அப்பாத்துரையம் - 1 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) தமிழ் --தமிழர் --தமிழ்நாடு  வருங்காலத் தமிழகம்  வளரும் தமிழ்  தமிழ் முழக்கம் ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 1 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 30+314 = 344 விலை : 430/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 430  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலையிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பேரறிஞர் அண்ணா மணிவிழா வாழ்த்துரை பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களின் மணி விழாவிலே கலந்து கொள்வதில் நான் மிகுந்த உற்சாகம் அடைவதற்கும், இதனை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுவதற்கும் காரணம் - பல ஆண்டுகளாக அப்பாத்துரையார் அவர்களுடன் நெருங்கிப் பழகி அவரை அறிந்தவன்; அவருடைய தமிழ்த் தொண்டால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நற்பயனை உணர்ந்தவன்; அவர்கள் குடும்பத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்பதுதான். ஒருவரை நாம் மதிக்கிற நேரத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் மதிக்கிறார்கள் என்பதை அறியும்போது ஏற்படுகிற இனிமையை விட வேறு ஓர் இனிமை இருக்க முடியாது. அப்பாத்துரையாரை நாம் எந்தக் கோணத்திலிருந்து பாராட்டுக்கிறோமோ அதையல்லாமல், அவருடைய தனித் திறமையை அறிந்த மற்றவர்கள் அவருடைய தொண்டின் மேன்மையை உணர்ந்து. பல்வேறு கோணங்களில் பாராட்டிப் பேசுவதைக் கேட்கும்போது, நாம் மேலும் மகிழ்ச்சி அடைகிறோம். நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள் ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கிய காலத்திலிருந்து, அறப் போராட்டங் களில் ஈடுபட்ட கட்டம் வரை அவரது தனித் திறமையை நாம் நன்கு அறிவோம். தமிழின் மூலத்தை ஆய்ந்தவர் அவர், தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர்; தமிழ் இனத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்கும் இடையே பகைமூட்ட அல்ல - தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார். அவர் அறிந்த அனைத்தையும் எழுதி ஏடாக்கினால், அவை இந்த மண்டபமே நிறையும் அளவுக்கு இருக்கும். நம் அப்பாத்துரையார் அவர்கள், எந்த நேரத்தில் பார்த்தாலும், சிந்தனை - படிப்பு - எழுத்து என்று சிறப்பாகக் கழித்திருக்கிறார். மற்ற நாடுகளில் அறிவாளர்கள் ஒன்று சொன்னால், அதை ஏற்றுக் கொள்வதற்கு அங்கே ஒருவரோடு ஒருவர்போட்டி போட்டுக் கொள்வார்கள். ஆனால் இந்த நாட்டில் ஒருவரை ‘அறிவாளி’ என்று சொன்னாலே ஆபத்து; “அவன் என்ன பெரிய அறிவாளியா? என்ன அறிவு?”.... பெரிய அறிவு!” என்று கேட்பதன் மூலம் தங்களிடம் அறிவு இருக்கிறது எனக்காட்டிக் கொள்ளச் சிலர் முனைவார்கள்! இத்தகைய அறிவுப் பணி புரிவதே பெரிய சிக்கல்தான்; ஆனால் சிக்கலிலேதான் சுவையும் இருக்கும். மேனாடுகளில் எந்த அளவு இப்பணியில் ஈடுபடுகிறார்களோ அந்த அளவுக்கு எழுத்துத்துறையானாலும், பேச்சுத் துறையானாலும், வேறு எந்தத் துறையானாலும் இங்கே உற்சாகமாக ஈடுபடுவது என்பது மிகமிகக் கடினம். இப்படிப்பட்ட கடினமான தொண்டை முப்பது - முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கி, பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் நிறைவேற்றி வருகிறார். அவர், தம் வாழ்க்கையைக் கரடு முரடான பாதையில் நடத்தி, அதே வேளையில் மிகத் தெளிவான தமிழறிவைத் தமிழகம் ஏற்கும் அளவுக்குப் பணி புரிந்திருக்கிறார். சுதிக்குள் பாடும் இசைவாணர் அப்பாத்துரையாரது வாழ்க்கை, ஒரு பூந்தோட்டமா? இல்லை! வறுமைச் சூழலிலே தம் குடும்பச் சூழலை அமைத்துக் கொண்டு இருப்பவர் அவர். எனினும் பண்பட்ட உள்ளத்தோடு மாற்றாரின் இழிமொழிகளையும் ஏசல்களையும் தாங்கிக் கொண்டு - தம் பணிகளைச் செய்திருக்கிறார். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் சொன்னது போல், அவர் விரும்பியிருந்தால் ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ஆகியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்து கொள்ளவில்லை. எந்தெந்த வகையில் எல்லாம் தமிழுக்குத் தொண்டாற்றலாம் - எந்தெந்த வழிகளில் எல்லாம் தமிழ் நாட்டுக்குப் பணியாற்றலாம் என்று எண்ணி எண்ணி, அந்ததந்த நேரங்களில் அருந்தொண்டு ஆற்றியவர் அப்பாத்துரை யார். ஒவ்வொன்றையும் பற்றி ‘இப்படிச் செய்வது சரியா?’ என்ற கேள்வி அவருடைய எண்ணத்தில் ஊடுருவி நிற்கும். ஆகவே, சிறிது காலம் பள்ளி ஆசிரியராக இருப்பார்; பிறகு அது பிடிக்காமல் பத்திரிகை ஆசிரியர் ஆவார்; அதன் பிறகு, தமிழ்ப் பாதுகாப்புப் பணியில் குதிப்பார். பின்னர், போராட்டத்தினால் பயனில்லை என்று கருதி, ஏடுகளை எழுதி அளிக்கஎண்ணுவார். இவ்வாறு அந்தந்த நேரத்தில் தோன்றுவதில் ஈடுபடுவார். இசை நிகழ்ச்சியில் பாடுபவர் - பல வகையான பண்களை ஏற்ற இறக்கத்தோடு பாடினாலும் - பல்வேறு இசை நுணுக்கங் களைக் கையாண்டாலும் - ஒரு சுதிக்குள்ளே நின்றுதான் பாடுவார். அதுபோலவே, அப்பாத்துரையாரும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும் ஒரு சுதிக்குள்ளாகவே - ‘தமிழ் வாழ வேண்டும் தமிழ் வளர வேண்டும்’ என்ற ஒரு குறிப்பிட்ட கொள்கை வட்டத்தில் நின்று தொண்டாற்றியவர். மாறுபட்ட கருத்துடையவர்களும் தமிழ் மொழியின் பாதுகாப்பைப் பொறுத்து இன்று ஒன்றுபடுகிறார்கள். நானும் குன்றக்குடி அடிகளாரும் தோற்றம் - போக - நடவடிக்கைகள் - இருக்கும் இடம் - ஆகியவற்றில் மாறுபட்ட வர்கள்; என்றாலும், எங்கள் இருவரையும் தமிழ் ஒன்றுபடுத்தி இருக்கிறது. இதுதான் நாம் கையாள வேண்டிய சுதி! இதற்குள் நாம் எல்லா வற்றையும் காட்டலாம்; இந்த நிலை ஏற்பட, தமிழ் நாட்டில் முப்பது ஆண்டுகளுக்குமேல் பாடுபட வேண்டியிருந்தது! இந்தச் சுதியை நமக்கு அமைத்துக் தந்தவர்களில் அப்பத் துரையாரும் ஒருவர், அப்படிப்பட்ட முறையில் அமைவதுதான் அடிப்படையான தொண்டு. கடன்பட்டுக் குடிமாறும் புத்தக ஆசிரியர்கள் மேலை நாடுகளில் ஒரே ஒரு புத்தகம் எழுதினாலே, ஒருவர் தம் வாழ்நாளை வசதியாகக் கழித்துவிட முடியும் - அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு! அப்படிதான் ஓர் எழுத்தாளர் தாம் எழுதிய புத்தகத்தின் வருவாயைச் செலவழிப்பதற்காக - ஓராண்டுக் காலம் ஓய்வில் இருந்தே செலவழிப்பதற்காக - தென்அமெரிக்காவுக்குச் சென்று அங்கே வாழ்ந்தாராம்! இங்கோ... ... ஓர் ஆசிரியர், ஒரு புத்தகத்தை எழுதி வெளி யிட்டார் என்றாலே, குடியிருந்த வீட்டை மாற்றுவதைப் பார்க்கிறோம். அந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்குத் தாம் பட்ட கடனை அடைக்க முடியாமல், கடன்காரர்களுக்கு அஞ்சி, தென் சென்னையில் வீடு இருந்தால் வட சென்னைக்கும், வடசென்னை யில் வீடு இருந்தால் தென் சென்னைக்கும் அவர் குடிபோவார்! அப்படிப்பட்ட நிலையே இங்கு இருக்கிறது! இங்குப் புத்தகம் எழுதுவதும் அதன் மூலம் வருவாய் தேடுவதும் அவ்வளவு கடினம்! புத்தகம் வாங்கும் பழக்கம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும். அப்பாத்துரையின் நூல்களை - ஏடுகளை - வீடுதோறும் வாங்கி வைக்க வேண்டும். அப்பாத்துரையார் எழுதிய நூல்களில் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்னும் நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும் - எத்தனை ஆயிரம் கவிதைகளை, இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் - என்பதை எண்ணி எண்ணி வியந்தேன். புத்தகம் எழுதுவோரை மற்ற நாடுகளில் எல்லாம் வித்தகர் களாகப் போற்றுகிறார்கள். இந்த நாட்டிலோ, ‘புத்தகம் எழுதி இருந்த பணத்தைப் பாழாக்கிக் கொண்டவர்கள்’ என்கிற பழிச் சொல்தான் கிடைக்கும் எழுத்தாளர்களுக்கு! இந்த நிலையிலும் நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள், தமிழ்மொழிக்கு ஏற்றம் தரும் பல அரிய நூல்களை எழுதியிருக்கிறார். மறதி ஆகும் மரபு நம்மால் மதிக்கத் தக்கவர்களின் வாழ்க்கை வரலாறு முழு அளவுக்குத் தமிழகத்தில் இல்லை. ‘தனித்தமிழ் இயக்கம்’ கண்ட மறைமலையடிகள், ‘தமிழ்த் தென்றல்’-திரு.வி.க. நீதிக்கட்சித் தலைவர் சர்.பி.தியாகராயர் போன்றவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துத் தொகுத்து, நூல்கள் ஆக்கித் தருவதில் இன்றைய புலவர் பெருமக்கள் ஈடுபட வேண்டும். தமிழ் பெரும்புலவர்களின் - வாழ்க்கை வரலாறுகள் நம் மிடத்திலே இல்லை. அப்படிப்பட்ட பெரியார்களின் வரலாற்றை மறந்துவிட்டால், நம்முடைய ‘மரபு’ பிறகு நமக்குக் கிடைக்காது. ‘மரபு’ என்பதே இப்போது ‘மறதி’ என்று ஆகிவிட்டது. பண்டைத் தமிழ் மன்னர்களைப் பற்றிச் சரியாக எந்த நூலிலும் குறிப்பிடப் படவில்லை. நம்முடைய பள்ளிச் சிறுவர்களின் பாடநூலைப் பார்த்தால் - இராசராச சோழனுக்கு இராசேந்திர சோழன் மகன் என்று சொல்வாரும் உண்டு; தம்பி என்பாரும் உண்டு’ என்று இருக்கும்! ஒரு புத்தகத்தில் கரிகாலனைப் பற்றியத் செய்தி வருகிற இடத்தில் ஒரு நட்சத்திரக் குறி இட்டிருப்பார்கள். அதற்கு விளக்கம் கடைசிப் பக்கத்தில் இருக்கும். ‘கரிகால் வளவன் உரையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டான் என்பது உண்மை என்பாரும் உண்டு; இல்லை என்பாரும் உண்டு’ என்று இப்படித்தான் அந்த விளக்கம் எழுதப்பட்டிருக்கும்! உண்மை வரலாறு உருவாகட்டும் இப்படி ஐயப்பாடுகளுக்கு இடம் கொடுக்கும் போக்கினை நீக்கி, உண்மையான தமிழக வரலாற்றை உருவாக்கும் பணியினை வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். கல்வெட்டுகளில் காணப்படுவதையும், இலக்கிய ஏடுகளில் உள்ளவற்றையும், இன்ன பிற சான்றுகளையும் திரட்டி, தமிழக வரலாற்றைத் தொகுத்துக் கொடுக்கும் பணியைத் தமிழ் மக்கள் - தமிழ்ச் சான்றோர்கள் - ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் சில திங்கள்களில் (1968- சனவரித் திங்கள் முதல் வாரத்தில்) இரண்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாடு சென்னையில் நடைபெற விருக்கிறது. அதற்குள் இந்தப் பணியைச் செய்து முடித்தால், வெளிநாடுகளி லிருந்து வருபவர் கட்கு, “இது தான் எங்கள் நாட்டு வரலாறு” என்ற எடுத்துக் காட்டமுடியும். இத்தகைய பணியை செய்து முடிக்கக்கூடிய குழு ஒன்று அமைக்கப்பட்டால், அதற்குத் தலைமை - ஏற்றுப் பணியாற்று வதற்கு முழுத் திறமை பெற்றவர் - பன்மொழிப் புலவர் அப்பாத் துரையாரே ஆவார் என்பதை இங்கு நான் தெரிவித்துக் கொள் கிறேன். (சென்னையில் 20-9-1967 அன்று நடைபெற்ற பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் அவர்களின் மணி விழாவுக்குத் தலைமை தாங்கி அன்றைய முதல்வர் - பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய பாராட்டுரை. நன்றி - ‘நம் நாடு’ நாளிதழ் - : 22-9-1967.) அப்பாத்துரையார் எனும் அறிவாட்சி அடங்கியதே! தப்பாய்த் தவறாய்த் தமக்காய்ப் படிக்கும் தரகரிடை உப்பாய் உணவாய் உடம்பாய்த் தமிழை உயிர்த்திருந்து, `முப்பால் ஒளி’யாய் முகிழ்த்து `மணிவிளக்’ காய்எரிந்த அப்பாத் துரையார் எனும்அறி வாட்சி அடங்கியதே! ஒப்பாய்த் தமிழ்கற்(று) உரைவிற்(று) உயிர்வாழ உடல்களிடை மப்பாய்த் திரண்டு மழையாய்ப் பொழிந்து தமிழ்வளர்த்துக் கொப்பாய்க் கிளையாய் மலராய்க் கனியாய்க் குலம்புரந்த அப்பாத் துரையார் எனும்தமிழ் மூச்சிங் கொடுங்கியதே! செப்போ இரும்போ மரமோ மணலோ எதுதரினும் எப்போ திருந்தமிழ் மாறி உயிர்வாழ் இழிஞரிடை முப்போ திலுந்தமிழ் ஆய்ந்தே களைத்த மொழிப்புலவர் அப்பாத் துரையார் எனும்மூ தறிவும் அயர்ந்ததுவே! ஒருமொழிப் புலமை உறற்கே வாணாள் ஒழியுமெனில், இருமொழி யன்று, பன் மூன்று மொழிகள் இருந்தகழ்ந்தே திருமொழி எனநந் தீந்தமிழ்த் தாயைத் தெரிந்துயர்த்திக் கருவிழி போலும் கருதிய கண்ணும் கவிழ்ந்ததுவே! குமரிஆ ரல்வாய் குமிழ்த்தமுத் தம்மைக்குக் காசிநாதர் திமிரிப் பயந்தஅப் பாத்துரை என்னும் திருவளர்ந்து நிமிர்த்துத் தமிழ்மொழி நீணில மெங்கும் நிலைப்படுத்தும் அமரிற் படுத்திங் கயர்ந்ததே ஆரினி ஆந்துணையே! செந்தமிழ் ஆங்கிலம் இந்தி பிரெஞ்சு செருமனுடன் வந்தச மற்கிரு தம்ருசி யம்சப்பான் என்றயல்சார் முந்துபன் மூன்று மொழிபயின் றேபன் மொழிப்புலமை வெந்துநீ றானதே, தாய்ப்புலம் விம்ம வெறுமையுற்றே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார், கனிச்சாறு (பக். 158-59) கா. அப்பாத்துரை நேரிசை வெண்பா எப்பாத் துறைக்கும் இவனோர் பழம்புலவன் அப்பாத் துரையறிஞன் ஆழ்ந்தகன்ற - முப்பால்போல் நூலறிவு! நூறு புலவர்கள் சேரினிவன் காலறிவு காணார் கனிந்து. 1 ஆங்கிலத்தை அண்டை மொழிகளினைப், பண்டைநாள் பாங்குற வாழ்ந்த பலமொழியை - ஈங்கிவனே செந்தமிழ்க்குச் சேர்க்கும் குருதியெனச் சேர்க்கின்றான் சிந்தனையில் யாவும் செரித்து. 2 விருந்தெனும் நூலை வெளிநாட் டமிழ்தை அருந்தெனத் தந்தான் அருந்திச் - செருக்குற்றேன் எத்தனை எத்தனை எண்ணித் தொகுத்தீந்தான் அத்தனையும் முத்தமிழர்க்குச் சொத்து! 3 சின்னஞ் சிறுவர்முதல் சிந்தனையில் தோய்ந்தாயும் பென்னம் பெரியர்வர்க்கும் பித்தாக்கும் - வண்ணம் அருநூல்கள் ஈவான் கலைக்களஞ்சி யம்போல் வருநூலைப் பாத்துவப்பேன் நான்! 4 ஆங்கிலத்தில் என்பாட்டை ஆரும் வியக்குவணம் பாங்குறச் செய்தான் படித்தவர் பாராட்டி வைய இலக்கியத்தில் வாழும்என் பேரென்றார் ஐயமில்லை அப்பாத் துரை! 5 குறள்வெண்பா அப்பாத் துரைகொண்டே ஆயிரம்நூல் செய்க தப்பா துயரும் தமிழ்! -பாரதிதாசன், பாவேந்தம்-18 - பக். 200 தமிழ்மண் பொருளடக்கம் வருங்காலத் தமிழகம் 1. பழமையும் புதுமையும் ... 3 2. பண்டைத் தமிழர் அறிவு நிலை ... 6 3. பின் நோக்கும் முன் நோக்கும் ... 8 4. சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும் ... 11 5. முற்காலப் பிற்கால வாழ்க்கைப் போக்குகள் ... 15 6. தமிழும் தமிழரும் ... 19 7. தமிழகத்தின் இன்றைய பண்டைய பரப்புகள் ... 22 8. கடல்கொண்ட தமிழகப் பகுதிஅல்லது குமரிக்கண்டம் ... 26 9. திராவிடமும் இந்திய பெருநிலப்பரப்பும் ... 29 10.தமிழகமும் இந்திய வரலாற்றாசிரியரும் ... 33 11.உலக மொழிகளில் தமிழுக்குரிய இடம் ... 36 12.தமிழன் குறைபாடுகள் - இடைக்காலம் ... 41 13.பழங்காலக் குறைகள் ... 43 14.தற்காலச் சீர்குலைவு ... 50 15.வருங்காலத் திட்டம் ... 52 வளரும் தமிழ் 1. வளரும் தமிழ் ... 59 2. முற்கால, பிற்காலத் தமிழ் வழங்கும் எல்லைகள் ... 68 3. நாட்டுக் கல்வியும் - தாய்மொழியும் ... 73 4. இலக்கிய உலகில் தமிழன் ... 78 5. தென்னாட்டின் கலை வாழ்வு ... 92 6. தமிழியக்கமும், தமிழர் சமய வாழ்வும் ... 96 7. தமிழ்ச் சொற்களும் தமிழ்ப் பண்பாடும் ... 109 8. வடசொற்களென மயங்க இடந்தரும் தமிழ்ச்சொற்கள் ... 116 9. எழுத்துச் சீர்திருத்த முறைகள் ... 139 10.தமிழும் தமிழின மொழிகளும் ... 145 11.திருக்குறளும் வடமொழி நூல்களும் ... 150 12.நாடகத் தமிழ் ... 161 13.தமிழக அறிவியல் வளர்ச்சி ... 167 14.உயர் தனிச் செம்மொழி ... 173 தமிழ் முழக்கம் 1. தமிழ் வாழ்க! ... 185 2. தமிழர் வாழ்க! ... 191 3. தமிழ்த்தாய் வாழ்க! ... 200 4. தமிழ்ப் பண்பு வாழ்க! ... 211 5. தமிழ்த் தெய்வம் வாழ்க ! ... 232 6. தமிழ் இலக்கியம் வாழ்க! ... 254 7. தமிழிசை வாழ்க! ... 281 வருங்காலத் தமிழகம் முதற் பதிப்பு - 1946 இந்நூல் 2002 இல் வெற்றியரசி பதிப்பகம், சென்னை 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. பழமையும் புதுமையும் 1. முன்னுரை உலகில் எத்தனையோ நாடுகள், சமயங்கள், மொழிகள், பண்பாடுகள்; அவற்றில் எத்தனையோ நின்று நிலவின. ஆனால் இறுதியில் அழிந்தொழிந்தன. எத்தனையோ தோன்றுகின்றன; தோன்றி நிலவுகின்றன. ஆனால் எல்லை காணாப் பழங்காலத்தி லிருந்து நின்று நிலவி, இன்றும் உயிர்ப்பு அழியாது வளர்ச்ச்சிக் கான கருவுடன் விளங்கும் ஒரு சில நாடுகளுள் தமிழகம் ஒன்று. அதனுடன் ஒத்த பழமையுடைய நாடுகள், மொழிகள், நாகரிகங்கள் பல அழிந்தொழிந்து அவற்றினிடத்தில் பிற பல நாகரிகங்கள் தோன்றி மறைந்த பின்னும், தமிழும், தமிழர் நாகரிகமும் இன்றும் நிலவி, இனியும் நிலவும் நிலையில் உள்ளன. இவ் வழியாகத் தன்மையைக் கவிஞர் கன்னித் தன்மை என்று கூறிப் புகழ்வர். தமிழ்நாட்டின் மறுமலர்ச்சியைமுன்கூட்டி அறிந்து கூறிய அறிவர் ஆசிரியர் ப. சுந்தரம் பிள்ளை, “பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத்துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே”. என்று பாடினார். உண்மையில் தமிழின் இக் கன்னிப் புதுமை வியப்புக்குரியதே யாகும். ஆனால் இப்புதுமை முற்றிலும் தமிழின் இயல்பில் அடங்கிவிட்டதா? அல்லது தமிழர் செயலால், தமிழர் இடைவிடா முயற்சியால் ஏற்பட்டதா? சில காலமாகத் தமிழன், அது மொழியின் இயற்கையே, அதில் “தன் செயலாவது யாதொன்றுமில்லை” என்று இருந்து விட்டான். அதன் பயனாகக் கேடிலாத் தமிழுக்குக் கேடும் புறக்கணிப்பும் அவமதிப்பும் ஏற்படலாயின. இப்போது அவன், தான் முன்பு கொண்ட எண்ணம் தவறென்று கண்டுகொண்டான். அதாவது ‘தமிழ், தமிழனின்றித் தானே இயங்கவல்லது; தமிழின் சிறப்புக்கும், தமிழன் சிறப்புக்கும் தொடர்பில்லை’ என்ற இறுமாப்பு முற்றிலும் சரியான கொள்கையன்று என்று அவன் அறிந்து கொண்டான். இயற்கையின் அழகு முயற்சியற்றதாயிருக்கலாம்; ஆனால் இயற்கையை அப்படியே படம் பிடிப்பதுபோல் வரையும் கலைஞன் படைப்பு முயற்சியற்றதா? சிலையின் நிலை அசை வற்றதாய் இருக்கலாம்; ஆனால் நடனமானது ஓரிமைப் பொழுதில் மேற்கொள்ளும் துவண்ட நிலை, நெளிந்த தோற்றம் முயற்சியற்ற ஒன்றா? நிறுத்திவைத்து அசையாதிருக்கும் பம்பரத்தின் நிலையும், சுழற்சி யினிடையே அசையாதியங்கும் பம்பரத்தின் நிலையும் ஒன்றா? இவற்றை ஒன்றென்று கொள்பவர்தான் மொழியின் இயல்பு முற்றிலும் இயற்கை என்று கொள்ளுதல் கூடும்! மொழி, மனிதர் உள்ளத்தின் நினைவுகளின் பயனாய், அவற்றின் ஓயாத சுழற்சியின் பயனாய் ஏற்படுவது. அதன் அமைதி சிலையின் அமைதி அன்று; கலையின் அமைதி. அதன் ஆழம் பொய்கையின் ஆழமன்று; அகன்ற காவிரி நீரின் ஆழம். அதன் தெளிவு பாலை நீரின் தெளிவன்று; கொந்தளிக்கும் கடலின் தெளிவேயாகும். நொடிக்கு நொடி மாறும் இயல்புடைய மனிதர் கருத்துக்களி லிருந்தும் வாழ்க்கைப் போக்கிலிருந்தும் எல்லையற்ற கலைத்திறனால் படம் பிடித்தெடுக்கப்பட்ட ஓர் அமைதியே தமிழன் தனிப்பண்பிற்குக் காரணம். தமிழ், தமிழ்க்கலை, தமிழ்ப் பண்பாடு ஆகியவை இதுகாறும் அழியாதிருந்ததும், அழியாத் தன்மையுடையதா யிருந்ததும் எதனால்? அதனை அறிந்தால் தமிழ்மொழி மேலும் வளமடைய வகை தேடலாம். அதனை அறிவதன் மூலமே நாம் இவ்வழியாத் தமிழன்னையின் பிள்ளைகளாவோம்; அழியாத் தமிழ் வளர்க்கும் அழியாக் கலை படைத்த கலைஞராவோம். தமிழுக்கு ஏற்பட்டுள்ள இழிவுகளைப் போக்க வேண்டுமாயின் முன்னோர் வழிப் பிறந் தோம் என்று மனநிறைவு பெற்றுவிடாமல், முன்னோர் வழி நின்று முன்னோர் வழியில் செயலாற்றுவோம் என்ற உறுதி ஏற்பட வேண்டும். தமிழ் வளர்ப்பில் முன்னோர் கொண்ட கோட் பாட்டை, அவர்கள் கண்ட கன்னித் தன்மையின் மறைத் திறவுகோலை நாமும் காணுதல் வேண்டும். தமிழை அறியாக் கன்னித் தமிழாகக் கண்ட பழந் தமிழன் கலைத்திறத்திற்குக் காரணமாயிருந்த புதுமை ஒன்று உண்டு. அதுவே வாழ்க்கையில் அவன் படித்த பாடம். அது யாதென ஆராய்வோம். 2. பண்டைத் தமிழர் அறிவு நிலை மக்கள் அனைவரும் வாழ்கின்றனர். ஆனால் வாழ்க்கையைப் பற்றிப் பெரும்பாலோர் எண்ணிப் பார்ப்பதில்லை! அறியாத வற்றை அறிந்தோம் என்று எண்ணுவது மனிதரியல்பு. நமக்குப் பசி உண்டாகிறது. உணவு உண்கிறோம், பசியேன்? அதை உணவு எப்படிப் போக்கிற்று? அவ்வுணர்வு பின் என்னவாகிறது? அதில் எவ்வளவு, எவ்வாறு உடலில் சேர்ந்து உடலோம்புகிறது என்று நாம் எண்ணிப் பார்ப்பதுண்டா? நாகரிகம் மிக்கவர் எனத் தருக்கும் மக்களிடையே கூடப் பெரும்பான்மையோர் தாம் எவ்வளவு தொலைவு அந் நாகரிகத்துக் குரியவர் என்று எண்ணுப்பாராது இறுமாப்புக் கொள்கின்றனர். அந் நாகரிகத்துடன் தமக்கு எவ்வளவு தொடர்பு என்று யாரும் கருதிப் பார்ப்பதில்லை. நேரம் பார்க்க நாழிகை வட்டிலை நோக்குகிறோம். அது எப்படி அமைந்ததென்பதை நாம் அறிவதில்லை; அறிய எண்ணுவதுகூட இல்லை! பணிமனைக்கு விரைந்துசெல்ல வேண்டும் போது பொறி வண்டி ஏறிச் செல்கிறோம். அது எவ்வாறு இயங்குகிறது, எவ்வாறு அதை இயங்குவது, அது எவ்வாறு இயற்றப்பட்டது என்பதை அறிவது எத்தனைபேர்? அறிவோம், அறியோம் என்ற கவலையோ, எண்ணமோ உடையவர்கூட மிகக் குறைவே. மொழி வகையிலும் நாட்டு வகையிலும் பெரும்பாலோர் வாழ்வு இத்தகைய கவலையற்ற வாழ்வே. ஆனால் தமிழ் முன்னோர் மொழியைப் பற்றி, பண்பாட்டைப் பற்றிப் பெரிதும் அக்கறை கொண்டு கவலையுடன் அதை வளர்த்தனர். அதை வளர்ப்பதற்கான கருவிகளைத் தேடிக் கையாண்டனர். அதன் பயனாகவே தமிழ் பிற மொழிகளைவிட இளமையுடையதாய், நீண்ட வாழ்நாளுடைய தாய், கன்னித் தாயாய் வளர்ந்தது. நாமும் அத்தகைய முயற்சியும் கவலையும் கொள்ளாவிட்டால், அவர்கள் கன்னித்தமிழ் அவர்களுடன் நின்றுவிடும். நம் தமிழ் வேறு தமிழாகவே மாறி, நம் வீழ்ச்சிக்கு வழி ஏற்பட்டுவிடும். வாழ்க்கை முறையில் சில மக்கள் நாகரிகமுடையவர் என்று கருதப்படுகின்றனர். சிலர் நாகரிகமற்றவர் என்று புறக்கணிக்கப் படுகின்றனர். ஆனால் நாகரிகமுடையவர் என்று ஒரு வகுப்பைக் கூறுவது எதனால் என்று எண்ணி அறுதியிடல் அரிது. உயர்ந்த வாழ்க்கைத் தரம் நாகரிகமா? ஆம். ஒருவகையில் அது நாகரி கத்தின் அறிகுறியே. ஆனால் அதுவே நாகரிகம் ஆகுமா? புதிய பட்டாடை அணிந்து பட்டணத்தில் திரிபவை நாம் பட்டிக் காட்டான் என்போமே ஒழிய நாகரிகமுடையவன் என்று கூற மாட்டோம். பணம் கிடைத்தபோதெல்லாம் உயரிய உண்டியை உண்பவனை ஊதாரி என்போம். நாகரிகமுடையவன் என்று கூற மாட்டோம். நாகரிகம் என்பது இன்னதென்று வரையறுக்க முடியாத ஒரு பண்பாடு என்றே பல அறிஞரும் கூறுகின்றனர். ஆனால் அதன் மெய்ம்மையை ஆராய்ந்தால் அது வேறெதுவும் அன்று, அறிவுத் திறமும் அதனை செயற்படுத்தும் நயமும் மட்டுமே என்று காணலாம். இவை இல்லாதவிடத்து பொருள், பகட்டு, ஆரவாரம் எதுவும் பயனில்லை; “கற்கக் கசடற; கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற வள்ளுவர் வாக்கு நோக்குக. எனவே நாகரிகத்திற்கு அறிவும் கலையும் இரு கண்கள் போன்றவை. நாகரிகத்துக்குக் காரணமாயிருப்பது அறிவு. அதன் பயன் கலை, கலையோடு கூடிய வாழ்வு. இவ்விரண்டும் பொருந்திய வாழ்வு அமையுமானால், அதில் காணும் மறைந்த உட்பொருளே அழியாத்தன்மை, உயிர்ப்பு, கன்னித்தன்மை என்பது கலை, இன்பத்தையும் வளர்ச்சியையும், அறிவு, அழியாமையையும் தரும். இவ்விரண்டும் தமிழில், தமிழன் வாழ்வில், மொழியில் நிரம்பி யிருந்ததன் பயனாகவே தமிழ் இவ்வளவு நாள் அழியாத, அழிக்க முடியாத, மயங்காத ஒளியாய் நின்று தழைத்தது. அறிவும் கலையும் வேண்டாம் என்று யாரும் சொல்வ தில்லை. எல்லோரும் எல்லா நாட்டிலும் இதனைப் பறைசாற்றியே வருகின்றனர். அப்படியாயிருக்கத் தமிழன் மட்டும் அவற்றை அழியாத் தன்மையுடன் எப்படிக் கையாண்டான்? 3. பின் நோக்கும் முன் நோக்கும் அறிவு மனிதருக்கெல்லாம் பொதுவான ஒரு பண்பே. ஆனால் அதில் மூன்று படிகளைக் காணலாம். அதன் முதல் நிலை விலங்கு நிலை; இந் நிலையில் மனிதன் விலங்கைப்போல் கண்ட பொருளைக் காட்சியாகக் கொள்கிறான்; செயலாற்றி விடுகிறான். அவனுக்கு நினைவுண்டு, நினைவாற்றல் இல்லை. அவன் நோக்கு நிகழ்காலம் ஒன்றையே நோக்கும். ஆட்டு வரிசையில் ஆடுகள் ஒவ்வொன்றாய்ச் சென்று குழியில் விழுவதைக் கண்டும் மற்ற ஆடுகள் தம் போக்கை மாற்றுவது இல்லை. அவை தம் நிகழ்காலக் காட்சியை இறந்தகால அறிவாக, வருங்கால வழிகாட்டியாகக் கொள்வதில்லை. இந் நிலையில் உலகில் மக்களில் பெரும்பாலோர் இன்றும் உள்ளனர் என்பது வியப்புக்கு இடமல்லவா? ஆம்! ஆனால் உண்மையில் நாகரிகமிக்க இருபதாம் நூற்றாண்டிலும், நாகரிகமிக்க மேல் நாட்டிலும்கூட நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டுப் பேர் நிலை இதுதான். அவர்கள் நேரில் கண்டதைக் காட்சியாகக்கொண்டு, பசித்தவுடன் உண்டு, அகப்பட்ட கருவிகளைக் கையாண்டு, முன்னோர் வாழ்ந்த வழியில் வாழ்வதில் மனநிறைவும் இறுமாப்பும் பெற்றுவிடுகின்றனர். கேள்வி கேட்கும் குணம், முன்பின் பார்க்கும் குணம் நாம் நினைக்கும் அளவு மனிதன் இயல்பல்ல. அது இடர்ப்பட்ட மனிதனுக்கு- சிந்தனையில் சறுக்கிய மனிதனுக்கு மட்டுமே இயல்பாகும். பெரும்பாலோர் சிந்தனையுமற்றவர், வாழ்க்கைக் குறிக்கோளும் அற்றவர். அவர்களைப் பற்றியே அறிஞர், “வாழ்வதற்காக உண்பவர் அல்லர்; உண்பதற்காக வாழ்பவர்” என்று கூறுகின்றனர். வாழ்க்கையில் அடுத்தபடியில் உள்ளவர் நிகழ்கால நோக்கி லிருந்து சற்றுப் பார்வையைத் திரும்பி இறந்த காலத்தை நோக்கு பவர். இவர்களுக்குக் கண்ட உண்மை பெரிது, காணாத உண்மை சிறிது. தெரிந்தவை உண்மை, தெரியாதவை பொய். அவர்கள் பழமையில் மட்டும் நன்மை காண்பவர். புதுமையில் நன்மை இருக்கக்கூடும் என்ற எண்ணம் அவர்களுக்கு இராது. தம் பழைய எண்ணங்கள், தாம் போற்றும் பழைய வீரர், பழைய நூல்கள் ஆகியவற்றையே மேலும் மேலும் பேசுவர். நாட்டு முன்னேற்றம் என்றால் பழங்கால நிலைமைதான் வேண்டும் என்பர். இலக்கியம் என்றால், ‘முன்னோர் இலக்கியம், முனிவர் இலக்கியம் இருக்கிறது. அதைத் துய்ப்பதினும் வேறு இன்பம் ஏது?’ என்பர். முன்னோர் அறிவின் பெருமை பேணுவர். ‘அவர் அறிவைப் போற்றுதல் போதாது; அவர் வழி நிற்றல் வேண்டும்’ என்பதை அவர்கள் காண்பதில்லை. முன்னோர் கண்ட நெறியை அவர்கள் காணாது பின்பற்றுவர்; அதைக்கண்டு அவ் வழி நின்றால் அந் நெறி வளர்ச்சியுறும் என்பதை அவர்கள் எண்ணமாட்டார்கள். அவர்கள் போக்கு பழமையாகிய செக்கைச் சுற்றிச் செல்லும் செக்கு மாட்டுப் போக்கு! தமிழ் நாட்டார் சில காலமாகக்கொண்ட போக்கு இது. வள்ளுவர் காட்டிய வழி என்பர். அவ் வழியில் ‘நிற்பார்களே’ யன்றிப் ‘போக’ மாட்டார்கள். ‘அவர் காட்டிய வழியில்’ ‘சென்றோம்’ என்பாரேயன்றிச் ‘செல்வோம்’ என்று முனைய மாட்டார்கள். வள்ளுவர் இயற்றிய திருக்குறள் மாண்புடைய தென்பர். ஆனால் அதுபோல் இன்று நூல் இயற்றாதிருத்தல் தான் தமக்கு மாண்புடையது என்று அதே மூச்சில் கூறுவார்கள். புதுமை, பழமையின் நிழல் என்பது அவர்கள் வாழ்க்கைத் தத்துவம். ஆசிரியர் ப. சுந்தரம் பிள்ளை ‘ஆரியம்போல் அழிந் தொழியா’ என்றதன் முழு உண்மை இதுவே. ஆரியம் எதனால் அழிவுற்றது? பழமை பேணியதனாலும், புதுமை பேணாததாலும் மட்டுமே. காளிதாசன் ‘குமார சம்பவம்’ இயற்றினான். ஆயிரம் கதையைப் ‘பார்வதி பரிணயம்’ என்று இயற்றத்தான் தோன்றியது! வடமொழி இலக்கியத்தின் பிற்பகுதி முழுவதும் இராமாயண பாரதங்களுக்கு இடைச்செருகல் ஏற்படுத்துவதும், பழங்கதைகளைப் புதுப் புராணங்களாக்குவதும் இவற்றைச் சுற்றிச் செக்கரைப்பதுமாகவே முடிந்தது. இதனாலேயே வடமொழி இறந்த தென்பதை அறியாது, இன்றைய இந்தியப் பெருநிலப் பரப்பில் பல தாய்மொழிகளும் அவ் வழியே சென்று இடர்ப்படுகின்றன. தமிழன் இவ் வழித் துறந்து புதுவழி கண்டால் தமிழ்நாடு மட்டுமன்றிக் கீழ் நாடுகள் அனைத்திற்குமே அவன் வழிகாட்டியாவான். தமிழனுக்கு, அதிலும் சங்ககாலத் தமிழனுக்குச் சிறப்பான தமிழ் நெறி, தமிழ் நோக்கு ஒன்று உண்டானால் அது எதிர்கால நோக்கே. பிற்காலத் தமிழன் தமிழைப் பழந்தமிழ் என்று போற்றினான். முற்காலத் தமிழன் அதைப் புதுத் தமிழ், தமிழ்ப் புது நறவு என்று போற்றினான். பிற்காலத் தமிழன் செத்த கதையைச் செத்த உருவில் ப்பிய நடைப்படுத்தி மகிழ்ந்தான். பழந்தமிழன் உயிருள்ள பொருள்களை உயிருள்ள நாடக கூறினான். பிற்காலத் தமிழன் மெய்யில் பொய்மைகண்டு மகிழ்ந்தான். முற்காலத் தமிழன் பொய்யிலும் மறைந்த நின்ற மெய்ம்மையே கண்டான். சங்க காலத்திலும் பழமை உண்டு என எடுத்துக் கூறுபவர் இதனைக் கவனித்தல் வேண்டும். சிலப்பதிகாரத்தில் இராமன் வீரம், கண்ணன் காதல் கூறப்படுவது உண்டு. கடவுள் பற்று உண்டு. புராணக் கதைக் குறிப்புகள் உண்டு. ஆனால் அவற்றைப் புலவன் கூற்றுடன் சேர்த்துப் பார்த்தால், அவை அவன் அறிவின் படைப்பேயன்றி அவன் அவற்றின் படைப்பாய் விடவில்லை என்று காணலாம். பழங்கவிஞர் வீரத்திற்கு இராமனை எடுத்துக் காட்டாகக் கூறினர். பிற்காலக் கவிஞர் இராமனுக்கு வீரத்தை எடுத்துக் காட்டாக்கி விட்டனர்! அதாவது வீரம் என்ற கருத்தைப் புறக்கணித்து, எடுத்துக்காட்டாகிய இராமனுக்குள் அதை அடக்கினர்! 4. சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும் சங்க கால இலக்கியத்தில் தமிழன் எதிர் கால நோக்கைக் காணலாம். ஆனால் பிற்காலத்தில் இறந்தகால நோக்கு படிப் படியாய் அவனை அடைவதைச் சங்க காலத்திலிருந்து இன்று வரை காணலாம். சங்க காலத்தவர் பாடியது பெரும்பாலும் தாம் கண்ட காட்சி, தாம் எண்ணிய எண்ணம் ஆகியவையே. இரண்டு நூல்களில் ஒரே கருத்து இருந்தால் அது ஒரே சூழ்நிலையையும் ஒரே பொது எண்ணத்தையும் குறிக்குமேயன்றி ஒரே படப் பிடிப்பைக் குறிக்காது. சோழப் பேரரசர் காலத்தில் தாம் கண்ட உலகை, தம் காலத்தைப் பற்றிப் பாடியவர் ஒட்டக்கூத்தர் ஒருவரே என்னலாம். அந் நாளைய இலக்கியக் காட்டில் மெய்யுலகின் படமாக நிலவுவது அவரது ‘மூவருலா’ ஒன்றே. மற்றவர்கள், சொன்னதைச் சொல்லிச் சித்திரக் கவியும் மொழிபெயர்ப்பும் பயின்றனரேயன்றி வேறன்று. அம் மொழி பெயர்ப்புகளும்கூடப் புத்தறிவு கொளுத்தும் தற்கால மொழி பெயர்ப்பு போன்றவையல்ல. பழமைப் பித்தேற்றும் வக்கரித்த போக்கே கொண்டவை. இலக்கியத்தில் கண்ட இப் போக்கை மொழியிலும், அறிவி யலிலும், கலையிலும், வாழ்க்கையிலும் இன்றுகாறும் காணலாம். சங்க காலத் தமிழ் நூல் எதனை எடுத்தாலும் இடைக்கால, தற்கால நூல்களில் காண முடியாத ஓர் அரிய பண்பினை அதில் காணலாம். சங்க நூலின் தமிழ் உயிருள்ள தமிழ். அதாவது அதில் சொற்கள் பொருளைக் குறிக்கவே எழுந்தன. கவிஞன், இளங்கோவைப் போல் பாரவிரிவுரை ஆற்றலாம்; சொற்களை இழுமெனத் தொடுத்துப் பரிபாடலாசிரியர்களைப் போல் இசை பாடலாம்; வள்ளுவர் போல் அறிவுத்துறை நுணுக்கம் கூறலாம்; ஆனால் பொருள் குறிக்கச் சொல்! இட நிரப்பவோ ஒலி நிரப்பவோ சொல் காணுதல் அரிது. சிந்தாமணி காலமுதல் தற்காலம் வரை இந்நிலை உண்டா என்று துருவிப் பாருங்கள். கொக்கு, ‘விண் கண்ட கொக்கு’ ஆகும். பாடல், ‘பண்பட்ட பாடல்’ ஆகும். இச் சொற்கள் எதற்காக? எதுகைக்காக, போகட்டும்! இது, பாட்டுக் கட்டும் முயற்சியில்! மொழியில், பேச்சில்- இது ஏன்? வள்ளி அழகியவள் என்பது செந்தமிழ். அதாவது பழைய தமிழ். வள்ளி அழகுடையவள், வள்ளி அழகானவள், வள்ளி அழகானவள் ஆவாள், வள்ளி அழகான வளாயிருக்கிறாள்- இத்தகைய தொடர்கள் இக் காலத் தொடர்கள். இவற்றில் அழகான என்ற சொல்லிருக்கிறதே, அதில் ஓர் அரிய ‘அழகு’- அழகு உடைய பொருளை இன்றைய தமிழன் ‘அழகு ஆன’ பொருள் ஆக்கி விட்டான். இவ் வகையில் வேண்டுமானால் அவனுக்கு ஒரு ஆறுதல் கூறலாம். இவ் வருவருப்பான தொடரின் பகர்ப்பையே அவனுடன் பிற திராவிடத் தோழரும்- ஏன் வட இந்திய, வட மொழித் தோழர்கூட- பின்பற்றியுள்ளனர்! பழந்தமிழன் ‘இயற்கைப் பொருளை இற்றெனத் கிளத்தல்- செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்’ என்ற தொல்காப்பியச் சூத்திரங்களின் வழிநின்று, ‘இது நன்று’, ‘அது எனக்கு உரியது ஆகும்’ எனக் கூறினான். நாம் ‘இது நல்லது ஆகும்’ என இயற்றைப் பண்பு களையும் ‘ஆவ’தாகக் கூறுகிறோம். செந்தமிழ் வேறெம் மொழியையும்- வட மொழியையும் விட எளிமையும் சுருக்கமும் விளக்கமும் உடையது என்பதை, பல மொழியையும் பல நாடும் பல பண்புகளும் கண்ட அறிஞர் சர். சி. பி. இராமசாமி அவர்களே ஒப்பிப் புகழ்ந்துள்ளனர். அத்தகைய தமிழை விடுத்துத் தமிழனும், பிற திராவிடத் தோழனும் பயனற்ற ‘சங்கிலித் தொடர்ப் போக்கு’ நடையைப் பேணியது முன்னேற்ற மாகுமா என்பதை இன்றைய இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். பழந் தமிழன் இன்றைய தமிழனைவிட பெரிய சமயப் பூசலிடையே வாழ்ந்தான். இன்றைய வழிபாட்டு முறைகள், கொள்கைகள், நம்பிக்கைகள், கிட்டத்தட்ட அனைத்துமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் தமிழனிடம் இருந்தன என்பதைத் திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலிய நூல்களில் காணலாம். திருமால் நெறி, சிவநெறி, அகியவற்றின் மயிரிழை நுணுக்கங்கள், இடக்கையால் எறியும் எளிமையுடன், ஆனால் வழுவற, அவற்றில் கூறப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் பல சமயத் தெய்வங்கள் அவ்வச் சமயத்தார் நிலையிலேயே புனைந்துரைக்கப் பெறுகின்றன. ஆயினும் தெளிந்த சமய வாத நூல்களான மணி மேகலை, குண்டலகேசி முதலியவற்றிலன்றி மற்றவற்றில் ஆசிரியர் சமயத்தை அறியக்கூட அவை உதவ வில்லை! அவர்கள் கோட்பாட்டைக் கோட்பாடாகவும், அறிவை அறிவாகவும் கொண்டனர். எல்லாம் படர்க்கையில் வைத்து அறியப்பட்டனவே அன்றி ஒன்றும் தன்மையில் வைத்து உரைக்கப்படவில்லை. இத்தகைய படர்க்கைப் பாட்டு அறிவின் பயனாகவே (டீதெநஉவiஎந கூhiமேiபே) பொதுமறை தோற்றும் நிலை தமிழ்நாட்டில் மட்டும் சிறப்பாக நிகழ்ந்தது. தெய்வப் புலவர் என திருவள்ளுவரைப் போற்றும் பரிமேலழகர் போன்ற பெரியார் தெய்வ மொழியில் அதற்கு மூலந் தேடுவதுடன் நிற்க வேண்டிய தாயிற்றேயன்றி, தெய்வமொழியில் அதற் கொப்பான நூல் காட்டவோ அல்லது பார்த்துப் பகர்த்துக் கொள்ளவோகூட முடியாது போயிற்று! வாழ்க்கை முறை, கலை, அறிவியல் ஆகியவற்றிலும் இதே உயரிய அறிவு நயத்தைப் பழந் தமிழ் நூல்களில் காணலாம். கண்ணகியைக் கற்புக் ‘கடவு’ளாக்கிய கதை கூறும் நூல் சிலப்பதி காரம். கண்ணகியை அரசன் கற்புக் கடவுளெனக் கொண்டான் என்று கூறுவதுடன் அது நிற்கிறது. கண்ணகி பிறக்கும் போதே அவள் கற்புக் கடவுளின் திருவிறக்கம் (அவதாரம்) என்று கூறப்பட வில்லை. அவள், பின்னால் கற்புக் கடவுள் ஆவாள் என்பதும் கூறப்படவில்லை. அவள் கடவுளானது, அவள் வாழ்க்கைச் சிறப்பால், மக்கள் மனதில் தோற்றிய வீர உயர்வின் பயனாகவே என்பதை நாம் அறிகிறோம். கண்ணகி வாழ்வை இன்று ஒரு மாது வாழ்வதானால் நாமும் இளங்கோவுடன் சேர்ந்து அவளைக் கடவுள் என்று கூறத் தயங்க மாட்டோம். இது கவிஞன் நாடக ஆசிரியன் செயலன்றி வேறன்று. ஆனால் நாடக ஆசிரியன், மனிதப் பிறவி, கடவுட் பிறவியாக உயர்ந்ததெனக் காட்டினனே யன்றி, அது கடவுள் என்று சொற்பொழிவாற்ற வில்லை; வணங்கினர் என்பது மட்டுமன்று. கலைஞன் என்ற முறையில் அக் கடவுள் தன்மைகூட மனிதரின் இயற்கை மனஎழுச்சியாகக் காட்டப்படவில்லை. இராமர் கதை, கண்ணன் கதைகூட சிலப்பதிகாரத்தில், வாழ்க்கையோடு இணைந்த கலை நயத்துடன் காட்டப் பெறுகின்றன என்பது காணலாம். “சோவரணும் போர்முடியத் தொல்லிலங்கை கட்டழிந்த சேவகன் சீர்கேளாத செவி என்ன செவியே திருமால் சீர்கேளாத செவி என்ன செவியே” இங்கே திருமால் சிறப்பு, வணங்குபவர் மனதில் அவர் போர் வீரம் பற்றிய வியப்பாகக் கூறப்படுதல் காண்க. பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் ‘காலத்திற்கேற்ற கோலம்’ போட்டவ ராயினும் கம்பரினும் தமிழ்க்கலைத்திறன் பேணியவர் எனலாம். சீதையை அன்னையாக்கிய பின் அன்னையாகப் புனைந்துரைக்கப் பல இடங்களில் கம்பர் தவறினர். ஆனால் சேக்கிழார் ஒரு தடவை ஒரு கருத்தை மேற்கொண்டபின் அந் நெறியிலேயே பழந் தமிழ்க் கவிஞர் போல் நிற்றல் காணலாம். வணக்கத்திற்குரிய பெண் பாவலர் அழகைக் கூறும் போதெல்லாம் காண்பவர் மனத்தில் எழும் தூய அழகுணர்ச்சியே குறிப்பிடப் படுகின்றது. ‘கற்பகத்தின் கொம்பொப்பாள்’. ‘காண்டகு நற்காட்சியினாள்’ போன்ற தொடர்கள் அவர் அறிவுறுத்திறனுக்கும் கலைத் திறனுக்கும் எடுத்துக்காட்டாகும். ஆயினும் சங்ககாலக் கவிஞர் இக் கதைகளைப் படர்க்கைப் பாட்டில் நாடக முறையில் இன்னும் திறம்படக் கூறியிருப்பார் என்பது உறுதி. 5. முற்காலப் பிற்கால வாழ்க்கைப் போக்குகள் பழைய சங்க நூல்களினின்றும் பிற்கால நூல்களினின்றும் அவ்வக் கால மக்கள் ஊண், உடை, நடை, எண்ணங்கள், சமயம், அரசியல், வாழ்க்கைப் பொருள்கள், கலையறிவு ஆகியவற்றைப் பற்றிய கருத்துக்களைத் தொகுப்ப தானால் அப்போது நம் நாட்டின் சென்ற இரண்டாயிர ஆண்டுப் போக்கு முற்போக்கு அன்று, பெரிதும் பிற்போக்கு என்பதைக் காணலாம். பழங்காலத் தமிழரிடை உழவு, வாணிகம், போர், தொழில்கள் ஆகிய பலவும் ஒத்த சிறப்புடையவையாகவே குறிக்கப்படுகின்றன. காதலும் சமயமும் ஒருங்கே சிறப்பிக்கப்படுகின்றன. ஆனால் பிற்காலத்தார் உழவை உயர்த்தினர்; பிறவற்றுக்கு மதிப்புக் குறைத்தனர். தற்காலத்திலும் உழவை உயர்த்திக் கூறுவதுண்டு. ஆனால் இப்புகழுரை வெற்றுரை என்பதை உழவர் வாழ்வில் காணலாம். பெருநிலக் கிழவரை உயர்வுபடுத்திப் பயனடையும் முகப் புகழ்ச்சியேயன்றி இது வேறில்லை. வடமொழியில்- பிற்கால நூல்கள் உயர்வாகக் கொள்ளும் தெய்வீக மொழியில் - இந் நயவஞ்சகத்துக்கு இடமின்றி உழவர் உரிய இடத்தில் வாழ்க்கை வகுப்பில் (வருணத்தில்) நான்காம் இடத்தில் வைக்கப்பட்டனர். பிற்கால நூல்களில் இல்லறம் பசப்பிப் புகழப்பட்டது. சங்க கால வாழ்வில் சமயம் வாழ்க்கையின் ஒரு பகுதி. பிற்கால வாழ்வில் வாழ்க்கை சமயத்தின் பகுதி. சங்க காலத்தில் சமய ஆராய்ச்சியும் கோட்பாடும் ஓர் அறிவுத்துறைப் பொழுதுபோக்கு. பிற்காலத்தில் அது பொதுமக்களைப் பிணிக்கும் இருப்புச் சட்ட மாக ஆகிவிட்டது. சங்க காலத்தில் கல்வி அனைவர்க்கும் பொது; கற்றவர் பிறர்க்கு அறிவுரை கூறி உலகை நல்வழிப்படுத்த அதனைப் பயன்படுத்தினர். இதனாலேயே வேறெந் நாட்டிலும் காணாத அளவு சங்கத் தமிழ்ப் புலவரிடையே பல்வேறு வகுப்பினரையும், தொழிலினரையும், பெண்பாலரையும் காண்கிறோம். தமிழில் காணப்படும் அளவு இன்றைய மேல் நாடுகளில்கூடப் பெண்பாலர் பெரும் புலவராயிருப்பதைக் காண்கிறோமில்லை. ஆனால் பிற்காலத்தில் கல்வி பெண்பாலர்க்குரியதன்று என்றாய் விட்டது. பெரிய புராண காலத்திலும் பெண்கள் சமயத்துறைத் தலைவராய் கல்விக்கு ஓரளவேனும் உரியராயிருந்தனர். ஆனால் வடமொழித் தோய்ப்பு கம்பராமாயண முதல் காணப்படுகிறது. சீதை முதலிய பெண்பாலர் சிறப்புக்களில் உடலழகு நாற்குண அழகு உண்டு; கல்வியழகு கிடையாது. பெரிய புராணம் சிவநெறி நூலாயினும் அதனைப் பின்பற்றும் சிவநெறியாளர், இன்றும் தம்மிடையே திலகவதியாரும் புனிதவதியாரும் பிறந்துவிடக் கூடாது என்று தவமிருக்கின்றனர் என்று கூறுதல் தகும்! திருமால் நெறியினரும் இன்று ஒரு நாச்சியார் பிறந்தால், அதாவது கவிபாடும் பெண் பிறந்தால் என் செய்வர் என்பதை நினைக்கவே தாளவில்லை! சிலப்பதிகாரத்தில் கண்ட முத்தமிழ் பிற்காலத்தில் பெய ரளவில் மிகவும் போற்றப்பட்டுத்தான் வந்தது. ஆனால் ஒரு தமிழையன்றி மற்ற இரண்டு தமிழும் விலக்கப்பட்டு விட்டன. தொல்காப்பிய கால இலக்கணம், தொல்காப்பியர் காலத்தில் இருந்த தமிழின் இலக்கணம். அதனைப் பயின்றால் அவர்காலத் தமிழ், அவர் தமிழ் என்று கருதிய மொழி எது என்று காணல் கூடும். ஆனால் பிற்கால இலக்கணங்கள் தொல்காப்பியம் போல் தமிழுக்காக எழுந்த இலக்கணங்கள் அல்ல, தொல்காப்பியத்தின் ஆவி வடிப்பு மட்டுமே. ஏதாவது புதுமை புகுத்தப்பட்டால், அது தமிழ் மொழியின் புதுமையன்று, தமிழர் கருத்துமன்று; பிற மொழியினின்று தமிழ்மீது சுமத்தப்பட்ட போலிச் சரக்குகள், அதுவும் தமிழரல்லாதார் புனைந்த சரக்குகள். இலக்கியமோ பெரும்பாலும் இம்மாய இலக்கணங்களுக்கான எடுத்துக்காட்டுகள். சிலப்பதிகார, புறநானூற்றுக் காலத் தமிழன், அவ்வந் நிலத்திற்கேற்ற உணவு, உடை கொண்டு வாழ்ந்தான். ஆனால் நகரங்களில் வகை வகையான உணவுகள், உடைகள்! வாணிகம் உலகெங்கும் பரந்தோங்கியிருந்தது. பிற நாட்டுச் சரக்குகள், கருத்துக்கள் வரவேற்கப்பட்டன. உண்மையான ஒப்பரவு (சமரசம்) தமிழனிடையே நிலவிற்று. ஆனால் அவன் ஒப்பரவு இக்காலத் தன்னிலை கெட்ட அடிமை ஒப்பரவு அல்ல. தற்பண்பு ஒழிப்பு மன்று, ‘பிறர் தம் மத மேற்கொண்டு களையவே’ என்ற நிலையிலுள்ள ஒப்புரவே. பிற நாடுகளின்மீது இன்றைய உவத்தலும் அவனுக்கில்லை; இன்றைய காய்தலும் அவனுக்கில்லை. அவன் ஆரியம் நன்று என்று கூறுவான்; ஆயின் தமிழ் இனிது என்பான். ஆரியப் பசப்புக்கும் கால் பிடிப்புக்கும் போகான்; பழிப்புக்கோ வேண்டுதல் ஏற்படவில்லை. பிற்காலத் தமிழன் பிறமொழிப் பற்றால் தன் மொழி மீது கொண்ட நாணத்தை மறைத்தான்; பிறமொழி அறிவால் தன் மொழியறிவின்மையை மறைத்தான். பிறமொழி நடை, பிற மொழி எண்ணம், பிறமொழிப் பற்று மிகுந்தன. முற்காலத் தமிழனைப் போல் மனிதனுடன் மனிதன் என்ற முறையில் பிறருடன் ஊடாடாமல், நண்பனுடன் நண்பன் என்ற முறையில் கைகோத்த தோழமை கொள்ளாமல், நாயினம்போல் பசப்பித் தோழமையின் பேரால் அடிமையை வளர்த்தான். இதனாலேயே தான் உழைத்தும் உண்ணாது, தான் நெய்தும் உடுக்காது, தான் ஈட்டிய செல்வத்தைப் பிறர் காலடியில் வைத்துப் புழுக்கையும் இரவலனும் ஆனான்! தான் எடுத்த கோயிலில் தானே புக முடியாதவனாய், தான் வணங்கும் கடவுளுக்கே தான் அயலானாய் மாற்றானாய் அண்டமாட்டாதவனானான். தன்மொழி தனக்கு அயலாயிற்று; தன் இலக்கியமே தன்னைப் பழித்தது. அவனுக்குத் தன் நாடே பகை நாடாய், தன் விடுதலையே தனக்கு விலங்காயிற்று. ஆனால் இவ்வளவினும் மொழி மட்டும் அவனை விடவில்லை. அவன் மொழி எது வாயினும் சரி, அது தூய திராவிடமான தமிழாயினும் சரி, தூய்மையற்ற திராவிட மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடமாயினும் சரி, திராவிடக் கலப்பு ஏற்பட்டு விட்ட வடநாட்டுத் தாய்மொழிகளாயினும் சரி, எல்லாம் படிப்படியாகத் தாழ்ந்த மொழிகளே. வேண்டுமானால் தூய திராவிடமாகிய தமிழினும் இத் தூய்மையால் கெடாத பிற மொழிகள் உயர்வாகலாம். ஆனால் திராவிட வாடை படாததென்ற பெருமைக்கு இலக்கான வடமொழியாகிய தெய்வ மொழியை நோக்க அனைத்துமே இழிந்த மொழிகளே! அத்தெய்வ மொழியின் திராவிடச் சிதைவுகளான பாகதம் பாளிகள்கூட இழிந்தவையே- வடமொழி நாடகங்களில் பணிமக்களும் (சூத்திரர் அல்லது தாசர்களும்) அவர்களுடனொத்தவரான பெண்பாலரும் வழங்குவதற்கே அவை உரிமையுடையவை. தமிழ்நாடும், பிற திராவிட நாடுகளும், பிற இந்திய மொழி களும் கூட உண்மை நாட்டுப் பற்றுக்கு உறுதுணையாக வேண்டு மானால் திராவிடக் கலப்பற்ற ஆரியமாகத் (தவறாக)க் கொள்ளப் படும் வடமொழியைவிட, ஆரியக் கலப்பற்ற தமிழுக்கு உயர் மதிப்புத் தரவேண்டும் என்பது தேற்றம். 6. தமிழும் தமிழரும் ஒரு நாடு உலகை நோக்க அல்லது பிற நாடுகளைப் பார்க்கப் பெரிதாகவோ சிறிதாகவோ இருத்தல் கூடும். ஆனால் எந்த நாடும் அந்த நாட்டு மக்களுக்கு மிகச் சிறிதாகத் தோற்றும் அளவுக்குச் சிறுமையுடையதாகாது! உலகில் மிகச் சின்னஞ்சிறிய நாட்டிலும் அந்நாட்டின் மக்கள் தம் நாட்டைப் பொன்னெனப் போற்றாதிரர். மொழியின் நிலையும் இதுவே. ஆனால் இந்தியப் பெருநிலப் பரப்பில் எங்கும் வாழ்ந்த தமிழ் மக்கள்- தம் மொழி, தம் இனம், தம் நாடு ஆகியவற்றின் பெயரைக்கூட ஏற்க நாணமடைந்து வந்திருக்கின்றனர். தமிழகத்திலும் உயர்வகுப்பார் என்று தம்மைக் கூறிக் கொள்பவர் பலர், தாம் தமிழர் அல்லர் ஆரியர் என்று கூறிக் கொள்ளவும், தம் பெயரைப் பிற மொழிகளில் கொண்டும் பிற நாட்டு மக்கள் ஒலிமுறை, சொற்கள், மொழிகள் ஆகியவை பேணியும், தமக்கு மேம்பாடு தேடுவாராயினர். அறிவூழியாகிய இவ்வூழியில் தம்மின மறுத்த பிற மொழியாளர்கூடத் தம் மொழியைப் பேணி மட்டும், அந்தோ, பிற மொழி பேசுதலும் எழுதுதலும் உயர்வென்று கொண்டு வயிற்றுக்காகத் தன் மதிப்பை விற்கும் நிலையிலிருக்கிறார்களே! தமிழைப் புறக்கணிக்கும் இக்குறை ஒருபுறமிருக்க, வெறும் புகழ்ச்சியும் வீம்புமே உரைத்துச் செயலில் தமிழைப் பேணாத இன்னொரு கூட்டம் உண்டு. அவர்கள் பழமை பேணும் முறையில் தமிழில் எல்லாம் உண்டு, தமிழர் இனி முன்னேற வேண்டுவதில்லை என்ற கூறிக் கிணற்றுத் தவளைகளாய் காலம் போக்குவர். பொன் குடமேயாயினும் மாசற நீராட்டாவிடில் அழுக்கடைந்து ஒளி குன்றுமன்றோ? தமிழில் இயற்கை வளம் எவ்வளவு இருந்தாலும் முயற்சியும் வளர்ச்சியும் இல்லாவிட்டால் அது மங்கவே செய்யு மன்றோ? அத்தகைய நிலையை இன்று தமிழ் கண்டுவிட்டது! சொல்வளமிக்க தமிழில் கலைச் சொற்கள் இல்லை என்ற குறை கூறப்பட்டு விட்டது. அறிவியல் துறைகளின் முற்போக்கில் தமிழ் பின்னடைந்து விட்டது. தாய் என்பதற்காக அன்பு காட்டலாம்; பாராட்டலாம். ஆனால் தாய் உடலுக்கு நோய் வந்தால் நோய் எம் தாயை யணுகாது என்று வாளாயிருத்தல் தகுமோ? குறையைக் குறையெனக் கூறி இடித்துரைக்க வேண்டுவதில்லை யாயினும், குறையென அறிந்து தீர்க்காவிடில் மக்கள் கடமை செய்தவ ராவரோ? ஆதலின் தமிழ்ப்பற்றும் அறிவும் கடமைப் பொறுப்பும் மிக்க தமிழ் இளைஞர், தமிழின் வளமும் குறையும் ஒப்ப அறிந்து அதனை வளர்த்தல் வேண்டும். “மெய்யுடை யொருவன் சொல மாட்டாமையால் பொய் போலும்மே பொய் போலும்மே” என்றும், “பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே மெய் போலும்மே” என்றும் அதிவீரராமபாண்டியர் கூறுவதற்கிணங்க, வளமாகத் தோன்றுபவை குறையாகவும், குறையாகத் தோன்றுபவை வள மாகவும் இருத்தல் கூடும். ஆகவே தமிழின் உள்ளார்ந்த வளங்கள் யாவை, அதனை நலிவிக்கும் உள்ளார்ந்த குறைகள் எவையென ஆய்ந்தறிதல் இன்றியமையாதது. தமிழ், தமிழகம், தமிழ்ப்பண்பு ஆகியவைபற்றி இன்று பழிப்பவர் மட்டுமேயன்றி புகழ்பவர்கள்கூட அதன் உள்ளார்ந்த மதிப்பையும் வளத்தையும் நன்கு உணர்வதில்லை! உலக மக்கள் நோக்கில், தமிழ் இன்னும் சிறுமைப்பட்டே காணப்படுகிறது. இதற்குக் காரணம் அவர்கள் தமிழின் இன்றைய நிலையையும் தமிழர் இன்றைய நிலையையும் கொண்டு அதனை மேற்போக்காக மதித்து விடுகின்றனர். இன்று உலகில் பெரும்பாலாகப் பேசப்படும் மொழிகள் ஆங்கிலம், சீனம், இந்தி, வங்கம் முதலியவை. தமிழ் பேசுவோர் தொகை இவற்றினும் மிகக் குறைவு. பேசப்படும் இடமும் மிகக் குறுகிய இடம். எனவே, இந் நிலையிலுள்ள பல மொழிகளுடன் வைத்தே தமிழ் எண்ணப் படுகிறது. வழங்கா மொழியாகிய வடமொழி இம்முறையில் எண்ணப்படுவதில்லை! வரலாற்று முறையிலும் இலக்கியப் பண்பாட்டு முறையிலும் அதன் உயர்வு உணரப்படுவது இதற்குரிய காரணம். தமிழுக்கும் இத்தகைய உயர்பண்பாடு உண்டென்பதை, இன்றைய தமிழர் நிலையும்- தமிழர் புறக்கணிப்பும்- திரையிட்டு மறைக்கின்றது. ஒருவேளை தமிழும் வடமொழி போல் வழங்காதிருப்பின் இவ் வுள்ளார்ந்த பண்புகள் மதிப்புப் பெறக்கூடும் என்றுகூடக் கூறலாம். ஆகவே, காய்தலுவத்த லின்றித் தம் மொழியில் கருதத் தூண்டும் தமிழ் இளைஞர்க்கும் பிறநாட்டு நல்லார்க்கும் தமிழின் வளம், தனிச் சிறப்புக்கள் ஆகியவைகளை அறிவியல் வரலாற்று முறைகளில் பிறழாது எடுத்துக்கூறுவது பயனுடையதாகும். அம் முறையில் தமிழகம், தமிழ் ஆகியவற்றின் சிறப்புக்களை முதலில் எடுத்துக் கூறுவோம். 7. தமிழகத்தின் இன்றைய பண்டைய பரப்புகள் தமிழகம் என்ற பெயர் இந்திய பெருநிலப் பரப்பில் தமிழ் வழங்கும் தனிப்பகுதிக்குச் சிறப்பாக வழங்கப்படுகிறது. இப் பகுதியின் இன்றைய எல்லை, பெரும்பாலும் எழுநூறு ஆண்டு களுக்கு முன் இயற்றப்பட்ட தமிழ் இலக்கண நூலான குறிக்கப்பட்ட எல்லையை ஒத்ததேயாகும். நன்னூலில் தமிழகத்தின் எல்லை “குணகடல் குமரி குடகம் வேங்கடம்” என்று கூறப்பட்டது. அதாவது கிழக்கே கீழ்க்கடல் அல்லது வங்கக் குடாக் கடல்; தெற்கே குமரி அல்லது கன்னியாகுமரி முனை! மேற்கே குடகம் அதாவது மேற்குமலை அல்லது மேற்குத் தொடர்ச்சி மலை; வடக்கே வேங்கடம் என்னும் திருப்பதி மலை ஆகியவற்றின் இடையிலுள்ள நாடு தமிழகம். தற்கால அரசியல் பிரிவுகளின்படி தமிழகப் பகுதி, சென்னை மாவட்டத்தின் இருபத்தாறு வட்டங்களுள் ஏறக்குறைய பதினொரு முழுவட்டங்களையும், தென்னிந்திய தனி அரசுகளில் (சமஸ்தானங்களில்) முழுத்தனியாக ஒன்றையும் உட்கொண்டது. வட்டங்கள் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை (பாண்டி மண்டலம்), சேலம், கோயம்புத்தூர் (கொங்கு மண்டலம்), சென்னை, செங்கற் பட்டு, வட ஆர்க்காடு (தொண்டை மண்டலம்) ஆகியவை. தமிழ்த் தனியரசு புதுக்கோட்டை. இவ்வெல்லைக்கப்பால், திருவிதாங்கூர்த் தனியரசின் பரப்பில் கிட்டத்தட்ட ஒரு பாதியிலும் (மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு), சிறுபான்மையாக நீலகிரி வட்டத்திலும், நெல்லூர் வட்டத்திலும் தமிழ் பேசப்படுகிறது. இந்திய பெருநிலப் பரப்புக்கு வெளியேயும் தமிழ் பேசப்படும் இடங்கள் உண்டு. இவற்றுள் பழமையும் தலைமையும் உடைய பகுதி யாழ்ப்பாணத்தை உள்ளடக்கிய வட இலங்கைப் பகுதியே. நில இயல் முறைப்படி, இது இந்தியப் பரப்பிலிருந்து துண்டுபட்டுக் கிடந்தாலும், பண்பாட்டு முறைப்படிப் பார்த்தால் இது உண்மையில் தமிழகத்தின் ஒரு பகுதியே ஆகும். இங்குள்ளோர் இந்தியாவினின்று குடியேறியவர் என்று அடிக்கடிக் கூறப்படுவ துண்டு; இது தவறு. பல காலங்களில் தொழில் காரணமாகவும், ஆட்சிநிலை காரணமாகவும் மற்றத் தமிழகத்தார் இப்பகுதியில் குடியேறியது உண்மையே ஆயினும், அந் நாட்டு மக்கள் தொன்று தொட்டே தமிழர் ஆதலால் அக் குடியேற்றம், தமிழகத்தின் ஒரு பகுதியிலுள்ளார் இன்னொரு பகுதியில் குடியேறுவது போன்றதேயன்றி வேறன்று. எனவே, நிற இயலை விடுத்துப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் விரிந்த எல்லையைக் கூறுவதானால், வட இலங்கையும் அதனுட் சேர வேண்டுவதேயாகும். ஆயினும், தமிழகம் எனும் பெயர் இந்தியப் பரப்பின் தமிழ் நிலத்திற்கே பெரிதும் வழங்கப் பெறுவதால், இரண்டும் சேர்ந்த பகுதியைப் பெருந்தமிழகம் என்று கூறுதல் பொருத்தமாகும். இப்பெருந் தமிழகத்திலேயே திருவாங்கூரின் உள்மண்டிலங்களில்- திருவனந்தபுரம் மண்டிலத்தின் தென்பகுதியாகிய தோவாளை, அகத்தீசுரம், இரணியல், கற்குளம், விளவங்கோடு ஆகிய ஐந்து கூற்றங்களும்; கிழக்கில் செங்கோட்டைக் கூற்றமும், வடகிழக்கில் தேவிகுளம் மண்டிலத்தைச் சேர்ந்த தேவிகுளம், பீர்மேட்டுக் கூற்றங்களும் சேர்க்கப்பட வேண்டியவையாகும். இவற்றையன்றி, அரசியல் காரணமாகவும், வரலாற்றுக் கால உறவுகள் காரணமாகவும், பிழைப்புக் காரணமாகவும் கடல் கடந்த நாடுகள் பலவற்றில் தமிழர் பெரும்பான்மையினராகவும், சிறுபான்மையினராகவும் சென்று தங்கித் தமிழ் பேணி வருகின்றனர். இவற்றுள் பர்மா, மலாய், சிங்கப்பூர் (கிழக்கு ஆசியா); தென் ஆப்பிரிக்கா, கிழக்காப்பிரிக்கா, மோரீஸ் தீவு (ஆப்பிரிக்கா); பிரிட்டிஷ் கயானா, மேற்கிந்திய தீவுகளான ஜமைக்கா போன்றவை (அமெரிக்கா), பசிபிக் தீவுகள் முதலிய பகுதிகள்- விதந்தோதத் தக்கவை. இவையனைத்தையும் சேர்த்துக் கடல் கடந்த தமிழகம் என்றும்; பெருந்தமிழகத்துடன் சேர அனைத்தையும் ஒருங்கே மாபெருந்தமிழகம் அல்லது தமிழ் உலகம் என்றும் கூறலாம். தமிழகத்தில் தமிழர் எண்ணிக்கை, கிட்டத்தட்ட இரண் டரைக் கோடி, திருவாங்கூர்த் தனியரசில் ஏறக்குறைய இருபது இலக்கமும் (20, 00, 000), வட இலங்கையில் இருபது இலக்கமும் (20, 00, 000), கடல் கடந்த நாடுகளில் மொத்தமாக அறுபது இலக்கமும் (60, 00, 000) ஆக மாபெருந் தமிழகம் அல்லது தமிழ் உலகில் தமிழ் பேசுவோர் மொத்தத்தொகை மூன்றரைக் கோடி (3, 50, 00, 000) ஆகும். பழந்தமிழகம் இன்றைய தமிழகத்தினும் விரிவுடைய தாயிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இன்றைய தமிழ் நாட்டின் நாலு மண்டிலங்களாகிய பாண்டிமண்டிலம், சோழ மண்டிலம், தொண்டைமண்டிலம், கொங்கு மண்டிலம் ஆகிய வற்றுள், தொண்டை மண்டிலமும் பிற மண்டிலங்களுடன் அவ்வக் காலங்களில் ஆட்சி வகையில் ஒன்றுபட்ட உட் பகுதியேயாகும். மற்ற இரண்டு மண்டிலங்களே தொன்று தொட்டுத் தனி மண்டிலங் களாகத் தனி யரசாட்சியுடை யவையாய் இருந்தன. ஆனால் இவற்றுடன் ஒப்ப மூன்றாவதாகக் கருதப்பட்ட அரசே சேர அரசு; அது இன்றைய மலையாள நாட்டைக் குறிப்பது. இதிலிருந்து இன்று தமிழகத்துக்குப் புறம்பாகக் கருதப்படும் மலையாள நாட்டுப் பகுதி, வரலாற்றுக் காலத்திலேயே (1000 ஆண்டுகட்கு முன் வரை) தமிழ் நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த பகுதிகளுள் ஒன்றாகக் கருதப்பட்டு வந்ததென்பது தெளிவு. இன்று மலையாள நாட்டுப் பகுதியில் ஆளும் கொச்சி அரசர் தம்மைப் பழந்தமிழ் சேர அரசனின் வழித்தோன்றல் என்றே கொள்கின்றார். திருவாங்கூர் அரசர்கூடச் சங்ககாலத்தின் கடை எழு வள்ளல்களுள் ஒருவனான ஆய் அண்டிரன் வழிவந்தவரெனவே, அண்மையில் பல ஆராய்ச்சி யாளர் நிறுவுகின்றனர்1. இவை மட்டுமின்றித் தமிழின் மிகச்சிறந்த இலக்கியக் களஞ்சியமான சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் சேரப் பேரரசன் செங்குட்டுவன் இளவலேயாவர். அந்நூலில் செங்குட்டுவன் தமிழரசன் என்பது மட்டுமன்று, அவன் தமிழரைப் புறக்கணித்துப் பேசிய வட அரசரை அடக்கி வட நாட்டில் தமிழ்ப் பெருமையை நாட்டியவனென்றும் கூறப்படுகிறது. போக பதிற்றுப் பத்து என்ற நூல் முழுவதுமே சேர அரசரைப் பாடுவது. எனவே 1000 ஆண்டுகட்கு முந்திய பழந்தமிழகம் மலையாள நாட்டையும் உள்ளடக்கி மேல்கடல் கீழ்கடல்களையே எல்லையாகக் கொண்டு வடவேங்கடம் வரை பரவியிருந்த தென்பது பெறலாம். இதனாலேயே நன்னூலுக்கு முந்திய தமிழ் இலக்கண நூல் களெல்லாம் தமிழகத்தின் எல்லை கூறுகையில் மேற்கெல்லை குடகம் அல்லது குடகுமலை என்று கூறலாம், கட்களையே மேல்கீழ் எல்லைகளாகக் கொண்டன. “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து” என்ற தொல்காப்பியப் பாயிரச் செய்யுளில் வடதென் எல்லைகள் மட்டுமே கூறப்பட்டது காண்க. அடிக்குறிப்பு 1. உயர்திரு பி. சிதம்பரம் பிள்ளை அவர்களின் கூhந கூயஅடை டயனே வாயவ றள கூசயஎயnஉடிசந பார்க்க. 8. கடல்கொண்ட தமிழகப் பகுதி அல்லது குமரிக்கண்டம் மேலும் சிலப்பதிகாரத்திலும் தொல்காப்பியத்திலும் தமிழ் நாட்டின் எல்லையைக் குறிப்பிடும்போது, தென் எல்லையாகக் கூறப்படும் குமரியை உரையாசிரியர்கள் குமரிமுனை என்று கொள்ளாமல் குமரி ஆறு எனக் கொண்டனர். சிலப்பதிகார நூலிலும் பிற இடங்களில் வரும் செய்திகளால் குமரி என்பது ஒரு மலைக்கும் ஒரு ஆற்றுக்கும் அவற்றைச் சார்ந்த நாட்டுக்கும் பெயர்களாம் என்று அறிகிறோம். இவற்றாலும் பிற நூற் குறிப்பு களாலும் இன்றைய குமரி முனைக்கு நெடுந்தொலைவரை நிலம் பரந்திருந்ததென்றும், முதலிய மலைகளும் குமரியாறு, பஃறுளியாறு முதலிய ஆறுகளும்; குமரிநாடு, முன் பாலைநாடு, பின் பாலைநாடு முதலிய நாடுகளும் இருந்தன என்று கேள்வியுறுகிறோம்.1 இக் கூற்றுக்களை வெறும் கற்பனைக் கூற்றுக்கள் என்று சிலரும், மிகைப்பட்ட கூற்றுக்கள் என்று சிலரும் தட்டிக்கழிக்கப் பார்க்கின்றனர். ஆனால் பழைய நூல்களின் குறிப்புக்கள் பல்வேறிடத்தும் ஒருமுகப்பட்டு இதனை வலியுறுத்துகின்றன. புறநானூற்றின் பாட்டு ஒன்றில் ஓர் அரசனுக்கு வாழ்த்துக் கூறப்படும் இடத்தில் ஒரு புலவர், “நின் வாழ்நாள் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” ஆகுக என வாழ்த்துகின்றனர். பஃறுளியாறு குமரி ஆறுபோல் இயற்கையாறு அன்று, வெட்டப்பட்ட ஆறு என்றும், அதை வெட்டிய அரசன் இன்னான் என்றும் கூறி, அவனைச் சிறப்பிக்கும் பாடலும் ஒன்று உள்ளது. இவற்றால் இவ்வாறுகள், மலைகள், நாடுகள் வரலாற்றில் இடம் பெற்ற உண்மைச் செய்திகளேயன்றிக் கற்பனைகளோ மிகைக் கூற்றுகளோ அல்ல என்பது உறுதி. மேலும் கற்பனையும் மிகைக் கூற்றும் சீவக சிந்தாமணி, கம்பராமாணயம் முதலிய நூல்கள் காலத்திற்கும் பிற்பட்ட காலத்திற்கும் உரிய இலக்கியத்தின் இயல்பேயன்றிச் சங்க கால இலக்கியத்தின் இயல்பு அன்று! பழந்தமிழ் இலக்கியம், தற்கால மேலை நாட்டிலக்கியத்தினும் வாய்மையும் இயற்கையுடனொத்த சிறப்பும் பொருந்திய தென்பதை அதனை மேற்போக்காகக் கற்பவரும் காணாதிரார். இன்று நாம் சங்க இலக்கியம் என்ற பெயரால் உணரும் நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்ற வகைகளுக்குட்பட்ட தொகை நூல்களேயாகும். இவற்றுள் தமிழர் பொதுமறைகளான திருக்குறளும் நாலடியும் அடங்கும். அகச் சான்று புறச்சான்றுகளுதவியால் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டு தமிழ்க் காப்பியங்களும் இக் காலத்தவையே என்று கூறலாகும். இந் நூல்கள் எழுவதற்குக் காரணமான சங்கத்தை தமிழ் மரபு, கடைச்சங்கம் என்று கூறுகின்றது. இச் சங்கத்துக்கு முன்பே தலைச்சங்கம், இடைச்சங்கம் என இரு சங்கங்கள் இருந்தன என்று இறையனார் அகப்பொருள் என்ற நூலின் உரை கூறும். பிற உரையாசிரியர்களும் இக் கூற்றை ஏற்று அதன்வழி நின்றனர். அண்மையில் குமரிநாடு முதலிய தென் கடற்பகுதிகளின் வாய் மையை ஐயுறுவோர், இச் சங்க வாழ்வையும் ஐயுறவும் மறுக்கவும் செய்வதுண்டு. ஆயினும் தமிழ் மரபுக்கும் ஒருசார்பற்ற ஆராய்ச்சிக்கும் ஒத்த முடிவுகள் இவ் விரண்டையும் வலியுறுத்துபவையே யாகும். கடைச்சங்கம் இருந்ததாகக் கூறப்படுவது பாண்டியன் பின்நாளைய தலைநகரமாகிய மதுரையிலேயே. வரலாற்றுக் காலங்களிலேயே மதுரைக்கு முற்பட்டுக் கொற்கை, பாண்டியன் தலைநகராயிருந் ததாக அறிகிறோம். கொற்கைக்கு முற்பட்ட தலைநகர் மணலூர் என்றும், அதனினும் முற்பட்டு இடைச்சங்க காலத்தில் கபாட புரமும், தலைச்சங்க காலத்தில் குமரிக் கரையிலுள்ள தென் மதுரையும் தலைநகர்களாகவிருந்தனவென்று உரையாசிரியர்கள் குறிக்கின்றனர். இக் கூற்றுக்களுடன் வடமொழி பாரத ராமாயண நூல் குறிப்புக்கள் முற்றிலும் பொருத்த முடையவையாயிருக் கின்றன. பாரதத்தில் பாண்டியன் தலைநகர் மணலூர் (மணவூர்) என்றும், இராமாயணத்தில் அவன் தலைநகர் கபாடபுரம் என்று கூறப்படுகின்றது. தற்காலச் செடியியலும் (க்ஷடிவயலே), விலங்கியலும் (ணடிடிடடிபல), நிலத்தோற்ற இயலும் (ழுநடிடடிபல), ஒருங்கே தென்கடற்பகுதி முன் தென்னாட்டுடன் சேர்ந்த ஒரு பெருநிலப்பரப்பாயிருந்ததென்றும் பல்லாயிர ஆண்டுகளாகப் படிப்படியாகக் கடலுள் ஆழ்ந்து அப்பகுதி தென்னாடாயிற் றென்றும் கூறுகின்றன. இப்பெரு நிலம் பல கடல் கோள்களால் படிப்படியாக அமிழ்ந்த செய்தி தமிழ் நூல்களில் குறிக்கப்படுவதுடன், வடநாட்டுப் புராணங் களிலும் குறிக்கப்படுகின்றன. அறிவியலாராய்ச்சியும் இதனைக் கணக்கிட்டு, இன்ன காலத்தவை என்று அறுதியிடுவதால் இச் செய்தி ஒரு சார்பற்றவர் அனைவர்க்கும் ஒப்பமுடிந்த முடிபேயாகும் என்னலாம். இவ்வாறு பழந்தமிழகம் மலையாள நாட்டில் மட்டுமன்றித் தென்கடற் பகுதியிலும் பரவியிருந்தது என்று காணலாம். இன்றைய வட இலங்கைப்பகுதி இன்று கடலால் தமிழகத்தி லிருந்து பிரிக்கப் பட்டிருப்பினும், உண்மையில் முன்காலத்தில் (இராமாயண காலத்துக்கு முன்) தமிழகத்துடன் தொடர்ந்த ஒரு பகுதியேயாயிருத்தல் வேண்டும் என்று கூறலாம். அடிக்குறிப்பு 1. இந்நூல் ஆசிரியர் எழுதிய குமரிக் கண்டம்; உயர்திரு. கந்தையாபிள்ளை அவர்களின் தமிழ் இந்தியா; திராவிட பிரகாசிகை ஆகியவை காண்க. 9. திராவிடமும் இந்திய பெருநிலப்பரப்பும் உலகின் நாகரிக வளர்ச்சியில் ஓரிரண்டாயிரம் ஆண்டு களாகத் தமிழ் பெரிதும் தனித்துப் பிரிந்து நின்றே வருகிறது. இத் தனி வாழ்வின் காரணமாக இக் காலத்திற்குள்ளேயே பழந்தமிழ் நாட்டின் ஒரு பகுதியான மலையாள நாடும் அதன் மொழியும் தனி மொழியாகவும் நாடாகவும் பிரிந்தன. வரலாற்றிற்கு முந்திய (தொல்காப்பியத்துக்கு முற்பட்ட) காலத்தில் இதுபோலவே வேறு நாடுகளும் பிரிந்திருக்க வேண்டும் என்று எண்ண இடமில்லாமலில்லை. ஏனெனில் கன்னடம், துளு, குடகம் முதலிய மொழிகளும் தெலுங்கு மொழியும் இன்று தனி மொழிகளாயினும், தமிழுடன் மிக நெருங்கிய தொடர்புடைய மொழிகள் என்பதைக் கால்டுவெல் முதலிய ஆராய்ச்சியாளர் நிலைநாட்டியுள்ளனர். இவற்றில் பெருவரவாகப் புகுந்த வடசொற்கள் இவையனைத்திற்கும், வட நாட்டுத் தாய்மொழி களுக்கு, வடமொழிக்கும் பொதுவானவை, ஆதலால் அவை இம்மொழிகளுக்கு (திராவிட) உரியவை என்பது தெளிவு. அச் சொற்கள் நீக்கி அம்மொழியின் தனிச்சொற்களை ஆராய்ந்தால் அவை அனைத்தும் தமிழின் வேர்ச் சொற்களுடனும் (முதற்பகுதி களுடனும்) இலக்கண அமைதிகளுடனும் பெரிதும் ஒத்திருப்பது காணலாம். இவ் வொற்றுமையால் இவையனைத்தும் தமிழின் திரிபுகள் என்று கொள்வது சற்று மிகைபட்ட விரைந்த முடிபு ஆகும் என்பது உண்மையாயினும், இவையனைத்தும் ஒரே மூலமொழியின் திரிபுகள் என்று கொள்வது பொருத்தமுடைய தென்பதில் ஐயமில்லை. இவை யனைத்தையும் சேர்த்து ஒருங்கே குறிக்க இப்போது ‘திராவிட’ என்ற சொல் வழங்கப்படுகிறது. வடமொழி வழக்கில் திராவிடம் என்ற சொல் தனிப்படத் தமிழைக் குறிக்கவே வழங்கிய சொல் ஆகும். சிவஞான முனிவர், சிவஞான போதத்துக்கு எழுதிய தமிழ்ப் பேருரை திராவிட மாபாடியம் (த்ராவிட மஹா பாஷ்யம்) என்றும், ஆழ்வார்கள் நாலாயிரமும் தேவார திருவாசகமும் முறையே திருமால் நெறி யினராலும், சிவநெறியினராலும் திராவிட வேதம் என்றும் கூறப்படுதல் காண்க. இதுபோல் மலையாளம் கேரளம் என்றும், கன்னடம் கர்நாடகம் என்றும், தெலுங்கு ஆந்திரம் என்றும் வழங்கும். ஆயிரம் ஆண்டுகட்கு முன் தென்னாட்டு மொழிகளைப் பற்றிக் கூறிய வடமொழி அறிஞரான குமாரில பட்டர் தென்னாட்டு மொழிகளாகத் திராவிட ஆந்திரம் என்ற இரண்டு மொழிகளையே குறிக்கிறார். இதிலிருந்து அக் காலத்தில் மலையாளம் கன்னடம் முதலிய மொழிகள் தனி மொழிகளாகப் பிரியாது கொடுந்தமிழ் நிலையிலேயே இருந்தனவென்று காணலாம். முற்கால கன்னட (பழ அல்லது ஹள கன்னட) நூல்களும், முற்கால மலையாள (பச்ச மலையாள) நூல்களும் இதற்கேற்ப வட எழுத்துக் கூட எழாத தமிழ் நடையிலேயே எழுதப்பட்டிருந்தன. கால்டுவெல் முதலிய மொழி நூலாராய்ச்சி யாளரும் மலையாளம் கன்னடம் துளுவம் குடகம் முதலிய மொழிகள் தெலுங்கைவிடத் தமிழையே பெரிதும் ஒத்திருந்ததால், அவை திராவிட இனத்தில் தமிழ்க்குழுவைச் சார்ந்தவை என்றே கூறுகிறார்கள். திராவிட இனமொழிகளுள் தமிழினின்று நெடுந்தொலை பிரிந்து விட்ட மொழி தெலுங்கேயாகும். தற்கால வடமொழி அடிமைப் பற்றின் காரணமாகப் பலர் தெலுங்கை வடமெழிச் சிதைவென்று கூடச் சாதிக்க முயன்றனர். அறிவியலூழியாகிய இந்நாளில் இது கானல் நீரென உருக்குலைந்து போயிற்று. மேலும் தெலுங்கு நாட்டுக்கும் அப்பால் வங்க நாட்டிலும், நடு இந்திய மாவட்டத்திலும் உள்ள திருந்தாத் திராவிட இன மொழிகள், தெலுங்கை விடத் தமிழையே பெரிதும் ஒத்திருக்கின்றன. வட மேற்கிந்தியாவிலுள்ள பலூச்சி மொழியும் இவ்வாறே. எனவே மொழியாராய்ச்சி முன்னேற முன்னேற, திராவிட மொழிகளுள் தமிழ் நீங்கலாக மற்ற எல்லா மொழிகளை யும்விடப் பழமை மிக்கதாகத் தெரியவருகின்ற இத் தெலுங்கும், மிகத் தொன்மையான (தொல்காப்பியத்துக்கும் முந்திய) காலத்தில் தமிழினின்று பிரிந்து தனிப்பட வளர்ச்சியுற்றுத் தனிமொழியான ஒரு கொடுந்தமிழ் மொழியே யென்பது இன்னும் தெளிவாக விளங்கக்கூடும். வருங்கால ஆராய்ச்சியாரால் திராவிட மொழிகளில் திருந்திய திராவிட மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், துளு, குடகம், தெலுங்கு முதலியவைகள் பேசப்படும் இந்தியப் பகுதியைப் பண்பாட்டு முறைப்படி திராவிடநாடு அல்லது பழம் பெருந் தமிழ்நாடு என்று கூறலாம். இது கிட்டத்தட்ட இன்றைய சென்னை மாவட்டத்தையும், திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை, மைசூர் முதலிய தனியரசுகளையும், பம்பாய் மாகாணம், ஐதராபாத் தனியரசு ஆகியவற்றின் பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். திராவிட நாட்டுக்கு வடக்கில், வட இந்தியப் பகுதிகளிலும் மேல்கீழ் எல்லைக்கோடு வரை தனித்தனித் தீவுகளாகப் பழங்குடி மக்கள் இன்னும் தங்கித் திருந்தா நிலையிலுள்ள திராவிட மொழிகள் பேசி வருகின்றனர். இவையும் இமயமலை அடிவாரத்திலுள்ள காஷ்மீரி, நேபாளி, பூட்டானி முதலிய மொழிகளும் வட நாட்டினரால் முற்றிலும் அயல் மொழிகள் என்ற முறையில் ‘பேய் மொழிகள்’ (பிசாசு பாஷா) என்று கூறப்பட்டன. இவைகூட ஒரு காலத்தில் மிகத் திருந்திய நிலையிலிருந்தன என்று கொள்ளக் கூடும். ஏனெனில் வடமொழியில் இன்று ‘ப்ருகத்கதா, கதா சரித் சாகரம், பஞ்ச தந்திரம்’, தமிழில் ‘பெருங்கதை’ பாரதிதாசன் ‘புரட்சிக்கவி’ ஆகிய பரந்த இலக்கியத் துறைக்கு முதனூலாகக் கருதப்படும் பில்கண மாகவிஞரின் பிருகத் காவியம் பேய் மொழிகளுள் ஒன்றிலேயே முதலில் எழுதப்பட்டதாம்! ‘திராவிட நாடு’ எனச் சிறப்பாகக் குறிக்கப்படும் இந்தியத் தீவக்குறைக்கு (ஞநniளேரடய) அப்பாலுள்ள சிந்து கங்கைப்பகுதி, ஆரிய இனம், ஆரிய மொழி, ஆரியப் பண்பாடு ஆகியவற்றுக்கு நிலைக்களமாக, ஆரியாவர்த்தம் என வட நாட்டாரால் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. ஆயினும், இவற்றிலும் திராவிடப் பண்பாடு மிகுந்தும் குறைந்தும் கலந்துள்ளது என்பதை வரலாற்று அறிஞரும் மொழியாராய்ச்சி வல்லுநரும் இப்போது ஒத்துக்கொண்டும் எடுத்துக்காட்டியும் வருகின்றனர். மராத்தியும், ஒரியாவும் சிறப்பாகத் தெலுங்குப் பண்பாடு கலந்தவை என்றும்; பிற வட இந்தியப் தாய் மொழிகளிலும் வட மொழியினும் பழம் பாகதம், பாளி ஆகியவற்றிலும், பழைய வேத சொற்களும் திராவிட இலக்கிய அமைதிகளும் மலிந்து காணப்படுகின்றன என்றும் பாண்டர்கார், முக்கர்ஜி முதலிய வடநாட்டறிஞரும், மாக்டானல், கிரியர்ஸன் போன்ற மேனாட்டறிஞரும் விளக்கியுள்ளனர். இருக்கு வேதத்திலேயே தெளிந்த திராவிட வேர்ச்சொற்கள் 11-க்கு மேல் காணப்படுகின்றன என்று பாண்டர்கார் கூறுகின்றார்! இவற்றைத் தெலுங்கு மொழியாராய்ச்சியாளர் முதற்கொண்டு மேற்கொண் டுள்ளனர். எனவே, தமிழ்மொழியும் பண்பாடும் தமிழகத்துக்கும் திராவிடத்துக்கும் சிறப்புரிமையானவையாயினும், இந்தியா முழுமைக்குமே பழம்பரப்புக் காரணமாகப் பொது உரிமை உடையவை என்பது தெளிவு. அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மொகஞ்சதாரோ, ஹரப்பாப் புதைபொருள்களின் ஆராய்ச்சியால் இவ்வுண்மைகள் இந்திய நாட்டுப் பழமை ஆராய்ச்சிக்கு உயிர் நிலையான செய்திகள் என்பது வலியுறுத்தப்படுகிறது. சிந்து வெளி நாகரிகத்தின் முழு விவரமும் இன்னும் தெளிவுபடுத்தப்பட வில்லை. எனவே இன்றைக்கு 6000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழக நிலையைப் பற்றி அவற்றின் மூலம் அறியப்படக் கூடும் உண்மைகள் அறுதியிட்டுக் கூறுமாறில்லை, ஆயினும் இன்று ஆரிய நாகரிகம் என்று கொள்ளப்படும் சமய, அறிவியல், கலைக் களஞ்சியங்கள் அத்தனையிலும், முற்றிலுமன்றாயினும், மிகப் பெரும் பகுதியேனும் தமிழர்க்கும் திராவிடர்க்கும் உரிய முதலுரிமையே என்பது பெறப்படும். 10. தமிழகமும் இந்திய வரலாற்றாசிரியரும் இந்தியப் பெருநிலப் பரப்பின் வரலாறு எழுதுவோர் தென் இந்தியாவை, இந்தியாவில் ஒரு பகுதி, அதுவும் தனித்துப் பிரிந்து நிற்கும் ஒரு சிறு பகுதி என்று கொண்டு அவ்வளவிலேயே அதில் கவனம் செலுத்துகின்றனர். இந்தியப் பரப்பின் மிகப்பழைய மொழியும் இலக்கியமும், மிகப்பழைய பண்பாடுகளும், சமய நெறிகளும் தோற்றுவித்த இந்தியப் பரப்பின் உயர்நிலை அது என்பதை அவர்கள் உணர்வதில்லை. பல சமயங்கள், மொழிகள், பழக்க வழக்கங்கள், அரசியல் முறைகள் நிறைந்து ஒரு கண்டமோ அல்லது ஒரு குட்டி உலகமோ என்று கொள்ளத்தக்க இப் பரப்பில், உண்மையில் ஒற்றுமையும் வளர்ச்சியும் காண விழைவோர் அவ் வகையில் வடநாட்டைத் தேடிப் பயனில்லை. அத்தகைய ஒருமைப் பாட்டிற்கான அடிப்படை உண்மை, தமிழகத்தின் பண்பாடேயாகும். இன்று இந்தியாவில் பெரும்பான்மையாகக் காணப்படும் உடல் அமைப்பும் முக வெட்டும், தென் இந்தியர் உடலமைப் பையும் முகவெட்டையுமே ஒத்திருக்கின்றன. இந்தியாவுக்குச் சிறப்பான கலைகள் சிற்பம், ஓவியம், குழைவுக்கலை (ளுஉரடயீவரசந), இசை, நாட்டியம், நாடகம் முதலியவை யாவும் திராவிட அடிப்படையே யுடையவை. இன்றும் திராவிட நாட்டிலும் சிறப்பாகத் தமிழ் நாட்டிலுமே அவை பெருவழக்காயுள்ளன. வடமொழி, பாகத, பாளி மொழிகளில் கூடப் பெரும்பகுதி தென் இந்தியக் திராவிடராலும் வட இந்தியாவில் ஆரியருடம் கலந்த திராவிடராலும் ஏற்பட்டவையே. சமய வகையில் வடநாட்டிற்கு அன்பு நெறியே (பக்தி மார்க்கத்தை)ப் புகட்டியது தென் நாடே. அறிவு நெறியில் இந்தியாவில் தலைமை வகிக்கும் நெறிகள் நான்கனுள் மூன்று தமிழகத்திலேயே தோன்றியவை. அவை, சங்கரர் மாயாவாத அல்லது கேவல அத்துவித நெறி, சிவநெறி அல்லது சுத்த அத்துவித நெறி, இராமானுசர் திருமால் நெறி அல்லது விசிட்ட அத்துவித நெறி ஆகியவை. மீந்த ஒன்றாகிய மாத்துவர் துவித நெறி கூடக் கன்னட நாட்டில் தோன்றியது. மேலும் இவற்றுக்கு ஆதாரமான உபநிடதங்களும், சமண புத்த நெறிகளும் வடநாட்டில் எழுந்தவையாயினும், வடநாட்டுத் திராவிடரான அரசர் வழியினரால் (சத்திரியரால்) தோற்றுவிக்கப்பட்டவையே. வடமொழி கூடத் தூய்மைமிக்க சிந்துவெளி ஆரியரால் தோற்றுவிக்கப்பட்டதன்று. திராவிட மயமான கங்கை ‘ஆரியரால்’ தோற்றுவிக்கப்பட்டது. சமய நெறியைப் போலவே மொழி வகையிலும் இலக்கிய வகையிலும் வடமொழி வளர்ச்சி பெரிதும் தமிழ் வளர்ச்சியைப் பின்பற்றிய தென்பது எக்காரணம் கொண்டோ இன்னும் ஆராய்ச்சியாளர் கவனத்தை ஈர்க்க வில்லை! தமிழிலக்கியத்தின் காலவரையறை நெடுநாட் பிழைபட்டு உரைக்கப்பட்டிருந்தே இதற்குக் காரணமாகும். வடமொழியில் தமிழைப் பின்பற்றியே பாட்டில் எதுகை, மோனை, ஓரெழுத்து மோனை ஆகியவை பிற்காலத்தில் மலிந்தன. சமய இலக்கியங்கள், கலை இலக்கியங்கள் பலவும், அறிவியல் துறைகள் பலவும் தமிழிலிருந்தே, அழிந்துபோன வடநாட்டுத் திராவிட மொழி இலக்கியங்களி லிருந்தோ மொழி பெயர்க்கப்பட்டவையேயாகும். இவ்வுண்மையை ஒரே காலத்துள்ள வடமொழி தென்மொழி இலக்கியங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதாலும், பிற ஆரிய இனங்களின் வரலாறுகளைத் துருவி ஒப்பிடுவதாலும் அறியலாம். ஆரியர் தனி நாகரிகம், ஆரியர் பிற மக்களுடன் (சிறப்பாக நாகரிக மிக்க திராவிட செமித்திய மக்களுடன்) கலவாத இடத்தில் அவர்களிடையே காணப்படும் நாகரிக மட்டுமேயாகும். நாகரிகத்தில் இந்திய, கிரேக்க, ரோம ஆரியர் மட்டுமே முன்னேறினர் என்பதன் காரணம், பிற ஆரிய மக்களைவிட அவர்கள், திராவிட செமித்திய இனத்தவருடன் நெருங்கிய உறவு கொண்டனர் என்பதாலேயே, கிரீஸிலும் இத்தாலியிலும் ஆரிய நாகரிகம் எப்படி அந் நாட்டுப் பழங்குடிகளின் நாகரிகமாகுமோ, அதுபோல் இந்தியாவிலும் ஆரியர் நாகரிகம் உண்மை யில் தமிழர் அல்லது மற்றத் திராவிட வகுப்பார் நாகரித்தின் மறு பெயர்ப்பேயாகும். ஆரிய நாகரிகத்தில் நேரடியாகத் தமிழரிடமிருந்தே பகர்ந்து கொண்ட சில பகுதிகள் குறிக்கப்படுதல் நலம். வடமொழியில் ரஸம் பாவம் என்பவை பற்றிய கோட்பாடுகள் கி. பி. 9-வது நூற்றாண்டிலேயே எழுந்தன. தமிழில் தொல்காப்பியர் காலத்திலேயே மெய்ப்பாடுகள் ஆராய்ந்துணரப்பட்டன. எனவே வடமொழியாளரைவிட ஆயிரம் ஆண்டுகட்கு மேற்பட்ட பழங்காலத்திலேயே இக் கொள்கைகள் தமிழகத்தி லிருந்தன. வடமொழி இலக்கணத்தில் எழுத்திலக்கணமும் சொல்லிலக் கணமும் மட்டுமே உண்டு. யாப்பும் அணியும் தனித்துறைகளாகப் பிற்காலத்தில் விரிக்கப்பட்டன. தமிழிலோ அவை தொன்று தொட்டுத் தொல்காப்பியத்துக்கு முந்தியகால முதற்கொண்டே இலக்கணத்தின் பகுதியாக அமைந்துள்ளன. மேலும் தமிழிலுள்ள பொருளிலக்கணம் இன்றுவரைகூட வட மொழியில் பகர்க்கப் படவில்லை. ஆயினும் முற்கால வட மொழிக் கவிஞரான பாஸன், காளிதாசன் போன்றவர்கள் தமிழ்த் திணைநெறி பிறழாது நூலியற்றியது, அவர்கள் உள்ளத்தில் தமிழ் இலக்கியப் பண்போ தமிழ் இலக்கண அறிவோ நன்கு வேரூன்றியிருக்க வேண்டும் என்பதைக் காட்டும். மேற்கூறியவற்றால் தமிழ், இந்தியத் தாய்மொழிகளுள் ஒன்று மட்டுமன்று; வடமொழியை ஒத்த சிறப்புடைய மொழி மட்டும் கூட அன்று; வடமொழியினும் வேறெம் மொழியினும் மேலாக இந்தியாவின் பண்டைப் பெரும் செம்மொழி என்று இந்தியர் யாவராலும் மேற்கொள்ளத்தக்கது. தமிழின் இந் நிலை அறியப் படாதது தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமன்றி, இந்தியாவுக்கும் உலகுக்குமே ஒரு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை! 