தேவநேயம் 3 பதிப்பாசிரியர் புலவர். இரா. இளங்குமரன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு நூற்பெயர் : தேவநேயம் - 3 தொகுப்பாசிரியர் : புலவர். இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2004 மறுபதிப்பு : 2015 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 8 + 312 = 320 படிகள் : 1000 விலை : உரு. 300/- நூலாக்கம் : பாவாணர் கணினி தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காராவேலர் தெரு தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 மொழி மீட்பின் மீள் வரவு தனித் தமிழ் வித்தை ஊன்றியவர் கால்டுவெலார். அதை முளைக்கச் செய்தவர் பரிதிமால் கலைஞர்; செடியாக வளர்த்தவர் நிறைமலையாம் மறைமலையடிகள்; மரமாக வளர்த்து வருபவன் யானே என்ற வீறுடையார் பாவாணர். கிறித்து பெருமான் சமய மீட்பர்; காரல்மார்க்கசு பொருளியல் மீட்பர்; மொழிமீட்பர் யானே என்னும் பெருமித மிக்கார் பாவாணர். ஆரியத்தினின்று தமிழை மீட்பதற்காக யான் அரும்பாடு பட்டு இலக்கிய இலக்கண முறையோடு கற்ற மொழிகள் முப்பது என்று எழுதிய பெருமிதத் தோன்றல் பாவாணர். மாந்தன் தோன்றியது குமரிக் கண்டத்திலேயே; அவன் பேசிய மொழியே உலக முதன்மொழி; ஆரியத்திற்கு மூலமும், திரவிடத்துக்குத் தாயும் தமிழே என்னும் மும்மணிக் கொள்கைளை நிலை நாட்டிய மலையன்ன மாண்பர் பாவாணர். அவர் சொல்லியவை எழுதியவை அனைத்தும் மெய்ம்மையின் பாற்பட்டனவே என இன்று உலக ஆய்வுப் பெருமக்களால் ஒவ்வொன்றாக மெய்ப்பிக்கப்பட்டு வருதல் கண்கூடு. இருபதாம் நூற்றாண்டைத் தம் ஆய்வு மதுகையால் தேவநேய ஊழி ஆக்கிய புகழும் வேண்டாப் புகழ் மாமணி தேவநேயப் பாவணர். அவர் மொழியாய்வுச் செய்திகள் ஒரு நூலில், ஓர் இதழில், ஒரு மலரில், ஒருகட்டுரையில், ஒரு கடிதத்தில், ஒரு பொழிவில் ஓர் உரையாடலில் அடங்கியவை அல்ல. கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாக அவற்றை யெல்லாம் தொகுத்து அகர நிரலில் தொகுக்கப்பட்ட அரிய தொகுப்பே தேவநேயம் ஆகும். நெட்ட நெடுங்காலமாகத் தேவநேயத்தில் ஊன்றிய யான் அதனை அகர நிரல் தொகையாக்கி வெளியிடல் தமிழுலகுக்குப் பெரும்பயனாம் என்று எண்ணிய காலையில், தமிழ் மொழியையும் தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தையும் தாங்கிப் பிடித்து ஊக்கும் - வளர்க்கும் - வண்மையராய் - பாவாணர்க்கு அணுக்கராய் - அவரால் உரையும் பாட்டும் ஒருங்கு கொண்ட பெருந்தொண்டராய்த் திகழ்ந்த சிங்க புரிவாழ் தமிழ்த்திரு வெ. கோவலங்கண்ணனார் அவர்கள் தமிழ் விழா ஒன்றற்காகச் சென்னை வந்த போது யானும், முனைவர் கு. திருமாறனாரும் சந்தித்து அளவளாவிய போது இக்கருத்தை யான் உரைக்க உடனே பாவாணர் அறக்கட்டளை தோற்று விப்பதாகவும் அதன் வழியே தேவநேயம் வெளிக் கொணரலாம் எனவும் கூறி அப்பொழுதேயே அறக்கட்டளை அமைத்தார். தேவநேயர் படைப்புகள் அனைத்திலும் உள்ள சொல்லாய்வுகளைத் திரட்டி அகர நிரல் படுத்திப் பதின்மூன்று தொகுதிகள் ஆக்கினேன். பதிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது; அச்சிடும் பொறுப்பு, பாவாணர் பல காலத்துப் பலவகையால் வெளியிட்ட நூல்களையும் கட்டுரைகளையும் ஒருங்கே தொகுத்து ஒரே நேரத்தில் வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் நாடு மொழி இனப் போராளி கோ. இளவழகனாரிடம் ஒப்படைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அத்தேவநேயம் தமிழ் ஆய்வர், தமிழ் மீட்பர் அனைவர் கைகளிலும் இருக்க வேண்டும் என்னும் வேணவாவால் மீள்பதிப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடுகிறது. பாவாணர் அறக்கட்டளை நிறுவிய கோவலங்கண்ணனார் புகழ் உடல் எய்திய நிலையில், அவர் என்றும் இறவா வாழ்வினர் என்பதை நிலைப்படுத்தும் வகையில் அவர்க்குப் படையலாக்கி இப்பதிப்பு வெளிப்படுகின்றது. மொழி இன நாட்டுப் பற்றாளர் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல், பல் பதிப்புகள் காண வேண்டும். வருங்கால இளைஞர்க்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும். அதற்குத் தூண்டலும் துலக்கலுமாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் மீட்டெடுப்புப் பற்றுமையரும் தொண்டரு மாவர். வெளியீட்டாளர்க்கும் பரப்புநர்க்கும் பெருநன்றியுடையேன். வாழிய நலனே! இன்ப அன்புடன் வாழிய நிலனே! இரா. இளங்குமரன் பதிப்புரை 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுப்பதற்காகத் தம் வாழ்வின் முழுப் பொழுதையும் செலவிட்டவர். திராவிட மொழிகளுக்குத் தாய்மொழித் தமிழ், இந்திய மொழிகளுக்கு மூலமொழித் தமிழ், உலக மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ் என்பதைத் தம் பன்மொழிப் புலமையால் உலகுக்கு அறிவித்தவர். இவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு சேர தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டதைத் தமிழ் உலகம் அறியும். முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பாவாணர் வழி நிலை அறிஞர். வாழும் தமிழுக்கு வளம் பல சேர்ப்பவர். பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேவநேயம் என்னும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்கொள்ளும் வகையில் தொகுத்துத் தந்துள்ளார். இத்தேவநேயத் தொகுப்புகள் தமிழர்களுக்குக் கிடைத்த வைரச்சுரங்கம். இத் தொகுப்புகளை வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம். அறிஞருலகமும், ஆய்வுலகமும் இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை வாங்கிப் பயன் கொள்வீர். - பதிப்பாளர் கோ. இளவழகன் உள்ளுறை உவக்காண் 1 உவமை 1 உழவுங் கைத்தொழிலும் 10 `உள் என்னும் வேர்ச்சொல் 14 உள்ளீட்டு வகை 20 உற்கம் 20 உறங்கும் நிலைகள் 21 உறுப்பு வகை 21 உறைக்காலம் 21 ஊக்கமின்மை வகை 42 ஊகாரச் சுட்டு 1 முன்மையியல் 43 ஊகாரச் சுட்டு 2முன்னுறவியல் 48 ஊகாரச் சுட்டு 3 முற்செலவியல் 56 ஊகாரச் சுட்டு 4 மேற்செலவியல் 68 ஊகாரச் சுட்டு 5 நெருங்கலியல் 85 ஊகாரச் சுட்டு 6 தொடுதலியல் 87 ஊகாரச் சுட்டு 7 கூடலியல் 90 ஊகாரச் சுட்டு 8 வளைதலியல் 200 ஊகாரச் சுட்டுக் கருத்து வளர்ச்சி 255 ஊங்கு 257 ஊசி 257 ஊட்டி 258 ஊதா மணி விளையாட்டு 258 `ஊது என்னும் ஒலிக் குறிப்புச் சொல் 259 ஊதை (வாதம்) முதலியன 263 ஊர் 263 ஊர்ப்பெயர் 264 ஊருணி 265 ஊழ் 265 ஊறு 265 எகர ஒகர இயற்கை 265 எச்சம் 276 எண்டிசைத் தலைவர் 276 எண்பெரும் பெற்றி - அட்டமாசித்தி 277 எண்வகை ஒக உறுப்புகள் 277 எண் வேறுபாடு 277 எதிர்மறையின் எதிர்மறை 278 எது தேவமொழி? 278 எருமை 281 எல்லரி 281 எல்லா 281 எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியா? 288 எழுத்தமைப்பு 297 எழுத்து 297 எழுதுதல் 297 எழுதீவுகள் 298 எழுபிறப்பு 298 எள்ளுதல் 298 என் உலக்கை குத்துக் குத்து விளையாட்டு 298 `ஏ என்னும் இரு வேர்ச் சொற்கள் 299 ஏகாரச்சுட்டு 304 ஏகார விடைச்சொல் 311 ஏதம் 311 ஏது 311 ஏமப்புணை 312 உவக்காண் உந்த இடம் உவ என்றது ஒரு சில அடித் தொலையே உள்ள முன்னிலை இடம். இம் முன்மைச் சுட்டு இற்றைத் தமிழகத்தில் வழக் கிழந்தது. (தி.ம.1185) உவமை உவமை -உபமா உத்தல் - பொருந்துதல், உ-ஓ-ஓப்பு- ஒப்புமை. உ- உவ் -உவ. உவத்தல் = ஒத்தல், விரும்புதல், மகிழ்தல். உவ-உவமை. உவ-உவகை. உவமை=ஒப்பு (திவா). மகிழ்ச்சிக்கு விருப்பமும் விருப்பத்திற்கு மனப்பொருத்தமுங் காரணமாம். நாட, விழைய, வீழ என்னும் உவமவுருபுகள் விருப்பக் கருத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. உவமை என்னுஞ் சொல் விருப்பப் பொருளை உணர்த்துவது மட்டுமன்றி, ஒப்புமைப் பொருளை இயல்பாகக் கொண்டும் உள்ளது. உவமை- உவமம்- உவமன் ஓ.நோ : பருமை - பருமம் - பருமன் முழுமை - முழுமம்- முழுமன் - முழுவன் உவமை - உவமி. ஒ. நோ: ஒருமை - ஒருமி. உவமித்தல் = ஒப்பாக்குதல், ஒப்பாகக் கொள்ளுதல், ஒப்பிடுதல் - தொல்காப்பியத்தில் ஆளப் பெற்ற வடிவம் உவமம் என்பதே. (வ.வ.) உவமை என்னுஞ் சொல் வடமொழியில் உபமா என்று திரியும். அதை உப+மா என்று பிரித்து இருசொற் கூட்டாக்கி, ஒத்த அளவு என்று பொருள் கூறுவர். உப=உடன். மா=அளவு. தமிழில், உவமை என்பது., உப என்றும் முதனிலையும் மை என்னும் ஈறுங்கொண்ட ஒரு சொல்லே. இருக்கு வேதத்தில், உபமா என்பது கூட்டுச் சொல்லாயிருந்து முன் சொல்லிற் பொருள் சிறந்து, அளத்தில். பங்கிடுதல், அளித்தல் என்று பொருள்பட்ட தாகத் தெரிகின்றது, சதபத பிராமணம், மகாபாரதம் முதலிய பின்னூல்களில், அது தமிழ்த் தொடர்பினால் ஒப்புமைப் பொருள்பெற்று விட்டது. ஒப்பு, ஒப்புப் பொருள் என இருகூறு கொண்டது உவமை என்னும் அணி, ஒப்பு உவமம் என்றும் ஒப்புப் பொருள் பொருள் என்றும் தமிழ்ற் சொல்லப்பெறும், வடமொழியார், பிற்காலத் தில் பிரமாண(ம்)- பிரேமேய(ம்) என்னும் முறையில், உவமத் திற்கும் பொருளுக்கும் உபமான- உபமேய என்னும் சொல் லிணையை ஆக்கிக் கொண்டனர். இதிலும், மான என்பது அளவு குறித்த மானம் என்னும் தென்சொல்லே. (வ.வ: 96-97) உவமையாகு பெயர் ஆட்டுக் கொம்பு (அவரை) காக்கைக் கால் (கெண்டி) கிளிமூக்கு (மாங்காய்) குருவித்தலை (மதிலுறுப்பு) (சொல்.16) உவமை தென்சொல்லே ஆங்கிலக் கல்வியும் அறிவியல் ஆராய்ச்சியும் நம் நாட்டில் புகுந்து ஒன்றரை நூற்றாண்டும், தமிழ் தனி வளமொழியெனக் கால்டுவெல் கண்காணியார் நாட்டி ஒரு நூற்றாண்டும் ஆகியும் இன்றும் தமிழின் தனித்தன்மையைப் பற்றிப் பல பேராசிரியரும் ஐயுற்று வருவதால் ஒவ்வொரு தமிழ்ச் சொல்லையும், வேரும் ஆக்கமும் காட்டி இன்னின்னது தென் சொல்லே யென நாட்ட வேண்டும் நிலைமை நேர்ந்துள்ளது. கண்ணுதற் பெருங் கடவுளுங்கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்தஇப் பசுந்தமிழ் ஏனை மண்ணிடைச் சில இலக்கணவரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ! என்று பரஞ்சோதி முனிவர் பாடுமாறு தமிழிலக்கணம். தனிப்பட்டதாயும் பிற மொழிகட்கில்லாத பொருளிலக்கணத்தைத் தன்னகத்துக் கொண்டு தலைமை வாய்ந்ததாயும் கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்பே குமரி நாட்டில் தோன்றி வளர்ந்த தொன்மையுள்ளதாயும், இருந்தும் அதன் குறியீடுகளில் ஒன்றாகவும் பொருட் படல இயற்பெயர்களுள் ஒன்றாகவும் உள்ள உவமை என்னும் சொல் வட சொல்லா தென் சொல்லா என்னும் ஐயுறவிற்கு வடசொல்லே என்னும் வலிப்பிற்கும் சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் மிக்க இக்காலத்து இடந்தந்து நிற்பது மிகமிக இரங்கத்தக்க செய்தியாகும். உவமையென்னுஞ் சொல் ஒப்புமை யென்னுஞ் பொருளது. இப் பொருள் அதன் முழுவடிவில் மட்டுமின்றி அதன் அடிவேரான உகரத்திலேயே கருக் கொண்டுள்ளது. உகரமாகிய ஓரெழுத் தொரு மொழி ஒப்புமைக் கருத்துக் கொண்டி ருப்பதை உத்தி யென்னுஞ் சொல்லால் உணரலாம். உத்தல் = பொருந்துதல் உத்தி = பொருத்தம். மதிக்கும் அறிவிற்கும் பொருத்தமான செய்தி உத்தி எனப்படும். அவ்வுத்தியை அறியும் அகக்கரணத்தையும் உத்தி யென்பது ஆகுபெயர். நூலிற்கும் உரைக்கும் பயன்படும் உத்தி களான நெறிமுறைகள் முப்பத்திரண்டாகத் தொகுக்கப் பெற் றுள்ளன. இவ்வுத்தியை யுக்தி எனத் திரித்தாள்வர் வடநூலார். இரு கட்சியர் விளையாடும் எல்லா விளையாட்டுகளிலும் கட்சி யமைத்தற்கு இவ்விருவராய்ப் பொருந்தி வருவதை உத்தி கட்டுதல் என்பர். கட்டுதல் என்னும் சொல் வழக்கே உத்தியென் னும் சொற்குப் பொருத்தப் பொருளுண்மையை உணர்த்தப் போதிய சான்றாகும். கட்டுதல், பொருத்துதல், கள்ளுதல், பொருந் துதல், கள்ள என்பது பொருந்த என்று பொருள்படும் ஓர் உவம உருபு. கள்ளக் கடுப்ப ஆங்கவை எனாஅ என்று தொல் காப்பியங் கூறுதல் காண்க (1232) கள் என்னும் பகுதியினின்று பிறந்ததே களம் (கூட்டம். அவை) என்னும் தொகுதிப் பெயரும். கட்சி (கள்+சி) என்னும் பெயரும் இப்பகுதியதே. சென்னைப் பல்கலைக் கழக அகராதி விளையாட்டு உத்திச் சொல்லைத் தெலுங்குச் சொல்லென்று பிறழக்கொண்டதோடு, நூலுத்திச் சொல்லினின்று வேறுபட்ட தெனவுங் கூறியுள்ளது. உத்தி யென்பதனொடு தொடர்புற்ற உந்து என்றும் சொல் பொருந்துதற் பொருள்படுவது கவனிக்கத்தக்கது. தானந்தோறும் உந்திடுங் கரணம் என்பது சிவஞான சித்தியார். (4.34) தமிழில் ஏறத்தாழ முக்காற் பகுதி உகரவடிச் சொற்கள். உகரவடி, சொல்லாக்கத்தில் (1) முன்னைத் திரிபு (2) அள்ளைத் திரிபு (3) பின்னைத் திரிபு என மூவகைத் திரிபடையும், உகரம் ஊகார ஒகர ஓகாரங்களுள் ஒன்றாவது முன்னைத் திரிபு: உகரம் அகரமாவது அள்ளைத் திரிபு: உகரம் இகரமாவது பின்னைத் திரிபு: முன்னைத் திரிபு என்றும் மோனையாகவேயிருக்கும். எ-டு : புழை - பூழை குட்டு - கொட்டு முன்னைத் திரிபு முடங்கு - மடங்கு அள்ளைத் திரிபு புரள் - பிறழ் பின்னைத் திரிபு இவற்றுள் பின்னிரண்டும் மோனையாகவும் தொடரும். அவை அள்ளை மோனை, பின்னை மோனை எனப்படும். எ-டு : குளியம் - கூளி,கொள் - கோள் - முன்னை மோனை பசுமை - பாசி - பைமை - அள்ளை மோனை சிவன் - செய்யான் - சேயோன் - பின்னைமோனை குளியம் = உருண்டை, குழியம் = வளைதடி, கூளி= வளைந்ததாயுள்ள வாழை வகை, கொள்= வளைந்த காயுள்ள காணம், கொட்குதல் = வளைதல், சுற்றுதல், சுழலுதல், கோள் = வட்டம், கதிரவனைச் சுற்றும் கிரகம், கோள், கோண் = கோடு, குள் - கூள். உகரச் சொல் முதலாவது முன்மைக் கருத்தையும், பின்பு அதன் வழியாகப் பின்மை, உயர்ச்சி, ஒப்புமை, ஆகிய கருத்துகளையும் கொண்டுள்ளது. ஒப்புமைக் கருத்தில் உகரச் சொல் உ - ஓ - ஓ என மோனைத் திரிபடையும். ஒத்தல் போலுதல், ஒவியம் = ஒப்புமை பற்றிய வரைவுக்கலை. ஓ + தல் = ஒத்தல். ஓ + இயம் = ஓவியம். ஓகரவடி. பல மெய்களொடுஞ் சேர்ந்து பல ஒப்புமை அல்லது பொருந்தற் கருத்துச் சொற்களை உண்டுபண்ணும். ஒக்கல், ஓச்சை, ஒட்டு, ஒண்டு, ஒண்ணு, ஒத்து, ஒப்பு, ஒம்பு, ஒல்லு, ஒவ்வு, ஒற்று. ஒன்று, ஒன்னு ஆகிய சொற்களை நோக்குக. மொழி வளர்ச்சியில், சொற்கள் பல்குதற் பொருட்டு அறுவகைச் செய்யுள் திரிபுகளும் மூவகைப் புணர்ச்சி வேறுபாடுகளும் முக்குறைகளும். முச்சேர்க்கை களும் முன்னோரால் கையாளப் பெற்றுள்ளன. முச்சேர்க்கையாவன. முதற் சேர்க்கை இடைச் சேர்க்கை, கடைச் சேர்க்கை என்பன. ஒப்புமைக் கருத்துள்ள உகரச் சொல் கடைச் சேர்க்கையாக லகரமெய் பெற்றுப் பல்வேறு திரிபடைந்து பற்பல சொற்களைப் பிறப்பிக்கும். உல் - உள் - உடு - உடன் உடு - ஒடு - ஓடு ஓடுதல் = ஒத்தல், பொருத்துதல், கூடுதல், ஓட என்பது ஓர் உவம உருபு. ஓடப் புரைய என்றவை எனாஅ என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. (1232) ஓடாவி = ஓவியன். ஓடு - ஓட்டம் - ஆட்டம் = ஓப்பு குரங்காட்டம் ஓடுகிறான் என்னும் வழக்கை நோக்குக. ஒட்டை - உடன், ஒத்த. உல் - உர் - உறு- உறழ் உர் - உரி - உரிஞ் - உரிஞ்சு உர் - உர்- உரை- உராய். உல் அடியின் அள்ளைத் திரிபு உல் - அல். அல்லுதல் - பொருந்துதல், பின்னுதல், முடைதல். அல் - அள் - அளை அள் - அண் - அணவு, அணை அள் - அட்டு - அச்சு (ஒத்த பொருளமைக்குங் கருவி) அண் - அண்டு அத்து, அம் முதலிய சொற்களும் அள் அடியினின்று அமைந்தவையே, அத்துதல் - ஒட்டுதல். இணைத்தல். அம்- அமர்தல் - ஒத்தல். பொருந்துதல். உள் அடியின் பின்னைத் திரிபு உள் - இள், இண் - இணர், இணங்கு, இணை இள் - (இய்) - இயை - இசை இள் - இழை இய் - எய் - ஏய். ளகர மெய்யீறு பல சொற்களில் யகரமெய் யீறாகத் திரியும். எ-டு : தொள்- தொய். பொள் - பொய். வள் - வய் - வை = கூர்மை இழைதல் = உராய்தல், உளம் பொருந்துதல், ஒன்றிப் பழகுதல் எய்தல் = ஒத்தல் தேனெய் மார்பகம் (சீவக 2382) உகரச் சொல், முன்மைக் கருத்திலும் உயர்ச்சிக் கருத்திலும் வகரமெய்ச் சேர்க்கை பெறுவது போன்றே, ஒப்புமைக் கருத்திலும் பெறும். உவ், உவக்காண், உவை - முன்மைச்சுட்டு. உவ்வி (தலை) உவ, உவண், உவணை - உயர்ச்சிக் கருத்து (உவ்) - உவ - (உவர்) - இவர் - ஒப்புமைக் கருத்து, இவர்தல் = ஒத்தல். உவமை என்னுஞ் சொல் ஒப்புமைக் கருத்துள்ள உவ என்னும் முதனிலையினின்று பிறந்ததாகும், உவத்தல் என்னும் தொழிற் பெயர்க்கு விரும்புதல், பிரியமாதல், மகிழ்தல் என்னும் பொருள் களும் உவகை என்னும் தொழிற்பெயர்க்கு அன்பு, காமம், இன்பச் சுவை (சிருங்கார ரசம்) மகிழ்ச்சி என்னும் பொருள்களும், உவப்பு என்னும் தொழிற்பெயர்க்கு விருப்பம், மகிழ்ச்சி, பொலிவு, என்னும் பொருள்களும், பல்கலைக்கழகம் அகராதியிற் குறிக்கப் பட்டுள்ளன. மனம் ஒத்திராவிட்டால், விருப்பமும் அன்பும் காமமும் இன்பமும் மகிழ்ச்சியும் எங்ஙனம் நிகழும்? இவற்றிற் கெல்லாம் அடிப்படை உளம் ஒத்தல் அன்றோ! உவகை உவப்பு முதலிய சொற்கள் போன்றே உவமை என்பதும் தொழிற் பெயராகும், உவ என்னும் பகுதி தல், கை, பு, உ, மை, மம், மானம், என்னும் பல விகுதிகளை யேற்று முறையே உவத்தல், உவகை, உவப்பு, உவவு, உவமை, உவமம், உவமானம், என்னும் பல தொழிற் பெயர்களைத் தோற்றுவிக்கும், இவற்றுள் முதல் நான்கும், உவமைப் பொருள் இழந்துவிட்டன, அல்லது அவற்றை அப்பொருளில் ஆளும் இலக்கியப் பகுதிகள் இறந்துபட்டன. மம் ஒரு தொழிற் பெயரீறு என்பது, உருமம், பருமம், முதலிய சொற்களால் உணரலாம். உருத்தல், வெப்பமாதல், உருமம், வெப்பமான நண்பகல். மம் ஈறு மை யீற்றுத் திரிபெனக் கொள்ள இடமுண்டு. ஒ.நோ : செய்யாமை - செய்யாமல். செய்யாமை போனான். செய்யாமே போனான், செய்யாமற் போனான், என்னும் முத் தொடரும் ஒரு பொருளனவாதல் காண்க. மன்னுதிரு வண்ணா மலைச்சம்பந் தாண்டாற்குப் பன்னுதலைச் சவரம் பண்ணுவதேன் - மின்னின் இளைத்தவிடை மாதர் இவன்குடுமி பற்றி வளைத்திழுத்துக் குட்டா மலுக்கு என்னும் காளமேகர் பாடலில், குட்டாமல் என்பது குட்டா மலுக்கு என்று உருபேற்று வருவதால் செய்யாமல் என்னும் வாய்பாட்டு எதிர்மறை வினையெச்ச வடிவம், வினை எச்சமாய் ஆளப்படும். செய்யாமை என்னும் எதிர்மறைத் தொழிற் பெயரின் திரிபாயிருக்கலாம் என்று உய்த்துணரப் பெறும் அஃறிணைப் பெயர்களின் மகரவிறுதி னகரவிறுதியாவது பெரும்பான்மை யாதலால் உவமம் என்னும் பெயர் உவமன் என்று திரியும். ஓ.நோ : பருமம் - பருமன் தொழிற் பெயர் தடுமம் - தடுமன் திறம் - திறன் கடம் - கடன் பிற பெயர் விழுமம் என்னும் தொழிற் பெயர் விழு + மம் என்றும், விழுமு + அம் என்றும் பிரித்தற்கு இடந்தரும், ஆயின் உருமம், பருமம் என்பன இடந்தரா, விழுத்தல் = சிறத்தல், விழுமுதல் = சிறத்தல். மானம் என்னும் சொல் தொழிற் பெயரீறாய் வருவதை, அடைமானம், கட்டுமானம் தீர்மானம், படிமானம், பிடிமானம், பெறுமானம், வருமானம் முதலிய தொழிற் பெயர்களின்று அறிக. உவமை என்னும் பெயரினின்று உவமித்தல் என்னும் வினை பிறக்கும். ஒருமை என்னும் பெயரினின்னு ஒருமி-த்தல் என்னும் வினை பிறந்திருத்தல் காண்க, உவமித்தல், ஒன்றனை ஒன்றிற்கு ஒப்பாகக் கூறுதல். இங்ஙனமே, உவமானம் என்னும் பெயரினின்று உவமானி - த்தல் என்னும் வினை பிறக்கும். தீர்மானம் என்னும் பெயரினின்று தீர்மானி-த்தல் என்னும் வினை பிறந்திருத்தல் காண்க. தீர்மானம், முடிவு தீர்மானித்தல் முடிபு செய்தல், உவமானித்தல், உவமித்தல். உவப்பு என்னும் சொல் முற்கூறியவாறு உயர்ச்சிப் பொருளையுந்தரும். உவ - உவர் - இவர். இவர்தல் = உயர்தல், ஏறுதல் உவ - உவப்பு = உயரம், உவ-உவ-உகப்பு = உயர்வு உவ - உவண் = மேலிடம் உவண் - உவணை = தேவருலகம். உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை என்று தொல்காப்பியங் கூறுவதால் (1224) உயர்ந்த பொருளை ஒப்பாகக் கொள்வதே உவமையின் அடிப்படை நெறிமுறை என்று கொண்டு உவமைச் சொல்லிற்கு உயர்வுப் பொருள் கொள்வது பொருந்தாது. தொல்காப்பியம் உயர்ந்தது என்று குறித்தது. சிறந்தது என்னும் பொருளது. சிறப்பு, உயர்வு சிறப்பு, இழிவு சிறப்பு என இரு திறப்படும். உயர்ந்த பொருளுக்கு மிகவுயர்ந்த பொருளை யும் இழிந்த பொருளையும் உவமங்கூற வேண்டும் என்பதே தொல்காப்பியர் கருத்து. எ-டு: ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் கங்கையாற்றிலும் சாக்கடை கலந்து கங்கை நீராம் என்னும் எடுத்துக் காட்டுவமையில் மேலோர்க்குக் கங்கையும் கீழோர்க்குச் சாக்கடையும் உவம மாதல் காண்க. வேற்றுமை குறிக்கும் சொல் வேற்றுமை என்றே பெயர் பெற்றாற் போல் ஒப்புமைபற்றிய அணியும் ஒப்புமை குறிக்கும் சொல்லாலேயே அழைக்கப் பெறுதலே முறைமையாம். வடமொழியில் உபமா உபமான என்னும் இரு வடிவுகளே உள. இவை முறையே, உவமை, உவமானம், என்பவற்றின் திரிபுகள், உவமம், உவமன், உவமி, உவமானி என்னும் வடிவுகளும் சொற்களும் வடமொழியிலில்லை. அறியுங்கருவி அல்லது அளவைப் பெயர் ஆன என்று இறின். அதனால் அறியப்படும் பொருளின் பெயர் ஏய என்று இறுவது வடமொழி மரபு. எ-டு : ஞான(ம்) - ஞேய(ம்) அனுமான(ம்) - அனுமேய(ம்) பிரமாண(ம்) - பிரமேய(ம்) இம்முறைப்படி உபமானத்தினால் அறியப்படுவது உபமேய(ம்) என்றாயிற்று. இது பிற்கால வளர்ச்சி மானம் என்பது தனிநிலையில் அளவு என்று பொருள்படும் தூய தென்சொல். படியை இன்றும் மானம் என்பர் வடார்க்காட்டார். இதுகாறுங் கூறியவற்றால் உவமை தென் சொல்லே யென்றும் அது உவ என்னும் முதனிலையடிப் பிறந்த தொழிற் பெயரென் றும் அதன் அடிவேர் உகரச் சொல் என்றும் அதன் கண்ணும் ஒத்தற் கருத்து கொண்டுள்ளதென்றும் அதனால் அது அதனின்று மோனை அள்ளை பின்னைத் திரிபாகத் தோன்றியுள்ள ஒத்தற் கருத்துச் சொற்களையெல்லாம் தாங்கிநிற்கும் தனிப்பெரும் தூண் என்றும் அணி கட்கெல்லாந் தாயான உவமை யிலக்கணத் தையே அணியிலக்கணமாகவுங் கூறும் தொல்காப்பிய உவம இயல் வடமொழியில் பிற்காலத்து விரிவாகத் தோன்றிய அணி நூல்கட் கெல்லாம் மூலமென்றும் வரலாற்று அடிப்படையில் சொல்லாராச்சியும் மொழியாராய்ச்சியும் செய்தல் வேண்டு மென்றும் ஆராய்ச்சியின்றிக் குறடும் பேதையும் போலக் கொண்டது விடாமை ஆசிரியர்க் கழகன் றென்றும் அறிந்து கொள்க. உவமை தென் சொல்லே என்பதற்கு வேறு சில சான்றுகளுமுள. தமிழில் உவமை என்னும் சொல்லில் உவ என்பது வினைப் பகுதி; மை என்பது விகுதி; ஆகவே, உவ என்பதே உயிர்நாடி யான உறுப்பு. மை விகுதி, வந்தமை, வருகின்றமை என்பன போன்ற சொற்களில் தொழிற்பெயர் விகுதியாகவும், சிறுமை, பொறுமை என்பன போன்ற சொற்களில் தொழிற் பண்புப் பெயர் விகுதியாகவும், நன்மை, தீமை என்பன போன்ற சொற்களில் பண்புப் பெயர் விகுதியாகவும் இருக்கும். வடமொழியில் உபமா என்னும் சொல்லில் உப என்பது இடைச்சொல்லான முன்னொட்டு (உபசர்க்கம். Prefix) என்றும் மா என்பது அளவு குறித்த சொல்லென்றும் கொண்டு உபமா என்பதற்கு ஒத்த அளவு ஒன்றினைக் கொண்டு, ஒன்றை அளத்தல், ஒப்பு நோக்கு, ஒப்புமை, உவமை என முறையே பொருள் கூறப்படும். ஆகவே, மா என்பதே சிறந்த உறுப்பாம். இதனால் தமிழில் நிலைமொழி அல்லது பின் மொழிப் பொருள் சிறந்தும் வடமொழியில் வருமொழி அல்லது முன்மொழிப் பொருள் சிறந்தும் உள்ளன என்றும் தெளிவாம். உவமானம் என்னும் தமிழ்ச் சொல்லில் மானம் என்பது அடைமானம் (அடைவு) படிமானம் (படிவு) என்பவற்றிற்போல் ஒரு விகுதி. உபமான என்னும் வடசொல்லில், மான என்பது அளவு என்று பொருள்படுத்தப்படுஞ் சொல். இங்ஙனம் வேறுபட்டிருப்பதால், தமிழ் உவமை வேறு வட மொழி. உபமா வேறு என்று கருதற்க. இரண்டும் ஒன்றே வட மொழியில் உள்ள சொற்களெல்லாம் வடசொல்லேயென்று காட்டுதற்கு, அதில் உள்ள தென் சொற்களெல்லாம் பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும் பொருள் கூறுவதும், அதுவும் இயலாக்கால் இடுகுறி (ருடம்) என்று முத்திரையிட்டு விடுவதும், வடநூலார் வழக்கம். வெள்ளையான சிறு தவச வகையொன்றைக் குறிக்கும் சாமை என்னும் சொல்லைச் சியாமா என்று திரித்துக் கருப்பானது என்றும்; நன்றாய் எண்ணெயில் வெந்தபின் தின்னும் வடை வகை யொன்றைக் குறிக்கும் ஆமைவடை என்னும் சொல்லை ஆமவட எனத் திரித்து நன்றாக வேகாதது என்றும்; முகம் என்பதன் கடைப் போலியான முகன் என்னும் சொல்லை மு + கன் எனப் பிரித்து. தோண்டப் பெற்ற கிடங்கு போன்ற வாயையுடைய உறுப்பு என்றும், வடமுனையாய் தோன்றும் ஒருவகை நெருப்பைக் குறிக்கும் வடவை என்னும் சொல்லைப் படபா என்று திரித்து, அதனொடு முகம் என்பதைச் சேர்த்துப் படபாமுகம் என ஆக்கி, பெட்டைக் குதிரை முகம் போன்றது என்றும் பொருள் கூறுவார் வேறு என்தான் சொல்லார்! தொல்காப்பியத்திலும் தொன்னூல்களிலும் உவமை அணியிலக் கண முறையிற் கூறப்படாமல் பொருளிலக்கண முறையிலேயே கூறப்பட்டுள்ளது. தோழி, தலைவன் தலைவியொடு, சிறப்பாகத் தலைவனொடு உரையாடும் போது உள்ளுறையுவமம் ஏனை யுவமம் என்னும் இருவகை யுவமைகளையும் ஆளுவது மரபு. இவற்றை விளக்க எழுந்ததே உவமவியல், பிற்காலத்தில் வட நூலார் அணியிலக்கணம் வகுத்தபோது தமிழிலக்கண உவம வியலைப் பயன்படுத்திக் கொண்டதுடன் உவமை என்னும் பெயரையும் உபமா எனத் திரித்துக் கொண்டனர். தொல்காப் பியம் பாணினீயத்திற்கு முந்தியதென்னும் உண்மை ஒப்புக் கொள்ளப்படாவிடினும், தொல்காப்பியம் கடைக்கழகத் தொடக்கத் தெழுந்த வழிநூலாதலால் அதற்கு முந்திய அகத்தியம் முதலிய நூல்கள் வடமொழி இலக்கணங்கட்கு முதனூல் என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலும் ஐந்திரம் பாணி னீயம் முதலிய வடமொழி வியாகரணங்கள் எல்லாம் நன்னூல் போல் எழுத்தும் சொல்லும் ஆகிய இரண்டே கூறுவனவென் றும் தொல்காப்பியம் முதலிய தொன்னூல்கள் யாவும் எழுத்துச் சொற் பொருள் மூன்றையுங் கூறும் பிண்டங்கள் என்றும் வேறு பாடறிதல் வேண்டும். வடமொழியில், யாப்பிலக்கணம் சந்தசு அல்லது சந்தோபிசிதி என்னும் நூல்களிலும், அணியிலக்கணம் அலங்காரம் என்னும் நூல்களிலும் வேறாகக் கூறப்படும். தமிழிலோ, யாப்பும் அணியும் பொருளிலக்கணக் கூறுகள், அவை தனிநூற்களிற் கூறப்பட்டவிடத்தும், பொருள் இலக் கணக் கூறுகளாகவே என்றுங் கொள்ளப்பெறும். உவமை அணி கட்கெல்லாம் தாயாதலால், அணியிலக்கணம் உவமவியலில் அடக்கமாம். தொல்காப்பிய உவமவியலில் நால்வகை ஏனையுவமங்களுடன் ஐவகை உள்ளுறை உவமங்களும் கூறப் பெற்றுள்ளன; உவமை உறுப்புகள் மாணவர்க்கு எளிதாய் விளங்குவன வாதலால் கூறப் பெறவில்லை. ஆயின், எச்சவியலில் உவமத்தொகை கூறப்பட் டிருப்பதால் அதன் மறுதலையாகிய உவம விரியும் கூறாமல் கூறப்பட்டதாகக் கொள்ளப்பெறும். உவமம், உவமவுருபு, பொதுத்தன்மை, பொருள் என்னும் நான்கும் உவமை உறுப்புகளாம். இந்நான்கும் அமைவது விரியுவமை: உவம உருபு அல்லது உவமவுருபும் பொதுத் தன்மையும் குறைவது தொகையுவமை. வடமொழியில் இந் நான்கையும் முறையே, உபமான, உபம வாசக, சாதாரண தர்ம, உபமேய என்றும்: விரியுவமத்தைப் பூர்ணோபமா என்றும்; தொகையுவ மத்தை லுப்தோபமா என்றும் அழைப்பர். இவை யெல்லாம் பிற்காலத்து வளர்ச்சியும் மொழிபெயர்ப்புமாகும். இதுகாறும் கூறியவற்றால் உவமை தென் சொல்லே என்றும் உவமவியல் தென்மொழி யிலக்கணக் கூறே என்றும் தேர்ந்து தெளிக. உழவுங் கைத்தொழிலும் உழவன் உயர்வு: உணவின்றி உயிர் வாழ்க்கையின்மையின், அவ் வுணவை விளைக்கும் உழவர் மன்னுயிர்த் தேருக்கு அச்சாணி யாகவும், மன்பதை மரத்திற்கு ஆணி வேராகவும் கருதப்பட் டனர். உழுவார் உலகத்திற் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து என்றார் திருவள்ளுவர். சிறப்பாக இரப்பார்க்கொன்றீபவரும் விருந்தினரைப் பேணுப வரும் உழவரேயாவர். இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர் என்று வள்ளுவரும், இரப்போர் சுற்றம் என்று இளங்கோ வடிகளும், வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான் என்று நல்லாதனாரும், எந்நாளும் - காப்பாரே வேளாளர் காண் என்று கம்பரும் கூறியிருத்தல் காண்க. விருந்தோம்பலும் இரப்போர்க் கீதலுமாகிய வேளாண்மை செய்வதினா லேயே, உழவர் வேளாளர் எனப்பட்டனர். வேளாண்மையாவது பிறரை விரும்பிப் பேணு தலையாளுந் தன்மை. வேள்- விருப்பம். உழவர் அமைதிக் காலத்தில் உழவுத் தொழிலைச் செய்து வந்ததோடு, போர்க்காலத்தில் போர்ப்பணியும் புரிந்து வந்தனர். வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர் பெறும் பொருளே என்று தொல்காப்பியங்கூறுதல் காண்க (1582). அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்றும் நாற் பெருங்குலத் தாருள், வேளாளர் ஏனை முக்குலத்தில்லறத்தாரையும் தாங்கி வந்ததினால், வேளாளரே சிறந்த இல்லறத்தாராகக் கருதப்பட் டனர். மருதநிலத்தூரில் நிலையாக வசித்து ஆறிலொரு கடமையை அரசனுக்கு ஒழுங்காக இறுத்துவந்தவரும் வேளாளரே. வண்ணான், மயிர்வினைஞன், செம்மான், குயவன், கொத்தன், கொல்லன், கன்னான், தட்டான், தச்சன், கற்றச்சன், செக்கான், கைக்கோளன், பூக்காரன், கிணையன் (கிணைப் பறையன்), பாணன், கூத்தன், வள்ளுவன், மருத்துவன் ஆகிய பதினெண் தொழிலாரும்; உழவனுக்குப் பக்கத் துணையாயிருந்து தத்தம் தொழிலைச் செய்து அவனிடம் கூலி அல்லது தாம் செய்த பொருட்கு விலை பெற்றுவந்தனர். இதனால், அவர் பதினெண் குடிமக்கள் எனக் கூறப்பட்டு வேளாளருள் அடக்கப் பட்டனர். இங்ஙனம் பல்வகுப்பாரையும் உணவளித்துக் காத்ததினாலேயே, வேளாண் வினையைத் திருக்கை வழக்கம் எனச் சிறப்பித்துக் கூறினர் கம்பர். தெய்வத்திற்குப் படைத்த திருச்சோற்றைப் பலர்க்கும் வழங்குவது திருக்கை வழக்கம் எனப்படும். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் கைம்புலத்தா றோம்பல் தலை என்று இல்வாழ்க்கை யதிகாரத்தும் (43) இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு இல்வாழ்வா னென்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றி னின்ற துணை என்னுங் குறளில் (41), இயல்புடைய மூவர் என்பது அதிகார வியை பால் அந்தணர் அரசர் வணிகர் என்னும் முக்குலத்தில்லறத் தாரையே குறிக்கும், பிரமசாரியன் வானப் பிரத்தன் சந்நியாசி என்று பரிமேலழகர் கூறியிருப்பது பொருந்தாது. துறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் என்னுங் குறளிலுள்ள துறந்தார் என்னுஞ் சொல்லே துறவியரைக் குறிக்கும். வித்து மிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் என்று விருந்தோம்பலதிகாரத்தும் (81,85) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர் என்று உழவதிகாரத்தும் (1033), வள்ளுவர் கூறியிருப்பதால், உழவனே தலைமைக் குடிவாணன் (Chief Citizen) என்று அவர் கொண்டமை புலனாகும். மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஊணுடைக் கருவிப் பொருள்களும், அரசியற்கின்றியமையாத இறையும், போருக்கு நேர்வகையும் நேரல்வகையுமான பணியும் உழவரால் அமைவதை நோக்கும் போது. பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர் என்று வள்ளுவரும் (1034), பொருபடை தருஉங் கொற்றமும் உழுபடை யூன்றுசால் மருங்கி னீன்றதன் பயனே .......................................................................................... பகடுபுறந் தருநர் பார மோம்பிக் குடிபுறந் தருகுவை யாயினின் அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே என்று வெள்ளைக்குடிநாகனாரும் (புறம். 35), புரப்போர் கொற்றமும் - உழவிடை விளைப்போர் என்று இளங்கோவடிகளும் (சிலப்.10: 149 - 50), கூறியிருப்பது ஒரு சிறிதும் மிகையாகாது. இருவகை வேளாளர் : வேளாளர், உழுதுண்பாரும் உழுவித்துண் பாரும் என இருவகையர், உழுதுண்பாருக்குக் கருங்களமர் காராளர் என்னும் பெயர்களும், உழுவித் துண்பாருக்கு வெண் களமர் வெள்ளாளர் என்னும் பெயர்களும், உரியன. உழவர், களமர், கடையர், வேளாளர் என்பன இருசாராருக்கும் பொது வாகும். ஆயினும், ஈற்றுப் பெயர் தவிர ஏனையவெல்லாம் உழு துண்பார்க்கே சிறப்பாக வழங்கின. அவருக்கு மள்ளர் என்னும் பெயருமுண்டு. அவர் தந்நிலத்தில் உழுவாரும் பிறர் நிலத்தில் உழுவாரும் என இரு நிலைமையர். உழுவித் துண்பார் பலர் வேள்எனவும் அரசு எனவும் பட்ட மெய்தி, அமைச்சரும் படைத்தலைவரும் மண்டலத் தலைவரும் சிற்றரசருமாகி, மூவேந்தர்க்கும் மகட்கொடை நேரும் தகுதியராயிருந்தனர், கடையெழு வள்ளல்களுட் பெரும்பாலார் வேளிரே. நிலவகை : நிலங்கள் இன்றிருப்பது போன்றே, நன்செய் புன்செய் வானாவரி (வானங்காணி) என மூவகைப் பட்டிருந்தன, உழுது பயிரிடப்படுவது உழவுக்காடு என்றும், கொத்திப் பயிரிடப் படுவது கொத்துக்காடு என்றும், பெயர் பெற்றிருந்தன. செயற்கை நீர்வளம் : உழவுத் தொழிற்கு இயற்கை நீர்வளம் போதாவிடத்து, அரசரால் செயற்கை நீர்வளம் அமைக்கப் பட்டது, வெள்ளச்சேதம் நேராவாறும், பாய்ச்சலுக்கு வேண்டிய நீர் ஓடுமாறும், ஆற்றிற்குக் கரை கட்டலும்; நீரைத் தேக்க வேண்டு மிடத்தில் ஆற்றிற்குக் குறுக்கே அணை கட்டலும்; பேராற்றி னின்று கண்ணாறும், கண்ணாற்றினின்று கால்வாயும், கால்வாயி னின்று வாய்க்காலும் வெட்டலும்; இவை இயலாவிடத்து, ஏரி குளம் தொடுதலும்; அக்காலத்தரசர் மேற்கொண்ட செயல் களாம். கண்ணாறுங் கால்வாயும் பெரும்பாலும் சோழநாட் டிலும், ஏரி குளம் பெரும்பாலும் பாண்டி நாட்டிலும் வெட்டப் பட்டன. கரிகால்வளவன் ஈழத்தினின்று பன்னீராயிரம் மக்களைச் சிறை பிடித்துக் கொணர்ந்து காவிரிக்குக் கரைகட்டுவித்தான். இராசேந் திரச்சோழன் சோழகங்கம் என்னும் ஏரியை வெட்டினான். முடிகொண்டான் ஆறும் அவனால் வெட்டப்பட்டது போலும்! காவிரிக் கல்லணை கி.பி. 1068இல் வீரராசேந்திரனால் வெட்டப்பட்ட தாகத் தெரிகின்றது. சோழநாட்டில், இன்னின்ன கண்ணுறு இன்னின்ன வளநாட்டிற் கும், இன்னின்ன கால்வாய் இன்னின்னவூருக்கும், இன்னின்ன வாய்க்கால் இன்னின்ன பாடகவரிசைக்கும், பாயவேண்டுமென் னும் ஏற்பாடிருந்தது. அதனால், வேலியாயிரம் விளையவும், ஒருபிடிபடியுஞ் சீறிடம் எழுகளிறுபுரக்கவும், இருபூவும் முப்பூவும் எடுக்கப்படவும், இயல்வதாயிற்று, பூவென்பது வெள்ளாண்மை. அரசரின் ஊக்குவிப்பு : நிலம் சரியாய் விளையாதவிடத்தும், கடுந்தண்டலாளரைப் பற்றி முறையிட்ட விடத்தும், அரசர் வரிநீக்கஞ் செய்தனர். அயல் நாடுகளிலுள்ள அரிய விளை பொருட்களைக் கொண்டு வந்தும், தமிழ்நாட்டிற் பயிரிடச் செய்தனர். ................................... அந்தரத் தரும்பெற லமிழ்த மன்ன கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே என்று அதியமான்மகன் பொகுட்டெழினியை ஔவையார் பாடியிருப்பதால் (புறம். 392), அவன் முன்னோருள் ஒருவன் சீனத்திலிருந்தோ சாவகத்திலிருந்தோ, கரும்பைத் தமிழ் நாட் டிற்குக் கொண்டு வந்ததாகத் தெரிகின்றது. *கரும்பு கீழ்நாட்டில் முதலாவது சீனத்திலும் பின்பு சாவகத்திலும் பயிராயது. சீனரை வானவர் என்றும் சீனத்தை வானவர் நாடு என்றும் அழைத்தனர் முன்னோர். இனி, சாவகம் நாகநாட்டைச் சேர்ந்த தாதலானும், தேவருலகிற்கு நாகநாடு என்னும் பெயருண்மை யானும், சாவகநாட்டு நாகபுரத்தரசர் இந்திரன் என்ற குடிப்பெயர் கொண்டிருந்தமையாலும், சாவகத்தை இந்திர நாடு என்று கூறினர் முன்னோர். மருதநிலத் தெய்வமாகிய வேந்தன் என்னும் இந்திரனுக்குப் புகார்ச் சோழர் விழாக் கொண்டாடியதும், அவன் உழவுத் தொழிற்கு வேண்டும் மழைவளந்தருவன் என்னும் குறிக்கோள் பற்றியதே போலும்! உள் என்னும் வேர்ச்சொல் உள் (துளைத்தற் கருத்து வேர்) உ-உல்-உள். உள் என்பது ஈண்டுத் துளைத்தற் கருத்துள்ள வேர்ச்சொல். உல்=1. தேங்காயுரிக்கும் கூரிய கருவி. 2. கழு - துளைத்தற்குக் கூரிய கருவி வேண்டும். உல்-இல்-இல்லி=துளை, சிறுதுளை இல்= துளை போன்ற சிறுவீடு, வீடு. ஓ.நோ: புரை = துளை, அறை, வீடு. இல்-இல்லம்=பெருவீடு, வளமனை. அம் பெருமைப் பொருட் பின்னொட்டு, ம.இல்லம். உல்-உர்-உரல்= உலக்கையாற் குத்துதற்கேற்ற குழியுள்ள கல்,ம.உரல், து.ஓரல், க.ஓரளு, தெ.ரோலு. உல்-உலை. உலைதல் = உட்குலைதல் உள்ளிறங்குமாறு குத்துதலும் ஒருவகைத் துளைத்தல், அங்ஙனங் குத்துங்கருவி கூராயிருத்தல் வேண்டும். உல்-உள்-உளி. உள்-அள்=கூர்மை. அள்- அளி= குத்தும் உறுப்புள்ள ஈ, தேனீ, குளவி, வண்டு. அளி- வ.அலி. உள்-உளி=கூரிய பல்வேறு கருவி, ம., க., து. உளி; தெ. உலி. உளி- உசி ஊசி. ஓ.நோ: இளி- இசி. ஊசி=கூர்மை, கூரிய தையற்கருவி, எழுத்தாணி, கழு, துலைமுள், இருப்பு நெருஞ்சில், குயவர் மட்கலம் அறுக்குங்கருவி, சிறுமை. குத்தூசி, கோணியூசி, தையலூசி, வகுவூசி; ஊசிக்கணவாய் (மீன்). ஊசிக்கழுத்தி (மின்), ஊசிக்களா, ஊசிக் காது, ஊசிக்காய் (தேங்காய்), ஊசிக்கார் (நெல்), ஊசிக்கால் (தூண்), ஊசிச்சம்பா, ஊசித்தரை (அவரை), ஊசித்தூற்றல், ஊசித் தொண்டை, ஊசிப் பாலை, ஊசிப்புழு, ஊசிமல்லிகை, ஊசிமிளகாய், ஊசிமுல்லை, ஊசிவேர் முதலிய கூட்டுச் சொற்கள் தொன்றுதொட்ட வழக்காம். நெசவுத் தையலும் முதன் முதல் நிகழ்ந்த இடம் பண்டைத் தமிழகமே. ஊசி- வ. சூச்சி உளி - உளியம் = உளிபோற் கூரிய உகிர்களையுடைய கரடி. உளி- உகிர் (வ.நகம்) M. uhir K.ugur, Tu. uguru, Te, goru (கோரு). உள்- உளு= மரத்தைத் துளைக்கும் புழு. உளுத்தல் = புழு வால் துளைக்கப்படுதல். உளு-உசு. ம.உளும்பு. உள்-அள்=1. வாய். அள்ளுறுதல் = வாயூறுதல் 2. காது. அள்குத்து = மகமதியப் பெண்டிர் அணியும் காதணி வகை. உள்= உள்ளிடம். ïl«, 7M« nt‰Wik íUò, cŸËU¡F« kd«, ÚUŸ _œ»¢ bršY« gwit (Snipe)K.,M உள், inside. உள் - உள்ளல், உள்ளான் (Snipe) உள்ளும் ஊரலும் (சிலப். 10: 117) வாளைமீன் உள்ளல் தலைப்படலும் (திரிகடு.7) உள்ளானும் வலியானும் எண்ணிக் கொண்டு (குற்றா. குற. 85: 1) தெ. உல்லாமு, க. உல்லங்கி. உள்- உள்ளம்- உளம்= உள்ளிருக்கும் மனம். உள்ளுதல் = கருதுதல், நினைத்தல். உள்ளல் = கருத்து. உள்-உள்கு, உள்குதல் = நினைத்தல். உள்கு = ஊழ்கு. ஊழ்குதல் = (வ.) தியானித்தல். நின்றனை யுள்கி யுள்ள முருகும் (திருவாச. 5: 50) புனிதன பங்கய மூழ்கி (கோயிற்பு, பாயி.7) உள்ளாளம் = உடம்பசையாமல் உள்ளடக்கமாகப் பாடும் பாட்டு. உள்- உள்ளி= நிலத்திற்குள்ளிருக்கும் பூண்டுவகை. k., து. உள்ளி; தெ. உல்லி. உள்-உளவு = உள்ளிருந்து துப்பறிதல். உளவு- உளவன்= துப்பாள். J.csî; f., தெ. ஒலவு. உளகு = உட்டுளையுள்ள யாழின் தண்டு. உளகன் = உட்பட்டவன். பல்லினைக்கே யுளகரெல்லாம் (திருநூற். 61) உளர்தல் = உட்கிளைத்தல், குடைதல், கோதுதல். உளம்புதல் = புதரைத் தட்டி வேட்டை விலங்கைக் கிளப்புதல். கைம்மா வுளம்புநர் (கலித்.23) உளைதல் = உட்குடைதல். ம.உள. உளை - உளைவு, உளைச்சல். உளு- உழு-உழுதல் = நிலத்தை மேனாக்காகத் துளைத்தல், ம., க. உழு; து.ஊட் (ரன) உழு-உழவு-உழவன். உளு-உகு. உகுதல்= உள்ளிருந்தொழுகுதல், சுரத்தல், சிந்துதல், சிதறுதல், உதிர்தல், தேய்தல், குலைதல், கெடுதல், சாதல். உகு-உகை, உகைத்தல் = உள்ளழுத்துதல், பதித்தல். க. ரபர. நீலமொன் றுகைக்கு நிறைந்த கணையாழி (பணவிடு. 97) உகு- (உகள்)- அகள்- அகழ். அகழ்தல்= தோண்டுதல் f. agal (அகழ்). அகழ் = 1 அகழி. f. agal (அகழ்). வையையும் ஒருபுறத் தகழாம் (திருவிளை. திருநகரப். 17) 2. குளம். நீர் நசைஇக் குழித்த வகழ் (பெரும்பாண். 108) அகழ்- அகழி. f. agalu (அகழு), தெ. அகட்த (agadta) அகழான் = அகழெலி அகள் - அகடு=1. உள். செழுந்தோட்டகட்டின் அடைகிடக்கும் (கூர்மபு. தக்கன்வே. 57) 2. வயிறு. தெ. கடுப்பு. அகடாரார் (குறள். 936) 3. நடு. மதியகடு தோய் (தாயுமா. சச்சி. 6) 4. நடுவுநிலைமை. அகடுற யார் மாட்டும் நில்லாது (நாலடி. 2) அகள் - (அகண்) - அகணி = 1. உட்புறம். கடுக்காயில் அகணி நஞ்சு, சுக்கிற் புறணி நஞ்சு (பழமொழி) 2. உட்புறத்தோடு கூடிய புறநார். 3. அகநாடாகிய மருதநிலம். (சூடா) 4. நெல்வயல். அகணியின் கரைபுரளும் எங்கணும் (அரிசமப. குலசே.8) அகழ்ப்பை - அகப்பை. Te. agapa, K.agape. ஓ.நோ: கேழ்ப்பை - கேப்பை. அகம் = உள், உள்ளிடம், இடம், வீடு, மருதம், மனம், மார்பு, காமவின்பம், அகப்பொருள், அகநானூறு. ம.அகம், K. ஆகெ (age). அகம் - அகம்பு - உள். அகரம் = மருதநிலத்தூர், ஊர். (பிங்.) உகு- (உகல்)- உவல்-அவல்=1. பள்ளம். அவலா கொன்றோ மிசையா கொன்றோ (புறம். 187) 2. விளைநிலம். மெல்லவ லிருந்தவூர் தொறும் (மலைபடு. 450) 3. குளம். உவல் - உவன்றி= நீர்நிலை. வாய்த்தலைக்கும் உவன்றிக்குமாகப் பங்கொன்றும் (S.i.i.ii,521) உவனித்தல் = ஈரமாதல் உவல் - உவறு. உவறுதல் = சுரத்தல் உவறு நீருழக்கி (சீவக. 966) உவறு - உவற்று (பி.வி.) உவற்றுதல் = சுரக்கச் செய்தல். ஒண்செங்குருதி யுவற்றியுண் டருந்துபு (அகம்.3) உவறு - ஊறு. ஊறுதல் = சுரத்தல். k., க. ஊறு, தெ. ஊரு. ஊறு- ஊற்று. தெ. ஊட்ட, க. ஊட்டெ, து.ஊட்டி. ஊற்றுதல்= ஒழுகச் செய்தல், வார்த்தல், ம.ஊத்து; மராட்டி, ஒத்து. உவல்- (உவன்று)- ஊன்று. ஊன்றுதல்= பள்ளத்தில் அல்லது குழியில் நடுதல் அல்லது நட்டுதல், நிலைபெறுதல், நிலைநிறுத் துதல். ஊன்று - ஊன்றி (க்கம்பு). ஊன்று - ஊற்றம் = நிலைபேறு. ம. ஊன்னு, தெ.ஊனு. உவல்- உவள்-உவளகம்=1. அரண்மனையின் உட்புறம். உவளகந் தனதாக வொடுங்கினான் (சீவக. 243) 2. பள்ளம் (பிங்.) 3. தடாகம் (பிங்.) 4. அகழி. உவளகங் கண்ணுற் றுவர்க்கட லிஃதென் (குமர.பிர.திருவாரூ.32) உள்-உண். உண்ணுதல்= உட்கொள்ளுதல். உண்-உணா, உண, உணவு, ஊண், உண்டி. உண்- ஊட்டு (பி.வி.). - ஊட்டம் = 1. உண்பிக்கை. 2. வளமான உணவு (nutrition). ஊட்டு-ஊட்டி=1. ஊட்டும் உணவு. 2. வளமான அல்லது வலுவுறுத்தும் உணவு. 3. குழந்தைகட்கு ஊட்டும் சங்கு. 4. சங்கு போன்ற குரல்வளையுறுப்பு (Adam’s apple) உள் - (உளை)- உடை. உடைதல்= உட்குலைதல், விரிதல், பிளத்தல். உள்-ஊள்-ஊளை = தொள்வு, தொய்வு, உலைவு, பதனழிவு, பதனழிந்த மோர், அதையொத்த காதுச்சீழ். ஊளைச்சதை = ஊழற்சதை. ஊழுறுதல் = குடைதல். காழியர் மோதகத் தூழுறு விளக்கமும் (சிலப்.6 : 37 அரும்) ஊள்-ஊழ், ஊழ்த்தல் = 1. உட்குலைதல், பதனழிதல். அருவிதந்த பழம்... ஊழ்த்து (மலைபடு. 174-80) 2. விரிதல், மலர்தல். இணருழ்த்து நாறா மலரனைய (குறள்.650) 3. முதிர்தல். காந்த ளுழ்த்துச் சொரிவபோல் (சீவக. 1742) 4. நாறுதல் (பிங்) ஊழ்- ஊசு. ஒ.நோ: காழ்=காசு. தொள்- தொளர்- தளர். தொள்- தொய். நொள் - நொய்- நொய- நொச. நோள்- நோய்- நோ. ஊழ்-ஊழல்=குலைவு, தாறுமாறு, உலைவூ, நாற்றம், ஊழில் = அருவருப்பான சேறு (பிங்.) ஊழலித்தல்= பதனழிதல், சோர்தல். உள்- ஒள்-ஒழுகு. ஒழுகுதல் = துளை வழியாய்ச் சிந்துதல். ஒள்- ஓள்- ஓளை. ஓளைவாய்= சாளைவாய். ஒள்= ஓட்டு. ஒட்டுதல்= கையைத் துளைக்குள் இடுதல். ஓள்= ஓட்டை= துளை. ஒழுகு- ஒழுக்கு. ஒழுகுதல்=1. சிந்துதல். 2. ஒழுக்குப் போல் நீள்தல், நேராதல். வார்தல் போதல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல். 800) 3. நீள்தல் போற் காலால் நடத்தல், வண்டி செல்லுதல் ஒ.நோ: நெடு-நட. கம்பியை நீட்டிவிட்டான் என்னும் வழக்கை யும் நோக்குக. 4. ஒழுக்க முறையில் நடத்தல். ஒழுகு- ஒழுக்கு- ஒழுக்கம்- நடை, செலவு, நடத்தை, வரிசை. ஒழுகு= நிலம், கோயில் முதலியவற்றின் ஒழுங்கான வரலாறு அல்லது கணக்கு. நாடு பிடித்தார்க்கு ஒழுகைக் காட்டி (திவ். திருமலை. 3, வியா) கோயிலொழுகு = கோயிலுடைமை வரலாறு. ஒழுகு- ஒழுங்கு - ஒழுங்கல்= ஒழுங்காயிருக்கை. ஒழுகு- ஒழுகை= 1. வண்டி. உப்பொ யொழுகை யெண்ணுப (புறம். 116) 2. வண்டி வரிசை. பெருங்கயிற் றொழுகை (பெரும்பாண். 64) ஒழுங்கு - ஒழுங்கை = 1. நீண்ட இடைகழி. 2. மண்டபநடை, முகப்பு. ஒள்-ஒளி. ஒளிதல் - துளைக்குள் அல்லது பள்ளத்துள் மறைதல். ஒளி- ஒழி-ஒழிதல்= மறைதல், நீங்குதல், சாதல். ஒ.நோ: மாய்தல் = மறைதல், இறத்தல். ஒழி-ஓய். ஓ.நோ: வழி-வாய். ஓய்தல் = வேலையொழிதல், மரங் காய்ப்பொழிதல். கால் வலிமையொழிதல். ஓய்வு-ஓவு-ஓ= ஓளிவு, சென்று தங்குகை, ஒழிவு. உள்-உடு-அகழி (பிங்.) உடு-உடுவை= அகழி, நீர்நிலை. உடு-ஊடு= துளைவழி, வழி. ஊடு- ஊடை= நெசவின் குறுக்கிழை. உள்-உரு-உருவு. உருவுதல்= துளையூடு செல்லுதல், மூடின கையூடிழுத்தல். உருவ= துளைநெடுக, முற்றும், நன்றாக. ஒ.நோ: E. through - thoroush, thoroughly. புயவலியை நீயுருவ நோக்கையா (கம்பரா. குலமுறை. 26) இதுகாறும் காட்டிய சொற்களெல்லாம், துளைத்தல், துளைக் குங் கருவி, துளை, துளைக்குட் செல்லல், துளை யினின்று வருதல், துளையூடுருவுதல் ஆகிய பெருங்கருத்துக் களையும் அவற்றின் கிளைப்புக்களையுமே கொண்டு ஒரே தொடர்புற் றிருத்தல் காண்க. துளையெனினும் பள்ளமெனினும் ஓக்கும். சில சொற்கள் அணிவகையிற் பொருளுணர்த்தும். அவற்றை அறிதல் வேண்டும். எ- டு: குடைதல் =1. துளைத்தல் - (பருப்பொருள்) 2. துளைத்தல்போல் நோவுறுத்தல் - (அணிப் பொருள்) உள் - உஷ் (இ.வே.) உஷ்- உஷ்ண. உள்-உர்-உரு-உரும்-உரும்பு-உருப்பு- உருப்பம்= வெப்பம். உரும்-உருமி. உரும்- உருமு- உருமம்= வெப்பம் மிக்க உச்சிவேளை. (வ.வ: 91) உள்ளீட்டு வகை சாறு நீர்போலிருப்பது; சோறு கட்டிச் சோறுபோலிருப்பது; (கத்தரி முருங்கை கற்றாழை முதலியவற்றின் உள்ளீடு சோறு எனப்படும்) சதை வாழை மா முதலியவற்றின் உள்ளீடு; சுளை சீத்தா பலா முதலியவற்றின் உள்ளீடு; அரிசி நெல் கம்பு முதலிய வற்றின் உள்ளீடு; பருப்பு அவரை துவரை முதலியவற்றின் உள்ளீடு. (சொல் : 69) உற்கம் உற்கம் - உல்க (இ.வே.) உல்- உலர். உல்-சுல்- சுல்லி= அடுப்பு. உல்- உள்-உண்-உண. உள்-உர்- உரும்- உரும்பு = கொதிப்பு, உல்-உற்கு- உற்கம்=1. அனற்றிரள், 2. கடைக்கொள்ளி, 3. விண்வீழ்கொள்ளி. உற்குதல் = எரிகொள்ளி வீழ்தல். திசையிரு நான்கும் உற்கம் உற்கவும் (புறம். 41: 4). வட மொழியில் உஷ் என்பதையே மூலமாகக் காட்டுவர். (வ.வ.96) உறங்கும் நிலைகள் படுத்தல் கிடப்பு நிலையடைதல்; சாய்தல் கால் நீட்டியிருந்து கொண்டு தலையைச் சாய்த்தல்; கிடத்தல் உறங்காது படுக்கை நிலையிலிருத்தல்; கண்வளர்தல் கண்ணை மூடுதல்; துஞ்சுதல் கண்ணை மூடித்தூங்குதல்; தூங்குதல் தொட்டிலிலாவது தூங்கு கட்டிலிலாவது கண்படை செய்தல். உறங்குதல் ஒடுக்க நிலை யடைந்து அயர்ந்து தூங்குதல். (சொல் : 56) உறுப்பு வகை சினை உயிர்ப்பொருளின் உறுப்பு; உறுப்பு உயிர்ப் பொருள் உயிரில்லாப் பொருள் ஆகிய இரண்டிற்கும் பொதுவான உறுப்பு. (சொல் : 52) உறைக்காலம் (Bronze Age) (தோரா. கி.மு. 15, 000- 10,000). உறை யென்பது வெண்கலம். இது முறியெனவும் படும். கஞ்சம் உறைவெண் கலமா கும்மே. (பிங். 6: 140) வெண்கலப் பெயரும் விழுமமும் பெருமையும் ............................................................................................................... ஓரிடைச் சொல்லும் வாழ்நாளும் உறையெனல் (பிங் 10 : 184). எட்டுப் பங்கு செம்பும் ஒரு பங்கு தகரமுங் கலந்த கலப்பு மாழையே உறை. இது செம்பு போலத் தனிமாழை யன்மை யாலும், வெண்ணிறக் கலவடிவிலேயே மக்கள் இதைக் கண்ட மையாலும், கருமிய (காரிய) வாகுபெயராக வெண்கலம் என்னும் பெயர் பெற்றது. செம்பு, கும்பா, கிண்ணம், குடம், வட்டில் முதலிய கலங்களும்; மாடவிளக்கு, குத்துவிளக்கு, பாவை விளக்கு முதலிய திரிவிளக்கு வகைகளும்; வாள் கறண்டி முதலிய கருவிகளும்; உறையாற் செய்யப்பட்டன. வெண்கல ஏனத்தில் வார்த்த அல்லது வைத்த நீருங்கட்டியுமான உணவுப் பொருட்கள், சிறப்பாகப் புளிப்புப் பண்டங்கள், கைத்துங் கெட்டும் போகாவாதலால், பொன்னும் வெள்ளியும் கிடையாத ஏழைமாந்தர்க்கும் இடைத்திற வகுப்பார்க்கும் வெண்கல ஏனமே சிறந்த மாழைக்கலமாக இருந்து வந்தது. செப்புக்குடம் என்னும் நீர்க்கலம் செம்பினாற் பெயர் பெறினும், வெண்கலத்தினாலேயே இன்றுஞ் செய்யப்பட்டு வருகின்றது. வெண்கல வோசை முழங்குவதாலும் மிக நீண்டு நிற்பதாலும், கைத்தாளம், வண்டித்தாளம், கைம்மணி, நாழிமணி, ஆன்மணி, குதிரைமணி, யானைமணி, தேர்மணி, கோபுரமணி, சேமக்கலம், பலகைமணி, முதலிய இசைக்கருவிகட்கு உறையையே முதற் கருவியாகப் பயன்படுத்தினர். இடிக்குரல் முரசம் இழுமென் பாண்டில் (சிலப். 26: 194) இதிற் பாண்டில் என்றது வண்டித் தாளத்தை. உவச்சரும் பிற பூசகரும் பூசையிற் பயன்படுத்துவது கைம்மணி. கைம்மணிச் சீரன்றிச் சீரறி யாக்கம்ப நாடன் சொன்ன மும்மணிக் கோவை முதற்சீர் பிழை..... என்று வாணியன் தாதன் கம்பர் மீது அங்கதம் பாடினான். தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக் கைபயப் பெயர்த்து மையிழு திழுகி ஐயவி சிதறி ஆம்ப லூதி இசைமணி யெறிந்து காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக் காக்கம் வம்மோ காதலந் தோழீ வேந்துறு விழுமந் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே. என்னும் புறப்பாட்டில் (281) இசைமணியென்றது கைம் மணியையே. கறங்குமணி துவைக்கும் ஏறுடைப் பெருநிரை என்பதில் (மலைபடு. 573) குறித்தது ஆன்மணி. கறங்குமணி வாலுளைப் புரவியொடு என்பதில் (சிறுபாண். 91-2) குறித்தது குதிரைமணி. கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கின் பெருங்கை யானையிரும் பிடர்த்தலை யிருந்து என்பதில் (புறம். 3:10-11) குறித்தது யானைமணி. பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் என்பதில் (அகம். 4:10-12) குறித்தது தேர்மணி. யானையை மணிகட்டாது தெருவழிச் செல்ல விடுவதில்லை. அதனால், யானைவரும் பின்னே, மணியோசை வரும்முன்னே என்ற பழமொழி யெழுந்தது. மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா என்றார் கபிலர். (இன்னா. 14) வழக்கிழந்தோ பெருந்தீங்கு செய்யப்பட்டோ அரசனிடத்தில் முறையிடு வோர் அசைக்குமாறு, அரண்மனை வாயிலிற் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணி வெண்கல மணியே. வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன் அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன் (சிலப். 20:53-5) ஆடுங் கடைமணி நாவசை யாமல் அகிலமெங்கும் நீடுங் குடையைத் தரித்தபி ரானிந்த நீணிலத்தில் பாடும் புலவர் புகழொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச் சூடுங் குலோத்துங்கச் சோழனென் றேயெனைச் சொல்லுவரே. என்பது, ஒட்டக்கூத்தரும் இரண்டாங் குலோத்துங்கச் சோழ னும் முன்னீரடியும் பின்னீரடியுமாகப் பாடிய தனிப்பாடல். பொதுமக்கள் நேரமறியுமாறு, நாழிகை தோறும் அடிக்கக் கோபுரத்திற் கட்டிய பெருமணி கோபுர மணியாம். உறுதியும் பார்வையுமுள்ளதும், போதிய அளவு கிடைக்கக் கூடியதும், பெரும்பாலுங் களவுங் கொள்ளையும் போகாததும், ஆன மாழை உறையே யாதலால், அதிலேயே சிறியவும் பெரியவு மான தெய்வப் படிமைகளும் மக்கட்படிமைகளும் வார்க்கப் பட்டன. உறைக் காலத்தில், நெய்தல் நில மக்கள் கப்பல் நாவாய் முதலிய பெருங் கலங்களிற்சென்று, அக்கரை நாடுகளிலும் அவற்றை யடுத்த தீவுகளிலுமுள்ள பல்வகை அரும்பண்டங் களைக் கொண்டு வந்து நீர்வாணிகத்தைப் பெருக்கினர். ஆட்சித் துறையில், கோவினும் பெரிய வேந்தன் தோன்றி, ஐந்திணை யரசரையும் அடக்கி யாண்டான். தனக்கொரு தனிச் சிறப்பு வேண்டி, முடியணியும் உரிமையைத் தனக்கே கொண்டான். இதனாலேயே, அவன் வேந்தன் எனப்பட்டான். மே=மேல், மே-மேய், மேய்தல்= விலங்கு புல்லின் மேற்பகுதியைத் தின்னுதல், கூரையின்மேல் வைக்கோலிடுதல். மேய்-வேய். வேய்தல் = கூரையின்மேல் வைக்கோலிடுதல், ஒற்றன் ஒரு கோலத்தை மேற்கொண்டு உளவறிதல், தலைமேல் மகுடமணிதல். வேய்- வேய்ந்தோன்= மகுடமணிந்தோன். வேய்ந்தோன்- வேய்ந்தன் - வேந்தன். கொன்றைவேய்ந்தோன்= கொன்றை மாலையை அல்லது மலரைத் தலையிற் சூடிய சிவன். கொன்றைவேய்ந்தோன் - கொன்றைவேந்தன்- சிவன். வேந்தன்- வேந்து. ஓ.நோ: அரசன் - அரசு, அமைச்சன் - அமைச்சு, பாங்கன் - பாங்கு, பார்ப்பான் - பார்ப்பு. முடியுடை மூவேந்தர் என்னும் வழக்கை நோக்குக. வண்பொழில் மூவர் தண்பொழில் வரைப்பின் என்று தொல்காப்பியங் (1336) கூறுவதால், கி.மு.7-ஆம் நூற்றாண்டு வரை இச்சிறப்புரிமை காக்கப்பட்டு வந்ததென அறியலாம். அதன்பின், கடைக்கழகக் காலத்தில் குறுநில மன்னர் தலையெடுத்ததால், மூவேந்தரும் இவ்வதிகாரத்தை இழந்து விட்டனர். பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி என்று இளங்கோவடிகள் பாடுவதாலும், தமிழன் பிறந்தகம் குமரிநாடா தலாலும், குமரிக்கண்டத் தமிழ் நில முழுதும் பழம்பாண்டி நாடாதலாலும், மூவேந்தருள்ளும் முதலில் தோன்றியவன் பாண்டியனே என்பது அறியப்படும். பிற்காலத் தில், நாவலந்தேயத்தின் கீழ்ப்பாகத்தையும் மேற்பாகத்தையும் துணையரசராக அல்லது மண்டிலத் தலைவராக ஆளுமாறு, அமர்த்தப் பெற்ற பாண்டியன் குடியினர் இருவரே, சேரசோழ ராக மாறியிருத்தல் வேண்டும். பண்டி = வண்டி (சக்கரம், சகடம்). பண்டி- பாண்டி= 1. வட்டமான விளையாட்டுச் சில். 2. அதைக் கொண்டு விளையாடும் விளையாட்டு (வட்டாட்டு). 3. மாட்டு வண்டி. அகவ வரும் பாண்டியும் (பரிபா. 10: 16). 4. கூடாரப்பண்டி. (சிலப். 14: 168. அரும்.) 5. (உருண்டு திரண்ட) எருது. (பரிபா. 20:17. குறிப்பு) ஒ.நே. குண்டு- குண்டை= எருது. பாண்டி - பாண்டியம் = 1. எருது. செஞ்சுவற் பாண்டியம் (பெருங். உஞ்சைக். 38:32). 2. (எருது கொண்டு உழும்) உழவு. செஞ்சுவற் பாண்டியம் (பெருங். உஞ்சைக். 38:32) 3. (எருதுகொண்டு உழும்) உழவு. பாண்டியஞ் செய்வான் பொருளினும் (கலித். 136) பாண்டி- பாண்டில் = 1. வட்டம். பொலம்பசும் பாண்டிற்காசு (ஐங். 310). 2. வட்டக்கட்டில். பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில் (நெடுநல். 123). 3. வட்டத் தோல். புள்ளி யிரலைத் தோலூ னுதிர்த்துத் தீதுகளைத் தெய்திய திகழ்விடு பாண்டில் (பதிற்றுப். 74). 4. வட்டத் தாளம். இடிக்குரன் முரச மிழுமென் பாண்டில் (சிலப். 26:194). 5. வட்டக் கண்ணாடி. ஒளிரும்... பாண் டில் (பு.வெ.6:12). 6. வட்டக்கிண்ணி. பாண்டிலெடுத்த பஃறா மரை கீழும் பழனங்களே (திருக்கோ. 249). 7. விளக்குத் தகழி. (பிங்.) 8. தேர்வட்டை. (சிலப். 14:168. உரை). 9. இருசக்கர வண்டி. வையமும் பாண்டிலும் (சிலப்.14:168). 10. குதிரைபூட்டிய தேர் (திவா.) 11. நாடு. ஒ. நோ: மண்டலம், வட்டாரம், 12. எருது, காளை. காளை மறம் விஞ்சிய தாதலின், போர்மறவன் காளையெனப் பட்டான். காளை = 1. இளவெருது. 2. கட்டிளம் பருவத்தினன். (திவா.) 3. பாலை நிலத்தலைவன். (திவா.) 4. போர் மறவன். உரவுவேற் காளையும் (புறம். 334). காளை மறம் விஞ்சியது மட்டுன்று; கற்பாறையிலும் ஆற்று மணலிலும் சேற்று நிலத்திலும் மேட்டிலும் பள்ளத்திலும், பொறைவண்டியை மருங்கொற்றி மூக்கூன்றித் தாள் தவழ்ந்து இழுத்துச் செல்லுங் கடைப்பிடியுமுள்ளது. அதனால், மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து. என்றார் திருவள்ளுவர். (குறள்.624). அச்சொடு தாக்கிய பாருற் றியங்கிய பண்டச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய வரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ என்றார் ஔவையார். (புறம்.90). அரசன் போர்மறமும் ஆட்சித்திறனும் ஒருங்கே யுடையவன் என்பதை யுணர்த்தற்கு, குமரிநிலை முதல் தமிழவேந்தன் பாண் டியன் எனக் குடிப்பெயர் பெற்றான். செழியன், வழுதி, மாறன் முதலிய குடிப்பட்டங்களும் பின்னர்த் தோன்றின. பாண்டிநாடு வெப்பநாடாதலால், குளிர்வெண்மதி குலமுதலாகக் கொள்ளப் பட்டது போலும்! வேப்பந்தாரை யணிந்ததற்கும் கயற்கொடி கொண்டதற்கும் இதுவே கரணிய மாயிருக்கலாம். தாராலும் கொடியாலும் வேம்பன் மீனவன் என்னும் பெயர்களும் எழுந் தன. கயல்மீன் யானைமீனும் பனைமீனும் போலப் பருமீனன் றாதலின், அதைக் கொன்றதனாற் பிடித்த வெற்றிச்சின்னமாகக் கயற்கொடியைக் கருத இடமில்லை. குளிர்ந்த பேரொளி வீசும் முழுமதி போன்றவன் குடிகள் பேரின்பமும் அறிவும்பெற ஆளும் அரசன், என்னுங் கருத்திற் பிடிக்கப்பட்ட மதிவட்டக்குடை அல்லது வெண்கொற்றக் குடையும், தமிழகத்தின், சிறப்பாகப் பாண்டி நாட்டின், வெப்ப நிலையைக் குறிப்பாக வுணர்த்தும். நண்ணிலக்கோடு குமரிமுனைக்குத் தெற்கிற் பதின்பாகைக்குள் இருப்பதும், இற்றைத் தமிழகத்திலும் வடவாணரினும் தென் வாணர் பெரும்பாலுங் கருத்திருப்பதும், முழுகிப்போன தென் பாண்டி நாட்டின் வெம்மை மிகுதியை யுய்த்துணர ஏதுவாகும். சோழ பாண்டியர் பாண்டவர்க்குத் துணையாகவும் சேரன் நடு நிலையாகவும் பாரதப்போரிற் கலந்து கொண்டதனாலும், மூவேந்தர் குடிகளும் பாண்டவ கௌரவர்க்கு முன்பே வரலாற் றிற்கெட்டாத் தொன்முது பழங்காலத்தில் தோன்றியமையாலும். பாண்டியன் என்னும் சொல்லைப் பாண்டவன் என்னுஞ் சொல்லினின்று திரிப்பது, வரலாற்றறிவும் ஆராய்ச்சித்திறனும் இல்லாதவர் செயலெனக் கூறி விடுக்க. இனி, பழையன் என்னும் குறுநிலமன்னன் ஒருவன் பாண்டி நாட்டில் வாழ்ந்து, வேம்பைக் காவல்மரமாக வளர்த்ததையும், பாண்டிய வேந்தரின் பழைமையையும் நோக்கி; பண்டு என்னும் சொல்லினின்று பாண்டியன் என்னுஞ் சொல்லைத் திரிப்பர் சிலர். பாண்டிய வேந்தன் இன்று தான் நமக்குப் பழைமையானவனே யன்றி, அவன் முதன்முதலாகக் குமரிநாட்டில் தோன்றிய போது ஒருவருக்கும் பழைமையானவன் அல்லன் என்றும், பழையன் என்னுஞ் சொல் ஒருவனது இயற்பெயருக்கே யன்றி, ஓர் ஆள்குடிப் பெயருக்கு ஏற்காதென்றும், அவர் அறிதல் வேண்டும். பாண்டிய வேந்தன் ஐந்திணை நிலங்களையுங் கைப்பற்றி ஆண்ட தனால், கருங்கடல்முதல் கருமலைவரை நாடு முழுவதுங் காவற் குட்பட்டது. பாலை நிலவாணர் வேந்தனின் படைமறவராயினர். அந்நிலத்தலைவன் காட்டுப் படைத் தலைவனானான். ஏற் கெனவேயிருந்த மருதநிலப்படை நாட்டுப்படை யெனப்பட்டது. போர்க்காலத்திலும் அமைதிக் காலத்திலும் நிலையாக விருந்த படை நிலைப்படை யென்றும், அவ்வப்போது போரின் தேவைக் குத் தக்கவாறு கூலிக் கமர்த்தப்பட்ட படை கூலிப் படையென் றும், பெயர்பெற்றன. காவல் மிகுந்து களவுங்கொள்ளையும் போரும் நீங்கவே, நாட்டில் அமைதியும் இன்பமும் நிலவின. தொழில்கள் பெருகின. வழிப்போக்கும் இடம் பெயர்வும் அச்சம் நீங்கின. வணிகம் வளர்ந்தது. மக்கள் பெருகப் பெருக மெல்ல மெல்ல வடக்கே சென்று பரவினர். நாட்டுச் செல்வத்தை மிகுக்கவும், நாகரிக வாழ்க்கைக் கேற்ற பொருள்களைத் தொகுக்கவும், காட்டுவழி களிலெல்லாம் காவற்படையை நிறுவி நில வாணிகத்தையும், கடற்கரை வளைந்துள்ள இடங்களிலெல்லாம் துறைநகர்களை யமைத்து நீர்வாணிகத்தையும், வேந்தன் ஊக்கினான். ஏற்கெனவே, இயற்கை மொழிக்காலத்திற் பிரிந்து சென்ற மாந்தரினங்கள் ஆப்பிரிக்கா ஆத்திரேலிய நிலப்பகுதிகளிலும், இழைத்தல் மொழியின் அசை நிலைக் காலத்திற் பிரிந்துசென்ற மாந்தரினங்கள் சீன மங்கோலிய நிலப்பகுதி களிலும், கொளுவு நிலைத்தொடக்கக் காலத்திற் பிரிந்துசென்ற மாந்தரினங்கள் மேலையாசிய நிலப்பகுதிகளிலும், செம்புக்காலத்தில் ஏகார ஓகாரங்கள் குறுகு முன்னும் ள ழ ற ன தோன்றுமுன்னும் பிரிந்து போன மாந்தரினங்கள் வடஇந்தியாவிலும், பெருகிப் பரவி வந்தன. பெருநிலங்களில் வாழ்ந்தவருட் சிலர் அவற்றை யடுத்த சிறுநிலங்களான தீவுகளிலுங் குடியேறினர். பெருநிலத்தினின்றும் தீர்ந்து நாற்புறமும் நீராற் சூழப்பட் டிருக்கும் சிறுநிலமே தீவாகும். தீர்-தீர்வு-தீவு. ஒ.நோ. கோர்-கோர்வை-கோவை. குரு(வு)-கோர்-கோ. தீவு-தீவம் = பெருந்தீவு. வடமொழியாளர் தீவு என்னுஞ் சொல்லைத் த்வீப என்று திரித்து, இருபக்கம் நீராற் சூழப்பட்டதெனப் பொருட்கரணியங் காட்டுவர். இதன் பொருந்தாமையைக் கண்டு கொள்க. நிலவணிகத்தார் பாதுகாப்பும் உதவியும் நோக்கி, எப்போதுங் கூட்டமாகவே சென்று வந்தனர். அக்கூட்டத்திற்குச் சாத்து என்ற பெயர். சார்தல் = சேர்தல், கலத்தல், கூடுதல். நல்லெழில் மார்பினைச் சார்ந்து (கலித். 142). சார்-சார்த்து-சாத்து = 1. கூட்டம் சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும் (கல்லா. 63:32). 2. வணிகர் கூட்டம். சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன் (சிலப் 11: 190). சாத்து-வ. ஸார்த்த. சாத்து-சாத்தன் = 1. வணிகக் கூட்டத்தலைவன், (நன். 130, மயிலை), 2. வணிகர் தெய்வமான ஐயனார். (85.நி.) 3. வணிகர்க்கிடும் இயற் பெயர்களுள் ஒன்று. 4. சீத்தலைச்சாத்தனார். அவனுழையிருந்த தண்டமிழ்ச் சாத்தன் (சிலப்.பதி.10). 5. யாரேனும் ஒருவனைக் குறிக்கும் பொதுப் பெயர். அக்கடவுளாற் பயன்பெற நின்றா னோர் சாத்தனை (தொல்.பொ.422, உரை). 6. உழவர் எருதிற் கிடும் விரவுப்பெயர். வடவர் ஐயனாரைக் குறிக்கும்போது சாதா என்றும், சாத்ரு என்றும், திரிப்பர். இதினின்று அவர் ஏமாற்றை அறிந்து கொள்க. சாத்தர் = வெளிநாடு சென்றுவரும் வணிகக் கூட்டத்தார். அதர்கெடுத் தலறிய சாத்தரொ டாங்கு (அகம். 39). சாத்தவர் = சாத்தர். பழுதில் சாத்தவர்கள் சூழ (திருவாலவா. 27:1) சாத்தன் என்னுஞ் சொல் பிற்காலத்திற் சாத்துவன் என்றும் சாத்துவான் என்றுந் திரிந்தது. கோவலனின் தந்தை மாசாத்து வான் (பெருஞ்சாத்தன்) என்று இயற்பெயர் பெற்றிருந்தமை காண்க. சாத்தர் தம் வணிகச் சரக்குகளை ஏற்றிச் செல்ல முதலிற் பொதி யெருதுகளைப் பயன்படுத்தினர். பின்னர் மேலை யாசியாவினின்று கழுதை, குதிரை, ஒட்டகம், கோவேறுகழுதை ஆகியவற்றைப் படிப்படியாகக் கொண்டுவந்து பழக்கினர். கழுதையின் பிறப்பிடம், வடகிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தியோப் பியா சோமாலி முதலிய நாடுகளும், மேலையாசியாவில் சீரியா பாரசீகம் பெலுச்சித்தானம் முதலிய நாடுகளும், நடு ஆசியாவில் திபேத்தும் மங்கோலி யாவும், ஆகும். குதிரையின் பிறப்பிடம் ஆசியாவின் வடநடுப்பாக மென்றும், அங்கிருந்து அது கிழக்கே சீன மங்கோலிய நாடுகட்கும், மேற்கே ஐரோப்பாவிற்கும், தென்மேற்கே பாரசீகம் அரபியா முதலிய நாடுகட்கும், சென்றதாகச் சொல்லப்படுகின்றது. ஒட்டகத்தில், ஒற்றைத் திமிலிக்கு அரபியாவும் இரட்டைத் திமிலிக்குப் பகத்திரியாவும் (Bactria), பிறப்பிடமாகச் சொல்லப் படுகின்றது. கோவேறு கழுதை, பிற்காலத்திற் கி.மு. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, சின்ன ஆசியாவிற் பயன்படுத்தப் பட்டதாகத் தெரிகின்றது. அது ஆண்கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்த கலப்பினமாகும். வணிகச் சாத்திற்குக் கழுதையும் குதிரையுமே மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன. தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப நெரியற் புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத் தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும். (பெரும்பாண். 77-80). அரபிக் குதிரைகள் பெரியனவும் பேணுதற் கரியனவுமாதலால், பெரும்பாலும் படைகட்கும் அரசர் ஊர்தற்குமே பயன்படுத்தப் பட்டிருக்கும். நாட்டுத்தட்டு என்றும் அச்சிமட்டம் என்றும் சொல்லப்படும் சிறுதரக் குதிரைகளையே, சாத்துக்கள் பயன்படுத்தியிருக்கும். நாட்டுத்தட்டு இந்தியா விலேயே வளர்க்கப் படுவது. அச்சிமட்டம் சுமதுராத் (Sumatra) தீவின் வடமேற்குப் பகுதியாகிய அச்சியிலிருந்து (Achin) வந்தது. சாத்துக்கள் குதிரைகளைப் பயன்படுத்தியதை, பெருஞ் சாலை வழிகளில் ஆங்காங்குக் கட்டப்பட்டிருக்கும் சாத்தனார் (ஐயனார்) கோவிற்குமுன், சுதையாலும் சுடுமண்ணாலும் செய்து நிறுத்தப்பட்டுள்ள குதிரையுருவங் களினின்று அறிந்து கொள்ள லாம். குதிரை தமிழகத்திற்கு வந்த பின்னரே, குமரர் காதல் வாழ்வில் மடலேற்றம் என்னும் மணமுறைவினை தோன்றியிருத்தல் வேண்டும். ஓர் இளைஞன் தான் காதலித்த பெண்ணை அவள் பெற்றோர் தர இசையாவிடின், நீர்ச்சீலை மட்டும் அணிந்து உடம்பு முழுதும் சாம்பற்பூசி எருக்கமாலையணிந்து, ஊர் நடுச்சந்தியிற் பனங்கருக்கு மட்டையாற் செய்த குதிரைமே லமர்ந்து, தான் காதலித்த பெண்ணின் உருவப்படத்தை வலக்கையிலேந்தி, அதை உற்று நோக்கிய வண்ணமாயிருப்பான். ஊர்ப்பெருமக்கள் அதனைப் பார்ததவுடனேயே, அவன் எல்லா வகையிலும் பெண்ணிற்குத் தகுதியுள்ளவனென்றும் அவனிலுஞ் சிறந்தவன் இல்லையென்றுங் காணின், பெண்ணின் பெற்றோரிடம் பேசித் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கவுங் கூடும். அது அத்துணை எளிதாக முடிவதாயில்லா விடின், அவர் அவனை நோக்கி நீ ஆய்வு தருகின்றையா? என வினவுவர். அவன் தருகின்றேன். எனின், அவனை அம்மடற் குதிரைமீது அமர்ந்திருந்தவாறே பெருந்தெரு வழியாக ஊரைச் சுற்றியிழுப்பர். பனங்கருக்காற் காயம் படுந்தொறுங் காதல் மறம் (வீரியம்) கிளரின், அவன் கடைப்பிடியையும் அவன் எண்ணம் நிறைவேறாவிடின் இறந்து படும் நிலைமையையும் உன்னி, பெண்ணின் பெற்றோரை வற் புறுத்தி இசைவித்து மணத்தை முடித்து வைப்பர். இது இக் காலத்து உண்ணாநோன்பும் பாடுகிடப்பும் (சத்தியாக்கிரகமும்) போன்றது. பழைய வுரையிலுள்ள வீரியம் என்னும் சொற்கு விந்து என்று பொருள் கொள்ளுவது பொருந்தாது. பெண்ணின் பெற்றோர் ஊரைப் பகைத்துக் கொள்ள முடியாத. அதனால், மடலேற்றத்தாற் காதலன் கருதியது கைகூடும் வாய்ப் புண்டு. ஆயின், அதே சமையத்தில், காதலன் தன்மானத்தைத் துறக்கவும் நோவைத் தாங்கவும் காயம் மிகின் உயிரை இழக்கவும் அணியமாயிருத்தல் வேண்டும். இதன் அருமை நோக்கியே எல்லாரும் இதை மேற்கொள்வதில்லை. சிலர் வெற்றரட்டாக விளம்பிச் சொல்லளவிலேயே நின்று விடுவர். இம்மடலேற்ற வழக்கு நாகரிகம் நிரம்பாத பழங்காலத்திற்குரிய தாதலால், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே அற்றுப்போ யிருத்தல் வேண்டும். ஆயின், இன்றும் ஒருவர் கோவை பாடின், மடலூர்தலும் ஒரு துறையாக அமைதல் வேண்டுமென்பது புலனெறி வழக்கமாகும். ஆதலால், அயல்நாட்டார் அகப்பொருட் செய்யுட்களைப் படித்தவுடன் பண்டைத்தமிழ் நாகரிகத்தைப் பற்றித் தவறான எண்ணங் கொள்ளாவாறு, மறைமலையடிகள் வழிப்பட்ட தனித்தமிழாசிரியரிடமே தமிழ் பயிலுமாறு செய்தல் வேண்டும். அரபிக் குதிரைகள் வந்தபின், பாண்டியனுக்கும் அவன் சிற் றரசர்க்கும், காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப் படை என்னும் நால்வகைப் படைகள் அமைந்தன. ஆட்சித்துணையாக, ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் ஐவகை யுறுதிச்சுற்றமும் எனப் பதினெண் குழுவார் அமைந்தனர். பாண்டியன் தன் ஆள்நிலத்தை மூன்று மண்டலங்களாகவும், ஒவ்வொரு மண்டலத்தையும் பலநாடுகளாகவும், ஒவ்வொரு நாட்டையும் பல கூற்றங்காளவும், பிரித்தாண்டதாகத் தெரிகின் றது. மண்டலம் என்னுஞ்சொல் மண்டிலம் என்றுந் திரியும். மண்டலம் என்பது வட்டம். அச்சொல் வட்டம், வட்டகை, வட்டாரம் என்னும் சொற்கள் போன்று நாட்டுப் பகுதியைக் குறித்தது. அது தூய தென்சொல்லே. முண்டு = உருட்டுக் கட்டை. முண்டு-முண்டம் = உருண்டு திரண்ட கட்டி, சதைத்திரள், கை கால் தலையில்லா வுடல், பெரிய வுருட்டுக் கட்டை. முண்டு-முண்டை = முட்டை. முண்டு-முட்டு-முட்டை. முண்டு-மண்டு. மண்டுதல் = வளைதல். மண்டு-மண்டி. மண்டியிடுதல் = காலை மடக்குதல். மண்டு-மண்டலம் = 1. வட்டம். (பிங்.). சுடர் மண்டலம் (திருநூற்.80). 2. வட்ட வடிவம். (திவா.). 3. மந்திரச் சக்கரம். 4. கதிரவனை அல்லது திங்களைச் சுற்றியுள்ள ஊர்கோள் (வட்ட வொளிக்கோடு). 5. காதலன் காதலியின் உடம்பிற் பொறிக்கும் வட்ட வடிவமான உகிர்க்குறி. 6. கயிறு பாம்பு முதலியவற்றின் சுற்று. மண்டலம் பயிலுரகர் (பாரத. குருகுலு.3) 7. வட்ட வடிவ மான படை வகுப்பு. (குறள்.767, உரை). 8. குதிரை வட்டமாகச் சுற்றி யோடுதல். பண்ணிய வீதிபற்றி மண்டலம் பயிற்றுனானே (சீவக. 795). 9. நடுவிரல்நுனியும் பெருவிரல்நுனியும் கூடி வளைந் திருக்க மற்ற விரல்களும் ஒக்க வளைந்து நிற்கும் இணையா விணைக்கை (சிலப். 3:12, உரை). 10. வில்லோர் இருகாலையும் வளைத்து நிற்கும்நிலை. மண்டலம்-மண்டலி. மண்டலித்தல் = 1. வளைத்தல். 2. காலை வளைத்து நிற்றல். 3. சுற்றிச் சுற்றி வட்டமிடுதல். 4. ஒரு பாட்டின் இறுதி எழுத்து அசை சீர் சொல் என்பவற்றுள் ஒன்று அடுத்த பாட்டின் முதலில் அமையப் பாடுதல். மண்டலம்-மண்டிலம் = 1. வட்டம். 2. வட்டவடிவம். 3. கதிரவன். பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (பெரும்பாண். 442). 3. திங்கள். செய்வுறு மண்டிலம் (கலித். 7). 4. வட்டக் கண்ணாடி. மையறு மண்டிலம் போலக் காட்ட (மணி. 25:137). 5. வானம். (பிங்.) 6. பார் வட்டம். செஞ்ஞாயிற்று ................................................................................. பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் (புறம். 30). 7. பார்நிலம் கடல்சூழ் மண்டிலம் (குறுந். 300). 8. வட்டமா யோடுகை. செலவொடு மண்டிலஞ் சென்று (பு.வெ.12, வென்றிப். 14). 9. இருகாலும் வளைத்து நிற்கும் நிலை. இருகால் மண்டலத் திடுதல்மண் டிலநிலை (பிங். 6:369). மண்டலம்-வ. மண்டல. மண்டலம் என்னும் சொல் மட்டுமன்று, வட்டம் என்னும் சொல்லும் வடசொற் றிரிபாகவே சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகரமுதலியிற் காட்டப்பட்டுள்ளது. வல்-வள்-வண்டு, வட்டு-வட்டம். வட்டம்-வட்ட (பிரா.) - வ்ருத்த (வ.) L.verto (turn). இத்திரிபைத் தலைகீழாக வ்ருத்த-வட்ட-வட்டம் என்று காட்டியுள்ளது செ.ப.க.க.த. அகரமுதலி. மண்டலம் வட்டம் என்னும் இருசொற்கும் அடிவேர் முல் என்பதே. உழவு, கைத்தொழில், வணிகம், அரசியல் முதலியவற்றால், உலகியல் அறிவு பலதுறையிலும் வளர்ந்து வந்தது. அதன் விளை வாக, மதத்துறையிலும் பல மாறுதல்கள் நேர்ந்தன. ஐந்திணை நிலத்தாரும், ஐம்பூதங்களையும் நன்மையுந் தீமையும் செய்யும் உயிரிகளையும் இறந்த முன்னோரையும் போரிற்பட்ட பெரு மறவரையும் பேய்களையும் பொதுவாக வணங்கி வந்தாலும், ஒவ்வொரு திணைநிலத்திற்கும் ஒவ்வொரு தெய்வம் சிறப்பாக நிலைத்துவிட்டது. குறிஞ்சி நிலத்தில் முதற்கண் தோன்றி, ஏனை நிலங்களிலும் மட்டுமன்றி உலகமுழுதும் பரவிய முதல் தெய்வம் தீயாகும். அதனால், தெய்வம் என்னும் பொதுப்பெயரே தீயின் பெயரி னின்றுதான் திரிந்தது. தேய்தல் = மரங்கள் அல்லது கற்கள் உராய்தல், உராய்ந்து தீப்பற்றுதல். தேய்-தேயு = உராய்ந்து பற்றும் நெருப்பு. தேயு-தேசு = நெருப்பின் ஒளி. தேசு-வ. தேஜ. தேய்-தே = தெய்வம். (பிங்.) தேபூசை செய்யுஞ் சித்திரசாலை (சிவரக. நைமிச. 20). 2. நாயகன். (இலக். 81.). தே-தீ = 1. நெருப்பு. வளித்தலைஇய தீயும் (புறம்.2). 2. விளக்கு. தீத்துரீஇ யற்று (குறள். 929). 3.. வயிற்றுத்தீ, கடும்பசி. வயிற்றுத்தீத் தணிய (புறம். 74). 4. சினத்தீ, சினம். மன்னர்தீ யீண்டுதங் களையோடு மெரித்திடும் (சீவக. 250). 5. தீயின்தன்மை, தீமை. தீப்பால் தான்பிறர்கட் செய்யற்க (குறள். 206). 6. நஞ்சு. வேகவெந் தீநாகம் (மணி. 20:98). 7. நரகத்தீ. அழுக்காறு ......................................... தீயிழி யுய்த்துவிடும். (குறள் : 168) ஒ.நோ : தேம்பால்-தீம்பால். தேய்-தேய்வு-தேவு = 1. தெய்வம், (பிங்.). நரகரைத் தேவுசெய் வானும் (தேவா. 696:2). 2. தெய்வத் தன்மை. தேவு-தேவன் = கடவுள். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (திருமந். 2104). தேவன்-வ. தேவ. தேய்வு-தெய்வு-தெய்வம் = 1. வணங்கப்படும் பொருள். தெய்வ முணாவே (தொல்.பொ.18). 2. தெய்வத் தன்மை. 3. தெய்வத்தன்மை யுள்ளது. 4. கடவுள். 