குறுந்தொகை விளக்கம் ஆசிரியர் மகாவித்துவான் இரா. இராகவையங்கார் தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 600 017.   நூற் குறிப்பு நூற்பெயர் : குறுந்தொகை விளக்கம் ஆசிரியர் : இரா. இராகவையங்கார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 1993 மறுபதிப்பு : 2009 தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 40 + 680 = 720 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 450 /- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ.மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030   பதிப்புரை தமிழ்மொழியின் தொன்மையையும் தமிழ் இனத்தின் பெருமையையும் தமிழ் நிலத்தின் வளமையையும் மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல்களைத் தேடித்தேடி எடுத்துத் தமிழ், தமிழர் நல நோக்குடன், நிலைத்த நூல்களைத் தமிழ்மண் பதிப்பகம் குலைகுலையாய்த் தமிழ் உலகிற்கு வழங்கி வருவதைத் தமிழ் உலகம் அறியும், பழம்பெரும் மொழிகளெல்லாம் வாழ்ந்து செழித்த காலத்தில் நம் தொன்மொழியாம் தமிழ்மொழியும் வாழ்ந்தோங்கி இருந்தது, பழம்பெரும் மொழிகளில் சில இருந்த இடம் தெரியாமல் அழிந்தும் சில அருங்காட்சியகத்தில் வைத்துப் பார்க்கத்தக்க அளவிலும் இருக்கும் இந்தக் காலச்சூழலில் இளமை குன்றா வளம் கொழிக்கும் மொழியாகவும், பேச்சுமொழியகவும், எழுத்து மொழியாகவும், அறிவியல் மொழியாகவும், நின்று நிலைத்து வாழும் நம் தமிழ்மொழியின் அருந்தமிழ்ச் செல்வங்களையெல்லாம் ஒரு சேர வெளியிட்டுத் தமிழ் நூல் பதிப்பில் தனிமுத்திரை பதித்து வருகிறோம், சங்க இலக்கியத் தொன்மையும் பெருமையும் உலக இலக்கிய வரிசையில் சிறப்பிடம் பெற்ற அறிவுக் கருவூலம். பல்லாயிரம் ஆண்டுகள் பழமைச் சிறப்புடைய பழந்தமிழர் ஆவணம். பண்டைத் தமிழரின் வாழ்வியல் களஞ்சியம். செவ்வியல் மொழிகளுள் உயர்ந்தோங்கி நிற்கும் மலைவிளக்கு. பழந்தமிழர்களின் தலை இலக்கியம். தாய்மை இலக்கியம். வீர இலக்கியம். அடிப்படை இலக்கியம். தமிழர் தம் உயிரோடு உயிர்த்தெழுந்த உயிர் இலக்கியம். தமிழ்மண்ணின் மணம் கமழும் இயற்கை இலக்கியம். தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை உலகுக்குக் காட்டும் உயர் இலக்கியம் நம் செவ்வியல் இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகை நூலுக்கு முதுபெரும் தமிழறிஞர் இரா. இராகவையங்கார் எழுதிய உரைவளத்தை தமிழகப் பல்கலைக் கழகங்களுள் சிறந்து விளங்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1993 ல் வெளியிட்டுள்ளது. இவ்வருந்தமிழ்க் கருவூலத்தைத் தமிழுலகம் பயன் கொள்ளும் வகையில் மீள் பதிப்பாக வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய கலைப் பெட்டகம். தமிழர் வாழ்வியலுக்கு ஓர் எல்லைக் கல். தமிழ முன்னோரின் வாழ்வும் வரலாறும் நெறிமுறைகளும் பிணைந்து கிடக்கும் பொற்குவியல். பழந்தமிழப் பண்பாட்டை, நாகரிகத்தை, இசையை, கலையை அறிய உதவும் காலப் பெட்டகம். பண்டைத் தமிழ்க் குமுகத்தை உள்ளது உள்ளபடியே காட்டும் படிமக்கலங்கள். ஐவகை நிலப் பிரிவுகளின் மக்கள் பிரிவுகளையும் படிப்படியாக அந்த மக்கள் பெற்ற மாற்றங்களையும் கண்ணாடிபோல் காட்டும் கைவிளக்கு. தமிழ் தமிழர் தமிழகம் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அறிய உதவும் தமிழர்தம் வைப்பகம். கல்வெட்டு செப்பேடு ஆயவற்றின் மூல வைப்பு. உணர்ச்சி ஊட்டும் உயிர் நட்புக்கும் உவமை காணா வீரத்திற்கும் ஒப்பிலாக் கொடைக்கும் சான்றாக நின்று நிலவும் பண்பாட்டுப் பெட்டகம். மாந்த வாழ்வின் எதிரொலியும் எதிரொளியும் நிறைந்த ஒளிவிளக்கு. உயர்ந்த ஒழுக்க நெறிகளைப் புகட்டும் ஒழுக்க நூல். அற உணர்வுகளைத் தாங்கி நிற்கும் அற இலக்கியம் நம் செவ்விலக்கிய நூல்கள். பதிப்பு முன்னோடிகள் நீராலும் நெருப்பாலும் வெள்ளப் பெருக்காலும் கரையான் அரிப்பாலும் அழிந்தது போக மறைக்கப்பட்டும் புதைக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் போனவை போக எஞ்சிய நூல்களையெல்லாம் தேடித் தேடி எடுத்துத் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கொடையாக வழங்கிச் சென்ற பழந்தமிழ்ப்பதிப்பு முன்னோடி களை நன்றி உணர்வோடு வணங்குகிறோம். அவர்களுக்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ப் பணியைத் தம் உயிர்ப்பணியாய்க் கொண்டு அருந்தமிழ்ச் செல்வங்களையெல்லாம் தமிழ்கூறும் உலகிற்குப் பதிப்பித்து வழங்கிய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் உள்ளிட்ட ஏனைய தமிழ் நூல் பதிப்பகங்களையும் இந் நேரத்தில் நினைவு கூர்வது எம் கடமையாகும். செவ்விலக்கியக் கருவூலங் களுக்கு அரும்பெருந்துணையாக இருந்து இந்த நூல் வெளிவருவதற்கு அடித்தளமாய் இருந்த பெருமக்கள் அனைவரையும் வணங்குகிறோம்.. செல்வாக்கு இழந்துபோன இலக்கியச் செல்வங்களையெல்லாம் மீட்டெடுக்கும் எம் தமிழ்க் காப்புப் பணிக்குத் தோள் தந்து உதவுங்கள். சங்க இலக்கியம் அருங்காட்சியகப் பொருளாக ஆகிவிடக்கூடாது. மக்கள் இலக்கியமாக மலர்ந்து மணம் தர வேண்டுமென்ற தளரா உணர்வுடன் மக்களுக்காக மக்களையே கருப்பொருளாகக் கொண்டு பாடிய பண்பாட்டுச் செல்வங்களைச் செம்பதிப்பாகத் தமிழ்மக்களுக்குத் தந்துள்ளோம். பிழையும் குறையும் காணின் சுட்டி எழுதுங்கள். எதிர்வரும் பதிப்பில் குறைநீக்கி நிறைவு செய்வோம். கோ. இளவழகன்   பதிப்பு வரலாறு குறுந்தொகை மூலமும் உரையும் -1915 எட்டுத்தொகையுள் இரண்டாவதாகிய இக் குறுந்தொகையை அரிதின் ஆய்ந்து முதற்கண் வெளியிட்ட பெருந்தகை திருக்கண்ணபுரம் திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கனார் ஆவர். ங்கசாமி என்பது இவர்தம் பெயர். இவர் தந்தையார் சௌரிப்பெருமாள் ஐயங்கார். பிற்காலத்தில் சங்க இலக்கிய ஆய்வுக்குத் தூண்டுதலாக இருந்த அய்யம்பேட்டை முத்துரத்தின முதலியாரே இவரைத் தமிழ்க் கல்வி பெறுதற்கு மதுரை செல்லுமாறு தூண்டினார். சோழவந்தான் கிண்ணி மடம் சிவப்பிரகாச சுவாமிகளிடமும், பெரும்புலவர் அரசஞ் சண்முகனாரிடமும் அருந்தமிழ் கற்றார். வாணியம்பாடி மகமதியர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். தொல்காப்பியப் பொருளதிகாரத்தைச் சிலமுறை பயின்றார். அதில் வந்துள்ள தொகை நூற் செய்யுள்களில் உளந்தோய்ந்தார் குறுந்தொகை எனக் குறிக்கப்பட்ட செய்யுள்கள் பெயருக்கேற்பச் சிறியவையாய்க் காணப்பட்டமை யாலும், அந்நூல் முழுவதும் கிடைக்கலாம் என்ற துணிவுண்டாயமை யாலும் அதனைத் தேடி உரைசெய்து வெளிப்படுத்தலாம் என முயற்சி மேற்கொண்டார். அந்நிலையில் முத்துரத்தின முதலியார் சென்னை அரசினர் ஓலைச் சுவடி நூல் நிலையத்திலுள்ள குறுந்தொகைச் சுவடியைப் படியெடுத்து உதவுமாறு அரங்கனாரை வேண்டினார். அதனால் சென்னை சென்று அச்சுவடியைப் படியெடுத்துக் கொண்டு திரும்பினார். அப் படியோ பிழை பொதிந்து பொருளறிவாரா நிலையில் சிதைவு மீக்கூர்ந்து இருந்தது. அந்நிலையறிந்த முத்துரத்தின முதலியார் அரங்கனார் ஆர்வம் அறிந்து சீரியதோர் குறுந்தொகைச் சுவடியை வருவித்துத் தந்துதவினார். மற்றும் அகநானூறு, நற்றிணை, பரிபாடல் ஆகிய சுவடிகளையும் உரை வரைதற்கு ஏதுவாக வழங்கினார். அரங்கனார்க்குக் கிடைத்த குறுந்தொகைச் சுவடிகளில் 300ஆவது செய்யுளின் மேலே ஒரு செய்யுள் அகப்படவில்லை அதனை அகப்படுத்துதற்காக மதுரைத் தமிழ்ச் சங்கச் சுவடிச் சாலைக்குச் சென்று ஆங்கிருந்த சுவடியைப் பெற்று ஒப்பிட்டார். பாட வேறுபாடும் குறித்துக்கொண்டார். அவ்விடுபட்ட செய்யுள் ஆய்வளை ஞெகிழவும் என்னும் 316 ஆவது செய்யுளாக இருக்கக் கண்டு மகிழ்ந்தார். அதன்பின்னே மிதிலைப்பட்டி, செவ்வூர் முதலிய இடங்களுக்குச் சென்று ஏடு தேடினார். பழந்தமிழ் ஏடுகளுள், ஓர் ஏட்டில் குறைவான பகுதிகள் மற்றை ஏடுகளிலும் குறைவாகவே இருப்பதும், எத்துணை ஏடுகளைத் தேடிக் காணினும் அக்குறை நிரம்பாதே போதலும் கண்கூடாகலின் ஒரு பாட்டுப் புதிதாகக் கிடைத்தமைக்கு மகிழ்ந்து உரை எழுதத் தொடங்கினார். வேறு சுவடிகள் கிடைக்குமோ என வேண்டுகோள் விடுத்து வேண்டியும் பயன் பெற்றிலர். இத்தொகையை ஆய்ந்து மூல பாடங்காணலும், உரை வரைதலும் எத்தகு அருமை என்பதை அரங்கனார் குறிப்பிடுகிறார்: பேரறிவும் பேராற்றலுமுடைய தக்க தமிழறிஞர் பலர் ஒன்றுகூடிப் பல பிரதிகளை வைத்துக் கொண்டு பன்னெடு நாளும் ஆராய்ந்து பதிப்பிப்பதாயினும் மூலமளவிலும் முற்றும் திருத்தமாகப் பதிப்பித்தல் முடியாததாகுமென்பது சங்கத்துத் தொகை நூல்களைப் பொறுத்தவரையிலும் எட்டுணையும் மறுக்கமுடியாத ஓருண்மையாகும். இத்தகைய அருமைவாய்ந்த ஒருவகைத் தொகை நூலுள் ஒன்றைச் சிற்றறிவும் வலிக்குறைவு முடைய யான் அசலுக்குச் சரியான நகல் என்பதாக வெளிப்படுத்தத் துணியினும் அஃதெனக்கே நகை விளைவித்திடும் செய்கையாகவும் அவா வெள்ளத்தில் அச்சிற்றறிவும் வலிக்குறைவு மாழ்ந்திடவே, பேராசிரிந்த சீராசிரியரான பேராசிரியர்க்கே இருபது பாட்டிற் பொருள் புலப்பட்டிலதென ஓராசை உலகினிறுவி உயரிய இக்குறுந்தொகை நூற்குப் பொருள்காணத் துணிந்தேன். மூலமளவிற் பதிப்பித்தல் சிறிதும் பயன் தராததாகும் பொருளெழுதியே பதிப்பித்திடுக முயன்றால் முடியாததென் என்றின்னோரன்ன அன்பர்களின் வற்புறுத்துக்களும் என்னை வலியுள்ளேனாக மயங்கச் செய்து ஊக்கங் கொள்ளச் செய்திட்டன. ஆதலின் அவாவின் பெருக்கிலாழ்ந்து அதனிடைப்பட்டு முற்றும் உரையெழுதி இற்றைக்கு மூவாண்டின் முன்னர் (1912) முடித்தேன்.” குறுந்தொகை மூலத்துள் சில மாறுபாடுகள் செய்துள்ளார் அரங்கனார், இடக்கர்ச் சொல்லாகிய குஃறொடரன்மொழி இந்நூலில் ஒன்பதிடங்களில் வந்திருந்தவற்றை அறவொழித்துச் செய்யுளிற் குறை தோன்றாதவாறு ஏற்றவற்றைச் சேர்த்து உரையெழுதியமை ஒன்றாகும். இங்ஙனம் செய்தமைக்குக் காரணம் பழந்தமிழ் நூல்கள் பலவற்றைத் தமிழுலகிற்குத் தந்த தக்காராகிய ஸ்ரீமான் சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் கலித்தொகை யகத்து மாற்றிவைத்துக் காட்டிப் போந்த காரணமேயாம்! என்று இதற்குச் சான்று காட்டுகிறார் அரங்கனார். இனிச், ‘செய்யுள், கருத்துரை, பாடினோர் பெயர் எனச் சுவடிகளில் கண்டமுறையை மாற்றி கருத்துரை, பாடினோர் பெயர், செய்யுள் என அமைத்துக் கொண்டு உரை வரைந்துள்ளார். கருத்துரையின் முன்னே என்பதன் அறிகுறியாக இருந்த எ-து என்பதை இது என மாற்றியுள்ளார். கருத்துரையில் இவர் செய்த மாற்றங்கள் 24 அவற்றை ஆங்காங்கு உரைக்கண் குறித்துள்ளார். முற்றிலும் உரை காணவொண்ணாவாறு கிடந்த 364, 366, 367, 372, 376 எண்களுள்ள ஐந்து செய்யுள்களையும் சுவடிகளில் உள்ளவாறு உணருமாறு மாற்றாமல் அப்படியே பதிப்பித்துள்ளார். குறுந்தொகை பாடினோர் 205 பேர் என்னும் குறிப்பை உட்கொண்டு, இறை வணக்கம் பாடிய பெருந்தேவனார் ஒருவரையும் சேர்த்து 206 பேர் ஆகுமாறு ஒழுங்கு செய்து பாடினோர் பெயரும் பிறவும் என்னும் தலைப்பில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். புறநானூற்று அச்சுப் புத்தக முகவுரையில் இருநூற்று நால்வர் எனக் குறிப்பிட்டிருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார். அறிஞர்களின் திருத்தங்களை வந்தனத்தோடு ஏற்றுக் கொண்டு மறுபதிப்பில் அவற்றைத் தழுவி இன்ன இன்ன திருத்தங்கள் இவ்விவ்வறிஞர் களால் அறிவிக்கப்பட்டன வென்றும் மகிழ்ந்து சுட்டி அவர்கள் செய்தருளிய பேருதவியைப் பலர்க்கும் பயன்படச் செய்து என் நன்றியறிவையும் மறவாமற் கூறுவேன் என்று தம் பணிவும் ஆர்வமும் தோன்ற உதவியுரைத்தலில் வரைகின்றார். 150-ஆவது செய்யுள்வரை விரிவாக உள்ள உரை, பின்னே சுருங்கிவிடுகிறது. அதற்கு அச்சகத்தில் நேரிட்ட தொல்லையே காரணமாம். எட்டுப் பக்கம் கொண்ட படிவங்கள் 18 அச்சிடற்குப் பதினெட்டுத் திங்கள் ஆயினவாம். அதனால் விளக்கவுரைப் பகுதியைச் சுருக்கிப் பத்தொன்பதாவது படிவத்திலிருந்து முப்பத்தொன்பதாவது படிவம் வரை இருபத்திரண்டு நாள்களுள் பதிப்பித்து முடித்திருக்கிறார். அதனை அவ்வளவு விரைவில் அச்சிட்டுதவிய வேலூர் வித்யாரத்நாகரம் அச்சுக்கூடத் தலைவர் ஏ.டி.இராசகோபால் பிள்ளைக்கு நன்றி கூறியுள்ளார். அச்சுக் கூடத்தாரிடத்துப் பெரிதும் அஞ்சி நின்ற எனாது அச்சத்தை அறவே ஒழித்து விட்டார் என்று எழுதும் தொடரால், அதற்குமுன்னே அச்சிட்ட அச்சகத்தாரிடை இவர் பட்டபாடு புலப்படுகின்றது. உதவியுரைத்தலும், குறுந்தொகைக் குறுந் துணையாக அருந்தொகை யுதவிய பெருந்தகைச் செல்வர்கள் பெயரும் உதவிய தொகையும் என்னும் பட்டியும், மேற்கோளாட்சி விளக்கமும், அருங்குறிப்புக்களும் பிறவும், எஞ்சியவைகளும் உரையில் மேற்கோள் கொண்ட நூல்கள், பாடினோர் பெயரும் பிறவும் என்னும் பகுதிகளை 43 பக்க அளவில் முற்பகுதியாக உடையது. அரங்கனார் குறுந்தொகை. இன்னும் சோழவந்தான் கிண்ணிமடம் சிவப்பிரகாச சுவாமிகள் திருவுருவப் படம் பதித்து உரிமையுரை வழங்கியதும், வேலூர் ஊரீசு கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் பு.க.சீனிவாசாசாரியர் வழங்கிய சிறப்புப் பாயிரமும், மணக்கால் அய்யம்பேட்டை முத்துரத்தின முதலியார் வழங்கிய முகவுரையும் முதற்கண் முறையே இடம்பெற்றுள. பின்னிணைப்பாக அரும்பத அகராதி, குறுந்தொகைச் செய்யுண் முதற் குறிப்பகராதி. பிழையும் திருத்தமும், விளம்பரம் என்பவை இடம்பெற்றுள. இதன் விலை ரூ.2-0-0 தபாற் கூலி வேறு என்னும் குறிப்புள்ளது. அரங்கனார் உரையை, “திணை, உள்ளுறை, இறைச்சி, மேற்கோள், இலக்கணக் குறிப்பு முதலியவற்றைச் சுட்டிச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தலாகிய புத்துரை என்று பாராட்டுகிறார் முத்துரத்தின முதலியார். இவற்றுடன் ஒவ்வொரு பாடலுக்கும், ‘மெய்ப்பாடு, பயன் என்பவற்றையும் உரையாசிரியர் குறிப்பிட்டுச் செல்கிறார். பாடவேறுபாடு ஆங்காங்குக் காட்டியுள்ளார். மேற்கோள்களைச் செவ்விதில் அடிக்குறிப்பாக அமைத்துள்ளார். தாம் ஆய்ந்த பிரதிகளின் நிலைமையையும் ஆங்காங்குச் சுட்டுகிறார். கருங்கால் வேம்பின் என்னும் 24-ஆம் பாடலில், இவ்வடியில் (ஈற்றயலடியில்) ஒருசீர் விடுபட்டது போலும்; இவ்வடியும் ஈற்றடியும் பிரதிகள் தோறும் சிதைந்து காணப்பட்டன. ஆதலின் ஒருவாறு அனுமானித்துக் குறிக்கப் பட்டன என்றும், முட்டுவன் கொல் தாக்குவேன் கொல் என்னும் 28-ஆம் பாடலில், இப்பாட்டுப் பிரதிகளில் சிதைந்து காணப்பட்டது ஆதலின் ஒருவாறு வரையப்பட்டது.’ என்றும் அடிக்குறிப்பாகக் குறிக்கிறார். இவ்வாறே அனுமானிக்கப்பட்ட பாடங்களை 178, 277, 383 ஆகிய பாடல்களில் சுட்டுகிறார். சில பாடல்களில் மிகைபோலும் (259, 392) என்றும், இடம் விடப்பட்டுள்ளது (200, 394) என்றும், கருத்துரை குறைவாக உள்ளது (366) என்றும், வரலாறு புலப்படவில்லை (328, 393) என்றும், பொருள் விளங்கவில்லை (172,223, 330, 364, 369, 379, 385, 388) என்றும் ஆங்காங்குக் குறிப்பிடுகிறார். ஒன்பதடிப் பாட்டாக உள்ளது என்றும் (391) இப்பாட்டு ஆறடியினதாதல் உணர ஒரு பிரதியில் 4, 5 அடிகளுக்கு இடம் விடப்பட்டிருக்கிறது (266) என்றும் சுவடியில் பாடல் இருந்த நிலைமையைத் தெளிவிக்கிறார். சேணோன் என்பதற்கு (150) இராக்காலத்து மரத்துச்சியில் இருப்பவன் என ஒரு பிரதியில் உரையுண்மையைச் சுட்டுகிறார். சுவடியில் உள்ள துறையினும் இத்துறையே பொருத்தமென (319) ஓரிடத்தும், இத்துறை வேறு சுவடியில் உண்டு என்பதை மற்றோரிடத்தும் (353) குறிப்பிடுகிறார். அரிதின் முயன்று தேடியும் தகுதிவாய்ந்த சுவடி கிடையாமையால் இவர் பட்டுள்ள இடர்ப்பாடுகள் இனிதின் விளங்குகின்றன. அவ்விடர்ப் பாடுகளுக்கிடையே உரை கண்டு தம் பெயரை நிலைப்படுத்திக் கொண்ட அரங்கனார் உள்ளமும் உழைப்பும் ஒன்றை ஒன்று விஞ்சியனவேயாம். தாமரை புரையும் காமர் சேவடி என்னும் கடவுள் வாழ்த்துப் பாடலில் சேவலங் கொடியோன் என்பதற்கு சேவல்-கோழிச் சேவல்; அது முருகன் கொடியின் கண்ணதாதலை கோழியோங்கிய வென்றடு விறற்கொடி என்றதனான் (திருமுரு.38) ஓர்க. இனி, சேவல் - ஆண்மயிலுமாம். என்னை? பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ எனவும் (திருமுரு.122) மணிமயில் உயரிய மாறா வென்றிப், பிணிமுகவூர்தி ஒண்செய் யோனும் எனவும் (புறம்.56) ஆசிரியர் நக்கீரர் கூறுதலான். சேவற் பெயர்க் கொடை சிறகொடு சிவணும், மாயிருந் தூவி மயிலலங் கடையே என்றதனால் (தொல்.மரபு.48) தோகையோடு கூடி மென்மைத்தன்மை மேவிப் பெண்டன்மை கொண்ட மயிலிடத்துச் சேவற் பெயர்க்கொடை சேராதேனும், வேலன் கொடியில் வீறு பெற்றுப் போர் முகத்து நின்று ஆண்டன்மை மிக்க மயிலிடஞ் சேறற்கு இழுக்கின்றென்க இதனை அச் சூத்திரத்து உரையிறுதியில், செவ்வேனார்ந்த மயிற்காயின் அதுவும் நேரப்படும் என்று ஆசிரியர் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் வரைந்தமையும் வலியுறுத்தும்; அன்றியும் இங்குத் தேவிற் சிறந்த திருமாலும் சிவபெருமானும் ஊர்தியையும் கொடியையும் ஒன்றாகக் கொண்டிருத்தலும் கருதத்தக்கது என்று இவர் விரித்தெழுதும் திறம் அறிந்து இன்புறற் பாலதாம். இவ்வாறே பின்னும் நயமுற எழுதுவார். இத்தொகை நூல் பற்றிய பழங்குறிப்பு இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிகள் இரு நூற்றைவர்; இத்தொகை நாலடி சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது என்பது. மாணவர்கள் தம் ஆசிரியரிடத்திலிருந்து தகவுரையோடு கையெழுத்து வாங்கி எமக்கனுப்புவார்களாயின் அவர்கட்கு இரண்டு ரூபா விலையுள்ள குறுந்தொகை மூலமும் உரையும் ஒன்றரை (1-8-0) ரூபாவிற்கு அனுப்பப்படும். ஒரு மாணவர் ஒரு புத்தகத்திற்குத்தான் எழுதிப் பெற்றுக் கொள்ளலாம் (தபாற்கூலி வேறு) என்று இவர் பொறித்துள்ள குறிப்பு இவர்தம் மாணவர் நிலையில் பட்ட முந்திய பண முட்டுப்பாடும் நூல் கிடைத்தல் தட்டுப்பாடும் எழுப்பிய உணர்வின் விளைவாகலாம்! குறுந்தொகை - மூலம் - 1920 குறுந்தொகை மூலம் மட்டும் அறிஞர் கா.நமசிவாய முதலியாரால் 1920-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது. அது குமாரசாமி நாயுடு அண்டு சன் அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது. ஆனால் அப்பதிப்பு வெளிப்பட்டு உலாவியது பற்றி அறியக் கூடவில்லை. 1 வெளிவந்ததாகத் தெரியவில்லை என அறிஞர் வையாபுரிப் பிள்ளை குறிப்பிட்டுள்ளார். குறுந்தொகை - மூலமும் உரையும் - 1930 மூலமும் உரையும் கூடிய இப்பதிப்பு. இராமரத்தின ஐயரால் எழுதப்பெற்ற புத்துரையுடையதாகும். இதனைப் புரசபாக்கம் சேசாசல ஐயர் என்பார் கலா நிலையம் பதிப்பாக வெளியிட்டார். ஆயினும் புத்தக வடிவில் வெளியாகவில்லை என அறியப் பெறுகிறது. குறுந்தொகை - மூலம் - 1933 இப்பதிப்பு புரசபாக்கம் சர்.எம்.சி.டி. உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் சோ.அருணாசல தேசிகரால் பதிப்பிக்கப் பெற்றதாகும். இப்பதிப்புகள் சுவடிகொண்டு ஆராய்ந்து பதிக்கப் பெற்றன அல்ல. அரங்கனார் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. பதிப்புதோறும் சில திருத்தங்களை யுடையனவாயினும், சுவடி கொண்டு ஆராய்ந்தவை அல்ல என்பர். குறுந்தொகை மூலத்தை மட்டும் முதன்முதல் வெளியிட்டவர் தமிழறிஞர் சி.வை.தாமோதரம் பிள்ளை என்பவர் என டாக்டர் மா.இராசமாணிக்கனார் குறிப்பிடுவார். ஆனால் அச்செய்தி அறியப் பெறவில்லை. அவர்தம் வரலாற்றிலும் இச்செய்தி குறிப்பிடப் பெற்றிலது. குறுந்தொகை - மூலமும் உரையும் - 1937 டாக்டர் சாமிநாதையர் எழுதிய பதவுரை, விளக்கவுரை முதலியவற்றைக் கொண்ட பதிப்பு இது. ஐயர் முழுமையாக உரை எழுதிய நூல் இக்குறுந்தொகையேயாம். மற்றை நூல்களையெல்லாம் அரும்பதவுரை, மேற்கோள், ஒப்புமைப் பகுதி முதலியன எழுதி எழிலும் பயனும் கெழுமப் பதிப்பித்தார். இந்நூற்கே முற்றிலும் உரைகண்டு வெளியிட்டுள்ளார். இதனை ஆய்ந்து வெளியிட்ட வகையையும் காரணத்தையும் முகவுரையில் கூறுகிறார்: பலவகையான குறிப்புக்களும் அகராதிகளும் எழுதி வைத்துக்கொண்டு பொருள் வரையறை செய்யத் தொடங்கினேன். நாளடைவில் பெரும்பாலான செய்யுட்களின் பொருள்கள் விளங்கின. இனி இதனை அச்சிட்டு வெளிப்படுத்தலாம் என்று எண்ணியிருந்தேன். இடையே வாணியம்பாடி ஹைகூல் தமிழ்ப் பண்டிதராக இருந்த தி.சௌ. அரங்கசாமி ஐயங்காரென்பவர் குறுந்தொக்கு உரையெழுதி 1915-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டனர். அப்பால் குறுந்தொகை ஆராய்ச்சியில் எனக்கிருந்த ஊக்கம் சிறிது தளர்ந்தது. பிற நூலாராய்ச்சியில் கருத்தைச் செலுத்தலானேன். பின்பும் சிலர் சில பத்திரிகைகளில் இந் நூலை வெளியிடுவதாகக் கேள்வியுற்றேன்.... பழைய உரை இல்லாமையால் புதிய உரை எழுதி இந்நூலை நான் வெளியிட வேண்டுமென்ற கருத்து சில தமிழன்பர்களுக்கு இருந்ததை உணர்ந்தேன். பல அன்பர்கள் அடிக்கடி தூண்டி வந்தார்கள். முற்கூறிய ஐயங்காரவர்கள் உரைப்பிரதி இப்பொழுது எங்கும் கிடைக்கவில்லை. பல வருஷங்களாக உழைத்துத் தொகுத்த குறிப்புக்கள் வீணாகாமல் இருக்கும் பொருட்டு இந்நூலை வெளியிட வேண்டுமென்ற எண்ணம் எனக்கு மீண்டும் உண்டாயிற்று குறுந்தொகை உரைவிரிவுமிக்கது. ஒவ்வொரு பாடலும் கூற்று, கூற்று விளக்கம், மூலம், பிரதிபேதம், பழைய கருத்து, ஆசிரியர் பெயர், பதவுரை, முடிபு, கருத்து, விசேடவுரை, மேற்கோளாட்சி, ஒப்புமைப் பகுதி என்னும் பன்னிரு பகுதிகளைக் கொண்டு இயல்கின்றது. முன்னே முகவுரையும், பின்னே செய்யுள் முதற் குறிப்பகராதியும், அரும்பத முதலியவற்றின் அகராதியும் சேர்க்கப்பட்டுள்ளன. பாடிய புலவர்கள் பெயர்களும் பாடிய பாடல் எண்களும் காட்டப்பட்டுள்ளன. பிரதிபேதங்கள் எனத் தனியே எட்டுப் பக்கங்களும் உண்டு. இவ்வாராய்ச்சிக்குக் கிடைத்த சுவடிகள். திருவாவடுதுறை ஆதீனம் சுவடி 1 திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர் சுவடி 1 மந்தித்தோப்பு மடத்தில் கிடைத்த சுவடி 1 செங்கோல் மடத்தில் கண்ட சுவடி 1 திருமயிலை சண்முகம் பிள்ளை கடிதச் சுவடி 1 சோடாசவதானம் சுப்பராய செட்டியார் சுவடி 1 தொழுவூர் வேலாயுத முதலியார் சுவடி 1 சென்னை அரசினர் கையெழுத்துப்புத்தக சாலைச் சுவடி 1 புதுக்கோட்டை இராதாகிருஷ்ணையர் கடிதச் சுவடி 1 திருக்கோணமலை த.கனகசுந்தரம் பிள்ளை கடிதச் சுவடி 1 இப்பத்துச் சுவடிகளும் மூலச் சுவடிகளே. அதிலும் ஒன்றைப் பார்த்து ஒன்று எழுதினவாகவே இருந்தனவாம். குறுந்தொகை 380 பாடல்களுக்குப் பேராசிரியர் உரை எழுதினார் என்றும், அவர் எழுதாது விட்ட 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதினார் என்றும் நச்சினார்க்கினியர் உரைப்பாயிரம் குறிக்கின்றது. நல்லறி வுடைய தொல்பே ராசான் கல்வியுங் காட்சியுங் காசினி அறியப் பொருள்தெரி குறுந்தொகை இருபது பாட்டிற் கிதுபொரு ளென்றவன் எழுஅரதா தொழிய இதுபொரு ளென்றதற் கேற்ப உரைத்தும் என்பது அது. இப்பேரறிவாளர்கள் எழுதிய உரையுடன் கூடிய சுவடி சௌரிப் பெருமாளரங்கருக்கோ, சாமிநாதையர்க்கோ கிட்டிற்றில்லை. நச்சினார்க்கினியர் உரைப்பாயிரச் செய்யுள் கிட்டாக்கால் இவ்வுரை தானும் இருந்ததென்னும் குறிப்புமின்றி ஒழிந்திருக்கும் என்றே எண்ண வேண்டியுளது. அவ்வுரையின்மையை ஒருவகையான் நிறைவு செய்யும் பணியையே மேற்கொண்டார் ஐயர். அரங்கனார் அரிதின் முயன்றும், அறிக்கை விடுத்தும் கிடையாத சுவடிகள் பல ஐயருக்குக் கிடைத்தன. அவை அவர்தம் செல்வாக்கை எளிதில் விளக்குவன. அவர் தேடிக் கொண்ட சுவடிகளை அல்லாமல், அவரைத் தேடிக்கொண்டு வந்த சுவடிகள் உண்மையை அறிவோம் அல்லவோ! அப்பேறு எளிதில் எவர்க்கும் வாய்ப்பதோ? ஆகலின் ஓரிரு சுவடிகளைக் கண்ட அளவில் பலரும் அமைந்து பதிப்பித்தாராகப் பல சுவடிகளை ஆய்ந்து வெளியிட்டார் ஐயர். ஆதலால் பிறர் பதிப்புகளில் காணக்கூடாத பாடவேறுபாடுகளும், திருத்தங்களும் ஐயர் பதிப்பில் கிடைப்பன ஆயின. இஃது அரங்கனார் பதிப்பையும் ஐயர் பதிப்பையும் ஒப்பிடும் அளவானே அறியக் கூடியதாம். இக்குறிப்பால் ஐயர் பதிப்பு அறவே குறையற்றது என்றோ, நாட்டிலுள்ள சுவடிகள் அனைத்தையும் கண்டு ஆய்ந்தது என்றோ கூறுவது ஆகாது. இன்னும் எத்துணைப் பதிப்புகள் வரினும் மேலும் திருந்துதற்காம் நிலைமை இருந்துகொண்டே இருக்கும்! அறிதோறும் அறியாமை கண்டற்று என்னும் தேர்ச்சியுரை பதிப்புத் துறைக்கு மிகப் பொருந்துவதே. ஐயரின் குறுந்தொகைப் பதிப்புக்குச் சென்னைப் பல்கலைக் கழக உதவி 1934-இல் கிடைத்தது. அவ்வுதவியால் 1937-இல் குறுந்தொகை மூலமும் உரையும் வெளிவந்தது. பல்கலைக் கழக உதவி கிடைக்குமாறு உதவியவர் தமிழ்ப் பாடநூற் குழுவின் தலைவராக இருந்த டி.சிவராம சேதுப்பிள்ளை ஆவர். உதவித் தொகை ரூ.1500 இதனைப் பற்றிக் குறிப்பிடும் ஐயர், இவ்வளவு வருஷங்களாக நான் வெளியிட்டு வரும் நூற் பதிப்புக்களுக்கு இதைப் போன்ற பேருதவி கிடைத்ததில்லை என்பதைத் தமிழ்நாட்டினருக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்கிறார். குறுந்தொகையின் இரண்டாம் பதிப்பு ஐயரின் திருமகனார் கலியாண சுந்தரையரால் 1947-இல் வெளியிடப் பெற்றது. பாடினோர் வரலாறு எழுதி இணைக்கப் பெற்றது; சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன; பாட வேறுபாடுகள் அவ்வப் பக்கத்துக் குறிக்கப் பெற்றன. இப்பதிப்புக்குப் புதிதாக ஏடொன்றும் ஆராயப் பெறவில்லை. ஆதலால் பதிப்பு வகைத் திருத்தமன்றிப் பழஞ்சுவடியால் நேர்ந்த திருத்தம் இல்லை. சங்க இலக்கியம் - 1940 இது சைவ சித்தாந்த சமாசத்தின் அரிய பதிப்பாகும். சங்க இலக்கியத்தை முழுமையாக ஆராய்வார்க்குக் கலைக் களஞ்சியமாக விளங்கும் கவின்பதிப்பு இது. அன்றியும் புலவர் வரிசையாக ஆராய்வார்க்குப் புதையலாகத் திகழும் பெற்றியது. இப்பதிப்பை இம்முறையில் ஆய்ந்து வெளியிட்ட பெருமை அறிஞர் வையாபுரிப் பிள்ளையைச் சேர்ந்ததாகும். சங்க இலக்கியம் என்பது பாட்டும் தொகையுமாம். அப்பாடல் எண்ணிக்கை 2381. அவற்றைப் பாடிய புலவர் பெருமக்கள் அகம்பன்மாலாதனார் முதல் வேம்பற்றூர் குமரனார் ஈறாக 473 பேர்கள். ஆசிரியர் பெயர் காணாத பாடல்களாக 102 பாடல்கள் உள. 1443 பாடல்கள் முதல் பகுதியாகவும், எஞ்சியவை இரண்டாம் பகுதியாகவும் இரு பகுதிகளாக வெளிவந்துள. சங்கப் புலவர்களின் பெயர்களை ஆசிரியர் அகர வரிசையில் அமைத்தும், பாட்டுத் தொகை நூல்களையும் அவ்வாறே அகராதி அடைவில் வைத்தும் பாடல்களைஅவ்வந்நூல்களின் தொடர் வரிசையில் கொண்டும் பதிப்பிக்கப் பெற்றது இப்பதிப்பு. சங்க நூல்களுக்கு அமைந்த பழைய உரைகளின் திட்பத்தைப் பாதுகாத்து இக்காலத்தில் எவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் புத்துரை எழுதுதல் வேண்டும் என்னும் குறிக்கோளைச் சைவ சித்தாந்த சமாசம் மேற்கொண்டது. அதன் முதற்பணியாக மூலபாடத்தை வெளியிடுவதெனத் துணிந்தது. ஏட்டுப்பிரதிகள், கையெழுத்துப் பிரதிகள், ஆகியவற்றைத் திரட்டியது. அறிஞர் குழுவொன்றைத் தேர்ந்து ஆய்வில் புகுத்தியது. பிரதிகளில் கிடைக்கும் பாடங்களைக் குறிக்காமலும் வெளியிடாமலும் வாளாவிருத்தல் தமிழ்க் கல்வியின் முன்னேற்றத்தைக் கெடுப்பதாகும்; தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியைத் தடுப்பதாகும். தமிழன்னைக்கே தீங்கிழைப்பதாகும்; ஏட்டுப் பிரதிகளின் தொகை அருகிவரும் இந்நாளில் அவற்றைப் பயன்படுத்தும் தொண்டர் படை பன்மடங்கு பெருகுதல் வேண்டும். அவற்றால் கிடைக்கும் பயன் அவ்வப்போது வெளிவருதல் வேண்டும் எனத் திட்டமிட்டுக் கொண்டு செயலில் இறங்கியது. பிரதிகளை ஒப்பிட்டு உண்மைப் பாடம் தேர்ந்தெடுத்த வகையை முகவுரை குறிப்பிடுகின்றது. 1. உரையின்றி நூல்களின் மூலம் மட்டும் கிடைக்குமிடத்து பிரதிகளில் உள்ள மூலத்தால் மட்டும் திருத்தம் செய்தல். 2. உரைகளும் உள்ளவிடத்து அவைகளின் துணை கொண்டு பிரதிகளில் உள்ள மூலத்தை நோக்கிப் பொருத்தமுள்ள பாடங் கொள்ளுதல். 3. தொல்காப்பிய உரை முதலியவற்றில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட விடத்து அவ்வுரையிற் காணும் பாடத்தோடு ஒப்புநோக்கித் தகுதியான பாடங்கொள்ளுதல். இம்முறையால் பெற்ற பயன் பெரிது. அச்சுப் பிரதியில் காணப்படாது மறைந்துவிட்ட அடிகள் மீண்டும் கிடைத்தன; ஒரு சில இடங்களில் அப்பிரதியில் காணப்படாது மறைந்து விட்ட சொற்கள் புலப்பட்டன. ஒரு சில இடங்களில் அப்பிரதியில் மாறுபட்டுக் காணும் சொற்கள் திருத்தமடைந்தன. ஒரு சில இடங்களில் இலக்கணக்குறிப்பு பாடினோர் பாடப்பட்டோர் குறிப்பு முதலியவற்றில் திருத்தங்கள் கிடைத்தன. பதிப்புச் செம்மையை முகவுரை குறிப்பிடுகின்றது; இவ்வளவு முயற்சி செய்தும் பொருள் விளங்காத பகுதிகள் பலவுள்ளன. அப்பகுதிகளில் பாடம் சிதைந்துள்ளதென்பது எளிதில் அறியக் கிடக்கின்றது. பாடம் இவ்வாறிருத்தல் வேண்டும் என்று ஊகிக்கவும் இடமுண்டு. ஊகங்கள் உண்மையெனத் துணிந்தவிடத்தும் அவை பதிப்பிற் பிழை திருத்தமாக உடுக்குறியுடன் கொடுக்கப் பட்டுள்ளனவேயன்றி, மூலங்கள் திருத்தப்படவில்லை. பிரதிகளின் உதவி இன்றிக் கேவலம் ஊகத்தையே கடைப்பிடித்துப் பாடங்களை மாற்றிவிடுதல் அடாத காரியம். இப்பதிப்பில் ஒரு பாடமேனும் ஊகத்தால் மாற்றப்படவில்லை. விளங்காத பாடங்கள் திருந்துதற்குரிய வழி ஒன்றேயுள்ளது. அது பெருமுயற்சிகள் செய்து மேன்மேலும் ஏட்டுப் பிரதிகளைத் தேடிச் சேகரித்து அவற்றின் துணைகொண்டு ஆராய்ந்து உண்மை காணுவதே இப்பதிப்பில் விரிவான முகவுரை, சங்க இலக்கியங்களின் வரலாறு, சங்க இலக்கியங்களின் பதிப்பு விவரம், சிறப்புப் பெயர் அகராதி புலவர்களும் பாடல் தொகையும் பாட்டெண்களின் ஒப்புநோக்கு அட்டவணை, புலவர்களின் பெயர்வகை, புலவர்களும் அவர்களாற் பாடப்பட்டோரும், அரசர் முதலியோரும் அவர்களைப் பாடினோரும் புலவர்கள் அகராதி, பாட்டு முதற்குறிப்பு. பதிப்பிற்குதவிய ஏட்டுப் பிரதிகள் முதலியன ஆகிய பயன்மிக்க இணைப்புகள் இடம் பெற்றுள்ளன. இதன் இரண்டாம் பதிப்பு பாரி நிலையத்தின் வழியே 1967-இல் வெளிவந்துள்ளது. இதற்குப் பயன்பட்ட சுவடிகள்: சுவடிகள் அகநானூறு: கம்பர்விலாசம் வே.இராசகோபாலையங்கார் ஏடு 1. கம்பர்விலாசம் வே.இராசகோபாலையங்கார் கடிதம் 1 சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை கடிதம் 1 பவானந்தர் கழகம் கடிதம் 1 ஐங்குறுநூறு: சென்னை அரசாங்க நூல் நிலையம் கடிதம் 2 கலித்தொகை: நெல்லை அம்பலவாண கவிராயர் ஏடு 1 பவானந்தர் கழகம் கடிதம் 1 குறுந்தொகை: மதுரைத் தமிழ்ச் சங்கம் ஏடு 1 தி.த.கனகசுந்தரம் பிள்ளை கடிதம் 1 இரா.இராகவையங்கார் கடிதம் 1 முத்துரத்தின முதலியார் கடிதம் 1 சென்னை அரசாங்க நூல் நிலையம் கடிதம் 1 நற்றிணை: மதுரைத் தமிழ்ச் சங்கம் ஏடு 1 இரா.இராகவையங்கார் கடிதம் 1 சென்னை அரசாங்க நூல் நிலையம் கடிதம் 1 பவானந்தர் கழகம் கடிதம் 2 பதிற்றுப்பத்து: இரா.இராகவையங்கார் கடிதம் 1 தி.த.கனகசுந்தரம் பிள்ளை கடிதம் 1 பரிபாடல்: தி.த.கனகசுந்தரம் பிள்ளை கடிதம் 1 புறநானூறு: மதுரைத் தமிழ்ச் சங்கம் ஏடு 1 சென்னை அரசாங்க நூல் நிலையம் கடிதம் 1 தி.த.கனகசுந்தரம் பிள்ளை கடிதம் 1 மன்னார்குடி சோமசுந்தரம் பிள்ளை கடிதம் 1 பத்துப்பாட்டு மூலம்: கா.ரா.நமச்சிவாய முதலியார் கடிதம் 1 திருமுருகாற்றுப்படை: எம்.பி.எஸ்.துரைசாமி முதலியார் ஏடு 1 பொருநராற்றுப்படை அம்பலவாண கவிராயர் ஏடு 1 சென்னை அரசாங்க நூல் நிலையம் கடிதம் 1 சிறுபாணாற்றுப்படை அம்பலவாண கவிராயர் ஏடு 1 சென்னை அரசாங்க நூல் நிலையம் கடிதம் 1 பெரும்பாணாற்றுப்படை அம்பலவாண கவிராயர் ஏடு 1 சென்னை அரசாங்க நூல் நிலையம் கடிதம் 1 முல்லைப்பாட்டு: அம்பலவாண கவிராயர் ஏடு 1 சென்னை அரசாங்க நூல் நிலையம் கடிதம் 2 மதுரைக் காஞ்சி சென்னை அரசாங்க நூல் நிலையம் கடிதம் 1 மன்னார்குடி சோமசுந்தரம் பிள்ளை கடிதம் 1 நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு மன்னார்குடி சோமசுந்தரம் பிள்ளை கடிதம் 1 பட்டினப்பாலை மன்னார்குடி சோமசுந்தரம் பிள்ளை கடிதம் 1 சென்னை அரசாங்க நூல் நிலையம் கடிதம் 1 மலைபடுகடாம் சென்னை அரசாங்க நூல் நிலையம் கடிதம் 1 ஔவையார் பாட்டு இரா.இராகவையங்கார் ஏடு 1 தொல்.பொரு. நச். பேரா திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம் ஏடு 1 தொல்.பொரு. நச். பேரா பவானந்தர் கழகம் ஏடு 1 தொல்.பொரு. இளம்: வ.உ. சிதம்பரம்பிள்ளை ஏடு 1 தொல்.பொரு. நச். இலக்கண விளக்க ஆசிரியர் பரம்பரை சோமசுந்தர தேசிகர் ஏடு 1 இலக்கண விளக்கம்: ஆனந்தரங்கம் பிள்ளை வழியினர் ஏடு 1 புறத்திரட்டு சென்னை அரசாங்க நூல் நிலையம் கடிதம் 1 இவ்வேடுகள் பற்றிய மற்றை விளக்கங்களை அந்நூல் அட்டவணையில் கண்டு கொள்க. நயவுரை நற்றிணை, அகநானூறு என்பவை போலவே குறுந்தொகையும் நானூறு பாடல்களைக் கொண்ட சங்ககால அகப்பொருள் நூலேயாகும். பாடல் எண்ணிக்கையால் நானூறு பெற்றும் குறுந்தொகை எனப்பெயர் பெற்றது. அப்பாடல்களின் அடிகள் குறைந்த அளவின. ஆதலால், குறுமை அடை பெற்றதாம். நான்கடிமுதல் எட்டடி எல்லை அளவில் அமைந்த அகவற்பாக்களே அவை. குறுந்தொகையினும் நற்றிணை நெடியதும் (9-12), அதனினும் அகநானூறாம் நெடுந்தொகை நெடியதும் (13-31) ஆம் என நற்றிணையில் கண்டோம். நல்திணை என்னும் பெயர், சற்றே விரிந்து நல்ல குறுந்தொகை எனப்பாடு புகழ் பெற்றது. நற்றிணை நல்ல குறுந்தொகை என்பது அது. நல்ல என்பது நன்மை, நேர்மை, செம்மை முதலிய பல பொருள்களைத் தரும். இல்லற மல்லது நல்லற மன்று என்பது பிற்காலத் தொடர் எனின், பண்டு தொட்டே பயின்ற அறம் அஃதாம் அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை என்னும் வள்ளுவம் எண்ணத் தக்கதாம். தொகை நூல்களையெல்லாம் திரட்டி முடிந்தபின்னர்ப் பாடப்பட்டவை கடவுள் வாழ்த்துகள். பாரதம் பாடிய பெருந்தேவனாரால் அவ்வந்நூல் தகவுக்கு ஏற்பப் பாடப்பட்டவை கடவுள் வாழ்த்துகள். அவ்வகையில் குறுந்தொகைத் தொகுதிக் கடவுள் வாழ்த்து, ஆறடி அளவில் சேவலங் கொடியுடையவனாம் செவ்வேளைப் பற்றிப் பாடியது. கடவுள் வாழ்த்தோடு நானூறு பாடல்களைக் கொள்வதும், கடவுள் வாழ்த்தைத் தனியாகக் கொண்டு நானூறு பாடல்களைக் கொள்வதும் ஆகிய வழக்குகளில், இது கடவுள் வாழ்த்தைத் தனியாகக் கொண்டது. தனியாகவே அதனை வைப்பினும் நூலில் 401 பாடல்கள் உள. இவற்றில் இரண்டு பாடல்கள் 4 அடிமுதல் 8 அடி இறுதியாக என்னும் வரம்பைக் கடந்து உள்ளன. அவை 307, 391 ஆகியவை, இவற்றை விலக்கிப் பார்ப்பின் கடவுள் வாழ்த்தோடு 400 பாடல்களாய்ப் புறநானூறு போல் அமையும். தொகைநூல் என்பவை தொகுக்கப்பட்டவை என்பதாம். அவ்வகையில் இக்குறுந்தொகையைத் தொகுத்தார் பூரிக்கோ என்பார். அவர் அதைத் தொகுக்கத் தூண்டியவர் தொகுப்பித்தார் ஆவர். குறுந்தொகையைத் தொகுப்பித்தார் பெயர் அறியக்கூட வில்லை! பூரிக்கோஅரசர் எனின் தொகுப்பித்தாரும் அவரே யாம். தமிழர், அகப்பொருள்விளக்க அடிமணையாக முப்பொருள்களைக் கொண்டனர். அவை, முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன. இம்முப்பொருள்களும் பாடுவோர் நிலை, அடியளவு என்பன கொண்டு மிக்கும், அளவேயும், சுருங்கியும் வரும். இவ்வகையில் இம்முப்பொருள்களும் அகநானூற்றில் மிக்கும், நற்றிணையில் அளவாகவும், குறுந்தொகையில் குறைந்தும் வரும். இம்முப்பொருள்களில் உயிரன்னது உரிப்பொருள். அதனைத்திறமாக வெளிப்படுத்துதற்குத் துணையாக வருவனவே முதல் கருப்பொருள்கள். ஆதலால், முத்தொகை நூல்களிலும், அடியளவு எவ்வளவு எனினும் உரிப்பொருள் மட்டும் குன்றாமல் சுடர்விடும் என்பதை நாம் புரிதல் வேண்டும். கடவுள் வாழ்த்துப் பாடுதலில் நயமிக்க உத்திகளைக் கையாள்பவர் பெருந்தேவனார். நூலின் அளவுக்கு ஏற்ப ஆறடிகளில் சேவல் கொடியினைப் பாடினார். சேவலங் கொடியோன் என்பதிலுள்ள சேவல் (சிவந்த கொண்டை யுடையது) என்னும் சொல்லாட்சியும், பழந்தமிழர் கண்ட சேயோன் என்னும் பெயர் மாட்சியும், செவ்வேள் என்னும் செவ்வியல் பண்பியல் காட்சியும் கவர, எல்லாம் சிவப்பாகவே படைத்தார். செவ்வேளின் சேவடி செந்தாமரை; அவன் உடல் பவழம்; உடல் ஒளி செங்கதிர்; உடை குன்றிமணி நிறம்; கையில் குன்றம் துளைத்த செஞ்சுடர் வேல்; இன்னொரு கையில் சேவல் கொடி; அவன் காத்தலால் உலகத் துயிர்கள் இனிய பாதுகாப்புடையவையாய் விளங்குகின்றன. தாமரை புரையும் காமர் சேவடி பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே என்பது அப்பாட்டு. யாப்பருங்கலக் காரிகையில் இப் பாடலைக் காட்டி, இஃது எல்லாக் குற்றமும் தீர்ந்த செய்யுள் என்கிறார் உரையாசிரியர் குணசாகரர்! இச்செம்மைத் தொடர்ச்சியாகவே நூலில் முதற்பாடலில் செங்களம், செங்கோல் அம்பு, செங்கோட்டு யானை, சேஎய் குன்றம், குருதிப்பூ (செம்பூ), காந்தள் (செந்நிறத்தது) என்பவை இடம்பெறுதலை நோக்குக. கடவுள் வாழ்த்தை முதற் பாடலாகவும் அடுத்த பாடலை இரண்டாம் பாடலாகவும் கொள்ளும் பொருத்தத்தை உணர முடிகின்றது. (இந்நூலில் இரண்டாம் பாடல்) ஒரு பாடலைப் பாடியவர் நோக்குக்கும், அதனைப் பயின்று நூலாசிரியர் படைத்த நோக்கை மாற்றித் தம் நோக்கிற்கும் ஏற்றிப் புதையல் முறைக்கு எடுத்துக் காட்டாகி விட்ட பாட்டு கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்பது (இதில் முதற்பாடல்) அது, குறுந்தொகையில் இரண்டாம் பாடல்! பாண்டியனுக்குத் தேவி கூந்தலில் இருந்து வந்த நறுமணம், இயற்கையோ செயற்கையோ என ஐயம் உண்டாயிற்றாம். அதனைத் தெளிவிப்பார்க்குப் பொற்கிழி வழங்கப்படும் எனச் சங்கமண்டபத்தில் பொற்கிழி (பொன் முடிப்பு ; கிழி=துணி) தூக்கிவைத்தானாம். தருமி என்பான் வறியன்; இறைவனை வேண்டி இப்பாடலைப் பெற்றுப் பாண்டியன் அவையில் கூறிப் பரிசுபெறு நிலையில் நக்கீரரால் தடுக்கப்பட்டு இறைவரே மெய்ப்பிக்க வர, நக்கீரர் மறுக்க, இறைவர் நெற்றிக் கண் காட்ட, நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே என நக்கீரர் வாதிட்டார் என்று கதை புனைந்து, திருவிளையாடலும் நிகழ்ந்ததாகிவிட்டது! திரைப்படமும் கிளர்ந்தது. இறையன் என்னும் பாடலாசிரியர் பெயரை, இறைவன் ஆக்கிவிட்ட பொய்ப்புனைவு இது! இறையன் இயற்றிய களவியல் நூல், இறைவன் இயற்றிய தாகப் புனையப்பட்ட கதையொடும் ஒப்பது! நூற்பெயர் இறையனார் களவியல்! இப்புனைவு நமக்குக் கூறுவது என்ன? பழந்தமிழர் உள்ளக்கிளர்ச்சி ஒருபாட்டுருக் கொண்டதாயினும், அது கதை, காவியம், கூத்து என விரித்துக் கொள்ளும் தகையமையது என்பதாம்! இவ்வுத்தியில் பிற்காலத்தில் எழுந்த உரையாடல், கதை, நாடகம், வரலாறு என்பவை பலப்பலவாம்! நட்பு - அன்பு - காதல் என்பவற்றை அளக்கும் கோல் உண்டா? பருப்பொருள் ஆகாத நுண்ணுணர்வுப் பொருளை எந்த அளவுகோல் கொண்டு அளப்பது? அது நிலத்தினும் பெரிது! வானினும் உயரமானது! ஆழ்கடலினும் ஆழமானது! ஆம்! என் தலைவன் கொண்ட அந்நட்பு என்று தலைவி பாராட்டும் பாராட்டு எத்தகு சிறப்பினது(3)! எம் தலைவர் பொய் கூறார் எனக் கூறுகிறாள் தலைவி! இயற்கை மாறினாலும் எம் தலைவர். இயல்பு மாறார் என உறுதியாய் மொழிகிறாள்(21) கானம் காரெனக் கூறினும் யானோ தேறேன் அவர் பொய்வழங் கலரே “தலைவர், தலைவராகவே இருப்பார் பிறர்! ஆனால், என் தலைவன்? தலைவர் மட்டுமா? என் தாய் அவர்! என் தந்தையும் அவர்! என்கிறாள். அவள் பெருமிதமா இது? இல்லை. அவன் உயிர்நிலையா? (93) வாழுநம் என்னும் செருக்கு (பெருமிதம்) என்பது வள்ளுவம். “நாங்கள், யாரை யார் அறிவோம்! என் தாய் தந்தையரை அவர் அறிவாரா? அவர் தாய் தந்தையரை யான் அறிவேனோ! நாங்களும் தாம் ஒருவரை ஒருவர் அறிவோமா? இயற்கை இறைமைக் காதல் இவற்றையெல்லாம் அறிந்து கொண்டா தோன்றும்? வானம் பொழிகிறது! நிலம் தாங்குகிறது! நீர் நிறம் மாறிக் கலந்துவிடுகிறது! அவ்வாறு நாங்கள் கலந்து விட்டோம்! நெஞ்சங் கலந்த நேயர் ஆனோம்! வஞ்சங்கலவா வாழ்வு எம் வாழ்வு என்கிறான் தலைவன். இவ்வினிய காதலைப் படைத்த படைப்பாளர் பெயர் இல்லை! அவர் பாடிய பாடல் கிடைத்தது; பாடலில் வரும் செம்புலப் பெயல் நீர் என்பது தொகுத்தவர் உள்ளம் தொட்டது! அத்தொடராலே செம்புலப் பெயர் நீரார் எனப் பெயரிட்டுப் போற்றினார்(40). நெஞ்சக்கலப்புடைய தலைவன் தலைவியர் இப்பிறப்பில் அல்லாமல் எப்பிறப்பிலும் பிரிதல் ஆகாது என்னும் வேட்கையராகத் திகழ்கின்றனர். தலைவி சொல்கிறாள்: “தலைவனே, இப்பிறப்பு மாறி மறுபிறப்பு எய்தினாலும் நீயே என் கணவனாக இருப்பாயாக! யானே உன் நெஞ்சுக்கு இனியவளாக இருப்பேனாக என்கிறாள். இம்மை மாறி மறுமை ஆயினும் நீ ஆகியர் என் கணவனை யான் ஆகியர்நின் நெஞ்சுநேர் பவளே (49). ஒன்றை அன்றி ஒன்று இல்லை எனப் பண்பட்ட வாழ்வு கொண்டதால், அன்றில் (அன்றி + இல்) என்னும் பெயர் கொண்ட பறவை, நீர் நிலையில் உலாவும்போது, ஒரு பூ தம் பார்வையை நொடிப்பொழுதளவு குறுக்கிட்டு மறைத்தாலும் ஓராண்டு மறைந்ததுபோல உணர்ந்து வெதும்பும். அத்தகைய அருமையானது காதல். இருவரும் இணைந்தே வாழ்ந்த நாங்கள், ஒருவராய்ப் பிரிய நேரின், உயிர் உடனே போவதாக என்கிறாள் தலைவி. பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரிது ஆகிய தண்டாக் காமமொடு உடனுயிர் போகுக (57). என் தலைவி என் நோய்தீர்க்க மருந்து வேண்டும் போதில் அவளே மருந்தாக இருக்கிறாள். எவற்றை நான் துய்க்க விரும்புகிறேனோ அத்துய்ப்புக்கு வேண்டும் பொருளாக அவளே உள்ளாள் எனத் தலைவன் வியக்கிறான். மருந்தெனின் மருந்தே; வைப்பெனின் வைப்பே (71) எத்தகைய இன்பம் செய்கிறாள் என்தலைவி எனப் பெருமிதங் கொள்கிறான் ஒரு தலைவன். கொடிய கோடைப் பொழுதில் தண்மையளாக இருந்து வெப்பைத் தணிக்கிறாள். நடுக்கும் பனிப்பொழுதில் தாமரை முகையின் உள்ளே தங்கிய வெதுவெதுப்புப் போல இருந்து குளிரைத் தணிக்கிறாள். வேனிலானே தண்ணியள்; பனியே தாமரை உள்ளகத் தன்ன சிறு வெம்மையளே (376). முதல் சந்திப்பில் எப்படிப் பூரிப்படைந்தோம்! அதன் பின்னர் என்றும் என்றும் அப்பூரிப்பே! குறைந்தது என்பது ஒன்று உண்டா? என்று தங்கள் இன்பியல்வாழ்வு பற்றிப் பேசுகிறாள் தலைவி. என்றும் அன்றை அன்ன நட்பினன் (385) தலைவனை நோக்கியே வாழும் வாழ்வைத் தலைவி தன் தோழிக்குக் கூறுகிறாள். ஞாயிறு அனையன் தோழி! நெருஞ்சி அனைய என் பெரும்பணைத் தோளே (315) தலைவன் கதிரோனைப் போலுள்ளான். யான் அக்கதிரோனை நோக்கியே நிற்கும் நெருஞ்சி மலர் போல உள்ளேன் என்கிறாள்! தலைவன் நிலையில் மாற்றமுண்டோ? என்னும் ஐயம் தலைவிக்கு உண்டாகின்றது. அவளுக்கு உயிரன்ன தோழி, நிலை பெற்ற உலகம் நிலை பெயர்ந்தாலும், நீரும் தீயும் தம் தன்மை பெயர்ந்தாலும், அளப்பரிய கடலுக்கு அழிவு நேர்ந்தாலும் தலைவர் தம் நிலை மாறார் என்கிறாள் (373) பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்லத் தலைவன் நினைக்கிறான். அப்பிரிவு அவனை வருத்துகின்றது. பொருள் தேடுதலால் இல்லறம் ஆகிய இம்மைப் பயன் அடையலாம். அவ்வறத்தால் மறுமைப் பயனும் அடையலாம். அவ்விரண்டையும் எடைபோட்டு, யான் என் தலைவியோடு அடையும் இன்பத்தையும் எடைபோட்டால் அவ்விரண்டும் இவ்வின்பத்திற்கு ஒப்பாக மாட்டாது என்கிறான். குறுமகள் தோள்மாறுபடும் வைகலொடு, உலகமும் புத்தேள் நாடும் தூக்கில் சீர் சாலாவே (101) தலைவன் வலிமை, மகிழ்வு, செயல் எல்லாமும் இல்லாமல் ஒழிகின்றன. உற்ற நண்பன் உளைந்து போகிறான். தலைவனை இடித்துரைக்கிறான். நண்பனே, இடித்துரைப்பவனே, என் இனிய காதலியோடு ஒரே ஒரு நாள் வாழ்ந்தாலும் போதும்; அதன்மேல் அரைநாள் வாழ்க்கையும் வேண்டுவதில்லை! அத்தகையள் அவள் என்கிறான். பெருந்தோள் குறுமகள் சிறுமெல் ஆகம் ஒருநாள் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே (280) தலைவனும் தலைவியும் நடத்தும் இல்லறச் சிறப்பைக் கண்டு வருகிறாள் செவிலித்தாய். தான் கண்டுவந்த இனிய நிகழ்வைப் பெற்றதாயாம் நற்றாயிடம் கூறுகிறாள். தலைவியோடு வாழும் வாழ்வு நாள் ஒவ்வொன்றும் விழா நாளேயாம் என்பதை விழவு மூதாட்டி என்பது அருமையும் பெருமையும் உடையதாம். (10) சுண்டக் காய்ச்சிய பாலில் உறைமோர் இட்டுவைத்த கட்டித் தயிரைப் பிசைந்த அக்கையையும் கழுவுதலாயின் தாளிப்புப்பதம் கெடுமென எண்ணித் தன் ஆடையில் துடைத்துக் கொண்டு முகத்திலே தாளித மணம் கமழ ஆக்கிய இனிய புளிக்குழம்பைக் கணவன் உண்ணும்போது, குழம்பு இனிதாக உள்ளது எனப்பாராட்ட நம் செல்வியின் முகம் மென்மையாக மலர்ந்த இன்பத்தை யான் கண்டு திளைத்தேன் என்றாள்! மக்கள் நல்வாழ்வு கண்டும் கேட்டும் பெற்றோர் மகிழும் மகிழ்வும், இல்லறச் சிறப்புப் பேறும் தலைவிதானே ஆக்கிப் படைத்து அதனை உண்பிக்கும் அருமையும், அதனை உண்டான் சுவை நலம் பாராட்டும் பண்பும் உளங்கொளத்தக்கவையாம். இன்னவை இல்லற வாழ்வின் இனிய வழிகாட்டிகள். பாடல்: முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர் இனிதுஎனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே (167) தோழியின் தாய், தலைவிக்குச் செவிலித்தாய். அச்செவிலித்தாய் தலைவி யின் தாய்க்குத் தோழி; இவை நூன்மரபு! அந்நாள் வழக்கில் கண்டது என்பதுமாம். செவிலித்தாய் தலைவன் தம்மவரோடு மணம்பேச வருவான் என்னும் இனிய செய்தியைச் சொல்கிறாள். அது கேட்ட தோழி அவளை வாழ்த்துகிறாள். தமது வீட்டில் இருந்து தம்முயற்சியால் வந்த பொருளைக் கொண்டு ஆக்கிய உணவைப் பகுத்து உண்டு மகிழ்வது போன்றது என மகிழ்கிறாள். அது, தம்மில் தமது உண்டன்ன எனப்படுகின்றது, இக்கருத்து. தம்மில் இருந்து தமது பாத் துண்டற்றால் எனவரும் வள்ளுவத் தொடும் ஒப்பிட்டு மகிழத் தக்கதாம்! தம் உறைவிடம்; தம் உழைப்பு; தம் பொருள்; தம் உணவாக்கம்; தம் பகுத்துண்ணும் பண்பாடு என்பனவெல்லாம் சுருங்கவைத்த சொல்லோவியம் இஃதாம் (83) தலைவியும் தோழியும் உரிமை நட்பில் எத்தகையர் என்பதை எண்ணித் தலைவன் பூரிக்கிறான். தோழி மிதவையின் தலைப்பக்கத்தைப் பிடித்தால் தலைவியும் அத்தலைப் பக்கத்தையே பிடிப்பாள். தோழி மிதவையின் கடைப் பக்கத்தைப் பிடித்தால் தலைவியும் அக் கடைப் பக்கத்தையே பிடிப்பாள். தோழி மிதவையை விட்டு நீரொடு போனால் தலைவியும் நீரொடு போவாள் போலும் என்கிறான். தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின் ஆண்டும் வருகுவள் போலும் (222) தோழி, தலைவன்மேல் தலைவி கொண்ட காதலை அருமையாக அவன் செவியில் பட உரைக்கிறாள். தாய் அடித்தாலும் சேய் அம்மா என்றே அழுகிறது அல்லவா! அப்படி நீவருத்தினாலும் உன்பால் அன்பினள் என்கிறாள். தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்டு அன்னா என்னும் குழவி போல இன்னா செயினும் இனிது தலை யளிப்பினும் நின்வரைப்பினள் (397) இழந்த அழகை அவரிடம் கேட்டுப் பெறலாம் என்னும் தோழியிடம் தலைவி அரிய பண்பாட்டியல் பகர்கிறாள். இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்தவை தாவென் சொல்லினும் இன்னாதோநம் இன்னுயிர் இழப்பே நாமே நம் தலைவரிடம் அவர் வேண்டியவாறு நம்மைத் தந்தோம். தந்ததை மீட்டும் தருக என்று கேட்டுப் பெறுவதைக் காட்டிலும் உயிரைவிடுவது கடினமோ? இல்லை! என்கிறாள். அரிய பெரிய கருத்துகளை உள்ளடக்கிய தொடர்கள் பல குறுந்தொகையில் இடம் பெற்றுள. அவற்றுள் சில: ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் (63) பெருநன்று ஆற்றிற் பேணாரும் உளரே (115) (உளரே என்பது உளரோ என்பதாம்) இல்லோன் இன்பம் காமுற் றாங்கு (120) இல்லோர் வாழ்க்கை இரவினும் இழிவு (283) இனியவோ பெரும தமியோர்க்கு மனையே (124) இளமை பாரார் வளம் நசைஇயோர் (126) வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் (135) பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ (146) காமம் நெரிதரக் கைந்நில் லாதே (149) பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ? (156) செய்வினை முடித்த செம்மல் உள்ளம் (270, 275) நல்லிசை வேட்ட நயனுடைய நெஞ்சிற் கடப்பாட் டாளன் உடைப்பொருள் (143) நீயே இமயமும் துளக்கும் பண்பினை (158) நன்மொழிக்கு அச்சம் இல்லை (392) என்பவற்றைக் கருதுக. புறப்பொருள் இலக்கியத்தில் தலைவன் வஞ்சினம் கூறுவான். ஆனால் அகப்பொருளிலும் கூறுகிறான். மெல்லியலே, உன் நன்னலம் அகல உன்னைப் பிரிவேனோ? பிரியேன்; பிரியின் என்னை விரும்பி இரவலர் வாராத நாள் வரட்டும் என்கிறான். அது மெல்லியல் அரிவைநின் நல்லகம் புலம்ப நிற்றுறந்து அமைகுவென் ஆயின் எற்றுறந்து இரவலர் வாரா வைகல் பலவா குகயான் செலவுறு தகவே (137) என்பது. கற்பவர் உள்ளம் கரையத்தக்க சில காட்சிகள் குறுந்தொகையில் உள. பெருமலை; உயர் மரம்; பெரிய தேன் கூடு; காண்பவனோ இருத்தலையன்றி எழுதற்கு இயலாத முடவன். தேன் கூட்டைப் பார்க்கிறான். தேன் கையில் வழிந்ததாகக் கொண்டு நக்குகிறான்! என்னே அவன் துய்ப்பு? நெடுவரைப் பெருந்தேன் கண்ட இருக்கை முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்குவது என்பது அது (60) சுட்டு வாட்டும் மலைப்பாறை; அதன் மேல் வெண்ணெய்! காப்பவனோ கையில்லாதவன்; கண்ணால் காக்கும்; ஊமன் (ஆகவே செவிடன்)- வெண்ணெய், உருகாமல் காப்பது எப்படி? கையில் ஊமன் கண்ணில் காக்கும் வெண்ணெய் உணங்கல் (58) தோழி! அழாதே என்று சொல்லி நாம் அழுத கண்ணீரைத் துடைக்க யாருளர்? அழாஅல் என்று நம் அழுதகண் துடைப்பார் யாருளர்? (82) மழை பெய்தது; ஈரம்போகுமுன் உழுதல் வேண்டும்; உழுதற்கு உரியவனுக்கு உள்ளதோ ஓர் ஏர்! என் செய்வான்? ஈரம்பட்ட செவ்விப் பைம் புனத்து ஓர் ஏர் உழவன் (131) அடுத்தடுத்து ஏழு ஊர்கள் உள்ளன. அவற்றின் தேவைக்கு வேண்டும் கொல்லர் உலைக் களமோ ஒன்றே ஒன்று! அவ்வுலையின் துருத்தி எப்பாடுபடும்? ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த உலைவாங்கு மிதிதோல் (172) ஒரே ஒரு பசுவால் வரும் வருவாய் கொண்டு நடத்தும் சிறப்பில்லாத இல்வாழ்க்கை எத்தகைய வறுமையது? ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை (295) எள்ளல் சுவையும் குறுந்தொகையில் இல்லாமல் இல்லை: எங்களிடத்தில் பெரிய பெரிய சொற்களைச் சொல்வான்! ஆனால் புதல்வனைப் பெற்றுத் தந்த தாயைக் கண்டுவிட்டால், கண்ணாடியின் முன் நின்று காலையும் கையையும் தூக்கினால் அந்நிழல் எப்படித் தூக்கிக் காட்டுமோ அப்படி இருப்பான்: எம்மில் பெருமொழி கூறித் தம்மில் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யும் புதல்வன் தாய்க்கே (8) நெடுநாளாக வராத தலைவன் வந்தான். அவன் கேட்குமாறு, நிலத்தைத் தோண்டி உள்ளே போய்விட மாட்டார்; வானத்தில் ஏறிப்பாய்ந்து விடவுமாட்டார்; விரிந்த கடல்மேல் நடந்து போய்விடவுமாட்டார்; ஊர் ஊராக, குடும்பம் குடும்பமாகத் தேடினால் அகப்படாமல் போய் விடவா செய்வார் என்கிறாள் தோழி! நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார் விலங்கிரு முந்நீர் காலில் செல்லார் நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடிமுறை குடிமுறை தேரின் கெடுநரும் உளரோநம் காத லோரே (130) மணம் பேச வேண்டிய காதலன் வீட்டார் வரவில்லை. ஆனால் அயலார் மணம் பேச வந்தனர். அது, மீனுக்குப் போடப்பட்ட வலையிலே காட்டு விலங்கு பட்டுக்கொண்டது போலுள்ளது. மீன் வலை மாப்பட் டாங்கு இதுமற் றெவனோ நொதுமலர் தலையே (171) மா= விலங்கு; நொதுமலர்= அயலார். அருமைமிக்க உவமைகள் பலவற்றைக் கொண்டவை நம் பண்டை இலக்கியங்கள். குறுந்தொகையில் உள்ள சில உவமைகள். வீட்டுக்குருவி சிறியது; அதற்குத் தக்க சிறகு; அதன் வண்ணம் வடிவை எண்ணுகிறான் பாவலன்; ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ (46) என்கிறான். சாம்பல்=வாடல். தினை, கடுகு, அன்னவை அளவைப் பெயர்களாகக் கொள்ளப்பட்டன. தினையளவு, கடுகளவு என்பர். ஞாழல் பூ சிறிய வெள்ளிய கடுகு போன்றதாம். ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் 50 ஐயவி = கடுகு; வீ = பூ. மரத்தின் ஊடே ஒளி புகுகின்றது; கோடுகள் விளங்குகின்றன. அம்மரத்தின் கீழே புலி படுத்துக் கிடக்கிறது. மரமும் வேங்கை; புலியும் வேங்கை; ஒன்றற்கு ஒன்று கொடுத்த கொடை; கரிய அடியை உடைய வேங்கை; கீழே குண்டுக்கல்; நல்ல நிலவு; பாறைமேல் வேங்கைமலர் வீழ்ந்து கிடப்பது படுத்துள்ள புலியின் தோற்றம் தருகிறது. கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையில் தோன்றும் (47) குருளை = குட்டி. வளைந்த வாயையுடைய கிளி வேப்பம் பழத்தை எடுக்கிறது. அத்தோற்றம் வளைந்த இருவிரல்களின் ஊடு தங்கக் காசை வைத்து நூலில் கோப்பது போன்றுள்ளது. தங்கக் காசு உருண்டை வடிவினது என்பது அறியப்படும். வேப்பம்பழத்தின் நிறமும் பொற்காசு நிறமும், கிளியின் அலகும் கோப்பவர் விரலும் எண்ணி மகிழலாம். “கிள்ளை, வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம் புதுநாண் நுழைப்பாள் நுதிமாண் வள்ளுகிர்ப் பொலங்கல ஒருகாசு ஏய்க்கும் பொலங்கலம் = பொன்னணி; ஏய்க்கும் = ஒப்பாகும் (67) மூங்கில் வளையும் தன்மையது; வளை என்பதும் அதற்கொருபெயர். நன்றாக ஒரு மூங்கிலை வளைத்துப் பிடித்து விட்டுவிட்டால் எப்படித் துள்ளிச் செல்லும்; அப்படிச் செல்கிறது அவிழ்த்து விடப்பட்டகுதிரை! விட்ட குதிரை விசைப்பின் அன்ன விசும்பு தோய் பசுங்கழை (74) கழை = மூங்கில் இப்பாடலைப் பாடியவர் பெயர் அறியக் கூடாமையால், விட்ட குதிரையார் எனப்பட்டார்! கொல்லுத் தொழில் செய்வான் ஒருவன்; அழிசி என்பது அவன் பெயர். அவன் நொச்சி இலையைக் கூர்ந்து நோக்கு கிறான். மயிலின் அடி அவன் மனத்திரையில் ஓவியக்காட்சி வழங்குகிறது. மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி என்கிறான். (138) குரல் = பூங்கொத்து. ஓந்தியின் முதுகைப் பார்க்கும் ஒருவர்க்கு அது என்ன தோற்றம் தருமோ? ஓரம்மையார் அதனைக் கருக்கரிவாளொடு ஒப்பிட்டுக் காண்கிறார்; அவர், அள்ளூர் நன்முல்லையார். வேதின வெரிந்நின் ஓதிமுது போத்து (140) வேதினம் = கருக்கரிவாள். வெரிந் = முதுகு. வில்லைப் பற்றி அம்பு ஏவும் கை எப்படி இறுக்கமாக இருக்கும்! இன்பியல் நண்பு அத்தகைத்தாம். வில்லக விரலில் பொருந்தி என்கிறார்! அவர் பெயர் வில்லக விரலினார் எனப்பட்டது (370) மயிலடியைக் கண்ட ஒருவரைக் கண்டோம்! மயில் முடியைக் காண்கிறார் ஒருவர். அவர் வாகைப் பூப்போலும் மயிற் கொண்டை என்கிறார் குமரி வாகைக் கோலுடை நறுவீ மடமாத் தோகைக் குடுமியில் தோன்றும் (347) தொடர்ச்சியாக ஒன்றைத் துய்த்தால் படிப்படியே வெறுப்புத் தோன்றல் உண்டு. நீராடல் இன்பமே; ஆனால் நெடும்பொழுது நீராடல். தேன் இனியதே! தொடர்ந்து அதையே சுவைத்தால்? சோற்றுக்குத் தொடுகறி விடுகறி மாற்றி மாற்றி ஆக்குவதேன்? நீர்நீடு ஆடில் கண்ணும் சிவக்கும் ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் என்கிறது குறுந்தொகை (354) கூந்தல் அழுக்கு அகற்றப் பழநாளில் களிமண்ணைப் பயன்படுத்தினர். அம்மண் எருமண் எனப்படும். கூழைக்கு எருமண் கொணர்கம் என்கிறது ஒருபாட்டு (113) ஊருணி வேறு; ஊரணி வேறு; ஊருணி ஊரவர் உண்ணும் நீர் உடையது. ஊருக்குத் தொலைவினது, ஊரணி, ஊர்க்குப் பக்கமானது; குளிப்பதற்கு உரியது. ஊர்க்கும் அணித்தே பொய்கை என்கிறது இதேபாட்டு. திருமணப் போதில் பறையறைவதும் சங்கம் முழக்குவதும் வழக்கம் என்பதை, பறைபடப் பணிலம் ஆர்ப்ப என்கிறது குறுந்தொகை (15). பணிலம் = சங்கு. பலரும் வரவும் போகவும் உறையவும் உரிய வளமான வாயிலை அடைப்பது பொறுப்புமிக்க பணி. அனைவரும் வந்துவிட்டனரோ, வர இருப்பவர் உளரோ எனக் குரலெடுத்து அழைத்தே வாயிலை அடைப்பர்! இவ்வழக்கம் இருந்ததை, பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ? என்பதால் அறியலாம் (118) பழங்கால முயற்சி வாழ்வின் உயர்ச்சி அறிந்து மகிழத் தக்கது. அப்பன் பாட்டன் தேடியதை வைத்து உழையாது உண்பவர் மடியர்; குடியை மடிப்பவர். அவர் வாழ்வு இரவலர் வாழ்வினும் இழிந்தது! தம் முயற்சியால் வாழ்வதே உயர் வாழ்வு என்கிறது ஒரு பாடல் (283) உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர் இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என்பது அது. பொருளடக்கம் பதிப்புரை iii பதிப்பு வரலாறு எi சங்க இலக்கியம் - 1940 ஒஎii நயவுரை ஒஒii அறிஞர் இரா. இராகவ ஐயங்கார் வாழ்க்கை வரலாறு 1 உரைச் சிறப்புப் பாயிரம் 15 முகவுரை 17 குறுந்தொகை விளக்கம் 37 செய்யுள் முதற்குறிப் பகராதி 646 குறுந்தொகை பாடிய புலவர்கள் 653 பாடப்பெற்றோர் 658 அருஞ்சொற்பொருள் - அகரநிரல் 659 குறுந்தொகை விளக்கம் அறிஞர் இரா. இராகவ ஐயங்கார் வாழ்க்கை வரலாறு தோற்றம் ஆய்வுலகம் போற்றும் அறிஞராகவும், நூலாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும், கட்டுரையாளராக வும் பல்வேறு துறைகளில் புகழ்பூத்து விளங்கிய இரா.இராகவ ஐயங்கார் அவர்கள் சிவகங்கை சமீனைச் சார்ந்த தென்னவராயன் புதுக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்; தந்தை இராமாநுஜயைங்கார், தாய் பதுமாசனி அம்மையார்; பிறந்த நாள் : 20-09-1870. குலப்பெருமை இராகவையங்கார் பிறந்த குடும்பம் வழிவழி வளமையும் பெருமையும் உடையது. இராமேசுவரம் செல்லும் திருத்தலப் பயணிகளுக்கு இக் குடும்பத்தினர் பல்வேறு அறஞ்செய்த சிறப்பினர்; மாடபூசி என்னும் குலப் பெருமையினர். இவர்களின் தந்தைவழி முன்னோர் செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் வட்டம் திருப்புட்குழியிலிருந்து சென்றவர்கள். தாய்வழி முன்னோரும் மூன்று தலைமுறைகளுக்கு முற்பட்டுப் புகழ்பெற்று விளங்கியவர். சின்னப்பிரதானி கிருஷ்ணையங்கார். இவர் முத்துராமலிங்க சேதுபதியின் காலமாகிய பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுயில் இராமநாதபுரம் சமீனில் அமைச்சராக விளங்கியவர். இராமேவரம் திருக்கோயிலின் சுற்றாலை மண்டபமாகிய சொக்கட்டான் சேரி மண்டபம் இவர்கள் மேற்பார்வையில் அமைக்கப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஐயங்கார் அவர்களின் தாய்மாமன்மார் இருவர் சேது சமத்தான ஒளிவிளக்குகளாகத் திகழ்ந்தவர்கள். இவர்களுள் முன்னவர் அட்டாவதானம் கிருஷ்ணஐயங்கார். இவர் வடமொழி, தென்மொழியில் வல்லவர். அவருடைய இள வல் சதாவதானம் முத்துசாமி ஐயங்கார். அவரை சேஷாத் திரி சர்மா என்றும் சேஷாவதானிகள் என்றும் அழைப்பர். இவர் பன்மொழிப் புலமையாளர். மைசூரில் அட்டாவ தானம் நிகழ்த்தி மைசூர் மன்னரால் பதினாயிரம் பொன்னும், முத்துமாலையும், தண்டிகையும் பரிசாகப் பெற்றவர். சேதுசமத்தான வித்துவானாக விளங்கிய இப் பெரியார் பாண்டித்துரைத் தேவர் முதலிய அரசகுலத் தோன்றல்களுக்கும் மற்றும் புலவர் தலைமுறையினருக்கும், குறிப்பாக இராகவ ஐயங்காருக்கும் தமிழறிவு புகட்டிய சிறப்பினர். கல்வித்தகுதி பேரறிஞராகப் பெரும்புகழ் பெற்று விளங்கிய மகாவித்துவான் இராகவஐயங்கார் அவர்கள் பல்லோர் போற்றும் கல்வியாளர்; தமிழைச் சிறப்பாகவும், வடமொழி மற்றும் ஆங்கில மொழியினையும் பயின்றவர். தமிழில் சங்கநூற் பயிற்சி மிக்கவர். நூலாசிரியர்களின் ஆழ்ந்த கருத்துக்களை எளிதில் அறிந்து சுவைபடப் பேசும் திறமையாளர்; தமிழ் நூல்களில் கண்ட நயமான பகுதிகளை வடமொழிக் கருத்துக்களோடும், ஆங்கில நூல்களோடும் ஒப்புநோக்கிச் சிந்திக்கும் ஆற்றல் மிக்கவர். தமிழில் செய்யுள் இயற்றல், உரைநடை வரைதல், நுண் பொருள்களை ஆழ்ந்து ஆய்தல், நிரல்படச் சொற்பெருக்காற்றல் என்றின்ன பிறவற்றில் தமக்கு நிகர் தாமேயாக விளங்கியவர். ஐயங்கார் அவர்கள் பட்டம் பதவிகளை ஒருபோதும் தாமே நாடிச் சென்றதில்லை. அவையே இவரை நாடி வந்தன என்பது மிகையான கூற்றன்று. இளமையிலேயே தந்தையை இழந்த இவர் இராமநாதபுரம் அரசவைப் புலவராக விளங்கிய தம் மாமன் சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் ஆதரவில் வளர்ந்தார். இவருக்கும் இவருடைய தமையனார் திருப்பதி ஐயங்காருக்கும் மாமன் அவர்களே கல்வி பயில வாய்ப்பளித்தார். மெட்ரிகுலேசன் வரை பள்ளிக் கல்வி பயின்ற ஐயங்கார் அவர்கள் தம் மாமனிடமும், ஏனைய அரசவைப் புலவர்கள் வழியும் தமிழோடு வடமொழியும் பயின்று பல்கேள்வித் துறைகளிலும் தலைமை பெற்று விளங்கினார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப இளமைக் காலத்திலேயே கூர்ந்த அறிவும், சொல் வன்மையும், கவிபாடும் திறனும் இவர்பால் வாய்க்கப் பெற்றன. அரசவைப் புலவர்களின் கூட்டுறவால் அவதானம் செய்யும் ஆற்றலையும் பெற்றார். இளமைக்காலத்திலேயே ஊற்றுமலை சமீன்தார் இருதாலய மருதப்பத் தேவரைச் சந்தித்து அவருடைய அவையில் தம் கல்வித் திறமையைக் காட்டிப் பரிசு பெற்றுப் பாராட்டுதல்களோடு இராமநாதபுரம் திரும்பிய நிகழ்ச்சி இவருடைய வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்ச்சியால் முத்துசாமி ஐயங்கார் இவருடைய கல்வித்திறன் கண்டு உவந்தார். சேதுமன்னரின் அவைத் தொடர்பும் இவர் கல்வி வளர்ச்சிக்கு உரமூட்டியது. ஆசிரியப்பணி இராகவ ஐயங்கார் தமது 18ஆவது அகவையிலேயே மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியப் பணியினை ஏற்றார். இக் கால எல்லையில் இவர் ஜானகி அம்மாளை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். இரண்டு ஆண்டுகள் பள்ளிப் பணியில் இருந்தபின் திருச்சி சேஷையங்கார் பள்ளியில் தமிழாசிரிராகப் பணி புரிந்தார். சேதுசமதானத் தொடர்பு ஐயங்கார் அவர்கள் இராமநாதபுரத்தில் நிகழ்ந்த கலைமகள் விழாவில் புலவர் குழுவினர் மத்தியில் சேதுபதி மன்னர் முன்னிலையில் தம் திறமையை வெளிப்படுத்திச் சேது சமத்தானத் தொடர்பினைப் பெற்றார். அரசர் அவர்கள் இயற்றமிழுக்கு ஒருவராக இவரை ஏற்றுச் சிறப்பித்தார்கள். ஐயங்கார் அவர்களின் புலமைத் திறத்தைப் பாராட்டி மாநிலக் கல்லூரி கணிதப் பேராசிரியரும் தமிழ் அறிஞருமாகிய பூண்டி அரங்கநாத முதலியார் அளித்த நற்சான்றிதழும் ஐயங்கார் அவர்கள் சேது சமத்தானத் தொடர்பினைப் பெற மிகவும் உதவியாக இருந்தது. பெற்ற பட்டங்கள் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையில் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் முன்னின்று நிகழ்த்திய ஆண்டு விழாவில் டாக்டர் உ.வே. சாமிநாதையர் தலைமையில் ஐயங்கார் அவர்கள் பல்லோர் வியக்கும் வண்ணம் சிறப்புப் பேருரை நிகழ்த்தினார். அவையினர் இவருக்கு மகா வித்துவான் என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தனர். ஐயங்கார் அவர்கள் சேதுவேந்தர் அவையினைச் சார்ந்து சிறப்பித்த காலத்தில் தமிழகமெங்கும் பல்வேறு சங்கங்களில் சொற் பொழிவுகள் நிகழ்த்தி அறிஞர்களை மகிழ்வித்தார். முன்னாள் நீதிபதி எஸ். வரதாச்சாரியார், வி.வி. சீனிவாச ஐயங்கார், தேச பக்தத்தலைவர் சத்தியமூர்த்தி முதலிய பேரறிஞர்கள் இவரைப் பாராட்டக்கருதி மயிலாப்பூர் சமகிருத அகாதமியின் ஆதரவில் நிகழ்த்திய சிறப்புக் கூட்டத்தில் இவருக்குப் பாஷாகவி சேகரர் என்ற பட்டமும் பொற்கிழியும் பொன்னாடையும் அளித்தனர். பகவத் கீதையைத் தமிழ்ப்படுத்தியது குறித்தும் தொழில் சிறப்பு’, புவியெழுவது முதலிய செந்தமிழ்ப் பனுவல்களைப் பாடியது குறித்தும் இவ் விருது இவருக்கு அளிக்கப் பெற்றது. சேது சமத்தான அவைக்களப்புலவர் சேது சமத்தானத்தில் இயற்றமிழ் ஆசிரியராக ஏற்றுக் கொள்ளப்பெற்ற இவர் இவருடைய மாதுலர் முத்துசாமி ஐயங்கார் 1897-ல் காலமாகியது முதல் சேது சமத்தான அரசவைப் புலவர் ஆனார். இவருக்கு ஆண்டு நன்கொடையாக ஊதியம் வழங்கப் பட்டதுடன் தண்டிகை வரிசையும், பொற்பதக்கமும், பொன்மணிக் கடகங்களும், பொன்னாடைகளும் சேதுபதி மன்னரால் பரிசாக அளிக்கப் பெற்றன. பாகர சேதுபதி காலத்தில் மட்டுமன்றி அவருக்குப் பின் பட்டமேற்ற இராசராசேசுவர சேதுபதி, நாகநாத சேதுபதி ஆகியோர் அவையிலும் இவர் சமத்தான மகாவித்துவானாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மூவரும் இவருக்கு வரிசை அளித்துச் சிறப்பித்தனர். சேதுபதிகள் உடன்பாட்டுடன் இவர் மதுரைத் தமிழ்ச்சங்கத்திலும் பிற இடங்களிலும் பணியாற்றிய போதிலும் தம் ஆயுட்காலம் வரை இவர் சேது சமத்தான வித்துவானாகவே விளங்கினார். சேதுபதி அவர்களின் அரவணைப்பை இவர் என்றும் நன்றியுடன் போற்றி மகிழ்வார். இவர் எழுதிய சேதுநாடும் தமிழும் என்ற நூல் சேதுநாட்டின் பெருமையை உலகறியச் செய்தது. இராசேசுவர சேதுபதியின் தூண்டுதலால் இவர் எழுதிய வஞ்சிமாநகர் என்னும் ஆராய்ச்சி நூல் அம் மன்னர் பிரானுக்கே உரிமையாக்கப்பெற்றது. சேதுவேந்தர் பேரவை எப்பொழுதும் புலவர் பேரவையாகவே திகழும். இவ் அவையில் நவராத்திரி விழாவினை யொட்டிப் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நிகழ்வது வழக்கம். இவ் விழாவில் கலந்துகொள்ளும் அறிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்பப் பரிசு வழங்கப் பெறும். இது காரண மாக ஐயங்கார் அவர்களுக்கு உ.வே. சாமிநாதையர் முதலிய பேரறிஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. சேதுசமத்தானத்தின் பொருளுதவி பெற்று அமெரிக்கா சர்வமத மாநாட்டில் கலந்து கொண்ட சுவாமி விவேகானந்தர் இராமநாதபுரத்தில் தங்கியிருந்த காலத்தில், சமயம் தொடர்பாகப் பல செய்திகளை ஐயங்கார் அவர் களுடன் கலந்து விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரைத் தமிழ்ச்சங்கப் பணி பாண்டித்துரைத் தேவரால் 1901 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 14-ஆம் நாள் தோற்றுவிக்கப் பெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கம் நான்காம் தமிழ்ச்சங்கம் எனப் போற்றப் பெறுவது. இச் சங்கம் நிறுவும் முயற்சியில் இராகவ ஐயங்கார் அவர்களும் தேவர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியாக மாறி இன்றும் தமிழ்ப் பணி புரிந்து வருகிறது. அரசர் சேதுபதி அவர்கள் தம் அவைக்களப் புலவர் இராகவ ஐயங்கார் அவர்களை இச் சங்கத் தமிழ்த் தொண்டாற்ற நியமித்தது மிகவும் தகுதி வாய்ந்ததாகும். ஐயங்கார் அவர்கள் நூற்பதிப்பு நூலாராய்ச்சி என்ற துறைகளின் தலைவராக அமர்ந்து அரும்பணியாற்றி யுள்ளார். இங்குப் பணியாற்றியகாலை, பல்வேறு இடங்களுக்கும் சென்று அரிய பல ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்ததோடு சுவடிகளை ஒப்புநோக்கியதன்வழி, தமிழ் நூல்கள் பற்றிய அரிய செய்திகளையும் கண்டு வெளிப்படுத்தியுள்ளார்கள். செந்தமிழ்ப் பொறுப்பாசிரியர் தமிழ் ஆராய்ச்சிச் செய்திகளை வெளியிடுவதற்காக மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ் என்னும் இதழை 1902 ஆம் ஆண்டு தொடங்கியது. இவ்விதழின் முதல் பொறுப்பாசிரியராகப் பொறுப்பேற்றவர் இரா. இராகவ ஐயங்கார் அவர்களே. தமிழ் வளர்ச்சிக்காகச் சேதுவேந்தர் செய்துவந்த பெருந்தொண்டுகள் குறித்து ஐயங்கார் இவ்விதழில் விரிவாக எழுதியுள்ளார். இப் பத்திரிகையின் முதல் இதழிலேயே ஆராய்ச்சி என்னும் பகுதியைத் தொடங்கி, அச்சிட்ட தொல்காப்பிய செய்யுளியல் உரை ஆசிரியர் பேராசிரியர் என்னும் உண்மையை உலகிற்கு முதன் முதலில் இவர் வெளிப்படுத்தினார். புத்தகக் குறிப்பு என்னும் தலைப்பில் மதிப்புரைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவ்விதழில் இவர் இரண்டரை ஆண்டுகளே பணியாற்றினார். இவருக்குப் பின்னர் இவருடைய அம்மான் சேய் மு. இராகவ ஐயங்கார் அவர்கள் இப் பொறுப்பினை ஏற்றார். இரா. இராகவ ஐயங்கார் தம் குறுகிய காலப் பொறுப்பில் வெளியிட்ட ஆராய்ச்சிச் செய்திகளும் கட்டுரைகளும் பதிப்பித்த நூல்களும் பலவாகும். பத்திரிகைவழி வெளிப்படுத்தியவை தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பின் நான்கு இயல்களுக்குரிய உரை நச்சினார்க்கினியர் உரை என்றே சி.வை தாமோதரம் பிள்ளை கருதியிருந்தார். இவ்வாறே அவர் தம் பதிப்பினை வெளியிட்டார். ஆனால் இவ்வுரை பேராசிரியர் உரை என்பதனை ஐயங்கார் அவர்கள் இவ்விதழின் வழியாகத் தமிழ் உலகிற்கு அறிவித்தார். இதனைப் பின்பற்றியே தொல்காப்பியப் பதிப்புகள் பின் வந்தோரால் பதிப்பிக்கப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இதுபோலவே திருக்கோவையார் உரையாசிரியர் பேராசிரியரே எனத் தெளிவுபடுத்தினார். புறப்பொருள் வெண்பாமாலையின் உரை ஆசிரியர் சாமுண்டி தேவநாயகர் என்றும் கம்ப ராமாயணத்திற்கு ஆசிரியர் சூட்டிய பெயர் இராமாவதாரம் என்றும் முதற்கண் அறிவித்தவர் இவரேயாவர். பாகவத புராணத்தைத் தமிழில் பாடியவர் ஆரியப்பப் புலவர் என்ற தவறான கருத்தை மறுத்து அது வேம்பத்தூர் செவ்வைச் சூடுவாரால் பாடப்பெற்றது என்னும் உண்மையை உலகிற்கு அறிவித்துள்ளார். இவையெல்லாம் இவர்தம் ஆராய்ச்சித் திறனுக்குத் தக்க சான்றுகளாகும். ஐயங்கார் அவர்கள் செந்தமிழ் இதழில் சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் குறித்துத் தொடர்ந்து எழுதியுள்ளார். இவர் இவ்விதழில் திருவள்ளுவர், கம்பர் குறித்து எழுதிய கட்டுரைகள் ஆராய்ச்சிப் பேருரைகளாகும். திருத்தக்க தேவரையும் கம்பரையும் ஒப்பிட்டு இவர் எழுதிய கட்டுரையும் சிறப்புடைய தாகும். சேதுபதிகள் என்னும் தலைப்பில் சேதுவேந்தர் குலப் பெருமையினையும் வரலாற்றையும் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார். வெளியிட்ட நூல்கள் செந்தமிழ் இதழ் வாயிலாக ஐந்திணை ஐம்பது உரை கனா நூல்’, வளையாபதிச் செய்யுட்கள்,’ புலவராற்றுப் படை இனியது நாற்பது உரை’, நேமிநாதம் உரை என்பனவற்றை முதற்தொகுதியில் வெளியிட்டுள்ளார். அவிரோதியாழ்வாரின் திருநூற்றந்தாதியையும் முத் தொள்ளாயிரச் செய்யுட்களையும் இவ்விதழ் வாயிலாகப் பதிப்பித்துள்ளார். ஐந்திணை எழுபது பன்னிரு பாட்டியல் தொல்காப்பியச் செய்யுளியல் - நச்சினார்க் கினியர் உரை என்பனவற்றையும் தொடர்ந்து வெளியிட் டுள்ளார். ஐயங்கார் அவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்கப் பணியை ஏற்கும் முன்பே ஏட்டுச் சுவடிகளை ஒப்புநோக்கி அக நானூற்றைப் பதிப்பிக்கத் தொடங்கினார். நோய்வாய்ப்பட்ட தாலும் மற்றும் சில இடையூறுகளாலும் இப் பதிப்புப்பணி தொடர்ந்து நடைபெறவில்லை. பின்னர், கம்பர் விலாசம் இராசகோபால ஐயங்கார் அகநானூற்றுப் பதிப்பினை இராகவ ஐயங்கார் துணையுடனேயே பதிப்பித்தார். ஐயங்கார் அவர்கள் இப் பதிப்பில் சிறந்த முகவுரை ஒன்றும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்விட மாற்றம் இராகவ ஐயங்கார் 1904 ஆம் ஆண்டில் தமது உடல் நலிவுகாரணமாகச் செந்தமிழ் இதழாசிரியர் பணியிலிருந்து விலகித் தேவக் கோட்டை சென்று சில ஆண்டுகள் வாழ்ந்தார். நகரத்தார் பெரு மக்கள் பலரும் இவரை ஆதரித்தனர். இக் கால கட்டத்தில் தான் இவருடைய புதல்வர் இராமாநுஜ ஐயங்கார் பிறந்தார். ஏழாண்டுகள் தேவ கோட்டையில் வாழ்ந்த பின்னர் இவரிடம் தமிழ் பயின்ற இராஜேவர சேதுபதி 1910 ஆம் ஆண்டில் சேதுபதி யானார். அவர், தம் ஆசிரியரை மீண்டும் இராமநாத புரத்திற்கு அழைத்துக் கொண்டார். மீண்டும் இராமநாதபுர வாழ்க்கை முன் போலவே இவர் மீண்டும் இராமநாதபுரத்தில் சேதுபதி மன்னரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார். தமிழ், வடமொழி நூற்களை இடையறாது கற்றதுடன் பிறருக்கும் கற்பித்தார். ஆராய்ச்சி உரைகளையும் வெளியிட்டார். கவித் திறத்தால் செய்யுள் நூல்களையும் இயற்றினார். ஆய்வுப்பதிப்புகள் : ஆராய்ச்சி நூல்கள் தொல்காப்பியச் செய்யுளியலின் நச்சினார்க்கினியர் உரையைச் செந்தமிழில் வெளியிட்டுப் பின்பு செந்தமிழ் வெளியீடாக 1917இல் வெளியிட்டுள்ளார். இதன் முகவுரையில் தொல்காப்பிய வரலாறும் உரைநூல்களைப் பற்றிய குறிப்பும், பதிப்பிற்குரிய ஏடுகளின் வரலாறும் பிறவும் நன்கு விளக்கப் பெற்றுள்ளன. இவருடைய ஆராய்ச்சி நூல்களில் வஞ்சிமாநகரம் என்னும் நூல் குறிப்பிடத்தக்கதாகும். கொங்குநாட்டுக் கருவூரே வஞ்சி மாநகரமென்று இவர் இந்த நூலில் துணிந்துள்ளார். இக் கருத்துக்கு மாறுபட்டோர் மேலைக் கடற்கரையிலுள்ள கொடுங் கோளூரே வஞ்சிமாநகரென வாதிட்டனர். இது புலவர்களிடையே அந் நாளில் விவாதத்திற்குரிய பெரும் பொருளாக அமைந்தது, இந் நூல் இவர் தம் ஆராய்ச்சித் திறனுக்குத் தக்க சான்றாகும். சங்ககாலப் பெண்பாற்புலவர் குறித்து இவர் எழுதியவை நல்லிசைப்புலமை மெல்லியலார்கள் என்னும் பெயரில் வெளியிடப் பெற்றது. நம்மாழ்வார் திருப்பாசுரம் நம்மாழ்வார் மதுரையில் திகழ்ந்த சங்கப் புலவர் குழுவிற்கு எழுதி விடுத்த திருப்பாசுரம் அண்ட கோளத்தாரணுவாகி எனத் தொடங்கும் 17 அடிகள் கொண்ட ஓரகவல். இவ்வகவலைக் கண்டெடுத்தவர் ஐயங்கார் என்பது குறிப்பிடத் தக்கது. எளிதில் பொருள் விளங்காத இவ்வகவலை ஐயங்கார் அவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பின்பு திருவல்லிக்கேணியில் நிகழ்த்திய ஒரு சொற் பொழிவில் பொருள் விளங்கச் செய்தார். இச் சொற்பொழிவினை ஸ்ரீவேத வேதாந்த வர்த்தணி மகாசபையினர் 1934ல் அண்ட கோள மெய்ப் பொருள் என்னும் பெயரில் தனி நூலாக வெளியிட்டுள்ளனர். இப் பாசுரத்தின் பொருளைத் தென்மொழி வடமொழி மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார். செய்யுள் நூல்கள் ஆய்வுலகம் போற்றும் அறிஞராக விளங்கிய ஐயங்கார் அவர்கள் ஆசுகவியாக விரைந்து பாடும் ஆற்றல் பெற்ற வராகவும் திகழ்ந்தார். இவர் இயற்றிய சிறு பிரபந்த வகைகளில் ‘புவியெழுபது’, தொழிற்சிறப்பு திருவடி மாலை’, இராசராச சேதுபதி ஒரு துறைக்கோவை’1, என்பன குறிப்பிடத்தக்கன. திருவேங்கட மாயோன் மாலை’, திருப்புல்லாணி யமகவந்தாதி’, பாரத நீதிவெண்பா’, ‘பகவத்கீதைப்பாடல்’, காவல் தலைமை கடவுள் மாலை பல்லட சதகம் என்பன இன்னும் அச்சில் வராத நூல்களாகும். ஔவையார் எழுதிய ஆத்திசூடிக்கு இவர் எழுதியுள்ள விளக்கவுரை சிறந்ததொரு விருத்தியுரை யாகும். இவ்வுரை நூலைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை 1985-ல் பதிப்பித்து வெளிவரச் செய்துள்ளார். கவிதை நூல்களேயன்றி ஐயங்கார் அவர்கள் தம் வாழ்நாளில் பாடிய தனிப்பாடல்களும் பலவாகும். தம்மை ஆதரித்த மன்னர் பாகர சேதுபதி மறைந்த போது இவர் பாடிய பாடல்கள் நெஞ்சை உருக்குவன. நவராத்திரி விழாவிலும் இவர் பல பாடல்களைப் பாடியுள்ளார். மொழிபெயர்ப்புத் தொண்டு வடமொழியிலும் வல்லவராகிய இவர் அம்மொழியிலுள்ள அரிய கருத்துக்களையும், சிறந்த நூல்களையும் தமிழ் நூல்களாக வெளியிட்டுத் தொண்டாற்றியுள்ளார். வால்மீகி இராமாயணத்தில் சில பகுதிகளையும் இரகுவம்சத்தில் சில சருக்கங்கனையும் இவர் தாழிசை யாப்பில் மொழி பெயர்த்துள்ளார். வியாச பாரதத்திலுள்ள நீதிப்பகுதிகளை வெண்பாவில் அமைத்து 203 பாடல்களில் பாரத நீதிவெண்பா என்னும் ஓர் அறநூலையும் ஆக்கியுள்ளார். இந் நூலும் மேலே சுட்டிய நூற்பகுதிகளும் இன்னும் அச்சில் வெளியிடப் பெறவில்லை. தாழிசையாப்பில் முழுமையாக அமைந்த மொழி பெயர்ப்பு நூல் பகவத்கீதைப் பாடலாகும். இந் நூலும் இதுவரை அச்சாகவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி. மகாகவி காளிதாசரின் சாகுந்தலத்தை அபிஜ்ஞான சாகுந்தலம் என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். ஐயங்கார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருந்தபோது இம் மொழி பெயர்ப்பு முற்றுப் பெற்றது. இவர்தம் மொழி பெயர்ப்பு நூலாகிய சாகுந்தல நாடகம் தென்னாட்டில் விளங்கும் பாடத்தைத் தழுவி அமைக்கப்பெற்றது. வடமொழியிலுள்ள பாகவதத்தின் உரை நடைக்குத் தமிழ் உரைநடையும் கொண்டுள்ளது. காவிய ஆசிரியர் பண்டைய வள்ளல்களுள் சிறந்து விளங்கியவன் பறம்புமலைக் கோமானாகிய பாரி. சங்கப் பாடல்களில் இவ் வள்ளலைப் பற்றிக் காணப்பெறும் வரலாற்றுச் செய்திகளையும், பின்வந்த நூல்களில் வந்த குறிப்புக்களையும் ஆதாரமாக வைத்துப் பாரிகாதை என்ற காவியத்தை 16 பகுதிகளாகப் பகுத்து 753 வெண்பாக்களில் இவர் சிறந்த காவியமாக உருவாக்கியுள்ளார். இதற்குரிய உரையையும் இவரே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இக்காவியத்தின் அருமை பெருமைகளை உணர்ந்த அண்ணாமலை அரசர் அவர்கள் தம் பிறந்த நாள் விழாவாகிய 14-02-1934 இல் புலவர்கள் கூடிய அவையில் அரங்கேற்றம் செய்து தம் குமாரர் முத்தையவேள் அவர்களைக் கொண்டு பொற்கிழியும் பொன்னாடையும் அளித்துச் சிறப்பித்துள்ளார். கற்பனைச் சிறப்பும் பொருள் ஆழமும் மிக்க இக் காவியத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தம் முதல் தமிழ் வெளியீடாக 1937 ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பணி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1935 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பெற்ற தமிழாராய்ச்சித் துறையில் இராகவ ஐயங்கார் அவர்கள் முதன்மை ஆராய்ச்சியாளராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தம் 65-ஆம் அகவையில் இப் பதவியை ஏற்ற அவர் 1941 வரை இப் பிரிவில் பெருந்தொண்டாற்றினார். ஆராய்ச்சிப் பணியுடன் முதுகலை மாணவர்களுக்குப் பாடமும் கற்பித்தார். இக் கால கட்டத்தில் அகத்தியம், தொல்காப்பியம் ஆகியவற்றின் வரலாறுகளை ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இவர் எழுதிய `தமிழ் வரலாறு என்ற நூல் பல்கலைக்கழக இரண்டாவது வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது. குறுந்தொகைக்கு இவர் செய்த விளக்கவுரை முதற்பகுதி (111 பாடல்கள்வரை) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழி 1946-இல் வெளியிடப் பெற்றுள்ளது. திணை, கைகோள், கூற்று, கேட்போர் முதலிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப இவர் எழுதியுள்ள உரையும் விளக்கமும் அறிஞர் பெருமக்களை இன்புறுத்தும் சிறப்புடையன. பத்துப் பாட்டுள் பெரும் பாணாற்றுப்படை, பட்டினப் பாலை என்னும் இருபெரும் பாடல்களுக்கும் இவர் இயற்றிய `ஆராய்ச்சியும் உரையும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்துள்ளன. பெரும்பாணாற்றுப் படை ஆராய்ச்சியில் பல்லவன் மரபு, சோழனுக்கு நாக கன்னியின் வழி வந்தது என்பதை மறுத்துள்ளார். பல்லவ குலம் கடல் கெழு செல்வி வழியாக வந்த துரோணன் மரபு என்று தக்க ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். பொருநராற்றுப் படைத் தலைவனாக வரும் கரிகாலனும், பட்டினப் பாலையின் தலைவனாகிய திருமாவளவனும் ஒருவரல்லர் என்பதை ஆராய்ந்து துணிந்துள்ளார். இரு நூல்களின் உரைப் பகுதியிலும் நச்சினார்க்கினியர் உரையைச் சில இடங்களில் மறுத்தும், தம் துணிபு கூறியும் எழுதியிருப்பது இவர் தம் புலமைத் திறனை விளக்கும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவர் நிகழ்த்திய சிறப்புச் சொற் பொழிவுகள் மிகப் பல. பிறர் நிகழ்த்தும் பொழிவுகளைக் கேட்டு மதித்து அவற்றை வரவேற்கும் பரந்த உள்ளம் படைத்தவராக விளங்கினார். மாணவர்களிடம் கருத்து வேற்றுமை கண்டபோது கூட அவற்றை வரவேற்றுத் தம் கருத்துக்களைநிலைநாட்டச் சான்றுகள் கூறி வாதிடுவார். மாணவர்களின் சிறந்த கருத்துக்களைப் பாராட்டவும் செய்வார். நாவீறு பெற்ற நாவலராக விளங்கிய இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் பலவற்றில் தலைமை வகித்தும், பொழிவு நிகழ்த்தியும் தமிழ்விருந்து அளித்துள்ளதுடன் வாதப்போர் பலவற்றில் கலந்துகொண்டு இவர் வெற்றி கண்டுள்ளார். புகழ் பூத்த வாழ்வு ஐயங்கார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து 1941 இல் ஓய்வுபெற்ற பின்னர் இராம நாதபுரத்தில் உள்ள தமது இல்லத்தில் வாழ்ந்து வந்தார். இவர்தம் திருமகனார் இராமநுஜ ஐயங்கார் தந்தைக்குரிய பணிவிடைகளை நன்கு ஆற்றினார். கண் பார்வைக் குறைவாலும், உடல் தளர்வாலும் வெளியூர்களுக்குச் செல்வதை நிறுத்திய ஐயங்கார் தம்மை நாடி வந்தவர்களுக்கு எப்போதும் தமிழ் விருந்தளித்தார். ஆயுட்காலம் முழுமையும் தமிழை அயராது கற்றும், கற்பித்தும், நூல்களைப் படைத்தும் நூலாராய்ச்சிகளையும் உரைகளையும் உருவாக்கித் தந்த இத் திருத்தொண்டர் 11-07-1946இல் பூதவுடல் நீத்துப் புகழுடம்பு பெற்றார். இவர்கள் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ சங்கங்களில் தலைமை வகித்தும் சொற்பெருக்காற்றியும் வந்த போது அங்கங்கே இவர்களுக்கு அளித்த வரவேற்பு வாழ்த்து மடல்களும் இவர்தம் பன்னெறித் தொண்டுகளைப் பாராட்டியுள்ளன. இவர் மறைந்த பொழுது இவர்களுடன் பழகிய பேராசிரியர்களும், கவிஞர்களும், அறிஞர்களும் பிறரும் இரங்கி எழுதிய உரைகளும் கையறுநிலைப் பாடல்களும் இவர்தம் அழியாப் புகழுக்குச் சான்று பகவர்வன. எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஆக்கியளித்த தமிழ்ச் செல்வங்கள் தமிழன்னைக்குச் சிறந்த அணிகலன் களாகத் திகழ்கின்றன. செந்தமிழின் முதற்றலைவன் செய்தனவாம் தாய்த்தொண்டு செப்பற் பாற்றோ? முந்தியநூல் செய்யுள்பல முறையாக வச்சிட்டான்; முயலா தாரும் பிந்தியதன் னிருட்காலப் பிணக்கமெலாம் நுழைந்தாய்ந்து பிறங்கும் உண்மை தந்திடுவோன்; ஐயங்க டமையறுப்பான் ஆராய்ச்சிமுறை தருவான் அம்மா! கண்டின்மிக வினிக்கின்ற கட்டுரைகள் பலதந்தான்; கருத்து மிக்க எண்டொகையுள் அகத்திற்கிங் கியலுரையுள் ளுறைதோன்ற இயற்றி வைத்தான்; வண்டிறலார் வடகடலுள் நலமுகந்து தமிழ்க்கடலுள் வார்த்துக் கொள்வான்; தண்டமிழ்த்தேன் ஒழுக்கமெனும் தாழிசைசெய் தோங்குமிசை தானும் கொண்டே! சந்தமுறு ரகுவம்சம் சாகுந்த லம்கீதை சார மெல்லாம் தந்திடுபா ரதநீதி பல்லடன்றன் சதகமிவை தந்தான்; செந்தேன் உந்தும்ஒரு துறைக்கோவை ஒருகோடி தனிச்செய்யுள் உவையுந் தந்தான் எந்தவுயர் பாவன்றாய்க் கிராகவன்போற் பன்னெறித்தொண் டியற்றி னானே! கம்பன் பிறப்போ கபிலாவ தாரமோ இம்பரிவ ரென்ன இருந்தா னிறந்தானே செம்பதுமை ஈன்றருளும் சீரா கவனோடும் அம்புவியிற் காண்டற் கரும்புலமை மாய்ந்ததுவே! கீதை மொழிபெயர்த்தான்; கேடில் புகழ்க்காளி தாதனார் சாகுந் தலத்தைத் தமிழ் செய்தான்; தீதகல எம்மான் திருவடிமேற் பாமாலை ஓதியே உய்ந்தான்; உரைத்தான் தொழிற்சிறப்பே. வஞ்சி நகரை வரையறுத்தான் வண்புவியின் விஞ்சு நலம்விரித்தான்; வேள்பாரி பாட்டிசைத்தான்; செஞ்சொற் பொருளுரையாற் செந்தமிழை மேம்படுத்தான்; எஞ்சும் இவைநிதிகள் இராகவனார் வைத்தனவே1. உரைச் சிறப்புப் பாயிரம் சங்கப் புலக்கடலிற் றாந்தாந் தனிமூழ்கி யங்கட் டிளைத்த வறிஞருளே - துங்கப் பொருணித் திலம்பெற்றார் பொய்யாக் கலைமா தருணித் தலும்பெற்றா ரால். என்மா துலனா மினிய புலச்சேடன் நன்மா ணடியை நயந்ததனாற் - பன்மாண் குறுந்தொகையின் சீர்கண் கொளவேற்றி வைத்தேன் வெறுந்தகையெ னேனும் விளக்கு. பெரியார் குறுந்தொகைக்குப் பேராசிரியன் உரையா மிரவி யொளித்த - இரவூ டொருவிளக்க மீது மொளிருந் தமிழ்த்தாய் அருள்விளக்கும் கோயி லகத்து. பேரா சிரியன் பெரிய வுரையெங்கே ஓரா வெளியே னுரையெங்கே - நேரென்னிற் பொன்னைக் கரும்பொன் பொரூஉம் புயன்மிளிரு மின்னைப் பொருமின் மினி. தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் எழுதிய முகவுரை1 தமிழ் மக்களது அன்பும் அறிவும் நிறைந்த இன்ப வாழ்வின் இயல்பினைப் புலப்படுத்துவன பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகிய சங்க இலக்கியங் களாகும். அந் நூல்கள் இற்றைக்கு ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட பழமை வாய்ந்தன என்பது அறிஞர் பலருக்கும் ஒப்ப முடிந்த துணிபாகும். திருமுருகாற்றுப் படை முதல் மலைபடுகடாம் இறுதியாக அமைந்த பாடல்கள் பத்தும் பத்துப் பாட்டு எனப் பெறும். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாம். அத் தொகை நூல்களே தமிழர்கள் வகுத்த அகம் புறம் என்னும் பொருள் வகையினை இனிது விளக்கும் இலக்கியங்களில் தலை சிறந்தனவாகும். இவற்றுள் பதிற்றுப்பத்தும் புறநானூறும் புறப்பொருள் பற்றித் தொகுக்கப் பட்டன. கலித்தொகையும் பரிபாடலும் முறையே கலிப்பாவும் பரிபாடற்பாவும் ஆகிய யாப்பு வகைபற்றித் தொகுக்கப்பட்டன. ஐங்குறுநூறு என்பது ஓரம்போகியார் முதலிய நல்லிசைப் புலவர் ஐவரால் அகனைந் திணையுள் ஒவ்வொரு திணைபற்றி நூறு நூறு செய்யுட்களமையத் தனித்தனியே பாடப் பெற்றுத் தொகுக்கப்பட்டதாகும். குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்பன அகனைந்திணையாகிய பொருளாலும் ஆசிரியப்பாவாகிய யாப்பாலும் நானூறு பாடல்கள் என்னுந் தொகையாலும் ஒத்தவியல்பினவாம். எனினும், இவற்றைச் செய்யுட்களின் அடி வரையறை கருதி முன்னையோர் மூன்று தொகைகளாகத் தேர்ந்து தொகுத்தனர். நாலடி முதல் எட்டடி வரை யமைந்த குறுகிய செய்யுட்களைக் குறுந்தொகையென ஒரு தொகையாக்கினார். ஒன்பதடி முதல் பன்னிரண்டடி வரை அமைந்தவற்றை நற்றிணையென ஒரு தொகைப்படுத்தினர். பதின்மூன்றடி முதல் முப்பத் தோரடிவரை அமைந்த நீண்ட செய்யுட்களை நெடுந்தொகை யாகிய அகநானூறு என ஒரு தொகையாக்கினார். குறுந்தொகை என்னும் இத் தொகைநூல் இப்போது கடவுள் வாழ்த்து நீங்கலாக நானூற்றொரு செய்யுட்களைப் பெற்றுள்ளது. நெடுந்தொகை நானூறும் குறுந்தொகை நானூறும் நற்றிணை நானூறும் என இறையனார் களவியலுரையாசிரியர் குறிப்பிடுவதால் இந் நூல் தொகுக்கப் பெற்ற காலத்து நானூறு செய்யுட்களை யுடையதென்பதே தொல்லாசிரியர் துணிபாம். இத் தொகை முடித்தான் பூரிக்கோ, இத் தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர். இத் தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது என்னுங் குறிப்பு இத் தொகையினிறுதியிற் காணப்படுதலின், இதனைத் தொகுத்துதவினார் பூரிக்கோ என்னும் புலவர் பெருமானென்பதும், கடவுள் வாழ்த்து நீங்கலாக இந் நூலில் தொகுக்கப்பெற்ற நானூற்றொருசெய்யுட்களையும் பாடிய புலவர் இருநூற்றைவர் என்பதும், நாலடி முதல் எட்டடிவரை அமைந்த அகவற்பாக்களே இதன்கண் தொகுக்கப்பெற்றன என்பதும் தெளிவாகும். நவிலுந்தோறும் சுவைமிகப் பயக்கும் இலக்கிய வளமார்ந்த இக் குறுந்தொகைக்குத்தொல்காப்பியவுரையாசிரியருளொருவராகிய பேராசிரிய ரென்பார் தம்முடைய கல்வி வன்மையும் பெரும் புலமையும் விளங்க அரியதோர் விரிவுரையியற்றினரெனவும், அவ்வாசிரியரால் உரையெழுதி முடிக்கப் பெறாது எஞ்சிய இருபது செய்யுட்களுக்கு மட்டும் பின்வந்த ஆசிரியர் நச்சினார்க்கினியர் தெளிவுரை வரைந்து அவ்வுரையினை நிறைவு செய்தன ரெனவும் நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப்பாயிரம் கூறுகின்றது. இங்ஙனம் முந்நூற்றெண்பது செய்யுட்களுக்குப் பேராசிரி யருரையும், எஞ்சிய இருபது செய்யுட்களுக்கு நச்சினார்க் கினியருரையும் அமைந்த குறுந்தொகையின் பழையவுரை இது போது கிடைக்கப் பெறாமை தமிழரது தவக் குறையேயாம். இக் குறுந்தொகையினை 1915 ஆம் ஆண்டில் முதன் முதலாகப் பதிப்பித்து வெளிப்படுத்திய அறிஞர். திருக் கண்ணபுரத்தலத்தான் திருமாளிகைச் சௌரிப் பெரு மாளரங்கனார் ஆவர். தமிழிற் சிறந்த புலமை மாண்பும் பேரன்புமுடைய இப் பெரியார், முன்னர் வெளிவராத அரிய நூலாகிய இதனை வெளிப்படுத்துங்கால் இந் நூற்பொருளை யாவரும் உணர்ந்து மகிழும்வண்ணம் தாம் அரிதின் முயன்று எழுதிய புதிய உரையுடன் வெளியிட்டுதவினார்கள். தமிழ் நூலாராய்ச்சிக்குப் போதுமான கருவிகளும் ஆதரவும் கிடைக்காத அக்காலத்தே இவர்கள் இயற்றிய குறுந்தொகை யுரை தமிழ் மக்களாற் பெரிதும் பாராட்டப்பட்டது. எனினும், பழந்தமிழ் இயல் நூல்கள் சான்றோர் பலராலும் ஆராயப் பெற்று வெளியிடும் முயற்சி தெளிவடையவே, முன்னர் வெளியிடப்பெற்ற நூலுரைகளின் பிழைபாடுகளும் அவ்வப்போது அறிஞர்களுள்ளத்தே புலப்படுவனவாயின. அதன் பயனாகக் குறுந்தொகைச் செய்யுட்கள் திருந்திய வடிவில் வெளிவருவனவாயின. பண்டைத் தமிழ் நூல்களை வெளியிடுந் திறத்தில் நிகரற்று விளங்கிய தமிழ்ப் பெரியார் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் தாம் பல ஆண்டுகளாக இக் குறுந்தொகையினை ஆராய்ந்து வந்ததன் பயனாக, சௌரிப் பெருமாளரங்கனார் பதிப்பிற் பிழையுற்றிருந்த செய்யுட்களைப் பிழையற்ற நிலையில் வெளிப்படுத்தி அத்தூய பாடத்திற்கேற்பத் தெளிவும் விளக்கமும் அமைந்த புதிய உரையினையும் எழுதி, அதனைச் சென்னைப் பல்கலைக் கழகத்தாரது ஆதரவுடன் 1937ஆம் ஆண்டு வெளியிட்டார்கள். மூன்றாவது உரையாகிய இது,1 சங்கச் செய்யுட்கள் பிழையற்ற நிலையில் வெளிவந்த பின்னர் அமைவுடன் எழுதப் பெற்றதாதலின், முதலுரையைக் காட்டிலும் தூய்மையும் பொருட்டெளிவும் விளக்கமும் பெற்றுப் பயில்வோர்க்குப் பேராதரவாய் விளங்குகின்றது என்பதனைத் தமிழறிஞர் எளிதின் உணர்வர். தமிழ் நூல்களைப் பாடஞ்சொல்வாரும் பயிலும் மாணவர்களும் மிகுதியாக மிகுதியாக, அந் நூல்களின் பொருள் நலன்களும் நவிலுந்தொறும் சுவைமிக வளர்ந்து சிறத்தல் இயல்பேயாம். தம் வாழ்நாள் முழுதும் தமிழ் நூல்களைப் பயின்று அவற்றின் சுவை நலங்களை யுணர்ந்து மகிழ்தலையே பொழுது போக்காகக் கொண்டவரும், இன்றமிழ்ப்பனுவல்களை யாவரும் வேட்ப மொழியுஞ் சொல்வன்மையுடையவரும், விருந்தாய சொன்மாலையியற்றித் தமிழன்னைக்கு அணிந்த பெரும்புலவரும் ஆகிய சேது சமத்தான அவைக்களப் புலவர் மகாவித்துவான் இரா. இராகவையங்காரவர்கள் நம் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பகுதியில் அலுவல் மேற்கொண்டிருந்த காலத்துத் தமிழ் மாணவர்கட்குச் சில மணிநேரங்களிற் பாடஞ் சொல்லவேண்டிய கடமையினையும் மேற்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் பயிற்ற எடுத்துக் கொண்ட நூல் இக் குறுந்தொகையாகும். தமிழிலக்கியச் சுவை நலங்களில் ஈடுபடுங்கால், தம்மையும் மறந்து அத் துறையில் ஆழ்ந்துவிடுமியல்புடைய ஐயங்காரவர்கள் குறுந்தொகைப் பாடல்களுக்குச் சங்கவிலக்கியக் கண்கொண்டு பொருள் கூறுமிடத்து முன்வெளிவந்த இரண்டுரைகளினுங் காணப்பெறாத புதிய விளக்கங்களும் செய்யுளின் திருத்தமான வடிவங்களும் புலப்படுதல் இயல்பே. அவற்றைக் கேட்டார் பலர் அவர்கள் கண்ட திருத்தங்களைத் தழுவிப் புதிய விளக்கவுரை யொன்று எழுதியுதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்கள். அவ் வேண்டுகோளை நிறைவேற்றக் கருதிய மகாவித்துவான் ஐயங்காரவர்கள், மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் உரையைப் பயிற்சிக்குரிய அடிப்படையுரையாகக் கொண்டு, அதன் விளக்கமாக, இகல்கருதாப் புலமையுணர்வுடன் குறுந்தொகை விளக்கத்தினை இயற்றினார்கள். அவ்வுரையில் இப்பொழுது கிடைத்துள்ள ஒரு பகுதியாகிய நூற்றுப் பன்னிரண்டு பாடல்களின் உரை இதுபோது அண்ணா மலைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளி வருகின்றது. 1 குறுந்தொகையாகிய ஒரு நூலுக்கே ஒன்றன்பின் ஒன்றாக இம் மூன்றுரைகளும் வெளிவருவதற்கு, முன்னைப் பதிப்பிற்கண்ட பிழைபாடுகளுங் கருத்து வேறுபாடுகளுமே காரணமாயின. எடுத்துக்காட்டாக முதல்வர் உரையிற் சிலவற்றை நோக்குவோமாக. இத் தொகையின்கண் வந்த `வில்லோன் காலன கழலே எனத் தொடங்கும் ஏழாம் பாடல், உடன் போக்கின்கண் சென்ற தலைவன் தலைவி யிருவரையும் சுரத்திடைக் கண்டோர் கூறிய துறையின் பாற்படும். இப் பாடலின் மூன்றா மடியில் வந்த `ஆரியர் என்னுஞ் சொல்லுக்குப் பிறநாட்டவராகிய மிலேச்சர் என்பது பொருளாகும். இப் பொருண்மரபினை யறிந்து கொள்ளாத முதலுரை காரர், பிற்கால வைதீகர் கருத்தின்படி ஆரியர் என்பதற்கு இருமுதுகுரவர் எனப் பொருள் கூறியுள்ளார். இச் செய்யுளில் `ஆரியர் என்பது பின்னுள்ள `கயிறாடு பறையின் என்பதனோடு இயைந்து, ஆரியர் ஆடும் கூத்துடன் ஒலிக்கும் பறை நிகழ்ச்சியைக் குறிக்கின்றது. நடத்தற்கரிய பாலை நில வழியில் தலைவன் தலைவி இருவரையும் கண்டவர்கள், அவ்விருவர் நிலைக்கும் வருந்தி அவ்விருவரும் அளிக்கத்தக் கார் எனக் கூறுவதல்லது அவர்தம் பெற்றோரை நினைத்து இரங்கினர் என்பதற்குரிய சொற்குறிப்பு இப் பாட்டின்கண் இல்லை. இதன்கண் `வேய் பயிலழுவம் முன்னியோர் என்பதனை முடிக்க வந்த `அளியர் தாமே என்னும் பயனிலை, தொடர்பில்லாத ஆரியர் என்னுஞ் சொல்லை முடித்தல் கூடாது. `கயிறாடு பறையின் என்புழிக் கயிற்றின்கண் ஏறி ஆடும் கூத்தராவார் இவரென இயைபு பெறக் கூறுதல் இன்றியமையாததாகலின், `ஆரியர் கயிறாடு பறையின் என இயைத்துரைப்பதே பொருத்தமுடையதாம். மேற்காட்டிய காரணங்களால், இச் செய்யுளிலுள்ள `ஆரியர் என்னும் சொல்லிற்கு `இருமுது குரவர் எனப் பொருளுரைத்தல் பொருந்தாதென்பது புலப்படும். இப் பிழைபாட்டினையுணர்ந்த ஐயரவர்களும் ஐயங்காரவர்களும் தம் உரையின்கண் இப் பிழையினை விலக்கியுள்ளார்கள். முதலுரையாசிரியர் 9ஆம் பாடல் இரண்டாமடியினை, `மடை மாண் செப்பிற் றமியள் வைகிய எனத் தவறாகக் கொண்டமையால் பிழைபடச் சொன்முடிபு கூறி விளக்கமின்றி யுரையெழுதியுள்ளார். `மடைமாண் செப்பிற் றமிய வைகிய எனப் பின்னவர் பாடங்கொண்டு கூறிய உரையும் விளக்கமுமே பிழையற்றன. இவ்வாறே இந் நூற் பத்தாம் பாடலிலும் முதலுரையாசிரியர் துறையொடு பொருந்தாமலும் பொருள் விளக்கமின்றியும் உரை கூறியுள்ளார். இவர் தம் பதிப்பில் 110 ஆம் செய்யுளில் அடியமைப்பும் சொல்லுருவும் பிழைபட அமைந்துள்ளன. வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழி நீர் நிலைப்பைம் போதுளரிப் புதல்பிலி யொண்பொறிக் கருவிளை நுண்மு ளீங்கைச் செல்வரும் பூழ்த்த வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென் றின்னா தெறிவரும் வாடையொ டென்னாயினள் கொலென்னாதோரே என முதற் பதிப்பில் சிதைந்து காணப்படும் பாடம். வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழி நீர நீலப் பைம்போ துளரிப் புதல பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி நுண்முள் ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென் றின்னா தெறிவரும் வாடையொ டென்னா யினள்கொ லென்னா தோரே எனப் பின் வந்த பதிப்பாளர்களால் திருத்திக் கொள்ளப் பட்டமை காண்க. இருபத்து நான்காஞ் செய்யுளில் ஆற்றய லெழுந்த வெண் கோட் டதவத், தெழுகளிறு மிதித்த வொருபழம் போல என இம் முதலுரையாசிரியர் கொண்ட பாடத்தைக் கீழ்க்குறிப்பாகக் காட்டிய ஐயரவர்கள், `எழுகுளிறு மிதித்த வொருபழம் போல என்ற பாடமே சிறந்ததெனக்கொண்டு, குளிறு என்பதற்கு நண்டு எனப் பொருள் கூறிச் சென்றனர். குளிறு என்பது நண்டின் பெயர் அன்று எனவும், `களவன் குளிர்ஞெண்டு என உரிச்சொல் நிகண்டும். `குளீர: கற்கடக: என அமரகோசமும் கூறுதலால் `எழுகுளிர் மிதித்த என்ற பாடமே பொருந்துமெனவும் விளக்கவுரையாசிரியராகிய ஐயங்காரவர்கள் திருத்திக்கொண்டார்கள். அத்திப் பழம் நன்கு முற்றி யளிந்ததாயினும் ஏழு நண்டுகள் ஏறி மிதித்த அளவே அப் பழம் உருவறக்குழைந்து சிதையுமென உறுதியாகக் கொள்ளுதல் இயலாது. என்னை? நண்டுகளின் கால்கள் மிதித்த அளவே அப் பழத்தினைக் குழைவித்தற் கேற்ற வன்மையுடையன அல்லவாதலின் என்க. ஏழு யானைகளால் அடுத்தடுத்து மிதித்தற்கேற்றவாறு வழியிற்கிடந்த அத்திப்பழம், அவ் யானைகளின் கால்களால் அடுத்தடுத்து மிதிக்கப்பெற்ற நிலையில் உருவின்றிக் குழைந்து சிதைதல் போலக் கொடியோருடைய நாவானது உருவறக் குழைந்து சிதைக என்பதே தலைவியின் கருத்தாகலின், முதலுரையாசிரியர் கொண்ட `எழுகளிறு மிதித்த ஒரு பழம்போல என்ற பாடமே பொருட் சிறப்புடையதாகும். இதனால், முதலுரை யாசிரியராகிய சௌரிப்பெருமாளரங்கனார் உரையும் ஆராய்ச்சியாளரால் உற்று நோக்குஞ் சிறப்புடைய தென்பது பெறப்படும். சௌரிப்பெருமாளரங்கனாரது குறுந்தொகைப்பதிப்பு சிற்சில விடங்களிற் பொருள் விளக்கமின்றிப் பிழையுடன் காணப்படுதலால் அப் பிழைகளை நீக்கித் திருத்தமான பாடத்துடன் வேறொரு புதிய உரையினை யியற்றி வெளியிடுதல் ஐயரவர்களின் நீங்காக் கடமையாயிற்று. இரண்டாம் உரையாகிய ஐயரவர்களின் உரைக்கும் ஐயங்காரவர்களின் விளக்கவுரையாகிய இம் மூன்றாம் உரைக்கும் உள்ள வேற்றுமையினை யறிந்துகொள்ளுதல் நலமாகும். ஐயரவர்கள் தம் உரையில் எடுத்துக் காட்டிய மேற்கோட் குறிப்புக்களை ஐயங்காரவர்கள் பாடற் பொருளுடன் தொடர்பு பெற வைத்து விளக்கியுள்ளார்கள். பொருள்கோள் பற்றிய கருத்துரை, சிறப்புரை, பாட வேறுபாடுகள் முதலிய பகுதிகளில் இவ்விரண்டுரைகட்கும் குறிப்பிடத் தக்க வேறுபாடுகள் சில உள. அவற்றுட் சிலவற்றை இங்கு நோக்குவோமாக. தலைவி தன்னை இகழ்ந்துரைத்தாளெனக் கேட்ட காதற் பரத்தை , தலைவியின் பக்கத்திலுள்ளவர்கள் கேட்கும்படி கூறியதாக அமைந்தது எட்டாஞ் செய்யுளாகும். இதன்கண் கையுங் காலுந் தூக்கத் தூக்கும் கண்ணாடியின் நிழல் போலத் தலைவன் தன் மனைவி விரும்பியதையே செய்தொழுகுகின்றான் எனத் தலைவனை யிகழ்ந்துரைக்கும் பரத்தை, தலைவியைப் `புதல்வன் தாய் எனக் குறிப்பிடு கின்றாள். இப் பகுதிக்குச் சிறப்புரை யெழுதிய ஐயரவர்கள், பரத்தை தலைவியைத் தலைவனுக்கு மனைவியென்று கூறப்பொறாளாதலின் புதல்வன் தாய் என்றாள் எனக் குறித்துள்ளார்கள். புதல்வனைப் பேணுதற்குரியளன்றி இன்பத்திற்கு உரியளல்லள் என்பது குறித்துத் தலைவியைத் தன் மகன் தாய் எனப் பரத்தை யிகழ்ந்தாள் என ஐயங்காரவர்கள் கூறும் நயம் `புதல்வன் தாய் என்னும் சொற்பொருளைத் தழுவியதாக அமைந்துளது. 11ஆம் பாடலில் `குல்லைக் கண்ணி வடுகர் முனையது, பல்வேற்கட்டி நன்னாட்டும்பர், மொழிபெயர்தே எத்தராயினும் என்ற தொடர் கொண்டு, இதனால் கட்டியினுடைய நாடும் வடுகரது நாடும் வேற்று மொழியையுடையன வென்பது பெறப்படும் என ஐயரவர்கள் குறிப்பிட்டார்கள். இவ் விளக்கவுரையாசிரியர் இத் தொடரைக் `கட்டி நன்னாட்டும்பர் வடுகர் முனையது மொழி பெயர் தேஎத்தராயினும் என இயைத்துரைக்க எனக் கூறி, இதனாற் கட்டி நன்னாடு வடுகர் முனைக்கு இப்பால் தமிழகத் துண்மை துணியப்படும். கட்டி சேரன் படைத் தலைவருள் ஒருவனென்பது. `கங்கன் கட்டி (அகம். 44) எனவரும் அகப்பாட்டான் அறிந்தது எனக் காட்டும் குறிப்பு இலக்கியச் சான்றுடன் ஏற்றுக் கோடற்கு உரியதாதல் காணலாம். பாட பேதங்கள் விளக்க வுரையாசிரியராகிய ஐயங்காரவர்கள் முன்னை யிரண்டுரை களிலும் இல்லாத பாட பேதங்களைப் பொருள் நோக்கத்தால் உய்த்துணர்ந்து கண்டு வெளியிட்டுள்ளார். முன்னைய பதிப்புகளில் `திப்புத்தோளார் எனவும் `திட்புத்தோளர் எனவும் காணப்படும் புலவர் பெயரை ஐயங் காரவர்கள் `தீப்புத்தேளார் எனத் திருத்தி வழங்கியுள்ளார். 13ஆம் செய்யுளில், நாடன் நோய் தந்தனன் எனப் பிரித்தற்கேற்றவாறு `நாடனோய் தந்தனனே என முன்னைப் பதிப்புக்களிற்கண்ட பாடத்தை `நாட னொய்தந்தனனே எனக் கொண்டு, நாடன் ஒய்தந்தனன் எனப் பிரித்து, `நாடன் (அருகினின்றும்) ஒழியத் தொடங்கினன் எனப் பொருள் கூறியுள்ளார். இப் பகுதிக்கு, ஒய்யென - நெருங்கா தொழியென எனச் சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை 48ஆம் அடியில் அடியார்க்கு நல்லார் வரைந்த உரைக் குறிப்பை மேற்கோளாகக் காட்டியது இவ்வாசிரியரது நூல் அறிவைக் காட்டுவதொன்றாம். 25ஆம் செய்யுளில், யாருமில்லைத் தானே கள்வன், தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ என இதுகாறும் வழங்கி வரும் பாடம் பொருளுக்கு இயைபில்லாமை யுணர்ந்த மகாவித்துவான் ஐயங்காரவர்கள் இத் தொடரின் கண் உள்ள கள்வன் என்னுஞ் சொல்லின் உண்மை வடிவம் களவன் என்பதேயாம் எனவும், ஏடெழுதுவோர் மெய்யையும் உயிர்மெய்யையும் ஒரே நிலையில் எழுது மியல்பினர் என்பதனை ஏடு படிப்போர் கூர்ந்துணராமையே இப்பிழை நிகழ்வதற்குக் காரணமாயிற்றெனவும் குறிப்பிட்டுக், களவன் என்பது செய்தி நிகழ்ந்த களத்துச் சான்றாயினானைக் குறிக்குமென்பதற்கு இலக்கியச் சான்று காட்டி விளக்கியுள்ளார்கள். கள்வன் பொய்த்தல் இயல்பாதலால் கள்வன் பொய்ப்பின் யானெவன் செய்கோ எனக்கவலுதல் பொருத்தமுடையதன்றாம். களவன் என்ற பண்டைய வழக்கு இக்காலத்திய `களத்தான் என்னும் வழக்குடன் ஒப்புநோக்கத் தகுவதாம். பல்லோர்க்கும் நடுநின்று சான்று பகரும் களவனான தலைவன் என்பாற் பொய்ப்பின் யான் யாது செய்வேனோ எனத் தலைவி தோழிக்குக் கூறினாள் என ஐயங்காரவர்கள் கூறும் பொருள் அறிஞர்களால் வியந்து பாராட்டத்தகும் சிறப்புடையதாகும். செய்யுள் 28இல் `முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல் என முன்னை யிருவர்கொண்ட பாடத்தில் முட்டுதலும் தாக்குதலும் ஒரே கருத்தினவாய், உடம்பின் வினையேயாதலின் முட்டுவேன் என்பது பாடமன்றெனவும் `மூட்டுவேன்கொல் எனத் தாம் திருத்திக்கொண்ட பாடமே பொருத்தமுடைத் தெனவும் ஐயங்காரவர்கள் குறிப்பிட் டுள்ளார்கள். மூட்டுதல் - நினைவு மூளச் செய்தல்; தாக்குதல் - பாய்தல்; உடம்பால் விரையத்தீண்டுதல்; கூவுதல் - வாயால் அரற்றுதல்: இவற்றால் மனம், மெய், வாக்கு மூன்றாலும் முயலத் தொடங்கியவாறு கூறினாள் என இவ்வாசிரியர் கூறும் விளக்கம் நோக்கத்தக்கது. செய்யுள் 34இல் `குட்டுவன் மரந்தை என முன்பதிப் பாளர்கள் கொண்ட பாடம் பிழை யென்பதும், மாந்தை என்பதே சரியான பாடமென்பதும், முத்தொள்ளாயிரத்தில், `மல்லனீர் மாந்தையார் மாக்கடுங்கோக் கோதைக்கு என வெண்பா வடியின் வருதலால் துணியப்படும் என ஐயங்காரவர்கள் தெரிவித்துள்ளார். இங்ஙனம் பொருள் நுட்பங் கருதிச் செய்யுளின் உண்மை வடிவினைத் தேர்ந்து துணியும் தெளிவுடைமை இவர்தம் இயல்பென்பதனை இவ் விளக்கவுரை இனிது புலப்படுத்தும். பொருள் நயம் `கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி எனத் தொடங்கும் இரண்டாம் செய்யுளுக்கு ஐயங்காரவர்கள் கூறும் பொருள் பெரிதும் சுவைபயப்ப தொன்றாகும். தலைவன் சிறைப்புறமாக வந்து நிற்பதறிந்த தோழி, தலைவியை விரைந்து மணந்து கொள்ளவேண்டுமெனத் தலைவனைத் தூண்டுங் குறிப்பினளாய் அவனது இயல்பினைப் பழித்துரைக்கின்றாள். அதுகேட்ட தலைவி அப் பழியைக் கேட்டற்கு மனமில்லாதவளாய்த் தன் உயிர்த் தலைவனோடு தனக்குள்ள நட்பின் கெழுதகைமையினைப் போற்றியுரைப்பதாக அமைந்தது குறுந்தொகை மூன்றாஞ் செய்யுளாகும். `நாடனொடு என்பால் நிலைபெற்ற நட்பானது சொல்லப்புகின் நிலத்தைவிட அகலத்தாற் பெரிது; நினையப்புகின் வானைவிட ஓக்கத்தால் உயர்ந்தது உள்புக்கு எல்லை காணப்புகின் கடலை விட ஆழத்தால் அரிய அளவினது என்பது இதன் பொருளாகும். `பெரிது, உயர்ந்தது, ஆரளவினது என முத்திறப்படுத்தது உரை, உள்ளம், மெய் என்ற மூன்றாலும் அளக்கலாகாமை குறித்து என ஐயங்காரவர்கள் விளக்கியுள்ளார்கள். தலைமகனும் தலைமகளும் ஊழ்வழியே ஒருபொழிலிடத்து எதிர்ப்பட்டு ஒருவரையொருவர் இன்றியமையாதவராய் உள்ளங் கலந்து அன்புமீதூரப் பெறு கின்றனர். இந் நிலையில் தன் உயிர்த் துணைவனாகிய தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லுதல் நேருமோ என உளங் கவல்கின்றாள் தலைவி. அவளது குறிப்பு வேறுபாட்டினை யறிந்த தலைவன், தலைவியைத் தேற்றும் பகுதியாக அமைந்தது 40ஆம் செய்யுளாகும். என் தாயும் நின் தாயும் என்ன உறவினர்? என் தந்தையும் நின் தந்தையும் எம்முறைமையுடைய சுற்றத்தார்? யானும் நீயும் எந்தக் குடிவழியென்று அறியோம்; செந்நிலத்துப் பெய்யும் மழை நீரைப்போல நம்மிருவருடைய அன்புமீதூரப் பெற்ற நெஞ்சங்கள் தாமாகவே கலந்து ஒன்றாயின என்பது இப் பாடற் பொருளாகும். இதன்கண் `செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சந் தாம் கலந்தன என்பது, பெயல் மேலே வானத்தும் செம்புலம் கீழே தரையினும் வேறு வேறிடங் களில் வேறு வேறாக உளவேனும் இவை தாமாக இயைந்து ஒரே செந்நீர் ஆயினாற்போல, வேறு வேறிடத்து ஒருவர்க்கொருவர் உறவில்லாது வேறுபட்டிருந்தும் நம் நெஞ்சங்கள் தாமாகக் கலந்து அன்பால் ஒன்றாயின என்றதாம் என இவ்வாசிரியர் கூறும் விளக்கம் தெளிவு டையதாதல் காண்க. 110 ஆம் பாடலில் நீர நீலப்பைம்போது உளரிப், புதலபீலி யொண் பொறிக் கருவிளை ஆட்டி. நுண்முள் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த வண்ணத்துய்ம் மலர் உதிரத் தண்ணென்று இன்னாது எறிவரும் வாடை எனத் தலைவி வாடைக் காற்றின் கொடுமை நினைந்து வருந்துகின்றாள். நீரிலுள்ள நீலத்தின் பசிய போதுகளை அசைத்துப் புதர்களிற் படர்ந்த மயிற்பீலியின் தெள்ளிய பொறிகளையுடைய கருவிளை மலரை அலைத்து நுண்ணிய முட்களையுடைய ஈங்கையின் பஞ்சு போலுந் துய்யினை யுடைய மலர்கள் உதிரும்படி குளிர்ந்து வீசி, இவற்றின்கண் எல்லாம் மலர் களளவில் அசைத்தும் ஆட்டியும் உதிர்த்தும் தண்ணென்று வீசி வந்த இவ்வாடைக் காற்று என்பால் மட்டும் இன்னாது எறிவரும் தன்மையை யுடையதாயிற்று என்பது முற்கூறிய அடிகளுக்கு ஐயங்காரவர்கள் கூறும் பொருளாகும். நீரிலுள்ள நீலமும் புதரிலுள்ள கருவிளையும் நுண்முட்களை யுடைய ஈங்கையும் ஆதலால் அங்கு அவற்றிற்குப் பற்றுக்கோடும் பாதுகாவலும் உள்ளமை கண்டு அவற்றை அழியாது உளரி, ஆட்டி. உதிரத் தண்ணென்று அவ்வாறு பற்றுக்கோடும் பாதுகாவலும் இல்லாத எனது எளிய நிலைகண்டு இவ்வாடைக் காற்று என்னை இன்னாது எறிவதாயிற்று எனத் தலைவி வாடை செய்யுந் துயர்மிகுதியைக் குறிப்பிட்டு இரங்கியதாக இவ்வுரையாசிரியர் கூறிய சொற்பொருள்நயம், `நவில் தொறும் நூல்நயம் என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு ஓர் இலக்கியமாதல் காண்க. இவ்வாறே 91 ஆம் செய்யுளுக்கு வரையப்பட்டுள்ள உள்ளுறை விளக்கம் கண்டு மகிழ்தற்குரியது. பரணராற் பாடப்பெற்ற 73ஆம் பாடலில், நன்னன் நறுமாகொன்று நாட்டிற் போக்கிய, ஒன்றுமொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே எனத் தோழி தலைமகளை நோக்கிக் கூறும் பகுதியில் எடுத்துக் காட்டிய கோசரது வன்கட் சூழ்ச்சியும் இதுவென இது காறும் பிறரால் விளக்கப்படவில்லை. இப் பகுதிபற்றி ஐயங்காரவர்கள் உய்த்துணர்ந்தெழுதிய குறிப்பு ஆராய்ச்சியாளர் கூர்ந்து நோக்குதற்குரியதாம். இங்ஙனமாக நுட்பமுடைய கருத்துக்களைச் செய்யுட் பொருளொடு பொருந்த விளக்கிச் செல்லுந்திறம் இவ் விளக்கவுரையுள் பலவிடத்துங் காணப்படும். பொருந்தாதவை எனினும், இவ்வுரையகத்தே சில விடங்களிற் பொருத்த மில்லாதனவும் உள. அவை ஆசிரியரால் விரும்பியவாறு வலிதிற் புகுத்தப் பெற்றனவாகத் தோன்றுகின்றன. இந்நூல் கடவுள் வாழ்த்தாகிய பெருந்தேவனார் பாடலில், நெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப என்ற தொடரால் முருகன் ஒரு கையில் வேலும் மற்றொரு கையில் கோழிக் கொடியும் கொண்டமை கூறு முகத்தால் அப்பெருமானது இருகை யையுடைய சாத்துவிகத் திருமேனியே இப் பாடலிற் குறிப்பிடப்பட்டதென விளக்க வந்த ஐயங்காரவர்கள் இவ் வடிவு வடமொழியிற் குமார தந்திரத்துட் கூறப்பட்ட தென்றும், இவ் வடிவமைத்து வழிபடுதல் நன்றெனக் குமாரதந்திரநூல் கூறுதற்கேற்பவே பெருந்தேவனாரும் முருகன் வேலுங் கோழிக் கொடியும் உடைமை குறித்தார் என்றும் கூறுகின்றார்கள். குறிஞ்சிக் கடவுளாகிய முருக வேள் வழிபாடு தமிழ் நாட்டில் வழங்கும் தெய்வ வழிபாடு களைவிடத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்ததொன்றாம். இவ் வழிபாடு தென்னாட்டிலன்றி வடநாட்டில் வடமொழியாள ரால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்படாத இயல்பின தாம். அன்றியும், வட மொழியில் தந்திரங்கள் தோன்றியது கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிந்தியதென ஆராய்ச்சியாளர் துணிந்து கூறுகின்றனர். 