11. உலக மொழிகளில் தமிழுக்குரிய இடம் நிலப் பரப்பையோ மக்கள் தொகையையோ மட்டும் பார்த்தால் உலக மொழிகளிடையே தமிழுக்குத் தனிச்சிறப்புக் கூறுவதற்கில்லை. சீனமொழி 40 கோடி மக்களாலும், ஆங்கிலம் 22 கோடி மக்களாலும் பேசப்பட்டு வருகின்றன. மற்றும் பேரரசின் பரப்பினாலும் உலக வாணிக வளத்தாலும் ஆங்கிலம் முதன் மொழியாக நிலவுகிறது. இவற்றுடன் தமிழ் நிகராக எண்ணப் படுவதற்கில்லை. ஆங்கிலத்துக்கடுத்தபடியாக இன்றைய உலக நாகரிக நிலையில் உயர்வுடைய பகுதியான மேலை ஐரோப்பாவின் மொழிகளான ஜெர்மனும், பிரஞ்சும், அறிவியல் கலைப் பரப்புக் காரணமாக ஆங்கிலத்துடன் சேர்த்துத் தற்கால முதன் மொழிகளாகக் கருதப்படுகின்றன. இந்தியப் பரப்பில்கூட உருது, இந்தி ஆகியவை கிட்டத்தட்ட 6 கோடி மக்களாலும் வங்காளி 5 கோடி மக்களாலும் பேசப்படுகின்றன. தற்கால மொழி என்ற முறையில் பெறப்படாத உயர்வு தமிழுக்குத் தொன்மொழி என்ற நிலையில் பெறப்படலாம் என்று நாம் கருதக்கூடும். தென்மொழிகளில் மக்கள் வாழ்க்கைக்கு நிலையான பயனுடையவையாய், முக் காலத்தும் அதன் வழிகாட்டிகளாய் இயங்கும் மொழிகள் உயர்தனிச் செம்மொழிகள் (ஊடயளளiஉயட டயபேரயபநள) எனப்படும். கிரேக்க மொழியும் இலத்தீன் மொழியும் ஐரோப்பியரால் உயர்தனிச் செம்மொழிகள் எனப் போற்றப்படுகின்றன. இன்று வடமொழியும் அவற்றுடன் ஒப்ப உயர்தனிச் செம்மொழி என்று ஏற்கப்பட்டிருக்கிறது. உலகின் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் கிரேக்க இலத்தீன் துறைகளுட னொப்ப வடமொழிக்கும் தனித்துறை வகுக்கப்பட்டுள்ளது. இம் மும்முதன் மொழிகளுக்கும் அடுத்தபடியாக உலகப் பெருஞ் சமயங்களின் தாயக மொழிகளாயின எபிரேயம், அரபு முதலி யவையும் பாரசீகமும் இடம் பெறுகின்றன. உயர்தனிச் செம் மொழிகள் நிலையிலன்றாயினும் வரலாற்றுச் சிறப்பும், இடச் சிறப்பும் உடையவையாக ஜஸ்லான்டிக், காதிக், பழம்பாரசீகம் முதலிய சில்லறைத் தொன்மொழிகள் இயங்குகின்றன. மேற்கூறிய சிறப்புடைய மொழிகள் நீங்கலான மற்ற மொழிகள் தாய் மொழிகள் என்ற முறையிலேயே மதிக்கப்படுகின்றன. இவற்றிலும் இலக்கிய சிறப்புடையவை, பண்பட்டவை, பண்படாதவை என்ற பாகுபாடுகள் வேண்டும். இப் பாகுபாடுகளில் தமிழ் எத்தரத்தில் வைக்கத்தக்கது, எத்தரத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பவை பற்றித் தமிழரும் கவலைப்படவில்லை; பிறரும் கருத்தூன்றி ஆராய இடமேற் படாதிருக்கின்றது. நாட்டு வரலாற்றாராய்ச்சியும் இலக்கிய வரலாற்றாராய்ச்சியும் தொடக்க நிலையிலிருந்த காலத்தில் தமிழ் இலக்கியம் மற்ற வட இந்திய, தென் இந்திய மொழிகளினும் பழமையுடையது என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அது எவ்வளவு தொலைவு பழமையுடையது என்பது உணரப்படாமலே இருந்தது. தமிழில் பெரும்பற்றுடைய கால்டுவெல், போப் ஆகியவர்கள்கூட இன்றிருக்கும் தமிழிலக்கியத்தின் மிகப் பழமை வாய்ந்த திருக்குறள், சங்க இலக்கியம் ஆகியவற்றின் காலம் எட்டாம் நூற்றாண்டு என்றே கருதியிருந்தனர். அவை கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவையென்பதும், தொல்காப்பியம் அவற்றினும் மிகத் தொன்மை வாய்ந்ததென்பதும் இப்போது தெளிவுபட்டுள்ளது. தமிழில் இக் காலத்துக்கு முன் இலக்கியமே இல்லை என்று கொண்டால் கூட, இந்தியாவில் தமிழ் வடமொழி நீங்கலான மற்றெல்லா இலக்கியங்களுக்கும் தமிழ் ஆயிர ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் முற்பட்டதாகும். இக் காலத்திலும் பழமையுடைய உலக இலக்கிய மொழிகள் உயர்தனிச் செம்மொழிகளுள் முதன் மூன்று மொழிகளும் எபிரேயமும் மட்டுமேயாகும். ஆனால் தமிழில் தொன்மை மிக்கவை என்று நாம் கொள்ளும் நூல்களுள் எதுவும் கலைப்பண்பாட்டு வகையில் தொடக்கக்கால இலக்கியத்தைச் சார்ந்த நூலாகக் காணவில்லை. தொடக்கக் கால நாகரிகத்தைக் குறிப்பதாகவும் இல்லை. முதல் இலக்கிய நூலான திருக்குறள், அன்றும் இன்றும் தமிழகத்தில் மட்டுமன்றி உலகிலேயே ஒப்பும் உயர்வுமற்ற தனிப்பெருநூல். தொல்காப்பியமும் இன்றிருக்கும் இலக்கணங்களுள் பழமை யுடையதாயினும் பிற்கால இலக்கண நூல்கள் அனைத்தையும் விட விரிவானது. சங்க இலக்கிய நூல்களும் முற்ற வளர்ந்த ஓர் இலக்கியத்தின் சிதறிய துணுக்குகளின் தொகைகளேயாம். மேலும் தொல்காப்பியத்துக்கு முன்னும் விரிந்த இலக்கண இலக்கியங்கள் இருந்தன என்பதை அதில் காணப்படும் அகச்சான்றுகளாலேயே உய்த்தறியலாம். மரபுடையோ இதற்கு நெடுங்கால முன்னதாகவே இருபெருஞ் சங்கங்கள் இருந்ததாகவும், இன்றிருக்கும் இயல் பகுதி மட்டுமன்றி அக் காலத்தில் இசை, நாடகம் என்ற இரு வேறு பெரும் பிரிவு களிருந்ததாகவும் குறிப்பதுடன், அத்தகைய நூல்கள் பலவற்றின் பெயர்களும் பகுதிகளும் மேற்கோளுரைகளும் தருகின்றது. இவற்றை ஒரு சார்பின்றி நோக்குவோர் தமிழிலக்கியம் உண்மை யில் வடமொழி இலக்கியத்தினும் மற்றெவ்விலக்கியத்தினும் மிக்க தொன்மையுடையதாயிருந்திருக்க வேண்டும் என்பதைக் காணாதிரார். ஆகவே தமிழில் தொன்மை ஒன்றை நோக்கினாலும் உயர் தனிச் செம்மொழிகளுள் அது இடத்பெறத் தக்கது என்பது தெளிவு. ஆனால் அதன் தனிச்சிறப்பு இதனுடன் நின்றுவிட வில்லை. இலக்கியப் பரப்பிலும் இலக்கியச் சிறப்பிலும் அதற்குத் தனி உரிமைகள் உண்டு. அதனோடு பிற உயர்தனிச் செம்மொழிகள் அனைத்தும் இறந்துபட்ட மொழிகளாயிருக்க, தமிழ் ஒன்று மட்டும் இன்றும், உயிருடனியங்குவதுடனன்றி, இன்னும் எத்தனையோ தடங்கல்களையும் புறக்கணிப்புகளையும் பூசல்களையும் தாண்டி வளம்பெற்று வளரத்தக்க நிலையை உடையதாகவே இருக்கிறது. உயர்தனிச் செம்மொழிகளில்கூட அரிய இன்னொரு உலகப் பொதுப் பயனும் தமிழுக்கு உண்டு. அதுவே அதன் பண்பாட்டு, வரலாற்றுச் சிறப்பு ஆகும். தமிழ், தமிழரின் தாய்மொழி மட்டுமன்று; திராவிட மொழிகளிடையே தொன்மை மிக்க மொழியாகும். அதனைத் திராவிடத்தாய் என்று கூறப் பலர் தயங்கினும், தாய்மைப் பண்பு மிக்க மூத்த மொழி என்பதனை எவரும் மறுப்பதற்கில்லை. இந்தியப் பெருநிலப் பரப்பெங்கும் பரந்து கிடக்கும் திராவிடப் பண்படா மொழிகளுடன் ஒப்பிட்டு நோக்குபவர்களுக்கு அது திராவிடத் தாய்மொழிக்கு மிக்க அண்மை நிலை உடையதென்பது விளங்கும். மேலும் திராவிடம் மட்டிலுமன்றி இந்திய மொழிகளிலும் தமிழ் தொன்மை மிக்க மொழி. அதன் பொதுப் பண்பினை இந்திய மொழிகள் அனைத்தின் வளர்ச்சி முறையிலும் வடமொழி வளர்ச்சியிலும்கூடக் காணலாம். சில இடங்களில் இந்தியாவுக்கு வெளியிலுள்ள பிற ஆரிய மொழி களுடனும், ஆரியமல்லாப் பிற இன மொழிகளுடனும் அது கொண்டுள்ள உறவைக் கண்டு கால்டுவெல் போன்ற பேராராய்ச்சியாளர் உலகின் முதன் மொழிக்கும் அது அண்மையுடையதென்றும், பல மொழிகளுக்கு மட்டுமன்றிப் பல இனம் தாய்மொழிகளுக்கும் அது பாலமாயமையத்தக்கதென்றும் கூறுகின்றனர். நான்காவதாக இந்திய சமயத்துறையின் அடிப்படைக் கருத்துக்களையும், இந்திய நாகரிகத்தின் வித்துக்களையும் தமிழ், தமிழக, தமிழ்ப் பண்பாட்டாராய்ச்சி மூலமே காணலாகும். இத்தனை வகையிலும் தொன்மொழி என்ற முறையிலும், தற்கால மொழி என்ற வகையிலும் தனிப்பெருமை உடைய தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழி எனவும், முதன்மொழி எனவும் கொள்ளாதது வியப்புக்கிடமான செய்தியேயாகும். தமிழர் இன்றைய அடிமை நிலையே உலக மக்கள் இம் மொழியின் தகுதியை ஏற்க முடியாது போனதற்குக் காரணம் என்று கூறலால் வடமொழி போல் தமிழ் இறந்த மொழியா யிருந்தால்கூட அது இன்று ஒருவேளை உலகின் தொன்மொழிகளுள் இடம் பெற்றிருக்கக் கூடும். தமிழர் இறந்தவருடனும் எண்ணப் படாது வாழ்பவருடனும் எண்ணப்படாத நிலையிலிருப்பதனால் போலும், தமிழ் இறந்த மொழிகளுள்ளும் உரிய இடம் பெறாது, வாழு மொழிகளுள்ளும் இடம் பெறாது இரண்டுங் கெட்டான் நிலையில் நிற்க நேர்ந்தது! தமிழர் இறந்தகாலப் பெருமையை மக்கள் உணரத் தடையாயிருப்பது, அவர்கள் நிகழ்கால இழிநிலையே. தமிழிளைஞர் தமிழகத்தின் வருங்காலத்தை மேம்படுத்தப் பாடுபட்டால், பழங் காலப் புகழ் உலக மக்கள் காதில் பழம் புராணமாகத் தோன்ற மாட்டாது; புராணக் கூற்றுக்கள் போல நம்பகமற்றதாகவும் இராது. தமிழில் உண்மை அன்பும் அதன் பழம்பெருமையில் நம்பிக்கையுமுடையவர்கள் புதுப்பெருமை உண்டுபண்ண முயலாவிட்டால், அவர்கள் பற்றும் பெருமையும் போலிப்பசப்புக்களேயன்றி வேறல்லவென்று கூறலாம். 12. தமிழன் குறைபாடுகள் - இடைக்காலம் தமிழ்மொழி, தமிழிலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் குறைகளைத் தமிழர் யாவரும், சிறப்பாக வருங்காலத் தமிழகத்தின் படைப்பாளர்களான தமிழிளைஞர்கள், தமிழ் நங்கையர்கள் அறிதல் இன்றியமையாதது. இக் குறைகளை மூன்று பெரும் பிரிவுகளாக வகுக்கலாம். ஒன்று இடைக்காலத்தில் அதன் வளர்ச்சி குன்றி நலிந்த வகைகள், அவற்றுக்குக் காரணமாயிருந்த உள்ளார்ந்த வழுக்கள், அந் நலிவால் ஏற்பட்ட பயன்கள் ஆகியவை. இரண்டாவது, உலக நாகரிகப் போக்கில் தமிழன் பின்னடைந்துவிட்ட பகுதிகள். மூன்றாவது தமிழர் இன்றைய வாழ்வில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளும் சூழ்நிலைகளும் ஆகும். முதன் முதலாக இடைக்காலக் குறைபாடுகளை எடுத்துக் கொள்வோம். புதுச்சமய வரவு காரணமாகவோ இக்கால நூல்களில் பழமை சொல்லளவில் பேணப்பட்டது. ஆனால் பழந்தமிழன் பெருமையையோ பண்பாட்டு உயர்வையோ இக் காலத்தவர் உணரவில்லை. உணர்ந்த விடத்தும் அதனை மதிக்கவில்லை. அரசியல் மாறுபாட்டின் காரணமாகவோ அவர்கள் ஆராய்ந்து நோக்காது, தம் மொழியினும் பிற மொழி உயர்வுடையதெனக் கொண்டு படிப்படியாகப் பிற மொழி நாகரிகத்தையும் பண்பாட்டையுமே தமதாக மதித்து அப்போலிப் பழமை மீது தம் போலி வாழ்வை வளர்க்க முனைந்தனர். எனவே இக் காலக் குறைபாட்டைச் சுருக்கமாகக் குறிப்பிட்டால் தற்பண்பு உணராமை எனக் கூறலாம். இதன் வழியாகப் பிற பல குறைபாடுகள் ஏற்பட்டன. அவர்கள் பின்பற்றிய அயல் பண்பு உண்மையில் வட நாட்டுத் திராவிடப் பண்பின் வளர்ச்சியே ஆயினும், அது நாகரிகப் பண்பாட்டில் மிகவும் தாழ்ந்த ஆரியப் பூச்சினால் வளர்ச்சியற்று உழலும் போலி வளர்ச்சியாதலின், அதன் வாயிலாக வடநாட்டை முதலில் பிடித்த சனியன் இங்கும் வந்து தமிழையும் பிடித்தது! பாரதம் நான்கு தடவை மொழி பெயர்த்துப் பாடப்பட்டது. இராமாயணம் இருமுறை பாடப்பட்டது. புராணங்கள் எண்ணற்றவை. ஒரு சில நூல்கள் நீங்கலாக இக்கால நூல்களுள் ஒன்றேனும் நிகழ்கால நிலை பற்றியதோ எதிர்காலப் போக்குடையதோ வாழ்க்கைத் தொடர்புடையதோ அன்று. இருபதாம் நூற்றாண்டு வரையிலும் தமிழ் மொழி இலக்கியத்தின் வளர்ச்சி இந் நிலையி லேயே இருந்தது. இன்னும் புதுமைப் பூச்சுப் பூசித்திரியும் பல புதிய எழுந் தாளர்கள் இவ்வாட்டு மந்தை உணர்ச்சியுடன் எழுதுகின்றனர்; அல்லது புதிய உருவையோ உடலையோ ஏற்றும் அதன் மூலமாகப் பழமை பேணவே விளம்பரவேலை செய்கின்றனர். இவர்கள் வாழ்வியல் (சமூக) எழுத்தாளர்கள் போல் எழுதுவர்; அதனிடையே புராண மேற்கோள், புராண உவமைகள், பழைய மூடப் பழக்க வழக்கங்களுக்கான சப்பைக்கட்டுகள், சூழ்ச்சிகள் முதலியவை நெளியும். இலக்கியத் தமிழ் எழுதுவர், ஆனால் அதனிடையே வழங்காப் பிறமொழிச் சொல்லுக்கு வழக்கு உண்டுபண்ணுவர். எளிய தமிழ் நடையைப் புகழ்வர்; கொச்சைச் சொற்களையும் வழங்குவர்; அதனிடையே புதிய புரியாய் பிறமொழிச் சொற்கள் செருகப்படும். தமிழ் அகரவரிசை, தமிழ் நூலுரை, தமிழ் மாணவர் செய்யுட் பாடங்களுக்கு உரை ஆகியவை எழுதுவர்; ஆனால் ஆங்காங்கே தமிழ்ச்சொல்லை எப்படியாவது பிறமொழிச் சொல் எனக் காட்ட அவர்கள் மெய்யும் கையும் தினவெடுப்பதைக் காணலாம். அவர்கள் வாழ்வில் கடவுள் நம்பிக்கைத் தேடிப் பார்த்தாலும் காணாது; துறவும் காணப்படாது. ஆனால் அவர்கள் கலையில், வாணிகத்தில் கடவுளுக்காகப் பாடுபடுவர், தம்நலம் பேணிப் பிறருக்குத் துறவுநிலை கற்பிப்பர். இத்தகைய போலி வளர்ச்சி பழந்தமிழருக்கு மாறுபாடானது மட்டுமன்று, எதிர்காலத் தமிழக வாழ்வுக்கும் பெரிதும் ஊறு செய்வதாகும். 13. பழங்காலக் குறைகள் இடைக்காலத்தின் குறைகளை மட்டும் கூறிச் ‘சீர்திருத்தக் காரர்’ எனத் தம்மைக் கூறிக்கொள்பவர் சிலர் மன நிறைவு பெறுவதுண்டு. இவர்கள் தமிழினிடத்தில் உண்மையான அன்பும் தமிழரிடத்திலும் தமிழினத்தினிடமும் உண்மையான மதிப்பும் உடையவர்கள்தான். ஆனால் இவர்களும் போலிச் சமயப் பசப்பிலீடுபட்டுக் குருட்டுப் பழமை நாடுபவர்களே. அவர்கள் ‘தமிழன்பு’ம் தமிழ் நோக்கும் இறந்தகாலம் தழுவியது, இறந்தகால நோக்குடையது. அவர்கள் தமிழ்ப்பற்றில் தமிழர் பற்று முழு இடம் பெறாது. மேலும் தமிழ் எவ்வளவு உயர்வுடையதாய் ஒருக்காலிருந்தே திருப்பினும் அப் பழம்புகழ் நம் தற்காலத் துயரிடையே ஆறுதல் தர உதவுமேயன்றி இனியும் நம்மை அப் புகழுக்குரியவராக்க உதவாது உண்மையில் நம்மிடம் அழிந்தது போக மீந்த இலக்கியம் அதனை உய்த்துணரவும் பின்பற்றவும் உதவுமேயன்றி மீட்டுத்தரப் போதிய தன்று. எடுத்துக்காட்டாக, சிலப்பதி காரத்தால் பண்டைத் தமிழர்க்குரிய யாழ் முதலிய பலவகை இசைக்கருவிகள், விரிவான இசை நூல்கள், நாடக வகைகள் ஆகியவற்றைப் பற்றி அறிகிறோம். ஆனால் அவற்றை மீட்டும் உயிர்ப்பித்து வழங்கச் செய்யப் போதிய விவரங்கள் அதில் கிடையா. அதில் கூறப்பட்ட நூல்களில் பெரும்பாலானவை இறந்து போனதால் இனி அவ்வறிவு திரும்பிவரத் தக்கதன்று. மீந்த நூல்களால் நாம் அறிவதெல்லாம் நம் மரபு பெரிது, நம் குருதியில் பேராற்றலுள்ளது என்ற ஊக்க உணர்ச்சி மட்டுமே. ஆதலின் பழங்கால இலக்கியம் நம் எதிர்காலப் பெருமைக்கு வழிகாட்டியாகுமேயன்றி, நம்மை அந் நிலைக்குக் கொண்டு செல்லத்தக்க ஊர்தி ஆய்விடமாட்டாது. பண்டைய இலக்கியப் பரப்பை முழுதும் அறிவு முடியாத நம் இன்றைய நிலையில் மீந்த இலக்கியத்தின் அளவு கண்டு நாம் வியப்படைவது இயற்கையே. மீந்த நிலையிலேயே அது மற்ற முழு இலக்கியங்களுடன் பெருமையுடன் ஒப்பிடக்கூடியதாயிருப்பதும் உண்மையே. ஆனால் ஒரு நாடு எவ்வளவு பெருமையுடைய தாயினும் அது உலகன்று. ஒரு மரம் எவ்வளவு வானளாவி நாற்றிசையும் பரந்து வளர்ந்ததாயினும் அது தோப்பாகாது. உலகில் பிற நாடுகள் நாகரிகமற்றிருந்த காலையில், தமிழகம் இறுமாந்து தனித்து வாழ முடிந்திருக்கலாம். ஆனால் உலக நாகரிகம் வளம் பெற்றோங்கியிருக்கும் இந்நாளில் இறுமாப்பு, அழிவு நோக்கிச் செல்லவே வகை செய்யும். இருந்தவன் எழுந்திருப்பதற்குள் நடந்தவன் காதவழி என்ற உண்மையை இன்றைய தமிழனின் நாகரிக வரலாற்றில் காணலாம். ஆமையின் நடைகண்டு எள்ளி நகையாடிய முயல் இடைவழியில் உறங்க, ஆமை ஊர்ந்து சென்று பந்தயத்தில் வென்ற கதை யாவரும் அறிந்ததே. நாம் முயலினதுபோன்ற தன்மறப்புக்கு ஆளாகலாகாது. இப்போதே இரண்டாயிர ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆழ்ந்த துயிலால் தமிழக வாழ்விற்கு நெடுநாள் பிந்திப் பிறந்த நாகரிகங்கள் தமிழைத் தொலைவில் நின்று நகையாடவோ, அண்மையில் வந்து எட்டி உதைக்கவோ, தலை மீது அமர்ந்தழிக்கவோ தலைப்படுகின்றன. இந் நிலையில் இறுமாப்பும் வீம்புரையும் அறிவுடைய நிலையாகா. தன்மதிப்புணர்ச்சியும் விடாமுயற்சியும் தன்னைத் தானே திருத்தும் தறுகண்மையுமே வேண்டப்படுவன. பழந்தமிழர் இலக்கியத்தின் பெருங்குறைபாடு உரைநடை இலக்கியம் இல்லாமையேயாகும். அறிவு நூல்களைக் கூட அவர்கள் யாப்பிலேயே செய்திருந்தனர். 8 ஆம் நூற்றாண்டுக்குப் பின் நூல்களுக்குக் குறிப்புரையும் விளக்க உரையும் எழுந்தன. ஆனால் இவை கருவி நூல்களேயன்றி இலக்கியமாகா. நடையும் புலவர் புலமையைக் காட்டும் நிலையில் இருந்ததேயன்றிக் கலைப் பண்பு அல்லது அழகு, எளிமைநயம் ஆகியவையுடைய தாயில் லை உரைநடை ஏற்படாததற்கு அக்காலத்தில் அச்சுப்பொறி யில்லாமையும் நூல்களை மனப்பாடம் செய்ய வேண்டிய நிலைமை யிருந்ததும் ஓரளவு காரணமாகும். பிற இந்திய மொழிகளிலும் இக் குறைபாடு அண்மைவரை இருந்தது. ஆயினும் பண்டைய கிரேக்கர் இலக்கியம் அக் காலத்தும் உரைநடை இலக்கியம் உடையதாயிருந்தது. பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டில் வேதநாயகம் பிள்ளை, மறைமலை யடிகள், நமச்சிவாய முதலியோர் முதலிய புலவர்கள் முயற்சியால், உரைநடை தலையோங்கியிருக்கிறது. ஆயினும் இன்னும் பிற தற்கால மொழிகளுடனொப்பாகத் தமிழ் உரை நடையும், உரைநடை இலக்கியமும் மேம்பாடு பெறவில்லை. தமிழில் வரலாறுகள் இல்லை. சங்க இலக்கியம், அதன் நிகழ் கால நோக்கு, வாய்மை ஆகியவை காரணமாக அளவு வரலாற்று ஆராய்ச்சிக்கேனும் பயனுடையது. பிற்கால இடைக் கால இலக் கியங்கள் இவ்வகையிலும் பிற்போக்குடையது. அறிவியல் துறையில் பழைய நூலுரைகளால் தமிழர் உயர்நிலை எய்தியவர் என்று அறியப்படினும், இன்று அத்துறையிலக்கியம் இல்லையென்றே சொல்லலாம். மேலும் இன்று மேல்நாடுகள் இத்துறையில் எவ்வளவோ முன்னேறிவிட்டன. தமிழில் அவற்றை மொழி பெயர்ப்பதற்கான கலைச் சொற்கள்கூடக் கிடைப்பதில்லை என்று குறைகூட வேண்டியிருக்கிறது. இலக்கியத்தின் பகுதிகளாகக் கருதப்பட்டிருந்த நாடகம் இசை என்ற கலைகளும் முன் இருந்தனவேயன்றி இன்று அருகின. ‘இசைக்குத் தெலுங்கு’ என்ற எண்ணம் சிலகாலமாய் ஏற்பட்டிருக் கிறது. தமிழிசை இயக்கம் இத்துறையைச் சீர்திருத்திப் பண்டைப் பெருமையை மீட்டும் ஏற்படுத்த முயல்கிறது. நாடகத்துறையில் தமிழின் பஞ்சம் வியப்புக்கிடமாகவேயிருக்கிறது. பழம் பெருமையைச் சுட்டிக்காட்ட மட்டுமே சிலப்பதிகாரம் உதவும். அதுவும் நாடகக் காப்பியம் மட்டுமே, முழுவதும் நாடக நூல் அன்று. இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் நாடக நூல் ஏற்பட்டதில்லை. வட மொழியில் ‘காவ்யேஷூ நாடகம் ரம்யம்’ அதாவது, காவியங்களில் நாடகமே சிறப்புடையது, என்று கூறப்படுகிறது. வடமொழி இலக்கியத்திலும் நாடகப் பகுதி உயர்வும் பேரளவும் உடையது. எடுத்ததற்கெல்லாம் வட மொழியைப் பின்பற்றிய பிற்காலப் புலவர்கள்கூட வடமொழியின் தலைசிறந்த இப் பகுதியில் நாட்டம் செலுத்தாதது பெருவியப்பே! நாடகத்தின் பகுதியாகிய கூத்து (நாட்டியம்) இயன்றளவு தமிழ்நாட்டில் தழைத்து வருகிறது. ஆயினும் அதனை இன்னும் வட நாட்டாரும் பிற நாட்டாருமே போற்ற வேண்டியிருக்கிறது. அதனை ஊக்கி வளர்க்கத் தமிழர் இன்னும் முனையவில்லை. அரசியல் வாழ்வில் தமிழர் ஊர், நகர் அரசியல்களில் கொண்ட பொறுப்பாட்சி முறை நாட்டின் பொது அரசியலில் இடத்பெறாது போயிற்று. தமிழரசரும் இந்தியப் பிறபகுதி அரசரும் நல்லரசராகவும் தீய அரசராகவும் (செங்கோலரசன், கொடுங் கோலரசனாக) வகுக்கப்பட்டனரேயன்றி வரையப்பட்ட அரசு (ஊடிளேவைவைரவiடியேட அடியேசஉhல), தற்சார்பு அரசு, (னநளயீடிவளைஅ) என்று வகுக்கப்படவில்லை. அரசியல் இந் நிலையில் ஒரு பேரறிவியல் துறையாக விளங்க இடமில்லாது போயிற்று. திருக்குறள் முதலிய தமிழ் நூல்களில் அரசியல் பகுதியில் அரசன் கடமை, அமைச்சர் கடமை முதலியவைகள் தான் இடம்பெற்றன. அரசியல்வகை, குடிகள் உரிமைகள், ஆட்சிமுறைப் பாகுபாடுகள் அகியவை கூறப்படவில்லை. நூல்களை விடுத்து வரலாற்று நிகழ்ச்சிகளை நோக்கினாலும், தமிழ் நாட்டரசர்களும் நாடு முழுவதையும் நேரிடை ஆட்சி புரியாமல் சிற்றரசர்களை அடக்கி அவர்கள் மூலமே ஆண்டனர் என்பது தெளிவாகும். பேரரசுகள் நாடு முழுவதையும் ஒற்றுமைப் படுத்தாது போனதற்கும் நீண்டகாலம் நிலைக்காததற்கும் இதுவே காரணம். சமய வாழ்வில் ‘இடைக்காலத்’ தமிழகத்தில்தான் பெரிதும் எதிர்ப்புணர்ச்சியும் குறுகிய நோக்கமும் இருந்தன. சங்க காலத்தில் பரந்த மனப்பான்மையும் அப்பரவும் நிலவின. அதோடு வாழ்க்கை சமயத்துக்கு அடிமைப்படவில்லை. சமயம் நல்வாழ்வின் ஒரு பகுதி என்பது உணரப்பட்டிருந்தது. ஆயினும் ஒப்பரவு என்ற பெயரால் அயலார் பண்புகள், பழக்கங்கள் ஆகியவற்றுக்குப் பேராதரவு கிடைத்ததேயன்றித் தற்பண்பு பேணப்படவில்லை. இன்னும் தமிழர் வாழ்வில் இக் குறையையும் இதனால் ஏற்படும் அடிமை மனப்பான்மையையும் காணலாம். தமிழன் பிறர் சமயத்தையும் பாண்பாட்டையும் தனதாகக் கொள்ள இன்றும் இசைந்து வருவது அறிவுநோக்குடன் பார்ப்பவரும் வியப்பையே ஊட்டும். தன் சமயம் தன்னைத் தாழ்ந்தவனாகவும், தன் மொழியை இழி மொழியாகவும் கருதவோ நடத்தவோ செய்யுமா என்று தமிழன் எண்ணிப் பார்ப்பதில்லை. பிற சமயத்துக்கு விட்டுக் கொடுப்பது பெருந்தன்மை என்று எண்ணுகிறோம். ஆம். ஆனால் தன்மறுப்பு என்றுகூட எண்ணாததும் அவன் சமய வாழ்வை அழித்து விட்டது, அழித்து வருகிறது என்பதை இளைஞருலகம் உணர்ந்து வருகிறது. ஆயினும் பொதுமக்கள் இன்னும் பெரும் பான்மையாய்த் தம் பண்பை, இனத்தை, தம் தோழரை இழிவு படுத்தும் கொள்கையைத் தம் சமயமெனக் கொண்டு, தெரிந்தோ தெரியாமலோ தம் நாட்டுக்கும் மொழிக்கும் பண்பாட்டுக்கும் பகைவராயிருந்து வருகின்றனர். வங்க நாட்டில், பீகாரில் பஞ்சம் என்றால், பட்டினி என்றால், தமிழன், பணம் கொட்டித்தரத் தயங்குவதில்லை. தமிழ் நாட்டில் பஞ்சம் என்றால் வடநாட்டாரும் பிற நாட்டவரும் அதைச் சட்டைச் செய்வதில்லை. தமிழன் சட்டை செய்யாதது மட்டுமல்ல, சட்டை செய்வதில்லை என்பதை எண்ணிப் பார்ப்பதுமில்லை. தமிழன் பிற நாட்டினரைச் சமய, அரசியல், கல்வித் தலைவராக ஏற்க மறுப்பதில்லை, ஏற்க முந்தவும் செய்கிறான்! ஆனால் தமிழ்நாட்டுப் பெரியார் தமிழரிடையும் சிறுமைப்பட்டுழல் கின்றனர்- வெளியுலகம் அவர்களையோ அவர்கள் நாட்டையோ தம் உலகத்தின் ஒரு பகுதி என்றுகூட எண்ணுவதில்லை. தமிழனிடையே தொழில் பற்றிய பிரிவுகள் உண்டு. அவை இயற்கை ஒழுங்கை ஒட்டி வரன்முறையாய் (பரம்பரையாய்) வருவதும் உண்டு. ஆனால் இவ்வகையில் கட்டுப்பாடோ உயர்வு தாழ்வோ இல்லை. தமிழ் நூல்களில் அப்படி உயர்வு தாழ்வு இருந்தால்கூட அதில் வேளாளர்க்கே முதல் நிலை உயர்வு தரப்பட்டிருக்கும். ஆனால் இன்று தமிழன் மேற்கொள்ளும் பிறநாட்டுச் சமய முறையில் பிறப்பால் வகுப்பும், மாற்ற முடியாத வகுப்பும், தொழில் மாறுபாட்டால் விலகாத வகுப்பு வேற்றுமையும் உண்டு. உழைக்கும் வேளாளன் உயர்வுக்கு மாறாக, உழைக்காது அண்டியும் சுருண்டியும் ஏய்த்தும் பிழைக்கும் சோம்பர்க்கு முதல் மதிப்பு தரப்படுகிறது. தமிழர் இல்லறத்தையே அடிப்படை அறமாகக் கொண்டனர். அவர்கள் துறவறத்தை உயர்வாகக் கொள்ளினும் அத்துறவறம் இன்று தமிழன் கொள்ளும் அன்பு துறந்த போலித் துறவறமன்று; தன் நலந்துறந்த துறவறமேயாகும். வகுப்பு வேற்றுமையை ஆதரித்துப் பேசியோ, அல்லது பேச்சில் எதிர்த்து நடையில் ஆதரித்தோ பசப்பும் துறவறம் அன்று; அதனைச் சீறி உடைக்கும் துறவறமாகும். பண்டைத் தமிழர் இவ் வகையில் இடைக்கால தற்காலத் தமிழரினும் மேம்பட்டவராயினும், இடைக்காலக் கேடுகளுக்குத் தெரிந்தோ தெரியாமலோ வழிகோலினர் என்பது உண்மை. அவர்கள் தன்னலந்துறந்த பெரியாராகிய அறிவர், அந்தணர் ஆகியயோரைத் தலைமேற்கொண்டு மதித்தனர். ஆனால் தோற்றத்தை மேலீடாகக் கண்டு ஏமாறும் குணம் அவர்களிடம் படிப்படியாக வளர்ந்தது. உவர் மண் தோய்ந்த வண்ணானை முழு நீறு பூசிய முனிவர் என்று கொண்ட பெருமையும், நீறு பூசி ஏய்த்த பகை வனுக்கு அடியார் பணிந்த கதையும் அம்மயக்கத்திற்கு அறிகுறிகள் ஆகும். தமிழர் போலி ஒப்புரவால் தமிழர் பண்பாடு கெட்டது; தமிழர் செல்வமும் கலையும் உயர்வும் கெட்டன, அதனுடன் சார்ந்த இன்னொரு போலி நற்குணத்தால், தமிழ் நூல்கள் அறம் ஈகை என்பவற்றைத் தமிழர் உயர்நிலைப் பண்புகள் என்று போற்றுகின்றன. எவரும் இதனைப் போற்றுதல் தகுதியேயாகும். வறியார்க் கீதல், பிறர் நலம் புதிபவர்க் கீதல், உழைப்பவர்க்கும் கலைநலம் பேணி உழைப்பவர்க்கும் ஊக்கமளிக்க ஈதல், உற்ற விடத்து நண்பர்க்கும் யாவர்க்குமீதல் ஆகியவை அப்பழுக்கற்ற நற்பண்புகளே, ஆனால் தமிழன் படிப்படியாக வறிய தோற்றத்தை வறுமையாகக் கொண்டு உழையாத சோம்பன், எத்தன் ஆகிய வருக்கும்; அறிவர் அந்தணர் தோற்றத்தை அறிவு, அந்தண்மை கொண்ட தன்னலச் சூழ்ச்சிப் பகைவருக்கும் வெறிமிக்க மூடருக்கும் ஈதலை ஈகை எனப் பாராட்டியழிவுறத் தொடங் கினான். நண்பர்களையும் உயிர்களையும் விடுத்து கல்லினுக்கும் கற்கோயிலுக்கும் கல்லினும் கொடிய நெஞ்சுடைய வகுப்புப் பற்றாளர்களுக்கும் ஈதலே இந்நாளில் ஈகையெனக் கொள்கை பட்டு வருகிறது. அண்மைக் காலங்களில் அவன் உவந்தீவதுடன் நில்லாது, தன்னினத்தைக் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சிக்காக ஈயவும், தன் பழிச் செயல்களை மறைப்பதற்காக ஈயவும், அஞ்சி அஞ்சி ஈயவும் தொடங்கி விட்டான். இவற்றை உட்கொண்ட புதுக் கவிஞர் பாரதி, “அஞ்சி அஞ்சிச் சாவார்- அவர் அஞ்சாத பொருளிலை அவனியிலே” என்று பாடினார். ஈகை என்பது ஈகைக் குணமுடையார்க் கீதலேயன்றி வேறன்று என்பதை வருங்கால ஒழுக்க நூல்கள் வற்புறுத்த வேண்டும். அது தமிழன் மனத்தில் பதிய வேண்டும். 14. தற்காலச் சீர்குலைவு தமிழ்நாட்டின் இப்பழைய வரன்முறைக் குறைகளேயன்றித் தற்காலச் சூழலிற்பட்ட குறைகளும் பல. தமிழன் இன்று முன்னேற வேண்டும் என்று எண்ணினாலும் முன்னேறுவது எளிதல்ல. அவன் சுமக்கும் அடிமைச் சுமை அவ்வளவு! அடிமையாக மாடுகள்போல் விற்கப்பட்டவர்களான நீக்ரோவர்களாக உடலடிமைகள் மட்டுமே, வெள்ளையன் தன்னைத் தெய்வப் பிறவி என்று கருதி அவனை அடக்கினாலும், அவன் தன்னை விலங்குப் பிறவி என்று கருதுவதில்லை. தன் அடிமைத்தன்மை தன் வலியின்மையால், காலக் கேட்டால் வந்தது என்று மட்டும் அவன் எண்ணுவான். காலமாறு பாட்டில் நம்பிக்கை கொண்டு ‘ஆனைக்கு ஒரு காலம், பூனைக்கு ஒரு காலம்’ என்று எண்ணித் தன்னை வலிமைப்படுத்திக் கொள்வான். இதன் பயனாக அவன் உடலடிமைத்தனம்கூட மாறி வருகிறது. ஆனால் தமிழன் இன்று அரசியல், சமயம், வாழ்வியல், பொருள் நிலை ஆகிய எல்லாத் துறையிலும் அடிமை; அது மட்டுமன்று; வெளிநாட்டார்க்கும் அடிமை, அயல் நாட்டார்க்கும் அடிமை, தன் நாட்டிலும் சிலர்க்கு அடிமை, சிலரை அடிமை கொள்ளும் கூலி அடிமை. அது மட்டுமா? நீக்ரோ அடிமை தன் பகைவனை வெறுத்து மனத்திலாவது எதிர்ப்பான். தமிழன் தன்னைச் சுரண்டுபவனைத் தன் தாய், தன் தந்தை, தன்னை ஆட்கொள்ளும் வள்ளல் எனக் கூறி மகிழ்வுடன் தன்மீது உதைப்பவன் காலை அணைக்கிறான். தான் இழிந்த பிறப்பு என்பதை ஒப்புக்கொள்கிறான். தமிழரிடையே பல விடுதலைப் போர்கள், இயக்கங்கள் நடந்துள்ளன; நடக்கின்றன. ஆனால் அவற்றின் தலைவர்கள் கூடிய மட்டும் தமிழுக்கும் தமிழர்க்கும் புறம்பானவர்களாகவே இருத்தல் வேண்டும் என்ற ஒரு ஒழுங்கு ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமன்று. அவன் பாடுபட்டு நாடும் விடுதலையும் ஒரு புதுமையான விடுதலையே. அடிமை ஒழிப்பே மற்றவர்களுக்கு விடுதலை. தமிழருக்கு விடுதலை என்பதெல்லாம் ஓர் அடிமையினின்றும் விடுபட்டு இன்னோர் அடிமை நிலையை ஏற்பதே. தான் அடிமையாகப் பிறந்தவன், அதுவே இயற்கையின் ஒழுங்கு என்ற எண்ணம் அவன் மனத்தில் வேரூன்றியிருக்கிறது. தற்காலப் பெரியார் ஒருவர் கூறுகிறபடி ‘தமிழன் ஒரு வகையில் நாயின் பண்புடையவன். நாய்போல் அவன் பிற இனத்தினிடம் நன்றி கொள்வான்; நயப்புக் கொள்வான். தன் தோழரிடம் மட்டுமே வெறுப்பு, ஆணவம், பொறாமை முதலியவை எல்லாம் இடம் பெறும். தற்காலத் தமிழர் அரசியலில் ஆங்கிலத்தையும், புத்தரசியல் இயக்கத்தில் இந்தியையும், சமயத்துறையில் வடமொழி போன்ற மொழிகளையும் இசையில் தெலுங்கையும் முதன் மொழியாகக் கொண்டுள்ளனர். தமிழன் 100-க்கு ஏழு எட்டு மேனியே எழுத்து மணம் கூட உடையவன் என்பதும்; இச் சிலரும் பெரும்பாலும் தமிழ்நாட்டில் வாழும் பிற நாட்டாரும் பிற இனத்தாருமே என்பதும்; அதிலும் பெண்பாலார் நூற்றுக்கு ஒருவர்கூடக் கிடை யாது என்பதும் இதன் பயன் என்பதை எத்தனைபேர் எண்ணிப் பார்ப்பவர்? இவ் வயல் மொழிகளில் இடைக்காலத்தில் ஆங்கிலமும் இந்தியும் தெலுங்கும் கிடையா. வடமொழி ஒன்றே தமிழை அழுத்தி வந்தது. நூல்களும் பெரும்பாலும் மொழிபெயர்ப்புக்களும் விளம்பர நூல்களுமே. இந்நிலையில் கல்விநிலை இன்றைவிடச் சற்று மேம்பட்ட தென்பதை அவ் விளம்பர நூல்கள் நல்ல இலக்கிய நடையில் எழுதப் பட்டிருப்பதிலிருந்தும், சமயத்துறையில் கல்வியறிவு மிக்க நங்கையர் தலைமைநிலை பெற்றிருந்ததிலிருந்தும் காணலாம். முற்காலத் தமிழகத்திலோ வடமொழி அழுத்தம் மிகக் குறைவு. நூல்கள் கிட்டத்தட்ட முற்றிலும் தமிழ் முதல் நூல்கள். அதற்கேற்பத் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பெரும்புலவர் ஒரே காலத்தில் வாழ்ந்தனர் என்றும், அவர்களிடையே எல்லாத் தொழிலாளரும் வகுப்பினரும் இருந்தனர் என்றும், தலைசிறந்த வர்களும் பெருந் தொகையினரும் பெண் பாலர் என்றும் காண்கிறோம். இன்றைய தமிழகம் இதனின்றும் படிக்க வேண்டும் படிப்பினை ஒன்றே. தமிழ்நாட்டில் தமிழ் முதலிடம் பெற்றாலன்றித் தமிழர் வகுப்பு வேறுபாடின்றி, பால்வேறுபாடின்றி, தொழில் வேறு பாடின்றிக் கல்வியறிவு பெறார். 15. வருங்காலத் திட்டம் இன்றைய ஊழி, உலகின் புரட்சி ஊழி ஆகும். கி. பி. 1500 வரை உலக நாகரிகத்தில் மிகவும் பிற்போக்கு நிலையில் இருந்த ஐரோப்பா, தன் இருண்ட இடைக்காலத் தூக்கத்தை உதறித்தள்ளி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சி யடைந்து வருகிறது. கீழ்நாடுகள் பல்லாயிர ஆண்டுக்கணக்கில் பொய்யாக்கிவிட்டன. இன்று உலகம் என்றால் மேல்நாட்டுலகம் என்ற நிலைமை வந்துவிட்டது. அரசியல், வாணிகம், கலை ஆகிய எல்லாவகையிலும் கீழ்நாடுகள் மேல்நாடுகளின் நிழலாக இருந்து வருகின்றன. இருபதாம் நூற்றாண்டில் கீழ்நாடுகள்கூட விழிக்கத் தொடங்கி இருக்கின்றன. ஜப்பான் மேல்நாட்டு முறையிலேயே மேல் நாடுகளுடன் போட்டியிட்டது. வடநாடு இரண்டு உலகப் போர்களையும் இந்திய நாட்டுரிமை (தேசீய) இயக்கத்தையும் பயன்படுத்திப் பொருளியல் துறையில் முன்னேறி வருகிறது. ஆனால் தமிழ்நாடு இன்னும் கனவு காணும் படியைத்தான் அடைந்திருக்கிறது. பதக்குக் கனவு காண்பவன் உழக்கு வெற்றி யடைவான். தமிழர் கனவிலும் உழக்கு என்று பேசவே அஞ்சு கின்றனர். ஆங்கில நாடு அரசியலிலும் பொருளியலிலும் மற்ற நாடு களுக்கு முந்திக்கொண்டு வளர்ச்சியடைந்து விட்டது. ஜெர்மனி, தன் அறிவியல் திறத்தால் அதனுடன் போட்டியிடத் தொடங்கிற்று. ஆனால் பிரான்சு 18 ஆம் நூற்றாண்டு வரை அரசியல் துறையில் இருண்டகால நிலையிலேயே உழன்றது. ரூஸோ, வால்ட்டேர் முதலிய பேரறிஞர்கள் தம் எழுதுகோலைச் சாட்டையாகப் பயன்படுத்தி மக்களைத் தட்டி எழுப்பின. மக்கள் தம் அரசியல் திருந்தினாலன்றி வாழ்வுந் திருந்தாதென்று கருதி அரசியல் புரட்சியில் முனைந்தினர். பல தடவை அப் புரட்சி தோல்வியுறுவதாகத் தோற்றினும் அது படிப்படியாக பிரான்சுக்குப் புது அரசியல் வழங்கிற்று. உலகுக்கும் புரட்சி மூலம் வெற்றி காண முடியும் என்று காட்டிற்று. ஆனால் வெறும் அரசியல் புரட்சி முழு வெற்றி காணாது; அதனுடனாகவோ, அதனினும் முந்தியோ பொருளியல் புரட்சி ஏற்பட்டால் தான் பொருளியல் வாழ்வில் பிந்திய கீழ் நாடுகள் முன்னேற முடியும் என்பதை உருசிய (ரஷ்ய)ப் புரட்சி காட்டிற்று. தமிழ்நாடோ அரசியலிலும் பொருளியலிலும் மட்டுமன்றி வாழ்வியலிலும் பின்னடைந்து நிற்கிறது. இந்திய நாட்டுரிமைக் கழகம் அரசியல் புரட்சியுடன் அமைந்து நிற்கிறது. விடுதலைக் குறிக்கோள் அதன் தலைவர்களால் ‘இராம அரசு’ என்று கூறப் படுகிறது. அதாவது புரட்சி, அரசியலுடன் நின்று விட வேண்டுமேயன்றிப் பொருளியலிலும் வாழ்வியலிலும் புரட்சி கூடாது என்பது அவர்கள் நிலை. நாட்டுரிமைக் கழகத்தில் இளைஞர் குழுத் தலைவர்களும் சம உரிமையாளர்களும் (அபேதவாதிகளும்) பொது உடைமையாளர்களும் பொருளியல் புரட்சியுடன் கூடிய அரசியல் புரட்சி கோருகின்றனர். ஆனால் அரசியல் கூரையும் பொருளியல் சுவரும் மட்டுமன்றி, வாழ்வியல் அடிப்படையே சீர்கெட்டு நிற்கும் தமிழகம் உலகில் உருசியப் புரட்சியிலும் அடிப்படையான புரட்சி காணினல்லாமல் வெற்றி காண முடியாது. ஆகவே தமிழ் இளைஞர் வாழ்வியலிலும் பொருளியலிலும் அரசியலிலும் ஒரேயடியான முக்கூட்டுப் புரட்சிக்கு வழிகோல வேண்டும். மேலும் இன்று உலகில் முன்னணியில் நிற்கும் நாடுகள் ஒற்றுமை, தகுதி ஆகிய சாக்குகளால் தம் ஆட்சியில் உலகை ஆட்டி வைக்கச் சூழ்ச்சி செய்கின்றன. நாட்டுரிமை இயக்கம், உலகில் பிற்பட்ட இந்தியா தனிவாழ்வு பெற்றாலன்றி முன்னேறாது என்பதை உணர்ந்து விடுதலை கோருகிறது. உலகில் தகுதி பற்றிய ஆட்சி ஏற்படுவதானால், ஆங்கில ஆட்சிதான் இன்னும் உலகை ஆட்டி வைக்க நேரிடும். அது போலவே நாம் தனித் தகுதி வேண்டுகிறோம். இந்திய பரப்புக்கு உண்மையில் நல் வாழ்வு வேண்டுவோர் இந்தியாவில் தமிழகம் போன்ற பிறபட்ட பகுதிகளுக்கும் சரிநிலை (சமத்துவம்) வழங்க வேண்டும். சரிநிலை யில்லா ஒற்றுமை ஒற்றுமையாகாது, சுரண்டலே யாகும். ஆகவே தமிழன் காணும் கனவில் சரி நிலையும் சரிநிலைத் தகுதியும் முதலிடம் பெற்று, அவற்றின் அடிப்படையிலேயே நாட்டு ஒற்றுமை, உலக ஒற்றுமை ஏற்பட வேண்டும். நாட்டு வாழ்வின் அடிப்படைப் பண்பு தாய்மொழியே யென்பதை இப்போது உலக மக்கள் உணர்ந்துகொண்டு விட்டனர். கல்வியும் கலையும் அறிவியலும் தாய்மொழி வாயிலாக அன்றி வளரா. கல்வியிலும் தாய்மொழிக் கல்வியன்றிப் பிற கல்விகள் கிளிப்பிள்ளைப் பேச்சேயன்றி வேறன்று. தமிழரிடை நாட்டுரிமைக் கழகத்தார் தமிழுக்கு முதலிடம் என்று பேசுகின்றனராயினும் அதுவகையில் முனைந்து விராயாமல் ஆங்கிலத்துடன் வேறு மொழிகக்கும் இடம் தேடுகின்றனர். நாட்டுரிமைப் பண்பு தாய்மொழிப் பற்றுடன் ஒன்றுபடும் நாளில் பிற மொழிகளுக்கு மதிப்பு இரண்டாம்தரச் செய்தியே யாகவேண்டும். அத்துடன் பிற மொழி யாயினும் ஆங்கிலம் தமிழரிடை சரிநிலையை ஓரளவு தந்த மொழி; பகுத்தறிவு விளக்கத்துக்கு வகை செய்த மொழி, தமிழர் அறிவியல் துறையில் வளர்ச்சியடைய ஆங்கிலம் இன்னும் நெடுங்காலம் உதவும். அதனை வெறுத்து, தமிழினும் ஆயிரமடங்கு பிற்போக்குடைய வடநாட்டு மொழிகளைத் தமிழர் மேற்கொள்ளுதல், மேற்கொள்ளத் தூண்டுதல் மறைமுகமான தமிழ்க்கொலையே யாகும். தமிழ், தமிழர் பண்பாட்டின் கொடி. ஆங்கிலம், பகுத் தறிவின் கொடி. வடநாட்டு மொழிகள் இன்னும் பிற்போக்கு, பூசல், வகுப்பு வேற்றுமை ஆகியவற்றின் கொடியேயாகும். ஆகவே ஆங்கிலம் அகல்வதாயின் அவ்விடத்தின் பெரும்பகுதியைத் தமிழே கொள்ளும்படி செய்யத் தமிழராவோர் விரைதல் வேண்டும். இந்தியப் பொது இயக்கம், உலக இயக்கம் ஆகியவை அதனைப் புறக்கணித்தால், தமிழர் தமக்கெனத் தனி இயக்கம் மேற்கொள்ளல் இன்றியமையாதது. அல்லது தமிழக நாட்டுரிமைக் கழகம் பெருநிலப்பரப்புக் கழகத்தினிடம் பேரம் செய்தோ, போராடியோ, தனித்து நின்றோ உழைக்க வேண்டும். இருண்ட காலத்தினின்றும் விழித்த ஐரோப்பா முதலில் தன் வளர்ச்சிக்குத் துணையாகக் கொண்ட தாய்ப்பால் கிரேக்க இலக்கியமே. ஏன் அது கிரேக்க இலக்கியமாயிருக்க வேண்டும்? அன்று ஐரோப்பிய நாகரிகத்திலில்லாத பகுத்தறிவுச் சத்து அதில் இருந்தது. இன்று தமிழர் இருண்டகாலங் கழித்து விழிக்கின்றன. அவர்கள் உட்கொள்ள வேண்டிய தாய்ப்பால் எது? மொழி பெயர்ப்பே. உலக அறிவின் அடிப்படையிலேயே தமிழன் எதிர் கால வாழ்வை அமைக்க முடியும். ஆனால் எம் மொழியினின்று மொழி பெயர்ப்பது? உலக அறிவின் திரட்டுப்பாலாய் விளங்கும்? ஆங்கிலத்திலிருந்தும், அடுத்தபடியாக உலக அறிவின் புட்டிப் பால்களாக இயங்கும் பிரஞ்சு, ஜெர்மன் மொழிகளிலிருந்தும், உலக அறிவின் ஊற்றாக நிலவிய கிரேக்க மொழியிலிருந்தும் மட்டுமே. தமிழன் தன் மொழிக்கு அடுத்தபடி இரண்டாம் இடத்தில் வைத்துக் கற்க வேண்டிய மொழிகள் இவையே என்பது மூடாக்கற்ற மதியினர் தெள்ளத் தெளியக் காணக்கூடும் உண்மை. பிரிட்டிஷ் இந்தியாவில் இன்று சுமத்தப்பட்ட ஆங்கிலமும், பிரஞ்சு இந்தியாவில் சுமத்தப்பட்ட பிராஞ்சும் மருத்துவர் கத்தியால் விளையும் நல்வாழ்வைத் தமிழர்க்குத் தரக்கூடும். ஆனால் வடமொழியும் இந்தியும் உருதுவும் போன்ற கீழ்நாட்டு மொழிகள் வெளியுறவுகளுக்குப் பயன்படுமேயன்றித் தமிழன் வாழ்வுக்குத் தாய்ப்பாலாகா. தமிழன் உறக்கக்காலத் தாலாட்டாகவே அவை நிலவக்கூடும்; விழிப்புத் தரும் திருப்பள்ளியெழுச்சிகளாகா. சுருங்கக்கூறின் தமிழ்நாட்டு இளைஞர்தான் வருங்காலத் தமிழகத்துக்கான திட்டமிடுவதில் முதற்பங்கு கொள்ள வேண்டும். பிற நாட்டவர் அதாவது அயல்நாடுகளாகிய இந்தியப் பரப்பின் பிற பகுதியாளர்களுடன் தமிழன் ஒத்துழைக்கக் கூடும். ஆனால் அவர்களுடன் சரிநிலையில் தன் கருத்தை வலியுறுத்தும் ஆற்றலில்லாதபோது ‘ஒத்துழைப்பு’ என்ற சொல்லின் முதற்பகுதி (ஒப்பு) பொருளற்றதாகிவிடும். தமிழரிடை ஒப்புநிலையும் (சமத்துவம்), சரிநிலைவாய்ப்பும், சரி ஒழுங்கும் (சமநீதியும்) இன்றித் தமிழர் ஒற்றுமையோ, இந்திய ஒற்றுமையோ, உலக ஒற்றுமையோ ஏற்பட முடியாது. இந்திய வாழ்வுக்குத் தமிழர் வாழ்வே அடிப்படையும் உயிர் நிலையும் ஆகும். அவர்களை ஒதுக்கியோ, புறக்கணித்தோ, அடக்கியோ இந்தியா வாழ நினைத்தால், இந்தியா என்றும் உண்மை விடுதலை பெறாது. வடநாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வடநாட்டில் வாழினும், இனவகையில் தமிழர்களே, தமிழ்நாடு தனித்து வளர்ச்சியுற்றபின் வடநாட்டினும் அவர்க ளுக்கும் சரிநிலை உரிமை ஏற்படத் தமிழ்நாடு வகை செய்யும். எனவே நம் அரசியல் கட்சிகளுள் வடநாட்டு ஆக்கம் வலுக்கப் பாடுபடுபவை உண்மையில் மறைமுக அடிமை வாழ்வையே பெருக்கும். தமிழர் ஆக்கம் பெருக்க முனையும் கட்சிகளே உண்மையில் இந்தியாவில் விடுதலையையும் அடிப்படைப் பண்பாட்டு ஒற்றுமையையும் ஏற்படுத்தும். எதிர்காலத் தமிழகம் தனித்தியங்கி பிற மொழிகளுக்குத் தன்மதிப்பு வகையில் வழிகாட்டவல்ல தனித்தமிழ் வளர்த்து, ‘விடுதலை என்பதும் ஒற்றுமை என்பதும் சரிநிலையை அடிப் படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற உண்மைக்குச் சான்றாக விளங்க வேண்டும். உலகின் அடிமை இருளுக்கு இருப்பிடமாயியங்கும் தமிழகம் தனிமனிதர், தனிப் பகுதிகள் பின்னடையக் காணாத மக்கள் ஒட்டாது நாட்டினால், உலகம் அதனைப் பின்பற்றும் என்பது உறுதி. இங்ஙனம் உலகிற்கும் இந்தியாவுக்கும் வழிகாட்டியாகவும் தமிழகத்துக்கு இன்றியமையா உயிர்நிலைச் சீர்த்திருத்தமாகவும் அமையத்தக்க முறைகளைத் தமிழர் திட்டம் என்ற இரண்டாம் பகுதியில் விளக்குவோம். வளரும் தமிழ் முதற் பதிப்பு 1964 இந்நூல் 2001 இல் தமிழ்மண் பதிப்பகம், வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. வளரும் தமிழ் தமிழ் மொழியை வண்டமிழ், தண்டமிழ், கன்னித் தமிழ், கன்னித் தாய்த் தமிழ், மூவா முதன்மொழி எனத் தமிழ்க் கவிஞர் சிறப்பிப்பதுண்டு. இக் கூற்றுகளைக் கவிஞர் புனைந்துரை என்றோ, தாய்மொழிப் பற்றின் ஆர்வ உரைகள் என்றோ கூறிவிடத்தோன்றும். புராண மரபுக் கூற்று என்று கூறிவிடக்கூட இடமில்லாமலில்லை. ஏனெனில், தமிழிலும் புராணங்கள் உண்டு. இக் கூற்றும் புராணங்களிலேயே மிகுதியும் காணப் படுகிறது. ஆயினும், இக் கூற்று முழுதும் கவிதைப் புனைவோ, ஆர்வப் புனைந் துரையோ, புராண உரையோ அன்று, ஏனெனில், சமற்கிருத மொழியிலும் பிற மொழிகளிலும் புராணங்கள் எழுதியவர் இதே புனைந்துரையை அம் மொழிகளுக்குச் சார்த்தவில்லை. மொழிக்கு அதைச் சார்த்த முடியாமை யறிந்தே அவர்கள் இதே புனைந்துரையைத் தம் சமயத்துக்கும் (சனாதன தர்மம்-என்று முள்ள சமயம்), நாட்டுக்கும் (புராதன பாரதம்) உரிமைப்படுத்தினர். மொழி யெல்லை கடந்து நாட்டிலும் சமயத்திலும் மட்டும் அப்பண்பு மாநிலத்தில் பரவியிருந்தது. தமிழின் இப்புராண மரபின் மூலத்தைப் புராண காலத்துக்கு முற்பட்ட இலக்கியக் காலம், சங்க காலங்களில் காணலாம். தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்ற பொருள் இலக்கியக்கால முழுவதிலும் வழங்கியுள்ளது. தமிழ் என்பதற்கு ‘அறிவு’ என்ற பொருள் இன்னும் பழைமையானது. ‘தமிழறிவோர்’, ‘நூலோர்’ என்ற வழக்குகள் ‘ஆய்ந்துணர்ந்த அறிவுடைய பெரியோர்’ என்ற பொருளில் நீதி நூல்களில் வழங்கியுள்ளது. ‘தமிழ்’ என்ற சொல் மொழிப் பெயராக மட்டுமன்றி, நாடு, இனம், மக்கள் பெயராகவும் சங்க இலக்கியத்தில் பெரிதும் வழங்குகிறது. தமிழர் தம் மொழியுடன் அறிவும் கலையும் வளர்த்து, கலைப் பண்பையும், அறிவுப் பண்பையும், இனப் பண்பையும் மொழியுடன் இணைத்து மொழிப் பண்பாகப் பேணினர். தமிழ் அயல் மொழிகளைப் போல, உலகின் மற்றப் பண்புடைய, தொல்பழங்கால மொழிகளைப் போல, வழக்கிறவாமல், வளமிழக் காமல் நிலவுவதற்கு இதுவே காரணம். தமிழ்ப் பண்பு தளர்ந்துவரும் காலத்தில் வாழ்ந்த தமிழர், புராண காலத் தமிழர். தன்னிகரில்லாத பழந்தமிழ் சமற்கிருதத்துடன் ஒப்பாகத் தாழ்ந்து, வடமொழி, தென்மொழி என்ற ஒப்பீட்டுக்கு இலக்காவதை அவர்கள் கண்முன் கண்டனர். சமற்கிருதம் தேவமொழியாகி, தமிழ் தாய்மொழிகளுள் ஒன்றாகத் தணிவதையும் அவர்கள் கலங்கிய கண்களுடன் நோக்கினர். ‘தானாடா விட்டாலும் தன் தசையாடும்’ என்ற முதுமொழிக்கிணங்க, அவர்கள் தமிழ்ப் பற்று ஆட்டங் கண்டது. அதனை மீட்டும் உறுதிசெய்ய, வலியுறுத்தவே, அவர்கள் தளர்ச்சிக்கு ஆறுதலாகக் ‘கன்னித் தாய்’ப் பண்பு கண்டு பராவினர்! ‘தெய்வத் தமிழ்’க் கூறு கண்டு பாசுரம் பாடினர்! தம்மிடையே தோன்றித் தமிழிலே படர்ந்த தளர்ச்சி, தமிழ் மொழியின் ஆழ்ந்த தனிப் பண்பைக் கெடுத்துவிடாது என்று அவர்கள் தமக்குத் தாமே ஆறுதல் கூறிக்கொண்டனர். சமற்கிருத மரபும், ஆங்கில மரபும், இந்தி மரபும் தழுவத் தொடங்கியுள்ள இக்கால ஆதிக்கவாதத் தமிழர், தம் பிறமொழி சார்ந்த உயர் பதவிக் கோட்டைகளில் இருந்துகொண்டு, இதே ஆறுதலைத் தம் மனச்சான்றுக்கு அளிக்கத் தொடங்கியுள்ளனர். பிற மொழி தழுவுதலும், பிறமொழிச் சொற்கள் கலத்தலும் இன்றியமையாதன என்ற தம் வயிற்றுப் பிழைப்புக் கொள்கைக்கு இவ்வகையி லேயே ஆதரவும் திருத்தமும் ஒருங்கே தேடுகின்றனர். கலப்பினளவும் தழுவலளவும் தமிழின் தனிப் பண்பினைக் கெடுக்கும் அளவில் செல்லக்கூடாது; செல்ல வில்லை என்று காட்டி அவர்கள் சிறிது மகிழ்வும் எய்துகின்றனர். ஆறுதல் பெற்று ஆறுதலும் தருகின்றனர். இனத்தினின்று ஒதுங்கி அதற்கெட்டாத உயர்வாழ்வில் குளிர் காயச் சென்ற இடங்களில் கூட, தமிழ்ப் பண்பு இவ்வாறு அவர்கள் நாடி நரம்புகளில் அதிர்கின்றது. தமிழர் ‘கன்னித் தாய்மொழி’யைப் புகழ்வதற்கு நெடுநாள் முன்னரே, அதைத் ‘தெய்வப் பண்பு, ‘முயற்சியற்ற இயற்கைப் பண்பு’ என்று எண்ணி இறுமாப்புக் கொள்வதற்கு முன்னரே, ஆற்றாமை ஆறுதல் அடைவதற்கு முன்னரே, மனித அடிப்படையில், அறிவடிப்படையில், கலையடிப்படையில், அந்தக் ‘கன்னித் தாய்ப் பண்பும்’ அத்தெய்வீகப்பண்பின் அப்பெயர்கள் குறிக்கப் படாமலே உருவாக்கப்பட்டிருந்தன. அவ்வடிப்படைப் பண்புகளின் பல கூறுகள் வடஇந்தியாவில் பரவியதனாலேயே, உபநிடத, புத்த, சமண கால வடஇந்திய வாழ்விலும், இறந்துபட்ட வடஇந்தியத் தாய்மொழி வாழ்வுகளிலும், தொடக்கக் கால சமற்கிருத வாழ்விலும், உலக வாழ்விலும் தமிழ்ப் பண்போ டொத்த பல நல்ல உயிர்க்கூறுகளைக் காண்கிறோம். இவ்வுயிர்க் கூறுகளே ஆரிய நச்சுக் காற்று எட்டாத மேலை உலகக் கோடியில் நாகரிகமும் அறிவியலும் வளர்ந்துள்ளது. ஆயினும், ஆரியத் தொடர்பிலிருந்து நெடுந்தொலைவு விலகிய இன்றைய உலக நாகரிக மய்யமான மேலைஉலகு, தமிழ்த் தொடர்பிலிருந்தும் அதுபோலவே விலகியுள்ளது. தான் தேய்ந்த போதும் உலகுக்கு ஒளிதரத் தவறாத திங்கள்போல, தான் ஆரிய நோயால் நலிவுற்ற போதும் உலக நாகரிகத்தை இரண்டாயிர ஆண்டு வளர்த்துள்ள தமிழன் ‘கன்னித் தாய்’ப் பண்பு, ‘தெய்வப் பண்பு இடைக்காலக் களங்கம் நீக்கித் துலக்கப்படின், அது இன்னும் உலகுக்கு மீண்டும் ஒரு புதுவாழ்வு தரப் போதிய வளம் உடையது. தமிழகத்துக்கு அது புதுவாழ்வல்ல, புதுப் பெருமையே தரப் போதியதாயிருக்கும் என்று கூறத் தேவையில்லை. அக் கன்னித் ‘தாய்ப் பண்பு’, ‘தெய்வப் பண்பு’ ஆகியவற்றின் கூறுகளில் தமிழர், தமிழறிஞர், தமிழ் மாணவ மாணவியர் கருத்துச் செலுத்துதல் வேண்டும். அவற்றை இங்கே சுருக்கமாக வகுத்துக் கூறுவோம். 1. சிந்துவெளி நாகரிகத்தைக் குறிப்பிட்டு விளக்கம் கூறும் இடத்தில், இந்தியாவின் தேசிய முதல்வர், பண்டித ஜவஹர்லால் நேரு சுட்டிக் காட்டும் உண்மை, சிந்துவெளி கால இந்தியாவுக்கு மட்டுமன்றி, சங்ககாலத் தமிழகத்துக்கும், புத்தர் கால வடஇந்தியாவுக்கும், பொருந்துபவை. அவர் ஆளும் இன்றைய தமிழகத்துக்கோ இந்தியாவுக்கோ பொருந்தாதவை. பிறப்பாலும் மரபாலும் வடஇந்தியராயினும் வளர்ப்பாலும் அறிவாலும் மேலை உலக நாகரிகத்தின் பகுத்தறிவுச் செல்வ வளம் உடையவர் நேரு. அத்தகையவர் கண்கள் காணும் உண்மையையாவது தமிழர் கண் திறந்து காணுதல் வேண்டும்! இன்றைய இந்தியாவின் பொதுமக்களுடைய சமய வாழ்வின் அடிப்படைக் கூறுகள் அத்தனையையும் சிந்து வெளியில் காண்கிறோம். இக்கால மூட நம்பிக்கைகள் பலவற்றைக்கூட, புராணக் கதைகள் சிலவற்றைக்கூடக் காண் கிறோம். ஆனால், அய்யாயிர ஆண்டுகட்கு முற்பட்ட அன்றைய இந்திய நாகரிகம் இன்றைய இந்திய நாகரிகத்தைவிட, இன்றைய பல நாடுகளின் நாகரிகங் களைவிட, அடிப்படை மேம்பாடு உடையது. ஏனெனில், அந்நாளைய மக்கள் சமயம் மக்கள் வாழ்வின் பல கூறுகளுள் ஒரு கூறாய் இருந்தது. இன்றிருப்பது போல், மக்கள்வாழ்வு சமயத்தின் ஒரு கூறாய் இல்லை. எனவே, அன்று புரோகிதர் புரோகிதராக மட்டும் இருந்தனர். அவர்கள் இன்றிருப்பதுபோல், சமுதாயம், கல்வி, அரசியல் ஆகிய எல்லாவற்றையும் ஆட்கொண்டு, புரோகித இன ஆட்சி நடத்த வில்லை. மக்கள் வளர்ச்சியை எல்லாத் துறைகளிலும் தடுக்கும் ‘பேரருளாளராக’ அவர்கள் விளங்கவில்லை! 2. உழவுக்குத் தமிழர் மதிப்புக் கொடுத்தனர். உழவரை ஆரியர் ஆக்கியது போலத் தமிழர் கடைசி வருணம் ஆக்க வில்லை. அத்துடன் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், அணைகள் கட்டி உழவை வளர்த்த முதல் இனம் தமிழினமே. காடு வெட்டிக் கழனியாக்க, காட்டாற்றுக்குக் கரைகட்ட அரசியல் முறையில் திட்டமிட்ட முதல் நாடும் தமிழகமே. ஆனால், அதே சமயம் ஆங்கிலேயர் வரும்வரை, தமிழகம் இன்றைய தமிழகம் போலக் கிராம தேசமாகவோ, வெறும் உழவு நாடாகவோ இல்லை. உலகத்தின் வாணிகக் களமாக, செல்வச் சிகரமாக, தொழில் மய்யமாகத் தமிழகம் விளங்கிற்று. மக்களுள் மிகப் பெரும்பாலோர் வாணிகத்திலும் தொழிலிலும் ஈடுபட்டுப் பெரிய நகரங்களில் வாழ்ந்தனர்! அவர்கள் எளிய வாழ்வின் பண்பை அறிந்திருந்தனர். ஆயினும், ஏழடுக்கு மாளிகையிலும், பட்டு மஞ்சத்திலும் பொன்னணி மணி யாடை புனைந்து ஒய்யார வாழ்வே வாழ்ந்தனர். ஒரு சில துறவிகள் வலிந்து மேற்கொண்ட வறுமையன்றி, பொருளியல் சார்ந்த வறுமை தமிழகத்தில் அன்று இல்லை-தமிழகம் சூழ்ந்த நாடுகளில்கூட அன்று கிடையாது. அது தமிழகத்துக்குத் தொலைவிலிருந்து பின்னாள்களில் வந்த அயலுலக இறக்குமதிச் சரக்கேயாகும். ‘தமிழர் அன்று இன்றுபோல்’ அடுக்களைப் பூச்சிகளாகவோ உள்நாட்டுப் பூச்சிகளாகவோ இராமல், உலகெலாம் சென்று வாணிகம், தொழில், கலை, குடியேற்றம், அரசு ஆகியவை பரப்பினர். கீழைஉலகில் தமிழகத்துக்கு மட்டுமே, எகிப்தியர், ஃபினீஷியர், கிரேக்கரைப்போலக் கடற்படை இருந்தது. பதிற்றுப் பத்திலும் பரிபாடலிலும், பிற சங்க இலக்கியங்களிலும், காணும் கடற்போர், கடல் வாழ்வுக் குறிப்புகளைப் போல, தமிழ் தவிர்த்த ஏனைய பண்டைய உலக மொழி இலக்கியங்களிலோ, தற்கால உலகமொழி இலக்கியங்களிலோகூட எதுவும் காணமுடியாது. 3. கல்வியைப் பரப்ப இன்று மேனாட்டு நாகரிக வாய்ப்புகள் எண்ணற்றவை ஏற்பட்டுள்ளன. பண்டைத் தமிழருக்கு இவ்வாய்ப்பு மிகமிகக் குறைவே-சீனம் கண்ட அச்சுத் தொழிலும், சீனமும் வட இந்தியாவும் பயன்படுத்திய தாளும்கூடப் பண்டு இங்கு இல்லை. பனை ஓலை கடந்து தமிழர் இத் துறை ஒன்றில் மட்டும் தாமாக முன்னேறவே இல்லை! ஆயினும், தமிழர் கல்வியில் அடைந்த முன்னேற்றம் வியப்புக்குரியது. அன்றைய உலகம் மட்டுமல்ல, இன்றைய உலகமும், இன்றைய அறிஞரும் காணாதது. அது ‘கண்ணின்றிக் காண்பவன் திறம், அரங்கின்றி வட்டாடிய திறம்’ என்னலாம். இது வகையில் அவர்கள் பயன்படுத்திய கருவிகள் எவை? இன்று நாம் அல்லது உலகம் அவற்றைப் பயன்படுத்தினால், அவர்களைக் கடந்து வளர முடியும் என்பதில் ஒரு சிறிதும் அய்யமில்லை. கண்ணில்லாமல் அவர்கள் கண்டதை, காலில்லாமல் அவர்கள் ஓடியதை, கண்ணுடனும் காலுடனும் நாம் காண முடியாது. ஓடமுடியாது! முதலில் அவர்கள் அடைந்த முன்னேற்றத்தையே இன்று நாம் அறிவதில்லை! சங்க காலத்தில் கிட்டத்தட்ட தமிழர் அனைவரும், அன்று தமிழராகவே இருந்த மலையாளிகளும், கன்னடியரும், தெலுங்கரும் உட்படக் கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு பேராக-ஆடவரும் பெண்டிரும்-எழுத வாசிக்கப் படித்திருந்தனர். கண்ணைத் திறந்து-மரத்தால் செய்யப்பட்ட ஆரியக் கண்ணாடியோ, மேலை நாட்டுக் கண்ணாடியோ போட்டுக் கொள்ளாமல்-சங்க இலக்கியத்தின் பக்கம் பார்வையைத் திருப்புபவர்களுக்கு இது தென்படாமல் போகாது. யார் யாரெல்லாம் புலவராகியுள்ளார்கள்-தொகுப்பு நூல்களின், திரட்டுகளில் இடம்பெறும் அளவுக்கு அவர்களுள் எத்தனை பேர்-எத்தனை வகுப்பினர்-தொழிலினர்-ஊரினர்-நாட்டினர்-கல்வி ஒளிபெற்றிருக்கிறார்கள் என்று கண்டால், அது இன்று நாம் நம்பக் கூடிய ஒரு செய்தியாயில்லை! மேனாட்டினர் கூட இதை அறிந்தால் எளிதில் நம்பமாட்டார்கள்-ஏனெனில், அது அவர்கள் இன்றும் கனவு காணாத ஒன்று! இன்றைய அமெரிக்காவும், இரஷ்யாவும், பிரிட்டனும் கண்டு பொறாமைப் படத் தக்க கல்வி வளர்ச்சி, பகுத்தறிவுப் பண்பு, சங்க இலக்கியத்தில் மிகத் தாழ்ந்த நிலையிலுள்ளவர் களிடம்கூட இருந்தது! நம்ப முடியாத இம் முன்னேற்றங்களுக்குரிய நம்ப முடியாத கருவிகள் யாவை? முத்தமிழ்! பொது மக்களிடம் கல்வி பரப்புவதற்காக மிகப் பழங் காலத்திலேயே தமிழர் கண்டுபிடித்த-உலகு இன்றும்-காணாத ஒரு கருவி! முச்சங்கம்! அது இக்காலச் சங்கங்களுள் ஒன்று என்று கூடப் பலர் நம்பத் தயங்குகின்றனர். ஆனால், அது நாம் கொள்ளும் பொருளிலுள்ள சங்கம் அன்று. ஏனெனில்,அது உலகில் எந்நாடும் இன்றுவரை கண்டிராத, கேட்டிராத, எண்ணிப் பார்த்திராத முழு நிறை தேசியச் சங்கம்-அதுவே இலக்கியம் ஆக்க, திரட்ட, தொகுக்க, தணிக்கை செய்ய, சான்றளிக்க, பிரச்சாரம் செய்ய, இலக்கியப் புகழ் பரப்ப அமைந்த தமிழுலகின் ஒரே அமைப்பு. மூவரசரையும் திறை கொண்ட ஒரே பாவரசர் செல்வம்! கல்லூரி, பல்கலைக் கழகம் போன்ற நாட்டுக் கல்வி நிலையங்கள், கலை நிலையங்களின் நடு இணைப்பான, பல்கலைக்கழகக் கூட்டுறவு அமைப்பு அதுவே! பள்ளிகளாகிய பரந்து சிதறிய வேர்த்துய்களை ஒருபுறமும், உலக வாழ்வாகிய உச்சிக் கொடியை ஒருபுறமுமாக, ஒவ்வொரு தமிழர் வாழ்வுடனும் அக்கால உலக நாகரிக வாழ்வை இணைத்த அரசியல் சாராத அரசியல் பேரமைப்பு மரம் அது! 4. சங்ககால வாழ்வுக்கு ஆதாரம் அதன் செல்வவளம். அச் செல்வ வளத்துக்கு ஆதாரம் அதன் தொழில் வளம், வாணிக வளம், கடல் வளம், கடல் வாணிக வளம், சுரங்க வளம், காட்டு வளம்! இத்தனைக்கும் ஆதாரம் அது கண்ட-இன்று நாம் அயல் மரபாகக் கருதும்-அறிவு நூல் வளம்! இந்த அறிவு நூல் வளத்துக்கு ஆதாரம்-இன்றைய தமிழர் இதைக் காதில் கொள்ளுமுன் தங்கள் காதுகளைத் ‘தயார்’ செய்து கொள்ளுதல் வேண்டும்-இத்தனைக்கும் ஆதாரம், தமிழர் சமய அறிவொளி! ‘தமிழர் சமய அறிவொளி’ என்றவுடன் சமயவாணர் கிளர்ச்சியுறக் கூடும். சீர்திருத்த வாதிகள் சீற்றமடையக் கூடும். ஆனால், அதன் உண்மை கண்டால் இருவருமே பெருமைப் படுதல் வேண்டும். ஆத்திகர் போற்றும் ஒரு நாத்திகர் சான்றே அதற்கு உண்டு-இங்கும் தேசிய முதல்வர் பண்டித நேரு சான்றே அதைச் சுட்டிக்காட்டுகிறது. அவர் பண்டை இந்தியா பற்றிக் கூறும் சான்று அது - தமிழகத்துக்கு அது முற்றிலும் பொருந்தும்! இந்தியாவின் மிகப் பழைமையான சமய நூல்களில் கூட நாத்திகம்-நாத்திகத்தின் பல்வேறு வகைகள்-கண்டிக்கப் படுகின்றன. உலோகாயதம், சூனிய வாதம், கணவாதம், அணுவாதம், சாங்கியவாதம், நியாயவாதம்-இத்தனை நாத்திக நெறிகள் கண்டிக்கப்படுகின்றன-சுட்டிக் காட்டி, விளக்கப்பட்டு, வரிவரி யாக மறுக்கப்படுகின்றன! கண்டிக்கப்படும் கொள்கைகளில், இன்றைய மேனாடுகளும் கண்டு வியக்கத்தக்க புத்தம் புதிய இயக்க, எதிர் இயக்கக் கருத்துகளை-ஹீடனிசம், இப்சனிசம், மார்க்சிசம், சோஷலிசம், ராஷனலிசம் ஆகிய அத்தனையையும்-தமிழகத்தின் பகுத்தறி வியக்கம், தன்மான இயக்கம் ஆகியவற்றையும்-நேரடியாக இல்லா விட்டாலும் மறைமுகக் கண்டன வடிவத்திலாவது காண்கிறோம்! அந் நாத்திகத்தைக் கண்ட முதல்வர் பிருக°பதி, கபிலர், கணநாதர் ஆகியோர் பின்னாளில் ரிஷிகளுடன் சேர்த்து எண்ணப்பட்டனர். நாத்திகத்தின் முடிசூடா மன்னர் பிருக°பதி ஒரு ரிஷியாக்கப்படவில்லை-தேவனாகக்கூட ஆக்கப்படவில்லை-ஒரு பகவான் ஆனார்-பகவான் என்று முதல் முதல் அழைக்கப் பட்டவர் அவரே. ஒரு நாத்திக முதல்வர் மட்டுமன்றி, நாத்திகர் வேதம், வேதாந்தம், சாத்திரங்கள் எல்லாம்-ஒரு முழு உலக இலக்கியமே இருந்ததாகத் தெரியவருகிறது! நேரு இது கண்டு வியக்கிறார்; ஒரு கணநேரம் அவர் பாரதக் கனவின் ஒளியிடையே நிழலாக அல்லது பாரதக்கனவின் நிழலிடையே ஒளியாக அது குறுக்கிடுகிறது. நேரு கண்ட மின்னொளியை ஆராய்ந்து விளக்குகிறார் மற்றொரு வடநாட்டு அறிஞர், எம்.என்.ராய் தம் ‘பொருளியல் வாதம்’ (ஆயவநசயைடளைஅ) என்ற நூலில்! உலகங் கடந்து இந்தியாவும், இந்தியா கடந்து தமிழகமும் நாகரிகத்திலும், சமய, அறிவு, கலைத்துறைகளிலும் முற்பட்டு முன்னேறியதற்குரிய உயிர்க் காரண விளக்கம் இதுதான்-இந்த நாத்திகர் பொது ஆராயா நம்பிக்கைகளை-பழக்க வழக்கங்களை-பழங்கொள்கைகளை எதிர்த் தெதிர்த்து எல்லாவற்றையும் உள்ளூர அறிவுப் பண்பாக மாற்றிவந்தனர். இவர்கள் பெயர்களுள் ஒருசிலவே-சித்தர் முனிவர் பெயர்களாக-நமக்குக் கட்டுக்கதை வடிவில் வந்து எட்டியுள்ளன. ஒருவர் நூலேனும், வாசகமேனும் நேரடியாக நமக்கு வந்து சேரவில்லை. அவர்களும் அவையும் இருட்டடிக்கப் பட்டன. ஆனால், அவர்கள் பண்பு இருட்டடிக்கப்படவில்லை. எதிர்த்தவர்களே கொள்கைகளையும் பண்புகளையும் கொண்டு நமக்குத் தந்துவிட்டுப் போயுள்ளனர். நம் இடைக்காலத் தேசிய இருளுக்குள் மறைந்த தேசிய ஒளிப்பண்பு—நம் இடைக்காலச் சமயப் புகைக்குள் மின்னும் அறிவுப் பொறி அதுவே. சில சித்தர் நூல்கள் தமிழில் கண்ணாடித்தாள் பொதிந்து நமக்கு வந்து எட்டியுள்ளன. ஒரு பெருஞ்சித்தர்-புதியதோர் ஆத்திகமே வகுத்துக் கொடுத்த சித்தர்-திருவள்ளுவரின் திருக்குறள்-அப்பழங்கால உலகு வருங்கால உலகுக்கு நம் கால உலகாகிய அஞ்சல் துறைமூலம் அனுப்பும் பதிவுசெய்யப்பட்ட அஞ்சல் சிப்பமாக (சுநபளைவநசநன ஞயசஉநட) நம் தமிழக அஞ்சல் சேவகர் கையில் இருக்கிறது! இந்தியாவின் பேரருளாளர்-மேல் நாட்டு டால்°டாய், ரோமேன் ரோலண்டு முதலியோர்-அருள்மரபின் மூல முதல்வர் அவரே என்று ஜெர்மன் அறிஞர் ஆல்ஃபிரட் ஷ்வைட்ஸர் உணர்ந்து குறிப்பிடுகிறார். காந்தியார் மரபை ஈன்று மறந்தது தமிழகம்-அவர் உடலை ஈன்று மறந்தது குஜராத்து-உடல் கொன்று மறந்தது மராட்டியம்-மரபும் உடலும் ஈனாமல் - கொலையிலும் மறதியிலும் பங்கு கொள்ளாமல்-உலகில் அறிவுச் செல்வரை ஒருபுறமும் அறிவு வீரரை மற்றொருபுறமும், பெற்றுப் பெருக்கும் அறிவரக்க நாடாகிய ஜெர்மனி-தான் பெறாத ஷேக்°பியரை, தான் ஈனாத காளிதாசனை உலகுக்குணர்த்திய விசித்திரப் பிறவியான ஜெர்மனி-இதோ, இத் திருவள்ளுவரையும் உலக அரங்குக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது! கோமாளிகளைக் கண்டு சிரிக்கும் உலகம், அயலாடை, அயற்பண்புகள்-பழைமையுருவில் வந்தாலும், புதுமையுருவில் வந்தாலும்-ஒருங்கே போற்றும் தமிழகம், திரையில் ஒளிநிழல் கண்டு, திரையே ஒளி என நம்பிப் போற்றும் இந்தியா-ஜெர்மனியின் இப் புத்தொளியை எப்படி வரவேற்குமென்று பொறுத்துப் பார்ப்போம்! 2. முற்கால, பிற்காலத் தமிழ் வழங்கும் எல்லைகள் தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம், தமிழ் எனப் பலவாகக் கூறப்படும் மொழிகள் உண்மையில் ‘தமிழ்’ என்ற ஒரே அடிப்படை மொழியின் வகைத் திரிபுகளே. இதனைப் புலவருலகம் ஊன்றிக் கவனித்தல் வேண்டும். ஏனெனில், தமிழகத்துக்கு மட்டுமன்றி உலகுக்கே பயன்படத்தக்க பல ஆராய்ச்சித் துறைகளுக்கு இது தூண்டுகோலாகத் தக்கது. இது வகையில் மொழி, தமிழ் நாட்டெல்லை ஆகியவை பற்றிய கீழ்வரும் செய்திகளை அறிஞர் உலகம் கவனித்தல் வேண்டும். இன்று ‘தமிழ்நாடு’ என்ற சொல் இந்திய உபகண்டத்தில் தமிழ் பேசப்படும் ஒரு பகுதிக்கு மட்டுமே வழங்கப் பெறுகிறது. ஆயினும் பழந்தமிழகம் இதுமட்டுமன்று. அரசியல் துறையில் விழிப்புற்ற தமிழர் தென் திருவாங்கூர் பகுதி தமிழகமே என்பதைச் சுட்டுகின்றனர். ஆனால், திருவாங்கூர், கொச்சி முழுவதிலுமே, சிறுபான்மையாகவோ, பெரும்பான்மை யாகவோ தமிழரில்லாக் கூற்றங்கள் (தாலுக்காக்கள்) இல்லை. இத் தமிழர் குடியேறிய தமிழர்கள் அல்லர். பண்டைப் பழந்தமிழ்க் காலத்தி லிருந்து மாறுபடாதிருந்து வரும் எஞ்சியுள்ள பழந்தமிழரே என்பதை அரசியல் சார்ந்த இன்றைய எக்கட்சியினரும் கவனிப்பதில்லை. புத்த மதத்தின் மூலம் வடநாட்டுப் பண்பாடு புகுந்து சிங்களமொழி வேறுபடுவதற்கு முன்னிருந்தே, இலங்கை தமிழகமாயிருந்தது. சிங்களம் வேறுபட்ட பின்னும் வட இலங்கை தமிழ் நாட்டைவிடத் தொன்மை மிக்க தமிழக மாகவே இருந்து வருகிறது. ஈழ நாட்டாராகிய வட இலங்கைத் தமிழர் தமிழ் நாட்டிலிருந்து குடிபுகுந்தவருமல்லர். தமிழ் நாட்டுத் தமிழர் ஈழநாட்டிலிருந்து குடியேறியவரும் அல்லர். ஈழநாட்டுத் தமிழர் சிங்களவரினும் பழைமையான இலங்கை நாட்டு மக்களே. பழைய நூல்களில் கிழக்கும், மேற்கும் கடல் என எல்லை வகுக்கப்பட்டது. நன்னூல் (12ஆம் நூற்றாண்டுக்) காலத்திலிருந்து தான் ‘குண கடல்’ (க்ஷயல டிக க்ஷநபேயட) குமரி, குடகம் (றுநளவநசn ழுhயவள) ‘வேங்கடம்’ என எல்லை கூறப் பட்டது. 12ஆம் நூற்றாண்டுக்குப் பின்தான் மலையாளத்தில் மலையாள இலக்கியம் ஏற்பட்டுள்ளது. அதற்கு முந்திய ஆயிர ஆண்டுகளுக்கு மேற்பட்ட மலையாள நாட்டு இலக்கியம் தமிழ் இலக்கியமாயிருப்பதும் காணலாம். குலசேகராழ்வார் பதிகங்கள், சேரமான் பெருமாள் பாடல்கள் (7,8ஆம் நூற்றாண்டு) சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து முதலிய சங்க கால நூல்கள் (2-3 நூற்றாண்டு) ஆகியவை இத்தகைய மலைநாட்டுத் தமிழ் நூல்கள். சங்க காலத் தமிழ் வேளிருள் நன்னன் கன்னட நாட்டுத் தமிழ்க் குறுநில மன்னன். சங்க நூல்களில் கூறப்படும் எருமையூர் உண்மையில் மைசூரே (எருமையூர்: வடமொழி மஹிஷபுரி-மைசூர்). கொடுந்தமிழ் நாடுகளில் ஒன்றாகக் கூறப்படும் புன்னாடு கன்னட நாட்டிலும் பண்டைக் கன்னட நாட்டுப் பகுதியாகவே (புன்னாடு) கூறப்படுகிறது. வேங்கடத்துக்கப்பாலும் தமிழ் வேளிர் (சிற்றரசர்) இருந்தனர். பல்லவர் அல்லது திரையர் உண்மையில் இவர் வழிவந்தவர்களே என்பதற்குப் பல குறிப்புகள் உள்ளன. பல்லவர்க்கு இழிவு கற்பிக்கும் புராணக் கதைகளினா லேயே, இவற்றின் பக்கம் ஆராய்ச்சியாளர் நோக்கம் நாடாமல் இருந்து வருகிறது. இப்பல்லவர் ஆந்திரருடனும், கன்னட நாட்டுக் கங்கருடனும், சோழருடனும் இரண்டற்ற தொடர்புடையவர்கள். பிற்காலத்தில் கலிங்க நாட்டிலும் தெலுங்கு நாட்டிலும் சோட (சோழ) மரபினர் ஆண்டு வந்தனர். தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்று பொருள். தெலுங்கு, தெனுகு என்பதற்கும் (தேன்) இனிமை, மணம் என்றுதான் பொருள். கன்னடம் என்பதற்கு (கம்-வாசனை; கன்னல்-கரும்பு) இனிமை என்பதுவே பொருள் ஆகும். மிகப் பழைமைவாய்ந்த மலையாள கன்னட நூல்கள் கிட்டத்தட்ட தமிழாகவேயுள்ளன. மலையாள நூல்களில் ஆசிரியர் தாம் தமிழில் எழுதுவதாகவே கூறினர். 7ஆம் நூற்றாண்டில் பழைய மலையாள கிறித்தவர் தம் மொழியைத் தமிழ் என்று கூறியதுடன் தமிழில் எழுதி முதன்முதலாகத் தமிழ் நூல்களை அச்சிடவும் செய்தனர்! முதல் தமிழ் ‘அகராதி’ மலபார் மொழி அகராதி என்ற பெயருடனேயே அச்சிடப் பட்டுள்ளது. ‘உயர்குலத் தமிழர்’ தங்கள் மொழியை வேறுபடுத்தி விட்டபின்னும் (இழிந்தவராகக் குறிக்கப்பட்ட) பழந்தமிழ்க் குடியினர் தமிழராகவே இருந்தனர். இன்றும் இருந்து வருகின்றனர். இவர்கள் ‘மக்கள் வழி’ (குயவநசயேட ஐnhநசவையnஉந) உடையவர்கள். ‘தீண்டப்படாத’ மக்கள் எல்லா நாடுகளிலும் இன்றும் தம்மை ஆதித் திராவிடர், ஆதிக் கேரளர், ஆதி ஆந்திரர் என்றே கூறுகின்றனர். 12ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டினுள்ளேயே பாண்டித் தமிழ், சோழத் தமிழ் என்ற வேறுபாடு தலைகாட்டிற்று. இரண்டுக்கும் வெவ்வேறு எழுத்துகள் கூட ஏற்பட்டன. இன்றைய தமிழ் எழுத்து சோழ எழுத்தேயாகும். இது சேர எழுத்து எனவும் கூறப்பட்டது. ஆனால், பழைய பாண்டி எழுத்தான வட்டெழுத்து பாண்டி நாட்டில்தான் இன்று மறைந்துவிட்டது. வடமலையாளத்திலும் தென் கன்னடம், குடகு ஆகிய இடங்களிலும் அது இன்றும் ‘கோல் எழுத்து’ என்ற பெயருடன் வழங்குகிறது. ‘யார் செய்த நல் வினையோ’ இன்று பழந்தமிழ் எழுத்து மாறுபட்டு விட்டாலும், தமிழ் மொழியானது பாண்டி, சோழம் என இரு மொழிகளாகிவிடாமல் ஒரு மொழியாகவே இருந்து வருகிறது. கடைசியாக, பழந்தமிழ் எல்லை இன்றைய தமிழ்நாடும் மலையாள நாடும் அதற்குச் சற்று அப்பாலும் இப்பாலும் மட்டுமன்று. நெடுந்தொலை பரவியிருந்த தென்பது தமிழ் நூல்களாலேயே விளக்கப்படக் கூடும். ஆயினும் பகுத்தறிவு, ஆராய்ச்சிக்கண் அப் பக்கம் இன்னும் நாடாததால் விளக்கம் பெறாதிருந்து வருகிறது. இவ்வகையில் புலவர்கட்குப் பெருந்தடையாய் இருந்து வருவது ‘தமிழ்’ என்பது சொல்லின் பலகால மாறுபட்ட வழக்கெல்லையே யாகும். முதலில் ‘தமிழ்’ என்பது தென்னாட்டில் வழங்கப்பட்ட மூலத் திராவிட மொழியின் பெயராக இருந்தது. இது முத்தமிழ் (முன்னையதமிழ் அல்லது மூன்று தமிழ்) எனப் பிற்காலத்தில் வழங்கப்பட்டது. இன்று இதனையே நாம் திராவிடம் என்று குறிக்கிறோம். இதன் வகை பேதங்கள் கொடுந்தமிழ்கள் என்றும் இதன் திருந்திய இலக்கிய வடிவம் செந்தமிழ் என்றும் வழங்கப்பட்டது. சங்க காலத்தில் மங்களூருக்கும் வேங்கடத்துக்கும் தெற்கிலுள்ள தீவக்குறை முழுவதும் செந் தமிழ் நாடாகவும், அதன் வடக்கு கொடுந்தமிழ் நாடாகவும் இருந்தது. மேற்கி லுள்ள மொழி குடகு (குடக்கு - மேற்கு) எனப்பட்டதுபோல், வடக்கு மொழி வடுகு எனப்பட்டது. கன்னடமும் தெலுங்கும் உண்மையில் 10ஆம் நூற்றாண்டு வரை இத்தகைய ஒரே எழுத்துடைய ஒரே கொடுந் தமிழ் மொழியாயிருந்து, பின் இரண்டாகப் பிரிந்தவையே. தேவாரக் காலத்துக்குள் (7ஆம் நூற்றாண்டுக்குள்) செந்தமிழ்நாடு பின்னும் குறுகிற்று. சில காலம் அது பாண்டி நாடாகவும், சில காலம் வடபாண்டி, தென்சோழ நாடுகளாகவும் கொள்ளப்பட்டது. பெரிய புராணத்தில் சோழ நாட்டிலிருந்து பாண்டிநாடு செல்லும் சம்பந்தர் தென்னாடு அல்லது தமிழ் நாட்டுக்குப் போவதாகவே கூறுகிறார். இவ்விடத்தில் தமிழ்நாடு என்பது செந்தமிழ்நாடு என்ற பொருளிலேயே வழங்கப்பட்டிருப்பதைக் காணலாம். தொல்காப்பியர் கூறிய தமிழ்நாட்டெல்லை உண்மையில் செந்தமிழ் நாட் டெல்லையேயன்றி செந்தமிழ், கொடுந்தமிழ் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய முழுத்தமிழ் (திராவிட) நாட்டெல்லையன்று. ஏனெனில் அவர் தெற்கெல்லை யாகக் கூறிய குமரி, குமரிமுனையோ கடலோ அன்று. குமரியாறுதான் என்று குறித்தனர் உரையாசிரியர்கள். அதன் தெற்கிலிருந்த பஃறுளியாறு, குமரி நாடுகள் ஆகியவை தமிழ்ப் பெரு நாடாகவேயிருந்தாலும், செந்தமிழ்நாடு அல்லவாதலால் அவை விலக்கப்பட்டன என்று தோன்றுகிறது. தெற்கெல்லை, செந்தமிழ் நாட்டெல்லை எனவே, வடக்கெல்லையும் அதுவே யாதல் தெளிவு. “வடவேங்கடம் தென் குமரியாயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து” என்ற தொல்காப்பியத் தொடர் இவ் வேறுபாட்டைக் குறிக்க எழுந்ததேயாகும். தொல்காப்பியர் எக்காரணங் கொண்டோ செந்தமிழை வேறுபடுத்தி அதையே தமிழ் எனக் கொண்டு எல்லை வகுத்து, அதை ஏற்றுக் கொண்டதன் மூலம் தமிழ்நாடு `செந்தமிழ்’ பேணிற்று; கொடுந் தமிழைக் கொடுமைக்கு ஆளாகக் கைவிட்டுத் தமிழகத்தைக் குறுக்கிற்று. செந்தமிழும் கொடுந்தமிழும் ஒருதமிழ் ஆதல் வேண்டும் என்று அரசியல்துறை எழுச்சி பெற்றவர்களனைவரும் விரும்புகின்றனர். புலவர்கள் உடனிருந்து ஒத்துழைப்பார்களா? அவர்கள் தமிழ் இலக்கியப் பற்று, தமிழ்ப் பற்று, தமிழ் மக்கள் பற்று, தமிழ்நாட்டுப் பற்று பெருந் தமிழுலகப் பற்று ஆக விரிவுபடுமா? 3. நாட்டுக் கல்வியும் - தாய்மொழியும் அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் எல்லாவற்றையுமே பொதுப்படக் கல்வி என்று கூறலாம். ஆயினும், பள்ளிகளின் வாயிலாகக் கிடைக்கும் வாய்ப்பு ஒன்றை மட்டுமே சிறப்பாகக் கல்வி என்று கூறுகிறோம். இதற்கும் காரணம் இது ஒன்றே செயற்கை முறையான வாய்ப்பு. திட்டப்படுத்தி வளர்ச்சி உண்டு பண்ணுவது பள்ளிக் கல்வியில் மட்டுமே எளிது. பள்ளியறிவுக்கு முன்னும் பின்னும் உள்ள அறிவு வளர்ச்சியை இயற்கை யறிவு வளர்ச்சி அல்லது இயற்கைக் கல்வி என்னலாம். பள்ளிக்கு முற்பட்ட இயற்கைக் கல்வியும், பள்ளி அல்லது கல்லூரிக்குப் பிற்பட்ட இயற்கைக் கல்வியும், குடும்ப, சமூக வாழ்க்கையினிடையே ஏற்படும் கல்வியாதலால், இரண்டும் வாழ்க்கை மொழியாகிய தாய்மொழியிலன்றி வேறெதிலும் நடைபெற முடியாது என்பது தெளிவு. முதற்படியும் இறுதிப்படியும் ஆன இவ்விரண்டுடன் ஒத்து, அவற்றை இணைக்கத்தக்கதான பள்ளிக் கல்வி அவற்றைப்போல் தாய்மொழி மூலமான கல்வியாயிருந்தாலல்லாமல், அது நாட்டுக் கல்வியாயும் இராது என்று கூறத் தேவையில்லை. பிறமொழி, தாய்மொழியைவிட மிகச் சிறந்ததாய் அமையக்கூடும் இடங் களில் கூட, பிற மொழிக் கல்வியினால் வீண்கால அழிவு ஏற்படுகிற தென்பதில் ஐயமில்லை. ஏனெனில் தாய்மொழி மூலம் ஓர் ஆண்டில் கற்கப்படும் கல்வியைப் பிறமொழி மூலம் மூன்றாண்டுகளில் கூடக் கற்கமுடியாது. அதோடு கற்ற அள விலும் அது தாய்மொழி போலச் செரித்து அறிவுணவாய் மேலும் வளர்ச்சிக் குரியதாகாமல், தாளால் புனையப்பட்ட செடிகொடி போல் செயலற்ற தாகவே இருக் கும். நம் தமிழ்நாட்டில் ஆங்கிலம் ஒன்று நீங்கலாக எந்தப் பிற மொழியும் தாய் மொழியைவிட எத்துறையிலும் சிறப்புடைய தன்றாதலால், பிறமொழிக் கல்வி பயனற்றது மட்டுமன்று; தீமை தருவதும் ஆகும் என்று கூறத் தேவையில்லை. பள்ளிக்கு முற்பட்ட கல்வி பள்ளிக்கு முற்பட்ட கல்வியிலும் மூன்று படிகள் உண்டு. முதற்படி இயற்கையாய் ஏற்படுவது. உயிர்கள் வளர்ச்சிப் படியில் (நுஎடிடரவiடிn) பல ஊழிகளாக அடைந்த முன்னேற்றம் முழுவதும் மரபுரிமை (பரம்பரை)யாகக் குழந்தைக்கு இயற்கையாகவே சில மாதங்களில் வந்துவிடுகிறது. பசித்தபோது அழுதல், பால் குடித்தல், குடித்த பால் செரிக்கும் வகையில் கை கால்களை ஆட்டி விளையாடுதல் ஆகியவை இத்தகையன. கண்ட பொருள்களைப் பிடித்தல், வாயில் வைத்துச் சுவைபார்த்தல், கூர்ந்து நோக்குதல் முதலியவை உடல் வளர்ச்சிக்கும் பொருள்கள் பற்றிய இயற்கையறிவு வளர்ச்சிக்கும் உதவுகின்றன. இரண்டாவது படி தாயின் தொடர்பால் ஏற்படுவதாகும். தாயின் செயலில்லாவிட்டால் விலங்கு நிலையில் கீழ்ப்படியிலேயே குழந்தை இருக்க வேண்டி வரும். உணவு நாடும் குழந்தைக்குத் தக்க உணவைத் தாய் கால வாய்ப்பறிந்து உதவுவது போலவே, அறியும் விருப்பம் மட்டும் உடைய குழந்தைக்கு விரைவில் அறிவு வளர்ச்சி ஏற்படத் தாய் உதவுகிறாள், தாயுடன் குடும்பமும் உதவுகிறது. குடும்பத்துக்குக் குடும்பம் குழந்தைகள் அறிவு வளர்ச்சி வேறு படுவதற்குத் தாயின் அறிவு நிலை, குடும்ப நிலை, இரண்டிடத்தும் உள்ள கல்வி, பண்பாடு ஆகியவையே காரணம் ஆகும். தாயின் அறிவு குறைவுற்ற சமூகங்களிலும், குடும்ப வாழ்க்கைத்தரம் தாழ்வுற்றிருக்கும் சமூகங்களிலும் குழந்தைகள் பிற்காலத்தில அறிவு குன்றியிருப்பதற்கு இதுவே காரணம். இயற்கைக் கல்வியின் மூன்றாவது படி பிற குழந்தைகள் கூட்டுற வினாலேயே ஏற்படும் அறிவு ஆகும். ஒரு சில ஆண்டு வளர்ச்சி பெற்ற குழந்தை தாய் உறவினும் தன்னொத்த குழந்தைகள், சில சமயம் தனக்கு மூத்த அல்லது இளைய குழந்தைகள் (பாப்பாக்கள்) கூட்டுறவை நாடுவது காணலாம். ஆகவே, குடும்பத்தினுள்ளும், சூழ்ந்துள்ள குடும்பத்திலும் உள்ள குழந்தைகளின் அறிவு நிலையே இந்தப் படியில் குழந்தையின் வளர்ச்சி வேகமாகிறது. நம் நாட்டில் தாயின் அறிவு குடும்பத்தின் அறிவாகவும், குடும்பத்தின் அறிவு நிலை, சாதி, சமூகம், இனம் ஆகியவற்றின் அறிவு நிலையாகவும் இருப்பதால்தான் குழந்தையின் அறிவும் நாட்டின் அறிவும் பெரிதும் பெரும்பான்மை இனத்தின் அறிவுநிலையாய்விடுகிறது. நாட்டின் அறிவை வளர்ப்பவர்கள் இப் பெரும்பான்மை இனத்தையும், அதனைச் சார்ந்த பிற்பட்ட சாதி சமூகங்களையும் தனிப்படத் திருத்த முற்பட்டாலல்லாமல், குழந்தை வளர்ச்சியும் நாட்டு வளர்ச்சியும் தடைப்பட்டே இருக்கும். பள்ளிக்குப் பிற்பட்ட கல்வி பள்ளிக்குப் பிற்பட்ட கல்வியும் முற்பட்ட கல்வியைப் போலவே சமூக, இனப் பண்பாட்டினளவில் நிற்க வேண்டிய தாகிறது. அத்தோடு மற்றும் இருவகை களிலும் பள்ளிக்குப் பிற்பட்ட கல்வி இனவளர்ச்சியின் அடிப்படையைத் தழுவிய தாகிறது. பள்ளிக்கு முற்பட்ட கல்வியைவிடப் பள்ளிக்குப் பிற்பட்ட கல்வியில் வாழ்க்கைத் தரம், வாழ்க்கைப் பொருளாதார வசதிகள், நல்ல மணவாழ்வு, சமூக அறிவுநிலை ஆகியவை மிகுந்த இடத்தைப் பெறுகின்றன. வாழ்க்கை மொழி யாகிய தாய் மொழியின் நிலை, தாய்மொழிக் கல்வி ஆகியவை வாழ்க்கையை யும் வளர்ச்சியையும் பாதிக்கும் பருவமும் இதுவே. பள்ளிக் கல்வி நம் நாட்டில் இன்று பள்ளிக் கல்வி மூன்று படிகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை தொடக்கக் கல்வி (1-5 வகுப்பு அல்லது 1-8 வகுப்பு) இடைநிலைக் கல்வி, உயர்கல்வி (கல்லூரிக் கல்வி) என்பவை. தொடக்கக் கல்வி உண்மையில் இயற்கைக் கல்வியின் பிற்பட்ட படிகளான குடும்ப, சமூகக் கல்விக்குத் துணைதரும் கல்வியேயாகும். இதுமட்டுமே எல்லா மனிதர் களுக்கும் உரியதெனக் கொள்ளப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் எல்லா மனிதர்க்கும் உரிய இம் மனிதத்தன்மை மிகவும் குறுகியிருக்கிறது. (அ) ஆண்களுக்கு அறிவு உரிமை, ‘பெண்களுக்கு அடிமை உரிமைதான்’ என்று இந்நாட்டில் கருதப்பட்டுவருகிறது. உண்மைநிலையும் அப்படித் தான் இருந்துவருகிறது. உயர் வகுப்புகளில்கூடப் பெண்கள் தாழ்ந்த வகுப்பினராகவே உள்ளனர் என்பது மறக்கத் தக்கதன்று. மேல் நாடுகளில் பெண்களுக்குக் கல்வி உரிமை இருந்தும்கூட வாழ்க்கையில் உள்ள அடிமைப் பண்பு அறிவுத்துறையில் அவர்களை முற்றிலும் விட்ட பாடில்லை என்று காணலாம். அப்படியிருக்க, பெண்களுக்கு உரிமையும் வசதியும் அளிக்கப்படாத இந்நாட்டில், பெரும்பாலான பெண்கள் சமூகத்திலும் பிற்பட்டு, பெண்கள் என்ற நிலையிலும் பிற்பட்ட இரட்டிப்பு அடிமை நிலையிலுள்ளார்கள். ஆதலால், இங்குப் பெண்கள் பிற்பட்டிருப்பதில் வியப்பில்லை. (ஆ) வாழ்க்கையில் பிற்பட்ட இனத்தவர்கள் செல்வநிலையிலும் பிற்பட்டுத் தொடக்கக் கல்விகூடப் பெறாததால், முற்பட்ட ஓரிரு வகுப்புகளும் முற்பட்ட இனமும் மட்டுமே அனைவர்க்கும் உரிய கல்வியை அடைந்து வருகிறது. வரிகொடுக்கும் இனம் பிற்பட்ட இனமாகவும், கல்வி கற்கும் இனம் பிறிதொரு சிறுபான்மை இனமாகவும் இருக்கும் நாடு நம்நாடு தவிர உலகில் வேறு எங்கும் இருக்காதென்று கூறலாம். (இ) செல்வநிலை பிற்படாத இடத்திலும் சமூக இன வாழ்க்கைப் பண்பாடு தொடக்கக் கல்வியைக்கூடப் பாதிக்காதிருக்க வில்லை. ஏழை வீட்டுநோய் செல்வர் வீட்டிலும் பரவுவதுபோல் ஏழையின் அறியாமை அதே சமூகத்தி லுள்ள செல்வர் பண்பாட்டையும் கெடுத்தே வருகிறது. மூன்று வகைக் கல்விகள் மேற் குறிப்பிட்ட பொது வசதிக் குறைவு மட்டுமல்லாமல், கல்வி மூவகைப்பட்டிருப்பதனால் வேறு ஒரு பெருங்கேடும் நாட்டு மக்களுக்கு உண்டு. எல்லாருக்கும் உரிய கல்வி தொடக்கக் கல்வி; இடைத்தர வகுப்பார்க்கு இடைக்கல்வி (ளுநஉடினேயசல நுனரஉயவiடிn) உயர் (சோம்பல்) வகுப்பார்க்கு உயர் கல்வி என்றிருக்கும் வகுப்பு முறை ஏழைகளுக்கு உதவாத முறை மட்டுமல்ல, அவர்களைப் பூண்டோடு வளர்ச்சியில்லாது அழுத்திவைப்பதும் ஆகும். ஏனெனில் படிப்படியாக மாணவர் சம்பளம் உயர்வது ஒன்றே, ஏழையை அங்கங்கே தடைசெய்யப் போதிய அணையாயிருக்க, அது போதாமல் ஒவ்வொரு படியிலும் ஒருபெரிய தேர்தல் (பரீiக்ஷ); ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு தேர்தல்; போதாக் குறைக்குத் தேர்வு (ளுநடநஉவiடிn) ஆகியவற்றால், நாட்டின் செல்வத்துக்குக் காரணமான ஓர் இனம், அரிப்புகள் கொண்டு அரித்துத் தள்ளப்பட்டுச் சுரண்டும் இனம் அதன் செல்வத்தின் உதவியால் தானே செல்வ வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் பெறுகிறது. இம்மூவகைக் கல்வியிலும் படிப்படியாகப் பிற மொழிகள் புகுத்தப் படுவதும், மிகுதியாக்கப்படுவதும் ஒரு புறம் நாடு அழிய உதவுவதுடன், மறுபுறம் நாட்டு வாழ்வுக்குத் தொடர்பற்ற, நாட்டுச் செல்வத்தை உண்டு பண்ணுவதில் ஈடுபடாத, உழைக்காத ஓர் இனம் வளர மட்டும் உதவுகிறது. பிற மொழி பிறமொழிகளுள் தற்கால நூல் முறை அறிவு (ளுஉநைnஉந) தரும் ஆங்கில அறிவுகூடப் பாமர மக்களிடையே தொழிலறிவு, பகுத்தறிவு வளர உதவவில்லை. காரணம் நாட்டுப் பொது மக்களிடையே எவரும் அதனையடைய வழியே இருப்பதில்லை. படித்தாலும் பிறமொழியறிவு பிறமொழியாளருடன் ஊடாட உதவுமேயன்றித் தாமே சிந்திக்க, தம் இனத்தார், தம் மக்கள் வளர்ச்சிக்கு உழைக்க உதவாது. தவிர அரசியல் உயர்வு, நாகரிக உயர்வுக்குப் பிறமொழிக் கல்வி உதவும் வரை, பிறமொழி அறிவுடையார்க்கே உயர் சம்பளம் என்றிருக்கும் வரை, உயர் குடியினர் எனத் தருக்கி அரசியல் சூதாட்டமாடும் சோம்பல் வகுப்புகள் அன்றி, நாட்டு மக்கள் எவரும் முன்னேற முடியாது. ஆகவே ‘நாட்டுக்கல்வி’ உண்மையில் ‘நாட்டுக்கல்வி’ ‘நாட்டு மக்கள் கல்வி’ ஆதல் வேண்டுமானால் அது முழுவதும் தாய்மொழி அடிப்படையில் அமைவது இன்றியமையாதது ஆகும். பிறமொழிக் கல்வி, பிறநாட்டுத் தொடர்பு வேண்டும். அளவு உயர்ந்துவிட்ட இனத்தவர்க்கு, நாட்டுக்கல்விக்கு மேற்பட்ட ஒரு துணையாக முடியுமேயல்லாமல், நாட்டுக் கல்வியின் ஒரு பகுதியாக முடியாது. 