாக்டர் என்பவர் அதை மாநாட்டில் வாசித்தார். இத் தலைமையுரையிலேயே போஸ் புரட்சிக் கருத்து களையே மேற்கொண்ட தம் புதிய சங்க அமைப்பைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அவர் கொடுத்த பெயர் ‘சமவாதியர் சங்கம்’ என்பது. இந்தியாவின் விடுதலை உரிமையை எதிர்த்து வந்த பிரிட்டனின் பழமை (ஊடிளேநசஎயவiஎந) கட்சியார் இப்புது முயற்சி பற்றி அவதூறான பிரசாரம் செய்யத் தொடங்கினர். சிறப்பாக, நாஸியர் கோட்பாடுகளைப் புதுக்கட்சி ஆதரிப்பதாக அவர்கள் சாற்றினர். ஆனால் போஸ் “ஐரோப்பாவின் கட்சி எதுவானா லும் இந்தியா அதனை அப்படியே ஏற்க முடியாது. தம் நிலைமைக் கொத்த நல்ல முறைகளை எக்கட்சியிலிருந்தும் எடுத்துக் கொள்ளும். இதில் தவறு எதுவும் யாரும் கூறமுடியாது” என்று விடையிறுத்தார். போஸின் பிரசாரத்தின் வெற்றி பிரிட்டிஷ் அரசியலாரின் போக்கைப் பல தடவை மாற்றுமளவு வலிமையுடைய தாயிருந்தது. உலக மாநாடுகளில் பிரிட்டன் தனக்கு வேண்டிய இந்தியர் எவரையேனும் இந்தியாவின் பிரதிநிதி என அனுப்பி இந்தியாவைப் பற்றித் தவறான கருத்தைப் பரப்பியதுண்டு. வியன்னாவில் நடந்த ஒரு பொருளாதார மாநாட்டில் இந்தியாவுக்கு இத்தகைய போலிப் பிரதிநிதித்துவம் தரப்பட்டிருந்தது. ‘இத்தகைய பிரதிநிதிகள் மூலம் ஏற்படும் விதிகள் இந்தியாவைக் கட்டுப்படுத்த மாட்டா’ என்று போஸ் கண்டனம் விடுத்தார். ஆகவே அடுத்தபடியாக லண்டனில் கூடிய அதே மாநாட்டுக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பிரிட்டன் பிரதிநிதியை அனுப்பவில்லை. மஸாரிக் இல்லம் : பட்டேல் மறைவு ஜூலை மாதத்தில் போஸ் வியன்னாவிலிருந்து புறப்பட்டு ஜெக் தலைநகரமான பிரேக் சென்றார். இங்கும் நகரவைத் தலைவர் அவருக்கு வரவேற்பளித்தார். பத்து நாள் இங்கே தங்கிப் போஸ் இங்கும் நகரவை நடைமுறைகளைப் பார்வையிட்டார். நோயாளிகளுக்குச் செய்யப்படும் சிகிச்சை முறைகளையும் சிறப்பாகத் தொழுநோயாளிகள் நலவிடுதிகளான ‘மஸாரிக் இல்லங்களை’யும் பிரேச் பல்கலைக்கழகம், உலகின் மிகப்பெரிய இரும்புத் தொழிற்சாலையான ‘ஸ்கோடா’த் தொழிற்சாலை ஆகியவற்றையும் அவர் சுற்றிக் கண்டார். பிரேசிலிருந்து போஸ் வியன்னாவுக்கு மீண்டும் வருவதற்குள் பட்டேலின் உடல்நிலை மிகவும் கேடடைந்து அவர் உயிர் நீத்தார். அவர் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்படும்படி கப்பலிலேற்றி அனுப்பப்பட்டது. போஸ் தாமே மார்சேல்ஸ் வரை வந்து அதனைக் கப்பலேற்றினார். போஸும் பட்டேலும் ஒரே தாயின் இரு பிள்ளைகள் போல் வெளிநாட்டில் உழைத்து வந்தவர்கள். ஆகவே போஸ் துணை இழந்த அன்றில்போல் பெருந்துயரைந்தார். இருவரும் சேர்ந்து செய்த பணியைப் போஸ் ஒருவரே செய்யும்படியாயிற்று. இத்தாலி, பால்கன் சுற்றுப் பயணம் மார்சேல்ஸிலிருந்து சுபாஷ் போஸ் ஜெனிவாவுக்கும், பிரான்சுக்கும் சென்று பின் இத்தாலியில் நடைபெற்று ஆசிய மாணவர் கழகத்தில் பங்கு கொள்ள அந்நாடு சென்றார். ரோமில் அவர் சில நாட்கள் தங்கி அங்கே நடந்து வந்த இளைஞர் இயக்கங்களைக் கவனித்தார். இதன்பின் அவர் பால்கன் தீபகற்பத்திலுள்ள பல சிறு நாடுகளிலும் சுற்றுப் பயணம் செய்தார். ஸோவியா, புடாப்பெஸ்ட்டு, புகாரெஸ்ட் முதலிய எல்லா நகரங்களிலும் மக்கள் போஸ் மூலம் இந்தியர் நிலைமைகள், அவர்கள் அவாக்கள் ஆகியவை பற்றி ஆர்வத்துடன் பல செய்திகள் கேட்டனர். தந்தை பிரிவு : இந்தியா வந்து மீளுதல் போஸ் பால்கன் நாடுகளிலிருக்கும்போது இந்தியாவில் அவர் தந்தை மிகவும் மோசமான உடல்நிலை அடைந்துள்ளதாகச் செய்தி வந்தது. உடனே அவர் விமானமேறி இந்தியா வந்தார். பம்பாயில் அவர் இறங்கியது நேரடியாகத் தம் ஊர் சென்று தம் வீட்டிலேயே தங்க வேண்டும் என்று அவரைக் கட்டுப்படுத்தும் உத்தரவு ஒன்று அவருக்குத் தரப்பட்டது. ஆனால் அவர் வீடு செல்லுமுன் தந்தை உயிர் பிரிந்துவிட்டது. அவர் ஈமக் கடன்களை மட்டுமே போஸ் நடத்த முடிந்தது. வெளிநாடுகளில் நெடுநாளிலிருந்த போஸ் சில நாட்களாவது இந்தியாவில் இருக்க விரும்பினார். ஆனால் அரசாங்கம் அதற்கு அனுமதி தரவில்லை. அவரை வியன்னா மருத்துவரும் உடனே திரும்பிவிடும்படி கூறினார். ஆகவே 1934 ஜனவரி 10-ஆம் தேதி அவர் மீண்டும் வியன்னா சென்றார். வெளிநாட்டுப் பிரசார இயக்கம் இத்தடவை போஸ் முதல் தடவையை விடப் பொறுமையாக ஐரோப்பிய அரசியல் நிலைகளை ஆராய்ந்தார். அதனுடன் இந்தியாவின் எதிர்காலம் பற்றிப் பல திட்டங்கள் தீட்ட அவருக்கு இத்தடவை வாய்ப்பு ஏற்பட்டது. இந்தியா பற்றிய தவறான பிரச்சாரங்கள் பலவற்றை எதிர்த்து அவர் எதிர்ப்பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றார். ‘பெங்காளி’ போன்ற அத்தகைய படக்காட்சிகள் அவர் முயற்சியால் நிறுத்தப்பட்டன. ஹிட்லர் ‘வெள்ளையர் ஆளப் பிறந்தவர்; கறுப்பர் அடிமைகளாகவே வாழப் பிறந்தவர்’ என்று கூறிய போது பல நாட்டு மக்களும் அவரைக் கண்டித்தனராயினும் போஸ் விடுத்த கோபாவேசமிக்க கண்டனம் ஹிட்லரையே பணிய வைத்தது. தாம் இந்தியரையோ, ஜப்பானியரையோ கறுப்பருடன் சேர்த்துக் கூறவில்லை என்று ஹிட்லர் மழுப்பப் பார்த்தார். ஆனால் போஸ் அம்மழுப்பலை ஏற்காது அதனைக் கண்டித்துத் தம் தன் மதிப்பையும் நடுநிலையையும் நிலை நாட்டினார். போரில் ஹிட்லரை இங்ஙனம் எதிர்த்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஹிட்லருடன் தொடர்பில்லாத காலத்திலும் ஹிட்லருடன் நேச உறவு பூண்டு இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட பிற்காலத்திலும் எக்காலத்திலும் போஸ் தன்மதிப்பையும் தன்னம்பிக்கையையும் விட்டுக் கொடுத்ததே கிடையாது. சுதந்திர நாடுகளின் மக்கள் கூடக் காட்ட முடியாத கொள்கைச் சுதந்திரத்தை தாய்நாட்டிலிருந்து துரத்தப்பட்ட இந்த ‘அடிமைநாட்டு’க் குடியுரிமையாளர் காட்டித் தம் தாய்நாட்டுக்குப் பெருமை தந்தார். ரோம் நகரில் போஸ் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அரசர் அமானுல்லாவைச் சந்தித்தார். உயரிய கொள்கையுடைய வராயினும் தம்நாட்டுப் புரோகிதக் கும்பல்கள் சூழ்ச்சியால் அரசிழந்த அப்பெருந்தகை மன்னர் நிலையைக் கண்டு போஸ் மிகவும் பரிவும் ஒத்துணர்வும் கொண்டார். கட்சி கடந்த தேசிய வீரர் வியன்னாவில் போஸ் பட்டேலின் உருவச் சிலையொன்றைத் திறந்து வைத்தார். வங்கத்தில் போஸ் கட்சி, சென் குப்தா கட்சிப் பூசல் மீண்டும் ஏற்படுவது கேட்டு அவர் வருந்தினர். வங்கத்தில் தம் குழுவினர் பெரும்பான்மை யோராயிருந்தும் இரு கட்சிகளும் சரிசமப் பிரதிநிதித்துவம் வகித்துச் சமரசப்படும்படி அவர்களுக்குப் போஸ் அறிவுரை கூறினார். கொள்கைக்காக எவரையும் அஞ்சாது எதிர்க்கும் இப்போர் வீரர் கட்சிப் பூசல்களுக்கு எக்காலத்திலும் உட்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொள்கைகளில் விட்டுக் கொடுத்தும் கட்சியாதிக்கத்துக்காகப் பாடுபடும் இந்திய மக்களுக்குப் போஸ் வாழ்க்கை வரலாறு ஓர் ஒழுக்க முறை நூல் எனலாம். ‘தே வலேரா’ இந்தியா திரும்புமுன் 1936ஆம் ஆண்டில் போஸ் அயர்லாந்து சென்று அந்நாட்டுத் தலைவர் ‘தே வலேரா’வைக் கண்டார். அடிமைத் துன்பத்துக்காளான இவ் இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஒருவரிடமிருந்து மற்றவர் அவர்கள் தாய்நாட்டு அரசியல் பற்றி விரிவான விளக்கம் பெற்றனர். இந்தியாவை விட நீண்ட நாளாக அயர்லாந்து பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு வந்துள்ளது. இந்தியர் அனுபவிக்கும் கொடுமைகளை எல்லாம் அயர்லாந்தும் அனுபவித்தது. பிரிட்டிஷாரின் சூழ்ச்சி முறைகள் அனைத்தையும் நன்கு அறியப் போஸின் அயர்லாந்தின் அரசியல் பற்றி ஆராய்ச்சி பெரிதும் பயன்பட்டிருக்க வேண்டும் என்று கூறலாம். லக்னோ காங்கிரஸ் - ஜவஹர் அழைப்பு, சிறை புகல் 1936-இல் இந்திய தேசிய காங்கிரஸ் பேரவை லக்னோவில் கூடியது. இடதுசாரியின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவரான பண்டித ஜவஹர் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டிலிருந்து நெடுந்தொலைவில் வாழ்ந்து உடல் நலிந்தும் நாட்டுக்கு அருந்தொண்டுகள் செய்து வரும் போஸ் பெருந்தகை இக்காங்கிரஸ் பேரவையில் கலந்து கொள்ள வேண்டும் என்று பண்டித ஜவஹர்லாலும் மற்றைய தலைவர்களும் பெரிதும் விரும்பினர். ஆகவே நாட்டு மக்கள் சார்பில் ஜவஹர் போஸுக்கும் அழைப்பு அனுப்பினார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வியன்னா ஸ்தானிகர் மூலம் போஸ் இந்தியா செல்லக்கூடாது என்றும் இந்தியா சென்றால் உடன் சிறைப்படுத்தப்படுவார் என்றும் அவருக்கு அறிவிக்கப் பட்டது. போஸ் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விருப்பத்தைவிட இந்திய மக்கள் விருப்பத்தையே உயர்வாக மதித்து இந்தியாவுக்குப் புறப்பட்டார். புறப்படும்போது பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கடிதத்தில் அவர் “இந்தியாவுக்குக் கொடுத்திருப்பதாகக் கூறப்படும் புதிய சீர்திருத்தத்தின் விடுதலை வண்டவாளம் இதுதான் போலும்” என்று சினந்து கூறினார். ஏப்ரல் 11-ஆம் தேதி போஸ் வரும் கப்பலை எதிர் நோக்கிப் பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் யாவரும் ஏமாற்றமடைந்தனர். அவர் இறங்கியதும் இறங்காததும் சிறைப்படுத்தப்பட்டு ஏரவாடாச் சிறைக்கு அனுப்பப்பட்டார். ‘விடுதலைக் கொடியைத் தளராது பறக்க விடுங்கள்’ என்ற செய்தியை மக்களுக்கு விடுத்து அவர் சிறை சென்றார். தண்டனை எதிர்ப்பு : விடுதலை போஸின் சிறைத் தண்டனை காங்கிரஸ் பொதுக் கூட்டம், இந்தியாவின் சட்டசபைகள், பிரிட்டிஷ் அரசியல் மன்றம் ஆகிய எல்லா மேடைகளிலும் முதல்தரக் கிளர்ச்சியாக உருவெடுத்து எதிர்ப்புப் புயல்களைத் தூண்டிற்று. இந்திய மத்திய சட்டசபையில் புலபாய் தேசாய் முழக்கங்கள், பிரிட்டனின் அரசியல் மன்றங்களிலும் அதிகாரிகளின் அலுவல் மன்றங்களிலும் மாக்ஸ்டன், ஸ்டீவன் முதலிய முற்போக்குக் கட்சியினர் கேள்விகள், காங்கிரஸ் செயற்குழு, காங்கிரஸ் சமதர்மக் கட்சி ஆகியவற்றின் கண்டனத் தீர்மானங்கள் முதலிய அனைத்தும் ஒரு முகமாக ஆட்சியாளர் போக்கைக் கண்டித்தன. இவ்வெதிர்ப்புக்களுக் கஞ்சியும் மாகாண சுய ஆட்சிக்கு ஒத்துழைப்புச் சூழ்நிலையை விரும்பியும் ஆட்சியாளர் 1937 மார்ச்சில் அவரை விடுதலை செய்தனர். 1935-ஆம் ஆண்டைய இந்திய அரசியல் சட்டப்படி அமைந்த மாகாண சுய ஆட்சிச் சட்டசபைகளின் தேர்தல்களில் காங்கிரஸ் கலந்து பெருவாரியான வெற்றிகள் பெற்ற சமயம் இதுவே. மீண்டும் வெளிநாடு : புதிய காங்கிரஸின் தலைமைப் பதவி 1937 மே மாதத்தில் மீண்டும் உடல்நிலை காரணமாக போஸ் மேனாடு சென்றார். லண்டனில் அவருக்குப் பெருத்த வரவேற்பளிக்கப்பட்டது. புதிய சீர்திருத்தப்படி வரும் இந்தியாவின் மத்திய ஆட்சியைக் காங்கிரஸ் எதிர்க்க வேண்டும் என்று அவர் இக்கூட்டத்தில் வற்புறுத்தினார். இத்தடவை அவர் ஐரோப்பாவில் நெடுநாள் தங்கவில்லையானாலும் பல இடங்களில் புதிய சீர்திருத்த அரசியலைக் கண்டித்துப் பேசினார். அவர் திரும்பி இந்தியா வருமுன் அவர் வாழ்க்கையில் புதியதோர் ஊழி பிறக்கலாயிற்று. பிரிட்டனிலிருந்த அவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8. காங்கிரஸ் தலைமையும் தலைமைப் போட்டியும் ஹரிபுராவும் திரிபுரியும் காங்கிரஸ் தலைவர்களிடையே காங்கிரஸ் தலைவராய்ப் பல கருத்து வேறுபாடுகளிடையேயும் காங்கிரஸின் முன்னணி வீரராய் இருந்து வந்தவர் சுபாஷ் போஸ். இக்காரணத் தினாலேயே அவர் இடது சாரியினரிடையே தீவிரவாதியா யிருப்பவர் என்று தெரிந்தும் எல்லாத் தலைவர்களும் அவரிடம் தனிப்பட்ட மதிப்பு வைத்திருந்தனர். இந்நிலைமை பெரிதும் மாறுபட்டு அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் காங்கிரஸ் மிதவாத சக்திகளையும் ஒருங்கே எதிர்த்து நாட்டை விட்டு வெளியேறிப் போர்த்தொடுக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியவை ஹரிபுரா, திரிபுரிக் காங்கிரஸ் மதித்து நடத்திய வெற்றி விழா. பின்னது ‘வணங்காமுடி மன்ன’ரான போஸ் விடுதலை இந்தியா நோக்கி முன்னேறுவதற்காகக் கொட்டிய போர் முரசு. இவ்விரண்டும் சேர்ந்து போஸ் வாழ்க்கைப் போக்கினும், இந்தியாவின் அரசியல் மதிப்பிலும் உலகு காணாப் பெரும் புரட்சியை உண்டு பண்ணின. இவ்விரண்டு பேரவை களின் நிகழ்ச்சிகளும் காங்கிரஸில் பற்றுடையவர்களுக்குக் கண்ணீர் வருவிக்கத்தக்கவை. அதே சமயம் காங்கிரஸைக் கடந்து இந்தியாவிடம் பற்றுடையவர்களுக்கு இறும்பூதும் வியப்பும் தருபவை. தியாக மன்னர்களின் தியாகப் பரிசு காங்கிரஸின் 51-வது பேரவைக் கூட்டமான ஹரிபுராக் காங்கிரசுக்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுகள் போஸ் பிரிட்டனி லிருக்கும் போதே தொடங்கப்பட்டன. அவ்வாண்டு தலை வராவதற்காக முன்மொழியப்பட்ட பெயர்கள் சுபாஷ் போஸ், மௌலானா அபுல்கலாம் ஆஜாத், பண்டித ஜவஹர்லால் நேரு, கான் அபுல் கபூர்கான் ஆகிய நால்வர். இத்தனைபேருமே தனித்தகுதியும் சிறப்பும் உடையவர்கள். அனைவரும் ஒப்பற்ற தியாகிகள். ஆயினும் போஸின் பெயர் கேட்ட உடனே மற்ற மூவரும் விலகி அவருக்கு ஒரு முக ஆதரவு காட்டினர். கொள்கை வேறுபாடுகளிடையே கூடத் தியாகத்துக்குத் தனி மதிப்பு உண்டு என்பதைக் காங்கிரஸ் இத்தியாகிகள் தியாகச் செயல் மூலமே காட்டிற்று. தலைவர் ஊர்வலம் 1938 ஜனவரி 14 போஸ் விமான மூலம் வந்திறங்கினார். காங்கிரஸின் தலைவர் என்ற சிறப்புரிமைகளுடன் நாட்டு மக்களும் நாட்டின் மாபெருந் தலைவர்களும் கராச்சி விமான நிலையத்திற்குப் பெருந்திரளாகச் சென்று அவரை வரவேற்றனர். தபதி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட ஹரிபுராக் காங்கிரஸ் நகருக்கு விட்டல் பாய் பட்டேல் நினைவுக் குறியாக விட்டல் நகர் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. வரவேற்புக் கழகத்தினர் பந்தலுக்குப் போஸை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். காங்கிரஸின் 51 ஆம் ஆண்டுப் பணியை நினைவூட்டும் வகையில் தலைவர் ஊர்தி 51 எருதுகள் பூட்டப்பட்டு 51 தேசியக் கொடிகளைத் தாங்கி 51 வாயில்களினூடாகச் சென்றது. விட்டல் நகரெங்கும் ஒரே குதூகலமாய்க் காணப்பட்டது. வெள்ளிய கதராடையணிந்த தலைவர்களும் தொண்டர்களும் நகரெங்கும் பரபரப்புடன் அலைந்து திரிந்த காட்சி வெண் மலர்களை நோக்கி வெண் சிறைத்தும்பிகள் நடமாடுவது போன்றிருந்தது. பிப்ரவரி 13 தலைவர் வந்து சேர்ந்து தம் படை வீட்டில் அமர்ந்தார். அதனை அடுத்து மகாத்மா காந்தியின் குடிசையின் முன்பு பெரிய முந்நிறத் தேசியக் கொடியொன்றும் பறந்தது. மற்றொரு புறம் பண்டித ஜவஹர்லாலின் உறைவிடம் அமைந்திருந்தது. மூவர் குடில்களிலும் தலைவர் மாறி மாறிப் பெருந்திரளாகப் கூடிப்பேசினர். 14 செயற்குழுக்கூட்டமும், 16 அகில இந்தியக் காங்கிரஸ் குழுவின் கூட்டமும் நடைபெற்றன. காங்கிரஸ் குழுவின் கூட்டத்தில் பண்டித ஜவஹர்லால் நேரு முந்திய ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து விளக்கிய பின் புதிய தலைவரைத் தலைமையேற்கும்படி வேண்டிக் கொண்டார். வான முகடதிரும்படியான ‘வந்தேமாதர’க் குரல்களிடையே போஸ் தலைமையிருக்கையிலமர்ந்தார். நாட்டு நெருக்கடியும் உலக நெருக்கடியும் இக்காங்கிரஸ் கூடிய சமயம் இந்தியாவுக்கும் உலகுக்கும் மிக நெருக்கடியான சமயம் ஆகும். அரசியல் சிறையாளர் விடுதலை செய்யப்படாததைக் கண்டித்து இரு மாகாண முதல்வர்கள் மாகாணத் தலைவரிடம் பதவி துறப்புத்தான் அளித்திருந்தனர். ஐரோப்பாவிலோ இரண்டாம் உலகப் போர் மூளும் நிலையிலிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டியில் எண்ணற்ற தீர்மானங்கள் செய்ய வேண்டியிருந்ததில் வியப்பில்லை. காங்கிரஸிலும் கமிட்டியிலும் இடதுசாரியினர் தலைவர்களை நெருக்கித் தீவிர நடைமுறைகளில் ஈடுபடும் படி தூண்டி வந்தனர். பீகார், ஐக்கிய மாகாணங்களிலும் எதிர்ப்பியக்கம் நடத்தி அரசியலாரைத் தாக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். வரவேற்புக் கழகத் தலைவர் கோபால் தாஸ் போஸின் இடைவிடாத தியாக வாழ்வைப் பாராட்டி, இந்தத் தலைவர் ஆட்சியின் கீழ்க் காங்கிரஸ் முன் என்றும் அடைந்திரா முன்னேற்றமும் வெற்றியும் உடையதாகுமாக என்று வாழ்த்தி யாவரையும் வரவேற்றார். தலைமையுரை சுபாஷ் சந்திரபோஸ் பல்லாயிரக்கணக்கான மக்கட் கடல்களின் ஆரவாரங்களுக்கிடையே தம் உணர்ச்சி மிக்க தலைமையுரையை வாசித்தார். நாட்டுச் சூழ்நிலைகள், உலக நெருக்கடி நிலை, சென்ற காலப் பணிகள், வருங்காலத் திட்டங்கள் ஆகிய யாவும் அவரால் தெள்ளிய நடையில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டன. போஸின் நடுநிலைமையும் பொறுப்புணர்ச்சியும் போஸ் தீவிரக் கருத்துக்களை உட்கொண்ட இக்காங்கிரஸின் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் தீவிரக் கட்சியினர்க்கு மட்டுமின்றி மற்றவர்கட்கும் திருப்திகரமான தாகவே யமைந்தன. பேரவைக் கூட்டத்தின் போதும் அதன்பின்னும் போஸ் உடல்நலங் குன்றியவராகவே இருந்தும் பரபரப்புடன் எல்லாச் செயல்களிலும் கலந்து உச்ச அளவு உழைப்புச் செய்தார். எதிரிகளுக்கு ஓர் இம்மியளவும் விட்டுக் கொடுக்காத உறுதியுடைய இவ்வீரர் கருத்து வேறுபாடுடைய தம் நாட்டு மக்களிடமும் தலைவர்களிடமும் என்றுமே சமரச மனப்பான்மையும் நேச முறையும் உடையவர் என்பது அவர் தலைமைக் கால நடுநிலையிலிருந்து நன்கு விளங்கிற்று, அவரது கட்சிப் பற்றும் கோட்பாடுகளுங் கூட நாட்டுப் பற்றுக்கு உட்பட்டு அதற்கு விட்டுக் கொடுப்பதாகவே இருந்தது. மேனாட்டு அரசியல் வாழ்வில் அவர் கண்ட கட்டுப்பாடும் ஒற்றுமையும் அவரது இப்பண்பை மேலும் வற்புறுத்த உதவின. கொள்கை உறுதியும் செயல் திறமும் துணிவும் ஒருங்கே படைத்த இவ்வொப்பற்ற தலைவர் குடியாட்சியைத் திறம்படி நடத்திக் காட்டும் நாட்டுத் தொண்டராகவும் இருந்ததற்கு இதுவே காரணம் ஆகும். ‘வீணையின் உட்கீறல்’ காங்கிரஸ் வரலாற்றில் ஹரிபுரா காங்கிரஸ் மாசு மறுவற்ற ஓர் உயர் உவகை நாடகம். ஆனால் அதனையடுத்து வந்த திரிபுரி காங்கிரஸ் இதற்கு நேர்மாறான துயர் நாடகமாயமைந்தது. வீணையின் உட்கீறல் போல் 1927-ஆம் ஆண்டு சென்னை காங்கிரஸின் போது ஏற்பட்ட வலதுசாரி இடதுசாரி வேறு பாடே இதற்குக் காரணமாகும். லண்டனிலிருக்கும் போதே போஸ் 1935ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி மத்திய இணைப்பு ஆட்சி ஏற்படுவதை முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்று இந்திய மக்களையும் தலைவர்களையும் ஊக்குவித்தார். காங்கிரஸிலும் வெளிப்பார்வைக்கு எல்லாருடைய போக்கு களும் இதற்கு ஆதரவாயிருப்பது போலவே தோன்றிற்று. ஆனால் வலதுசாரித் தலைவர்களில் பலர் தீவிரவாதிகளைப் போராட்டத்தில் ஊக்கிக் காங்கிரஸ் பேராற்றலை மிகுதிப் படுத்தியபின் சமரசம் செய்து கொள்வதிலேயே நாட்டங் கொண்டிருந்தனர். காந்தியடிகளின் சமரச மனப்பான்மை இச்சார்பினருக்குத் துணை தருவதாக இருந்தது. ஆகவே லண்டனிலிருந்து வந்தவுடன் அவரை வரவேற்ற தலைவர்களில் பலர் அவர் தீவிரக் கோட்பாடுகளை ஆதரிக்காமலும் எதிர்க் காமலும் விலகி நின்று, தலைமைப் பதவியைத் தங்கள் சார்பாகத் திட்டமிட்டு வந்தனர். காந்தியடிகளும் மேலிட ஆதரவு பெற்ற செயற்குழுவினரும் இக்காரணத்தால் போஸின் தலைமைப் பதவியையோ வேறு எந்த இடதுசாரித் தலைமை யையோ விரும்ப வில்லை. தம் சார்பான ஒருவரையே நிறுத்தி மக்கள் ஆதரவைத் தம் பக்கம் கொண்டுவர முயன்றனர். தலைமைப்பீடப் போட்டி இத்தடவை தலைமைப் பீடத்துக்கு நின்றவர்கள் சுபாஷ் போஸ், மௌலானா அபுல்கலாம் ஆஜாத், பட்டாபி சீதா ராமையா ஆகியவர்களே. உடல்நலம் காரணமாக ஆஜாத் விலக நேர்ந்தது. இது சந்தர்ப்பவசமான ஒரு நிகழ்ச்சியேயாகும். ஆனால் அவர் விலகும் போது விடுத்த அறிக்கை நிலைமையை மிகவும் சிக்கலாக்க உதவிற்று. “டாக்டர் பட்டாபி சீதாராமையாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது கேட்டு நான் மகிழ்ச்சியடை கிறேன். நான் விலகுவதாக அறியுமுன்பே அவர் எனக்காக விலகுவதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் அங்ஙனம் செய்ய வேண்டாமென்று நான் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் நிற்க இணங்கியுள்ளார். அவர் காங்கிரஸ் செயற்குழுவில் ஒரு பழைமையான உறுப்பினர்; சலியா உழைப்புடையவர். தேர்வாளர்களுக்கு அவர் பெயரைச் சிபாரிசு செய்கிறேன். அவர் ஒருமுகமாகத் தேர்வு பெறுவாராக” என்று அவர் குறிப்பிட்டார். மூன்று பேர் தேர்வுக்கு நிற்குமிடத்தில் ஒருவர் விலகி மற்ற இருவர் நிற்கவும் அவர்களுள் ஒருவரை ஆதரிப்பது காங்கிரஸில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த எழுதாச் சட்டம் (ஊடிnஎநவேiடிn) அல்லது மரபுக்கு மாறானதாகும். இதனால் பொதுவாக மனக்கசப்பு ஏற்பட்டது. வலதுசாரியினர் நேர்மையற்ற முறையில் இடது சாரியினரை விலக்கச் சூழ்ச்சி செய்கின்றனர் என்ற போஸின் ஐயம் வலுப்பெற்றது. பின் நடைபெற்ற நிகழ்ச்சிகள் யாவும் அவ் ஐயத்தை உறுதிப்படுத்தலாயின. புதிய நிலைமை : புதிய மரபுகள் லாகூர் காங்கிரஸ் முதற்கொண்டே பண்டித ஜவஹர்லால் காந்தியடிகள் செல்வாக்கு வலையில் சிக்கி இடதுசாரியினின்றும் படிப்படியாக விலகினார். காங்கிரஸ் அபேதவாதிகளும் இவ்வித பெருந்தலைவர்களை எதிர்க்கத் தயங்கிச் சிறிது சிறிதாக நழுவலாயினர். ஆகவே இடதுசாரியின் உரிமைகளை இடது சாரித் தலைவர்களே விட்டுக் கொடுப்பதாகத் தோன்றிற்று. ஆனால் இச்சூழ்நிலையிலும் போஸ் தலைமைத் தேர்வுப் போட்டிக்கு நிற்பதென்றே துணிந்தார். இதனால் காங்கிரஸின் இன்னொரு மரபு வழக்கிழந்தது. இதுவரை தலைவர் தேர்வில் போட்டியோ தேர்தலோ ஏற்படாமலேயே ஒருமுகமான தேர்ந்தெடுப்பு இருந்து வந்தது. தலைவர் என்பது காங்கிரஸை நடத்தும் பொறுப்பு என்று மட்டும் இருந்த நிலையில் யார் வந்தாலும் அதில் வேறுபாடு இல்லை. ஆனால் இத்தடவை போட்டியிடையே கொள்கை வேறுபாடு புகுந்ததனால் போஸ் பழைய மரபை விடுத்துப் புது மரபை உண்டுபண்ண நினைத்தார். அரண்மனை இரகசியம் அங்காடி அம்பலம் வலதுசாரித் தலைவர்கள் அனைவரும் இடதுசாரியினரும் முக்கியமான தலைவர்களும் போஸை ஆதரியாததனால் அவருக்குத் தலைவர்களுடைய ஆதரவு குறைந்தது. ஆனாலும் நாட்டு மக்கள் நெஞ்சில் அவர் கொண்டிருந்த இடம் எவருக்கும் தெரியாததன்று. ஆதலால் சட்டமன்றப் போட்டியில் தேர்வாளர் எவ்வளவு மும்முரமாக முனைவார்களோ அதே வகையில் இத்தேர்தலில் தலைவர்கள் முனைந்து வேலை செய்தார்கள். காங்கிரஸின் ஒற்றுமையிலும் நேர்மையிலும் ஆழ்ந்த பற்றுடைய போஸ் தேர்தல் வேலையிலிறங்க விரும்பவில்லை. ஏனெனில் காங்கிரஸ் தலைமைப் போட்டி ஆள் போட்டி அன்று; நாட்டுப் பணிப் போட்டி என்று அவர் எண்ணினார். ஆகவே அவர் இப்போட்டி நிகழ்வதற்குக் காரணமான கொள்கை வேறுபாட்டையே தம் சார்பில் விளக்க நேர்ந்தது. “வருகிற ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் காங்கிரஸ் வலது சாரிக்கும் இடையே இணைப்பரசியல் திட்டம் பற்றி ஒரு சமரசம் ஏற்படலாம் என்று எண்ணப்படுகிறது. இதன் பயனாகவே ஓர் இடதுசாரித் தலைவர் வருவதை வலதுசாரியினர் விரும்ப வில்லை. அவர் சமரசப் பேச்சுக்களில் குந்தகமாகவும் ஒப்பந்தத்தின் பாதையில் ஒரு முள்ளாகவும் இருக்கலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.” மேலிடத்தின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அரசியலின் அந்தரங்கப் போக்கை அம்பலமாக்கும் இவ்வறிக்கை வெடிகுண்டு போன்றிருந்திருக்க வேண்டும் என்பது எதிர்பார்க்கத்தக்கதே. ஆனால் பரஸ்பர ஒத்துழைப்பாகிய காரைக்கோட்டை மதிலில் ஒரு செங்கல் எடுக்கப்பட்டால் பின் படிப்படியாக ஒவ்வொரு செங்கல்லும் நழுவுவது இயற்கை தானே! எதிர்ப்பிடையே வெற்றி : மேலிட அதிர்ச்சி வலது சாரியினர் இக்கூற்றை ஆவேசத்துடன் மறுத்தனர். ‘போஸ் அஹிம்சையில் பற்றற்றவர்; மறைமுகமாகப் புரட்சிக் காரருக்கு உதவுபவர்; மகாத்மா காந்தியின் நம்பிக்கையைப் பெறாதவர்’ என்றெல்லாம் கூறப்பட்டது. இவற்றால் பிரிட்டிஷார் தான் போஸை மிகுதி வெறுக்க முடியுமே தவிர நாட்டு மக்கள் வெறுப்பு அதிகமாக முடியாது என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. சர்தார் பட்டேல், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகிய மாபெருந் தலைவர்கள் மறைமுகமாகவும் நேரிடையாகவும் பட்டாபியை ஆதரித்தும் போஸுக்கும் 200 மொழிகள் வரை பெரும்பான்மையாகக் கிடைத்து அவர் வெற்றி பெற்றார். போஸுக்குப் பெருவாரியான ஆதரவளித்த பகுதிகள் அவர் பொன்னாடாகிய வங்கமும் கப்பலோட்டிய தமிழனை யீன்ற மணித் திருநாடாகிய தமிழகமுமேயாகும். இடதுசாரியினர், அபேதவாதிகள்கூட விலகிநின்ற இந்நேரத்தில், தமிழகத்தின் அறிவுச் சிகரங்களுள் ஒன்றெனத் தக்க இடதுசாரித் தலைவர் எஸ். சீனிவாச ஐயங்காரும் அவர் தோழர்களான திரு. முத்துராமலிங்கத் தேவரும் தமிழ்நாட்டில் போஸுக்குத் தம் முழு ஆதரவைத் தந்தது மறக்க முடியா அருஞ்செயல் ஆகும். வலதுசாரியின் அந்தரங்க சுத்திபற்றி ஐயம் எழுந்தது நாட்டு மக்களுக்குப் பேரதிர்ச்சியே தந்திருக்க வேண்டும். ஆனால் மக்கள் இருதிறத்தாரிடமும் ஒரு சார்பு கொள்ள இடமிருக்க முடியாது. தந்தையும் தாயும் வாதி எதிர்வாதிகளாக வழக்குமன்றில் வாதாடும் போது அத்தாய் தந்தையரின் குழந்தைகள் இருக்கும் நிலையிலேயே நாட்டு மக்கள் இருந்திருக்க வேண்டும் என்னலாம். ஆனால் தேர்தல் முடிவு தெரிந்தபோது காந்தியடிகள் வாய்விட்டுச் சொன்ன சொற்கள் இதைவிட அதிர்ச்சி தருபவையாயிருந்தன. அவர் நேரடியாகவே தாம் போஸ் தலைவராவதை ஒரு சிறிதும் விரும்பவில்லையென்று விளக்கமாகத் தெரிவித்தார். “தொடக்கத்திலிருந்தே போஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை நான் தீவிரமாக எதிர்த்து வந்துள்ளேன் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். அதற்கான காரணங்களை நான் இப்போது கூறப்போவதில்லை. பட்டாபி சீதாராமையா விலக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டவன் நானே யாகையால், அவர் தோல்வி என் தோல்வியே” என்று காந்தியடிகள் குறிப்பிட்டார். போர் வீரரின் பொறை எதிர்ப்பு தம் வெற்றியால் ஏற்படும் மனக் கசப்பினால் காங்கிரஸ் ஒற்றுமைக்கும் வெற்றிக்கும் ஊறு வரக்கூடாது என்றெண்ணினார் போஸ். ஆகவே எப்பாடு பட்டும் எதை விட்டுக்கொடுத்தும் எதிர்த்தரப்புடன் சமரசம் செய்யவும் மகாத்மா காந்தியின் ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் பெறவும் முயற்சிகள் செய்தார். ஆனால் காந்தியடிகள் கோயிலின் வாயில் அவருக்கு அடைப்பட்டதாகவே இருந்தது. தாம் அவருடன் ஒத்துழைக்கப் போவதில்லையென்றும் விலகியே நிற்கத் துணிந்துவிட்டதாகவும் அவர் கூறினார். போஸுக்கு இயற்கையாக இருந்த உடல் நலிவு மனக் கசப்பாலும் அதிக உழைப்பாலும் மிகுதியாயிற்று. ஆனால் வீரரும் தியாகியும் நாட்டுப் பற்று மிக்கவரும் ஆன அவர் மனந்தளராது தம் வேலைகளனைத்தையும் யார் உதவியுமின்றித் தாமே செய்து வந்தார். காந்தியடிகள் விருப்பப்படியே காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களில் 12 பேர் ஒருங்கே பணி துறந்து விலகினர். காந்தீயக் குழுவினர் போஸை விலக்கவே பாடுபட்டனர் என்பது வெட்ட வெளிச்சமாயிற்று. ஒருபுறம் காங்கிரஸ் வேலையை நடை பெறமுடியாமல் ஒத்துழையாமை செய்துவிட்டுக் கல்கத்தாவில் கூடி ‘காங்கிரஸின் கொள்கை களிலும் திட்டங்களிலும் திட்டங்களிலும் எத்தகைய மாறுபாடும் கூடாதென்று இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் எல்லா அதிகாரமும் காந்தியடிகளின் கையிலேயே இருக்க வேண்டும்’ என்று ஒரு விசித்திரத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினர். நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக் கொப்பான இம்முடிவுக்குப் பின் போஸ் தலைவர் நிலையைத் துறந்தே தீருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முள்ளாசனத்தில் அமர்ந்த தலைவர் ஒத்துழைப்பும் மறுத்துச் செயல் சுதந்திரமும் மறுக்கப்பட்ட இந்த நிலையிலும் அவர்கள் எதிர்பார்த்தபடி போஸ் பதவி துறக்கவில்லை. மருத்துவ நிபுணர் எக்காரணத்தாலும் வேலை செய்யக் கூடாதென்று வற்புறுத்தியும் அவர் பலர் செய்ய வேண்டிய வேலையை ஒருவராகவேயிருந்து செய்து, நோய்ப் படுக்கையிலிருந்தபடியே காங்கிரஸுக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் உடல் வெப்பு 103 பாகைகளுக்கு மேல் சென்றிருந்தது. பந்தலுக்குள் வந்தபின் அவர் நிலை இன்னும் படுமோசமாயிற்று. அவர் சுவாசகோசம் வரை நோய் பரவி அபாய நிலை ஏற்பட்டு விட்டதென மருத்துவர்கள் கூறினர். ஆனால் போஸின் நோயைப் போலவே அவர் அரசியல் எதிரிகளும் விட்டுக் கொடுக்கவில்லை. போஸும் தம் வேலையை விட்டு மருத்துவ இல்லம் செல்ல மறுத்துவிட்டார். “ஜபல்பூர் சென்று மருத்துவம் பார்க்க நான் இங்கே வரவில்லை. காங்கிரஸ் கூட்டம் கூடி முடியுமுன் நான் இறப்பதாயிருந்தால், மருத்துவ விடுதியில் சாவதைவிட இங்கே சாவதே மேலானது.” என்று அவர் கூறினார். போஸின் நிலை குறித்துப் பண்டித ஜவஹர்லால் காந்தியடிகளுக்குத் தெரிவித்து அரசியல் போட்டி தவிர்க்கும்படி வேண்டிக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் காந்தியடிகள் இந்தப் போராட்ட நேரத்திலேயே ராஜ்கோட் மக்கள் உரிமைக் காக உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஆகவே இதுபற்றி எதுவும் கவனிக்க நேரமில்லை என்று கூறிவிட்டார். ஊர்வலத்தில் தலைவர் படம் மார்ச் 10 ஆம் தேதி காங்கிரஸ் கூட்டம் தொடங்கிற்று, அன்றைய ஊர்வலத்தில் தலைவர் கலந்து கொள்ள முடியாத அளவு அவர் செயலற்றவரானார். அவர் படமே ஊர்வலத்தில் தலைமை தாங்கிற்று. வழக்கம் போல் 52-வது ஆண்டு காங்கிரஸ் வாழ்வைக் குறிக்க 52 யானைகள் பூட்டிய ஊர்தியில் தலைவர் படம் கொண்டு செல்லப்பட்டது. காந்தியடிகளைப் பின்பற்றும் கொள்கை பற்றிய தீர்மானம் பொதுக்கூட்டத்தில் நிறைவேறிற்று. போஸும் மகிழ்ச்சி யுடனேயே காந்தியைப் பின்பற்றுவதாகவும் அவர் ஆலோசனைப்படி நடப்பதாகவும் ஒப்புக் கொண்டார். ஆனால் உடல் நலிவு வரவர அதிகரிக்கவே அவரால் காந்தியடிகளிடம் போக முடியவில்லை. இதற்காகவும் அவர் மீது குறை கூறப்பட்டது. தம் உடல் நிலையை எண்ணிக் கல்கத்தா வருமாறு அவர் காந்தியடிகளை வேண்டினார். இது பயன்படாது போகவே கடித மூலம் அவர் கருத்தறிய விரும்பினார். இதுவும் எத்தகைய முடிவும் உண்டு பண்ணவில்லை. எனவே ஏப்ரல் 28-இல் கல்கத்தாவில் மீண்டும் அகில இந்தியக் காரியக் கமிட்டி கூட்டப்பட்டது. போஸ் தம்மை இன்னும் ஆதரித்து நின்ற இளைஞர்களை எவ்வளவோ கட்டுப்படுத்தி வைத்திருந்தார். ஆயினும் சிறிதளவு குழப்பம் கண்டு அவர் மனமுடைந்து தலைமையிடத்தைத் துறக்கத் துணிந்தார். கடைசி நேரத்தில் பண்டித ஜவஹர் அவரை அங்ஙனம் செய்யாதபடி தடுக்க முயன்றார். போஸ் இப்போது தம் முடிவை மாற்ற இணங்கவில்லை. அவர் இடத்தில் பாபு ராசேந்திர பிரசாத் தலைவராக்கப்பட்டார். காங்கிரசுக்குத் தம் வாழ்நாளையே பலி கொடுக்க எண்ணிய போஸைக் காங்கிரஸ் உதறித் தள்ளிற்று. ஆனால் இதுவும் போஸ் வரையில் நன்மையே செய்தது. காங்கிரஸாலும் அதன் தலைவர் களாலும் ஆற்றமுடியாத பெரும் போராட்டத்தை அவர் நடத்துவதற்குக் காங்கிரஸ் தலைமைப் பதவித் துறப்பே காரணமாயமைந்த தென்னலாம். 9. தேசிய முன்னணி இயக்கமும் மாய மறைவும் தேசங்கடந்த தேசிய வீரர் இந்தியாவின் தேசியவாதிகளிடையே போஸின் பணிமிக்க உயர்வானது. கட்சி வாதங்கள் கடந்த தேசிய வாதம் என்னும் நிலை இந்தியாவில் இன்னும் ஏற்படவில்லை. காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, போஸ் போன்ற முதல்தரத் தலைவர்களே கட்சி கடந்த தேசியத்தைக் கனவு காணவும் அதற்காக உழைக்கவும் வகை தேடியவர்கள். ஆனால் காந்தியடிகள் தேசியத்தைவிட அஹிம்சை, சத்தியம் முதலிய சமயக் கோட்பாடுகளிலும் பழங்காலப் பொருளாதார முறைகளிலும் மிகுதியாகப் பற்றுடையவர். ஜவஹர்லாலோ உலக நாடுகளிடையே ஓர் உறுப்பாக, உலகைப் பின்பற்றியே இந்தியா முன்னேற முடியும் என்ற கோட்பாடுடையவர். ஆகவே உலகையாட்டிப் படைக்கும் வல்லரசுகளின் சதுரங்க ஆட்டத்தினிடையே அவர் ஒரு பகுதியாயிருந்து ஆடுபவராய் விட்டார். ஆனால் போஸ் கட்சி கடந்து தேசியத்தைக் கண்டது போலவே, தேசியங் கடந்து தேசத்தையும், தேசங் கடந்து தேச மக்களையும், தேச மக்களையும் கடந்து தேச நலனுக்கான மார்க்கத்தையும் கண்டவர் ஆவார். ஊழையும் உப்பக்கம் கண்ட தலைவர் மற்ற எல்லாத் தேசியத் தலைவர்களும் தேசத்தின் தலை விதியை ஏற்று நடத்தினர்; போஸ் தேசத்தின் தலைவிதியையே மாற்றியமைக்க முற்பட்டார்; முற்பட்டுப் பெரு வெற்றியும் கண்டார்; முழுவெற்றி காண்பதில் அவருக்கு ஏற்பட்ட தடை ஒரே ஒரு தடைதான் - அவர் ஒரு மனிதர், உலகைப் படைத்தழிக்கும் கடவுள் அல்லர் என்பதே. சுருங்கச் சொல்லப் போனால் “ஊழையும் உப்பக்கம் காண்பர். உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்” என்று வள்ளுவர் பெருமான் குறிப்பிட்ட ஊழ் கடந்த பெரியார்களுள் அவர் ஒருவர். அலெக்ஸாண்டர், ஸீஸர், நெப்போலியன் ஆகிய முதல்தர உலகப் பெரு வீரர்கள் வரிசையில் வைத்து அவர் எண்ணத்தக்கவர். மகான்களிடையே ஒரு மாவீரர் திரிபுரி காங்கிரஸ் போஸ் அடைந்த படு வீழ்ச்சி போஸைத் தவிர வேறு எந்த அரசியல் தலைவரையும் முறியடித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய நெருக்கடியின் பின் அரவிந்தர் ஒரு துறவியானார்; வ.உ.சி. அரசியலில் நம்பிக்கையிழந்து, சமூகச் சீர்திருத்தவாதியானார். ஆனால் போஸ் காங்கிரஸை நம்பமுடியாத விடத்துத் தாமே காங்கிரஸாகித் தேசத்தை நம்பலானார். தேசம் பக்குவமடையாதது கண்டு தாமே தேசமாகி அரசியலும் படையும் அமைத்து ஆணவமிக்க பிரிட்டிஷ் வல்லரசை எதிர்த்துப் போரிடலானார். துணிச்சல் மிக்க இவ்வீரரின் வீரகாதை இந்தியா வரலாற்றிலும் காணாத, புராணத்திலும் காணாத புது இதிகாசமாகும். போஸின் வாழ்க்கை இந்தியாவின் நனவை மட்டுமின்றி, கனவையும் கடந்தது என்னல் வேண்டும். ‘தேசிய முன்னணிக் கட்சி அமைப்பு’ காங்கிரஸ் இயக்கத்துடன் மாணவர் இயக்கம், தொழிலாளி கள் இயக்கம், குடியானவர் இயக்கம், சமதர்மவாதிகள் இயக்கம், பொதுவுடைமை இயக்கம் ஆகிய எல்லா ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களையும் ஒன்றுபடுத்தவே போஸ் பாடுபட்டு வந்தார். காங்கிரஸ் மேலிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பில் அடிக்கடி வளர்ச்சியுறுவது கண்டும் அவர் ஓர் இடதுசாரி அணிவகுப்பு ஏற்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையிலேயே 1928 முதல் 1939 வரை காங்கிரஸின் ஓர் அங்கமாயிருந்து உழைத்தார். திரிபுரி காங்கிரஸ் மூலம் அவ்வொத்துழைப்புக்கு வழியில்லாமல் போகவே, காங்கிரஸுக்கு வெளியிலிருந்தே ‘தேசிய முன்னணி’ என்ற புது இயக்கம் தொடங்க முனைந்தார். காங்கிரஸிலிருந்து வெளியே துரத்தப்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவில் எத்தனையோ பேர்கள் உண்டு. அவர்களுள் வெளிய சென்று தனிக்கட்சி அமைக்க முயன்றவர்கள் மிகச் சிலர். தனிக் கட்சி அமைக்க முயன்று வெற்றி கண்டவர் ஓரிருவர் என்னலாம். அவர்களுள் போஸ் ஒருவர். 1939-லிருந்து 1941 வரை இவர் தோற்றுவித்த கட்சி நன்கு வளர்ச்சியடைந்து வந்ததென்பதில் ஐயமில்லை. போஸ் வெளிநாடு சென்ற பின் அவர் செய்த செயல்களும் உண்மையில் இக்கட்சியைத் தொடர்ந்த செயல்களேயாகும். போஸ் உடல்நலம் பெற்றதும் நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து தம் தேசிய முன்னணிக் கட்சிக்குக் கிளைகள் அமைத்து அதை ஒழுங்காக ஆக்கினார். அதன் நோக்கங்கள், கொள்கைகள் ஆகியவற்றை விளக்கிப் பிரசாரம் செய்தார். அவர் வெளிநாட்டு அனுபவம், அரசியல் பயிற்சி ஆகியவற்றின் காரணமாக விரைவில் நாடெங்கும் ஒரு புதிய தேசிய இயக்க விதை விதைக்கப்பட்டது. சென்னையில் திரு. ஐயங்காரும், பிற தமிழ்த் தோழர்களும் முன்னணிக் கட்சியை வலுப்படுத்தப் பாடுபட்டனர். போஸின் தமையனார் சரத் சந்திர போஸும் அவருக்குத் துணையாயிருந்தார். மேலிட அடக்குமுறையிடையேயும் நாட்டுப்பணி; சிறைப்பரிசு போஸின் வளர்ச்சியைக் கண்டு வலதுசாரியினர் வாளா இருக்கவில்லை. போஸின் தளராத நிமிர்ந்த தேசிய ஆர்வம் எல்லா இடதுசாரிக் கட்சியினரையும் மீண்டும் ஒருங்கிணைத்துவிடக் கூடும் என்று அவர்கள் கண்டனர். ஆகவே போஸின் செல்வாக்கு மிகுதியாயுள்ள மாகாண காங்கிரஸ் கமிட்டியின் உரிமைகளைக் குறைத்து மந்திரி சபைகளின் உரிமைகளை வலுப்படுத்தலாயினர். இதனைக் கண்டித்து, போஸ் பிரசாரக் கூட்டங்கள் நடத்தினார். அதன்மீது மேலிடம், அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார் என்று குறைகாட்டி அவரை வங்கக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியிலிருந்தும் கமிட்டிகளிலிருந்தும் நீக்கிற்று. வார்தாவின் இக்கட்டளையை வங்கக் காங்கிரஸ் கமிட்டி ஏற்கத் தயங்கியபோது அக்கமிட்டியும் நீக்கப் பட்டது. இதனால் போஸின் தமையனார் சரத் சந்திரபோஸும் பதவியிழந்தார். காங்கிரஸ் மேலிடம் போர் தொடுத்துவிட்ட பிறகும் போஸ் தம் வழக்கப்படி தேசியப் பணியில் முனைந்து ஈடுபடுவதை நிறுத்தவில்லை. சென்னையில் டயரின் ‘தம்பி’ நீலின் உருவச் சிலையை அப்புறப்படுத்தும் இயக்கத்தைத் தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்கள் நடத்தியது போலவே, கல்கத்தாவில் ஹாஸ்வெல் என்ற வெள்ளை அட்டூழிய வீரர் உருவச் சிலையை அப்புறப்படுத்துவதற்கான கிளர்ச்சியில் போஸ் ஈடுபட்டார். வங்க இளைஞர்கள் அவருடன் பெருவாரியாகச் சேர்ந்து கிளர்ச்சி செய்தனர். அது கண்டு சினந்த வங்க அரசாங்கம் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவரைக் கைது செய்து காவலரை யறையின்றிச் சிறையிலிட்டது. போஸ் சிறைப்பட்ட பின்னும் அவர் தோற்றுவித்த கிளர்ச்சி ஓய்ந்தபாடில்லை. வங்க இளைஞர்கள் சாரியாக வந்து அதனைத் தொடர்ந்து நடத்தினர். வேறுவழியின்றி அரசாங்கத்தார் அச்சிலையை அப்புறப்படுத்தினர். போஸ் எடுத்த செயல் இங்கும் வெற்றி பெற்றது. ஆனால் அரசாங்கத்தின் வெஞ்சினமும் பழியுணர்ச்சியும் போஸைக் காவலிலேயே வைத்திருந்தது. அவர் மீது வேறு சில குற்றச்சாட்டுகளையும் தயாரித்து விசாரணைக்கும் கொண்டுவராமலேயே சிறை வைத்திருந்தனர். மீண்டும் உண்ணா நோன்பு : நாட்டு மக்களுக்கு ஒரு சாஸனம் விசாரணையில்லாமல் போஸைச் சிறை வைத்திருந்ததை மீண்டும் நாட்டு மக்கள் பலபடி கண்டித்துக் கிளர்ச்சி செய்த வண்ணமிருந்தனர். முன் ஒத்துழையாமையியக்க நாட்களில் சிறையிலிருக்கும் போதே மக்கள் அவரைச் சட்டசபைக்குத் தேர்ந்தெடுத்தது போலவே இப்போதும் உபதேர்தலில் அவரைத் தேர்ந்தெடுத்தனர். அரசாங்கம் எக்காரணங் கொண்டும் அவரை விடுதலை செய்யத் துணியவில்லை. போஸும் தம்மை வரையறையின்றிக் காவலில் வைத்திருப்பதைப் பலவாறு எதிர்த்து வந்து இறுதியில் உண்ணா நோன்பிருக்கப் போவதாக எச்சரிக்கை செய்தார். அந்நோன்பு எங்ஙனம் முடியினும் நாட்டுக்குத் தம் இறுதி முடிவையும் விருப்பத்தையும் பதிவு செய்து தெரிவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அவர் தம் சாஸனம் ஒன்றை எழுதி வைத்து அதனை மகாணாத் தலைவர்கட்கும் அமைச்சர்கட்கும் அனுப்பி வைத்தார். அதில் அவர் கூறுவதாவது: “என் வாழ்வில் மிக நெருக்கடி விளைவிக்கும் நட வடிக்கையில் இறங்குமுன் அதுவகையில் என்னைத் தூண்டிய எண்ணங்களை இங்கே எழுதிவைக்கிறேன்.” “மிக ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னர் நான் வந்துள்ள முடிவு மனிதன் எக்காரணங்கொண்டும் சூழ்நிலைகளுக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதுதான். ” இப்போதுள்ள சூழ்நிலையில் வாழ்வது என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத செயல். சட்ட ஒழுங்குக் கேடு. அநீதி ஆகியவற்றுக்கு விட்டுக் கொடுத்து வாழ்க்கையை நீடிப்பதென்பது என் வாழ்க்கைப் பண்புக்கே மாறானது. வாழ்க்கைக்கு இவ்விலை கொடுப்பதைவிட வாழ்க்கையை உதறியெறிவதையே நான் விரும்புகிறேன். அரசாங்கம் என்னைப் பலாத்காரத்தால் காவலில் வைக்க விரும்பினால் நான் அவர்கட்குக் கூறுவது, “என்னை விடுவிக்க! அன்றேல் நான் வாழ மறுத்துவிடுவேன்” என்பதே. வாழ விரும்புவதோ, சாகத் துணிவதோ என் சொந்த முடிவைப் பொறுத்தது. “ஒரு கொள்கைக்காக வாழ்ந்தோம்; அதற்காக இறந்தோம்” என்பதைவிட ஒருவருக்கு வேறு யாது வேண்டும்? என் நாட்டு மக்களுக்கு நான் கூறுவது; அடிமையாய் வாழ்வதினும் சாபக்கேடு மனிதனுக்கு வேறு இல்லை. அநீதியுடனும் தீமையுடனும் சமரசம் செய்து கொள்வதைவிட ஒருவன் செய்யும் பழிச் செயல் வேறு இல்லை. இந்நாளைய அரசாங்கத்திற்கு நான் கூறுவது... “எனது இறுதி வேண்டுகோள் இது.” எனது இறுதி அமைதியைப் பலாத்காரத்தினால் குலைக்க முற்படவேண்டும். டெரென்ஸ் மாக்ஸ்வினி, ஜதின்தாஸ், மகாத்மா காந்தி ஆகியவர்கள் வகையில் அரசாங்கம் நோன்பில் தலையிட எண்ணவில்லை. அதுபோலவே என் வகையிலும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதில் மாறுபாடு ஏற்பட்டு, பலாத்காரமாய் உணவு திணிக்க முயற்சி எடுத்துக் கொண்டால்கூட நான் அதனை என் முழு பலத்துடன் எதிர்க்கப் போவது உறுதி. அதன் பயன் இன்னும் அபாயகரமான தாய்விடும். என் உண்ணா நோன்பு 1910 நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கும் விடுதலை. போஸ் எத்தகைய மனிதர் என்பதை இந்தியா அறிந்திருப்பதை விடப் பிரிட்டிஷ் அரசாங்கம் நன்கு அறியும் என்னலாம். சொல்லொன்று, செயலொன்று, சொல்லியபடி செய்ய மாட்டாதவர் என்ற வகுப்பில் அவர் சேர்ந்தவர் என்று அவர்கள் எண்ணவில்லை. ஆகவே நோன்பு எச்சரிக்கைக்குரிய நாள் வரை அவர்கள் வாளா இருந்து அந்நாள் வந்ததே அவரை விடுதலை செய்தனர். விடுதலை செய்த பின்னும் அவர்மீது இரு வழக்குகள் வழக்கு மன்றத்தில் இருந்துவந்தன. அவர் உடல்நிலை சரிப்படும் வரை அவற்றை வலியுறுத்துவது ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. வெளித் தோற்றத்தில் போஸ் இப்போது இந்தியரிடையே இந்தியராய், காங்கிரஸ் தலைவரிடையே காங்கிரஸ் தலைவராய் அவர் நிலையில் மற்ற யாவரும் இருக்கிறபடியே தான் இருந்து வந்ததாகத் தோன்றியிருக்கக்கூடும். ஆயினும் நாட்டு மக்களும் தலைவர்களும் அரசியலாரும் எதிர்பார்த்திராத திட்டங்கள் அவர் உள்ளத்தில் உருவாகி வந்தன என்பது பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளினால் மட்டுமே வெளியாயிற்று. உண்மையில் அவர் திட்ட முழுவதும் செயற்பட்டு முடிவடைந்த பின்தான் அதன் முழு வடிவமும் நமக்குத் தெரிய வந்தது. ஆறியமர்ந்த நீறு போன்றிருந்த அவர் உண்மையில் நீறுபூத்த நெருப்பாகவே அமைந்தார் என்பதை மக்கள் உணரவில்லை. போஸின் இரகசியத் திட்டம் 1939 செப்டம்பரில் உலகப் போர் தொடங்கியதிலிருந்தே போஸ் வெளிநாடு சென்று காங்கிரஸ் போராட்டத்திற்கு உதவியாக வெளிநாடுகளிலிருந்து ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை உருவாக்க வேண்டுமென்று கருதி வந்தார். ஆனால் அவர் திட்டங்கள் முழு அமைதி பெற ஓராண்டாயிற்று. இதற்கிடையில் 1940-இல் அவர் தேசப்பணியிலீடுபட்டுக் காலவரையறையின்றிச் சிறைப்பட்டார். உண்ணாநோன்பின் மூலம் அரசியலாரையே பணிய வைத்து வெளியேறிய பின் இந்தியாவிலிருந்து வெளியேறி மாஸ்கோ செல்ல எண்ணினார். அவ்வாண்டு டிசம்பரில் போவதாக எண்ணிக் காபூலில் அதற்கான ஏற்பாடுகள் செய்யும்படி அங்குள்ள நண்பர்களுக்கு எழுதியிருந்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் புறப்பட இரண்டு தடைகள் ஏற்பட்டன. ஒன்று கல்கத்தா நகர சபைக்கு அவர் பொறுப்பான சில காரியங்களில் உதவி செய்ய வேண்டியிருந்தது. மற்றொரு தடை அவர் வெளிச் செல்லுவதற்கான மாற்றுருவிற்கு இயற்கைத்தாடி வளர்ப்பது அவசியமாயிருந்தது. தாடி வளர்ப்பதற்குக் குறைந்தது ஆறு மாதம் வேண்டியிருந்தது. மாய மறைவு விடுதலை பெற்ற போஸ் கல்கத்தா எல்ஜின் ரோடிலுள்ள தம் வீட்டில் தங்கினார். சமய வழிபாட்டில் முழு நேரமும் ஈடுபடப்போவதால் எவரும் தம்மைப் பார்க்கக் கூடாது என்று திட்டப்படுத்தித் தனியறையிலேயே இரவும் பகலும் கழித்து வந்தார். படிப்படியாகப் பிறருடன் கடிதப் போக்குவரவு, தொலைபேசியில் பேசுவது ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டார். உணவு கொண்டு வருபவரும் வெளியே வைத்து விட்டுப் போய்விட வேண்டும். போஸ் அரசியலில் மன மலுத்து அரவிந்தர் போல் சமயப் பணியிலிறங்கிவிட்டார் என்ற எண்ணம் பரவிற்று. இதற்கிடையே திடீரென ஒருநாள் போஸ் காணாமற் போய்விட்டார் என்ற செய்தி எங்கும் பரவிற்று. பல நாளாகியும் வல்லமை மிக்க அரசாங்கப் போலீசார் அரித்துத் தேடியும் எவ்விதப் பலனும் கிட்டவில்லை. கல்லூரி வாழ்வில் துறவியாக இமயமலைக்குப் போனது போலவே போயிருப்பார் என்றே யாவரும் முடிவு செய்தனர். ஆனால் அரசியலார் மட்டும் அவர் இந்தியாவைவிட்டு வெளியே போய்விட்டார் என்றும், நாஜியர்களுடன் கூட்டாக வேலை செய்கிறார் என்றும் கூறி வந்தனர். முதலில் நாட்டு மக்கள் இதனை நம்பக்கூடவில்லை. இஃது எதிர்பார்க்கத் தக்கதே. ஆனால் நாளடைவில் இஃது ஓரளவு உறுதிப்பட்டது. 10. வெளிநாடுகளில் புரட்சி இயக்கம் போஸின் மறைவு பற்றி உலகமும் அரசியலாரும் பலவாறு பேசிக் குழப்பமடைந்திருந்தனர். ஆனால் அவர் உண்மையில் 1941 ஜனவரி 16-இல் மாற்றுருவில் - ஒரு முஸ்லீம் பக்கிரி உருவில் - வெளியேறிப் போலீஸார் கண்களுக்குத் தப்பி இந்தியாவின் எல்லை வரை பல இடையூறுகளையும் கடந்து சென்று 19-ஆம் தேதி பெஷாவரை அடைந்துவிட்டார். அவர் வெளியேறிய செய்தி பொது மக்களுக்குத் தெரியவந்தது ஜனவரி 26-லேயே. அதற்கு முன் அவர் இந்தியாவின் எல்லை சென்றுவிட்டார். இங்கிருந்து புறப்படும்போது அவர் பேசமுடியாத ஊமை, காது கேளாத செவிடு என்று நடித்து எல்லைக் காவலருக்குத் தப்பி 1941 ஜனவரி 22-இல் காபூல் சென்று சேர்ந்தார். வழியில் மலைநாட்டுக் குடிகளின் தலைவர்கள் பலர் அவருக்கு ஆதரவளித்தனர். இவர்களுள் அடாஸரீப்பிலுள்ள சமயத் தலைவரான பீர் பாபாவும் லால்புராவின் தலைவரான ரஹ்மத்கானும் முக்கியமானவர்கள். ரஹ்மத்கான் காபூல் அரசவையில் செல்வாக்குப் பெற்றவரான படியால் அவர் கைச்சீட்டு வழியில் காவலர்களிடமிருந்து தப்பப் பேருதவியாயிருந்தது. காபூலில் அரசாங்க ஒற்றர் ஒருவர் போஸையும் நண்பர்களையும் பின்தொடரலானார். போஸ் நண்பர்கள் அவருக்குச் சிறிது பொருள் தந்து அனுப்பினர். அதன்பின் போஸ் ரஷ்ய தூதரைக் காண முயன்றார். ஓரிடத்தில் வழியிலேயே அவரைக் கண்டும், போஸ் நண்பர் தம்முடனிருந்தவர் போஸ் தான் என்று அவர் நம்பும்படி செய்ய முடியவில்லை. ஆளடையாளம் மறைக்க எடுத்துக்கொண்ட முயற்சியேயன்றி, உறுதிப்படுத்தத் தக்க சான்றுகள் அவர்களிடமில்லை! ஆனால் இத்தாலிய தூதரை அவர்கள் கண்டபோது தெளிவான வெற்றி கிடைத்தது. ஸேஞர் க்ரோனி என்ற அவர் போஸ் தப்பி வந்தார் என்று கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார். அவர் மூலம் ரோம் நகருடனும் பெர்லினுடனும் தொடர்வு கொள்ள முயன்றனர். ஆனால் எக்காரணத்தாலோ எதுவும் நடைபெறாமல் நாட்கள் கழிந்தன. உத்தம் சந்தின் உத்தம சேவை முன் கூறப்பட்ட ஒற்றன் சுபாஷ் போஸையும் அவர் தோழர் ரஹமத் கானையும் அடிக்கடி தொல்லைப்படுத்தினான். அச்சமயம் ரேடியோ விற்பனையாளரும் போஸிடம் பற்றுதலுள்ளவருமான உத்தம் சந்த் என்ற இந்தியர் அவருக்கு ஆதரவு தந்தார். 48 நாள்வரை நோயும் தொல்லையும்பட்டு அங்கே தங்கினார். அதன்பின் நடந்தே ரஷ்ய எல்லை செல்வதென்று அவர் துணிந்தார். ஆனால் இதற்குள் இத்தாலிய தூதரின் முயற்சியின் பயனாய் ஐரோப்பா செல்லவேண்டிய ஏற்பாடுகள் தயாராயின என்று செய்தி வந்தது. மார்ச் 17-இல் அவர் அங்கிருந்து புறப்பட்டு ஜெர்மனி வெளிநாட்டுக் காரியாலயத்தார் உதவியுடன் மாஸ்கோ சென்று அங்கிருந்து மார்ச் 28-இல் பெர்லின் சென்றார். இந்தியத் தலைவர் போஸும் ஜெர்மன் தலைவர் ஹிட்லரும் சுபாஷ் ஆப்கானிஸ்தானிலிருக்கும்போது அவர் ஓர் இத்தாலியப் பெயருடன் இத்தாலியராக நடித்தார். இப்போது ஜெர்மனியில் மற்றொரு இத்தாலியப் பெயருடன் அங்குள்ள பல நாட்டுத் தலைவர்களையும் நேரில் கண்டு பேசலானார். அக்டோபர் மாதத்துக்குப் பின் இம்மறை பெயர்களிலிருந்து வெளிவந்து தம் பெயரை வெளிப்படையாகத் தெரிவித்தார். இதனுடன் ஐரோப்பாவெங்கும் அவர் ஜெர்மனியிலிருக்கும் செய்தி பரவிற்று. சில நாட்களில் அவர் முன்கூட்டித் திட்டம் செய்த படி அடால்ஃப் ஹிட்லரைச் சந்தித்தார். அவர்கள் சந்தித்துக் கைகுலுக்கிய காட்சியின் படம் மேனாடெங்கும் ஆர்வத்துடன் பரவிற்று. ஹிட்லர் அன்புடனும், நட்புரிமை யுடனும் போஸை வரவேற்று வணக்கமளித்தார். போஸ் தம் ஐரோப்பாவிலுள்ள இந்தியர்களிடையேயும் போர்க் கைதிகளிடையேயும் பிரச்சாரம் செய்து இந்திய விடுதலைப் படையொன்று திரட்டுவதற்காகவே ஐரோப்பா வந்ததாகத் தெரிவித்தார். இந்தியாவின் சுதந்திரத்துக்கன்றி வேறு எவ்வகையிலும் அது வேலை செய்யாது என்றும், அதன் நிர்வாகம் யார் தலையீடுமின்றித் தன்னிச்சையாயிருக்க வேண்டும் என்றும் ஆகிய இரண்டு நிபந்தனைகளுடன் அஃது இயங்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஹிட்லர் அந்நிபந்தனைகளை ஏற்று அம்முயற்சிக்கு இணக்கமளித்தார். மேனாட்டு இந்திய விடுதலை இயக்க வரலாறு இந்தியாவில் புரட்சி இயக்கத்திலீடுபட்டு வெளியேறின பலர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்தனர். இவர்களுள் பலர் இந்திய விடுதலைக் கழகங்களை நடத்தினர். முதல் உலகப் போரின் போது ராஜமகேந்திர பிரதாப் என்பவர் ஒரு விடுதலை அரசாங்கமே அமைத்திருந்தார். நம்பியார், இக்பால் ஷடா, எம்.வி. ராவ் ஆகியவர்கள் ஜெர்மனியில் உழைத்து வந்தனர். ஃபிரான்சிலிருந்து ஓடிச்சென்ற அஜித் சிங் முஸாலினி அரசியலில் ரேடியோவின் பொறுப்பாளராயிருந்து உழைத்தார். இத்தாலி உலகப்போரில் ஈடுபட்டு ஆப்பிரிக்காவில் போர் நடத்திய போது இந்தியப் படை வீரர்கள் பெருவாரியாகச் சிறைப்பட்டனர். அவர்களில் சிலர் இத்தாலியிலுள்ள அஜித் சிங்கின் விடுதலைக் குழாத்தில் சேர்ந்தனர். மிகப் பலர் ஜெர்மனி சென்று போஸின் விடுதலை இந்தியப் படை (குசடிளைந ஐனேயைn டுடிபசைந)யில் சேர்ந்தனர். செப்டம்பர் மாதத்தில் சுபாஷ் ஜெர்மன் அரசாங்கத்தால் அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்ட விமானத்தில் ஏறி ஃபிரான்சு, இத்தாலி, ஹாலந்து ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார். நாஜியர் கட்சிக் கோட்பாடுகளை எதிர்த்த பல இந்தியர்கள் சிறையிலிருந்தனர். இந்தியாவில் விடுதலைக்கு உழைப்பதில் அவர்களிடையே கருத்து வேற்றுமையில்லையென்று கண்ட போஸ் தம் சொந்தப் பொறுப்பில் அவர்களை விடுதலை செய்யும்படி அவ்வவ் அரசாங்கங்களைக் கோரினார். இவர்களனைவரையும் சேர்த்து 1941 அக்டோபரில் பெர்லினில் ஐரோப்பிய இந்தியர் மாநாடு ஒன்று கூட்டினார். நேத்தாஜி பட்டமளிப்பு போஸுக்கு இந்திய மக்கள் தலைவர் பெருந்தகை (நேதாஜி) என்ற பெயரிட்டழைத்தது இந்த பெர்லின் மாநாட்டிலேதான். ஜெர்மன் அரசாங்கமும் பிற நேச (பிரிட்டனின் பகை) நாடுகளும் அவரை விடுதலை இந்திய வல்லாளர் (குசநணைந ஐனேளைஉhந குரநாசநச) என்று அழைத்தன. ஆஃஜாத் ஹிந்த் ஃபௌஜ் முதன்முதல் போஸின் விடுதலை இந்தியப் படையில் (ஆஃஜாத் ஹிந்த் ஃபௌஜ்) சேர்ந்தவர்கள் நியூ ரம்பர்க்கில் இருந்த கைதிகளான 250 இந்தியப் படைவீரர்களே. அவர்களுக்குக் கூனிக்ஸ்பர்க்கிலுள்ள படை முகாமில் பயிற்சி தரப்பட்டது. அதன்பின் அன்னாபுர்க் என்ற இடத்திலும் பல வீரர்களின் முன் போஸ் பேசி அவர்களைச் சேர்த்தார். எங்கும் போஸ் வீரர்களிடம் விடுதலைப் படை இந்தியாவின் நலத்துக்கன்றி வேறு எதற்கும் உழைக்க வேண்டியதில்லை என்பதையும், ஜெர்மனியுடன் வேறு எந்த அடிப்படையிலும் தமக்குத் தொடர்பு கிடையாது என்பதையும் தெளிவுபடுத்தினார். விடுதலைப் படையில் சேர விரும்பாதவர்கள் வகையிலும் தாம் பாடுபடவே போவதால், நாட்டுச் சேவையை விரும்பித் தியாகத்தை ஏற்பவர்கள் அல்லாத எவரும் அவற்றில் சேர வேண்டாம் என்றும் அவர் விளக்கினார். ஆஃஜாத் ஹிந்த் சங்க் விடுதலை இந்தியப் படை அமைத்தபின் இந்திய விடுதலைப் பிரசாரத்தைத் தொடர்ந்து ஐரோப்பாவெங்கும் நடத்துவதற்காகப் போஸ் விடுதலை இந்தியத் தலைநிலையம் (ஆஃஜாத் ஹிந்த் கேந்த்ரம்) ஒன்று அமைத்தார். இதன் தலைமையிடம் பெர்லினிலிருந்தது. ஐரோப்பாவின் முக்கிய நகரங்களிலெல்லாம் அதற்குக் கிளைகள் அமைக்கப்பட்டன. தலை நிலையத்துக்குப் போஸ் பெருந்தகையே தலைவராகவும் நேதாஜியால் விடுதலை பெற்ற திரு.ஏ.சி.என். நம்பியார் பொதுச் செயலாளராகவும் அமர்வு பெற்றனர். ஓர் அமைச்சரவையில் அவ்வத் துறையமைச்சர்கள் அமைவது போல் இங்கும் அரசியல் துறை ஒவ்வொன்றுக்கும் ஓர் அமைச்சர் நிறுவப்பட்டனர். பிற நாடுகளுக்குத் தூதர்களும் அமர்த்தப்பட்டனர். விஷி (ஃபிரான்ஸ்), பெல்ஜியம், ஹாலந்து, ஹங்கேரி முதலிய நாடுகளில் விடுதலை இந்திய அரசாங்கத் தூதர்கள் இருந்தனர். ஐரோப்பாவில் அமைந்த இந்த இந்திய விடுதலை நிலையத்தின் முக்கிய வேலை இந்தியா பற்றிய செய்தி பரப்புதலும், விடுதலை இயக்கத்திற்காகவும் விடுதலைப்படை வளர்ச்சிக் காகவும் நிதி திரட்டுவதலும் ஆகும். இச்சங்கச் சார்பில் ஃபிரீஸ் இந்தியன் மாஃகஜின் என்ற பெயருடன் ஆங்கிலத்திலும் ஜெர்மனியிலும் ஒவ்வொரு மாதப் பத்திரிகையும், இந்துஸ்தானி யிலும் பிற இந்திய மொழிகளிலும் பாயீ பந்த் (க்ஷhயi க்ஷயனே) என்ற வாரப் பத்திரிகையும் வெளிவந்தன. முன்னது பொதுமக்களுக்கும், பின்னது படை வீரருக்கும் உரியனவாயிருந்தன. ‘ஜெய் ஹிந்த்’ மந்திரத் தோற்றம் ஐரோப்பிய இந்திய விடுதலை இயக்கம் செய்த நற்காரியங்களுள் ஒன்று இன்று இந்தியாவில் தேசிய மந்திரமாய் விட்ட ஜெய்ஹிந்த் என்ற வணக்க முறை ஆகும். இதற்கு முன் ஐரோப்பாவில் இந்தியர் ஒருவரை ஒருவர் காணுமிடத்தில் ஆங்கில முறையிலும் அவரவர் சமய மொழி மரபுகளை ஒட்டியும் பலவகை வணக்கங்கள் கூறுவது பிறநாட்டினர் நகைப்புக்கிடம் தந்து வந்தது. தேசியவாதிகளிலும் இந்துக்கள் ஜெய்ராம் என்றும், காங்கிரஸ்காரர் வந்தே மாதரம் என்றும், முஸ்லீம்கள், சீக்கியர்கள் வேறு வகையிலும் வணக்கம் கூறினர். போஸின் செயலாளர் திரு. அபித்ஹலஸன் யோசனையுடன் ஹிந்தி, உருது ஆகிய இரு மொழிகளிலும் வேறுபடாத சொற்களமைந்த ‘ஜெய் ஹிந்த்’ என்ற தொடரை போஸ் வணக்க முறையாக்கினார். துணிச்சல் மிக்க நடுநிலை வீரர் விரைவில் விடுதலைப் படை ஆயிரக் கணக்கில் பெருகிற்று. நானூறு ஐந்நூறு வீரர்களைப் போஸ் முதலில் கோரினார். ஆனால் 5000 வரை சேர்ந்துவிட்டனர். அவர்கட்குப் பயிற்சியுடன் அவர்களுக்கான உடல் நலம், மருத்துவம், கல்வி முதலிய வசதிகளும் செய்யப்பட்டன. விடுதலை இந்திய ரேடியோ, விடுதலை இந்தியப் படக்காட்சி முதலியவையும் ஒழுங்கு படுத்தப்பட்டன. 1942 நவம்பரில் போஸ் ஸ்டாலின் கிராடில் ஜெர்மானியர் நடந்திய போரைப் பார்வையிட்டார். அங்கிருந்து திரும்பியதும் அவர் ரஷ்யருடன் ஜெர்மானியர் சமாதானமே செய்துகொள்ளவேண்டும் என்று துணிந்து கூறினாராம். இத்துணிவு போஸின் நடுநிலை வீரத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஆனால் அதே சமயம் ஜெர்மானியர் பெருந்தன்மையும் பொறுமையும் உடையவராயிருந்தாலன்றி இவ்வுரையை அவர்கூறித் தப்பியிருக்க முடியாது. 