1 பெருந்தேவனார் பாடலிற் குறித்தபடி வேற்படையும் கோழிக் கொடியும் முருகனுக்கு உரியனவென்பது `வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ (திருமுருகு. 265) எனவும், `கோழியோங்கிய வென்றடுவிறற்கொடி (திருமுருகு.38) எனவும் வரும் சங்கநூற் குறிப்புக்களாற் புலனாகும். ஒரு முகமும் இருகையுமுடைய முருகன் திருவுரு கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே தமிழ் நூல்களிற் குறிப்பிடப்பெற்றதென்பது தமிழ் நூலாராய்ச்சியால் இனிது புலனாகின்றது. முருகப் பெருமான், தன்னை அன்பினால் வழிபடும் அடியார்களின் முன்தோன்றி யருளுங்கால் அவர்கள் அச்சமின்றிக் கண்டு வழிபடுதற்கேற்றவாறு தன் தெய்வத் தன்மையையுள்ளடக்கிக் கொண்டு மக்கள் வடிவில் இளையோனாக வந்து அருள்புரியு மியல்பினையும் உடையான் என்பதனை, அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி (திருமுருகு. 289, 290) என்ற தொடரால் நக்கீரனார் குறிப்பாக அறிவுறுத்தி யுள்ளார். இவ்வியல்பினை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின்கண் சிறிது வெளிப்பட விளக்கிய திறம் இவண் கருதத்தகுவதாம். களவொழுக்கத்தில் இரவுக்குறியில் அடிக்கடி வந்து செல்கின்றான் தலைமகன். அவனை நோக்கித் தோழி கூறுவதாக அமைந்தது. கடம்பு சூடி யுடம்பிடி2யேந்தி மடந்தை பொருட்டால் வருவ திவ்வூர் அறுமுக மில்லை அணிமயி லில்லை குறமக ளில்லை செறிதோ ளில்லை கடம்பூண் தெய்வ மாக நேரார் மடவர் மன்றவிச் சிறுகுடி யோரே எனவருங் குன்றக்குரவைப் பகுதி, “தலைவ, நீ தலைவியைப் பெறுதல் கருதிக் கடப்பமலர் மாலையை யணிந்து கையில் வேற்படையைத் தாங்கிக் கொண்டு இரவில் இவ்வூர்க்கண் அடிக்கடி வந்து செல்வது, கண்டார் நின்னை முருகனெனக் கருதி ஆராயாது விடுவர் என்னுங் கருத்தினாலென அறிகின்றேன். கடவுளாகிய முருகன் நின்னைப்போன்று ஒரு முகமும் இரு கையும் உடைய தனது பழைய திருமேனியாகிய இளைய வடிவுடனும் வருதல் கூடும் என்னும் உண்மையினை யறிந்துகொள்ளமாட்டாது, ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளுங் கொண்ட வடிவுட னன்றி முருகன் இத்தகைய மக்கள் வடிவில் வருதலியலாது எனக் கருதும் அறியாமையுடையோர் இச் சிறுகுடியோரா தலின், நீ இங்ஙனம் வருங்கால் உனக்கு ஆறுமுகங்கள் இல்லை யென்றும், அழகிய மயிலாகிய ஊர்தியில்லை யென்றும், பக்கத்தில் வள்ளி நாச்சியார் இல்லையென்றும், பன்னிரண்டு தோள்கள் இல்லையென்றும் கூறி இவ்வூரார் வழி பாட்டினை யேற்றுக் கொள்ள வந்த முருகனாக நின்னை உடன்படமாட்டார்கள் எனத் தோழி தலைவனுக்கு அறிவுறுத்துமுகத்தால் இக் களவொழுக்கத்தினைவிட்டுத் தலைவியை மணந்துகொள்ளத் தூண்டினாள் என்பது மேலெடுத்துக் காட்டிய அடிகளின் பொருளாகும். இவ்வாறு தலைமகன் முருகனுக்குரிய கடப்ப மலர் மாலையை யணிந்து கையில் வேற்படையினையேந்தி வருதற்குக் காரணம் தன்னைக் கண்டார் மணங்கமழ் தெய்வத்து இளை யோனாகிய முருகனென்று எண்ணி விலக்காதிருப்பர் என்பது கருதியே என்பதனை, தலைமகன் கடம்பு சூடி உடம்பிடி யேந்தித் தன்னைக் குமரனென்று பிறர் கருத வந்த காரணம் பண்டைத் தன் மணங்கமழ் தெய்வத்திள நலங்காட்டி யென்றாராதலால் என்ற உரைக் குறிப்பால் அரும்பதவுரையாசிரியர் இனிது விளக்கியுள்ளார். அன்றியும் அறுமுக முடைய வடிவமொன்றே அக் காலத்து முருகனுக் குரிய வடிவமாயிருந் திருப்பின் அவ்வடிவமில்லாமை கருதித் தலைவனை முருகனென உடன்படாத சிறுகுடியோரை மடவர் மன்ற இச் சிறு குடியோரே எனத் தோழி இகழ்ந்துரைத்த தாக இளங்கோவடிகள் கூறியதற்கு ஒரு சிறிதும் இயைபில்லாமையறிக. ஒரு முகமும் இரு கையுமுடைய முருகன் திருவுருவமே சங்க காலத்திற்கு முன்னுள்ள பழைய வடிவமென்றும், இளங்கோவடிகள் காலத்து இப் பழைய வடிவம் மக்களால் மறக்கப்படும்படி பிற்றைநாளிற் புராணங்களிற் சொல்லப் பெற்ற ஆறுமுகத் திருமேனியே பொதுமக்கள் வழிபாட்டில் இடம் பெறத் தொடங்கியதென்றும் மேற்காட்டிய சிலப்பதிகாரத் தொடராலும் அதற்கு அரும்பதவுரையாசிரியர் எழுதிய உரைக்குறிப்பாலும் இனிது புலப்படுத்தப்படுதல் காண்க. இங்ஙனம் இளங்கோவடிகளும் நக்கீரனாரும் முருகனது பழைய திருமேனியெனக் குறிப்பிட்டு விளக்கிய ஒரு முகமும் இருகையும் உடைய முருகன் வடிவம் தமிழ்நாட்டுத் தொன்மை வடிவமேயெனவும் வடமொழியிற் பிற்காலத்தெழுந்த குமார தந்திரமும் ஸ்ரீதத்துவநிதியும் பண்டைத் தமிழ் நூற்கொள்கைக்கு மூலமாவதுபோல் ஐயங்காரவர்கள் எழுதியது ஒரு சிறிதும் பொருந்தாதெனவும் கொள்ளுதலே ஆராய்ச்சியுணர்விற்குப் பொருந்தியதாகும். குறுந்தொகை 17ஆம் செய்யுளைப் பாடிய புலவர் பெயர் பேரெயின் முறுவலார் என முன்னைப் பதிப்பாசிரியர் அனைவருங் கொண்டனர். இத் தொடரைப் பேரே இன்முறுவலார் என ஐயங்காரவர்கள் பிரித்திருப்பது பொருந்துவதாகத் தோன்றவில்லை. அருங்குறும்புடுத்த கானப்பேரெயில் (புறம். 21) என வருதலால் பேரெயில் என்பதை ஊர்ப் பெயராகவும், முறுவலார் என்பதை இயற்பெயராகவுங் கொள்ளலாம். 21ஆம் செய்யுளில் கானங்காரெனக் கூறினும் என்ற தொடர் கொண்டு, ஓதாத கானம் காரெனக் கூறினும் என்ற இச் சிறப்பால் இது பாடியவர் ஓதலாந்தையார் எனப் பட்டனரோ என நினைத்தலுமாம் என்று ஐயங்காரவர்கள் உய்த்துணந் துரைத்தல் இயைபுடையதாகத் தோன்றவில்லை. தலைவியின் ஊடலைத் தணித்தற்குத் தலைவன் பாணனைத் தூதாக அனுப்புகின்றான். அங்ஙனம் தூது வந்த பாணனது சொல்வன்மையால் ஊடல் தணிந்து வாயில் நேரும் தலைவி, பாணன் கேட்கத் தோழியை நோக்கிக் கூறுங் கூற்றாக அமைந்தது குறுந்தொகை 33 ஆம் செய்யுளாகும். இப் பாடலின் ஈற்றடியாகிய விருந்தினூரும் பெருஞ் செம்மலனே என்பதற்குப் புதிதாகப் பெறும் விருந்தின் பொருட்டுச் செல்லும் பெரிய தலைமையை யுடையான் என ஐயரவர்கள் பொருள் கூறினார்கள். பாணனது செல்லு தற்றொழிலை ஊர்தல் எனக் கூறுதல் பொருந்தாதெனக் கண்ட ஐயங்காரவர்கள் விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலன் என்ற அத் தொடர்க்குப் பலர் அழைத்து இடும் விருந்தினனோடு யானை பரி தேர் இவற்றின் ஊர்ந்து செல்லும் தலைமையை யுடையவனேயாவன், எனப் பொருள் கூறினார்கள். இவர் கூறும் உரையும் பெருஞ் செம்மலன் எனப் பாராட்டப் பட்ட பாணனது உயர்வினைத் தெளிவாகப் புலப்படுத்தவில்லை. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் மாணவர் சிலருடன் அளவளாவிக் கொண்டிருந்த பொழுது இச் செய்யுளுக்கு ஒருநாள் கூறியதாகச் சொல்லப்படும் உரை இவண் கருதத்தக்கது, அவ்வுரை: “தோழி, இப்பாணன் சொல் வன்மையிற் சிறந்த இளமாணாக்கருள் ஒருவன் போலத் தோன்றுகின்றான். பிறரிடம் இரந்து பெறும் உணவினால் முற்ற வளராது வாடிய உடம்பொடு நின்றவனாயினும் இப் புதிய ஊரின்கண்ணும் தன்பெரிய தலைமைப்பாட்டிற் குறையாது திகழ்கின்றான். இவன் தன்னுடைய ஊர் மன்றத்தே எத்தகைய சொல்வன்மை பெற்று விளங்கு வானோ! என்பதாம். இப் பாடலில் வந்த தன்னூர் மன்றத்து என்னன் கொல்லோ என்னுஞ் சொல்லாற்றலால் விருந்தினூரும் என்பதற்குப் புதுவதாகிய ஊரின்கண்ணும் எனப் பொருள் கூறுதலே பொருந்துவதாகும். விருந்து என்னுஞ் சொல் புதுமை என்னும் பொருளில் வழங்குதலை விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே (தொல். செய். 231) என வருந் தொல்காப்பிய நூற்பாவால் உணரலாம். விருந்தின் ஊர் என்புழி இன்-சாரியை; விருந்தினூரும் என்ற உம்மை சிறப்புணர நின்றது. பாணன் தங்கும் ஊர், தலைவன் வாழும் ஊரினும் சிறிது தொலைவுடையதென்பது இதனாற் புலனாம். இரந்தூண் நிரம்பாமேனி இவனுக்குப் புதிய ஊரின்கண் தளர்ச்சி தருவதாயினும், அதனால் ஒரு சிறிதுந் தளர்வின்றித் தலைமையுடன் காணப்படுகின்றான் என்பாள், இரந்தூண் நிரம்பா மேனியொடு விருந்தினூரும் பெருஞ் செம்மலனே என்றாள். தன்சொல் செல்லுதற் குரியதல்லாத இப் புதிய ஊரின் கண்ணேயே இத்துணைத் திறம்படப் பேசும் ஆற்றல் பெற்ற இப்பாணன், தன்னூரில் தான் தங்கும் மன்றத்தே எத்துணைச் சொல் வன்மை யுடையனாய்த் திகழ்வானோ எனத் தலைவி பாணனது சொல்வன்மையை வியந்து பாராட்டு முகத்தால் தான் தலைவனொடு கொண்ட ஊடல் தீர்ந்து வாயில் நேர்வாளாயினாள் என்பது இப் பாடலாற் பெறப்படுதல் காணலாம். இவ்விளக்கவுரையாசிரியர் இந் நூலிற் சில விடங்களில் முழுச் சொற்களைச் சிதைத்துப் பொருள் கூறியுள்ளார். உதாரணமாக, 41ஆம் செய்யுளில் அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே என்புழி அலப்பென் என்பது வருந்துவேன் என்னும் பொருள்பட வந்த ஒரு மொழியாக இருப்பவும், இதனை அலப்பு + என் எனப் பிரித்து, அலத்தற்குக் காரணம் யாது எனப் பொருள் கூறுவர். இப் பாடலில் வந்த புகல்வேன் என்னும் ஒரு மொழியையும் புகல்வு + ஏன் எனப் பிரித்து விருப்பம் ஏன் எனப் பொருளுரையா திருப்பவும், ஒன்றை மாத்திரம் சிதைத்துப் பொருள்கோடல் சங்க விலக்கிய மரபொடு பொருந்தாமையறிக. 77ஆம் பாடலில் தவறோ இலவே எனப் பொருள்படுந் தொடரைத் தவறு ஓவில எனவும், 91 ஆம் பாடலில் பெண்டினை யாயின் என்புழிப் பெண்டினை என்பதனை ஒரு சொல்லாகக் கொள்ளாது பெண்டு + இன்னையாயின் எனவும், பிரித்துரைத்திருப்பது ஐயங்காரவர்கள் பிறர் செல்லும் பொது நெறியே செல்லாது, தாம் ஒரு நெறி புதுவதாகக் கண்டு தெரிவிக்க வேண்டும் என்ற விழை வுடையார் என்பதனைப் புலப்படுத்தும். இவ் விருப்பத்தால், இத் தொகையிலுள்ள செய்யுட்களுக்கு வைப்பு முறை யியைபு சொல்லத் தொடங்கி, முதலிரண்டு செய்யுட்களுக்கும் 6-7ஆம் செய்யுட்களுக்கும் கூறிப் பிற செய்யுட்களுக்குச் சொல்லமாட்டாது இடர்ப்பட்டமை யறிக. உரைச் சிறப்பு இவ் விளக்கவுரையாசிரியராகிய ஐயங்காரவர்கள் குறுந்தொகை முதற்பாடலுக்கு எழுதிய விரிவுரை பொருட் செறிவுடையது. அதனைக் காண்க. 26ஆம் பாடலில் தகாஅன் போலத் தான்றீது மொழியினும் என்ற தொடருக்கு முன்னையுரையாசிரியர் இருவரும், தீது மொழிதற்கு வினைமுதலாகிய தான் என்பதற்கு முறையே தலைவன் என்றும், கட்டுவிச்சி யென்றும் பொருள் கூறினர். இப் பாடலில் தான் என்றது தலைவியை எனவும், அவள் கூறுந் தீதாவதுதான் உயிர் விடுவதாகிய இன்னாமை மொழிதல் எனவும் ஐயங்காரவர்கள் உரை கூறுவர். இப் பகுதி தொல்காப்பியம் களவியல் 21ஆம் சூத்திரவுரையில் இப் பாட்டிற்கு நச்சினார்க்கினியர் கூறும் பொருட்குறிப்பினை அடிப்படையாகக் கொண்டு உய்த்துணர்ந்தெழுதிய சிறப்புடையதாகும். இடைச்சுரத்துச் செவிலித்தாய் செயலற்றுச் சொல்லியதாக அமைந்தது 44ஆம் பாடலாகும். வெள்ளி வீதியைப் போல நன்றுஞ், செலவயர்ந்திசினால் யானே (அகம். 147) எனக் காதலாற் பிரிந்த ஆதிமந்தியார் கூறியவாறு, தன் காதலனைக் காணாது தேடிச் சென்ற வெள்ளிவீதியார் என்னும் பெண் புலவராற் பாடப் பெற்றதாகலின். அகப் பொருள் பற்றிய இப் பாடலை அவர்தம் வாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருட் பகுதியாகக் கொண்டு அதற்கேற்பவும் ஐயங்காரவர்கள் பொருள் கூறுகின்றார்கள். அப் பகுதி காணத்தக்கது. 54ஆம் பாடலில் வந்த மீனெறி தூண்டிலின் என்பதற்கு முன்னையுரையாசிரியரிருவரும், மீனை யெறியும் தூண்டிலைப் போல எனவும். மீனைக் கவர்ந்துகொண்ட தூண்டிலைப் போல எனவும் முறையே உரை கூறிச் சென்றனர். மீனெறி தூண்டிலின் நிவக்கும் என்பதற்கு, மீன் கோத்த இரையை எறிந்த தூண்டிலிற் கோல் போல ஓங்கும் என ஐயங்காரவர் கள் பொருள் கூறுவர். எறிதல், உயிர் உடையதாகிய மீனின் வினையாவதல்லது உயிரில்லாததாகிய தூண்டிலின் வினையாகாது என விளக்கிய திறம் உணர்தற்குரியதாம். 58ஆம் பாடலில் இடிக்கும் கேளிர் நுங்குறையாக நிறுக்கலாற்றினோ நன்று என்பதன்கண் ஆக என்றும், நிறுக்க லாற்றினோ என்றும் முன்னையோர் பிரித்தமை போலல்லாமல், ஐயங்காரவர்கள் ஆகம் என்றும் நிறுக்கல் ஆற்றினோ என்றும், பிரித்து அதற்கேற்பப் பொருள் கூறுதல் நோக்கத்தக்கது. 61ஆம் செய்யுளில் பொய்கையூரன் கேண்மை செய்தின் புற்றனம் என முன்னிருவர்கொண்ட பாடத்தை மாற்றிப் பொய்கையூரற் கேண்மை செய்தின் புற்றனெம் எனப் பாடங் கொண்டு, ஊரனுக்கு அருமைசெய்து பரத்தையர் போல உற்றின் புறேமாயினும் வையம் ஈர்த்தின்புறும் இளையோர் போல அவற்கு எண்மைசெய்து இன்புற்ற னெம்; அதனால் வளைநழுவாது செறிந்தன எனக் கூறும் பொருளும், எண்மை செய்தல் - உணவிடுதல், வாய்பூச நீர் பெய்தல் முதலியன ஆம் என்றெழுதிய குறிப்பும் உல கியலுடன் பெரிதும் இயைபுடையன வாகும். 65ஆம் செய்யுளில் வாராதுறையுநர் வரல்நசைஇ வருந்தி நொற்துறைய இருந்திரோ எனத் தான் வந்தன்றே தளிதரு தண்கார் என்னும் பகுதிக்கு ஐயங்காரவர்கள் கூறும் பொருளும், தன் கற்பால் இட்ட வழக்காயிருக்கும் கார், இவ்வாறு இருந்திரோ எனக் கேட்குமாறு, தலைவர் குறித்த பருவந்தப்பியும் உயிர் வாழ்தலை நொந்துரைத்தவாறு எனக் கூறிய நயமும் சிறப்புடைய வாதல் காண்க. தான் பெய்க என்று சொன்ன அளவில் அவ் ஏவல் வழிநின்று ஒழுகவேண்டிய தாழ்வுடைய மேகம். தன்னை நோக்கி இவ்வாறு உயிர் வைத்திருந்தீரோ என வினவக்கூடிய அளவு ஆதரவற்ற தாழ்ந்த நிலைக்குத் தலைவி பெரிதும் வருந்தினாள் எனக் குறித்த நயம் வியக்கத்தக்கதே. இவ்வாறு, திணை, கைகோள், கூற்று, கேட்போர் முதலிய சூழ்நிலைக் கேற்பத் திரு.இரா. இராகவையங் காரவர்கள் குறுந்தொகைப் பாடல்களுக்கு எழுதியுள்ள உரையும் விளக்கமும் அறிஞரனைவரும் படித்து இன்புறுதற் குரிய சிறப்புடையனவாம். குறுந்தொகையின் பொருட் செறிவினையும், மகாவித்துவான் ஐயங்காரவர் களது புலமை நலத்தினையும் இப் பதிப்பினால் தமிழகம் உணர்ந்து மகிழும் என்னுந் துணிபுடையேன். இவ்வுரை வெளிவருவதிற் பதிப்பாசிரியர்க்கு உதவியாக இருந்தவர் திரு. இ. எஸ். வரதராச ஐயரவர்கள். இஃது அச்சேறுங்கால், ஒப்புநோக்குதல் செய்துதவிய திரு. வரதராச ஐயர்க்கும், திரு. க. வெள்ளைவாரணனார்க்கும் பல்கலைக் கழகச் சார்பில் நன்றி செலுத்துகின்றேன். இந் நூல் போன்ற அருமையான தமிழ் நூல்கள் வெளி வருவதற்கு வாய்ப்புச் செய்து தமிழை வளர்த்து வரும் முத்தமிழ் வள்ளல் செட்டிநாட்டரசர் இராஜா சர். மு. அண்ணாமலைச் செட்டியாரவர்கட்கும், தமிழிற்கு ஆவன செய்து உதவிவரும் துணைவேந்தர் திரு. எம். இரத்தினசாமி (எம்.ஏ., சி.ஐ.இ.) அவர்கட்கும் தமிழகம் நன்றி செலுத்துங் கடமை உடையது. அ. சிதம்பரநாதன் 15-12-1946 குறுந்தொகை விளக்கம் கடவுள் வாழ்த்து பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியது தாமரை புரையுங் காமர் சேவடிப் பவழத் தன்ன 1 மேனித் திகழொளிக் குன்றி யேய்க்கு முடுக்கைக் குன்றி னெஞ்சுபக வெறிந்த செஞ்சுடர்2 நெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப வேம3 வைக லெய்தின்றா லுலகே என்பது கடவுள் வாழ்த்து. (விளக்கம்) இஃது உலகிற்குப் பயன்பட முருகக் கடவுளை வாழ்த்தியது. யாழ்கெழு மணிமிடற் றந்தணன் றாவி றாணிழற் றவிர்ந்தன்றா லுலகே (அகம். கடவுள் வாழ்த்து) என்பது உலகிற்குப் பயன்பட வாழ்த்தியதாகப் பேராசிரியர் கருதியது கொண்டு இதனையும் அவ்வாறுணர்க (தொல். செய். வாழ்த்தியல் வகையே.) தாமரை புரையுங் காமர் சேவடி-தாமரை மலரை ஒக்கும் எல்லார்க்கும் விருப்பஞ்செய்யும் செய்ய அடிகள். கடவுளொண்பூ (பெரும்பாண். 290) ஆதலானும், மங்கல மாதலானும், முருகக் கடவுள் தோற்றமுடைமையானும் தாமரையை முதற்கட் கூறினார். நின்னீன்ற நிரையிதழ்த் தாமரை (பரிபா. 8) நளினத்துப் பிறவியை (பரிபா. 5) என்பன பரிபாடல். செம்மை, மென்மை, நறுமை முதலியன வேயன்றி அந்தணர் விரும்பிச் சூடும் பொதுமையும் உண்மை தெரியக் `காமர் சேவடி என்றார். நின்னிற் சிறந்த நின்றாளிணையவை (பரிபாடல் 4) என்பது பற்றிச் சேவடியை முற்பட நினைந்தார். காமர் சேவடியையும், பவழத்தன்ன மேனிக்கண் திகழொளியையும், குன்றியேய்க்கும் உடுக்கையினையும், குன்றின் நெஞ்சு பிளவு பட எறிந்த செஞ்சுடர் நெடுவேலினையும் உடைய சேவற்கொடியோன் காத்தலான் உலகம் இன்பமுள்ள வாழ்நாளை எய்தியது என்றவாறு. உலகம் `இன்னாவைகல் (புறம். 363) எய்தாது ஏமவைக லெய்தியது சேவலங்கொடியோன் காத்தலான் என்றுணர்த்தி அந் நன்றியை மறவாது உயிர்கள் தொழுக என்று குறிப்பெச்சத்தாற் கொள்ள வைத்தார். காமர் சேவடி, `காமர் கழலடி (கலித். 30) என்பது போல வந்தது. ஏமம்-இன்பம். காப்ப ஏமவைக லெய்தின்று என இறந்தது காட்டிக் காப்ப ஏமவைகலெய்தும் என்பது குறிக்கொள வைத்தார். நல்லழிசியாரும், யாமுமெஞ் சுற்றமும் பரவுதும் ஏமவைகல் பெறுகம்யா மெனவே (பரிபா. 17) எனப் பாடுதல் காண்க. மருதத்துத் தாமரையையும், நெய்தலிற் பவழத்தையும், முல்லையிற் குன்றியையும், குறிஞ்சியிற் குன்றினையும் எடுத்தாண்டது ஏமவைகலெய்தற் குரிய உலகு நானிலமாகப் பகுக்கப்பட்டது கருதியென்க. குன்றி-குறுநறுங் கண்ணி யென்ப. `திருவளர் தாமரை என்னுந் திருச்சிற்றம்பலக் கோவையுரையிற் பேராசிரியர் பூவால் நிலமுணர்த்தியவாறு கோடலால் இவ்வியைபு உணரப்படும். செஞ்சுடரைக் கூறி அதனைக் கடவுளாக வுடைய பாலையை நினைப்பித்தார் என்பது ஆம். இவ்வாறு ஐவகை நிலனும் நினைப்பித்தல் சிலப்பதிகாரப் புறஞ்சேரியிறுத்த காதைக்காண் “கடுங்கதிர்... நாடென (அடி. 3-9) என்புழிக் கானமென்பதனால் முல்லையும், சூர் கரடி யென்பவற்றாற் குறிஞ்சியும், வேங்கை என்பதனாற் பாலையும், உருமு என்பதனால் மருதமும், முதலை என்பதனால் நெய்தலும் பெறுதும் என அடியார்க்கு நல்லார் கூறிய உரை நோக்கியறிக!. தான் மேஎய மைவரை உலகமாகிய தன்னிலனும் தீய பகையசுரர்க்கு அரணாயபோது எறியப்பட்ட இதிகாசங் காட்டியவாற்றால், இந்நால்வகை நிலனும் ஆண்டுள்ள நல்லோர் காரணமாகக் காக்கப்படுதல் குறித்தார். கொன்றுண லஞ்சாக் கொடுவினைக் கொஃறகை, மாய வவுணர்த் தபுத்தவேல் (பரிபா. 5) என்பதனான் இஃதறிக. இத் தொகைநூல் உறுதிப்பொருணான்கனுள் இன்பம் பற்றியதாதலின் அதற்கியைய முருகக் கடவுள் காப்ப இன்ப வைக லெய்தியது என்று கருதினாரெனினு நன்கமையும். இவ்வின்பத்தொடு படாத வைகலை, எல்லா மெவனோ பதடி வைகல் (323) என இகழ்தல் காண்க. இவ்வின்பத்திற்கும் முருகக்கடவுள் பரவப்படுதல், கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே (பரிபா. 14) (பிரிந்தகேளிர் வந்து புணர்ந்து பின் நீங்காமைப் பொருட்டு மகளிர் யாழை யெழுவி நின்னைப் பாடுகின்ற பாட்டை விரும்பினோய்) என வருதலான் அறியப்படும். குறமக ளவளெம் குலமக ளவளொடு மறுமுக வொருவனின் னடியிணை தொழுதேம் துறைமிசை நினதிரு திருவடி தொடுநர் பெறுகநன் மணம்விடு பிழைமண மெனவே”(சிலப். குன்றக் குரவை24) என வருதல் கண்டு கொள்க. ஈண்டுப் பிழைமணம் என்றது அயல் மணத்தை; நன்மணம் என்றது தந்தை தாயர் நினைத்தற்காகிய களவு மணத்தை. இத் தொகைநூல் களவுங் கற்புமாகிய இருவகைக் கைகோளினையும் பற்றிவருதலான் அவ்விருவகைமையினையும் உலகிற்கு ஒழுகிக்காட்டிய முருகக் கடவுளை வாழ்த்துதல் ஏற்புடைத்தாதலும் நினைக. செவ்வேள் தெய்வயானையாரைக் கரணத்தோடு வேட்டதும், வள்ளி நாய்ச்சியாரைக் களவிற் றழீஇயதும் (பரிபா. 9) நன்குணர்க ஆண்டுப் பரிமேலழகர், இக்களவிற் புணர்ச்சி யுடைமையான் வள்ளி சிறந்தவாறும், அத் தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் கூறுகின்றார் என உரைத்து விளக்குதல் காண்க. திருவுருவை நினைவார்க்கு மடிதற்று முந்துற எய்தியருளும் சிறப்பான் உடுக்கையோடு சேவடியையும், நினையாத ஆசுரவியல்பினரை அழித்தற் சிறப்பான் வேலினையும், உலகு வைகறையே துயிலெழுந்து தொழ விளித்தற் சிறப்பான் சேவலினையுங் கூறினார். ஒண்பொறிச் சேவலெடுப்ப வேற்றெழுந்து (புறம்.383) எனவும், குடுமிக் கோழி நெடுநக ரியம்பும் பெரும்புலர் விடியலும் (234) எனவும், சேவல் ஏம வின்றுயி லெடுப்பி யோயே (107) எனவும் வருவன கொண்டுணர்க. சேயோன் என்ற பெயர்க்கியைய அடியும், மேனியும், உடுக்கையும், வேலும் செய்யவாகக் கூறிக்காட்டலான், ஈண்டுச் சேவல் செம்மையே தன்கணில்லாத மாயிருந்தூவி மயில் (தொல். மரபியல் 48) எனல் சிறந்ததன்று. மயிலை நீலப் பறவை என்பர் இளங்கோவடிகள் (குன்றக்குரவை). குவியிணர்த் தோன்றி யொண்பூ வன்ன தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல் (107) எனவும், அழலகைந் தன்ன காமர் துதைமயிர் மனையுறை கோழி மறனுடைச் சேவல் (அகம். 277) எனவும் கோழிசேவல் கூறப்படுதல் காண்க. கோழிச் சேவற் கொடியோன் கோயிலும் என்பது (சிலம்பு. ஊர்காண். 10) காண்க. மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடி (பரிபா. 17, 48) என்புழிப் பரிமேலழகர் மணிநிற மஞ்ஞையினையும், உயர்ந்த கோழிக் கொடியினையும் எனப் பொருள் கூறுதலும் அல்லிலனலன் றன்மெய்யிற் பிரித்துச் செல்வ வாரணங் கொடுத்தோன் (பரிபா. 5 அடி 57-58) என்றதனால் இச் சேவல் செந்தீக் கடவுள் மெய்யாதலும் நன்கு உணரப்படும். படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும் (பரிபா.19) என்பதனாற் செஞ்சுடர் நெடுவேல் என்ற பாடமே கொள்ளப்பட்டது. விசுவகர்மா ஆகியவன் சூரியன் பல் சுடருள் ஒரு பகுதியை எடுத்துச் சத்தியாயுதத்தை நிருமித்து முருகக் கடவுட்கு நல்கினன் என்று மார்க்கண்டேய புராணங் கூறுதலானும் இயைபு உணரப்படும். எல்லா உயிரும் நிலனையும் பொழுதையும் பெற்று இன்பந் துய்க்க வேண்டுதலின், ஏம வைக லெய்தின்றா லுலகே என்றார். ஆசிரியர் தொல்காப்பியனாரும், முதலெனப் படுவது நிலம் பொழுதிரண்டி னியல்பு (தொல். அகத். 4) என்பதனால் இவ்விரண்டையுமே முதல் என ஆளுதல் காண்க. தெய்வ முணாவே ... ... ... கருவென மொழிப (தொல்.அகத். 18) என்பதனாற் சேவலங்கொடியோன் கருப்பொருளாதல் அறியலாம் – ஒழுக்க மாகிய புணர்தல் முதலிய உரிப்பொருளைந்தும் இன்பப் பகுதியேயாதலான் அவற்றை `ஏமம் என்பதனால் வெளிப்படுத்தினார். இங்ஙனம் அகத்திணைக்குச் சிறந்த முதல், கரு, உரி என்ற மூன்றும் கூறினராதல் காணலாம். முருகக் கடவுள் வடிவங்களுள் இரு கையுடைய வடிவே சாத்துவிக வடிவென்றும் அவ்வடிவில் வலக்கையின்கட் சத்தியும் இடக்கையிற் குக்குடமும் அமைத்து வழிபடுதல் நன்றென்றும் குமாரதந்திரம் என்னும் நூல் கூறுமென்பவாத லான் அதற்கேற்பவே வேலுங் கோழியு முடைமை குறித்தார். க்ரௌஞ்ச பேத்தா என்னுந் திருவுருவத்தினை இவ்வின்பப் பாடற்றொகைக்கு நினைந்தது அவ்வடிவம் காமனுக்குரிய கரும்பு வில்லையும், மலர்க்கணையையும் ஏந்துமியல்பின தாதல் பற்றியென்று உய்த்துணரலாம். இவ்வுண்மை ஸ்ரீ தத்துவநிதியிற் காணலாம். தீப்புத்தேளார் 1 1 செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பிற் செங்கோட் 2 டியானைக் கழறொடிச் 3 சேஎய் குன்றங் 4 குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. (எ-து) தோழி கையுறை மறுத்தது. (வி) கோறல் அம்பின் வினையாகவும் தேய்த்தல் யானையின் வினையாக வுங் கொள்க. எய்து கொன்ற அம்பு கடவுட்டன்மை யான் ஈண்டு கையினடை தலான் செங்கோ லம்புடைமை கூறினாள். அவுணரைத் தேய்த்தற்குக் குத்தி வீழ்த்தலான் யானைக்குச் செங்கோடு கூறினாள். அவுணரிற்றலையாயினாரைத் தன் யானையால் தேய்த்துப் போர்நிலங் குருதியால் நனைந்து செங்களம்படப் பொருதவாறு காட்டினாள். கழறொடி - தோளிலிட்டு உழலும் வீரவலையம். அம்பெய்தும் யானையைக் கடாவியும் உள்ள திருக்கையில் அவ் வீரந் தோன்ற இட்ட தொடி எ-று. அங்குசங் கடாவ வொருகை என்பது முருகாற்றுப்படை (110). இப் பாட்டில் எல்லாஞ் செய்யவாகக் கூறற் கேற்பத் தொடியும் மாணிக்க வலையமெனின் நன்கியையும். அவுணரைக் கொன்று தேய்த்தபடியே படையொடும் யானையொடும் போந்து சுரருக்கு அருளிய நிலையிற் றிருக்கையின் வீர வலையத்தைப் படை வென்றிக்கும் கொடை வென்றிக்கும் இயைய நினைந்தனள்; செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (முருக. 99) என்றது கொண்டு இஃதுணர்க. இவற்றாற் றெறலும் அருளும் கருதினாள். `செங்களம் பட என்றாரேனும் களம் செம்மை பட என்பது கருத்தாகக் கொள்க. இது தாரகாசுரவதத்தில் நிகழ்ந்ததென்ப. கம்பநாடரும் தாருகன் குருதியன்ன குருதியின் (கம்ப. பாசப்.21) என உவமித்தலா லுணர்க. தாரகாரி என்பது முருகக் கடவுள் திருப்பெயர். யானைச் சேஎய் என்றது குமாரக் கடவுள் கசவாகன மூர்த்தியும் ஆதல் பற்றியென் றுணர்க. `கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந்தாங்கு என்பது பதிற்றுப்பத்து (2:1). சேஎய் குன்றம் சேஎய் காந்தட்டு என்க. குமாரக் கடவுள் மலை குமாரக் கடவுளுடைய அடையாளப் பூவாகிய காந்தளை யுடைத்து எ-று. `கடவுட் காந்தள் என்பது அகப்பாட்டு (152). அடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் (முருகு. 43, 44) என இக் கடவுள் கூறப்படுதல் காண்க. இது தெய்வஞ் சூடுவ தென்று கூறித் தோழி கையுறை மறுத்ததாகக் கொள்ளலாம். இனி நற்றிணையுள், கடவுட் கற்சுனை யடையிறந் தவிழ்ந்த பறியாக் குவளை மலரொடு காந்தட் குருதி யொண்பூ வுருகெழக் கட்டிப் பெருவரை யடுக்கம் பொற்பச் சூர்மகள் அருவி யின்னியத் தாடு நாடன் (34) என வருதல்பற்றித் தெய்வத்தொடு தெய்வமகட்குரிய தென்றுங் கூறி மறுத்தாள் என்பதுமாம். கடவுள் குன்றத்துக் கடவுட் குரிய இக் குருதிப் பூங்காந்தள் இவட்குத் தந்தவர் யார் என்று வினாவப்படும் என்று மறுத்தாளாகக் கொள்க. இனி வெறியாட் டயர்ந்த காந்தளும் (தொல். புறத். 5) என்பது பற்றி வேலனும் வெறியாடற்கணன்றிப் பறியாத காந்தளை யார் பறித்துதவினர் என்று வினாவப்படு மென்க. கையுறை மறுத்தது என்ற துறையிற் கூறல் கூற்றெச்சத் தாயது என்பது பேராசிரியர் கருத்தாம்; அவர் இவற்றால் யாம் குறையுடையே மல்லேம் என்று தோழி தலைவற்குச் சொல்லி மறுத்தாள் எனக் கொள்ளலான் அறியலாம் (தொல். செய். 206) மிகுதி பற்றிச் சூடாததனை இவள் சூடின், சூடியது பூப்பற்றியன் றென்றும் சிறந்தான் ஒருவன் கொணர்ந்து தந்த சிறப்புப்பற்றி என்றும் அயலாரால் உய்த்துணரப்படும் என மறுத்தாள் ஆகக் கொள்க. இவ்வாறு மிகுதிபற்றி மறுத்தல். நொதும லாளர் கொள்ளா ரிவையே எம்மொடு வந்து கடலாடு மகளிரும் நெய்தலம் பகைத்தழை பாவை புனையார் உடலகங் கொள்வோ ரின்மையின் தொடலைக் குற்ற சில்பூ வினரே என (ஐங். 187) வந்ததனானும், ஆண்டுத் தோழி கையுறை மறுத்தது எனத் துறை கூறியதனானும் உணர்க. இனிக் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந்தட்டு என்புழிக் குன்றத்துக் காந்தளைச் செந்நிறத்தாற் சிறப்பித்துக் குருதிப்பூ வுடையதாகக் கூறியதனால் நீ கொணர்ந்த காந்தள் கையுறை நின் கைப்பட்டு நின் மெய் வெப்பத்தாற் கரிந்து காட்டுவது குறித்து இக் கரிந்தது நின் மெய்வெப்பங் கூறுதலின் இதனைத் தலைவி காணின் ஆற்றாளாமெனக் கொள்ள வைத்துத் தோழி மறுத்தா ளென்பது மொன்று. இது பேராசிரியர், நின்னே போலு நின்றழையே....... மயல் கூர்மாதர்க்குத் துயர் மருந்தாயினு, நோய் செய்தன்றாற் றானே, நீ தொடக்கரிதலி னோரிடத்தானே என்பதைக் கையுறை மறுத்ததாகக் காட்டிப் பாராட்டெடுத்த லென்னும் (தொல்.மெய்ப். 16) சூத்திரத்துரைக்கட் கூறிய நல்லுரையால் உணரப்படும். சேஎய் குன்றம் குருதிப்பூவின் குலைக்காந் தட்டு என்று தோழி கூறித் தலைவியைக் குறியிடத்துய்த்து அது காண்பாயாகிற்காண் எனக் குறிப்பெச்சத்தாற் கொள்ள வைத்தாள் எனவும் ஆண்டே கொள்வர். இப் பிற்கருத்து நச்சினார்க் கினியர்க்கும் உடம்பாடாம் (தொல்.செய். 206). இறையனார் களவியலுரைகாரர்க்கும் இஃதே உடம்பாடா யினும், `யான் செங்காந்தட்பூக் கொய்துகொடு வருவல்; ஆண்டுத் தெய்வ முடைத்து; நின்னால் வரப்படாது; இப் பொழிலிடத்தே நில் என்னுங் கருத்தாற்றோழி கூறியதாக அவர் துணிவர் (18). சேஎய் என்பது செய்யோன் என்பதன் சிதைவு என்பர் நச்சினார்க்கினியர் (முருகு. 61). காய் கடவுட் சேய் (பரிபா. 5) என்பது பற்றிக் கடவுள் மகன் எனினுமமையும். குமார ஸம்பவம் என்று காளிதாஸரும் பெயரிட்டாளுதல் காண்க. கவர்கணை (புறப்.வெண். பாதீடு)யின் வேறு தெரியக் கோலம்பு என்றதாம். கோல்-திரட்சி என்பதுமுண்டு. குருதிப்பூ என்றது குருதியொத்த பூ எ-று. குருதி யொப்பின் கமழ்பூங் காந்தள் (நற்றிணை 399) என்ப. இது பாடியவர் தீப்புத்தேளார். தீப்புத்தேள் - அங்கியங் கடவுள். திட்புத்தோளர் என்பது பாடமெனின், திண்மையை யுடைய தோளினர் என்க. சேஎய் குன்றம் என்றது இம் மலையும் அக்கடவுட்கே உரியது எ-று. செங்களம் முதலாகக் கூறிய பலவற்றிற்கும் இயையக் குன்றமுஞ் செவ்வரை யெனத் தகும். செவ்வேளை வாழ்த்திய பாடற் பின்னே செவ் வேளைச் சிறப்பித்து அக் கடவுள் குன்றத்தை அவனடை யாளப் பூவாற் புகழ்ந்த பாட்டை வைத்தார் என அறிக. இறையனார் 2. கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி 1 காமஞ் செப்பாது கண்டது 2 மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலி னறியவு முளவோ நீயறியும் பூவே. (எ-து) இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன் தலைமகளை நாணின் நீக்குதற்பொருட்டு மெய்தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திக் கூடித் தனது அன்புதோற்ற நலம் பாராட்டியது. (வி) ஊன்றேர் வாழ்க்கைப் புள்ளினத்தின் வேறாய்க் கொங்குதேர் வாழ்க்கையைச் சிறப்பாகவுடையது தும்பி என விளித்தான். `படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி எருவைச் சேவல் (அகம். 161) என்பதனால் ஊன்றேர் வாழ்க்கைப் புள்ளினம் உணர்க. ஊன்றேர் வாழ்க்கையை யுடைய அப்பலவும் புறஞ்சிறையுடையவாக நீ மட்டும் அகஞ்சிறையையுடையையென்று அவற்றின் வேறு தெரியவைத்து அஞ்சிறைத்தும்பி என்றான். சிறையைக் கூறியது பறந்து செல்வதற்குக் கருவியாதல் பற்றியாம். உயிர்க்கு ஊறுசெய்யாத வாழ்க்கையினுஞ் சிறந்து நறுமணந்தேரும் வாழ்க்கை யுடைமையாற் `சாரக்கிராகி என வண்டினைக் கூறுதல் வடநூல் வழக்கு. `வண்டனார் (சிந். 1632) எனப் பெரியோரால் வழங்கப்படுதலுங் காண்க. நாற்றவுணவினோர் (புறம். 62) ஆகிய தேவசாதி போலக் கொங்குதேர் வாழ்க்கையைச் சிறப்பாகக் கருதிக் கூறினான். சுரும்பு முதலியன தும்பியின் கிளையென்ப. இவற்றுள் நல்ல மணத்தே செல்லதற்குரியன சிலவே என்ப (சிந். 892 நச். உரை). இவற்றுள் உயர்ந்ததையே ஈண்டு விளித்துக் கூறியதாகக் கொள்க. நறியவும் உளவோ என வினாவுவோனுக்குச் செப்புதற்குரியை நீ என்பது தெரியப் பல்லிடத்துச் சென்று தேர்தற்குத் துணையாகிய சிறையை அகத்தேயுடைமையால் எங்குஞ் சென்று கொங்கின் இயல்பு நன்கறிவையாகிய நீ காமஞ் செப்பாது - என்ற வினாவிற்கு எனக்கின்பமாவ தொன்றை விடையாகக் கூறாது. தான் துய்த்து அறிந்த இன்பமாதலான் அதனைக் காம மென்றான்; காமம் இன்பமாதல் காமவல்லியை இன்பக்கொடியென வழங்க லானறியலாம்; `கற்பகங் கந்துக்கட னொத்தான், இணைவே லுண்க ணந்தையு மின்பக்கொடி யொத்தாள் (சிந். 365) என்ப. இன்பமும் பொருளு மறனுமென்றாங் கன்பொடு புணர்ந்த வைந்திணை (கள. 1) எனத் தொல்காப்பியனாரும் வழங்குதல் காண்க. உளவோ என, வினாவுகின்றா னாதலாற் செப்பாது என்றான். வினாவுஞ் செப்பே என ஆசிரியர் தொல் காப்பியர் வழங்குதலால் இதனுண்மை உணர்க. கண்டது - நீ அறிந்தது. நீ அறியும் பூவே என்பதனா லறிக. மொழிமோ - கூறுவாயாக. பயிலியது கெழீஇய நட்பின் பயின்றது உரியதாகிய நட்பினையும்; என்றது முற்பிறப்பிற் பயின்றது இப் பிறப்பின் உரியதாகிய நட்பு எ-று. மயிலியல் - மயிலின் இயலாகிய சாயலினையும்; மயிலன்ன; மென்சாயலார் (புறம். 395) என்பது காண்க. இயல் நடையுமாம். செறி எயிறு - நிரையாய்ச் செறிந்த பற்களையும் உடைய அரிவை என்க. நாடி நட்டலே வேண்டுவதாகவும் அங்ஙன மாகாது நோக்கெதிர் நோக்கிய அளவிலே மெய்தொட்டுப் பயிறல் உண்டாயது பற்றிப் பயிலியது கெழீஇய நட்பின் என்றான்; உள்ளப் புணர்ச்சியின் வழியது மெய்யுறு புணர்ச்சியாதலின் முற்பட இருவயினொத்த நட்பினையே பாராட்டினான். தான் கண்ட நிலங் குறிஞ்சியாதலின் ஆண்டுள்ளதோர் மயிலோ என்று ஐயுற நின்ற நிலையே நினைந்து மயிலியல் என்றான். அவள் பொழிலிடை உலாவியபோது கண்ட நடை நினைந்து மயிலியல் என்றானெனினு மமையும். அவள் முறுவற் குறிப்பால் உள்ளம் ஒத்த லறிந்தானாதலால் அது புரிந்த செறி யெயிற்றைப் பாராட்டினான்; இத்தனையும் உடையாளோர் தெய்வமல்லள் மகள்தான் எனத் தெளிந்தது பற்றி அரிவை என்றான். அரிவை கூந்தலின் - அரிவையினுடைய கூந்தலைப் போல; ஊற்றுணர்ச்சி யுடைய பிறவுறுப்புக்களின் உயர்பு தோன்ற வைத்தான். கூந்தலே கூறியது அதுவே பாயலாகத்தான் கிடந்ததுபற்றி என்க. தான் அவள் மெய்தொட்டுப் பயிறற்குக் காரணமாய்ப் பல்கால் தான் துரப்பவும் அக் கூந்தலின் இயல்பாகிய நறுமணத்தால் விடாது நீ அமர்ந்து ஆர்த்தது அறிவேனாத லால் நின்னை வினாவுவேன் என்று குறித்தான். இதனால் நீ அறியும் கூந்தலைப் போல நீ அறியும் பூக்களுள் நறியவும் உளவோ என்றான். கொங்குதேர் வாழ்க்கையால் இவ்விரண்டினியல்பும் நன்கறிவை, அதனாற் கண்டது மொழிமோ என்றான். மொழிமோ என்றது கிளக்குநபோல அஃறிணை மருங்கி னறைந்ததாகும். சுரும்பு முதலியன கூறும் பாஷையைச் சீவக னுணர்ந்திருத்தலின் அதனாலவற்றை அழைத்தான் (சிந். 892-893) என நச்சினார்க் கினியருரைப்பர். கொடுங்குழை கூந்தலுட் டிவளும் வாழிய செம்பொறி வண்டுகாள் இவள் கூரெயி றீனுந் தகையவோ தவள மெல்லியர்த் தண்கொடி முல்லையே (சிந். 1331) என்பது இப் பாட்டின் கருத்தைத் தழீஇ வந்ததாகும். உளவோ மொழிமோ என்றான், உளவென்று மொழிவையாயின் அவை கொணர்ந்து இவள் கூந்தலிற் புனைவேன் என்பது குறித்து. பிற ஒவ்வாமலர் புனையின் இவள் கூந்தலினறுமணத்தை அவை கொள்வனவன்றி இக் கூந்தலுக்கு ஒரு மணஞ் செய்யாவாம் என்பது கருத்து. உளவோ எனப் பன்மையாற் கூறியது பல பூக்கள் கூடியும் இந் நறுமணஞ் செய்யா என்பது நினைந்து. நீ அறியும் பூக்களுள்ளே நறியவும் உளவோ என்க. கெழீஇய நட்பினால் அவள் கூந்தல் தனக்குரியதாகிய சிறப்பான் அதனையே முற்கூறினான்; `இவள் ஒலிமென் கூந்த லுரியவா நினக்கே (225) என வருதல் காண்க. இனி மயிலியல் என்பது மயில் நடை என்றே கொண்டு கூந்தலி னறியவு முளவோ என்பது இறுதியாக அடி முதல் முடிவரைத் தன் உள்ளம் பிணித்த அவள் இயற்கை அழகு நினைந்து கூறினான் எனின் நன்கு பொருந்தும். கெழீஇய நட்பு - வளர்ந்து ஓங்கிய நட்பு என்பது மாம்; உரவுத்திரை கெழீஇய பூமலி பெருந்துறை (நற்றிணை, 159) என்பது காண்க. செறியெயிறு - நிரைத்த செறிமுறை பாராட்டினாய் மற்றெம் பல்லின் (பாலைக்கலி, 21) என்புழிக் காண்க. இறையனார் சிவபிரானார்; இது சிவபிரான் ஓர் புலவனாய்ச் சங்க மேறித் தருமி என்னும் அந்தணன் பொருட்டுப் பாடப்பட்டது என்பது தொன்றுதொட்டு வந்த வழக்கு. நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண் என்பது ஆளுடையவரசர் திருப்புத்தூர்த் திருப்பாட்டு. தேவகுலத்தார் 3. நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் 1 குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே. (எ-து) தலைமகன் சிறைப்புறமாக அவன் வரைந்து கொள்வது வேண்டித் தோழி இயற்பழித்தவழித் தலைமக ளியற்பட மொழிந்தது. (வி) நாடனொடு நட்பு - நாடனொடு ஒத்து நட்ட நட்பானது சொல்லப்புகின் நிலத்தைக் காட்டிலும் அகலத்தாற் பெரிது; நினையப்புகின் வானைக்காட்டிலும் ஓக்கத்தா லுயர்ந்தது: உள்புக்கு எல்லை காணப்புகின் நீரைக்காட்டிலும் ஆழத்தால் அரிய அளவினது என்க. பெரிது, உயர்ந்தது, ஆரளவினது என முத்திறப்படுத்தது உரை, உள்ளம், மெய் என்ற மூன்றானும் அளக்கலாகாமை குறித்து. நிலம், வான், நீர் மூன்றும் அளக்கரிய பொருள்களாதலின் எடுத்துக் காட்டப்பட்டன. நீர்-கடல். இனிதி னியைந்த நண்பு (அகம். 328) ஆதலின் உயிர்கட்கு இனியது செய்யும் நிலத்தினும், வானினும், நீரினும் ஒருகாலே பெருகிற்றென அந் நண்பினை மிகுத்துக் கூறினாள். இம் மூன்றும் கூடிய வழியல்லது தனியே நின்று பயன்படாமையானே அவற்றினும் மிக்கதென்று கூறி இவை சேர்ந்து செய்யும் பயன் இந் நட்பின் உள்ளதென்று சிறப்பித்தவாறாம். நிலம், நீரின்றிப் பயன்படாமையும், வான் மேல்நின்ற மட்டிற் பயன்படாமையும், நீராகிய கடல் சூழ நின்றும் தனியே பயன்படாமையும் நோக்கிக் கொள்க. வான் கடலை உண்டு நிலத்திற் பொழிதலால் உயிர்கள் இன்புறுதல் காண்க. மூன்றன் சேர்க்கை இன்றியமையாமை பற்றிக் கூறினாள். நீர் பூதமாகாது கடலாதல் போல வானும் மேகமாயிற்று. வானோக்கி வாழும் உலகம் (குறள். 542) என்பதனான் அறிக. கடலின் நீர் வானால் நிலத்திற் பெய்யப்பட்டு நிலனும் நீரும் இயைந்து பயன்படுவது போன்றது இந் நட்பு என்றவாறு. இங்ஙனம் கூறாது நட்பின் அளவுப் பெருக்கமே கருதி நில முதல் மூன்றையும் கூறினாள் என்னின் பெருக்கத்திற்கு ஒன்றேயமையுமென்க. `நிலத்தொடு நீரியைந் தன்னார் (குறள். 1323) என்றலும் நினைக. சிலப்பதிகார நாடுகாண்காதையிலும், கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (அடி 102-103) என்புழி அடியார்க்கு நல்லார் மழை தொழில் மாற இவற்றில் ஒன்றே யமையுமா கவும், இவை எல்லாம் சேரினும் கடல் வளனெதிரக் கயவாய் நெரிக்குங் காவிரி என உரைத்தது கொண்டு இஃதுணர்க. போஷகமாகிய உணவு நல்கும் நிலத்தினையும், தாரகமாகிய நீர் உதவும் வானையும் போக்கிய மாகிய மணி பவளம் முதலியன உதவும் கடலையும் எடுத்துக்காட்டி அம் மூன்றும், இந் நட்பொன்றே நல்கற் சிறப்பான் மேம்படுதல் காட்டினாள். பெருங்கடற்கெல்லை தோன்றினும் (373) என்பதனால் கடலெல்லை காண வரிதாதல் உணர்க. கருங்கோற் குறிஞ்சிப்பூ - கரிய கொம்பினையுடைய குறிஞ்சிப் பூ. நிறையப் பூத்தற்கேற்ற வலியுடைமை கருதிக் கருங்கொம்பு கூறினாள். பன்னீராண்டு வளர்ந்து பூக்குமியல்பான் அது தலைவியாகிய தன்னைக் குறிப்பானுணர்த்திற்று. பூ மகளிர் நலமென்பது நறுமலர் வள்ளிப்பூ நயந்தோயே என்னும் பரிபாட் டடியான் (14) உணர்க. பூவினன்ன நலம் புதிதுண்டு (நற். 15) என வரும். கவினென்னுங் காமர் மலர் (சிந். 2797) என்பது காண்க. பூக்கொண்டு - பூக்களைக் கொண்டு. சாரல் பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பு - மலைப்பக்கத்துப் பெரிய தேனைத் தொகுக்கும் நாட்டை யுடையவனோடு இழைத்த நட்பு. நெடுவரைப் பெருந்தேன் (60). பறவை யிழைத்த பல்கணிறாஅ, றேனுடை நெடுவரை (நற். 185). இதனால் மலையில் வண்டு தேனிறால் இழைத்தலறிக. திணி நெடுங்குன்றந் தேன் சொரியும்மே (புறம். 104). பால்வரை தெய்வம் இழைத்த நட்பு வண்டு பெருந்தே னிழைத்தது போலுமென்று விசேஷித்தாள். பால்வரை தெய்வம் போல ஈண்டு வண்டும் தோன்றாது நின்றது. இப்பாட்டில் தலைவனும் தலைவியும் குறிஞ்சி நிலத்தவராகவே கொள்க. சாரற் குறிஞ்சிப்பூ என இயைப்பாருமுளர். பூவிற்றேன் தனியே பயன்படாது நின்றது சாரலில் வண்டால் இழைக்கப்பட்டுப் பயன்படல் போலத் தலைவியும் தலைவனும் பால்வரை தெய்வத்தால் இணைக்கப்பட்டுப் பயன்படல் கருத்து. நிலம் பயவாது போம், வான் பெய்யாது போம், நீர் தன்னீர்மை குன்றினும் குன்றும், நட்பு அங்ஙனமாகாமல் எக்காலும் பயன்பட்டுப் பின்னும் துன்னத்தகும் சிறப்பாற் கூறினாள். நாடனொடு நட்பு தலைவன் அயன்மையால் பயன் படுதல் இன்றி நாள் கழிவது கருதித் தோழி இயற்பழித்த வழித் தலைமகள் இயற்பட மொழிந்ததாகக் கொள்க. இது தேவகுலத்தார் பாடியது என்ப; தேவகுலம் - தேவர் தளி அரசரெடுத்த தேவகுலம் (சிந். 348 நச்.) நிலமும், வானும், நீரும் பருவத்திலியைந்து பயன்படுதல் போல நட்பும் வரைதற்குரிய நன்னாளி லியைந்து பயன்படுதல் குறித்தது எனினும் அமையும். காமஞ்சேர் குளத்தார் 1 4. நோமென் னெஞ்சே நோமென் 2 னெஞ்சே இமைதீப் பன்ன 3 கண்ணீர் தாங்கி அமைதற் கமைந்தநங் காதலர் அமைவில ராகுத னோமென் னெஞ்சே. 4 (எ-து) பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) இமைதீப் பன்ன கண்ணீர் - கண்ணுக்குக் காவலாகிய இமைகளைச் சுடுதலொத்த கண்ணீரினை, தாங்கி - தம் கையாற் தடுத்து. அமைதற்கு அமைந்த - நாம் உயிர் தாங்குதற்பொருட்டுத் தங்கிய. நம் காதலர் - நம்கட் காதலுடைய தலைவர். அமைவிலர் ஆகுதல் - இப்போது நம்மிடத்துத் தங்குதலிலர் என்று நின்னாற் சொல்லலாகு தற்கு. என் நெஞ்சு முக்காலும் நோகும் என்றவாறு. தலைவி ஆற்றாளெனக் கவன்று, தோழி தலைவர் நின் கண்ணே அமைவில ரென்றாளென்றும். நின் சொல்லால் அமைவிலராதற்கு என்னெஞ்சு நோம் என்று தலைவி கூறினாள் என்றும் கொள்க. அமைவிலராத லென்றது தோழி சொல்லியதைத் தான் கொண்டு சொல்லியது; அமைவிலரல்லர் என்பது தலைவி கருத்து. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென், வாடுதோட் பூச லுரைத்து (குறள், 1237) என்புழிக் கொடியார்க் கென்பதனைக் கொடியாரென்கின்றவர்க்கு எனக்கொண்டு கொடியார்க்கென்பது கொடியரல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச் சொல் எனக் கூறுதல் கண்டு இவ் வழக்குணர்க. நோவ லவரைக் கொடியரெனக் கூற னொந்து (குறள். 1236) என்புழிப் பரிமேலழகர், யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கு அன்று, நீ கூறுகின்றதற்கு என்றவாறு என உரைத்தது காண்க. காதலர் நெஞ்சத்தவராதலை என்னெஞ்சு அறிந்து ஆற்றி யிருக்கவும், அவர் அமைவிலரென்று கேட்பதாதற்கு அந் நெஞ்சு தானே நோம் என்று கூறினாள் என்க. இதுவே ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைவி கூறிய கூற்றாம் என்க. காதலர் புணர்ந்துள்ள போது நின்னைப் பிரியேனென்ன ஆண்டுப் பிரிவென்பது ஒன்றுண்டு போலுமெனக் கவன்று அது நினைந்து ஆற்றாது உள்ளே வெதும்பி இமை தீப்பன்ன கண்ணீர் வடித்த அளவிலே அவர் ஆண்டுத் தாங்கியதை ஈண்டுக் கூறியதாகக் கொள்க. நம் காதலர் என்றாள், நீயும் அங்ஙனம் நினைத்தற்குரியை என்பது தோன்ற. களவொழுக்கத்தான் வந்த துன்பத்தைப் பிறர்க்குப் புலனாகாமல் நிறுத்தலென (தொல். களவு. 30) இளம்பூரணர் இச் செய்யுளைக் கொள்ளலால் அதற்கேற்பக் கூறினாம். ஈண்டுப் பிரிவிடை என்பதை வரைபொருட் பிரிவிடை என இளம்பூரணர் கருதினாராவர். இவ்வாறே வந்த கடலங்கானல் (245) என்னும் பாட்டில், மெல்லம் புலம்பன் கொடுமை, பல்லோரறியப் பரந்து வெளிப்படினே, என்னல மிழந்ததனினும் நனியின்னாதே எனக் கிழத்தி கூறுதலும் ஒப்பு நோக்குக, இதே துறையின் வைத்த அடுத்த பாட்டை வரைவிடை வைத்துப் பிரிந்த வழிக் கூறியதாக நச்சினார்க்கினியர் கொள்ளுதலுங் காண்க. அள்ளூர் நன்முல்லையார் பாடிய குறுந்தொகை 202ஆம் பாடல், வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் வாயின் மறுத்தது. ஆதலின் ஆண்டுத் தலைவன் பரத்தைமையை முனிந்து, இனிய செய்த நம் காதலர் இன்னாசெய்தல் நோமென்னெஞ்சே என்று கூறியதனோடு இதற்கு வேற்றுமை கண்டு கொள்க. அதுவும் இதுவும் ஒத்துள்ள இடத்தும் துறைவேறு கூறுதலான் துறைக்கு இயையப் பொருள் கூற வேண்டிற்றென்க. ஈண்டு அமைவிலராகுதல் என்றாற் போல ஆண்டு ஆக்கச்சொல் இல்லாமை நோக்கிக் கொள்க. காமஞ்சேர் குளத்தார் - பிரிந்தாரைக் காமத்திற் சேர்க்கும் குளமுண்டு என்பது, புகாரிலுள்ள இரு காமத் திணையேரி (பட்டின. 39) வரலாற்றான் அறியப்படுவது. அக்குளக்கரையில் வதிந்தவர் இவராவர். நரிவெரூஉத்தலையார் 5. அதுகொ றோழி காம நோயே 1 வதிகுரு குறங்கு மின்னிழற் 2 புன்னை உடைதிரைத் திவலை 3 யரும்புந் தீநீர் 4 மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல்லித ழுண்கண் பாடொல் லாவே. (எ-து) பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி யுரைத்தது. (வி) மெல்லம் புலம்பன் - மெல்லம் புலம்பாகிய நெய்தல் நிலத்தினையுடையவன். மென்புலம் - மருதமும் நெய்தலும் (புறம். 42) எனப் புறப்பாட்டுரைகாரர் கூறுதலான் நெய்தல் மெல்லம் புலம்பெனப்பட்டது என்றுய்த்துணரலாம். புறம் - புறம்பு ஆவது போலப் புலம் - புலம்பாயிற்று. கடனிலத்தை மென்பாலெனவுங் கூறுதலான் இஃதுணரப்படும்; தண்கடற் படப்பை மென்பாலனவும் (பதிற்று. 30) எனவரும். மென்பால் நிலம் குழிக்குமண் குறைவதென்ப. பிரிந்தென - பிரிந்தானென்று; என்றது கண்களில் பிரியா துள்ளானாகவும், பிரிந்ததாக நினைந்து (எ-று) பூம்போது சிதைய வீழ்ந்தென (புறம். 28) என்புழிப் பழையவுரைகாரர் வீழ்ந்ததாக எனப் பொருள் கூறுதல் காண்க. வயிரியருண்டெனத் தவாஅக் கள்ளின் (பதிற். 43) என்பது காண்க. பல்லிதழ் உண்கண் பாடொல்லா - பல பூக்களையும் போலும் கண்கள் துயிலைப் பொருந்தாவாம். “துறைவன், நெஞ்சத்துண்மை யறிந்தும் என்செயப் பசக்குந் தோழியென் கண்ணே (ஐங். 169) என்பது காண்க, கண்ணுள்ளார் காதலவராக (குறள். 1127) அஃதறியாது பிரிந்தாற் போல நினைந்து கண்கள் பாடொல்லா; அதுகொல் காம நோயே என்று வினவியதாகக் கொள்க. கண்ணுள்ளார் காதலவராக என்புழிப், பரிமேலழகர் யானிடையீடின்றிக் காண்கின்ற வரைப் பிரிந்தாரென்று கருதுமாறென்னை என உரைத்தது கண்டு கொள்க. வெளியிற் பொருள்களைக் கண்டு காட்டவல்ல கண்கள் தம்மிடத்துள்ள தலைவனைக் காணமாட்டாது பிரிந்தெனப் பாடொல்லா; அக் குருட்டுத் தன்மை காம நோய்கொல் என்றதாகக் கொள்க. வதிகுருகு - மருதத்தினின்று வந்து துணையின்றி வதியும் குருகு. மீனுண்டு தன்னிலத்தையும் மறந்து உறங்குதற்குக் காரணமாக இனிய நிழலையுடைய புன்னை. உடைதிரைத் திவலை யரும்புந் தீநீர் மெல்லம் புலம்பன் - கரையை உடைக்கும் அலைத்திவலையால் புன்னை முகிழ்க்கும் தீவிய நீரையுடைய மெல்லம் புலம்பன் என்க. திவலை, உடைக்கும் அலையிலுண்டாதல் தெளிக. ஓங்குதிரை வெண்மண லுடைக்குந் துறைவற்கு (ஐங். 113) என்பது காண்க. தீநீர் மெல்லம் புலம்பென்றது உலகம் தீநீர் உண்டற்குக் காரணமாதல் பற்றி, இன்னீர்த் தடங்கடல் வாயிலுண்டு ... ... காரெதிர்ந்தன்றால் (நற். 115) என்பதனால் உண்மை உணர்க. கடல் சார்ந்து மின்னீர் பிறக்கும் (நாலடி, 245) என்பது பற்றிக் கூறினார் என்றலும் ஒன்று. குருகும் நாரையும் வேறு வேறென்பதும் மருதத் திற்குரியன வென்பதும் தடஞ்சிறை யன்னங் குருகொடு நாரைப் பார்ப்பின மோம்புதண் மருதம் (சிந். 2101) என வருதலானறிக. தடந்தாள் நாரை யிரிய ... ... ... வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும் (பதிற். 29) என்பதும் காண்க. வதிகுரு குறங்கும் ... ... ... மெல்லம் புலம்பன் என்றது அயல் நாட்டவரும் வந்து துய்த்துறங்கும் பெருமனை யுடையான் என்றும், அம் மனை கடல் தருஞ் செல்வத்தால் வளம் பலபடைத்து வளரும் என்றும் குறித்துத் தான் ஆண்டுச் சென்றுறங்கப் பெறாமைக்கும் வருந்துவாள் என்னும் குறிப்பிற்று. நம் கண் பாடொல்லாவாகத்தான் கடலன்ன செல்வத்தால் பொலிவு பெறும் மனைக் கண்ணே வரையாதினி துறங்குகின்றான் என்பதுமாம். `பொதும்பர்த் தனிக் குரு குறங்குந் துறைவற்கு (ஐங். 144) என்புழிப் போல வரைந்து கொண்டு ஒன்றுபட்டொழுக நினையாது தனித்துறங்கு வான் எனினும் அமையும். இனி நன்மலை நாடன் பிரிந்தென ஒண்ணுதல் பசப்ப தெவன் கொ லன்னாய் (ஐங். 144) என்புழிப் போல, பிரிந்தணிமை குறித்துப் பிரிந்தென என ஈண்டு வந்ததெனினுமாம். இது வரை விடை வைத்துப் பிரிந்தவழிக் கூறிய தென்பர் (தொல்.களவு. 21). ஐயோ வெனயாம் பையெனக் கூறிற் கேட்குவர் கொல்லோ (தொல். களவியல். 21 நச். மேற்கோள்) என்பது பிரிந்த அணிமையிற் கூறியதாதல் காண்க. பதுமனார் 6. நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந் தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று 1 நனந்தலை யுலகமுந் துஞ்சும் ஓர்யான் மன்ற 2 துஞ்சா தேனே. (எ-து) வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது. (வி) யாமம் நள்ளென்றன்று - இரவு நள்ளென்ற அநுகரணத்தை யுடையதாயிற்று. இவ்வோசை யான் கேட்பது மாக்கள் முனிவின்று சொல்லவிந் தடங்கினராதலால் என்பதுபட வந்தது. என் உண்மையான வருத்தமறிய மாட்டாமல் ஐயறிவேயுடைய தாயர் என்னை முனிதலில்லையாகிச் சொல்லொழிந்து எனக் கினிதாக நினைவடங்கினர்; அவர் சொல்லெல்லாம் தன்னை வைதலே யாதலால் முனிவின்று சொல்லவிந்தடங்கினர் என்றாள். இனிது என்றது அம் மட்டில் தனக்கினிதாதல் கருதி. நனந்தலையுலகமும் துஞ்சும் - அகலத்தையுடைய உலகினுள்ள உயிர்களும் துயிலும். மன்ற ஓர்யான் துஞ்சாதேனே - தேற்றமாக யான் ஒருத்தியே துயிலாதேன். என்றவாறு. மாக்களடங்கின ரென்றதனால் தன் பகை துயிறலையும், உலகமும் துஞ்சும் என்றதனால் அயல் துயிறலையும் வெளிப்படையாகச் சொல்லி ஓர்யான் மன்ற துஞ்சாதேனே என்றதனால் தன்னட்பாகிய தோழி துயிறலைக் குறிப்பாற் கொள்ளவைத்த வாறாம். இது நாகரிகமாகத் தோழியை நெருங்கியது. மாக்கள் அடங்கினர் அஃதினிதென்று கூறி, உலகமும் துஞ்சும், அது தனக்கு நன்றுமன்று தீதுமன்று என்று கொண்டு, துயிலாதோற்கு உசாத்துணையாகிய நீயும் துயின்றது தீதேயாம் என்று கொள்ள வைத்தவாறு காண்க. பகை, நொதுமல், நட்பென்னும் மூன்றும் குறித்த நயம் தெரிக. ஓர்யான் என்ற கணக்கீடும் துஞ்சுவாரைக் கணக்கிட்டுக் கழித் துணர்ந்ததாதல் காணலாம். துஞ்சாதாரைக் கணக்கிட்டு நனந்தலையுலகத்து யானொருத்தியே துயிலாதேன் என்றது காண்க. யாமம் நள்ளென்றன்றே; அஃதோர்கின்றேன்; யானே மன்ற துஞ்சாதேன் எனக் கூறினும் அமையும். ஓர்யான் - ஈண்டு வினைத்தொகை. இப் பாடலை அவன்வயிற் பரத்தைமைக்கு உதாரணம் காட்டுவர் இளம்பூரணர் (தொல்.களவு. 20). ஈண்டுப் பரத்தைமை என்பது அயன்மை என்பர் நச்சினார்க்கினியர். துஞ்சாதோற்கு உறுதுணையாகத் தலைவர் வந்திலர் தன் அயன்மையால் என்பது அவர்க்குக் கருத்தாகக் கொள்க. இங்ஙனமன்றிப் பரத்தைமை தலைவற்குக் களவிற் கூறுதல் புலத்துறையன்மை யுணர்க. பெரும் பதுமனார் 7. வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலன 1 சிலம்பே நல்லோர் யார்கொ லளியர் தாமே யாரியர் 2 கயிறாடு 3 பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயி லழுவ1 முன்னி யோரே. (எ-து) செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டோர் கூறியது. (வி) வில்லோன் - கையில் வில்லுடையவன். காலன கழலே - காலிலணிந்தன கழல்களேயாம். தலைவன் முன்னர் நெறிகாட்டிச் சேறலான் முற்கூறினார். வில்லோன் காத்துச் சேறல் குறித்து, கழற்கான் மின்னொளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப் பன்மலை யருஞ்சுரம் போகிய தனக்கு (அகம். 203) என்றார். தொடியோள் - கையில் வளையலுடையவள்; உடன்செல்லுதலான் வளைகழலாமை குறித்தது. மெல்லடி மேலன சிலம்பே - மெல்லிய வடிகளின் மேலுள்ளன சிலம்புகளேயாம். தலைவி காலினை மெல்லடி என்றதனாற் றலைவன் கால் வலிய என்பது குறித்தார். வில்லுக்கும், தொடிக்கும் ஏற்ப உறுப்புக்கள் கொள்ளப்பட்டன. கழல்கள் வீரக்குடி பற்றியும் வென்றி பற்றியும் அணிந்தன. பகைவரை வென்று அவர் தலைவடிவு பதித்த கழல் இடக்காலினும், தங்குடிக்குரிய கழல் வலக்காலினும் அணிவர். இவ் வழக்கினை, வீரதண்டை சேமத் தலைவிளங்கு மிடுதாளினான் எனத் தமிழ் மறவர் தலைவராகிய சேதுவேந்தர் விருதுகளில் வழங்குதல் காணலாம். இக் கருத்திற் கியையவே புறப்பாட்டுரைகாரர் காலன புனைகழல் (புறம். 100) என்புழி வீரத்திற்கும் வென்றிக்கும் கட்டின என்பர். பாலையில் நடத்தலாற் றாவடி என்பது கருதி மெல்லடி என்றார். இருவரும் நடத்தற்கு உரிய ரல்லாது தேரூர்ந்து சேறற்குத் தக்கவர் என்பது கருதிக் கூறினாரென்பதுமாம். கடுங்கட் காளையொடு நெடுந்தேரேறி ... ... வேறு பல் லருஞ்சுர மிறந்தன ளவளென (ஐங். 