4. இலக்கிய உலகில் தமிழன் இன்றைய உலகம் விரைந்து ஓருலகம் ஆகிக்கொண்டு வருகிறது. ஆனால், நமக்கு அது ஓருலகம் ஆனால் போதாது. அது நம் உலகமும் ஆதல்வேண்டும். அதாவது நாம் அதை ஆக்கும் பொறுப்பிலும் இயக்கும் பொறுப்பிலும் பங்குகொண்டு அதன் மதிப்பு வாய்ந்த ஓர் உறுப்பு ஆதல்வேண்டும் உலக நாகரிகப் போட்டியில் நாம் முந்திக்கொண்டிந்த காலம் உண்டு. ஆனால், வரவர நாம் பிந்திவிட்டோம். இன்று நாம் கிட்டத்தட்ட கடைசி வரிசை யில் கடைசியாகப் பிந்தித்தானிருக் கிறோம். இந் நிலையில் நாம் முன்பு முந்திக் கொண்டிந்தோம் என்பதையே எவரும் நம்பமுடியாமலாகியுள்ளது. நாம் என்றாவது முந்திக்கொண்டிருந்தோம் என்பது உண்மைதானா, உண்மையா யிருக்கமுடிமா என்று இன்று கேட்கப்பட்டால், அதில் வியப்பில்லை. இது உண்மை என்பதுகூட இன்று ஆராய்ந்து முடிவுகட்டக்கூடிய ஒரு செய்தியாகத்தான் இருக்கிறது. இதுபோலவே நாம் பிந்திவிட்டோம் என்பதும் ஆராய்ச்சிக்குரிய செய்தியாகவே உள்ளது. நாம் இன்று பிற்பட்டிருக்கிறோம் என்பதை எவரும் எளிதில் ஒப்புக்கொள்வர். ஆனால், நாம் பிந்திக்கொண்டுதான் வந்திருக்கிறோம், நெடுங்காலமாகப் பிந்திக்கொண்டுதான் வந்திருக்கிறோம் என்பதைப் பலர் எளிதில் உணரமாட்டார்கள். ஏனென்றால், முன்பு முந்திக்கொண்டிருந்தோம் என்பது உண்மையானால் தானே, நாம் இன்றைய நிலைமைவரைப் பிந்திக் கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறமுடியும்? நாம் என்றுமே பிற்பட்டு இருந்து வந்திருக்கலாம் அல்லவா? நாம் ஒரு காலத்தில் மேம்பாடடைந்திருந்தோம் என்று சிலர் பெருமை பேசி நாள் கழிக்கிறார்கள். உண்மையில் இன்றைய நிலையைப் பார்க்க, இது பெருமைக்குரிய செய்தியன்று; சிறுமைக்குரிய செய்தியேயாகும். வேறு பலர் பழைமையில் கருத்துச் செலுத்தாது புதுமையிலேயே முனைந்து செல்ல விழைகின்றனர். இது சீரிய முயற்சியே. ஆனால், பழைமையின் வேரில்லாத விடத்தில் புதுமை வளம் பெறாது, மலர்ச்சியுறாது, பிற நாடுகளின் புதுமை அவ்வந் நாடுகளின் பழைமையில் பூத்த புதுமலர்ச்சிகளே. பழைமைவெறுத்துப் புதுமையுட் புகுவோர் தம்மையுமறியாமல் தம் பழைமையை அல்லது பண்பைக் கைவிட்டு அயலார் பழைமை அல்லது பண்பையே நாடுபவர்கள் ஆகிறார்கள். ஏனெனில், பிறநாடுகளிலிருந்து அவர்கள் மேற்கொண்டு பின்பற்றும் புதுமை, அந் நாடுகளின் பழைமையில் வந்த புதுமலர்ச்சியே. மேலும் அயல்நாடுகளினிட மிருந்து பின்பற்றும் இப் புதுமை உண்மையில் புதுமலர்ச்சியாகாது: போலிப் புதுமையேயாகும்! பழைமை அல்லது பழம் பண்பிலிருந்து புதுமலர்ச்சி ஏற்படுவது இயல்பே. ஆனால், அயற்பண்பி லிருந்து இப் புதுமை எளிதில் மலர்ச்சியுறாது. மேனாடுகளில் கிரேக்க உரோம இலக்கியங்களிலிருந்து புதுமலர்ச்சி ஏற்பட்டதே என இக்கூற்றுக்கு எதிர்க் கூற்று எழுப்பப்பெறக் கூடும். கிரேக்க, உரோமப் பண்பாடுகள் வடக்கு மேற்கு அய்ரோப்பாவில் புதுமலர்ச்சி ஏற்படுத்தி யது உண்மையே. ஆனால், இப் புதுமலர்ச்சிக்கு கிரேக்க, உரோமப் பண்பாடுகள் மட்டுமே காரணம் என்று கூறமுடியாது. ஏனெனில், அப் பண்பாடுகள் கிரேக்கமும் உரோமும் அழிவுறாமல் காக்கவில்லை. அந்நாடுகள் அய்ரோப்பாவிலேயே இருந் தாலும், அவற்றில் அம் மறுமலர்ச்சி முழுதும் ஏற்படவுமில்லை. வடக்கிலும் மேற்கிலும் உள்ள பகுதிகளிலேயே அவை புதுமலர்ச்சி தூண்டின. வடக்கும் மேற்கும் பண்படாப் பகுதிகள். தெற்கும் கிழக்கும் பண்பட்டவை. ஆனால், வளர்ச்சிக்குரிய ஏதோ ஒரு பண்பு பண்படாப் பகுதிகளில் இருந்தது. அப் பண்பு பண்பட்ட பகுதிகளில் குன்றிவிட்டது. ஆனால், வளர்ச்சி குன்றிய பண்பட்ட பகுதி வளர்ச்சிக் கூறுடைய வடபகுதிக்குத் தூண்டுதல் தந்தது. மறுமலர்ச்சியின் மறைதிறவு இதுவே. நற்பண்பு அயற்பண்பாயினும் பிறர் பண்பாட்டு மலர்ச்சியைத் தூண்டவல்லது. நம்மிடையே இன்று ஆங்கிலப் பண்பாடு அத்தகைய தூண்டுதலே தந்துள்ளது. நாம் நம் பண்பில் நின்று அதன் தூண்டுதல் பெற்றால், புதுமலர்ச்சியின் வேகம் இன்னும் மிகுதியாகும் என்பது உறுதி. எல்லா மொழிகளிலும் உள்ளார்ந்த நற்பண்புகளும் உண்டு. உள்ளார்ந்த அல்பண்புகளும் உண்டு. அல்பண்பு தேய, நற்பண்பு வளருமானால், அம் மொழியில் வளர்ச்சி ஏற்படும். நற்பண்பு வளராவிட்டால் அல்பண்பே வளர்ந்து வளர்ச்சி தடைப்படும். அல்லது அது அழிவுறும். அயற்பண்புகள் ஒருமொழிக்குச் செய்யக் கூடியதெல்லாம், நற்பண்பைத் தூண்டி வளர்ப்பதோ, அல் பண்பைத் தூண்டி அழிப்பதோ மட்டுமே. அயற்பண்பு ஒரு மொழியின் பண்பாக இரண்டு வழியிலும் வளர்ச்சி தளர்ச்சி பெறமாட்டா. தமிழின் தனிப் பண்புகள் எவை: அப் பண்புகளிலும் நற்பண்புகள் எவை, அல்பண்புகள் எவை என்று நாம் அறிந்திட வேண்டுவது இன்றியமையாதது. இவை இரண்டையும் தற்கால உருவிலேயே நாம் காணக் கூடுமானாலும், அவற்றின் முழு விளக்கத்தையும் இயல்புகளையும், தோற்ற வளர்ச்சி தளர்ச்சி வரலாறுகளையும், அவற்றின் பழைமையிலேயே நாம் காணலாகும். பழம் பண்பிலூறிய மொழியின் இக் குணங்களையும் குறைகளையும் நன்கறியாமல், மொழியின் வருங்கால வளர்ச்சிக்குத் திட்டமிடுவது எளிதன்று. நம்மில் இன்று பழம் பெருமைகள் பாடுபவர் உண்டு. அதன் இன்றைய குறைபாடுகளை எடுத்துரைப்பவர் உண்டு. ஆனால், தமிழின் தனிப்பண்புகளை அதாவது அதன் தனிச்சிறப்புகளையும் அதன் தனிக்குறைபாடு களையும் ஆராய்ச்சி முறையில், வரலாற்று முறையில், உலகப் பின்னணியின் ஒப்பீட்டு முறையில் விளக்கமாக உணர எவரும் முயற்சி செய்வதில்லை. இனியேனும் இதில் நாம் கருத்துச் செலுத்துதல் வேண்டும். நம் சிறப்புகளை நாம் அறிவது எதற்காக? நம்மை நாமே புகழ்ந்து கொள் வதற்காகவா? அன்று! அல்லது வேலிக்கு ஓணான் சான்று கூறுவதுபோல நமக்கு நாமே சான்று கூறுவதற்கும் அன்று. நம் சிறப்புகளை அறிவதன் மூலம் நாம் உலகில் முன்பு முந்திக்கொண்டிருந்ததன் காரணங்களை அறிந்து, அவற் றுக்குத் தக்க சூழ்நிலையமைத்து மீண்டும் செயலாற்ற வைத்து நம் மொழியை வளர்ப்பதற்காகவே. இதுபோலவே நாம் நம் குறைபாடுகளை அறிந்துகொள்வதும் அவற்றை வாளா ஏற்று நம் தலையிலடித்துக் கொள்வதற்காக அன்று. முதன்மை நிலையிலிருந்து கடைமை நிலைக்கு நம்மைக் கொண்டுவந்தது இக் குறைபாடுகளே யாதலால், அவற்றை உணர்ந்து திருந்துவதன் மூலம் நாம் மீண்டும் முதன்மை நிலை நோக்கி முன்னேறலாம். இதனால், நாம் முன்னைய முதன்மை நிலையையும் தாண்டிச் செல்ல முடியும் என்று துணிந்து கூறலாம். ஏனென்றால், முன்னைய முதன்மை நிலை தோழமையற்ற முதன்மை நிலை-அது ஒரு தனிக்கொடுமுடியாயிருந்தது. இன்று நாம் அடையக்கூடும், முதன்மை நிலை தோழமையோடு, துணையோடு கூடியது. உலகு இமயமாக, நாம் அதன் ‘தவளகிரி’ கௌரிசங்கர் (எவரெ°ட்) முகடுகளாக விளங்க நாடுவதே நம் வருங்காலக் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். அதுமட்டுமன்று. அது ஒரு வளராத மலைக் கொடுமுடியா யிராமல், வளரும் உயிர் முகடாயிருத்தல் வேண்டும். அதாவது உலகை வளர்த்து நாமும் அதனுடன் வளர்தல் வேண்டும். சிலர் குறைபாடுகளில் கவனம் செலுத்த விரும்ப மாட்டார்கள். வேறு சிலர் சிறப்புகளில் கவனம் செலுத்த விரும்ப மாட்டார்கள். ஆனால், உண்மையில் இவ்விரண்டும் ஒன்றோ டொன்று இணைந்தவையே. நம் குறைபாடுகள் நம் சிறப்புகளுடன் கூட உடன் பிறப்பாகவே வளர்ந்துள்ளன. குறைபாடறிந்தே குணம் பெருக்க முடியும். குணமறிந்துதான் குறைபாடு குறைக்க முடியும். எனவேதான் குணம் குறை நாடி, உவப்புவர்ப்பின்றி ஆராய்தல் இன்றியமையாததாகிறது. குணங் குறை இரண்டிலும் உலகில் நம் இடத்தை நாம் வரையறுத்து உணர வேண்டுமானால், நம் சூழ்நிலைகளை நாம் எந்த அளவுக்கு மாற்றி யமைக்க உதவியுள்ளோம், அல்லது எந்த அளவுக்கு நாம் நம் சூழ்நிலைக்கு இயைய மாறியுள்ளோம் என்பதை நாம் உணர்தல் நலம். அதாவது உலக மொழிகளில், நாகரிகங்களில், பண்புகளில் நாம் இதுவரையிலும் ஒரேயடியாகத் தனித்து வாழ்ந்துள்ளோமா, பிற இனங்களுடன் தொடர்பு கொண்டு படிப்படியாக மாறியோ, மாற்றியோ வந்திருக்கிறோமா? மாறி, அல்லது மாற்றி வந்திருந்தால் அதன் இன்றைய விளைவுகள் யாவை? அதன் பலாபலன்கள், நம் பலாபலன்கள், உலகுக்குரிய பலாபலன்கள் எவை என்றும் நாம் காணுதல் வேண்டும். உலகில் நாம் தனித்து வாழவில்லை. இனங்களுடன் தொடர்பு கொண்டே வந்துள்ளோம், என்பது தெளிவு. உலக நிலப்படத்தை ஒரு கையிலும் உலக வரலாற்றுப் படத்தை மற்றொரு கையிலும் வைத்துப் பார்த்தால், இது நன்கு விளங்கும். தமிழ் பேசப்படும் நாட்டைச் சுற்றிலும் உள்ள எல்லைப் புறங்களை நோக்கினால் தமிழ் மொழியும் பண்பும் தமிழக எல்லை கடந்து பரவியுள்ளதையும், இன்னும் பரவி வருவதையும் காணலாம். தமிழ் மொழியும் தமிழ்ப் பண்பும் பரவுதல் என்று அங்கு நாம் கூறும்போது நாம் தமிழர்க்கும் பிறர்க்கும் பொதுவாயுள்ள பண்புகளைக் குறிக்கிறோமேயன்றி; தமிழர்க்கு மட்டுமேயுரிய பண்புகளைக் குறிக்கவில்லை. அப் பண்புகள் தமிழரிடமிருந்து பிறர்க்குச் சென்றனவா, பிறரிடமிருந்து தமிழர்க்கு வந்தனவா என்பதையும் இவ் வகையில் நாம் முடிவுகட்ட வேண்டியதில்லை. தமிழர்க்கும் பிறர்க்கும் பொதுப் பண்புடன், பொது வளர்ச்சிகள் உண்டா என்பது மட்டுமே நாம் இப்போது எழுப்பியுள்ள வினா! தமிழகத்தைச் சூழ்ந்து மூன்றுபுறம் கடலும், ஒரு புறம் நிலமும் எல்லையாகின்றன. இன்று மேற்கிலும் கூடச் சிறிதளவு நிலம் உண்டு-அதுவே மலையாளப் பகுதி. வடபால் கன்னடம், துளு, தெலுங்குப் பகுதிகள், நில எல்லை ஆகின்றன. நில எல்லையில் அண்டையிலுள்ள இப்பகுதிகளுடன் தமிழ் மொழி, இலக்கியம், கலை ஆகியவை மிக நெருங்கிய தொடர்புகள் உடையதாயிருக்க வேண்டுவது இயல்பாக எதிர்பார்க்கக் கூடியதே. அவ்வகைத் தொடர்பு இல்லையானால், அல்லது அது குறைந்ததானால், அதில் தமிழகத்தில் குறைபாடோ, அதன் சூழ்நிலையின் வழுவோ ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் என்பதை யாவரும் ஒத்துக்கொள்வர். இந்நாட்டு மொழிகள் தமிழுடன் நெருங்கிய ஒற்றுமையுடையவை. கலைகளும் இலக்கியமும் கூடப் பேரளவில் ஒற்றுமை யுடையவையே. அதாவது அவற்றுடன் தமிழ்க்கிருக்கும் வேற்றுமை மற்றெல்லா மொழிகளுடனும் தமிழ்க்குள்ள வேற்றுமையைவிடக் குறைவே. இம்மொழிகள் அனைத்தும் இந்திய மாநில மொழிகளுள் தனிப்பட்டதொரு மொழிக்குழு என வகுக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்-அதற்கு வடமொழியாளரும் அவர்களைப் பின்பற்றி மேனாட்டவரும் நாகரிக உலகும் கொடுத்த பெயரே திராவிடம் என்பது. தென்மொழிக்குக் குழுவின் எல்லை கடந்து வடநாட்டில் வடமேற்கில் பலூச்சி, நடுப்பகுதியில் கோண்டு, வடகீழ்ப் பகுதியில் இராஜமகாலி ஆகிய மொழிகள் தென்மொழிக் குழுவுடன் பொதுவாகத் தொடர்புகளுடையன. மொழியறிஞர் கூற்றுப்படி தென்மொழிக் குழுவிலும் அண்டையிலுள்ள தெலுங்கு கன்னடத்தைவிட இம் மொழிகள் தமிழுடன் நெருங்கிய ஒற்றுமையுடையவை. தென்மொழித் தொடர்பின் பரப்பைவிடத் தமிழ்மொழித் தொடர்பின் பரப்புப் பெரிது என்பதற்கு இது ஒரு தெளிவான நற்சான்று ஆகும். பிற வடநாட்டுத் தாய் மொழிகளிலும் ஒவ்வொரு தனிமொழியும் குழுவும் பெருங்குழுவும் தத்தமக்குள் அணிமை காரணமாக நெருங்கிய ஒற்றுமையும் சேய்மை காரணமாக வேற்று மையும் உடையன. இது இயல்பே. ஆனால், அணிமையல்லாத தென்மொழிக் குழுவுடனும், அதிலும் அணிமை குறைந்த தமிழ் மொழியுடனும் ஒவ்வொரு தனி மொழியும் குழுவும் பெருங்குழுவும் தனித்தனித் ஒற்றுமைத் தொடர்புடையவை யாயிருக்கின்றன. இத்துடன் குப்தர் கால இலக்கிய மொழியாகிய உலக வழக்கற்ற வடமொழி யொருபுறமும் இப்பெருங் குழுவின் பிறமொழிகள் மற்றொரு புறமும் தனித்தனி தொடர்பு ஒற்றுமைகள் உடையவையாய் இருக்கின்றன. பண்டை ஆரியர் பாஞ்சாலத்தில் வழங்கிய வேத மொழியைவிட இப் பண்டைய ஆரிய இலக்கியமொழி தென்மொழிக் குழுவுக்கும் தமிழ்க்கும் நெருங்கிய தொடர்புடையதாக இருப்பது தமிழ்ச் செல்வாக்கின் பண்டைய இந்தியப் பரப்பை நன்கு விளக்குகிறது. நில எல்லையை விட்டுக் கடலெல்லையில் நெருங்கினால் அணிமைக் கடல் கடந்த பகுதியாகிய இலங்கையின் வட பகுதி இன்றும் தமிழ்மொழி பேசப் படும் பகுதியாயுள்ளது. அத் தமிழ், தமிழ்நாட்டுத் தமிழினும் பழைமையும் பெருமை யும் குறைந்ததா யில்லை. பிற கடல்கடந்த நாடுகளான பர்மா, மலாயா, இந்துசீனா, பிஜி, முதலிய பகுதிகளிலும் இன்று தொழிலும் வாணிகமும் காரணமாகத் தமிழரே மிகப் பெரும்பான்மை யினராய்ச் சென்று பரந்துள்ளனர். இப் பரப்பு பெருமைக்குரியதென்று கொள்ளப் படலாம். சிறுமைக்குரியதென்றும் கொள்ளப்படலாம். பரப்பும் தொடர்பும் இன்றுள்ளன என்பதை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன். மேற்கிலும் தென் ஆபிரிக்கா, மொரிசியசு, கயானா, ஜமாய்க்கா ஆகிய இடங்களில் தமிழர் பரந்துள்ளனர். இத்தொடர்பும் பரப்பும் இன்றேபோல் பண்டும் வளர்ந்து இருந்தது-பரப்பு இன்றைவிட முன்பு மிகுதி என்பதைக் கல்வெட்டு, வரலாறு, பழம் பொருளாராய்ச்சி ஆகிய மூன்றுமே காட்டுகின்றன. பாண்டிய சோழ மன்னர் சீனப் பேரரசருடனும், உரோமப் பேரரசருடனும், அரசியல், வாணிக உறவு கொண்டிருந்தனர். அராபியரும் கிரேக்கரும் தமிழக வாணிகத்தில் கலந்துகொண்டிருந்தனர். உரோமர் காலத்தில் உலகின் தங்கத்தில் பெரும்பகுதி தமிழகத்தில் வாணிகம், தொழில் ஆதிக்கமும் வந்து குவிந்தது-இன்றும் பல உரோமப் பேரரசர் கால உரோம நாணயங்கள் தமிழகத்தில் பெருவாரியாகக் காணப்படுகின்றன. இன்னும் பழைமையான வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில்-3000,4000 ஆண்டுகளுக்கு முன்-ஆரியர் பெயர் உலகில் கேட்கப்படாத காலத்தில்-தமிழகம் சால்டியா வுடனும், பால°தீனத்துடனும், டயர் ஸைடனுடம், எகிப்துடனும் தொடர்பு கொண்டிருந்தது. இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே ஆரியர்க்கு முற்பட்ட இந்தியா உலக நாகரிகத்தில் தலைமையும் முதன்மையும் தாங்கியிருந்த தென்பதைச் சிந்துவெளி நாகரிகம் காட்டுகிறது. எனவே, தமிழர் தனித்து வாழ்ந்தவர் அல்லர்; தம் சூழ்நிலையில் படிப்படி யாய்ப் பரந்த மொழி, நாகரிக, கலை, வாணிகத் தொடர்பு பண்டிருந்தே உலக முழுமையிலும் தமிழர்க்கு இருந்ததென அறிகிறோம். உலகில் மனித வகுப்பின் முதல் நாகரிகமாக மேனாட்டினரால் கருதப்படுவது நடு உலக நாகரிகம் அல்லது நடுநிலக் கடல் நாகரிகமே. தமிழ் நாகரிகம் அதனுடன் நெருங்கிய தொடர் புடையது என்பதை யாவரும் ஒப்புக்கொள்கின்றனர். அதில் இனத் தொடர்பும் நாட்டுத் தொடர்பும் மொழித் தொடர்பும் எந்த அளவுக்கு இடம் பெற்றன என்பது தெரிய வாராவிட்டாலும் நாகரிகத் தொடர்பு கட்டாயம் இருந்தது-கிட்டத்தட்ட ஓரினம் என்று கூறத்தகும் அளவுக்கு நாகரிகத் தொடர்பு இருந்தது என்பதும் யாவரும் ஒப்ப முடிந்த உண்மையேயாகும். இத்தொடர்பில் கொடுக்கலும் வாங்கலும் நிறைய இருந்திருக்க இடமுண்டு-கட்டாயம் இருந்திருத்தல் வேண்டும். ஆனால், எக்காரணத்தாலோ மற்ற நாடுகள், நாகரிகங்கள், மொழிகள் யாவும் பழம்பொருள் ஆராய்ச்சிக்கு மட்டுமே உரியவையாய் விட்டன. அவை அழிந்துவிட்டன. இயற்கையான தளர்ச்சியாலும் ஆகியிருக்கலாம்-அயல் நாகரிகங்கள் படையெடுப்பினாலும் ஆகியிருக்கலாம். ஆனால், அவற்றைப் பின்பற்றி அவற்றின் பின் ஏற்பட்ட, அவர்களை வென்று அடக்கிய நாகரிகங்கள் அவர்கள் தொடர்பில்லாத வடபுல நாடுகளில் பிந்துற்றன. அவர்கள் தொடர்புடைய தென்பால் நாடுகளில் முந்துற்றன. அதே சமயம் இன்று தென்பால் நாடுகள் தாழ்ந்துள்ளன. வடபால் நாடுகள் உயர்ந்துவிட்டன. தென்பால் நாடுகளுள்ளும் கீழ்ப்பால் நாடுகள் முந்தியிருந்தன. மேற்பால் நாடுகள் பிந்தின. ஆனால் வரவரக் கீழ்ப்பால் தாழ்ந்தது. மேற்பால் உயர்ந்தது. இந்தியாவினுள் தென்பால் நாடுகளும் கீழ்ப்பால் நாடுகளும் வடகோடி நாடுகளும் முந்தியிருந்தன. ஆனால், இவை பிந்துற அணிமைக் காலங்களில் வடபால் முந்தியுள்ளது. மேற்பால் பாகிஸ்தானாகி ஆட்சி ஆதிக்க உரிமை பெற்றுள்ளது. தமிழகம் உலகப் பரப்புடையது மட்டுமன்று, காலப் பரப்பும் மிகுந்தது. பண்டை மொழிகளுள் எஞ்சியது இது ஒன்றே. இதனிலிருந்து பல தலைமுறை கடந்த மேற்கு ஐரோப்பிய மொழிகள் அதற்குக் கொள்ளுப்பேரன் அல்லது ஏழாம் கொள்ளுப்பேரன் முறையுடையவை. அப் புத்தம் புது மொழிகளுடன் அது இன்றும் வாழ்கிறது - வாழ்வது போதாது, போட்டியிடுதல் வேண்டும் என்றும் நாம் எண்ணுகிறோம். போட்டியிட முடியாமல், வாழமட்டுமே செய்தால்கூட, அது உலக மொழிகளில் மிகுதி உயிர்ப்பண்பும் உள்ளுரமும் உடைய மொழி என்பதில் ஐயமில்லை. உலகின் எல்லா நாகரிகத் தலைமுறைகளிலுள்ள மொழி நாகரிகங்களுடனும் அது தொடர்பு கொண்டு அவற்றைத் தாண்டி இன்றும் வாழ்கிறது. தமிழின் தனிச் சிறப்புகளுள் உலகப் பரப்பு, காலப் பரப்பு ஆகிய இவ்விரண்டுமே யன்றி மற்றும் ஒரு தனிச்சிறப்பும் உண்டு. அதுவே உலகின் முதல் முதல் பண்பட்டமொழி-முதல் முதல் இலக்கண இலக்கியமுடைய மொழி, இதற்கு வேறு சான்று வேண்டா. அதன் எழுத்தமைப்பு இன்னும் எல்லா உலக மொழிகளையும் தாண்டி நிற்கின்றது. உயிர் எழுத்து-மெய் எழுத்து; உயிரில் குறில், அதற்கிசைந்த நெடில், இரண்டு இணையுயிர் (னுiயீhவாடிபேள); மெய்யில் வலி, மெலி, இடை ஆகிய இப்பாகுபாடுகள் எழுத்திலும் சரி, இலக்கணத்திலும் சரி இன்றும் மற்ற நாடுகளில் இல்லை. தமிழிலும் தமிழ்த் தொடர்புடைய இந்திய மாநில மொழிகளிலும் மட்டுமே உண்டு. முதல் முதல் எண் வகுத்தமொழி எது என இன்று அறுதியிடப்பட்டு விடவில்லை. ஆனால், எண் இலக்கங்கள் உடைய மொழிகள் இன்றும் அரபு, வடமொழி, தமிழ் ஆகியவை மட்டுமே. அரபுமொழி காலத்தால் பிந்தியது. அது வடமொழியிலிருந்தும் பினீஷியரிடமிருந்தும் இலக்கம் எடுத்திருக்கக்கூடும். ஆனால் 9 இலக்கமும் 0-ம் இந்தியாவுக்கே உரியது என அறிகிறோம். இந்தியாவுக்குத் தனிப்பட உரிய அப்பண்பும் தனி இந்திய மொழியாகிய தமிழ்க்கே உரியது என்று கூறத் தேவையில்லை. இது ஏலாவிடினும்கூட, தமிழ்க்குத் தனி இலக்கமுண்டு-அதில் 0 இல்லாவிடினும் பதின் கூற்றுத் தொகைக்குறிப்பு (னுநஉiஅயட nடிவயவiடிn) உண்டு என்பதும்; இன்றும் எம்மொழியிலும் இல்லாத கீழ்வாய் (கசயஉவiடிn) இலக்கம் உண்டு என்பதும் அதன் முதன்மையையும் தனிமையையும் வற்புறுத்தும். இலக்கிய இலக்கணம் தமிழில் இந்திய மாநில மொழிகள் எதனையும் விடப் பழமையானது. வடமொழி இலக்கணத்தில் இன்றுமில்லாத பொருட்பால், தொடக்கத்திலில்லாத யாப்பு, அணி தமிழில் தொன்றுதொட்டு உண்டு. இவை மட்டுமல்ல, இன்றும் உலகில் எம்மொழியும் வகுக்காத இசையிலக்கிய இலக்கணம், நாடக இலக்கிய இலக்கணம் தமிழில் வகுக்கப்பட்டிருந்தது. மொழி சார்ந்த கலைகள் மூன்றே - இயல், இசை, நாடகம்-என்ற உண்மை-தமிழர் 3000 ஆண்டுகட்கு முன்னரே அறிந்த உண்மை-உலகிற்கு-உங்களுக்கு இன்னும் புதிதே என்று நீங்களே காணலாம். இலக்கியம் கற்பனை, இயற்கை ஆகிய இரு சார்புடையது. இவை பொருட் சார்பு, இதன் வடிவம் கலை வடிவம். ஆகவே இலக்கியத்தைக் கற்பனை இலக்கி யம் (சுடிஅயவேiஉ டவைநசயவரசந), வாய்மை யிலக்கியம் (சுநயடளைவiஉ டவைநசயவரசந) என்று இரு கூறாகவும்; இயற்கையிலக்கியம், கலை இலக்கியம் (ஊடயளளiஉயட டவைநசவரசந) என்று இரு கூறாகவும் வகுக்கலாம். கற்பனை இலக்கியமே உலகில் எந்நாட்டிலும் மிகுதி. இதுவும் பெரும்பாலும் செயற்கைக் கற்பனை இலக்கியமே. இதன் வாழ்வே செயற்கைக் கற்பனை, அதாவது மரபு நெறியுடையது. இச்செயற்கை மரபையே தமிழர் புலநெறி வழக்கு என்றனர். தமிழர் புலநெறி வழக்கு நாளாவட்டத்தில் இயற்கைநிலை திரிந்து வரவரச் செயற்கையாகக் கம்பர் காலம் முதல் வாழ்வுடன் இம்மியளவும் தொடற்பற்ற முகில் மண்டலக் கற்பனையாகிவிட்டது. (ருடவசய சுடிஅயவேiஉளைஅ) உலகம் முழுதும் அணிமைக் காலம்வரை பரந்தது இந்தச் செயற்கைக் கற்பனைகளே -பாரசீக இலக்கியத்தின் கவிதை, மங்கை, தேறல்-இலக்கியக் கற்பனை, ஆறு மலைகள்-பாற்கடல், நெய்க்கடல் ஆகிய ஏழு கடல்கள் -ஹோமரால் சிறு தீவான ஐதாக்கா பெருந்தடந்தீவாகக் காட்டப்படல்-ஷேக்°பியரின் நில இயல், வரலாற்று மயக்கங்கள் திணை மயக்கங்கள்-தாந்தே யின் மூவுலக நாடகம்-கெதயின் மெபி°டாபிலி°-டெனிஸனின் மாய உலகம் இவை யாவற்றையும் கடந்து சங்க இலக்கியத்துக்கு வந்து பாருங்கள்; பின் இதுபோன்ற இலக்கியப் பண்பு எங்கெங்கு உள்ளன என்று காணுங்கள். தற்கால இரஷ்ய, டேனிய, இலக்கியத்தில்-பண்டை கிரேக்க இலக்கியத்தில்-காளிதாசர் கால வடமொழி இலக்கியத்தில்-புத்த சமயகால வடவரிலக்கியத்தில்-பெருங் கதையில்-மட்டுமே இதே பண்பைக் காணலாம். பலபடி குறைந்த அளவிலேனும், இன்று இந்திய இலக்கியத்தில் இதே பண்பு புகுந்து வருவது கண்கூடு. இப் பண்பு யாது? அரசர் அரசி வாழ்விலிருந்து மக்கள் வாழ்வு. கற்பனையிலிருந்து இயற்கை. வானுலகிலிருந்து மண்ணுக்கு. காணாப் பொருளின் உவமை உருவகத்திலிருந்து. கண்டபொருளின் உவமை உருவகம். சமய நெறியிலிருந்து சமய சமரசம். இவை தவிர கற்கண்டெனத் திட்பம் வாய்ந்த கிரேக்க இலக்கியத்தின் கலைப் பண்பை அதனிலும் பேரளவில் சங்க இலக்கியத்தில் காணலாம். உலக நாடக இலக்கிய இலக்கண வரலாறு பின்னோக்கிச் சிலப்பதிகார நாடகத்தில் சென்று முடிவது காணலாம். உலக நாகரிகத்தில், நாடக வரலாற்றில் விளங்காத பல புதிர்களைச் சிலப்பதிகாரம் விளக்கும். தமிழிலக்கியத்தின் பிற சிறுதிறச் சிறப்புகள் மொழிச்சார்பில் தனித்தமிழ் பேணப்படல், கலைச்சொல் விரிவு; பாடல் சார்பில் தொடர்பாக்கள், எதுகை மோனையற்ற பாக்களின் செல்வாக்கு மிகுதி; ஒழுக்க இலக்கியம், காதல் வீர இலக்கிய முதன்மை; உலா அந்தாதி முதலிய செயற்கை நாடகக் கலைச் சின்னங்கள் ஆகியவற்றைக் கூறலாம். பிற்கால இலக்கியத்திலும் சமயப் பாடல், பக்திப் பாடல் தமிழ்க்கே உலக மொழிகளில் முதன்மை தருவதாகும். திருவாசகம், அப்பர் தேவாரம், நாச்சியார் திருமொழி ஆகியவற்றுக்கு வடமொழியில்கூட ஒப்பிடத்தக்க பாடல்கள் மிகமிகச் சில. பிறமொழிகளோ போட்டிக்கு முன் வரவேமாட்டா. இத்தனை பரப்பு, முதன்மை, உரம் உடைய மொழி தளர் வானேன்-தளர்ந்து நலிவானேன்? இதனை ஆராயுமுன் இதன் இன்றைய குறைபாடுகளையும் சுருக்கி முதலில் கூறுவேன். தமிழில் உரைநடை பெரும்பாலும் இல்லை. (இன்று ஏற்பட்டு வருகிறது.) நாடகம் கிட்டத்தட்ட இல்லை. (இன்னும் இதில் கவனம் செலுத்தப் பெறவில்லை.) அறிவியல் வளர்ச்சி தொடங்கவே இல்லை. கலைச் சொல் லாக்கம் கூட உண்மையான உணர்ச்சியுடன் தொடங்கப் பெறவில்லை. கதை இல்லை. புனைகதையும் கட்டுரையும் இதழகத் துறையும் மற்றும் இன்றைய வளர்ச்சிகளாகக் காணலாம். வரலாறு இல்லை. இலக்கிய வரலாறு இல்லை. இலக்கிய ஆராய்ச்சி இல்லை. கால ஆராய்ச்சி மட்டும் தான் உண்டு. மொழியாராய்ச்சி தொடங்கி வருகிறது. இலக்கியமொழி வேறு, பேச்சுமொழி வேறு என்ற நிலை வளர்வது. தமிழில் ஏன் இக்குறைபாடுகள் வந்தன? இவை இயற்கைக் குறைபாடுகளா? சிலப்பதிகாரக் காலத்துக்குப் பின் நாடகம் கைவிடப் பட்டது. இதில் ஓர் ‘அதிசயம்’ வடமொழியில் நாடகம் வானுற ஓங்கி வளர்ந்துள்ளது. இருமொழிப் புலவர்கள் இந்தியாவெங்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் வட மொழியைப் பார்த்துப் பின்பற்றிப் பின்பற்றி இலக்கியம் வகுத்தும் ஒரு நாடகம் கூடத் தமிழிலோ தாய்மொழிகளிலோ எழுத முடியவில்லை-எழுத முயன்ற தாகக்கூடக் காணோம்! வடமொழியின் சிறப்பில் அணியிலக்கணம் தலை சிறந்தது-தமிழனாகிய தண்டியே அதன் ஒப்பற்ற தலைவன்-முதல்வன். ஆனால், தமிழில் தண்டிக்குப் பின் அது வளர்ச்சியடைவில்லை. தமிழரே அதனை வளர்த்தனர்- ஆனால் வடமொழியில்! உரைநடை தமிழில் பழைமையுடையது. தமிழ் உரையாசிரியர் இந்தியா முழுவதிலும் உள்ள கவிதை இலக்கிய ஆசிரியரைவிடப் பழைமையானவர். சிலப்பதிகாரமோ பாட்டிடையிட்ட உரையுடைச் செய்யுள். ஆனால், உரைநடை அணிமைவரை ஏனோ இல்லை. ஏட்டில் எழுதும் மரபு இதற்குக் காரணமா? இதே ஏட்டில் இதே தமிழ் நாட்டில் சங்கரர் வடமொழிக்கு உரைநடை வகுத்தனரே. அதற்கும் முற்பட உபநிடதங்கள் உரைநடையிலிருந்தனவே? வரலாறு கண்ட இலக்கியம்-வரலாற்றுத் தொடர்பும் வாழ்க்கைத் தொடர்பும் உடைய இலக்கியம் தமிழிலக்கியம் ஒன்றே. பதிற்றுப் பத்து ஒரு சேர நாட்டு வரலாறு. இடைக் காலத்திலும் பாட்டில் கல்வெட்டுகள் உண்டு. சோழன் மெய்க்கீர்த்திகள் உண்டு. ஆனால், வரலாறு வளர்க்கப்பட வில்லை. வரலாற்று மரபுகள் இருந்திருத்தல் வேண்டும். புராணங்களாக அவை திரிக்கப்பட்டன. கவிஞர் புகழுரை வரலாறு சமயப் புராண வரலாறாயிற்று. இதற்குச் சிபிச் சோழன், மனுச் சோழன் வரலாறுகள் சான்றாகும். மேலும் முத்தமிழ் ஒரு தமிழாயிற்று. பண்டைத் தமிழக எல்லை தேய்ந்து தேய்ந்து குறுகி வந்துள்ளது. தமிழ்க்கும் தமிழின அயல் மொழிகளுக்கும் உள்ள அடிப்படை மொழித் தொடர்பு மறக்கப்பட்டும் மறக்கடிக்கப் பட்டும் வந்துள்ளது. அவற்றின் இலக்கிய மரபில் வடமொழி மரபு வளர்ந்து தென்மொழி அல்லது தாய்மொழி மரபு அதாவது தமிழ்த் தொடர்பு குறைந்து வந்துள்ளது-வருகிறது. ஆனால், இதே அளவுக்கு நாட்டுத் தொடர்பு, மக்கள் தொடர்பு, இயற்கைத் தொடர்புகளும் குறைந்துதான் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றால் தமிழ்ப் பண்பும், தமிழினப் பண்புத் தொடர்பு களும், தமிழர் நாகரிகமும் ஒருங்கே தேய்ந்து வந்துள்ளது காண்கிறோம். எந்நாட்டாராலும் அணிமை வரை ஆளப்படாத தமிழர்-எம் மொழிக்கும் எந்தக் காலத்துக்கும் வளைந்து கொடாத தமிழ்-எவ்விலக்கியத்துக்கும் எக்காலத்திலும் முற்பட்டும் முந்தியும் இருந்த தமிழிலக்கியம் உள்ளுயிர் மாளாவிடினும் ஒளியற்று, பேணுதலற்றுத் தளர்ந்துவந்துள்ளது என்பதில் ஐயமில்லை. இது ஏன்? இலக்கியத் தளர்ச்சிக்குரிய காரணங்கள் வரலாற்று மாணவர் விளக்கத்தக்கவையே. 1. சமய நூல்களுக்கு முதன்மை ஏற்பட்டது. 2. சமய வேறுபாடு இலக்கியத்தில் கட்சி வேறுபாடு புகுத்தியது. 3. பிறமொழி உயர்வும் அதன் மொழி பெயர்ப்பும் செல்வாக்கும் பெருகிற்று. 4. அரசர்கள் தமிழைவிடப் பிற மொழி உயர்வில் நம்பிக்கை யுடையவராய், பிற மொழிப்பற்று மிக்கவராயிருந்தனர். பல்லவர், சோழர் நாயக்க மன்னர் காலங்களிலே இது மிகுதியாயிற்று. 5. மொழிப் பற்று வேறு, சமயப் பற்று வேறு, மக்கட் பற்று வேறு என வேறுபாடு விரிவுற்றது. 6. பிற மொழியாளர், நாட்டாளர் ஆட்சிச் சரடு பிடித்து உயர்ந்து, பழந் தமிழர் படிப்படியாக அடிமையாயினர். 7. வடமொழிச் சொல், இலக்கியப் பண்பு பேணும் முயற்சி. 8. சாதி வேறுபாடு-பிற மொழிக்குரிய உயர் வகுப்பினர் அப்பிற மொழியிலும் தனியுரிமை கொண்டது-கன்னட நாட்டில் சமற்கிருதம் புலமையில் ஒரு குல நீதி இன்றும் அரசியலாராலேயே காட்டப்பட்டு வருகிறது. 9. தமிழின மொழித் தொடர்பு அறுக்கப்பட்டது. 5. தென்னாட்டின் கலை வாழ்வு தமிழகம் பல துறைகளிலும் மிக விரைவாக முன்னேறி வருகிறது. தமிழரே அறியாத அளவு முன்னேறுகிறது என்று கூடக் கூறலாம். பல காலமாகப் பல காரணங்களால் அமுக்கப் பட்டுக் கிடந்த தமிழகத்தின் உள்ளாற்றல் படிப்படியாக வெளிப்பட்டு வளர்ச்சிக்குத் தூண்டுதல் தருகின்றது. வளர்ச்சியின் கருநிலை யறிந்து தக்க உரமிட்டு வளர்த்தால், தமிழகம் உலகில் மதிப்புக்குரிய ஓரிடம் பெறும் என்பதில் ஐயமில்லை. அவ்வகையில் தமிழர் செய்தல் வேண்டும் ஆக்க முயற்சிகள் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது தமிழகத்தின் வாழ்வு நலியத் தொடங்கு முன் இருந்த-நலிவுற்றும் வெளித் தோன்றாமல் மறைந்தும் இருக்கும் பண்புகளை அறிந்து அவற்றை உயிர்ப்பித்தல் வேண்டும். இரண்டாவதாக, தமிழகம் எவ்வளவு விரைவாக முன்னேறினாலும் தமிழகத்தை அடுத்துள்ள பிற தென்னாட்டுப் பகுதிகளும் பிற நாடுகளும் இன் னும் விரைவாகப் பல துறைகளில் முன்னேறுகின்றன என்பதை மறுக்க முடியாது. தமிழறிஞர் அவற்றை ஊன்றிக் கவனித்து ஆவன கொண்டு தமிழகத்தை வளப் படுத்துதல் வேண்டும். இவ்வகையில் சிறப்பாகத் தென்னாட்டில் பிறபகுதி களையும் மேனாடுகளையும் கூறுதல் வேண்டும். தென்னாட்டில் பிறபகுதிகளில் தமிழகத்தில் நலிவுற்ற சில துறைகள் நலிந்தொழியாதும் வளர்ந்தும் வருகின்றன. மேனாடுகளில் அறிவியல், பொறியியல் துறைகளில் எட்டிப் பிடிக்கமுடியாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்றாவதாகத் தமிழர் தம் தனித் தன்மை (ஐனேiஎனைரயடவைல) யையும் தற்புதுமையையும் (டீசபைiயேடவைல) வளர்த்தல் வேண்டும். வெளிநாடுகள் வழி காட்டி யாகவும் தூண்டுதலாகவும் இருக்க முடிமேயன்றி வேறல்ல. அவற்றைப் பின்பற்றி மட்டும் செல்வதால் உண்மை வளர்ச்சியும் ஏற்படாது. தேசிய மதிப்பும் அதனால் பெருகாது. கலைத்துறையில் தமிழர் மறைந்த பண்பாடுகள்-இன்று பலர் மறந் திருக்கும் பண்பாடுகள் பல. கிராம வாழ்வும் உழவும் எளிய வாழ்வுமே கீழ் நாட்டுக்குரிய பண்பாடுகள் என்று பலரால் இலேசாகக் கூறப்பட்டு வருகிறது. இதனைப் போற்றுதலாகக் கொள்பவரும் உண்டு; புறக்கணிப்பாகக் கொள்பவரும் உண்டு. ஆனால், சங்க இலக்கியத்தை ஒரு சிறிது புரட்டினாலும் கூடத் தமிழர் நகர வாழ்விலும், வாணிக - கைத்தொழில் வளர்ச்சியிலும், கடற்படை, கல்வி ஆகியவற்றிலும், ஆட்சி முறையிலும் உயர் வாழ்க்கைத் தரத்திலும் மேம்பட் டிருந்தனர் என்று காணலாம். நறுமணப்பொடி (குயஉந ஞடிறனநச), வண்ணக் குழம்புகள் (ஞயiவேள & டiயீளவiஉமள), நல்லாடை, துணிமணிகள் ஆகியவற்றில் சங்க காலத் தமிழன் அறிந்த வகைகள் தொகைகள் இன்றைய அமெரிக்க மேனாட்டின ரையும் நாணச் செய்யும். திட்டமிட்ட நகரமைப்பு முறை மொகெஞ் சதாரோ காலத்திலிருந்து அணிமை வரை தமிழர் மரபாயுள்ளது. கிராம வாழ்க்கையில் கவிஞர் அமைதியைக் காணலாம். உழவில் ஒழுக்க நூலார் உயர்வு காணலாம். ஆயினும் கலைகள், அறிவியல்கள் பெருகுவது நகர்களிலேயே, தமிழர் நாகரிகம் மருதநிலப் பேரூர்களிலும் நெய்தல் நிலப் பட்டினங்களிலும் வளர்ந்ததேயாகும். மனித நாகரிகம் குறிஞ்சி (மலை) நிலத்தில் தோன்றி, முல்லையில் (காட்டில்) படர்ந்து மருதம், நெய்தல் (ஆற்றுப் பாங்கு கடற்கரை) களில் முதிர்ந்தது. உலகில் ஏனைய மக்கள் குறிஞ்சியளவில், முல்லையளவில், அணிமை வரை நின்றனர். தமிழர் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே மருத, நெய்தல் நாகரிகம் அடைந்திருந்தனர். துறைமுக நகர்களுக்குப் பட்டினம் என அவர்கள் பெயரிட்டது ஒன்றே இதனைக் காட்டும். 2000 ஆண்டுகட்கு முன் இயல், இசை, நாடகம் என முத்திறம் வளர்த்த நாடு தமிழகம் ஒன்றே. அவற்றைக் கட்டமைத்துப் பேணக் கழகம் அமைத்த பண்பு வேறு எந்நாட்டிலும் இல்லை. ஆயினும், இடையில் (ஆரிய புராணக் காலத்தில்) இசை நலிந்துவிட்டது. நாடகம் நடைபெற்ற தடத்தையே காணோம். சிலப்பதிகார நூல், அதன் உரை ஆகியவற்றிலிருந்து பண்டை வளங்களை மட்டும் அறிகிறோம். பா, பாவினம் என்று தமிழில் இருவகைப் பாட்டுகள் இருந்தன. இவற்றுள் பாக்களுக்கு மட்டுமே இயல் துறை இலக்கணம் உண்டு. அதிலும் வஞ்சி கலிப்பாக்களுக்கு விளக்கமான இலக்கணமில்லை. இவையும் பாவினங்களும் இசை நாடகங்களையே பெரிதும் சார்ந்தவை. இப்பாவினங்களும் நாடகமும் இன்று மலையாள நாட்டில் எப்படியோ இறவாது நிற்பதுடன், நாடக மரபு புது வளர்ச்சி பெற்று உலகப் புகழ் கண்டுள்ளது. ஆனால், சிலப்பதிகாரமே ஒரு நாடகம் என்றும், மலையாளிகளின் சாக்கையர் கூத்தாக அது நடிக்கப்படவே அமைந்த தென்றும் தமிழர் அறியாதிருக்கின்றனர். மலையாளத்தின் நாட்டுப் பாடல்களும், நாடகமும் தமிழறிஞரால் சிலப்பதிகார முன்மாதிரியுடன் தழுவியாக்கப்படு மானால், தமிழகம் மேம்படுவதுடன் அவற்றால் மலையாள நாட்டுக்கும் புத்தாக்கம் ஏற்படும். தென்னாடு, வடநாடு ஆகியவற்றின் கலைகளையும், கிரேக்க நாடு மேலை நாடு ஆகியவற்றின் கலைப் பண்புகளையும் கண்டுணர்ந்து தமிழர் தமிழின் எதிர்கால வளர்ச்சியில் முனைதல் வேண்டும். அரசியல் காரணமாக ஏதோ ஒரு இந்திய மொழியையும், ஏதோ ஓர் மேனாட்டு மொழியையும் கற்பதுடன் தமிழர் அமையாமல் பரந்த மொழியறிவுடன் உலகக் கலை, உலக அறிவு ஆகியவற்றுடன் இணையும்படி பலதிற மொழிகளும் பயிலுதல் வேண்டும். தென்னாடும் சரி, வடநாடும் சரி, நெடுங்காலமாகப் பாரத, இராமாயணப் புராணங்களிலும் வாழ்க்கைத் தொடர்பற்ற கலைச் சுவையற்ற கண்கட்டுக் கற்பனைகளிலும் உழல்கின்றன. வடமொழி இலக்கியங்கள் பெரும்பாலும் இவ்வடிமைப் பண்பிலேயே நின்றுள்ளன. தமிழர்களுக்குப் பண்டைத் தமிழகச் சங்க இலக்கியமும் மேனாட்டிலக்கியமும் நல்ல வழிகாட்டி களாகும். ஆனால், இவற்றைக்கூடக் குருட்டுத்தனமாகப் பின்பற்ற வேண்டுவதில்லை. அவற்றின் அடிப்படையில் புத்துரு ஆக்கலே சால்புடையது. நாடகத்தைவிடப் படக்காட்சி, பேசும் படம் உயிர்ப் பண்பு நிறைந்தது. அத்துடன் நாடகத் துறையைவிட இவை நிலையான பயனுடையவை. மக்கள் அறிவு வளர்ச்சி, கல்வி ஆகிவற்றுக்குப் படக்காட்சியை ஒத்த நல்ல கருவி வேறில்லை. ஆனால், அதில் கலைப் பண்பு இன்னும் ஏற்படவில்லை. வாழ்க்கைத் தொடர்போ மருந்துக்கு மில்லை. புராணப் படங்கள் புராணங்களைக்கூடக் கெடுத்துவிடத் தக்கவையாயுள்ளன. அண்மையில் இவ்வகையில் தனிப்பட்ட ஒரு சிலர் முயற்சியால் முன்னேற்றம் ஏற்பட்டுப் பட்டினத்தார், சிட்டாடல் ஞான சௌந் தரி முதலிய படங்கள் தோன்றியுள்ளனவாயினும் வாணிகக் கலைஞர், போலிச் சமயவாதிகள் ஆகியவர்களின் ஆதிக்கம் கலையுலகில் இன்னும் விட்டபாடில்லை. பாரதி பாடல்போலவே தமிழிலக்கியத்தின் பிற பாடல்களும் உணர்ச்சியுடன் புது மெட்டுக்களோடிணைந்து கலையில் இடம் பெறுதல் வேண்டும். பழைமையே புதுமைக்கு உரம் என்னும் உண்மையைத் தமிழர் மறக்கவிடக்கூடாது. என்.எ°.கேயின் ‘கிந்தனார்’ நாடகக் களத்தில் ஒரு புதுத்துறை, இதுபோன்ற புதுத்துறைகளை மக்கள் ஆதரித்தல் வேண்டும். கலைப் பண்பை மறந்து வேறு சில வசதிகளையும் சோம்பல் வாழ்வையும் எண்ணி மக்கள் தவறான படங்களை ஆதரிக்காதவாறு கலைஞர், அறிஞர் அவர்கட்கு வழி காட்டுதல் வேண்டும். முத்தமிழும் முறையாக விரவிய நாடகம், படக் காட்சி தமிழகத்துக்கு மறுமலர்ச்சியும் உலகுக்குப் புதுமையும் தரும். கலைத் துறையில் கூடிய மட்டும் தனித் தமிழ் பேணலின் இன்றியமை யாமை இன்று நன்கு உணரப்படவில்லை. தமிழ் இன்று சற்று நலிந்திருப்பினும் உலகின் மற்றெல்லா மொழி களையும்விட நுட்பமான சிறப்புகள், உள்ளார்ந்த வளர்ச்சி வித்துகள் அதில் மிகுதி உண்டு. மொழியிலும் தேசியம் பேணித் தேசியத் தமிழாகிய தனித்தமிழ் வளர்த்தால் தமிழகத்தில் இன்று கனவில் கூடக் காணமுடியாத புது வளர்ச்சி ஏற்படுவது உறுதி. 6. தமிழியக்கமும், தமிழர் சமய வாழ்வும் ‘உலகின் மிகப் பழைய நாகரிகம் தமிழக நாகரிகமே; தொன்மை மிக்க மொழி தமிழே; சமயம், கலை, அறிவியல் ஆகியவற்றில் உலகுக்கு வழிகாட்டியாய் நின்றதும், நெடுநாள் உலகில் தலைமை வகித்து நின்றதும் தமிழகமே’ என்று தமிழர் தொன்று தொட்டு நம்பி வந்திருக்கின்றனர். பிற நாட்டாராய்ச்சியாளர் இதனைத் தாய்மொழிப் பற்றுக் காரணமான புகழ்ச்சி என்று புறக்கணித்தல் இயல்பே. புறக்கணித்தும் வந்துள்ளனர். இன்றும் ஆராய்ச்சியாளர் இப் புகழுரையை அப்படியே ஏற்கின்றனர் என்று கூற முடியாது. ஆனால், ஆராய்ச்சிகளால் ஏற்படும் உண்மை வெளிப்பாட்டின் போக்குத் தமிழரின் இப் பெருமையை ஆதரிக்கும் முறையிலேயே சென்று கொண் டிருக்கிறது. தாயன்பு காரணமாகத் தமிழர் கூறும் இப் புகழுரைகளை வருங்காலத்தில் தாய்ப் பண்பு பற்றிய அறிவு காரணமாகத் தமிழர் கொள்ளக் கூடும். ஆராய்ச்சியின் இப் போக்குக் கண்டு தமிழர் எழுச்சியும் மகிழ்ச்சியும் கொண்டால் அது இயல்பேயன்றி வேறன்று. அது மட்டுமன்று, மலையாளிகள், தெலுங்கர், கன்னடர், துளுவர் முதலியவர்கள் நாடுகள் தமிழகத்தை அடுத்துள்ளவை. அவர்கள் மொழிகள் தமிழுடன் பிறந்த மொழிகள் என்று கூறப் படுகின்றன. அவர்களும் இப் பெருமையில் பங்கு கொள்ளத்தானே செய்வர்! இந்தியா ஒரு ‘நாடு’ என்று பலரும் கொள்கின்றனர். தமிழ்நாடு இந்திய மாநிலத்தின் ஓர் உறுப்புத்தானே! உறுப்பின் பெருமை உடலின் பெருமை ஆகாதா? ஆகவே இந்தியரும் இதில் பெருமை கொண்டால் வியப்பில்லை. மலையாள நாட்டில் பிறந்த சங்கராச்சாரியையும், தமிழ் நாட்டில் பிறந்த இராமானுஜாச் சாரியையும், கன்னடத்தில் பிறந்த மத்துவாச்சாரியையும், வங்கத்தில் பிறந்த சைதன்னியரையும் இந்தியா முழுவதுமே வேற்றுமையின்றிப் போற்றவில்லையா? ஆனால், தமிழைப் பற்றி மட்டில் இப்பரந்த மனப்பான்மை எங்கோ ஒளிந்தது. மேன்மேலும் ஒளிந்துகொண்டே வருகிறது. தமிழ் நாட்டின் திருவள்ளுவர்-அவரைவிட உயர்ந்த ஒழுக்க நூலாசிரியர் பிற இந்திய மொழிகளில் மட்டுமல்ல, வடமொழியில் மட்டுமல்ல, உலகில் எந்த மொழியிலுமே, எக்காலத்திலுமே, இருந்ததில்லை, ஒரு வேளை இருக்கப் போவதுமில்லை என்பதை எல்லாரும் ஒத்துக்கொள்கின்றனர். ஆனால், காசியிலும், கள்ளிக் கோட்டையிலும், பூனாவிலும், விசாகப்பட்டினத்திலும் முழங்கும் நூல் அதுவா? நேர்மாறாகக் கீதையும் ஒரு நூல், அதனை ‘அங்கிங் கெனாதபடி எங்கும்’-தமிழகத்திலேயும் காவிரிக்கரை, வைகைக்கரை, தாமிர வருணிக்கரை எங்கும் தவறாமல் ‘பாராயணம்’ செய்வதைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்! வள்ளுவர் நூலின் ஒழுக்கம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், சங்க இலக்கியங்கள், நாடகக் காவியமான சிலம்புச் செல்வம், கற்பனைக் களஞ்சியமான சிந்தாமணி, பக்திப் பாசுரங்களான தேவார, திருவாசகங்கள். வைணவப் பாசுரங்களான திருவாய்மொழி முதலிய நாலாயிரந் தமிழ், பக்திக் காவியங்களான பெரியபுராணம் கம்பராமாயணம் இவை கங்கைக் கரையிலும் கோதாவரிக் கரையிலும் பேசப்படவாவது செய்வதுண்டா? இவையெல்லாம் பழைமையுடையவை யல்லபோலும்! அதனால்தான் பிறமொழியாளர் போற்றவில்லை என்றால் ஓரளவு மனஅமைதி யடையலாம். இறந்த இலக்கியம் போக இன்றிருக்கும் தமிழிலக்கியத்தில் பெரும் பகுதி வடமொழியில் இலக்கியமே ஏற்படாத காலத்தைச் சேர்ந்தது. சங்க இலக்கியம் (அதுவும் கடைச்சங்க இலக்கியம் மட்டும்தான்) அளவிலும் பண்பிலும் உலகின் ஒரு தனி இலக்கியத்துக்கு ஒப்பானது. அது அத்தனையும் வடமொழியின் முதற் பெருங் கவிஞன் காளிதாசன் காலத்துக்கு முந்தியது. தமிழின் பல நூல்கள் வடமொழி பிறப்பதற்கே முந்திய நூல்களா யிருக்கக் கூடும்! தமிழ் நாட்டார் தம் தற்பெருமையால் அண்டை அயலிலுள்ள தெலுங்கர், மலையாளிகள் ஆகியவரைப் பகைத்துத் தம் பெருமையைக் குறைத் திருக்கலாமா? ஒருவேளை இருக்கலாம் என்று நாம் நினைக்க இடமுண்டு. தமிழருக்குக்கூடத் தம் மொழியைத் தாழ்த்திப் பேசினால் அவ்வப்போது சினம் ஏற்படுகிறதே! அவர்களுக்கு ஏற்படாதா? 18ஆம் நூற்றாண்டுவரை, திருவாங்கூர், கொச்சி, கள்ளிக்கோட்டை ஆகிய இடங்களின் அரசர் அரசியல் மொழி தமிழ். மலையாள நாட்டில் கம்ப ராமாயணம் அணிமைவரை-இன்றும் நாடகமாக நடிக்கப்பட்டு வருகிறது. சிலப் பதிகாரம் மலையாளிகளால் தம் நாட்டுப் பழைய இலக்கியமாகப் போற்றப் படுகிறது. பழைய மலையாள நூல்கள் தமிழ் எழுத்தில், அதாவது வட மொழிச் சிறப்பெழுத்துகள் விலக்கி, தமிழ்ச் சொல் பண்பு பிழையாமல் எழுதப்பட்டுள்ளன. தெலுங்கில் நாச்சியார் திருப்பாவை எழுத்தெழுத்தாய் ஓதி உரை விளக்கப் படுகிறது. காசி கேதாரம் வரை வைணவக் கோவில்களில் பாடப்படுகிறது. பல நாயன்மார்கள் கதைகள் சேக்கிழாருக்கு முன்பே தெலுங்கில் எழுதப்பட்டன. ஆண்டாள் சரிதை விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயராலே தெலுங்கில் காவிய மாக எழுதப்பட்டது. பழைய மலையாள, சிங்கள, இராமாயண பாரதங்கள் வட மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்படவில்லை. தமிழிலிருந்தே மொழி பெயர்க் கப்பட்டன. சிங்களத்தில் 5ஆம் நூற்றாண்டிலேயே (காளிதாசன் காலத்திலேயே) சிலப்பதிகாரம் மொழி பெயர்க்கப்பட்டது! சங்கராச்சாரியர் (8ஆம் நூற்றாண்டில்) தம் வட மொழி நாவாரச் சம்பந்தர், கண்ணப்பர், சாக்கியர் ஆகிய மூன்று நாயன்மார்களையும் வணங்கியிருக்கிறார். பெரிய புராணமும் திருவிளையாடற் புராணமும் சிவஞான போதமும் மட்டுமேனும் தமிழிலிருந்து வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழர் பெருமையை ஏற்று எல்லா நாட்டினருமே கடன் பெறத் தயங்கிய தில்லை. ஆனால், இக் கடன்கள் மறக்கப்பட்டன, இன்றும் மறைக்கப்படுகின்றன ஏன்? வடமொழி தெய்வமொழி அல்லது தற்கால முறையில் சொல்லப் போனால் சமயமொழி. அதனாலே தமிழ் மொழியின் சிறப்புப் பேணாது வடமொழிக்கு எல்லா நாட்டவரும் வணங்கினர் என்று கூறப்படக் கூடும். வடமொழியில் வேதம், பிராமணம், உபநிடதம், பாரத ராமாயணம், கீதை, சுமிருதிகள், வேத அங்கங்கள் ஆகியவை உண்டு. இவை இந்துகளின் சமய நூல்கள். இவை வடமொழியில்தானே உள்ளன? ஆம்; ஆனால், வடமொழி வேதத்தில் கண்ட சமயம் இந்து மதமா? இல்லை. இந்துகள் பெரும்பாலாக வணங்கும் சிவன், திருமால் பெயர்கள்கூட அங்கு மருந்துக்கும் கிடையாது. பிற்காலத்தில சைவரும் வைணவரும், அதில் சொல்லப்பட்ட உருத்திரரையும் சூரியரையும் சிவ விஷ்ணுக்களாகக் கொண்டு மனமமைந்தனர். இந்துகளின் பிறப்பிறப்புக் கொள்கை, ஆ பேணல் முதலிய பழக்க வழக்கங்கள் எதுவும் அதிலில்லை. இவையெல்லாம் வடமொழிச் சமய நூல்களில் படிப்படியாகவே காணப்படுகின்றன. இன்றைய இந்து மதத் தத்துவங்களை ஒருங்கே காண வேண்டினால் ஓரளவு இராமாயணத்துக்கும், மகா பாரதத்துக்கும் வருதல்வேண்டும். இவையும் அவ்வப்போது எழுதிச் சேர்க்கப்பட்ட பகுதிகளே. ஆனால், தற்கால இந்து மதத்தில் இடைக் காலத்தில் எழுந்த கறைகளான சாதி வேறுபாடு, தீண்டாமை, முதலிய நீங்கலாக எல்லா அடிப்படைப் பண்புகளையுமே தமிழிலக்கியத் தொடக்கக்கால நூல்களிலிருந்து காணலாம். இங்கும் வளர்ச்சி இல்லாமலில்லை. ஆனால், இங்குள்ள வளர்ச்சி உருவளர்ச்சி, உறுப்பு வளர்ச்சியல்ல. தொடக்கத்தில் (பரிபாடல்) சிறுபிள்ளையாகக் காணப்படும் கருத்துகள் நாலாயிரத்திலும், தேவாரத்திலும், மெய்யறிவு நூல்கள் பதினான்கிலும் பருவ மங்கையாகக் காட்சியளிக்கின்றன. வடமொழியிலோ முதலில் ஒருகால், பின் ஒரு கை, பின் வயிறு, தோள் என்றே வளர்ச்சி காணப்படும். காரணம் வட மொழியில் இச்சமய வளர்ச்சி கடன் வாங்கிய வளர்ச்சி, தமிழில் வாழ்வில் மலர்ந்த வளர்ச்சி என்பதேயாகும். இந்திய சமய வாழ்வின் அடிப்படைக் கருத்துகள் யாவும் திராவிடச் சார்பானதே என்பதை மோகெஞ்சதாரோ ஆராய்ச்சியாளர் எடுத்துரைக் கின்றனர். அங்கே இந்திய சமயத்தின் கருநிலை காணப்படுகிறது. வடமொழி தேவமொழி என்ற கருத்து, கம்பர் காலத்துக்குமுன் தமிழிலும் இல்லை. வடமொழியிலுமில்லை. கம்பர் காலத்தில் வடமொழி இலக்கியத்திலும் தமிழிலக்கியம் பரந்ததா யிருந்திருத்தல் வேண்டும். இடைச் சங்க, தலைச்சங்க நூல்கள் அவர் காலத்தில் அழியவில்லை என்று தமிழுரையாசிரியர் கூற்றுகளால் அறியலாம். இந்து மதம் சிவநெறியும், திருமால் நெறியும் சேர்ந்த முழுநெறி என்று மக்கள் எண்ணுகிறார்கள். சிவ நெறி நூல் முற்றிலும் தமிழிலேயும் மீந்தவை சில கன்னடத்திலும்தா னிருக்கின்றன. திருமால் நெறி நூல்களோ தமிழில் மட்டுமே உண்டு. வடஇந்திய வைணவ இயக்கம் ஆழ்வார்களைப் பின்பற்றிய இராமானுசர் சீடரின் சீடர் வழிமரபால் வந்ததே. இங்ஙனம் சமய முறையிலும் தமிழே முதன்மை வகிக்க வேண்டியிருக்க, அதற்கு இரண்டாமிடமும் மூன்றாமிடமும் பத்தாமிடமும் மறுக்கப்படுவானேன்? தமிழர்கள் எண்ணிப் பார்த்தல் வேண்டும்? தமிழில் அன்புகொண்ட தமிழர்கள் மனத்தில் மேற்கூறிய கொதிப்புகள் 2000 ஆண்டுகளாக எழுந்திருத்தல் வேண்டும். பல தடவை தமிழர் ஏமாந்தனர், தவறினர். ஆனால், எல்லாரும் தவறவில்லை. நல்ல காலமாக இன்று தமிழர் குறைகூறும் அளவு தமிழ்ப் பண்பில் நழுவிய கவிஞர்கள்கூடப் பல இடங்களிலும், தலைமறைந்து எழுந்த வடமொழியலையை எதிர்த்து ஆங்காங்கே தமிழ்ப்பண்பு பேணியிருக்கின்றனர். சேக்கிழார், கம்பர், ஆழ்வார்கள் பாடலுக்கு உரையெழுதிய பெரியவாச்சான் பிள்ளை ஆகியோர் சமயங் காரணமாக ஆயிரந் தடவை தமிழுக்கு மாறுசெய்தும் ஆங்காங்குக் குத்தும் கத்தியைத் தாக்கும் புழுப்போலப் பகைப்பண்பை எதிர்த்துத் தாக்கி யிருக்கின்றனர். அவர்கள் இன்று பிறந்திருந்தால் தம் நூலைத் தாமே பாழ்நூல் என்று கூறியிருப்பர்! தமிழர் போற்றும் மாநிலம், தமிழர் பின்பற்றும் மொழி, தமிழர் மேற்கொண்ட சமயம், தமிழரிடைத் தவழ்ந்துவந்த மாயப் பழக்க வழக்கங்கள் யாவும் தமிழர்க்கு ஊறு தருவதையும்; தமிழரிடையே தமிழாராய்ச்சி விட்டதாகக் காணப்படும் சிலர் உணர்ச்சியால் தமிழரல்லாதாராயிருப்பதும் கண்டு, தமிழுக்கு முதலிடம் என்ற கிளர்ச்சியையும், தமிழர்க்கே தமிழகம் என்ற கிளர்ச்சியையும், அறிவும் உணர்ச்சியும் வீரமும் மிக்க தமிழர் தோற்றுவித்தனர். இவ்வியக்கம் மிகப் பழந்தமிழ்க் கொள்கையையும், பண்பாட்டையும் மீண்டும் ஏற்படுத்த முயல்வது, பழைமைப் பற்றால் அன்று. அப்பழைமையில் கலந்துள்ள பெருமை நோக்கியும், அதில் அமைந்த தமிழர் உயிர் நிலைத் துடிப்பையும் ஊக்கத்தையும் கண்டுமேயாகும். அது புதுப் புரட்சி வேகத்துடன் எழுந்து கருத்து வேற்றுமைகள், சமய வேற்றுமைகள், கட்சி வேற்றுமைகள் ஆகிய எல்லாக் கரைகளையும் உடைத்துப் பெருவெள்ளமாகப் பொங்கிவருகிறது. அதனைத் தடைப்படுத்த யாராலும்-இவ்வீரத் தமிழரால்கூட இனி ஆகாது. தமிழர் மொழியை அவர்கள் செம்மைப்படுத்த எண்ணினர். எதிர்ப்பு இருந்தது. தமிழகஞ் சார்ந்த அயல் நாடுகள் இத்தகைய எதிர்ப்புகளால் குலைந்தே தமிழ்ப் பண்பினின்று நழுவின என்பதை அம்மொழியின் வரலாறுகள் காட்டுகின்றன. ஆனால், தமிழின் நல்ல காலம்; மொழி செப்பமுற்றே வருகிறது. தமிழர் கண் குளிர, எதிர்ப்பவர் கண்ணீர் உண்ணீராக ஒடுங்கத் தழைத்தே வருகிறது. தமிழர்க்குத் தமிழியக்கத்தார் அரசியல் விழிப்பையும் எழுச்சியையும் ஊட்டினர். எதிர்ப்பு மிகுந்தது. பிளவுகள் மலிந்தன. ஆனால், இங்கும் தமிழன்னை அருளால் தமிழ் மக்கள் உள்ளூர ஒற்றுமையடைந்து வருகிறார்கள். சமயத் துறையிலே தமிழியக்கம் தலையெடுத்தது. ‘நம்மை வளர்த்த மொழியை நாம் செப்பம் செய்தோம்; நாம் வளர்த்த அரசியலை அடிமை நிலையி லும் செப்பம் செய்து வருகிறோம். நாமே படைத்து வளர்த்த நம் சமயத்தையும் இனிச் செப்பம் செய்வோம் என்றெழுந்தனர் வீரத்தமிழ் மரபினர். மொழிக் கோட்டை மண் கோட்டை; அதில் பகைவர் பதுங்க இடமில்லை. அரசியல் கோட்டை முள் கோட்டை. அதில் வீரத்தமிழன் கால் கிழிய நடந்தான். பகைவர் முள் மேல் கால் வைக்க அஞ்சி வழிவிட்டு வருகின்றனர். ஆனால், சமயக்கோட்டை மதிலும், ஞாயிலும், சுரங்க அறைகளும் உடையது. கோட்டை யினுள் இருப்பவர்க்கு மாறா வெற்றி தரும்படி அமைந்தது. ஆயின். அந்தோ இன்று கோட்டைக்குரியவர் உள்ளிருக்க வில்லை. நண்பர் சிலரை நம்பிப் பாதுகாக்க விட்டு விட்டு வெளித் தங்கியுள்ளனர். கோட்டை மதில்கள் போலி நண்பர் எறிபடைகள் வீசும் இடமாயின. சுரங்கங்கள் படைக்கலங்கள் அவர்கள் கையில்! கோட்டையின் கொடிகள்கூட இன்று அவர்கள் கொடிகள்! தமிழியக்கத் தார் இம்முறையில் போராட வேண்டியிருக்கிறது. தமிழியக்கத்தார் தமிழர் சமய வாழ்வைச் செப்பம் செய்ய முயன்று சோர்வுற்று வருகின்றனர். தம் கோட்டை தம் எதிரி வசமானால் அதை அழிக்கத் தானே வேண்டும் என்கின்றனர் சில இனமறவர். ஆனால், ஆண்டு முதிர்ந்த சிலர், அந்தோ நம் பிள்ளைகள், நம் மாதர் கோட்டையினுள் உள்ளனரே. அவரைக் கருதியேனும் அழிவு தவிர்த்தல் வேண்டுமே என்று கவல்கின்றனர். தமிழர் சமயம் மாசேறியுள்ளது. கழுவினால் மாசு போகும். ஆனால், கழுவும் நிலை கடந்துவிட்டது. மாசு படிப்படியாய் ஏறி உடலில் நோய்ப் புழு மலிந்து விட்டது. நோய் தோல் கடந்து, தசை கடந்து, குருதியில் பரவி, எலும்பில் தோய்ந்து விட்டது. பல உறுப்புகள் புற்றேறின. நேரத்தில் கழுவாதவற்றை ஊசியிட்டு மாற்றி யிருக்கலாம்; காலத்தில் ஊசியிடாதவற்றை அறுவைசெய்து மாற்றி யிருக்கலாம். இப்போது ஒன்றிரண்டு உறுப்பேனும் அறுத்தெறியப்படுதல் வேண்டும் நிலையி லிருக்கிறது. உறுப்பை அறுத்தெறிவதா? என்று ஆர அமர்ந்து செல்வர் தயங்கி னால், போவது இனி உறுப்பன்று, உயிர்ப்புத்தான். தமிழர் சமயத்தின் மாசா? எது மாசு, எது உடல்? தமிழியக்கத்தார் தமிழர் சமயம் எது என்று காணும் வகையில் ஒற்றுமைப் படவில்லை. ஒற்றுமைப் படவும் முடியாது. தமிழர் சமயம் எது என்று கண்டு அதனை ஆக்கும் வேலை வேண்டுவதில்லை. தமிழர் சமயத்தில் ஆவன கொண்டு அல்லன நீக்கி அவரவர் முயன்றால் போதும்! ஆயின் ஆவன கொள்ள யாரும் தடைசெய்யவில்லை. ‘உனக்கு முருகனா வேண்டும்! யார் தடுக்கிறார்கள்? காளியா வேண்டும்! யார் தடுக்கிறார்கள்? இவ்வாக்க வேலைக்கு விளம்பரம் போதும்; போர் வேண்டுவதில்லை. ஆயின்; அல்லன விலக்குதல் அப்படியல்ல. ஒருவனுக்கு ஆவது, அடுத்த வனுக்கு ஆனாலும், ஆகாவிட்டாலும் கெடுதலில்லை. ஆயின், அல்லன வற்றை நீக்குதல் வேண்டுமானால் அனைவரும் நீக்குதல் வேண்டும். வீட்டுக்கு ஒரு மாடி, இரு மாடி, ஏழு மாடி வைப்பதால் அயலானுக்குக் கேடில்லை. ஆனால், இடிந்து விழும்படி கட்டினால்? எது சமயம் என்பதில், தமிழரிடையே, தமிழியக்கத் தாரிடையேகூட ஒற்றுமையில்லை. சிவம் தமிழ் என்பார் ஒருவர், அன்றென்பார் மற்றொருவர். ஆனால், இது தாவில்லை (கேடில்லை)! எது தமிழர் சமயம் அன்று என்பதில் தமிழறிஞர் எல்லாருமே ஒற்றுமைப்பட்டுள்ளனர். கீழ்க்காணும் செய்திகளில் முதல் நான்கு தமிழர் (கிறி°வர் முகம்மதியர் உள்பட) யாவரும் ஒப்புக் கொள்ளத் தக்கவை. மற்ற இரண்டு உணர்ச்சி மேலீடுள்ள சிலர் (நல்லெண்ணத் துடனேயே) மறுக்கக் கூடியவையாகலாம். 1. தமிழரிடையே பிறப்பினால் உயர்வு தாழ்வு கிடையாது. உயர்வு தாழ்வுகள் இயற்கையாய் ஏற்படுவதுண்டு. இயற்கையாகவும் முயற்சியாலும் அவை போகும். ஆனால், இன்று தமிழரிடையே ஏற்பட்டுள்ள உயர்வு, இவர்கள் இன்றைய சிவன் கோவில், பெருமாள் கோவில் தாழ்வு முற்றி லும் இயற்கையானது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அது இயற்கையாய் அழிவதையும் முயற்சியால் அழிக்கப்படுவதையும் எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள். 2. தமிழரிடையே இன்று ஏற்பட்டிருக்கும் உயர்வு தாழ்வு தமிழரில் ஒரு சாராரே ஏற்படுத்திய உயர்வு தாழ்வல்ல. ஏனெனில், தமிழ்ப் பண்பு குறைந்து அடிமைத் தன்மை மிகுந்தோறும் உயர்வு தரப்படுகிறது. தமிழ்ப் பண்பு மிகுந்தோறும் அடிமை உணர்ச்சி குறையும் தோறும் தாழ்வு ஏற்படுகிறது. தமிழ் நாட்டுப் பழம் பாணர் குடியே வீரரைப் பாடாமல் கடவுளைப் பாடி அவர் பெயராகிய திரையில் மறைவிலிருந்து வாழும் நச்சரவை அண்டித் தேவரடியாளாய் தேவடியாள் குடியாயிற்று. பக்தருக்கு மறுபதமான தேவரடியார், தாசர் என்பவற்றின் பெண்பாலே தேவடியாள் தாசி என்றாகியிருப்பதும்; தமிழ் நாட்டிலும் சரி, இந்திய மாநிலத்தின் வேறெந்த நாட்டிலும் சரி, பக்த வகுப்பாரன்றி மற்றவர்கள் ‘தாசர்’ என்று பெயர் கூட வைத்ததில்லை என்பதும் காண்க. அரசர்க்கு அமைச்சராயிருந்த வள்ளுவர் குடியே-தெய்வப் புலமைத் திருவள்ளுவர் பிறந்த திருக்குடியே-இன்றைய பறையர் குடி; அவர்கள் இன்று தீண்டப்படாதவர். இன்னும் இதுபோல் பிற ஆய்ந்துணரலாம். 3. தொழிலால் ஏற்பட்ட நால் வகுப்பான அந்தணர், அரசர். வணிகர், வேளாளர் என்பவருள் நால்வரும் பிறப்பால் ஒரே வகுப்பினரே. வேளாளர் என்ற சொல்லின் வேராகிய ‘வேள்’ கடவுளையும், போர்ப்படையையும், உழுபடையையும், குறித்தலால், வேள்வி வழிபாட்டையும், வேளாளர் அந்தணரையும் வேளிர் அரசரையும், வேளாளர் வணிகரையும், உழவரையும் உணர்த்தும் சொல்லாகின்றது. வேளாளரே சமயத்தீக்கைபெற்று அந்தணராவர். போர் வெற்றியால் அரச மரபினர் ஆவர். தொழிலால் வணிகரும் உழவரும் ஆவர். எனவேதான் வேளாளர் உயர்வாகக் கூறப்பட்டனர். இது பிறப்பாலன்று. தொழிலால். (இன்று வேளாள ரிடையே செல்வ நிலையிலுள்ளார் நான்காம் வகுப்பினராகவும் உழுது வாழ்பவர் ஐந்தாம் வகுப்பினராகவும் ஆகியிருத்தல் கவனிக்கத்தக்கது.) 4. துறவோர், அந்தணர் என்பவர்கள் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர். (பிறப்பொட்டிய எவ்வகுப்பினரும் அல்லர்; அதிலும் கொலை வேள்வி செய்தலை ஆதரித்துச் சாதி வேற்றுமையை அறமாகவும் சமய அடிப்படைக் கொள்கையாகவும் கொண்ட வகுப்பினர் அல்லவே அல்லர்!) துறவறம் இல்லறத்துக்கு மாறானதன்று. இல்லறந் துறந்த அறமும் அன்று. தன்னலம் துறந்த துறவறமேயாகும். தம் இல்லத்தின் கடமை முற்றுற்றபின் உலகுக்கு உழைக்க வந்தவர்தாம் துறவோர். தம் இல்வாழ்வில் நின்றே உலகு பேணலை மேற்கொண்டவர் அந்தணர். பிற்காலத்தில் கோவில் வழிபாடு முதலிய பொதுக்கடனாற்றும் ஊழியன் பார்ப்பான் எனப்பட்டான். குருக்கள், இவர்கள் பிறப்பால் தமிழராகிய வேளாளராதலாலும், கொலை வேள்வி செய்யாதவராதலாலும் வேளாப் பார்ப்பனர் என்றும் வழங்கப்பட்டனர். இன்றும் இவர்களுடன் பிராமணர் உண்ணுவதும் மணஉறவு கொள்வதும் இல்லை. அவர்கள் மந்திரங்களும் பிராமணர் மந்திரங்கள் அல்ல. வேளாளர் தீக்கை பெறும்போது ஓதும் மந்திரங்களே. குருக்கள் பெயராகிய பார்ப்பான் என்ற சொல்லே தவறுதலாய்ப் பிற்காலத்தில் பிராமணனுக்கு வழங்கிற்று. அச்சொல் குறித்த தமிழர் மதிப்புப் பிராமணர்க்குப் போயிற்று, தமிழர் குடியைக் குறித்த அச்சொல்லைப் பிராமணர் விரும்பாது ஏளனம் செய்ததால் அது குருக்களை இழிவுபடுத்தும் சொல்லாய் அது மாறிற்று. 5. இரப்பது இழிவு. ஈகை சிறந்தது. குறிப்பு: இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று பொருந்தா நீதிகள். திருக்குறள் முதலிய நூல்களில் இரண்டு நீதிகளும் தரப்படுகின்றன. ஆனால், எவரும் இரத்தல் கூடாது, இரத்தல் இறைவன் படைப்பிலேயே இருத்தல் தகாது என்று வள்ளுவர் பெருமான் கூறுவதனால் ஈகை இடமறிந்து உதவுதல் என்ற பொருளே தரும். அதாவது பொருளீட்ட முடியாதவன், முயன்றும் பெறாதவன், இடுக்க ணுற்றவன், பிறர்க்கென உழைத்துத் தன்னைப் பேணாதவன், பொது நலம் பேணி ஆளும் அரசன் ஆகியவர்க்கு ஈதலையே தமிழர் ஈகை என்று கொண் டிருத்தல் வேண்டும். சோம்பர், இரத்தலைத் தொழிலாகக் கொண்டவர். இறைவன் பேர் சொல்லிப் பிழைக்கும் எத்தர், இரத்தல் உயர்வெனக் கொள்பவர், மக்களிடையே வேற்றுமை விளைவிப்பவர் ஆகியவர்கட்குக் கொடுத்த, கொடுத்து வரும் தவற்றினாலேயே தமிழர் நலிந்தனர், நலிகின்றனர். 6. கடவுள் ஒருவரே, அவர் உருவமற்றவர், சமயங் கடந்தவர் (எனவே எச் சமயத்துக்கும் அவர் உரியவர் அல்லர்) அவர் குணம், குறி, ஊர், பேர் அற்றவர் (எனவே ஆண் பெண் பால்வேறுபாடு, சாதி வேறுபாடு ஆகியவை அவர் பெயரால் ஏற்படமுடியாது. அவர்க்குத் தனியாக ஒரு தாய்நாடும் தாய்மொழியும் கிடையாது.) குறிப்பு 1 :- இக் கடவுட் கொள்கை உயர்ந்ததேயாயினும், இக் கடவுளின் அருள் நிலையைத் தாமும் கொண்டுதான் போலும் தமிழர் தம் பண்பிழந்து பிறர் பண்பு பேணி யழிவுற்றது என்று எண்ணாதிருக்க முடியவில்லை. ‘அருளும் அருளுடையார் கண்ணதே’ என்பதைத் தமிழர் ஓராதிருந்தனர், இருக்கின்றனர். குறிப்பு 2:- தமிழர்க்குச் சமயம் இல்லை என்று கூறுவோர் சொற்கள் பழந்தமிழர் கடவுட் கொள்கைக்கு அவ்வளவு முரணாயில்லை என்பது காண்க. அரசியலில் ‘ஆளாத அரசியலே நல்ல அரசியல்’ என்பர். ‘சமயத்திலும் சமயமாகாத சமயமே உயர் சமயம்’ என்னலாகும். சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த சமயப் பற்று உண்டு. சமயப் பற்றிலாழ்தல் இல்லை. துறவியாகிய இளங்கோ எல்லாச் சமயமும் பாடி நடுநிலை நின்றமை இக்காலத்துறவியரால் முடியுமா? துறவியல்லாதவரால்தான் முடியுமா? 7. கடவுளுக்குப் பிறப்பும் இறப்பும் வாழ்வும் இல்லை. அவர் அருள்வலியால் (தற்கால மொழியில் இயற்கை யாற்றலால்) உயிர்களும் உலகங்களும் நடைபெறுவதன்றி அவர்களை அல்லது அவற்றைத் தோற்றுவிப்பது மில்லை, அழிப்பதும் இல்லை (சமய மொழியில் கூறினால் அவர் சாட்சி மாத்திரமாய் நின்று இயக்குகிறார்.) உயிர்களுக்கு அவர் செய்வதெல்லாம் துன்பத்தினின்று விடுதலைபெற உதவுவதுதான். இக்கருத்துகளுக்கு மாறுபட்ட சமயம் தமிழர் சமய மாகாது. மாறுபட்ட கருத்துகளும் தமிழர் சமயக் கருத்துகளாகா. இன்றைய தமிழர் சமயத்தில் மேற்கண்ட கருத்துகள் இல்லை என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஏனெனில், அச்சமய நூல்களிலிருந்தே இவை எடுக்கப்பட்டன. ஆனால், இவற்றுக்கு மாறான கருத்துகளும் இன்றைய தமிழர் சமயத்தில் எண்ணற்றவை. அவற்றுள் சில, சாதி வேறுபாடு, தீண்டாமை ஆகியவற்றின் ஆதரவு, வடமொழி தெய்வமொழி எனல், வடமொழி மந்திரம் ஓதுதல், சோம்பர்க்கும், எத்தர்க்கும் ஈதல், தமிழர் சமயத்துக்கு எதிரான கொள்கை யுடைய பிராமணர்கட்குக் கோவிலில் நுழைவுரிமை மட்டுமன்றித் தலைமையும் கொடுத்தல் ஆகியவை. தமிழ் நூல்களில் பார்ப்பனர் குடியிருப்புச் சேரி என்று கூறப்பட்டிருக்கிறது. ஊருக்குப் புறம்பே புல் வீடுகளில் வாழ்ந்தனர் அவர்கள். கோவிலை அவர்களுக்கு விட்டுப் பக்தர் (தேவரடியார்)களுக்குப் பாதுகாப்பாக அவர்களை முதல் தெருவிலும் விட்ட செயலுக்குத் தமிழர் எதுவும் படல் வேண்டும்! இச் செயல் செய்தவர் தமிழ் அரசரே-சிறப்பாகப் பிற்காலச் சோழர், நாயன்மார் காலத்திலும் சேக்கிழார் காலத்திலும் இருந்த சோழரே என்பதை நோக்க அவர்கள் வீரத்தைப் புகழ்வதா, வீண் வம்புக்கு இகழ்வதா என்று கூறமுடியாத நிலையிலிருக்கிறோம். இந்து மதம் என்று இன்று கூறப்படுவது சிவ நெறியையும் திருமால் நெறியையும் சேர்த்துதான். ஆனால், இவை கலப்பற்ற சிவ நெறியும் திருமால் நெறியும் அல்ல. அவற்றுடன் கலந்து நிற்கும் மூன்றாம் நெறி யொன்று உண்டு. அந்நெறி சில வகையில் சிவ, திருமால் நெறியை விடச் சிறந்தது. அந்நெறியில் ஒரே ஒரு சாதிதான் உண்டு. (ஆயினும் அந்நெறியில் சேராத சிவ நெறியாளர் திருமால் நெறியாளர்களிடையே சாதி வேறுபாட்டை ஏற்படுத்தி வளர்ப்பது அவர்கள் உயிர்நிலைக் கடமை) அந்நெறிக் கென்று கோவிலும் உருவமும் கிடையாது. (ஆனாலும் தனக்கெனக் கூடில்லாமல் தான் முயன்று ஊட்டாமல், காக்கையின் கூட்டில் காக்கை ஊட்ட வளர்வதாகக் கூறப்படும் குயில் குஞ்சுகள் போல, சைவர் வைணவர் செலவில் எழுப்பப்பட்ட கோவில்களில் அவர்கள் உருவினையே வைத்துக் கொண்டு அவர்கள் செலவில் வாழ்ந்து அவர்கள் தெய்வத்தின் பெயரை வைத்தே அவர்களை என்றென்றைக்கும் அடிப்படுத்த வழி கண்டவர்கள் அந்நெறி யாளர்கள்). பொருளும் உயிரும் உள்ள சிவ, திருமால்நெறி வேதங்களை ஓதுபவர்களை இழிவு படுத்தித் தம் பொருளற்ற, பிதற்றல் வேதத்தை வைத்து அந்நெறிச் செல்வர் பணமும் பறித்து அவர்களை அவமதிக்கவும் வழிசெய்வர். இம் மூன்றாம் நெறிக்குப் பெயர் வழங்குவதில்லை. ஆனால், பெயர் உண்டு. அதுவே சுமார்த்தம் என்பது. சாதி வேறுபாட்டைப் பேணுதல், வடமொழிக்கு எல்லா வகையிலும் உயர்வு காத்தல் இவை இவர்கள் தொழில். சுமார்த்தர் திருநீறிட்டும் இடாமலும் சிவன் கோவிலை ஆளாமல் ஆள்வர். அவர் தம்மைச் சிவப் பிராமணர் என்றுகூடக் கூறிக்கொள்வதில்லை. சைவர்கள் அத்தகைய திருமண் பாவைகள் என்று அவர்கள் எண்ணியிருத்தல் வேண்டும். ஆனால், வைணவர் கோவிலில் செல்லும் சுமார்த்தர் தம்மைச் சுமார்த்தர் என்று கூறிக்கொள்வதில்லை. வைணவர் என்பர். நாமம் கட்டாயம் இட்டுக் கொள்வர். ஆனால் அவர் ‘கலை’யால் அவரையறியலாம். வடமொழி பேணும் அவர்க்கு ‘வடகலை’ என்ற பெயர் பொருத்தம் தானே! வைணவத்தில் கோவில் குருக்களாகிய தென்கலையான் விவரம் தெரிந்தோ தெரியாமலோ இன்னும் வடகலையை எதிர்ப்பான். சைவம் பணிவல்லவா? சைவக் குருக்கள் சிவமாகிய பிராமணரில் ‘ஐக்கியமாய்’ ஒன்றாகி வேறாகி நிற்கிறார்போலும்! சைவரும் வைணவரும் சுமார்த்த நெறியையும் வட கலையையும், ஒழித்தாலன்றி அவர்கள் நெறி பழைய தமிழ்நெறி யாகாது. இவற்றை ஒழித்தால் கோவில் தமிழ் வேதங்களே பாடப்படும். தமிழ் மந்திரங்கள் ஓதப்பட வழி ஏற்படும். வடமொழி வேதம் ஒழிக்கப்பட வழியுண்டு. சாதி, தீண்டாமையை ஒழிக்க முற்படலாம். சுமார்த்தர்களிடம் கோயிலை விட்டுவிட்டு, நல்ல உணர்ச்சி மிக்க தமிழர் நா°திகரானால், ‘கடவுளே, இந்த நா°திகர் பக்கம் நின்று ஆ°திகப் பூண்டை அழி என்றுதான்’ தமிழர் வேண்டிக்கொள்ளல் தகுதி. 7. தமிழ்ச் சொற்களும் தமிழ்ப் பண்பாடும் சொற்கள் உலகப் பொருள்களின் குறியீடுகள் மட்டுமல்ல; கருத்துகளின் குறியீடுகளும் கூட. பொருள்களைக் குறிக்கும் சொற்கள் அச்சொற் பொருளை அறிந்த மக்கள் உள்ள நாட்டு மொழிகளிலெல்லாம் இருக்கும். ஆனால், கருத்துகளைக் குறிக்கும் சொற்கள் எல்லா மொழிகளிலும் ஒரே நிலையில் இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, கொடுத்தல், தருதல், ஈதல்; நாம், நாங்கள்; வணக்கம், வழிபாடு, தொழுகை ஆகிய நுட்ப வேறுபாடுகள் ஆங்கிலத்தில் இல்லை. கனவு, நனவு, என்ற மாறுபாடும் காய், கனி ஆகிய வேறுபாடும் ஆங்கி லத்திலும் மற்றெம் மொழியிலும் இல்லை. இன்றைய பல ஆங்கிலக் கருத்துக் குறிகளுக்கும் இதுபோலத் தமிழில் பல சமயம் நேர் தனிச்சொல் இல்லாம லிருப்பதுண்டு. இங்ஙனம் கருத்துக் குறிக்கும் சொல் வளத்தின் வேறு பாட்டா லேயே மொழிகளிடையே பண்பாட்டு வேறுபாடும், உயர்வு தாழ்வும் மதிக்கப்படும். தமிழ் இவ்வகையில் தனித் தன்மையும் உயர்வும் உடைய தென்பது ஆராய்ச்சி வகையால் காணவேண்டுவதொன்று. மொழியில் என்ன இருக்கிறது என்றும் சொல்லில் என்ன இருக்கிறது, எந்த மொழிச்சொல்லை எந்த மொழியில் வழங்கினால் என்ன என்றும் இப்போது பல அரைகுறை மதியினர் ஆராயாது கூறுவதுண்டு. சொற்கள் கருத்துகளைக் குறிப்பவை; தமிழில் எல்லாச் சொல்லும் கருத்துக் குறிப்பவை; கருத்து அறிவியல் முறைப்படி கூறினால், நீடித்த வாழ்வுடைய ஓர் உயிரியக்கமுடைய பொருள் என்பதுபோன்ற உண்மைகளைக் கவனிப்பவர் இவ்வாறு கொள்ள முடியாது. மொழியின் சொல்லில் அம்மொழியாளரின் இறந்தகால வாழ்க்கைக் கருத்து முற்றிலும் கருவூலமாகச் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சொற்களின் பொருள் பல கால மாறுபாட்டால் பொருள் திரிந்திருப்பதுண்டு. அறிஞர் தேவநேயப்பாவாணர் போன்ற ஆராய்ச்சியாளர் பலர் அத்தகைய மாறுபாடுகளில் பலவற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். வளைதல் என்ற பொருளில் மட்டுமே சங்க இலக்கியங்களில் ‘வாங்கு’ என்ற வழங்கும் இச்சொல் கை வளைந்து பெறுதல் என்ற குறிப்பில் ‘பெறு’ என்னும் பொருளில் இன்று வழங்குகிறது. இது இத்தகைய மாறுதலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. மேற் குறிப்பிட்டது போன்ற சொற்பொருள் மாறுபாடு காலவேறுபாட்டை மட்டுமே குறிக்கும். ஆனால், பண்பாட்டு மாறுபாட்டைக் குறிக்கும் சொற்களும் பல உண்டு. இம்மாறுபாடுகளிற் பல உண்மையில் தமிழ்ப் பற்றுடையவர் உள்ளத்தை அறுக்கும் மாறுபாடுகள் ஆகும். ஏனெனில், அச் சொற்களின் பழம் பொருளும் புதுப்பொருளும் தமிழன் முன்னைய உயர்வையும் இடைக்கால வீழ்ச்சியையும் அளந்து காட்டுபவையாயுள்ளன. இத்தகைய சொற்களில் நூல், பாட்டு, பட்டினம், பொன் என்பன சில. நூல் நூல் என்ற சொல் இப்போது பெரும்பாலும் சுவடி அல்லது புத்தகம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. திருக்குறள் ஒரு நல்ல நூல், இது சங்க நூல் என்றெல்லாம் வழங்குகிறோம். ஆயினும் வானநூல், கணக்குநூல் என்று சொல்லும்போது நாம் கொள்ளும் பொருள் வேறு. இங்கே அது அறிவுநூல் என்றோ, அறிவுநூல் துறை என்றோ பொருள்படும். இப்பிந்திய பொருளிலேயே முற்காலத்தில் இச்சொல் பயன்பட்டது. நூல், நூலோர், கணக்காயர் முதலிய சொற்கள் முற்கால இலக்கிய வழக்கில் இலக்கியத்தையோ இலக்கிய ஏடுகளையோ குறித்ததாகக் காட்டவே முடியாது. ஏனெனில் அது ஆராய்ச்சி முடிவுகளை மட்டுமே குறித்தது. இவ்வகையில் ‘நூல்’ என்ற பழந்தமிழ்ச் சொல்லின் பொருள் அறிவியல் (ளுஉநைnஉந) என்ற ஆங்கிலப் பொருளே ஆகும். தமிழரிடையே ஆராய்ச்சி பழங்கதையாகப் போனபின்னரே இது சுவடி எனும் பொருளில் பயன்பட்டிருத்தல் வேண்டும். இங்ஙனம் பொருள் இழிவுபட்டத னாலேயே இன்று இக்கருத்தை (ளுஉiநேஉந)க் குறிக்கத் தமிழ்ச் சொல்லுக்குத் திண்டாடுகிறோம். வட மொழியில்கூட இதற்குச் சரியான சொல் கிடையவே கிடையாது. சா°திரம் என்பது சட்டம் அல்லது விதிகளின் தொகுப்பு என்றே பொருள்படும். நூல், நூற்பா என்ற சொற்களிரண்டும் தொடர்புபட்டவை. நூலின் இலக்கணம் கூறும் நன்னூல் இழைத்த நூலின் பண்பையும், மரக்கோட்டம் அறுக்கும் நூலின் பண்பையும் உவமை கூறியுள்ளது. இதிலிருந்தே நூல் என்பது, கணக்கு வானிலைஆய்வு, இயற்பொருளாய்வு, மொழியினிலக்கணம் முதலிய அறிவுத் துறைகளை மட்டுமே குறிக்கும் என்பது தெரியவரும். இதற்கேற்ப நூற்பா என்ற சொல்லும் நூலுக்கான ‘பா’ எனப் பொருள்படுகிறது. சிலப்பதிகாரப் பாக்களும் பத்துப்பாட்டுப் பாக்களும் பாக்கள் மட்டுமே; நூற்பாக்கள் அல்ல. இதிலிருந்தே சிலப்பதிகாரமும் பத்துப்பாட்டும் நூல்கள் அல்ல, இலக்கிய ஏடுகள் மட்டுமே என்று காணலாம். நூல் (ளுஉநைnஉந) கிட்டத்தட்ட இறந்துவிட்ட காலத்தில் தோன்றிய வடமொழி நாகரிகம் நூற்பாவைச் சூத்திரம் என வழங்கிற்று. இச்சொல் (ஸூத்ரம்) உண்மையில் நூல் என்பதன் மொழிபெயர்ப்பு. நூலின் பண்பு இழக்கப்பட்ட காலத்தவர் அதன் பா வடிவத்துக்கு மட்டும் இதனைப் பயன் படுத்தினர். வடமொழியில் சூத்திரம் என்பது ஒரு பாவகை, ஒரு நடைவகை, ஆனால், தமிழில் அது ஒரு தனி வகைப்பட்ட துறைக்கான செய்யுள் வகை, வடமொழி முறைப்படி திருக்குறளின் குறட்பாக்களைச் சூத்திரம் என்னலாம். ஆனால், தமிழில் அது சூத்திரமும் அல்ல, நூற்பாவும் அல்ல. குறட்பாவே. மக்களுக்கு இலக்கியம், ஆராய்ச்சியாளர்க்கு நூல். நூலாராய்ச்சிக்கும் அப்பால் சென்று அனுபவ மெய்ம்மை கண்டவர்கள் அறிவுமறை, மறை என்பது நூன்முடிபு, மெய்யுணர்வு (ஞாடைடிளடியீhல, ஆலளவiஉளைஅ) ஆகியவற்றைக் குறிக்கும். சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்ட, ஒரு வேளை, தொல்காப்பியத் துக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர்களிடையே ஆராய்ச்சித்துறை குன்றி ‘நூல்’ என்ற சொல்லில் மாறாட்டமும் குழப்பமும் ஏற்படத் தொடங்கியிருத்தல் வேண்டும். ஆயினும், இலக்கண நூலோர் அச் சொல்லைப் பெரும்பாலும் பிற ழாமல் வழங்குகின்றனர். உரையாசிரியர்களும் இவ்வேறுபாடு குறித்துள்ளனர். இப் பொருள் வேறுபாடு முற்றிலும் மறக்கப்பட்ட காலம் எது என்று கூறமுடியாதாயினும் வடமொழியாளர்களால் தமிழ்ப் பண்பாடு அறியப்படு முன்னரே இச் சொற்குழப்ப மேற்பட்ட தென்னலாம். திருவள்ளுவமாலையில் நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ என்று குறித்திருத்தல் காண்க. பாட்டு இப்போது பாட்டு, பா, செய்யுள் எல்லாம் ஒரு பொருளில் வழங்குகின்றன. இவற்றின் எதிர்ச்சொல் ஆக வழங்குவது உரைநடை. உரையென்பது பாட்டுக்கு உரை என்ற பொருளில் பிற்காலத்து வழங்கியதும் உண்டு. பண்டைத் தமிழ் நூல்கள் உரைநடையை உரைச் செய்யுள் என்றன. இதிலிருந்தே செய்யுள் என்பது உரைக்கு எதிரிடையல்ல என்று காணலாம். உரை என்பது பேச்சு. அந் நடையில் இலக்கண இலக்கிய வரம்பமையச் செய்யப்பட்டது உரைச் செய்யுள். யாப்பமைதியும் அமைந்தால் அது யாப்பு அல்லது பாவகை ஆகும். ஆகவே செய்யுள் என்பது இன்று நாம் ‘இலக்கியம்’ என்று கூறும் பொருளில் வழங்கியதாயிருத்தல் வேண்டும் என்று கூறலாம். பாவகையில் பாவேறு, பாவினம் வேறு என்றும் வகுக்கப்பட்டன. அறிவு சான்ற கருத்துகள் நூலாக நூற்பாவில் எழுதப்பட்டது போல; அறிவும் உணர்ச்சியும் அழகும் சான்ற கருத்துகள் பாக்களாக எழுதப்பட்டன. சிலகால் பாவினங்களாகவும் எழுதப்பட்டன. இவற்றின் ஓசையின் இசைநயம் மிக்கதான முறையே பாடல், அல்லது பாட்டு எனப்பட்டது. ஆகவே பாவேறு, பாட்டு வேறு ஆகும். சிலப்பதிகாரம் பாக்களாலானது. தேவாரம் பாட்டுகளாலானது. இப் பாட்டுகள் பாவாகவும் பாவினமாகவும் இருக்குமாயினும், பாவினங்கள் பெரும்பாலும் இசைப்பாட்டுகளிலேயே வழங்கின. தேவாரம் இசைப்பாடல் தொகுதி என்பதை மறந்து இசையுணர்வு கெட்ட பிற்காலத் தமிழகம் அதைக் காவியத்துக்கும் பயன்படுத்திற்று. இலக்கியம் என்ற பொருளுடைய செய்யுள் எனும் சொல் பொருள் மாறுபட்டதனாலேயே செய்யுளும் நூலும் சேர்ந்தது; இயல் என்னும் எண்ணம் மறந்துபோயிற்று. பழம் முத்தமிழ்ப் பகுப்பின் பரப்பை ஆங்கிலக் குறியீடுகளுடன் 47ஆம் பக்கம் உள்ள விளக்கப் படிவத்தில் காண்க. விருத்தங்கள் வட மொழியிலிருந்து வந்தவை என்பது பலர் கருத்து. இது தவறான கருத்து. தமிழில் அது பாவினமாய் இசையில் மட்டும் வழங்கியது. கலிப்பா உறுப்புகளில் வரும் வகைகள் விருத்தங்களே. பலவகை அடிகளிலும் எழுதப்பட்ட அவை நாளடைவில் நான்கடி என்று வழங்கின. தமிழரே இதனை அளவடி (ளுவயனேயசன ரேஅநெச டிக கநநவ) என்றனர். அடி, கால் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பாகவே வடமொழி அடி (பாதம்) அமைந்திருப்பதும் காணலாம். வடமொழியிலேயே விருத்தமுறை பிற்பட்டது. அவற்றில் எதுகை மோனை அமைந்தது தேவாரக் காலத்துக்கும் பிற்பட்டுதான். வேத இதிகாசக் கால வடமொழி யில் மூன்றடி, இரண்டடியே மிகுதி. பட்டினம் தமிழர் வழக்கில் பட்டினம் என்பது கடற்கரையிலுள்ள துறைமுக நகரம் எனப் பொருள்படும். தமிழர் நிலத்தை ஐந்திணையாக்கி ஒவ்வொரு திணையிலும் சிற்றூருக்கும் பேரூருக்கும் தனித்தனிப் பெயர்கள் வழங்கினர். இவ்வேறுபாடு உலகில் வேறு எம் மொழியிலும் கிடையாது. இவ்வேறுபாடு அழிவுற்ற பின்னரே வடமொழி இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டிருத்தல் வேண்டும். ஏனெனில், இதன் சுவட்டை வடமொழியில் காணமுடியவில்லை. வடமொழிப் பண்பாடு பிந்திய தென்பதற்கு இவ்வெதிர் மறைச்சான்று மட்டுமன்று; நேர்முகச் சான்றும் உண்டு. பட்டினம் என்ற சொல் கடற்கரைப் பேரூர் என்ற பொருள் கெட்டதுடன் எழுத்து உருவமும் குறைவுற்றுப் பட்டணம் என இன்றும் வழங்குகிறது. இது பிற்பட்ட வழக்கு என்று கூறத் தேவையில்லை. வடமொழியில் இப்பிற்பட்ட வழக்கும் பிற்பட்ட வடிவுமே காணப்படுகின்றன. அத்தோடு அது பிறமொழி (தமிழ்)ச் சொல்லாதலால் பட்டணம், பட்டனம், பத்தணம், பத்தனம் எனப் பலவாறாகவும் எழுதப் பட்டது. இவ்வழக்கும் மிக அருகலானதும் பிற்காலத்ததும் ஆகும். தமிழர் குறித்த பொருளில் பட்டினம் என்ற சொல் இன்றைய தமிழ் நாட் டெல்லையில் மட்டுமன்றிப் பண்டைத் தமிழ்ப் பண்பாட்டின் முழு எல்லையையும் காட்டி இந்தியா எங்கும் அக்குறிப்பு மாறாமலே இடப் பெயர்களில் வழங்கப் படுகிறது. நெய்தல் நிலச் சிற்றூராகிய பாக்கம், மருதநிலத்துப் பெயராகிய ஊர் ஆகியவற்றைப்போலவே பட்டினம் என்னும் பெயரும் இந்தியாவெங்கும் துறைமுகப்பட்டினங்களின் பெயர் ஈற்றிலேயே இருப்பது காணலாம். காயல் பட்டினம், குலசேகரன்பட்டினம், நாகப்பட்டினம், சேரப்பட்டினம், சதுரங்கப் பட்டினம், சென்னைப்பட்டினம், மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினம் ஆகியவை காண்க. கங்கைக் கரையிலுள்ள பாட்னா ஆற்றுத் துறைமுகப்பட்டினம் ஒன்றைக் குறித்த பெயரேயாகும். பொன் தமிழில் இன்று உலோகங்களைக் குறிக்கும் பொதுச் சொல் இல்லை என்று தோற்றும். ஆனால் ஐம்பொன் என்ற வழக்கும் வெண்பொன் (வெள்ளி) என்ற வழக்கும் உண்மையில் இப்பொருளுடைய சொல் ‘பொன்’ என்பதே என்று காட்டும். இப்பொதுச் சொல் தங்கத்தின் பெயராய்க் குறிக்கப்பட்ட காலம் எதுவோ அறிகிலோம். ஆனால், இப் பெயரிலிருந்தே பெரும்பாலான உலோகப் பெயர்கள் வந்துள்ளன என்று காணலாம். வங்கம், ஈயம், தங்கம், பித்தளை என்ற நான்கு உலோகங்களுக்கும் தமிழர் தனிப் பெயரிட்டனர். இவையே அவர்களுக்கு முதலில் அறியவந்த உலோகங்கள் என்றுகூட எண்ணலாம். இவற்றைப் பொதுவாகக் குறிக்க அவர்கள் பொன் (பொலிவுடையது) என்ற சொல்லை வழங்கினர். மற்ற உலோகங்களை அவர்கள் நிறம்பற்றியும் பண்பு பற்றியும் காரணப் பெயராகக் குறித்தனர். செம்பொன் (ஊடியீயீநச) சிவப்பு நிறமுடைய பொன், செம்பொன் என்பதே செம்பு எனக் குறுகிற்று. வெண்பொன்(ளுடைஎநச) இதுபோல் வெள்ளி யாயிற்று. இரும்பொன் (இருமை=கறுப்பு) கருமை நிறமுடைய பொன். இது இரும்பு எனக் குறுகிற்று. தங்கம் பைம்பொன் அல்லது பசும்பொன் (பசுமை அல்லது மென்மை உடையது) எனப்பட்டது. தங்கம் என்ற சொல் இருப்பதாலும், பொன் என்பதே பொருள் குறுகி அதன் பெயராய் வழங்கியதாலும் இதில் சொல்குறுக்கம் ஏற்படவில்லை. தமிழர் தங்கத்தில் பலவகைத் தங்கத்தைக்கூட அறிந்திருந்தனர். 