1943 ஜனவரி 26இல் கூனிக்ஸ்பர்க்கில் அவர் இந்திய விடுதலை நாளை ஜெர்மனியிலேயே கொண்டாடினார். தேசியக் கொடி உயர்த்தித் தேசிய கீதத்துடனும் இசை மேளத்துடனும் இந்தியப் படைவீரர் ஜெர்மன் நகர்களில் ஊர்வலம் வந்தனர்! இவ்விழாவில் போஸ் தம் வீரரை ஊக்கிப் பேசியதுடன் ஜெர்மன் தளபதிகளும் இந்திய வீர தீரத்தையும் கட்டுப்பாட்டையும் தேச பக்தியையும் பாராட்டிப் பேசினர். இரண்டு வாரங்களுக்குப் பின் நடந்த ஒத்திகையில் இந்தியப் படை ஜெர்மன் படையுடன் போர் நடத்தி வெற்றி கண்டது. கிழக்காசிய அரசாங்கத்துக்குப் பயணமாதல் போஸ் ஐரோப்பாவில் விடுதலை இந்தியப் படையும் அரசியலும் நிறுவியபோது அவர் உதவி கீழ்த் திசையிலும் நாடப்பட்டது. கிழக்காசியாவில் போஸ் குடும்பத்தைச் சேர்ந்த ராஷ்பிஹாரி போஸ் என்பவர் நிறுவிய விடுதலை இந்திய இயக்கத்தில் உள்நாட்டுப் பிளவும் பூசலும் ஏற்பட்டன. ராஜ்பிஹாரி போஸ் ஜப்பானிய அரசாங்கத்தின் மூலம் சுபாஷின் உதவி கோரினார். 1943 ஜனவரி 27ஆம் தேதி கிழக்காசியர் செல்லும் நோக்கத்துடன் போஸ் ஹாலந்திலுள்ள ஒரு துறைமுகம் சென்றார். ஆனால் பிரிட்டிஷ் இரகசிய இலாகா அவரைக் கவனித்து வருவதாகத் தெரிந்ததும் அவர் திரும்பிவிட்டார். இதன்பின் போஸ் பயணச் செய்தி எவரும் அறியாமல் வைக்கப்பட்டது. அவர் மீண்டும் தாடி வளர்த்துக் கொண்டு போர்டோத் துறை முகத்திலிருந்து ஜெர்மன் நீர் மூழ்கியில் புறப்பட்டார். தென் ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்து மகா கடல் வந்ததும் ஜப்பானிய நீர் மூழ்கி ஒன்று அவரைச் சந்தித்து இட்டுக் கொண்டு பினாங் வந்து சேர்ந்தது. அங்கிருந்து அவர் விமானத்தில் டோக்கியோ வந்து சேர்ந்தார். கிழக்காசிய விடுதலை இயக்க வரலாறு கிழக்காசியாவில் ராஷ்பிஹாரி போஸ் தலைமையில் இயங்கிய விடுதலை இந்திய இயக்கச் சார்பில் பாங்காக்கில் ஒரு மாநாடு நடைபெற்றிருந்தது. 1943 ஜூலை 4-ஆம் தேதி ராஷ்பிஹாரி தலைமையில் இரண்டாவது மாநாடு சிங்கப்பூர் அல்லது ஷோனானில் நடைபெற்றது. சுபாஷைப் பிஹாரி அறிமுகம் செய்து வைத்து அவரிடமே இந்திய விடுதலைக் குழாத்தின் தலைமையை ஒப்படைப்பதாகக் கூறினார். போஸ் இம்மாநாட்டில் போர் நிலைமை, இந்திய நிலைமை ஆகியவற்றை விளக்கி இந்திய விடுதலைக்காகத் தாம் இந்திய தேசியப் படையும் தற்காலிக விடுதலை இந்திய அரசாங்கமும் அமைக்க விரும்புவதாகவும் அதற்கான ஒத்துழைப்பைக் கிழக்காசிய இந்திய மக்கள் தருவர் என்று தாம் நம்புவதாகவும் கூறினார். பல்துறைத் தலைவர் சுபாஷ் போஸ் இந்தியாவில் சொற்பொழிவுப் பிரச்சாரமும் சட்ட மறுப்பும் மட்டுமே செய்து வந்தார். ஆனால் கிழக்காசியாவில் இந்திய விடுதலை இயக்கத்தில் எல்லாமுமாய் எல்லா இடத்திலும் இருந்து அவர் எல்லாப் பணிக்கும் தாயகமாயிருந்தார். அரசாங்கம், பிரசாரம், சொற்பொழிவு, படைத் தலைமை, நிர்வாகத் தலைமை ஆகிய அனைத்தின் பொறுப்பையும் அவர் ஒருவரே ஏற்று நடத்தினார். இளமையில் சமயப் பற்றிலாழ்ந்து துறவியாய் இமயமலை சென்ற இளைஞர் இத்தனை துறைகளையும் இயக்கும் தனிப் பெரும் வீரராயிருப்பார் என்று யாவரே குறி கூறியிருக்க முடியும்! 1943 ஜூலை 5-ஆம் தேதி நடைபெற்ற விடுதலை இந்தியப் படை அணி வகுப்பில்தான் போஸ் முதல் தடவையாக ‘செல்க செல்க தில்லி நோக்கி (தில்லி சலோ)’ என்ற வீரமுழக்கம் செய்தார். அதற்கடுத்தநாள் இ.தே.ரா. அல்லது இந்திய தேசிய ராணுவம் (ஐ.சூ.ஹ. டிச ஐனேயைn சூயவiடியேட ஹசஅல) என்ற பெயருடன் அதன் தொடக்க விழா நடத்தப்பட்டது. ‘ஜெய் ஹிந்த்’ என்ற வெற்றி முழக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் இச்கூட்டத்திலேயே, நான்கு நாட்களுக்குப் பின் இந்திய வீரப்பெண்மணிகளின் படை திரட்டும் யோசனையும் உருவாயிற்று. மலாயா முழுவதும் இந்திய தேசிய இயக்கம் பற்றிப் பிரச்சாரம் செய்தபின் சுபாஷ் பெருந்தகை தாய்லாந்து (சயாம் அல்லது சீயம்), பர்மா, ஜாவா, சுமத்ரா, போர்னியோ எங்கும் சென்றார். பல நாட்டுப் பத்திரிகைப் பிரதிநிதிகள் மகாநாடுகளையும் கூட்டித் தம் நோக்கங்களை விளக்கினார். இந்தியர்கள் மட்டுமின்றி ஆசிய நாட்டு மக்கள் அனைவருமே போஸ் வீரமுழக்கங்களையும் அறிவு விளக்கங்களையும் கேட்டு இந்தியாவினிடமும் இந்திய விடுதலை இயக்கத்தினிடமும் பெரும் பற்றுக் கொண்டனர். மலாய்களிடையும் செல்வர், ஏழைத் தொழிலாளிகள், கைவண்டி இழுப்பவர் வரை யாவரும் பெரிதும் சிறிதுமான நன்கொடைகளும் காணிக்கைகளும் மற்றும் பல உதவிகளும் அளித்து இந்திய இயக்கத்திற்கு ஊக்கம் தந்தனர். ஆகஸ்டு 25 ஆம் தேதி சுபாஷ் இந்திய தேசியப் படையின் சேனாதிபதிப் பொறுப்பைத் தாமே ஏற்றார். அவர் தம் ஒப்பற்ற ஆர்வமும் வீரமும், படை வீரர்களிடம் அவர் காட்டிய பரிவும் ஒப்புணர்ச்சியும் படையில் புத்துணர்ச்சியையும் புது ஆற்றலையும் உண்டு பண்ணின. ஒரு சில மாதங்களுக்குள் படையின் எண்ணிக்கை 30,000-க்கு மேல் வளர்ச்சியடைந்தது. இதன்பின் போஸ் முன்பு சற்றுச் சீர்குலைவுற்றிருந்த இந்திய விடுதலைக் குழாத்தைச் சீரமைத்துத் தாய்லாந்து, பர்மா, அந்தமான், ஜாவா, சுமத்ரா, ஸெலிபிஸ், போர்னியோ, ஃபிலிப்பையன், சீனா, ஜப்பான் ஆகிய இடங்களில் கிளை நிலையங்களும் சிங்கப்பூரில் தலை நிலையமும் அமைத்தார். 1945 ஜனவரியில் தலை நிலையம் ரங்கூனுக்கு மாற்றப்பட்டு இந்தியாவுக்கு அருகில் கொண்டு வரப்பட்டது. 1945 அக்டோபர் 21-இல் நடைபெற்ற மகாநாட்டில் தற்காலிக விடுதலை இந்திய அரசாங்கம் அமைக்கப்பட்டு அதற்குப் போஸே தலைவராகவும், போர் வெளிநாட்டுத் தொடர்பு அமைச்சராகவும் அமர்த்தப் பெற்றார். அக்டோபர் 22-இல் ஜான்ஸி ராணி படைதயாராயிற்று. அந்தமான் நில ஆட்சி உரிமை அக்டோபரிலேயே டோக்கியோவில் நடந்த கிழக்காசிய அதிகாரிகள் மாநாட்டில் ஜப்பான் முதலமைச்சர் தளபதி டோஜோ அந்தமான். நிக்கோபார்த் தீவுகளைத் தற்காலிக இந்திய அரசாங்கத்தினிடம் ஒப்படைத்தார். போஸ் ஜப்பான் சக்கரவர்த்தியைக் கொலுமண்டபத்தில் சந்தித்து அளவளா வினார். இதன் பின் ஓர் இந்தியக் குறுநில மன்னர் ரங்கூனை யடுத்திருந்த ஐராவதி பெருநிலக்கிழமையைத் தற்கால அரசாங்கத்துக்குக் கொடுத்தார். இதுவும் 50 சதுர மைல் பரப்பும் 15,000 மக்கள் தொகையும் உடையதாயிருந்தது. அக்டோபர் 24-இல் விடுதலை அரசாங்கம் பிரிட்டனுடனும் அமெரிக்காவுடனும் போர் அறிவிப்புச் செய்தது, 1944 ஜனவரியில் படைத்தலைமையிடமும் ரங்கூனுக்கு மாற்றப்பட்டது. அரக்கான் - மணிப்பூர் போர்முனைகள் 1944 பிப்ரவரி 4-இல் இந்தியப்படை அரக்கான் முனையில் தாக்குதல் தொடங்கி வெற்றி பெற்றது. எதிர்பார்க்கப்பட்டபடி இந்தியாவில் ஏதாவது செயல்முறை இச்சமயம் நடந்திருந்தால் இந்தியா எளிதாக விடுதலை நோக்கி விரைந்திருக்கக்கூடும். ஆனால் அங்ஙனம் நடக்க நேராததால் பல துன்பங்களுக் கிடையே இந்தியப்படைகள் கிடைத்த வெற்றியை விடாதிருக்கப் போராட வேண்டியதாயிற்று. போர் வெற்றியை ஒட்டிப் படைத்தலைமை நிலையம் மெரியோவுக்குக் கொண்டு வரப்பட்டது. மார்ச் 18-இல் இந்தியப் படைகள் இந்திய எல்லைக்குள் புகுந்து பல தலங்களைப் பிடித்தன. இதே சமயம் மணிப்பூர்த் தனியரசின் தலைநகரான இம்பால் மீதும் எதிர்ப்புத் தொடங்கிற்று. விரைவில் இங்கே 15,000 சதுர மைல் பகுதி வெல்லப்பட்டது. வெற்றிபெற்ற பகுதிக்கு மேஜர் ஜெனரல் ஏ.ஜி.சாட்டர்ஜி மாவட்டத்தலைவர் (கவர்னர்) ஆக்கப்பட்டார். இ.தே.ரா.வின் ஊக்கம் - நாட்டின் தயக்கம் ஜப்பான் பலக்குறைவடைதல், காலநிலை, ஒரு சில இ.தே.ரா. அதிகாரிகளின் சதிச் செயல் ஆகியவற்றின் பயனாக இ.தே.ரா.வின் வெற்றிப்போரின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது. போர் முறையையொட்டி அவர்களைத் திட்டமிட்டுப் பின்வாங்கும்படி போஸ் கட்டளையிட்டார் நோயும் கடுந்தொல்லைகளும் இப்போது தளர்ச்சியுற்ற வீரர்களை வாட்டி வதைத்துப் பெரும்பலி கொண்டன. தப்பிப் பிழைத்த வீரர்கள் மாந்தலேக்கும் மெனியோவுக்கும் சென்றனர். இருநூறு ஆண்டுகளாகத் தம் தலைவர்களுக்கன்றித் தமக்கெனப் போரே அறியாதும், இந்தியத் தலைமையதி காரிகளைக் கூடப் பெறாதும் இருந்த இந்தியர் தமக்கென அத்தலைவரை எதிர்த்து 1944-இல் முதல் முதல் போரிட்டனர். அம்முதற் போரே அவர்களுக்குப் பேரளவு வெற்றி தந்தும் இந்தியாவில் அதற்கான ஆதரவு எழுவதற்குத் தலைவர்கள் தயாராயில்லாததால் வெற்றி தொடர முடியாமல் போயிற்று. ஆயினும் சூழ்நிலை கிடைத்தால் இந்தியர் தம் நாட்டுக்காகப் போரிட்டு வெற்றி பெற முடியும் என்பதை அரக்கான், அம்பாய்ப் போர் முனைகள் உலகுக்குத் தெளிவுபடுத்தின. தளர்விலும் தலைவர்! இ.தே.ரா.வின் பின்னடைவின்போது தலைவர் பெருந்தகை போஸ் காட்டிய தீரம் வெற்றி நாளிலும் பன்மடங்கு அவர் தலைமைத் தகுதியைக் காட்டுவதாயிருந்தது. அவர் படை வீரருடன் படை வீரராயிருந்து தம் துன்பம் பாராமல் யாருக்கும் வேண்டிய உதவிகளும் தயாரிப்புகளும் செய்வதில் ஈடுபட்டார். மருத்துவ விடுதிகளை மேற்பார்வையிட்டுக் காயமடைந்தோர் களுக்குத் தக்க ஏற்பாடுகள் செய்தார். அவ்வாண்டு முடிவில் அவர் மீண்டும் கிழக்காசியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களுக்கு ஊக்கமளித்துக் கடைசிப் போராட்டத்திற்கு ஆயத்தம் செய்தார். விஷன்பூர் (விஷ்ணூபுரம்) இம்பால் கொஹிமாத் தொடர்புகளை ஊடறுத்துவிட்டால் இந்தியாசெல்ல வழியேற்படும். இதுவே இவ்விறுதி உயிர்ப் போராட்டத்தின் குறிக்கோளாயிருந்தது. ஆனால் பிரிட்டிஷ் படையும் மாந்தலே. மத்திய பர்மாவைப் பிடிக்கத் திட்டமிருந்தது. ரஷ்ய - ஜெர்மன் போராட்டத்தை ஒத்த கத்திரிக்கோல் போர் முறை நிகழ்ந்தது. இரு திறங்களும் நெடுநாள் தெளிவான வெற்றியின்றிப் பூசலிட்டன. ஆனால் மறுபடியும் இ.தே.ரா. அதிகாரிகள் சிலர் சரியால் நிலைமை மெள்ள மெள்ள இந்தியருக்கு மாறாயிற்று. ஜப்பானியருக்கும் இச்சமயம் விமான பலம் குன்றித் தளவாடத் தொடர்வு ஏற்படுத்த முடியாமல் போயிற்று. இறுதி ஏற்பாடுகளும் அறிவுரைகளும் அடுத்தபடி வேண்டும் செயல்களுக்கு ஏற்பாடு செய்ய போஸ் டோக்கியோ செல்லவேண்டி வந்தது. படை அதிகாரி களையும் 6,000 வீரர்களையும் இந்தியர் பாதுகாப்புக்காக விட்டுவிட்டு அவர் புறப்பட்டார். அவர் பாங்காக்குச் செல்லும் பயணம் இந்தியாவிலிருந்து வெளியேறிய பயணத்துக்கொத்த கடுமையுடையதாயிருந்தது. பிரிட்டிஷ் படைகள் சூழ்ந்து வந்து தொல்லை தந்தன. பிரிட்டிஷ் அமெரிக்க விமானங்கள் அவரைப் பிடிக்க வேட்டையாடின. இத்தனை தடைகளையும் கடந்து 1945 மே 13-ஆம் தேதி அவர் பாங்காக் வந்தடைந்தார். இப்போது அவர் இந்தியருக்கு வெளியிட்ட செய்தி; “இந்தியா இன்னும் போராடுகிறது; டில்லி நோக்கிய பாதையே சுதந்திரம் நோக்கும் பாதை. ஆனால் டில்லிக்குப் பாதைகள் பல உண்டு” என்பதே. மே 21-ஆம் தேதி பாங்காக்கில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசுகையில் நேதாஜி போஸ் கூறியதாவது; “நம் மின்னல் இயக்க முன்னேற்றத்தின் மெய் வடிவத்தை இந்தியா உணரும் காலம் வரும்போது இந்தியா முழுமையும் ஒரு பாறை போல் நமக்குப் பின்னணியாயிருக்கும். இந்திய விடுதலைப் போரின் முதல் கட்டத்தில் நாம் தோல்வியடைந்தது உண்மையே. ஆனால் பல கட்டங்கள் இன்னும் உள்ளன. விடுதலை இந்திய அரசாங்கமும் படைகளும் பர்மாவில் இந்தியருக்கு என்ன செய்துள்ளனர் என்பது விரைவில் காணப்படும்.” இ.தே.ரா.வின் தயக்கம் இந்தியாவின் மயக்கம் மே 28-இல் நேதாஜி பாங்காக்கிலிருந்து மலாயா சென்றார். இச்சமயத்தில்தான் இந்தியாவில் 1942-இல் சிறைப்பட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட்டு இந்திய அரசியல் மாறுதல் பற்றிய சிம்லா மாநாடு நடந்து கொண்டிருந்தது. இம்மாநாட்டுப் போக்கைக் கண்டித்துத் தம் கொள்கைகளை இந்தியருக்குச் சிங்கப்பூர் ரேடியோவில் அறிவிக்கவே அவர் அங்கே சென்றார். ஜூலை மாதத்தில் போரில் பட்ட வீரர்களுக்காகச் சிங்கப்பூரில் சிலை செய்யப் போஸ் ஏற்பாடு செய்தார். பிரிட்டிஷார் மீண்டும் வந்துவிடுவர் என்ற நிலை வந்த பின்னும் போஸ் இதனை விரைவுப்படுத்தினரேயன்றி நிறுத்தவில்லை. கட்டி முடிந்தவுடன் வந்த பிரிட்டிஷ் படைகள் தம் முதல் சீற்றத்துக்கு அதை இரையாக்கின. “கற்றூண் பிளந்தது” இ.தே.ரா.வின் போர் முயற்சிகளால் இனிப் போர் வீரர்களுக்குக் கேடன்றி வேறு பயனிராது என்று தெளிவு பட்டபின் 1945 ஜூன் 234-ஆம் தேதி போஸ் போர் நிறுத்தக் கட்டளையிட்டார். தோல்வியறியாத தளரா உளங்கொண்ட போஸ் நாட்டு மக்கள் நன்மையை எண்ணித் தற்காலிகத் தோல்வியை ஒப்புக் கொண்டது. இவ்வொரு தடவைதான். ஆனால் இதன் பின் அவர் வாழ்க்கையும் மறுபடியும் மறை வென்னும் மாய இருளில் கலந்துவிட்டது. எச்சுமைக்கும் தளர்ந்து வளையாத கல் தூண் பிளந்திற்றது போல் அது தோன்றிற்று. அது பிளந்திற்றதோ விலகி நின்றதோ யார் அறிவார்! 1945-ஆம் ஆண்டு டோக்கியாவுக்கு விமானத்தில் செல்லுகையில் விமானம் விழுந்து நொறுங்கி மாண்டார் என்று அறிவிக்கப்பட்டது. இதனைப் பலர் உறுதிப்படுத்தினர் - பலர் மறுத்தனர். ஆனால் 1942 மார்ச் 23-லும் இத்தகைய செய்தி வந்து பின்னால் இறந்தது சுபாஷ் போஸ் அல்லர்; ராஷ்பிஹாரி போஸ் என்று கூறப்பட்டது கண்டு, போஸின் தமையனார் சரத்பாபுவும் அவர் தோழர்கள் பலரும் இன்னும் போஸ் இருக்கிறார் என்றே நம்புகிறார்கள். எது எப்படியாயினும் போஸின் புகழ் உரு இந்தியர் மனத்தில் என்றும் மறையாதென்பது உறுதி. அவர் பெயரும் புகழும் வீரமும் சிந்திக்கும் இந்திய இளைஞர், மங்கையர் உள்ளங்களி லெல்லாம் வருங்காலக் கனவுலக போஸ்கள் கருவுயிர்த்து வளர்ச்சி பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை. விடுதலைப் படைவீரர் தவிப்பு தலைவர் பெருந்தகை சுபாஷ் போஸையே உயிராகக் கொண்ட பல உடல்களான விடுதலை இந்தியப் படையினர் தலை துண்டிக்கப்பட்ட உடல்களென மேனாடுகளிலும் கீழாசியாவிலும் காட்டிலும் நாட்டிலும் பல்வகை அவதிகட்காளாகி மழ்கினர். பலர் பிடிபட மறுத்துத் தற்கொலை செய்து கொண்டனர். பலர் பலநாள் தப்பிப் பலவகை வதைகட்காளாகினர். பிடிபட்டவர்கள் பிரிட்டிஷ் வீரராலும் அவர்கள் துணைவர்களாலும் பலகால் தம் தாய் நாட்டினராலுமே எண்ணற்ற துன்பத்திற்கும் அவமதிப்புக்கும் ஆளானார்கள். ஆனால் இவ்வளவு தொல்லைகளிடையிலும் புராணங்களில் கட்டுரைக்கப்பட்ட நரக வாதைகளினும் கொடிய நரக வாதைகளினும் போஸின் திருநாமம் ஒன்று மட்டும் அவர்கள் உள்ளத்தில் சுடர்விட்டு ஆறுதல் தரத்தக்கதாகவேயிருந்தது. வீழ்ந்துபட்டும் பிழைத்தெழும்படி இந்தியர் உள்ளத்தில் ஒளியேற்றிய அவ்விளக்கம் மீண்டும் எழும்நாள் எந்நாளோ என்று நாட்டு மக்களேபோல் நாமும் அவாவுறாதிருக்க முடியவில்லை. செங்கோட்டை வெங்கோட்டையாயிற்று தாய்லாந்திலும் பிற கிழக்காசியப் பகுதிகளிலும் எஞ்சி அடைக்கலம் புகுந்த இ.தே.ரா. கைதிகள் படும் தொல்லைகள் இந்திய மக்களுக்கெட்டியது. வெற்றி நாளில் போரில் கலக்க முடியாத இந்தியர் தோல்வியில் தம் கடமையை மறந்துவிட வில்லை. காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்றென ஒரே மூச்சில் ஜெய்ஹிந்த், வாழ்க இ.தே.ரா. என்ற முழக்கத் துடனெழுந்து அவர்கள் பால் அனுதாபம் காட்டியது. காங்கிரஸின் மாபெருந்தலைவர்கள் தக்க முயற்சியெடுத்தனர். கைதிகள் டில்லி கொண்டு வரப்பட்டுச் செங்கோட்டையில் அடைபட்டனர். விடுதலைக் கொடியை ஏற்ற வேண்டிய டில்லி செங்கோட்டையே அவர்கள் சிறைப்படும் இடமாயிற்று! செங்கோட்டையே அவர்கட்கு வெங்கோட்டையாயிற்று! தோல்வியினின்று பிறந்த வெற்றி ஒளி ஆயினும் வெற்றியிடை தோல்வி, தோல்வியிடை வெற்றி என்பது பொய்க்கவில்லை. போஸின் தளராத போர் நடவடிக்கையால் முற்றிலும் சாதிக்க முடியாத செயல் அப்போர்க் குரலாகிய ஜெய்ஹிந்த் மூலம் ஒரு வகையில் பயன் தந்த தென்னலாம். இந்தியாவில் முன் என்றுமில்லாத ஒற்றுமையையும் ஆர்வத்தையும் தன்னம்பிக்கையும் தோல்வியிலும் இ.தே.ரா. உண்டு பண்ணியது. இந்தியாவின் காங்கிரஸ் கடந்து, நாட்டு மக்களையும் கடந்து, நாட்டின் அதிகாரிகள், போலீஸ் படைவீரர், கடற்படை, விமானப்படை எங்குந் தேசிய மயமாய் ஒரே ஆன்மிகப் போர்க்களமாயிற்று. பம்பாயில் நடைபெற்ற கடற்படை வீரர் கிளர்ச்சி இதனை வெள்ளை ஆட்சியாளர்க்கும் விளக்கமாக்கிற்று. இந்தியாவில் மகாத்மாகாந்தி ஜவஹர்லால் நேரு முதலிய எண்ணற்ற தலைவர்களும் போஸ் பெருந்தகையும் செய்த பலவகைத் தியாகங்களால் பூத்துக் காய்த்திருந்த விடுதலை இ.தே.ரா. உணர்ச்சி மூலம் பழுத்துக் காய்ந்து முயற்சியின்றிக் கையில் நழுவியதுபோல இந்தியர் கைக்கு வந்தது என்று கூறினால் தவறில்லை. ஏனெனில் எதிர்பாரா வகையில் 1947 ஆகஸ்டு 15-இல் இந்தியாவுக்குப் பேரரசிலிருந்து பிரியும் உரிமையோடு கூடிய குடியேற்ற நாட்டு விடுதலை அளிக்கப்பட்டுவிட்டது. விடுதலை நாளின் இன்பதுன்ப உணர்ச்சிகள் போஸின் முயற்சி பலித்திருந்தால் நமக்குக் கிடைக்கும் விடுதலையை விட இன்று நமக்குக் கிடைத்துள்ள விடுதலை ஒரு வகையில் விலையேறியதே. கணவன் இருந்து மகிழ்ச்சியிடையே பெற்றெடுத்த பிள்ளையைவிடக் கணவனிழந்த பின் அவள் கருவீன்ற பிள்ளை கைம்பெண்ணுக்குத் துன்பத்திடையேயும் துன்பங் கலந்த இன்பமும் ஆறுதலும் தருவதே யன்றோ? கணவனையிழந்த துயரிடைகூடத் தாய் பிள்ளையைக் குறை கூறவோ புறக்கணிக்கவோ செய்யமாட்டாள். அது போலவே இவ்விடுதலை போஸ் கனவு கண்ட விடுதலையிற் குறைந்ததாயினும் அவர் ஒப்பற்ற வீரத்தின் மறையை மறக்க உதவி செய்யும் காரணத்தால் நமக்கு அது விலையேறியதாகும். இவ்விடுதலை மலருடன் நமக்கு விலக்க முடியாதளிக்கப் பட்ட முட்களாகிய குறைகளும் இன்னல்களும் பல. பாக்கிஸ்தான் பிரிவினையும் அதை ஒட்டி நிகழ்ந்த வருந்தத்தக்க கலவரங்களும் அழிவும் ஒன்று. இவ்விடுதலைக்குத் தலைநாயகக் காரணமான தந்தை மகாத்மா காந்தியும் அடுத்தபடி முதன்மையான தலை மகனாரான போஸ் மறைவும் இதன் மற்றைய கதைகள் ஆகும். இந்திய மக்கள் தலைவர்கள் பெரு முயற்சியால் இ.தே.ரா. வீரர்கள் விடுதலை பெற்றுள்ளனர். பல தடங்கல்களுக்கிடையே அவர்கள் படிப்படியாகப் படைகளிலும் பிற நாட்டுப் பணிகளிலும் ஈடுபட்டு இந்திய மக்களின் வாழ்விலே வாழ்வாகக் கலந்து வருகின்றனர். அவர்கள் போரில் சிந்திய விடுதலைக் குருதியும் போஸ் புகழ் கலந்த அதன் துடிப்பும் வருங்காலத்தில் புதியதோர் இந்தியாவை உருவாக்குமாக. 11. தலைவர் பெருந்தகை வாழ்க்கையின் படிப்பினைகள் ஒளிகளிடையே ஒரு மின்னொளி இந்தியா பெரியார்கள் எண்ணற்றவரை ஈன்றுள்ள மாபெருந்தேசம். அது கிட்டத்தட்ட ஒரு பெரிய கண்ட மென்னும் படியான பரப்பும் உலகிடையே உள்ளமைக்கப்பட்ட ஒரு குட்டியுலகமென்னும் படியான நாகரிகப் பெருக்கமும் உடையது. அதோடு அதன் வரலாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டு தொடர்ந்த வளர்ச்சியுடையது. எல்லையற்ற இவ்விருகைப் பரப்புகளிடையே பெரியார்களைத் தோற்றுவிக்காத நிலப் பகுதியோ பெரியார் ஒளியால் விளக்க முடியாத நூற்றாண்டோ கிடையாதென்னலாம். அப்பெரியார்களில் பலர் இந்திய வானிடையே மிளிரும் விண்மீன்களாக மட்டுமிராமல் உலகெங்கும் ஒளி திகழும் விரிகதிர் விளங்கங்களாய் உலகப் பெரியர்களாகவும் விளங்கியுள்ளனர். அவர்களிடையே திருவள்ளுவர் பெருமான், புத்தர்பிரான் முதலான அறிவுத் துறைப் பெரியர், அசோகன், சிவாஜி போன்ற பேரரசர், காந்தியடிகள், விவேகானந்தர் போன்ற மக்கள் தலைவர் என எல்லாத் துறைகளிலும் பெருமையுடையவர் தோன்றியுள்ளனர். ஆனால் இத்தனை விளக்கங்களிடையேயுங்கூட மின்னல் போல் திடுமென தோன்றி நாட்டையும் உலகையும் திகைக்க வைத்து திடுமென மறைந்துவிட்ட பெரியார் போஸைப் போல எவருமிலர். அவர் வாழ்க்கை தந்த திகைப்பிடையே அவர் பெருமையை நாம் முற்றிலும் உணர நமக்கு இன்னும் பல காலம் சென்றுவிடக் கூடும். அடிமை மனப்பான்மையை அறவே ஒழித்தவர் போஸ் வாழ்க்கையில் நாம் காணத்தகும் முதல் படிப்பினை அடிமை மனப்பான்மையை ஒழித்து இந்தியர் வாழ்வது என்பதை அறிவதாகும். இந்தியாவின் பழம்பெருமை பேசுவதால் அடிமை மனப்பான்மை ஒழியாது. உண்மையில் அப்பெருமையை நம் புதுவாழ்வில் நிலை நாட்டாவிட்டால் பழமைப் பேச்சு அடிமைத்தனத்துக்கு ஒரு நற்சான்றாகவே ஆகிவிடும் என்பதைப் போஸ் நன்கு உணர்ந்தார். இதனாலேயே அவர் நாட்டுப் பற்று அவரைப் பிற நாடுகளின் சிறப்புக்களை ஊன்றிக் கவனிக்கத் தூண்டிற்று. தன் நாட்டின் சிறப்பே சிறப்பு என்ற கிணற்றுத் தவளை மனப்பான்மையை அவர் கொள்ள முடியவில்லை. பிறர் இந்தியாவைக் குறை கூறுவதைக் கண்டு அவர் சிங்கம் போல் சினந்தெழுந்ததுண்டு. ஆனால் குறையிருப்பதாக அவர் உணர்ந்தால் அப்போது சினங்கொள்வதற்கு மாறாக ஆத்திரங் கொண்டு சீர்திருத்தக் கோடரியின் மூலம் அதனைத் திருத்துவதில் ஈடுபடுவார். இந்தியாவின் அடிமைத்தனம் வெறும் அடிமைத் தனம் மட்டுமன்று. செயலற்று ஏலமாட்டாத்தனம், அறிவற்ற கண் மூடித்தனம், அடிமை மனப்பான்மையை மறைக்கும் தன்னல இறுமாப்பு, இச்சகப்பேச்சு, வாய் வேதாந்தம், அடிமை நீக்கும் முயற்சிக்கு மாறாக அடிமைகளிடையே அடிமையாதிக்கப் போட்டி வேட்டையாடுதல் ஆகிய எண்ணற்ற தீமைகள் தோய்ந்து கிடந்தன என்று அவர் கண்டார். இவையனைத்துக்கும் மருந்து எப்பற்றினுக்கும் மேலான நாட்டுப் பற்று; எச்செயலார்வத்துக்கும் மேலான நாட்டுப் பணியின் ஆர்வம் ஆகியவையேயென்று கண்டார். ஆகவே வேறு இனிய பசப்புக் குறிக்கோள்களால் மக்கள் ஒற்றுமையைச் சிதறடிக்காது நாட்டு விடுதலை ஒன்றை நோக்கியே யாவரையும் ஊக்கி வந்தார். ஒற்றுமைக்கு மறை திறவுகோல் போஸ் நாட்டுக்குத் தந்த மற்றொரு விலை மதிக்க முடியாப் பரிசு ஒற்றுமைக்கு வழி காட்டியதாகும். நம் தேசத்தில் எத்தனையோ சமயத் தலைவர்கள் தோன்றியும் சாதிப் பூசல் ஒழிந்தபாடில்லை. எதிர்பாராத வகையில் சாதியுணர்ச்சி பெருகிக் கொண்டு தான் வருகிறது. எத்தனையோ அறிஞர்கள், நாட்டுத் தலைவர்கள் தோன்றியும் சமயவாதங்கள் அருகிவிடவில்லை; பெருகிடத்தான் செய்கின்றன. சாதி சமயங்களைப் பாராட்டாதவர்களாலும் சாதி சமய வேறுபாட்டை அகற்றவே முடியவில்லை. அதைப் பாராட்டு பவர்களாலும் அழிக்கவே முடியாது. ஆனால் வாய் பேசாச் செயல் வீரரான போஸ் தோன்றுவித்த இயக்க மொன்றில் மட்டுமே தொடக்க முதல் இறுதி வரை இப்பேச்சுகளுக்கு இடமில்லாது போயிற்று. சாதி சமயப் பூசல் மட்டுமோ? அவற்றின் புதுப் பதிப்பாகத் தற்கால அரசியல் உலகிலே தோன்றியிருக்கும் கட்சிப் பூசல்கள் கூட அவர் இயக்கத்தை அசைக்க முடியவில்லை. இவர் இயக்கதின் பின்னர் இந்தியாவில் பல சாதி, பல மொழி, பல சமய, பல கட்சிக் கொடிகள் ஒருங்கே ஒரே பணியிடையே பறக்க விடுவதைக் காண்கிறோம். 1947-இல் பம்பாயில் நடைபெற்ற கடற்படை வீரர் கிளர்ச்சியின் போது எல்லாக் கட்சிக் கொடிகளையும் ஆதரவாளர் தாங்கிச் சென்ற காட்சி பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிக் கனவுகளுக்கு ஒரு பேரிடியாய் அமைந்தது. இந்தியாவின் மீதுள்ள அரசியல் பிடியைக் கைவிட்டுவிட அவர்கள் துணிந்ததற்கான காரணங்களிலே இது முதன்மையானது என்பதில் ஐயமில்லை. கடவுளரை யொத்த மகான்களாலும் அறிஞர்களாலும் அரசியல் பெரியார்களாலும் சாதிக்க முடியாத இச்சாதனையின் மறை திறவுகோல் யாது? அது வேறு எதுவும் இல்லை. செயல் சுத்தமேயாகும். பலர் மனச் சுத்தமுடையவர்களாயிருக்கலாம். அநீதி கண்டவுடன் இஃது அநீதி என்றறிவதுடன் நிற்பர். வேறு சிலர் அதனை அநீதியென நிலைநாட்டி வாதிடுவதுடன் நிற்பர். போஸோ நினைத்ததைக் கூறுவார்; கூறியதைச் செய்வார்; பெருத்த அநீதிகளை நினைக்கு முன், பேசு முன், செயல் வீரராகி எதிர்ப்பார். பிறர் மனத்தில் அநீதி என்றுபட்டு, அதனை அவர்கள் வாய்விட்டுக் கூறி, வாதாடி நிலை நாட்டி செயல் சூழ்ச்சிகளால் அதனை அகற்றும் வரை அவர் பொறுத்திருப்பதில்லை. அவற்றைத் தாம் உணர்ந்ததே ஒழிப்பார். போஸ் ஒருவரே தனிப் பெருந்தலைவராயிருந்த ‘விடுதலை இந்திய இயக்க’த்தில் மட்டுமே, ஒரு மொழியினர். ஒரு வகுப்பினர், ஒரு சயமத்தினர், ஒரு கட்சியினர்கூட ஆதிக்கம் வகித்தனர் என்றோ, உரிமை மறுக்கப்பட்டனர் என்றோ எவரும் கூற எண்ணுவதற்குக் கூட இடமில்லாதிருந்தது. இதுவே வேறு எந்த இந்தியத் தலைவரையும்விட அவர் பேரளவில் ஒற்றுமை சாதித்ததற்கான வழி. தன்மதிப்புணர்ச்சி சுபாஷின் வாழ்க்கையில் எவரும் காணத் தவறாத பெருஞ் சிறப்பு அவர் தன்மதிப்புணர்ச்சி ஆகும். ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயர்நீப்பர் மானம் வரின்’ என்ற வள்ளுவர் வாக்குக்கு இலக்கியம் வேண்டுமானால் இரஜபுத்திர வீரர் கதைகளில் பார்க்க வேண்டும்; அல்லது காந்தியடிகள், போஸ் வாழ்க்கைகளைப் பார்க்கவேண்டும். காந்தியடிகளின் சமய உணர்ச்சிகளால் அவர் வாழ்க்கையில் இச்சிறப்பைப் பலர் கவனிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால் போஸ் வாழ்க்கையில் இதனைத் தெளிவாகக் காணலாம். அலிப்பூர்ச் சிறை நிகழ்ச்சி, ஹிட்லர் கறுப்பரைப் பற்றிப் பேசியதன் கண்டனம் ஆகியவற்றில் இதனை முந்துறக் காணலாம். இத் தன்மதிப்பை நிலை நாட்டுவதில் அவர் காட்டும் துணிச்சல் உண்மையிலேயே எவரையும் அதிர வைக்கத் தக்கதாகும். காந்தி வழியுணர்ந்து நடந்தவர் போஸ் வாழ்வில் எவரும் காண நினைக்காத, எதிர்பாராத சிறப்பு ஒன்று உண்டு. அஃது அவர் காந்தியடிகளின் சிறப்புக்களையும் அவர் காட்டிய வழியின் நன்மை தீமைகளையும் வழுவற உணர்ந்து நடந்து கொண்டவர் என்பதாம். ‘காந்தீயம்’ என்ற புகழ்க் கொடியின் கீழ்த் தங்கள் சிறு தன்னலங்களையும் குறைகளையும் பலர் மறைத்துக் கொள்கின்றனர். இத்தகையோரைக் காந்தீயத்தின் நண்பர் என்பதைவிடப் பகைவர் என்று எண்ணல் வேண்டும். ஆனால் போஸ் இந்தியாவின் எந்தப் பெரியாரையும் குறை கூறுபவர் அல்லர். காந்தியடிகளையோ அவர் இந்தியாவின் தந்தை என்றே கொண்டனர். மனித உருவில் கடவுள் என்று ஒன்றைப் போஸ் நம்பியிருக்கக் கூடுமாயின் அது காந்தியே என்று அவர் ஒப்புக் கொண்டிருப்பார். ஆனால் ஒருவர் பெருமையை ஒப்புக் கொள்வது என்பது அவர்களைப் புகழ்ந்து பாராட்டுவது என்பதன்று; பெருமையை உள்ளவாறு உணர்வதும் அதில் உள்ள குறைகளை எடுத்துரைப்பதுமே ஆகும். காந்தியடிகள் இந்தியாவுக்கு விடுதலையார்வம் ஊட்டியவர்; அவ்வார்த்தை நாடெங்கும் பரப்பியவர்; அச்சத்தை நீக்கியவர். பிரிட்டிஷாரைக் கண்டு நடுங்குதல், பிரிட்டிஷாரை விட்டால் கதியில்லை என்று எண்ணுதல், அவர்கள் ஆட்சியில் பதவியடைவதினும் பேறு வேறில்லை என்ற மனப்பான்மை கொள்ளுதல் ஆகியவை ‘காந்தி’ என்ற பெயர் பரவியதுமே நாட்டைவிட்டு ஒடினது தவறு என்று கண்டால் உயிரையும் அவர் கொடுப்பார்; இந்தியாவுக்கு நலம் என்றால் எந்நலமும் விடுவார்; அதே சமயம் மனிதர் இனத்தில் அவர் பற்றுதலுடையவர். காந்தியடிகளின் இத்தனை பெருமைகளையும் போஸ் பாராட்டி பன்முறை பிறருக்கும் வலியுறுத்தினார். ஆனால் காந்தியடிகளின் அரசியலில் கொண்ட ஆன்மிகப் போக்கு, பழங்கால ஆட்சி வேண்டுமென்ற எண்ணம், பிரிட்டிஷார் தயவையும் நேர்மையும் எதிர்பார்த்தால், சமரசம் செய்ய முந்துதல், மக்கள் மனநிலை, குறைபாடுகளை அறிந்து செயலாற்றாமை, ஆன்மிகப் பெருந்தன்மை காரணமாக எதிரிகளுக்கு விட்டுக் கொடுத்தல் ஆகியவைகளை போஸ் கண்டித்து நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை கூற எண்ணினார். இது காந்தியடிகளின் பெருமையை உணராததாலன்று; நாட்டின் நலம் கருதியும் அவர் புகழ் கருதியுமேயாகும். காந்தியடிகள் ஒப்பற்ற வழிகாட்டி என்பதைப் போஸ் உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிந்தார். ஆயினும் தந்தையைக் குறைகூறாமல் செயலாற்றிப் பேணும் தனயன்போல் அவர் செயலாற்ற முனைந்தார். ஆனால் அவர் காந்தியடிகளையும் நாட்டையும் அறிந்த அளவு காந்தியடிகளும் முதியோராகிய காந்தீய பக்தர்களும் அவரையோ நாட்டையோ உணரவில்லை. இஃது இந்தியாவின் தவக்குறை என்றுதான் கூறவேண்டும். போஸ் அஹிம்ஸை வழியில் நில்லாதவர் என்று காந்தியடிகள் கூட எண்ணியதாகத் தோன்றுகிறது. ஆனால் தலைவர் போட்டியையும் அச்சமயம் காந்தியும் போஸும் நடந்து கொண்ட வகைகளையும் காண்பவர்களுக்கு அஹிம்ஸை வீரர் எனப் புகழ் பெற்ற காந்தியடிகளைவிட போஸ் மிகுதியாக அஹிம்ஸையைக் காட்டினார் என்று விளங்கக் கூடும். ஆனால் காந்தியடிகளின் அஹிம்ஸைக்கும் போஸ் அஹிம்ஸைக்கும் வேற்றுமை உண்டு. காந்தியடிகள் அஹிம்ஸையப் பகைவர் களிடமே சிறக்கக் காட்டினார். போஸ் அதனை நண்பர் களிடையே காட்டினார். துப்பாக்கியின் முன்னிலையில் அதாவது போர்க்களத்திலும் அஹிம்ஸை செல்லுமென்று காந்தியடிகள் எண்ணினார். காந்தீய பக்தர்களும் அங்ஙனம் ஆட்சியை எதிர்ப்பதில் மட்டுமே அதை ஒரு போர் முறையாகக் கொண்டனர்; எதிரிகளைப் போர்முனையில் எதிர்க்கும் போதன்று! அஹிம்ஸை அன்புக்கு அடிப்படையானது. அன்புடை யாரிடை எழும் அன்புப் பூசலில் மட்டுமே அது பயன்படும். இந்நிலையைக் குடும்ப வாழ்விலும் குடும்ப வாழ்வு ஒத்த நல்லரசாட்சியிலுமே காணலாம். காந்தியடிகள் கண்களுக்கு உலக முழுவதுமே ஒரு குடும்பமாக தோன்றிற்று. அதனால் அவர் அதை எங்கும் பயன்படுத்த எண்ணினார். காந்தீய பக்தர்கள் அங்ஙனம் எண்ணுவதாகக் கூறுவதில் பொருளில்லை. ஏனெனில் அவர்கள் உலகை ஒரு குடும்பமாக எண்ணத் துணிய மாட்டார்கள்! போஸ் வாழ்க்கையில் பருப் பொருளாகக் காணத்தகும் சிறப்புக்கள் விளக்கப்படாமலே எவரும் காணத்தக்கவை. பதினொரு தடவை சிறை; உலகெங்கும் கடுஞ்சூழ்நிலைகளில் திரிதல், நோய், நலிவு ஆகியவற்றிடையே ஓயா உழைப்பும்; வாழ்க்கை முற்றிலும் இடைஞ்சல்களிடையேயும், அபாயங் களிடையேயும் துணிகரமாகப் பணியாற்றல்; உலகின் ஆற்றல் மிக்க வல்லரசுகளையும், தலைவர்களையும் அஞ்சாது எதிர்த்தல், நட்பாடுதல் ஆகிய பண்புகளும் எங்கும் இலைமறைகாய் போல் அவர் வாழ்வில் காணத்தக்கவை. ஒரே ஒரு பண்பு அவர் வாழ்வைக் காந்தியடிகள் விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியார்களுடன் பிணைக்கத் தக்கதாயுள்ளது. அதுவே அவர் சமயப்பற்று. இந்தியாவில் சமயப்பற்று பலபடியிலும் பெரியார்கள் பலரிடமும் உண்டு. ஆயினும் அதன் வேறுபாடுகளும் அவற்றின் பயனும் கூர்ந்து கவனிக்கத் தக்கவை. காந்தியடிகள் சமயப்பற்று அவர் அரசியலுக்குக் குந்ததகமாயிருந்தது. அதே சமயம் அவர் அரசியல் வாழ்வு அவர் சமயப்பற்றை இயங்க விடாமல் செய்தது. இராஜாராம் மோகன்ராயிடம் சமயப்பற்று அரசியல் உணர்வால் புதுமை பெற்றது. ஆனால் ஸி.ஆர்.தாஸ், போஸ் ஆகிய இருவர் வாழ்விலும் சமயப்பற்று தூய்மையானதாய் எதனாலும் கெடாதிருந்தது. அரசியலார்வமும் தூய்மையாய் இருந்தது. ஒன்று மற்றொன்றை அழிக்க முடியவில்லை. உலகின் கண்களுக்குப் புரட்சி வீரராகக் காட்சியளித்த போஸ் ஒருவரே வாய் பேசா சக்தியாராதனையாளராக இல்லற வாழ்வு பற்றிய சிந்தனையையே விடுத்து நாட்டுப்புகழ் என்னும் நங்கைக்கே தம் வாழ்வை அர்ப்பணித்திருந்தார் என்பது கவனித்தற்குரியது. நேதாஜியின் வீர உரைகள் வங்கம் தந்த சிங்கம் நேதாஜியின் வீர உரைகள் 21-10-1943இல் மாவீரன் நேதாஜி அவர்கள் சிங்கப்பூரில் சுதந்திரக் கழக மாநாட்டில் ஆற்றிய தலைமை உரையும், அதே நாளில் (21-10-1943) பிற்பகலில் நேதாஜி அவர்கள் இந்திய விடுதலையை வென்றெடுப்பதற்காக அமைத்த தற்காலிக அரசமைப்பு பற்றிய அறிவிப்பும், 22-10-1943இல் ஜான்சி இராணி படைப்பயிற்சி முகாமை தொடங்கி வைத்து நிகழ்த்திய உரையும், 25-10-1943இல் மலேயா-இந்திய செல்வந்தர்கள் மாநாட்டில் பேசியபோது நேதாஜி விடுத்த வேண்டுகோளும், 04-07-1944இல் கிழக்காசிய இந்தியர்கள் நடுவில், இந்தியர்களைப் பார்த்து இந்திய விடுதலையை வென்றெடுப்பதற்கு இரத்தம் கொடுங்கள், நான் விடுதலையை வென்றெடுத்துத் தருகிறேன் என்று பேசிய பேச்சும், 06-07-1944இல் காந்தியடிகளுக்கு உள்ளம் நிறைந்த அன்பு காணிக்கையாக வானொலி மூலம் வாழ்த்து பெற விழைந்த செய்தியும், 08-07-1944இல் பர்மாவிலிருந்து இந்தியர் களுக்கு வானொலி மூலம் இந்திய விடுதலையை பெறுவதற்கு தெளிவு படுத்திய உறுதிமொழியும், 11-07-1944இல் சக்கரவர்த்தி பகதூர் ஷாவின் கல்லறையிலிருந்து நேதாஜி ஆற்றிய உரையும், நேதராஜியின் வரலாறு என்பதால் அவர் ஆற்றிய வீர உரைகள் இந்நூலுள் சேர்க்கப்பட்டுள்ளது 1. புரட்சியை வளர்ப்பது? (கிழக்காசிய இந்தியச் சுதந்திரக் கழக மகாநாடு 21–10–43 இல் சிங்கப்பூர் தைதோவா கெகிஜோவில் நடைபெற்றபோது, அதற்குத் தலைமை வகித்து நேதாஜி ஆற்றிய தலைமை யுரை) நண்பர்களே! சென்ற ஜூலையில் நடந்த நமது சந்திப்பின் பிறகு, என்னென்ன முன்னேற்றம் – என்னென்ன அருஞ்செயல்கள் நேர்ந்துள்ளன வென்பதையும் இனிமேல் கையாள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன வென்பதையும் மதிப்பிடுவதற் காகவேதான் இம் மகாநாடு. கிழக்காசிய இந்தியச் சுதந்திரக் கழகத் தலைமைப் பதவியை நான் ஏற்றுக்கொண்டதும், முதன் முதலில் தலைமைக் காரியாலயத்தைத் திருத்தியமைக்கவே முழுக்கவனமும் செலுத்தினேன். அதில் பல புதிய இலாகாக்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. சர்வ ஜன சக்தியையும் சாதனங் களையும் ஒன்று திரட்டும் கொள்கை இங்கு இடம் பெற்று விட்டது. இந்த அஸ்திவாரத்துடன் கிழக்காசிய முழுமை யிலுள்ள கிளை ஸ்தாபனங்களும் திருத்தியமைக்கப் பெற்றிருக் கின்றன. சர்வாம்சப் படை திரட்டல் கொள்கை எங்குமே அமலுக்கு வந்து விட்டது. அடுத்த படியாக, இந்திய தேசீய ராணுவம் (ஆஸாத் ஹிந்த் பௌஞ்) திருத்தியமைக்கப்பட்டு விட்டது. இன்னும் பல மாறுதல்கள் செய்ய நேரலாம். முன்னைவிட இப்பொழுது நம் ராணுவத்தின் உத்சாகமும் பலமும் அதிகரித்திருக்கின்றன. வடதிசை நோக்கி ஏதேனும் ஒரு படை அனுப்பப்படும் போதுதான். அப் படையினரின் மகிழ்ச்சியும் உத்சாகமும் வெளியாகும். நம் வீரர்கள் “டில்லி செல்லுவோம்” என்னும் மந்திரத்தையே சதா உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உறுதி கூறுகிறேன். இப்பொழுது அவர்களுக்கு இயந்திரப் பயிற்சி தந்து செயலுக்குத் தயாராக்குவதுடன். ராணுவ விஸ்தரிப்பு வேலையும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. எதிர்பார்த்தபடி, இராணுவத்தில் புதிதாகச் சேர்ந்தவர்களும் உற்சாகமாகவே இருக்கிறார்கள். மலேயா முழுதும் பயிற்சி முகாம்கள் இருக்கின்றன. புதிதாக ராணுவத்தில் சேர முன் வருபவர்களின் எண்ணிக்கையைக் கவனித்தால், அம் முகாம்கள் போதா. அவர்கள் எல்லோருக்கும் பயிற்சியளிக்கும் நிலைமையில் நாம் இல்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால், அவர்கள் ஒவ்வொருவருடைய தேவையையும், உடனுக்குடன் கவனிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். அதற்காகத்தான் தாய்லாந்து, பர்மா போன்ற இதர இடங்களிலும் பயிற்சி முகாம்கள் திறக்கப்படு கின்றன. எல்லா இடங்களிலும் வாலிபர்களை விட இளம் பெண்கள் தான் அதிக உற்சாகத்துடன், எவ்வித சேவைக்கும் தயாரென மார்தட்டி முன்வருகின்றனர். ஆதலால் ஜான்சி ராணிப் படையொன்று தேவையாயிற்று. அவர்களுக்கு ராணுவப் பயிற்சியும், செஞ்சிலுவைப் பயிற்சியும் கொடுக்கப்படும். அப்படையில் மத்திய பயிற்சி முகாம் நாளை (22–ம் தேதி) திறக்கப்படும். படை திரட்டும் திட்டம் போலவே, பணம் திரட்டும் வேலையும் ராணுவத்துக்குத் தேவையான சாதனங்களைச் சேகரிக்கும் வேலையும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மத்தியதர – கீழ்த்தர வகுப்பு மக்களிடையே காணப் பெறும் தியாக உணர்ச்சி, சுதந்திரம் விரும்புகின்ற இந்தியனுக்குப் பெருமையும் திருப்தியும் அளிப்பதாகும். பணம் படைத்தவர் களும் கொஞ்சம் கொஞ்சமாக முன் வந்து கொண்டிருக் கின்றனர். மற்றவர்களைப் போலவே இவர்களும், சேவை – தியாகம் ஆகியவைகளில் பங்கு பெறுவரென்பது எனது நம்பிக்கை. இந்தியச் சுதந்திரத்துக்காக சகல உதவிகளும், செய்ய வேண்டுமென்ற ஓர் வகையான பேராவல் இந்திய சமூகத்தில் குடி புகுந்து வருவதால், இன்னும் அதிக நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம். மக்கள் படும் துன்பம் மிதமிஞ்சியிருந்தாலும், சில மாதங்களாக உள் நாட்டு நிலைமை நமக்குச் சாதகமாகவே பலனளித்து வருகிறது. சில சமயம், சமாதானக் கருத்துக்களை அதிகார வர்க்கத்தினர் சிலர் வெளியிட்டு வந்தாலும், பிரிட்டிஷாரின் கொள்கை மட்டும் கல்லுப் பிள்ளையாராகவே இன்னும் இருக்கிறது. நம் சிறந்த இந்தியத் தலைவர்கள் கணக்கற்ற தொண்டர் களுடனும் வீரர்களுடனும் சிறைச்சாலைகளில் அடைபட்டிருக் கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்திலே, ஏதேனும் கௌரவக் குறைவான சமரசத்துக்கு, வீண் முயற்சிகளைப் பல வழிகளிலும் செய்யலாம். இது ஒன்று தவிர, வேறெவ்வித மாறுதலும் உள்நாட்டில் ஏற்படுவதற்கில்லை. இந்தியாவின் பல பாகங் களிலும் வியாபித்திருக்கும் அரசியல் கொந்தளிப்பை, வங்கப் பஞ்சம் அதி தீவிரமாக்கியிருக்கிறது. இந்தப் பஞ்சத்துக்குக் காரணம், பிரிட்டிஷார் தங்கள் போருக்காக, இந்தியாவின் விளைபொருள்களையும், மூலப்பொருள்களையும் நான்கு ஆண்டுகளாக அள்ளிச் சென்றதுதான். இதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்தப் பஞ்சத்தைத் தீர்க்க, ஒரு லட்சம் டன் அரிசியை நம் கழகத்தின் சார்பில் அளிப்பதாகக் கூறினேன். மறுத்தது மட்டுமல்ல; நம்மைக் கேலியும் செய்யத் தலைப்பட்டனர். கல்கத்தா கார்ப்பரேஷன் போன்ற பொது நிலையங்கள் “வறுமையால் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவுப் பொருள் அனுப்புங்கள்” என்று பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் டுக்கும் விடுத்த வேண்டுகோள்களெல்லாம் குப்பைத் தொட்டி களில் போடப்பட்டன. இந் நிலைமையில் ‘புரட்சியை வளர்ப்பது பட்டினிதான்’ என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டு விட்டோம். வட ஆபிரிக்காவிலும் இத்தாலியிலும் நம் எதிரிகள் சிறு சிறு வெற்றி காண்பதற்கு முன்பிருந்த உலக நிலைமை, இன்றும் நமக்குச் சாதகமாகவே தான் இருக்கிறது. இந்த நிலைமையை, நம் தாய்நாட்டிலுள்ளவர்களும் நன்கு உணர்த்திருக்கின்றனர். உலகத்தில் என்ன மாறுதல் நேர்ந்தாலும் நம் சுதந்திரக் கழகமும் ராணுவமும் சம்பந்தப்பட்ட மட்டில், போரிட்டு வெற்றி பெறுவதென்ற உறுதி நாளுக்கு நாள் உரம் பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. சென்ற ஜூலையிலிருந்து மலேயா – தாய்லாந்து – பர்மா – இந்தோ சைனா ஆகிய இடங்களில், நான் சுற்றுப் பிரயாணம் செய்ததை நீங்கள் தெரிந்திருப்பீர்கள். அவ்விடங்களில் நான் சந்தித்த நம் தாய்நாட்டு மக்களிடம் வைராக்கியம் தோன்றி யிருப்பதைக் கண்டேன். அவர்களது மனோபாவம் எனக்கு உத்சாகத்தையும், ஏற்கனவே இருந்த நம்பிக்கையையும் மேலும் வளர்த்து விட்டது. அது மட்டுமல்ல, நமது எல்லாவித முயற்சிகளுக்கும் பெரும் பக்க பலமாகவும் ஆகிவிட்டது. சென்ற ஆகஸ்டில் பர்மா சுதந்திரமடைந்த செய்தியும், இந்த மாதம் பிலிப்பைன் சுதந்திரப் பிரகடனம் விடுத்ததும், இந்தியாவின் உள்ளேயும் வெளியேயுமுள்ள இந்தியர்களுக்கு மகத்தான உணர்ச்சியைக் கிளப்பியிருக்கின்றன. அவ்விரு சுதந்திர சர்க்கார்களுக்கும், கிழக்காசியாவிலுள்ள நாமனைவரும் அவைகளின் சுதந்திர தின வைபவங்களைக் கொண்டாடிய தோடு நமது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித் திருக்கிறோம். ஆசியாவின் இறுதி விடுதலையைக் கொண்டுவரும் பொறுப்பு, இப்பொழுது நம்மை எதிர்நோக்கியிருக்கிறது. பிரிட்டிஷாரையும் அவர்களது துணைவர்களையும் இந்திய மண்ணிலிருந்து விரட்ட வேண்டியது நமது கடமையாகும். பர்மா – பிலிப்பைன் சுதந்திர தினங்களை ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடிய நாம், அதே மூச்சில் நமது மகத்தான பொறுப்பையும் முன்னைவிட அதிகமாக உணர்ந்திருக்கின் றோம். அதிர்ஷ்ட வசமாக, தாய்லாந்தின் பிரதமர் – இதர மந்திரிகள், பர்மாவின் பிரதமர் டாக்டர் பாமா – இதர மந்திரிகள் எல்லோரையும் தனித்த முறையில் சந்தித்தேன். அவர்கள் மூலம் அவர்களுடைய சர்க்கார்களிடமிருந்து, நமது போருக்கு வேண்டிய அனுதாபத்தையும் நல்லெண்ணத்தையும் பெற்றுவிட்டேன். அவர்கள் நமது போராட்டத்தின் ஒவ்வொரு துறைக்கும் வேண்டிய உதவிகளைச் செய்வதாக வாக்குறுதியும் தந்திருக்கின்றனர். நம்மை எதிர் நோக்கியிருக்கும் போருக்கும், அதன் பின் தேவையாகும் புனருத்தாரண வேலைகளுக்கும் வேண்டிய முன்னேற்பாடுகள் அனைத்தையும் நாம் செய்து கொண்டி ருக்கிறோமென்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். பிரிட்டிஷாரையும் அவர்கள் துணைவர்களையும் நம் நாட்டி லிருந்து வெளியேற்றிய பின், நம் தாய் நாட்டின் நிலைமை எப்படியிருக்குமென்பதை முன்கூட்டியே நாம் தெரிந்து கொள்ளலாம். அதை உத்தேசித்துத்தான், “புனருத்தாரண இலாகா” வொன்றை நம் தலைமைக் காரியாலயத்தில் புகுத்தியுள்ளேன். இந்த இலாகாவும் தனது கடமை பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான பயிற்சிகள், ராணுவ நடவடிக்கைகளோடு சேர்த்து ஏக காலத்தில் அளிக்கப்படுகின்றன. சுருங்கக் கூறினால், எதிர்நோக்கியிருக்கும் போர், பின்னர் செய்ய வேண்டிய வேலைகள் ஆகியவைகளுக் கான ஏற்பாடுகள் யாவையும் தயாரித்துக் கொண்டேயிருக் கிறோம். எப்படிப் பார்த்தாலும், நமது போரின் அடுத்த கட்டம் மிகச் சமீபித்து விட்டதென்பதில் சந்தேகமில்லை. கிழக்காசியாவிலுள்ள இந்தியர்கள், சிறப்பாக இந்திய தேசிய ராணுவ வீரர்கள், இந்திய எல்லைதாண்டி விடுதலைப் போரை நடத்தும் நந்நாளுக்காகக் காத்திருக்கின்றனர். அதற்குமுன் ஒரு சில அரசியல் திட்டங்களை நாம் வகுத்துவிட வேண்டும். உதாரணமாக, ஆஸாத் ஹிந்த் (சுதந்திர இந்திய) தற்காலிக சர்க்காரை அமைத்து அதன் தலைமையில் நமது போரைத் தொடங்க வேண்டும். அப்படி ஓர் அரசாங்கத்தை அமைத்து விட்டால், உலக முழுதுமுள்ள இந்தியர்களிடையே ஒருவிதச் சிறந்த உத்வேகததையும் பலனையும் காணலாம். அத்துடன், நமது போரில் – அவர்களுக்கு மகத்தான வீரா வேசமும் சக்தியும் தோன்றும். உண்மையாகவே, எல்லோரும் ஆஸாத் ஹிந்த் தற்காலிக சர்க்காரின் ஆரம்ப தினத்தை அளவிறந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நமது கழகம் கிழக்காசியா முழுதிலுமுள்ள இந்தியர்களின் ஏகப் பிரதிநிதி சபையாகவும் முழு நம்பிக்கை பெற்றதாகவுமிருப்பதால், அத்தகைய சர்க்காரை அமைக்க முழுத்தகுதி பெற்றிருக்கிறது. கழகமும் எனக்கு அதிகாரம் கொடுத்திருப்பதால், ஆஸாத் ஹிந்த் தற்காலிக சர்க்கார் அமைக்கும் வேலை எனது கடமையாயிற்று. நம் தாய்நாட்டில் இப்படி ஓர் சர்க்கார் அமைக்கப்பெற்று அதன்மூலம் இறுதி விடுதலைப் போர் ஆரம்பமாகியிருந்தால், மதிக்க முடியாத மகத்துவமாகவேதான் இருக்கும். ஆனால் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அங்குள்ள மாபெரும் தலைவர்கள் சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருப்பதால், அம்மாதிரியான சர்க்கார் அமைப்பதை எதிர்பார்க்க முடியாது. அதோடு அங்கு விடுதலைப் போர் நடத்துவதை அல்லது தொடங்குவதை நாம் எதிர்பார்த்தால் பகற்கனவாகத்தான் முடியும். அந்தப் புனித கைங்காரியத்தை இங்குள்ள நம்மால் தான் செய்ய முடியும். இந்தச் சந்தர்ப்பத்தில், நம் தாய்நாட்டு எல்லைக்கு வெளியே ஓர் தற்காலிக சர்க்காரை அமைக்கலாமென்பதற்கு, உலகச் சரித்திரம் பல சான்றுகள் தருகிறது. அன்றி, நம் நாட்டின் வெளியே இருந்து கொண்டு கூட சுதந்திர யுத்தத்தை நாம் நடத்தலாமென்றும் அச் சரித்திரம் கற்பிக்கிறது. இந்திய எல்லைக்கு வெளியே அரசியல்ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் நாம் கொண்டு செல்லும் சுதந்திர இயக்கம், நம் தாய்நாட்டின் உட்புறத்திலே நடந்து கொண்டிருக்கிறது; இந்த உண்மையை நாம் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும். இங்கு நாம் செய்துவரும் ஒவ்வொரு முயற்சிக்கும், தாய் நாட்டிலுள்ள இந்தியர்களிடமிருந்து நிறைய ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அங்குள்ள பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பெரும்பாலானவர்களிடமிருந்து கூட பேராதரவு வந்து கொண்டிருக்கிறது. தவிர, இந்தியாவிலுள்ள தேச பக்தர்களுக்கும் வெளி நாடுகளிலிருந்து கொண்டு தாய் நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபடும் இந்திய தேசபக்தர்களுக்கு மிடையே நெருங்கிய நிரந்தரத் தொடர்பு நிலவுவதும் எல்லோரும் அறிந்ததுதான். நமது ஏஜெண்டுகளில் சிலரை, பிரிட்டிஷ் அதிகாரிகள் அடிக்கடி கைது செய்வதும் துன்புறுத்துவதும், கொலை செய்வதுமாக இருக்கின்றனர். ஆயினும் நமது தொடர்புக்கு எவ்விதக் குறைவும் ஏற்பட்டதே யில்லை. இந்த உண்மைகளையெல்லாம் கவனிக்கும்போது, நம் ராணுவம் எல்லைதாண்டி மூவர்ணக் கொடியுடன் நமது புண்ணிய பூமியில் புகுந்து, கொடியைப் பறக்க விட்டதும், அங்கு சந்தேகத்துக்கிடமில்லாத உண்மையான உறுதியான உக்கிரமானதோர் புரட்சி நிகழ்ந்து தான் தீருமென்பதை அறிவோம். அந்தப் புரட்சி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவைக் கண்டுவிடுமென்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நண்பர்களே! இன்று நாம் செய்து வருவதெல்லாம் இறுதிப் போருக்கான தயாரிப்புகள்தான். இந்திய எல்லை தாண்டியதும் நமது போராட்டம் ஆரம்பமாகும். அதன்பின்னர் ‘டில்லி சலோ’ தொடங்கும். அந்த முன்னேற்றம், கடைசிப் பிரித்தானியன் துரத்தப்படும்வரை – அல்லது அவன் சிறைக் கம்பிகளுக்குள்ளே அடைபடும் வரை நீடிக்கும். டில்லியில் – வைசிராய் மாளிகையில் நம் தேசீயக் கொடியை உல்லாசமாகப் பறக்கவிட்டு, பழைய செங்கோட்டையில் நமது ராணுவம் வெற்றி அணி வகுப்பை நடத்தும்வரை ‘டில்லி சலோ’ தான் நமது மந்திரம். நண்பர்களே! நமக்கு மகத்தான ஆதரவும் மனப்பூர்வமான ஒத்துழைப்பும் நல்கிய நிப்பொன் மக்கள் – நிப்பொன் சர்க்கார் – இம்பீரியல் நிப்பொன் ராணுவம், ஆகியோருக்கு நமது மனமார்ந்த வந்தனம் உரியது. இதுவரை நாம் பெற்றுள்ள உதவிகளுக்கு நமது நன்றியறிதலைத் தகுந்த முறையில் தெரிவிக்கும் நந்நாள் வெகுதொலைவிலில்லை. இன்றைய நிலைமையில் அவ்வுதவி களைப் பாராட்டும் பொருட்டு, நிப்பொன் இம்பீரியல் ராணுவத்துக்கு ஐந்து விமானங்கள் கட்டும் செலவுத் தொகையையும், நிப்பொன் கடற் படைக்காக ஐந்து விமானங்கள் கட்டும் செலவுத் தொகையும், நம் கழகத்தின் சார்பாக நன்கொடையளிக்கிறேன். இந்தப் போர் எவ்வளவு நீண்டதாகவும் கடுமையாகவும் இருந்தபோதும், நம் பொது எதிரி இறுதியாகத் தோல்வி யடையும் வரை நிப்பொனியர்களுடன் தோளோடு தோள் நின்று போரிட உறுதி கொண்டுள்ளோமென்பதை, அவர்களுக்கு உறுதிகூற விரும்புகிறேன். நிப்பொன் – அதன் நேசநாடுகள் ஆகியவைகளின் இறுதி வெற்றியிலும் நம் சொந்தத் தேச விடுதலையிலும் பூரண நம்பிக்கை கொண்டிருக்கிறோம். தோழர்களே! பிற்பகலில் ஆஸாத் ஹிந்த் தற்காலிக சர்க்கார் அமைப்பை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். ஜேய் ஹிந்தி! 2. தற்காலிக சர்க்கார் பிரகடனம் (21-10-43இல் கிழக்காசிய சுதந்திரக் கழக மகாநாட்டின் போது, பிற்பகல் 4-15 மணிக்கு நேதாஜி வெளியிட்ட, ஆஸாத் ஹிந்த் (சுதந்திர இந்திய) தற்காலி சர்க்கார் அமைப்பு பற்றிய பிரகடனம்) பிரிட்டிஷாரால் 1757–இல் இந்திய மகாஜனங்கள் முதன் முதலாகத் தோல்வியுற்றனர் வங்காளத்தில். அதன் பிறகு, இழந்த விடுதலையைத் திரும்பப் பெற நூறு ஆண்டுகளாகக் கடும்போர் நடைபெற்றது. அக்காலத்தில் நம் மக்கள் செய்த தியாகமும் வீரச்செயல்களும் மயிர் சிலிர்க்கச் செய்கின்றவை யாகும். அந்தச் சரித்திர ஏடுகளில், வங்கத்தைச் சேர்ந்த் சுராஜு தௌலா, மோகன்லால்; தென்னிந்தியாவைச் சேர்ந்த அப்பா சாஹிப் பான்ஸ்லே, பீஷ்வா பாஜிராவ், அதாரிவாலா ஆகிய இணையற்ற வீரர்களும்; கடைசியாக வீரத்தீரத்தில் யாருக்கும் இளைப்பில்லாத ஜான்ஸிராணி இலட்சுமி பாய், அஞ்சா நெஞ்சம் படைத்த தாந்தியோதோபி, மகாராஜா குனவர்சிங், நானாசாகிப் முதலிய வீரர்களும் சிரஞ்சீவியாக இடம் பெற்றிருக்கின்றனர். பிரிட்டிஷார் நமது நாட்டுக்கு, எவ்வாறு பிற்காலத்தில் அபாயகரமான – அஷ்டமத்துச் சனியனாக விளங்குவரென் பதை நம் முன்னோர்கள் முதலில் உணராதது துரதிஷ்டமே யாகும். ஆதலால், அவர்களை இந்திய எல்லையிலிருந்து விரட்டியடிக்க ஓர் ஐக்கிய முன்னணியை அமைக்கவில்லை. நாள் செல்லச் செல்ல பிரிட்டிஷாரின் உண்மைச் சொரூபம் மனப்பான்மையும் வெளியாகவே, போர்க்கோலம் பூண்டனர் இந்தியமக்கள். பகதூர்ஷா தலைமையில் 1857–இல் தங்களது கடைசிப் போராட்டத்தை நன்றாக நடத்தினார்கள். அந்தப் போரில் ஆரம்ப வெற்றிகள் பல கிடைத்தன. ஆயினும், காலச்சக்கரச் சூழ்ச்சியாலும், தகுந்த தலைவரில்லாக் குறை யாலும் படிப்படியாகப் பலவீனமடைந்ததால், இறுதி வீழ்ச்சியும் அடிமை விலங்கும் கௌவிக் கொண்டன. பின்னர், பகைவரும் அதிசயிக்கத்தக்கவாறு, பிறந்த பொன்னாட்டுக் காகத் தங்களைப் பலியிட்ட வீர ஜான்சி ராணி – தாந்தியாதோபி – குன்வர்சிங் – நானாசாகிப் போன்றவர்களின் நினைவு, நம் தேசத்தார் மனதினின்றும் அகல முடியாததாகும். உலகம் உள்ளளவும் நமக்கு வழிகாட்டும் நட்சத்திரங்களே அவர்கள். 1857 –க்குப் பின் இந்திய மகாஜனங்கள், பலவந்தமாக நிராயுதபாணிகளாக்கப் பெற்று, நீண்டகாலம் தலைதூக்காத படி பிரிட்டிஷாரின் மிருகத்தன்மைக்கும் கொடுங்கோன்மைக் கும் ஆளாயினர். உணர்ச்சியிழந்து, நம் நாடு நம்மதே என்பதையும் மறந்து சிறுமையுற்றனர். 1885–ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றியதும் புதியதோர் எழுச்சி கொண்டோம். முதல் மகாயுத்தம் முடியும் வரை இந்திய மக்கள் தங்கள் சுதந்திரத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு, சாத்தியமான சகல முறைகளையும் கைக்கொண்டனர். கிளர்ச்சி, பிரச்சாரம், பிரிட்டிஷ் சாமான் பகிஷ்காரம், பயங்கர இயக்கம், நாசவேலை ஆகிய துறைகளில் இறங்கி, இறுதியில் ஆயுதம் தாங்கிய புரட்சியும் நடத்தினார்கள். அம் முயற்சிகளெல்லாம் அப்பொழுது வெற்றி தரவில்லை. கடைசியாகத் தோல்வி மனப்பான்மைதான் பீடித்தது. புதிய முறைகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், கோடைக்கால மழை போல் மகாத்மா காந்தி தமது புதிய ஆயுதங்களான ஒத்துழையாமை, சாத்வீகச் சட்ட மறுப்பு இவைகளுடன் தோன்றினார். அது முதல் இருபது ஆண்டுகள் வரை மக்களின் உணர்ச்சியும் எழுச்சியும் தீவிரமாக வளர்ந்தன. “விடுதலை” – “சுதந்திரம்” என்ற தாரக மந்திரம் ஒவ்வொரு நகரம், கிராமம் எங்கும் புகுந்தது. வீடுதோறும் இம் மந்திரம் ஒலித்தது. தியாக உணர்ச்சி உரம் பெற்றது. ஒரே அரசியல் ஸ்தாபனத்தின் கீழ் மக்கள் ஒன்றுபட்டனர். இவ்வாறு உணர்ச்சி கொண்ட இந்தியர்கள், அரசியலில் தங்கள் சக்தியின் தன்மையை உணர்ந்தனர். இன்று எல்லோரும் ஒரே குரலில் பேசி, பொது இலட்சியத்தையடைய வீறு கொண்டிருக் கின்றனர். 