385) என வருதலானிஃ துணர்க. நல்லோர் - குடியினும் வாழ்க்கையினும் நன்மை நிரம்பினோர். யார்கொல் - எவ்வினை மேற்கொண்டவரோ; தொடியோள் கால்களிற் சிலம்பு கழிந்தன இன்மையால் மணமகனும் மணமகளும் ஆகத் துணியப்படாமைபற்றி என்ன உறவினராவரோ என்றாரெனினு மமையும். நல்லோர் யார்கொல் என்புழி - யார் வினா வினைக் -குறிப்புச் சொல்லாதலான் இங்ஙனம் கூறப்பட்டது. இவர் அழுவம் முன்னிய நல்லோர் ஆதலான் நம் அளிக்கு உரியர் என்றார். ஆரியர் - ஆரியநாட்டிற் கூத்தர். கயிறாடு பறையின் - கயிற்றில் ஆடுதற்குக் காரணமாக ஒலிக்கும் பறையைப் போல; வாகை வெண்ணெற்றுக் கால்பொரக் கலங்கி ஒலிக்கும் அழுவம். கால் பொர - காற்று மோத, கலங்கி ஒலிக்கும் அழுவம் - நிலைபெயர்ந்து ஒலிக்கும் பரப்பு. இடருற்றார் கூவியழைப்பினும் கேளாதபடி வெண்ணெற் றொலிக்கும் பரப்பு எ-று. வேய்பயி லழுவம் - புகுதற்கும் நடத்தற்கும் இடையீடாகிய முள்ளுடை மூங்கிற் றூறுகள் செறிந்த பரப்பு. அழுவம் முன்னியோர் - பரப்பிற் செல்ல நினைத்தவர். வேய்பயி லழுவம் தம்முள் உரிஞித் தீப்பற்றுதற்குக் காரணமாக வேய் செறிந்த பரப்பு என இதுவும் அதன் கொடுமை குறித்தது என்பது பொருந்தும். அலங்குமழை நரலத் தாக்கி விலங்கெழுந்து, கடுவளி யுருத்திய கொடிவிடு கூரெரி (அகம். 47) என்பதும் காண்க. அழுவம் - பரப்பு. `பெருநீ ரழுவத்து (அகம். 20) முள்ளுடை மூங்கில் (ஐந்திணை 70-36) என்ப. காலன கழல், மேலன சிலம்பு. முன்னியோர் நல்லோர், யார் கொல் அளியர் என்க. வில்லோன் காலிற் கழலும், தொடியோள் அடியிற் சிலம்பும் ஒலிப்பச் செல்கின்றார். அவ்வொலி கேளாமல் வாகை வெணெற்றொலிக்கும் அழுவம் எனச் செவிலிக்குக் குறிப்பாற் கண்டோர் உணர்த்தின ரென்க. வில்லோன், தொடியோள் எனத் தனித்தனிக் கூறியவர் நல்லோர் என இருவரையும் சேரக் கூறியதனால் இருவருந் தாமுன் செய்த நன்மையாற் சேர்ந்து செல்லுதல் கருதினார் என்பதும் ஆம். யார்கொல் - நினக்கு என்ன உறவினர் எனச் செவிலியை வினாவியதாகவுங் கொள்க. வாகை வெண்ணெற் றொலிக்கும் அழுவம் இனிதாக முன்னியோர் யார்கொல் என்று கொண்டு ஊரில் அயலார் அலர் ஒலிக்க இருப்பது வெறுத்தவரோ எனக் கருதினா ரென்பதுமாம். அழுவத்துக் காலிற் கழலும், சிலம்பும் ஒலிக்கப் புகும் இந் நல்லோரைக் கண்டு கலங்கி அறிவில்லாத வாகை வெண்ணெற்றும் ஒலித்தல் சாடுவாற் கொள்ள வைத்தது கண்டோர் இரக்கம் புலப்பட என்க. இது பெரும்பதுமனார் பாடலாதலிற் பதுமனார் பாட்டிற்கு மேல் வைத்தார் போலும். ஆலங்குடி வங்கனார் 8. கழனி மாஅத்து விளைந்துகு 1 தீம்பழம் பழன வாளை கதூஉ 2 மூரன் எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையுங் காலுந் தூக்கத் தூக்கும் 3 ஆடிப் பாவை 4 போல மேவன 5 செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே. (எ-து) கிழத்தி, தன்னைப் புறனுரைத்தாளெனக் கேட்ட காதற் பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. (வி) கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் - வயல் வரப்பினுள்ள மாமரத்து விளைந்து தானே உகும் தீம் பழத்தை. பழன வாளை கதூஉம் ஊரன் - பக்கத்துப் பொதுவாகிய நீர்நிலைச் செறுவின் வாளை மீன் பற்றும் ஊரன்; என்றதனால் மாமரம் வைத்து வளர்த்துப் போற்றுவார்க்கல்லாது ஒரு முயற்சியுமின்றிப் பக்கத்துப் பொதுவாகிய பழனத்துள்ள வாளைக்கும் வருந்தாமல் எளிதிற் பயன் துய்க்க வாயினாற்போல, தலைவன் தன்னைப் பேணும் தலைவிக்கல்லாமல் பரத்தைக்கும் வருந்தாமல் நலன் துய்க்க வாயினான் என்பது குறித்ததாம். ஊரன் - மருத நிலத்தூர் உடைய தலைவன். மாஅத்துத் தீம்பழம் கூறியதனால் மருதத்து முதுவேனில் வந்ததாகக் கொள்வர். எம் இல் பெருமொழி கூறி - எம் மனையில் எம்மைப் பெருமைப் படுத்தும் மொழிகளைச் சொல்லிவிட்டு. பெருமொழி - சிறு சொற்கெதிராய புகழ்ச்சியு மாகும். எம் இல் என்றாள் தலைவன் எத்தனைப் பெருமொழி கூறினும் பரத்தையர் மனை அவன தாகாது தம் மனையே ஆதல் கருதி. `மைவிழியார் மனையகல் என்பது ஆத்திசூடி. தம்மில் என மேல் வருதலால் இவ்வுண்மை புலப்படும். தம் இல் - தம் மனைக்கண்; தலைவி இல்லாளாதலின் அவளையும் உளப்படுத்திக் கூறினாள். தன் புதல்வன் தாய்க்கே ஆடிப்பாவை போல மேவன செய்யும் தனக்கு மகனைப் பெற்று அவற்குத் தாயாயினாளுக்கே கண்ணாடியின் நிழற்பாவை போல அவள் விரும்பியன செய்வான். புதல்வனைப் பேணுதற் குரியளன்றி, இன்பத்திற்குரியளல்லள் என்பது குறித்துத் தலைவியைத் தன் மகன் தாய் என்றாள். தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை போல - உணர்ச்சி யில்லாது தலைவி ஏவிய தொழில் செய்வான் என இகழ்ந்தாளாம். காமக் கிழத்தியர் தலைவனை இகழ்ந்தது என இப் பாட்டை இளம்பூரணர் கொள்ளுதல் காண்க. (தொல்.கற்பு. 10). இனி எம் மனைக்கண் தனக்கின்பஞ் செய்தற்குரிய எம்மைத் தொழில் கொள்ளல் வேண்டித் தன் பெரு மொழிகளைச் சொல்லி விட்டுத் தம் மனைக்கண் தனக்கின்பந் துய்த்தற் குதவாத புதல்வன் தாய்க்கு அவளிட்ட தொழிலை உணர்ச்சியின்றிச் செய்வன் என இகழ்ந்தா ளெனினும் அமையும். கையுங் காலும் கூறினாள் இருந்தும் நடந்தும் செய்யுந் தொழிலெல்லாம் குறித்து. தன் புதல்வன் என்றது இம் மனைக் கண் தாம் பெறும் மகவு அவன் மகவெனப் படாமை குறித்தது. இவ்வுண்மை நற்றிணையில் தலைவி, யாண ரூரநின் மாணிழை மகளிரை, யெம்மனைத் தந்துநீ தழீஇயினு மவர்தம், புன்மணத் துண்மையோ வரிதே யாவரும், பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, நன்றி சான்ற கற்பொ, டெம்பா டாத லதனினு மரிதே (நற். 330) எனக் கூறுதலான் அறியப்படும். பழனவாளை கதூஉம் என்றதனால் கழனிக்கும் பழனத்திற்கு மிடையே மாமரம் உண்மை உணரலாம். விளைந்துகு தீம்பழம் பழனவாளை கதூஉம் ஊரன் என்று தலைவியர்க்குரிய தலைவரைக் கிடைத்தபோது துய்ப்பது பரத்தையர் இயல்பென்று குறித்தாளாம். கயமனார் 9. யாயா கியளே 1 மாஅ யோளே மடைமாண் செப்பிற் 2 றமிய 3 வைகிய பெய்யாப் பூவின் 4 மெய்சா யினளே 5 பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் இனமீ னிருங்கழி யோத மல்குதொறும் கயமூழ்கு மகளிர் 1 கண்ணின் மானும் தண்ணந் துறைவன் கொடுமை நம்மு னாணிக் 2 கரப்பா டும்மே. 3 (எ-து) தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. (வி) யாயாகியள் - என்தாய் ஆயினள். குற்றம் பொறுத்துரை யாடும் சிறப்பால் யாய் ஆயினள் என்றாள். இது தோழி கூற்றெனத் துறைகூறுதலின் என் தாய் என்பது செவிலியை எனக் கொள்க. மாயோள் இளையளாயினும் அறிந்தொழுகும் வன்மையால் தன்னை வளர்த்த என் தாயாயினள் என்றாள். தோழி தானே செவிலி மகளே (தொல். களவு. 34) என்பது காண்க. தலைவியை, யாய் என்றது புலத்தற்குக் காரணமாயின தலைவன்கண் உளவாகவும், அவை மனங்கொள்ளாத சிறப்பை நோக்கி என ஐங்குறு நூற்றுரைகாரர் கூறுவர் (ஐங். 1). தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார், இகழினும் கேள்வரை யேத்தி யிறைஞ்சுவார் என வரும் பரிபாடலடிகளான் (20) இவ்வியல்புணர்க. மாயோள் - இளமைக்கு இயல்பாகிய மாமை நிறமுடையள். இவ்விளையள் முதுநிலையில் உள்ள யாய் ஆயினள் என்றவாறு. மடைமாண் செப்பின் - பொருத்துவாய் மாண்ட செப்பின் கண். தமிய வைகிய - தனித்தனவாய் நாட்கழிந்த. பெய்யாப் பூவின் - ஒருவர் சூடாத மலர்களைப் போல. மெய் சாயினள் - உடல் வாடினள். தமிய என்றது கொடியினுமின்றிச் சூடுவார் குழலினுமின்றி மூடிய செப்பிற் றனித்தனவாதல் பற்றி. ஒவ்வாக் கானத் துயர்மரம் பூத்த பூவும் ஒருவர் சூடாமற் கழியுமாதலான் அவற்றை விலக்கற்குச் சூடவேண்டிப் பறிக்கப்பட்டு மணம் காற்றுக்கொண் டொழியாது மடைமாண் செப்பிற் பாதுகாக்கப்பட்ட பூ என்றாள். பூ மகளிர் நலத்திற்குவமையாதல், `வள்ளிப்பூ நயந்தோயே என வருதலா (பரி. 14) னுணர்க. பாசடை - பசிய இலை. நிவந்த - உயர்ந்த. கணைக்கால் - திரட்சியையுடைய தண்டு. நெய்தல் - நீலமலர். பேராசிரியர் `அவை தாமன்ன என்னும் (தொல். உவ. 11) உவமவியற் சூத்திரவுரைக்கண் இவ்வடியை எடுத்தோதி ஈண்டு இன்வேற்றுமையும் உவம உருபோடு வந்தது எனக் கூறுதலான் இங்ஙனம் உரைக்கப்பட்டது. `தீயினன்ன வொண்செங் காந்தள் (மலைபடு. 145) என்புழி நச்சினார்க்கினியர் கொண்டாற்போல இன்சாரியை என அவர் கொள்ளாமை காண்க. பேராசிரியர் “அன்ன, ஆங்கு, மான வினைப்பா லுவமம் (தொல்.உவ. 12) என்பதற்கு இதனை எடுத்துக்காட்டலான் கயமூழ்கு மகளிர் கண்கள் மூழ்கும்போது இதழ் குவிந்து, எழும் போது விழித்தல் போல ஓதம் மல்குதொறும் இதழ் குவிந்து ஓதம் வற்றுதொறும் மலர்ந்து அவர் கண்ணெனக் காட்டும் என்றவாறு. மல்குதொறும் என்றதனால் வற்றுதலும் உடன் கூறினாராதலுணர்க. தண்ணந்துறைவன் கண்களல்லாத நெய்தல்களை இவையும் கண்கள் என்று வேறு சொல்ல ஒக்கும் துறையையுடையவன் ஆதலால் தன் கண்ணாகிய தலைவியல்லாத பரத்தையைக் கண்டார், இவற்கு இவளும் கண்ணாவாள் எனப் பேணி ஒழுகுபவன் என்று அவன் தலைவியைப் பேணாதொழுகுதலைக் குறித்தாள். கொடுமை - தன்னைப் பேணாமையையே யன்றிப் பரத்தையைக் கண்ணாகப் பேணும் கொடுமை. நம்முன் நாணி - வாயிலாகப் புக்க நம்முன்னர்க் காட்டற்கு நாணுற்று. கரப்பு ஆடும் - அவன் கொடுமை கரத்தலுடன் உரையாடுவாள். இது பொறுத்து வாயில் நேர்தலால் மாயோள்யாய் ஆயினள் என்றவாறு. இது வாயிலாகப் புக்காருட் பாடினி பாணற்கு உரைத்தது என்று கருதுவர் (தொல். செய். 201. பேர். நச். 199). அங்ஙனமாயின் மாயோள் இளமையிலே அறிவு முதிர்ந்து தாயின் தன்மையை எய்தினள் என்க. இனி நெய்தலும் இன மீனும், கண்ணின் மானும் என்றாலும் இழுக்காது. நெய்தலுள்ளுழி மீனுமிருத்தல். நெய்த லிருங்கழி நெய் தனீக்கி மீனுண் குருகு (ஐங். 185) என வருதலால் அறிக. ஈண்டு மீன் கண்ணிற் குவமையாதல் குளித்துப் பொருகயலிற் கண்பனி மல்க (அகம். 312) என்புழிக் காண்க. ஓதம் மல்குதல் கூறியதனால் மாலைப் போதென்றும், அப்போது நெய்தல் மலருமென்றும், அம் மல்கிய நீரால் மீனினம் நெய்தல் மருங்கு அடையும் என்றும் கொள்க. இனமீ னார்ந்த வெண்குருகு மிதித்த. அறுநீர் நெய்தல் (நற்றிணை. 183) என்பதுங் காண்க. ஓரம்போகியார் 10. யாயா கியளே விழவுமுத லாட்டி பயறுபோ லிணர பைந்தாது படீஇயர் 1 உழவர் 2 வாங்கிய கமழ்பூ மென்சினைக் காஞ்சி யூரன் கொடுமை கரந்தன ளாகலி னாணிய வருமே. (எ-து) தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. (வி) விழவு முதலாட்டி - தலைவன் விழாவிற்கு முதன்மையை ஆளும் இயல்பினள். பயறுபோ லிணர பைந்தாது படீஇயர் - பயற்றங்காய் போன்ற பூங்கொத்துக்களிலுள்ள பசிய தாதுக்கள் படும்படி; தம்மேனியினும் உழுபகட்டினும் உழுநிலத்தினும் படுமாறு. உழவர் வாங்கிய - உழுபவர் வளைத்த. கமழ்பூ மென்சினைக் காஞ்சியூரன் - மணக்கின்ற மலர்களையுடைய மென் கொம்புகளுள்ள காஞ்சி மரங்களையுடைய மருதநிலத்தூர்த் தலைவன். கோதை தொடுத்த நாட்சினைக் கறுங்காற் காஞ்சி (சிறுபாண். 178) என்புழி நச்சினார்க்கினியர் மாலை கட்டினாற் போல இடையறாமற் றொடுத்த நறிய பூக்களுடைமை இதற்குக் கூறுதல் காண்க. வயல் வரப்புகளிலுள்ள காஞ்சி மரங்களை உழுபவர் வளைத்துவிட்ட அளவிலே அவை தம் மேனியிலும் உழு பகட்டிலும் உழுநிலத்திலும் கமழ்தாதுதிர்த்து இன்பஞ் செய்தல் குறித்ததாம். இம் மரத்தைப் பல்லிடத்தும் குறுங்காற் காஞ்சி என்றலால் இஃது எளிதிலெட்டி வளைத்தற்காவதும் நினைக. காஞ்சித் தாதுக்கன்ன தாதெரு மன்றத்து (முல்லைக்கலி. 8) என்பதன்கண் தாதெருவிற்கு உவமிக்கப்பட்டதனால் இதன் தாதுக்கள் சிறந்த எருவாதற்பொருட்டு வளைத்து விட்டனர் என்பதும் பொருந்தும். வயல் வரப்புக்களில் இவற்றை வைத்துப் போற்றுதலும் இது கருதியாகும். உழவர் தம் மேனியிலும் தம் உழுபகட்டினும் தாதுபடிந்து தாம் உழுநிலத்துக் காஞ்சி மரங்களை வளைத்த செயல் தோன்ற வந்தாற்போலத் தலைவனும் அவன்றன் பாணனும் பரத்தையரை வளைத்துச் சேரியி னிகழ்த்தியன மனையிற் றலைவி காண வந்து நின்றது கருதிற்று. உழவன் றலைவனாகவும், உழுபகடு பாணனாகவும், உழுநிலஞ் சேரியாகவும், காஞ்சிமரங்கள் பரத்தையராகவுங் கொள்க. ஊரன் கொடுமை என்பது விழவு முதலாட்டி தானாகவும் அவளை மகிழ்வித்தே மகிழாது அவளுள்ளம் வருந்தத் தனி வைத்துப் பரத்தையரை வளைத்து வளைத்து மகிழ்ந்து ஆண்டுச் செய்தன காண விழவுடன் மனைக்கண் வருந்தன்மை. நீ செய்யுங் கொடுமையை நீ காண வெளிக்காட்டாது தன்னுள்ளத்தே ஒளித்தனளாதலுடன் நீ நாணிய வருவாள் என்றாள். ஊரன் தன் கொடுமைக்குத் தான் நாணுமாறு விரைந்து எதிர்கொண்டு வருவாள் என்றவாறு. முன்னைப் பாட்டோடு இயைபு காண்க. பந்தொடு பெயரும் பரிவிலாட்டி (நற்றிணை. 140) என்புழிப் பரிவின்மையை ஆளுபவள் என்பது போல முதலாட்டி முதன்மையை ஆளுபவள் என வந்தது. குடமலையாட்டி (சிலப். வேட்டுவ வரி) என்புழிக் காண்க. மாமூலனார் 11. கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும் 1 பாடில கலிழுங் 2 கண்ணொடு புலம்பி யீங்கிவ ணுறைதலு முய்குவ 3 மாங்கே யெழுவினி 4 வாழியென் 5 னெஞ்சே முனாஅது 6 குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் 1 கட்டி 2 நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் 3 வழிபடல் 4 சூழ்ந்திசி னவருடை நாட்டே 5 (எ-து) தலைமகள் தன்னெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது. (வி) கோடு ஈர்வளை - சங்கினை யீர்ந்த வளையல். இலங்கு வளை - முன்கையின் விளங்கும் வளையல். ஞெகிழ - கையினின்று நெகிழாநிற்க. நாள்தொறும் - வரைவிடை வைக்கும் ஒவ்வொரு தினமும். பாடில கலிழுங் கண்ணொடு - துயிறல் இல்லனவாய் அழுநீர் ஒழுகுங் கண்களுடன். புலம்பி - தனிமையின் வருந்தி. ஈங்கு இவண் உறைதலும் - இவ்விடத்து இப்படித் தங்குதலையும். உய்குவம் - தப்புவேம். என் நெஞ்சே - என் மனமே. வாழி - வாழ்வாயாக. இனி அவருடைய நாட்டே முனாஅது எழு - இப்போது அவருடைய நாட்டிற்கே முற்பட எழுந்து செல்வாயாக. குல்லைக் கண்ணி வடுகர் முனையது - கஞ்சங் குல்லையைத் தலையிற் சூடுங் கண்ணியாகவுடைய வடுகர்க்குரிய பகைப் புலத்ததாய். பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் - பல வேற்படையை யுடைய கட்டி என்பானுடைய நல்ல நாட்டிற்கு அப்பால். மொழிபெயர் தேஎத்த ராயினும் - அவர் நம் மொழி மாறிய தேயத்துள்ளவராயினும். ஆங்கே வழிபடல் சூழ்ந்திசின் - அவ் விடத்திற்கே நின்னைப் பின்பற்றி வருதலைத் துணிந்துள்ளேன் என்றவாறு. நெஞ்சே முனாஅதெழு வழிபடல் சூழ்ந்திசின் என்க. வழிபடல் - பின்பற்றல். `வழிபடுதல் வல்லுத லல்லால் (நாலடி. 309). இப் பாட்டை இளம்பூரணர் களவென்னுங் கைகோளிற் கொண்டு காமக்கிழவ னுள்வழிப்படுதற்கு (தொல். கள. 22) உதாரணங் காட்டுதலான், இது தலைவர் வரைவிடை வைத்துப் பிரிந்தவழி அவர் யாண்டுளராயினுமாக; அவருள்வழிப் படுவல்; நீ முனாஅதெழு என்று தன்னெஞ்சிற்குக் கூறியதாக உரைக்கப்பட்டது. மொழிபெயர் தேஎத்த ராயினும் என்றது தலைவர் அத் தேயத்தரல்லாமை தோற்றி நின்றது. யாண்டுளராயினும் வழிபடுவல் என்று தன் ஆதரந்தோன்றக் கூறியதாம். பகைப்புலமும் மொழிபெயர் தேயமும் தான் செல்லற் குரியன அல்லாமை காட்டி நின்றன. கட்டி நன்னாட்டும்பர் வடுகர் முனையது மொழி பெயர் தேஎத்தராயினும் என இயைத்துரைக்க. இதனாற் கட்டி நன்னாடு வடுகர் முனைக்கு இப்பாற் றமிழகத் துண்மை துணியப்படும். கட்டி, சேரன் படைத்தலைவரு ளொருவ னென்பது `கங்கன் கட்டி (44) எனவரும் அகப்பாட்டா னறிந்தது; இவன் பாணன் என்பவனைத் துணைக்கொண்டு உறையூரிற் றித்தனொடு பொரவந்து அவன் நாளவையிற் கிணைப்பறையொலி கேட்டஞ்சிப் பொராதோடினன் என்பது (226) அகப்பாட்டிற் கண்டது. இவன் கங்கர் குடியினனாகிய கங்கனின் வேறாதல், `கங்கன் கட்டி என்பதனாலும் `பங்களர் கங்கர் கட்டியர் எனச் சிலப்பதிகாரக் காட்சிக் காதையிற் கூறுதலானும் துணியலாம். ஈங்கிவணுறைதலும் உய்குவம் என்பது வளைநெகிழ் தலும் கண்கவிழ்தலுங் கண்டு அன்னை இடித்துரைக்கவும் ஊரலர் தூற்றவும் நெஞ்சே நீயும் யானும் இங்கு இப்படி வருந்தி வதிவதும் தப்புவேம் என்றதாம். இவண் - இவ்வாறு. கட்டி நன்னாடென்றது பகைப்புல மாகாமையும் மொழி பெயராமையும் பற்றியென்று கொள்க. கட்டியைப் பாடியவர் இம் மாமூலனாரும் பரணரும் (அகம். 226) குடவாயிற் கீரத்தனாரும் (அகம். 44) ஆவர். இராசத் தானத்துக் கட்டி எனப் பெயரிய பெருங்குதிரை வீரர் பண்டு தொட்டு இன்று முள்ளனர். வடுகர் முனையது மொழிபெயர் தேஎத்தராயினும் என்றது தலைவியது ஆண்மையும் உணர்வும் குறித்து நின்றதெனின் நன்கு பொருந்தும்; தலைவற்குந் தலைவிக்குங் கூறிய ஒப்பின் வகையுள் ஆண்மையும் உணர்வும் உண்மை கண்டு கொள்க. `கலிழுமங்கண் என்பதூஉம் பாடம். ஓதலாந்தையார் 12. எறும்பி 1 யளையிற் குறும்பல் சுனைய உலைக்க 2 லன்ன பாறை யேறிக் கொடுவில் லெயினர் பகழி மாய்க்கும் கவலைத் தென்பவவர் சென்ற வாறே 1 அதுமற் றவலங் கொள்ளாது நொதுமற் கழறு 2மிவ் வழுங்க லூரே. (எ-து) ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி யுரைத்தது. (வி) எறும்பி அளையின்-ஆண்டுள்ள எறும்பின் புற்றையொத்த. குறும்பல் சுனைய பாறை - குறிய பலவாகிய சுனைகளையுடைய பாறை. அளை - புற்று. `அளையுறை பாம்பும் என்பது ஆசாரக்கோவை (84). நுண்பல் லெறும்பி கொண்டளைச் செறித்த. வித்தாவல்சி வீங்குசிலை மறவர் (அகம். 377) என்பதனால் இவருணவு ஆண்டு எறும்புகள் அளைச்செறித்த புல்லரிசியே யாதல்பற்றிக் கூறினார். இனி எறும்பி அளையினையுடைய குறும்பின்கண் அல்சுனைய பாறையேறி எயினர் பகழி மாய்க்குங் கவலைத்து என்பதுமாம். அல்சுனை என்பது சுனையல்லாத சுனை எ-று; வறுஞ்சுனை என்பது கருத்து. வழியல்லாத வழியை அல்வழி என்பது போலக் கொள்க. வறுஞ்சுனை யுடைமையால் உலைக்கல் அன்ன பாறை என்பது கருத்தாதல் காண்க. நீருள்ள சுனைய பாறையை வெம்மை பற்றி உலைக்கல்லோடு உவமிப்பது சிறந்ததன்று. சுனைய பாறை எனவும், உலைக்கலன்ன பாறை எனவுங் கொள்க. குறும்பு - சிற்றரண்; கடுங்கண் மறவர் கல்கெழு குறும்பின் (அகம். 87) என்பது காண்க. கல்கெழு குறும்பாதலாற் குறும்பின்கட் பாறையேறி என்றார். கொடுவில் எயினர் - கொடிய வில்வேடர். கொடுமை வளைவுமாம். உலைக்கல் - உலையின் அடைகல்; “கொல்லன், விசைத்தெறி கூடமொடு பொரூஉம் உலைக்க லன்ன வல்லா ளன்னே (புறம். 170) என்புழிக் காண்க. பாறையேறிப் பகழிமாய்க்குங் கவலைத்து - பாறையிலேறிச் சேய்மைக் கண் வழிவருவாரைத் தெரிந்து அவரைக் கொல்லற்குக் கொடுவில்லெயினர் தம் அம்புகளைத் தேய்த்துக் கூர்மையாக்குதற்குக் காரணமான கவர்த்தவழிகளை யுடைத்து அவர் சென்ற ஆறு என்ப என்க, மாய்த்தல் - தேய்த்துத் தீட்டுதல். கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென, மருங்கு னுணுகிய பேஎமுதிர் நடுகல் (அகம். 297) என்பது காண்க. மற்று அது அவலங் கொள்ளாது - என்போல அதுபற்றி வருத்தம் கொள்ளாது. இவ்வழுங்கலூர் - என் வருத்தத்தைத் தவிர்த்தல் செய்யும் இவ்வூர். நொதுமற் கழறும் - என்னை அயன்மையின்வைத் திடித்துரைக்கும் எ-று. ஊர்-ஈண்டுத் தோழி. இவள் என்னோடொருபடியாயுள்ளவள், என்போல அவர் சென்ற ஆறு கவலைத்தென்று அவலங்கொள்ளாது, என்னின் வேறாய் என்னை அயன்மையில் வைத்துக் கழறுவாள் என்றாளென்க. அது - ஆற்றின் கொடுமை என்பதுமாம். ஆறு கவலைத்தென்ப என்றதனால், தான் கேட்ட ஆற்றின் கொடுமை தோழியும் அறிந்ததேயாம். அது தெரிந்தும் அவலங்கொள்ளாது கழறுவாள் என்றவாறு. அவர் பிரிவினும் அவர் சென்ற ஆற்றின் கொடுமை பற்றி அவலங்கொள்வள் என்பது கருத்து. அழுங்கல் - தவிர்த்தல்; `செலவழுங்குதல் என்பதனானுணர்க. அவர் சென்ற ஆற்றில் உணவளிப்பது எறும்பியளை, நீர் தருவது அறுநீர்ச்சுனை, உறைவிடம் உலைக்கலன்ன பாறை, வாழ்வோர் பகழிமாய்க்குங் கொடுவில் எயினர் என அவர் சென்ற ஆற்றின் இடையூறெல்லாந் தெரியக் கூறினாளாகக் கொள்க. கவலைத் தென்ப என்றது கானுயர் மருங்கிற் கவலை யல்லது, வானம் வேண்டா வில்லே ருழவர் (அகம். 193) என்பது கொண்டு, அஞ்சுவரு மரபின் வெஞ்சுர மிறந்தோர், நோயிலர் பெயர்த லறியின், ஆழல மன்னோ தோழியென் கண்ணே (அகம். 375) என்பதனாற் றலைவர் அருஞ்சுரத்து நோயிலராகப் பெயர்தல் தலைவி கருத்தாதல் அறியலாம். கபிலர் 13. மாசறக் கழீஇய1 யானை போலப் பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் 2 துறுகற் பைத லொருதலைச் 3 சேக்கு நாட னொய்தந் 1 தனனே தோழி பயலை யார்ந்தன 2 குவளையங் கண்ணே. (எ-து) தலைவன் தோழியிற் கூட்டங்கூடி ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய வேறுபட்ட கிழத்தி தோழிக் குரைத்தது. (வி) மாசறக் கழீஇய யானை போல - அழுக்கறக் கழுவிய யானையைப் போல. பெயலுழந்த துறுகல்லின் குளிர்ச்சியை யுடைய ஒரு பக்கத்து என்னுடன் தங்கும் நாடன், அருகினின் றொழியத் தொடங்கினன். தோழி என் குவளையங் கண்கள் உடனே பயலை யார்ந்தன என்றவாறு. பைதல் குளிர்ச்சிக்காதல், பனிப்படு பைதல் விதலைப் பருவத்து எனவரும் பரிபாட்டடியிற் (11 அடி 75) பரிமேலழகர் கூறியதனான் அறிக. துறுகல் - மனையுள்ள மனைப்படப்பையிற் சிறுபாறை; துறுக னண்ணிய கறியிவர் படப்பைக் குறியிறைக் குரம்பை நம் மனை (அகம் 272) என்பதனான் இஃதறிக. இதன் பக்கத்துக் குளிர்ச்சியையுடைய ஒரிடத்துத் தோழியிற்கூட்டங் கூடிப் பிரிய வேறுபட்ட கிழத்தி என்க. களவில் இங்ஙனம் பாறைப் பக்கத்துத் தலைவன் வந்து தலைவியைத் தழுவிப் பிரிதல் உண்டென்பது, மழை பொழிந்த பாறை மருங்கிற் சிரல்வா யுற்ற தளவிற் பரலவற் கான்கெழு நாடற் படர்ந்தோர்க்குக் கண்ணும் படுமோ (நற். 61) எனவும், துறுக னண்ணிய கறியிவர் படப்பை ... ... ... நம் மனைவயிற் புகுதரு, மெய்ம்மலி யுவகையான் (அகம். 272) எனவும் வருவன கண்டுணர்க. பெரும்பெயல் உழந்ததனாற் பைதல் ஒருதலை என்றார். சேக்கும் நாடன் ஒய்தந்தனன் - உடன் தங்கும் தலைவன் என்னினின்று ஒழியத் தலைப்பட்டனன். ஒய்தருதல் நெருங்காது ஒழிதல்; அடியார்க்கு நல்லார், ஒய்யென - நெருங்கா தொழியென (சிலப். அடைக்கல. 48) எனக் கூறுதலான் உணர்க. ஒய்தருதல், கண்ணிற் றப்புதல் என்பதும் பொருந்தும். பரிபாடலில் ஒய்யப் போவாள் (20 அடி 41) என்பதற்குப் பரிமேலழகர் காணாமற் றப்பப் போகின்ற பரத்தையை என உரை கூறியதனான் உணர்க. அவன் கண்ணிற்றப்பிய அளவே கண் பசந்தனவாக அவன் வருமளவும் யாங்ஙனம் ஆற்றுவல் என்று சிறிதும் பிரிவாற்ற மாட்டாத தன் மென்மை புலப்படுத்தியவாறு. இஃது உவக்காணெங் காதலர் செல்வாரிவக் காணென், மேனி பசப்பூர் வது (குறள். 1185) என்பது போன்றது. இக் குறளிற் போலப் பிரிந்த இட அணிமையும் கால அணிமையுந் தோன்றச் சேக்கும் நாடன் ஒய்தந்தனன் என்றாள் என்க. இனி, ஒருதலைச் சேக்கு நாடன் என்னைச் செல்லச் செலுத்தினன், அந் நிலையிலே கண்கள் பயலை யார்ந்தன என்பதுமாம். ஒய்தல் - செலுத்துதல், ஒய்யு நீர்வழிக் கரும்பினும் (பதிற். 87) எனவும் கிளையு ளொய்வலோ (புறம். 253) எனவும் வருவன வற்றான் உணர்க. தனியே நாடன் எனத் தலைவனைக் கூறுதல், நாடன் தான் குறிவாயாத் தப்பற்கு (121) எனவும் அறிதற் கமையா நாடனொடு (377) எனவும் வருமிடங்களிற் கண்டு கொள்க. பயலை என்ற வழக்கு செயலையந் தளிரேய்க்கும் எழினல மந்நலம், பயலையா லுணப்பட்டு (பாலைக்கலி. 14) என்பதனாலறிக. பைதல் ஒருதலை என்பதற்கு எதுகையாக ஒய்தந்தனனே என வந்ததனாலும் இதுவே பாடமாகப் படிக்க வேண்டுவது உணரலாம். பயலை என்பதற்கு ஈற்றடியிற் குவளை யென்பது இனவெதுகையாக வந்தது. சேக்கு நாடனைப் பார்த்து மகிழ்ந்தன ஆதலாற் குவளையங்கண் என்றார். பார்வையிற் றப்பவும் பயலை யார்ந்தன என்றார். இதுவே பிரிய வேறுபட்டவாறு கூறியதாதல் காண்க. இது “சிறிதுநீ, தணக்குங்காற் கலுழ்பானாக் கண் (பாலைக்கலி. 24) என்பது போல வந்தது. நான் மறப்பினும் என் கண்கள் களவு புலப்படும் வண்ணம் பயலை யார்ந்தன என்றாள். நோய்தந்தனனே என்று பாடங் கொண்டாரும் உண்டு. துயங்குபட ரகல முயங்கித் தோண்மணந் தின்சொ லளைஇப் பெயர்ந்தனன் றோழி யின்றெவன் கொல்லோ கண்டிகு மற்றவன் அல்கா மையி னம்ப லாகி யொருங்குவந் துவக்கும் பண்பி னிருஞ்சூ ழோதி யொண்ணுதற் பசப்பே.” (அகம். 102) என்பதனோடு ஒப்புநோக்கி உண்மையுணர்க. தொல்கபிலர் 14 அமிழ்துபொதி 1 செந்நா வஞ்ச நிவந்த 2 வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் பெறுகதில் லம்ம யானே பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே மறுகி 3 னல்லோள் 4 கணவ னிவனெனப் 5 பல்லோர் 6 கூறயா 7 நாணுகஞ் 8 சிறிதே. (எ-து) மடன்மா கூறு மிடனுமா ருண்டே (தொல். களவி. 11) என்பதனால் தோழி குறைமறுத்துழித் தலைமகன் மடலேறுவல் என்பதுபடச் சொல்லியது. (வி) செந்தா அஞ்சுதற்குக் காரணம் இப்போது நிவந்த வையெயிறு எ-று. நிவந்த - எழுந்த. அமிழ்து பொதி வையெயிறு எனவும், அமிழ்து பொதி சின்மொழி எனவும் கூட்டுக. முதனிலை விளக்கு. தன் வாய்க்கும் காதிற்கும் இன்பஞ் செய்தல் காட்டியவாறு. முள்ளுறழ் முளையெயிற் றமிழ்தூறுந் தீநீரைக் கள்ளினும் மகிழ்செயு மெனவுரைத்து மமையார் (கலித். 4) எனவும், அமிழ்தத் தன்ன வந்தீங் கிளவி (206) எனவும் வருவனவற்றானுணர்க. சில்சொற் பெருந்தோண் மகளிரும் ... காப்பிகழ லாகாப் பொருள் (திரிகடு. 47) எனக் குலமகளிர்க்குச் சிறப்பாகக் கூறுதலாற் `சின்மொழி யரிவையை என்றார். தோழி இவ்விடத்துக் காவலர் கடியரெனச் சேட்பட நிறுத்தலாற் றலைவன் இது கூறுகின்றானாதலான் காப்பிகழாமைக்குக் காரணமும் உடன் கூறியவாறாம். யானே பெற்றாங்குப் பெறுகதில் - யானே களவில் இயற்கைப் புணர்ச்சியிற் பெற்றபடி பலரறிய மடன்மா ஏறுதலாற் பெறுவேனாக விரும்புவல் யானே என்றான். இயற்கைப் புணர்ச்சியுட் போலத் தோழி துணையின்றித் தானே பெறுதல் கருதி, இங்கே தோழியை விலக்குவது அவள் தன் குறைமறுத்துத் தன்னைச் சேட்படுத்ததனால் என்றுணர்க. அச் சேட்படையான் மடலேறுவல் எனக் கூறுமிடனும் உண்டு. நச்சினார்க்கினியர், தோழி நீக்கலினாகிய நிலைமையு நோக்கி. மடன்மா கூறு மிடனுமா ருண்டே (தொல். களவி. 11) என்புழி விளக்கியவாற்றான் இஃதறிக. பெற்றாங்கு இவ்வூரே யறிகதில் - யான் இயற்கைப் புணர்ச்சியிற் பெற்றபடி இதுகாறும் அறியாத இந்த ஊரே நல்லோள் கணவனிவனென அறிவதாக விரும்புவல். இவ்வாறு `மடன்மாமேல் மன்றம் படர்வித்தவள் (நெய்தற்கலி 24) என்றது காண்க. மறுகிற் பல்லோர் கூற - தெருவிற் பலர் கூறா நிற்க. யாம் சிறிது நாணுகம் - அந் நல்லோளும் யானும் சிறிது பொழுதைக்கு நாணுவோம் என்றவாறு. எல்லோரும் கூற என்னாது பல்லோர் கூற என்றது தோழி முன்னரே யறிந்தது பற்றி என்க. மாமேல் ஏற்றுவித்த நல்லோள் இவள் என்று அவள்பழி நுவலு மிவ்வூர் (173) என்பதனாற் றலைவியும், வெள்ளென் பணிந்து பிறரெள்ளத் தோன்றி (182) என்பதனாற் றானும் நாணுதல் கருதிற்று. நாண் பெரிதேனும் அது சிறிது பொழுதைக்குத்தான் உள்ளதென்று சிறிதே என்றான். பெருநாணீக்கி (182) என வருதலான் நாணுதல் சிறிதாகாதென்க. மடன்மா வூர்ந்தவுடனே அவளை இவற்களித்தலான் நாணியிருக்கும் பொழுதே சிறிதாதல் துணிக. நல்லோள் கணவன் என்புழி நல்லோள் தலைவன் கையிலுள்ள கிழியில் ஓவிய வடிவில் அமைந்தவள் என்ப. இவன், நல்லோள் வடிவைக் கையிற் பிடித்தூரு மிவன். அறிகதில்லம்ம இவ்வூரே என்பதனால் இக் களவொழுக்கம் நல்லோள் கணவன் இவளென முன் அம்பலினும் அலரினும் மறைத்து மொழிந்த இவ்வூரே அறிக என்றும், இவ்வூர்ப் பல்லோரும் மறைத்து மொழிதற்குப் பெரும் போது நாணியிருந்த நாம், இப்போது மறுகிற் பல்லோர் வெளிப்படையாகக் கூறச் சிறிது போது நாணுவோம் என்றும் கூறினான் என்க. சிறுபோது கூறியது மடலேறினால் விரைந்து மணநிகழ்தல் குறித்ததாம். நல்லோள் - இகழ்ச்சிக் குறிப்பு. ஔவையார் 15. பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் 1 நன்மொழி போல வாயா கின்றே தோழி யாய்கழற் செயலை 2 வெள்வேல் விடலையொடு தொடுவளை 3 முன்கை மடந்தை 4 நட்பே. (எ-து) உடன் போயின பின்றைத் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள்; நிற்பச் செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்றது. (வி) மூதாலத்துத் தொல் பொதியில் என்க; பழைய ஆலமரத்துப் பழம் பொதியில் என்றவாறு. நாம் அமையத்து வந்து தோன்றுதும் என்று சொற்றது பிழையாது இவ்வம்பலத்து மோகூர் மன்னற்குத் துணையாய் வந்து தோன்றிய நாலூரினராகிய கோசர் என்னும் ஒருவகை வீரருடைய பிழையாத நற்சொற் போல் விடலையொடு நம் மடந்தை நட்பு வாயாகின்று. விடலை - மறவன்; பாலை நிலத்துக்குரியவன். வாயாகின்று - வாய்மை யாயினது. வாயாயினது எங்ஙனம் அறியலாயிற்றெனின் பறை ஒலிக்கவும் சங்கங்கள் ஆர்க்கவும் மடந்தை விடலையொடு ஒரு மனையில் இறைகொள்ளுதலான் என்பாள் பறைபடப் பணில மார்ப்ப இறை கொள்பு வாயாகின்று என்றாள். விடலையொடு மடந்தை பறைபடப் பணில மார்ப்ப இறை கொள்பு நட்புவாயாகின்றே என்க. இளம்பூரணர் விடலையொடு மடந்தை நட்புப் பறைபடப் பணில மார்ப்ப இறை கொண்டு நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயாயிற்றெனச் செவிலி நற்றாய்க்குக் கூறினமை யானும் (தொல். கற்பி. 2) எனக் கூறுதலான். இறைகொள்பு தோன்றிய கோசர் என இயைப்பது அவர்க்குக் கருத்தன்மை உணரலாம். அன்றியும் தோன்றி இறை கொள்வதல்லது இறை கொண்டு தோன்றுதல் இல்லாமை யுணர்க. பொருட் சிறப்பில்லாமையுந் தெரிந்து கொள்க. ஈண்டுக்குறித்த கோசர் செய்தி மோகூர் மோரியர் படைக்குப் பணியாமைக்குக் காரணமாக, அம் மோகூர் மன்னற்குதவியாய் அவன் மோகூரையடுத்துள்ள ஆலம் பலத்து அவர் சொற்றபடி வந்து தோன்றியதாகும் (அகம். 251). மோகூரை யடுத்து ஆலம்பலமும் கோசப்பாடியும் இன்றைக்கும் கள்ளக்குறிச்சிப் புறத்திருத்தல் காணலாம். செவிலியும் நற்றாயும் தோழியுந் தலைவியும் போல் வராதலாற் றோழி என விளித்தாள்; இது களவிற் கூடிய தலைவன் தலைவியை உடன்கொண்டு போய்த் தன்னகத்துக் கொடுப் போரின்றிக் கரணத்தொடு புணர்ந்ததாகும். காலில் ஆய்ந்து கட்டிய கழலையும் மார்பிற் செயலை மாலையையும் கையில் வேலையும் உடைய விடலை என்க. கோசர் வாய்மொழியாற் சிறந்த ஒருவகை வீரர். ஒன்று மொழிக் கோசர் (அகம். 106) என்ப.தொடுவளை - செறிக்கும் வளை. இடுபுணர் வளையொடு தொடுதோள் வளையர் (பரிபா. 12, அடி 23) என்புழிப் பரிமேலழகர் செறிக்குந் தோள்வளையராய் என உரைத்தது காண்க. தொடு என்பது மட என்பதனோடு எதுகைத் தொடையினிருத்தலான் இதுவே பாடமென்க. விடலையொடு இறை கொண்டதனாற் செறிந்தவளை கூறுதலில் பொருத்தமுங் காண்க. செறிவளை - இறுகிய வளை (ஐங்குறு. 199). செயலை வெள்வேல் விடலை என்பதே பாடம். செயலை அணிந்த வெள்ளிய வேல்விடலை: `செயலை வெள்வேல் (அகம். 221) என்றார். செயலைத் தோன்று நற்றார் மார்பற்கு (நற். 376) என வருதல் காண்க. செயலை - அசோகு. பாலை பாடிய பெருங்கடுங்கோ 16. உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம் 1 பொன்புனை பகழி செப்பங் கொண்மார் 2 உகிர்நுதி புரட்டும் ஓசை போலச் செங்காற் பல்லி 1 தன்றுணை பயிரும் அங்காற் கள்ளியங் 2 காடிறந் தோரே. (எ-து) பொருள்வயிற் பிரிந்த இடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு தோழி கூறியது. (வி) கள்வர் - ஆறலைகள்வர், பொன் புனைபகழி - இரும்பைத் தலையிற் புனைந்த அம்பின். செப்பங் கொண் மார் - எய்த பொருளில் உருவக்குத்துஞ் செம்மையைக் காணும் பொருட்டு. உகிர்நுதி புரட்டும் ஓசைபோல - நகத்தினால் அவ்வம்பின் நுதியை (முனையை) நெருடும் ஒலிபோல. உகிர்நெரி யோசையிற் பொங்குவன (அகம். 267) என்ப. செவ்விய கால்களையுடைய ஆண்பல்லி தனக்குத் துணையாகிய பெண்பல்லியை அழைக்கும் அழகிய பொழுதில் நம்மை உள்ளார் கொல்லோ கள்ளியங் காடிறந்தோர் என்க. தோழி கள்ளியங் காடிறந்தோர் கள்வர் தம் பகழி செப்பங் கொண்மார் உகிரால் நுதியைப் புரட்டும் ஒசை போலப் பல்லி துணைபயிரும் அங்கால் உள்ளார் கொல்லோ என்றார் என்க. அங்கால் - அழகிய போது. கால் போதாதல் எக்கால் வருவ தென்றி, அக்கால் வருவர் (277) என்புழிக் காண்க. அழகிய போது என்றார், தாமே உள்ளாரேனும் அவருள்ளுதற்குரிய செவ்வியை யுண்டாக்கியது கருதி. கள்ளியங்காடு என்றார், அப் பல்லிகள் கள்ளி முள்ளிற் பொருந்தி யிருத்தல் பற்றி (அகம். 151). பல்லி பொருந்திய விடத்தை விட்டு நீங்குத லில்லை யென்பது பொருந்தலாற் பல்லி போன்றும் (சிந்தா. 1895) என்னுஞ் சிந்தாமணியிற் கண்டது; பொருந்திய இல்லத்தை யகன்று போயவர் காதலராதல் நினைக. கள்ளியங்காடு - செல்வார் ஒரு பயனுங் கொள்ளல் இல்லாது எங்குங் கள்ளியாயுள்ள காடு என்றவாறு. கள்ளியங்காட்ட (அகம். 53). கள்ளியங் கடத்து (ஐங்குறு 323) என்புழிக் கள்ளிக்கு அடையேயின்றி வந்தது போல ஈண்டுங் கொள்க. கள்ளியங் காட்டிற் கள்வர் உகிர்நுதி புரட்டும் ஓசையைக் கேட்டுத் தம் வீரத்தாற் கடக்கும்போது உள்ளாராயினும், பல்லி தன் துணைபயிரும் அழகியபோது உள்ளார் கொல்லோ என்றாளாம். பல்லி துணைபயிரும் ஓசையைப் பல்கால் நம் மனைக் கண்ணே கேட்டறிந்தவராதலான் உள்ளுவர் என்பது கருத்தாகக் கொள்க. இனி, கள்ளியங் காடிறந்தோர் பயிரும் அங்கு நம்மை உள்ளார் கொல்லோ எனக் கொண்டு ஆல் என்பது அசையெனினும் நன்கு `அமையும். கள்வர்தம் என்னும் சீர்க்குக் கானவர் என்பது முண்டு.’ கள்வர் திரிதருங்கானம் (கைந்நிலை 22) என்பது காண்க. பேரேயின் முறுவலார் 1 17. மாவென மடலு மூர்ப பூவெனக் குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப2 மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ் 3 கொளினே. (எ-து) தோழியிற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன், தோழி குறை மறாமற் கூறியது. (வி) ஊரும் குதிரையென ஊராத பனைமடலையும் ஊர்வர். சூடும் பூவெனச் சூடாத எருக்கின் குவிந்த முகிழாலாகிய கண்ணியினையும் சூடுவர். இவை ஊரும் மாவும், சூடும் பூவுமாகாமை என என்பதனாற் குறித்தன. இவற்றாற் றெருவிற் பலரால் ஆரவாரிக்கவும் உட்படுவர். சாதலிடத்தும் ஆவர் என்றவாறு. காமங் காழ்கொளின் - காமமாகிய நோய் மரத்தினிடத்து முற்றிய பரலாகிய விதையைத் தம் முட்கொள்ளின் என்றவாறு. ஈண்டுக் காமம் எட்டிமரமென்றுங் கொள்ளலாம். பிறிது - மேற்கூறியன அல்லாத சாதற்குரிய செயல். மறுகிற் பல்லோர் சுட்டிக்கூறலால் ஆர்க்கவும் படுப. மறுகிற் பல்லோர் கூறயாம் நாணுகம் (14) என்றது காண்க. களிக்கயன் மழைக்கணார் காமங் காழ்கொளீஇ (சிந்தா. 1941) என்புழிக் காமங் காழ்கொளீஇ என்பதற்குக் காமத்தே வயிரங் கொண்டு என நச்சினார்க்கினியர் கூறுதலான் யாமும் காமத்தே காழ்கொளின் என்றாம். ஊராத மடலை ஊரும் மாவாகவும், மக்கள் சூடாத எருக்கங் கண்ணியைச் சூடும் பூவாகவும் கொள்ளவும் வண்ணம் அறிவு கலங்கச் செய்து பிறர் இகழ்ந்து ஆர்த்தபோதும் உணர்வு வராது சாதலையும் அடைவித்தலால் ஈண்டுக் காழ் அவற்றிற்கேற்ப விதையாகத் துணியப்பட்டது. காமத்தை நோய் மரமோடு உவமஞ் செய்தல். திண்ணிலை வரைப்பிற் சினைதொறுஞ் செறிந்து கண்ணவை யுறூஉங் கனிபல கண்டவை நயவரு நஞ்செனப் பெயர்தெரி வின்மையின் அமரர்காட்டியவமுதுநமக்கிவையெனப் பசிநோய்தீரவயிறலிற்கதுமெனத் தசைபோழ்ந்துகழற்றித்தபுத்திசினாங்கு... காமத் தியற்கையுங் காணுங் காலை (பெருங். இலா. 20) என வருவதனா னறிக. பேராசிரியர் மெய்ப்பாட்டியலுள் (22) இதனைத் தலைமகன் பெரிதுங் கலங்கிய கலக்கத்திற்கு உதாரணங் காட்டுதலான் இக் காழ் மனத்தைக் கலங்கச் செய்யும் பரலாதல் நன்கு துணியலாம். ஊமத்தம் பித்துநோய் செய்யும் செடியாதல் கண்டது: அது போன்ற தென்க. தலைவன், காமம் என்னும் நோய்மரத்தில் காழினைக் கொண்டுள்ளேன். இதற்கு மருந்து நின் தோழி தோள் நலம் உண்டலே என்றும், அம் மருந்து கிடையாதாயின் சாதல் செய்வேன் என்றும் குறிப்பிற் கொள்ளவைத்தான் என்க. தலைவன் காமநோய் முற்றியது என்பதைப் புலமைத் திறத்தான் இங்ஙனங் குறித்துக் காட்டிய இப் பாடலைப் பயிலுந்தோறும் ஒருவன் தன்னையறியாமே இன்முறுவல் தோன்றுதலால், இது பாடிய நல்லிசைச் சான்றோர் பேரே இன்முறுவலார் எனலாயிற்றோ என உய்த்துணரலாம். ஈண்டு அறிவுகாழ்க் கொள்ளுமளவை (379) என்புழிப் போலக் காம முதிர்ந்து வயிரங்கொள்ளின் என்னலாமேனும் தலைவன் கலக்கத்திற்கு இதுபோற் காரணமாகாமை நோக்கி உண்மையுணர்க. இனிக் காமத்துக் காழில் கனி (குறள். 1191) என்பது பற்றிக் காமமாகிய அப்படியே முழுவதும் விழுங்குதற்குத் தடையாகிய பரலைக் கொண்டால் எனக் கூறினும். இக் கலங்கிய செயல்கட்குக் காரணமாதலின்மை யாற் பொருந்தாதென்க. காமமாகிய ஊமத்தத்தினிடத்தே முதிர் நிலையாகிய பரலை உட்கொள்ளின் அவர் ஊர்ப... ... ஆகுப என்றான் எனினும் அமையும். ஊமத்தந் தின்றார் போல வுன்மத்தன் உருமித் தின்பான் (கம்பரா. அதிகாய. 215) என வருதலா னிஃதறிக. இங்குக் காமங் காழ்கொளின் ஊர்ப, சூடுப. மறுகிற் படுப, ஆர்க்கவும் படுப, பிறிது மாகுப என்று கொண்டு காமன் கணையினிகழும் ஐவகை அவத்தையுங் கருதி வைத்தனன் என்பதுமாம். ஊர்தல் சுப்பிரயோகம், சூடுதல் விப்பிரயோகம், மறுகிற்படுதல் சோகம், ஆர்க்கப்படுதல் மோகம், பிறிதுமாதல் மரணம் என அமைத்துக் கொள்க, குவிமுகிழ் எருக்கம் என்றது மலர்தலே யில்லாது குவிந்துள்ள மகிழேயுடையது குறித்தது. காமங் கொளின், காழ் கொளின் என்க. கபிலர் 18. வேரல் வேலி வேர்க்கோட் பலவின்1 சார னாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்தி சினோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. (எ-து) இரவுக்குறிவந்து நீங்குந் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு கடாயது. (வி) வேரல் வேலி - மூங்கிலை வேலியாக உடைய. வேர்க் கோட் பலவின் - வேரிற் குலைகளையுடைய பலா மரத்தினுடைய. சாரல் நாட - மலைப்பக்கத்து நாட்டினனே. பலவின் சாரல் - பலாச் சாரல்; இன் - சாரியை. பலாவால் இனிய சாரல் எனினும் அமையும். செவ்வியை ஆகுமதி - துய்த்தற்குரிய செவ்விக்கு இயைபுடையையாகுக. யாரஃ தறிந்திசினோர் - நின்னை யன்றிச் செவ்வியை அறிந்தவர் வேறியாருளர்; என்றது இவள் நலத்தைச் செவ்வியறிந்து இயற்கைப் புணர்ச்சியிற் றுய்த்ததனால் நீயே செவ்வியறி வாயும் அறிந்து துய்ப்பாயுமாவை என்றவாறு. நின் சாரற்கண்ணே பலாவின் சிறு கொம்பிற் பெருங்கனி ஏந்தும் பற்றுக்கோடின்றித் தானே நான்று பருப்பதுபோல, இவள் உயிராகிய கொம்பு மிகவும் மெல்லிதாக இவள்கட் பழுத்த காமக் கனியோ நாளும் தவப்பெரிதாவது, இன்னும் முதிரவிட்டாற் பழம் அச் சிறு கொம்பை ஒடித்துக் கீழே பயன்படாது வீழ்ந்தொழிவது போல இவள் காமம் இவளுயிரைக் கெடுத்தொழியும் என்று குறித்து வரைவு கடாயினாளாம். களவினுண்ட நலம் பிறர் வேலியகத்துள்ள வேர்க்கோட் பலவுண்டது என்பதும், கற்பின் உண்பது தம் மனைக்கண் முற்றத்துப் பலாவின் சிறுகோட்டுப் பெரும்பழத்தைச் செவ்வியிற் கொண்டு விருந்தோடருந்துவது என்பதும் அவன் குறிக் கொண்டு ஒழுக உணர்த்தியவாறாம். மலரினு மெல்லிது காமஞ் சிலரதன் செவ்வி தலைப்படு வார் (குறள். 1289) என்பதனாற் காமச் செவ்வியின் அருமை உணரப்படும். வேர்க்கோளாயிற் றரை தாங்கும் என்று காட்டிச் சிறு கோட்டுப் பெரும் பழம் என்றதனால் அதைத் தாங்கி அதன் செவ்வியறிந்து துய்த்தல் நினக்கே யுரியதென்று உணர்த்தினாள். சிறு கோடு என்பதனால், தலைவியினது இளமையும் மென்மையுந் தெரிய வைத்தாள். `உயிர்தவச் சிறிது காமமோ பெரிது என்றதனானும், சிறு கோட்டுப் பெரும் பழம் என்ற உவமையானும், காதல் உயிரின்கண் உண்டாகி வளர்வது என்று காட்டினாள். உயிர் தவச்சிறிது என்பதனால் உயிரை அணுவென்று கருதினர் போலும். பரணர் 19. எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர் 1 பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினைமதி வாழிய நெஞ்சே 2 மனைமரத் 3 தெல்லுறு மௌவ னாறும் பல்லிருங் கூந்தல் யாரளோ 4 நமக்கே 5. (எ-து) உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. (வி) எவ்வி யிழந்த - எவ்வியை இழந்ததன் காரணமாக, வறுமை யாழ்ப்பாணர் - யாழ்க்கல்வி வறுமையாய பாண் சாதியினர். அதன் அருமை யறியுமவன் இல்லாமையால் அக் கலை அதற்குரிய சாதியில் வறுமை யெய்தியவாறு குறித்தார். பூவில் வறுந்தலை மேற் கூறுதலான் அருமையறிந்து பொற்பூச் சூட்டு மவனின்றிப் பொருளான் வறுமைப்படுதல் குறித்தல் காண்க. இதனால் ஈண்டு யாழ்க்கல்வி வறுமையே கொள்க. இக் கருத்திற்கியையவே எவ்வியிழந்த செருவிற் பாணர் தாங்கைதொழுது போற்றுமியல்புடைய யாழை முறித்தனர் (அகம். 115) என்று கேட்கப்படுவது காண்க. இவ்வாறே, புலவர் நாவிற் சென்றுவீழ்ந் தன்றவ னருநிறத் தியங்கிய வேலே (புறம். 235) என ஔவையார் அதிகன் இறந்துழிப் பாடுதலுங் காண்க. பூவில் வறுந்தலை போலப் புல்லெனக் காணப்பட்டு அகம் வருந்துவாயாக. யாழின் உயர்வு தோன்ற அதன் வறுமையை வறுந்தலையாற் குறித்த பொருள் வறுமைக்கு முற்பட வைத்தார். புல்லென்றினைமதி என்றது வறுந்தலை போல உடம்பு பொலி விழந்து உள்ளம் வருந்துக என்றவாறு. இஃது உணர்ப்பு வயின்வாரா வூடலாதலான் இவன் ஊடல் உணர்த்தற்கு உரைத்தன எல்லாம் பயன்படாமை தெரிதல் பற்றி அவள் உரைக்கு வேறு கூறிற்றிலன். மனைமரத்து எல்லுறு மௌவல் - மனைக்கணுள்ள மரத்திற் படர்ந்த இரவுற்ற முல்லைமலர் போல. நாறும் பல்லிருங் கூந்தல் - கமழ்கின்ற ஐவகையாகிய கரிய கூந்தலையுடையாள். யாரளோ நமக்கு - நமக்கு என்ன உறவினளோ என்றவாறு. எல் - இரவாதல். எல்லை யெம்மொடு கழிப்பி யெல்லுற நற்றேர் பூட்டலு முரியீர் (அகம். 200) என்புழிக் காண்க. மனைமரத்து இரவிலுற்ற முல்லைமலர்கள் ஒருவருஞ் சூடாமலே மணம் நாறுதல் போல இவள் கூந்தலும் நாம் அணையாமலே நாறும் என்பது குறிப்பு. நமக்கு என்றது நெஞ்சையும் உளப்படுத்தியேயாம். எவ்வி - மிழலை நாட்டை ஆண்ட வேள். இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் வெல்லப்பட்டான் (புறம். 24). கோப்பெருஞ் சோழன் 20. அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின் உரவோ ருரவோ ராக மடவ மாக மடந்தை நாமே. (எ-து) செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தியுரைத்தது. (வி) துணை துறந்து - நாம் எனக்குத் துணையாந்தன்மை விட்டதனால். தன் துயர் கண்டு இரங்காமையால் அருளும், தம்மையே காப்பாகவுடைய என்னைக் காவாது காதலின்றிப் போதலால் அன்பும் நீக்கி என்றாள். தொடர்பிலார் துயர்கண்டு உண்டாகும் அருளும் தொடர்புடையார் பக்கலுண்டாகும் அன்பும் நீக்கி என்றவாறு. தொடர் பிலளாக வைத்துப் பிரிவராயின், துயர் கண்டும் பிரிதலால் அருளிலர் என்றும், தொடர்பினளாக வைத்துப் பிரிவ ராயின், தன் வருத்தத்திற்கு வருந்தாது போதலின் அன்பிலர் என்றும் கருதினாள். அவ்வுலகிற்கு இன்றியமையாத அருளும் இவ்வுலகிற்கு இன்றியமையாத அன்பும் நீக்கி அவ்வுலகிற்கு உதவாததும் இவ்வுலகினிலையாததுமாகிய பொருள் வயிற்பிரிவோர் அறிவுடையராயின்; ஆயின் என்பது ஆகாமை குறித்து நின்றது. “தீதொரீஇ, நன்றின்பாலுய்ப்ப தறிவு (குறள் 422). ஆதலின் அங்ஙனம் நன்றின் பாலுய்ப்ப தாகாமை நினைந்தாள். உரவோர் உரவோராக - அங்ஙனம் பிரியும் வலியுடை யோர் நம்மைப் பிரியும் அறிவுடையாராக, மடந்தை - மடந்தாய். நாமே மடவமாக - அவரைப் பிரியமாட்டாமல் அறிவிலேமாக. அருளுமன்பு நீக்கித் துணை துறந்து பொருள் மேற்பிரியும் அறிவினும், அருளு மன்பும் நீங்கவும் துணை துறக்கவும் இயையாத மடமை உயர்ந்தது என்பது கருத்தாகக் கொள்க. இனிப் பிரிவோர் உரவோராயின் அப் பிரிவு வருத்தம் உணர்தற்கு உரவோர் மடவமாக என்றும் அப் பிரிவு வருத்தம் உணராமைக்கு நாமே உரவோமாக என்றும் கூறினாள் எனினுமமையும். அருளிலார்க் கவ்வுலக மில்லை (குறள். 247) என்பதனால் அருள் அவ்வுலகிற் கின்றியமையாமையும், அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத், தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு (குறள். 75) என்பதனால் அன்பு இவ்வுலகிற் கின்றியமையாமையுங் காண்க. ஓதலாந்தையார் 21. வண்டுபடத் ததைந்த 1 கொடியிண ரிடையிடுபு 2 பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை 3 கானங் காரெனக் கூறினும் யானோ தேறேனவர் 4 பொய்வழங் கலரே. (எ-து) பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, அவர் வரக் குறித்த பருவ வரவின்கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு என்று தன்னுள்ளே கவன்றாட்கு, அவளது குறிப்பறிந்த தலைமகள், கானம் அவர் வருங்காலத்தைக் காட்டிற்றாயினும் யான் இது கார்காலமென்று தேறேன்; அவர் பொய்கூறாராகலின் எனத் தான் ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. (வி) புதுப் பூங்கொன்றை - புதிய மலரையுடைய கொன்றைகள் வண்டு பட - வண்டுகள் ஒழிக்க. `பறை பட (15) என்றது காண்க. ததைந்த கொடியிணர் - நெரிந்த கொடியாய பூங்கொத்துக்களை. ததைதல் - நெருங்கலுமாம். இடையிடுபு - இடையிடையே இட்டு வைத்து; பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற் றோன்றும் - பொன்னாற் புனைந்து செய்த அணிகளைச் சுற்றிக் கட்டிய மகளிர் கூந்தலைப் போலத் தோற்றஞ் செய்யும் கொன்றை தோன்றுமென்க. ஈண்டுப் பொன்னிழை பொற்காசு மாலை. பொலஞ்செய் கிண்கிணிக், காசி னன்ன போதீன் கொன்றை; (148) என்பது காண்க. கொன்றை தோன்றுவதன் மேல், கானம் காரெனக் கூறினும் முல்லைக்காடு காரென்று தானே வாய் திறந்து ஓதினாலும்; அவர் சொற்றேறிய யானோ தெளியேன், என்ன காரணமெனின் அவர் பொய்வழங்கலர் ஆதலான் என்றாள் என்க. கானம் காரெனக் கூறுதல் சொல்லுவன்ன முல்லைமென் முகையே (358) என்புழிக் காண்க. இது கிளக்குந போல அஃறிணை மருங்கின் அறைந்தது. அவர் பொய் வழங்கலர் ஆதலாற் கூறாத கானம் காரெனக் கொன்றை கதுப்பிற் றோன்றுதல் காட்டி ஓதினும் யானோ தேறேன் என்றாள். ஓதாத கானம் காரெனக் கூறினும் என்ற இச் சிறப்பால் இது பாடியவர் ஓதல் ஆந்தையார் எனப்பட்டனரோ என நினைத் தலுமாம். யானோ தேறேன் - என்போல் அவர் சொற்கேட்கும் பாக்கியம் இல்லாதனவும் பேதைமையவும் ஆகிய புதுப்பூங் கொன்றைகள் மகளிர் கதுப்பிற் றோன்றுத லால் கானம் காரெனத் தேறுவ என்றாளாம். யானோ என்புழி ஓகாரம் பிரிநிலையென்று (தொல். உயிர் மயங். 88) இளம்பூரணர் கூறுதலான் கதுப்பிற்றோன் றும் புதுப்பூங் கொன்றை, கானம் காரெனக் கூறினும் யானோ தேறேன் என்பதே பாடமென்று நன்கு துணிக. கொன்றை தேறாது தோன்றும், யானோ தேறேன் என்பது கருத்து. ததைந்த கொடியிணர் கொன்றைகளினுடையன என்பதும் அவை மடவ ஆதலிற் கானம் காரென்று கூறும்படிப் புதுப்பூ விட்டு மகளிர் இழை கட்டிய கதுப்பிற் றோன்றும் என்பதும் குறித்தவாறு. மடவமன்ற தடவுநிலைக் கொன்றை ... ... ... நெரிதரக், கொம்புசேர் கொடியிண ரூழ்த்த, வம்ப மாரியைக் காரென மதித்தே (66) என்புழிக் காண்க. கொடியிணர் தாராகிய இணர்கள் என்பர் பரிமேலழகர். கொன்றை கொடியிண ரூழ்ப்ப (பரிபா. 8,24). சேரமானெந்தை 22. நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய யாரோ பிரிகிற் பவரே சாரற் சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து 1 வேனி லஞ்சினை கமழும் தேமூ ரொண்ணுத 2 னின்னொடுஞ் செலவே. (எ-து) செலவுக் குறிப்பறிந்து ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. (வி) இவணொழிய - இவண் நீங்கிய அளவில். நீ, நீர்வார் கண்ணை - நீ நீர் இடையறாது ஒழுகுங் கண்களை யுடையை, நின் னொடுஞ் செலவு - நின்னொடு செல்லுஞ் செலவின்கண். தேமூர் ஒண்ணுதல் - வண்டுகள் ஊருதற்குக் காரணமான நின் ஒள்ளிய நுதலானது. சாரற் சிலம்பணி கொண்ட - தாள்வரையை உள்ள மலைப்பக்கம் அழகு கொள்ளுதற்குக் காரணமான. வலஞ்சுரி மராஅத்து - வலம்புறமாக இதழ் சுரிந்த கடம்பினது. வேனில் அஞ்சினை கமழும் - வேனிற்காலத்து அழகிய கொம்புகள் போல மணக்கும். இவ்விரண்டினையும் தெரிந்தால் யாரோ பிரிகிற்பவர் - யாரோ பிரியவல்லுநர் என்றவாறு. ஒழிய நீர் வார் கண்ணை உடன் செலவின்கண் நுதல்வேனில் அஞ்சினை கமழும், இங்ஙனமாக யாரோ பிரிகிற்பவர் என்க. சாரற் சிலம்பு - தாள்வரையையுடைய சிலம்பு. மலிநீ ரதர்பல கெழுபு தாள்வரை (பரிபா. 6) என்புழிப் பரிமேலழகர் மிக்க நீர் வரும் வழிகள் பல பொருந்தின சாரல் எனப் பொருள் கூறிக் காட்டியதனால் அறிக. தாள்வரை - பாத சைலம் எனப்படும் இதுவே பேர் என்பது `தாள்வரை என முடித்துத் தாள் பரப்பி மண் தாவிய ஈசனை’(திருவாய். 3, 9, 10, 11) எனச் சடகோப முனிவர் பாடுதலாற் றுணியப்படும். கண்ணிற்கு அயலதாய நுதல் உடன் செலவிற் கமழும் என்றதனால் கண்கள் மிகக் களித்தல் குறித்தாள். நுதல் வேனில் அஞ்சினை கமழும் என்று நின்னொடுஞ் செலவின்கண் அவ் வெய்ய பாலையும் இனிதாதல் காட்டினாள். காணாதொழியிற் கண்கள் நீர் வாரும். கண்டு செல்லின் அக் கண்ணிற்கு அயலதாகிய நுதலும் நீர் வாரும். கண்டு செல்லின் அக் கண்ணிற்கு அயலதாகிய நுதலும் கமழும், இந் நிலை யறிந்தார் தனித்துச் செல்லார் என்பது கருத்து. கோட்சுரும் பரற்று நாட்சுரத் தமன்ற நெடுங்கான் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி வலஞ்சுரி வாலிணர் கொய்தற்கு நின்ற மள்ள னுள்ளம் மகிழ்கூர்ந் தன்றே பஞ்சாய்ப் பாவைக்குந் தனக்கும் அஞ்சாய் கூந்த லாய்வது கண்டே (ஐங்குறு. 383) என்பது பற்றி நின்னொடுஞ் செலற்கண் மராஅத்துச் சினைப் பூ அளகத்திற் சூடநேர்தலால் நுதல் கமழும் என்றார் என்க. நீர் வார் கண்ணையாய் ஒழிய என்பாரும் உளர். ஔவையார் 23. அகவன் மகளே யகவன் மகளே மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே, அவர் நன்னெடுங் 1 குன்றம் பாடிய பாட்டே. (எ-து) கட்டுக்காணிய நின்றவிடத்துத் தோழி அறத்தொடு நின்றது. (வி) அகவல் - அழைத்தல். தெய்வங்களையும் குலத் தோரையும் அழைத்தலையுடைய பெண்டே. இவள் தான் வழிபடுந் தெய்வங்களையும் கிட்டிக் கேட்பார் இருமர பினரையும் அழைத்துப் பாடுதலால் அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே இன்னும் பாடுக என்றாள். மனவுக்கோப் பன்ன - சங்குமணியினாலாகிய கோவையைப் போன்ற. நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே - வெள்ளிய நல்ல நெடுங் கூந்தலையுடைய அகவன் மகளே. ஈண்டுக் கூந்தற்கு நன்மையாவது மனவுக்கோப்பன்ன வெள்ளிய நிலை கண்டு முதுமையாற் பலரும் போற்றற்குரிய சிறப்பு. `மூத்தோ ரன்ன வெண்டலை (அகம். 90) என்பது காண்க. நெடுமையும் நீண்ட கால வளர்த்தியைக் குறிக்கும். பாட்டே பாடுக என்றாள் அவர் பாடல் கேட்கும் இனிமை ஒன்றே குறித்து. பாட்டே என்றதனால் அதன் பொருள் பொய்ப்பது என்பது குறிப்பு. தெளித்தபடி வரைய வாராமை கருதியதாம். இடையிடை உரையாடுதல் வேண்டாம் எனினும் அமையும். அவள் பாடிய பாட்டினுள்ளே குலத்தவரை அழைத்துப் பாடிய போது தலைவருடைய குன்றம் பாடிய பாட்டைக் கேட்டு அதையே இன்னும் பாடுக என்றாள் என்க, பாட்டே பாடுக என்றும் தோழி கூறி இவளைப் பசப்பித்த தலைவர் அவர் என்று குறிப்பிற் கொள்ளவைத்து அறத்தொடு நின்றவாறாம். இதனால் இப் பாட்டிற் றலைவன் தலைவியின் தாய் மரபினனென்பது உய்த்துணரலாகும். இங்ஙனங் கொள்ளாது கட்டுவிச்சியே அவரை அறிந்து கூறி அவர் நன்னெடுங் குன்றத்தைப் பாடினாள் என்னின் தோழி அறத்தொடு நிற்றல் வேண்டாதாகும் என்க. அவள் குலம் பாடும்போது இரு மரபும் பாடப்புக்க நிலையில் தன்னடைவே தலைவர் மரபிற்குரிய குன்றம் பாடப்பட்டது கேட்டு, அதனையே பல்காற் பாடுக என்று கூறித் தோழி அறத்தொடு நின்றாள் என்பதே பொருந்திற்றாம் என்க. அகவர் குலத்தோ ரெல்லோரையும் அழைத்துப் புகழ்வர் என்பர் நச்சினார்க்கினியர் (மதுரைக் காஞ்சி, அடி 225). தான் கருதிய தலைவர் குன்றம் அவள் வாயில் தன்னடைவே வருதற் சிறப்பைக் குறித்து முக்காற் கட்டுவிச்சியை அழைத்தனள் என்பது பொருந்தும். பரணர் 24. கருங்கால் வேம்பி 1 னொண்பூ யாணர் என்னை யின்றியுங் கழிவது கொல்லோ ஆற்ற லெழுந்த வெண்கோட் 2 டதவத் தெழுகுளிர் 3 மிதித்த வொருபழம் போலக் குழையக் 4 கொடியோர் 5 நாவே காதல ரகலக் கல்லென் றவ்வே 6. (எ-து) பருவங்கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது. (வி) கருங்கால் வேம்பின் ஒண்பூ - வேம்பின் கரிய காம்பினுள்ள ஒள்ளிய மலர்கள். யாணர் என்னை யின்றியும் - புதுவருவாயிற் புக்க என் தலைவர் இல்லாமலும். கழிவது கொல்லோ - சூடாது கழிவதோ. பாண்டியரும் அவர் படையுஞ் சூடிய சிறப்பால் ஒண்பூ என்றாள். போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். புறத். 5) எனவும், வேம்பினமலை வான்பூச், சுரியா ருளைத்தலை பொலியச் சூடி (281) எனவும் வருவன கண்டு உணர்க. வேம்பு பூக்கும் இளவேனிற் பருவம் அவர் வருவம் என்று சொற்ற போதாதலால் அவரின்றிச் சூடாது கழிவதுகொல் என்றாள். சூடாது என்றாள் தலைவரைப் பிரிந்து தான் சூடற்காகாமை பற்றி. பூக்கழிவது என்பது பூப் பருவம் போய்க் காய்ப்பருவம் ஆவது. அவரோ வாரார் தான் வந் தன்றே, வேம்பி னொண்பூ வுறைப்பத், தேம்படு கிளவியவர் தெளிக்கும் பொழுதே (ஐங்குறு. 350) என்ப. ஆற்றயலெழுந்த வெண்கோட் டதவத்து - யாற்றினருகில் ஓங்கிய வெள்ளிய கொம்புகளையுடைய அத்தியினது. எழுகுளிர் மிதித்த ஒருபழம் போல- ஏழு நண்டுகள் பற்றிக் குழைத்த ஓர் பழத்தை ஒப்ப. குழைய - யான் குழையா நிற்கவும். அதன் மேலும் வருத்துவதாகக் கொடியோர் நாவே கல்லென்ற - அவர் திறத்துக் கொடுமையுரைப்போர் நாக்கள் தாம் குழைவின்றிக் கல்லென வாயின. நாக்கள் தூற்றலிற் குழையாது கற் போன்றன என்பது கருத்தாம். கல்லென்ற - ஆரவாரித்தன என்பதுமாம். பல நண்டுகள் பற்றி மொய்த்தற்கு இயைபுடையதாக யாற்றய லெழுந்த அதவத்து என்றாள். குளிர் - நண்டு என்பது, களவன் குளிர்ஞெண்டு கற்கடக மட்டை செளுகங் கறையான் சிதல் (உரிச்சொனிகண்டு.