8. வடசொற்களென மயங்க இடந்தரும் தமிழ்ச்சொற்கள் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, சமயப்பற்று முதலியவை மக்கள் வாழ்க்கை யின் வளர்ச்சிக்குச் சிறந்த தூண்டுதல்களாய் இருந்து வருகின்றன. ஆனால், பலர் அவற்றை நேர்மையற்ற குறுகிய முறையில் மேற்கொண்டு அவற்றையே நாகரிக வளர்ச்சிக்கும் சிறப்பாக நடுநிலை ஆராய்ச்சிக்கும் முட்டுக்கட்டை களாக வழங்கி வருகிறார்கள். அதிலும் இவ்வகையில் நம் நாட்டில் காணப்படும் நிலைமை மிகமிகப் புதுமையானது. பொதுவாக உலகில் ஆராய்ச்சிக்குத் தடை யாகக் கருதப்படும் மொழிப்பற்று மக்கள் உணர்ச்சிக்குத் தாயகமான தாய் மொழிப் பற்றேயாகும். ஆனால், தமிழ்நாட்டின் ஆராய்ச்சியில் காணப்படும் பிற்போக்குத் தாய்மொழிப் பற்றால் அன்று, பிறமொழிப் பற்றாலேயே ஆகும். இது வியப்புக் கிடமன்றோ? தமிழ்மொழியும் வடமொழியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்விந்தியக் கண்டத்தில் ஒருங்கே வளர்ச்சி யடைந்து வருகின்றன. எனவே அவற்றுள் ஒன்றன் பண்புகள், சொற்கள், கருத்துகள் முதலியவை இன்னொன் றிலும் இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்த்தல் இயற்கையே. ஆனால், தமிழில் வடசொற்களையும் வடவர் பண்புகளையும் கருத்து களையும் தேடித் துருவித் தொகுப்பதில் சளைக்காத அறிஞர் பலர் வட மொழியில் உள்ள தமிழ்ச் சொற்கள், கருத்துகள், பண்புகள் ஆகியவற்றைத் தேட எண்ணுவதுகூட இல்லை. மேலைநாட்டறிஞர் அல்லது வட நாட்டறிஞர் அவற்றைத் தேடி அறிவித்தால்கூட அன்னத்தின் இறகுகளில் அல்லது தாமரை யிலையில் பட்ட நீரால் அவை ஈரமடையாததுபோல, அவர்கள் கருத்தையும் செயலையும் அது சற்றும் தாக்காமல் புறக்கணித்துத் தள்ளப்படுகிறது. வடமொழிப் பண்டிதர்களும் அவர்களைப் பின்பற்றித் தமிழ்ப் பண்டிதர் பலரும் இடைக்காலத்தில் தமிழிலக்கணம், இலக்கியம் ஆகிய எல்லாம் வடமொழி வரவுகள்தாம் என்று நிலைநாட்ட முயன்றனர். “அன்றியும் ஐந்தெழுத்தால் ஒரு பாடையென்றறையவே நாணுவர் அறிவுடையோரே” என்று தமிழை இழிவு படுத்தித் தம்மைப்போன்ற தமிழறிஞரையும் அறிவிலாதவர்கள் என்று கூறிய இலக்கணக் கொத்து ஆசிரியர் இவ்வகுப்பையே சேர்ந்தவர் ஆவர். மேல் நாட்டா ரது பகலொளி கதிர் எரிக்கும் இந்நாள்களில் இப் ‘பழம்பாடை’க் கருத்துகள் பட்டப் பகல் நிலவுபோல் பொலிவிழந்து போயின. ஆயினும் சூரப்பன்மன் ‘திருவுரு’கள் போல் அவை பல்வேறு உருவில் இன்னும் வந்து நம்மை மருட்டுவதுண்டு. தற்போது தமிழினமும் ஆரிய இனமும் வேறு வேறான தனிப்பேரினங்கள் என்ற கொள்கை எங்கும் ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது. எனவே, தமிழினின்று ஆரியம் வந்ததென்றோ ஆரியத்தினின்று தமிழ் வந்ததென்றோ எவரும் கூற இடமில்லை. எனவே இவ்விரு மொழிகளின் உறவெல்லாம் ஒத்துவாழும் காலத்தில் ஏற்பட்ட நட்புறவுகளாயிருக்கக் கூடுமே யல்லாமல், ஒன்றுக்கொன்று தாயகமான உறவு எதுவும் இருக்க முடியாது. இன்றைய தமிழிலக்கியத்தின் தோற்றக்காலமுதலே அதாவது நமக்குக் கிட்டியுள்ள பழந்தமிழிலக்கியக் காலமுதலே ஒரு சில வடசொற்களேனும் தமிழிலக்கியத்தில் காணப்படுவ தோடு அவை வரவரப் பெருகியும் வந்துள்ளன. திருநாலா யிரத்துக்கு உரை எழுதப்பட்ட காலத்திலும் சைவ சித்தாந்த நூல் களுக்கு விளக்க உரைகள் எழுந்த சைவமடங்கள் காலத்திலும் வண்டிக் கணக்கில் வடசொற்களை மொத்த இறக்குமதி செய்யும் முயற்சிகள் செய்யப் பட்டன. ஆனால், யார் பெற்ற பேறோ அம்முயற்சிகள் பயனற்றுப் போயின. தமிழிலே மட்டுமன்றி, தமிழினத்தின் பாற்பட்ட அயல் மொழிகளிலும் ஒவ்வொரு காலத்தில் இத்தகைய “மணிப் பிரவாள” நடை தோற்றுவிக்க முயற்சிகள் நடந்து இங்கேபோல் அங்கும் அவை தோல்வியுற்றன என்பது கவனிக்கத்தக்கது. இராமாயணக் கால முதல் இலக்கியம் என்ற பெயரால் மொழி பெயர்ப்புகள் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டன. இதுகாறும் கூறியவை தமிழ்மீதும் தமிழர்மீதும் ஆரியத் தாக்குதலால் ஏற்பட்ட மாறுதல்கள். இவை பலவிடத்தும் மிகைப்படுத்தப்பட்டுப் பாமரத் தமிழ் மக்கள் காதில் நன்றாக உறைக்கும்படி எடுத்துக் கூறப்படுகின்றன. ஆனால், இதனை ஒட்டித் தமிழர் தாக்குதலால் ஆரியம் மாறுபட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுவதுமில்லை; எழுமானால் மறைக்கவும்படுகிறது. வடமொழி தமிழ்மொழி உறவில் வடமொழியினால்தான் தமிழ்மொழியில் மாறுதல்கள் ஏற்பட்டன. தமிழ்மொழியினால் வடமொழியில் மாறுதல் ஏற்பட வில்லை என்று வடமொழியின் பண்டிதர்கள் தமிழ்ப் பண்டிதர்கள் முதற்கொண்டு எண்ணி வருகின்றனர். ஆனால், மொழி, இலக்கியம், சமயம், நாகரிகம், கலை ஆகிய எந்தத் துறையிலும் உண்மை இதற்கு நேர்மாறான தென்பதை வரலாறும், ஆராய்ச்சியும் வரவர விளக்கி வருகின்றன. மொழியைப் பற்றிய மட்டில் வடமொழியினால் தமிழில் ஏற்பட்ட மாறுதல்கள் சில சொற்களின் வரவு மட்டுமே. நாட்டு ஆர்வமும் மொழியார்வமும் மேம்பட்டு வரும் காலங்களில் இவை யெல்லாம் எளிதில் விலக்கிவிடத்தக்க சில்லறை மாறுதல்களேயாகும். ஆனால், தமிழ்மொழியின் தாக்கினாலும் தமிழின மொழிகளின் தாக்கினாலும் வடமொழியும் வட இன மொழிகளும் அடைந்துள்ள மாறுதல்கள் அடிப்படையான வையும் விலக்கப்படாதவையும் ஆகும். ஏனெனில், அம் மாறுதல்கள் வெறும் சொல் ஆட்சி மட்டிலும் அன்று. ஒலி, இயல்பு, சொல்முறை, கருத்துத் தெரிவிக்கும் முறை ஆகியவற்றையும் பற்றியதாகும். வடமொழிக்கு இனமான வெளிநாட்டு மொழிகளாகிய பாரசீகம், கிரேக்கம், இலத்தீனம், ஜெர்மானிய, கெல்டியக் குழுக்கள் ஆகியவற்றில் ள,ண,ட ஆகிய ஒலிகள் இல்லை. வடமொழியில் இவை வர வர மிகுதியாகி இன்றைய வட இன மொழிகளில் பெரிதும் மலிந்து கிடக்கின்றன. இம்மிகுதி தமிழினத்தை யடுத்துப் பேசப்படும் மராத்தியிலும், பீகாரியிலும், வங்காளியிலுமே கூடுதலா யிருப்பது கூர்ந்து நோக்கத் தக்கது. வடமொழியில் பெரும்பாலும் ள,ண,ட ஆகிய இவ்வொலிகள் ல, ன, த ஆகிய எழுத்துகள் திரிந்து ஏற்பட்டவையே. ஆயினும், இவற்றினிடையேயும் பல சொற்கள் அத்தகைய மாறுதல்களுக்கு இடமில்லாத முதற் சொற்களாகும். இம்முதற் சொற்களில் பல தமிழ் அல்லது தமிழினச் சொற்களே ஆயிருக்கக் கூடும். ட என்ற எழுத்து வகையில் பல சொற்களில் இவ்வுண்மையைத் தெளிவாகக் காணலாம். இரண்டு எடுத்துக்காட்டுகள் இவ்வகையில் தருவோம். கடம் என்பது குடம் என்ற தமிழ்ச் சொல்லின் இன்னொரு வடிவம். இதைவிடத் தெளிவாகத் தமிழ்ச்சொல் பட்டணம் என்பதாகும். இச்சொல் தமிழில் பட்டினம் என்றும் பட்டணம் என்றும் வழங்கும். இதன் உண்மையான பொருள் கடற் கரையிலுள்ள துறைமுக நகரம் என்பதாகும். தமிழ் நாட்டில் பட்டணம் என்று முடியும் பெயர்களாகிய சென்னைப் பட்டணம், காயல் பட்டணம், நாகப்பட்டணம் ஆகியவையும் தெலுங்கு நாட்டிலுள்ள விசாகப்பட்டணம்கூடக் கடற்கரையிலேயே இருப்பது கவனிக்கத்தக்கது. உலக வழக்கத்தில் இந்த நுட்பத்தை மக்கள் கவனிப்பதில்லை. வடமொழியாளரும் இந்நுட்பம் அறியாமல் அதனை நகரம் என்ற பொருளிலேயே வழங்குகின்றனர். இச்சொல் பட்டணம், பட்டநம், பத்தநம் என்று பலவாறாக எழுதப் பெறுவதும், வடமொழி காஞ்சி அரசர்களால் வளர்க்கப் பட்ட காலத்தில் வாழ்ந்த தண்டிக்குப் பிற்காலத்திலேயே இது வடமொழியில் ஆளப் பெறுவதும் அது புது வரவு என்பதை வலியுறுத்தும். மேலும் பட்டி (ஊர்) என்ப துடன் இச்சொல் இணைவுடையது. ண என்ற எழுத்து வருமிடங்களில் பெரும்பாலும் நகரம் மாறியே ணகர மாகும். அப்படி மாறாத இடங்களில் அச் சொற்களும், தமிழ் அல்லது தமிழினச் சொற்களேயா யிருக்கக்கூடும். இவை தவிர வேத காலத்துக்குப்பின் முன் வழக்கு இல்லாத பல சொற்கள் வடமொழியில் வந்து குவிந்தன. இவற்றுள் பலவற்றை வடமொழி உரை யாசிரியர்களே தேசி அல்லது நாட்டுச் சொற்கள் என்று ஒத்துக் கொண்டனர். நாம் அறிந்தவரை குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை வடமொழி இந்நாட்டில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. ஆகவே, அதன் சொற்களெல்லாம் நூல் வழக்கிலேயே பாதுகாக்கப்பட்டிருத்தல் வேண்டும். வேதவழக்கு முழுவதையும் யா°கர் என்பவர் நிருக்தம் என்ற நூலிற் தொகுத்துக் கூறி யிருக்கிறார். அவர்க்குப் பிற்பட்ட பாணினியும் தம் காலத்துச் சொற்களை ஆராய்ந்து அவற்றின் சொல் மூலங்கள் அல்லது தாதுக்களைத் தொகுத்தார். இவ்விரண்டு தொகுப்புகளுக் கிடையிலும் புதிதாக வந்த சொற்களிலும் பாணினிக்குப் பின் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தண்டி காலம்வரை வந்த சொற் களிலும் பெரும்பாலானவை தமிழினச் சொற்களே. “காஞ்சி”க் காலத்துக்குப் பின் சைவ சித்தாந்தக் கருத்துகள் வடமொழியில் புகுந்ததை யொட்டிப் பல தமிழ்ச் சொற்களும் நேரிடையாகவோ கருத்து மொழி பெயர்ப்பாகவோ வட மொழியில் சென்று ஏறின. ஈசன் என்பதற்குப் பதியும் ஆன்மா என்பதற்கு பசுவும் மற்றும் மாயை, பாசம், மலம் முதலிய சொற்களும் வடமொழியில் கையாளப் பட்டன. பல சொற்கள் வடமொழியில் கலவாமல் வட இனமொழியாகிய இந்து° தானி முதலியவற்றில் வழங்கினதுண்டு. எடுத்துக்காட்டாக, திரும்பு அல்லது வளை என்ற பொருளில் இந்து°தானியில் வழங்கும் மோட் (மோடு) என்ற பகுதி இவ்வகையில் தமிழ் முடங்கு, முடக்கு என்பவற்றுடன் இயையு என்று காணலாம். வேறு பல சொற்கள் நேரிடையாக வட மொழிக்குச் செல்லாமல் பாளி, பாகதம் முதலிய நாட்டு மொழிகளின் வாயிலாக வடமொழி சென்றன. இவற்றுள் சிலவற்றை வரும் பகுதிகளில் ஆராய எடுத்துக் கொள்வோம். சொற்களின் போக்கிலும், இலக்கண அமைப்பிலும், வாசக ஒழுங்கிலும், வடமொழி தமிழாலடைந்த மாற்றம் கொஞ்ச நஞ்சமன்று. தமிழில் பெயர்ச்சொல் ஒருமையிலும், பன்மையிலும் ஒரே படியான உருபு ஏற்கும். வடமொழியில் தெளிவான உருபு இல்லாமல் பெயர்ச் சொல் சிதைந்து மாறும். ஆனால், நாளடைவில் வட மொழியிலும் ஒருமை, பன்மைகளில் ஒரே படியான உருபுச் சொற்கள் தோன்றின. நான்காம் வேற்றுமை உருபினிடமாக கிருதே (ஆக) என்ற சொல்லும் ஐந்தாம் வேற்றுமை உருபினிடமாக த° (இருந்து) என்ற உருபுச் சொல்லும் இத்தகையவை. தமிழினத்தின் கூட்டுறவால் வடமொழியில் முன் உருபுகள் (ஞசநயீடிளவைiடிn) அருகி இறுதியில் ஒழிந்தன; இணை இடைப் பெயர்கள் (சுநடயவiஎந ஞசடிnடிரn) அருகி வினையாலணையும் பெயர் புதிதாக உண்டு பண்ணப்பட்டது. உம்மை இடைச் சொல்லால் (ச) இணைத்துத் தொடுத்த வினை முற்றுகளின் இடமாக வினை எச்சங்கள் பெயர் எச்சங்கள் பெருகின. சொல் ஒழுங்கிலும் பண்டை வட இன மொழியாகிய தொடுப்பு முறை (ஹயேடலவiஉ ளுநளூரநnஉந) நீங்கித் தமிழின முறையாகிய அடுக்குமுறை (ளுலவோநவiஉ யசசயபேநஅநவே) ஏற்பட்டது. ஆகவே, வடமொழி தமிழ்மொழி ஆகியவற்றினிடையில் ஒரு சொல்லோ பண்போ பொதுவாகக் காணப்பட்டால் உடன், தானே இலக்கணக் கொத்து ஆசிரியராகிய சுவாமிநாத தேசிகரைப் போல அது வட மொழியைத்தான் சார்ந்திருத்தல் வேண்டும் என்று கொள்வது அறிவுமாகாது; மனித நேர்மையான மொழிப் பற்றுமாகாது என்று காணலாம். ஆராய்ச்சியாளர் அவ்வியற்கையான மொழி உணர்ச்சிக்குக்கூட ஆளாகாமல் உண்மையை அறியும் அவாவை மட்டுமே கடைப்பிடித்தல் வேண்டும். அத்தகைய ஆராய்ச்சிக்குத் தூண்டுதல் தரும் வகையில் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய பொதுச் சொற்கள், இடைக்காலத்தில் வடமொழியில் சென்று வழங்கியதனால் வட சொற்களென்று கொள்ளப்பட்ட தமிழ்ச் சொற்கள் ஆகியவற்றுள் சிலவற்றை இங்கே ஆராய எடுத்துக்கொள்வோம். உலகில் எல்லா மொழிகளுக்கும் ஒரு முதல் தாய் மொழி இருந்திருத்தல் வேண்டும் என்று பல நாட்டுமக்களும் அறிஞரும் கருதி வந்திருக்கின்றனர். இந்நம்பிக்கையால் பொதுப்பட மொழியாராய்ச்சிக்குப் பல குந்தகங்கள் நேர்ந்திருக்கின்றன. மேனாட்டார் விவிலிய நூலின் பேபல் கோபுர வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல்லூழிகளுக்கு முன் யூதரின் தாய்மொழியாகிய ஏபிரெயமே உலகத் தாய்மொழியாயிருந்தது என்று நம்பி வந்தனர். ஆனால், ஆராய்ச்சி இந்நம்பிக்கைக்குச் சற்றும் இடம் தரவில்லை. வடநாட்டார் உலகின் தாய்மொழி வடமொழி என நம்பினர். ஓரளவுக்கு வடநாட்டு மொழியாராய்ச்சியும் மேலைநாட்டு மொழியாராய்ச்சியும் இதற்கு உதவின. ஏனெனில், வடநாட்டு மொழிகள் யாவும் உலகின் வேறுபல மொழிகளும் உண்மையில் ஒரே ஆரிய இனமொழிகளாதலால் பெரிதும் ஒப்புமை உடையவையா யிருந்தன. ஆனால், அவ்வினத்துக்கும் வடமொழி தாய் மொழியல்ல; பிற ஆரிய இனமொழிகளிலும் முந்தி இலக்கிய வடிவம் பெற்ற முதல் மொழி வடமொழியே என்று நாளடைவில் தெளிவாயிற்று. தென்னாட்டில் தமிழ்மொழி மேற்கூறிய இரண்டு மொழிகளைப் போலவே உலகத் தாய்மொழி என்று பழந்தமிழரால் கொள்ளப்பட்டிருந்தது. வடமொழிப் பற்றுதலால் பண்டிதர்கள் சில நாள் இதனை ஏளனம் செய்து புறக்கணித்தனர். ஆனால், ஆராய்ச்சி இதனை முற்றிலும் ஏற்கும் நிலைமையி லில்லையாயினும் இதனை ஒருவாறு விளக்கும் பல சான்றுகள் தருகின்றது. அறிஞர் கால்டுவெல் தமிழினத்தின் இன்றைய மொழிகளாகிய தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய பண்பட்ட பெருமொழிகளிடையேயும் பண்படாத பல மொழிகளிடையேயும் பிறமொழிகள் அல்லது மொழி உட்குழுக்கள் ஒன்றை ஒன்று தழுவுவதைவிடத் தமிழ் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஒவ்வொரு வகையில் தழுவி நிற்கும் நடுநாயக இணைப்பு மொழியாயிருக்கிறது என்று விளக்கினார். அதுமட்டுமன்று உலகின் பிற இனங்களாகிய ஆரிய இனம், செமித்திய இனம், மங்கோலிய இனம், ஆ°திரிக இனம், ஆப்பிரிக்க - அமெரிக்க இனங்கள் ஆகியவற்றுடனும், அவற்றின் தனி உறுப்புகளுடனும் தமிழ் பற்பல ஒற்றுமைகள் உடையது என்பதை அறிஞர்கள் பலர் எடுத்துக்காட்டியுள்ளனர். இத்தனை மொழிகள், இத்தனை இனங்களுடன் தமிழ் பின்னிக்கிடக்க அவை, தம்முள் இவ்வளவு பின்னல்களுக்கும் இடையே தமிழுடன் அடிப்படைத் தொடர்பு கொண்டு கிடப்பதைக் காண, தமிழ் உலகத் தாய்மொழியாய் இராவிடினும் இன்று அத்தாய் மொழிக்கு மிகவும் அருகிலிருக்கும் தலைமொழியும் எல்லா மொழி களின் இணைப்பு மொழியும் ஆகும் என்று அறிஞர் கால்டுவெல் முதலியோர் கூறினர். இற்றைக்குப் பல்லாயிரம், அல்லது பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே ஏற்பட்ட இவ்வுறவுகளில் சிலவே, சிலசமயம் தமிழையும் வடமொழியையும், சில சமயம் தமிழையும் ஆரியப் பொது மொழிகளையும், சில சமயம் தமிழையும் வடமொழி நீங்கலான பிற ஆரிய இன மொழிகளையும் இணைக்கின்றன. தமிழுக்கும் ஆரிய இன முழுமைக்கும் பொதுமையான பண்புக்கு உகரச் சுட்டை எடுத்துக்காட்டாகக் கூறமுடியும். இது தமிழில் அண்மையும் சேய்மையும் அல்லாத எல்லா உறவுகளையும்-இடைப்பட்ட தொலை, பின்புறம், மேல், கீழ், உள், மறைந்த நுண்பொருள் ஆகிய அனைத்தையும் குறிக்கும். வடமொழியிலும் ஆரிய இனத்திலும் உச்சம், உபரி, உத்-. முதலிய சொற்களிலும், சொற் பகுதிகளிலும் இது மேல் என்ற பொருளில் வழங்குகிறது. தமிழ் பழைய, புது என்ற சொற்கள் வடமொழியிற் காணவில்லை. ஆனால், பண்டைய ஆரிய இன மொழியாகிய கிரேக்க மொழியில் உள்ளன. (ஆங்கிலத்தில் ஞயடயநடிடடிபல பழைமையாராய்ச்சி என்ற சொல் இதிலிருந்து வந்ததாகும்.) இன்னும் அரிசி, நாவாய் முதலிய சொற்கள் (கிரேக்க மொழியின் ஒரிசா, நாவியா) இத்தகைய பழங்கால உறவுகள் அல்ல என்றும் அலெக் ஸாண்டர் படையெடுப்பின் பின் ஏற்பட்ட கிரேக்கர்-தமிழர் வாணிப உறவாலென் றும் கொள்ளப்படுகிறது. எப்படியும் பழைய, புது போன்ற சொற்கள் இவ்வாறு ஏற்பட்டிருக்க முடியாது. ஆகவே, ஆரியரான கிரேக்கர் கிரேக்க நிலம் வருமுன் அண்மை மேனாடுகளில் பரவியிருந்த ஈஜிய வகுப்பினர் தமிழருடன் கொண்ட தொடர்பின் பயனாகவே இவ்வுறவுகள் ஏற்பட்டிருக்கலாம். அரசர், இடையர் (அல்லது பசு மேய்ப்பவர்) என்று இருமைப்பட்ட பொருளில் ‘கோ’ என்ற சொல்லும் ‘ஆர்’ (நிறைவு) என்ற சொல் மூலத்தினுடன் தொடர்புடைய ஆரியன் (ஆன்றோன்) என்ற சொல்லும் வடமொழிக்கும் தமிழ்க்கும் பொதுவான இத்தகைய முதல் உறவுச் சொற்களாம். சுற்று, சூழ் என்பவற்றுடன் உறவுடைய சுன்னம், சூரியன் என்பவையும் இவற்றின்பாற்படும். எனவே தமிழ்க்கும் வடமொழிக்கும் பொதுவான சொற்களின் ஒரு பகுதி மனித நாகரிகத் தொடக்கக் காலத்தில் எல்லா மொழிகளுக்கும் தாயகமாக ஒரு தமிழின மொழி இருந்த காலத்தைச் சார்ந்ததென்பதும், அவ்வொரு மொழியின் நேர்வழி மொழியாய் இன்று இயங்குவது தமிழென்பதும், அத்தகைய தமிழுடன் இப்பண்டைய உறவு கொண்ட மொழி வடமொழி மட்டுமல்ல, பிற ஆரிய இன மொழிகளும், பிற இன மொழிகளும் கூடவே என்பதும் அறியக் கிடக்கின்றன. இப் பழங்கால உறவைவிட்டு வரலாற்றுக் காலத்தில் தென் மொழியி லிருந்து வடமொழியாளர் எடுத்துக் கொண்ட சொற்களில் தமிழ்ச் சொல் என்று இன்று காட்டத்தகும் சொற்கள் சிலவற்றை முறைப்படி இனி ஆராய்வோம். தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான சொற்கள் எல்லாம் வட சொற்கள் என்று கொள்ளப்படுவது தவறு என்று முன்னைய பகுதிகளில் காட்டிய செய்திகள் தெளிவு படுத்தும், பிறநாட்டு வட இனமொழிகளில் காணாமல் வேதகால வடமொழியில் மட்டும் காணப்படும் சொற்கள், வேதகால வடமொழியில் காணாமல் பிற்கால வடமொழியில் காணப்படும் பல்லாயிரக் கணக்கான சொற்கள், வடமொழியில் காணாமல் பாளி, பாகதம் முதலிய பண்டைப் பேச்சு மொழிகளிலும் இந்தி, வங்காளி, குஜராத்தி, மராத்தி முதலிய தற்காலப் பேச்சு மொழிகளிலும் காணப்படும் கணக்கற்ற சொற்களில் பெரும்பகுதி ஆகியவை. தமிழிலிருந்து நேராகவோ தமிழின மொழிகளிலிருந்தோ எடுக்கப்பட்டு வடமொழியியற்கைப்படி மாறின சொற்களே யாகும். இங்ஙனம் மாறிய மாற்றம் இருவகைப்படும். ஒன்று சொல்லின் பொருளை மொழி பெயர்த்தல், மறைக்காடு என்பதற்கு வேதாரண்யம் என்றும், திருமலை என்பதற்கு ஸ்ரீபர்வதம் என்றும் மொழி பெயர்த்துக் கொள்வது இவ்வகை. இன்னொருவகை தமிழ் ஒலிகளை அப்படியே வைத்தும் திரித்தும் வழங்கல், பொதிகை மலை வட மொழியில் மலயம் என்று பெயர் பெற்றிருப்பது திரிபு மிகுதி பெறாத வழக்கு. காவிரி என்ற தமிழக ஆற்றின் பெயர் காவேரி என்று மாறுபட்டதும் வைகை வேகவதி என்று மாறுபட்டதும் பலவகையில் ஒலியை மாற்றித் திரித்துக் கொண்ட திரிபு வழக்குகள். இத்தகைய சொற்கள் வடமொழியில் சென்றன என்பதை நிலை நாட்டச் சில சான்றுகள் சொற்களைத் தருவோம். அகில் உலகில் இன்றுகூட வேறெங்கும் விளையாது பொதிகை மலை யடிவாரம் ஒன்றிலேயே விளையும் ஒரு வகைச் சந்தனமாம். இது குழம்பாய் அரைப்பதற்கு மட்டுமன்றிச் சாம்பிராணி போல் புகைப்பதற்கும் வழங்கப்படுவது. பெண்கள் அகிற்புகையை ஊட்டித் தலைமயிர்க்கு மணமூட்டுவர். தமிழிலக்கியத் திலும் வடமொழி இலக்கியத்திலும் இது பெரிதும் குறிக்கப்பட்டுள்ளது. இது வளர்வது பொதிகை யிலென்று வடமொழி நூல்களே குறிக்கின்றன. வடமொழி யில் இதன் பெயர் அகரு என்பதாகும். தென்னாட்டு மலையின் பொருள் தென் மொழியிலிருந்து முதலில் தோன்றியிருத்தல் வேண்டும். வடமொழியில் சிறிது மாறுதலுடன் இது கையாளப்பட்டது. யானை இந்தியாவில் மேற்குத் தொடர் மலைப்புறத்திலும் பர்மாவிலும் ஆப்பிரிக்காவிலும் மட்டுமே காணப்படும் விலங்கு. இதற்குச் சரியான இடுகுறிப் பெயர் வடமொழியில் கிடையாது. கரி, ஹ°தி முதலிய பெயர்களெல்லாம் கையுடைய விலங்கு என்று பொருள்தரும் இடுகுறிக் காரணப் பெயர்களேயாகும். இன்றும் யானை பழக்கும் பாகர் பெரும்பாலும் தமிழ்நாட்டை யடுத்த மலையாள நாட்டினரே. ஆனால், யானைநூல் இன்றும் சங்க காலத்திலும்கூட வடமொழி யிலேயே இருந்ததாம். இந்நூலும் பிற நூல்களும் தமிழினின்றுதான் வட மொழிக்குச் சென்றிருத்தல் வேண்டுமெனக் கொள்ளுதல் இயல்புதானே. அங்ஙனம் சொல்லும்போது அவற்றின் சொற்கள் பல மேற்கூறியபடி நேராகவும் மொழி பெயர்த்தும் திரித்தும் வடமொழி புகுந்தன என்பதும், பழைய நூல்கள் தமிழில் அழிக்கப்பட்ட பின் அவை வட மொழிக்கு உரிமையாக்கப் பட்டன என்றும் கூறுதல் வேண்டும். சைவ சமயம் இன்னும் முற்காலத்தும் தமிழ்நாடு மட்டிலுமன்றி இந்தியா எங்கும் பரந்திருந்த தென்பது யாவரும் அறிந்ததொன்றே. ஆயினும் ஆராய்ச்சி முறையில் சைவ சிந்தாந்தம் நிலைபெற்று வளர்ச்சி யடைந்தது தென்னாட்டில் தான். அதன் நூல்கள் வட மொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டன என்று அண்மைவரைப் பலர் கூறிவந்தனர். சைவப் பெருந்தலைவரும் ஆராய்ச்சி அறிஞருமான அருள்திரு மறைமலையடிகள் அந்நூல்கள் மெய்கண்டார் முதலிய தமிழறிஞர்களால் தமிழில் செய்யப்பட்டதை வட மொழிப் பற்றாளர் சிலர் வடமொழியில் பின் மொழிபெயர்த்துக் கொண்டனர் என்பதைக் காட்டியுள்ளனர். மேலும் இவ் வடமொழி தென்மொழி நூல்களுக்கு நெடுநாள் முன்னரே தமிழ் நாட்டில் சைவ சித்தாந்த உண்மைகள் நன்கு பரவியிருந்தன என்பதை 10ஆம் நூற்றாண்டிலும் 8ஆம் நூற்றாண்டிலுமுள்ள சோழர் பல்லவர் கல்வெட்டுகள் காட்டுகின்றன. 5ஆம் நூற்றாண்டில் எழுதப் பெற்றதாகக் கொள்ளப்படும் திருமூலர் திருமந்திரமும் இதனை வலியுறுத்தும். வடமொழியிற் சென்ற இச் சைவ சித்தாந்தத்துடனும் அதன் கிளைகளான சங்கரர் மாயாவாதத்துடனும், இராமானுஜர், மத்துவர், நீலகண்டர் முதலியவர் நெறிகளுடனும் பல தமிழ்ச் சொற்கள் வடமொழியில் பயிலலாயின. அவற்றை மேலே விவரித்துக் கூறுவோம். பெரிய புராணக் கதைகள், திருவிளையாடற் புராணக் கதைகள், தமிழர் கதைகள் ஆகிய யாவும் வட மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டன என்று வடமொழியின் மொழிபெயர்ப்புகளை மூலமாகக் கொண்டு கூறுவது எவ்வளவு பேதைமை? பொதுப்பட இவ்விலக்கிய நூல்களெல்லாம் வடமொழிக்குப் புது வரவு என்று காட்டும் சான்றுகள் ஆராய்பவர்க்குக் கிட்டாது போகவில்லை. நாயன் மார்கள், ஆழ்வார்கள் பெயர்கள் சில சமயம் போதிய தமிழறிவில்லாத வடமொழிப் புலவரால் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பாரதத்தில் பாண்டியன் தலை நகர் மணவூர் என்று கூறப்படுகிறது. உண்மையில் அவ்வூரின் பெயர் மணலூர் ஆகும். தமிழில் ஏட்டெழுத்தில் லகரம் வகரமாகக் காணப்பட்டது. மொழி பெயர்ப்பவர் தமிழறிஞராயிருந்தால் இத்தகைய சிறு தவறுகளுக்கு இடமிராது. இன்னுமொரு சிறு சுவைதரும் உண்மை இலக்கிய அறிவு தெற்கினின் றும் வடக்கே சென்றதென்பதை வலியுறுத்தும். தமிழில் செயற்பாட்டுவினை படு, பெறு, உண் என்ற மூன்று பகுதிகளின் சேர்க்கையால் பெறப்படும். அடிக்கப் பட்டான், அடிக்கப்பெற்றான், அடியுண்டான் எல்லாம் ஒரே பொருள். நோய்வாய்ப் படுவதையும் இதேபோல் நோயுண்டான் என்பது வழக்கம். தமிழர் செடிகளின் நோய்க்குப் புதுமையான பெயர் கொடுத்துள்ளனர். தேங்காயின் நோய் தேரை: விளாங்காயின் நோய் ஆனை: தொடராக வரும்போது தேரையுண்ட தேங்காய் என்று வருவதனால் தேரை என்ற உயிரினம் தேங்காயை உண்டது என்ற மயக்கம் ஏற்படுகிறது. பண்டைத் தமிழர் இது வெறும் மயக்கம் என்பதை அறிந்திருந்தனர் என்பதை நாலடியாரில் “தேங்காயுண்ணாத தேரைக்கு உண்ட குற்றம் ஏற்படுவதுபோல” என வரும் குறிப்பினால் காணலாம். வடமொழி யாளரும் அவர்களைப் பின்பற்றிய எல்லாப் பிற மொழியாளரும் தமிழின் இத் தனிச்சிறப்பு அறியாது அதனை மொழிபெயர்த்து உலகிலில்லாத ஒரு செய்தியை உள்ளதாகக் கருதி மயங்கினர். தமிழரின் பண்டைய வரன்முறை உரிமை தாய்வழியில் என்பது அறிஞர் முடிவு. இன்று வரை அது மலையாளத்திலும் பழந்தமிழ் நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்த வங்கக்கடல் தீவுகளிலும் நிலைபெற்றுள்ளது. இன்று பொருள் வரன்முறை உரிமை குறிக்கும் தாயபாகம் என்ற சொல்லில் முதற் பகுதியாகிய தாயம்-இப்பழைய உரிமையினை நினைவூட்டுவது. தாய்வழி வரவே தாயம் எனப்பட்டது. இது இன்று சொல்லின் முதற் பொருளிழந்து வடமொழியில் குருட்டுத்தனமாக வழங்கப் பெறுகிறது. பூசை, பூசி என்ற சொற்கள் பூக் கொண்டு செய்வது, பூசுவது என்ற குறிப்புடையவை என்பர் அறிஞர் கால்டுவெல். இந்நூல் வேத மொழியிலில்லா வழக்கு. பிற ஆரிய இனமொழிகளிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாயை என்பது உலகத் தத்துவத்தைக் குறிக்கும் சொல். தொடக்கத்தில் உலகம் அழிவது அல்லது திரிவது என்ற உண்மை தோன்ற மாய்-என்ற பகுதியி லிருந்து மாயை, மாய்கை என்ற சொற்கள் எழுந்தன. (இன்றும் இதனை மாயை, மாய்கை என்று எழுதுவது உண்டு) மாயாவாதிகள் இதனைப் பெரு வழக்காக வழங்கி வடமொழிக்குக் கொண்டு சென்றனர். மாய் என்ற பகுதியுடனேயே தொடர்புடைய இன்னும் இரு பகுதிகள் மா, மால் என்பனவாம். இவை கருமை, மயக்கம் என்றும் பொருள் தரும். திருமால் மாயா உருவினன் என்று பாடப் படுவதும், கரிய உருவினன் என்பதும், உமை வடிவினன் எனப்படுவதும் சேர்த்து நோக்கினால் சமய அடிப்படைக் கருத்துடைய இவ்வொப்பு மைகள் அனைத்தும் தமிழர் கருத்தினின்றும் தமிழ் மொழியினின்றுமே தோற்றின என்பது விளங்கும். உடலில் 72000 நாடிகளுள் 10 தலைமையுடைன என்றும், அவற்றுள்ளும் சிறப்புடையவை. இடைகலை, பின்கலை, சுழிமுனை என்றும் எல்லாவற்றுக்கும் நடுநாயகமானது சுழிமுனை என்றும் கூறப்படும். இவற்றுள் சுழிமுனை உந்திச் சுழிமுதல் நெற்றிமுனை வரை செல்வது. உந்திச்சுழி பிறப்புக்குக் காரணமாகிய அறிதுயில் நிலையையும், நெற்றிமுனை பிறப்பறுக்கக் காரணமான மெய்யறி வையும் உணர்த்தும். எனவே சுழிமுனை என்பதிலுள்ள சுழி-எதனை உணர்த்தும் என்று கண்டோம். இச் சுழியின் வடிவத்தையே ஓங்காரம் என்றும் பிள்ளையார் சுழி என்றும் கொள்கிறோம். மேலும் அறிதுயில் சுழுத்தி எனப்படும். வடமொழி யாளர் சுழி முனையை ஸுஷீம்நா என்றும் சுழுத்தியை ஸுஷீப்ரிதி என்றும் திரித்துக்கொண்டனர். புத்தகத்தைத் திருடிக் கொண்டு போனவனுக்கு அதை அறியும் அறிவையுமா திருடிக்கொண்டு போக முடியும்? வடமொழியாளர் ‘ஈயடித்தான் காப்பி’களிடையே சொற்களின் உயிர்கள் போய்விட்டன. நெடுங்காலமாகத் தமிழரும் இந்தியாவில் பிற தாய் மொழிகள் பேசும் மக்களும் தாய்மொழியிலும் இந்தியப் பழங்குடியினமான தமிழினத்திலும் (நான்காம் ஐந்தாம் வருணத்தவரிடத்திலும்) பற்றுதலின்றி அவ்வின மொழி களைப் பேணாது விட்டதன் பயனாக அவற்றின் சொற்கள் எவை, வட சொற்கள் எவை என்ற வேறுபாடு தெரிவதற்கிடமில்லாம லிருந்தது அந்நிலையில் வடமொழியாளர் தம் இலக்கியத்தில் ஒரு சொல்லை வழங்கிவிட்டால் ஆளில்லாத இடத்தில் அகப்பட்ட தெல்லாம் உடைமை தாம் என்பதுபோல் அது அவர்களுடை தென்று கொள்ளப்பட்டது. பாணினி போன்ற இலக்கண அறிஞர் சொற்களை ஆராய்ந்து சொல் மூலங்கள் தொகுப்புகள் கண்டதுபோல் பிறமொழிகட்கு யாரும் தொகுப்புச் செய்யவில்லை. தமிழில் தொல்காப்பியர் காலம்முதல் மொழி இலக்கணம் ஏற்பட்டபோதிலும் சொல்தொகுப்பு மிகப் பிற்பட்ட காலத்திலேயே ஏற்பட்டது. அப்போதும் இலக்கிய வழக்குக்கு வெளியேயுள்ள உலகவழக்குச் சொற்களை யாரும் தொகுக்க முன் வரவில்லை. இந் நாள்வரை எவரும் எண்ணவுமில்லை. இலக்கியமும் சமய சச்சரவுகளால் பெரும் பகுதிகளும் சிதைந்து ஒரு பகுதியே நமக்கு வந்து சேர்ந்துள்ளதனால் ஆராய்ச்சி செய்வோர். நெடுங்காலம் வடமொழியாளர் சொல்லையே மந்திர மொழியாகக் கொண்டு மயங்கினர். யாம் தமிழெனக் கொள்ளும் சொற்கள் இன்னும் பலவற்றை எமக்குத் தோன்றிய காரணங்களுடன் மேலே ஆராய்வோம். தமிழர் ஒருசார்பை-அதிலும் தாய்மொழிக் கெதிரான ஒருசார்பை அகற்றி நேர்மையாக முன் முடிவு எதுவுமின்றி ஆராய ஒருப்பட இவை உதவுமாயின் எம் முயற்சி வீண் முயற்சியன்று என்ற நிறைவு அடைவோம். இலக்கியம், இலக்கணம் என்ற சொற்கள் வட சொற்கள் என்றும் லக்ஷியம், லக்ஷணம் என்பவையே அவற்றின் வடமொழி உருவங்கள் என்றும் பலரால் கொள்ளப்பட்ட காலம் உண்டு. இன்றும் பலர் அப்போலி வாதத்தை நம்பக்கூடும். ஆகவே, அவை வடசொற்கள் அல்ல என்று நாம் கொள்வதற்கான காரணங்களை இங்கே விளக்குவோம். தமிழில் இலக்கியம், இலக்கணம் என்ற சொற்கள் அவை இன்று வழங்கும் பொருள்களிலேயே வரலாற்றுக் கெட்டிய காலந்தொட்டு வழங்கி வந்திருக் கின்றன. இக்கருத்துகளை விளக்க வேறு சொற்கள் வழங்கியதாகவும் தெரிய வில்லை. (இயல், இசை, நாடகம் என்ற மூன்றில் இயல் என்பதை இலக்கியம் எனச் சிலர் தவறாகக் கொள்கின்றனர். இயலில் இலக்கணம் ஒரு பகுதி என்பதையும் இசை, நாடகம் ஆகியவற்றுள் இலக்கியமும் உண்டு, இலக்கணமும் உண்டு என்பதையும் கவனித்தல் வேண்டும்.) தமிழில் இச்சொற்கள் வடமொழியிலிருந்து வந்தன வென்றால் இங்கே முன் வேறு சொல் இருந்திருத்தல் வேண்டும். அங்ஙனமில்லாததால் இச் சொற்கள் தமிழில் வழங்கிய சொற்களே. இன்னும், வடமொழியிலிருந்து இச் சொற்கள் வந்தன என்று நிலைநிறுத்த விரும்புவோர் முதலில் அச்சொற்கள் வடமொழியில் வழங்கினவா வழங்குகின்றனவா என்று பார்த்தல் வேண்டும். வட மொழியில் அன்றும் இன்றும் இலக்கியம், இலக்கணம் என்ற சொற்களினிடமாக லக்ஷியம், லக்ஷணம் என்ற சொற்கள் வழங்கப்பட்டதேயில்லை. சாஹித்யம், வ்யா கர்ணம் என்ற சொற்களே அவற்றைக் குறிக்கின்றன. அப்படியாயின் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் பகுதி எது? இலக்கு என்பதேயாம். இதனை இன்றும் தமிழ் நாட்டில் இடம் என்ற பொருளில் செட்டிநாட்டார் வழங்கு கின்றனர். இலகு, இலங்கு என்பன இதன் மூலப் பகுதிகள். செல்லுமிடம் என்ற பொருளில் வழங்கப்பட்டுப் பின் குறிக்கோள், கருத் தியல் குறிக்கோள், பொருள்களில் இச்சொல் வழங்குகிறது. கட்டு என்ற சொல்லிலிருந்து கட்டியம் (கோமாளித்தனம்) அமைந்தது போல் இலக்கு என்பதி லிருந்து குறிப்பு வினை யடியாகப் பிறந்த அம் ஈற்றுப் பண்புப்பெயரே இலக்கியம் ஆகும். இலக்கணம் என்பது இலக்கு என்ற பகுதியுடன் வண்ணம் என்ற சொல்லின் மூலமாகிய அணம் என்ற பண்புவிகுதி சேர்ந்த சொல். இன்னணம் என்ற தொடரில் இது முழுச் சொல்லாய் வருவது காண்க. வாழ்க்கைக் குறிக்கோளை எடுத்துக் காட்டும் உறுதி நூல்கள் இலக்கியம். அவற்றின் பண்புகளை ஆராய்வது இலக்கணம். இவ்வளவு தெள்ளிய உயரிய கலைப்பண்புடைய சொற்கள் இலக்கியத்துக்கும் இலக்கணத் துக்கும் எந்தப் புதியமொழியிலும் பழம்மொழியிலும் இல்லை. உண்மையில் பிறமொழிகளில் இவற்றுக்கான சொற்களின் முதற்பொருள் நகைப்புக்கிடமாவன. வடமொழியின் இலக்கியம், இலக்கணம் என்பவற்றுக்குச் சரியான சொற்களின் முதற்பொருள் உடனிருத்தல், விளக்கம் என்பனவாம். ஆங்கிலம் முதலிய மேனாட்டு மொழிகளில் இலக்கியம் என்பது எழுதப்படுவ தென்றும், இலக்கணம் என்பது சொற்பயிற்சி என்றுமே பொருள் படுகின்றன. சொல்லாட்சியில் மட்டுமன்றிப் பொருளாட்சியிலும் இத்தகைய உயர்வுடைய தமிழர் செல்வக் குவைகளை அவற்றை என்றுமறியா மூங்கை மொழியாகிய வடமொழியின் மீது சுமத்தல் என்ன அறியாமை! இவ்விரு சொற்களோடு தொடர்புடைய சொல் இலக்கம் என்பது, பத்தும் நூறும் எண்ணலளவாயிருந்த காலம் திராவிட மொழிகள் பிரியாத காலம் என எண்ணப்படுகிறது. அதன்பின் ஒருபடி கூட்டி ஒன்பது நூற்றுக்குப் பின் பத்து நூறு ஆகமுடியும் என்ற பொருள்பட ‘ஆய் இறும்’ அல்லது ‘ஆயிறும்’ என்ற தொடரே ஆயிரமாயிற்று. பின்னும் கணக்கு வளர்ச்சியும் கணக்கர் வளர்ச்சியும் ஏற்பட்டபின் கிட்டத்தட்ட அதே பொருளில் இலக்கம், கோடி என்ற பொருள் களையும் அமைத்தனர். இலக்கம் என்பது இலக்கு ஆயது என்பது, இன்னும் சிறு செல்வர் ஆயிரத்தையும், பதினாயிரத்தையும் பெருஞ் செல்வர் ஆக விரும்பு வோர் முதற்கண் இலக்க (நூறாயிர) த்தையே இலக்காகக் கொள்ளுதல் காணலாம். கோடி ஒரு தனிமனிதன் செல்வ எல்லையைக் காட்டிற்று. கோடி வகுத்தவர் கொடி கட்டி வாழ்ந்தனர். அக்கொடி கோடியைக் குறித்த சொல்லே யாதலும் கொடிநிலை, கொடுக்கு ஆகிய சொற்களில் அது அப் பொருளில் வருதலும் காணலாம். கொடி, கோடி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட பகுதி கோடு-கோணு என்பதாம். இதனடியாகப் பிறந்த இரண்டு சொற்கள் கோணம் என்பதும் கோட்டை என்பதும் ஆகும். இவற்றுள் முன்னது வடமொழியில் மட்டுமன்றி ஆரியமொழிகள் பலவற்றுள்ளும் காணப்படும் சொற்களுள் ஒன்று. இரண்டாவது வட மொழியில் அருகலாகவே வழங்குகிறதாயினும் கன்னட, மராட்டிய நாடுகளில் பெருவழக்கமாய் வழங்கிற்று. வரலாற்று மாணவர், பெரும் போர் நிகழ்ந்த இடமாகிய தலைக் கோட்டை யையும் வடஇந்தியத் தனியரசாகிய இராவு கோட்டையையும் கவனிக்க. வைசியர் என்ற சொல்லும் கருத்தும் வகுப்பும் வடநாட்டைச் சார்ந்தன. அதற்கிணையாகக் கொள்ளப்படும் சொல்லாகிய வணிகர் என்ற சொல்லும் பொருளும் வகுப்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவை. வணிகர் என்ற சொல் வடமொழியில் வழங்கப்படினும் அது வடசொல் அன்று, தமிழ்ச் சொல்லேயாம் என்று காட்டுவோம். ஆரியர் இந்தியாவுக்கு வரும்போதும் நெடுநாள் பின்னரும், வாணிகம் செய்திலர். மேலும் கடல் கடந்த வாணிகம் பண்டும் இன்றும் வடநாட்டினரை விடத் தென்னாட்டினராலேயே மிகுதியும் பயின்று வரப்பெறுகிறது. பாண்டியன் சோழன் ஆட்சியில் கடற்றுறைப் பட்டினங்கள் பற்றிக் கேள்விப்படுவது போல் வடநாட்டில் என்றும் (முகலாயர் ஆட்சியில் கூட) நாம் கேள்விப்படவில்லை. எனவே வணிக வகுப்புத் தோன்றி வளர்ந்த பகுதி தமிழ் நாடேயாதலால் அச்சொல் தமிழேயாதல் வேண்டும் என்க. வணிகர் என்ற சொல்லின் பகுதி வண்மை என்பது. வேளாளர் நிலச் செல்வமிக்கவர், விருந்தோம்புவர். வணிகர் கலச் செல்வமிக்கவர், வண்மையால் வழங்குபவர். தமிழ்மக்களிடையே வணிகர் செழித்தோங்கியிருந்ததற்கு இருக்கு வேதமே சான்று பகரும். தமிழராகிய த°யூக்கள் அந்நாள் நகர்களும் அரண்களும் துறைமுகங்களும் உடையவராயிந்தனர் என்றும், அவர்களிடையே வணிகர் பணிகர் என்ற வகையினர் இருந்தனர் என்றும் இருக்குவேதம் உரைக்கிறது. இவ்விடத்தில் பணி என்ற வடசொல்லின் பகரம் தமிழுக்குப் பொதுவான வல்லெழுத்துப் பகரமேயன்றி மெலிந்த பகரம் அன்று. வல்லெழுத்துப் பகரமும் வகரமும் தமிழில் போலியாக மாறும். வடமொழியில் மென் பகரம் அங்ஙனம் மாறும். ஆகவே முற்காலத்தில் பணி, பணிகர் என்றும் பின் வணிகர் என்றும் வழங்கிய சொற்கள் தமிழின் கிளைச் சொற்களேயாம் என்க. இன்றும் மலையாளத்தில் கைத்தொழில் முதலாளி வகுப்பினர் பணிக்கர் எனப்படுதல் காண்க. நீர், மீன், கலை, நிலையம் ஆகிய சொற்கள் தமிழினின்று வடமொழி புக்கதெனத் தெளிவாக விளங்கும் சொற்களெனக் கால்டுவெல் காட்டியுள்ளனர். அவற்றின் பகுதி நீர்மை, மின்னுதல், கல் (கற்றல்),நில் என்பனவாம். அன்றியும் இவ்வகையைச் சேர்ந்த தமிழ்ச் சொல்லாம் அதனுடனொத்த புனல் தமிழ்ச் சொல்லாதலும் அதனுடன் தொடர்புடைய கனல், கனலுதல் ஆகியவற்றையும் காண்க. மேற் கூறிய சொற்களுடன் சேர்த்தெண்ணத்தக்க ஆரிய தமிழ்ச் சொல் வலயம் ஆகும். வல் என்ற பகுதி ஆற்றலையும் வலம் ஆற்றலுடைய வலக்கை யையும் அதனால் படும் வெற்றியையும் கொடியையும் குறிக்கும். சுற்றி வருபவர் வலப்புறமாக வருவதால் வலம் சுற்றுதல் என்றும் வலயம் சுற்று என்றும் ஆயிற்று. இதன் இன்னொரு வடிவம் வளையம். உண்மையில் இது வளை என்ற பகுதியிலிருந்து வந்தது. வடமொழியில் இப்பொருட் சிறப்பு களின்றி இப்பெயர் இடு குறியாக எடுத்துக்கொள்ளப்பட்டது. (வெற்றியைக் குறிக்கும் சங்கின் வாய் வலப்புறமாயமைந்த தாதலின் அது வலம்புரியாயிற்று). நட என்பதிலிருந்து நடனமும், நாடு என்பதிலிருந்து நாடகமும் நாட்டியமும் தோன்றின. வடமொழியில் இச்சிறப்புகள் இல்லாததோடு எல்லாம் நடனம் என்ற பொதுப் பொருளுடனேயே வழங்கின. தாண்டவம் ஒருகால் ஒருகால்மீது தாண்டி நிற்கும் நிலைகுறிக்கும் தண்டம், தடி என்ற சொல்லுடன் இயைபுடையது. அதனால் அடித்துத் தண்டியதே தண்டனையின் முதற்படி ஆதலால் தண்டனை என்ற சொல்லும், ஆற்றலுடையவர் பாதுகாப்பில் சென்று பணிந்து பொருள் தருதல் தண்டம் வழங்கல் என்றும், பாதுகாப்பில் ஒருவன் தன்னை ஒப்புவித்தல் தண்டனிடுவதென்றும் வழங்கியது கவனிக்கத்தக்கது. பசு, பாசம், பசுமை, பசை என்ற சொற்களும் நயம், நசை என்ற சொற்களும் நயப்பு, நைப்பு (நைப்பாசை) நெய், நெசவு என்பவற்றுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்க தமிழ்ச் சொற்கள். வடமொழியில் அவற்றுக்குப் பகுதியில்லை. இவற்றைப்போலவே வீரம் என்ற சொல் வீறுடனும், திடம் என்பது திட்பம், திட்டம், திண்ணம் என்பவற்றுடனும் மாரணம், மாறு என்பதனுடனும், கேளிக்கை, கேலி, கேள், கேள்மை என்பவற்றுடனும் நானா (வகை) என்பது (நாலா) பக்கம் என்பதனுடனும் உறவுடைய தமிழ்ச் சொற்கள். பாலன் பால்குடி மாறாச் சிறு பருவத்தினன் என்ற கருத்தில் எழுந்தது. வால் என்பது வெண்மை. தூய்மைப் பொருளுடையது. இளங்குருத்தைக் குறிப்பாகக்கொண்டு இளமை குறித்தலால் வாலிபன் இளைஞனுக்கேற்ற சொல்லாயிற்று. துண்டம் என்ற சொல் துண்டு என்ற தமிழ்ச் சொல்லேயாம். துணி என்ற வினையுடன் உறவுடையது. இதேபோல் பிண்டமும் தமிழ்ச்சொல்லேயாம். பிளவு பட்ட துண்டே பிண்டம். இதற்கு எதிர்ச்சொல்லான அண்டம், அளைத்து என்ற பகுதியுடன் இயைபுடைய தமிழ்ச் சொல் ஆகும். வடமொழியில் சிந்தை, கவலை ஆராய்ச்சி இவ்விரண்டையும் குறிக்கும், தமிழில் ஆராய்ச்சியைக் குறிக்கும் சிந்துதல், சிதறுதல் ஆகியவற்றுடன் இது தொடர்புடையது. செய்தியைப் பிரித்து அறியும் அறிவை இது குறிப்பதால் நல்ல தமிழ்ச் சொல்லேயாகும். சாரம், சாறு என்ற சொல்லுடனும் வாக்கு, வாசகம் வாய் என்ற சொல்லுட னும் சார்பு கொண்டவை. கலயம் கலத்தின் பிறிதொரு வடிவம். கலகம் கலவரம் என்ற தமிழ்ச் சொல்லைப் போல் கல என்ற பகுதியடியாகப் பிறந்தது. கு என்பது வளைவு என்ற கருத்துடைய பகுதி. வடமொழி யிலும் இவ் விடைச் சொல் இப்பொருளில் வழங்குகிறதாயினும் அது அருகலான வழக்கே. அதனை ஒட்டிய சொற்கள் தமிழில் பெருவாரியானவை; சொல்லின் இன்றி யமையாப் பகுதியானவை. வடமொழியில் இவ்விடை என்றும் தனித்துச் சொல் லுக்குப் புற அடையாகவே நிற்கிறது. (எ-டு) ரூபம் கு-ரூபம்; தர்க்கம் கு-தர்க்கம் என்பனபோல. தமிழில் குவை, குவி. குடம். குலை, குப்பம், குவடு, கும் முதல் ஆகிய சொற்களில் பிரிக்க முடியா அளவு சொல்லுடன் ஒன்றுபட்டுக் காணப்படுகிறது. ஆகவே, இவ்விடைச் சொல்லாகிய சொல்மூலம் தமிழே என்றல் தெளிவு. இம் மூலத்தின் திரிபுகளுள் ஒன்றே குகை என்பது. இதன் இன்னொரு வடிவம் குவை. அறுகம் புல்லுக்கு வடமொழி யிலுள்ள பெயராகிய குசை என்பதுகூட இதனுடன் தொடர்புடைய தமிழ்ச் சொல்லேயாயிருக்கக்கூடும். ‘கு’ என்னும் இடைச் சொல்லின் நெடிலுருவத்திலிருந்து கூர்மை, கூடு, கூவு முதலிய சொற்கள் தோன்றின. இச்சொற்களுடன் இணைப்பு உடையதே கூவல் என்பது. இதன் திரிபு கூவம், கூபம் என்றாம். இறுதி வடிவமே வடமொழியில் காணப்படு வது. வடமொழி புக்க தமிழ்ச் சொற்களுள் ஒன்றாகவே இதனைக் கொள்ளலாம். தமிழ் அல்லது திராவிடமொழிச் சார்புடையதாகக் கொள்ளக்கூடிய இன்னொரு சொல் சூடாமணி, ஆபாதசூடம் என்ற வடசொற்றொடர்களில் வரும் சூடா என்ற சொற்கள் ஆகும். வடமொழியில் இதன் பொருள் தலை என்பதாகும். தமிழில் தலையில் அணி என்ற பொருளுடைய சூடு என்ற சொல்லும், தெலுங்கில் முகங்கொண்டு பார் என்ற பொருளில் வரும் சூடு என்ற சொல்லும், இதனுடன் தொடர்புடையன. சுடிகை (பாம்பின் படமும்) இதனைச் சார்ந்த இன்னொரு சொல், தமிழில் தலை என்ற பொருளில் இது வழக்கிலிருந்திருக்கக் கூடும். வடமொழியில் இது பிற்கால வழக்கேயாதலாலும் இதன் சார்புச் சொற்களான தமிழ்ச் சொற்களும் பெரு வழக்காய்த் தொன்றுதொட்டு வழங்கி வருவதாலும் வடமொழிக்கினமான பிற மொழிகளில் இதன் சார்பான சொற்களின்மையாலும் இது திராவிடச் சொல்லேயாமெனத் தெளியலாம். காலம், கால் (ஒளி வீசு) என்ற மூலத்தை உடையது. ஒளிவீசும் கதிரவற் காகி அதன் மூலம் தெரியப்படும் காலத்துக்காயிற்று. கால் காற்றின் பெயருமாகி, காற்று என்ற சொல்லின் பகுதியுமாயிற்று. ஒளியின் எதிர்மறையாகிய நிழலும் தமிழர் மரபில் ஒருவகை ஒளியாகவே கொள்ளப்பட்டதனால் இரண்டும் ஒன்றுக்கொன்று சொல் மாற்றாகத் தமிழில் வழங்கின. அதன் வழி நிழல் ஒளி எனப் பொருள்பட்டது போல, காலம், காளம், நிழல், கருமை எனப் பொருள்பட்டு கரிய உருவினளாகிய உலகத்தாய் காளி எனப் பட்டாள். கரியநஞ்சு கக்கும் பாம்பு காளிங்கன் எனப்பட்டது. வடமொழி இதனைப் பெரு வழக்காகக் கொண்டு தனதாக்கிக் கொள்ளினும் அதன் உடன்மொழிகளில் இச்சொல் பயிலாததனால், அது இந்தியர் முதல்-தாய்மொழியாம் பழந்தமிழ் அல்லது திராவிட மொழியேயாம் என்பது தெளிவாகும். படை படுத்தல்-கொல்லுதல் என்ற பொருள் தரும் தொழிற்பெயர். இது ஆகுபெயராய்ப் படுக்கும் கருவியையும், பொருளாகு பெயராய்ப் படுக்கும் மனிதத் தொகுதியையும் காட்டிற்று. படன் என்ற வடசொல் இதன் திரிபேயாகும் எனக் கொள்ளலாம். கரு என்பது உரி என்பது போன்ற உரிச்சொல்லடி, இயற்கையில் பிறப்பிலிருந்தே வரும் இயல்பைக் கரு என்றும் பின்வரும் வளர்வை உரி என்றும் தமிழர் கூறிப் பொருள்களைக் கருப்பொருள் என்றும் உரிப்பொருள் என்றும் வகுத்தனர். இதனுடன் தொடர்புடைய பிற தனித் தமிழ்ச் சொற்கள் கருது, கருத்து என்பன. (கருமம் என்ற சொல்கூட வட மொழியினத்தில் இல்லாத வடசொல் ஆதலால் இவற்றுடனொத்த இயற்கைச் சொல் எனக் கொள்ளப் படலாம்). பிறப்பில் இயல்பாய் வரும் பண்புகள் ஏற்படுவது அன்னை வயிற்றில் ஆதலின், அது கரு என்றும். பிள்ளை வளரும் பை கருப்பை என்றும் கூறப்பட்டது. வடமொழி ‘கர்ப்பம்’ என்ற சொல் மூலமற்ற சொல்; அது தமிழ்ச் சொல்லின் திரிபேயாதல் வேண்டும். குவிதலின் இன்னொரு வடிவம் கவிதல். இத்துடன் தொடர்புடைய சொற்கள் கவிகை, கவிழ், கவர், கவடு முதலியவை ஆகும்; இவற்றினின்று தோன்றிய இரு சொற்கள் கவிஞன், கவிதை என்பன; கவர்ச்சியுடையன கவிதை ஆகும். கவடு என்பது இரு பிளவான கொம்பு. கவர் என்றும் உலக வழக்கு உண்டு. அதன் சொற்போலித் திரிபு கபடு. இரண்டக நெஞ்சத்தை, அதாவது வஞ்சத்தைக் காட்டும் வடமொழிச் சொல் கபடம் இதன் திரிபு. மேற்கூறிய வகையில் சொற்கள் பலவும் பெருக்கிக் கொண்டே போகலாம். சொல்லாராய்ச்சித் துறையில் முனைபவர்கள் இவற்றை ஒரு பொது எல்லைக் கோடாக மட்டும் கொண்டு ஆராய்ந்தால் வடமொழியினும் பல்லூழி தொன்மை யும்; இன்று காணப்பெறும் சிற்றிலக்கியம், சிற்றளவு கடந்து பேரளவும் உடைய தமிழ் மொழிப் பற்றிப் பலப்பல உண்மைகள் காண்டல் ஆகும். இன்றும் ஆழ்ந்து ஆராய்ந்தால் வடமொழியில் இடு குறியாகக் காணப்படும் சொற்கள் தமிழில் அழகிய திட்பமுடைய காரணச் சொற்களோ என்று ஐயுறுதற்கிடமிருப்பது காணலாம். தில்லையம்பலத்தின் பேர் சிதம்பரம் எனப்படு கிறது. சித் அம்பரம், என்று பிரிக்கப்பட்டு சித்-உயிர், அம்பரம்-வான்; உயிராகிய வானில் உலவுவது என்று கொள்ளப்படுகிறது. தமிழர் இதனைச் சிற்றம்பலம் என எழுதுதல் மரபு என்பது யாவரும் அறிந்த செய்தி. இது தமிழர் பண்டைய தவறுகளுள் ஒன்றோ என இந்நாளில் ஐயுறுவார் உண்டு. ஆனால், அது தவறன்று. ஏனெனில், சிற்றம்பலத்தின் எதிர்ச்சொல் பேரம்பலம். எனவே, எல்லா உயிர்க்கும் பொதுவான பொது வெளியைப் பேரம்பலம் என்றும், ஓர் உயிரின் உள்ள வெளியைச் சிற்றம்பலம் என்றும் தமிழர் கூறியிருத்தல் கண்கூடு. உயிரி லும் பொது உயிராகிய இறைவனைப் பேருயிர் என்றுந் தனி உயிர்களைச் சிற் றுயிர்கள் என்றும் அழைத்தனர். சிற்றுயிர் என்பதே வடவர் மொழியில் ‘சித்’என வழங்கப்பட்டதோ என எண்ண இடமுண்டு. இவ்வுயிரின் நுண் உருவம் ‘வெள்ளி பொன் மேனிய தொக்கும்’ என்றார் யோகக் குறள் கண்ட ஒளவையார். அதற் கேற்ப அடியார் இதயத்திலிறைவன் நடமிடுவது பொன்னம்பல நடிப்பு என்னப் படும். இன்னும் சித்திரம் என்பது ஓவியத்தின் மறுபெயர் என்றும், வடசொல் என்றும் கொள்ளப்படுகிறது. ஆனால் அவன் சித்திரமாகப் பேசுகிறான் என்ற உலக வழக்கில் அழகாகப் பேசுகிறான் என்ற பொதுப் பொருளைவிட, நுணுகி நுணுகிச் சின்னஞ் சிறு நயந் தோன்றப் பேசுகிறான் என்பதே தெள்ளத் தெளியக் காணப் பெறுகிறது. எனவே சித்திரம் என்பது “சிறு திறம்” ‘சிற்றுத்திரம்’ என்பவற்றின் பண்டைய மரூஉவோ என்று எண்ணலாம். திறம் இங்ஙனம் திரம் ஆயிற்று எனக் கொள்வோமானால் ‘சூ°திரம்’ ‘சூத்திரம்’ என்ற வடசொற்கள் ‘சூழ்ச்சித்திறம்’ ‘சூள்திறம்’ என்பவற்றின் மரூஉவோ என்றும், வேத்திரம் (பிரம்பு) என்பது வேய்த்திறமோ என்றும் ஐயுறலாகும். மேற்கூறிய இடங்களிலெல்லாம் தமிழர் இத்தமிழ்ச் சொல் மூலங்கள் வகுக்காமல் இருக்க வடமொழியாளர் மட்டும் வகுத்தது ஏன் என்று கேட்கலாம். இலக்கியத் தொடக்கக் காலம் தொட்டு ஒரு வகையில் தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் வடமொழியாளரின் நச்சுக்கொடி படர்ந்து அதன் முன்னைய செழுமையையும் தன்னாண்மையையும் படிப்படியாய் உறிஞ்சி வந்திருப்பது காணலாம். ஆனால், ஆராய்ச்சி நோக்குடன் நோக்குவார்க்கு அதனிடையேயும் தமிழின் தொல்நிலையை விளக்கும் தொலைவறிகுறிகள் தோற்றாமல் போகா. தமிழர் ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று தொல்காப்பியர் காலத்திலேயே கொண்டிருந்தனர். ஆனால், புத்தர் சமணர் தோன்றியவிடத்தன்றி இந்தியாவில் எங்கும் தாய்மொழி வளம் பெற்றதில்லை. தமிழில் புத்தர் சமணர் தோன்றுமுன் வளம் பெற்றிருந்த இலக்கிய இலக்கணம் புத்தர் சமண ஆரியர் கைப்பட்டு அவர்கள் வடமுறைகளுக்கிசைய வகுக்கப்பட்டது. அவ்வண்ணம் வகுக்கப்பட்ட நூல்களே போற்றப்பட்டு முன்னைத் தனித் தமிழ்ப் பெரு நூல்கள் அழிந்தன, அழிக்கப்பட்டன. அப்பெருந் தமிழ் நூல்களில் இலக்கணப் பெருமைக்கு ஒரு தொல்காப்பியமும் வாழ்க்கைப் பெருமைக்கு ஒரு திருக்குறளும் இலக்கியப் பெருமைக்கு ஒரு சிலப்பதிகாரமும் நமக்கு மீந்தன. அச்சிறு பல கணிகள் மூலம் முன்னைய பெருமையிற் பலவற்றை நாம் உய்த்தறியலாம். எனவே தொல்காப்பியம் மொழியாராய்ச்சிக்கு ஓரளவு பயன்படும். உலக வழக்குச் சொற்கள் இலக்கியத்தில் பிற்காலத்தார் ஒதுக்கிய பழஞ் சொற்களே யாதலால் அவையும், தமிழின் உடன் மொழியாகிய தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலியவையும், அவற்றிலும் சிலவகையில் தூயவையாயிருக்கக் கூடும். வடநாட்டு மலைவாழ் குடிகள், பலூச்சிகள் மொழிகளும் முன்னைய தமிழ்த் தொல்வடிவங்களை விளக்கவும் சொல் மூலங்களை முடிவு கட்டவும் உதவும் என்னலாம். 9. எழுத்துச் சீர்திருத்த முறைகள் இந்திய மக்களிடையே மிகவும் பரந்து காணப்படும் அறியாமையைப் போக்குவதற்கான திட்டங்களுள் நாட்டின் பழைய எழுத்து முறைகளுக்குப் பதிலாக ரோமன் எழுத்து முறையைப் பரப்புவதும் ஒன்றாகும் என அரசாங்கத்தார் கருதி அதை நடைமுறைக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்வதாகக் கொஞ்ச நாள்களுக்கு முன்பு ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதன்படி “மதறா° காலிங்” என்ற மாதமிரு முறைப் பத்திரிகை யுடன் ரோமன் எழுத்தில் அச்சிடப் பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றும் வெளியிடப்படுமென்று அறிவிக்கப் பட்டிருந்தது. தற்கால நிலைமைக்குத் தக்கபடி தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் ஏற்படுத்துதல் வேண்டுமென்று பல முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், இவை தற்போது கருதப்படுவது போல் தமிழ் எழுத்து முறையை முற்றி லும் விலக்கிப் புதுமுறை வகுக்கும் முயற்சிகள் அல்ல. ஆகவே, இத்தகைய புது எழுத்து முறை அவசியமா என்பதையும், அதனால் ஏற்படும் ஆதாய இழப்புகள் எவை என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டியது இன்றியமையாதது ஆகும். திட்டம் தமிழ் மொழியை மட்டுமே யல்லாமல் இந்தியத் தாய் மொழிகள் எல்லாவற்றையுமே பாதிப்பதாயினும் தமிழ் மொழியைப் பற்றி மட்டிலுமே சிறப்பாக இங்கே அதனை ஆராய்வோம். ஆதாயங்கள் இம்முறையை ஆதரிப்பவர்கள் கருத்தில் கொண்ட ஆதாயங்கள் மிகத் தெளிவானவை. அவற்றுள் மிக முக்கியமானது அது அனுபவமாகக் கல்வி கற்பதை மிகவும் எளிதாக்கும் என்பதே. தமிழ் அரிச்சுவடியின் மொத்த எழுத்துகள் நன்னூல் கணக்குப்படி 369 ஆகிறது. பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் அரிச்சுவடியிலுள்ளபடி இவ் வெண்ணிக்கை 247 ஆகும். ஆனால், ரோமன் முறையில் எழுத்துகளின் எண்ணிக்கை 26 தான். இன்னும் வேறு பல ஆதாயங்களும் இம்முறையில் இருப்பதாகக் கருதப்பட்டு வருகிறது. அச்சுக் கோப்பவர்களுக்கும் கையச்சு (டைப்) அடிப்பவர் களுக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை குறைவினால் எவ்வளவோ நன்மையும் வசதியும் உண்டு. கையச்சு அடிக்கும் இயந்திரமும் மிகச் சுருங்கிய அளவில் அமைக்கப்படு வதுடன் அச்சு நிலையங்களிலும் அச்சுகள் தொகை குறையும். மேலும் இந்தியாவிலுள்ள எண்ணற்ற மொழிப் பேதங்களை வரிவடிவிலேனும் இது மிகவும் குறைக்கும். ஒரு மொழியாளர் பேசுவதையோ கருது வதையோ மற்ற மொழி பேசுபவர் அறியமுடியாவிட்டாலும், ஊர்ப் பெயர்களும், ஆள்களின் பெயர்களும் எல்லா மொழிகளுக்கும் பொதுவாய் விட்ட சினிமா, மோட்டார், கவர்னர் முதலிய சொற்களும் பேச்சில் எப்படிப் பொதுவாய் இருக்கின் றனவோ, அப்படியே எழுத்திலும் எளிதில் எல்லா மொழியாராலும் பொதுவாக அறியப்படும் சொற்களாய்விடும். புதிதாக மொழி கற்பவர் ஒரு சில சொற்களை யறிந்தவுடன் பொதுவரிவடிவங்களை வாசித்து உணரக் கூடும். ரோமன் முறையில் அச்சுக்கொத்த அச்சு எழுத்து, எழுதுவதற்குரிய கையெழுத்து என்றும் இருவகை உண்டு. இன்னும் இத்தகைய பல ஆதாயங் களும் ரோமன் எழுத்து முறைக்கு ஆதாரமாகக் கூறப்படுகின்றன. நடைமுறையிலேற்படும் சிக்கல்கள் மேற்கூறியவற்றில் பிந்திக் கூறப்பட்ட சில்லறை ஆதாயங்கள் உண்மையிலேயே ஆதாயங்கள்தாம் என்பதை மறுப்பதிற்கில்லை. அச்சுக்கும் கையச்சு அடிப்பதற்கும் இன்றைய நிலையில் தாய் மொழியின் எழுத்துகள் தொகையிலும் வடிவிலும் சிக்கலுடையவையே. தமிழைப் பற்றிய மட்டில் அது ரோமன் எழுத்தை விட மிகுதியாயினும் பிற இந்திய மொழிகளை நோக்கத் தொகை குறைந்ததே என்று கூறலாம். மேலும் தமிழ் எழுத்துகளுக்குச் சிறிதளவு சீர்திருத்தம் செய்து இச்சில்லறைக் குறைகளைக் கூடப் போக்கவும் முடியும். இத்தகைய சீர்திருத்தங்களைவிட ரோமன் எழுத்து முறையை உயர்வாகக் கருதுவோர் அதில் அதிகப்படியாய் இருப்பதாக எண்ணும் ஆதாயங்கள் இரண்டு தாம்: அவை எழுத்து எண்ணிக்கைக் குறைவு. எல்லா மொழிகளின் வரிவடிவும் ஒன்றுபடுதல் ஆகியவையே யாகும். எழுத்துக் குறைவு முதலாவதாக எழுத்துக் குறைவை எடுத்துக் கொள்வோம். ரோமன் எழுத்து முறையில் 26 எழுத்துகள் என்று கூறும்போது நாம் ஆங்கில மொழிக்குத் தேவையான ஆங்கில அரிச்சுவடியின் எழுத்துகளையே எண்ணுகிறோம். இவற்றுள் (ஒ, க, ண, b, ப, ன, ளூ, ற, ஆகிய) 8 எழுத்துகள் தமிழுக்குத் தேவை யில்லை. ஆனால் இதற்கு மாறாகத் தமிழ் அரிச்சுவடியில் உள்ள எழுத்துகளில் ரோமன் எழுத்து முறையில் இல்லாத எழுத்துகள் பல. உயிர்களின் நெடில்கள் 7-ம் வல்லினத்தில் ச, ட, ற என்ற 3-ம் மெல்லினத்தில் ங,ஞ, ண, ன ஆகிய 4-ம் இடை எழுத்தில் ழ, ள, ஆகிய 2-ம் ஆக 16 எழுத்துகள் ரோமன் முறையில் இல்லை. மேற்கூறியபடி தமிழில் அதிகமாயுள்ள எழுத்துகளை ரோமன் முறையில் இரண்டு வகையாக எழுதலாம். ஒன்று அவற்றில் சில குறியீடுகளைச் சேர்த்துக் கொள்வது: உதாரணமாக (n) எழுத்தின் மேல் புள்ளியிட்டால் ‘ங்’ என்றும் அதன்கீழ் புள்ளியிட்டால் ‘ண்’ என்றும் கொள்ளலாம். ஆனால், இம்முறை எழுத்து மயக்கத்தையும் எழுத்துப் பிழைகளையும் மலியச் செய்வதுடன், ஒலிகளையும் மயங்க வைக்கும். எழுதுவதிலும், வாசிப்பதிலும் இது மிகவும் சிரமத்தை உண்டு பண்ணுவதுடன் ரோமன் முறையின் ஆதாயங்களுள் ஒன்றாகக் கூறப்படும் எழுத்துச் சுருக்கத்தையும் இது அறவே ஒழித்துவிடும். ஏனெனில், அரிச்சுவடியில் வெளிப் பார்வைக்கு (n) என்ற ஒரே எழுத்தேயிருந்தாலும், அச்சுக்கும், கையச்சுக்கும் குறியீடுகளுடன்கூடிய அத்தகைய பல எழுத்துகள் உண்மையிலே தேவைப்படும். தமிழிலுள்ள அதிகப்படி எழுத்தைக் குறைக்க இன்னொரு முறை கையாளப்படலாம். தமிழில் தேவையற்ற எழுத்துகளை அதிகப்படி எழுத்துகளின் குறியீடுகளாக வழங்கலாம். இப்படி வழங்கினால் ரோமன் எழுத்தின் முக்கிய மான ஆதாயம் இரண்டாவது பொய்யாய்விடும். தமிழுக்கு வேண்டாத எழுத்துகள் மற்றத் தாய்மொழிகளுக்குத் தேவையானவையாகும். ஆகவே, ஒலி ஒற்றுமை கெட்டுப்போகும். மேலும் தேவையற்ற எழுத்துகள் 8 தாம்: அதிகப்படி எழுத்துகள் தமிழிலேயே 16. மற்றத் தாய்மொழிகளில் இன்னும் மிகுதி. எழுத்துப் பெருக்கத்தால் ஏற்படும் அருவருப்புகள் இது தவிர, ரோமன் எழுத்துகளில் அரிச்சுவடியில்தான் எழுத்துகளில் எண்ணிக்கை குறைவு. எழுதும்போது சொற்களை அமைப்பதற்கான எழுத்துகள் விரிவாகப் பக்கக் கணக்கில் நிறைத்து அருவருப்பையே உண்டாக்கும். இருக்கிறது என்ற சொல்லை எழுத ஐசரமமசையவர எனக் குறைந்தது 10 எழுத்துகள் தேவைப்படும். இது எழுதுவதற்கும் தொல்லை, படிப்பதற்கும் எளிதன்று. குறியீடுகளுடன் சேர்ந்து எழுதுவதானாலும் தொல்லை இன்னும் பன்மடங்காகும். மேலும், உயிரும் மெய்யும் சேர்ந்து தமிழில் ஒரே எழுத்தாக எழுதப் படுகிறது. ரோமன் முறையில் இவற்றைப் பிரித்தெழுதுதல் வேண்டும். தமிழரிடையேயும் பிற இந்தியத் தாய்மொழி யாளரிடையேயும், படித்தவர் களுக்குக்கூட உயிர் மெய் எழுத்தை உயிரும் மெய்யுமாகப் பிரித்துணர்வ தென்பது கல்லில் நாருரிப்பது போல் கடினமான காரியம். ஐரோப்பாவில் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்தே பெரிதும் உருவேற்றப்பட்டு விடும் இந்த முறையை இந்தியரனைவரும்-அதிலும் சிறப்பாகக் கிராமங்களில் வாழும் பாமர மக்கள் எளிதில் பின்பற்ற மாட்டார்கள் என்பதை அவர்களிடையே ஆசிரியர்களா யிருந்து போதனை நடத்தியவர்கள்தாம் எளிதில் அறிவார்கள். மேற்கூறிய செய்திகளால் ரோமன் முறையிலிருப்பதாகச் சொல்லப்படும் ஆதாயங்கள் ஆராய்ந்து பார்க்கப் போனால் ஆதாயங்களேயல்ல. அது மட்டு மன்று. அதில் இழப்புக்கள்கூட மிகுதியாயுள்ளன என்று காணலாம். சிறப்பாகக் கட்டாயக் கல்விக்கு உதவியாக அது சற்றும் பயன்படாதென்றே தோற்றுகிறது. அவ்வகையில் ரோமன் முறையை விட நாம் மேலே குறிப்பிட்ட சில்லறைச் சீர்திருத்தங்கள் மிகுதியான பயன் தரும் என்றும் கூறலாம். சில்லறைச் சீர்திருத்தங்கள் தமிழ் எழுத்துக்குப் புறம்பான ரோமன் முறை அல்லது நாகரிக முறை ஆகியவற்றின் உதவியில்லாமலே தமிழில் பல சீர்திருத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுள் சில எழுத்துகள் புதிதாய்ப் படிப்பவர்க்கு அதை எளிதாக்குவதுடன், அச்சுக்கும் வேண்டியபடி எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் தன்மையுடையவை. மலாய் நாட்டிலும் இந்தியாவிலும் வெளியிடப் படும் சில முற்போக்கான தமிழ்ப் பத்திரிகைகள் ஆகிய எழுத்துகளை லை, னை, ணை, ளை எழுதி வருகின்றன. இது புரட்சிகரமான மாறுதல் என்று சொல்வதற்கில்லை. புதிதாய்ப் படிப்பவர்கள் நிலையிலிருந்தும், வெளிநாட்டார் நிலையிலிருந்தும் பார்த்தால் இத்திருத்தம் இயல்பாகத் தோற்று கிறது வழக்கமான வடிவங்களே புதுமையாகவும் சிக்கல் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. இன்னும் ஆகிய எழுத்துகளும் இதே முறையில் அப் பத்திரிகைகளில் னா, றா, ணா என்று எழுதப் பெறுகின்றன. அச்சகத்துக்கும் கையச்சுக்கும் இதனால் ஏற்படும் ஆதாயம் கொஞ்சமன்று. ஏனெனில் இவற்றுக்கென அமைக்கப்பட்ட 8 அச்சுகள் மீந்துவிடுகின்றன. இதே சீர்திருத்தத்தை இன்னும் சற்று விரிவுபடுத்துவதானால், மெய்யுடன் உ, ஊ சேருமிடங்களில் வரும் குறியீட்டையும் ஒரே வழிப்படுத்தலாம். கூடுமானால் வடவெழுத்துகளான ஷு, ஹு என்பவற்றிலும் ஸூ, ஷூ, ஹூ என்பவற்றிலும் கையாளப்படும் வடிவத்தையே மேற்கொண்டு விட்டால் அச்சுகளில் இருபதுக் கதிகமாகக் குறைவு ஏற்படும். சுழியிடாத ‘உ’, சுழியிட்ட ‘உ’ ஆகியவற்றைத் தலைகீழாக்கி ‘உ, ஊ’ உயிர் மெய் குறியீடுகளாக்கிவிட்டால், ஆதாயம் இன்னும் மிகும். உருவமும் செயம் உடையதாகும். படிப்பவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் எகரத்திற்கான கொம்புக் குறியீட்டை எழுத்துகளுக்கு முன்னால் சேர்ப்பதற்குப் பதில் பின்னால் சேர்த்துக் கெ என்பதற்கும் பதில் கb என்றெழுதுவது கூட இயற்கை நெறியை ஒட்டிய சீர்திருத்தமேயாகக் கூடும் என்று எண்ணு கிறோம். பிறமொழி ஒலிகள் இறுதியாக ரோமன் முறையில்லாத ஒலிகளுக்குக் குறியீடுகள் சேர்த்துப் புது ஒலிகளைக் குறிக்கக் கூடுமாயின், தமிழ் அரிச்சுவடியிலில்லாத புது ஒலிகளுக்கு அங்ஙனம் செய்யமுடியும் என்பது தெளிவே. பெரும்பாலும் தமிழ் எழுத்துகள் ஒவ்வொன்றும் தமக்கெனத் தெளிவான ஒலி வேறுபாடுகளை உடைய வையாயிருக்கின்றன. இவ்வகையில் ரோமன் முறை தமிழ் எழுத்து முறையையும், பிற இந்தியத் தாய்மொழிகளின் எழுத்து முறைகளைவிட எவ்வளவோ பிற்பட்டதேயாகும். ஏனெனில், ஆங்கிலத்தைப் பற்றிய மட்டில் உயிர்களில் நெடில் குறில் வேற்றுமையில்லை. அது போக ஒவ்வோர் உயிரும் அவ்வப்போது ஒலியில்லாது வீணே வழங்கப்படுவதுடன், வெவ்வேறான 10 அல்லது 12 ஒலிகள் உடையவையாயிருக்கின்றன. இதுபோக மெய்களிலும் பல ‘ஒலிகள்’ ஓர் எழுத்தாலும், பல எழுத்துகளால் ஓர் ஒலியும் குறிக்கப்பட்டு எல்லையற்ற குழப்பம் விளைகிறது. தமிழ் முதலிய நாட்டு எழுத்துகளைச் சீர்திருத்தி வழங்கினால் இத்தகைய குழப்பங்களுக்கு இடமில்லை. இம்முறையில் தமிழர் அறியும்படி தமிழில் இல்லாது, ஆங்கிலம் முதலிய மேல்நாட்டு மொழிகளிலும், வடமொழி இந்து°தானி ஆகிய வடநாட்டு மொழிகளிலும் உள்ள ஒலிகளையும் தேவைப் பட்ட இடங்களில் குறித்துக்கொள்ளலாம். 10. தமிழும் தமிழின மொழிகளும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ‘கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பல ஆயின’ என்று தமிழ்மொழியை நோக்கிக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், அரசியல் தலைவர் சிலரும், தமிழ்ப் புலவர் சிலரும் இதைக் கூறத் தயங்கி வருகிறார்கள். இதற்குக் காரணம் தமிழனுக்கு நெடுநாளாக ஏற்பட்டிருக்கும் தோல்வி மனப்பான்மையையும், ‘அஞ்சி அஞ்சிச் சாகும்’ அச்சத்தையும் பலர் பயன்படுத்திக் கொண்டதே யாகும். “தமிழர் இப்படித் தம் புகழ் பாடி என்ன பயன்?” ‘சரியான புலமையெனில் பிற நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ `இச்செய்தியை ஏற்றுக்கொள்ளும் மலையாளி, கன்னடியன், தெலுங்கன் யார்’ என்று அவர்கள் கேட்கிறார்கள். இதை ஒப்புக்கொள்ளும் மலையாளி, கன்னடியர், தெலுங்கர் உண்டு. அதுவும் பொதுப்படையான ஆட்கள்கூட அல்லர். கல்லூரியும், பல்கலைக்கழக மும் ஒப்பும் முதல்தரத் தலைவர்கள். அத்தகையோர் உரைகளில் சிலவற்றைக் காண்போம். முதலில் ஒரு மலையாள அறிஞர் உரையைக் கீழே தருகிறோம். திருவிதாங்கூர் அரசரின் மலையாள மொழியாசிரியரான ஏ. கிருஷ்ண பிஷாரடி 1927 மார்ச்சில் சென்னைப் பல்கலைக்கழக ஆதரவில் ‘மலையாள மொழியும், இலக்கியமும்’ என்ற ஆராய்ச்சிச் சொற்பொழிவிடையே மலையாள மொழியில் கூறியதைத் தமிழ் எழுத்தில் அப்படியே தருகிறோம். மலையாளச் சொற்பொழிவு “தெலுங்கு, தமிழ், கர்ண்ணாடகம், மலையாளம் எந்நீவக த்ரமிட பாஷகள் ஒரு த்ரமிட மூல பாஷக்கு தந்நே காலக்ரமத்திலுண்டாய பரிணாம பேதங்களாயி வருவானே தரமுள்ளு; எந்நு மாத்ரமல்ல, அங்ஙனே ஒரு மூலபாஷ உண்டா யிருந்து வெந்நும், ஆ மூலபாஷக்குண்டாயிருந்ந பேராணு தமிழ் எந்நுள்ள தெந்தும் ....தெளியிப்பான் சில லக்ஷ்யங்கள் தந்நேயு உண்டு. ஒந்நாம தாயி, மலயாள பாஷக்கு ‘மலநாட்டுத் தமிழ்’ எந்நும், கர்ண்ணாடக பாஷக்குக் ‘கரிநாட்டுத் தமிழ்’ எந்நும், சோழ பாண்டிய நாடுகளிலே பாஷக்கு ‘சோழத் தமிழ்’ எந்நும், ‘பாண்டித் தமிழ்’ எந்நும் பறஞ்சு (கூறப்பட்டு) வந்நிருந்நதாயி பழைய தமிழ் க்ரந்தங்களிலும் மலயாள க்ரந்தங்களிலும் காணுந்நது கொண்டு தந்நே தமிழ் எந்நதுத்ரமிட பாஷகளுக் கெல்லாம் பொதுவாய பேர் ஆணு எந்நும், விசேஷத்தேக் காணிப்பானாணு மலநாட்டுத் தமிழ், கரிநாட்டுத் தமிழ், எந்த மட்டில் ஒரே விசேஷணம் (அடைமொழி) சேர்த்துப் பறயுந்நது எந்நும் உள்ளது °பஷ்மாணு.... ‘தமிழ் நாட்டு ஐ வேந்தரும் வந்தார்’ எந்நிங்ஙனே, சோழம், பாண்டியம், கேரளம், கர்ணாடகம், தெலுங்கு, ஈ அஞ்சு ராஜாக்கள்மாரே தமிழின்றே ப்ரதி °தாபகன்மாராயி (தமிழை நிலை நிறுத்தியவராய்) கணிச்சும் கொண்டு செந்தமிழ் க்ரந்தங்களில் ப்ரதிபாதிச் சிட்டுள்ளதும் (ஆராய்ந்து நிறுவியுள்ளதும்) மலயாள பாஷயிலே ப்ராசீன (பண்டைய) க்ரந்தங்ஙளாய ‘அமரம் தமிழ்,’ ‘நம்பியாருடே தமிழ்’ முதலாய பேருகள் காணுந்நதும், இதின்னுதா ஹரங்ஙளானு......லீலா திலகம் எந்ந ப்ராசீன க்ரந்த காரனா கட்டே, மணிப் பிரவாள லக்ஷண ப்ர°தாவத்தில் மலயாள பாஷயும், சம°க்ருதவும் கூடிச் சேர்த் துண்டாக்கிய காவ்யத்தினாணு மணி ப்ரவாளமெந்நு பறஞ்ஞு வருந்ந தெந்நுள்ளதின்னு ப்ரமாணமாயி (மேற்கோளாய்) ‘தமிழ் மணி, சம்°க்ருதம் பவழம்’ எந்நும் மற்றும் பல ப்ரயோகங்களும் காணிச்சு அவயிலே தமிழ் சப்தத்தினு (சொல்லுக்கு) மலயாள பாஷ எந்நது த்ரமிட பாஷகளுக் கெல்லாம் பொதுவாய பேராணு எந்நும் °பஷ்டமாயி பறஞ்ஞிட்டு முண்டு.” மேற்காட்டிய மேற்கோள் மலையாளமாயிருந்தும் தமிழருக்குப் புரிவதுதான் என்று காணலாம். உண்மையில் தமிழிலக்கணம் தெரிந்தவர் எழுதும் தமிழை விட, தமிழன் பேசும் தமிழுக்கு இம் மலையாளம் மிகவும் அடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. தெலுங்கு மொழியிலும் வடமொழிச் சொற்கள் புகுத்தப்பட்ட வரலாறு; வடசொற்களைக் கலந்தபின் அச்சொற்கள் மட்டுமன்றித் தூய தெலுங்குச் சொற்களையும் வடசொல் எனச் சாதிக்கச் செய்யப்படும் முயற்சி ஆகியவற்றைப் பற்றி ஒரு தலைசிறந்த தெலுங்கு மொழியறிஞர் கூற்றுகளைக் கீழே தருகிறோம். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தெலுங்கின் முதன்மை ஆய்வுரை யாளரான கொரடா ராமகிருஷ்ணய்யா எம். ஏ. அவர்கள் திராவிட மொழி நூலாராய்ச்சிகள் (1935) என்ற நூலிலும் திராவிட மொழிப் பொதுச் சொற்கள் (1944) என்ற நூலிலும், கீழ்வருமாறு ஆங்கிலத்தில் குறிப்பிடுவதைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருகிறோம். திராவிட மொழி நூலாராய்ச்சிகள் (பக்.42) தெலுங்கில் முதல் கவிஞன் நன்னயரே யாயினும் அவர் வடமொழிப் பற்றாளரானமையால் (வடமொழி கலந்த) கடுநடையில் 100-க்கு 75 வடசொற்களுடன் பாரதத்தை மொழி பெயர்த்தார். ஆயினும் அவர் பின் வந்த கவிஞர்கள் பலர், சிறப்பாகச் சைவப் புலவர்கள் இத்தகைய பெருவாரியான வடமொழி இறக்குமதியைக் கண்டித்து ‘ஜானு’ தெலுங்கு (தூய தெலுங்கு) நடையை ஆதரித்தனர். இத்தகைய தெலுங்கையே நாட்டுப் பொது மக்கள் எளிதாக உணர்ந்துகொள்ள முடியும் என்பது பல்குறிகி சோமநாதர் கோட்பாடு... மேலும் திக்கணர் ‘வழங்காத புதுச்சொற்களை’ வழங்குவது தவறு என்று கூறியவரே யாயினும், உள்ளார்ந்த தேசிய மனப் பான்மை உடையவரா யிருந்தமையால் நன்னயரைவிட மிகுதியான தூயதெலுங்கு அல்லது தேசிய மொழிச் சொற்களை வழங்கினார். ஆயினும், வட சொல் வழக்கு மிகுதி காரணமாக இத்தேசியச் சொற்கள் மேலும் வழங்காது போனதனால் இன்று திக்கணரின் தேசிய நடை கடுமையாகவும், நன்னயரின் கடு வடமொழி நடை எளிதாகவும் காணப்படுகிறது. தமிழின மொழிப் பொதுச் சொற்கள் இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளுமே வடமொழி அல்லது ஆரிய மூலங்களிலிருந்து தோன்றின என்ற நம்பிக்கை பொதுவாக இந்திய (ஆரிய) அறிஞரிடையேயும் இலக்கணப் புலவரிடையேயும் இருந்து வருகிறது. உண்மையில் தென்னிந்திய மொழிகளில் பெருவாரியாக வடமொழியிலிருந்து வந்த சொற்கள் உள்ளன என்பது உண்மையேயாயினும், தேசியப் பகுதி (தூய தாய்மொழிப் பகுதி)யே அதில் முனைந்த பகுதியாயுள்ளது; இதனை இலக்கண நூலாரும் ஒத்துக் கொள்கின்றனர். இந்நிலையிலும், தெலுங்கு மொழியிலும், பிற தென்இந்திய மொழிகளிலும் உள்ள சொற்களெல்லா வற்றையும் வடமொழி அல்லது பிராகிருதத்திலிருந்து வருவித்துக் காட்டவும், அதன் மூலம் வடமொழி, பிராகிருதம் ஆகியவற் றிலிருந்தே இம்மொழிகள் தோன்றியிருத்தல் வேண்டும் என்ற, தங்கள் மனத்திலூறிக்கிடக்கும் எண்ணத்தை வலுப்படுத்தவும் அவர்கள் முயல்கின்றனர். வடமொழியிலுள்ள சொல் மூலங்கள் (சுடிடிவள) பல்வேறு முன் இடைச்சொற்களுடன் பல்வேறுபட்ட பொருள் கொள்ளத் தக்கவையாயிருப்பதால் எந்த மொழிச் சொல்லையும் அது எவ்வுருவமுடையதாயினும், பொருளுடைய தாயினும் வடமொழிக்கிணையத் திரித்துக் குழப்பமுடிகிறது. வடமொழியிலிருந்து பிறமொழிகளை வருவிக்க எடுத்துக் கொள்ளப்படும், இம்முயற்சியின் பிழை பாட்டை கி.பி.7ஆம் நூற்றாண்டிலிருந்த வடமொழி யறிஞரான குமாரிலபட்டர் கண்டித்து எச்சரித்துள்ளார். குமாரிலபட்டர் கூறுவதாவது: தூய திராவிடச் சொற்களாகிய சோறு, பாம்பு, வயிறு, அதர் (பாதை) முதலியவற்றை வடமொழிப் பகுதிகளின் ஒலியுடனும் அவற்றின் பொருளுடனும் ஒட்டவைத்து வருவிக்க எண்ணுவது பொருத்த மற்றது. (அவர் வடமொழிக் கூற்றை அப்படியே தமிழில் தருகிறோம்). தத்யதோ ஒதனம் சோறு இத்யுக்தே சோர பத்வாச்யம் கல்பயந்தி; பந்தாநம் அதர் இத்யுக்கே ‘அதர’ இதி கல்பயித்வா ஆஷூத் சத்யம் து°த்ரவாத் அதர ஏவபந்தாஇதி. ததா பாம்பு சப்தம் பகாராந்தம் சர்ப, வசனம் அநாராந்தம் கல்பயித் வாசத்யம் பாப ஏவ அங்கள இதி வதந்தி; ஏவம் வயிறு சப்தம் ரேபாந்தம் உதரவசனம் வைரி சப்தே நப்ரத் யாம் நாயவதந்தி. மேலும் தெலுங்கில் மோவி (-முன்வாய் அல்லது உதடு), மோகாலு (-முழங்கால் அல்லது முட்டு), பொக்கிலி (பொக்குள் அல்லது கொப்புள்-பொற் குழி), கோவலு (கோயில்-கோ-இல்; இறைவன் வீடு), சிலுவா (சிலு-வாய்-வாயில் நஞ்சுடையது; பாம்பு), இனுமு (இரும்பு-பொன்-கரிய உலோகம்) என்ற சொற்கள் பிரிக்க முடியாது மாறிவிட்டபடியினால் பழந்தமிழ்ப் பொருளிழந்து விட்டன என்றும் அறிஞர் இராமகிருஷ்ணையா காட்டியுள்ளார். வடசொல்லை முதலில் புகுத்தி அதன்பின் எல்லாம் வடசொல் என்று கூற முனையும் வடஆரியர் சூழ்ச்சியை இத்தெலுங்கறிஞரும் வடமொழி யறிஞரும் கண்டிப்பது போலவே மலையாள மொழியை ஆராய்ந்த மேனாட்டு அறிஞர் டாக்டர் குண்டர்ட்டும் கண்டித்துள்ளார். அவர் கூறுவதாவது: “திராவிட மொழிச் சொற்கள் முழுவதையும்-ஏன் அதில் கலந்துள்ள அரபுமொழி, ஐரோப்பிய மொழிச் சொற்களையும் கூட-எல்லாம் வட மொழியிலிருந்து திரிந்து வந்தவையே என்று கூறும் இந்தியப் ‘புலவர்கள்’ எத்தனையோ பேரைக் காணலாம். ஆயினும் வடமொழியில் திராவிடச் சொற்கள் கலந்துள்ளன என்பதை ஒத்துக்கொள்ளும் இந்தியப் புலவர்களை எங்கும் காணமுடியவில்லை.” குண்டர்ட் அந்நாள் இந்தியரிடம் கண்ட குறைகள் அறிஞரிடையே குறைந்து வருகிறது. ஆனால், பொது மக்களிடையே அறிஞர் அறிவு இன்னும் பரவ விடாது ஆரியப் பள்ளிகள், ஆரியப் பத்திரிகைகள், ஆரிய நிலையங்கள் தடுத்து வருகின்றன. 11. திருக்குறளும் வடமொழி நூல்களும் திருவள்ளுவர் தமிழுலகுக்கு அளித்த முப்பாலமிழ்தம் எல்லாச் சமயத்துக்கும், எல்லா நாட்டு மக்கட்கும் மட்டுமன்றி முக்காலத்துக்கும் பொதுவான முழு முதல் தமிழ் நூல். இத்தகைய சீரிய சிறப்புடைய நூல் உலகில் வேறெம்மொழியிலும் இல்லை என்பது கண்டு, தமிழர் களிப்படைகின்றனர். ‘வெறெம்மொழியிலும்’ என்பதில் வடமொழியும் அடங்கித்தான் கிடக்கிறது. அதை மறுப்பாரும் இல்லை. வேறெம்மொழியிலும் எப்புலவர்க்கும் தரப்படாத ‘தெய்வப் புலவர்’ என்ற புனை பெயரும் திருவள்ளுவர்க்கே சிறப்பான பெயராய் வழங்கப்படுகிறது. தெய்வ மொழி என்று தன்னாலும், பிற பலராலும் கொள்ளப்பட்ட வடமொழியிலிருந்து அதற்கு-அல்லது-அதில் கண்ட கருத்துக்கு மூலம் தேடப் பெரும்பாடுபட்ட உரையாசிரியர் பரிமேலழகரே தம்மையும் மீறித் தம் நாவார, உளமார அவரைத் தெய்வப் புலவர் என்று கூறிக் கைகூப்பி வணங்கியிருக்கின்றார். திருவள்ளுவர் திருக்குறளின் மாண்பைப் பிற்காலத்தவர் எளிதில் உணரும்படி ‘மணி உரை’ எழுதிய பரிமேலழகப் பெரியார்க்குத் தமிழகம் எவ்வளவோ கடமைப்பட்டிருப்பது உண்மை. ஆனால், அவர் தேடிய வடமொழி மூலங்கள் உண்மையில் திருவள்ளுவர்க்கு மூலங்கள் ஆயிருக்கக் கூடுமா?-அல்லது-அது முற்றிலும் அவர் வடமொழிப் பற்றின் விளைவா-? என்பதைத் தமிழன்பர் ஆராய்தல் அமைவுடையதே. தமிழர் இதனை ஆராய்வதில் மிகுதி அக்கறை காட்டாதது இயல்பே. பாலமிழ்தம் கண்டவிடத்து அதை உண்பதை விட்டு, அது யார் சமைத்தது என்று அறியக் காத்திருப்பவன் அறிவாளியாகமாட்டான். தமிழர்க்கு அறிவொழுங்கு காட்டிய திருவள்ளுவரும். `‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’’ என்று தமிழனுக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆயினும் இவ் வடமொழி மூலச் செய்தி அடிக்கடி தமிழன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தலை நீட்டி வருகிறது. அண்மையில் தமிழ்த்துறையில் பெரும் பொறுப்பிலிருந்த பெரியார் ஒருவர் இவ் வடமொழி மூலச் செய்தியைப் பெரிதுபடுத்தி வலியுறுத்தி யதுடன் நில்லாது திருவள்ளுவர், இளங்கோ, சீத்தலைச்சாத்தனார் முதலியவர்களின் காலவரையறையையும் அக்கருத்துக்கேற்ப மாற்ற விழைவதால் இச்செய்தியைத் தமிழன் மீட்டும் ஆராய்ந்து உண்மை எது எனக் காணுதல் இன்றியமையாதது. ஆனால், இவ்வாராய்ச்சியில் புகுமுன் தமிழர்கள் ஒரு செய்தியை மறவா திருத்தல் வேண்டும். இவ்வாராய்ச்சி முடிபு எதுவாயினும் அது திருவள்ளுவர் பெருமையை ஒரு சிறிதும் அசைத்துவிடாது. வடமொழியிலாயினும் சரி, வேறெம் மொழியிலாயினும் சரி, இதனைப் போன்ற-இதனை யொத்த நூல் திருக் குறளுக்கு முன்னோ, பின்னோ சமகாலத்திலோ (அதாவது முக்காலத்திலும்) கிடையாது என்ற நிலை எல்லாருமொப்ப முடிந்த முடிபேயாகும். முதலில் பரிமேலழகர் உரையில் கண்ட செய்திகளை எடுத்துக் கொள்வோம். பரிமேலழகர் திருக்குறளை ஒப்புயர்வற்ற முழு முதல் நூல்-அல்லது-முதனூல் என்று கொண்டாரேயன்றி வழி நூல் என்று கொண்டார் என்று கூறமுடியாது. குறளாசிரியரை அவர் தெய்வப்புலவர் என்றார். அது வழி நூலானால் அதன் முதனூலாசிரியர்களைத் திருவள்ளுவரை விடச் சிறப்பித்துக் கூறியிருத்தல் வேண்டும். அங்ஙனம் அவர் கூறவில்லை என்பது தெளிவு. பரிமேலழகர் குறிப்பதெல்லாம் திருக்குறளின் கருத்துகளிற் பல மனுநூல். சாணக்கியர் பொருள்நூல், காமாந்தக நீதி நூல் ஆகியவற்றிற் காணப்படு கின்றன என்பதே. கால ஆராய்ச்சி ஏற்படாத அக்காலத்தில் வடமொழி நூல்கள் எல்லாம் மிகப் பழையன என்று நம்பப்பட்டு வந்தன. அது அக்காலச் சமயக் கொள்கை என்று கூடக் கூறலாம். எனவே, அரும்பாடுபட்டு இவ் வடமொழி ஒருமைப்பாடுகளைக் கண்ட பரிமேலழகர், திருவள்ளுவர் இந்நூல்களைக் கற்றுணர்ந்திருத்தல் வேண்டும் என்றெண்ணினர். பிற்காலத் தமிழர் பலர் எண்ணுவது போல், அவர்க்கு இது திருவள்ளுவரிடம் மதிப்புக் குறைந்த காரணத்தால் அல்ல; பரிமேலழகர் காலத்தில் புலவர் என்ற சொல் வடமொழிப் புலவர்க்கே முதலுரிமை யாயிருந்தது. எனவே, திருவள்ளுவரிடம் பரிமேலழகர் கொண்ட பற்றுதலின் காரணமாகவே அவர் பெரிய வடமொழிப் புலவராகவும் இருந்திருத்தல் வேண்டும் என்று அவர் எண்ணினார். பரிமேலழகர் காட்டிய இவ்வொப்புமைகளைச் சாக்காகக் கொண்டு இக்கால ஆராய்ச்சியாளர் சிலர் திருக்குறளுக்கு அவ்வடமொழி நூல்கள் மூலங்கள்-அல்லது-முதனூல்கள் என்று அவர் எண்ணியதாக மனப்பால் குடிக்கின்றனர். தமிழர் கருத்துப்படி முதனூல் எழுதத்தக்கவர் கடவுள்-அல்லது-கடவுள் நிலையிலுள்ள முனிவர்கள். வழிநூல் எழுதுபவர் அவர்வழி நிற்கும் அறிஞர் ஆகிய மனிதர்களே. வழி நூலாசிரியர் முதனூற் கருத்துகளைச் சுருக்கியும், விரித்தும், எளிமைப்படுத்தியும் புதுமுறைப்படுத்தலாம். முதனூலுக்கு மாறுபடவோ, மிகைப் படவோ அவர் எழுதார். முதனூலாசிரியரினும் அவர் சிறந்த வராகக் கொள்ளவும் படார். இந்நிலையில் வைத்துப் பார்த்தால் பரிமேலழகர் எண்ணம் தெளிவாகும். திருவள்ளுவர் புலமைக்குப் பாராட்டாகவே இவ்வொப்புமைகள் தரப்பட்டன. ஆனால், வழிநூல் அல்ல என்ற எண்ணத்தை வற்புறுத்தவே அவர் ‘தெய்வப் புலவர்’ என்ற பெயரை வலியுறுத்தி எடுத்தாண்டார். உரைப்பாயிரத்தில் அவர் மொழியை உற்று நோக்குவார்க்கு இது புலனாம். “இவற்றுள் (அதாவது அறத்தின் பிரிவுகளாகிய ஒழுக்கம், வழக்கு, தண்டம் ஆகிய மூன்றனுள்) வழக்கும், தண்டமும் உலக நெறி நிறுத்துதற் பயத்த(ன) வாவதல்லது, ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு உறுதிபயத்தற் சிறப்பில வாகலானும், அவைதாம் நூலானேயன்றி உணர்வு மிகுதியானும், தேயவியற் கையானும் அறியப்படுதலானும்; அவற்றை ஒழித்து, ஈண்டுத் தெய்வப் புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறமென எடுத்துக் கொள்ளப்பட்டது.” முதனூல், வழிநூல் இயல்புகளை உன்னிக் கவனிப்பவர்க்கு முதனூலே உறுதிபயப்பதும், பொது நூலுமாம் என்பதும், உணர்வு மிகுதியானும், தேயவியற்கையானும் அறியப்படத்தக்க செய்திகளை ஒட்டிக் கூறுபவையே வழி நூல், சார்பு நூல்களாம் என்பதும் விளங்கும். ஆகவே, காலவரையறையை நீக்கிப் பார்த்தால் பரிமேலழகர் கூறும் இயல்புகளின்படியும், திருவள்ளுவர் நூலே முதனூல் என்பதற்கு அட்டியில்லை. திருவள்ளுவர்நூலைக் கால இயற்கைக்கும், தேயவியற்கைக்கும் தக்கபடி விரித்த சோமேசர் முதுமொழி வெண்பாப் போன்ற நூல்கள் திருவள்ளுவர் நூலுடன் எத்தகைய உறவுடையவையோ அத்தகைய உறவுதான் இவ் வடமொழி நூல்களுக்கும். அவை காலத்தால் திருக்குறளுக்கு முந்தியவையாமே என்னின் அதனைக் கீழே ஆராய்வோம். இதற்கிடையில் தமிழர்களிடையே இன்னொரு வினா எழலாம்: ‘பரிமேலழகர் திருக்குறளையே முதனூலாகக் கொண்டாராயின் வடமொழிக் கருத்து மூலங்களை இத்தனை அரும்பாடுபட்டுத் தேடுவானேன்-?’ என்பதே அக்கேள்வி. பரிமேலழகர் வடமொழியிற் சிறந்த புலவர். இவ்வொப்புமைகள் தரப்பட்டதே அதனைக் காட்டும். புலவர்கள் தம் புலமை விரிவைப் பயன்படுத்தி ஒப்புமை காட்டல் இன்றும் புதிதல்ல. சங்க நூல்களிற் பலவற்றை உரையுடனும், உரையின்றியும் பதிப்பித்த அறிஞர்-உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் பிற சங்க நூல்கள்,சிந்தாமணி, கம்பராமாயணம், பாரதம் ஆகியவற்றிலிருந்து ஒப்புமைக் குறிப்புகள் தந்திருக்கிறார் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், அறிஞர்-உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் போல ஒப்புமை தந்த துடன் பரிமேலழகர் நிறுத்திக் கொள்ளவில்லை என்பது உண்மையே. வடமொழிக் கருத்துகள் திருக்குறளுக்கு முந்தியவை என்ற தம் இயற்கை எண்ணத்தையும் தெரிவித்திருக்கிறார். ‘இயற்கை எண்ணம்’ என்று குறித்ததன் காரணம் இக்கால ஆராய்ச்சியாளர்போல், அவ்வெண்ணத்தைப் புதிதாக நிலைநாட்ட அவர் முயன்றவரல்லர் என்பதற்கே. இவ்வியற்கை எண்ணம்-அல்லது-நம்பிக்கையால் தூண்டப் பட்ட அவர், ஒப்புமை காட்டியது அவர் புலமையின் காரணமாக மட்டுமன்று என்பது அவர் கால நிலைமைகளை அறிபவர்க்கு மட்டுந்தான் விளங்கும். பரிமேலழகர் காலம் சைவ, வைணவ சமய மறுமலர்ச்சியும், வடமொழி மேலாண்மையும் ஒருங்கே மேலோங்கிய காலம். சைவ, வைணவ சமயங்களின் பழைய வரலாற்றைக் கவனித்தால் அவை வேதநெறிக்குப் புறம்பாக, பல இடங்களில் எதிராகக்கூட வளர்ந்தவை என்று காணலாம். ஆனால், புத்த, சமண சமயங்கள் அவற்றையும் தாண்டி வேதநெறியை எதிர்த்தபோது, வேத நெறியாளர் சைவ, வைணவரை அணைத்துக் கொண்டு புத்த, சமண சமயத்தை அழிப்பதில் அவர்கள் ஒத்துழைப்பைப் பெற்றனர். பெற்றாலும், வேத நெறிக்கு முதலிடம் பெற்றுவிடுதல் வேண்டும் என்ற காரியத்திலும் கண்ணாயிருந்து அதற்கு அவ்வப்போது சைவ, வைணவப் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டனர். தமிழரிடையே புத்தம், சமணம் மேலோங்கியபோது வேத நெறிக்குத்தான் இழுக்கு நேர்ந்ததேயன்றித் திருக்குறளுக்கு இழுக்கு நேரவில்லை. புத்த நூலாகிய மணிமேகலையின் ஆசிரியர் அவர் குறளொன்றை மேற்கோளாகக் காட்டி, அவரைப் ‘பொய்யில் புலவன்’ என்று குறித்திருக்கிறார். புத்தரையே குறிக்கும்போதுகூட ஆசிரியர் இதற்கு மேற்பட்ட புகழுரை தரமுடியாது. சமண நூல்கள் இன்னும் ஒருபடி போய் அவரைத் தங்கள் ஆசிரியருள் ஒருவராகக் கொள்கின்றன. சைவ, வைணவ மறுமலர்ச்சியிலும் திருவள்ளுவர் புகழுக்குக் குறைவில்லை. சைவர் அவரைப் பொய்யடிமை யில்லாத புலவர்களுள் இடந் தந்ததுடன் நில்லாது 64 நாயன் மாருள்ளும் அவரை ஒருவராக்கினர். வைணவ ஆழ்வார்களும் அவரைப் பாராட்டப் பின்வாங்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழரிடையே எழுந்த எந்தக் கலையிலும் முழுப் பொலிவுடன் ஓங்கியுயர்ந்து மிதந்த புகழ் திருக்குறளினுடையது. திருவள்ளுவரின் இப்புகழை வேதநெறியாளர் கொள்ளவும் முடியவில்லை. தள்ளவும் முடியவில்லை. அவர்கள் அதனை ஏற்றிருந்தால் திருவிளையாடலையும், பெரிய புராணத்தையும் ஆழ்வார்கள் சரிதைகளையும் சிவஞான போதத்தையும், தமிழ் முந்தியோ-வடமொழி முந்தியோ என்று மயங்கும்படி மொழிபெயர்த்த அவர்கள் திருக்குறளை மொழிபெயர்க்கா திருக்க மாட்டார்கள். வேதநெறியைத் தழுவிய தமிழர்களோ புத்தர், சமணர்களுக்குப் பின்னடையாமல் அதனை உச்சி மேற்கொண்டுவிட்டனர். இந்நிலையில் தமிழர் பலர் வேதநெறி, திருவள்ளுவர் நெறிக்கு மாறானதோ என்ற ஐயமும், வேதநெறி ‘வைதீகரிடையே’ திருவள்ளுவர் நெறி வேத நெறிக்கு மாறாய் நின்று அதன் புகழைக் கெடுக்குமோ என்ற ஐயமும் நிலவின. இதனால், இருசாராரிடையேயும் உட்பிணக்குத் தோன்றாமலும், திருவள்ளுவர் நெறிக்கு எதிர்ப்பு ஏற்படாமலும் காக்கவே பரிமேலழகர் அருமுயற்சி செய்து திருவள்ளுவர் நெறி வேதநெறியின் நற்சாறே என்று விளக்க முன் வந்தார் என்று தோற்றும். ஆயினும், திருக்குறள் வடமொழி நூல்களின் மேம்பட்ட நூல் என்பதை அவர் மறுக்கவில்லை. வாயார வற்புறுத்தாமலும் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. தெய்வமொழி என வேதநெறியாளர் கொண்ட வடமொழி நூல்கள், மக்களுக்கு மக்கள் எழுதிய அறிவு நூல்கள், மனித மொழியாகிய தமிழில் எழுதப் படினும், திருவள்ளுவர் நூல் தெய்வ நிலையில் நின்று எழுதப்பட்ட அருள் நூலே என்று அவர் கூறவந்த கருத்துக்கு அப்பாற்சென்று தாமே குறித்துள்ளார். பரிமேலழகர், வள்ளுவர் முதற் கருத்துக்கு மாறாக வலியுறுத்திப் பொருள் கொண்டதும் ‘கால நிலை’ யால் ஏற்பட்ட இன்றியமையா வேண்டுதல்களேயன்றி வேறன்று. பரிமேலழகர் உரைபற்றிய செய்தியை இத்துடன் நிறுத்தி விட்டு அதனைத் ‘தொக்காக’க் கொண்ட தற்கால வேதமொழிப் பற்றாளர் ஆராய்ச்சிகளை அடுத்துக் கவனிப்போம். வடமொழி தென்மொழிக் கால வரையறை தெரியாத காலத்தில் பரிமேலழகர் உரை எழுந்தது. தற்கால ஆராய்ச்சி யாளர் ஆராய்ச்சிகட்கு இத்தகைய தடங்கல் மிகுதியில்லை. இன்று வடமொழி என்று போற்றப்படுவது இலக்கியக் கால மொழியாகிய திருந்திய மொழியைத்தான். திருந்திய இலக்கியத் தமிழ் செந்தமிழ் எனப்படுவது போலத் திருந்திய வடமொழி ‘சமற்கிருதம்’ எனப்படும் இம்மொழியில் பாரதம், இராமாயணம், பகவத்கீதை, புராணங்கள், °மிருதிகள், இலக்கணங்கள் ஆகியவை நீங்கலாக எல்லா நூல்களும் கி.பி. முதல் நூற்றாண்டுக்குப் பிந்தியவையே. இவற்றுள்ளும் புத்த சமயத்தவர் எழுதிய புத்தசரிதம் என்ற காப்பியமும் ‘மண்ணியல் சிறுதேர்’ (ம்ருச்சகடிகா) என்ற நாடகமும் மட்டுமே கி.பி. 5ஆம் நூhற்றாண்டுக்கு முற்பட்டவை. திருவள்ளுவர் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்று சமணர் கூறுகின் றனர். கி.பி. முதல் நூற்றாண்டென்பதே பலர் முடிபு. இவ்விரண்டுக்கும் அது முற்பட்டதாகவே இருக்க இடமுண்டாயினும், இங்கே பிந்திய முடிபையே நாம் கொள்வோம். சங்கநூல்களில் இதற்கும் முந்திய பகுதிகள் பல. மிகப் பிந்திய பகுதி கி.மு. 3ஆம் நூற்றாண்டினது. சைவ வைணவ வேதங்கள் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கும் 10ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை. சிந்தாமணி, கம்பன், கூத்தர், சேக்கிழார் காலம் 12ஆம் நூற்றாண்டுக் குட்பட்டது. வடமொழியில் புத்தர் நூல் நீங்கலாக வேத நெறியாளர் ஏற்கத்தக்க முதல் இலக்கிய நூல்கள், காளிதாசன் நூல்களே. வள்ளுவர் காலம் இதற்கு 500 ஆண்டுகள் முற்பட்டது. எனவே, வடமொழி இலக்கியம் எதினின்றும் வள்ளுவரோ, சங்ககாலப் புலவர்கள் எவருமோ கடன்பெற அங்கு இலக்கியம் எதுவுமே இருந்ததில்லை என்று காணலாம். இலக்கியம் இல்லாவிட்டாலும்; இதிகாசம், புராணம், இலக்கணம், பழைமை வாய்ந்த வேத மொழியிலுள்ள வேத நூல்கள் ஆகியவை உண்டு. இவற்றுள் வேதங்கள் கால வரையறைப்படுத்தப்பட்டவை யல்லவாயினும் மிகப் பழைமை யானவையே. திருக்குறளுக்கும் அவற்றுக்கும் ஒப்புமை காண எவரும் கனவு கூடக் காணவில்லை. அவை வேறுவேறு இனம், வேறுவேறு உலகம் சார்ந்தவை. வடமொழி இலக்கியத்திலேயே திருக்குறள் போன்ற முப்பால் நூல் உண்டு. அதுவும் மிகச் சிறந்த ஒரு கவிஞரால் எழுதப்பட்டதே. வள்ளுவர் நூலுக்குப் பொருளாலும், கவிதைச் சிறப்பாலும், கருத்தாலும் மிக நெருங்கிய ஒப்புமை உடைய நூல் இதுவே. திருவள்ளுவர் திருக்குறளுக்கு வடமொழியில் ஒப்புமை தேடிய எவரும் பர்த்ருஹரி என்பவர் எழுதிய முந்நூறு (த்ரிசதகம்) என்ற இந்த நூலை ஒப்புமைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கு உண்மையான காரணம் வேறு எதுவுமில்லை. பர்த்ருஹரியின் காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பதை எவரும் அறிவர் என்பதே. இறுதியாகத் திருவள்ளுவர் நூலுக்கு ஒப்புமையாக இன்று ஆராய்ச்சியாளர்க்குப் படும் நூல்கள் அன்று பரிமேலழகர் குறிப்பிட்ட நூல்களை யன்றி வேறில்லை என்ற முடிவுக்கு வருகிறோம். பரிமேலழகர் காட்டும் ஒப்புமைகளில் பெரும் பகுதி மனுநூல், காமாந்தக நீதிநூல், சாணக்கியர் பொருள்நூல் என்பவையே. ஒரு சிலர் பாரதத்தின் சில பகுதிகளையும் பகவத்கீதையையும் குறிப்பிடுகிறார்கள். பர்த்ருஹரியின் நூல்களைப்போல் தெளிவாய்ப் பிற்பட்ட நூலானால் ஆரியப் பற்றாளர் ஆராய்ச்சி எழுந்திருக்காது என்று கூறலாம். நேர்மாறாக அவை முற்பட்டவை என்று தெளிவுபடக் கூடுமானால் பரிமேலழகர் முடிபுடன் நின்றிருக்கலாம். மேற்கூறிய நூல்களில் பாரதம் பரதகண்டத்தின் மிகப் பழங்கதை. இக்கதை நிகழ்ந்தகாலம் கி.