1937 முதல் 1939 வரை எட்டு மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபைகள் அமைத்துப் பொறுப்பேற்று நடத்தித் தங்கள் நிர்வாகத் திறமையையும் நிரூபித்தனர் இந்தியர்கள். இந்த உலக மகா யுத்த ஆரம்பத்திலேயே விடுதலைக்காக இறுதிப் போராட்டத்தை நடத்த நம் நாடு வல்லமை கொண்டிருந்தது. இப்பொழுதோ, ஜெர்மனியும் அதன் நேச நாடுகளும் நமது பரம எதிரிக்குத் தலை தெறிக்கும்படி அடி கொடுத்திருக்கின்றன. கிழக்காசியாவில் நிப்பொன், அதன் நேச நாடுகளது உதவியுடன் உதைத்து வீழ்த்தியிருக்கிறது. ஆகவே, இயற்கை அன்னையின் பேரருட் கருணையால் இந்திய மக்களின் தேசீய விமோசனத் துக்கு, கிடைப்பதற்கரியதோர் அற்புதத் தருணம் இன்று வாய்க்கப் பெற்றிருக்கிறது. கடல் கடந்த இந்தியர்களும், முதன் முதலாக ஒன்றுபட்டு ஒரே ஸ்தாபனத்தின் கீழ் போருக்கு தயாராக விளங்குவதும் அதிர்ஷ்ட வசமேயாகும். சிந்தனை யாலும், உணர்ச்சியாலும், கடல் கடந்த இந்தியர்களும் தாய் நாட்டிலுள்ளவர்களும் சம நிலையில் முன்னேறிக் கொண்டிருக் கின்றனர். குறிப்பாக இங்கு இருபது லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் ‘பரிபூரணத் தியாகம்’ எனும் மின்சார அரண் வகுத்து, தரும யுத்தத்தில் ஈடுபடத் தோள் கொட்டி நிற்கின்றனர். இவர்களுக்கு முன்னணியாக இந்தியச் சுதந்திர ராணுவம் கச்சைகட்டி முரசமைந்து, கட்டுப்பாடாக ‘டில்லி நோக்கி முன்னேறுவோம்’ என ஆர்ப்பரிக்கின்றது. பிரிட்டிஷ் ஆட்சியின் நயவஞ்சகமும் ஒழுங்கீனமும் அதன் மீது இந்தியருக்குக் கோபாவேசத்தை உண்டாக்கிவிட்டது. இந்தியரைப் பல வகையிலும் சுரண்டிக் கொள்ளையடித்துச் சூறையாடி, பட்டினிபோட்டு மடிய வைத்ததால், இந்தியர்கள் வெறுப்பும் தீராப் பகைமையும் கொண்டிருக்கின்றனர். குற்றுயிரும் கொலையுயிருமாக இருக்கின்றனர் இந்தியர்கள். இந்த சோகம் நிறைந்த ஆட்சியின் கடைசிச் சின்னங்களை அழித்துச் சாம்பலாக்க, ஓர் சிறு நெருப்புப் பொறிதான் தேவை. அந்த ஈமத் தீயைக் கொளுத்தும் பொறுப்பு இந்தியத் தேசீய ராணுவத்தைச் சார்ந்திருக்கிறது. அதற்குத் தாய் நாட்டிலுள்ள சகோதரர்களின் உற்சாகமான ஆதரவும், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் பெரும் பகுதி உதவியும், வல்லமை மிகுந்த நம் நேசநாடுகளின் பக்கபலமும், இங்குள்ள இந்தியப் பொது மக்களின் பேராதரவும் நிச்சயமாகத் துணைசெய்யுமென்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும், இம்மகத்தான கடமையை நிறைவேற்றும் போரில், இந்திய தேசீய ராணுவம், சிறப்பாக தனது சொந்த பலத்தையே களங்கமற நம்பியிருக்கிறது. அடிமை இருள் நீங்கிச் சுதந்திர ஒளி தோன்றப் போவதால், ஓர் தற்காலிக சர்க்காரை அமைத்து அதன் கொடியின் கீழ் இறுதிப் போரைத் தொடங்குவது ஒவ்வொரு இந்தியனின் தவிர்க்க முடியாத கடமையாகும். ஆனால் இந்தியாவிலுள்ள தலைவர்கள் அனைவரும் சிறையிலிருப்பதாலும், அங்குள்ள மக்கள் நிராயுதபாணிகளாக இருப்பதாலும், அங்கு தற்காலிக சர்க்காரை அமைப்பதோ அதன் கீழ் ஆயுதம் தாங்கிப் போர் செய்வதோ சாத்தியமில்லை. எனவே, அந்தக் கடமை கிழக்காசியாவிலுள்ள சுதந்திர இந்தியக் கழகத்தைச் சார்ந்துவிட்டது. உள்நாட்டிலும் வெளி நாடுகளிலுமுள்ள தேசபக்தர்கள் எல்லோரும் இதற்கு உதவக் கடமைப்பட்டிருக் கின்றனர். இப்பொழுது சுதந்திர இந்தியத் தற்காலிக சர்க்காரை நாங்கள் அமைத்து விட்டோம். எங்கள் பொறுப்பை உணர்ந்து செய்கையில் இறங்குகின்றோம். எங்கள் முயற்சியனைத்திற்கும் எல்லாம் வல்ல இறைவன் முழு வெற்றியை அருளுமாறு மனமொழி மெய்களால் இறைஞ்சுகின்றோம். அன்னையின் விடுதலைக்காக எங்கள் ஆருயிரையும் ஆயுதம் தாங்கிய சகாக்களின் உயிரையும் அர்ப்பணம் செய்யத் தயங்கோமென, திரிகரண சுத்தியுடன் சத்தியம் செய்கின்றோம். எங்கள் நாடு உலக நாடுகளினிடையே சரிநிகர் சமமாகத் தலைசிறந்து விளங்கவும், எங்கள் நாட்டின்மீது தாயின் மணிக்கொடி தன்னிகரற்றுப் பறக்கவும், எங்கள் உயிர் போம்வரை போர் செய்வோமெனச் சபதம் மேற்கொள்ளுகின்றோம். இந்திய மண்ணிலிருந்து பிரிட்டிஷாரையும் அவர்களது கூட்டாளிகiளியும் வெளியேற்றும் போரைத் தொடங்கி நடத்துவது இந்தத் தற்காலிக சர்க்காரின் பொறுப்பு. பிறகு, இந்திய மக்களின் விருப்பதுக்குக் கிணங்க அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான நிரந்தரச் சுதந்திர சர்க்காரை – அமைக்கவும், இந்தத் தற்காலிக சர்க்கார், வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யும். அந்த நிரந்தர சர்க்கார் ஏற்படும் வரை, இந்தத் தற்காலிக சர்க்காரே இந்திய மக்களின் சார்பில் நாட்டு விவகாரங்களை நிர்வகிக்கும். இந்திய ஆண் பெண் அனைவரையும் இந்தத் தற்காலிக சர்க்காருக்கு உதவும் படியும் தங்கள் விசுவாசத்தை அளிக்கும் படியும், அறை கூவியழைக்க இந்த சர்க்காருக்கு உரிமையுண்டு. மதச் சுதந்திரமும், சரிசமப் பிரஜா உரிமைகளும், இந்திய மக்கள் எல்லோருக்கும் நேரிய முறையில் அளிப்பதாக இந்த சர்க்கார் உறுதிமொழி கூறுகின்றது. இமயம் முதல் குமரிவரை வாழும் இந்தியர்கள் யாவரும் சுபிட்சமாகவும் பொங்கும் பொருளாதார நலங்களுடனும் வாழுவதற்குரிய வகையாவையும் வகுப்பதே, இந்த சர்க்காரின் தலை சிறந்த இலட்சிய மென்பதை உலகத்தாருக்குப் பறைசாற்றுகின்றது. ஏற்கெனவேயுள்ள அன்னிய ஆட்சியின் சூழ்ச்சியால் நிலவுகின்ற வேற்றுமை யனைத்தையும் ஒழித்து, ஏற்றத் தாழ்வில்லாத நிலைமையை இவ் வரசாங்கம் சிருஷ்டிக்குமென உறுதி கூறுகிறது. பேரருட் கடவுள் திருவடி யாணை; பிறப்பளித்து எமை யெலாம் புரக்கும் தாரணி விளக்காம் எம்மரு நாட்டின மீதாணை; நம் தாய்நாடு வாழ்க வென வீழ்ந்த விழுமியோர் திருப் பெயர்கள் அதன் மிசை யாணை; பாரத நாட்டின் வெம்பிணியில் ஈடுபட்டு சொல்லரிய அளப்பில்லாத தியாகங்கள் செய்துள்ள தவராஜ கோளரிகளின் மீதாணை இந்திய மக்களே! உங்கள் அனைவரையும் அழைக்கிறோம். தாய்நாட்டின் விடுதலை உங்கள் லட்சியம்; தாய் மணிக் கொடியின் கீழ் ஒன்று கூடுங்கள்; ஆயுதம் ஏந்துங்கள்; அன்னியனை விரட்டக் கங்கணம் கட்டுங்கள். நடைபெற விருக்கும் இறுதிப் போரில் வெற்றி அடையும் வரை, எந்த இடுக்கண் நேர்ந்தாலும், எத்தனை உயிர்கள் பலியானாலும் தயங்காது கடனாற்ற, சுதந்திரப் பலிபீடத்தில் இதுவரை இரையான ஆவிகளின் பெயரால் உங்களை வரவேற்கின்றோம். அன்னை அறை கூவி அழைக்கின்றாள். எழுமின்!எழுமின்! எழுமின்! ஆஸாத் ஹிந்த் தற்காலிக சர்க்கார் சார்பாக: (ஒப்பம்) சுபாஷ் சந்திர போஸ் (சர்க்கார் தலைவர், பிரதமர், யுத்த மந்திரி, அன்னிய நாட்டு மந்திரி) “கேப்டன் டாக்டர் லெட்சுமி (பெண்கள் இலாகா மந்திரி)” “எஸ்.ஏ. அய்யர் (பிரச்சார – விளம்பர மந்திரி)” “லெப்டினன்ட் கர்னல் ஏ.ஸி. சாட்டர்ஜி (நிதி மந்திரி) லெப்டினன்ட் கர்னல் அஸீஸ் அகமது லெப்டினன்ட் கர்னல் என்.எஸ். பக்த் லெப்டினன்ட் கர்னல் ஜே.கே. பான்ஸ்லே லெப்டினன்ட் கர்னல் குல்ஸாரா சிங் லெப்டினன்ட் கர்னல் எம்.ஸெட் கியானி லெப்டினன்ட் கர்னல் ஏ.டி. லோகநாதன் லெப்டினன்ட் கர்னல் எஸான் காதர் லெப்டினன்ட் கர்னல் ஷா நவாஸ் ஆயுதம் தாங்கிய படைகளின் பிரதிநிதிகள் ஏ.எம். ஸகாப் – காரிதரிசி, மந்திரி அந்தஸ்துடன் ராஷ் பிகாரி போஸ் – பிரதம ஆலோசனையாளர் கரீம் கனி தேவநாத் தாஸ் டி.எம். கான் ஏ. எல்லப்பா ஆலோசனையாளர்கள் ஜே.ஏ. திவி சர்தார் இஷார் சிங் ஏ.என். சர்க்கார் – சட்ட ஆலோசனையாளர் ஷோனான், அக்டோபர் 21, 1943 ஜேய் ஹிந்த்! 3. ஆம்; இந்தியா அளிக்கும்! (சிங்கப்பூரில் 22.10.43இல் மாலை 5 மணிக்கு ஜான்ஸி ராணிப்படைப் பயிற்சி முகாமை நேதாஜி திறந்துவைத்து நிகழ்த்திய சொற்பெருக்கு) சகோதரிகளே! ஜான்சி ராணிப்படைப் பயிற்சி முகாமின் ஆரம்ப விழா, நமது இயக்கச் சரித்திரத்திலிலேயே புதுமையும் முக்கியத்து வமும் கொண்டதாகும். நவ இந்தியாவை உருவாக்கும் வேலையில் நாம் ஈடுபட்டிருக்கின்றோம். அதில் நம் பெண்களும் பங்கு கொண்டிருப்பது மிக மிகப் பொருத்தமானதே. நமது வேலை பிரச்சார சூழ்ச்சியல்ல வென்பதை உங்கள் மனதில் நன்றாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். நமது பண்டைப் பெருமையும் முன்னோர் திறமையும் உன்னதமானவை. அந்தப் பரம்பரைப் பெருமையில்லா விட்டால், ஜான்ஸி ராணி போன்ற பெண்மணிகளுக்கு இந்தியா பிறப்பிடமா யிருந்திருக்காது. புராதன இந்தியாவில் மைத்திரேயி போன்ற வெண் மணிகள் தோன்றியது போலவே, பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் வேரூன்று முன்பு, மகாராட்டிரத்தில் அகல்யா பாயும், வங்கத்தில் பவானி ராணி – ரஜியாபீகம் – நூர்ஜஹான் ஆகியோரும் சர்க்கார் நிர்வாகங்களையேற்று நீதி செலுத்திப் பெருமையுற்றனர். மேதைகள் பிறப்பதற்கேற்ற அவ்வளவு வளப்பங் கொண்டிருக்கும் இந்தியா, என்றும்போல் உலகம் அதிசயிக்கத் தகுந்த வீரப் பெண்மணிகளைத் தோற்றுவிக்கச் சிறிதும் சளைக்காதென்பது எனது திட நம்பிக்கை. இந்தியாவில் புதிய அரசியல் வானம் 1921–ல் தென்பட்ட தும், ஆயிரக்கணக்கான, இல்லை – லட்சக்கணக்கான பெண்கள் தியாகத்தில் பங்கு பெற்றனர். சிறையென்றால் திடுக்கிடும் காலம் அது. அப்பொழுதே ஆண்களோடு பெண்களும் சிறை வாழ்க்கைக்குப் போட்டியிட்டார்கள். அதனால், கல்கத்தா விலுள்ள இரண்டு சிறைக்கூடங்களும் நிரம்பி விட்டன. புதிய சிறைச்சாலைகள் கூட கட்ட நேர்ந்தது. அவைகளும் சில தினங்களில் நிரம்பி விட்டன. சிறை வாழ்க்கை இந்தியர்களுக்கு அச்சம் தரவில்லை யென்பதைக் கண்ட பிரிட்டிஷார், வேறு முறைகளைக் கையாளத் தொடங்கினர். தலைவர்களைச் சிறையில் தள்ளி விட்டு, பொது மக்களைக் குண்டாந் தடியாலும் துப்பாக்கிக் குண்டாலும் அடக்க முயன்றார்கள். இந்த அரக்கத்தனத்துக்கு இரையாகக்கூட ஆண்களோடு பெண்களும் தயாராகிவிட்ட னர். ஒரு நிகழ்ச்சியை என்னால் மறக்கமுடியவில்லை. பிரிட்டிஷ் சர்க்காரின் உத்தரவை மீறி கல்கத்தாவில் ஓர் ஊர்வலம் நடத்தினோம். அதைக் கலைக்கத் தடியடிப் பிரயோகம் செய்யப்பட்டது. அது சமயம் ஊர்வலத்திலிருந்த பெண்கள், அந்தக் குண்டாந்தடிகளைச் சிறிதும் லட்சியம் செய்யாமல், எங்களுக்கும் போலீசாருக்கும் இடையிலே அணிவகுத்து நின்றதைக் கண்டேன். அவ்வளவு துணிவு கொண்டவர்கள் நமது பெண்கள். அதைப் போலவேதான் இந்தியாவில் நடந்துள்ள புரட்சி இயக்க நடவடிக்கைகளிலும் மிகுந்த தைரியத்துடன் நின்று அருஞ்செயல்களைச் செய்திருக்கின்றனர். வங்காளத்திலே யிருந்த ராஷ்டிர மகிளா என்ற பெண்கள் சங்கம், 1928 டிசம்பரில் 500 பெண்களடங்கிய ஓர் தொண்டர் படையைத் திரட்டிற்று. அவர்களது பயிற்சியும் அணிவகுப்பும் கண்ட எனக்கு அப்போதே ஒரு நம்பிக்கை பிறந்தது. போதிய ஊக்கமும் வசதியுமளித்தால், சந்தர்ப்பம் வரும்போது அரும்பெரும் சேவைசெய்ய வல்லமை படைத்தவர்களாயிருப்பார்களென்பது அந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஈடேற, இன்று இந்தப் பயிற்சிமுகாம் தயாராகி விட்டது. இவ்வளவு காலதாமதத்துக்கு அவர்களல்ல – காரணம். தகுதியான இடமும் இதர ஏற்பாடுகளும் தயாரிப்பதில் தான் காலதாமதம் நேர்ந்தது. இதற்கிடையில் நமது சகோதரிகள் பொறுமையிழந்து கவலையுற்றதும், ஒன்று கூடி “எங்களை நீங்கள் மறந்து விட்டீர்களா?” என்று கேள்வியெழுப்பியதும் நானறிவேன். இந்தச் சந்தர்ப்பத்தில் ஜான்ஸி ராணியைப் பற்றிச் சில வார்த்தைகள் கூறித்தானாக வேண்டும். ஜான்சிராணி யுத்தம் தொடங்கியபோது வயது இருபதுதான். அந்த இளம் வயதுப்பெண், குதிரை மீதேறி போர்க்களத்தின் நடுவில் வாள் வீசினாளென்றால், அவளது ஊக்கமும் உணர்ச்சியும் எவ்வளவு இருந்திருக்குமென்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். அவளை எதிர்த்துப் போர் புரிந்த ஆங்கிலேயத் தளபதியே கூறினான்: “கலகக்கார ஜான்ஸிராணியே புரட்சி வீரர்களி லெல்லாம் தலைசிறந்த பராக்கிரமசாலி” என்று. அவ்வளவு விசேட பராக்கிரமத்தை ஜான்ஸிராணி பெற்றிருந்தாள். அந்தத் தளபதியால் அதனை மறைத்துக் கூறுவதற்குக்கூட இயல வில்லை. முதன்முதலில் ஜான்ஸிக் கோட்டைக்குள்ளே யுத்தத்தைத் தொடங்கினாள்; கோட்டை முற்றுகையிடப் பட்டதும் தப்பியோடினாள் கல்பிக்கு. தான் மட்டுமா? மற்றும் பல வீரர்களோடு. அங்கிருந்து தொடங்கினாள் யுத்தத்தை; அப்பொழுதும் தோல்வி. பின்வாங்கிச் சென்று தாந்தியா தோபியோடு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு, குவாலியர் கோட்டையைத் தாக்கி அதைக் கைப்பற்றினாள். குவாலியர் கோட்டையை முக்கிய படைத்தளமாகச் செய்துகெண்டு யுத்தத்தை நடத்தினாள். கடைசியாக அவ்விடத்தில் யுத்தம் செய்யும் பொழுதே யுத்தகளத்தில் இறந்தாள். ஒன்றுக்கு அதிகமான தோல்வி நேர்ந்தும், சலிக்காது போர் செய்ய எவ்வளவு தைரியம் அவளுக்கு இருந்திருக்க வேண்டும்? நினைத்துப் பாருங்க்ள். 20 வயதுள்ள ஜான்ஸி ராணி இவ்வாறு மனம் தளராமல் போரிட்டது நமது பல தலைமுறைகளுக்குப் பெருமையும் உணர்ச்சியும் ஊக்கமும் அளிக்கக்கூடிய உதாரணமன்றோ? அவளது தோல்வி நமது துர்ப்பாக்கியமே. அவளது தோல்வி இந்தியாவின் தோல்வியாகும். அவள் உடல் அழிந்து விட்டது; ஆனால் அவளது ஆத்மா ஒருகாலும் அழியாது. அந்த ஒரு ஜான்ஸி ராணியின் ஆவி மற்றொரு தலைமுறையில் பல ஜான்ஸி ராணிகளைத் தோற்றுவித்து வெற்றி மாலை சூடுமென்பதில் சந்தேகமில்லை. ஒரு சில ஆயிரம் மகக்ளைக் கொண்ட ஜான்ஸியின் சுதந்திரத்தைக் காப்பாற்ற ஒரு இலட்சுமிபாயை இந்தியா அளிக்குமானால், 38 கோடி மக்களின் சுதந்திரத்தைப் பெறுவதற்கு ஆயிரக்கணக் கான ஜான்ஸி ராணிகளை ஏன் இந்தியா அளிக்காது? ஆம்; நிச்சயம் அளிக்கத்தான் செய்யும். அந்த ஜான்ஸி ராணியின் பிறந்த தினமாகிய இச் சுபதினத்தில், இந்த ஜான்ஸி ராணிப் படையின் பயிற்சி முகாமைத் திறந்து வைப்பதில் பேரானந்தமடைகின்றேன். இம் முகாமில் 156 சகோதரிகள் பயிற்சியைத் தொடங்குவார்கள். இத் தொகை விரைவில் ஆயிரமாகப் பெருகுமென்று நம்புகிறேன். தாய்லாந்து, பர்மா முதலிய இடங்களில் பெண்களுக்குப் பயிற்சி முகாம்கள் இருக்கின்றன. ஆயினும் இதுதான் தலைமை நிலையம். ஆதலால் இங்கு பலம் வாய்ந்த ஆயிரம் ஜான்ஸி ராணிகள் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். “டில்லிக்குச் செல்லுவோம்” என்ற கோஷத்தை உங்களிட மிருந்து கேட்டு ஆனந்தமடைகிறேன். நான் இப்பொழுது விடுத்த செய்தியை நீங்கள் செல்லுமிடங்களுக்கெல்லாம் எடுத்துச்சென்று, எனது திட்டத்தை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். ஜேய் ஹிந்த்! 4. இழந்த உயிர் திரும்புமா? (1943 அக்டோபர் 25 ஆம் நாள் திங்கட் கிழமை யன்று சிங்கப்பூரில் நடைபெற்ற அகில மலேயா இந்தியப் பணக்காரர் மகாநாட்டின் போது, நேதாஜி விடுத்த வேண்டுகோள் – அல்ல, உத்தரவின் சுருக்கம்) நண்பர்களே! உங்கள் எல்லோரையும் மனமார வரவேற்கின்றேன். இந்தியச் சரித்திரத்திலேயே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது இம் மகாநாடு. நீண்ட சொன்மாரி இந் நேரம் தேவையில்லை; ஆதலால் எனது வேண்டுகோள் இதுதான். நம் மகத்தான லட்சியத்தையடைய, இம் மகாநாடு உங்களைச் சோதிக்கப் போகிறது. இந்தியாவை விடுதலை செய்யும் மகத்தான பொறுப்பு உங்கள் ஒவ்வொருவர் மீதும் இப்பொழுது சுமத்தப்பட்டிருக்கிற தென்பதை நீங்கள் உணர்வீர்களென்றே நம்புகிறேன். போர்க்களம் செல்லுகின்ற இராணுவத்தில், சாதாரண சிப்பாய் முதல் அதிகாரி வரை எல்லோரும் தத்தம் பொறுப்பை சரி சமமாகப் பங்கிட்டுக் கொண்டு, சரிவரக் கடமையைச் செய்தால் தான் வெற்றி கிடைக்கும். கிழக்காசியாவிலுள்ள இந்தியர்கள் எல்லோருமே. இன்று ஒரே இராணுவ மயமாகி விட்டீர்கள். உங்களில் சிலர் பணக்காரர்கள்; சிலர் ஏழைகள்; சிலர் கவ்வி அறிவுடையவர்கள்; சிலர் அஃதில்லாதவர்கள்; என்பது எனக்குத் தெரியும். எத்தனை தான் வேற்றுமை யிருந்தாலும் இன்றுள்ள கடமையைப் பொறுத்தவரையில், எல்லோரும் சரிநிகர் சமானமானவர்களே. இந்தக் கடமை யிலிருந்து யாரேனும் தப்பித்துக் கொள்ள முயற்சி செய்யலாகாதென்பதை உங்கள் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். நமது போராட்டத்துக்கு ஷோனான் முக்கியத்துவம் வாய்ந்திருக்கிறது. இந்தியச் சுதந்திரக் கழகத்தின் தலைமைக் காரியாலயம் இங்கே தான் இருக்கிறது. ஆஸாத் ஹிந்த் தற்காலிக சர்க்காரும் இங்குதான் நிறுவப் பெற்றிருக்கிறது. இந்தியத் தேசிய ராணுவத்தின் தலைமைக் காரியாலயமும் இங்கே தான் இடம் பெற்றிருக்கிறது. ஒரு காலத்தில் பிரிட்டிஷாரின் கோட்டையாக விளங்கிய இந்த ஷோனான், இன்று நமது இயக்கத்தின் தலைமைக் கோட்டையாக மாறியிருக்கிறது. ஒரு ராணுவத்துக்கும் அதன் தளபதிக்கும் எவ்வளவு தொடர்பு இருக்குமோ, அதே தொடர்பு தான் ஷோனானுக்கும் கிழக்காசியாவிலுள்ள இதரப் பகுதிகளுக்கும் இருக்கிறது. ஆதலால் இங்கிருந்து கிளம்பும் எதிரொலி கிழக்காசியா முழுமையும் வியாபிக்கும். உங்கள் நடவடிக் கையைப் பொறுத்திருக்கிறது பிற இடங்களின் நடவடிக்கை. எனவே, உங்கள் பங்கும் பொறுப்பும் மகத்தானவைகளாகும். ‘இந்தியா ஒரு சுதந்திர நாடு’ என்று நினைத்துக் கொள்ளுங்கள். அதற்கு அன்னியனின் படையெடுப்பு அபாயம் நெருங்கி வந்துவிட்டதென்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது, அந்தச் சுதந்திர சர்க்கார் என்ன செய்யுமென்பதைச் சிறிது சிந்தியுங்கள். நாடு முழுமையுமுள்ள சகல சக்திகளையும் செல்வங்களையும் ஒன்று திரட்டுமல்லவா? அது தான் எந்தச் சுதந்திரச் சர்க்காருக்கும் இயற்கையான கடமை; மிகச் சாதாரணமானதுங்கூட. இந்த உண்மையை எளிதில் உணர்ந்து கொள்வீர்களானால் சுதந்திரம் பெற்று அதைக் காப்பாற்றும் வேலையில் உங்கள் கடமை என்னவென்பதையும் எளிதில் தெரிந்து கொள்வீர்களென்பதில் ஐயமில்லை. யுத்த நெருக்கடிக்குள்ளாகிய எந்தச் சுதந்திர சர்க்காரும், அதன் மக்களிடம் பணத்துக்காகப் பல்லைக் காட்டாது. இது வரை நாம் செய்து வந்தது போல், வேண்டுகோளுக்கும் கூட்டங்களுக்கும் இடமிருக்காது. ஒரே ஒரு அறிக்கை தான்; குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களிடமிருந்து இன்னின்னது தேவையென்பதை மட்டும்தான் அவ்வறிக்கை கூறும். எவ்வித முணுமுணுப்புமின்றி மக்கள் தானாகவே முன் வந்து, அவ்வறிக்கைக்கு மகிழ்ச்சியுடன் மரியாதை செய்வர். ஏனென்றால், சுதந்திரத்தின் பெருமை சுதந்திரம் துடிக்கும் மக்களுக்குத்தான் தெரியும்! உங்களை ஒன்று கேட்கிறேன்; ஒரு சுதந்திர நாட்டில், இராணுவத்தில் சேரவோ யுத்த வரி கொடுக்கவோ, யாரேனும் மறுக்க முடியுமா? முடியவே – முடியாது; ஒருகாலும் முடியாது. நம் இந்தியா இன்னும் சுதந்திரமடைய வில்லை; ஆனால் உள்ளத்திலும் உணர்ச்சியிலும் நாம் சுதந்திரமடைந்து விட்டோம். அத்துடன், இங்கு சுதந்திர இந்தியத் தற்காலிக சர்க்காரையும் அமைத்து விட்டதால், சுதந்திர மக்களாகவே ஆகிவிட்டோம். சட்ட பூர்வமாகச் சொன்னால், யுத்தத்தில் ஈடுபட்டுள்ள எந்த நாட்டிலும், தனிச் சொத்துரிமை என்பது எத்தகையத் தனி நபருக்கும் இருக்க முடியாது. யுத்தச் சமயத்தில், மக்களின் சொத்தும் சுகமும் அந்நாட்டு சர்க்காருக்கே உரியன. அதைப் போலவே தான், இங்கு சுதந்திர சர்க்காரை அமைத்து சுதந்திர மக்களாகவே வாழும் உங்கள், உயிர், சொத்து, உடைமை எல்லாம் இப்பொழுது உங்களைச் சார்ந்தவையல்ல. அவையத் தனையும் இன்று இந்தியாவுக்குச் சொந்தம்; வேறு யாருக்கும் உரிமை கிடையாது. இந்த உண்மையையும் உங்கள் கடமையையும் ஏற்றுக்கொள்ள மறுப்பீர்களானால், வேறொரு தெளிவான வழியிருக்கிறது. ஒரு சமயம் ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி நடத்தியதோடல்லாமல், மன்னர்களைப் போலவும் டாம்பீக வாழ்க்கை நடத்தினர். இன்று அவர்கள் எல்லோரும் இருக்கு மிடம் சிறைச்சாலைதான். உண்மையையும் கடமையையும் மறுப்பவர்கள், தாராளமாக அந்த வழியை பின்பற்றிச் சென்று அவர்களோடு கூடிக் கொஞ்சிக் குலாவலாம். ஆனால் ஒன்று மட்டும் நன்றாக உங்கள் மனதில் பதிந்திருக்கட்டும். யுத்தம் முடிந்தபின், சுதந்திர இந்தியாவில் உங்களுக்கு இடமிருக்காது. அது சமயம் சுதந்திர இந்திய சர்க்கார், ஒருகால் உங்கள் மீது உயர்தரமான இரக்கம் காட்ட விரும்பினால், மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுடன் உங்களை இங்கிலாந்துக்கு அனுப்பி வைப்பதாகவே இருக்கும். மலாய் நாட்டிலுள்ள சில பணக்காரர்கள், அவர்களை நான் தொந்தரவு செய்து கொண்டிருப்பதாக முணுமுணுக் கிறார்களாம். அவர்கள் இனிமேல் உடனடியாக வழியில் இறங்கும் பொருட்டு, அவர்களுடன் நேர்முகமாக நின்று பேச விரும்புகின்றேன். இந்தியச் சுதந்திர இலட்சியத்துக்காக ஏதோ நன்கொடை வழஙகுவதன் மூலம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தங்கள் இனத்தையே மாற்றிக்கொண்டு விடலா மெனச் சிலர் யோசனை செய்வதாகவும் ஓர் செய்தி எட்டுகிறது. வேறு சிலர், எதிரி சொத்துப் பாதுகாப்பாளரிடம் தங்கள் சொத்துக்களை ஒப்படைத்துவிட்டு, யுத்தம் நின்றதும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்றும் குயுக்தி செய்கின்றனர்களாம். இன்னும் சிலர், ஒரு கோடி ரூபாய் நன்கொடையளிப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுப் பர்மாவுக்குப் போய் விடுவதென்றும், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழையும்வரை வாக்களித்த பணத்தைச் சிறிது சிறிதாகக் கொடுப்பதுபோல் பாசாங்கு செய்து, கடைசியாகத் தட்டிக் கழித்து விடுவ தென்றும் நினைத்துக் கொண்டிருப்பதாக மற்றோர் செய்தி வருகிறது. நாம் ஷோனானிலோ, பர்மாவிலோ, அல்லது இந்தியாவிலோ, எங்கிருந்தாலும், இந்தியா பரிபூரண சுதந்திரம் அடைந்து கடைசி வெள்ளையன் தற்காலிக சர்க்கார் ஷோனானிலேதான் இருக்கும். ஒவ்வொரு இந்தியரும், எந்த மதத்தினராயினும் சரி, அவரவர் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டுமென்பதே எனது கோரிக்கை. அதை யார் யார் செய்கிறார்கள்? யார் யார் செய்யவில்லை யென்பது எனக்குத் தெரியும். எந்த விதத்திலும், எத்தகைய தியாகத்தைச் செய்தேம், நான் இந்தியாவை விடுதலை செய்ய வேண்டியவனாக இருக்கின்றேன்; செய்தே தீருவேன். இந்த மகத்தான பொறுப்பை அது சந்தோஷ மளித்தாலும் அளிக்ககாவிட்டாலும், நீங்கள் உணர்ந்துதானாக வேண்டும். சுதந்திரத்தில் உங்களுக்கு விருப்பமில்லை யென்றால், வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள். பிறகு நான் முன் சொன்னபடி, இரண்டாவது வழி உங்களுக்க காகத் திறந்துதானிருக்கிறது. இதுதான் ஷோனானிலிருந்து நான் விடும் கடைசி வேண்டுகோள். சுதந்திர இந்தியத் தற்காலிக சர்க்காரின் பிரதிநிதியாக உங்கள் முன் நிற்கும் நான், கையேந்திப்ப பிச்சை கேட்க வரவில்லை; உங்கள் உயிர் உடைமையனைத்தையும் ஏகபோகமாக எடுத்துக் கொள்ளும் உரிமையுடனேயேதான் இங்கு நிற்கிறேன். இது வீண் பயமுறுத்தலல்ல; அந்த வழக்கம் என் அகராதியிலேயே கிடையாது. என் விரோதிகள் கூட அதனை நன்கு அறிவார்கள். தாமாக முன் வந்து உதவுவதற்குச் சந்தர்ப்பம் அளிக்கவில்லையே என்ற குறை இருக்கக்கூடாது. நீங்களாக முன்வரா விட்டால், கையைக் கட்டிக் கொண்டு சும்மாயிருக்கவும் முடியாது. ஒன்று – நண்பர்களாக இருங்கள்; அல்லது – விரோதியாகி விடுங்கள். பிரிட்டிஷார் மட்டுமல்ல எங்கள் விரோதி; பிரிட்டிஷாருக்கு உதவி செய்பவர்கள்,எங்கள் இலட்சியத்துக்கு உதவ மறுப்பவர்கள் ஆகியோரும் எங்கள் விரோதிகளே. ஏனெனில், இன்று ‘இருப்பதா – இறப்பதா’ என்பதில் முடிவு காணும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். தாமாகவே முன்வந்து நம் ராணுவத்தில் பயிற்சி பெறுபவர்களின் உணர்ச்சிப் பெருக்கைப் பாருங்கள். எத்தனைபேர் உயிரோடு சுதந்திர இந்தியாவைக் காண்பார் களென்பது அவர்களுக்கே தெரியாது. பின்வாங்கும் திட்டமே அவர்களுக்கில்லை. அந்தத் திட்டம் வேவலுக்கும் அவரது ராணுவத்துக்கும் மட்டுமே ஒதுக்கப்பெற்றிருக்கிறது. உடம்பில் கடைசித் துளி இரத்தம் இருக்கும் வரைப் போரிடுவதும், வெற்றிக் கொடியுடன் சுதந்திர இந்தியாவில் நுழைவது, அல்லது வழியிலே செத்து மடிவது என்பதுவுமே நமது ராணுவத்தின் இலட்சியம். நிலைமை இப்படியிருக்க, என்னைப் பார்த்துச் சில பணக்காரர்கள் கேட்கின்றனர், சர்வாம்சப் படை திரட்ட லென்பது, ‘10 சதவிகிதமாக 5 சதவிகிதமா’ என்று. அவர்களை ஒன்று கேட்கின்றேன்? நமது போர் வீரர்கள், போர்க்களத்தில் 10 சதவிவகிதம் போர் செய்து உடம்பிலுள்ள இரத்தத்திலும் 10 சதவிகித மட்டுமே சிந்திவிட்டு, மீதியை சேமித்து வைத்துக் கொள்வது எப்படி? அதிர்ஷ்டவசமாக நமக்கு ஆள் பஞ்சமில்லை. நீண்டதோர் பெரும் யுத்தத்தைக்கூட சமாளிக்க ஆள் பலம் நமக்கு இருக்கிறது. நமது தேவையெல்லாம் பணமும் சாதனங்களுமே. நாமெல்லோரும் மிக ஏழைகளாக இருந்தால் வெளிநாட்டாரின் உதவியை நாடுவது குற்றமல்ல. நம்மிடந்தான் பணக்காரர்கள் இருக்கிறார்களே! இவர்களை வைத்துக் கொண்டு அயலாரிடம் உதவிக்குக் கையேந்தினால், அதைவிடக் கேவலமும் வெட்கமும் என்ன இருக்கிறது. உயிரையே தியாகம் செய்ய நம் சகோதர சகோதரிகள் முன் வந்திருக்கும்போது, உயிரை வெல்லமாக நினைக்கும் பணக்காரர்கள் தங்களிடமுள்ளவைகளை விட்டுப் பிரிய ஏன் முணுமுணுக்க வேண்டும்? உயிரோடு பணத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், பணத்துக்கு மதிப்பேது? பணம் இன்று வரும், நாளை போகும்; இழந்த உயிர் திரும்ப வருமா? கனவு கூடக் காண முடியாதே! வெளிநாட்டு சர்க்கார் உங்களைப் பார்த்து,“உன் சொத்தைக் கொடு, அல்லது உன் உயிரைக் கொடு” என்று உத்ரவிட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நிச்சயமாக, உயிரைக் கொடுக்காமல் உங்கள் சொத்தைத் தானே கொடுப்பீர்கள்! இன்று, இளைஞர்கள் தங்கள் உயிர்களையே தியாகம் செய்ய முன்வந்துள்ளனர். ஏழைகள், போர்களத்தில் தங்களைப் பலியிடும் பொருட்டு, அவர்களுடைய உடைமை யெல்லாவற்றையும் ஒன்றுகூடப் பாக்கியில்லாமல் அர்ப்பணம் செய்து விட்டனர்; உயிரையும் சுதந்திரப் போருக்குப் பணயம் வைத்து விட்டார்கள். இந்தப் பாமர மக்களின் கண்களிலே, என்றுமில்லாத ஓர் ஒளி வீசுகின்றது. அவர்களது ஆவேச உணர்ச்சிலே உத்சாகம் பொங்குகிறது. இப்படிக் கணக்கற்ற மக்கள் நடந்து கொண்டிருக்கின்றனர். இவர்களது உதாரணத் திலிருந்து ‘சர்வாம்சப் படை திரட்டல்’ என்றால் என்ன வென்பதை உலகமே தெரிந்து கொண்டு விட்டது. இதே உணர்ச்சியுடன், மலேயாவிலுள்ள இந்தியப் பணக்காரர்களில் ஒருவர்கூட ‘இந்தியச் சுதந்திரத்துக்காக இதோ எனது சேமிப்புச் சொத்து’ என்னறு அர்ப்பணம் செய்ய முன் வருவாரில்லையா? சுயநலத் தியாக லட்சியத்தில் இந்தியர்களுக்குப் பரிபூரண நம்பிக்கையுண்டு. இந்தியாவிலுள்ள ஹிந்து சன்னியாசிகளும் முஸ்லிம் பக்கிரிகளும்தான் அதற்கு உதாரணம். உண்மை, நிதி, தியாக நம்பிக்கை ஆகியவைகளை நிலை நிறுத்தும் பொருட்டு, தமது அரச போகத்தையும் உடைமைகளையும் துறந்து, எத்தனை மன்னர்கள் சன்யாசிகளாகவும் பக்ரிகளாகவும் மாறியிருக்கின்றன ரென்பதைச் சரித்திரம் நமக்குக் கற்பிக்கின்றது. அவ்வளவு பெருமை படைத்த நாட்டில் பிறந்த நமக்கு, நமது 38 கோடி மக்களை விடுதலை செய்யும் கடமையைவிடப் புனிதமும் நீதியுமுள்ள பணி வேறென்ன இருக்கிறது? நீங்கள் உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இல்லையென்றால், “உயிர் நீங்கலாகவுள்ள எங்கள் சொத்து முழுமையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று ஏன் சொல்லக்கூடாது? நம் சர்க்காரின் வேலைத் திட்டங்களை இப்போது தெரிவித்து விடுகிறேன்; அவைகளை நிதானமாகவும் ஒழுங்காகவும் நீங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும். யுத்தத்துக்கு முன் மலேயாவிலிருந்த இந்தியர்களின் சொத்து சுமார் 100 கோடி ரூபாய். யுத்தகாலத்தில் அம் மதிப்பு பன்மடங்கு பெருகி வளர்ந்துள்ள தென்பது உங்களுக்கே தெரியும். பிற சர்க்கார்களைப் போலவேதான், நமக்கும் ஒரு வருடத் தேவைக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்க உத்தேசித்துள்ளேன். அதனை நிறைவேற்றும் பொருட்டு உங்கள் சொத்துக்களைத் தியாகம் செய்ய நீங்களாகவே முன் வரவேண்டும்; அல்லது யுத்தம் முடியும்வரை நாங்கள் விடும் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்து கொண்டேயிருக்க வேண்டும். இவ்விரண்டில் எதைச் செய்வதென்பது உங்கள் முடிவைப் பொறுத்தது. முதன்முதலில் இது சமயம் உங்களிடமிருந்து விரும்புவது பத்துக் கோடி ரூபாய்தான். இத் தொகை உங்கள் பழைய சொத்தில் பத்திலொரு பகுதிதான். மலேயா இந்தியப் பணக்காரர்களில் பெரும் பணக்காரர்கள் பலர் இங்கு வந்திருப்பதால், உங்களிடமிருந்து உடனடியாக ஒரு கோடி ரூபாயாவது என் கைக்கு வந்துவிடுமென்று நினைக்கிறேன். இன்னும் ஒரு மாத காலத்தில் 10 கோடியும் என்னிடம் கிடைக்குமெனப் பரிபூரணமாக நம்புகிறேன். 5. இரத்தம் கொடு! சுதந்திரம் இதோ! (1994 ஜூலை 4-ஆம் நாள், இந்தியச் சுதந்திரக் கழகத்திற்கு நேதாஜி தலைமை ஏற்று ஓராண்டு நிறைவெய்தியது பற்றி, கிழக்காசிய இந்தியர்கள் அகமகிழ்ந்து கொண்டாடிய நேதாஜி வார விழாவின்போது, நேதாஜி ஆற்றிய சொற்பெருக்கு.) பன்னிரண்டு மாதங்களாக நமது சுதந்திர இயக்கம் வெகு தூரம் முன்னேறியிருக்கிறது. இந்தியயாவில் இருபது ஆண்டுகளாக ஊழியம் செய்து அனுபவம் பெற்றிருப்பதால், இங்கு நடந்துள்ள வேலைகளின் மதிப்பையும் தரத்தையும் என்னால் சரியாக அளவிட முடியும். என்னுடன் ஒத்துழைத்த உங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றி. இன்னும் உங்கள் முன் பல வேலைகள் இருக்கின்றன. உத்சாகத்துடனும் உறுதியுடனும், ஆள், பணம், பொருள் இவைகளைச் சேகரிப்பது அவசியம். இவைகளைச் சேகரிக்கும்போது பல சிக்கல்கள் குறுக்கிடும். அவைகளை உடைத்தெறிந்து கொண்டு தான் நாம் முன்னேற வேண்டும். மற்றபடி விடுவிக்கப்பட்ட இந்தியாவில் நிர்வாகம், புனருத்தாரணம் ஆகிய வேலைகளுக்கும் ஆண் பெண் இருபாலாரும் தேவை. பர்மாவிலிருந்து நம் எதிரிகள் பின் வாங்கும்போது கையாண்ட முறைகளை, அதாவது சுட்டெரிக்கும் கொள்கையை இந்தியாவிலுள்ள அவர்கள் கையாளலாம். அப்படி நேர்ந்தால், அந்த நிலைமையைச் சமாளிக்க நாம் தயாராகி விடவேண்டும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பிரச்சனை யொன்று இருக்கிறது. நம் யுத்த களத்துக்கு சங்கிலித் தொடர்போல் உதவிப் படைகளையும், போருக்கு அவசியமான சாதனங்களையும் அனுப்புவதே அப்பிரச்சனை. இந்தப் பிரச்சனையில் தவறினால், போர் முனையில் பெறும் வெற்றியும், அதன் பாதுகாப்பும், இந்தியாவினுள்ளே நுழைய வேண்டுமென்ற எண்ணமும் நிறைவேறாது போய்விடும். இந்திய விடுதலைப் போரின் அடித்தளம் கிழக்காசியா. அதிலும் பர்மா முதன்மையானது. இந்த அடித்தளம் பலமுள்ளதாக இருந்தால்தான், போர் முனையிலுள்ள துருப்புகள் வெற்றி பெற முடியும். உள்நாட்டின் நிலைமையும் நன்றாகப் பாதுகாக்கப்பட வேண்டும். நம்மை எதிர் நோக்ககியிருக்கும் மாதங்களில், போர் முனையிலும் இந்தியாவிலும் புரட்சியை உண்டு பண்ணுவதிலேயே முழுக் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அந்த வேலைக்காக நானும் யுத்த சபையிலுள்ள எனது சகாக்களும் செல்ல நேரிடலாம். அப்பொழுது நீங்கள் இங்கே செய்ய வேண்டிய வேலைகளைக் குறைவின்றிச் சிறப்பாக நிறைவேற்றுவதன் மூலம் எங்களைப் பூரண திருப்தி செய்வீர்களென நம்புகிறேன். நமது பகைவனின் பிரச்சாரத் தந்திரங்கள் உங்கட்கு நன்றாகத் தெரியும். அந்தத் தந்திரங்கள் நமக்கு விரோதமானவை மட்டுமல்ல; வேடிக்கையுங் கூட. முதன் முதலில் நம் ராணுவம் ஒன்றிருப்பதையே அலட்சிய் செய்தார்கள். பின்னர் அதை அங்கீகரிக்காமலிருக்க அவர்களால் முடியவில்லை. அரக்கானில் அவர்களுக்கு நாம் கொடுத்த உதை, அந்த அலட்சிய புத்தியை ஒழித்து விட்டது. நாம் இந்தியாவுக்குள் நுழைய முடியாதென்று கதறியதெல்லாம், நாம் மணிப்பூர் – அஸ்ஸாம் எல்லைகளிலும் நுழைந்ததும் உலகத்தாரிடம் செல்லாக் காசாகி விட்டன. இந்த அவமானத்தால் நம் பகைவர்களும் அவர்களுக்குத் துணையாக நின்று கூலிக்கு மாரடிக்கும் நமது சோணகிரிகளும் சித்தம் கலங்கி வாயில் வந்தபடி உளர ஆரம்பித்தனர். இப்பொழுது என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? நமது இராணுவம் ஓர் பொம்மலாட்டமாம்! நாம் டில்லிக்குச் செல்ல முடியாதாம்! மணிப்பூரிலிருந்து டில்லிக்கு வெகு தூரம் இருக்கிறதாம்! இந்தியப் பூகோள நூல் நமக்குத் தெரியாதென நினைத்து விட்டார்களோ, என்னமோ? அவர்களை விட நமக்குத்தான் நன்றாகத் தெரியுமே! மணிப்பூரிலிருந்து டில்லிக்கு எவ்வளவு தூரமோ, அதைவிட அதிக தூரத்தை நம் படைகள் இதுவரை கடந்து விட்டன. இன்னும் உயரமான குன்றுகள், ஆழமான பள்ளத் தாக்குகள், அகலமான குன்றுகள் இருக்கின்றன. எத்தனை தான் கரடுமுரடான வழியாகயிருந்தாலும், அவையத் தனையையும் தாண்டிச் செல்லவும், எவ்வளவு நீண்ட தூரத்தையும் கடந்து விடவும் நமது படைகள் தயாராகிவிட்டன. பகைவர்கள் செய்கின்ற ஏளனம், நமக்கு நேரிய பாதையைக் காட்டுவதோடு திட நம்பிக்கையையும் அளிக்கிறது. ஏளனம் செய்வதை நிறுத்திவிட்டு. என்றைக்கு நம்மை அவர்கள் புகழத் தொடங்குகிறார்களோ, அன்றுதான் நமக்குக் கெடுதி நேரிடும். நமது வேலைகள் யாவும் மிகத் திறமையானதும் சிறந்ததாகவும் இருப்பதால் தான், அவர்கள் கண்களுக்கு நாம் தூஷிக்கப் படத் தகுந்தவர்களாகிறோம். அவர்கள் தூஷணை நமக்குப் பெருமை. ஆதலால் அவர்களை நாம் போற்றுகிறோம். நண்பர்களே! உங்களிடம் சில தினங்களுக்கு முன் சில கோரிக்கைகள் விடுத்தேன். நம் சர்வாம்சப் படை திரட்டலுக்கு நிங்கள் முழு ஆதரவு கொடுத்தால், உங்களுக்காக இரண்டாவது போர் முனையைத் திறந்து விடுகிறேனென்று உறுதி கூறியிந்தேன். அந்த உறுதி மொழியை இப்பொழுது நிறைவேற்றி விட்டேன். நமது போரின் முதற் படலம் முற்றுப் பெற்று விட்டது. நமது வெற்றி வீரர்களுடன் நிப்பொனிய வீரர்களும் ஒரு மித்து நின்று போர் புரிகின்றனர். இப்பொழுது பகைவர்களைப் புறங்காட்டி யோடச் செய்து கொண்டே இந்திய மண்ணில் நம் வீரர்கள் போரிடுகின்றனர். இந்நேரம் உங்கள் கடமையை நிறைவேற்ற கச்சையை வரிந்து கட்டுங்கள். ஆள், பணம், பொருள் எல்லாம் அதிகமாகத் தேவை. அவைமட்டுமல்ல; கொண்ட இலட்சியத்தை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்ற மனோ திடமும் நம்மிடம் உறுதியாக இருக்க வேண்டும். அந்த உறுதி தான் வீரச் செயல்களுக்கும் பழுதில்லா வெற்றிக்கும், பூரண சக்தியைக் கொடுக்கும். சுதந்திரம் நம் கண்ணுக் கெட்டிய தூரத்தில் இருக்கிறது. சுதந்திர இந்தியாவை உயிரோடிருந்து பார்க்க வேண்டுமென்று நினைத்தால், அது சகிக்க முடியாத ஆபத்தைத் தருகின்ற பெரும் தவறேறயாகும். பிழைத்திருந்து சுதந்திரத்தைக் காண வேண்டுமென்ற நினைப்பு யாருக்கும் இருக்கக்கூடாது. இன்னும் கடுமையானதும் நிண்டதுமான போர் நம்மை எதிர்நோக்கி யிருக்கிறது. ஆதலால், இந்தியா நீடூழி வாழ, உயிர்த்தியாகம் செய்ய வேண்டுமென்ற ஆவல்தான் வேண்டும். ‘சுதந்திரப் பாதை நமது இரத்தத்தால் நிரம்ப வேண்டும்; அதன் மூலம் வீர மரணம் நமக்கு வேண்டும்’ என்ற ஆசை நம்மிடம் குடி கொள்ள வேண்டும். நண்பர்களே! உங்களிடம் ஒன்று கேட்கின்றேன். உங்கள் இரத்தத்தைக் கொடுங்கள்; இரத்தத்துக்கு இரத்தத்தாலேயே பழி தீர்க்க முடியும். இரத்தம்தான் சுதந்திரத்தின் விலை. என்னிடம் இரத்தம் கொடுங்கள்; உங்களுக்குச் சுதந்திரம் கொண்டு வருகிறேன். இது சத்தியம். 6. காந்திஜிக்குக் காணிக்கை! (இந்தியாவிலிருக்கும் மகாத்மாஜிக்கு, 1944 ஜூலை 6-ஆம் நாள் தனது உள்ளம் நிறைந்த அன்புக் காணிக்கையை நேதாஜி சுபாஷ் போஸ், கிழக்காசியப் பிரதேசத்திலிருந்து வானொலி மூலம் அளித்து, ஆசியைப்பெற விழைந்தார்.) மகாத்மாஜி! பொது வேலைகளில் ஈடுபடத் தங்கள் உடல்நிலை இடந்தருவதாக இருப்பதால், தங்களிடம் சில வார்த்தைகள் சொல்ல எனக்கு உரிமையுண்டு. இந்தியாவுக்கு வெளியேயிருக்கும் இந்தியர்களின் நோக்கம், நடைமுறை, தேசாபிமானம் ஆகியவைகளைப் பொறுத்ததே அந்த வார்த்தைகள். சிறையிலே அன்னை கஸ்தூரிபாய் உயிர்நீத்த செய்தி எட்டியதும், தங்கள் நாட்டினரின் கவனமும் கவலையும் தங்கள் உடல்நிலை மீது பதிந்து விட்டன. அது இயற்கையின் நியதியே. 38 கோடி மக்களுக்கும் தலைமை தாங்கி வழிகாட்டிக் கொண்டிருக்கும் தங்கள் பொன்னுடல் தேறவும், நீண்ட ஆயுளை இறைவன் தங்களுக்கு அளிக்கவும் எல்லோரும் பிரார்த்தித்தனர். அடுத்தபடியாக, தாயகத்தின் வெளியே வசிக்கும் தங்கள் நாட்டினர் எத்தகைய எண்ணங் கொண்டிருந்தன ரென்பதைச் சொல்ல ஆசைப்படுகிறேன். இப்போது நான் சொல்வ தெல்லாம் வெட்ட வெளிச்சமான உண்மைகளே. “சரித்திர பூர்வமான வழிகளைப் பின்பற்றி நடத்தப்பெறும் போரின் மூலம்தான் இந்தியா விடுதலை பெறும்” என்று இங்குள்ள வர்கள் மட்டுமல்ல. தாயகத்திலுள்ளவர்களும் உறுதியாக நம்புகின்றனர். அகிம்சையும் – ஒத்துழையாமையும் – சாத்வீக எதிர்ப்பும், நம்முன் பிரிட்டிஷ் சர்க்காரைப் பணியவைக்க முடியாதென்றே உணருகின்றனர். நானும் அப்படித்தான். இங்குள்ள இந்தியர்களிடம் எவ்வித வேற்றுமையுணர்ச்சியும் சிறிதுகூட இடம் பெறவில்லை. 1929 டிசம்பரில் நடந்த லாகூர் காங்கிரஸ், தங்கள் முயற்சியால் பூரண சுதந்திரத் தீர்மானத்தை நிறைவேற்றிற்று. அதுமுதல், அந்தத் தீர்மானமே காங்கிரஸ்காரர்களின் பொது லட்சியமாகிவிட்டது. இன்று வெளிநாடுகளிலுள்ள இந்தியர் களின் எழுச்சிக்கு, தாங்கள் சிருஷ்டித்த விழிப்புதான் காரணம். தங்களை உலகின் தலைமைப் பீடத்தில் வைத்துப் பூசிப்பதற்கும், தங்கள் ஒப்புவமையற்ற தலைமையேதான் காரணம். ஒரே லட்சியம் – ஆசை – உறுதி ஆகியன ஒருங்கே படைத்த இந்தியத் தேசாபிமானிகளாகிய நாமனைவரும், உலகப் பொதுமக்களின் முன்னிலையில் ஒரே மாதிரிதான். நான் 1941 – இல் இந்தியாவைவிட்டு வெளியேறியதும், பிரிட்டிஷ் செல்வாக்குச் செல்லுபடியாகாத பல தேசங்களில் சுற்றுப் பிரயாணம் செய்தேன். அங்கெல்லாம் தங்கள் தலைமை போற்றப்படுவதையும், சென்ற நூற்றாண்டுவரை வாழ்ந்த இந்திய அரசியல் மேதைகள் அனைவரையும்விட தங்களுக்கே அதிகச் சிறப்புத் தருவதையும் நேரில் கண்டேன். அரசியல் துறையிலே ஒவ்வொரு நாடும் தத்தம் லட்சியங்களை உறுதிசெய்து கொண்டுவிட்டன. ஆயினும் நவீன சக்திகளுடன் கூடிய ஓர் முதல்தர வல்லரசை, மிகத் திறமையாகவும் வீரமாகவும் எதிர்த்துப் போர்செய்து, தன் தேச மக்களுக்கு வாழ்நாள் முழுதும் சேவை செய்துவரும் தங்கள் மேதைக்கு இணையே கிடையாது. பிரிட்டிஷ் செல்வாக்குப் பிரதேசங் களில் காணப்படுவதைவிட, ஆயிரம் மடங்கு அதிகமாகவே பிற இடங்களில் தங்கள் மதிப்பும் தாங்கள் அடைந்துள்ள பேறுகளும் புகழப்படுகின்றன. 1942-இல் தாங்கள் துணிந்து செய்த “வெள்ளையனே வெளியேறு” தீர்மானம், இன்னும் நூறு மடங்கு தங்கள் புகழை வளர்த்திருக்கிறது. இந்தியாவில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மூலம் நானும் நிறைய அனுபவம் பெற்றிருக்கிறேன். எனது வெளிநாட்டு வாழ்க்கையின் போதும், பல இரகசிய உண்மைகளைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். “இந்தியாவின் விடுதலையை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியும் ஒருகாலும் ஒப்புக் கொள்ளாது” என்ற முடிவுக்கு என் அனுபவம் என்னனைக் கொண்டு வந்து விட்டு விட்டது. இந்த யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக, பலங்கொண்ட மட்டும் தங்கள் முழு சக்தியையும் உபயோகித்து, இந்தியாவைப் பாலைவனமாக்கிவிட வேண்டுமென்று பிரிட்டன் உறுதி செய்து விட்டது. இந்த யுத்தத்தில் ஒருகால் நேசநாடுகள் வெற்றிபெறுமானால், அந்த வெற்றி ஐக்கிய அமெரிக்காவைச் சார்ந்ததாகவேயிருக்கும். பிரிட்டனுக்கு அதில் எவ்வித உரிமையும் இருக்காது. தன் ஏகாதிபத்தியப் பிரதேசங்களில் ஒரு பகுதியை நேச நாட்டினரிடம் ஒப்படைத்தும் மற்றொரு பகுதியை எதிரிகளிடம் இழந்தும் பரிதபித்துக் கொண்டிருக்கும் பிரிட்டன், வெற்றியிலும் உரிமை கிடைக்காவிட்டால் எந்த நிலைமையி லிருக்கும்? கண்டிப்பபாக, இது வரையிலும் கையாளாத மிருகத்தனத்தை யெல்லாம் மிகக் கடுமையாகக் கையாண்டு, இந்தியாவைக் கொள்ளையடிப்பதன் மூலம் இழந்த நஷ்டங்களை ஈடு செய்யத் தயங்காது. அதற்காக, இப்பொழுதே லண்டனில் திட்டங்கள் தயாராகிவிட்டன. இவ்வ விபரங்களெல்லாம், இரகசிய ஆட்கள் மூலம் கிடைத்த நம்பகமான தகவல்கள். ஆதலால், அவைகளைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியது எனது கடமை. பிரிட்டிஷ் சர்க்காரென்றும் பிரிட்டிஷ் மக்களென்றும் பிரித்துக் காட்டுவது இயலாத காரியம். இந்திய விடுதலையில் ஆர்வங் கொண்ட ஒரு சில அமெரிக்கரும் ஒரு சில பிரிட்டிஷாரும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த இலட்சிய நண்பர்கள் சிறு பகுதியினராகவே யிருப்பதால், அவர்களது தேசத்தார் களாலேயே தூற்றலுக்கும் துன்பத்துக்கும் ஆளாகின்றனர். இந்திய நடவடிக்கையைப் பொறுத்த வரையில், பிரிட்டிஷ் சர்க்காரும் பிரிட்டிஷ் மக்களும் ஒரே மாதிரிதான். அமெரிக்காவின் லட்சியமோ சொல்ல வேண்டாம்! உலகத்தின் தலைமைப் பீடத்தைப் பற்றியே வாஷிங்டன் அதிகாரவர்க்கம் கனவு காண்கிறது. அப்படிக் கனவு காண்பது மட்டுமல்ல, அமெரிக்காவின் 49-ஆவது சமஸ்தானமாகவே பிரிட்டன் விளங்குமென்று வெளிப்படையாகச் சொல்லவும் வாஷிங்டன் அதிகார வர்க்கத்தினர் துணிந்து விட்டனர். இந்த நிலைமையில் இந்தியா, தங்களது வாழ்நாள் முழுதும் கையாளப்பட்டுள்ள இரத்தம் சிந்தாத வழிகளின் மூலம் விடுதலை பெற்று விட்டால், அதைவிடப் பெரும் பேறு வேறெதுவுமேயில்லையென இந்தியர்களனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியடைவர்; சந்தேகமே யில்லை. ஆனால் நிலைமையில் எவ்வித மாற்றத்தையும் காணாம். அன்றிருந்தது போல்தான் இன்றும் இருக்கிறது. ஆகவே, “நாம் உண்மையில் விடுதலை பெற விருப்பமுள்ளவர்களாக யிருந்தால், இரத்தப் பிரவாகத் தில் தோய்ந்துவிட நம்மைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும்” என்ற எண்ணம் உண்டாகிறது. இந்தியாவுக்குள்ளேயே ஆயுதம் தாங்கிய போரை நடத்த வசதிகளும் சந்தர்ப்பமும் வாய்த்திருந்தால், அதுவே சிறந்த மார்க்கமென உள்ளப்பூரிப்படையலாம். ஆனால் மகாத்மாஜி! இந்தியர்களின் நிலைமை, மற்றெல்லோரையும் விட, உங்களுக்குத் தான் நன்றாகத் தெரியும். என்னைப் பொறுத்த வரையில், இருபது வருடமாக இந்தியப் பொது வாழ்வில் ஈடுபட்டதன் பயனாகக் கிடைத்துள்ள அனுபவம் என்னை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. இந்தியாவுக்கு வெளியே தொலை தூரத்திலுள்ள இந்தியர்களின் உதவியும் சக்தி மிகுந்த அன்னிய நாட்டாரின் உதவியும் கிடைக்காவிட்டால், உள்நாட்டில் ஆயுத பலங்கொண்ட எதிர்ப்பை நடத்த முடியாது. இந்த யுத்தம் தொடங்கியபின், வெளி நாடுகளிலிருந்து ஆயுத உதவியை எதிர்பார்ப்பதும் தொலைதூரத்திலுள்ள இந்தியர்களின் உதவியை நாடுவதும், இந்தியாவிலுள்ளவர் களுக்கு இயலாத காரியமாகி விட்டன. ஆனால் இந்த யுத்தம், பிரிட்டிஷ் வல்லரசின் எதிரிகளிடமிருந்து போதுமான அளவு எல்லாவித உதவிகளையும், இந்தியாவுக்கு வெளியேயிருக்கும் இந்தியர்கள் பெற்றுக்கொள்ள வழியைத் திறந்து விட்டது. அந்த உதவிகளை நான் எதிர்பார்த்ததற்கு முன், இந்திய விடுதலைப் பிரச்னையில் அவர்கள் கொண்டுள்ள அபிப் பிராயங்களை முதன்முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய தாயிற்று. “அச்சு நாட்டார் சுதந்திரத்தின் விரோதிகள்; ஆகவே இந்திய விடுதலைக்கும் விரோதிகள்” என்று பிரிட்டிஷ் பிரசாரகர்கள் பல ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றனரே, அது உண்மைதானா? என்று என்னையே நான் கேட்டேன். அதற்குச் சரியான பதிலைக் காணும் நோக்கத்துடனேதான் இந்தியாவை விட்டு வெளியேறினேன். வீட்டையும் நாட்டையும் விட்டுப் பிரிவதென்று நான் முடிவு செய்ததற்குமுன், தொலை தூரத்திலிருந்து உதவியை நாடுவது நேர்மையா? என்பதையும் சிந்தித்தேன். இதர தேசங்கள் சுதந்திரம் பெற என்னென்ன முறைகளைக் கையாண்டன என்பது பற்றிய பல புரட்சி சரித்திரங்களை ஏற்கெனவே கற்றிருக்கிறேன். எந்த அடிமை நாட்டாரும், பிறநாட்டாரின் உதவியின்றிச் சுதந்திரம் பெற்றதாக ஒருவரிகூட அவைகளிடம் காணப்படவில்லை. 1940–களில் மீண்டும் அந்த ஏடுகளைப் புரட்டினேன். ஏதேனும் ஒரு வகையில் பிறநாட்டின் உதவி பெற்றுத்தான் எந்த நாடும் சுதந்திரம் அடைந்திருப்பதைக் கண்டேன். ஒருதனி மனிதன், தன் சொந்தப் பொறுப்பில் பிறநாட்டின் உதவியைக் கடனாகப் பெறுவதும், பின்னால் அந்தக் கடனைத் திரும்பக் கொடுப்பதும் நேர்மைதானென்ற முடிவுக்கும் வந்தேன். தவிர, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் போன்ற சக்தி மிகுந்த வல்லரசுகளே உலகைச் சுற்றி உதவிப் பிச்சையெடுக்கும்போது, நம்மைப்போல் அடிமைப்பட்டு ஆயுத பலமில்லாமல் தவிப்பவர்கள் வெளிநாட்டாரிடம் கடனாக உதவி கேட்பதில் என்ன தப்பு இருக்க முடியும்? மகாத்மாஜி! இந்தக் கடுமையான வேலையைத் தொடங்குமுன், மிக எச்சரிக்கையுடன் நாள் – வாரம் – மாதக்கணக்கான, பிரச்சனையை அலசி அலசி ஆராய்ந்தேன். என் தேச மக்களுக்கு என் சக்திகொண்ட மட்டும் இவ்வளவு காலம் ஊழியம் புரிந்த நான், தேசத்துரோகியாகவோ, தேசத்துரோகி என்று எவரும் என்னைக் கருத இடம் கொடுக்கவோ, நான் விரும்பவில்லை. இந்தியாவிலேயே தங்கி, என்றும்போல் என் ஊழியத்தைச் செய்தால், எனக்கு மிகச் சுலபமாகவே தானிருக்கும். போர் முரசு செவிடுபட்டதும், இந்தியச் சிறையிலே அடைபட்டி ருப்பதும் சுலபம்தான். அப்படிச் செய்திருந்தால், என்னைப் பொறுத்தவரையில் எதையும் இழந்தவனாக மாட்டேன். இந்தியப் பொது ஊழியர் எவரும் பெறுவதற்குரிய உயர்தரச் சிறப்பை எனக்கு அளித்திருக்கும் என் தேச மக்களின் பேரன்புக்கு எனது வணக்கம். அசையாத அன்பும், பிரிக்க முடியாத பற்றும் மிகந்துள்ள அபிமானிகள் நிறைந்த ஓர் கட்சியையும் நிறுவியிருக்கிறேன். துன்பம் நிறைந்த நீண்ட பாதையில், என் உயிர், தோழர்கள், எதிர்காலம், எதையும் பொருட்படுத்தாமல் இறங்கிவிட்டேன். வெளி யுதவியின்றி சுதந்திரம் பெற்று விடுவோமென்று சிறிதளவேனும் நம்பிக்கை கொண்டவனாக இருந்திருந்தால், இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியாவைவிட்டு வெளியேறியிருக்க மாட்டேன். அடுத்த ஒரு பொன்னான சந்தர்ப்பம் கிடைக்காதென்றும், வெளியிலிருந்து நடவடிக்கை எடுக்காமல் உள்நாட்டிலிருந்து கொண்டே நம் சொந்த முயற்சியின் மூலம் வெற்றிபெற முடியாதென்றும் சந்தேகமறத்தெளிந்தேன். அதனால் தான் இப்படி தைரியமாக இறங்க முடிவு செய்தேன். இயற்கையின் கருணை கிடைத்தது. எத்தனையோ கஷ்டங்கள் நேர்ந்தும், இதுவரை எனது திட்டங்களுக்கு வெற்றி கிடைத்து விட்டது. இந்தியாவுக்கு வெளியே, நான் சந்தித்த இந்தியர்கள் அனைவரின் ஒன்றுபட்ட அபிப்பிராயத்தைத் திரட்ட முயன்றேன். இந்தியச் சுதந்திரத்துக்காக தங்களால் இயன்ற எதையும் தியாகம் செய்ய ஒவ்வொருவரும் முன் வந்துள்ளன ரென்பதைத் தங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். பின்னர், இந்த யுத்தத்தில் பிரிட்டனுக்கு எதிராகப் போரிடும் சர்க்கார்களின் அபிப்பிராயங்களை அறிய முனைந்தேன். பல ஆண்டுகளாக பிரிட்டிஷார் நமக்குச் செய்து வந்துள்ள பிரச்சாரமெல்லாம் வெறும் சூழ்ச்சியே யென்ற உண்மை புலனாயிற்று. அச்சு நாட்டினர் இந்தியச் சுதந்திரத்தின் நண்பர்களாக இருக்கின்றனர். அது மட்டுமல்ல, அச்சு நாட்டினர், அவர்கள் சொந்த பலத்திலிருந்து நமக்குத் தேவையான எல்லா உதவிகளையும் அள்ளிக் கொடுக்கவும் சித்தமாக யிருக்கின்றன ரென்பதைக் கண்டு கொண்டேன். நம் எதிரிகள் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றன ரென்பதை அறிவேன். அந்தப் பிரச்சார சூழ்ச்சியில் என் தேச மக்கள் ஒருகாலும் மயக்க மாட்டார்களென்பது நிச்சயம். ஏனெனில், என்னைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். தேசீயச் சுயமரியாதையை விரும்பி வாழ்நாள் முழுதும் எல்லையற்ற துன்பங்களையனுபவித்த ஒருவன், எந்த அன்னிய சக்திக்கும் பணிய மாட்டான். தவிர, அன்னிய சக்தியின் தயவால், எனக்கென எந்தப் பலனையும் விரும்பவில்லை. என் தேச மக்களாலேயே உயர்தரக் கௌரவமும் புகழும் பெற்றுள்ள எனக்கு, அன்னிய சக்திகள் அளிக்கும் கௌரவத்தில் என்ன பெருமை இருக்க முடியும்? சுயமரியாதையும் சுயயவுணர்வும், சொந்தமாகத் தன் நிலைமையை உறுதி செய்யும் ஆற்றலும் இல்லாத ஒருவன் தான், அன்னிய பலத்தின் கைப்பாவை யாவான். என் தேசத்தின் கௌரவத்தையும் சுயமரியாதையையும் நான் விலைக்கு விற்று விடுவேனென்று, எனது மிகக் கொடிய பகைவன்கூட சொல்லத் துணியமாட்டான். அன்றி, என் தேசத்தில் நான் ஓர் அனாதையாக யிருந்தவனென்றோ, எனக்காக ஓர் சொந்தக் கௌரவத்தை பிறர் தயவால் சம்பாதிக்க முயலுகிறவனென்றோ, எவராலும் நினைக்ககக் கூட முடியாது. இந்தியாவை விட்டு வெளியேறியபோது, என் உடைமையனைத்தையும், உயிரையும் கூட இழக்கும் ஆபத்தை ஏற்றுக் கொண்டேன். ஏன்? அந்த ஆபத்துகளைக் கடப்பதன் மூலம் இந்தியாவின் சுதந்திரத்துக்கு உதவ முடிவுமென் பதால்தான். ஆனால், அச்சு நாட்டு சக்திகளைப் பற்றியதோர் கேள்விக்கு நான் பதலளிக்க வேண்டியதுதான். அவர்களால் நான் ஏமாற்றப்படுவேனென்பது நடக்கக் கூடிய காரியமா? பிரிட்டிஷாரிடையே புத்தி சாதுரியமான அரசியல் தந்திர மிக்க நபர்கள் காணப்படுகிறார்களென்பது உலகம் ஒத்துக் கொண்ட உண்மை. அந்தப் பிரிட்டிஷ் அரசியல்வாதிகளுடனேயே வாழ்நாள் முழுதும் இணைந்தும் எதிர்த்தும் போராடிய ஒருவன், உலகத்திலுள்ள வேறெந்த அரசியல் வாதிகளாலும் ஏமாற்றமடைய முடியாது. பிரிட்டிஷாரே அவர்களுடைய முயற்சிகளில் என்னிடம் தோல்வியுற்றிருக்கும் போது, இனி உலகிலுள்ள எந்த சக்தியும் என்னைத் தீண்டவே முடியாது. பிரிட்டிஷாரால் நேர்ந்த நீண்ட காலச் சிறைவாசமும், உடல் நலிவும் இதர இடர்களுமே என் உள்ளுணர்ச்சியை நெருங்க முடியவில்லை யென்றால், வேறெந்த சக்திக்குத் தான் என்னைப் பணிய வைக்க முடியும்? நான் அகில உலக இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஓர் மாணாக்கன் என்பது தங்களுக்கே நன்கு தெரியும். இந்த யுத்தம் தொடங்குமுன்பே, அகில உலகத் தலைவர்களுடன் நேரிடையான நெருங்கிய தொடர்பு எனக்கு உண்டு. இந்த வரி எனக்குப் புதிதல்ல. ஆதலால் எத்தகையக் கபட நாடக அரசியல் தந்திரிகளாலும் என்னைப் பேதையாக்கி அமுக்கி விட முடியாது. அச்சு நாட்டு சக்திகளின் நோக்கத்தைப் பற்றி அலசி ஆராய்ந்து ஓர் முடிவுக்கு வருமுன், ஆங்காங்குள்ள மக்களின் பொறுப்பு வாய்ந்த முக்கிய தலைவர்களோடு நெருங்கிப் பழகி, நேரிடையான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். ஆகவே, அகில உலக இயக்கங்கள் பற்றிய எனது தீர்ப்பில், என் தேச மக்கள் முழு நம்பிக்கை வைக்க முடியுமென்பதில் சந்தேக மில்லை. நான் இந்தியாவிலிருந்து வெளியேறியதும், வெளியிலுள்ள என் தேச மக்கள் என் தீர்ப்பைச் சோதனை யிட்டார்கள். என் தாய் நாட்டின் கௌரவத்துக்கோ, சுயமரியாதைக்கோ, தேசீய நலனுக்கோ மாறாக எதையும் எப்பொழுதும் நான் செய்யவில்லை என்ற முடிவும் ஏற்பட்டு விட்டது. என் செயல்முறை யாவும், உலகத்தின் முன்னிலையிலே இந்தியாவின் கௌரவத்தை நிலைநிறுத்தவும், இந்திய விடுதலையை விரைவில் கொண்டு வரவுமேயாகும். மகாத்மாஜி! கிழக்ககாசியப் போர் தொடங்கியதும், நமது பகைவர்கள் ஜப்பானியர்களுக்கு எதிராகக் கடுமையான யுத்தப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர். ஆதலால், ஜப்பானியர்கள் பற்றி மட்டும் சில வார்த்தைகள் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், இது சமயம் ஜப்பானிய சர்க்கார், ராணுவம், பொது மக்கள் ஆகியோருடன் நெருங்கிய கூட்டுறவோடு, நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். நமது பகைவர்களுடன் இந்த ஜப்பான் உறவு கொண்டிருந்த காலமும் ஒன்றிருந்தது. அந்த உறவு உயிருடன் இருந்த நேரம் வரை நான் ஜப்பானுக்கு வரவேயில்லை. “பிரிட்டன் மீதும் அமெரிக்கா மீதும் என்றைக்கு ஜப்பான் யுத்தப் பிரகடனம் செய்கிறதோ, அன்று தான் ஜப்பானின் சரித்திரம் புனிதம் பெறும்” என்ற என் கருத்து நிறைவேறியதைக் கண்ணுற்ற பிறகு தான், ஜப்பானுக்குச் செல்வதெனத் தீர்மானித்தேன். என் தேசத்தார் பலரையும் போலவே, நானும் பல ஆண்டுகளாக, ஜப்பானியருக்கு எதிரான பிரச்சாரங்களைப் படித்திருக்கிறேன். 1937-இல் சீனாவோடு ஜப்பான் போர் தொடுத்த காரணம் அவர்களைப் போலவே எனக்கும் விளங்காமலே தான் இருந்தது. 1937 – 38இல் என் தேசத்தாரைப் போலவேதான் என் அனுதாபமும் சுங்கிங் மீது இருந்தது. 