5. கடவுள் ஏற்பாடு, ஊழ். தெய்வம்-வ. தைவ. தேய் என்னும் மூலத்திலுள்ள யகரமெய், தெய்வம் என்னுஞ் சொல்லிலு மிருத்தல் காண்க. குறிஞ்சி நிலத்தார், தெய்வம் தீவடிவினது அல்லது தீயொத்தது என்னுங் கருத்தினரேனும், தெய்வம் அல்லது தேவன் என்பது பொதுப்பெயராகி விட்டதனால், தீயைப்போற் சிவந்தவன் என்னுங் கருத்தில் தம் தேவனைச் சேயோன் என்றனர். அவன் தம்மைப்போல் மறவனாயிருக்க வேண்டுமென்று கருதி, மறத்திற்குச் சிறந்த இளமைப் பெயரால் அவனை முருகன் என்றனர். முருகு இளமை. அழகு என்பது அதன் வழிப் பொருள். தம் படைக்கலமாகிய வேலையேந்தியும், குறிஞ்சிக்குரிய கடப்ப மாலையை யணிந்தும், இருப்பதாகக் கருதி, வேலன் என்றும் கடம்பன் என்றும் இருபெயர் சேர்த்தனர். மேலெழுந்து விண்ணுலகஞ் செல்லவுதவுமென்று கருதி, குறிஞ்சிக்குரிய அழகிய பெரும்பறவையாகிய மயிலை முருகனுக்கு ஊர்தியாகக் கொண்டனர். முல்லைநிலத்தார், தம் கன்றுகாலிகட்குப் புல்வளரவும் வானா வாரிக் கொல்லையிற் பயிர்கள் விளையவும், இன்றியாமையாத மழை பெய்யும் கருமுகிலை அல்லது அது திரளும் நீலவானைத் தம் தேவன் வடிவாகக் கொண்டு, அவனை மாயோன் என்றும் கரியவன் என்றும் மால் என்றும் குறித்தனர். மருதநிலத்தார், விண்ணுலகக் கொள்கை கொண்டதனால், இம்மையிற் சிறந்த நல்வினை செய்யும் பொதுமக்கள் தேவராகவும் வேந்தன் தேவர்கோனாக வும், மறுமையில் விண்ணுலகத்திற்சேர்வர் என்னும் நம்பிக்கையினால், ஒருங்கே விண்ணுலக வேந்தனாகவும் மழைத் தெய்வமாகவுங் கொண்ட தம் தேவனை, வேந்தன் என்றே விளம்பினர். நெய்தல் நிலத்தார், கடல்படு செல்வத்திற்கும் நீர்வாணி கத்திற்கும் கடலையே நம்பியிருந்ததனால், கடல் தலைவனே தம் தேவன் எனக்கொண்டு, அவனை வாரணன் என்றனர். வாரணம் கடல். வாரணன் கடல் தலைவன். வார்தல் வளைதல். வள்-வர்-வார்-வாரணம். கடல் நிலத்தைச் சூழ்ந்திருப்பதால் வாரணம் எனப்பட்டது. வளைகடல் வலையிற் சூழ்ந்து (சீவக. 1115). கேடகமும் சங்கும் வாரணம் எனப்படுவதும் வளைந்திருத்தல் பற்றியே. வாரணன்-வ. வருண. கடற்கோ = வாரணன் (உபதே. உருத். 230). பாலைநிலத்தார் அடிக்கடி ஆறலைத்தும் சூறையாடியும் போரிட்டும் மக்களைக் கொன்று பிணமாக்கியதனால், அப்பிணங்களைத் தின்பதாகக் கருதப்பட்ட கூளிகளின் (பேய்களின்) தலைவியாகிய காளியை, தமக்குப் போரில் வெற்றி தருபவளாகக் கருதி, அவளை அவர் தெய்வமாகக் கொண்டு காவிட்டு வழிபட்டனர். பேய்நிறம் கருப்பென்பது பற்றி, அவள் காளி எனப்பட்டாள். கள்-காள்-காளம்-காளி = கருப்பி. அவளை மாயோள் என்பதும் அந்நிறம் பற்றியே. மாமை கருமை. காளி-வ. காலீ. கருப்பாய் என்பது உலக வழக்கு. காளி வணக்கம் அடிப்படையிற் பேய் வணக்கமாயினும், அது தாய் வணக்கமும் கண்ணகிபோலும் கற்புடைத் தேவி வணக்கமுங் கலந்ததாகும். காளியம்மை கொற்றவை என்னும் பெயர்கள் தாய் வணக்கக் கருத்தைக் காட்டும். கொற்றம் + அவ்வை = கொற்றவை (வெற்றித்தாய்). இனி, அம்மை யென்னும் பெயர் அடையடுக்காது தனித்தும் அவளைக் குறிக்கும். அதனால், அவளால் நேர்வதாகக் கருதப்பட்ட கொப்புள நோய், அம்மை யென்றே பெயர் பெற்றது. இங்ஙனம் ஐந்திணை வணக்கமும் ஏற்பட்டபின், மருதநிலப் பார்ப்பாருட் சிறந்த அறிஞர் சிலர். பிறவியறுக்கும் வீடு பேற்றும் கருத்துங்கொண்டு, அப்பேற்றைப் பெறும் சிவ நெறி திருமால் நெறி ஆகிய இரு மதங்களையுங் கண்டனர். குறிஞ்சி நிலத்தி லிருந்து ஆய்ந்தவர் சிவ நெறியையும், முல்லை நிலத்திலிருந்து ஆய்ந்தவர் திருமால் நெறியையும், கண்டதாகத் தெரிகின்றது. வீடுபேற்று முயற்சியை மேற்கொண்டவர், உலகப் பற்றை முற்றத் துறந்து எல்லாவுயிர்களிடத்தும் அருள் பூண்டமையால், அந்தணர் எனப்பட்டார். அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். (குறள். 30). இங்ஙனம், கல்வித் தொழிலாளர், இல்லறம் பேணும் பார்ப்பார் என்றும் துறவறம் பூணும் அந்தணரென்றும், இரு பாற்பட்டனர். இங்ஙனமே, அரசரும் குறுநில மன்னர் பெருநில மன்னர் என்றும், வணிகரும் நில வணிகர் நீர் வணிகர் என்றும், உழவரும் உழுதுண்போர் (கருங்களமர்) உழுவித் துண்போர் (வெண்களமர்) என்றும், இவ்விரு திறப்பட்டனர். கருங்களமர் காராளர் என்றும், வெண்களமர் வெள்ளாளர் என்றும், சொல்லப்பட்டனர். இவ்விரு சாரார்க்கும் வேளாளர் என்பது பொதுப்பெயராகும். ஏனை மூவர் போலாது, புதிதாய் வந்தவர்க்கும் அன்புடன் விருந்தோம்பி வேளாண்மை செய்வதனால், உழவர் வேளாளர் எனச் சிறப்பிக்கப்பட்டனர். வேளாண்மை பிறரை விரும்பி யாளுந் தன்மை. வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான். (திரிகடுகம். 12). குறிஞ்சி நிலத்தார், குறவர் குன்றவர் இறவுளர், கானவர் வேட்டுவர் என்றும்; முல்லைநிலத்தார். ஆட்டிடையர் மாட்டிடையர் என்றும்; நெய்தல் நிலத்தார், நுளையர், திமிலர், பரதர் (பரவர்) என்றும்; பாலைநிலத்தார், எயினர், மறவர், வேட்டுவர், வேடர் என்றும்; இடம்பற்றியும் தொழில் பற்றியும் கருவி பற்றியும் சிற்சில வகுப்பாராய்ப் பிரிந்து போயினர். ஆயர், இடையர், கோவர், தொறுவர், பொதுவர் என்னும் பெயர்கள், பெயர்வேற்றுமையே யன்றிக் குலவகுப்பைக் குறியா. ஆன்வல்லோர் (திவா.) என்றும், ஆன்வல்லவர் (சூடா.) என்றும், ஆயர்க்குப் பெயருண்மையால், கோவலன் என்பது கோ மேய்ப்பதில் வல்லவன் என்று பொருள்படும் தென் சொல்லே யன்றி, கோபாலன் என்னும் இருபிறப்பி வடசொல்லின் திரிபாகாது. பாலைநிலம் குறிஞ்சியை யடுத்ததாதலின், வேட்டுவர் என்னும் பெயர் கொண்ட வகுப்பார் இருநிலத்திலும் இருந்தனர். கடிய நெடு வேட்டுவன் என்னுங் கொடையாளி கோடை மலைக்குத் தலைவன். சிலப்பதிகாரத்திற் பாடப்பட்டுள்ள வேட்டுவவரி பாலைவாணரைப் பற்றியது. உறைக்காலத்து மொழித் துறையில், எகர ஒகரக் குறில்களும் ள, ழ, ற, ன மெய்களுந் தோன்றி நெடுங்கணக்கு நிரம்பியிருத்தல் வேண்டும். வெண்பா வஞ்சிப்பாவுந் தோன்றி நால்வகைப் பாவிலும் இலக்கியம் நடைபெற்றிருக்கும். இசை நாடகக் கலைகளும் வளர்ச்சியுற்று இலக்கிய விலக்கணம் பெற்றிருக்கும். எழுத்து சொல் பொருள் என்னும் முக்கூறுத் தழுவிய பிண்ட விலக்கணமுந் தோன்றியிருக்கும். தமிழர் மீண்டும் வடக்கே சென்று பரவியிருப்பர். வடஇந்தியா திரவிடநாடாகவும், நடுவிந்தியா மொழி பெயர் தேயமாகவும், மாறியிருக்கும். மக்கள் பெருகி ஆள்நிலம் மிக விரிவடைந்துவிட்டதனால், பாண்டியன், குமரியாற்றிற்கு வடக்கிற் பனிமலை வரையுள்ள நிலப்பாகத்திற் கீழ்ப்பாதியை ஒருவனும் மேற்பாதியை ஒருவனும் ஆளுமாறு, இருதுணையரையரை அமர்த்தியிருத்தல் வேண்டும். வெள்ளி (வெண்பொன்) செம்பும் வெள்ளீயமுங் கலந்து உறையென்னுங் கலப்புப் பொன்னம் (metal), அமைத்ததற்கு முன்னோ பின்னோ, வெள்ளி அல்லது வெண்பொன் என்னும் பொன்னமம் தமிழகத்திற் கிடைத்துப் பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். வெண்ணிற மாயிருப்பது வெள்ளி. வெள்-வெள்ளி. இரும்பல்லாத பொன்னத் தனிமங்களுள் (elements) தலைசிறந்து பயன்படுபவற்றுள் ஒன்றான செம்பு, கற்காலத்தின் பிற்பகுதியில் கி.மு. 8000 போல் புதுக் கற்கால மாந்தனாற் கண்டுபிடிக்கப்பட்டு முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. செம்பு இயற்கையில் தனிப்பொன்ன நிலையிற் காணப்படுகின்றது. இவ்வியற்கைச் செம்பு புதுக் கற்கால மாந்தன் கல்லிற் கீடாகப் பயன்படுத்திய கருவிப்பொருளாகும். அதினின்று அவன் முருட்டுச் சம்மட்டி களையும் கத்திகளையும் பின்னர் மற்றக் கலங்களையும் அமைத் தான். அதன் சமட்டப் படுந்தன்மையால், அதை வேண்டிய வடிவத்திற்கு அடித்துக் கருவிகளை உருவாக்குவதற்கு மிக எளிதாயிருந்தது. தட்டுவதனாற் செம்பு இறுகிக் கூர்மை மிக்கன வும் நீண்டுழைப்பனவுமான ஓரங்கள் தோன்றின. அப்பொன் னத்தின் பளபளப்பான செம்பட்டை நிறமும் நிலையான தன்மைகளும் அதை மிகுந்த விலைமதிப்புள்ள தாக்கின. இம் முந்து காலத்திற் செம்பிற்காகச் செய்த தேடுகை, இயற்கைச் செம்பைக் கண்டு பிடிக்கவும் அதன் வைப்புக்களிலிருந்து அதையெடுக்கவும் வழி வகுத்தது. கி.மு.6000 ஆண்டு கட்குச் சற்றுப்பின்பு, அப்பொன்னத்தைக் குடியிருப்புத் தீக்களத்தில் உருக்கி வேண்டிய வடிவத்தில் வார்த்துக் கொள்ள முடியுமென் பது, கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்பு, பொன்னவியற் செம்பிற்கும் செம்புள்ள பாறைக்குமுள்ள உறவும், செம்பு கலந்த மணலிலிருந்து நெருப்பினாலும் கரியினாலும் செம்பைப் பிரித் தெடுக்க முடியுமென்பதும், கண்டு பிடிக்கப்பட்டன. இதினின்று பொன்னவூழி தொடங்கிப் பொன்னக்கலை பிறந்தது. செம்புக் காலத் தொடக்கத்தில் அதன் மாபெரு வளர்ச்சி எகிப்துவில் இருந்திருக்கக் கூடும். கி.மு. 5000 ஆண்டுக் காலத்தி லேயே, கல்லறைகளில் இறந்தவர் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்ட படைக்கலங்களும் கருவிகளும் செம்பினாற் செய்யப்பட்டிருந் தன. கி.மு. 3200 போல், சீனாய்த் தீவக்குறையில் (Peninsula), சினெப் புரு (Snefru) அரசனால், செப்புச் சுரங்கங்கள் நடத்தப்பட்டதைப் பற்றிய திட்டமான எழுத்தேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சுரங்கங்களிற் கண்டெடுக்கப் பட்டுள்ள குகைகள், அப் பொன்னத்தைப் பிரித்தெடுக்குங்கலை தூய்மைப்படுத்தலையும் உட்கொண்ட தென்பதைக் காட்டுகின்றன. அக்கலை, செம்பைச் சன்னத்தகடுகளாக அடித்து, அவற்றைக் குழாய் களாகவும் பிறவுருப்படிகளாகவும் செய்கிற அளவுற்கு வளர்ச்சியடைந் திருந்தது. அக்காலத்தில் உறை (வெண்கலம்) முதன்முதல் தோன் றிற்று. அம்மூலக்கருவிப் பொருளின் அறியப்பட்ட முதற்பழந் துண்டு, மெதும் (Medum) கூம்புக் கோபுரத்திற் கண்டெடுக்கப் பட்டுள்ள ஒரு வெண்கலப் பாரையாகும். அதன்தோற்றக்காலம் தோரா. கி.மு. 3700 என்று பொதுவாக ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது. செம்பும் வெள்ளீயமுங் கலந்த அளையம் (alloy) ஆகிய உறை, செம்பினும் உயர்ந்த வன்மையும் விறப்பும் ஆகிய தன்மைகளை உடையது. இது பொதுவாகப் படைக்கலங்களும் கலையுருப்படி களும் செய்யுங் கருவிப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இது மிகுதியாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தப்பட்ட காலம் உறைக்காலம் (Bronze Age) எனப்படும். உறையைப் பயன்படுத் துகை, எகிப்துவிலிருந்து கிரேத்தாவிற்குக் (crete) கி.மு. 3000-இலும், சிசிலிக்குக் (Sicily) கி.மு. 2500-இலும், பிரான்சிற்கும் ஐரோப்பாவின் பிறவிடங்கட்கும் கி.மு. 2000-இலும், பிரித்தனுக் கும் காண்டினோவியப் பரப்பிற்கும் கி.மு. 1200-இலுமாக, நண்ணிலக்கடற்கரை நாடுகட்கு விரைந்து பரவியது. கி.மு. 3000 போல் செம்பு செப்பறைத் (Cyprus) தீவில் ஏராளமாக எடுக்கப்பட்டது. அங்குள்ள செம்பு வைப்புக்கள் மிகப் பெரியன வாகவும் மிகவுயர்ந்த விலைமதிப்புள்ளனவாகவும் இருந்ததனால், அத்தீவின் ஆட்சி, அடுத்தடுத்து, எகிப்தியர்க்கும் ஆசிரியர்க்கும் பீனிசியர்க்கும் கிரேக்கர்க்கும் பாரசீகர்க்கும், உரோமர்க்கும் தாவிற்று. உரோமர்க்கு வேண்டிய செம்பு ஏறத்தாழ முற்றிலும் அத்தீவினின்றே வந்தது. அதனால் அது செப்பறைப் பொன் மணல் (acs cyprium) எனப் பெயர் பெற்றது. அப்பொருளுள்ள இலத்தீனப் பெயர் கிப்ரியம் என்று குறுகப் பின்னர்க் குப்ரம் என்று திரிந்தது. இப் பெயரினின்றே காப்பர் என்னும் ஆங்கிலச் சொல் வந்தது. இலத்தீனப் பெயரின் முதலீரெழுத்துக்களுஞ் சேர்ந்து கு (cu) என்னும் இதளியக் (Chemical) குறி யமைக் கின்றது. ஆசியாவிற் செம்பும் உறையும் எப்போது முதலிற் பயன்படுத்தப் பட்டன வென்பது, தெரியவில்லை. சு சிங்ஙின் (Shuching) பாவியங்கள் (epics), சீனத்தில் கி.மு. 2500-இலேயே செம்பு பயன்படுத்தப் பட்டதாகக் கூறுகின்றன. ஆயின், அக்கலையின் அற்றை நிலையைப் பற்றியாவது, அப்பொன்னம் அதற்குமுன் பயன்படுத்தப்பட்டதைப் பற்றியாவது, ஒன்றும் அறிதற்கில்லை. கி.மு. 1765-இலிருந்து 1122 வரை யாண்ட சங் (Shang) ஆள்குடிக் (dynasty) காலத்திற் செய்யப்பட்டனவும், பேரழகுடையனவும், உயர்ந்த கலைத்திறனைக் காட்டு வனவுமான உறைக்கலங்கள், கிடைத்துள்ளன. ஆயினும், இப்பொன்னங் களின் மூலத்தைப் பற்றிய மருமம், முந்துகாலச் சீனரின் திருக்கல்லறைகளில் என்றென்றைக்கும் பூட்டி வைக்கப் பட்டுள்ளது போலும்! (- பிரித்தானியக் கலைக் களஞ்சியம் (1970) 6, பக். 468.) வெண்கலம் திண்மையும் வன்மையும் உடைமையினாலேயே உறையெனப் பட்டது. முறியென்பதும் அப்பொருட்டே. உறத்தல் செறிதல். உறுதல் உறுதியாதல், உறைதல் இறுகுதல். முறத்தல் விறப்பாதல். முறுகு திண்மை. வெள்ளி, பொன்னிற்கு அடுத்தபடியாக அழகுள்ளதும் விலை யுயர்ந்ததும் அணிகலத்திற்குப் பயன்படுவதுமான பொன்ன மாகும். அது பொன்போல் அத்துணை யுயர்ந்ததன்றேனும், உலகத் திற் கிடைக்குமளவு மிகக் குறைவாகவே யுள்ளது. ஞாலத்தின் கற்புறணியிற் கிடைக்கும் அரைக்கோடிப் பங்கு இரும்பிற்கு, இருபங்குதான் வெள்ளி கிடைக்கின்றது. வெள்ளியின் நடைமுறைப் பயன்பாட்டுத் தொடக்கம், தொன்மைக்குள் மிகத் தொலைவு செல்கின்றது. எனினும், மாந்தன் முதன்முதற்பணிக்குப் பயன்படுத்திய பொன்னங்கள், பொன்னும் செம்புமேயென்று நம்பப்படுகின்றது. கி.மு. 4000 வரை பழைமையான அரசர் கல்லறைகளில், வெள்ளியணி கலன்களும் சுவடிப்புக்களும் காணப்படுகின்றன. கி.மு. 3100 போல் எகிப்தை ஆண்டதாகக் கருதப்படும் மெனெசின் (Menes) நெறியீட்டுத் தொகுப்பில், ஒருபங்கு பொன், விலை மதிப்பில் இரண்டரைப் பங்கு வெள்ளிக்குச் சமமென்று தீர்க்கப்பட் டுள்ளது. இதுவே முதற்பொன்னளவைத் திட்டமாக இருக்கலாம். கி.மு. 700-ஆம் ஆண்டு, சிந்தாற்றிற்கும் நீலாற்றிற்கும் இடைப் பட்ட எல்லா நாடுகளிலும், பொன்னும் வெள்ளியும் பணமாக வழங்கின என்பது பெரும்பாலும் தேற்றம். உரோமர், தம் காலம் வரை, வெள்ளிப் பணிக்கலையிலும் அறிவியலிலும் வேறெந் நாட்டாரினும் மிகத் தேர்ச்சி பெற்றிருந்திருக்கலாம். (பிரித் தானியக் கலைக்களஞ்சியம் (1970), 20, பக். 536.) மேற்காட்டிய மேற்கோட்பகுதிகள், தமிழறியாதவராற் பெரும் பாலும் மேனாடுகளே பற்றி யெழுதப்பட்ட வையாதலால், அவற் றுள் தமிழர் வரலாற்றிற்கு ஒவ்வாதன வெல்லாம் அறியாமையின் விளைவென்று கருதியமைக. இற்றையுலகில் மிகப்பெரிய வெள்ளிச்சுரங்கம் மெகசிக் கோவில் (Mexico) உள்ளது. அமெரிக்க ஒன்றிய நாடுகளிலும் (U.S.A.) கானடாவிலும் வெள்ளி பெருவாரியாகக் கிடைக்கின்றது. தென்னமரிக்காவிலும் வெள்ளி எடுக்கப்படு கின்றது. முதன்மை யான வெள்ளியீய நாக மணல்கள் ஆத்திரேலியாவிற் கிடைக்கின் றன. சிற்றளவாக வெள்ளி கிடைக்குமிடங்கள் உலகெங்கும் பரவியுள்ளன. பண்டைத் தமிழகத்தில், வெள்ளிக் கலங்கள் பயன்படுத்தப் பட்டது மட்டுமின்றி, வெள்ளி வேய்ந்த மாடங்களும் அம்பலங் களும் அரண்மனைகளிலும் கோவில்களிலும் அமைந்திருந்தன. அமிழ்தன மரபி னூன்றுவை யடிசில் வெள்ளி வெண்கலத் தூட்ட லன்றி (புறம். 390). விளங்கில வந்தி வெள்ளி மாடத் திளங்கோ வேண்மா ளுடனிருந் தருளி (சிலப்.25:4-5). வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன் (சிலப்.பதி. 41). வெள்ளி சிற்றளவாகக் கிடைத்ததனால், அரசராலும் பெருஞ் செல்வராலும் அணிவகைப் பொருள்கட்கன்றி, பொது மக்க ளாற் பல்வகைக் கருவிகள் செய்யப்பயன்படுத்தப் படவில்லை. அதனால், வெள்ளிக்காலம் என ஒரு காலமும் ஏற்படவில்லை. 5. இரும்புக்காலம் (Iron Age) (தோரா. கி.மு. 10,000-உலக முடிவு.) உறைக்குப் பின் தள்ளிப் பொன்னமாகக் கண்டுபிடிக்கப்பட்ட தும், உலகெங்கும் ஏராளமாகக் கிடைப்பதும், எல்லாக் கருவி களுஞ் செய்தற் கேற்ற உறுதிமிக்கதும், நாகரிகமும் அறிவும் விரைந்து வளர்தற் கேதுவாயிருந்ததும், கரும்பொன் என்னும் இரும்பாகும். அதன் கருமை நிறத்தால் இரும்பெனப்பட்டது. இர்-இரு-இருள். இருமை கருமை. இரு-இரும்-இரும்பு. E.iron. OE iren. அசீரியரும் எகிப்தியரும் இரும்பை மிகுதியாகப் பயன்படுத் தினர். திருப்பொத்தகம், படைப்பியல் (ஆதியாகமம்), 4-ஆம் அதிகாரம் 22-ஆம் திருமொழியில், தூபால் காயீன் இரும்பு செம்பு வினைஞர்க்கெல்லாம் பயிற்றாளனாக இருந்தானென்று சொல்லப்பட்டுள்ளது. தாவீதின் காலத்திற் கருவிகளும் படைக் கலங்களுஞ் செய்ய இரும்பு பயன்படுத்தப்பட்டது. இலக்கியக் கிரேக்கரின் முன்னோடிகளான தோரியப் படையெடுப்பாளர், இருப்புக் கருவி களையும் படைக்கலங்களையுங் கொண்டிருந்தார்கள். ஆக்கிலெசிற்கு, அவனது வல்லுடம்பாண்மைப் பரிசாக ஓர் இருப்புப் பந்து அளிக்கப் பட்ட செய்தியை ஓமர் குறித்திருக்கின்றார். கிரேக்கர் கருங்கடலின் தென்கரையினின்றும், உரோமர் இசுப்பானியா வினின்றும் எல்பாவினின்றும், இரும்பைப் பெற்றனர். தெளிவாக வுள்ளபடி, அதற்கு முந்திய மூலங்கள் இந்தியாவில் இருந்தன. (பிரித்தானியக் கலைக்களஞ் சியம் (1970), 12, பக். 598.) தூபால் காயீன் காலம் கி.மு. 3874. கி.மு. 1425-இல் கானானியர் இருப்புத்தேர் வைத்திருந்தனர். 1296-இல் கானான் அரசானான யாபீன் 90 இருப்புத்தேர் உடையவனா யிருந்தான். இரும்பு மட்டு மின்றித் தேரும் முதன்முதல் தமிழகத்திலேயே தோன்றியிருத்தல் வேண்டும். தமிழ், உலகில் முதன்முதல் தானே தனியாகத் தோன்றிய மொழி யாதலால், நீண்ட காலமாகச் சிறப்புப் பெயரின்றி மொழி என்னும் பொதுப் பெயராலேயே வழங்கி வந்தது. ஓர் ஊரில் ஒரே ஆறிருப்பின் போய் வந்தேன் என்றே சொல்வர். அதுபோல் ஒரே மரமிருப்பின், மரத்தடிக்குப் போ என்றே சொல்வர். இங்ஙனம் தமிழும் தமிழகத்தில் ஒரே மொழியாயிருந்ததனால், மொழி யென்றே முதலில் வழங்கிற்று. தென்னில மக்கள் வடக்கே சென்றபின், தட்பவெட்பநிலை சுற்றுச் சார்பு முதலியவற்றின் வேறுபாட்டாலும், பேச்சுறுப்புக் கள் வன்மை பெற்றுவிட்ட தனாலும், இலக்கிய விலக்கணங்களும் புலவரு மின்மையாலும், வாய்க்கிசைந்த வாறு பேசி வந்ததனாலும், அவர் மொழி வல்லோசையும் கொச்சைத் தன்மையும் பெற்றுத் திரவிட நிலையடைந்து விட்டது. அதன்பின் அங்குச் சென்ற தென்னில வணிகர், வடநாட்டில் மொழிபெயர்ந் திருந்ததைக் கண்டனர். அதனால் அந்நாட்டை மொழிபெயர் தேயம் என்றனர். அம்மொழிபெயர் தேயத் தென்னெல்லை வரவரத் தெற்கே தள்ளி வந்தது. குல்லைக் கண்ணி வடுகர் முனையது வல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் (குறுந். 11). வில்லலைத் துண்ணும் வல்லாண் வாழ்க்கைத் தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே. (அகம்.31). பனிபடு சோலை வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் (அகம். 211). தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர் பிழியார் மகிழர் கலிசிறந் தார்க்கும் மொழிபெயர் தேஎம் இறந்தன ராயினும் (அகம்.295). இவை பிற்காலத்தனவாயினும், முற்காலத்து நிலைமையையும் ஒருவாறு குறிக்கும். நிலவாணிகம் போன்றே நீர்வாணிகமுஞ் சிறந்தது. ஆற்றைக் கடக்கப் பரிசல், அம்பி, ஓடம், பள்ளியோடம் முதலிய கல வகை களும்; கால்வாய் ஆறு கரையோரக் கடல் ஆகியவற்றிற் சரக்குக் களைக் கடத்தத் தோணி, பஃறி முதலிய கடத்து வகைகளும்; கடலில் உட்சென்று மீன்பிடிக்கக் கட்டுமரம், மேங்கா, திமில், படகு முதலிய சிறுகல வகைகளும்; முத்துக் குளிக்கச் சலங்குப் படகும்; ஆழ்கடலைக் கடந்து அக்கரை நாடுகளில் வணிகஞ் செய்து மீளக் கப்பல், நாவாய், வங்கம் முதலிய பெருங்கல வகைகளும்; ஏற்பட்டன. நெய்தல் நிலத்தில் மீன்பிடிக்கும் தொழிலராயிருந்த படவர் அல்லது பரவர் சிலர், நெடுங்கடல் செல்லும் நீர்வணிகராயினர். அவருள் தலைவர் குறுநிலமன்னருமாயினர். அவர் குடிப்பெயர் பரதர், பரதவர் எனவுந் திரிந்தது. படம் = துணி, சீலை, பாய். படம்-படவு-பாய் கட்டிய தோணி. படவதேறி (திருவாச. 43:3). படவு-படகு. படவு-படவன் = படகோட்டி. படவர்மடமகளிர் (திருப்போ. சந். பிள்ளைத். முத். 4). படவன்-பரவன் = படகேறி மீன் பிடிப்பவன். மீன்பல பரவன் விலைகொணர்ந் திட்டனன் (திருமந். 2031). பரவன்-பரதவன் = 1. மீன் பிடிப்போன். மீன்விலைப் பரதவர் (சிலப். 5:25). திண்டிமில் வன்பரதவர் (புறம். 24:4). 2. நீர்வணிகள், வணிகன். (சிலப். 5:157, உரை). 3. குறுநிலமன்னன். தென்பரதவர் மிடல்சாய (புறம்.378). பரதவன்-பரதன் = 1. மீன் பிடிப்போன். படர்திரைப் பரதர் முன்றில் (கம்பரா. கார்கால. 74). 2. கடலோடி. பரதர் மலிந்த பயங்கெழு மாநகர். (சிலப். 2:2). 3. வணிகன். பரத குமரரும் (சிலப். 5:158). பரதவர் கடலோடிகளும் (Mariners) சுற்றுக்கடலோடிகளுமா யிருந்தனால் (Circumnavigators), வடதிசைச் சென்று வடபார் முனையில் சிற்சில வேளைகளில் தோன்றும் வண்ணவொளியைக் கண்டு, அதற்கு வடவை யென்று பெயரிட்டனர். வடம்-வடவை = வடதிசை நெருப்பு. வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து (தனிப்பாடல்). வடவனல் = வடவை. அக்கடலின் மீது வடவனல்நிற்க விலையோ (தாயு. பரிபூர. 9). வெள்ளத் திடைவாழ் வடவனலை (கம்பரா. தைலமா. 86). வடவனலம் = வடவை. கடுகிய வடவன லத்திடை வைத்தது (கலிங். 402). வடம்-வடந்தை = வடதிசையிலுள்ளது, வடகாற்று. வடந்தைத்தீ = வடவை. சுடர்ந்தெரி வடந்தைத் தீயும் (காஞ்சிப்பு, இருபத். 384). உத்தர மடங்கல் = வடவை (திவா.) உத்திரம் = வடக்கு. மடங்கல் = கூற்றுவன்போல் உலகையழிக்கும் ஊழித்தீ. உத்தரம் = வடக்கிலுள்ள ஊழித்தீ, வடவை (பிங்.) பாரின் தென்முனையிலும் வடவை போன்ற ஒளி தோன்று மேனும், ஆரியர் வருகைக்கு முற்பட்ட பண்டைத் தமிழிலக்கியம் முற்றும் அழியுண்டு போனமை யால், அதைப்பற்றிய இலக்கியக் குறிப்பும் இறந்துபட்டது. வடவனல் குமரிநாடு முழுகுமுன்னரே கண்டுபிடிக்கப் பட்டதேனும், அதைப் பற்றிய குறிப்புகள் இற்றைப் பண்டைநூல் 7-ஆம் நூற்றாண்டினதான திவாகரமே. எனினும், வடவையை முதன்முதற் கண்டவன் தமிழனே என்பதற்கு, அதுவே போதிய சான்றாம். ஏனெனின், இற்றை யறிவியல்களைக் கண்ட மேனாட்டாரும் அதை 17-ஆம் நூற்றாண்டிலேயே அறிந்தனர். காசந்தி (Gassendi) என்னும் பிரெஞ்சிய அறிவியலார் 1621-இல் அதைக்கண்டு அதற்கு வடவிடியல் (Aurora Borealis) என்று பெயரிட்டார். இன்று அப்பெயர்க்கு வடவொளி யென்றே பொருள் கொள்ளப்படுகின்றது. அதன் விளக்கம். “A luminous atmospheric phenomenon, now considered to be of electrical character, occuring in the vicinity of, or radiating from, the earth’s northern or southern magnetic pole, and visible from time to time by night over more or less of the adjoining hemisphere, or even of the earth’s surface generally; popularly called the Northern (or Southern) Lights............” என்று எருதந் துறை ஆங்கிலப் பேரகரமுதலியிற் கூறப்பட்டுள்ளது. தமிழ்ப்பெயரும் இலத்தீனப் பெயரும், ஏறத்தாழ முற்றும் பொருளொத் திருத்தல் காண்க. நிலவணிகர் வடக்கிற் பனிமலை வரையும் வடமேற்கில் மேலையாசியா வரையும், நீர்வணிகர் பல்திசையிலுமுள்ள அக்கரை நாடுகள் எல்லாவற்றிலும், பேசப்படும் மொழிகளை யெல்லாங் கேட்டபின், தம்மொழி ஒன்றிலேயே ழகரம் சிறப்பாயொலித்தலைக் கண்டு, அதற்குத் தமிழ் என்று பெயரிட்டிருக்கலாம். தம்-தமி = 1. தனிமை. தமிநின்று (திருக்கோ. 167). 2. ஒப்பின்மை. (சங். 81). தமி+ழ் = தமிழ் (தனிமையாக ழகரத்தைக் கொண்ட மொழி). தமிழ் - தமிழம். தமிழின் இனிமையையும் தமிழப் பண்பாட்டின் சீர்மையையும் நோக்கி, இனிமையு நீர்மையுந் தமிழென லாகும். (10:580) என்றார் பிங்கல முனிவர். அவ்விரண்டும் வழிப்பொருளே யன்றித் தமிழ் என்னுஞ் சொல்லின் வேர்ப்பொருளாகா. சொல்லமைப்பும், செம்மரபும், இலக்கண வொழுங்கும், ஐவகைத் தொடையமைந்த நால்வகைப்பாவின் இன்னோசையும், பொருளிலக்கணமும், சிறப்பாக அகப்பொருட்டுறைகளும், இன்கதை தழுவிய வனப்பியலும், தமிழின் இனிமையையும்; பொருண்மொழிப் பாக்களும் அரசியல் நூலும் அறநூலும் மெய்ப் பொருள்நூலும் தமிழ்ப் பண்பாட்டின் நேர்மையையும், காட்டும். அகப்பொருட்டுறைகளின் இனிமையை நுகர்ந்தே, மாணிக்க வாசகர் யாவையும் பாடியபின் கோவையும் பாடி, அதில், சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தை யுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ .......................................................... என்று (திருக்கோ. 20), தம் சிறப்பான ஈடுபாட்டைக் குறிப்பாகத் தெரிவித்தார். இரும்புக் காலத்தில், வெண்பா முதலிய நால்வகைப் பாக்களுள் முதல் இரண்டன் கலப்பால் மருட்பா என்னும் கலவைப்பாவும், கலிப்பாவின் திரிபால் பரிபாடல் என்னும் திரிபாவும், தோன்றின. இசை, நாடகம், மருத்துவம், சமையல், கணக்கு, கணியம், ஏரணம், மறை, மெய்ப்பொருள் முதலிய பல்துறைக் கலைகளும் அறிவியல்களும் பற்றிய நூற்றுக் கணக்கான நூல்களும்; அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எண்வகை வனப்பியலும்; தோன்றியிருத்தல் வேண்டும். மொழியுடன் இசையும் நாடகமும் இணைக்கப்பட்டு, இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் வழக்கும் ஏற்பட்டிருத்தல் வேண்டும். ஐந்திணைச் சொற்களும் சேர்ந்து, தமிழ் பெருவளம் பெற்றிருந்தது. ஊக்கமின்மை வகை நெடுநீர் - விரைந்து செய்யக் கூடியதை நீட்டித்துச் செய்யும் இயல்பு. மடி - முயற்சி செய்யாது சும்மாயிருக்கும் சோம்பல். மறவி - செய்ய வேண்டியதை மறந்து விடுதல். துயில் - பகலும் தூங்குதல் அல்லது தூக்க நிலையில் இருத்தல். (குறள் 605) ஊகாரச் சுட்டு - 1 முன்மை (1) முன்மைச் சுட்டு ஊ = முன்னிலையிலுள்ள. உ = முன்னிலையிலுள்ள. (உன்னா! = உதோ!) உது - உதோ ! (உந்தோ ! உதா ! உந்தா !). உது = முன்னிலையிலுள்ளது. உது - உதோ - உதோள் - உதோளி = (உவ்விடத்தில்) முன்னிலையிடத்தில். ஊங்கு = முன்னிலையில், முன்பு உங்கு = முன்னிலையில், உங்கு - உங்கா. (ஊங்கு - ஊங்கண் - உங்கண் - (உங்கன்) - உங்ஙன் - உங்ஙனம் = உவ்விடம்; உவ்வாறு). உந்த = முன்னிலையிலுள்ள. (உந்த + இடம் = உந்திடம்) (உன்ன) = முன்னிலையிலுள்ள, உத்தகைய. உவ் - உவன் = முன் நிற்பவன், உவ் - உவ - உவை = முன் நிற்பவை. குறிப்பு : ஊ என்பது முதற்காலத்தில் பெயரும் பெயரெச்சமும் குறிப்பு வினையெச்சமுமாகிய சுட்டுச் சொல்லாக வழங்கிற்று. (2) முன்னிலைப் பெயர் ஒருமை பன்மை ஊன் ஊம் (முதல் நிலை) நூன் நூம் (இரண்டாம் நிலை) நீன் நீம் (மூன்றாம் நிலை) முன்னிலைப் பெயரின் வேற்றுமையடி ஒருமை பன்மை ஊன் - உன், ஊம் - உம் நூன் - நுன், நூம் - நும் நீன் - நின், நீம் - நிம். (மு.தா.) குறிப்பு : (1) மூவிடப் பதிற்பெயர்களும் நெடுமுதல் குறுகியே வேற்றுமை யேற்கும். முதற்காலப்படர்க்கைப் பதிற்பெயர் தான் தாம் என்பன. பின்பு அவை தற்கட்டுப் பெயராயின. (2) மூவிடப் பதிற்பெயர்களிலும், னகரவீறு ஒருமையையும் மகரவீறு பன்மையையும் உணர்த்தும். (3) நீன், நீம் என்னும் இருபெயர்களும், இன்றும் தென்னாட்டுப் பழங்குடி மக்கள் வழக்கில் உள்ளன. (4) நீம் என்பதன் வேற்றுமையடி வழக்கற்றது. (5) நீன் நீம் நீங்கள் என்னும் முப்பெயரும், முறையே, இழிந்தோன் ஒத்தோன் உயர்ந்தோன் ஆகியோரைக் குறிக்க ஆளப்பெறும். (ii) முன்னிலை யொருமைப்பெயர் நீன்-நீ (நான்காம் நிலை) ஒ.நோ. தம்பின் - தம்பி (கடைக்குறை) நீ என்னும் பெயர் வேற்றுமையேலாதிருப்பது, அது நீன் என்னும் பெயரின் திரிபாதலை உணர்த்தும். (iii) முன்னிலைப் பன்மைப் பெயர் பன்மைப் பெயர் இரட்டைப்பன்மைப்பெயர் ஊம் ஊங்கள் நூம் நூங்கள் 4-ஆம் நிலை நீம் நீங்கள் (iv) இரட்டைப் பன்மைப் பெயரின் வேற்றுமையடி ஊங்கள் உங்கள் நூங்கள் நுங்கள் நீங்கள் நிங்கள் (v) முன்னிலைப் பன்மைப் பெயர் நீ + இர் = நீயிர் = நீவிர் (இலக்கணப் போலி) 5-ஆம் நிலை = நீர் (தொகுத்தல்) நீ என்னும் ஒருமைப் பெயரடியாகப் பன்மைப் பெயர் அமைக்கக் கருதி, அவர் என்னும் படர்க்கைப் பெயருக் கொப்ப ரகர விருதி யேற்றி, நீயிர் என அமைத்தனர் இடைக்காலத்தினர். நீம் என்னும் சொல் பலவகுப்பாரிடை வழக்கற்றுப் போனமையே இதற்குக் காரணம், நீம் என்னுஞ் சொல்லைப் போன்றே நீர் என்பதும் ஒத் தோனைக் குறித்தலையும், இவற்றுள் பின்னது நிர் என வேற் றுமைத் திரிபு கொள்ளாமையையும், நோக்குக. நீயிர் நீவிர் நான் எழுவா யலபெறா என்னும் நூற்பாவில், நீர் என்பதையுஞ் சேர்த்துக் கொள்ளாமை நன்னூலாரின் மொழியாராய்ச்சியின்மையையே காட்டும். (3) முன்மை (காலமும் இடமும்) ஊங்கு = முன்பு. (ஊங்கண் - ஊங்கணோர் = முன்னோர்.) புரம் = முன்; முகம் = முன்பு, காரணம். முகம் - முகர் - முகரி = தொடக்கம். முதல் - முன், தொடக்கம், அடி, காரணம். (முதலி = முதலிலுள்ளவன்-ள்-து). முந்து-முந்தை-முத்தை, (முந்துரி-முந்திரி = முதற் சிற்றிலக்கம்) முன் முன்னம் - முனம். முன்னம் - முன்னர். முன் - முன்பு. முன் முன்று. முன் = முனை - முனைவன் = முன்னோன். கடவுள். முன்மையைக் குறிக்குஞ் சொற்கள், முன்வாயான உதட்டிற் பிறக்கும் பகர மகர முதலவாயிருப்பது கவனிக்கத் தக்கது. (4) முதன்மை முன்னிடத்தில் வைக்கப்பெறுவது சிறந்த பொருளாதலால், முன்மைக் கருத்தில் முதன்மைக்கருத்துத் தோன்றிற்று. முகம் = தலைமை. முகம் - முகமை - முகாமை. முகம் - முகர் - முகரி = தலைமை. முகம் - முகன் - முகனை = தலைமை. முகு - முக்கு - முக்கியம் (வ.) முதல் - முதன்மை. முதன் - முதலி = தலைவன். படைத்தலைவன். படைமுதலி சேனைமுதலி என்பன படைத்தலைவன் பெயர். முதலியார் = படைத்தலைவர் வழியினர் (5) முதுமை முன் பிறந்தவன் பின் பிறந்தவனை நோக்க முதியவனாதலால், முன்மைக் கருத்தில் முதுமைக் கருத்துத் தோன்றிற்று. துய்ப்பு, (அனுபவ) மிகுதியால் அறிவு வளர்த்தலின், முதுமைப் பெயர் அறிவையும் குறிக்கும். புரை = பழைமை. முகம் - முகர் - முகரி = பழைமை, கிழம். முகரி - மூரி = கிழம், கிழவெருது, பழைமை. முகரிமை = பேரறிவு. முது - முதுமை. முது - முதார் - முதாரி = முதிய கன்று, முதுமை, முதிர்ச்சி. முது - முதை = பழங்கொல்லை. முதை - முதையல் = பழங்காடு. முது - மூ - மூப்பு. முது - முதுவல் = பழைமையாற் பழுதானது. முது - முதிர் - முதிர்ச்சி = மூப்பு, முற்றிய விளைவு. முது = மூப்பினாலுண்டாகும் அறிவு. முது - முதுக்கு = அறிவு. முதுக்குறைதல் = மகளிர் உலகியலறிவடைதல், பூப்படைதல். முதுவன் = மூத்தோன், அறிஞன். முது - (முத்து) - முற்று. முற்றுதல் = முதிர்தல். (6) முன்னுறுப்பு உத்தம் = முன் தள்ளிய முந்திரிக் கொட்டை. உதடு = வாயின் முற்பகுதி, உதடு (உதழ்) - இதழ் = உதடு, உதடு போன்ற பூவிதழ். துதி = யானைக்கு, முன்னிருக்குங் கை. துதிக்கை = துதியாகிய கை. (நுத்தி) = நெத்தி - நெற்றி. நுதல் = மண்டையின் முற்பாகம். முகம் = முகத்தில் முன் நீண்டிருக்கும் மூக்கு, மூக்கும் வாயும் சேர்ந்த மூஞ்சி (muzzle) மூஞ்சியும் கன்னமுஞ் சேர்ந்த முகரை, முகரையும் நெற்றியுஞ் சேர்ந்த முகம் (face) முகம் - முகன். குறுக்காக வளரும் அஃறிணை யுயிரிகளுடைய உடலின் முன்புறத்தில் முகமும், முகத்தின் முன்புறத்தில் மூஞ்சியும். மூஞ்சியின் முன்புறத்தில் மூக்கும், இருத்தல் காண்க. பறவையின் மூஞ்சிக்கு மூக்கு அல்லது அலகு என்ற பெயர். மக்கள் முகம் தலையின் முன்புறத்திலிருப்பது. முகம் முகர் = மூக்கு. முகர் - முகரி = மூக்கின் அடி. முகம் - முக. முகத்தல் = மூக்கால் மணத்தை நுகர்தல். முக - மோ - மோப்பு - மோப்பம். முகம் - முகர், முகர்தல் = மணத்தை நுகர்தல். முகர் - நுகர். முகர் - மோர். முகம் - முகர் - முகரை - மோரை. முகவாய் - மோவாய். முகு - முக்கு - மூக்கு = முகரும் உறுப்பு, பறவையலகு, மூக்கு - (மூங்கு) - மூங்கா = மூக்கு நீண்ட கீரி. முதாரி = முன் கை வளையல். முந்துரி - முந்திரி = முன்தள்ளிய கொட்டையுள்ள பழம், அப்பழமரம் (அண்டிமா). முந்திரி - முந்திரிகை. குறிப்பு : முகம் என்னுஞ் சொல்லின் அடி முகு என்றும், அதன் முக்கியமான எழுத்து மு என்றும் அதற்கும் உயிர் நாடியானது உ என்னும் உயிர் என்றும், அறிதல் வேண்டும். முகன் என்னுங் கடைப் போலி வடிவத்தை மு+கன் என்று பிரித்து. மு முன்னொட்டு (Prefix) என்றும். கன் என்பது தோண்டுதலைக் குறிக்கும் வினைச்சொல் என்றும், முகன் என்பது தோண்டப் பட்டது போன்ற வாயைக் குறிக்கும் பெயர் என்றும், பொருந்தாப் புளுகலாகக் கூறுவர் வடநூலார். முகம் என்னுஞ் சொல் வடமொழியிலும் முகத்தைக் குறிக்குமென்றும், கன் என்னுஞ் சொல்லும் கல் என்பதன் திரிபேயென்றும் அறிந்துகொள்க. கல்லுதல் தோண்டுதல். முகம் என்னும் சொல் வடமொழியில் வாயைக் குறித்தற்குக் காரணம். பறவைகட்கு மூக்கும் வாயும் இணைந்திருப்பதும். அவற்றின் வாயான அலகு மூக்கு என்று அழைக்கப்பெறுதலுமே. (7) முற்பகுதி முகம் உடலின் அல்லது தலையின் முற்பகுதியாதலால், முகம் என்னுஞ் சொல் இடம் பொருள்களின் முற்பகுதியையுங் குறிக்கும். உரைமுகம் துறைமுகம் நூன்முகம் போர்முகம், முகவுரை முகதலை முகமண்டபம், முதலிய பெயர்களை நோக்குக. முகம் - முகப்பு = முன் மண்டபம், முனைப்பகுதி. முகம் - முகன் - முகனை - மோனை = சீர்களின் முதலிடம், அவற்றின் முதலெழுத்துக்கள் ஒன்றிவரல், முகப்பு. முகம் - முகர் - முகரி = முன்புறம். முந்து - முந்தி = முன்றானை. முன் - முனை. (போர் முனை - War front) முன்று - (முன்றம்) - முற்றம். முன்று + இல் = முன்றில். இனி, குவிந்த அல்லது கூரிய பொருள்களின் முற்பகுதியைக் குறிக்குஞ் சொற்களாவன : குனை - கொனை = நுனி (வடார்க்காட்டு வழக்கு). துள் - தூய் = நுனி. நுதி = நுனி. (நுன்) - நுனி, நுனை. முன் - முனி, முனை. முள் - முளை = முனை. ஊகாரச்சுட்டு - 2) முன்னுறவு (1) தோன்றுதல் ஒன்றினின்று இன்னொன்று முன்வருதலே தோன்றுதலாதலின், முன்மைக் கருத்தில் தோன்றுதற் கருத்துப் பிறந்தது. ஒரு பொருள் எத்திசையில் தோன்றினும். அதன் முகத்தை நோக்க அது வருந் திசை அதற்கு முன்மையாதல் காண்க. இதனால், தோன்றுதலை முகஞ்செய்தல் என்று கூறும் வழக்கையும், நோக்குக. முன்மை என்பது முன்னாகவுள்ள நிலைமையையும், முன்னுறல் என்பது முன்வரும் இயக்கத்தையும், குறிக்குமென வேறுபாடறிக.. உம்மை வினைவந்துருத்த லொழியாதெனும் (மணி. 26; 82) உருத்தல் = தோன்றுதல் (உ.வே.சா.உரை). ஊழ்வினை யுருத்து வந்தூட்டும் (சிலப். பதிகம், 52) (மு.தா.) உருத்து = வெளிப்பட்டு (அரும்பதவுரை;) உருத்து = உருக்கொண்டு (அடியார்க்கு நல்லாருரை). உருத்தல் = தோன்றுதல், முளைத்தல், உருவெடுத்தல். உரு = தோற்றம், வடிவம், உடல், படிமை, தெய்வச் சிலை, ஓவியம், ஓவியவேலையான பூத்தொழில், வடிவுள்ள தனிப்பொருள். உரு-உருவு - உருவம். உருப்படி = ஓர் உருவின் படி (copy) யான பொருள்படியான தனிப்பொருள், தனிப்பொருள் (article). உருப்படுதல் உருக்குலைதல் என்பன, உடம்பின் வளர்ச்சி தளர்ச்சிகளைக் குறிக்கும் வழக்காறுகள். உருப்போடுதல் = மணிமாலையிலுள்ள ஒவ்வோர் உருவிற்கும் ஒவ்வொரு முறையாக ஒரு மந்திரத்தை ஓதுதல், அல்லது ஒரு மந்திரத்தின் ஒலிவடிவைப் பெருக்குதல், மந்திரம் போல ஒன்றை மனப்பாடஞ் செய்தல். உருவேற்றுதல் என்பதும் இதுவே. உரு = ஒரு தனியிசை வடிவு. பண், பாட்டு, மெட்டு. தோற்ற வகையைக் குறிக்கும் நிறம் வண்ணம் முதலிய சொற்களும், இசை வகையைக் குறித்தல் காண்க. உரு - உருவு - உருபு = பெயர் வேற்றுமையின் வடிவான ஈறு, உவமையின் வடிவான சொல்; அகத்தியத்தை நோக்க வழி நூலும் அதற்கு முந்திய நூல்களை நோக்கச் சார்பு நூலுமான தொல்காப்பியத்தில், உருபு என்பது ஓர் இலக்கணக் குறியீடாகக் குறிக்கப்பட்டிருப்பதனாலும், அது தமிழிலக்கணந் தோன்றிய தொன்று தொட்டு வழங்கிவரும் மரபுச் சொல்லாதலாலும், அது தூய தமிழ்ச் சொல் என்பது ஒரு தலை. தோன்றுதலைக் குறிக்கும் வேறு பல சொற்களும் உகரத்தையேனும் உகரமோனையையேனும் உகரத்திரிபை யேனும் முதற் கொண்டிருத்தல் காண்க. உரு - (உரும்பு) - அரும்பு. அரும்புதல் = தோன்றுதல்: குருத்தல் = தோன்றுதல்; அதினின்று மொருபுருடன் குருத்தான் (விநாயகபு. 72, 4) (குரு) - கரு = முதற் பொருளில் தோன்றும் பொருள். துளிர்த்தல் = தோன்றுதல். நுனை - நனை. நனைதல் = தோன்றுதல். நுதலுதல் = தோற்றுவித்தல். பூத்தல் = தோன்றுதல். பொடித்தல் = தோன்றுதல். முகிழ்த்தல் = தோன்றுதல் முளைத்தல் = தோன்றுதல் முறிதல் = தோன்றுதல் இச் சொற்களெல்லாம் முன்வருதல் அல்லது முன் தள்ளுதல் என்பதையே வேர்ப்பொருளாகக் கொண்டவை என்பது, துள் (தள்), முள் (முட்டு) முதலிய சொற்களால் உணரப்படும். துள் என்னும் அடியினின்று பிறந்த துருத்து என்னும் சொல்லும், முள் என்னும் அடியினின்று பிறந்த முட்டு என்னும் சொல்லும், முன் தள்ளுதலைக் குறித்தல் காண்க. தோன்றுதலை (முன் வருதலை)க் குறிக்கும். உருத்தல் என்னும் வினைச்சொல் வடமொழியில் வழங்காமையையும், உருவம் என்னும் பண்புப் பெயரின் திரிபான ரூப என்பது மட்டும் அதில் வழங்குதலையும், நோக்குக. (2) இளமை ஒரு பொருள் தோன்றிய நிலை அதன் இளம்பருவமாதலின், தோன்றற் கருத்தில் இளமைக் கருத்துத் தோன்றிற்று. (i) இளமை (நிலைத்திணை) உல்லரி = தளிர். (உலிர்) - இலிர். இலிர்த்தல் = தளிர்த்தல். உரு - (உரும்பு) - அரும்பு = மொட்டு. அரும்புதல் = தோன்றுதல், முளைத்தல். அரும்பு - அருப்பம் = முளைக்கும் மீசை. (குள்) - கொழுந்து = தளிர். குள் - கெழு - கெழுமு. கெழுமுதல் = முளைத்தல். குரு - குருகு = குருத்து. குரு - குருத்து - குருந்து = தென்னை. பனை முதலியவற்றின் இளவிலை. (குருந்து) - கருந்து = மரக்கன்று (கோடைமலை வழக்கு). குரு - குரும்பு - குரும்பை = தென்னை, பனை முதலியவற்றின் பிஞ்சு. (சுலிர்) சிலிர் = தளிர். சிலிர்த்தல் = தளிர்த்தல். துள் - துளிர் - தளிர். நுகும்பு = பனையின் இளமடல். நுங்கு = பனையின் இளங்காய். நுகு - (நகு) - நாகு = இளமை. நுள் - நுழு - நுழுந்து = இளம்பாக்கு. நுழாய் = இளம்பாக்கு. நுனை = அரும்பு. நுனை - நனை. நுரு = தளிர். நொரு = இளம்பிஞ்சு. நுரு - (நுறு) - நறு - நாறு - நாற்று = இளம்பயிர். நாறுதல் = தோன்றுதல். நாறு = முளை, இளம்பயிர். புள் - (பிள்). பீள் = இளங்கதிர், இளமை. பூட்டை = இளங்கதிர். பூட்டை - பீட்டை. (புகு) - பூ - போ - போத்து = இளங்கிளை. போந்து = பனங்குருத்து. போந்து - போந்தை = பனங்குருத்து. பொகில் = அரும்பு. பொகில் - போகில் = அரும்பு. புதல் = அரும்பு. முள் - முளை = முளைக்கும் வேர் தளிர் முதலியன; மரக்கன்று. முருந்து = இளந்தளிர், இளவெலும்பு. முருந்து - முருந்தம் = கொழுந்து. முறி = தளிர். முறிதல் = துளிர்த்தல். முகுரம் = துளிர். முகுள் - முகுளம் = அரும்பு. முகுள் - முகிள் - முகிளம் = அரும்பு. முகிள் - முகிழ் = அரும்பு. முகிழ் - முகிழம். முகை = அரும்பு. மொக்கு = அரும்பு. மொக்கு - மொக்குள் = அரும்பு. முட்டு - பிஞ்சு. முட்டுக்காய் = பிஞ்சுக்காய், முட்டுக்குரும்பை = சிறு குரும்பை சேர்க்க. முசு = பிஞ்சு (பலா). முட்டு - மொட்டு = அரும்பு. முதள் = அரும்பு. இங்குக் காட்டப்பட்ட சொற்களெல்லாம், முன் வருதல் அல்லது முன்றள்ளுதல் என்னுங் கருத்தை அடிப்படையாகக் கொண்டவை. (Shoot, bud முதலிய ஆங்கிலச் சொற்களுடன் இவற்றை ஒப்பு நோக்குக.). (ii) இளமை (இயங்குதிணை) உரு = கரு (Embryo). (குள்) - குழ - குழவு = இளமை, குழந்தை, குட்டி. குழவு - குழவி = குழந்தை. குட்டி. குழவு - குழகு = இளமை, குழந்தை. குழகு - குழகன் = இளைஞன், குழ - குழந்தை. (குள்) - குட்டி. கொழுந்து = கொழுந்துபோன்ற மகன் அல்லது மகள். குலக் கொழுந்து என்னும் வழக்கை நோக்குக. குரு - கரு = சூல், முட்டை, குழவி, குட்டி. காசறைக் கருவும் (சிலப். காட்சி. 52) கரு - கருப்பு - கருப்பம். குரு - குருந்து = குழவி. குருகு = விலங்கின் குட்டி. குருளை = குட்டி. குது - (குதல்) - குதலை = மழலை. குதல் - (கதல்) - கதலி = சிறியது. கதலி - கசளி = கெண்டைக்குஞ்சு. (கதல் - (கசல்) -கச்சல் = பிஞ்சுக்காய்). புள் - புரு = குழந்தை. புள் - பிள் = பிள்ளை, பிள்ளைமை யழகு. தன் பிள்ளழியாமே (திருவிருத். 14, வியா. பக். 94). பிள் - பிள்ளை. பிள் - பீள் = கரு. கருப்பைக் குழவி, இளமை. பீட் பிதுக்கி (நாலடி. 20). (புது) - புதல்வு - புதல்வன், புதல்வி. முல் - (முன்) - முனி = யானைக்கன்று. முனியுடைக் கவளம் போல (நற்றிணை 360) முள் - முளை = இளமை. முளையன் = சிறுவன். முளையான் = சிறு குழந்தை. முள் - முட்டு - மொட்டு - மொட்டை. மொட்டைப் பயல் = சிறு பயல். முள் - முரு - முருகு = இளமை. இளைஞன், சேயோன். முருகு - முருகன். முறி - மறி = சிறியது. விலங்கின்குட்டி, சில விலங்கின் பெண். விலங்கினத்தில் பெண்பால் ஆண்பாலினுஞ் சிறிதாயிருப்பதால், மறி நாகு என்னும் இளமைப்பெயர்கள் சில விலங்கின் பெண்பாலையும் உணர்த்தும். முகு - மக - மகவு. மக - மகன், மகள். முது - (முதல்) - மதல் - மதலை = இளமை, குழவி. முள் - மள் - மள்ளன் = இளைஞன், வீரன். மள் - மழ = இளமை, குழவி. மழவுங் குழவும் இளமைப் பொருள (தொல். உரி. 14) மழ - மழவு = இளமை, குழவி. மழவு - மழவன் = இளைஞன், வீரன். மழ - மழலை = இளமை, மழ - மாழை = இளமை. முள் - விள் - விளவு = இளமை. விள் - விளர் - இளமை, முற்றாமை. விளர் - விளரி = இளமை. விள் - விழை - விழைச்சு = இளமை. விழை - விடை = இளம் பறவை. விடை - விடலை = இளைஞன். வீரன். (3) மடமை எவ்வகை யுயிரினத்திலும் இளமையில் அறியாமை மிக்கிருப்பது இயற்கையாதலால், இளமைக் கருத்தில் மடமைக் கருத்துத் தோன்றிற்று. மழ - மத - மட - மடம் = இளமை, மடமை. மட - மடப்பு = மடப்பம் = இளமை, மடமை. மட - மடை - மடைமை. இரு திணையிலும், பெண்பாலும் ஆண்பாலினும் மடம் மிக்க தாகக் கருதப்படுவதால் மடவரல் மடந்தை (பேதை, ஏழை) முதலிய பெயர்கள் உயர்திணையிலும், மந்தி மூடு முதலிய பெயர்கள் அஃறிணையிலும், பெண்பாலைக் குறிக்க வெழுந்தன. இளமையிலேயே அழகும் சிறந்திருப்பதால், முருகு மதவு மடம் முதலிய சொற்கள் அழகையும் உணர்த்தின. (4) புதுமை எதுவுந் தோன்றியவுடன் புதுமையாயிருக்குமாதலால், தோன்றற் கருத்தில் புதுமைக் கருத்துத் தோன்றிற்று. ஒரு மாணவன் ஒரு கல்வி நிலையத்தில் சேர்ந்த துவக்கத்தில் புதுமாணவன் எனப் படுதலையும், ஒரு கருவி முதன்முதற் கண்டு பிடிக்கப்பட்டவுடன், புதுக்கருவியெனப்படுதலையும், நோக்குக. (குது) = கொத்தம் = புதுமை. இச்சொல் இவ்வடிவில் இன்று தெலுங்கில் மட்டும் வழங்கி வருகின்றது. கொத்த = புதிய. கொத்தகா = புதிதாய். இன்று தமிழில் வழங்கும் வடிவுகளாவன : குது - (குடு) - கடு - கடி = புதுமை. கடிமலர்ப் பிண்டி (சீவக. 2739). (குடு) - (கொடு) - கோடு - கோடகம் = புதுமை. கோடு - கோடி = புதுமை, புத்தாடை. நுது என்னும் தமிழ் அடியினின்றே நூதனம் என்னும் வடசொல் திரிந்துளது. புது - புதுமை புது - புதுக்கு - புதுக்கம். புதுவல் = புதிதாய்த் திருந்திய நிலம். புதிர் = புதுநெல். புதுமுதல் = புதியவர்போற் பேசுதல், புதினம் = புதுமை, புதுச் செய்தி. முள் - (மள்) - மழ - மழலை = இளமை, புதுமை. மழலைத்தேன் = புதுத்தேன். மழ - (வழ) - வழை = புதுமை. வழை மது நுகர்பு (பரிபா. 11, 66) வழை - வழைச்சு = புதுமை. வழைச்சற விளைந்த (பெரும்பாண். 280) (5) பசுமை புதுமையான முன் பருவத்தில், அதாவது இளம்பருவத்தில், பயிர் பச்சைகள் பசுமையாயிருப்பதால், புதுமைக் கருத்தில் பசுமைக் கருத்துத் தோன்றிற்று. பசுமை செழிப்பைக் குறிக்குமாதலால், புதுமைச்சொல் உடற் செழிப்பையும் உணர்த்தும். உடல் செழிம்பாயிருத்தலைப் புதுப்புது வென்றிருத்தல் என்பது மரபு. புது என்னும் சொல் இப்பொருளில் பெரும்பாலும் புசு என்று திரியும். புசுப்புசு வென்றிருத்தல் = மக்கள் உடல் செழிம்பாயிருத்தல். புது - புசு - புசுப்பு = உடற்செழிப்பு. புசு - பசு - பசுமை = புதுமை, இளமை, மென்மை, பச்சை நிறம், செழிம்பு. புதுமெழுக்கைப் பசுமெழுக்கு என்றார் கடியலூர் உருத்திரங்கண்ணனார் (பட்டினப்பாலை, 166.) பசு - பச்ச - பச்சை = பசுமை, பசிய பொருள். பசுமை கண்ணுக்கினிய நிறமாதலால், கண்ணுக்கினிதாயிருத்தலைப் பச்சென்றிருத்தல் என்பர். பச்சுடம்பு = இளந்த உடம்பு. பச்சு - பச்சடி = வேவிக்காமற் பச்சையாகச் செய்யும் கூட்டு. சமைக்காத காய்கறிகள் பெரும்பாலும் பச்சை நிறமாயிருப் பதால், பசுமைச்சொல் சமையாமைப் பொருளைத் தந்தது. பச்சைவெட்டு பச்சூன் பச்சரிசி பச்சை வெண்ணெய் பச்சைத் தண்ணீர் முதலிய வழக்குக்கள் இக்கருத்துப்பற்றியன. பச்சை என்னுஞ்சொல், உணவின் திருந்தா நிலையைக் குறித்தல்போல், மொழியின் திருந்தா நிலையையும் குறிக்கும். இடக்கர்ப்பேச்சு பச்சைப்பேச்சு எனப்படும். பசு - பச. பசத்தல் = பச்சையாதல், பச - பசள் - பசண்டை = பசமை. பச - பசல் - பசலை = பசிய பொன்னிறத் தேமல், பசலை - பயலை = தேமல். பசு - பாசு - பாசம் (moss). பாசு - பாசி = பாசம், பச்சைப்பயறு. பாசு - பாசவன் = பச்சூன் விற்பவன். பசு - (பசி) - (பயி) - பை. பைமை = பசுமை, இளமை. மென்மை. அகர இகரம் ஐகாரமாகும் (தொல். 54.) பை - பைத்து = பசுமை. பை - பையல் = இளைஞன், சிறுவன். பையல் - பையன். பையல் - பயல் - பயன் - பசன். பை - பைது - பைதல் = பையன், குழவி. பை - பயிர் = பச்சையான புல்செடி கொடி. பயிர்பச்சை பைங்கூழ் என்பன வழக்கு. பை - பயறு = பச்சைப்பயறு, பிறபயறு, பயறு; பயறுபச்சை என்பது வழக்கு. பயறு - பயறி = பயற்றம்மை. (6) மென்மை இளமையில் எவ்வுயிரியும் மென்மையாயிருப்பதால். இளமைக் கருத்தில் மென்மைக் கருத்தும் தோன்றும். குதலை = மென்மை, மென்மொழி. மழ - மழமழப்பு = மென்மை. மழலை = மென்மை, மென்மொழி, மழறுதல் = மென்மையாதல். மழ - மத - மட - மடம் = மென்மை. பைய = பசுமை, இளமை, மென்மை. பைமை = பசுமை. இளமை, மென்மை. பைய = மெல்ல. பையப் பைய - பயப்பய - பைப்பய. பை - பையா. பையாத்தல் = சிறுமைப்படுதல், துன்பத்தைத் தாங்கமுடியாவாறு மென்மையாதல், துன்புறுதல். பையுள் = துன்பம். (7) முன் தள்ளி வருதல் தோன்றிய பொருள் முன்னாக நீண்டு வருதல் முன் தள்ளி வருதலாகும். துந்து - துந்தி = முன்தள்ளிய வயிறு. துந்தி - தொந்தி. துருத்துதல் = முன் தள்ளுதல். வயிறு துருத்திக் கொண்டிருக்கிறது என்பது தென்னாட்டு வழக்கு. (துள்) - தள். புடைத்தல் - முன் தள்ளுதல், வீங்குதல். முலை = முன் தள்ளிய மார்பு. (மொஞ்சு) - மொஞ்சி = முலை. (8) தருதல் வாழை குலையீனுதலைக் குலைதள்ளுதல் என்றும், தென்னை பனை பாளை விடுதலைப் பாளை தள்ளுதல் என்றும், நெல் புல் கதிர் ஈனுதலைக் கதிர் தள்ளுதல் என்றும், கூறுவர். மரஞ்செடி கொடிகள் காய் கனியோடிருக்கும் போது மக்கள் அவற்றைப் பறித்தல் அவை கொடுக்க அவர் கொள்வது போலிருத்தலால்; அவை காய்த்துக் கனிதலைப் பலன் தருதல் அல்லது பலன் கொடுத்தல் என்பர். இதனால், தள்ளுதற் கருத்தில் தருதற் கருத்துப் பிறந்தது. தள் - தரு - தார் - தா - த. தார் - தர். தள் என்னும் வினை தருதற் பொருளில் தரு எனத் திரிந்து, அதன் மேலும், எதிர்மறை வினைவில் தார் அல்லது தா என்றும் (தாரான், தரான்), ஏவல்வினையில் தா என்றும், இறந்த கால வினையில் த என்றும் (தந்தான்), திரிந்துள்ளது. யகர மெய்யீறாகத் திரியாத ளகர மெய்யீற்று இயற் சொற்க ளெல்லாம், பொதுவாக ருகரவீற்றவாகத் திரிகின்றன. v.L.: கள் - கரு - கார் (கருமை). இளமையை உணர்த்தும் குரு நுரு முரு முதலிய அடிகளெல்லாம், குல் நுல் புல் முல் முதலியவற்றின் திரிபான குள் நுள் புள் முள் முதலியவற்றினின்று திரிந்தவையே. கள் - கரு - கார் என்னும் திரிபு போன்றதே தள் - தரு - தார் என்பதும், முழுத்திரிபு நிலையிலும், தருதல் வினை வருதல் வினையை ஒத்துள்ளது. வள் - வரு - வார் - வா - வ - வார் - வர். அரும்பண்டத்தைக் குறிக்கும் தாரம் என்னும் சொல். தார் என்னும் திரிபடியாகப் பிறந்தது. கடல் தரும் பல பொருள் கடற்பஃறாரம் (புறம். 30). உயர்திணையிலும் இயங்குதிணையான அஃறிணையிலும், பிள்ளையை அல்லது குட்டியை ஈனும் தாய் குலை தள்ளும் அல்லது காயீனும் மரத்தைப் போலிருப்பதால், தாய்க்குத் தள்ளை என்று பெயர். ஒரு பெண்டு பிள்ளை பெற்றால், அவள் புகுந்தகத்திற்கு அல்லது கணவன் குடிக்கு ஒரு பிள்ளை தந்த தாகக் கருதப்படுவாள். மகப் பெறுதல் தருதல் எனப்படும். புயங்கமெலாஞ் சுதையென்னுமாது தந்தாள் (கம்ப. சடாயுகாண். 28). பிள்ளை பெறுவதில் தாய் தந்தையர் இருவர் வினையுங் கலந் திருத்தலால், அவ்விருவருக்கும் தா என்பது பொதுப் பெயராம். ஆயினும், ஈன்றாளுக்கு ஆய், தாய் (தம் + ஆய்) முதலிய தனிப் பெயர்கள் வழங்குதலாலும், பிள்ளையைத் தோற்று விப்பவன் தந்தையேயாதலானும், தா என்பது பெரும்பாலும் தந்தையையே குறிக்கும். தாதா - தாத்தா = தந்தையின் தந்தையாகிய பாட்டன். தாதா - தாதை. புகுந்த குடிக்குப் பிள்ளையைத் தருபவள் தாயென்றும், மனைவிக்குப் பிள்ளையைத் தருபவன் தந்தை யென்றும், வேறு பாடறியப்படும். தந்தை தருவது விந்து நிலை; தாய் தருவது பிள்ளை நிலை. (9) முற்செலவு நுதலுதல் = முற்கூறுதல், கூறித் தொடங்குதல். நுதலிப்புகுதல் = இன்னது கூறுவேன் என்று கூறப்போகும் பொருளைச் சொல்லித் தொடங்கும் நூலுத்தி. தூது = முன்விடுக்கும் செய்தி. அச்செய்தி சொல்பவர், தூது - தூதன் தூதுவன். அரசரும் காதலரும் ஒருவரொருவரிடைச் செல்வதை முன்னறிவித்தற்காக விடுக்கும் செய்தியே, முதன்முதல் தூது எனப்பட்டது. பின்பு அது செய்தி என்னும் பொதுப் பொருளில் வழங்கத் தலைப்பட்டது. கண்ணன் தூது, அங்கதன் தூது முதலியவற்றை நோக்குக. ஊகாரச்சுட்டு - 3) முற்செலவு இயக்கத்தில் முன்னுறலுக்கு அடுத்தது முற்செலவு. முன்னது இடத்து நிகழ்வும் பின்னது இடம் பெயர்வும் ஆகும். முற்செலவு, தானே செல்லலும் தள்ளப்பட்டுச் செல்லலும் என இருவகைத்து. (1) முன்தள்ளல் (i) காற்றை மூக்காலும் வாயாலும் தள்ளல் உய் - உயிர். உயிர்த்தல் = மூச்சுவிடுதல். மூச்சே உயிர்நாடியும் உயிர்நிலைக்கு அடையாளமுமாதலால், ஆவி உயிர் எனப்பட்டது. உள்ளே போனால மூச்சு, வெளியே போனால் போச்சு என்னும் பழமொழியை நோக்குக. உயிரையும் உயிர்ப்பையும் வடநூலார் பிராணன் என்று கூறுதலையுங் காண்க. உய்த்தல் = முன் தள்ளல், செலுத்துதல். காற்றை உள்ளிழுப்பதும் வெளிவிடுவதும் ஆகிய இரண்டும் சேர்ந்ததே மூச்சாயினும் மிக வெளிப்படையானதும் ஒலி விளைப்பதும் வெளியிடுவதே யாதலின், மூச்சு உயிர்ப்பெனப் பட்டது. மூச்சு விடுதல் என்னும் வழக்கும் இக்காரணம் பற்றியதே. உந்து - உந்தி = பேசும்போது வாய்வழிக் காற்றைத் தள்ளுவதாகக் கருதப்படும் கொப்பூழின் உட்பக்கம். கொப்பூழ். உந்தி முதலா முந்துவளி தோன்றி என்பது தொல்காப்பியம் (பிறப்பியல் 1). உந்தியிலிருந்து எழுப்பப்படும் காற்றைக் குறிக்கும் உதானன் என்னும் வடசொல், உது என்னும் அடியைக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. உந்தியில் தோன்றும் உதான வளிப்பிறந்து என்பது நேமிநாதம் (6). தும்முதல் = மூக்கு வழியாய்க் காற்றைத் தள்ளுதல். துரத்துதல் = வாய்வழித் தீய காற்றை வன்மையாய்ச் செலுத்துதல் (Cough). முசுமுசுத்தல் = குறட்டை விடுதல். முக - மூசு. மூசுதல் = மூச்சை விடுதல், மோப்பம் பிடித்தல். மூசு - மூச்சு. மூசு - மூஞ்சு - மூஞ்சி = மூக்கு, மூக்குள்ள முகப்பகுதி (muzzle). மூஞ்சுதல் = மூச்சு விடுதல், மோப்பம் பிடித்தல். மூஞ்சு - மூஞ்சுறு - மூஞ்சூறு = மூஞ்சி நீண்ட அல்லது எதையும் மோப்பம் பிடிக்கின்ற எலி; தென்னாட்டார் இதனை மூஞ்செலி என்பர். மூஞ்சு - மூஞ்சை = நீண்ட மூக்கு அல்லது முகம். ஒருவன் இளைத்துக் களைத்த நிலையில் விரைந்து வலிதாய் மூச்சு விடின், மூசு மூசென்று இளைக்கிறான் என்பர். இவ்வொலிக் குறிப்பு ஒப்பொலியும் சுட்டொலியும் கலந்ததாகும். முக - முசி, முசித்தல் = மூச்சிழைத்தல், களைத்தல், இளைத்தல், மெலிதல். முசிப்பாறுதல் = இளைப்பாறுதல். (ii) காற்றைக் கையால் தள்ளல் ஊதுதல் = வாயால் ஊதுதல்போல் கொல்லன் துருத்தியாற் காற்றைத் தள்ளுதல். ஊதல் = காற்று நிறைந்தாற்போற் பருத்தல், ஊத்தம் = ஊதல். துருத்து - துருத்தி = ஊதுலைக் குருகு, துருத்தி போன்ற தோற்பைக் குழல் (Bag-pipe). துருத்தி - துத்தி - தித்தி. (iii) பிற பொருள்களைக் கால் கையால் தள்ளல் உதைத்தல் = முற்செலுத்துதல், காலால் முன் தள்ளுதல். சிலையுதைத்த கோற் கிலக்கம் (கம்ப. கார்முக. 9) உந்துதல் = முன் தள்ளுதல், தள்ளுதல். உந்து - உஞ்சு - உஞ்சல் = உந்தப்படும் தாப்பிசை. உஞ்சல் - ஊஞ்சல் - ஊசல். உன்னுதல் = உந்துதல். (உந்து - உந்தி = தள்ளித் தள்ளிப் பறக்கும் தட்டான்). ஊங்குதல் = ஊஞ்சலாடுதல். ஊக்குதல் = ஊஞ்சலாட்டுதல். கொழித்தல் = முன் தள்ளுதல். புடைப்பவள் கூலத்தோடு கலந்துள்ள மண்ணையும், நீரலை அடிமண்ணையும், முன் தள்ளுதல் கொழித்தல் எனப்படும். சுண்டுதல் = விரலால் முன் தள்ளுதல் அல்லது தெறித்தல். (துள்) - தள். தள்ளுதல் என்னும் வினை முதலாவது முன் தள்ளுதலையே குறித்தது. தூண்டுதல் = விளக்குத் திரியை முன் தள்ளுதல், ஊர்தி விலங்கை முற்செலுத்துதல், ஏவலனை முன் தள்ளுவது போல் ஒரு வினைமேல் ஏவுதல். தூண்டு - தீண்டு. தூண்டாவிளக்கு தீண்டாவிளக்கு எனப்படுதல் காண்க. நுந்துதல் = திரியைத் தூண்டுதல். நுந்து - நொந்து. நுந்தாவிளக்கு நொந்தாவிளக்கு எனவும் படும். நூங்கு - நூக்கு. நூக்குதல் = முன் தள்ளுதல், தள்ளுதல். நூவுதல் = திரியைத் தூண்டுதல், நீரை முன் இறைத்துப் பாய்ச்சுதல். நூவு - நீவு; நீவாத தீபம் (மதான். 140) (நூ) - நீ. நீத்தல் = தள்ளுதல், செலுத்துதல், நீயான் = கப்பலோட்டி, நீயான் - நீகான் - மீகான். நீகான் - நீகாமன் - மீகாமன். (2) நீக்கல் வேண்டாவென்று தள்ளப்பட்ட பொருள் நீக்கப் பட்டதாதலின், தள்ளற்கருத்து நீக்கற்கருத்தைத் தழுவியதாகும். உத்துதல் = கழித்தல், நீக்குதல். உத்து - ஒத்து. ஒத்துதல் = தள்ளுதல். ஒத்தி வைத்தல்= தள்ளி வைத்தல். ஒதுங்குதல் = தானே தள்ளதல் (த.வி.) ஒதுக்குதல் = ஒரு பொருளைத் தள்ளுதல், ஒரு குறிப்பிட்ட பயனுக்காக ஒன்றைத் தள்ளி வைத்தல். (பி.வி.) ஒதுங்கவைத்தல் = வழியிலும் அறை நடுவிலும் உள்ளவற்றை ஒரு புறமாகத் தள்ளி வைத்தல். ஒதுங்கு - ஒதுக்கு - ஒதுக்கம். கொழி - கழி. கழிதல் = நீங்குதல். கழித்தல் = நீக்குதல். ஒரு தொகை யினின்று இன்னொரு தொகையை நீக்குதல் போற் குறைதல். (துள்) - தள். தள்ளுதல் = நீக்குதல். துர - துற. துறத்தல் = நீக்குதல். துற - துறவு - துறவி = பற்று நீக்கியவன். துற - துறக்கம் = துறவாற்பெறும் வீடு. ஒ. நோ. விடு - வீடு = பற்ற விடுகையாற் பெறும் பேரின்பம். துறக்கம் என்னும் சொல் முதலாவது வீட்டையே குறித்தது; பின், அதைப்போன்றே விண்ணிலுள்ளதும் இன்பந்துய்க்கப் பெறுவதுமான (அல்லது அங்ஙனம் உள்ளதும் பெறுவதுமாகக் கருதப்படு வதான) தேவருலகத்தைக் குறித்தது. வர்க்கம் என்னும் வடசொல் சுவர் (உயரத்திலுள்ளது) என்னும் பகுதியடி யாகப் பிறந்திருப்பதால், அதை இதனொடு மயக்குவது சரியன்று. மேலேழுலகங்களுள் சுவர்லோகம் என்பதொன்றாகக் கூறப்படுதல் காண்க. சுவர் என்னுஞ் சொல்லின் வேர்ப் பொருளை மேற் செலவியலில் உயர்தற் பகுதியிற் காண்க. தூர்த்தல் = குப்பை கூளத்தைக் கூட்டித் தள்ளுதல். நுதுத்தல் = நீக்குதல், அழித்தல், அவித்தல். இன்னல் நுதுக்கும் தண்கவிதை வள்ளல் (விநாயக பு. 46, 4). நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றாற் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல் (குறள், 1158). (நூ) - நீ, நீத்தல் = நீக்குதல். நீத்தார் = துறந்தார். (நூங்கு) - நீங்கு. நூக்கு - நீக்கு. (3) துள்ளுதல் துள்ளுதலாவது குதித்தல், அது முன்னோக்கித் துள்ளுதலும் மேனோக்கித் துள்ளுதலும் என இருவகைத்து. மேனோக்கும் போது மேற்றிசையும் முன்றிசையாகி விடுவதால் அதுவும் முன்றிசையின் பாற்பட்டதே. உகளுதல் = தாவுதல். உகளித்தல் = குதித்தல். குதித்தல் = தாவுதல், தாண்டுதல், கடத்தல் கூத்தாடுதல். குதி - குதிரை = தாவிச் செல்லும் விலங்கு கூற்றங் குதித்தலுங் கைகூடும் (குறள் 269) குதித்தல் கடத்தல் (வெல்லுதல்) குதி - கூத்து - கூத்தன். துள்ளுதல் = குதித்தல். துள்ளல் = கூத்தன். துள் - துள்ளி - துளி = துள்ளிவிழும் நீர்த்திவலை, சிற்றளவு. துள் - துள்ளம் = துளி. துளி - துமி. (தூண்டு) - தாண்டு. தாண்டுதல் = தாவுதல், குதித்தல், கடத்தல். தாய் எட்டடி தாண்டினால் குட்டி பதினாறடி தாண்டும் என்பது பழமொழி. தாண்டு - தாண்டவம் = கூத்து. தாண்டு - தாண்டகம் = 24 எழுத்து ஆகிய அளவைத் தாண்டிச் செல்லும் அடிகளைக் கொண்ட செய்யுள். துமுக்கு (தெ.) = தாண்டு. (தூவு) - தாவு. தாவுல் = தாண்டுதல். (4) தெளித்தல் தெளித்தலாவது ஒன்றை அள்ளி முன்னாக எறிதல் அல்லது இடுதல். நீரைத் தெளிக்கும்போது அது துளித் துளியாகத் துள்ளி விழுதலால், துள்ளுதற் கருத்தில் தெளித்தற் கருத்துப் பிறந்தது. உகுதல் = முன்துள்ளி விழுதல், சிந்துதல். உகுத்தல் (பி.வி.) = சிந்துதல், தூவுதல். துளித்தல் = துளி விழுதல் (த.வி.); துளிகளைச் சிந்துதல், தெளித்தல், தெறித்தல், இறைத்தல், சிந்துதல் (பி.வி.).துளி - தெளி. தெளித்தல் = துளி துளியாய்ச் சிந்துதல்; மலர், அரிசி முதலியவற்றைச் சிற்றளவாய்த் தூவுதல். தெளி - தெறி. தெறித்தல் = துளி துள்ளி விழுதல், துள்ளுதல், விரலினால் ஒன்றை முன்னோக்கிச் சுண்டுதல் அல்லது துள்ளச் செய்தல். துள்ளு நடையைத் தெறிநடை என்பர். தெறிநடை மரைக்கண மிரிய (அகம். 224) தாவுபு தெறிக்கு மான் (புறம். 259) தூவுதல் = தெளித்தல், இறைத்தல், சிதறுதல். தூவானம் = இறைக்கும் மழை, தெறிக்கும் மழைத்துளி. தூவல் - துவல். துவலுதல் = துளித்தல், தெளித்தல். துவல் - துதலை = துளி. துவலை - திவலை. துவலை - துவாலை = துளி, சூதகப் பெருக்கு துவல் - துவறு. துவறுதல் = மழை தூவுதல் (த.வி.) துவறு - துவற்று. துவற்றுதல் = தூவுதல் (பி.வி.) துவறு - தூறு. துவற்று - தூற்று. தூறுதல் = மழைத்துளி விழுதல். தூறு - தூறல். தூற்று - தூற்றல். தூற்றுதல் = பதரையும் மணியையும் பிரித்தற்குக் கூலத்தை முன்னாக வாரியிறைத்தல், மண்ணைவாரி யிறைத்தல், பழிச் சொற்களைப் பரப்புதல். தூறல் = மழைத் துளி, பழிச்சொல். தூறு = பழிச்சொல். அவதூறு = பழிப்பு. துன்னல் = சிறு திவலை. நீர்த்திவலையைக் குறித்தற்குத் துன்னல் என்றொரு சொல்லுண் மையாலும், தெறிக்கப்படும் ஒரு வகைக் காய் தெல் என்று பெயர் பெற்றிருப்ப தாலும், துள் துன் என்னும் ஈரடிகட்கும் பொதுவாகத் துல் என்றொரு வேருண்மை ஊகிக்கப்படும். பறவைகள் புணர்ச்சி வேளையிற் சிறப்பாகவும், பிற வேளைகளிற் பொதுவாகவும், தம் உடம்பினின்று மெல்லிறகுகளைத் தூவுவதினால், அவற்றிற்குத் தூவு என்னும் பெயருண்டாயிற்று. தூவு - தூவி. தூவு - தூவல் = இறகு, இறகினாலான எழுதுகோல். Pen என்னும் ஆங்கிலச் சொல்லும் இக்காரணம் பற்றியதே. L. penna, feather. உகு துளி தூவு என்னுஞ் சொற்கள், முதலாவது முன் சிந்துதல் என்றே பொருள்பட்டு, பின்பு சிந்துதல் என்னும் பொதுப் பொருளை உணர்த்தி வருகின்றன. நீண்ட காலக்கடப்பினால் அவற்றின் முன்மைக் கருத்து இன்று மறைந்து விட்டது. இன்றும் தெளித்தல் வினை முன்னன்றி வேறு புறத்தில் நிகழாமை காண்க. (5) முற்செல்லுதல் இயற்கையான செலவெல்லாம் முற்செலவே. துள்ளுதல் என்பது ஒரு முறை முன்னோக்கித் தாவுதல்; முற் செலவு என்பது நெடுகச் செல்லுதல். இது செல்லுதல் செலுத்து தல் ஆகிய இரண்டையுந் தழுவும். உய்தல் = முன் செல்லுதல், செல்லுதல். உய்த்தல் = செலுத்துதல். உய் - ஒய். ஒய்தல் = செலுத்துதல். உப்பொய் ஒழுகை (புறம். 116). ஒய் - எய். எய்தல் = அம்பைச் செலுத்துதல். எய் - ஏ - ஏவு. ஏவுதல் = செலுத்துதல், தூண்டுதல். ஏவு - ஏவல் - ஏவலன். ஏதல் = அம்பைச் செலுத்துதல். ஏ = எய்தல், அம்பு. ஏவு = அம்பு. எய் - எயின் = எய்யும் வேடர்குடி. எயின் - எயினன். இனி, எய்நன் - எயினன் - எயின் என்றமாம். எய் - எயில் = மறவரிருந்து எய்யும் மதில். உகைதல் = செல்லுதல், உகைத்தல் = செலுத்துதல். உகை - அகை. அகைத்தல் = செலுத்துதல். ஒசுதல் = செலுத்துதல். ஒசுநன் = மீகாமன், படகோட்டி, பரவன். ஓசு - ஓச்சு. ஓச்சுதல் = செலுத்துதல், தூண்டுதல். துரத்தல் = போதல் (த.வி) செலுத்துதல். தூண்டுதல், நடத்துதல் (பி.வி.) துர - துரம் - துரந்தா - துரந்தரன் = செலுத்துவோன், நடத்துவோன், பொறுப்பாளி, தலைவன். ஒ. நோ. புர - புரம் - புரந்தா - புரந்தரன் = அரசன். (காவலன்), விண்ணரசன். துரம் = பொறுப்பு, தலைமை. துர - துரை = தலைவன், சிற்றரசன். முன். முன்னுதல் = முற்படுதல், செல்லுதல். முள் - (முடு) - விடு. விடுத்தல் = முற் செலுத்துதல், அனுப்புதல், விடு - விடை - விடையில் - விடையிலான். விடு - விடுப்பு. விடை = செலவு, செல்ல உத்தரவு. முள் - (முய்) - (முயம்) - வியம் = முற்செலுத்துதல், செலுத்துதல், ஏவுதல் தூண்டுதல். வியங்கொள் - வியங்கோள் = ஏவல், மதிப்பேவல். வியங்கொள்ளுதல் = மாடு குதிரை முதலிய விலங்கைத் தூண்டிச் செலுத்துதல், தேரொட்டுதல், தூண்டுதல், ஏவுதல். தேர்வியங்கொண்ட பத்து என்னும் ஐங்குறு நூற்றுப் பிரிவுப் பெயரை நோக்குக. (6) விரைவு (துடுக்கு) விரைவு அல்லது வேகம் என்பது, ஒப்பு நோக்கிச் சொல்லும் உறவுப் பண்பாகும். ஒன்றன் செலவைத் தனிப்பட வேகம் என்று சொல்ல முடியாது. மாட்டு வண்டியைவிடக் குதிரை வண்டியும், குதிரை வண்டியை விட மிதிவண்டியும், மிதிவண்டியைவிடப் புகைவண்டியும், புகைவண்டியைவிட இயங்கி (Motor) வண்டியும், வேகமாகச் செல்லும், ஒரே வண்டியை எடுத்துக் கொள்ளினும், அதன் மென் செலவொடு ஒப்பு நோக்கியே அதன் கடுஞ்செலவு வேகம் எனப்படும். ஆகவே, இயங்கும் பொருள் ஒன்றாயினும் பலவாயினும், ஒன்றைவிட இன்னொன்றும் ஒருசெலவைவிட இன்னொரு செலவும் முன் செல்வதே வேகம் எனப்படுகின்றது. ஆதலால், முற்செலவு என்பது இயல்பான செலவென்றும், ஒரு செலவினும் இன்னொரு செலவு முற்படுவதே வேகம் என்றும், அறிந்து கொள்க. விரைவு என்பது ஒரு வினையை முந்தித் தொடங்கி முந்தி முடிப்பதையும், வேகம் என்பது ஒருவினை செய்தற்கண் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குரிய வினை வீதத்தையும், குறிக்கும். (i) லகர னகர வெதுகை ஒல் - ஒல்லென = விரைவாக. ஒய் - ஒய்யென = விரைவாக. துள்ளுதல் = விரைதல். துள் - துண் - துண்டை = துடுக்கானவன். துண்ணெனல் = விரைதல். துனைதல் = விரைதல். துவல் = விரைவு, துவலுதல் = விரைதல். பொள் - பொள்ளென = விரைவாக. முள் - முண்டு - மண்டு. மண்டுதல் = விரைந்து செல்லுதல். கடற்படை குளிப்ப மண்டி (புறம் 6) (முள்) = (முய்) - முயல் = வேகமாக ஓடும் சிறு விலங்கு வகை. (முள்) - (மள்) - மழ - மழமழ (விரைவுக் குறிப்பு) (முல்) - (மல்) - வல் = விரைவு. வல்லே = விரைவாக. வல் - வல்லை = விரைவு. ஒன்றின வல்லே செயிற் செய்க (நாலடி. 4.) (ii) ரகர வெதுகை சுரு - கருக்கு = விரைவு சுருக்காய் வா என்பது வழக்கு. சுருசுருப்பு = ஊக்கம். சுரு - சரு - சருக்கு (வி.கு.). சரு - சரேல் (வி.கு.). சரு - சர - சரசர (வி.கு.). சர - சரட்டு (வி.கு.). துர - துரை = வேகம். துரத்தல் = ஆணியை முடுக்குதல். துர - துரத்து (பி.வி.) துரத்துதல் = முடுக்குதல், வேகமாய் ஓட்டுதல். (புரு) - பர - பரபர - பரபரப்பு. (புரு) - பரு - பரி = வேகம். வேகமான செலவு, வேகமாகச் செல்லுங் குதிரை. பரிதல் = ஓடுதல். (புரு) - பொரு - பொருக்கு (வி.கு.) பொருக்கென்றெழுத்தான் என்று கூறுதல் காண்க. பொருக்கு - பொக்கு (கொச்சை வழக்கு). பொருக்க = விரைவாக. (முரு) - விரு - விருவிரு - விருவிருப்பு = விரைவு. விருவிருவென்று போ என்னும் வழக்கைக் காண்க. விரு - விருட்டு (வி.கு.). விரு - விர - விரை - விரைவு. விரை - விரைசி. (iii) றகர வெதுகை குறு - குறுகுறு. குறு குறுத்தல் = வேண்டாததைச் செய்ய விரைதல். குறு - குறும்பு = சேட்டை. சுறு - சுறுசுறு - சுறுசுறுப்பு. சுறு - சுறுதி = வேகம். துறு - துறுதுறு. துறுதுறுத்தவன் - வேண்டாவினை அல்லது குறும்பு செய்து கொண்டேயிருப்பவன். (நூறு) - நொறு - நொறில் = விரைவு. (முறு) - முறுக்கு = வேகம், துடுக்கு. (iv) டகர வெதுகை (உடு) - (ஒடு) - ஓடு. ஓடுதல் = விரைந்து செல்லுதல். குடு - குடுகுடு (வி.கு.). குடுகுடுவென்று ஓடுகிறான் என்னும் வழக்கைக் காண்க. குடுகுடுத்தான் = விரைவாளன் (அவசரக்காரன்). குடு - கடு. கடுத்தல் = விரைதல், விரைந்தோடுதல். கடும்பா = விரைந்து பாடும் பா. கடுநடை = வேகநடை. காலெனக்கடுக்குங் கவின்பெறு தேரும் (மதுரைக். 388) கடு - கடுகு - கடுக்கம் = விரைவு. கடுகுதல் = விரைதல். கடு - கடி - கடிது, கடி = விரைவு. எம்மம்பு கடி விடுதும் (புறம். 9.) (மு.தா.) சுடு - (சுட்டு) < சுட்டி = துடுக்கு, குறும்பு. சுட்டி - சுட்டிக்கை - சூட்டிக்கை = விரைவு. சுடு - சடு - சடுதி. சடு - சடுத்தம் = விரைவு. சடு - சட்டு சட்டென்று செய், சட்டுச் சட்டென்று செய், என்று ஏவும் வழக்கைக் காண்க. (குதிரை வண்டி மாட்டு வண்டியைவிட வேகமாய்ச் செல்வதால், அது சடுக்கா (Jutka) வெனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்). சட்டு - சட்ட - விரைவாக. துடு - துடுக்கு = வேகம், துணிவு, குறும்பு. துடு - துடும் (வி.கு.). துடு - திடு - திடும் (வி; கு.). திடு - திடீர் (வி.கு.) துடு - துடி - துடிப்பு + ஒன்றைச் செய்ய விரைதல். துடித்தல் = விரைந்து அடித்துக் கொள்ளுதல். (நுடு) - நொடு - நொடுநொடு. நொடுநொடுத்தல் = துடுக்கா யிருத்தல். நொடு - நொடுக்கு (வி.கு.). (புடு) - பொடு - பொடுக்கு (வி.கு.). பொடுக்கென்று போய் விட்டான் என்னும் வழக்கைக் காண்க. பொடு - பொடுபொடு (வி.கு.). (புடு) - படு) - பட - படபட - படபடப்பு. பட-படக்கு. படக்குப்படக்கெனல் = துடித்தல், அச்சத்தால் நெஞ்சம் துடித்தல். முடு - முடுகு - முடுக்கு, முடுகுதல் = விரைதல். முடுக்குதல் = வேகமாய் ஓட்டுதல். முடுகுவண்ணம் = விரைந்து செல்லும் குறிவிணை வண்ணம். முடுக்கு - மொடுக்கு (வி.கு.). முடு - மொடு - மொடுமொடு (வி.கு.). முடு - (மடு) - மட - மடமட (வி.கு.). (v) தகர வெதுகை குது - குதுகுது - குதுகுதுப்பு = விரைபு. குது - கது - கதும் (வி.கு.). கது - கதழ் - கதழ்வு = விரைவு. கதழ்வும் துனைவும் விரைவின் பொருள (தொல். உரியியல். 17). கது - கதி. கதித்தல் = விரைதல். கதி = விரைவு, வேகம். (புது) - (பது) = பதறு - பதற்றம் = பதட்டம். (பது) - பதை - பதைபதை - பதைபதைப்பு. (முது) - (மது) - மத - மதமத (வி.கு.). (முது) - விது - விதுவிது - விதுவிதுப்பு = நடுக்கம், விரைவு. விது - விதும்பு - விதுப்பு, விதும்பல் = விரைதல், விரைந்துகூட விரும்புதல். விதுப்பு = விரைவு, விரைந்த வேட்கை. அவர்வயின் விதும்புதல் கண்விதுப்பழிதல் என்னும் திருக்குறள் அதிகாரப் பெயர்களை நோக்குக. (vi) சகர வெதுகை (குக) - கிசு - கிசுக்கு (வி.கு.). புசு - புசுக்கு - பொசுக்கு (வி.கு.) புசு - பொசு - பொசுபொசு. (முசு) - விசு - விசுவிசு (வி.கு.). விசு - விசுக்கு (வி.கு.). பொசுக்கென்று போய்விட்டது, விசுவிசுவென்று பிடித்தெரிகிறது, விசுக்குவிசுக்கென்று நடந்து போகிறான், என்பன வழக்கு. விசு - விசை = வேகம். (7) (நடுக்கம்) அச்சம் உடலும் நெஞ்சாங்குலையும் விரைந்து அசைவது அச்சத்தைக் குறிக்குமாதலால், விரைவுக் கருத்தில் அச்சக் கருத்துப் பிறந்தது. துள் - துண். துண்ணெனல் = திடுக்கிடுதல், அஞ்சுதல். துண் - துணுக்கு. துணுக்கிடுதல் = திடுக்கிடுதல். துணுக்கு - துணுக்கம் = நடுக்கம், அச்சம். துண் - திண் - திடு - திடுக்கு. நுடு - நடு - நடுங்கு - நடுக்கு - நடுக்கம். விது - விதிர் - விதிர்ப்பு = நடுக்கம். விதிர்விதிர்ப்பு = நடுநடுக்கம். விது - விதுக்கு. விதுக்கு விதுக்கெனல் = அச்சத்தால் நெஞ்சம் படக்குப் படக்கென்று அடித்துக் கொள்ளுதல், இங்ஙனம் அடித்துக் கொள்ளுதலை வெருக்கு வெருக்கென்றிருக்கின்றது என்பர். விதுக்கு - விருக்கு, - வெருக்கு - வெருவு - வெரு = அச்சம். வெருவுதல் = அஞ்சுதல். வெரு - வெருள் - வெருளி = அச்சுறுத்தும் புல்லுரு. வெருள் - விரள் - மிரள். விரள் - விரட்டு. விரட்டுதல் = அச்சுறுத்துதல், அச்சுறுத்தி வேகமாக ஓட்டுதல். (8) வீசுதல் ஒருவன் வேகமாய் நடக்கும்போது, அவன் கை வேகமாய் வீசுவதாலும், அங்ஙனம் வீசும்போது அது நீளுவதாலும், வேகமாய் நடப்பதைக் குறிக்கும் விசு என்னும் சொல், வேகமாய் ஒன்றை வீசுவதையும் நீட்சியையுங் குறிக்கும். சொற்களைப் பிறப்பித்துள்ளது. விசு - விசிறு - விசிறி - சிவிறி. விசிறுதல் = வேகமாய் வீசுதல், வீசி யெறிதல். விசு - விசுக்கு. விசுக்குதல் = விரைந்து கைவீசுதல். விசிறுதல். விசுக்கு விசுக்கென்று நடக்கிறான் என்பது வழக்கு. விசு - வீசு. வீசுதல் = வீசியெறிதல், வாரிக்கொடுத்தல், நீளுதல், மிகுதல், நீளவாசனை வருதல். வீசு - வீச்சு = வேகம், வீசுதல். ஊஞ்சலாட்டு, நீளம், மிகுதி. வீச்சாய் நடக்கிறான், கைவீச்சுப் பெரிதாயிருக்கிறது, ஊஞ்சலை ஒரு வீச்சு ஆட்டினான், வீடு வீச்சாயிருக்கிறது, வீச்சாய்க்கொடு என்பன, முறையே மேற்குறித்த பொருள்கட்கெடுத்துக்காட்டாம். வீச்சு - வீச்சம் = நாற்றம். காற்றானது நீண்டு செல்வதால், அதனொடு கலந்த வாசனையும் நீண்டு செல்கின்றதென்க. வீசுதல் என்னும் சொல் வழக்கில் தீய நாற்றத்தையே குறிக்கும். வீசு - வீசை = நீண்டுவளரும் மேலுதட்டு மயிர். தலைமயிரும் தாடியும் நீண்டு வளர்வனவேயாயினும், குறுக்காக நீண்டு வளர்வது மீசையொன்றே யாதலின், அது வீசையெனப்பட்டது. வீசை - மீசை. ஒரு சில சொற்கட்குக் கற்றோர் வழங்கும் வடிவினும் கல்லார் வழங்கும் வடிவே முந்தினதாயுள்ளது. (9) ஊக்குதல் ஊக்குதல் ஊக்கமுண்டாக்குதல். ஊக்கமாவது முயற்சிக்கேது வான முனைப்பு. ஒருவன் தன் மனத்தாலேனும் பிறனாலேனும் ஒருவினை செய்யத் தூண்டப்பட்ட விடத்தே, அவனிடத்து அதற்குரிய முயற்சி பிறக்கும். தூண்டுதல் என்பது முற்செலுத்துதல். ஒரு குதிரை முற்செல்லுமாறு அதனை ஊர்பவன் அதைத் தூண்டிவிடுவது போன்றதே. ஒருவன் ஒரு வினை செய்யுமாறு அவனது உள்ளம் அவனைத் தூண்டிவிடுவதும், உள் - உள்ளம் = ஊக்கம். உள்ளுதல் = ஊக்குதல். உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் என்று வள்ளுவனார் ஊக்கமுடைமை யதிகாரத்தில் (592) கூறியிருத்தல் காண்க. (உள்ளம் என்பதைப் பரிமேலழகர் ஆகு பெயராகக் கொண்டது பொருந்தாது. மனத்தைக் குறிக்கும் உள்ளம் என்னும் சொல்லும், ஊக்கத்தைக் குறிக்கும் உள்ளம் என்னும் சொல்லும், வெவ்வேறாம். மனத்தைக் குறிப்பது உள்ளிருப்பது என்றும், ஊக்கத்தைக் குறிப்பது முற்செலுத்துவது என்றும் பொருள்படும்). (மு.