மு. 1000 ஆயிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஆனால், இன்றைய வடமொழிப் பாரதம் கி.மு.1000-க்கும் கி.பி.500-க்கும் இடையே எழுதப்பட்டதென்பது தவிர அது யாரால், எப்பொழுது, எவ்வளவு எழுதப்பட்டது என்று யாரும் கூறுவதற்கில்லை. இன்னொரு வகையாகச் சொன்னால் இந்தியா வெங்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான எழுத்தாளர் கைச்சரக்குகளின் கோவை அது. காலம்பற்றிய ஆராய்ச்சியில் இத்தகைய கூட்டுச் சரக்குக்கு இடமில்லை என்று கூறவேண்டுவ தில்லை. பகவத்கீதையின் காலமும் இதுபோல் வரையறுக்கக் கூடாததே. கி.பி 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கராச்சாரியார் இதற்கு உரை எழுதினார். அதற்குமுன் எப்போது அது எழுதப்பட்டது என்று கூறுவதற்கில்லை. கி.மு. 7ஆம் நூற்றாண்டு என்று சிலரும் கி.பி. 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு என்று சிலரும் கூறுவர். சங்கராச்சாரியருக்கு முன் வட மொழி இலக்கியத்தில் இதுபற்றிய குறிப்பு எதுவுமில்லை. அதன் கால வரையறை திட்டமாகுமுன் ஒப்புமை ஆராய்ச்சிக்கு அது உகந்ததல்ல. ஒப்புமையும் திருக்குறளைப் பற்றியமட்டில் தற்செயலான பொதுக் கருத்துகளன்றி வேறில்லை. எனவே ஒப்புமை வகையால் ஏதேனும் நாட்ட வேண்டுபவர் நாட்டஞ் செலுத்தத் தக்க நூல்கள் மற்ற மூன்றுமே. காமாந்தக நீதிநூல் காலமறியப் படாதது. மேலும் அது சாணக்கியர் பொருள் நூலின் மறுபதிப்பேயாகும். அதன் பொருள் ஒழுங்கு, குறளை ஒட்டியதானால், அது குறளைப் பின்பற்றி ஏற்பட்டதாகக்கூட இருக்கக்கூடும். பிறமொழியாளர் வடமொழியைப் பின்பற்றியிருந்தால் அதைப் பெருமையுடன் கூறுவதே மரபு. ஆனால், வடமொழி வடவர்க்குப் பொதுமொழியாதலால் எம் மொழியினரும் தம் கருத்தை-தாம் அறிந்த கருத்தை வடமொழி உலகுக்குப் புதியதாக அதனைத் தரலாம். அங்ஙனம் தரும்போது பெயர் குறிக்கும் மரபு கிடையாது. மேலும் வடமொழியிலிருந்து புதுக்கருத்துப் பெறுங் காலம் வள்ளுவர்க்கு நெடுநாள் பிந்திய காலம். வடமொழியில் அக்காலத்தில் இலக்கிய வளம் ஏற்படாத காலம் என்று மேலே கூறினோம். மனுநீதி என்று இப்போது வழங்கும் நூல் ஆதி மனுநூல் அன்று என்று அந்நூலே குறிப்பிடுகின்றது. ஆதி மனுநூலின் கருத்துகளைத் தொகுத்துப் பிற்காலத்தார் எழுதிய நூல்வரிசையில் அது ஒன்றேயாகும். அதன் இறுதிப் படிவம் கி.பி.5ஆம் நூற்றாண்டுக்குச் சற்றுமுன் ஏற்பட்டதென வின்ஸன்ட் °மித் கூறுகிறார். இதன் பகுதிகள் சில பழைமையாயிருக்கக் கூடுமாயினும் இன்றைய வடிவிலிருந்து நூலாராய்ச்சி-வரலாற்றாராய்ச்சி பயன்படாதது. கடைசியாகச் சாணக்கியர் செய்தியை எடுத்துக் கொள்வோம். இவர் கி.மு. 4ஆம் நூற்றாண்டினிறுதியில் வட இந்தியா முழுவதையும் வென்றாண்ட பேரரசன் சந்திரகுப்தனின் அமைச்சன் என்று கூறப்படுகிறது. இது உண்மை யானால், அவர் காலம் திருக்குறளின் காலமாக ஒப்புக்கொள்ளப்பட்ட கி.பி. முதல் நூற்றாண்டுக்கு 500 ஆண்டுகள் முந்தியதாயிருத்தல் வேண்டும். ஆனால், சாணக்கிய சூத்திரம் அல்லது பொருள் நூலை வட மொழியில் பதிப்பித்த பதிப் பாசிரியர்கள், அது சாணக்கியர் எழுதியது அன்று என்றும், அவர் கொள்கைகளையோ அவர் எழுதிய நூலையோ பின்பற்றி கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கு முன் யாரோ எழுதிய நூலாகவே இருத்தல் வேண்டும் என்றும் கூறுகிறார்கள். பொருள் நூலின் காலம் கி.மு. 4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பதை அடிப்படையாய்க் கொண்டு பாணினியின் காலத்தை கி.மு. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத் துக்கு முன் என்று கொண்ட முடிபுகூட இப்போது இம்மறுப்பின் பின் பயனற்றுவிட்டது என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் சாணக்கியர், சந்திரகுப்தன் அமைச்சன் என்று குறிப்பிடும் மரபுரையே அவர் தென்னாட்டவர் என்றும் குறிப்பிடுகிறது. அவர் கூறும் அரசியல் முறைகள் சோழ பல்லவர் ஆட்சிமுறை பற்றிக் கல்வெட்டுகளால் தெரிபவற்றுடன் மிகவும் ஒத்தே காணப்படுகிறது. மேற்கூறியவற்றால் சாணக்கியர் நூலின் ஒப்புமையும் கால வரையறைப் படாத ஒற்றுமை என்றாகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக வடமொழி நூல்கள் அக்கால அறிஞர்களின் கூட்டுச் சரக்கு என்பதையும், தமிழிலக்கியத்தினும் வட மொழியின் திருந்திய இலக்கியம் பிற்பட்டது என்பதையும், சமயம், கலை, அறிவியல் ஆகியவற்றில் அது தமிழுலகுக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது என்பதையும், தமிழ் நூல்கள்போல் காலம், இடம், ஆசிரியர் குறிப்பற்றது என்பதையும் ஆராய்ச்சியாளர் நினைவில் வைத்தல் வேண்டும். நாம் மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சிப் பெரியார் இவ்வொப்புமை ஆராய்ச்சியில் முனைந்ததுடன் திருவள்ளுவர், இளங்கோ காலங்களையும் ஐயுற முற்படுகிறார். தமிழ்ப் புலவர்கள் அவருக்கு விடையிறுக்கக் கூடுமாயினும் அவரை ஓர் ஆராய்ச்சியாளர் என்று கருதாததால் விடையிறுத்திலர். அவர் கொள்கை வரலாற்றுக் கண்ணை மூடிக்கொண்டு தடவும் முயற்சி என்பதைக் காட்ட இரண்டு செய்திகள் மட்டும் கூறுவோம். ‘சிலப்பதிகாரம்’ கயவாகு என்ற இலங்கையரசன் காலம். இலங்கையில் இரண்டு கயவாகுகள் ஆண்டனர். முதலாமவன் கி.பி. 2ஆம் நுhற்றாண்டினன். இரண்டாமவன் கி.பி. 6ஆம் நுற்றாண்டுக்குப் பிந்தியவன். சிலப்பதிகாரமும் சங்க நூல்களும் முதல் கயவாகு காலத்தவையல்ல, இரண்டாமவன் காலத்தது என்பது அப்பெரியார் கூற்று. அப்பர் சம்பந்தர் 7ஆம் நூற்றாண்டவர் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்கள் தேவாரங்கள் சங்க காலத்தைப் பழங்காலமாகக் குறிப்பது பெரியார் கூற்றுக்கு முரண்படும். சிங்கள மொழியில் சிலப்பதிகாரம் கி.மு. 5ஆம் நூற்றாண்டிலேயே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பெரியார் கூற்று இதனால் முற்றிலும் அடிபடுகிறது. ஆரிய மொழிச் செருக்கு புதுவெள்ளமாய் ஓடிய பரிமேலழகர் காலத்தில் மங்காத வள்ளுவர் பெருமை, எப்பெரியார் காலத்தும் மங்காதெனவும், எவ் ஒப்புமைக்கும் ஈடு செலுத்தும் எனவும், காலப்பழைமை இல்லாதவிடத்தும் அதன் முதன்மை மாறாதெனவும் தமிழுலகம் உறுதியாக நம்பலாம். 12. நாடகத் தமிழ் கொற்கை நண்பன் ஒருவன் என்னுடன் உயர்தரப் பள்ளியில் பயின்று வந்தான். அவன் கிழிந்த ஆடைகளையே உடுப்பான். ஆனால் , அவன் ஆடைகள் ஒன்றும் அழுக்காயிருந்த தில்லை. அவனுக்கு வருவாய் மிகக் குறைவு. ஆனால், அவன் பிறர்க்கு உழைப்பதிலும் கையிலுள்ளவற்றைப் பிறர்க்குக் கொடுப்பதிலும் குறைபாடற்றவன். பெருந்தன்மையும் அன்பும் அவனிடம் இயல்பாகவே குடி கொண்டிருந்தன. பரம்பரைச் செல்வரும் அவன் செல்வப் பண்புகளுக்கு முன் நாணமுற்றனர். கொற்கை நண்பன் பிறப்பிடத்துக்கும் ஒரு நாள் சென்றிருந்தேன். அது ஊர் என்று சொல்வதற்குகூடப் பொருந்தாத நிலையிலிருந்தது. ஆனால், அங்கங்கே சில தெருக்கள் தேரோடும் வீதிகளை நினைவூட்டின. சில வீடுகளில் சிதைந்த சுவர்கள் கோட்டைச் சுவர்கள் போன்றிருந்தன. குப்பைக் கூளங்களிடையே அழகிய சிலைகளின் பகுதிகள், அரும்பொருள்கள் காணப்பட்டன. நண்பன் வீட்டுப் பழம் பொருள்களில் ஒன்று எல்லாரையும் பல நாள் மலைக்கச்செய்தது. அது ஒரு கடிகாரம் போன்றிருந்தது. அது அக்காலக் கடிகாரமோ என்று எண்ணினோம். ஆனால், அதில் கடிகாரத்தின் தெளிவான குறிகள் எதுவுமில்லை. நெடுநாள் கழித்துப் படைவீர நண்பன் ஒருவன் அதைக் கண்டு, “இது உங்களுக்கு எப்படிக் கிடைத்தது. இது வடக்கு நோக்கிக் கருவியாயிற்றே!” என்றான். ஆம். கொற்கை நகரத்தார் கப்பலோட்டிய காலத்தின் ஒரு நினைவூட்டு அது என்று அறிந்தோம். கொற்கை நண்பன் செல்வப்பண்பு, அவன் குடியின் பழஞ்செல்வம் நினைவூட்டுகிறது. கொற்கையின் அரும் பொருட்குவைகள் அதன் பழம் பெருமையைக் காட்டுகின்றன. இவற்றைப் போன்றே தமிழர் புதையல் நீதியாகிய சிலப்பதிகாரமும் தமிழர் பண்டைய முத்தமிழ் வளத்துக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. ஆயினும் கொற்கையிற் கண்ட வடக்கு நோக்கியின் தன்மையைப் படைவீர நண்பன் விளக்கும்வரை நாம் அதன் உயர்வை அறிய முடியாதிருந்தது போலவே, இச்சிலம்புச் செல்வத்தின் தன்மையும் நமக்கு முற்றிலும் விளங்கா திருக்கின்றது. படைவீர நண்பன் அனுபவ அறிவு நமக்குத் துணை செய்வது போல், இங்கு, பழந்தமிழர் மரபுகளை அறிந்தவர்களிடமிருந்து நாம் துணை பெறுதல் அவசியம். தமிழுரையாசிரியர்கள் ஓரளவு சிலப்பதிகாரத்தை உணர நமக்குப் பேருதவி செய்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் காலத்திலிருந்த தமிழ்ப் பண்பும் தமிழ் மரபும் கூட இன்று சிதைந்துவிட்டது. அவர்கள் துணையும் அவ்வளவுக்கு நமக்கு மலைப்பையே உண்டுபண்ணுகின்றது. அவர்கள் இதனை முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம் என்று அழைத்துப் போயினர். நாமும் அதனைப் பின்பற்றி அதனை அவ்வாறே அழைக்கின்றோம். ஆனால், எங்கே முத்தமிழ், எங்கே நாடகம் என்று தேடாதிருக்க முடியவில்லை. வரிப்பாட்டுகள் அங்கங்கே பாடப்படுவதனால் இசைத்தமிழ் ஓரளவு உண்டு என்னலாம். கூத்துப்பற்றி ஒன்றிரண்டு இடங்களில் குறிப்பு வருகிறது. அதனால் அது நாடகக்காப்பியம் ஆகும் என்று கூறி அமைதி பெறவேண்டுமா! இவற்றின் விரிவுகூட உரையாசிரியர்கள் தருவதன்றி வேறன்று. ஆகவே, அது நாடகக் காப்பியம் என்று கூறுவது வெறும் உபசார வழக்கு மட்டும்தானா? இன்று சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம் என்று கூறுவது ஒருவகையில் உபசார வழக்கேயாகும். நாடகம் என்றால் கூத்து அல்லது நடனம் என்று கொண்டால்கூட, நாடகக் காப்பியம் என்று வழங்கப்படும் அளவுக்கு அது அவ் வகைகளில் நிறைவுடையதாயில்லை. ஆயினும், அது பழங்கால நாடக இயல்பை அறிய உதவுவது; அதன் சின்னங்களை உடையது என்பதில் ஐயமில்லை. அச்சின்னங்களின் மூலம் அதன் பழைய நிலையை ஆராய்ந்து பின் நாடகக் காப்பியம் என்ற பெயருக்கு அது எவ்வளவு தூரம் தகுதியுடையது என்று காண்போம். நாடகம் என்பது உரையும் பாட்டும் கூத்தும் கதையும் விரவிவருவது. கேள்விக்கும் காட்சிக்கும் விருந்தளிப்பது. இன்று தமிழ் நாட்டில் நாடகங்கள் நடிக்கப்படுகின்றனவாயினும், அவை பழந்தமிழ் மரபுடன் தொடர்பு அற்றுப் போயிருக்கின்றன. ஆகவே, மிகப் பழையகால நாடக நிலையை அறிய அவை உதவ வில்லை. சிலப்பதிகார உரைக் குறிப்புகளும் மேற்கோள்களும் அந்நாளைய இசை, கூத்து ஆகியவற்றின் உயர் நிலையையும் விரிவையும் பெருக்கத்தையும் குறிக்கின்றன. ஆயின், இவ்வகல் விரிவுடைய கலைப்பண்பு எங்கே போயிற்று? முற்றிலும் அழிந்துவிட்டதா? சிலப்பதிகாரத்தை அறியும் அளவுக்கேனும் அவற்றை உய்த்தறிய முடியாதா என்று ஆராய்வோம். சிலப்பதிகாரத்தில் காணப்பட்ட இசைப்பண்பு அழியாது பல நூற்றாண்டுகள் நிலவியது என்பதற்குத் தேவாரம் சான்றுதரும். தேவாரத்தில் சிதைந்த பதிகங்கள் போக, மீந்தவற்றுள் பழைய பண்கள் பல இடம் பெறு கின்றன. இப்பண்களைப் பழங்காலத்தில் பயிலப் பாணர் என்ற தனி மரபினர் இருந்ததாக அறிகிறோம். சம்பந்தர் காலத்தில் பதிகங்களை யாழிற் பாடிய திருநீல கண்டயாழ்ப்பாணரும், தேவாரத்துக்குப் பண் வகுத்த நங்கையும் இம்மரபின ராவர். இம்மரபினர் பெயரை இலங்கை நாட்டு யாழ்ப்பாணம் இன்னும் நினை வூட்டுகிறது. சோழப் பேரரசர் தேவாரம் பாட அமர்த்திய ஓதுவார் மரபினர், பெரிதும் இம்மரபினர் தோன்றல்களாகவே இருந்திருக்கக்கூடும். பாட்டுப் பாடும் பாணமரபினர் சங்ககால முதல் சோழர் காலம்வரை காலத்துக்கேற்ப மாறிப் பின் அழிந்துபட்டனர். சங்க நாள்களில் பாணருடன் கூத்துப் பயின்ற மக்கள் விறலியர் எனப்பட்டனர். சிலப்பதிகாரத்தில் கூத்தின் ஒருவகை சாக்கையர் கூத்து என்று கூறப்படுகிறது. சாக்கையர் என்பவர் கூத்து வல்லுநர் என்று அறிகிறோம். பிற்காலத் தமிழகத்தில் இம்மரபும் பாணர் மரபைப் போலவே அற்றுப் போயிற்று. இவ்விருமர பினருமே பழங்காலத் தமிழ் அந்தணர் மரபுபோலும்! தமிழ் நாட்டில் இம்மரபு இன்று காணப்படவில்லையாயினும் மலையாள நாட்டில் அவர்கள் இன்றும் உள்ளனர். இன்றும் அவர்கள் பழந்தமிழ்ப் பெயரால் ‘சாக்கியர்’ என்றும் ‘சாக்கர்’ என்றும் வழங்கப்படுகின்றனர். அவர்கள் இன்றும் அந்தணராகவே கணிக்கப்படுகின்றனர். அவர்கள் தொன்றுதொட்டு சேர அரசர்களாலும் அவர்களது பிற்காலத் தோன்றல்களாலும் பேணப்பட்டு இன்றும் நாடக ஆசிரியராய் விளங்குகின்றனர். அவர்கள் நாடகம் இன்று மலைநாட்டுத் தமிழின் தோன்றலான மலையாளத்தில் ‘சாக்கியார் கூத்து’ என்றும், ஓட்டம் துள்ளல் என்றும் வழங்கப்படுகிறது. இதுவன்றி மலையாள நாட்டில் பழந்தமிழ் மரபின் இன்னொரு கலையாகிய பாவைக்கூத்து (பொம்ம லாட்டம்) தெலுங்கு நாட்டிலும் கதைகளி, ஊமைக்கூத்து முதலிய பல தமிழ்நாடக வகைகள் சிதைந்தும் உருத்திரிந்தும் மலையாள நாட்டிலும் நடமாடுகின்றன. பழந்தமிழ் நாடக இயல்பை அறியச் சிலப்பதிகார உரைக் குறிப்புகளுடன் இச்சிதைந்த தமிழ் நாடக முறைகளையும் வைத்து ஒப்பிட்டு நோக்குதல் வேண்டும். தமிழரின் பழஞ்சொத்தாகிய நாடகத்தமிழில் நாடக உருவம் இங்ஙனம் கொடுந்தமிழ் நாடுகளிலும், அதன் இலக்கிய வடிவம் ஓரளவு தமிழிலும் மீந்துள்ளது. அதாவது அச்செல்வத்தின் உடல் தமிழகத்திலும், உயிர் மலையாள முதலிய நாடுகளிலும் உள்ளது. எதெதற் கெல்லாமோ பணத்தை வாரியிறைக்கத் தயங்காத தமிழ்ச் செல்வர், இவ்வுடலையும் உயிரையும் இணைப்பின் தமிழ் நாடகம் இந்நாளைய உயிரற்ற இரவல் நடிப்பாயிராமல் உயிருள்ள, வளரும் தமிழ்க் கலையாய்விடும் என்பதில் ஐயமில்லை. தமிழிசை முற்றிலும் சிதையாமல் தேவாரத்தால் சிலகாலம் காக்கப்பட்டது போல், நாடகம் முற்றிலும் சிதையாமல் திருவாசகத்தில் காக்கப்பட்டிருக்கிறது. அதிலுள்ள திருப்பொன் னூசல், திருப்பொற்சுண்ணம், திருவெம்பாவை முதலியவையும், காப்பியங்களில் காணப்படும் கந்துகவரியும் உண்மையில் நாடக உறுப்புகளேயாகும். பழந்தமிழ் நாடக இயல்பை அறிய இன்னோர் உதவி, பிறநாட்டு நாடக வரலாறுகள் ஆகும். சிலப்பதிகாரத்தில் பொருளற்ற பல சிறு செய்திகள், அவற்றால் பொருளுடையவை யாகக் காணப்படும் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம். சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு காதையும் ‘என் அல்லது என’ என்று முடிகின்றது. இது ஒரு ‘குருட்டு விதி’ என்று எண்ணப்படுகிறது. ஆனால், பழைய நாடக இயலில் இது ஓர் அரிய பொருளைக் குறித்தது. வட நாட்டிலும், இங்கிலாந்தில் ஷேக்°பியர் காலங்களிலும்கூட நாடக மேடைக்கு முன் திரைகள் கிடையா. எனவே, ஒரு காட்சி முடிந்து மறுகாட்சி வருவதைக் குறிக்க ஆசிரியனே ஏதாவது முறையைக் கையாளவேண்டி யிருந்தது. வடமொழியில் இதற்காகவே ஒவ்வோர் அங்க முடிவிலும் சூத்திரதாரன் ஒரு முடிவுரை கூறுவான், ஒவ்வோர் அங்கத் தொடக்கத்திலும் ஒரு முன்னுரை கூறுவான். இது மிகப் பழங்கால முறை. ஷேக்°பியர் காலத்தில் இதற்குப் பதில், பாட்டிலேயே ஒரு புதுவகை அடியையோ எதுகையையோ பயன்படுத்தினர். தமிழர் என், என என்ற சொல்லால் காட்சி மாற்றம் குறித்தனர். சிலப்பதிகாரத்தை நாடகம் என்று நாம் கூறுவது உபசார வழக்கே என்று தோன்றுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று, அதில் வருணனை மிகுந்திருப்பது. காளிதாசன், ஷேக்°பியர் முதலிய நாடக ஆசிரியர்களும் இவ்வகையிலேயே அதிக வருணனைக்கு இடங்கொடுத் துள்ளனர். காரணம் அக்காலத்தில் திரைகள் அதிகம் பயன்படாமையே. பண்டைத் தமிழகத்தில் பலவகை எழினிகள் இருந்தனவாயினும், அவை சில சிறப்பான கட்டங்களுக்கு மட்டுமே பயன்பட்டன. மேலும் அவை கூத்து அரங்கிற்கே சிறப்பாக வழங்கின. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் அரங்குகள் பெரும்பாலும் கூத்தரங்குகளே யாகும். ஏனெனில் நாடக அரங்குகள் பின்கட்டு இல்லாது நாற்புறமும் திறந்து இருந்தன. கிரேக்க நாடகங்கள் இவ்வகையில் தமிழ் நாடக இயலை ஒத்திருந்தன. இக்காரணத்தால் அக்காலம் உடைமாற்றம் உரு மாற்றம் இல்லை. இசையிலும் கூத்தில் பல நடிகர் இருந்தபோதிலும் நாடகத்தில் பெரும்பாலும் ஒருவரே நின்று கதையை அவிநயம் செய்தனர். இதனால்தான் சிலப்பதிகாரத்தில் நாடகம் உரையாடல் முறையில் அமையாமல், கதை கூறும் முறையில் அமைந்திருக்கிறது. இசைப் பாட்டுகள் மட்டும் தனித்தனி நடிகர் கூற்றாய் அமைந்துள்ளன. தமிழில் உரைப்பாட்டு மடை, வடமொழி சூத்திரதாரர் கூற்றை ஒக்கும். இன்றைய சாக்கியர் கூத்து நாடகத்தைக் காண்போர், சிலப்பதிகாரம் உண்மையில் சாக்கியர் கூத்துப் போன்ற ஒருவகை நாடகத்துக்கென எழுதப்பட்டதென்பதை உணர்வர். சாக்கியர் கூத்தில் ஒரே நடிகர். அவர் ஆடும் மேடை, நடுவில் அமைந்து கேட்போர் நாற்புறமும் இருப்பர். எனவே, முகபாவங்களைவிட அவிநயம் இந்நாடகத்தில் முக்கியமானது. சிலப்பதிகாரத்தி லுள்ள உரையாடலும் சரி, வருணனையும் சரி, பாவங்களைவிட அவிநயங் களுக்கே ஏற்றமுறையில் அமைந்திருப்பதைக் காணலாம். இன்று ஒவ்வொரு காதையும் ஒரு நீண்ட வாக்கியமாய் அமைந்திருப்பது இன்றைய மாணவர்க்கு மலைப்பைத் தரலாம். ஆனால், அவிநயத்தில் அது உண்மையில் தொடர்ந்து பொருளையும் நயத்தையும் கொண்டது என்பதைச் சிலப்பதிகாரத்தைச் சாக்கியர் கூத்தாக மலையாளச் சாக்கியர்களைக் கொண்டு நடிக்கவிட்டுப் பார்த்தால் அறியலாம். பழந்தமிழ் நாடகம், ஆதரவற்ற நிலையில் குறவஞ்சிப் பாட்டாகவும், தெருக் கூத்தாகவும் அணிமைக் காலம் வரை ஓரளவு பயின்றே வந்திருக்கிறது. அயலார் ஆட்சியில் அயல்நாட்டுப் பண்பில் மயங்கிய செல்வரும், உயர் வகுப்பாரும், அவற்றைக் குறையுடையதாகக் கருதி, அவற்றைச் சிதைய வைத்தனரேயன்றி வேறன்று. புறக்கணிப்பு நஞ்சு ஏறி மலையாள நாடகத்தைக்கூட அழிக்க விருக்கிறது. தமிழன்பரும் மலையாள, தெலுங்கன்பரும் ஒத்துழைத்தால் அதனைச் சீரமைத்தல் ஒருவாறு கூடும். இவ்வகையில் வடமொழி நாடகமும் பெரிதும் பயன்படுவது என்றே எண்ணலாம். வடமொழி நாடகம் சமயச் சார்பற்ற தாக வளர்ந்ததையும், பண்டைய நாடகப் புலவர் பெரும்பாலும் புத்தராகவோ, சமணராகவோ, தாழ்ந்த வகுப்பினராகவோ இருந்து வந்திருப்பதும் நோக்க வடநாட்டில் பயின்ற அக்கலையும் உண்மையில் வடநாட்டுப் பழந் திராவிடக் கலையின் ஒரு தேய்ந்து திரிந்த வளர்ச்சியேதான் என்று எண்ண இடமுண்டு. தொலை நாடுகளான கிரீசு, இங்கிலாந்து நாடுகளின் நாடக வளர்ச்சிகூடத் தமிழ்நாடக வளர்ச்சி முறை காண உதவுமென்பது உறுதி. திராவிடமொழி யன்பர்களும், திராவிடச் சார்பு மலிந்த வட இந்திய மொழி அறிஞர்களும், ஒன்றுபட்டு ஆராயின், இந்நாட்டின் பழங்கலைச் செல்வங்களில் பல புதையுண்ட பண்புகளை உயிர்பெறக் காணலாம். இவ்வகையில் வேறெந்நூலினும் பேருதவிபுரியும் பண்டைப் பெருநூல் சிலப்பதிகாரம் என்பது மிகையாகாது. அந்நூல் மூலம் வடமொழி நாடகக் கலையின் பிறப்பு வளர்ப்புப் பற்றிய பல செய்திகள் கூட விளக்கமடையக் கூடும். 13. தமிழக அறிவியல் வளர்ச்சி தமிழக அறிவியல் வளர்ச்சி என்றதுமே எவரும் தமிழகத்துக்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றுதான் கேட்கக்கூடும்! ஆம், இன்றைய தமிழக நிலை அதுதான்! ஆனால், இதே நிலைமை என்றும் இருக்க முடியுமா? இந்நிலை மாற வேண்டாவா? அதற்கான கனவுகளாவது காண வேண்டாவா? திட்டம் தீட்ட வேண்டாவா? இவை பற்றித் தமிழகத்தில் கருத்துள்ள தமிழர் சிந்திக்காமலிருக்க முடியாது. சிறப்பாகத் தமிழகப் பணியில் முனையும் இளைஞர்கள் இத்துறையில் இன்னும் நெடுநாள் அசட்டையாய் இருக்க முடியாது. இன்று தமிழ் மாணவர்களிடையே தமிழார்வத்தை ஊட்டிவிட்டோம். அத் தமிழார்வம் தமிழறிவை ஊட்டிவிட்டது. அத்துடன் நிற்கவில்லை. அவர்கள் தமிழ்ப் பணியை விரிவுபடுத்தித் தமிழிலக்கியப் பணியுடன் நிறுத்தாமல், தமிழர் பணியில் இறங்கிவிட்டனர். தமிழரைப் பண்டைத் தமிழர், முழுத் தமிழ்ப் பண்பாடுடைய திராவிடர்களாக்க முனைந்த திராவிட இயக்கத்தையும், தன்மான இயக்கத்தையும் பகுத்தறிவியக்கத்தையும், சீர்திருத்த இயக்கத்தையும், தன்மான திராவிட நாடு காணும் ஆர்வத்தையும் இத் தமிழார்வம் தலை நின்று பரப்பிவிட்டது. இவற்றை முழு அளவில் பயன்படுத்தி நாட்டு வாழ்வை உயர்த்த வேண்டுமானால், இளைஞர் ஆக்கப் பணியில் இறங்குதல் வேண்டும். தமிழர்க்கு, திராவிட இயக்கத்தவர்க்கு ஆக்கத் துறையில் முதல் முன்னணியாயிருக்க வேண்டிய துறை அறிவியல் வளர்ச்சி பற்றிய திட்டங்கள் தீட்டுவதே. தென்னாட்டில் இதுவரையில் ஏற்பட்டுள்ள சீரிய முயற்சிகள் இரண்டே இரண்டுதான். திட்டம் தீட்டுமுன் அவற்றில் கருத்துச் செலுத்துதல் வேண்டும். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று அறிவியல் வளர்ச்சிக் கான ஆக்கக் கருவிகள் செய்யும் தொழில். ஆந்திர நாட்டில் இதற்காக ஆந்திர அறிவியல் கழகம் நிறுவப்பட்டு நடைபெறுகிறது. திராவிடப் பண்பாட்டடிப் படையுடன், திராவிட நாட்டு நோக்குடன் இது அமையப் பெறவில்லை யானாலும், இது திராவிட நாட்டில் இருப்பதே. இது போன்ற கழகங்கள் தமிழகத்திலும், பிற தென்னாட்டுப் பகுதிகளிலும் அமைதல் வேண்டும். இரண்டாவது அறிவியலுக்கு உதவும் தொழில் துறைகளான ஆலைகள், பொறியூர்திகள் செய்யும் தொழில் முதலியவையே, இத் துறையில் முதலாளியாக மட்டுமன்றிப் புத்தாராய்ச்சியாளராகவும், புது ஆக்க முயற்சியாளராகவும் அறிஞர் ஜி.டி. நாயுடு அவர்கள் விளங்குகிறார்கள். பகுத்தறிவியக்கம் அறிவியலியக்கமாக வளருமானால், அத்தகையோர் இன்று இத்துணை அல்லற்படத் தேவையிராது, திராவிடநாடு பெறும் வரை அவர்கள் வாளா இருத்தல் வேண்டும் என்பதில்லை, சிறு அளவிலாவது அவர்கள் உழைப்பை பயன்படுத்தலாம். திட்டந் தீட்டுவதன் அவசியம் இது. திட்டத்துக்கான கூறுகள் என நாம் நினைப்பவற்றைத் தற்காலிகமாக ஐந்து கூறுகளாக வகுக்கலாம். 1. மொழித்துறையில் அதற்கான பழஞ்சொற்களைப் புகுத்துதல், புதுச் சொற்களை ஆக்குதல். 2. மேடைப் பேச்சுகளிலும், பத்திரிகைக் கட்டுரைகளிலும், இயக்க நடைமுறைகளிலும் அமைப்புகளிலும், அறிவியல் தலைப்புகளுக்கும், பிரசாரங்களுக்கும் வழிவகுத்தல். 3. அறிவியல் கருத்துகளை மக்களிடம் பரப்பும், சிறு வெளியீடுகளைப் பெருக்குதல், அறிவியல் வளர்ச்சிக்குக் குந்தகமாக இருக்கும் பழைய மூட நம்பிக்கை மனப்பான்மையை ஈவிரக்கமின்றிச் சாட இளை ஞர்கள் பலரை ஊக்கி, நூல்கள் எழுதுவித்தல். 4. தொழிலாளர்களுக்குச் சிறப்பாகவும் பொதுமக்களுக்குப் பொது வாகவும் அறிவியல் வளர்ச்சியாலும் தொழில்துறை அறிவாலும் அனுபவத்தாலும் ஏற்படும் நாட்டுப் பொருள் துறை மேம்பாட்டையும் தனி மனிதர் வருவாய் மேம்பாட்டையும் விளக்கி, தொழிலாளர்களை யும், தொழில் முதலாளிகளையும் ஒருங்கே அத்துறையில் உழைக்க, அறிவு செலுத்த, முதலீடு செய்யத் தூண்டுதல். 5. தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் பிள்ளைகளுக்கும் தொழிற் பள்ளிக்கூடங்களை இயக்கச் சார்பிலேயே தொடங்கி, அரசாங்க ஆதரவை எதிர்பார்த்தும் பாராமலும் தொழில்கள் நடத்தக்கூடிய வகையில் தொழிற்கல்வி ஏற்படுத்தல், தொடக்கத்தில் தற்காலிகமாக ஆங்கில அறிவியல் துறைச் சொற்களையே கையாண்டு தமிழில் கற்றுக் கொடுக்கலாம். அறிஞரைவிடத் தொழிலாளிகள் நல்ல சொற்களை ஆக்கிக் கொள்வார்கள். அவர்கள் அனுபவ உலகத்தில் இருப்பவர்களாதலால் அவர்களின் உதவியுடன் அதை எளிதில் செய்ய முடியும். தொடக்கத்தில் நாட்டவர் ஆதரவு தேடியும் மிக எளிதில் விரைவில் தொழில் மூலம் வருவாயையே உண்டு பண்ணியும் மக்கள் ஆர்வத்தைப் பெருக்கலாம். இவற்றுள் முதலாவது மொழித்துறை. இதனால் இன்று ஏற்பட்டிருக்கும் பெருஞ்சிக்கல் தூயதனித் தமிழைத்தான் வழங்குதல் வேண்டுமா? அல்லது ஆங்கிலச் சொல்லையே வழங்கலாமா என்பதே. இதில் தமிழ்ப்பண்பு மிக்கது எது என்பதைப் பற்றித் தமிழர்க்குள் இரண்டு கருத்து இருக்க முடியாது. ‘தமிழில் முடியுமானால்’ தனித்தமிழே சிறந்தது; அதனையே கூடிய மட்டும் வழங்குதல் சிறப்புடையது. தனித்தமிழே வழங்கப்படல் வேண்டும் என்பதைத் தமிழரும் மறுக்க மாட்டார். பிறமொழியாளரும் அவர் தமிழின் பகைவராயிருந்தால் அன்றி மறுக்கமாட்டார். தமிழில் சொல் இல்லாமல், அல்லது காணமுடியாமல் போனால் பிற மொழிச்சொல்லை வழங்குவது சரி என்பது கொள்கையளவில் ஏற்கக் கூடியதே. ஆனால், காரியத்தில் இது சரியன்று, ஏனெனில், உண்மையில் மற்றெம் மொழியையும்விடத் தமிழில் இவ்வாய்ப்பு மிகுதியே. இன்றில்லாவிட்டாலும் தமிழ்ப் புலவர், பொதுமக்கள், தொழிலாளர் ஆகிய மூவரும் அறிவியலறிவுபெறும் காலத்தில் எல்லாக் கருத்துகளும் தமிழில் அமைந்துவிடுவது உறுதி. அக்காலத் தில், தமிழ் பிற இந்திய மொழிகளுடனும் வட மொழியுடனும் மட்டுமன்றி, மேனாட்டு மொழிகளுடனும்கூடப் போட்டியிடும் தன்மையுடையது என்பது மொழியாராய்ச்சி யாளர் கண்டுவரும் முடிவு. அன்றியும் தமிழைவிட வளம் குறைந்த பிறமொழிகளில்கூட வடமொழிச் சொற்கள் புகுத்தி இத்தாய் மொழிச் சொற்கள் ஒழிக்கப்படாமலிருக்குமானால், அவற்றிலும் போதிய சொற்கள் வளர்ச்சியடையும் என்பதை மலையாள மொழியும், கன்னடமொழியும், இராயல சீமாத் தெலுங்கு மொழியும் பயில்பவர் அறிவர். வடமொழியை இன்று புகுத்த முனைபவர் பிறமொழிக் கலப்பு வேண்டுமென்று பொதுவாகக் கூறுபவர்போல் பிரச்சாரம் செய்வது உண்மையில் வடமொழிக் கலப்புக்கு மட்டுமேயாகும். இத்தகையோர் பிறமொழிப் பசப்புப் பசப்புவதை விட்டுத் தாய்மொழிப் பற்றுடையவராய்த் தங்கள் வடமொழியிலேயே அறிவியல் நூல்கள் எழுதி மேனாட்டவர்க்கு வழி காட்டட்டுமே என்று நேரிடையாக அறைகூவல் விடுக் கிறோம்! வடமொழியில் முடியாத ஒன்றைத் தாய்மொழியில் புகுத்து வானேன்? தங்கள் தாய்மொழியாய் இயங்கும் தன்மை கூட அற்ற ஒருமொழியின் சாக்காட்டுநோயை உயிருள்ள தாய்மொழிகளிலும் குத்திச் செலுத்தி அவற்றைச் சாகடிக்க முயல்வானேன்? பிற மொழிச்சொல் இன்றியமையாது தேவைப்பட்டால் அறிவியல் வளமும் உலக வழக்கும் உடைய ஆங்கிலம் முதலிய மேனாட்டு மொழிச் சொற்களை எடுக்கலாமே? இந்தியாவில் ஒற்றுமை வேண்டுமானால் எல்லாத் தாய்மொழிச் சொற்களையுமே பயன்படுத்தலாமே! தாழ்த்தப் பட்ட நாட்டு மக்களுக்குப் புரியாமல் தமக்கு மட்டுமே புரிந்ததாகக் காட்டிக்கொள்ளும் அறிவு வரம்பற்ற மொழியின் புரியாச் சொற்களைப் புகுத்திக் குழப்புவானேன்! தொழிலாளர்களைப் பற்றியவரை அவர்கள் இன்று முடிந்தமட்டும் தங்கள் வழக்காற்றிலுள்ள தனித்தமிழ்ச் சொற்களுடன் தற்காலிகமாகவேனும் ஆங்கிலச் சொற்களை வழங்குவதே அவர்கள் விரைந்த அறிவியல், தொழில்கல்வி வளர்ச்சிக்கேற்றது ஆகும். மொழித் துறைக்கு அடுத்தது பிரசாரத்துறை. இதில் ஆக்கவேலைக்கு முன்னீடான சூழ்நிலை மக்களிடையே சமயத்துறையில் உள்ள போலிச் சமயப் பண்புகளான மூடநம்பிக்கைகள், சோதிடம், மந்திரம், சகுனப்பலன், இராகுகாலம், குறி முதலியவை பார்த்தல் ஆகியவற்றினால் ஏற்படும் மூட மனப்பான்மையை அகற்ற மேடை, பத்திரிகை, பள்ளிக்கழகங்கள், தமிழ் இலக்கியக் கழகங்கள் ஆகிய எல்லாவற்றையும் பயன்படுத்துதல் வேண்டும். சங்க இலக்கியக் கால அறிவிய லாக நமக்கு எந்நூலும் எட்டவில்லையாயினும் அக்கால உயர் அறிவியல் பொது அறிவை அவ்விலக்கியம் காட்டுவதுடன், பகுத்தறிவுச் சூழ்நிலையை உலகின் வேறெவ் விலக்கியத்தையும்விட அது மிகுதியாகக் கொண்டுள்ளது என்பதை இலக்கியக் கழகங்கள் எடுத்து விளக்கலாம். தமிழ்நாட்டுச் செல்வர்கள் தங்கள் செல்வத்தின் பெரும்பகுதியைத் தமிழ்நாட்டுக்குப் பயன்படாத துறைகளில் செலவிடுவதைக் கண்டித்துக் கல்வி அறிவியல் முதலிய நற்றுறைகளில் அவர்கள் கவனத்தைச் செலுத்துதல் வேண்டும். அறம் என்றும் புண்ணியம் என்றும் சாக்குக் காட்டிச் சோம்பேறிகளுக் கும் ஊதாரி உண்டிக்காரர்க்கும் கொடுக்கும் பணம் அறமுமன்று, புண்ணியமு மாகாது. நாட்டுமக்களால் பழிக்கத்தக்க ஒரு தீச்செயல் என்று அவர்கள் காது செவிடுபட எடுத்துக்காட்டுதல் வேண்டும். தவிர அறிவியல் வளர்ச்சியில் பங்கு கொண்டால் அமெரிக்கா போன்று செல்வமும், இரஷ்யா போன்று நாட்டு வளமும் பெருக்கலாம் என்ற எண்ணத்தையும் அவர்களுக்கு ஊட்டுதல் வேண்டும். தொழிலாளர்களும் சிறு தொழில் முதலாளிகளும் தாமே அறிவியல் வளர்த்து அறிவியலாளராகும்படி அவர்களுக்கு ஊக்கமும் உதவியும் தரத் தற்காலிகமாக ஆங்கிலச் சொற்களுடனோ, முடிந்தவிடத்துத் தமிழ்ச் சொற்களுடனோ அறிவியற் கல்விதர அறிஞரும் மாணவரும் முன் வரவேண்டும். ஏனெனில் ஆங்கிலம் கற்றவர் அறிவு ஆங்கிலங் கல்லாத தமிழர்க்குக் கொடுத்த பின்தான் நாட்டின் அறிவாகும். அயல்மொழியில் படித்த அறிவு என்றும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும். ஒரு புத்தாராய்ச்சியாளரைக்கூட அது கொண்டு தரும் தன்மையுடையதன்று. வடநாட்டில் உள்ள ஜே.ஸி. போ°, பி.ஸி.ரே, தென்னாட்டு சி.வி. இராமன் ஆகியவர்கள் புத்தாராய்ச்சிகள் யாவும் பாலைவன மலர்களே, நாட்டு மக்கள் வாழ்வுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் உதவ முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆங்கிலநாட்டுப் பற்றும் கல்விகற்ற வகுப்பினர் அடிமை மனப்பான்மையுமே அவர்களிடம் அறிவு வளர்ச்சியுடன் தாய்மொழி வளர்ச்சியும் நாட்டுப் பற்றும் ஒன்றுபடாமல் செய்துள்ளது. அதுவே அறிவியற் படைப்பாற்றலையும் தடுக்கிறது. தாய்மொழி, அறிவியல், தொழிலுலகு மூன்றும் சேர்ந்த அறிவியலே நாட்டு அறிவியல் ஆகும். வளர்க நாட்டறிவியல். வாழ்க தமிழ். 14. உயர் தனிச் செம்மொழி ஒரு நாடு உலகை நோக்க, பிற நாடுகளைப் பார்க்கப் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருத்தல் கூடும். ஆனால், எந்த நாடும் அந்த நாட்டு மக்களுக்கு மிகச் சிறிதாகத் தோற்றும் அளவுக்குச் சிறுமையுடையதாகாது! உலகில் மிகச் சின்னஞ் சிறிய நாட்டிலும் அந்நாட்டின் மக்கள் தம் நாட்டைப் பொன்னெனப் போற்றாதிரார். மொழியின் நிலையும் இதுவே. ஆனால், இந்தியப் பெருநிலப் பரப்பில் எங்கும் வாழ்ந்த தமிழ் மக்கள்-தம்மொழி, தம்இனம், தம் நாடு ஆகியவற்றின் பெயரைக்கூட ஏற்க நாண மடைந்து வந்திருக்கின்றனர். அதன் பயனாகத் தமிழினத்தவர் பலர் படிப்படியாகத் தம்மை வேறினத்தவர் என்று கொள்ளலாயினர். தமிழகத்திலும் உயர்வகுப்பார் என்று தம்மைக் கூறிக் கொள்பவர் பலர். தாம் தமிழர் அல்லர் ஆரியர் என்று கூறிக்கொள்ளவும், தம் பெயரைப் பிறமொழிகளில் கொண்டும் பிற நாட்டுமக்கள் ஒலிமுறை, சொற்கள், மொழிகள் ஆகியவை பேணியும், தமக்கு மேம்பாடு தேடுவாராயினர், அறிவூழியாகிய இவ்வூழியில், தம்மினம் மறுத்த பிற மொழியாளர்கூடத் தம்மொழியைப் பேணி அதிலேயே எழுதவும் பேசவும் முனையும் நாளில், தமிழர் மட்டும், அந்தோ, பிறமொழி பேசுதலும் எழுதுதலும் உயர்வென்று கொண்டு வயிற்றுக்காகத் தன்மதிப்பை விற்கும் நிலையிலிருக்கிறார்கள்! தமிழ், தமிழகம், தமிழ்ப்பண்பு ஆகியவை பற்றி இன்று பழிப்பவர் மட்டுமேயன்றிப் புகழ்பவர்கள் கூட அதன் உள்ளார்ந்த மதிப்பையும் வளத்தையும் நன்கு உணர்வதில்லை! உலக மக்கள் நோக்கில், தமிழ் இன்னும் சிறுமைப்பட்டே காணப்படுகிறது. இதற்குக் காரணம் அவர்கள் தமிழின் இன்றைய நிலையையும், தமிழர் இன்றைய நிலையையும் கொண்டு அதனை மேற்போக்காக மதித்து விடுகின்றனர். இன்று உலகில் பெரும்பாலாகப் பேசப்படும் மொழிகள் ஆங்கிலம். சீனம், இந்தி, வங்கம் முதலியவை. தமிழ் பேசுவோர் தொகை இவற்றினும் மிகக் குறைவு. பேசப்படும் இடமும் மிகக் குறுகிய இடம். எனவே, இந்நிலையிலுள்ள பல மொழிகளுடன் வைத்தே தமிழ் எண்ணப்படுகிது. வழங்கா மொழியாகிய வடமொழி இம்முறையில் எண்ணப்படுவதில்லை! வரலாற்று முறையிலும் இலக்கியப் பண்பாட்டு முறையிலும் அதன் உயர்வு உணரப்படுவது இதற்குரிய காரணம் ஆகும். தமிழ்க்கும் இத்தகைய உயர்பண்பாடு உண்டென்பதை இன்றைய தமிழர் நிலையும்-தமிழ் நிலையும்- தமிழர் புறக்கணிப்பும்-திரையிட்டு மறைக்கின்றது. ஒரு வேளை தமிழும் வடமொழிபோல் வழங்காதிருப்பின் இவ்வுள்ளார்ந்த பண்புகள் மதிப்புப் பெறக்கூடும் என்றுகூடக் கூறலாம். ஆகவே, காய்தலுவத்த லின்றித் தம்மொழியில் கருத்தூன்றும் தமிழ் இளைஞர்க்கும் பிறநாட்டு நல்லார்க்கும் தமிழின் வளம், தனிச் சிறப்புகள் ஆகியவற்றை அறிவியல் வரலாற்று முறைகளில் பிறழாது எடுத்துக் கூறுவது பயனுடைய தாகும். தற்கால மொழி என்ற முறையில் பெறப்படாத உயர்வு தமிழ்க்குத் தொன்மொழி-என்ற நிலையில் பெறப்படலாம் என்று நாம் கருதக்கூடும். தொன் மொழிகளில் மக்கள் வாழ்க்கைக்கு நிலையான பயனுடையவையாய், முக்காலத் தும் அதன் வழிகாட்டிகளாய் இயங்கும் மொழிகள் உயர் தனிச் செம்மொழிகள் (ஊடயளளiஉயட டயபேரயபநள) எனப்படும். கிரேக்க மொழியும் இலத்தின் மொழியும் ஐரோப்பியரால் உயர்தனிச் செம்மொழிகள் எனப் போற்றப்படுகின்றன. இன்று வடமொழியும் அவற்றுடன் ஒப்ப உயர்தனித் செம்மொழி என்று ஏற்கப்பட்டிருக் கிறது. உலகின் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் கிரேக்க இலத்தின் துறைகளுடனொப்ப வடமொழிக்கும் தனித்துறை வகுக்கப்பட்டுள்ளது. இம் முதன் மொழிகளுக்கும் அடுத்தபடியாக உலகப் பெருஞ் சமயங்களின் தாயக மொழிகளாகிய ஏபிரேயம், அரபு முதலியவையும் பாரசிகமும் இடம்பெறுகின்றன. உயர்தனிச் செம்மொழிகள் நிலையிலன்றா யினும் வரலாற்றுச் சிறப்பும், இடச் சிறப்பும் உடையவையாக ஐ°லாண்டிக், காதிக், பழம்பாரசிகம் முதலிய சில்லறைத் தொன் மொழிகள் இயங்குகின்றன. நாட்டு வரலாற்றாராய்ச்சியும் இலக்கிய வரலாற்றா ராய்ச்சியும் தொடக்க நிலையிலிருந்த காலத்தில் தமிழ் இலக்கியம் மற்ற வட இந்திய, தென் இந்திய மொழிகளிலும் பழைமையுடையது என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப் பட்டது. ஆனால், அது எவ்வளவு தொலைவு பழைமையுடையது என்பது உணரப்படாமலே இருந்தது. தமிழில் பெரும்பற்றுடைய கால்டுவெல், போப் ஆகியவர்கள்கூட இன் றிருக்கும் தமிழிலக்கியத்தின் மிகப் பழைமை வாய்ந்த திருக்குறள், சங்க இலக்கியம் ஆகியவற்றின் காலம் எட்டாம் நூற்றாண்டு என்றே கருதியிருந்தனர். அவை கி.பி. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவையென்பதும், தொல்காப்பியம் அவற்றினும் மிகத்தொன்மை வாய்ந்ததென்பதும் இப்போது தெளிவு பட்டுள்ளது. தமிழில் இக்காலத்துக்கு முன் இலக்கியமே இல்லை என்று கொண்டால்கூட இந்தியாவில் வடமொழி உட்பட எல்லா மொழி இலக்கியங்களுக் கும் தமிழ் ஆயிர ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் முற்பட்டதாகும். இக்காலத் திலும் பழைமை யுடைய உலக இலக்கிய மொழிகள் உயர்தனிச் செம்மொழிகளுள் முதல் இரண்டு மொழிகளும் எபிரேயமும் மட்டுமேயாகும். ஆனால், தமிழில் தொன்மை மிக்கவை என்று நாம் கொள்ளும் நூல்களுள் எதுவும் கலைப் பண்பாட்டு வகையில் தொடக்கப்படி இலக்கியத்தைச் சார்ந்த நூலாகக் காணவில்லை. தொடக்கப்படி நாகரிகத்தைக் குறிப்பதாகவும் இல்லை. முதல் இலக்கிய நூலான திருக்குறள், அன்றும் இன்றும் தமிழகத்தில் மட்டுமன்றி உலகிலேயே ஒப்பும் உயர்வுமற்ற தனிப்பெருநூல். தொல்காப்பியமும் இன்றிருக்கும் இலக்கணங்களுள் பழைமை யுடையதாயினும் பிற்கால இலக்கண நூல்கள் அனைத்தையும் விட விரிவானது. சங்க இலக்கிய நூல்களும் முற்ற வளர்ந்த ஓர் இலக்கியத்தின் சிதறிய துணுக்குகளின் தொகைகளேயாம். மேலும் தொல்காப்பியத்துக்கு முன்னும் விரிந்த இலக்கண இலக்கியங்கள் இருந்தன என்பதை அதில் காணப்படும் அகச் சான்றுகளாலேயே உய்த்தறியலாம். மரபுரையோ இதற்கு நெடுங்கால முன்னதாகவே இருபெருஞ் சங்கங்கள் இருந்ததாகவும், இன்றிருக்கும் இயல்பகுதி மட்டுமன்றி அக்காலத்தில் இசை, நாடகம் என்ற இருவேறு பெரும் பிரிவுகளிருந்ததாகவும் குறிப்பதுடன், அத்தகைய நூல்கள் பலவற்றின் பெயர்களும் பகுதிகளும் மேற்கோளுரைகளும் தருகின்றன. இவற்றை ஒருசார்பின்றி நோக்கினால் தமிழிலக்கியம் உண்மையில் வடமொழி இலக்கியத்தினும் மற்றெவ்விலக்கியத் தினும் மிக்க தொன்மை யுடையதாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதைக் காணாதிரார். ஆகவே, தமிழில் தொன்மை ஒன்றை நோக்கினாலும் உயர் தனிச் செம்மொழிகளுள் அது இடம்பெறத் தக்கது என்பது தெளிவு. ஆனால், அதன் தனிச்சிறப்பு இதனுடன் நின்றுவிட வில்லை. இலக்கியப் பரப்பிலும் இலக்கியச் சிறப்பிலும் அதற்குத் தனி உரிமைகள் உண்டு. அத்தோடு பிற உயர்தனிச் செம் மொழிகள் அனைத்தும் இறந்துபட்ட மொழிகளாயிருக்க, தமிழ் ஒன்றுமட்டும் இன்றும் உயிருடனியங்குவதுடனன்றி, இன்னும் எத்தனையோ தடங்கல்களையும் புறக்கணிப்புகளையும் பூசல்களையும் தாண்டி வளம்பெற்று வளரத்தக்க நிலையை உடையதாகவே இருக்கிறது. தமிழ், தமிழகம், தமிழிலக்கியம் ஆகியவை பற்றி அறிஞர் உலகில் கூடப் பல தப்பெண்ணங்களும் அறிவுக் குழப்பங்ளும் உண்டு. நாட்டு வரலாறுகள், மொழி ஆராய்ச்சி, பழம் பொருள் ஆராய்ச்சி தற்கால வாழ்வியலாராய்ச்சி (ளுடிஉiடிடடிபல) ஆகியவற்றின் முடிபுகள் ஒருமுகப்படுத்தப்படின் இவற்றைப் பற்றிய உண்மைகள் விளக்கம் பெறக்கூடும். ஆனால், தமிழகத்திலும் இந்திய மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பொது மக்களிடையே ஆராய்ச்சி முடிவுகள் எளிதில் சென்றெட்டுவ தில்லை. தமிழர்களின் இன்றைய அவல நிலையும் தமிழகத்தின் அடிமைச் சூழ்நிலைச் செறிவும் இவ்வகையில் அறியாமைத் திரையோடு மேலும் இருட்டடிப்புத் திரையிட்டு வருகின்றன. மேனாட்டினர் உள்ளத்தில் இலக்கிய வளமுடைய மொழி என்றாலும் தாய்மொழி என்றாலும் அது தற்காலப் புதுமொழி என்றே பொருள்படும். ஏனெனில், உலகில் தற்கால மொழிகள் கிட்டத்தட்ட அனைத்தும் இலக்கிய அளவில் ஒன்றிரண்டு அல்லது நான்கு நூற்றாண்டுக் கால வாழ்வே உடையவை. நேர்மாறாகப் பண்டைய மொழிகள் எனப்படுபவை ஆயிரமாண்டு முதல் மூவாயிரமாண்டுவரை முற்பட்ட மொழிகள். ஆனால், இவை யாவும் (சீனமொழி நீங்கலாக) இறந்துபட்ட மொழிகளே. ஆகவே, பண்டை இலக்கிய மொழி அல்லது உயர் தனிச் செம்மொழி (ஊடயளளiஉயட டுயபேயரபந) என்றால் இறந்துபட்ட மொழி யாகவே இருக்கும் என்ற தப்பு எண்ணம் ஏற்பட்டுள்ளது. இத் தப்பெண்ணத்துக்கு ஆளான மொழி தமிழ் ஒன்றே! இரண்டு உலகுகளை இணைக்கும் பாலம் உலக மொழிகளிடையேயும் சரி, இந்திய மாநில மொழிகளிடையேயும் சரி, தமிழ் பல வகைகளிலும் தனித் தன்மையுடையது. பண்டைய வேத மொழிக்கும் கிரேக்க உரோம நாகரிகங்களுக்கும் முற்பட்ட எகிப்திய பாபிலோனிய நாகரிகங்க ளுடன் தோழமைபூண்டு, அவற்றினும் முற்பட்டதும் மேம்பட்டதும் ஆனதென்று அறிஞரால் கொள்ளப்படும் மொகெஞ்சதாரோ நாகரிகத்துடன் இணைந்த நாகரிகப் பழைமையுடைய மொழி தமிழ். ஆகவே, இம்மொழி உண்மையில் இறந்துபட்ட ஒரு பேருலக நாகரிகத்துக்கும் சென்ற 2000 ஆண்டுக்குள் அதன் அழிபாட்டின் மீது புதுவதாக வளர்ந்த இன்றைய உலக நாகரிகத்துக்கும் இடையே அமைந்த ஒரு பாலமாகும். மனித நாகரிகத் தோற்ற வளர்ச்சிகளை ஆராய விரும்பும் உலகப் பற்றாளர்களுக்குத் தமிழகம் ஒரு வற்றா உயிர் ஒழுக்குடைய கருவூலமே என்னலாம். வரலாற்றுக்கு முற்பட்ட உலக மொழிகளான ஈபுரு, அரபு முதலிய செமித்திய இனமொழிகளுடன் திராவிடமொழி யினத்துக்கு உறவு உண்டு. அவ்விரு சார்பு மொழிகளையும் ஒருங்கே ஆராயும் ஆராய்ச்சி இன்னும் ஏற்படவில்லை. ஆனால், பண்டிருந்தே அந்நாடுகளுடனும் கிழக்காசிய நாடு களுடனும் தமிழகம் வாணிக, அரசியல், ஆட்சித் தொடர்புகள் கொண் டிருந்தது. இன்றும் ‘ஏழு கடல்களிலும்’ கடல்கடந்த நாடுகளிலும் தமிழர் மட்டுமே பரவி யுள்ளதும் இவ் வுள்ளார்ந்த தொடர்பின் பயனே என்று காணலாம். கடல் கடந்த இந்தியர் மிகப் பெரும்பாலோர் தமிழரே என்பதும், கடல் கடந்து பேசப்படும் இந்திய மொழி தமிழ் ஒன்றே என்பதும் ஆராய்ச்சியாலறியப்பட வேண்டாத பொது அறிவுச் செய்திகளாயினும், பொது மக்களிடையே எக்காரணத்தாலோ அறிவிக்கப்படாத செய்திகளாகவே உள்ளன. தமிழிலக்கிய வாழ்வின் தனிச் சிறப்புகளைக் கழக வாழ்வு, முத்தமிழ்ப் பாகுபாடு, பொருள் முதன்மை (டீசபைiயேடவைல), நாட்டு வாழ்க்கைத் தொடர்பு, ஐந்திணை வாய்மை, சமய ஒப்புரவு எனத் தொகுத்துக் கூறலாம். கழக வாழ்வு தமிழில் முதல் இடை கடை என முச்சங்கங்கள் இருந்தன என்பதும் முதலது கடலுட்பட்ட குமரி-பஃறுளி நாடுகளிலமைந்த தென் மதுரையிலும், இடையது அதேயிடத்தில் கவாடபுரத் திலும், மூன்றாவது வைகைக்கரை மதுரையிலும் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வாழ்வுபெற்றிருந்தன என்பதும் நெடு நாளைய தமிழ்நூல் மரபு. இவற்றைப் பலர் ஒப்புக்கொள்ள முடிவதில்லை, ஒப்புக்கொள்ள முடியாமைக்கான காரணங் களாவ ன: (1) சங்கம் என்பது வட சொல் (2) சங்கங்கள் பற்றிய விவரங்கள் ஆயிரம் பதினாயிரக் கணக்கான ஆண்டு, புலவர் தொகையுடையதாய், மிகைப்பட்டதாய், வட்டத் தொகை உடைய தாய்க் காணப்படுகிறது. (3) 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டுச் சங்கம் பற்றிய செய்திகள் இல்லை. சங்க வாழ்வின் மெய்ம்மையை ஒப்புக்கொள்ள விரும்பாதவர் இன்னொரு காரணமும் கூறுகின்றனர். இலக்கிய வளர்ச்சிக்குச் சங்கம் அமைப்பதென்பது மிக ‘நவீன’ கால மரபாயிற்றே, இது ‘அக்காலத்திலேயே’, ‘தமிழரிடையே’ இருந்திருக்க முடியுமா? என்கின்றனர் அவர்கள்! கடைப்பட்ட இக் கேள்விக்கு விடை எளிது. அக்காலத்தில் மட்டுமென்ன? இக்காலத்தில்கூட ‘நவீன’ மேல் நாடுகளில் பிரான்சு தவிர எங்கும் திட்டமமைந்த இலக்கிய மொழிக் கழகங்கள் இல்லைதான்! தமிழர் குறிப்பிடும்படியான கழகம் முக்காலத்திலும் இதுவரை வேறெங்கும் உண்மையில் இருந்ததாகத் தெரிய வில்லை. இதனால் அது தமிழ்க்கே சிறப்பு எனப்படத் தக்கதேயாகும். மேலும் இது ‘நவீனம்’ என்பவர்களே, முன்னுக்குப்பின் முரணாக, ‘ஒருவேளை சமணர் சங்கங்களை யெண்ணி இம்மரபு தோற்றியிருக்கலாம்’ என்கின்றனர். சமணர்க்குத் தோற்றக் கூடியது தமிழர்க்குத் தோற்ற முடியாது போலும்! சங்கம் என்ற சொல் வடசொல் என்பவர் பட்டி, மன்றம், கழகம், கூடல் முதலிய சொற்களும் வழங்குவதை மறந்தனர், சங்கக் கட்டடமே பட்டி மண்டப மெனப்பட்டது. மேலும் சங்கம் வடசொல் என்பவர் அது வடமொழிச் சொல்தானா என்று ஆராய்வார்களாக! வடமொழியோடொத்த பிற ஆரிய மொழிகள் எதனிலும் அச்சொல் இல்லை. எனவே தூய ஆரியச் சொல் அல்லாத பெரும்பான்மை வடமொழிச் சொற்களில் அது ஒன்று என்பதை அவர்கள் அறிவார்களாக! கழகம் என்பதைக் கலகம் என்று எள்ளிப் பேசியும் வடமொழிக் ‘கடிகா’ வின் சிதைவே என்று இன்பக் குழப்பம் எய்தி உழல்பவர்கட்கும் இதுவே தக்க விடையாயமையும். ஏனெனில் ‘கல’ என்பதே அதன் பகுதியாகும். ‘சங்க’ மரபுரைகள் மிகைப்பட்டிருப்பதும், ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் அதாவது தேவார, பெரியபுராண, கம்ப ராமாயண காலங்களில் அடிபடுவதும் உண்மையே. ஆனால், இவ் ஆரியமாயைக் காலத்திலிருந்த தமிழிலேயே தமிழ் இலக்கியம், கலை ஆகியவற்றையும் உண்மைத் தமிழ்ப் பண்பையும் காணும் இவ்வன்பர்கள் இவ்வொன்றில் மட்டும் தங்கள் முன்னோர்களிடம் அவ நம்பிக்கை கொள்வதேனோ! இது தவிர மற்ற எதில் அவ்விடைக் காலத்தவர் மிகைப்படுத்தவோ போலி உண்மைகள் புகலவோ இல்லை? உண்மைச் செய்தி யாதெனில் இப்பொய்ம்மைக் காலத்தின் பொய்கள் பலவற்றையும் விரும்பித் தழுவும் இவர்கள் பொய் கலந்த இம்மெய்யில் தாம் விரும்பாத மெய்யும் கலந்து விட்டதே என்றுதான் வருந்துகின்றனர்! பாலில் நீர் கலந்துவிட்டதே என்று அழுபவர்போல, நீரில் பால் கலந்துவிட்டதே என்று அழுந் தொழிலாளரும் உண்டல்லவா? தலைச்சங்கம் இடைச்சங்கம் பொய்ச் செய்திகளல்ல ஒரு சார்பின்றி ஆய்பவர்கட்கு சங்ககால வாழ்வின் தன்மை மலை மேலிட்ட விளக்கம் ஆகும். இரண்டு தலைமுறைகளில் இயற்றப்பட்ட கடைச்சங்க இலக்கியமே பன்னூறாக, பல்நாடு, பல்வகுப்பு, பல்தொழில் ஆன பல்வகைப்பட்ட புலவர்களை உடையது. தொகை மிகுந்ததனால் தன்மை குறையவும் இல்லை. சங்கச் செய்யுள்களில் ஒரு சிறு செய்யுள் நூறு பெரிய புராணத்துக்கும் ஆயிரம் கம்பராமாயணத்துக்கும் மேம்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. கடைச்சங்க இலக்கியத்தில் காணப்படும் வரலாற்றுச் செய்திகள், இலக்கியமுறை, மொழிநிலை, பண்பாடு, கலைவளம் ஆகிய அனைத்தும் பிற்காலத் தமிழிலக்கியம் எதனினும் காணப்படாத புதிய உலகம் ஆகும். இஃது ஒன்றே கடைச்சங்க மிருந்ததென்பதற்குச் சான்று ஆகும். இதனை இன்று மறுப்பவர்களும் மிகக் குறைவு. கடைச் சங்க காலத்ததாயினும் கடைச் சங்க நூல்களுள் சேராத சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றின் மூலமும் இடைச் சங்கநூல் எனப்படும் தொல்காப்பிய மூலமும் புறநானூறு, முத்தொள்ளாயிரம் முதலியவற்றின் மூலமும் நாம் அறியும் மொழி, கலைப் பண்பாடுகள் கடைச்சங்க நூல்களில் காணாப் புது உலகமே யாகும். எனவே இடைச்சங்க வாழ்விருந்ததும் மெய்ம்மையே என்னலாம். மேலும், அடியார்க்கு நல்லார், பெருங்கதை எழுதிய கொங்குவேள் ஆகியவர் காலம்வரை இடைச்சங்க நூல்களான குருகும் பெருநாரையும் வெண்டாளியும் இருந்ததாகத் தெரிகிறது. ஏனெனில், அவற்றைக் கற்றே கொங்குவேள் பெருங்கதை யாத்ததாக அடியார்க்கு நல்லார் கூறுகின்றார். பெருங்கதை மொழி வழக்கும் செய்யுள் வழக்கும் கடைச்சங்கத்தின் வழக்கின் வேறாயிருப்பதை டாக்டர் உ.வே. சாமிநாதையர் எடுத்துக்காட்டி இக்கருத்தை வலியுறுத்துகிறார். உயர் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் வெளியிட்டுள்ள புறத்திரட்டிலும் உரைகளின் மேற்கோள் களிலும் வரும் இறந்துபட்ட நூல்களின் பெயர்களும் செய்யுள்களும் தலை இடைச்சங்க நூல்கள் முடிவுக்கும், பிற நூல்கள் முடிவுக்கும் சான்று பகரும். சங்ககாலம் பற்றிக் குறிப்பிடும் அதே நூன்மரபு தொல்காப்பியத்துக்கு முன் அவிநயம், அகத்தியம் முதலிய இலக்கண நூல்கள் இருந்ததாகவும் அகத்தியம் தொல்காப்பியம் போல் இயல் தமிழ்க்கு மட்டு மிலக்கணமன்று, இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்க்கும் இலக்கணம் என்றும் கூறுகின்றன. அறிஞர் பலர் அகத்தியர், அகத்தியம் கட்டுக்கதை என்கின்றனர். இஃது எப்படி யாயினும் ஆகுக. தொல்காப்பியத் துக்கு முன் இலக்கிய இலக்கணம் தொல்காப்பியத்தினும் விரிவாக இருந்ததென்பதைத் தொல்காப்பிய மூலமும் உரைகள், மேற்கோள்கள் மூலமும் காண்டலாகும். அத்தோடு அகத்தியம் போன்ற முத்தமிழ் இலக்கணம் கிடைக்காவிடினும் சிலப்பதிகாரம் போன்ற முத்தமிழ் இலக்கியம் இருந்ததென்பது வெள்ளிடை மலை. அம்முத்தமிழ் கடைச்சங்கக் காலத்திலேயே பாராட்டுதல் இல்லாமையால் பெரிதும் மங்கிவிட்டது. சோழப் பேரரசர் ஆட்சிக்குள் அழிந்து தடமற்றுப் போயிற்று. கடைச்சங்க இலக்கிய காலம்கூடப் பண்டைத் தமிழிலக்கிய வாழ்வின் நிறைவுக் காலமன்று, நலிவு தொடங்கிவிட்ட கரும்பொற் காலமே என்றும், அதற்குமுன் வெண்பொற்காலமும் செம்பொற் காலமும் இருந்திருத்தல் வேண்டும் என்றும் அறியலாம். முத்தமிழ் வாழ்வு பண்டைத் தமிழர் போற்றிப் பெருமை கொண்ட முத்தமிழில் ஒரு தமிழான இயலை மட்டுமே இன்று நாம் போற்றிப் பெருமை கொள்கிறோம். இதுவும் சங்ககாலத்துக்கு முன்னிருந்தே தேய்ந்து வந்துள்ளதேயன்றி வளர்ந்து வரவில்லை. பின்னாளைய இலக்கணப் புலவர்கள் தமிழிலக்கணத்தை ஐந்திலக் கணமாக வகுத்தனர். அவ்வைந்து: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பது. தொல்காப்பியத்தில் பிரிவுகள் மூன்றாயினும் இவ்வைந்து பகுதிகளும் உள்ளன, ஆனால், வடமொழியில் அகத்தியத் தோடிணையாகச் சைவப் புலவர் களால் குறிக்கப்படும் பாணினியத்தில் எழுத்தும் சொல்லுமே உண்டு. வடமொழி யாளர் தமிழகத் தொடர்பு கொண்ட பின்னரே, யாப்பியலும் அணியியலும் விரிக்கப் பட்டன வாதலால் அவை பாணினி மரபில்வந்த இலக்கணத்துக்குப் புறம்பாக யாக்கப்பட்டன. தமிழகத் தொடர்பு ஏற்படுமுன் வேத மொழியில் சில சமயநூல்கள் இருந்தனவேயன்றி வடமொழி என்ற இலக்கிய மொழியும் இலக்கியமும் தோன்றவில்லை யாதலால் பாணினிக்குப் பேச்சு மொழியின் இலக்கணமாகிய எழுத்தும் சொல்லும் மட்டுமே தேவைப்பட்டது. எழுது, எழுத்து என்ற சொல்லே பாணினிக்கு முன் கையாளப்படவில்லை என்பது அறிஞர் கூற்று. உயர்கலைப் பண்பு சங்க இலக்கியத்தின் இன்னொரு மாண்பு உயர்கலைப் பண்பாடு. கிரேக்க இலக்கியத்தின் வடிவமைப்பும் செறிவும் தூய்மையும் இதில் களிநடம்புரிகின்றன. இன்று இது உலகில் அறியப்படாதது சங்ககாலத் தமிழின் குற்றமன்று; இன்றைய ‘அறிவுலகின்’ குற்றம். கிரேக்க இலக்கியம் இருட்கால மேனாட்டில் பட்டபாடுதான் இன்று தமிழ்ச் செம்மைக்கால இலக்கியம் இக்காலத்தில்படுகிறது. கலைக்கோப்பும் கட்டுப்பாடும் உடைய கவிதை பாலை நீர் ஊற்று போல் எளிதாகவோ பாறை நீரூற்றுப்போல் அரும்பெறலாகவோ இருக்கலாம். சங்க காலத்தில் பழம் பாடல்கள் பல முந்திய வகை. பிற பிந்திய வகை. ஆனால், இரண்டிலும் உயர்கலைப் பண்பு உண்டு. இடைக்காலத் தமிழ் நூல்கள் கற்பவர் அறிவு நிலைக்கோ, இடைக்கால மொழியாகிய வடமொழி கற்பவர் அறிவு நிலைக்கோ இது எட்டாதது. தற்கால வட ஐரோப்பியக் கலைஞர்கள் நெறி களையும் கிரேக்க இலக்கிய நெறிகளையும் கற்றுத் தீட்டப்பட்ட கலைப் பண்பாட் டுடன் செல்பவர்க்கு அவை யெல்லாம் கோபுரவாயில்களாகவும், தமிழ் இலக்கியம் கோவிலாகவும் காணப்படும். இவ்வுயரிய கட்டுக்கோப்பின் ஆராய்ச்சியே ஐந்திணை நெறியாக இலக்கணங்களில் வகுக்கப்பட்டது. இது முழு அளவில் தமிழ்க்கே சிறப்பானது. கிரேக்க மொழியின் பண்பில் இதன் ஒரு கூற்றைக் காணலாம். பாட்டின் உவமையும் சொல்லும் வாழ்க்கையுடனும் இயற்கை யுடனும் இயைந்ததாயிருத்தல் வேண்டும் என்பதே திணைநெறியின் அடிப்படையாகும். சமய ஒப்புரவு இன்றைய உலகுக்கு, சிறப்பாக இந்திய வாழ்வுக்குத் தமிழிலக்கியம் மற்றொரு படிப்பினை தருகின்றது. இந்தியாவின் சமய வாழ்வைப் படம் பிடித்து எல்லாச் சமயங்களையும் எல்லாச் சமய இயக்கங்களையும் உட்கொண்ட இலக்கியம் தமிழிலக்கியம் ஒன்றே. இவ்வகையில் இதனோடு ஒருபுடைச் சார்பேனும் உடையது கன்னடம் ஒன்றே. தவிர சமயங்களனைத்துக்கும் இன்றும் பொது மறையாயிருக்கும் திருக்குறளும் சமயச் சார்பற்ற பெரும் பான்மை இலக்கியமும் உடையது தமிழ் மொழி ஒன்றே. சமயத் துறையிலும் சங்ககாலச் சமயம், பிற்காலச் சமயம் போல் அருள் நெறியின் பெயரால் மருள் நெறியாகிய வகுப்பு வேற்றுமைக்கும், புரோகித ஆட்சிக்கும் சப்பைக்கட்டு கட்டாமல் உண்மையிலேயே தன்னலமகற்றிய நடுநிலையருள் நெறி பேணியதென்று காணலாம். சுருங்கக் கூறின் தமிழிலக்கியம் தமிழ் நாட்டவர்க்கும் தமிழுலகுக்கும் மட்டுமே யன்றி, பெருந் தமிழகமாகிய திராவிடமொழிக்குழு நாட்டுக்கும் அதன் பண்டைப் பழம்பதியாகிய இந்திய மாநிலத்துக்கும் பொது உரிமையுடைய ஓர் ஒப்பற்ற கருவூலம் ஆகும். கீழ் நாடுகளுக்கே தமிழிலக்கியம் ஓர் எச்சரிக்கை தரப்போதியது. போலித் துறவறம், கிராம வாழ்க்கையில் நிறைவு பெறல், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை ஆன்மிகம் என்றும் கீழைநாட்டுப் பண்பாடென்றும் தழுவி ஏமாந்து மேனாட்டின் சுரண்டலை விரும்பி ஏற்கும் இவ்வடிமை ‘அரை உலகு’ (ழநஅளையீhநசந)க்குத் தமிழக இலக்கியம் ஒரு பெருமித மறுப்பு ஆகும். ஏனெனில் கீழ் நாட்டின் பொற்காலத்தில் திட்டமிட்ட நகரங்கள், துறைமுகப் பட்டினங்கள் உயர்தர வாழ்க்கை வசதிகள் ஆகியவை பெருகியே இருந்தன. உலகின் சீனமொழி யொன்றுக்கு அடுத்தபடியாக உலகில் மிக நீண்ட நாள் வாழ்நாள் உடைய இலக்கிய மொழி தமிழே யாகும். கடை இடை தலைச் சங்கநூல்கள் அழியாதிருந்தால், அல்லது இனி அகப்பட்டால் சீனத்தினும் அது நீண்ட வாழ்வுடையதாயிருக்கக்கூடும். தமிழ் முழக்கம் இந்நூல் 2001 இல் தமிழ்மண் பதிப்பகம், வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. தமிழ் வாழ்க! நம் தமிழ்நாட்டின் பல இடங்களிலும், மேடைகளிலும் சில ஆண்டுகளாகத் தமிழ் வாழ்க என்ற முழக்கம் வானைப் பிளக்கின்றது. தமிழர் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரங்களிலும் இம் முழக்கம் வரவேற்பு நன்மொழியாக வழங்கப்பட்டு வருவதையும் நாம் காணுகிறோம். தெரு மூலைகளிலும், சந்திச் சுவர்களிலும், மரப்பட்டை களிலும், வீட்டுக் கதவுகளிலும், எங்கும் `தமிழ் வாழ்க’ என்ற வாசகம் காட்சி தருகின்றது. சிறிதாகவும் பெரிதாகவும், சில சமயம் கொட்டை எழுத்துகளிலும் அவை தீட்டப்பெற்று விளங்கு கின்றன. கரி, காவிக் கட்டி, சாக்பீ° முதலியன பலவும் எழுதுவதற்குப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. பள்ளிக்கூடக் கரும்பலகைகள், மேசை, நாற்காலிகள் முதலியவற்றில் மட்டுமின்றிப் புத்தகங்கள், தேர்வுத்தாள், விடைத்தாள்கள் பலவற்றிலும் இத் தொடர் பொறிக்கப்பட்டு விளங்குவதையும் காணுகின்றோம். இவ்வாறு எங்கும் நிறைந்திருப்பதாகவும், பெரியவர்கள் மட்டுமல்லர், சிறுவர், சிறுமியரும் ஆர்வமுடன் முழக்கஞ் செய்து வருவதாகவும் உள்ள இத்தொடரின் வரலாறு என்ன? இதன் உட்பொருள் யாது? என ஆராய்வது அவசியம் அல்லவா? மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், `என்ன இது! நாம் பேசி வருகின்ற மொழி வாழ்க என்பதுதானே அதன் விளக்கம்; இதிலே விளக்குவதற்கு வேறு என்ன இருக்கிறது?’ என்று தோற்றலாம். ஆனால், இதனால் ஒருவகை மறுப்பும், வற்புறுத்தலும் ஏற்பட்டிருக்கின்றன; ஏற்பட்டும்விட்டன. அதனை ஒருவாறு ஆராய்வதே - அதன் தோற்றம், வளர்ச்சி, பெருக்கம் ஆகியவற்றை -அவற்றின் மூலக்காரணங்களை ஒருவாறு அறிய முயல்வதே இந்நூலின் நோக்கமாகும். `தமிழ் வாழ்க’ என்று முழக்கிவரும் சிறுவருளே சிலர் அத் தொடரின்கண் உள்ள இரு சிறப்பு `ழ’கரங்களையும் சரிவர எழுதத் தெரியாதவர்களாகக்கூட இருக்கிறார்கள். பல தேர்வுத் தாள்களில் `ழ’கரத்திற்கு மாறாக `ள’ கரமும் `ல’ கரமும் எழுதிவிடுகின்றனர். நகைப்புக்கு இடந்தரும் வகையிலே `தமிள் வாள்க’ `தமில் வால்க’ என்றெல்லாங்கூடச் சிலர் எழுதுகின்றனர். இவற்றைக் கண்டு சினங்கொள்வாரும், ஏளனங் கூறுவாரும், நகையாடுவாரும் உளர். ஆனால், இம் மூவகையினருமே, இப் பிழை செய்வாருள்ளும் மறைந்து அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலும் புதைந்து கிடக்கும் ஓர் அரிய உண்மையை உணர்ந்தார்களில்லை. உணர்ந்தால், இம் முழக்கத்தின் தனிச் சிறப்பு அவர்களுக்கு விளங்கும். அஃது என்ன? ஆசிரியர் போதனையும், இலக்கண மரபுகளும் செல்லாத உள்ளங்களிலுங் கூடத் `தமிழ் வாழ்க’ என்ற இயக்கத்தின் ஆற்றல் சென்று வேரூன்றிவிட்டது என்பதே அதனால் நாம் அறியக் கூடியது. அதுமட்டுமன்று; தமிழறிவு தானும் இந்தத் தமிழ் உணர்ச்சி வேகத்துக்கு ஒப்பாகச் செயலாற்ற முடியவில்லை என்பதையும் இந்நிலை காட்டுகின்றது. தமிழ் நாட்டிலிருக்கும் தமிழுணர்ச்சி யளவுக்குத் தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களும் ஆசிரியர்களும் வேலை செய்யமுடியவில்லை என்றும், போதிய அளவு அரசாங்கமும் ஒத்துழைக்க முன்வரவில்லை என்றுமே இதனால் கூறலாம். தமிழ் வாழ்க என்ற தொடரின் - முழக்கத்தின் - ஆற்றலை இன்னொரு வகையாகவும் மதிப்பிடலாம். தமிழ்நாட்டிலே வாழ்கின்ற பல்வேறு பிரிவினரிடையேயும் ஒற்றுமை காண, உணர்ச்சி காண, உயிர்காண முனைந்த இயக்கங்களும், கட்சிகளும் பல; அரசியலாரின் முயற்சிகளும் பல. அரசியலாரின் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராயின. கூட்டுறவு இயக்கத்தை அவர்கள் தொடங்கினர். ஆனால், அது நொண்டி நொண்டித் தளர்நடையிலேயே செயலாற்றிவருகின்றது; செயலாற்ற முயல்கிறது. நாட்டு இயக்கமாக மக்கள் உளங்களிலே வேரூன்றி, மக்கள் இயக்கம் என்ற அளவுக்கு அது வளரவில்லை; வளரும் என்பதற்கான அறிகுறிகளும் போதிய அளவுக்கு இல்லை. சீர்திருத்தம் என்ற பெயரால் நீதிக் கட்சி முயன்று பார்த்தது; ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனால், அதுவும் மின்னொளிபோல் தோன்றி மறையும் நிலையில் விளங்கியதே யன்றி நிலையான ஒளியுடன் விளங்கவில்லை. மேலும், அம் மின்னொளிதானும் அதன் தோற்றத்துக்கு முன்னிருந்த காரிருளிற் கலந்து முன்னையிலும் பன்மடங்கு இருண்ட நிலையையே தந்தது. ‘காங்கிரசு’ எனும் நாட்டுக் கழகக் கட்சி வரிந்து கட்டிக்கொண்டு முன்வந்தது. பெரு முழக்கமும் செய்தது. ஆனால் அதுவும் சாதி சமய வகுப்பு வாதங்களாகப் பல்வேறு சுழிகளிலே அகப்பட்டுத் தன் வலி குன்றியது. இன்றோ அரசியற் சூழ்ச்சியாகிய மலைப் பாறையிலே மோதிச் சின்னாபின்னமுற்றுச் சிதறுண்டு விளங்குகின்றது. இப் பெருங் கட்சிகளுக்கு இடையிலே வேறு பல சமயக் கட்சிகளும், சீர்திருத்தக் கட்சிகளும் முனைந்து வேலை செய்தன. அவற்றாலும் பல்வேறு துறையில் பட்ட தமிழ் நாட்டினரை ஒற்றுமைப்படுத்த இயலவில்லை. ஓருயிரும், ஒரு மொழியும், ஒரு மனமும் தந்து, ‘ஒரே நாட்டினராக’ - ஒற்றுமையுடையவர்களாக, ஆக்க முடியவில்லை. இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன? இந்த இயக்கங்கள் எதுவும், வேறுபட்டு நின்ற இந் நாட்டினரின் ‘வாழ்வு’ ஆகிய உடலின் உள்ளே அமைந்து கிடக்கும் உயிர் நாடியை உணர்ந்து, அவர்களுக்கு உயிர்ப்பும், ஒற்றுமையும் தரமுடியாது போயின என்பதேயாகும். இந் நிலையிலேதான் எங்கோ ஒரு மூலையில் இருந்து எழுந்தது ஒரு முழக்கம். அதனையடுத்து நாற்றிசைகளினின்றும் ‘தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்!’ என்ற குரல்கள் இரைந்தெழுந்து முழங்கின. தமிழ் வாழ்க! பொங்குக பொங்கல்! தமிழ் வாழ்வு மலர்க! எனப் பல்வேறு உருவிலே அம் முழக்கம் பரவியது. நாட்டினர் காதுகளிலே, இனிய குழப்பமோ, குழம்பிய இனிமையோ? எனும்படி வந்து தாக்கியது. தமிழ், தமிழ் மொழியாய், தமிழ்த் தாயாய், தமிழ் நாடாய், நாட்டு மக்களாய், மக்களின் வாழ்வாய், வாழ்வின் மலர்ச்சியாய் வளர்ந்து பொங்கிப் பெருகி வழிந்தோடலாயிற்று. ‘ஒற்றுமை’ என்ற சிந்தனையே வேண்டாத அளவு நாடெங்கும் நாட்டினர் அனைவரும் கட்சி, மதம், குலம், நிலை வேறுபாடுகளை மறந்து, இப் பேரொலியின் கீழ், பெருமுழக்கத்தின்கீழ், ஆம்; `பெருமந்திரத்தின்’ கீழ் ஒற்றுமைப்பட்டுவிட்டனர். இத்தகைய அரிய ஒற்றுமையை, அரிய உணர்ச்சிப் பெருக்கை, ஒளிநிறைந்த உள்ளொளியை, உயிர்ப்பைத் தந்த சொற்றொடர் `மந்திரம்’- ‘தமிழ் வாழ்க!’- என்பதிலே சற்றேனும் ஐயமில்லை! புழுவாய், அடிமையாய், நடைப் பிணமாய், வலிகுன்றி, வாழ்விழந்து, பற்றுக் கோடின்றிப் படர்ந்தழியும் பூங்கொடிபோல் பரந்துபடும் தமிழ் நாட்டினரின் வாழ்வை வாழ்விக்க வந்த இப் பெரு முழக்கம் தமிழரின் தனிப்பெரு ‘மந்திரம்’, புத்துணர்வு பெற்ற தமிழ்ச் சமுதாயத்தின் ‘மூல மந்திரம்’ - என்பதிலே எள்ளளவும் ஐயம் இல்லை. ஜ°டி°, காங்கிரசு, இந்துமகா சபை, முசுலிம் லீக்கு, சநாதனக்கட்சி இன்னும் எத்தனையோ இயக்கங்களாலும் ஒன்றுபடுத்த முடியாத தமிழ் நாட்டினரைத் ‘தமிழ் வாழ்க’ என்ற இயக்கம், அதன் முதற் குரலிலேயே ஒற்றுமைப்படுத்திவிட்டது. எனவே, இதனை ‘மந்திரம்’, தமிழர் புதுவாழ்வின் ‘மூலமந்திரம்’ என்று சொல்லலாம். இதன் ஆற்றலால் கட்சிகள் ஒற்றுமைப்பட்டன; மக்களும் ஒன்று எனும் உணர்வு பெற்றனர். முன்னாளிலே ஒருசமயம், இத் தமிழ் நாட்டில் பல்வேறு சமயக் கோட்பாடுகள் நிலவின. ஒருவர்க்கொருவர் ஒவ்வாமல் பூசலிட்டுக்கொண்டே இருந்தனர். அப்போது தோன்றியது ஓர் ஒப்பற்ற தமிழ் நூல். அது நிலவிய வேற்றுமையை அகற்றி மக்களைச் சமயங் கடந்த ஓர் உண்மைச் சமயத்தை, ஒரே கடவுள் கொள்கையைக் காணச் செய்தது. அதுதான் திருவள்ளுவனாரின் திருக்குறள். இதனை, ‘ஒன்றே பொருள் எனின், வேறென்ப;- வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென எப்பாலவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி’ என்ற பாடல் வலியுறுத்துகின்றது. இவ்வறநூல் ஏற்படுத்திய அதே ஒற்றுமையை இன்றைய தமிழர் வாழ்வில் ஏற்படுத்தியது ‘தமிழ் வாழ்க’ என்ற சொற்றொடர். அன்று ஒற்றுமை காண எழுந்த நூலினைத் தமிழர், தமிழ் வேதம், பொதுமறை என்றெல்லாம் போற்றினர். எனில், இந் நாளிலும் தமிழ் நாட்டினரிடை அத்தகைய ஒற்றுமை உணர்வை ஏற்படுத்திய சொற்றொடரை நாம் மறையின் உயிர் நிலையாகிய ‘மந்திரம்’ என்றே கொள்ளலாம் அல்லவா? அதுவே தமிழர் மந்திரம் ; தமிழரின் பெரும் பெயர்க் கடவுள்; அதனை வழுத்துவோமாக! இந்தியப் பெருநாட்டு விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டிருந் தவர்கள் காங்கிரசுக் கட்சியினர். இந்நாட்டு மக்கள் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டிருந்தவர்கள் நடுநிலைக் கட்சியினர். பகுத்தறிவின் பெருக்கமே குறிக்கோள் என வைத்துக்கொண்டிருந்தவர்கள் தன்மதிப்பு இயக்கத்தினர். இவர்கள் அனைவரும் இத் ‘தமிழ் வாழ்க’ இயக்கத்திலே கலந்து கூடினர். இது மட்டுமா? ‘அன்பே சிவம்’ என்பவர்கள் சிவ சமயத்தினர். உலகெலாம் திருமாலின் அம்சமே எனப் போற்றியவர் திருமால் சமயத்தினர். இவர்களும், மற்றும் அறிவுநெறி, வினை நெறிப் பாற்பட்டவரும் இம் மந்திரத்தை மேற்கொள்ள முன்வந்தனர். மேலும், மக்கட் பணியே இறைப்பணி எனக் கருதி நம் நாட்டிடையே வாழ்ந்து வரும் கிறித்தவரும், உலகெலாம் ஒரே குடி எனக் கொண்ட முசல்மான்களும், இம் மந்திரத்துடனும், அது பொறிக்கப்பட்ட கொடியுடனும் இணைந்து வீறுடன் விளங்கினர். இவ்வாறாகப் பலரையும் ஒன்றாகும்படி செய்த ஆற்றல் - ஒரே நாட்டினராக - ஒரே குடியினராக எண்ணுமாறு செய்த ஆற்றல், இத் ‘தமிழ் வாழ்க’ என்ற மூலமந்திரம் ஒன்றுக்கே உண்டு. மந்திரம் என்றால் என்ன? பொருள் உள்ள, அல்லது பொருள் அற்ற சில ஒலிகள், சில எழுத்துகள், அல்லது சில சொற்கள், சொற்றொடர்களே மந்திரம். மாந்தர் உள்ளங்களில் ஆழ்ந்து புதையுண்டு கிடக்கும் அறிவு நுட்பங்களை, அனுபவங்களை, அனுபவ உண்மைகளை, உணர்ச்சிகளைத் தூண்டி எழுப்பிச் செயலுருப்பெறச் செய்து நிற்கின்ற சத்தியே மந்திரம். சில சமயம் அவை அங்ஙனம் மாந்தர் உளம்மட்டுமன்று, இயற்கையின் உள்ளத்தையும், ஏன் தெய்வங்களின் உள்ளங்களையும்கூட இயக்குவிக்கும் ஆற்றலுடையவை என எண்ணப்படுகின்றன. இவ் வகையிலே ஏற்புடைய ஒன்று ‘தமிழ் வாழ்க’ எனும் மந்திரம். அது தமிழ் நாட்டினரில் ‘தமிழர்’ எனும் பண்பு வாய்ந்த ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஆழ்ந்து அணைந்து எழுந்து அவர்கட்கு ஊக்கமும் உயிர்ப்பும் ஆக்கமும் எழுச்சியும் நல்கியது. தமிழ் நாட்டிலும் பிற வேறு நாடுகளிலும் அவ்வப்போது மந்திரங்கள் பல எழுந்தன. மக்கள் தம் வாழ்க்கையின் உட்கிடக்கையை மறந்து செயலாற்றும் திறமற்றுச் சோர்ந்தபோது பெரியார்களின் முயற்சிகளால் அவை தோன்றின. மக்களுக்குப் புத்துயிர் ஊட்டிப் புது உணர்வையும் புது வாழ்வையும் அவை அளிக்கப் பேரளவு உதவுவனவாகவும் அமைந்தன. உணர்ச்சிக்கு ஒரு புதுமை வேண்டும். பழகிய மந்திரங்கள் உணர்ச்சி யற்ற மனிதர் நாவிற் பட்டு உயிரற்ற சொத்தைகளாகவே விளங்கும். மண விழாக் காலங்கள் போன்ற சடங்குகளிலே ஒரேபடித்தாக ஓதப்படும் மந்திரங்கள் போல வெறுங் கூலி மந்திரங்களாகிவிடும். அப்போது மக்களைப் புத்துணர்ச்சியாற் புதுப்பிக்க அதனால் முடியாது. அவற்றின் உணர்ச்சியை மீண்டும் மக்களிடையே புதிய உருவத்தில் எழுப்புவதற்குத் தகுந்த புதிய அமைப்புடைய புது மந்திரங்கள் எழுதல் வேண்டும். அவ்வகையில் எழுந்த மந்திரச் சொற்றொடரே ‘தமிழ் வாழ்க!’ என்னும் முழக்கமாகும். மந்திரங்கள் பலவற்றையும் போலவே இதுவும் உருவிலே சிறியதுதான்; எனில், பொருளோ மிகவும் பெரிது; பயன் அதனினும் பெரிது. இதனை ஒவ்வொரு கூறாக எடுத்து ஓதித் தமிழ்வளம் பெருக்க இனி முயல்வோம். உரிமைப் பெருமக்கள் ஓவாத் தமிழ்முழக்கம் தருமால் துயில்விழிப்பு எம்-தாய்க்கு. 2. தமிழர் வாழ்க! தமிழ் வாழ்க! எனும் மந்திரத்தினைப் பற்றிச் சிறிது கூறினோம். இனி, அம் மந்திரத்தையே பல்லவியாகக் கொண்டு, அதன் கிளைகள், அல்லது பகுதிகள், அல்லது சரணங்கள் என்ற ஆறு வகைகளைப் பற்றியும் தனித்தனி ஆராய்வோம். அவற்றில் முதலாவது ‘தமிழர் வாழ்க!’ என்பது. தமிழ் வாழவேண்டுமாயின் தமிழர் வாழ்தல் வேண்டும். ஆதலின், `தமிழர் வாழ்க’ என்பதும் பொருள் பொதிந்த தொடரேயாகும். தமிழ், தமிழர் இரண்டுக்கும் உள்ள உறவு யாது? தமிழ் உயிர் ; தமிழர் உடல். உடலின்றி உயிர்க்கு வாழ்வில்லை. உயிரின் ஒவ்வோர் வளர்ச்சியும் உடல் வளர்ச்சியோடு தொடர்பு கொண்டன்றிச் செயற்படாது. அசைவு, செயல், உணவு எதுவும் உடல் மூலமாகவன்றி உயிர் ஒன்றினால் மட்டும் தனித்து மேற்கொள்ள முடியாது. ஆகவே, தமிழர் ஆகிய உடல் நலமாகச் செழிப்புடன் வாழ்ந்தாலன்றித் ‘தமிழ்’ ஆகிய உயிர் வளர்ச்சியும் ஆக்கமும் பெறாது என அறிந்துகொள்ளுதல் வேண்டும். தமிழ் நாட்டிலே பிறந்து வளர்ந்து புகழ் உடம்பு எய்திய மக்கள் தொகையினர் கணக்கற்றோர். அவர்கள் உடல் அழியினும் அழியாது நின்றன எவை? அவர்கள் வாழ்வின் குறிக்கோளும், நோக்கமும், உட்கருத்தும், பயனும் ஆகியிலங்கும் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியங்களுமேயன்றோ! அவர்கள் தம்மொழியில் தங்கள் அறிவை எல்லாம் ஒருங்கேயன்றோ கொட்டிவைத்துப் போயிருக்கின்றனர்! அந்தச் செறிந்த சேம வைப்பையே நாம் இன்று ‘தமிழர் இலக்கியம்’ என்கிறோம். அது வளர்தல் வேண்டும். ஊக்கமும் உயிர்ப்பும் உடையதாக ஓங்குதல் வேண்டும். அதற்கு என்ன செய்வது? அதனுடன் தமிழரின் இன்றைய அறிவு, அனுபவம், உணர்ச்சி, ஆர்வம் முதலிய அனைத்தும் சென்று இணைதல் வேண்டும். அவ்வாறு இணைந்து சிறப்பு அடைய, இன்று இருப்பதுபோல் தமிழர் நலிந்து கிடந்தால் போதுமா? போதாது. ஆகவே, தமிழ் வாழவேண்டின், தமிழ் மேம்பட வேண்டின், தமிழ் ஓங்கவேண்டின், ‘தமிழர் வாழ்க! தமிழர் மேம்படுக! தமிழர் ஓங்குக!’ என்ற முழக்கம் எங்கும் எழுதல் வேண்டும். அங்ஙனமாயின் தமிழர் யார்? தமிழ் பேசுவோர் தமிழர். இந்த விடை ஓரளவு எளிதானதாகவே தோற்றும். ஆம்; தமிழ் பேசுவோர் எல்லாரும் தமிழர்தாம்! ஆனால், இஃது உண்மையில் ஒரு சரியான விடையாகுமா? ஆகவே ஆகாது. ஏனெனில், தமிழ் யாதென்று கேட்பார்க்கு அவ் விடையையே மாற்றித் `தமிழர் பேசுகிற மொழி தமிழ்’ என்றுதான் கூறவேண்டியதாக இருக்கிறது. ஒருவகையில் ‘தமிழர்’, தமிழ் இரண்டுமே அவ்வளவு மாறாதிருக்கும் நிலையான பொருள்கள் அல்ல. தமிழர் பிறந்தனர்; பிறந்து வாழ்ந்து இறந்தும் போயினர். தமிழர் இன்றும் பிறக்கின்றனர். வாழ்கின்றனர்; இறந்து போகவும் செய்வர். இவர்களை இணைப்பது, ஒரே தொடர்புடைய மக்கள் வழியினராக ஆக்குவது, ‘தமிழ்’ ஒன்றேயாகும். ஆனால், மாறுவது தமிழர் மட்டுமா? எனில், இல்லை. தமிழும் அவ்வாறே காலந்தோறும் மாறுதலடையத்தான் செய்கிறது. மொழியிலே பேதங்கள் ஏற்படுகின்றன; மாற்றங்கள் நேர்கின்றன. நூல்கள், இலக்கணங்கள், சொற்கள், நடையிலே மாற்றம் ஆகிய பல வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இம் மாற்றங்களை இணைப்பது எது? ‘தமிழர்’ என்ற ஒரு தொடர்ந்த இனமும், அதன் கால்வழியுமேயாம். ஆகவே, நம் வரையறை வன்மை கெடுகின்றது. தமிழர் யார்? தமிழ் பேசுவோர் எனின், தமிழ் யாது? என்று கேட்பின் தமிழர் பேசுவது என்றே கூறவேண்டியதிருக்கிறது. இங்ஙனம் ஒரு வினாவுக்கு மற்றொரு வினாவையே விடையாகக் கூறுதல் பொருந்துமா? பொருந்தாது. மேலும், தமிழ் பேசுவோர் மட்டுமே தமிழர் எனின், பிறநாடு சென்று பிறமொழி பயின்று வற்புறுத்தல்களுக்கிடையே கூடத் தமிழை மறவாதவரும், மறக்க நேரினும் தமிழ்ப் பற்று மாறாதவரும் தமிழரா? அல்லரா? தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ் பேசக் கற்று, அதிலே அன்பும், ஆர்வமும், திறமும் மிகுந்து விளங்கிய போப் ஐயர் யார்? தமிழிலே புலமை மிகுந்தவராகத் தமிழ்ப் பாவியற்றி புகழ்பெற்ற வீரமாமுனிவர் யார்? மேற்குறித்த வரையறையால் இவர்கள் தமிழர் அல்லர் என்றாகிறது. அவர்களை அவ்வாறு ஒதுக்குவது எவ்வளவு கொடுமை? என் சுவைமிக்க அனுபவம் ஒன்றினைக் கேளுங்கள். நெல்லை மாவட்டத்திலே கிறித்தவ சமயத் தலைவராயிருந்த மேலை நாட்டார் ஒருவரை, அவர் பள்ளி முதல்வராயிருந்தபோது ஒருநாள் காணச் சென்றேன். அவர் வெளியிலே சென்றிருந்தார். சிறிது நேரம் அங்கே கிடந்த நாற்காலிகளிரண்டில் நானும் என்னை அழைத்துச்சென்ற நண்பரும் அமர்ந்தோம். அவர் மேசையைக் கவனித்தேன். தமிழ் நூல்களே எம்மருங்கும் காட்சியளித்தன. அவர்தம் கைப்பட வடசொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் தேடி எழுதிய சிட்டை ஒன்றும், தமிழ் நாட்டு நாடோடிப் பாட்டுகளென வெளியிடுவதற்காகத் தொகுத்த தொகுதி ஒன்றும் மேசைமீது கிடந்தன. கண்டு வியப்படைந்தேன். அவ் வெள்ளையர் தமிழர் - ஆம்! வெள்ளையராயினும் தமிழரே! அவர் வந்தபின் நிகழ்ந்த நிகழ்ச்சியோ அவ்வியப்பை மேலும் எண்மடங்கு பெருக்கிற்று. அவ் வெள்ளையர் வரவுக்கு விதிர்விதிர்ப்புடன் காத்திருந்த நான், அவர் வந்தவுடன் ஆங்கிலத்தில் ஊறிப் பெற்ற என் இயற்கை ஆங்கில ஒழுக்கைக் காட்டி, ‘குட்மார்னிங்’ என்று கூறினேன். கூறினதுதான் தாமதம், அவரது விடை என்னைத் தூக்கிவாரிப் போட்டது. “ஏன் அன்பரே, உம் தாய்மொழியிலேயே வணக்கம் என்று சொல்லலாமே” என்றார் அவர். புலிக்குட்டி என் முன் நின்று உறுமுவது போலிருந்தது எனக்கு. கனாக் கண்டு விழித்தவனின் அரைதுயில் பார்வையில் பொங்கி ஆரவாரிக்கும் மகன் தோற்றிய தன்மைபோல் இருந்தது. நான் வியப்பும் திகைப்பும் மகிழ்ச்சியும் கொண்டு சற்று விழித்தேன். என் தோல்வியுணர்ச்சியை மட்டும் காட்டாமல், அவரது தமிழை உதறிவிட்டு, ஆங்கிலத்திலேயே “ஆம் தங்களுக்கும் அப்படித் தானே” என்று கூறினேன். அவர் சிரித்தார். அன்று நான் தப்பினேன். தப்பினும் உள்ளூர என் மனம் மட்டும் என்னைப் புண்படுத்தாமலில்லை. என் ஆங்கிலப் பற்றென்னவோ ஒரு நடிப்புத்தான் என்பது எனக்குத் தெரியும். அடிமை நாட்டான் ஆள்பவன் மொழியில் கொண்ட பற்று அது! அடிமை உணர்ச்சியையும் போலிப் பசப்பையும் அன்றி, அது வேறு எதனைக் குறிக்கக் கூடும்? ஆனால் ஆளும் குழுவினருள் ஒருவரான அவர் தமிழிற் கொண்ட அன்பு அவ்வாறல்லவே. ‘அவர் தாய்மொழி ஆங்கிலம்’ எனச் சொல்லுக்குச் சொல் நான் கூறியபோது அவர்முகம் பட்டபாட்டைப் பார்த்தல் வேண்டுமே! இக் கசப்பான உண்மையை அவர்க்கு, ஏன் எடுத்துச் சொன்னோம் என்றாயிற்று எனக்கு. அத்தகைய வெள்ளையர் தமிழர் அல்லர் - நானும் நீங்களும் மட்டுந்தான் தமிழரா? ஆகவே, தமிழ் பேசுவோர் தமிழர் என்ற வரையறையும் அவ்வளவு பொருத்தமுடையதாகக் காணப்பெறவில்லை. அப்படியாயின் தமிழர் யார்? ‘தமிழினிடம் பற்றுதல் கொண்டவர் மட்டுமே தமிழர்’ என்று கூற யான் விரும்புகிறேன். தமிழ் நாட்டில் வந்து தமிழ் பேசிப் பழகியவரை - தமிழ் கற்றவரை - தமிழ்ப்பற்று உடையவரையெல்லாம் அது தமிழருட்படுத்துவது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது. ஆனால், தமிழைப் புறக்கணித்து ஆங்கிலங் கற்றவர் தமிழ்க்கு முந்தி இந்தியோ ஆங்கிலமோ, வடமொழியோ பிறவோ கற்றோம் என்றும் - தமிழில் பழக்கமில்லை, அவற்றிலேயே பழக்கம் என்றும் - அம் மொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்கள் இல்லையென்றும், தாம் அறியோம் என்றும் சொல்பவர்கள் இருக்கின்றார்களே, அவர்களை எல்லாம் ‘தமிழர்’ அல்லர் என்று விலக்குவதா? தமிழ்ப் பத்திரிகைகள், தமிழர் பத்திரிகைகள் இவை தமிழ்க்கும் தமிழர்க்கும் புறம்பானவை என்று கூறிவிடலாமா? கூறிவிடலாம் என்று கூறவே நான் விரும்புகின்றேன். அதற்கு அவர்கள் மன்னித்தல் வேண்டும். ஆனால், தமிழ்ப்பற்று மிக்க பெரியாரான குமரன் ஆசிரியர் முருகப்பா அவர்கள், அவர்களும் தமிழர்கள் என ஆர்வத்துடன் காட்டுகின்றார்கள். ‘ஒருவன் உறங்கும்போது கன்னத்தில் அறைந்துவிட்டால் எம் மொழியில் அவன் திட்டுவானோ அதுவே அவன் தாய்மொழியெனக் கொள்ளத் தகும்’ என்பர் அவர். சிலர், தொன்றுதொட்டு வழிவழியாகத் தமிழ் பேசுபவர்தாம் தமிழர் என்பர். தமிழ் எழுத்துகள் ‘தெய்விக எழுத்துகள்’ என வீறுடன் காட்டிய மாணிக்க நாயகர், “தமிழ் நாடு” பத்திரிகை தோற்றுவித்த தமிழ் அறிஞர் நாயுடு, தமிழ் நாட்டு நாட்டுரிமைக் கழகத்தில் செயலாற்றிப் பின் தமிழரிடைப் புத்தியக்கம் தோற்றுவித்த பெரியார் ஈ.வெ.ரா. ஆகியவர்கள் தொன்றுதொட்டு, வழிவழித் தமிழ் பேசாதவராயினும், இன்று தனி முழுத் தமிழர் அல்லரா? ‘தமிழர் யார்...?’ என்று இத்தகைய ஆராய்ச்சியாலும் துணியக் கூடவில்லை என்று காண்கிறோம். இனி, உலக வழக்கு இதனைத் தெளிவுபடுத்துமா என்றும் பார்ப்போம். தமிழ் நாட்டின் பல மாவட்டங்களிடையே “தமிழாதி” என்ற ஒரு சொல் வழக்கிலிருக்கின்றது. அது யாரைக் குறிக்கின்றது? யார் எக் கருத்துடன் அதனை வழங்குகின்றனர் என்று பார்ப்போம். சில இடங்களில் ஒருவரிடம் இவ்வூரில் எத்தனை வீடுகள் என்று கேட்டால், பெரும்பாலும் இதில் அவ்வகுப்பினர் வீடு இத்தனை, பிற குறிப்பிட்ட பணக்கார வகுப்பினர் வீடு இத்தனை என்று குறிப்பிட்டு, போகத் தமிழாதிகள் இத்தனை என்பர். பணக்காரர் எவ்வகுப்பினராயினும், எப்போதும் அவரைத் தம்முடன் சேர்த்தே கூறுபவர் அச் சிலர். செல்வர் வாழும் இடங்களிலே குலத்திமிர் கொண்ட செல்வரும், அரைகுறை அறிவு பெற்றோரும், அரசியல் பணிபெற்று உயர்ந்த சிலரும், தம்மை ஒரு தனிப்பட்ட “உயர்ந்த” வகுப்பினர் என்று கொண்டு, பிற மக்களைத் “தமிழாதி” எனப் பொதுப்படையாகக் குறிக்கின்றனர். தாமே பிறரைத் ‘தமிழாதி’ எனக் குறிப்பதால், இவர்கள் தம்மைத் தமிழர் ஆகக் கொள்ளவில்லையோ என்ற ஐயம் நமக்கு எழுகின்றது. இவர்கள் ஏன் பிறரைத் ‘தமிழாதி’ என்கின்றனர்? தாமும் தமிழ்தானே பேசுகின்றனர்! தாம் தமிழரை வென்றடக்கிய குழுவினர் என்றும், நாட்டு மக்களாகிய பிறரே தமிழாதி என்றும் குறிக்கின்றனரா? அல்லது தமிழன்றிப் பிறமொழி அறியாதார் அவர், தாம் பிறமொழிப் பயிற்சியும் பற்றும் உடையவர் என்றா? அல்லது தமக்குத் தமிழ்த் தொடர்பேயன்றிப் பிறமொழித் தொடர்பும், பிறமொழியாளர் தொடர்பும் உண்டு என்ற செருக்கினாலா? ஏன் இங்ஙனம் கூறுகின்றனர்? இவை ஒன்றோ, பலவோ, எல்லாமோ இவ் வழக்கின் அடிப்படை என்று எண்ணலாம். எப்படியாயினும், இவர்கள் “தமிழாதி” என்று தம்மாற் சூட்டப்படும் மக்களைத் தம்மினும் இழிந்தார் எனக் கொள்கின்றனர் என்பது மட்டும் வெளிப்படை. அப்படியாயின் தமிழர்-உண்மைத் தமிழர், தமிழ் நாட்டிற் ‘கீழ் வகுப்பு’ என ஒதுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் தாமா? மேனாட்டவருள் சிறந்த தமிழ் அறிஞரான கால்டுவெல், இதற்கு ‘ஆம்’ என்று கூறுவர். சேர நாட்டுப் பகுதியாகிய திருவாங்கூரில் இன்று பெரும்பாலும் மலையாளமே நாட்டு மொழியாக நிலவுகின்றது. அங்கேயும் மலையாளப் பகுதியின் உட்பகுதியில் தமிழ்நாட்டுத் தொடர்பற்று வாழும் ‘பரவர்’ இன்றும் தமிழே பேசுகின்றனர். அது மட்டுமன்று. மலையாளம் அவர்கள் நாக்கில் சற்றும் வருவதில்லை. தமிழ்நாட்டிலும் ஆங்கிலம், வடமொழி, இந்தி ஆகியவற்றுக்கு முன்பின் தயக்கமின்றித் துள்ளிக்குதித்து ஆதரவு தேடுபவர், உயர் வகுப்பினர் எனத் தம்மைத் தாமே சூட்டிக் கொள்பவரேயன்றிப் பாமர மக்களல்லர். தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களை வலியுறுத்திக் கலப்பவரும், தமிழ்ச் சொல்லிருக்க அதனைக் கையாளாமல் திசைச்சொற்கள், வட சொற்களையே கையாண்டு, தமிழ்ச் சொல்லை மறையச் செய்து தமிழ் வளம்குன்றச் செய்பவரும், பிறமொழி கற்ற உயர்குல வகுப்பாரே யன்றிப் பொதுமக்கள் அல்லர் என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. உடல் வலியாமல் தமிழ்நாட்டில் வெற்றி கொள்ள எண்ணிய எல்லாப் பிறநாட்டுப் படையெடுப்பாளர்களுக்கும், உள்நாட்டிலேயே ஐந்தாம்படை வேலை செய்து, பகைவரின் வெற்றிக்கும் ஆட்சிக்கும் உதவுவது இம் மேற்குலத்தார்தாம் என்பதையும், இவர்கள் மக்கள் தொகையுள் ஒரு சிறுபான்மையினரே என்பதையும் நோக்க, இவர்களை விலக்கிப் பொதுமக்களை மட்டுமே ‘தமிழர்’ என வழங்க எழுந்த இவ்வியற்கை வழக்கு மிகவும் பொருத்த முடையதென்றே கூறுதல் வேண்டும். இக்கருத்துக்கொண்டே போலும் ‘ஒதுக்கப்பட்ட மக்கள்’ இன்று யாவராலும் ‘திருக்குலத்தார்’ என்றும், ‘ஆதித் திராவிடர்’ அதாவது ‘முதல் தமிழர்’, முன்னைய தமிழர்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். தெலுங்கு நாட்டிலும், கேரள நாட்டிலுமுள்ள ஒதுக்கப்பட்ட மக்கள்கூட இதற்கிடையே ‘ஆதி கேரளர்’, ‘ஆதி ஆந்திரர்’ எனப்படுதல் கூர்ந்து நோக்கத்தக்கது. இதுகாறும் கூறியவற்றைத் தொகுத்துக் கூறின், தமிழ் பேசுவோர், தொன்று தொட்டுப் பேசுவோர், தமிழ்ப் பற்றுடையோர், தமிழரிடைப் புறக்கணிக்கப்பட்டிருப்போர் இவர்கள் யாவரும் ஒரு வகையாகத் ‘தமிழர்’ எனவே கூறப்படுகின்றனர். எனினும், இறுதியில் கூறப்பட்டவர் சிறப்பு வகையால் ‘முழுத் தமிழர்’ ஆவர் எனத் தோற்றுகின்றது. இதனை இனி இன்னும் ஒருவகையிலும் காட்டுவோம். தமிழரிடைத் தமிழாதியரை ஒதுக்குவோர் அங்ஙனம் ஒதுக்குவதன், உட்கிடக்கை யாது? தமிழாதியரைவிட அச் சிலர் - அவரைத் தமிழ்ப் பகைவரென்றாலும் தவறில்லை - எவ்வகையில் உயர்வுடையார் என்று தெரியவில்லை. பிறப்பினால் அவர்கள் உயர்வு என்பர் சிலர். பிறமொழிப் பயிற்சியினால், அல்லது பொதுப்பட அறிவினால் உயர்ந்தவர் என்பவர், இன்னுஞ் சிலர். பணத்தினால், நாகரிகத்தினால், சமயத் தலைமையால் என்பர் வேறு சிலர். எப்படியாயினும், அவர்கள் உயர்வு நாடுகின்றனர்; உயர்வால் நலனும் சிறப்பும் நாடுகின்றனர் என்பது மட்டும் தேற்றம். இங்ஙனம் நாடுபவர் தமிழரா? அல்லர் தாமே! தமிழரிடையே தமிழாதிகள் அறிவு, அன்பு, ஆற்றல் ஆகியவற்றில் எளியவர் என்னல் கண்கூடு. ஆனால், இவையனைத்தின் வித்தும் அவர்களிடையே உண்டு. எல்லாம் சிறுமைப்பட்டுச் சரியொத்துச் சீர்கெட்டுக் கிடக்கின்றன அவர்களிடத்தில். இவர்களைவிட அறிவின்மிக்க வகுப்பார் உளர். அவர்களிடை ஆற்றல் குறைவு; அன்பு மிகமிகக் குறைவு. அவர்கள் இவர்களினும் மேம்பட்டவராம்! ஆனால், சரியொத்த மேம்பாடு அல்லது வளர்ச்சி பெறாது ஒரு சார்பு வளர்ச்சியடைந்தவர் ஆவர். உடல் வளராது கால் வளர்ச்சி அல்லது தலைவளர்ச்சி, முன் பகுதி வளராது புறப்பகுதி வளர்ச்சி எய்தியவர்களைப் போன்ற, அருவருக்கத்தக்க பிறவிகளேயாவர் அவர்கள்! இவர்களைவிட ஆற்றலின் மிக்கவர் உளர். ஆனால், அவர் அறிவு குறைந்தவர்; அன்பும் குறைந்தவர். இவர்களைவிட அன்புமிக்க வகுப்பார் மட்டும் இல்லை. இருந்தால் அவர்களை ஒதுக்கி விலக்கார்; விலக்கி வேறாகப் பிரித்துத் “தமிழாதி” என்று கூறார் அன்றோ? ஆகவே, இத் தமிழாதிகளான ஒதுக்கப்பட்ட மக்கள் உலக வழக்கினாலும், அரசியல் வழக்கினாலும் கூறப்படுவது போலவே, உண்மையிலேயே முழுமையாகத் ‘தமிழர்’ எனல் தெளிவு. ஏனெனில், இவர்கள்தாம் சரியொத்த வளர்ச்சியுடைய தமிழ் மக்கள் ஆவர். இவர்கள் அறிவிலும் ஆற்றலிலும் அன்பிலும் சரியொத்து மேம்படின் அறிவு மேம்பாட்டுடன், ஆற்றலும், செயல் திறமும், அமைப்புத்திறனும் பெற்று முழு வளர்ச்சியுற்ற, மேம்பட்ட தமிழராய் விளங்குவர் என்பதில் ஐயமில்லை. இதற்கு மாறாக ஒரு சார்பு வளர்ச்சியுடைய தற்கால “உயர்குலத்தார்” எனப்படுவோர், அருவருக்கத்தக்க வேறுவேறு உறுப்பு வளர்ச்சியுடையவராய், அன்பின்றி அறிவும், அறிவின்றி ஆற்றலும் உடையவராதலின், ‘தமிழராகார்’ என்றும் கூறலாகும். உண்மையில் தமிழரிடையே எவரையும் பிறப்பாலோ, கல்வித்திறம், செல்வம், ஆற்றல் இவற்றின் குறைபாட்டினாலோ விலக்கிவைக்க நாடுபவர், தம் அறிவை, ஆற்றலை, அன்பைத் தமிழர் அனைவர்க்கும் பயன்படுத்தாமல், தமக்கு மட்டுமோ அன்றித் தனிப்பட்ட ஒரு குழுவினர்க்கு மட்டுமோ பயன்தரும்படி ஒதுக்கிவைக்க விரும்புபவர் விரும்புவதாகக் காட்டிக் கொள்பவர், விரும்புபவர் குழுவிற்பட்டவர், அத்தகைய குழுவுக்குத் துணை தருபவர், அதனை விட்டு நீங்க அல்லது அதனை ஒறுக்கத் தயங்குபவர் ஆகிய எவரும் தமிழராகார். தமிழர் அனைவரும் ஒன்றெனக் கொள்பவரே உண்மைத் தமிழர். “கங்கையொடு ஈழம் கடாரம் கடன்கொண்டார் வண்கை வழங்கினர் வந்து.” 3. தமிழ்த்தாய் வாழ்க! ‘தமிழ் வாழ்க!’ மந்திரத்தின் ஆற்றலைக் காட்டினோம். அம் மந்திரம் செவியினுள் புகுந்ததுமே, தமிழர்க்குக் கிளர்ச்சியும் ஊக்கமும் தந்தது. புத்துயிரூட்டும் அதன் தலை மந்திரம் “தமிழர் வாழ்க” என்பது. அதன் உள்ளுறை பொருளையும் ஓரளவு ஆராய்ந்தோம். ஒற்றுமை யுணர்ச்சியற்று, வந்தேறுங் குடியினர்க்கெல்லாம் - வந்த மொழியினர்க்கெல்லாம் - நாகரிகங்களுக்கெல்லாம் அடிமைப்பட்டுத் தாமே தம்மருமை தெரியாது கெட்டு நின்ற தமிழர்க்கு, இம் மந்திரம் எப்படி ஒற்றுமையும் உயிர்ப்பும் ஊட்டியது என்பதை இனி ஆராய்வோம். இதற்கு முன், நாட்டு மக்கள் வாழ்வைத் தட்டி எழுப்பிய மந்திரங்க ளெல்லாம் இம் மந்திரத்தளவு ஆழ்ந்து அகன்று மக்கள் வாழ்வைத் துருவித் துருவித் துறைதோறும் எட்டவில்லை. இதன் காரணம் யாது? இதற்கு முன் எழுந்த மந்திரங்கள் பிறமொழிப் போர்வை யுடனோ அல்லது பிறமொழி உணர்ச்சியுடனோ பயிற்றுவிக்கப் பட்டன. அதனால், தமிழர் உள்ளத்தின் ஆழத்தை எட்டிப் பார்க்க முடியவில்லை. மேலும், அவை மக்கள் அனைவரையும் ஒருங்கே இயக்கவும் முடியாது. ஏன் எனில், சமயச் சூழல், கட்சிச் சூழல், மொழிச் சூழல் தன்னலச் சூழல்களிற் சிக்கி அவை அழிவுற்றன. “தமிழ் வாழ்க” மந்திரம் தமிழ் மந்திரமாதலின், தமிழர் உள்ளத்தின் தனித் தனியிடங்கள் தோறும் சென்று, தன் செவ்வொளி பரப்பி, இன்ப ஊற்றளிக்க வல்லதாயிற்று. அதனுடன் அது முழுத்தமிழ் மந்திரமாதலின், தமிழருள் எவரையும் சமய வேற்றுமை காட்டியோ, கட்சி வேற்றுமை காட்டியோ, பிறப்பு வேற்றுமை காட்டியோ விலக்காது, தமிழகத்தையே ஒருங்கே தட்டியெழுப்பி, இதுவரையிலும் பிற மந்திரங்கள் காணாத ஒற்றுமையை ஏற்படுத்தியது. உடன்பிறப்பாளர் தம்முள் ஒற்றுமைப்படத் தாயினும் தாயன்பினும் சிறந்த கருவியுண்டோ? உடலைச் சுமந்து - பெற்ற தாயின் அன்பு இஃது ஆயின், உடலையும், உடலைச் சுமந்த தாயையும், தாயின் தாயையும் பெற்று, உடலைத் தாங்க உதவும் இயங்கியல் நிலையியற் பொருள்கள் யாவையும் சுமந்து, ஈன்று காத்த தமிழ் நாட்டன்னை அன்பும், அவ்வுடலினுள் நின்று கூத்தாட்டும் உயிரினையும், அதன் அறிவாற்றல் அன்புப் பகுதிகளையும் ஆக்கி வளர்த் தோம்பும் உயிர்மொழி யன்னையாம் தமிழின் - தமிழ்த் தாயின் அன்பும், ஏன் தமிழரை ஒற்றுமைப்படுத்தாது? தமிழ் மொழிக்கு, தமிழ் நாட்டுக்குப் புறம்பாகச் சென்று நாடியன அங்ஙனம் ஒற்றுமைப்படுத்தாத திலும் வியப்பு என்ன? ஒருவனது தாய்மொழியைத் `தாய் மொழி’ என்பது வெறும் அழகுக்காக மட்டும் அன்று. அது பலவகையில் தாயினும் சிறந்தது என்பதனாலேயாகும். தாய்ப் பாலே குழந்தையின் வளர்ச்சிக்கு வேறெவ்வகை உணவினும் சிறந்தது. அதுபோல் ஒரு நாட்டு மக்கள் இயற்கை வாழ்வினுக்கும், வளர்ச்சிக்கும், அறிவியல், கலை ஆராய்ச்சிப் பெருக்கங்களுக்கும் மூலமாவது தாய் மொழியேயன்றி வேறொன்றுமில்லை. எந்தப் பயிற்சி பெற்ற ஆசிரியனினும் தாய் தன் குழந்தைக்கு முதன் முதல் அறிவுரைகளையும் நடைப் பயிற்சிகளையும் திறம்படவும் எளிதாகவும் உண்டுபண்ணுவதுபோல், தாய்மொழியும் அவர்களுக்கு அறிவும் வீரமும் ஊட்டும். தன்மதிப்பும், தன்னிலையும் வாழ்வும், வளர்ச்சியும் அளிக்கும். ஆகவே, பெருமையும் புகழும் விரும்பும் மக்கள், எப்பாடுபட்டும் தம் தாய் மொழியை, தாய்மொழியின் பண்பை, தாய்மொழியின் பொருட் குவைகளை உணர்ந்து போற்றிப் பேணிவரல் வேண்டும். அங்ஙனம் போற்றாத குறையினாலேயே - நெடுநாள் பிறர் வயப்பட்டு - அரசியலில் மட்டுமன்றி, சமயம், வாழ்வியல், அறிவியல், கலை, பொருளாதார வகைகளிலும் அடிமைப்பட்டுக் கிடந்தோம். தமிழ் மொழியும், இலக்கியமும், சமயம், வாழ்வியல் பகுதிகளும் சீரழியலாயின. இந்நிலையிலிருந்து படிப்படியாகத் தமிழர் தம்மையறிந்து, தம்மைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். அங்ஙனம் அறிய உதவுவது எது? அது தாய்மொழிப் பற்றேயாம். அதனை அடிப்படையாகக் கொண்டால், ‘தமிழர் யார்?’ என்னும் வினாவுக்குத் ‘தமிழ்த் தாயைப் போற்றுவோர்’ என்று எளிதில் விடை பகரலாம். தமிழர் நண்பர் யாரெனில், தமிழ்த் தாயின் வயிற்றிற் பிறவாத போதும், பிறந்தோமில்லையே என்று வருந்தும் பிறமொழிப் பிறந்த நன்மக்களேயாம். பகைவர் யாரெனில், தமிழராய்ப் பிறந்தும் தமிழரிடையே ஒரு சாராரையோ, பலரையோ புறக்கணித்தோ ஒதுக்கியோ வாழ எண்ணுபவரும், நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழினைத் தணிக்க அல்லது பிறிதொரு மொழிக்குத் தமிழரிடையே தமிழினும் உயர்வு கொடுக்க, அல்லது தமிழ்ப் பற்றின் பேரால் அப் பிறமொழிக்கு ஆதிக்கம் தேட முனைபவரேயாவர். ஒற்றுமைக்குத் திறவுகோலாகவும் உயர்வுக்கொரு மாத்திரைக் கோலாகவும் விளங்கும் இத் தாய்மொழிப் பற்றுடையவரே, “தமிழ்த்தாய் வாழ்க” என்னும் மந்திரத்தை உரத்துக் கூற உரிமையுடையவராவர். அது தமிழ்த் தாய்ப் பற்றினுக்கு அறிகுறி மட்டுமன்று, தமிழ்த்தாய்ப் பணிக்கு ஓர் அறை கூவலுமாகும். அம் மந்திரத்தை முழக்குவோர், தமிழின், தமிழ்த்தாயின் இன்றைய நிலையைக் கண்டு சற்றும் மனம்பொறாது வீறுடன் எழுவர் என்பது உறுதி. தமிழரின் தாய்மொழி என்றவகையில் தமிழ்நாட்டில் தமிழ்க்கே முதலிடம் என்றால், அஃது இயற்கையான ஒரு செய்தியே என்றும், அதனை யாவரும் விரும்புவர் என்றும் ஒருவரும் எதிர்க்கமாட்டார் என்றும் சிலர் எண்ணக்கூடும். அவ்வாறு எண்ணுதல் இயல்பும்கூட. ஆனால், உண்மை எவ்வளவோ மாறுபாடாயிருக்கிறது. தமிழ் நாட்டின் அரசியலில், சமயவாழ்வில், கல்வியில், தொழிலில் ஒவ்வொரு துறையிலும் ஏதாவது ஒரு பிற மொழிக்கே முதலிடமாயிருந்து வருகிறது. அரும்பாடுபட்டு உழைத்த தமிழ்ப் பணியாளர் பலரது தொண்டின் பயனாக, அரசியலார் அண்மையில் தமிழன்னையின் புண்களை ஒரு சிறிது ஆற்றும் மருத்துவம் ஒன்றைச் செய்தனர். அதாவது இந்நாட்டுப் பள்ளிகளில், ஆங்கிலம் நீங்கப் பிற பொருட்பாடங்களையெல்லாம் தமிழ் வாயிலாகவே கற்பிக்கலாம் என ஏற்பட்டது. அங்ஙனம் செய்வதால் பாடங்கள் எளிதில் மனத்திற் பதிவதோடன்றி, ஆங்கிலத் தேர்ச்சிகூட உயர்வுபெறும் என்றனர் கல்வித் துறை அறிஞர். ஆயினும், அச்சீர்திருத்தம் எதிர்பார்த்த முழுப்பயனும் தரவில்லை. அதன் காரணங்களை நோக்கினால் அச் சீர்திருத்தத்தின் குறைபாடுகள் விளங்கும். சிற்சில இடங்களில் இத் தமிழ்ப் பாட முறையால் ஆங்கில அறிவு குறைபடுகிறதென்றும், பலப் பல தாய்மொழி பேசப்படும் இடங்களில் தாய்மொழிப் பாடம் முட்டுப்பாடுடையதென்றும் கூறப்படுகின்றது. இவற்றுள் பிந்திய குறைபாட்டினை நடுநிலையும் வன்மையும் உடைய ஓர் அரசியலால் மட்டுமே நீக்க முடியும். அல்லது விட்டுக்கொடுப்பு - இன்று தமிழர் தவிரப் பிறரிடம் காணாத விட்டுக்கொடுப்பு என்ற ஓர் உணர்ச்சியால் மட்டுமே முடியும். அதாவது நேர்மையையும், ஒரு சார்பின்மையையும் பின்பற்றி எத் தாய்மொழி மிகுதியோ அது அப் பகுதியின் மொழியாகக் குறிக்கப் பெறல் வேண்டும். இதுபோக, முதற் குறையோவெனில் இன்றைய ஆங்கிலப் போதனையின் குறைபாடேயாகும். ஆங்கிலம் பிறமொழியாதலால் அதனைக் கற்பிக்கத் தனி ஆசிரியர் வேண்டும். அவர் பிற பாடம் போதிப்பவராய் இருத்தல் கூடாது. அன்றியும் அவர் நன்கு தமிழறிந்தவராய் இருந்தாலன்றித் தமிழர்க்குக் கற்பிக்கவும் முடியாது. கூடுமான இடங்களிலெல்லாம் அவர் தமிழ் மரபையும், ஆங்கில மரபையும் ஒப்பிடத் தெரிந்தவராயிருத்தல் வேண்டும். அதேபோல் தமிழிலக்கணம் ஆங்கில இலக்கணம் இவற்றை ஒப்புமை செய்பவராகவும் இருத்தல் வேண்டும். தமிழ்மொழி வாயிலாக ஆங்கிலம் முதலிய பிற மொழிகளைக் கற்பித்தால், எளிதாக அம் மொழிப்பயிற்சி ஏற்படும் என்பது கைகண்ட உண்மை. ஆங்கிலமேயன்றி வடமொழி முதலிய பிறமொழிகளிலும் இலக்கணம் கற்பிப்போர் அம்மொழி இலக்கணத்துறைச் சொற்களை வழங்காது, தமிழ்ச் சொற்களையே வழங்கினால் மாணவர் உள்ளத்தில் அம்மொழியறிவும் இலக்கணமும் நன்கு பதியும். ஆகத் தமிழுணர்ச்சி குன்றியதால் பிற மொழிப் பயிற்சிகூடத் தமிழரிடையே குன்றுவதையுங் காணலாம். இரண்டாவதாகத் தமிழ்ப்பாடத் திட்டம் புதிது. அதற்கான துறைச் சொற்கள் அமையாதது நடைமுறையில் ஒரு தடையாகவே இருக்கின்றது. இதனைச் சாக்காகக் கொண்டு தமிழ்ப்பாடத்தைக் குறை சொல்வது தவறு. ஏனெனில், இத் திட்டம் உண்மையில் அரைக்கலியாணமாக அமைந்ததே யாகும். அரைகுறைச் சீர்திருத்தங்கள், சீர்திருத்தத்தின் குறைபாட்டை நன்கு எடுத்துக் காட்டுமே தவிரச் சீர்திருத்தத்தின் வெற்றி தோல்விகளை எடுத்துக் காட்டா. முழு அளவு நடைமுறையில் வந்து, பொது வாழ்வில் அதன் பயன்கள் தென்பட்ட பின்பே, அதன் நன்மை தீமைகள் வெளியாகும். ஆகவே, இச் சீர்திருத்தத்தில் நம்பிக்கை யுள்ளார் அதை இன்றைய நிலையில் நிறுத்திவிடாமல், அதனை அதன் முழு அளவுக்கும் கொண்டுசெலுத்துதல் வேண்டும். முதலில், இன்று தமிழில் பாடம் கற்பிப்பவர்கள் நேற்றுவரை அதனை ஆங்கிலத்திலேயே கற்று, இன்றும் ஆங்கிலத்திலேயே நினைப்பவர்கள், அது மட்டுமன்று, அப் பாடப் புத்தகங்களை எழுதியவர்களும் அப்படியே. அவர்கள் ஆங்கிலத்தில் அதனைப் படித்துத் தேர்ச்சி பெற்று, ஆங்கிலத்தில் எண்ணித் தமிழில்-அரைகுறையாகப் படித்த தமிழில், உண்மைப் பற்றில்லாமல் கடனைக் கழிக்கப் படித்த தமிழில்-அதனை எழுத முனைந்தவரேயாவர். அப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் அரசியலாரும் குழுவினரும் அப்படியே. இவர்கள் அனைவரும் முதலில் ஆசிரியர், அறிவியலார், நூலாசிரியர். அதன் பின்னர் மட்டுமே தமிழ்ப் பூச்சுப் பூச முயல்பவராவர். முதலில் தமிழராய், தமிழ் ஆசிரியர், தமிழ் அறிவியலார், தமிழ் நூலாசிரியர் ஆயினார் அல்லர். இங்ஙனமன்றி முதலிலேயே தமிழராக அவர்கள் அமையவேண்டுமாயின், இன்றைய உயர்நிலைப் பள்ளிகளில் பாடம் தாய்மொழி மூலமாய் இருப்பது போலவே, கல்லூரிகளிலும் இடைப்புலமை (ஐவேநச), இளம்புலமை (க்ஷ.ஹ.), பெரும்புலமை (ஆ.ஹ.) வகுப்புகளிலும் தமிழ் மூலமே பாடம் கற்பிக்கப்படல் வேண்டும். இது மட்டுமன்று பள்ளிகளும் கல்லூரிகளும், ஆங்கில மொழிக்கு முதலிடம் கொடுக்கும் ஆங்கிலப்பள்ளி ஆங்கிலக் கல்லூரிகளாய் இராமல், தமிழுக்கு முதலிடம் கொடுக்கும் தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க் கல்லூரிகள், தமிழ்ப் பல்கலைக் கழகங்களாய் விளங்குதல் வேண்டும். ஆங்கிலம், இந்தி முதலியவை கட்டாயப் பாடமாக இராமல், தமிழ் கட்டாயப் பாடமாகவும், கூடுதலான நேரத் திட்டமுடையதாகவும், பிற விருப்பப் பாடமாய் அருகலாகவும் இருத்தல் வேண்டும். அதோடு பாடம் கற்பிப்பவர் அனைவரும் தமிழ்ப்புலவர் தேர்வுடையவர் களாகவும், ஆங்கிலம், வடமொழி முதலிய பிறமொழிகள் கற்பிப்பவரும்கூடத் தமிழில் இளம்புலமை (வித்துவான் முதனிலை) அல்லது புலமை (வித்துவான் முடிவுநிலை) உடையவராயும் இருத்தல் இன்றியமையாத தகுதி என ஆதல் வேண்டும். ஊதிய வகையிலும், இன்றிருப்பதுபோல் ஆங்கில ஆசிரியர்க்கு நூற்றுக் கணக்கிலும், வடமொழி இந்தி ஆசிரியர்க்கு ஐம்பது அறுபதுக் கணக்கிலும், தமிழாசிரியர்க்கு முப்பது நாற்பதுக் கணக்கிலும் தரப்படாமல் தமிழாசிரியர்க்கு நூற்றுக் கணக்கிலும், அடுத்தபடி வடமொழி, இந்தி ஆசிரியர்க்கும், ஆங்கில ஆசிரியர்க்கு நாற்பது ஐம்பது கணக்கிலும் தரப்படுதல் வேண்டும். ஆசிரியரிடைத் தலைமை யாசிரியராகும் உரிமையும் உயர்வும் சிறப்பாகத் தமிழ்ப் புலமையுடைய வருக்கே இருத்தல் வேண்டும். இன்னும் கல்வி, உண்மையில் ஒன்றிரண்டு குலத்தார்களுக் குள்ளேயோ, செல்வரிடையேயோ கட்டுப்பட்டிருக்கக்கூடாது. இந் நாட்டில் பிறப்புக் கட்டுப்பாடு, சாதிப் பாகுபாடு மிகுதி. போதாக்குறைக்கு வறுமை மிக்க இந்நாட்டில் கல்விச் செலவோ மிகுதியாக விளங்கிச் செல்வர் மட்டுமே கற்க இடம் தருகின்றது. தவறி ஏழை கற்றாலும் பிழைப்புக்கு வேறு இடமில்லை. அரசியற் பணிகளுள் உயர்குலத்தார் எளிதில் தம் செல்வாக்கால் இடம் பெறுவர், செல்வரும் பெறுவர். ஏழை ‘பெண்டாட்டி கட்டியும் பிரமச்சாரி’ என்ற வகையில், ‘பிள்ளை பெற்றாலும் மலடி’ என்ற வகையில், கற்றாலும் கல்லாருடனொப்பச் சிலவகையில் கல்லாதவர் நலன்களையும் இழந்து திரிய வேண்டியதுதான். இந்நிலைமை மாற வேண்டுமானால், கல்விக்குப் பள்ளிச் சம்பளம் என்ற ஒன்றின்றி, வருமானவரி, நிலவரி முதலியவற்றைப் போல் வரியிட்டுப் பணம் பெற்றுக் கல்வி கற்பிக்கப்படல் வேண்டும். எல்லார்க்கும் ஒரே வாய்ப்பு அளித்தால், ஏழைகள் செல்வரோடொத்து உயர்ந்து உலக நலனேற்படுத்துவர். பணிகள் தரும் வகையில் வெறும் போட்டி சிறந்ததன்று. வாழ்க்கைப் போட்டியில் முந்திக் கொண்டவர்கள் போலி ஒப்புநிலையை நிலைநாட்டி எல்லாம் போட்டிக்கு விடுக என்பர். அப் பணிகள் எல்லார்க்கும் ஒப்பக் கிடைக்கும் வகைகளையும், அதற்கான கல்வி எல்லாரிடையும் ஒப்பப் பரவும் வகைகளையும் அரசியலார் கவனித்தல் வேண்டும். இந்நாட்டில் ஒரு காலத்தில் ஆளுங் கட்சியினர் அத்தகைய பணி ஒப்புரவை நோக்கமாகக் கொண்டிருந்தனர். இன்றைய ஆட்சியிலுள்ளார் அதனை ஏற்காது போலி வேதாந்தம் பேசி மழுப்பு வதனாலேயே நாட்டில் சாதி சமயக் குழப்பங்கள் நிறைவதும் ஆராய்பவர்க்குப் புலனாகும். இவ்வுயர் சீர்திருத்த நிலை ஏற்படும் வகையில் அரசியலார்க்கு வழிகாட்டியாய் அமைய வேண்டுபவர் இந்நாட்டுச் செல்வரேயாவர். அதிலும் இவர்களுட் பலர் வேலைக்காகப் படித்தல் வேண்டும் நிலையிலில்லாதவர், அவர்கள் வேலை தேடும் தேர்வுப் பித்தராகாமல் - அப் பித்துக்குப் பக்கமேளமடித்து வயிறு வளர்க்கும் கூலிப் படையினரை ஆதரிக்காமல், நாட்டில் உண்மைக் கல்வி வளர்க்கும் முறையில் தனிப்பள்ளிகள் பல அரசியல் சார்பற்ற முறையிலே நடத்தலாம். அல்லது அரசியற் சார்பிலுள்ள பள்ளிகளையே உயரிய திட்டங்களில் இணைத்து நடத்தலாம். அத்தகைய தமிழ்ச் `சாந்தி நிகேதனங்கள்’, ‘விசுவ பாரதிகள்’ நாடெங்கும் எழவேண்டும். ஆனால், அவை வகுப்புவாத மடங்கள் போலாகாமலிருக்கவும் வேண்டும். இதுவரை தமிழரின் தாய்மொழி என்ற வகையில் தமிழ்க்குச் செய்ய வேண்டிய தொண்டுகள் எவை எனச் சில கூறினோம். ஆனால், ‘தமிழ்’ தமிழரின் தாய்மொழி மட்டுமின்றி, உலகில் ஒப்புயர்வற்ற ஒரு தனிக் குழுவின் குறியீட்டு மொழி - நடுநாயக மொழி - தொன்மொழியாகவும் நிற்கின்றது. இக் குழுவினைத் திராவிடக் குழு என்றும் தமிழ்க்குழு என்றும் கூறுவர். திராவிடம் என்ற பெயர் வடமொழியில் தமிழையே குறிப்பது. ஆகவே, குழுவின் பெயரே அது ‘தமிழைத் தாயகமாகக் கொண்டது’ எனக் காட்டும். வடநூலாசிரியரான குமாரிலர் தம் காலத்தில் இக்குழுவில் திராவிடம், ஆந்திரம் என இருபகுதிகளே இருந்தன எனக் குறிப்பர். இன்றும் ஆந்திரம் தனியாகவும், பிற தமிழ்க் குழு மொழிகள் அனைத்தும் தெலுங்கு அல்லது ஆந்திரத்தைச் சாராது தமிழையே சார்ந்து நிற்கின்றன என்றும் காட்டுவர் பேரறிஞர் கால்டுவெல். ஆகவே, தெலுங்கு நீங்கிய தமிழ்க்குழு மொழிகள் தமிழ்க் குழுவுட்பட்ட தமிழ்க் கிளைக் குழுவாதல் காண்க. இக்கிளையிலும் மலையாளம், கன்னடம், துளு முதலிய மொழிகள் தம்முள் ஒத்துத் தழுவி அவற்றின் இணைப்பாயிருப்ப தால், தமிழ் அக்கிளைக் குழுவின் தாய்மொழி என்பதும், அதேபோன்று அக் கிளைக்குழுவின் எல்லா மொழிகளுக்கும், தெலுங்குக்கும் உள்ள உறவினும் தமிழ் அவ்வெல்லாவற்றுடனும் தெலுங்குடனும் கொண்ட உறவே மிகுந்திருப்பதால், தமிழ் தமிழ்க் குழுவின் நடு நாயகமான மொழி - அவை யனைத்தையும் இணைக்கும் தாய்மொழி - என்பதும் தெளிவாகும். அதற்கியைய இம் மொழியின் வரலாறும் இலக்கியமும் அவற்றினும் பன்மடங்கு பழைமையும் சிறப்பும் பொருந்தியதாகும். எனவே, தமிழ் தமிழரின் தாய்மொழி மட்டுமன்று, தமிழ்க் கிளைக்குழுவின் தாய்மொழியும், தமிழ்க் குழுவினரின் தாய்மொழியும் ஆம். ஆதலால், இதனுக்குத் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாள, கன்னட, துளுநாட்டு உயர்தரக் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், அவ்வந்நாட்டுத் தாய்மொழிகளின் தாயகமொழி என்ற வகையில் ஆராய்ச்சிப் பகுதிகள் அமைதல் இன்றியமை யாததாகும். தமிழ்க் குழுவின் சிதறிய பல துண்டங்கள் குடகு, மைசூர், சோட்டா நாக்பூர், பீகார், வங்காளம், பலுச்சி°தானம் முதலிய இடங்களிலிருப்பதும், இவையனைத்தும் தமிழ்க் குழுவை ஒக்குமிடங்களிலெல்லாம் தம்முள்ளோ பக்கத்திலிருக்கும் பெருந்தமிழ்க் குழுமொழிகளுடனோ கொண்ட உறவினும், தமிழினையே மிகுதியாக ஒத்திருப்பதும் நோக்க, இத் தமிழ்க்குழு ஒருகால் இந்தியா முழுமையும் பரந்து கிடந்ததொன்றென்பதும், அதன் மாபெரும் தாய் தமிழாமென்பதும் தேற்றம். ஹரப்பா, மொகஞ்சதாரோவில் வெட்டியெடுத்த பழம்பொருள் ஆராய்ச்சியாலும் இது நன்கு உறுதிப்படுவதாகும். எனவே, இந்தியாவின் ஒரு பகுதியில் பேசப்படுவதும், பல பகுதிகளிற் பண்படாத் தொன்மொழிகளை உடையதும், பண்டைக் காலத்தில் இந்தியா வெங்கும் செறிந்ததும், இந்திய மொழிக்குழாங்களுள் தொன்மை மிக்கதும் ஆன இத் தமிழ்க் குழுவின் ஆராய்ச்சி, இந்தியாவின் பல்கலைக் கழகங்கள் அனைத்தினுக்குமே உரியதாம். அக் குழுவின் தாயகமொழி என்ற முறையிலும், இந்தியாவின் தொன்மை மிக்க மொழி என்ற வகையிலும், இந்தியாவின் சமய விரிவுகள் அனைத்துக்கும் தோற்றுவாயும் தாயகமுமான சமய இலக்கிய உயர்வுடைய மொழி என்ற வகையிலும், இந்தியரனைவரும் வடமொழியினும் மேம்படத் தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தல் கடனாகும். அணிமையில் வடபுல மொழிகளாம் இந்தி, வங்காளி, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி ஆகியவற்றின் மொழியாராய்ச்சியாளர், அவற்றில் ஆரியமல்லாப் பகுதி - திராவிடச் சார்பான பகுதிகள் - மிகுதியிருப்பதாகக் கூறுவதும், ஒலிப்போக்கு, ஒலிச்சிதைவு, இலக்கண அமைப்பு, ஒழுங்கு ஆகிய வகையில் அவை மட்டுமின்றி வடமொழி தானும் பிற ஆரிய மொழியினும் தமிழை, தமிழ்க்குழுவை ஒட்டியிருப்பதுங் காண, அவ் வட இந்தியத் தாய் மொழியாளர்க்கும், வட மொழியாளர்க்குங்கூடத் தமிழ் தாயக மொழியாய்த் திகழ்தல் கண்கூடு. இன்னும், பிறநாட்டு மொழிகளும், ஆரியம் முதலிய பிற மொழிக் குழுக்களும், குழுமொழிகளும், கிளைக் குழுக்களும் தம்முள் எல்லா விடங்களிலும் தமிழை ஒத்திருப்பது காட்டியும், அவ்வெல்லாக் குழுவினுக்கும் மொழிகளுக்கும் தமிழ் இணைப்பு மொழியாய்ப் பாலம்போல் அமைந்திருப்பது காட்டியும், கால்டுவெல் தலைமகனார், தமிழே, தமிழ்க் குழுவே உலகின் முதல் தாய்மொழியாம் என்றும் விளக்கிப் போந்தனர். அண்மையில் ‘தற்காலத் தொகுப்பு’ (மாடர்ன் ரிவீயூ) என்ற திங்களிதழிலும், ‘இந்தியப் படவாரப் பதிப்பிலும்’, (இல்ல°டிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா) அமெரிக்கா, ஆப்பிரிக்கா மக்கட் குழுவினரின் நாகரிகங்கள் வியக்கத்தக்க முறையில் தென்னாட்டு நாகரிகத்தை ஒத்திருக்கின்றன என்று குறிப்பிட்டிருப்பதும் ஈண்டு கவனிக்கத்தக்கது. ஆகவே, முதலில் “தமிழ்த்தாய் வாழ்க” என்பது தாய்மொழி என்ற வகையில் அவரவர் தாய்மொழி வாழ்க எனக் குறிக்குமாயினும், பரந்து ஆராயின், உண்மையிலேயே அத் தாய்மொழிகட்கெல்லாம் தாயாகிய-முதல் தாய்மொழியாம் `தமிழ்த்தாய் வாழ்க’ என்று விளங்கக் கூறி, அம்மந்திரம் தமிழர்க்கு மட்டுமேயன்றித் தமிழர் மேம்படும் காலத்தில் உலகுக்கே உறுதிப் பயனுடையது எனவுங் காட்டலாகும். ஆனால், இத்தனை தாய்களுக்கும் தாயாகும் பேறுபெற்ற தமிழ், இன்னும் அவற்றால் சோர்வு பெறவில்லை. அவள் அடையும் சோர்வெல்லாம் அவள் மக்கள் அடைந்த-அதுவும் தற்காலிகமாக அடைந்த-சோர்வேயாம். இதனாலேயே, இத் தமிழன்னையைத் தமிழ்ப் பெரியார் மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் கன்னித் தாயென மனத்துட் கொண்டு, “கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித் தெழுந்தே ஒன்று பல வாயிடினும் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!” என்று பாடினார். தமிழரின் நினைவுக்குள் - வரலாற்று நாள்களுக்குள் எண்ணினால், அது தோன்றி-எத்தனையோ தலைமுறைகள் ஆகிவிட்டனவே! இத்தனை நாளிலும் தமிழ் அன்றிருந்ததுபோல இன்றும் பிறரது ஒரு தலைமுறையை ஒரு பகல் ஓர் இரவாகக் கழித்து விழித்தெழுந்தும், சோர்ந்து துயின்றும் கழிக்கின்றாள் என்று காணலாம். ஆகவே, இத் தமிழ் வகையில், “எனக்குத் தாயாகியாள் என்னையிங் கிட்டுத் தனக்குத் தாய்நாடியே சென்றாள்- தனக்குத்தாய் ஆகியவளும் அதுவானால் தாய் தாய்கொண் டேகு மளித்திவ் வுலகு” என்ற நாலடியாருரை பொய்த்து, அவள், பிறதாயர்-தன்மகவாம் பிறதாயர் அழிந்துகூடத் தான் அழியாக்கன்னித் தாயாய்-கன்னி உலகத் தாயாய் விளங்குகிறாள் என்பது போதரும். அவள் கொண்ட இடைக்காலத் தூக்கம் நீங்கி யெழப் பாடும் பள்ளியெழுச்சியே நம் கிளைமந்திரமாகிய “ தமிழ்த்தாய் வாழ்க!” “கன்னித் தமிழ்த்தாய் வாழ்க!” என்ற முழக்கங்களாகும். “ஊனாய் உயிராய் உயிர்நாடியாய் எல்லாம் தானாகி நிற்கும் தமிழ்.” 4. தமிழ்ப் பண்பு வாழ்க! உலகில் தொன்மைமிக்க மொழிகளுள் தமிழ் ஒன்று. ஆனால், அத்தொன்மை மிக்க மொழிகளுள் தமிழ்க்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏனைய தொன்மொழிகள் யாவும் இஃது ஒன்று நீங்கலாக இறந்துபட்டுவிட்டன. இஃது ஒன்று மட்டுமே உயிருடைய தொன்மொழியாய் நின்று நிலவுகின்றது. அப்படியாயின், அத்தொன்மொழிகள் எதிலும் இல்லா ஓர் அரிய பண்பு இத் தமிழ் மொழியில் இருக்க வேண்டுமென்றோ? அப்பண்பை அறிந்து அதனை நாம் போற்றிக் காப்போமாயின், தமிழ் என்றும் குறைவு படாது வளர்ச்சியுற்றோங்கும். இன்று தமிழரிடை ஏற்பட்டுள்ள நலிவுக்கும் தளர்ச்சிக்கும்கூட அத்தகைய பண்பு உயிர்ப்பும் ஊக்கமும் ஊட்டும் உயர் கற்பகமாய் அமையுமன்றோ? ஆதலின், அப்பண்பு யாதென ஆராய்ந்து, அது ‘வாழ்க’ என்று மந்திரம் முழக்கித் தமிழ்க்கும், தமிழர்க்கும் வாழ்த்துக் கூறுவோமாக. தமிழின் தனிப்பண்பை இன்னொரு வகையிலும் தெற்றெனக் காணலாம். தமிழ்மொழி தமிழர்க்கு மட்டுமன்றித் தமிழ்க் குழுமொழிகள், பிற இந்திய மொழிகள், ஏன் உலக மொழிகள் அனைத்துக்குமே தனிப்பெரும் தாய் மொழியாகும் என மேலே கூறினோம். இங்ஙனம் காலத்தாலும், தோற்றத்தாலும் தமிழ்க்குப் பிற்பட்ட மொழிகளுள், எத்தனையோ இறந்துபட்டு விட்டன. எத்தனையோ பிள்ளையும், பிள்ளையின் பிள்ளையும் பெற்றும், எல்லாம் பல தலைமுறை வாழ்ந்தும் தாழ்ந்து ஒழிந்து கழிந்தன. அஃதேன்? உயர் இலக்கியம் பெறாததால் எனின், அன்று. உயர்தனிச் செம்மொழிகளான இலத்தீனும் கிரேக்கமும் இலக்கிய வளமற்றன அல்லவே? அவை இறந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயிற்றே. ஏன்? மேலும், அவற்றுடனொத்த வடமொழியைப் பார்த்தால், அது தமிழன் கண்களுக்கு முன்னாலேயே எத்தனை தலைமுறை வாழ்வு பெற்றுப் பிறந்து இறந்துவிட்டது! முதலில் தொல்காப்பியர் காலத்தை ஒட்டி இருந்த வேதமொழி திருந்திய மொழியான சமற்கிருதமாய்ப், பாளியாய், அப்பிரபஞ்சங்களாய்ப், பழந்தாய் மொழிகளாய், இந்தி முதலிய தற்காலத் தாய்மொழிகளாய் இன்று வாழ்வு பெறுகின்றது. வடமொழியின் இத்தனை தலைமுறைக்கும் தமிழ் ஒரே தலைமுறையாய் வாழ்ந்து இன்றும் உயிரோடிருப்பது மட்டுமன்று, இன்றும் வளர்ச்சி முற்றுப்பெறாது வளர்ச்சியின் வித்தை-மூல சத்தியை-இழக்காமல் கன்னித் தமிழாகவே இருக்கிறது. தமிழின் இவ் இறவாத்தன்மை, தமிழர் நாகரிகத்தின் சமயத்தின் இவ்வுயிர், யாதென ஆராய்வோம். முதலில் தமிழ் பல மொழிகளுக்குத் தாயாயினும், தனக்குத் தாயாக எம்மொழியையும் கொள்ளாதது உற்று நோக்கத்தக்கது. இப்பண்பைத் தமிழின் தாய்மைப் பண்பு என்று கூறலாம். இம்முதல் தாய்மைப் பண்புக்குக் குறைவு வாராதவரை ஒரு மொழி அழியமுடியாது. தமிழ்க் குழுவிற்பட்ட பிறமொழி களாகிய தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலியவை இறந்துபடவில்லை யாயினும், தம் நிலை திரிந்து மாறின. இதற்குக் காரணம், அவை தம் மொழியல்லாத வடமொழியைச் சார்ந்து நிற்க முயன்றதனாலேயேயாம். இங்ஙனம் வடமொழிச் சார்பு முதன் முதலில் ஏற்பட்டபோது, இன்று தமிழ் நாட்டில் தமிழ்ப் பற்றுடையோர் அதனை எதிர்ப்பது போலவே, அந்நாடுகளிலும் அவ்வம் மொழியின் தாய்மொழிப் பற்றுடையோரும் எதிர்க்கவே செய்தனர். மலையாளத்தில் இத்தகைய காலத்தை `சம்பூக்காலம்’ என்றும் ‘மணிப்பிரவாள காலம்’ என்றும் கூறுவர். இத்தகைய காலத்தில் சம்பூக்கள் என்ற அவியற் காவியங்கள் எழுதப்பட்டன. அவை காவியத்தையும், நாடகத்தையும், உரைநடையையும், செய்யுள்களையும் குழப்பிச் சேர்த்ததுபோல், தாய்மொழிச் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் சேர்த்துச், சில சமயம் வடமொழிச் சொற்களுக்குத் தென்மொழி இலக்கணத்தை யும், தென்மொழிச் சொற்களுக்கு வடமொழியிலக்கணத்தையும் பொருந்தா வண்ணம் பொருத்தி அமைக்க முயன்றன. அத்தகைய புதுப்பிறவிகள் நெடுநாள் வாழாதொழியவே, இனிப் பெருத்த அளவில் எதிர்க்கக் கூடாதென எண்ணிய அவ் உட்பகைவர், பகையாளி குடியை உறவாடிக் கெடுக்கத் தொடங்கினர். அதன்பின் அவர்கள் எழுத்தச்சன் என்ற தலைவன் மூலம் வட மொழியைத் தந்திரமாகப் படிப்படியாகக் கலந்து நூற்றுக்கு எண்பது வடமொழிச் சொற்கள் பயிலும் இன்றைய நிலைக்குக் கொண்டுவந்துவிட்டனர். தெலுங்கின் கதையும் கிட்டத்தட்ட இதுவே. கன்னடமும் தமிழும் இவ்வெதிர்ப்புக்குச் சிலநாள் தப்பியிருந்தன. அதனால்தான் பழங் கன்னடமும் பழந்தமிழும் ஒரு மொழிதானோ என்று சொல்லும்படி அவ்வளவு நெருங்கிய ஒப்புமையுடையவையாய் இருக்கின்றன. அப்பழங் கன்னடத்தைக் கையாண்டவர் பெரும்பாலும் சமண எழுத்தாளர்களே யாவர். அவர்களும் வடமொழிப் பற்றுடையவரேயாயினும், வடமொழி யினும் சமயப்பற்றே மிகுதியுடையவரானமையால், அத் தாய்மொழியைப் பேணி மேம்படுத்தினர். ஆனால், சமணம் ஒழிந்து வீரசைவ சமயமும், அதன் வாலைப்பற்றிச் சநாதனப் போர்வை போர்த்த புதிய இந்து சமயமும் தலை எடுத்தபோது, வரவர வடமொழி மிகுந்த கன்னடத்தின் போக்குத் தூய தமிழைப் புறக்கணித்து, வடமொழி விரவிய தெலுங்கைப் பின்பற்றலாயிற்று. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையும் கடிக்கத் தொடங்கிய வெறிநாய்போல், வடமொழி மயக்கம் தமிழையும் இறுதியில் பீடிக்கலாயிற்று. முதன் முதலில் இம்முயற்சியைச் செய்தவர் இங்கும் சமணரே. ஆனால், கன்னடத்தைப் போலவே இங்கும் அவர்கள் அதனை ஒரு வரம்புக்குட்பட்டே செய்தனர். புத்த சமண சமயங் களைந்த சமயாச்சாரியரும், ஆழ்வார்களும், இவ்வொரு வகையில் பெரும்பாலும் அவர்கள் சுவட்டையே பின்பற்றினர். ஆனால், பின்னாளைய வைணவ ஆசாரியரும், அவர்களைப் பின்பற்றிய சைவ உரையாசிரியரும் மயக்கத்திற்பட்டு மணிப்பிரவாள நடையை- வடமொழி கலந்த அவியல் நடையைப் புகுத்த முயன்றனர். முயன்றும், இவ்வனைவரும் வெற்றி பெறாதொழிந்தனர். தற்போது சிலர் தம் சமயமாகிய மாயாவாதப் பூச்சைச் சைவ வைணவங்களின்மீது பூசி, அவற்றின் உயிரை உறிஞ்சியபின், ஆங்கில மோகங்கொண்ட மக்களையும் தம் பக்கந் தூண்டி, மணிப்பிரவாள நடையைப் பல்லாற்றானும் தமிழர்மீது புகுத்த முயலுகின்றனர். ‘திரு’ என்னும் அழகிய தமிழ்ச் சொல்லுக்கு மாற்றாக ‘ஸ்ரீ’ என்ற தமிழர்க்குப் புறம்பான வடமொழிச் சொல்லைப் புகுத்திச் செய்த - செய்கின்ற பேராரவாரம் இதற்குச் சான்றாகும். மக்கள் தனித் தமிழை விரும்புகின்றனர் என்று கண்டு, அதனைப் பயன்படுத்திக்கொண்டே, கூடுமிடங்களிலெல்லாம் வடமொழியைக் கையாண்டு, அத் தனித்தமிழ்ப் பயிரின் பேரால் கலப்புத் தமிழ்க் களைக்கும் ஓரிடம் அமைத்துவிட விரும்பும் சிலர் முயற்சியையும், இன்று இத்துறைப் பட்டோரது சூழ்ச்சி முறைக்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம். தாய்மைக் கடுத்தபடியாகத் தமிழின் இரண்டாவது பண்பு அதன் கன்னித் தன்மையேயாம். அதாவது, தமிழ் எத்தகைய மொழியை அடுத்தும் தன்னிலை திரியாத் தன்மையுடையது. இத் தன்மையை அரைகுறையாக உடைய பிற தமிழ்க்குழு மொழிகள், வடமொழியைச் சிலநாள் எதிர்த்து நின்றன வெனினும், பின் அதன் சுழலிற்பட்டன. எனினும், அவை என்றும் வடமொழிக்கு அடிமைப் பட்டுவிட மாட்டா எனவும், அவற்றில் உள்ளூர நின்ற தமிழ்க் குருதி அவற்றுக்கு மீண்டும் ஊக்கமும், அந்நோயை எதிர்க்கும் வன்மையும் கொடுக்கும் எனவும் நாம் நம்பலாம். தமிழ் மொழியின் இக் கன்னித்தன்மைக்குப் பேருதவி புரியும் இன்னொரு பண்பு அதன் வண்மையாம். புதிய புதிய கருத்துகளையும் புனைவுகளையும் குறிக்கும் வகையில் தமிழ்மொழி எவ்வளவு வண்மையுடையதென அறிய வேண்டின், இன்றைய தமிழின் மேலெழுந்தவாரியான நடையை விலக்கி, உள்ளூரக் கிடக்கும் பழந்தமிழை (செந்தமிழை)க் கவனித்தல் வேண்டும். இதில் வினைச்சொற்களும் பெயர்ச்சொற்களும் எண்ணிய எண்ணிய பொருள்களைக் குறிக்கும் வளத்தை ஈண்டு ஒரு சிறிது கூறாதிருக்க முடியவில்லை. இன்றியமையா இடங்களில் அல்லாது, சொற்களை வழங்காமல் குறிப்பின்றி அறிய வைக்கும் சுருக்கமும், இப் பழந்தமிழில் இயைந்தவாறு வேறு எந்த மொழியிலும் இயையவில்லை என்னலாம். “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” இத்தகைய மொழி நடையை உடையது என்பது, அதனைப் பயில்பவர் எளிதிற் காணும் உண்மையாகும். இப் பழந்தமிழில் காணும் சிறு தொடர்களை நாம் இன்றைய தமிழில் பெருந் தொடர்களாலேயே குறிக்கவேண்டியிருக்கிறது. காரணம், குறுந்தொடர்களை நாம் மறந்தோம். அவற்றை நினைவில் வைக்கும் தமிழ் மரபை இழந்து பிறமொழி மரபைக் கொண்டோம். இன்று உண்டோம் என்ற தமிழ்ச் சொல்லை மறக்கப் பிறமொழிக் கலப்பு எப்படி உதவுகின்றது என்று பாருங்கள்! பிறமொழியிலிருந்து வரும் சொற்கள் பெரும்பாலும் பெயர்ச் சொற்கள் மட்டுமே. ஆகவே, உண்டோம் என்னும் வினைச் சொல்லுக்குப் பதிலாக உணவு என்னும் பொருளுடைய ஃபுட் (குடிடின) என்ற பிறமொழிச் சொல்லுடன் எடுத்தோம் என்ற துணைவினையைச் சேர்த்து, ஃபுட் எடுத்தோம் என்ற, புது மணிப்பிரவாளத் தொடர் ஆயிற்று. நாளடைவில் மணிப்பிரவாள நடை சீர்கெட்டொழிந்தாலும்கூட, ஃபுட் என்பது மட்டும் மாறி உணவு என்றாகி, உணவு எடுத்தோம் என்கின்றோமேயன்றிப், பழைய மரபுப்படி உண்டோம் என்கின்றோமில்லை. பிறமொழிச் சொல் போயினும், அதன் வரவாலேற்பட்ட மரபு முறிவு மாறுவதில்லை என்பதற்கு இஃது ஒரு சான்று ஆகும். பழங்காலத்தில் ஏற்பட்ட வடமொழி முதலிய மொழிகளின் தலையீடும் இவ்வகை அழிவையே செய்தன. எடுத்துக்காட்டாகச் செங்கடல் என்ற தொடர் பண்புத் தொகை. சுருக்கமாகச் செம்மை கடல் என்ற இருகருத்துகளைத் தொடர்புபடுத்துவது. வடமொழியில் இத்தகைய தொகைநிலைத் தொடர் இல்லை. ஆகவே, வடமொழியிலிருந்து சிவப்பு என்பதற்குச் சரியாக லோகிதம் என்ற சொல்லும், கடல் என்பதற்குச் சரியாகச் சாகரம் என்ற சொல்லும் கொண்டுவரப் பட்டு லோகிதசாகரம் எனப்பட்டது. வடமொழிச் சொல்லும் தொடரும் தமிழ்க் காதுக்கும் உள்ளத்துக்கும் புதிதாகையால், முதலது பண்பு என்று காட்ட “ஆன” என்ற சொல்லையும், அஃது ஒரு வண்ணம் என்று காட்ட நிறம் என்ற சொல்லையும் சேர்த்து லோகிதமான சாகரம், லோகித நிறமான சாகரம் என்று கூறப்பட்டது. இந்த இயற்கைக்கு மாறான மணிப்பிரவாளத் தொடரே இன்றைய தமிழின் “சிவப்பான கடல்”, “சிவப்பு நிறமான கடல்” என்ற பல்லக்குக் கொம்பு போன்ற அருவருப்பான தொடர்களுக்கு மூலமாய் நின்றது. பழந்தமிழில் புதுக் கருத்துகளைக் குறிக்கப் புதுச் சொற்கள் எவ்வளவோ எளிதாக இயற்றப்பட்டன எனக் காட்டலாம். ஆடுபவனை அல்லது ஆடுவதை ‘ஆடி’ என்றனர். நிழலையுடையது என்பதற்கு ‘நிழற்று’ என்றனர். உத்திராடத்தில் பிறந்தவனுக்கு ‘உத்திராடத்தான்’ என்றனர். மேலும் வாசகங்களில் எழுவாய் பயனிலைத் தொடர்பைக் காட்டும் பால் விகுதிகளைத் தமிழினின்று இந்திகூட எடுத்துக் கொண்டுள்ளது. வினைகள் ஒன்றையொன்று தொடரும்போது முன்னது வினையெச்சமாம் வழக்கை வடமொழி தமிழினின்றே கற்றுக்கொண்டது என்னல் வேண்டும். ஏனெனில், அத்தகைய வழக்கு பிற ஆரிய மொழிகளில் இல்லை. தமிழ்ச் சொற்களின் நயத்துக்கும் பொருள் வளத்துக்கும் சில எடுத்துக்காட்டுகள் தருவோம். தொண்ணூற்றாறு தத்துவங்களையும் கடந்து நின்ற பொருளைத் தமிழர் ‘கடவுள்’ என்றனர். வலஞ் சுழிக்கும் வட்டத்தை ‘வலயம்’ என்றனர். மற்றும் வினைப் பகுதிகளினின்று தொழிற் பெயரும், ஆகுபெயரும் உண்டுபண்ணத் தமிழில் இருக்கும் விகுதிகள் எண்ணிறந்தன. இவ்வளவையும் வைத்துக்கொண்டு, இன்று தமிழ் மாணவர், ஆசிரியர், நூலாசிரியர் முதலியோர் சிறுசிறு கருத்துகளை - ஆங்கிலச் சொற்கள் அல்லது வடமொழிச் சொற்கள் குறிக்கும் கருத்துகளைத் தமிழிற் கூற முட்டுப்படுவ தேன்? தமிழ் மரபு இழந்ததனாலும் அதன் பயனாகத் தமிழ் நூற்களை அறியும் திறம் குறைந்ததனாலுமேயாம். பழைய சங்க நூல்கள் இன்று உயிருள்ள நடையாய் இல்லை என்று கூறப்படுகின்றது. அவையல்ல உயிரிழந்து வருபவை. நம் கண்கள் காமாலை நோயிற்பட்டு, நம்மரபை மறந்து, நாம் இழந்த உயிரை, அவை இழந்த உயிராகக் காணச் செய்கிறது. ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்ற பழமொழி யுண்டல்லவா? இனியேனும், அச் சங்கநூற் பயிற்சியால் நம் பழக்க வழக்கங் களும் பழந்தமிழின் நாப் பழக்கமும் தமிழர் உளப் பழக்கமும் மிகவும் வளர்ந்து ஓங்குவதாக! இதுகாறும் மொழித்துறையின் தமிழ்ப் பண்பு கூறினோம். பிற துறைகளில் அஃது இன்னும் தெளிவாகக் கூடக் காணப்படும். ஆனால், இதில் ஓர் அரிய நயத்தை நாம் மறந்துவிடக்கூடாது. மொழியிலோ, சமயத்திலோ, பிறவற்றிலோ தமிழர்க்குத் தனிப்பண்பு உண்டு என்பதனால், அவர்கள் தனித்து வாழ்ந்தவர்கள் என்று கொண்டுவிடக்கூடாது. இவ்வெல்லாத் துறையுள்ளும் தமிழ் பிற இந்திய மொழிகளுடன் தெளிந்த மேலீடான உறவும், இந்தியாவுக்கு வெளியிலுள்ள மொழிகளுடன் மேலீடாகக் காணக்கூடாத ஆழ்ந்த உள்ளார்ந்த உறவும் உடையதாயிருக்கின்றது. இவ்வுறவுகள் யாம் முன் கூறியபடி பெரும்பாலும் தாய்மை உறவு அல்லது கொடுத்தல் உறவேயன்றிப் பெறுதல் உறவன்று. எடுத்துக்காட்டாகத் தமிழினின்றும் வடமொழி தன் உயிர்நாடியான சில ஒலிகளை யும், எழுத்துகளையும், சில இலக்கண மரபுகளையும், இலக்கிய இலக்கண விரிவையும் பெற்றது என்று காட்டக்கூடும். வடமொழியில் வால்மீகிக்கு முந்திய நூல்கள் பண்படாதவை. அதற்குப் பிந்தியவை மட்டுமே பண்பட்ட இலக்கியம் ஆகும். இங்ஙனம் பண்பட்ட நூல்கள் திடீரென்று எப்படித் தோன்றின? தமிழ் நாட்டில் பண்பாடு ஏற்பட்டது சங்கங்களால். வடமொழியில் சங்கங்களிருந்ததாகக் கேள்வியில்லை. ஆனால், முதல் வடமொழிக் கவிஞனாகிய, வால்மீகி தமிழ்நாட்டை நன்கு அறிந்திருந்தவன் என்பது கண்கூடு. இலக்கணப் பண்பாடும், விரிவும், பாணினியினால் ஏற்பட்டது. அவர் தொல்காப்பியர் காலத்துக்குப் பிற்பட்டவர் என்பது அந்நூற் பாயிரத்தால் மட்டுமன்று, அதன் சூத்திர நடையாலும் தெரிகிறது. பிற்காலத்தவர்கூட வட நாட்டிலும் பிற நாடுகளிலும் சங்கங்கள் மொழியைச் செப்பம் செய்ததையோ, நூல்களை ஆய்ந்து தேர்ந்து மதிப்பிட்டோ தொகுக்கவோ செய்தன என்பதையோ நாம் காணமுடியாது. அண்மைக் காலத்தில்கூட பிரான்சு நாடன்றி வேறெந்நாட்டிலும் சங்கங்கள் (ஹஉயனநஅநைள) இருந்ததாகத் தெரியவில்லை. மேலும், வடமொழியிலுள்ள சித்தாந்த வேதாந்த நூல்கள் யாவும், இலக்கிய நூல்களில் பலவும், தமிழ் நாட்டுத் தமிழராலோ, மலையாளத்துப் பழந்தமிழராலோ, அல்லது பழந்திராவிடர் தாக்கு மறையாது பொலிந்த வங்கம் மராடம் முதலிய நாட்டு மக்களாலோ மட்டுமே இயற்றப்பட்டன என்றும் வரலாற்றால் அறியலாம். தமிழரிடை இசைக்கும், நாடகத்துக்கும் முன்னாளில் இலக்கணம் உண்டு. அது மட்டுமன்று; இயலில் ஐந்திலக்கணம் உள்ளது, தமிழ்மொழியில் மட்டிலுமே. வடமொழியில் அணி யிலக்கணம் இலக்கணத்தின் வேறாக “அலங்கார சா°திரம்” என வளர்ந்துள்ளது. அஃது ஒன்றே அது பிற்காலத்திய வளர்ச்சி என்பதைக் காட்டும். தமிழில் முதல் இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் அது தனி அதிகாரமாகக்கூடப் பிரிக்கப்படவில்லை. இலக்கணத்துடன் இலக்கணமாக விரவிக் கிடக்கின்றது. அணியியலின் விதை வடமொழியில் இல்லை. தமிழிலேயே உள்ளது என்பது இதனால் பெறப்படுகின்றது. யாப்பின் செய்தியும் இதுவேயாகும். பொருளிலக்கணமோ எனில் அன்றும் இன்றும் தமிழன்றிப் பிறமொழிகளில் “காப்பி” அடிக்கப்படக் கூடாத ஒன்று. தமிழர் இங்ஙனம் பிறர்க்கெல்லாம் அவரவர் நாகரிகத்துக் கான விதை உதவினர்; உரம் கொடுத்து உதவினர்;அத்துடனாகவே தம் நிலத்துக்கெனத் தனி விதையும் உரமும் வேறு உண்டுபண்ணிக்கொள்ளும் ஆற்றலுடையவராயும் இருந்தனர். இதனால்தான், தமிழ் நாட்டினின்றும் சமய அலைகள் பல வடநாட்டுக்கும் உலகுக்கும் சென்றும், தமிழ் நாட்டில் மேன்மேலும் இடையறாப் புதுப்புது வளர்ச்சிகள் இருப்பதைக் காண்கின்றோம். உலகில் சமயத்தோற்றமே - வடவர் வேதம், பாரசீகர் “அவெ°தம்” முதலியனகூட - தமிழ் அந்தணர் புறம்போந்து அமைத்தவை என எண்ணவும் இடமுண்டு. அதை விட்டு விட்டாலும்கூட அறிவுத்துறையில் முதன் முதல் கடவுள் ஆராய்ச்சி செய்தவர் தமிழரே என்பது வடமொழி நூலுரைகளிலேயே காணப்படுகின்றது. வேதாந்தங்களாகிய உபநிடதங்களை அருளியவர் அரசரேயென அவை கூறுகின்றன. அவருள் சனகர் சனற்குமாரர் தலைவர் ஆவர். இவர்கள் வேதங்களிலும் மிக்க பழைமையுடையவர் என்றும் அவை கூறுகின்றன. வேத சமயம் அறிஞரால் ஏற்கப்படாமல் போகவே, அறிஞர் பேரால் உபநிடதங்கள் என்ற புது நூல்கள் செய்யப்பட்டு, வேதங்களின் மதிப்பை உயர்த்த அவற்றுடன் சேர்க்கப்பட்டன. இவ்வுபநிடதங்களின் சாரமாகிய பிரம சூத்திரங்களும் தமிழரிடமிருந்தே, தோன்றியிருத்தல் வேண்டுமென்பதனை அவற்றுக்கு உரைகண்ட பேராசியர் அனைவரும் தென்னாட்டினரே என்பதிலிருந்து உய்த்தறியலாம். அறிவுநெறியைப் பொறுத்தவரை கடவுட் கொள்கை தமிழ் நாட்டிலிருந்தே தோன்றியது. இதனைக் ‘கடவுள்’ என்ற சித்தாந்தக் கருத்துப் பொதிந்த தமிழ்ச் சொல்லொன்றே நன்கு விளக்கும். சித்தாந்தத்தை வகுத்த சந்தானாசாரியர் நால்வரும், வைணவ ஆசாரியரான இராமனுசரும் தமிழரே. அதுமட்டு மன்று, அவர் கோட்பாட்டை எதிர்க்க முயன்ற புறச்சமய ஆசாரியரான மாத்துவரும் சங்கரரும் தென்னாட்டிலிருந்தே தோன்றினர். இங்ஙனம், வரலாற்றுக் காலத்துக்கு முந்திய ஆராய்ச்சிகளில் புகாமல் வரலாற்றுக் காலத்துக்குட்பட்டு ஆராய்ந்தாலுங்கூட வேதாந்தத்தின் இரு கிளைகளான மாயாவாத நெறியும் சித்தாந்த நெறியும் தமிழ் நாட்டிலேயே பிறந்தவை என்பது தெளிவு. இவற்றுள் தென்னாட்டுக்கே சிறப்பான தொன்னெறி, சித்தாந்தம். அதன் கிளையாய், அதனுடன் தென்னாட்டில் எதிர்த்து நிற்கமுடியாது வடநாடு போய்ப் பரந்த புறச் சமய நெறியே மாயாவாதம். இதனை வடமொழியாளரே “பிரச்சன்ன பௌத்தம்” (மாறுவேடம் பூண்ட பௌத்தம்) என்றும், “சமத்கார நா°திகம்” (தந்திரமான நா°திகம்) என்றுங் கூறுவர். அறிவுநெறித் துறையில் தமிழர், தனித்தமிழ் நெறியாகிய சித்தாந்த நெறியை வகுத்ததோடு இந்தியா முழுதும் பரந்துபட்ட மாயாவாதம் முதலிய நெறிகளைத் தோற்றுவிப்பதிலும் உதவியாயிருந்தனர் என்று காண்கிறோம். அன்புநெறியில் வடநாட்டுப் பாகவத இயக்கத்துக்குக் காரணமா யிருந்தவர்கள் துளசிதாசர், கபீர், சைதன்யர் முதலியவர்கள். அவர்களுக்குக் குருவாயிருந்தவர் இராமானந்தர். அவர் தெலுங்கு நாட்டினர். அவரே சிவாஜி மன்னனுக்கு ஆசிரியர். இவர் இராமானுசரையும் இராமானுசர் ஆழ்வார்களையும் பின்பற்றினவர். ஆழ்வார்கள் காலமோ வடநாட்டுப் பாகவதக் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டது. எனவே, வடநாடெங்கும் பரந்த வைணவப் பயிரும் தென்னாட்டில் தோன்றியதே என்பது தெளிவு. சைவமோவெனில் தமிழ்நாட்டிலேயே பிறந்து, தமிழ் நாட்டிலேயே முழுவளர்ச்சியும் அடைந்தது. அதன் சமயாசாரியர்களாகிய நால்வர் பிறந்ததும், தேவார திருவாசகம் முதலிய சைவத் திருமுறைகள் எழுதப்பட்டதும் தமிழிலேயே. சமணரையும் பௌத்தரையும் எதிர்க்கும் வெறியில் சைவர் ஆரியச் சூழ்ச்சிக்கு ஓரளவு அடிமைப்பட்ட காலத்திலேயே சமயாசாரியரின் இப்புதுச் சைவம் எழுந்ததாதலால், இஃது ஆரியக் கலப்புப் பெறினும், உயிர்நிலைக் கருத்துகளில் தமிழ்ப் பண்புடையவையே என்று சொல்லத் தகும். எனவே, தமிழர்க்குச் சிறப்பான பழைய சமய நெறியுடன் இந்தியா முழுமைக்கும் பொதுவான பிற்காலச் சமய நெறிகளும் தமிழ் நாட்டையே உயிராகக் கொண்டவை என்று காணலாம். மொழியையும், சமயத்தையும் விடுத்து அறிவியல் கலைப் பகுதிகளை இனிப் பார்ப்போம். வான நூலில் தமிழர் இன்று காணும் அத்தனையும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே பெற்றிருந்தனர். இதைச் சிலப்பதிகாரம் முதலிய சங்கநூல்களின் குறிப்பால் நாம் அறியலாம். அதுமட்டுமன்று; வடநாட்டாரிடை நாட்கணிப்புப் பெரிதும் திங்களை ஒட்டியதாகும். தென்னாட்டில் அஃது என்றும் ஞாயிற்றை ஒட்டியே நடப்பது கவனிக்கத்தக்க வேறுபாடாம். ஞாயிற்று முறையை வடநாட்டாரும் ஏற்ற பிறகுங்கூடத் தமிழர் திருக்கு என்ற நேர்முறையையும், வடநாட்டார் அதனின்றும் தோன்றிய பள்ளிப்பிள்ளை வாய்பாட்டு முறையாகிய வாக்கிய கணிதத்தையும் பின்பற்றினர். மலையாள நாட்டில் இன்றும் வாக்கியக் கணிதம் ‘பரசியம்’ என வழங்கப்படுகின்றது. ‘பரசியம்’ என்பது வடமொழியில் பிறருடையது எனப் பொருள்படும். ‘திருக்கு’ காட்சி எனப் பொருள்படும். எனவே ‘திருக்கு’ தமிழர் நேரில் கண்டதும், ‘பரசியம்’ அயலாராகிய ஆரியருடையதும் எனக் காணலாம். இயற்கையை நேரில் கண்டறிந்த திருக்கு முறையிலிருந்தே வாய்பாட்டு முறையாகிய வாக்கியங்கள் ஏற்பட்டிருக்க முடியும். ஆதலால், தமிழர் தமக்கென வானநூல் முறையொன்று வகுத்ததுடன், பிறருக்கும் வேறு தனிமுறை வகுக்க உடந்தையா யிருந்தனர் என்பதும் விளங்கும். மருத்துவத் துறையில் ஒப்புயர்வற்ற முழு அறிவு பெற்ற சித்தர்கள் வாழ்ந்ததும், அவர்கள் முறையாகிய சித்தர் நெறிவளர்ந்ததும், இத் தமிழ் நாட்டிலேதான். இம்மருத்துவ முறை இன்று புறக்கணிக்கப்பட்டிருப்பது உலக வியப்புகளுள் ஒன்றாகும். ஏனெனில், இதன் உள்ளார்ந்த தன்மைகளை நோக்கினால், இஃது எல்லா முறைகளையும்விட மிகச்சிறந்த மருத்துவ முறையாகும். வடநாட்டு ஆயுர்வேதம் மட்டுமன்று, மேனாட்டு மாற்று நிலை, இணைப்புநிலை நெறிகளைவிடக்கூட (ஹடடடியீயவாiஉ யனே ழடிஅநடியீயவாiஉ ளலளவநஅள) மேம்பட்டது என்று காட்டலாகும். அதன் சிறப்புகளுள் ஒன்றிரண்டு மட்டும் கூறுவோம். பிற மருத்துவ முறைகளைவிட இது கண்கண்டது; கண்ணுடைய முறையாகும். எப்படியென்றால், இஃது ஒன்றே, உடல்நிலை, நோய்நிலை, மருந்து ஆகிய மூன்றையும் ஒருங்கே கணித்து மருந்து கூறுகின்றது. இன்றைய மேனாட்டு மருத்துவர் மக்கள் உடல்நிலையைக் கூறுபடுத்தாமல் நோய் அறிந்தவுடன் மருந்து கொடுப்பதைக் கண்கூடாக அறியலாம். மேலும், பிறமுறைகள், அம்முறைகள் வழங்கும் நாட்டில் கிடையாத பொருள்களைப் பயன்படுத்துவது, அவை அந்நாட்டில் பிறந்தவையே அல்ல என்று காட்டுகிறது. மருந்து சேர்ப்பதிலும் உண்டுபண்ணுவதிலும்கூட அவை பிறர் முறையைக் கடன் வாங்குவதனால், அவற்றை அடிக்கடி காரண காரியத் தொடர்பு காட்டமுடியாமல் குருட்டுத்தனமாகவே பின்பற்றுகின்றன. இவற்றுள் முந்திய குற்றத்துக்கு ஐரோப்பாவில் விளையாத கொய்னாப் பொடியையும், இரண்டாவது குற்றத்திற்குக் காப்பி, தேயிலை, புகையிலை முதலிய பழக்கங்களை முதலில் மேற்கொண்டு, பின் அரை குறையாய்க் குற்றம் கூறிய வகையையும், இன்றும் நன்மை என்றோ தீமை என்றோ துணிய முடியாத அம்மை குத்தல், ஊசியிடல் என்பவற்றையும் கூறலாம். இரண்டாவதாகச் சித்தர் நெறியைப் போல், தம் நாட்டுப் பொருள்களை நேரில் ஆராயாமையினால்தான், அவர்கள் பொருள்களைச் சேமித்து உலர்த்தியும், பொடி செய்தும், வடித்தும் இடர்ப்படவேண்டி வருகின்றது. சித்தர் நெறி நேரில் பூண்டுகள் சரக்குகள் இவற்றை ஆராய்வதுடன், அவை கிடைக்குமிடங்களையும் மலைவளம், நீர்வளம் என வகுத்துச் சுட்டுகிறது. மருத்துவத்தின் பகுதிகளாக இவற்றுடன் நோய் நிச்சயம், தனிக்குணம், வைப்பு முறை, சேர்மானம், நாடி நிச்சயம், பூண்டுவகை, உப்பு வகை, முப்பு முறை ஆகிய பல கிளைகளை உடையதும் இச்சித்தர் நெறி ஒன்றேயாகும். நேரிடையாக இயற்கையை ஒட்டிய முறையும், தொடக்கக் காலமுதல் ஆராய்ச்சி அனுபவத்தை ஒட்டிய முறையும் வேறு எதிலும் இல்லை. மேனாட்டு முறைகளில் இன்று மிகுதியும் வழக்காற்றில் இருக்கும் முறை மாற்றுநிலை முறையாம். அது பெரிதும் புற உடல் ஆராய்ச்சியையே நம்பியிருப்ப தாகலின், இயற்கைக்கு மாறான அறுவை மருத்துவத்தையே பெரும்பாலும் தழுவுதல் வேண்டும் நிலையிலுள்ளது. ஆனால், சித்தர் நெறி அறுவை மருத்துவம் இன்றியே எல்லாப் பிணிகளையும் தீர்க்கவல்லது. இன்னும் பல சித்தர் நெறித் தலைவர்கள் அறுவை மருத்துவமின்றியே தற்கால மேனாட்டு மருத்துவத்தினாலும் தீருவதற்கரிய பிணிகளையும் தீர்த்து வருவது கண்கூடு. அதுமட்டுமன்று; நோயைத் தடுப்பதுடன் மற்றெல்லா முறைகளும் நிற்ப, நோயில்லா வாழ்வு, நோய் எதிர்ப்பு வன்மை, ஆயுள் நீடிப்பு ஆகியவற்றுக்கு உதவும் வகையில், தற்கால நல்லுணவு முறையைவிட மேம்பட்ட முறைகளடங்கிய ‘கற்பம்’ என்ற தனித்துறையை உடையதும், உலகியல் கடந்த முழுமுதல் நோய்களான பிறப்பு, இறப்பு என்பவற்றைக்கூட வெல்லும் வகை ஆராய்வதும், இத் தமிழர் நெறியல்லால் வேறு இல்லை. தற்கால மேனாட்டு மருந்துத் துறையினர் தம் செருக்கையும், குறுமனப் பான்மையையும் விடுத்து, இந்நெறியை ஆராய முனைவரேல், உலகில் மருத்துவப் புரட்சியே ஏற்படுமென நான் துணிந்து கூறுவேன். கலையிலும் தமிழரின் முதன்மை நன்கு விளங்கும். பரத நாட்டியம் இன்று விரிவும் நயமும்பட நிலைபெற்றிலங்கக் காண்பது தென்னாட்டிலேயேயாம். சிற்றன்ன வாசல் முதலிய இடங்களிலுள்ள பழந்தமிழ் உயிர் ஓவியங்களே அண்மைக் காலத்தில் மலையாள நாட்டில் இரவிவர்மாவின் கலையாக மீண்டும் வளர்ந்தன. கலையின் வளர்ச்சி வட நாட்டில் ஆரியத்தாக்கு மட்டும் உள்ள பஞ்சாபு, காசுமீரம் முதலிய இடங்களில் ஏற்படாமல், திராவிடத் தாக்கும், திராவிடரோடு தொடர்புமுடைய இராஜபுத்திரரது தாக்கும் மிகுந்த அஜந்தா, எல்லோரா முதலிய இடங்களிலும், வங்கநாட்டிலும் மட்டிலுமே ஏற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. சிற்பங்களோ எனில் போட்டியின்றித் தென்னாட்டுக்கே உரியனவாகும். தஞ்சைக் கோயில், திருமலை நாய்க்கன் மகால், மதுரைக் கோவில் முதலியவற்றுக்கு ஈடாக, ஏன்? முசுலிம்கள் வருமுன், வடநாட்டில் எத்தகைய சிற்பமும் இல்லை எனல் காண்க. இசைக் கலையில் மேலீடாகப் பார்ப்பவர்க்குக் கருநாடக இசை பெயரளவில் தெலுங்கு மொழியில் நிலவினும், உள்ளூர ஆராய்ந்து பார்த்தால் அதன் தோற்றம், வளர்ச்சி தற்போதைய செல்வாக்கு ஆகிய எல்லா வகையிலும் தெலுங்கு நாட்டைவிடத் தமிழ் நாட்டினுடனேயே நெருங்கிய தொடர்புடையது என்று காணப்படும். அதன் அறிவியல் பகுதியை உள்ளூர அறிந்தவரும், கலைப் பகுதியைத் திறம்படக் கையாளும் கலைஞரும், தமிழ் நாட்டில் பிறந்த தமிழரேயாவர். அதன் ஒப்பற்ற தலைவராக எண்ணப்படும் தியாராஜர்கூடத் தமிழ்நாட்டின் நடுநாயகமான திருவையாற்றில் தான் வாழ்ந்தவர் என்பதும் நினைவில் வைக்கத்தக்கது. பிற்கால அரசியலார் தெலுங்கு மொழிக்கு ஆதரவளித்த தனாலேயே தமிழரின் தமிழிசை தெலுங்கிசையாக உருவில் மாறியது. ஆனால், அக்கலையின் தோற்றம் தெலுங்கிசைக்கு மட்டுமன்று, தெலுங்கு மொழிக்கே முற்பட்டதாகும் என்பதை வரலாறு நன்கு எடுத்துக்காட்டும். இசையுடன் பிறந்த நாடகக் கலையிலும், உலகெங்கும் நாட்டியத்தைப் பரப்பிய உதயசங்கர் முதலிய கலைஞர் பாராட்டுவது தென்னாட்டினையே. இரண்டாயிரமாண்டுகட்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் இந்நாடகக் கலையின் விரிவை நோக்குவோர் அதன் பண்டை உயர்வினையும், நுட்பத்தையும் கண்டு வியவாதிரார். தமிழ்ப் பண்பின் இன்னொரு பகுதி அதன் இறவாத் தன்மையாம். இப்பண்பு உண்மையில் அதன் வண்மையின் ஒரு பகுதியேயாகும். ஓய்வு வேண்டா வளர்ச்சிப் பெருக்கத்தை உடைய மொழி தளர்ச்சியடையாத மொழியல்லவா? அத்தோடு, தமிழ்க்கு இதுவரை ஏற்பட்ட இக்கட்டுகள் கொஞ்ச நஞ்சமல்ல. நண்பரையே யன்றிப் பகைவரையும் ஒப்ப வரவேற்று இருவரையும் வேற்றுமை தெரியாமல் தம்மகத்தே வைத்து வளர்த்தவர் - வளர்ப்பவர், தமிழர். அங்ஙனம் உடலினுள் சென்று உயிர் நாடியைத் துளைத்து உள்ளுயிரை உறிஞ்சும் பகைப் புழுக்களின் செயலை எதிர்க்கும் ஆற்றல் தமிழினுக்கன்றி வேறு எம் மொழிக்கு இருக்கக்கூடும்! இரண்டாம் உலகப் போரில் செருமானியரைத் தம் நாட்டுக்குள் புகவிட்டுத் தாம் அவர் அழிவின் முழுவேகத்தையும் ஏற்றும் எதிர்ப்பு வன்மை குன்றாமல், படிப்படியாக அவ்வெதிரிகளின் வலிமையைக் குறைத்து, அவர்களை விழுங்கிய மாபெரும் இரஷ்ய நாடு ஒன்றையே தமிழின் ஒப்பற்ற இவ்வுயிர் வன்மைக்கு - இதன் இறவாத் தன்மைக்கு - உவமையாகக் கூறலாம். தமிழ் மொழியின் தனிப்பண்பு பற்றி இதுகாறும் கூறினோம். இனி, இத் தனிப்பண்புகள் எழுந்த வகையையும், அவற்றால் உலகின் முழுமுதல் மொழியாய் இருக்கும் தகுதியுடைய தமிழ் நலிவடைந்து வருவதன் காரணங்களையும் ஆராய்வோம். தமிழின் தனிச்சிறப்புக்குக் காரணமாவது தமிழரின் தனிப்பண்பே யாகும். ஆனால், செம்பில் களிம்புபோல் இப்பண்பினுள்ளே ஒளிந்து கிடந்தது ஒரு சிறு தூசு. அதுதான் பேரணையில் கிடந்த சிறு கீறல் போல் வரவர விரிந்து தமிழ் நலிவுக்கும் தமிழர் நலிவுக்கும் காரணமாயிருந்துவருகிறது. தமிழர் குணங்களுள் மிகச் சிறந்ததும், இன்று அவர்கள் நிலைமையை இழிவுபடுத்துவதற்குக் காரணமாக இருப்பதுமான குணம் வேளாண்மையே யாகும். வேளாண்மை என்பது பிறர்பாற் பரந்துபட்ட அன்பு. பிற நாட்டாரும் அன்பைப் பேணினும் அவ்வன்பு இரு வகையில் வரம்புபட்ட அன்பாகும். முதலில் தன்னலத்தாலும், இரண்டாவதாக ஆணவத்தாலும் அது தடைப்படும். தன்னலத்துட்படும்போது அவ்வன்பு ஆதாயம் கிடைக்கும் இடங்களில் மட்டுமே செலுத்தப்படும்; இழப்பு ஏற்படும் இடங்களில் விலக்கப்படும். இன்றைய சனாதனிகளிட முள்ள சனாதனத்தில் இவ் இயல்பை வேறு விதமாகக் காணலாம். ஆதாயம் வருமிடங்களில் இது முகங்காட்டாது; இழப்பு வருமிடங்களில் ஆரவாரத்துடன் முழங்கும் நிலையுடைய தாக விளங்கும். இரண்டாவதாக ஆணவத்திற்குட்பட்ட போது அது சற்று விரிந்த தன்னலமாகத் தன் உறவினர், தன் வகுப்பு, தன் நாடு, தன் சமயம் ஆகியவற்றுக்குள் நின்று விடுகின்றது. தமிழரின் வேளாண்மைக்கு இத்தகைய வரம்பு இல்லை. அது கிட்டத்தட்ட கடவுளின் அருட்குணத்துக்கு அண்மை யுடையது. தன்னை அண்டினோர் யாவராயினும் வரையாது கொடுக்கும் தன்மையது அவ் அன்பு அல்லது வேளாண்மை. வருபவன் தன் இனமாயினுஞ்சரி பிற இனமாயினுஞ்சரி, நண்பனா யினுஞ்சரி பகைவனாயினுஞ்சரி, ஏழையாயாயினுஞ்சரி செல்வனாயினுஞ்சரி, அவன் தன் வீடு தேடிவரின் அவனை விருந்தினனாகவே கொள்ள வேண்டுவது தமிழர் முறைமை. அது மேலீடாகக் கற்றுவந்த கடமை மட்டுமன்று; நெடுநாள் பழகி உள்ளத்தில் ஊறிப்போன பண்பாடு; அல்லது இயல்பு ஆகிவிட்டது. இதனால், எல்வளவோ தீங்கு வந்தும் தமிழர்களை விட்டு இக் குணம் அகன்றபாடில்லை. இக் குணத்தால் அவர்கள் அறிஞர் போற்றும் தெய்வத் தன்மை மிக்க அருளாளராக விளங்கினும், உலகியல் வாழ்வில் அவர்கள்பட்ட, படும் இன்னல்கள் எண்ணுந்தரமன்று. “அருளிலார்க்கு அவ்வுலக மில்லை; பொருளிலார்க்கு இவ்வுலக மில்லாகி யாங்கு” என்று வள்ளுவர் மொழி என்றும் எவர்க்கும் பொய்க்காதன்றோ! இவ்வுயர் பண்பு உடையவர் தமிழ்நாட்டின் வெளியிலும் சில வகுப்பார் உளர். அவரே வட இந்தியாவிலுள்ள இராஜபுத்திரரும், °காத்லந்து அயர்லந்து நாட்டினரும், அமெரிக்க நாட்டுச் செவ்விந்தியர் முதலியவருமாவர். இவ்வனைவரும் தமிழரைப் போலவே இன்று தம் ஆண்மை கெட்டு நலிந்திருப்பது காண, இவ் வேளாண்மை எவ்வளவு உயர்குணமாயினும், ஒரு வகுப்பினர் உயர்வை ஓரளவு தடை செய்யவோ, ஒரு வேளை முற்றிலும் அழிக்கவோ செய்யும் இயல்பும் உடையது என்னலாம். தமிழ் மக்களுக்குத் தீங்கில்லாமல் இவ் வேளாண்மை நிகழ வேண்டு மாயின், இதில் அன்புடைமை சற்றுங் குறையாமலேயே, அறிவு முறையில் சிறுசிறு மாறுதல்கள் ஏற்படுதல் வேண்டும். அவற்றுள் ஒன்று தன்மதிப்பு, தன் மக்களைப் போல் பிற மக்களைப் பேணுதல் வேண்டும் என்ற நீதியைத் தமிழர் மட்டுக்கு மிஞ்சிப் பின்பற்றினர். முகலாய அரசன் உமாயூனைப் போலத் தன்மக்களிலும் பிறமக்களை இவர்கள் உயர்த்தி வருவது யாவரும் காணத்தக்க செய்தியேயாகும். இன்று வேளாண்மையுடைய தமிழருக்கு மாறாகத் தாளாண்மை மிக்க பிறமக்கள் தமிழர் வாழ்விலும் சமயத்திலும் புகுந்து பங்கு பெற்று அச்சமயத்தையும் வாழ்வையும் அழிக்க முனைகின்றனர். இப் பிறமக்கள் யாரோ வெனில், தம்மை உயர்ந்தோர் என்று கூறிக்கொள்ளும் சீரியர் அல்லாத சூழ்ச்சிக்காரரே என்பது சொல்லாமலே அமையும். அன்னார் தமக்கு இடங்கொடுத்த தமிழ்ப் பெருமக்களைச் சிறுமைப்ப டுத்தித் தூற்ற, அதனைத் தமிழர் பலர் வாளா ஏற்கும் நிலைமைக்கும் வந்துவிட்டனர். தமிழர் வேளாண்மையுள் புதைந்து கிடக்கும் தற்கொலைப் பண்பு, வேளாண்மை சிறிதளவும் இல்லாரிடமும் அவர்கள் வேளாண்மை செலுத்துவதே யாகும். ‘பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்ற உண்மையை மறந்த தமிழர் அதன் பயனாக அப் பிச்சைக்காரரின் காலடியிற் கிடந்து, `வாய்விடா உயிர்கள்போல்’ வதங்குகின்றனர். அவர்கள் அறம் அவர்களுக்கு வானுலகும், புகழும் தருவதற்கு மாறாக, அவர்கள் தாய்க்குப் பழியும் தந்தையர்க்கு இழிவும் இம் மண்ணுலகிலேயே தந்துள்ளது. அது மட்டுமா? உண்மைக் குடிகாரனும் பழிகாரனும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் இழிசொற்களைத் தாமே விரும்பி ஏற்றுத் தம் மூதாதையர் மேலும் விரும்பிச் சுமத்தும் அளவு, அவர்கள் தன் மதிப்பிழந்தும், தன்னுணர்வு இழந்தும் விட்டனர். இந்நிலைமை விரைவில் மாறித் தமிழர் வேளாண்மை யோடு, வேளாண்மைக்கு மாறற்ற தாளாண்மையும் உடையவராதல் வேண்டும். தமிழரின் இன்னொரு தனிப்பண்பு அவர்களது மான உணர்ச்சி. தன் மதிப்பிற் சிறிது குன்றினும் உயிரை விட்டுவிடும் மாவீரர் தமிழர். அத்தகைய நிலைமையில் உயிர்விடுவது தற்கொலை என்றே அவர்கள் கருதுவதில்லை. கணவனுடன் இறந்த கற்புடைய மாதர் தமிழ் மாதரும், தமிழருடன் நெருங்கிய உறவுடைய இராஜபுத்திர மாதருமேயன்றிப் பிறர் அல்லர். வடநாட்டில் இராஜபுத்திரரது வீரவழக்குப் பிற கோழைகள்மீது சுமத்தப்பட்டு உடன்கட்டை ஆயிற்று. தமிழரிடத்தில் இத்தகைய வற்புறுத்தல் இல்லை என்பதை அவர்களிடை மறுமணம் செய்யும் வகுப்பினர் அன்றேபோல் இன்றும் இருப்பதால் அறியலாம். இம் மான உணர்ச்சி இன்று வெற்றாரவாரமாக நின்று தமிழரிடை அழிவு செய்கின்றது. காரணம் இது தன்மதிப்புடன் கூடிய அன்பு நெறியினின்றும் விலகியதும், அன்புநெறியும் தாளாண்மையும் அற்ற ஒரு தன்னலக் கூட்டத்தாரின் சூழ்ச்சியுட் பட்டதுமேயாம். தமிழர் மான உணர்ச்சி அல்லது அதன் திரிபு ஆகிய ஆணவத்தினால் தூண்டப்பட்டு, ஒருவர்க்கொருவர் பிணங்கும் இடங்களிலெல்லாம், அவர்கள் இயற்கை அன்பின் வசப்பட்டு மீண்டும் ஒன்றாய் இணங்கிவிடாமல், இப் பசுத்தோல் போர்த்த புலிக்கூட்டத்தினர் அவர்களை என்றும் பிரித்து வைக்கச் சூழ்ச்சிகள் வகுத்தனர். தமிழரிடம் உள்ள உண்மைச் சமய உணர்ச்சியினின்று பகுத்தறிவை அகற்றப் போலிச் சமய உணர்ச்சியை உண்டுபண்ணி வளர்த்து, அதன் மூலம், இவர்கள் தமிழர்களை என்றும் ஏய்த்துத் தின்ன வழிபார்த்தனர். அங்ஙனம் பிரித்து வைக்கச் சமயம், அரசியல் கொள்கை முதலிய எதனையும், எவ்வாறாயினும் அவ் “அருள் பிறவிகள்” பயன்படுத்தத் தயங்குவதில்லை. கடைசியாகத் தமிழர் பண்பில் தலைசிறந்தது பிறப்பு வேற்றுமை பாராட்டாமையேயாகும். கீழ் உயிர்களைக் கொல்லுவதும் கொலையே எனக் கொண்ட தமிழர், மக்களிடையிலேயே ஒரு சாராரைக் ‘கீழ்’ என ஒதுக்குவரோ? ஒதுக்கார். மக்களுள் ஒரு சாரார் கீழ்மை உடையவரா யிருந்தாலும்கூட, அவர்களை நேரிடையாகவோ, நயமாகவோ உயர்த்தவே முயற்சிசெய்வர் உண்மைத் தமிழர். இதனைப் பழந்தமிழர் சமய வாழ்வில் நன்கு காணலாம். ஊன் மறுத்த உணவைத் தமிழர் இன்றும் “சைவ” உணவு என்கின்றனர். அவ் ஊன் மறுத்தார் சிவனை வணங்குகின்றனர். ஊன் உண்டு பலியிடுபவர் தெய்வத்துக்கும் தமிழர் சுடலைமாடன், இசைக்காடும் பெருமாள் என்று பெயர் வைத்துள்ளனர். கொஞ்சம் தமிழ் அறிந்த உடனே இவ்விரு தெய்வமும் ஒன்று என்று அவர்கள் ஒரு நெறிப்படுவர் அன்றோ? இன்று தமிழரிடையே வகுப்பு வேற்றுமை தலைவிரித்தாடு கின்றது. இஃது என்றுமே இப்படி இருந்ததில்லை என்பதைப் பழைய தமிழ் நூல்களால் அறியலாம். ஆனால், தமிழரிடையே இவ்வேற்றுமையைப் புகுத்தியவர் நாட்டில் கூட, இவ்வேற்றுமை தமிழ்நாட்டிலுள்ள அளவு இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. பிறரைப் பிரித்தால்தானே வாழலாம்; தான் பிரிந்தால் வாழமுடியுமா? எனவேதான், அங்கும் இல்லாத ஒன்றை இங்கு மட்டுமே அவர்கள் புகுத்தினர். தமிழ் நாட்டிலும் முன்னாளில் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற பிரிவினை இருந்ததாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. அது வருண வேற்றுமை அன்று. வருண வேற்றுமையா யிருந்தால், அன்று பார்ப்பனர் தம்மையொழிந்த பிறர் அனைவரும் சூத்திரர் (அல்லது தாசி மக்கள்) என்று கூறுவரா? தமிழ் நாட்டரசரும் வணிகரும், நல்ல தமிழராய், இருந்ததனாலன்றோ பார்ப்பனர் அவரைத் தம் வருணப் பாகுபாட்டில் தம்முடன் சேர்க்கவில்லை. மேலும், தமிழர் பாகுபாடு தொழிற் பாகுபாடேயன்றிப் பிறப்பினால் உயர்வு தாழ்வுப் பாகுபாடுகளல்ல என்பதை இன்னொரு வழியில் காட்டலாம். தமிழர் நால் வகுப்புள்ளும் நாலாவதான வேளாளர் வகுப்பு ஒன்று தமிழ்நாட்டில் நாலாவது வகுப்பாயில்லை. எவ்வகையிலும் முதன்மையுடைய வகுப்பாகவே அஃது இருக்கின்றது. தமிழர் வேளாண்மைக்கு ஓர் இலக்காகவே இருக்கின்றவர் இன்றும் அவர் அன்றோ? மற்றைய மூன்று வகுப்பாருக்கும்கூடத் தமிழர் இப்பெயரைச் சூட்டத் தயங்குவதில்லை. வணிகரிடைப் ‘பூவைசியர்’ என்பவர் வேளாளரே. ‘தனவைசியரும்’ வேளாண்மையுடையவரே. அரசருள் தமிழரிடை-குறுநில மன்னராயிருந்து சிறப்புற் றவர் ‘வேளிர்’ எனப்படுவர். ‘வேளாளர், வேளிர்’ என்ற இரண்டு சொல்லும் ‘வேள்’என்ற பகுதியிலிருந்தே வந்தவை யாகும். ‘வேள்’ என்றால் கடவுள். முருகனுக்கு அது பெயராயிற்று. கடவுளை வழிபடும் வழிபாடே வேள்வி. கோவிலில் வழிபாடு செய்யும் ஒரு தமிழ் வகுப்பார் இன்றும் ‘வேளார்’ எனப்படுகின்றனர். எனவே, ‘வேளாளர்’ என்ற சொல் அந்தணர்க்கும் உரியதாதல் காண்க. அது மட்டுமன்று. இன்று தமிழ் நாட்டுச் சைவ வைணவக் கோவில்களிலே பூசை செய்ய உரிமை பெற்ற வகுப்பினரைப் பார்ப்பனர் ‘வேளாப் பார்ப்பார்’ என்று கூறித், தம்முடன் சேர்க்காது விலக்கி வைக்கின்றனர். நக்கீரர் முதலியவரும் ‘வேளாப் பார்ப்பார்’ என்றே கூறப்படுகின்றனர். அவர்கள் ஊன் உண்ணாதவ ராதலின், வேள்வி (வடநாட்டு வேள்வியாகிய பலி) செய்யாதவர் என்ற பொருளில், அவர்கள் அங்ஙனம் பிரித்துக் கூறப்பட்டனர் போலும்! கோவில் குருக்கள் பார்ப்பனரது ஆரிய மந்திரங்களை ஓதாமல், எங்கும் தமிழர் முறைப்படியே மந்திரமோதலின், அவர்களை ஆரியச்சார்பான பார்ப்பனர், தமிழ்ப் பார்ப்பார் என்ற முறையில், வேளாப் பார்ப்பார் என்று கூறியிருக்க வேண்டும். நாலடியாரை ‘வேளாண்வேதம்’ என்று கூறிய இடத்தும், வேள் என்ற சொல் வேற்றுமை காட்டாது தமிழரைக் குறித்தல் காண்க. இங்ஙனம் தொழிலாலும் பழக்கவழக்க மாறுபாட்டாலும், இயற்கையில் தமிழரிடையே வேற்றுமை இருந்த போதிலும், அதனை அவர்கள் பிறப்பு வேற்றுமையாகக் கொள்ளவுமில்லை. சமயத் தொடர்புபடுத்தவுமில்லை. தமிழரசரும் தமிழ்ச்செல்வரும் தம் நாட்டுக்கு வந்த அயல் மக்களைத் தம் மக்களிலும் மேம்படுத்தியதனால், அம் மக்கள் நிலைமறந்து, ஒண்டிய வீட்டிலிருந்து உடையவரை இகழவும் தாழ்த்தவும் இடமேற்பட்டது. அங்ஙனம் கெடுத்த பின்னரும்கூடத் தமிழர்க்கு இயற்கை யான வகுப்புப் பற்றற்ற தன்மை தமிழ் நாட்டிலுள்ள பெரியார் களின் வாழ்விலும் காணப்படுகிறது. மேலும், தமிழ் மக்கள் இன்றும் எச் சமயத்தினராயினும் பேதமின்றி மாதாகோவில், ஆண்டவர் பள்ளி முதலியவற்றுக்குச் சென்று பணிகின்றனர். அதே சமயம் பார்ப்பனர் தாம் மேற்கொள்ளும் - அல்லது மேற் கொள்வதாகச் சொல்லும் சமயத்துக்குள்ளேயே ஆழ்வார்கள், நாயன்மார்கள், வள்ளலார் ஆகியவர்களைப் போற்ற மறுப்பதும், தமிழ்நாட்டுக்குப் புறம்பே சென்று பிற மதத்தை அணைந்தவராயினும்கூடத் தம் கூட்டுறவுப் படையில் பிறந்தவர் என்பதற்காக, சாயிபாபா முதலியவர்களை, நம்பியோ நம்பாமலோ கொண்டாடுவதும் காண்க. தமிழர் இன்னும் இக் கூட்டத்தாரைத் தம்மவரென்றோ அயலவர்- நண்பரும், பகைவரும் அற்ற பொது நிலையிலுள்ள வெளிநாட்டு மக்கள் - என்றோ எண்ணி ஏமாறுகின்றனர். எம்மதமும் சார்ந்து கெடுக்கும் பகைவர்கள் அவர்கள் என்ற உண்மையை உணர்கின்றார்களில்லை. சைவர்களும் வைணவர்களும் இவ்வாரிய வகுப்பினர் களுக்கு அடிவருடிகளாய்த் தம் தமிழின மக்களை அடிமைப் படுத்தித் தாழ்த்த ஒருப்பட்ட போதிலும்கூட, சுமார்த்தரும் வடகலையாரும் அச்சைவரும் வைணவரும் மேற்கொள்ளும் நாயன்மாரையும் ஆழ்வார்களையும் தலைவர் உட்பட மேற்கொள்ளத் தயங்குவதைக் காணலாம். தமிழர் இனியேனும் விழித்தெழுந்து பொதுப் பற்றுடன் தனிப் பண்பு பேணித், தம் பொதுமறையாகிய திருக்குறளின் நெறியைப் பின்பற்றிப் “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்” எனப் பறையறைந்து பண்புடன் வாழ்வாராக! தமிழ்ப் பண்பு வாழ்க! தமிழ் வாழ்க! “கடந்த அதனைக் கடவுள் எனக்கொள் திடம் பேணுவார் அறிஞர் தேர்ந்து” 5. தமிழ்த் தெய்வம் வாழ்க ! மக்கள் தாம் பேசும் மொழியையும், வாழும் நாட்டையும் தாயாக உருவகப்படுத்துதல் உலக வழக்காக இருக்கின்றது. உடலைப் பெற்று உணவூட்டி ஆதரிக்கும் தாயைப்போல் மொழியும் நாடும் அவர்களை இளமையிலூட்டி வளர்ப்பதனை உன்னியே இவ்வழக்கு எழுந்திருத்தல் வேண்டும். உரோம் நாடு ஒன்றில் மட்டுமே (அதனைப் பின்பற்றித் தற்கால உலகில் செருமனி நாடும்) தந்தையர் நாடு தந்தையர் மொழி யென்றனர். பிற்காலப் புலவர்களும் தந்தையர் நாடு என்று அருகிக் கூறுவதுண்டு. ஒருவேளை உடம்பினை ஊட்டி வளர்க்கும் தாயினும் உயிர்க்கு உணவாம் கல்வியும், உலக வாழ்க்கைக்கு உறுதுணையாம் பொருட்பேறும் தரும் தந்தையே மேம்பட்ட உறவு என அவர்கள் கருதினர் போலும்! ஆனால், உண்மையில் மக்கள் பேசும் மொழிக்கு உவமையாகத் தாயையும் தந்தையையும்கூடக் கூறுவது போதாது. ஏனெனில், தாயும் தந்தையும் மக்களை வளர்த்தூட்டுவது இளமையில் மட்டுமேயாம். மொழியோ மக்களுக்குத் தம் ஆருயிர் வாழ்க்கை முழுமையும் உறுதுணையாய் நிற்கின்றது. அவர்கள் செயல் மொழி நினைவுகளையெல்லாம் அரசனைப் போல் ஏவிநின்று இயக்குகின்றது. அது மட்டுமன்று, அவர்களுக்குக் கடவுளைப்போல் உள்ளும் புறமுமாக நின்று, அவர்களை விட்டகலாது, அவர்கள் தன்னை மறப்பினும் தான் அவர்களை மறவாது அஃது அவர்களுக்கும் அவர்கள் வழிவழித் தலைமுறையார்க்கும் வாழ்வு தர ஓவாதுழைக்கின்றது. ஆகவே, மொழியை மக்களது தாய், தந்தை, நண்பன், அரசன் என்று உருவகப்படுத்துவதிலும், ‘தெய்வம்’ என்றே உருவகப்படுத்துதல் சாலச் சிறந்ததாம். தாய்மொழியைத் தெய்வம் எனல் இயைபுடையதானால், தமிழர் தாய்மொழியாகிய தமிழைத் தெய்வம் எனல் ஆயிரமடங்கு இயைபுடையதாகும். ஏனெனில், தமிழ்மொழி மற்றெல்லா மொழிகளிலும் இயற்கையுடன் மிக நெருங்கிய உறவு உடையது. மொழிகளெல்லாம் இயற்கையன்னையின் பிள்ளை களானால், தமிழ் இயற்கையன்னையின் முழுமுதற் பிள்ளை என்னலாம். இதனை அதன் ஒலிகள், எழுத்துகள், இலக்கண இலக்கிய அமைதிகள் ஆகிய யாவற்றுள்ளும் பார்க்கலாம். தமிழின் ஒலிகள் அதிக முயற்சியின்றி ஒலிக்கப்படுபவை என்பதை நேரிடையாக ஒலித்தே அறியலாம். ஒலிகளைப் பதிவு செய்யும் பொறிகள் மூலம் அறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கர் அதனைக் காட்டியும் உள்ளனர். அதனுடன், உலக மொழிகள் ஒவ்வொன்றின் வரலாற்றையும் ஆராய்வோர் மொழிகள் இன்று மாறும் மாற்றம் எல்லாம் இறுதியில் தமிழ்த் தன்மையடையும் வகையிலேயே செல்கின்றன என்றுகாண்பர். இதற்கு ஆரிய மொழிகளும் விலக்கல்ல. எப்படியெனில் வடமொழியில் மெய்யெழுத்துகளுள் கசடதப என்ற ஐந்து வல்லெழுத்திலும், ஒவ்வொன்றிலும் நான்கு எழுத்துகள் உண்டு. அந்நான்கையும் அவ்வற்றுக்கினமான ஙஞணநம என்ற மெல்லெழுத்து களையும் ஐவர்க்கம் என்பர். இவ் ஐவர்க்கங்களுள் முதலாவதும் மூன்றாவதும் மட்டுமே இயற்கை ஒலிகளாம். ஏனெனில், இரட்டித்து வருமிடங்களிலெல்லாம் இவ்விரண்டாவதும் நான்காவதும் மாறி, ஒன்றாவதும் மூன்றாவதும் ஆகின்றன. மேலும், இரண்டு உயிர்க்கிடைப்பட்ட வன்மை மென்மையாதலும், இடைபோன்று ஒலித்தலும் கெடலும் தமிழில் காணலாம். எடுத்துக்காட்டாக ‘மாதம்’ என்ற சொல்லின் இடையிலுள்ள ‘த’ கரம் ‘திட்டம்’ என்ற சொல்லில் உள்ள ‘த’ கரம் போல ஒலிக்காமல் இடையெழுத்துப்போல் ஒலித்தல் காண்க. ‘தேசம்’ என்ற சொல் தேயம் என இடையாகி, அவ் இடையெழுத்தும் கெட்டுத் ‘தேம்’ எனப் பழைய நூல்களில் வருவது காணலாம். இம் மாறுபாடு தெலுங்கிலும் மலையாளத்திலும் மலிந்திருப்பது அவை தமிழினத்தைச் சேர்ந்தவை, வடமொழியைச் சேர்ந்தவை அல்ல என்பதைக் காட்டுகின்றது. வடமொழியில் ‘மாதா’ என்ற சொல் தமிழில் மாத்தா என்றெழுதி விரைவாக வாசித்ததுபோல் ஒலிக்கும். ஆனால், மலையாளத்தில் அங்ஙனம் ஒலிக்காமல் தமிழ் போலவே ஒலிக்கின்றது காண்க. அது மட்டுமன்று; வடமொழியில் இல்லாத இவ் இயல்பு வடநாட்டுத் தாய்மொழிகளாகிய பண்டைய பாளி, பாகதங்கள், தற்கால இந்தி முதலிய மொழிகளில் காணப்படுகின்றன. பிற நாட்டு மொழிகளிலும் அருகலாக இவை காணப்படாமலில்லை. வடமொழியில் ஆரிய புத்திர என்ற சொல், பாகதத்தில் அஜ்ஜவுத்த என வருவதும், பகினீ என்ற வடசொல் பகினீ என இந்தியில் வருவதும் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாகும். மற்றும் மொழி முதலில் இரு மெய்கள் வாராமை, இடையில் பெரும்பாலும் மூன்று மெய்கள் முதலிய கடுந்தொடர்கள் வாராமை, இறுதியில் மெய்கள், சிறப்பாக வல்லினங்கள் வாராமை ஆகிய வகைகளில் ஆரியமொழிக்கு முன்னிருந்தே ஐரோப்பாவில் வழங்கிய உருசிய, பின்னிசிய, ஹங்கேரிய மொழிகள் தமிழ்க் குழுவுடன் ஒத்திருக்கின்றன. இந்தியாவிலும் பாளி பாகதச் சிதைவுகள் இவ்வகையில் தமிழை அண்டியே வந்துள்ளன. ப்ரக்ருதி என்பது பகுதி எனவும், ப்ரியதர்ஸி என்பது பியத°ஸி எனவும் மாறுதல் இதனை வலியுறுத்தும். இலக்கணத்திலும் பல விதிகள் இயற்கை விதிகளோ என்னும்படி அமைந்துள்ளன. “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவதியல்பே” என்ற உயிர்மெய் இயல்பு கூறும் நன்னூல் சூத்திரமும், “வன்மை சார்ந்த மென்மை வன்மைக் கினமாகத் திரியும்” என்ற விதியும், தமிழ்க்கு மட்டுமின்றி உலகியல்புக்கே இலக்கணமாதல் காண்க. இரண்டு உயிர்கள் கலத்தலால் இடையிட்டுவரும் யகர வகர மெய்களை உடன்படுமெய் என்று சொல்லாமல் உடம்படுமெய் என்றே கூறியதும் இதன்பாற்படும். உயிர்க்கு உடம்பாக வந்த மெய் என்ற தத்துவத்தை இது உணர்த்தி நிற்கும். மேலும் ஐம்பூதச் சேர்க்கையால் ஏற்பட்ட உலகத்தை ஒத்துத் தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாகவும், தமிழிலக்கியம் ஐந்திணை நெறிப்பட்டதாகவும் அமைந்தன என்றுங் கூறலாம். சொல் ஒழுங்கு, வாசக ஒழுங்கு முதலியவற்றை எடுத்துக் கொண்டாலும், தமிழின் இயற்கை வாய்ப்பு நன்கு புலனாகும். எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றில் வாக்கியம் முடிவது; பயனிலையிலாயினும் ஆங்கிலம் முதலிய பல மொழிகளும் பயனிலை இடையில் அமைந்துவிடுகிறது. செயப்படுபொருள், பயனிலை கொண்டு முடியும் வேற்றுமைத் தொடர்கள், உரிச்சொற்கள், சார்பு வாசகங்கள் முதலிய யாவும் பின் சேர்க்கையாக வருகின்றன. தமிழ்க்குழு இச் செயற்கைப் புரளிகளற்று விளங்குகிறது. மேலும், திணை, பால் முதலிய பாகுபாடுகள் ஆரிய மொழிகளுள் பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஒவ்வாத “ரசாபாச” முறையில் அமைந் துள்ளன. எடுத்துக்காட்டாக, மனைவி என்ற பெண்பாற் பொருளுக்கு ‘தாரா’ என்ற ஆண்பாற் சொல்லும், ‘களத்ரம்’ என்ற அஃறிணை ஒன்றன்பால் சொல்லும், ‘பார்யா’ என்ற பெண்பால் சொல்லும் ஒருங்கே வழங்குகின்றன. இவற்றுள் முதல் சொல்லாகிய தாரா - என்பதில் பெண்ணை ஆணாக மயங்கிய பால் மயக்கத்தோடு இன்னொரு மயக்கமும் அமைந்துள்ளது. ஏனெனில், மனைவி என்ற ஒருமை எண்ணுப் பொருளைக் குறிக்க வந்த இச்சொல் எப்படியோ இலக்கணத்தில் பன்மையாகக் கருதப்படுகின்றது. மூன்றாவது சொல்லாகிய களத்ரமோ பால் மாறாட்டத்துடன் நில்லாமல் திணை மாறாட்டமும் உண்டுபண்ணுகிறது. ஆரிய மொழிகளிலுள்ள இம்மயக்கம், அவற்றின் வழி வழிப் பிள்ளைகளிடம் குறைந்துவரினும், இன்றளவும் முற்றிலும் மறைந்துவிடவில்லை. இந்தி, வங்காளி முதலிய இந்திய மொழிகளும், ஜெருமன், பிரெஞ்சு முதலிய ஐரோப்பிய மொழிகளும் இவ்விடர்ப்பாட்டினால் இன்னும் முட்டுப்படவே செய்கின்றன. ஆரிய மொழிகளுள் இக்கறையை ஒழித்த தற்கால மொழி ஆங்கிலமொன்றே - அதுவும் அண்மையில் பதினாறாம் நூற்றாண்டி லேயேயாகும். ஆனால், தமிழும் தமிழ்க்குழு மொழிகளும் தொன்றுதொட்டு நேரிய திணைப் பாகுபாடுகளை உடையவையாய்ச் சிறப்புற்றோங்கி உள்ளன. அன்றியும், பலவகையில் தமிழ் இலக்கணம் இயற்கை அமைவுடை யதென்று காட்டலாகும். யாப்பிலக்கணத்தில் சீர் தளைக்காகச் சொற்கள் அருவருக்கத்தக்க முறையில் சிதைக்கப் படாததும், தெளிந்த பொருளற்ற சொற்கள் தமிழிற் கிடையாததும் கவனிக்கத்தக்கது. நான் ஒருவரையும் காணவில்லை என்பதற்கு, ‘நான் கண்டது யாருமிலர்’ என்றும் ‘நான் ஒரு மனிதனையும் காணவில்லை’ என்பதற்கு, ‘நான் கண்டது மனிதனல்லாதவன்’ என்றும் தமிழில் கூறுவதில்லை. மேலும் செயலைக் காட்டாத வினைகளைத் தமிழ் முற்றிலும் ஒடுக்கியோ அல்லது பொதுப்பட அஃறிணை முடிவு கொடுத்தோ கூறும் நயம் உலக மொழியாராய்ச்சியாளரால் பெரிதும் பாராட்டத்தக்கது. எடுத்துக்காட்டாக ‘சாத்தன் மனிதனாயிருக்கிறான்’ என்ற ஆங்கிலத் தொடரைத் தமிழ், ‘சாத்தன் மனிதன்’ எனச் சுருக்கிவிடுகிறது. “சாத்தன் எழுதுகோலைப் பெற்றிருக்கிறான்” என்ற தொடரைச் “சாத்தனுக்கு எழுதுகோல் உண்டு” அல்லது ‘சாத்தனிடம் எழுதுகோல் உளது’ என்று கூறுகிறது. இவ்வாசகங்களில் சாத்தன் செயல் யாதொன்றுமில்லை என்பதையும், அஃறிணைப்பொருள் செயலற்ற வினைக்கு எழுவாயாக வருதல் பொருத்தம் என்பதும் காண்க. இதுகாறும் தமிழ் இயற்கை