1938 டிசம்பரில், நமது காங்கிரஸ் மகாசபையின் சார்பில் சுங்கிங்குக்கு அனுப்பப்பட்ட மருத்துவக் கோஷ்டிக்கு, நானே பொறுப்பாளியாக இருந்தேனென்பதை தாங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். நான் ஜப்பானுக்கு வந்த பின்னர், பழைய சந்தேகத்தில் தெளிவு கண்டேன்; ஆனால் என் தேசத்தார் இன்னும் சந்தேகம் கொண்டிருக்கின்றனர். இந்தக் கிழக்காசிய யுத்தம், ஜப்பானியர்கள், பொதுவாக உலகத்தின் மீதும் சிறப்பாக ஆசிய நாடுகளின் மீதும் கொண்டிருந்த மனப்பான்மையை புரட்சிகரமாக்கி விட்டது. இந்த மாற்றம் ஜப்பானிய சர்க்காரிடம் மட்டுமல்ல, ஜப்பானிய மக்களிடமும் காட்சி தருகிறது; ஆசிய மக்களிடமும் புதிய உணர்ச்சியைத் தோற்றுவித்து விட்டது. அதலால், ஆசிய நாடுகளெல்லாம் ஜப்பானின் பரிசுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் இழுக்கப்பட்டு விட்டன. பிலிப்பைன், பர்மா, இந்தியா, புதிய சீனா, இவைகளின் மீது ஜப்பான் இன்று காட்டிவரும் மனோபாவமே அம்மாற்றத்தைத் தெளிவு படுத்தும். நான் ஜப்பானுக்கு வந்த பின்னர், இன்றைய ஜப்பான் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதும், ஆசியா பற்றி ஜப்பான் கொண்டுள்ள நடைமுறைக் கொள்கை போலியானதல்ல வென்பதைக் காண, பூரணத் திருப்தியடைந்தேன். புதியதோர் உணர்ச்சியில் ஒரு தேசம் முழுமையுமே ஒன்றுபட்டு நிற்பது, உலகச் சரித்திரத்தில் புதுமையல்ல. பிரஞ்சுப் புரட்சியின் போது பிரான்ஸிலும், பொதுவுடைமைப் புரட்சியின்போது ருஷ்யாவிலும், அந்த நிலைiயைக் கண்டிருக்கிறோம். இரண்டாவது முறையாக 1943 நவம்பரில் நான் ஜப்பானுக்கு வந்தபோது, பிலிப்பைனுக்குச் சென்றேன். அதன் தலைவர்களைச் சந்தித்தேன்; அங்குள்ள நிலைமையை நேரில் பார்த்தேன். பின்னர் சுதந்திரம் பெற்ற பர்மாவுக்குச் சென்றேன்; நீண்ட நாளாக அதன் நிலைமையும் என் கண்களால் கண்டு மகிழ்ந்துள்ளேன். சீனாமீது ஜப்பான் கொண்டுள்ள மனோபாவம் உண்மையனதா? போலியா? என்பதை யறிய, சீனாவுக்கும் சென்றேன். ஜப்பான் – தேசீயச் சீனா ஒப்பந்தம், தேசீய சீனாவின் தேவைகளைப் பூர்த்திசெய்து கொண்டிருக்கிறது. யுத்தம் முடிந்ததும் ஜப்பானியர் தனது படைகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அவ் வொப்பந்தத்தில் உறுதி செய்திருக்கின்றனர். பிறகு ஏன் சுங்கிங் சீனா சண்டை செய்கிறது? சுங்கிங்குக்கு, பிரிட்டனும் அமெரிக்காவும் மனப்பூர்வமாகவே உதவியளிக் கின்றன வென்று நம்பமுடியுமா? பதிலுக்கு சுங்கிங் சீனாவிட மிருந்து எதையும் திரும்ப வாங்காமல் விட்டுவிடுமா? ஜப்பான் மீதுள்ள பழைய பகைமையையும் வஞ்சகத்தையும் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு, பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் சுங்கிங் அடமானம் செய்யப்பட்டு விட்டதென உறுதி சொல்லுகிறேன். ஜப்பானுக்கு சீனா மீது இன்றைய மனோபாவம் இல்லாதிருந்தால், ஜப்பானை எதிர்த்து யுத்தம் செய்ய பிரிட்டனிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் உதவி பெறுவதில் அர்த்தமுண்டு; நியாயமுண்டு. ஆனால், இப் பொழுது சீன – ஜப்பான் உறவில் புத்தம் புதிய அத்தியாயம் ஆரம்பமாகிவிட்டது. இந்நேரத்தில் யுத்தத்தை அர்த்தமில்லா மல் அது நீடித்துக்கொண்டேயிருக்குமானால், கொஞ்சங்கூட மன்னிப்பளிக்க இடமில்லை. சுங்கிங்கின் நடத்தை சீன மக்களுக்கு நன்மையானதல்ல; ஆசியாவுக்குக்கூட நன்மையல்ல. 1942 ஏப்ரல் மாதத்தில், தங்களுக்குச் சுதந்திரமாக நிறைய அவகாசம் கிடைத்தால் சீன ஜப்பான் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதில் ஈடுபடுவதாகக் கூறினீர்கள். அந்த அறிக்கை, அரசியல் மேதையின் அபூர்வமான தலைசிறந்த வார்த்தை கொண்டதாகும். சீனாவின் குழப்பத்துக்கு, இந்தியாவின் அடிமைத்தனமே தான் பொறுப்புள்ள அஸ்திவாரம். இந்தியாமீது பிரிட்டனின் பிடிப்பு இருப்பதாகலேயே ஆங்கிலேய அமெரிக்கர்கள், சுங்கிங் – ஜப்பான் போரை நீடித்து நடத்தும் பொருட்டு சுங்கிங்கிக்குப் போதிய உதவியளிப்பதாகக் கூறி, சுங்கிங்கை நம்பும்படி செய்து தூபம் போடுகின்றனர். மகாத்மாஜி! ‘சுதந்திர இந்தியா, சீன ஜப்பான் நல்லுறவுக்கு உழைக்கும்’ என்று தாங்கள் நினைத்தது முற்றிலும் சரியே. இந்தியாவின் விடுதலை, மடமையாகத் தவறு செய்து கொண்டிருக்கும் சுங்கிங்கின் கண்களைத் திறந்துவிடும். அதன்மூலம், சீனாவுக்கு ஜப்பானுக்கு மிடையே ஓர் கௌரவமான நல்லுறவும் தானே தோன்றிவிடும். நான் கிழக்காசியாவுக்கு வந்ததும் சீனாவுக்குச் சென்றேன். சீனாவின் தேவைகளை இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. சுங்கிங்கில் சர்வாதிகாரம் ஆட்சி செய்வதைக் கண்டேன். நேர்மையான காரியங்களுக்குச் சுங்கிங் சீனாவோ, கலப்பற்ற ஆங்கிலேய – அமெரிக்கச் செல்வாக் குடன் சர்வாதிகாரத்துக்கு உட்பட்டிருக்கிறது. துரதிர்ஷ்ட வசமாக சுங்கிங் அதிகாரிகளை ஏமாற்றுவதற்கான வசதிகளை ஆங்கிலேய – அமெரிக்கர்கள் பெற்று விட்டார்கள். ஜப்பான் தோற்கடிக்கப்பட்டு சுங்கிங் சீனாவின் அதிகாரம் ஆசியா முழுதும் பரவுமென்று அவர்கள் நம்பும்படி செய்துவிட்டார் கள். உண்மையென்னவென்றால், எப்படியேனும் ஜப்பான் தோற்கடிக்கப்படுமானால், சீனா முழுமையும் அன்னிய அமெரிக்கரின் கட்டுப்பாட்டின்கீழ் வந்து விடுவது நிச்சயம். அப்படி நேர்ந்தால், சீனாவை மட்டுமல்ல, ஆசியா முழுமையுமே அந்தச் சோக மேகம் கௌவிக் கொள்ளும். சுங்கிங் சர்க்காரின் பிரச்சாரர்கள் இந்தியாவிலிருந்து கொண்டு, இந்தியாவின் அனுதாபத்தைப் பெற முயற்சிப்பது பற்றி எனக்குச் சிறிது தெரியும். வால் தெரு (றுயடட ளுவசநநவ) விலும் லம்பார்டு தெரு (டுடிஅயெசன ளுவசநநவ) விலும் தன்னை ஈடுவைத்திக்கும் அந்த சுங்கிங், (சீனா பற்றிய புதுக்கொள்கையை ஜப்பான் பறைசாற்றிய பின்) இந்தியர்களின் அனுதாபத்தை பெற எக்காலத்திலும் லாயக்கில்லையென்று தான் கௌரமாகச் சொல்ல விரும்புகிறேன். மகாத்மாஜி! வெறும் வாக்குறுதிகளில் இந்தியர்கள் எவ்வளவு நம்பிக்கையுள்ளவர் களென்பது, எல்லோரையும்விட உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஜப்பானின் பிரகடனமும் வெறும் வாக்குறுதியாகவேயிருந்தால், என் சகோதரர்களின் அவநம்பிக்கைக்கு நானே தான் கடைசி மனிதனாக இருப்பேன். ஆனால், இந்த உலக மகாயுத்தத்தின் நடுவே, பிலிப்பைன், பர்மா, தேசீயச் சீனா போன்ற நாடுகளில் ஜப்பான் செய்திருக்கும் புரட்கிகரமான மாற்றங்களை என் இரு கண்களாலும் கண்டுவிட்டேன். ஜப்பான், ஜெனரல் டோஜோவை பிரதம மந்திரியாகவும் தலைவராகவும் பெற்றிருக்கிறது. வாக்கிலும் செயலிலும் உறுதி பிறழாத உத்தமரென, டோஜோவை சாதாரண சிப்பாய் முதல் உயர்தர அதிகாரிகள் வரை ஏகமனதாகப் போற்றிப் புகழுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரையில், தனக்கிருக்கும் அந்தரங்க சுத்தியை ஜப்பான் அதன் செயல்மூலம் நிரூபித்து விட்டதென நான் உறுதியாகச் சொல்வேன். இந்தியப் பிரச்னையில், ஜப்பானியர் சுயநலம் கொண்டிருக்கின்றன ரென்று மக்கள் ஒரு சமயம் சொன்னார்கள். அப்படியானால், நமது தற்காலிக சர்க்காரை எதற்காக அவர்கள் அங்கீரிக்க வேண்டும்? அந்தமானையும், நிக்கோபர் தீவுகளையும் சுதந்திர இந்தியத் தற்காலிக சர்க்காரிடம் ஒப்படைக்க அது முடிவு செய்ததேன்? அவ்விரு தீவுகளுக்கும் தலைமை அதிகாரியாக இந்தியர் ஒருவர் இப்பொழுது போர்ட் பிளையரில் இருப்பதேன்? கிழக்காசியாவில் இந்திய சுதந்திரப் போருக்காக, இந்தியருக்கு நிபந்தனையற்ற உதவிகளை அது அளித்து வருவதேன்? ஜப்பானின் அந்தரங்க சுத்தியையும், அதன்மூலம் கிடைக்கும் பேருதவிகளையும் கண்டுகளிக்கும் இந்தியர்கள், கிழக்காசியா முழுதும் இருக்கிறார்கள். ஜப்பான் மீது அவநம்பிக்கை கொண்டிருந்தால், கிழக்காசியாவிலுள்ள 30 லட்சம் இந்தியர்களும் ஒருமுகமான கூட்டுறவுக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார்களா? ஒரு தனி மனிதனை ஏமாற்றவோ அல்லது தன் வயப்படுத்தவோ ஒருவனால் முடியும். ஆனால், கிழக்காசியாவில் சிதறிக் கிடக்கும் 30 லட்சம் இந்தியர்களையும் பலாத்காரமாய் இணைக்க எவராலும் முடியாதே! கிழக்காசியாவிலுள்ள இந்தியர்கள், சொந்த முயற்சி எதுவும் செய்யாமலும் அதிகப்படியான தியாகம் செய்யாமலும் ஜப்பானின் உதவியை எதிர்பார்த்தால், அந்தத் தவறான நடத்தைக்கு ஜவாப்தாரியாக வேண்டியதுதான். ஆனால் நான் ஓர் இந்தியன் என்ற முறையில், ‘இந்தியச் சுதந்திரப் போருக்குத் தங்கள் சக்தி கொண்ட மட்டும் ஆள் – பணம் – சாதனம் எல்லாவற்றையும் திரட்டிக் குவிப்பதில் கிழக்காசிய இந்தியர்கள் முன்வந்துள்ளனர்’ என்பதைத் தங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன். தேச ஊழியத்துக் காகத் தாய் நாட்டிலேயே ஆள் – பணம் – சாதனங்களைத் திரட்டுவதில் 20 வருட அனுபவம் பெற்றிருக்கிறேன். அந்த அனுபவம் இன்று பேருதவியாயிற்று. இப்பொழுது கிழக்காசிய இந்தியர்களின் முயற்சி பெருமிதங் கொண்டிருக்கிறது. அவர்களின் தியாக சக்தி அளவிடற்கரியது. அவர்களது உணர்ச்சி மேலும் மேலும் பெருகிக் கொண்டிருக்கிறது. அவர்களது பேராதரவும் பணமும் நிறைய குவிந்து கொண்டிருப்பதால், நம்மால் உற்பத்தி செய்ய முடியாததும் நமக்குத் தேவையானதுமான ஆயுதங்களையும் தளவாடங் களையும், ஜப்பானிடமிருந்து பெற்றுக் கொள்வதில் எந்தவிதத் தவறுமில்லையே! மகாத்மாஜி! இங்கு நம்மால் நிறுவப் பெற்றிருக்கும் தற்காலிக சர்க்கார் பற்றிச் சிறிது சொல்ல விரும்புகிறேன். ஆஸாத் ஹிந்த் தற்காலிக சர்க்காரை, ஜெர்மனியும் ஜப்பானும் அங்கீகரித்திருக்கின்றன. தவிர அவைகளின் ஏழு நேச நாடுகளும் அங்கீகரித்துள்ளன. உலகத்தின்முன் ஓர் தனி மதிப்பும் கௌரவமும் பெற்றிருக்கிறது நம் சர்க்கார். ஆகவே, பிரிட்டனிடமிருந்து இந்தியாவை விடுதலை செய்ய இந்த ஆஸாத் ஹிந்த் சர்க்கார் ஆயுதம் தாங்கிய போரை நடத்த வேண்டியிருக்கிறது. இந்தியாவிலிருந்து நமது எதிரிகள் ஒழிந்தபின் சட்டமும் சமாதானமும் நிலை நிறுத்தப்பட்டதும், இந்த சர்க்காரின் வேலை முற்றுப்பொறும். பின்னர், இந்திய மகாஜனங்கள் தாங்களாகவே தங்கள் விருப்பம்போல் நிரந்தர சர்க்காரை நிறுவுவதற்கும் அதன் தலைமையை நிர்ணயிப்பதற்கும், இந்த சர்க்கார் பக்கபலமாக இருக்கும். மகாத்மாஜி! நானும் என்னுடன் ஒத்துழைக்கும் எல்லா இந்தியர்களும், இந்திய மகாஜனங்களின் ஊழியர்களென்பதை உங்களுக்கு உறுதி கூறுகிறேன். எங்கள் முயற்சியிலே நாங்கள் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்களுக்கும் தியாகங்களுக்கும் பரிசாக விழைவது நம் தாய்நாட்டின் விடுதலை யொன்றேயாகும். இந்தியா சுதந்திரமடைந்ததும், அரசியல் துறையிலிருந்தே விலகிவிட வேண்டுமென்று கருதுபவர்கள் பலர் எம்முடன் இருக்கிறார் கள். பாக்கியுள்ளவர்கள், சுதந்திர இந்தியாவில் எவ்வளவு சாதாரண வேலையாக இருந்தாலும் அதனை ஏற்று நடத்துவதில் திருப்தியடைபவர்களாகவே இருக்கின்றனர். ‘பிரிட்டிஷ் ஆட்சியில் உயர்தரப் பதவி வகிப்பதைவிட சுதந்திர இந்தியாவில் தோட்டி வேலை பார்ப்பதே மேல்’ என்ற உணர்ச்சியைப் பெற்றுவிட்டனர் இங்குள்ளவர்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இருக்கின்றன ரென்பதையும் இவர்கள் நன்கு அறிவார்கள். கடைசி ஆங்கிலேயன் இந்திய மண்ணிலிருந்து வெளி யேற்றப்படும் வரை ஜப்பானிடமிருந்து நமக்கு எவ்வளவு உதவி தேவைப்படுமென்பது, தாயகத்திலிருந்து கிடைக்கப் பெறும் கூட்டுறவின் அளவைப் பொறுத்திருக்கிறது. ஜப்பான், அதன் உதவியை நமக்கு அளிக்கத் தானாக முன்வரவில்லை; இந்தியர்கள் தாங்களாகவே முன்னேறி விடுதலை பெற்று விட்டால், ஜப்பான் சந்தோஷத்தையே அடையும். பல நாடுகளின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் பிரிட்டன்மீதும் அமெரிக்காமீதும் ஜப்பான் போர்ப் பிரகடனம் செய்த பின்னர்தான், ஜப்பானின் உதவியை நாமே விரும்பினோம். தாயகத்திலிருந்து எதிர்பார்க்கும் உதவி எவ்வளவு அதிகமாகப் பெருகுகிறதோ, அவ்வளவுக்கு ஜப்பானியரிடமிருந்து எதிர்பார்க்கும் உதவி குறையுமென்று நம்புகிறேன். “வெள்ளையனே வெளியேறு” என்ற தங்கள் தீர்மானத்துக்கு பிரிட்டிஷ் சர்க்கார் மரியாதை செய்தாலும் சரி, வேறெந்த வகையிலேனும் தாய்நாட்டார் தங்கள் முயற்சியின்மீது சுதந்திரத்தைப் பெற்றுவிட்டாலும் சரி, என்னைவிட அதிகச் சந்தோஷத்தையடைபவர்கள் வேறெவருமே இருக்க முடியாது. ஆயுதம் தாங்கிய போரை நடத்தாமல் வேறெந்த வகையிலும் நமது உரிமையைச் சாதிக்க முடியாதென்ற காரணத்தாலேயே தான், இந்த வழியில் நான் இறங்கவேண்டுவது தவிர்க்க முடியாததாயிற்று. மகாத்மாஜி! எனது வேண்டுகோளை முடிக்குமுன், இந்த யுத்தத்தின் முடிவு எப்படி இருக்குமென்பது பற்றிய ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். வெற்றி அவர்களுக்கே என்ற நம்பிக்கையைப் பரப்பும் பொருட்டு, நம் விரோதிகள் கையாண்டுவரும் பிரச்சாரத்தின் தன்மை எனக்கு நன்றாகத் தெரியும். அந்தப் பிரச்சாரங்களால் நம் தேசத்தார் ஏமாந்துவிடவோ, ஆங்கிலேய – அமெரிக்கர்கள்தான் வெற்றியடைவ ரென்ற தவறான எண்ணத்தின்மீது பிரிட்ட னுடன் சமாதானத்தை நாடவோ மாட்டார்களென்று நம்புகிறேன். திறந்த கண்களுடன் யுத்தகால உலகத்தைச் சுற்றி வந்து விட்டேன். இந்தியாவிலும், பர்மிய இந்திய எல்லையிலும் நம் எதிரிகள் ஆதரவற்றப் பலங்குன்றியிருக்கின்றனர். ஆதலால், நமது சுய பலத்தைக் கணக்கிடும் நான், இறுதி வெற்றி விரோதிகளின் பலத்தைக் குறைத்துப் பேசும் அளவுக்கு, நான் கடுமையானதுமான போர் காத்து நிற்பதை அறிவேன். ஆனால், அது எவ்வளவு நீண்டதாகவும் கடுமையானதாகவும் இருந்தாலும், இறுதி வெற்றி நமக்குத்தான் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் கடைசிச் சுதந்திரப் போர் தொடங்கப்பட்டு விட்டது. ஆஸாத் ஹிந்த் ராணுவத்தினர் இந்திய மண்ணில் வீரமாகப் போரிட்டு கொண்டிருக்கின்றனர். எல்லாவித இடர்களையும் துன்பங்களையும் துச்சமாகத் தள்ளிவிட்டு, மெதுவாக – ஆனால் உறுதியாக அவ் வீரர்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆயுதம் தாங்கியப் போர், கடைசி ஆங்கிலேயனை இந்திய மண்ணிலிருந்து தூக்கியெறிந்து விட்டு, டில்லி வைசிராய் மாளிகையில் நம் தேசீய மூவர்ணக்கொடியைப் பெருமைபெறப் பறக்க விடும் வரை நீடிக்கும். எங்கள் தேசத்தின் தந்தையே! இந்திய விடுதலைக்காக நடைபெறும் இந்தப் புண்ணியப் போரிலே வெற்றிபெற, தங்கள் அன்பு கனிந்த ஆசீர்வாதத்தை அருளுமாறு வேண்டுகின்றோம். ஜேய் ஹிந்த்! மகாத்மாஜியின் மணிமாலை “சுபாஷ் போஸ் மீது நான் கொண்டிருந்த உறவு, மிகச் சிறந்ததும் பரிசுத்தமானதுமாகும். அவரது தியாக சக்தியை வெகுநாட்களுக்கு முன்பே உணர்ந்திருக்கிறேன். ஆனால், லட்சியத்தில் பலம் திரட்டும் திறமையும், போர்முனையில் துணிந்து நிற்கும் வீரமும் அவருக்கு எல்லையற்றிருந்தன வென்பதை, இந்தியாவிலிருந்து அவர் வெளியேறிய பின்னர்தான் தெள்ளத் தெளியத் தெரிந்து கெண்டேன்.” – காந்திஜி 15.1.47 7. ஐரோப்பாவைப் பாருங்கள்! (இரங்கூனிலிருந்து 8.7.44இல் வானொலி மூலம், நேதாஜி இந்தியர்களுக்குத் தெளிவு படுத்தித் தந்த சாசனம்) நண்பர்களே! தயாகத்தார்களே! தற்கால ஐரோப்பாவின் நிலைமை, இந்தியாவுக்கும் சுதந்திரப் போருக்குமுள்ள விசேடக் குறிப்புகள், ஆகியன பற்றி இன்று உங்களிடம் பேசப் போகிறேன். நான் சொல்வதெல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்களேயன்றி வேறெவருடையனவு மன்று. என்னால் அளவிடப் பட்டுக் கூறப்படும் உண்மை நிலை களை, நீங்களே விரிவுபடுத்தி உண்மையைத் தெரிந்துகொள்ள உதவுமென நம்புகிறேன். அரசியல் அல்லது ராணுவம் இவைகளில் ஏதேனும் ஒன்றுபற்றி ஆராய்ச்சி செய்தால், நமக்குத் தெரியாமலே சாதகமான எண்ணங்கள் தோன்றி ஆபத்தான நிலைமைக்கு வந்து விடுகிறோம். தனியொரு வனுடைய ஆசையின் விளைவாக வெளிவரும் தீர்ப்பு உண்மையாக இருக்கவும் முடியாது. ஆனால் ஐரோப்பிய நிலைமைபற்றிய எனது ஆராய்ச்சியில், அத்தகைய ஆசையின் விளைவுகளுக்கு நான் சிறிதும் இடம் கொடுக்கவில்லை. ஐரோப்பாவின் நிலைமையிலிருந்து இந்தியாவின் நிலைமை, சுதந்திர விஷயத்தில் மாறுபட்டதேயென்பதை உணர்ந்திருக்கி றேன். ஐரோப்பாவில் என்ன நேர்ந்தாலும், இந்தியர்கள் அவர்களது சுதந்திரத்தைப் பெற முடியும்; பெற்றே தீர்வார்கள் என்பது எனது தீர்ப்பு. சென்ற உலக மகாயுத்தத்தில் நேசநாடுகள் வெற்றி பெற்றதும் ஜெர்மனி தோல்வியுற்றதும் ஏன்? எப்படி? என்பதைப் பற்றிய உண்மைகளே இப்போதைய ஆராய்ச்சிக்கு அஸ்தி வாரம். அந்த யுத்த முடிவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள்: சென்ற யுத்தத்தின் போது, பிரஞ்சு மக்கள் தங்கள் சொந்த நலனுக்காக தம் சொந்த வீடுவாசலுக்காகவும் போரிடுவதாக உணர்ச்சி பெற்றிருந்தார்கள்; சிறப்பாக தங்களுக்கு உரிமையான அல்ஸாக் லாரெய்ன் பிரதேசத்தைத் திரும்ப அடைந்தே தீர வேண்டுமென்றும் உறுதி கொண்டிருந்தார்கள். ஆகவே, “வெற்றி அல்லது மரணம்” என்ற உணர்ச்சி மேலீட்டால் ஒத்து நின்று போரிட்டனர். ஆனால் ஜெர்மன் இராணுவமோ, சிறந்த பயிற்சியும் பலமும் முஸ்தீபுகளும் பெற்று இயந்திரம் போல் போரிட்டதெனினும், பிரஞ்சு ராணுவத்திடமிருந்த உணர்ச்சித் துடிப்பு அதனிடம் மிகமிகக் குறைவு. இந்த உண்மை, நேசதேசத் தலைமைத் தளபதி மார்ஷல் போக் என்பாரின் வாழ்க்கைச் சரித்திரத்தைப் படித்தால் நன்கு புலனாகும். ஜெர்மனி நீண்டகால தாக்குப்பிடிக்க முடியாதபடி அவ்வளவு மோசமான உள்நாட்டுப் பொருளாதாரம் சீர்கேடுற்றதும் மற்றொரு காரணம். இந்த யுத்தத்தின் நிலைமை முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இன்றைய ஜெர்மனி, தனது தவிர்க்கமுடியாத தேவைகளுக் காகவும், நெருக்கடியான குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காகவும் போரிடுகின்றது. யுத்தம் தொடங்கு முன்பே ஜெர்மனியர்கள் அனைவரும் உணர்ச்சியில் பயிற்சி பெற்றுவிட்டனர். ‘இந்த யுத்தத்தில் ஜெர்மனி தோற்றால், நிச்சயமாக ஜெர்மன் சமூகமே அழிந்துவிடும்’ என்ற உணர்ச்சி ஒவ்வொரு ஜெர்மானியன் உள்ளத்திலும் பாய்ந்து விட்டது. சுருங்கக் கூறினால், சென்ற யுத்தத்தின்போது நேசநாட்டினர், குறிப்பாக பிரஞ்சு தேசத்தார் கொண்டிருந்த ஆத்மீக உணர்ச்சிப் பெருக்கை இப்பொழுது ஜெர்மனியர்கள் தங்களுக்கு உரிமையாக்கி விட்டார்கள். பழைய அனுபவத்தின் காரணமாக, உள்நாடுக்குத் தேவையான எல்லாவற்றையும் நான்கு வருடத் திட்டம் மூலம் சேகரித்த பின்னர்தான் யுத்தத்துக்கு அது தயாராயிற்று. தவிர, ஜெர்மனி யானது, ருஷ்யா நீங்கலாக ஐரோப்பா முழுமையையும் கட்டுப்பாட்டின்மூலம் தன் வசப்படுத்திக்கொண்டு, யுத்தக் காலப் பொருளாதாரத்தையும் பலப்படுத்திக் கொண்டிருக் கிறது. ஆகையால், நீண்ட கால யுத்தத்தையும் கப்பல் தடைகளையும் தாங்குவதற்கு சக்தி பெற்றுவிட்டது. சென்ற யுத்தத்தில் பிரஞ்சு தேசமும் இத்தாலி தேசமும் ஜெர்மனியை எதிர்த்துப் போரிட்டன. பிரஞ்சு தேசம் தனது பூரண சக்தியையும் ஜெர்மனிக்கு எதிராக உபயோகித்தது குறிப்பிடத்தக்கது. பிரஞ்சு, இத்தாலியுட்பட ஐரோப்பாவின் பெரும் பாகமும் ஜெர்மன் கட்டுப்பாட்டுக்கும் அதிகாரத்துக் கும் வெளியே இருந்தன. இப்பொழுதோ, ருஷ்யா நீங்கலாக ஐரோப்பா முழுதுமே ஜெர்மன் ஆதிக்கத்தில் இருக்கிறது. ருஷ்யப் பிரச்னையொன்று தான் ஜெர்மனியை எதிர்நோக்கி யுள்ளது. நேச நாட்டார் இத்தாலியிலும் பிரான்ஸிலும் நுழைந்தது ஜெர்மானியருக்குத் தொந்தரவாக இருந்தபோதும், புதியதோர் விறுவிறுப்புக் காணப்படுகிறது. அதனால் ஜெர்மானியரிடம் பிரிக்க முடியாத கட்டுப்பாடு உரம் பெற்று விட்டது. தங்கள் நாட்டுக்குள்ளேயே போரை நடத்த இத்தாலியும் பிரான்ஸும் மனப்பூர்வமான ஆதரவு தரவில்லை. நேச நாட்டார், இத்தாலிய மன்னரையும் மாஜி பிரதமர் படாக்ளியோவையும் இரகசியமாகத் தங்கள்பால் அணைத்துக் கொண்டிருப்பது, இத்தாலிய மக்களிடையே வெறுப்பை உண்டாக்கியிருக்கிறது. அதைப் போலவே தான் பிரஞ்சு மக்களும் வெறுப்படைந்திருக்கின்றனர். இந்த எனது அறிக்கையை யாரேனும் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், அவர்கள் பிரான்ஸிலிருந்து வெளிவரும் அமெரிக்கச் செய்திகளை மட்டும் படிப்பவர்களாகத்தான் இருக்க முடியும். எப்படியும் பிரிட்டிஷார் தான் இறுதி வெற்றி பெறுவார் களென்றும், அவர்கள்தான் யோகசாலிகள் என்றும் சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனரென்பது எனக்குத் தெரியும். குறுகிய மனோபாவமுடையவர்கள்தான் அப்படி நினைக்க முடியும். சரித்திரம், பெரும் சக்தி கொண்டது; அதில் காணப்பெறும் நிகழ்ச்சிகளெல்லாம் எதிர்பாராதவை யல்ல. ஆகவே ஐரோப்பாவில் இன்று நடப்பவை எந்த அஸ்திவாரத் தின் மீது நடக்கின்றன? எந்தவிதமான முடிவுக்கு வரும்? என்பவைகளை நாம் கண்டுகொள்ள வேண்டும். 1939–ஆம் ஆண்டு முதல் 1942 வரையுள்ள ஐரோப்பாவின் நிலைமையைச் சொல்லிவிட்டு, இப்பொழுதுள்ள ஐரோப்பா வின் விமர்சனத்துக்கு வருகிறேன். 1940, 1941, 1942 இவ்வாண்டு களில் பிரிட்டிஷாருக்கு மிகவும் பயங்கரமான கட்டமிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். பிரிட்டன் ஒவ்வொரு யுத்த முனையிலும், தோல்விமேல் தோல்வி கண்டு துன்பப்பட்டது ஒருபுறமிருக்க, அவர்களது தேச மக்களின் உற்சாகத்தைக் காப்பாற்ற எல்லாவகையிலும் பெரும் முயற்சியும் எடுக்க வேண்டியதாயிற்று. அப்பொழுது, தினந்தோறும் அமெரிக்கா வின் உற்பத்திச் சாதனங்களை வானளாவப் புகழ்ந்து பேசினார் கள்; அமெரிக்கர்களால் கிடைக்கப்பெறும் பொருளாதாரப் பெருக்கத்தை வியந்து கூறி, வெற்றி நிச்சயமென்று நல்லெண் ணத்தைப் பரப்ப முயன்றார்கள். இந்தியாவுக்கென அவர்கள் செய்த பிரச்சாரம் என்ன? யுத்தத்தின் பின்னர், இந்தியாவைப் புனருத்தாரணம் செய்யப் போவதாகவும், அதற்காக சபைகளையும் சேமிப்பு நிதிகளையும் தயாரித்து வருவதாகவும் ஓயாமல் பிரச்சாரம் செய்து, பிரிட்டனின் வெற்றியில் இந்தியர் களின் கவனத்தைத் திருப்ப முழுக் கவனம் செலுத்தினர். ஆனால் அமெரிக்கா யுத்தத்தில் குதித்த நேரம் வரை ஆங்கிலேயரின் பிரச்சாரமெல்லாம் பலன் தரவில்லை. இந்நேரத்தில், நேச நாட்டினருக்கு ஐரோப்பாவின் நிலைமை சிறிது சாதகமாக இருக்கிறது. அந்தச் சிறிது சாதகங்களையும் கவனமாக ஆராய்ந்தால், அந்த வெற்றிகளுக்குப் பெரும் பான்மையான காரணம் அமெரிக்காவின் உதவிதான் என்பது விளங்கும். இன்று நேச நாட்டாரிடம் காணப்பெறும் உணர்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர்களிடமில்லை. இன்றைய உணர்ச்சிக்குக் காரணம் அமெரிக்காதான். ஆயினும் பிரிட்டனின் தலைமை இன்னும் ஏழ்மையாகத்தானிருக்கிறது. அதனால்தான் அமெரிக்க ஜனாதிபதியிடம் பிரிட்டிஷ் பிரதமர் சரணாகதியடைந்திருக்கிறார். அமெரிக்கத் தளபதியின் கீழ் ஒன்றுபட்டுப் போரிடவும், மதிப்பிலா பிரிட்டிஷ் பிரதேசங்களை அமெரிக்காவுக்குக் கொடுத்து அதிகச் சலுகை காட்டவும் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஏகாதிபத்தியத்தின் வைரத்தூண் வின்ஸ்டன் சர்ச்சில், “அமெரிக்க சகாப்தம்” என்று அமெரிக்கர்கள் கூறுவதையும், சர்ச்சிலின் சகாக்களும் அன்புக்குரிய தாசர்களும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளு கிறார்கள். அமெரிக்காவின் சக்தி முதல்தரமாகயிருப்பதால் அமெரிக்கா விரும்பும் பிரதேசங்களையெல்லாம் ஒப்படைத்து விட்டு, அமெரிக்காவின் தயவில் தங்கள் ஏகாதிபத்தியத்துக்கு இடம் தேடிக்கொள்ள, பிரிட்டிஷார் தயாராக இருக்கிறார் களென்பது கண்கூடு. இந்தக் காரணத்தால்தான் இந்தியாவின் சுதந்திரத்தை பிரிட்டன் மறுப்பதும், இந்தியச் சுதந்திரப் பிரச்சினைக்கு பிரிட்டனை வற்புறுத்த அமெரிக்கா பின்வாங்குவதும். எனவே யுத்தம் ஒழிந்ததும், இப்பொழுது தனக்கு நேர்ந்துள்ள நஷ்டங்களை ஈடு செய்ய, இந்தியாவைக் கடுமையாக – மிருகத்தனமாகக் கசக்கிப் பிழிவதென பிரிட்டன் திட்டமிட்டிருக்கிறது. எப்படியும் யுத்தம் முடியும்போது, இந்திய தேசீய இயக்கத்துக்குச் சமாதி கட்டிவிடுவதென லண்டனிலே திட்டங்கள் தயாராகிவிட்டன. அமெரிக்காவின் பரிபூரண உதவியும் ஒத்துழைப்பும் கொண்ட நேச நாட்டார், 1942 நவம்பரில் வட ஆப்ரிக்காவிலும் கடைசியாக இத்தாலியிலும் வெற்றி பெற முடிந்தது. அமெரிக்க அரசியல் தந்திரம் மட்டும் இல்லாது போனால், நேச நாட்டாருக்குப் பிரஞ்சு அட்மிரல் டார்லன் கட்சியின் உதவி கிடைத்திராவிட்டால், வட ஆப்பிரிக்கப் போரில் நேச நாட்டார் வெற்றியடைவதென்பது சந்தேகந்தான். இருந்தாலும், அட்மிரல் டார்லன் கட்சியாருக்கு எதிராக, பிரிட்டிஷார் இன்னும் ஜெனரல் டீகாலேயைப் புகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றனர். அது சம்பந்தமாக பிரிட்டனுக்கும் அமெரிக்கா வுக்கும் எவ்வித ஒப்பந்தமும் ஏற்படவில்லை. பிரிட்டனின் முயற்சியால் அட்மிரல் டார்லன், ஜெனரல் ஜிராட் ஆகியோர் களுக்கு எதிராக, ஜெனரல் டீகாலேயிக்கு வெற்றி கிடைத்திருக் கிறது. ஆங்கில – அமெரிக்க ஒப்பந்த மின்மையால், பிரஞ்சு வட ஆப்ரிக்காவில் ருஷ்யாவுக்கு வெற்றி கிடைத்து, அதன் ஆதிக்கமும் ஓங்கியிருக்கிறது. பிரான்ஸின் விடுதலை யுத்தம் என்று சொல்லப்படுகிறதேயாயினும், ஜெனரல் டீகாலேயிக்கு பிரான்ஸில் எவ்விதப் பதவியும் கொடுப்பதற்கு நேச தேசத்தளபதியான அமெரிக்க ஜெனரல் ஈசன் ஹோவர் மனமொப்பவில்லை. பிரஞ்சு நாட்டிலே ஏதேனும் ஒரு பாகத்தை நேசத் துரப்புகள் கைப்பற்றினால்கூட, அப்பகுதி டீகாலே வசம் ஒப்புவிக்கப்படாமல் நேச நாட்டு ராணுவத்தின் வசமேதானிருக்கும், பிரிட்டன், அமெரிக்கா, ருஷ்யா இம் மூன்று தேசத்துக்கு மிடையே ஐரோப்பியப் பிரச்னைமீது எவ்வித ஒப்பந்தமும் ஏற்படவில்லையென்பதும் உலக முழுவம் தெரியும். இம்மூன்று சர்க்கார்களுக்கும் உள்ளூற ஒற்றுமையுணர்ச்சியோ ஒன்றுபட்ட கருத்தோ இல்லையெனினும், பொது விரோதத் தின் காரணமாக நேசம் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரி நேசம், யுத்தத்தின் வெற்றியையோ ஏற்படுகின்ற பலனையோ உரிமையாக்காது. சென்ற மகா யுத்தத்தில் 1918–இல் பிரிட்டன் – அமெரிக்கா – பெல்ஜியம் – பிரான்சு ஆகியன அன்றைய நேசதேசத் தலைமைத் தளபதி மார்ஷல் போக் தலைமையில் ஒன்றுபட்டிருந்த நிலைமைக்கும் இன்றைய நேசநாட்டாரின் நிலைமைக்கும் மிகுந்த வேற்றுமை காணப்படுகின்றது. ஐரோப்பாவின் நிலப்பரப்பில் நேசநாட்டினர் பிரவேசிப்பதால் வெற்றி வந்துவிட்டதெனக் கூறமுடியாது. ஏனெனில் ருஷ்யாவிலே புகுந்து மாஸ்கோவைக் கைப்பற்றும் பொருட்டு திட்டமிட்ட நெப்போலியனின் வெற்றியைப் போல் அவ்வளவு போலியானதேயாகும் அந்த வெற்றி. ஜெர்மானியர்கள் இங்கிலாந்திலே பிரவேசித்திருந்தால், நான் நிச்சயமாகச் சொல்வேன் – பிரிட்டிஷார், சிங்கம் போல் போரிட்டிருப்பார் களென்று. ஆனால் இப்பொழுது அவர்கள் தேசத்துக்கு வெளியே தொலை தூரத்தில் யுத்தம் நடப்பதால், அவர்களால் அவ்வளவு ஆண்மையுடன் சண்டை செய்யவும் முடியாது; செய்யவும் மாட்டார்கள். ராணுவம் என்பது உயிரற்ற இயந்திரமல்ல; மனிதப் பிராணிகளைக் கொண்டதுதான் ராணுவம். அம் மனிதர்களுக்கும் மனித உணர்ச்சிகள் உண்டு; எங்கெங்கே எப்படியெப்படிப் போரிட வேண்டுமென்பதும் அவர்களுக்குத் தெரியும். அனுபவமில்லாத இளம் வயதுடைய நெப்போலியன் தலைமையில், பயிற்சியற்ற பிரஞ்சு ராணுவம் திறமைiயாகப் போரிட்டு ஐரோப்பா முழுதிலும் பெரும் வெற்றியைச் சம்பாதித்து. உலக எதிர்ப்பிலிருந்து புரட்சியையும் அதன் பலனையும் பாதுகாக்கும் பொருட்டு, பிரான்ஸ் தேசம் முழுமையுமே போரிட்டது. ஐரோப்பாவை வெற்றிகண்டு அதன் சக்கிரவர்த்தியாக நெப்போலியன் விளங்கியும், அதே ராணுவம் யுத்தத்தால் அனுபவமிருந்திருந்தும் எதிரிகளல் இறுதியில் முறியடிக்கப்பட்டது. முதன்முதலில் அடைந்த வெற்றி புனிதமானது, ஏனெனில் வாலிப நெப்போலியன் தலைமையில் அனுபவமில்லாத பிரஞ்சு ராணுவம் நடத்திய போர், அவர்களது சொந்த நாட்டின் நலனைப் பற்றியதாகும். பின்னால் நடத்தியதும் புனிதப் போரல்ல; அப்பொழுது ஐரோப்பாவையே ஆக்ரமிக்கும் நோக்கம் புகுந்துவிட்டது. ஆகவே சக்ரவர்த்தி நெப்போலியன் தலைமையிலிருந்த பிரஞ்சு ராணுவம், உள்ளுணர்ச்சியையும் யுத்த நோக்கத்தையும் இழக்க நேர்ந்ததன் காரணமாக, முழுத்தோல்வியை அடைந்தது. இதே உதாரணம், ஆங்கிலேய அமெரிக்கர்களுக்கும் பொருந்தும், இவர்களுக்குப் புனிதமான நோக்கம் எதுவும் கிடையாது. உலகத்தையே ஆக்ரமித்துவிட வேண்டுமென்றும் போரிடுகிறார்கள். ஆதலால், இந்தப் போரை உள்ளுணர்ச்சி யுடன் நீண்டநாள் நீடித்து நடத்த முடியாது. இப்பொழுதுகூட பிரிட்டனின் சக்தி மிகமிகக் கேவலமாக இருக்கின்றதென முன்பே தெரிவித்துவிட்டேன். ஆகவே, ஐரோப்பாவில் அமெரிக்காவின் ராணுவ பலம் காலியாகிறது வரை, நேச நாட்டினர் வீரமுடன் போரிடுவார்கள். எவ்வளவு காலத்துக்குத் தான் அப்படி நீடித்து நிற்கமுடியும்? அதிகார பூர்வமான புள்ளி விபரங்களின்படி, அமெரிக்காவுக்கு சென்ற யுத்தத்தை விட இந்த யுத்தத்தில் நஷ்டம் அதிகமாகிவிட்டது. அமெரிக்கா ஓர் பெரும் ஜனத்தொகை கொண்ட நாடுதான். ஆனால் அமெரிக்கர், போர்க்குணம் படைத்த சமூகத்தினரல்ல வென்பதை நாம் மறந்துவிடக் கூடாது. விவசாயிகளையும் தொழிலாளிகளையும் கொண்ட சமூகமே அது. ஐரோப்பிய யுத்தம் அமெரிக்காவுக்கு வெகு தூரத்தில் நடைபெறுவதால், அமெரிக்கா முழுமையும் அது அபிமானம் கொள்ளும்படி செய்யவில்லை. இந்த ஐரோப்பிய யுத்தத்துக்கு அதிக ஆதரவு தருபவர்கள் ஜனாதிபதி ரூஸ்வெல்டின் சிஷ்ய கோடிகளான யூதர்களே யாவர். பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரக் கனவு காண்கிறார்கள். செல்வாக்குள்ள மற்றோர் தனிக் கட்சியாரும் அங்கு இருக்கின்றனர். அவர்களுக்கு ஐரோப்பிய யுத்தத்தில் திருப்தி யில்லா விட்டாலும், பசிபிக் போரில் அதிகக்கவனம் செலுத்து கின்றனர். அதனால் அமெரிக்காவின் இடைவிடாத முயற்சி உறுதி பெற்றிருக்கிறது. அதன் காணரமாக ஐரோப்பியப் போரை விட்டுவிட்டு பசிபிக் போரில் முழுக் கவனத்தையும் செலுத்த நேரிடலாம். அப்படி நேர்ந்தால், அமெரிக்காவின் யுத்த நஷ்டம் உச்சநிலையடைந்துவிடும். அப்பொழுது முணு முணுப்புத் தோன்றிவிடும்; சக்தியின்மையும் புகுந்து விடும். ராணுவத்துறையில் நோக்கினால், யுத்த முனைத்தொடர்புகள் மிகவும் விரிவடைந்து விடும். அதனால் ராணுவப் பிரச்னை களும் கஷ்டங்களும் அதிகரித்து விடுவதோடு அமெரிக்கரின் தளர்ச்சியையும் அதிகப்படுத்திவிடும். அமெரிக்கா என்றைக்குத் தனது தளர்ச்சியைக் காட்டுகிறதோ அன்றே அவர்களது முடிவும் தொடங்கிவிடும். அது மட்டுமல்ல, ஆங்கிலேய அமெரிக்காவின் ஐரோப்பிய வீழ்ச்சியும் புலர்ந்துவிடும். சோவியத் ருஷ்யா பற்றிய கேள்வி ஒன்றுதான் இப்பொழுது பாக்கி. ஜெர்மனிக்குள்ளே புகுந்து அதன் அரசியல் கொள்கைகளை மாற்றும் திறமை ருஷ்யாவுக்கு இருக்கிறதா? நேச தேசப் பிரச்சாரர்களின் கூற்றுப்படி, பெர்லினை ருஷ்யர்களால் நெருங்கத்தான் இயலுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது ருஷ்யாவின் யுத்த உற்பத்தியையும் யுத்த நஷ்டத்தையும் நாம் கவனிக்கவேண்டும். சோவியத்துக்கு உயிர் நஷ்டமும் பொருள் நஷ்டமும் மிக அதிகமென்பதை எவரும் மறுக்க முடியாது. அவர்களது முயற்சிக்கும் ஓர் எல்லையுண்டு. எதிர்காலத்தையும் அவர்கள் அளவிடுவார்கள். மார்ஷல் ஸ்டாலினின் சிறந்த பிரச்சார சக்தி, எந்தவித நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் யுத்தத்தை நீடித்து நடத்துவதற்கான மகத்தான பலத்தையும் உணர்ச்சி யையும் ருஷ்ய மக்களுக்கு அளித்திருக்கிறது. அவர்கள் தங்கள் தந்தை நாட்டுக்காகவும் தங்கள் சொந்த சொத்துச் சுகங்களுக் காகவும் மட்டுமே போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். ருஷ்யா வுக்கு வெளியே அவ்வளவு உறுதியுடன் போரிட அவர்களுக்கு மனம் வராது. ஸ்டாலின் கிரேடில் ஜெர்மனியர்களுக்கு நேர்ந்ததுதான் ருஷ்யாவுக்கு வெளியே ருஷ்யர்களுக்கும் நேரும். ஆகவே, ருஷ்யர்கள் அவர்களது 1939ஆம் வருட எல்லைக்கு அப்பால் வெல்வதற்கு, சோவியத் படைகளால் இயலுமென்று என்னால் நம்பமுடியவில்லை. இன்னொரு எண்ணமும் தோன்றுகிறது. பிரிட்டன் – அமெரிக்கா – ருஷ்யா இம் மூன்றுக்குமிடையே எந்தவித ஒப்பந்தமும் ஏற்படாததால், நேச தேசங்களின் வெற்றி ஐரோப்பாவின் தலைவிதியை எப்படி நிர்ணயிக்கும் என்பது எவருக்கும் தெரியாது. பெரும் பகுதி ஐரோப்பாவில் ஆங்கிலேய அமெரிக்கரின் லட்சியமும் சோவியத்தின் லட்சியமும் முரண்பட்டிருக்கின்றன. மற்றொரு ருசிகரமான விஷயம். ஐரோப்பாவில் தங்கள் பிரவேசத்தைப்பற்றி ஆங்கிலேய அமெரிக்கர்கள் உரத்த குரலில் பிரமாதமாக விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில், “போர்முனையை அகலப்படுத்தி பிரான்ஸுக் குள்ளே ஆள் பலத்தையும் சாதன பலத்தையும் அள்ளியிறைக்க ஆங்கிலேய அமெரிக்கர்கள் பின்வாங்கினால், ஜெர்மன் ராணுவத்தால் ஒருநாள் அழிவு நேர்ந்தே தீரும்” என்று, இரண்டாம் போர்முனை குறித்து சோவியத் அயல்நாட்டுக் காரியாலய அறிக்கை ஆங்கிலேய அமெரிக்கர்களை எச்சரிக்கையும் செய்கிறது. இன்னொரு விஷயத்தையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும், உதாரணமாக பிரஞ்சு வட ஆப்ரிக்கா – ஸிரியா – எகிப்து ஈரான் ஆகிய இடங்கள்பற்றி சோவியத்துக்கிருக்கும் எதிர்ப்பு மனப்பான்மை, ஆங்கிலேய அமெரிக்கர்களுக்குப் பிடிக்கவில்லை. தவிர போலந்து – பின்லாந்து – பால்கன் ஆகிய இடங்களில் சோவியத் நடத்தும் போருக்கு ஆதரவு கொடுக்க, ஆங்கிலேய அமெரிக்கர்களுக்கு விருப்பமில்லை. ஆதலால் 1912–ஆம் வருடத் துருக்கி யுத்தத்தில் பால்கன் நாடுகளுக்கு நேர்ந்த நிலைமை ஒருகால் நேச நாடுகளுக்கும் நேரலாம். அப்பொழுது, 1939–ஆம் வருடத்திய ருஷ்ய எல்லையைத் தாண்டி சோவியத் முன்னேறத் தொடங்கினால், ஆங்கிலேய அமெரிக்கருக்கும் சோவியத் ருஷ்யருக்குமிடையே வெறுப்பும் அவநம்பிக்கையும் எதிர்பாராத வகையில் தலைவிரித்தாடும். அதோடு பெருங் குழப்பமும் ஏற்படும். துருக்கி பற்றிய மற்றொரு கேள்வியும் எழுகிறது. துருக்கி தனது பலம் முழுவதையும் நேச நாட்டுக்கு அர்ப்பணிக்கப் போவதாக, பிரிட்டிஷ் பிரச்சாரகர்கள் உலகத்தை ஏமாற்ற முயல்கின்றனர். இந்திய முஸ்லிம்களையும் பிரிட்டிஷ் அபிமானிகளாக்கி விடலாமென்பது இந்தப் பிரசாரகர்களின் நினைப்பு. நவீனத் துருக்கியைத் தெரிந்து கொண்டவன் எவனும் இந்தப் பிரச்சாரங்களை நம்பவே மாட்டான். துருக்கியிலே நேசதேச அபிமான வட்டாரங்கள் சில இருக்கின்றன. துருக்கியின் அங்காரா ஒலிபரப்பி, நேச தேச அபிமானத்துடன் முழங்குகின்றது; எனினும் இந்த யுத்தத்தில் எந்தக் கட்சியுட னாவது துருக்கி சேருமா வென்பதற்கு, எவ்வித ஆதாரமோ காரணமோ கிடையாது. அப்படியானால் துருக்கியின் நிலைமை என்ன? நடுநிலைமையாகவேதான் இருந்துவரும். ஆரம்பத்தில் நான் கூறியதுபோல், நம் எதிரிப் பிரச்சார கர்கள் அமெரிக்காவின் யுத்த சாசன உற்பத்தி பற்றிப் பிரம்மாதமாகப் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். நேச தேசத்தார்களின் மனோ உறுதியைப் பலப்டுத்துவதற்காகவே தான் அந்தப் பிரச்சாரம். ஆனால் அமெரிக்காவின் யுத்த உற்பத்திப் பெருக்கத்துக்கும் ஓர் எல்லையுண்டென்பதை நாம் மறந்துவிடலாகாது. அமெரிக்காவின் உற்பத்தி ஏற்கெனவே உச்சநிலையடைந்து விட்டதால் இனிமேல் அது குறைவு படுமேயன்றி, மேலும் பெருகுவதற்கு இடமில்லை. ஜெர்மனியை எடுத்துக் கொண்டால், விமானத் தாக்குதல்களின் காரணமாக அதன் உற்பத்தியில் எவ்வித தளர்ச்சியும் அங்கு காணப்பட வில்லை; பல வகைகளில் முன்னேறியேயிருக்கிறது. ஆகையால், யுத்ததுக்குத் தேவையான எல்லாவற்றையும் உற்பத்தி செய்து கொள்ளும் வசதியை, ஜெர்மனி பெற்றிருக்கிறது. இப்பொழுது ஐரோப்பிய நிலைமையைச் சுருக்கமாக அளவிட்டுக் கூறுகிறேன்:– கிழக்கு யுத்த முனையில் ருஷ்யர் களைத் தோற்கடிக்க ஜெர்மானியர்களால் முடியவில்லை; அதைப் போலவே ஜெர்மானியர்களைத் தோற்கடிக்க ருஷ்யர் களாலும் இயலவில்லை. சிறிது காலம் பொறுத்து மேற்கு ஐரோப்பாவில் ஜெர்மானியருக்குச் சாதகமான நிலைமை ஏற்படலாம். அப்பொழுது தான் பிரான்ஸிலிருந்து ஆங்கிலேய அமெரிக்கரைப் பின்னுக்குத் தள்ள ஜெர்மானியரால் முடியும். இத்தாலியின் தீபகற்பத்தைக் கடந்து வடஇத்தாலியில் நுழையும் போதுதான், ஜெர்மானியர்கள் தங்கள் முழுப்பாது காப்பையும் அரண் செய்வார்கள். அந்த இடத்திலிருந்து ஜெர்மானியர்களை அப்புறப்படுத்த நேச தேசத்தாரால் முடியாது; அவ்வளவு மூர்க்கமான ஜெர்மன் எதிர்ப்பை அவர்கள் காண்பார்கள். இத்தாலியிலும், பிரான்ஸிலும் உள்ள போர் முனைகளை எடுத்துக் கொண்டால், நேசதேசத்தாரின் ஆத்மீக பலம் அமிழ்ந்து போவதுவரை ஜெர்மானியர்களின் பிடிவாத ஆவேசம் தணியாதென்பது நிச்சயம். அன்றி, ஜெர்மானியரின் ஆத்மீகப் பலம் சிதறுண்டு விடுமென்று என்னால் நம்ப முடியவில்லை. ஆரம்பத்தில் ஜெர்மனிக்கு நேர்ந்த விமானத் தாக்குதல் ஜெர்மானியர்களின் பறக்கும் குண்டு விமானங்களால் முறியடிக்கப்பட்டுக் குறைவுபடவே, விமான பலத்தில் முன்னேறி விட்டனர் ஜெர்மானியர்கள். ஜெர்மானியர்களின் ஆத்ம பலத்துக்கும் வலிமைக்கும் இது வொன்றே போதிய சாட்சியாகும். அடுத்து வரும் சில மாதங்கள் ஜெர்மானியருக்கு ஆபத்து நிறைந்த நெருக்கடியையே கொடுக்கும். ஆனால் வெற்றியின் எல்லைக்கு பழையபடி ஜெர்மனி திரும்பிவிடும். இது என்னுடைய தீர்ப்பு. சென்ற யுத்தச் சமயம் நேர்ந்தது போல் இப்பொழுதும் ஜெர்மானியரின் ஆத்ம பலம் குழப்பமடைந்த தால் தான், எனது தீர்ப்பு பிரயோசனமற்றதாகும். ஆனால் அவ்வித நிகழ்ச்சிக்கான எவ்வித அறிகுறியையும் என்னால் காண முடியவில்லை. ருஷ்யாவில் மார்ஷல் ஸ்டாலின் செய்ததைப் போலவே, ஜெர்மனியிலும் உள்நாட்டு எதிர்ப்பு சக்திகள் அனைத்iயும் சர்வாதிகாரி ஹிட்லர் முன்கூட்டியே ஒழித்துக் கட்டி பாதுகாப்பை அமைத்துள்ளார். இந்த ஐரோப்பிய யுத்தம் வெறும் ஆயுத பல யுத்தமல்ல; உணர்ச்சிப் பெருக்கும் சமநிலை கொண்டிருக்கிறது. உணர்ச்சிப் பெருக்கின் பலம் எவரிடம் அதிகமாகயிருக்கிறதோ அவர் களுக்குத்தான் வெற்றி. எதிரிகளின் சக்தியெல்லாம் இந்த நீண்ட ஐரோப்பியப் போரில் ஒருங்கு திரண்டு கட்டுப்பட்டிருக்கும் இந்த நேரம், இந்தியர்களுக்கு கிடைத்தற்கரிய உதவியை அளித்துள்ளது என்பதுதான், பரிசுத்த இந்தியக் கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியவரும். இத்தாலியிலும், பிரான்ஸிலும் ஆங்கில அமெரிக்கப் படைகள் சிதறாமலிருந் தால், அந்த தரைப் படை கப்பல் படைப் பலம் யாவும், இந்தியாவுக்குள்ளேயும் இதர கிழக்காசியப் பகுதிகளிலேயும் பரந்து விரிந்திருக்கும். அவர்களது ஐரோப்பிய நடவடிக்கைகள், நமது விடுதலைப் போருக்கு நேரடியான உதவியைத் தந்திருக்கின்றன. கடைசியாக, ஐரோப்பிய நிலைமையால் இந்தியாவின் சுதந்திரம் சாத்தியமாக இருக்கிறதென்று, திரும்பவும் கூற ஆசைப்படுகின்றேன். ஐரோப்பாவின் எதிர்காலம் எக்கதி யடைந்தாலும் நமக்குக் கவலையில்லை. இந்தியர்கள் தங்கள் விடுதலையைப் பெற்று கொள்ளும் பொருட்டு கடவுள்தான் இந்தப் பொன்னான வாய்ப்பை அளித்திருக்கிறார். நமக்கு ஐரோப்பிய நிலைமை உற்சாக மூட்டிக் கொண்டேதான் இருக்கிறது. அதன் கதி எக்கேடு கெட்டாலும் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதேயில்லை; நமது சுதந்திரம் எட்டிப் பிடிக்கும் அளவில்தான் இருக்கிறது. சந்தர்ப்பம் வரும்போது அதைக் கைப்பற்றிக் கொள்ளுவோமாக! இரும்பு பழுத்திருக்கும்போது ஓங்கி அறையத்தானே வேண்டும்! ஜேய் ஹிந்த்! 8. கற்றுக் கொண்ட பாடம்! (சக்ரவர்த்தி பகதூர் ஷாவின் நினைவு நாளன்று (1944 ஜூலை 11–ஆம் நாள்) அவரது கல்லறையில் நேதாஜி செய்த சொன்மாரி) சென்ற வருடம் செப்டம்பரில் மன்னாதி மன்னர் பகதூர் ஷாவின் தினத்தைக் கொண்டாடினோம். இந்தியாவின் முதலாவது விடுதலைப் போரில், அதாவது 1857ஆம் வருடப் புரட்சியில், நமது தலைவராக விளங்கியவர் பகதூர்ஷா. சென்ற வருடத்தில் அவரது தினத்தில் இங்கு வந்து கலந்து கொண்ட ஆஸாத் ஹிந்த் ராணுவத்துக்கும் இந்தியச் சுதந்திரப் போருக்கும், சரித்திர சம்பந்தத்தை உண்டாக்கிவிட்டது. சரித்திர சம்பந்தமுடையதென்று ஏன் சொல்லுகின்றேன்? 1857–க்குப் பிறகு, அன்றுதான் முதன் முறையாக இந்தியாவின் புதிய புரட்சி ராணுவம், தனது ஆதிப் புரட்சி ராணுவத் தளபதியின் ஆன்மாவுக்கு மனம் குவிந்து மரியாதை செலுத்தி வணங்கி நின்றது. அன்று தினம், சக்கரவர்த்தி பகதூர் ஷாவின் வேலையைத் தொடர்ந்து செய்வோமென்றும், பிரிட்டிஷ் பிடிப்பிலிருந்து இந்தியாவை விடுவிப்போமென்றும், நாமனைவரும் சபதம் எடுத்துக் கொண்டோம். இப்பொழுது, அந்தச் சபதம் நிறைவேறும் தருணத்துக்கு நாம் வந்து விட்டோமென்பதைத் தெரிவிக்க, மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன். அன்று இங்கு வந்திருந்த ராணுவத்தினருள் பெரும்பாலோர், இன்று இந்திய எல்லைதாண்டி தாயகத்தில் போரிட்டுக் கொண்டிருக் கின்றனர். இவ்வருடம், மன்னர் பகதூர் ஷாவின் நினைவு நாளும் நேதாஜி வார விழாவும் ஒரே காலத்தில் வந்திருக்கிறது. அத்துடன், பூரண சுதந்திரம் பெறும்வரை யுத்தத்தை நீடித்து நடத்துவோமென்று, கிழக்காசியா முழுமையுமுள்ள இந்தியர் கள் தங்கள் பிரதிக்ஞையைப் புதுப்பித்திருக்கும் சந்தர்ப்பமும் சேர்ந்து கொண்டதால், இந்திய வெற்றி மகத்துவம் பெற்றுவிட்டது. முதலாவது சுதந்திரப் போரை நடத்திய தளபதியின் மரண பூமி, கடைசிச் சுதந்திரப் போரை நடத்துவதற்கு அஸ்திவாரமாகி யிருக்கிறது. இதுவும் இறைவன் கருணைதான். இதே பூமியில் – இந்தப் புண்ணிய பூமியிலிருந்து நமது படைகள் தாய்நாட்டை நோக்கி முன்னேறிக் கொண்டி ருக்கின்றன. ஆதலால்தான், சென்ற வருடச் சபதம் ஓரளவு வெற்றியளித்திருப்பதையுணரும் சுதந்திர இந்திய ராணுவம், அந்த மாபெரும் தேசாபிமானி – ஒப்பற்ற தலைவரின் ஆத்மாவுக்கு மகிழ்ச்சி தெரிவித்து மரியாதை செய்யவும், வெறுக்கத் தகுந்த பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியப் புண்ணிய பூமியை விடுவிப்பதுவரை ஆற்றலைத் தரும்படி வேண்டவுமே, மீண்டும் இங்கு கூடியிருக்கிறது. 1857–ஆம் வருட நிகழ்ச்சிகளைப் பற்றி சில வார்த்தைகள் சொல்வது பொருந்துமென்றே நினைக்கிறேன். 1857–ஆம் வருடப் போரை, பிரிட்டிஷ் ஊழியத்திலிருந்த இந்தியச் சிப்பாய்களின் கலகமென்று, ஆங்கிலேய சரித்திரக்காரர்கள் அபாண்டமாகத் திரித்துக் கூறிவிட்டனர். உண்மையென்ன வென்றால், இந்தியச் சிப்பாய்களும் இந்தியப் பொது மக்களும் ஒன்று சேர்ந்து நடத்திய ஓர் தேசீயப் புரட்சியே யாகும். இந்தியச் சிற்றரசர்கள் பலர் அந்தப் புரட்சிப் போரில் பங்கு கொண்டிருந்தனர். சில சிற்றரசர்கள் அதில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கி நின்றது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த யுத்த ஆரம்பத்தில் நமக்கு வெற்றிமேல் வெற்றி கிடைத்தது. இறுதியில் எதிரிகளின் பலம் அதிக சக்தி பெற்றிருந்ததால் தோல்வியுற்றோம். புரட்சிச் சரித்திரத்தில் இந்தத் தோல்வி நடக்கக் கூடாததன்று. முதல் போரிலேயே வெற்றியடைந்துள்ள தேசம் ஏதேனும் உண்டாவென்பதை, உலகச் சரித்திரத்திலேயே காண்பது மிக அபூர்வம். சுதந்திரப் போர் என்பது ஒருமுறை உதித்துவிட்டால், அது தலைமுறை தலைமுறையாக இடைவிடாது ஒளிர்ந்து கொண்டேதானிருக் கும். புரட்சியுங்கூட தோல்வியுறலாம். நசுக்கப்படலாம்; ஆனால் தற்காலிகமாகவேதான் அந்நிலையிருக்க முடியும். அதன் பலாபலன்களை எவராலும் அழிக்க முடியாது. அது கற்றுக் கொடுத்த பாடங்கள் நம்மை ஆட்கொள்ளுகின்றன; அதிகப் பலம் பொருந்திய மற்றொரு புதிய போருக்கு வழியையும் திறந்து விடுகின்றன. அதற்கெனச் சிறந்த தயாரிப்புகளும் கைகூடி விடுகின்றன. 1857–இல் நேர்ந்த தோல்வி பற்றிய பாடங்களைக் கற்றுவிட்டோம். அந்த அனுபவம் காரணமாக, இந்த யுத்தத்துக்கு நம்மைத் தயாராக்கிக் கொண்டோம். இதுதான் இந்திய விடுதலைக்காக நடத்தப்படும் இறுதிப்போர். 1857–இல் ஒருநாள் விடியற் காலையில், இந்தியர்கள் திடீரென ஆயுதமேந்தி பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்ட ரென்று நினைப்பது தவறு. எந்தப் புரட்சிப் போரும் அவ்வளவு அவசரமாகவோ ஒழுங்கீனமாகவோ நடைபெறுவதில்லை. நம் தலைவர்கள், அவர்களால் இயன்ற அளவு யுத்தத் தேவை களைத் தயாரித்துக் கொண்டுதான் போரில் குதித்தார்கள். ஆனால் வெற்றியடையும்வரைத் தேவையான சாதனங்களின் குறைபாடு நேர்ந்துவிட்டது. அந்தப் புனிதப் போரில், முக்கிய தலைவர்களுள் ஒருவராகிய நானாசாகிப், ஐரோப்பா முழுமையும் சுற்றுப் பிரயாணம் செய்து, வெளிநாட்டு உதவியையும் துணையையும் பெறத் தன்னாலானமட்டும் முயற்சி செய்தார். துரதிர்ஷ்ட வசமாக அவரது முயற்சிகளில் தோல்வி நேர்ந்துவிட்டது. அந்தப் புரட்சி நேரத்தில் உலகத்து நாடுகளுடன் பிரிட்டன் நட்புக் கொண்டிருந்ததால், இந்திய மகாஜனங்களை நசுக்குவதற்கு வேண்டிய பலத்தையும் சாதனங்களையும் அது சேகரித்து வைத்திருந்தது. சிலகாலம் பொது மக்களிடையேயும் இந்தியச் சிப்பாய் களிடையேயும், போற்றத்தகுந்த முறையில் புத்திசாலித் தனமான பிரச்சாரம் இந்தியாவுக்குள்ளே நடைபெற்றிருந்தது. அதற்கேற்ப, குறிப்புக் காட்டியதும் தேசத்தின் பல பாகங்களிலும் ஏக காலத்தில் அந்தப் புரட்சிப் போர் ஆரம்பமாயிற்று. வெற்றிமேல் வெற்றி அடைந்தனர் புரட்சி வீரர்கள். வட இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களெல்லாம் பிரிட்டிஷாரிடமிருந்து விடுவிக்கப்பட்டன. புரட்சி ராணுவம் வெற்றிக் கொடியுடன் பவனிவந்தது. இப்படியாக எல்லா இடங்களிலும் புரட்சியின் முதற்கட்டம் சிறப்பாக முடிந்தது. இரண்டாவது கட்டத்தில் எதிரியின் எதிர் நடவடிக்கை ஆரம்ப மாயிற்று. நமது ஆட்களால் அதை எதிர்த்து நிற்கமுடிய வில்லை. ஆகவே விரிவான தேசீயப் போர் முனைகளும், கொண்டு செலுத்த திறமை மிகுந்த புரட்சி தளபதியும் தேவையாயின. அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவின் சில பகுதிகளிலுள்ள சிற்றரசர்கள், புரட்சியில் கவலையற்றவர் களாய் ஒதுங்கி நின்றனர். இவர்களது நிலைமைகண்டு மனம் தாங்காமல் மன்னர் பகதூர்ஷா, ஜெயப்பூர் – ஜோதிபுரி – பிக்கானீர் – ஆள்வார் போன்ற பல சிற்றரசர்களுக்கும் விடுத்த கடித்ததைப் பாருங்கள்: “எந்தக் காரணத்தைக் கொண்டேனும் எந்த வழியிலேனும் ஆங்கிலேயர்களை நம் ஹிந்துஸ்தானத்திலிருந்து வெளியே துரத்தியாக வேண்டுமென்பதுதான் எனது மனப்பூர்வமான ஆசை. ஹிந்துஸ்தானம் முழுதும் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்பது என் பேரவா. அதற்காகவே நடந்து கொண்டிருக்கும் இந்தப் புரட்சிப் போர் வெற்றிமுடி தரிக்க வேண்டுமானால், இந்த இயக்கத்தின் முழுப் பொறுப்பையும் தானே தாங்கிக் கொள்வதோடு, தேசத்தின் எல்லா சக்திகளையும் ஒருங்கு திரட்டி இந்திய மகாஜனங்கள் அனைவரையும் தன்பால் அணைத்துக் கொண்டு, வழி நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்த ஓர் தலைவர் வேண்டும். அவ்வளவு நிர்வாகத் திறமைகொண்ட தலைமை கிடைக்காவிட்டால் வெற்றி முடி தரிக்க முடியாது போய்விடும். ஆங்கிலேயர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு, அகில இந்தியாவையும் கட்டியாள நான் விரும்பவில்லை. மன்னர்களே! எதிரியை வெளியே துரத்தும்பொருட்டு, உறையிலிருக்கும் உங்கள் வாட்களை உருவ முன் வருவீர்களாயின், எனது ஏகாதிபத்திய உரிமைகளையெல்லாம் துறந்து விடுவதோடு, உங்களால் தேர்ந்தெடுக்கப்பெறும் எந்த இந்திய மன்னரிடமும் எனது அதிகாரத்தை, பதவியை ஒப்படைத்து விடுகிறேன்.” பகதூர் ஷாவின் சொந்தக் கையால் எழுதப்பட்ட இக்கடிதம், எவ்வளவு தியாக சிந்தையையும் தலைசிறந்த தேச பக்தியையும் கொண்டிருக்கிறதென்பதை உணருகின்ற எந்த இந்தியன் தான், விடுதலை வேட்கை கொண்ட எவன்தான், பகதூர் ஷாவுக்குத் தலைவணங்கி மரியாதை செலுத்தா மலிருக்க முடியும்? முதுமையும் பலவீனமும் உடையவராக இருந்தால், அந்த யுத்தத்தைத் தானே நடத்திச் செல்வது தன் சக்திக்கு அப்பாற்பட்டதென பகதூர் ஷா உணர்ந்தார். ஆகவே மூன்று ராணுவத் தளபதிகள், மூன்று பொது ஜனத்தலைவர்கள், ஆக ஆறுபேர் கொண்ட யுத்த சபையை அமைத்து அதனிடம் பொறுப்பு முழுமையும் ஒப்படைத்தார். இந்தியா பூரண சுதந்திரம் பெறுவதற்கான சரியான பக்குவத்தை அப்பொழுது அடையாத காரணத்தால், அவருடைய முயற்சிகளெல்லாம் தோல்வியுற்றன. ஆனால் அந்த வயோதிகத் தலைவரிடம் குடி கொண்டிருந்த புரட்சிக் கனலின் தன்மை உச்சநிலையடைந் திருந்தது. ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த பெரைலி நகரின் சுவர்களிலே ஒட்டப்பட்டிருந்த பகதூர் ஷாவின் பிரகடனமே அவரது மனப்பண்பை விளக்கும். “இந்த நமது ராணுவத்தில் உயர்வு தாழ்வுக்கு இடமில்லை; சமத்துவமே பிரதிபலிக்கிறது. இந்தப் புனித யுத்தத்தில் யார் யார் வாளேந்துகிறார்களோ, அவர்கள் அனைவரும் சம பெருமையுடையவர்களே. எல்லோரும் சகோதரர்கள்; அவர்களிடையே எவ்வித ஏற்றத் தாழ்வும் கிடையாது. ஆகவே, இந்தியச் சகோதரர்களே! எழுக! போர்க்களத்தில் குதியுங்கள்! இதுவே நம் தலை சிறந்த கடமை.” இதுதான் பகதூர் ஷாவின் பிரகடனம். இவைகளெல்லாம் எதற்காக நான் குறிப்பிடுகிறேனென்றால் நமது ஆஸாத் ஹிந்த் பௌஜின் அஸ்திவாரம், அந்த 1857 லேயே இடப்பட்டு விட்டதென்பதைக் காட்டுவதற்காகத்தான். இந்தக் கடைசி யுத்தத்தின் போது நம்முன் அந்த 1857–ஆம் வருடத்திய முதல் யுத்தம் கற்றுக் கொடுத்த பாடங்களும் அதன் தோல்வியும் நம் உணர்ச்சியைத் தூண்டுவனவாக இருக்கின்றன. இந்நேரம் இறையருள் நம் பக்கமே இருக்கின்றது. பல போர்முனைகளில் நமது எதிரி உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறான். நம் தேசத்தார் நன்றாக விழிப்பெய்தி யிருக்கின்றனர். நமது ஆஸாத் ஹிந்த் பௌஞ் எல்லையற்ற சக்தியுள்ளது. தாய்நாட்டின் விடுதலைக்காக நம் ராணுவத்தினர் அனைவரும் பொது லட்சியத்தின் மீது ஒன்றுபட்டு நிற்கின்றனர். முழு வெற்றியடையும் வரை எவ்வளவு காலம் நீடித்தாலும், நம் ராணுவ அதிகாரிகள் நிமிர்ந்து நின்று போராடும் ஆற்றல் பெற்றுள்ளனர். நமது அடிப்படையில் ஒழுங்கும் நியதியும் திறம்பட அமைக்கப்பட்டிருக்கின்றன. பகதூர் ஷாவின் வீரச்செயல்களும் உதாரணமும் நம் நினைவில் பதிந்து, நம்மை ஊக்குவிக்கின்றன. எனவே, இறுதி வெற்றி நமக்குத் தான் என்பதில் ஏதேனும் சந்தேகம் இருக்க முடியுமா? 1857–ஆம் வருடப் புரட்சி தலைகீழாக வீழ்ச்சிபெற்ற பின்னர், பிரிட்டிஷார் கையாண்ட அட்டூழியங்களைப் படிக்கும்போதும் அவைகளை நினைக்கும்போதும், என் இரத்தம் கொதிக்கத் தொடங்குகிறது. நாம் மனிதர்களாக யிருந்தால், 1857லும் அதற்குப் பின்னரும் நம் வீரர்களுக்கு நேர்ந்த கதிக்குப் பழி தீர்த்துத்தானாக வேண்டும். பிரிட்டி ஷாரின் மிருகத்தனத்துக்கு, அவ்வீரர்கள் ஆளாகி அனுபவித்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவைகளை யாராலும் சகிக்க முடியாது. பிரிட்டிஷார் யுத்த காலத்தில் மட்டுமல்ல, பின்னருங்கூட விடுதலை விரும்பிய இந்தியர்களின் இரத்தத்தைச் சிந்தினார்கள்; மனிதத் தன்மையற்று சித்திரவதை செய்தார்கள். அக்கொடுமைகளுக்கெல்லாம் அவர்கள் பழி கொடுத்துதான் ஆகவேண்டும். இந்தியா விரும்புவதெல்லாம் பழிக்குப்பழி என்பதுவே. இந்தியர்களாகிய நமக்கு, இன்னும் பகைவன்மீது அவ்வளவு வெறுப்பு வளரவில்லை. உங்கள் தேசத்தார் நிமிர்ந்து நின்று மனித சக்திக்கு மீறிய வீரத்துடன் திகழவேண்டுமென விரும்பினால், நீங்கள் அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். தேசத்தின்மீது அன்பு செலுத்துவதற்கு மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது; பகைவனை வெறுக்கவும் கற்றுக் கொடுத்துதானாக வேண்டும். ஆகவே, நான் இரத்தம் சிந்துவதற்காக அழைக்கின்றேன். பண்டு செய்த கொடுமைகளுக்கெல்லாம் அந்தப் பகைவனின் இரத்தம்தான் ஈடுசெய்ய முடியும். நாம் நமது இரத்தத்தைச் சிந்தத் தயாராக இருந்தால்தான், அவர்களின் இரத்தத்தைக் குடிக்க முடியும். எனவே நமது எதிர்காலத் திட்டம் இரத்தம் சிந்துவதேயாகும். இந்த யுத்தத்தில் நம் வீரர்கள் சிந்துகின்ற இரத்த ஆறு நமது பழைய பாவங்களையெல்லாம் அடித்துச் சென்று விடும். நம் வீரர்களின் இரத்தமே, நம் விடுதலைக்குரிய பரிசு, நம் வீரர்களின் இரத்தம் – வீரம் – தைரியம் இவையே அந்த அன்னிய ஆக்ரமிப்புக்கார பிரிட்டிஷாரை வஞ்சம் தீர்த்துப் பழிவாங்க, இந்திய மகாஜனங்களுக்குக் கிடைத் திருக்கும் பெரும்பேறுகள். ஜேய் ஹிந்த்! கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி முதற் பதிப்பு 1964 இந்நூல் 2003 இல் முல்லை நிலையம், சென்னை - 17 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. விடுதலைப் பாறை முடிசார்ந்த மன்னர், பிடிசாம்பராயினர்! இதுவே மன்னர் மரபின் பொது நீதி. இதற்கு விலக்கான தென்னாட்டு மன்னர் இருவர் உண்டு. ‘பிடிசாம்பர்’ வாழ்க்கைகளை ஒழுங்காய் எழுதிய ‘தாள்வரலாறு’, அவர்கள் புகழ் பொறிப்பதில் தள்ளாடிய துண்டு. ஆனால், மக்கள் உள்ளமாகிய பொன் வரலாற்று ஏட்டில் இருவர் புகழும் நீடித்துள்ளன. புதுப்புது மேனியுடன் இருவர் புகழும் நீடித்து வளர்கின்றன. தமிழகத்தின் தென் கோடியிலே, பாஞ்சாலங்குறிச்சியருகே ஒரு மண்மேடு காட்சியளிக்கிறது. அது தமிழர் கண்களில் ஒரு வீரகாவிய ஏடு. தமிழர் உள்ளங்களில் அது விடுதலைக்குக் கொடி எடுத்த வீரத்தின் காடு. வீரத்தின் எல்லை நோக்கி, விடுதலை ஆர்வம் என்ற கவண் பொறி ஏந்தி, வீரபாண்டியக் கட்டபொம்மன் வீசி எறிந்த புகழ்க் கல்லின் சுவடு அது! உடல் சாய்ந்தாலும் சாயாத ஒரு வீர உள்ளம் இன்றும் அவ்விடத்தில் நின்று வருங்காலம் நோக்கி வீறிட்டு முழக்கமிடுகிறது. தென் கோடியின் இக்குரலுக்குத் தமிழகத்தின் வடகோடி எதிர்க்குரல் தருகிறது. சித்தூர் அருகே, நரசிங்கராயன்பேட்டைப் புறவெளியிலே, அது கன்னட மொழியிலே குரலெழுப்புகின்றது. அதுவே கன்னடத்தின் போர்வாள், ஹைதர் அலியின் வீர முழக்கம். அது தமிழகத்தின் உள்ளம் தடவி, ஆந்திரம் நோக்கி அடர்ந்தெழுகின்றது. கன்னடம் அதிர, மலையாளம் மலைப்பு எய்த, அது தென்னகத்தைத் தட்டி எழுப்புகிறது. மன்னன் மரபில் வந்த குடிமன்னன் கட்டபொம்மன். ஆனால், அவன் மக்கள் தலைவனானான்; வெளியார் ஆதிக்கத்தை வீறுடன் எதிர்த்து நின்று விடுதலைக் கொடியேற்றினான். இதற்கு மாறாக ஹைதரோ, குடிமரபிலே, பொதுமக்களிடையே பொதுமகனாகத் தோற்றியவன். அவன் வீரனானான். வீரத்தை நாடு அழைக்க. அவன் வீர மன்னனானான்; பேரரசு நாட்டினான். அது மட்டுமோ? அவன் மற்றப் பெரும் பேரரசு களுடன் மோதிக்கொண்டான். ஆயினும், அவன் தன் பேரரசைக் காப்பதைவிட, மாநிலம் காப்பதிலேயே பெரிதும் மனங் கொண்டான். ஆளவந்த வெளியார்களை மீளவைக்க அவன் அரும்பாடு பட்டான். எனினும், ஆளத் தெரியாத கோழை மன்னர் பலர் வெளியார் வலுவால் வாழ எண்ணினர். பேரரசுகளோ சரிந்துவரும் தம் வலுவைச் சதி எதிர் சதிகளின் உதவியால் சப்பைக்கட்டுக் கட்ட எண்ணின. இன்னும் சிலர் பலர் வெளியாரை அண்டிப் பிழைப்பதையே ஆக்கமாகக் கொண்டனர். விடுதலைக்கான உயிர்ப் போராட்டத்தைக்கூட அவர்கள் தம் சிறுதனி நலத்துக்காகப் பயன்படுத்தி, அதில் குளிர்காய எண்ணினர். விடுதலைப் பூஞ்சோலையில் இவ்வாறாக வேற்றுமைப் புயலடிக்கத் தொடங்கிற்று; ஒற்றுமை சாயத் தலைப்பட்டது; சதியும் பூசலும் சதிராட முற்பட்டன. அஞ்சா நெஞ்சன் ஹைதர் இத்தனை சூழல்களையும் தன்னந்தனியனாய் நின்று மும்முர மாகத் தாக்கினான்; சாய்வைத் தடுக்க முயன்றான்; ஒற்றுமையைத் தானே படைத்து உருவாக்க விரைந்தான். அவ்வொற்றுமைப் பாறையின் முகட்டில் விடுதலைக் கொடியை உயர்த்திவிட அவன் விதிர் விதிர்த்தான். சாய்வை அவனால் நீண்டநாள் தடுத்து நிறுத்த முடிய வில்லை. சாய்வு வலுத்தது. விடுதலைக் கொடியை அவனால் ஏற்ற முடியவில்லை. வேற்றுமைப் புயல் மேலும் கீழும் நாலாபுறமும் குமுறியடித்தது. ஆனால், புயலிடையே மின்னல் போல, அவன் சுழன்று போராடினான். அப்புயலின் வீச்சு எதிர்வீச்சுக்களையெல்லாம் சமாளித்து, அவன் விடுதலைக் கம்பத்தின் அடிப்படைக்கல் நாட்டினான். புயல் எளிதில் அமையவில்லை. ஆனால், புயலிடையே ஹைதர் நட்ட கல் அந்தப் புயலடியிலேயே அசையாத விடுதலைப் பாறையாய் நிலவிற்று. புயலிடையே ‘வீரவெற்றிச் சிங்கம்’ ஹைதர் நாட்டிய அடிப்படைக் கல்லின் மீதே பின்னாளில் வீரபாண்டியக் கட்டபொம்மன் விடுதலைக்கொடி நாட்டினான். ஹைதரின் புதல்வன் திப்பு, சிங்கத்தின் பின்வந்த சிங்கமாய், அந்தக் கொடியை உலக அரங்குக்கே உயர்த்த முயன்றான். அவன் முயற்சி வெற்றி பெறவில்லையானாலும், வீணாகவில்லை. அதன் எதிரொலியே வெள்ளையரைப் பின்னாளில் வெருட்டித் துரத்தியடிக்க முடிந்தது. ஹைதரைக் காட்டிக்கொடுக்க முனைந்த போலி மரபுகளில் மராட்டிய மரபு ஒன்று உண்டு. அது சிவாஜியின் வீரமராட்டிய மரபன்று. அம்மரபின் அரியாசனத்தைக் கவர்ந்து, அதனைத் தன் நரியாசனமாக்கிக் கொண்ட பேஷ்வா மரபு. ஆயினும், அம்மரபு கூட ஹைதர் காலத்துக்கு நெடு நாட்களுக்குப் பின், தன் மாசு கழுவ முற்பட்டது. ஹைதர், கட்டபொம்மன் ஆகியவரின் புகழ் மரபுக் கொடியை அம்மரபின் கடைசித் தோன்றலான நானா சாகிப் சிலகாலம் வானளாவப் பறக்கவிட்டான். இதன் மூலம் அவன் தன் முன்னோர் மாசகற்றி, சிவாஜியின் வீரமரபுக்கு மீண்டும் ஒளி தந்தான். மாநிலத்தின் விடுதலையை மதிக்கவில்லை, மாநிலத்தில் அடிமையாட்சி பரப்பிய ஆங்கில அரசியலார். 1857-ஆம் ஆண்டு வீசிய விடுதலைப்போரின் ஒரு பேரலையை அவர்கள் ‘சிப்பாய்க் கலகம்’ என்று கூறி நையாண்டி செய்தனர். மதவெறி கொண்ட வர்களின் மட எதிர்ப்பென்று அதை அவர்கள் தட்டிக் கழிக்கப் பார்த்தனர். ஆனால், விடுதலை வரலாற்றாசிரியர்களில் தலைசிறந்தவர், மராட்டிய திலகம் வீரசவர்க்கார், ‘எரிமலை’யாய் மூண்டு வெடித்த பெரும்பேராக அதைத் திரட்டிக் காட்டினார். விடுதலைப் புதுப் பயிர் வளரும்படி, மாநிலமெங்கும் வெடித்துச் சிதறி விதை தூவிய நெற்றாக அதைச் சித்தரித்துக் காட்டினார். ஆனால், விடுதலைப் பயிருக்கான விதைகளைச் சிதறடித்த காட்சியுடன் அவர் ஆராய்ச்சி நோக்கு நின்றுவிட்டது. விடுதலை விதை தந்த கொடி விளைவுற்றது மராட்டி யத்திலேதான். அதை வீரசவர்க்கார் திறம்படச் சுட்டிக் காட்டுகிறார். அவர் தாயகமாகிய மராட்டியத்தின் பெருமை அது. சிவாஜியின் வீர மரபு விளங்கிய இடம் அது என்பதையும் அவர் மறக்கவில்லை. ஆனால், மராட்டியத்தில் காய்த்து முற்றி விளைவுற்ற கொடி, தமிழகத்திலே மலர்ந்தது என்பதையோ, கன்னடத்திலே மூல விதையூன்றியதென்பதையோ அவர் கனவிற்கூடக் காண முடியவில்லை. ஒருவேளை அக்காட்சியை அவர் மறக்க எண்ணியிருக்கலாம். சிவாஜியின் மரபுக்கும் நானாசாகிப்புக்கும் இடையேயுள்ள போலி மரபு பேஷ்வா மரபு. அது கன்னடத்தின் விடுதலைப் போராட்டத்திடையே கொண்ட பங்கை அவர் வீர வரலாற்றுக் கண் காண விரும்பியிருக்க முடியாது. அது அவர் விழுமிய மராட்டிய உள்ளத்தை உள்ளூர உறுத்தி இருக்கக்கூடும்! மராட்டிய மண்டலத்தின் வேற்றுமைப் பிணக்கு, ஐதரா பாதை ஆண்ட நிஜாமின் கோழை அடிமைத்தனம், ஆர்க்காட்டு நவாபு மகமதலியின் குள்ள நயவஞ்சகச் சூழ்ச்சிகள், கிலிகொண்ட திருவாங்கூர் மன்னர் மரபின் ஆங்கில ஆதிக்க நேசம் - இத்தனை இருள்கள் சூழ்ந்த தென்னாட்டின் அந்நாளைய வாழ்விலே, வீறொளி பரப்பிய வீரசோதி, ஹைதர்! அவன் வாழ்க்கை வரலாறு தென்னாட்டவர் உள்ளங்களை, சிறப்பாக வீரம் கருக்கொள்ளும் நிலையில் உள்ள இளைஞர் உள்ளங்களை ஈர்க்கும் தன்மையுடையது. அது காலத்தின் செல்வம். காலந்தாண்டி ஞாலத்துக்கு வழிகாட்டும் சீரிய பண்பு அதற்கு உண்டு. வரலாற்றில் மறைக்கப்பட்டிருந்த பொன்னேடு பாஞ்சாலங் குறிச்சி. ஆண்ட அயலார் அதைக் கற்பனைக் கண் கொண்டு பார்க்கவும் அஞ்சினர். 