விலங்கு. 26) `குளீர : கற்கடக: என்பது அமரகோசம். இவற்றால் குளிறு என்பது நண்டின் பெயரன்மை உணரலாம். மிதித்தல் குழைத்தல் பிசைதல் என்பது உலைவாங்கு மிதிதோல் (172) என்புழிக் காண்க. ஈண்டுக் கொடியோர் என்றது தோழியரையும் ஏவலாட்டி யரையும். காதலர் அகல - என் காதலர் அகன்ற அளவில்; காதலர் குறித்த பருவத்தினின்று அகன்றிருத்த லால் என்பது. காதலர் வேம்பின் ஒண்பூப் பருவத்து வாராமையால் அவரைக் கொடியோர் என்று தோழி முதலாயோர் கூற, அவரைக் கொடியோர் என்பவர்தாம் கொடியர் என்றும் அவர் நாவே பல்காற் றூற்றலால் குழையாத கல்லாயின என்றும் கூறினாள் என்க. வேம்பின் ஒண்பூ என்னையின்றியும் கழியுங்கொல் என்றதனால் தலைவர் குறித்த பருவத்திற்குள் வருவரென்று தலைவி கூறினாள் எனக் கொள்க. பழம் போலக் குழைய என்றது ஞெண்டு கனியைப் பற்றும் போது அதன் அழகு சிதைய வாங்கும் என்பது பற்றி. உதிர்த்த கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு ............ வீழ்துணைக் கிடூஉ மலவன் (அகம். 380) என்றது காண்க. `பெறுநாள் யாண ருள்ளி (அகம். 57) என்புழிப் போல யாணர் வளன் என்பதுமாம். கல் - எறிகல்லுமாம். கபிலர் 25. யாரு மில்லைத் தானே களவன் 1 தானது 2 பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங் கால 3 ஒழுகுநீ ராரல் பார்க்கும் குருகு முண்டுதான் 4 மணந்த ஞான்றே. (எ-து) வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (வி) யாருமில்லை - நான் கலந்த நாளில் வேறெவரு மில்லை. தானே களவன் - தலைவன் தானே செய்தி நிகழ்ந்த களத்திருந்த சான்றாவான். தான் அது பொய்ப்பின் - அவன் தான் கூறிய அச்சூள் பொய்ப்பானாயின், யான் எவன் செய்கோ - யான் யாது செய்வேனோ. ஒழுகுகின்ற நீரில் வரும் ஆரல் மீனைப் பார்த்திருக்கும் சிறு பசுங்கால குருகு முண்டு. தினையின் தாள் குருகின் சிறு பசுங்கால்கட் குவமை. இன்ன பொழுது வரைவல் என்று சூளுரைத்துப் பின் நீட்டித்தலால் அது பொய்ப்பின் என்றாள். களவன் - செய்தி நிகழ்ந்த களத்துச் சான்றாயினான். நெஞ்சு களனாக நீயலென் யானென ... ... ... மற்றவன் மணந்த ஞான்றை (36) என இந் நூலுள் வருதல் கொண்டு இச் சொல்லின் உண்மையுணர்க. கதிர்மூக் காரல் களவனாக (அகம். 246) என வருதலானும் உணர்க. தினைத்தாளை உவமித்தது பெயராது அவ்விடத்தே இருந்தது பற்றி எனின் ஈண்டைக் கியையும். ஆரல் மீன் பார்த்தலால் எம்மைப் பார்த்ததென்று சொல்லேன். யாரும் பார்த்தல் உண்டோ என யான் பார்த்தபோது குருகுண்மையை யான் கண்டேன். அக் களத்துண்டு என்பதே ஈண்டுப் பொருளாதல் காண்க. குருகு பாராததாயினும் அக் களத்தின் அவன் சூளுரைத்தது கேட்டதேயாம் என்று `குருகு முண்டுதான் மணந்த ஞான்றே என்றாள். தானது பொய்ப்பின் என்றதனால் குருகு சூள் கேட்டதற்குச் சான்றாதல் காண்க. களவன் நடுச்சொல்வோன் என்பது திவாகரத்தினுங் காணலாம். கள்வன் பொய்ப்பின் யானெவன் செய்கோ என்பது இயைபுடைத்தன்று, கள்வன் பொய்த்தல் இயல்பாதலால். பல்லோர்க்கு நடுச்சொல்லும் களவனான தலைவன் என்பாற் பொய்ப்பின் யானெவன் செய்கோ என்பது இயல்புடையதாதல் நன்கு நோக்கிக் கொள்க. குருகு பேச வல்லதாயின் தான் கேட்ட சூளுண்மை கூறும் என்பது குறிப்பெச்சம். அடுத்த பாட்டில் தன் கண் கண்டது பொய்க்குவதன்றே என்று கூறிக் கண்டது பொய்க்காது நடுநின்று சொல்பவனைக் களவன் எனக் கொள்ள வைத்த இயைபுங் காண்க. யான் எவன் செய்கோ - உயிர் துறப்ப தல்லது வேறு யாது செய்கோ என்றவாறு. குருகும் உண்டு என்ற உம்மை அவன் நெஞ்சுமுண்டு வாயுமுண்டு என்பன தழுவி வந்தது. கொல்லனழிசி 26. அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை மேக்கெழு 1 பெருஞ்சினை யிருந்த தோகை பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன் தகாஅன் போலத் தான்றீது மொழியினும் தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே தேக்கொக் கருந்து 2 முள்ளெயிற்றுத் துவர்வாய் 3 வரையாடு வன்பறழ்த் தந்தைக்4 கடுவனு மறியுமக் கொடியோ னையே. (எ-து) நற்றாயும் செவிலித்தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு இஃது எற்றினானாயிற் றென்று கட்டுவிச்சியை வினவிக்கட்டுக் காண்கின்ற காலத்துத் தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெய்வமென்று கூறக் கேட்டுத் தோழி அறத்தொடு நின்றது. (வி) அரும்பு அற மலர்ந்த - அரும்புகள் முற்றவும் மலர்ந்த, தன்னுயிர் தானறப் பொற்றானை (குறள். 268) என்புழிப் போல வந்தது. அரும்பற அவிழ்ந்த (புறம். 246) என்புழி முகை யில்லையாக மலர்ந்த என்றார் பழையவுரை காரர். கருங்கால் வேங்கை - வலி தாளினையுடைய வேங்கையினது. மேக்கெழு பெருஞ்சினையிருந்த தோகை - மேலே ஓங்கிய பெருங் கொம்பிலிருந்த மயில்கள். பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன் - பூப்பறிக்கும் இளமகளிரைப் போலக் காணப்படுங் குறிஞ்சி நிலத் தலைவன்; மகளிர் போற்றோன்றி உண்மையில் மயிலாதல் போல நாடனும் தகான் போலத் தோன்றித் தக்கான் ஆவன் என்பது குறிப்பு; தகான் போல - மறந்தானும், துறந்தானும் ஆவனென்று தகான் போல நினைந்து. தான் தீது மொழியினும் - தான் உயிர் விடுவதாகிய இன்னாதது தலைவி கூறினும் என்றவாறு. அவனோ மறந்து துறந்தான்; மனையிலோ கட்டுக் காண்கின்றார்; இங்கு இந் நிலையிற்றன் கற்புக் காத்தற்கு உயிர்துறத்தலே நன்றென்று தலைவி தீது மொழிந்தாள். அது கேட்ட தோழி இவளிறக்கும் அளவிற்றான துன்பத்தை விளைத்த அக் கொடியோனை மாமரத்தின் மேலிருந்து தேன் பொருந்திய கனியை அருந்திய குட்டிக்குத் தந்தையாகிய ஆண் குரங்கும் அறியும். அது தன் கண் கண்டு பொய்க்குவதன்று என்று செவிலிக்கும் நற்றாய்க்கும் தோழி அறத்தோடு நின்றாளெனக் கொள்க. தேக்கொக்கு - தேன்றன்மையையுடைய மாங்கனி; தேன் தேர் சுவைய மாஅத் தீங்கனி (அகம். 348) என்பது காண்க. முள்ளெயிற்றுத் துவர்வாய் வன்பறழ், தாயில்லாமற் றனியே வரையின் கண்விளையாடுதலால் வன்பறழ் என்றாள். பறழ் - குட்டி. பறழ் கனியுண்டிருந்ததனானும் வரையாடுதலானும் அறியாது; அதன் தந்தை ஆகிய கடுவனும் அறியும். உம்மையாற் றானறிந்தது கொள்ள வைத்தாள். கட்டுக் காணும் வரை வரையாது வாளாவிருந்த கொடுமையை யுடையானை என்க. செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின், யானுயிர் வாழ்த லதனினு மரிதே (அகம். 98) என்பன முதலியவற்றால், தலைவி கட்டுக்கேனும் வெறியாடற் கேனும் இணங்காது உயிர் துறப்பேன் என மொழிதல் கண்டு கொள்க. மேற்பாட்டிலும் யானெவன் செய்கோ என்றதுங் காண்க. இவ்வாறு கோடலே நச்சினார்க்கினியர் கருத்தென்பது அவர், தலைவனைத் துறந்தான் போலவும் மறந்தான் போலவும் கருதித் தான் தீது மொழியினும் (தொல்.களவியல் 21) என்பது முதலாகக் கூறியவற்றானுணரப்படும். இப் பாட்டின் துறைவிளக்கத்திற்கும் இதுவே ஏற்பதாதல் நோக்கி யுணர்க. இனி நாடன் தகான் போல - நாடன் இவள்கண் இவ் வேறுபாடு செய்யத்தகாதான் போல. தான் தீது மொழியினும் - கட்டுவிச்சி தெய்வம் அணங்கிற்றென்று ஒரு தீது மொழியினும் எனப் பொருள் கூறலுமாம். இப் பொருட்கு இவ் வேறுபாடு செய்த அக் கொடியோனைக் கடுவனும் அறியும்; ஒரு விலங்கும் அறியா நிற்க அதனைத் தெய்வமேறினாள் அறிகின்றிலள் தீது மொழியும் என்று இகழ்ந்து தோழி அறத்தொடு நின்றாளென்க. இவ் விலங்கு பொய்க்குவதன்று என்று கட்டுவிச்சி பொய்த்தது குறிப்பிற் கொள்ள வைத்தாள். முதுவாய்ப் பொய்வல் பெண்டிர் (அகம். 98) என்பது காண்க. வெள்ளி வீதியார் 27. கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் றீம்பா னிலத்துக் காஅங் கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது பசலை யுணீஇயர் 1 வேண்டும் திதலை யல்குலென் 2 மாமைக் கவினே. (எ-து) பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) கன்று முண்ணாது - கன்றுண்டற்கே யுண்டாகிய பாலாதலான் அதனை முற்கூறினாள். கன்றுண்டெஞ்சி யதையே கலத்திற் கொள்ளுதல் முறையாதலால் அதனைப் பிற்கூறினாள்; கறவை கன்றார்த்திக் கலநிறை பொழியும் (12 : 93) என்பது மணிமேகலை; நல்லான் என்றாள் அருளாற் சுரத்தலான். அருள் சுரந்தூட்டு மிதனொடு (13 : 54) என்பது மணிமேகலை. உணவாதலுடன் நாவிற்கு இனிதாதல் அறியத் தீம்பால் என்றாள். நிலத்துக்காங்கு - மண்ணிற் பயனின்றிச் சிந்தியொழிந் தாற் போல. கவின் - என் தாய் என்பொருட்டு ஓம்பிய மெய்க் கவின். எனக்கு மாகாது - எனக்கு முதவாது. என்னைக்கு முதவாது - என் தலைவற்கும் உதவாது. பசலையுண்ண வேண்டுவதாகும் என்றவாறு. தாயோம் பாய் நலம் (அகம். 146) ஆதலால் நல்லான் தீம்பாலுடன் கவினை உவமித்தார். இந் நலம் பூவினை ஒத்துத் தானும் நுகர்ந்து தலைவனும் நுகர்தற்கு ஆதலின் பாலோடு உவமித்தாள். கன்றுண்ணாமையைத் தனக்காகாமைக்கும் கலத்தினும் படாமையைத் தன் தலைவற்கு ஆகாமைக்கும் உவமித்தாள். மிகுநலம் பெற்றாள் தமியள் மூத்தற்று (குறள். 1007) என்புழிக் கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும் பயனிழந்து கழிந்த குமரி என்று பரிமேலழகர் கூறியதனால் கவின் தனக்கும் தன் கொழுநற்கும் பயன்படாமற் கழிவது பற்றிக் கூறினாள். கலத்திற் படுவது கன்றோடொத்த உயிரோம்பற் பொருட்டு ஆகும். அங்ஙனம் உதவாமையால் தன்னாடொத்த தலைவற்குமாகாது என்றாள். மண்ணிற் சிந்திக்கெடுதல் பசலையுண்டு தொலைதலுக்கு உவமை யாயிற்று. என் மாமைக் கவின் - என் மணி நிற அழகு. என் கவின் என்று பாலோடுவமித்துப் பாலினை நல்லான் தந்தது போல அக் கவின் தாய் தந்தது என்பது தெரிய ஆன்றீம்பால் என உவமித்தாள். பொருள் கொடுப்பாருடையதாதல் போல இவள் கவினும் அதனைத் தந்து போற்றும் தாயுடையதாக உபசரிக்கப்பட்டது. இது வெள்ளி வீதியார் என்னும் நல்லிசைப் புலமை மெல்லியலார் தம் தலைவன் பிரிவிடை ஆற்றாது சொல்லியது என்பது (தொல். அகத். 54) நச்சினார்க்கினியர் உரையால் அறியப்படுவது. இப் பாடலைக் கூறிய பின்னர்ப் பிரிவு பொறாது தம் காதலர் உள்ள ஊர்க்குச் செல்லத் தலைப்பட்டனர் என்பது. நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே (அகம். 147) என ஔவையார் பாடியதனால் அறியப்படுவது. திதலை - தேமல். ஔவையார் 28. மூட்டு 1 வேன்கொ றாக்கு வேன்கொல் ஓரேன் 2 யானுமோர் பெற்றி மேலிட் டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல் அலமர லசைவளி யலைப்பவென் உயவுநோய் யறியாது துஞ்சு மூர்க்கே. (எ-து) வரைவிடை யாற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) மூட்டுவேன்கொல் - என் நிலை தெரியவேண்டி அவர்க்கு மூளச்செய் தறிவிப்பேனோ. தாக்குவேன்கொல் - தீண்டுவேனோ. ஓர் பெற்றி மேலிட்டு - தேளேறுண்டே னென்றாற் போல ஓரு பாயத்தை ஏறட்டுக் கொண்டு; ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல் - ஆ என்று விரைந்து கூப்பிடுவேனோ. அலமரல் அசைவளி - சுழற்சியுடன் அசைகின்ற காற்றானது. என் உயவு நோயறியாது அலைப்ப. என் உயவுக்குக் காரணமாகிய காம நோயை அறியாமல் அலையா நிற்க. அங்ஙனம் அலைப்பதறியாது கண்டுயிலும் ஊர்க்கு மூட்டுவேன்கொல் என்றாள் என்க. மூட்டுதல் - நினைவு மூளச் செய்தல். தாக்குதல் - பாய்தல். உடம்பால் வரையத் தீண்டுதல். கூவல் - வாயாலரற்றல். இவற்றால் மனம் மெய் வாக்கு மூன்றாலும் முயலத் தொடங் கியவாறு கூறினாள். முட்டுதலும் தாக்குதலும் ஒன்றாய் உடம்பின் வினையேயாதலின் முட்டுவேன் என்பது பாட மின்மை யறிக. தாக்குதல் தீண்டுதல் ஆதல் தாக்கணங்கு என்னும் பெயரானுணர்க. வல்லின எதுகைத் தொடையுங் காண்க. யானும் ஓரேன் - இந் நோயையுடைய யானேயுந் தெரிகிலேன். அறியாது அலைப்ப, அறியாது துஞ்சும் ஊர்க்கு என இரண்டிடத்தும் கூட்டுக; இடைநிலை விளக்கு. அறியாது துஞ்சும் ஊர்க்கு அறிவிக்க என் எண்ணத்தை மூள்விப்பேனோ, என் மெய்யாற் றீண்டுவேனோ, என் உரையாற் கூவுவேனோ என்றாளாகக் கொள்க. அறியாது துஞ்சும் என்றதனால் இம் மூன்றாலும் அறிவித்தலே பயனாதல் தெளிக. அறிந்தால் விரையத் தலைவன் வருதற்கு உடன்படுவர் என்பது கருத்து. வளி தன்னை யலைப்ப என்றதனால் அவ் வளியே மெய் வருடத் துஞ்சும் ஊர் என்று குறித்தாளாம். ஊர் என்பது செவிலி, தாய் முதலாயோர். ஔவையார் 29. நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்1 பெயனீர்க் கேற்ற 2 பசுங்கலம் போல உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி அரிதவா வுற்றனை 3 நெஞ்சே நன்றும் 4 பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு மகவுடை மந்தி போல அகனுறத் தழீஇக் 5 கேட்குநர்ப் பெறினே. (எ-து) இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், இவர் எம்மை மறுத்தாரென்று வரைந்துகொள்ள நினையாது பின்னுங் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது. (வி) நல்லுரை - நற்சொல், புகழ். இகந்து - ஒழிந்து. புல்லுரை - புன்சொல், பழி. தாஅய் - பரக்கப்பட்டு. பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல - வானின்று பெய்தலான் உண்டாகிய நீர்க்கு எதிர்ந்துள்ள பசிய மட்கலம் போல. உள்ளந் தாங்கா - நெஞ்சத்தைத் தாங்கி; என்றது பெயல் நீர்த்துளிக்கு எதிர்ந்த பசுமட்கலத்தைக் கரையாமற் றாங்க முயன்றாற் போலச் சிறு துன்பத்துக்கும் கரைகின்ற உள்ளத்தைக் கரையாமற் றாங்கி என்றவாறு. வெள்ளம் நீந்தி - அக் கரையும் பசுங்கலத்தைக் கொண்டு வெள்ளம் நீந்துதல் போல. இக் கரையும் உள்ளத்தைக் கொண்டு துன்ப வெள்ளத்தை நீந்த நினைத்தலால், அரிதவாவுற்றனை என்றான்; செய்தற்கரிய தொன்றைச் செய்ய விரும்பினை என்றவாறு. இது நல்லுரை இகத்தற்கும் புல்லுரை பரத்தற்கும் ஆகும் என்று தெளிந்தவாறாம். இகந்து தாஅய் அரிது அவாவுற்றனை என்க. தாஅய் என்பது மலரிதழ் தாஅய் மீனாரம் பூத்த வியன் கங்கை (பரி. 16 : 35,36) என்புழிப் போலப் பரக்கப்பட்டு என்னும் பொருளில் வந்தது. பெயல் நீர்க் கேற்ற பசுமட்கலத்தைத் தாங்குதல் போலச் சிறு துன்பத்திற்கும் கரையும் உள்ளந் தாங்கிப் புகழ் நீங்கிப் பழி பரக்கப்பட்டு ஒரு வெள்ளத்தை நீந்தி அரிது செய்ய அவாவுற்றனை என்றானாம். பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல் (குறள். 505) ஆதலான் இச் செயல் பெருமையைத் தரும் நல்லுரை இகத்தற்கும் சிறுமையைத் தரும் புல்லுரை பரத்தற்கும் காரணமாதல் ஒருதலை என்று கூறினான். நெஞ்சே இவ்வாறு அரிதவா வுற்றனையாதலான், நின் பூசல் நன்றும் பெரிதால் - நீ செய்யும் ஆரவாரம் பெரிதும் நன்றால் என மாற்றிக் கொள்க. நன்றாதல் யாங்ஙனமெனின் அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறின் என்க. மகவு ஏற இயலாமல் உயர்ந்த மரக் கொம்பில் ஏறும்போது தன்னைத் தழுவிய மகவைத் தான் தழுவியணைத்து ஏறும் மந்தி போல உள்ளுறத் தழுவி நின்பூசல் கேட்போரைப் பெற்றால் என்றவாறு. மகமுயங்கு மந்தி வரைவரை பாய (பரி. 15 : 38) எனவும், கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி (மலைபடு. 311) எனவும் வருவனவற்றால் தன்னைத் தழுவிய மகவைத் தாய்மந்தி கையாற்றழுவி உயர் வரைகளிற் றிரிதல் தெரியலாம். கைத்தல மந்திகொண்ட கைமகப் போன்று (சிந்தா. 2571) என்புழி நச்சினார்க்கினியர் மந்தியைக் கையாலே தழுவிக்கொண்ட ஒழுக்கத்தையுடைய மகப்போல என உரைப்பது காண்க. உயர்கோடு - உயர்ந்த மலைச்சிகரமும் ஆம். விரைவில் வரைந்து கொண்டு கூடுவதே நல்லுரைக்குரிய செயல் என்றும் வரைந்து கொள்ள நினையாது பின்னுங் களவிற் கூடுதல் புல்லுரைக்குரியது என்றும் கருதியவாறாம். கழியக் காதல ராயினுஞ் சான்றோர் பழியொடு வரூஉ மின்பம் வெஃகார் வரையி னெவனோ வான்றோய் வெற்ப (அகம். 112) என்பதனால் இக் களவில் நீளக்கூடுதல் பழியோடி வருவதாதல் காட்டி வரைவுகடாதல் காண்க. அரிதவாவுதலாவது இரவில் ஊறு பலவும் காப்பு மிகுதியும் அலர் பரத்தலும் உளவாகும் பேயுமறியா மறையமை புணர்ச்சியைப் பின்னும் புரிய விரும்புதல் என்க. “பசுங்கலம், பெருமழைப் பெயற்கேற் றாங்கு (நற். 308) என்றதனால் பசுங்கலம் தளர்ந்து நீரோடொன்றாதல் உணரலாம். கச்சிப்பேட்டு நன்னாகையார் 30. கேட்டிசின் வாழி தோழி யல்கற் 1 பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇய 2 வாய்த்தகைப் 3 பொய்க்கனா 4 மருட்ட வேற்றெழுந் 5 தமளி தைவந் தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் 6 தமியேன் 7 மன்ற 8 வளியேன் 9 யானே. (எ-து) அவர் நின்னை வரைந்து கோடற் காரணத்தாற் பிரியவும் நீ ஆற்றாயாகின்றதென்? என வினாய தோழிக்குத் தலைமகள், யான் ஆற்றியுளேனாகவும் கனவு வந்து என்னை இங்ஙன் நலிந்தது எனக் கூறியது. (வி) கேட்டி - கேட்பாய். சின் : அசை. காப்பும் பூண் டிசின் (அகம். 7) என்புழிக் காண்க. அல்கல் - இரவு: அல்கிய அல்லில் என்பதுமாம்; இராப்போதில் பின் யாமம் என்றவாறு. இன்ன நாளில் வரைய வருவல் என்றபடி வாராது நீட்டித்தலாற் பொய் வலாளன் என்றாள். பொய்வலாளன் - பொய்யை மெய்போலச் சொல்லும் வன்மையை ஆள்பவன். மேல் கனவினும் பொய் செய்பவன் என்று காட்டுகின்றாள். மெய்யுறல் மரீஇய - உடம்பின் ஊற்றின்பம் மருவற்கு. வாய்த்தகை - வாய்மைத் தகையாக என்றபடி. பொய்க்கனா மருட்ட - பொய்யாகிய கனவானது மருள்விக்க. ஏற்றெழுந்து - மயக்கம் நீங்கித் துயிலெழுந்து. அமளி தை வந்தனன் - கையாற் சேக்கையில் அவனைத் தடவினேன். வண்டுபடு குவளை மலரிற் சாஅய் - வண்டுகள் உழக்கிய குவளை மலரைப்போல் நிலை குலைந்து யானே தமியேன் - அவனைக் காணாது யானே தமித் தலையுடையேனானேன். மன்ற அளியேன் - தேற்றமாக இரங்கற் குரியேன். தோழி கேட்டி என்றவாறு. மரீஇய - மருவற்கு; ஒரீஇக் கூறலு மரீஇய பண்பே (தொல். உவம. 33) என்புழிப் போல வந்தது; பொய்க்கனா வாய்த்தகை மருட்ட ஏற்றெழுந்து என்றது, வறுங்கை காட்டிய வாயல் கனவின் ஏற்றேக் கற்ற வுலமரல் (அகம். 39) என்றாற் போல நின்றது. ஏற்று - துயிலேற்று. துயிலேற்ற லாவது துயில் மயக்கம் நீங்கல். இதனை ஏற்றெழுவே னாயின் - மயக்கம் நீங்கி எழுந்திருப்பேனாயின் (கலி. 37) என நச்சினார்க்கினியர் உரைத்ததனானுணர்க. மேலே காட்டிய அகநானூற்றிற்கும் பழையவுரைகாரர் கனவிடத்துத் துயிலேற்றுக் காணாது ஏக்கற்ற துயரம் என்றல் காண்க. துயிலேற்றெழுந்து தலைவனைத் தைவந்தேன்; அந் நிலையில் அமளி தைவந்தேனாயினேன்; இதனாற் சாஅய் தமியேன் ஆதலால் யானே மன்ற அளியேன் என்றாள் என்க. இவள் சாய்ந்ததும் அக் கனவு மிழந்து அமளியிற் றமியளாயினமை பற்றி என்று கொள்க. இதன் துறைக்கருத்துள் கனவு வந்து இங்ஙனம் நலிந்தது என்றதனாற் கனவு மெய்யாக வந்து நனவிற் பொய்யாகப் போம்படி வருத்தியது என்பது கருத்தாகக் கொள்க. கனவிற் காணுமிவளே, நனவிற் காணாணின் மார்பு (ஐங்குறு. 234) என்புழிப் போலத் தலைவி தோழியாற் றலைவனை வரைவு முடுக்குதல் பயனாகக் கொள்க. இனி, பொய்க்கனா மருட்டலால் அவர் மெய்யுறல் மரீஇய வாய்த்தகையால் ஏற்றெழுந்தமளி தைவந்தேன் என்பதுமாம். ஆதிமந்தியார் 31. மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் 1 காணேன் மாண்டக் கோனை யானுமோ 2 ராடுகள மகளே யென்கைக் கோடீ 3 ரிலங்குவளை நெகிழ்த்த 4 பீடுகெழு 5 குரிசிலுமோ ராடுகள மகனே. 6 (எ-து) நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமக ளறத்தொடு நின்றது. (வி) மள்ளர் குழீஇய விழவினானும் - வீரர் திரண்ட வில்லேர் விழவினிடத்தும். இது வீரர்வில்லார்விழவெனப்படும்; வில்லார் விழவினும் (திணைமாலை 62) என்பது காண்க. மகளிர் தழீஇய துணங்கையானும் - மகளிர் அவரவர்க்குரிய மள்ளரைத் தழுவியாடுந் துணங்கைக் கூத்திடத்தும். யாண்டும் - இவையல்லாத பிறவிடத்தும் மாண்டக்கோனைக் காணேன் - மாண்பினாற்றக்க தலைவனைக் காணக் கிடைக்கிலேன். மகளிர் தம் ஆடவரைத் தழுவி யாடு இடமாதலால் மாண்டக் கோனை ஆண்டுந் தேடியது கூறினார். மள்ளரன்ன மரவந் தழீஇ, மகளிரன்ன வாடுகொடி நுடங்கும் (ஐங். 400) என உவமித்தலான் இவ்வுண்மை யுணர்க. ஈண்டுத் துணங்கை பரத்தையராடுந் துணங்கையாம். இது தலைவி தானில்லாத மகளிர் துணங்கையிற் புக்குத் தேடியதனால் உணரப்படும். முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின், யானவண் வாரா மாறே, வரினே வானிடைச், சுடரொடு திரிதரு நெருஞ்சி போல, வென்னொடு திரியா னாயின் (அகம். 336) என்பது நயப்புப் பரத்தை கூற்றாதலான் இஃதுணரலாம். கணவ னுள்வழிப்படுதல் வேண்டிப் பரத்தைய ராடுங்களனெல்லாம் புக்கு அலைதலான் கற்புடையாட்டியாகிய யான் ஓர் ஆடுகள மகளாயினேன் என்றிரங்கினா ளென்க. ஆடுகளமகள் தான் இல்லிறந்து மறுகிற் போய்ப் பல்லிடத்துந் திரிதற்குரிய ளென்பதும், அங்ஙனஞ் செய்வது கற்புடைப் பெண்டிர்க்கு ஆகாதென்பதும், நீயே கானலொழியயானே, வெளிகொள் பாவையிற் பொலிந்தவெ னணிதுறந், தாடுமகள் போலப் பெயர்த லாற்றேன் (அகம். 370) என வருதலானறியலாம். காதலற் கெடுத்துத் தேடப்புக்குக் கடைகழி மகளாயினேனன்றி அவனை யாண்டுங் கண்டிலேன் என்றிரங்கியவாறாம். என்னாற் பரத்தையர் துணங்கையிற் தேடப்பட்டு அவனும் ஆடுகளமகனா யினனன்றி அவனைக் காணேன் என்றவாறு. `நாடக மகளி ராடுகளத்து (பெரும் பாண். 55) என்பதுங் காண்க. யான் ஆடுகளமகளாம்படி என் கோடீரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலும் என்னொத்த குடியின் மாண்தக்கோனாகியும் என்னாற் றுணங்கையிற் றேடப்பட்டு ஆடுகள மகனாகிய கூத்தனாயினான் என்றவாறு. ஆடுகள மகள் விறலி எனினுமமையும். பீடுகெழு குரிசில் என்பதனால் அவன் அரசனாதல் புலப்படுத்தினார். அவனை வஞ்சிக்கோன் (சிலப். 21 : 11) என்பர் இளங்கோவடிகள். `வலம்படு குரிசில் (புறம். 50) என அரசரைக் கூறுதல் காண்க. இது பாடிய ஆதிமந்தியார் மன்னன் கரிகால்வளவன் மகளாதல் சிலப்பதிகாரத்தான் அறியப்பட்டது (சிலப். 21 : 11). இப் பிரிவினால் என்னையு மிழித்தான் தன்னையுமிழித்தான் என இரங்கியவாறாம். இது புறமேனும் அகத்திணையிற் றொகுத்ததற் கேற்ப வேறு துறை கூறிற்றென்க. இவ்வுண்மை நச்சினார்க்கினியர் இது காதலற் கெடுத்த ஆதிமந்தி பாட்டு; இவை தத்தம் பெயர் கூறிற் புறமாம் என்றஞ்சி வாளாது கூறினார் (தொல். அகத். 54) எனவும், யாண்டுங் காணேன் என அவனுள்வழிப் பட்டுக் கூறினமையாற் கற்பின்பால் ... ... நன்கு மதித்தவாறு காண்க (தொல்.களவு.22) எனவும் கூறியது கொண்டுணர்க. அங்குங் காணேன், இங்குங் காணேன், எங்குங் காணேன் என்பதே பொருத்தமாகலின் யாண்டுங் காணேன் என்ற பாடமே கொள்க. கோடீ ரிலங்குவளை மேலே கூறிற்று (11). மள்ளர் குழீஇய விழவிற்கும் கற்புடை மகளிர் புகுதற் குரியரல்லர் என்பது, `எல்வளை மகளிர், துணங்கை நாளும் வந்தன வவ்வரைக், கண்பொர...... மண்கொளற் கிவரு மள்ளர் போரே (364) என்னும் பரத்தை கூற்றா னுணர்க. வெள்ளிவீதியா ராகிய கற்பர சாட்டியார் தங்காதலனுள் வழிப் படுதல் குறித்து யானே காதலற் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந் தாதிமந்தி போலப் பேதுற், றலந்தனெ னுழல்வென் கொல்லோ (அகம். 45) எனத் தஞ்செயற்கு எடுத்துக்காட்டாக இவ்வாதிமந்தியார் செயற்கையைக் கூறுதலானும், வஞ்சின மாலையுள் கண்ணகியார் தெய்வக் கற்புடையாட்டியர் வரிசையின் வைத்து இவரைச் சிறப்பித்தலானும் இவர் பத்தினிப் பெண்டிரே யாதல் நன்குணர்ந்து கொள்க. இவர் காதலற் கெடுத்து அறிவு பிறிதாகிப் பேதுற்றுப் பன்னாட்டினும் பல்லூரினுந் தேடினாராதலின் யாண்டுங் காணேன் என்றார். ஆட்டனத்தியைக் காணீரோவென, நாட்டி னாட்டி னூரினூரிற், கடல் கொண்டன்றெனப் புனலொளித் தன்றெனக், கலுழ்ந்த கண்ணள் காதலற்கெடுத்த வாதிமந்தி போல (அகம். 236) என்பதனால் இஃதறிக. அள்ளூர் நன்முல்லையார் 32. காலையும் பகலும் கையறு மாலையும் ஊர்துஞ் சியாமமும்1 விடியலு மென்றிப் 2 பொழுதிடை தெரியிற் பொய்யே காமம் மாவென மடலொடு மறுகிற் றோன்றித் தெற்றெனத் 3 தூற்றலும் பழியே வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே. (எ-து) பின்னின்றான் கூறியது. (வி) கையறுமாலை - செயலற்ற மாலைப்போது, கையறு மாலை என்றதனாற் செயலறாத காலையும், பகலும் என்று கொள்க. ஊர் துஞ்சியாமம் என்றதனால் விடியலைத் துஞ்சா விடியலும் என்று கொள்க. திரிசந்தி என்னும் வழக்கால் இரவிற்கு முன்னாகியநாட்பகுதியை மூன்றாக்கினான். இப் பொழுது இடை தெரியின் - இவ்வைம்பொழுதுகளின் செவ்வி தெரியப்படு மாயின்; இடைதெரிதல் - செவ்வியறிதல். `இடைதெரிந்து.......... சொல்லுக (குறள். 712) என்புழிக் காண்க. இடை - இடம் எனக்கொண்டு பொழுதும் இடமும் தெரியிற் காமம் பொய்யே என்பதும் பொருந்தும். பிரிவுதலைவரின் - இக் காமக் கூட்டத்திற்கு இப் பொழுதானும், இடத்தானும் பிரிதல் தலைப்படின். மா என - இஃதொரு குதிரை என்று கண்டாரிகழ. மடலொடு - மடலூர்தலான். மறுகிற் றோன்றி - தெருக்களிற் றோற்றஞ் செய்து. தெற்றென - தெளிய. தூற்றலும் - குறையெடுத்துரைத்தலும். பழியே - அவட்குப் பழி தருவதாகும். அங்ஙனம் ஊர்ந்து தூற்றாது வாழ்தலும், இப் பொழுதுகளையுடைய, இவ்வுலகில் உயிர் வாழ்தலும் எனக்குப் பழி தருவனவாகும் என்றவாறு. ஊர் துஞ்சியாமம் என்று தான் துஞ்சுதலில்லாமை குறித்தான். கையறு மாலை என்று ஒரு பொழுதைப் பார்த்துத் தெரியான் என்று வைத்துத் தனக்கெப்போதும் கையறவுண்மை புலப்படுத்தினான். இடம் தெரியேன் ஆதலால் மடலொடு மறுகிற் றோன்றுவே னென்றும், அங்ஙனம் அன்றேற் காலங் கருதாமையால் நெடுநாள் வாழ நினையேன் என்றும் கூறிப் பின்னின்றான். மடலூர்ந்தால் உயிர் வாழ்வேனென்றும், மடலூரேனேல் உயிர் வாழேனென்றும் தெளியக் காட்டியவாறு. `தெற்றென வென்பதை ஈரிடத்துங் கூட்டுக. மெய்ப்பிரிவு தலைவன் தலைவி யருள்ளத்தானில்லாமல் காலமும் இடனும் பற்றியே யுண்டாதலான் அவற்றையே பிரிவுக்குக் காரணமாக்கினான். தோழி தலைவியைச் சேட்படுத்துப் பொழுது பற்றியும், இடம் பற்றியும் ஆகாமை காட்டித் தலைவற்கு மறுத்தலான் அவ்விரண்டும் பற்றிப் பிரிவு தலைவரின் என்றான். தானவளைத் தூற்றற்கு முன்னர் மடலொடு மறுகிற் றோன்றி என்றதனாற் றூற்றப்படுதலும் குறித்தான். `மறுகி னார்க்கவும் படுப (17) என்றது காண்க. பொழுதிடை தெரியாத உண்மைக் காமம் உடையார் இவை செய்ப எ-று. தூற்றல் பழி என்ற தோழிக்குத் தூற்றலும் வாழ்தலும் பழி என்றானென்பதும் ஆம். படுமாத்து 1 மோசிகீரனார் 33. அன்னா யிவனோ ரிளமா ணாக்கன் 2 தன்னூர் மன்றத் தென்னன் 3 கொல்லோ இரந்தூ ணிரம்பா மேனியொடு விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே. (எ-து) வாயிலாகப் புக்க பாணன் கேட்பத் தோழியை நோக்கித் தலைமகள் வாயில் நேர்வாள் கூறியது. (வி) அன்னாய் - எனக்குத் தாயன்பு செய்தற்குரிய தோழியே; தலைவி தோழியை அன்னை என்றல், `அன்னை யென்னை யென்றலு முளவே (தொல்.பொருள். 52) என்பதனான் அமைந்தது. இவன்-இப் பாண்மகன். ஓரிளமாணாக்கன்-பல் மாணாக்கருள்ளும் கல்வியைத் தொடங்கி ஓர்கின்ற வயதினிளைய கற்றுச் சொல்லி. தன்னூர் மன்றத்து - தான் பிறந்தவூரிலுள்ள அவைக் கண் ஏறிய காலத்து; என்னன் கொல்லோ - எத்தகையனாவனோ. இரந்தூண் நிரம்பா மேனியொடு இவன் - இரந்து உண்ணும் ஊண் நிரம்பாத உடம்போடு உள்ள இவன். விருந்தினூரும் பெருஞ்செம்மலனே - அம்முது காலத்துப் பலரழைத்து இடும் விருந்தினோடு யானை, பரி, தேர் இவற்றினூர்ந்து செல்லும் தலைமையையுடையவனே யாவன் என்றவாறு. இரந்தூண் நிரம்பா மேனியென்றும் இளமாணாக்கன் என்றும் சொல்லி, இப்போதுள்ள தாழ்ந்த நிலையும், விருந்தினூரும் பெருஞ் செம்மலனே என்றும், தன்னூர் மன்றத்தென்னன் கொல்லோ என்றும் சொல்லி, வருங்காலத்துயர்ந்த நிலையும் புலப்படுத்தினா ளென்க. இளமாணாக்கன் - இன்னும் ஊர் மன்றம் ஏறாது மையோலை பிடிக்குங் கற்றுச் சொல்லி என்றவாறு. பாணன் சொல் வலிமைக்குத் தோற்று வாயில் நேர்ந்தாள் (தொல். கற்பு. 6 நச்.) ஆதலான் அவன் மழபுலமை கொண்டு, முதுபுலமை அளக்கின்றாள் என்பதே பொருந்திற் றாகும். தன்னூர் என்றதனால் தலைவன் நயந்த பரத்தையூர் வேற்றூராத லுணரலாம். பரிபாடலின் மையாட லாடல் மழ புலவர் (11 : 88) என்புழிப் பரிமேலழகர் கல்வி தொடங்கின அளவாதலின் மழபுலவர் என்றார் எனக் கூறுதலான் இளமாணாக்கன் என்பதன் பொருள் உணரலாம். களிறு மன்றே மாவு மன்றே, ஒளிறுபடைப் புரவிய தேருமன்றே, பாணர் பாடுநர் பரிசில ராங்கவர், தமதென (புறம். 135) என்பதனால் இவர் களிறு முதலியன ஊரும் செம்மல் என்ப துணரலாம். இளமாணாக்கன் நிலையிலே இவன் சொல்லிய விரகுடை இன்சொற்கேட்டு இவனெய்தும் முதுபுலமை நிலையை வியந்தனளாதலால் வாயில் நேர்ந்தாள் ஆதல் உணர்க. படுமாத்தூர் என்பது சேது நாட்டுச் சிவகங்கையைச் சார்ந்துள்ன ஊர். படுமா - பெரு மாமரம். படுசினை - பெரிய கொம்புகள் (அகம். 11) என்பது காண்க. கொல்லிக் கண்ணனார் 34. ஒறுப்ப வோவலர் 1 மறுப்பத் தேறலர் தமிய ருறங்குங் கெளவை யின்றாய் இனியது கேட்டின் புறுகவிவ் வூரே முனாஅ, தியானையங் 2 குருகின் கானலம் பெருந்தோ 3 டட்ட மள்ள 4 ரார்ப்பிசை வெரூஉம் குட்டுவன் மாந்தை யன்னவெம் 5 குழல்விளங் 6 காய்நுதற் கிழவனு மவனே. (எ-து) வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியது. (வி) ஓவலர் ஒறுப்ப - விட்டு நீங்காத தாயர் வைது ஒறுக்கா நிற்கவும். நீங்கா தாராய் ஒறுப்ப என்பதுமாம். தேறலர் - களவிற் கூடியது தேறாதவராய். மறுப்ப - தலைவர்க்கு மண மறுக்கா நிற்கவும். தமியருறங்குங் கவ்வை - தலைவரைக் கூடப்பெறாது தமித்துள்ள தலைவியர் உறங்குதற்குக் காரணமாகச் சொல்லுங் கடுஞ் சொற்கள், இன்றாய் - இனி இல்லையாகி. இவ்வூர் - இவ்வூரினுள்ளவர். இனிது கேட்டின்புறுக - இனியதாகிய மணமங்கல விசைகேட்டு இன்பம் அடைவாராக. களவிற் பின்னும் கூடப் பெறாமைக்குத் தாயர் நீங்காது வைவதே தடையென்பதறிய ஓவலர் ஒறுப்ப என்றும், கற்பிற் கூடாமைக்குத் தேறலராய்த் தலைவர்க்கு மணமறுத்தலே தடை யென்பதறியத் தேறலர் மறுப்ப என்றுங் கூறினாள். இவ்விரு படியானும் தலைவரைக் கூடப் பெறாதுள்ள நிலைதெரியத் தமியர் என்றாள்; தமியராய நிலையில் உறக்கம் வராமை தெரிய உறங்கும் கவ்வை என்றாள். இவ்வூர் இதுகாறும் தமியரைத் துயிலும் பொருட்டுத் தாயர் செய்யும் கவ்வை கேட்டுத் துன்புற்றது. இனி மங்கல இசை கேட்டின்புறுவதாக என்றாளாம். இனியது - இல்லறத்துப் புகழ் விளைத்து வாழ்வது எனினும் பொருந்தும், இனியது கேட்டின்புறுக என்றதனால் இதுகாறும் கவ்வை கேட்டுத் துன்புற்றது புலப்படுத்தினாள். உறங்குங் கவ்வை - துயிலுந் தாலாட்டு என்பது போல வந்தது. முனாஅது- தாயர் மறுத்தற்கும் வரைவுடன் படுதற்கும் முற்றொட்டே. ஆய் நுதற் கிழவனுமவனே - நுணுகிய நுதலையுடையாட்குரிய கிழவனும் அத் தலைவனேயாம். முனாஅது கிழவனுமவனே என்றதனாற் பினாஅதும் அவனே கிழவனாக வரைவு மலிந்தமை குறித்தாள். கானலிலுள்ள, யானையங் குருகின் பெருந்தோடு - யானை பிளிறுதல் போலச் செய்யும் ஒருவகைக் குருகுகளின் பெருந்தொகுதி என்க. அட்ட மள்ளர் - வென்ற வீரருடைய. ஆர்ப்பிசை வெரூஉம் - ஆர்ப் பொலிக்கு அஞ்சுதற்குக் காரணமான. குட்டுவன் மாந்தை யன்ன - குட்ட நாடுடையவனது மாந்தையை யொத்த. எம் குழல் விளங்கு ஆய் நுதல் - குழலையடுத்து விளங்கும் நுணுகிய நுதலையுடைய எந்தலைவிக்கு. முனாஅது அவனே கிழவன் - முன்றொட்டு அவனே கிழவன். இங்ஙனம்முன்றொட்டுள்ளவன் கிழவனா கானேல் இவ்வூர் இனியது கேளாது துன்புறுவதாகும் என்று தலைவியது உயிர்விடுந் துணிவுபுலப்படுத்தினாளுமாவள். நின் றோன் போலு மென்றுமென் மகட்கே (அகம். 110) என்புழி என்றும் என்பதனால் முனாஅதும் பினாஅதும் அவனே கிழவன் எனக் கொள்ளுதலே சிறந்ததாதலுணர்க. முத்தொள்ளாயிரத்து மல்லனீர் மாந்தையார் மாக் கடுங்கோக் கோதைக்கு என வெண்பாவடியின் வருதலால் இவ்வூர்ப்பெயர் மரந்தை யாகாமை நன்கு துணியப்படும். மேற்றிசையாத்திரிகரால் இவ்வூர் பின்னாளில் மாதையென வழங்கப்பட்டது. ஆஅய்வேட்குரிய பொதியிற் புறத்துக் கடலில்லாத அகநாட்டில் மரந்தை, முரந்தை எனப் பெயரிய தோரூருண்மை தாலமி பூகோள நூலிற் கண்டதாம். அது கடற்றுறையூரில்லாமையால் இம் மாந்தை அதனின் வேறாய கடற்றுறைப் பட்டினமாதல் நன்குணரலாகும். மாந்தைவருமிடங்களிற் கடல் கூறப்படுதல் நோக்கியறிக. மள்ளர் - களங் கொள் வீரர். களங்கொண் மள்ளரின் முழங்கும் (அகம். 227) என்பது காண்க. சேரற்குரிய கொல்லி மலையிற் கண்ணனார் ஆதலால் அவர்க்குரிய மாந்தைத் துறையையுங் கூறினார். கழார்க் கீரனெயிற்றியார் 35. நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் 1 பன்ன கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ நுண்ணுறை யழிதுளி தலைஇய தண்வரல் வாடையும் 2 பிரிந்திசினோர்க் கழலே. (எ-து) பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது. (வி) நாள் நேர்பு - வாடைப் போதிற்கு முன் வருவமென்று, அவர் பிரிந்துறையக் குறித்த நாள்களைத் தாம் உடம்பட்டு; என்றது பிரியும் நாள் இவ்வளவென்று கூறிப் பிரியும்போது அவர் காண அழுது அவரைத் தடுக்காதுடம் பட்டமை குறித்தாள். வாடையும் பிரிந்திசினோர்க்கு - வாடைப்போதினும் பிரிந்து உறைவார் பொருட்டு. அழலே - அவர் காணாமனின்று அழற்கு. என் கண்ணே நாணில - என் கண்கள் நாணில என்றவாறு. மன்ற - தேற்றமாக. அவர் பிரியவிட்டுப் பின் அழுதல் செய்யாமையே வேண்டுவது. பின் அழுகை வருமாயின் அதற்கு நாண வேண்டுவதென்பது குறிப்பு. அவர் ஒருவர் காண அழாது இங்குப் பலர் காண அவர்க் கழுதற்கு நாணில என்றாள். பசும் பாம்பின் சினைச்சூன் முதிர்ப்பன்ன கனைத்த கரும்பின் என்க. கூம்பு பொதி - கூம்பிய பூம்பொதி. நுண்ணுறையும் அழி துளியும் பெய்து என்க. நுண் உறை - சிறுதூவல். அழிதுளி - பெருந்துளி; பெரும்பெய லழிதுளி பொழிதல் ஆனாது (அகம். 214) எனவும், “ஆலியொடு, பரூஉப்பெய லழிதுளி தலைஇ (அகம். 304) எனவும் வருதலானறிக. கனைத்த - பருத்த; கனைத்த நெய்தல் (அகம். 150). பிரிகின்றுழி அழாது பிரிந்த பின்னர் அழுதலான் ஒரே வினையை இடனறிந்து செய்து பயன் கொள்ள அறியாது இடனில் இடத்துச் செய்து நீரறுதற்கு இக் கண்கள் நாணில என்றவாறு. பரணர் 36. துறுக லயலது மாணை மாக்கொடி 1 துஞ்சுகளி றிவருங் குன்ற நாடன் நெஞ்சுகள னாக நீயலென் 2 யானென நற்றோண் மணந்த ஞான்றை மற்றவன் தாவா வஞ்சின 3 முரைத்தது நோயோ 4 தோழி நின்வயி னானே. (எ-து) வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளெனக் கவன்று வேறுபட்ட தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது. (வி) மாணை மாக்கொடி, நிலைத்த துறுகல் அயலதாகவும் அதன்மீது படர்ந்து பற்றுக் கோடுளதாகாது துறுகற் போலத் தோன்றிய துஞ்சுகளிற்றின் மீது படர்ந்தேறும் குன்ற நாடன் என்றவாறு. துஞ்சுமளவின் அதன்மீது கொடி இவர்தல் கூறுதலான் இக் கொடி விரைந்து நீளுமியல்பினதென்று துணியப்படும். துறுகல் யானையிற் றோன்றும் (279) என்பதனால் துறுகல், யானை போறல் காண்க. இதனால் துறுகற்கும் யானைக்கும் வேற்றுமை தெரியாது. துறுகல்லிற் படரவேண்டுவது யானை மேற்படர்ந்தது என்பதாம். பெயராத பற்றுக்கோடு என நினைந்து பெயருங்களிறு போல்வானைப் பற்றித் தழீஇயது குறித்தாள், கொடி தனித்து அலமரக் களிறு பெயர்தல் நினைக. நெஞ்சுகளனாக - தன் நெஞ்சமே அறியும் அவைக்கள னாக. நீயலென் யானென - நின்னை யான் பிரியேன் என்று. நற்றோள் மணந்த ஞான்றை - என் நல்ல தோள்களைக் கலந்துள்ளபோது. நற்றோள் என்றாள் மணத்தற்கு முன் நல்லனவாய் இப்போது மெலிதல் குறித்து. தாவா வஞ்சினம் உரைத்தது - கெடாத சூளுரைத்தது. உரைத்தது என்றது உரைத்தது மட்டுமே; செய்திலன் என்றவாறு. நோயோ - நின்வயினானே சொற்றபடி செய்யாத அவனுக்கு நோயாகும். அது கேட்டு மகிழ்ந்த எனக்கு நோயாகும். நின்கண் நோயாவதோ என்றவாறு. பெயருங் களிற்றின்மேற் கொடியிவர்ந்தது போலப் பெயருங் களிறு போல்வானைப் பெயராப் பற்றுக்கோடாகக் கருதித் தழீஇயதும் அவன் வஞ்சினத்தை நம்பியதும் என் தீவினையென்று யானிருக்கவும் என்பாற் கேட்ட நின்கண் நோயாகுமோ; அங்ஙனம் நோயாயின் வஞ்சினம் பொய்க் காது அவனை விரைந்து வரைவொடு வரச் செய்க என்பது குறிப்பாம். அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற் றேறியார்க் குண்டோ தவறு (குறள். 1154) என்புழிப் பரிமேலழகர் அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனக் கொண்டார்க்குக் குற்றம் உண்டோ எனக் கூறிச் சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க் கெய்தும்; அது எய்தாவகை அழுங்குவி என்பது கருத்து. அவர் வஞ்சினம் உரைத்தது பொய் யாகாவாறு, விரைந்து வரைவொடு வரச்செய்க என்றதாகக் கொள்க. நெஞ்சுகளனாக உரைத்தது பொய்ப்பின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் ஆதலால் அவற்கு நோயாதல் தெள்ளியது; அவன் நோய் என் நோயாய் என் நோய் நின் நோயாய் ஆயினதோ என்றாள் எனினும் அமையும். களன் - அவைக்களம்; களனஞ்சி (குறள். 730) என்பதனால் உணர்க. தன்னெஞ்சு அறிவதாதலின் தன் நெஞ்சே இது செய்த அவைக்களனாக என்க. பாலை பாடிய பெருங்கடுங்கோ 37. நசைபெரி துடையர் நல்கலு 1 நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் 2 அன்பின 3 தோழியவர் சென்ற வாறே. (எ-து) தோழி, கடிது வருவாரென்று ஆற்றுவித்தது. (வி) முன்னரே நசையுடையர் சென்ற ஆறுகள் பிடிபசி களைதற் பொருட்டுப் பெருங்கை வேழம் யாஅம் பொளிக்கும் அன்பின ஆதலால் அது கண்டு நசை பெரிதுடையராய் நல்கலும் நல்குவர் என்றவாறு. மென்சினை யாஅம் என்றார் வேழம் தன் கொம்பால் அன்றித் தன் பெருங்கையாலே பொளித்தற்குரியது பற்றி. பொளித்தல் - உரித்தல். பிடி பசிகளைதற்கு வேழம் பொளிக்கும் அன்பின என்றதனாற் களிறு தன் பசி களைய நினையாது தன் பிடிபசி நீங்க வினைசெய்து உதவலே பயனாக நினையும் அன்பு தெரிந்து நசைபெரிதுடையர் ஆவர்என்றவாறு. ஒரு விலங்கு செய்யும் அன்பு கண்டு தாம் இங்ஙனம் ஆவர் என்பது சிறுகட் பெருநிரை யுறுபசி தீர்க்கும், தடமருப்பியானை (255) என்புழிப் பெருநிரை யுறுபசி தீர்க்கும் யானை என்றதன்றித் தன் பசி தீரும் யானை யெனக் கூறாத நயம் நோக்கி யுணர்க. ஆறு அன்பின - வழிகள் அன்புள்ள இடமாயின. ஆறுகளில் வேழங்கள் அன்பின எனினுமமையும். உடனுறையும் போது நசையுடையர் பிரிந்து சென்றவழி அன்பின கண்டு நசை பெரிதுடையராய் நல்குவர் என்றவாறு. நல்கலும் நல்குவர் என்புழிப் பிரிந்து நல்காமையைச் செய்தலைத் தழீஇயிற்று. மென்சினை யாஅம் - வறுமையுற்ற கொம்பினையுடைய யாஅமரம். மெல்லியர் செலினுங் கடவன் பாரி கைவண்மையே (புறம். 106) என்புழி மென்மை இப் பொருட்டாதல் காண்க. பொளிக்கும் - பட்டை உரிக்கும். பெரும்பொளி வெண்ணார் (அகம். 83) என்றது காண்க. சினை வறிதாதலாற் பொளிக்கும் என்றவாறாம். முளிசினை மராஅத்துப் பொளிபிளந்தூட்ட (அகம். 335) என்றது காண்க. ஆறுகள் அன்பின என்றது மேற் கூறியவாறு உணவால் வறிய அவ் வழிகளும் அன்பு பெருகின என்று காட்டியதாம். கபிலர் 38. கான மஞ்ஞை யறையீன் முட்டை 1 வெயிலாடு 2 முசுவின் குருளை யுருட்டும் குன்ற நாடன் கேண்மை யென்றும் நன்றுமன் வாழி தோழி யுண்கண் 3 நீரொ டொராங்குத் தணப்ப 4 உள்ளா தாற்றல் 5 வல்லு வோர்க்கே. (எ-து) வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது. (வி) மஞ்ஞை கான அறை ஈன் முட்டை - மயில் காடு செறிந்த பாறையில் ஈன்ற முட்டையை. முசுவின் ஆடு குருளை - கருங்குரங்கின் விளையாடுங் குட்டி. வெயிலில் உருட்டும், குன்ற நாடன் என்க. முட்டை கான நிழலிற் பாறையிற் கிடந்து உள்ளே உள்ள குஞ்சு வாளாசாம்பாது நினையாமல் அது வளரும்படி வெயிலில் உருட்டும் நாடன் என்று விலங்கிற் சிறிதும் தானறியாமலே விளையாட்டினும் நன்று புரியும் நாடன் என்றதாகக் கொள்க. ஆடுகுருளை - வரையாடு வன்பறழ் (26) என்றாற் போல வந்தது. வெயிலிலுருட்டும் என்பதனால் மயில் நிழலில் ஈன்றதென்பது பெற்றாம். குருளை யுருட்டும் என்றதனால் அடைகாத்தற்கு மயில் ஆண்டில்லாமை உணரலாம். நாடன் கேண்மை என்றும் நன்றுமன் - தலைவன் நட்புப் பிரிந்த நாளினும் நன்மையுடைத்து மிக. யார்க்கெனின், உண்கணீரொடு ஓராங்குத் தணப்ப - அவன் தணந்தவுடன் தம் உண்கணீரும் ஒரேபடியாகத் தணப்ப. உள்ளாது - அவனை மனத்தால் நினையாமல். ஆற்றல் வல்லுவோர்க்கே - உயிராற்றுதலை வல்லுதல் செய்வோர்க்கே என்றவாறு. உவனை உள்ளுதலால் ஒருவாறுயிராற்றலாம் ஆதலான் உள்ளுதல் செய்யாது உயிராற்றுதல் செய்தல் அரியதோர் வன்மை என்பாள் வல்லுவோர் என்றாள். வல்லுதல் - வினை. அது முக்காலத்தும் வல்லியோர், வல்லுநர், வல்லுவோர் என வருதல் காண்க. எதிர்மறையிலும் வல்லார் எனவரும், அவனை உள்ளுதலாற் றலைவி யுள்ளாவள். மற்றியா னென்னுளேன் மன்னோ வவரொடியா னுற்ற நாளுள்ள வுளேன் (குறள். 1206) என்ப. அறையீன் முட்டையை அறையாடு குருளையுருட்டு மென்க. துறுகல்லிற் குரங்குகள் உகளல் துறுகற் கல்லா மந்தி கடுவனோ டுகளும் (ஐங்குறு. 277) என்பதனால் அறிக. முட்டை குரு ளையுருட்டும் நாடன் ஆகியும் பிள்ளைப் பேறெய்த வரைந்துதவாது தாழ்ப்பவன் என்று கருதியதாம். குருளை விளையாட்டில் முட்டையுட் குஞ்சுக்கு இடர் செய்வது போலத் தன் விநோதத்து நீளுதலான் வரையாது நம்மை இடர் செய்பவன் என்பதாம் எனினும் நன்கு பொருந்தும். ஔவையார் 39. வெந்திறற் கடுவளி 1 பொங்காப் போந்தென 2 நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும் மலையுடை3 யருஞ்சுர மென்பநம் முலையிடை முனிநர் சென்ற வாறே. (எ-து) பிரிவிடை ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்கு `யாங்ஙனம் ஆற்றுவேன் எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைமகள் கூறியது. (வி) வெந்திறற் கடுவளி பொங்காப் போந்தென - வெங்கடுவளி எனவும் திறற்கடுவளி எனவுங் கொள்க. வேந்தெறல் எனவும் காணப்படும். வேம் - வேகும். உள்ளம் வேமே (102). பொங்காப் போந்தென - பொங்கி வந்ததாக. உழிஞ்சில் நெற்று விளை வற்றல் ஆர்க்கும் - வாகையின் நெற்றாய் விளைந்த வற்றல்கள் ஆரவாரிக்கும். மலையுடை யருஞ்சுரம் என்ப - குன்றுகளும் உடைகின்ற அரிய பாலை என்பர். ஆர்க்கும் அலையுடை அருஞ்சுரம் என்றும் ஆம். அலை - கள்வர் அலைத்தல். சுரத்தின் இயல்பானும் மக்களானும் கேடுதருதல் குறித்தது. மலையுடை யருஞ்சுரம் - `வரைபிளந்துக்க ஆரிடை (கலித். 2) என்றது காண்க. பொங்கர்ப் போந்தென என்பது பாடம் எனின் கடுவளி பொங்கரிற் போந்தாற் போன்று வற்றல் ஒலிக்கும் என்று உவமையிற் கொண்டு பொருள் கூறுக. முலையிடை முனிநர் - முலையிடைக் கிடந்தும் பிரிவர் என்ற குறிப்பால் நம்மால் ஊடி முனியப்படுவர் சென்ற ஆறு அருஞ்சுரமென்க. முலையிடை வாங்கி முயங்கின னீத்த கொலைவனை (நெய்தற். கலி. 30) என்புழிப்போல முயங்கி நீத்தலால் முனிநர் என்றாள் எனினுமமையும். முலையிடைக் கிடந்து அவர் அதை முனிந்து பிரிதல் ஓர் அரிய செயல் என்றவாறு. முலையிடைத் தட்பத்தை முனிந்து அருஞ்சுர வெப்பத்தை விரும்பினர் என்பதாம். உடம்பு முலையிடைக் கிடக்கும் போதே பொருள்மேற் பிரிதலை நினைந்து அம்முலைகளை உள்ளத்தால் முனிந்தவர் என்றதுமாம். மலையுடைதல் கண்டு அறிவில்லாத வற்றலும் ஆர்க்கும் என்பது தோன்ற வைத்தவாறு. இனி ஆர்க்கும் அலையுடை அருஞ்சுரம் என்றதற்கேற்ப வற்றல் ஆர்த்தலால் வழிச்செல்வார் துயருற்றழுதாலும் பிறர் கேளாமையும் கேட்டால் ஆண்டுள்ள கள்வர் அலைத்தலும் உடைய அருஞ்சுர மென்றதாகக் கொள்க. செம்புலப் பெயனீரார் 40. யாயு ஞாயும் யாரா 1 கியரோ எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயு 2 மெவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல 3 அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. (எ-து) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர், பிரிவரெனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு தலைமகன் கூறியது. (வி) யாயும் ஞாயும் - என் தாயும் நின் தாயும். யாராகியர் - என்ன உறவினர். `யாஅரென்னாது (அகம். 50) என்புழிக் காண்க. எந்தையும் நுந்தையும் எனவும், யானுநீயு மெனவுங் கூறலான் அவற்றிற்கேற்ப யாயும் ஞாயும் என்பன என் தாயும் நின் தாயும் எம்முறைமையுடைய உறவினர் என்க. இருவர்க்கு முள்ள இரு மரபுங் கூறினான். எவ்வழி யறிதும் - எக்குடிவழி என்று அறிதும்; எவ்விடத்தினர் என்று அறிதும் என்பதுமாம். செம்புலப் பெயனீர் போல - செந்நிலத்துப் பெய்யும் மழை நீரைப் போல. உடை நெஞ்சம் தாம் - நம்முடைய உள்ளம் தாமாக. அன்பு கலந்தன என்றவாறு. பெயல் மேலே வானத்தும் செம்புலம் கீழே தரையினும் வேறு வேறிடங்களில் வேறு வேறாகவுளவேனும் இவை தாமாக இயைந்து ஒரே செந்நீர் ஆயினாற்போல வேறு வேறிடத்து ஒருவர்க்கொருவர் உறவில்லாது வேறுபட் டிருந்தும் நம் நெஞ்சங்கள் தாமாகக் கலந்து அன்பால் ஒன்றாயின என்றதாம். செந்நீர் என்றது செம்மண் அணுக்களும் நீரும் உடையதாய் ஒன்றானாற் போல வேறு வேறாயும் கலந்து, ஒன்றாயினோம் என்றவாறு. செம்புலப் பெயல் - செம்புலத்தொடு கூடிய பெருமழை செம்புலத்தில் மழை பெய்தற்கு அச் செம்புலம் ஒரு முயற்சியும் செய்யாதாகவும் அது தெய்வத்தானாதல் போல இக் கலப்பும் தெய்வத் தானாயது என்பது கருத்து. `கடவுண் மழை என்றார் ஆளுடையடிகளும் (திருக்கோ. கொளு 279). அன்புடை நெஞ்சம் என்றதற்கேற்ப நெகிழும் இயல்புடைய செந்நிலமும் கலத்தல் குறித்தானாம். இங்ஙனம் அருமையான உவமை கூறிய சிறப்பால் இப் பாடலுடையார் செம்புலப் பெயனீரார்எனப்பட்டாராவர். அணிலாடு முன்றிலார் 41. காதல ருழைய ராகப் பெரிதுவந்து சாறுகொ ளூரிற் புகல்வேன் 1 மன்ற அத்த நண்ணிய வங்குடிச் சீறூர் மக்கள் போகிய வணிலாடு முன்றிற் புலம்பில் போலப் 2 புல்லென் றலப்பென் 3 றோழியவ ரகன்ற ஞான்றே. (எ-து) பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) காதலர் உழையராக - காதலர் தம் பக்கலில் உள்ளவராக. அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர் பெரிதுவந்து - காட்டிடத்து நான் நண்ணியுள்ள அழகிய குடிகளையுடைய சிறிய ஊரினைப் பெரிதாக மகிழ்ந்து. சாறு கொளூரிற் புகல்வேன் - விழாக் கொண்ட பேரூர் போல விரும்புவே னாகிய யான். அவர் அகன்ற ஞான்றே - அவர் பிரிந்து சென்ற அந்நாளே, மக்கள் போகிய - மக்கள் இரியல் போகியதனால். அணிலாடு முன்றில் - அணில்கள் விளையாடும் முற்றத்தை யுடைய. புலம்பு இல் போல - தனி மனை போல. புல்லென்று அலப்பு என் - புல்லென்னப்பட்டு அலத்தற்குக் காரணம் யாது. காதலர் உழையராகத் தன் சீறூர் உவந்து சாறு கொள்பெரிதாகிய ஊர் போல விரும்பப்படுதலும் அவர் அகன்ற ஞான்றே மக்கள் போகிய புலம்பில் போல அலப்பும் என் என்றாளாம். அலப்பு - மிடியுமாம். அலந்தவர் - மிடித்தவர் என்பது (நெய்தற்கலி. 16 : 6) என்பதனால் அறியலாம். தன்னூர் அத்தம் நண்ணிய சீறுராகியும் அது சாறு கொள் ஊராதலும் அது புலப்பில் ஆதலும் காதலர் உழையிருப்பதானும் அகறலானும் நேர்தல் காட்டினாள். சீறூர் பெரிதாதற்குச் சாறு கொள் ஊரும், அஃது ஊரே யாகாதெனற்கு மக்கள் போகிய பாழ் மனையும் எடுத்துக் காட்டினாள். அத்தம் நண்ணிய சீறூர் என்றதனால் தலைவனும் தலைவியும் பாலை நிலமக்களாதல் துணியலாம், 15 ஆம் பாட்டில் விடலை என்ற பெயர் பற்றிப் பாலைநிலத் தலைவன் என்றது காண்க (தொல்.கற்பி. 2 இளம்.). இதன்கண் மக்கள் போகிய புலப்பில்லாக நினைதல் காட்டியதனால் தானிருந்தும் இல்லாதவளாதலை உடன் கூறினாள் என்பதாம். அவரில்லாதது உறைபதி அன்று என்று கூறினாள் எனினுமமையும். அவர் அகன்ற ஞான்றே துயருறுதல் என்னென்று வினாவி அவர் அகன்ற நாள்முதல் இன்று வரைப் பாழ்மனையில் அவர் வரல் நசைஇ ஆற்றியிருத்தல் காட்டிப் பின்னும் ஆற்றுவல் என்று குறித்தவாறாம். நச்சினார்க்கினியர், ஆற்றுவல் என்பது படக் கூறியது (தொல். கற்பி. 6) என இதை உரைத்தது காண்க. தன் வேறுபாடு கண்ட தோழிக்கு அவர் அகன்ற ஞான்றே ஊர் வேறுபாடு கண்டு உள்ளம் துயருழப்பது என்றும் அதனால் உடம்பு வேறுபாடு உண்டாயிற்றென்றும் கருதிக் கூறினாள். மக்கள் போகியதனால் பிள்ளைகளோடு முன்றி லாகாமை அணிலாடு முன்றில் என்பதனாற் குறித்தாள். இன்னா தன்றே யவரில் லூரே (நற். 216) என்பது காண்க. கபிலர் 42. காம மொழிவ தாயினும் யாமத்துக் கருவி மாமழை வீழ்ந்தென வருவி விடரகத் தியம்பு நாடவெம் தொடர்புந் தேயுமோ 1 நின்வயி னானே. (எ-து) இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய் பாட்டான் மறுத்தது. (வி) காமம் - நீ மெய்யுற்றுத் துய்க்கும் இன்பம். ஒழிவ தாயினும் - குறி வாயாமையால் ஒருகால் ஒழிவதாயினும். நாட நின்வயின் எம் தொடர்பும் தேயுமோ - நாடனே நின்னிடனுண்டாகிய எம் தொடர் நட்பும் குறையுமோ என்றவாறு. தேயுமோ என்பதனாற் றேயாது வளரும் என்று குறித்தாளாம். ஒழிவதாயினும் என்றதனால் இரவுக்குறியும் அரிதென்று குறித்தாள். தொடர்பு தேயாது என்றதனால் அம் மெய்யுறு புணர்ச்சியை வரைவிற் பெறுக என்றாளாம். யாமத்துக் கருவிமாமழை வீழ்ந்தென - இரவில் தொகுதியையுடைய கரிய மழை பெய்தது என்று. விடரகத் தருவி இயம்பும் நாட - முழைஞ்சுகளிடத் தொழுகும் அருவி தெரிய ஒலிக்கும் நாட என்க. என்றது இரவில் மக்கள் அறியாது சேய்மைக்கண் மலையில் மழை பெய்தது என்பதைக் காலையில் விடரகத் தருவி வழியளவை யான் அறியச் சொல்லுதல் போல, மறைவிற் புணர்ந்தாலும், இவள் மெய்வேறுபாட்டான் அநுமானிக்கப்பட்டுப் பிறரால் அலர் தூற்றப்பட்ட நட்பு என்பது குறித்தாள். இதனால் விரைவில் வரைதல் பயனென்க. யாமத்து மழை வீழ்ந்ததென அருவி இயம்பும் என்றது வழியளவைக் கெடுத்துக்காட்டாதல் காண்க. இது காரியத்தாற் காரணத்தை அறிந்தவாறாம். இது வழியளவை களின் பொது, எச்சம், முதல் என்னும் வகைமை மூன்றனுள் எச்சத்தின் பாற்படும் என்பது. வெள்ள ஏதுவினால் நிச்சயித்துத் தலைமழை நிகழ்வுரைத்தல் (மணி. சமயக் 33,34) எனச் சாத்தனார் கூறுதலான் அறிக. இவள் மெய்வேறுபாடும், பல்கால் நின் வரவும் ஆகிய காரியங்களால் இத் தொடர்பு பலரறிய இயம்பப்பட்டு ஓங்குவது என்று உய்த்துணர்ந்து கொள்ளவைத்தவாறாம். காமம் உடம்பு பற்றியது. அது காலம் பற்றியும் இடம் பற்றியும் இடையீடுபட்டுக் கிடையா தொழிவதாயினும், உயிரோடுள்ள இத் தொடர்புந் தேயுமோ என்பதாம். இம்மையினும் மறுமையினுந் தேயுமோ என்பதும் ஒன்று. பிரியினும் பிரிவ தன்றே, நின்னொடு மேய மடந்தை நட்பே (ஐங். 297) என்பது காண்க. வீழ்ந்ததென என்பது வீழ்ந்தென என மரீஇயிற்று. ஔவையார் 43. செல்வா ரல்ல 1 ரென் றியானிகழ்ந் தனனே 2 ஒல்வா 3 ளல்லளென் றவரிகழ்ந் தனரே 4 ஆயிடை, இருபே ராண்மை 5 செய்த பூசல் நல்லராக் 6 கதுவி யாங்கென் அல்ல 7 னெஞ்ச மலமலக் குறுமே. 8 (எ-து) பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது. (வி) அவர் நசைபெரிதுடையராதலால் என்னைப் பிரிவாற்றார்; அதனாற் செல்வாரல்லர் என்று அவர் செலவு தடுப்பது யான் இகழ்ந்தனன். பிரிவு அறியாத இவள்பால் பிரிவுரைத்தால் அதற்குப் பொருந்தாளென்று, அவரோ செலவுரைத்தலை இகழ்ந்தனர். ஒல்லேம் என்ற தப்பற் சொல்லா தகறல் வல்லுவோரே (79) என்றது பார்க்க. இருபேர் வீரியஞ் செய்த பூசல் நிகழும் அவ்விடையில் ஒரு பேரை நல்ல பாம்பு தீண்டினாற் போல என் நெஞ்சத்தை அல்லல் ஆனது அலமலக்குறச்செய்யும் என்க, அல்லல் - பிரிவுத் துன்பம். முதற்கண் அறியப்படாமல், விடம் தலைக்கேறிய அளவில் இது நல்லராத் தீண்டியதனால் ஆயதென்று அநுமானிக்கப்படுவது போல இவ்வலமலக் குறற்குக் காரணம் பிரிவு அல்லல் என்று உணரப்படுவது என்றவாறு. நல் அரா - பொல்லாங்குக்கு நல்லதான பாம்பு. இங்ஙனமே நன் குரங்கு (சிந். 1997) என்புழி நச்சினார்க்கினியர் பொல்லாங்குக்கு நன்றான குரங்கு என்றது காண்க. பேர் - பெயர்; பசப்பெனப் பேர்பெறுத னன்றே (குறள். 1190) என்ப. பேராசிரியர் வேறுபடவந்த வுவமத்தோற்றம் (தொல்.உவ.33) என்புழிப் பெயர் என்பது பொருள் உணர்த்துதலின் அதனை உருவின்பாற் படுத்துணர்க எனக் கூறியதனால் இவ் வழக்குண்மை உணர்க. அகநானூற்றுப் பழைய வுரைகாரர், கடுஞ்சொற் சொல்லுகிற பேரும் இன்சொற் சொல்லி வரைவுடம்படுவர் (அகம். 72) என்றது காண்க. வெள்ளி வீதியார் 44. காலே பரிதப் பினவே கண்ணே 1 நோக்கி நோக்கி வாளிழந் தனவே அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. (எ-து) இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது. (வி) காலே பரிதப்பின - இருகால்களும் நடந்து நடந்து செலவு தடுமாறின. கருமேந்திரியத்தை முற்படக் கூறினார் செலவு அயர்தற்குரியர் அல்லாத கற்புடையாட்டி யாராகிய தம்மைத் தெருவிற் புறப்படச் செய்தல் பற்றி: தோள்நலம் உண்டானைக் கெடுத்தாள் போல் தெருவிற்பட்டு (நெய்தற்கலி. 