மொழியெனக் காட்டினோம். இது யாவரும் ஒப்ப முடிந்தது. இத்துடன் தமிழரிடையே சமயப் பற்றுடையவரும் தம் சமயத்துக்கும் தமிழுக்கும் இன்றியமையாத் தொடர்பு உண்டு என்று உறுதி கொள்கின்றனர். நிலைத்துவிட்ட வடவர் கூட்டத்தார், பல்லாயிரம் ஆண்டுகள் முயன்றும் தமிழரின் அவ் உறுதி இன்னும் சற்றுங் குலைந்துவிடாம லிருக்கிறது. இனித் தெய்விகத் தன்மை, அதாவது சமயத் தொடர்பு வகையில் தமிழின் நிலை, யாதென நோக்குவோம். சைவ சமயத்தினர்க்கு வடமொழி வேதத்துக்கு மாறாகத் தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைகள் தமிழிலேயே உள்ளன. வைணவர்க்கும் தமிழிலேயே நாலாயிரப் பிரபந்தங்கள் உள்ளன. சைவ சமயத் தலைவர்களான சமயாசாரியர் நால்வரும், சந்தானாசாரியர் நால்வரும் தமிழ்நாட்டிலேயே பிறந்து, தமிழிலேயே பாடியுள்ளனர். தமிழோடு வடமொழி நீங்கலாக வேறு எம் மொழியிலும் இந்தியர் சமய நூல்கள் எழுதியிலர். ஆகவே, சமயத் தொடர்பு தெய்விகத் தன்மையின் அறிகுறியாயின. இந்திய மொழிகளுள் தமிழ்க்குப் புறம்பாக வடமொழி ஒன்றைத் தவிர வேறு எம்மொழிக்கும் அவ் உரிமை கிடையாது என்பது தெளிவு. சைவ வைணவத் திருப்பதிகள், பாடல் பெற்ற இடங்கள், புராணச் செய்திகளுக்கிலக்காகிய மலை, ஆறு, கோவில் முதலிய சின்னங்கள் யாவும், அரும்பெரும் பணி அமைந்த கலைக்கோவில்களும், தமிழ்நாட்டிலேயே பெரும்பாலும் காணப்படுவதும் இதனை வலியுறுத்தும். ஆகவே, வடமொழிக்கு எத்தகைய தெய்வத்தன்மை இருப்பதாகச் சொன்னாலும், அதனைவிடப் பன்மடங்கு தமிழ் தெய்வத்தன்மையுடையது. வடமொழியை இந்தியர் அனைவரும் பேணுவதுபோல், அதனினும் பன்மடங்காகத் தமிழையும் பேணவேண்டுவது இந்திய சமய வளர்ச்சிக்கு இன்றியமை யாததாகும். இதனைத் தமிழர் விரிவாக வலியுறுத்தல் வேண்டும். அங்ஙனம் வலியுறுத்துவதற்கு வெளியிலும் உள்ளிலும் தடை யாகவும், நேரிடையாகவும் மறைமுகமாகவும் எதிராயிருக்கும் தமிழ் நாட்டின் புல்லுருவிகளை ஒழிக்கும் அளவுக்குத் தமிழ்க்காதல் வளர்தல் வேண்டும். இந்நாட்டில் புராணங்களியற்றியவர்கள் தமிழ் தெய்வத் தன்மை உளதெனத் தடையின்றி ஆதரித்துப் போற்றியுள்ளனர். “தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை உண்ட பாலனை அழைத்ததும், எலும்பு பெண்ணுருவாக் கண்டதும், மறைக் கதவினைத் திறந்ததும், கன்னித் தண்டமிழ்ச்சொலோ? மறுப்புலச் சொற்களோ? சாற்றீர்!” என்று திருவிளையாடற் புராணமுடையார் கூறுகின்றார். மேலும் காஞ்சிப் புராணமுடையார், “வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி, அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியைச் சங்கமெலாந் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனில் கடல்வரைப்பின் அதன்பெருமை யாவரே கணித்தறிவார்!” என்று, அதன் பெருமையினைக் கூறியுள்ளனர். ஆனால், முதல் பாட்டுத் தமிழின் பெருமையை மட்டும் கூற, இரண்டாம் பாட்டு அதனை வடமொழியுடன் அண்டை கொடுத்து ஒப்புமை கூறமுயலுகிறது. பாட்டின் தொனியை நோக்கினால், அவ் ஒப்புமைகூட உபசார ஒப்புமையோ அல்லது, பரிந்து பேசும் மழுப்பல் உரையோ என்று தோற்றும்படி அமைந்திருக்கிறது. உண்மையில் அப்படித்தானா? அன்றெனில், அப்படி அந்நூலார் கூறுவானேன் என்று ஆராய்வோம். இரண்டாம் பாட்டிலிருந்து தமிழின் இலக்கணமான அகத்தியம் வடமொழியின்இலக்கணமான பாணினியத்தின் காலத்தில் செய்யப்பட்டது என்றும், ஆனால் இரண்டிலும் முந்தியது பாணினியமே என்றும் தோன்றும். அகத்தியம் அகத்தியனாரால் இயற்றப்பட்டது. தொல் காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம். இவர் அகத்தியர் மாணாக்கருள் ஒருவரெனவுங் கூறப்படுவர். அகத்தியம் முதற்சங்க காலத்திலும் தொல்காப்பியம் இடைச் சங்க காலத்திலும் அரங்கேற்றப்பட்டன என்று பழைய நூல்கள் கூறுகின்றன. இடைச் சங்கம் இரண்டாம் ஊழியிலும், முதற் சங்கம் முதல் ஊழியிலும் இருந்தனவாம். அப்படியாயின் தொல்காப்பியம் அகத்தியத்துக்கு மிகவும் ஓர் - ஊழிவரை கூடப் பிற்பட்டதா? தொல்காப்பியர் அகத்தியர் மாணாக்கராயினுங்கூடத் தொல் காப்பியம் அகத்தியத்துக்குப் பிற்பட்டதே என்பதில் ஐயமில்லை. தொல்காப்பியப் பாயிரத்தில், ஆசிரியரைப் பாயிரக்காரர் “ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்” எனக் கூறியிருக்கிறார். பாயிரம் நூலினும் பிற்பட்டது. ஆசிரியர் சிறப்புக்கூறவே அவர் ‘வடமொழிப்புலமை’ யுடைமையும் கூறப்பட்டது. அஃது ஒருகால் புனைந்துரையும் மிகைப்பாடும் உடையதாகவே இருத்தலுங் கூடும். இந்நிலையில், வடமொழியாளரிடையில் முதன்மையுடைய தாகக் கூறப்படும் பாணினியத்தைக் கூறாமல், “ஐந்திர நிறைந்த” எனக் கூறுவானேன்? இவ் வினாவுக்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அளிக்கும் விடையை நோக்குவோம். ஐந்திரம் பாணினியத்துக்கு நெடுநாள் முந்திய நூல்; தொல்காப்பியர் பாணினிக்கு முன் இருந்தவரானதால், பாணினியைப் பயிலாமல் ஐந்திரம் பயின்றிருத்தல் வேண்டும். இன்னும் ஓரிடத்தில் நச்சினார்க்கினியர் தொல்காப்பியர் வேதங்களை வகுத்த வியாசர்க்குக்கூட முந்தியவர் என்று குறிப்பிடுகிறார். எப்படியும் தொல்காப்பியர் பாணினிக்கு முந்தியவர் என்பதை அந்நூல் நடையே காட்டும். பாணினி காலம் சூத்திரக்காலம் எனப்படும். இக்காலத்தில் செய்யுள் நடை அவாய் நிலைகளும் குறிப்புச் சொற்களும் குறியீடுகளும் பல்கிச் செறிவுடையதாயிற்று. ஆனால், அக்காலத்துக்கு முந்திய நடையோ சுருக்கத் துக்காக எளிமை இனிமை தெளிவு முதலிய பண்புகளை விட்டுக்கொடுக்காத நேரிய சூத்திர நடையா யிருந்தது. தொல்காப்பிய நடையும் இப்பழைய நடையைப் போலவே வேண்டிய அளவு விரிவும் நெகிழ்ச்சியும் உடையதா யிருக்கின்றது. தொன்னூல், நன்னூல் முதலியவற்றின் சூத்திர நடையைத் தொல்காப்பியத்துடன் ஒப்பிட்டால், இதனை நன்கறியலாம். நன்னூலார் “பெயரும் வினையும் புணருங்காலை” என்று ஒரு வரியிற்கூறும் செய்தியைத் தொல்காப்பியர்; “பெயரும் பெயரும் புணரும் காலையும் பெயரும் வினையும் புணரும் காலையும் வினையும் பெயரும் புணரும் காலையும் வினையும் வினையும் புணரும் காலையும் என்று இந்நான் கிடனும்” என்பர். ஆகவே, தொல்காப்பியர் நடை பாணினியின் வைர நடைப்பித்து ஏறுமுன் எழுந்த சுருங்கிய இழுமெனும் தெள்ளிய நடையாம் என்க. இங்ஙனம் தொல்காப்பியம் பாணினியத்திற்கு முந்தியதா யிருக்க, மேற்கூறிய பாட்டில் தொல்காப்பியரின் ஆசிரியராகிய அகத்தியரையே பாணினிக்குப் பிந்தியவராகக் குறிப்பிட்டிருக் கிறதே? இது பொருத்தமற்ற தல்லவா? இத்தகைய புரட்டுத் தோன்றியதேன்? வடமொழிப் பற்றுடையார் மெல்ல மெல்லத் தமிழை அதன் உயர் நிலையினின்றும் தணித்து வடமொழியை உயர்த்தும் முயற்சிகளுள் ஒன்றே இதுவும். அகத்தியர்க்கும் பாணினிக்கும் இருமொழி இலக்கணமும் அருளிய தெய்வம் சிவபெருமான் என்று கூறப்படுகின்றது. “இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குர வரியல் வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும் இருமொழியு மான்றவரே தழீஇயினா ரென்றாலிவ் இருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ!” என்ற பாட்டுக் காண்க. ஆனால், அகத்தியர் வருமுன் தமிழ்நாடு சங்கமும் இலக்கிய வளமும் பெற்றிருந்தது. அதில் அகத்தியர் மட்டுமன்று, அச் சிவபெருமானே வந்து தமிழாராய்ந்தார். அவ்வப்போது நேரிடையாகவோ, உருவத் திருமேனி எடுத்தோ, பாடியும் உரை கூறியும் வாதாடியுங்கூட வந்தனர் என்றெல்லாம் புராணங்கள் பேசுகின்றன. ஆதலால், “கண்ணுதற் பெருங்கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டப்படக் கிடந்ததா யெண்ணவும் படுமோ!” என்று புராணிகர் வீறு கொள்கிறார். சிவபெருமான் வட மொழிக் கருளிய இலக்கணம் சங்கம் கண்டதா? அதில் சிவனார் இருந்து மொழியாராய்ந்தாரா? பாடினாரா? நமக்குத் தெரியாது. பாணினியின் முதல் சூத்திரங்களுக்கு மட்டும் பரமசிவன் உடுக்கை அடித்து ஒலி எழுப்பினார் என்ற அழகிய கதை உள்ளது. வேறு வடமொழியை அவர் ஆராய்ந்ததாகவோ, அதில் பாடியதாகவோ எங்கும் கேள்விப்படவில்லை. பரமசிவன் அம்பலத்திலாடியதாகக் கூறும் இடங்களிரண்டு, பொன்னம்பலம் சிதம்பரத்தில், வெள்ளியம்பலம் மதுரையில், மூன்றாவது செப்பம்பலம் என ஒன்றுண்டாம்; அதுகூடத் திருநெல்வேலியிலாம். அனைத்தும் தமிழ் நாட்டிலே. உலகின் இதய இடம் சிதம்பரம், புருவ மய்யம் மதுரை என்கிறார்கள்; இரண்டும் தமிழ்நாட்டிலே. அடி முடி தேடியது, காலனை உதைத்தது முதலிய புராணச் செய்திகள் நிகழ்ந்தது எனக் கூறுவதும் தமிழ்நாட்டிலேதான். முருகன் படை வீடு ஆறும் இங்கேயே. வைணவமும், மாயாவாதம் அல்லது °மார்த்தமும் தோன்றியதுகூடத் தமிழ்நாட்டில். சிவபிரான் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் அருளிச்செய்தது தமிழரின் மதுரையில். அதனிடையே சிவபிரான் அந் நாட்டில் அரசராக விரும்பி வந்து ஆண்டு, அந்நாட்டு அரசிளங்குமரியாம் தடாதகைப் பிராட்டியாரையும் மணந்தனராம். தமிழராம் சம்பந்தர்க்கே சிவனார் ஞானப்பால் அருளினார். தமிழராம் சுந்தரர்க்கே அவர் தூதேகினார். முத்திதரும் பதிகளுள் இறக்க முத்தி தரும் பதியொன்றே வடநாட்டில் உள்ளது. போக, பிறக்க முத்தி, மிதிக்க முத்தி, காண முத்தி, நினைக்க முத்தி ஆகிய யாவும் தமிழ் நாட்டிலேயே உள்ளன. மணிவாசகரும் இதை எண்ணித்தான் போலும் “தென்னாடுடைய சிவனே போற்றி” என்றனர். இங்ஙனம் தமிழ்நாட்டுடனும், தமிழுடனும் இத்தனை நெருங்கிய தொடர் புடையவராகச் சைவர்கள் கூறும் சிவபிரானை முதலில் வடமொழிக்கு உரிமையாக்கவும், பின்னர் வட மொழிக்கே உரிமையாக்கவும் முயன்றவர் கைத்திறன், அம்மம்ம! கனவிலும் கருதற்பாலதன்றே! அத்தோடு நில்லாது, அன்னார் அச்சிவ பெருமான் கோவிலின் உள்ளும் புகுந்து அத் தமிழையும் அத்தமிழ் நால்வரையும் அவமதிப்பதைக் கண்டு சைவர் என்போர் ஏனோ வாளா கிடக்கின்றனர். இனித் திருமாலை எடுத்துக்கொள்வோம். அவர்தாம் ‘வடமறை ஓலமிட்டுப் பின்செலப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங் கொண்டலாவரே. பரமசிவன் ஆரியர் தெய்வம் என்பது பொருந்தாதெனில், திருமாலை ஆரியர் தெய்வம் என்றல் எள்ளத்தனையும் பொருந்தாது. பிறப்பற்ற அவர் பிறக்க விரும்பியது அரசகுலத்தில்; பார்ப்பனர் குலத்தில் அன்று. ஒரு பிறப்பில் அவர் ஆயர் அல்லது இடையருடன் நெருங்கிய தொடர்புகொண்டவர். ஒருவேளை பிறந்ததே இடைக்குலந் தானோ என்னவோ? யார் கண்டார்கள்! அரசரும், இடையரும் வடநாட்டிலும் தமிழரினமே அன்றோ? இன்னும் ஐயமுண்டானால் அவர் நிறம் நோக்குக! ஆரியர் அவரை நெடியராக்கினும் கரியர் என்ற செய்தியை நீக்க முடியவில்லை. அத்தோடு, இன்னொரு சிறு நுட்பத்தை நோக்கினால் இத்தெய்வம் தமிழரிடையே தோற்றியது எனத் தெளிந்து கூறலாம். வடமொழியில் இவரைப் பெரும்பாலும் அமங்கலமாகக் ‘கரியன்’ என்று கூறினும், தமிழில் அவரை ‘மயங்கிய நீல நிறத்தவன்’ என்ற பொருளில் “மால்” என வழங்குதல் கவனிக்கத்தக்கது. ‘கரியன்’ என்று கூறுமிடத்தில்கூடத் தமிழில் கருமை ‘அருமை’ எனப் பொருள்படுவதும் காண்க. மேலும் இராமன் கதை, கண்ணன் கதை, வடநாட்டினும் மிகுதியாகத் தென்னாட்டிலேயே வழங்கிவருகிறது. சங்க இலக்கியங்களில் இக்கதைகள் குறிப்பிடப்படும் அளவு, அதே காலத்திலுள்ள வடமொழி இலக்கியங்களில் குறிப்பிடப்பட வில்லை. தென்னாட்டுக் கண்ணனுக்கு வடநாட்டில் காணப்படாத தோழி ஒருத்தி ஏற்பட்டிருந்தாள். அவளே நப்பின்னைப் பிராட்டியாவாள். மற்றும் குகன் கதை, சவரி கதை, ஏகலைவன் கதை முதலிய தமிழ்க் கதைகள் இவர்கள் கதைகளுள் விரவியிருப்பதும், இவை வடமொழியாளரிடம் மட்டுமின்றிச் சமண பௌத்தரிடமும் சாவக நாட்டினரிடமும் வழங்குவதும், கிரேக்கர், உரோமர், பாரசீகர் முதலியவரிடம் இவற்றை யொத்த கதைகள் வழங்குவதும், இக்கதைகளின் மாபெரும் பழைமையினையும், இக் கதைகள் ஆரியச் சார்புக்கு முந்தியது என்பதையும் காட்டும். அதாவது ஆரியர் வருமுன் வடநாட்டில் வாழ்ந்த தமிழரிடையே வழங்கிய இக்கதைகள், இந்நாட்டின் பிற கதைகளைப் போலவே உலகெங்கும் சென்று பரந்திருத்தல் வேண்டும். மேலும் இன்று தமிழ்நாட்டில் இக் கதைகளின் மீது பற்றுதல் கொண்டு அவற்றின் வயப்பட்டு மயங்கிப் பணப்பையை அவிழ்ப்பவர் தமிழரே என்றும், அக்கதையைவிடப் பணப்பையில் மிகுதியான பற்றுக் கொண்டு, பிறரிடம் பக்தி ரசமும் பாவமும் கனிந்த சமயம் பார்த்து, அப் பணப்பையைத் தம் மடியில் கட்டுபவர் ஆரியரே என்றும் காண்க. சிவபிரான் கதை திருமால் கதை ஆயிற்று - தமிழ்க் கடவுளான முருகனைப் பற்றியோ கூறவேண்டுவதில்லை. சிவபிரானிடமிருந்து தமிழ்க் கனியும் பெற்றுக் கலந்துகொண்டவர் அவர். அத் தமிழ் உண்ட வீறினால்போலும் அவர் வடமறை அருளிய வானவனைக் குட்டிச் சிறையிலிட்டதும்! அதுமட்டுமா? அவ்விளந்தமிழ் வீறு, பழந்தமிழ் ஐயனாம் பரமனைக்கூடப் பணிய வைத்ததாம். அச்சிவனார் செய்த குற்றம் வடமொழியாளர்க்கு ஆதரவு செய்ததுதான் போலும்! சிவபிரான், திருமால், முருகன் ஆகியோர் தமிழர் வகுத்த தெய்வங்களே எனக் கண்டோம். மேற் கூறிய தமிழ்த் தெய்வங்களனைத்தையும் இன்று தமிழர் - தமிழ் நாட்டில் மட்டுமின்றி வடநாட்டிலும் தமிழரனைவரும் வணங்குகின்றனர். அவர்கள் வணங்காத தெய்வங்கள் கோவில் கொள்ளாத் தெய்வங்கள் - ஆரியத் தெய்வங்கள் மட்டுமே. ஆரியத் தெய்வங்களுள் தலைமையானது. அவர்கள் முழுமுதல் பொருளுக்குப் பிற்றை நாளில் கொண்ட பெயராகிய ‘பிரமம்’ என்ற சொல்லுடன் நெருங்கிய தொடர்புடைய பிரமாவேயாவர். இவர் பெயரை ஒட்டித்தான் ஆரிய வகுப்பினர் தம்மைப் ‘பிராமணர்’ என்றனர். இவரைத் தமிழர் மாபெரும் தெய்வங்களாகிய சிவபிரானுடனும் திருமாலுடனும் சேர்த்து மூவராகச் செய்தும், இந்தியாவில் எவ்வினத்தாரும் அவரை ஏற்றுக் கோவில் கட்டாதது குறிப்பிடத்தக்கது. (ஆரியர்தாம் கோவில் கட்டுபவரல்லரே. கட்டிய கோவிலை - கோவிலின் பொருளைத் தின்று அழிப்பது மட்டும்தானே கோவிலுடன் அவர்களுடைய தொடர்பு!)ஆனால், ஆரியரா இதைக் கண்டு அஞ்சுபவர். மலை மகாதேவனை நாடாவிட்டால், மகாதேவனாவது? மலையை நாடலாமல்லவா? அதுபோல், ஆரியர் தெய்வங்களைத் தமிழர் ஏற்காவிட்டா லென்ன, தமிழர் தெய்வங்களையே ஆரியப் பூச்சுப் பூசிவிடுவோம் என்றனர். அரசரை வஞ்சகத்தால் வென்று ஆண்டவனையும் பணியவைக்கும் ஆற்றலுடையவராயிற்றே ஆரிய மக்கள்! தமிழ் எழுத்துகள் எல்லாமே தெய்வத்தன்மை உடையவை என்றும் ‘ஓம்’ என்ற வடிவில் நின்றே எல்லாம் பிறந்துள்ளன என்றும், பேரறிஞர் மாணிக்க நாயக்கர் அருமுயற்சி செய்து காட்டியுள்ளது, ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இதுகாறும் சமயச் சார்பிலேயே தமிழின் தெய்வத் தன்மையைப் பற்றிக் கூறினோம். சமயவாதிகளுள் பலர் கடவுளைத் தத்தம் முறைப்படி தத்தமக்கு விருப்பமான உருவில் வணங்குவதுடன் நில்லாமல், கடவுளைத் தம் வயமாக்கி, அவர் தமக்கே உரியவர் என வாதாடிவிடுவதுமுண்டு. அத்தகைய சமயவாதிகள், கடவுள் தம் சமயமேயன்றிப் பிற சமயங்களையும், தம்மையேயன்றி மக்களனை வரையும் மக்களேயன்றி உயிர்கள், உயிரற்ற பொருள்களனைத்தையும் படைத்தவர் என்று, தாம் முன்கூறியதையே மறந்து விடுகின்றனர். நல்ல காலமாகத் தமிழரிடை அத்தகைய குறுகிய மனப்பான்மை அருமை. ‘எம்மதமும் சம்மதமே’ என்ற பொது நோக்கம் மட்டுமன்று; கடவுள் எல்லா மதத்துக்கும் அப்பாற்பட்டவர், அல்லது சமயங் கடந்தவர் என்றும் கொண்டுள்ளனர். அது மட்டுமன்று; பல சமயங்கள் கடவுளுக்கு மனித வடிவு கற்பித்து மனிதத் தன்மையும் சூட்டியுள்ளன. சில இன்னும் ஒருபடி தாண்டி மக்களின் இருபாலாருள், கல்வி உலகில் மேம்பட்ட ஆண்பாலாகவே கடவுள் உருவை அமைத்துள்ளன. தமிழர் மட்டுமே கடவுளை ஆணாக மட்டுமின்றிப் பெண்ணாகவும் கற்பனை செய்துள்ளனர். தமிழர்க்கடுத்தபடி உலகின் மிகப் பழைய நாகரிகங்களான எகிப்திய, அகியானிய (ஹநபநயn ஊiஎடைளையவiடிn), அசிரிய நாகரிகங்களும் கடவுளை அன்னை வடிவில் வணங்கியுள்ளன. சைவர், இரண்டையும் ஒன்றுபடுத்தி அம்மையப்பனாகக் கருதினர் போலும். ஆனால், தமிழர் பால்பாகுபாடு மட்டுமின்றித் திணை வேறுபாடும் கடந்து, கடவுளைத் திணை பால்பகாப் பொதுப் பெயராக்கிச் சிவம் என்றும், பண்பு கடந்த அறிவுப் பொருளாகிய கந்தம் அல்லது இலிங்கம் என்றும், தத்துவங் கடந்த அகண்ட பொருளாகிய கடவுள் அல்லது கந்தழி என்றும் பாவித்தனர். இவற்றுள் கடைசியிற் காட்டிய சொற்கள், வேதாந்த சித்தாந்தத்தின் முடிந்த உண்மையினைக் காட்டும் இயற்பெயராய் அமைந்துள்ளமை காண்க. வடமொழியில் இதற்கு இயற்பெயர் இல்லை என்றும் காணலாம். தமிழர் அருவப்பொருளைத் தம் தெய்வத்தின் பெயராகிய சிவன் என்பதன் ஒன்றன்பால் வடிவாகக் குறித்ததுபோல, வடமொழியாளர் தம் தெய்வமாகிய பிரம்மாவின் அஃறிணை வடிவமாகிய ‘பிரமம்’ என்ற சொல்லைப் புனைந்துகொண்டனர். அஃது ஒன்றே, இச்சொற் குறிக்கும் கருத்துகள் தமிழருடையன என்று காட்டும். இறுதியாக, தமிழ் தெய்வ மொழியாயின் வட மொழிக்குத் ‘தேவபாடை’ என்ற வழக்கு ஏற்படுவானேன் என்ற ஒரு கேள்வி எழலாம். வடமொழிக்குத் தேவபாடை என்ற வழக்கு கம்பர் காலத்துக்குப் பிற்பட்டது. இக்காலத்து நூலெழுதியவர், சமய விளம்பரத்துக்கான நூல்கள் இயற்றி அவற்றை இலக்கியத்தின் பேராலும், கலையின் பேராலும் வழக்காற்றிற் புகுத்த முயன்றவர்கள். பகுத்தறிவு மூலம் பொதுமக்களைக் காண முடியாத இடத்தில், இன்றும் போலி அறிஞர் பலர் மக்களிடையே அறியப்படாது பிறிதொரு மொழியில் இன்ன நூலுளது, பிறிதொரு நாட்டார் இன்னது சொல்கின்றனர் எனத் தம் அறியாமையையும், தம் ஆராய்ச்சி ஆற்றலின்மையையும் மறைப்பது வழக்க மல்லவா? அது குறித்தே தாயுமானவரும், “தென்மொழிப் புலவரிடை வடமொழிப் புகழ் பாடுவேன், வடமொழிப் புலவர் வரில் தென்மொழி பாடுவேன்” என்றனர். அதே முறையில் பொதுமக்கள் அறிவை மயக்க, அவர்கள் நன்கு பயிலாத ஒரு மொழியைப் பயன்படுத்தினர், கற்றறிந்தார் என்று பிறநாட்டு மன்னர் அல்லது, பிறநாட்டு மக்களிடமிருந்து நற்சான்று பெற விரும்பிய கூட்டத்தார். இங்ஙனம் உயர்த்துவதற்கு வடமொழியை எடுத்துக் கொண்டதன் காரணம், அது வேறு யாரும் பேசாத உயிரற்ற மொழி என்பதேயாகும். இம்மொழியில் தமிழிலும் பிறமொழியிலும் உள்ள நூல்களைப் பெயர்த் தெழுதிக்கொண்டு, அவ்வத்தாய்மொழி நூல்களை ஒழிப்பதன்மூலம் அதனை உயர்த்த முயன்றனர். இதற்கு வடமொழியிலேயே சான்றுகள் பல உள்ளன. காசுமீர நாட்டில் பேசப்பட்ட ஒரு மொழியில் ஏற்பட்ட ‘பில்கணன’து பெருங்கதையை, வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டனர். பின் முதன்மொழி நூல் ஒழிய, வடமொழி நூலே இன்று வாழ்கின்றது. இதுபோலத் தமிழ்நாட்டிலும் நிலவுதல் இயற்கைதானே. தமிழின் பரந்த இலக்கண இலக்கியம், அறிவியல், கலை வளங்கள் வடமொழியை வண்மைப்படுத்தப் பயன்பட்டிருத்தல் வேண்டும் எனக் காட்டலாம். அறிவியலுள் ஒன்றான யானையேற்றத்தை எடுத்துக் கொள்வோம். யானைகள் இன்றும், அன்றும் மிகுந்துள்ளமை தென் இந்தியாவிலேயன்றி வட இந்தியாவிலன்று. யானைக்கு வடமொழியில் சரியான பெயர்கூடக் கிடையாது. ஆரியர் அதனைக் கண்டபோது, அதன் புதுமை நோக்கி அதற்கு ‘ஹ°தி’ ‘அ°தம்’ அல்லது கையையுடையது எனக் காரணப்பெயர் தந்தனர். அத்துடன், இன்றும் யானைப்பயிற்சி செய்பவர் எங்கும் மலையாளிகளேயாவர். ஆகவே, யானை பற்றிய நூல் மலையாளம் அல்லது தமிழில் இருப்பதன்றோ இயல்பு? ஆனால், இன்று மட்டுமின்றி முன்னாளிலும் அது வடமொழியிலேயே இருந்தது என்று கூறுகின்றனர். இஃது எதனால்? யானையில்லா நாட்டு மொழியில், யானைக்குப் பெயர்கூடச் சரியாக அமையாத ஒரு மொழியில் யானையின் தேர்ச்சியாளர் எழுதிய நூல் இருப்பது எதைக் காட்டுகிறது? அதை எழுதியவர் வடமொழி நூல்களில் பெரும்பகுதியை எழுதியவரைப் போலவே, தமிழர் என்று காட்டவில்லையா? தொழில் நுட்பம் நிறைந்த இதுபோன்ற கலைகள் பலவும், பொது மக்களால் எளிதில் கவரப்படா திருப்பதற்காகவும், பொது மக்களால் மதிக்கப்படுவதற்காகவுமே வடமொழியில் எழுதப்பட்டன என்பர். சமய வாழ்வுப் பகுதிகளிலும் எல்லா மக்களுக்கும் தெரியக் கூடாதென்று மறைக்க வேண்டிய செய்திகளெல்லாம் - ஒரு குலத்துக்கு ஒரு நீதியான அறநெறிகள் கட்டுப்பாடான ஏமாற்று முறைகள் - ஆகியவற்றுக்கெல்லாம், வடமொழி குழூஉக் குறியாய் அமைந்தது. நம் நாட்டில், இன்றும் குடியரிடையேயும், திருடரிடையேயும், நாடோடிச் சாமியார்களிடையேயும் பொதுப்படையான கருத்துகளைக் குறிக்கக் குழூஉக்குறிகள் வழக்கிலிருப்பதைக் காணலாம். இவற்றுக்கு அவர்கள் வேடிக்கையாக ‘சமற்கிருதம்’ என்றும் ‘ இத்தாலி மொழி’ என்றும் கூறுவர். இத்துடன் பாமர மக்களையும், அவரிடையே பணத்தால், அறிவால், ஆற்றலால் மக்களையும் வேறுவேறு பிரித்து வைக்கவும், இத்தகைய அயல் மொழி பயன்பட்டது. இன்று ஆங்கிலம் அத்தகைய அயல்மொழியாக நின்று பயன்படுகிறது. ஆங்கிலம் மட்டும் சமய மொழியாக்கப்பட்டுப் பார்ப்பனர் ஏகபோக உரிமையாய் இருந்திருந்தால், அது வடமொழி போலவே அவர்களுக்கு முழுப்பயன் அளித்திருக்கும். அதனைவிட்டு இந்திமொழியைக் கொண்டு வரவும் அவர்கள் முயன்றிருக்க மாட்டார்கள். ஆகையால்தான், ஆங்கிலம் இந்தி தெலுங்கு முதலிய அயல்மொழிகள் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்க்கு இடது கையாக நின்று உதவியும், வடமொழிபோல் வலதுகை யாய் நின்று உதவுவதற்கில்லை. இந் நுட்பமறிந்த காரணத்தினால் தான், பார்ப்பனத் தலைவர்கள், ஆங்கிலமும் இந்தியும் வரினும், வடமொழியும்கூட இருப்பது இன்றியமையாதது என வற்புறுத்திவருகின்றனர். வடமொழி தெய்வமொழி என்பார் கூற்று எழுந்தவாறு கூறினோம். ஆனால், தீயில்லாமற் புகையுண்டாகாது என்றபடி, வடமொழி தெய்விகமொழி எனப் புகன்றவர், “தெய்விக மொழி” என்ற கருத்துக் கொள்ள முன் வழக்கு இருந்திருத்தல் வேண்டும். அவ்வழக்குத் தமிழ் பற்றியதே என்றும், வடமொழிக்கு முன்னமே தமிழ் தெய்விகமொழி எனக் கருதப்பட்டிருந்த தென்றும் காட்டுவோம். பின்னாளில், தமிழில் பற்றற்ற புல்லுருவிகள் தோன்றித் தோட்டக்காரனும் திருடனும் சேர்ந்ததுபோல, வட மொழியாளருடன் சேர்ந்ததனால்தான், தமிழ் தெய்வமொழி என்ற வழக்குக் குன்றி, வடமொழி அந்நிலையைக் கவரலாயிற்று, தமிழ்நாட்டில் கற்ற தமிழரும், கல்லாத பாமர மக்களிடமிருந்து பிரிந்து உயர்வடையும் நோக்கத்துடனேயே பிரித்தாளும் பார்ப்பனருடன் சேர்ந்து, தம்மையும் தம் இனத்தையும் தாமே தாழ்த்திக் கொண்டனர். இக்குணம் இன்றும் தமிழரிடை உண்டென்பதை, அவர்கள் கிறித்தவர்கள் தமக்குச் சூட்டிய ‘அஞ்ஞானிகள்’ என்ற பட்டத்தைத் தெரிந்தோ தெரியாமலோ பொறுத்துக் கொள்வதிலிருந்து காணலாம். நெடுநாள் பார்ப்பனர் சமயத்தை மேற்கொண்ட காரணத்தால்தான், தமிழர் இன்று ‘தாம் மனிதர்’ என்பதைக்கூட மறக்கும் தறுவாயி லிருக்கின்றனர். தொல்காப்பிய உரையில், நச்சினார்க்கினியர் நால்வேதம் என்ற சொல்லுக்கு உரைவிரிக்குங்கால், “வேதங்கள் இருக்கு, எசுர், சாமம் அதர்வணம், என்று பாகுபாடு செய்யப்பட்டது பின்னாள்களில் வேதவியாசரால் என்றும், அதற்கு முன்னிருந்த தலவகாரம் முதலியவற்றையே முன்னூல்கள் குறிப்பிட்டன என்றும் குறிக்கிறார். இவை முன்னைய தமிழ் வேதங்களே என்றும், அவற்றுக் கிணையாக அவை இறந்துபட்டபின், வியாசர் வடமொழியில் அவற்றின் மொழிபெயர்ப்புகளையோ, கருத்துகளையோ வகைப்படுத்தி அமைத்தவையே, இன்றைய வேதங்கள் என்றும் தமிழறிஞர் பலர் கூறுகின்றனர். அதனை எதிர்த்து மறுப்பாருமுளர். எது எங்ஙனமாயினும், “நால்வேதம்” என்ற வழக்கு ஆரியரிடை இல்லை; தமிழரிடையேதான் உண்டு என்பது தெளிவு. இன்றும் வடநாட்டில் மூன்று வேதங்களே ஏற்கப்பட்டு, ‘திரிவேதி’ என ஊர்ப்பெயரும் ஆட்பெயரும் இருப்பதனால் இது பெறப்படும். தமிழ் நாட்டில் மட்டுமே தெள்ளத்தெளிய ‘நான்மறை’ என்ற வழக்கும், ‘சதுர்வேதி மங்கலம்’ என்ற ஊர்களும் காணப்படும். ஆகவே, ஆரிய வேதங்களுக்கு முன்னமேயே தமிழரிடை நாலு வேதங்களிருந்தன என்று கூறுதல் தவறன்று. அவ்வேதங்கள் ஏன் அழிந்துபட்டன என்ற கடாவுக்கு விடை எளிது. அவை என்றேனும் எழுதப்பட்டிருந்தாலன்றோ இறவாதிருக்கும்? அவை வாயுரையால்கூடக் கூறப்படாமல் குறிப்புரைகளால் கூறப்பட்டுப் பரம்பரையாய் வந்தன. பின்னாளில் குறளும் திருவாசக திருமந்திரங்களும் இவற்றின் வழிநூல்களாயமைந்தன. வேதங்கள் வடமொழியில் முதனூலாயிராது மொழிபெயர்ப்பா யிருந்ததனால் தான், அதன் கருத்துகள் அங்கே மேன்மேலும் வளரவோ புதுப்புது நூல்களாய்த் தளிர்க்கவோ முடியாததாயிற்று. தமிழிலக்கணத்தில் தொல்காப்பியம் முதல், அதற்கு முன்னிருந்துங்கூட, எல்லா இலக்கணங்களிலும் மேற்கோளாய் எடுத்தாளப்பட்ட சில பழஞ் சூத்திரங்கள் இதனை வலியுறுத்தும், தமிழ் நூல்கள் முதல், வழி என இரண்டாகவும், பின் நாள்களில் முதல், வழி, சார்பு என மூன்றாகவும் வகுக்கப்பட்டன. முதல் நூலுக்கு விதியாக அமைந்த பழஞ்சூத்திரம், “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்” என்பதாம். இதன் பொருள் ‘இருவினைப் பற்றற்ற, முழு அறிவுடைய முதல்வன் கண்டதே முதல் நூல்’ என்பதாகும். சூத்திரத்தின் பொருள் நம்மைத் திடுக்கிடச் செய்யத்தக்கது. இதனை அறிந்துதானோ என்னவோ, உரையாசிரியர் உரையிற் கோடலாக ‘இறைவன் என்றாராயினும் இறைவனை ஒத்த பெரியாரையும் உடன்கொள்க’ என்று பொருள் விரித்தார். எப்படியும் கடவுளோ, கடவுளோடொத்த முழுமுதல் முனிவரோ நேரனுபவத்தால் கண்டது முதனூல் என்றாயிற்று. உரையாசிரியர் இதற்கு வேத ஆகமங்களை மேற்கோள் காட்டுகிறார். அப்படியாயின் அவர் குறித்த வேதாகமம் யாவை? வடமொழி வேதாகமமோ வெனின், அது பொருந்தாது. தமிழிலக்கண மெழுதுவோர் தமிழ்மொழிக்கும் தமிழிலக்கியத்துக்கும் இலக்கணம் எழுதினரேயன்றி வேறு எம்மொழிக்குமன்று. எனவே, இச் சூத்திரங்கள் ஏற்பட்ட காலத்து, வாய்மொழியாக வேதாகமங்கள் தமிழில் பயிலப்பட்டன என்றும், மறை முறையாக அவை பின்னாளில் வடமொழியில், வகுக்கப்பட்டன என்றும் விளங்கலாம். யானைநூல் முதலில் தமிழரால் தமிழிலேயே (அல்லது தமிழின் திரிபாகிய மலையாளத்திலேயே) எழுதப்பட்டிருத்தல் கூடுமாயினும், பின்னால் எப்படி வடமொழி நூலாக்கப்பட்டதோ, அப்படியேதான் இவ்வேதாகமங்களும் என்பது தேற்றம். இராமாயண பாரதக் கதைகள் கூடத் தமிழ்க் கதைகளாக இருந்திருத்தல் வேண்டுமென மேலே குறிப்பிட்டோம். ஆகவே, இன்று வடமொழியில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டவை என்று எண்ணப்படும் நூல்களிற் பெரும்பாலன முதலில் தமிழினின்று வடமொழியில் ஆக்கப்பட்டுச் சிதைவுற்று, ஆரியச் சார்பு மிகுந்து, பின் மீண்டும் தமிழ்ப் படுத்தப்பட்டவையாம் என்க. எல்லாம் ‘ஆமில்டன் வாராவதி’ என்ற ஆங்கிலச்சொல், சிதைந்து அம்பட்டன் வாராவதியாய், ‘பார்பர்° பிரிட்ஜ்‘ (க்ஷயசநெச’ள க்ஷசனைபந) ஆன கதைதான். இத்தனை வகையில் தமிழின் தெய்வத்தன்மை திறம்பட விளங்கவும், சமயவாதிகள் என்று இன்று தம்மைக் கூறிக் கொள்ளும் பலரும், வடமொழி தெய்வத்தன்மையுடையது என்றோ, வடமொழியே தெய்வத்தன்மையுடையது என்றோ சாதித்துத் தமிழை அந்நிலையிலிருந்து நீக்க - நீக்குவிக்க ஏன் அரும்பாடுபடுகின்றனர்? மேலும், தமிழை மேம்படுத்த வடவர் எவரும் முற்படாதிருக்க, வடமொழியை மட்டும் மேம்படுத்தத் தமிழ்நாட்டிற் பலர் முன்வருவானேன்? முதலில், வடமொழி தெய்வ மொழியாயின் அஃது ஏன் இறந்துபட்டது என்பதற்கு இவர்கள் பதில் சொல்லட்டும்! இறைவற்கு விருப்பமான இருமொழிகளாகிய வடமொழி தென்மொழிகளுள் வடமொழி இறந்துபட்டதே, அஃது அந்த இறைவற்கே அத்தனை உகந்தது அன்று எனக் காட்ட வில்லையா? செத்துப்போன ஒரு மொழியைத் ‘தெய்விகமொழி’ என்று கூறி, ஓர் உயிருள்ள மொழியை - அத்தன்மைக்கு நிறைந்த தகுதியும் மேம்பாடும் உடையதாயிருந்தும் - மறுப்பது, அதிலும் தமிழ்நாட்டிலிருந்துகொண்டு, தாம் உழையாமல் பிறர் உழைப்பிலே கொழுக்க விரும்பும் ஒரு சமூகமும், அதன் வால்பிடிக்கும் சிலரும் மறுப்பது ஏன்? இம்மறுப்பு என்று எழுந்தது? - ஏன் எழுந்தது? இதன் வரலாற்றில் மூன்று படிகள் உள்ளன. அவற்றை அதன் இன்றைய நிலையிலிருந்து பின்னோக்கிச் சென்று பார்ப்போம். முதற்காலம், இலக்கணக்கொத்து ஆசிரியரான சுவாமிநாத தேசிகர்க்குப் பிற்பட்ட காலம். அவ்வாசிரியர் தம் இலக்கணத்தில் தமிழிலக்கணமே வடமொழி இலக்கணத்தின் வழித்தோன்றல் என்று காட்டி, மக்களை ஏமாற்ற எத்தனையோ குட்டிக்கரணங்கள் போடுகின்றார். தமது வடமொழிப் பற்றினால், மொழி நூலறிவின்றி, வடமொழி தென்மொழிகளுக்குப் பொதுவான ஒலிகளை எப்படியோ வடமொழி எழுத்துகளென ஒதுக்கி விட்டுத் தமிழ் ஐந்தெழுத்தாலான ஒரு மொழி என்று கொண்டு, “அன்றியும் ஐந்தெழுத்தால் ஒருபாடையென்று-அறையவே நாணுவர் அறிவுடையோரே” என்று மயங்கிக் கூறினார். அறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளை இதனைத் தம் கலித்தொகைப் பதிப்பு முன்னுரையில் கண்டித்துள்ளார். இக்காலத்தில்தான், ஆரியர்க்கு, “வக்காலத்து” வாங்கிய பலர், வட சொற்களைச் சிதையாமலும், ஏராளமாகவும் இறக்குமதி செய்தனர். அதற்காகவேண்டியே வட மொழியிலிருந்து தமிழர் உச்சரிக்கவே திணறும் ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ என்ற எழுத்துகளையும் வழக்கில் கொண்டுவந்தனர். இவற்றோடமையாது வடசொல் என்று தாம் தம்முடைய மயக்கப் பார்வையில் கண்ட இடத்திலெல்லாம், தந்நகரமிட்டு `மஹாந்’ என்றும், வடமொழி இலக்கணத்தை வலியுறுத்தி `°வாமிந்’ என்றும் எழுதலாயினர். இன்று யார்க்கும் தமிழ்நாட்டில் தெரியாத-கிட்டத்தட்ட முக்கால் பங்குப் பேர்களுக்கு உச்சரிக்கவே முடியாத ‘ஸ்ரீ’ என்ற எழுத்தையும் இக்காலத்துப் பலர் புகுத்த முயன்றனர். இவ்வளவும் முடியாமல், கடைசியிற் குறிப்பிட்ட எழுத்தின் திரிபாகிய சிரீ என்ற சொல்லை, அரசியலார் உதவிபெற்றுப் புகுத்திச்செய்யும் ஆரவாரத்தைத் தமிழன் என்றேனும் மறக்கமுடியுமா? இவ்வளவு தூரம் தமிழரைப் புண்படுத்தும் சமூகத்தினிடையே கூடப் பாலைவன ஊற்றுப்போலத் தோன்றினார், தமிழறிஞரான பரிதிமாற் கலைஞனார். தமிழியக்கத்துக்கும் தனித்தமிழ் இயக்கத்துக்கும் அன்னார் செய்த பணி தமிழரால் என்றென்றும் மறக்கத் தக்கதன்று. ‘தமிழ்க்கு முகமில்லை’ என்று கூறிய வடமொழி வாணர்க்கு, ‘வடமொழி வாயற்றுப் போயிற்று’என அவர் விடையிறுத்த செய்தி, தமிழர் புண்களுக்குப் பேராறுதலளிக்க வல்லது. அக்காலத்துக்கு முற்பட்டது சிந்தாமணிக்கால முதல் இலக்கணக் கொத்து வரையுள்ள ஆயிரம் ஆண்டுகள். அக்காலத்தில் எழுதப்பட்ட புராணங்களும் காவியங்களும் தமிழர் பலரால் தமிழ்ப்பண்பு விரவப் பாடப்படினும், பெரும்பாலும் வடமொழியையும் வடமொழி இலக்கியங் களையும் பாராட்டி உயர்த்தி, அவற்றைப் பின்பற்றும் நோக்கமுடையவையாய் உள்ளன. தமிழர் பழைய இலக்கியப் பண்புகளுக்கு இவை கருவூலமாய் விளங்கினும், தமிழரைப் புண்படுத்தும் பல பகுதிகளையும் உட்புதைவாய் மறையக் கொண்டுள்ளன. அவற்றின் முள்ளை நீக்கிச் சுளையை மட்டுமே தமிழர் கொள்ளற்பாலர். இனித் தொடக்கக் காலம் வடமொழியை எதிர்த்து நின்ற காலம். இது தொல்காப்பியத்துக்குப் பிற்பட்டுத் திருக்குறட் காலம் வரை. இக்காலத்திலுஞ் சில வடசொற்கள் விரவினும், அவை அருகலாகவும், அடிமை மனப்பான்மை யின்றியும் வழங்கப்பட்டுள்ளன. இங்ஙனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழின்மீது வடமொழித் தாக்கை மிகுதிப்படுத்த முயன்றவர் யார்? ஏன் முயன்றனர்? உலகில் வேறு எந்த நாட்டினரையும்விடத் தமிழ்நாட்டில் பிறப்பு வேற்றுமை மிகுதி என, வரலாறு கற்போரறிவர். தமிழ்நாட்டின் நிலையை நுணுகிக் கற்போர் இவ் வேறுபாடு இயற்கையில் பழக்கவழக்க வேறுபாடு, பொருள் நிலை வேறுபாடு முதலியவற்றை ஒட்டியதே என்றும், இவ் வேற்றுமைகள் நாகரிக முற்போக்கின் இயற்கையான பலன்களே என்றும் காண்பர். அஃது அவர் உலகியலிலே முதல்நிலை பெற்றதன் பயன். ஆரியர் தாங்களே அவர்களைக் குறிக்கும் இடங்களிலெல்லாம், அவர்கள் பேராற்றலுடையவர், பெரிய நகரங்களும் செல்வமுமுடையவர் என்றும் தாம் அவரை வென்றது தந்திரத்தால் மட்டுமே என்றும், கூறுவது காண்க. இவ் இயற்கை வேற்றுமையைப் பிறப்பு வேற்றுமையாகக் கருதுவது இயற்கைக்கு முற்றிலும் மாறுபட்டது. இயற்கையில் ஏற்பட்ட இம் மாறுதல்கள் இயற்கையிலேயே அழியும் இயல்பு உடையன. அங்ஙனம் அழியாமல் இவற்றை நிலையான நிலவரமாக்குவது, அவற்றைச் சமயத்துடன் தொடர்புபடுத்துவதனாலேயாகும். நாட்டுப்புறத்தில் இன்று அவர்கள் - தமிழ் மக்கள்-வேறு வேறு பழக்கவழக்க முடையாராயினும் ஒருங்கே பொருந்தி வாழ்வதைக் காணலாம். ஆனால், அவர்களிடையே தமிழ்நாட்டு இயற்கை வகுப்பல்லாத வகுப்பினர்-உழைத்துண்ணலை விரும்பாது உழைப்பவன் உழைப்பின் பயனை எவ்வகையிலாவது எளிதிற் பெறச் சூழ்ச்சி செய்யும் வகுப்பினர்-அவ்வேற்றுமைகளை என்றும் மாறா நிலவரமான பிரிவினை களாகும்படி, வருணாசிரம நீதியும், ஒரு குலத்துக்கு ஒரு நீதியும் வளர்த்ததுடன், அவ்வகுப்பினர் ஒருவரை ஒருவர் என்றும் வெறுத்துப் பூசலிடும்படி, வகுப்புப் புராணங்களும், உயர்வு தாழ்வு வழக்குகளும் உண்டுபண்ணி அதனைத் தம் போலிச் சமய நூலினுள் புகுத்தினர். ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்,’ பையப் பையத் தின்றால் பனையையும் தின்னலாம்’, என்னும் மூதுரைகளின்படி தமிழர் நாளடையில் அவர்களின் மாயைக்கு ஆளாகித் தம்மவர், பகைவர், தம் சமயம், பகைச்சமயம் ஆகியவற்றின் வேறுபாடறியாது மயங்கினதோடு, இவ்வேற்றுமைகளனைத்தும் தம் சமயத்தின் ஒருபகுதியே என எண்ணி மேற்கொண்டும் விட்டனர். அதுமட்டுமா? அவர்கள், தம்மையே தம் சமயம் தணிப்பதாகவும் கருதிவிட்டனர். அதாவது, ‘தாசி மக்கள்’ என்ற பொருளுடைய ‘சூத்திரர்’ என்னும் சொல்லைப் பாமரரான தமிழ் மக்கள், விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ மேற்கொள்ளும்படி அவர்களை மயக்கிவிட்டனர். இவ்வகையில் படித்த மக்களும் செல்வரும் அவர்களுடன் சேரும்படி, அவர்களுக்குச் சற்று உயர்வும், சலுகையும் தரப்பட்டன. என்னே, சமயத்தின் உயர்வும் இன்று அது தமிழ்ப் பகைவர் கைப்பட்டுச் செய்யும் அநீதியும்! பிறப்பு வேற்றுமையற்ற சமயங்களான சைவ வைணவ சமயங்களைச் சார்ந்தவர் தமிழ் மக்கள். ஆனால், இச் சமயங்கள் வகுப்பு வேற்றுமையை மேற்கொள்ளக் காரணமாயிருந்தது, இவற்றுக்குப் புறம்பான உலோகாயதம் செறிந்த மாயாவாத சமயமேயாகும். இதனைச் சற்றே மாறுபட்ட உருவில் சைவத்தின்மீதும், வைணவத்தின்மீதும் செலுத்தி, வடகலை வைணவம், சுமார்த்தம் என்ற புதுப்பிறவிகளைத் தோற்று வித்தனர் அப் போலிகள். ஆட்டுத்தோல் போர்த்துத் தம்முடனேயே விரவிய இவ்விரு புலிகளையும், தமதென மயங்கிச் சைவ வைணவராகிய தமிழர் - சிறப்பாகச் சைவராகிய தமிழர் - அப்போலிகள் கையில், தம் சமயத்தின் தலைமையிடமாம் கோவிலில் புகும் உரிமையும், தம் சமயத்தலைவரான அந்தணருடனொத்த சிறப்பினையும் தந்தனர். ‘மூக்கிற் கிடம்பெற்ற ஒட்டகம்’ போல, அப்புறச்சமய, புற நாட்டுப் பார்ப்பார், புகலிடம் பெற்ற இடத்தைத் தமக்குரிய இடமாக்கி, பின் தமக்கே உரியதெனக் கொண்டு, தமிழர் நாட்டிலேயே தமிழரை அவமதித்தும், தமிழர் சமயத்திலேயே தமிழர் நிலையை இழிவுபடுத்தியும், (சூத்திரர் அல்லது தாசி மக்கள் என அவரைத் தாம் கூறியும், அறிவிழந்த அவரையே கூறிக்கொள்ளச் செய்தும்;) தமிழ் என்ற பெயராலேயே தமிழர் நாக்கை அறுக்கும் - தமிழர் செவிக்குக் கைக்கும் - தமிழர் மொழிக்கு அவமதிப்பை வளர்க்க முயலும் போலித் தமிழை உண்டுபண்ணித் தமிழை அழித்தும், அழிக்க முடியாவிடங்களில் புறக்கணித் தொதுக்கியும் வந்துள்ளனர். இந்நிலையைத் தமிழர் - சைவ வைணவத்தில் உண்மைப் பற்றுடையவரென்று கூறும் தமிழர் - எத்தனை நாள் பொறுத்திருக்கப் போகின்றனர்? பொறுக்கும் ஒவ்வொரு கணமும் தமிழ்க்குத் தீங்காகும் என்பதனை அவர்கள் உணர்தல் வேண்டும். “படமுடியாதினித் துயரம் பட்டதெல்லாம் போதும்” என்று தமிழ்த்தாய், தமிழ்த்தெய்வம், தன்மக்களைத் தன் தொண்டர்களைக் கூவித் தன் விலங்கை உடைத்துத் தன் மதிப்பாம் வேற்படையெடுத்து, அறிவுலகம், அன்புலகம், செயலுலகம் ஆகிய மூவுலகமும் வென்றடக்க எழும்படி அழைக்கின்றாள். நாம் அது கேட்டும் அவ்வன்னை - அத்தெய்வ அன்னையின் கூக்குரல் கேட்டும் வாளா இருப்பதா? அப்படி இருப்பது நம் பிறப்பு, நம் கடமை, நம் உரிமை அனைத்துக்கும் மாறாயிற்றே! ஆதலின், எழுமின்! விழிமின்! அறிவாகிய வாளும், அன்பாகிய கேடயமும் ஏந்தி, வீரமாம் குதிரை யேறி, முன்னேற்றக் களத்தில் விரைவோமாக! வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் அன்னை! வாழ்க தமிழ்த் தெய்வம்!!! 6. தமிழ் இலக்கியம் வாழ்க! தமிழ் நம் அன்னை என்றும், நம் தெய்வம் என்றும் கூறினோம். அன்னை என்ற வகையில் தமிழ்க்குச் செய்யும் பெரும் பணியாவது, அவ்வன்னையின் மக்களாகிய தமிழ் மக்கட் பணியும், அம்மக்களிடையே வேற்றுமை காட்டுபவரை ஒறுத்தலாகிய பணியுமே என்றுங் காட்டினோம். தெய்வம் என்ற வகையில் தமிழ்க்குச் செய்யும் பணி போற்றுதலாகும். தமிழ்த் தெய்வத்துக்குத் தமிழ் மக்கள் இதயமாம் சிற்றம்பலம் அமைத்து, அதில் அன்பெனும் மேடை ஏற்படுத்தி, அதன்மீது தமிழன்னையின் இலக்கியத் திருவுருவம் அமைத்து, அதனைப் போற்றவேண்டும். அங்ஙனம் போற்றித் ‘தமிழிலக்கியம் வாழ்க!’ என்ற மந்திரம் கூறி வழிபடுவோமாக. உண்மைத் தமிழராவார் தம் உடைமைகளுள் எதனை இழப்பினும், தமிழினை இழக்க ஒருப்படார். ஏனெனில், அஃது அவர்கள் உயிர்க்கும் உயிர்போன்றது. உயிரினும் அரிய உயிர்ப் பண்பு அதுவே ஆகும். தமிழர்க்குத் தமிழ் எப்படியோ, அப்படியே தமிழ்க்கு உயிராய் விளங்குபவை தமிழ்க் கலைகளும், தமிழ் இலக்கியமும் ஆகும். ஒரு நாடு மிகவும் பெருமையடைவது அதன் கலைகளாலும் இலக்கியத்தாலுமேயாம். நாட்டின் பிற வெற்றிகள் எல்லாம் அன்றன்று பயன்தருவன, படைக்கலங்களாலும் பொருளாலும் பெறத்தக்கன. கலைகள், எல்லா வகையிலும் நிறைந்த வெற்றியும் வளமும் பெற்ற நல்வாழ்க்கையுடைய நாட்டில் மட்டும்தான் தழைத்தோங்கும். இன்று உலகை ஆட்டிவைக்கும் மேல் நாட்டாரைப் பாருங்கள்! உலகின் அரசியல், வாணிகம், எல்லாம் அவர்கள் கையில்! ஆற்றலும் செல்வமும் அவர்கள் காலடியில் கிடக்கின்றன! ஆயினும், என்ன? அவர்களிடம் கலைச்செல்வம் நம் அளவு உண்டா? இல்லை. ஏன்? அதற்கேற்ற வாழ்வுமுறை அவர்களிடம் இல்லை. அவர்கள் வாழ்வு பொய்யான போலி வாழ்வேயாகும்! உள்ளே எமனோலையைச் சுருட்டி வைத்துக் கொண்டு காத்திருக்கும், அரசப்பிளவை போன்றதே அவர்கள் வாழ்வு. அதன் வெளிப் பகட்டினுள்ளே தொழிலில்லாமை, வறுமை, செல்வத்திமிர், நிறத்திமிர், வகுப்புப் பூசல், வெறுப்பு, அடிமைத்தனம், அடக்குமுறைகள் ஆகிய பல புழுக்கள் நெளிகின்றன. இத்தகைய வாழ்வில் கலைச் செல்வம் எங்ஙனம் ஏற்படும்? ஆங்கில நாட்டில் கலைகள் மிகுந்த காலம் என்பது, எலிசபெத் அரசியின் காலம். ஆங்கில மக்கள் வெற்றி யார்வம் மிகுந்திருந்த காலம் அது. வெற்றித் திமிர் கொண்டிருந்த காலம் அன்று! வடநாட்டிலும் விக்கிரமாதித்தன் காலம் அத்தகையது. தென்னாட்டுக்கோ பிற்றை நாளில் சோழப் பேரரசர்கள் காலமும், அதற்கு முன் பாண்டியர் அரசாட்சிக் காலமும், அத்தகைய நல்வாழ்வுக் காலங்களாயிருந்தன. நம் வாழ்வின் பயனாகக் கொள்ளத்தகும் இக்கலைகள் மாந்தர்க்குப் புலன்வழி இன்பந் தந்து, உள்ளத்தைப் பண்படுத்து கின்றன. புலன்களுள் மெய்யை விட வாயும், வாயைவிட மூக்கும், மூக்கைவிடக் கண்ணும் செவியும் உயர்வுடையன. கண்ணுக்குக் களிதரும் கலைகள் ஓவியம், செதுக்கு, சிற்பம் முதலியன. ஆனால், அவற்றின் படைப்புகள் செயலற்றன. அவற்றிலும் மன உணர்வுக்கு அண்மையுடையது, செவிப்புலனுக்கு உணவு தந்து செயலுடைய தாய் மனோபாவங்களை (உளப் பண்புகளை) இயக்கும் இயல், இசையாகும். கட்புலனுக்கும் செவிப்புலனுக்கும் ஒருங்கே விருந்தளிக்கும் கலை, நாடகம் என்பர். இஃது ஓவியத்திலும் உயரிய நடையோவியம்! இசையில் கட்புலப்பட்ட இசை! இத்தகைய நாடகம் இலக்கியத்தின் துறைகளுள் ஒன்று என்றால், இலக்கியத்தின் பெருமையைச் சொல்ல வேண்டிய தில்லை. நாடக ஆசிரியன், இசையையும், இயற்கையையும் மனித எண்ணங்களையும் குழைத்து, நாடகமாம் மாளிகை கட்டுகிறான். இலக்கிய ஆசிரியனோ, அத்தகைய மாளிகை கட்டுவதுடன் அமையாது, அதனைச் சுற்றிலும் எல்லாவகைச் செயலுருவும், விரிவுரை, தற்கூற்று, குறிப்பு ஆகிய பலவுங் கொண்ட பூஞ்சோலைகளையும், பூப்பந்தர்கள், பூந்தடங்களையும் சேர்த்து ஒரு பெரிய பல்கலை விருந்து நிகழ்த்துகிறான். நாடகம் உட்படப் பிற கலைகளனைத்தும் இயற்கையின் ஒரு மூலையை - வாழ்க்கையின் ஒரு கணப் போதை அழகின் ஒரு கூறை எடுத்துக்காட்டுவதுடன் நிற்க, இலக்கியக் கலைஞன், ஒரு மந்திர வாதியைப்போல, அணுவினும் சிறிய பொருள்முதல், அண்டத்தினும் பெரிய பொருள் வரை தன்னதாகக்கொண்டு, எல்லாவகைப் பட்ட மாயவித்தைகளும் செய்கின்றான். எல்லாப் புலன்களுக்கும், மனத்துக்கும், மனத்திலுள்ள அறிவு, உணர்ச்சி, ஆற்றல் ஆகிய அனைத்துக்கும், அவன் உயிர் விருந்தளிக்கிறான். ஆகவேதான், அவன் கலையாகிய இலக்கியத்தை ‘அகலக் கலை’ என்றனர் அறிஞர். அஃது அகலக் கலை மட்டுமன்று. அகலாக்கலை என்று கூறினாலும் கேடில்லை. ஏனெனில், அஃது உண்மையில் மனித வாழ்க்கையில் ஒன்றையோ பலவற்றையோ, அனைத்தையுமோ ஒரு பாடமாகக் காட்ட முடியும். அதன் அளவு விரிவு - கலைஞன் திறன் ஒன்றையே வரம்பாகக் கொண்டது. திறனோ, கிட்டத்தட்ட கடவுள் திறனுக்கே ஒப்பானது! அதனால்தான் முதல் தரக் கவிஞனைத் தமிழர், ‘முனிவர்’ என்றும், ‘பகவன்’ என்றும் கூறினர். மொழிக்குக் கலையும், இலக்கியமும் உயிர் என்று மேலே கூறினோம். தமிழ்மொழி கலையிலும் இலக்கியத்திலும் ஊறியது. தமிழில் கலையும் இலக்கியமும் இல்லாவிட்டாற்கூட, நாம் கலைக்கும் இலக்கியத்துக்கும் அலந்தவர்களாய் விடமாட்டோம். ஏனெனில், தமிழ் மொழியே ஒரு கலை. தமிழ்ச் சொற்களே தனித்தனி இலக்கியங்கள்! தமிழ்மொழி இயற்கையின் முதற்சேய் எனும்படி இயற்கை ஒலிகள் இயற்கைப் பண்புடையவை என்று மேலே கூறினோம். இதிலிருந்து அஃது அப்படியே இயற்கையாய் எழுந்தது என்று எடுத்துக் கொள்ளப்படாது, இயற்கைக்கு மாறாகப் போகாது, பல்லாயிர ஆண்டுகளாக இயற்கையை ஒத்த முறைகளிலேயே பயன்படுத்தப்பட்டுவந்த மொழி என்றே இதனைக் கூறுதல் வேண்டும். இயற்கை அழகுடையதாயினும், அதன் அழகைத் தனித்தெடுத்துக் காட்டும் கலையழகுபோல, இயற்கையின் அழகிய ஒலிகளைப் பிரித்தெடுத்துத் தமிழாக்கினர் தமிழ் மூதாதையர். அதனால்தான் தமிழில் மெய்கள் மொழி முதல் வாராமை, பொருந்தாமெய்கள் இடையில் மயங்காமை, வன்மை ஈற்றில் வாராமை ஆகிய செம்மைப்பாடுகள் காணப்படுகின்றன! அரிச்சுவடியில் எழுத்துகளின் ஒழுங்கைப் பாருங்கள். உயிரின் பின் மெய்; இடையில் அரை உயிரான ஆய்தம்! முழுமெய்களான வலியின்பின் குறை மெய்களான மெலியும் இடையும்! இன்னும் சொற்களிலும் இதே மெலியும் வலியும், இதே ஒழுங்கும் பொருள்நயமும் காணப்படும். இதனை ஈண்டு விரித்து ஆராய முடியாதாயினும் ஓரளவிற் கூறுவோம். பெண்களைக் கொடி என்று உவமித்தல் கவிஞர் வழக்கு. கொடிகள் ஒரு கொம்பு அல்லது கொம்பின் மீது படரும். பெண்கள் அதுபோல் காதற் கணவனைச் சேர்ந்து வாழ்வராம். ஆகவே, தமிழில் கொடி படரும் கொம்பு கொழு கொம்பாயிற்று; கணவன் கொழுநன் ஆயினன். சரி, கொடி பிறர் கண் கவர்வது மலர் நிறையும்போது; பெண்கள் ஆடவர் கண் கவர்வது பருவமெய்தும்போது, எனவே பருவமெய்துவது பூப்பு எனப்பட்டது. பெண்கள் கணவனுடன் சேரும் வாழ்வு இதற்கேற்ப மணம் எனப்பட்டது. மணவாழ்வின் பயன் குழந்தை பெறுவது. இதனைப் பழம் என்றும் அவர்கள் கருதினர், ஆனால், பழம் எனச் சொல்லவில்லையே என்று எண்ணலாம். குழந்தை பத்துமாத விளைவு குன்றிப் பிறந்துவிட்டபோது, இவ்வுருவகம் மீண்டும் தலைகாட்டுகின்றது; குழந்தை காய் விழுந்துவிட்டது என்கின்றனர். இச்சொற்களுள் எத்தனை உருவகங்கள்! எத்தனை கற்பனைகள்! கடவுளின் பெயர்களாகிய கந்தம், கடவுள், சிவம் முதலியவற்றின் நயங்களை மேலே கூறியிருக்கிறோம். வெளிப்பார்வைக்குத் தனித்தனி இடுகுறிச் சொற்களாய் இருப்பவை கூட, ஆராய்வார்க்கு, அரிய நயம் புதைந்த உறவுடைய காரணச் சொற்களே என விளங்கும். நிறைவு என்ற பொருளுடைய வண்மை என்ற சொல்லிலிருந்து வெற்றி என்ற பொருள் தரும் வலமும், அதனைக் காட்டும் கொடியைக் குறிக்கும் வலனும் அவ்வெற்றியைத் தரும் கையாகிய வலக்கையும், அவ்வெற்றியை விழைவோர் வலப்புறமாகச் சுற்றும் சுற்றாகிய வலயமும் எழுந்தது காண்க. நூல் என்ற சொல் ஏட்டுக்கும், இழைக்கும் பெயர். நூல் கற்போன் நூல் காப்பணி கின்றான். ‘இழை நூல் மரத்தின் கோட்டம் நீக்கும், ஏட்டுநூல் மளக்கோட்டம் தீர்க்கும்’ என்றார் நன்னூலாசிரியர். கோணு, கோடு என்பதிலிருந்து வளைவு, மதிலால் வளைந்திருக்கும் கோட்டையாயிற்று. இன்னும் இவை போன்ற பல்லாயிரக்க ணக்கான தொடர்களை நோக்கின், நாப் பழக்கத்தால் வரும் தமிழே ஒரு கலை என்றும், மனப்பழக்கத்தால் ஏற்படும் அதன் சொற்களே, இலக்கியக் கற்பனைகளைப் பிழிந்து மணியாக்கிய மணிக்கண்டுகள் என்றும் காணலாம். இத்தன்மையினை இலக்கியம், இலக்கணம் என்ற சொற்களிலுங் காணலாம். இலக்கியம் என்பது இலக்கு ஆகியது ஆம். ஒரு மனிதன்-ஒரு பெரியார்-தம் வாழ்நாளிற் கண்ட உண்மையினை-உண்மைகளை-அழகினை-நயத்தினைப் பிறர்க்கு இலக்காம் வண்ணம் எழுதிவைத்தால் அஃது இலக்கியமாம். அவ்விலக்கியத்தின் பண்பை, அதன் வண்ணத்தை, அதன் உருவினையும் பாகுபாட்டினையும் அமைப்பையும் விளக்குவது இலக்கணமாம். இலக்கிய இலக்கணங்களுக்கு இத்தனை அழகிய சொற்கள் வேறு எம்மொழியிலுமில்லை. சிலர் இச் சொற்களே வடமொழியினின்று வந்தன என்று சொல்கிறார்களே? என்று வினவலாம். அஃது இச்சொற்களுக்கு மட்டுமன்று. வேறு பல நல்ல தமிழ்ச் சொற்களையுந்தான் வடமொழி என்று சொல்கின்றனர்! இவற்றுட் பல தமிழினின்று வடமொழி போந்தவை. மறைமலையடிகள் போன்ற பேரறிஞர், இவற்றுட் பலவற்றை எடுத்துக் காட்டியுள்ளனர். இன்னும் பிற அறிஞர் எடுத்துக் காட்டவுஞ் செய்வர். எப்படியும் இலக்கியம், இலக்கணம் என்ற சொற்கள் தமிழே எனக் காட்டுவோம். வடசொல் என்று இவற்றைக் கூறும் மக்கள் இவை இலக்ஷ்யம், இலக்ஷணம் என்ற வடமொழிச் சொற்கள் மருவி வந்தவை என்பர். அப்படியே வைத்துக்கொள்வோம். தமிழ் மொழியில் இலக்கியம் என்பது மொழியின் சிறந்த நூல்களின் தொகுதி என்ற பொருளிலும், இலக்கணம் என்பது மொழியின் அமைப்பு நூல், அமைப்புக் கூறும் நூல் என்றும் பொருள்பட வழங்குகின்றன. இப்பொருளில் இச்சொற்களுக்கு மூலங்களாகக் கூறப்படும் இலக்ஷ்யம், இலக்ஷணம் என்ற சொற்கள் எங்கேனும் வடமொழியில் வழங்குகின்றனவா? இல்லை. வடமொழியில் இலக்கியம் இலக்கணம் என்ற இணைச்சொற்களுக்கு ஒன்றுடனொன்று பொருத்தமற்றதாகச் சாகித்யம், வியாகரணம் என்ற சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. இரண்டிலும் தமிழ்ச் சொற்களின் நயம் தென்படவில்லை. அவை மிக மட்டமானவை. தமிழில் மிகப் பழைமையான காலந்தொட்டே வழங்கிவரும் இலக்கியம், இலக்கணம் என்ற தொடர்புடைய சொற்கள், வடமொழியாளர் என்றும் வழங்காத சொற்களிலிருந்து, வடமொழியாளர் என்றுமறியாத நயமுடைய பொருளில் வந்து வழங்கின என்பது எத்தனை பொருத்தமற்ற புளுகு பாருங்கள்! இவ்வளவு நல்ல சொற்களைக் கையாண்டிருப்பின், அதன்பின் வடமொழியாளர், ‘சாகித்யம்’, ‘வியாகரணம்’ என்ற மட்டமான சொற்களை வழங்கியிருப்பரா? அது மட்டுமன்று; தமிழ் இலக்கியம் ‘இலக்கு’ என்ற சொல்லிலிருந்து வந்தது. இலக்கு என்பதற்கு இடம், குறி, நோக்கம் முதலியதான பலவகை விரிவுடை பொருள்கள் உள்ளன. இலக்கியம் என்ற சொல், அம் மூன்று பொருளும் உடைய இலக்கு என்ற சொல்லிலிருந்து குறிப்பு வினைப் பெயராய் வந்த பிறிதொரு சொல். வடமொழி இலக்ஷியம் என்ற சொல், நோக்கம் என்ற ஒரு பொருள் மட்டுமே கொண்டது. ஆகவே, சொல் வளர்ச்சியோ, திரிபோ, பொருள் நயமோ வடமொழியில் இல்லாமை காண்க. இலக்ஷணம் என்ற சொல்லும், அதுபோல் என்றும் இலக்கணம் என்ற பொருளில் வழங்காதது காண்க. தமிழ் இலக்கியத்தின் அருமை பெருமைகளைப் பற்றிக் கூறுமுன், தமிழ்க்கும் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் உள்ள சரியான தொடர்புபற்றி, ஒரு புதிய செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன். ‘ஒரு பானைக்கு ஒரு சோறு பதம்’ என்றபடி, இன்றைய இலக்கியத்தின் ஒரு பகுதியையோ, இன்றைய இலக்கிய முழுமையையுமோ வைத்துக்கொண்டு, தமிழின் பெருமையையும், தமிழர் இலக்கியப் பெருமையையும் ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து உய்த்தறியலாம். ஆனால், மேலீடாகப் பார்ப்பவர்க்குத் தற்காலத் தமிழ் இலக்கியத்தை வைத்துக் கொண்டு, தமிழின் முழு இலக்கியத் திறனை அறிய முடியாது என்றுதான் கூறுதல் வேண்டும். ஏனெனில், இன்று நமக்குக் கிட்டும் இலக்கியம், உண்மைத் தமிழ் இலக்கியம் அல்லது தமிழர் இலக்கியமாகாது. அவ்விலக்கியத்தின் தொன்மை, விரிவு, பண்பு ஆகிய எதைப் பார்த்தாலும், இன்றைய தமிழ் இலக்கியம் தமிழர் இலக்கியத்துக்கு குறைவு பெற்றதேயாகும். எப்படி எனிற் காட்டுதும்: தமிழில் வரன்முறையாக முத்தமிழ் என்ற வழக்கு இருக்கிறது. இப்பிரிவு வடமொழியில் இல்லை. வேறெம்மொழி யிலும் இல்லை. தமிழிலும் இன்று அஃது இல்லை. ஆனால், மரபு மட்டுந்தானிருக்கிறது.`முத்தமிழ்’ என்பது இயல் இசை நாடகம் என்பவை என்று, இன்று அறிகிறோம். இசையும், நாடகங்களும் இன்று நம்மிடம் இல்லை. அதைப்பற்றிய சில குறிப்புகளும், சில நூற்பெயர்களும், சிலப்பதிகாரத்தாலும் அதன் உரையாலும் விளங்குகின்றன. அக்குறிப்புரைகளே அவற்றின் தொன்மை, விரிவு, ஆழம் இவற்றை அளந்தறியப் போதுமாயினும், அது வரலாற்றுக்கு மட்டுமேயன்றி, இலக்கிய முறைமையில் போதாதது ஆகும். ஆகவே, இன்று இலக்கியம் என்பதெல்லாம், அதன் மூன்றிலிரண்டு பகுதியைச் சாகடிக்கவிட்டு, மீந்திருக்கும் மூன்றிலொன்றாகிய இயலை மட்டுந்தான். வடவர் வேதங்களை ஆராய்ந்தெழுதிய மாக்°முல்லர், “தமிழரின் நூற்றுக்கணக்கான நகரங்களையும் கோட்டை களையும், ஆரியர்கள் தீயிட்டெரித் தனர். தீ ஆறு மாதம் எரிந்தது. அநேக தமிழ் மறை, இலக்கண இலக்கியங்கள் அதனால் அழிந்தன” என்றெழுதியுள்ளார். அவ் வியல்தான் முற்றிலும் உண்டா? தமிழற்கு இன்று கிட்டிய முதல்நூல் தொல்காப்பியம். முதல்நூல் இலக்கணமா யிருக்க முடியுமா? தெலுங்கில் அப்படி முதலிலேயே இலக்கணம் ஏற்பட்டதுண்டு. ஆனால், தெலுங்கிலக்கணம் எழுதியவர் மொழிக்குத்தான் இலக்கணம் எழுதினார். இலக்கியத்தைக் குறிக்கும்போது, வடமொழி இலக்கியத்தைத்தான் எண்ணினார். மலையாளத்தில் அண்மையில் கேரள பாணினியம் என்ற அகன்ற இலக்கணம் எழுதப்பட் டிருக்கிறது. ஆனால், அதற்கு இலக்கியம் மலையாள இலக்கியம் மட்டுமன்று, உலகின் இலக்கியம் முழுமையுமே யாகும். ஆனால், தொல்காப்பியரோ தெளிவாக இலக்கியத்துக்கு - தமிழ் இலக்கியத்துக்கு - இலக்கணம் எழுதினார். இலக்கியத்துக்கே உரிய உரிச்சொற்களை எடுத்தாண்டிருக்கின்றார். நூல்நெறி வழக்கு, ஆன்றோர் வழக்கு எடுத்துக் காட்டுகிறார். செய்யுளியல் அணியியல் வேறு, நூல் வழக்குக்கான ஐந்திணை நெறி வேறு. இதையெல்லாம் விடப் புதுமையானது; அவர் முன் இலக்கணங்களைக் குறிப்பிடுவது. உரையாசிரியர் கூற்றுப்படி, இவர் இலக்கணத்தில் முன்னாசிரியர் விட்ட பகுதி, தனக்குக் கருத்து வேற்றுமையுள்ள பகுதி ஆகியவற்றை மட்டுமே விரிக்கிறார் என்று தோன்றுகிறது. அத்தனை இலக்கண இலக்கியமும், முன் இருந்திருத்தல் வேண்டுமே? எங்கே போயின? போயொழிந்த இசை நூல்கள், நாடக நூல்கள், அவற்றின் இலக்கணங்களின் கதி யாது? தொல்காப்பியத்துக்குப் பிந்தி, கடைச் சங்க காலத்துக்குப் பிந்தியுள்ள நூல்கள்கூட எல்லாம் உள்ளனவா? இல்லை! இல்லை! இல்லவே இல்லை! சமண நூலாகிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை உரைகளில் மேற்கோள் காட்டிய நூல்கள், புத்த நூலாகிய நேமிநாதத்தில் மேற்கோள் காட்டிய சூத்திரங்கள், பாக்கள் பல இன்ன நூல்களிலிருந்து என்று தெரியவில்லை. ஒளவை எழுதிய அசதிக்கோவை என்ற பாட்டுகள் ஒரு சிலதான் உள்ளன. பரிபாடல், முத்தொள்ளாயிரம் சிறுபகுதியே உள்ளன. பிற்காலப் புலவர் பாடல்கள்கூட எத்தனையோ அழிந்துவிட்டன. சுருங்கச் சொல்லின், தமிழின் இன்றைய முதல் நூலாகிய தொல்காப்பியத்துக்குமுன், இலக்கிய இலக்கண இசை நாடக நூல்கள் பலவும், பின்நூல்கள் பலவும் மறைந்தன. ஆகவே, இன்றைய தமிழிலக்கியம் விரிவிலும் வளத்திலும், தொன்மை யிலும், தமிழ் முழு இலக்கியத்திலும் எவ்வளவோ குறைவுபட்டது. தொன்மை விரிவு முதலியவை எப்படியாவது போகட்டும்! தன்மை யிலாவது முற்றிலும் தமிழர் இலக்கியமா? என்று பார்ப்போம். தமிழர் வகுப்பு வேற்றுமை பாராட்டுவதில்லை என்று கூறினோம். இன்றைய தமிழ் நூல்களில் தொன்மைச் சிறப்பு வாய்ந்த குறளும், நாலடியும் இதனை நன்கு வலியுறுத்துகின்றன. “பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்கின்றார் திருவள்ளுவப் பெருந்தகையார். “தோணி இயக்குவன் தொல்லை வருணத்துக் காணிற் கடைப்பட்டான் என்றிகழார்” என்கின்றார் நாலடியாசிரியர். ஆனால், முன்னது வேற்றுமை யில்லை என்று மட்டும் கூறப் பின் செய்யுள் பிறப்பு வேற்றுமையை எதிர்க்கின்றது காண்க. பின்னூலின் காலத்துக்குள், அவ்வேற்றுமை வழக்காற்றில் மிகுந்துவிட்டதே ஆசிரியர் கண்டித்ததற்குக் காரணம். பிற்காலத் தமிழ்ப்புலவர் ஒருவர், “நாற்பாற் குலத்தில் மேற்பால் ஒருவன், கற்றிலனாயின் கீழிருப்பவனே” என்கின்றார். இவ்வாசிரியரும், தமிழர் கொள்கைப்படி வேற்றுமையை எதிர்ப்பினும், பிறப்பாலுள்ள வேற்றுமையை அறிந்துரைக்கின்றது காண்க. இதற்குள் நாற்பாற் குலத்தை நிறுவும் முயற்சி முற்றும் அழிந்துவிட்டது போலும், நல்ல காலமாக இந்நூல் சமய நூலாயில்லை. சமய நூலானால் பிற்கால நூல்கள் அவை சைவமாயினும், வைணவமாயினும், யாதாயினும், படிப்படியாய் பிறப்பு வேற்றுமையை மேற் கொள்வது காணலாம். கற்றவரிடை நேர்மையுடையவர் அதனை வெறுத்து விடுவரே யென்று அஞ்சி, உயர்நிலை அல்லது வைதிக நிலையில் வேற்றுமை யில்லை. கீழ்நிலை அல்லது உலகியல் நிலைக்குமட்டுமே வேற்றுமை உண்டு என்றுஞ் சொல்லத் தொடங்கினர். கல்வியைத் தன் உயர்வுக்குப் பயன்படுத்திய வகுப்பினரின் தலைவரான சங்கராச்சாரியார், இன்றும் சைவ வைணவ சமயத்தில் சாதிப்பிடிப்பு படிப்படியாய் ஏறிவருவதும், அச்சாதியை ஏற்கத் தயங்கும் கோழைகளைச் சாதிப்பித்தர் தென்கலை வைணவர் என்றும், சைவர் சற்சூத்திரர் என்றும் இழித்துக் கூறுதலும் காண்க. ஆனால், முன்னாளில், “உலகியலில் வேற்றுமையுண்டு, வைதிக நிலையில் வேற்றுமையில்லை” என்பது போய், “இன்று வேற்றுமை பாராட்டுவார்தாம் வைதிகர், பாராட்டாதவர் உலகியல் நிலையினர்” என்று மாறிவிட்டது. இம்மாறுதலும் காலத்தின் கோலம் போலும் ! அண்மைக் காலங்களில் தமிழிலக்கிய இலக்கணங்களில் பிறப்பு வேற்றுமை புகுத்தப்பட்ட அளவுக்கு எல்லையேயில்லை! நல்ல காலமாக அவற்றை ஏற்குமளவு அறிவு நமக்கில்லை. மக்களில் வேற்றுமையில்லை என்று நாம் சொல்ல பிற்காலத் தமிழ் நூல்கள் பார்ப்பனரையும் ஒருபடி தாண்டி பாட்டிலும் நான்கு சாதி, எழுத்திலும் நாலு சாதி, எண்ணிலும் நான்கு சாதி என்று சாதி வகுக்கின்றன. இதே முறையில் தமிழ்நாட்டின் “அறிவியல்” முன்னேறினால், கல்லிலும் நாலு சாதி, நீரிலும் நான்கு சாதி, மரங்களிலும் நாலு சாதி ஏற்பட்டிருக்கும்! என்னே நம் நாட்டின் நிலை! தமிழிலக்கியத்தின் போக்கில் வரவர வளர்ந்து வரும் இன்னொரு வழு வடமொழி மயக்கமும் வடமொழி இலக்கிய மயக்கமும் ஆகும். இம் மயக்கம் தொடங்கிய காலத்தில் வடமொழியில் இலக்கியமே யில்லை. சில புராணக் குப்பைகளே இருந்தன. இம் மயக்கம் முற்ற முற்ற வட மொழி இலக்கியம் வளர்ச்சியடைந்து - தமிழர் மதிப்புக்கு இடம் தந்து நின்றது. தமிழில் இலக்கியம் அழிந்து வடமொழியினின்று மொழி பெயர்ப்பை எதிர்பார்க்கும் நிலைமையை அடைந்துவிட்டது. வடமொழியினும் தமிழ் மொழியில் இலக்கியம் குறைந்தும், புராணம் வரவர மிகுந்தும் வந்தது கவனிக்கத் தக்கது. இன்னும், பழந்தமிழ்க் கொள்கைகளாகிய கற்பு, ஊனுண்ணாமை, கொல்லாமை முதலிய கருத்துகள் ஆரியர்க்குதவும் வகையில் மாற்றப்பட்டன. ஐவரை மணந்த துரோபதைக்கும், கணவனை விடுத்துச் சந்திரனை நாடிய தாரைக்கும் கற்புண்டென்று வற்புறுத்தப்பட்டது. இன்னும் ஒத்துவாராத கதைகளுக்கு “ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கப்படாது” எனப்பட்டது. வேள்வியில் ஊனுண்ணும் பார்ப்பனர் ஊனுண்ணாதவரே என வற்புறுத்தப்பட்டது. அதனை மக்கள் ஏற்கும் அளவு வலியுறுத்த அவர்களுக்குத் திறமை இல்லாக் குறையினால், பார்ப்பனர் பலர் தமிழ் நாட்டிலும் தமிழர் வாழும் நாட்டிலும் மட்டும் ஊனுண்ணலையும் வேள்வியையும் ஒருங்கே விடுத்தனர். இவ்வளவும் படிப்படியாய் வந்த காரணத்தினால்தான், பழந்தமிழ்ப் பண்பு கெடாத சில நூல்களேனும் - தொல்காப்பியம், திருக்குறள், சங்கநூல்கள் முதலியவை கிடைத்துள்ளன. இச் சில நூல்கள் போகப் பெரும்படியான தமிழ் நூல்கள் இறந்துபட்டன. ஏன்? கடல் கொண்டதனால் இறந்துபட்டதென ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர். பழந்தமிழ் நூல்களும் உரைகளும்கூட இதற்குச் சான்று கூறுகின்றன. அங்ஙனம் கடலுஞ் சிலவற்றைக் கொண்டதென்பதற்குத் தடையில்லை. ஆனால், கடல் கோளையும், தமிழ் வேதங்களையும் எதிர்க்கும் ஓர் ஆசிரியர் கூறுகின்றபடி, கடல்கோள் தமிழர் நூல்களுக்கு மட்டுமா? தமிழர்களிடையும் நூல்கள் மட்டுமா அப்படிப் போகும்? போயினும், கடல்கோளுட் படாத அன்றைய தமிழ்நாட்டுப் பகுதியிலுள்ள படிகள் எங்குப் போயின? படிகள்தாம் போயினும் வடமொழி மறைகள், கீதை முதலியவை மக்கள் மனமென்றும் ஏட்டில் வழங்கி இன்றும் உள்ளனவே? தமிழ் நூல்கள் மட்டுமா அங்ஙனம் மக்கள் மனத்தாலுங்கூட இல்லாதொழிதல் வேண்டும்? இவ்வினாக்கள் உண்மையில் திகைப்பளிப்பவையே. ஆயின், தமிழ் நூல்கள் பிற மொழிகளனைத்தும் தொடங்கு முன்னமேயே அடைந்த விரிவையும், அக்காலத்து எழுத்து வசதிகளையும் நோக்க, நூல்களைப் பாதுகாக்க என்று ஒரு தனிக்கூட்டம் இருந்தாலல்லது, அவை பேணப்படமுடியாது என்று காணலாம். தமிழ்நாட்டில் பாணர் என்ற பாடும் வகுப்பு ஒன்று இருந்தது. ஆனால், உண்மையில் நூலியற்றியவர் எல்லா வகுப்பிலுமிருப் பினும் அதைப் பேணுவதற்கான ஒரு வகுப்பு இருந்திருத்தல் வேண்டும். அதுவே தமிழ் அந்தணர் வகுப்பு. அவர்கள் பிற்றைநாள் பார்ப்பனர் - அவரைச் சார்ந்த பிறநாட்டு அரசர் - வரவால் ஒளி மழுங்கினர். ஒழுக்கமே உயிர் எனக் கொண்ட பழந்தமிழந்தணர், குணத்தின் பயனை- பொறுமையையும் பணிவையும், தன்னல மறுப்பையும் - இன்றும் ஓரளவு காணலாம். இவர்கள் எதிர்க்கும் குணமில்லாததால் தலைமை மாறும் காலத்தில் அடிமைச் சுமை பெற்றனர். ஆனால், பார்ப்பனரோ ஆரவாரமும் புறவேடமும் மிக்கவராய், உலகியல் சூழ்ச்சியும், உயர்ந்தோரைக் கவரும் மாய்மாலமும் உடையரா யிருந்ததனால், அவ் அந்தணரையும் பிற தமிழரையும் அடுத்துக் கெடுத்து அவர்களைத் தமக்குக் கீழ்ப்படுத்தினர். அவ் அந்தணர் பூசை செய்த கோயிலினுள், சமையல் வேலையை அரசனை யண்டிப் பசப்பி அடைந்து, ஆணவமற்ற அவ் அந்தணர்களின் எதிர்ப்பின்றி, வடமொழி வேதம், மந்திரம் இவற்றைச் சைவ வைணவர் கோவிலில் ஓதும் உரிமையையும் பெற்றனர். பின், ‘ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியைக் கெடுத்தது போல்’ தம் உடல் மினுக்காலும், ஒய்யார நாகரிகத்தாலும், பொதுமகள் போல் அனைவரையும் கவர்ச்சி செய்து நடந்து, ‘தாசிமக்கள்’ எனப் பொருள்கொள்ளும் (அவர்களுக்கே பொருந்தும்!) ‘சூத்திரர்’ என்ற பெயரைத் தமிழர்மீது சுமத்தி, அத்தமிழந் தணரையும் ‘வேளாப் பார்ப்பனர்’ என மாற்றி, நாளடைவில் தாழ்ந்த வகுப்பினர் என அவர்களே நம்பும்படி செய்து, இறுதியில் அவர்கள் சமயத்தையும் தம் பசப்புச் சமயத்துள் ஒரு பகுதியோ என எண்ணும்படி செய்துவிட்டனர். இதற்கெல்லாம் இடங் கொடாத தமிழ் நூல்களை ஆர்வத்துடன் கற்பதாகக் காட்டி அவற்றைக் கைப்பற்றி மறைவாகவும், பின் வெளிப்படை யாகவும் அவற்றைக் கடலில் எறிந்தும், ஆற்றில் எறிந்தும் வந்தனர். அக்கடலில் எறிந்த செய்தியையே அவர்கள் மக்களிடைக் கடல்கோள் செய்தியுடன் தம் குற்றம் வெளிப்படாவாறு குழப்பிப் பரப்பினர். ஆற்றிலெறிவதையே காவிரிப்புராணமாக விரித்து, மீண்டும் மீண்டும் தமிழ் நூல்களை அழித்து வந்தனர் - அழிக்கின்றனர் - அழித்தும் வருகின்றனர். இஃது அன்று மட்டுமன்று, இன்றும் அண்மையிற் காலஞ்சென்ற அறிஞரின் நூல்களைக்கூடச் சிலர் கூட்டியும் திரித்தும் எழுதுகின்றனர் என்று கூறப்படுகிறது. இங்ஙனம் பல்லாயிரம் ஆண்டுகளாக அழித்தும் அழியாது மீந்தவையே - தமிழ் மீது தமிழ்நாட்டுத் தமிழர் கொண்ட விடாப்பிடி ஆர்வத்துக்கு ஒரு சிறு குறியீடாய் இன்று ‘தமிழிலக்கியம்’ என்னும் பேர்கொண்டு நிலவுகின்றது. போனது போக, இம் மீந்த இலக்கியத்தை நோக்கினாலும், தமிழ் இலக்கியத்தின் விரிவும் கொள்கையும் வியப்புக்கிட மானதேயாகும் . இன்று உலகிலுள்ள சமயங்களுள் கிட்டத்தட்ட எல்லாம் தமிழ்நாட்டில் உள்ளன. படிப்படியாக அவை அனைத்துக்கும் தமிழ் இலக்கியம் இடந் தந்துள்ளது. இராமனழகை வருணிக்கும் கம்பர், “தோள் கண்டார் தோளே கண்டார்” எனக் கூறுவதே போலத் தமிழிலக்கியமும் ஒவ்வொரு சமயத்தார்க்கும் ஒரு பகுதி காட்டித்தான் எல்லாரது பகுதியையும் ஒருங்கு உடன் கொண்டதாயுள்ளது. இவற்றுள் மிகப் பிந்தித் தமிழ் நாட்டில் நுழைந்த இசுலாமிய கிறித்தவ சமயங்களின் வெவ்வேறு கிளைகள்கூடத் தமிழிலக்கியத்தில் தனியிடம் பெற்றுள்ளன. முதன்முதலில் தமிழ்நாட்டில் நுழைந்த புறச்சமயங்களாகிய சமண புத்த மாயாவாத சமயங்களோ என்னில், தனித்தனி ஒரு மொழியின் இலக்கியத்துக்குப் போதிய அளவு இலக்கியப் பகுதிகள் உடையவை. அவற்றுள் இறந்துபட்டன பல. இன்று பல இடங்களில் தமிழறிஞர் தமிழிலக்கியத்தினைப் பற்றிப் பேசும்போதெல்லாம். ஒவ்வொருவர்க்கும் தமிழிலக்கியத்தின் ஒரு பகுதியையோ, சிலபகுதிகளையோ மனத்தில் வைக்கின்றார்களேயன்றி வேறன்று. சமயக் கட்சிச் சார்பின்றித் தமிழிலக்கியங்களை ஓரிடத்தில் திரட்டினால், பண்பினால் மட்டுன்றி அளவினால் கூடத் தமிழ் பிறமொழிகளின் இலக்கியங்களினும் நிறைவுடையதாயிருக்கும் என்பதில் ஐயமில்லை. தொன்மையை எடுத்துக்கொண்டால், இன்றைய இந்திய மொழிகளுள் தமிழ் எல்லாவற்றிலும் எத்தனையோ மடங்கு தொன்மை மிக்கது. வடநாட்டுத் தாய்மொழிகளுள் குஜராத்தி முதலிய மொழிகளில் மிகப் பழைமையான இலக்கியம் காந்தியடிகள் எழுதியவை, என்னும்படி அவை அவ்வளவு புத்தம் புதிய வளர்ச்சியையுடையன. உருதுவை நோக்கினால், அம்மொழிதானும் பேரரசர் அக்பரால் புதுவது புனையப் பெற்றதாகும். போக வடமொழிகளுள் பழைமை யுடையவை வங்காளியும், இந்தியும், மராத்தியுமேயாம். வங்காளி நம் கண்களுக்கு முன்னேயே அந்நாட்டினர் ஒப்பற்ற மொழிப்பற்றின் வெளிப்பயனாக வளர்ந்தது. அதன் முதல் இலக்கிய நூலும், இந்தி, மராத்தி முதலியவற்றின் முதல் நூல்களும் அவ்வம் மொழியின் இராமாயணங்களேயாகும். வங்காளி இராமாயணம் சைதன்யரால், இந்தி இராமாயணம் கம்பர்போல் புகழ்பெற்ற துளசிதாசரால், மராத்தியில் ஆழ்வாருள் சூடிக்கொடுத்த நாச்சியாரை ஒப்பக் கண்ணன் காதலிலீடுபட்டு உலகு துறந்த மீராபாயினால் இயற்றப்பெற்றவை. இம்மூன்று வடநாட்டு நூல்களுக்கும் தூண்டுதலாயிருந்தது தென்னாட்டு இராமாநந்தரே. அவை இந்நாட்டுச் சமயமாம் கடலினின்று, இராமாநந்தராகிய புயல், நீர் மொண்டு சென்று வடநாட்டில் பொழிந்த முதல் மழைத்துளிகளேயாம். தென்னாட்டை எடுத்துக்கொண்டால், துளு, குடகம் முதலிய மொழிகள் இன்றும் இலக்கிய உயிர்ப்படையவில்லை. மலையாள மொழியின் இலக்கிய வரலாறு சென்ற இரு நூற்றாண்டுகளுக்குள்ளேயும், மொழி அதனினும் சற்றுதான் பழைமையுமுடையன. சேரமான் பெருமாள் நாயனாருடன் மலையாள மொழியும் அரசியலும் பிரிந்தன என்பர். அதற்குமுன் மலையாளம் நல்ல செந்தமிழ் நாடாய்ச் சிலப்பதிகாரம் போன்ற முத்தமிழ் நூல்களைத் தோற்றுவிக்கும் உயிர்ப்பண்புடையதாய் இருந்தது. தெலுங்கில் இலக்கியம் ஏற்படத் தொடங்கியது. தெலுங்கு இராமாயணம் எழுதிய திக்கணர் காலம்முதல்தான்; அதாவது 12ஆம் நூற்றாண்டில்தான், அதற்கு முன்னைய நூல் எட்டாம் நூற்றாண்டில் நன்னய பட்டர் எழுதிய இலக்கணம் ஒன்றே. இதுவும் மேற்குறிப்பிட்டபடி அரை வடமொழி இலக்கணமேயாம். கன்னடமொழி சமணரால் - சமணரைப் பின்பற்றிய வீர சைவரால் பேணப்பட்ட காரணத்தால், வடமொழி தமிழ்மொழி நீங்கலாக, மற்றெல்லா இந்திய மொழியிலும் தொன்மை யுடையது. பழங்கன்னடமொழி கிட்டத்தட்ட செந்தமிழே என மேலே கூறினோம். அதன் இலக்கியம் எட்டாம் நூற்றாண்டு முதற்கொண்டது. தமிழ் இவ்வெல்லாமொழியிலும் முந்தியதெனக் கூற வேண்டியதில்லை. வடமொழியைப் பின்பற்றி எழுதிய சிந்தாமணிகூட, இவையனைத்துக்கும் முந்தியதாகும் - ஐந்தாம் நூற்றாண்டுக்குரியதாதலின். தமிழின் தொன்மையை வடமொழியுடன் ஒப்பிடுமுன், உலகின் பிற மொழிகளுடன் இதனை ஒப்பிடல் வேண்டும். ஐரோப்பிய மொழிகள் அனைத்துக்கும் இலக்கியக் காலம் பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிந்தியதேயாகும். இறந்துபோன கோதிக்கு, ஐ°லாண்டிக்கு, சாக்சன் முதலியவற்றில் சில மொழிபெயர்ப்புகளும் சிறு நூல்களும் மட்டும் பத்தாம் நூற்றாண்டு முதற்கொண்டு இருந்தன. இதுபோக ஐரோப்பியரின் பண்டை இலக்கியமெல்லாம், இலத்தீன் கிரேக்க மொழிகளில் மட்டிலுமேயாம். இலத்தீன் இலக்கியம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்கும் கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது. கிரேக்க இலக்கியமோ இன்னும் பழைமை யுடையதாய் கி.மு. ஏழு, ஆறாம் நூற்றாண்டு முதற்கொண்டது. ஹோமர் என்ற முதற்கவி கி.மு.பத்தாம் நூற்றாண்டிலேயே - எழுத்து ஏற்படு முன்னரே - பாடினர் என்பர். ஐரோப்பியரினும் முந்திய நாகரிகங்கள் நடுநிலக்கடல் வட்டாரங்களில், எகிப்து, சிறிய ஆசியா, அசிரியா, பினிஷியா முதலிய இடங்களிலிருந்தன. அவர் சில வகையில் தமிழரை ஒத்த உயர் நாகரிகமுடையவர். கணக்கு முதலியவற்றில் முதன்மை அடைந்தவர். ஆனால், இலக்கிய வளர்ச்சி பெற்றிலர். இவையனைத்தையும் விட்டு, வட தென்மொழிகளைக் கவனிப்போம். மேனாட்டு மிகத் தொன்மை வாய்ந்த மொழியாகிய கிரேக்கத்துடன் வடமொழி பலவகைகளில் ஒப்புடையது. வடமொழியின் முதல் நூலாகிய ரிக் வேதத்தின் காலத்தைப் பலரும் பலவாறாகக் கணிக்கின்றனர். மிகப் பிந்திய கணிப்பை எடுத்துக் கொண்டாலும், அது ஹோமரைவிட ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதென்பர். ஆனால், இதில் ஒரு குறை உண்டு. இஃது இலக்கிய நடையில் எழுதப்பட்ட நூலன்று. முதன் முதல் இலக்கியநடை அமையப்பெற்ற நூல் வால்மீகியின் இராமாயணமேயாகும். இஃது கி.மு.எழுநூறுக்கும், கி.மு.நூறுக் கும் இடைப்பட்டதாயிருக்கலாமென்று அறிஞர் கூறுகின்றனர். இதன் அடுத்த இலக்கிய நூல் கி.பி.நூறிலேயே ஆதலின் அதனை அண்டியதேயாக இருக்கக் கூடும். தமிழில் இன்றைய முதல் இலக்கியநூல் திருக்குறளும் சிலப்பதிகாரமும் ஆகும். முன்னது கி.பி.முதல் நூற்றாண்டினது. பின்னது இரண்டாம் நூற்றாண்டினது. இக்கால வடமொழி, கிரேக்கம், இலத்தீன் ஆகியவற்றின் இலக்கியத்தைத் தவிர மற்றெல்லா இலக்கியத் துக்கும் முற்பட்டதெனக் காண்க. ஆனால், அதே காலத்தில் தமிழில் இன்னொரு வகை இலக்கியம் இருந்தது. அதுதான் சங்க நூல்கள். இவை வடமொழி இலக்கியத்தினும், அதனைப் பின்பற்றிய பின் நாளைய இலக்கியத்தினும் உயரிய பண்பாடு உடையவை. அதாவது திணைவழு, காலவழு, இடவழு அற்றவையாகும். காலைநேர வர்ணனையில் மாலையிற் பூக்கும் மலர்கள் மலர்ந்ததாகவும், கார்காலக் கதையினிடையில் வேனிற்காலப் பூக்கள் பூத்ததாகவும், கூறும் பாடல்கள் பிற்காலத்தும் பிறமொழிகளிலும் மலிந்து கிடக்கக் காணலாம். இவற்றில் தவறாத இலக்கியங்கள் தமிழ்ச்சங்க இலக்கியமும், கிரேக்க இலக்கியங்களும் மட்டுமேயாம். இவ்வகையில் கிரேக்கரைவிடத் தமிழர் பலமடங்கு உயர்வுடையவர் என்பதை அவர்கள் உயரிய திணைப் பாகுபாடு, கருப்பொருள், உரிப்பொருள் பாகுபாட்டினால் அறியலாம். இதில் ஒரு கூறு கிரேக்கரிடம் உண்டு. அவர்களது`பா°டோரல்’ (ஞயளவடிசயட) இலக்கியம் தமிழர்தம் முல்லைப் பாட்டினை நினைவூட்டவல்லது. அவர்களது ‘ஓடங்கள்’ (டீனந) தமிழர் குரவைப் பாட்டுகளை ஒப்பவை. ஆனால், அது போன்ற பல திணையும் தமிழில் சங்க இலக்கியத்தில் உள்ளன. அதனுடன் நேரிடை வருணனை மட்டுமன்றி, அடைமொழி, உவமை, ஆகிய எதனினும் இவ்வமைதி தோன்றப் பாடுபவர் தமிழர். இவ்வகையில் வடமொழியில் வால்மீகியும், காளிதாசனும், ஆங்கிலத்தில் ஷேக்°பியர் முதலிய கவிஞர்களும் பெருவழுக்கள் உடையவர் என்று அறிஞர் கூறுகின்றனர். இவ்வளவு உயர் பண்புடைய சங்க நூல்கள், பெரும்பாலும் தொகை நூல்களாகவே இருக்கின்றன. தொகை நூல்கள் பல நூற்பகுதிகளையோ, தனிப் பாடல்களையோ, தொகுத்து இயற்றியவை. பல சிறு காவியத் துண்டங்களா யிருப்பினும், பல காவியப் பதிவுகளாக அவை திகழ்கின்றன. எப்படியும், அக்காலத்தும் அதற்கு முன்னும் காவியங்கள் இருந்தன என்பது சிலப்பதிகாரம் முதலிய அற்றை நாள் நூல்களாலும், இலக்கணக் குறிப்புகளாலும் அறிகிறோம். இக்காலத்துப் பெருந்தேவனார் பாரதம் ஒன்றிருந்ததென்பதும், இராமாயணக் கதை நன்கு தமிழ் நாட்டில் பரவியிருந்ததென்பதும்கூட முன்னைக் காவியங்கள் உண்டென்பதை வலியுறுத்தும். புறநானூறு, பரிபாடல் முதலியவற்றின் பாடல்கள் மிகப் பழைமையுடையன. சில, பாரதப் போர்க்கதை முதலிய பண்டைப் புராணச் செய்திகளைத் தம் கால நிகழ்ச்சிகளாகக் கூறுவன. இவையனைத்தும் போக வேதக்காலத்துக்கு அண்டியோ, முன்னோ இயற்றப்பட்ட தொல்காப்பியமே விரிந்த இலக்கியத்துக்கு இலக்கணம் வகுப்பதையும், அதனை ஒத்ததான வடமொழி இலக்கணம் மட்டும் கூறி இலக்கியத்தினிலக்கணம் கூறாததும் நோக்கத் தமிழ் மொழி வேதக்காலத்துக்கும், தொல்காப்பியக் காலத்துக்கும் முன் போந்த இலக்கிய வளமுடையதாயிருந்தது தெளிவாக புலப்படும். ஹரப்பா, மொகஞ்சதாரோ முதலிய இடங்களின் புதைபொருளாராய்ச்சி யாலும் பழந்தமிழ் நாகரிகம் நன்கு வெளிப்பட்டிருக்கின்றது. இன்னும் பழம்பொருள் புதைபொருளாராய்ச்சி, மொழி ஆராய்ச்சி இவையும், ஏடுகளின் சோதனைகளும் தமிழிலக்கியத் தின் பண்டை வரலாற்றை இன்னும் தெளிவு படுத்தக்கூடும், எப்படியும், இன்றிருக்கும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கினாலும்கூடத் தமிழ் இலக்கியம் தொன்மை, விரிவு, பண்பாடு ஆகிய எல்லாவகையிலும் உலகின் உயர்தனிச் செம்மொழிகளுள் முதன் மொழியாய் இலங்கும் என்பது உறுதி. அதுபோல அஃது இன்று வாழும் புது மொழிகளுள்ளும், வளரும் மொழி களுள்ளும்கூட முதலிடம் பெறுதல் வேண்டும். அது வகையில் தமிழர் உழைக்க முன்வருதல் வேண்டும். கழிந்த சில ஆண்டுகளாகத் தமிழர் அங்ஙனம் உழைக்க முன்வந்ததன் பயனாகத் தமிழரிடையே புது மலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பிறக்கும் உயிரின் வாழ்நாளுக்கியையக், கருவளர்ச்சி நாளும், கருவுயிர்க்கும் துன்பமும் மிகுதிப்படும் என்றபடி, தமிழின் புதுமலர்ச்சி நீடிப்பும், பலவகைக் குழப்பமும் நிறைந்ததாயிருக்கிறது. அதனிடையே பலர் ஒளி காண முடியாது - புதுப் பிறப்புக் காணமுடியாது - மலைக்கின்றனர். அங்ஙனம் மலைக்காது தமிழ்ப் பணி - தமிழிலக்கியப் பணியில் அவர்களைத் தூண்ட முயலுவோம். தமிழிலக்கியமாவது. தமிழர் தொன்று தொட்டுக் கொண்ட உயர் கருத்துகள், உயர் பண்புகள், உயர் கலைகள் இவற்றின் மொழியுருவப் பண்பாடேயாகும். மொழியுருவில் எல்லாப் பிற கலைகளையும் நாம் நமது குருதியுடன் முன்னோரிடமிருந்து பெற்றோமேயல்லாது, பயின்று பெறவோ மேம்படுத்தவோ செய்தல் அருமையானதே. ஆனால், இலக்கியமோ தாய்ப் பால்போல் தாய்மொழியுருவில் நம் உள்ளத்தில் படிந்து, நம்மை நம் முன்னோர்கள் கண்ட செம்பொருட் களஞ்சியத்தின் உருவில் அமைக்கின்றது. நம் முன்னோர் கனாக்களை, நம் கனாக்களை, நம் கனவிலும் நனவிலும் படியவைக்கிறது. இங்ஙனம், தமிழ் இலக்கியம் நம் வாழ்வில் கலக்க வேண்டுமானால் நாம் இலக்கியம் என்ற பேரால் பிறநாட்டு இலக்கியங்களின் ‘காப்பி’களையோ, பிறநாட்டு இலக்கியத்தின் மாதிரியில் எழுதப்பட்ட ‘போலி’களையோ தாராளமாகக் கொண்டுவிடல்கூடாது. இதனால், மொழிபெயர்ப்புகளையோ, பின்பற்றுதலையோ நாம் கண்டிக்கவில்லை. அவை முதல்தர இலக்கியமாகா என்று மட்டுமே கூறுகின்றோம். தமிழ்நாட்டில் பிற்காலத்தில் எழுதப்பட்ட தலபுராணங்கள் பெரும்பாலும் மொழிபெயர்ப்புகளும் ‘காப்பி’களுமேயன்றி வேறல்ல. அவற்றில் இலக்கியச் சுவை, கவிதை, பாட்டு மணம் இருக்கலாம். ஆனால், அவையல்ல தமிழர் விரும்பும் தனிப் பேரிலக்கியங்கள். இடைக்கால நூல்களான சிந்தாமணி, கம்பராமாயணம் முதலியவை கதையளவில் மொழிபெயர்ப்புகள் என்பதில் தடையில்லை. கொள்கை அளவில் அவை தமிழினத்துக் கேற்புடையனவுமல்ல. ஆரியக் ‘காப்பி’கூட அல்ல; ஆரியத்தை மீறிய காட்டாரியமேயன்றி வேறன்று. வடமொழியாளர்கூட ஏற்காத அளவு இராமனைக் கடவுளாகவும், வீடணனை வீரனாகவும், வாலியைக் குற்றமுடையவனாகவும் புனைந்ததுடன், படித்துப் படித்துப் பலவகையில் பார்ப்பனச் சமயத்துக்குக் கருவியாக அவை பயன்பட்டிருக்கின்றன. மொழியிலும், நடையிலும் பாட்டியல்பிலுமோவெனில், அவை ஆரிய மொழியின் போக்கை உயர்த்தும் முறையிலேயே நடைபெறுகின்றன. அதில் உள்ள தமிழ்ப் பண்புகள் எல்லாம், அதனை, அவற்றில் கலந்த நஞ்சைத் தமிழர் தொண்டைக்குள் செலுத்த, கூடச் சேர்த்த வெற்றினிப்பேயன்றி அவர்கள் கண்களைக் கவரத்தந்த வெளிப்பூச்சேயன்றி - வேறன்று. இந்நூல்களும் தமிழர் உயர்வை ஓரோரிடங்களில் விளக்குமாயினும், சிறப்பானவை அல்ல. ‘பொற்கலத்தைக் காட்டி அதிலுள்ள கள்ளினுக்கு மதிப்புத் தேடுவது போல்’ இன்று அவற்றின் கவர்ச்சியான கவிதை காட்டப்பட்டு, இவற்றிலுள்ள கள் - நச்சுக்கள் - தமிழர்க்கு ஊட்டப்பட்டு வருகின்றது. அந்நூற்களின் பேரால் வருணாச்சிரம ஊழல்கள் - மூடப் பழக்க வழக்கங்கள் வளர்க்கப்படுகின்றன. பணக்காரத் தமிழர் ஏழைகளிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அவர்கள் பணமெல்லாம் ஏழைத் தமிழர்களுக்கும், அப் பணக்காரத் தமிழர்களுக்கும் எட்டாது, கோவிலில் புதைக்கப்பட்டுத் தமிழ்ப் பகைவரிடையே சோம்பேறிகளையும், சமூகப் புல்லுருவிகளையும் வளர்க்க வழங்கப்படுகிறது. இனிச் சங்க இலக்கியமோவெனில் மொழிபெயர்ப்பு அன்று. கருத்து, பண்பு ஆகிய எதிலும் பிறமொழிச் சார்பு - பகைச்சார்பு உடையது அன்று. அதில் கலந்த மிகச்சில வடசொற்களும், கருத்துகளும் நட்பு முறையில் எடுக்கப் பட்டுள்ளனவேயன்றி, அடிமை மனப்பான்மையுடையவையன்று. இவ் விலக்கியத்தை வடமொழி இலக்கியத்துடன் ஒப்பிட்டால், வடமொழியின் எந்த இலக்கியத்திலும் காணப்படாத உயர்பண்புகள் இதில் காணப்படும். ஆனால், எந் நோக்கத்துடன் எதிர்ப்பினும், சங்க இலக்கியத்தை எதிர்ப்பவர் கூற்றுக்கு இடமில்லாமல் இல்லை. கம்பர் காலத்தினும் சங்ககால இலக்கியத்தில் உயிர்ப்பும், துடிப்பும், வண்மையும் குறைவே. இதற்குக் காரணம் அரசியல் சமூக வாழ்வில் கம்பர் காலம் களிப்பும் வெற்றியும் மிக்க காலம். அப்போது தமிழரின் உணர்ச்சி ததும்பி நின்றது. சமய வாழ்விலும் அப்படியே! சங்க காலம் அறிவு நிறைவு பெற்ற காலமாயினும், தமிழர் தனித்தோங்கி நின்ற காலமாயினும், உணர்ச்சி குன்றிய காலம், அரசியலில் சேர, சோழ, பாண்டியர் வலிகுன்றிக் குறுநில மன்னர் ஆட்சி மிகுதியடைந்த காலம். கோசர், களப்பிரர் முதலிய பிறநாட்டு வீரரும் உட்புகுந்து கொள்ளையிட்ட காலம். தமிழர் அப்போது வீரராயிருந்தனர். ஆயின், சிறு அளவிலேயே. செங்குட்டுவன், கரிகாலன் முதலியோர் வரவர அருகினர். சமயங்களில் ஆரியமும், புத்தமும், சமணமும் வந்து விரவின. தமிழர் அனைவர்க்கும் இடந்தந்தனர். பின்னர் அதனால் குழப்பமெய்தியும் நின்றனர். இந்நிலையில் பேரிலக்கிய நூல்கள் எழாது, தனிப்பாடல்களும் குறைகளுமே மிகுந்தன. சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய இரண்டும் மட்டுமே கதை தழுவிய காவியங்கள். இக்காலம் உண்மையில் பதினேழு - பதினெட்டாம் நூற்றாண்டுக் கவிராயர் காலம் போன்றது ஆகும். கவிராயர்கள் காலத்தில் கவிதைகள் இலக்கண நிறைவும், வழுவிலா அமைப்பும் உடையவையாயிருந்தன. கம்பரிடையும் வில்லிபுத்தூராரிடையும் காணுதற்கரிய திறனையும், அமைப்பு நுணுக்கங்களையும் சில கொண்டிருந்தன. கம்பரிடையும், செயங்கொண்டாரிடையும் காணாத புலமையை அவற்றில் காணலாம். ஆனால், உணர்ச்சியும் ஆர்வமும் தற்சார்பும் புதுமையும் மட்டுமே குறைவு. அவற்றின் பெருமையெல்லாம், அவை முன்னைய கவிதைக் காலத்தின் மகுடம் என்பதேயாகும். இதே வகைப்பட்ட கவிதைக் காலத்தின் மகுடமே சங்க காலமாகும். ஆனால், சங்க காலம் கவிராயர் காலத்திலும் மிகவும் உயர்வுடையது. ஏனெனில், கவிராயர் காலத்துக்கு முந்திய கம்பர் காலம் தமிழ் இலக்கியம் தற்காப்புப் பெற்ற காலமன்று. தமிழர் அறிவிலும், கலையிலும் மேம்பட்டு நின்ற காலமல்ல. அழிந்து, பின் பிறரை நோக்கி எழ முயன்ற காலமேயாகும். ஆகவே, சங்ககாலம் கவிராயர் காலத்தைப் போன்ற காலமாயினும் கவிராயர் காலத்தினும் தமிழ்ப் பண்பு மிகுந்த காலமாகும். கவிராயர் காலத்திலும் கம்பர் காலம் எத்தனை உயர்வுடையதோ, அவ்வளவு உயர்வுடையதாயிருந்திருத்தல் வேண்டும் சங்க காலத்துக்கு முந்திய காலம் - தமிழ் நூல்களின் கூற்றுப்படி இக்காலமே முதல், இடைச் சங்க காலமாகலாம். இக்காலத்தில் மாபுராணம், தகடூர் யாத்திரை முதலிய பெரிய காவியங் களிருந்தன என்று பின்னூல்கள் கூறுகின்றன. தொல் காப்பியத்தில் அத்தகைய நூல்களின் எத்தனையோ வகை - இன்றைய தமிழராகிய நாம் இன்னதென்று நன்கு தீர்மானிக்க முடியாத - புதிய வகைகள் கூறப்படுகின்றன. அவற்றுட்சில இன்று தமிழர்க்குப் புதிய வகைகள், எடுத்துக்காட்டாக மகாமகோபாத்தி யாய பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் ஆராய்ந்த சங்ககாலத்து ‘அங்கதங்களை’க் கூறலாம். அல்லது புதுக் கருத்துகளை - ஆம்; அக்காலத்துப் புதுக் கருத்துகள் உடையவர் தமிழர் - புதுக்கருத்துகளைப் புதுவதாகப் புனைந்து கூறும் ‘விருந்து’ என்ற வகையைக் கூறலாம். அல்லது, பெருங் காப்பியமாய்ப் பழங்கதையைப் பாட்டிலும் உரையிலும் கூறும் ‘தொன்மை’ என்னும் வகையைக் கூறலாம். உலகில், பொதுவாக எல்லா இலக்கியத்துக்கும் - எல்லாவகைப் பொருளுக்கும் இளமை, முதிர்ச்சி, நலிவு ஆகிய மூன்று பருவங்கள் உண்டு. தமிழ் இலக்கியத்தில் வடமொழி விரவிய காலத்துக்கு அத்தகைய மூன்று பருவங்களையும் எளிதாகக் குறிக்கலாம். சிந்தாமணியும், பெருங்கதையும் இடைக்காலத் தமிழிலக்கியத்தின் தோற்றக் காலம். கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, சயங்கொண்டார் ஆகிய புலவர் வாழ்ந்த சோழர் காலம் அதன் முழு வளர்ச்சி, அல்லது முதிர்ச்சி, அல்லது பொற்காலம். கவிராயர் காலம் அதன் நலிவுக்காலம் எனலாம். இம்மூன்றும் சேர்ந்து தமிழிலக்கியத்தில் - தமிழிலக்கியத்தின் ஒரு பகுதியான வடமொழி சார்புப் பகுதியில் ஓர் ஆயுட்காலம் ஆகும். எல்லா வகையிலும் அத்தகைய மூன்று பருவங்கள் காணலாம். வடமொழியில் வால்மீகி, பாசன் காலம் தோற்றக் காலம். காளிதாசன் காலம் முழு வளர்ச்சிக் காலம். தண்டி போஜன் முதலியோர் காலம் முதுமைக் காலம். இதன் பின்னும் தென்னாட்டுச் சங்கரரும், அப்பைய தீட்சதரும் அதற்கு ஒரு மறுவாழ்வு தந்தனர். அதன் பின் வடமொழி இலக்கியம் அழிவுற்றது. ஆங்கிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அது ஷேக்°பியர் காலத்தில் தோன்றிற்று, மில்டன் காலத்தில் முழு வளர்ச்சி அடைந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் முதுமை பெற்றழிந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் ஒரு முறை வளர்ந்தோங்கி இன்று நலிந்து வருகின்றது. எனவே, ஆங்கிலத்தில் இரண்டுமுறை வாழ்வு ஏற்பட்டிருத்தல் காண்க. ஆனால், இரண்டு வாழ்வும் மொத்தம் நானூறு ஆண்டுகளுக்குள். வடமொழியில் ஓர் ஆயுள் ஓராயிரம் ஆண்டு. ஆனால், ஓர் ஆயுளே அதற்கிருந்தது. ஆங்கிலத்துக்கு இருமுறை வாழ்வு, ஆனால் இரண்டும் சேர்ந்து நானூறாண்டுகள்தாம். ஆங்கிலம் அதற்குமுன் வேறு மொழி உருவில் இருந்தது. எனவே, அதனை ஆயுள் நீட்டிப்புக் குறைவு என்று கொள்ளுதல் தவறன்று. ஆங்கிலமும் வடமொழியும் பிறமொழிகள் அனைத்துக்கும் மாதிரி வகைகள் என்று கூறலாம். தமிழை அவற்றுடன் ஒப்பிடுவோம். சிந்தாமணி முதல் கவிராயர் காலம் வரை ஓர் ஆயுள் எனக் கூறலாம். அதன்பின் பாரதியாருடன் ஒரு புது இளமைக்காலம் தொடங்குகிறது. சிந்தாமணிக்கு முந்திய கடைச்சங்க காலமோ அதன் முந்திய ஓர் ஆயுட்காலத்தின் முதுமை என மேற்கூறினோம். ஆகவே, இன்றைய தமிழிலக்கியத்தில் ஒரு பண்டைய வாழ்வின் முதுமையும், பின் ஒரு முழுவாழ்வும், அதன்பின் ஒரு புதுவாழ்வின் தொடக்கமும் காணப்படு கிறது. ஆகவே, நம் கண்முன் மூன்று வாழ்வுகள் உள்ளன. வடமொழியின் வாழ்வு ஒன்று; ஆங்கிலத்தின், தமிழின் வாழ்வு மூன்று. அதுமட்டுமன்று; ஆயுள் நீட்டிப்பை எடுத்துக்கொண்டால் ஆங்கிலத்தின் ஓர் ஆயுள் ஆண்டு இருநூறு. வடமொழியின் ஓர் ஆயுள் ஆண்டு ஆயிரம். தமிழின் ஓர் ஆயுள் ஆண்டு ஆயிரத்து முந்நூறு. (சிந்தாமணியின் காலம் கி.