19-ஆம் நூற்றாண்டின் வாயிலில் அவர்களை எதிர்கொண்டழைத்த அந்நிகழ்ச்சியின் நிழலைக்கூட அவர்கள் வரலாற்றில் குறிக்கவில்லை. அதன் பின் 1857-இல் எழுந்த வீர ஏட்டையோ அவர்கள் திரித்துக் கூறி அமைந்தனர். ஆனால், ஹைதர் வாழ்வை அவர்கள் திரித்துக் கூறவில்லை; மறைக்கவில்லை. அதை அவர்கள் மறக்கவும் இல்லை. ஆயினும், அவர்கள் அதைத் தம் இனத்தவர்க்கு - ஆளும் இனத்தவர்க்கு - ஒருநிலையான எச்சரிக்கையாக மட்டுமே தீட்டினர். ஆளப்படும் மக்கள் கண்களில் அதன் மெய்யான உருவம் தென்படாமல் இருக்கும்படி, அவர்கள் அதற்குச் சாயமடித்து உருமாறாட்டம் செய்தனர். மெய்யான ஊடு நூலுடன் பொய்யான பாவு நூலிழைத்து, அவர்கள் திரை இயற்றினர். அத்திரையிலே விடுதலையின் வீரத்திருவுரு வேட்டைக் காட்டின் வெங்கொடுமைப் பேருருவாகக் காட்சி தந்தது. இம்மாறாட்டத் திரை அகற்றி, ஹைதர் வாழ்வின் பாரதீர உருவில் நாம் கருத்துச் செலுத்தவேண்டும். விடுதலைப் பயிர் வளர்க்கமுனையும் நமக்கு, அவ்விடுதலை இயக்கத்தின் நாற்றுப் பண்ணைக்கே வித்தும் உரமுமிட்ட வீரவாழ்வு ஒரு நல்ல வழிகாட்டியாதல் ஒருதலை. நமக்கும் நம் பின்னோர்களுக்கும் அது நற்பயனூட்டும் பண்புடையதாய் அமையும் என்பதும் உறுதி. 2. காலமும் களனும் ஹைதர் வாழ்வாகிய நாடகத்துக்கு 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி ஒரு மேடையாய் அமைந்தது. அக்காலத் தென்னகத்தின் அரசியல் சூழல்களே அதற்கேற்ற பின்னணித் திரைகளாக இயங்கின. காலம், களன் ஆகிய அத்திரையின் இரண்டு கூறுகளையும் தெளிவாக உணர்ந்தாலல்லாமல், ஹைதர் வாழ்வைச் சரிவர மதிப்பிட முடியாது. கன்னட நாடு இன்னும் அரசியலரங்கத்திலே அழைக்கப்பட வில்லை. தமிழகம் ‘சென்னை’ என்று அழைக்கப்படுவது போல, அது மைசூர் என்றே அழைக்கப்படுகிறது. ஆனால், அணிமைவரை மைசூர் என்பது ஒரு தனியரசின் பெயராகவே நிலவிற்று. ஹைதர் காலம் முதல்தான் இது இங்ஙனம் ஒரு முழுப் பகுதியாக இயல்கிறது. அதற்கு முன் அது பல குறுநிலப் பகுதிகளாகவே பிரிந்திருந்தது, முதல் முதல் அப்பெரும்பகுதியை ஒன்றுபடுத்தி, ஒரே அரசாக்கி, ஒரு குடைக்கீழ் ஆண்டவன் ஹைதரே! மைசூர் என்ற பெயரால் அப்பகுதி முழுவதும் அழைக்கப்பட்டதும் அக்கால முதல்தான். பழங்காலத்தில் மைசூர் பகுதி கங்கநாடு என்றழைக்கப்பட்டது. இப்பெயர் கொங்கு நாடு என்பதன் மறு வடிவமேயாகும். இன்று கொங்குநாடு என்ற பெயரை நாம் சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களடங்கிய தமிழகப் பகுதிக்கு மட்டுமே வழங்குகிறோம். ஆனால், சங்க காலங்களில் - அதாவது கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை - இது கொங்குநாட்டின் ஒரு பகுதியாக மட்டுமே கொள்ளப்பட்டது. அதை அன்று தென் கொங்கு நாடு என்று வழங்கினர். இன்றைய மைசூர்ப் பகுதி வடகொங்கு நாடு என்றும், தென்கன்னட மாவட்டமடங்கிய மேல் கடற்கரைப் பகுதி மேல்கொங்குநாடு என்றும் குறிக்கப்பட்டன. இம்மூன்றும் சேர்ந்தே பண்டைக் கொங்கு நாடு அல்லது பெருங் கொங்குநாடு ஆயிருந்தது. மைசூர்த் தனியரசு ஹைதர் நேரடியாக ஆண்ட பகுதியே. அவன் பேரரசாட்சியின் விரிவு மேற்குறிப்பிட்ட பெருங் கொங்குநாடு முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. அத்துடன் பல சமயங்களில் அது அவ்வெல்லை கடந்து மலபார் மாவட்டம், கொச்சித் தனியரசு, சோழநாடு, தொண்டைநாடு, ஹைதரா பாதின் பகுதி ஆகிய எல்லைகளிலும் பரவியிருந்தது. தென்னாட்டில் எங்கும் முடியரசுகள் தோன்றுவதற்கு முன் குடியரசுகளும் குடிமன்னர் ஆட்சிகளுமே பரவியிருந்தன என்று எண்ண இடமுண்டு. சங்ககாலத்தில் தமிழகத்திலே சேர சோழ பாண்டியர் என்ற முத்தமிழ் முடிமன்னர் ஆண்டனர். ஆனால், தமிழகம் நீங்கலாக எப்பகுதியிலும் அந்நாளில் மொழி எல்லை வகுப்போ, மொழி சார்ந்த அரசுகளோ ஏற்படவில்லை. குடி மரபுகளே நிலவின. தமிழகத்திலேகூட. முடியரசுகள் ஏற்பட்ட பின்பும், அவர்களுக்கு அடங்கியும் அடங்காமலும் பல குடிமரபுகள் நிலவின. தமிழகத்துக்கு அப்பால் முடியரசுகள் இல்லை; குடியரசுகளே நிலவின. தமிழகத்திலும், தமிழகத்துக்கு அப்பாலும் இக்குடி மன்னர்கள் வேளிர் அல்லது சாளுக்கர்கள் எனப்பட்டனர். வடதொண்டை நாட்டில் இன்றையத் தெலுங்கு நாட்டுப் பகுதியில் ஆய் அண்டிரனும் திரையரும் வேளிராக ஆண்டனர். அண்டிரர் குடியே ஆந்திர மரபாய் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை பேரரசாக நிலவிற்று. கலிங்கரும் இத்தகைய குடியரசரே. சிலகாலம் கலிங்கரும் சிலகாலம் ஆந்திரருமாக இமயமுதல் வடபெண்ணைவரை பேரரசாட்சி நடத்தினர். சங்ககாலத் திரையர் குடி மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் பல்லவப் பேரரசு நிறுவி, இன்றைய ஆந்திர, வடதமிழகப் பகுதி முழுதும் ஆண்டது. இதேசமயம் மேல்திசையில் கடம்பர் குடியரசு மரபினராக ஆண்டனர். கலிங்கர், ஆந்திரர், பல்லவர் அல்லது திரையர், கடம்பர் ஆகிய இவ்வெல்லா மரபுகளும் கடலோடிகளாக விளங்கி, கடல் வாணிகம் நடத்தினர். அயல் நாடுகளில், சிறப்பாகத் தென்கிழக்காசியாவெங்கும் இவர்கள் தென்னக நாகரிகம் பரப்பி, தென்னகக் குடியேற்றங்கள் நிறுவினர். இக்காலத்தில் மைசூர் பகுதியில் எருமை அல்லது எருமையூரன் என்ற வேளும், தென்கன்னடப் பகுதியில் நன்னன் என்ற வேளும் ஆண்டனர். இவர்கள் பெயர்கள் இன்றளவும் நம்மிடையே நிலவுகின்றன. எருமையூர் என்பதன் சமஸ்கிருத வடிவம் மஹிஷபுரி என்பது. அதன் பாளி அல்லது பாகத (பிராகிருத) வடிவமே இன்று மைசூர் என்ற பெயரைத் தந்துள்ளது. அது முதலில் ‘மைசூர்’ என்ற ஊர்ப் பெயராய் இருந்தது. மைஹதர் காலத்திலிருந்து, அது அவ்வூரைத் தலைநகராகக் கொண்ட பரப்பின் பெயராய் இயங்குகின்றது. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் பாண்டியர் சோழர் குடிகளைச் சேர்ந்த இளவல்கள் பலர் தென் தெலுங்கு நாட்டிலும், மேற்கு மைசூர்ப் பகுதியிலும் பல தனியரசுகள் நிறுவினர். தெலுங்கு கன்னட மொழிகளில் ‘சோழ’ என்ற சொல் ‘சோட’ என்று திரிந்தது. நன்னன் என்ற பெயருடன் சோட என்ற பெயரும் இணைந்து, இன்றுவரை ‘நன்னிசோட’ என்ற குடிப்பெயராய் அப்பகுதிகளில் நிலவுகிறது. கி.பி. 3 முதல் 10-ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தின் பெரும் பகுதியைப் பாண்டியர் ஆண்டனர். வடதமிழகத்தையும் ஆந்திரப் பகுதியையும் பல்லவர் ஆட்சிகொண்டனர். இதேசமயம், தென்னாட்டின் வடபகுதியை ஆண்டவர்கள் கடம்பர், சாளுக்கியர், இராஷ்டிரகூடர் ஆகிய மரபினர். அவர்களுக்குக் கீழ்ப்பட்டும், கீழ்ப்படாமலும் கங்கர் (மேலைக் கங்கர்) என்ற மரபினர் மைசூர்ப் பகுதியை ஆண்டு வந்தார்கள். கங்கரும் அவருக்குப் பின்வந்த மரபினரும் சமண சமயம் சார்ந்தவர்கள். ஹளபீடு, பேலூர் ஆகிய இடங்கள் இன்றும் அவர்கள் கலைவளத்துக்குச் சின்னங்களாய் அமைகின்றன. ஹம்பியிலுள்ள விஜய நகரச் சிற்பங்களுடன் போட்டியிட்டு, இவை கன்னட நாட்டின் கலைச் செல்வங்களாகப் புகழ் பெற்றுள்ளன. 12-ஆம் நூற்றாண்டில் மைசூர்ப் பகுதி சோழப் பேரரசர் ஆட்சிக்கும், அதன்பின் பாண்டியப் பேரரசர் ஆட்சிக்கும் உட்பட்டிருந்தது. ஆனால், அப்பேரரசுகளின் வீழ்ச்சிக்குப்பின் 14-ஆம் நூற்றாண்டுவரை ஹொய்சளர் என்ற வலிமை வாய்ந்த மரபினர் துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக்கொண்டு அப்பகுதியில் ஆண்டுவந்தனர். 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் முதன் முதலாகத் தென்னகத்தின் அரசியல் வாழ்வில் வடதிசையி லிருந்து ஒரு பேரிடி வந்து விழுந்தது. சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் தென்னாட்டுக்கப்பாலுள்ள சிந்து கங்கை வெளி ஆப்கானிய மரபின் ஆட்சிக்கு உட்பட்டது. டில்லியில் ஆண்ட ஆப்கானியப் பேரரசன் அலாவுதீன் கில்ஜியின் படைத் தலைவன் மாலிக்காபூர் 1310-இல் தென்னாட்டின் மீது படையெடுத்தான். மைசூர்ப் பகுதிக்கு வடக்கே தேவகிரியில் யாதவ மரபினரும், வாரங்கலில் காகதீயரும் ஆட்சி செய்து வந்தனர். மாலிக்காபூர் படையெடுப்பின் முன் இவர்களும் ஹொய்சளரும் வீழ்ச்சியுற்றனர். மாலிக்காபூர் தமிழகத்திலும் பாண்டியப் பேரரசை நிலைகுலையச் செய்து இராமேசுவரம் வரை கொள்ளையடித்துச் சென்றான். மாலிக்காபூர் படையெடுப்பின் அழிவிலிருந்து முதல் முதல் தலை தூக்கிய இடம் மைசூர்ப் பகுதியே. இங்கே விஜயநகரப் பேரரசு உருவாகி, 16-ஆம் நூற்றாண்டுவரை கன்னடம், தெலுங்கு நாடு, தமிழகம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கி ஆண்டது. இதன் வடபால் பகமளி என்ற மற்றொரு இஸ்லாமியப் பேரரசு தோன்றி வளர்ந்தது. இப்பேரரசு விரைவில் பீஜப்பூர், கோல்கொண்டா, அகமதுநகர், பீஹார், பீடார் ஆகிய ஐந்து தனியரசுகளாகச் சிதறுண்டது. ஆயினும், இவை வலிமை குன்றாத அரசுகளாகவே நிலவின. பாண்டியப் பேரரசர் ஆட்சிக் காலத்திலும் விஜயநகரப் பேரரசர் ஆட்சிக் காலத்திலும் தென்னாட்டின் கடல் வாணிகமும் செல்வ வளமும் உச்சநிலை அடைந்தன. உலக வாணிகத்தில் தென்னாட்டவர் சீனருடனும் அராபியருடனும் கைகோத்து உலாவினர். உலகின் பொன்னும் மணியும் மிகப்பேரளவில் தமிழகத்திலும் தென்னாட்டிலும் வந்து குவிந்து கிடந்தன. இப்பெரு வளம் மேலை நாட்டினர் பொன்னாசையைத் தூண்டிற்று. 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் போர்ச்சுகீசிய நாட்டானாகிய வாஸ்கோடகாமா கடல் மூலமாகத் தென்னாட்டுக்கு வர வழி கண்டான். அவன் கள்ளிக் கோட்டையில் இறங்கி, அதன் குடி மன்னனாகிய சாமூதிரியின் ஆதரவையும், விஜயநகரப் பேரரசனாகிய கிருஷ்ண தேவராயரின் ஆதரவையும் பெற்றான். 16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரும் டச்சுக்காரரும், 17-ஆம் நூற்றாண்டில் பிரஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் தென்னகக் கடற்கரைப் பட்டினங்கள் பலவற்றில் வாணிகத் தளங்கள் ஏற்படுத்தினர். படிப்படியாக வாணிக ஆட்சி நாட்டாட்சியில் தலையிட்டு, தாமே சிறு நாட்டாட்சிகளாகத் தொடங்கின. விஜயநகரப் பேரரசு 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியி லிருந்து சரியத் தொடங்கிற்று. தலைநகரைத் தமிழகத்தின் வடபகுதியிலுள்ள சந்திரகிரிக்கு மாற்றி, பேரரசர் பெயரளவில் பேரரசராக நின்று, சிற்றரசர்போல ஒதுங்கி ஆட்சி செய்து வந்தனர். தமிழகத்தில் அவர்கள் கீழ் ஆண்ட தஞ்சைநாயகரும் மதுரைநாயகரும் வலிமை வாய்ந்த அரசர்களாயினர். அதுபோலவே கன்னடப் பகுதியில் மேல் கரையோரத்தில் இச்சேரி நாயகர்களும் மைசூர்ப் பகுதியில் உடையார் மரபினரும் பேரரசின் மேலுரிமையை உதறித்தள்ளி, தனியாட்சி நிறுவினர். பகமளிப் பேரரசிலிருந்து கிளைத்த அரசுகளில், வடக்கே அகமது நகரும், தெற்கே பீஜப்பூர், கோல்கொண்டா ஆகியவையும் விஜயநகரப் பேரரசின் அழிவுக்குப்பின் வலிமையுற்று வளர்ச்சி அடைந்தன. பீஜப்பூர், தமிழ்க்கொங்கு நாட்டை நோக்கியும், கோல்கொண்டா தொண்டைநாட்டை நோக்கியும் தம் ஆட்சியைப் பரப்ப முயன்றன. இம்முயற்சிகளால் விஜயநகர அரசு பின்னும் நலிந்தது. தஞ்சை நாயகரும் வீழ்ச்சியுற்றனர். ஆனால், மதுரை நாயகர், மைசூர் உடையார், இச்சேரி, பேடனூர்த் தலைவர் ஆகியோர் வளம் பெற்றனர். பீஜப்பூர் சுல்தானிடம் ஷாஜி என்ற மராட்டிய வீரன் படைத்தலைவனாயிருந்தான். அவனும் அவன் புதல்வர்களான எக்கோஜியும் சிவாஜியும் தஞ்சை நாயகர் ஆட்சியில் தலையிட்டு, அப்பகுதியைக் கைக்கொண்டனர். தஞ்சையில் 18-ஆம் நூற்றாண்டு இறுதிவரை ஒரு மராட்டிய மரபு நிலைபெற்றது. சிவாஜி மற்றொருபுறம் மேல் கடலோரத்தில் கொண்காணக் கரையில் ஒரு மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் இட்டான். சிந்து கங்கை வெளியில் 16-ஆம் நூற்றாண்டில் ஆப்கானியரை வென்று, மொகலாயர் பேரரசு அமைத்தனர். அகமது நகர் அரசு 17-ஆம் நூற்றாண்டிலேயே முகலாயப் பேரரசன் அக்பரால் விழுங்கப்பட்டிருந்தது. அவன் பின்னோர்களான ஷாஜஹான், அவுரங்கசீப் ஆகியவர்கள் பீஜப்பூரையும், கோல்கொண்டாவையும் படிப்படியாக அழித்துக் கீழடக்கி, தமிழகத்திலும் தம் படைத்தலைவரை அனுப்பினர். அச்சமயம் அவர்களால் முற்றிலும் கீழடக்கப்படாதிருந்த பகுதி சிவாஜியின் மராட்டியப் பகுதி ஒன்றேயாகும். ஆனால், மராட்டிய மண்டலத்திலே, சிவாஜி மரபைக் கவிழ்த்து, பேஷ்வாக்கள் என்ற புதிய மரபினர் ஆண்டனர். இவர்கள் பேரரசு நாட்டினர். இப்பேரரசு ஐந்து கிளை அரசுகளாய் பிரிவுற்றிருந்தாலும், பேஷ்வாக்களின் திறமையால் ஒற்றுமை குலையாமல் வலிமை வாய்ந்த கூட்டரசாகவே இயங்கிற்று. 17-ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் உடையார் மரபினர் இன்றைய மைசூர்த் தனியரசின் ஒரு பாதியளவான பரப்பைப் படிப்படியாக வென்று வளர்ச்சியுற்றனர். உடையார் மரபினரில் புகழ் வாய்ந்தவரான சிக்கதேவராயர் 1699-இல் மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப்புடன் நட்புறவுகொண்டு, அவர் ஆதரவைப் பெற்றார். ஆனால், சிக்கதேவராயர் 1704-இல் உலகு நீத்தார். அவருக்குப்பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாயிருந்தனர். மைசூர் அரசு மீண்டும் அவல நிலையடையத் தொடங்கிற்று. அதன் மேல் திசையில் குடகுப் பகுதியையாண்ட பேடனூர்த் தலைவரும், கீழ்த் திசையில் சித்தல துருக்கத் தலைவரும் மைசூர் அரசர்களுக்குப் பெரும் போட்டியாக வளர்ச்சியடைந்து வந்தனர். தமிழகத்தில் மொகலாயப் பேரரசின் ஆளாக, ஆர்க்காட்டு நவாபும், அதன் வடபால், தென்னாடு முழுவதற்கும் பேரரசர் பேராளாக ஹைதராபாது நிஜாமும் நிலை பெற்றனர். அவுரங்கசீப் 1707-இல் மாண்டபின், மொகலாயப் பேரரசு சரிந்தது. நிஜாமும் ஆர்க்காட்டு நவாபும் கிட்டத் தட்டத் தன் னுரிமையுடைய தனியரசர்கள் ஆயினர். பெயரளவில் மட்டும் ஆர்க்காட்டின் மீது நிஜாமுக்கு மேலுரிமை இருந்தது. மேனாட்டு வணிக ஆட்சி நிறுவிய வெள்ளையர்களில், பிரஞ்சுக்காரர் கைவரிசையே 18-ஆம் நூற்றாண்டில் மேலோங்கி இருந்தது. டியூப்ளே போன்ற ஒப்பற்ற அரசியல் தலைவர்களும், லாலி, புஸி போன்ற திறமையான படைத் தலைவர்களும் தென்னகத்திலே பிரஞ்சுப் பேரரசு நாட்டக் கனவு கண்டுவந்தனர். இதற்கேற்பத் தென்னாட்டு மக்களிடையேயும் தென்னக அரச மரபுகளிடையேயும் அவர்கள் நட்புறவும் செல்வாக்கும் வளர்ந்து வந்தன. இந்நிலையினால் தம் வாணிகம் பங்கம் அடையுமே என்ற அச்சத்தினால், ஆங்கிலேயர் அவர்கள் வளர்ச்சியை எதிர்த்து நிறுத்த அரும்பாடு பட்டு வந்தனர். பிரஞ்சுக்காரருக்குத் தாயகத்திலிருந்து போதிய நல்லாதரவு கிடைக்கவில்லை. தமிழரைப்போல, பிரஞ்சுக் காரரும் போட்டி பொறாமை சூழ்ச்சிகளுக்கு இடம் தருபவராயிருந்தனர். இந்நிலை படிப்படியாக, பிரஞ்சு இனத்தின் பெருமை குலைத்து, ஆங்கிலேயர் சூழ்ச்சிகளுக்கு வலுத் தருவதாய் அமைந்தது. தென்னக அரசியல் வாழ்வில் ஹைதர் புகுந்த சமயம் இதுவே. தென்னகத்தில் அச்சமயம் வலிமை வாய்ந்த பேரரசர்கள் மராட்டியப் பேஷ்வா மரபினரும் நிஜாமுமே யாவர். அவர்களுக்கு அடுத்தபடியான வலிமை வாய்ந்த அரசன் ஆர்க்காட்டு நவாபு. ஆனால், இப்பேரரசுகளிடையேயும், அரசுகளிடையேயும் பிரஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் அரசியல் சூதாட்டத்தில் இறங்கியிருந்தனர். இந்த அரசியல் வேட்டைக்காரரின் வேட்டைக்கு, மைசூர் நடுநாயகமாக அமைந்திருந்தது. அதற்குத் தொல்லை கொடுத்து, அதன் வளர்ச்சியைத் தடை செய்யும் வேட்டை நாய்களாக, பேடனூர், சித்தலதுருக்கத் தலைவர்கள் இருபுறமும் இருந்தனர். இவர்கள் தவிர வடக்கே இன்றைய தார்வார் பகுதியில், குத்தி என்ற இடத்தில் மொராரிராவ் என்ற ஒரு மராட்டியத் தலைவனும், கடப்பை, கர்நூல், சாவனூர் ஆகிய பகுதிகளில் தனித்தனி நவாப்புகளும் ஆட்சி செய்தனர். உள்நாட்டு வேற்றுமைப் பூசல் களமாகவும், வெளி நாட்டார் வேட்டைக் களமாகவும் விளங்கிய அந்நாளைய தென்னாட்டு அரசியல் வாழ்வில் ஹைதர் புகுந்து, அதை எவ்வாறு தன் வீர வெற்றிக் களமாக மாற்றினார் என்பதை இனிக் காண்போம். 3. குடி மரபு மன்னர் மரபிலே தோன்றி மன்னர் ஆனவரும் உண்டு; குடிமரபில் தோன்றி மன்னவரானவரும் உண்டு. புகழிலும் ஆற்றலிலும் பண்பிலும் பிந்திய வகையினரே மேம்பட்டவர்கள் என்று வரலாறு காட்டுகிறது. உண்மையில் புகழ்மிக்க மன்னர் மரபுகளை ஆக்கியவர்களே குடிமரபினர்தான். ஆயினும், மன்னர் மரபுக்கே புகழ் தந்தவர்கள்கூடத் தம் குடி மரபை மறைக்கவே விரும்பியுள்ளனர். முடிமரபின் மாயப் புதிர் இது. மன்னரின் இம்மயக்க ஆர்வத்தைப் பயன்படுத்தி மன்னனைத் தன்னலப் பசப்பர்களும் புரோகிதர் குழாங்களும் போலி அரச மரபுகளையோ, தெய்வீக மரபுகளையோ படைத்துருவாக்க முனைந்துள்ளனர். இவற்றின் மூலம் அவர்கள் மன்னரைத் தம் வயப்படுத்தவும், குடிமக்களிடமிருந்து அவர்களைப் பிரித்து வைத்துத் தன்னலம் பெருக்கவும் தயங்கியதில்லை. குடிமரபிலே பிறந்து கோ மரபுக்கு மதிப்பளித்தவன் ஹைதர். ஆனால், மேற்கூறிய ஆர்வத்துக்கு அவன்கூட விலக்கானவன் என்று கூற முடியாது. தன் வீரப் புகழ் ஆட்சியின் உச்சநிலையிலேகூட, அவன் தான் பீஜப்பூர் மன்னர் மரபினன் என்று கூறி, தன் பெருமையை பீஜப்பூரின் பெருமையாக்கி மகிழ்வதுண்டாம்! ஆனால், கால நிலையை ஊன்றி நோக்கினால், ஹைதரின் இவ்வார்வம் கண்டிக்கத் தக்கதல்ல என்னல் வேண்டும். ஏனென்றால், அந்நாளைய இஸ்லாமிய உயர் குடியாளரும், அவர்களைப் பின்பற்றி வெள்ளையரும் பீஜப்பூர் போன்ற தென்னாட்டு அரசுகளின் மரபுகளைக்கூட உயர் மரபாகக் கருதவில்லை. உயர்குடி என்றால் தென்னாட்டுக்கு அயலான குடி என்றே அவர்கள் கருதினர். மரபின் பழமைக் கொடி வடபுலத்திலிருந்தோ, இஸ்லாமிய மேலைப்புறங்களிலிருந்தோ வந்திருந்தால்தான் உயர்குடிச் சிறப்பும் மதிப்பும் அதற்கு இருக்க முடியும் என்று அவர்கள் எண்ணினார்கள். இந்நிலையில் ஹைதர் மரபைப் பெருமைப்படுத்த எண்ணிய இஸ்லாமிய வரலாற்றாசிரியர், அவன் குடிமரபின் பழமையை லாகூருக்கும் பாக்தாதுக்கும் கொண்டு சென்று, அதன்மீது அயல்நாட்டுப் பழமைப் புகழொளி பரப்ப முயன்றுள்ளனர். இம்முயற்சி முழு வெற்றி காணவில்லை. ஏனென்றால், பாட்டன் முப்பாட்டன் கடந்து குடி மரபுப் பட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துவரவில்லை. ஒருசாராரின் குலமரபுக் கொடியின்படி, ஹைதரின் தொலைமுன்னோன் ஹஸன் என்பவன். இவன் இஸ்லாமியரிடையே புகழ் முதன்மை பெற்ற ‘குரேஷ்’ குடியினன். இன்றைய ஈராக்கின் பழங்காலத் தலைநகரான பாக்தாதிலிருந்து, சிந்து வெளியிலுள்ள ஆஜ்மீருக்கு வந்து அங்கே குடியேறியவன். அவன் புதல்வன் வலிமுகம்மது தன் சிற்றப்பனுடன் மனத்தாங்கல் கொண்டு, தென்னாட்டிலுள்ள குல்பர்கா நகருக்கு ஓடிவந்தான். அவன் மகனே ஹைதர் அலியின் பாட்டனான அலிமுகமது. மற்றொரு கூற்றின்படி, முதல் முன்னோன் முகமது பாய்லோல் என்பவன். இப்பெயர் மொகலாயருக்கு முன் தில்லியை ஆண்ட லோடி மரபினரின் பெயரை நினைவூட்டுவது. அவன் தன் புதல்வர்கள் வலிமுகமது, அலிமுகமது என்பவர்களுடன் பாஞ்சாலத்திலிருந்து பிழைப்புக்காக குல்பர்கா வந்து சேர்ந்தான். முந்திய மரபில் அலிமுகமதுவின் தந்தையாகக் காணப்பட்ட வலிமுகமது, இம்மரபில் அவன் தமையனாகத் தோற்றமளிக்கிறான். ஹைதர் குடிமரபில் அலிமுகமதுவுக்குப் பின் குளறுபடி எதுவும் இல்லை. ஆகவே அலிமுகமதுவின் கால முதலே குடிமரபு வரலாறு மெய்யானது என்று கொள்ளலாம். அலிமுகமது கல்வி கேள்விகளில் வல்லவன். இப்புகழ் குல்பர்கா நகரில் அவன் மதிப்பை உயர்த்திற்று. அந்நகரில் வாழ்ந்த சயித்பர்ஸா முன்ஷி என்ற சமயத் துறைப் பெரியாரின் புதல்வியை அவன் மணம் செய்துகொண்டான். குல்பர்காவில் ஏற்பட்ட ஆட்சி மாறுதல் காரணமாக, அவன் அந்நகரைவிட்டு வெளியேற நேர்ந்தது. அவன் மைத்துனர்கள் ஏழுபேர் இருந்தார்கள். ஏழு பேருமே பீஜப்பூர் சுல்தானிடம் படைத்துறை அலுவலில் அமர்ந்திருந்தவர்கள். அவர்கள் ஆதரவால் அலிமுகமதுவும் பீஜப்பூர் சென்று பணியமர்வு பெற்றான். இனித் தன் வாழ்வு பட்டு மெத்தை விரித்த வாழ்வாகவே இருக்கும் என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். ஆனால், அது அவ்வாறு அமையவில்லை. அவுரங்கசீப் பீஜப்பூரைப் படையெடுத்தபோது, அவன் மைத்துனர் ஏழு பேரும் ஒருவர் பின் ஒருவராக அரிய வீரச் செயல்களாற்றிக்களத்திலேயே புகழுடன் மாண்டனர். இச்செய்தி கேட்ட அவர்கள் தங்கையாகிய அலியின் மனைவி, வாழ்விலே முழுதும் வெறுப்படைந்து வாடி வதங்கினாள். எவர் தேற்றினாலும் தேறாமல் அவள் வாழ்வு-மாள்வுக்கிடையே ஊசலாடினாள். இடமாற்றத்தால் மனைவியின் உயிர் காக்க எண்ணி, அலி மீண்டும் குடி தூக்கினான். சுரா மாகாணத்திலுள்ள கோலார் (கோலாறு) அவனுக்குத் தஞ்சம் அளித்தது. கோலார்த் தலைவன் ஷாமுகமது அவனுக்கு ஆதரவு காட்டி, அவனைத் தன் அரண்மனையில் பணியரங்கத் தலைவன் ஆக்கினான். அவன் குடி மீண்டும் தழைத்தது. முகமது இலியாஸ், முகமது, முகமது இமாம், ஃவைத்தே முகமது ஆகிய நான்கு புதல்வரைப் பெற்று வளர்த்தான். அவன் 1678-ல் உலகு நீத்தான். தலைமூத்தவனான முகம்மது இலியாஸுக்கும் கடைசி இளவலான ஃவத்தேமுகமதுவுக்கும் வாழ்க்கைப் பண்பிலே மிகவும் முரண்பாடு இருந்தது. இலியாஸ் சமயப்பற்றார்வம் மிக்கவன்; ஃவத்தே இளமைத் துடிப்பும் வீரமும் உடையவன். அவர்கள் முரண்பாடு முறுகிப் பிணக்கமாயிற்று. இலியாஸ் குடும்பத்தையே துறந்துவிட்டு தஞ்சையிலிருந்த பர்ஹான் உதீன் என்ற ‘பீர்சாதா’ - அதாவது ஞானகுருவையடைந்து, அவர் பணியில் நாட்கழித்தான். ஃவத்தேமுகமது ஆர்க்காட்டு நவாப் சாதத் உல்லாவிடம் தானைத்தலைவன் (பௌஜ்தார்) ஆக வேலை பார்த்தான். செஞ்சிக்கோட்டையை நவாப் முற்றுகையிடும்போது செஞ்சித் தலைவன் தீப்சிங் நவாபின்மீது மூர்க்கமாகத் தாக்கினான். நவாபின் உயிருக்கே பேரிடையூறு ஏற்படவிருந்தது. ஃவத்தேமுகமது தீப்சிங்கை எதிர்த்து வீழ்த்தி நவாபைக் காப்பாற்றினான். இதனால் அவனுக்கு ஆனை அம்பாரி முரசும் முதலிய மதிப்புகளும், ‘நாய்கன்’ என்ற பட்டமும், புகழும் கிட்டின. 1701-இல் இலியாஸ் உயிர் நீத்தான். அவன் சார்ந்த ஞானகுருவின் புதல்வியை மணந்துகொண்டு, ஃவத்தே முகமது தன் படிமுறையை உயர்த்திக்கொண்டான். ஏனென்றால், இம்மண உறவுமூலம் ஆர்க்காட்டுக் கோட்டை முதல்வன் இப்ராஹிம் அவன் மைத்துனனானான். இலியாஸுக்கு ஹைதர் சாகிபு என்ற புதல்வன் இருந்தான். அவன் கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலியின் பெரியப்பன் புதல்வனாதலால், மூத்த ஹைதர் சாகிப் எனக் குறிக்கப்படுகிறான். அவன் சிற்றப்பன் ஃவத்தே முகமதுவைப் போலவே சிறந்த வீரன். மைசூரை அப்போது ஆண்டவன் சிக்கதேவராயரின் புதல்வனான தொட்ட கிருஷ்ணராஜ் ஆவன். மூத்த ஹைதர் சாகிபு மைசூர் அரசன் படைத்துறையில் ‘நாய்கன்’ என்ற பட்டத்துடன், நூறு குதிரைகளும், இரு நூறு காலாட்களும் உடைய படைப் பிரிவின் தலைவனானான். புகழும், குடி மதிப்பும் ஃவத்தேமுகமதுவுக்கு இன்பம் தரவில்லை. நவாபின் சூழலிலிருந்த பொறாமைப் பூசல்கள் அவன்மீது புழுக்கத்தையும் வெறுப்பையும் வளர்த்தன. அரசுரிமை மாற்றத்துடன் அவன் அங்கிருந்தும் வெளியேற வேண்டியதாயிற்று. சிலகாலம் தமையன் மகன் மூத்த ஹைதர் சாகிபுவின் உதவியால் அவன் மைசூரில் அலுவல் பார்த்தான். பின் சுரா மாகாணத் தலைவனான தர்கா கலீகானிடம் சென்று பெரிய பலாப்பூர்க் கோட்டை முதல்வனாக அமர்வு பெற்றான். இங்கே மாகாணத் தலைமை அரசுரிமைப் பதவி அடிக்கடி மாறிற்று. ஃவத்தேமுகமதுவின் திறமையும் புகழும் என்றும் பெரிதாகவே இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றம், கட்சி - எதிர்க்கட்சிப் பூசல் காரணமாக அடிக்கடி அவன் அல்லற்பட்டு இக்கட்டுகளுக்கு ஆளானான். ஃவத்தே முகமதுவுக்கு பர்ஹான் உதீனின் புதல்வி யல்லாமல், மற்றும் இரண்டு மனைவியர் இருந்தார்கள். அவர்களில் இளையாள் மூலம் அவனுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். இரண்டாவது புதல்வன் இளமையிலேயே காலமானான். ஷாபாஸ்கான், ஹைதர் அலிகான் என்ற மற்ற இரு புதல்வர்களுமே அவன் குடிமரபின் புகழ்ச் சின்னங்களாக நிலவினர். ஷாபாஸ் 1718-லும் ஹைதர் 1721-லும் பிறந்தனர். இளையவராகிய ஹைதரே பின்னாளில் கன்னடத்தின் போர்வாளாகப் புகழ் பெற்ற சிங்கக்குருளை ஆவார். ஃவத்தே முகம்மது அந்நாளைய தன்னல, தன்னாதிக்கப் பூசல்களிடையே தன் தலைவனாகிய தர்காகலிகானுக்கும் அவன் பின்னோர்களுக்கும் உண்மை தவறாமல் உழைத்து வந்தான். ஆயினும், உடனிருந்தோர் தவறுகளால் அவன் தோல்வியுற்றுப் போரில் மாளநேர்ந்தது. தர்காலிகானின் புதல்வனாகிய அப்பாஸ்கலிகான் நன்றிகெட்டதனமாக, அவன் செல்வமுழுவதையும் பறிமுதல் செய்து எடுத்துக் கொண்டான். அத்துடன் நில்லாமல் அக்கொடியோன் பணப்பேராசையால் ஃவத்தேயின் மனைவிமக்கள் அணிமணி ஆடைகளையும் பறித்துக்கொண்டு, அவர்களைச் சிறையிலிட்டுக் கொடுமைக்கு ஆளாக்கினான். எட்டு வயதான ஷாபாஸும், மூன்றே வயதுடைய ஹைதரும் ஒரு பெரிய முரசத்தினுள் வைத்து, அதிர்ச்சியில் துடிதுடித்து வீறிடும்படி முரசறைவிக்கப் பெற்றனராம்! மைசூரில் வாழ்ந்த மூத்த ஹைதர் சாகிப் தன் சிற்றன்னையரும் தம்பியரும் படும் அவதிகேட்டு, அவர்களைச் சென்று விடுவித்தான். அவர்களைத் தன் பாதுகாப்பிலேயே வைத்து அவன் வளர்த்தான். ஷாபாஸுக்கு வயது வந்ததும் அவன் தன்னுடன் அவனையும் படைத்துறை அலுவலில் சேர்த்துக் கொண்டான். 1749-இல் தேவன ஹள்ளிக் கோட்டை முற்றுகையின் போது, மூத்த ஹைதர் சாகிப் வீரப் போர் செய்து மாண்டான். ஷாபாஸ் போரில் காட்டிய வீரத்தை மெச்சி, மைசூர் அமைச்சனான நஞ்சிராஜ் அவனை மூத்த ஹைதரின் பதவியில் அமர்த்திக் கொண்டான். இளைய ஹைதர் இப்போரில் ஒரு புதுப் படை வீரனாகவே சேர்ந்திருந்தான். அந்நிலையிலும் அவன் ஆற்றிய அஞ்சா வீரதீரச் செயல்கள் அமைச்சனின் மதிப்பையும் பாராட்டையும் பெற்றன. ஆகவே, ஹைதரிடமும் ஒரு சிறிய படைப் பிரிவின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கன்னடத்தின் போர்வாளாக ஹைதர் இதுமுதல் வளரலானான். வாள் கொண்டு அவன் தன் வீரப் புகழ்க் கழனியை உழத் தொடங்கினான். அடுத்து நடைபெற்ற ஆர்க்காட்டு முற்றுகையின் போதும், அதன் பின் நடைபெற்ற போராட்டங்களின் போதும் ஹைதர் புகழும் ஆற்றலும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தன. மைசூர் இச்சமயம் ஈடுபட்டிருந்த போராட்டம் நிஜாம், ஆர்க்காட்டு நவாப் ஆகிய இரண்டு அரசர் குடிகளிலும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் எழுந்த அரசுரிமைப் போராட்டமேயாகும். இதுவே, கர்நாடகப் போர் என்ற பெயரால் 1748 முதல் 1754 வரை தென்னாடெங்கும் சுழன்றடித்த போராட்டப் புயல் ஆகும். இப்போராட்டப் புயலின் கருவிலிருந்தே ஹைதர் அலியின் புகழ் முதிர்ச்சியுற்று வளர்ந்து தென்னக வாழ்வில் தவழத் தொடங்கிற்று. அப்புயலின் வரலாறே அவன் புகழ் வரலாற்றின் தொடக்கம் ஆகும். 4. தென்னக அரசியல் அமளி ஆங்கில ஆட்சி தென்னகத்தில் வேரூன்ற வகை செய்த பெருநிகழ்ச்சி கருநாடகப் போரேயாகும். அதன் பின்னாளைய விளைவுகளை நோக்க, அதை நாம் ‘தென்னாடு விடுதலை இழந்த வரலாறு’ என்று குறிப்பிடலாம். தென்னாட்டுக்கு அதன் படிப்பினைகள் நிலையானவை. அதன் எச்சரிக்கைகள் காலத்திரையில் ஆழப் பதிந்துள்ளவை. விடுதலை இழப்பால் பயன் இழந்தவர்கள் தென்னாட்டு மக்கள். பயன் அடைந்தவர்கள் ஆங்கிலேயர். ஆனால், பயன் அடையத் திட்டமிட்டவர்கள் பிரஞ்சுக்காரர்கள். சிறப்பாக பிரஞ்சுத் தலைவராயிருந்த அந்நாளைய தலைசிறந்த அரசியல் மேதை, டியூப்ளே! பழம், மரத்தைவிட்டு அகன்றுவிட்டது. ஆனால், அது எய்தவன் கையில் விழவில்லை. அதன் அருமையறியாத மூன்றாவது பேர்வழியின் கைவசப் பட்டுவிட்டது. தென்னாட்டு வரலாற்றின் ஒரு முக்கோணப் புதிர் இது. தென்னகத்தின் விடுதலை வாழ்வு, பிரஞ்சுப் பேரரசாட்சி, ஆங்கில ஆதிக்கம் என்று மூன்று தலைகளையுடைய முக்கோணச் சக்கரத்தின் சுழற்சியே கருநாடகப் போராட்டம். முதல் நிகழ்ச்சி நிறைவேறப் பாடுபட்டவன் ஹைதர். மற்றத் தென்னகப் பேரரசுகளும் அரசுகளும் குந்தகமாயிருந்திராவிட்டால், அதில் அவன் வெற்றி பெற்றிருப்பான். ஆனால், தென்னகத்தின் வேற்றுமைப் பிணக்குகள் இரண்டாம் நிகழ்ச்சிக்கு உதவின. இரண்டாம் நிகழ்ச்சி வெற்றிபெறக் கனவு கண்டவன் டியூப்ளே. அதை அடைவதற்குரிய துணிவு, அரசியல் நுட்பம் அவனிடம் இருந்தது. புஸி, லாலி போன்ற அவன் படைத் தலைவர்களிடம் அதற்குரிய தலைமைத்திறம், போர்ச் சாதனங்கள், படைத்திறம், வீரம் ஆகிய யாவும் இருந்தன. தவிர, டியூப்ளே தென்னக மக்கள் வீரத்தை அடிப்படையாகக் கொண்டே பிரஞ்சுப் புகழ்ப் பேரரசு எழுப்ப முனைந்தான். தென்னக மக்கள் மன்னர் மரபுகள் ஆகியவற்றில் அவனுக்குச் செல்வாக்கும் நேசபாசமும் மிகுதியாகவே இருந்தது. ஆனால், இத்தனை வாய்ப்புக்களையும் விழலுக்கிரைத்த நீராக்கின, பிரஞ்சு தாயத்தில் இருந்த வாணிக ஆட்சியாளர்களின் தொலைநோக்கின்மை, நாட்டுப் பற்றற்ற குறுகிய பொறாமைப் போக்கு, ஆகியவை. இவையே, பிரஞ்சு மக்கள் கைப்பட இருந்த பேரரசை. அதனைக் குறிக்கொள்ளாத, அதில் நேரிடையான அக்கறையற்ற ஆங்கிலேயர் வசமாக்கிற்று. ஆங்கிலேயரிடம் அரசியல் நோக்கம் தொடக்கத்தில் இல்லை. வாணிக நோக்கமே இருந்தது. பிரஞ்சு ஆதிக்கம் தம் வாணிகத்துக்குக் கேடு செய்யும் என்பதனாலேயே அவர்கள் பிரஞ்சு ஆட்சியை எதிர்த்தனர். அத்துடன் அக்காரணத்தால் அரசியல் நோக்கத்தை அவர்கள் ஏற்க வேண்டியதாயிற்று. ஆனால், அதை ஏற்ற பின்பும் அவர்கள் முதல் நோக்கம் அதுவல்ல. ஆட்சி அவர்களுக்கு வாணிக ஆதிக்கத்து ஒரு கருவி மட்டுமே. அது கைக்கு வந்தபின், அவர்கள் பிரஞ்சுக்காரரைப்போல, வாணிகத்தைக் கைக்கொள்வதுடனும் புகழ் ஆட்சி செய்வதுடனும் நின்றுவிடவில்லை. அவர்கள் ஆட்சியைப் பயன்படுத்தி, தென்னகத்தில் அன்று குவிந்து கிடந்த உலகின் பெருஞ் செல்வத்தைக் கைக்கொண்டு, அதன் மூலம் உலக ஆதிக்கமே நாடினர். அது மட்டுமோ? கைத்தொழில் துறையிலும் தொழில் நுட்பத் துறையிலும் அன்று தென்னகம் உலகத்தில் தலைமை பூண்டு, உலகத்தையே ஆட்டிப் படைத்து வந்தது. அத்தொழில் வளத்தை அழிக்கவும், அதைத் தன் கைவசமாக்கித் தொழில் நாடாக வளரவும் ஆங்கில ஆட்சி இங்கிலாந்துக்கு உதவிற்று. பிரஞ்சு ஆட்சி ஏற்பட்டிருந்தால், தென்னாடு விடுதலை இழந்து தளைப்பட்டிருக்கும். ஆனால், அது தங்கத் தளையாகவே இருந்திருக்கும். விடுதலை இழப்பு நீங்கலாக வேறு எந்தப் பொல்லாப்புக்கும் அது ஆளாகியிருக்காது. நேர் மாறாக, ஆங்கில ஆட்சியின் முழுத்தீங்கு, அது அயல் ஆட்சி என்பது மட்டுமல்ல; அது அரசியல் விடுதலை வாழ்வை மட்டுமின்றி, தென்னகத்தின் பொருளியல் வாழ்வையும், கலை வாழ்வின் பெருமையையும் அழித்தது என்பதே. 18-ஆம் நூற்றாண்டு வரை உலகில் இத்துறைகளில் போட்டியற்று முதன்மை நிலை அடைந்திருந்த தென்னாடு, 19, 20-ஆம் நூற்றாண்டுகளுக்குள் உலகில் மட்டுமல்ல; கீழ்த்திசையில்கூடக் கடைப்பட்ட நாடாயிற்று. அதன் முதன்மைநிலை தடம் இல்லாது அழித்தொழிக்கப்பட்டது. ஹைதரின் பெருமை அவன் விடுதலை வாழ்வு சரியாமல் காக்க முயன்றான் என்பது மட்டுமல்ல; விடுதலை சரிவுறும் காலத்திலேயே புதிய விடுதலைக்கு அடிகோலினான் என்பது மட்டுமல்ல; அவன் முழுப் பெருமை இவை கடந்த ஒன்று. அவன் தென்னகத்தின் பொருளியல் சரிவு கண்டு, அதைத் தடுக்க அரும்பாடுபட்டான் என்பதே. ஹைதர் அரசியல் வாழ்வில் நுழைவதற்கு முன்பே நிஜாமும் ஆர்க்காட்டு நவாபும் விடுதலை வாழ்வின் சரிவு நோக்கிச் சறுக்கத் தொடங்கிவிட்டனர். நிஜாம் அரசை முதல் முதல் நிறுவியவன் மீர் கமருத்தீன் என்பவன். அவன் தந்தை மொகலாயப் பேரரசின் கீழ் கூர்ச்சரத்தின் மண்டலத் தலைவனாயிருந்தவன். அவன் பாட்டன் ஆஜ்மீர் மண்டலத் தலைவனாயிருந்தவன். ஆனால், அவுரங்கசீப்பின் ஆட்சியின் பின் மொகலாயப் பேரரசு சரியத் தொடங்கியபோது, அவன் தென்னகத்தில் தனியாட்சி நிறுவி 1713 முதல் 1748 வரை நிஜாம்உல்முல்க் என்ற பட்டப் பெயருடன் தென்னக முழுவதும் மேலாட்சி நிறுவினான். அவனுக்குப் பின் அவன் இரண்டாம் புதல்வனான நாஸிர்ஜங்கும், மகள் பிள்ளையான முசபர்ஜங்கும் நிஜாம் அரசுரிமைக்குப் போட்டியிட்டனர். தென்னாட்டின் விடுதலை வீழ்ச்சிக்கு இந்நிகழ்ச்சியே வித்திட்டது. நிஜாமைப்போலவே ஆர்க்காட்டில் தனியாட்சி நிறுவி 1710 முதல் 1732 வரை சாதத்துல்லாகான் நவாபாக ஆட்சி செய்தான். அடுத்து வந்த நவாப் தோஸ்த் அலிகான் மைசூர்மீது படையெடுத்து, அப்போது மைசூரை ஆண்ட சிக்க கிருஷ்ண ராஜனின் படைகளால் முறியடிக்கப் பெற்றான். அவனுக்குப் பின் ஆட்சி பல கைகள் மாறி வலுவிழந்தது. ஆனால், நிஜாமின் ஆதரவு பெற்று அன்வருதீன் 1743 முதல் 1748 வரை நல்லாட்சி நடத்தினான். அதன் பின் இங்கும் அரசுரிமைப் போட்டி எழுந்தது. அன்வருதீன் மகனான வாலாஜா-சுராஜ் உத்தௌலா-முகமதலி ஒரு புறமும், தோஸ்த் அலிகானின் மருமகனான சந்தா சாகிப் மற்றொரு புறமும் போட்டியிட்டனர். முகமதலியை நாஸிர்ஜங்கும், சந்தா சாகிபை முசபர் ஜங்கும் பிரஞ்சுக்காரரும் ஆதரித்தனர். போரின் முதல் கட்டத்தில் நாஸிர்ஜங்கின் கை மேலோங்கிற்று. கமருத்தீன் இறந்த சமயம் நாஸிர்ஜங் அருகிலிருந்ததால் அவன் அரசிருக்கையை எளிதில் காப்பாற்ற முடிந்தது. மைசூர் மன்னரும் மற்றும் குறுநில அரசரும் அவனை ஆதரித்தனர். பிரஞ்சுப் படையில் அப்போது உட்கிளர்ச்சி இருந்து வந்ததனால், முஸபர்ஜங் புதுச்சேரிக்கு ஓட நேர்ந்தது. புதிய நிஜாமான நாஸிர் ஜங்கின் ஆணைக்கு இணங்கியே மைசூர் அரசன் போரில் இறங்கினான். அரசன் சிக்க கிருஷ்ண ராஜன் திறமையற்றவனாயிருந்ததால், அமைச்சன் நஞ்சிராஜனே இதுபோது அரசியலை நடத்தி வந்தான். அவன் முஸபர்ஜங்கின் ஆட்கள் வசமிருந்த தேவன ஹள்ளிக் கோட்டையை முற்றுகை செய்தான். மூத்த ஹைதர் சாகிபு வீரப்போர் செய்து மடிந்ததும், ஹைதரும் ஷாபாஸும் திறமையாகப் படை நடத்தி மூத்த ஹைதரின் இடத்தில் ஷாபாஸ் அமர்வு பெற்றதும் இம்முற்றுகையிலேதான். ஹைதர் தன் கன்னிப்போர் ஆற்றிப் புகழும் ஆதரவும் பெற்றதும் இங்கேயே. மைசூர்ப் படைகளின் அடுத்த நிகழ்ச்சி ஆர்க்காட்டு முற்றுகையே. நாஸிர்ஜங் முகமதலியை நவாபாக்குவிக்கும் முயற்சியில் தன் படைகளுடன் இதில் ஈடுபட்டான். ஷாபாஸும் ஹைதரும் மைசூர்ப் படைகளை இங்கே நடத்தினார்கள். முற்றுகை வெற்றியடைந்தது. முகமதலி நவாபாக்கப்பட்டான். நாஸிர்ஜங் வெற்றிப் புகழுடன் அங்கேயே தங்கியிருந்தான். மைசூர்ப் படைகள் இங்கே வீர தீரத்துடனும் கட்டுப்பாட் டுடனும் நின்று போரிட்டது கண்டு, ஆங்கில வரலாற் றாசிரியர்கள்கூட வியப்படைந்துள்ளனர். இதில் புத்தம் புதிய வீரன் ஹைதரின் கைவரிசையே முனைப்பாயிருந்தது என்பது பின்னாட்களிலேயே அவர்களுக்குத் தெரியவந்தது. ஆனால், மைசூர் அமைச்சன் நஞ்சிராஜன் இவ்வீர இளஞாயிற்றின் பெருமையை முற்றிலும் உணர்ந்துகொண்டான். அவனுக்கு மானியம் அளித்து நிலவரியை நேரிடையாகப் பிரிக்கும் உரிமையும் தந்தான். அத்துடன் மன்னர் பெயரில் தனிப் படை திரட்டும் உரிமையும் அவனுக்குத் தரப்பட்டது. அமைச்சரோ டொத்த துணையமைச்சராக அவன் படிநிலை உயர்ந்தது. 1750-க்குள் போர் நாஸிர்ஜங் பகதூருக்கு எதிராகத் திடீரென்று திரும்பிற்று. அரசியல் சூழ்ச்சிகளில் வல்ல டியூப்ளே தன் கைவரிசையைத் திடுமெனச் செஞ்சிக் கோட்டை மீது திருப்பினான். நவாப்புகள் ஆர்க்காட்டைத் தலைநகராகத் தேர்ந்தெடுக்குமுன், சிவாஜி காலமுதல் அதுவே தமிழகத்தின் தலைநாயகக் களமாக இருந்து வந்தது. பிரஞ்சுப் படைத்தலைவன் புஸி அதைக் கைப்பற்றியதனால் கடப்பை, கர்நூல் முதலிய பகுதிகளிலுள்ள வலிமை வாய்ந்த குறுநில மன்னர் பிரஞ்சுச் செல்வாக்குக்கு உடன்பட்டனர். அவர்கள் உதவியுடன் நாஸிர்ஜங்கு சூழ்ச்சிப் பொறியில் சிக்கவைக்கப்பட்டான். சின்னாட்களில் அவன் சதிகாரர் கைப் பட்டு இறந்தான். முஸபர்ஜங் இப்போது பிரஞ்சு உதவியுடன் நிஜாமானான். முகமதலி ஆர்க்காட்டை விட்டுத் திருச்சிராப்பள்ளிக்கு ஓட வேண்டியதாயிற்று. இங்கும் அவன் சந்தாசாகிபினால் முற்றுகையிடப்பட்டான். இச்சமயத்தில், முகமதலி ஆங்கிலேயர் உதவி நாடினான். இது முதல், முகமதலி, இறந்துபோன நாஸிர்ஜங் மரபினர் ஆகியவர் பக்கமாக ஆங்கிலேயரும் கருநாடகப் போரில் ஈடுபட்டனர். பொதுவாக இச்சமயத்திலும் இதற்குச் சில நாள் பின்னரும் பிரஞ்சுத் தலைவர்களைவிட ஆங்கிலத் தலைவர்கள் அரசியல் திறமையும் போர்த் திறமையும் குன்றியவர்களாகவே இருந்தார்கள். ஆயினும், ஹைதரைப்போலக் குடிமக்கள் மரபிலிருந்து எழுந்த ராபர்ட் கிளைவ் என்ற வீரன் இப்போது ஆங்கிலேயர் மதிப்பை உயர்த்த முன் வந்தான். அவன் அரசியல் கவறாட்டத்தில் எதிர் கவறாட்டமாடி, ஆர்க்காட்டைக் கைப்பற்றினான். முகமதலி மீட்டும் தவிசேறினான். ஹைதர் இப்போது போர்வீரனாக மட்டும் செயலாற்ற வில்லை. மாநிலத்தின் சூழ்நிலையையும் மைசூரின் நிலையையும் அவன் கூர்ந்து கவனித்தான். பணமும், படை வலிமையும், படைத்துறைச் சாதனங்களும் அன்றைய நிலையில் ஓர் அரசின் உறுதிக்கு மிகமிக இன்றியமையாதவை என்பதை அவன் கண்டான். எனவே, நாஸிர்ஜங் வீழ்ச்சியடைந்ததும், நாஸிர்ஜங்கின் கருவூலமும் படைத்துறைச் சாதனங்களும் எதிர்தரப்பாரிடம் சிக்கிவிடாமல் அவன் தடுத்தான். அவற்றைத் தானே கைக்கொண்டு அவற்றுடன் மைசூருக்கே மீண்டான். சிறிய படைவீரர் களிடையிலிருந்தும் பொதுமக்களிடையிலிருந்தும் ஆள் திரட்டி அவன் தன் படையணிகளைப் பெருக்கிக் கொண்டான். சிறப்பாக மலை நாட்டு மக்களாகிய வேடர்கள் அவன் படையின் ஒரு தலைக்கூறாய் அமைந்தனர். நாஸிர்ஜங் வீழ்ச்சியுடன் மகமதலியின் கை வலுத்திருந்தது. கிளைவின் உதவியால் அவன் அரசிருக்கை பெற்றாலும், அதை வைத்துக் காக்கும் வகையில் அவன் கையாலாகாதவனாகவே இருந்தான். இந்நிலையில், ஹைதரும் மைசூர் அமைச்சரும் கட்சிச் சார்பில்லாமல் தம் தனி நலம் பேணுவதிலேயே ஈடுபடலாயினர். இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி மைசூர் வரும் வழியிலேயே ஹைதர் புதுச்சேரியைச் சென்று பார்வையிட்டான். பிரஞ்சுக் காரருடனும் பிரஞ்சுத் தலைவருடனும் நட்பு முறையில் அளவளாவி, அவர்கள் போர் முறைகள், கட்டுப்பாடு, அமைப்பாண்மைத்திறம், வீர உணர்ச்சி ஆகியவைகளை அவன் கூர்ந்து கவனித்தான். இந்நிகழ்ச்சி ஹைதர் அரசியல் வாழ்வில் ஒரு நல்லொளி விளக்கைப்போல் அமைந்தது. புதுப்படைகளைத் திறம்படப் பயிற்றுவிப்பதில் இதுமுதல் அவன் மிகுதிக் கவனம் செலுத்தினான். படைத்துறை நடவடிக்கை நுட்பங்களிலும் அவன் கருத்தாராய்ச்சி ஓடிற்று. தவிர, பயிற்சி வகைகளிலும், அமைப்பாண்மைத் துறையிலும் பிரஞ்சுப் படைத்துறை வல்லுநர்களையும் பணித் தலைவர்களையும் அமர்த்த இது தூண்டுதலளித்தது. பிரஞ்சு மக்களின் வாய்மையும் உறுதியும் இவ்வேளையில் அவனுக்குப் பெரிதும் பயன்பட்டன. மைசூர் அமைச்சன் நஞ்சிராஜன் தன் பக்கமும் பிரஞ்சுக்காரர் பக்கமுமாக ஊசலாடுவதை முகமதலி கண்டான். நஞ்சிராஜன் பேரவாவைத் தூண்டி அவனைத் தன்பக்கம் இழுக்க முயன்றான். ஆகவே, தன் எதிரியாகிய சந்தாசாகிபை அழித்துத் தமிழக முழுவதையும் வெல்ல உதவினால் திருச்சிராப்பள்ளிக் கோட்டையையும் அதைச் சார்ந்த பகுதிகளையும் நஞ்சிராஜனுக்கு அளிப்பதாக அவன் நைப்பாசை காட்டினான். மைசூர் மன்னனும் மக்களும் இதை விரும்பவில்லை. ஆயினும், பேராவல் தூண்ட நஞ்சி ராஜன் இதை ஏற்றான். ஹைதரையே படையுடன் அப்பக்கம் அனுப்பினான். தன் கட்சியை வலுப்படுத்தும்படி, நஞ்சிராஜன் குத்தியை ஆண்ட மராட்டியத் தலைவன் மொராரிராவையும் பிற தலைவர்களையும் பணம் கொடுத்துத் தன் வசப்படுத்தினான். மராட்டியப் படைகளும் கொள்ளைக் கூலி பெறும் ஆர்வத்துடன் உடன் சென்றன. இரண்டாவது கருநாடகப் போரில் பிரஞ்சுக்காரர் வீழ்ச்சிக்கும் ஆங்கிலேயர் வெற்றிக்கும் ஹைதர் அலியே பேரளவு காரணமாய் அமைந்தான். ஆங்கில வரலாற்றாசிரியர் இதை மறைத்து மழுப்பியுள்ளனர். கிளைவின் சூழ்ச்சி நடவடிக்கை ஒன்றிலன்றி, ஆங்கிலேயர் எதிர்ப்புக்கு பிரஞ்சுத் தளபதிகள் சளைத்ததில்லை. ஆனால், அத்தகையோர் இப்போது ஹைதரின் தாக்குதலுக்கு மீண்டும் மீண்டும் உடைந்தனர். சிறப்பாக ஹைதரின் குதிரைப் படையின் ஆற்றல் தென்னகம் முன்பு காணாத ஒன்றாயிருந்தது. காசீகான் பேடேயின் தலைமையில் அது இரவும்பகலும் எதிரிகளைத் தாக்கிச் சீர்குலைத்தது. எதிரிகளின் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் கைக் கொண்டு, அப்படை எதிரிகளின் வலுவைத் தன் வலுவாக்கி வந்தது. சந்தாசாகிப் மதுரைநாயக மரபின் கடைசி இளவரசியை ஆசை வார்த்தைகளால் நம்பவைத்து ஏமாற்றியவன். தென்னக வாழ்வில் ஹைதர் எவ்வளவு தூயவீரனோ, அதே அளவு பழிக்கஞ்சாத் தூர்த்தன் அவன். அவன் வாழ்வின் போக்குக்கு ஏற்ப, அவன் கை தாழத் தொடங்கியதுமே, அவன் உட்பகைவர்கள் கையாலேயே அவன் கோர மரணம் அடைந்தான். சந்தாசாகிப் கொடியவனானால், அவனை எதிர்த்த முகமதலி குடில நயவஞ்சகச் செயல்களில் அவனை விடக் குறைந்தவனல்ல. நைப்பாசை தூண்டிப் பெரும்படையழிவுக்கும் செலவுக்கும் நஞ்சிராஜனை ஆளாக்கிப் பயன்பெற்ற பின், அவன் தான் முன்பு சொன்ன சொற்படி மைசூராருக்குத் திருச்சிராப் பள்ளியைத் தர மறுத்தான். அத்துடன் மைசூர் அமைச்சன் பிரஞ்சுக்காரருடன் ஊடாடியதாகக் கூறி, ஆங்கிலேயர்களையும் அவர்களிடமிருந்து பிரித்து, ஆங்கிலேயர்களைத் தன் மனம்போல் கைப்பாவையாக வைத்து ஆட்டிப் படைக்கலானான். நஞ்சிராஜன் பெருஞ் சீற்றங்கொண்டு ஹைதரை அனுப்பித் திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டான். இப்போது முகமதலி பிரஞ்சுக்காரர் தயவைப் பெற்று, முற்றுகையைச் சமாளித்தான்; முற்றுகை கிட்டத்தட்ட வெற்றி பெறும் சமயத்தில், அவன் மீட்டும் சமரசப் பேச்சுப் பேசி ஏமாற்றினான். எதிரிகளைக்கூடச் சரியானபடி மதித்துணர்ந்தவன் ஹைதர். பிரெஞ்சுக்காரரிடம் அவன் கொண்ட மதிப்பும் நம்பிக்கையும் குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயரிடம் கூட வாய்மையையும் வீரத்தையும் கண்டு அவன் மதித்தான். ஆனால், முகமதலியின் ஏலமாட்டாக் குள்ளநரித்தனத்தை அவன் மனமார வெறுத்தான். அத்தகைய ஒரு கோழையின் பிடியில் சிக்கி, தம் நாட்டு நலனையும், சார்ந்த நாட்டு நலனையும் விழலுக்கிரைத்த நீராக்கிய ஆங்கில ஆட்சியாளர் அறிவு நிலை கண்டு அவன் பரிந்து இரக்கமுற்றான்! பாவம்! முகமதலியின் சூழ்ச்சியால் ஆங்கில உயர்பணியாளர் பெற்ற கைக்கூலியும் கொள்ளை ஆதாயமும் தூய வீரனான ஹைதருக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? 1754-இல் கருநாடகப் போர் முடிவுற்றது. முகமதலியின் சூழ்ச்சி ஹைதர் வீரத்தை ஆங்கிலேயர் பக்கமாக நின்று உதவச் செய்தது. அதுவே, பிரஞ்சு மக்கள் வலுத் தளர வைத்தது. தென்னகத்தின் தீயஊழ் அன்று முகமதலி உருவில் நின்று, வீரமும் தகுதியும் அற்ற திசையில் நாட்டு விடுதலையை ஒப்படைத்தது. இப்போர் முடிவில் ஹைதர் படையில் 1500 பயிற்சி பெற்ற குதிரை வீரரும், 3000 பயிற்சி பெற்ற காலாள் வீரரும் இருந்தனர். முழுதும் பயிற்சி பெறாத வீரர் 4000-க்கு மேல் இருந்தனர். 5. புகழ் ஏணி ஹைதரின் வாழ்க்கை தொட்டில் பருவத்திலிருந்தே இடர்கள் பல நிறைந்தது. இவற்றைத் தாங்கும் உடலுரமும் உளஉரமும் அவனுக்கு வாய்த்திருந்தது. ஆனால், அவன் புறவாழ்வில் காணாத மென்மையும் இனிமையும் அவன் அக வாழ்வில் தோய்ந்திருந்தது. குடும்ப பாசத்துக்கும் நேசத்துக்கும் நேரமில்லாத அவன் வீரவாழ்வில், குடும்ப பாசமும், நேச பாசமும் நிலைத்திருந்தன. ஹைதரின் தமையனான ஷாபாஸுக்கு முதல் மனைவி மூலம் ஒரு புதல்வி இருந்தாள். முதல் மனைவி இறந்தபின் இரண்டாவது மனைவி மூலம் இரண்டு புதல்வியர்களும், காதர் சாகிபு என்ற புதல்வனும் இருந்தனர். மூத்த மனைவியின் புதல்வி லாலாமியான் என்ற செல்வருக்கு மணம் செய்து வைக்கப்பட்டாள். ஹைதருக்கு 19 ஆண்டு நிறைவுற்றபின் ஷாபாஸ் அவனுக்கு ஷாமியான் மாய்னுதீன் என்பவரின் புதல்வியாகிய பக்ருன்னிசாவை மனைவியாக்கினான். ஒரு புதல்வி பிறந்ததன்பின், அந்நங்கை வாதநோய் பட்டுப் பாயும் படுக்கையுமானாள். அவளிருக்க மற்றொரு மனைவியைக் கொள்ள ஹைதர் விரும்பவில்லை. ஆயினும் அவன் செல்வமும் செல்வாக்கும் வளருந்தோறும், ஓர் ஆண்மகவில்லாக் குறை நினைந்து அந்நங்கை உருகினாள். மற்றும் ஒரு துணை தேடும்படி அவள் ஹைதரை வற்புறுத்தினாள். அதன்படி ஹைதர் குர்ம் கூண்டாக் கோட்டைத் தலைவனான மீர்அலி ரஸாகானின் மைத்துனியை விரும்பி மணம் செய்து கொண்டான். அவள் தந்தை மக்தூம் சாகிபு என்பவர். இந்நங்கையின் வீரப்புதல்வனே திப்பு. ஹைதர் தேவன ஹள்ளிப் போரில் வெற்றிபெற்ற அதே ஆண்டிலேயே, அதாவது 1749-லேயே அவன் பிறந்தான். வீரமைந்தன் மேனியுடன் மேனியாகவே இதுமுதல் ஹைதரின் புகழ் வளர்ந்தது. முகமதலியின் சதியால் நஞ்சிராஜன் நிலை இரண்டக நிலையாயிற்று. படைவீரர்கள் ஊதியம் கோரி அமளி செய்தனர். முகமதலியை நம்பியதால் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் இருவருமே அவன் எதிரிகளாயினர். அத்துடன் மைசூர் அரண்மனையில் அவன் மதிப்பு மிகவும் வீழ்ச்சியடைந்தது. அவன் எதிரிகள் மன்னன் காதில் அவனுக்கு எதிராகக் கோள்மூட்டி, மன்னன் சீற்றத்தை வளர்த்தனர். இவ்வளவும் போதாமல் பண ஆசையால் அவனுடன் வந்திருந்த மராட்டியத் தலைவரும் பிறரும் அவனை அச்சுறுத்தினர். இத்தனை இக்கட்டுகளுடன் மைசூருக்குத் திரும்ப மனமின்றி, நஞ்சிராஜன் சத்தியமங்கலம் என்ற இடத்திலேயே தாவனமடித்துத் தங்கினான். ஹைதர் அவனுடனிருந்து தக்க அறிவுரை, உதவியுரைகள் தந்தான். இச்சமயம் மைசூரின் நிலையறிந்து, மராட்டியப் பேரரசுத் தலைவனான பேஷ்வா பாலாஜிராவ் நானா, மைசூர்ப் பகுதி மீது படையெடுத்தான். மைசூரை அடுத்த சுரா மாகாணத்தில் நவாப் திலாவர்கான் தலைவனாயிருந்தான். மராட்டியர் அம்மாகாணத்தைக் கைப்பற்றி பலவந்தராவ் என்பவனை அதில் அமர்வித்தனர். திலாவர்கானுக்குக் கோலார்ப் பகுதி மட்டமே விட்டுக் கொடுக்கப்பட்டது. மைசூர் ஆட்சிப் பகுதியிலும் அவர்கள் புகுந்து ஹைதர்படை பற்றிய கவலையின்றிச் சூறையாடினர். அரசன் அவசர அவசரமாக அமைச்சனுக்கு அழைப்பு விடுத்தும், அமைச்சன் வரவில்லை. இறுதியில் அவன் மராட்டியருக்கு ஒரு கோடி வெள்ளி கையுறை தந்து, சிறிது ஓய்வு பெற்றான். ஒரு சில படைப் பிரிவுகளை நாட்டில் விட்டு வைத்து, பேஷ்வா பூனாவுக்குச் சென்றான். நஞ்சிராஜ் மைசூருக்கு வரவிடாமல் தடுத்தவர்கள் ஊதியம் வேண்டி அமளி செய்த அவன் படைவீரர்களே. ஹரிசிங் என்பவன் தலைமையில் ஹைதர் இல்லாத சமயத்தில் அவர்கள் நஞ்சிராஜனைச் சிறையிலிட்டு, உணவும் நீரும் அளிக்காமல் வதைத்தனர். இந்நிலையில், நஞ்சிராஜன் தன் வெள்ளிப் பொற்கலங்களை விற்று அவர்களுக்குப் பணம் தரவேண்டியதாயிற்று. இப்பணத்துடன் அவர்கள் பெங்களூர் அருகில் சென்று, குடித்துக் கூத்தாடி மகிழ்ந்திருந்தனர். ஹைதர் திரும்பி வந்து செய்தி அறிந்தபோது, முதலில் நஞ்சிராஜனிடமே அவன் சீற்றம் கொண்டான். “அண்ணலே! உங்களை அவர்கள் பட்டினியிட்டு வதைத்தது அடாத செயல்தான். ஆனால், அவ்வழியில் நீங்கள் இறந்திருந்தால், உங்களுக்காக அவர்கள்மீது நான் கட்டாயம் பழி வாங்கி யிருப்பேன். அத்துடன் உங்கள் வீரராகப் பூசித்திருப்பேன். ஆனால், நீங்கள் மானத்தைவிட உயிர் பெரிதென்று கருதிவிட்டீர்கள். அதற்காக வருந்துகிறேன். ஏனென்றால் நீங்கள் என் வீரத்தலைவர் என்பதற்கான தகுதியை இழந்து விட்டீர்கள்” என்று கனல் பறக்கப் பேசினான். நஞ்சிராஜனின் சொந்த நிலை விரைவில் ஹைதர் உள்ளத்தை உருக்கிற்று. அவன் சீற்றம் ஹரிசிங் குழுவினர்மீது திரும்பிற்று. 500 துப்பாக்கி வீரர்களை மட்டும் உடன் கொண்டு, அவன் இரவோடிரவாகக் குதிரையேறிப் புயல் வேகத்தில் சென்றான். தலைவனுக்கெதிராகக் கை ஓங்கிய அத்தறுதலைகள் மீது மூர்க்கமாகத் தாக்கி அவர்களைக் கொன்றோ, சிதறடித்தோ ஒழித்தான். அவர்களிடமிருந்த பணம், துணிமணி, தள வாடங்களுடன் அவன் நஞ்சிராஜனிடம் வந்து, அப்பொருள் களை அவன் காலடியில் வைத்தான். தளபதியின் வீரமும் மாறாத உறுதியும் கண்டு மகிழ்ந்த நஞ்சிராஜன், அவன் மீட்டுக்கொண்டு வந்த செல்வத்தில் சிறிதே தனக்கு எடுத்துக்கொண்டு, மீந்தவற்றை அவனுக்கே அளித்தான். இறந்த வீரரின் குதிரை, ஒட்டகைகள், படைக்கலங்கள் முதலியவற்றையும் நஞ்சிராஜன் அவனிடமே ஒப்படைத்தான். அத்துடன் இதுமுதல் அவன் தன்னுடன் ஹைதரைச் சரியாசனத்தில் இருத்தி, அமைச்சனுக்கு ஓர் அமைச்சனாக நடத்தினான். ஹைதர் அறிவுரை கலந்தே அவன் எப்போதும் செயலாற்றினான். இம்முறையிலே மதிப்பு மட்டும் குறையாமல் மைசூருக்குச் செல்வதற்கு வழிவகை என்ன என்று நஞ்சிராஜன் அவனை வேண்டினான். வாழ்க்கையில் முதல் தடவையாக, ஹைதர் தன் தனி முறையில் செயல் திட்டம் வகுக்க நேர்ந்தது. திருச்சிராப்பள்ளி முற்றுகையின்போதே, ஆர்க்காட்டு நவாபின் பெயரால் நஞ்சிராஜன் மேல் கடற்கரைப் பகுதியை மீட்க ஹைதரை அனுப்பியிருந்தான். ஹைதர் அப்போது திண்டுக்கல், கோயமுத்தூர், பாலக்காடு, கள்ளிக்கோட்டை ஆகிய பகுதிகளைக் கீழடக்கி, அவற்றின் தலைவர்களிடமிருந்து திறை பிரித்து வந்திருந்தான். இப்போதும் அவர்களிடமே சென்று மறு தவணைத் திறையைப் பெற்று மைசூர் அரசரிடம் காணிக்கையாகத் தரலாம் என்று ஹைதர் அறிவுரை கூறினான். ஏமாற்றம், தோல்வி, வறுமை, அவமதிப்பு ஆகிய இருட்படலங்களால் தாக்குண்டு கிடந்த அமைச்சன், தளபதியின் இவ்வறிவுரை ஒளியை ஆர்வத்துடன் அணைத்துக் கொண்டான். அதன் நிறைவேற்றத்தையும் அவனிடமே விட்டான். ஹைதர் என்ற பெயருக்குப் புலி என்பதே பொருள். தென் கொங்கு, மலையாளக் கரை மக்கள் அவனைப் புலி என்றே மதித்திருந்தனர். ஆகவே, பெரும்பாலான தலைவர்கள் அட்டி கூறாமல் தம்மாலியன்ற தொகைகளை அவன் முன் கொண்டுவந்து குவித்தனர். தராதவர்களும் அவன் தாக்குதல் முரசம் காதில் விழுந்தவுடனே பணிந்து, ஒற்றைக்கு இரண்டடையாகப் பரிசில்கள் கொண்டுவந்து கொட்டி அளந்தனர். ஹைதர் மூலம் நஞ்சிராஜன் அடைந்த புகழும் பணமும் மைசூரில் மன்னன் சீற்றம் தணித்தன. நஞ்சிராஜன் அனுப்பிய பெருந்தொகையாகிய ஒரு கோடி வெள்ளியை ஏற்று, மன்னன் அவனை மீட்டும் அரசவைக்கு வரவழைத்துக் கொண்டான். ஹைதரும் உடன் சென்று அமைச்சருடன் அமைச்சராக மதிப்புடன் பணியாற்றினான். நாஸிர்ஜங்கைக் கொலை செய்யத் தூண்டிய கடப்பை கர்நூல் தலைவர்கள், மேற்கு மைசூர்ப் பகுதியில் குடிமக்களையும் தலைவர்களையும் கிளர்ச்சிக்குத் தூண்டினர். தானைத் தலைவன் கங்காராம் கிளர்ச்சிக்குத் தலைவனாயிருந்தான். ஹைதர் அத்திசையில் கிளர்ச்சியை அடக்க அனுப்பப்பட்டான். தன் படைகளுடனே ஹைதர் இரவு பகலாக விரைந்து சென்றான். எதிர்பாராத வகையில் கங்காரம் ஹைதர் படையின் திடீர்த் தாக்குதலுக்கு ஆளானான். கிளர்ச்சிக்காரர் பெரும் பாலோரும் ‘தப்பினோம், பிழைத்தோம்’ என்று ஓடினர். ஹைதர் ஓடியவர்களை விடாது துரத்தி வாளுக்கிரையாக்கி னான், அல்லது உயிருடன் சிறைப்பிடித்தான். கங்காராம் பாரிய சங்கிலியைச் சுமந்து இழுத்தவண்ணம் மன்னர்முன் கொண்டு வரப்பட்டான். மைசூரில் ஹைதர் அடைந்துவந்த பெருமையும், அதனால் நஞ்சிராஜனுக்கு இருந்து வந்த மதிப்பும் அரண்மனையில் பலர் உள்ளத்தில் தீராப் பொறாமை ஊட்டியிருந்தது. இத்தகையவர்களில் நஞ்சிராஜனின் தம்பியாகிய தேவராஜன் ஒருவன். அவன் மறை சதிகளில் ஈடுபட்டிருந்து, ஒரு நாள் ஒரு படையுடன் அரண்மனையை வளைத்துக்கொண்டான். ஹைதருக்கும் நஞ்சிராஜனுக்கும் இது செய்தி எட்டுமுன், அரண்மனை வாயிலை நோக்கி பீரங்கிகள் முழங்கின. துப்பாக்கிக் குண்டுகளும் பீரங்கிக் குண்டுகளும் அரண்மனை மதில்களைத் துளைக்கத் தொடங்கின. ஆனால், நஞ்சிராஜனும் ஹைதரும் இவற்றை அறிந்து, விரைந்து வந்து கிளர்ச்சியை அடக்கினர். ஹைதர்அலி மைசூர் அரசின் பாதுகாப்பை உன்னி, தொலைவிடங்களிலிருந்து வீரர் பலரைக் கொணர்ந்து, படையை வலுப்படுத்தினான். பிரஞ்சுக்காரர் பலரைப் படையின் பயிற்சித் துறையிலும், அமைப்பாண்மைத் துறையிலும் அமர்வித்தான். அத்துடன் ஆர்க்காட்டில் முகமதலியால் அருமை அறியாது துரத்தப்பட்ட பல படைத்தலைவர்களை வரவழைத்து உயர் ஊதியத்தால் அவர்களைத் தன்னுடன் பிணைத்தான். இவர்களில் ஆசாத்கான், சர்தார் கான், முகமது உமர் முதலியவர்கள் முக்கியமானவர்கள். முகமது உமரின் புதல்வன் முகமத் அலியே ஹைதரின் பிற்கால வாழ்வில் மைசூரின் ஒப்பற்ற படைத் தலைவனானான். வளர்ந்துவரும் ஹைதரின் புகழ் கண்டு, வெளிநாட்டு எதிரிகளைவிட உள்நாட்டு எதிரிகள் கலங்கினர். அதேசமயம் அவனை நேரே எதிர்க்கவும் அஞ்சினர். நஞ்சிராஜனை அவன் இல்லாத சமயம் அகற்றுவதே அவன் வலுவைக் குறைக்க வழி என்று அவர்கள் திட்டமிட்டனர். அதைச் செயற்படுத்தவும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. திண்டுக்கல், பாலக்காட்டுப் பகுதிகளில் சில கிளர்ச்சிகளை அடக்குவதற்காக, நஞ்சிராஜனும் ஹைதரும் சென்றிருந்தனர். நஞ்சிராஜன் பின்னணி வேவுத் தளங்களில் சுற்றிக்கொண்டிருந் தான். ஹைதர் முன்னணிப் போர் முனையில் ஈடுபட்டிருந்தான். இச்சமயம் பார்த்து, அரண்மனை எதிரிகள் மன்னனை ஏவி நஞ்சிராஜனைப் படைத் துறையிலிருந்து வரவழைத்தனர். நஞ்சிராஜன் தொடர்ச்சியாகப் போர் வேலைகளில் ஈடுபட்டுச் சோர்வுற்றிருந்தான். ஆகவே, விரைவில் போர் முடித்து மைசூருக்கே மீளும்படி ஹைதருக்கு உத்தரவு அனுப்பிவிட்டு, அவன் அரண்மனைக்கு வந்தான். இத்தடவை எதிரிகளின் சூழ்ச்சிகள் பேரளவில் பயன் தந்தன. ஹைதரிடம் காரியத் துணைவனாகக் குந்திராவ் என்ற ஒருவன் இருந்தான். அவன் சூழ்ச்சிகளில் வல்லவன். நஞ்சிராஜ னிடமிருந்து அமைச்சர் பணியைக் கைக் கொள்ளவேண்டு மென்று அவன் நீண்ட நாள் திட்டமிட்டிருந்தான். ஆகவே, ஒரு புறம் மன்னன் மனத்தை அவன் நஞ்சிராஜனுக்கு எதிராகக் கலைத்தான். மற்றொருபுறம் ஹைதரிடமும் நஞ்சிராஜனைப்பற்றிக் குறைகள் கூறி வந்தான். ஆகவே, நஞ்சிராஜன் திரும்பிவந்த சமயம் மன்னன் அவன்மீது பழைய குற்றச்சாட்டுகளை நீட்டினான். நஞ்சிராஜன் எதிர்த்துப் போரிட எண்ணவில்லை. அரசியல் பணிகளிலிருந்து ஒதுங்கிவிடுவதாகப் பணிவுடன் கூறினான். ஹைதர் திரும்பி வந்தபோது, குந்திராவே அமைச்சர் பணியை ஆற்றிவந்தான். நஞ்சிராஜன் பெயரளவிலே அமைச்சனாக ஒதுங்கியிருந்தான். தன் செயல் துணைவனே அமைச்சனாவதைப் பெருந்தன்மை மிக்க ஹைதரின் உள்ளம் மகிழ்வுடன் வரவேற்றது. ஆனால், குந்திராவுக்கு இது போதவில்லை. அவன் அமைச்சர் உரிமைகளையே முழுவதும் பெற விரும்பினான். ஆகவே, நஞ்சிராஜனுக்கெதிராக அவன் மன்னன் மனத்தை மட்டுமன்றி, ஹைதர் மனத்தையும், திருப்பினான். அவன் சூழ்ச்சியறியாது ஹைதர் நஞ்சிராஜனை வற்புறுத்தி, குந்திராவிடமே அமைச்சர் உரிமைகளை வாங்கி அளித்தான். மாறா உறுதியுடைய ஹைதரின் நட்பைக்கூட இழந்து விட்டோமே என்ற துயரத்துடன், நஞ்சிராஜன் தன் தாயகமான கென்னூருக்குச் சென்று ஓய்வுடன் வாழலானான். கென்னூரையடுத்துப் பெரிய பட்டணம், அர்க்கல்குரா, அஞ்சிடி துருக்கம் முதலிய கோட்டைகள் நஞ்சிராஜன் குடும்ப மானியங்களாய் அமைந்திருந்தன. அவற்றின் மேற்பார்வைக்காக எழுநூறு குதிரை வீரரையும், இரண்டாயிரம் பயிற்சி பெற்ற காலாட்களையும், பயிற்சி முற்றுப் பெறாத நாலாயிரம் படை வீரரையும் மட்டுமே நஞ்சிராஜன் இப்போது தன்னுடன் வைத்துக் கொண்டான். 