தா.) உள் - (உய்) - (உயல்) - உஞல் - உஞற்று. உஞற்றுதல் = உள்ளந் தூண்டுதல், முயற்சி செய்தல், வருந்தி யுழைத்தல். முன் - முனை, முனைதல் = முற்படுதல், முயற்சிசெய்தல், ஊக்கங் கொள்ளுதல். முனை - முனைப்பு. முள் - (முய்) - முயல் - முயற்சி. முயல் - முயற்று. முயலுதல் = முனைந்துழைத்தல். முக - முசுமுசு - முசுமுசுப்பு = ஊக்கம். ஊகாரச் சுட்டு - 4) மேற்செலவு திறந்த வெளியில் நிலமட்டத்திலிருந்து உயிரிகள் முற்செல்லக் கூடிய திசைகள், பக்கத்திசை எட்டும் மேற்றிசை ஒன்றுமாக ஒன்பதாம். அவற்றுள், மக்களும் மற்றப் பறவாவுயிரிகளும் முற்செல்லக்கூடிய திசைகள் பக்கத்திசையாகிய எட்டே, பறவை ஒன்றே ஒன்பான் திசையும் முற்செல்லக் கூடியதாகும். நிலத்திலும் நீரிலுமிருந்து மேலெழும் பொருள்கட்கெல்லாம் முற்செல வென்பது மேற்செலவே. மேற்செலவு முற்செலவில் ஒருவகையேயாதலால், முற்செலவைக் குறிக்கும் ஊகாரமே மேற்செலவையும் உணர்த்தும் என்க. மேற்செல்லுதல் அல்லது மேன்மேற்செல்லுதல் என்பது, முற்செலவையும் மிசைச் செலவையும் பொதுப்படக் குறித்தல் காண்க. ஏண் சேண் முதலிய சொற்கள் உயரத்தையும் தொலைவையும் பொதுப்படக் குறித்தலையும் நோக்குக. (1) எழுதல் எழுதலாவது கிளர்தலும் துள்ளுதலும். துள்ளுதல் என்பது முன்னோக்கித் துள்ளுதலும் மேனோக்கித் துள்ளுதலும் என இருவகைத்து. உன்னுதல் = உயரவெழுதல். உசும்புதல் = உறங்கினவன் மெல்ல உடம்பசைத்தெழுதல். உசும்பு - உசுப்பு (பிறவினை). உகலுதல் = அலையெழுதல். உகளுதல் = குதித்தல், உகைத்தல் = எழுதல், எழுப்புதல், உயரக் குதித்தல். உதித்தல் = உயரவெழும்புதல்; குதித்தல் = உயரவெழும்புதல். குதி - கொதி. கொந்தளித்தல் = கடல் கிளர்ந்தெழுதல். துள்ளுதல் = குதித்தல். துள் - துளும்பு; துளும்புதல் = மீன் நீர்மட்டத்திற்கு மேல் மெல்லத் துள்ளுதல். துளும்பு - தளும்பு. தளும்புதல் = கலம் அசைவதால் நீர் சிறிது துள்ளுதல். தளும்பு - ததும்பு. தளும்பு - தளம்பு. துளும்பு - துடும்பு. துடும்புதல் = ததும்புதல்; துள் - தள் - தள - தளதள - தளதளி - தத்தளி. தள - தளை. தளைத்தல் = கொதித்தல். பொங்குதல் = எழுதல், கொதித்தல், மிகுதல். முள் - முளி; முளிதல் - பொங்குதல். முள் - முளு. முளுத்தல் = உலையரிசி மெல்லத் துள்ளுதல். முள் - முண்டு. முண்டுகல் = துள்ளுதல், விதை முளை நிலத் துள்ளிருந்து முட்டியெழுதல். முசுமுசுத்தல் = நீர் கொதித்தல். (2) புளித்துப் பொங்குதல் சூட்டினாற் பொங்குவது போன்று புளிப்பினாலும் சில பொருள்கள் பொங்கியெழும். உகின் - எகின் = புளி. உகின் - உகினம் - எகினம் = புளி. நுர - நுரை = புளிப்பினால் எழும் சிறு குமிழி, அதன் நிறமான வெண்மை. நுரை வெண்மையாயிருந்தல் காண்க. நுரை - நரை = வெண்மை. நரைத்தல் = வெளுத்தல். நரையான் புறத்திட்ட சூடு (பழமொழி 48) நுதம்பு = கள். நொதித்தல் = புளித்துப் பொங்குதல். (புள்) புளி = புளித்துப் பொங்குவது, புளிப்புச்சுவை, புளிப்புப் பழம். புளித்தல் = புளித்துப் பொங்குதல். புளிக்க வைத்த மா எழும்பியிருத்தலைக் கொண்டே அது புளித்து விட்டதென்று அறிந்து கொள்ளுதல் காண்க. புளி - புளிச்சி = புளிச்சை. (புள்) - (புர) - புரை - பிரை = புளித்த மோர், பாலைப் புளிக்க வைக்கும் மோர். பொங்கு - பொங்கல் = கள். பொருணி = கள். பெருகு = தயிர். (முள்) - முளி. முளிதல் = பொங்குதல். முளிதயிர் = நன்றாய்த் தோய்ந்த தயிர். முண்டகம் = கள். (முள்) - முர - முரப்பு. முரத்தல் = புளித்தல். முர - மோர். முரமுரெனவே புளித்த மோரும் என்று ஔவையார் கூறுதல் காண்க. முர - முரை = நுரை. முகினி = புளி. (3) உவர்த்துப் பொங்குதல் உவர் நிலமும் பொங்கியெழும். (உளம்) - உழம். உழமண் = உவர்மண். (உளம்) - அளம் = உப்பு. உமண் = உப்பு. உமண் - உமணன். உப்புதல் = பொங்கியெழுதல். உப்பு = உவர்த்துப் பொங்கியெழும் சத்து, உவர்ப்புக் கல். உவர் - உவரி = உவர் நீர்க்கடல். (சுவர்) - சவர். சவர்த்தல் = உவர்த்தல். பொங்குதல் - நிலம் உவர்த்தெழுதல். பொருமுதல் - உளம் உவர்த்தெழுதல். (4) உயர்ச்சி உடம்பால் உயர்தலும் நிலைமையால் உயர்தலும் இடத்தால் உயர்தலும் என உயர்தல் மூவகை. ஊ - உ - மேல், உயர்ந்த. எ.டு. உத்துங்கள். உத்தரி, உத்தரியம், உத்தூளனம் முதலிய பல வடசொற்களில் முன்னொட்டாயிருந்து, உயர்ச்சி அல்லது மேலுறவுக் கருத்தை உணர்த்துவது உகரமே. உல்லி - மதில். உள் = மேன்மை. உகத்தல் = உயர்தல். உகப்பே உயர்வு (தொல். உரியியல் 8). உகைத்தல் = உயரவெழும்புதல். (மு.தா.) உச்சம் - உயர்ச்சி, உச்சி = உச்சமான இடம். உத்தரம் = உயர்வு, உயரவிருக்கும் விட்டம், உயர்ந்த வடதிசை. குமரிமலை மூழ்கிப் பனிமலை எழுந்தபின், வடதிசை உயர்ந்தது; தென்றிசை தாழ்ந்தது. இதனால், அவை முறையே உத்தரம் தக்கணம் எனப்பட்டன. உத்தரம் (உ+தரம்) = உயர்வு. தக்கணம் (தக்கு + அணம்) = தாழ்வு. உப்புதல் = எழுதல், பருத்தல், வீங்குதல். உப்புசம் = வயிற்றுப் பொருமல். உம்பர் = மேல், மேலிடம், ஆகாயம், தேவருலகம், தேவர். உம்பரான் = உயர்நிலையிலிருப்பவன். உம்பரம் = மேலிடம், ஆகாயம், தேவருலகம். உம்பல் = உயரமான விலங்காகிய யானை. உயர் - உயரம், உயர்வு, உயர்ச்சி, உயர்த்தி. உவணம் = உயரப் பறக்கும் பருந்து, உவணம் - உவணன். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? என்பது பழமொழி. உவணை = தேவருலகம். உவச்சன் - ஓச்சன் - ஓசன் = தெய்வத்தை ஏத்துபவன். உறை = உயரம். உன் = உயர்ந்த, மிகுந்த. v.L.: உன்மத்தம். உன்னுதல் = மூச்சடக்கி எழுதல், உயரக் குதித்தல், உன் - உன்னதம். உன்னிப்பு = உயரம்; ஊங்கு = உயர்வு, மிகுதி; ஊர்தல் = ஏறுதல், ஏறிச் செல்லுதல், ஊர் - ஊர்தி. ஊர்த்தம் = மேல் > ஊர்த்வம் (Urdhva) - வ. ஒய்யல் = உயர்ச்சி. ஒய்யாரம் = உயர்நிலை. ஒயில் = ஒய்யாரம், உயரக்குதித்தாடும் கும்மி. ஓங்கு = ஓங்கல் = யானை, மலை. ஓங்கு - ஓக்கு - ஓக்கம் = உயரம், பெருமை. ஓச்சுதல் = உயர்த்துதல். ஓச்சு - ஓச்சம் = உயர்வு, கீர்த்தி. கடிதோச்சி மெல்ல வெறிக (குறள் 572). ஒப்புதல் = உயர்த்துதல். ஓம்புதல் = உடல் உயருமாறு வளர்த்தல், பேணுதல், காத்தல். ஒர்கை = யானை. ஓவர் = ஏத்தாளர். குடம் = உயர்ந்த மேற்கு. கொடுமுடி = உயர்ந்த மலைக் குவடு. கோடு = மலையுச்சி. குவி = சுவர். சுவல் = மேடு. சுவலை = அரச மரம். அரசுபோலோங்கி என்னும் மரபுவமைத் தொடரை நோக்குக. சுவர் = மதில். சுவணம் = கருடன் (உயரப் பறப்பது). குளிகை = செய்குன்று. துங்கம் = உயர்வு. துங்கன் = உயர்ந்தவன். தூங்குதல் = உயர்தல், மிகுதல் தூக்குதல் = உயர்த்துதல், எடுத்தல், எடுத்து நிறுத்தல். தூக்கு - தூக்கம் = உயரம், நிறை, விலையேற்றம். நூங்கு = உயர்வு, பெருமை, மிகுதி, நூங்கர் = தேவர். நூக்கம் = உயரம். புங்கம் = உயர்வு, புங்கவன் = உயர்ந்தவன். புகழ்தல் = உயர்த்துச் சொல்லுதல். புகல் = புகழ். பொருபுக னல்லேறு (கலித். 103) புகுதல் = ஏறுதல். புகு - புகவு = மேலேறுகை. புகவரும் பொங்குளைப் புள்ளியன் மாவும் (பரிபா. 10,14.) புகல்வி = விலங்கின் ஆண். ஒ-நோ. ஏறு-ஏற்றை. புழற்கோட் டாமான்புகல்வியும் (குறிஞ்சிப். 258) புரம் = உயர்ந்த மனை, அஃதுள்ள நகர். குடி நகர். பதி முதலிய பிற சொற்களும் தனியில்லையும் ஊரையுங் குறித்தல் காண்க. உயர்ந்த கட்டிடங்களுள் தலைமையானது கோபுரம். ஒ. நோ. கோநாய், அரசமரம், நாயகத் தூக்கம். புரம் - பரம் = மேல். பரம் - பரன், பரை. பரண் = உயர்ந்த இருக்கை. பரம் - (பரந்து) - பருந்து = உயரத்தில் பறக்கும் பறவை. பரன் = மேலோன், கடவுள். பர - பரவு - பராவு. பரவுதல் = உயர்த்துக் கூறுதல், புகழ்தல். பரம் - வரம் - வரன் = மேலானது. உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (குறள். 24) பரி = உயர்ச்சி (திவா.) வார்தல் = உயர்தல், வார் = உயர்ச்சி, பர - வர - வார். புரவி = மதில் தாண்டும் உயர்ந்த குதிரை. (திருவிளையாடற்புராணம், நரிபரியாக்கிய படலம், 87-94) புரை = உயர்வு. புரையோர் = உயர்ந்தோர். புரையுயர் வாகும் (தொல். உரியியல். 4) புன் = (மேலெழும்) பறவை. புள் - (பள்) - (பண்) - பணை = பரண், உயரம், மூங்கில் அரசு முதலிய உயர்ந்த மரம். பொக்கம் = உயரம், மிகுதி. பொகுட்டு = மலை. பொங்கம் = மிகுதி, பொங்கர் = மலை. பொருப்பு = மலை. பொற்றை - பொத்தை - பொச்சை = மலை. பொறை = மலை. பொறையன் = மலைநாடன், சேரன். போற்றுதல் = புகழ்தல், வளர்த்தல், காத்தல். போற்றி = இறைவனை ஏத்துபவன், பூசாரி. முகடு = உச்சி, மேலிடம், கூரை. முகடு - மோடு - மேடு - மேடை. மேட்டிமை = செருக்கு. முகட்டுப்பூச்சி - மூட்டுப்பூச்சி - மூட்டைப் பூச்சி - மூட்டை. (5) உச்சி (தலை) உச்சமான உறுப்பு உச்சியாகும். உளை = தலை, தலைமயிர். உக்கம் = தலை, உவ்வீ = தலை. உச்சி = மேலிடம், தலை. சுட்டி = மயிர்முடி. சுடிகை = தலையுச்சி, மயிர்முடி, சூட்டு. சூளி = உச்சிக்கொண்ட. சூளி - சூழி = உச்சி, உச்சிக் கொண்டை, மேலிடம், கூழியம் = உச்சிக்கொண்டை, மேலிடம். சூழியல் = சுவரின் எடுத்துக்கட்டி (cornice) குளிகை = நிலாமுற்றம். சூளை = சூடை = தலை. குடுமி. சூட்டு = உச்சிக் கொண்டை, மதிலுச்சியிலுள்ள ஏவறை. சூடம் = தலையுச்சி. சூடாலம் = தலை. சூடு = குடுமி, உச்சிக்கொண்டை. (6) உச்சி யணி உளை = தலையாட்டம். உத்தி = திருமகளுருவம் பொறித்த தலையணி. சுமத்தல் = மேற்கொள்ளுதல், தாங்குதல். சும - சுமை. சுட்டி = நெற்றியணி. சுடிகை = மகுடம், நெற்றிக்சுட்டி. சூளிகை = தலையணிவகை. சூடிகை = மணிமுடி. சூழி - யானையின் முகபடாம், சேணம். சூழியம் = உச்சிக் கொண்டையணி. சூளை = முடிமணி (சூளாமணி). சூளை - சூடை = முடி மணி (சூடாமணி), சடைப்பில்லை. சூடுதல் = தலையில் அல்லது கொண்டையில் அணிதல். பொறுத்தல் = சுமத்தல், மேற்கொள்ளுதல், தாங்குதல்; (7) தொங்கல் தொங்குகிற பொருட்களெல்லாம் நிலமட்டத்திற்கு மேற்பட உயரத்திற் கட்டப்பட்டவை அல்லது அமைந்தவையாதலின், உயர்ச்சிக் கருத்தில் தொங்கற் கருத்துத் தோன்றிற்று. ஒன்றற்கிட மாகும் கனப்பொருளெல்லாம் நிலத்தோடொக்கும். உறுதல் = உயர்தல். உறி = உயரத்திற் கட்டப்பட்ட தூக்கு. உக்கம் = கட்டித் தூக்குங் கயிறு. தூங்குதல் = உயர்தல், தொங்குதல். தொங்கு கட்டிலில் உறங்குதல். தூங்கு - தூக்கு - தூக்கம். தூக்குதல் = உயர்த்துதல், எடுத்தல், எடுத்து நிறுத்தல், தொங்க விடுதல், தொங்கவைத்துக் கொல்லுதல். தூக்கு = ஏற்றம், எடுப்பு, நிறுப்பு, ஒரு நிறை, தொங்க வைப்பு, தொங்கவிடும் பை. தூக்கு - தூக்கம். தூக்கு - தூக்கணம் = கூட்டைத் தொங்கவிடும் ஒருவகைக் குருவி. தொங்குதல் = அடி ஒன்றிற்படாமல் வானத்து நிற்றல், ஒன்றைப் பற்றிக் கொண்டு தொங்குதல் போல ஒருவனை நெருங்கி வேண்டல். தொங்கல் = தொங்கும் அணி, மாலை. தொங்கல் - தொங்கலம் = தொங்குவது போல் ஆடை கீழிறங்குதல். தொங்கட்டம் - தொங்கட்டான் = தொங்கும் அணி. தொங்கும் கடிகார எடை. தொங்கு - தொக்கம் = எலும்பு முதலியன செரியாமல் வயிற்றில் தொங்கிக் கொள்ளுதல். தொங்கல் = தொங்கும் பொருளுக்கும் நிலத்திற்கும் இடையீடி ருப்பது போல் வரவிற்கும் செலவிற்கும் இடையீடிருத்தல் (deficit) தொங்கல் விழுதல் என்பது வழக்கு. (8) உயர்ச்சி குறிக்கும் இகர முதற் சொற்கள் உயிரினத் திரிபுப்படி, உயர்ச்சி குறிக்கும் உகர முதற் சொற்கள் இகர முதலவாகத் திரியும். உ-இ-ஈ. இவர்தல் = ஏறுதல், உயர்தல். கிளம்புதல் = எழுதல். கிளம்பு - கிளப்பு. கிளர்தல் = எழுதல். கிளர் - கிளர்ச்சி. சிமை = உச்சி. நிவத்தல் = உயர்தல். மிகுதல் = மேற்படுதல். மிகு - மீ. மிகுதி - மீதி. மீ = உயரம், மேலிடம், ஆகாயம், மேன்மை. மீ - மீது. மிசை = உயர்ச்சி, மேல், மேலிடம். மிடை = பரண். மிதத்தல் = மேலெழுதல், நீர்மேற் கிடத்தல். மித - மிதப்பு = உயர்ச்சி, மேடு, தெப்பம். மித - மிதவை. மிதித்தல் = பாதத்தை ஒன்றன்மேல் வைத்தல். மிலைதல் = மேற்கொள்ளுதல், அணிதல். மிலை - மலை; (9) உயர்ச்சி குறிக்கும் எகர முதற் சொற்கள் உ - இ - எ - ஏ. உ - எ - ஏ. எஃகுதல் = ஏறுதல். எக்குதல் = வயிற்றை நிமிர்த்துதல். எக்கர் = மணல் மேடு. எகிர்தல் = எழுதல், குதித்தல். எட்டுதல் = உயர்ந்து அல்லது நீண்டு தொடுதல். எட்டம் = உயரம், தூரம். எட்டன் = உயர்ந்தோன். எட்டர் = அரசனுக்கு நாழிகைக் கணக்குக் கூறும் ஏத்தாளர். எட்டி = உயர்ந்தவன், சிறந்தவன், பண்டைத் தமிழரசர் வணிகர் தலைவனுக்கு வழங்கிய சிறப்புப் பட்டம். எட்டி = செட்டி. செட்டி - செட்டு = செட்டியின் தன்மை. எட்டி = ஏட்டி. செட்டி - சேட்டி. எடுத்தல் = தூக்குதல், நிறத்தல். எடுப்பு = உயர்வு. எடை = நிறை. எண்ணுதல் = மேன்மேற் கருதுதல், மேன்மேற் கணக்கிடுதல். எண் = மேன்மேற் செல்லும் தொகை. எம்புதல் = எழுதல், குதித்தல். எவ்வுதல் = எழுதல், குதித்தல். எழுதல் = உயர்தல், கிளர்தல். எழு - எழுவு. எழு - எழும்பு - எழுப்பு. எழு - எழில் = உயர்ச்சி, அழகு. எழால் = எழுகை, இசையெழுகை. ஏ = உயர்ச்சி, பெருமை. ஏ பெற்றாகும் (தொல். உரியியல், 7) ஏ = மேனோக்குகை. கார்நினைத் தேததரு மயிர் குழாம் (சீவக. 87) ஏக்கழுத்தம் = கழுத்து நிமிர்ப்பு, தலையெடுப்பு. ஏடு = மேன்மை. ஏடுடைய மேலுலகோடு (தேவா. 539, 2.) ஏடு = விஞ்சையருலகம். ஏட்டன் = மேலோன். ஏண் = உயர்ச்சி. ஏணி = ஏறுங்கருவி, உயரவெல்லை, தூரவெல்லை, எல்லை. நளியிரு முந்நீர் ஏணியாக (புறம். 36) ஏணை = ஏந்தும் தொட்டில். ஏணாப்பு = இறுமாப்பு. ஏட்சி = எழுச்சி. ஏத்துதல் = உயர்த்துதல், புகழ்தல், வழுத்துதல். ஏந்துதல் = மேலாகத் தாங்குதல்; ஏந்தல் = மேலோன் அல்லது தாங்குவோன். ஏர்தல் = எழுதல். ஏர் = பயிரை எழச் செய்யுந் தொழில், அதற்குரிய கருவியாகிய கலப்பை. ஏர் - ஏரி = ஏர்த்தொழிற்குரிய குளம்; எருது (ஏர்து) = ஏர்த்தொழிற்குரிய காளை. ஏற்றல் (ஏல்) = கையேந்தி வாங்குதல், கொள்ளுதல், மேற் கொள்ளுதல், சுமத்தல், ஏல் - ஏல்வை. ஏல் - ஏனம் = ஏற்குங் கலம். ஏறுதல் = உயர்தல், எழுதல். ஏற்றம் = ஏறி மிதிக்கும் குத்துலக்கை, ஆளேறும் அல்லது நீரேற்றும் துலா. ஏறு = பெண்ணின்மேல் ஏறும் ஆண் விலங்கு. ஏறு = ஏற்றை - ஏட்டை. சே = (பெண்ணின் மேலேறும்) ஆண் விலங்கு. சே - சேவு - சேவல் = விலங்கு பறவைகளின் ஆண். சேண் = உயரம், சேய்மை, மலைமுகடு, ஆகாயம், துறக்கம். சேண = உயர. சேண் - சேணம் = துறக்கம், விலங்கின் மேலிடும் மெத்தை. சேண் - சேணி = ஏணி, விஞ்சையருலகம். சேணியன் = விஞ்சையன், இந்திரன். சேணோன் = மலைவாசி, பரணிலிருந்து காப்பவன்; சேண் - சேடு = உயரம், பெருமை. சேடு - சேடன் = பெரியோன், கடவுள். சேடல் = உச்சிச் செலுந்தில் என்னும் மரம். சேடு = சேடி = விஞ்சையருலகம். சேடு - சேட்டம் = மேன்மை. சேட்டன் = பெரியோன், மூத்தவன், தமையன். சேட்டி = தமக்கை. சேட்டை = மூத்தவள், மூதேவி. ஏண் - சேண். ஒ. நோ: ஏமம் - சேமம். சேண் - சேடு - சேட்டம்; ஒ. நோ. கோண் - கோடு - கோட்டம். சேடம் = பெருமை, மிகுதி, மீதி. ஒ. நோ. மிஞ்சுதல் = மிகுதல், மீதல். மிஞ்சு - மிச்சம். எஞ்சுதல் = மேற்படுதல். மிகுதல். மீதல். எஞ்சு - எச்சு - எச்சம். மிகுதியாய்க் கொடுத்தலை எச்சாய்க் கொடுத்தல் என்பது கொங்கு நாட்டு வழக்கு. எஞ்சுதல் = கடத்தல். இரக்குவாரே னெஞ்சிக் கூறேன் (பதிற். 61, 11) தெண்டுதல் = நெம்புதல்; மேற்கிளப்புதல். தெண்டு - தெண்டில் = தலையை அடிக்கடி மேற்கிளப்பும் ஓணான். தேங்குதல் = உயர்தல், மிகுதல். தேங்கு - தேக்கு - தேக்கம்; தேக்கு = உயர்ந்த அல்லது உயர்வான மரம். தேக்குதல் = அடிவயிற்றிலுள்ள காற்றை எழுப்புதல், ஏப்பம் விடுதல். ஏப்பம் என்னும் சொல்லும் ஒலிக் குறிப்பொடு எழுச்சி குறித்த ஏகாரங் கலந்ததே. தேர் = உயரமான ஊர்தி. தேரி = மணற்குன்று. நெம்புதல் = கிளப்புதல். மெச்சுதல் = உயர்த்திப் பேசுதல். மெட்டு = மேடு, மண் திட்டு, யாழிசைத் தானக்கட்டை, இசைப்போக்கு, மேன்மை. மெட்டு - மெட்டி. மெத்துதல் = மேலிடுதல், பள்ளத்தை நிரப்புதல், மிகுதல், வெல்லுதல். மெத்தை = மேல்நிலை, மேல்தளம். மெத்து - மச்சு. மே = மேல், மேம்பாடு. மேதக மிகப்பொலிந்த (மதுரைக். 19.) மேதுதல் = பள்ளத்தை நிரப்புதல். மேதை = மேன்மை, மேலோன், அறிஞன். மேதாள்வி - மேதாவி. மேய்தல் = விலங்கு மேலாகப் புல்லைத் தின்னுதல் கூரையின் மேல் இலை வைக்கோல் முதலியவற்றை இடுதல். மேய் - வேய். வேய்தல் = மேலணிதல், கூரை மேய்தல், தலையின் மேல் முடி சூடுதல், உடம்பின் மேல் ஏதேனும் அணிந்து ஆள் அடையாளம் மறைத்தல். இவற்றிற்கு மூலக் கருத்து மேலிடுதல் என்பதாம். வேய் - வேய்ந்தோன் - வேந்தன் = முடி சூடியவன். சேர சோழ பாண்டியர் மூவரும் முடியுடையரசராதலால் வேந்தர் எனப் பட்டமை காண்க. கொன்றை வேய்ந்தோன் என்னும் பெயர் கொன்றைவேந்தன் என மருவியிருத்தலையுங் காண்க. வேய் = ஒற்று. ஒற்றர் மாறுகோலம் பூண்டு பகைவர் மறைகளை அறிபவராதலால், ஒற்று வேய் எனப்பட்டது. உடம்பின் மேல் ஒன்றை அணிந்தல்லது கோலம் மாறுதல் இயலாது. வேய் - வேய்வு - வேவு = ஒற்று. மேவுதல் = மேவிட்டுக் கொள்ளுதல், வேய்தல். மேல் - மேலை, மேலும், மேலாக, மேலிட்டு, மேலுக்கு, மேற் கொண்டு, மேற்பட்டு. மேலாகு, மேலிடு, மேற்கொள், மேற்படு முதலிய வினைகள் மேல் என்னுஞ் சொல்லை முன்னொட்டாகக் கொண்டவை. மேல் - மேலா - மேலாவு = மேலதிகாரிகள் (High Command). மேல் - மேன்மை. மேல் - மேன் - மேன்படு - மேம்படு - மேம்பாடு. மேலோன் - மேனோன். மேலன் - மேனன்; மேல - மேன. மேல் - மேன் - மேனி = உடம்பின் மேற்புறம், உடம்பு திருமேனி = இறையுருவம், தூயோருடம்பு. மேல் - மேற்கு - மேக்கு = மலையாலுயர்ந்த திசை அல்லது கதிரவன் செலவின் பிற்பகுதிக்குரிய திசை. மேல் - மேலை - மேரை = மேலெல்லை, எல்லை. அளவு. மதிப்பு, மதித்தளிக்கும் மானியம். மேல் - வேல் - வேலி = எல்லை. எல்லையிலிடும் முள், எல்லைக்குட் பட்ட நிலம், ஒரு நில அளவு. வேலி - வேலிகம் = வேலியில் வைக்கப்படும் கற்றாழை. வேல் - வேலியில் இடப்படும் முண்மரம், முட்போற் குத்தும் ஆயுதம். வேல் - வேலை = எல்லை, நிலவெல்லையான கடல், கால வெல்லை, காலம். வேலை - வேளை = காலம். இங்குக் காட்டப்பட்ட இகர எகரவடிச் சொற்கள் பலவற்றிற்கு மூலமான உகர வடிச்சொற்கள், இறந்துபட்டன. (10) தன்மைப்பெயர் மாந்தனுக்கு இயல்பாக நான் என்னும் அகங்கார மிருத்தலாலும், அவன் தன்னலத்தையே முன்னலமாகப் பேணுதலாலும், உயர்ச்சி குறிக்கும் ஏகாரத்தினடியாகத் தன்மைப் பெயரை அமைத்துக் கொண்டான் முன்னைத் தமிழன் என்க. ஒருமை பன்மை ஏன் ஏம் (முதல் நிலை) யான் யாம் (2 ஆம் நிலை) நான் நாம் (3 ஆம் நிலை) வந்தேன் வந்தேம் என்னும் தன்மை வினைகளில். ஏன் ஏம் என்னும் தன்மைப் பெயர்கள் இன்றும் விகுதியாய் வழங்குதல் காண்க. இவை பிற்காலத்தில் பின்வருமாறு திரிந்தன. ஏன் - என் - அன் - அல். ஏம் - எம். ஏம் - ஆம் - ஓம் எம் - அம் - ஓம் யாம் நாம் என்னும் பெயர்கள் வேரளவில் ஒன்றே யாயினும், திரிபு வேறுபாடு காரணமாகவும் வசதி நோக்கியும். முறையே தனித்தன்மைப் பன்மையாகவும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாகவும் ஆளப்பட்டன. முன்னிலையில் நீ நீம் (நீர்) நீங்கள் எனவும், படர்க்கையில் அவன் அவர் அவர்கள் எனவும், இழிலொப்புயர்வு ஆகிய முந்நிலை பற்றிய பெயர்கள் ஏற்பட்டுவிட்டமையாலும்; தன்மையிலும். அரசரும் இறைவனும் தம்மை யாம் என்றே சுட்டுவதாகக் கூறுவது மரபாதலாலும், யாம் நாம் என்னும் ஒற்றைப் பன்மைப் பெயர்களினின்று யாங்கள் நாங்கள் என்னும் இரட்டைப் பன்மைப் பெயர்கள் தோன்றியுள்ளன (4 ஆம் நிலை). முதலாவது, யாங்கள் என்பது தனித்தன்மைப் பன்மையாகவும், நாங்கள் என்பது உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாகவும், வழங்கின. பின்பு, யாங்கள் என்னுஞ் சொல் வழக்கற்றுப் போய் விட்டமையால், அதற்குப் பதிலாக நாங்கள் என்பது தவறாக வழங்கி வருகின்றது (5 ஆம் நிலை). வேற்றுமைத் திரிபு எழுவாய் வேற்றுமையடி ஏன், யான் என் ஏம், யாம் எம் நான் நன் நாம் நம் யாங்கள் எங்கள் நாங்கள் நங்கள் தமிழில், நன் என்பது இருவகை வழக்கிலும், நங்கள் என்பது உலக வழக்கிலும், அற்றன. நங்கள் கோன் வசுதேவன் என்று திருமங்கையாழ்வார் கூறுதல் காண்க. தெலுங்கிலும் கன்னடத்திலும் நன் என்னும் அடி இன்றும் வழங்குகின்றது. (11) வினாச்சொல் ஒருவனை எவன் என்று வினாவுவது, ஓர் இடத்திலுள்ள பல பொருள்களுள் ஒன்றை உயர எடுத்துக்காட்டி இதுவா என்று கேட்பது போலிருத்தலால், வினாச் சொல்லும் எழுச்சி அல்லது உயர்ச்சி குறித்த ஏகாரச் சொல்லடியாகப் பிறந்துள்ளது. ஏ? = vJ?, எவை? எவன்? எவள்? எவர்? (முதல் நிலை) ஏ - யா = எவை? (2 ஆம் நிலை) ஏ - ஏ (3 ஆம் நிலை) ஏவூர்? (பண்டைத் தமிழ்); எவ்வூர்? (இற்றைத் தமிழ்).. எவன் = எது? எவை? (4 ஆம் நிலை). எவன் - என். ஏ - யா - ஆ. ஏவர் - யாவர் - யார் - ஆர். ஏ - ஆ - ஓ. வந்தானா? வந்தானோ? (5 ஆம் நிலை) பெயர் : ஏவன், ஏவள், ஏவர், ஏது, ஏவை. எவன், எவள், எவர், எந்து, எது, என்னது, எவ், எவை, என்ன. யாவன், யாவள், யாவர், யாது, யா, யாவை; யாவர் - யார், யாவது - யாது. பெயரெச்சம் : எ, எந்த, என்ன, எனை. வினையெச்சம் : என்று (காலம்) எங்கு, எவண், யாங்கு, யாண்டு (இடம்) ஏன் (காரணம்) ஏ எ யா என்னும் மூன்றே வினாவடிகளாய் அமைவதையும், ஆ ஓ என்னும் இரண்டும் ஈறாகவன்றி வேறாக வராமையையும், நோக்குக. எ ஏயின் குறுக்கம்; யா அதன் திரிபு. ஆதலால், மூலவினாவடி ஏ என்னும் ஒன்றே. (12) உயர்ச்சி குறிக்கும் அகர முதற் சொற்கள் உ-அ-ஆ. (உகைத்தல் = உயரவெழும்புதல். உகை - அகை.) அகைத்தல் = உயர்த்துதல். (உள் = மேன்மை. உள் - (உண்) - அண்.) அண் = மேல், மேலிடம், மேல்வாய். அண்பல் = மேல்வாய்ப்பல். அண் - அண்ணம் = மேல்வாய். அண் - அணல் = மேல்வாய். அண்ணல் = உயர்வு, உயர்ந்தோன், அரசன், கடவுள், அண்ணன் = பெரியோன், மூத்தோன், தமையன். அண்ணி = அண்ணன் மனைவி. அண்ணாத்தல் = மேனோக்குதல். அணத்தல் = தலையெடுத்து நிமிர்தல். அணர்தல் = மேனோக்குதல். அணரி = மேல்வாய். அத்தாசம் = அந்தரம். அத்தாசமாய்த் தூக்கிக் கொண்டு போகிறான் என்பது தென்னாட்டு வழக்கு. அந்தரம் = ஆகாயம், தேவருலகம். அந்தரக்கோல் = மேலிசை நரம்பு, மேலிசை. அம்பரம் = மேலிடம், ஆகாயம், தேவருலகம். (உம்பரம் - அம்பரம்). (குதி-கதி). கதித்தல் = எழுதல். (13) குரவர் பெயர் ஒருவனுக்கு உயர்ந்தோரான ஐங்குரவருள்ளும் இரு முதுகுரவர் மிகச் சிறந்தவராதலின், அவரைக் குறித்தற்கு உயர்வு குறித்த உகரச் சுட்டின் திரிபான அகரத்தை அடியாகக் கொண்ட பல சொற்கள் கிளைத்துள்ளன. தந்தை தாய் —— அக்கை அச்சன் அச்சி அத்தன் அத்தி அப்பன் அம்மை (அவ்வை) —— அன்னி, அனி (அணி) அன்னை (அஞ்ஞை), அனை ஆஞன் —— ———— ஆத்தை —— ஆய் குறிப்பு : (1) கோடிட்ட இடத்திற்குரிய சொற்கள் வழக்கற்றன போலும். (2) தாயைக் குறிக்கும் சில சொற்கள் அன் ஈறு பெற்றும் வழங்குகின்றன. v.L.: அக்கை - அக்கன் அம்மை - அம்மன் இவற்றிலுள்ள அன் ஈறு ஒருகால் மறங்குறிக்க வந்திருக்கலாம். (3) தாயைக் குறிக்கும் பல சொற்கள் முன்னொட்டுப் பெற்றும் பெறாதும் தமக்கையையும் குறிக்கின்றன. எ.டு. தாய் தமக்கை அக்கை அக்கை தமக்கை அச்சி அச்சி அவ்வை தவ்வை (தமவ்வை) தந்தை பெயரும் இங்ஙனம் தமையனைக் குறிக்கும். எ.டு. ஐயன் - தமையன். (4) குரவர் பெயர்கள் சில விகுதிமாறி அவர்களின் உடன் பிறந்தாரைக் குறிக்கின்றன. எ.டு. அத்தன் - அத்தை (தந்தையோடுடன் பிறந்தவள்) அம்மை - அம்மான் (தாயோடுடன் பிறந்தவன்) (5) தந்தை தாய் பெயர் முன்னொட்டுப் பெற்றும் வரும். தம் + அப்பன் = தமப்பன் - தகப்பன். (தம் + ஆய் = தாய்) (6) குரவர் பெயர்களுட் சில பிறவற்றின் திரிபாகத் தெரிகின்றன. எ.டு. அத்தன் - அச்சன் அம்மை - அவ்வை அன்னை - அஞ்ஞை (7) ஆண்பால் குறிக்கும் அன்னீறும் பெண்பால் குறிக்கும் இகர வைகார வீறுகளும், முதற்காலத்தில் குரவர் பெயர்களொடு சேர்ந்திருந்ததாகத் தெரியவில்லை. எ.டு. அப்பன் - அப்பு அம்மை - அம்மு (8) குரவர் பெயர்கள் பாட்டன் பாட்டியரைக் குறித்தற்குப் பால் மயங்காது மீமிசையாக அடுக்கி வருவதுண்டு. எ.டு. அப்பச்சு (அப்பச்சி) = பாட்டன். அம்மாச்சி = பாட்டி. தாய் பெயர்கள் இங்ஙனம் தொடர்ந்து தாயையே குறிப்பது முண்டு. எ.டு. அம்மணி (அம்மணி), அம்மனை. தாய்பெயர் பாட்டியைக் குறிப்பதுமுண்டு. எ.டு. அவ்வை = தாய், பாட்டி. (9) அம்மை அப்பன் என்னும் பெயர்கள், தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலக மெங்கணும் அவ்வந் நாட்டிற் கேற்பத் திரிந்து வழங்குகின்றன. (10) மேற்காட்டிய இருமுதுகுரவர் முறைப் பெயர்களை, விதப்பாக அம்மை அப்பன் என்பவற்றை, குழவி வளர்ப்பொலி களின் பாற்படுத்துவர் மேலை மொழி நூல்வல்லார். ஆயின், அண்ணன் என்னும் பெயர் உயர்ந்தோனுக்கும் தமை யனுக்கும் பொதுவாயிருத்தலாலும், ஐயன் என்னும் பெயர் முதலாவது பெரியோனைக் குறித்துப் பின்பு திரிந்தும் திரியாதும் ஐங்குர வரையும் பொதுப்படச் சுட்டுவதாலும், அம்மை அப்பன் முதலிய பெயர்கள் மூப்பும் அருமையும் பற்றிப் பிறருக்கும் பால் தவறாது வழங்குதலாலும், உயர்ச்சி குறிக்கும் உகரவடியின் திரிபான அகர வடியும் உயர்ச்சி குறித்தலாலும், அவற்றைச் சுட்டொலிகளின் பாற்படுத்துவதே சாலச்சிறப்புடைத்தாம். ஆரிய மொழிகளெல்லாம் திரிபுடை மொழிகளாதலின், அவற் றைத் தாய்மொழியாகக் கொண்ட மேனாட்டார் அம்மை அப்பன் என்னும் சொற்களை முறையே மா பா என்னுங் குழவி யொலி களினின்று திரிந்தவையாகக் கொள்வது வியப்பன்று. (14) பின்மை குறுக்காக வளரும் விலங்கு பறவைகட்கு உடம்பின் உச்சமான இடம் அல்லது மேற்புறம் முதுகாதலின், உகரச்சுட்டிற்குப் பின்மைக் கருத்தும் சிறுபான்மை உரித்தாம். மேலும், காலமுன் இடமுன் என முன்மை இரு வகைப்பட்டு முன்மைக் கருத்தில் பின்மைக் கருத்தும் பின்மைக் கருத்தில் முன்மைக் கருத்தும் மயங்குதலால், அதனாலும் முன்மைச் சுட்டு பின்மைக் கருத்தைத் தழுவுவதாம். இனி, மேல் என்னுஞ் சொல் உச்சம் முன்மை பின்மைகளை உணர்த்துவதையுங் காண்க. எ.டு. மேல் = உச்சத்தில், மேனாள் = முன்னாள், மேல் = பின்பு, அதன் மேல் = அதன் பின்பு. உப்பக்கம் = பின்பக்கம். உத்தரம் = பின்சொல்லும் மறுமொழி. உத்தரம் - உத்தரவு = வேண்டுகோளின் பின்தரும் ஆணை அல்லது விடை. உம்மை = பிற்காலம் (எதிர்காலம்) .................................................................................................. உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன் என்பது நாலடியார். (58) ஊகாரச் சுட்டு - 5) நெருங்கல் (1) அணுகல் முன்னோக்கிச் செல்லும் உயிரிகள் தாம் அடையக் கருதிய இடத்தை முதலாவது அணுகும். கருத்திலாது நீண்டு செல்லும் ஒரு மரக்கிளையும் கூட அண்மையிலுள்ள ஒரு பொருளை இயற்கையாக அடுக்கும். நெருங்கல் என்பது, தொட்டு நெருங்கலும் தொடாது நெருங் கலும் என இருதிறத்ததாதலால். இவ்வியல் முற்செலவியலையும் தொடுதலியலையும் அரிமா நோக்காகத் தழுவும். (உள்) - அள். அள்ளுதல் = நெருங்குதல். அள் - அண் - அணுகு - அணுக்கம். அண் - அண்டு - அண்டை. அண் - அண்மு. அண் - அடு. அள் - அரு - அருகு. உறுதல் = நெருங்குதல். குள் - குழு - கெழு - கெழுமு. கெழுமுதல் = கிட்டுதல். (குட்டு) - கிட்டு. கிட்டுதல் = நெருங்குதல். கிட்டு - கிட்டம் = அண்மை. கிட்ட = நெருங்க. துன்னுதல் = நெருங்குதல். துன்றுதல் = நெருங்குதல். துறுதல் = நெருங்குதல். தூர்தல் = நெருங்குதல். (நுள்) - நள் - நண் - நணுகு. (நுள்) - (நெள்) - நெரு - நெருங்கு. முட்டுதல் = நெருங்குதல். கிட்டமுட்ட என்னும் வழக்கை நோக்குக. முட்டடி = அண்மை. முண்டுதல் = நெருங்குதல். முண்டு - மண்டு. மண்டுதல் = நெருங்குதல். (2) செறிதல் இருபொருள் ஒன்றையொன்றணுகுதல் நெருங்கலும், பல பொருள் ஒன்றையொன்றணுகுதல் செறிதலும் ஆகும். நெருங் கலினும் செறிவு மிக அணுக்கமாகும். (உள்) - அள் = செறிவு. உறு - உற - உறப்பு = செறிவு. (சுறு) - செறு; செறுத்தல் = செறிதல். செறுத்த செய்யுள் (புலம். 53) செறு - செறி - செறிவு. துன்னுதல் = செறிதல். துதைதல் = செறிதல். துதை - ததை. துவன்றுதல் = செறிதல். துறுதல் = செறிதல். துறு - துறவு - துறுமு - துறும்பு. துறுமுதல் = செறிதல். துறும்புதல் = செறிதல். நுள் - நள் - நளி = செறிவு. நள்ளுதல் = செறிதல். நளியென் கிளவி செறிவும் ஆகும் (தொல். உரியியல், 25) பொதுளுதல் = செறிதல். முள் - முண்டு - மண்டு. மண்டு = நெருங்குதல், செறிதல். முறு - விறு - வெறு. வெறுத்தல் = செறிதல். விறு - விற - விறப்பு = செறிவு. விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே (தொல். உரியியல், 49) முடை - மிடை. மிடைதல் = செறிதல். மொய்த்தல் = செறிதல். (3) ஒடுங்கல் ஒடுங்கலாவது நெருக்கமாதல். இரு அல்லது பல பொருள்கள் ஒன்றையொன்று நெருங்கும்போது நெருக்கம் உண்டாகும். அதனால் ஒடுக்கம் ஏற்படும். ஒடுக்கம் இடைவெளியொடுக்கமும், பொருளொடுக்கமும், ஒழுக்கவொடுக்கமும், என மூவகை. உல் - உல்லி = ஒடுங்கியஆள். உல்-உல்லாடி = உல்லி. உல்லி - ஒல்லி. உல் - ஒல் - ஒல்லட்டை = ஒல்லி. உல் - உல்கு - (உற்கு) - உற்கம் - உக்கம் = ஒடுங்கிய இடை. உல் - ஒல் - ஒல்கு. ஒல்குதல் = சுருங்குதல்; ஒல்கு - ஒற்கம் = ஒடுக்கம். சுருக்கம். தளர்ச்சி. உல் - அல் - அல்கு - அல்குல் = சுருங்கிய இடை. அல்குதல் = சுருக்குதல். அல்கு - அஃகு. அஃகுதல் = சுருங்குதல். உள் - ஒள் - ஒரு - ஒருகு - ஒருக்கு. ஒருக்குதல் = ஒடுக்குதல். ஒருக்கு - எருக்கு. உள் - உடு - உடுகு - உடுக்கு = இடையிலொடுங்கிய கோடங்கி. உடுக்கு - உடுக்கை. உடுகு - இடுகு. இடுகுதல் = நெருங்குதல். உடுக்கு - இடுக்கு - இடுக்கம் = நெருக்கம். இடுக்கு = சிறு சந்து. இடுக்கு - இடுக்கல். இடுக்குதல் = நெருக்குதல், நெருக்கிப் பிடித்தல் அல்லது ஏந்துதல். பிள்ளையை இடுப்பில் இடுக்குதல் என்னும் வழக்கைக் காண்க. இடுக்கு = இடுக்கி = நெருக்கிப் பிடிக்குங் கருவி. உடு - இடு - இடை = ஒடுங்கிய மருங்குல். இடு - இடுப்பு. இடு - இடுக்கண் = ஒடுக்கி அல்லது நேருக்கி வருத்தும் துன்பம். இடு - இடர். இடர்ப்படுதல் = துன்பத்தால் அல்லது வறுமையால் நெருக்குண்ணுதல். இடு - இடங்கு - இடங்கர் = சிறு வழி. உள் - இள் - இண்டு = சிறிய இடுக்கு. இண்டும் இடுக்கும் என்பது வழக்கு. இள் - இட்டு - இட்டிது = ஒடுங்கினது. சிறியது. இட்டிடை = சிறிய இடைவெளி. இட்டேறி = ஏற்றமான சிறிய வண்டிப்பாதை. இட்டிகை = சிறு செங்கல். உடு - ஒடு - ஒடுங்கு - ஒடுக்கு - ஒடுக்கம். ஒடுங்கு - அடங்கு - அடக்கு - அடக்கம். அடங்குதல் = ஒடுங்கியமைதல். அடக்க வொடுக்கம் என்னும் வழக்கைக் காண்க. உற - உறங்கு - உறக்கு - உறக்கம். உறங்குதல் = ஒடுங்கித் தூங்குதல். ஊரடங்குதல் என்னும் வழக்கை நோக்குக. (குட்டு) - கிட்டு - கிட்டி = கெண்டைக்காலை நெருக்குங் கருவி. குள் - குட்கு - குக்கு. குக்குதல் = ஒடுங்குதல். குள் - குடு - கொடு - கொடுகு. கொடுகுதல் = ஒடுங்குதல். கொடு - (கோடு) - கோடங்கி - கோடாங்கி = உடுக்கு. சுள் - செள் - செறி. செறித்தல் = நெரித்தல், அடக்குதல். நுள் - நெள் - நெரு - நெருங்கு - நெருக்கு - நெருக்கம். நெரு - நெரி. நெரித்தல் = நெருங்குதல். முள் - முடு - முடுகு - முடுக்கு = சிறு சந்து. முடுக்கு - முடுக்கர். முள் - (மள்) - வள் = நெருக்கம். ஊகாரச்சுட்டு - 6) தொடுதல் நெருங்கலுக்கு அடுத்து நிகழக்கூடிய தொடர்பு தொடுதல். முற்செல்லும் உயிரிகள் தாம் அடையக் கருதிய பொருள்களை அடுத்தபின் அவற்றைத் தொடும்; தற்செயலாக எதிர்ப்பட்ட பொருள்களையும் தொடலாம். இங்குத் தொடுதல் என்பது கையினால் தொடுவதை மட்டுமன்று, உடம்பாலும் குணத்தாலும் தொடுவதையும் குறிக்கும். (1) தொடுதல் துறை மெலிதாய்த் தொடுதல் (உள்) - அள் - அளவு - அளாவு. அளவுதல் = தொடுதல். உறுதல் = தோலால் தொடுதல். உறு ஊறு = தொட்டறிவு. உல்-ஒல்-ஒற்று-ஒத்து. ஒத்துதல் = மென்பொருளால் தொடுதல். ஒத்து - ஒத்தடம். ஒத்து - ஒற்று - ஒற்றி. துவளுதல் = தொடுதல். துவளை - ஒத்தடம். துவ - துவை - துவைதல் = சாயந்தொடுதல். (தூண்டு) - தீண்டு - தீட்டு. தீண்டுதல் = தொடுதல். தொடுதல் = உறுதல். தோய்தல் = நீரையும் நிலத்தையுந் தொடுதல். கால்நிலந் தோயாக் கடவுளை (நாலடியார், கடவுள் வாழ்த்து) பொருதல் = பொருந்தித் தொடுதல். பொருங் கதவு, பொருமுக வெழினி முதலிய பெயர்களை நோக்குக. முத்துதல் = முகத்தால் தொடுதல். (i) தொடும் உறுப்பு (புறணி) உரி = தோல், மரப்பட்டை. (உல் - உர் - உறு. உர் - உரி). (தொல்) - தொலி - தோல் - தோடு - ஓடு. (தொன்) - தோள் = தொடும் உறுப்பான கை, அல்லது சுவலைத் தொடும் புயம். துவ - துவக்கு = தோல். (ii) தொடங்கல் ஒரு கருவியைத் தொடுதலே அதைக்கொண்டு செய்யும் வினையைத் தொடங்கலாகும். ஒரு வினையைத் தொடங்கல் அதைத் தொடுதல் போலாம். உறுதல் = தொடங்கல். v.L.: உரைக்கலுற்றான் = சொல்லத் தொடங்கினான். (துடு) - துடங்கு - துடக்கம். துடு - தொடு. தொடு - தொடங்கு - தொடக்கம். தொடுதல் = தொடங்குதல். அன்று தொட்டு = அன்று தொடங்கி. (துவ) - துவங்கு - துவக்கம். தொன்றுதொட்டு, அன்று தொடுத்து, தொட்டகுறை (தொடங்கி விட்ட வினைக்குறை) முதலிய மரபுத் தொடர்களை நோக்குக. (iii) தொடுப்பு தொடுப்பாவது இருபொருட்குண்டான தொடர்பு. அது ஒன்றையொன்று தொட்டபின் நிகழ்வது. (துடு) - துடை. தொடு - தொடை. தொடுத்தல் = இணைத்தல். தொடு - தொடுக்கு. தொடுக்குதல் = தொட்டால் விழும் நிலையாய்த் தொடுத்துவைத்தல். தொடு - தொடுப்பு = இணைப்பு, தகாப்புணர்ச்சியுறவு. தொடுக்கு - தொசுக்கு = தகாப்புணர்ச்சி. தொடு - தொடுசு = வைப்பு. தொடுசு - தொடிசு. தொடு - தொடுவு = வீட்டைத் தொடர்ந்த கொல்லை. தொடு - தொடுவை = தொடுத்திருப்பது, புதிய யானையைப் பயிற்றும்படி தொடுத்துவிட்ட யானை, பாங்கன், வைப்பு. தொடு - தொடர் - தொடர்பு. (தொல்) - தொற்று - தொத்து. (iv) துடக்கு துடக்காவது தொடுப்பாலுண்டாகுங் கட்டு. (துடு) - துடக்கு = கட்டு. தொடு - தொடக்கு = கட்டு. துவ - துவக்கு = கட்டு. துய - துயக்கு = கட்டு. தொடு - தொடர் - தொடர்பு = கட்டு, கட்டப்பட்ட செய்யுள். (v) தொடர்ச்சி பல பொருள்கள் முறையே ஒன்றோடொன்று தொடுக்கப் படுவதால் தொடர்ச்சியுண்டாகும். தொடு - தொடர் = வரிசை. அள் - அண் - அணி = வரிசை. அணி = அணில் = முதுகில் மூவரிசை அல்லது வரியுள்ள அணில். அண் = அடு = அடுக்கு = அடுக்கம் = அடுக்கல். தொடர் = தொடரி. தொடர் = தொடர்ச்சி. தொடர் = தொடர்வு = தொடர்பு. தொடு = தொடக்கு = தொடக்கி = தொடரி (சங்கிலி, கொடி). தொடு = தொடல் = தொடலை = மாலை. தொடு = தொடவு = தொடவல் = மாலை. தொடு – தொடை – மாலை . தொடை-தொடையல்= மாலை. (2) முட்டல் துறை i. வலிதாய்த் தொடுதல் வலிய பொருள்கள் ஒன்றையொன்று வேகமாகத் தாக்குவது வலிதாய்த் தொடுதல். உதைத்தல் = தாக்குதல், எற்றுதல். ஒட்டுதல் = தாக்குதல். மாந்தருறை நிலத்தோ டொட்டலரிது (குறள், 499) குட்டுதல் = முட்டியால் தலையைத் தாக்குதல். குட்டு - கொட்டு. கொட்டுதல் = முட்டியால் ஒன்றைத் தாக்குதல், குச்சால் பறையை அடித்தல், சுத்தியலால் ஒன்றைத் தட்டுதல், கொட்டுப்பிடி, செம்புகொட்டி முதலிய பெயர்களை நோக்குக. சொட்டுதல் = தலையிற் குட்டுதல், பறவை ஒன்றைக் கொத்துதல். (துட்டு) - தட்டு. தட்டுதல் = கையாலுங் கருவியாலும் கொட்டுதல். தட்டு - தட்டான். நொட்டை (யிடுதல்) = சுவை மிகுதியால் அண்ணத்தில் நாவைச் சேர்த்துக் கொட்டுதல். பொட்டு - பட்டு. பட்டுதல் என்பது தட்டுதல் என்னும் பொருளில் வழங்கின பண்டை வினைச்சொல், இன்று வழக்கற்றது. பட்டுதற்கு அடையாக வைத்துக் கொள்ளும் கல் பட்டடை என்றும், பட்டும் அறை பட்டறை என்றும், பட்டும் சாலை பட்டசாலை என்றும், வழங்குதல் காண்க. முட்டுதல் = தலையாலும் முகத்தாலும் தாக்குதல். முகம் என்றது ஒரு பொருளின் முனை அல்லது முற்பகுதி. முட்டு = முட்டியில் வாங்கும் குண்டடி. முட்டு - மொட்டு = தலையில் வாங்கும் குட்டு. மொட்டு மொட்டென்று தலையிற் குட்டினான் என்பது வழக்கு. கொங்கு நாட்டார் குட்டை மொட்டுக்காய் என்பர். இங்குக் காட்டிய சொற்கள் வல்லோசை மிகுமாறு டகரம் இரட்டியவை யாதலின், அவை பெரும்பாலும் கடினமான பொருள்களை வன்மையாகத் தொடுவதையே குறிக்கும். தகரவொலி டகரவொலியினும் மெல்லியதாதலின், தகரமிரட்டிய சொற்கள் சற்று மென்மையாகத் தாக்குவதைக் குறிக்கும். தகரம் தனித்து வருவனவும், டகரம் தனித்தும் மெலியோடு கூடியும் வருவனவும், மெலி தனித்தும் இரட்டியும் வருவனவும், இங்ஙனமே. குத்துதல் = கையால் உடம்பிற் குத்துதல், உலக்கையாற் கூலத்தைத் துவைத்தல். குத்து - குற்று. கும்முதல் = குத்துதல். குமைத்தல் = குத்துதல். முண்டுதல் = மெல்ல முட்டுதல். மொத்துதல் = உடம்பிற் கையாலும் கருவியாலும் அடித்தல். மோதுதல் = முட்டுவதினும் சற்று மெலிதாய்த் தாக்குதல். கையாலும் உலக்கையாலும் குத்துதல் போல் தொடுதலளவான குத்துதல்களே இங்குக் குறிக்கப்பட்டவை. ii. முட்டுக் கொடுத்தல் முட்டுக் கொடுத்தலாவது ஒன்று இன்னொன்றை முட்டித் தாங்கும்படி செய்தல். உள் - அள் - அண் - அண்டு. அண்டுதல் = நெருங்குதல், பொருந்துதல், முட்டுதல். அண்டு - அண்டை = முட்டு. அண்டை (அண்டக்) கொடுத்தல் = முட்டுக் கொடுத்தல். பொது = ஒப்பு, பொருத்தம். பொது - (போது) - போதிகை = தூண்மேல் வைக்குந் தாங்கு கட்டை. முள் - முட்டு. முள் - முண்டு - மண்டு. மண்டுதல் = தாங்குதல். மண்டுகால் = முட்டுக்கால். iii. ஒலித்தல் உயிரிகளின் வாயொலிகளல்லாத மற்ற வொலிகளெல்லாம், பொருள்கள் ஒன்றையொன்று தொடுவதினாலேயே அல்லது தாக்குவதினாலேயே உண்டா கின்றன வென்று முன்னைத் தமிழர் அறிந்து. தொடுவதையும் தாக்குவதையும் குறிக்குஞ் சொற்களி னின்று ஒலிபற்றிய சொற்களை அமைத்துக் கொண்டனர். உயிரிகளின் வாயொலிகளும், எழுத்தொலிகளாயின், அவற்றின் உடம்புள்ளிருந்தெழுப்பப்படும் காற்றானது, மிடறும் மூக்கும் போன்ற உறுப் பிடங்களையும், அண்ணமும் பல்லும் போன்ற உறுப்புக்களையும், தாக்குவதினாலேயே உண்டாகின்றனவென் றறிந்திருந்தனர் என்பது : உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிற்றினும் நெஞ்சினும் நிலைஇப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற் றமைய நெறிப்பட நாடி எல்லா எழுத்துஞ் சொல்லுங் காலை என்னுந் தொல்காப்பிய நூற்பாவால் (83) ஊகிக்கப்படும். உல் - உலம்பு. உலம்புதல் = அலப்புதல். உலம்பு - அலம்பு. அலம்புதல் = ஒலித்தல். உல் - ஒல் (ஒல்லெனல்) = ஒலிக்குறிப்பு. ஒல் - ஒலி. ஒல் - ஒல் = ஒலி, தாலாட்டு, ஓலாட்டு = தாலாட்டு. ஓல் - ஓலம் = ஒலி, ஓசை, கூவிளி. குல் - குலை - குரை = ஒலி, ஆரவாரம் நுரைத் தலைக் குரைப்புனல் (பொருந. 240). குவவுக் குரையிருக்கை (பதிற்றுப் 84, 20) குல் - கொல் (கொல்லெனல்) = ஒலிக்குறிப்பு. குல் - கல். கல்லென் பேரூர் (சிலம். 12, 12) கல் - கலி. கலித்தல் = ஒலித்தல். சுல் - சில் (சில்லெனல்) = ஒலிக்குறிப்பு. சில் - சிலம்பு. சிலம்புதல் = ஒலித்தல். சில் - சிலை. சிலைத்தல் = ஒலித்தல். சில் - சிலை, சிலைத்தல் = ஒலித்தல். சுல் - சொல் = ஒலி, மொழி, சொல்லுதல் = உரைத்தல். சொல் ஒலி வடிவாயிருத்தலால், ஒலி பற்றிய பல சொற்கள் சொல்லையும் உணர்த்துகின்றன. எ.டு. அறைதல் = ஒலித்தல், சொல்லுதல். இசைத்தல் = ஒலித்தல், சொல்லுதல். இயம்பல் = ஒலித்தல், சொல்லுதல். கரைதல் = ஒலித்தல், சொல்லுதல். துழனி = ஒலி, தொனித்தல் = ஒலித்தல், சொல்லுதல், தொனுப்புதல் = அலப்புதல். துணதுணத்தல், தொனுதொனுத்தல், தொண தொணத்தல் என்பன, அலப்புதலையும் விடாது பேசுதலையுங் குறிக்கும். நுள் - நள் (நள்ளெனல்) = ஓர் ஒலிக்குறிப்பு. நுள் - (நொள்) - நொடி = ஒலி, சொல். புல் - புலம்பு. புலம்புதல் = ஒலித்தல். ஒருவன் தனியாயிருந்து தன்னொடு தானே பேசுவது ஒலித்தலளவா யிருப்பதால், அது புலம்புதல் எனப்படும். அதனால் புலம்பு என்னும் சொல் தனிமையைக் குறிக்கும். புலம்பே தனிமை (தொல். உரி. 35) இனி, தாக்கும் அல்லது தாக்கப்படும் பொருள்களின் திண்மைக்கும் ஒலிக்குந் தன்மைக்கும் ஏற்பப் பல்வேறு வகையான ஓசைகள் பிறத்தலால், அவற்றைக் குறித்தற்கு வெவ்வேறெழுத்தொலிகள் பயன்படுத்தப் பெறும் என்றறிக. எ.டு. கட்டு கெத்து கப்பு கண் சொட்டு சொத்து சப்பு சக்கு சிங்கு கிண் திட்டு தொப்பு திக்கு தங்கு திண் நொட்டு நொக்கு நொங்கு நங்கு பொட்டு,பட்டு பொத்து பொக்கு, பக்கு மொட்டு, மட்டு மொக்கு, மக்கு மொத்து மொங்கு, மங்கு குறிப்பு : (1) மேற்காட்டிய ஒலிக்குறிப்புச் சொற்கள், ஒலியின் ஒருமை குறிக்கத் தனித்தும் பன்மை குறிக்க இருமுறை அடுக்கியும் வரும். எ.டு. பழம் சொத்தென்று விழுந்தது. பழங்கள் சொத்துச் சொத்தென்று விழுந்தன. (2) இன்று அகரமுதலவாகவும் இகரமுதலவாகவும் வழங்கும் தாக்கொலிக் குறிப்புச் சொற்கள், முதற்காலத்தில் உகரமுதல வாகவும் பின்பு உகரமோனையுயிர் முதலவாகவும் வழங்கி யிருத்தல் வேண்டும். (3) தாக்கொலிக் குறிப்புச் சொற்களிலெல்லாம் ஒலிக் குறிப்பும் சுட்டுக்குறிப்பும் நுண்ணியதாய்க் கலந்திருக்கும். (4) ஒலிக்குறிப்புச் சொற்களும் விரைவுக் குறிப்புச் சொற்களும் ஒன்று போல் தோன்றினும் வேறுபட்டவை. எ.டு. ஒ.கு. வி.கு. பறவை படபடவென்று படபடத்துப் பேசினான் சிறகடிக்கிறது திடீரென்று விழுந்தது திடீரென்று வந்து விட்டான் (5) ஒலிகளின் வேகத்திற்கும் நீட்டத்திற்கும் தக்கவாறு ஒலிக் குறிப்புக்கள் அமையும். எ.டு. குப்பென்று புகை வந்தது (ஒருமை) குப்புக்குப்பென்று புகை வந்தது (பன்மை) குபுகுபுவென்று புகை வந்தது (வேகம்) (6) ஆல், ஆர்; ஈல், ஈர்; ஏல், ஏர்; ஓல், ஓர்; முதலிய சொல்லீற்றசைகள் ஒலி நெடுமை குறிக்க வரும். எ.டு. தடால், தடார் குபீல், குபீர் மொலோர், சளார் iv. தட்டல் (தடை) ஒரு பொருள் இன்னொரு பொருளை முட்டினவுடன், முன்னதன் முற்செலவு தடுக்கப்படுவதால், முட்டற் கருத்தில் தடைக் கருத்துத் தோன்றிற்று. ஒட்டு - அட்டு - அட்டி = தடை. அட்டு - அட்டம் = குறுக்கு. குறுக்கு நிற்பது எதுவும் தடையாகும். முட்டப்படும் சுவர் முதலியவும் குறுக்கு நின்றுதான் தடுக்கும். ஆதலால், குறுக்கு நிற்றல் எனினும் தடுத்தல் எனினும் ஒன்றே. அட்டங்கால் = குறுக்காக மடக்கி வைக்குங் கால். அட்டு - அட்டணம். அட்டணக்கால் (அட்டணங்கால்) = குறுக்காக மடக்கிவைக்குங் கால். அட்டப் பல்லக்கு = குறுக்காகக் காவும் பல்லக்கு. அட்டம் பாரித்தல் = குறுக்காக (பக்கவாட்டில்) வளர்தல். குள் - குறு - குறுகு - குறுக்கு = வழியின் பக்கவாட்டு, வழித்தடை, முதுகின் குறுக்குப் பகுதி. குள் - (குட்டு) - கட்டு. கட்டுதல் = தடுத்தல், வழியிற் குறுக்காகச் செல்லுதல். காடை கட்டினால் பாடைகட்டும் என்பது பழமொழி. துள் - தள் - தட்டு. தட்டுதல் = தடுத்தல், நீருள் மூழ்கினவனுக்குத் தரை தட்டுதலும், முற்செல்பவனுக்குச் சுவர் தட்டுதலும் தடையாகும். தட்டு - தட்டி = அறையை அல்லது வழியைத் தடுக்கும் மூங்கிற்பாய் அல்லது தென்னங்கிடுகு. தள் - தளை = தடுக்கும் கட்டு அல்லது விலங்கு, கட்டு அல்லது பிணிப்பு, செய்யுட்சீரின் ஓசைப் பிணிப்பு. தளைதல் = தடுத்தல், பிணித்தல், தள் - தடு - தடை. தடு - தடுப்பு. தடு - தடுக்கு = சிறு தட்டிபோன்ற பாய். தடு - தடக்கு - தடங்கு - தடங்கல். தட்டுத் தடையின்றி, தட்டுத் தடங்கலின்றி என்பன மரபுத் தொடர்மொழிகள். தள் - (தழு) - (தகு) - தகை. தகைத்தல் = தடுத்தல், முள் - முட்டு = முட்டுப்பாடு, தடை. தீயதைக் காண்டலும் கேட்டலும் நல்வினைக்குத் தடையாகக் கருதுதலின், அவற்றை முறையே, கண்டு முட்டு கேட்டுமுட்டு என்பர் சமணர். முள் - (முடு) - முடை = நெருக்கடி, முடை - முடைஞ்சல். முட்டு - (முட்டம்) - விட்டம் = முகட்டின் குறுக்குத்தரம். முள் - (முறு) - மறு - மறுக்கு = குறுக்கு. மறுக்காட்டுதல் = குறுக்காக நின்று இடம் வலம் செல்லாதபடி தடுத்தல். குறுக்கும் மறுக்கும் என்பது வழக்கு. முல் - வில் - விலகு - விலங்கு = குறுக்கு, குறுக்காக வளர்வது, தடுக்குங் கட்டு (தளை). விலங்கூடறுத்தது (சிலப். 16: 213). வில் - வில்லடை = தடை. விலங்கு - விலங்கம் - வில்லங்கம் = தடை. விலங்கு - விலங்கல் = நாட்டின் குறுக்கே நின்று ஒன்றன் செலவைத் தடுக்கும் மலை. குன்று முட்டிய குரீஇப் போல என்னும் உவமையை நோக்குக. ஒருவன் ஓர் அறியாத நாட்டில் சென்று கொண்டிருக்கும்போது. வழியில் மலையிருப்பின், தடையுண்டு சுற்றிச் செல்வது அல்லது மீள்வது இயற்கை. கரிகால் வளவனின் வடதிசைப் படையெடுப்பு பனிமலையால்தடையுண்டது. v. கடை ஒன்று இன்னொன்றை முட்டும் முனை அதன் கடையாதலால், முட்டற்கருத்தில் கடைமைக் கருத்துத் தோன்றிற்று. பக்கம் நோக்கியதும் மேனோக்கியதும் எனக் கடை இருவகை. பக்கம் நோக்கியது முனை அல்லது கடை; மேனோக்கியது உச்சி. தலை என்பது இவ்விரண்டிற்கும் பொது. உச்சிமைக் கருத்தும், கடைமைக் கருத்தும் ஒன்றே. ஆயினும், ஒப்பின் முடித்தல் என்னும் உத்தி பற்றி, மேனோக்கிய உயர்ச்சி குறித்த சொற்களுடன் மேனோக்கிய உச்சி குறித்த சொற்களும் கூறப்பட்டன. எனினும், நட்டுக்கு நிற்கும் நிலைத்திணைப் பொருள்களின் உச்சிப் பெயர்கள் உயர்தற் கருத்தையும், படுக்கையாய்க் கிடக்கும் நிலைத்திணைப் பொருள்களின் கடைப் பெயர்கள் முட்டற்கருத்தையும், இருநிலையும் அடையக் கூடிய இயங்கு திணைப் பொருள்களின் உச்சிப் பெயர்கள் அவ் இரு கருத்தையும், அடிப்படையாய்க் கொண்டவை யென்றறிக. படுக்கையாய்க் கிடக்கும் ஒரு தூணின் முனை, அது நட்டுக்கு நிற்கும் போது உச்சியாய் மாறுதல் காண்க. குடு - குடுமி = முடி, முடிபு (தீர்மானமான கொள்கை) கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே (புறம். 32.) குடு - (கடு) - கடை - கடைசி. கடையன் = நாற்பால் வரிசையில் இறுதியில் கூறுப்படும் உழவன். கடைச்சி - கடைசி = உழத்தி. குடு - கொடு - கோடி = கடைசி. துல் - (தல்) தலை = கடை, உச்சி, மேலுறுப்பு. இருதலை மணியன், இருதலைக் கொள்ளி, இருதலைக் காமம் முதலிய தொடர்களில், தலை என்பது முனையை அல்லது கடையைக் குறித்தல் காண்க. நடுவண தெய்த இருதலையும் எய்தும் என்பதிலும் அஃதே. முண்டு = தலை. முடி = தலை, உச்சி, உச்சிக் கொண்டை, தலைமயிர். முள் - முழு - முகு - முகுடம் = முடி. முகுடம் - மகுடம் - முடி, முடிக்கலம், பாட்டின் இறுதித் தொடர். முச்சி = தலையுச்சி. மோசிகை = உச்சிமுடி; முஞ்சம் = உச்சயணி. vi. எல்லை முட்டுங்கடை ஒரு பொருளின் முடிவிடமாய் அல்லது எல்லை யாயிருப்பதால், முட்டற்கருத்தில் எல்லைக் கருத்துத் தோன்றிற்று. உல் - உல. உலப்பு = முடிவு, அளவு, எல்லை. உல் - ஒல் = எல்லை, முடிவு. ஒல் - எல் - எல்லை. எல் - எல்கை. எல் - ஏல் - ஏல்வை = காலவெல்லை. ஓர் - ஓரம் = முடியும் பக்கம், பக்கம். ஓரஞ்சொல்லுதல் = ஒருபாற் கோடிச் சொல்லுதல். குடு - கொடு - கோடி = கடைசி, எல்லை, கடைகோடி, தெருக் கோடி என்னும் வழக்குகளைக் காண்க. துகு - (திருகு) - திகை = முடிவு. எல்லை, திகைதல் = முடிதல், தீர்தல். தீர்மானமாதல். மாதம் திகைந்த சூலி, அதன் விலை இன்னும் திகையவில்லை, என்பது தென்னாட்டு வழக்கு. திகை - திசை = முடிவு, எல்லை, பக்கம். (துக்கு) - திக்கு. திசைச்சொல் = பல திசைகளில் வழங்கும் கொடுந் தமிழ்ச் சொல். திசைச்சொல் என்பது தொன்றுதொட்டு வழங்கிவரும் தமிழிலக்கணக் குறியீடாதலாலும், மயங்குதலைக் குறிக்கும் திகை என்னும் சொல்லும் திசை என்று திரிதலாலும், எல்லையைக் குறிக்கும் திசை என்னும் சொல் தென் சொல்லேயாம். நீ திசைத்ததுண்டோ (கம்ப. கைகேசி சூழ். 18) இவன் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே (திவ். திருவாய், 4,6,1.) திசைப்புறுதலுஞ் சீவர்க்கு (வேதா. சூடா. 110.) என்னுந் தொடர்களில், மயங்குதலைக் குறிக்கும் திகை என்னுஞ் சொல் திசை என்று திரிந்திருத்தல் காண்க. திசை என்னுஞ் சொல்லின் மூலவடிவான திகை என்பது வடமொழியில் வழங்காமையையும் நோக்குக. திசை - (தேசு) - தேசம் - தேயம் - தேம் = திசை தேசம், பக்கம், இடம். அவன் மறை தேஎ நோக்கி (அகம். 48) தெவ்வர் தேஎத்து (புறம். 6) திசை தேசம், என்னும் சொற்கள் பக்கம் என்னும் பொருளில் வருதலை, அந்தத் திசைக்கே போகமாட்டேன் என்னும் தமிழ் வழக்காலும், ஏகதேசம் என்னும் வடமொழி வழக்காலும், அறியலாம். ஏகதேசம் = ஒரு பக்கம், ஒரு பகுதி. தேசம் என்னும் சொல் முதலாவது எல்லையைக் குறித்து, பின்பு ஓர் எல்லையில் அல்லது பக்கத்தில் உள்ள நாட்டைக் குறித்தது, ஒ. நோ. சீமை = எல்லை, நாடு. திக்குத் திக்கென்று அடித்துக் கொள்ளுகிறது என்னும் வழக்குண்மையாலும், நாத்தட்டுதல் திக்குதல் எனப்படுதலாலும், திகை என்னுஞ் சொல் ககரவொலி கொண்டிருத்தலாலும், திக்கு என்னும் சொல்லும் தென் சொல்லே யென்க. முள் - முளி - விளி - விளிம்பு = ஓரம். விளிம்பு - (விளிம்பு) - வடிம்பு. முட்டு - மட்டு = அளவு. மட்டு - மட்டம் = அளவு, சரியான அளவு, தாழ்ந்த அளவு, தாழ்வு. கடல்மட்டம், மட்டப்பலகை, மட்டக்குதிரை, மட்டத் துணி முதலிய வழக்குகளை நோக்குக. vii. முடிதல் உலத்தல் = முடிதல்; உறுதல் = தொடுதல், முட்டுதல். உறு - இறு - ஈறு. இறு - இறுதி. இறுதல் = முடிதல்; இறு - இற - இறப்பு = சாவு. இறுத்தல் = கடமையைத் தீர்த்தல், வரி செலுத்துதல். இறு - இறை = கடமை (வரி). இறுத்தல் = வழிச்செலவை விட்டிருத்தல், தங்குதல், இறு - இறை = இறைவன் = எங்குந் தங்கியிருப்பவன். உறு - அறு - அறுதி = முடிவு. அறு - அறவு = நீக்கம். துவலுதல் = சாதல். துல் - (தில்) - (திர்) - தீர். தீர்தல் = முடிதல், நீங்குதல், தீர்மானம் = முடிவு, முடிபு. தீர் - தீர்வை. பொல் - பொன்று. பொன்றுதல் = இறத்தல், முடிதல். முல் - முற்று, முற்றுதல் = முடிதல், இறத்தல். முள் - முளி - விளி. விளிதல் = முடிதல், இறத்தல். முளிதல் = முற்றுதல், கெடுதல். விளி - வீ. வீதல் = முடிதல். சாதல். முள் - விள் - விழு - விகு - விகுதி = இறுதி. ஈறு. முளி - (முழி) - முடி - முடிவு. முடி - மடி. மடிதல் = இறத்தல். முடி - முசி. ஒ. நோ. ஒடி - ஒசி முசிதல் - முடிதல். இறத்தல். மூங்கில் போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர் என்னும் திருமண வாழ்த்து மரபுரையைக் காண்க. முட்டுதல் = முடிதல். முஞ்சுதல் = முடிதல். சாதல். மூசுதல் = முடிதல், சாதல். முச்சுதல் = முடித்தல், மூழ்த்தல் = முதிர்தல். மூழ் - மூய். மூய்த்தல் = முடித்தல். viii. மழுங்கல் ஒன்றோடொன்று முட்டும் பொருள்களுள், மெலியது ஒரே முறையிலும் வலியது பல முறைப் பின்னும் முனை மழுங்கி மொட்டையாகின்றன. கூராகச் சீவின எழுதுகோல் தேய்வது, எழுதப்படும் கருவியில் அது பலமுறை முட்டுவதனாலேயே. (நுள்) - (நுழு) - நழு - நழுங்கு. நழுங்குதல் = மழுங்குதல். நழுங்கு - நழுக்கு - நழுக்கம் = மழுக்கம், மழுங்கல். பொட்டு - பொட்டை = கண்ணொளி மழுக்கம். முள் - (மள்) - மழு - மழுகு - மழுங்கு - மழுக்கு - மழுக்கம். மழுக்கு - மழுக்கை, மழுங்கு - மழுங்கல். முள் - முட்டு - மொட்டை - மட்டை. மழு மொட்டை - மழுமட்டை. மூள் - (மொள்) - மொழுக்கு - மொழுக்கட்டை - மொக்கட்டை = மழுக்கமானது. மொழுக்கு - மொக்கு - மொக்கை = கூரின்மை. (மொள்) - மொண் - மொண்ணை = மழுக்கம், கூரின்மை. மொண்ணை - மண்ணை = மழுக்கம். மண்ணை - மணை = மழுக்கல், மழுங்கலாய்தம். மணை - மணையன் = மழுங்கலாய்தம். ix. மதிமுட்டு மதியானது கூரிய கண்போன்றிருத்தலால், மடமை அதன் மழுக்கமாகக் கூறப்படும். கூரிய மதிக்குக் கூர் என்றே பெயர். கூழை = குட்டையானது, மதிக்குறைவு. கூழை மாந்தர்தஞ் செல்கதி (தேவா: 462, 9) முட்டு - முட்டாள். முட்டு - முட்டன் = மூடன். முட்டு - (முட்டி) - மட்டி. முட்டு - மொட்டை = மட்டை = மூடன். முண்டு = மடமை. முண்டம் = அறிவில்லாதவன். x. மதிமழுக்கம் மொண்ணை = கூரின்மை. மொண்ணையன் = அறிவு மழுங்கியவன். மொண்ணை - மண்ணை = மழுக்கம், மடமை. மணையன் = மதிக் கூர்மையற்றவன். மழுக்கு - மக்கு = மதியற்றவன். மழுக்கட்டை - வழுக்கட்டை = மதிமழுக்கம், மூடத்தனம். முண்டு - மண்டு = மதியற்றவன். xi. மொட்டையாதல் முனைமழுங்கியது மொட்டையாகும். மொட்டையாதல், உண்மையாய் மொட்டையாதலும் அணி வகையில் மொட்டையாதலும் என இருவகை. உடம்பிற்குத் தலையின்மையும், தலைக்குப் பாகை மகுட மின்மையும், மண்டைக்கு மயிரின்மையும், உறுப்பிற்கு அணி யின்மையும், மேலுக்கு ஆடையின்மையும், நிலத்திற்குப் பயிரின் மையும், முடங்கலுக்குக் கையெழுத்தின்மையும், மரத்திற்குக் கிளையின்மையும், கொம்புள்ள விலங்கிற்குக் கொம்பின்மையும், வாலுள்ள உயிரிக்கு வாலின்மையும், வாலிற்கு அதன் நுனியின் மையும், இவை போல்வன பிறவும், மொட்டைமையாகக் கருதப்படும். குட்டு - கட்டு. கட்டாந்தரை = வெறுநிலம். குள் - (கூள்) - கூழை = மொட்டைவால், வாலற்றது. அளவடியின் இறுதிச் சீரில் மோனை முதலியன வில்லாத தொடை. சொட்டு - சொட்டை = வழுக்கை, வழுக்கைத் தலை. பொட்டு - பொட்டல் = பாழ்நிலம், வெறுநிலம், தலை வழுக்கை. போடு = மொட்டை. மூளி = உறுப்புக்குறை. அணியற்றது. மூளிக்குடம் (வாயறுந்த குடம்) மூளிக்காது முதலிய வழக்குக்களை நோக்குக. மூளி - மூழி = மூளிக்காதி. முண்டு - மொட்டையானது. கிளை தறித்த கட்டை. முண்டு - முண்டம் = தலையில்லாதது மொட்டையானது, கிளைதறித்த கட்டை, உறுப்புக்குறை, ஆடையில்லாவுடம்பு. ஆடையில்லாவுடம்பை முண்டக்கட்டையென்றும் மொட்டைக் கட்டை யென்றும் கூறுவர். முட்டு - மொட்டை. மொட்டைத் தலை = பாகையற்ற தலை, மயிர் வெட்டின தலை. மொட்டை மண்டை = மழித்த தலை. முள் - (மள்) - மண். மண்ணுதல் = மழித்தல். இந்தக் கத்தி மண்ணாது, என்பது தென்னாட்டு வழக்கு. மள் - மழி - வழி. மழித்தல் = மொட்டையடித்தல் (தலை வறண்டுதல்). மழித்தலும் நீட்டலும் வேண்டா (குறள் 280) முள் - முண்டு - முண்டம் = மழித்த தலை. முண்டன் = மழித்த தலையன். சமணன், மழிக்கும் முடிவினைஞன். முண்டை = மழித்த தலைச்சி, கைம்பெண். முண்டை - முண்டைச்சி. முண்டு - முண்டி. ஒ. நோ. துண்டு - துண்டி. முண்டித்தல் = தலைமழித்தல், முண்டி = மழித்த தலையன், மழிவினைஞன். முண்டி + அனம் = முண்டனம். ஒ.நோ. கண்டி + அனம் = கண்டனம். முண்டி + இதம் = முண்டிதம். அனம் இதம் என்பன தொழிற் பெயர் விகுதிகள். எ.டு. வஞ்சி - வஞ்சனம். தப்பு - தப்பிதம். மொழுக்கு - மொழுக்கன் = வேலைப்பாடில்லாத அணி; மழுங்கு - மழுங்கன் = வேலைப்பாடில்லாத அணி. (மொழு) - மோழை = மொட்டை. கொம்பில்லா மாடு, மரஅடி முண்டம். ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் என்பது பழமொழி. மோழைமுகம் = (மொட்டை முகமுள்ள) பன்றி, மோழல் = பன்றி. மொண்டு = மொட்டைக்கை. கைக்குறை. மொண்டு - மொண்டி = கை குறைந்தவன். மொண்டிமுடம் என்பது வழக்கு. நொண்டுதல் = குறைந்த காலொடு நடத்தல். ஒரு காலால் நடத்தல் அல்லது தாவிச் செல்லுதல். நொண்டு - நொண்டி = நொண்டுதல், நொண்டுபவன். ஓரடி குறுகிய ஈரடிச்சிந்து. முடம் என்பது வளைவு என்றும், மொண்டி என்பது குறை என்றும், வேறுபாடறிக. xii. மங்கல் மங்கல் என்பது உளி மழுங்கல்; மழுங்கு - மங்கு - மங்கல். மங்கல் நிறம் = மஞ்சள் நிறம். வெள்ளையுமன்றிப் பச்சையுமன்றி இடை நிகர்த்தாய் மங்கிய நிறமாகவிருத்தலின், மஞ்சள் நிறம் முதலாவது மங்கல் எனப்பட்டது. மங்கல் - மஞ்சல் - மஞ்சள், ஒ.நோ. கழங்கு - கழஞ்சு, இலங்கு - இலஞ்சு - இலஞ்சி. மஞ்சல் = மஞ்சள் நிறமுள்ள சரக்கு. தமிழ் நாட்டில் கணவனோடு கூடி வாழும் பெண்டிர் அழகிற்கும் உடல் நலத்திற்கும் மணத்திற்கும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது வழக்கமாதலின், மஞ்சட்கும் மஞ்சள் நிறத்திற்கும் மங்கலத் தன்மை ஏற்பட்டுவிட்டது. திருமண வரிசையில் வைக்கப்படும் பொருள்களுள் மஞ்சளும் ஒன்றாகும். மங்கல் - மங்கலம் = மஞ்சட்பூச்சாற் குறிக்கப்பெறும் மகளிர் வாழ்க்கை நலம், மஞ்சளாலும் மஞ்சள் நிறத்தாலும் குறிக்கப் பெறும் நற்செய்தி, மகளிர் வாழ்க்கை நலத்தின் அடையாளமான அணி (தாலி). மங்கலம் - மங்கலை = கணவனொடு கூடி வாழ்பவள், கணவனை இழவாதவள். மங்கலம் - மங்கலி = மங்கலை. மங்கை = மங்கலமாகிய மணப்பருவத்தாள். மணத்திற்குரியவர் பதினாறாட்டைப் பருவத்தானும் பன்னீராட் டைப் பருவத்தாளும் என்று அகப்பொருளிலக்கணமும், மாகவா னிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள். (மங்கல வாழ்த்துப் பாடல், 2-4) என்று இளங்கோவடிகளும் கூறுதலையும், பன்னீராட்டைப் பருவத்தார் மங்கையெனப் படுதலையும், நோக்குக. மங்கு - மக்கு - மக்கல் = ஒளிமழுங்கல். xiii. வழித்தல் மழி - வழி. தலை வழித்தல் முகம் வழித்தல் என்னும் வழக்குக் களைக் காண்க. தலைவழித்தலைத் தலை வறண்டுதல் என்றுங் கூறுவர். வழித்தல் என்பது முண்டித்தல் என்று மட்டும் பொருள் படும். வறண்டுதல் என்பது தலைமயிரைச் சுறண்டியெடுத்தல் போல் வலிதாய் வழித்தலைக் குறிக்கும். மயிர் பெயர்வது போன்றே தோல் பெயர்வதும் ஒருவகை முண் டனம் அல்லது மொட்டையாதலால், தோலைப் பெயர்ப்பதும் வழித்தல் எனப்படும். மரமுஞ் சுவரும் போன்ற கரடுமுரடான பொருள் உடம்போடு உரசித் தோலைப் பெயர்த்து விட்டால், மரம் வழித்துவிட்டது சுவர் வழித்து விட்டது என்பர். கத்தி வழித்தலும் கரடு முரடான பொருள் வழித்தலும் வினைவடிவில் ஒத்திருத்தலுங் காண்க. வழிதல் என்பது தோல் பெயர்தலாகிய தன் வினையைக் குறிக்கும். வழி - வழல், வழலுதல் = நெருப்பி னால் வெந்து தோலுரிதல். வழல் - வழற்று - வழட்டு. வறற்றுதல் = நெருப்பில் வாட்டித் தோலுரித்தல். அல்லது மயிர் நீக்குதல். ஓலையால் நாக்கிலுள்ள அசட்டை நீக்குதலும், சீப்பால் தலை மயிரைச் சீவுதலும், மண்வெட்டியால் வாய்க்காலிலுள்ள சேற்றை இழுத்தெறிதலும், சிறங்கையால் ஒரு பொருளை இழுத்துத் தள்ளுதலும், இவை போல்வன பிறவும், வினையிலும் விளை விலும் கத்தி வழித்தலை ஒத்திருத்தலால், அவையும் வழித்தல் எனப்படும். வடித்தல் = நாவழித்தல், நாவைத் திருத்துதல். வடியா நாவின் வல்லாங்குப் பாடி (புறம். 47) வழி - வடி - வார். வடித்தல் =தலைமயிரை வாருதல். வடிக்கொள் கூழை (நற். 23.) வார்தல் = உரிதல் (அகம், 69), வழித்தள்ளுதல், கூட்டுதல், தலைமயிரைச் சீவுதல். வாரி = சீப்பு, குப்பை வாரி முதலிய வாருங் கருவி. சிக்குவாரி சிணுக்குவாரி என்பன தலைமயிர் வாருங் கருவிகள். வார்கோல் - விளக்குமாறு. வாரியன் = களத்தில் நெல்லைக் கூட்டிக் குவிப்பவன். அங்ஙனம் குவித்தலை மேற் பார்க்கும் அலுவலாளன். பள்ளர் ஊராண்மையில் ஆட்களைக் கூட்டுபவன். வாரியம் - வாரியன் தொழில், மேற்பார்வை, மேற்பார்வைக்குழு. கும்ப அளந்த படியின் மேலுள்ள கூம்பிய பகுதியைக் கையால் தட்டுதலும் வழித்தலை ஒத்திருத்தலால், தலை தட்டியளத்தலைத் தலைவழித்தல் என்பர். அளக்கப்படும் பொருள் நீர்ப்பொரு ளாயின் படி மட்டத்திற்கு மேல் கூம்பாதொழுகுமாதலின், அது வழிதல் என்னுந் தன் வினையாற் கூறப்படும். கொள்கலங்களிலும் ஏரி குளம் போன்ற கொள்ளிடங்களிலும் நீர் நிரம்பியோடுதலை வழிந்தோடுதல் என்பது, இம்முறை பற்றியே. xiv. வடித்தல் வழி - வடி. சோறு வெந்தபின் நீரை வழியச் செய்தல் வடித்தல் எனப்படும். தானாய் வழிந்தோடாத நீரைக் கலத்தைச் சாய்த்து வழியச் செய்வது வழித்தலினும் வேறு பட்டதாதலின், வடித்தல் எனப்பட்டது. பொருள் வேறு பாட்டைச் சொல் வேறுபாடு குறித்தது. ஏரி குளங்களில் நீர் நிரம்பித் தானாய் வழியாது மடை அல்லது கலிங்கு வழியாய்ப் பாயுமாயின், அதுவும் வடிதல் எனப் படும். அங்ஙனம் பாய்ச்சுதல் வடித்தல் எனப்படும். கூழுங் கஞ்சியும் போன்ற நெகிழ்பொருள் தானாய் வழிதலையும் வடிதல் என்பர். வடி-வார். ஒருகலத்தினின்று நீரை ஊற்றுதலும் ஓர் உலோகத்தைக் காய்ச்சி யூற்றுதலும் வடித்தல் அல்லது வார்த்தல் எனப்படும். கண்ணீர்போலத் தானாய் வடிதல் வார்தல் எனப்படும். வார் - வார்ப்பு - வார்ப்படம் = காய்ச்சியுருக்கி வார்த்துச் செய்தது; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே (புறம். 812) ஒரு கலத்திலுள்ள நீரை ஊற்றும்போது அதிலுள்ள மண்டியைத் தடுத்தற்குக் கலத்தின் வாயில் துணிகட்டுவது. வடிகட்டுதல் எனப்படும். இதை வடார்க்காட்டார் வேடு கட்டுதல் என்பர். வெயிலுக்குத் தலையில் துணிகட்டுவதையும் ஒப்புமை பற்றி வேடுகட்டுதல் என்பதுண்டு. xv. வார்தல் (நீளல்) வடியும் நீர்ப்பொருள் நீண்டு நேராக விழுமாதலின், வடிதற் கருத்தில் நீட்சிக் கருத்தும் நேர்புக் கருத்தும் தோன்றின. காதை நீட்டி வளர்த்தலைக் காது வடித்தல் என்பர். குழைவிரவு வடிகாதா (தேவா. 1091,1) வடி - வரி - வரிசை. வரி - வரிச்சு - வரிச்சல் = நீண்ட குச்சு. வடி - வார். வார்தல் = நீளுதல், நேராதல், நீளக்கிழித்தல். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள (தொல். உரியியல், 19) வார் - வாரி = நீண்ட பெருங் கம்பு. வார் - வாரை = நீண்ட பெருங்கம்பு. வாரைவதி = ஆற்றின் குறுக்காக வாரையால் அமைக்கப்பட்ட வழி, பாலம். வாரைவதி - வாராவதி. வார் = நீண்ட தோல்துண்டு. வார் - வால் = நீண்டவுறுப்பு. வால் - வாலம் = வால், வால முகம் = நீண்டமுகம். வாள் = நீண்ட கத்தி, வாளம் = நீண்ட வார், கம்பி. வாள் - வள் - வள்பு = வார். வார் - வாரம் = சொல்லொழுக்கமும் இசையொழுக்கமுமுள்ள பாடல். xvi. வழுக்கை மொட்டையான பொருட்கள், சிறப்பாக மழித்த தலை, வழுக்கை யாயிருப்பதால், மழுக்கைக் கருத்தினின்று வழுக்கைக் கருத்துப் பிறந்தது. உள் - (இள்) - இழு - இழும். இழுமெனல் = வழு வழுப்பு. முழு - மொழு - மொழுக்கை - மழுக்கை - வழுக்கை. மொழு - மழு. மழு - மழ - மழமழ - மழமழப்பு = வழவழப்பு. மழு - வழு. மழ - வழ. வழு - வழுக்கு - வழுக்கல் = வழுவழுப்பு. வழுக்கைத் தேங்காய். வழு = வழுக்கை. வழுக்காய் = வழுக்கைத் தேங்காய். வழு - வளுக்கை = வழுவழுப்பான இளந்தேங்காய் உள்ளீடு. வழுதலை = வழவழப்பான கத்திரிக்காய். வழுதுணை = கத்தரிக்காய். வழுவல் = தேங்காய் வழுக்கை. வழுவழுப்பு = வழவழப்பு, மென்மை. வழு - வழுகு வழுகுதல் = வழுவழுப்பாயிருத்தல். வழு - வாழை = வழுவழுப்பான மரம். மரம் வழுகும் என்பது விடுகதை. வழ - வழகு = வழவழப்பு, மென்மை. xvii. வழுக்கல் வழுக்கையான இடமும் பொருளும் வழுக்கும். (உழு) - இழு - இழுக்கல் = வழுக்கல். (நுழு) - நழு - நழுங்கு - நழுங்குதல் = வழுவுதல்; சறுக்குதல். வழு - வழுகு - வழுக்கு - வழுக்கல் = சறுக்கல், சறுக்கு நிலம். வழுக்குமரம் = சறுக்குமரம். வழுவழுத்தல் = வழுக்குதல். வழு - வழுவு. வழுவுதல் = சறுக்குதல். வழாஅல் = வழுக்குகை. வழூஉ மருங்குடைய வழாஅ லோம்பி (மலைபடு. 21) xviii. நழுவல் வழுவழுப்பான பொருள் கையைவிட்டு நழுவும். முழு - மழு - வழு. முழு - மொழு - மொழுப்பு. மொழுப்புதல் = மழுப்புதல். மொழுப்பு - மழுப்பு. மழுப்புதல் = வலக்காரமாய்ப் பேசிக் கடமையினின்று நழுவுதல். வழு - வழுவு - வழுவல் = நழுவல். வழுவாடி = காரியத்தை நழுவவிடுபவன். வழு - வழுக்கு. வழுக்குதல் = தப்புதல். (நுழு) - நழு - நழுவு - நழுவல். நழுவு - நழுவி = பிடிகொடாதவன் நழு - நழுப்பு. நழுப்புதல் = மழுப்புதல். வழுவல் நெறியினின்று வழுக்கலும் வழுவலும் தவறுதலாதலின், வழுக்கற் கருத்து வழுவற் கருத்தைத் தழுவிற்று. (உழு) - இழு - இழுக்கு - இழுக்கம் = தவறு, தீயொழுக்கம். இழுக்கு = தவறு. முழு - மழு - வழு = தவறு. வழு - வழுக்கு - வழுக்கம் = தவறு. வழுக்குதல் = தவறுதல். வழுக்கு = தவறு. வழு - வழூஉ. வழு - வழால் - வழாஅல் = தவறுகை. வழு - வழுவு - வழுவல் = தவறு, கேடு. வழு - வழும்பு = குற்றம். வழவழப்பு வழுக்கும் பொருட்கள் சில ஒட்டுந்தன்மையனவாயிருத்தலின், வழுக்கலைக் குறிக்கும் சொற்களினின்று பிசின்போல் ஒட்டுகின்ற அல்லது நெய்ப்பசையுள்ள சில பொருள்களின் பெயர்கள் தோன்றியுள்ளன. உழு - உழுந்து = வழவழப்பான பயறு. கொழு - கொழுப்பு. (நுழு) - (நிழம்) - நிணம். ஒ.நோ. தழல் - தணல். (முழு) - மழு - வழு - வழும்பு = நிணம். வழு - (வழல்) - வழலை = சவுக்காரம் (Soap). முள் - (மள்) - வள் - வண்டை = வழவழப்பான காய். வண்டை - வெண்டை. xix. குட்டையாதல் (சிறுத்தல்) முனை மழுங்கின பொருளும் மேன்மேலும் முனை தேயும் பொருளும், குட்டையாகும். குறைதலும் குட்டையாதலே. குள் - குள்ளம். குள் - குள்ளை. குள் - குள்ளல். குள் - குட்டை - கட்டை. குள் - கூள் - கூளி = குள்ளம், குள்ளமானது. கூள் - கூழை = குள்ளம். குட்டை, குள்ளமானது, குட்டையானது. கூழை - கூழையன். குள் - (குண்) - குணில் = குறுந்தடி. குல் - கு (குறுமை முன்னொட்டு - diminutive prefix) எ.டு. குக்கிராமம் (வ.) ஒ.நோ. நல் - ந. நப்பின்னை, நக்கீரன். xx. தட்டையாதல் மிகக் குட்டையான பொருள் தட்டையாகும். உயரமான பொருள்களெல்லாம் சற்றுக் குறுகின் குட்டையும், மிகக் குறுகின் தட்டையும், ஆம். சட்டு என்பது தட்டுதலைக் குறித்த ஒரு பழந்தமிழ் வினைச்சொல். சட்டுச் சட்டென்று தட்டுகிறான் என்பது வழக்கு. தட்டும் பொருளும் தட்டப்படும் பொருளும் தட்டையாகும். தட்டுதலும் ஒருவகை முட்டுதலே. முட்டுதல், வினைமுதல் முட்டுதலும் கருவி முட்டுதலும் என இருவகை. சினைவினை வினைமுதல் வினை யொக்கும். (சுத்துதல்) = தட்டுதல். சுத்து - சுத்தி - சுத்தியல் = தட்டுங்கருவி. சுத்து - சுட்டு. (சுட்டு) சட்டு - சடை. சடைதல் = அடிக்கப்படும் ஆணி முனை மழுங்கித் தட்டையாதல். சட்டு - சட்டம் = தட்டையான மரப்பட்டி. சட்டகப்பை = தட்டகப்பை. சட்டு - சட்டுவம் - சட்டுகம் = சட்டகப்பை. சட்டுவம் = சட்டகப்பை, தட்டையான பானை. சட்டுவம் - சருவம். சட்டம் - தட்டையான பனையோலை. சட்டம் வாருதல் = ஓலையின் அருகுகளை அரிந்து எழுதுவதற்கு ஏற்றதாக்குதல். சட்டம் - சட்டன் = ஓலைச்சுவடி பயிலும் மாணவன். சட்டன் + நம்பி = சட்டநம்பி = மாணவர் தலைவனாகிய ஆசிரியன், தலைமை மாணவன், சட்டநம்பி - சட்டம்பி. சட்டநம்பிப்பிள்ளை - சட்டம்பிப்பிள்ளை - சட்டாம் பிள்ளை. சட்டம் = மரச்சட்டம், கோடிழுக்கும் சட்டப்பலகை, நேர்மை, செப்பம், முறைமை, நீதியொழுங்கு, வரம்பு. விதி. மாணவர் பார்த்து ஒழுங்காக எழுதுவதற்கு மேல் வரியில் வரையப்பட்டிருப்பது மேல்வரிச் சட்டம் எனப்படும். ஓர் அமைப்பகத்தின் கரும நடப்பிற்குரிய விதியொழுங்கு முழுவதும் சட்ட திட்டம் எனப்படும். சட்டம் = விதி, விதிக்கும் அதிகாரம், அதிகாரத்தாற் பெற்ற வுரிமை. இட்டமுடன் முதலியார் வாங்கி வந்த காளைதினம் இருபோருண்ணும் சட்டமுடன் கொள்ளுண்ணும் ... (வேதநாயகம்பிள்ளை தனிப்பாடல்) சட்டம் - சடங்கு = மதவிதிப்படி அல்லது ஒழுக்க விதிப்படி நடைபெறும் கரணம். சட்டம் = படம் கண்ணாடி முதலியவற்றின் நாற்புறமுங் கோக்கப் படும் மரச்சட்டம். சட்டக் கட்டில். சட்டக் கதவு, சட்டப் பரம்பு. சட்ட வாள் முதலியன நாற்புறமுஞ் சட்டங் கோத்தவை. சப்பரம் முகடு முதலியவற்றிற்குச் சட்டங்கட்டுதல் ஆயத்த வினையாயிருத்தலின், சட்டங் கட்டுதல் என்பது ஆயத்தஞ் செய்தல் என்று பொருள்படும். உடம்பு உயிருக்குச் சட்டம் போன்றிருப்பதால், அதுவும் சட்டம் எனப்படும். சட்டம் - சட்டகம் (frame, outline). சட்டம் - சட்டை = உடம்பு, உடம்பின் மீந்தோல், அது போன்ற மெய்ப்பை. மீந்தோல் பெயர அடிபட்டவனை நோக்கி அவன் உடம்பு சட்டை சட்டையாய்க் கழன்றுவிட்டது என்றும், பாம்பு மீந்தோல் கழித்தலைச் சட்டை சுழற்றுதல் என்றும், கூறுதல் காண்க. சட்டம் - சடம் = உடம்பு. ஒ. நோ. பட்டம் - படம். சடம் = (சடல்) - சடலம் = உடம்பு. ஒ. நோ. படம் - படல் - படலம் (பரப்பு). சடலம் என்னும் வடிவு வடமொழியிலில்லை. சத்தியும் சடலமும் என்பது உலக வழக்கு. சப்பு சப்பு என்பது, ஒரு நெகிழ் பொருள் ஏதேனும் ஒன்றை முட்டலைக் குறிக்குஞ் சொல். சாணமும் களிமண்ணும் பழச் சதையும் போற் குழைந்த பொருள்களை, நிலத்திற் போடும் போதும் சுவரில் எறியும் போதும், சப்பு என்ற ஒலி கேட்கும். அதனால் சப்பென்று விழுந்தது என்பர். அவ்வொலியெழப் போடப்படும் குழை பொருட்கள் தட்டையான வடிவங் கொள்ளும். அதனால், சப்பு என்னும் ஒலிக்குறிப்பினின்று தட்டையாதல் கருத்துணர்த்தும் பல சொற்கள் பிறக்கும். (சுப்பு) - சப்பு - சப்பை = தட்டை, தட்டையானது, தட்டையான தொடைப் பகுதி. சப்பைக் காய், சப்பைக் கால், சப்பைத் திருக்கை, சப்பை மூக்கு, சப்பை வாய், சப்பை யெலும்பு முதலிய வழக்குக்களைக் காண்க. சப்பு - சப்பட்டை = தட்டையானது. சிறகு, சப்பட்டையரம் = தட்டையரம். சப்பு - சப்பல் = சப்பட்டை. சப்பல் - சம்பல் = விலைத் தாழ்வு. சப்பு - சப்படி = சப்பட்டை. சப்பை = தட்டையான பதர். பதர் போற் பயனற்றவன் (பதடி). சப்பு - சப்பன் = பயனற்றவன். சப்பு - சப்பரை = மூடன். சப்பட்டை = மடையன். சப்பு - சப்பங்கி = மந்தன். சப்பு - சப்பரம் = மொட்டையான எடுப்புத்தேர். சப்பு - சப்பளி. சப்பளிதல் = சப்பையாதல். சப்பளித்தல் = அடியிற் சப்பையாக உட்கார்தல். சப்பளி - சப்பளம் - சப்பணம் - சம்மணம். சப்பணங் கூட்டுதல், சம்மணங் கூட்டுதல், என்பன வழக்கு. சப்பளக்கட்டை = சப்பையான தாளக்கட்டை (சப்பளாக் கட்டை). சப்பு - சப்பத்தி = தட்டையான முத்து. சப்பு - சப்பாத்து = (தட்டையான) செருப்பு. சப்பாத்து - சப்பாத்தி = தட்டையான அல்லது செருப்புப் போன்ற இலையுடைய கள்ளிவகை. வடவர் தட்டையான அப்ப (ரொட்டி) வகையைச் சப்பாத்தி என்பது கவனிக்கத்தக்கது. சப்பு - (சப்பாளி) - சப்பாணி. ஒ. நோ. களவாளி - களவாணி. சப்பாணி = நிலத்திற் சப்பையாயிருக்கும் முடவன், அவனைப் போல் குழந்தை அமர்ந்திருந்து கைதட்டும் நிலை. தட்டை என்பது உயரத்திற்கு மாறான தன்மையாதலால், அதை யுணர்த்தும் சப்பையென்னும் சொல் பொதுவாகத் தாழ்வாள நிலையையே குறிக்கும். சப்பை = தட்டையானது. தாழ்ந்தது, பயனற்றது, சுவையற்றது, கெட்டது. சப்பைத்துணி = மட்டமான துணி. சப்பை நிலம் = பயனற்ற நிலம், சப்பை வாக்கு (சப்பட்டை வாக்கு) = பயனற்ற சொல். சுவையற்றதைச் சப்பென்றிருக்கிறது என்பது உலக வழக்காத லால், சப்பு என்பதே சப்பை யென்று திரிந்திருத்தல் உணரப்படும். சொட்டுச் சொட்டென்று சொட்டுகிறது, சொத்தென்று விழுந்தது, என்னும் வழக்குண்மையாலும், தட்டுங் கருவி யொன்று சுத்தி எனப்படுதலாலும், சட்டு சப்பு முதலிய சொற்களும் துவக்கத்தில் உகர முதலாகவே யிருந்திருத்தல் வேண்டும். தட்டு (துட்டு) - தட்டு. தட்டுதல் = கையால் அல்லது கருவியால் கொட்டுதல்; அதாவது ஒன்று இன்னொன்றை வலிதாய் முட்டச் செய்தல். தட்டு - (தடை) - தறை. தறைதல் = சடைதல். தட்டு = தட்டையானது. துலைத்தட்டு, தேர்த்தட்டு, பூத்தட்டு, வெற்றிலைத் தட்டு முதலிய வற்றை நோக்குக. பாத்தி வரிசையான நிலப்பகுதியும் தட்டு எனப்படும். தட்டுக்கூடை = தட்டையான கூடை. தட்டு - தட்டம் = தட்டையான கிண்ணம். தட்டு - தட்டை = தட்டையானது, அறிவிலி. (துட்டு) - திட்டு (ஒ. கு.). திட்டுதிட்டென்று கேட்கிறது என்பது உலக வழக்கு. தட்டை - தடை. வாழைப் பட்டையை வாழைத்தடை என்பர். தொப்பு தொப்பு (ஒ. கு.) ஒருவன் துணி துவைப்பதைக் குறிக்கும்போது, தொப்புத் தொப்பென்று துணியை அடிக்கிறான் என்பது உலக வழக்கு. தொப்பு - தப்பு - தப்புதல் = துணி துவைத்தல். தப்பு - தப்பை = அடி (தெ.) தட்டையானது. மூங்கிற்பற்றை, தப்பை வைத்துக் கட்டுதல் என்னும் வழக்கைக் காண்க. தப்பு - தப்பளம் = பற்று. தொப்பு - துவை. துவைத்தல் = துணியடித்தல், சம்மட்டியா லடித்துத் தட்டையாக்குதல். பொட்டு - பட்டு பட்டுதல் என்பது தட்டுதலைக் குறித்த ஒரு பண்டை வினைச்சொல். பட்டடை என்னுஞ் சொல்லை நோக்குக. பட்டு - பட்டம் = பட்டையான தகடு, ஒரு தலைவனுடைய சிறப்பைப் பொறித்து அவனது நெற்றியிற் கட்டும் தகடு, அத்தகட்டிற் பொறிக்கப்படும் சிறப்புப் பெயர், ஒருவனுக்கு மக்கள் புகழ்ச்சியாகவோ இகழ்ச்சியாகவோ வழங்கும் சிறப்புப் பெயர், தட்டையான காற்றாடி, மரப்பட்டை, சீரை (மரவுரி), சீரைபோன்ற துணி. பட்டங் கட்டுதல், பட்டஞ் சூட்டுதல், பட்டமளித்தல், பட்டப் பெயர் முதலிய வழக்குக்களை நோக்குக. பட்டம் - படம் = துணி, துணியில் எழுதப்படும் ஓவியம். படம் - பணம் = தகடான காசு. படம் - படாம் = துணி, துணிக்கச்சு, யானையின் முகபடாம். படம் - படகம் = திரைச்சீலை, படமாடம். படம் - படங்கு = ஆடை, திரை, படமாடம், துப்பாக்கியின் அடி, பாதத்தின் முற்பகுதி. படங்கு - படங்கம் = படமாடம். படம் - படவு - படகு = பாய் கட்டிய தோணி. படம் - படல் = தட்டிபோன்ற அடைப்பு. படல் - படலம் = மேற்கட்டி. படல் = படலிகை = பூந்தட்டு. பட்டு - பட்டா = பட்டைவாள், வண்டிப் பட்டை, ஆவண ஏடு, ஆவணம். பட்டு - பட்டி = சீலை, தகடு, ஏடு, ஏட்டிலெழுதப்படும் அட்டவணை, மூங்கிற் பிளாச்சு, தட்டி, தட்டியாலமைத்த கால் நடைத்தொழு, கால் நடைப்பட்டியுள்ள சிற்றூர். பக்கத்துக் கொல்லைகளிற் போய் மேயும் பட்டிமாடுபோற் கட்டுக்காவ லின்றித் திரிபவன். பட்டி - பட்டியல் = பொருள்விலை யட்டவணை, தட்டையான வரிச்சல். பட்டி - பட்டிகை = ஏடு, பட்டயம், சீலை, அரைக்கச்சை, மேகலை, யோகப்பட்டை. பட்டு - பட்டை = தட்டையான பொருள். மரப்பட்டை, வண்டிப்பட்டை, வாழைப்பட்டை, பொடிப் பட்டை, தோட்பட்டை, யோகப்பட்டை முதலிய பெயர்களையும், பட்டையடித்தல், பட்டை தீர்த்தல் முதலிய வழக்குக்களையும்; பட்டையரம், பட்டைப்புழு முதலிய வற்றையும் நோக்குக. பட்டை - பட்டையம் - பட்டயம் = பட்டைவாள், ஏடு, தகடு, செப்பேட்டாவணம். பட்டை - பற்றை - பத்தை = தட்டையானது. மூங்கிற்பற்றை தேங்காய்ப்பற்றை முதலியவற்றை நோக்குக. பட்டம் - பாட்டம். பாட்டரம் = தட்டையரம். முட்டு முட்டு - மட்டு - மட்டை = பட்டை. வாழைப்பட்டையை வாழைமட்டையென்றும் பொடிப் பட்டையைப் பொடி மட்டை என்றும், கூறுதல் காண்க. மட்டை = தட்டையான ஓலைக்காம்பு, தட்டையான அடிகருவி (bat). பனைமட்டை பந்தடிமட்டை முதலிய வழக்குக்களைக் காண்க. மடல் = மட்டை, இதழ். மடல் - மடலி - வடலி = மட்டை வெட்டப்படாத இளம்பனை. (மடை) - மணை = தட்டுப் பலகை, தட்டையான கட்டை. அடிமணை அரிவாள்மணை முதலியவற்றை நோக்குக. xxi. படர்தல் தட்டையாகும் பொருள் படர்ந்து பரவும். பட்டு = சிற்றூர். பட்டு - பற்று = நிலம், சிற்றூர், மேகப்படை, தப்பளம். படம் = பட்டையாக அகலும் பாம்பின் கழுத்து. படம் - பணம் - பணி = படத்தையுடைய நல்ல பாம்பு, பாம்பு. படங்கு - படங்கான் = அகன்ற பூரான். படல் - படலம் = பரப்பு, இயலினும் பரந்த நூற்பகுதி, திரைபோற் கண்ணிற் படரும் சதை. படல் - படலை = படர்கை, பரந்த இடம், வாயகன்ற பறை. படலை - பதலை = வாயகன்ற பறை. படல் - படர் = பரவும் மேகப்பற்று. படர்தல் = பரவுதல், அகலுதல், செல்லுதல். பட்டை - படை = பரப்பு, கூட்டம், சேனைப்பரப்பு. சேனைப் பகுதி, மேகப்பற்று. படாகை = அகன்ற கொடி, நாட்டின் உட்பிரிவு, கூட்டம். படாகை - பதாகை = பெருங்கொடி. ஐந்து விரலும் நெருங்கிப் பரந்த கை. பாடவரை = வாளவரை. (பட) - பர - பரவு. பர - பரப்பு. பர - பரத்து (பி.