பி.500; கவிராயர் காலம் 1800). பிற இலக்கியத்தின் தொடக்கக்கால மொழி வளர்ச்சி குறைவு. தமிழின் தொடக்கக்காலம் ஒரு பெருவாழ்வின் ஓய்வு உறக்கமேயன்றி வேறன்று பிறநாட்டிலக்கியம் சிறு செடிகளின் விரைந்த வளர்ச்சி, தமிழிலக்கியம் நெடுநாள் வளர்ந்து வெட்டப்பட்ட மரத்தின் ஆழ்ந்த வேர்கள் எழுப்பிய உள்வளர்ச்சி போன்ற வன்மையுடையதாகும். ஆகவே, பழந்தமிழ் இலக்கியங்கள் சில பல அழிந்ததற்காக அழவேண்டியதில்லை. ஏனெனில், ஒருபுறம் இலக்கியத்தின், கலையின், பிழிவே தமிழ்மொழி. தமிழர் வாழ்வு தமிழருளத்திற் கரந்த தமிழ்ப்பண்பு. இன்னொன்று அவ்விலக்கியம் நூலில் அடங்கி, நூலெறிந்தால் - நூலெறியப்பட்டால் அழிந்தொழிவ தன்று. அது தமிழின் தமிழரின் உளமாகிய அடிவேரில் தளிர்ப்பது. தளிர்கள் மலர்கள் - இலைகள் - கொப்புகள் - அடிமரம் - வெட்டப்பட்டன. ஆயின் என்ன? அதன் உயரிய உட்பண்பே வேராய்த் தமிழர் இதயத்தில், வாழ்வில் பின்னி ஆரியர் கைக்கும் சூழ்ச்சிக்கும் அப்பாற்பட்டதாகக் கிடக்கிறது. மலையாளத்திலிருந்த ஏலக்கொடி பற்றிய அழகிய கதை ஒன்றுண்டு. ஏலக்காயைப் பாண்டி நாட்டார் கொண்டேகினராம். அரசரிடம் முறையீடு சென்றது. தருமனை ஒத்த அரசர், ‘சரி! நம் நாடு வளமுடையது. போகட்டும்’, என்றார். ‘ஐயனே ஏலக்காய் மட்டுமன்று ஏலக்கொடிகூடக் கொண்டேகுகின்றனர் பாண்டியமக்கள்’ என்றனராம், கலவரப்பட்ட குடிகள், அறிவு சான்ற அரசன் புன்முறுவலுடன், ‘கொடிபோனாலென்ன? நம் நாட்டு மழையுமா போகும்? ஆதலிற் கவலை வேண்டா’ என்றனராம். அதுபோல் தமிழ்க் கலைகள், இலக்கியங்கள் இறந்தனவே எனக் கவலை வேண்டா. இன்றைய இலக்கியம் எறியப்பட்டால்கூடக் கவலை வேண்டா என்று நான் நம் தமிழ் நாட்டினர்க்குக் கூறுவேன். இலக்கியத்தின் இலக்கியம் - இலக்கிய ஊற்று - கலையின் உயிராகிய தமிழன் - உண்மைத் தமிழன் உண்மைத் தமிழ்ப்பண்பு குன்றாத உயர்தமிழன் ஒருவன் உள்ளவரை - அவனை அழித்தொழிக்காதவரை, தமிழ், தமிழ்க்கலை, தமிழ் இலக்கியம் அழியாது; அதனை அழிக்கவும் முடியாது. ஆதலின், அப்பண்பை வளர்ப்போம். அப்பண்புடைய இலக்கியம் அதனால் வளரும். இன்றைய இலக்கியத்தில் கூடியவரை அதற்கு முயல்வோம். தமிழர் வாழ்விலேயே இலக்கியப் பண்பு ஊறியிருக்கிற தென்று கூறி னோம். அவ் வாழ்வோடு தொடர்புள்ளவரை இன்றைய தமிழ் இலக்கியமும் தமிழ்ப் பண்பினின்று நெடுந்தொலைவு அகன்றுவிடாது. உண்மையில் எல்லா நாட்டையும்விடத் தமிழ்நாட்டில் இலக்கியமும், கலையும் சமயமும் வாழ்க்கையோடு இணை பிரியாத தொடர்புடையன. கலைகளும், இலக்கியமும், இசையும், நடனமும் பெண்கள் விளையாட்டுடனும், ஆடவர் களியாட்டத்துடனும் கூடியிருப்ப துடன் மட்டுமல்ல,சிறுமியர் ஆட்டமான அம்மானை, கழங்கு, பந்து, பொழுது போக்குக்கான ஊசல், வாழ்க்கைச் செய்திகளான மார்கழி நீராடல், தொழிலாளர் சுண்ணமிடித்தல் இவை பாட்டுடனும், செயலுடனும் இசைகின்றன. ஆண்களிடமும் போர் முதலிய பெரிய செய்திகளுமேயன்றி, ஏற்றமிறைத்தல், படகு, கப்பல் ஓட்டுதல், பள்ளர் வாழ்க்கை, குறவர் வாழ்க்கை முதலியவற்றை ஒட்டி ஏற்றப்பாட்டு, வஞ்சிப்பாட்டு, பள்ளு, குறவஞ்சி ஆகிய வகைகள் உள்ளன. இன்னும் சிந்து, நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து, கிளிக்கண்ணி, பாம்பாட்டிச் சித்தர் பாடல் முதலிய பலவகைகளும், தமிழரின் வாழ்க்கையிலேயே கவிதை பின்னிப் பிணைந்து கிடப்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் ஆகும். இவை இலக்கியத்தில் மதிப்புப் பெறாமல் இல்லை. பெற்றது பின்னாளில் மட்டுமன்று; மாணிக்கவாசகர், மூவர் காலமுதல் தொடங்கிப் பாரதியார், பாரதிதாசன் காலம் வரை, எளிய மக்கள் வாழ்க்கையை எளிய இனிய பாவில்-இசைகலந்த பாட்டில் அமைக்கும் பழக்கமுளது. ஒவ்வொரு துறையை மட்டிலும் எடுத்தாற்கூட மாணிக்கவாசகர், மூவர், ஆழ்வார்கள், பட்டினத்தார், தாயுமானவர், தத்துவராயர், பத்திரகிரியார், இராமலிங்க அடிகள், பாரதி, பாரதிதாசன் ஆகிய எத்தனை புலவர்கள் என்று நோக்குக. அவருள் அரசியல், சமூகச் சீர்திருத்தம் ஆகிய புதுக் கருத்துகளைப் பாடியவர்கள் பாரதியும் பாரதிதாசனும் ஆவர். இதற்கடுத்தபடியான வாழ்க்கைத் தொடர்புள்ள இலக்கியம், இசை, நாடக இலக்கியங்கள், இவற்றுள் சிலப்பதிகாரம் தலைமையானது. அதன்பின் தேவாரமும் நாலாயிரப் பிரபந்தமும் மட்டுமே இத்துறை சார்ந்தன. அண்மையில் தமிழிசை இயக்கம் ஏற்படுவதற்கு முன்னர்க் கீர்த்தனங்கள் இராமலிங்க அடிகளாலும், அருணாசலக் கவிராயராலும், முத்துத்தாண்டவராலும் பாடப் பெற்றன. இசைப் புலவர். இலக்குமணப் பிள்ளை அவர்களும் இதனை அறிவியல் முறைப்படி பாடியவர். தமிழிசை இயக்கம் ஏற்பட்டபின் அதனைப் பயன்படுத்திச் சுத்தானந்தர் ஓரளவும், பாரதிதாசன் நிறைவு படவும் பல பண்களிலும் வாழ்க்கையை ஒட்டிய-உயர் கருத்துப்பட்ட-தமிழ்ப்பண்பு மிக்க பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர்-பாடிவருகின்றனர். இசையினின்று விலகிய-மக்கள் வாழ்க்கையினின்று விலகிய-இயற்கையினின்று விலகிய-இலக்கியமே கம்பர் கால இலக்கியமாம். இவை படித்தவர் இலக்கியம். அதாவது செயற்கை இலக்கியம் என்னலாம். இச்செயற்கைக் கற்பனை முறைகளுக்குத் தமிழில் ஒப்பற்ற தலைவர் கம்பர். வடமொழியில் ஒப்பற்றவர் தண்டியும், சிரீ ஹர்ஷனும் ஆவர். இதனைத் தமிழில் முதன்முதலில் தோற்றுவித்தவர் சிந்தாமணி ஆசிரியர். இதேமுறையில் கடைசியாக வந்தவர் நைடதம் பாடிய அதிவீரராம பாண்டியனும், பிரபுலிங்கலீலை பாடிய துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளும் ஆவர். இச்செயற்கைக் கற்பனைகளும், `காப்பியடித்துக் காப்பியடித்து’ உயிரற்றுப்போன காலத்தில்தான், புராணங்களும் தலபுராணங்களும் கணக்கின்றி எழுந்தன. இக் கற்பனைக் காவியங்களிலிருந்து கிளைத்து மக்கள் செவிக்குச் சற்றே இசையுணர்வையும் எழுப்பி, இரண்டாலும் ஓசைச் சுவைமிக்க காவியங்களே சந்தக் கவிதைகளாம். இதனை முதன்முதல் தொட்டவர் கம்பரேயாவார். அதன்பின் சயங்கொண்டார், வில்லிபுத்தூரார் முதலியவர் சந்தச் சுவையைப் பெருக்கினர். இத்துறையில் கடைசியானதும் அனைவரினும் ஒருபடி முற்போந்ததும் அருணகிரி நாதரின் திருப்புகழாகும். இதில் கம்பரது கற்பனை மிகவும் குறைவுற்றுச் சந்தம் நிறைவுபெற்று விளங்கும். பொருள் நயம் இனிமை இவற்றினும் பகட்டான நடையையே அவர் விரும்பியதால், பொருத்தமற்ற இடங்களிலும் வட சொற்களை - பிறர் பாட்டில் வழங்காத வழங்கத் தயங்கும் வடசொற்களைக்கூடத் - தாராளமாக வழங்குகிறார். கற்பனை இலக்கியத்தின் நடையை மிகுத்துச் சந்தக் கவிகள் உண்டாயின. அவற்றின் அமைப்பைத் துறையாக வகுத்துத் துறைநூல்கள் அல்லது பிரபந்தங்கள் எழுந்தன. இவற்றுள் கவிதைச்சுவை சொட்டும் திருக்கோவையார் காலத்தான் முந்தியது. ஆனால், பெரும்பாலும் பிள்ளைத் தமிழ், கலம்பகம், உலா என்ற துறைகள் கம்பர் காலத்துக்குப் பிற்பட்டவையே. கற்பனை இலக்கியத்தில் கம்பர் கவிச்சக்ரவர்த்தியாயிருப்பது போல், இத்துறை யில் ஒட்டக் கூத்தர் கவிச்சக்கரவர்த்தியாவார். அவரது மூவருலாவுக்கு இன்னும் ஒப்புக் காண அரிது ஆகும். கம்பர் காலத்துக்கு முன்னமேயே எளியநடையில் பிரபந்தங்கள் எழுதியவர் பட்டினத்தார் ஆவார். இத்துறையில் இன்னொரு சிறந்த பழைய நூல் செயங்கொண்டார் செய்த கலிங்கத்துப் பரணியாகும். இப்புலவரும் ஒட்டக்கூத்தரையும் கம்பரையும் ஒப்பக் கவிச்சக்கரவர்த்தி எனக் கூறப்படுவர். தனித் தமிழிலேயே இவர் சந்தங்கள் பாடியவர். பிற்காலத்தில் இத்துறைகளில் குமரகுருபரர், சிவப்பிரகாசர், மீனாட்சிசுந்தரம்பிள்ளை ஆகியோர் சிறந்தவர். ஆகத் தமிழிலக்கியம் ஆகாயம்போல் பரந்தது. இன்று கிட்டிய தமிழிலக்கியம் கூடக் கடல்போல் கரையற்றுப் பல துறைகளாய்க் கிடக்கின்றது. ஆயினும், இன்றைய நிலையில் சில துறைகளிற் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. வடமொழியில் சிறந்துள்ள நாடகப் பகுதி தென்னாட்டில் சங்க காலமுதல் ஆதரிப்பாரற்று அழிந்துவிட்டது. உரைநடை வடமொழியிற் போலவே தமிழிலும் குறைவு. இவற்றுள் முதற் குறையைச் சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியமும், சம்பந்த முதலியாரின் நாடகங்களும் ஓரளவு நீக்க முயலும். இவற்றுள் முன்னது ஒன்றே இலக்கியத்துறை முயற்சி, பின்னதும் பிற முயற்சிகள் பலவும் தொழில் முயற்சிகளாகவே காணப்படுகின்றன. உரைநடை வேதநாயகம் பிள்ளை, சூரியநாராயண சா°திரி, மறைமலை யடிகள், திரு.வி.கலியாணசுந்தர முதலியார் ஆகியவர்களால் மிகவும் முன்னேற்ற மடைந்துள்ளது. புதிய எழுத்தாளர் பலர் கட்டுரைகளும், இலக்கியச் சார்பான புது உரைகளும், புதுக்கதைகளும், எழுதுகின்றனர். அத்துறையை ஒட்டி டாக்டர் மகாமகோபாத்தியாய சுவாமிநாத ஐயர் அழகிய கட்டுரைகள் பல எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் புத்திலக்கியம் தோற்றுவித்துத் தமிழன்னைக்கு நூன்மாலை பாமாலை சார்த்துதல் வேண்டும். பழ அணிகளும் புதுக்கிப் போற்றப்படுதல் வேண்டும். இவ்வகையில் நாம் கடுமை என்ற பூச்சாண்டியில் விழுந்து முன்னது போற்றாமலிருக்கப் படாது. பிறமொழிச் சொற்கள் வரவு இயற்கையாய் உயிருள்ள மொழிகளில் ஏற்படினும், தமிழில் அவை வருவதைத் தடுக்க வேண்டுமென்று கூறத் தனிக்காரணங்கள் பல உள. தமிழ் சொல்வளம் மிக்கது; சொற்கள் பெரும்பாலும் காரணச் சொற்கள். முற்கூறியபடி மொழியே உயர் இலக்கியப் பண்பாட்டை உள்ளடக்கியது. மேலும், ஆங்கிலம் முதலிய மொழியினர் பிற சொற்களை ஆள்வோராயிருந்து வேண்டும்போது எடுக்கின்றனர். தமிழ், அரசியல், சமயம், கல்வி ஆகிய எல்லாவற்றிலும் அடிமைப்பட்டுக் கிடப்பதால், சொற்களை அது எடுப்பதற்கு மாறாக, அவை அதன்மீது சுமத்தப் பட்டிருக்கின்றன. ஆதலின், அஃது அடிமைத் தனத்துக்கு அறிகுறியாகின்றது. மேலும், பிறமொழிகளில் சொற்களின் வரவு கட்டுப்பாடான ஒரு சமூகத்தினரின் முயற்சி அன்று. அஃது இன்னொரு மொழியை மேம்படுத்துவதற்காகவுமன்று, அன்றியும், மொழி நூலாராய்ச்சியாளர் ஒரு மொழி அதன் பிறமொழி இறக்குமதியால் வளராது, உட்பண்பு விரிப்பினாலேயே வளரும் என்கின்றனர். ஆங்கிலம் இன்று பிறமொழிச் சொல் நூற்றுக்கு அறுபதுக்குமேல் உடையது. ஆனால், இந்த நூற்றுக்கு அறுபதும் செங்கல்கள் போன்றவையே என்றும், கட்டடத்துக்கு உறுதியும் கவர்ச்சியும் கொடுக்கும் சுண்ணமும் நீரும், தனி ஆங்கிலமே என்றும் அறிஞர் கூறுவர். அத்தோடு பிறமொழிச் சொல் ஒவ்வொன்றும் தாய்மொழிச் சொல்லை ஓட்டிவிடும் என்பதும், இன்று நடைமுறையில் காணலாம். செல்லாக் காசு செல்லுங் காசை ஒட்டிவருவது போலக் கனவு, உறக்கம் முதலிய நல்ல தமிழ்ச் சொற்களைச் சொப்பனம், நித்திரை ஒழித்து வருதல் காண்க. இப்படி ஒழிந்த சொற்கள் பல. ஒழிந்துவருபவை வேறு. தமிழ்ப் புலவர் முயற்சியால் சில தனித்தமிழ் இலக்கியச் சொற்கள் அண்மையில் வழக்காற்றில் வந்துள்ளன. அங்ஙனம் இலக்கியச் சொற்கள் வழக்கில் வரமாட்டா என்பவர்க்கு ‘உறவற்ற செத்த மொழிச் சொற்கள் தமிழ் வழக்கில் கொண்டுவரப்பட்டு வழங்கக்கூடுமானால், தமிழ்க்குருதி ஓடும் உயிர்ப்புள்ள சொற்கள் ஏன் வழக்கில் வாரா? என்று வினவலாம். எனவே, தமிழ்நலம் பேணுவோர்க்கு உரைகல், அவர் தமிழ்நலம் பேணி, தமிழின் இலக்கியமும் தமிழ்ப் பண்பும் பேணி, அனைத்தும் தனித்தமிழாய் - சொற்கலப்பு ஏற்பட்டால்கூட அதனால் தமிழின் தலைமை கெடாதும், தமிழர் தலைமை கெடாதும் பேணும் தமிழராய்ச் செயலாற்றுவதேயாகும். அங்ஙனம் செயலாற்றத் தமிழர் தம் பன்னூறாயிரக்கணக்கான இணைக் கரங்களையும் ஒன்றாக்கிக் கொண்டு உழைப்பார்களாக! வாழ்க தமிழ்! வாழ்க தமிழிலக்கியம்! “திருவார் குறள்தானும் தெய்வச் சிலம்பும் உருவாரக் கொண்டேன் உளம்.” 7. தமிழிசை வாழ்க! “தமிழ் வாழ்க” இயக்கம் தமிழ் நாட்டில் மூன்றலைகளாக எழுந்துள்ளது என்று கூறலாம். முதலில் தமிழ் இயக்கம் ஆகும். இரண்டாம் அலை தமிழர் இயக்கம்! அதன் மூன்றாவது அலை தமிழிசை இயக்கம் ஆகும். இதுவே, இவ்வியக்கத்தின் மூன்று அலைகளிலும் முழு அலை ஆகும். இம்மூன்றனுள் தமிழ் இயக்கம் தோற்றுவித்த பெரியார், பார்ப்பனருள் தமிழறிவும் தமிழ்ப்பற்றும் ஒருங்கே கொண்டவ ரான உயர் திரு.வி.கோ. பரிதிமாற் கலைஞர் ஆவார். அவர் ‘தமிழ் மாதுக்கு முகமுண்டோ’ என வினவிய வடமொழித் திமிர் படைத்த தோழர்க்கு, ‘வடமொழி மாது வாயற்றனளே’ எனத் தன்மதிப்புடன் சுருக்கென விடையிறுத்த பெருவீரர் ஆவார். அவரது தனித்தமிழ்ப் பற்றை, உண்மைத் தமிழ்ப் பற்றை அவர் தம்பெயரைத் தமிழ்ப் பெயராக மாற்றிய ஒன்றினாலேயே அறியலாம். இரண்டாவது தமிழர் இயக்கம், இதனைக் கலை வகையில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையும், சமய வகையில் உயர்திரு.மறைமலையடிகளும், அரசியல் வகையில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களும் தோற்றுவித்து வளர்த்தனர். மூன்றாவது தமிழிசை இயக்கம். இஃது இலக்கிய வகையில் இசைஞர் திலகம் உயர்திரு.தி.இலக்குமணப் பிள்ளையாலும், துணைமை தலைமை வகையில் செட்டிநாட்டு மன்னர் பெருந்தகை அண்ணாமலைச் செட்டியார் அவர்களாலும் தோற்றுவிக்கப்பட்டு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து ஓங்கி வருகின்றது. இசை, உலகனைத்துக்கும் - ஏன், உயிர்கள் அனைத்துக்குமே பொது என்னலாம். முன் காலங்களில் கல்லுங்கூடச் சில பண்களால் உருகியது என்று கூறப்படுகின்றது. அப்படியிருக்க, அதனை மனித உலகளவில் குறுக்கி, அதனினும் ஒரு மொழி - ஒரு நாட்டினுடன், தொடர்புபடுத்தித் தமிழிசை எனக் கூறுவானேன் என்ற கேள்வி எழலாம் அறிவியல் அல்லது விஞ்ஞானத்தில் பிரஞ்சு நாட்டு அறிவியல், ஆங்கில அறிவியல் என இல்லையே? அதுபோல் தானே இசையும் என்று நீங்கள் கேட்கக் கூடும். ஆனால், இக்கேள்வி இசையின் ஒரு துறையைப் பற்றிய மட்டில்தான் உண்மை. இசை ஓர் அறிவியல் என்ற வகையில் அஃது எல்லா நாட்டுக்கும் பொது. ஆனால், இசை அறிவியல் மட்டும் அன்று, அஃது ஒர் உயர் கலையும்கூட, முன் குறிப்பிட்டபடி உயர்ந்த கலை-கவின்கலை; உயிருள்ள செயலுள்ள கவின் கலையாகும். கலை என்ற வகையில் அது நாப்பழக்கம், செவிப்பழக்கம். உணர்ச்சிப் பழக்கம் உடையது. நாவும் செவியும், மொழியினுடன் சேர்ந்தன உணர்ச்சியோ, மொழியிலும் தாய்மொழியுடன் இணைந்தது. உணர்ச்சி ஆழ்ந்துவிடின்-அறிவு தானும் ஆழ்ந்து விடின்-இவ்விரண்டும் வாழ்க்கையுடன் உறவுடையதானால், அது மொழியுடன், அதுவும் தாய்மொழியுடன் தாய்மொழி இலக்கியத்துடன் தொடர்புபடுதல்வேண்டும். தாய்மொழியுடனும் தாய்மொழி இலக்கியத்துடனும் கூடாத இசை உயிரற்ற ஒரு வாய்ப்பாட்டாக லாம். ஆனால், அஃது உயிருள்ள ஒரு கலையாகமாட்டாது. எனவே, இசை ஒரு கலை; மொழியுடன், இலக்கியத்துடன் தொடர்புடைய ஒரு கலை. அதன் அறிவியல் பகுதி எல்லா மொழிக்கும் பொது. கலைப் பகுதி-உணர்ச்சி தரும் பகுதி-இலக்கியப் பகுதி-தமிழரைப் பற்றிய மட்டில் தாய்மொழி யிலேயே-தமிழர் தாய்மொழியாகிய தமிழிலேயே இருத்தல் வேண்டும், இருத்தல் இன்றியமையாமையாகும். அப்படியிருக்க, அத் தமிழில் இசை இருக்க முடியுமா? என்றும், அத் தமிழ்க்கும் இசைக்கும் தொடர்புதான் ஏது? என்றும், தமிழிசை தெலுங்கிலேன் இருக்கப்படாது? என்றும், கேள்விகள் கேட்பது அறியாமை. இவ்விந்தை தமிழ்நாடு ஒன்றிலன்றி உலகில் வேறு எந்நாட்டிலும் இருக்காது. ‘தமிழ்’ என்ற சொல்லே இனிமை எனப் பொருள்படும். தமிழ் மொழிக்கு அப்பெயர் காரணப் பெயர். இவ்வாறு தமிழர் கூறி வந்திருக்கின்றனர். அப்படியிருக்கத் தமிழ் இனிமையற்றது என்றோ, இசைக்குத் தக்கது அன்று என்றோ வாய் கூசாது சொன்னால், அவரை என் செய்வது? அதுவும் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்தன்று அவர்கள் சொல்வது! தமிழ் நாட்டினுள் ளிருந்து! தமிழன் உழைத்துப் பெற்ற சோற்றை உழைக்காமலேயே ஏய்த்துத் தின்னும் ஒரு புல்லுருவி வகுப்பார்-தமிழ்க்கலைக்குப் பதில் தமிழைத் தமிழரைக் கொல்லும், இழிவுபடுத்தும் பிறகலை வளர்த்துத் திரியும் ஒரு வகுப்பார்-கூறத் தமிழர் வாய்மூடிக் கேட்டுக்கொண்டிருப்பதென்றால் அது பொறுக்கக்கூடியதா? ஆனால், இவ்வுரையில் ஓர் ஆற்றலும் இல்லாமலில்லை. வேறெல்லாத் துறைகளிலும் தமிழை அவமதிக்க ஒரு வடநாட்டு மொழியைச்-செத்த மொழியைத் தேடிய மக்கள், இசையை எதிர்க்கும் முயற்சி ஒன்றில் மட்டும் அவ்வளவு எட்டப் போகாமல், தமிழ் இனத்துட் சேர்ந்த ஒரு மொழியையே அடுக்க நேர்ந்ததுதான் அந்த ஆறுதல். வேறெம்மொழி இசையையும் விடத் தெலுங்கிசை இனிமையுடையதென்றால், அத்தெலுங்கின் உறவு மொழி-முதல் தாய்மொழி யாகிய தமிழும்-இனிமையுடையதே என்பது கூறாமலேயே அமையுமன்றோ! இவ்வகையில், இவ்விரு மொழிகளின் உறவு வெறும் மொழியுறவு மட்டுமன்று, என்று நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். உலகில் இனிமையுடைய மொழிகளாகச் சொல்லப்படும் எல்லா மொழிகளையும், தமிழையும் எடுத்துப் பார்த்தால், இனிமைக்குக் காரணமான சில பொதுப் பண்புகள் காணப்படும். மேல்நாட்டில் இனிமையுடையவை என்று சொல்லப்படும் மொழிகள் இத்தாலியமும் பிரெஞ்சும்; கீழ்நாட்டில் பாரசீகமும் இந்து°தானியும் தெலுங்கும். இவ் எல்லா மொழிகளிலும் பொதுவாகவும், தெலுங்கில் சிறப்பாகவும் ஓர் இனிய பண்பு காணப்படுகின்றது. அதாவது, அம்மொழிச்சொற்கள் யாவும் பெரும்பாலும் உயிர் எழுத்திலோ, மெய்யெழுத்திலோ முடிவதேயாகும். தெலுங்கு மொழி எப்போதும் உயிரிலேயே முடிவதுதான், அதற்கு இத்தனை அழகு கொடுப்பதாகக் கருதப்படுகிறது. இந்து°தானி, மெய்யில் முடியும் மொழியும், பாட்டின் இறுதியில் ஒரு வகையான அகரம் போன்ற இழுப்பொலியும் உடையதாயிருப்பதே அதன் இனிமைக்குக் காரணம். இத்தாலியத்திலும் பிரஞ்சிலும் உயிரோடு மென்மையும், சிறுபான்மை இடையும் ஈற்றில் வரும். பின் கூறியவையும் உயிர்போல் நீட்டி இசைக்கக்கூடிய ஒலியே என்பதை ஒலித்துப் பார்க்கவும். உயிரை அளபெடுத்து நீட்டுவதுபோல (ஆ அ, ஆ அ அ என்று) இடையையும் மென்மையையும், (இன்ன்ன் என்று) (வால்ல்ல் என்று) அளபெடுக்க முடிவது காண்க. தமிழ் இவ்வகையில் தெலுங்கை அண்டியிருப்பினும், இத்தாலி பிரஞ்சு மொழிகளை முற்றிலும் ஒத்திருத்தல் காண்க. மென்மையும், இடையும் அளபெடுக்கும் வகையில் உயிர்போன்றது என்று கூறினோம். இனிமை வகையில் உயிரினும் இடை இனிமை என்றுங் காணலாம். ஆக, சொல் முடிபுவகையில் தமிழ்மொழி பெரிதும் இனிமை மிக்கதெனக் காணக்கூடும். சொல்லில் இடை எழுத்துகளையும் முதல் எழுத்து களையும் பார்த்தால், தெலுங்கே செயற்கை ஒலியும் முரணொலியும் மிகுதியுடையது எனவும், தமிழ் உலகின் எல்லா மொழிகளிலும் இனிமையுடையது எனவும் காணக்கூடும். தெலுங்கில் “நனுப்ரோவமய” என்ற பதத்தில், ‘ப்ரோ’ எனத் தொடங்குவது ‘போ’ என இருந்தால், அழகும் ஒலியியல்பும் மிகுதி என்பதைச் செவியுணர்வால் காண்க. மற்றும் தமிழ் ஒலிக்கு மாறான வடமொழியில் கீர்த்தனங்கள் இயற்றிய ஜயதேவரும், அவர்க்கு வழிகாட்டியாக இருந்த தென்னாட்டுச் சங்கரரும் வடமொழியில் இனிய பாட்டுகள் எழுதியது தமிழ் ஒலிப்பை-ஒலி முறையை ஒட்டித்தான் என்பதை அவற்றின் சொல்லொழுக்கால் காண்கிறோம். தெலுங்கிலும் இத்தகைய இனிமை ஏற்பட்டது, தமிழ்நாட்டிலிருந்த தியாகராயரால் என்பதும் காண்க. தமிழின் சுவையறிந்த சங்கரர், வடமொழியில் அச்சுவையை வருவித்தது போல், தியாகரும் அதனைத் தெலுங்கில் ஏற்றினார் என்க. ‘இப்படியாயின் தெலுங்கு இனிமை என்று பிறர் சொல்லுவதேன்? நம் காதுக்குக்கூடத் தெலுங்கு ஒலி இனிமையாகத்தானே தோன்றுகிறது? இசையில் ஈடுபட்டார் பலர் இவ்வாறு கூறுவது ஏன்?’ என்று கேட்கப்படலாம், இதன் விடை எளிது. தமிழ் நாட்டில் கலைஞர் பலரும் தம் திறத்தை எல்லாம் காட்டி அழகிய தெலுங்குப் பதங்களைத் தெரிந்தெடுத்து வழங்கியுள்ளனர். ஆகவே, தெலுங்கிசையின் இன்றைய இனிமை தெலுங்கின் இனிமை மட்டுமன்று, கலைஞர்களின் ஒலித்தேர்வும் சேர்ந்ததாகும். எப்படியெனில், காட்டுவோம்:-இன்று இனிமை மிக்க மொழிகள் என மேனாடுகளில் பிரஞ்சும் இத்தாலியமுமே கருதப்படுகின்றன. ஆங்கிலம் இனிய ஒலி குறைந்தது. மிகவும் முரணொலிகளே நிறைந்த மொழி ஜெருமனாகும். ஆனால், உலகின் இசையரசரான பீதவன், ஹான்டெல், மோஸார்ட் முதலியவர்கள் தோன்றி இம்மொழிகளில் இசை இலக்கியங்கள் ஏற்படுத்தினர். அவை இத்தாலிய மொழியிலும் பிரஞ்சு மொழியிலும் உள்ள இசை இலக்கியங்களைவிட இனிமையாகக் கருதப்படு கின்றன. அதன் காரண மொழியன்று; ஆசிரியரின் ஆற்றலேயாகும். ஆகவே, தெலுங்கில் இனிய இசை அமைந்ததும், தமிழில் அமைவு குறைவுபட்டதும், அல்லது பட்டதாகத் தோற்றுவதும் அதைத் தமிழில் அமைத்தவர் குறைவு என்பதனாலேயே. இன்றும் பயில்பவர் தெரிபவர், போற்றுபவர் குறைவு என்பதனாலுமே அது நேரும் என்று உணர்க. மேலும். தமிழ் தெலுங்கைவிட இனிமை குறைவு என்று வைத்துக் கொண்டாலும்கூடத் தமிழில் இசைப் பாடல்கள் ஏற்படுவது என்பது முடியாத காரியமன்று. இனிமை குறைந்த ஆங்கிலத்திலும், வல்லோசை மிக்க ஜெருமனிலும், சிங்க முழக்கத்தையும் பறையோசையுமொத்த இலத்தீன் வடமொழி களிலும் இசை அமையக்கூடுமாயின், தமிழில் ஏன் கூடாது? ஏன் முடியாது? எனக் கேட்கிறோம். தமிழ்க்கும், இசைக்கும் தொடர்பு விட்டுப்போன காரணத்தையும், அங்ஙனம் விட்டுப்போன வரலாற்றையும் இனிக் கூறுவோம். தமிழர் வாழ்வில் இசை வேறெவ்வகுப்பினரினும் மிகுதியாகவே கலந்துள்ளது என்பதை, இன்றும் கீழ் வகுப்பினர் என்று கூறப்படும், ‘உண்மைத் தமிழர்’ எத்தகைய தொழிலைச் செய்தாலும்-மண்வெட்டும்போதும் நீரிறைக்கும்போதும், பாதையிற் கல்போடும் போதும்கூட-பாடலும் ஆடலும் கலந்து தொழிலாற்றுவதிலிருந்தும்-சமயச் சார்பில் பக்திச் சுவை சொட்டும் பாடல்களின் மிகுதியிலிருந்தும் அறியலாம். இவ்விசை வாழ்வினின்று உயர்குலத்தார், ஆரியத் தாக்கினாலும், சமண பௌத்த சமயத் தாக்கினாலும் படிப்படியாக விலகினர். சங்க காலத்தும் ‘பாணர்’, ‘விறலியர்’ இவ்விசைப் பழக்கத்தை விடாது காத்துவந்தனர். தமிழரசர், குறுநில மன்னர் படிப்படியாக ஆரிய சமண வலைப்பட்டபின், இவர்கள் பிழைப்பும் அகன்றது. இவ் வகுப்பினருள் அழியாது எஞ்சி நின்ற திருநீலகண்ட யாழ்ப்பாணரால்தாம் தேவாரப் பண்கள் மீந்து நின்றன. இவர் குடிப்பிறந்த ஓர் அம்மையாரே அவற்றுக்குப் பண்வகுத்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழிசையின் கடைசிப் பூண்டு இவ்வம்மையே போலும்! தேவாரத்துக்குப் பண் வகுத்த இவர்போல் திருவாசகம் முதலிய நூல்களுக்கு வகுக்க யாரும் முயலவில்லை. இங்ஙனம், ஆதரவின்மையாகிய மணலில் தமிழிசையாகிய வையை சென்று சுவறிற்று. ஆனால், மேல்நிலத்திற் சுவறினும், வையை அடிநிலத்தில் தருவது போலவே, தமிழிசையும் மேலீடாகப் பார்ப்பவர்க்குச் சுவறியது போலத் தோன்றினும், உண்மையில் இன்னொரு வகையில் -எதிர்பாராத இன்னொரு வகையில் - அல்லது இன்னும் பல வகைகளில், ஊற்றெடுத்து ஒழுகத் தொடங்கிற்று. இத்தகைய ஊற்றுகளுள் ஒன்றே மக்கள் வாழ்வில் ஊறி ஆங்காங்கே பள்ளு, குறவஞ்சி, கிளிக்கண்ணி, நிலாவணி ஆகிய பொதுமக்கட் பாட்டு வகையாகிப் பின் புலவர்களால் எடுத்துக் கையாளப்பட்டது. இன்னொன்று இதனினும் எதிர்பாராதது. இவ்வூற்றுகளினின்று பொறிகளால் நீரிறைக்கப் பெற்று, வானளாவ உயர்ந்த தொட்டிகளில் நிரப்பி, அருவியாகவும் மேலூற் றாகவும் பாய்ந்தெழுவதுபோல், தமிழிசை பிறபுல மன்னர்க்குப் பொழுது போக்குக்காக வழங்கி, அம் மன்னரைச் சார்ந்தொழுகியவர் கைபட்டுத் தானும் அவர்களைச் சார்ந்ததொழுகிப் பிற புலப் போர்வை போர்த்து வாழத் தொடங்கிற்று. இங்ஙனம், தமிழிசையினின்று கிளைத்த திசை இசைகள் இரண்டு. வடநாட்டில் தமிழ் நிலவும் காலத்தில் கிளைத்து, வடசொல்லை அண்டி வளர்ந்த வடபுல இசை ஒன்று. அதனின்று கிளைத்துப் பின்னும் தமிழின் வழிக் கிளைமொழியான இந்தி முதலியவற்றைச் சார்ந்து பின் பாரசீகம் முதலியவற்றுடன் கலந்த இந்து°தானி இசை ஒன்று. இவ்விரண்டினும் தெளிவாகத் தமிழ்நாட்டிலேயே வளர்ந்து, இன்றும் தமிழ்நாட்டிலேயே இடம்பெற்று நிற்கும் தமிழிசை - திசைப்போர்வை போர்த்த தமிழிசைக் கிளை - கருநாடக இசையாம். முன் “ தமிழ்ப் பண்பு வாழ்க” என்ற பகுதியில் கூறியபடி, இந்திய இசை அனைத்தையும், யார் வளர்த்தாலும் தோற்றுவித்தவர் தமிழரேயாவர் எனக் காண்க. தமிழ்நாட்டை ஆண்ட நாயக்க மன்னர் தெலுங்கராயினும் பரந்த மனப்பான்மையுடையவர். அவருட் சிலர் தெலுங்கு இலக்கியத்தோடு தமிழ் இலக்கியத்தைக்கூடப் போற்றியவர். ஆனால், இஃது அக்பரைப் போன்று அரசியல் நயத்துக்காக வேண்டியன்றி வேறன்று. வட நாட்டில் அக்பரும் பின்னாளில், பிரம்மஞானசபை இயக்கத்தில் ஈடுபட்ட வெள்ளையரும், ஆதரவின் பேரால் இந்துக்களில் உயர்வகுப்பார்களுடைய கலைகளையும் நாகரிகத்தையும், சில உயர்ந்த நாகரிகக் குடும்பங்களையும்கூட, விலை கொடுத்து வாங்கித் தம் வயப்படுத்தியது போல், நாயக்க மன்னரும் (முகலாயரினும் நாட்டு மக்களுக்கு அண்மை யுடையவரானபடியினால் இன்னும் எளிதாகவே) தமிழர் கலை, நாகரிகம் முதலியவற்றின் உதவியால், தம் கலையையும் நாகரிகத்தையும் (வடமொழிக் கலை நாகரிகத்தையும்கூட), மேம்படுத்தலாயினர். அதன் பயனாகத், தெலுங்கு இலக் கியம் அடைந்த நன்மை எவ்வளவோ உண்டு. ஆனால், இசையைப்பற்றிய மட்டில் மொழி தெலுங்காயினும், பயில்வோர் வகையிலும் (அஃது அவரைச் சார்ந்தவர் மொழிப் பற்றைவிடப் பணப் பற்று மிக்கவர் என்பதனை மட்டுமே காட்டவல்லது) பயிலும் இடவகையிலும், அன்றேபோல் இன்றுவரை தமிழரும் தமிழ்நாடும் - ஆகவேயிருந்தது. இவ்வகையில் தியாகர் உயர்ந்தது இசைக்கலையால் மட்டுமன்று, அவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தார் என்பதனாலுமேயாகும். தமிழரிடைப் பயின்ற தமிழிசையைத் தெலுங்கில் இயற்றியதனால்தான் அவரை இசை அரசராக உயர்த்தினர் அத்தெலுங்கு அரசர்கள். தியாகர் காலத்திலேயே அவரினும் உயரிய கலைஞர் இருந்திருந் தாலும்கூட, அவர் தமிழிலெழுதியிருந்தால் உயர்வு பெற்றிருக்க மாட்டார். ஷேக்°பியர்போல், பெர்னாட்ஷாபோல் நம் நாட்டுக்குக் கிடைத்த பாரதிதாசனும் உரிய உயர்வடையாத காலை, ஆங்கிலத்தில் கடுகு வறுக்கும் சொத்தைகள் கூட, ஐயாயிரம் ஆறாயிரம் எண்ணிக்கொட்டி இறுமாப்படையவில்லையா? அதுபோலவே இதுவும் என்க. இத்தனை தொலை தமிழிசையைத் தெலுங்குக்கு உரியதாக்கப் பார்த்தும், இன்றளவும் அது வெற்றியடைய வில்லையே! அப்படியாயின் இன்று தமிழரிசை தெலுங்கிசை எனப்படுவதேன்? தெலுங்குக்குரிமை என வாதாடப்படுவதேன்? இதுவும், தமிழ்நாட்டிலுள்ள கலிகாலக் கூத்திலொன்று. தமிழ்நாட்டிசை தெலுங்கிசை என்று தெலுங்கர் கூறிக்கொள்ள விரும்புவது இயற்கையே! அது தமிழர்க்கும்கூடப் பெருமையும் மகிழ்ச்சியும் தரத்தக்கதுதான். தெலுங்கர்தாம் நம் உறவினராயிற்றே? பின் ஏன் இப் பூசல்? என்றால், தெலுங்கர் அல்லர் இவ்விசையைத் தமக்குரிமையாக்கப் பாடுபடுபவர்! தமிழ் நாட்டில் உள்ள நம் பழைய புல்லுருவிக் கூட்டத்தார்தாம், அதை வேறெதாவது நாட்டுக்கு - ஜெருமனிக்கும் துருக்கிக்கும் சொந்தமாக்க முடியாவிட்டால் வடநாட்டுக்காவது - அதுவும் முடியாவிட்டால் தெலுங்குக்காவது உரிமையாக்கித் தொலைத்து விடலாம் என்று பார்க்கின்றார்கள். அவர்கள் எண்ணமனைத்தும் - பற்றுத லனைத்தும், தெலுங்குக்கு ஆதரவு, இந்திக்கு ஆதரவு, வடமொழி அல்லது வேறெம்மொழிக்காவது ஆதரவு என்றல்ல. எப்படியாவது அது தமிழர்க்குப் புறம்பாய் - தமிழர்க்கு எட்டாததாய்ப் போய்த் தமது தரகுக்கு உடந்தையானதாய் இருத்தல் வேண்டும் என்பதுதான். ஆதலால், தெலுங்கு தமிழ் என்ற இப்போட்டி உண்மையில் தெலுங்குக்கும் அல்லது வேறெந்த மொழிக்கும், தமிழ்க்கும் உள்ள போட்டி அன்று; தெலுங்கு அல்லது தமிழ்க்குப் போட்டியாய் வர இணங்கும் வேறெந்த மொழியின் பெயரையாவது முகமூடியாய் அணிந்துகொண்டு, சிலர் சுயநலத்துக்காகத் தமிழை, தமிழர் தமிழைத் தாக்கும் தாக்கேயன்றி, இது வேறெதுவுமே அன்று. ஆகவே, மலையாளத்து மன்னர் ஏலக்கொடி வகையிற் கூறியதுபோல், கருநாடக இசை எப்பெயர் கொண்டு எங்கு நிலவினும், எம்மொழிப் போர்வை போர்ப்பினும் அது தமிழிசையாகவே நிலவும் என்பது உறுதி. ஆனால், ஒரே ஒரு குறைமட்டும்; அது தமிழில் நிகழாது வேறெம்மொழியில் நிகழ்ந்தாலும், அஃது உண்மையில் தமிழிசையோ தமிழிசையின் கிளையோகூட ஆகாமல், தமிழிசையின் நிழல் - அதுவுங்கூட வட்டக் கண்ணாடியில் தோன்றும் விகாரமான நிழலாகவே விளங்கும் என்று கூறுதல் வேண்டும். இன்று, கருநாடக இசை தென்னை மரத்திற் பூத்த பனம்பூ மாதிரி, (அது பூக்குமா என்பது கேள்வியன்று; தாள் பூவாயிருக்க லாமல்லவா?) தமிழிசையும் ஆகாமல் தெலுங்கிசையும் ஆகாமல் இருக்கின்றது. இந்நிலையில் அதனை ‘ஒரு கலை’ என்று கூறுவதே தவறாகும். தமிழ்ப் பாட்டுக்குப் பதில் இலக்கணப் புலவர்களது தேமாங்காய் புளிமாங்காய் வாய்பாடுகளைக் கோத்துப் பாட்டியற்றினால், எப்படி அது பாட்டின் ஒலிப்பு உடைய தாயினும் பாட்டாகமாட்டாதோ அதுபோலவேதான் கருநாடக இசையும் தமிழர் வாய்ப்பாட்டிசையாகுமே யன்றித் தெலுங் கிசையோ, தமிழிசையோ இரண்டும் ஆகாது. ஏனெனில், அது தெலுங்கு மொழியின் சந்தங்களும் பாவங்களும் அற்றது. தெலுங்கர் இலக்கியம் என்று போற்றக்கூடும் தன்மையுமற்று விளங்குவது. 1 கருநாடக இசை தமிழிசையின் ஒருகிளையே, அல்லது நிழலே, அல்லது திரிபே என்று கூறினோம். அது தெலுங்கு நாட்டில் என்றும் காணப்படாதது மட்டுமன்று; தெலுங்கு மொழியின் பெயர் வரலாற்றில் கேட்கப்படுவதற்கு முன்னிருந்தே தமிழ்நாட்டில் அதன் அங்குரங்களும், அதன் முழு இசை யியக்கமும் காணப்படுகின்றன. நாம் மேலே கூறியதுபோல், தேவாரங்களுக்குப் பண் வகுத்துக் கோவில்களில் பாடும்படி ஏற்பாடு செய்யப்பட்டது சோழர் காலத்தில் ஆகும். சோழருள் ஒருவன் இசை பயில்வதற்கான குறியீடுகளை - சுரங்களை - வகுத்து ஒழுங்குபடுத்தினான் என்று கலிங்கத்துப் பரணியில் கூறப்படு கிறது. இதற்கு நெடுநாள் முன்னர் முதலிரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல்லவ அரசன் ஒருவனுடைய கல்வெட்டில்கூட இதே வகையில் சுரங்கள் ஒழுங்குபடுத்தப் பட்டதாகக் குறிக்கப் பட்டிருக்கிறது. இவ்வளவு தொலைவு சென்று தமிழிசையின் தொன்மையையும் விரிவையும் எடுத்துக்காட்ட வேண்டியதே இல்லை. சிலப்பதிகாரம் தமிழிசையின் அறிவியல் விரிவையும். கலை உயர்வையும், பழைமையும் நன்கு எடுத்துக் காட்டும். அந்நூலுக்கு உரை எழுதிய உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், நூலுக்குப் பன்னூற்றாண்டளவு பிற்பட்டு வாழ்ந்தவர். அவர் காலத்திற்கூடச் சிலப்பதிகாரத்துக்கு உதவியாயிருந்த இசையிலக்கண நூற்களும், இலக்கிய நூற்களும் இருந்தன என்று காணப்படுகிறது. சில நூல்கள் எழுதியவர் காலத்தில் இருந்து, அவர் காலத்துக்குள் இறந்துபட்டதாக உரையாசிரியர், கூறுகிறார். (எது எவ்வாறாயினும் இவ்வழிவு மட்டுமாவது கடல் கோளினாலன்று, பாராட்டின்மை யாலோ பகைமையினாலோ தான் என்று காணலாம்). அவற்றுள் இசைநுணுக்கம், பஞ்ச பாரதீயம் முதலிய நூல்கள் கூறப்படுகின்றன. இவை இன்று நமக்குக் கிட்டாததால் சிலப்பதிகாரம் ஒன்றே இசைபற்றிய மிகப் பழைய நூலாக இன்று நிலவுகின்றது. சிலப்பதிகாரத்துள்ள ஆய்ச்சியர் குரவை, கானல்வரி, வேட்டுவ வரி முதலிய பகுதிகள் ஒப்பற்ற உயர் இசை இலக்கியங்கள். இதே நூலில் இலக்கணப் பகுதிகளும் அதாவது அறிவியற் பகுதிகளும் கூறப்படுகின்றன. இசையாசிரியன் (பாகவதர்), தண்ணுமை (மத்தளம்), குழல் (புல்லாங்குழல்), யாழ் ஆகிய கருவிகளின் தலைவரியல்பு, கருவிகள் இயல்பு, வகை ஆகிய அனைத்தும் விரிவுபடக் கூறப்பட்டுள்ளன. யாழில் இன்றிருக்கும் வீணைபோல் ஏழ்நரம்புடைய சிறுகோட்டியாழ் மட்டுமன்றி, இருபத்தொரு நரம்புடைய சகோடயாழ் ஒன்றும், ஆயிர நரம்புடைய பெருங்கோட்டியாழ் ஒன்றும் கூறப்பட்டுள்ளது. இராவணன் கைலையைப் பெயர்க்க முயன்று, அதனால் நைவுற்றகாலை, இறைவன் மனம் மகிழும்படி ஆயிர நரம்புள்ள யாழ் பயின்றான் என்று கூறப்படுகிறது. அது தமிழர் பெருங்கோட்டி யாழ்தான் போலும்! இன்றைய வீணையில் ஏழு நரம்புகள் ஏழு சுரங்களை வாசிக்க உதவுகின்றன. சகோடயாழ் இருபத்தொரு நரம்புகளை யுடையதாதலின், இதனினும் நுண்மையும் நயமும் உடையதாதல் வேண்டும். ஆயிரம் நரம்புடைய பெருங் கோட்டியாழ் இதனினும் எத்தனையோ நயமுடையதென்று கூறவேண்டுவதில்லை. இத்தகைய யாழில் இசை எழுப்பினோரது மொழியில் இசை ஏற்படாது என்று கூறுவோர் கூற்று, எத்தனை அறிவுடையது பாருங்கள்! இசை உணர்ச்சியில் பருமை நுண்மை என்ற உணர்ச்சி வேறுபாடுகள் இருக்கக்கூடும், என யாவரும் ஏற்பர். பறையோசை இசை உள்ளதாயினும், முன்னதினும் பின்னது உயர்வும் நயமும் உடையதாகுமன்றோ? இன்று கலைப்பண்பு குறைந்தவை என்று கருதப்படும் நாடோடிப் பாட்டுகளைவிடக் கருநாடக இசை உயர்ந்தது எதனால்? நுண்மையினால்தானே? அந்நுண்மையைத் துய்க்க இயலாத பரு உணர்ச்சி உடையவர், அதனைப் பார்த்து இகழின், அதன் உயர்வு அதனால் குறைவு ஆகுமா? ஆகாதே! அதுபோலவே இன்றைய கருநாடக இசையிலும் நுண்மையுடைய கலை - இசை ஒன்று இருந்து அஃது ஆதரவற்றிருக்கின்றது என்றால் நீங்கள் வியப்படையக் கூடும். ஆனால், உண்மையில் அத்தகைய இசை உளது என்று காட்டுவோம். தமிழ் மொழியையும் பிறமொழியையும் பேச்சு நடையிலோ பாட்டிலோ உரத்துப் படிப்பவர்கள், அவற்றினிடையே உள்ள வேற்றுமையை எளிதாக உணர்வர். தமிழை வாசிக்க முயற்சி மிகவும் வேண்டுவதில்லை. நரம்பு களுக்கும் நாடிகளுக்கும் உழைப்பு மிகுதி தரும் ஒலிகள் படிப்படியாக விலக்கப்பட்டு, அது பண்பட்டு விளங்குவதே இதற்குக் காரணம். இங்ஙனம் பண்பட்ட மொழிகளில் இயற்கையிலேயே ஓர் இசைப் பண்பு உண்டு என்று காணலாம். இப்பண்பினை வடமொழியிலும் ஆங்கிலத்திலும் உயர்கலைஞர்கள் கையாண்டுள்ளனர். எடுத்துக்காட்டாகத் தண்டிகாலப் புலவர் வன்சொல் விலக்கியும், சில சமயம் வல்லொலியும், நாசிகமாகிய மெல்லொலியும் விலக்கியும் பாடியுள்ளனர். அத்தகைய பாக்கள் தமிழ் போன்றே ஒலித்தல் காணலாம். அதுபோல் ஆங்கில நாட்டிலும் அயர்லாந்துக் கவிஞர், தம்மொழியியல்பொன்ற வன்சொல்லை விலக்கி எழுதுவதும், அவ்வோசையைப் பின்பற்றி எழுதிய வின்°பர்ன் என்பார் ‘ஆங்கில மொழியின் குயில்’ எனப்படுதலும் காண்க. கருநாடக இசையும் அவ்வப்போது பரு ஒலி நீத்து நுண்ஒலி (வலியினும் மெலி நுண்ணியது; மெலியினும் இடையும் உயிரும் நுண்ணியன என்க.) சேர்ந்து மிகவும் உயர்நிலை எய்துதல் காண்க. தமிழின் ஒலியியலை நோக்கினால் கருநாடக இசையின் உயர்வே தமிழிசையின் தொடக்கமாம் என்னலாகும். பறையோசையும் நாடோடிப் பாட்டும் கேட்டவுடன் தரும் எழுச்சியைக் கருநாடக இசை தாராது. சற்று ஆரவாரம் தொலைத்து அடங்கிய பண்பட்ட புலனுணர்வுடையார்க்கே இன்பந் தருகின்றது அல்லவா? அதுபோல், கருநாடக இசையில் பயின்று பண்பட்டபின், அதன் உயர்நிலையைத் தமிழில் நாடினால்தான் அதன் அருமை விளங்கும் தெலுங்கில், “தல்லியு தன்றியு நீவே” என்பதனை “அப்பனீ! அம்மைநீ அன்புடைய மாமனும் மாமியும்நீ!” என்பதுடன் ஒப்பிடுக. முன்னதில் உணர்ச்சியினும் ஒலி முந்துற நிற்பதும், பின்னதில் உணர்ச்சியினும் ஒலி பின்னுற நிற்பதும் காண்க. உயர்இசையில் இசையின் பொருளாகிய உணர்ச்சி அல்லது ‘பாவம்’ கனிந்து, மேம்பட நிற்றல் வேண்டும் - ஓசை அதற்குத் தாழ்ந்து, ஆனால் அதன் உயர்வு தாழ்வுகளை எடுத்துக் காட்டி நிற்றல் வேண்டும். பாடகன் நயத்தை எடுத்துக் காட்டும் பக்கமேளக்காரன் இருக்கிறானே, அவனைப்போல. இது இசையின் ஒலிப்பையும் பாவத்தையும் மட்டுமே கவனித்தால்தான் பொருந்தும். பொருளைக் கவனித்தாலோ தெலுங்கு மொழியிசை தமிழர்க்கு விளங்காத பொருளுடையது. பொருள் விளங்காததாகவே, கருத்தும் பாவமும் விளங்காது வீணாதல் காண்க. அதுமட்டுமன்று, தெலுங்கு தெரிந்தவரேதாம் அதனைக் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது தெலுங்கிசை யின் நிலைமை யாதெனப் பார்ப்போம். ‘தல்லியு தன்றியு நீவே’ என்றால், ‘தாயும் தந்தையும் நீயே’, என்பது பொருள். இதனினும் தமிழ்ப் பாட்டின் பொருள் நிறைவுடையதாதல் காண்க. தெலுங்குப் பாட்டுகளைச் ‘சுதேசமித்திரன்’ முன்னர் வாரத்துக்கு வாரம், பெருமுயற்சி செய்து மொழிபெயர்த்து உதவியதுண்டு. அதனை வாசிப்போர் அவற்றின் வெள்ளைக் கருத்துகளை - சக்கைப் பசப்புகளைக் காணலாம். தமிழிசை இசைக்கலை மட்டுமன்று, கவிதையுங்கூட ஆகும். ஆனால், தெலுங்கு இசையின் பழக்கமும், அத் தெலுங்கிசையில் இருக்கும் கொஞ்சநஞ்ச உயிரையும் கெடுக்கக் கலந்த நச்சுக் கருவியாகிய இசைப்பெட்டியும்- ஹார்மோனியம் - நம் நாடகங்களையும் பேசும் படங்களையும் தாக்கிக் கவிதை யல்லாத வெற்றுரைப் பாட்டுகளைப்- புலம்பலினும் கேடுகெட்ட வாய்ப்பாட்டு ஓலங்களை - இசையாகக் கருதச் செய்துவிட்டன. ஆனால், தமிழிசையிற் கலந்துகிடக்கும் தெய்விகக் கவிதையையும் உயர்ஓசை நயத்தையும் கீழ்வரும் பாட்டில் காண்க. “மாசில் வீணையும் மாலை மதியமும், வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை இணையடி நீழலே.” இதில் அகலக் கலையும் ஆழக் கலையும் உள்ளுயிர்க் கலையும் ஒருங்கு பொருந்திய அருமை காண்மின். ஓசை நயத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், வல்லெழுத்து எவ்வளவு குறைந்து மெல்லோசை இடையிட்டு இடையோசையே மேம்பட்டு நிற்கின்றது பாருங்கள். இது போன்ற தமிழிசை இலக்கியங்கள் எண்ணிறந்தன உள்ள பண்டையிசையில் மீந்தவையே சிலப்பதிகாரப் பகுதிகள். இடைக்கால இசை இலக்கியம் தேவார திருவாசகப் பகுதிகள். பிற்காலத்தில் திருப்புகழும், தனி இசையாக முத்துத்தாண்டவர் கீர்த்தனைகளும் உள்ளன. நாடக முறையில் நந்தனார் கீர்த்தனையும், இராம நாடகமும், உயர்இசை நூற்கள் ஆம். புத்தியக்க முறையில் இசைப்புலவர் திலகமாம், தி.இலக்குமணப் பிள்ளை இசையையும், கவிதையையும் தமிழ்ப் பண்பாட்டையும் கருத்துப் பண்பாட்டையும் ஒருங்கே உடைய உயர் கருத்துப் பொதிந்த பாட்டுகள் சில இயற்றியுள்ளனர். ஆனால், இவற்றிடையே தமிழிசை என்ற பெயர் வைத்துக்கொண்டு தமிழ், கலை இரண்டு மல்லாத வாய்ப்பாட்டிசையையே பாடும் நாடக இசைஞரும், பேசும்பட இசைஞரும், பிற தற்கால வாய்ப்பாட்டு இசைஞரும் போன்றவர்கள் தமிழிசைஞரே என்றெண்ணும் எண்ணம் நம் நாட்டில் ஒழிதல்வேண்டும். அவர்கள் இசை அறிந்தோர்; அவ்வளவுதான்! பாட்டின் பொருளும் யாப்பு முறையும் அறிந்தோர் கவிஞர் ஆவாரா? அதுபோலவே இவர்கள் இசையிலக்கிய ஆசிரியர் ஆகார். அவர்கள், இசைப்பாக்கள் இலக்கியச் சுவையுடையவை ஆகா. ஆதலின், என்க. உயர்திரு. இலக்குமணப் பிள்ளையைப் போலும், கவியரசர் பாரதிதாசனைப் போலும் தமிழ்ப் பற்றும் இலக்கியப்பற்றும் கொண்ட இசைஞரே நாட்டின் புதுத் தமிழிசையியக்கத்தை நடத்தும் வண்மை யுடையார் ஆவர். இன்று, ஆதரவில்லாமல்தான் தமிழிசை தாழ்ந்து, தமிழிசையின் கிளையாகிய-உயிரற்ற சொத்தைக் கிளையாகிய, கருநாடக இசை உயர்ந்து விட்டது என்பதனைக் காட்டுவோம். இன்று உயர்த்திச் சொல்லப்படும் கருநாடக இசை தற்போது பாராட்டப்படினும், ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இதே நாட்டில் பாராட்டப்படாமலிருந்தது பலர்க்கும் நினைவிருக்கலாம். நாடகங்கள் முதலில் இசையைத் துணை கொள்ளத் தொடங்கிய காலங்களில், மக்கள் இந்து°தானி மெட்டுகளையே விரும்பிக் கேட்டனர். அதற்குப் புதுமெட்டு என்ற பெயரும் சூட்டப் பட்டது. பின் இங்கிலீஷ் மெட்டுகள்கூடத் தோன்றின. இவற்றினிடையே எந்தத் தெலுங்குப் பாட்டாவது வந்தால் அதனைக் கேட்டவுடன், “யாருக்கு வேண்டும் இந்தப் பழைய கருநாடகம்” எனப்பட்டது. இந்தச் சொல் இன்னும் இசை உலகத்துக்குப் புறம்பாகப் பல பொருள்களை இழிவுபடுத்திக்கூட வழங்கி வருகிறது. நாகரிகமற்ற மனிதனை “இவனொரு கருநாடகப் பேர்வழி, ஒன்றுக்கும் உதவாத பழைய கருநாடகம்” என்கிறோம். அத்தனைக்குச் சீர்கெட்ட நிலையிலிருந்த “கருநாடக” இசைதான் இன்று சிலர் போற்றி உயர்த்தித், தமிழரைப் பணியவைக்க வழங்கும் “தியாகர்” கீர்த்தனங்கள். இப்படிக் கருநாடகம் அன்று மதிப்புக் குறைவானேன்? அப்போது அது முழுமையும் தமிழ்நாட்டுக்குப் புறம்பாகாமல் தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்தது. கருநாடகம் என்னும் சொல் ‘கரியநாடு’ என்று பொருள்படும். இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் இந்த வட்டங்களில் மலையை ஒட்டிய இடமும், மைசூரை ஒட்டிய சேலமும் இன்றும் பருத்தி விளையப் பதமான கரிசல்மண் நாடாயிருக்கின்றது. இதுவே கருநாடக நாடு. இதனை, ஆங்கிலேயர் வரும்போது ஆண்டவன்தான் கருநாடக நவாபு. இதன் ஒருபகுதியில் பேசப்பட்ட மொழியே கன்னட மொழியாயிற்று. எனவே, கருநாடக இசையுடன் தொடர் புடைய கருநாடக நாடு தெலுங்கு நாடாகாது. ஒன்று, தமிழ்நாட்டின் கருநாடகப் பகுதிக்கு அப்பெயர் உரித்தாதல் வேண்டும்; அல்லது தமிழ்க் கிளைக்குழு மொழியாகிய கன்னடம் பேசும் நாட்டுக்கு உரித்தாதல் வேண்டும். இன்று, அது கன்னடத்தார்க்கு உரிமையாகவில்லை. எனவே, அது முற்றிலும் தமிழர் இசையாய் இருந்திருத்தல் வேண்டும் என்பது கண்கூடு. ஆதலால்தான் இன்று ‘தெலுங்கிசை தெலுங்கிசை’ எனப் போற்றுபவர், அன்று போற்றாது ஒதுக்கிவிட்டுத் தமிழர்க்குப் புறம்பு என்று கருதிய இந்து°தானி, பார்சி இசைகளை உயர்த்தினர். அக்கால மனப்பான்மையை இன்னொரு வகையிலும் காணலாம். தமிழ் நாட்டின் பகுதியிலுள்ள திருவாங்கூர் அரசரான கார்த்திகைத் திருநாள் பெரிய இசைப்புலவர். ஆனால், அவர் எழுதிய பாட்டுகள் அவர் தாய்மொழியான மலையாளத்திலோ, அல்லது அதனை ஒட்டிய தமிழிலோ, அல்லது அதனை அடுத்த தெலுங்கிலோ இல்லாமல், வட மொழியில்தான் இருந்தன என்று காண்க. கருநாடகம் பழைமைப் பொருளில் வழங்குவது, அஃது இந்து°தானியிலும் பழகிய உயர்வுடையது என்று காட்டவல்லது. கருநாடகத்தினும் பழைய இசை தெம்மாங்கு என்று இன்று சொல்லப்படும் தெம்மாங்கு அல்லது தென்பாங்கு ஆகும். கருநாடக மெட்டும், தென்பாங்கு மெட்டும் இன்றும் இசையைத் தொழிலாகக் கொண்ட- ஊதியச் சரக்காகக் கொண்டவர்களது வெறுப்புக்கு ஆளாய், இஃது என்ன பழைய, கருநாடகமா, தெம்மாங்கா என்ற வகையில் புறக்கணிக்கப் பட்டுவிட்டன. ஆனால், இத் தெம்மாங்கு உண்மையில் குறைவுடையதா? கருநாடகம் குறைவுடையதானால், தெம்மாங்கும் அப்படியே. முன் பழித்த கருநாடகம், பழித்தவர் உயர்த்த உயர்ந்ததுபோல், இன்று அன்று இழிவுபடுத்தக் காரணமாயிருந்த இந்து°தானி இசையிலும் மேம்பட்டதென அனைத்திந்திய இசை மாநாட்டிலும் கொள்ளப்படத்தக்கதானால், தெம்மாங்கும் ஆதரவு பெற்றால், அத்தகைய, அல்லது அதனினும் மேம்பட்ட உயர்நிலை எய்தும் என்பதில் தடையில்லையல்லவா! இத் தெம்மாங்கு இலக்கிய ஆதரவும், இசை அறிஞராகிய இசைத் தொழி லாளர் ஆதரவும் அற்று, நலிந்து தேய்ந்த பழைய தமிழிசைக் கிளையேயாகும். கருநாடகமும் அதுவே. ஆயினும், அது தமிழ்மக்கள் வாழ்க்கையை விட்டகன்று, பிறமொழி மன்னர் பொழுதுபோக்குக்கு ஆடப்பெற்ற பொய்நடிப்பு இசையாயிற்று. தெம்மாங்கோ எனில், மக்கள் வாழ்க்கையின் உயிர்த்துடிப்புடைய தாய் இன்றும் இயங்குகின்றது. வாழ்க்கைத் தொடர்புடையதாய் எதனையும் இழிவுபடுத்தும் சிலரின் பழிப்பை ஏற்றுத் தமிழர் இதனைப் புறக்கணிப்பதுபோலவே மலையாள நாட்டிலும் தமிழர் மறந்துவிட்ட பழங்கலைகளை-இதுவரை மக்கள் போற்றிவைத்திருக்கும் கலைகளையும் கூட-இன்று அவர்கள் வெறுக்கத் தொடங்குகின்றனர். இதுகாறும் அவை காப்பாற்றப்பட்டது. மலையாள நாட்டில் வடநாட்டுப் பார்ப்பார் முற்றிலும் தலைமை பெற்றுவிடாமல் பழந்தமிழ் அந்தணராகிய நம்பூதிரிகளே தலைமையடைந்திருந்ததனால்தான் என்னல் வேண்டும். இன்னும் பழந்தமிழ்க் கலைகளை அங்கே ஆதரிப்பவர் நம்பூதிரிகளாவர். மேனாட்டார் இன்று மலையாளம் சென்று அப்பழங்கலைகளை ஊமைக் கூத்து, துள்ளல் (கலிப்பாட்டு), வஞ்சி ஆகியவற்றைக் கற்று, அவற்றின் உயர்கலை வளத்தை உலகிற்கு வெளியிடுகின்றனர். மேல் நாட்டினர் வியக்கும் இவ் உயர்கலைகள் தமிழர், மலையாளிகள் புறக்கணிப்புக்கு ஆளாவதேன்? தமிழ்நாட்டில் தமிழர் புறக்கணிக்கப்பட்டுப் பிறவகுப்பாரும் அவரைச் சார்ந்தொழுகுவாரும் உயர்ந்ததனால், அவ் உயர்ந்தோர் தம் உயர்வைக் காக்க மக்களிடையே உள்ள-மக்களுக்குரிய கலை முதலிய யாவற்றையும் புறக்கணித்து ஒதுக்கி வைத்தனர்; இஃது பாரதக் கதையில் அருச்சுனன் திறங்கள் ஓங்க, ஏகலைவன் வலக்கைப் பெருவிரலைக் கல்வி ஊதியமாகக் கொண்ட துரோணரின் பெருந் தகைமையைப்போல் என்க. மக்கள் வாழ்வுடன் தெம்மாங்கு மெட்டுகள் தொடர் புடையவையாய் இருப்பதனாலேயே அவற்றைப் பொது மக்கள்-பார்ப்பனராலும் அவர்கள் வால்பிடிக்கும் போலித் தமிழராலும் இழிகுலத்தினர் என ஏளனமாகக் கூறப்படும் உண்மைத் தமிழரான பொதுமக்கள்-அதனை எப்படியாவது, ஒளித்தாவது கேட்க விரும்புகின்றனர். உயர்குலத்தார் புறக்கணிப்பு, நகைப்பு, புன்முறுவல், இழிப்பு ஆகிய இத்தனைக்கும் விடாது இன்றும் வில்லுப்பாட்டு, கரகம், காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து, நிலாவணி, குறவஞ்சி, பள்ளு, ஏற்றம் முதலிய பாட்டுகளும், இவற்றை ஒத்த மலையாளத்திலுள்ள தமிழ் விருத்தங்களான கிளிப்பாட்டு, வஞ்சி, துள்ளல் முதலியனவும் அழியாமை காண்க. இவற்றின் உயிரை, இவற்றிலுள்ள மக்கள் வாழ்க்கைத் துடிப்பை வியந்தே, இன்றைய புதிய நாடகக் கழகங்களும், பேசும்படக் கழகங்களும் அவற்றை ஆங்காங்கே பயன்படுத்திப் பொதுமக்கள் ஊக்கத்தைத் தூண்டிப் பாராட்டையும் எளிதிற் பெறுகின்றன. மக்கள் விரும்பிய இப்பாட்டுகளைக் கலைஞர் மேம்படுத்திக் கலையை வாழ்வுடன் தொடர்பு படுத்தாது, அதனை இழிவென விளம்பரப்படுத்திக் கலையினின்றும் ஒதுக்கி வைக்கின்றார்கள். ஏனெனில், நம் நாட்டில் இன்று கலைவேறு, கல்வி வேறு என்று இரண்டாகப் பிரிந்தியல்கிறது. இசைக்கலை என்ற பெயரால் பணம் ஈட்டுபவர் அதனை அறிவியலாகவோ, கலையாகவோ எண்ணாமல், தொழிலாக மட்டுமே எண்ணி, அதற்கான தொழில்திறம், தொழில் பசப்புடன் நின்று விடுகின்றனர். அதனைக் கல்வியுடனும், மொழியுடனும், கவிதையுடனும் தொடர்புபடுத்துவது இல்லை. உண்மைக் கலையின் உயிரான மக்கள் வாழ்வுடன் இணைப்பதும் இல்லை. இம்மூன்றும், அதாவது மக்கள் வாழ்வும், தமிழின் இலக்கியச் சுவை அல்லது கவிதையும் அறிவியற் பகுதியும் இணைந்தால்தான் இசைத் தொழில் நிலையில் நில்லாது உயரும். அங்ஙனம் உயரும் காலத்து எழும் இசையே உண்மைத் தமிழிசையாம். அதற்கான முயற்சிதான் தமிழிசை இயக்கம் என்று உணர்தல் வேண்டும். தமிழிசை இயக்கம் அதற்கொரு கருவியேயன்றி ஒரு முடிவாகாது. ஆகவே, அவ்விசைக்கான நெறியிற் செல்லாமல் ஏதோ புரியாத் தெலுங்கை விட்டுப் புரியாத் தமிழில்-பிறமொழி கலந்த உணர்ச்சியற்ற தமிழில் இசைபாடித் தமிழிசை என்பதெல்லாம், தமிழிசை இயக்கத்தின்பாற் படாது; தமிழிசை மயக்கத்தின் பாற்றான் படும் என்க. கற்றார் ஆதரவும், கலையைத் தொழிலாகக் கொண்டவர் ஆதரவும் இல்லாமல் கலையொழியுமென்பதில் ஐயமில்லை. அங்ஙனம், தமிழ்நாட்டில் ஒழிந்த பழைய தமிழ் நாடகக்கலை இன்று பழந்தமிழ்நாட்டின் பகுதியான மலையாள நாட்டில் இன்றும் ஓட்டந் துள்ளல் என்ற பெயருடன் நிலை பெறுகிறது. அதனைப் பார்ப்போர் அதனைப் பழந்தமிழ் நாடக நூல்களில் எஞ்சியுள்ள சிலப்பதி காரத்துடன் தொடர்புபடுத்துவரா? படுத்தார். ஆனால், உய்த்தாராய்வார்க்கு இவ் இரண்டினுடைய தொடர்பும் புலப்படல் எளிது. தமிழ்நாட்டில் தற்காலக் கொட்டகை நாடகங்களைப் பார்த்தவர், சிலப்பதிகாரத்தைப் பார்த்தால் அது நாடகக் காப்பியமாகவே தோற்றாது. நாடகத்தில் அங்கம், களம் ஆகிய பிரிவு உண்டு. திரைக்காட்சிக்கான தூண்டுதல்கள் உண்டு. கதையின் பாத்திரங்கள் காட்சிகளில் பரந்து உரையாடுவதன் மூலமே கதை நடைபெறும். சிலப்பதி காரத்தில் இஃது ஒன்றையேனும் தொடர்பாகக் காண முடியாது. ஆகவே, அதை நாடகநூல் என்பது வெறும் பாராட்டோடு அன்றி, நாடகம் என்பது இங்கே நாட்டியம் என்றுகூடப் பொருள்படுமோ என்று எண்ணுவர் சிலர். ஆனால், சிலப்பதிகாரம் நாடகம் என்னும்போது நாட்டியத்தையே நாடகம் எனக் குறிக்கிறோம் என்று எண்ணுவது தவறு. ஏனெனில், நாடகம் ஒரு கலையாக மட்டும் எண்ணப்படாமல் தமிழிலக்கியத்தில் மூன்று பகுதிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. அது வெறும் கலையானால், நாட்டியமானால், அதில் தமிழின் தொடர்பு யாது? அதுதான் எல்லா மொழிக்கும் பொதுவான உடல் சார்புடைய கலையாயிற்றே! அன்றி நாட்டியத்துக்கான தமிழ்ப்பாட்டே நாடகத்தமிழ் என்னின், அதுதான் இசையிலடங்கிற்றே; தனிப்பட நாடகத்தமிழ் என்று கூறப்பட வேண்டுவதில்லையே என்றும் மறுக்க. பின், சிலப்பதிகாரம் எங்ஙனம் நாடகமாம் எனிற் கூறுதும். இன்றைய நாடகங்களுக்குத் திரைகள் உண்டு. அவை காட்சிக்குக் காட்சி மாற்றப்படுகின்றன. பழைய காலத்து நாடகங்களுக்குத் திரை அழகுக்காக இடப் பட்டதுண்டு. காட்சிக்குக் காட்சி மாறுவதில்லை. மேடை மீது நடிகர் வருவதும், போவதுமே காட்சி மாற்றத்தைத் குறிக்கும். இங்கிலாந்தில் ஷேக்°பியர் காலத்தில் திரை மாற்றம் இல்லை என்றே தோன்றுகிறது. கிரேக்கர் இலக்கியக் காலத்திலும் மேடை நாற்புறமும் திறந்ததொன்றாய் இருந்ததென்று தெரிகிறது. இன்றும் ஓட்டந் துள்ளல் நாற்புறமும் திறந்த மேடையில்தான் நடைபெறுகிறது. தமிழ் நாட்டில் இன்று நடக்கும் தெருக்கூத்துகளில் பல இப்படி நிகழ்வது காணலாம். சிலப்பதிகாரத்தில் ஷேக்°பியர் காலத்தைப்போலப் பின்புறத் திரை மட்டும் இருந்தது. முன் திரையும், திரைமாற்றமும் இல்லை. அதனால்தான் காட்சி முடிவைக் காட்ட ஷேக்°பியர் பாட்டுகள் (அவை எதுகையற்றவை) கணீர் என எதுகையில் முடிகின்றன சிலப்பதிகாரத்தில் காதைகள்‘என’ அல்லது ‘என்’ என்று முடிகின்றதும் இக்காரணத்தினாலேயே யாகும். இச் சொற்கள் காட்சிமாற்றத்தைக் குறிக்கும். மேலும், இன்றைய நாடகத்தில் நடிகர் பலர். அற்றைய கிரேக்கர் காலத்தில் நடிகர் மிகச் சிலர்; எழுதப்பட்ட நாடகங்களும் அதற்கேற்பச் சில பாத்திரங்களே வரும்படி அமைக்கப் பெற்றிருந்தன. நாடகங்களில் துயர் நாடகங்க ளென்னும் (அவலச் சுவை நாடகங்கள்) வகை (கூசயபநனநைள) தோற்றத்தால் முந்தியது. அவற்றுள் இரண்டு வகை நடிகர் இருந்தனர். ஒருவகைப் பாட்டு மட்டும் படிக்கும் குழாம் (கூட்டிசைக் குழாம்)-(ஊhடிசரள)ஆம். இன்னொன்று பாட்டோடு செய்கையும் அபிநயமும் உடைய தலைவர் ஆவர். குழாத்தினர் பாட்டில் நயமான பகுதி வரும்போது ‘ஆமாம்’ போடவோ, கை தட்டிக் கொக்கரிக்கவோ செய்வர். சிலகால் தலைவன் அரசனாக நடிக்கும்போது, அவர்கள் அவனது அமைச்சர் குழாமாகவோ குடிமக்களாகவோ அமையவும் செய்வர். கிரேக்க நாடகத்தின் மிகப் பழைமையான காலத்தில் இம்முதல் நடிகர் கதை சொல்பவராகவும், பிறர் கேட்பவராகவும் இருந்தனர். படிப்படியாக அபிநயமும் நடிப்பும் கலந்தன. பல நடிப்புகளுக்கு முதலில் ஒருவரே நடிகரா யிருந்தனராயினும், படிப்படியாக நடிகர் தொகை அதிகப்பட்டது. கதை கூறும் பகுதிகளும், விரிவுரைகளும் விடப்பட்டன. நாடகம் தோன்றியது இவ்வகையில் தான். இத்தனை மாற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்படாத முதல் நிலை நாடகத்தில், இன்றைய நாடகத்தைப் போல, உரையாடல் மட்டுமன்றி, கதைப் பகுதி கூறலும் விரிவுரைகளும் (வருணனைகள்) எல்லாம் காவியத்தில் உள்ளதுபோல மலிந்திருந்தன. அவற்றுள் விரிவுரைகள் உரைநடையாகவும், கதைப் பகுதி செய்யுளாகவும், நாடகப்பகுதி பாட்டு அல்லது இசைப்பாவாகவும், தமிழ்நாட்டில் நிகழ்ந்து வந்தது. இத்தகைய முதற்கால நாடக அமைப்பை உடையதே, முத்தமிழ்க் காவியமான சிலப்பதிகாரம். இதனைப் பின்பற்ற முயன்றேதான் வடமொழியில் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்காவியங்களான சம்பூக்களும், நாடகமும் எழுதப்பெற்றன. இன்றைய மலையாளத்து ஓட்டந்துள்ளலும் இதில் சற்றுச் சிதைவுற்ற இன்னொரு வடிவேயாகும். அஃது இன்னும் மலையாளத்தில் ஆங்கிலம் படித்தவரால்கூட முற்றிலும் புறக்கணிக்கப்படாது இலக்கியமாகவே நடத்தப் படினும், செயலுலகில் இழிவாகக் கருதப்படலாயிற்று, அவ்விலக் கியத்தைக் கற்றவர்க்கு உதவியாகச் சிலப்பதிகாரம் இன்றும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டும், மொழி பெயர்க்கப் படாமல் அப்படியே மலையாள எழுத்தில் எழுதப்பட்டு மலையாளப் புலவர் வகுப்பு (வித்துவான்)க்கும் தலைப்புலமை (ஆ.ஹ.) வகுப்புக்கும் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டும் உள்ள தென்பது கவனிக்கத்தக்கது. மலையாளத்தார் இங்ஙனம் மலையாள இலக்கியத்தின் மேம்பாட்டை உன்னிச் சிலப்பதி காரத்தை ஏற்றனரன்றோ? அதுபோலத் தமிழ்நாட்டுச் செல்வரும் இவ் ஓட்டந் துள்ளலில் தேர்ச்சி பெற்ற மலையாளிக்குத் தமிழ் கற்பித்தோ, அல்லது தமிழ்ப் புலமையோடு ஓட்டந்துள்ளலும் தமிழ்ச் சிறுவர் சிலர்க்கு ஒருங்கே பயிற்றுவித்தோ, சிலப்பதிகாரத்தை நாடகமாகச் செயற்படுத்தி நடித்துக் காட்டி, அதன் கலைப்பண்பை, அதாவது நாடகப்பண்பைத் தமிழ்நாட்டார் அனுபவிக்கும்படி செய்யலாம். அப்போதுதான் அஃது இன்றுபோல் வெறும் இயற்காவியமாய் வாசிக்கப் படாமல், இசைக்காவியமாய்ப் பாடப்பட்டும், நாடகக் காவியமாய் நடிக்கப்பட்டும், உண்மையாகவே முத்தமிழ்க் காவியமாக விளங்கும். இங்ஙனம் செய்வதால் சிலப்பதிகார ஆராய்ச்சியில் இன்னும் பல அரிய செய்திகள் பொருள் பட விளங்கும். எடுத்துக்காட்டாகச் சிலப்பதிகாரத்தில் காணும் எல்லையற்ற அகண்ட விரிவுரைகள் வாசிப்பவர்க்குச் சலிப்புத் தருவதாயினும், அபிநயத்துடன் நடிக்கப்படின் இதற்காகவே எழுதப்பட்ட தென்பது தெற்றென விளங்கும். இதுகாறும் கூறியவற்றால், தமிழிசையின் தொன்மை விரிவு உயர்வு ஆகியவை விளங்கும். முன்னைய அதிகாரம் ஒன்றில் தமிழர் உயர் அறிவுக்கும், கலைப்பண்புக்கும் அவர்கள் மொழியே-மொழியின் சொற்களே சான்று பகரும் என்று கூறினோம். இசை வகையிலும் இது பொய்க்கவில்லை. உரைநடை, பாட்டு ஆகிய இரண்டுக்குமுள்ள வேற்றுமை என்ன என்று ஆராய்ந்தால், அவற்றுள் உரைநடையில் பேசுபவர் கருத்தை ஒட்டித் தொனி உயர்ச்சி தாழ்வு அலை ஏற்படுகிறது என்றும், பாட்டில் ஒழுங்காகவும், செவிக்கினிமை பயக்கும் அலைகள் ஏற்படுகின்றன என்றும் காணலாம். இவ்விரண்டு அலைகளும் ஒத்துவாராத பாட்டு உயிரற்ற செய்யுளாகவும், ஒத்துவரின் ஓசை நயமுடைய பாட்டாகவும் திகழும். பாட்டைவிட இசையில் இவ் ஒலி உயர்வு இன்னும் மிகுதி. முன் கூறிய கருத்து அலை, செய்யுள் அலை ஆகிய இரண்டினுடன், உணர்ச்சி உயர்வு தாழ்வினால் ஏற்படும் உணர்ச்சியலையாகிய மூன்றாவது அலையும் ஒன்று சேர்கின்றது. இம்மூன்றும் ஒன்றை ஒன்று தழுவி நயப்படுத்தி ஏற்படும் இசைப்பே இசை அலையாகும். ஒவ்வோர் அலையும் பிற அலையுடன் இசைந்து நயம் பெறுகின்றது. இவ்விரண்டு கருத்தையும் கொண்டே தமிழில் இசை என்ற அரிய சொல் வழங்குகிறது. பாட்டலை, பொருள் அலை, உணர்ச்சி அலை இம்மூன்றும் கூடிய இசையே இசை எனக் கொண்ட நயம் எத்தனை உயர்வுடையது! தத்துவங் கடந்த பொருளைக் கடவுள் என்ற உயர்பண்பு இதனிலும் காணப்படுகிறதன்றோ! இப் பண்பு, இன்றும் கெடாது தமிழிசை தனித் தமிழிசையாய் நிலவவேண்டுமாயின், அது தமிழியக்கம் தமிழரியக்கம், தமிழிலக்கிய இயக்கம் ஆகிய அனைத்துடனும் சேர்ந்து ஒன்றுபடுதல் வேண்டும். தமிழ்ப் பண்பற்ற பிற்றைச் சேர்ப்புகளுக்கு - தமிழில் ஊறித் தமிழ்மணம் வீசா வெற்றாரவாரச் சொற்களுக்கு அல்லது நடைக்குத் துணையும் முதன்மையும் தாராது, தமிழர் குருதிச்சூட்டில் விளைந்த தனித்தமிழிசையே பயிலுதல் வேண்டும். அதுவும் தமிழரிடை வேற்றுமை காட்டாத நிலையில், தமிழரிடை ஒரு சாராரையோ, பல சாராரையோ விலக்கித் தம் நலம் பேணுபவர், அல்லது பொதுநலத்துக்காகத் தம் நலத்தை விட்டுக் கொடுக்க மறுக்கும் குழுவினர் கைப்பட்டு அவர்கள் கருவியாகாமல், அது தமிழர், உண்மைத் தமிழரிடைப் பிறப்பு வேற்றுமையறப் பாடுபடும் தமிழர், அல்லது அவ்வேற்றுமை அறும்வரை மேலீடான ஒப்புமை வேதாந்தம் பேசிப் பசப்பி வலியவர் கீழ் மெலியவரைக் கிடத்திவிட்டு வைத்தல் வேண்டும் என்று முயலாத தமிழராலேயே பேணப்பெறுதல் வேண்டும். அத்தகைய தமிழிசை - தமிழர் என்ற அகன்ற அடித்தளத்தையும், தமிழ்ப் பண்பு என்ற உயர் கொடுமுடியையும், தமிழர் வாழ்வு என்ற அளவிட முடியா மேடு பள்ளங்களையும், இயற்கைக் காட்சிகளையும் உடைய பெரிய இசை மலையாய்த் தமிழர் நலங்களாகிய ஊற்றுகளுக்கும் தமிழர் வண்மையாகிய ஆறுகளுக்கும் பிறப்பிடமாய், தமிழன்பு என்ற கடலில் அவ்வாறுகளைச் சேர்த்துத் தமிழறிவு என்ற முகிற்குலத்தால் மீண்டும் அன்புநீர் மொண்டு பெய்யப் பெற்றுத் தமிழ்வாழ்வு வளம்பெற ஓங்குதல் வேண்டும். “அந்நாளே தமிழ் வாழ்வின் நன்னாள்; தமிழ் நாட்டினர் வாழ்வின் பொன்னாள்!” அதை அடைய நாம் உயிர்ப்புடன் முயல்வோமாக! தமிழ் வாழ்க! அடிக்குறிப்பு 1. இவ்விடத்தில், கோநகர்ஆண்டுவிழாவின் போது தலைமை தாங்கிய புரட்சிக் கவிஞர் திரு. பாரதிதாசன் அவர்கள் உரை குறிப்பிடத்தக்கது. அவர்கள் கூறியதாவது:- காலஞ்சென்ற பாரதியார் தமிழிசைக்குப் பகைமையாக இரண்டு பொருள்களைக் குறிப்பிடுவார். ஒன்று ஆர்மோனியப் பெட்டி, மற்றது தியாகையர் கீர்த்தனங்கள். இவற்றுள் பின்னது கவிதைகளுக்கும் இசைக்கும் பேரிழுக்கான ஒரு குறை உடையது. செய்யுளுக்கும் இசைக்குமாகச் சொற்களை நற்புலவர்கள் சுக்குமி ளகுதிப் பிலி என்று பிரிக்கக்கூடாது. தியாகையர் தெலுங்கர் தெலுங்கிற்கும் அன்னியர் ஆதலால், பொருள் கெட்டுப் பாவம் சிதையும்படி சொற்களைப் பெய்திருக்கிறார். தொகுக்கப்பட்ட அப்பாத்துரையார் நூல்கள் கால வரிசையில் 1. குமரிக் கண்டம் 1940-43 2. நாத்திகர் யார்? ஆத்திகம் எது? 1943 3. இராவணன் வித்தியாதரனா? 1943 4. கால்டுவெல் ஒப்பிலக்கணம் 1944 5. கெஞ்சி 1944 6. தளவாய் அரியநாத முதலியார் 1944 7. சிறுகதை விருந்து 1945 8. மேனாட்டு கதைக் கொத்து 1945 9. சேக்சுபியர் கதைகள் 1945, 1950, 1954 10. கிருட்டிண தேவராயர் 1946 11. வருங்காலத் தமிழகம் 1946 12. சங்க காலப் புலவர்கள் 1946 13. டேவிட் லிவிங்ஸ்டன் 1946 14 போதும் முதலாளித்துவம் 1946-47 15. குடியாட்சி 1947 16. ஆங்கிலப் புலவர் வரலாறு 1947 17. சமதரும விளக்கம் 1947 18. இரவிவர்மா 1949 19. சுபாசு சந்திரபோசு 1949 20. சங்க இலக்கிய மாண்பு 1949 21. காதல் மயக்கம் 1949 22. பெர்னாட்சா 1950 23. தாயகத்தின் அழைப்பு 1951 24. ஐக்கிய நாடுகளின் அமைப்பு 1952 25. பொது உடைமை 1952 26. சமூக ஒப்பந்தம் 1952 27. ஆங்கில தமிழ் அகராதி 1952 28. வருங்காலத் தலைவர்கட்கு 1952 29. சமூக ஒப்பந்தம் 1952 30. பொது உடைமை 1952 31. ஐன்ஸ்டீன் 1953 32. எண்ணிய வண்ணமே 1953 33. ஜேன் அயர் 1954 34. நிழலும் ஒளியும் 1954 35. தென்னாடு 1954 36. *தென்னாட்டுப் போர்க்களங்கள் 1954 37. ஐனேயை’ள டுயபேரயபந யீசடிடெநஅ 1954 38. டாம் பிரெணின் பள்ளி வாழ்க்கை 1955 39. தென்மொழி 1955 40. திராவிடப் பண்பு 1955 41. நீலகேசி 1955 42. கட்டுரை முத்தாரம் 1956 43. வாழ்வாங்கு வாழ்தல் 1956 44. இதுதான் திராவிட நாடு 1956 45. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழகம் 1956 46. ஹோரேஸ் வால்போல் கடிதங்கள் 1956 47. கதை இன்பம் 1956 48. அறிவுச் சுடர் 1956 49. பொன்னின் தேட்டம் 1957 50. பெஞ்சமின் பிராங்ளின் 1957 51. வாழ்க 1957 52. உலகம் சுற்றுகிறது 1957 53. பேரின்பச் சோலை 1957 54. கன்னியின் சோதனை 1957 55. நல்வாழ்வுக் கட்டுரைகள் 1957 56. திருநிறை ஆற்றல் 1957 57. செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள் 1957 58. வியப்பூட்டும் சிறுகதைகள் 1957 59. மன்பதைக் கதைகள் 1957 60. மக்களும் அமைப்புகளும் 1957-58 61. மருதூர் மாணிக்கம் 1958 62. சிலம்பு வழங்கும் செல்வம் 1958 63. மணிமேகலை 1958 64. சரித்திரம் பேசுகிறது 1959 65. வள்ளுவர் நிழல் 1959 66. காரல் மார்க்சு 1960 67. தமிழன் உரிமை 1960 68. மேனாட்டு இலக்கியக் கதை 1960 69. இரு கடற்கால்கள் 1960 70 வாடாமல்லி 1960 71. இருதுளிக் கண்ணீர் 1960 72. காரல் மார்க்ஸ் 1960 73. மலைநாட்டு மங்கை 1961-62 74. புதியதோர் உலகம் செய்வோம் 1962 75. யாழ் நங்கை 1963 76 வளரும் தமிழ் 1964 77. கன்னடநாட்டின் போர்வாள் ஐதரலி 1964 78. வெற்றித் திருநகர் 1964 79. மொழிவளம் 1965 80 குழந்தை உலகம் 1967 81. செந்தமிழ்ச் செல்வம் 1968 82. கொங்குத் தமிழக வரலாறு 1983 83. இந்துலேகா 1988 முதற் பதிப்பிற்கான ஆண்டு இல்லாத நூல்கள் மறுப்பதிப்பு செய்த ஆண்டு விவரம்: 1. தமிழ் முழக்கம் 2001 2. இன்பத்துள் இன்பம் 2001 3. இந்திய மக்கள் விடுதலை வரலாறு 2002 4. வாழும் வகை 2002 5. உலக இலக்கியங்கள் 2002 6. ஈலியாவின் கட்டுரைகள் 2002 7. பிறமொழி இலக்கிய விருந்து -1 2003 8. பிறமொழி இலக்கிய விருந்து 2 2006 9. சிறுவர் கதைக் களஞ்சியம் 1 2002 10. சிறுவர் கதைக் களஞ்சியம் 2 2002 11. சிறுவர் கதைக் களஞ்சியம் 3 2002 12. சிறுவர் கதைக் களஞ்சியம் 4 2002 13. சிறுவர் கதைக் களஞ்சியம் 5 2002 * தென்னாட்டுப் போர்க்களங்கள் எனும் நூல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொருள் அடிப்படையில் தொகுக்கப்பட்ட அப்பாத்துரையம் தமிழ் - தமிழர் -- தமிழ்நாடு முதல் பதிப்பு மறுபதிப்பு 1. வருங்காலத் தமிழகம் 1946 2002 வளரும் தமிழ் 1964 2006 தமிழ் முழக்கம் --- 2001 2 தென்மொழி 1955 2001 தமிழன் உரிமை 1960 2001 3. சரித்திரம் பேசுகிறது 1959 2002 மொழிவளம் 1965 2001 4. புதியதோர் உலகம் செய்வோம் 1962 2001 (அறப்போர் பொங்கல் மலர்) வரலாறு 5. சங்க காலப் புலவர்கள் 1945 2003 தளவாய் அரியநாத முதலியார் 1944 2003 கிருட்டிண தேவராயர் 1946 2003 இரவிவர்மா 1949 2003 6. சுபாசு சந்திரபோசு 1949 2003 கன்னடநாட்டின் போர்வாள் ஐதரலி 1964 2003 7. டேவிட் லிவிங்ஸ்டன் 1946 2003 ஐன்ஸ்டீன் 1953 2003 ஜேன் அயர் 1954 2003 8. பெர்னாட்சா 1950 2003 டாம் ப்ரெணின் பள்ளி வாழ்க்கை 1955 2002 9. பெஞ்சமின் பிராங்ளின் 1957 2008 10. குடியாட்சி 1947 2006 ஐக்கிய நாடுகளின் அமைப்பு 1952 --- இரு கடற்கால்கள் 1960 2002 11. தென்னாடு 1954 2006 இதுதான் திராவிட நாடு 1956 --- 12. இந்திய மக்கள் விடுதலை வரலாறு --- 2002 13. வெற்றித் திருநகர் 1964 2003 14. கொங்குத் தமிழக வரலாறு 1983 2002 ஆய்வுகள் 15. சங்க இலக்கிய மாண்பு 1949 2002 சிலம்பு வழங்கும் செல்வம் 1958 2001 இன்பத்துள் இன்பம் --- 2001 16. தென்னாட்டுப் போர்க்களங்கள் -1 1954 2003 17. தென்னாட்டுப் போர்க்களங்கள் -2 1954 2003 18. வாழ்க 1957 2001 உலகம் சுற்றுகிறது 1957 2007 19. மணிமேகலை 1958 2002 செந்தமிழ்ச் செல்வம் 1968 2001 வள்ளுவர் நிழல் 1959 2001 மொழி பெயர்ப்பு 20. குமரிக் கண்டம் 1940-43 2002 21. கால்டுவெல் ஒப்பிலக்கணம் 1944 --- திராவிடப் பண்பு 1955 2014 22. கெஞ்சி 1944 -- 23. பிறமொழி இலக்கிய விருந்து -1 --- 2006 எண்ணிய வண்ணமே 1953 --- 24. பிறமொழி இலக்கிய விருந்து 2 --- 2003 25. தாயகத்தின் அழைப்பு 1952 --- காதல் மயக்கம் 1949 --- 26 . 1800ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் 1956 2001 27. ஹோரேஸ் வால்போல் கடிதங்கள் 1956 2002 செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள் 1957 2002 ஈலியாவின் கட்டுரைகள் --- 2002 28. நீலகேசி 1955 2003 வாழ்வாங்கு வாழ்தல் 1956 கன்னியின் சோதனை 1957 2002 யாழ் நங்கை 1963 --- 29. பேரின்பச் சோலை 1957 2003 30. வாடாமல்லி 1960 2004 31. மலைநாட்டு மங்கை 1961-62 2007 இந்துலேகா 1988 2003 இளையோர் வரிசை 32. சிறுவர் கதைக் களஞ்சியம் -1 --- 2002 குழந்தை உலகம் 1967 1982 33. சிறுவர் கதைக் களஞ்சியம் - 2 --- 2002 34. சிறுவர் கதைக் களஞ்சியம் - 3 --- 2002 35. சிறுவர் கதைக் களஞ்சியம் - 4, --- 2002 கதை இன்பம் 1956 --- 36. சிறுவர் கதைக் களஞ்சியம் -5 --- 2002 37. சேக்சுபியர் கதைகள் - 1 --- 2002 சேக்சுபியர் கதைகள் - 2 --- 2002 38. சேக்சுபியர் கதைகள் - 3 --- 2002 சேக்சுபியர் கதைகள் - 4 --- 2002 39. பொன்னின் தேட்டம், 1957 2002 மன்பதைக் கதைகள், 1957 2002 மருதூர் மாணிக்கம் 1958 2004 40. மேனாட்டு இலக்கியக் கதைகள் 1960 2002 மேனாட்டுக் கதைக் கொத்து, 1945 2002 சிறுகதை விருந்து, 1945 --- வியப்பூட்டும் சிறுகதைகள் 1965 --- பொது 41. அறிவுச் சுடர் 1951 2004 மக்களும் அமைப்புகளும் 1957-58 --- நிழலும் ஒளியும் 1949 --- நாத்திகர் யார்? 1943 --- இராவணன் வித்தியாதரனா? 1943 --- 42. கட்டுரை முத்தாரம் 1956 வாழும் வகை --- 2002 43. நல்வாழ்வுக் கட்டுரைகள் 1957 2002 திருநிறை ஆற்றல் 1957 2004 44. போதும் முதலாளித்துவம் 1946-47 இருதுளிக் கண்ணீர், 1960 உலக இலக்கியங்கள் --- 2002 45. காரல் மார்க்சு 1960 சமூக ஒப்பந்தம் 1952 பொது உடைமை 1952 ஆங்கிலப் புலவர் வரலாறு 1947 46. சமதரும விளக்கம் 1947 2002 வருங்காலத் தலைவர்கட்கு 1952 2002 47. ஆங்கிலம் தமிழ் அகராதி 1952 --- 48. ஐனேயை’ள டுயபேரயபந யீசடிடெநஅ 1954 --- கீழ்க்கண்ட நூல்கள் வெளிவந்தும் எங்களுக்கு கிடைக்ககாத காரணத்தால் தொகுப்பில் இடம்பெறவில்லை 1. அன்னை அருங்குண 2. அலிபாபா 3. அன்பின் வெற்றி(கழகம்) 4. சிந்தாமணி இன்பம் 5. காங்கிரசு வரலாறு 6. கூப்பர் கடிதங்கள் 7. சிங்காரச் சிறு கதைகள் 8. சேரன் வஞ்சி 9. காங்கிரசுக்கு ஏன் ஓட்டு செய்ய வேண்டும் 10. இல்லற மாண்பு 11. இருகுழந்தைகள் (ஆசிரியர் கழகம்) 12. கழகச் சிறுகதைகள்(கழகம்) 13. கிருட்டிணதூது சருக்கம் (முத்தமிழ்) 14. மதம் அவசியமா? 15. மேவிழா முழக்கம் 16. ஊழ் கடந்த மூவர்(ஆசிரியர் கழகம்) 17. பாலநாட்டுச் சிறு கதைகள் (ஆசிரியர் கழகம்) 18. புத்தரின் சிறு கதைகள்( கழகம்) 19. திருக்குறள் மணி விளக்க உரை 20. தென்னகப் பண்பு 21. துன்பக்கேணி 22. உயிரின் இயல்பு 23. வகுப்புவாதிகள் யார்? 24. வின்ஸ்ட்டன் சர்ச்சில் 25. வீர அபிமன்யு(ஆசிரியர் கழகம்) 26. யுத்தக் கதைகள் 27. கூhந ஆiனே யனே ழநயசவ டிக கூhசைரஎயடடரஎயச தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட தொகுப்பு நூல்களின் விவரம் வ. எண். தொகுப்பு நூல்கள் 1. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் 22 நூல்கள் 2. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20 நூல்கள் 3. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை 21 நூல்கள் 4. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் 40 நூல்கள் 5 திரு.வி.க. தமிழ்க்கொடை 26 நூல்கள் 6. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் 39 நூல்கள் 7. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52 நூல்கள் 8. தொல்காப்பியம் (உரைகளுடன்) 15 நூல்கள் 9. உரைவேந்தர் தமிழ்த்தொகை 28 நூல்கள் 10. கருணாமிர்த சாகரம் 7 நூல்கள் 11. பாவேந்தம் 25 நூல்கள் 12 புலவர் குழந்தை படைப்புகள் 16 நூல்கள் 13. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் 24 நூல்கள் 14. கவியரசர் முடியரசன் படைப்புகள் 13 நூல்கள் 15. செவ்விலக்கிய கருவூலம் 15 நூல்கள் 16. இராகவன் நூற்களஞ்சியம் 16 நூல்கள் 17. தமிழக வரலாற்று வரிசை 12 நூல்கள் 18 சதாசிவப் பண்டாரத்தார் 10 நூல்கள் 19. சாமிநாத சர்மா நூல்திரட்டு 31 நூல்கள் 20. ந.சி.க. நூல் திரட்டு 24 நூல்கள் 21. தேவநேயம் 13 நூல்கள் 22. மறைமலையம் 34 நூல்கள் 23. மாணிக்க விழுமியங்கள் 18 நூல்கள் 24. நாவலர் சோமசுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் 5 நூல்கள் 25. ஐம்பெருங் காப்பியங்கள் 5 நூல்கள் 26. பதினெண் கீழ்க்கணக்கு 3 நூல்கள் 28. நீதி நூல்கள் 2 நூல்கள் 29. முதுமொழிக் களஞ்சியம் 5 நூல்கள் 30. உவமைவழி அறநெறி விளக்கம் 3 நூல்கள் 31. செம்மொழிச் செம்மல்கள் 2 நூல்கள் 32. குறுந்தொகை விளக்கம் (இராகவன் ஐயங்கார்) 1 நூல் 33. சுப்புரெட்டியார் - 3 நூல்கள் அகராதிகள் 34. தமிழ் இலக்கணப் பேரகராதி (கோபாலையர்) - 18 நூல்கள் 35. யாழ்ப்பாண அகராதி - 2 நூல்கள் 36. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதி - 3 நூல்கள் 37. ந.சி. கந்தையா அகராதிகள் - 2 நூல்கள் 38. இளங்குமரனார் அகராதிகள் - 2 நூல்கள் புதிய வெளியீடுகள் 39. வள்ளுவ வளம் 5 நூல்கள் 40. இளவரசு 4 நூல்கள் 41. செந்தமிழ் ஓர் அறிமுகம் 1 நூல் 42. பாரத வெண்பா 1 நூல் 43. சிந்துநாகரிகம் புதிய ஒளி 1 நூல் 44. உலகில் தமிழினம் 1 நூல் பி. இராமநாதன் 9 நூல்கள் 1. தமிழரின் தோற்றமும் பரவலும் 2. தமிழ நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் 3. தொன்மைச் செம்மொழித் தமிழ் 4. தமிழர் வரலாறு கி.பி. 600 வரை 5. தமிழர் வராறு இன்றைய நோக்கில் 6. உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ் 7. இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகள் 8. பன்னாட்டு அறிஞர்களின் பார்வையில் தமிழும் தமிழரும் 9. தமிழுக்குத் தொண்டு செய்த பிறநாட்டு அறிஞர்கள்