30) என்பது முதலாக வருமிடங்களான் உணர்க. கண்ணே நோக்கி நோக்கி வாள் இழந்தன - என் இரு கண்களும் தேடிப் பார்த்துப் பார்த்துத் தமக்குரிய புலமாகிய ஒளியை இழந்தன. ஈண்டு நோக்கி நோக்கி என்பதற் கேற்ப கால்கள் நடந்து நடந்து எனக் கூறலாயிற்று. என் கண்ணொளி போன்ற காதலரைக் காணாமையினால் அல்லாதாரையும் பார்த்தற்கியலாது ஒளியிழந்தன என்றவாறு. வினைசெய்யும் பொறியினும், அறிவுறும் பொறியினும் சிறந்தன விரண்டே கூறி எல்லாப் பொறியும் ஓய்தல் குறித்தார். நீளிடைக் கூர்ந்து நோக்கி நோக்கி வாளற்றன எனினுமமையும். `நீளிடை யத்த நோக்கி வாளற்றுக் கண்ணுங் காட்சி தவ்வின (நற். 397) எனவருதல் காண்க. அகன்ற பெருவிசும்பின் மீனினும் பலர் இவ்வுலகத்துப் பிறர் ஆடவர் உள்ளனர் என்றது அம் மீன் நடுவண் விளங்கும் உவாமதியனையாரைக் காணேன் என்று குறித்ததாம். மீன் போன்றார் பிறர் அம் மீனினும் பலராவர்; மதிபோன்றார் ஒருவரைத் தாம் காணேன் என்றவாறு. இது வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே (அகம். 147) என்றபடி இவர் செலவயர்ந்துழிக் கூறிய பாட்டாகும். இது புறமேனும் அகத்திணைக்கே துறை கூறிற்று. துறைக்கேற்றவாறு செவிலி கூற்றாகக் கொள்ளுமிடத்து, செவிலி உடன்போக்கில் தலைவன் தலைவி இருவரையுந் தேடிக் கால் தப்பின, கண்கள் நோக்கி நோக்கி ஒளியிழந்தன, மீனினும் பலர் இவ்வுலகத் துள்ளனர். ஞாயிறும் மதியும் அனைய இருவரையுந் தாம் காணேன் என்று இரங்கியதாகக் கூறுக. தலைவன் தலைவியர் இருசுடராக உவமிக்கப்படுதல் இரு சுடரும் போந்தன என்றார் (திணைமாலை. 71) எனக் கூறியதனால் அறிக. பிற எல்லாம் மேற் கூறியவாறே கொள்க. `சந்திரனே தாயாக என்பது சினேந்திரமாலை. நச்சினார்க்கினியர் `வள்ளி (தொல்.புறத். 33) என்புழித் தண்கதிர் மதியம் எனக் கொண்டு திங்கள் நீரின் தன்மையும் பெண்டன்மையும் உடைமை யான் என்றது கண்டு தலைவியை மதியாகக் கூறுதல் வழக்கென வுணர்க. ஆலங்குடி வங்கனார் 45. காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி வாலிழை 1 மகளிர்த் தழீஇய சென்ற 2 மல்ல லூர னெல்லினன் பெரிதேன் 3 மறுவருஞ் சிறுவன் றாயே 4 தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே 5. (எ-து) தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டியவழித் தோழி வாயில் நேர்ந்தது. (வி) கடுந்தேர் பண்ணி - விரையச் செல்லற்குரிய தேரினை அலங்கரித்தேறி. வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற மல்லல் ஊரன் - தூய அணிகலங்களையுடைய பரத்தை யரைத் தழுவப் போயின வளனுடைய ஊர்த்தலைவன். கடுந்தேர் வேண்டியது அவரைத் தழுவும் விழைவு விதுப்பால் என அறிக. வாலிழை என்றாள் இழை தூயதன்றி அவர் தூயரல்லர் என்பது குறித்து. யாணரூர தூயர் நறியர் நின்பெண்டிர் (ஐங். 70) என்று தலைவி. பரத்தையரை இகழ்ச்சிக் குறிப்பால் கூறுதல் கண்டு உணர்க. அவர் மயக்குவது இழையாலன்றி இயற்கையழகால் அன்று என்பதுமாம். அவர் பலர் என்பது தோன்ற மகளிர் என்றாள். தழீஇய சென்ற என்றது இவன் தழுவுதலல்லது அவர் உள்ளத்தோடு தழுவாமை குறித்தது. சென்றவூரன் - தான் இருந்த இல்லிலேயான் தனியாக இருக்கச் சென்றவன் என்பதாம். மல்லல் - அப் பொருட்பெண்டிர்க்கு இறைக்கும் செல்வ மிகுதியுடையவன் என்பதாம். கடுந்தேர் பண்ணித் தழீஇய சென்ற வூரன் ஆண்டுத் தங்கிக் காலை யெழுந்து - அப் பரத்தையர் சேக்கை விட்டு விடியலிற்றுயிலெழுந்து; இரவெல்லாம் ஆண்டே இவன் கிடந்தபடி குறித்தது. எல்லினன் பெரிதேல் - பெரிது விளங்கினனேல்; என்றது அம் மகளிரைத் துய்த்த சின்னங்களால் பெரிதும் விளங்கித் தோன்றுவனாயின். சிறுவன் தாய் மறுவரும் - அவன் சிறுவனுக்குத் தாயாகிய தலைவி உளம் கழல்வாள். சிறுவன் தாய் என்றாள் அவன் தன் பெண்டு என நினைந்துள்ளானாயின் இவளோடே இன்பந் துய்க்கானா என்பது தோன்ற, இதனால் இத் திணைப் பிறத்தல் தெறுவது - இவ்வுயர்குடிப் பிறத்தல் இவ்வாறெல்லாம் இடருறத்தக்கது போலும். அம்ம - கேட்பித்தற்கண் வந்தது. சிறுவன் தாய் என்றது பரத்தையர் அங்ஙனமாகாமை குறித்தது. சிறுவர்ப் பயந்து நன்றி சான்ற கற்போ, டெம்பாடாதலதனினும் அரிதே (நற். 330) என்பது காண்க. இங்ஙனம் உயர்திணைப் பிறத்தலைத் தலைவிக்குக் கூறி அவன் விரும்பிய பரத்தையரின் இழிபிறப்புணர வைத்தாளாம் தோழி. இதனால் பரத்தையர் துய்த்த சின்னம் தோன்ற வாராமை வேண்டி வாயில் நேர்ந்தாளாம், பிரிவுத் துன்பத்திலும் அவன் தலைமகள் முன்னர் எல்லினன் தோன்றல் மிகவும் துன்பம் விளைக்குமாதலால் எல்லாது வரவேண்டினாள், `நகச்சின்னங் கண்டு என்னுள்ளத்தே யெரிகையால் என்பது நினைக. வேண்டேம் பெருமநின் பரத்தை யாண்டுச்செய் குறியோ டீண்டுநீ வரலே (ஐங். 48) என்பது காண்க. கடுந்தேர் பண்ணி மகளிர்த் தழீஇய சென்றவூரன் காலையெழுந்து பெரிதெல்லினனேல் சிறுவன் தாய் மறுவரும் என்க. இப் பாட்டுத் தலைவியை உயர்த்துக் கூறியது என நச்சினார்க்கினியர் கூறியதும் காண்க. (தொல்.பொருள். 46). தேர் பண்ணி என்றதனால் `தானும் புதுவதின் இயன்ற அணியன் (அகம். 66) ஆதல் நினையலாம். தெறுவதென்றது உயர் குடிப்பிறப்பு இழிவினைப் பொறாதென்பது பற்றி. மாமலாடனார் 46. ஆம்பற் பூவின் சாம்பலன்ன கூம்பிய சிறகர் 1 மனையுறை குரீஇ முன்றி லுணங்கன் மாந்தி மன்ற தெருவி 2 னுண் டாது குடைவன வாடி இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் புன்கண் மாலையும் புலம்பும் இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே. (எ-து) பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, ஆற்றுவலென்பதுபடச் சொல்லியது. (வி) பூவின் சாம்பல் - பூவின் வாடல். பூவின் வாட லொத்த கூம்பிய சிறகுகளையுடைய மனையினுறையுங் குருவிகள். முன்றில் உணங்கல் மாந்தி - முற்றத்தில் உலர்த்திய புழுங்கலை யுண்டு. மன்ற - தேற்றமாக. தெருவின் நுண்ணிய பூழியைச் சிறகராற் குடைவனவாய் விளையாடி. ஆடுதல் - நீராடுதல் போலப் புழுதியாடுதலுமாம். மன்ற என்றது தனக்கு ஓரூறும் உண்டாகாதென்று தெளிதலைக் கருதிற்று. இல்லிறைப்பள்ளி - இல்லில் இறப்பின்கட் சேக்கையில்; தம் குஞ்சுகளோடு தங்குதற்குக் காரணமான புன் கண்மையுடைய மாலையும் இன்றுகொல், புலம்பும் இன்றுகொல் அவர் சென்ற நாட்டில் என்க. இன்றுகொல் என்பதனைத் தனித்தனி கூட்டுக. புன்கண் - ஒளியிழத்தல் என்பர் பரிமேலழகர் (குறள். 1222). ஒளியிழத்தல் மாலைக்கும் தலைவிக்கும் ஒப்புக் கொள்க. புலம்பு தனி நிலையினுண்டாம் துயர். காலமும் இடனும் யாண்டும் ஒருபடியாயில்லாமல் வேறுபடும் என்று நினைந்து இங்ஙனங் கூறினாள். இவ்வாறு ஐயுற்றது அவர் தன்பாலுள்ளுழி மாலையின் புன்கண்மையும் புலம்பும் கண்டறியாமையால் அவருள்ளுழி யெல்லாம் அவ்வாறாகும் போலும் என்னுங் கருத்தால் அவர் சென்ற நாட்டே இன்றுகொல் என்றாளென்க. இன்னும் வருமே தோழி வாரா, வன்க ணாளரோடியைந்த, புன்கண் மாலையும் புலம்பு முந்துறுத்தே (நற்றிணை.89) என்புழிப் புன்கண் மாலையும், புலம்பும் வாராத தலைவரான் உளவாதல் கூறுதலான் இஃதுணரப்படும். மாலையும் ... ... ... அணிதேரான் றான்போத வாராத நாளே வரும் என்பது திணை மாலை நூற்றைம்பது (101). இன்றுகொல் எனத் தோழியை ஐயத்தின் வினாயினாள்; அங்ஙனம் இன்றென்று செப்புவையாயின் யாமும் அவருள் வழிப்பட்டு இவற்றின் துயர் தீரலாம் என்னுங் கருத்தால் அவ்வாறு இல்லிறந்து புறப்படுதல் கற்புடைய மகளிர்க்கு ஆகாமையின் புன்கண் மாலையும் புலம்பும் வருத்த இருத்தலே தலைவிதியென்று குறித்தவாறாம். இன்றுகொல், இருந்தால் அவர்க்கும் என் போலவே மாலையும் புலம்பும் வருத்தலான் இவண் மீளவிரைகுவர் என்பது இவள் நினைவாம். மன்ற மாந்தி எனக் கொண்டு நாளும் உணங்கல் முன்றிலில் மாந்தக் கிடைப்பது குறித்தாள் எனினும் அமையும். இதனால் மனையின் வளமிகுதி குறித்தாள். பறவைகள் பூழி குடையும் விருப்பின என்பது எறிகிளர் கேழல் கிளைத்திட்ட பூழி, பொறிகிளர் மஞ்ஞை புகன்று குடையும் (கைந்நிலை. 11) என்பதனான் உணர்க. இனி இன்றுகொல் என்ற ஒருமை பற்றி வதியும் மாலைக் கண்ணும் தனிமைக் கண்ணும் புன்கண் இன்றுகொல் என்றாளெனின் நன்கு பொருந்தும், மனையுறை குரீஇப் பிள்ளையொடு வதியும் புன்கண் மாலை என்றது இம் மாலையிற்றானும் தலைவனும் பிள்ளைகளோடு மனை யுறைதற்கில்லாமல் பிரிந்திருத்தலை நினைப்பிப்பது. நெடுவெண்ணிலவினார் 47. கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. (எ-து) இராவந் தொழுகுங்காலை முன்னிலைப் புறமொழி யாக நிலாவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது. (வி) கருங்கால் வேங்கை வீ - வலிய தாளையுடைய வேங்கை மரத்தின் பூ. உகுதுறுகல் - உக்க பாறை; துறுகல் - கற்செறிவு. இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை - பெரிய புலியின் குட்டி போலக் காணப்படும் காட்டினடுவில். வேங்கை புலிவரி போலப் பூக்கும் என்பது வேங்கையும் புலியீன்றன (நற்றிணை. 389) எனவும், வேங்கை யலங்கலந் தொடலை யன்ன குருளை (நற். 383) எனவும் வருவன கண்டுணர்க; புலியன்றிப் புலியல்லாதனவும் புலி போலத் தோன்றி அச்சஞ் செய்தல் குறித்தாள்; குருளையிற் றோன்றும் என்று அதன் தாயுந் தந்தையும் அக் காட்டிடையுலாவுதல் கருத வைத்து அச்ச மிகுந்தாள். இவ்வாறு பல ஏதமும் அஞ்சாது இரவின்கண் வருபவர் கள வொழுக்கத்திற்கு, நெடுவெண்ணிலவே நல்லையல்லை என்க. நல்லையல்லை - நன்மை செய்வாயல்லை; தீமையே செய்வாயாவை என்றவாறு. களவிற்கு நல்லையல்லை என்று திங்களை நோக்கிக் கூறியதாற் கற்பிற்கு நல்லதென்று தலைவன் கொள்ள வைத்தாள். கரணத்து மணந்தார் நிலவில் இன்பந் துய்த்தல் நிரைநிலை மாடத் தரமிய மேறி (சிலப். மனையறம். 27) என்பதனானறிக. காட்டிடையும் வேங்கை வீயுகு துறுகல்லைப் புலிக்குருளையாகப் பொய்யே காட்டுவை, மனைப்புறத்துக் குறிசெய்த இடத்தும் இருவரையும் மெய்யே காட்டுவை ஆதலால் நல்லையல்லை என்றாளாம். நெடு நிலவு -நெடும்போதுள்ள நிலவு; மதி நெடியோனாதல் குறித்தாளென்பதுமாம், வெள்ளென் நிலவில் நிழல் நன்கு தெரிதலியல்பு; இது களவிற்காகாது. எல்லி வருநர் - இரவென்று வருபவர்; இரவும் தாய் துஞ்சுதலும் நல்லனவாக நிலவே நீ மட்டும் நல்லையல்லை என்றாளாம். நீயுமறைந்தால் நல்லையாவை என்பதாம். நிலவு மறைந்தன் றிருளும் பட்டன்று ... ... ... அன்னையுந் துஞ்சினள் (நற். 182) என்பதனாலிக் கருத்துணரப்படும். நெடும்போது கழித்து மறையும் நிலவே இப்போதே மறைந்தாயாயின் நல்லை என்பது கருதினாளெனினுமமையும். வெண்நிலவு என்பது மேகத்தால் ஒளி மழுங்கா துண்மை குறித்தது. எல்லிவருநர் என்றதனால் அவர் இரவிற் குறியிடை வந்து நின்றார் என்றும் நிலவு வெளிப்பாட்டால் அவரைச் சென்று எதிர்ப்படமாட்டாமல் தலைவி வருந்தா நின்றமையால் தோழி மதியொடு புலந்து கூறினாள் என்றும் இதனைத் துணியலாம். (திருக்கோ. 171) பார்க்க. பூங்கணுத்திரையார் 48. தாதிற் செய்த தண்பனிப் பாவை காலை வருந்துங் கையா றோம்பென ஓரை யாயங் கூறக் கேட்டும் இன்ன பண்பி னினைபெரி துழக்கும் நன்னுதல் 1 பசலை நீங்க வன்ன 2 நசையாகு 3 பண்பி னொருசொல் இசையாது கொல்லோ காதலர் தமக்கே. (எ-து) பகற்குறிக்கட் காணும்பொழுதினும், காணாப் பொழுது பெரிதாகலின், வேறுபட்ட கிழத்தியது வேறு பாடு கண்டு தோழி சொல்லியது. (வி) தாது - பூந்தாது; அதனாற் செய்த விளையாட்டுப் பாவை. தண்பனிப் பாவை - தண்பனியிற் றுயிலவிட்ட பாவை. காலை வருந்துங் கையாறு ஓம்பென - காலை வெயிலிற் கிடந்து வருந்துதற்குக் காரணமான செயலற்றி ருப்பதைப் பரிகரியென்று. ஓரையாயங் கூறக்கேட்டும் - தன்னுடன் விளையாடற் குரிய மகளிர் கூட்டம் சொல்லக் கேட்டும்: அங்ஙனஞ் செய்யாது. இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் - இன்ன தன்மையிற் பெரிதும் துன்பத்து வருந்தும். நன்னுதல் பசலை - நல்ல நுதலையுடையவளது நிறவேறு பாடாகிய பசலைதான். காதலர் தமக்கே - காதல் செய்த தலைவர் தமக்கே; நீங்க - அவர் புணர்ந்து நீங்கும் அளவில்; அன்ன நசையாகு பண்பின் ஒரு சொல் - நமக்கு விருப்பமாகிய இயல்பினையுடைய அத்தகைய ஒரு வார்த்தையை; அஃதாவது வரைக என்ற ஒரு சொல்லை. இசையாது கொல்லோ - கூறாது கொல்லோ என்றவாறு. வரைதல் நீக்கற்கு மாகலான் அதனை விலக்கற்கு நசையாகு பண்பினன்ன ஒரு சொல் என்றாள். பசலை நீங்க இசையாது கொல்லோ - பசலைதான் நீங்க வேண்டி இசையாது கொல்லோ எனினுமமையும், பிறர் எல்லார்க்கும் அறியச் சொல்லும் பசலை தான், காதலர் தமக்கே ஒரு சொல் இசையாதோ என்றாளென்க; பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே என்றது காண்க. தானே நினைந்து செய்ய வேண்டுவதை ஆயங்கூறக் கேட்டும் செய்யாமை காட்டிப் பாவையுடன் விளையாடல் மறந்தவாறு கூறினாள்.உணவும் அருந்தாது மறந்து பாவை விளையாட்டினை விரும்புமவள் அதனை ஆயஞ் சொல்லக்கேட்டுஞ் செய்யாமை எற்றினாயிற்றென்று ஆராயப்படும்போது, அவ்வாயத்திற்கு இதனானாயிற்றோ என்று ஐயுறும் வண்ணம் அறிவியா நிற்கும் இந்நன்னுதலுடையாளது பசலைதான். இசையாது கொல்லோ என்றாளென்க. நன்னுதல் என்றாள் மறைக்கப்படாத அவ்வுறுப்பினுண்டாய பசலை என்பது தெரிய. அவர் நீங்கிய அளவிலே உண்டாகிய நிறவேறுபாடான பசலை அவர் திரும்பிப்பார்த்த அளவிலே அவர்க்கு ஒரு சொல் இசையாதோ என்க. பசலைதான் நீங்க இசையாது கொல் - பசலைதான் நீங்க வேண்டலான் இசையாதோ என்றாளெனினும் அமையும். அம்மூவனார் 49. அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து மணிக்கே ழன்ன மாணீர்ச் சேர்ப்ப 1 இம்மை மாறி மறுமை யாயினும் நீயா கியரென் கணவனை 2 யானா கியர்நின் னெஞ்சு நேர் பவளே. 3 (எ-து) தலைமகன் பரத்தைமாட்டுப் பிரிந்தவழி ஆற்றா ளாகிய தலைமகள், அவனைக் கண்டவழி அவ்வாற்றாமை நீங்கு மன்றே; நீங்கியவழிப் பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது. (வி) முண்டகம் - முள்ளி, அதன் முள்ளிற்கு அணிற்பல் உவமை, கூன்முண் முண்டகம் (51) முண்டகத்து மணிக்கேழ் அன்னம் மாண் நீர்ச்சேர்ப்ப - முண்டகமலர்களில் மணிநிறமுள்ள காரன்னங்கள் மாட்சிமைப்படுகின்ற நீர்க்கடற் சேர்ப்ப. காரன்னங்கள் கொங்குமுதிர் முண்டகத்து மாண்ட வாறு பரத்தையர் நின்னை யெய்தி மாண்புற்றனர் என்று குறித்தாள். துறையுள் தலைமகன் பரத்தை மாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாய் அவனைக் கண்டுழிக் கூறியது ஆதலின் அதற்கேற்பக் கொள்ளப்பட்டது. கொங்கு - தாது, முண்டகத்தின் தாதுக்களால் காரன்னங்கள் நிறம் பொலிவு பெற்று மாண்புபடுதல் காட்டினாள். முண்டகத்து மணிக்கேழால் அன்னங்கள் மாணும் என்பதுமாம். மணிமருண் மலரமுள்ளி (அகம். 236) என்ப. இம்மை மாறி மறுமையாயினும் - இப்பிறப்பு மாறி மறுபிறப்பு உண்டாயினும்; மறுமை - மறுமை உலகமுமாம் (அகம். 66). நீ என் கணவன்; ஆகியர் - ஆகுக. நின் நெஞ்சு நேர்பவள் யான் ஆகியர் - நின் மன மொத்தவள் யானாகுக; என்றது தலைவன் பரத்தைமையில்லாது தனக்கே உரியனாதல் கருதினாள். தன்னெஞ்சு நேர்தல் தானறிதலாற் கூறாது விடுத்தாள். பிறன் கற்புடையாட்டி வாயினாலும் சொல்லத்தகானாதல் காண்க. முண்டகத்துடன் மணிக்கேழன்ன மாநீரையுமுடைய சேர்ப்ப என்பாருமுளர். மணிக்கேழ் - மணிநிறம். காரன்னம் கடலாடிப் புலவு நாறியது கொங்கு முதிர் முண்டகத்து மானு மென்பதனாற் பரத்தையரதிழிவான இயல்பும் அவர் தலைவனால் மாணுதலுந் தலைவனை அடையாத நிலையில் மாணாமையுங் குறித்தாள். நெஞ்சு நேர்பவள் - உள்ளம் பொருந்துபவள் என்பதுமாம். எந் நெஞ்சமர்ந்தோளே (56). இம்மை மாறி மறுமையாயினும் நீயாகிய ரென்கணவனை என்றது இம்மையிலும் நீ பரத்தையர்க்குக் கணவன் ஆகாய் என்பதும், அவர் நினக்கு மனைவியர் ஆகார் என்பதும் குறித்ததாம். `எங்கணவ னெங்கணவ னென்பாரிகல்வாட (புறப். வெ.மா.தும்பை. 24) என்ற ஐயனாரிதனார் பாடல் கண்டுணர்க. குன்றியனார் 50. ஐயவி யன்ன சிறுவீ ஞாழல் செவ்வீ மருதின் 1 செம்மலொடு தாஅய்த் 2 துறையணிந் தன்றவ ரூரே3 யிறையிறந் திலங்குவளை நெகிழச் சாஅய்ப் புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. (எ-து) கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது. (வி) ஐயவி - வெண்சிறு கடுகு. சிறுவீ ஞாழல் - ஞாழற் சிறுவீ என்பது பின் முன்னாகத் தொக்கது. ஞாழற் சிறுவீ மருதின் செவ்வீச் செம்மலொடு தாஅய் என்க. செவ்வீச் செம்மல் - சிவந்த பூவாடல். தாஅய் - பரந்து. அவரூர்த்துறை யணிந்தது என்றது துறையில் நீர் தோற்றாது மருதின் செம்மலோடு ஞாழல்வீயே பரந்து தோற்ற நின்றது என்றவாறு. அதுபோல என் தோள்களும் எனக்கியல்பாகிய எழில் தோற்றாது வளை நெகிழ மெலிந்து புலம்பே தோற்ற நின்றன என்பது கருத்து. இஃது எடுத்துக் காட்டுவமை. தலைவி துறையின் நீர் கொள்ளும்போது அத் துறை நீர் கொள்ளும் பலர் கண்கொளப் பூண்டதனாற் றுறையுந் தோளையும் உவமித்தார். ஞாழல் வீ தாஅய் துறையணிந்தது என்றது தலைவி தலைவரைப் பிரிதலால் ஞாழலிணர் சூடப்பெறாது துறை வீழ்ந்து பரந்ததைக் குறித்த தெனினுமமையும். மகளிர் ஞாழலிணர் சூடுதல், கொழுநிழன் ஞாழன் முதிரிணர் கொண்டு, கழும முடித்துக் கண்கூடு கூழை, சுவன்மிசைத் தாதொடு தாழ வகன்மதி, தீங்கதிர் விட்டது போல முகனமர்ந்து, ஈங்கே வருவாளிவள் யார் (குறிஞ்சிக்கலி. 20) என்பதனா னறிக. ஞாழல் ஆகுபெயராய் ஞாழற் செம்மலெனின் அமையும். ஞாழற் செம் மலணிந்தன்று, புலம்பணிந்தன்று என்பனவற்றில் அணிதல் கண்ட பிறர் கண்கொளப் பூணுதல்; இகழ்ச்சிக் குறிப் பெனினு மமையும். தலைவர் பரத்தையரோடு விளையாடிய போதின் உதிர்ந்த ஞாழலின் சிறுவீ மருதின் செம்மலோடு பரந்து அவராடிய துறைகளிற் கண்டார் கண்கொளப் பூண்டது என்பதுமாம். ஈண்டு அவரூரென்று பரத்தையர் சேரியைக் கூறுதலான் தலைவி வதியுமிடன் அவரூராகாமை குறித்தாள். குன்றியனார் 51. கூன்முண்1 முண்டகக் கூர்ம்பனி மாமலர் 2 நூலறு முத்திற் காலொடு பாறித் 3 துறைதொறும் வரிக்குந் 4 தூமணற் சேர்ப்பனை யானுங் காதலென் 1 யாயுநனி 2 வெய்யள் எந்தையங் கொடீஇயர் 3 வேண்டும் அம்ப லூரு 4 மவனொடு மொழிமே. 5 (எ-து) வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவு மலிவு கூறியது. (வி) அகப்பாட்டிற் (26) கூன்முள் முள்ளி என்பது மீன் முள்ளன்ன என்பதற்கு எதுகைத்தாகலிற் கூன்முள் என்பதே பாடமாம். கூன்முள் - வளைவினையுடைய முள். முண்டகத் தின் பனிக்காலக் கரியமலர்; கூர்ம்பனி - உடலைக் குன்னாக்கச் செய்யும் பனிக்காலம்; கூரும்பனி மரீஇயிற்று. இச் சொல் வழக்கினை `மந்தி கூர (நெடுநல்வாடை. 9), கூரலங் குறுமுயல் (அகம். 284) என்னுமிடங்களிற் கண்டு கொள்க. `மணிமருண் மலர முள்ளி (அகம். 236) என்பதனாற் கரியமலர் என்றாம். நூலறு முத்தின் - கோத்த நூல் அற்ற முத்துக்களையொப்ப. காலொடு - காற்றால் முத்திற் பாறி என்க; வினையுவமம். வரிக்கும் - அலங்கரிக்கும். மாமலர் காலாற்பாறித் தூய மணலை அலங்கரித்தாற் போல நீயும் தெய்வத்தானுய்க்கப்பட்டுத் தலைவனை அலங்கரித்தனை யாவை என்பது குறித்ததாம். வரைவு மலிதலால் இயற்கையிற்றுறை களெல்லாம் தூமணல் பரப்பி மலர்களால் அலங்கரிக்கப்படுதல் குறித்தாளென்பது மொன்று. தூமணல் காற்றுத் தூவிய மணலுமாம். சேர்ப்பனை யானுங் காதலென் - நின்னைக் களவிற்கூடிய சேர்ப்பனை யானும் விருப்பம் உடையேன். யாயும் நனிவெய்யள் - நம் தாயு மிக்க விருப்பமுடையவள்; எந்தையும் கொடீஇயர் வேண்டும் - தந்தையும் நின்னைக் கொடுக்கச் சேர்ப்பனை வரைவொடு வரல் வேண்டுவான். ஊரும் அவனொடும் அம்பல் ஒழிமே - இவ்வூரும் வரைவொடு வரும் அவனோடும் நின்னைக் களவிற்கூட்டும் சிறு சொல்லும் ஒழியும் என்றவாறு. யானுஞ் சேர்ப்பனைக் காதலென் என்பது சாத்தன் தாயைக் காதலன் (தொல்.சொல். வேற்றுமை மயங்கியல். 19-சேனாவரையருரை) என்பது போல வந்தது; அலரஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவுகடாயவிடத்து `அலர்வாய் நீங்கவருளாய் (அகம். 320) எனக் கூறுதலான் அம்பல் ஒழிதலே கருத்தாகக் கொள்ளப்பட்டது. `அலர்வா யம்ப லூரு மவனொடு மொழியும் (அகம்.282) என்புழிப் போல இதனைக் கொள்ளலா மெனின் ஆண்டுத் துறை இரவுக் குறிக்கண் தலைமகன் சிறைப் புறமாகத் தோழி தலை மகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியதும் தலை மகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதும் ஆகக் கூறுதலானும், ஈண்டு, `வரைந்து கோடல் மெய்யாயின மையின் வதுவை முடியுமளவும் ஆற்றும்படி தோழி தலைமகட்கு வற்புறுத்தியது (தொல்.களவு 24) என நச்சினார்க்கினியர் கூறுதலானும் வேற்றுமை கண்டு கொள்க, ஒழியுமே என்பது ஒழிமே என விகாரப்பட்டது. சேர்ப்பனை நின்னுடன் வதுவையிற் காண யானுங் காதலென், யாயும் நனி வெய்யள், எந்தையுங் கொடீஇயர் வேண்டும் என்று வரைவுமலிவு கூறி, அவன் வரைவொடு வரல் தான் வேண்டுவது என்று குறிப்பித்து, வரைவோடு வரும் அவனோடு நின்னைக் களவிற் கூட்டிய ஊரார் அம்பலும் ஒழியும் என்று காட்டி. அதுகாறும் ஆற்றியிருக்கு மாறு தோழி வேண்டினாள் எனக் கொள்க. பனம்பாரனார் 52. ஆர்கலி மிதித்த 1 நீர்திகழ் சிலம்பிற் சூர்நசைந் தனையையாய் 2 நடுங்கல் கண்டே நரந்த நாறுங் குவையிருங் கூந்தல் நிரந்திலங்கு 3 வெண்பன் மடந்தை பரிந்தனெ னல்லெனோ 4 விறையிறை யானே. (எ-து) வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி முன்னாளின் அறத்தொடு நின்றமை காரணத்தான் இது விளைந்தது என்பது படக் கூறியது. (வி) ஆர்கலி மிதித்த நீர் திகழ் சிலம்பில் - கடலை மிதித்தற்குக் காரணமான அருவிநீர் விளங்கு மலையில்; மலை நீர் கடலை மிதித்தலாவது கடலுவர் நீரை மலை அருவி நீர் நெடுந்தூரம் உள்ளே தள்ளி ஊர்வதாம். சிலம்பிற்சூர் - மலையிற்றெய்வம். நசைந்தனையையாய் - விரும்பப்பட்ட அத் தன்மையை யுடையையாய், இது தாய் கருத்தாற் கூறியது. தலைவன் விரும்பிய தனாலுண்டாகிய இத் தன்மையை யறியாத தாயால் சூர் விரும்பிய அத் தன்மையையுடையையாக நினைக்கப்பட்டு என்றவாறு. நடுங்கல் கண்டு - வெறியாடினும் கட்டுக்காணினும் நம் கற்பிற்கு என்னாகுமென்று நீ நடுங்குதலைக் கண்டு. மடந்தை - மடந்தாய். யான் இறை இறை பரிந்தனெ னல்லெனொ - யான் சிறிது சிறிது மறையைச் செல்ல விட்டனல்லனோ என்றவாறு. நரந்தம்பூ - நாறுதற்குக் காரணமான திரட்சியாகிய கரிய கூந்தலையும், வரிசையின் இலங்குதற்குக் காரணமான வெண் பல்லினையுமுடைய மடந்தாய் என்க. தாய்வேறு நினைத்தலால் நீ நடுங்கல் கண்டு வரைவுமலிவில் நின் இருங் கூந்தல் நரந்தம் நாறவும், நின் வெண்பல் நிரந்திலங்கவும் வேண்டி இறை இறை பரிந்தனெனல்லெனோ என்றாளாகக் கொள்க. நிரந்திலங்குதல் முறுவலித்தலைக் குறித்தது. ஆர்கலி இரவின் எழுந்து பரந்து ஊர்தலான் உண்டாகிய நீர் என்பதுமாம். இது கடலும் மலையும் அடுத்துள்ள நிலத்து நிகழுமென்க. ஆர்களிறு மிதித்த என்று பாடங் கொள்வாருமுளர். வரைவுமலிவு கேளாத முன்னெல்லாந் தலைமகள் நடுங்கி நின்று கூந்தலில் நரந்தம்பூச் சூடாது, முறுவல் மலராது வாடியது குறித்ததாம். நசைந்த அனையையாய் என்பது நசைந்தனையையாய் என மரீஇயிற்று. இதனைத் தலைவி கூற்றாகக் கொள்வர் இளம்பூரணர் (தொல்.கள. 17). அவர் சிலம்பிற் சூர்நசைந் தனையையாய் என்பதற்கு மலையிற்றெய்வம் விரும்பியதாகக் கருதிய தாயையுடையையாய் என நினைப்பர் போலும். நாறுங் கூந்தலும் இலங்கும் வெண்பல்லும் வரைவுமலிவு கேட்ட தோழிக்கும் இயையும் என்க. கோப்பெருஞ்சோழன் 53. எம்மணங் கினவே 1 மகிழ்ந முன்றில் 2 நனைமுதிர் 3 புன்கின் 4 பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும் செந்நெல் வெண்பொரி 5 சிதறி யன்ன எக்கர் நண்ணிய வெம்மூர் வியன்றுறை நேரிறை 6 முன்கை பற்றிச் சூரர மகளிரொ டுற்ற சூளே. (எ-து) வரைவு நீட்டித்த வழித் தோழி தலை மகற்குரைத்தது. (வி) மகிழ்ந - மகிழ் செய்தற்குரியாய்; நீ மகிழ்ச்சிக்குரியை யாகவும் நின் சூள்கள் எம்மணங்கின என்பதுபடக் கூறினாள். முன்றில் - வியன்றுறை முன்றிலாகக் கொள்க. புன்கின் நனை முதிர் பூ என்க. பூத்தாழ் வெண்மணல் புனைந்த வெறியயர் களந் தொறும் வேலன் செந்நெல் வெண்பொரி சிதறியன்ன எக்கர் என்க. எம்மூர் எக்கர் நண்ணிய வியன்றுறை-எக்கர் தலைவனுடன் தலைவி மறைந்து விளையாடற் காயது பற்றிக் கூறினாள். எக்கர் - மணற்குவியல். நேரிறை முன்கை - இறை நேரிய முன்கை. வியன்றுறைக்கண் எம் முன்கைபற்றி, வியன்றுறைச் சூரர மகளிரோடுற்ற சூள்கள் எம் மணங்கின என்றவாறு. வியன்றுறைச் சூரரமகளிர் - அச்சத்தைச் செய்யும் கடல் கெழு செல்வியர்; சூர் - தெய்வத்தன்மையுமாம். விரைந்து வரைவல் எனக் கைப்பற்றி நீ கூறிய சூள்கள் வரைவு நீட்டித்தலான் நின்னை யணங்குமென்று எம் மணங்கின என்றவாறு. உற்றசூள் என்றும் முன்கைபற்றி யுள்ளசூள் என்றும் சூரர மகளிரோடுற்ற சூள் என்றும் அச் சூளும் ஒன்றல்ல பலவென்றும் தெளியக் காட்டினாள் என்க. எம் மணங்கினவாதலின் இதனை உள்ளவாறுணராத தாய் வெறியயர்தற்குப் புகுவள் என்பது தலைவன் நினைய அக் களத்தையே யுவமையாக்கிச் சூள்நிகழ்ந்த தன்னூர் வெண்மணல் எக்கர் வியன்றுறையை வருணித்தாள். உற்றசூள் - மிகுத்துரைத்த சூள்கள். சூள் கேட்ட எம்மை அணங்கின, சூளுரைத்த நின்னை அணங்கினவில்லை. ஆதலால் வரைவு நீட்டித்து நின் விநோதத்து மகிழ்கின்றாய் எனக் குறிப்பிற் கொள்ள வைத்தாள். எம் மணங்கின என்பது நின்னை அணங்கின வில்லை என்பதாம். இதனைத் தலைவி கூறியதாகக் கொள்வர் நச்சினார்க்கினியர் (தொல்.கள.10). அங்ஙனமாயிற் சூளுரைத்த நின்னையும் நீ கைப் பற்றிய என்னையும் அச்சூள் அணங்குதல் தகும். என்வாய்க் கேட்ட என் தோழியையும் அணங்குதல் மருட்கைத்தாம் என்பது தெரிய எம் மணங்கின என்றாளாகக் கொள்க. என்னையும் என் வாய்க் கேட்ட தோழியையும் அணங்கின சூள்கள் நின்னை அணங்குதல் செய்யாமை பற்றிக் கூறினாளெனினு மமையும். மீனெறிதூண்டிலார் 54. யானே யீண்டை யேனே யென்னலனே 1 ஏனல் காவலர் கவணொலி வெரீஇக் 2 கான யானை கைவிடு பசுங்கழை மீனெறி தூண்டிலி 3 னிவக்கும் கானக நாடனொ 4 டாண்டொழிந் தன்றே. (எ-து) வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (வி) யானே ஈண்டையேன் - யான்மட்டும் இங்குள்ளேன்; என்னைப் பிரியாத நலன் கானக நாடனோடு ஆண்டு ஒழிந்தது என்றவாறு. தலைவன் புணர்ந்தபோது என்கண் உளதாகிய நலன் அவன் நீங்கியபோது உடனீங்கிய தென்பதாம். ஏனல் காவலர் - தினைகாப்பவர். யானை கைவிடு பசுங்கழை - யானை வளைத்த கைவிட்ட பசிய மூங்கில், மீனெறி தூண்டிலின் நிவக்கும் - மீன் கோத்த இரையை எறிந்த தூண்டிலின் போல ஓங்கும். தூண்டில் மீனை எறிதலே இல்லை என்க. தூண்டில் என்பது விழுங்கிய மீன் அகப்படும்படி செய்யப்பட்டு இரைகோத்த கொடுவாயிருப்புக் கருவி. இது நாணின் இறுதியிற் பிணிக்கப்பட்டு நாண் தலைப்புக் கழைக்கோல் நுதியின் மடுக்கப்படுவது. இத் தூண்டிலிரும்பின் இரையை மீன் விழுங்கி அதன்கண் அகப்படுவது முண்டு. அகப்படாது இரையை எறிந்து மீன் தப்பிப் போவது முண்டு. இவ்வுண்மையைத் “தலைவலித்தியாத்த, நெடுங்கழைத் தூண்டினடுங்க நாண்கொளீஇக் கொடு வாயிரும்பின் மடிதலை புலம்பப், பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை (286, 287) எனவரும் பெரும்பாணாற்றடிகளானும் தூண்டிற்பொன் மீன் விழுங்கி யற்று (குறள். 931) என்னுங் குறட்டொடரானும் அறிக. இவற்றுள் இரை கதுவிய வாளை எனவும் மீன் விழுங்கியற்று எனவும் வருவன கொண்டு எறிதல் மீனின் வினையாத லல்லது தூண்டிலின் வினையாகாமை காண்க. மீன் இரையை எறியாதவரை வளைந்த தூண்டிற் கழைக்கோல் எறிந்தவுடன் நிவத்தலையே ஈண்டுக் குறித்தாரென்க. அகப்பாட்டினும் பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்துக், கொடுவாயிரும்பின் கோளிரை துற்றி (36) என வருவது காண்க. மீனெறி தூண்டிலினிவக்கும் (ஐங். 278) என்பது கபிலர் எடுத்தாண்ட உவமையாதலால் இப் பாட்டுடையார் அவர்க்கு முந்தியவராவர். அவனைக் கொள்ளற்கிருந்த என்னலம் அவனாற் கொள்ளப் பட்டொழிந்தது என்னும் நயமுந்தோன்ற நிற்றல் காண்க. கவணொலி வெருவல் அலரஞ்சுதலாகவும், யானைக் கை அன்பாகவுங் கொண்டு அன்புண்டாய் வளைந்து அன்பில்லாது நிமிர்ந்து அகன்றனன் என்று குறித்தவாறாம். இஃது ஐந்தடியும் எதுகைவந்த பாட்டு. நலனெய்துதற்கு விரைய வரையச் செய்க என்று தோழிக்குக் குறிப்பித்ததாகக் கொள்க. நெய்தற் கார்க்கியர் 55. மாக்கழி மணிப் பூக் கூம்பத் தூத்திரைப் பொங்குபிதிர்த் துவலையொடு 1 மங்கு றைஇக் 2 கையற வந்த தைவர லூதையொ 3 டின்னா வுறையுட் டாகுஞ் சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே. (எ-து) வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடுமெனத் தோழி தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. (வி) மாக்கழி - பெருங்கழி. மணிப்பூ - மணிநிறப்பூ; கரு நெய்தல். திரையின்கட் பொங்கும் பிசிராகிய தூத்துவலை யொடு என்க. மங்குல் தைஇ - மேகத்தையும் வீசி. சேம் பினிலை பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ (76) என்புழிச் சேம்பினிலை யானைச் செவி போல அசைய வீசி எனப் பொருளாதலா னுணர்க. கையற வந்த தைவர லூதையொடு - தலைவரைப் பிரிந்தார் செயலறும்படி அழையாது வந்து உடம்பு முழுதுந் தடவும் வாடையொடு. இன்னா உறையுட்டு ஆகும் - நெஞ்சிற்கும் இன்னாமை செய்யும் உறையுளை உடையதாகும். ஆதலான் இச் சிறு நல்லூர் உயிர் வாழ்க்கை சில நாளே உள்ளதாகும் என்றவாறு. சின்னாள் கூறியது தலைவன் வரைவோடு வரும் என்னும் நசையான் என்று கொள்க. அப்பால் இறந்துபடுதல் குறித்தாள். இன்னாவுறையுள் சின்னாள் வாழ்க்கை யுடையதேயாம் என்னும் உலகியல்பும் உடனுணர்த்தியவாறு. சிறு நல்லூர் - அவனொடு களவிற் கூடுதற்குக் காரணமான சிறு நன்மையை உடைய ஊர்; வரைந்து கற்பிற் கூடுதல் பெருநன்மை என்பது குறித்ததாம். மணிப்பூ முண்டகத்தின் வேறாய் மணிமருள் நெய்தலை மணிப்பூ என வழங்கிக் காட்டியதனால் இவர் நெய்தற் கார்க்கியர் எனப்பட்ட னராவர். கர்க்கி முனிவர் வழியினர் கார்க்கியர்; கர்க்கி கோத்திரமுண்மை உணர்க. இதனா லிவரந்தண ராவர். அம்ம கேட்பித்தற்கண் வந்தது: தலைவன் சிறைப்புறத்தானாத லுணர்க. சிறைக்குடி ஆந்தையார் 56. வேட்டச் செந்நாய் 1 கிளைத்தூண் 2 மிச்சிற் குளவி மொய்த்த 3 வழுகற் சின்னீர் வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர் 4 வருகதில் லம்ம தானே அளியளோ வளியளெந் நெஞ்ச 5 மர்ந் தோளே. (எ-து) தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு கூறியது. (வி) வேட்டச் செந்நாய் - மரை பன்றி முயல் முதலியவற்றை வேட்டம் ஆடுதலிற் செம்மை பெற்ற நாய்கள்; `ஓட்டியல் பிழையா வயநாய் (அகம். 182) என்பது காண்க. செந்நாய் ஞமலியிலொரு சாதி எனினுமமையும். கிளைத்து என்னும் வினையெச்சம் ஊண் என்னும் வினைப் பெயரில் உண் என்னும் வினை கொண்டது. குளவிகள் மொய்த்தலால் அழுகல் நாற்றத்தையுடைய சிறுநீர். குளவி - காட்டு மல்லிகையின் சருகுகள். நாய் நீர் வேட்கையாற் கிளைத்தது தெரிய வேட்டச் செந்நாய் என்றான். ஒருவருண்ட மிச்சில் பருகலாகாது; அதனினும் நாயுண்ட தென்றிகழ்ந்தவாறு. நீர் வேட்கையின் மிகுதியால் அவ்விகழ்ச்சி கருதாது பருகப்புகின் சருகு மொய்த்து வெயிலிற் கொதித்து அழுகல் நாற்றத்தை யுடைமையாற் பருகற்கு ஆகாமை காட்டினான்; தாகத்தாலிறவாமற் பருகினும் தாகம் தணியப் பருகற்கில்லாமை தெரியச் சின்னீர் என்றான். எம்மைத் தனிவிடாமல் எந்நெஞ்சமர்ந்து இப் பாலையினும் எம்முடனுள்ளவள் எம்மோடு அழுகற் சின்னீர் உண்ண வெளிவருக. அஃதெமக்கு விருப்பம் என்றவாறு. அம்ம - அசை. வளையிடைக் கை கூறியது குடித்தற்கு நீர் அள்ளும் உறுப்பாதல் பற்றி; வருகதில் என்றது வந்தால் இதன் பொல்லாங்கு அவளும் காண்பள் என்றவாறு. தானே அளியளோ அளியள் - அவள் தானே பிரிந்த நிலையினும் இரங்கத்தக்கவள்; நெஞ்சமர்ந்த நிலையினும் இரங்கத் தக்கவள். இனி அழுகற் சின்னீர் தான் உண்ணப்புகுதலின் தன்னெஞ் சமர்ந்தோளும் அஃதுண்பாளாகக் கருதி எம்மொடு உணீஇயர் வருக என்றானெனினு மமையும். இங்ஙனங் கொள்வதின் பொருத்தம், நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்ட, லஞ்சுதும் வேபாக் கறிந்து (குறள். 1128) என்பதனா லுணர்க. செருவார் தோள நின்சிந்தை யுளேனெனின், மருவார் வெஞ்சுர மெனையும் வவ்வுமால் (கிட்கிந்தா காண்டம், அரசியல் 10) என்று தாரை கூற்றில் வைத்துக் கம்ப நாடர் பாடுதலானும் இஃதுணரப்படும். இது களவிற் றலைவன் தலைவியை உடன்கொண்டு போகத் துணிந்தது என இளம்பூரணரும் (தொல். அகத். 44) கற்பிற் றலைவன் தோழி கேட்பக் கூறியது என நச்சினார்க்கினியரும் (தொல். கற்பியல் 5) கொள்வர். அங்ஙனமாயின் சுரத்தின் பொல்லாங்கு தெரியத் தலைவன் போதற்கு முன்னே கூறியதாகக் கொள்ளப்படும். பசியுந்தாகமுந் தணியச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிலும் அழுகற்சின்னீரும் எம்மொடுணீஇயர் வருக எனக் கூறினும் நன்கு பொருந்தும். பசி தணிய மிச்சில் உண்டற்கு ஓய்பசிச் செந்நாயுயங்குமரை தொலைச்சி, யார்ந்தன வொழிந்த மிச்சில் சேய் நாட் டருஞ்சுரம் செல்வோர்க்கு, வல்சியாகும் (நற்றிணை. 43) என்பது காட்டுப. கிளைத்தல் - காலாற் கீறுதல். கிளைத்துண் மிச்சில் என்பதும் பாடம். சிறைக்குடி - மகளிரைச் சிறை காக்குங் காப்புடைய குடி. கோட்டை வேளாளர்பால் இவ் வழக்கம் இன்றும் காண லாம். கழிசிறை என்ற வழக்கானும் இஃதுணரலாம். பிசிர்குடி யாந்தையாரின் வேறு எனத் தெரியச் சிறைக்குடியாற் கூறினார். சிறைக்குடி ஆந்தையார் 57. பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமமொ 1 டுடனுயிர் போகுக தில்ல 2 கடனறிந் திருவே மாகிய வுலகத் தொருவே மாகிய புன்மையா முயற்கே. 3 (எ-து) காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (வி) பூ இடைப் படினும் - தமக்கு இடையே ஒரு பூ வுண்டாயினும்; என்றது ஆண் பெண் இரண்டிற்கும் இடையே ஒரு பூ நின்று ஒன்றையொன்று காணப்பெறாது மறைப்பினும் என்பதாம். அவ்வளவிலே, யாண்டு கழிந்தன்ன - ஓர் யாண்டு பிரிந்து கழிந்தாற் போன்றனவாய், நீருறை மகன்றிற் புணர்ச்சி போல - நீர்வாழ்கின்ற மகன்றில் மிதுனங்களின் சேர்க்கை போல. பிரிவரிதாகிய தண்டாக் காமமொடு - பிரிதலரிதாகிய துய்த் தமையாத காமத்துடன். கடனறிந்து - கடப்பாடறிந்து. உடனுயிர் போகுக தில்ல - காதலர் பிரிந்தவுடன் உயிர் போகுக; இஃதென் விருப்பம். இருவேமாகிய வுலகத்து - ஓருயிர்க்கு ஈருடம்பினே மாகிய வுலகத்தில். ஒருவே மாகிய புன்மை - அவர் பிரிந்தபோதும் அவரின் வேறாய் ஓருயிருடையே மாகிய இழிந்த பழியினின்றும், உயற்கே - தப்புதற்கே; உடனுயிர் போகுக தில்ல என்றாள் என்க. இருவ ராகத்து ளோருயிர் (திருக்கோவை. 71) என்பதனானும், ஓருயிரொழித் திரண்டுடம்பு போவ போல் (சிந். 2638) என்பதனானும் அறிக. இரண்டுடற் குயிரொன் றாயினர் (கம்ப. மிதிலைக். 38). காமமொடு என்றதன் மேலும் உடனுயிர் போகுக என்றது பற்றிப் பிரிந்தவுடன் என்னப்பட்டது. ஒருவேம் எனக் கருதுதல் ஆசிரியர் புன்மையெனக் கூறுதலான் அதற் கேற்ப அவரின் வேறாய ஒருவேம் எனக் கொள்ளப்பட்டது. இருவேம் - எப்போதும் இரட்டையேயாய்ச் சேர்ந்து நிகழ்வேம். ஒருவேம் - பிரிந்து வேறாய் நிற்கும் ஓருயிரேம்; நற்றிணையுள், `நினக்கியா னுயிர்பகுத் தன்ன மாண்பினேன் (128) என நட்பிற் கூறுதலும் இக் கருத்தையே வலியுறுத்தும். உயிர் பகுத்தல் - ஓருயிரை இரண்டாகப் பகுத்து ஈருடம்பின் வைத்தல். மகன்றில் - எப்போதும் ஆணும் பெண்ணும் இணை பிரியாதனவும், சிறிது பிரிந்தது போலக் காணப்படினும் துயராற்ற மாட்டாதனவும் ஆகிய நீர்வாழ் பறவைகள்; இணைபிரி மகன்றலிற் பேர்த லாற்றாள் (பெருங் கதை 1, 53, 96) எனவும், துணைபிரி மகன்றி லொத்தாள் (சிந். 302) எனவும் வருவன கண்டு கொள்க. காளிதாசரும் தாமரை யிலையிடைப்பட்ட சேவலைக் காணாது பெடை புலம்பு வது கூறினார் (சாகுந்தலம், அங்கம் 4). வெள்ளி வீதியார் 58. இடிக்குங் கேளிர் 1 நுங்குறை யாக நிறுக்க லாற்றினோ 2 நன்றுமற் 3 றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் 4 கையி லூமன் கண்ணிற் காக்குங் வெண்ணெ யுணங்கல் 5 போலப் பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.6 (எ-து) கழற்றெதிர்மறை. (வி) இடிக்குங் கேளிர் - இடித்துரைக்குங் கேண்மை யுடையீரே. நும் குறை - நுமக்கு இன்றியமையாத காரியம். ஆகம் நிறுக்கல் ஆற்றினோ நன்று - என்னுடம்பு உருகுதற்கு முன்னர் நிறுத்தலைச் செய்யின் நன்மை தருவது. மற்று இல்ல - வேறெவையும் நன்மை தருவன இல்லை. பரிதி காய்தலினால் வெய்தாகிய பாறையின் ஒருபுறத்து வைத்த வெண்ணெ யுணங்கல் போல, ஆகம் நோன்று கொளற்கு அரிதே - உடம்பு பொறுத்துக் கொள்ளுதற்கு அரியதேயாம்; என்னை காரணமெனின் இந் நோய் ஆகம் பரந்தன்று ஆதலால் என்க. வெண்ணெய் உணங்கல் போல ஆகம் உருகாது பொறுத்துக் கொள்ளற்கரிது என்றவாறு. இங்ஙனம் கொள்ளாது உணங்கல் போல நோய் பரந்தன்று என்பது சிறிதும் பொருந்தாது. வெண்ணெய் உருகினால் அதனைச் சேர்த்து அள்ள நினைதல் போல நோய் பரந்தா லதனைச் சேர்த்து அள்ள நினையாமையும் அதுவே வெண்ணெய்போற் கண்ணிற் காக்கும் பொருளாகாமையும் நோக்கி யுண்மை யுணர்க. உடம்பு முழுதும் உருகுதற்கே பிறரும் வெண்ணெய்ப் பாவை வெந்துடன் வெயிலுற் றாங்கு (சிந். 1532) எனக் கூறுதல் காண்க. வெண்ணெய் உணங்கல் - வெண்ணெய்த் திரளை வெயில் பரந்த நிலையி லுள்ளது. இது காமக்காய்ச்சல் பரந்த நிலையிலுள்ள உடம்பிற்கு உவமையாயிற்று; காமவெயில் வெண்ணெய்ப் பாவை (சிந். 682) என்பது காண்க. இவ்வுடம்பு உயிர்த்தோழனாகிய பாங்கனாற் காக்கப்படுதல் கருதிக் கையிலூமன் கண்ணிற்காக்கும் வெண்ணெ யுணங்கலோடு உவமித்தான். அப் பாங்கன் கை தலைவி அணைக்குங்கை போல இன்பஞ் செய்யாமையிற் கையின்மை கூறினான். தலைவனைக் கண்டு இரங்குதலல்லது அவ னியல்பு பிறர்க்குச் சொல்ல இயலாமையான் ஊமனோடு வமித்தான். கண்ணிற் காக்கும் வெண்ணெய் - கண்மட்டும் கொண்டு காக்கும் வெண்ணெய். கண்ணிற் காக்கும் - கண் போல காக்கும் என்னு நயமுந்தோன்ற நின்றதுமாம். ஞாயிறு காயும் வெவ்வறை - பரிதி காயும் வெய்ய பாறை, வெண்ணெய் உருகுதற்கு ஞாயிறு காய்தலே அமைவதாக வெவ்வறை கூறியது விரைந்து உருகிப் பரப்பது கருதி; மெய்யுருகிக் கண்ணுருகி நெஞ்சுருகிக் காமவெயில் வெண்ணெய்ப் பாவை போல் மெலிகின்றாரே (சிந். 682) என்பதனாற் காம வெயிலில் மெய்யுருகுதல் உணரலாம். இனிப் பொன்றுஞ் சாகத்துப் பூங்கண்கள் போழ்ந்த புண் (சிந். 1332) என்புழிப் போல ஆகம் நெஞ்செனக் கொண்டு அதனை நிறுக்கலாற்றினோ நன்று என்றாலும் பொருந்தும்; வெண்ணெய் வெங்கனன் மீமிசை வைத்த தொத், துண்ணையா வுருகாவுளளாயினாள் (சிந். 1309) என்பதனான் இஃதுணரப்படும். அவ் வழக்கெல்லாம் நோயை வெண்ணெயோடுவமிப்பது பொருந்தாமை காட்டும். மேல் நோய் என்றது பற்றி நுங்கு உறை ஆகம் நிறுக்கலாற்றினோ நன்று எனக் கூறினானெனினும் பொருந்தும். நுங்கு உறை - விழுங்கு மருந்து. இடிக்கும் நோய்க்கு விழுங்கு சொற்களை மருந்தாகப் பாங்கன் நினைப்பது கருதிக் கூறினான். நுங்குதல் - விழுங்குதல்; அரவு நுங்குமதியின் (395) என்பது காண்க. உறை - மருந்து; உறையொன் றின்றித் தண்டா நோய் மாதர் தலைத் தருதி (சிலப். கானல். 30). கேளிர் எனப் பன்மையாற் கூறியது இப் பாங்கன் பார்ப்பானாதற் சிறப்புப்பற்றி என்க; ஈண்டுத் தலைவன் சொற்கேட்பவன் பார்ப்பான் என்பது பேராசிரியர் கூறியது (தொல்.செய். 196). ஆகம் பரந்தன்று இந்நோய் எனக் கூறுவதன் பொருத்தம் மெய்பரந் தெவ்வங் கூர்ந்த வேமுறு துயரம், வெம்மையிற் றான்வருத் துறீஇ (நற். 273) என்பதனானுணர்க. மோசிகீரனார் 59. பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் 1 அரலைக் குன்றத் 2 தகல்வாய்க் குண்டுசுனைக் குவளையொடு பொதிந்த குளவி நாறுநின் நறுநுதன் 3 மறப்பரோ மற்றே முயலவும் சுரம்பல விலங்கிய வரும்பொருள் நிரம்பா வாகலி னீடலோ 4 வின்றே. (எ-து) பிரிவிடை யழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. (வி) பதலை - ஒருகட் கிணைப்பறை. பாணி - அதன்கண் ஒலிப்பிக்குந் தாளவரிசைகள். பாணிப் பரிசிலர் - தாள வரிசை களின் தரத்திற்குத் தக்க பரிசில் பெறும் பாணர். பரிசிலர் கோமான் - பரிசிலரைப் புரந்தளிக்கும் வேந்தன். அரலைக் குன்றம் - சேலம். ஓசூர்ப்புறத்து `அரலி குண்டா என்பது ஒன்றுண்டு; ஆண்டே நள்ளி யென்னும் பெருவள்ளலுடைய தோட்டி மலையாகிய அங்குசகிரியும் உண்டு. இவற்றால் இக் கோமான் நள்ளி என்பது பொருந்தும். குளவி - மலைப்பச்சை. `குளவித் தண் கயம் என்பது நற்றிணை (232). குவளையொடு குளவி நாறு நறுநுதல் என்றது அரிதின் மலையேறிச் சுனையினிறங்கி நுகரு நறுமணம் இல்லத்தே எளிதினுகர்தற்காய சிறப்பைக் குறித்தது. சுரம்பல விலங்கிய அரும் பொருள் - அருவழிகள் பல குறுக்கிட்ட அரிய பொருள் : என்றது குறுக்கிட்ட வற்றைக் கடந்தாலுங் கிடைக்கரியது குறித்தது. முயலவும் நிரம்பா வாகலின் - முயற்சி செய்யா நிற்கவுங் குறித்த பருவத்துள் நிறையா ஆதல் காரணமாக. நீடலோ இலர் - வரும் எனக் குறித்த நாளினும் நீடுதலோ இல்லராவர் என்றவாறு. அரும் பொருளென்று அதன் இயல்புணர்ந்தவர் முயன்றும் நிரம்பாமை யுண்டென் றுணர்வராதலின் அது நிரம்பும் பொருட்டு நீடார்; அப் பொருளினும் அரிய நின்னுயிர் காத்தற்கு விரைந்து வருவர் என்று வற்புறுத்தினாள்; `பெண் பெற்றானஞ்சா னிழவு என்னும் பழமொழி நோக்குக. `அரலை மரலாம் (பிங்கலம்) என்பதனால் அது மரற் செடியின் வேறு மரமாதலுணரலாம். குன்றத் தகல்வாய்க் குண்டு சுனை கூறியது அதிற் குவளையும் குளவியும் கொள்ளற்கரியன என்பது தெரிய என்க. நின் நுதலின் அழகும் மணமும் நினைவரல்லது பொருள் நினையார் என்பது காட்டினாள். முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது, பைந்தொடிப் பேதை நுதல் (குறள். 1238) ஆதலின் அதனை மறப்பரோ என்றாளெனினும் நன்கு பொருந்தும். நுதல் நீவிப் பிரிந்தவராதலின் அதனை மறப்பரோ என்றாள். கண்ணு நுதலு நீவி முன்னின்று பிரிதல் வல்லிரோ (நற். 71) என்பதனா னறிக. நுதல் பிரியும் பொழுதே பசப்பது வாணுதல் பசப்பச் செலவயர்ந் தனையே (ஐங். 423) என்பதனா னுணர்க. பரணர் 60. குறுந்தாட் கூதளி யாடிய 1 நெடுவரைப் 2 பெருந்தேன் கண்ட விருக்கை முடவன் 3 உட்கைச் சிறு குடை 4 கோலிக்கீ ழிருந்து சுட்டுபு நக்கி 5 யாங்குக் காதலர் நல்கார் நயவா ராயினும் பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே. (எ-து) பிரிவிடையாற்றாமையிற் றலைமகள் தோழிக் குரைத்தது. (வி) கூதளி யாடிய நெடுவரை - கூதளங் கொடி காற்றாலாடிய நெடிய மலை, கூதள மூதலைக் கொடி (அகம். 255) எனவருதலான் கூதளி கொடியாதலறிக. இது வெண் கூதாளம் எனப்படும். நெடுவரைப் பெருந்தேன் - நெடிய மலையிற் றொடுத்த பெரிய தேன்கூடு. ஏற இயலாமை தெரிய நெடுவரை என்றாள். படர்ந்த கூதளங்கொடி பிடித் தேறலாமெனின் அதுவும் நிலை யின்றிக் காற்றாலசைவது கூறினாள். அசையினும் வலியினாற் பற்றப்பட்டு ஏறலாமெனின் ஏறுதற்குரிய வலியின்மை தெரியக் குறுந்தாள் இருக்கை முடவன் என்றாள். தாளின் குறுமையால் எழுந்து நிற்க இயலாமல் இருத்தலையுடைய முடவன் என்க. முடவன் ஆசை மிகப் பெருந்தேன் என்றாள். கீழிருந்து - அத் தேன் கூட்டின் கீழே இருந்து. உட்கைச் சிறு குடை கோலி - உள்ளங்கையைச் சிறிய வுண்கலமாகக் குழித்துக் கொண்டு. சுட்டுபு - கீழிருந்தபடியே அத் தேன்கூட்டை மற்றைக் கைவிரலாற் சுட்டுதல் செய்து குடையாகக் கோலிய வறிதாகிய உள்ளங்கையை நாவால் நக்கினாற்போல. காதலர் - நங்காதற்குரியவர் அத் தேன் போலத் தம்மை நல்கார், நம்மை நயத்தலுஞ் செய்யார். எனினும் பல் போதும் அவரைக் கண்ணாற் கண்டிருத்தலும் உள்ளத்துக் கினிதாம் என்றவாறு. தேன் தன்னை முடவற்கு நல்காமையும் அவனை நயவாமையும் நினைக. முடவன் ஏறவியலாத உயர்நிலையிற் றேனைக் கண்ட மாத்திரையே அதன் கீழிருந்து அதனைக் கையினேந்தியது போலவும் அத் தேனையே நக்குவது போலவும் நினைந்து வறுங்கை சுவைத்தாலும் அவற்கின்ப மாயினாற் போலத் தலைவரைக் கண்ட மாத்திரையில் அவர் மெய்யுறும் இன்பம் என்னுள்ளத் துண்டாவதென்றும் அதுவும் இப் பிரிவினால் இல்லையாயினேனென்றும் தலைவி வருந்திக் கூறினா ளென்க. நல்கார் நயவார் என்றது தலைவர் ஈண்டுள்ளபோது தம் பரத்தைமையால் தலைவிக்கு நல்காமையும் தலைவியை அன்புற்று நோக்காமையுங் குறித்தது. அங்ஙனமாயினும் அவரைப் பல்காற் காண்டல் மாத்திரையும் உள்ளத்துக் கினியதே என்று தன்னுயிரினுஞ் சிறந்த கற்பின் மகிழ்தலைப் புலப்படுத்தினாள். நல்கார் என்பது உடம்பிற்கு இனியது உதவார் என்றவாறு. இஃது உள்ளத்துக்கினிதே என்பதனாற் பெறப்படும். நல்கார் நயவார் என்றலாற் றலைவர் பரத்தைமை தெரிய வைத்தாள். `காவினு ணயந்து விட்டார்களே (சிந். 1905) என்பதனால் நயத்தல் அன்புற்று நோக்குதலாலறிக. கண்ட மாத்திரையும் தன் உள்ளத்துக்கினியதாதல் கூறித் தலைவர் விரும்பும் பரத்தையர்க்கு மெய்யுற்றாலும் உள்ளத்துக்கினியாத வஞ்சம் குறிப்பித்தாள். தும்பிசேர்கீரனார் 61. தச்சன் செய்த சிறுமா வையம் ஊர்ந்தின் புறாஅ ராயினுங் கையின் ஈர்த்தின் புறூஉ மிளையோர் போல உற்றின் புறேஎ மாயினு நற்றேர்ப் பொய்கை யூரற் கெண்மை 1 செய்தின் புற்றனெஞ் 2 செறிந்தன வளையே. (எ-து) தோழி தலைமகன் வாயில்கட் குரைத்தது. (வி) சிறுமா வையம் - குதிரையொடு செய்யப்பட்ட சிறு தேர்; இச் சிறு தேரின் றொழிற்றிறந் தோன்றத் தச்சன் செய்த என்றாள்; தச்சச்சிறார் புனைந்ததன்று என்பது குறித்த வாறாம். மா - குதிரை. ஊர்தல் - ஏறிச் செலுத்துதல், இளையோர் - இளமகார். ஊரனுக்கு அருமை செய்து பரத்தையர் போல உற்றின்புறே மாயினும் வையம் ஈர்த்தின்புறும் இளையோர் போல அவற்கு எண்மை செய்து இன்புற்றனெம்; அதனால் வளை நழுவாது செறிந்தன என்றவாறு. இது களவுக் காலத்து அருமையாதலைச் செய்து உற்றின் புற்றயாம் இக் கற்புக் காலத்து எளிமையாதலைச் செய்து வையம் ஈர்த்தின்புறும் இளையோர் போல இன்புற்றனெம் என்றதாம். இப்போது அருமையாயின் செய்து உற்றின்புறுவார் பரத்தையர் என்றும் எளிமையாயின செய்து, அம்மட்டில் இன்புறுவோம் யாமென்றும் தோழி வாயில்களறியக் கூறினாள். அருமைக் காலத்துப் பெருமை காட்டிய, எண்மைக் காலத்திரக்கத்தானும் (தொல்.பொ.கற்பி. 9) என்பது தோழி கூற்றிற்கு இடனாத லுணர்க. எண்மை செய்தல் - உணவிடுதல், வாய்பூச நீர் பெய்தல் முதலியன ஆம். இவை இல்லுட் டொழுத்தையருஞ் செய்வாராதலின் எண்மை செய்து என்றாள். `ஊரற் கெண்மை என்பது ஊரன் கேண்மை எனப் படிக்கப்பட்டது. இதுவே பாடமெனின் ஊரனது நட்பை யாஞ்செய்து இன்புற்றனெ மன்றி நந்நட்பை அவன் செய்தின்புற்றிலனென்று கூறினாள் என்க. களவினும் இவ்வாறு நாடனொடு செய்து கொண்டதோர் சிறுநன் னட்பே (377) எனக் கூறுதல் காண்க. இருவரும் ஒத்துத் துய்ப்பதே உற்றின்புறுவதாதலின் இங்ஙனங் கூறினாள். பரத்தையர்க்கு ஊர்ந்தின்புறும் பெருந்தேர்போல்பவன் எமக்கு ஈர்த்தின்புறுஞ் சிறுமா வையம் ஆவன் என்றிரங்கிக் கூறியவாறு; பரத்தையர்பாற் றான்செய்யுங் கேண்மையால் அவரைச் சுமத்தலுஞ் செய்வன், யாம் செய்யுங் கேண்மை யால் ஈர்க்கப்படுவன் எனக் குறிப்பித்தாள். பொய்கையூரன் என்றது எல்லாருந் தோயுநீர்நிலை போல வரையாது தோயப்படுவன் எனக் குறித்ததாம். கையினீர்த்து என உவமையிற் கூறியதனால் எண்மையைக் கையாற் செய்து என்னும் பொருளிற் கொள்க. யாம் செய்வது எண்மை என்பதனாற் பரத்தையர் செய்வது அருமையெனக் குறிப்பித்தாள். பரத்தையர் செய்வது அருமையாதல் வேம்பின் பைங்காயென் றோழி தரினே, தேம்பூங் கட்டி யென்றனிர் (196) என்பதனானும், தாம் செய்வது எண்மையாதல் தண்ணியதரினும் வெய்யவுவர்க்கு மென்றனிர் (196) என்பதனானும் அறிக. சிறைக்குடி ஆந்தையார் 62. கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை நாறிதழ்க் 1 குவளையொ டிடைப்பட 2 விரைஇ ஐதுதொடை மாண்ட கோதை போல நறிய 3 நல்லோண் மேனி முறியினும் வாய்வது 4 முயங்கற்கு மினிதே 5. (எ-து) தலைமகன் இடந்தலைப்பாட்டின்கட் கூடலுறு நெஞ்சிற்குச் சொல்லியது. (வி) கோடல் - காந்தள் மலர். எதிர்முகையாகிய பசிய மலர் முல்லை. இவற்றைக் குவளையொடு இடைப்பட விரவி என்க. விரவுதல் - கலந்து தொடுத்தல். இடைப்பட விரைஇ என்றது நெருக்கமில்லாமல் இடைவெளி யுண்டாகக் கலந்து தொடுத்து என்றவாறு. ஐதுதொடை மாண்ட கோதை போல - வியப்பெய்தத் தொடுத்தல் மாட்சிமைப் பட்ட மாலை போல. நறிய நல்லோள் - மூக்கிற்கு நறுமையும், கண்ணிற்கும் மனத்திற்கும் நன்மையுஞ் செய்பவள். மேனி காந்தளாகிய கைகளும் முல்லை எதிர்முகையாகிய பற்களும் குவளை யாகிய கண்களும் விரவி இடையிட்டுத் தொடைமாண்ட கோதை போல விளங்குதல் காட்டினான். குவளையோடு எனக் கூறியது கண்ணின் உயர்பு தோன்ற நின்றது. இம் மேனி முறியினும் வாய்வது - ஒவ்வோருறுப்பும் ஓரோர் மலராக இடையிட்டுத் தொடுத்தது போலுளாளாதலும் யாண்டும் ஊற்றின்பஞ் செய்தலான் முறியினுஞ் சிறப்புடையது என்றவாறு. அம் முறிபோற் காண்டற் கினிதாதலன்றி அம் முறியினும் வாடிக் குழையாது முயங்கற்கும் இனிதாயது என்றவாறு. முறி முயங்கக் குழையு மென்பது மெல்லிலை குழைய முயங்கலும் (361) என்புழிக் கண்டு கொள்க. ஒரோ ருறுப்பே மலராதலும் யாண்டுஞ் சாயலான் முறியாதலுங்கொண்டு கூறியதாம். புணர்ச்சியின் அணிமையால் அணைத்த கைகளையும் அங்ஙனம் அணைத்தற்கு முன் குறித்துக் கொண்ட நகை முறுவலையும் அதற்குமுன் மதியுடன்பட்ட கண்ணோக் கினையும் முறையே நினைந்து அவற்றைக் கோடல், முல்லை எதிர்முகை, குவளையாக உருவகப்படுத்தி, மேனி முழுதும் இன்பஞ் செய்ததறிதலால் அதனை முறியினுஞ் சிறப்பித்துத் தன் மகிழ்ச்சி புலப்படுத்தினான். நச்சினார்க்கினியர் (தொல். பொ. அகத். 14) புணர்ந்துழி மகிழ்ந்து கூறியது இஃதென்றதனால் இப் பொருளுண்மை இனிதறிக. கோதை போல நறிய நல்லோள்மேனி வாய்வது இனிது என்றவாறு. முயங்குக மினிதே என்பதும் பாடம். உகாய்குடிகிழார் 63. ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக 1 வெண்ணுதி யவ்வினைக் கம்மா வரிவையும் வருமோ எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே. (எ-து) பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. (வி) அறம் பெற ஈதலும் இன்பம் பெறத் துய்த்தலுமாகிய காரியங்கள். இல்லோர்க்கு இல்லென - அக்காரியங்கட்குக் காரணமாகிய பொருளில்லா தார்க்கு இல்லையாமென்று. செய்வினை - பொருள் செய்யும் வினையைக் கைம்மிக எண்ணுதி - செய்வதின் மேலாக நினைத்தி. கை - செய்வ தென்பது கையறியாமை (குறள். 925) என்பதனா னுணர்க. அவ் வினைக்கு - அவ் வினை செய்தற்கு. அம் மா அரிவையும் வருமோ - அழகிய மாமை நிறத்தினையுடைய பெண்டும் உடன் வருவளோ, அவளின்றி எம்மைத் தனியே செல்ல விடுப்பையோ. நெஞ்சே உரைத்திசின் - மனனே சொல்வாய். நெஞ்சே எண்ணுதி என்றது யானங்ஙனம் நினையேன் என்னுங் குறிப்பிற்று. அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை (குறள். 49) என்பதனான் இதுவே அறனெனவும், ஈட்டிவரும் பொருளான் இன்பந்துய்த்தல் கருதி இப்போது இவளோடு துய்க்கும் இன்பம் விடேனெனவும், தான் துணிந்தது குறித்து இவ்விரண்டுங் கெடாமல் அம் மா அரிவையும் வருமோ எனவும், இவை இப்போதே கெட எம்மை உய்த்தியோ எனவும் வினாவினான். அம் மா அரிவை என்றான் அவளுடன் வராதொழியின் அவள் மாமை சிதையுமென்பது கருதி. எம்மை உய்த்தியோ என்றான். நின்னால் வலித்துய்க்கப்பட்டாலன்றி யானே இயல்பாகச் செல்லேன் என்பது தோன்ற. தலைவி மனையிறந்து வாராமை தானறிந்ததாதலின் அரிவையும் வருமோ, அது நீ அறிவையாயின் உரைத்தி என்றான். கருவூர்க் கதப்பிள்ளையார் 64. பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப் 1 புன்றலை மன்ற நோக்கி மாலை மடக்கட் குழவி 2 யணவந் தன்ன 3 நோயே மாகுத 1 லறிந்துஞ் சேயர் தோழி சேய்நாட் டோரே. (எ-து) பிரிவிடை ஆற்றாமை கண்டு வருவர் எனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) பல பசுக்கள் நெடிய நெறிக்கண் அகன்று போய் வந்தன என்று அவையில்லாத புல்லிய இடத்தையுடைய மன்றினைப் பார்த்து மாலைப்போதில் இளங்கட் குழக் கன்று பின்னும் வருவனவோ என்று தலையெடுத்து மேனோக்கினாற் போன்ற துன்புடையே மாதலை இங்குள்ள காலத்துக் கண்டறிந்தும் சேய்மைக்கணுள்ள நாட்டினராகிய தலைவர் வரக்குறித்த பருவத்தினுஞ் சேய்மைய ராயினார் என்றவாறு. தாயர் வந்தன என்று நோக்கிப் புன்றலை மன்றால் ஏமாறிப் பின்னும் வருவனவோ என்று மாலையிற் கன்றுகள் அணவந்த துன்பினை உவமையாக்கினாள். இங்ஙனம் பிரியாது ஊரிலுள்ள போதும் மாலையில் இல்லம் வாரா ராயின் வரும் வழியைத் தலையெடுத்து நோக்கியிருக்கும் தன் துன்பத்தைப் புகுநிலையிற் பல்காற் பார்த்தறிந்தும் காலத்தாற் சேயராயினார் என்பது நன்கறிய வேண்டி. மடக்கண் - தாயை இவ்வாறு நெடுநேரம் பிரிந்து பார்த்தறியாத இளங்கண். சேய்நாட்டோர் என இடச்சேய்மை கூறியதனால் சேயர் என்புழிச் சேய்மைக் காலம் பற்றியதாயிற்று. சேய்நாட்டுப் பிரிந்து சேணுறைநர் (அகம். 