வி.) பர - பரவை = பரந்த கடல். பர - பரம்பு. பரம்படித்தல்= உழுத நிலத்திற் கட்டியடித்துப் பரவச் செய்தல். பரத்தை = பரந்து ஒழுகுபவள். பராகம் = பரவும் பூத்தூள். பர - பார் = பரப்பு, தேர்த்தட்டு, பாறை, நிலப்பகுதி, ஞாலம். பார்முதிர் பனிக்கடல் (திருமுரு. 45) பார் - பாறை. பார் - பாரி. பாரித்தல் = பரவுதல், பருத்தல், விரித்தல். பர - பா - பாவு. பா - பாய் = பரந்த தடுக்கு. பாய்தல் = பரத்தல். பலகை - அகன்ற பாளம். பலாசினை = பரக்க நடுதல். பாள் = இருப்புச் சட்டம். பாளம் = பலகை. பாளை = விரியும் மடல். பாழி = அகலம். பெருமை, நகர் (பேரூர்). அகைத்தல் = அடித்தல். அகலுதல் = படர்தல், நீங்குதல், செல்லுதல். அகலம் = மார்பு. அகல் = அகன்ற மண்தட்டம். அகல் - ஆல் = படருமரம். ஆல்போற் படர்ந்து என்னும் உவமை மரபை நோக்குக. ஆல் - ஆலம். ஆலி = பெரும்பூதம். அடித்தல் = தட்டுதல். அடர்தல் = தட்டியுருவாக்குதல். ஐதடர்ந்த நூற்பெய்து (புறம். 29). அடர் = தகடு; பூவிதழ். அதள் = தோள். அவைத்தல் = குற்றுதல். அவல் = குற்றுதலால் தட்டையான அரிசி. அவிழ்தல் = விரிதல், விரிந்து கட்டு விடுதல். அலைத்தல் - அடித்தல். அலகு = அகலம், கத்தியலகு. அலகு பாக்கு = தட்டையான பாக்கு. அலசுதல் = இழையகலுதல். அலசல் = இழையகன்ற துணி. அலர்தல் = மலர்தல். அலவை - பரத்தைமை. கலத்தல் = பரத்தல். கலக்க நடுதல் என்னும் வழக்கைக் காண்க. கட்டுரை கலந்தகாலை (கம்பன். கர. 68) கல - கலவு - கலவம் - கலாவம் = அரைப்பட்டிகை. மயிற்பீலி. கலை = ஆடை. சல்லா = அலசல் துணி, சல்லாரி = அலசற் சீலை. சல்லவட்டம் = கேடகவகை. துவைத்தல் = குற்றுதல். துகில் = துணி. துகிலிகை = துணிக்கொடி. தகழி = அகல். தகண் = புற்பற்றை. தகண் - தகடு. (துட்டு) - தட்டு - தட்டம் - தடம் = அகலம், பெருமை, அகன்ற குளம். தடம் - தடாகம். தளம் = தட்டு, பரப்பு, படை இதழ். தாளம் = சாலர். தாலம் = தட்டு, யானைக்காது. நல் - (நால்) - நாலம் - ஞாலம் = பரந்த உலகம். பருமையும் அகலமும் ஒன்றே. பெரிய இலை, பெரிய தாள், பெரிய தட்டு, பெரிய துணி, பெருவழி என்று அகன்ற பொருள்களைக் கூறுதல் காண்க. நனம் = அகலம். நனம் - நனவு = அகலம். மலர்தல் = விரிதல். இங்குக் காட்டப்பட்ட சொற்கள் பலவற்றிற்கு நேர் மூலம் அகரமுதலாயினும், அடிமூலம் உகரமுதல என்பது ஒரு தலை. இது இப்படல முழுமைக்கும் ஒக்கும். xxii. அமுங்குதல் அமுங்குதலாவது ஒரு பொருள் அழுந்த முட்டுதல். உறு - உறுத்து. (உள்) - (அள்) - அழு - அழுந்து - அழுத்து - அழுத்தம். (உம்) - அம் - அமுங்கு - அமுக்கு - அமுக்கம். (நும்) - நெம் - (நெமுங்கு) - நெமுங்குதல் = அமுங்குதல். (நுள்) - (நெள்) - நெரு - நெருங்கு - நெருக்கு - நெருக்கம். (3) குத்தல் முறை குத்தல் என்பது, மொட்டைக் கருவி குத்துதலும் கூர்ங்கருவி குத்துதலும் என இருவகை. இவற்றுள் பின்னதே ஈண்டுக் கூறப்படும். i. குத்துதல் குள் - கிள், குள்ளுதல் - நகத்தாற் கிள்ளுதல். குத்து - குந்து. குத்து - கொத்து - கொட்டு. சுள். சுள்கள் என்று குத்துகிறது என்பது வழக்கு. சுள் - சுர் - சுருக்கு - சுறுக்கு (குத்தற்குறிப்பு) தூண்டுதல் = குத்துதல். துள் - தெள் - தெறு. தெறுதல் - கொட்டுதல். துள் - தள் - (தய்) - தை. தைத்தல் = குத்துதல். முள் தைக்கும் என்னும் வழக்கைக் காண்க. நுள். முள். முசுமுசுத்தல் = தினவெடுத்தல். ii. குந்துதல் குந்துதலாவது நிலத்திற் குத்துவதுபோல் உட்கார்தல். குண்டி குத்துதல் என்பது நாகை வழக்கு. குத்த வைத்தல் என்பது பாண்டி நாட்டு வழக்கு. குத்து - குந்து. குந்துதல் = உட்கார்தல். குத்து - குத்தி - குதி. குதிங்கால் = நிலத்திற் குத்தும் அடிப்பாதம். குதை = நிலத்திற் குத்தும் விற்கோலடி. குதிர்தல் = காரியம் குந்துவதுபோல் ஏற்பாடாதல். ஒ.நோ. sit - settle. குந்து - குந்தனம் = மணிக் கல்லைக் குந்தவைத்தாற் போற் பதிக்குந் தகடு. குத்துக்கல் குத்துவிளக்கு முதலிய பெயர்களும் குந்தி யிருத்தல் பற்றி ஏற்பட்டவையே. முள் - (முள்கு) - முள்கா. முள்காத்தல் = குந்தியிருத்தல். முசுப்போல முள்காந்திருப்பர் (நன்னூல் விருத்தி, சூ. 96) முள்கா - (உள்கா) - உள்கார் - உட்கார். இன்றும் கல்லா மக்கள் உளுக்கார்தல் என்றே கூறுவர். iii. நேராதல் குத்துக் கல்லும் பிற குத்தும் பொருள்களும் பொதுவாக நேராகக் குத்துவதால், குத்தற்கருத்தில் நேர்புக் கருத்துத் தோன்றிற்று. இங்கு நேர்பு என்றது வளையாமையை சாயாமையை அன்று. செங்குத்து நட்டுக்குத்து முதலிய வழக்குக்களை நோக்குக. குத்துதல் = நேராதல். குத்து - குத்தி - (கத்தி) - கதி. கதித்தல் = நேராதல். நேர் கிழக்காகச் செல்லுதலைக் கிழக்கே கதிக்கச் செல்லுதல் என்பர் நெல்லை நாட்டார். கதி - கதிர் = வளையாமற் செல்லும் ஒளியிழை. கதிர் - கதிரவன். iv. குத்தும் பொருட்கள் உல் = தேங்காயுரிக்குங் கருவி. உள் - அள் = நீர் முள்ளி. உள் - உளி. உளி - உசி - ஊசி. உளித்தலைக்கோல் = நுனியிற் கூரான கோல். உளியம் = உளிபோன்ற கூரிய நகமுள்ள கரடி. உறு - உறும்பு = குத்தும் சிறு கரம்பைக் கட்டி. உகிர் = நகம். உள் - அள் - (அய்) - அயில் = வேல். குத்து - குத்தி = பற்குத்தி போன்ற கருவி. குள் - கள் - கள்ளி = ஒருவகை முட்செடி. கள் - கண்டு = கண்டங்கத்தரி. கண்டு - கண்டம் = கண்டங் கத்தரி, கள்ளி, எழுத்தாணி. கண்டு - கண்டல் = முள்ளி, நீர்முள்ளி, தாழை, கண்டல் - கண்டலம் = முள்ளி. கண்டு - கண்டகம் = முள், நீர்முள்ளி, வாள். கண்டகம் - கண்டகி = இலந்தை, தாழை, மூங்கில், முதுகெலும்பு. கள் - கழு, கள் - கடு = முள், முள்ளி. குள் - கிள் - கிள்ளி - கிளி. கிள் - கிள்ளை = கூரிய மூக்கினாற் கிள்ளுவது. குள் - கெள் - கெளிறு = முள்ளாற் கொட்டும் மீன். சுல் - சூல் - சூலம். குலிசங்கதை சூல் (சேதுபு. தேவிபுர. 27). சுள்ளெறும்பு = முட்குத்துவது போற் கடிக்கும் எறும்பு. சுள் - சுளிக்கு = கூர்மையான கோல். சுள் - சுணை - சிறுமுள், முட்போற் குத்தும் மானவுணர்ச்சி. சுள் - சுர் - சரி - சுரணை = குத்தல். குத்தும் மானவுணர்ச்சி. சுரணை மரணை என்னும் தொடரில் நிலைமொழி தென் சொல்லும் வருமொழி வடசொல்லுமாகும். சுரியூசி = பனையேட்டில் துளையிடுங் கருவி. சுரி - சுரிகை. சுரி - சூரி. சுர் - சூர் - சூரை = ஒருவகை முட்செடி. சுர் - சுறு - சுறுக்கு = மானவுணர்ச்சி. சுறு - சுற - சுறா - சுறவு - சுறவம் = கூரிய செதிளால் வெட்டும் மீன். சுர் - சுர - சுரசுரப்பு = முட்குத்துவதுபோற் சுரடுமுரடாயிருப்பது. சுனை = சுரசுரப்பு. துல் - துலம் = நீர்முள்ளி. துள் - (தெள்) - தேள் = குத்தும் நச்சுயிரி வகை. தேள் - தேளி = தேள்போற் கொட்டும் மீன். தூண்டு - தூண்டி - தூண்டில் = மீனைக்குத்தும் முள். தெள் - தெறு. தெறுக்கால் = தேள். நுள் - நுள்ளான் = கடிக்கும் சிற்றெறும்பு. நுள் - நுள்ளி - நள்ளி = நண்டு. நள்ளி - நளி = தேள். நளிர் = நண்டு. நுள் - நெள் - நெரி - நெரிஞ்சி - நெருஞ்சி - நெருஞ்சில். முள் - முள்ளி. முளி = செம்முள்ளி. முளரி = முட்செடி, முட்சுள்ளி. முளா - முளவு = முள்ளம்பன்றி. முண்டு - முண்டகம் = முள், நீர்முள்ளி, தாழை, முள்புதர், கருக்கு வாய்ச்சி. முக - முசிறு - முசிடு = சுள்ளென்று கடிக்கும் செவ்வெறும்பு. முசுக்கட்டை = கம்பளிப்பூச்சி. முசுக்கை = முசுமுசுக்கை. மூசு மல்லிகை = ஊசி மல்லிகை. (குத்து) - குத்தி. (குந்து) - குந்தம், குந்தாலம், குந்தாலி, கூந்தாலம். (கொத்து) - கொத்து - கொட்டு. களைக்கொத்து, களைக்கொட்டு, கொட்டு மண்வெட்டி முதலிய பெயர்களைக் காண்க. ஊசி என்னும் சொல் தமிழ்ச்சொல் என்பது, அதன் பொருட் காரணத்தால் மட்டுமன்றி, ஊசிக்கண் (சிறுகண்) ஊசிக்களா (முள்ளுக்களா), ஊசிக்காது (நுனித்துக் கேட்குஞ் செவி), ஊசிக்காய், ஊசிக்கார், ஊசிச் சம்பா, ஊசித் தூற்றல். ஊசிப்பாலை. ஊசிப்புழு, ஊசிமல்லிகை, ஊசி மிளகாய், ஊசி முல்லை, ஊசிவேர், குத்தூசி, துன்னூசி, தையலூசி, முதலிய பெயர் வழக்குக்களாலும் அறியப்படும். மேலும், வடமொழியிலுள்ள சூசி என்னுஞ்சொல் siv (to sew) என்னும் வேரினின்று பிறந்ததாகக் காட்டப்படுவது. ஊசி என்னும் தென் சொல்லோ குத்துவது என்று பொருள்படும் உள் என்னும் வேரினின்று உள் - உளி - உசி - ஊசி என ஒழுங்காகத் திரிந்திருப்பது. v. குறண்டும் பொருட்கள். குறண்டுதல் என்பது முட்கருவிகளால் வலிதாய் வழித்தல். குறண்டுதல் = வறண்டுதல். குறண்டி = ஒருவகை முட்செடி. குறண்டு - கறண்டு. குறண்டி - கறண்டி = குறண்டுங் கருவி. பாதாள கறண்டி (பாதாள வறண்டி) என்னுங் கருவியை நோக்குக. கறண்டு - கறட்டு (ஒ.கு.). கரண்டு - கரண்டி (trowel) சுறண்டு - சுறண்டி. சுரண்டு - சுரண்டி. சுறு - சொறி. சொறிதல் = நகத்தால் வறண்டுதல். (புறண்டு) - பறண்டு - பிறாண்டு. பறண்டு - பறட்டு (ஒ. கு.). பறண்டு - வறண்டு - வறண்டு - வறண்டி. வறண்டு - வறட்டு (ஒ. கு.). கறட்டுக் கறட்டென்று புல்லைச் செதுக்குகிறான். பறட்டுப் பறட்டென்று சொறிகிறான், வறட்டு வறட்டென்று பானையைச் சுறண்டுகிறான், என்பன வழக்கு. vi. சுரசுரப்பு செறிந்த பல நுண்முட்கள் ஒருங்கே குத்துவது சுர சுரத்தல். குர் - (குர) - கர - கரகர - கரகரப்பு = தொண்டையின் சுரசுரத்தல் போன்ற உணர்ச்சி. கர - கார் - காறு. காறுதல் = கரகரத்தல். கர - கரண் - கரணை = சுரசுரப்பான கிழங்கு. கரண் - கரடு - கரடா = சுரசுரப்பான தாள் கரடு = கரடான திரடு. கரடு - கரட்டை = கரட்டுத்தோலுள்ள ஓணான். சுர் - சுர - சுரசுர - சுரசுரப்பு. சுர் - சர் - சரு - சருசரு - சருச்சரை. சர் - சரள் = கரட்டுமண். சுர் - (சுரடு) - (சுரட்டை) - சிரட்டை = சுரடான கொட்டாங்கச்சி. சுரடு - சுறடு - சுறட்டைத் தலை = வறண்ட தலை. சுற - சொறி - சொறியன் = சொறித்தவளை. (புர்) - பர்பர - பரபர (உடம்பை அரித்தற் குறிப்பு) பர - பரடு - பரட்டை - பறட்டை = சீவாத்தலை. பர - (பார்) - பாறு. பாறுமயிர் = பறட்டை முடி. பர - பரல் = பருக்கைக்கல். பர் - பரு - பருக்கை = குத்தும் கரட்டுக்கல். முர் - முர - முரமுர - முரமுரப்பு = சுரசுரப்பு. முர - முரம்பு = சரள். முர - முரண் - முரடு. சுரசுரப்பானதைக் கரடுமுரடானதென்று கூறுதல் காண்க. vii. குத்தும் பொருள்களின் கூர்மை உள் - உளி - உசி = கூர்மை. உசி - ஊசி = கூர்மை. உள் - அள் = கூர்மை. அள் (அய்) - அயில் = கூர்மை. குள் - குர் - கூர். (குர் - குரு - குருக்கு = ஒருவகை முட்செடி.) குள் - கள் - கரு - கருக்கு = கூர்மை. கள் - கடு - கடி = கூர்மை. குனை - கொனை = கூர். சுள் - சுணை = கூர்மை. துள் - துய் = கூர்மை. நுல் - நுன் - நுனை = கூர்மை. நுள் - நுட்பு - நுட்பம் = கூர்மை. முள் - முளை = கூர்மை. முள்ளுறழ் முளையெயிற்று (கலித். 4.). முன் - முனை = கூர்மை. முள் - (மள்) - வள் = கூர்மை. லள் - (வய்) - வை = கூர்மை. வள் - வடி = கூர்மை. முள் - வெள் = கூர்மை. viii. குத்துவதால் உண்டாகும் புள்ளி ஒத்து = ஒற்று = புள்ளி, புள்ளியுள்ள மெய்யெழுத்து, குத்து = புள்ளி. புள் - புள்ளி - குத்து, மெய்யெழுத்து. புகு - புகர் = புள்ளி. புகர் - போர் = புள்ளி. புட்டு - புட்டா = புள்ளி. புள் - பொள் - பொறி = புள்ளி. புட்டு - பொட்டு = புள்ளி. புள்ளுதல் புட்டுதல் பொள்ளுதல் பொட்டுதல் முதலிய வினைகள் வழக்கற்றன. ix. நுண்மை கூரியமுனை நுட்பமாயிருத்தலால், கூர்மை நுண்மையைக் குறிக்கும். உள் - அள் - அரு - அரி = நுண்மை. அள் - (அய்) - ஐ = நுண்மை. அரியே ஐம்மை (தொல். உரி. 58.) துள் - துய் = பஞ்சின் நுனி. நுள் - நுண் - நுண்மை. நுள் - நொள் - நொய் - நொய்ம்மை = நுண்மை. நொய் = நுண்மை. முள் - முளரி = நுண்மை. x. நுண்வினைகள் நுண்மைபற்றி நுள் (நுல்) என்னும் அடியினின்று பிறந்த வினைச் சொற்கள் வருமாறு : நுல் - (நுற்பு) - நொற்பு - நொற்பம் = நுட்பம். நுள் - நுழ - நுழை. (1) நுழைதல் = நுண்மையாதல், நுழைநூற் கலிங்கம் (மலைபடு. 561.) (2) கூரிதாதல். நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞரும் (மதுரைக். 517.). நுழை = நுண்மை. நுழைபுலம் = நுண்ணிய அறிவு. நுண்மாண் நுழைபுலம் (குறள். 407.) நுழைவு = நுண்மை. நுழ - நிழ. நிழத்தல் = நுணுகுதல். நுனி = நுண்மை. நுனித்தல் = கூராக்குதல், கூர்ந்து நோக்குதல். நுனிப்பு = கூர்ந்தறிகை. நூனெறி வழாஅ நுனிப்பொழுக் குண்மையின் (பெருங்.வத்தவ.7, 34.) நுண் - நுண்பு - நுட்பு - நுட்பம். பாலியேங் கண்காண்பரிய நுண்புடையீர் (திவ். இயற். பெரிய திரு. 8.). நுண் - நுண்ணிமை = நுண்மை. நுணங்குதல் = நுட்பமாதல். நுணங்கு - நுணக்கம் = கூர்மை. நுணங்கு = நுண்மை. நுணாவுதல் = விரல் நுனியால் அல்லது நாநுனியால் தடவியறிதல். நுணாசுதல் = நுணாவுதல். நுணித்தல் = கூர்மையாக்குதல், நுணுகி ஆராய்தல். நுணுகுதல் = கூர்மையாதல், நுட்பமாதல். நுணுகு - நுணுக்கு - நுணுக்கம். நுணுக்குதல் = கூர்மையாக்குதல், மதியைக் கூர்மை யாக்குதல், நுண்மையாக்குதல், பொடி செய்தல், சிறிதாயெழுதுதல், நுண்ணி தாக வேலை செய்தல். நுணுக்கு = நுண்மை, நுட்பமானது. நுணுக்கம் = கூர்மை, கூரறிவு, நுண்மை, நுட்பம், வேலைத்திறம். நுணுங்குதல் = நுணுகுதல், பொடியாதல். நுணுங்கு - நணுங்கு. நணுங்குதல் = சிறுத்தல், வளராமை. நுணைத்தல் = நுணாசுதல். நுள் - நுறு - நுறுங்கு - நொறுங்கு = நுண்மை. நுள் - நுசு - நொசு - நொசி. நொசிதல் = நுண்மையாதல். நொசி = நுண்மை. நொசி - நொசிவு = நுண்மை. நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை (தொல். உரி. 76) நுள் - (நொள்) - நொய் - நொய்வு - நொய்ம்மை. நொய்ய = நுட்பமான. நுள் = (நு) - நுவ் - நுவல். நுவலுதல் = நுட்பமாகச் சொல்லுதல் நூலுரைத்தல். நுவல் = சொல். நுவல் - நூல். நுவல் - (நுவள்) - நுவண் - நுவணை = நுட்பம், கல்வி நூல். நுவண் - நுவணம் = கல்விநூல். xi. நுண்பொருட்கள் உல் - (அல்) - அன் - அனு = நுண்ணியது, நுண்ணளவு. உள் - (அள்) - அண் - அணு = நுண்ணியது, நுண்ணளவு. நுள் - (நொள்) - நொய். நுள் - நுறு - நுறுங்கு = நொய். நுறுங்குதல் = பொடியாதல். நுறு - நூறு = பொடி. நூறு - நீறு = பொடி, சாம்பல், சுண்ணம். நீறு - நீற்று. நீற்றுதல் = சுண்ணமாக்குதல். நூறுதல் = பொடியாக்குதல்போல் அழித்தல். நுறுங்கு - நொறுங்கு = நொய். தூள். நொறுங்கு - நொறுக்கு. நொறுங்கு - நறுங்க. நறுங்குதல் = சிறுத்தல். நொறுக்கு - நறுக்கு. நறுக்குதல் = துண்டாக்குதல். நுள் - நுசு - நுசுப்பு = நுணுகிய மகளிரிடை. நுவ்வு = எள் (தெ.) நுவ்வு - நூ. நூநெய் (நூனெ) = நல்லெண்ணெய் (தெ.) நுவல் - (நோல்) - நோலை = எள்ளுருண்டை. நுவணை = இடித்தமா. மென்றினை நுவணையுண்டு (ஐங். 285) நுவணை - நுணவை = மா, எள்ளுருண்டை. நுவணம் = இடித்தமா. சுள் - சுண் - சுண்ணம் = பொடி. நீறு. சுண்ணித்தல் = நீறாக்குதல். சுண்ணம் - சுணம் = பொடி. பூந்தாதுபோற் படரும் தேமல். சுணம் - சுணங்கு = பூந்தாது. பூந்தாதுபோற் படரும் தேமல். சுண்ணம் - சுண்ணக்கம் = பொடி. சுண்ணம் - கூண்ணம்பு - சுண்ணாம்பு = காரக்கல் நீறு. புள் - பூள் - (பூழ்) - பூழி = தூள், புழுதி. பூழ் - பூழ்தி = புழுதி. பூழ்தி - புழுதி. புள் - (பொள்) - பொடி. பொடித்தல் = தூளாக்குதல். xii. குறும்பொருட்கள் நுண்மைக்கு இனமானது குறுமையாதலின், நுண்மைக் கருத்து குறுமை அல்லது சிறுமைக் கருத்தைத் தழுவும். (உள்) - இள் - இட்டு. இட்டிது = சிறிது. இட்டு - இட்டிகை = சிறு செங்கல். (உள்) - எள் = சிறிய கூல வகை, எட்டுணை = சிற்றளவு. உள் - (அள்) - அரு - அரி = சிறியது. சிறிய பருப்பு. அரிசி. அரியே ஐம்மை (தொல். உரி. 53). அரிநெல்லி = சிறுநெல்லி. அரி - அரிசி = சிறியது, சிறிய பருப்பு. அரிசிக்களா, அரிசிச் சோளம், அரிசிப்பல் முதலிய புணர்ப் பெயர்களில், அரிசி என்பது சிறுமையை உணர்த்தும், அருநெல்லி = சிறுநெல்லி. குன் - குன்னி = மிகச்சிறியது. குள் - குரு - குருவி = சிறு பறவை. குருமகன் - குருமான் = சிறுமகன், குட்டி, குருமான் - குருமன். குரு - குறு. குறுமகன் ( - குறுமான் - குறுமன்), குறுங்கட்டில், குறுநொய், குறுமணல் முதலிய புணர்ப் பெயர்களில் குறு என்பது சிறுமையுணர்த்தும். குறு - குறுவை = குறுகிய காலத்தில் விளையும் நெல். குறுவை - குறுகை. குறு - குறள் - குறளி = குட்டிப்பேய். குறள் - குறளன். குறள் = குறுகிய வெண்பா. குறள் - கறள் - கறளை = வளராது குறுகிய வுயிரி. குறு - குறில். குறு - குறுகு - குறுக்கு - குறுக்கம் - குறுக்கன் = குறுநரி. குறுக்கன் - குக்கன் - குக்கல் = குறுநாய். குள் - (கள்) - கண் = சிறியது. கண் விறகு = சிறு விறகு (தஞ்சை வழக்கு). கண்ணறை = சிற்றறை. கண்ணாறு = சிற்றாறு. கண் - கண்டு = துண்டு. கண்டறைவாள் = துண்டறுக்கும் வாள். கண்டு - கண்டம் = துண்டம், சிறுநிலம், நிலப்பகுதி. கண்டங் கண்டமாய் நறுக்க வேண்டும் என்பது வழக்கு. காய்ந்த கறித்துண்டு உப்புக் கண்டம் எனப்படும். கண்டம் - காண்டம் = நூற்பகுதி. கண்டு - கண்டி. கண்டித்தல் = துண்டித்தல், பகிர்தல், துண்டித்தல் போற் பேசுதல். கண்டி - கடி. கடிதல் = கண்டித்தல். கண்டி - கண்டனம். குள் - குட்டம் = சிறுமை, குறுமை, சீர் குறைந்த அடி. குட்டான் = சிறிய ஓலைப்பெட்டி, சிறு படப்பு. குள் - குண் - குணில் = குறுந்தடி. குள் - கு = குறிய, சிறிய. ஒ.கோ. நல் - ந. சுள் = சிறுமை. சுள்ளாணி - சிறிய ஆணி. சுள் - சுண்டு = சிறியது, சிறிய முகவைக் கருவி (வீசும்படி). சுண்டு - சுண்டான் = சிறு மொந்தை. சுண்டெலி சுண்டுவிரல் முதலிய புணர்ப் பெயர்களில், சுண்டு என்பது சிறுமையைக் குறிக்கும். சுண்டு - சுண்டை = சிறிய காய் வகை. சுண்டு - சிண்டு = சிறிய குடுமி. சுள் = (சுட்டு) - சிட்டு = சிறியது, சிறு குருவி. சிட்டு - சீட்டு = ஒலை நறுக்கு. சிட்டு - சிட்டி = சிறுகலம். சுல் - சல் - சல்லி = சிறியது. சிறு காசு. ஒட்டாஞ்சல்லி, சல்லிக்கல், சல்லிப்பயல் சல்லிக்கட்டு முதலிய புணர்ப்பெயர்களில், சல்லி என்பது சிறுமை குறிக்கும். சுல் - சில் = சிறியது, துண்டு, சிற்றளவு. சில்லுக் கருப்புக் கட்டி = சிறுகருப்புக்கட்டி. சின்னீர் = கொஞ்ச நீர். சில் - சில்லான் = குட்டி ஓணான். சில் -சின் - சின்னான் = சிறியவன். சில் - சிறு - சிறுகு. சிறு - சிறுக்கன் - சக்கன் (ம.) சிறு - சிறான = சிறுவன். சிறு - சிறுத்தை = சிறுபுலிவகை. சிறு - சிறாய். சில் - சிலும்பு - சிலாம்பு - சினாம்பு - சிறாம்பு = மரத்திலும் மீனிலுமுள்ள நுண்பட்டை. சிலு - செலு = சிறுசெதிள். செலு - செலும்பு = சிறு துண்டு, பாக்குச்சீவல். செலு - செது - செதிள். சிலும்பு - செறும்பு = சிறாம்பு. சில - சின்மை. சில் - சில. அளவுச் சிறுமை குறித்த சொல் தொகைச் சிறுமையும் குறித்தது. துல் - (தில்) - தின் - தினை. தினைத்துணை = சிறிய அளவு. துள் - துட்டு = சிறியது, உலோகத் துண்டு, காசு. துட்டுத்தடி = குறுந்தடி. துள் - துண்டு = சிறியது, சிறுபகுதி. சிறுவேட்டி, சிறுநிலம். துள் - துண் - துணி = துண்டு, ஆடைத் துண்டு, ஆடை. துணித்தல் = துண்டாக்குதல். துணி - துணிக்கை = சிறுபகுதி. துண்டுத் துணியும், துண்டுதுணுக்கு, துண்டு துணிக்கை என்பன வழக்கு. துண் - துணுக்கு = சிறுபகுதி. துண்டு - துண்டம். துண்டு - துண்டி. துண்டித்தல் = துண்டாக்குதல். நுல் - (நல்) - நன் - நன்னி = மிகச் சிறியது. நன்னியுங் குன்னியும் என்பது வழக்கு. நன் - நன்னன் = சிறியவன். நுள் - நுள்ளல் = சிறுகொசுகு. நுள்ளல் - நொள்ளல். நுள் - நுளம்பு = சிறுகொசுகு. புல் - (பில்) - பின் - பின்னி = மிகச் சிறியது. நன்னி பின்னி என்பது தஞ்சை வழக்கு. பில் - பில்லை = துண்டு. சடைப்பில்லை, சந்தனப் பில்லை, தோங்காய்ப்பில்லை முதலிய வழக்குக்களைக் காண்க. பில்லை - வில்லை. புள் - புரு - பிரு - பிருக்கு = சிறியது. சிறுதுண்டு. பிஞ்சும் பிருக்கும் என்பது வழக்கு. பிள்ளைக்கற்றாளை, பிள்ளைக் கிணறு. பிள்ளைக் கோட்டை. பிள்ளைத் தக்காளி, பிள்ளைப்பிறை, பிள்ளைப் பெட்டி, பிள்ளை விளாத்தி (குட்டி விளா) முதலிய புணர்ப் பெயர்களில். பிள்ளை என்பது சிறுமையைக் குறிக்குமேனும், அது இளமைப் பெயரின் ஆட்சி விரிவே என்றறிதல் வேண்டும். குட்டித் தொல்காப்பியம் என்பதில் குட்டி என்பதும் அதுவே. பிள் - பிட்டு = சிறிது. பிட்டுக் கருப்புக்கட்டி = சிறு கருப்புக்கட்டி. பிள் - பிசு - பிசுக்கு - சிறு துண்டு. பிசுக்கு - பிசுக்கி = சிறுபயல். பிசு - பிசுகு. பிசுகுதல் = சிறுதுண்டு கேட்டல். பிசுக்கு - விசுக்கு - விசுக்குணி (விசுக்காணி) = சிறியது, சிறுதுண்டு. புள் - பொள் - பொட்டு = சிறியது, சிற்றளவு. பொள் - பொடி. முள் - முட்டு = சிறியது. முட்டுக்கள் = சிறுபொருட்கள். முள் - (மள்) - மண் - மணி = சிறியது. மணிக்கயிறு, மணிக்காடை, மணிக்குடல், மணிக்கை, மணித்தக் காளி, மணிச்சம்பா, மணிச்சுறா, மணிப்பயறு, மணிப்புறா, முதலிய புணர்ப்பெயர்களில், மணி என்னுஞ் சொல் சிறுமையைக் குறித்தல் காண்க. மண் - மாண் = குறள், குறளன், சிறுவன், இளைஞன், மணமிலி (பிரமசாரி). குறுமாணொருவன் தற்குறியாகக் கொண்டாடும் (தேவாரம் 164, 5) மாணாகி வையமளந்ததுவும் (திவ். பெரியதிரு. 8, 10, 8.) மாண் - மாணி = சிறியது, சிறுவன், மணவாதான், மாணவன். கருமாணியா யிரந்த கள்வனே (திவ். இயற்பா, 2, 61.) மாண் - மாணவல் = சிறுவன், கற்குஞ் சிறுவன். மாணவன் - மாணவகன் - மாணவகம் - கல்வி. மாணவகன் - மாணாக்கன். மாணவனைக் குறிக்கும் வேறு சில பெயர்களும் சிறுவன் சிறுமியைக் குறிப்பனவாகவே யுள்ளன. ஒ.நோ. பிள்ளை = மாணவன், மாணவி. பள்ளிப் பிள்ளை என்னும் வழக்கைக் காண்க. E. pupil, from L. pubillus, pupilla, dims of pupas, a boy; pupa. a girls. E. pedant, from Gr. pais. paidos, a child. மாணாக்கன் மாணாக்கி என்னும் வடிவங்களும், மாணவன் என்னும் வடிவமும், அதன்திரிபான மாணி என்பதும், இவற்றுக்கு அடிவழியான கொடிவழிச் சொற்களும், வட மொழியிலில்லை. (4) உறைத்தல் உறைத்தல் என்பது அழுத்தித் தாக்குதல். ஆலங் கட்டியும் பெருமழைத்துளியும் நிலத்தில் வல்வேகமாய் விழுவதையும். ஒரு பேரொலி காதில் அழுத்தமாய்ப் படுவதையும், வெப்பம் காரம் புளிப்பு முதலியவை உடலையோ நாவையோ தாக்குவதையும், உறைத்தல் என்பர். இவற்றுள், முதலது பருமைத் தாக்கும் ஏனைய நுண்மைத் தாக்கும் ஆகும். இவையெல்லாம் தொடுதலின் வகை களே. தொடுதலென்பது ஒன்று இன்னொன்றின் மேற்படுதல். பண்பி படுதலும் பண்பு படுதலும் எனப்படுதல் என இருவகை. அழுத்தமாய்ப் படுதலே உறைத்தல். i. சுடுதல் சுள்ளென்று குத்துகிறது என்பது போன்றே, சுள்ளென்று வெயிலடிக்கிறது என்பதும் வழக்கு. கூர்ங்கருவியாற் குத்துவது போன்றது வெம்மைத்தாக்கு. உறைத்தல் = வெயில் உடம்பைத் தாக்குதல். சுள் - சுள்ளாப்பு = கடுவெயில். சுள் - சுள்ளை - சூளை = செங்கல் சுடுமிடம். சுள் - (சுட்கு) - (சட்கான்) - சுக்கான் = அளவிறந்து சுடப்பட்ட செங்கல். சுள் - சுர் - சுரம் = சுடும்பாலை. சுர் - சுரன் - சூரன் = கதிரவன். சுர் - சுறு - சுறுக்கு (சுடுதற் குறிப்பு). சுறு - சுறீர் (சு.கு.). சுள் - சுடு - சுடல் - சுடலை. சுடு - சூடு. சுடு - சுடர் - சுடரோன். துள் - தெள் - தெறு. தெறுதல் = சுடுதல். நீங்கிற் றெறூஉம் (குறள். 1104). ii. எரிதல் சுடுவது நெருப்பு. நெருப்பின் இயல்பு எரிதல். உல் - உரு. உருத்தல் = அழலுதல். உரு - உருப்பு - உருப்பம் = வெப்பம். உரு - உருமம் = வெப்பம். நண்பகல். உருமகாலம் = கோடைக் காலம். உரு - உரும் - உருமி. உருமித்தல் = புழுங்குதல். உல் - எல் - எரி. உள் - உண் - உண்ணம் = வெப்பம். குள் - கொளு - கொளுந்து - கொளுத்து (பி. வி.) கொளுந்துதல் = எரிதல். குள் - (கள்) - காள் - காய். காய்தல் = எரிதல். காய் - காய்ச்சல். காய் - (காய்ந்து) - காந்து. ஒ.நோ. வேய்ந்து - வேந்து. காள் - காளம் - காளவாய் = சுண்ணாம்புக்கல் சுடுமிடம். (கள்) = கண் - கண - கணப்பு = நெருப்பு. (கண்) - கணை = உடம்பிலுள்ள சூடு. (கண்) - கண்டு = அக்கி. கும்புதல் = எரிதல். சுல் - சுல்லி = அடுப்பு, அடுக்களை, மடைப்பள்ளி. சுள் - சுளுந்து = தீப்பந்தம். சுள் - சுண்டு - சுண்டான் = தீப்பந்தம். புள் - புழுங்கு. புழுங்குதல் = எரிதல். புகைதல் = எரிதல். பொள் - பொசு - பொசுங்கு - பொசுக்கு (பி. வி.) பொசுங்குதல் = எரிதல். முள் - முளி. முளிதல் = எரிதல். முள் - வெள் - வெட்டை = உடம்பிலுள்ள சூட்டு வகை. வெள் - (வெட்கை) - வெக்கை. வெள் - வெய் - வெய்யில் - வெயில். வெய் - வெய்யோன். வெய் - வெயர் - வெயர்வை. வெயர் - வேர் - வேர்வை. வெயர் - வியர் - வியர்வை. வெய் - வே - வேகு. வேகு - வேகம் = கடுமை. வே - வெந்தை. வே - வேன் - வேனல் - வேனில். வே - வேம் - வேம்பு = சூட்டை யுண்டாக்கும் பழமரம் அல்லது வேனிலில் தழைக்கும் மரம். வேம் - வேங்கை = வேகும் இடம்போல் தோன்றும் விலங்கு. வெய்ம்மை - வெம்மை. வெம் - வெம்பு - வெப்பு - வெப்பம். வெம்பு - வெம்பல். வெள் - வெது - வெதும்பு - வெதுப்பு. இனி, உ - அ திரிவுப்படி உல் அடியினின்று பிறந்த அன்று அனல் அழல் முதலிய சொற்களும், குல் அடியினின்று பிறந்த கன்று கனல் முதலிய சொற்களும், துல் அடியினின்று பிறந்த தழல் (தணல்) என்னும் சொல்லும், உளவென அறிக. iii. விளங்குதல் எரிவது விளங்கும். எரியாத பொருள்களின் விளக்கமும் ஒருபுடை யொப்புமை பற்றி விளக்கமெனவே படும். உல் - (இல்) - இலகு - இலங்கு - இலக்கு - இலக்கம் = விளக்கம். (இல்) - எல் = ஒளி. எல்லே யிலக்கம் (தொல். இடை. 21). உள் - ஒள் - ஒளி - ஒளிர் - ஒளிறு. உள் - உடு. உவி - அவி - அவிர். அவிர்தல் = விளங்குதல். குல் - (குல) - குலவு - குலாவு. குலவுதல் = விளங்குதல். குல் - குரு = ஒளி, நிறம். குள் - (கள்) - களை = அழகு. கள் - (கடு) - கடி = விளக்கம். அருங்கடிப் பெருங்காலை (புறம். 166). குள் - கெழு = ஒளி, நிறம். கெழு - கேழ் = ஒளி, நிறம். கேழ் - கேழல் = நிறம். குறுவுங் கெழுவு நிறனா கும்மே (தொல். உரி 5) கள் - காள் - காய் - காய்தல் = விளங்குதல். நிலாக் காய்கிறது என்னும் வழக்கை நோக்குக. சுல் - (சொல்) - சொலி. சொலித்தல் = விளங்குதல். சொல் - சொன்றி, சோறு. சொல் = பொன்போற் பொலியும் கூலமாகிய நெல். சுள் - சுடு - சுடர். சுடர்தல் = ஒளிவிடுதல். துல் - துலகு - துலங்கு - துலக்கு - துலக்கம் = விளக்கம். துள் - துளகு - துலங்கு - துலக்கு - துலக்கம் = விளக்கம். துள் - துளகு - துளங்கு - துளக்கு - துளக்கம் = விளக்கம். துளங்கொளி = கேட்டை. துளங்கு - தளங்கு - தயங்கு - தயக்கம் = விளக்கம். (துகு) - தகு தகதக என்று சொலிக்கிறது என்பது வழக்கு. தகு - தங்கு - தங்கம். தகு - தகை = அழகு, விளக்கம். (துகு) - (திகு) - திகழ். திகழ் - திங்கள். (நுல்) - நில் - நில - நிலா - நிலவு. நில் - நெல் = பொன்போல் விளங்கும் கூலம். சடைச் செந்நெல் பொன் விளைக்கும் (நள. 68) பொன்விளைந்த களத்தூர் முதலிய தொடர்களை நோக்குக. நில் - நிழ - நிழல் = ஒளி. நிழல் - நிகர் = ஒளி. நிழல் - நிழறு - நிழற்று. புல் - (பூல்) - பூ = பொலிவு, அழகு, மலர், பூத்தல் = பொலிதல், அழகாதல், பூ மலர்தல். புள் - பள் - பள - பளபளப்பு. பள் - (பாள்) - பாளம் = பளபளப்பு. பாள் - வாள் = ஒளி. வாள் ஒளியாகும் (தொல், உரி, 69). பள் - பட்டு - பட்டம். பட்டுப்பட்டென்று நிலா அடிக்கிறது, பட்டப்பகல் என்னும் வழக்குகளை நோக்குக. பள் - பளீர் (ஒளிர்தற் குறிப்பு). பள் பளிச்சு (ஒ. கு.) பள் - பளிங்கு = கண்ணாடி, வெள்ளி (Venus). பட்டு = பொலிவுற்ற துணி. புல் = பொல். - பொலி - பொலிவு. பொல் - பொற்பு. பொல்லுதல் = பொலிதல். பொல் - பொலம் - பொலன். பொல் - பொன் = பொலிவு, அழகு, பொலியும் தங்கம். பொல் - பொற்றி - பொறி = அழகு. பொற்ற = அழகிய, நல்ல. பொற்ற தாமரையிற் போந்து (சிந்தாமணி. 2608). பொல்லாத - பொல்லா = அழகற்ற, தீய. பொல்லாச் சிறகை விரித்து (மூதுரை. 14). பொல்லாப்பு = தீமை, பொல்லாங்கு = தீமை. பொல்லார் = தீயவர். நல்லது, நலம் பொலம் முதலிய இணை மொழிகளில் பின்மொழி எதுகை நோக்கித் திரிந்ததாகும். முல் - (மில்) - மின் - மின்னல். மின் - மீன் = மீனம். (மில்) - வில் = ஒளி. முள் - (மள்) - மழ - மழமழப்பு. மழ - மாழை = பொன். மாழை - மாடை - மாசை = பொற்காசு. மள் - மண் - மணி = விளங்கும் கல், மண்ணுதல் = அலங்கரித்தல். முள் - (மிள்) - மிளிர். முள் - மெள் - மெரு - மெருகு = பளபளப்பு. முள் - விள் - விளங்கு - விளக்கு - விளக்கம். விளங்கு - பிறங்கு - பிறக்கம் = விளக்கம். விள் - (வெள்) - வெட்டு - வெட்டம். வெட்டுதல் = மின்னுதல். வெள் - (வெளிச்சு) - வெளிச்சம். வெட்ட வெளிச்சம் என்னும் வழக்கைக் காண்க. iv. நீறாதல் எல்லாக் கனப்பொருள்களும் எரியினால் எரிக்கப்பட்டபின் நீறாகும். நீறு பூத்த நெருப்பு என்னும் வழக்கை நோக்குக. கும்பு - கும்பி = சுடுசாம்பல். உள் - உண் - உடு - அடு - அடல் - அடலை = சாம்பல். சும் - சும்பு - (சம்பு) - சாம்பு - சாம்பல் - சாம்பர். சாம்பு - சாம்பான் = பிணத்தைச் சுடுபவன். v. காய்ச்சுதல் நெருப்பில் சுடப்படும் பொருள்களும் உலையிலிட்டுக் காய்ச்சப் படும் பொருள்களும் காயும் அல்லது அவியும். உல் - உலை = சமையற்குக் காய்ச்சும் நெருப்பு. கொல்லன் களரியை உலைக்களம் உலைத்தரை என்றும் சமைத்தற்கு நெருப்புள்ள அடுப்பின் மேல் நீரிட்ட கலம் ஏற்றுவதை உலையேற்றுதல் என்றும் கூறுவது காண்க. உவி - அவி. உவியல் - அவியல். (குள் - கள் - காள்) - காய் - காய்ச்சு காய்தல் சுடுதல். காய்ச்சுதல் = சுடவைத்தல். கும் - குமை. குமைதல் = புழுங்குதல். கும் = கும் மாயம் = குழைய. சுள் - சுடு. சுண்டு - சுண்டல் = நீர் சுண்டிய பயறு. சுண்டுதல் அவித்தல். துவர் - துவரம் = துவட்டல். துவர் - துவர்த்து - துவட்டு - துவட்டல். புள் - புழுங்கு - புழுங்கல். புழுங்கு - புழுக்கு - புழுக்கல். பொள் - பொரி - பொரியல். பொரி = பொரித்த அரிசி. பொள் - பொசு - பொசுங்கு - பொசுக்கு, பொசுக்குதல் = சுடுதல். பொசுக்கு - பொதுக்கு. பொதுக்குதல் = வாழைக்காயைச் சுட்டுப் பழுக்கவைத்தல். vi. உலர்தல் வெயிலிலும் நெருப்போரத்திலும் காயும் ஈரப் பொருள்கள் உலரும். உல் - உல. உலத்தல் = காய்தல். உல - உலவை = காய்ந்தமரம். உல - உலர் - உலறு. உள் - உண் - உண. உணத்தல் = உலர்தல். உண - உணத்து (பி.வி.). உண - உணங்கு. உணங்குதல் = உலர்தல். உணங்கு - உணக்கு (பி.வி.). (உல் - எல் - ) எரி - எரு = காய்ந்த சாணம். குல் - கல. கலகலத்தல் = நன்றாகக் காய்தல். (குள் - கள் - காள்) - காய்தல் = உலர்தல். சுள் = கருவாடு. சுள் - சுள்ளி = காய்ந்த குச்சு. சுள் - சுட்கு. சுட்குதல் = வறளுதல். சுட்கு - சுட்சும் = வறண்டது. சுட்கு - சுக்கு = காய்ந்த இஞ்சி. சுக்கு - சுக்கல் = காய்ந்தது. சுக்குதல் = உலர்த்தல். சுள் - சுண்டு - சுண்டி = சுக்கு. சுண்டு - சண்டு = காய்ந்த புல்தாள். சுள் - சுர் - சுரி. சுரித்தல் = வற்றுதல். சுர் - (சர்) - சரக்கு = காய்ந்தபொருள். (சர்) - சருகு = காய்ந்த இலை. சும்பு - சுப்பு - சுப்பல் = சுள்ளி. சுப்பு - சுப்பி = சுள்ளி. சுப்பு என்பது விரைந்து நீர் வற்றுதற் குறிப்பு. சுள் - சுரு - சுரி. சுரித்தல் = வற்றுதல். நெருப்பிடைச் சுரிக்க நீட்டும் (கம்ப. இரணிய. 137) சும்பு - சம்பு - சாம்பு. சாம்பதுல் - வாடுதல். சும் - (சுவ்) - சுவறு. சுவறுதல் = நீர்வற்றுதல். சுவ்வென்று உள்ளே நீரை இழுக்கிறது என்பது வழக்கு. சுடு - சொடு - சொடி. சொடிதல் = வெயிலில் வாடுதல். சொடித்தல் = வற்றுதல். சோடை = வறட்சி. துவர்தல் = உலர்தல். துவர் = விறகு, சருகு. துவர் - துவர்த்து - துவட்டு. துவர்த்துதல் = ஈரம் புலர்த்துதல். (துவ்) - தவி - தாவம். (துவ்) - (துகு) - தகு - தகை = தாகம். தகு - தாகம். புல் - புலர். புல் - பொல் - பொலு. பொலுபொலுத்தல் = நன்றாகக் காய்தல். பொல் - (பொரு) - பொருக்கு = காய்ந்த சோற்றுப் பருக்கை. முள் - முளி. முளிதல் = காய்தல், உலர்தல். vii. செந்நிறம் நெருப்பானது சிவந்த நிறமாயிருப்பதால், நெருப்பின் பெயர்களி னின்றும் அப்பெயர்களின் அடிகளினின்றும் செந்நிறத்தைக் குறிக்கும் சொற்கள் திரிந்துள்ளன. இளங்கோவடிகள், எரிநிறத் திலவம் (சிலப். 5: 214.) என்று கூறுதல் காண்க. எரிமலர் = முருக்குமலர் (சீவக. 662.) எரிமலர் = செந்தாமரை (சீவக. 2741). உல் - அல் - அலத்தம் - அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு. அல் - அர் - அரன் = சிவன் (செந்நிறத்தான்). தமிழருள் ஒரு சாரார் இறைவனைத் தீவடிவினனாகக் கருதியதால், அவனை அரன் என்றும் சிவன் என்றும் பிறவாறும் அழைத்தனர். அர் - அரக்கு = சிவந்த மெழுகு. அர் - அரத்தம் = சிவப்பு. குருதி. அரத்தம் (அரத்தம் என்பதே சரியான வடிவம். அது முதல் கெட்டு வழங்கி வடசொல்லெனப் பிறழவுணரப்பட்டு, பின்பு இகரம் முன்னிட்டெழுதப்படு கின்றது ஒ.நோ. அரங்கன் - ரங்கன் - இரங்கன்). - அத்தம் = சிவப்பு அத்தம் - அத்தி = சிவந்த கனிதரும் மரம். அர் - அருணம் = சிவப்பு. அருணன் = காலைச் செங்கதிரோன். அருணமலை = சிவன் அழற்பிழம்பாக நின்ற மலை. அருணமலை - அண்ணாமலை. அர் - (ஆர்) - ஆரியம் = சிவந்த கேழ்வரகு. உல் - (இல்) - இலந்தை = சிவந்த கனிதரும் முட்செடி. (இல்) - (இர்) - இரத்தி = இலந்தை. (இர்) - இராகி = கேழ்வரகு. உல் - எல் - (எர்) எருவை = செம்பருந்து. உல் - உரு - உரும்பு - உரும்பரம் - உதும்பரம் = சிவப்பு, செம்பு. குல் - குலிகம் = சிவப்பு, சாதிலிங்கம். குல் - குரு = சிவப்பு. குருவெறும்பு = செவ்வெறும்பு. குரு - குருதி = சிவப்பு, அரத்தம். குருதிக் காந்தள் = செங்காந்தள். குருதிக்கிழமை = செவ்வாய்க்கிழமை. சுள் - (சொள்) - சோண் - சோணம் = சிவப்பு. சோண மலை = அருணமலை. சோணை = சிவப்பு. சொள் - செள் - (செட்டு) - செட்டி = செம்மலர் மரவகை (வெட்சி). செட்டு - செட்டை - செச்சை = சிகப்பு, செந்துளசி. செய் = சிவப்பு. செய்யன் = சிவந்தவன். செய் - செய்யான் = செம்பூரான். செய் - செயிர். செயிர்த்தல் = சிவத்தல், கோபித்தல். கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல். உரி. 74) செய் - செயலை = சிவந்த அசோகந் தளிர். செய் - சேய் = சிவப்பு. முருகன். சேயோன் = சிவன். முருகன். (முதற்காலத்தில் சேயோனும் சிவனும் ஒருவரே). செய்ம்மை - செம்மை. சேய் - சே. சேத்தல் = சிவத்தல். சே - சேது = சிவப்பு. சேது - சேத்து = சிவப்பு. சேத்து - சேந்து - சேந்தன் = சேயோன் (முருகன்). சேது - கேது = சிவப்பு. சுல் - (சோல்) - சால் - சாலி = செந்நெல். (சோல்) - சேல் = செங்கெண்டை மீன். சேல் - சேலேகம் = சிந்துரம். (சோல்) - சோர் - சோரி = அரத்தம். சும் - செம் - செம்பு - செப்பு கெம்பு - கெம்பு = சிவந்த கல். செந்தூள் - செந்தூளம் - செந்தூரம் - செந்துரம் - சிந்துரம் = செஞ்சுண்ணம். செம் - செவ் - செவிள் = மீனின் சிவந்த மூச்சுறுப்பு. செவிள் - செகிள். செவிள் - செவிடு = செவிப்பக்கம், கன்னம். செவிடு - செவி = செவிட்டிலுள்ள காது. செவிடு - செகிடு. (சொகு) - சொக்கம் = செம்பு. சொக்கன் = சிவன். (சொகு) - செகு - செகில் = சிவப்பு. கசகு - செகு = சிவப்பு. சேகு - சேகை = சிவப்பு. செகு - செக்கம் - செக்கர் = சிவப்பு, செவ்வானம். செக்கச் செவேர் என்னும் வழக்கை நோக்குக. செவ் - செவ - சிவ - சிவப்பு - சிகப்பு, சிவ - சிவம் - சிவன் - சிவை. சிவ - சிவத்தை. செவல் - சிவல் - சிவலை செவல் - செவ்வல். கல்லா மக்கள் சிவப்பைச் சுவப்பு என்று சொல்லல் கவனிக்கத் தக்கது. ஆரியர் இந்தியாவிற்குள் புகுமுன்னரே தமிழர் சிவ வழிபாட்டி னராயிருந்தமையாலும், சிவன் என்பது தமிழ்ச் சொல்லாதலா லும், அதற்குத் தமிழ் வழியாய்ப் பொருள் கூறாது வடமொழி வழியாய் நன்மை செய்பவன் என்று பொருள் கூறுவது பொருந் தாது. அந்தி வண்ணன் செந்தீ வண்ணன் மாணிக்கம் முதலிய பெயர்கள் சிவனுக்குப் பயின்று வருதல் காண்க. சும் - (தும்) - தும்பு - துப்பு = சிவப்பு. பவழம். துப்பு - துப்பம் = அரத்தம். தும்பு - தோம்பு = சிவப்பு. தோம்பு - (தாம்பு) - தாம்பரம் = சிவப்பு, செம்பு. தாம்பரம் - தாம்பரை - தாமரை = செம்மலர்வகை. தாமரை - மரை. நாட்டுப்புறத்து மக்கள் இன்றும் தாமரையைத் தாம்பரை என்றே வழங்குவர். தாமரை என்பது செம்மலரையும் முளரி என்பது வெண்மலரையும் துவக்கத்திற் குறித்ததாகத் தெரிகின்றது. துள் - (தள்) - தளவு - தளவம் = செம்முல்லை. தும் - (தல்) - துவர் = சிவப்பு. காவி. பவழம், பாக்கு, காசுக்கட்டி. துவர்ப்பு = சிவப்பு. காசுக்கட்டி, அதன்சுவை. துவர் - துவரி = காவி, இலவம்பூ. துவரித்தல் = செந்நிறமூட்டுதல். துவர் - துவரை = செம்பயறு. துவரை - தோரை = செங்காய்ப்பனை, அரத்தம். துவர் - தோர். நெய் + தோர் = நெய்த்தோர் = அரத்தம். துவர் - துகிர் = பவழம். துவள் - துவண்டை = காவியுடை. அரன், சிவன், சேந்தன், சேயோன், சொக்கன் என்பன ஒருபொருட் சொற்கள். கரியோன், கண்ணன், மாயோன், மால் முதலியவை திருமாலையும்; கரியோள் (கருப்பாய்). காளி, மாயோள், மாரி முதலியவை காளியையும்; கருமை பற்றிக் குறிக்கும் ஒரு பொருட் சொற்களாயிருத்தலை நோக்குக. சொக்கன் என்பது அழகன் என்று பொருள் படுமேனும். சிவனைக் குறிக்கும் போது அப்பொருள் படாது. viii. தெரிதல் விளங்கும் (ஒளிரும்) பொருள்கள் தெளிவாகத் தெரிதலால், விளக்கத்தைக் குறிக்கும் சொற்கள் தெளிவாகத் தெரிதலைக் குறிக்கும். துலங்குதல் = விளங்குதல், தெளிவாகத் தெரிதல். துல் - தெல் - தென். தென்படுதல் = தெரிதல், தோன்றுதல், புலப் படுதல். துளங்குதல் = விளங்குதல். துளங்குமிளம் பிறையாளன் (தேவா. 88, 10) துளங்கொளி = மிக்கவொளி. துள் - துண் - துணி = ஒளி. (பிங்.). துள் - தெள். தெள்ளுதல் = விளங்குதல். தெளிவாதல். தெள்ளுங் கழலுக்கே (திருவாச. 10, 19). தெள் - தெளி. தெளிதல் = விளங்குதல், நன்றாய்த் தெரிதல். தெளி - தெரி. தெரிதல் = விளக்கமாதல், தோன்றுதல். முள் - விள் - விளங்கு. விளங்குதல் = ஒளிர்தல். தெளிவாகத் தெரிதல். ix அறிதல் தெரியும் பொருள் அறியப்படும். தெள்ளிமை = அறிவுநுட்பம். தெள்ளியர் = தெளிந்த அறிவினர். தெளிதல் = அறிதல். தெளி - தெரி. தெரிதல் = அறிதல். தெள் - தெருள். தெருள்தல் = அறிதல், உணர்தல். தெரி - தேர். தேர்தல் = அறிதல். x. ஆராய்தல் தெரியாத பொருளைப் பற்றிய அறிவு ஆராய்ச்சி வழிப்படுவதாம். தெள்ளுதல் = ஆராய்தல். தெள் - தெளி. தெளிதல் = ஆராய்தல். தெளி - தெரி. தெரிதல் = ஆராய்தல், தெரிந்தெடுத்தல். தெரி - தேர். தேர்தல் = ஆராய்தல். xi. தெளிதல் ஆராய்ச்சியால் ஐயம் நீங்கித் தெளிவு பிறக்கும். அதன்பின் தெளியப் பட்டதன் மீது நம்பிக்கையுண்டாம். அதனால் ஒரு வினை முயற்சிக்கு உறுதியான தீர்மானஞ் செய்யப்பெறும். துணிதல் = தெளிவாதல், உறுதியாக முடிவு செய்தல், துணிவு = உறுதி, சூழ்ச்சித் தெளிவு. துன்னல் போகிய துணிவினோன் (புறம். 23) துணிச்சல் = கடுமனத்திடம். துல் - தெல் - தென் - தென்பு = தெளிவு. தென்பு - தெம்பு. தெள்ளுதல் = தெளிவாதல். தெள் - தெளி. தெளிதல் = ஐயநீங்குதல், நம்புதல். தெள் - தெண் - தெட்பு - தெட்பம் = தெளிவு தெட்டவர் = தெளிந்தவர். தெரி - தேர். தேர்தல்= உறுதிகொள்ளுதல், முடிவு செய்தல். தேர் - தேறு. தேறுதல் = தெளிதல், திடங்கொள்ளுதல், நம்புதல், துணிதல். தேறு - தேற்று - தேற்றம் = தெளிவு, உறுதி. தேற்றன் = உண்மையறிவுள்ளவன். தேற்று தேற்றரவு = தேற்றுதல், தெளிவித்தல். தெளிவு என்பது கலக்கத்திற்கு எதிராயிருப்பதால், உள்ளம் ஐயுறவு நீங்கி உண்மையறிவதும்,ஒருவன்நோயுண்டநிலையில் ஏற்பட்ட கலக்கம் நீங்கி அவன் உடம்பு வலுப்பெறுவதும், தேர்விற்கு முன்னுள்ள ஐயம் நீங்குமாறு மாணவன் தேர்ச்சி காட்டுவதும். தெளிதல் அல்லது தேறுதல் என்னுஞ் சொல்லாற் குறிக்கப்பெறும். நீர்த்தெளிவு நீர்த் தெளிவும் கலங்கல் நீக்கமே. மண்ணுந் தூசியும் பிறவும் கலந்திருக்கும் போது நீரூடு பார்த்தல் இயலாது. அவை நீங்கிய நிலையில் நீர் பளிங்கு போலிருப்பதால், அதன் உள்ளும் அடியும் உள்ள பொருள்கள் தெளிவாய்த் தெரியும். அங்ஙனம் தெரியும் நீர் தெண்ணீர். சிலவிடத்து, ஊடு தெரியாத நீர்ப்பொருளும் அதனினுந் திண்ணிய நிலையுடன் ஒப்பு நோக்கித் தெளிவு எனப்படும். துள் - துண் - துணி. துணிதல் = தெளிதல். துணிநீர் மெல்லவல் (மதுரைக். 283.) துள் - தெள் - தெண் - தெட்பு - தெட்பம் = தெளிவு. தெள் - தெளி - தெளிவு. தெட்ட = தெளிந்த. மால்கரி தெட்ட மதப்பசை (கம்ப. சரபங். 8). தெள் - தெடு. திண்ணமில்லாத கஞ்சியைத் தெடுதெடுவென்றிருக் கின்றதென்பர். தெள் - தெரி - தேர் - தேறு = தெளிவு. தேறுதல் = தெளிதல். தேறு = நீரைத் தெளிவிக்கும் தேற்றாங்கொட்டை. தேறுபடு சின்னீர் போல (மணி. 23, 142). தேறு - தேற்று = தெளிவு. தெளிவிக்கை, தேற்றாங் கொட்டை (பிங்). தேற்றின் வித்திற் கலங்குநீர் தெளிவதென்ன (ஞானவா, மாமவியா. 3) தேற்று - தேற்றா (தேற்றாங்கொட்டை, அக்கொட்டை மரம்). தேற்றாவினுடைய விதையைக் கொண்டு கலத்தே மெல்லத் தேற்றக் கலங்கிய நீரிற் சிதைவு தெளியுமாறு போல (கலித். 142, வரை). xiii. கள் தெளிவு கள்ளும் தேனும் பொதுவாக அரித்தும் வடிகட்டியும் தெளிவான தாக எடுக்கப் பெறுவதால், தெளிவு என்னும் சொல் அவ்விரண் டையும் ஆகுபெயராய் உணர்த்திற்று. இனிமையும் வெறிவிளைப்பும் கள்ளுக்குந் தேனுக்கும் பொதுவியல் பாதலால், கள் தேன் மது மட்டு முதலிய பெயர்கள் அவ்விரண் டையும் பொதுப்படக் குறிக்கும். இயற்கைக் கள்ளும் செயற்கைக் கள்ளும் எனக் கள் இருவகைப் படும். துல் - (தெல்) - தென் = (தெளிவு, கள்) இனிமை. தென்னிசை பாடும் பாணன் (திருவாலவா. 56, 7). தென் - தேன் = தெளிவு, கள், மது. தேன் - தேம் - தீம் - தீவு = இனிமை. தேன் - தேனி. தேனித்தல் = இனித்தல். தீவிய = இனிமையான. தீம் - (தி) - தித்தி. துள் - தெள் - தெளிவு = பதநீர், கருப்பஞ்சாறு. தேறு - தேறல் = தெளிந்த கள், தேன். xiv. வெண்மை ஒளியானது வெண்மையாயிருத்தலால், ஒளியை அல்லது விளக்கத்தைக் குறிக்கும் சொற்களினின்று (அல்லது சொல்லடி களினின்று) வெண்மையைக் குறிக்குஞ் சொற்கள் பிறந்துள்ளன. நெருப்பு சிவந்ததென்றும், கடுமையான கதிரவனொளி வெண்மை யானதென்றும், பொதுவாகக் கொள்ளப்படும். குரு - குருகு = வெண்மை. துல் - துல்லியம் = வெண்மை. துள் - தெள் - தெளி. தெளிதல் = வெண்மையாதல். புல் - பல் - பால் = வெண்மை. பால் - வால் = வெண்மை. முள் - முரு - முருந்து = வெண்மை. முள் - விள் - விளர். விளர்த்தல் = வெண்மையாதல். விள் - வெள் - வெண்மை. வெள் - வெள்ளை. வெள் - வெளு. xv. வெளுத்தல் விள் - விளர். விளர்த்தல் = வெண்மையாதல், வெட்குதல். விள் - விடி - விடியல் = கரிய இருள் நீங்கி வெளிய ஒளி தோன்றல். விள் - வெள் - வெள்ளென = விடிய, வெள்ளெனக் காட்டி = வெள்ளெங்காட்டி = விடியற்காலை. வெள் - வெளு. கிழக்கு வெளுத்தல் = விடியுமுன் கீழ்த்திசை வெள்ளையாதல். வெளுத்தல் = வெண்ணிறமாதல், வண்ணான் துணிகளை வெள்ளையாக்குதல் அல்லது துப்புரவாக்குதல். வெள் = வெள்கு. வெள்குதல் = நாணத்தால் முகம் வெளுத்தல். வெள்கு - வெட்கு - வெட்கம். வெள் - வெளிறு, வெளிறுதல் = சிறிது வெண்ணிறமாதல். xvi. வெண்மையான பொருட்கள் உல் - எல் - எலும்பு - என்பு. எல் - எலி = வெள்ளையான எலிவகை. கருப்பை = காரெலி. சுல் - சுல்லு = வெள்ளி. துல் - துலம் = பருத்தி. துலம் - துலவம் = பருத்தி. துல் - தூல் - தூலினி = இலவு (பஞ்சு). தூல் - தூலை = பருத்தி. தூல் - தூலம் = இலவு. தூலம் = தூலகம் = பருத்தி. துள் - துய் = பஞ்சு. துய் - தூய் - தூசு = பஞ்சு. துள் - தும்பு - தும்பை - வெண்பூச் செடி வகை. வெள்ளாடைக்குத் தும்பைப் பூவை எடுத்துக் காட்டுவது உலக வழக்கு. புல் - பல். பல் - (பன்) - பன்னல் = பருத்தி. பன் - பனுவல் = பருத்தி. பல் - பால். பால் - வால் - வாலுகம் = வெண்மணல். புள் - பள் - பளிங்கு. பள் - பாள் - பாளிதம் = சோறு. பால் - பாலை = பாலுள்ள மரவகை. அம்மரம் வளரும் நிலம். முல் - முல்லை = வெண்பூக்கொடி வகை, அது வளரும் நிலம். முல் - மல் = மல்லி - மல்லிகை. முள் - முரு - முருந்து = மயிலிறகின் அடி எலும்பு. முள் - முளரி = வெண்டாமரை. முள் - (முண்டு) - முண்டகம் = வெண்டாமரை. முள் - விள் - விள = வெண்தோட்டுக்காய் மரவகை. விள - விளம். விள - விளா - விளவு - விளவம். விளா - விளாத்தி. விள - விளர் - விளரி = விளா. விளா = நிணம். விளவம் - வில்வம் = விளாவிற்கு இனமான கூவிளம். கருவிளம் = மரப்பட்டை கருத்துள்ள விளாவகை. விள் - வெள் - வெள்ளில் = விளா. வெள் - வெள்ளம் = வெளுப்பான புதுப்பெருக்கு நீர். வெள் - வெள்ளி. வெள் - வெள்ளை. வெள் - வெளிச்சி = வெண்ணிறக் கொண்டை மீன். வெள் - வெளிர் - வெளிறு = விளையாத வெண்மரம். அறிவின்மை. குறிப்பு : - குருகு என்பது கொக்கை மட்டுங் குறியாது நாரை காரன்னம் முதலிய பற்பல நீர்ப்பறவை வகைகளைக் குறித்த லால், அவற்றைக் குறிக்கும்போது வளைந்த கழுத்துள்ளது என்று பொருள் கொள்ளப்படும். xvii. தூய்மை அழுக்கெல்லாம் பெரும்பாலும் பிற நிறமாயிருப்பதாலும், அழுக்கற்ற சாயந்தோய்க்காத ஆடை வெண்மையாயிருப்ப தாலும், சுவரின் அழுக்கைப் போக்க வெண்சுண்ணம் பூசுவதாலும், வெண்மை தூய்மைக் கடையாளமாம். துள் - துய் - துய்ய = தூய. தூய் - து - துப்பு - துப்புரவு = தூய்மை. துய் - தூய் - தூய்மை. தூய் - தூ. புல் - பல் - பால் - வால். வான்மை = தூய்மை. வாலாமை = தூய்மையின்மை. வாலறிவு = தூய அறிவு. முல் - முல்லை = கற்பு. முள் - வெள் - வெள்ளை = தூய்மை, தூய ஆடை, வெண்பா. வெள் - வெளி = வெண்பா. எக்காரணத்தையிட்டும் வேற்றுத்தளை விரவாது தன்றளை கொண்டே இயலும் தூய்மையுடைய பா வெண்பா (வெள்+பா). வெள்ளை = களங்கமற்றவன், சூதுவாதில்லாதவன். வெள்ளைக்கில்லை கள்ளச் சிந்தை என்றார் ஔவையார். வெள் - வெள்ளந்தி = கள்ளங் கவடற்றவன். xviii. வெறுமை தூய்மை யென்பது வேற்றுப் பொருளும் வேற்றுப் பொருளி யல்புங் கலவாததாதலின், தூய்மைக் கருத்தில் தனிமைக் கருத்தும் தனிமைக் கருத்தில் வெறுமைக் கருத்தும் தோன்றும். தனிக்கருப்பைச் சுத்தக் கருப்பு என்று கூறுதல் காண்க. வெண்மை = தூய்மை, தனிமை, வெறுமை. வெள்ளிலை = இலை தவிர வேறு பூ காய் ஒன்றுமில்லாத கொடியிலை. அல்லது உணவின்றியும் வழங்கப்படும் இலை. வெண்பாட்டம் = மாராயமில்லாது வெறுமையான பாட்டம். வெண்ணிலைக் கடன் = ஈடில்லாது வெறுமையாகக் கொடுக்கப் படும் கடன். வெள் - வெறு - வெறுமை = தனிமை, ஒன்றுமின்மை. வெறு இலை வெற்றிலை (வெள்ளிலை.) வெறுஞ்சோறு = கறிவகையில்லாத் தனிச் சோறு. மாட்டுத் தாம்பணியில் (தாவணியில்) எங்கு பார்த்தாலும் வெறும் மாடாயிருக்கும் என்பது போன்ற வழக்கைக் காண்க. வெறுவாய் = ஒன்றுமில்லாத வாய். வெறு - வெறுமம் - வெறுமன். வெறுமனே போய் விட்டான் என்பது. ஒன்றுஞ் சொல்லாது அல்லது செய்யாது போய்விட்டான் என்று பொருள்படுவதை நோக்குக. வெறு - வெற்று. வெற்றிடம் = ஒன்றுமில்லாத இடம். வெற்று வண்டி = வெறு வண்டி. வெற்றாள் = தனியாள். வெறு - வெறி. வெறித்தல் = முகிலும் மழையுமின்றி வானம் வெறுமையாதல். வெறி - வெறித்து - வெறிக்சு = வெறுமை. ஆளிருந்து போய்விட்ட வெற்றிடத்தைக் கண்டு. வெறிச் சென்றிருக்கிறது என்பர். xix. வறுமை பொருளில்லா வெறுமையே வறுமை. வெள் - (வெண்கு) - வெங்கு - வெங்கன் = ஒன்று மில்லாதவன். வெள் - வெறு. வெறும்பயல் = ஒன்றுமில்லாத பயல். வெறு - வெற்று. வெற்றுக்கட்டை = ஒன்றுமில்லாதவன். வெற்றெனத் தொடுத்தல் = (சிறந்த) பொருளின்றிச் சொல்லை யடுக்குதல். வெறு - வறு - வறுமை = பொருளின்மை. வறுங் கூவல் = நீரில்லாக் கிணறு. ஒருநாளும் போகாதவன் திருநாளுக்குப் போனானாம். திருநாளும் வெறுநாளாய்ப் போனதாம் என்பது பழமொழி. வெறுநாள் = (சிறந்த) நிகழ்ச்சியற்ற நாள். xx. வீண்மை பயனில்லா வெறுமை வீண்மை. விள் - வீண். வெள் - வெட்டி. வெட்டி வேலை = பயனற்ற வேலை, வீண் வேலை. வெட்டியாள் = வேலை செய்யாத ஆள். வெள் - வெறு. வெறும் பேச்சு = பயனற்ற பேச்சு. வெறு - வறு - வறிது = வீணானது, வீணாக. xxi. வெளி வானவெளி ஒன்றுமற்ற வெற்றிடமாதலால், அல்லது வெற்றிட மாய்த் தோன்றுதலால், அது வெறுமை யுணர்த்துஞ் சொற்களாற் குறிக்கப்பெற்றது. விள் - விண் = ஆகாயம். விண் - விண்டு = ஆகாயம். விள் - (விசு) - விசும்பு. விள் - வெள் - வெளி = ஆகாயம். வெள்ளிடை = வெறுமையான இடம். வறிது நிலைஇய காயமும் (புறம் 20) xxii. வெளிப்பாடு வெளிப்பாடாவது ஒன்று இன்னொன்றன் உள்ளிருந்து வெளி வருதல். விள்ளுதல் = வெளிவிட்டுச் சொல்லுதல். விள் - விளம்பு - விளம்பரம். விள் - விடு. விடுதல் = வெளிவருதல், பிஞ்சு விடுதல். இந்த மரம் பிஞ்சு விட்டிருக்கிறது என்பது வழக்கு. விடுத்தல் = வெளிப்படக் கூறுதல். விடு - (விடி) - (விடிச்சி) - விரிச்சி = தெய்வத்தால் விளம்பப்படு வதாகக் கருதப்பெறும் நள்ளிரா நற்சொல். பாக்கத்து விரிச்சி = படைமறவர் சென்று தங்கிய பக்கத்து ஓர்ந்து கேட்கும் விரிச்சி. விடு - விடை. விடைத்தல் = வெளிப்படுத்துதல். விள் - வெள் - வெளி - வெளிச்சி = காதிற் புறப்படும் கொப்புளம். கொப்புளத்திற்குப் புறப்பாடு என்னும் பெயருண்மை நோக்குக. வெளி - வெடி. வெடித்தல் = வெளிவருதல், பிஞ்சு விடுதல். xxiii. சோம்பல் சூட்டினால் சோம்பல் உண்டாகும். பசிசோம்பு மைதுனங் காட்சிநீர் வேட்கை தெசிகின்ற தீக்குணமோ ரைந்து என்பது அடியார்க்கு நல்லார் மேற்கோள். சுள் - கணங்கு - சுணக்கம் = வேலைத் தளர்ச்சி, தாழ்ப்பு, தடை, சோர்வு. சுணங்குதல் = சோம்பற்படுதல். சுணங்கு - சுணங்கல் = சோம்பல், சோம்பேறி. சுணங்கு - சுணங்கி = சோம்பேறி. சுணங்கி - சோணங்கி = சோர்வுற்றவன். சோடன் = சோம்பேறி. சோடை = சோர்வு. சும் = சோம்பல், ஒன்றுஞ் செய்யாமை. சும் - சும்மா = ஒன்றுஞ் செய்யாமல். சும்மாவிருத்தல் = வேலையொன்றுஞ் செய்யாதிருத்தல், ஞானச் சோம்பல். சும் - சும்பு - சும்பன் = சோம்பேறி, பயனற்றவன். சும்பு - சொம்பு - சோம்பல். சோம்பு ஏறியவன், சோம்பேறி. xxiv. உறைப்பு உறைப்பு என்னும் பண்புப் பெயர் விதந்து சுட்டுவது காரத்தையே. உறைக்கும் பொருளைச் சுள்ளென்றிருக்கிறது என்பர். காரத்தை எரிச்சல் என்று கூறுவர். இதனால், உறைத்தலைச் சுடுதலோ டொப்பக் கொண்டமை புலனாம். உறு - உறை - உறைப்பு. உல் - எல் - எரி - எரிச்சல். (குள்) - கள் - கடு. கடுத்தல் = உறைத்தல். கடு = காரம். கடு - காட்டம் = உறைப்பு. கடு - கடி = காரம். கடி - கரி. கரித்தல் = உறைத்தல். கரி - கார் - கார்ப்பு. கார் - காரம். சுள் = உறைப்பு. சுள்ளம் = உறைப்பு. சுள்ளாப்பு = உறைப்பு. சுள்ளக்காய் = மிளகாய். சுள்ளிவிடுவான் = மிளகு, மிளகாய். சுள் - சுர் - சூர் = காரம், மிளகு. (நுள்) - நெள் - நெரி - நெரியல் = நெருப்புப் போல் எரியும் மிளகு. நெரியல் - மெரியல் - மிரியல் = மிளகு. நெரிப்பு - மெரிப்பு. தெலுங்கர் மிளகாயை மெரப்பக்காய் (மெரிப்புக்காய்) என்று கூறுதல் காண்க. முள் - முளகு - மிளகு. முளகாய் - மிளகாய். முளகு - முளகி - மிளகி = மிளகுச் சம்பா. xxv. கடும் புளிப்பு கடும்புளிப்பும் காரம்போல் காட்டமானதாகும். புளிப்பு முதிர்ந்த கள். தேட்கடுப் பன்ன நாட்படு தேறல் (புறம். 192) அரவுவெகுண் டன்ன தேறல் (புறம். 176) பாப்புக் கடுப்பன்ன தோப்பி (அகம். 348) என்று கூறப்படுதல் காண்க. உறு - உறை = புளித்த மோர். குள் - கள் - கடு. கடுத்தல் = புளித்தல். கடு - காடி = புளிப்பு, புளித்த கள், புளித்த கஞ்சி, ஊறுகாய். கடு - காட்டம் = கடும்புளிப்பு. சுள் - சுடிகை = பனங்கள். சுள் - சூழிகை = கள். சுள் - சுர் - சுரம் = கள். சுர் - சுரை = சுள் சுர் - சூர் = காட்டம். சூர்நறா வேந்தினான் (பரிபா 6, 72). கள் - சுண்டு = கள். சுண்டுசோறு = கட்சத்துள்ள சோறு. சுண்டு - சுண்டம் = கள். சுண்டகன் = கள்ளிறக்குவோன். சுண்டு - சுண்டி. சுண்டியுண்டை = புளிக்க வைக்குங் குளிகை. சுண்டு - சுண்டை = கள். சுண்டி - சொண்டி = சுண்டியுண்டை. கடும் புளிப்பிற்குத் தாக்குவது போன்ற உறைக்கும் திறனுண்மை பற்றியே, பாலைப் புளிக்கவைத்தலைப் பிரை குத்துதல் என்றும் பிரை தைத்தல் என்றும் கூறுவர். தைத்தல் குத்துதல். தை (தய்) - தயிர் = பிரை தைத்த பால். ஒ. நோ. மை - மயிர். xxvi. சினத்தல் சினம் தீயைப் போன்றதாதலின், எரிதலைக் குறிக்கும் சொற்கள் சினத்தையும் குறிப்பனவாயின. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். என்று வள்ளுவர் கூறுதல் காண்க. உல் - உலறு. உலறுதல் = சினத்தல். உருத்தல் = சினத்தல். உருத்திரம் = சினம். உரு - உருப்பு - உருப்பம் = சினம். உல் என்னும் வேரினின்று பிறந்த அழலுதல் அனலுதல் அன்றுதல் எரிதல் முதலிய வினைகளும் சினத்தலைக் குறிக்கும். குருத்தல் = சினத்தல். குல் என்னும் அடியினின்று பிறந்த கனலுதல் கன்றுதல் என்னும் வினைகளும், குள் என்னும் அடியினின்று பிறந்த காய்தல் என்னும் வினையும், சினத்தலைக் குறிக்கும். குள் - கள் - கடு. கடுத்தல் = கோபித்தல், வெறுத்தல். சுள்ளம் = கோபம். சுள்ளக்கம் =கோபம். சுளித்தல் = கோபித்தல். சுண்டுசொல் = சுடுசொல். தொடுதல் : தொடுதல் (அல்லது முட்டுதல்) என்பது, உள்ளிருந்து தொடுதல் வெளியிருந்து தொடுதல் என இரு வகைத்து. கருப்பைக்குள்ளிருந்து தாய் வயிற்றைக் குழவி முட்டுதல் உள்ளிருந்து தொடுதல்; தாய் வயிற்றினின்று பிறந்த உயிரிகள் தம்மை அடுத்தவற்றைத் தொடுவது வெளியிருந்து தொடுதல். மரத்துள்ளிருந்து துளிரும் நிலத்துள்ளிருந்து முளையும் முண்டி வெளிவருவது போல, தாய் வயிற்றினுள்ளிருந்து குழவியும் முண்டி வெளிவருவது, அதற்குத் தோற்றம். ஆகவே தோற்றமும் உள் தோற்றம் வெளித் தோற்றம் என இருவகைத்து. முட்டைக்குள் குஞ்சும் கருப்பைக்குள் குட்டியும் தோன்றுவது உள் தோற்றம், அவை பிறப்பது வெளித் தோற்றம். ஆகவே, சிலவற்றிற்கு ஒரு தோற்றமும் சிலவற்றிற்கு இரு தோற்றமும் உளவாம். கூடல் பொருள்கள் நெருங்குவதும் ஒன்றையொன்று தொடுவதும் கூடலாகும். ஆகவே, கூடலும் தொட்டுக் கூடல் தொடாது கூடல் என இருதிறத்தது. (1) கூடல் துறை i. கூடுதல் உறுதல் = கூடுதல். ஓர்தல் = பொருந்துதல், கூடுதல். குழு - குழுமு. குழு - கெழு. குழுமு - கெழுமு. கும்முதல் = கூடுதல். கும் - கும்பு. கும்புதல் = கூடுதல். கும் - குமி - குவி. குவிதல் = கூடுதல். குள் - கூள் - கூண்டு. கூண்டுதல் = கூடுதல். கூண்டு - கூடு. கூடு - கூட்டு - கூட்டல். குள் - கொள் - கொள்ளுதல் = கூடுதல். சுள் - செள் - செறி. செறிதல் = கூடுதல். சென் - செரு - சேர். சேர்தல் = கூடுதல். துள் - தொள் - தொழு - தொகு. தொகுதல் = கூடுதல். தொழுதல் = கூடுதல், கலத்தல். நுல் - (நுர) - நிர. நிரத்தல் = கலத்தல், கூடுதல். புள் - பொள் - பொழி. பொழிதல் = கூடுதல், திரளுதல். முல் - முன் - மன். முன்னுதல் = பொருந்துதல். மன்னுதல் = பொருந்துதல், கூடுதல். முள் - முண்டு - மண்டு. மண்டுதல் = கூடுதல். முள் - முட்டு. முட்டுதல் = கூடுதல். ii. தொகுதி கூடின ஒவ்வொரு கூட்டமும் ஒரு தொகுதியாகும். (உள்) - இள் - இண் - இணர் = கொத்து. ஓர் - ஓரை = கூட்டம், மகளிர் கூட்டம், விண்மீன் கூட்டம். குல் - குலை = காய்த்தொகுதி. குல் - குலம் = மக்கள் வகுப்பு, வண்டுகளின் கூட்டம். குல் - குர் - குரல் = பயிர்க்கதிர். குல் - குற்று - குத்து - கொத்து. குள் - குளகம் = ஒரு முடிவு கொண்ட செய்யுள் தொகுதி. குழுமு - குழுமம். குழு - குழும்பு. குழு - குழாம். கும் - கும்பு - கும்பல். கும் - குமு - குமுக்கு = கூட்டம். குள் - கள் - களம் - களன் = அவை, களம் - கணம். களம் - கழகம். கூள் - கூளி = கூட்டம். கூடு - கூட்டு - கூட்டம். கொள் - கொண்டி = தோட்டம். கொள் - கோள் = குலை. கோள் - கோட்டி = அவை. சுவள் - சுவண்டு = பொருத்தம். சுவள் - சுவடி = ஏட்டுக்கற்றை. சுல் - (சோல்) - சோலை. சுள் - செள் - செரு - சேர் - சேரி. செள் - செண் - செண்டு = பூக்கற்றை. செண் = கொண்டை. சொது - சொதை = குழாம், கூட்டம். சேர் - சார் - சார்த்து - சாத்து = வணிகக் கூட்டம். துள் - (துண்) - துணர் = கொத்து. துள் - துடு - துடுப்பு = கொத்து. துடு - துடவை - தோட்டம். துவல் - துவலை = கூட்டம். தொள் - தொண்டி = தோட்டம். தொள் - தோடு - தோட்டம். துல் - (துற்று) - தொற்று - தொத்து = பூங்கொத்து. தொழு - தொழுதி. தொழு - தொகு - தொகுதி. தொகு - தொகை. தொகு - தொகுப்பு - தோப்பு. தொழு - தொறு = மந்தை. நுல் - (நுர) - நிர - நிரை = வரிசை, மந்தை. புல் - பொல் - பொரு - போர் = படப்பு. புல் - (பிள்) - பிண்டி = கூட்டம். பொள் - பொழி - பொழில் = சோலை. பொள் - பொய் - பொய்தல் = கூட்டம், மகளிர் கூட்டம். புது - புதர். புது - புதை - பொதை. பொது - பொதும்பு - பொதும்பர் = சோலை, மரச்செறிவு. முகு - முகை = கூட்டம். முகை - மூகை = கூட்டம். முல் - (மல்) - மன் - மன்று = அவை. மன்று - மந்து - மந்தை. முண்டு - மண்டு - மண்டல் - வண்டல் = ஆயம், மகளிர் கூட்டம். முட்டு - முட்டம் = ஊர். iii. உறையுள் மக்களும் மற்ற வுயிரிகளும் கூடி வாழும் இடம் அல்லது பொருந்தியுறையும் இடம் உறையுளாம். உறு - உறை - உறையுள். உல் - (உர்) - ஊர். குல் - குலம் = வீடு, கோயில். தேவகுலம் = கோயில். குள் - குடி = வீடு, ஊர். குடியிருத்தல் = குடியிலிருத்தல், வசித்தல். குடி - குடிகை - குடிசை - குடி - குடில் - குடிலம். கை இல் என்பன குறுமைப் பொருள் விகுதிகள். ஒ. நோ. கன்னி - கன்னிகை, தொட்டி - தொட்டில். கும்பு - கும்பை = சேரி. கும்பு - குப்பு - குப்பம் = சிற்றூர். குள் - கள் - களம் - களன். ஏர்க்களம் போர்க்களம் அவைக்களம் என்பவற்றை நோக்குக. கொள் - கொட்டு - கொட்டம். கொட்டு - கொட்டில். கொட்டம் - கொட்டகை. கொட்டம் - கொட்டாரம். கொட்டம் - கோட்டம் = தொழுவம், கோயில். அரண்மனை. கொள் - கொண்டி = தொழுவம். சுள் - செள் - செரு - சேர் - சேரி. துள் - தொள் - தொழு - தொழுவு - தொழுவம். தொழு - தொறு. முன் - மன் - மனை. மன் - மன்று - மன்றம். மன்று - மந்து - மந்தை. மன் + திரம் = (மன்றிரம்) மந்திரம் = மனை. கோயில், யானை குதிரைத் தொழுவம். திரம் என்பது ஒரு தொழிற் பெயர் விகுதி. நிறைந்து கூடல் உறுதல் = நிறைதல். குள் - குழு - கெழு - கெழுமு. கெழுமுதல் = நிறைதல். கும்(கம்) - கமம். கமம் நிறைந்தியலும் (தொல். உரி. 57). கூடுதல் = நிறைதல். சுல் - சோல் - சால். சாலுதல் = நிறைதல். சால = மிக. சான்றோர் = அறிவு நிறைந்தோர். சான்றாண்மை = எல்லா நற்குணங்களும் நிறைந்து அவற்றை ஆளுந் தன்மை. சால்பு = சான்றாண்மை. துவல் - துவன்று. துவன்றுதல் = நிறைதல். துவன்று நிறைவாகும் (தொல். உரி. 34). முண்டு - மண்டு. மண்டுதல் = நிறைதல், திரளுதல். கால்விசைந் தோடிக் கடல்புக மண்டி (திருவாசகம், 2, 135) மண்டு - மடு. மடுதல் = நிறைதல். மடுத்தல் = நிறைத்தல். v. நிறைந்து கூடுமிடம் கூடு - கூடம் = நீண்ட அறை அல்லது மனை. சால் - சாலை = கூடம். மாணவர் கல்வி பயிலும் பள்ளியைப் பள்ளிக்கூடம் கல்விச் சாலை பாடசாலை என்றும், தொழிலாளர் பலர் கூடித் தொழில் செய்யுமிடத்தைத் தொழிற்கூடம் தொழிற்சாலை என்றும், கம்மியர் வீட்டில் பணி செய்யும் அறையைப் பட்டசாலை என்றும், எல்லா இல்லங்களிலும் நீண்ட அறையைக் கூடம் என்றும் வழங்குதல் காண்க. மண்டுதல் = நெருங்குதல், நிறைதல், நிறைந்து கூடுதல். மண்டு = செறிவு, மிகுதி. மண்டு - மண்டகம் - மண்டபம். ஒ.நோ.வாணிகம் - வாணிபம். மண்டு - மண்டி = பொருள்கள் நிறைந்த இடம், சரக்கறை. மண்டு - மடு - மடம். திறப்பான பெரிய வீட்டை மடம் போலிருக்கிறது என்பர். மண்டுதல் = நெருங்குதல், திரளுதல். மண்டு - மண்டி = நீரின் அடியில் திரண்டிருக்கும் மண் அல்லது அழுக்கு. மண்டு - மண்டல் - வண்டல் = வெள்ளத்தின் அடியில் திரண்டு படியும் மண். vi. மிகுதல் மிகப் பல பொருள்கள் கூடின கூட்டம் அளவில் மிகும். உருத்தல் = மிகுதல். உறுதல் = மிகுதல். உரவு = மிகுதி. குல் - கல் - கன் - கன - கனம் = மிகுதி. கன் - கனை = மிகுதி. குள் - கள் - கடு கடுத்தல் = மிகுதல். கடு - காடு = மிகுதி. வெள்ளக்காடு பிள்ளைக்காடு முதலிய வழக்குகளை நோக்குக. கள் - கய் - (கயல்) - கஞல். கஞலுதல் = செறிதல், நிறைதல், மிகுதல். குள் - கூர். கூர்தல் = மிகுதல். குள் - கொள்ளை = மிகுதி. சும் - சும்மை = மிகுதி. சும் - சும - சுமதி = மிகுதி. புல் - பல் - பன்மை. பல் - பல்கு - பலுகு. பலு-பரு. பருத்தல் = மிகுதல். பரு - பெரு. முகு - மிகு - மிகுதி - மீதி. முள் - முண்டு - மண்டு = செறிவு, மிகுதி. vii. செய்தல் புதிதாகச் செய்யப்படும் பொருள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள பொருள்களின் அளவை மிகுத்தலால், மிகுத்தற் கருத்தில் செய்தற் கருத்துத் தோன்றிற்று. ஆங்கிலத்திலும் make என்னும் சொல்லை L. magnus (great) என்னும் சொல்லினின்று திரிப்பர். ஒரு தனிப்பட்டவர்க்கோ ஒரு கூட்டத்தார்க்கோ உள்ள பொருள் போதாதபோது தேவையான அளவு அது பெருக்கப்படும். விளைவுப் பெருக்கம் என்று அடிக்கடி கூறப்படுதல் காண்க. பயிர் வளர்த்தலைப் பயிர் செய்தல் என்றும், பொருளீட்டுதலைப் பொருள் செய்தல் என்றும் கூறுவதையும் நோக்குக. குள் - கள் - கடு - கரு. கடுத்தல் = மிகுதல். கருவி = தொகுதி (group). கருமை = பெருமை. ஆயுதத்தைக் குறிக்கும் கருவி என்னும் சொல் தூய தென் சொல்லாத லாலும், அதனோடு தொடர்புள்ள கரணம் என்னும் சொல் செய்கையென்று பொருள்படுதலாலும், இவ்விரண் டிற்கும் கரு என்பது பகுதியாயிருத்தலாலும், கரு என்னும்சொல் மிகுதிப் பொருள் தருதலாலும், மிகுத்தற் கருத்து செய்தற் கருத்தைப் பிறப்பித்தற்கேற்றதாதலாலும், செய்தல் எனப் பொருள்படும் கருத்தல் என்பதொரு வினை முன்னொரு காலத்து வழங்கிப் பின்னர் வழக்கற்றுப் போனதாகத் தெரிகின்றது. கரு - கருமம் = செய்கை. தொழில். ஒ. நோ. பரு - பருமம். கரு - (கரும்) - கருமம். ஒ.நோ. உரு - உரும் - உருமம். கரும் - கம் = தொழில், கம்மியர் தொழில். ஈங் கம்மும் (தொல். எழுத். 328) கம் - கம்மியம் - கம்மியன் = கம்மாளன். கம் - கம்மாளன். கருமம் - கம்மம் = கம்மியர் தொழில். கம்மஞ் செய்மாக்கள் (நாலடி. 393) கம்மவாரு = பயிர் வேலை செய்யும் தெலுங்க வகுப்பார். கரு - கருவி = செய்யும் ஆயுதம். கரு - கரணம் = செய்கை, சடங்கு, மணச் சடங்கு, உடன்படிக்கை, ஆவணம் (deed), ஆவணம் எழுதுவோன், கணக்கெழுதுவோன். கரணம் - கரணத்தான் = கணக்கன். கரணம் = செய்யுங் கருவி. அகக்கரணம் புறக்கரணம் என்பவை உடம்பிற்கு அகமும் புறமுமுள்ள கருவிகளாகிய உறுப்புக்கள். கரு - கார். கார் - காரணம். கார் - காரியம். கருநிறத்தையும் தோன்றுதலையுங் குறிக்கும் கரு என்னும் சொல்லும், கார் என்று திரிதல் காண்க. கார்த்தல் = கருப்பாதல், தோன்றுதல். அணம் இயம் என்பன விகுதிகள். ஒ. நோ. கட்டணம், ஏரணம், கண்ணியம், வாரியம். கருமம் கருவி என்பன முதற்கால வடிவங்கள். அதனால், அவை மரபாகப் பண்டை நூல்களிற் பயின்று வருவன. கரணம் காரணம் காரியம் என்பன தொல்காப்பியர்க்கு முந்தின இடைக் கால வடிவங்கள். கற்பெனப் படுவது கரணமொடு புணர (தொல். 1088). ஆக்கந் தானே காரண முதற்றே (தொல். 504) ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானை (நக்கீரர்). (சுள்) - செள் - செய். செய் - செழு - செழுத்தல் = மிகுதல். செழு செழுத்தல் = மிக வளப்பமாதல். செய் - செய்கை = செயல், பயிர்த்தொழில், உடன் படிக்கை, ஆவணம் (deed). ஆதிசைவ னாரூரன் செய்கை (பெரியபு. தடுத்தாட். 59) செய்கைக்காணி = பட்டயக்காணி. செய்தல் = திருத்தமாகச் செய்தல், வருந்திச் செய்தல். செய் = திருந்திய நிலம். நன்செய் = நன்றாகத் திருந்திய நிலம். புன்செய் = சிறிது திருந்திய நிலம். செய் - செய்யுள். வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் (நன். 268) (புள்) - (பள்) - பண் - பண்ணை = தொகுதி, மிகுதி. பண்ணை - பணை = பெருமை. பணைத்தல் = பருத்தல். மிகுதல். பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி. 251) பண் - பண்ணு. பண்ணுதல் = செய்தல், ஆயத்தஞ் செய்தல், அலங்கரித்தல், சரிப்படுத்துதல், இசைக் கருவியில் அலகு (சுருதி) அமைத்தல். பண் - பண்டு - பண்டம் = செய்யப்பட்ட பொருள். பண்டம் - பண்டாரம் = பொருள்கள் தொகுக்கப்பட்ட இடம், களஞ்சியம், கருவூலம், நூலகம், அறிவன். துறவி. பூசாரி. பண்டாரம் - பண்டாரி. பண்டு - பண்டுவன் = பல பொருட்குணம் அறிந்த மருத்துவன். பண்டுலன் - பண்டுவம் = மருத்துவம். பண்டு - பண்டிதன் - பலநூற் பொருளறிந்த புலவன், மருத்துவன். பண்டிதன் - பண்டிதம். பண் - பணி = பொருள், செய்யப்பட்ட அணிகலம். பணி - பணிகன் - வணிகன் = பொருள்களை விற்பவன். வணிகன் - வாணிகன் - வாணியன். பண் = பண்ணப்பட்ட இசை. பண் - பாண் - பா. பாண் - பாணி. பாண் - பாடு - பாட்டு. பாண் - பாணன். பண் - பண்ணியம் = கிளைப்பண். பண் - பண்டர் = பாணர். viii. செய்யும் உறுப்பு (கை) கரு - கரம் (வ.) செய் - (சை) - கை செய் = கை (தெ.) பண் - பாணி. ix. வளம் பொருள் மிகுவதனால் வளமுண்டாகும். குள் - கொழு - கொழுமை. கொழு - கொழுப்பு கொழுமை - செழுமை. சுள் - செழு - செழுமை. செழு - செழுது - செழுத்து - செழுந்து = செழிப்பு. செழு - செழுப்பு - செழுப்பம் = செழிப்பு. செழுப்பு செழும்பு - செழும்பல். செழு - செழி - செழிப்பு - செழிம்பல். செழி - செழியன். முல் - மல் - வளம். மல் - மல்லல் = வளம். மல்லல் வளனே (தொல். உரி. 7) முள் - மள் - வள் - வண்மை = வளம், வளத்தாலாகும் ஈகை. வள்ளல். வள் - வளம் - வளவன். 2. குவிதல் துறை i.குவிதல் மலர்ந்த பூவின் இதழ்கள் கூடும்போது முகை போற் குவிதலால், கூடுதற் கருத்திற் குவிதற் கருத்துப் பிறந்தது. கும் - குமிழ் - குமிழி. கும் - குமு - குமுதம் = பகலிற் குவியும் ஆம்பல். கும் - குமி - குவி. குவிதல் = கூம்புதல். குவி - குவம் = ஆம்பல். கும்பு - கூம்பு. கூம்புதல் = குவிதல். கும்பு - குப்பு - குப்பி = குவிந்த சிறுகலம். கூலங்களையும் காய்கறிகளையும் கல் மண் முதலியவற்றையும் கூம்பிய வடிவில் தொகுத்து வைத்தல் குமித்தல் அல்லது குவித்தல் எனப்படும். கும் - குமி - குவி. கும் - கும்மல். கும் - கும்பு - குப்பு - குப்பல். குப்பு - குப்பை = குவியல். குமி - குமியல். குவி - குவியல், குவால், குவை. சும் - சும்பு - சூம்பு - சூம்பல் = கூம்பிச் சொத்தையான காய்கனி. சூம்பினகை = கூம்பி மொண்டியான கை. ii. கைகுவிதல் கும்மியடித்தற்கும் கும்பிடுவதற்கும் இருகையையும் ஒன்று சேர்க்கும் போது அவை கூம்பிய வடிவத்தை அடையும். கும் - கும்மி = கை குவித்தடிக்கும் விளையாட்டு. கும்மி - கொம்மி. கும் - கும்பு - குப்பு - குப்பி - கொப்பி = கும்மி. கும் - கும்மை - கொம்மை. கொம்மை கொட்டுதல் = கை குவித்தடித்தல். கும் - கும்பு - கும்பிடு. கும்பிடுதல் = கைகுவித்துத் தொழுதல். கும்பு - கூம்பு - கூப்பு. கைகூப்புதல் = கைகுவித்தல். துள் - தொழு. தொழுதல் = கை கலத்தல் அல்லது கூட்டுதல். iii. குப்புறுதுல் பூக்கள் மலர்வது தம் முகத்தைத் திறப்பது போலும், அவை குவிவது அதை மூடுவது போலும், இருத்தலாலும்; பகலில் மலர்ந்து இரவில் கூம்பும் இலைகளும் மலர்களும், பெரும் பாலும், மலரும்போது மேனோக்கியும் கூம்பும் போது கீழ் நோக்கியும் இருத்தலாலும், மாந்தன் மேனோக்கிப் படுத்திருத்தல் மலர்ந்த நிலைக்கொப்பாகவும், கீழ் நோக்கிப் படுத்திருத்தல் கூம்பிய நிலைக்கொப்பாகவும், சொல்லப்படும். மலர்தல் = முகம் மேலாதல், மலர்த்தல் = முகத்தை மேலாக்குதல். மலர் - மல்லார் - மல்லா. மல்லாத்தல் = முகம் மேலாதல். மல்லாத்துதல் = முகத்தை மேலாக்குதல். மல்லாந்துபடுத்தல் மல்லாக்கப்படுத்தல் முதலிய வழக்குக்களைக் காண்க. கும்பு - குப்பு - குப்புறு. குப்புறுதல் = முகங்கவிழ்தல். குழந்தை குப்புற்றுக் கொண்டது, முகங்குப்புற விழுந்தான், என்று கூறுவது வழக்கு. குவி - கவி. கவிதல் = குப்புறுதல். தலைகீழாதல். கவி - கவிழ். கவிழ்தல் = குப்புறுதல், தலைகீழாதல். கவிழ்ந்து நிலஞ்சேர அட்டதை (புறம். 77) குடம் கூடை முதலியவை பொதுவாக வாய்மேனோக்கியவாறு வைக்கப்படும். அவை தலைகீழாதல் கவிழ்தல் என்றும், அவற்றைத் தலைகீழாக வைத்தல் கவிழ்த்தல் என்றும், கூறப்படும். கவிதல் = தலைகீழான கூடைபோல் வளைதல். கவித்தல் = தலைகீழான கூடையைப் பிடித்தல் போல் குடை பிடித்தல், கூடையைக் கவிழ்த்தல் போல் மகுடத்தைத் தலையி லணிதல். கவி - கவிகை = குடை. கவிகண் = குடங்கையால் மறைக்கப்பட்ட கண். முகில் குடைபோல் வளைந்து படுதலும் கவிதல் எனப்படும். (3) கலத்தல் துறை i. நெருங்கிக் கலத்தல் (அன்பாற் கலத்தல்) உ - பொருந்து (ஏவல்வினை) உத்தல் = பொருந்துதல். உத்தம் = பொருத்தம். உத்தி = பொருந்தும் முறை. (உள்) - அள் = அளவு. அளவுதல் = கலத்தல். அளவு - அளாவு. அள் - அளை. அளைதல் = கலத்தல். உறுதல் = பொருந்துதல். உள் - (இள்) - இழை. இழைதல் = நெருங்கிப் பழகுதல். குலவுதல் = கூடுதல். கூடிக்குலாவுதல் என்னும் வழக்கை நோக்குக. குல - கல. கூடுதல் = கலத்தல். குள் - கொள். கொள்ளுதல் = பொருந்துதல். சும் - (சுவ்) - சுவள் - சுவண்டு = பொருத்தம். தூமதியஞ் சூடுவது சுவண்டே (தேவா. 