1755-இல் ஹைதர் திண்டுக்கல் மாவட்டத்தின் படைத்துறை ஆட்சியாளராக அமர்வு பெற்றான். இங்கே அவன் பிரஞ்சுப் படைத் தலைவர்களைத் தருவித்து, அவர்கள் மேற்பார்வையில் தன் படைகளை நன்கு பயிற்சி செய்வித்தான். அத்துடன் இவ்விடத்திலேயே அவன் ஒரு வெடிமருந்துச் சாலை அமைத்து, அதில் வெடிமருந்துச் சரக்குகளையும் படைக் கருவி களையும் தொகுத்துத் திரட்டினான். இங்ஙனம் மைசூர் அரசு தளர்ச்சியுற்றுவரும் நாட்களிலே, அத்தளர்ச்சியைத் தடுக்க ஹைதர் அரும்பெரு முயற்சி செய்தான். இம்முயற்சியே அவனை அச்சிறிய அரசின் அருகே ஒரு அரசாக்கிற்று. எவர் எதிர்ப்பும் இல்லாமலேயே மக்கள் சக்தி அவனைக் கன்னட நாட்டின் புகழ் ஏணியின் முதல் படியில் கொண்டு வந்து விட்டது. அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் நடைபெற்ற மூன்று நிகழ்ச்சிகள், அவனைத் திடுதிடுவென்று அப்புகழேணியின் படிகளில் ஏற்றி, புகழ்மேடையில் இடம் பெறுவித்தது. 1750-இல் நிஜாமாகத் தவிசேறிய முசபர்ஜங் ஓர் ஆண்டுக்கு மேல் ஆட்சி செய்யவில்லை. அடுத்த ஆண்டிலேயே நாஸிர்ஜங்கின் தம்பியான சலாபத்ஜங் என்பவன் மீர் அசப் உத்தௌலா என்ற பட்டத்துடன் நிஜாமானான். பிரஞ்சுக்காரர் உதவியுடன் அவன் ஹைதர் மீது படையெடுத்து, மீண்டும் மீண்டும் கொள்ளையிட்டு நாட்டைப் பாழாக்கி வந்தான். மன்னன் ஐந்து இலட்சம் வெள்ளியை உடனடிக் கையுறையாகக் கொடுத்து, இன்னும் இருபத்தேழு இலட்சம் தருவதாக வாக்களித்துத் தலை தப்பினான். ஆனால், வாக்களித்த தொகைக்காக நாட்டின் வடபகுதி முழுதும் ஈடுவைக்கப் பட்டிருந்தது. மராட்டியக் காவற்படை வீரர் ஆங்காங்கே தங்கி, மனம்போல மக்கள் செல்வத்தைச் சூறையாடி வந்தனர். மைசூர் மன்னன் நாட்டை வலுப்படுத்தி மராட்டியரை காட்டிலிருந்து துரத்தவே விரும்பினான். இம்முறையில் அவன் தன் குடிப்படைத் தலைவர்களை ஊக்க முயன்றான். ஆனால், அவர்கள் கோழைகளாகவும் தன்னலப் பேடிகளாகவும் காலங்கழித்தார்கள். மன்னனே முன்னணியில் நின்று போரிட வந்தாலல்லாமல், தாம் படைதிரட்ட முடியாது என்றனர். செய்வகை இன்னதென்றறியாது மன்னன் திகைத்தான். நிலைமையைச் சமாளிக்க வல்லவன் ஹைதர் ஒருவனே என்று மன்னனை அடுத்திருந்தவர்கள் கூறினர். அதன்மீது மன்னன் ஹைதரை அழைத்து, அவனை நாட்டின் முழுநிறை உரிமையுடைய படை முதல்வன் ஆக்கினான். மன்னனோடொத்த பொன்னணி மணி விருதுகளுடன் படை திரட்டல், குடிப்படைத் தலைவர்களுக்கு ஆணையிடல், கருவூலத்தையும் நாட்டுச் செலவாணியையும் கையாளல், வரி விதித்தல் ஆகிய சிறப்புரிமைகள் அவனுக்கு அளிக்கப்பட்டன. படைத் துறையில் இச்சமயம் கணக்குகள் சீர்குலைத்திருந்தன. படைச் சம்பளத்தில் பலநாள் தவணைப் பாக்கிகள் இருந்தன. படைவீரர் பலவிடங்களில் கிளர்ச்சிகள் செய்தனர். எங்கும் அமளி குமளியாக இருந்தது. ஹைதர் கிளர்ச்சிக்காரரை அடக்கினான். வேண்டாத படை வீரரையும் படைத்துறைப் பணியாளரையும் கிளர்ச்சியைச் சாக்கிட்டே குறைத்தான். கணக்குகளை நேரடியாகச் சரிபார்த்து, எரிகிற விட்டில் ஆதாயம் தேட முற்பட்ட கணக்குகளை ஒழித்தான். நேர்மையான சம்பளப் பாக்கியில் ஒரு பகுதி கொடுத்து, மறுபகுதியை எதிரி நாட்டில் கொள்ளை மூலம் சரி செய்து கொள்ளும் உரிமை அளித்தான். இவ்வகையில் படைத்துறையில் அமைதி ஏற்பட்டது. மராட்டியருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை ஹைதர் வேண்டுமென்றே கொடுக்காமல் கடத்தி வந்ததுடன், அதற்கீடாக அளிக்கப்பட்ட நிலப்பகுதியையும் கைக்கொண்டான். இச்செயல்களால் சீற்றங்கொண்ட பேஷ்வா, 1759-இல் கோபால் ராவ்ஹரி என்ற தம் படைத் தலைவனைப் பெரும்படையுடன் மைசூர் மீது ஏவினான். கடல் போன்ற மராட்டியப் படைகள் மைசூர் முழுவதும் பறந்து ஆட்கொண்டன. பெங்களூர் நகரத்தையும் கோபால்ராவ் முற்றுகையிடத் தொடங்கினான். இச்சமயத்துக்கே காத்திருந்த ஹைதர், லத்ப் அலி பேக் என்ற படைத் தலைவனை அனுப்பி, மராட்டியரின் பின்னணியிலிருந்த மைசூர்ச் சென்னைப் பட்டணத்தைக் கைக்கொண்டான். இதனால், பெங்களூர் முற்றுகை கைவிடப்பட வேண்டியதாயிற்று. இதன் பின்னும் நேரடிக் களப்போரில் இறங்க ஹைதர் விரும்பவில்லை. ஏனெனில், மராட்டியப் படை ஹைதர்ப் படையைப் போலப் பதின் மடங்கு பெரிதாக இருந்தது. ஆயினும், பொறுக்கி எடுத்த குதிரைப் படைகளை ஆங்காங்கு விரைந்து அனுப்பி, ஹைதர் மராட்டியப் படைத்தலைவனுக்குப் பெருந்தொல்லை விளைவித்தான். இரண்டாண்டு பெரும்படையுடன் நாடெங்கும் சுற்றியும், கோபால்ராவினால் எதுவும் சாதிக்க முடியாமல் போய்விட்டது. உடும்பு வேண்டாம், கையை விட்டால் போதும் என்றாயிற்று அவனுக்கு. இச்சமயம் பார்த்துக் காலம் ஹைதருக்கு ஒரு பேருதவி செய்தது. மராட்டியப் பேரரசும் தில்லியில் பெயரளவில் மேலாட்சி நடத்திய முகலாயப் பேரரசும் திடுமென 1761-இல் ஆப்கானிய வீரன் அகமதுஷா அப்துராணியின் தாக்குதலால் மூன்றாம் பானிபட்டுப் போரில் வீழ்ச்சியடைந்தன. கோபால்ராவ் திருப்பி அழைக்கப்பட்டான். போகும் அவசரத்தில், முப்பத்திரண்டு இலட்சம் வெள்ளிக்கீடாக வென்ற பகுதியையும் பிணையமாகக் கோரிய பகுதியையும் விட்டு விட்டு, கோபால்ராவ் பூனாவுக்கு மீண்டான். முப்பத்திரண்டு இலட்சத்தில் கூடப் பாதியே உடனடியாகக் கொடுக்கப்பட்டது. மறுபாதிக்கு ஹைதர் உறுதிமொழி தவிர வேறு பிணையம் கோரப்படவில்லை. மைசூரைச் சூழ்ந்த காரிருள் இங்ஙனம் ஹைதர் விடா முயற்சிகளாலும் அறிவார்ந்த திட்டங்களாலும் விலகிற்று. இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த மன்னன் ஹைதர் தலைமைப் பதவியை நிலவரமாக்கி அவன் மீது மேலும் விருதுகளைச் சொரிந்தான். ஃவதஃ ஹைதர் பகதூர் என்ற தனிச் சிறப்புப் பட்டம் இதுபோது அவனுக்கு அளிக்கப்பட்டது. 1761-இல் ஹைதர் ஒரு சிற்றரசின் கீழுள்ள படைத்தலைவனாக அரசியல் வாழ்க்கை தொடங்கினான். ஆனால், அன்றே அவன் புகழ், மைசூரைப் பேரரசுகளின் பிடி தாண்டிய ஒரு சிறு வல்லரசாக்க முனைந்திருந்தது. அவன் நாடில்லாத ஆட்சியாளனாக, முடி சூடா மன்னனாகத் தென்னாட்டின் புகழ் வரலாற்றில் ஒரு புதிய ஏடு தொடங்கும் நிலையை அடைந்தான். 6. குடிலன் வீழ்ச்சி ஆட்சி என்பது இரண்டு பக்கமுள்ள ஒரு கொடுவாள். அதன் ஒரு புறம் கூர்மை வாய்ந்தது; எதிர்த்தோரை அடங்கொண்டு சாடுவது; அழிவு செய்வது. ஆனால், அதற்கு மற்றொரு புறம் உண்டு. அது அக் கூர்மைக்கு வலுவும் பாதுகாப்பும் அளிப்பது. அழிவைத் தடுத்து ஆக்கத்தை உண்டு பண்ணும் நற்பக்கம் அதுவே! ஹைதரின் செயலாட்சியில் இந்த இரு பக்கங்களையும் தெளிவாகக் காணலாம். ஆனால், குந்திராவ் போன்றோர் ஆட்சியில் வாளின் ஒரு புறமே செயலாற்றிற்று. அவர்கள் கூரியபுறத்தால் அழிவு செய்தனர். அதனை வலுப்படுத்த, மட்டுப்படுத்தவில்லை. மொட்டைப் பக்கத்தின் அருமையை அவர்கள் அறியமாட்டார்கள். குந்திராவைத் தனக்கு மேல் உயர்த்திவிட்ட ஹைதருக்கு இது விரைவில் அனுபவ உண்மையாயிற்று. ஆளத் தெரிந்தவர் கையில் குந்திராவ் ஓர் ஒப்பற்ற ஆட்சிக் கருவியாகச் சமைந்தான். ஹைதரின் கீழ் அவன் செயலாளராக இருக்கும்போது அவன் நிலை இதுவே. அவன் திறமையறிந்து ஹைதர் அவனைத் தன்னிடம் வேலைக்கமர்த்தினான். குடிகள் மீது வரி விதிப்பதில் - விழுவில்லாமல் வரி வசூலிப்பதில் - இம்மியும் பிசகாமல் கணக்கு வைத்துக் கொள்வதில் குந்திராவுக்கு ஈடு யாரும் இல்லை. இதைக் கண்டே ஹைதர் அவனுக்குப் படிப்படியாக உயர்வு தந்து, இறுதியில் அவனைத் தன் நம்பகமான அந்தரங்கச் செயலாளனாக்கிக் கொண்டான். ஆனால், இந்நிலை அடைந்த பின், ஒப்பற்ற ஆட்சிக் கருவியான அவன் அத்துடன் அமையாமல், ஆட்சியையே கைப்பற்றும் பேரார்வம் கொண்டான். பெருந்தன்மை மிக்க ஹைதர் இங்கும் அவனுக்கு உதவினான். அந்நிலையிலும் அவனுக்கு உண்மை யுடனிருந்து, தன்னிலும் அவனை உயர்த்தி ஆதரவு தர முனைந்தான். ஆனால், ‘ஆட்சிக் கருவி’ ஆளும் பீடத்தில் அமர்ந்தபின் ஆளத் தெரியாதவன் ஆகத் தலைப்பட்டான. ஹைதரின் வலிமை அவனுக்குத் தெரியும். ஆனால், ஹைதரின் குறைபாட்டையும் அவன் உள்ளங்கை நெல்லிக்கனிபோலக் கண்டான். ஹைதரை எதிர்த்து வெல்லுவது அருமை. ஆனால், சூழ்ச்சியால் அவனை வீழ்த்துவது எளிது. எனவே, குந்திராவ் வெளித்தோற்றத்தில் நண்பனாகவே நடித்தான். உள்ளூர, மன்னனை ஹைதருக்கெதிராகத் திருப்பி வந்தான். மன்னனுக்கு அவன் மீது பொறாமை ஏற்படும்படி செய்தான். “மன்னரே, தாங்கள் ஆளும் மரபில் பிறந்தவர்கள். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற இயற்கைப் படியில், தாம் அரசர் மரபினர். நானோ அமைச்சர் மரபினன். அப்படியிருக்க, பிறப்பால் நீசன், சமயத்தால் வேறுபட்ட முசல்மான், நம் மைசூர் அரசுக்கு வெளியேயிருந்து வந்த ஒரு முரடன் - இப்படிப்பட்டவன் நம் நாட்டில் - நம் ஆட்சிக் கயிற்றில் கை வைப்பதா? இதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா? மானமுடைய மன்னர் மரபுக்கு, மாளாத நம் வைதிக நலனுக்கு இது இழுக்கல்லவா?” என்று அவன் மன்னன் மனத்தில் சாதிமத வேறுபாட்டுக் கருத்துக்களைப் புகுத்தினான். மன்னன் மனம் கரைந்தது. ஆனால், ஹைதரைப் பகைத்துக் கொள்ள அஞ்சினான். எனினும், குள்ளநரிக் குடிலனான குந்திராவ், மன்னனுக்குத் தேறுதல் தந்தான். “எதிர்க்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். அரசே! நீங்கள் செய்யவேண்டுவது வேறு எதுவுமல்ல; நான் சொன்னபடி நடந்து கொண்டால் போதும். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் அவன். மன்னன் மனத்தைக் கரைத்த பின், குந்திராவ் நாட்டின் எதிரியாகிய மராட்டியப்பேரரசன் பேஷ்வாவைத் தன் கருவியாக்கத் துணிந்தான். தான் பேஷ்வாவின் வகுப்பினன் என்பதை அவனுக்கு நினைவூட்டினான். ஹைதரின் மரபையும் குடியையும் இழித்துக் கூறினான். இவை போதாவென்று பேஷ்வாவின் பண ஆசை, ஆட்சி ஆசையையும் அவன் தூண்டினான். மைசூரின் மீது படையெடுத்து, ஹைதர் அழிவுக்கு உதவினால், படையெடுப்புச் செலவுக்காக ஐந்து இலட்சம் வெள்ளி தருவதாகவும், அத்துடன் ஆண்டுதோறும் திறையாக இரண்டு இலட்சம் அனுப்பிவர இணங்குவதாகவும் அவன் தெரிவித்து மறைவாகக் கடிதம் வரைந்தான். சூதறியாத ஹைதர், இச்சூழ்ச்சி வலையில் மெல்ல மெல்லச் சிக்கினான். சந்தர்ப்பங்கள் இங்கே அவன் எதிரிக்குப் படிப்படியாகச் சாதகமாகி வந்தன. தன் ஆற்றல் எதுவுமில்லாமல், ஆர்க்காட்டுக்கு நவாபாக, இச்சமயம் வாலாஜா-சுராஜ் உத்தௌலா - முகமதலி விளங்கினான். சூழ்ச்சியால் பெற்ற அரசை அவன் சூழ்ச்சியாலேயே பேண எண்ணினான். ஆகவே, பிரஞ்சுக்காரரைப் பற்றி ஓயாத கோள் மூட்டி, ஆங்கிலேயரை அவர்கள் மீது ஏவிவிட்டான். ஆங்கிலேயப் படைகளும் அவன் ஆணைப்படி புதுச்சேரியை முற்றுகை யிட்டன. ஆங்கிலேயர் வீரத்தைவிட ஹைதரின் வீரத்துக்கே இதுவரை பிரஞ்சுக்காரர் அஞ்சியிருந்தனர். ஆகவே, இச் சந்தர்ப்பத்தில் அவர்கள் ஹைதர் உதவியை நாடினர். தமக்கு ஆதரவு தந்தால், அதற்கு மாறாக, செஞ்சியையும் தியாக நகரையும் மைசூருக்கு அளிப்பதாக வாக்களித்தனர். ஹைதர் தன் படைகளின் பெரும்பகுதியை சையத் மக்தூம், அசூத்கான், மகூரிநாயுடு ஆகிய படை முதல்வர்களின் தலைமையில் புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தான். மக்தூம்கான் பார்மால் வட்டம் - அதாவது தென் ஆர்க்காட்டின் ஒரு பகுதியை - வென்று, அதை அசூத்கானின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டுப் புதுச்சேரி சென்றான். முற்றுகை வளையம் கடந்து, கோட்டைக் காவல் வீரருக்கு அவன் உதவியும் ஊக்கமும் அளித்தான். ஆனால், முற்றுகை தகர்ந்துவிடவில்லை. மைசூர் வீரரே கோட்டையைக் காத்து வந்தனர். புதுச்சேரி நடவடிக்கை காரணமாக, ஹைதரிடம் இப்போது ஒன்றிரண்டு படைப் பிரிவுகளே இருந்தன. ஆயினும், குந்திராவின் போக்குகளில் சிறிது ஐயத்துக்கு இடமிருப்பதாக ஹைதர் காணத் தொடங்கியதிலிருந்து, அவன் தன் குடும்பத்தினரைப் பாதுகாக்க ஒரு ‘படைகாவல் அரண்’ அமைத்துக் கொண்டிருந்தான். சின்னாட்களுக்குள் குந்திராவின் பகமை வெளிப்படையாயிற்று. அவன் வேண்டுகோளுக்கிணங்கி, புதிய பேஷ்வாவான மாதவராவ், ஈசாஜி பண்டிட் என்ற படைத் தலைவனை அனுப்பினான். அவனுடன் நாற்பதினாயிரம் குதிரை வீரரும், இருபதினாயிரம் காலாள் வீரரும் வந்து சேர்ந்தனர். அந்த விநாடியே குந்திராவ் ஹைதரின் அரணை வளைத்துக்கொண்டு, பீரங்கிக் குண்டுகளை அதன் வாயில் நோக்கிப் பொழிய வைத்தான். ஹைதர் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளில் முதன்மை யானது இதுவே. படை வலு இல்லாத இந்த நேரத்திலும் அவன் வீரப் படைத்திறம் சிறிதும் தளரவில்லை. தன் பீரங்கிகளைத் தற்காலிகப் பாதுகாப்பில் ஈடுபடுத்தி, அவன் எதிரியின் தாக்குதலுக்கு எதிர்த்தாக்குச் செய்தான். அதே சமயம் அவன் குந்திராவின் சூழ்ச்சிப் பொறியிலிருந்து தப்பும் திட்டங்களிலும் முனைந்தான். உடனே திரும்பி வரும்படி அவன் மக்தூமுக்கு ஆணை பிறப்பித்தான். தன் சட்டகனான மீர் அலி ரஸாகானுக்கும் விரைந்து வரும்படி அழைப்பனுப்பினான். அவர்கள் திரும்பி வரும் வரையில் காத்திருக்காமல், அவன் தன் பணித்துறைச் செல்வங்களனைத்தையும் தொகுத்து, அவற்றிற்கான கணக்குத் தயாரித்துக்கொண்டான். ஒரு சிறு படையை அனுப்பி, யாரும் அறியாமல் அரணை அடுத்திருந்த ஆற்றின் படகுகளையும், படகுக்காரர்களையும் பிடித்து அடைத்து வைத்தான். நள்ளிரவில் தன் அரும்பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் இரவோடிரவாக ஆற்றைக் கடந்து, காற்று வேகமான குதிரையில் ஏறி, எதிரியின் வலையிலிருந்து தப்பியோடினான். தன் அவசரத் தேவைகளை எண்ணி, ஹைதர் திடுமெனப் பெங்களூர் கோட்டையுள் நுழைந்து, அதைக் கைவசப்படுத்திக் கொண்டான். அதன் தலைவன் கபீர் பேகும், நகரின் வணிகச் செல்வரும் அவன் துணிகர வீரங்கண்டு, அவனை ஆதரிக்க முன்வந்தனர். அவர்களிடம் பண உதவி பெற்றுக் குடும்பத்தை அவர்கள் பாதுகாப்பில் விட்டபின், அவன் மீண்டும் நாடோடியாகப் புறப்பட்டான். குந்திராவும் மராட்டியரும் பெங்களூரை முற்றுகை யிட்டனர். இச்சமயம் மக்தூம் சாகிபு ஹைதரின் ஆணைக் கிணங்கிப் புதுச்சேரியை விட்டுப் புறப்பட்டான். வழியில் அசூத்கானிடமிருந்து படைக்கலங்களும் உணவுப் பொருள்களும் பெற்று, ஹைதரை நோக்கி வந்தான். மராட்டியரும் குந்திராவும் பெங்களூர் முற்றுகையை விட்டுவிட்டு, ஆனைக்கல் என்னுமிடத்தில் அவனைச் சூழ்ந்தனர். மக்தூம் தன் நிலையையும், படைக்கலமும் உணவும் கொண்டு வந்தும் அவற்றைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் இக்கட்டையும் தெரிவித்து ஹைதருக்குக் கடிதம் வரைந்தான். ஹைதர் தங்க இடமின்றி, தன் துணைவர் இடர் தீர்க்க வகையின்றி, காடுமேடாக அலைந்து வந்தான். அவனுக்கு இச்சமயம் தன் பழைய நண்பனும் தலைவனுமான நஞ்சிராவின் நினைவு இருளில் ஒளியாக மின்னிட்டது. இருவரிடையேயுள்ள நட்பு அணிமையில் முறிவுற்றிருந்தது. ஆனால், நஞ்சிராவின் பெருந்தன்மையிலும் நன்றியுணர்விலும் ஹைதருக்கு அசையாத நம்பிக்கை இருந்தது. குந்திராவின் சூழ்ச்சியில் சிக்கித் தான் விழுந்ததற்கு மன்னிப்புக்கோரி, அதே சூழ்ச்சியில் சிக்கித் தான் அடைந்த நிலையையும் விளக்கி அவன் நஞ்சிராவுக்கு முடங்கல் வரைந்தான். “நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம்” என்ற மூதுரை, நஞ்சிராவ் வகையில் பொய்க்கவில்லை. அவன் ஹைதரைக் கைதூக்கிவிட ஆர்வத்துடன் முன் வந்தான். அத்துடன் இடரில் சிக்கிய ஹைதரின் தோழன் மக்தூமுக்கு உதவும்படி தன் வசமிருந்த அஞ்சிடி துருக்கத் தலைவனுக்கு அவன் ஆணை பிறப்பித்தான். அஞ்சிடி துருக்கத்தின் ஆதரவிலிருந்துகொண்டு மக்தூம் எதிரிகளை விரைவில் எதிர்த்துத் துரத்த முடிந்தது. அவன் வீரர்கள் இரவில் எதிரி முகாம்களைப் பின்னிருந்து தாக்கி, அவர்கள் படைகளைச் சிதறடித்தனர். நரியுடன் சேர்ந்த சிறுத்தையும் யானையின் சீற்றத்துக்கு ஆளாகிச் சீரழிந்தது போல, குந்திராவுடன் சேர்ந்த பழிக்கு ஆளாகி, ஈஸாஜி பண்டிட் பல தொல்லைகளை அடைய வேண்டி வந்தது. இந்நிலையில் நஞ்சிராஜ் அவனுக்கு ஒரு முடங்கல் வரைந்தான். “மராட்டியப் பேரரசில் பெரும் பொறுப்பு வகிப்பவர் தாங்கள். குந்திராவோ ஒரு சிற்றரசின் எல்லையில் அடாது செய்த உட்பகை வளர்ப்பவன். இத்தகையவனுடன் சேர்ந்து செயலாற்றுவது தங்கள் பெருமரபுக்கு இழுக்காகும் என்று கூறவேண்டி வந்ததற்கு வருந்துகிறேன். ஆயினும், தம் ஆய்ந்தமைந்த அறிவமைதிப்படியே நடக்கவும்” என்று அவன் நயம்பட எழுதினான். ஏற்கெனவே மனம் புண்பட்டிருந்த ஈஸாஜிராவ், குந்திரா வுடனே பூசலிட்டு, அவனிடம் போர்ச் செலவு கோரினான். குந்திராவ் மறுக்கவே, மாராட்டியத் தலைவன் அவன் படைகளையே கொள்ளையிட்டு அப்பணத்துடன் திரும்பினான். மீர் அலி ரஸாகானின் படைகளும் இச்சமயம் வந்து சேர்ந்தன. அவற்றுடனும் மக்தூம் படைகளுடனும் ஹைதர் குந்திராவை வேட்டையாடத் தொடங்கினான். கோட்டை கோட்டையாக அவன் சென்று புகலிடம் தேடினான். கோட்டையின் பின் கோட்டையாக எல்லாம் நஞ்சிராவ், ஹைதர் ஆகியவர் வசப்பட்டன. மைசூரில் ஹைதர் அலி இல்லாததால், அரசன் ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குந்திராவின் வீழ்ச்சியை எதிர்பார்த்து, ஒவ்வொருவரும் தாமே அரசராகத் தலைப்பட்டனர். இக்குழப்பத்தில் அரசன் தன் குடும் பத்தையும் செல்வத்தையுமே பாதுகாக்க முடியாமல் பேரவதிக்காளானான். அரசனின் கையெழுத்துடன் அரசன் தாயும் பாட்டியும் ஹைதரை மைசூருக்கு அழைத்தனர். “பெருந்தன்மை மிக்க வீர மைந்தனே! உன் வாள் வலியின்றி எமக்குப் பாதுகாப்பில்லை; புகலிடமில்லை. உன் வீரக் கரமின்றி இங்கே ஆட்சியும் செல்லாது; வாழ்வில் அமைதியும் நில்லாது. ஆகவே விரைந்து வந்து, எம் வீர மைந்தனாகும் பேற்றையும் ஆட்சிப் பொறுப்பையும் நேரடியாக ஏற்று, எமக்கும் நாட்டு மக்களுக்கும் நல் வாழ்வளிக்கக் கோருகிறோம்” என்று அரச இலச்சினையிட்ட அழைப்பிதழ் ஹைதரை நாடிவந்தது. ஹைதர் தன் வீரவாழ்வில் முதல்தடவையாக, தன் வீரப்போக்கில் தயங்கினான். “கேளாதே வந்த இவ்வரும்பெரும் பொறுப்பை ஏற்பதா? மறுப்பதா?” என்ற பிரச்சினை எழுந்தது. ஏற்க அவன் விரும்பவில்லை; ஆனாலும் மறுக்க அவன் துணியவில்லை. மக்கள் அனாதை நிலையை அவன் எண்ணினான். மன்னன் அகதிபோல் அல்லலுறுவதைக் கண்டு அவன் உள்ளம் உருகினான். அவன் கண்முன் தன் நண்பனான வீர அமைச்சன் நஞ்சிராஜன் வீழ்ச்சிப்படலம் நாடகத் திரைக் காட்சிபோல் இயங்கிற்று. இவற்றை யெல்லாம் சிந்தித்தபின் இறுதியில் அப்பொறுப்பை ஏற்பதென்று அவன் துணிந்தான். துணிவுக்கு ஆதாரமான அக்கடிதத்தை அவன் தன் மூலப்பத்திரமாகப் பத்திரப்படுத்தினான். குந்திராவிடம் இன்னும் ஏழாயிரம் குதிரைவீரர், பன்னிரண்டாயிரம் காலாள் வீரர், மானுவெல் என்ற வெள்ளையன் தலைமையில் 800 ஆங்கிலப் படைவீரர், பத்துப் பன்னிரண்டு பீரங்கிகள் ஆகியவை இருந்தன. அனால், அகப்படையாகிய வீரம் இல்லாதபோது, புறப்படைகளால் யாது பலன்? சூழ்ச்சியிலே நம்பிக்கை வைத்த அவன், தன் சூழ்ச்சிக் கோட்டை இடிந்ததும், அச்சத்துக்கு ஆளாகி ஓடினான். அவன் படை வீரரே அவன் கோழைமை கண்டு வெறுத்து அவனைப் பிடித்து மன்னனிடம் ஒப்படைத்தனர். குந்திராவுக்கு இப்போதும் ஒரு பலம் இருந்தது. அரண்மனைப் பெண்டிர் மனம் போல நடந்துகொண்டவன் அவன். அவர்கள் தம் பழைய கிலியை மறந்து, அவனை ஆதரிக்கத் தலைப்பட்டனர். தனக்கென ஒரு திட்டமற்ற மன்னனும் அவர்கள் போக்கில் நின்றான். ஹைதர் வீரப்போரை நிறுத்தினான். உள்ளூர அவன் மன்னன் குடும்பத்தின் அவல நிலை கண்டு நகைத்தான். தன் வீரருள் சிலரை வெற்றுத் தோட்டாக்களுடன் அனுப்பி, அந்தப்புரத்தின் மாடிமீது சுடும்படி ஆணையிட்டான். பெண்டிர் கோட்டை அல்லோலகல்லோப் பட்டது. மன்னனுக்குப் புதிய மனுக்கள் சென்றன. குந்திராவுக்கு மன்னிப்பும் உயிர்ப் பிச்சையும் வழங்கினால், ஹைதரிடம் முன்பு தெரிவித்தபடி அவன் பாதுகாப்பை ஏற்பதாக அரசன் இணக்கம் தெரிவித்தான். ஹைதர் உள்ளூர நகைத்தான். ஆனால், இணங்கினான். வீரம், அருளிரக்கம், நகைத்திறம், சிறிது சோகம் கலந்த பெருமிதம் ஆகிய பலவகை உணர்ச்சிகளின் கூட்டுருவாக அச்சமயம் அவன் காட்சியளித்தான். குந்திராவ் மீளாச் சிறை வாழ்வு பெற்றான். ஹைதர் மாளாப் புகழ் வாழ்வு தொடங்கினான். புதிய முறையில் புதிதாக ஆட்சியைக் கைக்கொண்ட தன் அடையாளமாக அவன் மைசூர் நாட்டுக்குக் ‘கோதாதாத்’ - ‘புனித நாடு’ என்று பெயர் கொடுத்தான். மன்னனைப் பெயரளவில் மன்னனாக மதிப்புடன் வாழ விட்டு, அவன் மன்னனுரிமைகள் யாவற்றையும் கைக் கொண்டு நேரடி ஆட்சி தொடங்கினான். 7. வெற்றிப் பாதை ஹைதர் அலியின் ஆட்சி 1761-லிருந்து 1782 வரை நீடித்திருந்தது. இந்த இருபத்தோராண்டுக் காலத்திலும் ஓர் ஆண்டுகூடப் போர் இல்லாமல் கழிந்ததில்லை. ஓர் ஆண்டுக் காலம்கூட அவன் தலைநகரில் அரண்மனை வாழ்வு வாழ்ந்ததும் இல்லை. ஆயினும், இவற்றுக்கிடையில் அவன் குடும்பத்தின் வாழ்விலும் அரண்மனை வாழ்விலும் எல்லாம் திட்டப்படுத்தி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அக்குடும்பத்தின் ஒழுங்கைப் போலவே நாட்டின் ஆட்சி முழுவதும் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு, எல்லா அரங்கங்களும் ஒரு சிறிதும் வழுவாமல் இயந்திரங்கள் போல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. அவன் வீரவெற்றிகள் எந்த அரசன் வீர வெற்றிகளுக்கும் இளைத்தவை யல்ல. ஆனால், அவன் ஆட்சித் திறம் அவ்வெற்றிகளின் புகழையும் மங்கவைப்பதாயிருந்தது. மன்னுரிமை ஏற்றவுடன் ஹைதர் தன் பெயரால் புதிய நாணயம் வெளியிட்டான். அரசன், அமைச்சன் நஞ்சிராஜன் ஆகியவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் நேரடியாகக் கண்டு, விலைமதிப்பற்ற ஆடையணிகளை அவர்கட்குப் பரிசளித்து அவர்களைப் பெருமைப்படுத்தினான். அவர்கள் குறைவற்ற நிறைவாழ்வுக்கான எல்லா ஏற்பாடுகளையும் நிறைவேற்றினான். சீரங்கபட்டணம் கோட்டைக்கு வீரமிக்க மக்தூம் சாகிபையே தலைவனாக நியமனம் செய்தான். பல தலைவர்களிடம் ஒப்பற்ற வீரப்பணி செய்தும் தகுதிக்கேற்ப மதிப்புப் பெறாதிருந்த பத்ருஸ் ஸமான்கான் நாட்டு என்ற வீரனை, அவன் தன் காலாட்படைகளின் தளபதியாக்கிப் பெருமைப்படுத்தினான். குந்திராவின் சதியால் பதவியிழந்து நாடோடியாகத் திரிந்தபோது, பெங்களூர் வணிகரிடம் ஹைதர் வாங்கிய கடன்களும் இப்போது தீர்க்கப்பட்டன. குந்திராவின் உறவினன் ஒருவன் அவன் சார்பில் கோயமுத்தூர் பகுதியிலுள்ள கோட்டைகளை ஆட்சி செய்து வந்தான். குந்திராவ் வீழ்ச்சியடைந்த பின்னும் அவன் கீழ்ப்படிய மறுத்தான். ஹைதர் தன் மைத்துனனான இஸ்மாயிலின் தலைமையில் ஒரு படையை அனுப்பி அக்கோட்டைகளைக் கைப்பற்றினான். சிறிய பலாப்பூர்க் கோட்டையின் தலைவன் கிளர்ந்தெழுந்தான். அவனையும் ஹைதர் தானே நேரில் சென்று அடக்கி ஒடுக்க முனைந்தான். உடையார் மரபினர் ஆட்சியின் கீழிருந்த பகுதி இன்றைய மைசூர்த் தனியரசின் ஒரு பாதிக்கும் குறைவானதே என்று மேலே தெரிவித்திருக்கிறோம். அது முழுவதும் இப்போது ஹைதர் ஆட்சியின் கீழ் அமைதியுற்றிருந்தது. ஆட்சிப் பொறுப்பன்றி இனி வேறு பொறுப்பில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டதாகவே இச்சமயம் தோன்றிற்று. ஆனால், திடுமென வெளியேயிருந்து புதிய பொறுப்புக்கள் ஹைதரைக் கூவி அழைத்தன. ஸலாபத்ஜங் மீர் அஸப் உத்தௌலா 1761 வரை ஆண்டான். அவன் தம்பியர் இருவரில் மூத்தவன் பஸாலத். அவன் ஏற்கெனவே அடோனி மண்டலத் தலைவனா யிருந்தான். ஜங்மீர் ஷுஜா உல்முல்க் வீரமும் பேரவாவும் உடையவன். இளையவன் மீர் நிஜாம் அலிகான் முந்திய நிஜாமைச் சிறைப்படுத்தி வதைத்து, பின் தானே நிஜாமாகி, 1761 முதல் 1803 வரை 42 ஆண்டுக் காலம் நீடித்து ஆட்சி செய்தான். நிஜாம் அரசுரிமையிற் பிற்பட்டுவிட்ட பஸாலத் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அடானியில் தனியாட்சி நிறுவினான். அத்துடன் ஆட்சியைப் பரப்ப எண்ணங்கொண்டு மராட்டியர் கைவசமிருந்த சுரா மாகாணத்தின்மீது படையெடுத்தான். சுரா மாகாணத்தின் தலைநகரான ஹஸ் கோட்டை பெங்களூரை அடுத்திருந்தது. அதைக் கைப்பற்றும் முயற்சியில் பஸாலத் ஜங் வெற்றி பெற முடியவில்லை. அவ்வகையில் தனக்கு உதவி செய்தால், மாகாண ஆட்சியை ஹைதரிடமே விட்டு விடுவதாக அவன் தெரிவித்தான். இச்செயல் மூலம் தன் ஆட்சியையும் விரிவுபடுத்திக் கொள்ள முடியும். அத்துடன் நிஜாமின் வலுவையும் குறைக்க முடியும் என்று கண்டு, ஹைதர் அதில் முனைந்தான். ஹஸ் கோட்டையை ஹைதர் இரண்டு மூன்று நாட்களில் வென்றடக்கினான். அதன் பின், அவன் பெரிய பலாப்பூர்க் கோட்டையை அணுகினான். ஹைதரும் அவன் தமையனும் சிறு பிள்ளைகளாயிருக்கும்போது, அவர்கள் தாயுடன் சிறையில் அவதிப்பட்டிருந்த கோட்டை இதுவே. அவர்களைத் துன்புறுத்திய அப்பாஸ் அலிகானே அதன் முதல்வனாயிருந் தான். வளர்ந்துவிட்ட புலிக்குட்டியின் சீற்றத்துக்கு அஞ்சி, அவன் பெண்டு பிள்ளைகளுடன் கோட்டையைவிட்டு ஓடினான். மாகாணத்தின் கடைசிக் கோட்டை ஈத்தா என்பது. மராட்டியர் தமிழகக் கொங்கு மண்டலத்தை வெல்லும் பேரவாவுடன் இங்கே பீரங்கிகள், வெடி மருந்துக் குவைகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றைப் போதிய அளவு சேமித்து வைத்திருந்தனர். இவை அனைத்தும் ஹைதர் கைவசமாயின. போர் முடிவில் பஸாலத் ஜங் ஒன்றிரண்டு பீரங்கிகள் தவிர மற்றச் செல்வங்களையும் மாகாண ஆட்சியையும் ஹைதரிடமே ஒப்படைத்தான். அத்துடன் அவன் அரிய உதவியைப் பாராட்டி நவாப் பகாதூர் சக் மக் ஜங் என்ற பட்டத்தையும் அரசுரிமைச் சின்னங்களையும் அவனுக்கு அளித்தான். ஹைதர் பட்டத்தில் ‘ஜங்’ என்ற அடைமொழியை மட்டும் நீக்கி, மற்றவற்றைத் தன் நிலவர உடைமையாக்கிக் கொண்டான். மீர் இஸ்மாயில் ஹுசேனை மாகாணத் தலைவனாக்கி விட்டு, ஹைதர் வெற்றியுடன் சீரங்கபட்டணத்துக்கு மீண்டான். சிறிய பலாப்பூர் வெற்றியை அடுத்து, அதைச் சார்ந்திருந்த ராயதுருக்கம், ஹர்ப்பன ஹள்ளி, சித்தல துருக்கம் ஆகிய கோட்டை முதலியவைகளையும் ஹைதர் தன் ஆட்சிக்குக் கீழ்க்கொண்டு வந்து, திறை தருவிக்க முயன்றான். இவ்வேலை கிட்டத்தட்ட முடியும் சமயத்தில் பேடனூர் அரசியலில் ஏற்பட்ட அரசுரிமைப் பூசல் அவன் கவனத்தை ஈர்த்தது. ஹைதரின் பேரரச வாழ்வுக்கு அடிவாரமிட்ட நிகழ்ச்சி பேடனூர் வெற்றியேயாகும். பேடனூர் இன்றைய மைசூர்ப் பகுதியின் வடமேற்கிலுள்ள மலைநாட்டு சிறு நில அரசு ஆகும். 16-ஆம் நூற்றாண்டில் கிலாடி என்ற தலைநகரிலிருந்து நாயகமரபு மன்னர் அதை ஆண்டனர். அவர்கள் லிங்காயதர், அதாவது வீர சைவ மரபினர். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், இச்சேரி புதிய தலைநகராயிற்று. இச்சேரி நாயகர்கள் மைசூர் உடையார் களுடன் போட்டியிடத்தக்க வலிமை வாய்ந்த அரசர் ஆயினர். 1640-இல் சிவப்ப நாயகன் என்ற அரசன் தலைநகரைப் பேடனூர் அல்லது ‘மூங்கில் நகர’த்துக்கு மாற்றி, அதை வெல்ல முடியாத கோட்டை ஆக்கினான். அவன் ஆட்சிக் காலத்தில் பேடனூரின் செல்வம் தென்னாடெங்கும் புகழ் பெற்றதாயிற்று. ஆட்சியும் மேல் கடற்கரை வரை பரந்திருந்தது. 1765-இல் பேடனூர் மன்னன் பசவப்ப நாயகன் மாண்டான் அவன் மனைவி வீரம்மா, எக்காரணத்தாலோ தன் மகன் சென்னபஸவையாவிடம் ஆட்சியைக் கொடுக்காமல் தானே ஆள முற்பட்டாள். சென்னபஸவையா கொல்லப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், சென்னபஸவையா தப்பியோடி ஹைதர் அலியிடம் உதவி கோரினான். அரசுரிமை பெற்றால் ஹைதரின் ஆளாக இருந்து ஆட்சி செய்வதாகவும், திறை செலுத்துவதாகவும் வாக்களித்தான். ஹைதரின் பேடனூர்ப் படையெடுப்பு 1763-இல் தொடங்கிற்று. தலைநகரை அணுகும் வரை அரசி ஒரு சிறிதும் கவலை கொள்ளவில்லை. காடுமலைகளைக் கடந்து எந்தப் படையும் அவ்விடம் வரமுடியாதென்ற துணிச்சலே அதற்குக் காரணம். ஆனால், இளவரசன் உதவியாலும் ஓர் அமைச்சன் உதவியாலும் படைகள் காட்டுவழியறிந்து விரைந்தன. கோட்டையை அணுகிய பின் அரசி பணிந்து சமாளிக்க முயன்றாள். ஆண்டுதோறும் ஓர் இலட்சம் வெள்ளி திறையளிப்பதாக வாக்களித்தாள். ஆனால், அரசுரிமை இழப்பதைத் தவிர வேறு எந்தத் திட்டத்துக்கும் ஹைதர் இணங்கவில்லை. ஆளுபவரிடம் எத்தனை வேற்றுமை இருந்தாலும் அந்த மலைநாட்டு மக்களின் போர் உறுதியில் தளர்ச்சி எதுவும் இல்லை. அவர்களைக் கொல்வதுதான் எளிதாயிருந்தது; அடக்குவது எளிதாயில்லை. தலைநகர்க்கோட்டை முற்றுகை ஓர் ஆண்டு நீடித்தது. அதன் பின்னும், மறை சுரங்க வழி ஒன்றை உளவாளிகள் கண்டு கூறியதனாலேயே கோட்டை வீழ்ச்சி யுற்றது. அரண்மனையைத் தானே தீக்கிரையாக்கி விட்டு, நகைநட்டுகளுடன் அரசி வேறு கோட்டைகளுக்கு ஓடினாள். ஆனால், இறுதியில் எல்லாக் கோட்டைகளும் பிடிபட்டன. அரசியும் அவள் நண்பர்களும் மதகிரிக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். பேடனூரின் மலைநாட்டு மக்களே தொடக்கத்திருந்து ஹைதரின் படையின் மூலபலமாயிருந்து வந்தனர். மக்கள்வீரம், நாட்டின் வளம், அரணமைப்புக்கள் ஆகிய யாவுமே ஹைதருக்குப் பிடித்திருந்தன. ஆகவே, அவன் பேடனூரைத் தன் நேரடியாட்சிப் பகுதியாகவே சேர்த்துக் கொண்டான். மைசூர் அரசின் எல்லை விரிவுற்றது. அத்துடன் அவன் பேடனூரையே தன் தலைநகரம் ஆக்கிக் கொள்ள எண்ணியிருந்ததாக அறிகிறோம். இத்திட்டம் கைவிடப்பட்டாலும் அந்நகர்மீது அவனுக்கிருந்த ஆர்வம் என்றும் குறையவில்லை. அவன் அதன் பெயரை ஹைதர் நகர் என்று மாற்றியமைத்தான். நகரின் கட்டடங்களையும் தெரு அமைப்பையும் அழகுபடச் செப்பம் செய்தான். அங்கே ஒரு தனி அரண்மனை, ஒரு வெடி மருந்துச்சாலை, நாணயத் தம்பட்ட சாலை ஆகியவற்றை உண்டுபண்ணினான். நகருக்கு அருகாமையிலுள்ள கடற்கரையில் ஒரு புதிய துறைமுகத்தையும் கட்டமைத்தான். வெற்றியார்வத்துடன் புறப்பட்ட ஹைதர் உள்ளத்தில் பேடனூர், வாழ்க்கை ஆர்வத்தையும் ஆட்சியார்வத்தையும் தட்டி எழுப்பிற்று. புதிய மைசூர் அரசின் புகழ்ந்தோரரை வளைவில் பேடனூர் நடுநாயக மணிக்கல்லாக அமைந்தது. மைசூருடன் அமையாமல் பேரரசாட்சி அமைக்க வேண்டுமென்ற ஆர்வமும், தென்னாட்டு அரசியல் வாழ்வைச் சீரமைக்க அப்பேரரசை ஒரு கருவியாக்க வேண்டுமென்ற ஆர்வமும்தான் பேடனூரைத் தலைநகராக்க வேண்டுமென்ற முதலார்வத்தைக் கைவிடும்படி ஹைதரைத் தூண்டின. அவன் அரசியல் தொலை நோக்குக்கு இந்த ஆர்வத் துறவு ஒரு சீரிய சான்று ஆகும். பேடனூர் வெற்றியால் ஹைதருக்கு ஒன்றரைக் கோடி பொன்னுக்குக் குறையாத பெருஞ் செல்வம் கிடைத்ததென்று கூறப்படுகிறது. இது இன்றைய மதிப்பில் பத்துக்கோடி வெள்ளிக்குமேல் ஆகிறது. பேடனூர்ப் போரின்போது, சாவனூர் நவாப் அப்துல் ஹக்கீம் பேடனூர் அரசிக்கு உதவியளித்திருந்தான். ஏற்கெனவே சுரா மாகாணத்தின் வெற்றி மூலம் ஹைதர், மராட்டியர் பகைமையை விலைக்கு வாங்கியிருந்தான். சாவனூர் மராட்டியர் அரசை அடுத்திருந்ததனால், நட்பு முறையிலோ, எதிர்ப்பு முறையிலோ, அதைத் தன் பக்கமாக்கிக்கொள்ள ஹைதர் உறுதி கொண்டான். நட்புறவை நவாப் ஏற்காததால், ஹைதர் படைகள் சாவனூர் மீது சென்றன. நாட்டின் பெரும் பகுதி அழிக்கப்பட்ட பின்னரே, நவாப் பணிந்து திறைசெலுத்த ஒப்புக் கொண்டான். அவனிடமிருந்தும் கோடிக்கணக்கான விலைமதிப்புடைய பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இச்சமயம் ஆர்க்காட்டு நவாபின் எதிரியான சண்டாசாகிபின் மகன் மீர் ரஸா அலிகான் ஹைதரிடம் அலுவல் தேடிவந்தான். பிரஞ்சுப் போர் முறைகளிலும் பயிற்சிகளிலும் தேறிய அவனை ஹைதர் தன் பயிற்சிப் படைத் தலைவனாக்கிக் கொண்டான். ஹைதரின் படை முன்னேற்றங்கண்டு பேஷ்வா மாதவராவ் மனக் கொதிப்படைந்து, கோபால்ராவின் தலைமையில் ஒரு படையை அனுப்பினான். ஹைதரின் படை, அளவில் சிறிதாயிருந்தாலும், ஹைதரின் தலைமைத் திறமையால் பல களங்களில் வெற்றி கண்டது. கோபால்ராவ் மனமுடைந்து திரும்பவேண்டியதாயிற்று. ஆனால், விரைவில் பேஷ்வா தன் மூல பலம் முழுவதும் திரட்டிக்கொண்டு மைசூர் மீது படையெடுத்தான். சாவனூருக்குத் தெற்கே ரத்திஹள்ளி என்ற இடத்தில் ஒரு கடும்போர் நிகழ்ந்தது. ஹைதர் போர் முறைகள் பலவற்றைத் திறம்படக் கையாண்டும், மராட்டியர் பெரும்படைமுன் முழுத்தோல்வி ஏற்க வேண்டியதாயிற்று. ஒரு சில குதிரை வீரருடன் பேடனூர்க் காடுகளுக்குள் ஓடித்தான் ஹைதர் உயிர் தப்ப வேண்டியிருந்தது. மராட்டியப் படைகள் மைசூர்ப் பகுதி முழுவதும் பரவி ஹைதரை மென்மேலும் நெருக்கின. குடும்பத்தையும் குடும்பச் செல்வக் குவியலையும் சீரங்கபட்டணத்துக்கு அனுப்பி விட்டு, ஹைதர் நேர் உடன்படிக்கை கோரினான். இந்த ஒரு தடவை உடன்படிக்கையின் கட்டுப்பாடுகள் அவனுக்கு முற்றிலும் பாதகமாய் இருந்தன. அவன் சாவனூரையும் மொராரிராவிட மிருந்து முன்பு கைப்பற்றிய குத்திப் பகுதியையும் விட்டுக்கொடுக்க இணக்கமளித்தான். அத்துடன் போர் இழப்பீடாக 32 இலட்சம் வெள்ளி கொடுக்க வேண்டி வந்தது. ஆயினும், ஹைதரின் சுரா மாகாண வெற்றியும் பிற ஆட்சிப் பகுதிகளும் அவனிடமே விட்டு வைக்கப்பட்டன. தோல்வி இடையேயும் அவன் வீரத்துக்குக் கிடைத்த மதிப்பே இது. தோல்வி காணாத வீரன் ஹைதரின் புகழ் மராட்டியப் போரின் தோல்வியால் வளர்ந்ததேயன்றிக் குறையவில்லை. ஏனென்றால், இத்தோல்வி, அடுத்த வெற்றிப் பாய்ச்சலுக்கான ஒரு பதுங்கலாக மட்டுமே அமைந்தது. படைகளின் அளவால் பன்மடங்கு மேம்பட்ட எதிரி. முகம் திரும்பிய மறுகணமே ஹைதர் விரைந்து தன் நாட்டைச் சீர் செய்து கொண்டு அடுத்த வெற்றிப் பாய்ச்சலுக்குக் கிளம்பினான். இத்தடவை அவன் நாட்டம் மேற்கு மலையாளக்கரை நோக்கிற்று. மேற்குக் கரைப் பகுதி கி.பி. 9-ஆம் நூற்றாண்டுவரை முத்தமிழ் நாடுகளில் ஒன்றாகிய சேரநாடாயிருந்தது. ஆனால், அந்நூற்றாண்டில் சேரப் பேரரசு வீழ்ச்சியடைந்து பல சிற்றரசுகளாயின. தெற்கே, வேணாடு அல்லது திருவாங்கூர், உதயவர் மரபினராலும், அதன் வடபால் கொச்சி, பெரும் படப்பு மரபினராலும், கள்ளிக்கோட்டை, சாமூதிரி மரபினராலும், வடகோடியிலுள்ள சிரக்கல், கோலத்திரி மரபினராலும் ஆளப்பட்டது. விஜயநகர ஆட்சிக்காலத்தில் புதிதாகக் கடல் வழி கண்டு மேனாட்டுக் கடலோடி வாஸ்கோடகாமா வந்து தென்னாட்டில் இறங்கிய பகுதி, கள்ளிக்கோட்டையே. முதல் முதல் மேனாட்டினருடன் தொடர்பு கொண்ட கீழை உலக மன்னனும் சாமூதிரியே. மலையாளக் கரையின் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் நாயர்கள். அவர்கள் போரையே தங்கள் வாழ்வாகக் கொண்ட மறக்குடியினர். 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் புதிய இஸ்லாம் நெறியும் அராபியர் குடியேற்றமும் வடமலையாளக் கரையில் ஏற்பட்டது. அராபியரும் நாட்டுக் குடிகளும் கலப்புற்றபின் மலையாளநாட்டு இஸ்லாமியர் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களும் நாயர்களைப்போலவே வீரமுடையவர்களாயிருந்தனர். ஹைதர் நாட்களில் சிரக்கல் தலைவனும், அலிராஜன் என்ற ஒரு இஸ்லாமியனாகவே இருந்தான். 1757-இல் ஹைதர் நஞ்சிராஜனுடன் தமிழகப் போர்களில் ஈடுபட்டிருந்தான். அச்சமயம் அவன் மலையாளக் கரையில் படையெடுத்துத் திறை பிரித்த செய்தி மேலே கூறப்பட்டுள்ளது. சாமூதிரி அரசருக்கும் பாலக்காட்டு அரசருக்கும் இருந்த போட்டி அச்சமயம் ஹைதருக்கு உதவிற்று. பாலக்காட்டு அரசன் பணிந்து நண்பனானான். அவன் உதவியுடன் சாமூதிரி முறியடிக்கப் பட்டு, திறை செலுத்திப் பணிந்தான். ஆண்டுதோறும் திறை செலுத்துவதாகவும் இரு மன்னரும் வாக்களித்தனர். போட்டி காரணமாகப் பாலக்காட்டரசன் அவ்வப்போது இதை அனுப்பிவந்தாலும், சாமூதிரி இதை விரைவில் நிறுத்தினான். மைசூர் அரசியல் வாழ்வு வேறு திசையில் சென்றதாலும், மராட்டியர் படையெடுப்பாலும் ஹைதர் இப்பக்கம் திரும்பவில்லை. ஆனால், 1765-ல் மராட்டியப் படை திரும்பியவுடன், அவன் சாமூதிரியிடம் திறை கோரினான். சாமூதிரி மறுத்துவிடவே, ஹைதர் படையெடுப்புத் தொடங்கிற்று. முதலில் மைசூர்ப் படைகள் பேடனூர் வழி, மேல்கரையின் வடகோடி சென்றன. தளவாடங்களைக் கடல் வழி அனுப்பி விட்டு, ஹைதர் கரை வழியாகக் குடகுமீது படையெடுத்தான். ஒன்றிரண்டு குடி மன்னர் எதிர்த்து வீழ்ச்சியடைந்தபின், மற்றவர்கள் பணிந்தனர். கண்ணனூரிலுள்ள அலிராஜன் பணிந்ததுடனன்றி, ஹைதருக்கு நண்பனாகி அவன் படைகளுக்கு வழி காட்டி உதவினான். மலையாளக் கரைப் போராட்டத்தில் ஹைதர் படைகளுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது. பல அடர்ந்த சதுப்பு நிலக் காடுகள் தாண்டிப் படைகள் செல்ல வேண்டியிருந்தது. நாயர் வீரர்களும் அங்குலம் அங்குலமாக அவர்கள் முற்போக்கை மூர்க்கமாகத் தடுத்து நின்றனர். ஆனால், இறுதியில் படைகள் கள்ளிக்கோட்டையை அணுகின. சாமூதிரி இத்தடவை எளிதில் பணிந்து நட்பாடினான். ஆயினும், திறை செலுத்துவதில் அவன் நாள் கடத்தி வந்தான். ஹைதர் சீற்றங்கொண்டு சாமூதிரியையும் அவன் அமைச்சனையும் அவரவர் அரண்மனைகளிலேயே சிறைப்படுத்தினான். அப்போதும் செயல் சாயவில்லை. ஹைதர் அமைச்சனை வதைத்துத் துன்புறுத்தினான். தனக்கும் இந்தத் தண்டனை தரப்படக்கூடும் என்று எண்ணி சாமூதிரி தன் அரண்மனைக்குத் தானே தீ வைத்து அதில் மாண்டான். நகரின் செல்வத்தைக் கொள்ளையிட்ட பின், ஹைதர் மலையாளக் கரையில் தெற்கு நோக்கி முன்னேறினான். கொச்சி அரசரும் பாலக்காட்டு அரசரும் பணிந்து பெருஞ் செல்வத்தைத் திறையாக அளித்தனர். சாமூதிரியின் நெஞ்சழுத்தத்தின் பயனை ஹைதர் விரைவில் கண்டான். நாடு முழுவதும் அடக்கிவிட்ட மகிழ்ச்சியுடன் அவன் கோயமுத்தூர் சென்றவுடனே, மலையாளக்கரை முழுவதும் காட்டுத் தீ போலக் கிளர்ந்தெழுந்தது. மாடக்கரையிலிருந்து ஹைதர் கிளர்ச்சியை அடக்கும்படி ரஸா சாகிப் என்ற படைத் தலைவனை அனுப்பினான். ஆனால், கிளர்ச்சி இத்தடவை படைவீரர் கிளர்ச்சியா யில்லை. நாயர்குடி மக்கள் அனைவருமே கிளர்ந்தெழுந்தனர். ரஸா சாகிபு முன்னும் செல்லமாட்டாமல், பின்னும் வரமாட்டாமல் திணறினான். ஹைதர் செய்தி அறியுமுன் நிலைமை படுமோசமாயிற்று. செய்தியறிந்த பின்னும் பெருவெள்ளத்தால் ஹைதர் முற்போக்குப் பெரிதும் தடைப்பட்டது. நாயகர் வீரர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டு மைசூர்ப் படைகளுக்குப் பெருஞ் சேதம் விளைத்தனர். நகரை அணுக முடியாமல் இரு படைகளும் தடைபட்டு நின்றன. ஆனால், இச்சமயம் ஹைதரிடம் இருந்த பிரெஞ்சுப் படைப் பிரிவின் தலைவன் உருப்படியான உதவி செய்தான். அவன் உக்கிரமாக முன்னேறி அரண் வரிசைகளைப் பிளந்தான். பிளவின் வழி ஹைதர் படைகள் முன்னேறி நகரைக் கைக்கொண்டன. நாடு கைவசமானபின் ஹைதர் வட்டியும் முதலுமாகப் பழி வாங்கினான். மலபார் மக்கள் என்றும் அவன் பெயரை மறக்க முடியாதபடி தன் ஆற்றலை அவன் அவர்கள்மீது பொறித்தான். அவன் இப்போது எடுத்த நடவடிக்கைகள் படைத் துறை வரலாறு முன்பின் அறியாதது. சிறைப்பட்டவர்களை ஒருவர் விடாமல் அவன் கொன்று வீழ்த்தினான். குடிமக்களைத் தொகுதி தொகுதி யாகத் திரட்டித் தொலை நாடுகளில் சென்று பிழைத்து அவதியுறும்படி அனுப்பி வைத்தான். அரசியல் நோக்குடன் மதிப்பிட்டாலன்றி, மலபாரில் ஹைதர் கையாண்ட முறைகள் தூயவீரனான அவன் புகழுக்குக் களங்கம் தருபவையேயாகும். ஆனால், வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய முத்திசையிலும் பகைவர்களுடன் போராட வேண்டிய நிலையிலிருந்த மைசூருக்கு, நாலாவது திசையில், மேற்கு மலைத் தொடரின் நிழலில் ஒதுங்கியிருந்த மலபாரின் அமைதி மிக இன்றியமையாததாயிருந்தது. ஹைதரின் கடு நடவடிக்கைகள் கூட, இவ்வகையில் அவனுக்கு முழுதும் பயன்படவில்லை என்பதை அவன் பின்னாளைய வரலாறு காட்டுகிறது. 8. ஆங்கிலேயருடன் போர் ஹைதர் ஒரு சிறந்த போர் வீரன்; ஆனால், அவன் வெறியன் அல்லன். அவன் வாழ்க்கையையும் சூழலையும் உற்று நோக்குபவர்களுக்கு இது எளிதில் விளங்கும். 18-ஆம் நூற்றாண்டில் தென்னாட்டில், போர் விலக்க முடியாத ஒன்றாயிருந்தது. அதிலிருந்து ஓர் அரசு ஒரு சிறிது ஓய்வு பெற வேண்டுமானால்கூட, அது வலிமை வாய்ந்த அரசாகவும், ஓரளவு பேரரசாகவும் இருந்து தீர வேண்டும். ஹைதர் காலத்துக்கு முன்பே தளர்ந்து நொறுங்கிக்கொண்டிருந்த மைசூர் அரசை அத்தகைய வலிமை வாய்ந்த அரசாக்குவதிலேயே ஹைதரின் தொடக்கக் காலப் போர்கள் முனைந்திருந்தன. ஆனால், அந்த நிலை அடைந்த பின்னும் மைசூர், போர் இல்லாமல் இருக்க முடியவில்லை. இதற்குப் பேரளவு மராட்டியப் பேரரசின் பண்பும், நிஜாம், ஆர்க்காட்டு நவாப் ஆகியவர்களின் பண்புமே காரணங்கள். மராட்டியப் பேரரசைக் கைக்கொண்டிருந்த பேஷ்வா மரபினர் பேரரசாட்சியின் எல்லை விரிவை விரும்பியவர்களல்ல. அவர்கள் விரும்பியது சூழ்ந்துள்ள நாடுகளைக் கொள்ளை யிடுவதே. அவர்களுக்குப் பேரரசு என்பது இத்தகைய ஒரு கொள்ளைப் படைக்கான மூலதளம் மட்டுமே! நிஜாமும் ஆர்க்காட்டு நவாபும் தமக்கென வலுவும் கொள்கையும் அற்ற அரசுகள். ஆங்கிலேயரையும் பிரஞ்சுக்காரரையும் மோதவிட்டே அவர்கள் வளர எண்ணினர். இந்நிலை தென்னாட்டின் விடுதலைக்குச் சாவுமணி அடித்துவிடும் என்பதை ஹைதர் தெளிவாக உணர்ந்தான். அவன் பிற்காலப் போர்களின் போக்கைக் கவனித்தால் இது விளங்கும். ஆகவே, அப்போர்கள் மைசூர் அரசுக்கான போர்களோ, பேரரசுக்கான போர்களோ அல்ல. அவை தேசீயப் போர்கள். மேலும் ஹைதரின் தேசீயம் வெளிநாட்டாரை வெறுத்த தேசீயமன்று. பிரஞ்சுக்காரரின் வீரம், உறுதி, கட்டுப்பாடு ஆகியவற்றை ஹைதர் மனமாரப் பாராட்டினான். தன் அரசியலிலேயே அவர்களைப் பல துறையிலும் ஈடுபடுத்த அவன் தயங்கவில்லை. ஆங்கிலேயரிடமும் அவன் பெருமதிப்பு வைத் திருந்தான். அவர்கள் நட்பையே விரும்பினான். ஆகவே, அவன் தேசீயம் பிறநாட்டாரையோ பிறநாட்டுப் பண்பையோ வெறுத்த தேசீயமன்று. அவற்றைப் பயன்படுத்தியேனும் சரிந்துவந்த தேசீய வாழ்வைக் காக்க அவன் அரும்பாடுபட்டான். ஆனால், அவன் தேசீயத்துக்கு எதிராயிருந்தது வெளிநாட்டார் அரசியல் தலையீடும், அதற்கு ஆக்கமளிக்க உடந்தையாயிருந்த மற்றப் பேரரசுகளின் பண்புமேயாகும். இந்த நிலையில் ஹைதர் பேரரசுகளைக் கூடிய மட்டும் எதிர்க்காமலே மைசூரையும் மற்றத் தென்னக அரசுகளையும் வலுப்படுத்த முயன்றான். அவன் காலத்தில் எவரும் இந்தக் காலங் கடந்த உயரிய நோக்கத்தை உணர்ந்தார்களில்லை. ஆனால் அவன் உரையாடல்கள், கருத்துரைகளை வெளி நாட்டுத் தூதுவர் நமக்குத் தெரிவிக்கின்றனர். அவற்றில் இந்த நோக்கம் முளைப்பாகத் தென்படுகின்றது. பெயரளவில் மைசூர் மன்னனாயிருந்த சிக்க கிருஷ்ணராஜன் 1767-ல் உயிர் நீத்தான். அவன் மகன் நஞ்சிராஜன் மன்னர் பெயருக்கு உரியவனானான். ஆனால், அச்சிறுவன் தன் ஆற்றலும் பொறுப்பும் அறியாது வீணாரவாரங்களில் இறங்கினான். அவனைத் திருத்த முயன்றும் முடியாது போகவே, ஹைதர் அவன் அரண்மனைச் செல்வங்களைப் பறித்து, அவனைச் சிறைப்படுத்தினான். மன்னர் பொறுப்பை மட்டுமன்றிப் பெயரையும் அவன் இதன்பின் வெளிப்படையாக மேற்கொண்டு நவாப் ஆனான். இச்செயல் மூலம் ஹைதர் மீண்டும் பேஷ்வா மாதவராவின் சீற்றத்துக்கு ஆளானான். பேஷ்வாவின் பெரும்படை மைசூரை நோக்கி முன்னேறிற்று. பேஷ்வாவுடன் நிஜாமும் படையெடுப்பில் சேர்ந்து கொள்வதாக ஒப்புக் கொண்டான். ஹைதர் ஆர்க்காட்டு நவாபின் தமையனான மகுபூஜ்கானைத் தூதராக அனுப்பிச் சந்தித்துப் பேச முயன்றான். பேஷ்வாவின் சீற்றம் மாறவில்லை. படைகளின் வரவைத் தடுக்க ஹைதர் பல தீவிர நடவடிக்கை களை மேற்கொண்டான். வழி எங்கும் அணைகளை உடைத்து வெள்ளக் காடாக்கினான். பாதைகளைப் பாழாக்கினான். எல்லைப்புறங்களில் உணவுப் பொருள்கள் கிடைக்காதபடி அவற்றைத் தூர்த்தான். ஆனால், பேஷ்வாவின் பெரும்படையை இவை நீடித்துத் தடைப்படுத்த முடியவில்லை. மராட்டியர் சுரா மாகாணத்தை அடைந்தனர். மாகாணத் தலைவன் மீர் அலி ரஸாகான் ஹைதரின் மைத்துனன். அவனால் மிகவும் உதவப் பெற்றவன். ஆயினும் அவன் துணிந்து கடமை துறந்து பேஷ்வாவுக்குக் கோட்டையைத் திறந்து ஆதரவு தந்தான். இது ஹைதர் ஆற்றலுக்கும் ஊறு செய்தது. அவன் உள்ளத்தையும் புண்படுத்திற்று. இப்பகைச் செயலுக்குப் பரிசாக மராட்டியர் மீர் அலி ரஸாகானுக்குக் குர்ரம் குண்டாக் கோட்டையை வழங்கினர். ஹைதர் எப்படியாவது பேஷ்வாவுடன் இணங்கிப் போக முன்னிலும் மும்மரமான முயற்சி செய்தான். இத்தடவை சொல்திறமிக்க அப்பாஜிராம் என்ற தூதுவனை அனுப்பினான். அப்பாஜிராம் முயற்சி வெற்றி பெற்றது. முப்பத்தைந்து இலட்சம் வெள்ளி பெற்றுப் படையெடுப்பை நிறுத்தப் பேஷ்வா ஒப்புக்கொண்டான். ஹைதர் உடனடியாகப் பாதிப் பணம் திரட்டிக் கொடுத்தான். மறுபாதிக்குக் கோலார் மாவட்டம் ஈடாக அளிக்கப்பட்டது. இம்மறு பாதியையும் விரைவில் திரட்டிக் கொடுத்து, அவன் கோலாரையும் மீட்டுக்கொண்டான். இவ்வாறு மலைபோல வந்த இடர் பனிபோல நீங்கிற்று. மைசூர் படையெடுப்பில் மராட்டியருடன் நிஜாமும் பங்கு கொள்ள எண்ணியிருந்தான். ஆனால், அவன் படைகள் வந்து சேரு முன்பே நேச ஒப்பந்தம் முடிந்து விட்டது. ஆயினும் இந்தப் புதிய சூழ்நிலையையும் பயன்படுத்திக் கொள்ள நிஜாம் எண்ணமிட்டான். ஹைதருடன் சேர்ந்து ஆர்க்காட்டு நவாப் முகமதலியையும் அவன் கைப்பாவையாக நடந்துகொண்ட ஆங்கிலேயரையும் தாக்க அவன் திட்டமிட்டான். ஹைதர் இப்புதிய திட்டத்தை உள்ளூர விரும்பவில்லை. ஆயினும் நிஜாமின் வற்புறுத்தலுக்கு அவன் இணங்கினான். ஆனால், படைகள் ஆர்க்காட்டுச் சமவெளியில் இறங்கும்வரை நிஜாம் ஆங்கிலேயரை வெளிப்படையாகப் பகைத்துக் கொள்ளவில்லை. ஒரு புறம் ஹைதருடனும் இன்னொருபுறம் ஆங்கிலேயருடனும் நேச உறவு கொண்டு, இரண்டகமாகவே நடந்த கொண்டான். வெற்றி எந்தப் பக்கம் வரக்கூடுமோ அந்தப் பக்கத்தில் சாய எண்ணி மதில்மேல் பூனையாக இருப்பதையே அவன் அரசியல் கோட்பாடாகக் கொண்டிருந்தான். நிஜாம் படைகள் ருக்னுதுல்லா என்ற படைத்தலைவன் கீழ் அணிவகுக்கப்பட்டிருந்தன. ஹைதர் படையில் அன் மகன் திப்பு, மன்னிப்புப் பெற்று ஹைதருடன் சேர்ந்து கொண்ட மீர் ரஸா அலிகான், மக்தூம்சாகிபு, காஸிகான் முதலிய படைத் தலைவர்களும் மைசூர் படைத்தலைவனான மகமதலியும் தலைமை வகித்தனர். இருவர் படைகளும் சேர்ந்து 42,000 குதிரை வீரரும் 28,000 காலாள் வீரரும் இருந்தனர். 109 பீரங்கிகள் அவர்களுக்கு உதவின. தவிர ஹைதர் வசமாக ஹைபத் ஜங் என்பவன் தலைமையில் 5,000 குதிரை வீரர்களும் 2,000 பயிற்சி பெற்ற காலாள் வீரரும், 2,000 பயிற்சி முற்றுப் பெறாத வீரரும் சில பீரங்கிகளுடன் பின் தங்கி இருந்தனர். இப்படைகள் ஆர்க்காட்டுச் சமவெளிக்குள் பாய்தவதற்குச் சித்தமாகச் செங்கம் கணவாய் அருகே கூடாரமடித்து இருந்தன. நிஜாம் - ஹைதர் படைகள் இணைந்து படையெடுக்கத் தொடங்கிய செய்தி அறிந்ததும், திருச்சிராப்பள்ளியிலிருந்த படைத்தலைவன் ஹோவார்டு 5,000 காலாள்படை வீரரையும் 1,000 வெள்ளையரையும் விரைந்து கணவாயின் மறுபுறம் கொண்டுவந்து நிறுத்தி, நேசப் படைகள் கணவாய் கடவாமல் தடுக்க முயன்றான். ஆனால், ஹைதர் படைகள் இரவோடிரவாகக் கணவாய் கடந்து ஆங்கிலப் படைகளைச் சூழ்ந்து, அவற்றைத் தாக்கின. நிலைமையைச் சமாளிக்க முடியாத ஹோவார்டு, விரைந்து பின்வாங்கி, திருவண்ணாமலையை அடைந்தான். அங்கிருந்து சென்னைத் தலைவர்களுக்கு நேசப்படைகளின் தொகையும் முன்னேற்றமும் குறித்து அவசரத் தகவல் அனுப்பினான். இதன் பயனாகத் திருச்சிராப்பள்ளியிலிருந்து 4,000 காலாள் வீரர், 800 வெள்ளையர், ஆர்க்காட்டு நவாபின் 3,000 குதிரை வீரர் ஆகியவர்களுடன் படைத் தலைவன் ஸ்மித் அனுப்பப்பட்டான். நிஜாமின் படைகளை நோக்க, ஆங்கிலேயர் படைகள் மிகக் குறைந்த தொகையுடையவை. ஆகவே, வெற்றி தன் பக்கம் என்பதில் அவனுக்கு உறுதி பிறந்தது. இப்புகழை ஹைதருடன் பங்குகொள்ள அவன் உள்ளூர விரும்பவில்லை. ஆகவே, ஹைதர் படைகளைச் சோழநாட்டுக்கு அனுப்பி, உணவுப் பொருள், தளவாடங்கள் ஆகியவைகள் ஆங்கிலேயருக்கு வராமல் தடை செய்யும்படி அவன் வேண்டினான். ஹைதருக்கு நிஜாம் படையின்மீது நம்பிக்கையில்லை. ஆயினும் நிஜாமின் வற்புறுத்தலால், தன் மெய்க்காவல் படை போக மீந்தவற்றை அனுப்பிவிட்டான். நிஜாம் படைகள் சீர்குலைந்தால், மெய்க்காவல் படை கொண்டே சமாளிக்கலாம் என்று அவன் எண்ணினான். ஹைதர் எண்ணியது சரியாய் போயிற்று. மைசூர்ப்படை சிறிதானாலும் கட்டுக்கோப்புடையது என்று ஸ்மித் கருதினான். ஆகவே, அதன் பக்கம் சென்று தாக்குவதுபோல் பாவனை செய்து, நிஜாம் பக்கமே சென்று மோதினான். ஆங்கிலேயர் துப்பாக்கிகள் வேறொருபுறமிருந்து படை வீரரிடையே அழிவு செய்தன. சந்தைக் கூட்டத்தில் பாம்பு புகுந்தால் ஏற்படும் கலவரம் நிஜாம் படையில் காணப்பட்டது. நிஜாம் தொலைவிலிருந்து தன் வீரர்களின் ஓட்டத் திறமையைக் கண்டு வெட்கினான். மன்னன் அமைச்சனையும், அமைச்சன் படைத் தலைவனையும், படைத்தலைவன் வீரரையும் குறைகூறிச் சமாளித்தனர். ஆனால், ஆங்கிலேயர் அவர்களுக்குப் பேச்சுக்கும் இடமளிக்காமல் துரத்தினர். ஹைதரின் சிறிய மெய்க்காவற் படை இத்தோல்வியிடையேயும் நிலைமையைச் சமாளித்து, பாதுகாப்புடைய வேறிடத்துக்குப் பின் வாங்கிச் சென்றது. போரில் எடுத்த அடியில் ஆங்கிலேயர் தற்காலிகமாக வென்றாலும், நாட்செல்லச் செல்ல அவர்கள் பக்கத்திலும் தளர்ச்சி ஏற்பட்டது. ஆர்க்காட்டு நவாபின் படைகள் நிஜாம் படைகளைவிட மோசமாயிருந்தன. வேண்டிய நேரத்தில் வேண்டிய இடத்தில் படையும் பண உதவியும் செய்வதாகக் கூறி அவன் சென்னை அரசியல் தலைவர்களைப் போர் முயற்சியில் ஊக்கியிருந்தான். ஆனால், வரிப் பணத்தைத் தின்றழித்தது தவிர, பணத்துக்கு அவனிடம் வழி ஏதும் இல்லை. திருவண்ணா மலையில் படைகளுக்கு வேண்டிய உணவும் தளவாடமும் சேகரித்து iத்திருப்பதாக அவன் கூறியிருந்தான். இதை நம்பி ஸ்மித் அவ்விடம் சென்று காத்திருந்தான். எத்தகைய தளவாடமும் கிட்டவில்லை. ஆனால், இதே நம்பிக்கையுடன் அங்கே வந்திருந்த படைத் தலைவர் ‘உட்’டின் வீரருடன் ஸ்மித் கலக்க முடிந்தது. அவர்கள் மொத்தப் படைபலம் இப்போது 1,030 குதிரை வீரரும், 5,800 காலாள் வீரரும் ஆவர். 16 பீரங்கிகளும் இருந்தன. திருவண்ணாமலையில் ஆங்கிலேயரை ஹைதர் தாக்கினான். போர்க்களத்தில் ஆங்கிலேயர் எதிர்ப்பைச் சமாளித்து நின்றனர். ஹைதர் படைகள் பின்னடைந்தன. ஆனால், ஆங்கிலேயருக்கு உணவு, தளவாட உதவி எதுவும் வராமல் மைசூர்ப் படைகள் தடுத்தன. தம் கையில் பட்ட தளவாடங்களால் மைசூர்ப் படைகளின் நிலை மேன்மேலும் நலமடைந்தது. 1767-இல் தொடங்கிய போராட்டம் அந்த ஆண்டு இறுதிக்குள் பலவகையில் மாறுதலடைந்தது. சிங்காரப் பேட்டையருகே ஆங்கில உதவிப்படை ஒன்றைத் தாக்கும்போது, ஹைதர் படைக்குப் பெருஞ்சேதம் விளைந்தது. ஹைதர் குதிரை சுடப்பட்டு விழுந்ததனால், அவன் உயிர் மயிரிழையளவே தப்பிப் பிழைத்தது. தவிர, அவன் கீழ் திசைப் போர் ஈடுபாடறிந்த மலையாளக்கரைக் குடி மன்னர் கிளர்ந்தெழுந்ததாக அவன் கேள்விப்பட்டான். திப்புவின் தலைமையில் அவன் ஒரு படை அனுப்பி, அங்கே நிலைமையைச் சமாளித்தாலும், மதுரையி லிருந்தும் பம்பாயிலிருந்தும் ஆங்கிலேயர் அத்திசையில் கலவரங்களைக் கிளறிக் கொண்டேயிருந்தனர். பம்பாய்ப் படை மங்களூரைப் பிடித்ததாகத் தெரியவரவே, ஹைதர் திடுமென இரு கடற்கரைகளின் பக்கமும் போராட வேண்டி வந்தது. ஆனால், அவன் பெற்ற போர்த்திறமை அவையனைத்தையும் இடைவிடா முயற்சியுடன் சமாளித்தது. மங்களூரைச் சென்று மீட்டு, எவரும் எதிர்பாரா வகையில் அவன் கிழக்கே தன் படைகளுக்கு உதவ முன்வந்து, இவ்வியத்தகு விரைவின் மூலமே எதிரிகளின் உள்ளத்தில் அதிர்வேட்டுக்களை உண்டு பண்ணினான். ஓர் ஆங்கிலப் படை நிஜாம் பகுதி மீதே தாக்கத் தொடங்கிற்று. இது கேட்ட நிஜாம் தாயகத்துக்கு ஓடினான். ஆனால், அவன் ஓடியதுடன் அமையவில்லை. எவ்வளவு எளிதாக அவன் முன்பு ஆங்கிலேயர் உறவைக் கைவிட்டானோ, அதைவிட எளிதாக இப்போது அவன் ஹைதர் உறவை முன்னறிவிப்பின்றி ஒழித்துவிட்டு ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். நிஜாமின் துணை நீங்கியதால் ஹைதருக்கு உண்மையில் வலு மிகுந்ததென்றே கூறவேண்டும். ஏனென்றால், கடல் போன்ற நிஜாம் படைகளுடன் இணைந்து நின்ற போது கிட்டாத வியத்தகு வெற்றிகள் அதன் துணை அகன்ற பின்னரே ஹைதருக்குக் கிட்டின. கிட்டத்தட்ட வடதமிழக முழுவதும் அவன் வாள்போல் சுழன்று சுழன்று சென்று, முகமதலியின் வலிமைமிக்க கோட்டைகள் பலவற்றையும் கைப்பற்றினான். ஆங்கிலேயர் உதவிப் படைகள் எதுவும் இடம் விட்டு இடம் பெயர முடியாமல் அவற்றை அவன் சிதறடித்தான். இரண்டாண்டுகள் ஆங்கிலேயர் போக்கு வரவு முற்றிலும் கடல் வழியாகவே நடந்தது. கரையாதிக்கம் முழுவதும் ஹைதர் படைகளின் வசமாயிருந்தது. பண்டைத் தமிழரசுகளைப்போல் ஹைதரிடம் கடற்படையும் இருந்திருந்தால், மைசூர்ப் போருடன் ஆங்கில ஆட்சிக்கு ஒரு முடிவு ஏற்பட்டிருக்கும்! ஹைதர் மேல்திசையிலிருந்து திரும்புவதற்குள் ஹைதர் வென்ற தமிழகப் பகுதி முழுவதையும் மீட்டுவிட ஆங்கிலேயர் பெருமுயற்சிகள் செய்தனர். அதற்காகவே ஹைதரின் எதிரியாகிய குத்தி மராட்டியத் தலைவன் மொராரி ராவையும் அவர்கள் பணம் பேசி வரவழைத்தனர். ஆனால், அவன் படைகள் வந்து சேருவதற்குள் ஹைதர் மின்னலெனத் தமிழக எல்லையுள் குதித்தான். இந்துஸ்தானியில் ‘புலி’ என்ற பொருளுடைய ‘ஹைதர்’ என்ற சொல் மலையாளிகளிடையே ‘புலி’யால் நேர்ந்த கிலியையே தந்திருந்தது. 