59) என வந்தவிடத்துப் பழையவுரைகாரர் `பிரிந்து தாழ்க்கவுறைகின்றவர் என வுரைத்தது காண்க. ஈண்டுச் `சேயர் தோழி செய்நாட்டோரே எனப் படித்தலுமாம்; அங்ஙனமாயின், பொருள் செய்யு நாட்டினரென்றும். தந்நாடல்லாத நாட்டைத் தம்மதாகச் செய்த நாட்டினரென்றுங் கூறுக. பசுநிரை மிக்க ஆனிலைக் கருவூரினராதலாற் றாம்பல்காற் பயின்றறிந்ததை உவமையாக்கினார். அணவந் தன்ன நேயேம் என்பதும் பாடம்; அணவந்தாற் போன்ற அன்புடையேம் என்பது பொருள்; நே - அன்பு, ஈரம். நேநெஞ்சின் (புறம். 3) என்புழிக் காண்க. கந்தப்பிள்ளை சாத்தனார் என்பதும் பாடம். வந்த என என்பது வந்தென எனத் திரிந்தது. கோவூர் கிழார் 65. வன்பரற் றெள்ளறல் 1 பருகிய விரலைதன் இன்புறு துணையொடு மறுவந் துகளத் 2 தான்வந் தன்றே தளிதரு தண்கார் 3 வாரா துறையுநர் வரனசைஇ 4 வருந்திநொந் து5 றைய விருந்திரோ 6 வெனவே. (எ-து) பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. (வி) தன் இன்புறு துணையொடு - தன் இன்பமிகுதற்குக் காரணமான துணையாகிய பிணையொடு, வன்பரற் றெள்ளறல் பருகிய இரலை - சேறே இல்லாது வலிய பரற்கற்களே யுடைமையாற் றெள்ளிய நீரைக் குடித்த கலைமான். மறுவந்து - மீளவந்து உகள - புணர்ச்சிக் குறியிற் றுள்ளி விளையாடா நிற்கவும். வாரா துறையுநர் - இன்னும் ஈண்டு வாராமல் ஆண்டுத் தங்குகின்றவர். வரல் நசைஇ - வருதலை விரும்பி. வருந்தி நொந்து உறைய - உள்ளம் வருந்தி உரையால் நொந்து உடம்பு தங்க. இருந்திரோ என உயிர் வைத்திருந்தனிரோ என இடித்து, தளிதரு தண்கார் தான் வந்தன்று - துளியைப் பெய்யுந் தண்ணிய மேகந்தான் வந்தது என்றவாறு. மறுவந்து - நீர் குடித்துச் சேக்குமிடத்து மீள வந்து.உகளுதல் - இப் பொருட்டாதல், குறவர் முன்றின் மாதீண்டு துறுகற், கல்லாமந்தி கடுவனொ டுகளும் (ஐங். 77) என்புழிப் பழைய வுரைகாரர் குறவர் முன்றிலின் மாதீண்டு துறுகற் கண்ணே நாணாது மந்தி கடுவனோடுகளும் என வுரைத்தது கொண்டுணர்க. ஒரு விலங்கிற்குள்ள அன்பும் அவர்க்கில்லை என்றவாறு. இருந்திரோ என்றது, கார்ப் பருவந்தப்புதற்கண் இரான் என்று தன் கருத்தால் நினைதல் குறித்தது. தன் கற்பால் இட்ட வழக்காயிருக்கும் கார் இவ்வாறு இருந்தீரோ எனக் கேட்குமாறு தலைவர் பருவந் தப்பியும் உயிர் வாழ்தலை நொந்துரைத்தவாறு. அருமழை தரல்வேண்டிற் றருகிற்கும் பெருமையளே (கலி. 39) என்பது காண்க. தெள்ளறல் பருகிய இரலை உகள என்றது மழை பெய்தற்கு முன்வருவேம் என்றவர் பெய்து பருகி இரலை உகளா நிற்கவும் வந்திலர் என்பது குறித்து வந்தது. வாரா துறையுநர் வரமுயலாது தங்குபவர். கோவத்தனார் 66. மடவ மன்ற 1 தடவுநிலைக் கொன்றை கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய பருவம் வாரா வளவை நெரிதரக் கொம்புசேர் கொடியிண ரூழ்த்த 2 வம்ப மாரி 3 யைக் காரென மதித்தே. (எ-து) பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி பருவமன்றென்று வற்புறீஇயது. (வி) தடவுநிலைக் கொன்றை - உடலாற் பருமையுள்ள நிலையுடைய கொன்றை மரங்கள். மடவ - உள்ளத்தாற் பேதைமை யுடையன. கல்பிறங்கு அத்தஞ் சென்றோர் என்றாள். செல்லும் வழியிலுள்ள இடையீடுகள் வருதற் கண்ணுமுண்மை தெரியக் கூறிய பருவம் வாரா அளவை என்றது அவர் பொய் வழங்கலர் என்னும் உறுதியைக் குறித்தது. கொடியிணரூழ்த்த-கொடிமாலையாகப் பூங்கொத்துக்களை மலர்த்தின. வம்பமாரி - நிலைத்த பருவமழை யின்றி நிலை யில்லாமையையுடைய மழை. காரென மதித்தே - கார்ப்பருவ மழை யென்று தப்பக் கருதியே. காரென மதித்தே ஊழ்த்த. மதித்தே என்றதனால் மரங்களும் உள்ளம் உடையன என்றும் மடவ என்றதனால் அறிவுப் பெருக்கந்தான் போதாதென்றும் குறித்தாள். குறித்த பருவந் தாழ்த்த தலைவனை மடவன் என்னாது தோழி கொன்றை, முல்லை, மஞ்ஞை முதலியவற்றை மடவ என்று குறித்துமொழி கிளவியாற் படைத்துக் கூறி ஆற்றுவித்தல் கவிமரபேயா மென்க. கொன்றை கொடியிண ரூழ்ப்ப (பரிபாடல் 8, அடி 24) என்புழிப் பரிமேலழகர் `கொன்றைகள் தாராகிய இணர்களை மலர எனவுரைப்பது காண்க. அள்ளூர் நன்முல்லையார் 67. உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை வளைவாய்க் கொண்ட வேப்ப 1 வொண்பழம் புதுநா ணுழைப்பா னு2 திமாண் வள்ளுகிர்ப் பொலங்கல வொருகா சேய்க்கும் நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. (எ-து) பிரிவிடை யாற்றாது தலைமகள் தோழிக் குரைத்தது. (வி) உள்ளார்கொல் - நம்மை நினையார்கொல். கிள்ளை வளைவாய்க்கு மகளிர் வள்ளுகிர் உவமையாயிற்று. மகளிர் வள்ளுகிர் செம்மை யூட்டப்படுதல் நினைக: குவிமுகை முருக்கின் ... ... நகைமுக மகளி ரூட்டுகிர் கடுக்கு முதிராப் பல்லித ழுதிர (அகம். 317) என்பதனால் மகளிர் உகிர் செம்மை யூட்டப்படுதலும் அதுவே செம்முருக்கிதழ்க்கு உவமையாதலுங் கண்டுண்மை யுணர்க. பொருநராற்றுப் படையுள் பாடினிக்குக் கிளிவா யொப்பின் ஒளிவிடு வள்ளுகிர் (34) கூறுதல் காண்க. சார்ந்தனளிருந்து வாங்குபு கொண்டு, கிள்ளை வாயி னன்ன வள்ளுகிர், நுதிவிரல் சிவப்பக் கதியறிந் தியக்கலின் (பெருங். 4 : 7: 41-43) என வருதலானும் இஃதுணர்க. புதுநாண் நுழைப்பான் - புதிய நூலை நுழைக்கும் பொருட்டு. நாண் - நூல்; காப்பின்னாண் கழுத்தினாண் (கம்பரா. அயோத்தி. கைகேசிசூழ்) என்பன பற்றியறிக: நுழைப்பான் நுதி மாண் வள்ளுகிர்ப் பொலங்காசு - நுழைக்கும் பொருட்டு விரல் நுதியில் மாணவைத்த கூரிய நகங்கட் கிடையிலுள்ள பொற்காசு. நுழைப்பான் மாண்ட உகிர்க்காசு என்க. நுழைப்பான் என்பதை இங்ஙனம் எச்சமாகக் கொள்ளாது பெயராகக் கொள்ளின் ஆண் பாலாதலான் அவன் நகங்களைக் கிளிவாய்க்கு உவமையாக்குதல் வழக்காறன்றென்க. இவ்விடர்ப்பா டொன்றுமின்றி `நுழைப்பா ணுதிமாண் வள்ளுகிர் என்பதே `நுழைப்பா னுதிமாண் வள்ளுகிர் என எழுதினார் பிழைப்பாயிற் றெனின் ஈண்டைக்கு நன்கு பொருந்தும். பழநூல் பெருகின் கலங்களிற் புது நூல் நுழைப்பது மகளிர் செய்வது. வேப்பம்பழம் காசேய்க்கும் இந் நிலையினும் காடிறந்தோர் உள்ளார்கொல் என்றாள்; வேம்பின் ஒண்பூ உதிர்தற்கு முன்னர் வருவம் என்று தலைவர் தெளிவித்துச் சென்றது நினைந்து, பூ நிலையில் வருவம் என்றவர் பழநிலையினும் நினையார் என்பது கருத்து. `வேம்பி னொண்பூ வுறைப்பத் தேம்படு கிளவியர் தெளிக்கும் பொழுதே (ஐங். 350) என்பதனான் இஃதறிக. வேம்பி னொண்பூ யாண ரென்னை யின்றியுங் கழிவது கொல்லோ (24) என்றதும் இக் கருத்தே பற்றி வந்தது. நிலங்கரிகாடு - எல்லாம் உண்டாததற்குக் காரணமான நிலம் வெம்மையாற் கரிந்தகாடு. கள்ளியங்காடு - அக் காட்டிற் கள்ளி தானுண்டு, பயமரம் எதுவுமில்லை என்பது குறிப்பு. வேப்பம்பழம் நிறத்தானும் வடிவானும் பொற்காசு போலு மென்க. இனிக் கொல்லும் ஓவும் அசையாகக் கொண்டு கள்ளியங் காடிறந்தோர் உள்ளார் எனத் துணிந்து அதற்கு வேப்பவொண் பழம் பொலங்கா சேய்க்கும் நிலங் கரி என்று சான்று காட்டினாள் என்றலும் நன்கு பொருந்தும். வேம்பு பூக்கும் வேனற் பருவம் அவர் வருவம் என்று குறித்ததாகும். அள்ளூர் பாண்டி நாட்டூர் என்பது கொற்றச் செழியன் பிண்ட நெல்லி னள்ளூர் (அகம். 46) என்பதனாலறிக. அள்ளூர் நன்முல்லையார் 68. பூழ்க்கா லன்ன செங்கா லுழுந்தின் ஊழ்ப்படு முதுகா யுழையினங் கவரும் அரும்பனி யச்சிரந் 1 தீர்க்கு மருந்து பிறிதில்லை 2 மணந்த மார்பே. (எ-து) பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது. (வி) பூழ்க்கால் - குறும்பூழின் அடி. செங்கால் - செவ்விய தாள். ஊழ்ப்படு - ஊழ்த்தப்பட்ட. உழையினம் - கலையும் பிணையும்; ஆணும் பெண்ணும் சேரநின்று கவர்தல் குறித்தார். பழமா ரினக் கலை (385) எனவும், இனந்தீர் களிற்றின் (அகம். 32) எனவும் முசுவிற்கும் யானைக்கும் இனங்கூறுதலா னுணர்க. இனமாகக் கவர்தல் தலைவிக்குக் காம ஏது ஆகும். இதனை வடநூலார் உத்தீபன ஏது என்பர். அரும்பனி நோயை அச்சிரக் காலத்துத் தீர்க்கும் மருந்து மணந்த மார்பே பிறிதில்லை என்றவாறு. மார்பை மருந்து என்றலாற் பனி நோயாயிற்று. பனி நோயும் உண்டு. வெற்பகங் கொங்கின் வீழ்பனி நோய் என்பது திருத்தொண்டர் திருவந்தாதி. மணந்த மார்பு தணத்தலான் உள்ள நோயாதல் தெரியப் பிறிதில்லை என்றாள். பிறிது என்பது நோய் செய்ததினும் வேறு என்றவாறு. தன்நோய்க்குத் தானே மருந்து (குறள். 1102) என்பது போலக் கொள்க. மணந்த மார்பே மருந்தாதல் கூறி மணவாத மார்பு நோய் செய்வது குறித்தாள் என்பதுமாம். புலத்தின்கண் வித்திய உழுந்து பூத்தற்கு முன்னர் வருவமென்று தெளிவித்துப் போயவர் அது முதுகாய் விட்டு உழையினங்கவரும் போதும் வந்திலர் என்பது கருதிக் கூறினாள். மேற் பாட்டொடு பொருளியைபு காண்க. மணந்த மார்பென இறந்த காலத்தாற் கூறியது தான் அச்சிரக் காலத்துத் துய்த்து முன்னர்ப் பனியின் வருத்தமின்றி மகிழ்ந்தது நினைத்து. அரும்பனி - தடவு நெருப்பாற் போதற்கரிய பனி. இப் பருவந்தான் உழுந்து காய்ப்பதென்பது இரும்பனிப் பருவத்த மயிர்க்கா யுழுந்தி னகலிலை (நற். 89) என வருதலானறிக. கடுந்தோட் காவீரனார் 69. கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றெனக் கைம்மை யுய்யாக் 1 காமர் மந்தி கல்லா வன்பறழ் 2 கிளைமுதற் சேர்த்தி ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் சார 3 னாட நடுநாள் வாரல் வாழியோ வருந்துதும் 4 யாமே. (எ-து) தோழி இரவுக்குறி மறுத்தது. (வி) கருங்கண் - இருளாற் கரிய இடத்து. தாக்கலை - தாவுதல் உடைய தனக்குரிய ஆண் குரங்கு. பெரும்பிறி துற்றென - சாவினை அடைந்ததாக. இருண்ட இடத்துத் தாவுதலாற் பிழைத்து இறந்தது குறித்தவாறு. கைம்மை உய்யா - கணவனில்லா தொழுகுதலைச் செலுத்த மாட்டாத; காமர் மந்தி - கணவன் விருப்பமுடைய பெண் குரங்கு கல்லா வன்பறழ் - தன்றொழிலை இனிக் கற்க வேண்டாத வலிய குட்டியை. கிளை முதற் சேர்த்தி - சுற்றத்திடத்து வைத்து. ஓங்குவரை யடுக்கத்து - தன் கணவன் வீழ்ந்து கிடக்கும் ஓங்கியவரைகளை யுடைய மலைப் பக்கத்து. பாய்ந்துயிர் செகுக்குஞ் சாரல் என்க. இருண்ட இடங்களிற் றாவுதல் வல்ல கலையும் தப்புதல் குறித்து நள்ளிரவின் வருதலாற் றலைவற்கு வரும் ஏதங் காட்டினாள். தலைவன் நாட்டுச் சாரலின் விலங்கும் கைம்மை யுய்யாமை தெளிவித்துத் தலைவியின் இயல்பை நினைவித்தாள். வருந்துதும் என்றது நீ நள்ளிரவில் ஏதமின்றி வந்தவிடத் தும் ஏதங்களை நினைந்து வருந்துதும் என்றவாறு. வன்பறழ் ஆதலின் அதன் றொழிலை இனித் தானிருந்து கற்பிக்க வேண்டாமை காட்டித் தன்னுயிர் செகுக்கும் என்றாள். இங்ஙனம் ஏதம் நினைந்து யாம் வருந்தாமல் விரைந்து வரைந்து வாழியோ என்றாள்; நின்னை வாரல் என்று சொல்லும் வண்ணம் இன்னும் வரையாது வருதற்கு வருந்து தும் என்றாளெனினும் அமையும். கடுந்தோட் காவீரன் - தோளின் கடுமையா லெத்தகைய காவையும் ஏந்த வல்ல வீரன். ஓரம்போகியார் 70. ஒடுங்கீ ரோதி யொண்ணுதற் குறுமகள் நறுந்தண் ணீர ளாரணங் கினளே இனைய ளென்றவட் புனையள வறியேன் சிலமெல் லியவே கிளவி 1 அணைமெல் லியள்யான் 2 முயங்குங் 3 காலே. (எ-து) புணர்ந்து நீங்குந் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. (வி) ஒடுங்கிய ஈரோதி - தலையின் இடத்தும் வலத்தும் ஒடுங்கிய ஈர்ந்த கூந்தல். இனித் தன்னைக் கூடி நீங்கி ஆயத்திலொடுங்குதல் கருதி ஒடுங்கு குறுமகள் என்றானெனினு மமையும். ஸீமந்தரேகை பட வகிர்ந்தது குறித்து ஈரோதி என்றான். ஒண்ணுதற் குறுமகளாகிய நறுந்தண்ணீரள் முயங்குங்கால் அணை மெல்லியள்; அவள் கிளவி சில மெல் லிய; முயங்காக்கால் ஆரணங்கினள்; ஆதலான் அவளை இனையளென்று புனையும் அளவறியேன் என்றான். குறுமகள் - ஆண்டிற் குறிய மகள்; இளம்பெண் என்பது கருத்து. முயங்குங்கால் ஈரோதியாலும், ஒண்ணுதலாலும் மெய் யெங்கும் பரந்த இளமையாலும் கண்ணிற்கும், நறுமையால் மூக்கிற்கும், தண்ணிய நீரின் தன்மையளாத லான் வாய்க்கும், கிளவி சில மெல்லிய என்றலாற் செவிக்கும், அணைமெல்லியள் என்றதனால் மெய்க்கும் இன்பஞ் செய்பவள் முயங்காக்கால் ஆரணங்கின ளாதலறிந்து இனையளென்று புனையளவறியேன் என்றான். அவள் என்றான் தன்னைப் புணர்ந்து நீங்கி ஆயத்து ஒடுங்கித் தனக்குச் சேயளாதலான். முயங்குங்கால் மெல்லியள் என்றதனால் முயங்காக்கால் ஆரணங்கினள் என்பது கொள்ளப்பட்டது. முயங்கு முன்னும் முயங்கிவிட்ட பின்னும் ஆரணங்கினளாம். அவள் முயங்குங்கால் இன்பஞ் செய்தலான் இனையளென் றொரு படியாகக் கூறலா காமை தெளிவித்தான். ஆரணங்கு - அவளன்றி வேறெதனானும் நீங்கற்கரிய வருத்தம். கிளவிக்குச் சின்மையும் மென்மையுங் வேண்டுதல் காண்க. தண்ணீரள் என்புழி நீர் குளிர்ச்சி மிக்குத் தாகந் தணித்தலின் வாய்க்கினிமை குறித்தானாவன். கருவூர் ஓதஞானியார் 71. மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப் பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற் கல்கெழு கானவர் நல்குறு மகளே.1 (எ-து) பொருள்கடைக் கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது. (வி) பிரிந்துபோய்த் தேடிய பொருளான் அறஞ்செய்து அவ்வுலகிற் றுய்ப்பது மருந்தென்னின் மகளே மருந்து எனவும், அப் பொருளான் இவ்வுலகிற்றுய்ப்பது செல்வ மென்னின் மகளே செல்வம் எனவும் கூறி, அரும்பிய சுணங்கும் அம்பகட்டிள முலையும் பெருந்தோளும் நுணுகிய நுசுப்பும் உடைமையால் மகளே அப் பொருளாற் றுய்ப்ப தாகிய இன்பம் எனவும் கூறினானாம். இது பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியதாதலான் அதற் கேற்பவுரைக்கப்பட்டது. மருந்து அமிழ்தமாதல் மருந்தாகுந் தீ நீர் மலிதுறை மேய விருந்தையூ ரமர்ந்த செல்வ (பரிபா. தி. 1) என்பதான் உணர்க. மருந்தின் சாயல் (சிந். 1033) என வந்தது காண்க. பொருளான் அறனும் பொருளாற் பொருளும் பொரு ளான் இன்பமும் எய்தலாமென்ற நெஞ்சிற்கு அறப்பயனும் பொருட் பேறும் இன்பப் பெருக்கும் எனக்குக் கானவர் நல்குறு மகளே யாயினள் என்றா னென்க. இனிப் பிணி நீங்கவேண்டுவது மருந்தெனின் மகளே மருந்தாவள்; வறுமை நீங்கவேண்டுவது செல்வமெனின் மகளே செல்வமாவள் என்றலுமாம், நோயும் வறுமையுமே நீங்க வேண்டுதல் அடியார்க் கில்லை நோயும் வறுமையுமே (அழகரந்தாதி - 18) என்பதனா னுணரலாம், நோயும் வறுமையும் நீங்குதலேயன்றி இன்பமும் வேண்டுமெனின் அதுவும் மகளாலாதல் குறித்துக் கொண்டு சுணங்கு முலைதோள் நுசுப்பு இவற்றைச் சிறப்பித்தான் என்க. மகளே மருந்தும் வைப்புமாதல் உலகியலினுங் காண் பது. கொழுநன் பிணிக்கு மருந்தெனின் தன்னுடம்பையே அறுத்து உதவி மருந்தாகுங் குலமகளும் கொழுநன் தளர் நிலையிற் கூலிக் குழந்தும் அவனைக் காத்து வைப்பாம் கற்புடையாட்டியும் இந் நாவலந் தீவிலுண்மையா லுணர்க. மருந்தும் வைப்பும் இன்பமும் என்னும் இம் மூன்றும் சுணங்கையும் முலையையும் தோளையும் நுசுப்பையுங் கொண்டு எனக்குரிய மகளாக இயைந்திருக்க ஈண்டிருந்து துய்த்தல் விட்டுப் புறம் போவ தெற்றுக்கென்று செலவழுங்கினான் என்க. நாகரிகரும் நல்குதற்கரிய இத்தகைய மகளைக் கல்கெழுகானவர் நல்குதல் வியப்பு என்று குறித்தான். கல் - மலை, `வட பெருங்கல் (புறம். 17). மலையில் மருந்தும் பொன்னும் உண்டாதலாற் கூறினான் என்பதுமாம். கன்ம ருங்கெழுந் தென்றுமோர் துளிவரக் காணா, நன்மருந்துபோ னலனற வுணங்கிய நங்கை (கம்ப. சுந்தர. காட்சி. 3) என்ப. அரும்பிய சுணங்கின் முலை எனினு மமையும். அம்பகட்டிள முலையும் பெருந்தோளும் தாங்கலாகாப் பொறையாதல்பற்றி நுணுகிய நுசுப்பு என இயைபுபடக் கூறியது காண்க. பிற மகளிர்க்கும் சுணங்குண்டு, இங்ஙனம் அரும்புதல் காணேன்; முலையுண்டு, இவ்வம்பகட்டிளமை காணேன்; தோளுண்டு, இப் பெருமை காணேன்; நுசுப்புண்டு, இந் நுணுக்கங் காணேன் - என்னுங் குறிப்பின் விசேடித்தான். பகடு - பெருமை. அரும்புதல் - பொன்போல் அரும்புதல்: பொன்பொதிந் தன்ன சுணங்கின் (நற். 26) என்ப. ஓத ஞானியர் - வெள்ளம் போன்ற ஞானப் பெருக்கர் என்றவாறு. இச் சிறப்புப் பெயர்க் கியைய இவர் பாடல் சிறத்தல் காண்க. மள்ளனார் 72. பூவொத் தலமருந் தகைய 1 வேவொத் தெல்லாரு மறிய நோய்செய் தனவே தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப் பரீஇ வித்திய வேனற் குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே. (எ-து) தலைமகன், தன் வேறுபாடு கண்டு வினாய பாங்கற்கு உரைத்தது. (வி) பூ ஒத்து - தன்னை யான் காணுங்கால் வனப்பாற் றாமரைப் பூக்களை ஒத்து. ஏ ஒத்து - தான் என்னைக் காணும் போது கொல்லும் அன்பினை ஒத்து. எல்லாரும் அறிய - உற்றாரன்றிச் செற்றாரும் அயலாரும் அறிய. அலமருந்தகைய நோய் செய்தன - யான் சுழன்று தடுமாறும் தன்மையுள்ள பெரிய நோயைச் செய்தன; குருவி ஓப்புவாள் பெருமழைக் கண்கள் என்றவாறு. அலமருந்தகையால் எல்லாரும் அறிதற் காயிற்று. இதனாற் பாங்கனாகிய நீ என் வேறுபாடு கண்டு வினாவுவது வியப்பன்று என்பது குறிப்பு. பரீஇ வித்திய ஏனல் - நல்ல காலமறிந்து வித்திய தினை. இதுவே பொருளென்பது பவர் முல்லை தோன்றி பரியாமலீன்ற (புறப்பொருள் - பெருந்திணை) என்புழி நல்லுரை காரர் சாமுண்டி தேவநாயகர், முல்லையுந் தோன்றியுங் காலமறியாமல் முகிழ்த்தன எனத் தெளிவித்தது கொண்டுணர்க. தினை விதைத்தற்கு முன்னர்ச் செய்யுமுறைமைகளைக் கூறியவிடத்து, நாக நறுமர நவியத்திற் றுணித்து, வேக வெவ்வழல் விளிய மாட்டி, மானிணப் புழுக்கலொடு தேனெய் விதவையிற், பன்முறை பகர்ந்து தொன்முறை பிழையார், நன்னாட் கொண்டு தன்னையர் பரியப், பொன்னேர் சிறுதினை விளைந்த புலந்தொறும் (பெருங். 2 : 12:111-116) என விளங்கக் கூறுதல் கண்டு இதனுண்மையுணர்க. இதன்கண் நாட்கொண்டு ஐயர்பரிய விளைந்தபுலம் என இயைதல் கண்டு கொள்க. தலைவற்குப் பகைவரும் உண்மை செறுவர்க் குவகையாக ... ... வருபவோ (336) என்புழிக் காண்க. ஏவுண்டார் அலமருந்தகைய ஏ ஒத்து என்பதுமாம். ஏனற் குரீஇ - தினையிற் படியும் குருவிகள். மழைக்கண் – குளிர்ச்சியை யுடைய கண்கள். பூ - தாமரை; சேந்தொத் தலர்ந்த செழுந்தாமரை யன்ன வாட்கண் (சிந். 8) என்ப. மழைக்கண் ஏ ஒத்து நோய் செய்தல் விபரீதம் என்பது குறிப்பு. மென்றோளையுடைய ஓப்புவாள் என்க. ஓப்புவாளுக்குத் தேமொழியும் மென்றோளுமே கூறினான், குரீஇ ஓப்பும்போது அவள் வாயாற் பாடியது கேட்டும் கையால் ஓச்சியது கண்டும் என்க. மள்ளன் - வீரற்குப் பெயர்; இவர் வீரருமாவர் போலும். பரணர் 73. மகிழ்நன் மார்பே வெய்யை யானீ 1 அழியல் வாழி தோழி நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போக்கிய 2 ஒன்றுமொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே. (எ-து) பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமை படத் தலைமகட்குத் தோழி சொல்லியது. (வி) மகிழ்நன் - நமக்கு மகிழ்செய்தற் குரியவனுடைய. மார்பே வெய்யை நீ - மார்பையே எப்போதும் அணையும் விருப்பினை. மார்பே என்றது தலைவி இரு முலையானும் அணையுஞ் சிறப்பு நோக்கி. எப்போதும் வெய்யை என்பது இது பகற்குறியும் இரவுக்குறியு மறுத்ததாதலின் உய்த்துணர லாம். இடர்ப்பட்டு ஓரோ ரமயத்துக் குறிசெய்து கூடுதலை மறுத்து வரைந்து எப்போதும் அணைந்திருத் தலைக் குறித்தது. அங்ஙனம் எப்போதும் அணையும்படிக்குத் தலைவர் வரைவொடு வருதற் பொருட்டுக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியுஞ் சிறிது புரிய வேண்டும். ஊரும் நம் ஐயரும் இக் களவறிதல் காட்டிப் பகற்குறி மறுத்ததும் தாயுந் தமரும் அறிதல் காட்டியுங் காவல் மிகுதி காட்டியும் இரவுக்குறி மறுத்ததும் யான் புரிந்த சூழ்ச்சியாகும். இவ்வாறு பகலும் இரவும் வாராமல் மறுத்தற்கு அழியல்; இங்ஙனம் மறுத்தல் பற்றி விரைந்து வரைவொடு வருவர் ஆதலான் வாழி தோழி என்றாள். தலைவிபாலுந் தலைவர்பாலும் இரக்கங் காட்டாது இப்போது மறுத்தது ஆதலானும் அது பிறிதொன்று கருதிச் செய்யப்பட்டத னானும் வன்கட் சூழ்ச்சியாயிற்று. சிறிதே வேண்டும் - சிறிது பொழுதைக்கே வேண்டும்; விரைந்து வரைவர் என்பது கருத்து. ஈண்டுவமையிற் காட்டிய கோசர் சூழ்ச்சி கொண் கானவேள் நன்னன் வளர்த்த நறுமாமரத்தைக் கொன்று நாட்டிற் போக்கற்கு அவர் சூழ்ந்தது ஆகும் நன்னன் உண் டார்க்கு நீடாயுள் தருவதென்று தான் கேட்ட துணிபினால் ஓர் நறுமாவைப் போற்றி வளர்த்து அது பழுப்பது பார்த்திருந்தான். அஃதொரு காய் காய்த்தது அது முற்றிப் பெருங்காயாகிய நிலையிற் காற்றால் அடியுண்டு பக்கலிலோடும் யாற்றில் வீழ்ந்தது. அவ்வமயத்து யாற்றிற் குளித்த கோசர் குடிப் பெண்ணொருத்தி அதனை எடுத்துத் தின்றனள். காயைத் தன்பாற் கொடாது தின்றது தப்பென்று அவள் தமர் ஒன்பதிற்றொன்பது களிற்றோடு அவள் நிறையளவான பொற்பாவை கொடுப்பவுங் கொள்ளானாகி நன்னன் அவளைக் கொலை புரிந்தனன். இக் கொடுமையைப் பொறாத கோசர் இத் தீங்கு விளைத்தற்குக் காரணமாய நறுமா ஆயுளைப் போக்குவது என்று துணிந்து அதனை அழித்துத் தொலைக்க ஒரு சூழ்ச்சி தொடங்கினர். பாடல் வல்ல மகளிர்க்குப் பிடிப்பரிசில் மிகுத்து நல்கும் அவ்வூர் அகுதை தந்தையுடன் அகவன் மகளிர் பலரைப் புகுவித்து அவன்பால் அவர் பெற்ற பிடிகள் பலவற்றையும் நன்னன் ஊரிலில்லாத போழ்தில் அவன் நறுமாம் பொழிலிற் பிணிக்கச் செய்தனர். நன்னன் நறுமாவிற் பிணித்தபிடி தன் வழக்கப்படி அம் மாமரத்தின் அடி மண்ணை உதைத்து வாரி யிறைத்து அதுவே வேரோடு யாற்றில் வீழும் வண்ணம் செய்தது. அதனைப் பலர் முறித்து நாட்டில் விறகாக் கொண்டு போயினர்; இச் செய்தியே நன்னன் நறுமாகொன்று நாட்டிற் போக்கிய கோசர் வன்கட் சூழ்ச்சிச் செயலாக ஈண்டுக் கூறப்பட்டதாமென்க. யானைகள் நின்ற நிலத்தை அகழுமியல்புடையன என்பது, களிறுதைத் தாடிய கவிழ்கணிடு நீறு ... ... பழங்கண் முதுநெறி மறைக்கும் (நற்றிணை-302) என்பதனா னறியலாம். இம் மரத்தினொரு காயைத் தின்ற தவற்றிற்கு ஒரு மகளைக் கொலை செய்த நன்னன் இம் மரத்தையே தொலைத்த அகவன் மகளிர் பலரை இவன் என் செய்வன் காணலாமென்று கோசர் செய்த சூழ்ச்சியிஃதென்க. இவ்வுண்மை சேரி சேர (298) என்னும் பாட்டில் இது பாடிய பரணரென்னும் புலவர் பெருமானே இன்கடுங் கள்ளி னகுதை தந்தை. வெண்கடைச் சிறுகோலகவன் மகளிர், மடப்பிடிப் பரிசின் மானப், பிறிதொன்று குறித்ததவனெடும்புற நிலையே எனப் பாடியதனாலறிந்து கொள்க. இப் பாட்டிற் பரிசில் பிறிதொன்று குறித்தது நாடறிந்ததாதலின் அதனை உவமையாக்கித் தலைவன் பிறிதொன்று குறித்ததைத் தெளிவித்தாள். நன்னன் பெண் கொலை புரிந்த செய்தி மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை (292) என்புழிக் கண்டுகொள்க. ஒன்று மொழிக் கோசர் - இரண்டு படாத ஒரு சொல்லே யுடைய கோசர் என்னும் வீரர். விட்ட குதிரையார் 74. விட்ட குதிரை விசைப்பி னன்ன 1 விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன் யாந்தற் படர்ந்தமை யறியான் றானும் வேனி லானேறு போலச் சாயின னென்பநம் மாணல நயந்தே. (எ-து) தோழி தலைமகன் குறை மறாதவாற்றாற் கூறியது. (வி) விட்ட குதிரை - நெடுநாட் பிணித்த கட்டினின்று விடப்பட்ட குதிரை. விசைப்பினன்ன பசுங்கழை - குதிரை யின் விசைப்பினை ஒத்த விசைப்பினை யுடைய பசிய மூங்கில். விசைப்பு - துள்ளியெழுதல். விசும்புதோய் கழை - மேகத்தைத் தோயுங் கழை `விசும்பிற்றுளி (குறள். 16) என்பதும் `விசும்புதளி பொழிந்து (அகம். 345) என்பதும் காண்க. மூங்கிலுள்ள நிலங் குன்ற மாதலின் அது மேகத்தைத் தோய்தல் கூடும் என்க. புள்ளு நிமிர்ந்தன்ன பொலம்படைக் கலிமா (நற். 78) என்பதனாற் குதிரையின் துள்ளுதலை உவமித்தாள். இரவில் வளைந்து எட்டற்கு ஆகிப் பகலில் வளைத்தாற் றுள்ளி விசும்பு தோயும் கழை என்றது இரவிற் குறியிடத்திற் கிடைத்தவன் பகலிற் கிடைக்கரியன் என்று களவின் இடர்ப்பாடு கருதிய குறிப்பிற்று. பசுங்கழை துள்ளியெழுந்து எட்டாது நிமிர்வது பகலிலே தான் என்பதுணர்க. யாம் வேனிலான் போலத் தற்படர்ந்தமை யறியான் தானும் வேனில் ஏறுபோல நம் மாணலம் நயந்து சாயினனென்ப என்க வேனில் - வயந்த காலம்; புணர்ச்சிக் குரியது; `வேனில் வேள் (திருவாசகம். அறிவுறுத்தல். 9) என்பது நினைக. பிணிக்கப்பட்ட பசு இக் காலத்து விடையை நினைந்து மெலிதலும் அப் பசுவை விரும்பி விடை மெலிதலும் உலகியல். இவ்வுவமையே களவிற் காவலி லிருந்து நினைந்து மெலியும் தலைவிக்கும் அவளை எய்தப் பெறாது விரும்பி மெலியுந் தலைவற்கும் பொருந்திற்றாதல் காண்க. இனி நின்றபடியே வைத்து ஆனேறு போல என்பதற்கு ஆனால் விரும்பப்பட்ட ஏறு போல என வுரைப்பதும் ஈண்டைக்கு ஏற்கும். ஏறு உடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ (அகம். 64) என்புழி மடநாகிற்கும் ஏற்றிற்கும் உடனிலை வேட்கை கூறுதல் காண்க. தலைமகன் குறை - தலை மகனுடைய குறையை. மறாத வாற்றால் - தலைவி மறாத முறையால். படர்தல் - நினைதல். கயிற்றின் நீளங்கொண்டு துள்ள விடுதலன்றிக் கைவிடாத குதிரையை விட்ட குதிரை என்ற தொடரான் இப் பெயர் பெற்றனராவர்; விடுவிசைக் குதிரை விலங்கு பரி முடுக (அகம். 14) என்றது காண்க. படுமாத்து மோசிகீரனார் 75. நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ ஒன்று தெளிய நசையின 1 மொழிமோ வெண்கோட் டியானை சோணை படியும் 2 பொன்மலி 3 பாடலி பெறீஇயர் 4 யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. (எ-து) தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது. (வி) நீ கண்டனையாயின் அவரைத் தனிவிட்டு இங்கு வருதல் செய்யாய் என்று கண்டார்க் கேட்டனையோ என்றாள். பாணர் பொய்ப்பது பல்கா லறிந்தவளாதலால் ஐயப்பாட்டால் இங்ஙனம் வினவினாள்; ஒருநின் பாணன் பொய்யனாக (127) என்பது காண்க. கண்டார்க் கேட்டனையோ என்றதனால் யார்வாய்க் கேட்டனை என்றது அக் கண்டவரும் நினக்குரைத்தவரும் நின்னோ டொத்த பாணரோ என்பது நினைந்து. ஒன்று - கண்டது, கேட்டது என்னும் இரண்டனுள் ஒன்று. தெளிய நசையினம் - தெளிய விரும்பினம். காதலர் வருதலையே விரும்பினேம் தெளிய ஒன்றுமொழிமோ என்பது நன்கியையும். பாணன் கண்டார்க் கேட்டனன் என விடை கூறியது கேட்டுத் தலைவி யார் வாய்க்கேட்டனை என்றாளாம்; நினக் குரைத்தவர் கண்டது வாய்மையாயின் எனக்குரைத்த நீயும் நினக்குரைத்த அவரும் யானை சோணை யாற்றிற்படியும் பொன்மலிந்த பாடலி நகரத்தைப் பெறுக என்றாள். தலைவிக் குரைத்த பாணற்குக் காதலர் வரவு கண்டதாகக் கூறியவனும் ஒரு பாணன் என்பது ஈண்டைக்கு நன்கியையும். இருவரும் பொய்யர் என்று தான் துணிந்தது தெளியத் தன்னாலாகாத பெருங் கொடையை அவர் பெறுக என்றாளெனக் கொள்க. இங்ஙனம் கொள்ளாக்கால் சேய்மையில் வடக்கட் பெரு முடியரசர் தலைநகரை இவள் வழங்குதல் இயையாதென்க. போரினும் பெறற்கரியது தோன்ற யானைப் படையும், பொன் மலிவும் பாடலிக்குக் கூறினாள்: சோணைபடியும் என்பதனால் அது நீரரணுடைமை குறித்தாள். நாற்படையுட் டலையாவது கருதி யானையுடைய படை கருதினாள். களிறே படைக்காதல் கருதி `வெண்கோட்டி யானை என்றாள். `பொன்னினாகும் பொருபடை (சிந்தா. 1923) ஆதலான் பொன் மலிதல் கூறினாள். இது பாடிய புலவர் நாளிற் பாடலி உயர்ந்து சிறந்து விளங்குதல் இதனானறியலாம். கிள்ளிமங்கலங்கிழார் 76. காந்தள் வேலி யோங்குமலை நன்னாட்டுச் செல்ப வென்பவோ 1 கல்வரை 2 மார்பர் 3 சிலம்பிற் சேம்பி ளலங்கல் வள்ளிலை பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇத் தண்வரல் 4 வாடை தூக்கும் 5 கடும்பனி யச்சிர 6 நடுங்கஞ 7 ருறவே. (எ-து) பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது. (வி) காந்தள் வேலி - மலைநாட்டுக் காந்தள் சூழ்ந்து வேலியாயுள்ள. மலைநாட்டின்கண், செல்ப என்பவோ - சென்றார் என்னாது இனிச் செல்வார் என்று சொல்லுவரோ என்றவாறு. வாடை தூக்கும் கடும்பனி அச்சிரக்காலை யான் நடுங்கும் வருத்தம் உறுதலான் தான் அவர் பிரிவு முன்னரே உணர்ந்திருத்தல் தெளியச் செல்ப என்பவோ என்றாள். அவருள்ளபொழுது வாடை வருத்தாமை, செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின், ஓடுவை மன்னால் வாடை நீ யெமக்கே (அகம். 125) என்பதனான் அறிக. வாடையும் பனியும் அச்சிரக் காலத்துக்குரியன வாதலிற் கூறிக் காட்டினாள். கல்வரை மார்பர் செல்ப என்பவோ என்புழிக் கல்வரை மார்பர் கல்வரையாகிய நெஞ்சினர் என்றவாறு. மார்பு நெஞ்சத்திற் காதல் மார்ப மென்பதோர் கோயி லமைத்து, மாதவ னென்னும் தெய்வத்தை நாட்டி (பெரியாழ்வார் திருமொழி. ஆசைவாய் 3) என வருதலானறிக. பிரிதற்குரியதல்லாத அச்சிரக் காலையிற் பிரிதலான் இங்ஙனம் கூறினாள். இது தண்பனி யச்சிரந் தமியோர்க் கரிதெனக், கனவினும் பிரிவறியலனே (அகம். 178) எனவும் அச்சிரம் வந்தன் றமைந்தன் றிதுவென எப்பொருள் பெறினும் பிரியன்மி னோவெனச், செப்புவல் வாழியோ துணையுடையீர்க்கே (அகம். 217) எனவும் வருதலான் உணரப்படும். வாடை தானேயும் போதாது சேம்பினிலைகளைக் களிற்றுச் செவிகளைப் போல அசையச் செய்து பனிக்காற்றை மிகுத்தலால் தான் நடுங்குதல் கூறினாள். துறையுள், `அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் என்றிருத்தலான் வாடை தூக்கும் கடும்பனி யச்சிரத்துத் தான் நடுங்கஞர் உறுதலே தான் உணர்தற்கு ஏது எனத் தெளிய வைத்து அச்சிரத்தில் யான் நடுங்கு அஞர் உறுதலாற் செல்ப என்பவோ - சென்றாரென்னாரோ என்றாளென்பதே பொருந்திற்றாதல் காண்க. மதுரை மருதன் இளநாகனார் 77. அம்ம வாழி தோழி யாவதுந் தவறெனிற் றவறோ விலவே வெஞ்சுரத் துலந்த வம்பல ருவலிடு பதுக்கை நெடுநல் யானைக் கிடுநிழ லாகும் 1 அரிய கானஞ் சென்றோர்க் கெளிய வாகிய தடமென் றோளே. (எ-து) பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (வி) தம்மையும் நம்மையும் துன்பத்தின் வைத்தலான் அரியகானஞ் சென்றோர்க்கு யாவதுந் தவறெனின் அரியகானஞ் சென்றோர்க்கு எளியவாகிய தடமென் றோள்களே தவறு ஓவில என்றா ளென்க. சென்றோர்க்குத் தவறெனின் என்பது இல்லை தவறவர்க் காயினும் (குறள். 1321) என்புழிப் போல வேற்றுமை மயக்கம். சென்றோர்க்குத் தவறெனின் - சென்றோர் மாட்டுந் தவறெனின் என்றவாறு. களவிற் சிறு பொழுதும் பிரிந்து சேறற்கு அரியவாகிய என்றோள்கள் கற்பிற் பெருங்காலம் அரிய கானஞ் சேறற்கு எளிய ஆதல் தவறென்று கருதிக் கூறினாள். இதனை, சுரம்பல விறந்தோர், தாம்பழி யுடையரல்லர் நாளும், நயந்தோர்ப் பிணித்த றேற்றா வயங்குவினை, வாளே ரெல்வளை நெகிழ்த்த, தோளே தோழி தவறுடை யவ்வே (அகம். 267) என்பது போலக் கொள்க. தவறு ஓவில - தவறு நீங்கில. அரிய கானஞ் சென்றோர்க்கு எளியவாகிய என்புழி அரிய எளிய என்பன முரணின் வருதலான் இதுவே பொருளாமென்க. உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை - வழிச்செல்வோர் இறந்தாருடைய சருகிட்டு மூடிய கற்குவியல். உலந்தவம்பலர் - வம்பலரா யுலந்தார். வம்பலர் - வழிச்செல்வோர். வழிச்செல் வோரைக் கொன்று கல்லிட்டு மூடுவது ஆறலை கள்வர் வழக்கம். வடிநவி லம்பி னேவ லாடவர், ஆளழித் துயர்த்த வஞ்சுவரு பதுக்கை (அகம். 215) என வருதலானறிக, பிணத்தை மூடிய கற்குவியலன்றி வேறு நிழல் தருவன ஆண்டில்லை என்றவாறு. அந் நிழலிற் றங்கலாமெனின் ஆண்டும் கொல்விலங் குண்மை காட்டி நெடுநல் யானைக் கிடுநிழலாகும் கானம் என்றாள். நல்யானை யானை என்றது தன் துணை பிரியாமை குறித்தது. பதுக்கையின் உயரந்தெரிய யானைக்கிடு நிழலாகும் என்றாள். இனிச் சென்றோர்க்குப் பிரிதற் கெளியவாகிய தடமென் றோள்கள் தவறெனின் தவறோ இல என்று அவரைச் செலவழுங் குவியாது செலவிட்ட நீயே தவறுடையை எனத் தோழியைக் குறிப்பிற் கொள்ள வைத்தாளென்பதும் ஆம். சென்றோர்க்குத் தோள்கள் எளிய ஆதல் என்பது சேறற்கண் தலைவனை விலக்காது தொழுது விடுத்தல் ஆம். தோள்கள் செலவு விலக்குத லுண்டென்பது `மடமகள் நலங்கிளர் பணைத் தோள் விலங்கின செலவே (ஐங். 42) என்பதனான் உணர்க. நக்கீரனார் 78. பெருவரை மிசையது நெடு வெள்ளருவி முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பிச் சிலம்பி னிழிதரு மிலங்குமலை வெற்ப நோதக் கன்றே காமம் யாவதும் 1 நன்றென வுணரார் மாட்டுஞ் 2 சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே.3 (எ-து) பாங்கன் தலைமகற்குச் சொல்லியது. (வி) அருவி பிறப்பது பெருவரை மிசையாகியும் ஆண்டே நிலைத்தலறியாது முழவின் ஒலித்துத் தாழ்வரைகளில் இழிதரும் வெற்ப என்றது நின் உயர்குடிப் பிறப்பின் மேன்மைக்கு ஏற்ற வாறின்றிப் பொருளில்லாத வறுஞ்சொற் பலபேசித் தாழ்வுழி யெல்லாம் இழிதருவாய் என்றதாம். காமம் நோதல் தக்கது யாவதும் நன்றென உணரார் மாட்டும் - தன்னைச் சிறிதும் நல்லதென்று அறியாதாரி டத்தும்; தன்னைத் தீதென உணர்வாரிடத்தும் என்றவாறு. சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்து - சென்று இரந்தே நிற்கும் பெரிய பேதைமை யுடையது ஆதலான், காமம் தீதென வுணர்ந்த பார்ப்பனப் பாங்கனாதலான் பாங்கற் கூட்டத்துத் தன்னாற் குறியிடம் தலைப் பெய்தல் வேண்டி யிரந்து நிற்கும் தலைவன் இயல்பு தெரியக் காமத்தின் மேல்வைத்துக் கூறினான். காமம் நன்றென வுணரார்மாட்டும் எனக் காமத்தைத் தீதென வுணரும் தன்னையே படர்க்கை யாகக் கூறினானாம். `பேதையாய்க் காமம் பிடித்தாய் பிழைப்பாயோ என்றார் கம்ப நாடர் (யுத்த காண்டம். அதிகாயன். 271). இழிதரும் இலங்கு மலைவெற்ப என்றது நீ இழிதருதல் எல்லோராலும் உணரப்படும் என்னுங் குறிப்பிற்று. மலை - அடுக்கல். செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ. யுற்றாரறிவதொன் றன்று (குறள். 1255) என்புழிப் பரிமேலழகர், காம நோயுறாதார் மானமுடையார், நன்றென வுணரார் மாட்டுஞ் சென்றே நிற்கும் யானறிவதொன்றன்று என்பதாம் என இக் குறுந்தொகையைக் கொண்டு கற்பிற்றலைவி கூற்றின் வைத்துக் கூறினார். தோழி காமம் நற்றெனவுணராத அறிவுரையும் தலைவர் வரவு குறித்துப் பருவவரவு வினாவுதல் (277) கண்டுணர்க. முதுவாய்க் கோடியர் - அறிவையும் அதற்கேற்ற வாயினையுமுடைய கூத்தர். சென்றே நிற்கும் - சேறலும் நிற்றலுமல்லது வேறு பெறுதலில்லை என்றவாறு. முழவிற் றதும்பல் - பாங்கன் நல்லுரையை மறுத்துத் தலைவன் பல சொல்லுதல் குறித்தது எனினுமமையும். யாவதும் - சிறிதும். குடவாயிற் கீரத்தனார் 79. கான யானை தோனயந் துண்ட பொரிதா 1 ளோமை வளிபொரு நெடுஞ்சினை அலங்க லுலவை யேறி யொய்யெனப் புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்ச் சேந்தனர் 2 கொல்லோ தாமே யாந்தமக் கொல்லே 3 மென்ற தப்பற் 4 சொல்லா தகறல் 5 வல்லு வோரே. (எ-து) பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (வி) யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பல் - யாம் பிரிவிற் பொறேம் என்று தமக்குக் கூறிய தவற்றால்; இஃதோர் தவறோ என்பது குறிப்பு. யாம் இத் தவறுரைத்தது எம் மென்மையால் என்பது அகறல் வல்லுவோர் என்றதனாற் பெறப்படும். இத் தவற்றால் என்னிடம் சொல்லா தகறற்கண் வன்மை செய்பவராயினார் என்றவாறு. யாம் ஒல்லேமென்றது தப்பலாயின் அவர் சொல்லா தகறல் யாதாமென்று கருதினாளாம். வல்லுவோர் சீறூரிற் றாமே சேந்தனர் கொல்லோ - இவ் வன்மை செய்தற்கேற்பத் தாம் தனியே சிற்றூரிற் சேக்கை கொண்டனரோ; தாமே சேந்தனர் கொல்லோ என்றது தன்னுடன் சேக்கை கொள்ளவே பயின்றவர் என்னுங் கருத்தால். சேந்தனர் கொல்லோ என்றது தான் சேக்கை கொள்ளாத நிலையைக் குறித்து நின்றது. யானை தோல் நயந்துண்ட என்புழி நயத்தல் அத் தோலுங் கிடைத்தற் கருமை பற்றியதாம். புறவு பெடையொடு கூடிக் குலாவி மகிழுங் குரலின் வேறு தெரியப் புலம்பு தருகுரல என்றாள்; தம் தனிமையைப் பெடைகட் குணர்த்துங் குரலுடையவாய்ப் பெடையை அழைக்கும் அத்தம். அத்தம் - சுரவழி. அக் கொடிய பாலையிலும் புறவுகள் பெடை விழைந்து பயிரல் காட்டி ஆண்டு அகறல் வல்லுவோர் தாமே சேந்தனர் கொல்லோ என்றாளென்க. புறவு பெடைபயிரும் அத்தம் சொல்லா தகறல் வல்லுவோர் அவ்வத்தம் நண்ணிய சீறூர்த் தாமே சேந்தனர் கொல்லோ என்பதாம். நெடுஞ்சினை வளிபொரு அலங்க லுலவை என்க. நெடிய கொம்பிற் காற்று மோதலான் அசைதலுடைய உலந்த கிளை. ஒய்யென - விரைய. யாம் ஒல்லேம் - யாம் பிரிவு கேட்பது பொறேம் என்ற தவற்றால் சொல்லா தகறல் வல்லுவோர் என்பதுமாம். சேந்தனர்கொல்லோ என ஐயத்தினோதினமையால் ஆண்டுப் புறவு பெடைபயிரல் கேட்டுச் சீறூர் சேக்காது மீள்வாரோ எனத் தலைவி கருதினா ளெனவுங் கொள்வாருமுளர் (தொல். கற்பு. 7 நச்.) ஔவையார் 80. கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சிப் பெரும்புனல் வந்த விருந்திறை 1 விரும்பி யாம்ஃ 1 தயர்கஞ் சேறுந் தானஃ தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி 2 முனையான் 3 பெருநிரை போலக் கிளையொடுங் காக்க 4 தன் கொழுநன் மார்பே. (எ-து) தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. (வி) கூந்தலாம்பல் முழுநெறி அடைச்சி - ஆம்பலி னுடைய கூந்தல் போன்ற நெறிப்பினையுடைய முழு நெறித்தழையை உடுத்து. பரத்தையர் ஆம்பல் நெறித்தழை யுடுத்துவருதல், ஆம்ப லம்பகை நெறித்தழை, தித்திக் குறங்கி னூழ்மா றலைப்ப வருமே சேயிழை (293) என்புழிக் காண்க. அடைச்சி - உடுத்து; நெடுந்தொடர்க் குவளை வடிம்புற வடைச்சி (அடி. 588) என்னும் மதுரைக்காஞ்சிக்கு நச்சினார்க்கினியர் கூறியது கொண்டுணர்க. இது பெரும்பாலும் பரத்தையர் இளையாரை வசீகரித்தற்கு உடுக்கும் உடையாத லாண்டே காண்க. பெரும்புனல் வந்த விருந்திறை விரும்பி - பெரிய புனல் விளையாட்டில் வந்த விருந்தாகிய இறைவனை அன்பு செய்து. யாம் அஃது அயர்கம் சேறும் - யாம் அவ் விளையாடல் செய்வேமாகச் செல்லுதும். உடையள் தான் அஞ்சுவது ஆயின் - தலைவனை உடையளாகிய தலைவி தான் அஞ்சுதல் உண்டாயின். எழினி முனை ஆன் பெருநிரை போல - எழினியின் பகைப்புலத்துள்ள ஆன்பெரு நிரையைப் போல. தன் கொழுநன் மார்பைக் கிளையொடும் காத்துக் கொள்க என்க. காத்தாலும் எழினி கவர்தல் ஒருதலையாதல் போல யாம் அவனைக் கவர்தல் துணிபு என்றவாறு. வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி - வெய்ய போராகிய தேரின் நுகத்தைத் தாங்குபவன் தானேயாக வெல்லும் பல் வேற் படையுடைய எழினி. யுத்த துரந்தரன் தானாகக் கடக்கும் என்றவாறு. துரம் - நுகம். இது வடநூற்கு மொத்தல் காண்க. இனி, போரிற் பகைவர்கள் தன் காவற்சாகாட்டின் நுகத்தை எருதோ பாதியாகப் பூணும்படி கடக்கும் எனினுமமையும். தெவ்வர் தேஎ நுகம்படக் கடந்து (மலைபடு. 86, 87) என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது, இனி, நுகம் எயில் வன்கணையம் எனக் கொண்டு அது கெடக் கடக்கும் என்பதுமாம். கொடு நுகம் தழீஇய புதவின் (பெரும்பாண். 127) காப்பு மிகுதியினும் கவர்தல் வன்மை குறித்தது. இது பரத்தைக்கு மொத்தல் நினைக. கிளை என்றது தலைவிக்குப் பாங்காயினாரை. வந்த விருந்திறை என்றாள் தலைவன் தானே வந்தவனாகக் குறித்து. யாம் விரும்பி அயர்கம் என்றாள். இளையவர் விரும்பு தலல்லது தாம் விரும்புதல் அஃது என்றது வந்த விருந்திற்குச் செய்யும் விருந்தினை. விருந்திறை விரும்பி - விருந்திற்கு இறுப்பது விரும்பி என்பதுமாம். திருந்துவே லண்ணற்கு விருந்திறை சான்ம்மென (மலைபடு. 319) என்பதனான் இப்பாடத்தின் உண்மை யுணர்க, பெரும்புனல் வந்து இருந்துறை விரும்பி என்பாருமுளர். அஃது என்றது புனல் விளையாட்டினை (தொல். கற்பி. 10 நச்.) வடமவண்ணக்கனார் 81. இவளே, நின்சொற் கொண்ட வெற்சொற் றேறிப் பசுநனை ஞாழற் பல்சினை 1 யொருசிறைப் புதுநல னிழந்த 2 புலம்புமா ருடையள் உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 3 கடலுங் கானலுந் தோன்றும் மடறாழ் பெண்ணையெஞ் 4 சிறுநல் லூரே. (எ-து) தோழியிற் கூட்டங்கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது. (வி) யான் தனியே சொற்றது இல்லை என்பாள் நின்சொற் கொண்ட என்சொல் என்றாள். நின்சொற் கொண்ட என்சொல் என்றாள். நின்சொற் கொண்ட என் சொல் நின்னதன்றி வேறில்லை என்பது கருத்து. அச் சொற்றேறி இவள் எய்திய பயன் புதுநலம் இழத்தலும் அதன்மேற் புலம்புடைமையும் என்றவாறு. இவள் நலனைத் தருதற்குரியார் பிறரில்லை என்றும், இவள் புலம்பு தீர்க்கும் துணை நீயே என்றும் உள்ளல் வேண்டுமென்பதாம். தெய்ய - அசைநிலை. சிறு நல்லூர் உதுக் காணென்க. நிலவுபோல மணற்கானலும், இருள் போலக் கடலுந் தோன்று மென்க. `நிலவுக்கானல் (மதுரைக் காஞ்சி. 114), இருணிற முந்நீர் (முருகாறு. 293). கடல் உடனாடற்கும் மணற் கானலில் உடனல்கற்கும் ஏற்ற பெற்றி குறித்தவாறாம். வெண்டலைப் புணரி யாயமொ டாடி, மணிப்பூம் பைந்தழை தைஇ யணித்தகப் பல்பூங்கான லல்கினம் வருதல் (அகம். 20). பின்னும் புணர்ச்சி வேண்டிய தலைவற்குத் தோழி இடமுணர்த்தியாக இளம்பூரணர் கூறுதல் காண்க (தொல் களவு 24). ஊரை மடல்தாழ் பெண்ணையால் விசேடித்தது பிறரறியாது மறைந்தொழுகற்கும் ஆதல் கருதியதாம். ஆர் - அசை. நின்சொல் - விரைந்து வரைவல் என்ற நின்சொல். கடுவன்மள்ளனார் 82. வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர் பழாஅ லென்றுநம் மழுதகண் டுடைப்பார் யாரா குவகொ றோழி சாரற் 1 பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற் கொழுங்கொடி யவரை பூக்கும் அரும்பனி யச்சிரம் 2 வாரா தோரே. (எ-து) பருவங்கண்டு அழிந்த தலைமகள் வருவரென்று வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது. (வி) புறஞ்சேர்பு கதுப்புளரி - முதுகைச் சார்ந்து கூந்தலை வகிர்ந்து. அவரிங்ஙனம் தலையளி செய்வது கண்டு இது பிரிதல் குறித்ததென்று நான் அழவும், அழாஅல் என்று முகஞ்சேர்பு நம் அழுத கண் துடைப்பா ரென்க. புறஞ்சேர்பு என்றதனால் அழுத கண் துடைத்தற்கு முகஞ் சேர்தல் பெற்றாம். அழாஅல் என்று அழுத கண் துடைப்பார் யாராகுவர் கொல், அரும் பனி அச்சிரம் வாராதோர் யாராகுவர்கொல் என ஈரிடத்தும் கூட்டியுரைக்க. துடைப்பார் நெகிழ்ந்த நெஞ்சினர் என்பதும், வாராதோர் வன்னெஞ்சினர் என்பதும் கருத்து. ஒரு நெஞ்சிலே ஒரு பொருள் பற்றி வன்மையும் மென்மையும் உண்டாகப் படைக்கப்பட்டார் உலகிற் காணாமையால் இவர் யாராகத் தோற்றஞ் செய்தனர் என்பதாம். ஈண்டுள்ளபோது துடைப்பாராய் ஆண்டு நினைதலுமின்றி வாராதோர் யாராகுவர்கொல்; பன்மாயக் கள்வராவர் எனினு மமையும். சிறுதினை - சிறிது போழ்தில் விளையுந் தினையுமாம். தினைக்கண் மறுகா லவரை பூக்கும் அச்சிரம் வாராதோர் எனக் கொள்க, அவரை முதற்பூத் தோற்றுதற்கு முன்னே வருவல் என்று தெளிவித்துச் சென்று, அவரை மறுபடி பூக்கும் அமயத்தும் வாராதோர் என்க. முதற்பூப் பூத்தது பனியச்சிரம் என்றும், மறுகாற் பூத்தது அரும்பனியச்சிரம் என்றும் கொள்க. மறுகால் - `மறுகா லுழுத வீரச் செறுவில் (நற். 210) வாருறு வணர் கதுப்பு - வார்தலுற்ற வளைந்த கூந்தல் சாரல் - மலைச்சாரலில். வெண்பூதனார் 83. அரும்பெற லமிழ்த 1 மார்பத மாகப் பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை தம்மிற் றமதுண் டன்ன சினைதொறும் 2 தீம்பழந் நூங்கும் 3 பலவின் ஓங்குமலை நாடனை வருமென் றோளே. (எ-து) தலைமகன் வரைந்தெய்துதல் உணர்த்திச் செவிலியைத் தோழி வாழ்த்தியது. (வி) தம்மிற் றமதுண் டன்ன நாடனை அன்னை வரைவுடன் வருமென்றாள். இதனால் அவள் பெறலரிய அமிழ்தம் அருந்தும் உணவாக. பெரும் புகழ் உலகம் பெறுக என்றாள். இக் களவொழுக்கம் தம்மிற் றமதுண்டது அன்றாகவும் இதனையே அவ்வாறு இன்பத்தின் மயங்கிக் கொள்ளுதலால், வரைவுடன் படாது அலர் பேணாமல் மறைந்து வருகின்ற நாடனை, வரைவொடு ஊரறிய வரூமென்றாள் என்க. தம்மிற் றமதுண்டன்ன நாடன் - தம் மனைக்கண்ணே தமக்குரிய தென்று நூல் வகுத்ததை உண்டாற் போன்ற இன்பமுடைய நாடன். அன்ன என்றதனால் தலைவியுள்ள மனை அவன் மனை யாகாமையும், குரவர் கொடுப்பக் கொள்ளாமையால், தன்னுடையார் உடன்பட்ட உரிமை தலையாகாமையும் குறித்துத் தலைவன் வரைவுடன்படாத களவொழுக்கமாதல் காட்டினாள். அறஞ்செய்தாரல்லாமல் பிறர் பெறற்கரிய அமிழ்த உணவோடு கூடிய பெரும் பெயர் உலகம், களவொழுக்கத்து இன்பந் துய்த்த மாத்திரையாற் பெறலாகாமை கருதியும், நாடன் வரைதலால் இனி இல்லறஞ் செய்து அது பெறற் கெளிதாதல் கருதியும், அவ்வறத்திற்குடன்பட்டு, மணம் மறாது, தலைவனை வரைவொடு வருமென்றலால் அன்னை பெறீஇயர் என்றாள். தலைவன் களவொழுக்கத்தின்பத்தையே இவ்வாறு மயங்கிக் கோடலும், அதுவே துறக்கத்தின்பந் தருமென்று வரைவுடன் படாதொழுகலுண்டென்பதும், தம்மிலிருந்து தமது பாத்துண்டற்றா, லம்மா வரிவை முயக்கு (குறள். 1107) என்புழிப் பரிமேலழகர், இவளை நீ வரைந்து கொண்டு உலகோர் தம்மிலிருந்து தமது பாத்துண்ணும், இல்லறத் தோடு படல்வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது எனவும், இல்லறஞ் செய்தாரெய்துந் துறக்கத்தின்பம் எனக்கு இப் புணர்ச்சியே தருமென்று வரைவுடன்படான் கூறிய வாறாயிற்று எனவும் தெளிய வுரைத்தவாற்றா னுணர்க. பலவின் ஓங்குமலை நாடன் என்றது வரைந்து செய்யும் இல்லறத்திற்கு வேண்டுந் துப்புரவு நிரம்பல் குறித்தவாறாம். துறக்க இன்பம் பெறீஇயர் என்றதனால் இவ்வுலக வாழ்க்கை பெறுதலும் கூறினாளாம். `தமதுண் டன்ன நாடனை என்பதனைப் `பெற்றன்ன நீர்த்து (குறள். 1143) என்புழிப் பரிமேலழகர் `பெற்றன்ன நீர்மை - பெற்ற வழி யுளதா மின்பம் போலு மின்ப முடைமை என உரைத்தது போலக் கொள்க. தம்மிற் றமதுண்டன்ன நாடனை எனவும், பழந்தூங்கும் மலை நாடன் எனவும் இயைத்துக் கொள்க. மோசிகீரனார் 84. பெயர்த்தனென் 1 முயங்கயான் வியர்த்தனெ 2 னென்றனள் இனியறிந் 3 தேனது துனியா குதலே கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில் வேங்கையுங் காந்தளு நாறி ஆம்பன் மலரினுந் தான்றண் ணியளே. (எ-து) மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. (வி) யான் முயங்கப் பெயர்த்தனென் - யான் அவள் மார்பை அணைத்தற் பொருட்டுப் புறங்காட்டிக் கிடந்த மகளை என் மார்பிற்கெதிரே பெயரச் செய்தனன். அதற் குடன்படாது வியர்த்தனென் என்றனள். வியர்க்காத நிலையில் வியர்த்தேன் என்று வாயாற் கூறி அப் பெயர்த்தற் குடன்படாளாயினள். அது துனியாகுத லினியறிந்தேன் - அங்ஙனம் பெயர்ந்தது வெறுப்பாதலை இப்போது அறிந்தேன். இதனால் தலைவனை அணைந்த மார்பிற்குத் தாயணைதலும் துனியாதல் குறித்த வாறாம். இது பயில்வு என்னும் உணர்ச்சி என்ப (தொல். களவு. 23). ஈண்டு நச்சினார்க்கினியர் பயில்வாவது செவிலி முலையிடத்துத் துயில் வேண்டாது பெயர்த்து வேறோரிடத்துப் பயிறல் என்றதனா லுணர்க. இனி - அவளைப் போக்கிய இப்போது. ஆஅய் பொதியில் வேங்கையும் காந்தளும் நாறி என்றது தலைவன் பகலிற் புணர்ந்ததற்கு முன் சூட்டிய வேங்கை மலரும் காந்தள் மலரும் இவள்கண் மணத்தல் குறித்தது. தலைவனைப் பகலிற் புணர்ந்து இரவில் தாய் பக்கற் கிடைகொண்ட தலைவி அவன் சூட்டிய மலர்கள் மணந்து அவ்வின்பத்தால் ஆம்பல் மலரினுந் தண்ணியளாகியும் வியர்த்தனென் என்றனள். அதன் கருத்தை அப்போது அறியாதேன், இப்போது அறிந்தேன் என்றாள் என்க. கழறொடி ஆஅய் - கழலுந் தோள்வளையினையுடைய ஆஅய் வேள். கொடுக்கக் கையை நீட்டும்போதெல்லாம் தோள் வளை கழலுதல் குறித்தது. அவன் கொடையால் மழை தவழ்கின்ற பொதியில் மலை என்றவாறு. வடம வண்ணக்கன் தாமோதரனார் 85. யாரினு மினியன் பேரன் பினனே 1 உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர் 2 தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா 3 வெண்பூக் கொழுதும் யாண ரூரன் பாணன் வாயே. (எ-து) வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி வாயின் மறுத்தது. (வி) யாரினும் - தந்தை தாயரினும், மகவினும், தோழி யினும். இனியன் - இவ்வெல்லாரினும் இனிமை செய்பவன் என்க. சாவிற் சாகு மியல்மினாற் பெரிய அன்பினன் என்ற பாணனை நோக்கி இங்ஙனம் தலைவனாதல் பாணன் வாயிலேதான் என்று தோழி வாயின் மறுத்தாளென்க. பாணன் வாயே இனியன் பேரன்பினன் என்றவாறு. இதனாற் பாணன் நெஞ்சினும் அங்ஙனம் நினையாமை குறித்தனள். நாடன் இன்ன நிலையன் பேரன்பினனெனப், பன்மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி, வேனிற் றேரையி னளிய, காண விடுமோ தோழியென் னலனே (நற். 347) என்புழிப் பரிசிற் பாணர் நெடுஞ் சொல் வேனிற்றேரை ஒலிபோல இரங்கத்தக்கது என்றது காண்க. ஊர்க் குரீஇச் சேவல் - ஊர்க் குருவிச் சாதியிற் சேவல். காடு வாழ்கின்ற குருவியின் வேறு என்பது தெரிய ஊர்க் குரீஇ என்றார். `சகட மூர்க் குருவி என்பது திவாகரம். `பெருவரை யடுக்கத்துக் குரீஇ (அகம் 388) இவற்றின் வேறு என்றவாறு. உள்ளுதற்குரிய ஊர்க் குருவி என்க. இவற்றில் ஆண் பெண் நட்டு வாழ்தல் உள்ளுதற்குரியது என்றவாறு. இவ்வூர்க் குரீஇ மனையுறை குருவியாதலால் தலைவன் பல்காலிவற்றின் நட்பினைக் கண்டு உள்ளுதல் கூடுமென்று குறித்தாள். ஊர்க் குரீஇயினுடைய துள்ளு நடையுடைய சேவல் ஈனிலிழைக்க வேண்டிக் கொழுதும் என்பதாம். உள் - மனையினுள்ளிடம். `மனையுறை குரீஇ (புறம். 218). கருமுற்றிய தன் பேடைக் குருவிக்கு. தேம்பொதிக் கொண்ட தீங்கழை - இனிய சாறு பொதிதலைக் கொண்ட தீவிய தண்டு. கரும்பு - சாதி. கரும்பின் வெண்பூ நாறாமை இயல்பு. ஈனில் மெத்தென இழைத்தமைத்தற்குக் கரும்பின் வெண் பூவைக் கொழுதுதல் குறித்தாள். நாறாப் பூ என்றதனால் பிறர் சூடப் பயன் படாததைத் தான் பயன் கொள்ளுதல் குறித்தாள். பூக் கொழுதும் என்றாள். அப் பூவினும் மெத்தென இல்லாதன தள்ளி நல்லன கொள்ளுதல் கருதி. கரும்பின் வேல்போல் வெண்முகை விரியத்தீண்டி, முதுக்குறைக் குரீஇ முயன்று செய்குடம்பை (நற். 366) என்பது காண்க. ஊர்க் குரீஇச் சேவல் கொழுதும் ஊரன் என அக் குரீஇச் சேவற்குரிய இனிமையும் அன்புமில்லாமை குறித்தாள். இனித் தலைவன் உண்மையில் யாரினுமினியனாதலும், பேரன் பினனாதலும் பரத்தையர்க்கே யென்றும், அதனை நெஞ்சத்தால் நன்கறிந்த பாணன் வாயிலே தான் அங்ஙன மாவனென்றும் கருதிக் கூறினாள். பாணன் வாயே இனியன் அன்பினன் என்றது தோழி வாயினும், தலைவி வாயினு மங்ஙனமல்லன் என்றவாறு. வெண்கொற்றனார் 86. சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட் பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப் பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந் 1 தூதை தூற்றுங் கூதிர் யாமத் தானுளம் புலம்புதொ றுளம்பும் 2 நாநவில் கொடுமணி நல்கூர் குரலே. (எ-து) ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. (வி) சிறை பனி - வினைத்தொகை. தடுக்கப்பட்ட நீர்த்துளி. பொறை அருநோயொடு - பொறுத்தற்கரிய விரக நோயொடு. புலம்பலைக் கலங்கி - தனிமையலைத்தலால் யான் சேயரிக் கண் கலங்கித் துயிலாதிருப்ப. என்னை என்னென்று கேட்குநர் உளர் கொல் என்றாள் என்க. கேட்குநர் என்றது `பெரிதாலம்ம நின் பூசல்......... அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே (29) என்புழிப் போல வந்தது. என்னை ஆற்றுதற்குரிய நீயும் துயிறலால் கேட்டிலை என்பது குறிப்பு. ஊதை சிறந்து உறை தூற்றுங் கூதிர் யாமம் என்க. ஆன் நுளம்பு உலம்பு தொறு - மாட்டு ஈ ஒலிக்குந்தோறும். கொடுமணி நாநவில் நல்கூர் குரலே உளம்பும் - அதன் கழுத்திலுள்ள வளைவினையுடைய மணியின் நாவினால் நவிலப்பட்ட வறுங்குரல் தான் யாமத்து அசைந்தொலிக்கும். நல்கூர் குரல் - பொருள் வறிதாகிய ஓசை. `நல்கூர் சுரம் (347). கலங்கி - யான் கலங்கா நிற்க. கலங்க என்பது திரிந்தது. கலங்கழியுங் காரிகை நீத்து (குறள். 1262) என்புழி நீப்ப என்பது நீத்தெனத் திரிந்தாற் போல்வது. இனிக் கண் நோயொடு புலம்பலை மனங்கலங்கிக் கேட்குநர் உளர் கொல் கொடுமணி நல்கூர் குரலே உளம்பும் என்று கூறினும் அமையும். கட்புலம்பலை என்று பாடமாயின் கண்ணுடைய உழுதிரங்கலை எனப் பொருள் கூறுக. நம்பி அகப்பொருளுரை காரர் தனித்துழி இறைவி துனித்தழுதிரங்கலாகக் கூறுதல் காண்க. (கற்பியல். 