677, 4) துன்னுதல் = பொருந்துதல். பூசுதல் = இயைதல். புல் - பொல் - பொரு - பொருந் - பொருந்து. பொரு முகவெழினி பொருங்கதவு முதலிய தொடர்களை நோக்குக. முல் - மல் = மன். மன்னுதல் = பொருந்துதல். முள் - (முளவு) - முழவு. முள் - (முய்) - முய - முயங்கு - மயங்கு. முழவுதல் = நெருங்கிப் பழகுதல். முழவு - முழாவு. முளவு - விளவு - விளாவு. விளவுதல் = கலத்தல். ii. விரும்புதல் நெருங்கிப் பயின்றவரும் உள்ளத்திற் கலந்தவரும் ஒருவரை யொருவர் விரும்புவர். உவத்தல் = பொருந்துதல், விரும்புதல், மகிழ்தல். குலவுதல் = கூடுதல், மகிழ்தல், குலவு - குலாவு. (நுள்) - நள் - (நய்) - நய. நள்ளுதல் = பொருந்துதல். நயத்தல் = விரும்புதல். மகிழ்தல். முகத்தல் = (கலத்தல்) விரும்புதல். புள் - பிள் - விள். விள்ளுதல் = கலத்தல். விரும்புதல். இவ்வினை இன்று வழக்கற்றது. விள் - விளரி = வேட்கை. விள் - விளை = விருப்பம். விளையாடுதல் = விரும்பியாடுதல். விள் - (வீள்) - வீழ. வீழ்தல் = விரும்புதல். விளை - விழை. விழைதல் = விரும்புதல் விழைவு - விருப்பம், புணர்ச்சி. விழை - விழைச்சு = புணர்ச்சி. விள் - (விரு) - விரும்பு - விருப்பம். விழை - (விழாய்) - விடாய் = வேட்கை, நீர்வேட்கை. விள் - வெய் - மெய் - வெய்யன் = விருப்பமுள்ளோன். வெய்ம்மை - வெம்மை = விருப்பம். வெம்மை வேண்டல் (தொல். உரி. 36) வெள் - வேள் - வேட்கை = விருப்பம். காதல். வேள் = திருமணம். வேட்டல் = மணத்தல். வேள் - வேள்வி = ஒன்றை விரும்பிச் செய்யும் யாகம். வெள் - வெள்கு - வெஃகு. வெஃகுதல் = விரும்புதல். வெள் - வெண்டு. வெண்டுதல் = ஆசைப்படுதல். வேள் - வேண்டு - வேண்டல். வேள் = விருப்பம். வேள் - வேளாண்மை = பிறரை விரும்பி யுணவளித்தல். வேள் - வேளாளன் = வேளாண்மை செய்யும் உழவன். வேளாண்மை = உழவுத்தொழில். வேளாண்மை - வெள்ளாண்மை - வெள்ளாமை. வேள் - வேண் = விருப்பம். வேண் + அவா = வேணவா. வேண்டு - வேண்டும், வேண்டாம். வேள் - வேட்டம் = விருப்பம். உயிரிகளை விரும்பிப் பிடித்தல். வேள் - வேட்டை. வேட்டம் - வேட்டுவன் - வேடுவன் - வேடு -வேடன். புள் - (பிள்) - (பிண்) - பிண - பிணா - பிணவு - பிணவல் = விரும்பப் படும் பெண், விலங்கின் பெண். பிண் - பிணை = விருப்பம். பிள் - பிடி = பெண் யானை. பிள் - பெள் - பெட்பு = விருப்பம். பெள் - பெட்டை - பெடை - பேடை. பெள் - பெண் - பெண்டு. பெண் - பேண். பேணுதல் = விரும்புதல், போற்றல். பிணையும் பேணும் பெட்பின் பொருள (தொல். உரி. 40) பேண் - பேடு - பேடன், பேடி. iii. அன்புசெய்தல் கலந்தவரும் விரும்பியவரும் அன்பு செய்வர். உல் - உன் - உன்னியம் = சொந்தம். உன்னியார் = உறவினர், உன்னுதல் = பொருந்துதல். உன் - (அன்) - அன்பு. உறு - உறவு. உறு - உற்றான் = உறவினன். உறுதல் = பொருந்துதல். உல் - ஒல் - ஒன் - ஒன்று. ஒன்றுதல் = பொருந்துதல். ஒன்னார் = பகைவர். ஒன்றார் = பகைவர். உள் - அள் - அளி = அன்பு. அள் = (அரு) - அருள். அள் - அண் - ஆண் - ஆணம் = நேயம். ஆண் - ஆணு = நேயம். உள் - (உழு) - உழுவல் = விடாது தொடர்ந்த அன்பு. குள் - குழு = கெழு. கெழுவு = நட்பு. கெழு - கெழி = நட்பு. குள் - கெள் - கேள் = உறவு. கேண்மை = நட்பு. கூட்டு - கூட்டாளி = நண்பன். துல - துன். துன்னுதல் = பொருந்துதல். துன்னியார் = உறவினர், நண்பர். துன்னார் = பகைவர். துன் - துன்று. துன்றார் = பகைவர். துள் - தொழு - தோழம் - தோழமை. தோழம் - தோழன். தொழுதல் = தொகுதல். கூடுதல். தொழுதி - தொகுதி. (நுள்) - நள் - நண்பு - நட்பு. நள்ளுநர் = நண்பர். நள்ளார் = பகைவர். நள் - (நய்) நய. நயத்தல் = அன்பு செய்தல். நுள் = (நெள்) - நெய் - நேய் - நேயம் - நேசம் - நேசன். புல் - புல்லார் = பகைவர். புல்லுதல் = பொருந்துதல். புல் - பொல் - பொரு - பொருந் - பொருந்து. பொருந்தார் = பகைவர். முல் - முன் - மன். மன்னார் = பகைவர். முள் - முழு - முழுவல் = விடாது தொடர்ந்த அன்பு. iv. விரும்பிக் காக்கும் தலைவன் ஒரு பொருளை விரும்புகிறவன் அதைப் போற்றிக் காப்பானா தலின், விரும்பற் கருத்து காத்தற் கருத்தையுந் தழுவும். எ.டு. பேணுதல் = விரும்புதல், போற்றுதல். தந்தை தாய்ப் பேண் என்னும் ஔவையார் கூற்றை நோக்குக. ஒரு தலைவனுக்கு அவன் கீழ்ப்பட்டவர் மாட்டன்பு இருத்தல் வேண்டுமாதலால், விரும்புதல் குறித்த சில சொற்களினின்று தலைமை குறித்த சொற்கள் தோன்றியுள்ளன. நம்புதல் = விரும்புதல். நம்பும் மேவும் நசையா கும்மே (தொல். உரி. 31) நம்பு - நம்பன் = தலைவன். நம்பு - நம்பி = தலைவன். நயத்தல் = விரும்புதல். நய - நாயம் - நாயன் = தலைவன். நாயம் - நாயகம் - நாயகன் = தலைவன். வேட்டல் = விரும்புதல். வேள் = தலைவன். வேள் - வேளான் = தலைவன். நம்பு நய என்னும் இரு சொற்களும் ஒரேயடியினின்று திரிந்தவையே. நாயன் = தலைவன், அரசன், கடவுள், தந்தை. நாயனார் போனநாள் இன்றென்று அகத்திலுள்ளோரெல்லாருங் கூறி (சீவக. 2097, உரை) என்னுமிடத்து, நாயனார் என்பது தந்தையைக் குறித்தது. நாயன் நாய்ச்சுமார் என்னுந் தொடர் தலைவன் தலைவியரைக் குறிக்கும். இறைவனடியாரையும் தலைவரோடொப்பக் கருதும் வழக்க முண்மையால், நாயன் நாயனார் என்னும் பெயர்கள் அடியாரை யுங் குறிக்கும். வள்ளுவனார்க்கு நாயனார்ப் பட்டம் வழங்குவது அவரது புலமைத் தலைமை பற்றி யாகும். நாயன் - நாயர் = சேர (மலையாள) நாட்டுப் படைத் தலைவர் வழிவந்த குலத்தார். நாயன் என்பது தண்டநாயன் என்பதன் குறுக்கம். நாயடு நாயுடு என்பன தெலுங்கு வடிவங்கள். நாயனார் - நயினார் = சமணர்க்கும் சிவ குலத்தார்க்கும் வழங்கி வரும் பட்டப் பெயர். முதலாவது இது தலைமை பற்றி அவ்விரு சாராரின் தலைவர்க்கே வழங்கியது. தந்தையைக் குறிக்கும் நாயனா நயினா என்பவை தெலுங்கு வடிவங்கள். நாயன் - நாயந்தை - நயிந்தை = ஆண்டான், அடிமை வைத்தாளுங் குலத்தலைவன், சில குலத்தார் பட்டப்பெயர். நாயந்தை என்பது விளி வடிவில் நாயந்தே (நாயன்தே) என்றாகும். நாயன் - நாயகன் = தலைவன், கணவன், அரசன், கடவுள். நாயகம் = தலைமை. நாயகன் - நாயகர் = சில குலத்தார் பட்டப் பெயர். நாயகன் - நாய்கன் = வணிகர் தலைவன். நாய்கன் - நாய்க்கன் = சில குலத்தார் பட்டப் பெயர். நாயகன் - நாயக்கன் = சில குலத்தார் பட்டப் பெயர். நாய்க்கன் நாயக்கன் என்பனவும் படைத் தலைமை குறிக்கும். இவ் வடிவங்கள் முதலாவது குலத் தலைவர்க்கு வழங்கியவை. நாயன் - (நாயர்) - நாயிறு = கோள்களுள் தலைமையான கதிரவன் அதற்குரிய கிழமை. நாயிறு - ஞாயிறு. நாயிறு என்பதே உலக வழக்கு. குறிப்பு : நாயன் என்னும் பெயர் தந்தை பெயராகவும் குலப் பட்டப் பெயராகவும் வழங்கும் வழக்கு வடமொழியிலில்லை. தலைவன் கணவன் என்ற பொருளிலேயே அவை அங்கு வழங்குவன. மேலும், தமிழில் வழங்கும் பல்வேறு வடிவங்களும் வடமொழியிலில்லை. நாய நாயக (nayaka) என்ற இரு வடிவங்களே அங்குள. ஞாயிறு என்னுங் கிழமைப் பெயர் தொன்றுதொட்டு வழங்கி வருவது. நாயகன் என்னுஞ் சொல்லுக்கு வட மொழி யகராதியிற் காட்டப்படும் வேர் நீ என்பது. அது செலுத்துதலை அல்லது நடத்துதலைக் குறிக்கும். அச்சொல்லும் நூ என்பதன் திரிபான நீ என்பதே. நீத்தல் = செலுத்துதல். நீயான் = கலஞ்செலுத்து வோன். v. கலாய்த்தல் (பகையாற் கலத்தல்) இருவர் அல்லது இரு படைகள் நெருங்கிக் கலந்தே போர் செய்வதால், கலத்தற் கருத்தில் பொருதற் கருத்துத் தோன்றிற்று. சண்டையிடுதலைக் கைகலத்தல் என்று கூறுதல் காண்க. உத்தல் = பொருத்துதல். உத்தம் = போர். சேர நாட்டாரான மலையாளியர் போர்க்களத்தை உத்தாங்களம் என்பர். உம் - அம் - அமர். அமர்தல் = பொருந்துதல். அமர் = போர். அமரம் = போர் மறவர்க்கு விடப்பட்ட மானியம். கல - கலாய், கலாய்த்தல் = சண்டையிடுதல். கல - கலாம். கல - கலகம். (சுள்) - செள் - செரு = போர். (சும்) - (சம்) - சமம் = போர். சமத்தல் = கலத்தல், ஒன்றாதல். சமம் = ஒப்பு. சமம் - சமர் - சமரம். அருஞ்சம முருக்கி (புறம். 312) பொரு - போர். பொரு - பொருநன் = போர் செய்வோன். பூசு - பூசல் = போர், ஆரவாரம். முல் - மல் = சண்டை. முட்டுதல் = பொருந்தல், பொருதல். மொய்த்தல் = நெருங்கிக் கூடுதல். மொய் = போர். vi. தழுவல் அன்பு செய்பவர் அன்பு செயப்பட்டாரைத் தழுவுவர். தழுவலாவது கலந்தணைத்தல். உறுதல் = தழுவுதல். (உள்) - அள் - அளை - அணை. அணைத்தல் = தழுவுதல். அளைதல் = தழுவுதல். அணைதல் = தழுவுதல். அணை = நீரை அணைத்தல் போற் கட்டும் கரை. வாய்க்காலிற் பக்கமாக வழிந்தோடும் நீரை மண்ணிட்டுத் தடுத்தலை அணைத்தல் என்பர் உழவர். (சுள்) - செள் - செரு - சேர். சேர்தல் = அணைத்தல். சேர்ந்து கட்டுதல் என்பது வழக்கு. (துள்) - தழு - தழுவு. புல்லுதல் = தழுவுதல். முள் - முழு - முழுவு. முழுவுதல் = தழுவுதல். தழுவி முழுவி என்பது வழக்கு. முள் - முள்கு. முள்குதல் = தழுவுதல். முள் - (முய்) - முயங்கு. முயங்குதல் = தழுவுதல். முயங்கு - முயக்கு - முயக்கம். மு. முள் - (மள்) - மரு = மருவு. மருவுதல் = தழுவுதல். மரு - மருமம் = தழுவும் மார்பு. மரு - மார் - மார்பு. மருமம் - மம்மம் - அம்மம் = முலை, முலைப்பால். (முளவு) - விளவு. விளவுதல் = கலத்தல், தழுவுதல், விளவு - விளாவு - வளாவு. vii. மணத்தல் (புணர்தல்) தழுவலிற் சிறந்தது மணம். மணத்தாலாவது காமக்காதலர் தழுவிக் கூடுதல். (உள்) - அள் - அளை - அணை. அணைதல் = புணர்தல். (உள்) - இள் - இழை. இழைதல் = கூடுதல். குல - கல - கலவி. கூடு - கூட்டம் = புணர்ச்சி. குள் - கள் - கள - கண - கணம் = கூட்டம். கணவன் = கூடுபவன், கொழுநன். கணத்தல் = கூடுதல். கள் - (கடு) - கடி = திருமணம். கடியிற் காவலும் (மணி. 18, 98) துவள்தல் = புணர்தல். துவளை = புணர்ச்சி. நுள் - நொள் - நொட்டு. நொட்டுதல் = புணர்தல். புல்லுதல் = புணர்தல். புல் - பொல் - பொலி. பொலிதல் = புணர்தல். புள் - (புண்) - புணர் - புணர்ச்சி. புணை - பிணை. பிணைதல் = புணர்தல். (முல்) - மல் - மன் - மன்று - மன்றல் = மணம். மன்றுதல் = கூடுதல். முள் - (மள்) - மண - மணம். மணத்தல் - கலத்தல் கூடுதல். viii. மணத்தல் (வாசனை வீசுதல்) ஒரு பொருளின் நாற்றம் அதனையடுத்த காற்றொடும் பிற பொருளொடும் கலத்தலால், அது மணம் என்னப்பட்டது. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுதல் காண்க. குரு = மணம். குருஉப்புகை = மணமுள்ள புகை (திவாகரம்) குள் - குரு. குருத்தல் = கலத்தல், தொகுதல். (குருவி) - கருவி = தொகுதி. கருவி தொகுதி (தொல். உரி. 56) கருவி வானம் (பெரும்பாண். 24) கருவி வானம் என்புழிக் கருவி மின்னுமுழக்கு முதலாயவற்றது தொகுதி என்று சேனாவரையர் கூறியிருப்பது பொருந்தாது. விலங்கிலை யெஃகின் மின்மயங்கு கருவிய (குறிஞ்சி. 53) என்றவிடத்தும், வேல்போல மின்னு மயங்குகின்ற தொகுதிகளை யுடையவாய் (நச். உரை) என்றே பொருள்படும். கும் - கம் - கம - கமழ். கும்முதல் = கலத்தல், கூடுதல். குமுகுமுத்தல் = மணம் வீசுதல். பசுமஞ்சள் குமுகுமுச்சு (அழகர் கல. 10) குமுகுமு - கமகம. கம் என்று வாசனை அடிக்கிறது, கமகமவென்று கமழ்கிறது, என்னும் வழக்குக்களைக் காண்க. குள் - கள் - (கடு) - கடி = வாசனை. முள் - (மள்) - (மண்) - மணம் = வாசனை. மணத்தல் = கலத்தல். முள் - முரு - முருகு = வாசனை. முரு - மரு = வாசனை. மருவுதல் = கலத்தல். (முல்) - மல் - மன்று - மன்றல் = வாசனை. மன்றுதல் = கூடுதல். மரு - மருந்து = நோய் தீர்க்கும் வாசனைத் தழை, நோய் தீர்க்கும் பொருள். முறு - வெறு - வெறி = மணம். வெறுத்தல் = கலத்தல், செறிதல். வெறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க (நாலடி. 16) ix. இணையாதல் ஆணும் பெண்ணுமாக இருவர் அல்லது இரண்டு சேர்ந்து புணர்வதாலும், இயங்குதிணை யுயிரிகளிற் பெரும்பாலான ஆணும் பெண்ணுமாகக் கூடி வாழ்தலாலும், உழவிற்கும் வண்டிக்கும் அடிக்கடி இரு காளைகள் பூட்டப்படுவதாலும், கை கால் முதலிய சில வுறுப்புக்கள் இவ் விரண்டாயிருப்பதா லும், ஆடை முதலிய பொருட்கள் நன்கொடையில் பொதுவாக இணையாக வழங்கப்பெறுவதாலும், இணையைக் குறித்தற்குக் கலத்தலைக் குறிக்கும் சொற்களினின்று பல சொற்கள் பிறப் பிக்கப்பட்டுள்ளன. உத்தல் = பொருந்துதல். உத்தி = விளையாட்டிற்கு இருவர் சேரும் இணை. உத்திகட்டுதல் என்பது தென்னாட்டு வழக்கு. (உள்) - இள் - இழை - இணை, ஒ. நோ. தழல் - தணல். சுவள் - சுவடு - சோடு - இணை. சுவள் - சுவடி - சோடி - இணை. இருவரும் சுவடியாய்ப் போகின்றார்கள் என்பது தென்னாட்டு வழக்கு. (சுள்) - செள் - செண்டை = இரட்டை. செண்டை வரிசை = சச ரிரி கக என ஏழிசைகளும் இரட்டை இரட்டையாய் வருதல். சொதை - சதை = இணை. துணை = இணை, இரண்டு. துணங்கை = இரு கையுஞ் சேர்த் தடிக்குங் கூத்து. புணர் = இரண்டு. (4) கலங்கல் துறை கலக்கத்திற் கேதுவாகப் பல பொருள்கள் கலத்தல் கலங்கலாகும். i. கலவை உலக்குதல் = நீரையும் சேற்றையும் மிதித்துக் கலக்குதல். (உள்) - அள் - அண் - ஆண் - ஆணம் = கூட்டு. வெந்த ஆணம் - வெந்தாணம் = வெந்தணம் - வெஞ்சணம். இது வ்யஞ்சனம் என்னும் வடசொல்லின் திரிபாகக் கூறப்படும். (வ்யஞ்சனம் என்னும் வடசொல் வெளிப்படுத்துதல் (mani fast) என்பதை வேர்க் பொருளாகக் கொண்டிருப்பதையும். வெஞ்சணம் என்னும் தென்சொல் தமிழ்நாட்டில் பார்ப்பனத் தொடர்பற்ற மக்களிடையே வழங்குவதையும், கவனிக்க). பச்சடி போன்ற வேகாத ஆணமும் உண்டெனவறிக. கும் - குமை. குமைதல் = குழம்புதல். குள் - குழ - குழம்பு = பல சரக்குகள் கலந்த கூட்டு. குழம்பு கூட்டுதல் என்னும் வழக்கைக் காண்க. குழம்பு - குழம்பல். கூள் - கூட்டு. குல - கல - கலவை, கல - கலம் - கலம்பம் - கதம்பம் = பலவகைப் பூக்கள் கலந்த மாலை. கலம்பு - கலம்பகம் = பல வுறுப்புக்கள் கலந்து வருஞ் செய்யுள் நூல். (சூர்) - சார் - சாறு = குழம்பு. ii. கலக்கம் பல பொருள்கள் ஒன்றாகக் கலக்கும் போது கலக்கம் உண்டா கின்றது. பொருட் கலக்கத்தால் சிலவிடத்து மனக்கலக்கமும் விளைகின்றது. நீரு மண்ணுங் கலப்பது கலங்கல். அது பொருட்கலக்கம். பல ஆட்கள் கூடியிருக்கும் போது குறிப்பிட்ட ஒருவர் யார் என்று தெரியாது திண்டாடுவதும். பல வழிகள் கூடுமிடத்தில் செல்ல வேண்டிய வழி எதுவென்று தெரியாது மயங்குவதும். ஒன்றைச் செய்வது அதை விட்டுவிடுவது என்னும் எண்ணங்கள் மனத்தில் தோன்றும் போது ஒன்றைத் துணியாது ஊசலாடுவதும், மனக்கலக்கமாம். உழம்புதல் = பலவோசை கலந்தொலித்தல், குழம்புதல். உழப்புதல் = சொல்லால் மழுப்புதல். குல - கல - கலங்கு - கலங்கல். கலங்கு - கலக்கு - கலக்கம். கல் - கலுழ் - கலுழி = கலக்கம், கலங்கல் நீர். கலுழ்தல் = கலங்குதல், கண்கலங்கி அல்லது மனங்கலங்கி அழுதல். கலுழ் - கலிழ். கலுழ் - கலுழன் = வெள்ளையுஞ் சிவப்புமாகிய இரு நிறங்கலந்த பறவை. கலுழன் - கருடன் (வ). குழம்பு - குழம்பு - குழப்பம். குழு - கழு - கழும் = மயக்கம். கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும் (தொல். உரி. 53) குழு - கூழ் = கலக்கம். கூழ்த்தல் = ஐயுறுதல். அவனிவ னென்று கூழேன்மின் (திவ். திருவாய். 3,6,9) கூழ்படுதல் = கலக்கமுண்டாதல். செல்படை யின்றிக் கூழ்பட வறுப்ப (பெருங். மகத. 27, 31) குழு-கெழு. கெழுவுதல் = பொருந்துதல், மயங்குதல். (சுள்) - செள் - செரு - செருக்கு - செருக்கம் - செருக்கல் = கள் மயக்கம். செருக்கு = மயக்கம், மதம், அகங்காரம். செருக்கம் = கள்மயக்கம். செருக்கு - தருக்கு. துதைதல் = செறிதல். கூடுதல். ததுமல் = கூட்டம், குழப்பம். முள் - முய - முயங்கு - மயங்கு - மயக்கம். முயங்குதல் = கூடுதல். மயங்குதல் = கூடுதல், கலத்தல். வேற்றுமை மயக்கம் = ஒரு வேற்றுமை யுருபு மற்றொரு வேற்றுமைப் பொருளிற் கலத்தல். திணைமயக்கம் = ஒரு திணைப் பொருள் மற்றொரு திணை நிலத்திற் கலத்தல். முல் - மல் - மல. மலத்தல் = மயங்குதல். மல - மலங்கு - மலக்கு - மலக்கம் = மயக்கம். மலங்கு = பாம்புடம்பும் மீன் வாலுங் கலந்த நீருயிரி. மலங்கு - விலங்கு - விலாங்கு. மலங்கு - மதங்க - மதக்கம் = மயக்கம். மதங்கு - மறங்கு. மறங்குதல் = மயங்குதல். மல - மலை - மலைவு. மலைத்தல் = மயங்குதல். மலம் - மதம் - மறம் = மயக்கம். மதம் - மதர். முள் - மள் - மரு - மருள் = மயக்கம். மருள் - மருட்கை = மயக்கம், வியப்பு, வியப்புச்செயல். மரு - மருமம் - மம்மம் - மம்மர் = மயக்கம். மம்மம் - மம்மல் - அந்திநேரம், மயக்கம், காமம், கல்லாமை. மரு - மறு - மறுகு - மறுக்கம் = மயக்கம். மறுகுதல் = கலத்தல், மயங்குதல். மறுகு = பல பண்டங்களும் மக்களும் கூடும் பெருந்தெரு. மறுகு - மறுகை. மல் - மால் = மயக்கம், காதல், பித்து. மால் - மாலம் = மயக்கம் வித்தை, பொய் நடிப்பு (மாய்மாலம்). மால் - மான் = மயக்கம். மான்றல் = மயங்குதல். மால் - மாலை = பல பூக்கள் கலந்த தொடை, பல மணிகள் கலந்த கோவை, இரவும் பகலுங் கலக்கும் அந்தி வேளை. மருண்மாலை என்னும் வழக்கை நோக்குக. மால் - மார் - மாரம் = மயக்கம், மாறாட்டம். மாரன் = காதல் மயக்கத்தை யுண்டுபண்ணுபவன். மள் - மாள் - மாழ் - மாழ்கு. மாழ்குதல் = மயங்குதல். மாழ் - மாழா. மாழாத்தல் = மயங்குதல். மாழ் = மாழை = மருட்சி, மயக்கம். முயங்கு - மயங்கு - மசங்கு. மயங்கு பொழுது = அந்தி வேளை. மசங்கு - மசங்கல் = அந்திப்பொழுது. முய - மய - மச - மசகு = திகைப்பு. மயக்கம். மச - மசள் - மசண்டை = அந்திப்பொழுது. மச - மசக்கை = கருப்பிணிகள் அடையும் மயக்கம். மய - மயல் = மயக்கம், காதல். மயல் - மையல் = காதன் மயக்கம். மயல் - மயர் - மயர்வு - மயக்கம். முள் - (முறு) - விறு - வெறு - வெறி = மயக்கம். வெறுத்தல் = செறிதல், கூடுதல். iii. மதிமயக்கம் குள் - கள் = மயக்கம், மயக்கச் சரக்கு. களித்தல் = கட்குடித்தல், வெறித்தல், கனி = குடியன். களி - களிறு = மதமுள்ள ஆண் யானை. மருள் = மதிமயக்கம், மதிப்புலனற்ற எச்சப் பிறவி, மருளாளி - மருள்கொண்ட தேவராளன். மதம் = யானையின் மதிமயக்கம். மதம் - மத்தம் = பித்து. உன்மத்தம் = கடும்பித்து. உன்மத்தம் - ஊமத்தை = பித்த நோய் மருந்து. மல = மத - மது = கள், தேன். மது - மதுர் - மதுரி. மதுரித்தல் = இனித்தல். மதுர் - மதுரம். மது - மத்து - மட்டு = கள், தேன். மத - மதி = மயக்கந்தரும் நிலவு, திங்கள், ஒ.நோ. E. lunacy from L. luna = moon. மதி - மாதம் - மாசம் (வ.). மதி - மதிரை - மதுரை = வதிக்குலவரசர் தலைநகர். ஒ.நோ. குதி - குதிரை. மசள் - மசணை - மந்தன். வெறித்தல் = கட்குடித்து மதிமயங்குதல். வெறி = மயக்கம். iv. கருமை நடக்கும் வழி தெரியாமலும், எதிருள்ள பொருள் தெரியாமலும், நச்சுயிரி பேய் கள்வர் முதலியவற்றிற்கு அஞ்சியும், மயங்குதற்கிட மானது கரிய இருளாதலால், மயக்கக்கருத்தில் கருமைக் கருத்தும் இருட் கருத்தும் ஒருங்கே தோன்றின. மயக்கமே மனத்திற்கு ஓர் இருள் போன்றதாம். உல் - அல் = கருமை, இருள். இரவு. அல்லார்ந்த மேனியொடு குண்டுகட் பிறையெயிற் றாபாச வடிவமான அந்தகா (தாயுமானவர் பாடல்) உல் - இல் - இர் - இரா - இரவு. இர் - இருள் - இருட்டு. இருள்நிறப் பன்றி (தொல். 1568) இர் - இரு - இரும்பு = கரிய தாது. இரு - இறு - இறடி = கருந்தினை. இறு - இறுங்கு = காக்காய்ச் சோளம். குல் - கல் - கால் = கருமை. குள் - கள் - கள்வன் = கருநண்டு. புள்ளிக்கள்வன் (ஐங். 21) கள் - களம் - (களங்கு) - களங்கம் = கருமை, நிலாவின் கறை. கள் - காள் - காளம் = கருமை. காள் - காளி = கரியவள் (கருப்பாய்). காள் - காழ் = கருமை. காழ் - காழகம் = கருமை. காழ்த்தல் = கருத்தல், கருத்து வயிரங் கொள்ளுதல், உரத்தல். காழ் - காய் = காயம் = கருமை, கரிய விண். விண்ணென வரூஉங் காயப் பெயர் வயின் (தொல். எழுத். 305) காயம் - ஆகாயம் (வ.) கள் - கரு - கருப்பு = கருமை, பேய். கரு - கரும்பு. கரு - கரம்பு - கரம்பை = காய்ந்த களிமண். கரு - கரி = கருத்தது. கரி - கரிசு - கரிசல் = கருநிலம். கரு - கறு - கறை = கருப்பு. கறுத்தல் = சினத்தாற் கருத்தல், சினத்தல். கறைமிடற்றோன் = கண்டங் கரிய சிவன். கரு - கார் = கருமை, முகில். கார் - காரி = கரிய எருது, கரிய சனி. கார் - காறு. காறுதல் - கருத்தல், வயிரங்கொள்ளுதல். கரு - கருகு - கருக்கு. கருகுதல் = வெப்பத்தால் கருத்தல். கரு - கருவல், கருத்தை. கருக்கு - கருக்கல் = விடிகாலைக் கருக்கிட்டு. முல் - மல் - மால் = கருமை, திருமால் (கரியோன்). முகில். மால் - மழை. மால் - மாலம் = கருப்பு, பேய். மால் - மார் - மாரி = காளி, முகில் மழை. மால் - மான் - மானம் - வானம் = முகில், மழை, விண். மான் - வான் = முகில், மழை, விண். மால் - மா = கருமை. முள் - மள் - மாள் - மாய் - மாயோன் (திருமால்). மாயோள் (காளி). மாய் - மாயம் = கருமை. மள் - (மய்) - மை = கருமை, முகில், காராடு, கரிய குழம்பு. மை - மயில் = கரு (நீல) நிறத் தோகையுள்ள பறவை. மயில் - மயிலை = கருமை கலந்த வெள்ளைக்காளை. மை - மயிர் = கரிய முடி. மை - மயி - மசி = கரிய குழம்பு. தஞ்சை நாட்டார், எழுதும் மையை மசி யென்றே கூறுவர். மசி - மசகு = வண்டி மை. மசகு - மசகம் = மயிர். மச்சு - மச்சம் = கரும்படர். மை - மஞ்சு = முகில். முள் - மள் = மண் - மணி = கரியது, நீலக்கல். மணி வண்ணன், மணிமிடற்றோன் முதலிய பெயர்களை நோக்குக. மள் - மரு - மறு = உடம்பிலுள்ள கரிய புள்ளி. மாழ்கு - மாகு - மாகம் = கரிய விசும்பு. மாகம் - நாகம் - நாகர். நாகநாடு = விண்ணுலகம். v. குற்றம் உடம்பிலுள்ள அழுக்கு பெரும்பாலும் கருநிறமாயிருப்ப தாலும், வெள்ளாடையிற்படும்கரு நிறம் மதியின் கண் மறுப் போல் தோன்றுதலாலும், கருமை குறித்த சில சொற்கள் அழுக்கையும் அழுக்குப்போன்ற குற்றத்தையும் குறிக்கும். கரி - கரில் = குற்றம். கரி - கரிசு = குற்றம், பாவம். கள் - களங்கு - களங்கம் = குற்றம். கறு - கறை = குற்றம். காழ் = காசு = குற்றம். மல் - மலம் = அழுக்கு, பவ்வீ. மள் - மரு - மறு = குற்றம். மச்சு = குற்றம். மயல் = அழுக்கு. மயல் - மயலை = அழுக்கு. மாழ் - மாசு = குற்றம். ஒ.நோ. காழ் - காசு. மை = குற்றம். vi. மறைவு கருமையில்பட்ட பிறநிறமும் இருண்ட இடத்திலுள்ள பொருள் களும் கண்ணிற்குத் தெரியாது மறைந்திருப்பதால், கருமைக் கருத்தில் மறைவுக் கருத்துத் தோன்றும். கள் - கள்ளம் = மறைவு, திருட்டு, வஞ்சனை. கள் - கள்ளன் = திருடன். கள் - கள்வு - களவு = மறைவு. திருட்டு. கள்வு - கள்வன் = திருடன். கள் - (கர்) - கர - கரவு - கரவடம் = களவு. கரத்தல் = மறைதல், மறைத்தல். கரவு = வஞ்சகம், களவு. மறுத்தல் = இல்லையென்று சொல்லால் மறைத்தல். மறு - மற. மறத்தல் = மனத்தில் மறையப் பெறுதல். மறு - மறை. மறை = பொதுமக்கட்கு மறைந்திருக்கும் செய்தி களையும் உண்மைகளையும் கொண்ட நூல். நரம்பின்மறை = இசை நூல். மால் - மாலம் = பாசாங்கு. மாள் - மாய் - மாயம் = மறைவு. வஞ்சனை. மாய் - மாயை - ஆன்மாவின் அறிவை மறைப்பது. ஒ.நோ. சாய் - சாயை. மாயமான் = வஞ்சனையுள்ள மான். மாயமாய் மறைந்து விட்டது என்பது வழக்கு. மாயவித்தை மாயமாலம் முதலிய பெயர்களை நோக்குக. (5) காணல் துறை அகக் கண்ணாற் காணலும் புறக்கண்ணாற் காணலும் எனக் காணல் இருவகை. முன்னது கருதல், பின்னது நுகர்தல். காணல் i. கண்டறிதல் கண்டறிதலாவது புறக்கண்ணாற் காணல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறி வதெல்லாம் கண்டறிவே யாயினும், ஐவகை நுகர்ச்சிப் பொருள்களின் வடிவையும் காணுதற் சிறப்புப் பற்றிக் கண்ணின் தொழிலே காட்சி என விதந்து கூறப்படும். ஐம்புலன்களும் பொருள்களொடு பொருந்துவதனாலேயே நுகர்ச்சியும் அறிவும் ஏற்படுகின்றன. (உள்) - அள் - அறி - அறிவு. குள் - கள். கள்ளுதல் = பொருந்துதல். கள் - கரு - கரி = கண்டவன் (சாட்சி). கள் - கண் = காணும் பொறி. கண்ணுதல் = பார்த்தல் (நாமதீப நிகண்டு). கண் - காண் - காட்சி = பார்வை, அறிவு. காண் - காணம் = மேற்பார்வை. காண் - காணி. காணித்தல் = மேற்பார்த்தல். கண்காணி - கண்காணம். கண்காணி = மேற்பார்ப்பவன். துல் - துன்று - தோன்று. தோன்றுதல் = கண்ணொடு பொருந்து தல், தெரிதல், உருக்கொளல், உதித்தல், பிறத்தல். புல்லுதல் = பொருந்துதல். புல் - புலம் - புலன் = பொருந்தியறியும் அறிவு. புல் = அறிவு, அறிவு நூல், இலக்கணம். புலம் - புலமை. புலம் - புலவன். புலனாதல் = அறியப்படுதல். புலப்படுதல் = புலனொடு பொருந்துதல். புலம் - புலர். புலர்தல் = கண்ணுக்குத் தெரிதல், விடிதல். புலர் - புலரி = விடியல். புலர் - பலர் - பலார், பலாரென்று விடிந்தது என்பது வழக்கு. ii. கருதியறிதல் கருதி யறிதலாவது அகக் கண்ணாற் கண்டறிதல். மனம் ஒரு பொருளொடு அல்லது செய்தியொடு பொருந்துதலே கருதலாம். உத்தல் = பொருந்துதல். உத்தி = பொருத்தம் பொருந்துமுறை, பொருத்த மாகக் கொள்ளும் ஊகம். உன்னுதல் = பொருந்துதல், கருதுதல், தியானித்தல். உன் - உன்னம் = தியானம். உன்னித்தல் = பொருத்தமாக ஊகித்தல். உறுதல் = பொருந்துதல், கருதுதல். ஓர்தல் = பொருந்துதல், கருதுதல்; கருதியறிதல். குள் - கள் (கரு) - கருது - கருத்து. சுள்ளுதல் = கூடுதல், பொருந்துதல். கள் - கண். கண்ணுதல் = பொருந்துதல், கருதுதல், மதித்தல். கண் = கண்ணியம் = மதிப்பு. (சுள்) - செள் - செ. செத்தல் = பொருந்துதல், ஒத்தல். கருதுதல். செத்தல் = கருதுதல். அரவு நீருணல் செத்து (கலித். 45). வெப்புடையாடூஉச் செத்தனென் (பதிற்றப். 86) செத்தல் = ஒத்தல். வெள்ளாங் குருகின் பிள்ளை செத்து (ஐங். 151). செ - செத்து - சித்து. ஒ. நோ. செந்துரம் - சிந்துரம். சித்து = கருத்து, அறிவு, கருதியதை அடையும் திறம். சித்து - சித்தன். முன்னுதல் = பொருந்துதல், கருதுதல் முன் - முன்னம் = கருத்து, குறிப்பு. முன் - மன். மன்னுதல் = பொருந்துதல் கருதுதல். மன் - மனம் = கருதும் அகக்கரணம். மன்னுந்திறம் மந்திரம். திரம்= திறம். றகரத்திற்கு முந்தியது ரகரம். மன் + திரம் = மந்திரம் = கருத்து வலிமை, எண்ணத்தின் திண்ணம். உள்ளத்தை அல்லது ஆசையை அடக்கிய முனிவன், தன் கருத்து வலிமையால் தான் கருதியதை நிறைவேற்று மொழியும், தான் கண்டுபிடித்த தப்பாத உண்மைகளைச் சொல்லுமொழியும், மந்திரமாகும். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (தொல். செய். 178) நிறைமொழி மாந்தர் மறைமொழி கருத்து வலிமையொடு கூடியது என்பதை ஆணையிற் கிளந்த என்னுந் தொடர் குறிப்பாய் உணர்த்தும். கருத்து வலிமையொடு கூடாவிடத்து ஒரு மொழியும் ஒரு பயனும் உறாது. மந்திரம் வாய்மொழி எனவும் படும். வாய்மையான மொழி அல்லது வாய்க்கும் மொழி வாய் மொழி. திருமூலர் அருளிய திருமந்திரமும் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியும், கவுந்தியடிகள் இரு பரத்தரைச் சவித்த மொழிகளும் போல்வன. மந்திரங்களாம். மந்திரத்தைக் காட்டும் மொழியையும் மந்திரம் என்றது ஓர் ஆகு பெயர். எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின். (குறள். 666). ஆதலால், திண்ணிய வுள்ளத்தின் வழிப்பட்டதே வாய்மொழி என அறிக. மனத்துக்கண் மாசிலனான ஒருவன், ஒருவரை வாழ்விக்கவோ சாவிக்கவோ வாய் திறந்து ஒன்றைச் சொல்ல வேண்டுவதில்லை. உள்ளத்தில் உள்ளினாலும் போதும். கடவுளை வேண்டும் மன்றாட்டு எங்ஙனம் உரையின்றி உள்ளத்திலும் நிகழ முடியுமோ, அங்ஙனமே மந்திரமும் என்க. நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்திற்குப் பேராசிரியர் உரைத்த உரை வருமாறு: இது மந்திரச் செய்யுளுணர்த்துதல் நுதலிற்று இதன் பொருள்: - நிறைமொழி மாந்தரென்பது, சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையார் என்றவாறு. அவர் ஆணையமற் கிளக்கப் பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமன் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடரெல்லாம் மந்திர மெனப்படும் என்றவாறு. அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க. தானே என்று பிரித்தான், இவை தமிழ் மந்திரமென்றற்கும், பாட்டாகி அங்கதமெனப்படு வனவும் உள, அவை நீக்குதற்குமென உணர்க. அவை : ஆரிய தன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய வந்தண் பொதியி லகத்தியனா ராணையாற் செந்தமிழே தீர்க்க சுவா - எனவும், முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி - யரணிய லானந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோட னானந்தஞ் சேர்க சுவா - எனவும், இவை தெற்கண் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் (ஒருவன்) சாவவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின மேல் பாட்டுரை நூல் (391) என்புழி அங்கதமென்றோதினான் இன்ன மந்திரத்தை. இஃது ஒருவனை இன்னவாற்றாற் பெரும்பான்மையுஞ் சபித்தற் பொருட்டாகலின் அப் பெயர்த்தாயிற்று. இக் கருத்தே பற்றிப் பிறரும், நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (குறள். 2) என்றாரென்க அமைச்சன் அரசியற் கருமங்களை எண்ணும் அல்லது சூழுந் திறனும் மந்திரம் எனப்படும். திறமையாகச் சூழ்ந்து தப்பாது வாய்க்கும் வழிவகைகளைச் சொல்லுதலால், அமைச்சன் அரசற்குக் கூறும் அறிவுரையும் மந்திரம் எனப்பட்டது. மந்திரம் கூறுபவன் மந்திரி. மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல் என்றார் அதிவீரராம பாண்டியரும். iii. கருதும் மாந்தன் மாந்தனை மற்ற வுயிரிகளினின்று வேறுபடுத்திக் காட்டுவது மன்னுந்திறனாகிய பகுத்தறிவே. இயங்கும் உயிரிகட்கெல்லாம் கருதுத் திறமிருப்பினும், அது மாந்தனிடத்திற்போல் மற்ற வுயிரிகளிடத்தில் வளர்ச்சியடையவில்லை. மக்கள் தாமே ஆறறி வுயிரே என்றார் தொல்காப்பியர் (1522). பொருள்களை உயர்திணை அஃறிணை என இலக்கண நூலார் இரு பகுப்பாகப் பகுத்ததும், அங்ஙனம் பகுத்தற் கேற்ப முன்னரே பொதுமக்கள் அவற்றின் வினைகளைக் குறிக்கும் சொற்களை வெவ்வேறு விகுதி கொடுத்துக் கூறி வந்ததும், அவற்றின் பகுத்தறி வுண்மையின்மை பற்றியே மன்னுந்திறம் சிறந்திருத்தல் பற்றியே மாந்தன் மன் எனப்பட்டான். ஆங்கிலச் சொல்லாராய்ச்சியாளரும் man என்னும் பெயருக்கு thinking animal என்றே பொருட் காரணன் காட்டுவர் (E. man, from A.S. munan, to think). மன் = மன்னும் (கருதும்) உயிரியாகிய மாந்தன். மன்பதை = மக்கட் கூட்டம். மன்னுயிர் = மக்கட் குலம். நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் (திருமுரு. 276) என்றார் நக்கீரர். தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது (குறள், 68) என்றார் திருவள்ளுவர். மன்னுயிர் என்பதற்கு மன்னாநின்ற வுயிர் என்று பரிமேலழகர் உரைக்கும் உரை பொருந்தாது. மன்னாநிற்றல் = நிலைபெறுதல். மன் - மான் - மானவன் - மாந்தன். மன் - மநு (வ.). (6) பொருத்தல் துறை பல் உறுப்புக்களையும் பகுதிகளையும் பொருத்துவது பொருத்து. i. உறுப்புப் பொருத்து குள் - கள் - கண் - கணு. கண் - கணை. கணுக்கால் = கணைக்கால். கள் - களம் = உடம்பையும் தலையையும் பொருத்தும் கழுத்து. களம் - (களத்து) - கழுத்து. கள் - கட்டு குள் - கொள் - கொளை = பாட்டு. புல் - பொல் - பொரு - பொருந் - பொருந்து - பொருத்து. புள் - (பூள்) - பூண் - பூட்டு. புள் - (புண்) - புணர் - புணர்ப்பு. புள் - பொள் - பொட்டு = நெற்றியெலும்புப் பொருத்து. முள் - முளி = முட்டு, கணு. முளி - முழி - மொழி = கைமுட்டு, கரும்புக்கணு. முழி + கை = முழங்கை. முழி + கால் = முழங்கால். முழி - முழம் = முழங்கையளவு. முள் - முட்டு = கை காற் பொருத்து. முட்டு - முட்டி = முழங்காற் பொருத்து, கைக்கணு, மடக்கிய முட்டிக் கையாற் செய்யும் மற்போர். முட்டு - முடு - மடு - மடை = பொருத்து, கொளுத்து. முட்டு - மூட்டு = பொருத்து. முண்டு = மரக்கணு, உடற்சந்து. முண்டு - முண்டம் = கணுக்காற் பொருத்து. கட்டுதல் (உள்) - இள் - இழை - இணை. (இள்) - இய - இயை - இசை, இசைத்தல் = கட்டுதல். குள் - கள் - கட்டு. கட்டு - கட்டில். கட்டு - கட்டணம் = பாடை. புள் - (புண்) - புணை - பிணை. புண் - புணர். புணர்த்தல் = கட்டுதல். புண் - புணி - பிணி. பிணித்தல் = கட்டுதல். புள் - பொள் - பொட்டு - பொட்டணம் = கட்டு. பொட்டணம் - பொட்டலம். முள் - முட்டு - மூட்டு - முட்டை. ii. முடைதல் உல் - அல். அல்லுதல் = கூண்டு முடைதல். குள் - (குய்) - குயில். குயிலுதல் = நெய்தல், பின்னுதல். நுள் - நெள் - நெய் - நெயவு - நெசவு. புல் - பொல் - பொரு - பொருந்து - பொருத்து. புல் - (புன்) - பின். முள் - முடு - முடை. முடைதல் = பின்னுதல். iii. தைத்தல் உத்து - அத்து. அத்துதல் = தைத்தல். ஒட்டுதல் = தைத்தல். குத்துதல் = தைத்தல். துன்னுதல் = தைத்தல். துன் - துன்னம் = தையல். துன்னகாரன் - தையற்காரன். துள் - (தள்) - (தய்) - தை. தைத்தல் = துணி பலகை முதலியவற்றை இசைத்தல். தை - (தைச்சு) - தச்சு - தச்சன். வண்டிக் குடத்தில் ஆரைகளைப் பொருத்தலைத் தைத்தல் என்பர். பொள் - பொட்டு - பொத்து. பொத்துதல் = மூட்டுதல். பொல்லம் பொத்துதல் என்னும் வழக்கைக் காண்க. முள் - மூள் - மூட்டு - மூட்டை - மூடை = மூட்டப்பட்ட கோணிப்பை, மூட்டுதல் = தைத்தல். (7) மூடல் துறை மூடலாவது. கொள்கலங்களின் வாயையும் போர்ப்பவற்றின் ஓரங்களையும் பொருத்தி மறைத்தல். i. மூடுதல் உம் - உமி - உமிதல் = வாய் மூடி எச்சில் உமிழ்தல். உமி - உமிழ். சுள் - (சூர்) - சார்த்து - சாத்து. சாத்துதல் = மூடுதல். தும் - துமி. துமிதல் = உமிதல். தூர்த்தல் = குழியையும் துளையையும் மூடுதல். பொது - பொத்து. பொத்துதல் = மூடுதல், மறைத்தல். பொது - பொதுக்கு. பொதுக்குதல் = மறைத்தல். முள - மூழ். மூழ்த்தல் = மூடுதல். மூழ் - மூழல் = மூடி. மூழ் - மூடு - மூடி. மூடு - மூடம் - மோடம் = வானம் மூடிய மந்தாரம், மந்தாரம் போன்ற மடமை. மூடு = அறிவிலி. மூடம் - மூடன். மூழ் - மூய். மூய்தல் = மூடுதல், வாய்மூடி எச்சில் உமிழ்தல். மூய் - மொய். மொய்த்தல் = மூடுதல். ii. மூடிய பொருட்கள் உம் - உமி = நெல்லை மூடியுள்ள தொலி. உம் - ஊம் = வாய்பேசாத ஊமை. ஊம் - ஊமை. ஊம் - ஊமன். வாய் பேசாதவனை வாயை உம் என்று வைத்துக் கொண்டிருக் கிறான் என்பர். கும் - கொம்மை = கம்பு தினை கேழ்வரகு முதலியவற்றின் உமி. சும் - சொங்கு = சோள உமி. மூழ் - மூகு - மூகன் = ஊமையன். மூகு - மூங்கு = ஊமை. மூங்கு - மூங்கை = ஊமை. மூகு - மூகா. மூகாத்தல் = ஊமையாயிருத்தல். iii. போர்த்தல் உறு - உறை. குள் - குடி = சட்டை. கும்பு - குப்பு - குப்பா = தூரிப்பை. குப்பு - குப்பாயம் = மெய்ப்பை, சட்டை. குப்பாயம் - குப்பாசம். சுல் - (சோல்) - சால் - சால்வை = போர்வை. பொரு - போர் - போர்வை. பொரு - பொது - பொதி. பொதிதல் = போர்த்தல். பொதி - பொதிர். பொதிர்தல் = போர்த்தல். (8) பற்றல் துறை பற்றலாவது, கை கால் முதலிய உறுப்புக்களைப் பிற பொருள் களோடு பொருந்திப் பிடித்தல். மனத்தில் ஒன்றைக் கொள்ளுதலும் பற்றுதலோடொக்கும். i. பிடித்தல் விரல்களைப் பொருத்தி ஒரு பொருளைப் பற்றுதலே பிடித்தல். பிறவுறுப்புக்களால் ஒன்றைப் பற்றுதலும் ஒப்புமைபற்றிப் பிடித்தல் எனப்படும். குள் - கொள். கொள்ளுதல் = பற்றுதல். கொள் - கோள். ஏறுகோள் தீக்கோள் முதலியவற்றை நோக்குக. கொள்கொம்பு - கொழுகொம்பு = பற்றுக்கோடு. குது - கது - கதுவு. கதுவுதல் = பற்றுதல். கது - காது = ஒலியைப் பற்றும் செவி. புல் - (புற்று) - பற்று. புள் - (பிள்) - பிண்டி - பிண்டம். பிண்டம் = திரட்சி. பிண்டித்தல் கைக்குள் சோற்றை அல்லது மாவைத் திரட்டுதல், சேர்த்தல், பிடித்தல். பிண்டி - பிடி. ஒ. நோ. கண்டி - கடி. தண்டி - தடி. பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது என்னும் பழமொழியையும், பொரிவிளங்காய் பிடித்தல். கொழுக்கட்டை பிடித்தல், முதலிய வழக்குக்களையும் நோக்குக. பிடித்தல் = கைக்குள் திரட்டுதல், கைக்குள் மாத்திரளையைத் திரட்டுதல் போல் ஒன்றைப் பற்றுதல், கையிற் பிடித்துக் கொண்டது போல் அளவைக் குறைத்தல். பிடி = பிடிக்கப்படும் காம்பு அல்லது அடிப் பகுதி, கைக்குள் பிடிக்கும் அளவு. சட்டை முதுகிற் பிடிக்கிறது, சோறு பானையடியிற் பிடித்துக் கொண்டது. வீட்டில் தீப்பிடித்து விட்டது. சம்பளத்தில் ஓர் உருபாவைப் பிடித்து விட்டார்கள். எனக்குப் புழுங்கலரிசிதான் பிடிக்கும், என்பன போன்ற வழக்குக்களெல்லாம் உண்மையாகவும் அணி வகையிலும் பற்றற் பொருளையே குறித்தல் காண்க. பொல் - (பொற்று) - பொற்றி - பொறி = பிடிக்குங் கருவி, சூழ்ச்சியம், இயந்திரம். எலிப்பொறி புலிப்பொறி முதலியவற்றை நோக்குக. ஐம்புலவுறுப்புக் களும் பொருள்களின் தன்மையைப் பிடித்தலின், பொறியெனப்பட்டன. ii. கொள்ளுதல் ஒருவர் ஒன்றைப் பெற்றபின் அதைக் கையிற் கொள்ளுதலால், கொள்ளுதல் என்னுஞ் சொல், விலையின்றிப் பெறுதலையும் விலைக்கு வாங்குதலையுங் குறிக்கும். விலையின்றிப் பெறுதல், வந்ததைப் பெறுதலும் வலிந்து பெறுதலும் என இரு வகைத்து. கொள்ளுதல் = பெறுதல், வாங்குதல், விலைக்கு வாங்குதல். கொள் - கொள்ளை = கொள்ளும் விலை. கொண்டான் = பெற்றவன். விலைக்கு வாங்கினவன், ஒருத்தியை மனைவியாகக் கொண்டவன். கொள் - கொண்கு - கொண்கன் = கணவன். கொள் - கொள்வு - கொள்வனை. கொள் - கொள்நன் - கொழுநன் = கணவன். கொழுநன் - கொழுந்தன் = கொழுநனொடு கூடப் பிறந்தவன். கொழுந்தி (பெ. பா). கொள் - கொள்ளை = பெருவாரியாக வலிந்து கொள்வது (சூறை), பெருவாரியாக உயிர்களைக் கொள்ளும் நோய். கொள் - கொண்டி = கொள்ளை. கொள் - கோள் = கொள்ளை. ஆகோள் நிரைகோள் முதலிய வழக்குகளைக் காண்க. கொள் - கோள் - கோடல். சூறைகோடல் = கொள்ளையடித்தல். கொள்ளுதல் = மனத்திற்கொள்ளுதல். கருதுதல், நம்புதல். கொள் - கோள் = கருத்து. கொள் - கொள்கை = கருத்து, நம்பிக்கை, கோட்பாடு = குறிக்கோள், நெறிமுறை. iii. கொளுத்துதல் கொளுத்துதலாவது ஒன்று இன்னொன்றைக் கொள்ள வைத்தல்; அதாவது பற்றவைத்தல். குள் - கொள் - கொளுவு - கொளுவி. கொள் - கொண்டி = கொளுவி. கொள் - கொளு. கொளுத்துதல் = பற்றவைத்தல். அறிவு கொளுத்துதல் தீக் கொளுத்துதல் என்னும் வழக்குக்களைக் காண்க. கொள் - கோள் = கொளுத்துகை, குறளை. தீக்கோள் கோள் மூட்டுதல் முதலிய வழக்குக்களைக் காண்க. கொள் - கொட்கு - கொட்கி - கொக்கி = கொளுவி. கொள்ளி - நெருப்புப் பற்றிய கட்டை. கலகமூட்டுபவன். பொல் - பொரு - பொருந்து - பொருத்து. விளக்குக் கொளுத்துதல் விளக்குப் பொருத்துதல் என்னும் வழக்குக்களைக் காண்க. முள் - மூள் - மூட்டு. தீப்பற்றவைத்தல் தீ மூட்டுதல் என்பன வழக்கு. மூட்டுதல் = பொருத்துதல். மூட்டு - மூட்டம். மூட்டு - மாட்டு. மாட்டுதல் = கொளுவுதல். தீப்பற்ற வைத்தல். மாட்டு = மாட்டி. தலைப்பாகை மாட்டி சட்டை மாட்டி என்பன மாட்டுங் கருவிகள். மாட்டு = மாட்டல் = தலைமுடியில் மாட்டும் அணி. மாட்டு = செய்யுளில் ஓரிடத்திலுள்ள தொடரை மற்றோரிடத் திலுள்ள தொடரொடு பொருத்திப் பொருள் கோடல். iv. கொல்லுதல் அரிமா புலி முதலிய விலங்குகள் ஓர் உயிரைக் கொல்லற்கே பற்றுதலானும், கொல்லும் விலங்குகளும் மக்களும் ஓர் உயிரியைப் பற்றுதலுங் கொல்லுதலோடொக்குமாதலானும், பற்றுதற் கருத்தில் கொல்லுதற் கருத்துத் தோன்றிற்று. ஆங்கிலத்திலும் பற்றுதலைக் குறிக்கும் seize என்னும் சொல். கொல்லுதலைக் குறித்தல் காண்க. கொள் - கோள் = கொலை. கொள்ளுதல் = பற்றுதல், கொல்லுதல். கோளரி = கொல்லுஞ்சிங்கம். புலிகோட்பட்டான் பேய் கோட்பட்டான் முதலிய தொடர்கள், புலியினாலும் பேயினாலும் கொல்லப்பட்டதைக் குறித்தல் காண்க. கொள் - கொல் - கொலை. கொல் - கொல்லன் = மரத்தைக் கொல்பவன், தச்சன், கம்மியன், இருப்புக்கொல்லன். மரங்கொல் தச்சன் (சிலப். 5:29) ஐவகைக் கொல் தொழில்களுள் முதலாவது எழுந்தது தச்சு. (9) ஒன்றல் துறை இரு அல்லது பல பொருள்கள் ஒன்றாகப் பொருந்துதல் ஒன்றல். i. ஒட்டிச் செல்லுதல் ஊர்தல் = நிலத்தையொட்டிச் செல்லுதல், உடம்பையொட்டி நகர்தல். உடு - உடும்பு = நிலத்தையும் சுவரையும் ஒட்டிப் பற்றும் உயிரி. ஊணான் = நிலத்தை ஒட்டிப் படரும் கொடி. ஓணான் = நிலத்தையும் மரத்தையும் ஒட்டிச் செல்லும் ஊருயிரி. ஓணான் - ஒந்தான் - ஒந்தி - ஓதி. ஒட்டு - அட்டு - அட்டை = நிலத்தையும் மரத்தையும் ஒட்டிச் செல்லும் புழுவகை. மரஅட்டை - மரவட்டை. ஒள் - ஒண் - ஒண்டு. ஒண்டுதல் = மரம் சுவர் முதலியவற்றைச் சார்தல். ஒண்டிக்குடி = ஒட்டிக்குடி. (புல்லி) - பல்லி = மரத்தொடும் சுவரொடும் பொருந்தி இருப்பது. அச்சுடைச் சாகாட் டாரம் பொருந்திய சிறுவெண் பல்லி போல (புறம். 256). பொருந்தலாற் பல்லி போன்றும் (சீவக. 1895). ii. உடனுறுதல் உடு - உடல் = உயிருடனிருப்பது. உடல் = உடம்பு. உடு - உடங்கு - உடக்கு = போலியுடம்பு. உடன் - உடன்படு - உடம்படு. உடங்கு = கூட. உடந்தை = கூட்டு. ஒல் - ஒரு - ஒருங்கு. கூடு - கூட்டு. iii. ஒன்றுதல். உறுதல் = ஒன்றுதல். உல் - ஒல். ஒல்லுதல் = பொருந்துதல். ஒல் - ஒன்று - ஒற்று - ஒற்றுமை. ஒன்று - ஒன்றி. ஒள் - ஒண் - ஒண்டு - ஒண்டி. ஒண்ணுதல் = பொருந்துதல். ஒன்று - ஒற்று - ஒற்றி. ஒண்டு - ஒட்டு. குள் - கூள் - கூடு. சுவள் - சுவண்டு = பொருத்தம். சுவள் - (சிவள்) - சிவண். சிவணுதல் = பொருந்துதல். (சுள்) - செள் - செரு - சேர். துள் - தொள் - தொடு - தொட்டிமை = ஒற்றுமை. புல் - பொல் - பொரு - பொருந் - பொருந்து. iv. ஒத்தல் உருத்தல் = ஒத்தல். உறுதல் = ஒத்தல். உ - உவ் - உவ - உவமை = ஒப்பு. உவ - உவமம் - உவமன். ஒ. நோ. பரு - பருமம் - பருமன். உவத்தல் = பொருந்துதல், ஒத்தல். உ - ஒ. ஒத்தல் = பொருந்துதல். ஒ - ஒக்கல் - ஒக்கலி. ஒக்கலித்தல் = ஒப்பாதல். ஒ - ஒத்து - ஒத்தி - ஒத்திகை. ஒ - ஒப்பு - ஒப்பம். ஒப்பு - ஒப்பனை. ஒப்பு = ஒப்பாரி. ஒப்பு - ஒப்புரவு. ஒப்பு - ஒப்படி. ஒப்பு - ஒம்பு. ஒ - ஒவ்வு. ஒள் - ஒட்டு - ஒட்டை = ஒப்பு, ஒத்த பருவம். இவன் அவனொட்டை என்று கூறுதல் காண்க. ஒட்டை - ஓட்டை = ஒத்த பருவம். ஒள் - ஒரு - ஒருவு. ஒருவுதல் = ஒத்தல். ஓடுதல் = ஒத்தல். ஓடு - ஓட்டம் - ஆட்டம் = ஒப்பு குரங்காட்டம் ஓடுகிறான் என்று கூறுதல் காண்க. குள் - கள் - கண் - கண. கணத்தல் = கூடுதல், பொருந்துதல், ஒத்தல். கணக்க = போல. குரங்கு கணக்கா = குரங்குபோல. கணக்கு = ஒப்பு. அந்தக் கணக்கில் = அந்த வகையில், அதைப்போல. கண - கணகு - கணக்கு. குள் - கள் - கள்ளுதல் = பொருந்துதல், ஒத்தல். கள் - கடு - கடுத்தல் = பொருந்துதல், ஒத்தல். குள் - கொள். கொள்ளுதல் = பொருந்துதல், ஒத்தல். குள் - குழு - கெழு. கெழுவுதல் = பொருந்துதல், ஒத்தல். கெழு - கேழ் = ஒப்பு. சுள் - செள் - செய். செய்தல் = ஒத்தல். வேனிரை செய்த கண்ணி (சீவ. 2490). செய்யார் = பகைவர். செய் = செ. செத்தல் = ஒத்தல். செத்து = ஒத்து (தொல். பொ. 286 உரை). துல் - துல்லியம் = ஒப்பு. சரிமை. துல் - துலை = ஒப்பு. துள் - தள் - தழு - தகு தகுதல் = பொருந்துதல், ஒத்தல். தகுதி = பொருத்தம். பதவிக்குப் பொருத்தம். துணைதல் = ஒத்தல். நுள் - கள் - நளி. நளிதல் = பொருந்துதல், ஒத்தல். நளி - நடி. புல்லுதல் = பொருந்தல். ஒத்தல். புல் - புரை. புரைதல் = ஒத்தல். புல் - பொல் - போல். போலுதல் = ஒத்தல். போல் - போலி. போல = ஒப்ப. பொல் - பொரு - பொருவு = ஒப்பு. பொரு - பொருந் - பொருந்து. பொரு - பொது = ஒப்பு. எல்லார்க்கும் ஒத்தது, நடுநிலை. ஒன்றோடு பொதுப்படா வுயர்புயத்தினான் (கம்பரா. நாகபாச. 75). பொது = ஒப்பு. பொது - பொதுவன் - குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடைப்பட்ட முல்லை நிலத்தான். பொது - பொதியில் (பொது + இல்) = வழக்காளிக்கும் எதிர் வழக்காளிக்கும் பொதுவான அம்பலம். முன் - மன். மன்னுதல் = பொருந்துதல். மன் - மான். மானுதல் = ஒத்தல். v. துலை (தராசு) துலையின் சிறப்பியல்பு இருபுறமும் ஒத்தலாதலால், ஒத்தலைக் குறிக்குஞ் சொல்லினின்று துலைப்பெயர் தோன்றிற்று. துலைநாவன்ன சமநிலை என்று ஆத்திரேயன் பேராசிரியரும். சமன்செய்து சீர்தூக்கும் கோல் என்று திருவள்ளுவரும், கூறுதல் காண்க. ஒப்பு - ஒப்பராவு. ஒப்பராவுதல் = தராசு செய்தல். ஒப்பராவி = தராசு செய்வோன். துல்லுதல் = பொருந்துதல். ஒத்தல். துல் - துல்லியம் - துல்லிபம் = ஒப்பு. துலை = ஒப்பு. துல் - துலம் = நிறைகோல், துலா நிறை. துல் - துலா = நிறைகோல், நிறைகோல் போன்ற ஏற்றம், நிறைகோல் வடிவான ஓரை. கைத்துலா ஆளேறுந்துலா முதலிய ஏற்ற வகைகளை நோக்குக. துலாக்கோல் = கழுத்துக்கோல் என்னும் நிறை கோல். துலாக்கட்டை = துலாக்கோல் போன்ற வண்டியச்சுக் கட்டை. துலா - துலாம் = நிறைகோல், துலாவோரை, ஏற்றம், ஒருநிறை. துலாம் - துலான் = ஒரு நிறை. துல் - துலை = நிறைகோல், துலாவோரை, ஒரு நிறை, ஏற்றம். துலை - தொலை = ஒப்பு. vi. ஓவியம் ஒரு தோற்றத்தை ஒத்த வரைவே ஓவியம். உ - ஒ - ஒ = ஒப்பாகு. (ஏ). ஒ - ஓவம் = சித்திரம். ஓ - ஓவியம் = சித்திரம். ஓ - ஓடு - ஓப்பு, சித்திரம். ஓடு - ஓடாள்வி - ஓடாவி - சித்திரக்காரன். சுள் - செள் - செ. (செத்திரம்) - சித்திரம். ஒ. நோ. செந்துரம் - சிந்துரம். புல் - புள் - (பள்) - படு. படுதல் = உறுதல், பொருந்துதல், ஒத்தல். படு - படி = ஒப்பு, ஒத்தவகை, வகை. அப்படி, இப்படி, ஒருபடியாய் வருகிறது, என்னும் வழக்குக்களை நோக்குக. படி - படிமை = ஒப்பு, ஒத்த உருவம், வடிவம், கோலம், தவக்கோலம். படி - படிமம். படி - படிவு - படிவம். படிவு - வடிவு - வடிவம். vii. நடிப்பு ஒருவன் செயலை ஒப்ப இன்னொருவன் செய்தலே நடிப்பாம். நுள் - நள் - நளி - நடி. நள்ளுதல் = பொருந்துதல், செறிதல். நளிதல் = பொருந்துதல், செறிதல் = ஒத்தல். நளிய என்பது ஒர் உவமவுருபு. நாட நளிய நடுங்க நந்த (தொல். 1232). நளியென் கிளவி செறிவும் ஆகும் (தொல். உரி. 25). நளி - நளினம் = பகடி, கோமாளிக் கூத்து. நடித்தல் = பாசாங்கு செய்தல், கோலங்கொள்ளுதல், கூத்தாடுதல். நடி + அம் = நடம் = கூத்து. நடம் - நடன் = கூத்தன். வளிநடன் மெல்லிணர்ப்பூங்கொடி மேவர நுடங்க (பரிபா. 22, 43). நடம் - (நடல்) - நடலை = பாசாங்கு, பொய்ம்மை, வஞ்சனை. ஒ. நோ. படம் படல் - படலை, நடல் - நடலம் = பாசாங்கு, இகழ்ச்சி. கூத்து. நடலமடித்தல் - பாசாங்கு செய்தல். நடலம் - நடனம் = பாசாங்கு, கூத்து. இனி, நடி + அனம் = நடனம் - நடலம் என்றுமாம். அனம் ஒரு தொழிற் பெயர் விகுதி. எ.டு. விளம்பு - விளம்பனம், கண்டி - கண்டனம். நடம் - நட்டம் - நட்டுவன் = கூத்தாசிரியன். நட்டுவன் - நட்டுவம் = நட்டுவன் தொழில். நட்டுவம் - நட்டு. நட்டுவத்திற்கு மத்தளம் சிறந்த துணையாவது. ஆதலால் நட்டுவனோடு என்றும் மத்தளக்காரன் கூடியேயிருப்பான். அதனால், நட்டுமுட்டு, நட்டுவனும் முட்டுவனும், என்னும் இணைமொழிகள் எழுந்தன. நட்டுவன் என்னும் சொல்லை நோக்கி முட்டுவன் என்னும் சொல்லும் முட்டு என்னும் சொல்லை நோக்கி நட்டு என்னும் சொல்லும் எதுகைபற்றியமைந்தன. நட்டு - நட்டணம். நட்டணம். நட்டு - நட்டணை = நடிப்பு, கூத்து, கோமாளிக்கூத்து. நடி + அகம் = நாடகம் (முதனிலை திரிந்து விகுதி பெற்ற தொழிற்பெயர்). ஆரியர் நாவலந்தேயத்திற்கு வருமுன்னரே, தமிழர் இசை நாடகக் கலைகளில் சிறந்திருந்ததினால், அவர் அவற்றை இயலோடு சேர்த்துத் தமிழை முத்தமிழாக வழங்கி வந்தனர். தலைக்கழகத் தமிழ் முத்தமிழாகவே இருந்தது. எல்லா நூற்கும் பொதுவான சொல் வழக்கை உலக வழக்கு செய்யுள் வழக்கு என்றும், பொருள் வழக்கை உலகியல் வழக்கு நாடக வழக்கு என்றும், இவ்விருவகையாக வகுத்திருந்தனர். உலகியல் வழக்கு உண்மையானது; நாடக வழக்கு புனைந்துரை யானது. இவ்விரண்டும் கலந்த அகப்பொருட் செய்யுள் வழக்கைப் புலனெறி வழக்கு என்னும் பெயராற் குறித்து அதன்படியே தொன்றுதொட்டுப் பாடி வந்தனர் முன்னைத் தமிழர். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட் டாயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர் என்று சார்பு நூலாரான தொல்காப்பியர் கூறுதல் காண்க. (அகத்திணையியல், 53). இங்குக் காட்டப்பட்ட நடிப்புப் பற்றிய சொற்கட்கெல்லாம் வடமொழியில் மூலமாகக் குறிக்கப்படுவது ந்ருத்த என்னும் வடிவொடு நட்ட (வ.) என்னும் வடிவின் ஒவ்வாமையை என்பதாகும். viii. அளவு ஓர் அளவினால் ஒருமுறை அளக்கப்பட்ட பொருள் அளந்த கருவியோடொத்த அளவினதாயிருப்பதால், ஒப்புமைக் கருத்தில் அளவுக் கருத்துப் பிறந்தது. எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் என்னும் நால்வகையளவுள் முன்னதொழிந்த ஏனை மூன்றிலும், இன்னதுதான் அளவு கருவி என்னும் யாப்புறவில்லை. மக்களெல் லார்க்கும் பொதுவான அளவு கருவிகள் எங்கணும் பெரு வழக் காக வழங்கிவரினும், என்றும் எவரும் தம் வசதிக்கேற்ப எதையும் அளவு கருவியாக வைத்துக் கொள்ளலாம். பருமனிலோ நெடுமையிலோ, ஒரு பொருளுக்கு ஒத்த அளவு இன்னொரு பொருளிற் கொள்ளுவதே அளத்தல் என்க. வசதிபற்றிச் சில அளவு கருவிகள் ஏற்பட்டிருப்பினும், உண்மையில் அளக்கும் பொருளுக்கும் அளக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடில்லை. அளக்கப்படும் பொருளைக் கொண்டே அளக்கவுஞ் செய்யலாம். துணியால் துணியை அளப்பதையும் காயால் காயை நிறுப்பதையுங் காண்க. உல் - அல் - அல - (அலவு) - அலகு = அளவு. அல்லுதல் = பொருந்துதல், பொருத்துதல் (முடைதல்). உல் - (உள்) - அள் - அள - அளவு - அளவை. அள்ளுதல் = செறிதல், பொருந்துதல். புள் - (பள்) - படு - படி. படுதல் = தொடுதல், பொருந்துதல், ஒத்தல். படுதல் = ஒத்தல். மலைபடவரிந்து (சீவக. 56) படியொருவ ரில்லாப் படியார் போலும் (தேவர். 44. 7) படி = ஒப்பு. படி = ஒத்த அளவு, அளவு. முகத்தலளவு கருவி (நாழி), எடுத்த லளவு கருவி (படிக்கல்), தரம், வகை, நாள் தொறும் நாழியால் அளந்து கொடுக்கப்படும் கூலம், நாட்செலவுக்காசு. வரும்படி = வருமளவு. படிப்படியாக = அளவளவாக, மெல்லமெல்ல. படித்தரம் = நாடொறும் கோயிற்களந்து கொடுக்கப்பெறும் ஒழுங்கு. படிமுறை = மேன்மேலளவு. படிக்கட்டு = மேன்மேலளவான கட்டு. எனக்கு ஒருவகையாய் வருகிறது என்பதை எனக்கு ஒருபடியாய் வருகிறது என்பர். நாழியையும் நிறைகல்லையுங் குறிக்கும் படி என்னும் சொல்லும், மூலத்தின் ஒப்பைக் குறிக்கும் படி என்னும் சொல்லும், ஒன்றே. ஒப்புமைக் கருத்தையுணர்த்தும் படி என்னும் சொல், போன் மையைக் குறித்து உருவம் பற்றிய சொற்களையும், அளவைக் குறித்து அளவு கருவி பற்றிய சொற்களையும் பிறப்பித்ததென்க. முன் - மன். மன்னுதல் = பொருந்துதல். மன் - மான். மானுதல் = ஒத்தல். மான் - மானம் = ஒப்பு அளவு, படி, (நாழி, நாழியை மானம் என்பது வடார்க்காட்டு வழக்கு). மானவட்டில் = அளவு வட்டில். எண்மானம் = எண்ணளவு. வருமானம் = வருமளவு. வரும்படி. மன் - மான் - மா. ஒ. நோ. பண் - பாண் - பா. மா என்னும் சொல் அள என்னும் பொருளில் ஒரு காலத்து வழங்கிய ஏவல் வினை. மா + திரம் = மாத்திரம் = அளவு. மா + திரை = மாத்திரை = அளவு. திரம் திரை என்பன தொழிற்பெயர் விகுதிகள். திரம் - திரை. ஒ. நோ. அனம் - அனை. (வஞ்சனம், வஞ்சனை). ‘அவன் எனக்கு எம்மாத்திரம்? என்னும் தொடரில், மாத்திரம் என்னும் சொல் அளவைக் குறித்தல் காண்க. ‘எவ்வளவு?’ என்பதை வடார்க்காட்டார் ‘எம்மாத்தம்? (எம்மாத்திரம்?) என்பர். மானம் என்னுஞ் சொல். அளவு என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு ஒரு தொழிற்பெயர் விகுதியாகவும் வரும். எ.டு. கட்டுமானம் = கட்டும் அளவு, கட்டடம். படிமானம் = படியும் அளவு. படிவு. அடைமானம் செரிமானம் சேர்மானம் தீர்மானம் முதலிய தொழிற்பெயர்களில், மானம் என்பது விகுதியளவாக நின்றது. மான் - மானி. ஒ. நோ. தீர்மானி - தீர்மானம். தீர்தல் = முடிதல். தீர்மானம் = முடிவு. தீர்மானித்தல் = முடிவு செய்தல். மானி = அளப்பது, அளவு கருவி. எ.டு. வெப்பமானி. மானித்தல் = அளவிடுதல், மதித்தல், கருதுதல். மானி - மானியம் - மானிபம் = மதித்தளிக்கும் நிலம். ix. கணக்கு அளவிடுதல் = கணக்கிடுதல். குள் - குண் - குணி. குணித்தல் = அளத்தல், அளவிடுதல். குணிப்பு = அளவு. குணி - கணி. கணித்தல் = அளவிடுதல், கணக்கிடுதல். கணி = கணிப்பவன். கணி - கணியன். கணி - கணிதம். குள் - கள் - கண் - கண - கணகு - கணக்கு - கணக்கன். கணகு - கணகன் = கணக்கன். கணக்கு = அளவு, எண், தொகை, கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் முதலிய அளவீடு. அதற்கொரு கணக்கில்லை, கணக்கு வழக்கற்றுக் கிடக்கிறது என்னுந் தொடர்களில், கணக்கு என்னுஞ் சொல் அளவைக் குறித்தல் காண்க. கணக்கன், கணக்காயன், ஊர்க்கணக்கன் கணக்கப்பிள்ளை திருமுகக்கணக்கு முதலிய பதவிப் பெயர்கள் தொன்று தொட்டுத் தமிழ்நாட்டில் வழங்கி வருபவை. கணக்கன் என்னும் குடிப்பெயரைக் கொண்டவர் தூய தமிழ் மரபினர். பழந்தமிழர் இம்மிக் கணக்கும் கீழ்முந்திரி வாய்பாடும் பயின்றவர். (10) உறழ்தல் துறை உறழ்தலாவது ஒன்றாது மாறுபடுதல். அது அகத்தால் உறழ்தலும் புறத்தால் உறழ்தலும் என இருவகை. முன்னது வெறுத்தல்; பின்னது உரசுதல். i. உரசுதல் உல் - உர் - உரிஞ். உரிஞுதல் = உராய்தல். உரிஞ் - உரிஞ்சு. உர் - உரசு. உர் - உரை - உராய். உர் - அர் - அரம். அர் - (அரவு) - அராவு. அர் - அர - அரக்க. அரக்குதல் = தேய்த்தல். குர - குரப்பு - குரப்பம் = குதிரை தேய்க்குங் கருவி. துவை - தோய் - தேய். துவைத்தல் = தேய்த்தல், அரைத்தல். துவையல் = அரைக்கப்பட்ட கூழ். நுள் - நெள் - நெறு - நறு - நறுமு. நறுமுதல் பல்லைக் கடித்தல். நறு - நறுநறு = (பல்லைக் கடித்தற் குறிப்பு.) நுறு - நெறு - நெறுநெறு (பல்லைக் கடித்தற் குறிப்பு.) நுள் - நெள் - நெரு - நரல். நரலுதல் = உரசியொலித்தல், கத்துதல். ஆடு கழை நரலும் (புறம். 120). வெண் குருகு நரல (அகம். 14). நரல் - நரலை = ஒலி, கடல். நரல் = பேசும் மாந்தன், மக்கட் கூட்டம், மாந்தனை மற்ற வுயிர்களினின்று பிரித்துக் காட்டுவது, அவனது பேசுந்திறனே. நரல்- நருள். நருள் பெருத்துப் போய்விட்டது என்பது தென்னாட்டு உலக வழக்கு. நரல் - நரன் - நரம். வால் + நரம் = வானரம். (வாலையுடைய நரன் போன்ற குரங்கு). ii. தீப்பற்றுதல் பொருள்கள் ஒன்றோடொன்று உரசுவதால் சூடு பிறக்கின்றது. மூங்கிலும் அரணியும் சக்கிமுக்கியும் அவைபோல்வன பிறவும், ஒன்றோடொன்று உரசுவதால் தீயெழுகின்றது. தோய் - தேய். தேய்தல் = உரசுதல். தேய்த்தல் (பி.வி.) தேய் - தேய்வை = உரசும் சந்தனக்கட்டை தேய் - தே - தீ = நெருப்பு. தேய் - தேயு (வ.) நுள் - நெள் - நெரு - நெரி. நெரிதல் = நெருங்குதல், உரசுதல், நசுங்குதல். நெரு - நெருப்பு. iii. தெய்வம் தீயானது முதற்காலத்தில் தெய்வமாக வணங்கப்பட்டதினால், தீயின் பெயரினின்று தெய்வத்தைக் குறிக்கும் பெயர்கள் திரிந்தன. (சுள் - சுர் - சுரம் - சுரன் = தேவன்). தேய் - தே = தெய்வம், தலைவன். தே - தேவு -தேவன். தேய் - (தெய்) - தெய்வு - தெய்வம். iv. மாறுபடுதல் உறு - உறழ் - உறழ்ச்சி. உறழ்தல் = கருத்து மாறு பட் டுரையாடல், சொற்கள் தோன்றலும் திரிதலுமாகப் புணர்தல். உடு - உடல் - உடற்று. உடலுதல் = சினத்தல், பொருதல். உடற்றுதல் = சினப்பித்தல், வருத்துதல், அழித்தல். உடு - ஊடு - ஊடல். ஊடுதல் = கோபித்துரையாடாமை. சுறு - சுறுட்டு = பிடிவாதம். சுறட்டன் = தொந்தரைக்காரன். துல் - துன் - துனி. துனித்தல் = சினத்தல், வெறுத்தல். புல் - புல - புலவி. புலத்தல் = கோபித்துக் கொள்ளுதல். முல் - முறு - முறை. முறுத்தல் = கோபித்தல், சினந்து நோக்கல். முறு - முறுமுறு - முறுமுறுப்பு. முறைத்தல் = சினந்து நோக்கல். முல் - முன் - முனிதல் = கோபித்தல், வெறுத்தல். முனிவு = கோபம், வெறுப்பு. முனி = உலகை வெறுத்தவன். முனிவு - முனிவன். முன் - முனை. முனைதல் = கோபித்தல், வெறுத்தல். முனைவு - கோபம், வெறுப்பு. முனைவன் = முனிவன். முள் - முர - முரள் - முரண் - முரண்டு = பிடிவாதம். முரணுதல் = மாறுபடுதல். முரண்டு = மாறுபாடு, எதிர்ப்பு, அடங்காமை. முள் - (முண்) - முணவு. முணவுதல் = வெறுத்தல், சினத்தல். மூண் - முணை - முணைதல் = வெறுத்தல். மேலோர்க்கு அடங்காது முரண்டுபண்ணுவதைத் தில்லுமுல்லு அல்லது திண்டு முண்டு என்று கூறுவது வழக்கம். (11) திரளல் துறை ஒன்றாகச் சேரக்கூடிய பல அணுக்கள் அல்லது பகுதிகள் சேரின், திரட்சியுண்டாகும். i. திரட்சி திரண்ட பொருள்கள் திரட்சி பற்றிய சொற்களால் குறிக்கப் பெறும். உவ - உவா - உவவு = முழுமதி. உல் - உலம் = திரட்சி, திரண்ட கல். உலக்கை = திரண்ட தடி. குள் - குழு - குழவி = அம்மிக்குழவி. குழுவுதல் = திரளுதல். குழு - குழை = குண்டலம். குழு - கொழு - கொழுக்கட்டை. குழு - கழு - கழுகு = திரண்ட பறவை. குள் - குண் - கண் - கணை = திரட்சி, கணை - கணையம் = எழுமரம். குண் - குண்டு - குண்டலம். குண்டு - கண்டு = கட்டி. கற்கண்டு நூற்கண்டு முதலியவற்றை நோக்குக. குண்டு - குண்டன். குண்டுக்கழுதை. குண்டாந்தடியன் முதலிய தொடர்களில், குண்டு என்னுஞ் சொல் திரட்சியைக் குறித்தல் காண்க. குண்டு - குண்டி. குள் - குட்டி - கட்டி. கேழ்வரகுக் களிக் கிண்டும்போது படும் மாக்கட்டியைக் குட்டி என்பர். குட்டிபடுதல் என்பது வழக்கு. கும் - கொம் - கொம்மை = திரட்சி. கொம் - கொம்பு - கம்பு - கம்பம். குவ - குவவு = திரட்சி. குவடு = திரண்ட சிகரம், மலை. குவடு - கோடு. குள் - கொள் - கொட்டை = திரண்டது. குல் - கோல் = திரட்சி, திரண்ட கம்பு. கோல்தொடி = திரண்ட வளையல். கோல் - கால் = கம்பு, பந்தலைத் தாங்கும் கம்பு, தூண், தூண்போன்ற உறுப்பு, அவ்வுறுப்பின் அளவு (1/4). இப்பொருள் வரிசையைத் தலைகீழாகக் கூறுவர் உரையாசிரியன்மார். கால் போல் நீண்டு செல்லும் பொருள்களெல்லாம் கால் எனப்படும். கால் = நீர்க்கால், காற்று, காலம். கால் - காற்று. கால் - காலம். சுள் - சுளை = திரட்சி, திரண்ட பழச்சதைப் பகுதி. சுளையாய் நூறுஉருபா வாங்கிக்கொண்டான் என்னும் வழக்கைக் காண்க. சுள் - செள் - செண்டு = மழு. செள் - செரு - சேர். சேரே திரட்சி (தொல். உரி. 6) சுள் - (சொள்) - சோடு = திரட்சி. இத்தச் சோடு என்னும் வழக்கைக் காண்க. சோடு - சோட்டா = திரண்ட தடி. துள் - (தூள்) - தூண் - தூணம். துள் - தள் - தண்டு - தண்டம். தண்டு - தண்டி தடி. தண்டித்தல் = தடித்தல், பருத்தல். தண்டு = திரண்ட கம்பு, திரண்ட சேனை. ஆங்கிலத்தில் Club staff என்னும் சொற்கள் திரண்ட கம்பையும் குழுவையும் குறித்தல் காண்க. தண்டு = படை. தண்டநாயகன் = படைத்தலைவன். தண்டுதல் =சேர்த்தல், திரட்டுதல். துள் - தொள் - தொண் - தொண்டை = தடி. தொள் - தொழு - தொழுதி = திரட்சி. தொழுதிச் சிறகிற் றுயராற்றுவன (சீவக. 1187). தொள் - தோள் = திரண்ட புயம். தோள் - தோடு = திரட்சி. துல் - தில் - (திர்) - திரள் - திரளை - திரணை = திரண்டமேடு. திரள் - திரடு. துள் - (திள்) - திண் - திண்ணை. (திள்) - திட்டு - திட்டை. (திள்) - திடு - திடல் - திடர். திள் - திண்டு. புல் - பொல்லு = தடி. புள் - (பிள்) - பிண்டு - பிண்டம் = திரட்சி. முள் - முண்டு = திரட்சி. முண்டு - முண்டா = தோள். முண்டு - முண்டான் = மஞ்சட் கிழங்கு. முள் - முழு - முழா = திரட்சி, மத்தளம், முழா - முழவு - முழவ. வொலி. முழவுக்கனி = பலாப்பழம். முழா - மிழா = திரண்ட மான். முடா - மிடா = திரண்ட பானை. முழுத்தல் = பருத்தல். முழுமை = திரட்சி. முழுத்த ஆண்பிள்ளை என்று கூறும் வழக்கைக் காண்க. முழுமகன் = தடியன், மூடன். முள் - (மள்) - மழு = திரண்ட ஆயுதம். முழு - (முது) - முதல் = திரண்ட மூலதனம். முதல் - முதலாளி. முதல் - முதலை = திரண்ட மர அடிபோன்ற நீருயிரி. முதலை - மதலை = தூண், பற்றுக் கோடு. முதல் - முசல் - முசலம் = திரண்ட உலக்கை. முசல் - முசலி. முழு - விழு = திரண்ட, பெரிய, சிறந்த. முள் - முரு - முரள் - முரண் - முரடு = பெரியது, திரண்டது. கழுமுரடு = மிகத்திரண்ட பொருள். முரடு - முரசு = திரண்ட கட்டையாற் செய்யப்பட்ட மத்தளம், பேரிகை. முரசு - முரசம். முரடு - முருடு = முண்டுக்கட்டை. முள் - மொள் - மோள் - மோளம் - மேளம். மோளம் - மோழகம் - மேழகம் - ஏழகம். மொள் - மொத்து = திரட்சி, திரண்டது. மொத்து - மொத்தம். மொத்து - மொத்தை = திரளை, மொத்தை - மொந்தை. மொத்தை - மோத்தை = விலங்கின் ஆண். விலங்குகளின் ஆண் பொதுவாகப் பெண்ணினும் பருத்திருப்பதால், கடா மோத்தை மேழகம் (மோழகம்) முதலிய பெயர்களாற் குறிக்கப்பெறும். மொத்தை - மொச்சை - திரண்டபயறு. மொத்து - மத்து = திரண்ட கடை கருவி. மத்து - மத்தி - மதி - மசி. மத்தித்தல் = மத்தினாற் கடைதல். மதித்தல் = கடைதல் போற் கையினால் அழுத்திப் பசையாக்குதல். மசிதல் = பசையாதல். சோற்றை மதித்துக் குழந்தைக்கு ஊட்டு என்று கூறுதல் காண்க. கனை தழங்கு முதலிய சொற்கள் திரண்டொலித்தலைக் குறிக்கும். ii. திரண்ட அடி மரஞ்செடிகொடிகளின் அடி, அவற்றின் மற்றப் பகுதிகளை விடப் பருத்திருப்பதால், பருமைக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட பல சொற்கள் அடியைக் குறிக்கத் தோன்றியுள்ளன. உள் - அள் - அண்டு. அண்டுதல் = நெருங்குதல், முட்டுதல், பொருந்துதல் (கூடுதல்), திரளுதல், பருத்தல். அண்டு - அண்டி - அடி = பருத்தது, பருத்த அடி ஓ.நோ. தண்டு - தண்டி - தடி. அடி = மரத்தின் அடிப்பகுதி, மூலம், ஆதி, பழைமை மரத்தடி போன்ற பாதம், கால், செய்யுளடி, அடியளவு (foot) ஒன்றன் அடிப்பாகம். அண்டு - அண்டி = உடம்பின் அடித்துளை (anus), அண்டி தள்ளுதல் = அடித்துளைப் பகுதி வெளி வருதல் (Prolapsus ani). அண்டி தள்ளுதலை அண்டு தள்ளுதல் என்றுங் கூறுவர். அண்டிமா = பழத்தின் அடியிற் கொட்டையுள்ள மர முந்திரி. அண்டிமாம்பழம், அண்டிமாங்கொட்டை அண்டிக் கொட்டை என்பன தென்னாட்டு வழக்கு. அண்டுதல் என்னுஞ் சொற்கு மேற்குறித்த பொருள்களுள்ளமை கீழ்வருந் தொடர்களாலும் மேற்கோளாலும் அறியப்படும். (1) கிட்டுதல், நெருங்குதல். (இது வெளிப்படை). (2) முட்டுதல். அண்டை கொடுத்தல் = முட்டுக் கொடுத்தல். அண்டு - அண்டை - அடை. பட்டடை = தட்டும் அணைகல், அடைகல். (3) பொருந்துதல், ஒத்தல், தகுதல், ஏற்றல். ஆகார மாமுவமைக் கண்டாது (ஞானவா. முமுட்சு. 27) அண்டிப் பிழைத்தல் = ஒருவனைப் பற்றுக்கோடாகக் கொள்ளுதல். அண்டைவைத்துத் தைத்தல் = ஒட்டுப்போட்டுத் தைத்தல். அண்டு = மணிவட வுரு, சங்கிலி வளையம் (link). அந்தச் சங்கிலிக்கு இன்னும் நாலு அண்டு வேண்டும் என்பது வழக்கு. (4) பருத்தல். அண்டு - அண்டா = போகணி வடிவான பெருங்கலம். ஒ.நோ. குண்டு - குண்டா. ஆ ஒரு தொழிற் பெயர் விகுதி. எ.டு. உண் - உணா = உணவு. அடி என்னுஞ்சொல், முதலாவது பருத்தது என்னும் பொருளில் மர அடியையே குறித்தது. எல்லாப் பொருள்களின் அடிப் பாகத்தையும் குறிக்க வழங்கியபின், அது தன் சிறப்புப்பொருளை இழந்தது. குழு - கழு - கழி = கரும்புத்தண்டு. கருப்பங்கழி என்பது வழக்கு. துள் - தள் - தாள் = நெல் புல் முதலிய பயிர்களின் அடி. தள் - தண்டு = கீரை வாழை முதலியவற்றின் அடி. தண்டுக்கீரை தண்டங்கீரை கீரைத்தண்டு முதலிய வழக்குக்களைக் காண்க. தள் - தட்டு = சோளம் கரும்பு முதலிய பயிர்களின் அடி. தட்டு - தட்டை. துள் - துறு - தூறு = தென்னை, பனை முதலியவற்றின் வேரொட்டிய அடி. புள் - பூண்டு - பூடு = வெங்காயம் வெள்ளைப்பூண்டு முதலிய வற்றின் அடி. முழு - (முது) - முதல் = புளி, வேம்பு முதலிய மரங்களின் அடி, அடி, காரணம், முழுமுதல் = திரண்ட அடி, கடவுள். முள் - மூள் - (மூண்டு) - மூடு = வாழை கற்றாழை தாழை முதலிய வற்றின் வேரொட்டிய அடி. மூட்டோடு மரத்தைச் சாய்த்துவிட்டான் என்பது வழக்கு. முல் - (மூல்) - மூலம் = அடி, கிழங்கு, வேர், ஆதி, காரணம், வேர்போல் அடியில் முளைக்கும் நோய். மூலம் என்னுஞ் சொல் முதலாவது மரவடியையே குறித்திருத்தல் வேண்டும். போதி மூலம் பொருந்தி (மணி. 26, 47). மூல - மூலி = மருந்திற்குரிய வேர்ச் செடிகொடி, மூலி - மூலிகை. iii. திரண்டொலித்தல் உலம் - உலம்பு. உலம்புதல் = பேரொலி செய்தல். குமுகுமெனல் = பேரொலி செய்தல். குமுகுமெனவே முழக்க (திருப்போ. சந். பிள்ளைத். சிறுபறை. 2) கும் - குமுறு. கும் - குமுதம் = பேரொலி. கதறிமிகு குமுதமிடு பரசமயம் (திருப்பு. 948) துள் - தள் - தழ - தழங்கு. தழங்குதல் = முழங்குதல். முள் - (மள்) - மண் = முழக்கு. மண் முழா மறப்ப (புறம். 65) முள் - முழ - முழங்கு - குழக்கு - முழக்கம். குறிப்பு : இங்குக் குறிக்கப்பட்ட சொற்கள் ஒலிக் குறிப்புத் தழுவியவை. iv. பூப்படைதல் நிலைத்திணையில். திரண்ட அல்லது பருத்த முதலும் சினையும் முதிர்ச்சியடையும். அதனால், திரட்சிபற்றிய சொற்கள் சில பூப்படைதலை உணர்த்தும். உருத்தல் = முதிர்தல். கும் - குமர் = திரண்டவள், கன்னி, கன்னிமை, இளமை, அழிவின்மை (என்று மிளமை). மூப்பு சாக்காட்டிற் கேதுவாதலால், இளமை அழியாமையைக் குறித்தது. கும்மல் = கூடுதல், குவிதல், திரளுதல் கும் - கொம் - கொம்மை = திரட்சி. பூப்படைந்தவளைத் திரண்டவள் என்பது கொங்கு நாட்டு வழக்கு. ஒ. நோ. E. virgin, pom L. virgo, to swell. குமர் - குமரி = கன்னி கன்னியான காளி (துர்க்கை). கன்னிமை, அழிவின்மை. குமர் - குமரன் = திரண்டவன். இளைஞன், முருகன். சேயோனைப் பண்டைத்தமிழர் இளைஞனாகவே கருதியிருந்ததால், அவன் குமரன் என்றும் முருகன் என்றும் அழைக்கப்பட்டான். (முருகு = இளைமை. முருகன் = இளைஞன்). குமரன் குமரி என்னும் தென்சொற்களைக் குமாரன் குமாரி என நீட்டி மகனையும் மகளையும் குறிக்க வழங்கியது பிற்காலத்து ஆரிய வழக்கு. தமிழில் இளைஞன் இளைஞை என்றே அவை பொருள் தரும். குமரன் குமரி என்னும் தெய்வங்கள் தொன்று தொட்டுத் தமிழரால் வணங்கப்பட்டு வருபவை. குல் - கல் - கன். கன்னுதல் = திரளுதல், பழுத்தல். அரத்தங் கட்டுதலை இரத்தங் கன்னுதல் என்பர். கன் - கன்னி = திரண்டவள், பழுத்த இளைஞை, குமரிநிலை, இளமை, மணமாகாமை. கன்னி - கன்னிகை = இளங்கன்னி, கை ஒரு குறுமைப் பொருள் விகுதி -. ஒ - நோ. குடி - குடிகை - குடிசை. v. மொத்தம் (முழுமை) மொத்தம் என்பது ஒரு வகைப் பொருள்கள் அல்லது பலவகைப் பொருள்கள் எல்லாம் சேர்ந்த முழுத்திரட்சி. புள் - (பிள்) - (பிண்டு) - பிண்டம் = தொகுதி, முழுமை, உடம்பு. முள் - முழு - முழுது = முழுமை. முழுது - முழுவது. முழு - முழுவல் - முழுவன். முழு - (முது) - முதல் = உடம்பு. முல் - முற்று = முழுது. முது - மொது - மொத்து - மொத்தம். முள் - (மள்) - வள் - வள்ளிது = முழுமை. வள்ளிது - வள்ளிசு. vi. பருமை திரண்ட பொருள் பருத்திருக்கும். (உரு) - இரு - இருமை = பருமை. இரு - இறு - இறும்பு = மிகப்பெரியது. வியக்கத் தக்கது. உறு = பெரிய. உறுமை = பருமை. குரு = பருமை. குரு - குரை = பருமை. குரு - கரு - கருமை = பருமை. குள் - கள் - கடு - கடா = பருமையானது, பருமையான ஆண் விலங்கு. கடாநாரத்தை = பெருநாரத்தை. கள் - (கய்) - கயம் = பருமை. கள் - (சொள்) - சொண்டு = தடித்த உதடு. துள் - தூண் - தூணி. தூணித்தல் = பருத்தல். துள் - (துடம்) - தடம் = பருமை. தட - தடா - தடவு. தடா = பெரும்பானை. துள் - தொள் - தொட்ட = பெரிய. (தும்) - திம் - திம்மன் = பருத்தவன், பருத்த ஆண் குரங்கு. (நுள்) - நள் - நளி = பருவை. தடவுங் கயவும் நளியும் பெருமை (தொல். உரி. 22). புல் - பல் - பலா = பரும் பழமரம். பலா - பலவு. பல் - பன் - பனை = பருங்கொட்டை மரம். அல்லது புல் வகையில் தினை என்பதனொடு எதுகையாகவுள்ள பெயரைக் கொண்ட பெருமரம். தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் என்று கபிலரும். தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்றெரி வார் என்று வள்ளுவரும் (குறள். 104). கூறியிருத்தல் காண்க. பல் - பரு - பருமம் - பருமன். பரு - பருமை. பரு - பெரு - பெருகு - பெருக்கு - பெருக்கம். பெருக்கு - பெருக்கல். புள் - (பள்) - படு - பாடு. படுபாவி = பெரும்பாவி. புது - (பூது) - பூதம் = பெரியது. பெரும்பேய். (இரும்பூது) - இறும்பூது = மிகப்பெரியது, வியப்பானது. புது - பொது - பொத்து = பொத்தை = பெருமிளகாய். பொத்து - போத்து = விலங்கின் ஆண். பொத்து - பொந்து - பொந்தன் = தடித்தவன். பொந்து - பொந்தி. பொந்தித்தல் = பருத்தல். பொந்தி - போந்தி = வீக்கம். போந்திக்கால் = யானைக் கால். பொந்து - போந்து = பணை. போந்து - போந்தை = பனை. முள் - மள் - மாளிகை = பெருமனை. மாளிகை - மளிகை. முரு - மொக்கு - மொக்கை - பெரியது. மொக்கை - மக்கை. மக்கைச் சோளம் = பெருஞ் சோளம். மக்கையன் = மந்தன். மொக்கு - மொங்கு - மொங்கான் = பெரியது, பெருந்தவளை. முது - மொது - மொத்து - மொந்து - மொந்தன் = பெருவாழை. மொத்தன் - மந்தன். மொந்து - மந்து - மந்தம் = தடித்தன்மை, கூரின்மை, அறிவின்மை, சுறுசுறுப் பின்மை, செரியாமை, ஒளியின்மை. மந்தம் - மந்தாரம். vii. பெருமை (சிறப்பு) மதிப்பிற்கும் புகழிற்கும் ஏதுவான அறிவாற்றலதிகார செல்வங் களின் பருமையே பெருமை. உரவோன் = பெரியோன். குரு - பெருமை, பெரியோன். குரு - குரவு - குரவன் = பெரியோன். அரசன் ஆசிரியன் தாய் தந்தை அண்ணன் ஆகிய ஐவரும் ஐங்குரவர் என்றும், தாய் தந்தையர் இரு முதுகுரவர் என்றும், கூறப்படுதலால்; குரு என்னும் சொல்லுக்குப் பெரியோன் என்பதே மூலப்பொருளாகும். குரவர் என்னுஞ்சொல் பெற்றோரை விதந்து குறித்தல் போல, குரு என்னும் சொல் ஆசிரியனை விதந்து குறிக்கின்ற தென்க. குரு - குரை - பெருமை. குல் - கல் - கன் - கன - கனம் = பெருமை. சுள் - (சூர்) - சீர் - சிற - சிறப்பு. புல் - பல் - பரு - பெரு - பெருமை. முள் - மள் - மண் - மாண் - மாண்பு. மண் = மாட்சிமை. மாண் - மாட்சி. முகு - மகம் = பெருமை. மகம் - மகத்து - மகந்து - மாந்து - மாந்தன் = படைப்பிற் பெரியவன். முன் - மன் - மான் - மானம் = பெருமை. குறிப்பு : மகன் என்னும் பெயர் மகம் என்பதனின்று திரிந்த தாகவுங் கொள்ள இடமுண்டு. ஆயினும், பிள்ளை என்னும் இளமைப் பெயர் ஆண்பிள்ளை பெண்பிள்ளை எனப் பெரியோர்க்கும் வழங்குதலானும், மகன் மக்கள் என்னும் பெயர்கள் பிள்ளையர்க்கும் பெரியோர்க்கும் பொதுவாயிருத்த லானும், இளமைபற்றிய மகன் என்னும் பெயரே பெரியோனை யுங் குறித்ததாகக் கொள்ளப்பட்டது. ஐயன் : நெருக்கம் செறிவு தொடுதல் பொருந்தல் ஒன்றல் திரட்சி பருமை பெருமை என்பன, முறையே ஒன்றினின்றொன்றெழுந்த தொடர்ச்சிக் கருத்துக்கள். உள் - அள் - அண. அண்ணுதல் = நெருங்குதல். அள்ளல் = நெருக்கம். அள் = செறிவு. அள்ளுதல் = செறிதல். அள் - அள - அளவு - அளாவு. அளவுதல் = தொடுதல், பொருந்தல், கலத்தல். அள் = பற்றிரும்பு. அள்ளுதல் = சேர்த்தல், பொருத்தல், பூட்டுதல். அள்ளுக்கட்டுதல் = இரும்புத் தகட்டால் இறுக்குதல். அள் = பூட்டு, வண்டிவில்லைத் தாங்குங் கட்டை. அள் = வன்மை. வன்மைக் குணம் திரட்சி பருமை பெருமை திண்மை முதலியவற்றால் ஏற்படுவது. அள் - (அய்) - ஐ = பெருமை. பெரியோன். தலைவன் தந்தை, அரசன், ஆசிரியன், கணவன். ஐ - ஐயன் (ஐ + அன்) = பெரியோன், மூத்தோன். உயர்ந்தோன், தலைவன், தந்தை, அரசன், ஆசிரியன், முனிவன், (அந்தணன்), பார்ப்பான் (கோயிற்காரியம் பார்ப்பவன்). தேவன், சாத்தன். ஐயன் - ஐயை (பெண்பால்) = பெரியோள், தலைவி. ஆசிரியை, ஆசிரியன் மனைவி, துறவினி (தவப்பெண்). காளி, (துர்க்கை), மலைமகள் (பார்வதி). ஐ அல்லது ஐயன் என்னும் பெயர், முதலாவது மூப்பு காப்பு அறிவு தவம் முதலியனபற்றி, பெரியோன் அல்லது தலைவன் என்ற பொருளையே குறித்தது. இன்றும் பெரியோரையெல்லாம் ஐயா என்றே அழைத்தல் காண்க. என்னை முன் நில்லன்மின் (என்ற குறளில். 