1768-ஆம் ஆண்டில் ஆங்கிலேயருக்கும் அது அதே கிலியை உண்டுபண்ணிற்று. மேலை நாட்டில் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அழுகின்ற ஆங்கிலக் குழந்தைகளிடம் ஆங்கிலத் தாய்மார்கள் ‘நெப்போலியன்’ பெயரை மெல்ல உச்சரிப்பார்களாம். குழந்தைகள் உடனே வாய் பொத்தி நடுங்கி விடுமாம்! கீழ் திசையில் ஹைதர் பெயர் உச்சரித்துக் குழந்தைகளுக்குச் செவிலியர் அதே நிலையை உண்டு பண்ணினர்! மூலபாகல் என்ற இடத்தில் ஆங்கிலப் படைகளை அகற்றி ஆர்க்காட்டு நவாபின் படைகள் அமர்த்தப்பட்டிருந்தன. இஃதறிந்த ஹைதர் கோட்டையை எளிதில் கைப்பற்றிக் கொண்டான். படைத் தலைவன் ‘உட்’ அதை மீட்கப் புறப்பட்டான். உள்ளே மைசூர்ப் படைகள் இருந்தன என்று மட்டுமே அவனுக்குத் தெரியும். ஹைதர் மலையாளக் கரையிலிருந்து அவ்வளவு விரைவில் வந்திருக்க முடியாது என்று அவன் கருதினான். ஆனால், எதிர்ப்பின் மும்முரத்தால் அவன் உண்மை உணர்ந்து விரைந்து பின் வாங்கினான். இதுவும் எளிதில் முடியவில்லை. ஹைதர் வெளியே நிறுத்தியிருந்த படைகள் இதைத் தடுத்தன. அவசர அவசரமாகப் புதிய படை பலம் வேண்டுமென்று படைத் தலைவன் ஸ்மித்துச் செய்தி அனுப்பப்பட்டது. படைத் தலைவன் ஸ்மித் வருமுன் ஹைதர் மேலும் சில கோட்டைகளைக் கைப்பற்றிவிட்டான்! ஹைதர் ஹோசூர்க் கோட்டையின் முற்றுகையில் ஈடுபட்டிருந்தான். போர் முயற்சியின் தோல்விகளால் மனம் குமுறிய ஆங்கில அரசியலார் படைத் தலைவன் ஸ்மித்தைச் சென்னைக்குத் திருப்பியழைத்துக்கொண்டு, படைத் தலைவன் ‘உட்’டை நியமித்திருந்தனர். ‘உட்’ தன் களப் பீரங்கிகளையும் தளவாடங்களையும் பாகலூரில் படைத் தலைவனான அலெக்ஸாண்டரிடம் விட்டுவிட்டு ஹோசூருக்கு விரைந்தான். ஆனால், ஹைதர் முற்றுகை துறந்து இரு தலைவர்களின் இடையே பாய்ந்து சென்று பீரங்கிகளைக் கைப்பற்றிப் பெங்களூருக்கு அனுப்பினான். அத்துடன் ‘உட்’டின் படைகளை விடாது தொடர்ந்து அழித்து, அவன் தலைமைத் திறத்தைச் சந்தி சிரிக்க வைத்தான். வேங்கடகிரியிலிருந்து திடீரென்று மேஜர் பீட்ஸ்கெரால்டு என்ற படைத் தலைவன் வந்து உதவியிரா விட்டால், ‘உட்’, தானே ஹைதர் பிடியிலிருந்து தப்பி வந்திருக்க முடியாது! ஹோசூர் - பாகல்பூர் தோல்வியால், ‘உட்’டும் பதவியிழந்தான். படைத் தலைவன் லாங் படை முதல்வனாக அமர்வு பெற்றான். ஆங்கிலேயர் இப்போது பெங்களூரைக் கைப்பற்றி ஹைதரை மீள வைக்கலாம் என்று மனப்பால் குடித்தனர்! இதை அறிந்த ஹைதர் பஸ்ஸுல்லாக்கானை அனுப்பி ஆங்கிலேய ரிடம் மீந்திருந்த கோட்டைகளையும் பிடிக்க ஏவினான். இது மிக எளிதாக நிறைவேறிற்று. அத்துடன் ஹைதர் தன் படையுடன் சூறாவளிபோலச் சுழன்று திரிந்து, கோயமுத்தூர், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளை எல்லாம் நொடிக்குள் கைப்பற்றினான். வழியிலே நிக்ஸன் என்ற தலைவனுடன் ஒரு ஆங்கிலப் படை குறுக்கிட்டது. எதிர்ப்பது ஹைதர் தலைவர்களுள் ஒருவனல்ல, ஹைதரே என்றறியாது சிக்கிய அப்படையில், தலைவனும் துணைத்தலைவனும் தவிர ஒருவரும் தப்பவில்லை. துணைத் தலைவன் முன் ஆண்டில் சரணடைந்து, போர் முடிவுவரை போரிலீடுபடுவதில்லை என்ற உறுதியின் பேரில் விடுவிக்கப் பட்டிருந்தான். உறுதி தவறிய குற்றத்திற்காக அவன் மீதி வாழ்நாளைச் சீரங்கப்பட்டணம் சிறையில் கழித்தான். ஆர்க்காட்டு நவாபின் ஆட்சிப் பகுதி முழுவதையும் இப்போது ஹைதர் தன் கைக்குள் ஒரு ஆண்டுக்குள் கொண்டு வந்துவிட்டான். அது போதாமல், திடுமென மின்னல் உருகிப் பாய்ந்ததுபோல் சென்னையருகே பறங்கி மலையில் வந்து பாளையமடித்துக்கொண்டு, ஆங்கில அரசியலாரை அவன் நடு நடுங்க வைத்தான்! போரின் கடைசி ஆங்கிலப் படைத் தலைவன் ‘புரூக்’ ஹைதர் முன் மண்டியிட்டு நின்று சமரச ஒப்பந்தம் கோரினான். ஹைதரும் ஆங்கிலேயர் வகையில் எதையும் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுக்கச் சித்தமாகவே இருந்தான். ஆனால், நம்பிக்கை மோசக்காரனான முகமதலிக்கு மட்டும் எதுவும் விட்டுக் கொடுக்க முடியாதென்று பிடி முரண்டு செய்தான். ஹைதர் பறங்கிமலை யிலிருந்து ஒரு படைப் பிரிவுடன் வந்து சென்னையைச் சூறையாடுவதாக அச்சுறுத்திய பிறகுதான் ஆங்கிலேயர் அவன் கூறியபடி ஒப்பந்தம் செய்ய இணங்கினர். இந்த ஒப்பந்தம் 1769-ல் நிறைவேறிற்று. இவ்வொப்பந்தப்படி ஹைதரும் ஆங்கிலேயரும் எல்லாப் போர்களிலும் தமக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்று வாக்களித்தனர். இந்த வாக்குறுதியை ஆங்கிலேயர் என்றும் காப்பாற்றிய தில்லை. அச்சத்திலும் கிலியிலும் அளித்த வாக்குறுதி, ஒழுக்க முறைப்படி செல்லாது என்றுதான் அவர்கள் இதற்கு விளக்கம் கூறினர்! 9. புலியின் பதுங்கலும் பாய்தலும் மைசூரின் அரசியல் பொறுப்பை ஹைதர் ஏற்பதற்கு முன்னிருந்தே, மைசூரின் அமைதிக்கு மராட்டியப் பேஷ்வா மரபு ஒரு பெரிய வில்லங்கமாய் அமைந்தது. ஹைதரின் ஆட்சியில் மைசூர் செல்வ வளம் கொழித்த நாடாக வளர்ந்து வந்ததே இதற்குக் காரணம். இச்செல்வம் கொள்ளைப் பேரரசாகிய பேஷ்வா கால மராட்டியத்தின் பண ஆசையைத் தூண்டிற்று. தம்முடன் ஒத்த பேரரசராகிய நிஜாமை எதிர்க்க விரும்பாது அவர்கள் அடிக்கடி தெற்கே பார்வை செலுத்தியதன் காரணம் இதுவே. எத்திசையிலும் வெற்றி நாட்டிய ஹைதர், மராட்டியரிடம் மட்டும் அடிக்கடி பணம் கொடுத்தே ஒப்பந்தம் செய்ய வேண்டி வந்தது. ஒவ்வொரு சமயம் கடுந்தோல்விக்கும் ஆளாக வேண்டி வந்தது. ஆனால், இதற்கெல்லாம் வரலாறு இரண்டு காரணங்களையே கூற முடியும். மராட்டியப் படை தொகையில் மைசூர்ப் படையைவிட எப்போதும் பன்மடங்கு பெரியதா யிருந்தது. அத்துடன், கொள்ளையிடும் ஆர்வம் அப்படையின் அழிவாற்றலைப் பெருக்கிற்று. நாட்டு மக்கள் படை எதுவும் அதே அளவு துணிச்சலைக் காட்ட முடியாதிருந்தது. அத்துடன் சூழ்நிலையறிவும் தொலை நோக்கறிவும் உடைய ஹைதர் மராட்டியரை எதிர்க்குமுன், தென்னக அரசியல் புயலில் அசையா உறுதியுடைய ஓர் அரசை நிலைநாட்டிட விரும்பினான். மராட்டியருடன் போராடித் தன் ஆற்றலைச் சிதறடிக்க விரும்பவில்லை. அவர்களுடன் அவன் இறுதியாகத் தொடுத்த மூன்று போர்கள் இந்த உண்மையை நன்கு விளக்குகின்றன. முதற் போரில் அவன் படுதோல்வியுற்றான். ஆனால், அடுத்த போர்களால் இத்தோல்வி புலியின் ஆற்றல் மிக்க பாய்ச்சல்களுக்கு முந்திய பதுங்கல் என்பது தெளிவாயிற்று. இரண்டாம் போரில், மராட்டியர், நிஜாம் ஆகிய இரு பேரரசுகளும் ஒன்றுபட்டு நின்று படுதோல்வியடைந்தன. இறுதிப் போரில் மராட்டியர் முற்றிலும் முறியடிக்கப்பட்டனர். ஆங்கிலேயருடன் 1769-ல் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒரு புறம், நிஜாமுக்கும் பஸாலத்ஜங்குக்கும் இருந்த பகைமை மற்றொரு புறம் ஹைதரின் கீழ்திசை முன்னேற்றத்துக்கு வழி செய்தது. அவன் கடப்பை, கர்நூல் நவாப்களையும் சுரா மகாணத்திலுள்ள மற்றக் குறுநில மன்னரையும் கீழடக்கித் திறை வசூலித்து, மைசூர்த் தனியரசெல்லை தாண்டிப் பேரரசை மேலும் வளர்த்துக் கொண்டான். இவற்றால் ஆங்கிலப் போரில் இழந்த செல்வத்துக்கு அவன் பன்மடங்கு ஈடு செய்து கருவூலத்தை வளப்படுத்திக் கொண்டான். இச்செயல்கள் மீண்டும் பேஷ்வாவின் கடுஞ்சினத்தைக் கிளறும் என்பதை ஹைதர் எதிர்பார்த்தேயிருந்தான். ஆகவே 1769-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி ஆங்கிலேயர்களை உதவிக்கு வரும்படி அவன் அழைப்பு விடுத்தபின், தானே படையெடுப்புக்கு முன்னேற்பாடுகள் செய்தான். ஆனால், அவன் எதிர்பார்த்தபடி ஆங்கிலேயர் உதவ முன்வரவில்லை. கரடியின் உதவியை நம்பி மதயானையைக் கிளறிவிட்ட கதையாயிற்று. மராட்டியர் தாக்குதலின் முழு வேகத்தையும் ஹைதர் ஒருவனே ஏற்கவேண்டியதாயிற்று. இப்பொறுப்புத் தன் தனி ஆற்றலுக்கு மேற்பட்டதென்று கண்ட ஹைதர், இணக்கப் பேச்சுப் பேச முற்பட்டான். ஆனால், பேஷ்வா ஒரு கோடி வெள்ளி கேட்டதால் பேச்சு முறிவுற்றது. இதன்பின் எதிரியை முன்னேற விட்டு ஹைதர் தலைநகரை நோக்கிப் படிப்படியாகப் பின்னேறிச் சென்றான். மைசூரில் பெரும்பகுதியும் மராட்டியர் படைகள் வசமாயின. கோட்டைகள் பல பிடிபட்டன. பெங்களூருக்கு வடமேற்கிலுள்ள நிஜகல் கோட்டையில்தான் ஹைதரின் எதிர்ப்பு நடவடிக்கை மும்முரமாயிற்று. மூன்றுமாத முற்றுகையின் பின்னும் அதன் காவல் சிறிதும் தளரவில்லை. ஆனால், இச்சமயம் சித்தல துருக்கத் தலைவன் நம்பிக்கை மோசம் செய்து எதிரிக்கு உதவினான். ஆண்மை மிக்க பேடர்படையின் தலைமையில் அவன் துணிகரமாக மதிலேறி உட்பாய்ந்து கோட்டையை மராட்டியர் கைப்பற்ற வகை செய்தான். கோட்டைக்குள் ளிருந்தவர்களில் பெரும்பாலோர் மராட்டியர் கையில் சித்திரவதைக்கு ஆளானார்கள். இச்சமயம் பேஷ்வா மாதவராவ் உடல் நலிவுற்றுப் பூனாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. போரில் இதனால் ஹைதருக்குச் சிறிது ஓய்வு கிட்டியதாகத் தோன்றிற்று. ஆனால், பேஷ்வாவின் தாய்மாமனான திரியம்பகராவ் படைத்தலைமை ஏற்று, போரை முன்னிலும் மும்முரமாக நடத்தினான். மாதவராவ் கைப்பற்றாத கோட்டைகள் அவன் கைவசமாயின. இவற்றுள் குர்ரம்குண்டாக் கோட்டை முக்கியமானது. தலைமைக் கோட்டையான சீரங்கப்பட்டணத்துக்கும் ஆபத்து நெருங்கி வந்தது. ஹைதர் தன் முழுப் படைவலிமையையும் திரட்டிச் சீரங்கப்பட்டணத்தை எதிரி அணுகாமல் தடுக்க முற்பட்டான். அக்கோட்டைக்கு இருபது கல் வட திசையில் குன்றுகளின் நடுவில் மேலுக்கோட்டை என்ற திருக்கோவில் இருந்தது. ஹைதர் அதனை அணுகும் கணவாய் ஒன்றை வளைத்துப் பிறைவடிவில் குன்றின்மேல் தன் படைகளை நிறுத்திவைத்தான். ஆனால் அவன் போதாத காலத்துக்கு, அவ்வளைவுக்கு எதிராக இருந்த குன்றை அவன் கவனிக்கவில்லை. அதைப் பீரங்கித் தளமாகப் பயன்படுத்தி மராட்டியர் ஹைதர் படைக்குப் பேரழிவு செய்தனர். ஹைதரிடம் அவ்வளவு ஆற்றல் வாய்ந்த பெரிய பீரங்கிகள் இல்லை. ஆகவே பல மணி நேரம் அழிவைப் பார்த்துக் கொண்டிருந்தும், அவன் செயலற்றிருக்க வேண்டியதாயிற்று. முன்பகுதியைப் போராடவிட்டுக்கொண்டே, பின்புறமாகத் தன் படைகளை இரவோடிரவாகச் சீரங்கப்பட்டணம் கோட்டைக்குப் பின்வாங்கிச் செல்லும்படி ஹைதர் கட்டளையிட்டான். ஆனால், வழியில் ஒரு துப்பாக்கி தற்செயலாக வெடித்ததனால், இரகசியம் எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது. வழியில் முத்தேரி, என்ற ஓர் ஏரிக்கரையில் எதிரிகளின் பீரங்கிகள் இருந்தன. இப்பீரங்கிகள் ஒரு புறமும், பின் தொடரும் மராட்டியப் படை ஒரு புறமும் முத்தேரியைக் கூற்றுவன் களமாக்கிற்று. படைகள் சீரங்கப்பட்டணத்துக்கு ஐந்துகல் வடக்கிலுள்ள சர்க் கூலி மலையை அணுகியதும் மாராட்டியக் குதிரைப் படையினர் ஹைதர் படைகளைத் தாக்கினர். அணிகள் கலைந்து சிதறின. அழிவும் சித்திரவதையும் தொடங்கிற்று. ஒவ்வொருவரும் உயிருக்கு அஞ்சித் தனித்தனி வேறு வேறு திசையில் ஓடத் தலைப்பட்டனர். ஹைதர் ஒருபுறம் தனியாகத் தப்பிப் பிழைத்து ஓடிச் சீரங்கப்பட்டணம் சென்றான். அதே சமயம் திப்புவை எங்கும் காணாத கவலை, ஓடியவர் உள்ளங்களில் புயலிடையே புயல் வீசிற்று. மறுநாள் ஆண்டியுருவில் திப்பு தப்பி வந்தபின் தான் அவர்களுக்கு உயிர் வந்தது. அழிவிலும் அருஞ் செயல் செய்து புகழ் பெற்றவர் ஹைதர் தரப்பில் இரண்டே இரண்டு பேர்கள்தான். ஒருவன் படைத்தலைவன் பஸ்ஸுல்லாகான். அவன் ஒரு சிறு பிரிவுடன் எதிரிகளின் அணிகளையே பிளந்துகொண்டு தன் அணி குலையாமல் சீரங்கப்பட்டணம் வந்து சேர்ந்தான். ஹைதர் தன் அவமானத்தைக்கூட மறந்து அவனை ஆரக்கட்டித் தழுவிக் கொண்டான். சர்ச் கூலி மலைப்போரில் பெரும் புகழ் நாட்டிய மற்றொரு வீரன் யாஸின்கான் என்பவன். அவன் உருவிலும் தோற்றத்திலும் ஹைதரைப் பெரிதும் ஒத்திருந்தான். மைசூர்ப் படைகள் ஓடத் தலைப்பட்டபோது எதிரிகள் குறிப்பாக ஹைதரைக் கைப்பற்ற எங்கும் திரிந்துகொண்டிருந்தனர். தன் அரசனைக் காக்க யாஸின் கான் ஒரு சூழ்ச்சி செய்தான். தானே ஹைதர் என்ற முறையில் கூக்குரலிட்டு அவன் நடிப்புக் காட்டினான். சூழ்ச்சி பலித்தது. மராட்டியர் அவனே ஹைதர் என்று எண்ணிப் பலத்த காவலுடன் அவனைக் கொண்டு சென்றனர். திரியம்பகராவ் அவனையே ஹைதரென்று நினைத்து, அவனை மதிப்புடனும் அன்புடனும் நடத்தினான். துன்ப காலத்தில் அவன் நட்பைப் பெற்று அவனைத் தன் வசமாக்கிவிட அரும்பாடுபட்டான். ஹைதர் சீரங்கப் பட்டணத்தில் இருந்து அடுத்த போராட்டத்துக்கு ஆள் திரட்டுவது கேட்டதும், மராட்டியப் படைத் தலைவன் தான் ஏமாற்றமடைந்ததற்கு வெட்கி, யாஸின்கானை விடுதலை செய்தான். மேலுக்கோட்டை பேர் பெற்ற புண்ணியக் கோயில். தென்கலை வைணவரின் தலைமைத் திருப்பதிகளில் அது ஒன்று. ஆகவே, அதன் செல்வ வளம் பெரிதாயிருந்தது. வெறிகொண்ட மராட்டியர் அச்செல்வத்தை நாடி ஒருவர் மீதொருவர் விழுந்தடித்துச் சென்று அதைக் கொள்ளையிட்டனர். கிடைத்த உணவுப் பண்டங்களை உண்டு குடித்து ஆடினர். தேர்களையும் விதானங்களையும் கொளுத்தினர். இச்செயல் ஹைதருக்குத் தலைநகரின் காவல் ஏற்பாடுகளுக்குரிய போதிய கால வாய்ப்புத் தந்தது. தவிர, வைணவர் கோயிலைக் கொளுத்திய இந்துமதக் கொடியோர்களை எதிர்க்க மக்கள் திரள் திரளாக முசல்மான் வேந்தன் கொடிக்கீழ் திரண்டனர். ஆகவே, தலைநகரை திரியம்பகராவினால் என்றும் முற்றுகையிட்டுப் பிடிக்க முடியாமலே போய்விட்டது. நாட்டின் பெரும்பகுதியைக் கைவசப்படுத்திக் கொண்டு மராட்டியர் மாதக் கணக்காகச் சீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டனர். இறுதியில் 1772-ல் 15 இலட்சம் வெள்ளி உடனடியாகப் பெற்று, இன்னொரு 15 இலட்சத்துக்குச் சில மாவட்டங்களை ஈடாக ஏற்றுக் கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள். சிறையிலிருந்த பதவியிழந்த அரசச் சிறுவன் நஞ்சிராஜன் மராட்டியருடன் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிந்ததால், அவன் கொலைத் தண்டனைக்கு ஆளானான். அவன் தம்பி சாமராஜ் அவனிடத்தில் மன்னுரிமையாளனானான். 1772-இல் பேஷ்வா மாதவராவ் மாண்டான். அவனுக்கடுத்த தம்பியாகிய நாராயணராவ் பேஷ்வாவானான். அவனைக் கொன்றொழித்து அவன் சிற்றப்பன் ரகோபா பேஷ்வாவாக முயன்றான். ஆனால், மராட்டியரில் பெரும்பாலார் இறந்த நாராயணராவின் சிறுவன் மாதுராவையே பேஷ்வாவாக ஏற்க விரும்பினர். அரசுரிமைப் போர் ஒன்று தொடங்கிற்று. இத்தறுவாயைப் பயன்படுத்திக்கொண்டு, மராட்டியருக்குப் பிணையாகக் கொடுத்த பகுதிகளை மீட்கும்படி ஹைதர் திப்புவை அனுப்பினான். அத்துடன் தானே சென்று மராட்டியப் போர்க் காலத்தில் கிளர்ந்தெழ முயன்ற மலபார்த் தலைவர்களைக் கீழடக்கினான். 1773-இல் பேடனூர் அடுத்திருந்த குடகுப் பகுதியின் ஆட்சி மரபில் அரசியல் பூசல் எழுந்தது. அதன்மூலம் ஹைதர் தன் பேரரசை மேலும் பெருக்கி வளமாக்க வழி ஏற்பட்டது. குடகு பேடனூரைப் போலவே மலபாருக்கும் மைசூருக்கும் இடைப்பட்ட மலைநாட்டுப் பகுதி. அங்குள்ள மக்கள் வீரதீர முடையவர்கள். தங்குதடையற்ற விடுதலை வாழ்வுடையவர்கள். அவர்கள் சிறு சிறு சிற்றூர்களில் வாழ்ந்தனர். ஒவ்வொரு சிற்றூரிலும் நடுவே ஊர்த் தலைவன் வீடும் நிலமும் இருந்தன. அதைச் சுற்றி அவனுக்கு உட்பட்ட அவன் உறவினர் வாழ்ந்தனர். இச்சிறு நாட்டின் மன்னர் லிங்காயதர் அல்லது வீர சைவராக இருந்தனர். 17-ஆம் நூற்றாண்டுவரை இப்பகுதியில் குடிமரபாட்சியே நிலவிற்று. ஆனால், அந்நூற்றாண்டில் இக்கேரி அரச மரபைச் சேர்ந்த ஒருவன் பத்தனாக வந்து தங்கி, மக்கள் மதிப்பைப் படிப்படியாகப் பெற்று, அவர்கள் மீது ஆட்சி செய்யத் தலைப்பட்டான். நாளடைவில் குடகையும் குடகைச் சூழ்ந்த எல்லாப் பகுதிகளையும் அவன் தன் கீழ்க் கொண்டு வந்தான். ஹைதர் பேடனூரை வென்றபின், குடகையும் அதைச் சேர்ந்ததாகவே கொள்ள எண்ணி, 1765-இல் ஒரு படை அனுப்பினான். இத்தடவை அவன் முயற்சி பலிக்கவில்லை. ஆனால் 1770-இல் எழுந்த ஆட்சியுரிமைப் பூசலில், ஆட்சி உரிமையாளரில் ஒருவனான லிங்கராஜ் ஹைதர் உதவியைக் கோரினான். குடகுப் படையெடுப்புக்கு வழி கோலிய நிகழ்ச்சி இதுவே. மாற்றுரிமையாளனான தேவப்பன் ஓடி ஒளிய முயன்றான். ஹைதர் அவனைக் கைப்பற்றிச் சீரங்கப் பட்டணம் சிறைக் கூடத்துக்கு அனுப்பினான். மெர்க்காரா நகரம் ஹைதர் பேரரசின் ஒரு பகுதியின் தலைநகரமாயிற்று. ஹைதர் தன் வழக்கம்போல் குடகில் பிராமணர்களை உயர் பதவிகளில் அமர்த்தினான். மக்களை அவர்கள் கொடுமைப் படுத்தி மிகுதி வரி பிரித்தனர். இது தாளாமல் அவர்கள் எங்கும் கிளர்ந்தெழுந்தனர். ஹைதர் கிளர்ச்சியை அடக்கக் கடு நடவடிக்கைகளை மேற் கொண்டான். ஆயினும், இதன்பின் பதவிகளில் அவன் குடிகளிடம் நேர்மையாக நடக்கத்தக்க பொறுப்புடைய நன்மக்களையே அமர்த்தினான். 1776-இல் அரசிளஞ் சிறுவன் சாம்ராஜ் இறந்தான். திறமையற்ற அரசரே மீண்டும் மீண்டும் வருவதுகண்டு ஹைதர் சலிப்படைந்து, அடுத்த அரசுரிமையாளனைத் தேர்வதில் ஒரு புதுமை வாய்ந்த முறையைக் கையாண்டான். ஒரு மாளிகையில் பலவகை விளையாட்டுப் பொருள்களை வரிசைப்படுத்தி வைத்தான். அரசர் குடிச் சிறுவர்களை அங்கே திரட்டி, அவரவருக்கு வேண்டிய பொருள்களை எடுத்துக் கொள்ளும்படி கோரினான். தின்பண்டங்களையும் ஆடையணிகளையும் இன்ப ஊர்தி வகைகளையுமே எல்லோரும் தேர்ந்தெடுத்தனர். ஆனால், சாமராஜன் என்ற சிறுவன் மட்டும் அங்கிருந்த ஓர் அழகிய மணி பதித்த வாளைத் தேர்ந்தெடுத்தான், “ஆம்! இவனே தான் உண்மையான அரசன்!” என்று கூறி ஹைதர் அவனை மகிழ்வுடன் தன் அன்புத் தவிசில் ஏற்றினான். ஹைதர் அரசுரிமை விரும்பி மன்னனாகவில்லை; மன்னர் குடியினரின் திறமையின்மையும் நாட்டின் தேவையும் கண்டு மன்னனானான்’ என்பதை இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது. சிறுவன் சாமராஜன் காட்டிய ஆர்வம் ஹைதர் கண்காணப் பலிக்கவில்லை. ஆனால், அவன் கூரிய மதியார்வம் தவறானதன்று. அச்சிறுவனின் பிள்ளையான கிருஷ்ணராஜ உடையாரே பின்னாட்களில் 68 ஆண்டுகள் மைசூரை ஆண்டு அதை வளப்படுத்தியவன் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைதரின் அடுத்த வெற்றி பெல்லாரி வட்டத்தைச் சார்ந்தது. அதன் ஆட்சியாளன், பஸாலத் ஜங்கின் மேலாட்சியை உதறித் தள்ள விரும்பினான். பஸாலத் ஜங் அவனை அடக்க பிரஞ்சுப் படைத்தலைவன் வாலியை அனுப்பினான். ஆட்சியாளன் ஹைதரின் உதவியை நாடினான். ஆனால், உதவி நாடியவன்கூட எதிர்பாராதபடி அவ்வளவு விரைந்து ஹைதர் பெல்லாரி சென்றான். லாலியின் படை முற்றுகையிடுமுன் ஹைதர் உள்ளே சென்று போரில் லாலியை முறியடித்தான். அவன் படைகளைச் சிதறடித் தழித்தான். படைத் தலைவன் லாலி தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று பிழைத் தோடினான்! அடிக்கடி மைசூரின் எதிரிகளுக்கு உதவியவன் குத்தியை ஆண்ட மராட்டிய வீரன் மொராரிராவ். அவனைத் தண்டிக்க எண்ணி ஹைதர் அவனிடம் பெருந்திறை கோரினான். அவன் மறுக்கவே, குத்தி முற்றுகையிடப்பட்டது. கோட்டையில் நீர் இல்லாத நிலையில் மொராரிராவ் கோட்டையை விட்டு விடுவதாகக் கூறினான். ஆனால், அன்றிரவே மழை பெய்ததால், அவன் கூறியபடி நடக்கவில்லை. மீண்டும் நீர் வற்றி, மொராரிராவ் முன் போல் பணிய முனைந்தபோது ஹைதர் அதனை ஏற்றுக் கொள்ளாது கோட்டையை அழித்தான். அவனைச் சிறைப்படுத்திக் கபால் துருக்கத்தில் காவலிட்டான். குத்தி மைசூர்ப் பேரரசைச் சார்ந்த ஒரு பகுதியாயிற்று. புதிய பேஷ்வாவான ரகோபாவுக்கு எதிர்ப்பு மிகுதியாயிருந்தது. தன்னைப் பலப்படுத்திக்கொள்ள அவன் ஹைதர் நட்பை நாடினான். தான் தரவேண்டும் திறையை ஆறுலட்சமாகக் குறைக்கும்படி தூண்டி, ஹைதர் அவனைப் பஷ்வாவாக ஏற்று இணக்கமளித்தான். இது உண்மையில் ரகோபாவின் நிலையை உயர்த்திற்று. ஏனெனில், ஹைதர் பக்கமே ரகோபா சாய்ந்துவிடக் கூடாதென்று எண்ணிய பம்பாய் ஆங்கில ஆட்சியாளரும் அவனை ஏற்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். ரகோபாவுக்கெதிரான எதிர்ப்பு வலுக் குறைந்தது. இம்மகிழ்ச்சியால் கிருஷ்ணா ஆறுவரையுள்ள மராட்டியப் பகுதியை எடுத்துக் கொள்ளும்படி ரகோபா ஹைதருக்கு முடங்கல் வரைந்தான். ஹைதர் இந்த வாய் மொழிக் கொடையை செயல்முறைக் கொடை ஆக்குவதில் சிறிதும் நாட்கடத்தவில்லை. ஒரு சில மாதங்களுக்குள் மராட்டியப் பேரரசின் கன்னட மொழிப் பகுதி முழுவதையும் அவன் வென்று மைசூர்ப் பேரரசின் பகுதியாக்கினான். ஹைதரின் மைசூர்ப் பேரரசு இப்போது கிட்டத்தட்ட உச்ச அளவு பரப்பெல்லையும் உச்ச அளவு ஆற்றலும் உடையதாயிற்று. அதன்மீது மேலாட்சியுரிமை நாடியிருந்த மராட்டியப் பேரரசும் நிஜாம் பேரரசும் இப்போது மைசூரைப் பார்க்க இரண்டாம்தரப் பேரரசுகளாய் விட்டன. இந்நிலைமையைக் கண்ட நிஜாமும் ரகோபாவின் மராட்டிய எதிரிகளான பூனா அமைச்சர் குழுவினரும் புழுக்கமடைந்தனர். அவர்கள் விரைவில் மைசூருக்கு எதிராக ஒப்பந்தம் செய்துகொண்டு மைசூர்மீது படை யெடுத்தனர். நிஜாம்-பூனா நேசப்படையின் முன்னணியை ஹைதர் சாவனூர் அருகில் சந்தித்தான். ஸான்லிப் போரில் ஹைதரின் படைத்தலைவன் முகமதலி தன் படைகளுடன் ஓடுவதாகப் பாசாங்கு செய்து, மராட்டிய முன்னணிப் படைகளை மைசூர்ப் பீரங்கிகளின் எல்லைக்குக் கொண்டு வந்தான். பீரங்கிகளின் நெருப்புக்குப் படையின் பெரும்பகுதி இரையாயிற்று. மீந்தவர் தீய்ந்து கருகிய குறையுடலுடன் ஓடி எங்கும் கிலியைப் பரப்பினர். முன்னணியைத் தொடர்ந்து பின்னால் இப்ராஹிம்கான் தலைமையில் 40,000 வீரருக்குக் குறையாத நிஜாம்படை வந்து கொண்டிருந்தது. முன்னணியிலிருந்து ஓடிவந்தவர்கள் கிலி, அவர்களைக் கிருஷ்ணா ஆறு தாண்டி ஓடவைத்தது. பரசுராம் பாலாவின் தலைமையில் வந்த பூனா அமைச்சரின் மராட்டியப் படையோ அடோஸிவரை அசைந்தசைந்து வந்தது. படையிலிருந்து விலகிச் செல்பவர்களுக்கெல்லாம் பணம் வழங்குவதாக ஹைதர் தெரிவித்தவுடனே, சிதறிய கடலையைப் பொறுக்குவதற்கு ஓடும் குரங்குப் படைகள் போல அப் படைவீரர் சிதறிக் கலைந்தனர். மைசூரின் பழைய அரசர் மரபுக்கும் ஹைதருக்கும் சித்தல துருக்கம் ஒரு பகைமுள்ளாய் இருந்து வந்தது. மராட்டியப் போரில் அதன் தலைவன் ஹைதர் உதவிக்கு வரவில்லை. அத்துடன் நிஜகல் கோட்டை முற்றுகையில் அவன் எதிரியின் ஆளாயிருந்து ரகோபாவுக்கு வெற்றி தேடித் தந்தான். இனி மராட்டியர் ஓய்ந்து விடுவர் என்ற எண்ணத்துடன், ஹைதர் அவன் மீது தாக்குதல் தொடங்கினான். ஆனால், முந்திய தோல்வியின் அவமதிப்புக்கு ஈடு செய்யும் எண்ணத்துடன் மராட்டியர் ஹரிபந்த் பாரிகா என்ற தலைவன் கீழ் 60,000 குதிரை வீரரை அனுப்பினர். மராட்டியர் பண ஆசையறிந்த ஹைதர், துணைத் தலைவனை எளிதில் வசப்படுத்தி, பாரிகாவின் படையைக் கலைந்தோடுவித்தான். இதன் பின் அவன் துங்கபத்திரா, கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்பட்ட சிற்றரசுப் பகுதிகளனைத்தையும் சித்தலதுருக்கத்தையும் பிடித்தடக்கினான். அஞ்சாநெஞ்சும் அடங்காப் பண்பும் கொண்ட சித்தலதுருக்கத்தின் வீரமறக்குடி மக்களை அவன் ‘சேலர்’ என்ற பெயருடன் மைசூர்ப் படையின் தலைக்கூறாகச் சேர்த்துக் கொண்டான். அச்சிற்றரசின் தலைவனோ சீரங்கப்பட்டணத்தின் மீளாவெஞ் சிறையில் தன் மீந்த வாழ்நாளைப் போக்கினான். 10. விடுதலைப் போராட்டம் ஹைதர் வாழ்விலும் ஆட்சியிலும் 1779-ஆம் ஆண்டு ஒரு திரும்பு கட்டம் ஆகும். அதுவரை அவன் மைசூர் அரசுக்காகவும் மைசூர்ப் பேரரசுக்காகவும் போராடினான். போரை அவன் அதுவரை ஆட்சியின் உயிர் முறையாகக் கையாண்டிருந்தான். ஆனால், அந்த ஆண்டில் அரசு, பேரரசு வளர்ச்சியில் அவன் ஆர்வம் குறைவதையும், போரிலிருந்து திரும்பி மனம் அமைதியை நாடுவதையும் நாம் காண்கிறோம். அவ்வாண்டின் பின்னும் அவன் போரிலீடுபட வேண்டி வந்தது. ஆனால், அது பாதுகாப்பு நாடிய அரசியல் போரோ, ஆதிக்கம் நாடிய பேரரசுப் போரோ அன்று. அது அவன் இறுதி மூச்சுவரை நடத்திய போர் - வேண்டா வெறுப்புடன் பிற பேரரசர் தூண்டுதலால் தொடங்கப் பெற்று, அத்தூண்டுதல் நீங்கிய பின்னும் விடாப்பிடியுடன் நடத்தப்பட்ட ஹைதரின் தென்னாட்டுத் தேசீய விடுதலைப் போரேயாகும். ஹைதரின் பேரரசு வளர்ச்சியில் கடைசிப் படி கடப்பை வெற்றியைத் தொடர்ந்து வந்த சாவனூர் வெற்றியேயாகும். ஆனால், இவ்வெற்றி போரின் வெங்குருதியால் நிறைவேற்றப்பட வில்லை. மணவுறவுக் கலப்பு என்னும் செங்குருதியால் நிறைவேற்றப்பட்டது. ஹைதரின் மூத்த புதல்விக்குச் சாவனூர் நவாப் அப்துல்ஹகீமின் மூத்த புதல்வனையும், இளைய புதல்வனாகிய கரீமுக்கு அப்துல் ஹகீமின் புதல்வியையும் ஹைதர் மண நாடினான். இம்மண உறவின் இனிய சின்னமாக, நவாப் மைசூர்ப் பேரரசுக்குச் செலுத்தவேண்டிய திறை பாதியாக்கப் பட்டது. அதே சமயம் மைசூர்ப் படைக்கு நவாப் 2,000 வீரரை உதவும் கடப்பாட்டை ஏற்றான். இம்மண விழா மூலம் 1779-ஆம் ஆண்டு பேரரசின் முழு நிறைவிழா ஆண்டாக மாறிற்று. ஹைதர் மீர்முகமது சாதிக் என்ற இஸ்லாமியப் புலவனைப் பொருளமைச்சனாக நியமித்தான். சாமையா என்ற வீர பிராமண மரபினனைத் தன் உள்நாட்டுக் காவல்படைத் தலைவனாக் கினான். தென்னாடெங்கும் இப்போது ஹைதர் புகழ் பரந்தது. தொலை அயல் நாடுகளிலிருந்து வணிகர் குதிரைகளையும் விலையுயர்ந்த பொருள்களையும் விற்க மைசூரை நாடி வந்தனர். அவர்களுடனே வீரர், புலவர், அறச்சிந்தனையாளர் ஹைதரிடம் அலுவல் நாடியோ, பரிசில் அவாவியோ உலக நலத் திட்டங்களில் உதவி கோரியோ மைசூர் வந்து குழுமினர். சூழ்நிலையும் வரலாறும் ஹைதரை மேலும் இயக்கியிராவிடில் ஹைதரின் மீந்த ஆட்சிப் பகுதி அவனை ஒரு அசோகனாக, அக்பராக, ஹாரூன் அல்ராஸ்சிடாக, குலோத்துங்க சோழனாக மாற்றியிருக்கக்கூடும் என்று திடமாகக் கூறலாம். ஆனால், மாறிய நிலையிலும் 1779-ஆம் ஆண்டு இத்தகைய ஆட்சியின் ஒரு சிறு பதிப்பாகவே காட்சியளிக்கின்றது. 1770-ஆம் ஆண்டுக்குள் மைசூர், நிஜாம், மராட்டியர் ஆகிய மூன்று பேரரசுகளையும் ஆங்கிலேயர் ஒருங்கே புண்படுத்திப் பகைத்துக்கொண்டனர். ஆயினும், ஹைதர் தம்முடன் இல்லாமல், மற்ற இரு அரசுகளும் போரில் இறங்க விரும்பவில்லை. ஹைதரோ, மற்ற இருவரையும் நம்பிப் போரில் இறங்கத் துணியவில்லை. இந்நிலை 1780-ஆம் ஆண்டுக்குள் நீங்கிற்று. பிறர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் ஆங்கிலேயர் மீது போர் தொடுத்தே தீருவது என்று அந்த ஆண்டில் ஹைதர் துணிந்தான். ஆனால், அதே ஆண்டில் மற்ற இரு அரசுகளும் மனமுவந்து ஹைதருடன் சேர்ந்து ஆங்கில அரசை எதிர்த்த முன்வந்தன. மராட்டியரிடையே பேஷ்வா ரகோபா பம்பாய் ஆங்கிலேய அரசியலாருடன் 1775-இல் வர்காம் ஒப்பந்தம் என்ற உடன்படிக்கை செய்துகொண்டான். பேரரசு ஒரு கூட்டுறவானதால், அதன் முக்கிய உறுப்பினரும் கூட்டுறவின் அமைச்சரும் மக்களும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தபோது, விரைவில் ரகோபாவின் கை வீழ்ச்சியடைந்தது. மராட்டியர் ஆங்கிலேயரை எதிர்க்கத் துடிதுடித்தனர். நிஜாமுக்கெதிராக ஆங்கிலேயரைத் தூண்டியவன் ஆர்க்காட்டு நவாப் முகமதலியேயாவான். நிஜாம், வடசர்க்கார் என்ற ஆந்திரக் கரையோரப் பகுதியின் உரிமையாளன். அதில் குண்டூரை நிஜாம் மனமாரத் தன் தமையன் பஸாலத் ஜங்குக்கு விட்டுக் கொடுத்திருந்தான். ஆனால், முகமதலியின் சூழ்ச்சியால், 1778-ல் ஆங்கிலேயர் நிஜாமைக் கலக்காமல் அதைத் தமக்கென ஆண்டுக் குத்தகையாகப் பெற்று, முகமதலியிடமே அதை வழங்கினர். நிஜாமின் மேலுரிமை, நில உரிமை ஆகியவற்றுடன் அவன் குடியுரிமையும் இங்கே மிதித்துத் துவைக்கப்பட்டது. நிஜாம் இதைக் கண்டித்தபோது, ஆங்கிலேயர் வாளா இருந்ததுடன் நில்லாது, ஆண்டுக் குத்தகைத் தொகையும் இனித்தரப்படமாட்டாது என்று இறுமாப்புடன் கூறினர். இதுவே, ஆங்கிலேயர் மீது நிஜாமுக்கு ஏற்பட்ட உள்ளக் குமுறலுக்குக் காரணம். மராட்டியரும் நிஜாமும் ஆர்க்காட்டு நவாபைப் போல ஆங்கிலேயரின் கூலியாட்கள் ஆய்விடவில்லை. ஆயினும், அவர்கள் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு நேராகவோ மறைமுகமாக வோ ஆக்கமளித்த அடிமைகளாகவே இருந்துவந்தனர். வளர்ந்து வந்த ஆங்கில ஆதிக்கம் இவ்வடிமைகளையே நட்பிணக்கத்துடன் மதிக்கவில்லையென்றால், நாட்டின் தலைசிறந்த வல்லரசாக வளர்ந்துவந்த மைசூர் மன்னன் ஹைதரை நேசிப்பார்களென்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆனால், ஹைதரிடம் அவர்கள் நடந்துகொண்ட முறை பகைமை முறைமட்டுமல்ல; அவனையும் அவன் மூலமாகத் தென்னாட்டுத் தேசீயத்தையும் மதியாத அயலார் ஆதிக்கப் போக்காகவே அது அமைந்தது. ஹைதர் அரசியல் நேர்மையை எல்லாரிடமும் எதிர்பார்த்தவன். பிரெஞ்சுக்காரரிடம் அந்த நேர்மையே அவன் மதிப்பையும் பற்றையும் வளர்த்தது. தனி மனிதர் வகையில் ஆங்கிலேயரிடமும் அவன் அதே மதிப்பு வைத்திருந்தான். ஆனால், ஆங்கில அரசியல் ஆதிக்கக் குழுவினர் அந்த நேர்மையையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தவர்களாகத் தோன்றவில்லை. 1769-இல் ஹைதருடன் செய்துகொண்ட உடன்படிக்கையை அச்சத்தால் செய்து கொண்ட உடன்படிக்கை என்று அவர்கள் வெட்கமில்லாமல் கூறினர். அதே சமயம் சென்னை அரசியலை மதியாது இங்கிலாந்திலுள்ள வாணிகக் குழுவுடன் நேரடியாகத் தொடர்பு நாடிய முகம்மதலியைக் கெஞ்சி வாழ அதே அரசியலார் கூசவில்லை! ஹைதர் அலியின் ஒப்பந்தத்தை ஒழித்து, அவனை எதிர்த்தழிக்க வேண்டுமென்று முகமதலி இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் வாணிகக் குழுவினிடம் வாதாடினான். ஆனால், அதே நாவால் ஹைதரிடம் ஆங்கிலேயரைத் தென்னாட்டை விட்டுத் துரத்தத் தன்னுடன் ஒத்துழைக்கும்படி கோரிக்கையிட்டான்! ஹைதர் அவன் குள்ளநரிப் பண்பை அறிந்தவனாதலால், செய்தியை ஆங்கிலேயருக்குத் தெரிவித்திருந்தான். ஆனால், வாய்மையையும் நேர்மையையும், நம்பாத மனிதர் அன்று சென்னையில் ஆங்கில ஆட்சியாளராய் அமர்ந்து இருந்தனர். வளர்கின்ற தன் தென்னக வல்லரசுக்கு ஹைதர் வெடி மருந்தும் போர்ச் சாதனங்களும் பெற விரும்பினான். ஆங்கிலேய ருடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம் அவர்கள் நேசத்தால் இதைப் பெற அவன் மிகவும் முயன்றான். இது முடியாதென்று கண்டபின், அவன் மாகியிலுள்ள பிரெஞ்சுக்காரரிடமிருந்து இவ்வுதவியைப் பெற்று வந்தான். ஆனால், 1778-இல் ஆங்கிலேயர் மாகியைக் கைப்பற்றியிருந்தனர். மலபார் உட்படத் தென்னாட்டின் மேலுரிமையுடைய பேரரசன் என்ற ஹைதர் நிலைக்கும் அவன் பேரரசின் தேவைக்கும் இது குந்தகமாயிருந்தது. தவிர, மாகியில் உள்ள தன் உரிமை காரணமாக, அதன் பாதுகாப்பில் ஹைதர் வீரரும் பங்கு கொண்டிருந்தனர். மாகியை ஆங்கிலேயர் தாக்கினால், தான் ஆர்க்காட்டைத் தாக்க வேண்டிவரும் என்றுகூட அது தாக்கப்படுமுன் ஹைதர் எச்சரித்திருந்தான். ஆங்கிலேயர் காதில் இவை ஒன்றும் ஏறவில்லை. கடைசியாக, குண்டூரை ஆங்கிலேயர் கைப்பற்றியபோது, ஆங்கிலப் படைகள் ஹைதரின் இணக்கம் பெறாமலே ஹைதரின் ஆட்சிப் பகுதி வழியாக அவ்விடத்திற்கு அனுப்பப்பட்டன. இது ஹைதரின் ஆட்சியுரிமைக்கு எதிரானது. குண்டூர் முகமதலிக்குக் கொடுக்கப்பட்டபோதும், நிஜாமைப்போலவே ஹைதர் மனக்குமுறல் அடைந்தான். ஏனெனில், முகமதலியை அவன் தன் எதிரியாக மட்டுமன்றி, தன் மாநிலத் தாயகமாகிய தென்னகத் துக்கும், மனித சமுதாயத்துக்குமே எதிரி எனக் கருதினான். தன் குறைகளையெல்லாம் ஹைதர் சென்னை ஆட்சியாளரிடம் தெரிவித்திருந்தான். அதற்கு மறுமொழி இல்லாத நிலையிலும், ஆங்கில ஆட்சியாளரின் இரகசியத் தூதரான பாதிரி ஷ்வார்ட்ஸை அவன் ஆதரவுடன் வரவேற்றான். அத்துடன் ஹைதர் வசமிருந்த ஆங்கிலக் கைதிகளின் விடுதலை கோரப்பட்டபோது அவன் அவர்களைப் பெரும் போக்குடன் விடுதலை செய்தான். ஆனால், ஆங்கிலேயரிடம் ஹைதர் காட்டிய நேர்மை, பெருந்தன்மை, மனிதப் பண்பு ஆகிய யாவும் நாய்முன் எறிந்த சந்தனக் கட்டைபோலாயின. 1780-இல் மராட்டியர், நிஜாம், மைசூர் ஆகிய மூன்று வல்லரசுகளும் ஆங்கிலேருக்கெதிராக நேச ஒப்பந்தம் செய்துகொண்டன. அதன்படி துங்கபத்திரைக்கு வடக்கே கிருஷ்ணா ஆறுவரை ஹைதர் வென்றிருந்த பகுதிமீது அவன் உரிமை உறுதி செய்யப்பட்டது. மராட்டியருக்கு ஹைதர் தரவேண்டிய திறை 11 இலட்சம் என்பதும் வரையறுக்கப்பட்டது. தவிர, ஆங்கிலேயருடன் போர் தொடங்கியபின் பேராறையும் தென்னாட்டுக்கு வடக்கிலுள்ள பகுதிகளையும் மராட்டியர் வென்று கைப்பற்றுவது என்றும், வட சர்க்கார் அல்லது ஆந்திரக் கரையோரப் பகுதியை நிஜாம் கைக்கொள்வது என்றும், தமிழகப் பகுதியை ஹைதர் தாக்கி வென்று இணைத்துக் கொள்வதென்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது. ஒப்பந்தம் முடிவுற்றவுடனே ஹைதர் படையெடுப்புத் தொடங்கிவிட்டான். மற்ற இருவரும் அவர்கள் வழக்கப்படி தயங்கித் தயங்கியாவது நடவடிக்கை தொடங்குவர் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், அவர்கள் போரில் இறங்கவேயில்லை! ஹைதரின் முயற்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்! ஹைதர் தாக்குதலுக்குத் திரட்டிய படையில் 83,000 வீரர்கள் இருந்தனர். தென்னாட்டில் அதற்கு முன்னும் பின்னும் அவ்வளவு சிறந்த கட்டுப்பாடும் பயிற்சியும் ஆற்றலும் வாய்ந்த படை இருந்ததில்லை என்று ஆங்கிலேயரே ஒப்புக்கொள் கின்றனர். வேவு படை, மறை ஒற்றர்படை வகையில் எந்த அரசனும் ஹைதரின் அமைப்பிற்குப் பிற்பட்டவனேயாவான். ஏனெனில், அவனே நேரிடையாக எல்லா ஏற்பாடுகளையும் கவனித்தாலும், ஒவ்வொருவர் துறையும் பொறுப்பும் திட்டவட்டமாக வகுக்கப்பட்டிருந்தன. சென்னை அரசியலார் நிலை அன்று இவ்வெல்லா வகையிலும் ஹைதருக்குப் பலவகையில் பிற்பட்டதாகவே இருந்தது. உண்மையில் ஹைதர் படைகள் சென்னைக்கு ஒன்பது கல் அருகில் பறங்கிமலை வருவதுவரை அவன் திட்டம், நிஜாம், மராட்டிய ஒப்பந்தம் ஆகிய எதையும் ஆங்கிலேயர் அறிந்துகொள்ளவில்லை. இந்த ஒரு வகையில் ஆர்க்காட்டு நவாப் முகமதலி முன்கூட்டி எச்சரிக்கை தந்தும் போர் முறைகள் அறியாத ஆங்கில அரசியலார் செவியில் அது ஏறவில்லை. ஆங்கிலேயர்கள் விழித்ததும், ஆணைகள் எங்கும் பறந்தன. திருச்சிராப்பள்ளியிலிருந்து ஒரு படை ஹைதர் படைக்குப் பின்னின்று உதவி வருவதைத் தடுக்கும்படி ஆணையிடப்பட்டது. பாண்டிச்சேரியருகிலிருந்த ஒரு படை சென்னை வரும்படி கட்டளையிடப்பட்டது. குண்டூரிலுள்ள ஒரு படை தெற்கு நோக்கி வரும்படி கோரப்பட்டது. தவிர உடையார்பாளையம், செஞ்சி, கருநாடகக் கரை, வந்தவாசி ஆகிய முகமதலியின் கோட்டைகளுக்கு ஆங்கிலப் படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டன. ஆனால், குண்டூர் படை ஒன்று தவிர எதுவும் முன்னேற முடியவில்லை. அப்படையும் வந்தவாசியில் வந்து தங்கிற்று. அதன் தலைமையை இங்கே ஏற்ற கர்னல் பேய்லி கூத்தலாற்றை ஆகஸ்டு 25-இல் அடைந்தும், உடனே கடக்காமல் காலம் தாழ்த்தியதால் மாதக்கணக்கில் தடைபட வேண்டி வந்தது. ஏனெனில், அன்றிரவே ஆற்றில் வெள்ளம் பெருகிற்று. இறுதியில் ஆறு கடந்தபின், பேரம்பாக்கம் செல்லும் வழியில் ஹைதர் படைகள் அப்படைகளை மடக்கின. 700 வெள்ளையர்கள், 5,000 ஆங்கிலேயரின் நாட்டுப் படைவீரர்கள் அப்போரில் கொல்லப்பட்டனர். 2,000 வெள்ளையர்கள் சிறைப்பட்டனர். சிறைப்பட்டவர்களில் புகழ்மிக்க வீரரான பேயர்டு ஒருவர். இவர் மூன்றாண்டுகளுக்கு மேல் சீரங்கப்பட்டணம் சிறையில் அவதியுற்றுப் பின் விடுதலை பெற்றுத் தாய்நாட்டுக்கே அனுப்பப்பட்டார். சென்னையில் ஆங்கிலேயர் நிலை மோசமாவதை அறிந்து, வங்காளத்திலிருந்து பழைய சென்னை ஆட்சியாளர் வாரன் ஹேஸ்டிங்ஸ், ஸர்அயர்கூட் என்ற அனுபவமிக்க கிழத்தலைவனை அனுப்பினான். ஹைதர் ஆர்க்காட்டையும், ஆம்பூரையும் கைப்பற்ற முடிந்தது. ஆனால், வந்தவாசி நீடித்த முற்றுகையைச் சமாளித்த பின், ‘கூட்’ அதை விடுவித்தான். அதன்பின் அவன் கடலூரை நோக்கிச் சென்றான். ஹைதர் ‘கூட்’டின் படைக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே சென்று போர்ட்டோ நோவோவில் அவனுடன் கைகலந்தான். இதில் ஹைதருக்கு மிகவும் படையழிவு நேர்ந்தது. ஆனால், பேரம்பாக்கத்தில் நடந்த அடுத்த கைகலப்பில் இரு சாராரும் சலிப்படைந்தனர். அத்துடன் ஹைதரின் வேலூர் முற்றுகையைத் தடுக்க முடியாததால், ‘கூட்’ சென்னைக்குத் திருப்பியழைக்கப் பட்டான். இச்சமயம் ஆங்கிலேயருக்கும் டச்சுக்காரருக்கும் போர் மூண்டது. ஹைதர் உடனே நாகப்பட்டணத்திலுள்ள டச்சுக் காரருடன் ஒப்பந்தம் செய்துகொண்டான். ஆனால், ஆங்கிலப் படைத்தலைவன் கர்னல் பிரேயித்வைட் நாகப்பட்டணத்தைச் சூழ்ந்த தஞ்சை மாவட்டப் பகுதிகள் முழுவதையும் கைப்பற்றினான். எனினும், 1782-இல் திப்புவின் கையில் அவன் படை பெருந்தோல்வி கண்டது. அவனும் சிறைப்பட்டான். ஆங்கிலேயருடன் இவ்வாறு ஹைதர் தனித்து நின்று போராடிச் சமாளித்து வந்தான். அவனுடன் சேர்ந்து படையெடுப்பதாகக் கூறிய நிஜாமும் மராட்டியரும் ஓர் அடிகூடப் பெயரவில்லை. அரசியல் தந்திரியான வாரன்ஹேஸ்டிங்ஸ் குண்டூரை முகமதலியிடம் விட்டுவைக்கப்படாது என்று சென்னை அரசியலாருக்கு உத்திரவிட்டான். இச்சிறு செயலால் நிஜாமின் சீற்றம் தணிந்துவிட்டது. சிறு சுமையகற்றப் பெற்ற ஒட்டகம் களிப்புடன் எழுந்து ஓடியதுபோல, இச்சிறு தயவுக்கு நிஜாம் வால் குழைத்து மகிழ்ந்தான். இதுபோலவே ஆங்கிலப் படையொன்று மராட்டிய நிலத்தில் நுழைந்ததுமே மராட்டியர் மனமாறிவிட்டனர்; 1782-இல் ஆங்கிலேயருடன் அவர்கள் சால்பே ஒப்பந்தம் என்ற உடன்படிக்கை செய்துகொண்டனர். அதன்படி அவர்கள் ஹைதருடன் முன் செய்த ஒப்பந்தத்தின் வாசகங்களை மறுதலித்து, விடுதலைப் போரில் எதிரிகளின் கையாட்களாக மாறினர். ஹைதருக்கு உதவியாகப் பிரஞ்சுத் துருப்புகள் கடல் வழியாக பிரான்சிலிருந்து வந்தன. ஆனால், இறங்குமுன் ஆங்கிலக் கடற்படைகளுடன் அவை மோதின. இப்போர்களில் அலைக்கழிக்கப்பட்ட படையின் ஒரு பகுதியே போர்ட்டோ நோவோவில் இறங்கிற்று. இதன்பின் ஆங்கிலேயரும் பிரஞ்சுக் காரரும் ஒருங்கே தளர்வுற்றுப் போனதால், இருவருமே நேருக்குநேர் போராட்டத்தில் ஈடுபட விரும்பாமல் மறைமுக எதிர்ப்பில் நாட்கழித்தனர். ‘கூட்’ ஆரணியைத் திடுமென முற்றுகை செய்ய முனைந்தான். ஆனால், ஹைதர் விரைந்து ஆங்கிலப் படையணிகளைச் சிதறடித்தான். சென்னையில் ஆங்கிலேயர் வலுத்தளர்வது கண்டு, பம்பாய் அரசியலார் கடல் வழியாக மலபாரைத் தாக்கினர். ஹைதர் மலபாருக்குத் திப்புவை அனுப்பினான். இங்கே சில நாட்கள் எதிரியுடன் திப்பு போராடிக் கொண்டிருந்தான். மழைக் காலம் வந்தபின் போரில் எல்லாக் கட்சியினரும் தாமாக ஓய்வுற்றுப் போரைத் தளரவிட்டனர். ஆனால், ஹைதர் தளர்ச்சிக்கு ஒரு தனிக் காரணம் இருந்தது. ஹைதர் உடல் உரம் வியக்கத்தக்கதானாலும், ஓயாத போர் முயற்சியால் உள்ளூர முறிவுற்றிருந்தது. முதுகில் ஏற்பட்ட ஒரு புற்று இப்போது அவனுக்கு ஓயாத தொல்லை தந்தது. மருத்துவர் முயற்சிகள் எவையும் பலிக்காது போன பின், ஹைதர் நோயை எல்லாரிடமிருந்தும் மறைத்துக் கடமையில் ஈடுபட்டிருந்தான். ஆரணிப் போருக்குப் பின் ஆங்கிலேயரின் முதுபெரும் படைத்தலைவர் ‘கூட்’ உயிர் நீத்தான். அதனையடுத்து 1782, டிசம்பர் 7-ஆம் நாள் ஹைதரின் வீர ஆவியும் சித்தூர் அருகிலுள்ள நரசிங்கராயன் பேட்டைக் கூடாரத்தில் அகன்றது. ஹைதரின் ஏற்பாட்டினால், புதிய அரசியல் ஏற்பாடு முடியும்வரை அவன் மறைவு எவருக்கும் தெரியாமல் வைக்கப் பட்டது. தந்தை உடனடியாக அழைப்பதாக மட்டும் திப்புவுக்கு ஆணைபிறந்தது. திப்பு வந்து, தந்தையின் ஆணைப்படி மறைவாக உடலடக்கம் செய்து ஆட்சி ஒழுங்கமைந்த பின்னரே, ஹைதரின் முடிவு வெளியே மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. மக்கள் குடியிலே, போர் வீரர் மரபிலே பிறந்த ஹைதர், மக்கள் அழைப்பாலும் மாநிலத்தின் அவாவாலும் மன்னனானான். ஆகியும், மக்கட் பண்போ, போர்வீரப் பண்போ மாறாமல் வாழ்ந்து, போர் வீரனாகப் போர்க் களத்திலேயே மடிந்தான். அவனைப்போல நேரடித் தனியாட்சி செய்த எந்த மன்னரும் தலைநகரிலில்லாமல் பாசறைகளிலிருந்து அவன் ஆண்டதுபோல ஆட்சி செய்ததில்லை. அவன் மறைந்த பின்னும் அவன் ஆணையால் அவனில்லாமலே திப்பு வந்து ஆட்சியேற்கும் வரை எல்லாம் அவனிருந்து நடப்பது போல் நடந்தன. இது ஒன்றே அவன் ஆட்சித் திறமைக்கு ஓர் உயரிய சான்று ஆகும். ‘கன்னடத்தின் போர்வாள்’ கன்னடத்தைத் தென்னாட்டின் தலைநாயகமாக்கிவிட்டு உறையில் புகுந்தது. தென்னகம் அன்று தன் எதிரியை உணரவில்லை; எதிரியின் ஆற்றலை உணரவில்லை. ஆனால், ஹைதரின் வாழ்க்கைப் பணியால் தென்னகம் தன்னை உணர்ந்தது. ஹைதரின் மைந்தன் திப்பு தவிசேறி இவ்வுணர்வைப் பயன்படுத்தி வெற்றி பெற முயன்றான். ஹைதர் விட்ட இடத்திலிருந்து அவன் கன்னடத்தின் புகழை நெடுந்தொலை வளர்த்தான். ஆனால், ஹைதர் காலத்திய தென்ன கத்தின் உட்பகை நோய்கள் தென்னகத்தின் உரத்தை அரித்து விட்டன. தென்னகம் தற்காலிகமாகச் சரிந்தது. எனினும், ஹைதர் நட்ட விடுதலைப்பாறை, திப்பு அதன்மீது அமைத்த விடுதலைப் பீடம், நீடித்து நின்று பயன் தந்தன - இன்னும் பயன் தரும்! ஹைதர் குரலும் திப்புவின் குரலும் அப்பயன் நோக்கி இன்னும் நம்மை அழைக்கின்றன. 11. மன்னவன் மாண்பும் ஆட்சியும் மாட்சியும் மன்னர் பெரும்பாலும் ஆதிக்கம், ஆடம்பரம் இன்பவாழ்வு ஆகியவற்றிலேயே புரள்வர். அதையே மன்னர் வாழ்வு என்றுகூடக் கருதுவர். மன்னரின் இவ்வழியையே செல்வரும் இயல்பாக நாடுகின்றனர். குடியாட்சி நிலவும் இந்நாட்களில், மக்கட் பணியின் பேரால் உயர்பதவி பெறுபவர்களிடம்கூட, இவை இல்லாதிருப்பது அரிது. குடிமக்கள் ஆதரவு பெற்று உயர்ந்த அன்றே, உயர்வு பெற்றவர்கள் குடிமக்கள் வாழ்விலிருந்து நெடுந்துதொலை அகன்றுவிடுகிறார்கள். ஆனால், குடி மன்னனாகிய ஹைதர் வாழ்வும் ஆட்சிப் பாங்கும் இவ்வகையில் சிறந்த எடுத்துக்காட்டுக்கள் ஆகும். பொது மக்கள் வாழ்விலிருந்தும் படைவீரர் வாழ்விலிருந்துமே அவன் உயர்வு பெற்றான். ஆனால், உயர்ந்த பின்பும் பொதுமக்கள் வாழ்வின் எளிமையும் போர்வீரர் வாழ்வின் கடுமையும் அவனை விட்டு அகலவில்லை. அரசியலுக்கு இன்றியமையாத தருணங்களிலன்றி, அவன் ஆடம்பரத்தை விரும்பியது கிடையாது. கொலுமண்ட பத்திலும் சரி, போர்க்களத்திலும் சரி அவன் ஒரு படைவீரன் நிலைக்கு மேற்பட்ட எந்த உரிமையையும் ஏற்றுக்கொண்ட தில்லை. இவ்வகையில் ஹைதருக்கு இணையாகக் கூறக் கூடிய மன்னர், விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே. தமிழகத்தில் ஒரு நக்கீரர்கால நெடுஞ்செழியன், ஒரு இராசராசன், வடபுலத்தில் ஓர் ஒளரங்கசீப், ஒரு சிவாஜி, பண்டை உரோமத்தில் ஒரு மார்க்கஸ் அரீலியஸ் ஆகியவர்களிடத்தில் மட்டுமே இப்பண்பை அருகலாகக் காண்கிறோம். ஹைதர் வாழ்வு கழிந்து இன்று பலதலைமுறைகள், பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஹைதர் குடிமரபு கூட ஆங்கில ஆட்சியாளரால் தடம் தெரியாமல் அழித்துத் துடைக்கப் பட்டுள்ளது. அத்துடன் முரடன், கொடியவன், அரசியல் சூதாடி, மைசூர் அரசமரபைக் கவிழ்த்து மன்னுரிமையைக் கைப்பற்றியவன் என்றெல்லாம் ஆங்கில வரலாற்றாசிரியரும் எழுத்தாளரும் பேச்சாளரும் ஹைதரின் மாறாட்ட ஓவியந்தீட்டி, அவன் மெய்யுருவைத் திரித்துள்ளனர். இவ்வளவும் கடந்து இன்றுகூட மைசூர் மக்களிடையே ஹைதர் பெயருக்கு இருக்கும் மதிப்பும், அவன் நினைவால் ஏற்படும் ஆர்வமும் பெரிது. அவனுக்கு முன்னும் பின்னும் இருந்த அரசர், பேரரசர் பலருக்கும் கிட்டாத பெருமை இது. இதற்கு அடிப்படைக் காரணம் அவன் வீர தீர வாழ்வு மட்டுமன்று. மன்னனான பின்பும் அவன் மக்கட் பண்பு மாறாதிருந்தான் என்பதும், மன்னருள்ளும் மக்களுள்ளும் காணுதற்குரிய சீரிய பண்புகள் அவனிடம் இருந்தன என்பதுமே. ஹைதரைக் கண்டு அவன் எதிரிகள் அஞ்சினர். ஏனெனில், அவன் அடற்புலியேறு போன்ற வீரமுடையவன். அவனது உட்பகைவர், நயவஞ்சகர் அஞ்சினர். ஏனெனில், அவன் கூரிய நன்மதி அவர்கள் போலிப் பண்புகளை ஒரு கணத்தில் கண்டுகொண்டது. சோம்பித் திரிபவர், சொகுசு வாழ்க்கை யினர், கடமை தவறியவர் நடுநடுங்கினர். ஏனெனில், அவன் வீரத்தையும் உழைப்பையும் நேர்மையையும் மட்டுமே மதிப்பவன்; மற்றவர்களிடம் கண்டிப்பும் தண்டிப்பும் தரத் தயங்காதவன். ஆனால், பொதுமக்களுக்கு அவன் நண்பன். எளியவர்களுக்கு இறைவன். போர் வீரர்களுக்கு அவன் வள்ளல். அவர்கள் நலனுக்கு உழைக்கும் உரவோன். அவனைக் கண்டு அத்தகையவர் யாரும் அஞ்சியதில்லை. அஞ்சும்படியான தோற்றமோ இயல்போ, பண்பாடோ செயலோ எதுவும் அவனிடம் இல்லை. ஹைதர் ஆஜானுபாகு அல்ல. அழகனல்ல. அவன் நடுத்தர உயரமும் கருநிற மேனியும் உடையவன். ஆயினும் அவன் உடல் கட்டுமரம் வாய்ந்தது. கடு உழைப்பால் அது எளிதில் களைப்படைந்ததில்லை. தோல்விகளால் துவண்டதில்லை. உறுதி விடாமுயற்சி ஆகியவற்றின் திருவுருவாக அது திகழ்ந்தது. இவ்வெளிய தோற்றத்துக்கேற்ப அவன் எவருக்கும் எளியவன். எவருடனும் எளிதில் பழகி, இயல்பாக உரையாடி மகிழ்பவன். தென்னாட்டவர்க்கு இயல்பான மீசையையோ, முஸ்லீம்களுக்கு வழக்கமான தாடியையோ, அவன் வைத்துக்கொள்ளவில்லை. இப்பழக்கங்களால் அவன் எளிய தோற்றம் இன்னும் எளிமையுற்றது எனலாம். ஹைதரின் கூரிய சிறிய கண்கள் அவன் நுணுகிய இயற்கை அறிவுத் திறத்துக்குச் சான்று பகர்ந்தன. வளைந்த சிறு மூக்கு இயல்பான அவன் ஆளும் திறத்தையும் கண்டிப்பையும் எடுத்துக் காட்டின. தடித்த அவன் கீழுதடு, அவன் நெஞ்சழுத்தத்துக்கும் உறுதிக்கும் விடாப்பிடிக்கும் சின்னங்களாய் அமைந்தது. அணிமணிகளையோ பட்டாடை பொன்னாடைகளையோ ஹைதர் மிகுதி விரும்பியதில்லை. ஆயினும் அவன் உடையமைதியில் மிகுதி கருத்துச் செலுத்தியிருந்தான். வெள்ளைச் சட்டையையே அவன் விரும்பி அணிந்தான். பொன்னிறப் பூ வேலை, பொன்சரிகை அருகு ஆகியவற்றில் அவனுக்குப் பற்று மிகுதி. அச்சடிப் புள்ளி அல்லது புள்ளடி இட்ட சீட்டிகளை, சிறப்பாக பர்ஹாம்பூரில் நெய்த நேரியல்களை அவன் ஆர்வத்துடன் மேற்கொண்டான். கால்சட்டைகளும் இதே வகையான, மசூலிப் பட்டணம் துணிகளால் அமைந்திருந்தன. வேண்டும்போது நாடாக்களால் இறுக்கக் கட்டவும், மற்றச் சமயங்களில் நடுவே திறந்துவிடவும் தக்க முறையில் அவை தைக்கப்பட்டன. மடித்துத் தொங்க விடும் தளர் ஆடையையும் அவன் வழங்கினான். அவன் விரும்பிய நிறம் சிவப்பு அல்லது நீலச் சிவப்பு. அவன் தலைப்பாகை அந்நிறங்களிலோ, மஞ்சளாகவோ இருந்தது. நூறு முழம் கொண்ட நேரிய துணியால் அது நெடுநீள உருவில் உச்சி தட்டையாய் இருக்கும்படி கட்டப்பட்டது. இவை தவிர, அரையில் ஒரு வெண்பட்டிழைக் கச்சையையும், மஞ்சள் கால்புதையரணமும் அவன் அணிந்துவந்தான். அரசிருக்கையில், அமரும் சமயம் மணிக்கையில் வைர வளையங்களும், விரல்களில் இரண்டு மூன்று வைரக் கணையாழிகளும் இருப்பதுண்டு. அவன் அருகே வைரமிழைத்த பிடியுடைய ஒரு வாள் தொங்கிற்று. பூம்பாயல், மெத்தை படுக்கைகள் ஹைதருக்கு வழக்க மில்லை. பாசறைகளிலும் சரி, அரண்மனையிலும் சரி, பட்டுக் கம்பளம் ஒன்றும் இரண்டு மூன்று தலையணைகளுமே அவனுக்குப் போதியவையாயிருந்தன. படையணியுடன் இருக்கும்போது எல்லாப் படைவீரரும் தலைவரும் அணியும் அதே வகை அங்கியையே, அவன் தான் விரும்பும் வெண்பட்டுத் துணியில், தான் விரும்பும் பூம் புள்ளிகளுடன் தைத்து அணிந்தான். உடையின் எளிமையாவது ஹைதருக்கு ஒரு நடுத்தர உயர்குடியினன் தோற்றத்தைத் தந்தது. ஆனால், அவன் உணவுப் பழக்கம் குடிமக்களில் பலருக்குக்கூட வியப்பளிப்பதாயிருந்தது. இன்ன உணவுதான் வேண்டும் என்று அவன் எங்கும் கட்டளையிட்டதில்லை. வைத்த உணவை உண்டான். பலவகை உணவு, பல சுவை உணவு வைத்திருந்த இடங்களில், அவன் கூடியமட்டும் எல்லாவற்றிலும் சிறிது உண்பானேயன்றி, வேண்டியது உண்டு வேண்டாதது விலக்கியதில்லை. ஆயினும், இயற்கை விருப்பு வெறுப்புப் பற்றிய மட்டில், அவன் இனிப்பை அவ்வளவாக விரும்பியதில்லை என்றே கூறவேண்டும். புளிப்பு, கைப்புச் சுவைகளையே மிகுதி விரும்பினான். நிறை உணவு வகையிலே அவன் சோறும் பருப்புமே உண்ணும் விருப்புடைய வனாயிருந்தான். பயணங்களிலும் போர் நடவடிக்கை நேரங்களிலும் அவன் சேமம் செய்துகொண்டு வரப்பட்ட அரிசி அல்லது கேப்பை அடையையே உண்டான். அத்தகைய உணவை உண்பதில் பொதுப்படை வீரர்கூடச் சலித்துக் கொள்வதுண்டு. அவன் சலித்துக்கொள்வதில்லை. அரசிருக்கையில் கொலுவீற்றிருக்கும் பெருமித ஆடம்பரத்தை மன்னரும் மக்களும் விரும்புவதுண்டு. மன்னர் அவற்றில் பெருமை கொள்வதும் உண்டு. ஹைதர் மக்களுக்கான இன்றியமையாத வேளைகளிலன்றி, மற்றச் சமயங்களில் அவற்றை விரும்புவதில்லை. ஆனால், மைசூரில் ஹைதருக்கு முன்னாளி லிருந்து இந்நாள்வரை அரசமரபினர் தசராக் கொண்டாட் டத்தில் மிகவும் ஈடுபட்டு வந்துள்ளார்கள். மக்களுக்கும் அது ஒரு தேசீயப் பெருவிழா ஆக இருந்து வந்துள்ளது. ஹைதர் முஸ்லீமானாலும் பழைய அரச குடும்பத்தினரை மகிழ்விப்பதற் காகவும், மக்களுக்குரிய சமயப் பற்றுக்கும் எழுச்சிக்கும் ஊக்கமளிப்பதற்காகவும் அத்தருணத்தில் தனிச் சிறப்பான கொலு நடத்துவது வழக்கம். நாடகங்களும் படக் காட்சிகளும் இந்நாளில் பொதுமக்கள் பொழுது போக்காக மலிந்துள்ளன. ஹைதர் நாட்களில் இத்தகைய பொதுப் பொழுதுபோக்குகள் மிகக் குறைவே. விலங்குக் காட்சிகள். பொருட்காட்சிகள் கூட இன்றிரவு அன்று பெரும்பழக்கமாயில்லை. மற்போர், குத்துச்சண்டை, விலங்கு போர் ஆகியவையே இவற்றினிடமாக அன்று நடைபெற்றன. ஹைதர் இவற்றை ஊக்கியது மட்டுமன்றி அவற்றில் அடிக்கடி தானே முனைந்து ஈடுபடுவதுண்டு. மான் போர், யானைப் போர், வாணவேடிக்கை, குத்துச்சண்டை, மற்போர் ஆகியவற்றில் அவன் நேரடியாகச் சென்றிருந்து பரிசும் பாராட்டும் வழங்குவதுண்டு. பரிசுப்போட்டி சண்டைகளில் ஒரு வகை ஹைதர் நாட்களில் அவனால் பெரிதும் ஆதரிக்கப்பட்டது. அதில், கள் அருந்தப்பட்ட கழுதைகளுடனே கட்டுண்டபுலி போருக்குத் தூண்டப்படும். இன்னும் சிலசமயம் சிறந்த அபிஸீனிய வீரரோ அல்லது விரும்பும் வேறு பிறரோ புலி சிங்கங்களுடன் சண்டை செய்யும்படி ஏற்பாடு செய்யப்படும். சண்டைக்கான தனியிடத்தில் நடுவே ஒரு வாழைமரம் நடப்பட்டிருக்கும். சிங்கமும் ஆளும் அதைச் சுற்றி மாறிமாறித் தாக்க வேண்டும். மர மறைவிலிருந்து, சிங்கத்தை வீரர் குத்த வேண்டும். சிங்கம் மாண்டால், வீரனை மன்னன் பரிசுகளாலும் பொன்னணி மணிகளாலும் மூழ்குவிப்பான். ஆனால், சிங்கம் வென்றால், வீரனுக்குப் பரிசு கிடைக்காது. ஆனாலும், பெரும்பாலும் ஹைதர் அரங்கில் இருக்கும்போது, வீரன் மாள்வதில்லை. ஏனென்றால், விலங்கு வெல்லும் சமயம், ஹைதரின் குறி தவறாத துப்பாக்கிக் குண்டுக்கு விலங்கு இலக்காகி விழுந்துவிடும். இத்தகைய தருணங்களில் பந்தயப்போரில் மன்னனே பங்கு கொண்டு தன் திறமையைப் பயன்படுத்துவது உண்டு. இவ்வகையில் அந்நாளைய மைசூர் மக்கள் எல்லையில்லாத மகிழ்வும் பெருமையும் உடையவரா யிருந்தனர். தனி வாழ்க்கையிலும் நண்பர்களிடையிலும் ஹைதர் எல்லாருடனும் தாராளமாகக் கலந்து பேசும் இயல்புடையவன். அவன் தாய்மொழி கன்னடம். அதன் கொச்சைச் சொற்களை அவன் மிக அடிக்கடி கையாளுவது வழக்கம். அவன் உள்ளத்தில் வஞ்சகமும் பகைமையும் கிடையாது. ஆனால், கோபத்தில் கடுந்திட்டும் வசவும் நையாண்டியும் அவனிடம் ஏராளம். அதேசமயம் நெருங்கிய நண்பர்கள், வீரப்படைத் தலைவர்கள் எதிர்த்துத் திட்டினாலும், நையாண்டி செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் பண்பு அவனிடம் உண்டு. அரசியல் காரியங்களில் அவன் மிகுதி பேசுவதில்லை. ஆனால், பேசும்போது கண்டிப்பும் அறிவுச் செறிவும் மிகுதியாயிருந்தது. அவன் கருத்துக்களை அவன் கீழ்ப்பட்ட பணியாளர்களும் நண்பர்களும் மட்டுமன்றி, அறிஞர்களும் தனித் துறைகளின் வல்லுநர்களும் மதித்தார்கள். இளமையில் ஹைதர் பள்ளியில் நிழலுக்குக்கூட ஒதுங்கியது கிடையாது. இது காரணமாக அந்நாளைய முஸ்லீம் அரசர் அரசியல் மொழியாகிய பாரசீக மொழியிலோ, தாய் மொழியாகிய கன்னடத்திலோ ஹைதருக்கு எழுத்தறிவு கிடையாது. பத்திரங்களிலும் ஒப்பந்தங்களிலும் கட்டளைத் தாள்களிலும் கையொப்பமிடும்போது, அவன் பாரசீக மொழியில் ‘ஹைதர்’ என்ற பெயரின் முதலெழுத்தான ‘ஹை’ என்பதை மட்டும் எழுதப் பழகியிருந்தான். அந்த எழுத்தைக்கூட அவன் தலைமாற்றியும் ஒரு தடவைக்கு இருதடவையாகவும் எழுதினான். எழுத வாசிக்கத் தெரியாத காரணத்தினால் ஹைதருக்கு வாழ்விலோ ஆட்சிப் பொறுப்புகளிலோ எவ்வகையான குந்தகமும் கிடையாது. இதே நிலையில் இருந்த அக்பர், அசோகன் முதலிய அரசர்கள், கல்வி வல்லார்களின் உதவியாலேயே காரியம் ஆற்றினர். ஆனால், ஹைதர் பள்ளிக் கல்வியில்லாதவனாயிருந்தாலும் நினைவாற்றலிலும் அறிவாற்ற லிலும் பெரும் புலவர்களையும் விஞ்சியவனாயிருந்தான். ஹைதரின் நினைவாற்றல் மனித எல்லை கடந்த ஒன்றாகவே இருந்தது. கேட்ட ஒவ்வொரு சொல்லையும் பல ஆண்டு கடந்தும் அவன் நினைவில் வைத்திருப்பான். ஒரு தடவை கண்ட முகத்தையும் அதுபோலவே இருபது முப்பது ஆண்டுகள் கழித்தும் அவன் அடையாளம் கண்டு கொள்வான். உருவை மறைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் உரு மாறாட்டங்கள் கூட அவன் வகையில் பயன்படுவதில்லை. எத்தனை ஆண்டு கழித்தும் எந்தச் சூழலிலும் எந்த வேடத்திலும் அவன் ஆளையறிந்துகொள்வது கண்டு அவன் நண்பர் வியப்படைந் தனர். அவன் எதிரிகள் அஞ்சி நடுங்கினர். ஒரு தடவை ஒரு குதிரைச் சேணம் பழுதாய்விட்டது. அது பயன்படாதென்று எறியப்பட்டது. அது குப்பையுடன் குப்பையாய்க் கிடந்தது. குப்பை கூட்டுபவர்கூட அதைக் கவனிக்கவில்லை. அதுபற்றி எவரும் எண்ணவும் இல்லை. பல ஆண்டுகளுக்குப்பின் சேணங்களை மேற்பார்வையிடும்போது ஹைதர் “பழுதுபட்டு எறியப்பட்ட சேணம் எங்கே? என்று கேட்டான். எல்லாரும் விழித்தனர். ஹைதர் சேணத்தின் அடையாள விவரங்களை நுணுக்கமாகத் தெரிவித்தான். அந்த அடையாள விவரங்களை மனதிற்கொண்டு தேடியபின், அது குப்பைக் கூளத்தில் புதையுண்டு கிடந்து கண்டெடுக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குமுன் கண்ட ஆள்களை மட்டுமின்றி அவர்கள் குரலையும், பல செய்திகள் பற்றிய நுட்ப நுணுக்க விவரங்களையும் அவன் கூரிய உள்ளம் விடாது பற்றிக் காக்கும் இயல்புடையதாயிருந்தது. ஒரே சமயத்தில் பல காரியங்களிலும் ஈடுபட்டு, எல்லாவற்றிலும் ஒருங்கே கருத்துச்செலுத்தும் திறமும் ஹைதரிடம் இருந்தது. கடிதங்களை ஒருவர் வாசிப்பதைக் கேட்டுக்கொண்டே