771) ஐ தலைவனைக் குறித்தது. ஐங்குரவர் என்னும் ஐவகைப்பட்ட பெரியோருள், முதல்வன் தந்தை. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஆரியக்குல முறைப்படி, தமிழருள் ஏற்றிழிவுபெற்ற ஒரு சார் மேலோரும் ஒருசார் கீழோரும், தந்தையை முறையே ஐயா என்றும் ஐயன் என்றும், தொன்றுதொட்டு (ஆரியர் தென்னாடு வருகைக்கு முன்பிருந்தும், தமிழ் குமரி நாட்டில் தோன்றியதிலிருந்தும்), அழைத்து வருகின்றனர். ஐயா என்பது ஐயன் என்பதன் விளி வடிவம். அன்னீற்றுப் பெயர் உலக வழக்கில் உயர்வு குறியாமை பற்றி, ஐயா என்னும் விளிவடிவமே ஐயன் என்னும் எழுவாய் வடிவத்திற்குப் பதிலாகவும் வழங்கி வருகின்றது. தந்தையை நிகர்த்தவள் தாய். ஐயை என்னும் பெண் பாற்பெயர். பொதுவாகப் பெரியோளைக் குறிக்கும் போது திரியாதும், தாயைக் குறிக்கும்போது ஆய் என்று திரித்தும், வரும். ஆய் - ஆய்ச்சி (இரட்டைப் பெண்பால்), ஆயன் என்னும் ஆண்பாற் பெயர் இடையனையே குறித்தலையும். ஆய்ச்சி என்னும் பெண்பாற் பெயர் இடைச்சியைக் குறித்தலோடு தாய் பாட்டி என்னும் பொருள்களில் வழங்குதலை யும் நோக்குக. அன்னையுந் தந்தையும் முன்னறி தெய்வமாதலாலும், திருமண மாகும்வரை மக்கள் பெற்றோரோடேயே உறைதலாலும், ஏதேனுமொரு துன்பங்கண்டு அரற்றும் போதும் ஒர் இறும்பூது கண்டு வியக்கும்போதும்; சிறாரும் இளைஞரும் பெற்றோரை விளித்தல் இயல்பு. இதனால், பெற்றோரைக் குறிக்கும் சொற் களினின்று, இரக்கக் குறிப்பிடைச் சொற்களும் வியப்புக் குறிப்பிடைச் சொற்களும் தோன்றியுள்ளன. பெற்றோர் இரக்கக்குறிப்பிடைச் வியப்புக்குறிபிடைச் பெயர் சொல் சொல் அப்பன் அப்ப, அப்பா, அப்ப, அப்பா, அப்பப்ப, அப்பப்பா அப்பப்ப, அப்பப்பா அச்சன் அச்சோ அச்சோ அம்மை அம்மா, அம்மவோ அம்ம, அம்மா அம்மகோ, அம்மம்ம அன்னை அன்னோ அன்னோ இங்ஙனமே, ஐ ஐயன் என்னும் பெயர்களினின்றும், ஐய, ஐயவோ - ஐயகோ, ஐயே, ஐயோ, ஐயையோ முதலிய இரக்கக் குறிப்பிடைச் சொற்களும், ஐ, ஐய, ஐயோ முதலிய வியப்புக் குறிப்பிடைச் சொற்களும்; பிறந்துள்ளன. சுட்டொலிக் காலத்திற்கு முந்திய குறிப்பொலிக் காலத்தில் தோன்றிய வியப்புணர்வொலிகளுள் ஒன்று ஆய் என நெடின் முதலாகவே தோன்றியிருத்தல் வேண்டும். அது பின்னர் ஆய் - அய் (ஐ) எனக் குறுகியிருக்கலாம். அவ்வுணர் வொலிக் குறுக்கம் வேறு; அள் என்னும் அடிப் பிறந்து தந்தையைக் குறிக்கும் சொல்லினின்று திரிந்து இன்று வழங்கும் ஐ (அய்) என்னும் வியப்பிடைச்சொல் வேறு. ஐ வியப்பாகும் (தொல். 868) தந்தைக்கு அடுத்தவன் தமையன். தம் என்னும் முன்னொட்டுப் பெற்ற ஐயன் என்னும் பெயரே, தமையன் என்பது. முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர் (பு. வெ. 8, 23) என்பதில், ஐயர் என்பது தமையன்மாரைக் குறித்தது. உறவுமுறையல்லாத பெரியோருள், தந்தைக்கு நெருங்கியவன் ஆசிரியன். ஆசிரியர் இல்லறத்தாரும் துறவறத்தாருமாக இரு சாரார். எக்குலத்தாராயினும் இல்லறம் நடத்தும் ஆசிரியரையும், ஐயர் என்றழைப்பது வடார்க்காட்டு வழக்கு, முனிவரான ஆசிரியர் எங்கும் ஐயர் என்னும் பெயர்க்குரியர். ஐயர் யாத்தனர் கரணம் என்ப (தொல். 1091) என்பதில், ஐயர் என்பது முனிவரைக் குறித்தது. பிங்கலம் முனிவர் தொகுதியை ஐயர் தொகுதி என வகுத்துக்கூறும். முனிவர் பலவகையிலும் மிகப் பெரியார் என்பது, பெரியாரைத் துணைக் கோடல் பெரியாரைப் பிழையாமை என்னும் திருக்குறளதி காரங்களால் அறியப்படும். தமிழ்நாடு புகுந்த பிராமணர் இருவகை நிலைப்பட்டு ஆசிரியத் தொழிலையே முதலாவது மேற்கொண்டமையால், அவர் ஐயர் எனப்பட்டனர். பூசாரிய ரான புரோகிதரும் ஒருசார் ஆசிரிய வகுப்பினரே. இது பற்றியே, தமிழ் நாட்டுக் கிறித்தவக் குருமாரான பாதிரிமாரும் ஐயர் என அழைக்கப் பெறுகின்றனர். நாட்டுப் பாதிரிமாரை நாட்டையர் என்பர். குரு என்னும் பெயர் கலையாசிரியனையும் மதவாசிரி யனையும் பொதுப்படக் குறிப்பது. அவ்விருவகையாரின் தொழி லொப்புமையை உணர்த்தும். அவர் என்னும் தென்சொல் தெலுங்கில் வாரு எனத் திரிவதால், அவர்கள் என்னும் உயர்வீற்றிற் கொத்த வாரு என்னுஞ் சொல்லொடு கூடி ஐயவாரு என நிற்கும் தெலுங்குப் பெயர், ஐயவாரு எனத் திரிந்து மால் நெறியார் (வைணவர்) ஆன தெலுங்குப் பிராமணரைக் குறிக்கும் ஐயகாரு என்பது, ஆங்கிலத்தில் ஐயங்கார் என்னும் வடிவங் கொள்ளும். ஒரு நாட்டு மக்களின் ஒப்புயர்வற்ற ஆட்சித் தலைவன் அரசனாதலின், அவனும் ஐயன் எனப்படுவன். ஒரு பெண்ணுக்கு வாழ்க்கைத் தலைவன் அவள் கணவனாதலின், அவன் அவட்கு ஐயனாவன். என்னைக்கு முதவாது என்பதில், ஐ என்பது கணவனைக் குறித்தது. இனி, எல்லா வுலகங்கட்கும் ஒரு பெருந்தலைவனான இறைவனுக்கு. ஐயன் என்னும் பெயருரிமை சொல்லாமலே விளங்கும். ஐயை என்னும் பெயர் காளியையும், மலை மகளையுங் குறித்தலால், ஐயன் என்பது சிவனைக் குறித்தல் தேற்றம். முழுமுதற்றெய்வம் பெருந் தெய்வம் சிறுதெய்வம் எனத் தெய்வம் முத்திறப்படுதலால், பிற்காலத்தில் சிவன் மகனாகக் கூறப்பெற்ற வணிகத் தெய்வமான சாத்தன். ஐயன் என்றும் ஐயனார் என்றும் ஆண்பால் வடிவிலும் உயர்வுப் பன்மை வடிவிலும் குறிக்கப் பெறுவன். இங்ஙனம், ஐயன் என்னும் சொல், பல்வேறு பொருள் குறித்துத் தொன்று தொட்டுத் தமிழ் நாட்டில் திரிந்தும் திரியாதும் வழங்கி யிருப்பவும்; அணுவளவும் ஆரியத் தொடர்பற்ற பறையருள்ளிட்ட சில தமிழ்ப் பழங்குடிகள் ஐயன் என்னும் சொல்லையே தந்தை பெயராகக் கொண்டிருப்பவும்; வழக்கிற்கும் வரலாற்றிற்கும் மொழி நூற்கும் முற்றும் மாறாக, ஆரியன் என்னும் வருணப் பெயரின் சிதைவே ஐயன் எனும் தமிழ்ச் சொல் என, ஓரிரு தனிப் பட்டவர் நூலிற் கூறியிருப்பதுடன் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியிலுங் குறித்திருப்பது. மிகமிக வருத்தத்தக்க தொன்றாம். பெருமைக் கருத்து திரட்சிக் கருத்தின் வழிப்பட்ட பருமைக் கருத்தினின்றே தோன்றியிருப்பதால், நெருக்கமும் செறிவும் புணர்ப்பும் வன்மையும் குறிக்கும் அள் என்னும் அடிச்சொல் லினின்று, முற்கூறிய முறைப்படி, ஐ என்னும் சொல்லும் அதன்வழி ஐயன் ஐயை முதலிய சொற்களும் திரிந்திருப்பது, இயற்கைக்கும் ஏரணத்திற்கும் ஏற்றதே. ஐயன் என்னுஞ் சொற்கு மூலம் ஐ யாதலால், அது ஆர்ய என்னுஞ் சொல்லொடு பொருந்தாமையையும் கண்டு கொள்க. viii. திண்மை பல அணுக்கள் அல்லது பொருள்கள் மிக நெருங்கிச் சேர்வதால் திண்மை உண்டாகும். உறு - உற - உறப்பு. உற - உறை. உறைதல் = கட்டியாதல். உறு - இறு - இறுகு - இறுக்கு - இறுக்கம். இறுக்குதல் = இறுகுமாறு அமுக்கிக் காட்டுதல். குள் - கள் - கட்டு - கட்டி = இறுகியது. கட்டி - கெட்டி. கள் - காள் - காழ் - காய். காழ்ப்பு = வைரம். காய்த்தல் = உழைப்பால் கை இறுகுதல், பிஞ்சு முதிர்ந்து இறுகுதல், காய் காய்த்தல். சுள் - செள் - செறி - செறிவு. துள் - திள் - திண் - திட்பு - திட்பம். திண் - திணுகு - திணுங்கு - திணுக்கம். திண் - திணி. நுறு - நெறி. நெறித்தல் = விறப்பாகுதல். முள் - முறு - முறுகு - முறுகல் = சூட்டினால் இறுகியது. முறு - முற - முறமுறப்பு = விறப்பு. முறு - விற - விற - விறப்பு. விறு - வெறு - வெறி. வெறித்தல் = செறிதல். விற - விறை. விறைத்தல் = குளிரால் இறுகுதல். முள் - (மொள்) - மொய். மொய்த்தல் = இறுகுதல். ix. திண்ணம் திண்ணம் என்பது தட்டையான பொருளின் பருமன். உரம் = திண்ணம். ஓலை = திண்ணிய இலை. மெல்லிய தகட்டை ஓலையாயிருக் கிறது என்று கூறும் வழக்கமிருப்பினும், இலையை விட ஓலை திண்ண மாயிருத்தலைக் கவனிக்க. ஓடு = திண்ணமான காய்த்தோல். குள் - கள் - கட்டு - கட்டி - கெட்டி. கெட்டிக் காப்பு = திண்ணமான காப்பு. துள் - தெரள் - தோள் - தோடு = திண்ணமான பழத்தோல், ஓலை. துள் - (தின்) - திண் - திண்ணம். துல் = தில் - திர் - திரம் - திறம் - திறன். முள் - முரள் - முரண் = திண்ணமான சிப்பி. x. கனம் திண்மையானதும் திண்ணமானதும் கனக்கும். குரு = கனம். குரு - குரூஉ. பசுமட் குரூஉத்திரள் (புறம். 32). குல் - கல் - கன் - கன - கனம். (புள்) - (பள்) - பளு - பளுவு. xi. வலிமை கனமுள்ளது வலியது உரம் - உரன். உரம் - உரவு - உரவோன் = வலியோன். உறு - எறுழ் = வலி. குள் - கள் - கட்டு - கட்டி - கெட்டி. துல் - தில் - திர் - திரம் - திறம் - திறன் திறல். திறம் - திறமை. பொரு - போர் = வலிமை. முல் - முன் - முன்பு = வலிமை. முல் - மல் = வலிமை. மல் = வல் - வலி - வலிமை. வல் - வலு - வலுவு. வல் - வன் - வன்பு - வற்பு. வல் - வலம் = வலிமை, வெற்றி. வலக்கை = பயிற்சியினால் வலிமை பெற்ற கை. வலம் = வலக்கைப் பக்கம். வலம் - வலவன் = வலப் பக்கத்துக் காளை, ஊர்தியை வலமாகப் பொறிதிரித்தோட்டுபவன். வலம் வருதல் = நகரை வலமாகச் சுற்றிவருதல். முள் - மொள் - மொய் = வலிமை. மொய் - மொய்ம்பு = வலிமை. முள் (மள்) - வள் = வலிமை. xii. கடினம் வலியது கடினமானது. குல் - கல் = கடினமானது. கல் - கன்று. கன்றுதல் = காய் கிழங்கு முதலியன கடினமாதல். கன்று - கண்டு. குள் - கள் - கடு - கடுமை. கடு - கடினம். கடு - கட்டம். வள் - (வய்) - வயிர். வயிர்த்தல் - வயிரங் கொள்ளுதல், செற்றங் கொள்ளுதல். வயிர் = கொம்பு. வயிர் - வயிரம் - வைரம். வயிர் - வயிரி. வயிரித்தல் = கடினமாதல். வயிர் - வயிரி - வைரி = பகை, பகைவன். xiii. உறுதி உரம் - உரன். உறு - உறுதி, உறுதலை. குள் - கள் - கட்டு = உறுதி. கட்டு - கட்டி - கெட்டி. துல் - தில் - திர் - திரம் - திறம் - திறன். துள் - (திள்) - திண் - திண்ணம். திண் - திடம். திண் - திண்ணம் - திண்ணக்கம் = நெஞ்சழுத்தம். திண் - திடம் - திடாரி - திடாரிக்கம் = நெஞ்சுரம். ஊகாரச் சுட்டு - வளைதல் வேரும் ஆணியும் போன்ற நீண்ட பொருட்கள், தாம் முட்டின பொருளோடொன்றாவிடத்துச் சாயும். இயங்கு திணையுயிரிகள் சுவரும் மலையும் போன்றவற்றால் தடையுண்டவிடத்துப் பக்கமாகத் திரும்பிச் செல்லும். (1) வளைதல் துறை i. கோணுதல் கோணுதலாவது, நேராகச் செல்லும் பொருள் ஒரு பக்கமாகச் சாய்தல். உல் - ஒல் - ஒல்கு. ஒல்குதல் = சாய்தல். உறு - இறு - இற - இறப்பு = கூரைச்சாய்வு. இற - இறவாணம், இறவாரம் = கூரைச்சாய்வு. குள் - கொள் - கோள் - கோண். கோணுதல் = சாய்தல். கோண் - கோடு. கோடுதல் = சாய்தல். கோண் - கோணம் = சாய்வினால் உண்டாகும் மூலை. சுள் - சள் - சழி. சழிதல் - கலமும் பெட்டியும் பக்கமாக அமுங்கிச் சரிதல். சள் - சரு - சருவு. சருவுதல் = சாய்தல். சரு - சரி - சரிவு. சரிதல் = சாய்தல். சரி = அடிவாரம். சரு - சார். சார்தல் = சாய்தல். தூணில் சாய்ந்து கொண்டிருக்கிறான் என்பதும், தூணில் சார்ந்து கொண்டிருக்கிறான் என்பதும் ஒன்றே. சேர்தலைக் குறிக்கும் சார் என்னும் சொல்லும், சாய்தலைக் குறிக்கும் சார் என்னும் சொல்லும் வெவ்வேறு. சார் - சாரல் = மலைச்சரிவு, சாய்ந்து பெய்யும் மழை. சாரலன் = சாரல்நாடன், மலைநாடன். சாரலன் - சேரலன் - சேரல் - சேரன் = மலை நாடன், முத்தமிழ் வேந்தருள் ஒருவன். சள் - சாள் - சாடு. சாடுதல் = சாய்தல், சாடு - சாட்டம் - சாய்வு. சாடு - சாடை = நேரன்மை, சாயல் ஒப்பு. சாள் - சாய் - சாய்வு. சாய்வு சரிவு என்பது வழக்கு. சாயுங்காலம் - சாயங்காலம் - சாய்ங்காலம் = கதிரவன் சாயும் வேளை (எற்பாடு). சாய் - சாயை = நிழல். நிழல் சாய்தல் என்னும் வழக்கை நோக்குக. சாய் - சாயல் = நிழல், ஒருமருங்கு ஒப்பு. (தலை) சாய்த்தல் = தூங்குதல். சாய் - சயனம் (வ.) சாய் - சா - சாவு. சாதல் = சாய்ந்து விழுதல்போல் இறத்தல். துல் - தில் - திரு - திரும் - திரும்பு. திரும்புதல் - சாய்தல். உச்சிவேளைக்குப்பின் உடம்பு நிழல் சாய்வதை, அடித்திரும்புதல் என்று கூறுதல் காண்க. முல் - (மூல்) மூலை = கோணம். முள் - முட - முடங்கு - முடங்கி = மூலை. மூலை முடங்கி என்பது வழக்கு. முள் - (மூள்) - (மாள்) - மாண் - மாணல் = சாய்வு, வளைவு. கோணல் மாணல் என்பது வழக்கு. மாள் - மாடு - மாடை = சாய்வு. சாடைமாடை என்பது வழக்கு. நேராகப் பழிக்காமல் சாய்வு போன்ற நேரல் முறையில் பழித்தல், சாடைமாடையாய்த் திட்டுதல் எனப்படும். மள் - வள் - வாள்- வார். வார்தல் = சாய்தல், சரிதல். வார் - வாரம் = சரிவான இடம். அடிவாரம் = மலைச் சரிவு. தாழ்வாரம் = கூரைச்சரிவு. வாள் - வாடு - வாட்டம் = சாய்வு. வாட்டம் சாட்டம் என்பது வழக்கு. அங்கணம் வாட்டம் சாட்டமாய் இருக்க வேண்டும் என்பர். ii. வளைதல் வளைதலாவது, கொடியும் மெல்லிய கம்பியும் போன்ற நீண்ட துவள்பொருட்கள் வட்டமாகும் வரை மேன்மேலும் பலபடியாய்க் கோணுதல். உறு - இறு. இறுதல் = வளைதல். இறு - இற = வளைந்த பெருங்கூனி (prawn) இற - இறா - இறவு. இறா - இறால் - இறாட்டு. இற - இறை = பெண்டிரின் வளைந்த முன்கை. குல் - குல - குலவு. குலவுதல் = வளைதல். குலவு - குலாவு. குல் - குன் - குனி. குனிதல் = வளைதல். குன் - கூன் = வளைந்த முதுகு. கூனுதல் = வளைதல். கூன் - கூனி = சிற்றிறால். குள் - குழி - குழியம் = வளைதடி. குள் - (குண்) - குண - குணகு - குணக்கு = வளைவு. குணகுதல் = வளைதல். குள் - கூள் - கூளி = வளைந்த வாழைப்பழம். குள் - குரு - குருகு = (வளைதல்). வளைந்த கழுத்துள்ள நீர்ப் பறவை யினம். குள் - குட - குடம் = வளைவு. குடா = வளைவு. குடந்தை = வளைவு. குட - குடக்கம் = வளைவு. குரு - குர - குரங்கு = வளைவு, கொக்கி குரங்குதல் = வளைதல். குர - குறள் - குறண்டு. குறண்டுதல் = வளைதல். குறள் - குறடு = வளைந்த அலகுள்ள கருவி. குள் - கொள் = வளைந்த காணக்காய். கொட்பு = வளைவு. கொள் - கொடு - கொடுமை = வளைவு. கொடுங்கோல் = வளைந்த கோல். கொடுக்காய்ப்புளி = வளைந்த காயுள்ள மரவகை. கொடுக்கு = வளைந்த முள். கொடு - கொடி = வளைந்த தண்டு. கொடு - கொடிறு = வளைந்த குறடு, குறடு போன்ற அலகு (jaw). கொள் - (கொட்கு) - கொக்கு = வளைந்த கழுத்துள்ள பறவையினம். கொள் - கொம் - கொம்பு = வளைந்த கோடு, வளைந்த விலங்குக் கொம்பு. கொள் - கோள் - கோண் - கோணம். கோணப்புளி = கொடுக் காய்ப்புளி. கோணம் = கூன்வாள். கோண் - கோடு. கோடுதல் = வளைதல், கோடு - கோட்டம் = வளைவு. கோடு = வளைந்த யாழ்த்தண்டி, யாழ்த்தண்டி, பிறை வளைவு. வடகோ டுயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான் பிறைக்கே (பட்டினத்தார்) சுள் - சுளி. சுளிதல் = வளைதல். சுள் - சுர் - சுரி. சுரிதல் = வளைதல். சுவள் = சவள். சவளுதல் = வளைதல். துள் - துட - (துடம்) - தடம் = வளைவு. தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும் (தொல். உரி. 32). துவளுதல் = வளைதல். நுள் - நுட - நுடம் = வளைவு, கால் கை வளைவு. நுட - நுடங்கு. நுடங்குதல் = வளைதல். நுள் - நெள் - நெளி = வளைவு, வளைந்த அணி, நெளிதல் = வளைதல். நுள - (நொள்) - நொடி. நொடித்தல் = வளைதல். புள் - புரு - புருவம் = வளைந்த கண்பட்டை. புரு - புரி. புரிதல் = வளைதல். புரு - (புறு) - புறை - பிறை = வளைந்த நிலா. முல் - வில் = வளைந்த எய்கருவி. வில் - விலா = வளைந்த நெஞ்செலும்பு. முள் - முரு - முருகு = வளைந்த காதணி. முள் - முறு - முறி. முறிதல் = வளைதல். முறி - மறி. மறிதல் = வளைதல். முள் - முட - முடம் = வளைவு. கைகால் வளைவு. முடம் - (முடல்) - முடலை = பெருங்குறடு. முடம் - முடங்கு. முடங்குதல் = வளைதல். முடங்கு - மடங்கு. மடங்குதல் = வளைதல். முடங்கு - முடக்கு - முடக்கம். மடங்கு - மடக்கு - மடக்கம். முடங்கல் = சுருண்டு முடங்கிய திருமுக வோலை. முள் - (மள்) - வள் - வளை - வளைவு. வள் - வள்ளி = கொடி. இனி, புள் - பள் - வள் எனினுமாம். வள் - வளார் = வளைந்த சிறு போத்து. வளார் - விளார் - மிலார் - மிலாறு. வள் - வாள் - வாளி = வளைந்த தூக்குப்பிடி. வள் - (வண்) - வணங்கு. வணங்குதல் = வளைதல். சொல்வணக்கம் ஒன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான் (குறள். 327). வணங்கு - வாங்கு. வாங்குதல் = வளைதல், வளைத்தல். வாங்கு - வங்கு - வங்கி = வளைந்த கத்தி (பிச்சுவா), நெளிவு. வங்கி வளையல் = நெளி வளையல். வாங்கு - வாங்கா = வளைந்த ஊது கருவி. வாங்கா - வங்கா. வண் - வணர் = யாழ்க்கோட்டின் வளைந்த கடை. வணர் - வணரி = வனைதடி. முள் - (முடு) - முடி - மடி. மடிதல் = வளைதல், மடங்குதல். முரு - முரி - மூரி = வளைவு. முரிதல் = வளைதல். முள் - முறு - முறை - மிறை = வளைவு. குல் - (மல்) - வல் - வல. வலத்தல் = வளைதல். iii. வணங்குதல் மக்கள் கடவுளையும், தாழ்ந்தோர் உயர்ந்தோரையும் வணங்கும் போது உடம்பு வளைதலால், வளைதற் கருத்தில் வணக்கக் கருத்துப் பிறந்தது. உறு - இறு - இற - இறை - இறைஞ்சு. இறைஞ்சுதல் = வளைதல், வணங்குதல். குடம் - குடந்தம் = வளைவு, வணக்கம். குடந்தம் படுதல் = வளைதல், வணங்குதல், தொழுதல். குள் - (மள்) - வள் - (வண்) - வணங்கு - வணக்கு - வணக்கம். வணங்குதல் = வளைதல், தொழுதல். iv. திரும்புதல் ஒரு பொருள் வளையும்போது அது தான் முன்பு புறப்பட்ட இடத்தை அல்லது திசையை நோக்குதலால், வளைதற் கருத்தில் திரும்பற் கருத்துப் பிறந்தது. துள் - (துரு) - திரு - திரும் - திரும்பு. திரு - திரி. திரிதல் = திரும்புதல். முள் - முறு - முறி - மறி. மறிதல் - திரும்புதல். முள் - முடு - முடங்கு - மடங்கு. மடங்குதல் = திரும்புதல். மடங்கு - மடங்கல் = இடையிடை திரும்பிப் பார்க்கும், அதாவது முன்னும் பின்னும் நோக்கிச் செல்லும் அரிமா, அதுபோன்ற கூற்றுவன். v. மீள்தல் மீள்தலாவது திரும்பி வருதல். துள் - (துரு) - திரு - திரும் - திரும்பு. திரு - திரி. திரிதல் = திரும்புதல். ஒன்றைச் செப்பினை திரிதியென்றான் (கம்ப. அங்கத. 10.) முள் - (மூள்) - மீள் - மீட்சி. மீள்தல் = திரும்புதல். மீட்டல் = திருப்புதல். அடைவு வைத்த பொருளைத் திருப்புதல். மூள் - மூட்டு - மீட்டு. மீட்டுதல் = திருப்புதல், அடைவு வைத்த பொருளைத் திருப்புதல். மீட்டுதல் என்பதே உலக வழக்கு. மீள்தல் = பகைவர் கையினின்று அல்லது துன்பத்தினின்று திரும்புதல். மீட்டல் = பகைவர் கையினின்று அல்லது துன்பத் தினின்று விலக்கிக் காத்தல். மீள் - மீட்பு - மீட்பன். நிரைமீட்சி என்பது நிரை திரும்பி வருதலையும் மீட்கப்படு தலையும் குறித்தல் காண்க. vi. மடங்குதல் இலையும் தாளும் துணியும் போன்ற பொருட்களின் ஓரமும், கைகால் முதலியவற்றின் முனையும், திரும்புதலே மடங்குதலாம். சுள் - சுர் - சுரி. சுரிதல் = மடிதல், மடிப்பு விழுதல். முள் - முடு - முடங்கு - மடங்கு. முடு - முடி - மடி. மடிதல் = மடங்குதல். மடித்தல் = தாள் துணி முதலியவற்றை மடக்குதல். மடி = மடிக்கப்பட்ட சேலை, அரையிற் கட்டின ஆடையின் மேல் விளிம்பைப் பைபோல் மடித்த பகுதி. மடங்கு - மடக்கு =அலகை மடக்கிவைக்குங் கத்தி. மடக்குதல் = மடித்தல். vii. திரைதல் திரைதலாவது மடிப்பு விழுதல் அல்லது மடிப்பு விழுந்து சுருங்குதல். சுள் - சுர் - சுரி. சுரிதல் = மடிப்பு விழுதல், திரைதல். சுரித்தல் = திரைதல், சுருங்குதல். சுரித்த மூஞ்சி = மூப்பினால் திரைந்த முகம். சுரிதகம் = கலிப்பாவின் பிறவுறுப்புக்களிற் கூறப்பட்ட பொருளைச் சுருக்கி அல்லது தன்னுள் அடக்கிக் கூறும் முடிவுறுப்பு. சுரிதகம், தரவு தாழிசை முதலியவற்றிற் கூறப்படும் பொருளை அடக்கிக் கூறுவதனாலேயே, அடக்கியல் எனப்பட்ட தென்றறிக. சுள் - சுரு - சுருங்கு - சுருக்கு - சுருக்கம். குடையை மடக்குதலைக் குடையைச் சுருக்குதல் என்றும், திரை விழுதலைச் சுருக்குவிழுதல் என்றம் கூறுதல் காண்க. துள் - (துரு) - திரை. திரைதல் = மடிப்பு விழுதல், அலையெழுதல், சுருங்குதல், திரளுதல். திரைத்தல் = மடித்துச் சுருக்குதல், மடித்துத் திரட்டுதல். திரை - திரையல் = சுருங்குகை, வெற்றிலைச் சுருள். திரை - திரங்கு. திரங்குதல் = திரைந்து சுருங்குதல், வற்றிச் சுருங்குதல், சுருளுதல். திரங்கு - திரக்கு. திரக்குதல் = சுருங்குதல். viii. திருப்புதல் திருப்புதலாவது பக்கந் திருப்பிப் புரட்டுதல். திரும்பு - திருப்பு - திருப்பி. தோசை திருப்பி = தோசையைப் புரட்டுங் கருவி. புரள்தல் = திரும்புதல். புரண்டுபடுத்தல் = திரும்பிப் படுத்தல். புரள் - புரட்டு. புரட்டுதல் = ஒன்றைத் திருப்புதல். புரட்டு - புரட்டி. தோசை புரட்டி = தோசை திருப்பி. புரட்டு - புரட்டல் = புரட்டிச் சமைக்குங் கறி. ix. மடக்குதல் மடக்குதலாவது ஒன்றைத் திருப்பி அதன் செலவைத் தடுத்தலும் அதை அமர்த்துதலும். முள் - முறு - முறி - மறி. மறித்தல் = மடக்குதல், அமர்த்துதல். கிடைமறித்தல் = கிடையமர்த்துதல். மறி - மறியல் = தடுத்தல். முள் - முடு - முடங்கு - மடங்கு - மடக்கு. மடக்குதல் = திருப்புதல், தடுத்தல், அமர்த்தல், வெல்லுதல். மடங்குதல் = தோற்றல், அடங்குதல். கிடை மடக்குதல் = கிடையமர்த்துதல். முடங்கு - முடக்கு. முடக்குதல் = தடுத்தல். x. முடங்கிக் கிடத்தல் முடங்கிக் கிடத்தலாவது சோம்புதலும் பயன்படாது ஓரிடத்துத் தங்குதலும். இயங்கு திணையுயிரிகள் தூங்கும்போது பொதுவாய்க் கைகால் முடக்கிக் கொள்வதால், முடங்கற் கருத்தில் மடிமைக் கருத்துத் தோன்றிற்று. இனி, மடக்குண்டு கிடத்தலே முடங்கிக் கிடத்தல் எனினுமாம். முடங்குதல் = தூங்குதல், வழங்காது ஓரிடத்தமர்தல். பண முடக்கம் = பணம் வழங்காது ஓரிடத்துத் தங்குதல். முள் - முடு - முடி - மடி. மடிதல் = தூங்குதல், சோம்புதல். மடி = சோம்பல், கட்டுக்கடைச் சரக்கு. மடிவீசுதல் = கட்டுக்கடைச்சரக்கு நாறுதல். xi. பன்முறை குறித்தல் ஒன்றைத் திரும்பத் திரும்பச் செய்தல் அதைப் பன்முறை செய்தலாதலால். திரும்பற் கருத்துச் சொல் பன்முறைக் கருத்துணர்த்தும். திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பவும், திரும்பியும். திருப்பி, திருப்பித் திருப்பி, திருப்பியும். திரிய, திரியவும். மடங்கி, மடங்கி மடங்கி, மடக்கி, மடக்கி மடக்கி. மடக்கு = ஒரு சொல்லைப் பொருள் வேறுபட மடக்கி மடக்கிக் கூறும் அணி. மறிந்து, மறித்து, மறித்தும். (முறு - மறு) மறுக்க, மறுத்து, மறுத்தும். மீள, மீண்டும், மீண்டும், மீண்டும். மீட்டும்,. வளைய, வளைய வளைய, வளைத்து, வளைத்து வளைத்து. குறிப்பு : இங்குக் குறிக்கப்பட்டவற்றுள் மடக்கு என்னுஞ் சொல்லொன்றே பெயர்; பிறவெல்லாம் இடைச்சொல். xii. வேறாதல் ஒன்றைத் திரும்பச் செய்வது வேறொரு முறை செய்வதும், ஒன்றினின்று திரிதல் அதனின்று வேறுபடுதலுமாதலால், திரும்பற் கருத்துச் சொல் வேறாதற் கருத்தைத் தழுவிற்று. மறு = வேறு. மறு பிறவி = வேறு பிறப்பு. மறுபடி = வேறொரு முறை. மறுநாள் = அடுத்த நாள். மறு - மற்று =வேறு, திரும்பவும். வேறாக. மற்று - மற்ற - மற்றை (பெயரெச்சம்) மற்றொன்று = வேறொன்று. மற்றப்படி = வேறுவகையில். மற்றவன் = வேறொருவன், பிறன், அடுத்தவன். xiii. மாறுதல் வேறாதற் கருத்து மாறுதற் கருத்தைத் தழுவும். திரும்பு - திருப்பு. திருப்புதல் = மொழிபெயர்த்தல். சொல்லைத் திருப்புதல் = சொல்லை மாற்றுதல். திரும்பு - திறம்பு. திறம்புதல் = வேறுபடுதல், மீறுதல். திரிதல் = வேறுபடல், மாறுதல், திரித்தல் = வேறுபடுத்தல். திரி - திரிவு - திரிபு. திரிசொல் = இயற்சொல்லினின்று திரிந்த சொல். புள் - புரு - புரள். புரள்தல் = சொல் மாறுதல். புரள் - புரளி = மெய்ம்மாற்று, பொய். புரள் - புரட்டு - புரட்டன். புரள் - பிறள் - பிறழ்ச்சி. புரள் - புரட்சி. முறு - மறு - மறுத்தல் = மாற்றுதல். மறு - மறுப்பு. மறு - மறை = மறுப்பு. எதிர்த்து - எதிர்மறை. மறுக்களித்தல் = பழைய கொள்கைக்கு மாறுதல். மறுதலித்தல் = பழைய கொள்கைக்கு மாறுதல். மறு - மாறு - மாற்று - மாற்றம். xiv. மடங்களவு ஒன்றைத் திரும்பத் திரும்பச் செய்வது அதைப் பன்மடங்கு பெருக்குவதாயிருத்தலால், திரும்பற் கருத்துச் சொல் மடங் களவைக் குறித்தது. ஆங்கிலத்தில் turn (திரும்ப) என்னுஞ் சொல் முறையையும் fold (மடி) என்னுஞ் சொல் மடங்கையும், குறித்தல் காண்க. எ.டு. Five turns, ten fold. (துடம்) - தடம் = வளைவு. தடம் - தரம் = முறை. ட - ர, போலி. ஒ. நோ. படவர் - பரவர். தடம் - தடவை = முறை. திரும்பு - திருப்பு = தடவை. முடங்கு - மடங்கு. இருமடங்கு = இருமுறையளவு. முடி - மடி = மடங்கு. இருமடியாகு பெயர், மும்மடிச் சோழன், நான்மடித் தொலைவரி (தந்தி) முதலிய தொடர்களை நோக்குக. முறு - முறை = வளைவு, தடவை. முள் - (மூள்) - (மாள்) - மாண் = மடங்கு. பன்மாண் (பரிபா. 13, 62) வள் - (வாள்) - வாட்டி = தடவை. சுற்று வட்டம் வளையம் முதலிய சொற்கள் முழு வளைவு குறித்தவை. xv. வருதல் ஓரிடத்திற்குச் சென்றவன் திரும்புதலே வருதலாம். இன்று சென்னைக்குச் சென்று நாளைக்குத் திரும்புவேன் என்னுங் கூற்றில், திரும்புவேன் என்பது திரும்பிவருவேன் என்று பொருள்படுதல் காண்க. செல்லுதல் வருதல் என்பன திசைநோக்கி வேறுபட்டன வேயன்றி, வினைவடிவில் வேறுபட்டனவல்ல. ஒருவன் ஓரிடத்தி னின்று மற்றோரிடத்திற்குச் செல்லும்போது, அவ்வினை புறப்பட்ட இடத்தை நோக்கிச் செல்லுதல் என்றும், புகும் இடத்தை நோக்கி வருதல் என்றும் கூறப்படும். ஆதலால், ஒருவன் ஓரிடத்திற்குப் புதிதாய் வரினும் மீண்டுவரினும், திசைபற்றி இரண்டும் ஒன்றாகவே கொள்ளப்படும். வள் = வளைவு. வள் - வரு - வார் - வா - வ. ஒ. நோ. தள் - தரு - தார் - தா - த. வரு : வருகிறான், வருகை, வருவாய், வரவு. வார் : வாரானை (வருகை), வாரும், வாருங்கள் (ஏவற் பன்மை). வார், வா (ஏவல் ஒருமை). வ; வந்தான், வம்மின் (ஏவற்பன்மை). வருகிறான் வருவான் என்னும் நிகழ்கால எதிர்கால முற்று வடிவுகளிலும். வருகை என்னும் தொழிற்பெயரிலும், வரு என்பது பகுதியாயிருத்தலானும்; வார் என்னும் ஒருமை யேவலிலும், வாரும் வாருங்கள் என்னும் பன்மையேவலிலும், வார்தல் வாரானை என்னும் தொழிற் பெயர்களிலும், வார் என்பது பகுதியாயிருத்த லானும்; வா என்னும் ஏவலொருமை வடிவினின்று வாதல் வாவு என ஏதேனும் ஒரு தொழிற்பெயர் பிறவாமையானும், வருதல் என்னும் வினைக்கு ருகரங்கூடிய வரு என்பதே பகுதியாம். வள் என்னும் அடியினின்று முதலாவது திரியக் கூடியவை வர் - வரு - என்பவையே. இங்கு வருதல் வினைக்குக் கூறியதைத் தருதல் வினைக்குங் கொள்க. கோர் என்னும் சொல் கோ எனக் குறைந்ததுபோல, வரு என்பதன் திரிபான வார் என்னுஞ் சொல்லும் வா எனக் குறைந்த தென்க. நோ என்னும் வினை இறந்தகாலத்திலும் ஏவலிலும் நொ (நொந்தான், நொம்மாடா) எனக் குறுகியதுபோல, வா தா என்பனவும் வ த எனக் குறுகின. வார் = வா (ஏவலொருமை). வந்திக்க வாரென (பரிபா. 20, 70) லாரடா வுனக்கியாது தானர்தம் மகளடுக்கிமோ (பாரத. வேத்திர. 12). xvi. வரைதல் வரைதலாவது எழுதுதல். எழுதுதல் என்பது, எழுத்து எழுது தலையும் படம் வரைதலையும் பொதுப்படக் குறிக்கும். முற் காலத்தில் படவெழுத்தே (Heiroglyphic or picture-writing) தமிழகத் தில் வழங்கியதால், எழுத்து என்னும் சொல் படத்தையும் வரிவடிவையும் ஒருங்கே உணர்த்திற்று. படமும் எழுத்தும் பெரும்பாலும் வளைகோடுகளாலாவதால், வளைதற் கருத்தில் வரைதற் கருத்துப் பிறந்தது. இருதிணையுயிரிகளின் உடம்பிலும் இயல்பாகக் காணப்படும் கோடுகள் பொதுவாக வளைந்தேயிருத்தலின், கோடு என்னும் பெயர் முதலாவது வளைகோட்டையே குறித்துப் பின்பு ஒப்புமை பற்றி நேர் கோட்டையும் குறித்தது. கோடுதல் = வளைதல். கோடு = வளைகோடு, வரி (கோடு). வரிக்குதிரை வரிப்புலி முதலியவற்றின் கோடுகளை நோக்குக. வள் - வர் - வரி. வரிதல் = வளைதல், வளைத்து அல்லது சுற்றிக்கட்டுதல். வரி = வளைகோடு, கோடு, கோட்டுவடிவான எழுத்து, வரைவு, வரணனை, வரணிக்கும் பாட்டு அல்லது காதற் பாட்டு, கட்டு. ஆற்றுவரி கானல்வரி முதலிய இசைப்பாட்டு வகைகளை நோக்குக. வரித்தல் = எழுதுதல், வரைதல், பூசுதல், காதலியின் தோளிலும் மார்பிலும் வரைதல், அவளை மணத்தல், வளைத்து அல்லது சுற்றிக்கட்டுதல். வரி - வரன் = மணவாளன். வரி - வரணம் (வரி + அணம்) = எழுத்து, வரைவு, பூச்சு, நிறம், குலம், வகை, ஓசைவகை, பண், பாட்டு. வரணம் (வ.) - வரணி (வ.). வரணித்தல் = வரைதல், சொல்லால் வரைதல். வரணி - வரணனை (வரணி + அனை). வரணம் வரணி வரணனை என்பன தென் சொல்லடியாய்ப் பிறந்த வடநாட்டுச் சொற்கள். வள் - வண் - வண்ணம் = எழுத்து, வரைவு, பூச்சு, நிறம், வகை, செய்யுள், ஓசைவகை. வண்ணம் - வண்ணகம் = அராகம் என்னும் வண்ணவுறுப்பு. வண்ணக வொத்தாழிசைக்கலி தொன்றுதொட்டு வழங்கும் தமிழ்ச் செய்யுள் வகை. வண்ணத்தான் - வண்ணான் = ஆடைக்கு நிறமூட்டுபவன். வண்ணத்துப்பூச்சி - வண்ணாத்திப்பூச்சி. வண்ணம் - (வண்ணகன்) - வண்ணக்கன் = கட்டி நாணயத்தின் வண்ணத்தை (உரைத்து) நோட்டஞ் செய்பவன். வண்ணம் - வண்ணி. வண்ணித்தல் = வரணித்தல். வண்ணி - வண்ணகம் = வரணித்துப் புகழ்கை. ஒ. நோ. சுள் - சுண் - சுண்ணம் - சுண்ணகம். சுண்ணித்தல் = நீறாக்கல். வரி - வருவு. வருவுதல் = கோடிடுதல். வருவூசி = கோடிடும் ஊசி. வரி - வரை = கோடு. கீறல். வரைதல் = ஓவியம் வரைதல், எழுத்து எழுதுதல், கட்டுரை அல்லது நூல் எழுதுதல், காதலியின் தோளிலும் மார்பிலும் தொய்யில் வரைதல், அவளை மணத்தல். குறிப்பு : - வண்ணம் வண்ணகம் என்பன தொன்று தொட்டு வழங்கிவரும் தமிழிலக்கணக் குறியீடுகளாதலானும், அவற்றாற் குறிக்கப்படுவன தனித்தமிழ் யாப்பு வகைளாதலானும், அக்குறியீடுகட்கு மூலம் தனித்தமிழ்ச் சொற்களே. இனி, வண்ணம் என்னும் சொல், வகை என்னும் பொருளில், அவ்வண்ணம் இவ்வண்ணம் எவ்வண்ணம் என இருவகை வழக்கிலும் பெருவழக்காய் வழங்குதலையும் நோக்குக. நிறம் என்னும் வரணப் பெயரும் திறம் என்னும் வகைப் பெயரும் இசைவகையைக் குறித்தல் போன்றே. அவ்விரண்டையும் குறிக்கும் வண்ணம் என்னும் பெயரும் இசை வகையைக் குறித்த தென்க. தொல்காப்பியத்தில் 20 வண்ணங்களும், அவிநயத்தில் 100 வண்ணங்களும் கூறப்பட்டுள. வண்ணந் தானே நாலைந் தென்ப என்று தொல்காப்பியம் (செய். 210) வழிநூன்முறையிற் கூறுவது கவனிக்கத்தக்கது. xvii. வரம்பு ஓரிடத்தின் எல்லை கோட்டினால் குறிக்கப்படுவது வழக்க மாதலின், கோடிடுதல் எல்லை குறித்தலையுணர்த்திற்று. வரைதல் =கோடிடுதல், எல்லை குறித்தல், வரையறுத்தல், விலக்குதல். வரை = கோடு, எல்லைக்கோடு, அளவு, எல்லை. வரையறுத்தல், அடிமுதல் முடிவரை, இதுவரையும், இது வரைக்கும் முதலிய வழக்குகளைக் காண்க. வரை - வரம்பு = கோடு, எல்லை, அளவு, தாண்டக் கூடாத எல்லைபோன்ற அறவிதி, சட்டம். வரம்பு - வரப்பு - வயலெல்லையாகிய சுற்றுத்திடர். (2) இயங்கல் துறை i. அசைதல் அசைதல் என்பது, ஏதேனுமொரு பொருள் இடவலமாகவேனும் முன் பின்னாகவேனும் சாய்தல் அல்லது வளைதலோயாதலின், வளைதல் கருத்தில் அசைதற் கருத்துப் பிறந்தது. உல் - உல - உலவு - உலாவு. உலாவுதல் = அசைதல். உல் - அல் - அலை; அலைதல் = அசைதல். அலை - அசை. அல் - ஆல் - ஆடு. ஆடுதல் = அசைதல். உல் - உலு - உலுங்கு - உலுக்கு. உலுங்குதல் = அசைதல். உலுக்குதல் = அசைத்தல். உலுங்கு - அலுங்கு - அனுங்கு - அனுக்கு. உலுக்கு - அலுக்கு = கமகம். அலுக்குதல் = குரலை இனிமைபட வளைத்தல் அல்லது அசைத்தல். அலுங்கு - அலங்கு - அலங்கல் = அசைதல். உலு - உலுப்பு. உலுப்புதல் = அசைத்தல். உல் - ஒல் - ஒல்கு. ஒல்குதல் = வளைதல், அசைதல். உள் - (உய்) - உயல். உயலுதல் = அசைதல். (உய்) - (உய) - இய - இயங்கு - இயக்கு - இயக்கம் = அசைவு, கிளர்ச்சி. இயங்குதல் = அசைதல். குல் - குலு - குலுங்கு - குலுக்கு. குலுங்குதல் = அசைதல், (சுல்) - சல் - சலி. சலித்தல் = அசைதல், அசைத்தல். அசைத்துத் தெள்ளுதல். சலியடை = சல்லடை. துள் - துள - துளங்கு - துளக்கு - துளக்கம். துளங்குதல் = அசைதல். துள் - (துய்) - துயல். துயலுதல் = வளைதல், அசைதல். நுள் - நுண் - நுணங்கு. நுணங்குதல் = வளைதல், அசைதல். நுள் - நுட - நுடங்கு. நுடங்குதல் = வளைதல், அசைதல். ii. இயங்குதல் ஒரு பொருள் அசைவதினால் அது சற்று இடம் பெயர்கின்றது. ஓரிடத்தினின்று இன்னோரிடத்திற்குப் பெயர்தலும் அசைவின் பாற்படும். ஆங்கிலத்திலும் move என்னுஞ் சொல், அசைதலையும் இடம் பெயர்தலையுங் குறித்தல் காண்க. உல் - உல - உலவு - உலாவு. உலாவுதல் = இயங்குதல். உல் - ஒல் - ஒல்கு. ஒல்குதல் = நடத்தல். ஒல்கு - ஒழுகு - ஒழுக்கு - ஒழுக்கம் = நடத்தை. ஒழுகுதல் = நடத்தல், முக்கரணத்தால் நடத்தல். உல் - அல் - அலை - அசை. அசைதல் = நடத்தல், மெல்ல நடத்தல். உள் - (உய்) - உய - இய - இயங்கு - இயக்கு - இயக்கம் = செலவு. இயங்குதல் = செல்லுதல். உய - உயவு. உயவு நெய் = வண்டி செல்லுதற்கு வேண்டும் மசகு. உய - உயல் - இயல். இயலுதல் = நடத்தல், நிகழ்தல், நிகழ முடிதல், செல்லுதல். இய - இயவுள் = செலுத்துவோன், கடவுள். இயல் = நடத்தை, தன்மை. இயல் - இயல்பு = தன்மை. இயல் - இயற்கை = தன்மை, தன்மையாக அல்லது தானாக நடப்பது. சுல் - செல் - செலவு. iii. வருந்துதல் அசைவினாலும் செலவினாலும் உடம்பிற்குத் தளர்ச்சியும் வருத்தமும் பிறக்கும். அதனால், அசைவும் செலவும் குறித்த சொற்கள் தளர்ச்சியும் வருத்தமுங் குறிக்கும். உள்ளத்தின் அசைவு துன்பம், உடலின் அசைவு வருத்தம். உல் - அல் - அல்லல் = துன்பம். அல் - அல்லா. அல்லாத்தல் = துன்புறுதல். அலசுதல் = அசைதல், வருந்துதல், அலசடி = துன்பம். அலைதல் = அசைதல், வருந்துதல். அலைத்தல் = வருத்துதல். ஆறலைத்தல் = வழிப்போக்கரை வருத்திப் பறித்தல். அலைச்சல் = திரிதல், வருத்தம். அலை - அசை - அசைவு = தளர்ச்சி, வருத்தம், துன்பம். சுல் - சல் - சலி - சலிப்பு. சலித்தல் = தளர்தல், வருந்துதல். சில் - செல் - செல்லல் = துன்பம். செல்லல் இன்னல் இன்னா மையே (தொல். உரி. 6) துளங்குதல் = அசைதல், வருந்துதல். (3) முறிதல் துறை முறிதல் முறிதலாவது, விறப்பான நீள் பொருள்கள் ஒன்றை முட்டிச் சாயுமிடத்து அல்லது வளையும்போது ஒடிதல், இவ்வியற்கை விதியறிந்தே, வரிச்சையும் கரும்பையும் ஒடிக்க வேண்டியவிடத்து முழங்காலை முட்டவைத்துச் சாய்ப்பர். உடு - ஒடு - ஒடி. ஒடு = வளைவு, நெளிவு. ஒடு - ஒடுக்கு, உலோகக் கலங்களின் நெளிவை ஒடு அல்லது ஒடுக்கு என்பர். அதை நீக்குதற்கு ஒடுத்தட்டுதல் அல்லது ஒடுக்கெடுத்தல் என்று பெயர். ஒடிதல் = முறிதல். ஒடி - ஒசி. உறு - இறு. இறுதல் = வளைதல், முறிதல். நுள் - நொள் - நொடி. நொடித்தல் = வளைதல், ஒடிதல். நுள் - நெள் - நெரு - நெரி - நெரிசல் = நெருங்கி முட்டுதல், உடைதல். கண்ணாடி மட்கலம் முதலிய பொருள்கள் ஒன்றோடொன்று முட்டி நெரிந்துபோவது, அவற்றின் பகுதிகள் சாய்ந்து முறிதலே. நெரிதல் = வளைதல், முறிதல். நெறிதல் = வளைதல். நெறித்தல் = புறவிதழொடித்தல். முள் - முறு - முறி. முறிதல் = வளைதல், ஒடிதல். முறி = முறிந்த துண்டு, சீட்டு. (4) திருகல் துறை திருகல் ஒரு நீண்ட பொருள் முழு வட்டமாகாது மேலும் மேலும் பல நெளிவுகளாக அல்லது வளைவுகளாகத் தொடர்தல் திருகலாம். சுள் - சுரு - சுரி. சுரியாணி = முறுக்காணி. துள் - (திள்) - திரு - திருகு - திருகல். திருகு - திருக்கு = திருகி வைக்கும் அணி அல்லது ஆணி, முறுக்கு, மாறுபாடு, வஞ்சனை. திருகும் ஆணி திருகாணி, திருகலான கள்ளி திருகு கள்ளி. திருகு = கொண்டைத் திருகுபோல் திருகிவைக்கும் அணி. திருகி = தேங்காய் திருகி போன்ற கருவி. திரு - திரி. திரிதல் = முறுகுதல். திரித்தல் = முறுக்குதல். திரிசடை திரிதாடி திரிமருப்பு முதலியன முறுக்குண்ட பொருள் களின் பெயர்கள். புள் - புரு - புரள் - புரளை - புரடை - பிரடை - பிருடை = யாழ் முறுக்காணி, திரித்துக் கூறும் பொய். புரு - புரி = முறுக்குண்ட நூல், கயிறு, புரிதல் = முறுகுதல். புரு - புரள் - புரண்டை - பிரண்டை = புரண்டிருக்கும் அல்லது முறுக்குண்டிருக்கும் கொடி. முள் - முறு - முறுகு - முறுகல். முறுகு - முறுக்கு = திருகலாக வுள்ள பலகாரம், முறுக்கும் ஆணி முறுக்காணி. திருகல் முருகல் என்பது வழக்கு. முள் - (மள்) - வள் - வளை = சங்கு (முறுகியிருப்பது). (5) வட்டத் துறை வளைத்த பொருளின் இருமுனையும் தொடுமாறு முழு வளைவானதே வட்டம். i. வட்டமானவை உறு - இறு - இறால் = வட்டமான தேன்கூடு. இறத்தல் = வளைதல். உள் - (அள்) - (ஆள்) - ஆழி = வட்டம், மோதிரம், சக்கரம். குல் - *(குல) - குலவை - குரவை = வட்டமாக நின்றாடுங் கூத்து. குள் - (குரு) - குருகு = வளையல். குள் - குண்டு - குண்டலம் = வட்டம், சுன்னம். குள் - குட - குடம் - (குடகம்) - கடகம் = வளையல், வளைந்த மதில், வட்டமான பெட்டி. (குடுகு) - கிடுகு = வட்டமான கேடகம், வட்டமான அறை, கேடகம் போன்ற தென்னந்தட்டி. கிடுகு - கிடுகம் - கேடகம். குண - குணகு - குணக்கு - குணுக்கு = கனத்த காது வளையம். குள் - கொள் = கோள் - கோடு -கோட்டம்= வட்டம், மாவட்டம். கோரம் = வட்டில். சுல் - சில் = சக்கரம். சுல் - சுன் - சுன்னம் = சுழி, வட்டம். சுன் - சுன்னை = சுழி. சுள் - சுழி = வட்டம். சுழித்தல் = வட்டம் வரைதல். சுள் - சுட்டி = வட்டமான அணி, வட்டமான பொறி. சுட்டித்தலை = சட்டியுள்ள தலை. சுவள் - சவள் - (சகள்) - சகண்டை = வட்டமான பறை. சகண்டை - சகடை = சக்கரம், சக்கரமுள்ள வண்டி, பறை. சகடை - சகடு - சகடம் = வண்டி, வட்டில். சகடு - சகடி. சகடு - சாகாடு. சகடு - சாடு. சகடை - சக்கடை - சக்கடா. சுள் - (சள்) - சரு - சரி = வளையல் வகை. சுள் - சுளை - சுளையம் - சொளையம் = சுன்னம். சுள் - (சுர்) - சூர் - சூர்ப்பு = கைக்கடகம். புள் - புரு - புரி - பரி - பரிதி = வட்டம், வட்டமான கதிரவன். பரிதி - பருதி. பரி - பரிசை - வட்டமான கேடகம். பரி - பரிசு - பரிசல் = வட்டமான கூடைத்தோணி. புள் - (பள்) - பண்டி = சக்கரம், சக்கரமுள்ள வண்டி. பண்டி - பாண்டி - பாண்டில் = வட்டம். அகல், வட்டமான கிண்ணம், சாலர். முள் - முட்டு - முட்டை = சுழி, சுன்னம். முள் - (மள்) - (மண்) - மணி = வட்டமான வெண்கலம். முண்டு - மண்டு - மண்டி. மண்டியிடுதல் = காலை மடித்தல் அல்லது மடக்குதல். மண்டுதல் = வளைதல், மண்டு - மண்டலம் = வட்டம், வட்டகையான் நாட்டுப்பிரிவு, நாற்பான் நாள் வட்டம். மண்டலம் - மண்டலி, மண்டலித்தல் = வட்டமாதல், முழுமை யாதல், நிரம்புதல். மண்டலம் - மண்டிலம் = வட்டம், வட்டமான கோள், (கதிரவன் திங்கள் முதலியன), வட்டமான கண்ணாடி. மண்டில யாப்பு, மண்டலித்தல், நிலைமறி மண்டிலம், அடிமறி மண்டிலம் முதலியன தொன்றுதொட்டு வழங்கி வரும் தமிழ் யாப்பிலக்கணக் குறியீடுகள். அடிநிரம்பி வருதல் மண்டில யாப்பாகும். வட்டரவுக் கருத்து முழுமை அல்லது நிறைவுக் கருத்தைத் தழுவும். (மள்) - வள் - வள்ளம் = வட்டமான கலம். வள் - வள்ளி - வளையல். வள் - வளை. வளை - வளையம். வளை - வளையல், வளைவி. வள் - வட்டு = வட்டமான கருப்புக்கட்டி, வட்டமான ஓடு. வட்டு - வட்டி = வட்டமான பெட்டி. வட்டி - வட்டில் = வட்டமான கலம். வட்டு - வட்டம் - வட்டகை, வட்டாரம். வட்டு - வட்டணம் = வட்டமான கேடகம். வட்டணம் - வட்டணி. வட்டணித்தல் = வட்டமாதல், வட்டமாக்குதல். வட்டு - வட்டணை = வட்டம், கேடகம், சாலர். வட்டு - வட்டரவு = வட்ட வடிவு. வள் - வண்டு = வளையல், வட்டமான பூச்சி. வண்டு - வண்டி = சக்கரம், சக்கரத்தையுடைய ஊர்தி. வண்டி - வண்டில். வள் - வாள் - வார் - வார்ப்பு = வளையல். வாள் - வாளி = மூக்கிலும் காதிலும் அணியும் கம்பி வளையம். ii. சூழ்தல் சூழ்தலாவது ஒன்று இன்னொன்றைச் சுற்றி வளைதல். உள் - உடு. உடுத்தல் = சுற்றிக் கட்டுதல். உடு - உடுப்பு. உடு - உடை. உடுத்தல் = சூழக் கொண்டிருத்தல். நீராருங் கடலுடுத்த நிலமடந்தை (மனோன்மணீயம்). உல் - உலவு - உலாவு. உலாவுதல் = சூழ்தல். தூசுலாய்க் கிடந்த (சீவக. 550). ஊர் = கதிரவன் திங்களைச் சூழும் வட்டக்கோடு. செங்கதிர் தங்குவதோ ரூருற்றது (கம்ப. சரபங். 9) ஊர்கோள் = நிலாவைச் சுற்றியிருக்குங் கோட்டை. குள் - கொள் - கோள் - கோடு - கோட்டை = நகரைச் சூழ்ந்திருக்கும் மதில், நிலாவைச் சூழ்ந்திருக்கும் ஊர்கோள். சுல் - சுற்று - சுற்றம். சுற்றுதல் = சூழ்தல். சுள் - சூழ். சூழ்தல் = நாற்புறமும் வளைதல், அங்ஙனம் வளைதல் போல் ஒரு காரியம் பற்றிய எல்லாவற்றையும் எண்ணுதல். சூழ் - சூழ்ச்சி - சூழ்ச்சம் = மந்திரம் (ஆலோசனை), நுண்ணறிவு, விரகு (உபாயம்). சூழ்ச்சி - சூழ்ச்சியம் = மதி நுட்பமான அமைப்பு. சூழ் - சூழல் = சுற்றுச்சார்பு, இடம். சுள் - (சூள்) - சூட்டு = சக்கரத்தின் சுற்றுச்சட்டம். சூறுதல் = சூழ்தல். சூறிள விமையோர் (பாரத. காண்டவ. 31) புள் - புரி - புரிசை = நகரைச் சுற்றியுள்ள மதில். புரி - பரி. பரித்தல் = சூழ்தல். குருதி பரிப்ப (அகம். 31) பரிவேடம் = ஊர்கோள். முள் - முறு - முற்று - முற்றுகை = மதிலைச்சூழ்தல். முள் - (மள்) - வள் - வளவு = வீட்டின் சுற்றுப்புறம். வள் - வளாகம் = சுற்றியுள்ள நிலப்பகுதி. வள் - வளை - வளைசல் - வளவு. வள் - வட்டை = சக்கரத்தின் சூட்டு. வள் - வட்டு - வட்டம் = ஊர்கோள். முல் - (மல்) - வல் - வல. வலத்தல் = வளைதல், சூழ்தல். வல - வலை = சூழ்ந்து ஒன்றைப் பிடிக்கும் கயிற்றுக் கருவி. வள் - வாள் - வார் - வாரி = நிலத்தைச் சூழ்ந்த கடல். வார் - வாரணம் = கடல். வார்தல் = வளைதல், சூழ்தல். வாரணம் - வாரணன் = கடல் தெய்வம். வாரணன் - வருணன். வருணன் மேய பெருமண லுலகமும் (தொல். அகத். 5) iii. சுருள்தல் சுருள்தலாவது, ஒரு நீண்ட துவள்பொருள் ஒரு வளையமாகவோ பல வளையமாகவோ அமைதல். அது போன்ற தோற்றமும் இயக்கமும் அதன்பாற்படும். குள் - குழல். குழலுதல் = சுருளுதல். கடைகுழன்ற கருங்குழல்கள் (சீவக. 164) குள் - (குரு) - குருள் = சுருள். (குரு) - குறண்டு. ருறண்டுதல் = சுருள்தல். குள் - கொள் - கோள் - கோடு - சங்கு. கோடுதல் = வனைதல், சுழிதல். சுள் - (சுரு) - சுருள் = சுருண்ட பொருள். சுருள் - சுருளி. சுருள் - சுருளை - சுருணை. சுருள் - சுருட்டு - சுருட்டை - சுருண்ட மயிர். சுருட்டு = சுருட்டப் பட்டது. சுருட்டு - சுருட்டி. (சுரு) - சுரி. சுரிதல் = சுருள்தல். சுரியிரும் பித்தை (பொருந. 160) சுரிதல் = சுழிதல். வெள்ளைச் சுரிசங்கொடு (தில். திருவாய. 7,1,3) சுரிமுகம் = சங்கு. சுரி = உடம்புச் சுழி. சுரிநெற்றிக்காரி (கலித். 101) சுரி - சுரியல் = நீர்ச்சுழி. சுரி - சுரிந்து = நீழ்ச்சுழி. சுள் - சுழி = உடம்புச்சுழி, அதையுடையவன் செய்யுங் குறும்பு, நீர்ச்சுழி. புள் - புரி. புரிதல் = சுருள்தல். புரிக்குழன் மடந்தை (சீவக. 2688) புரிதல் = சுழிதல். புரி = சங்கு. புரியொருகை பற்றி (திவ். இயற். 1, 31) வலம்புரி = வலமாகச் சுழிந்த சங்கு இடம்புரி = இடமாகச் சுழிந்த சங்கு. முள் - முட - முடங்கு - முடங்கல் = ஓலைச்சுருள், திருமுகம். முடங்குதல் = வளைதல், சுருள்தல். முள் - வள் - வளை = சங்கு. வளைதல் = சுழிதல். வள் - வண்டு = சங்கு. வண்டு - வண்டல் = நீர்ச்சுழி. வள் - வாள் - வார் - வாரணம் = சங்கு. iv. சுற்றுதல் சுற்றுதலாவது, ஒன்று இன்னொன்றைச் சுற்றிவருதல் அல்லது வட்டமிடுதல். உல் - அல் - ஆல், ஆலுதல் = சுற்றி ஆடுதல். ஆல் - ஆலா = வானத்தில் வட்டமிட்டுப் பறக்கும் பறவை. ஆல் - ஆலை = கரும்பாலைபோல் சுற்றியாடும் இயந்திரம். ஆல் - ஆலத்தி = கண்ணெச்சில் கழித்தற்கு விளக்கையாவது, மஞ்சள் நீரையாவது ஒருவர் தலையைச் சுற்றியெடுத்தல். ஆலத்தி - ஆளத்தி = வலிவு மெலிவு சமன் என்னும் முந்நிலை யிலும் சுற்றிப் பண்ணிசைத்தல். ஆல் - ஆலு - ஆடு. ஆடுதல் = சுற்றுதல். ஆடு - ஆட்டு - ஆட்டம். உல் - உல - உலவு. உலவுதல் = சுற்றி வருதல். உலவு - உலாவு. உல - உலா - உலாத்து. உலா = வெற்றிவேந்தன் தலைநகரைச் சுற்றிவரும் பவனி, அதைப்பற்றிய நூல். உலவு - உரவு. உலாவு - உராவு. உல - உலவை = உலவிவருங் காற்று. குள் - கொள் - கொட்டு. கொட்டுதல் = சுற்றுதல். சுற்றிவருதல். கொள் - கொட்பு. காலுண வாகச் சுடரொடு கொட்கும் முனிவரும் (புறம். 43) கொடும் புலி கொட்கும் வழி (சிறுபஞ். 80) கொள் - கோள் = அண்டத்தைச் சுற்றிவரும் விண்மீன். சுள் - சுளை - சொளை - சொளையம். சொளையமாடுதல் = திருடும் நோக்கத்துடன் வீட்டைச் சுற்றி வருதல். சுல் - சுல - கலவு - கலாவு. சுலாவுதல் = சுற்றுதல். சுலாவு = சுற்றி வீசுங் காற்று. சுல் - சுற்று. சுள் - சூழ். சூழ்தல் = சுற்றுதல். சூழ்கதிர் வான் விளக்கும் (பு. வெ. 9, 16) துள் - (திள்) - திரு - திரி. திரிதல் = சுற்றுதல். சுடரொடு திரிதரும் முனிவரும் (சிலப். 12) முள் - வள் - வட்டு - வட்டம் = சுற்று, ஒரு கோள் வான மண்டலத்தை ஒருமுறை சுற்றிவருங்காலம், வியாழன் சுற்றிவருவது வியாழ வட்டம். வட்டு - வட்டணை - (1) வட்டமான செலவு. மாப்புண்டர வாசியின் வட்டணைமேல் (கம்ப. படைத். 97) (2) இடசாரி வலசாரியாகச் சுற்றுகை. சுற்றிவரும் வட்டணையில் (பெரிய. பு. ஏனாதி. 29) v. கட்டுதல் ஒரு பொருளை நூலாலும் கயிற்றாலும் சுற்றிக் கட்டுவதால், சுற்றுதற் கருத்திற் கட்டுதற் கருத்துத் தோன்றிற்று. சுற்றுதல் = ஆடையை அரையைச் சுற்றிக் கட்டுதல். புரி - பரி - வரி. வரிதல் = கட்டுதல். வரித்தல் = கட்டுதல். வரி = கட்டும் அரசிறை. உழவர் கண்டு முதலில் ஆறிலொரு பகுதியை அளந்து சாக்கிற் கட்டியதனால், அரசிறை வரி எனப்பட்டது. அரிசி பிடித்தல் என்பது எங்ஙனம் அரிசியைச் சாக்கிற் பிடித்து வாங்குதலைக் குறிக்குமோ, அங்ஙனமே வரி கட்டுதலென்பதும் வரிப் பகுதியைச் சாக்கிற் கட்டி வரித்தண்டலாளரிடம் ஒப்பு வித்தலைக் குறிக்கும். முள் - முடு - முடி - முடிச்சு = வளைத்துக் கட்டிய கட்டு, முடிச்சுப் போன்ற மரக்கணு. முடி = வளைத்துக் கட்டிய கட்டு. முடிதல் = வளைத்துக் கட்டுதல். முடி - முடிப்பு = முடியப்பட்ட பொருள். vi. சுழலுதல் சுழலுதலாவது, ஒரு பொருள் தன்னைத் தானே சுற்றுதல். சுழற்றுதல் அங்ஙனஞ் சுற்றுவித்தல். உல் - உலம் = சுழற்சி. உலம்வா - உலமா - உலமரல். உலமருதல் = சுழலுதல், மனம் சுழலுவதுபோல் வருந்துதல். உழலுதல் = சுழலுதல். உழல் - உழலை = உழலும் ஆலையுலக்கை அல்லது வாயிற் குறுக்குமரம். உழல் - உழற்று - உழற்றி = சுழற்சி. உழல் - உழன்றி = மாட்டுக் கழுத்தில் கட்டும் உழலைத் தடி. உல் - அல் - ஆல் - ஆலு - ஆடு. ஆடுதல் = சுழலுதல். குள் - குறு - (கறு) - கற - கறங்கு = காற்றாடி. கறங்குதல் = சுற்றுதல், சுழலுதல். குறு - கிறு - கிறுகிறு = கிறுகிறுப்பு = தலைச்சுற்று. சுற்றும் பொருளை நோக்கிக் கிறுகிறுவென்று சுற்றுகிறது என்பதையும், கிறுகிறு வாணம் கின்னறு வாணம் என்று சொல்லிக் கொண்டு சிறுவர் சுற்றியாடி விளையாடுவதையும், தலை வலிக்கும்போது கிறுகிறு வென்று வருகிறது என்று சொல் வதையும் நோக்குக. கிறு - கிறுக்கு = தலைச்சுற்று, மூளைக்கோளாறு, பைத்தியம். ஒருவர் நீண்டநேரம் சுற்றியாடுவதால் தலைமயக்கம் உண்டாதல் காண்க. கிறுகிறுத்தல் = தலை சுற்றுதல், மயக்கமாதல். தலைசுழன்று கிறுகிறுத்து (பிரபோத. 18, 54) கிறு - கிறங்கு - கிறக்கம் = மயக்கம். கிறங்குதல் = மயங்குதல். குள் - கொள் - கொட்பு = சுழற்சி. கொள் - கோள் = கதிரவனைச் சுற்றும் விண்மீன். வளிவலங் கொட்கு மாத்திரம் (மணி 12, 91) சுள் - சுழல் - சுழற்சி - சுழல் - சுழற்று - சுழற்றி - சுழட்டி. சுரித்தல் = சுழலுதல். சுருக்கு மண்டலந் தூங்குநீர்ச் சுரிப்புற வீங்க (கம்ப. இராவணன் தேரேறு. 30) சுள் - சுறு - சூறை = சுழித்தடிக்குங் காற்று. சூர்த்தல் = சுழலுதல். சூர்ப்பு = சுழற்சி. துள் - (திள்) - திரி. திரிதல் = சுழலுதல். சூறைவளி = சூறாவளி. வலந்திரியாப் பொங்கி (பு.வெ.9, 12) திரித்தல் = சுழற்றுதல். எஃகு வலந்திரிப்ப (திருமுரு. 111) திரி - திரிகை = திரிகல். திவி - தெரு - தெரும் = சுழற்சி. தெரும்வா - தெருமா - தெருமரல். அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல். உரி. 13). புள் - (புய்) - புயல் (Cyclone). முள் - வள் - வளி = வளைந்து வீசுங்காற்று. வள் - வட்டு - வட்டணை = வாள் போல் படைக் கலத்தைச் சுழற்றுதல். vii. அலைதல் ஒரு பொருள் சுற்றும்போதும் சுழலும்போதும் பல இடத்தைச் சார்தலால், சுற்றுதலையும் சுழலுதலையுங் குறிக்குஞ் சொற்கள் சில, அங்குமிங்கும் அலைதலைக் குறிக்கும். உல் - அல் - அலை. உழலுதல் = அலைதல். சுழலுதல் = அலைதல். சுற்றுதல் = அலைதல். திரிதல் = அலைதல். (6) உருட்சித் துறை உருட்சி என்பது கனவட்டம். பரப்பு மட்டும் உள்ளது வட்டம், பரப்பும் கனமும் உள்ளது கனவட்டம். குண்டுருட்சி நீளுருட்சி என உருட்சி இருவகைப்படும். i. உருள்தல் உருள்தலாவது, உருட்சிப் பொருள்கள் புரண்டு புரண்டோடுதல். உல் - அல் - அலை. அலைதல் = உருள்தல், அலைத்தல் = உருட்டுதல். தேறல் கல்லலைத் தொழுகும் (புறம். 115) அலை = உருளும் திரை. உருள் - உருளி = உருளும் சக்கரம். உருள் - உருட்சி. உருள் - உருட்டு - உருட்டல். உருட்டு - உருட்டி. ii. குண்டுருட்சி (உருண்டை) பந்துபோன்றது குண்டுருட்சியாகும். உல் - உல - உலகு = உருண்டையான ஞாலம், அது போன்ற கோள். உலகு - உலகம். உருள் - உருண்டை - உண்டை. குள் - குளிகை = உருண்ட மாத்திரை. குளி - குளியம் = உருண்டை, மருந்து (மாத்திரை). குளியம் - குழியம் = வாசனையுருண்டை. குள் - குண்டு = உருண்டை. குல் - கோல் - கோலி = உருண்டை, சிற்றுருண்டை. குள் - கொள் - கோள் - கோளம் = உருண்டை. கோள் - கோளா = உருண்டைக்கறி. சுள் - சுழி - சுழியம் = உருண்டைப் பலகாரம். புள் - (பொண்டு) - போண்டா = உருண்டைப் பலகாரம். முள் - முழி - விழி = கண்ணின் கருவிழி, விழி. மூக்கும் முழியும் என்பது உலக வழக்கு. முள் - (முடம்) - முடல் - முடலை = உருண்டை. வள் - வட்டு - வட்டணை = உருண்டை. (வடம்) - வடகம் = தாளிக்கும் உருண்டை. iii. உருண்ட திரட்சி உருண்ட திரட்சியாவது குண்டாயிருந்தும் முழுவுருண்டை யல்லாதது. உல் - உலம் = உருண்ட திரட்சி, உருண்ட கல். குள் - குண்டு = உருண்டு திரண்டது. குண்டுக்கல், குண்டுக் கோதுமை, குண்டுச் சம்பா, குண்டுமணி, குண்டு மல்லிகை, குண்டூசி முதலிய பெயர்கள், உருண்ட திரட்சிப் பொருள்களைக் குறிக்கும். குண்டு - குண்டா = உருண்டு திரண்ட கலம். குண்டு - கண்டு = நூற்பந்து. குண்டு - குட்டு = முட்டை (தெ.) குடம் = உருண்டு திரண்ட கட்டை அல்லது கலம். கும் - கும்பு - கும்பம் = உருண்டு திரண்ட கலம். கும்பச்சுரை = உருண்டு திரண்ட சுரை. கும்பு - கும்பா = உருண்டு திரண்ட கலம். குள் - கொள் - கோள் - கோளம் - கோசம் = முட்டை. குள் - கொள் - கொட்டை = உருண்டை தலையணை. சுல் - சூல் = முட்டை. ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின் (பெரும்பாண். 132). சுல் - சுன் - (சுனை) - சினை = முட்டை. சுள் - (சொள்) - சோளம் = உருண்ட கூலம். முள் - முட்டை. முள் - முட்டு - முத்து = உருண்ட கல் அல்லது விதை. ஆமணக்கு முத்து, குருக்கு முத்து, புளிய முத்து, வேப்பமுத்து முதலிய வழக்குக்களைக் காண்க. முள் - (மள்) - மண் - மணி = உருண்ட கூலம் அல்லது விதை, உருண்ட பாசி. நென்மணி, குன்றிமணி முதலிய வழக்குக்களைக் காண்க. iv. நீளுருட்சி உருளை போன்றது நீளுருட்சியாம். உல் - உலம் - உலக்கை. உருள் - உருளை - உருடை (-ரோதை). முன்பு கூடலியல் - திரளல் துறையில் குறிக்கப் பெற்ற உலக்கை குண்டலம் முதலிய ஒருசில சொற்கள் திரட்சிக்கருத் தொடு உருட்சிக் கருத்தும் கொண்டவையென அறிக. (9) ஊகாரச்சுட்டு துளைத்தல் ஒன்றை வலிதாய்த் தொட்டபொருள் கூர்நுனியுள்ள தாயிருப் பின், அது வளையாவிடத்து அதனால் முட்டப்பட்ட பொருளைத் துளைக்கும். வேர் மண்ணையும், ஊசி துணியையும், பூச்சி ஏட்டையும், ஆணி மரத்தையும், அம்பு உடம்பையும், கம்பி நிலத்தையும், பிற பிறவற்றையும் துளைக்கும். ஒரு பொருளை வினைமுதல் (கருத்தா) துளைப்பிலும், வினை முதலாற் கையாளப் பெறும் கருவி துளைப்பினும், சொல்லாக்க நெறிக்கு இரண்டும் ஒன்றே. வலிதாய்த் தொடும் பொருள்களுள், கூர் நுனியுள்ளவை சற்று உள்ளிறங்கு மாதலால், அதனையே துளைத்தலின் துவக்க நிலையாகக் கொள்ளல்வேண்டும். கடினமான பொருளைத் துளைப்பனவெல்லாம் கூர்நுனி யுள்ளனவாகவே இருக்கும். (1) குழித்தல் துறை குழித்தலாவது பள்ளம் உண்டுபண்ணுதல். i. குத்தல் குத்தல் என்பது ஒன்றன் உள்ளிறங்குமாறு கூர்ப்பொருளாற் குத்துதல். குத்து - குத்தி - கத்தி. தொடுதலியலிற் கூறிய குத்தல் குத்தித் தொடுதல் என்றும், இங்குக் கூறியது குத்தித் துளைத்தல் என்றும், வேறுபாடறிக. (உர்) - அர் - அர - அரங்கு. அரங்குதல் = அம்பு முதலியன தைத்தல். குத்து - குத்தி = குத்துங் கருவி, கொழுவொடு சேர்ந்த கலப்பைப் பகுதி. குத்து - கொத்து - கொட்டு. களைக்கொத்துகளைக் கொட்டு முதலிய பெயர்களை நோக்குக. (துள்) - (தள்) - (தய்) - தை. முள் தைத்தல் = முள் உள்ளிறங்குதல். புள் - பொள் - பொளி. பொளிதல் = உளியாற் கொத்துதல். பொள் - பொ. பொத்தல் = குத்தித் துளைத்தல். பொள் - பொது. பொதுத்தல் = முன் முதலியன பாய்தல். பொது - பொதிர். பொதிர்த்தல் = குத்துதல். ii. கீறுதல் கீறுதலாவது கூர்ங் கருவியாற் குத்தி நீள இழுத்தல். குள் - கிள் - கீள். கீள்தல் = கிழித்தல், பிளத்தல். கிள் - கிழி, கீள் - கீழ், கீழ்தல் = கிழித்தல் = பிளத்தல். குள் - குறு - கிறு - கிறுக்கு. கிறுக்குதல் = கீறிவரைதல், கோடு கீறுதல். கிறு - கீறு - கீறல். கீறு - கீற்று = கீறியவரை, கீறிய துண்டு, துண்டு, தட்டித் துண்டு. கீற்று - கீச்சு. கீச்சுதல் = கோடு கிழித்தல். குள் - (குறு) - கூறு = பகுதி. துண்டு. புள் - பொள் - பொளி - பொளித்தல் = கிழித்தல். புள் - (புறு) - பூறு - பீறு. பீறுதல் = நகத்தாற் கீறுதல். iii. பொறித்தல் பொறித்தலாவது, கடினமான பொருளிற் குழித்தெழுதுல். குள் - குழி - குழித்தல் = குழித்தெழுதுதல். புள் - பொள் - பொளி. பொளிதல் = வெட்டுதல், எழுத்து வெட்டுதல். பொளி - பொறி - பொறித்தல் = குழித் தெழுதுதல். புள் - பிள் - விள் - வெட்டு. iv. கிண்டுதல் கிண்டுதலாவது பொருள்களைக் கிளைத்தல் அல்லது குடைதல். உளர்தல் = தலைமயிரைக் கிண்டுதல், அரும்பைக் குடைதல். உழுதல் = கிண்டுதல், மயிரைக் கோதுதல். குடைதல் = கிண்டுதல். குடை - கடை. நெய்குடை தயிரின் (பரிபா. 16, 3) கடை - கடலை = கடையப்படும் பயறு. கடை - கடைச்சல். குள் - கொழு - கோழி = நிலத்தையும் குப்பையையும் கிளைக்கும் பறவை. கொழு = நிலத்தை உழும் காறு. கொழு - கொழுது. கொழுதுதல் = மயிர் குடைதல். கொழுது - கோது. குள் - கிள் - கிளர் - கிளறு - கிளாறு. கிளாறுதல் = கிண்டுதல். கிள் - கிளை. கிளைத்தல் = கிண்டுதல், கிண்டியது போற் பிரிதல். கிள் - கேள் - கேள்வி. கேட்டல் = கிண்டுதல்போல் வினவுதல், வினவியதற்கு ஒருவர் விடுக்கும் விடையைச் செவிகொடுத்தல், செவிமடுத்தல். கிள் - கிண்டு - கெண்டு. கெண்டுதல் = கிளைத்தல். தோண்டுதல். கெண்டு - கெண்டி = நீருண்கலத்தின் கிளை போன்ற உறிஞ்சி, அது உள்ள கலம். கிள் - கெள் - கேள் - கேழல் = நிலத்தைக் கிண்டும் பன்றி, அதை யொத்த யானை. துல் = துன். துன்னுதல் = உழுதல். கிண்டுதல், துன்னூசி = கலப்பைக் குத்தி. துள் - துழ - துழவு. துழ - துழா - துழாவு. துழாவுதல் = கிண்டுதல். துள் - தொள் - தொய். தொய்தல் = உழுதல். நுள் - நள் - நண்டு. நண்டுதல் = கிண்டுதல். நண்டற்சோறு = தைப்பொங்கலிற் கிண்டிச் சமைத்த சோறு. நண்டல் = கிண்டிக் குழைந்த சோறு. நண்டல் கிண்டிப் படைக்கிறது என்பது உலக வழக்கு. நண்டல் பிண்டல் = கூழுங் கட்டியுமாய் ஆக்கிய சோறு. சோற்றை நண்டல் பிண்டலாக்கி விட்டான் என்பது வழக்கு. நண்டு = நிலத்தைக் கிண்டிச் செல்லும் நீருயிரி. நண்டு - ஞண்டு. நுள் - நெள் - நெண்டு. நெண்டுதல் = கிண்டுதல். நெண்டு = நண்டு. நெண்டு - ஞெண்டு = நண்டு. ஞெண்டுதல் = கிண்டுதல். முள் - முண்டு. முண்டுதல் = பன்றி முகத்தாற் கிளைத்தல். 7. அறுத்தல் அறுத்தலாவது, வாளால் நீட்டுவாகில் பலமுறை துளைத்துக் கீறுதல் அல்லது துளைத்துத் துணித்தல். (உர்) - அர் - அரங்கு. அரங்குதல் = அம்பு முதலியன தைத்தல். (துளைத்து அறுத்தல்) அரங்கு - அரக்க. அரக்குதல் = கிளைதறித்தல், வெட்டுதல். தாருந் தோளுமரக்கி (விநாயக. பு. 42, 4). அரங்கு = அறுக்கப்பட்ட அறை. வட்டாட்டிற்கும் சூதாட்டிற்கும் வகுத்த கட்டம், நடத்திற்கும் நாடகத்திற்கும் வகுத்த நிலம் அல்லது மேடை. அரங்கின்றி வாட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் (குறள். 401). அரங்கேற்றம் = மேடையேறிக் கல்வித்திறமும் கலைத்திறமும் காட்டல். ஒரு வீடு பல அறைகள் கொண்டிருப்பதை அரங்கரங்காயிருக்கிறது என்பது தென்னாட்டு வழக்கு. அரங்கு - அரங்கம் = நாடகவரங்கு, சூதாடுமிடம், போர்க்களம், நீரால் அறுக்கப்பட்ட ஆற்றிடைக்குறை, காவிரிக்கும் கொள்ளி டத்திற்கும் இடைப்பட்ட ஆற்றிடைக் குறையைச் சேர்ந்த திருவரங்கம். அரங்கம் - அரங்கன் = திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் திருமால். அரங்கம் திருவரங்கம் அரங்கன் என்பனவே தொன்று தொட்டு வழங்கிவரும் வடிவங்கள். ரங்கம் ஸ்ரீரங்கம் ரங்கன் என்பன இடைக்காலத்தில் முதற்குறையாகத் திரிந்த வட சொற்களாகும். அரங்கு அல்லது அரங்கம் என்னும் சொற்கு அறுக்கப்பட்டது என்பதே மூலப்பொருள்; அர்(உர்) என்பதே மூலம். ரங்கம் என்னும் தலையற்ற சொற்கு மூலமுமில்லை; மூலப் பொருளு மில்லை. அர் - அறு - அறுப்பு. அறு - அறுவு - அறுவடை. அறு - அறுவை - அறுக்கப்படும் துணி, துணி. அறு - அறை = துண்டம், கட்டிடப்பகுதி, அறுக்கப்பட்ட அல்லது வகுக்கப்பட்ட இடம், அரங்கு, சூதாடும் கட்டம், பாத்தி. அரங்கு அறை என்னும் இரு சொற்கட்கும் உரிய பொருள்கள் ஏறத்தாழ ஒன்றாயிருப்பதாலும், அவ் இரு சொற்கட்கும் அர் என்பதே மூலமாதலாலும், அறையென்னும் சொல் தனித்தமிழ்ச் சொல் என்பது வெள்ளிடைமலை யாதலாலும், அரங்கு அல்லது அரங்கம் என்னும் சொல்லும் தென் சொல்லேயென்று தெளிக. vi. பிளத்தல் பிளத்தலாவது ஒரு பொருளை ஒரே முறையில் வெட்டித் திறத்தல் அல்லது துணித்தல். தானாய்த் திறத்தலும் பிளத்தலே. உடை - உடைப்பு, குள் - கள் - கண் - கணி - கணிச்சி = பிளக்குங் கோடரி. குள் - கிள் - கிறு - கீறு - கீறல். துள் - துற - துறப்பு = திறத்தல். துற - துறவு = திறவு. துற - திற - திறவு. திற - திறப்பு - துறப்புக் குச்சு = திறவுகோல். துற - துறவை = திறந்த வெளியிடம். மண்டை பிளத்தலை மண்டை திறத்தல் என்று கூறுவது வழக்கு. திற - தெளி. தெறித்தல் = பிளத்தல், உடைதல். புள் - பொள் - பொளி. பொளிதல் = வெட்டுதல், பிளத்தல். பொள் - போழ். போழ்தல் = பிளத்தல். போழ் = துண்டு. புள் - பிள் - பிடு. பிடுதல் = கையாற் பிளத்தல். பிள் - பிளவு = துண்டு. பிடு - பிது - பிதிர். பிதிர்தல் = பிண்டு உதிர்தல். பிள் - விள் - விடு. விடுதல் = பிளத்தல். விள்ளுதல் = பிளத்தல். vii. வெடித்தல் வெடிக்கும் பொருள் ஒன்றைப் பிளந்துகொண்டு வெளிவரு வதால், பிளத்தற்கருத்தில் வெடித்தற் கருத்துத் தோன்றிற்று. புள் - பிள் - பிடு - பிடுங்கு - பிடாங்கு = பிடுங்கும் வேட்டு. பிடாங்கு - பீரங்கி. அடைத்திருந்தது திடுமெனத் தானே திறந்துவிட்டால், பிடுங்கிவிட்டதென்பர். பிடாங்கு வேட்டைப் பீரங்கி என்பது தஞ்சை வழக்கு. பிள் - விள் - விடு - வெடு - வெடி. விள் - (வெள்) - வெட்டு - வேட்டு. viii. விரிதல் பிளந்த பொருள் விரியும். நொள் - நொகு - நொக்கு = வெடிப்பு. கும் - கம் - கமர் = வெடிப்பு. புள் - பிள் - விள். விள்ளுதல் = பிளத்தல், விரிதல். விள் - விள - விளவு. விளவுதல் = கமராதல். விள் - விரி - விரிவு. விரிதல் = பிளத்தல், வெடித்தல். பித்தச் சூட்டினாற் பாதத்தில் வெடிக்கும் வெடிப்பைப் பித்த விரிவு என்று கூறுதல் காண்க. விரி - விரல் = கையினின்று விரிந்தது. விள் - விரு - விருவு = நிலச்சிறு வெடிப்பு. விள் - விடு - விடர் = மலை வெடிப்பு, குகை. விடுதல் = பிளத்தல், விரிதல். விடு - விடவு = விடர். விள் - (விய்) - வியம் - வியன் - வியல் = விரிவு, அகற்சி, பரப்பு. வியல் - (வியலன்) - வியாழன் = கதிரவனைச் சுற்றும் கோள்களெல்லா வற்றிலும் பெரியது. வியல்என் கிளவி அகலப் பொருட்டே (தொல். உரியியல், 66.) விள் - வெள் - வெடி - வெடிப்பு. வெடித்தல் = பிளத்தல். ix. வாய் விரிதல் பிள் - பிளா - பிழா = வாயகன்ற ஓலைக் கொட்டான். பிழா - பிடா = வாயகன்ற நார்ப்பெட்டி. பிடா - பிடகு - பிடகம் = தட்டு, பெட்டி. பிள் - (பெள்) - பெட்டி = ஓலை நார் மரம் முதலியவற்றாற் செய்யப்பட்ட வாயகன்ற ஏனம். பெட்டி - பெட்டகம். (பெள்) - பேள் - பேழ் = பிளவு, விரிவு, அகற்சி, பேழ்வாய் =அகன்ற வாய். பேழ் - பேழை = வாயகன்ற செப்பு அல்லது மரக்கலம். x. பிரிதல் பிளந்த பொருள் வேறாகப் பிரியும். புல் - பில் (வில்) - விலகு - விலக்கு - விலக்கம். விலகு - விலங்கு. விலங்குதல் - விலகுதல். புள் - புய். புய்த்தல் = பிரித்தல், பிடுங்குதல், புய் - பிய். பிய் - (பெய்) - பெயர். பெயர்தல் = பிரிதல், விலகுதல். பெயர் - பேர். புள் - பிள் - பிரி - பிரிவு - பிரிவினை. பிள் - பிடு - பிடுங்கு. பிடுங்குதல் = பெயர்த்தல், பறித்தல். பிடு - (பிது) - பிதுங்கு - பிதுக்கு - பிதுக்கம். பிதுங்குதல் = பெயர்தல், பெயர்த்து வெளிவருதல். (பிது) - பிதிர். பிதிர்தல் = பெயர்தல், பிதுங்குதல். பிள் - விள். விள்ளுதல் = விலகுதல். விள் - விடு - வீடு = விடுதல், நீங்குதல், செலவு விட்டிருக்கும் இடம் (இல்லம்), பற்றுவிடுகை, பேரின்ப நிலையம். விடு - விடுதி. விடு - விடுதலை. விடுதல் = பிரிதல், நீங்குதல், விட்டிசைத்தல் = பிரிந்தொலித்தல். xi. விடுத்தல் விடுத்தலாவது சிக்கலான பொருளை விடுவித்தல். புள் - பிள் - பிய் - (பியி) - பிசி = பிய்ப்பதுபோல் விடுக்கும் விடுகதை. பிள் - பிடு - பிது - பிதிர் = விடுகதை. பிதிர் - புதிர். பிள் - விள். விள்ளுதல் = பிதிர் விடுத்தல். விள் - விடு விடுத்தல் = பிட்டுச் சொல்லுதல், விடுவித்தல். விடு - விடை = பிதிர்போன்ற அறியா வினாவை விடுவித்தல்போற் கூறும் மறுமொழி. xii. சேய் பிரிதல் பிள் - பிற - பிறப்பு. பிற - பிறவி. பிற - பிறந்தை = பிறவீ, இனம் (genus). தாயும் பிள்ளையும் வேறுவேறு பிரிந்துவிட வேண்டும் என்று பேறுகாலத்திற் பெண்டிராற் கூறப்படுதல் காண்க. தாய் வயிற்றினின்று சேய் பிரிதலே பிறத்தலாம். xiii. மலம் பிரிதல் (புல்) - (பில்) - பேல். புள் - புழுக்கை - பிழுக்கை. (புள்) - பிள் - (பிய்) - பீ. பிள் - பீள் - பீளை - பூளை = கண் மலம். பிள் - (விள்) - விட்டு - விட்டை. xiv. நீர்ப்பொருள் பிரிதல் (புல்) - பில் - பிலிற்று. பிலிற்றுதல் = சிந்துதல், பீச்சுதல். பில் - பீல் - பீர் = ஒரு பீச்சு. பீல் - பீற்று - பீச்சு. ஒ-நோ: கீற்று - கீச்சு. பிள் - பிழி - பிழியல். பிள் - பிய் - பெய் - பெயல். xv. பகுதல் பொருள்கள் பல பகுதிகளாய்ப் பிரிதலே பகுதலாம். புள் - (பள்) - (பழு) - பகு. ஒ. நோ. தொழு - தொகு. பகுதல் = பிரிதல். பக்கிசைத்தல் = பிரித்தொலித்தல். பகு - பகுதி = பிரிவு. கூறு, கண்டுமுதலில் ஆறிலொரு கூறான அரசிறை, பகுசொல்லுறுப்பாறனுள் ஒன்றான முதனிலை. பகுதி விகுதி என்னும் தென்சொற்களின் பொருளும், ப்ரக்ருதி விக்ருதி என்னும் வட சொற்களின் பொருளும், வெவ்வேறாம். பகுதி = கூறு. விகுதி = ஈறு. விகுதல் = முடிதல். ப்ரக்ருதி = இயற்கை (முன் செய்யப்பட்டது), இயல்பு. விக்ருதி = விகாரம். பகுதியும் திரிபை (விகாரத்தை) அடையக் கூடுமாதலாலும், சந்திசாரியை இடைநிலை என்பவும் திரிபை யுண்டு பண்ணுதலாலும், விகுதியென்னும் உறுப்பிற்குத் திரிபு என்னும் பொருள் பொருந்தாது. பகுதி விகுதிகள் முறையே முதனிலை இறுதிநிலையென்று பெயர் பெறுதலாலும், அவற்றிற்குக் கூறு ஈறு என்பனவே சொற்பொருள் என்பது துணியப்படும். களத்தில் முதலாவது அரசனுக்குச் செலுத்தப்படும் பகுதி சிறப்பாகப் பகுதி என்றே பெயர் பெற்றது போல், பகுசொல்லுறுப்புக்களுள் முதன்மையானதும் பகுதி யென்றே பெயர் பெற்ற தென்க. ஆகவே, பகுதி விகுதியென்பன ப்ரக்ருதி விக்ருதி என்பவற்றின் திரிபல்லவென்று தெளிந்து கொள்க. பகுதி விகுதியென்னும் தென்சொற்களினின்றே ப்ரக்ருதி விக்ருதி என்னும் வட சொற்களைத் திரித்துக் கொண்டு, அவற்றிற்குப் பொருந்தப் புளுகலாக வேறு பொருள் கூறுகின்றனர் வடவர் என்க. பகு - பகம் = பகுதி, ஆறு என்னும் தொகை. வேளாளன்விளைவு, அரசன் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்னும் அறுவர்க்குப் பகிர்ந்தளிக்கப்பட்டத னாலும், பகுசொல் பகுதி விகுதி சந்தி சாரியை இடைநிலை வேறுபாடு (விகாரம்) என்னும் ஆறுறுப்புக்களாய்ப் பகுக்கப் பட்டதனாலுமே, பகம் என்னும் சொற்கு ஆறு என்னும் தொகைப்பொருள் தோன்றிற்று. பகு - பகம் - பகவன் = பகுத்தளித்துக் காப்பவன், பலர்க்கும் படியளப்பவன், ஆண்டவன். வேளாளன் அறு சாரார்க்கம், அரசன் அரசியல் வினைஞர்க்கும், ஆண்டை அடிமையர்க்கும், படியளப்பது போல; ஆண்டவனும் பலர்க்கும் உணவைப் பகுத்தளித்துக் காப்பவன் என்னும் கருத்தில், அவனைப் பகவன் என்றனர். இன்றும் ஆண்டவனைப் படியளக்கிறவன் என்று பொதுமக்கள் கூறுதல் காண்க. Lord என்னும் ஆங்கிலச் சொல்லும் இதே கருத்துப் பற்றியெழுந் திருப்பது கவனிக்கத்தக்கது. E. Lord. O.E. hlaford (loafward) = bread. keeper. இனி, அவரவர்க்குரிய நன்மை தீமைகளை வகுப்பவன் என்றுமாம். பால்வரை தெய்வம் (சொல். 53) என்று தொல்காப்பியர் கூறியதை நோக்குக. இனி, பகு - பகவு - பகவன் என்றுமாம், எங்ஙனமாயினும் பொருள் ஒன்றே. பகு - பகுப்பு. பகு - பகல் - பால். பகு - பகை. பகு - பக்கு - பங்கு. பக்கு - பக்கம் - பக்கல். பகு - பகிர் - பகிர்வு. பகு - பகர். பகர்தல் = பொருள்களைப் பகுத்து விலை கூறுதல். பகு - பாகு = பகுதி, பக்கம், பக்கமாயிருந்து பேணுபவன் (பாகன்). பாகு - பாகன். பாகு - பாகம். பாகு - பாகை. பாகு - பாக்கு = பகுதி, கூறு. பாக்கு - பாக்கியம் = கூறு, நற்கூறு, பேறு. அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால். (குறள். 1141) பால்வாய்க்குழவி என்னும் சிலப்பதிகாரத் தொடருக்கு (15:23). மேற்பெறக்கடவ நல்ல பகுதியைத் தன்னிடத்தே யுடைய குழவி என்று அடியார்க்கு நல்லார் கூறுதல் காண்க. பாக்கு என்னும் சொல்லை bhag என எடுத்தொலிப்பதனாலேயே அது வடசொற்போல் தோன்றுகின்றது. இயம் என்பது ஓர் ஈறு. ஒ. நோ. கண் - கண்ணியம், பண் - பண்ணியம். பாக்கு - பாக்கம் = பக்கம், பக்கமான இடம், பட்டினப் பகுதி, பாக்கம் - வாக்கம். பாக்கு - பாங்கு - பாங்கர். பாங்கு - பாங்கன். பகு - பா - பாத்தி. பா - பாது. பாதிடு - பாதீடு. பகு - வகு - வகுதி. வகு - வகுப்பு. வகு - வகை. வகு - வகுந்து = வகை, வகுத்த வழி. வழிவகுத்தல், வழிவகை என்பன மரபு. வகு - வக்கு = வகை, வழி. வகு - வகிர் - வகிடு = வகிர்ந்த உச்சி, உச்சிக்கோடு. வகு - வாகு - வாக்கு = பாக்கம், திசை. இடக்கை வாக்கு, காற்றுவாக்கு முதலிய வழக்குக்களைக் காண்க. பகு என்னும் சொல் தென்சொல் என்பதற்குக் காரணங்கள் : (1) வடமொழியில் பகு என்னுஞ் சொற்கு மூலமாகக் காட்டப் படும் bhaj என்பதற்கு ஆணிவேரேனும் வரலாறேனும் இல்லை. அதோடு bhaj (to divide) என்னும் மூலத்தினின்று வேறுபட்டதாக bhanj (to break) என்றொரு மூலம் காட்டப்படுகின்றது. உண்மையில் இரண்டும் ஒன்றே. தமிழ்ப் பகுதியின் திரிந்த வடிவுகளே வடமொழியில் மூலமாகக் காட்டப் பெறுகின்றன. பகுதிக்கும், முந்தியது மூலம் அல்லது வேர். (2) Bhaj என்னும் மூலத்தின் திரிவுகளாக, bhakti, bhaga, bhagavan, bhaga, bhagya முதலிய சில சொற்களே வடமொழியிற் காட்டப் பெறுகின்றன. தமிழிலோ நாற்பதிற்கு மேற்பட்ட சொற்கள் பகு என்னும் பகுதியினின்று திரிந்துள்ளன. (3) பகுதி பக்கம் பாகம் முதலிய பல சொற்களும் பகு என்னும் ஒரே பகுதியினின்று திரிந்திருக்கவும், அவற்றின் திரிபுகளான ப்ரக்ருதி பக்ஷம் bhaga முதலிய வடசொற்கள் வெவ்வேறெழுத்துக் களைக் கொண்டனவாய் வெவ்வேறு மூலத்தனவாகக் காட்டப் படுகின்றன. xvi. தோண்டுதல் தோண்டுதலாவது ஒரு பொருளின் பரப்பு பள்ளமாகக் குடையப் படல். உள் - அள் - (அழு) - அகு - அகழ் - அகழி. குல் - கல். கல்லுதல் = தோண்டுதல். கல் - கலம் = தோண்டப்பட்ட ஏனம். கல் - கன், கன்னுதல் = தோண்டுதல். கன் - கன்னம் = தோண்டுதல். துளைத்தல், துளை, துளையான காது. கன்னக்கோல் = தோண்டுங் கருவி. கன் - கனி = தோண்டப்பட்ட சுரங்கம். குல் - கில். கில் - கீள் = கீழ். கீழ்தல் = தோண்டுதல். குள் - குழை - குடை. குடைதல் = தோண்டுதல். குள் - (குய்) - குயில். குயிலுதல் = தோண்டுதல். குயில் - குயிலுவம் = மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட இசைக் கருவி. சுல் - சூல். சூலுதல் = தோண்டுதல். துள் - (தூள்) - தூணி = தோண்டப்பட்ட கலம், ஓரளவு. துள் - துரு - தூரி - தூரியம் = குடைந்து செய்யப்பட்ட இசைக்கருவி. துள் - தொள் - தொடு. தொடுதல் = தோண்டுதல். தொள் - தோள். கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. (குறள். 418) தோள் - தோண்டு. தோண்டு - தோண்டி. தோள் - தோண் - தோணி = தோண்டப்பட்ட மரக்கலம். நுள் - நொள் - நோள் - நோண்டு. நோண்டுதல் = தோண்டுதல். புள் - பொள் - பொய். பொய்தல் = துளைத்தல், தோண்டுதல். xvii. தேடுதல் நிலத்திற்குள்ளிருக்குங் கிழங்கையும், எறும்புகள் சேர்த்து வைத்திருக்கும் அடிப்புல்லையும், பொன்னையும், புதையலையும், மக்கள் தோண்டியெடுப்ப தனால்,தோண்டற் கருத்தில் தோண்டு தற் கருத்துத் தோன்றிற்று. கிண்டுதலும் தோண்டுதலின் பாற்படும், துள் - துழ - துழவு - துழாவு. துழாவுதல் = தேடுதல். துள் - துர - துரப்பு.துரப்புதல் = துளைத்தல், தேடுதல். துர - திர - திரக்கு. திரக்குதல் = தேடுதல். துள் - தொள் - தோள் - தோண்டு - தேண்டு - தேடு - தேட்டு - தேட்டம். நுள் - நொள் - நோள் - நோண்டு - நேண்டு - நேடு. நேடுதல் = தேடுதல். நோண்டு - நோடு. நோடுதல் = தேடுதல், ஆய்தல், ஆராய்தல், பார்த்தல். நோடு - நோட்டம் = ஆய்வு, ஆராய்ச்சி. நோடு - நாடு, நாடுதல் = தேடுதல், விரும்புதல், ஆய்தல். நாடு - நாட்டம் = தேட்டம், விருப்பம், தேடும் பார்வை, பார்வை, கண். நாட்ட மிரண்டும் மதியுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும் (தொல். 