கட்டளைகளை எழுதுபவருக்குக் கட்டளை வாசகம் கூறல், வேலை செய்பவர்களை மேற்பார்த்தல், கணக்குப் போட்டுப் பார்த்தல் முதலியவற்றையும் செய்து, எதிலும் வழுவில்லாமல் நிறைவேற்றும் அவன் ஆற்றல் வியப்புக்குரிய தாயிருந்தது. காலை வேளையில் அம்பட்டன் அவனை வழித்துக்கொண்டிருக்கும்போதே, ஒற்றர் கூறிய செய்திகளை அவன் கேட்பான். நினைவுக் குறிப்பு எதுவும் இல்லாமலே ஒருவர் செய்தியுடன் மற்றவர் செய்தியை ஒப்பிட்டு, அவன் தேவைப்பட்டபோது அவர்களைக் குறுக்குக் கேள்விகள் கேட்பான். குறிப்புகளுடன் வந்த ஒற்றர்கள் அவன் கேள்விகளுக்கு விடைகூறத் திணறுவார்கள். நினைவாற்றலிலும் அரிது அவன் அறிவாற்றல். அவனுடன் பழகியவர்களுக்கு அது ஒரு மாய ஆற்றலாகவே இருந்தது. உண்மையில் அது அவன் ஆழ்ந்த அனுபவம், கூரிய மதிநுட்பம் ஆகியவற்றின் பயனேயாகும். குதிரைகள், மணிக்கற்கள், தோல் வகைகள் ஆகிய எப்பொருளையும் கண்டமாத்திரத்தில் அவனால் மதிப்பிட்டுத் தேர்ந்துவிட முடிந்தது. படை வீரர், படைத்தலைவர், பணித் துறையாளர் ஆகியவர்கள் முகங்களை ஒரு தடவை கண்டதுமே, அவர்கள் தகுதி, திறமை, நேர்மை, அனுபவம், அவர்கள் உள்ளத்தின் சிந்தனைகள் ஆகிய அத்தனையையும் அவன் குறித்துணர வல்லவனாயிருந்தான். படைத் துறையில் அவன் அனுபவம் விலைமதிப்பற்ற ஒரு மூலதனமாய் அமைந்தது. ஏனென்றால், அவன் தேர்ந்தெடுத்த படைக்கலங்கள். குதிரைகள், ஆட்கள் எல்லாம் என்றும் தலைசிறந்த தேர்வுகளாகவே இருந்தன. இவ்வரந்திறமையால், மைசூரின் ஆட்சியரங்கங்களிடையே அவன் ஒரு பெரிய அனுபவ ஆட்சியரங்கமாக விளங்கினான். அவன் கால மன்னர்கள் மட்டுமன்றிப் பல நாட்டின் அறிவுத் துறை வல்லுநர்களும் அவன் இயற்கையறிவாற்றல் கண்டு திகைத்துப் போயினர். ஆங்கிலேயர்களே அதற்குப் பல சான்று கூறுகின்றனர். ஹைதர் தன் வாழ்வில் ஒரு மணி நேரத்தைக்கூட வீணாக்கியதில்லை. உழைப்பும் சுறுசுறுப்பும் விடா முயற்சியும் அவனிடம் உச்சநிலையில் இருந்தன. இதன் பயனாகவே, வாழ்நாள் முழுவதும் ஓயாத பேராட்டத்திலீடுபட்டிருந்தும், அவன் அதன் இடைவேளையிலேயே நாட்டாட்சியின் ஒவ்வொரு செயலையும், தன் குடும்பத்தின் நிர்வாக முழுவதையும் தானே நேரிடையாகக் கவனித்துத் திட்டம் செய்ய முடிந்தது. அவன் கண்கூடாக நேரிலிருந்து பார்த்துச் செய்யாத செயல் எதுவும் கிடையாது. அத்துடன், எந்தக் காரியத்தையும் நீளநினைந்து வழுவறத் திட்டமிட்டல்லாமலும் அவன் செய்ததில்லை. உணர்ச்சி, விருப்புவெறுப்பு, கோபம் எதுவும் அச்செயல்களில் இடம்பெறவில்லை. அவன் தனக்கு உண்மையானவர்களுக்கு, தனக்காக உயிரைப் பாராமல் உழைத்தவர்களுக்குத் தாரளமாக வாரி வழங்கினான். போர்க்களத்துக்குப் படைகளை அனுப்பிவிட்டு அவன் தலைவனாக ஒதுங்கியிருக்கவில்லை. பிள்ளையைக் களத்திற்கு அனுப்பிவிட்டு, அவனையே நினைந்து நினைந்து செயலாற்றும் தாய்போல, அவன் அவர்களுக்கு நினைந்து நினைந்து ஆதரவுகளும் துணையும் செய்தான். நாள் தவறாமல், படை வீரர்களுக்கு மருத்துவ உதவி, பணம், உணவுப்பொருள்கள் அனுப்பி, அவர்கள் நலம் உசாவி வந்தான். இறந்தவர் குடும்பங்களை அவன் தன் குடும்பமாகப் பேணினான். காயமுற்றவர்களை அரசாங்கச் செலவில் குணப்படுத்தி, ஓய்வுடனே சம்பளமும் குடும்ப மானியமும் அளித்தான். படைத் துறைகளிலும் பணித்துறைகளிலும் அனுபவமிக்கவர்களுக்கும் உண்மையானவர்களுக்கும் அடிக்கடி பரிசும் பாராட்டும் வழங்கி ஊக்கினான். சோம்பேறிகள், கடமை தவறியவர்கள், பொது மக்களைச் சுரண்டியவர்கள் ஆகியோருக்கு ஹைதர் பொல்லாத கூற்றுவனாயிருந்தான். இத்தகைய குற்றஞ் செய்தவர்களை அவன் கடுமையாகத் தண்டிக்கவோ, பதவியிலிருந்து நீக்கவோ தயங்கவில்லை. நீக்கியபின் இரக்கம் காட்டுவதுமில்லை. ஆனால், இவ்வகையில் அவன் பொது மக்களையோ, பிறர் மக்களையோ நடத்தியதுபோலவே தன் புதல்வர்களையும், உறவினர்களையும் நடத்தினான். நேர்மையில் அவன் என்றும் வழுவியது கிடையாது. வீரருக்கும் வீரப் படைத்தலைவர்களுக்கும் ஹைதர் காட்டிய மதிப்பை உலகில் வேறு எந்த அரசனும் அரசியல் தலைவனும் காட்டியிருக்க முடியாதென்னலாம். திறமை, தகுதி, அனுபவம், உண்மைப் பற்று ஆகியவை காரணமாகவே அவன் ஆட்களத் தேர்ந்தெடுத்தான். ஆதரித்து உயர்த்தினான். ஆனால், உயர்த்தியபின் அவர்கள் பெற்ற உரிமையும் சலுகையும், நண்பர், குடும்ப உறுப்பினர் கூடப் பெற்றிருக்க முடியாது. இதற்கு இரு நிகழ்ச்சிகள் ஒப்பற்ற சான்றுகளாகின்றன. சர்க்கூலிப் போரைப் பற்றிய பேச்சு ஒருநாள் எழுந்தது. ஹைதர் உட்படப் படைத்தலைவர்களும் படை வீரர்களும் விழுந்தடித்துக் களம் விட்டு ஓடிய நிகழ்ச்சி அது. அதன் நினைவு ஹைதரைச் சோகத்தில் ஆழ்த்திற்று. ஆனால், அவன் தன் வெப்பத்தை உடனிருந்த தலைவர் மீதே கொட்டினான். “ஆம்! அன்று நம் படைத்தலைவர்கள் அத்தனைபேரும் கோழைகளாக ஆட்டுக் கூட்டங்களிலும் கேவலமாக நடந்துகொண்டார்கள். அதுமட்டுமன்று: தங்கள் உயிரை வெல்லமாகக் கருதி, அதைக் காப்பதற்காக, ஆயிரக்கணக்கான வீரரை வீணே பலி கொடுத்தனர். அதை நினைக்கும்போது இத்தகைய நன்றிகெட்ட துகளை வைத்துக் காப்பாற்றுவதற்காக நான் வெட்கப்படுகிறேன்” என்றான். மன்னன் கடுமொழிகள் கேட்டு எல்லோரும் தலைகுனிந்தனர். படைத்தலைவர்களிடையே அப்போது யாஸீன்கானும் இருந்தான். அவன் செயலை எண்ணியிருந்தால், ஹைதர் அவ்வாறு பேசியிருக்க முடியாது. அவன் அப்போரில் பட்ட காயங்களுக்கு எல்லை இல்லை. அதிலேயே அவன் ஒரு கண்ணையும் இழந்திருந்தான். அத்துடன் அவன் ஹைதராக நடித்து, ஹைதரையே காப்பாற்றியிருந்தான். அதன் பயனாக அவனுக்கு நூறு குதிரை வீரர்கள் காவற் படையினராக அளிக்கப்பட்ட போது, அவன் “எனக்கு ஒரு குதிரையே போதும். நூறு வேண்டாம்” என்று கூறி விட்டான். இக்காரணத்தால் அவன் ‘ஒண்டி குதிரி’ அல்லது “ஒற்றைக் குதிரையன்” என்று கேலிப்பெயரும் பெற்றிருந்தான். இத்தகைய வீரன் ஹைதர் கடுமொழி கேட்டுத் திடுமெனச் சினங்கொண்டான். “சரிதான் அரசே. நாங்கள் சிறிது தோற்றதனால் இவ்வாறு கூறுகிறீர்கள். ஆனால், தோல்வியும் வெற்றியும் முழுதும் மனிதன் செயலுக்குட்பட்டதன்று. போகட்டும். நாங்கள் இல்லாமல் போனாலும் அன்று நீங்கள் தோல்விதான் அடைந்திருப்பீர்கள். ஆனால், எனக்கு இந்தக் கண் போயிருக்காது. அந்தக் கண்ணை உங்களுக்காகக் கொடுத்தேனே, உங்களுக்கு நன்றி இருக்கிறதா?” என்றான். ஹைதர் தலை கவிழ்ந்து கொண்டான். “நான் உங்களை மறந்து பேசிவிட்டேன்” என்றான். இதுமட்டுமல்ல; ஹைதரைப்போல் சர்க்கூலியில் நடிப்பதற்காகவே அவன் தோல்வியின் நடுவே தாடி சிறைத்துக் கொண்டான். ஆனால், பிற்பட அவன் மீண்டும் தாடி வளர்த்தான். இதுகண்ட ஹைதர், “நண்பரே! இப்போது ஏன் தாடி வளர்க்கிறீர்? இனி என்னைக் காப்பாற்ற வாய்ப்பு ஏற்படாதென்றா?” என்று கேட்டான். என்ன காரணத்தாலோ யாஸீன் அப்போது சுண்டிப் பேசினான். “தாடி மீசையில்லாதவர்கள் பேடிகள் என்று கேள்விப்படுகிறேன் அரசே. அதனால்தான் தாடி வளர்க்கிறேன்” என்றான். ஹைதர் கேலிப் பேச்சைக்கூட உடனே நிறுத்திவிட்டான். ஒரு தடவை படைத் தலைவன் முகமதலி படைத்துறைச் செலவுக்குப் பணம் கோரினான். நிதிக் கணக்கரும் அருகிலேயே இருந்தனர். ஆனால், நாணயச் செலாவணி பற்றி ஹைதர் ஏதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தான். அவன் எரிச்சல் படைத் தலைவன் பக்கமாகத் திரும்பிற்று. “படைச் செலவு, படைச் செலவு என்று மாதம் மூன்று தடவை பணம் வாங்குகிறீர். இவற்றை எல்லாம் என்னிடமிருந்து பறித்து என்னை ஓட்டாண்டியாக்கி, கோடீஸ்வரனாகப் பார்க்கிறீர். எல்லாம் பார்க்கிறேன். உம்மைத் திருடனென்று சரியானபடி தண்டித்து, நீர் சேர்த்து வைக்கும் தங்கக்காசுகள் அத்தனையையும் பறிமுதல் செய்கிறேனா இல்லையா, பாரும்! போம், போம். இப்போது இங்கே நிற்க வேண்டாம்” என்றான். முகமதலி மன்னனிடமிருந்து முகந்திருப்பி நிதிக் கணக்கரை நோக்கினான். “நம் தலைவர் தாம் எல்லாம் அறிந்தவர் என்று நடித்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். அவர் மண்டையில் மூளையில்லை என்பது நமக்குத் தெரியாதா என்ன? அவர் கிடக்கிறார். அரசாட்சியின் பொறுப்பு அவருக்கு என்ன தெரியும்? நீங்கள் பணத்தைக் கொடுங்கள்” என்று அமைதியாகக் கேட்டான். நிதிக்கணக்கர் விழித்தனர். “இந்தச் சனியன் பொல்லாத சனியன். கேட்ட பணத்துக்குமேல் ஒன்றிரண்டு நூறு கொடுத்து ஒழித்துக் கட்டுங்கள்” என்று கூறி, ஹைதர் நிதிக் கணக்கர்களுக்கு ஆணை பிறப்பித்தான். இஸ்லாமிய மன்னர் பெருமன்னரிடையே மிகச் சிறந்த வர்கள்கூடச் சமயத்துறையில் மட்டும் வெறியுடையவர்களாக இருந்ததுண்டு. அக்பர், ஷாஜகான் போன்ற வடபுல மன்னர்கள் இதற்கு விலக்கானவர்கள் என்று புகழப்படுவதுண்டு. இது பெரிதும் உண்மையே. ஆனால், அக்பரும் ஷாஜகானும் தங்கள் ஆட்சிநலனைக் கருதி அரசியல் தந்திர முறையிலேயே சமரசப் பண்பாளராயிருந்தனர். இன்னும் சிலர் எம்மதமும் சம்மதமே என்ற ஆழ்ந்த சமயப்பற்றற்ற பொதுநிலையிலேயே சமரசம் பேணியுள்ளனர். ஆனால், ஹைதரின் சமரசம் ஆழ்ந்த சமய உணர்வின் பயனாக எழுந்ததேயாகும். அக்பர் சமரசத்தையும், ஷாஜகான் சமரசத்தையும் போற்றும் ஆங்கில வரலாற்று ஆசிரியர் தெரிந்தோ, தெரியாமலோ ஹைதரைச் சமயத் துறையில் அசட்டையாளன் எனக் குறிப்பிடுகின்றனர். இது தவறு என்பதைக் கீழ்வரும் செய்திகளும், ஹைதர் வாய் மொழிகளும் காட்டும். தசராக் கொண்டாடுவது பற்றியும், சைவ வைணவக் கோயில் மானியங்களைக் குறைக்கவாவது செய்யாமல் வழங்குவது பற்றியும் இஸ்லாமியத் தலைவர் குறைப்பட்டனர். இது சமயப் பகைமைச் செயலாகும் என்றனர். “சமயப் பகைவர்க்கு உதவுவதும் நலம் செய்வதும் சமயப் பகைமை ஆகமாட்டாது. நபிகள் நாயகம் அது செய்தால்தான் நாம் முஸ்லீம்களாயிருக்கிறோம்” என்று விளக்கம் தந்தான் ஹைதர். இயேசுபிரானிடம் சமயப் பிற்போக்கராகிய புரோகிதர் குறுக்குக் கேள்வி கேட்டபோது, இயேசுபிரான் கூறிய நகைச்சுவையும் பண்பும் வாய்ந்த விளக்கங்கள் பல. ஹைதரிடம் இஸ்லாமிய சமயத் தலைவர், கட்சி எதிர்க்கட்சியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு. அவன் தந்த விடை விளக்கங்கள் இயேசுபிரான் விளக்கங்களின் அருகே வைக்கத் தக்க சிறப்புடையவை ஆகும். ஒரு நாள் வாய்ச் சண்டையிலிருந்து கைச்சண்டைக்கு முதிர்ந்துவிட்ட ஒரு சமயப் பூசல் ஹைதரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. முஸ்லிம்களிடையேயுள்ள ஷியா, ஸுனீ வகுப்பினரிடையே நிகழ்ந்த வாதம் அது. முகமது நபிக்குப் பின் சமயத் தலைமை தாங்கிய குரவர்களில் ஷியாக்கள் சிலரைப் பூசித்தனர். சிலரைக் குறை கூறினர். குறை கூறப்பட்டவர்களே ஸுனீகளால் பூசிக்கப்பட்டவர்களாதலால், சண்டை வளர்ந்தது. ஹைதர் இரு தரப்பாரையும் அழைத்து அவரவர் வாதங்களைக் கேட்டான். “அரசே! நம் சமயக் குரவரைப் பற்றி இந்த ஷியாத் தலைவர்கள் தூற்றுகின்றனர். அதை எங்ஙனம் பொறுப்போம்?” என்றனர் ஸுனீத் தலைவர்கள். “அரசே! சமயக் குரவர் என்று அவர்கள் போற்றுபவர்கள் இன்னின்ன தீமையைச் செய்தார்கள் என்று காட்டித்தானே குறை கூறுகிறோம். தீமை செய்யவில்லை என்று அவர்கள் கூறமுடியவில்லை. குறை கூறுவதை மட்டும் எதிர்ப்பானேன்?” என்றனர் ஷியாக்கள். ஹைதர் தீர்ப்பளித்தான். அது ஒரு தரப்பாரையே கண்டித்தாலும், சமயக் கிளையினரிடையே ஒருதலைச் சார்பாயில்லை. ஷியாக்களைப் பார்த்து அவன், “அன்பரீர், நீங்கள் குறிப்பிட்ட குரவர்கள் இப்போது வாழ்பவர்களா?” என்று கேட்டான். “இல்லை” என்றனர் அவர்கள். மன்னன் உடனே சினத்துடன் பேசினான்: “ஆளில்லாத போது புறங் கூறுவது தவறு. மாண்டவரைக் குறைகூறுவது கோழைத்தனம். மன்னிக்க முடியாத குற்றம். அதற்கு நீங்கள் தண்டனை பெறத் தக்கவர்கள். இனி இச்செயல் செய்யாதீர்கள். போங்கள்” என்றான். மற்றொரு சமயம் ஷியாக்களும் ஸுனீக்களும் கலந்து அளவளாவும் சமயம், அவர்களிடையே பூசலுண்டு பண்ணத்தக்க ஒரு கதையை ஒருவன் அளந்தான். “குதிரையேறிச் செல்லும் ஒருவன், சேற்று நிலங்கடக்க வேண்டி வந்தது. குதிரையின் கால்கள் சேற்றில் ஆழப் பதிந்துவிட்டன. சமயக்குரவர் பெயர்களை ஒவ்வொன்றாகக் கூறி அவர்கள் அருள் துணையால் குதிரையின் கால்கள் மேலெழுக, என்று அவன் வேண்டினான். வாய்மையிற் சிறந்த அபூபக்கர், நேர்மை சான்ற ஹஜ்ரத் உமர், அறிவுத் திறம் வாய்ந்த ஹஜ்ரத் உஸ்மான் ஆகியவர்களை வேண்டியும் பயனில்லாது போயிற்று. பின், வல்லமை வாய்ந்த மூர்த்துஸா அலியை வேண்ட குதிரை கால் தூக்கி நடந்தது. வேறு சமயக் கிளையினர் தலைவர் பெயரை மதித்த குதிரை பகைச் சமயக் குதிரையாய்த்தான் இருக்க வேண்டுமென்று கருதி, பிரயாணி குதிரையை உடை வாளால் குத்திச் சாய்த்தான்.” இக்கதையைக் கூறியபின், கதையளந்தவன் அதுபற்றிய பிறர் கருத்துரை கோரினான். கருத்துரைகளால் வரவிருக்கும் பூசலை அறிந்த ஹைதர், தன் கருத்துரையை முற்படக் கூறினான்: “அன்பரே, அந்தப் பிரயாணி முற்றிலும் அறிவில்லாதவன் என்று தெரிகிறது. வாய்மை, நேர்மை, அறிவுத்திறம் ஆகிய பண்புகளால் குதிரையின் காலைத் தூக்க முடியவில்லை. வல்லமையால் தூக்க முடிந்தது. இந்த இயல்பை அந்த மட்டில் அறியாமல் போனான்” என்றான். இந்த இயல்பான விளக்கம் சமயவாதிகளின் விளக்கத்துக்கு அது பயனாக எழுந்திருக்கக்கூடும் பூசலுக்கும் ஒரு தடையிட்டது. ஹைதரின் இயல்பான நகைத்திறன், பேச்சுவன்மை, நடுநிலைமை ஆகியவற்றை மேலும் இரு நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. ‘அடிமைப் பெண்’ என்ற பொருளுடைய ‘லௌண்டிகா’ என்ற சொல்லை ஹைதர் அடிக்கடி வழங்குவதுண்டு. அது திட்டுவதற்குப் பயன்படும் சொல்: அருமையாக அழைப்பதற்கும் பயன்படுவது. படைத்தலைவன், அலிஸுமான்கான் ஒரு நாள், ‘இந்தச் சொல் கொச்சையானது. ஹைதரைப் போன்ற பெருமன்னன் வாய்மொழியில் இடம் பெறும் தகுதியுடைய தன்று’ என்று மெல்லக் கடிந்தான். ஹைதர் நகைச்சுவையுடன் இதற்களித்த மறுப்பு, சமயவாணர் நூலறிவுக்கு மிகவும் இனிதாயிருந்தது. “அன்பரே, என்ன இருந்தாலும் என் போன்றவரும் உம் போன்றவரும் அடிமைப் பெண்களின் மக்கள் தான்! பீடுடை மாதர் பெற்ற திலகங்கள் என்ற பெயருக்குப் பாத்திரமானவர்கள் ஹுசேன் துணைவர்கள் மட்டும்தான் என்பது உமக்குத் தெரியாதா?” என்றான். மறைநூலுரை மரபுக்குப் புது வழக்கு அளித்த இம் மறுமொழியின் சுவையில் சமயவாணரைப்போலவே நண்பர்களும் நெடிது ஈடுபட்டு மகிழ்ந்தார்கள். தகுதியில் குறைந்த மன்னரைப்போல ஹைதர் முகப் புகழ்ச்சியை விரும்புவதில்லை. முகப் புகழ்ச்சியை நயமாகக் கடிந்து தன் மதிப்புணர்ச்சியைத் தூண்டுவதில் ஹைதர் திறம் பெரிதாயிருந்தது. கீழ் வரும் நிகழ்ச்சி இதற்குச் சான்று. சுரா மாகாணத்தின் தலைநகரில் ஒரு புது மரபு இருந்தது. கல்லறை மாடங்கள் அங்கே வீடுகளின் முன், தெரு நடுவே இருந்தன. அந்நகரத்தை வென்றபின், ஹைதர் இச்செய்தியைச் சுட்டிக் காட்டினான். இதற்கு என்ன காரணம்? என்று நண்பர்களைக் கேட்டான். “மன்னரே, தங்கள் ஆட்சி ஏற்பட்டது கேட்டு, காடாய்க் கிடந்த இந்த இடத்தில் மக்கள் குழுமியுள்ளனர். காடுகளிலிருந்த கல்லறைகள் அப்படியே இருக்கின்றன” என்றனர். இம்முகப் புகழ்ச்சி மிகவும் திறமையும் நயமும் உடையதே. ஆனால், ஹைதர் அதை ஏற்க விரும்பாமல், எதிர் விளக்கம் தந்தான். “அப்படியன்று, அன்பரீர்! இந்நகரத்து மக்கள் தங்கள் தங்கள் இல்லங்களுக்காகப் போராடி மாண்டவர்கள் என்பதை நீங்கள் காணவில்லை” என்றான். விளக்கம் நண்பர்களுக்கு ஓர் அறிவுரையாகவும் அமைந்தது. எதிரிகள் கண்களிலும் போர் வரலாற்றிலும் ஹைதருக்கிருந்த பெருஞ்சிறப்பு அவன் வீரமும், வீரத் தலைமைத் திறமும், போர்த் திறமுமே. போர் வீரருடன் போர் வீரன் வாழ்க்கையை ஏற்ற தலைவன் ஹைதர். போர் வீரருக்கு அவன் ஒரு முன் மாதிரியாய் அமைந்தான். தோல்வி கண்டு துவளாமல், கடுந்துயர்கள் கண்டு கலங்காமல், இடரில் குதித்து விளையாடியவன் அவன். இத்தகைய தலைவனை வீரர் விரும்பிப் பின்பற்றி, ஆர்வத்துடன் அவனுக்காக மாண்டது இயல்பு. இது ஒன்றே அவனை ஒப்பற்ற படைத்தலைவனாக்கப் போதியது. ஆனால், இதுவன்றி வேறு பல ஒப்பற்ற திறங்களும் அவனிடம் இருந்தன. துணிகரமான, அறிவார்ந்த திட்டம், திறமை வாய்ந்த போர் முறைகள், விடாமுயற்சி, ஆகியவை போர்க் களங்களில் அவனை அடற்புலியேனாக்கிற்று. இவை போதாமல், அவனுக்கே உரிய வியத்தகு திறம் இன்னொன்றும் இருந்தது. அவன் தன் படைகளை மாற்றார் வியக்கும்படி இம்மெனுமுன் இருநூறும் முந்நூறும் தாண்டிக்கொண்டு சென்று, எதிர்பாராமல் மின்னலெனப் பாய்ந்து இடியென மோதி விடும் திறமுடையவனா யிருந்தான். ஆங்கிலேயரைப் போரில் திணறடித்த பண்பும், 1779-இல் சென்னை நகரைக் கலக்கிய திறமும் இதுவே. வீரனாகவும் தலைவனாகவும் பிறந்தவன் ஹைதர். பழங்கால வாட்போரிலும் புதிய காலத் துப்பாக்கிப் போரிலும் ஒருங்கே அவன் அக்காலத்தின் ஒப்புயர்வற்ற கைகாரனாயிருந்தான். ஒற்றர், வேவுகாரர், தகவல் சேகரத்தார்கள் ஆகியவர்களை ஹைதர், திறம்பட இயக்கினான். அவன் அமைத்த தகவல் சேகரக்காரர் அமைப்பே பின்னாட்களில் பத்திரிகை அமைப்பு ஏற்பட வழிகோலிற்று. ஒற்றர் படைத்தலைவன் என்ற முறையில்தான் அவன் மற்ற அரசர்களைவிட மிகுதியாகக் காலம், இடம், சூழல்களை நன்றாக உணரத் தக்கவன் ஆனான். இதுவே அவனைத் தென்னாட்டின் தேசிய வீரனாக்கிற்று. ஹைதரின் குறைபாடுகளில் ஒன்று அவன் முன் கோபமே. இதுபற்றிய ஒரு சுவைகரமான செய்தி கூறப்படுகிறது. தம்பட்டசாலைத் தலைவன் அல்லது தாரோதா, செப்பு நாணயத்தின்மீது என்ன உருவம் பொறிப்பது என்று கேட்க வந்தான். ஏதோ சச்சரவிலீடுபட்டிருந்த ஹைதர், “போ, ஏதேனும் ஒழுக்கங்கெட்ட சித்திரம் பார்த்து பொறித்து வை” என்றான். அப்பாவி தாரோதா சொன்னபடியே ஒரு படம் உருவாக்கித் தம்பட்டமடித்தான். நாலைந்தாயிரம் நாணயம் அடிக்கப்பட்ட பின்னரே, சில பெரியோர்கள் ஹைதரிடம் வந்து அதுபற்றி முறையிட்டார்கள். அதன்மீது வெளியிடப்பட்ட நாணயங்கள் திரும்பியழைக்கப்பட்டு, உருக்கப்பட்டனவாம்! ஹைதரின் பொன்னாணயம் ‘ஹொன்’ அல்லது பொன் என்பது. அதன் ஒருபுறம் ‘ஹை’ என்ற பாரசிக எழுத்தும், மறுபுறம் புள்ளிகளும் பொறிக்கப்பட்டன. செப்பு நாணயங்களில் ஒருபுறம் யானை உருவம் பதிக்கப்பட்டது. நல்லமைப்புடைய ஹைதரின் யானை இறந்த பின், அதனிடம் உள்ள ஆழ்ந்த பற்றுக் காரணமாக அதன் நினைவாக அவ்வுருப் பொறிக்கப்பட்டதாக அறிகிறோம். ஹைதரின் அரச முத்திரையில் பொறிக்கப்பட்ட வாசகம், “ஃவதஃ ஹைதர் உலகை ஆளப் பிறந்தான். அலிக்கு நிகரானவனும் இல்லை. அவன் வாளுக்கு ஈடானதும் இல்லை” என்பது. அவன் கைப்பொறிப்பில் ‘ஃவதஃ ஹைதர்’ என்ற தொடர் இருந்தது. பாரசீக மொழியில் எழுத்துக்கள் எண்களைக் குறிக்கும். ஹைதர் காலமான இஸ்லாமிய ஹிஜிரி ஆண்டை இவ்வாறு எழுத்தில் அடக்கி, அவ்வெண்களின் விவர நினைவுக் குறியாக, ‘ஹைதர் அலிகான் பகதூர்’ என்ற தொடரை அமைத்துப் பாரசிகக் கவிஞர்கள் ஹைதர் புகழ்நிறைப் பா இயற்றியுள்ளனர். தென்னாட்டின் சிங்கமான ஹைதர் வாழ்வு பாரசிக மொழியில் மட்டுமன்றி, கன்னட மொழி, தமிழ் மொழிகளில் பொறிக்கப்பட்டு, வருங்காலத் தென்னாட்டுத் தேசியத்தை வளர்ப்பதாக அமையுமாக! பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் (24.7.1907-26-5-1989) `அறிவுச் சுரங்கம் அப்பாத்துரையார்’ என்று பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரை `முகம் மாமணி குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது என்பது அவருடன் பழகியவர் களுக்கு, அவருடைய பேச்சுக்களைக் கேட்டவர்களுக்கு, அவருடைய புத்தகங்களைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெறியும். அப்பாத்துரையார் பேசும்பொழுது, உலக வரலாறுகள் அணிவகுத்து நடைபோடும் அரிய செய்திகள், ஆய்வுச் சிந்தனைகள், ஒப்பீடுகள் நிரம்பிய அவருடைய பேச்சைக் கேட்டவர்கள் மூளை கனத்துவிடும். ஒரு சிறு மூளைக்குள் இவ்வளவு செய்திகளை எப்படி அடைத்து வைத்திருக்கிறார் என்று வியக்க வைக்கும். அவரைத் தமிழகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்னும் ஏக்கம் அறிஞர் களிடையே இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில் திருவாளர் காசிநாதப்பிள்ளை - திருவாட்டி முத்து இலக்குமி அம்மையாருக்கு மூத்த மகனாக 1907 ஆம் ஆண்டு, ஆனி மாதம் ஏழாம் நாள் (சூன் 24) பிறந்தவர் அப்பாத்துரையார். குடும்ப மரபையொட்டிப் பாட்டனார் பெயரான நல்லசிவன் என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. ஆயினும் பெரியோர் களால் செல்லப் பெயராக அழைக்கப்பட்ட `அப்பாத்துரை’ என்னும் பெயரே இவருக்கு இயற்பெயர் போல் அமைந்து விட்டது. இவருடன் பிறந்த இளையவர்கள் செல்லம்மாள், சுப்பிரமணி, குட்டியம்மாள், கணபதி ஆகியோர். இரு தம்பிகள். இரு தங்கைகள், நல்லசிவன், காசிநாதன் என மாறி மாறி வரும் குடும்ப மரபில் அப்பாத்துரையாரின் பாட்டனாரின் பாட்டனார், அவர் பாட்டனாரின் பாட்டனார் ஆகிய ஏழாம் தலைமுறையினரான நல்லசிவன் என்பவர், கல்வி கற்ற, வேலையற்ற இளைஞராய்ச் சாத்தான்குளம் என்னும் ஊரிலிருந்து ஆரல்வாய்மொழி என்னும் ஊருக்கு வந்து, அக்கால (மதுரை நாயக்கர் காலத்தில்) அரசியல் பெரும் பணியில் இருந்த ஊரின் பெருஞ்செல்வரான தம்பிரான் தோழப்பிள்ளையிடம் கணக்காயராக அமர்ந்தார். ஆண் மரபு இல்லாத தம்பிரானுக்கு நல்லசிவன் மருமகன் ஆனார். சதுப்பு நிலமாயிருந்த புறம்போக்குப் பகுதி ஒன்றைத் திருத்திப் புதிய உழவு முறையில் பெருஞ்செல்வம் ஈட்டிய அவரே அப்பாத்துரையார் குடும்ப மரபின் முதல்வர். அவருக்கு நாற்பது மொழிகள் தெரியுமாம். குடும்ப மரபினர் வழியில் தன் பிள்ளையும் எல்லா மொழிகளும் பயில வேண்டும் என்னும் வேட்கையில் காசிநாதப்பிள்ளை அப்பாத்துரையாரிடம், `குறைந்தது ஏழு மொழிகளில் நீ எம்.ஏ. பட்டம் பெற வேண்டும். ஆங்கிலம் முதலில் தொடங்கி, பதினைந்தாம் வயதில் எம்.ஏ., முற்றுப் பெற வேண்டும். இருபத்து மூன்று வயதிற்குள் இயலும் மட்டும் மற்றவை படிக்க வேண்டும்’ என்று கூறினார். அவருடைய எண்ணத்தைத் தம் வாழ்நாளில் நிறைவேற்றி முடித்தவர் அப்பாத்துரையார். பழைய - புதிய மொழிகள் என ஆப்பிரிக்க மொழிகள் உட்பட நாற்பது மொழிகள் (ஏழாம் தலைமுறை பாட்டனார் போல்) அப்பாத்துரையாருக்குத் தெரியும். எழுத, பேச, படிக்க என அய்ந்து மொழிகள் தெரியும். அவை: தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், மலையாளம் ஆகியன. இனி அப்பாத்துரை யாரின் வாய்மொழி யாகவே அவரது வரலாற்றுச் சுருக்கத்தைக் கேட்போம். `ஆரல்வாய்மொழி ஊரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தபோது, புதிதாக அரசினர் பள்ளி தொடங்கப் பட்டது. அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் திருவாங்கூர் தனி அரசில் சேர்ந்திருந்த நிலையில் அப்புதிய பள்ளியில் தமிழுக்கு இடம் இல்லாதிருந்தது. தமிழ்க்கல்வி நாடி, குலசேகரப்பட்டினத்திலிருந்த என் பெரியன்னை வீட்டில் தங்கிப் படித்தேன். பின், குடும்பத்தினர் அனைவரும் எனக்காக நாகர்கோவிலில் குடியேறி, வாடகை வீட்டில் இருந்து வந்தனர். இந்நிலையில் என் பெற்றோர் என்னை நான்காம் வகுப்பிலிருந்து கல்லூரி முதலிரண்டு ஆண்டு படிப்பு வரை பயிற்றுவித்தனர். 1927இல் எனது பி.ஏ., ஆனர்ஸ் (ஆங்கில இலக்கியம்) படிப்புக்காகத் திருவனந்தபுரம் சென்றேன். நண்பர்கள் வீடுகளில் தங்கி, 1930இல் அத்தேர்வு முடித்து பணி நாடி சென்னைக்கு வந்தேன். சென்னையில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தேன். கூட்டுறவுத் துறையில் ஆறு மாதங்களும், `திராவிடன்’, ஜஸ்டிஸ்’ பத்திரிகைகளில் ஒவ்வொன்றிலும் ஆறு மாதங்களும், பச்சையப்பன் கல்லூரியில் இரண்டு மாதங்களும் பணியாற்றினேன். அதன்பின், `பாரத தேவி’, `சினிமா உலகம்’, `லோகோபகாரி’, `தாருல் இஸ்லாம்’ ஆகிய பத்திரிகைகளின் விற்பனைக்களம் அமைத்ததோடு, அவற்றில் பாடல், கட்டுரைகள் எழுதி வந்தேன். இச்சமயம், புகழ்வாய்ந்த சேரன்மாதேவி `காந்தி ஆசிரமம்’ என்ற குருகுலம் அரசியல் புயல்களால் அலைப்புற்று, கடைசியில் காரைக்குடி முத்துப் பட்டிணத்தில் சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலம் என்ற பெயரால் நடைபெற்று வந்தது. இதில் நான் தோழர் ஜீவானந்தத்திற்கு அடுத்த தலைமை ஆசிரியராக ஓராண்டும், `குமரன்’ பத்திரிகைகளில் சில மாதங்களும் பணியாற்றினேன். நாகர்கோவில் திரும்பி மீண்டும் சில மாதங்கள் கழித்த பின், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாசரேத், சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் காந்தியடிகளின் ஆக்கத் திட்டங்களில் ஒன்றாகிய இந்தி மொழி பரப்புதலை நன்கு நடத்தி வந்தேன். அதன் முத்தாய்ப்பாக ராஜாஜி முதல் அமைச்சரவையின் ஆட்சியின் போது, திருநெல்வேலி, எம்.டி.டி. இந்துக் கல்லூரி பள்ளியில் 1937 முதல் 1939 வரை இந்தி ஆசிரியராகப் பணியாற்றினேன். இங்கிருக்கும்போதுதான் இந்தி விசாரத் தேர்வையும் முடித்துக் கொண்டேன். நாச்சியாரை நான் திருமணம் செய்து, இரண்டாண்டு வாழ்க்கைக்குப் பின் அவளையும், என் தந்தையும் ஒருங்கே இழந்தேன். அரசியல் சூழல்களால் இந்தி கட்டாயக் கல்வி நிறுத்தப்பட்டதனாலும், என் சொந்த வாழ்க்கையில் நேரில் துயரங்களாலும் நான் திருநெல்வேலியை விட்டு வெளியேறினேன். இதே ஆண்டில் ஆங்கில எம்.ஏ. பட்டம் பெற்றதுடன், தமிழ் எம்.ஏ.வையும் தனிமுறையில் திருவனந்தபுரத்தில் எழுதித் தேறினேன். அத்துடன் ஆசிரியப் பயிற்சிக்காக ஓராண்டு சென்னை சைதாப்பேட்டை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் படித்தேன். இதே ஆண்டில்தான் காந்தியடிகளை, இந்திப் பிரச்சார சபையில் கண்டு பழகவும், மறைமலையடிகளுடன் தொடர்பு கொள்ளவும், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தில் என் தமிழ் நூலாசிரியப் பணி தொடங்கவும் வழி ஏற்பட்டது. 1941இல் பழைய காந்தி ஆசிரமத்தின் புது விரிவாக செட்டிநாடு அமராவதிப் புதூரில் அமைக்கப்பட்டிருந்த சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலப் பள்ளியில் ஆறு மாதங்களுக்கு மேல் தலைமை யாசிரியராகப் பணியாற்றினேன். கவிஞர் கண்ணதாசன் இப்பள்ளியில் என் மாணவராய்ப் பயிலும்போது தான் தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கினேன். அப்பாத்துரையாரின் முதல் மனைவி நாச்சியார் அம்மையார் மறைவுக்குப் பின், செட்டிநாடு அமராவதிப்புதூரில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது அலர்மேலு அம்மையாரின் தொடர்பு கிடைத்தது. காதலாக மாறியது. திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் தலைமையில், திருக்குறளார் வீ. முனுசாமி முன்னிலையில் அப்பாத்துரையாரின் திருமணம் திருச்சியில் நடைபெற்றது. இதனையடுத்து, செட்டிநாடு கோனாப்பட்டில் சரசுவதி உயர்நிலைப் பள்ளியில் இரண்டாண்டுக்காலம் பணியாற்றினார். இந்த ஊருக்கு அறிஞர் அண்ணாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் வந்திருந்தபோது அவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர், பாவேந்தர் உதவியோடு 1943 இல் துணைவியார் அலர்மேலுவுடன் சென்னைக்குக் குடிவந்தார். பாவேந்தரின் உதவியால் ஆங்கில நாளேடான `லிபரேட்டரில்’ உதவியாசிரியராகப் பத்து மாதங்கள் பணியாற்றினார். பின்னர், `விடுதலை’ நாளேட்டில் ஆறு மாதங்களும், முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியல் இரண்டு ஆண்டுகளும் பணியாற்றினார். இக்காலங்களில் தான் பெரியாரின் தொடர்பும், திராவிடர் கழகக் தொடர்பும் இவருக்கும் அலர்மேலு அம்மையாருக்கும் ஏற்பட்டது. பின்னர், 1947 முதல் 1949 முடிய நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றினார். இச்சமயம் சைதாப்பேட்டையில் ஓராண்டுக்காலம் தங்கியிருந்த போது, `இந்தியாவில் மொழிச் சிக்கல்’ என்னும் ஆங்கில நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலை அடிகள் நாற்பது பக்கத்தில் முன்னுரை வழங்கி யுள்ளார் என்பது தனிச்சிறப்பு. இந்த நூலே, அப்பாத்துரையாரின் அரசுப் பணிக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. 1949 முதல் 1959 வரை பதினோரு ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தார். ஆயினும், இந்த ஓய்வே நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுத வாய்ப்பாக இருந்தது. வருவாய்க்கும் உதவியது. ஆங்கில மொழிக்கு ஜான்சன் தந்த ஆங்கில அகராதியைப் போல் தமிழுக்கு ஒரு அகராதி எழுத வேண்டும் என்ற விரைவு அப்பாத்துரையாரின் நெஞ்சில் ஊடாடியதால், முதலில் ஒரு சிறு அகராதியைத் தொகுத்தார். பிறகு அது விரிவு செய்யப்பட்டது. தற்கால வளர்ச்சிக்கேற்ப பெரியதொரு அகராதியைத் தொகுக்க வேண்டுமென்று எண்ணிச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகக் காவலர் சுப்பையாபிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையும், பண உதவியையும் நாடியபோது, பல்கலைக்கழகமே அம்முயற்சியில் ஈடுபடப் போவதாகக் கூறியது. அப்பணிக்கு அப்பாத்துரையாரை சென்னைப் பல்கலைக் கழகம் பயன்படுத்திக் கொண்டது. 1959லிருந்து 1965 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் தமிழ் அகராதித் துறையில் டாக்டர் அ. சிதம்பரம் செட்டியாருடன் இணையாசிரியராகப் பணியாற்றி `ஆங்கிலத் தமிழ் அகராதியை’ உருவாக்கினார். 1971 ஆம் ஆண்டு, தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபட்டு அதன் தலைவராகவும் தொண்டாற்றி யுள்ளார். இயக்கத் தொடர்பு அப்பாத்துரையாரின் முன்னோர் `பிரம்மஞான சபை’ என்னும் தேசிய விடுதலை இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். அப்பாத்துரையாருக்கும் அவ்வியக்கத்தில் ஈடுபாடு இருந்தது. டாக்டர் அன்னிபெசன்ட், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. லாலா லஜபதிராய், லோகமானிய பாலகங்காதர திலகர் ஆகியோரின் தேசிய இயக்கத்தின் தீவிர செயல்பாடுகளில் பற்று வைத்தார். அக்காலம் காந்தியார் இந்தியாவிற்கு வராத காலம். தேசிய விடுதலை இயக்கத்தைப் பரப்பும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர் அப்பாத்துரையார். தெருவில் தேசிய பஜனைக் குழுக்களுடன் பாடிச் சென்று இயக்கம் வளர்த்தவர். தன் சேமிப்புப் பணத்தில் மூடி போட்ட காலணா புட்டிகளை நிறைய வாங்கி, அதற்குள் துண்டுக் காகிதங்களில் தேசிய முழக்கங்களை எழுதிப் போட்டு, அப்புட்டிகளை குளம், அருவிகள், கடற்கரைகள் எங்கும் மிதக்கவிட்டவர். அதன் மூலம் தேசியச் சிந்தனைகள் பரப்பியவர். ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் வெளியான சிப்பாய்க் கலகம் பற்றிய ஆங்கிலப் பாடலை ஆங்கிலத்திலும், தமிழிலுமாக நிறைய படிகள் எழுதி, ஆசிரியர் சட்டைப் பைகளிலும் மாணவ நண்பர்களின் புத்தகங்களிலும் வைத்து நாட்டு விடுதலை எழுச்சியைப் பரப்பியவர். இத்தகைய தேசியவாதி, திராவிட இயக்கவாதியாக மாறியதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, திருவனந்தபுரம் பிரம்மஞான சபையின் சமபந்தி போஜனம். ஆதி திராவிடர் பரிமாற, பார்ப்பனரும் வேளாளரும் உட்பட அனைத்து வகுப்பினரும் கலந்து உண்ண வேண்டுமென்று வேளாளராகிய பி.டி.சுப்பிரமணியப் பிள்ளையும், கல்யாணராம ஐயரும் ஏற்பாடு செய்திருந்தனர். பந்தி வேளையில் எல்லாப் பார்ப்பனரும், வேளாளரும் எழுந்து சென்றுவிட்டனர். அதனால் இவ்விருவருக்கும் பெருத்த அவமானமாயிற்று. அதுமட்டுமன்றி, இவ்விருவரையும் தத்தம் அமைப்புகள் மூலம் சாதி நீக்கம் செய்துவிட்டனர். இந்நிகழ்ச்சி அப்பாத்துரையாரை மிகவும் பாதித்தது. தேசிய இயக்கத்தில் அப்பாத்துரையார் இருந்தபோதும் இளம் வயதிலேயே முற்போக்குச் சிந்தனையாளராக இருந்தவர். தேசியத் தலைவர்களான காந்தியடிகள், திலகர், லாலா லஜபதிராய் போன்றோரின் படங்களை வைத்து பூசை செய்வது அப்பாத்துரையாரின் வழக்கம். இச்செயலை தந்தையாரைத் தவிர மற்ற அனைவரும் கண்டித்தனர். அதற்கு அவர், `பெண்கள் சேலையை ஒளித்து வைத்த காமுகன், யானையை ஏவிப் பெண்ணை ஏமாற்றி வசப்படுத்திய காம வேடன் ஆகியோரை நீங்கள் கடவுளாக வணங்குகிறீர்கள். அவர்களைவிட இந்தத் தலைவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்’ என்று எதிர்மொழி தொடுத்துள்ளார். மேலும், எட்டாம் வகுப்பில் சேரும்பொழுது, பார்ப்பனத் தலைமையாசிரியர் நடந்து கொண்ட முறை ஆகியவை இவருடைய உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது. இவையெல்லாம் இவரை திராவிட இயக்கத்தின் பால் பற்றுகொள்ள வைத்துள்ளது. பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகும்படி, சென்னைக்குப் பாவேந்தரால் அழைத்து வரப்பட்ட அப்பாத்துரையார், `விடுதலை’ இதழில் குத்தூசி குருசாமி அவர்களுடன் துணையாசிரியராகப் பணியாற்றினார். தென் சென்னையில் திராவிட இயக்கத்தை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கிளைக் கழகங்கள் அமைப்பதிலும், துணை மன்றங்கள் அமைப்பதிலும் முழு மூச்சாக ஈடுபட்டு திராவிட இயக்கத்தை வளர்த்தார். சென்னையில் பெரியார் வீடு வாங்கத் தயங்கியபோது, பெரியாரின் தயக்கத்தைப் போக்கி மீர்சாகிப் பேட்டையில் வீடு வாங்கத் துணை நின்றவர் அப்பாத்துரையார். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்போது முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர். இந்தி ஆசிரியராக இருந்த இவரை இந்தி எதிர்ப்புக் களத்தில் முன் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். அவரைக் கொண்டே இந்தியின் தன்மையைச் சொல்ல வைப்பதற்கே. பெரியார் நடத்திய முதல் திருக்குறள் மாநாட்டில் இவருடைய பங்களிப்பும் உண்டு. தம் பேச்சாலும், எழுத்தாலும் திராவிட இயக்கத்திற்குத் தொண்டாற்றிய அப்பாத்துரையாரை இயக்க மேடைகள் நிறைவாகப் பயன்படுத்திக் கொண்டன. இலக்கிய மேடைகளும் அலங்கரித்துக் கொண்டன. தமிழ்மொழி, தமிழ் இன முன்னேற்றத்தின் போராளியாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தம் இறுதிக் காலங்களில் `தலைநகர்த் தமிழ்ச் சங்கம்’ நடத்திய மொழிப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். அப்பாத்துரையார் கவிதை எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். 1935க்கு முன் அவருடைய படைப்புகள் அனைத்தும் கவிதைகளாகவே இருந்தன. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக் காலங்களிலும் இவருடைய கவிதைகள் `திராவிட நாடு’ இதழில் வெளியாயின. இவருடைய பெயரில் வந்த முதல் புத்தகம், சிறை சீர்திருத்தம் செய்த திருமதி ஃபிரை ஆகியோரின் வரலாறுகளைத் தமிழாக்கம் செய்ததுதான். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக சுமார் 170க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் `தென்னாட்டுப் போர்க்களங்கள்’, `கொங்குத் தமிழக வரலாறு’, `ஆங்கிலத் தமிழ்முத்து அகராததி’, `திருக்குறள் மணிவிளக்கஉரை’ `காரல் மார்க்சின் தாஸ் காபிடல் (மூலதனம்)’ மொழிப் பெயர்ப்பு ஆகியவை அறிஞர்கள் மனத்தைவிட்டு அகலா நூல்கள். திருக்குறள் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கு 2132 பக்கங்களில் உரை எழுதியுள்ளார். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்தவர். அப்பாத்துரையார் 82 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிஞர்களோடு பழகி கணக்கற்ற அறிவுச் செல்வங்களை வழங்கி, 26.9.89 இல் புகழுடம்பு எய்தினார். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, எழுத்துத் துறையில் கவிஞராக ஆய்வறிஞராக, எழுத்தாளராக, மொழி பெயர்ப்பாளராக ஒப்பிலக்கியவாதியாக பத்திரிகையாளராக விழுதுகள் பரப்பி ஆலமரமாகத் திகழ்கிறார். இந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்து விளையாடியவர்களெல்லாம் பெரிய மனிதர்களாக உயர்ந்துள்ளார்கள். ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தமிழர்கள் நெஞ்சில் என்றும் நிலைப்பார். -முனைவர் இளமாறன் யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 18-22 ஊசியின் காதுக்குள் தாம்புக் கயிறு...? வினா: இக்கால படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை? விடை: நிறைய படிக்க வேண்டும். `இலக்கியம்’ என்றால் என்ன? ஓர் இலக்கை உடையது. என்ன இலக்கு? மனிதனுக்குப் பொழுது போக ஏதாவது படிக்க வேண்டும். அதற்காக ஏற்பட்டதுதான் இலக்கியம். பிறகு தான் `இலக்கியம்’ வெறும் பொழுதுபோக்காக இருக்கக் கூடாது என்று ஆயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான் உலகமெங்கும் இலக்கிய உணர்வு ஏற்பட்டு, இலக்கியங்கள் தோன்றின. இலக்கியத்திற்கு முன்பே சயின்ஸ் - அறிவியல் தோன்றியது. அறிவியல்தான் மனிதனைப் படிப்படியாக உயர்த்தியது. பிறகுதான் இலக்கியம் தோன்றியது. இந்த இலக்கியங்கள் தோன்றிய பிறகுதான் அறிவியல் துறை குன்றிவிட்டது. இலக்கியத்தைவிட அறிவியல்தான் மனிதனுக்கு வேண்டும். `நீதி நூல்கள்’ இலக்கியங்கள் அல்ல என்று சொல்கிறார்கள். நான் சொல்வேன், திருக்குறள் ஓர் ஒப்பற்ற இலக்கியம்; அருமையான நீதி நூல்; இணையற்ற, தத்துவ நூல்! அதற்கு ஈடான நூல் உலகத்தில் கிடையாது! திருக்குறளுக்கு அடுத்து; திருக்குர்ரானைக் கூறலாம். அது ஒரு நீதி நூல்! அதில் கற்பனை குறைவு. முகம்மது நபியின் நேரடி அனுபவங்களே - உண்மைகளே, இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட நீதி நூல்! பைபிளை அப்படிச் சொல்ல முடியாது. அதை யேசுநாதர் மட்டும் எழுதவில்லை! பலர் எழுதியிருக்கிறார்கள். பல கற்பனைகள் உள்ளன. ஆனால், யேசுவின் வாசகங்கள் உயர்ந்த நீதிகள்! `ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைய முடியாது!’ என்று ஒரு பொன்மொழி இருப்பது தவறு! யேசு அப்படிச் சொல்லியிருக்க முடியாது! அவர் பேசிய மொழியில் `ஒட்டகம்’ என்பதையும், `தாம்புக்கயிறு’ என்பதையும் குறிக்க ஒரே சொல் தான் உண்டு. ஆகவே, `ஊசியின் காதுக்குள் தாம்புக்கயிறு நுழைந்தாலும் நுழையலாம்; பரலோக ராஜ்யத்திற்குள் பணக்காரன் நுழைய முடியாது!’ என்றுதான் அவர் சொல்லி இருக்கவேண்டும்! காதல் திருமணம் செட்டி நாடு அமராவதிப் புதூரில் அப்பாத்துரையார் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதுதான் அலமேலுவைச் சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருச்சிராப்பள்ளிக்குச் சென்றார்கள். திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் அவர்கள் தலைமையில் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் கலப்புத் திருமணம் மட்டுமன்று, இருவருக்குமே மறுமணமுமாகும்! தமிழுக்காக மயக்கம் ஆங்கிலத் தமிழ் அகராதியைத் தொகுக்கும் பணியில் அப்பாத்துரையார் முழு ஈடுபாட்டோடு பகல் நேரம் மட்டுமல்லாமல் பின்னிரவு வரை உழைத்து மயங்கி விழுந்த நாள்கள் பலவாம். அப்படி மயங்கி விழுந்த போது, மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டு, தலையின் முன் பகுதியில் ஒரு கறுப்பு வடு ஏற்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு பத்தாம் வகுப்பில் படிக்கும்போது பிரமு அத்தையாருக்கு என்னை மருமகனாகக்கிக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. தந்தை விருப்பமின்மையால், இது தடைபட்டது. இச்சமயம் சைவ சித்தாந்தத்தில் வல்லுனரான ஒரு முதலியார் அவர்கள் குடும்பத்திலும் ஊரிலும் கோயிலிலும் சைவ போதகராக இருந்தார். அவரிடம் அத்தையார் என் ஆங்கிலக் கல்வி, தமிழ்க் கல்வி பற்றிப் புகழ்ந்துரைத்தார். முதலியார், “ஒரு தமிழ்ப் பாட்டுப் பாடு” என்றார். நான் அன்று படித்த தமிழ் புத்தகங்களில் மிகப் பெரும்பாலும் வேதாந்தப் புத்தகங்களே. `ஞான வாசிட்டம்’, `கைவல்ய நவநீதம்’, `நிட்டானுபூதி’ முதலிய புத்தகங்களின் பாடல்களை ஒப்புவித்தேன்; விளக்கமும் கூறினேன். முதலியாருக்கு என் தமிழ் அறிவில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், வேதாந்த அறிவில் கசப்பு ஏற்பட்டது. ஆயினும் அவர் உடல்நலமில்லாதபோது, அவருக்குப் பதிலாகக் கோவிலில் சொற்பொழிவாற்றும் வேலையை எனக்கு அளித்தார். அச்சிட்ட அவர் சொற்பொழிவுகளையே படித்து நான் பேசினேன். பிற்காலத்தில் சைவ சித்தாந்தத்தில் பேரளவில் ஈடுபட இது எனக்கு உதவிற்று. இந்தி ஆசிரியராக இந்தி எதிர்ப்பு `முகம்’ மாமணி: நீங்கள் இந்தி ஆசிரியராக இருந்து கொண்டே இந்தியை எதிர்த்திருக்கிறீர்களே, உங்கள் செயல் மக்களைக் குழப்பியிருக்குமே! விடை: `சிலருக்குக் குழப்பமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தி எதிர்ப்பின் முன்னோடிகளான பெரியாரும் - அண்ணாவும் என் செயலைப் புரிந்து கொண்டு, இந்தி எதிர்ப்பு மாநாடுகளில், கூட்டங்களில் எனக்கு முதன்மை கொடுத்தனர். `இந்தி மொழியே தெரியாதவர்கள், இந்தியை எதிர்ப்பதை விட இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பன்மொழிகளில் புலமை பெற்ற அப்பாத்துஐரயார் எதிர்ப்பது தான் சரி. ஏனென்றால் அவருக்குத் தான் தெரியும். இந்தியில் ஒன்றும் இல்லை; அரசியல் ஆதிக்கத்துக்காக அதைப் புகுத்துகிறார்கள் - என்று நம்மைவிட அப்பாத்துரையார் சென்னால்தான் மக்களுக்கு உண்மை புரியும்” என்னும் பொருள்பட பெரியாரும் அண்ணாவும் எனக்கு ஆதரவு கொடுத்தனர். (குறிப்பு: அப்பாத்துரையார் 250 பக்கங்களில் ஐனேயை’ள டுயபேரயபந ஞசடிடெநஅ எனும் நூலை மறைமலையடிகளாரின் 40 பக்கங்கள் கொண்ட முன்னுரையோடு 1948இல் வெளியிட்டார். இந் நூல் வெளியிட்டதால் தமிழக அரசின் மொழி பெயர்ப்புத் துறையில் பணியாற்றி வந்த அப்பாத்துரையார் வேலை பறிக்கப்பட்டது. அண்ணா முதல் அமைச்சரானதும் முறையிடப்பட்டது. ஆனால், அப்பாத்துரையாரின் பத்தாண்டுகாலப் பணிக்குச் சேர வேண்டிய பணம் கொடுக்கப்படவில்லை.) - நேர்க்காணல் `முகம்’ மாமணி யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 30-31 கா. அப்பாத்துரையார் தமிழ்ப்பணி பன்மொழிப் புலமை தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் முதுகலைப் புலமைப் பெற்றவர். தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளிலும் அரபு, சப்பான், ஹீப்ரு மற்றும் மலேயா முதலிய ஆசிய மொழிகளிலும் பிரஞ்சு, செர்மன், ரஷ்யா, இத்தாலி போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் சுவாசிலி என்ற ஆப்பிரிக்க மொழியிலும் மூல அறிவு பெற்றவர். இம்மொழிப் புலமை பல்வேறு மொழிகளில் நூல்களை எழுதவும், மொழி பெயர்ப்பு செய்யவும் பெரிதும் துணை செய்தது. திருக்குறள் உரை அப்பாத்துரையார் பெரிதும் மதித்த தலைவர்களுள் ஒருவரான பெரியார், சமய சார்பற்ற முறையில் ஓர் உரையினைத் திருக்குறளுக்கு எழுதுமாறு அவரைக் கேட்டுக் கொண்டார். அவர் தன் மாணவராகிய கவிஞர் கண்ணதாசன் நடத்திய `தென்றல்’ என்னும் இலக்கிய வார ஏட்டில் இருநூறு குறட்பாக்களுக்கு உரை எழுதினார். 1965ஆம் ஆண்டு `முப்பால் ஒளி’ என்னும் பெயரில் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கி அவ்விதழில் திருக்குறளுக்குத் தொடர்ந்து உரை எழுதலானார். 1965 முதல் 1971 வரை `முப்பால் ஒளி’ இதழில் வெளிவந்த திருக்குறள் உரையினை விரிவுபடுத்தி ஒவ்வொன்றும் ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆறு தொகுதிகளாகத் திருக்குறள் மணி விளக்கவுரையென்னும் பெயரிட்டு வெளியிட்டார். இந்த ஆறு தொகுதிகளிலும் இருபது அதிகாரங்களிலுள்ள இருநூறு திருக்குறட்பாக்களுக்கு விரிவான விளக்கவுரைஅமைந்துள்ளது. எஞ்சிய 1130 குறட்பாக்களுக்கு அவர் எழுதிய உரை இன்னும் அச்சேறாமல் உள்ளது. ஆங்கிலத்திலும் திருக்குறளுக்கு மணி விளக்கவுரை 1980இல் திருக்குறள் அறத்துப்பாலின் முதல் 19 அதிகாரங்கள் வரை ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கு அவரது ஆதரவுடன் தட்டச்சு வடிவம் தந்தார். அறத்துப் பாலின் எஞ்சிய 19 அதிகாரங்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கும் தட்டச்சு வடிவம் தந்துள்ளார். இவ்வாறு அறத்துப்பால் முழுமைக்கும் தட்டச்சில் 2132 பக்கங்கள் அளவிற்கு அவரது ஆங்கில உரை எழுதப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆங்கில உரையும் இன்னும் அச்சேறாமல் உள்ளது. தென்னாடு முழுவதும் ஒரே மொழி, தமிழ்! திராவிட மொழிகள் பற்பலவாயினும் அவற்றுள் பண்பட்டவை ஐந்து. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் துளு. இவ்வைந்தனுள் இலக்கியம் கண்ட மொழிகள் நான்கு. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம். பண்பட்ட ஐந்து மொழிகளும் ஒரே இலக்கியம் உடையதாய் ஒரே எழுத்து வடிவம் உடையதாயிருந்த காலம் உண்டு. ஆனால், இலக்கியம் ஒன்றானதால் ஐந்து மொழிகளும் ஒரே பெயருடன் `தமிழ்’ என்றே அழைக்கப்பட்டது. சங்க இலக்கியங்கள், தேவாரத் திருவாசகங்கள் ஆழ்வார்களின் நாலாயிரப் பிரபந்தங்கள் எழுதப்பட்ட காலத்தில் தொன்னாடு முழுவதும் ஒரு மொழிதான் இருந்தது. வள்ளுவர் “தமிழ் மொழியையே மொழியாகக் கண்டார். தமிழ் நாட்டையே உலகமாகக் கண்டார். தமிழ்ப் பண்பையே மனிதப் பண்பாகத் தீட்டினார். அவர் தனிச் சிறப்புக்குக் காரணம் இந்தப் பொதுமைதான்” என்றும் வள்ளுவர் நாளில் தமிழ்ப் பண்புடன் போட்டியிடும் பண்பு இல்லை. அதுவே உச்சநிலையில் இருந்தது என்றும் கூறுகிறார். அப்பாத்துரையார். “தமிழ்ப் பண்பு நிறைந்த பகுதியையே அக்காலத்தவர்கள் தமிழகம் அல்லது செந்தமிழ்நாடு என்றார்கள். `தமிழ் கூறும் நல் உலகு’ எனத் தொல்காப்பியம் கூறுவது இதையே” எனவும் சமற்கிருதம் அன்று பிறக்கவில்லை. ஆரிய மொழியில் எழுத்தில்லை. இலக்கணமில்லை. இலக்கியம் என்ற கருத்தின் நிழல்கூட அன்று கிடையாது. சமற்கிருதம் இலக்கிய மொழி ஆன காலம் திருவள்ளுவருக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் சங்க இலக்கியத்துக்குப் பின்னரே” என்பதும் அப்பாத்துஐரயாரின் கருத்தாகும். தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில் தீண்டாதோருக்காக ஆலயங்கள் திறந்த போது தன் மகிழ்வை வெளிக்காட்டி அச்செயலைப் பாராட்டிக் கூறும்போது- பிறையெனத் தேய்ந்து நின்ற ........ ............ ........... பயிரது காக்கும் வேலி படர்ந்ததை அழித்ததே போல் செயிருறு சமய வாழ்வு சீருற அமைந்த பேதம் அயர்வுறு மனித வாழ்வை அழித்த தீங்கிதனை நீக்கி உயிருறச் செய்த கீர்த்தி ஓங்கு சித்திரைக் கோ மாற்கே! என்று கூறுகிறார். வேலியே பயிரை மேய்ந்தது போல், சீர்படுத்த வந்த சமயம் தீண்டாமை எனும் பேதத்தை ஏற்படுத்தியது. இத் தீங்கை நீக்கிக் கீர்த்தி பெறச் செய்த செயலைப் பாராட்டுகிறார். `தமிழ்ப் பண்பு’ என்னும் நாடகத்தில் தமிழர் விழா பற்றி இருவர் விவாதம் மூலம் விவரித்துள்ளார். கிறிஸ்துமஸ், ஈதுப் பண்டிகைகளைச் சிறப்பாக் கிருத்துவரும், முசுலீம்களும் கொண்டாடினாலும் அது தமிழர்களை எவ்வகையிலும் அவமதிக்கவோ, புண்படுத்தவோ செய்வதில்லை. தமிழ் விழாக்களுடன் தமிழ் விழாக்களாக அவற்றை ஏற்ற கிருத்தவ, இஸ்லாமிய நண்பர்களுடன் அவற்றை நாம் கொண்டாடுவதன் காரணம் எல்லாத் தமிழரும் சேர்ந்து முழு நிறை தமிழ்த் தேசியம் பேண அது உதவுகிறது. ஆனால், தீபாவளி போன்ற வடவர் பண்டிகைகள் தமிழரை அவமதிக்கும் புராணக் கதைகளைக் கொண்டாடுபவை. தமிழரைப் புண்படுத்துபவை. அத்துடன் அவை தமிழ்ப பண்புக்கு மாறுபட்டவை என்ற கருத்தை விதைப்பதோடு `மலையாளிகள் கொண்டாடும் ஓணம் விழா தமிழ்ப் பண்புடைய விழா மட்டுமல்ல, தமிழின விழா. மலையாளிகளும் இனத்தால் தமிழ்க் குழுவான திராவிடம் சார்ந்தவர்களே. பண்பில் அது பொங்கலைவிட குறைந்த விழாவல்ல. மேலும் பண்டு தமிழகத்திலும் அவ்விழா எங்கும் கொண்டாடப்பட்டதாகப் பத்துப்பட்டுப் பறைசாற்றுகிறது எனத் தமிழ்ப் பண்புடைய தமிழர் விழாக்கள் பற்றி இந்நாடகத்தின் மூலம் ஒரு சிறு ஆய்வே செய்துள்ளார், அப்பாத்துரையார். வங்க தேசத்திற்கு இணையான சிறப்புடையது தமிழகத் தேசியம். இச் சிறப்பிற்குக் காரணமாக விளங்கிய தலைவர் வ.உ.சி. அவர்களின் சிறப்பை எடுத்து உணர்த்துகிறார். “கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் தமிழகத்தின் முடிசூடா மன்னராகவும், தொழிலாளரியக்கத்தின் முதல் அனைத்திந்தியத் தலைவராயும் விளங்கினார். அத்துடன் இந்தியத் தலைவர்களிடையே காலங்கடந்த தொலை நோக்குடைய தலைவராகவும் விளங்குகிறார். அவருக்குப் பின் வந்த தீவிரவாதத் தலைவர்களுள் செயல்பாட்டில் அவருக்கு ஒப்பான செயற்கரியன செய்த பெரியாராகப் போஸ் நீங்கலாக எவரையும் கூற முடியாது. இவ்விருவருக்குமிடையே காந்தியடிகள் தலைமை இவர்களைத் தாண்டி ஒளி வீசிற்றாயினும், அது நாடு கடந்த உலக எல்லையும், அரசியல் கடந்த ஆன்மிக எல்லையையும் என்று கூற முடியாது”. 1906 ஆம் ஆண்டு சூரத்தில் கூடிய பேரவையில் தீவிரவாதியான திலகரை மிதவாதிகள் தாக்குதலிலிருந்து வ.உ.சி. தலைமையில் தமிழகத்திலிருந்து சென்றவர்கள் காத்தார்கள் என்ற சூழலை அப்பாத்துரையார் விரிவாக விளக்குகிறார். வான்புகழ் மணிமேகலை மணிமேகலையும் சிலப்பதிகாரமுமே பழமைமிக்க சிறப்பு வாய்ந்த காவியங்களாகத் திகழ்கின்றன. இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம் இயற்றப்படு முன்பே மதுரைக் கூலவாணிகரால் இயற்றப்பப்டட மணிமேகலையே புத்த உலகில் தலைசிறந்த காப்பியமாகக் காணப்படுகிறது. இலக்கியப் பண்பில் உயர்ந்த இம் மணிமேகலை பற்றி `மணிமேகலை’, `வான்புகழ் மேகலை’ என்ற கட்டுரையில் ஆய்ந்துள்ளார், அப்பாத்துரையார். இலக்கியத்தில் காப்பியங்களை இயற்கைக் காப்பியங்கள், செயற்கைக் காப்பியங்கள் என இரண்டாகப் பிரித்து இயற்கைக் காப்பியமாவது மக்களிடையே வழங்கி மக்கட் பாடங்களைக் காப்பிய உணர்வுடைய ஒரு கலைஞன் தொகுப்பால் ஏற்படுவது. செயற்கைக் காப்பியமாவது ஒரு கலைஞனையே கட்டமைக்கப் படுவது என விளக்கும் அப்பாத்துரையார் ஹோமரின் `இலியட்’ இயற்கைக் காப்பியம் என்றும் மில்டனின் `துறக்க நீக்கம்’ செயற்கைக் காப்பியம் என்றும் கூறி மணிமேகலையை இரண்டுக்கும் இடைப்பட்டதாகக் கூறியுள்ளார். உயர்காப்பியப் பண்புகள் முற்றிலும் அமைந்த மணிமேகலை புத்த சமய இலக்கியமாகக் காணப்படுவது பற்றி `புத்த சமயம் சார்ந்த ஏடுகள் உலகில் பல மொழிகளில் இருக்கின்றன. ஆனால், புத்த சமயச் சார்பான இத்தகைய நல் இலக்கியம் சமற்கிருதத்திலோ பாலியிலோ வேறு எந்த உலக மொழிகளிலோ கிட்டத்தட்ட 50 கோடி புத்த சமயத்தினர் பேசும் சீன மொழியிலோ 8 கோடி புத்த சமயத்தினர் பேசும் சப்பான் மொழியிலோ கூடக் கிடையாது” என இலக்கியப் பண்பாலும் காலத்தாலும்கூட புத்த சமய உலகில் மணிமேகலைக்கு ஈடு வேறு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 40-42 தொகுக்கப்பட்ட அப்பாத்துரையார் நூல்கள் கால வரிசையில் 1. குமரிக் கண்டம் 1940-43 2. நாத்திகர் யார்? ஆத்திகம் எது? 1943 3. இராவணன் வித்தியாதரனா? 1943 4. கால்டுவெல் ஒப்பிலக்கணம் 1944 5. கெஞ்சி 1944 6. தளவாய் அரியநாத முதலியார் 1944 7. சிறுகதை விருந்து 1945 8. மேனாட்டு கதைக் கொத்து 1945 9. சேக்சுபியர் கதைகள் 1945, 1950, 1954 10. கிருட்டிண தேவராயர் 1946 11. வருங்காலத் தமிழகம் 1946 12. சங்க காலப் புலவர்கள் 1946 13. டேவிட் லிவிங்ஸ்டன் 1946 14 போதும் முதலாளித்துவம் 1946-47 15. குடியாட்சி 1947 16. ஆங்கிலப் புலவர் வரலாறு 1947 17. சமதரும விளக்கம் 1947 18. இரவிவர்மா 1949 19. சுபாசு சந்திரபோசு 1949 20. சங்க இலக்கிய மாண்பு 1949 21. காதல் மயக்கம் 1949 22. பெர்னாட்சா 1950 23. தாயகத்தின் அழைப்பு 1951 24. ஐக்கிய நாடுகளின் அமைப்பு 1952 25. பொது உடைமை 1952 26. சமூக ஒப்பந்தம் 1952 27. ஆங்கில தமிழ் அகராதி 1952 28. வருங்காலத் தலைவர்கட்கு 1952 29. சமூக ஒப்பந்தம் 1952 30. பொது உடைமை 1952 31. ஐன்ஸ்டீன் 1953 32. எண்ணிய வண்ணமே 1953 33. ஜேன் அயர் 1954 34. நிழலும் ஒளியும் 1954 35. தென்னாடு 1954 36. *தென்னாட்டுப் போர்க்களங்கள் 1954 37. ஐனேயை’ள டுயபேரயபந யீசடிடெநஅ 1954 38. டாம் பிரெணின் பள்ளி வாழ்க்கை 1955 39. தென்மொழி 1955 40. திராவிடப் பண்பு 1955 41. நீலகேசி 1955 42. கட்டுரை முத்தாரம் 1956 43. வாழ்வாங்கு வாழ்தல் 1956 44. இதுதான் திராவிட நாடு 1956 45. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழகம் 1956 46. ஹோரேஸ் வால்போல் கடிதங்கள் 1956 47. கதை இன்பம் 1956 48. அறிவுச் சுடர் 1956 49. பொன்னின் தேட்டம் 1957 50. பெஞ்சமின் பிராங்ளின் 1957 51. வாழ்க 1957 52. உலகம் சுற்றுகிறது 1957 53. பேரின்பச் சோலை 1957 54. கன்னியின் சோதனை 1957 55. நல்வாழ்வுக் கட்டுரைகள் 1957 56. திருநிறை ஆற்றல் 1957 57. செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள் 1957 58. வியப்பூட்டும் சிறுகதைகள் 1957 59. மன்பதைக் கதைகள் 1957 60. மக்களும் அமைப்புகளும் 1957-58 61. மருதூர் மாணிக்கம் 1958 62. சிலம்பு வழங்கும் செல்வம் 1958 63. மணிமேகலை 1958 64. சரித்திரம் பேசுகிறது 1959 65. வள்ளுவர் நிழல் 1959 66. காரல் மார்க்சு 1960 67. தமிழன் உரிமை 1960 68. மேனாட்டு இலக்கியக் கதை 1960 69. இரு கடற்கால்கள் 1960 70 வாடாமல்லி 1960 71. இருதுளிக் கண்ணீர் 1960 72. காரல் மார்க்ஸ் 1960 73. மலைநாட்டு மங்கை 1961-62 74. புதியதோர் உலகம் செய்வோம் 1962 75. யாழ் நங்கை 1963 76 வளரும் தமிழ் 1964 77. கன்னடநாட்டின் போர்வாள் ஐதரலி 1964 78. வெற்றித் திருநகர் 1964 79. மொழிவளம் 1965 80 குழந்தை உலகம் 1967 81. செந்தமிழ்ச் செல்வம் 1968 82. கொங்குத் தமிழக வரலாறு 1983 83. இந்துலேகா 1988 முதற் பதிப்பிற்கான ஆண்டு இல்லாத நூல்கள் மறுப்பதிப்பு செய்த ஆண்டு விவரம்: 1. தமிழ் முழக்கம் 2001 2. இன்பத்துள் இன்பம் 2001 3. இந்திய மக்கள் விடுதலை வரலாறு 2002 4. வாழும் வகை 2002 5. உலக இலக்கியங்கள் 2002 6. ஈலியாவின் கட்டுரைகள் 2002 7. பிறமொழி இலக்கிய விருந்து -1 2003 8. பிறமொழி இலக்கிய விருந்து 2 2006 9. சிறுவர் கதைக் களஞ்சியம் 1 2002 10. சிறுவர் கதைக் களஞ்சியம் 2 2002 11. சிறுவர் கதைக் களஞ்சியம் 3 2002 12. சிறுவர் கதைக் களஞ்சியம் 4 2002 13. சிறுவர் கதைக் களஞ்சியம் 5 2002 * தென்னாட்டுப் போர்க்களங்கள் எனும் நூல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.