1042) xviii. பள்ளமுங் குழியும் தோண்டிய இடம் பள்ளமுங் குழியுமாகும். அவை இயற்கையும் செயற்கையும் என இரு திறப்படும். பள்ளத்தினும் ஆழ்ந்தது குழி. குள் - குழி - குழிவு. குள் - குண்டு. குண்டுங் குழியும் என்பது வழக்கு. குழி - குழிசி - குழிந்த பானை. குள் - குட்டு - குட்டம் = பள்ளம், ஆழம். குள் - (கள்) = (கய்) - கயம் = பள்ளம். குள் - கிள் - கீள் - கீழ் = பள்ளம். கீழ் - (கிழங்கு) - கிடங்கு. சுழித்தல் = கண் குழிதல். நுள் - நொள் - நொள்ளல் = கட்குழிவு. நொள் - நொள்ளை. நொள் - நெள் - ஞெள் - ஞெள்ளல் = பள்ளம். நொள் - நொடி = பள்ளம். புள் - பள் - பள்ளம். பள் - பள்ளன் = பள்ளமான மருத நிலத்தில் வாழ்பவன். உழவன். பள் - (பய்) - பயம் - பயம்பு = பள்ளம். பள் - பண் - பண்ணை = பள்ளம், குழி, நெற்குத்தும் பள்ளம், வயல். பள் - படு - படுகர் = பள்ளம், பள்ளமான வயல், மருத நிலம். புள் - பொள் - பொய் = குழி. முள் - மள் - மடு = பள்ளம். மள் - மள்ளன் = பள்ளமான மருதநிலத்தில் வாழ்பவன், உழவன். பள்ளன் என்பது உலக வழக்கும் மள்ளன் என்பது செய்யுள் வழக்குமாகும். மள்ள ருழுபக டுரப்புவார் (கம்பரா. நாட். 18). xix. நீர்நிலை பள்ளமான இடத்தில் நீர் தங்குவதனால், பள்ளத்தைக் குறிக்குஞ் சொற்கள் சில, நீர்நிலையைக் குறித்தன. நீர் நிலையைக் குறிக்குஞ் சொற்கள் சில, நீரையுங் குறிக்கும். குள் - குளம். குள் - குண்டு = சிறு குட்டை. குள் - குட்டு - குட்டை = சிறு குளம். குள் - (கள்) - (கய்) - கயம் = குளம். துள் - தொள் - தொழுவை = மடு. தொள் - தோள் - தோய் - தோயம் = நீர், கடல். புள் - பொள் - பொய் - பொய்கை = குளம். புள் - பள் - பாழி = சிறு குளம். பள் - படு = நீர்நிலை. படு - படுகை = நீர்நிலை, ஆற்றோரத்து நிலம். படுகை - படுகர் = நீர்நிலை. பள்(பல்) - பயம் = நீர்; பயம் - பயம்பு = நீர், நீர்நிலை. பள் - பண் = நீர்நிலை. பண் - பாணி = நீர். முள் - மள் - மடு = நீர்க்கிடங்கு. xx. தோண்டப்பட்ட நீர்நிலை குள் - கிள் - கிணறு. கிள் - கெள் - கேள் - கேணி. துள் - துர - துரவு = கிணறு. xxi. கீழ்மை பள்ளம் நிலமட்டத்திற்குக் கீழாயிருப்பதால், பள்ளத்தைக் குறிக்கும் சொற்களினின்றும் சொல்லடிகளினின்றும் கீழ்மையைக் குறிக்கும் சொற்கள் தோன்றியுள்ளன. கீழ்மை நிலம் (இடம்) பற்றியதும் நிலையைப் பற்றியதும் என இருவகைப்படும். நிலம் பற்றியதும், நிலத்திற்கு உட்பட்டதும் மேற்பட்டதும் என இருதிறப்படும். குள் - கிள் - கீழ் - கீழ்மை. கீழ் - கிழக்கு = கீழ், கீழிடம், இழிவு. காணிற் கிழக்காந் தலை (குறள். 488) கிளைஇய குரலே கிழக்குவீழ்ந் தனவே (குறுந். 337) கிழக்கிடு பொருளோ டைந்து மாகும் (தொல். 1226) குள் - (கள்) - (கய்) - கயம் - கயமை = கீழ்மை. கீழ் என்பது முதலாவது ஒன்றன் உட்பகுதியையே குறித்தது. நிலத்திற் குள்ளிருப்பது நிலத்தின் மேலுள்ள மக்கட்கு அடிப்புறத் திலிருப்பதால், கீழ் என்னுஞ் சொல் பின்பு நிலத்திற்கு மேலுள்ள வெளியிடத்திலும் அடித்திசையைக் குறிப்பதா யிற்று. xxii. தாழ்தல் தாழ்வு என்பது கீழ்நிலை. உள் - (இள்) - (இழு) - இரு. இருதல் = தாழ்தல். தாழ்ந்து விழுதல். இகுத்தல் = தாழ்தல். மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணை (மலைபடு. 226) கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ (மலைபடு. 44) குள் - குண் - குணம் = தாழ்ந்த கீழ்த்திசை. குணம் - குணக்கு = கிழக்கு. குள் - கிள் - கீழ் = கிழக்கு. கீழ் - கீழ்க்கு - கிழக்கு. துள் - (தள்) - தழு - தாழ் - தாழ்வு; தாழ் - தாழ்மை. தாழ் - தாழ்ப்பு = தாழ்த்தல், காலந் தாழ்த்தல், தாழ் - தாழம். தழு - தகு - தக்கு = தாழ்வு. தாழ்குரல் தொண்டையைத் தக்குத் தொண்டை என்று கூறுதல் காண்க. தக்கு - தக்கணம் = தாழ்ந்த தென் திசை. தெற்கிலிருந்த குமரி மலையும் நிலமும் முழுகி, வடக்கில் கடலிருந்த இடத்தில் பனிமலை யெழுந்ததால், தென்திசை தாழ்ந்து வடதிசை உயர்ந்தது. இதனால், தென்திசை தக்கணம் என்றும் வடதிசை உத்தரம் என்றும் கூறப்பட்டன. தக்கணம் தாழ்வு; உத்தரம் உயர்வு. தமிழகப் பரப்பின்படி, நிலமட்டத்தில் தாழ்ந்ததும் உயர்ந்ததுமான கீழ்த்திசை மேற்றிசைகளும், முறையே, கீழ்மேல் அல்லது கிழக்கு மேற்கு என்றும், குணம் குடம் அல்லது குணக்கு குடக்கு என்றும் கூறுப்படுதல் காண்க. தன் - தண் - தண. தணத்தல் = தாழ்த்தல், காலந்தாழ்த்தல். தள் - தண் - தணி - தணிவு. தாழ்த்தல், காலந் தாழ்த்தல். புள் - பள் - பள்ளை - கீழ்மட்டமான (குட்டையான) ஆடு. பள் - படு - படை = கீழ்மட்டம். படை - பாடை = கீழ்மட்டமான (தாழ்வான) கட்டில். படு - பாடு - பாடி = தாழ்வான கூரையுள்ள குடியிருப்பு அல்லது பாசறை. பள் - பண் - பாணி. பாணித்தல் = தாழ்த்தல். xxiii. தட்பம் குளிர்ச்சி சூட்டைத் தணிப்பதால் தணித்தற் கருத்தில் குளிர்ச்சிக் கருத்துப் பிறந்தது. வெப்ப நாட்டில் சூடு தணிவு மிக முதன்மை யாகக் கருதப்படும். துள் - தள் - தண் - தணம், தண் - தண்மை. தண் - தட்பு - தட்பம். தண் - தடு = தடுமம் = குளிர்ச்சி, நீர்க்கோவை. xxiv. கீழாதல் கீழாதலாவது அடித்திசையடைதல். விழுதலும், படுத்தலும், நிலத்திற் கிடத்தலும், கீழாதலாம். உள் - (இள்) - இரு. இருத்தல் = கீழமர்தல், அமர்தல், (இள்) - இடு. இடுதல் = கீழிடுதல், கொடுத்தல். இடு - இடம். உல் - (இல்) - (ஈல்) - ஈன் - ஈனுதல் = கீழிடுதல், பெறுதல். மணற்கீன்ற வெண்முத்தம் ஈன் - ஈ. ஈதல் = இடுதல். குள் - (கிள்) - கிட - கிடக்கை. கிடத்தல் = நிலத்திலிருத்தல், படுத்திருத்தல். புள் - பள் - பள்ளி - படுக்கை, படுக்கையறை, படுக்கும் வீடு, வீடு, கோயில், இடம், வீடுகள் சேர்ந்த ஊர். பள்ளி கொள்ளுதல் = படுத்தல். பள்ளியெழுச்சி = படுக்கை விட்டெழுந் திருத்தல். மக்கள் பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே வேலை செய்தலாலும், இரவிற் படுத்தற்கே வீட்டைத் தேடுதலாலும், படுக்கையைக் குறிக்கும் பள்ளியென்னும் சொல், வீட்டையும் பேரின்ப வீடாகிய கோயிலையும், அடியார் பள்ளிகொள்ளும் மடத்தையும், வீடுகள் சேர்ந்த ஊரையும், குறித்த தென்றறிக. பள் - படு. படுத்தல்= கீழாதல், விழுதல், கிடத்தல், தூங்குதல், படுதல் = விழுதல், போர்க்களத்தில் விழுந்திறத்தல், இறத்தல். படு - படுக்கை. படு - படி. படிதல் = விழுதல். நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேளலறச் சென்றான் எனப்படுத லால் என்னும் நாலடிச் செய்யுளால், இருத்தல் என்பது கீழமர் தலைக் குறித்தல் பெறப்படும். xxv. இறங்குதல் இறங்குதலாவது, மேற்றிசைப் பொருள் கீழ்த்திசையடைதல். அவ் இறக்கம் உள்ளிடத்ததும் வெளியிடத்ததும் என இருதிறப்படும். முன் காலில் தைப்பது உள்ளிறக்கமும், பறவை விண்ணிலிருந்து மண்ணிற்கு வருவது வெளியிறக்கமும் ஆகும். உள் - இள் - இளி - இழி - இழிவு. இழிதல் = இறங்குதல். இள் - (இற) - இறங்கு - இறக்கு - இறக்கம். கும் - குமுங்கு. குமுங்குதல் = இறங்குதல். புள் - புழு - புகு. புகுதல் = இறங்குதல். இளி, இழி, இற, இறங்கு முதலிய சொற்கள் உகர முதலவாய் மூலவடி விலிருப்பின் வேறு பொருன்படுமாதலின், அம்மயக்கத்தை நீக்குதற்கே இகர முதலவாயின வென்றறிக. சொல்லாக்க நெறிமுறைகளுள் முதன்மையானவற்றுள் இம்மயக்கொழிப்பும் ஒன்றாகும். xxvi. பழித்தல் பழித்தலாவது, மதிப்பில் இறக்குதல். ஒருவரைப் பழித்தல், மேலிருந்து கீழும் மேட்டிலிருந்து பள்ளத்திற்கும் இறக்குதல் போன்றதாம். உள் - (இள) - இழு - இகு - இகழ் - இகழ்ச்சி. இள் - இளி - இழி - இழிப்பு. இளி - இளிவு. துள் - (தள்) - தழு - தாழ் - தாழ்ச்சி. புள் - பள் - பழி - பழிப்பு. பழி - (வழி) - (வயி) - (வய்) - வை. வய் - வயவு - வசவு. வய் - வயை - வசை. xxvii. பதிதல் ஒன்று இன்னொன்றிற் படிதலே பதிதலாம். படிதல் = விழுதல், பதிதல், உறுத்துதல் = பதித்தல். படி - பதி - பதிவு. பதி - பதிப்பு. பதிதல் = படிதல், தங்குதல், குடியிருத்தல். ஓரிடத்தில் தங்கியிருத்தலைப் பதிவாயிருத்தல் என்று கூறுதல் காண்க. பதி = பதிவாயிருக்கும் இடம், வீடு, ஊர், நகர். பதி - வதி - வசி - வாசம். (வ). வதிதல் = தங்குதல், குடியிருத்தல். பதி = பாதம் = நிலத்திற் பதியும் உறுப்பு அல்லது பாகம். பதியும் பாதம் பதி பாத மூலம் பதி பாதமூலப் பற்றுடையான் என்று இறைவன் திருவடி குறித்து வரும் கல்வெட்டுத் தொடர்களை நோக்குக. பாதம் - பாதை = பாதம் பட்டு உண்டாகும் வழி. xxviii. பணிதல் பணிதலாவது ஒருவருக்குக் கீழ்ப்படுதல் அல்லது கீழ்ப்படிதல். பள் - பண் - பணி - பணிவு = பணிவிடை. பணி = தொண்டு. பணித்தல் = கீழ்ப்படிவித்தல், பணி செய்வித்தல், கட்டளை யிடுதல். பள் - படு - படி. படிதல் = பணிதல். கீழ் + படி = கீழ்ப்படி. xxix. புழை புழை யென்பது பக்கவாட்டிலும் ஒரு பொருளிலுமுள்ள ஆழ்ந்த பள்ளம். குள் - குழை - குடை = புடை, கவிகை. விலாப் புடையை விலாக்குடை என்று கூறுதல் காண்க. விரித்த கவிகை புடையுள்ளதாயிருப்பதால், கவிகை குடை யென்னப்பட்டது. குடை - கூடை = குடையுள்ள ஒலை நார்ப் பெட்டி. குழை - குகை - குவை. புல் - (பில்) = பிலம் = நிலக் குகை. புள் - புழை - புடை - புடங்கு. புள் - புழை - புடை - புடங்கு. புள் - பிள் - விள் - விடு - விடர் = குகை. முள் - முழை = குகை. முழை - முழைஞ்சு. முழை - முகை = குகை. xxx. பழைமை பழைமை காலத்தின் கீழ்நிலையைப் போன்றிருத்தலால், கீழ்மையை அல்லது பள்ளத்தைக் குறிக்கும் சொற்கள் சில பழைமையைக் குறித்தற் கேற்ற வாயின. கீழ் = முற்காலம் கீழ்ச் செய்த தவத்தாற் கிழியீடு நேர்பட்டு (திருவாசகம், 5, 46.) கீழ்க்கடை = கடந்துபோன நாட்கள். கீழ் - கிழ = கிழமை. கிழ - கிழவு. தொல் - தொல்லை = பழமை. தொல் - தொன்மை, தொல் - தொன்று = பழைமை. தொல் - தோல் = பழைமை பழம்பொருள்பற்றிய நூல், பழைமையான புகழ். தொள் - தொண்டு = பழைமை. புள் - பள் - பண்டு - பழைமை. பள் - பழ - பழமை - பழைமை. பழையன் = முதியன். xxxi. பழகுதல் ஒருவரொடு அல்லது ஒரு தொழிலில் பலநாட் பழகுவதால், புதுமை நீங்கிப் பழைமை ஏற்படுகின்றது. இங்ஙனம் பழைமை யாதலே பழகுதல். ஒரு பொருளைப் பலநாட் கையாளுதலும் பழகுதலே. பள் - (பய்) - பயில் - பயிற்சி. பழ - பழகு - பழக்கு - பழக்கம். பழகு - பழங்கு. பழங்குதல் = ஒரு புதுப்பொருளைப் பலநாட் பயன்படுத்திப் பழைமையாக்குதல், பயன்படுத்தல். பழங்கு - புழங்கு - புழக்கம் = ஒரு பொருளைப் பலகாற் பயன்படுத்தல், ஓரிடத்திற் பழகுதல், நடமாட்டம். பணப்புழக்கம் மக்கட்புழக்கம், என்பன வழக்கு. xxxii. வழங்குதல் வழங்குதலாவது நீளப் பழகுதல் அல்லது பயன்படுத்தல். பழ - வழ - வழமை = வழக்கம். வழ - வழப்பு - வழப்பம் = வழக்கம். (வழ - வாடு = வழக்கம்). தொழுவாடு = தொழில் வழக்கம் அல்லது குல வழக்கம், வழக்கம். வாடு - வாடுக்கை - வாடிக்கை = வழக்கம். வழ - வழங்கு - வழக்கு - வழக்கம். வழங்குதல் = பழகுதல், தொடர்தல், நடமாடுதல், பயன்படுத்தல், பயன்படுதல். வழக்கு - வழக்காறு. xxxiii. வாழ்தல் ஓரிடத்து நீடித்துப் பழகுதலே வாழ்தல். வழ - வாழ் - வாழ்க்கை. வாழ் - வாழ்ச்சி. வாழ் - வாழ்வு. வாழ் - (வாழகை) - வாடகை = குடிக்கூலி, அதை யொத்த பிறகூலி. அகை என்பது ஓர் ஈறு. வாழ் - வாழ்த்து - வழுத்து. வழுத்துதல் = துதித்தல். கடவுள் வழுத்தைக் கடவுள் வாழ்த்து என்று கூறுதல் காண்க. வழுத்து - பழிச்சு. (2) துளைத்தல் துறை துளைத்தலாவது ஒரு பொருளைத் துருவுமாறு குடைதல். i. துளைத்தல் உள் - உளு = துளைக்கும் புழு. உளுத்தல் = புழு மரத்தைத் துளைத்தல். உளு - உசு. குள் - குழை - குடை. குடைதல் = துளைத்தல். துள் - துளை. துள் - துர - துரத்தல் = துளைத்தல், குடைதல். துள் - தொள் - தொள்கு, தொள்கல் = துளைத்தல். புள் - புழு = துளைக்கும் பூச்சி. புழுத்தல் = புழு மரத்தைத் துளைத்தல். புள் - பொள் - பொளி. பொள்ளுதல் = துளைத்தல். பொளிதல் = துளைத்தல். பொளித்தல் = துளைத்தல். பொள் - பொய். பொய்தல் = துளைக்கப்படுதல். பொள் - பொது. பொதுத்தல் = துளைத்தல். ii. துளை உல் - (இல்) - இல்லி. (உள்) - அள் - அளை = வளை. உள் - ஒள் - (ஒட்டை) - ஓட்டை. குள் - குழை = துளை. குழை - குடை - குடைவு. குள் - கூள் - கூண்டு - கூடு. சுள் - சுர - சுரங்கம் = குடைபாதை, குடைவு, கனி. சுர - சுரை = துளை. சுள் - சுரு - சுருங்கை = குடைபாதை. துல் - துன் = வளை. துன் - தும் - தும்பு - தூம்பு - தூம்பா. துள் - துளை. துள் - துர - துரப்பு = குடைபாதை. துரப்பு - துரப்பணம் = துளைக்குங் கருவி. துள் - தொள் - தொள்ளை - தொளை. தொள் - (தொண்டு) - தொண்டி. நுள் - நுழை - நூழை = துளை, வாயில், பலகணி, சுருங்கை. நுள் - நூழ் - நூழில் = துளை. புல் - (புல்லம்) - பொல்லம் = ஓட்டை, துளை. புல் - புரை. புல் - புற்று. புள் - புழு - புழல். புள் - புழை - பூழை = துளை, கணவாய். புழல் - பொல். புள் - பொள் - பொள்ளல் = துளை. பொள்ளை = துளை. iii. துளையுள்ள பொருட்கள் துளை ஊடுருவியதும் உருவாததும் என இருவகைப்படும். குழல் - குடல். குழை - குழாய். குடு - குடுவை. குடு - குடுக்கை. குடு - குடல் - குடலி, குடலை. குள் - கூள் - கூண்டு - கூடு. சுரை = உட்டுளையுள்ள காய். உட்டுளை முற்றிய சுரையின் குடுக்கையிலுள்ளது. தும்பு - தும்பி = உட்டுளையுள்ள உறிஞ்சியைக் கொண்ட ஈவகை, உட்டுளை யுள்ள கையையுடைய யானை. தும்பு - தூம்பு = நீர்க்குழாய். தூம்பு - தூம்பா. தும்பு - தொம்பை = குந்தாணி, பறை. நுல் - (நல்) - நல்லி = மூளையெலும்பு. நுள் - நூழில் = துளையுள்ள செக்கு. நூழிலாட்டு = மிகுந்த எள்ளைச் செக்கிலாட்டுவது போல் ஏராளமான பேரைக் கொல்லுதல், அதைக் கூறும் புறத்துறை. நுள் - (நூள்) - நாள் - நாளம் = உட்டுளையுள்ள தண்டு, அரத்தக் குழாய், அதுபோன்ற நரம்பு. நாள் - நாளி = உட்டுளையுள்ள மூங்கில், மூங்கிற்படி. நாளி - நாழி = படி. நாழி - நாழிகை = நாழிகை வட்டில், நாழிகை நேரம், அறை. உண்ணாழிகை = கருப்பக் கிருகம். நாளி - நாடி = அரத்தக் குழாய், அதுபோன்ற நரம்பு. நாடி - நாடா = நரம்பு போல் நீண்ட பட்டி. நாளம் - (நளம்) - நரம் - நரம்பு. நரம் - நார் = நரம்புபோன்ற மரஇழை. நாள் - நாண் - நாணல் = உட்டுளையுள்ள தட்டை. புல் = உட்டுளையுள்ள பயிர்வகை. புறக்கா ழனவே புல்லென மொழிப (தொல். மரபியல், 86) புள் - (புழு) - புழல் - புழலை - புடலை. புள் - புட்டி - புட்டில். புள் - பொள் - பொய் - (பய்) - பை. முள் - முட்டி. iv. பதர் (உள்ளீடற்றது) துளையுள்ளது உள்ளீடற்றதாம். ஒரு செய்தியின் உண்மை அதற்கு உள்ளீடுபோன்றிருப்பதால், பொய்யானது உள்ளீடற்றதாகக் கருதப்படும். குள் - கூள் - கூண்டு - கூடு = பதர். சுள் - சொள் - சொண்டு = பதர் மிளகாய். சொள் - சொட்டை - சொத்தை - சூத்தை = பதரான காய்கனி. பொள் - பொழு - (பொகு) - பொக்கு = பதர், பொய். பொக்கு - பொக்கை = பல்லில்லா வாய். பொள் - பொய் = பதர், மெய்யல்லாதது. v. குற்றம் துளையுள்ள சில பொருட்கள் குற்றமுள்ளனவாகக் கருதப்படு வதால், துளைப்பெயர் குற்றத்தைக் குறிக்கும். உள் - ஒள் - (ஒட்டை) - ஓட்டை = குற்றம். சுள் - (சொள்) - சொட்டு - சொட்டை = குற்றம். நுள் - (நொள்) - நொட்டை = குற்றம். புள் - (புர) - புரை = குற்றம். vi. உள்ளிடம் உள் - உள்ளம் - உளம் உள் - அள் - (அழு) - (அகு) - அகம் - அகம்பு = உள், மனம். அகம் = உள், உள்ளிடம், மனம், வீடு, உள்நாடாகிய மருதம், அகப்பொருள். ஆலைக்கரும்பி னகநாடணைந்தான் (சீவக. 1618.) ஆடுகளங் கடுக்கு மகநாட்டையே (புறம். 28.) அகம் - அகரம் = மருதநிலத்தூர். உள் - உடு - ஊடு. அகு - அகண் - அகணி. அகண் - அகடு = உள். நடு வயிறு. நுள் - நள் - நடு - நடுவு - நடுவண் - நாப்பண். vii. உள்ளறிதல் உள் - உளவு. துள் - துர - துரவு. துள் - (துட்பு) - துப்பு. துப்புத்துரவு என்பது வழக்கு. viii. ஒழுகுதல் உள்ளிருந்து அல்லது துளையினின்று விழுதலே ஒழுகுதல். உள் - ஒள் - ஒழுகு - ஒழுக்கு - ஒழுக்கம். உள் - உறு - ஊறு. குள் - குறு - குற. குறத்தல் = வார்த்தல். குற - கற - கறவை. சுள் - (சுர்) - சுர. சுரத்தல் = ஒழுகுதல். சுர - சுரை = சுரக்கும் பால்மடி. சுள் - (சுன்) - சுனை = சுரக்கும் நீர்நிலை. முள் - மோள். மோளுதல் = சிறுநீர் விடுதல். மோள் - மோட்டிரம் - மோத்திரம் - மூத்திரம். வடமொழியில் மோள் என்னும் பகுதி அல்லது வினை இல்லை. மூத்திரம் என்னும் வினைப்பெயரே உள்ளது. வினைப் பகுதி யினின்று வினைப்பெயர் அமையுமேயன்றி, வினைப்பெயரினின்று வினைப்பகுதி அமையாது. (3) தளர்தல் துறை ஒருபொருள் துளை விழுவதால் கட்டுவிட்டுத் தளர்ச்சியடை கின்றது. i. தொளதொளத்தல் தொளதொளத்தலாவது ஒன்று இன்னொன்றுள் இறுகப் பொருந்தாதவாறு துளையிருத்தல். துள் - (தள்) -தளர் - தளர்ச்சி. தளர்தல்= தொள தொளத்தல். தள் - தள - தளத்தி = தளர்ச்சி. துள் - தொள் - தொள - தொளத்தி = தளர்ச்சி. தொள - தொளதொள - தொளதொளப்பு = தளர்ச்சி. தொள் - தொய். தொய்தல் = தளர்தல். ii. குழைதல் துளைவிழுந்த பொருள்போல் சுட்டுவிடுதல் குழைதல். பொருட் குழைவும் மனக்குழைவும் எனக் குழைவு இருவகை. உள் - உளை = குழைந்த சேற்று நிலம், சேறு. உள் - ஊழ் - ஊழல் = தளர்ச்சி, தளர்ந்தசதை. உள் - அள் - அள்ளல் = சேறு. அள் - அளறு = சேறு, ஆழ்ந்த சேறு போன்ற நரகம். அள் - அள்ளி = வெண்ணெய். அள் - அளி = சேறு. அளிதல் = குழைதல், குளுகுளுத்தல், அறக்கனிதல். உள் - இள் = இழுது = நெய். கும் - குமை - குமைதல் = குழைதல், குழைய வேகுதல். குள் - குளு - குளுகுளு. குள் - குழை - குழைவு. குள் - கூழ் = குழைந்த உணவு, உணவு. குள் - கொள் - கொள - கொளகொள - கொள கொளப்பு. சுள் - சொள் - சொளு. சொளுத்தல் = சேறாதல். சோறு குழைதல். சுள் - சள் - சள்ளல் = சேறு. சள் - சழு - சழுங்கு - சழுக்கம் = நெகிழ்ச்சி. துள் - தள - தளர் - தளர்ச்சி. துள் - தொள் - தொள்கு = சேறு. தொள்ளுதல் = நெகிழ்தல். தொள் - தொள்ளம் = சேறு. தொள் - தொள்ளி = சேறு. தொள்ளி - தொளி = சேறு. தொள் - தொய். தொய்தல் = தளர்தல். தொய் - தொய்யல் = சேறு. தொய் - தொய்யில் = குழம்பு. நுள் - நொள் - நொள - நொளநொள. நொள நொளத்தல் = நெகிழ்தல். நொள் - நொளு - நொளுநொளு. நொளுநொளுத்தல் = நெகிழ்தல், குழைதல். நொள் - நொளில் = சேறு. நொள் - நெள் - நெளு - நெளுநெளு. நெளுநெளுத்தல் = நெகிழ்தல், குழைதல். நெள் - நெய். நெளு - நெகு - நெகிழ். புள் - பொள் - பொளபொள. பொளபொளத்தல் = நெகிழ்தல், ஒழுகுதல். முள் - (மொள்) - மொழு - மொழுமொழு. மொழு மொழுத்தல் = சதை தளர்தல். மொழு - மொழுகு - மெழுகு = நெகிழ்ந்த நெய்ப் பொருள். iii. மென்மையாதல் குழைந்த பொருள் மென்மையாகும். உள் - (இள்) - இள. இளத்தல் = மென்மையாதல். இள - இளந்தாரி. இள - இளமை - இளைமை. முல் - மெல் - மென்மை. மெல்லுதல் = பல்லாற் கடித்தரைத்து மென்மை யாக்குதல். மெல் - மெலி - மெலிவு. மெலிதல் = மென்மையாதல். மெல் - மெல்ல = மெதுவாக. மெல் - மெள் - மெள்ள = மெதுவாக. மெள் - மெள்ளம். மெல் - மெலு - மெது - மெதுவு - மெதுகு. மெது - மெத்து = மெத்தை = மெல்லணை. மெத்தெனல் = மென்மையா யிருத்தல். iv. இளகுதல் இளகுதலாவது மனமும் பொருளும் மிகக் குழைதல். உர் - உரு - உருகு - உருக்கு - உருக்கம். உர் - அர் - அர - அரங்கு. அரங்குதல் = உருகுதல். உள் - அள் - அளி = அன்பு, அருள், கொடை. அளித்தல் = அருளுதல், கொடுத்தல். அள் - அருள். உள் - (இள்) - இள - இளகு - இளக்கு - இளக்கம். இள - இளக்கரி - இளக்காரம். இள - இர - இரங்கு - இரக்கம். குள் - கள் - கரை. கரைதல் = இளகுதல், நீராதல். சுள் - சள். சள்ளுதல் = இளகுதல். நுள் - நெள் - (நெளு) நெகு. நெகுதல் = இளகுதல். v. சோர்தல் குழைந்த பொருள் சோரும். பொருட் சோர்வும் மனச்சோர்வும் எனச் சோர்வு இருவகை. சுள் - சொள் = வடியும் வாய்நீர். சொள் - சோள் - சோர். சொள் - சொளு - சொளுசொளு. சொளுத்தல் = குழைந்துவடிதல். சுள் - சள் - சழ - சழங்கு, சழங்குதல் = சோர்தல். சழங்கு - சழக்கு - தளர்ச்சி. சள் - சனை. சளைத்தல் = தளர்தல், சோர்தல். சள் - (சாள்) - சாளை = வடியும் வாய்நீர். துள் - தள் - தளர் - தளர்ச்சி. துள் - தொள் - தொய். தொய்தல் = தளர்தல். புள் - பொள் - பொள. பொளபொளத்தல் = வடிதல், ஒழுகுதல். vi. குலைதல் கட்டுவிட்ட பொருள் குலையும். உலி - உலை. உலைதல் = சோறு கெடுதல். உள் - உளறு - உழறு. உழறுதல் = நாத்தளர்தல். உள் - (உளு) - உகு. உகுதல் = கெடுதல். உக்கல் = பதனழிதல். உகு - உகம் = அழிவு, கேடு, ஊழி. உள் - ஊள் - ஊளை = கெட்ட நெய். ஊள் - ஊழ். ஊழ்த்தல் = பதனழிதல், கெடுதல். ஊழ் - ஊழல் = கேடுபாடு, கெட்டது. ஊழ் - ஊழி = கேடு, அழிவு, ஒரழிவிற்கும் இன்னோ ரழிவிற்கும் இடைப்பட்ட காலம். ஊழ் - ஊசு. ஊசுதல் = உணவு கெடுதல். ஊழ் முட்டை - ஊமுட்டை = கெட்ட முட்டை. குல் - குலை. குலைதல் = கெடுதல். குள் - குளறு - குழறு. குழறுதல் = நாத்தளர்தல். துல் - தொல் - தொலை. தொலைதல் = தளர்தல். கெடுதல். துள் - தள் - தளர். நுள் - நொள் - நொள - நொச. நொசநொசத்தல் = சோறு கெடுதல். நொள் - நொ. நொந்துபோதல் = உணவு கெடுதல். vii. நொய்யதாதல் குலைந்த பொருள் நொய்யதாகும். நொய்ம்மை என்பது வலியின்மை, கனமின்மை, சிறுமை முதலியவற்றைத் தழுவும். உல் - (இல்) - இலவு = நொய்ய பஞ்சு. இலவு - இலவம். இலவு - இலகு. இல் - இலை = நொய்ய இலை வகை. உள் - எள் - எண்மை. எள் - எளி - எளிமை. எள் - ஏள் - ஏட்டை = எளிமை. ஏள் - ஏழ் - ஏழமை. ஏழ் - ஏழை. உள் - இள் - இளை - இளைப்பு - எளிமை. இள் - இள - இளப்பு - இளப்பம். சுள் - சுளு - சுளுவு. நுள் - நொள் - நொய் - நொய்ப்பு - நொய்ப்பம் = இலேசு, எளிமை, சிறுமை. நொய்யவன் = சிறியவன். viii. உடல் தளர்தல் உல் - ஒல் - ஒல்கு. ஒல்குதல் = தளர்தல். ஒல்கு - ஒற்கு - ஒற்கம். உள் - ஒள் - (ஒள்) - ஒய். ஒய்தல் = கைகால் தளர்தல். உள் - எள் - எய் - எய்ப்பு = தளர்ந்த முதுமை. உள் - இள் - இள. இளத்தல் = உடல் மென்மையாதல். இள் - இளை - இளைப்பு = எய்ப்பு. குது - குதல் - குதலை = தளர்ச்சி. சுள் - சொள் - சோர். துள் - தொள் - தொள்ளாடு - தள்ளாடு. துள் - தள் - தளர். தொள் - தொய். தொய்தல் = சோர்தல். நுள் - நொள் - நொள்கு. நொள்குதல் = இளைத்தல். ix. நோதல் உடலும் உள்ளமும் தளர்தலால் நோவுண்டாம். உள் - உளை. உளைதல் = நோதல். உளை - உளைச்சல். உள் - இள் - இர - இரங்கு - இரங்கல் = வருந்துதல். கும் - குமை. குமைதல் = சோர்தல், வருந்துதல். துல் - தொல் - தொலை. தொலைதல் = வருந்துதல். நுள் - நொள் - நொய் - நொய்வு = மனவருத்தம். நொய் - நொ = வருந்து (ஏவலொருமை). நொ - நொவ்வு = நோவு. நொவ்வுதல் = வருந்துதல். நொ - நொந்தலை = வலியின்மை (பலவீனம்). நொள் - நொள்ளா - நொள்ளாப்பு = வருத்தம். நொள் - நோள் - நோளை = பிணியுண்ட நிலை. நோள் - நோய் - நோ - நோவு. x. மெலிதல் உள் - இள் - இளை. இளைத்தல் = மெலிதல். சுள் - சுள்ளல் = மெலிவு. சுள்ளலன் = மெலிந்தவன். சுள் - சொள் - (சோள்) - சோணங்கி = மெலிந்தவன் - ள் - து. நுள் - நொள் - நோள் - நோய் - நோய்ந்தான் - நோய்ஞ்சான் = மெலிந்தவன். நோய்தல் = மெலிதல். முள் - மெல் - மெலி - மெலிவு. xi. துன்பம் உடலும் உள்ளமும் நோகக்கூடிய நிலை துன்பம். கும் - குமை = துன்பம், அழிவு. துல் - துன் - துன்பு. துல் - தொல் - தொல்லை = துன்பம். துள் - (துய்) - துயர் - துயரம். துள் - தொள் - தொய் - தொய்யல் = துன்பம். தொய் - தொ - தொந்தரவு, தொந்தரை = துன்பம். தொந்தரித்தல் = துன்புறுத்துதல். நுள் - நொள் - நொய் - நொ - நொம்பு - நொம்பலம் = துன்பம். xii. நிலைதளர்தல் (வறுமையடைதல்) உல் - ஒல் - ஒல்கு - ஒற்கு - ஒற்கம் = வறுமை. ஒல்குதல் = வறுமையடைதல். உள் - எள் - எண்மை. எள் - எளி - எளிமை = வறுமை. எள் - ஏள் - ஏட்டை = வறுமை. ஏள் - ஏழ் - ஏழமை. ஏழ் = ஏழை. சுள் - சொள் - (சோள்) - சோர் - சோர்வு = வறுமை. நுள் - நொள் - நொடி. நொடித்தல் = தளர்தல். கெடுதல். நொய் - நொ - நொந்தகை = வறுமை. நொ - நொந்தலை = வறுமை. முல் - மெல் - மெலி. மெலிதல் = வறுமையடைதல். xiii. தோற்றல் மென்மையால் அல்லது தளர்ச்சியால் தோல்வியுண்டாம். துல் - தொல் - தொலை. தொலைதல் = தளர்தல், தோற்றல். தொலை - தொலைவு = தோல்வி. தொல் - தோல் - தோல்வி. முல் - மெல் - மெலி - மெலிவு = தோல்வி. மெலிவென்பது முணர்ந்தேன் (கம்ப. முதற்போ. 181). மெல் - வெல். வெல்லுதல் = மெலித்தல், தோற்கடித்தல். வெல் - வென் = வெற்றி, வெல் - வேல் = வெற்றி. வெல் - வெற்றி. மெது - மெத்து. மெத்துதல் = மெலித்தல், வெல்லுதல். (4) நீளல் துறை நெகிழும் பொருள்கள் நீளுதலால், நெகிழ்ச்சிக் கருத்தில் நீட்சிக் கருத்துத் தோன்றிற்று. செங்குத்து படுக்கை என்னும் இருவகை வாகிலும் நீட்சி நிகழும். i. நீளுதல் நெகிழ் - நீள் - நீளம். நீள் - நீட்சி. நீள் - நீர் = நெகிழும் (நீளும்) பொருள். நீர் - நீல் = நீலம் = கடல் நீரின் நிறம். நீள் - நீட்டு = நீட்டப்படும் ஒலை. நீட்டு - நீட்டம். நீள் - நீடு. நீள் - நெள் - நெடு - நெட்டு - நெட்டை. நெடு - நெடில், நெட்டு - நெட்டம். நெட்டு = நெடுமை, நெடுந்தூரம், நெட்டம் = நெடுமை, செங்குத்து. நீட்சி என்பது செங்குத்து வாகிலும் கொள்ளப்படுதல். உருவத்தால் நீண்ட உயர்மர மெல்லாம் பருவத்தா லன்றிப் பழா என்னும் ஔவையார் கூற்றால் அறியப்படும். கெட்டு - நட்டு - நட்டம்; நட்டமாய் நிற்கிறான் என்னும் வழக்கைக் காண்க. ii. நிற்றல் நிற்றலாவது ஒரு பொருள் செங்குத்தாக நீண்டிருத்தல். நீள் - (நிள்) - நில். நில் - நிலை - நிலையம். நிலை - நிலைப்பு = நிலைவரம். நில் - நிலவு. நிலவுதல் = நிலைத்தல். நில் - நிலு - நிலுவை. iii. நிறுத்தல் நிற்பித்தலும் துலையை எடுத்து எடையறிதலும் செங்குத்தாக ஊன்றுதலும், நிறுத்தல். நில் - நிற்பு - நிற்பாட்டு. நில் - நிலு - நிலுத்து. நிலு - நிறு - நிறுத்து - நிறுத்தம். நிறு - நிறை. நிறு - நிறுவை. நிறு - நிறுவு - நிறுவனம் (தாபனம்) நெடு - நடு. நெடு - நெட்டு - நட்டு - நாட்டு. (5) புகுதல் துறை புகுதலாவது துளைக்குட் செல்லுதல் கூர்மையான அல்லது கடினமான பொருள் ஒன்றற்குள் புதிதாய்த் துளைத்துச் செல்லுதலும் புகுதலே. i. உட்புகுதல் உள் - ஒளி - (ஒள்) - ஒட்டு - ஒட்டுதல் = ஒன்றைத் துளைக்குட் புகுத்துதல். துள் - துரு - தூர். தூர்தல் = புகுதல். புகுதலைத் தூர்தல் என்பது வடார்க்காட்டு வழக்கு. தூர் - தூரி = மீன் புகும் பொறி. நுள் - நுழு - நுழுந்து - நொழுந்து. நொழுந்துதல் = தலையை உள் நுழைத்தல். நுழு - நுழை. புள் - புழு - புகு - புகுதி = மனைவாயில், வழி, வருவாய். புகு - புகுது. புகுதி - புகுடி = வாயில். புகு - புகுர். புகுர்தல் = புகுதல். புகுர் - பூர். பூர்தல் = புகுதல். புகு - போ - போகு - போக்கு. போ - போது. முள் - (முழு) - முழை. ii. உட்கொள்ளுதல் உட்கொள்ளுதலாவது வாய்க்குட் புகுத்துதல் அல்லது உண்ணுதல். உள் - உண் - உண - உணா - உணவு. உண் - ஊண் - ஊட்டு - ஊட்டம். ஊட்டு - ஊட்டி = ஊட்டப்படும் பன்றி. உள் - உறி - உறிஞ்சு (ஒலிக்குறிப்போடு கூடியது) உறிஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல். குள் - கொள் - கொண்டி = உணவு. சும்பு - சூம்பு - சூப்பு (ஒலிக்குறிப்போடு கூடியது) சூப்புதல் = சாரத்தை அல்லது சத்தை உள்ளிழுத்தல். துல் - துன் - துற்று = உணவு. துற்றுதல் = உண்ணுதல். துற்று - துற்றி = உணவு. துன் - தின் - தீன் - தீனி. தின் - தின்றி - திற்றி = உணவு. தீன் - தீற்று. தீற்றுதல் = ஊட்டுதல். துள் - துய். துய்த்தல் = உண்ணுதல், நுகர்தல். தும் - து. துத்தல் = உண்ணுதல். து = உணவு. து - துப்பு = உணவு. நுள் - நுழு - (நுகு) - நுகர். நுகர்தல் = உண்ணுதல் துய்த்தல் (அனுபவித்தல்). நுள் - நொள் - நொண்டு - நொண்டல் = நுகர்கை. புள் - புழு - புகு - புகா = சோறு. புகா - புகவு = உணவு. புள் - புசி - பொசி. பொசித்தல் = உண்ணுதல். முள் - முடு - மடு. மடுத்தல் = வாயிலிடல், உண்ணுதல். மடு - மடை = உணவு, சோறு. முள் - (முசி) - மொசி. மொசித்தல் = தின்னுதல். iii. மொள்ளுதல் மொள்ளுதலாவது கலத்தை நீருட்புகுத்தி நீர் கொள்ளுதல். குல் - கோல். கோலுதல் = மொள்ளுதல். கோல் - (கோலகை) - கோரகை = அகப்பை, கோரகை - கோரிக்கை. குள் - கொள். கொள்ளுதல் = முகத்தல். கொள் - கோள் - கோய் = கள்முகக்குங் கலம். நுள் - நொள். நொள்ளுதல் = முகத்தல். முள் - முழு - (முகு) - முக. முகத்தல் = மொள்ளுதல், மொண்ட ளத்தல், முக - முகவை. முல் - (முழை) - மூழை - அகப்பை. முள் - மொள். மொள் - மொண்டை - மொந்தை = கள் முகக்குங் கலம், மொந்தை போன்ற தோற்கருவி. (இசை). மொண்டை - மண்டை = நீர்முகக்குங் கலம், இரப்போர் கலம், அதுபோன்ற தலையோடு, தலையின் மேற்பகுதி, மண்டை போன்ற தோற்கருவி (இசை). iv. முழுகுதல் முழுகுதலாவது ஒரு பொருள், இன்னொன்றிற்குள் புகுந்து அமிழ்தல். உம் - அம் - அமிழ் - ஆழ். ஆழ் - ஆழம். ஆழ் - ஆழி. குள் - குளி. குளித்தல் = உட்புகுதல், முழுகுதல், நீருட் புகுதல். கொடியான் கூர்ங்கணை குளிப்ப (பு.வெ. 10:10, கொளு). எங்கு மருமத் திடைக் குளிப்ப (பு.வெ. 7:23). கடற்படை குளிப்ப மண்டி (புறம். 6). முத்துக்குளித்தல் = முத்துக்களை நீருள் மூழ்கியெடுத்தல். முள் - (மள்) - மண். மண்ணுதல் = குளித்தல், முழுகுதல். முதூர் வாயிற் பனிக்கய மண்ணி (புறம். 79) மண்ணுமங்கலம் = அரசன் நீராட்டு விழா. முள் - முழு - முழுகு - முழுக்கு. முழுகு - மூழ்கு. KGF - (KG§F) - K§F (j.É.); முழுக்கு - முக்கு - (பி.வி.) v. விழுங்குதல் விழுங்குதலாவது, ஓர் உணவுப்பொருளை முழுக்குதல் போல் திடுமென வாய்வழி உட்புகுத்துதல். குள் - குடி. நுள் - நொள். நொள்ளுதல் = விழுங்குதல். நுள் - நுழு - (நுழுங்கு) - நுங்கு, நுங்குதல் = விழுங்குதல். நுங்கு - நொங்கு - நொக்கு. நொங்குதல் = விழுங்குதல். நொக்குதல் - உண்டு குறையச் செய்தல். புள் - பள் - (பரு) - பருகு. முள் - முழு - முழுங்கு - விழுங்கு. முழுங்கு - (முழுக்கு) - முடுக்கு = ஒருமுறை விழுங்கும் நீர் அளவு. முடுக்கு - மடக்கு. விழுங்கு - (விழுக்கு) - விடுக்கு = மடக்கு. முழுக்கு - முக்கு. முக்குதல் = ஒன்றை வாய்நீருள் முழுக்கித் தின்னுதல். அவலை முக்கித்தின், எள்ளை நக்கித்தின் என்பது பழமொழி. பாசவன் முக்கித் தண்புனற் பாயும் (புறம். 63). முக்கு - மொக்கு. மொக்குதல் = வாய்நீருள் நிரம்ப முழுக்கித் தின்னுதல். vi. ஒளித்தல் ஒளித்தலாவது ஒன்று இன்னொன்றுள் புகுந்து மறைதல். உள் - ஒள் - ஒளி. குள் - குளி. குளித்தல் = மறைதல். யானறிதல் அஞ்சிக் குளித்து (கலித். 98) புள் - புய். புய்தல் = மறைதல். கோலப் பகற்களிறொன்றுகற் புய்ய (திவ். இயற். திருவிருத். 40) புள் - பள் - படு - (பது) - பதுங்கு - பதுக்கு - பதுக்கம். (6) துருவல் துறை துருவல் துருவுதலாவது ஒன்று இன்னொன்றுட் புகுந்து ஊடுருவிச் செல்லுதல். உள் - உரு - உருவு. உள் - (உடு) - ஊடு - ஊடை = ஊடுசெல்லும் இழை. குள் - (குரு) - கோர் - கோ. கோர்வை - கோவை. கோர்த்தல் = நூலைத் துளையின் ஊடு உருவச் செய்தல். துள் - துளை. துளைத்தல் = துருவுதல். துள் - துரு - துருவு. முல் - (மூல்) - மூலம் = வாயில், ஊடு. ஓர் அடைப்பிடத்தின் ஊடு சென்று கடத்தல் எங்ஙனம் துருவுதல் எனப்படுமோ, அங்ஙனமே ஒரு திறப்பிடத்தின் ஊடுசென்று கடத்தலும் துருவுதல் எனப்படும். ஒரு துளையூடு செல்லுதலும் ஒரு நாட்டூடு செல்லுதலும் துருவுதல் எனப்படுதல் காண்க. ஊகாரச் சுட்டுக் கருத்து வளர்ச்சி ஊகாரச்சுட்டு, முற்கூறியபடி முதலாவது முன்மையைக் குறிக்கும். முன்மையென்பது, காலமுன், இடமுன், முன்னிலை, முன்னுறுப்பு, முற்பகுதி, முனி (நுனி) முதலிய பல கருத்துக்களைத் தழுவும். தோன்றற் கருத்தினின்று முற்படற் கருத்துப் பிறக்கும். ஒரு மரத்தில் தோன்றிய தளிர் முன்னால் நீண்டு வளர்வதும், ஓர் உடம்பில் தோன்றிய தளிர் முன்னால் நீண்டு வளர்வதும், ஓர் உடம்பில் தோன்றிய உறுப்பும் கொப்புளமும் முன்னுக்குத் தள்ளியும் புடைத்தும் வருவதும், இவை போல்வன பிறவும், முற்படலாகும். முற்படற் கருத்தினின்று முற்செலவுக் கருத்துப் பிறக்கும். இடம்பெயரும் இருதிணையுயிரிகளும் ஓரிடத்தினின்று இன்னோரிடத்திற்குச் செல்வதெல்லாம் முற்செலவே. பிற்செல வெல்லாம், பெரும்பாலும், உயிரிகள் சிறிது வளர்ச்சியுற்ற பின்பும் குறுந்தொலைவிற்கும் வேண்டுமென்றே நிகழ்த்தப் பெறுவதால், இயற்கையான செலவெல்லாம் பொதுவாக முற்செலவென்றேயறிக. கீழிருந்து மேற்செல்வதும் ஒருவகை முற்செலவாதலின், முற்செலவு என்பது எழுதல் அல்லது உயர்தலையுந் தழுவும். முற்செலவுக் கருத்தினின்று நெருங்கற் கருத்துப் பிறக்கும். ஒரு மரக்கிளை நீண்டு வளர்ந்து இன்னொரு கிளையை அடுப்பதும், இருதிணையியங்குயிரிகளும் முன் சென்று தாந்தாம் விரும்பும் இடத்தையும் பொருளையுங் கிட்டுவதும், நெருங்கலாகும். நெருங்கற் கருத்தினின்று தொடுதற் கருத்துப் பிறக்கும். ஒரு பொருள் எத்திசையிலாயினும் மேன்மேலும் சென்று கொண்டே யிருப்பின், ஏதேனுமொரு பொருளைத் தொட்டே தீரல் வேண்டும். முன்னோக்கிச் செல்லும் உயிரிகளும் தாம் விரும்பிய பொருளையும் இடத்தையும் தொட்டடையும். தொடுதல் என்பது, மெலிதாய்த் தொடுதல் வலிதாய்த் தொடுதல் என இருபாற்பட்டு, தீண்டுதல், தழுவுதல், முட்டுதல், குத்துதல், உறைத்தல் முதலிய பல கருத்துக்களைத் தழுவும். தொடுதற் கருத்தினின்று கூடற் கருத்துப் பிறக்கும். கூடல் என்பது, ஒன்றிய கூடல், ஒன்றாக் கூடல் என இரு வகை. மண்ணொடு மண்ணும் நீரொடு நீருங் கூடுவது ஒன்றிய கூடல்; உடலொடு உடலும் கூலத்தோடு கூலமுங் கூடுவது ஒன்றாக் கூடல். ஒன்றாக் கூடல் மீண்டும் தொட்டுக் கூடல் தொடாது கூடல் என இரு திறத்தது. கூடற் கருத்தினின்று வளைதற் கருத்துப் பிறக்கும். ஒன்றாக் கூடலின் சில பொருள்கள் வளைவதுண்டு. ஒன்றையொன்று முட்டிய இருபொருள்கள் ஒன்றாதவையாயின், அவற்றுள் மெலியது கம்பிபோல் நீண்டிருப்பின் வளையும். கல்லைமுட்டிய வேரும் கடினமான பொருளை முட்டிய ஆணியும் வளைதல் காண்க. வழிச்செல்வோன் தெருவடைத்த சுவரை முட்டித் திரும்புவதும், வேற்றிடஞ் சென்றவன் வினைமுற்றி மீள்வதும், அணிவகையில் வளைதலின் பாற்படும். வளைதல் என்பது, சாய்தல், கோணல், திருகல் வட்டம், சுற்றல், சூழ்தல், உருட்சி சுழற்சி முதலிய பல கருத்துக்களைத் தழுவும். கூடற் கருத்தினின்று பிறக்கும் மற்றொரு கருத்து துளைத்தற் கருத்தாகும். முட்டிய பின் வளையாத வலிய பொருள், தான் முட்டியதைத் துளைத்தும் செல்லும். ஆணி சட்டத்தையும், வண்டு மரத்தையும், பூச்சி புத்தகத்தையும். மாந்தன் மலையையும் துளைக்கலாம் துளைத்தல் என்பது, குழித்தல், தோண்டுதல், துளையிடுதல், புகுதல், துருவுதல் ஆகிய பல கருத்துக்களைத் தழுவும். துளைத்துப் புகுதலும், துளைக்குட் புகுதலும் எனப் புகுதல் இரு வகைத்து. உயிரிகள் தத்தம் உறைவிடத்திற்குட் புகுதல் துளைக்குட் புகுதலாகும். ஒன்றைத் துருவிய பொருள் இறுதியில் வெளிப்படும். அது தோன்றல் அல்லது முன்வருதல் போன்றதாகும். அதன்பின் நிகழக்கூடியவை. தோன்றல் முதல் துருவல் வரை கூறியுள்ள பல நிகழ்ச்சிகளே. இவை ஒரு பொரு ளின் காலமெல்லாம் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே யிருக்குமாதலின், ஊகாரச் சுட்டுக் கருத்து வளர்ச்சி முற்றுறும் எல்லை துருவற்கருத்தே. ஆகவே, தோன்றல் முதல் துருவல்வரை யுள்ள கருத்துக்களெல்லாம் ஒரு சுழல் சக்கரமாதல் காண்க. ஊகாரச் சுட்டால் முறையே உணர்த்தப்பெறுங் கருத்துக்களில், முதன்மையானவையே இங்குக் குறிக்கப்பட்டுள. (மு.தா.) ஊங்கு ஊ - ஊங்கு = முன். ஊங்குதல் = முன் செல்லுதல் ஊக்குதல் = முற்செலுத்துதல், உள்ளத்தை வினையில் முன் செல்லத் தூண்டுதல் ஊங்கு - ஊக்கு - ஊக்கம். (தி.ம. 338) ஊசி ஊசி - வ. சூசி (இ. வே.) su#ci. உள் - அள் = கூர்மை. உள் - உளி = கூரிய வெட்டுக் கருவி. உளி - உகிர் = கூரிய விரலுறுப்பு. உளி - உசி - ஊசி = கூர்மை (பதிற்றுப். 70:7), கூரிய குத்துக் கருவி அல்லது தையற்கருவி (பிங்), சிறுமை. ஒ. நோ: இளி - இசி, வாளி - வாசி - வாசிகை. ஊசிக் கணவாய், ஊசிக்கழுத்தி, ஊசிக்களா, ஊசிக்காய், ஊசிக்கார், ஊசிச்சம்பா, ஊசித்தகரை, ஊசித்தூறல், ஊசித் தொண்டை, ஊசிப்பாலை, ஊசிப்புழு, ஊசிமல்லிகை, ஊசி மிளகாய், ஊசி முல்லை, ஊசிவேர் என்பன கூர்மை அல்லது சிறுமை பற்றித் தொன்று தொட்டுப் பல்வேறு பொருள்கட்கு வழங்கிவருஞ் சொற்களாம். எழுத்தூசி, குத்தூசி, துன்னூசி, தையலூசி என்பனவும் அத்தகை யனவே. எழுத்தூசி = எழுத்தாணி. மையெழுத் தூசியின் ... எழுத் திட்டாள் (சீவக. 1767). மீன்தேர் கொட்பிற் பனிக்கயம் மூழ்கிச் சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் (பதிற்றுப். 42: 2-4) என்பதால், புண்தைக்கும் ஊசியும் பண்டைத் தமிழகத் திருந்தமை அறியப்படும். கொல்லத் தெருவில் ஊசி விற்பதா? என்பது பழமொழி. மதிற்றலையைக் கைப்பற்றும் பகைவர் கையைப் பொதுக்கும் ஊசிப் பொறிகளும், அக்காலத்துக் கோட்டை மதில்மேல் வைக்கப் பட்டிருந்தன. ஐயவித் துலாமுங் கைபெய ரூசியும் (சிலப். 15: 213). வடமொழியில் சூசி என்னும் சொற்கு மூலமில்லை. தையலைக் குறிக்கும் சிவ் என்னும் சொல்லை மூலமாகக்காட்ட விரும்புவர். இங்ஙனமிருந்தும், சூசி என்பதினின்று ஊசி என்பது திரிந்துள்ள தாக, சென்னைப் பல்கலைக்கழக தமிழ், அகர முதலியிற் காட்டியிருப்பது எத்துணை நெஞ்சழுத்தம்! (வ.வ.96-97). ஊட்டி சங்கினால் குழந்தைகளுக்குப் பால் ஊட்டுவதால் அதற்கு ஊட்டி என்று பெயர். மக்களின் கழுத்தில் முன்புறத்துள்ள சங்கு போன்ற புடைப்பும் ஊட்டி எனப்படும். சங்கு எனவும்படும் (சொல். 13.) ஊதா மணி விளையாட்டு பல பிள்ளைகளுள் மூவர் கைகோத்துச் சாட் பூட் திரி என்று சொல்லிக்கொண்டு மூன்றுதரம் கை அசைத்துத் திரி என்று சொன்னவுடன் கையை யுருவிக் கைமேற்கை வைப்பர். மேற்கை, அகங்கை மேனோக்கியிருந்தால் வெள்ளை என்றும், புறங்கை மேனோக்கியிருந்தால் கருப்பு என்றும், சொல்லப்படும். இவ் விரண்டில் எவ்வகையிலேனும், தனியாக வைத்த பிள்ளை விலகிவிட வேண்டும். பின்பு, ஏனையிருவரும் முதலிற் சேராத வேறொரு பிள்ளையுடன் கைகோத்து, முன்போன்றே ஒரு பிள்ளையைப் பிரிக்க வேண்டும். மூவரும் ஒரே வகையாய்க் கை வைத்திருந்தால், மீண்டுங் கோக்கவேண்டும் இங்ஙனம் மும்மூவ ராய்க் கைகோத்து ஒவ்வொருத்தியைப் பிரித்தபின், இறுதியில் இருவர் இருப்பர். அவ்விருவருடன், முதன்முதற் பிரிந்த பிள்ளை ஒப்புக்கு என்று சொல்லிக் கைகோக்கும். முன்பு பிரியாத இருவருள் யாரேனும் ஒருத்தி தனிவகையிற் கைவைப்பின், அவள் விலகிவிட, அடுத்தவள் அகப்பட்டுக்கொள்வாள். அகப்பட்டுக்கொண்டவள் சற்றுத் தொலைவிற்போய் நிற்க, அவளுக்கு முன்னமே காட்டப்பட்ட ஒரு மணிமாலை அல்லது வேறோர் அணி, ஒரு பிள்ளையிடம் ஒளித்து வைக்கப்படும். தொலைவில் நிற்பவள், வரலாமா? என்று கேட்டு, வரலாம் என்று சொன்னபின் வந்து, மணிமாலை வைத்திருக்கிறவள் என்று ஒரு பிள்ளையை ஊகிப்பாய்ச் சுட்டிக்காட்டும். இல்லாதவள் எழுந்து நிற்பாள். ஐயத்திற்கிடமாயிருப்பின், அவள் மடி முதலிய வற்றைப் பிடித்துப் பார்க்கலாம். ஒருமுறை கண்டுபிடிக்கத் தவறி னவள் மறுமுறையுங் கண்டுபிடித்தல் வேண்டும். மணிமாலை வைத்திருப்பவளைக் கண்டுபிடித்து விடின், மற்றெல்லாப் பிள்ளைகளுஞ் சேர்ந்து, ஊதாமணியைக் கண்டுபிடித்தால் கை தட்டுவோம் என்று பாடிக் கைதட்டி மகிழ்வர். இது தெருவிலும் ஊர்ப்பொட்டலிலும் விளையாடப் பெறும். ஊது என்னும் ஒலிக் குறிப்புச் சொல் ஊ - ஊது. மாந்தன் மொழி இயற்கை மொழி (Natural Language), செயற்கை மொழி (Artificial Language) என இருநிலைப்படும். சுட்டுச் சொற்கட்கு முந்தியது இயற்கை மொழி; பிந்தியது செயற்கை மொழி. இவை முறையே முழைத்தல் மொழி (Inarticulate Speech), இழைத்தல் மொழி (Articulate Speech) எனவும் படும். இயற்கை மொழியைச் சேர்ந்த எழுவகை யொலிகளுள், ஒப்பொலி (Imitative) என்பது ஒன்றாகும். அஃது அஃறிணை யொலியும் உயர்திணை யொலியும் என இருவகை. எ-டு: அஃறிணையொலி : கூ, கூவு (coo), கரை (cry, crow), ஊள் -ஊளை (howl), பிளிறு (blare), இம் - இமிர் (hum). உயர்திணையொலி : சப்பு (sup, sip), துப்பு (spit), முக்கு, விக்கு (hiccup), ஊம் (hum), ஆம் (haw), மூசு, ஊது. உயர்திணையொலிகள், வாயொலி, மூக்கொலி, மூச்சுக் காற்றொலி என மூவகையாம். சப்புதலும் துப்புதலும் வாயொலியுடனும், முக்குதலும் ஊங்கொட்டுதலும் மூக்கொலியுடனும், மூசுதலும் ஊதுதலும் மூச்சுக் காற்றொலியுடனும் நிகழும். மூச்சுக் காற்றும் மூக்குவழி வருவதும் வாய்வழி வருவதும் என இருவகைத்து. மூசுதல் மூக்குவழிக் காற்றாலும், ஊதுதல் வாய்வழிக் காற்றாலும் நிகழும். மூசுதலாவது, செவியுறுமாறு காற்றை வெளிவிட்டும் உள்ளிழுத்தும் உரக்க மூச்சு விடுதல். மூசுமூசென்று இளைக்கிறான் என்னும் வழக்கை நோக்குக. மூசு - மூச்சு. ஒ.நோ: பேசு - பேச்சு. ஊதுதலாவது, நெருப்பெரித்தலும் விளக்கணைத்தலும் சூடாற்று தலும் துகளைப் போக்குதலும் முதலிய செயல்கட்கு, வாய்வழிக் காற்றை வெளிவிடுதல். காற்று வெளிவரும் ஓசை, பெரும்பாலும் சகர வொலியாலும், சிறுபான்மை சகரத்திற்கு ஒருபுடையினமான தகர வொலியாலும், குறிக்கப்படும். மூசு என்னும் சொல்லும், காற்பந்திற்குக் காற்றடிப் பதைக் குறிக்கும் புசுக்கு என்னும் ஒலிக் குறிப்பும், சகரத்தை யுடையன. Gas என்னும் ஆங்கிலச் சொல்லிலும் சகரமிருப்பது கவனிக்கத்தக்கது. வான் எல்மாந்து (Van Helmo#nt) என்பவர் gas என்னும் சொல்லை, khaos (chaos) என்னும் கிரேக்கச் சொல்லி னின்று திரித்தார் என்பது, அத்துணைப் பொருத்த முடைத்தன்று. காற்றின் தொழிலைக் குறிக்கும் வீசு, விசிறு, விசுக்கு (whisk) என்னும் சொற்களும் சகரத்தைக் கொண்டுள்ளன. நெருப்பெரித்தற்குக் காற்றை ஊதும்போது, ஊகாரத்தையே ஒலித்தற்கேற்ற இதழ் குவிவும், சகர தகரம் போன்ற உரசொலி களையே (fricatives) ஒலித்தற்கேற்ற வாய்நிலையும், அமைந் திருத்தலால், அந்நிலையில் வாய்வழிக் காற்றை வெளிவிடுஞ் செயலை, ஊசு, ஊது என்னுஞ் சொற்களே குறிக்க முடியும். ரகரம் உருளொலியாதலால் (trill) அத்துணைப் பொருத்தமான தன்று. காற்றை வெளிவிடும்போதும் உள்ளிழுக்கும்போதும் அமையும் வாய்நிலை, ஏறத்தாழ ஒன்றே. அதனால் வெயிலில் அலைந்தவன் இளைப்பாற உட்காரும்போது வாய்வழிக் காற்றை வெளி விடுதலையும், உறைப்பான உணவை யுண்பவன் வாய்வழிக் காற்றை உள்ளிழுத்தலையும், ஊசு என்னும் ஒரே சொல் குறிக்கலாயிற்று. ஊசென்று உட்கார நேரங் கிடையாது, ஊசு ஊசென்று அவ்வளவு சோற்றையும் உண்டுவிட்டான், என்னும் வழக்கு களை நோக்குக. நெருப்பெரித்தல் போன்ற செயலிற் காற்றை வெளிவிடுதலை, ஊது என்னுஞ் சொல் குறித்தது. சகர தகரம் ஒன்றற் கொன்று போலியாக வரும். எ-டு: ஓசை - ஓதை, நத்து - நச்சு. ஊதுதல் = 1. நெருப்பெரிக்க ஊதுதல், ஊது - ஊத்து, (தொ.பெ.) 2. விளக்கவிக்க ஊதுதல். 3. சூடாற்ற ஊதுதல். 4. நோவு தீர ஊதுதல். 5. துகள் நீக்க ஊதுதல். ஊதிப்போடுதல் = எளிதில் வெல்லுதல். உன்னைக் கசக்கி ஊதிவிடுவேன் என்னும் வழக்கை நோக்குக. 6. ஊதாங்குழ லூதுதல். ஊதாங்குழல், ஊதாங்குச்சி என்பன ஒருபொருட் சொற்கள். 7. இசைக்குழ லூதுதல். ஊதி, ஊதிலி (மகுடி), ஊது கொம்பு முதலியன துளையுள்ள இசைக் கருவி வகைகள். ஊதல் என்னும் சொல், எக்காளம், தாரை, கொம்பு முதலியன ஊதிச்செல்லும் ஊர்வலம் பற்றி ஆரவாரத்தையுங் குறிக்கும். ஒ. neh.: E. fanfare - fonfaronade. 8. தட்டான் பொன்னை ஊதிப் புடமிடுதல். ஊதுகட்டி, ஊதுவெள்ளி என்பன சொக்கவெள்ளியைக் குறிக்கும் பெயர்கள். 9. உலைத்துருத்தி அல்லது இசைத்துருத்தி யூதுதல். இசைத்துருத்தியின் பெயர் பின்வருமாறு திரியும். துருத்தி - துத்தி - தித்தி. 10. ஊத்தாம்பை யூதுதல். ஊத்தாம்பை ஊத்தாம் பெட்டி, ஊத்தாம் பேழை என்றும் சொல்லப் பெறும். 11. காய்களை மூட்டம்போட்டு ஊதிப் பழுக்க வைத்தல். 12. நோயாளி யுடம்பிற்குள் ஊதி மந்திரித்தல். 13. வண்டு ஒலித்தல். சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ (திருவா. 10:1) 14. வண்டு ஊதித் தேனை நுகர்தல். 15. வண்டு ஊதி மரத்தைத் துளைத்தல். 16. உடல் வீங்குதல். ஊத்தம் = வீக்கம். தெ. ஊத. ஊதல் = வீக்கம். ஊதை = வளிநோய் (வாதம்). ஊத்து = வளிநோய். ஊதுகணை, ஊதுகரப்பான், ஊதுகாமாலை, ஊதுமாந்தம் என்பன ஊதுநோய் வகைகள். ஊதுசுருட்டை, ஊதுவழலை, ஊதுவிரியன் என்பன உடம்பை ஊதச்செய்யும் நச்சுப்பாம்பு வகைகள். 17. மிகுதல். ஊத்தப்பம், ஊதுமாக்கூழ் என்பன எழும்பும் சிற்றுண்டி வகைகள். ஊது - ஊதியம் = 1. செலவிற்குமேல் மிகுந்த வரவு. முதலிலார்க் கூதிய மில்லை (குறள். 449) 2. பயன் ஊதியங் கருதிய வொருதிறந் தானும் (தொல். பொ. 41) ஊதியம் வேறு; சம்பளம் வேறு. ஊதிய இழப்பு - வ. லாப நட்டம். ஊது - ஊதாரி = துகளை ஊதிப் போக்குவதுபோல் செல்வத்தையெல்லாம் வீண் செலவு செய்தழிப்பவன். கொடையிலாத வூதாரி (திருப்புகழ்) ஊதாரி படுதல் = கேடுறுதல். உடலூதாரிபட் டொழி (திருப்பு. 904) ஊதாரி என்னுஞ் சொல்லை, உதார என்னும் வடசொல்லி னின்று திரிந்ததாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகர முதலி காட்டியிருப்பது, உண்மைக்கு மாறானதும் முற்றும் பொருத்த மற்றதுமாம். உதார என்னும் வடசொல் ஈகைத் தன்மையைக் குறிப்பதாகும், ஊதாரி என்னும் தென் சொல்லோ அழிப்பாளியைக் குறிப்பதாகும். அழிப்பாளி வீண்செலவு செய்பவனேயன்றி அளிப்பாளியல்லன். தமிழுக்கு இம்மியும் உதவாது பிறமொழி வளர்ச்சிக்கு ஏராளமாய் வாரிக் கொடுக்கும் தமிழ அரசனை அல்லது செல்வனை, ஊதாரியெனின், அது மிகப் பொருத்தமே. CJ - k., f., bj., து. ஊது. ஊது - ஊத்து - ம. ஊத்து = ஊதுகை. ஊது - ஊத்தம் - தெ. ஊத = வீக்கம். ஊது - ஊதை - 1. காற்று (திவா.) 2. வாடைக் காற்று. பனிப்புலர் பாடி ... ஊதையூர்தர (பரிபா. 11: 84) 3. வளிநோய் தலைவலி பன்னமைச்ச லூதை (தைலவ. தைல. 7) ஊதை - Skt. vata (வாத.) ஊசு, ஊது என்னும் சொற்களிலுள்ள சகர தகரங்கள் வாய்வழிக் காற்றுப் பறிதலை உணர்த்துதலால், அவை ஆரிய மொழிகளிலும் வட திராவிட மொழிகளிலும் உள்ள c, t என்பன போல் வெடி(ப்புத்) தகைப்பொலிகள் (Plosive Stops) ஆகாவென்றும், இரட்டித்த விடத்தே அங்ஙனமாகுமென்றும், அறிந்துகொள்க. தமிழ் குமரிநாட்டில் தோன்றிய தொன்மூதியன் மொழியாதலின், அந்நிலமிருந்த இடத்தை யொட்டிய தென்னாட்டுத் தென்கோடி யில் வழங்கும் தமிழொலிகளை, தமிழ் வாயிலாகத்தான் அறிய முடியுமே யன்றிப் பிற வடநிலத் திரிமொழிகள் வாயிலாய் அறிய முடியாதென்றும், அங்ஙனம் அறிய முயல்வார் குன்று முட்டிய குருடர்போல இடர்ப்படுவாரென்றும், அறிந்து கொள்க. hoot, v.i. & t., & n, l. Make loud sounds ... (of steam whistle or motor car or driver) Sound (intr) ... ME huten, imit. “hooter, n. In vbl senses, esp. siren, steam whistle, esp. as signal for work to begin or cease, [ER]” என்று எருதந்துறை நடப்பு ஆங்கிலச் சிற்றகரமுதலி (The Concise Oxford Dictionary of Current English) கூறுவதால், ஊது என்னுஞ் சொல்லொடு hoot என்னும் சொற்கு ஒருமருங்கு தொடர்பிருக்க லாமோ என ஐயுற இடமேற்படுகின்றது. ஊது - பூது - பூத்து. பூத்துப் பூத்தென்று அடுப்பூதிக் கொண் டிருக்கின்றான் என்பது உலக வழக்கு. ஊது - ஓது. ஓதுதல் = 1. காதிற்குள் ஊதுவது போல், சமய குரவன் அருமறை மந்திரத்தைச் சமைந்த மாணவனுக்குச் சொல்லுதல். 2. மருமச் செய்தியை ஒருவன் இன்னொருவன் காதிற்குள் மெல்லச் சொல்லுதல். ஊதை (வாதம்) முதலியன மூச்சும் பேச்சும் உட்பொருள் இடமாற்றமும் வெளியேற்றமும் தனித்தும் பிறதாதுக்களோடு கூடியும் நிகழ்த்துவது ஊதையின் தொழில்கள். உண்டதன் செரிமானத்திற்கு உதவுவது பித்தநீர், தசை நார்களின் மழமழப்பான இயக்கத்திற்கு உயவுநெய் போற் பயன்படுவது கோழை. ஐ. அல்லது ஐயம் என்பதும் கோழைக் கொரு பெயர். (தி.ம. 941) ஊர் ஊர் - வ. ரோஹ் (இ.வே.) உர் - உறு - உறி = உயரத் தொங்கிவிடும் தூக்கு. உறு - உறை = உயரம் (பிங்.) உர் - ஊர். ஊர்தல் = 1. ஏறுதல். ஊர்பிழிபு ... வந்தன்று (ஐங். 101). 2.ஏறிச்செல்லுதல். சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் (குறள். 37) வடமொழியார் காட்டும் ருஹ் (to ascend) என்னும் மூலம் ஊர் என்பதின் முறைமாற்றுத் திரிபே (metathesis).. ஊர் - ஊர்த்தம். ஒ. நோ: நேர் - நேர்த்தம். ஊர்த்தம் - ஊர்த்வ (urdhva) உயர்ந்த, தூக்கிய (இ.வே.). (வ.வ. 98) ஊர்ப்பெயர் ஊர்ப்பெயர்களும் ஊர்ப்பெயர் ஈறுகளும் வெவ்வேறு காரணம் பற்றியவை: ஆறை என்பது ஆற்றூர்; புத்தூர் என்பது புதிய ஊர்; மூதூர் என்பது பழைய ஊர்; பேரூர் என்பது மாநகர். பட்டி என்பது கால்நடைத் தொழுவமுள்ள சிற்றூர். பற்று என்பது தனிப்பட்டவர்க்கு அல்லது ஒரு சாரார்க்கு உரிய சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி. அடங்காப்பற்று என்பது அரசன் ஆணைக்கு அடங்காதவர் வசிக்கும் ஊர். பள்ளி என்பது பௌத்த சமண மடமுள்ள ஊர். பாளையம் என்பது படையிருக்கும் ஊர். பட்டு என்பது பாளையத் தலைவரான சிற்றூர் அரசர்க்கு விடப்பட்ட சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி. (சொல்) ஊர்ப்பெயர் மங்கலம் என்பது பார்ப்பனர் இருக்கும் ஊர். வாடை என்பது வேட்டுவர் அல்லது இடையர் இருக்கும் ஊர். பண்டார வாடை என்பது குடிகளுக்குரிய ஊர். நத்தம் என்பது பார்ப்பனர் அல்லாதார் வாழும் ஊர். குடி என்பது ஒரு குடும்பத்தாரே அல்லது குலத்தாரே வசிக்கும் ஊர். குடிக்காடு என்பது குடிகள் வசிக்கும் காட்டூர். குடியேற்றம் என்பது மக்கள் குடியேறிய ஊர். (குடியேற்றம் என்பது இன்று குடியாத்தம் என மருவி வழங்கும்). கல்லாங்குத்து என்பது கடினநிலத்தூர் முரம்பு என்பது கற்பாங்கான மேட்டு நிலத்தூர் பேட்டை என்பது சந்தை கூடும் ஊர். எயில் என்பது மதில் சூழ்ந்த ஊர். புரம் புரி என்பன அரசர் தலைநகர் விண்ணகரம் என்பது திருமால்கோயில் உள்ள ஊர் (விண்டு + நகரம் = விண்ணகரம்; விண்டு - விஷ்ணு. நகர், நகரம் - மனை, கோயில்) ஏரி, குளம், கோட்டை, கோயில் முதலிய ஈறுகளில் முடியும் பேர்களைக் கொண்ட ஊர்கள், அவ்வவ் வீறுகளால் குறிக்கப்படும் இடத்தைக் கொண்டவை என்பதை எவரும் சொல்லாமலே அறிந்து கொள்ளலாம். ஏரி என்று முடியும் பேரைக் கொண்ட ஓர் ஊரில் ஏரி இல்லா விடின் அது ஒரு காலத்தில் இருந்து பின்னர்த் தூர்ந்து போயிற் றென்று அறிதல் வேண்டும். இங்ஙனமே பிறவும். புரம் பட்டு முதலிய சிலபெயர்களும் இக்காலத்தில் சிறப்புப் பொருள் இழந்து பொதுப் பெயராக வழங்கி வருகின்றன. ஆதலால் இக்காலப் புத்தூர்ப் பெயர்கள் வரலாற்றுச் செய்தி யொன்றும் உணர்த்தா. (சொல். 29). ஊருணி ஊருண்பது ஊருணி, இது பாண்டி நாட்டு வழக்கு (தி.ம. 131). ஊழ் பழம் பிறப்புகளில் செய்யப்பட்ட இருவினைப்பயன் செய்த வனையே செய்த முறைப்படி சென்றடையும் இயற்கை யொழுங்கு. இது முறைப்படி வருவதால் முறை என்றும் ஊழ் என்றும், அவரவர்க்குரிய இன்ப துன்பப் பகுதிகளை வகுப்பதால் பால் என்றும், வகுத்தான் என்றும், தெய்வ ஏற்பாடு போலிருப்பதால் தெய்வம் என்றும், பால்வரை தெய்வம் என்றும் பெயர் பெறும். இனி மாறா இயல்பாய் இருப்பதால் இயற்கை என்றும் பெயர் பெறுவதாம். (தி.ம. 214). ஊறு உறுவது ஊறு. உறுதலாவது உடம்பின் உள்ளும் புறம்பும் படுதல் அல்லது தொடுதல். (தி.ம. 51). ஊறு என்பது நேர்ச்சி. உறுவது ஊறு; படுவது பாடு என்பது போல. (தி. ம. 945). எகர ஒகர இயற்கை தொல்காப்பியனார் தமது நூலில், அக்காலத்தில் வழங்கி வந்த எழுத்துகள் எவ்விதம் வரிவடிவில் எழுதப்பட்டு வந்தனவென் பதைக் குறிப்பிடவில்லை : ஆயினும் சில எழுத்துகள் புள்ளிபெற்று நிற்பதை மாத்திரம் குறிப்பிட்டுள்ளார். அவ் வெழுத்துகள் குற்றிய லுகரம், குற்றியலிகரம், மகரக்குறுக்கம், ஆய்தம், மெய்யெழுத்து, எகரம், ஒகரம் என்பன. உயிரெழுத்துகளுள் அ,இ,உ,எ,ஒ ஆகிய ஐந்தும் தமக்கு இனமான நெடில்களை உடையன. அ,இ,உ ஆகிய மூன்றுக்கும் இனமாகிய நெடிலைத் தெரிவிக்க அக் குறில் உருவத்துக்கு ஓர் அதிகப்படியான குறி சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் எகரம் ஒகரம் ஆகிய இரண்டின் வகையில் குறிலைக் குறிக்கும்பொழுது அதிகப்படியான புள்ளி சேர்க்கப்பட்டுள்ளன. குறிலின் நீட்சியே நெடில். ஆதலின் நெடிலின் வேறுபாடு விளங்கக் குறிலுருவத்துக்கு அதிகப்படியான குறியிட்டு நெடிலை உணர்த்துவதே இயற்கை. எகர ஒகரங்கள் அந்தப் பொதுவிதிக்கு மாறுபட்டுள்ளன. ஆசிரியரும் அ,இ,உ ஆகியவற்றுக்குரிய நெடிலுருவத்தைக் குறிப்பிடாமல், இவ் விரண்டை மட்டும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார். ஆதலின், எகர ஒகரங்களுக்குக் குறில் இல்லாமல் நெடிலே வழங்கும் ஒருவகையினின்றும் இவ்வெழுத்துகளின் உருவங் களைப் பெற்றிருத்தல் வேண்டும் என்றே நாம் எண்ணவேண்டி யிருக்கிறது. வடமொழியில் எகர ஒகரங்கள் நெடிலையே குறிக்கும். அவற்றிற்கு வடநாட்டார் இட்ட குறிகளை அவ்வாறே தமிழிலும் நெடிலுக்கு மேற்கொண்டு, அந் நாட்டாரால் வழங்கப்படாத குறிலை யுணர்த்த வேறு குறிகளை அமைக்க வேண்டி வந்தது போலும். புள்ளியினால் மாத்திரைக் குறைவை அறிவித்தலைப் பிற புள்ளியிட்ட எழுத்துகளால் அறியலாம். அதைப் போலவே எகர ஒகரங்களின் திறத்திலும் நெடிலி னின்றும் குறைந்த குறிலை உணர்த்தப் புள்ளியிட்டனர் என்றே கொள்ள வேண்டும் என்று திரு. தி. நா. சுப்பிரமணியனார் தம் பண்டைத் தமிழ் எழுத்துகள் என்னும் சுவடியில் (பக். 86-7) வரைந்துள்ளார். இலக்கண நூலார் எழுத்துகளின் வரிவடிவுகளைக் குறிப்பதே யன்றி, அவற்றை வரணிக்கும் வழக்கம் எங்குமில்லை; அவற்றை வரணிக்கவும் முடியாது. டகர பகரம் போன்ற இரண்டொரு நேர்கோட்டு வரிவடிவுகளை மட்டும் ஓரளவு வண்ணிக்கலாம். ஆயின், அதனாற் பெறும் பயனில்லை. எழுத்துகளை எழுதுதலே, அவற்றின் வரிவடிவைக் காட்டுதலன்றி வேறாகாது. புள்ளியென்பது எழுத்துகளின் வேறுபாட்டுக் குறியேயன்றி உண்மையான வரிவடிவாகாது. இதை யுணராது, பெரும்புலவரும் சிறந்த உரையாசிரியருமான நச்சினார்க்கினியரும், மகர வடிவைப் பற்றி வழுப்பட வுரைத்துவிட்டார். உட்பெறு புள்ளி யுருவா கும்மே (தொல். எழுத்து. 14) மகர வரிவடிவின் அடைப்புள்ளிட்ட புள்ளி, மகரக் குறுக்கத்தின் வடிவாம் என்பதே இதன் பொருள். மகரக் குறுக்க வடிவு. தெலுங்கு கன்னட வண்ணமாலைகளில் இரண்டாம் டகரத்திற்குள்ள வரிவடிவை ஒருபுடை யொத்தது. தமிழ் மகர வடிவு இன்று போன்றே அன்றும் இருந்தது. மேற் குறித்த நூற்பா மகரக் குறுக்க வரிவடிவு பற்றியதேயன்றி, மகர வரிவடிவு பற்றியதன்று. அதைப் பிறழவுணர்ந்து, பகர வரிவடிவுள் ளிட்ட புள்ளியே மகர வரிவடிவம் என்று உரைத்ததொடு. அதை வரைந்தும் காட்டிவிட்டார் நச்சினார்க்கினியர். அவர் உரை வருமாறு : உட்பெறு புள்ளி யுருவா கும்மே (நூற்பா) இது பகரத்தோடு மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்கின்றது. மகரம் அதிகாரப்பட்டு நிற்றலின் ஈண்டுக் கூறினார். இதன் பொருள் : உட்பெறுபுள்ளி - புறத்துப் பெறும் புள்ளியோடு உள்ளாற் பெறும் புள்ளி, உருவாகும் - மகரத்திற்கு வடிவாம் என்றவாறு. எனவே, புறத்துப் பெறும் புள்ளியாவது மேற்சூத்திரத்தான் மெய்கட்குக் கூறும் புள்ளி. ஈண்டு உருவென்றது காட்சிப் பொருளை உணர்த்தி நின்றது. உதாரணம்; கப்பி கப்பி (கம்மி) என வரும் இஃது எதிரது போற்றல். இனி, உயிர்மெய் வடிவு பற்றிய புள்ளி யில்லா ........... ஆறே (17) என்னும் நூற்பாவுரையிலும். அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்தெழுதினார் என்று தம் வழுவைக் கோடிட்டுக் காட்டிவிட்டார். உருவுதிரிந் துயிர்த்தல் என்பது உயிர்மெய் வடிவுகட்குரியதே யன்றி, மகர வடிவிற் குரியதன்று. மெய்யின் அளவே அரையென மொழிப (எழுத்து 11) அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே (எழுத்து 12) அரையளவு குறுகல் மகரம் உடைத்தே இசையிடன் அருகும் தெரியுங் காலை (எழுத்து 13) என்று முன்வரும் நூற்பாக்களையும். மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் (எழுத்து 15) எகர ஒகரத் தியற்கையும் அற்றே (எழுத்து 16) எனப் பின்வரும் நூற்பாக்களையும், புள்ளிபெறுதலன்றி ஓரெழுத்திற்கும் தொல்காப்பியர் வடிவு கூறாமையையும் நச்சினார்க்கினியர் நோக்கியிலர். மேலும், மகரவடிவிற்கு அகத்தும் புறத்தும் புள்ளியிடுவது ஏட்டெழுத்திற்கு இடர்ப்பாடான தென்பதையும், பகர வுட் புள்ளியை வளைத்தெழுதும் பகுத்தறிவு கூடப் பண்டைத் தமிழறிஞர்க்கு இல்லாதிருந்திருக்காது என்பதையும் அவர் கருதியிலர். தி. நா. சுப்பிரமணியனாரும் மகரக் குறுக்க வடிவு கூறும் நூற்பா வென்று கண்டபோது, நச்சினார்க்கினியர் காணாது போனது ஆனை யடிச்சறுக்கலே. நச்சினார்க்கினியர் வழுவுரை. தமிழெழுத்துகள் ஏற்கெனவே பன்முறை வடிவு மாறின என்று கூறும் எழுத்துமாற்றக்காரருக்கு, ஒரு போலிச் சான்றாகவும் வாய்த்துவிட்டது. மகரக் குறுக்கம் பற்றிய தொல்காப்பிய நூற்பாவும் அதற்கு இளம்பூரணர் உரைத்த வழுவுரையும் வருமாறு: உட்பெறு புள்ளி உருவா கும்மே (தொல். எழுத்து 14) இது. பகரத்தின் மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்தல் நுதலிற்று. (இ-ள்) உள்பெறு புள்ளி உருவு ஆகும் - புறத்துப் பெறும் புள்ளியோடு உள்ளாற் பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம். (அஃதின்மை பகரத்திற்கு வடிவாம்). எ-டு: ப், (ப்) எனக் கண்டுகொள்க. கப்பி, கப்பி (கம்பி) எனவரும். இவ்வுரையைக் கண்டே நச்சினார்க்கினியரும் மயங்கினார் போலும்! இன்றுள்ளபடியே மகர வடிவம் முன்பும் இருந்தது. மகரங் குறுகும் போதே உட்புள்ளி பெறும். எ-டு: ம். மகரக் குறை வட்டத்திற்குள்ளேயும் ஒரு புள்ளியிருத்தல் வேண்டும். கீழையாரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலம் தோரா. கி.மு. 2000. அவர்க்கன்று இலக்கியமும் இல்லை; எழுத்துமில்லை; தமிழரோ கி.மு. 10,000 ஆண்டுகட்குமுன் தலைக்கழகக் காலத்திலேயே முத்தமிழிலக்கிய விலக்கணங் கண்டவர். மேலும், உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூவகையெழுத்துக் கொண்ட நெடுங்கணக்கு முதன்முதல் தமிழிலேயே தோன்றிற்று. இனி, சமற்கிருதத்திற்கு முந்திய வேதமொழி யுட்பட ஆரிய மொழிகட்கெல்லாம் தமிழ் முந்தியதும் மூலமுமான மொழியென்று, அதன் முச்சுட்டெழுத் துகளே முழுச்செவிடனுக்குங் கேட்குமாறு முழங்கிப் பறையறை கின்றன. இனி, கிரந்த எழுத்தும் தேவநாகரியும் தமிழெழுத்தினின்றே திரிந்துள்ளன என்பது, ஊன்றி நோக்குவார்க்குப் புலனாகாமற் போகாது. இந்நிலையில், தமிழ் ஏகார ஓகார எழுத்துகளை வடமொழியினின்று கடன் கொண்டதென்பது, பாட்டன் திருமணத்தைப் பேரனே நடத்தி வைத்தான் என்பது போன்றதே. ஒரு மொழியிலுள்ள சொற்களினின்றே அம் மொழிக்குரிய எழுத்துகள் அமைக்கப்படும். அயன்மொழியிலுள்ள சிறப் பெழுத்துச் சொற்கள் கடன் கொள்ளப்படினும், அச் சொற்களே யன்றி அவற்றின் சிறப்பெழுத்துகள் முதற்கண் வழக்குப் பெறா. ஏகார ஓகார வடிவுகள் வடமொழியினின்று வந்தனவெனின். அவ் வீரெழுத்துகளையும், உயிராகவோ உயிர்மெய்க் கூட்டிலோ, முதலாகவோ இடையாகவோ கடையாகவோ கொண்ட சொற்கள் தமிழில் இல்லாதிருந்திருத்தல் வேண்டும். ஏ, ஏக்கம், ஏங்கு, ஏசு, ஏடாசி, ஏடு, ஏணி, ஏணை, ஏது (வினா), ஏந்து, ஏப்பம், ஏமா, ஏமாளி, ஏய், ஏர், ஏராளம், ஏரி, ஏல், ஏல, ஏலம், ஏவு, ஏழு, ஏழை, ஏற்பாடு, ஏற்றம், ஏற்று, ஏறு, ஏன் முதலிய ஏகார முதற்சொற்களும். ஓ, ஓக்காளம், ஓடு (பெயர்), ஓடு (வினை), ஓடி, ஓங்கு, ஓசை, ஓட்டம், ஓட்டு, ஓட்டி, ஓட்டை, ஓடம், ஓணான், ஓதம், ஓது, ஓமல், ஓய்தல், ஓர்படியாள், ஓரம், ஓரி, ஓலை, ஓவியம் முதலிய ஓகார முதற்சொற்களும். அவ் வீருயிரும் மெய்யோடுகூடி மூவிடத்தும் வரும் நூற்றுக் கணக்கான சொற்களும், கல்லா மக்களும் வழங்கும் அடிப்படை யுலக வழக்குச் சொற்களாயிருப்பதை நோக்கும்போது, தி.நா.சுப்பிரமணியனாரின் அறியாமை எத்துணை அளவற்ற தென்று கண்டுகொள்க. முதற்காலத்தில் மாந்தன் வாயில் முதற்கண் தோன்றிய நெடி லுயிர்கள் பின்னர்க் குறில்களாகக் குறுகிய பின்பே மொழி வளர்ச்சியடைந்திருப்பதால், எகர ஒகரக் குறில்களை இருவகை யிலும் முதலிலும் மூவிடத்துங் கொண்ட இருவகை வழக்குச் சொற்களும், ஆயிரக்கணக்காகப் பெருகியுள்ளன. ஏகார ஓகார நெடிற்சொற்களினும், எகர ஒகரக் குறிற்சொற்கள் ஏறத்தாழ இருமடங்கு பெருகியிருப்பது கவனிக்கத் தக்கது. ஆ ஈ ஊ என்னும் நெடில்களையும் அ இ உ என்னும் அவற்றின் குறில்களையும் அமைக்கத் தெரிந்த தமிழர்க்கு ஏ ஓ என்னும் நெடில்களையும் அவற்றின் எ ஒ என்னும் குறில்களையும் அமைக்கத் தெரியவில்லை யென்பது. முன் பிறந்த மும்மகவையும் வளர்த்த பெற்றோர்க்கு, பின்பிறந்த இருமகவை வளர்க்கத் தெரியாது போயிற்றென்பது போன்றதே. தொல்காப்பிய முதலதிகார முதலியலாகிய நூன்மரபிலுள்ள 33 குறு நூற்பாவிற்குள்ளேயே. எகர ஏகார ஒகர ஓகாரச் சொற்கள் எங்ஙனம் இயல்பாக வந்துள்ளன என்பதைப் பின்வரும் நூற்பாக்களாலும் அடிகளாலும் உணர்ந்து கொள்ளலாம். எழுத்தெனப் படுப ... முப்பஃ தென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே (1) முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன (2) அஇஉ எஒ என்னும் ... ஓரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப. (3) ஆஈ ஊஏ ஐஓ ஔஎனும் அப்பா லேழும் ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப (4) மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே. (5) நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர். (6) கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே (7) பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப. (8) பதினெண் ணெழுத்தும் மெய்யென மொழிப. (9) மெய்யோ டியையினும் உயிரியல் திரியாது (10) மெய்யின் அளபே அரையென மொழிப (11) அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே (12) அரையளபு குறுகல் மகரம் உடைத்தே இசையிடன் அருகுந் தெரியுங் காலை (13) உட்பெறு புள்ளி யுருவா கும்மே (14) மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் (15) எகர ஒகரத் தியற்கையும் அற்றே. (16) புள்ளி யில்லா எல்லா மெய்யும் உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும் ஏனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும் ஆயீ ரியல வுயிர்த்த லாறே (17) மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே (18) வல்லெழுத் தென்ப கசட தபற. (19) மெல்லெழுத் தென்ப ஙஞண நமன. (20) இடையெழுத் தென்ப யரல வழள (21) மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை (22) டறலள என்னும் புள்ளி முன்னர்க் கசப என்னும் மூவெழுத் துரிய. (23) லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும். (24) ஙஞணந மனவெனும் புள்ளி முன்னர் தத்தம் இசைகள் ஒத்தன நிலையே. (25) கசஞப மயவவ் வேழும் உரிய. (26) ஞநமவ என்னும் புள்ளி முன்னர் யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே. (27) மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும். (28) யரழ என்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும் (29) மெய்ந்நிலை சுட்டின் எல்லா வெழுத்தும் தம்முன் தாம்வரும் ரழஅலங் கடையே (30) ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ. (32) அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் (33) அகர ஆகார முதற்சொற்களும் இகர ஈகார முதற்சொற்களும் உகர ஊகார முதற்சொற்களும் போன்று அத்துணை ஏராளமாக இல்லாவிடினும், அவற்றிற்கு அடுத்தபடியாக எகர ஏகார முதற்சொற்களும் ஒகர ஓகார முதற்சொற்களும். நூற்றுக்கணக் கினவும் இயற்கையானவும் இன்றியமையாதனவும் பிற்கால நூல்களிற் போன்றே தொல்காப்பியத்திலும் பயின்று வருவன வாகவும் இருக்கும்போது, எகர ஒகரக் குறில்கட்கு மட்டும் ஏன் அதிகப்படியான புள்ளியிட்டார்கள் என்பது விளங்கவில்லை. பிறமொழியாளர் காணாத பொருளிலக்கணம் கண்டும் இய லொடு இசை நாடகங்களை இணைத்து முத்தமிழ் புணர்த்தும், எழுநிலச் செய்யுள் யாத்தும், எழுத்தினங்கட்கு உயிர், மெய், உயிர்மெய் என்று பெயரிடுமளவு மெய்ப் பொருளறிவு விஞ்சியும், ஆம்பல் தாமரை வெள்ளம் என்று அடுக்கிய கோடியும் முந்திரி கீழ்முந்திரி இம்மி யென்று நுணுக்கிய பின்னமுங் கணித்தும், உலக முழுதும் வழங்குமாறு எழுநாட் கிழமை வகுத்தும், ஏரணமும் மறையும் இயற்றியும், முக்கரணமுங் கடந்த முழுமுதற் கடவுளைக் கண்டும், தம் தெய்வப் புலமையை வெளிப்படுத்திய குமரித் தமிழர்க்கு, ஆ ஈ ஊ போன்றே ஏ ஓ நெடில்கட்கு அதிகப் படியான வரி வடிவமைக்கும் அறிவில்லாது போயிற்றென்பது. இம்மியும் நம்பத் தக்கதன்று. சூரசேனி மாகதி முதலிய நாட்டுப் பிராகிருத மொழியாளர், ஏகார ஓகாரங்கள் எகர ஒகரமாகக் குறுகுமுன் குமரிநாட்டினின்று வடபாற் சென்றோ, ஏன்(என்) நிலம். ஓன் (உன்-ஒன்) வீடு என்று குறில்களை நெடிலாக்கிப் பேசினதினாலோ, எகர ஒகரம் இல்லாத அல்லது வழங்காத மொழிகளைப் பேசி வந்தனர். மேலை யாசியாவினின்று கி.மு. 2000இற்குப்பின் இந்தியாவிற்குட் புகுந்த சிறுபான்மைக் கூட்டமான வேத ஆரியரின் மொழி, வழக்கற்றுப் பெரும்பான்மைப் பழங்குடி மக்களின் பிராகிருத மொழிகளுடன் கலந்து போனதினால், அவரது வேதமொழியான இலக்கிய மொழியும் எகர ஒகரக் குறில்கள் இல்லாததாயிற்று. மேலையாரிய மொழிகளிலெல்லாம் எகர ஒகரக் குறில்கள் தொன்றுதொட்டு வழங்கி வருவதால், வேத ஆரியரின் முன்னோர் மொழியிலும் அவை வழங்கியிருத்தல் வேண்டும். நெடிலுக்குரிய அதிகப்படி குறியை எகர ஒகரக் குறில்கட்கு இட்டது போன்றே, ஏனை முந்நெடில்கட்குப் போன்று ஏகார ஓகார நெடில்கட்குச் சுழிக்குறியிடாமையும்; இயற்கைக்கு மாறாகத் தோன்றுவதால். ஏகார ஓகாரத் தியற்கையும் அற்றே. என்று தொல்காப்பியர் கூறியதைப் பிற்காலத்தார் எகர ஒகரத்தி யற்கையும் அற்றே என்று திரித்துவிட்டனர் என்று கொள்வதற்கும் இடமில்லை. புள்ளியென்பது குத்து என்றே பொருள்படுவது. புள்ளுதல் குத்துதல். அலகாற் குத்தி (கொத்தி)த் தின்பதனாலேயே பறவை புள் எனப்பட்டது. எழுத்தாணியால் ஏட்டிற் குத்தினால் துளை விழும். அதனால், ஏட்டுப்புள்ளி யெல்லாம் சிறு சுழியாகவேயிருக்கும். இச் சுழி ஆகார ஈகாரத்திற்குப்போல் இன்று ஓகார வடிவிற்கு இறுதியில் இடப்பட்டுள்ளது. பண்டை நாளில் ஈகார வடிவும் இறுதியிற் சுழி பெற்ற இகர வடிவாகவேயிருந்தது அதைப் புதுப்பித்தல் வேண்டும். தேவநாகரி தோன்றுமுன் வடமொழிக்குப் பயன்படுத்தப்பட்ட கிரந்த வெழுத்தில் உள்ள ஓகார வடிவு, இன்று தமிழில் உள்ளது போன்றதே. கிரந்த வெழுத்து, தமிழெழுத்தினின்றே திரிந்தது. தொல்காப்பியர் எகர ஒகரத்தியற்கையும் அற்றே என்று அவர் சேரநாட்டு வழக்கையே கூறியுள்ளார். அவர் வாழ்ந்ததும் சேரநாடே. அவர் காலத்தில் அங்ஙனம் வழங்கியிருப்பினும், காலமெல்லாம் அது தொடர வேண்டுமென்னும் யாப்புறவில்லை. அவர் காலமாகிய கி.மு. 7 ஆம் நூற்றாண்டிற்குப் பின் இன்று 24 நூற்றாண்டு கடந்துள்ளது. இலக்கண விலக்கியங்களிலுள்ள தவறான அல்லது பழைமைபட்ட கருத்துகளைத் திருத்துவதற்கு, அதிகாரமுள்ள நூலாசிரியனுக்கு எக்காலத்தும் உரிமையுண்டு. எகர ஒகரம் பற்றிய தொல்காப்பியர் கூற்றையும் நன்னூலார்க்கு முன்பே ஒருவர் மாற்றியிருத்தல் வேண்டும். அதனையே. தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்(டு) எய்தும் எகர ஒகரமெய் புள்ளி (நன். 98) என்று 13 ஆம் நூற்றாண்டினரான பவணந்தி முனிவர் கூறினார். இதன் பொருள், எல்லா எழுத்துகளின் வடிவும் தொன்றுதொட்டு வழங்கி வருவனவே. ஆயின், அக்காலத்தில் (பண்டைக் காலத் தில்) எகர ஒகர உயிர்களும் அவற்றைக் கொண்ட உயிர்மெய் யெழுத்துகளும் புள்ளி பெற்றன; என்றே தெள்ளத் தெளிவாகக் கொள்ளக் கிடக்கின்றது. இங்ஙனங் கொள்ளாக்கால். ஆண்டு ... புள்ளி என்பது மிகைபடக் கூறலாகவும், சிறிதும் பயனற்ற தாகவும் இருத்தல் காண்க. தொல்லை வடிவின எல்லாம் என்பதிலேயே, எகர ஒகர மெய் புள்ளிபெற்றமை அடங்கியிருக்க அதனையேன் மீண்டும் எடுத்துக் கூறவேண்டும்! ஆகவே, தொல்லை வழக்கிற்கும் உள்ள வழக்கிற்கும் வேறுபாடு காட்டவே, பிற்கூற்றெழுந்த தென்க. இதை நோக்காது, எல்லா வெழுத்துகளும் பல்வேறு வகைப்பட எழுதி வழங்கும் பழைய வடிவினையுடையவாம். அவ் வடிவை யுடையனவாய் வழங்குமிடத்து, எகரமும் ஒகரமும் மெய்களும் புள்ளியைப் பெறும் என்றுரைத்தார் ஆறுமுக நாவலர். (19ஆம் நூற்றாண்டு). இதனையே ஒட்டியுரைத்தார் வை.மு. சடகோபராமானுசாச் சாரியார். மயிலைநாதரும், எல்லாவெழுத்தும் பழையதாக வருகின்ற வரி வடிவினவே யாம்: அவ்விடத்து எகரமும் ஒகரமும் மெய்களும் புள்ளிபெற்று நிற்பனவாம் என்றே கூறி. ஆண்டு என்ற மிகையானே, தாது, ஏது என்றற்றொடக்கத்து ஆரிய மொழிகளும்; எட்டு, கொட்டு என்றற்றொடக்கத்துப் பொதுமொழிகளும்; குன்றியாது. நாடியாது. எட்டியாண்டுளது என்றற் றொடக்கத்துப் புணர்மொழிப் பொருள் வேறுபாடு களும், அறிதற்பொருட்டுக் குற்றுகரக் குற்றிகரங்களுக்குமேற் புள்ளி கொடுப்பாரும் உளரெனக் கொள்க என்று சிறப்புக் குறிப்பு வரைந்தார். இனி, சங்கர நமச்சிவாயரோ, எல்லா வெழுத்தும் பல்வேறு வகைப்பட வரைந்து வழங்கும் பழைய வடிவினையுடையவாம். அவ்வடிவினவாய் வழங்குமிடத்து, தனித்தும் உடம்பூர்ந்தும் வரும் எகரமும் ஒகரமுந் தனிமெய்களும், இயல்பாய புள்ளியைப் பிற்காலத்து ஒழித்து வரைந்து ஏகார ஓகாரங்களோடும் உயிர்மெய்களோடும் ஐயப்பட வழங்கும் வழக்கினை யுடையவன்றி, துணியப்படுந் தொல்லை வடிவினது உறுப்பாய புள்ளியைப் பெறும், என்று நூற்பாவின் பிற்கூற்றை விளக்குவார் போன்று இடைக்கால நிலைமையைச் சுட்டி விரித்துரைத்தார். இவர் காலம் 18ஆம் நூற்றாண்டு. இவரெல்லாரும் இவ்வாறு வெவ்வேறு வகையில் ஒரே கருத்துப் பட வுரைக்க, இராமானுசக் கவிராயரோ வெனின். தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்(டு) எய்தும்ஏ காரம்ஓ காரமெய் புள்ளி என்று நூற்பாவையே மாற்றியமைத்து. எல்லா எழுத்துகளும் பலவேறு வகைப்பட எழுதி வழங்கும் பழைய வடிவையே யுடையனவாம். அவ்வாறு வழங்குமிடத்து, ஏகார ஓகாரங்களும் தனி மெய்களும் பழைய புள்ளியைப் பெறும். இவ்வாறு கூறுதலாற் பிற்காலத்தார் அந்தப் புள்ளியை நீக்கிச் சந்தேகப்பட வழங்கிவந்தன ரென்பதாயிற்று. வரலாறு : எ, ஏ, ஒ, ஓ, கெ, கே, கொ, கோ, க், க, ங், ங என வரும். மற்ற வுயிர்மெய்களுந் தனிமெய்களும் இவ்வாறே புள்ளி பெறுமெனக் காண்க. தொல்லாசிரியர் முதலாயினோர். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே என்றும், இறந்தது விலக்கல் எதிரது போற்றல் எனவுங் கூறினமையால், ஏகாரம் ஓகார மெய் புள்ளி பெறும் எனத் திருப்பவேண்டிற்று. என்னெனின், இக்காலத்தார் ஏகார ஓகாரங்களுக்கே புள்ளியிட்டெழுதுவது பெருவழக்கா யினமையா லென்க. என்று உரை வரைந்திருப்பது, பெரிதும் போற்றத்தக்கதாம். இவர் காலம் 19ஆம் நூற்றாண்டு. முதுகுடுமிப் பெருவழுதி காலத்திற்குப்பின், தமிழ்க் காப்பும் கல்வெட்டுத் தொடர்பும் தமிழத் தமிழ்ப் புலவர் கையினின்று கடந்து விட்டமையாலும், போற்றுவாரின்றிப் புலவர் மரபு வரவர அருகி வந்தமையாலும், வீரமாமுனிவர் காலத்திற் (18 ஆம் நூற்றாண்டு) புலமையில்லாதவர் படியெடுக்கவும் ஓலையெழுதவும் நேர்ந்துவிட்டமையால், குறில் நெடிலாகவும் மெய் உயிர் மெய்யாகவும் படிக்க முடியாவாறும் படிப்பார்க்குப் பொருள் விளங்காவாறும் தாறுமாறாக எழுதப்பட்டது கண்டு, அம் முனிவர் எகர ஒகரக் குறிலுக்கு மேற் குறுங்கீச்சும் மெய்க்கு மேற்சுழியும் வைத்தெழுதுமாறு ஏற்பாடு செய்தார். நீட்டல் சுழித்தல் குறின்மெய்க் கிருபுள்ளி (12) என்பது அவரது தொன்னூல் விளக்க நூற்பா. இனி, ஏகார ஓகார உயிர்மெய்கட்குக் கே, கோ என்று இரட்டைச் சுழிக்கொம்பு அமைத்ததும் தாமேயென்று அவர்தம் கொடுந் தமிழ் நூலிற் கூறியிருக்கின்றார். எகர ஒகரக் குறில்களும் உயிர்மெய்களுமோ, இன்று தொல்காப் பியரின் புள்ளிபெறாதும், வீரமாமுனிவரின் நெடும்புள்ளி (நீண்ட புள்ளி) யென்னும் குறுங்கீச்சுப் பெறாதும், ஏகார வடிவு கீழ்ச்சாய்ப்புக் கீச்சும் ஓகார வடிவு கீழ்ச்சுழியும் பெற்றும், தொல் காப்பியர் காலத்திற்கு முன்பே ஏனைக்குறில் நெடில்கள்போல இயற்கையாக வேறுபட்ட வடிவங்கொண்டதுபோலத் தோன்று கின்றன. இதுகாறுங் கூறியவற்றால், தொல்லை வடிவின எல்லா எழுத்தும் என்றும், ஒரு தமிழெழுத்தும் பிராமியெழுத்தினின்றோ வட வெழுத்தினின்றோ தோன்றவில்லையென்றும், தொல்காப்பியம், இசைநுணுக்கம், மதிவாணர் நாடகத் தமிழ்நூல் முதலிய கிறித்து விற்கு முற்பட்ட பண்டை நூல்களெல்லாம் தமிழெழுத்திலேயே யன்றிப் பிராமியெழுத்தில் ஏட்டுச் சுவடிகளில் எழுதப்பட வில்லை யென்றும், கி.மு. 3ஆம் நூற்றாண்டுப் பிராமிக் கல் வெட்டுப் பண்டைத் தமிழெழுத்திற்குச் சான்றாகாதென்றும். பிராமியெழுத்தும் வடவெழுத்தும் தமிழெழுத்தினின்றே திரிந்தனவென்றும், தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழி யென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க. நேரிழையார் கூந்தலினோர் புள்ளிபெற நீள்மரமாம் நீர்நிலையோர் புள்ளி பெறநெருப்பாம் - சீரணவு காட்டொன் றொழிப்ப இசையாம் அதனளவு மீட்டொன் றொழிப்ப மிடறு. நீண்மரத்தி லொன்றேற நேரிழையார் கூந்தலாம் பூநெருப்பி லொன்றேறப் பூங்குளமாம் - பேணுங் கழுத்திலொன் றேற இசையாம் இசையின் எழுத்திலொன் றேறவாங் காடு என்பன, தொல்காப்பியர் கூற்றுக்கு எடுத்துக்காட்டாக இடைக் காலத்தெழுந்த மாத்திரைச் சுருக்கம், மாத்திரைப் பெருக்கம் என்னும் சொல்லணிப் பாட்டுகள். - செந்தமிழ்ச் செல்வி மார்ச்சு 1979 எச்சம் எச்சம் என்னும் சொல், மக்களின் வாழ்க்கை மட்டுமன்றிப் பெற்றோரின் முகத்தோற்றமும் குணவமைதியும் எஞ்சி நிற்பதைக் குறிக்கும். அதனால், மக்கள் என்னும் சொல்லினும் (எச்சம் என்னும் சொல்) தகுதியும் பொருட் பொலிவும் உடையதாம். (தி.ம. 94.) எண்டிசைத் தலைவர் கிழக்கில் வேந்தன் (இந்திரன்) இந்திரன் என்று பழைமைநூல் கூறுவது பலவிடத்தில் கடாரத் தரசனையே. இந்திரன் யானைக்கு வெள்ளை நிறமும் ஐராவதம் என்னும் பெயரும் கூறுப்படுவதையும், கடாரத்திலுள்ள ஐராவதி என்னும் ஆற்றுப் பாங்கரில் வெண்புகர் யானை வதிவதாகக் கூறப்படுவதையும், இலங்கையிலிருந்த அரக்கரும் அசுரரும் அடிக்கடி இந்திரனை வென்றதாகக் கூறுவதையும், கடாரம் கிழக்கிலிருப்பதையும், இந்திரன் கடலைப் பாண்டிநாட்டின் மேல் வரவிட்ட கதையையும், மேகம் கீழ்க்கடலில் தோன்றிக் கொண்டல் என்று பெயர் பெறுவதையும், கடாரமும் மலேயா வும் இன்றும் ஆடல்பாடல்களிற் சிறந் திருப்பதையும், தேவருல கிற்கு நாகலோகம் என்றொரு பெயரிருப்பதையும் நோக்குக. எண்டிசைத் தலைவருள், அரசரெல்லாம் ஒரு காலத்தில் ஒரு தலை முறையில் தத்தமக்குரிய திசையிலுள்ள நாடுகளை ஆண்டுகொண்டிருந்தவரே. கடாரத்தரசனுக்கு இந்திரன் என்று பட்டப்பெய ரிருந்திருக்கலாம். தென்கிழக்கில் தீ (அக்கினி) ஜாவாவிலிருந்து பிலிப்பைன் தீவுவரையும், இன்றும் பலவிடத்தில் எரிமலைகள் எரிந்து கொண்டிருப்பதைத் திணை நூலிற் காண்க. தெற்கில் கூற்றுவன் (யமன்) மறத்திற் சிறந்த எருமைக்கடா (All About Animals, pp. 54, 55) மறலிக்கு ஊர்தியாகக் கூறப்பட்டது. தென்மேற்கில் அரக்கன் (நிருதி) தென்னாப்பிரிக்க மக்களையும் பண்டு தமிழகமும் ஆப்பிரிக்காவும் இணைந்திருந்ததையும் நோக்குக. மேற்கில் வாரணன் (வருணன்) வங்காளக்குடாவிலிருந்த நிலங்கட்கு முந்தி, அரபிக்கடலிலிருந்த நிலம் அமிழ்ந்து போனதால், மேற்கில் வாரணன் குறிக்கப்பட்டான். வடமேற்கில் காற்று (வாயு) இது ஒருகால் சகாராப் பாலைநிலக் காற்றாயிருக்கலாம். வடக்கில் குபேரன் இவன் இராவணன் காலத்தவன். இவ் விருவரும் முறையே இலங்கையிலிருந்த இயக்கர் (யக்ஷர்), அரக்கர் (ராக்ஷஸர்) என்னும் குலங்கட்குத் தலைவர். இவ் விருவர்க்கும் போர் நிகழ்ந்தது. இராவணன் குபேரனை வென்று அவன் ஊர்தியையும் (புஷ்பக விமானம்) கவர்ந்துகொண்டான். பின்பு குபேரன் வடதிசைக்குப் போய் ஒரு நாட்டையாண்டான். ஈழத்தில் பொன்னும் முத்தும் ஏராளமாயகப்பட்டமையின், அவன் ஒரு பெருஞ் செல்வனாய்ப் பல கருவூலங்களை யுடையவனாயிருந்தான். வடகிழக்கில் ஈசானன் ஈசானன் ஒரு சிவவடிவாகக் கூறப்படுகின்றான். இது மலைமகளின் கூறாகக் கருதப்படும் தடாதகைப் பிராட்டி, வடகிழக்குத் திசையி லிருந்த சோமசுந்தரனைக் கலியாணஞ் செய்ததினாலேயே. ஒ.மொ.நூ. எண்பெரும் பெற்றி = அட்டமாசித்தி நுண்மை - அணிமா பருமை - மகிமா நொய்ம்மை - லகிமா பளுமை - கரிமா விருப்புப் பேறு - பிராப்தி விருப்பிடம் சேறல் - பிராகாமியம் இறைமை - ஈசுரத்துவம் வயப்படுத்தம் - வசித்துவம் (த.இ.வ. 95.) எண்வகை ஓக உறுப்புகள் கடிவு (இயமம்), நோன்பு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணாயாமம்), ஒருக்கம் (பிரத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்), ஒன்றுகை (சமாதி) என்பன எண்வகை ஓக உறுப்புகள். (தி.ம. 50) தொகைநிலையை ஒருக்கம் என்றும், பொறைநிலையை நிறை என்றும், நொசிப்பை ஒன்றுகை என்றும் சொல்லப்படும் (வ. அட்டாங்க யோகம்) (த.இ.வ. 99). எண் வேறுபாடு திணை பால் வேறுபாடு தமிழிலக்கணத்தில் ஏற்பட்ட பின்பும், ஆண் பெண் என்னும் பாற்பெயர்களும், தந்தை தாய் என்னும் முறைப் பெயர்களும், மகவு, பிள்ளை, பார்ப்பு, குட்டி முதலிய இளமைப் பெயர்களும், சாத்தன், சாத்தி முதலிய விரவுப் பெயர் களும் மாக்கள் என்னும் பன்மைப்பெயரும், கடைக்குட்டி, பிள்ளை குட்டி, கன்று கயந்தலை என்னும் வழக்குகளும், உள்ளான், கத்தரிப்பான் முதலிய ஆன் ஈற்றுப் பெயர்களும், மண் வெட்டி, காடைக்கண்ணி முதலிய இகர ஈற்றுப் பெயர்களும் இருதிணைப் பொதுவாய் இருவகை வழக்கிலும் வழங்கி வருதலான், முதற் காலத்தில் எல்லாச் சொற்களும் திணை வேறுபாடின்றி எண் வேறுபாட்டோடு மட்டும் வழங்கி வந்தன என்பதும், மக்கட்கும் விலங்குகட்கும் பெரிதும் வேறுபாடில்லை என்பதும் அறியப்படும். (சொல். 20). எதிர்மறையின் எதிர்மறை வெளிப்டையும் குறிப்புமான எதிர்மறையின் எதிர்மறை உடன்பாடு ஆதல் பற்றி இன்மையின் இன்மை வேண்டும் அல்லது வறுமையின் வறுமை வேண்டும் என்று சொல்வது போல் மடியை மடியாக ஒழுகல் என்றார். (குறள் 602). எது தேவமொழி ? உலகிலுள்ள (ஏறத்தாழ) மூவாயிர மொழிகளுள், ஒருசில, மறை நூலுடைமை பற்றித் தம்மைத் தூயமொழி (Holy Language) என்றும், அவற்றுள்ளும் சமற்கிருதம் தன்னைத் தேவமொழி (Divine Language) என்றும், போற்றிப் புகழ்ந்து கொள்கின்றன. தூய மொழி என்பதினும் தேவமொழி என்பது உயர்வானது. முன்னது மண்ணுலகத்தில் தெய்வத் தன்மை யடைந்த மக்கள் மொழி யென்றும். பின்னது விண்ணுலகத்தினின்றோ வீட்டுலகத்தினின்றோ மண்ணுலகத்திற்கு வந்த தேவர்மொழி யென்றும், கருத்துப் பிறப்பிப்பன. உலகில் ஒரு மொழியும் தேவமொழி யன்று. ஒன்றைத் தேவமொழி யென்று குறிப்பின், அது புனைந்துரைவகையாகவே யிருத்தல் வேண்டும். அங்ஙனம் புனைந்துரை வகையிற் குறித்தற்கும். கீழ்க் குறிக்கப்பெறும் குணங்களனைத்தும் அதற்கிருத்தல் வேண்டும். (1) உலகமொழி முதன்மை (2) ஒலியெளிமை (3) பன்மொழித் தாய்மை (4) ஒப்புயர்வற்ற பண்பாடு (5) தூய்மை (6) மறைநூலும் பல்கலை இலக்கியமும் உண்மை (7) மக்கட் பொதுவுரிமை (8) நடுநிலை அறங்கூறல் இவ் வெண்ணியல்புகளும் ஒருங்கே தமிழுக்குள. இவற்றுள் ஒன்றிரண்டே சமற்கிருதத்திற்குள்ளன. (1) வழக்கற்றுப்போன வேத ஆரிய மொழியும் அக்காலத்து வட்டார மொழிகளாகிய (தமிழ் உட்பட்ட) பிராகிருத மொழி களும் கலந்த அரைச் செயற்கையான இலக்கிய மொழியே வடமொழியென்று சிறப்பாய்க் கூறப்படும் சமற்கிருதமாம். (கி.மு. 2000). தமிழோ, மாந்தன் முதல் முதல் தோன்றிய (Lemuria v‹D«) குமரிநாட்டில், தானே தோன்றிய இயற்கை மொழியாம்(கி.மு. 50,000). ஓங்க லிடைவந்து ... தன்னே ரிலாத தமிழ் என்னும் பழைய தனிப்பாவும் இதனைப் புலப்படுத்தும். (2) ஆற்றல் அழியுமென் றந்தணர்கள் நான்மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று. என்று கோதமனாரும். ஓதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி .................. வள்ளுவர் வாய்மொழி மாண்பு. என்று மாங்குடி மருதனாரும், கூறியவையே. தமிழொலி மென்மைக்கும் சமற்கிருதவொலி வன்மைக்கும் போதிய சான்றாம். (3) தமிழ் தென்னாட்டு மொழிகட்கெல்லாம் தாயாயிருப்பது போன்றே. சமற்கிருதம் வடநாட்டு மொழிகட்கெல்லாம் தாய் என்றொரு தவறான கருத்து நெடுங்காலமாக நிலவி வருகின்றது. ஒரு காலத்திலும் உலக வழக்காய் வழங்காத அரைச் செயற்கையான இலக்கியக் கலவைமொழி, எங்ஙனம் தாய்மொழியா யிருத்தல் கூடும்? ஒரு மொழி முதற்கண் தனிமொழியா யிருந்தாலன்றோ பின்னர்த் தாய்மொழியாயும் அமைதல் கூடும்! தமிழ், திரவிட மொழிகட்குத் தாயும். ஆரிய மொழிகட்கு மூலமுமாயிருக்கும் போது, அவ் வாரிய மொழிகளுள் ஒலியளவில் முது வளர்ச்சி யடைந்த இலக்கியச் செயற்கைக் கலவை மொழியாகிய சமற் கிருதம் எங்ஙனம் உண்மையில் பன்மொழித் தாயாயிருத்தல் ஒல்லும்? (4) கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ என்று பரஞ்சோதி முனிவர் தருக்குமாறு, இலக்கணச் செம்மை யும் வேறெம் மொழியினுமில்லாத பொருளிலக்கணமுமுடைய தமிழே மொழிப் பண்பாட்டில் தலைசிறந்ததாம். (5) பெருஞ் சொல்வள முடையதும் பிறமொழித் துணை வேண்டாததும் தனித்து வளர்ந்தோங்க வல்லதும் தமிழ் ஒன்றே. அன்றியும் தமிழ்நூற் களவிலை அவற்றுள் ஒன்றே யாயினும் தனித்தமி ழுண்டோ? என்னும் சுவாமிநாத தேசிகர் கூற்று மொழியாராய்ச்சியில்லாத இருட்காலத் தெழுந்ததாதலின், அது இற்றைக்குப் பொருளற்ற தென விடுக்க. சமற்கிருதத்திற்குள்ள சொல்வளம் பன்மொழிச் சேர்க்கையால் உண்டானதாதலின், அதுவும் சிறப்பிலதென்று விடுக்க. (6) பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே (1336) மறைமொழி கிளந்த மந்திரத் தான (1421) நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (1434) என்னும் தொல்காப்பியர் கூற்றும். ஏரணம் உருவம் யோகம் இசைகணக் கிரதம் சாலம் தாரணம் மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணம் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள என்னும் பழந்தனிப்பாடலும், பண்டைத் தமிழில் மறைநூலும் பல்கலை இலக்கியமும் இருந்து பின்னர் இறந்துபட்டமையை உணர்த்தும். பண்டைத் தமிழிலக்கியம் இறந்துபட்டமை யினாலேயே, அதன் மொழிபெயர்ப்பான சமற்கிருத இலக்கியம் இன்று முதல் தோன்றிய மூலமாகக் காட்சியளிக்கிறது. (7) ஆரிய வேதத்தையும் அதன் வழிப்பட்ட சமற்கிருத நூல்களையும் தமிழரான சூத்திரர் ஓதின், அவர் நாவை அறுத்துவிட வேண்டு மென்றும், அவற்றைக் கேட்பின் அவர் காதில் உருக்கின ஈயத்தை வார்த்தல் வேண்டுமென்றும், ஆரிய அறநூல்கள் அறைகின்றன. தமிழையும் தமிழ் நூல்களைக் கற்றற்கும் கேட்டற்குமோ எத்தகைய குலமத கட்சியின விலக்கும் வேறுபாடுமில்லை. செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார் இல் என்று வெள்ளிவீதியாரும் பாடியிருத்தல் காண்க. (8) ஆரிய அறநூல்கள் யாவும் கடுகளவும் நடுநிலையறியாதவை யென்பது. அவை குலத்திற்கொரு முறையும் தண்டமும் கூறுவதினின்று தெளிவாய் அறியப்படும். வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்திற் கொருநீதி என்னும் சுந்தரம்பிள்ளை வாயுரை ஈண்டுக் கவனிக்கத்தக்கது. இங்ஙனம் தமிழ் பல்லாற்றானும் தலைசிறந்த மொழியாயும், சிவ நெறியும் திருமால்நெறியும் தூயதமிழ் மதங்களாயும் இருப்பவும் தமிழ் பொதுவழிபாட்டிற்குத் தகாத மொழியென்று தள்ளப் பட்டபின்னும் தமிழர் ஆரியரினும் தாழ்ந்தவரென்று கொள்ளப் பட்டபின்னும், தமிழும் தமிழிலக்கியமும் இழப்பிற்கும் அழிப் பிற்கும் இடனாய் இற்றைச் சிறுமையடைந்துள்ளன. அறிவும் ஆராய்ச்சியும் மிக்க இக்காலத்திலேனும், தமிழர் விழித்தெழுந்து தம் முன்னோர் நிலைமையடைய முயல்வாராக. (தென்மொழி செப்டம்பர் 1959) எருமை எருமை - வ. ஹெரம்ப இர் - இரு - இருமை = கருமை. இருமை - எருமை = கரியமாட்டினம். ம, எரும, து. எர்மெ, தெ. எனுமு, க, எம்மெ. (வ.வ. 98) எல்லரி எல்லரி - வ. ஜல்லரீ (jh) எல்லரி = பறைவகை வல்வா யெல்லரி (மலைபடு. 10). (வ.வ. 98) எல்லா தனியுயிரான ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் இயற்கை நெடிலைந்தும் விளியசைகளாகப் பயன்படும். ஆதலால் விளியுருபாக அமையும். இவற்றுள், ஈ, ஊ என்னும் இரண்டும் பெரும்பாலும், முறையே இகர வுகரங்களின் நீட்டமாகவே யிருக்கும். எவ்வுயிராயினும், சேய்மை விளியெல்லாம் நெடிலாகவே யிருத்தல் கூடும். விளியசைகள், முன்னசை பின்னசை என இருவகைப்படும். ஆ முன்னசையாக வருவதில்லை. ஏ ஓ இரண்டும் முன்னசையாகவும் பின்னசை யாகவும் வரும். எ-டு: ஏ. ஏ முருகா! ஏ தங்கம்! (முன்விளி) ஏ அண்ணே! ஏ அரசே! (இருதலை விளி) தாயே! கடவுளே! (பின்விளி) ஓ. ஓ ஐயா! ஓ பெண்ணே! (முள்விளி) ஓ மாதோ! ஓ மன்னோ! (இருதலை விளி) அம்மோ! அண்ணோ! (பின்விளி) இனி, பெயரொடு சேர்ந்தன்றித் தனித்தும் ஏயும் ஓவும் யகர மெய்யொடு கூடி விளியசையாக வரும். எ-டு: ஏய்! இங்கே வா. (சிறுவரையும் இழிந்தோரையும் நோக்கிக் கூறுவது. இது இருபாற்பொது.) இது ஏ என்றுங் குறுகும். எ-டு: ஏ! போ. ஓய்! எங்கே போகிறீர்? (ஒத்த ஆடவரை நோக்கிச் சற்று மதிப்பாகக் கூறுவது). இது சொற்றொடர் முன்னன்றிப் பின்னும் வரும். எ-டு: இங்கே பாரும் ஓய்! இது வேய் - வே என்றும் திரியும். எ-டு: என்னவே! இப்படிச் சொல்கிறீர்? பெயரீற்று ஓகார விளியசை ஏகார விளியொடு இணைத்தும் ஆகார விளியொடு கூடியும் வரும். எ-டு: அம்மேயோ, அண்ணாவோ. ஆவோ இணைவிளி லகரமெய்யடுப்பது முண்டு. எ-டு: சாத்தாவோல். இதை ஒரு புடையொத்து, ஏகார முன் விளியும் லகர மெய்யடுத்து ஏல் என நின்று, இரு பாற்கும் பொதுவாகும். ஏல் என்பது எல் - எல்ல - எல்லா என்று திரிந்து, அகப் பொருட் செய்யுட்களில் இருபாற் பொது விளியாய் வழங்கும். முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச்சொல் நிலைக்குரி மரபின் இருவீற்று முரித்தே. (தொல். பொ. பொரு. 26) இது, கிழவன் கிழத்தி பாங்கன் பாங்கியென்னு முறைப் பெயராகிய சொல்பற்றிப் பிறந்ததோர் வழு அமைக்கின்றது. இதன் பொருள்:- முறைப் பெயரிடத்து இரு பாற்கும் பொருந்தின தகுதியையுடைய எல்லா வென்னுஞ்சொல், புலனெறி வழக்கிற்குரிய முறைமையினானே வழுவாகாது, ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒப்ப உரியதாய் வழங்கும் என்றவாறு. கெழுதகை என்றதனானே, தலைவியும் தோழியும் தலைவனைக் கூறியதே பெரும்பான்மை யென்றும், தலைவன் தலைவியையும் பாங்கனையுங் கூறுதல் சிறுபான்மை வழுவமைதியென்றும், கொள்க. (c.ம்) அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேன் முதிர்பூண் முலைபொருத வேதிலாண் முச்சி யுதிர்துக ளுக்கநின் னாடை யொலிப்ப வெதிர்வளி நின்றாய்நீ செல்; இனியெல்லா (கலி. 81) எனத் தலைவியைத் தலைவன் இழித்துக்கூறலின் வழுவா யமைந்தது. எல்லா நீ முன்னத்தா னொன்று குறித்தாய்போற் காட்டினை நின்னின் விடாஅ நிழல்போற் றிரிதருவா யென்னீ பெறாததீ தென் (கலி. 61) எனத் தோழி தலைவனை விளித்துக் கூறலின் வழுவாயமைந்தது. எல்லா விஃதொத்தன் (கலி.61) என்பது பெண்பால் மேல் வந்தது. ஏனைய வந்துழிக் காண்க. பொதுச் சொல் என்றதனானே எல்லா எலா எல்ல எலுவ எனவும் கொள்க. எலுவ சிறாஅர் (குறுந். 129) என வந்தது. யாரை யெலுவ யாரே (நற்றிணை. 395) எனத் தலைவனைத் தோழி கூறினாள். எலுவி யென்பது பாலுணர்த்தலின் ஆராயப்படா. (நச்சினார்க் கினியர் உரை). இவ்வுரையிற் சில கூற்றுக்கள் பொருந்தாமை அறிஞர் கண்டு கொள்க. பொதுச்சொல் என்றும், நிலைக்குரி மரபி னிருவீற்று முரித்தே என்றும், தொல்காப்பியர் கூறியுள்ளமையால், எல்லா என்பது தலைவன் தலைவியர் இருவரும் ஒருவரையொருவர் விளிக்கும் இருபாற் பொதுச்சொல் என்பது தெளிவாம். தெலுங்கில் ஓகார விளிச்சொல் பின்வருமாறு நால்வடிவு கொள்ளும். ஓயி - ஒத்தோரை விளிக்கும் முன் விளியசை. ஓரி - இழிந்தோரை விளிக்கும் முன்விளியசை. ஏமிரா ஓரியென்பாள் எந்துண்டி வதியென்பான் (காளமுகில் தனிப்பா.) ஓஸி - மனைவியையும் இழிந்த பெண்டிரையும் விளிக்கும் முன்விளியசை. ஓரை - மிக இழிந்தோரை விளிக்கும் முன் விளியசை. ஏல் என்னும் விளிச்சொற் றிரிபுகள் ஏல் - எல் - எல்ல. எல்ல என்னுஞ்சொல் வழக்கிறந்தது; இலக்கியமும் இறந்துபட்டது. எல்ல - எல்லா. இது மேற்கூறப்பட்டது. எல்லா =தோழீ. கடைமணி யின்குரல் காண்பென் காண் எல்லா (சிலப். 20:3). எல்லா - எல்லாவோ = தோழீ எல்லாவோ காதலற் காண்கிலேன் (சிலப். 18:11-12). எல் - எல்லே = தோழியை விளிக்குஞ் சொல். கொடிய என்னெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே (திவ். திருவாய். 5:3:5) எல் - எல்லோ = வியப்பும் இரக்கமும் உணர்த்தும் இடைச் சொல் (நெல்லை வழக்கு). எல் - எல. இது தமிழில் வழக்கற்றது. எல - எலா. இதுவும் தமிழில் வழக்கற்றது. எல, எலா என்னும் இரு சொற்கள், இருபாற் பொது விளி களாகத் தெலுங்கரிடை வழங்கி வருவதாகச் சொல்லப்படு கின்றது. எல என்பதையும், அதன் திரிபான சில சொற்களையும் பற்றி, கிற்றல் கன்னட அகரமுதலி பின்வருமாறு கூறுகின்றது. க. எல (ela) = உடன்படுதலைக் குறிக்கும் ஓர் இடைச்சொல். க. எலகெ (elage) = பெண்டிரை விளிக்குஞ் சொல். க. எலவோ, எலவோ = வலிமிக்க வியப்பிடைச் சொற்கள். க. எலா = நண்பரை அல்லது நெருங்கிப் பழகியவரை விளிக்குஞ் சொல். க. எலெ, எலே = எலா. க. எலெகெ (elege) = பழகிய பெண்டிரை விளிக்குஞ் சொல். க. எலொ, எலோ = எலா. எல் - எலு - எலுவ - எலுவன் = தோழன். (திவா.) எலுவன் - எலுவல் = தோழன். அரவெழுதிய கொடியு முடையவ னெலுவலும் (பாரத. பதினாறாம். 28). எலுவன் - எலுவ (விளிவே.) எலுவன் - எலுவை = தோழி. உனக்கெலுவை யாகுவதெ னெண்ணம் (பாரத. நாடுகரந். 33). எலுவன் - எலுவி = தோழி. (தொல். பொரு. 26, நச். உரை.) ஏல் - ஏல, ஏலே = சிறுவனையும் இழிந்தோனையும் விளிக்குஞ் சொல். (நெ.வ.) ஏல் - ஏலா = 1. மனைவியை விளிக்குஞ்சொல். (கரூர். வ.) 2. தோழன் தோழியரை விளிக்குஞ்சொல். குறவன் மகளாணை கூறேலா கூறே (பரிபா. 8:69), ஏலாவிது காணாயென (கந்தபு. அசமுகிப். 12). ஏல - ஏழ; ஏலா - ஏழா = தாழ்த்தப்பட்டோர் மனைவியை விளிக்குஞ் சொல். (நெ.வ). ஏழ - ஏட = தோழனையும் தாழ்ந்தோனையும் விளிக்குஞ் சொல். ஏட - ஏடன் = 1. தோழன். (யாழ். அக.). 2. அடியான், தொழும்பன். ஏடர்களை யெங்கு மாண்டுகொண்ட வியல்பறிவார் (திருவாச. 43 : 4). ஏட (விளிவே.) - தோழனையும் தாழ்ந்தோனையும் விளிக்குஞ் சொல். ஏடா வழிய லெழுந்திது கொள்ளாய் (மணி. 14 : 12) ஏடே - ஏடா ஏட - ஏடி = தோழியையும் இழிந்தோனையும் விளிக்குஞ் சொல். (சிலப். 17 : 28, உரை). ஏடி - ஏடீ (ஏடி யென்பதன் நீட்டல்). ஏட - ம. எட, எடா = சிறுவனையும் இழிந்தோனையும் விளிக்குஞ் சொல். ம. எட - எடன் = சிறுவன், பையன். ம. எடி - எடீ = சிறுமியையும் இழிந்தோளையும் விளிக்குஞ் சொல். ஏட - எட - அட = 1. சிறுவனையும் இழிந்தோனையும் விளிக்குஞ் சொல். அட பயலே! 2. கழிவிரக்கம் பற்றிய இடைச் சொல். அட கெடுவாய் பல தொழிலு மிருக்கக் கல்வி யதிகமென்றே கற்றுவிட்டா யறிவில்லாமல் (படிக்காசுப் புலவர். தனிப்பா.) அட - அடா, அடே, அடோ = சிறுவனையும் இழிந்தோனையும் விளிக்கும் விளிகள். அடா அடா = அடடா (ஓர் இரக்க வியப்புக்குறிப்பிடைச் சொல்). அட - அடி = சிறுமியையும் மனைவியையும் தோழியையும் இழிந்தோளையும் விளிக்குஞ் சொல். அடி மூழி! v‹d brŒjhŒ?, நந்த வனத்திலோ ராண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி (சித்தர் பாடல்) உடைத்தான் + அடி = உடைத்தாண்டி. என்னடி நான்பெற்ற மங்கை (அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து) எட்டி நில்லடி! அடி - அடீ = (அடி என்பதன் நீட்டம்). அடா - டா - ரா (தெ.). ஏமிரா ஓரியென்பாள் (காளமுகில்) இக்கடை வாடா = தெ. இக்கட ராரா. அடோ - அரோ - ஒரு மூவிட அசைச் சொல். குயிலாலு மரோ யாகா பிறபிறக் கரோபோ மாதிகும் ... ... ... ... அன்றாம் தாம்தான் கின்றுநின் றசைமொழி (நன். 441) அடே - வ. அரே. அடே -டே - வ. ரே. வ. அரே அரே - அரேரே - அரரே. மானியர் வில்லியம்சு சமற்கிருத - ஆங்கில அகரமுதலி அரே, அரரே, அரேரே, ரே என்னுந் திரிசொற்கள் பற்றிப் பின்வருமாறு குறிக்கின்றது. அரே - ind. interjection of calling (VS). அரரே - ind. a vocative particle (expressing haste) - L. அரேரே - ind. (repetition of are) interjection of calling to inferiors or of calling angrily (L). ரே - ind. a vocative particle (generally used contemptuously or to express disrespect, often doubled) - Ka#v; Kathas etc. ind = indeclinable. VS = Va#jasneyi Samhita# வாஜ நேயி ஸம்ஹிதா) L = Lexicographers (அகர முதலியாளர்) Kav = Ka#vya literature (காவிய இலக்கியம்) ஆங்கிலர் நண்பரைக் காணும்போது மகிழ்ச்சி விளியாக ஆளும் ஹலோ (ஹல்லோ) என்னுஞ் சொல், எல்லா என்னும் தென்சொல் லொடு தொடர் புடையதே. hallo, halloa, int., n., and v.i. Int. calling attention or expr. surprise; informal greeting; (n. and v. i.) the cry ‘hallo’. var. of earlier hollo. halloo, int. inciting dogs to the chase, calling attention or expressing surprise; (n.) the cry ‘halloo’; (perh.) var. of hollo; (v.i. and t.) Cry ‘halloi’, esp. to dogs; urge on (dogs etc.) with shouts; shout (t. and i.) to attract attention. hallow, v. t. and i. Chase with shouts; incite with shouts; shout to incite dogs etc. (ME). halowen prok. f. OF halloer. hello, n., and v.i. hallo. holla, int. calling attention f. F. hola. hollo, int. calling attention; (n.) the cry ‘hollo’. (conn. w. holla. hollo, hollow, holla, holloa, v. l, and t, shout (i and t); call to hounds (as prec). hullo, hulloa, int. used to call attention, express surprise or answer call. esp. on telephone. of hallo. ஏல் என்பது முதல் ரே என்பது வரை காட்டப்பட்டுள்ள பல்வேறு சொற்களெல்லாம், ஒரே தொடர்புள்ள கொடிவழிச் சொற்கள் என்பது தெள்ளத் தெளிவாம். அவற்றுள், ரே என்னும் இறுதிநிலைத் திரிசொல் மட்டும் வடமொழி யிலக்கியத்தில், அதிலும் பெரும்பாலும் பிற்கால இலக்கியத்திலும் அகரமுதலி களிலும் வழங்குவதும்; முந்து நிலைத் திரிசொல்லான எல்ல (எல்லா) என்பதை யொத்த ஹல்லோ என்னும் விளிச்சொல், ஆறாயிரம் கல் தொலைவி லுள்ள ஆங்கில நாட்டில் தொன்றுதொட்டு வழங்கி வருவதும் கவனிக்கத்தக்கன. ஆங்கிலச் சொல் வேட்டை நாயை ஏவும் சொல்லாகப் பயன் படுத்தப்படினும், விளியளவில் ஒன்றே யென்பதை அறிதல் வேண்டும். நூற்றுக்கணக்கான அடிப்படை ஆங்கிலச் சொற்கள் தென் சொல்லும் தென்சொற் றிரிபுமாயிருப்பதால், எல்லா என்னும் இருபாற் பொது விளிச்சொல் ஆங்கிலத்தில் வழங்கி வருதல் பற்றி ஐயுறுதற்கு எள்ளளவும் இடமில்லை. குமரி நாட்டினின்று கங்கைக்கரை சென்ற பண்டைத் தமிழர் திரவிடராகத் திரிந்தபின், ஐரோப்பா அடைந்து ஆரியராக மாறியிருப்பதாலும், அவ்வாரியருள் ஒரு கூட்டத்தாரே வேத ஆரியரின் முன்னோராக இந்தியாவிற்கு வந்திருப்பதாலும், தென்சொற்களின் முந்து வடிவங்கள் மேலையாரிய மொழி களிலும் பிந்துவடிவங்கள் கீழையாரியமாகிய வேதமொழியிலும் சமற்கிருதத் திலும் வழங்குவது இயற்கையே. மேலையர் உலக முன் மொழியாகிய தமிழை அடிப்படையாகக் கொள்ளாது அதன் திரிபுக் கொடுமுடியாகிய சமற்கிருதத்தையே மூலமாகக் கொண்டு ஆராய்ந்து வருவதால், மொழிநூல் பற்றிய அடிப்படை யுண்மைகளை அறியாது, வழிதப்பிய சகாராப் பாலை நில வழிப்போக்கர் போல் அங்குமிங்கும் சுற்றிச் சுற்றி இடர்ப்படுகின்றனர். தமிழ் இயன்மொழியென்றும் ஆரியம் அதன் திரிமொழி யென்றும் அறியும்வரை, அவர் தம் குருட்டுக் கொள்கையில் நிலைத்தே நிற்பர். அக் குருட்டாட்டம் நீங்குங் காலமும் அடுத்து வருகின்றது. (த.த.நா.சொ) எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியா? மக்கள் அறிவடையும் வழிகள், கல்வி, கேள்வி, ஆராய்ச்சி, துய்ப்பு என நால்வகைப்படும். ஒருவர் பிறர் எழுதி வைத்ததைத் தாமாய்க் கற்றறிவது கல்வி. அங்ஙனமன்றி அறிஞரையடுத்துத் தமக்கு வேண்டியவற்றைக் கேட்டறிவது கேள்வி; இவ்விரண்டுமன்றி, ஒன்றைப் புதுவதாகத் துருவியாய்ந்தறிவது ஆராய்ச்சி; இனி வாழ்நாளில் பற்பல வகையில் தாமே துய்த்து அறிவது துய்ப்பு. (அனுபவம்). இவற்றில் கல்வி என்பது இக்காலத்தில் கேள்வியையுந் தழுவும். ஆராய்ச்சி ஆராயப் பெறும் பொருள் நோக்கிப் பலதிறப்படும். அவற்றுள் சொல்லாராய்ச்சியும் ஒன்று. அது மொழியாராய்ச்சி யுட்பட்டது. ஒரு மொழிக்குட்பட்ட சொல்லின் அல்லது சொற் களின் வரலாற்றை ஆய்வது சொல்லாராய்ச்சி; ஒரு மொழிக்குப் பிற மொழியோடு அல்லது மொழிகளோடு உள்ள தொடர்பை ஆய்வது மொழியாராய்ச்சி. மொழிகளெல்லாம் பெரும்பாலும் சிலவும் பலவுமாய்த் தம்முட் தொடர்பு கொண்டிருப்பதால், மொழியா ராய்ச்சியில்லாதார் செய்யும் சொல்லாராய்ச்சி கட்டப்படுவதே. சொல்லாராய்ச்சி செய்ய விரும்பும் ஒருவர் முதற்கண், ஏதேனு மொரு மேலை மொழியில், சிறப்பாக ஆங்கிலத்தில், உள்ள மொழிநூல்களையும் சொல்லாராய்ச்சி நூல்களையும் சொல்லிய லகராதிகளையும் கற்றல் வேண்டும். அங்ஙனம் கற்கும்போதே, மொழியொலியியல் (Phonology), சொல் வடிவியல் (Morphology), பொருட்பாட்டியல் (Semasiology) முதலிய மொழி நூற்றுறை களைச் செவ்வன் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். அதன்பின் சொல்லாராய்ச்சி செய்ய விரும்பும் மொழியின் இலக்கணத்தைக் கற்பதுடன், அதிலுள்ள சொற் குடும்பங்களையெல்லாம் தனித் தனியாகவும் தொகுதி தொகுதியாகவும் நோக்கி, அவற்றின் தொடர்புகளை அறிந்துகொள்ளுதல் வேண்டும். பின்னர் அம் மொழிச் சொற்களை அம் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிற மொழிச் சொற்களோடும் ஒப்புநோக்கிக் காண்டல் வேண்டும். சொல்லாராய்ச்சிக்குச் சொல் வரிசைகளை ஒப்பு நோக்குவதினும், இலக்கண நெறி முறைகளை ஒப்புநோக்குவதே மிகுதியும் வேண்டப் பெறுவதாகும். மொழிநூல் அல்லது சொல்லியல்நூல், கணிதம்போலத் தற்சார்புக் கலையன்று. அதற்குப் பிறகலையறிவும் இன்றியமையாது வேண்டப்பெறும். உளநூல் (Psychology), வரலாற்று நூல் (History), ஞாலநூல் (Geography) மாந்தனூல் (Anthropology) என்பன மொழி நூற்குப் பெரிதுந் துணை செய்யும். வணிகம் பற்றி ஒரு மொழியினின்று இன்னொரு மொழிக்குச் சென்று வழங்குஞ் சொற்கட்கெல்லாம் வரலாற்றறிவும் ஞால நூலறிவும் இன்றிய மையாதன. எ-டு: துகி (தோகை), teak (தேக்கு). மேற்கூறியவாறு கருவி நூல்களுங் கலைகளும் கைவரப்பெற்ற பின், எல்லா மொழிகட்கும் பொதுவான சொல்லியல் நெறி முறைகளையும், ஆராய்வான் எடுத்துக்கொண்ட ஒரு மொழிக் கேயுரிய சொல்லாக்க நெறி முறைகளையும் அறிந்து கொள்ளல் வேண்டும். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன வாயினும் பல சொற்கு மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா ஆதலின் அவை இடுகுறியெனக் கொள்ளுதல் கூடாது. சற்று ஆழ்ந்து நோக்கின் அவற்றின் வேர்ப்பொருள் மெல்ல மெல்ல மிளிர்ந்து தோன்றும். சில சொற்கள் காலக்கடப்பில் மிகமிகத் திரிந்தும் இனச் சொற்களை இழந்தும் வேர்ச்சொல் வழக்கற்றும் போனதினால், அவற்றின் வேர்ப்பொருள் எத்துணை ஆழ்ந்து நோக்கினும் தோன்றுவதில்லை. அவற்றுள் ஒரு சிலவற்றிற்கு. அயன் மொழியிலுள்ள இனச்சொற்கள் வேர் காட்டினுங் காட்டும். கடலை, கொடுக்கு முதலிய பல சொற்களின் வேர்ப் பொருள் நோக்கிய மட்டில் தோன்றும். மரம் பொன் முதலிய சொற்களின் வேர்ப்பொருள் ஆழ்ந்து நோக்கினாலன்றித் தோன்றா. தமிழ், கருவி முதலிய சில சொற்களின் வேர்ப் பொருள் ஆழ்ந்து நோக்கி னும் தோன்றுவதில்லை. பொருந்தப் புகலலாக ஒரு சொற்கு பொருட் காரணங் காட்டுவது பொருந்தாது. ஒரு சொற்குக் காட்டும் வேர் எல்லாத் தடைகட்கும் விடையமையுமாறு உலகத் தோடும், கலைகளோடும், மலையாதிருத்தல் வேண்டும். அம்பு (வளையல்) என்னும் சொல்லின் வேர்ப் பொருள், amphi (around) என்னும் கிரேக்கச் சொல்லால் அறியப்படுகின்றது. ஒரு சொல்லின் பொருட் காரணங் காணுதற்கு முதற்கண், அச் சொல்லின் திருந்திய வடிவைக் கண்டுகொள்ளல் வேண்டும். மணத்தக்காளி என்பதன் திருந்திய வடிவு மணித்தக்காளி என்பது. தக்காளி இனத்திற் சிறியது என்பது அதன் பொருள். மணி என்பது ஒரு குறுமைப் பொருள் முன்னொட்டு. மணத்தக்காளி என்னும் தவற்று வடிவிற்கு, மணமுள்ள தக்காளி என்றுதான் பொருள் கூற முடியும். இங்ஙனமே சென்னைப் பல்கலைக்கழக அகராதியிற் கூறப்பட்டுள்ளது. ஒரு சொல்லின் திருந்திய வடிவைக் கண்டபின், அச் சொல்லாற் குறிக்கப்படும் பொருளின் சிறப்பியல்பை நோக்க வேண்டும். ஒரு பொருளின் சிறப்பியல்பு, அப் பொருள் முழுமையுந் தழுவிய தாகவோ அதன் ஒரு மருங்குபற்றியதாகவோ இருக்கலாம். பரிதி (வட்டமானது) என்பது முழுதுந் தழுவியது. வாழை (வழவழப் பானது) என்பது ஒரு மருங்கு (அடிமரம்) பற்றியது. வாழையினுஞ் சிறப்பாகத் தொடர்ந்து வாழ்வது மூங்கிலாதலால், வாழ்வது வாழை என்பது பொருந்தாது. பல குணங்கள் பல பொருட்கும் பொதுவாயிருத்தலின், சிறப்பியல் பென்றது பெரும்பாலும் ஒரு சார் பொருள்கட்குச் சிறப்பா யிருப்பதே. எ-டு: வள்ளம், வள்ளி, வளை, வளையம், வளையல், வண்டு, வண்டி, வணர், வணக்கம், வட்டு, வட்டி, வட்டில், வட்டை இவையெல்லாம் வளைந்தது அல்லது வளையமாயிருப்பது என்னும் பொருள் கொண்டவையே. குணம் என்பது தொழிலையும் தழுவும். எ-டு: : கேழல் (நிலத்தைக் கிளைப்பது) ஒப்புமையும் ஒரு குணமே. எ-டு: நுணா (நுணல் போலுங் காயையுடையது). ஒரு சொல்லான் பல கருத்துகள் எழுப்பப் பெறலாம்.அவற்றின் முன்மை பின்மைத் தொடர்பு அறியப்பட்ட பின்னரே. மொழிப் பொருட் காரணம் துணியப்பெறல் வேண்டும். சிலவிடத்துப் பல காரணங்கள் ஒத்த பொருத்தமுடையனவாகத் தோன்றும். அவற்றுள் மிகப் பொருத்தமானதை ஏரண முறையிலும் ஒப்பு நோக்கியுமே துணிதல் கூடும். எ-டு:: விழா என்னுஞ் சொற்கு விழுத்தல், விழைதல் என்னும் இரண்டும் பொருட் காரணமாகத் தோன்றலாம். விழுத்தல் சிறத்தல், விழைதல் விரும்புதல், விரும்பிச் செய்வது என்னுங் காரணத்தினும் சிறப்புச் செய்வது என்னுங் காரணமே பொருத்த மாம். சிறப்பொடு பூசனை என்று வள்ளுவர் கூறியிருப்பதாலும் சிறப்புச் செய்தல் என்னும் வழக்குண்மையாலும் பின்னதன் மிகுபொருத்தம் அறியப்படும். விழு - விழா, வேள்வியே விரும்பிச் செய்யப்படுவது. வேள்வியொடு செய்யப்படும் விழாக்கள், ஆகுபெயர் முறையில் வேள்வி யெனப்பெறும். இனி சொற்றிரிவு முறைகளையும் முற்பட அறிந்துகொள்ளல் வேண்டும். எ-டு:: இரு குறில் ஒரு நெடிலாகத் திரியும் என்னும் திரிவு முறையால், அகல் - ஆல் (விழுதூன்றிப் படரும் ஆலமரம்), வணங்கு - வாங்கு முதலியனவும்; டகரம், ரகரமாகத் திரியும் என்னும் திரிவு முறையால், படவர் - பரவர், விடிச்சி - விரிச்சி (மறைபொருளை வெளிப்படுத்தலான பாக்கத்து விரிச்சி) முதலியனவும், ழகரம் டகரமாகத் திரியும் என்னும் திரிவு முறையால், புழல் - புடல் (புழலை - புடலை), குழல் - குடல் முதலியனவும் இல் ஈறு ஒரு குறுமைப் பொருட்பின்னொட்டு என்பதால், தொட்டி - தொட்டில், குடி - குடில் முதலியனவும்; அம் ஈறு ஒரு பெருமைப் பொருட் பின்னொட்டு என்பதால், மதி - மதியம் (முழுமதி), நிலை - நிலையம் முதலியனவும்; உகரம் அகரமாகத் திரியும் திரிவு முறையால், குடும்பு - கடும்பு. நுரை - நரை (வெண்மை) முதலியனவும்; உகர ஊகாரம் முறையே இகர ஈகாரமாகத் திரியும் திரிவு முறையால் புரண்டை - பிரண்டை, தூண்டு - தீண்டு முதலியனவும்; விளங்குதல் காண்க. செந்தமிழ்ச் சொல்லியல் நெறி முறைகளும் (Principles of Etymology) சொற்றிரிவு முறைகளும் (Modes of Derivation) எத்துணையோ பல. (1) ஒலிமுறைச் சொல்லியல் (Sound Etymology) எ-டு: பாராளுமன்று - parliament பாராளுமன்று என்பது பார் ஆளும் மன்று என்னும் முச்சொற்றொடர். Parliament என்பது par-ler (speak) என்னும் பிரெஞ்சுச் சொல்லும் ment என்னும் ஆங்கில விகுதியும் சேர்ந்த ஒரே சொல். (2) உன்னிப்புச் சொல்லியல் (Guessing Etymology) எ-டு: அணில் = அழகு (அழகிய வரிகள்) உடையது. அணி = அழகு. கலம் = கல்லாற் செய்யப்பட்டது. வேந்தன் = வெம்மையாய் அதிகாரஞ் செலுத்துபவன். வேம் = வேந்தன். (3) அறிவாகுலச் சொல்லியல் (Pedantic Etymology) எடு. கிளி = கிளப்பது (பேசும் பறவை) மண் = மணப்பது (நாற்றமுடையது) (4) அடிப்பட்ட சொல்லியல் (Popular Etymology) எ-டு: நூல் (புத்தகம்) = இழைநூலும் எற்று நூலும் போல்வது. (5) குறிக்கோட் சொல்லியல் (Tendentious Etymology) எ-டு: : ஐயன் < ஆரியன் (ஆர்ய) அச்சன் < அஜ்ஜ (பிராகிருதம்) < ஆர்ய வெறுக்கை (செல்வம்) = வெறுக்கப்படுவது. (6) வழூஉப் பகுப்புச் சொல்லியல் (Malanalytic Etymology) எ-டு:: சாப்பாடு - சாவதற்கு ஏதுவானது (சா + பாடு) (7) நகையாட்டுச் சொல்லியல் (Playful Etymology) எ-டு: : தோசை இருமுறை சை என்று ஒலிப்பது. தோ (உருது) = இரண்டு. இங்கு காட்டப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளையெல்லாம் மறுக்கவும் விளக்கவும் புகின் விரியுமாதலின் அவற்றுள் நான்கை மட்டும் ஈண்டாராய்ச்சிக் கெடுத்துக்கொள்வல். (1) அணில். அணி = வரி, வரிசை அணி - அணில் = முதுகில் மூவரிகளை யுடையது. (2) வேந்தன் : வேய்தல் = மேலணிதல், முடிசூடுதல். வேய் = வேய்ந்தோன் - வேந்தன் = முடியணியும் உரிமையுள்ள சேர, சோழ, பாண்டியருள் ஒருவன். வேள், மன்னன், கோ, வேந்தன் என்னும் நால்வகையரசர் பெயருள், வேந்தன் என்பது முடியணியும் உரிமையுள்ள மூவேந்தர்க்கே பொதுவாகவுரியதாம். இவ்வுரிமை கிறித்துவுக்கு முற்பட்ட காலமெல்லாம் கையாளப் பெற்று வந்தது. கொன்றை வேந்தன் (சிவன்) என்பது கொன்றை வேய்ந்தோன் என்றே பொருள்படுதல் காண்க. வேந்து என்னும் பாலீறில்லாப் பழவடிவமும் வேந்தன் என்று பொருள் படுவதே; செய்து என்னும் வாய்பாட்டு வினை, முற்றும் ஆதல் போன்று. (3) கிளி, கிள்ளை : கிள் - கிள்ளி - கிளி, கிள் - கிள்ளை, கிள்ளுதல் = கூரிய மூக்கால் கொத்துதல், மரங்களிலுள்ள காய்கனிகளைக் கிள்ளி வைப்பது கிளியின் இயல்பு. பழகாத கிளியை ஒருவன் பிடிப்பானாயின், உடனே அகப்பட்ட உறுப்பைக் காயப்பட வலிதாய்க் கொத்திவிடும் கிளி கொத்தின பழம் என்பது வழக்கு. பேசும் இயல்பு கிளிக்கில்லை. சொல்லிக் கொடுத்ததைச் சொல் லும் இயல்பே அதற்குண்டு. சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை என்பது பழமொழி. சொன்னதைச் சொல்லும் திறத்தில், கிளியினுஞ் சிறந்தது பூவையென அறிக. (4) அச்சன் அத்தன் - அச்சன் (ஆண்பால்) தந்தை அத்தி - அச்சி (பெண்பால்) தாய், அக்கை. இவை தூய தமிழ்ச் சொற்கள். த - ச : போலி. ஒ. நோ. : பித்தன் - பிச்சன். அத்தன், அச்சன் என்பன முறைப்பெயர். ஆரியன் என்பது ஒரு மக்களினப் பெயர்; அத்துடன் ஓர் ஆரியச் சொல். அத்தன், அச்சன் என்பனவும் அத்தி அச்சி என்பனவும் முறையே ஆண்பாலீறாகவும் பெண்பால் ஈறாக்கவும் எண்ணிறந்த தமிழ்ப் பெயர்களில் தொன்று தொட்டு வழங்கி வருகின்றன. எ-டு: தட்டாத்தி, வண்ணாத்தி, கிள்ளிச்சி, வேட்டுவச்சி - பெண்பால். அரசன் என்னும் சொல்லே வடநாட்டில் அஜ்ஜ என்னும் பிராகிருதச் சொல்லாக வருகின்றதென்க. (1) பலமொழிகள் தம்முள் தொடர்பு கொண்டிருப்பதால் சொல்லாராய்ச்சிக்கு மொழியாராய்ச்சியும் வேண்டும். (2) சொற்கள் குடும்பம் குடும்பமாய் இயல்வதால், அவற்றைத் தொகுத்து நோக்கியே மூலங்காணுதல் வேண்டும்; என்னும் இரு நெறிமுறைகளை யுணர்த்துதற்கு, ஒரு சொற்றொகுதியை ஈண்டெடுத்துக் காட்டுவாம். மேலையாரிய மொழிகளிலுள்ள தமிழ்ச் சொற்களுள் ஒரு சில : குலவு - L. curvo, to bend, E. curve குரங்கு (வளைவு, கொக்கி), குறங்கு (கொக்கி) - D. kring, krink, a curl bend, crook E. crank to bend, wind and turn E. cringe A.S. Cringan, Crincan to bend with servility. கறங்கு (வளைவு, வட்டம், காற்றாடி, சுழல்) - A.S. hring O.H.G. hing Icel, hringr, G. ring, D. ring, Sw. ring, E ring. Sw. kring, about, around; Icel, kringer, a circle, Prov G. krink, kring, a ring, circle. குரவை - Gk. choros, a dance in a ring. L. chorus E. chorus. குருள் - D. krullen, Dan krolle, E. crull, curl, குருகு - A.S. cran, D. kraan, G. krahu, kranich; Icel, trans, Dan trane. Armor. karan, W. Garan, Gk. geranos, L. grus, E. crane. கொக்கி - A.S. hoc. E. hook. D. hock, Icel. haki, G. haken, O.H.G. hako, L.G. hake. கொடுக்கு - Icel. crokr, Sw. krok, Don crog. O.E. crok, E. croog, Dan crog, D. kruk, W. crwg, Gael, crocan. O.F. croc. ட.ர. போலி ஒ.நோ. குடகு - coorg, அடைக்காய் - areca கோணம் - Gk. Gonia, an angle. கோட்டை - L. castrum. E. caster. மேற்காட்டிய தென்சொற்களும், மேலையாரியச் சொற்களும், சொல்லளவில் மட்டுமன்றி அடிப்பகுதியிலும் ஒலியும் பொருளும் ஒத்திருப்பதைக் காணலாம். அவற்றுள் மூலம் எவை, திரிபு எவை என்று கண்டுபிடித்தற்கு, அச் சொற்களெல்லாம் எம் மொழியில் ஒருங்கே வழிமுறைத் தொடர்புற்று ஒரு குடும்பமாக வழங்கி வருகின்றன என்று காணுதல் வேண்டும். அவை எம்மொழியில் எங்ஙனம் வழங்கி வருகின்றனவோ அம் மொழியே அவற்றுக் கெல்லாம் மூலம் என்பது முடிந்த முடிபாகும். பல இடங்களில் ஒரு மரத்தின் இலையும் பூவும் காயும் கனியுமாகிய சினைகளே சிதறிக்கிடக்குமாயின், அவை அண்மையிலோ, சேய்மையிலோ உள்ள ஒரு மரத்தினின்றே பறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இதற்கு மாறாக, அச் சினைகளிலிருந்தே அம் மரம் வந்ததென்று வலிப்பது உத்திக்கும் உண்மைக்கும் பொருத்தாத இடும்புக் கூற்றாகும். ஓர் ஊரிலுள்ள மக்கள் வேற்றூர் சென்று வாழின், தொன்றுதொட்டு அவ்வூராரே எனத் தம்மைச் சொல்லிக் கொள்ள முடியாது.அங்ஙனம் சொல்லுதற்குத் தொன்றுதொட்டு வரும் உறையுள், உறவு, நட்பு, அயல் முதலியவற்றைக் காட்டுதல் வேண்டும். மேற்காட்டிய ஆரியச் சொற்கள் மேலை மொழி களில் ஆங்காங்கே ஒன்றிரண்டாகச் சிதறிக் கிடப்பனவே யன்றி, தமிழிற்போல் மரபுத் தொடர்புற்ற ஒரு குடும்பமாக அல்லது குலமாக வழங்கிவருவன வல்ல. ஆரிய மொழிகளில் நூற்றுக் கணக்கான அடிப்படைச் சொற்கள் சொல்லாலும், பொருளாலும் தென்சொற்களை ஒத்திருப்பதால், அவற்றைத் தற்செயலாக நேர்ந்த ஒப்புமைகளெனத் தள்ளிவிடவும் முடியாது. அவற்றின் உண்மைத் தொடர்பைக் காட்டுதற்கு மொழி நூலொடு வரலாறு முதலிய பிற சான்றுகளுமுள. மேற்காட்டிய சொற்கட்கெல்லாம் மூலம் தென்மொழியே என்பது. பின்வரும் சொற்றொகுதியால் அறியலாகும். குல் என்பது வளைவுப் பொருள் தரும் ஒரு வேர்ச்சொல். அதனின்று, வளைவு, கோணல், வட்டம், வளையம், உருட்சி, திரட்சி, குழற்சி, சுழற்சி, சுற்றல், சூழல் முதலிய பல உறவியற் கருத்துள்ள பற்பல சொற்கள் தொடர்ந்து கிளைத்துள்ளன. அவை வருமாறு : குல் - குலா - குலவு - குலாவு. குலவுதல் = வளைதல். குல் - குர் - குர - குரம் = வட்டமான குதிரைக்குளம்பு. குரல் = வளைந்த தினைக்கதிர். குரகம் = வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை. குரங்கு = வளைவு, கொக்கி. குரங்குதல் = வளைதல். குரவை = வட்டமாக நின்றாடுங் கூத்து. குரங்கு - குறங்கு = கொக்கி. குறங்கு - கறங்கு. கறங்குதல் = சுழலுதல். கறங்கு = காற்றாடி. கறங்கல் = வளைதடி. உ-அ, திரிபு. ஒ.நோ; முடங்கு - மடங்கு. குடும்பு - கடும்பு. குறகு = வளைந்த கழுத்துள்ள கருவி. குல் - குன் - குன்னா. குன்னாத்தல் = உடம்பு கூனிப்போதல். குனி, குனிதல் = வளைதல், வணங்குதல். குனிப்பு = வளைந்தாடுங் கூத்து. குனுகு, குனுகுதல் = கடுஞ் சிரிப்பில் உடம்பு வளைதல். கூனல் = வளைவு, முதுகு வளைவு. கூனி = வளைந்த சிற்றிறால், கூனை = கூனுள்ள தோற்சால். குல் - குளை - குளவி - கொடுக்குள்ள தேனீ. குளிகை = மருந்துருண்டை, வளைதடி, திரட்சி. குழல், குழலுதல் - சுருள்தல். குல் - குண் - குண்டு = உருண்டை, உருட்சி, திரட்சி. குண்டம் = உருண்டு திரண்ட பன்றி. குண்டன் = உருண்டு திரண்டவன், வளைந்தது. குண்டுசட்டி = உருண்ட சட்டி. குண்டா = குண்டுசட்டி. குண்டை = உருண்டு திரண்ட காளை, குண்டுசட்டி. குண்டலம் = வட்டம், சுன்னம், குண்டான காதணி. குண் - குண - குணகு. குணகுதல் = வளைதல். குணங்கு. குணங்குதல் = வளைதல். குணக்கு = வளைவு. குணலை = உடல்வளைவு, வளைந் தாடுங் கூத்து. குணி = முடமானது. குணுக்கு = காதிலணியும் உலோக வளையம். குணுக்குதல் = வளைத்தல். குள் - குட்டு = முட்டை. (தெலுங்குச் சொல்லான திசைச்சொல்) குடம் = உருட்சியானது, வளைவு. குட = வளைந்த. குடவு, குடவுதல் = வளைதல். குடக்கம் = வளைவு, குடக்கி = வளைவானது. குடக்கியன் = கூனன். குடங்கு, குடங்குதல் = வளைதல். குடந்தம் = வளைவு, வணக்கம், வழிபாடு. குடந்தை = வளைவு. குடா = வளைவானது குடி = (வளைந்த) புருவம். குள் - குய் - குயம் = வளைந்த அரிவாள். குள் - கூள் - கூளி = வளைந்த வாழைப்பழம். கூள் - கூடு = வட்டமான நெற் களஞ்சியம். கூள் - கொள் = வளைந்த காயிலுள்ள காணம். கொள் - கொட்பு = சுழற்சி. சுற்றுதல். கொட்கு - கொட்குதல் = சுற்றுதல். (கொட்கி) - கொக்கி = வளைந்த மாட்டுறுப்பு. (கொட்கு) - கொக்கு = வளைந்த கழுத்துள்ள ஒரு நீர்ப்பறவை வகை. கொக்கை = கொக்கி. கொட்டு = நெற்கூடு. கொட்டாரம் = களஞ்சியமுள்ள நிலம். கொட்டை = உருண்டை வடிவம். உருண்டு திரண்ட விதை, உருண்டைத் தலையணை. கொடு = வளைந்த. கொடுமரம் = வில். கொடுக்கு = வளைந்த முள்ளுறுப்பு. கொடுக்கன் = தேள். கொடுக்கி = தேட்கொடுக்கி (ஒரு செடி) கொடி = வளைந்த தண்டுள்ள செடி கொடிறு = குறடு, குறடு போன்ற வாயலகு. குல் - (கூல்) - (கொல்) - கோல் = உருண்டு திரண்ட கொம்பு. கோற்றொடி = திரண்ட வளையல், கோலி = உருண்டை. கொள் - கோள் = உருண்டையான (அல்லது சுற்றிவரும்) விண்மீன். கோளம் = உருண்டை. கோளா = உருண்டையான சிற்றுண்டி வகை. கோளம் - கோரம் = வட்டில் (வட்டமான கலம்). கோள் - கோண். கோணுதல் = வளைதல், சாய்தல், கோணம் = சாய்வு. சாய்ந்த மூலை. கோணன் = கூனன். கோணல் = சாய்வு, நெளிவு. கோணை = சாய்வு, பிறழ்வு. கோணையன் = மதி பிறழ்ந்தவன், குதருக்கவாதி. கோண் - கோடு = வளைவு. கோடுதல் = வளைதல். கோடல் = வளைவு, வளைந்த இதழுள்ள காந்தட்பூ. கோடி = வளைவு. கோடை = காந்தள். கோட்டம் = வளைவு. மதிலாற் சூழப்பட்ட கோயில், நிலாவைச் சூழ்ந்த ஊர்கோள். கோட்டம் - கோட்டகம். கோட்டை = வட்டமான நெற்களஞ்சியம், மதிலாற் சூழப்பட்ட இடம், நிலாவைச் சூழ்ந்த ஒளிவட்டம். இக் குடும்பத்தைச் சேர்ந்த பிற சொற்களுமுள. (தமிழ்ப்பொழில் மே. 1956.) எழுத்தமைப்பு ஈகாரத்தினின்று ஏகாரமும், ஊகாரத்தினின்று ஓகாரமும் மோனைத் திரிவாகத் தோன்றின. முதற்கண் நெடிலாகவே தோன்றிய உயிர்கள் பின்னர்க் குறிலாகக் குறுகின. அகரமும் இகரமும் ஐ என்றும், அகரமும் உகரமும் சேர்ந்து ஔ என்றும் இரு புணரொலிகள் (Diphthongs) எழுந்தன. அவை ஒலி யளவில் முறையே அய், அவ் என ஒலித்தன. (த.இ.வ. முன்னுரை.) எழுத்து முதன் முதலாக மக்கள் அமைத்தது பட எழுத்தே. எழுத்து என்னும் சொல் முதன் முதலாக ஓவியத்தையே குறித்தது. இன்றும் படமெழுதுதல் என்னும் வழக்கைக் காண்க. இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம் என்னும் பரிபாடல் அடியில் (19:53) எழுத்து என்பது ஓவியத்தை உணர்த்திற்று. ஓவியன் கைவினை போல எழுதப்படுவது உருவெழுத்தாகும் என்பது யாப்பருங்கல விருத்தி மேற்கோள். இந் நூற்பாவினின்று முற்காலத்திருந்த தமிழெழுத்து படவெழுத்தே (Hieroglyph) என்று துணியலாம். எழுதுதல் எழுத்து கோட்டாலமைவதாலும், முன்னிருந்து பின் அல்லது மேலிருந்து கீழ் இழுத்தே இயல்பாக நட்டுக்கோடு வரையப் படுவதாலும், இழுத்தற் கருத்தில் எழுதுதற் கருத்துத் தோன்றிற்று. கோடிழுத்தல் என்னும் வழக்கு இயல்பாகக் கோடு கீறும் திசையை உணர்த்தும். இல் - இலகு - இலக்கு = (எழுத்து, சொல், நூல்) இலக்குதல் = இழுத்து வரைதல், வரைதல், எழுதுதல். இரேகை யிலக்குக (சைவச. பொது. 274.) இலக்கு - இலக்கியம் = நூல், நூற்றொகுதி. இலக்கு - இலக்கணம் = நூன்மொழி யொழுங்கு, அதைக் கூறும் நூல். இலக்கு - இலக்கி. இலக்கித்தல் = வரைதல். இவ்வுருவு நெஞ்சென்னும் கிழியின் மேலிருந் திலக்கித்து (சீவக. 180) இலக்குதல் = எழுதுதல், குறித்தல். இலக்கு = குறி, குறித்த இடம், இடம், குறிப்பொருள், நோக்கம். இலக்கு - இலக்கம் = எண்குறி, எண். இழு - இழுகு. இழுகுதல் = இழுத்துத் தடவுதல், தடவுதல். இழு - (இழுது) - எழுது - எழுத்து = வரைவு, ஓவியம், வரி, இலக்கியம். எழுதுதல் = இழுத்து வரைதல், வரைதல். எழுதுதல் என்னும் பொருளில், இலக்கு என்னும் தென்சொல் வடமொழியில் லிக் என்று திரியும். இலக்கு என்னும் சொல் மிகப் பழைமையானதாதலால், அதன் பகுதி இன்று இழுத்தற் கருத்தை வெளிப்படையாய் உணர்த்த வில்லை. குமரிநாடும் தொன்னூலும் பல பழஞ் சொற்களும் மறைந்து போனமையும் இதற்குக் காரணமாம். (மு.தா.) எழுதீவுகள் ஒரு காலத்தில் ஞாலநிலப்பகுதி ஏழு கண்டங்களாகவும் இருந்த தாகத் தெரிகின்றது. அவை ஒன்றினொன்று தீர்ந்திருந்தமையால் தீவுகள் எனப்பட்டன. (தீர்வு - தீவு). அவை பெரு நிலப்பகுதிகளாத லால் தீவம் என்றும் சொல்லப்படும் (தீவு - தீவம்). எழுபிறப்பு நிலைத்திணை (தாவரம்), நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மக்கள், தேவர் என்னும் பிறப்புகள் ஏழினும் தீயவை தீண்டா என்பது பிறப்பின் வகை பற்றியும் தொகை பற்றியும் பொருந்தா மையின் எழுமக்கட் பிறப்பாம். (தி.ம. 70.) எள்ளுதல் எள்ளுதலாவது பார்த்தலும் உரையாடுதலும் செய்யாமை. (குறள் 752) எள்ளுதல் என்னும் உளவினை, இகழ்தலாகிய வாய்வினையை யும் புறக்கணித்தலாகிய செய்வினையையும் தழுவும். என் உலக்கை குத்துக் குத்து விளையாட்டு ஆடு முறை : இருபது சிறுமியர் போல் ஒரு வீட்டு முற்றத்தில் வட்டமாக நெருங்கியிருந்து, நடுவண் (மையம்) நோக்கிக் கால்நீட்டி ஒருத்தி பாதத்தோடு ஒருத்தி பாதத்தைச் சேர்த்து வைத்து, ஒவ்வொருத்தியும் இரு முழங்கையாலும் இரு விலாவையும் இடைவிடாது அடித்துக்கொண்டும், என் உலக்கை குத்துக் குத்து, அக்கா உலக்கை சந்தைக்குப் போ என்று மடக்கி மடக்கிப் பாடிக்கொண்டும், மெல்ல மெல்லப் பெயர்ந்து சுற்றிச் சுற்றி இயங்கிக்கொண்டே யிருப்பர். ஆட்டுத் தோற்றம் : தமக்கைக் கொன்றும் தங்கைக் கொன்று மாகக் குறிக்கப்பட்ட ஈருலக்கைகளுள், தமக்கையினது சந்தைக்கு விற்பனைக்காகப் போக, தங்கையினது தங்கிப்போனதினால், அவள் மகிழ்ச்சியோடு அதனால் குத்தின செயலை, இவ் விளையாட்டு நினைவு கூர்விக்கின்றது போலும்! (த.நா.வி.) ஏ என்னும் இரு வேர்ச்சொற்கள் ஏ1. (தன்மைப் பெயரடி) தன்மைப் பெயர்கள் (முதல் நிலை) எண் எழுவாய் வேற்றுமையடி ஒருமை : ஏன் என் பன்மை : ஏம் எம் இரட்டைப் பன்மை : (ஏங்கள்) எங்கள் இவற்றுள், ஏங்கள் என்பது ஏனையீரிடத்து இரட்டைப் பன்மைக் கொத்த வடிவேயன்றி, அவற்றைப் போல் உயர்வு குறித்ததன்று. அதுவும் அடியோடு வழக்கற்றது. ஏன் ஏம் இரண்டும் இன்று பெயராகவன்றித் தன்மை வினைமுற்றீறாகவே வழங்கி வருகின்றன. எ-டு: வந்து + ஏன் = வந்தேன் வந்து + ஏம் = வந்தேம் இவ் வீறுகள் பின்வருமாறு திரியும். ஏ - என் - அன் - அல். எ-டு: வந்தென், வந்தனென், வருவன், வருவல். ஏம் - எம். ம. ஏன்; க. என், ஏனு, ஏனெ, எ; தெ. னு, னி. எ-டு: வந்தெம், வந்தனெம். ம. ஓம்; க. எவு, ஏவு, ஏவெ; தெ. மு, மி. (இரண்டாம் நிலை) எழுவாய் வேற்றுமையடி ஏன் - யான் என் ஏம் - யாம் எம் ஏங்கள் - யாங்கள் எங்கள் ம. எங்ஙள் bj. ஏனு, ஏ; f. யான், ஆன். k. ஞாங்கள்; bj. ஏமு, மேமு; f. ஆம், ஆவு. யகரம் மொழி முதலெழுத் தன்மையாலும், எகரத்திற்கும் யகரத்திற்குமுள்ள நெருங்கிய தொடர்பினாலும், 2 ஆம் நிலை வடிவுகளும் முதல்நிலை வடிவுகள் ஒத்தே வேற்றுமையடி கொண்டன. (மூன்றாம் நிலை) எழுவாய் வேற்றுமையடி யான் - நான் நன் யாம் - நாம் நம் யாங்கள் - நாங்கள் நங்கள் ம. ஞான்; f. நானு, நா; bj. நேனு, நே. k. நாம், நோம், நம்மள்; bj. மனமு; f. நாவு. இவற்றுள், நன் என்னும் வேற்றுமையடி இற்றைத் தமிழில் வழக்கிறந்தது. அது தெலுங்கு, கன்னடம் முதலிய திரவிட மொழி களில் இன்றும் வழங்குகின்றது. அது குடியேற்றப் போற்றிக்காப்பின் (Colonial Preservation) பாற்படும். இற்றை வழக்கில் இல்லாத பழஞ்சொற்களும் சொல் வடிவுகளும், முழுகிப்போன குமரிக்கண்ட உலகவழக்கிலும் இறந்துபட்ட இலக்கிய வழக்கிலும் இருந்தன என்றறிதல் வேண்டும். நங்கள் என்பது இற்றை இலக்கிய வழக்கில் உள்ளது. நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே (திவ். பெருமாள். 7,3) நங்கள் வரிவளை யாயங்காளோ (திவ். திருவாய். 8, 2, 1) கூர்மதி வாய்ந்த குமரிக்கண்டப் பொதுமக்கள், யகர முதல் நகர முதலாகத் திரிந்த நிலையைப் பயன்படுத்தி, பன்மை வடிவில் அவ்விரு முதலுக்கும் பின்வருமாறு வேறுபாடு காட்டித் தமிழைப் பண்படுத்தியுள்ளனர். யாம், யாங்கள் = தனித் தன்மைப் பன்மை அல்லது படர்க்கை யுளப்பாட்டுத் தன்மைப் பன்மை. நாம், நாங்கள் = முன்னிலை யுளப்பாட்டுத் தன்மைப் பன்மை. இக்கால வழக்கில், யாங்கள் என்னும் சொற்குப் பகரமாக (பதிலாக), நாங்கள் என்பது தவறாக வழங்கி வருகின்றது. இதற்கு யாவடிச்சொல் வழக்கற்றுப் போனதே காரணம். தன்னையும் தன்னோடிருக்கும் பிறரையும் மட்டும் சேர்த்துக் குறிப்பது தனித் தன்மைப் பன்மையாம். நாம் என்னும் பெயரினின்று ஆம் ஈறு தோன்றியுள்ளது. அது அம் என்று குறுகவுஞ் செய்யும். இவ்விரண்டும் தன்மையொடு முன்னிலையை உளப்படுத்தும். எ-டு: நாம் வந்தாம், நாம் வந்தம், நாம் வந்தனம். ஆம் ஈறு ஓம் என்றும் திரியும். இது செய்யுள் வழக்கில் படர்க்கையையும், உலக வழக்கில் முன்னிலை படர்க்கை யிரண்டையும், உளப்படுத்தும். எ-டு: யாம் (நானும் அவனும், நானும் அவரும், யாமும் அவனும், யாமும் அவரும்) வந்தோம் - செய்யுள் வழக்கும் உலக வழக்கும். நாம் (நானும் நீயும், நானும் நீரும்) வந்தோம் - உலக வழக்கு. அம்ஆம் என்பன முன்னிலை யாரையும் எம்ஏம் ஓம்இவை படர்க்கை யாரையும் உம்ஊர் கடதற இருபா லாரையும் தன்னொடு படுக்கும் தன்மைப் பன்மை (நன். 332) உம்ஊர் கடதற (கும், டும், தும், றும்). ஏகாரவடியினின்று தோன்றாமையால் இங்குக் குறிக்கப் பட்டில. ஏ 2. (வினாச்சொல்லடி) ஏ = எந்த. எ-டு: ஏவூர் = எந்தவூர். இது தெலுங்க வழக்கு. இப் பெயரெச்ச வழக்கு இற்றைத் தமிழில் அற்றது. ஏ ஈற்று வினா வெழுத்தாகவும் வரும். எ-டு:: வந்தானே = வந்தானா. ஏது = 1. எது. 2. எப்படிக் கிடைத்தது. ஏ - ஏவன், ஏவள், ஏவர், ஏது, ஏவை. ஏன் = என்ன காரணம் பற்றி க. ம. ஏன். ஏ - யா. யா = யாவன், யாவள், யாவர், யாவது, யாவை. யா = யாவை. யாவர் - யார் - ஆர். யாவது - யாது. ம. யாவன், யாவள், யாவர் (யார், ஆர்), யாது, யாவ. க. யாவனு, யாவளு, யார், யாவது, யாவவு. தெ. எவடு, ஏதி, எவரு, ஏதி, ஏவி. யா - யாங்கு, யாண்டு = எங்கு. யாங்கு - யாங்கண். ஹேகெ தெ. க. ஏட. யாங்கு - யாங்கனம் - யாங்ஙனம் - யாங்ஙன் யா - ஆ - ஓ. ஆவும் ஓவும் ஈற்றுவினா வெழுத்துக்கள். எ-டு: அவனா, வந்தானா அவனோ, வந்தானோ ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ (தொல். 32) ஏ - எ = எந்த. எ-டு:: எக்காலம், எப்படி. f., k., எ எ - எம்மை = 1. எவ்வுலகம். எம்மை யுலகத்தும் (நாலடி. 132) 2. எப்பிறப்பு. எம்மைக் கிதமாக (கம்பரா. சடாயுவுயிர். 99) எவ்வது (=எவ்வாறு) எ - எந்த. எந்தா, எந்தோ, எதா, எதோ, எதோள், எதோளி = எங்கு. எங்கு, எங்கே (where) எங்கைக்கு (whither) ம. எங்ஙு. எங்கு - எங்கண், எங்கு - எங்கிட்டு. எங்கு - எங்கனம் - எங்ஙனம் - எங்ஙன். எம்பர் = எங்கு. எம்பருமின்மையின் (பெருங். நரவாண, 2: 13) எது - எத்து - எஃது. தெ. எதி. ம. எந்து எ - எவ் - எவன், எவள், எவர், எது, எவை. எவ் = எவை. vt‹ = v‹dJ., என்ன. எவன், யாது என்னும் இரு சொற்களுள், முன்னது முற்றும் அறியாப் பொருள் பற்றியும், பின்னது சிறிதறிந்த பொருள் பற்றியும், வினாவாய் வரும். எ-டு: காராமணி என்பது எவன்? இப் பயறுகளுள் காராமணி என்பது யாது? யாதெவன் என்னும் ஆயிரு கிளவியும் அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும் அவற்றுள், யாதென வரூஉம் வினாவின் கிளவி அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத் தெரிந்த கிளவி யாதலு முரித்தே (தொல். 514, 515) எவன் = 1. எம்மாந்தன் (உயர்திணை) 2. என்னது (ஒருமை) அஃறிணை. 3. என்ன (பன்மை) } எங்கு - எங்குற்றை = எவ்விடம். எங்குற்றைக்கு = எவ்விடத்திற்கு. எங்குற்றை - எங்குத்தை - எங்கித்தை. எங்கித்தைக் கன்மமெலாஞ் செய்தாலும் (சி.சி.10: 6) எங்குற்றைக்கு - எங்குத்தைக்கு. எங்குத்தைக்குச் செலுமிது (பதினொ. நம்பி. திருநா. திருவே. 5) எவ் - எவண் = எங்கு. எவன் - என் = எது, என்னது, என்ன, ம. என்ன என் - என்னை, என்னே, என்னோ. என் - என்னவன், என்னவள், என்னவர், என்னது, என்னவை. என்னவன் = 1. யாவன். 2. எத்தகையன். என்னவன் - என்னன். என்னன் எவ்விடத்தன் (இரகு. யாக. 90) என்னவர் தங்கட்கேனும் (கந்தபு. கிரவுஞ். 4) என்னத்தான்= எக்குலத்தான் (வடார்க்காட்டு வழக்கு) என்னர் = யாவர். அருந்தொடைச் சித்திரமதனை யென்னரே யளந்தறிபவர் (இரகு. திக்கு. 196) என்னரும் = எதும், சிறிதும், எவ்வளவும். என்னருங் கருதான் (பெருங். நரவாண. 2: 41) என்னோரும் = 1. எத்தன்மையோரும். 2. எல்லாரும். என்னோருமறிய எடுத்துரைத்தன்று (பு.வெ. 9:6, கொளு) என்னது - எந்து = 1. என்ன. அதெந்துவே (திருவாச. 29) தெ. ம. எந்து 2. எவ்வாறு. செயலாம் வழிமற் றெந்தோ (தணிகைப்பு. பிரம. 4) ம. எந்து. க. எந்த்து இனி, எது - எத்து - எந்து என்றுமாம் என்னது - எற்று (என் + து - என்ன) எற்றுக்கு. என்ன. M. enna, என்ன - என்னவோ - என்னமோ. என்று = எப்போது. ம. என்று. க. எந்து என்றூழி = என்றைக்கும். என் - எனை = என்ன, எந்த, எத்தகைய. எனைத்து = எவ்வளவு. எனையவன் - எனையன், எனைவன் = யாவன். எனைவராயினு (பெருங். வத்தவ. 3: 22) தன்மைப் பெயரடியும் வினாச்சொல்லடியுமான ஏயிரண்டும், உயர்வும் எழுச்சியும் குறித்த ஏ யென்னும் உரிச்சொல்லினின்று தோன்றியிருக்கலாம். ஏபெற் றாகும் (தொல். 788) குறிப்பு : தன்மைப் பெயரின் ஏகாரவடி அண்மைச் சுட்டான ஈகாரத்தின் திரிபாகவும், வினாச்சொல்லின் ஏகாரவடி எழுச்சி குறித்த ஏகாரமாகவும், இருக்கலாம். ஏகாரச்சுட்டு (1) எழுகைக்கருத்தும் உயரக்கருத்தும். ஏ = எழு, உயர், பெரு. L. E, ex, Gk. ec, ex, exo, Fr, Sp. - es, out (pfx) up, out. ஏகல் லடுக்கம், ஏ பெற்றாகும் ஏக்கழுத்தம் என்னும் வழக்கை நோக்குக. ஏக்காளம் - எக்காளம். ஏ - ஏழ் - ஏழு. ஏழ் - எழு - எழுவு. எழுவுதல் = ஒலியை எழுப்புதல். எழு - எழும்பு. ஏழ் - யாழ் = ஒலியெழுப்பல், இசை, பண், நரப்பிசைக்கருவி. எழு + ஆல் = எழால் = யாழ் வாசிப்பு, ஒரு பறவை. எழு + இல் = எழில் = எழுச்சி, அழகு. எழில் - எழிலி = மேலெழுந்து செல்லும் மேகம். எழிலி - எழினி = மேலெழுந்து செல்லும் திரை. எழு + சி = எழுச்சி = எழுகை. உள்ளக்கிளர்ச்சி. L. elate; lofty, E. elate, to raise; elation, pride. ஏழ் = எழுவும் இசை. ஏழ் என்னும் எண். இசை (சுரம்) ஏழாதலால் ஏழாம் எண் அப் பெயர் பெற்றது. ஏர் = எழுகை, பயிர்த்தொழில், கலப்பை, அழகு. ஏர்தல் = எழுதல். உலக முவப்ப வலனேர்பு திரிதரு (முரு.1) பயிர்பச்சைகளை எழுப்பும் உழவுத்தொழிலும் அதற்குரிய கருவியாகிய கலப்பையும் ஏர் எனப்பட்டன. L. aro. Gk. aroo. Ir. araim, A.S. erian, E. ear, to plough. E. arable = that can be ploughed. பயிர்பச்சை அழகானவை. மக்களிலும் பயிர்பச்சையிலும் வளர்ந்த நிலையில்தான் அழகு தோன்றும். ஒ.நோ: அலம் = கலப்பை, அழகு. அலம் + கரி = அலங்கரி. கரிப்பு = மிகுதி. கடு - கடி - கரி. கரி + அம் = காரம் (முதனிலை திரிந்த தொழிற்பெயர்). ஒ.நோ: பரி + அம் = பாரம், படி + அம் = பாடம். அலம் - அலவு - அலகு - அளகு - அழகு, ஏண் - உயரம், ஏண் - ஏணி = மேலேற்றுங் கருவி. ஏண் - ஏணை = குழந்தையை ஏந்தும் தொட்டில். ஏண் - சேண் = உயரம், வானுலகு. தூரம், சேணோன் = மேலுள்ளோன், வேந்தன் (இந்திரன்). ஏ = பெருமை, உயரம். ஏபெற்றாகும் (தொல். 788), ஏவுதல் = எழுதல். ஏ - ஏவு = உயரம். G. heben, A.S. hebban, E. heave, Goth, hafjan, to lift. E. heaven, O. Ice. hifinn. A.S. heofon, the air, the abode of the Deity. Lit. the ‘heaved’ or ‘lifted up.’ ஏண் - யாண் - யாணம் - யாணர் = எழுச்சி, புதுவருவாய். யாண் - யாணு = எழுச்சி, அழகு. யாணுக்கவினாம் (தொல். 865) ஏண் - சேண் - சேடு - சேடி = மேலிடம், விஞ்சையுலகு. சேடியர் = விஞ்சையர். ஏம் = உயரம், பாதுகாப்பு, இன்பம். ஒருவன் ஒரு விலங்கிற்குத் தப்ப வேண்டுமென்றால் மரத்தின் மேலும், பகைக்குத் தப்ப வேண்டுமென்றால் மதில் மலை மலைக்கோட்டை முதலிய வற்றின் மேலும் ஏறிக்கொள்ளுதல் இயல்பு. குன்றேறி யானைப் போர் கண்டற்றால் (குறள் - 758) என்பதையும் நோக்குக. ஏம் - ஏமை - யாமை - ஆமை = பாதுகாப்பான ஓடுள்ளது. ஏம் + ஆர் = ஏமார் - ஏமா (அல்லது) ஏம் + வா = ஏம்வா - ஏமா. ஏமாத்தல் = இன்புறுதல், மகிழ்தல். ஏம் + மாறு = ஏமாறு - ஏமா, ஏம் + அறு = ஏமறு - ஏமா = பாதுகாப்பான, அறிவிழந்து பேதைப்படு. ஏம் - ஏம்பு - ஏம்பல் = மகிழ்ச்சி. ஏம் + அம் = ஏமம் = பாதுகாப்பு, இன்பம். ஏமம் வைக லெய்தின்றா லுலகே (குறு. 1) ஏமம் > சேமம் > க்ஷேமம் (வ.). ஒ.நோ: ஏண் > சேண். ஏறு = மேலேறு. ஏறு - ஏற்றை = ஏறிப் புணரும் ஆண் விலங்கு. ஏறு - ஏற்று - ஏற்றம் = நீரை மேலேற்றும் துலா. ஏற்றம் = மேன்மேல் எண்ணுதல், துணிதல். ஏற்றம் நினைவும் துணிவுமாகும் (தொல். 821) ஏ - சே - சேவு. சே = காளை (ஆவின் மேலேறுவது). சேவு - (சேகு) - (சேக்கு). E. jack, the male. ஏர் - (ஏர்து) - எருது (ஆவின் மேலேறுவது). இனி, ஏர் (கலப்பை) - ஏர்து - எருது என்றுமாம். ஏறு - ஏற்று = உயர்த்து, புகழ். ஏத்து = உயர்த்து, புகழ். ஏந்து = கை உயர்த்தித் தாங்கு. ஏந்து + அல் = ஏந்தல். ஏந்தல் = நாட்டைத் தாங்கும் அரசன். ஏல் = கையேந்து, கையேந்தி வாங்கு, தாங்கு, மேற்படு, முற்படு. ஏல (நி. கா. வி. எ.) = முன்னதாக, A.S. oer, E. ere, before, Goth. air, soon, E. early, from oer. ஏரான் = ஒரு வேளையில் பள்ளிக்கு முதலாவது வந்தவன். ஏற்க + என = ஏற்கென - ஏற்கன. ஏங்கு = மூச்சையெழுப்பு, பெருமூச்சுவிடு, ஒன்றை நினைத்து வருந்து, பேரவாக்கொள், கவலைப்படு. E. heave, to lift up, to force from the breast. ஏங்குவது ஏக்கம். Cf. E. anxiety, anguish. ஏங்குதல் = அடிவயிற்றினின்று மேலெழுந்தொலித்தல், ஒலித்தல். ஏங்கொலிநீர் ஞாலத்திருளகற்றும் (தண்டி. மேற்கோள்.) ஏங்கு - இயங்கு - இயக்கு = ஒலி, வாத்தியத்தை ஒலி. ஏ - இய - இயம் = ஒலி, சொல், வாத்தியம். இயவர் = வாத்தியக் காரர். இயம் - இயம்பு = ஒலி, சொல். ஏ - இய - இயை - இசை = ஒலி. ஏம் - ஏம்பு - தேம்பு = ஏங்கு. தேம்பித் தேம்பி யழுகிறான் என்னும் வழக்கை நோக்குக. ஏ - சே - சேய். சேய்மை - உயரம், தூரம். மேனோக்கிய தொலை உயரமும் பக்கம் நோக்கிய தொலை தூரமுமாகும். ஏல் - எல் = மேலெழும் சூரியன், ஒளி, வெள்ளை, தீ, செம்மை. எல் - என்று = சூரியன், தீ. என்று + ஊழ் = என்றூழ். என்று - ஏன்று - ஏண்டு - யாண்டு - ஆண்டு. எல் - எல்கு - இளகு = நெருப்பால் உருகு என்றுமாம். ஒ.நோ: உரு (நெருப்பு) - உருகு. எல்கு - எஃகு = உருக்கு. எல் - எரி - எரு = காய்ந்த சாணம். எரி - எரு - எருப்பு (தெ.) = சிவப்பு. எல் - எர் - எல் > இல். எர் > இர். இலந்தை = செம்பழமுள்ளது. இரத்தி = இலந்தை. இராகி = சிவந்த கேழ்வரகு. இராகி (தெ) = செம்பு. L. oeris, copper. இல் - அல். அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு. இர் - அர். அரத்தம் = சிவப்பு, குருதி. அரத்தப்பூம் பட்டாடை. அரக்கு = சிவந்தது. அரிணம் - அருணம் = சிவப்பு. அருணன் = காலைச் செங்கதிரவன். அரத்தம் - ரத்தம் - ரக்த (வ.) Ice. raudh, Ger. roth. Celt. ruadh, rhudd, Gk. rythros, L. ruf, A.S. read, E. red, blood like colour. எல் - இல் - இல - இலகு - இலங்கு. இலங்குவது இலக்கம். இலகுதல் = விளங்குதல். எல்லே யிலக்கம் (தொல். 754). இலகு - இலக்கு = விளக்கத்திற்குரிய பொருள், எடுத்துக்காட்டு, குறி, இடம். மலையிலக்கு = மலைபோல் விளங்கக் கூடிய பொருள். Cf. E. Illustrate, from L. illustris - il, in, luceo. to shine. இலக்கு + அம் = இலக்கம். இலக்கு + இயம் = இலக்கியம் > லக்ஷ்யம் (வ.) - விளக்கத்திற்குரிய பொருள், எடுத்துக்காட்டு, குறி, இடம், நோக்கம். இலக்கு = இடம். L. locus, a place. இதனின்று locus, local, locate முதலிய ஆங்கிலச் சொற்கள் பிறக்கும். ஓர் இடத்தை இலக்கு என்பது தென்னாட்டு வழக்கு. எல் - எலி = வெள்ளெலி. எலி x கருப்பை = காரெலி. எல் - எல்லை, எல்கை, எல்வை = சூரியனால் ஏற்படும் கால அளவு, காலவெல்லை, இடவெல்லை, எல்லை. ஒ. நோ. பொழுது = சூரியன், காலம், காலவெல்லை. எல் - ஏல் - வேல் - வேலை - வேளை. வேல் - வேலி = எல்லைத்தடுப்பு. வேலி - வேல் = வேலி யடைக்கும் முள், வேலமரம். வேலை = நிலவெல்லையான கடல். எல் - Gk. helios, the sun. எக்கு = வயிற்றுப்பாகத்தை மேலெழுப்பு. எஃகு = வில்லாற் பஞ்சையெழுப்பித் தூய்மை செய். எகிர் = எழும்பு. எச்சு - உச்சம். ஹெச்ச தாய் = உச்ச நிலை. எஞ்சு = மேற்படு, மிகு, மீந்திரு. எஞ்சு + அம் = எச்சம் = மீந்திருப்பது. எஞ்சு + இல் = எச்சில் = மீந்த வுணவு, உமிழ்நீர், எஞ்சுவது எச்சு. எச்சு = மீந்த வுணவு, வாய்நீர்பட்டவுணவு, வாய்நீர். எச்சம் = பறவை துப்புவதுபோல் இடும் மலம். பெற்றோர் இறந்தபின் மீந்திருக்கும் பிள்ளைகள். எட்டு = உயர நில், தூர நில், கையுயர்த்தித் தொடு. எட்டு = மேன் மேல் வைக்கும் காலடித் தூரம். எடு = மேலெடு, தூக்கு, சுவர் அல்லது கட்டிடம் எழுப்பு, வெளிப் படுத்து, நீக்கு. எடு + ஐ = எடை. எடுப்பு = உயர்வு, வளர்ப்பு. கிழங்கெடுத்தல் முள்ளெடுத்தல் முதலிய வழக்குகள் வெளிப்படுத்தற் பொருளைக் குறித்தல் காண்க. ஆங்கிலத்தில், elevate, erect, edify, educate, elicit, முதலிய சொற்களும் e, ex முதலிய முன்னொட்டுகளும், எகர முதனிலையைக் கொண்டு, மேற்படுத்தல் எடுத்தல் வெளிப்படுத்தல் முதலிய பொருள்களை யுணர்த்தல் காண்க. Cf. E. - Gk. epi, Sans. api, L. ob, on. எண் = மேன்மேல் நினை, மேன்மேல் தொகையிடு. எத்து = மேனோக்கி உதை, ஏமாற்று. எம்பு = எழும்பு. எவ்வு = எழும்பு, குதி, தாண்டு. எறி = மேல்விடு. எற்று = எத்து, நிமிர்த்து. கழுதையுதைப்பு மேனோக்கியதாதலின் எறிதல் என்று சொல்லப்படுவதை நோக்குக. என் = மேன்மேற் சொல், சொல். என்று, என்றா, எனா, என என்னும் வினையெச்ச விடைச் சொற்கள் எண்ணுதற் பொருளில் வருதலை நோக்குக. தென்னு = மேனோக்கிப் பெயர், நெம்பு = தென்னு. பெயர் = கீழிருப்பதை மேற்படுத்து, வெளியாக்கு, இடம் மாறு, பெயர் - பேர். நெள் - நெடு - நெட்டு - நெட்டை. நெள் - நிள் - நீள் - நீடு. நீள் + சி = நீட்சி. நிள் - நிர் - நிர. நிரத்தல் = மிகுதல், கலத்தல். நிர - நிரம் - நிரம்பு. நிர - நிரை. நிர - (நிற) - நிறை. நிள் - நிண்டா (தெ.) நிள் - நில். நிற்றல் = நெட்டுக்கிருத்தல். நில் + அம் = நிலம். நில் + ஐ = நிலை. நில் - நிலு - நிலுவை. நிலு - நிறு - நிறை. நிலுத்து - நிறுத்து. நிறு - நிறுவு. நிறு + வை = நிறுவை. நிறுத்தல் = நிற்பித்தல், தராசை நிற்பித்து எடை பார்த்தல். நிலை - நினை. நினைத்தல் = மனதில் ஒரு பொருளை நிறுத்தல். நெடு - நடு - நட்டு - நாட்டு. நெட்டு - நட்டு. நடுதல் = நெட்டுக்கு வைத்தல், நிற்பித்தல். ஏ - மே - மேல். மேல் + கு = மேற்கு. மே + கு = மேக்கு. மேல் - மேனி. மே - மெய் = உடம்பு, கட்புலனான உடம்பு போல் உண்மையானது. Cf. substance - substantial = true. மே - மேது = மேல் மண்ணிடு. மேல் - மேலு - மேடு - மோடு. மேடு - மேடை - மேசை. ஒ. neh.: பீடம், table; பீடபூமி, table land மே - மேய் - வேய். மே + கம் = மேகம் (மேலுள்ள நீர்). மே - மேவு = மேற்படு, பொருந்து, விரும்பு. நம்பு மேவு நசையாகும்மே. மே - மீ - மிகு. மிகு - மிகை - மிசை (மேல்.) மீ - மீது - மீறு - வீறு. மீது - மித = நீர்மேற் கிட. மிதப்பு = செருக்கு. மிலை = தலைமேலணி. மீது - மெத்து = மேற்படு, வெல். மெத்து - மெத்தை = மேல்தளம், மேனிலை, மேலிடும் பஞ்சணை. மெத்து - மெது. மெதுவு = பஞ்சணை போன்ற மென்னிலை. மெது - மம்ருது(வ.). A.S. smoethe, E. smooth, LG. smoedig, G. schmeidig, மெது - மெல் = மெதுவு, மெதுவாகு, மெதுவாகும்படி பல்லால் அரை. E. mellow, soft and ripe, A.S. mearu, Dut. mollig, L. mollis. Gr. malakos, soft. E. mollify, to make soft, to calm. L. mollusc, one of those animals which have a soft body. E melt, A.S. meltan, to soften, to become liquid. E. mill, A.S. miln, G. muhle, L. mola, a mill-molo, to grind. Skt. mrid. to bruise. மிகல் - மிக்கிலி(தெ.). Goth. mikilis, Ice. mjok, A.S. micel, O.E. michel, muchel, E. much. மீ - மிஞ்சு - விஞ்சு. மிஞ்சு + அம் = மிச்சம்; மிஞ்சு + இல் = மிச்சல். மிசை = மிஞ்சியதை உண், உண். மிச்சில் மிசைவான் புலம் (குறள். 85). Cf. E. mess, to eat. O. F. mes, F. mets. செலவுக் கருத்து. ஏ = மேற்படு, மேற்செல், அசை, செல், பொருந்து, அடை, அறி. ஏ - இய - இயல். இய -இயங்கு - இயக்கம். இயங்கு = அசை, செல். இயக்கம் = அசைவு, செலவு, கிளர்ச்சி. இய - இயவு = செல்லும் வழி. இய = அசை, செல். இயவு - இயவுள் = வழிச் செலுத்தும் கடவுள். இயல் = (வி.). அசை, நட, நிகழ், செய்யமுடி, செய்யப்படு, தோன்று; (பெ.) நடக்கை, ஒழுக்கம், தன்மை, தன்மையைக் கூறும் நூற்பகுதி, தோற்றம், இயற்கை. இயல் - இயல்வு - இயல்பு = தன்மை, இயற்கை. இயல் + கை = இயற்கை. இயல் - ஏல் = நிகழ், செய்யமுடி. ஏல் + படு = ஏற்படு = நிகழ், தோன்று, அமை. ஏற்படு - ஏற்பாடு. இய + அம் = இயம் = தோற்றம், தோற்றம் குறிக்கும் ஈறு. இயம் - அம் - ம். எ-டு:: பண் - பண்ணியம், தாய் - தாயம். ஆசிரியன் - ஆசிரியம் (ஒரு வகைப்பா). முத்துவீரியம் தொல்காப்பியம் முதலிய நூற் பெயர்களும் இயம் ஈறு பெற்றவையே. ஏ = செல். ஏ - யா - ஜா - ga - go. யா + திரை = யாத்திரை - யாத்ரா - ஜாத்ரா. (இ.) திரை ஒரு தொழிற்பெயர் விகுதி. Dan, A.S. gaa, gan, E. go, G. gehen,Skt. gam. ஏ - ஏகு = செல். ஏ - ஏவு = செலுத்து, தூண்டு. ஏ = செலுத்தும் அம்பு. ஏ - எய் = அம்பைச் செலுத்து. எய்நர் - எயினர் = அம்பெய்யும் வேடர். எயில் = அம்பெய்யும் மதில், மதில். ஏ - ஏய் = பொருந்து, ஒப்பாகு, உண்மை போலச் சொல்லி ஏமாற்று. ஏய = பொருந்த, போல (உவமையுருபு). ஏ - எய் = பொருந்து. அடை, குறி. எய்யாமையே அறியாமையே (தொல்.) எய் - எய்து = அடை. ஏ - இய - இயை - இசை - இணை - பிணை, இசை = பொருந்து, ஒப்பாகு, இணங்கு, பொருத்து. ச - ன - ண போலி. எ-டு:: பூசை - பூனை. போடு - A.S. potian, L. positus - pose - pono, to place. இணை - இணர் = கொத்து. தன்மைப் பெயர். ஏ = உயர்வு. நான் என்னும் அகங்காரம் மாந்தனுக்கு இயல்பாக வுண்மையால், முந்தியல் தமிழன் தற்பெருமையும் தன்னலமும் பற்றி ஏகாரச் சுட்டால் தன்னைக் குறித்தான். ஏன் - யான் - நான் (ஒருமை). ஏம் - யாம் - நாம் (பன்மை). வினாப்பெயர். ஒரு பொருளை எதுவென்று வினவும் போது, ஒரு கூட்டமான பொருள்களில் ஒன்றை மேலெடுத்துக் காட்டச் சொல்வது போலிருக்கிறது. இதனால், வினாக் கருத்து எழுகைச் சுட்டில் தோன்றிற்று. ஏ = எந்த (எது, எவை). ஏ - எ. ஏது - எது - எதா - எதோ - எதோளி. எது - எதன். ஏன் > ஏவன் > எவன். ஏம் > ஏவம் > எவம். ஏன் - என் - என்னே - என்னை. ஏ - எவ். எவள் - எவண். எவன், எவள், எவர், எது, எவை. என் - என்ன = எத்தகைய. என் - எனை = எவ்வளவு. என் - எந்து - எந்த - எந்தா. எம் - எம்மை. எல் + து = எஃது. எல் + து = என்று. எல் - எல்ல = எவை. எல்ல + உம் = எல்லவும் - எல்லாம். ஒ. நோ: யா + உம் = யாவும் = எல்லாம். எல்லாம். A.S. eal, G. all, Gael, uile, W. oll, E. all. இனி, அல்ல + உம் = அல்லவும் - அல்லாம் - எல்லாம் என்று மாம், ஒ.நோ: அனை - அனைத்து - அனைத்தும், அல்லாம் என்று நாட்டுப்புற வழக்குமுண்டு. ஏ - யா. யாது (ஒ.) ah, ahit (g.), (ஏண்டு) - யாண்டு. (ஏங்கு) - யாங்கு. ஏங்கு - எங்கு. யாவன், யாவள், யாவர், யாவது, யாவை. யார் - ஆர். யா - ஆ - ஓ. ஒ. நோ: வந்தான் - வந்தோன். ஏ - ஆ - ஓ ஈற்று வினா வெழுத்துகள். எ-டு: வந்தானே? வந்தானா? வந்தானோ? ஓகாரம் உயரத்தைக் குறித்தாலும், அதனடியாய் ஒரு வினாச் சொல்லும் பிறவாமையின், அதை யாவின் குறையாகிய ஆகாரத்தின் திரிபென்றே கொள்ள வேண்டும். ஆவோவாகும் பெயரு மாருளவே (தொல். 680) (சு.வி.) ஏகாரவிடைச்சொல். ஏ = உயர், மேற்செல், தொடர். எழுதிக்கொண்டேபோ = go on writing, ஒன்றேகால் = one and a quarter. மேல் என்று பொருள்படும் on என்னும் சொல் ஆங்கிலத்தில் தொடர்ச்சி குறித்தலைக் கவனிக்க. அரசனே அன்முறையாய் நடந்தால் ஆரிடம் சொல்வது என்னும் வாக்கியத்தில், ஏகாரம் உயர்வுப் பொருள் குறித்தது. (சு.வி.) ஏதம் ஏதம் : சிதைத்தல் = குலைத்தல், வெட்டுதல், அழித்தல். சிதை - சித் (வ.). சிதை - சேதம் - ஏதம் = கேடு, குற்றம். சேதம் - சேத (வ.). (தி.ம. 738). ஏது ஏது - வ. ஹேது ஏ - ஏவு - ஏசு - ஏது. ஏசுதல் = ஏவுதல், செலுத்துதல். கொல்லம் பேசி (தேவா. 380 : 6). ஏது = ஏவுகை, தூண்டுகை, காரணம். ஏது நிகழ்ச்சி = கருமங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக் கொடுத்ததற்குத் தோன்றுகை. ஏது நிகழ்ச்சி யெதிர்ந்துள தாதலின் (மணி. 3 : 4) ஏது - ஏதன் = மூலக் காரணனான கடவுள். ஏதனை யேதமிலா விமையோர் தொழும் வேதனை (தேவா. 471:3) வடவர் வடசொற்குக் கூறும் வேர்ப்பொருளும் தூண்டுதல் என்பதே. அதற்குக் காட்டும் வேர் ஏவுதற் பொருளுள்ள ஹி என்பதாகும். கூறுத லுசாத லேதீடு தலைப்பாடு (தொல். பொ. 207) ஏதீடு = காரணமிட்டுரைத்தல் ஏமப்புணை ஏமப்புணையாவது நடுக்கடலில் கப்பல் மூழ்கும் போது கலவர் ஏறித் தப்பும் ஏமப்படகு (Life-boat). வாழ்க்கைக் கடலைக் கடக்கும் இல்லறத்தார்க்கு இடுக்கண் காலத்தில் உதவிக் காக்கும் இனத்தார் ஏமப்புணையார். பிறவிக் கடலைக் கடக்கும் துறவு பயில்வார்க்குத் தவ வோகங்களில் தவறு நேர்ந்து அவர் கெடும் நிலையில் அவரைத் திருத்தி ஆற்றுப்படுத்தும் முழுத்துறவர் ஏமப்புணையார். (தி.ம. 176).