6). காமத்திற்கு உத்தீபனவேதுவாகிய ஆன்மணிக்குர லல்லது ஆற்றுவிக்கும் குரல் கேட்டிலாமை குறித்தவாறு. கபிலர் 87. மன்ற 1 மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉ மென்ப 2 யாவதும் கொடிய ரல்லரெங் 3 குன்றுகெழு நாடர் பசைஇய பசைந்தன்று 4 நுதலே ஞெகிழ 5 ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே. (எ-து) தலைமகள் தெய்வத்திற்குப் பராயது. மன்ற மராஅத்த - அம்பலத்திலுள்ள கடம்பிலுறைகின்ற. பேஎமுதிர் கடவுள் - அச்சஞ் செய்தலிற் பழமைப்பட்ட தெய்வம். மராஅம் முருகக் கடவுட் குரியது. கொடியோர்த் தெறூஉம் என்ப - கொடுமையுடையாரைக் கொல்லு மென்று சொல்லுவர். எம் குன்று கெழு நாடர் - அம் முருகற்குரிய குன்றிற் கெழீஇய எம் நாடர். யாவதும் கொடியரல்லர் - சிறிதுங் கொடுமை யுடையவ ரல்லர்; நல்லர் என்றவாறு. மற்று நுதல் பசந்ததும், தோள் ஞெகிழ்ந்ததும் அவரான் அன்றோ உண்டாயினவெனின் அங்ஙனமன்று. அவர் பசைஇய நுதல் பசைந்தன்று - இனிப் பிரிதலாகா தென்று அன்பு செய்தல் பொருட்டு நுதல் பசந்தது. அவர் ஞெகிழத் தடமென்றோள் ஞெகிழ்ந்தன்று - பிரிந்ததற்கு அவர் உள்ளம் நெகிழும் பொருட்டுத் தடமென்றோள் ஞெகிழ்ந்தது. அவர் இவள் தம்மைப் பிரிந்து இங்ஙனம் பசந்தா ளென்று மிகப் பசைதற்பொருட்டும், இங்ஙனம் ஞெகிழ்ந் தாள் என்று உள்ளம் ஞெகிழ்தற் பொருட்டும், என் நுதலும் தோளும் தாமாகச் செய்தன இவை என்றும், அவர் கொடு மையா லுண்டாயின அல்லவென்றும் அவர் கொடியரா காமை தெளியக் காட்டியவாறாம். கொடியோர்த் தெறூஉ மென்ப என்று தெய்வத்தின் தெறல் கூறியதனால் கொடியரல்லாத நல்லோரை அருள் செய்த லுடன் குறித்தனளாம். இதனால் அந் நல்லாரை அளித்தற் பொருட்டுப் பராயதாதல் காண்க. `செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (முருகாறு 51) என்புழித் தெறலும் அளித்தலும் அக் கடவுட்குக் கூறுதல் காண்க. நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த, கொடியனாகிய குன்றுகெழு நாடன் (252) என்ற தோழியை மறுத்து எம் தலைவர் கொடியரல்லர் என்றவாறு. பெருந்தோள் ஞெகிழ வவ்வரி வாடச், சிறுமெல் லாகம் பெரும்பசப் பூர, இன்னேமாக வெற்கண்டு நாணி (நற். 358) என்புழித் தலைவன் பிரிந்து வந்து தலைவியின் தோள் ஞெகிழ்தலும், மேனி பசப்பூர்தலும் கண்டு பிரிந்ததற்கு நாணி இனிப் பிரியேனெனத் தெளித்தல் கூறுதல் கொண்டு இப் பொருண்மை உணர்க. ஞெகிழ ஞெகிழ்ந்தன்று என்பதற் கியைய பசைஇய பசைந் தன்று என்ற பாடமே சிறந்ததாதல் காண்க. `நல்ல னென்றியாயிற் பல்லித ழுண்கண் பசத்தன்மற் றெவனோ (ஐங்குறு. 170) என்று தோழி கொடுமை உரைத்தாளாக அவற்குக் கொடுமை இல்லாமை காட்டி நன்மை தெளித்துப் பராயவாறாம். பசைதல் - அன்பு செய்தல். மதுரைக் கதக்கண்ணனார் 88. ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன் சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித் தொன்முரண் சோருந் 1 துன்னருஞ் சாரல் 2 நடுநாள் வருதலும் வரூஉம் வடுநா ணலமே தோழி 3 நாமே. (எ-து) இரவுக்குறி நேர்ந்த வாய்பாட்டால் தோழி தலை மகட்குச் சொல்லியது. (வி) அருவியை உடைய ஓங்குமலை நாடன் பெருங்களிறு வயப்புலியால் தாக்கப்பட்டு இயல்பாகிய பழைய வலி சோர்தற்குக் காரணமாகிய பிறர் துன்னுதற்கரிய சாரலில் நள்ளிரவில் நாடன் வருதலுஞ் செய்வன். இங்ஙனம் அவனை வரச்செய்தலால் இக் களவில் நமக்குண்டாகும் பழியை நாமே நாணலமாவேமென்று தோழி இரவுக்குறி மறுத்ததாம். இதனையே பகற்குறி நேர்ந்ததாகக் கொள்ளுமிடத்து நடுநாள் வருதலும் செய்வன். பகலும் வருதலால் உண்டாகும் அலர்க்கு நாணவேண்டாதேம் ஆவேம் நாமென்று கூறியதாகக் கொள்க. குறியிடம் புகாதொழியின் அவனை வரச்செய்த வடுவுக்கு நாணலமோ என்று குறி நேர்ந்ததாகக் கொள்வதுமாம். வயப்புலி களிற்றைத் தாக்க அது வெருவிச் சோருதல் `பரியது கூர்ங் கோட்ட தாயினும் யானை, வெரூஉம் புலிதாக் குறின் (குறள். 599) என்பதனா னுணர்க. ஒலித்துவரும் அருவிபோல அவன் வரவே அலரொலி பரப்பும் என்பது குறிப்பு. வடுநாணலமோ என்பதும் பாடம். பரணர் 89. பாவடி யுரல 1 பகுவாய் 2 வள்ளை ஏதின் மாக்க ணுவறலு நுவல்ப 3 அழிவ 4 தெவன்கொலிப் பேதை யூர்க்கே பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய நல்லியற் பாவை யன்னவிம் 5 மெல்லியற் குறுமகள் பாடினள் 6 குறினே. (எ-து) (1) தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது. (2) தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி வாயின் மறுத்ததூஉமாம். (வி) பரந்த அடியினையுடைய உரலிடத்தனவாகிய நம் வள்ளைப் பாடல்களைப் பற்றி அயன்மாக்களும் பழி சொல்லுதலுஞ் செய்ப. பகுவாய் வள்ளை - பகுத்து வாயாற் பாடும் உலக்கைப் பாட்டு. மாறி மாறிக் குறும்போது அவரவர் வாயிற் பகுத்துப் பாடப்படுதலால் பகுவாய் வள்ளை எனலாயிற்று. உலக்கை வயின் வயினோச்சி என்பது குறிஞ்சிக்கலி (4). காஞ்சி நீழற்றமர்வளம் பாடி, யூர்க்குறு மகளிர் குறுவழி (அகம். 286) என்பதனால் மகளிர் பலரும் பாடிக் குறுத லுணரப்படும். அவ் வள்ளையில் இம் மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே, அதற்கழிவது அவ்வேதின் மாக்களையுடைய இப் பேதையூர்க்கு என்பயன் செய்வது என்றவாறு. ஊர்க்கழிவது எவன் கொல் - ஊர்க்குக் கெடுவது என்னை கொலென்பதுமாம். பேதை ஊர்க்கு - நன்றுந் தீதும் பகுத்துணர மாட்டாத பேதைமையையுடைய ஊர்க்கு. இது களவிற் பொருள் கோளாம். இனி, கற்பினாமிடத்து ஏதின் மாக்கள் பரத்தையரெனக் கொள்க. குறுமகள் தலைமகன் பரத்தைமையைப் பாடின ளாய்க் குறின். இப் பேதை யூர்க்கு அழிவது எவன் - இப் பேதைமையை யுடைய பரத்தையர் சேரிக்குக் கேடு என்னை என்க. பெரும் பூட் பொறையன் - ஏழரசரை வென்று அவரெழு முடியானு மாக்கிய பெரும் பூணையுடைய சேரன். இது சேரர்க்கு வென்றியான் எய்திய குலப்பூண் என்பது இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனையும், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலையும், செங்குட்டுவனையும் பதிற்றுப்பத்துள் இவ்வணியாற் சிறப்பித்த வாற்றா னறிக. பூணணிந்து விளங்கிய புகழ்சான் மார்ப (பதிற். 65) எனக் கபிலர் வாழியாதனைச் சிறப்பித்ததும் இது பற்றி என்று துணியலாம். பேஎமுதிர் கருங்கட் டெய்வம் அமரர் கணத்தது என்பது, கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை, விரிகதிரிளவெயிற் றோன்றி யன்ன (நற். 192) என்றதனா லறியப்படும். இப் பாவை விரிகதி ரிளவெயிற் றோன்றுதலைச் சிறப்பித்த வாற்றான் இது கொல்லிக் குடவரைக்கண் மேற்கு முகமாக எழுதப்பட்டது தெளியப் படும். சுடர்பொழிந் தேறிய விளங்கு கதிர் ஞாயிற் றிலங் குகதி ரிளவெயில் (மதுரைக். 702-3) என்பதனால் இள வெயில் மறையும் ஞாயிற்றதாதலறிக. பொறைய னுரைசா லுயர்வரைக் கொல்லிக் குடவயின் ... ... தேனுடைய நெடுவரைத் தெய்வ மெழுதிய வினைமாண் பாவை (நற். 185) என வருதலான் இப் பாவை கொல்லியின் குடவயினிருத்த லறியலாம். கண்டாரை வருத்துவது கொல்லிப்பாவை. ஈண்டுக் குறு மகள் ஏதின் மாக்களைத் தன் வள்ளையான் வருத்துதலால் அதனொடு உவமித்தாள். மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார் 90. எற்றோ வாழி தோழி 1 முற்றுபு கறிவள ரடுக்கத் திரவின் முழங்கிய மங்குன் 2 மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க் கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக்கனி 1 வரையிழி யருவி யுண்டுறைத் 2 தரூஉம் குன்ற நாடன் கேண்மை மென்றோள் சாய்த்துஞ் சால்பீன் 3 றன்றே. (எ-து) வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகத் தோழி கூறியது. (வி) கறி வளரடுக்கத்து முற்றுபு கலை தொட இழுக்கிய பலவுக் கனியை என்க. முற்றியதனால் முசுக்கலை தொட்டவளவில் இழுக்குதல் குறித்தார். இரவில் முழங்கிய மங்குல் மாமழை வீழ்ந்தென வரையிழியருவி யுண்டுறைத் தரூஉம் குன்ற நாடன் என்க. பூவில்லாத கோளியாய் நாறுதற் சிறப்பால் பூநாறு பலவு என்றார். பொங்கு மயிர்க்கலை - குளிராற் சிலிர்த்த மயிர்க்கலை. கறி - மிளகு. குளிர்க்கு அழலக் கறி கறித்து அழன் மிகுதி தீரக் கலைகளை தோண்டப் புக்கது என்பது உய்த்துணர்க. இங்ஙனம் கொள்ளாக்கால் இரவிற் கலை கனி தொடுதற்குக் காரணமில்லையா மென்க. அதிர்குரன் முதுகலை கறி முறி முனைஇ (அகம். 182) என்பதனால் ஆசுக்கலை கறிகறித்து வெறுத்தலுணர்க. நாடன் கேண்மை புறத்தே தோள் சாய்த்தும் அகத்தே சால்பீன்றது என்றவாறு. சால்பு - அமைதி என்பர் நச்சினார்க்கினியர் (தொல்.பொருள். 9). இதன் உள்ளுறையும் ஆண்டே அவர் கூறியது காண்க. புறத்தின் மெலியும் அகத்தின் அமைதியும் ஒரு போதே ஒரு கேண்மையே செய்கிற்பது; இஃது எத் தன்மைத்தோ என்றாள் என்க. வரைவு நீட்டித்தலான் மெலிவும் தெளித்த சொற்பற்றி வரைவன் என்ற துணிபால் அமைதியும் உண்டாதல் காட்டிய வாறாம். தலைவி உள்ளத்தின் சால்பு தன்னாலே உணரப் படுவ தொன்றாகலான் இது தோழி கூற்றாயிற்று. மங்குல் மாமழை - இருள்போல் கரியமழை, `மங்குல் ஞாயிறு என்ற பரிபாட்டுரையானறிக. `சால்பென்னுந் திண்மை (குறள். 988) என வள்ளுவனார் கூறுதலான் இது தோள் சாய்த்த மெலிவிற்கு மாறாதலுணர்க. செல்லா இரவே சிறுகா இருளே (கம்ப. உருக்கா. 4) என்பதனால் இரவுக்கும் இருளுக்கும் வேற்றுமை உணர்க. ஔவையார் 91. அரிற்பவர்ப் பிரம்பின் 1 வரிப்புற விளைகனி குண்டுநீ ரிலஞ்சிக் 2 கெண்டை கதூஉம் 3 தண்டுறை யூரன் பெண்டினை யாயிற் பலவா குகநின் னெஞ்சிற் படரே ஓவா தீயு மாரி வண்கைக் கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி கொன்முனை 4 யிரவூர் 5 போலச் சிலவா குகநீ துஞ்சு நாளே. (எ-து) (1) பரத்தையர் மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழித் தன் வரைத்தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழித் தலை மகள் அதனை நெருங்கிச் சொல்லியது. (2) பரத்தையிற் பிரிந்து வந்தவழி வேறுபட்ட கிழத்தியைத் தோழி கூறிய தூஉமாம். (வி) அரில் - பிணக்கம். பவர் - கொடி. பிரம்பின் வரிப் புறத்தை உடைய விளைந்த பழத்தை இலஞ்சிக் கெண்டை கதூஉம் ஊரன். கெண்டை கதூஉம் - கெண்டைகள் பற்றிக் கொள்ளும் கெண்டை - சாதியொருமை. ஊரன் பரத்தையர் பலர்க்கும் எளியனாதல் குறித்தது. அத்தகைய ஊரன் பெண்டு இன்னையாயின் என்க. இன்னை யாயின் என்றது அவன் பரத்தைமைக்கு வெறாது அவனைக் கண்ட அளவே நெஞ்சு நெகிழ்ந்து தழுவப் புகுவையாயின் என்பதாம். தன்னையே முன்னிலையாக வைத்துக் கூறியது. அஞ்சி கொன் முனை இரவூர் போல நின் நெஞ்சிற் படர் பலவாகுக. நீ துஞ்சு நாள் சில வாகுக என்று இடைக்கிடந்த உவமையை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் கொள்க. படர் பலவாகுக இரவூர் போல எனவும், இரவூர் போலத் துஞ்சு நாள் சிலவாகுக எனவு முரைத்துக் கொள்க. துஞ்சு நாள் சிலவாதலும் படர் பலவாதலும் நெடுமானஞ்சி கொன்முனை யிரவூர்க்கு முள்ளன காண்க. படர் பலவாதல் காரணமாகவே துஞ்சு நாள் சிலவாத லோர்ந்து கொள்க. ஒருதலையா னின்னாது காமம் காப்போல, விருதலை யானுமினிது (குறள் 1196) என்னும் குறளில் காப்பார் ஒரு தலைக்க ணின்னாதாதற்கும், இருதலைக் கண்ணுமாயினினிதாதற்கும், உவமையாதல் போல இதனைக் கொள்க. தழுவுதலால் தலைவன் பரத்தைமை ஒழியான்; அது பற்றிப் படர் பலவாகும்; துஞ்சு நாள் சிலவாகும் என்க. ஓவாதீயும் மாரி வண்கை - இடையிலொழியாது நல்கும் மாரியனைய வள்ளியகை. ஓவாதீயும் மாரி என்றது பருவம் பற்றி நல்கும் மாரியை விலக்கிய தாம். கடும் பகட்டியானை - கடிய வேகத்தானாகிய பெருமையையுடைய யானைப் படை. நெடுந்தேர் கூறியதனால் குதிரையும் உடன் கூறினவராவர். இவற்றால் கொடையும் வீரமும் குறித்தார். அஞ்சி கொன்முனை இரவூர் - அஞ்சியினுடைய அச்சம் செய்யும் போர் முகத்து இரவினையுடைய ஊர். இனி வேறுபட்ட கிழத்திக்குத் தோழி கூற்றாயின் பெண்டு இன்னையாயின் என்றது நின் இல்லறத்திற்கும் கற்பொழுக்கத் திற்கும் தலைமைக்கும் தக ஊரனை எதிர் கொண்டு வழிபடாது அவன் பரத்தைமை கருதி வேறுபடும் இத்தன்மை யுடையையாயின் என்று கூறியதாகக் கொள்க. தலைவனைத் தழுவாமையால் அவன் பரத்தைமையினும் கொடிய படர் பலவாகு மென்றும், தலைவிக்குத் துஞ்சு நாள் சிலவாகுமென்றும் தோழி கூறினவளாவள். “ஊரன்... ... ... பரத்தைமை தாங்கலோ விலலென வறிதுநீ, புலத்த லொல்லுமோ மனைகெழு மடந்தை, யதுபுலந் துறைதல் வல்லி யோரே, செய்யோ ளீங்கச் சில்பதங் கொழித்துத், தாமட்டுண்டு தமிய ராகியத், தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப, வைகுந ராகுத லறிந்து, மறியா ரம்மவஃ துடலுமோரே (அகம். 316) என்பதனால் உணர்க. தலைவி தழுவினால் எளியளாய்க் கேடுறுதலும், தழுவா தொழியின் அரியளாய்க் கேடுறுதலும் கருதிக் கூறியவாறு. தாமோதரனார் 92. ஞாயிறு பட்ட வகல்வாய் வானத் தளிய தாமே கொடுஞ் சிறைப் பறவை இறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த1 பிள்ளை யுள்வாய்ச் செரீஇய இரைகொண் டமையின் 2 விரையுமாற் செலவே. (எ-து) காமமிக்க கழிபடர் கிளவியாற் பொழுது கண்டு சொல்லியது. (வி) கொடுஞ் சிறைப் பறவைகள் மராஅத்த பிள்ளையுள் வாய்ச் செரீஇய இரை கொண்டமையின் ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்துச் செலவு விரையும் இவை தாம் அளிய என்க. கொடுஞ் சிறைப் பறவை - விரைதற்கு உதவியாய் வளைந்த சிறகுகளை உடைய பறவைகள். இறை உற ஓங்கிய மராஅம் - தாம் தங்குதல் பொருந்த உயர்ந்த கடம்பு. நெறி அயல் மராஅம் - வழிக் கயலாயுள்ள கடம்பு. மராஅத்த பிள்ளை - கடம்பிலுள்ள குஞ்சுகள். பிள்ளை உள்வாய்ச் செரீஇய - குஞ்சுகளின் உள்வாயிற் செருகும்படி. உள்வாய் கூறியது முன் வாயில் வைத்தால் நழுவி வீழ்தல் கருதி என்க. பிள்ளை உள்வாய் கொள்ளற் கேற்ற இரையாகிய சிறுமீன் கொண்டமையின் செலவு விரையும் என்க. பறவை ஆண் பெண் இரண்டுமாகிய பொது. இவை காதல் செய்து இன்புற்றுப் பிள்ளைப் பேறெய்தி அவற்றை இனி தோம்புதல் போலத் தானும் தலைவனை வதுவையிற் கூடி மகப்பே றெய்தி அம் மகவினை இனிதோம்பி மகிழ்தல் வேண்டித் தலைவி களவிற் கூறியதாக நினைக. நச்சினார்க்கினியர் களவிலே இப்பாட்டை எடுத்தாளுதல் காண்க (தொல்.களவு. 20). இவ்வாறு புறத்து நிகழும் நிகழ்ச்சிகள் காமத்தை வளர்க்குமென்க. இப் பறவைகள் இயற்கையாகிய இவ்வன்பினால் இரங்கத் தக்கன என்னு முகத்தால் இவ்வாறு மகப்பேறு இனிதோம்பும் இல்லறத்து வாழ்தற்கு விரையாது வரைவு நீட்டிக்கும் தலைவர் இவ்வன்பு அறிகிலரென்று குறித்த வாறாம். அளியதாமே - இவைதாம் அறியாதன என்று கொண்டு தலைவர்தாம் மிக அறிந்தவரென்று இகழ்ச்சிக் குறிப்பால் நினைத்தாளெனினு மமையும். அளித்திரா வென்னல்லதில்லை துணை (குறள். 1168) என்புழி அளித்து - அறியாமை யுடைத்து எனப் பரிமேலழகர் உரைத்தது காண்க. காலமிடம் தெரிதலும் பிள்ளையை ஊட்டும் அன்பின் விரைதலும் உடைமையால் பறவைகள் அறிவுடையன என்பது கருத்து. அள்ளூர் நன்முல்லையார் 93. நன்னலந் தொலைய 1 நலமிகச் 2 சாஅய் இன்னுயிர் கழியினு முரைய லவர்நமக் கன்னையு மத்தனு மல்லரோ தோழி 3 புலவியஃ 4 தெவனோ வன்பிலங் கடையே. (எ-து) வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது. (வி) நல் நலம் என்றது பெண் தன்மைக்கு இயல்பாகிய நாணினாகிய நலத்தை, நாணென்னு நன்மை குறித்தது சால்பு (குறள். 1013) எனவும் `நலஞ்சுடு நாணின்மை நின்றக் கடை (குறள். 1019) எனவும் வருவன கொண்டுணர்க. புறத்து மேனி நலம் மிகச் சாய்ந்து உள்ளே உள்ள இன்னுயிர் கழியினும் அவ் வுயிரினுஞ் சிறந்த நன்னலமாகிய நாண் தொலைய அவரைப் புலந்ததாகத் தோழி உரையல் என்றவாறு. ஒருவர்க்கு உரைத்தற்கண் நாண் தடையாதல் காண்க. அவர் நமக்கு அன்னையும் அத்தனு மல்லரோ - இருவேறு வடிவினுள்ள அன்னையும் அத்தனும் நமக்கொரு வடிவினாகியர் அவரல்லரோ. அங்ஙனம் அன்னையும் அத்தனுமாகிய பெற்றோர்க்கு இயல்பாய அன்பு இல்லாத இடத்து அவரைப் புலத்தலாகிய அஃது என்ன பயனு டைத்தாமென்க. புலவி என்பது அன்புடைக் காதலர் குழையத் தழுவி இன்பமிகத் துய்த்தற் பொருட்டு முன்னிகழ்வதாகும், அன்பில்லுழி அப் புலவியாற் பயனில்லை என்றவாறு. உரையல் என்றது புலந்ததாகவுரையல் என்றே கொள்ளத் தகுமென்றது புலவி யஃதெவனோ என்ற கூற்றாலறியக் கிடப்பது. யாரையோ நிற்புலக்கேம் (அகம். 46) என்பது காண்க. தலைவனைத் தலைவி காய்தற்கண் வந்ததென இளம்பூரணர் கூறுதல்கொண்டு இஃதுணர்க (தொல். கற்பு. 6). இது வாயில் மறுத்ததாலும் காண்க. நச்சினார்க்கினியர் உரையல் என்றது அன்பிலை, கொடியை என உரையல் என்றதாகக் கொண்டு கூறுவர் (தொல்.கற்பு. 48). அவர் நமக்கு அன்னையும் அத்தனு மல்லரோ என அறிவுறுத்தலான் அன்னையும் அத்தனும் அல்லர் என நினைந்து அன்பிலை கொடியை என உரையல் என்றாள் என்றார். தலைவி அயன்மை கூறியவாறென அவர் கொள்வர். நன்னலந் தொலைய உரையல்; நாண்கெட உரையல். `நோய் செய்தார்க் குரைத்தலு நாணுத் தரும் (குறள் 1162). நமக் கன்னையு மத்தனு மல்லரோ என்றது அவர் கருத்தால் நாம் மகப்போலக் கண்டு அன்பு செய்யப் பெறேமாயினும் நம் கருத்தால் பெற்றாரல்லரோ அவர் என்று கருதி நம்மாலன்பே செய்தற்குரியர், புலத்திற்குரியல்லரெனக் குறித்தாள். தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள். 212) என்புழித் தக்கார்க்கு - தக்கார்க்காயின் என்பது போல, நமக்கு - நமக்காயின் என வந்தது. ஈண்டுப் புலந்துரைத்தலே கருதி உரையலென்றாள் என்பது இது மற்றெவனோ தோழி துனியிடை, இன்னரென்னு மின்னாக் கிளவி (181) என்பதனாலுணர்க. நாணிட் டுரையவற் குரையா மாயினும் (நற். 263) என்புழி உரையாமைக்கு ஏது நாணாத லுணர்க. உயிரினுஞ் சிறந்த நாணு நனிமறந் துரைக்க லுய்ந்தனனே (நற். 17) என்பதும் அது. பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணியதாக உரைப்பதல்லது அந் நாண் கெடப் புலந்ததாக உரைய லென்பது கருத்தாம். `ஒற்றுமையுடைய காதலர் மாட்டுப் புலத்தலன்றே பேரின்பம் (குறள். 1323) அஃதில்லார் மாட்டு அஃதெவன் என்க. கதக்கண்ணனார் 94. பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத் தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே யானே மருள்வென் 1 றோழி பானாள் இன்னுந் தமியர் கேட்பிற் 2 பெயர்த்தும் என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே அருவி மாமலைத் தத்தக் 3 கருவி மாமழைச் சிலைதருங் குரலே. (எ-து) பருவங் கண்டு ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது. (வி) பேதைப் பித்திகத் தரும்பே பெருந்தண் மாரி முன்னும் மிகச் சிவந்தன என்க. மாரிப் பருவத்திற்கு முன்னர்ச் சிவத்தலால் பேதைப் பித்திகம் என்றாள். பித்திகத்தரும்பு சிவக்கு முன்னர்ப் போதுவல் என்று கூறிச் சென்று, இன்னும் வாராது தமியராய்ப் பிரிந்திசினோர். மாமழைச் சிலைதருங்குரல் பானாள் கேட்பின் என்னாகுவர் கொல் யானே மருள்வேன் என்றாள். என்னாகுவர் கொல் - யாதின்கண் ஆவரோ. என்கண் ஆவரோ, தம் வினையின் கண் ஆவரோ. இவற்றுளொன்று துணியலாகாது யானே மருள்வேன் என்றவாறு. பெயர்த்தும் என்னாகுவர் கொல் என்றது முன்னே என்கண் ஆகாது வினையின்கணாகிப் பிரிந்தோர் குரல் கேட்பின் திரும்பவும் என்னாவரோ என்றதாம். யான் ஆற்றுவல் அவர்தாம் என்னாகுவர்கொல் என்றுதான் யானே மருள்வேன் என்பதுமாம். மாமலையின்கண் அருவி தத்தாநிற்க மழைச் சிலைதருங்குரல் என்க. முன்னது பெருமை, பின்னது கருமை. கருவி - தொகுதி. சிலைதருங் குரல் - இடிக்கும் ஓசை. பானாட் கேட்பி னென்றது நள்ளிரவினும் தமியர் துயிலாமையைக் குறித்தது. தமியர் கேட்பின் என்றது தானுமவரும் ஒருங்கிருந்து கேட்பின் கூடற்கினியது கார் காலமென்னுங் குறிப்பிற்று. என்னாகுவர் கொல் - `நம்மிலும் வலிதாத் தூக்கிய பொருளிடை யாவரோ (அகம். 265). அப்பொருளினும் வலிதாத் தெளித்த தம் சொல்லிடை யாவரோ மருள்வேன் என்றா ளென்பதூஉம் ஆம். கபிலர் 95. மால்வரை யிழிதருந் தூவெள் ளருவி கன்முகைத் 1 ததும்பும் பன்மலர்ச் சாரற் சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள் 2 நீரோ ரன்ன சாயல் தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே. (எ-து) தலைமகன் பாங்கற்கு உரைத்தது. (வி) பன்மலர்ச் சாரற் சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகளுடைய சாயல் என்க. மால்வரை இழிதரும் தூவெள்ளருவியின் கன்முகைத் ததும்பும் நீரோரன்ன சாயல் என்க. நீரினு மினிய சாயல் (புறம். 105) என்றார் இவரே. தூயமென்மை என்றற்கு மலையிற் றூவெள்ளருவியின் நீரை உவமித்தார். ஈண்டுச் சாயல் என்பது உடம்பு முழுதும் உள்ள மென்மை. சிறு குடிக்குறவன் குறுமகள் என்றது தான் பெருங்குடிப் பெரு மகனாதலைக் குறித்தது. பெருந்தோள் கூறியது தன் பெருந்தோள் தழுவற்கு ஒப்புமை கருதி. குறுமகள் நீரோரன்ன சாயல் தீயோ ரன்னவென் உரன் அவித்தன்று - சிறுமியின் நீரோடு ஒரு தன்மைத்தாய் ஒத்தமென்மை, தீயோடு ஒரு தன்மைத்தாய் ஒத்த என் வன்மையை மாய்த்தது. மென்மை வன்மையை அவித்தது அதிசயம். உரன் - வன்மை. `தீமுரணிய நீரும் (புறம். 2) என்பதனால் தீயும் நீரும் மாறுபடுதல் உணரலாம். பன்மலர்ச் சாரலை நினைந்தது தான் குறுமகளைத் தழுவிய இடனாதல் பற்றி. ஓரன்ன என்பது `ஓரொத்த (பரிபா. 20) என்பது போல் வந்தது. ஓர் - அசை எனினுமாம். கல்முகை - மலைமுழை. அள்ளூர் நன்முல்லையார் 96. அருவி வேங்கைப் பெருமலை 3 நாடற் கியானெவன் செய்கோ வென்றி யானது நகையென 1 வுணரே னாயின் என்னா குவைகொ னன்னுத னீயே. (எ-து) தலைமகனை இயற்பழித்துத் தெருட்டுந் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது. (வி) அருவியான் வளரும் வேங்கையினையுடைய பெருமலை நாடற்கு என்க. அருவியின் தன்மை ஆடவர் தன்மையாகவும் வேங்கையின் தன்மை மகளிர் தன்மை யாகவும் நினைக. அருவி தன்கண் எய்தினாற் பயன்கொள்வதல்லது தானே யதன்பாற் சென்று பயன் கொள்ளவும், அதனைத் தன்கண் எய்துவிக்கவும் மாட்டாத வேங்கை போல, மகளிரும் தம் காதலர் தம் பாலெய்தினாற் பயன்கொள்வதல்லது தாமே யவர்பாற் சென்று பயன் கொள்ளவும், அவரைத் தம்பா லெய்துவிக்கவும் மாட்டாமை உணர்ந்து கொள்க. இக் கருத்தே `மகளிர் திறம் பெய்ய வுழக்கு மழைக்கா (பரிபா. 9) என்பதனா லினிது விளக்கப்பட்டது. ஆண்டுப் பரிமேலழகர், `காவை ஒத்தலாவது, காதனக் கின்றி யமையாத மழையை வருவித்துக் கொள்ளமாட்டாது, அது தானே வந்துழிப் பொலிந்து, வாராத வழியும் ஆம் அளவு ஆற்றி ஆகாத எல்லைக்கண் இறந்து படுதல் எனத் தெரிவித்த வாற்றா னிஃதுணர்ந்து கொள்க. இதனால் நாடன் தன் மலையின் அருவி போல ஒருகாற் பெருகி வந்தும், ஒருகால் வற்றி வாராதும் ஒழுகுவன் என்றும், அம் மலை யருவியால் வளரும் வேங்கை போல் யாமும் வந்துழிப் பயன் துய்த்தும், வாராதவழி யாற்றியும் இருப்பதல்லது வேறு அதற்கு யான் தனியே யாது செய்வேனோ என்று அவனை இயற்பழித்துத் தோழி தலைவியைத் தெருட்டினாளாகக் கொள்க. செய்கோ என்றது தலைவன் குறையே என்று குறிப்பானுணர்த்தி இயற்பழித்தவாறாம். அவனாற் பயன் துய்க்கும் நின்னாலும் செயற் கரியதொன்றை நின்நிழல் வாழும் யான் எங்ஙனம் செய்கோ என்று வெறுத்துரைத்தா ளெனினு மமையும். தலைவன் வந்து வரையாத குறைக்கு யான் நிரப்புத லெங்ஙன மென்று நீ குறித்ததை நகையென வுணரேனாயின் என்னாகுவைகொலென்றாள். இங்ஙனம் நீ என் தலைவரையும் என்னையும் குறிப்பாற் கொள்ளக் கூறியது என்னை நகுவதாகக் கருதாது அவரையே இயற் பழித்ததாக வுணர்வேனாயின் நன்னுதலுடைய நீ என்னாகுவை கொலென்றாளென்க. என்னாகுவை - யாதாகுவை. நன்னுத லுடைமையால் மகளாவையோ அன்றி யான் வேட்ட தலைவரைச் சிற்றாறாகக் கருதி இயற்பழித்தலான் மகள் வடிவின் வேறாவையோ. தலைவி, பெருமலைக் கேற்பத் தலைவரை வற்றாப் பேராறாகப் பாராட்டி இயற்பட மொழிந்தாளென்று உய்த்துணரத் தகும். நகையென உணரேன் என்றதனால் தோழி தலைவர் செயலை எள்ளுதற்குறிப்போடு சிறு நகை செய்து வெறுத்துரைத்தன ளென்றும் துணியலாம். என்னாகுவை கொல் என்பது என்கண் ஆகுவை கொல் எனினும் பொருந்தும். வெண்பூதியார் 97. யானே யீண்டை யேனே யென்னலனே 1 ஆனா நோயொடு கான லஃதே துறைவன் றம்மூ ரானே மறையல ராகி 2 மன்றத் தஃதே. (எ-து) வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (வி) யானே ஈண்டையேனே - யான் மட்டும் இவ்விடத்துள்ளேன். பிரிந்தமையாத நோயொடு என் நலனே கானலஃதே என்க. இலங்குவளை நெகிழச் சாஅய் யானே, யுளனே....... என்னலனே.... தண்ணந் துறைவனொடு கண்மாறின்றே (125) என இந் நூலுள் வருதல் கண்டுணர்க. நலன் கான லஃதென்றது நலன் அவருண்ட கானலிடத்தது என்றவாறு. `அவருண்ட வென்னலனே (112) என்பது காண்க. நலனைக் கொள்ளை கொண்ட தலைவன் தம் ஊரான், மறைவிற் செய்தி அலராகி எம்மூர் மன்றத் திடத்தது. மறை - பிறரறியாமல் என் நலனைக் களவிற் கொண்ட செய்தி. தம் ஊரான் என்றது இன்னும் வரைந்து எம்மூராகச் செய்கின்றிலன் என்னும் குறிப்பிற்று. தம் என்ற பன்மை துறைவன் தந்தையை உளப்படுத்திய தாம். மன்றம் - ஊரம்பலம். அலராகி என்றது அம்பலின் மிக்கது குறித்தது. வரைந்தால் அவரோடு அவர் ஊர் புகுதற்குரிய யான் வரைவு நீட்டித்தலால் தனியே ஈண்டையேன் என்றவாறு. இது மாட்டின்றி வந்த செய்யுள் எனப் பேராசிரியர் உரைத்தலான் (தொல்.மெய். 211) என் நலனே ஆனா நோயொடு கானலஃதென்று கூறப்பட்டது. சிறிது மாட்டுடையதாக்கி யானே ஆனா நோயொடு ஈண்டையேனே எனவும் என் நலனே கானலஃ தெனவும் கூறுதல் சிறப்புடைத்தாதல் காண்க. நலனுக்கு நோய் கூறுதலினும் தனக்கே கூறுதல் பொருந்திற்றாகும். இங்ஙனமாயின் துறைவன் தந்த ஆனா நோயொடு யான் ஈண்டையேன். அவன் கொண்ட என் நலன் கானலஃது. இவ்வாறு நோய் தந்து நலங்கொண்ட தலைவன் தம்மூரான். அவன் களவினிகழ்த்திய இப் பண்ட மாற்றுச் செய்தி அலராகி மன்றத்தஃது என்று கூறி, இப் பழி பரிகரிக்க வரைவொடு விரைந்து வருகின்றிலன் எனக் குறித்தாள் என்க. கோக்குள முற்றனார் 98. இன்ன ளாயின ணன்னுத லென்றவர்த் துன்னச் சென்று 1 செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழிநம் படப்பை நீர்வார் பைம்புதற் கலித்த மாரிப் பீரத் தலர்சில கொண்டே (எ-து) பருவங் கண்டழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. (வி) தோழி மாரிப் பீரத்தலர் சில கொண்டு அவர்ச் சென்று துன்ன நன்னுத லின்னளாயினள் என்று செப்புநர்ப் பெறின் நன்று மன் என்க. “நுதலே, பீரிவர் மலரிற் பசப்பூர்ந் தன்றே (நற். 197) எனவும், நுதல் பீரலரணி கொண்டு (கலி. 53) எனவும் வருவன காண்க. மறைக்கப் படாமையின் நுதற் பசலை அயலார்க்கு எளிதினறிதல் கருத்தாகும். நுதலிறை கொண்ட வயலறி பசலை (அகம். 235). செப்புநர்ப் பெறின் நன்று மன் - செப்பு நரைப் பெறாமையால் இக் களவு நன்றன்று என்றவாறு. பெறின் நன்று - பெற்றால் நல்லது. மன் - அது கூடாதன்றே என்க. பிரியாயாயின் நன்றுமன் (அகம். 33) என்புழிப் பழைய உரைகாரர், பிரியாயாயின் நன்று, மன் - அது மாட்டா யன்றே என்றது காண்க. களவின்கண் வாயிலுண்டாயின் களவு வெளிப் படுமாதலாற் பெறலாகாமை பற்றிப் பெறின் என்றாள். இது களவின்கண் வரைபொருள் பற்றிப் பருவங் குறித்து இட்டிடைத் தலைவன் பிரிந்ததாம். பீரத்தலர்சில கொண்டு வாடாது காட்டி இன்னளாயினள் எனச் செப்புநர் என்றதனானும் இது சேய்மைக்கட் பிரிவாகாமை யுணர்க. மாரிப் பீரம் என்றதனால் அவன் வருவது குறித்த பருவம் அஃதாதல் பொருந்தும். பைம் புதற் கலித்த பீரம் - பசிய புதலைப் பற்றுக்கோடாகக் கொண்டு படர்ந்து தழைத்த பீர். பீரத்தலர் போலப் பசந்ததல்லது அதற்குள்ள பற்றுக்கோடு தனக்கில்லை என்பது குறிப்பு. ஔவையார் 99. உள்ளினெ னல்லனோ 1 யானே யுள்ளி 2 நினைத்தனெ னல்லனோ 3 பெரிதே நினைத்து 4 மருண்டனெ னல்லனோ 5 வுலகத்துப் பண்பே நீடிய மரத்த 6 கோடுதோய் 7 மலிர்நிறை 8 இறைத்துணச் 9 சென்றற் றாஅங் கனைப்பெருங் காம மீண்டுகடைக் கொளவே. 10 (எ-து) பொருள் முற்றிப் புகுந்த தலைமகன், `எம்மை நினைத்தும் அறிதிரோ? என்ற தோழிக்குச் சொல்லியது. (வி) யானே உள்ளினெனல்லனோ - யான் இடைவிடாது நும்மைக் கருதினேனல்லனோ. அங்ஙனம் கருதிய நிலையில் பெரிதே நினைத்தனெனல்லனோ - செய்யும் பொருளினும் பெரிதாகிய நும் காம இன்பமே நினைந்தனெனல்லனோ. அது நினைந்து மீண்டு, நீடிய மரத்த கோடு தோய் மலிர் நிறை இறைத்துணச் சென்றற் றாஅங்கு அனைப்பெருங் காம வேட்கை கடைக்கொள உலகத்துப் பண்பின்கண் மருண்டனெ னல்லனோ என்க. பெரிதே நினைத்து மீண்டு என்றதனால் பெரிது காம இன்பமாதலுணர்க. காமமோ பெரிதே (18) `காமமோ பெரிதே (கலி. 137) எனவரும். அனைப் பெருங் காமம் என்றது அப் பெரிதே குறித்தல் காண்க. அனைப்பெருங் காமம் கடைக்கொள - அவ்வளவு பெரிய காமம் முடிவடைய. கூடிய காமம் பிரிந்தார் - வரவுள்ளி (குறள் 1264) என்புழி நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூடிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து எனப் பரிமேலழக ருரைத்தல் காண்க. நீடிய மரங்களின் கொம்பு தொடத் தோய்ந்த நிறை வெள்ளம்; சென்று இறைத்துண்ண அற்றாங்கு - நெடுந் தூரஞ் சென்று ஆண்டுள்ளார் இறைத்துண்ண வற்றினாற் போல; காம வேட்கை முடிவடைய என்க. கடலில் நின்றுண்டாகிய தீநீர் மலையிற் பெய்யப்பட்டு அருவியாய் வழிந்து மீண்டும் கடலை எய்தப் புகுமளவில் வற்றி இறைத் துண்ண அற்றாற் போல நும்மின் நின்றுண் டாகிய காம வேட்கை வினை செய்வுழி நின்று பெருகி மீண்டும் நும்பால் எய்திய நிலையில் வற்றிய தென்பது கருத்தாகக் கொள்க. பொருள் கடைக்கூட்டப் பிரிந்த யான் காமம் நினைந்து மீண்டு காமம் கடைக்கொண்ட அளவில் உலக இயல்பின்கண் மருண்ட னெனல்லனோ என்றவாறு. வினைவயிற் பிரிவுழிக் காம வேட்கை பெருகாமையும் அது முடிந்துழிப் பெருகுதலும் அங்ஙனம் பெருகியது தலைமகளை மீண்டெய்திய வளவில் வற்றுதலும் ஆகிய உலகத்துப் பண்பின்கண் மருண்டனென் அல்லனோ என்றான் என்க. பேராசிரியர் திருக்கோவை யுரையில் (9) `புணராத முன்னின்ற வேட்கை புணர்ச்சிக்கட் குறைபடும் என்றார். பரிமேலழகர் வினைவயிற் பிரிவுழிக் காமவின்பம் நோக்காமையும், அது முடிந்துழி அவ்வின்பமே நோக்குதலும் தலைமகற்கு இயல்பு (குறள். 1264) எனக் கூறுதலான் இஃதுணர்க. காம இன்பம் பெரிதாதல், `உலகமும் புத்தேணாடும் சீர்தூக்கின் சீர்சாலாவே ... ... குறுமகள் தோள்மாறுபடூஉம் வைகலொ டெமக்கே (101) என்புழியும் கண்டு கொள்க. கபிலர் 100. அருவிப் பரப்பி னைவனம் வித்திப் பருவிலைக் குளவியொடு 1 பசுமரல் கட்கும் 2 காந்தள் வேலிச் 3 சிறுகுடி பசிப்பிற் 4 கடுங்கண் வேழத்துக் 5 கோடுநொடுத் துண்ணும் வல்வில் லோரி கொல்லிக் குடவரைப் பாவையின் மடவந் தனளே மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே. (எ-து) (1) பாங்கற்கு உரைத்தது. (2) அல்லகுறிப்பட்டு மீள்கின்றான், தன் நெஞ்சிற்குச் சொல்லியது. (வி) அருவிப் பரப்பின் - மலையருவியினை யுடைய பரந்த நிலத்தின்கண். ஐவனம் வித்தி - மலைநெல்லினை விதைத்து. விளைவிற்கு நீரருகே சேர்ந்த நிலன் வேண்டுதலான் அருவிப் பரப்பினைக் கூறினர். மரலினும் உயர்ந்ததாதலின் குளவி யொடு என்றார். இவையே களை என்ற வாறாம். கட்கும் - களையாகப் பறிக்கும். காந்தள் வேலி - காந்தள் படர்ந்த வாழ்வேலிகளை உடைய. சிறுகுடி - குறிஞ்சி நிலத்தூர்க்குப் பெயர். குன்றக் குரவையுள் சிறுகுடியீரே சிறுகுடியீரே என வருதலான் உணர்க. பசிப்பின் என்றார் இவ்வாறு முயல்பவர் பசித்தலரிது என்பது பற்றி. கடுங்கண் வேழத்து - வன்கண்மையை உடைய யானை யின். `கடுங்கண்ண கொல் களிற்றால் (புறம். 14) என்புழிக் காண்க. கோடு நொடுத்து உண்ணும் - கொம்பை விற்று உண்ணும்; என்றது விளைவினையாலும் விறல் வினையாலும் வாழ்தல் கருதி. கொல்லிக் குடவரைப் பாவையின் - கொல்லியாகிய குடக்கண் வரையிலுள்ள பாவையைப் போல. மடவந்தனள் - கண்டார்க்கு அறியாமை வருதல் செய்தனள். கண்டார்க்கு மடமை வருதற்குக் காரணமாவள் என்பதுமாம். கடவு ளெழுதிய பாவையின் மடவது மாண்ட மாயோளே (அகம். 62) என்புழிப் பாவை போலக் கண்டார்க்குச் செய்யும் மடமைக்கண் மாட்சிமைப்பட்ட மாயோள் என்று பொருள் கொள்ளக் கிடத்தல் காண்க. நச்சினார்க்கினியர் (குறிஞ்சிக்கலி 24) `மட மருங்குல் என்புழி நோக்கினார்க்கு மடமையைக் கொடுக்கும் மருங்குல் எனப் பொருள் கூறுதலான் உண்மை உணர்க. மடவந்தனள் அவள் பணைப் பெருந்தோள்கள் மணத்தற் கரியவும் ஆயின என்றான் என்க. இங்ஙனம் காமத்தால் மடமை எய்தல் தகாதென்ற பாங்கற்கு என்னைக் கொல்லிப் பாவை போல மடமை செய்தனளொருத்தி. அவள் தோள்கள் மணத்தற் கரியன என்றான் என்றவாறு. வல்வில் ஒரு கணை எய்து பலவற்றை யூடுருவச் செய்யும் வலியுடைய விற்றன்மை, `வல்விற்கை வீர (கம்ப. யுத்த. ஒற்று. 30) ஓரி - மழவர் பெருமகன். பரூஉம் மோவாய்ப் பதுமனார் 101. விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும் அரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடும் இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே பூப்போ லுண்கட் பொன்போன் மேனி மாண்வரி யல்குற் குறுமகள் தோண்மாறு படூஉம் வைகலொ 1 டெமக்கே. (எ-து) தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கிய தூஉமாம். (வி) எமக்குக் குறுமகள் தோண்மாறுபடும் வைகலொடு தூக்கின் உலகமும் புத்தேணாடும் இரண்டும் சீர்சாலா என்க. தோண்மாறுபடூஉம் வைகலொடு தூக்கின் - மாறுதோட் டுயிலும் அரைநாளின்பத்தோடு வைத்து நிறைகாணின்; இங்ஙனம் தூக்குவதோர் கோலின்மையிற் றூக்கின் என்றான். புலக்கோலாற் றூக்கின் என்பதுமாம். உலகமும் புத் தேணாடும் இரண்டும் சீர்சாலா - உள்ளநாள்வரையும் உலகாளின்பமும், புண்ணியம் உள்ளவரையும் புத்தேணா டாளும் இன்பமும் ஆகிய இரண்டும் பொறையாற்றா. மாறு தோட்டுயிறலாவது - தலைவி வலத்தோளிற் றன்னிடத் தோளும் தலைவியிடத் தோளிற் றன்வலத் தோளும் செறியக்கிடந்து உறங்குதல். படுதல் - உறங்குதல். பரந்து படுபாயல் (அகம். 39) என்புழிப் படுதல் - கண்படுதல் என்றார் பழைய வுரைகாரர். பழிதீர் கண்ணும் படுகுவ (அகம். 11) என்பதும் காண்க. படூஉம் வைகல் என்றதனாற் றுயிறற்குரிய அரைநாளிரவாயிற்று. வென்றியான் எய்தும் உலகவின்பமும் புண்ணியத்தானெய்தும் புத்தே ணாட்டின்ப மும் ஒத்த அன்பானெய்தும் இவ்வின்பத்திற்குச் சீர்சாலா என்பது கருத்தாம். பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லியதாயிற் குறுமகளைப் பிரிந்துபோய் வினைமுற்றி எய்தும் உலகமும் இவளைத் துறந்து தவத்தானெய்தும் புத்தேணாடும் இவள் தோண்மாறுபடும் வைகலின்பத்திற்குச் சீர்சாலா என்றி கழ்ந்தா னென்க. படூஉம் வைகல் என்றதனால் விழித்தும் உறங்கியும் உலகாளின்பமும் இமையாமலே விழித்துப் புத்தேணாடாளின்பமும் குறித்தானாவன். உறங்கியும், உலகங்காத்தல், உறங்கு மாயினு மன்னவன் றன்னொளி, கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால் (சிந். 248) என்பதனான் அறிக. உலகாளுதலும் புத்தேணா டாளுதலும் வினை செய்தலாகவும் படுதல் வினையொழித லாகவும் தெரிந்து கூறினான். கண்ணும், மேனியும், அல்குலும், தோளும் குறுமகட்குக் கூறியது உலகிற்கும் புத்தேணாட்டிற்கும் இவ்வாறு வசீகரிக்கும் உறுப்புக்களில்லை என்பது குறித்ததாம். தோளென்றொழிந்தது அவ்வுறுப்பிற்கு உவமையில்லை என்பது கருதியதாம். உலக முழுதும் ஆளும் இன்பத்தைக் கருதிப் பெருங்கடல் வளைஇய வுலகமும் என்றான். துன்பத்துடன் இன்பமும் உள்ள உலகமும் இன்பமே உள்ள புத்தேணாடும் ஆதலான் இரண்டுங் கூறினான்; இனிதெனப் படூஉம் புத்தேணாடே (288) என்ப. அரிது பெறு சிறப்பு - செயற்கரியது கொண்டு பெறும் தகைமை. பாங்காயினார் கேட்பச் சொல்லியதன் பலன் குறுமகளை இம்மையின் பத்தினும் மறுமை யின்பத்தினும் மேலாக வைத்து அன்பு செய்வல் என்றவாறாம். ஔவையார் 102. உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தி 1 வான்றோய் வற்றே காமம் சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே. (எ-து) ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி யான் யாங்ஙனம் ஆற்றுவேன் என்றது. (வி) உள்ளின் உள்ளம் வேமே - காதலரை நினையின் அவர் பிரிவாகிய தீயினால் அந் நினையும் மனமும் வேகா நிற்கும். உள்ளாது இருப்பின் - அவரை நினையாது உயிர் வைத்திருப்பின். எம் அளவைத்து அன்று அங்ஙனம் காதலரை மறந்து உயிர் வைத்திருப்பது எம் வரைத்து அன்றாம்; யாம் மரீஇயோர் வரைத்தாம் என்பது குறிப்பு. காமம் வருத்தி வான்றோய்வற்று - இதனாற் காதல் ஈண்டும் சாகவருத்தி ஆண்டுப்புக்க வானத்திடத்தும் தோய்தல் வல்லது. யாம் மரீஇயோர் - யாம் உள்ளம் பொருந்தியவர்; இந் நிலையில் நம்மை அருளாமையால், சான்றோரல்லர் - அருள் நிறைந்தவரல்லர் என்றவாறு. யாம் மரீஇயோர் என்பது தாம் உள்ளம் மருவாதவர் என்னுங் குறிப்பிற்று. உள்ளம் வேம் என்றமையாற் பிரிவாகிய தீயில் என்பது கருதிற்றாம்; ஏகதேசவுருவகம். உள்ளாது இருப்பின் என்றாள் - அவரை மறப்பின் உயிர் போதல் ஒருதலை என்னுங் கருத்தான். மேல் வான்றோய்தல் கூறியதனால் வருத்தி என்பது ஈண்டுச் சாகவருத்தி என்றதாயிற்று. அவரை மறவாது நினைந்து சாதலான் வான்புகுதல் கூறினாள். உள்ளாதிருப்பின் என்றது தான் அவரை உள்ளியிருப் பதை உணர்த்திற்று. மறப்பி னெவனாவன் (குறள். 1207) என்புழிப் பரிமேலழகர் மறப்பின் ஆவன் எவன் எனக் கொண்டு யான் மறந்தால் இறந்து படாது உளேனாவது எத்தால் என்று பொருள் கூறியது கண்டுணர்க. மறப்பினென் றோண்மேற் கலங்கழியும் (குறள். 1262) என்புழி மேல் மறுபிறப்பினும் என்று அவர் கூறியது, மறந்தால் இறந்துபடுதல் கருதியதாதல் காண்க. சான்றோர் செல்வ மென்கட் செல்வ மென்பதுவே (நற்.210) என்று சான்றோர் பொருட் செல்வத்தை மதியார் என்றும் அருட்செல்வத்தையே மதிப்பவர் என்றும் தெரிதலான் அருளாதவரைச் சான்றோரல்லர் என்றாள். காதலர் வரைவிடை வைத்துப் பொருட் செல்வங் கருதிப் பிரிந்தவரெனின் ஈண்டு நன்கு பொருந்தும். இதனை `வழிபாடு மறுத்தற்கு (தொல்.களவு.சூத். 20) நச்சினார்க்கினியர் உதாரணங் காட்டுதலான் இது களவிற்றலைவி கூற்றாதலுணர்க. பேராசிரியரும் இதனைக் காதல் கைம்மிகல் (தொல். மெய்ப். சூத். 23) என்னும் இடத்தில் எடுத்தோதி வரைந்து எய்துங் கூட்டத்திற்கு ஏதுவாம் எனக் கொள்ளுதலான் இது களவிற் கூற்றாத லுணரப்படும். வான்றோய் வற்றே என்பதை வானினும் தோய்வதற்றே எனக் கொள்வதும் ஆம். அள்ளிக் கொள்வற்றே பசப்பு (குறள். 1187) என்புழிப் போல வந்தது. வாயிலான் தேவனார் 103. கடும்புன றொகுத்த 1 நடுங்கயி 2 ரள்ளற் கவிரித ழன்ன தூவிச் செவ்வாய் இரைதேர் நாரைக் கெவ்வ மாகத் தூஉந் துவலைத் 3 துயர்கூர் வாடையும் வாரார் போல்வர்நங் காதலர் வாழேன் போல்வ றோழி யானே. (எ-து) பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (வி) கடும்புனல் தொகுத்த அயிர் - கடியபுனல் குவித்த நுண் மணல், கடும்புனல் - கடிதாயோடிய நீர் என்பர் நச்சினார்க் கினியர் (நெடுநல்வாடை. 18) நடுங்கு அயிர் - சிறுகாற்றிற்கும் அசையும் நுண்மணல். நடுங்கயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர் (அகம். 320) என்பது காண்க. அள்ளலில் இரைதேர் நாரைக்கு எவ்வமாக அயிர்தூவும் வாடை என்க. அள்ளல் - சேறு. இரைதேர் அள்ளலில் வாடை அயிர் தூவுதல் நாரைக்குக் கேடு தருவதாதலுணர்க. நுண்ணயிர் ஊதை யுஞற்றும் என்பதற்குப் (பதிற். 51) பழைய வுரைகாரர், ஊதையுஞற்றுதல் - நுண்ணிய அயிரை முகந்து தூவுதலிலே முயல்கை எனக் கூறியது கொண் டுணர்க. அயிர்தூவும் வாடையும் எனவும் துவலைத் துயர்கூர் வாடையும் எனவும் கொள்க. துவலையாற் றுயரை மிகுக்கின்ற வாடைப் போதிலும் நங்காதலையுடையவர் வாரார் போல்வர். அவர் காதலை யாமுடையேமல்லேம் என்பது அருத்தா பத்தியாம். இதனாற் றோழி யானே வாழேன் போல்வல் - யான் தனியே உயிர் வாழேன் போல்வல். வாடைக்கு முன்னர் வருதல் குறித்து அங்ஙனம் வாராமை தெளியப்பட்டதனால் வாடையிலும் வாராரோ என்னுங் கருத்தால் வாரார் போல்வர் என்றாள். அவர் வரல் நசையால் இன்னும் உயிர்த்தற் குறிப்பால் வாழேன் போல்வல் என்றாள். கவிரிதழன்ன தூவி - முண்முருக்கின் இதழை யொத்த இறகு. நடுங்குகின்ற அயிர் ஆதலான் அள்ளலில் வாடை எளிதிற் றூவுதல் குறித்தாள். தனக்குத் துவலையால் துயர் கூர்வாடை என்றாள். இரைதேர் நாரைக்கு எவ்வமாக அயிர் தூவும் வாடை என்று அதனுடைய இரக்கமின்மை காட்டி அவ்வியல்பாற் றன்னைத் துவலையால் நலியுங்கொடுமை குறித்தாள்; மேற்பாட்டில் தண் சிதருறைப்ப (104) என்பது காண்க. நாரையை நினைந்தது தான் விடுதூதாதல் கருதி என்க. தூது செல்லற்குத் துணையாகிய தூவியையும் தூதுரைத்தற்குக் கருவியாகிய செவ்வாயையும் நினைந்தன ளாவள். நடுங்கு அஞர் அள்ளல் என்பது பாடமெனின் சென்றார் கால் நடுங்குதற்குக் காரணமான வழுக்கு நிலத்திலுள்ள சேற்றில் இரைதேர் நாரைக்கு எவ்வமாகத் தூவுந் துவலையாற் றுயர்கூர் வாடையும் என்க. வாயிலான் என்புழி வாயில் ஒரூர். நேரிவாயிலை வாயிலென்று (பதிற்றுப்பத்துப் பதிகத்து 50) ஒன்பதின்மர் வீழ வாயிற் புறத் திறுத்து எனக் கூறுதல் காண்க. காவன் முல்லைப் பூதனார் 104. அம்ம வாழி தோழி காதலர் நூலறு முத்திற் றண்சித ருறைப்பத் 1 தாளித் தண்பவர் நாளா மேயும் பனிபடு நாளே பிரிந்தனர் பிரியு நாளும் பலவா குவவே. 2 (எ-து) (1) பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது. (2) சிறியவுள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ என்ற தோழிக்குக் கிழத்தி கூறியதூஉமாம். (வி) நூல் அறுமுத்தின் - கோத்த நூலற்ற முத்துக்களைப் போல. தண்சிதர் உறைப்ப - குளிர்ந்த துளிகளைத் துளிக்க. தாளித்தண்பவர் - தாளிப்புல்லின் தண் கொடியை. ஆ நாள் மேயும் - ஆனினங்கள் விடியலில் மேயும். பனிபடு நாளே பிரிந்தனர் - அவர் வருது மென்ற பனியுண்டாகிய நாளிலே பிரிந்துறை வாராயினர். பிரியு நாளும் பலவாகுவவே - இனிப் பிரிந்துறையும் ஒவ்வொரு நாளும் பல நாட்களாதல் துணிந்தது என்றவாறு ஏ- தேற்றம். ஒருநா ளெழுநாள்போற் செல்லுஞ் சேட்சென்றார், வருநாள்வைத் தேங்கு பவர்க்கு (குறள் 1269) என்பதனான் இவ்வுண்மையுணர்க. ஈண்டுப் பரிமேலழகர் எழுநாள் - பல நாளாகப் பொருள் செய்தல் காண்க. இங்கு வாராமற் கழியும் நாள்களின் எண் சிறிய என்பது நினைந்து முன்வாராது கழிந்த நாள்களின் எண் பெரிய என்பதை மறக்கவேண்டாவோ என்ற தோழிக்கு இனி அவர் வாராது பிரியும் ஒவ்வொரு நாளும் முன் வாராது கழிந்த நாள்களினும் எனக்குப் பலவாதல் துணிபு என்று தலைவி கூறினா ளென்க. இனிப் பிரியும் ஒவ்வொரு நாளும் பலவாகுவ ஆதலால் இப் பிரிவில் யான் உயிர் வாழேன், தோழி நீ வாழி என்றாள் என்க. அம்ம - கேட்பித்தற்கண் வந்தது. தோழி வாழி என்றதனால் இப்பனி படுநாளில் அவரைப் பிரிந்து வாழேன், இறந்து படுவல் என்று குறித்ததாகக் கொள்க. இது நச்சினார்க்கினியர் கருத்தாதல் காண்க. (தொல்.அகத். 10). பனித்துளி உறைப்பவும் ஆனினங்கள் தம் வினையின் முயலுமாறு போல இப் பனிபடுநாளிற்றம் வினையிலே முயன்று பிரிந்தனர் எனவும் தண்சிதர் உறைப்ப மேயும் எனவும் கொள்க. நக்கீரர் 105. புனவன் றுடவைப் 1 பொன்போற் சிறுதினைக் கடியுண் 2 கடவுட் கிட்ட செழுங்குரல் 3 அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று 4 நடுங்கும் சூர்மலை நாடன் கேண்மை நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே. 5 (எ-து) வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (வி) புனவன் - புனத்தை முயன்று ஆக்கியவன். துடவை – தோட்டத்தின் கண். பொன்போற் போற்றிய சிறிய தினையில் கடயுண் கடவுட்கிட்ட செழுங்குரல் - நாட்கண்டு கிளை யுடன் புதிதுண்டற் காரணமாகக் கடவுட்கு அவிக்காட்ட இட்ட செழிய கதிரினை; கடவுட்கு அவிக்காட்டிய புதிதுண்டல் மலைக்குறவர் வழக்கு; புனத்தினைக் கிள்ளிப் புதுவவிக் காட்டிநின் பொன்னடி வாழ்கவென் றினக்குறவர் புதிய துண்ணுந் திருமாலிருஞ்சோலை (பெரியதிருமொழி) என்பது காண்க. சிறுதினை முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார் (புறம். 168) என்பதனானுந் தெளிக. கதிரில் உயர்ந்ததை அவிக்காட்ட இட்டுவைத்தலாற் செழுங்குரல் என்றாள். அறியாதுண்ட மஞ்ஞை - புதிதுண்டற் பொருட்டுக் கடவுட் கிட்டதறியாது அதன் செழுமை கண்டு உண்ட மயில். ஆடுமகள் - தெய்வமேறி யாடுபவள். வெளியுறு வனப்பின் - வெறியாடல் பொருந்திய அழகினை யொத்து. வெய்துற்று நடுங்கும் - உள்ளம் வெந்து உடல் நடுங்கும். சூர்மலை நாடன் - தெய்வமலை நாடன். நாடன் கேண்மை நீர்மலி கண்களால் அயலார் நினைத்தற்கு ஆகியது என்றவாறு. மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ, லறைபறை கண்ணா ரகத்து (குறள். 1180) என்ப. கண்ணொடு - கண்களால், கண் நீர்மலிதல் பிறர் நினைப்பாதற்கு ஏது ஆயினது என்றவாறு. இஃது உண்ணப்படா தென்றறியாது கண்ணுக்கினிய செழுமை கண்டு தினைக்கதிரினை மஞ்ஞையுண்டு நடுங்கி இது கடவுட் கிட்டதை யுண்டதென்று பலரானும் நினை யலாயினாற் போலச் சூர்மலை நாடன் யாம் கேண்மை செய் தற்கரிய பெருமையன் என்பதறியாது கண்ணும் மனமும் மகிழும் அவன் செழுமை கண்டு நட்டு நீர்மலி கண்ணொடு நின்று இன்னளாயினளென அயலார் பலரானும் களவு நினையலாயிற்றென்று குறித்தவாறாம். கடி - புதிது. கடவுட்கிட்ட சில்குரல் என்பதும் பாடம். பல கதிரிற் சிலவற்றைக் கடவுட்கு இட்டுவைத்து வளர்த்தலாற் சில்குரலென்றாள். கபிலர் 106. புல்வீ ழிற்றிக் 1 கல்லிவர் வெள்வேர் வரையிழி யருவியிற் றோன்று நாடன் தீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின் வந்தன்று 2 வாழி தோழி நாமும் நெய்பெய் தீயி னெதிர்கொண்டு தான்மணந் 1 தனையமென விடுகந் தூதே. (எ-து) தலைமகன் தூது கண்டு கிழத்தி தோழிக்குக் கூறியது. (வி) இற்றியினது கல்லிற் படரு புல்லிய வீழாகிய வெள்ளிய வேர்கள். இற்றிப் புல்வீழ் வெள்வேர் என்க. வீழ் - வீழ்து, இற்றி வீழ்வேர் வரையிழி யருவியிற்றோன்று நாடன் - இற்றியின் வீழ்தாகிய வேர் மலையினின்று வழிகின்ற அருவிபோலத் தோன்று நாடன்; ஒன்று மற்றொன்றாகத் தோன்று நாடன் என்பதனால் நமக்கு உள்ளவாறறியப்படாது மாறித் தோன்றுபவன் என்ற வாறாம். அம்புடையனாகத் தலையளி செய்து அன்பிலனாகப் பிரிதலால் உள்ளவாறறியப்படாதவன் என்பது கருத்து. புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர் என்றதனால் இற்றிமரம் கல்லினின்று வெளியே வளர்ந்து கோடுகள் புறப்பட நீடினும் தனக்கு இடனாகிய கல்லினைவிடாது வீழினாற் பற்றிக்கோடற்கு இவர்தல் போலத் தலைவன் இல்லினின்று வெளியே சென்றொழுகினும் தனக்கிடனாகிய மனையைவிடாது தூது மொழியினாற் பற்றிக் கொள் கின்றான் எனக் குறித்தாளாம். தீதில் நெஞ்சத்துக்கிளவி - குற்றமில்லாத உள்ளத்துண்டாகிய மொழி. நம் வயின் வந்தன்று - நம்பால் வந்தது. பிரிந்த காதல் மக்கள் அறியவேட்பது பிரிந்தவர் தீதில் நெஞ்சமே யாதலான் தீதில் நெஞ்சத்துக் கிளவி என்றாள். நெஞ்ச நிறைந்து புறன் வழிவதே கிளவி என்பது தெரிய நெஞ்சத்துக் கிளவி என்றாள்; நெஞ்சுவா யவிழ்ந்தனர் காதலர் (அகம். 129) என்பது காண்க. தூதுரைப்பானைக் கூறாது தூதுரையே வந்தன்று என்றாள். அதுவே தான் வேண்டுதல் பற்றி. இதனால் யாமும் நெய்பெய்தீ எழுந்து நெய்யை எதிர்கொள்வது போல அதனை எழுந்து ஏற்றுக் கொண்டு நெய்யாற்றீ அவியாதிருத்தல் போல இத் தூதுரையால் யாம் அவியாதுள்ளோம்; விரைந்து வருக எனத் தூதுவிடுகம் என்றாள் என்க. பேராசிரியர் இதனைக் கற்பாகக் கொள்ளல் (தொல். மெய்ப். 23) காண்க. நெய்பெய் தீயினெதிரே எம்மைக் கொண்டு தான் மணந்த நாளின் தன்மையம் என்று கரணத்தோடு அவன் மணந்த நன்னாள் மகிழ்ச்சியைப் புலப்படுத்தியதாகக் கொள்க. தெறலருங் கடவுள் முன்னர்த் தேற்றி. மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந்து (அகம். 396) என்பதனால் அங்கி கரியாகக் கைப்பிடித்து மணத்தல் உணரப்படும். இப் பாட்டைக் களவிற்குரியதாகக் கொள்வர் இளம் பூரணர் (தொல்.கள. 2) அவர்க்கு மணந்தனையம் என்பது மணந்தால் எத்தன்மையம் அத்தன்மையம் என்று பொரு ளாம் போலும்; இதற்குத் தூதுவிடுகம் என்பது கிளி முதலியவற்றைத் தூதுவிடுகம் என்றவாறாகக் கொள்க. தான் வரைந்தனையம் என்பதும் பாடம். மதுரைக் கண்ணனார் 107. குவியிணர்த் தோன்றி யொண்பூ வன்ன 1 தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல் நள்ளிருள் 2 யாமத் தில்லெலி பார்க்கும் பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக் கடுநவைப் படீஇயரோ 3 நீயே நெடுநீர் யாண ரூரன் றன்னொடு வதிந்த 4 ஏம வின்றுயி லெடுப்பி யோயே. (எ-து) பொருள் முற்றிவந்த தலைமகனையுடைய கிழத்தி காமமிக்க கழிபடர் கிளவியாற் கூறியது. (வி) தோன்றி - செங்காந்தள். தோன்றியின் இணரிற் குவிந்த ஒண்பூ அன்ன தொகு செந்நெற்றி. கணங்கொள் சேவல் - கோழிக் கூட்டங்களை வலிந்து கொள்ளும் சேவல்; ஒத்த காதலிற் பயிலாமை குறிப்பு. சேவலே நீ ஊரன் றன் னொடு வதிந்த ஏம இன்றுயில் எடுப்பியோய்; இக் கடுநவை யாற் பிள்ளை வெருகிற்கு அல்கிரையாகிப் படீஇயர் என்க. சாதலன்ன பிரிவினைச் செய்தலாற் கடுநவை யாயிற்று; `சாத லன்ன பிரிவரி யோளே (அகம். 339) என்ப. ஊரன் உயர்வு தோன்ற ஒடு வந்தது. ஏம இன்துயில் - இன்பத்திற்குக் காரணமான இனிய துயில். பசிமிகுதியால் இல்லின்கண் நள்ளிருள் யாமத்து எலியைப் பார்த்திருக்கும் பிள்ளை வெருகிற்கு இட்டுவைத்து உண்ணும் இரையாகித் தொலைவாயாக. நெடும்போது துய்த்தற்குரிய இன்பத்தைக் கெடுத்தலான் அக் கடுநவைக் குத்தக நெடும்போது துய்த்தற்குரிய உணவாகுவை என்றாள். நெடுநீர் யாணர் ஊரன் - நெடுங்கால தாமதத்தின் பின் புதிய வரவினையுடைய ஊரன். அவனொடு வதிந்த அருமை குறித்தது. நெடுநீர் நெடுநீர் மறவி (குறள். 605) என்புழிப் போல வந்தது. `யாணர்க் கோங்கு (சிறுபாண் 25) என்புழிப் புதிதாய்ப் பூத்த கோங்கு என நச்சினார்க்கினியர் பொருள் செய்தது காண்க. யாணர்ப் புலவர் (மதுரைக்காஞ்சி 750) என்பதும் இப் பொருட் டெனின் நன்கு பொருந்தும். ஈண்டுத் தலைவி சேவலை வைதுரைத்ததற்கு இயையக் கொள்வுழி இதுவே பொருந்தியதாதலுணர்க. ஊரன் என்பது அம்ம வாழி தோழி ஊரன் (ஐங். 36-39) என்புழிப் போலத் தனியே வந்தது. நள்ளிருள் யாமத்துப் படீஇயர் என்றது தன்னை அப்பொழுதிற் றுயிலெழுப்பியது கருதி. வதிந்த துயில் எடுப்பியோய் என்றது அவனொடு நெடுநாள் வதிதற்கியலாத சேணிடைப்பிரிவு குறிப்பது காண்க. இரையாகிக் கடுநவைப் படீஇயர் - இரையாகிக் கடியதண்டம் படுக என்பதுமாம்; பெரும் பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர் (சிலப். 16 : 171) என்புழி நவைப்படுதல் தண்டம் படுதலாதல் காண்க. வாயிலான் தேவனார் 108. மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக் கறவை கன்றுவயிற் படரப் 1 புறவிற் பாசிலை முல்லை யாசில் வான்பூச் செவ்வான் 1 செவ்வி கொண்டன் றுய்யேன் 2 போல்வ றோழி யானே. (எ-து) பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது. (வி) விளையாடுதல் - ஈண்டுத் தவழ்ந்து திரிதல். குன்றில் மழை விளையாடுதல் காட்டி அவர் குறித்த கார்ப் பருவ வரவு தெளித்தாள். குன்று சேர் சிறுகுடி - மலையைச் சார்ந்த சிறுகுடிக் கண். யானே உய்யேன் என்க. புறத்து மேயச்சென்ற கறவைகள் கன்றுவயிற் படர என்றதனானும் கார்ப் பருவத்துச் சிறு பொழுதாகிய மாலை வந்தது குறித்தாள். கறவை கன்று வயிற்படர்தல் கண்டு தான் மகப்பெற்று இங்ஙனம் அன்பு செய்தற்கு ஏதுவாகிய காதலர் வாராமை நினைந்தாள். பாசிலை முல்லை ஆசில் வான்பூ - பசிய இலைகளை யுடைய முல்லைகளில் கற்புடை மகளிர் தம் ஆசின்மைக்குச் சூடுதற்குரிய வெள்ளியமலர். இம் மலர் கார்ப் பருவத்து மாலையில் மலர்தலியல்பு. காதலர் பிரிந்திருத்தலாற் கற்புடையாட்டியாகிய தான் தனிமையிற் சூடற்காகாமை நினைந்தாள். பாசிலை முல்லை ஆசில் வான்பூத் தானுண் டாகிய செம்புலப் புறவினாற் செவ்வான் வனப்பினைக் கொண்டது. `செம்புலப் புறவின் (நற். 221) என்பது காண்க. வான்பூ விண்மீனாகவும் செம்புறவு செவ்வானாகவும் நினைந்ததாம். இங்ஙனமின்றி முல்லை வான்பூச் செய்வான் செவ்வி கொண்டன்று என்பது பாடமெனின் முல்லை வெள்ளிய மலர்களை உண்டாக்குதற்குச் செவ்விகொண்டது என்க. செய்வான் என்பது உய்யேன் என்பதற்கு எதுகையாதலுங் காண்க. கறவை கன்றுவயிற் படர்தலையும் முல்லை செவ்வி கொண்டதனையும் இக் கார்ப்பருவத்து மனையிற் றனிமையிற் கண்டு உயிர் வாழேன் போல்வல் என்றாள். போல்வல் என்றாள் இம் மாலையிலும் ஒரு கால் அவர் வரல் கூடுமென்னும் நசையால். யானே உய்யேன் என்றது என்னை நீத்து அவர் உய்யும் வலியுடையர் என்பது குறிப்பது. சிறு குடிக்கண் உய்யேன் என்றது அவரில் லாதுள்ள சிறு குடிக்கண் உயிர் வாழேன், அவருள்ளுழி இப் பருவத்து இம் மாலையி லுளனாயின் வாழ்வேன் என்று குறித்ததாம். நம்பி குட்டுவனார் 109. முட்கா 1 லிறவின் முடங்குபுறப் பெருங்கிளை புணரி 2 யிகுதிரை 3 தரூஉந் துறைவன் புணரிய விருந்த 4 ஞான்றும் இன்னது மன்னோ 5 நன்னுதற் கவினே. (எ-து) சிறைப்புறம் தலைவி வேறுபாடு கண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்றத் தோழி தலைமகட்குக் கூறியது. (வி) முட்கால் இறவின் - முள்ளைப் போன்ற கால்களை யுடைய இறாமீனின். இறாமீனின் கால்கள் முள்ளை யொத்தல் கண்கூடாகக் கண்டது; இக் கால்களால் இவை நடத்தலுண்டு என்பது நடையிறவு (பரி. 10 : 85) என வருதலானறியப்படும். முடங்குபுறப் பெருங்கிளை - வளைந்த முதுகையுடைய பெரிய ஓரினத்தை. புணரி இகு திரை தரூஉம் துறைவன் - கடலிற் றாழும் அலையே உதவும் துறை யுடையன்; என்றது வருந்தாமலே துப்புரவு நிரம்புதல் குறித்தவாறு. துறைவன் புணரா நிற்க உடனிருந்த நாளினும் நன்னுதற்கவின் இன்னது மன்னோ - நின் நல்ல நுதலின் அழகு இவ்வாறு பிறரறியும் படித்தாய் இரங்கற்காயது தான் என்றவாறு. பிரிவஞ்சும் புன்க ணுடைத்தாற் புணர்வு (குறள். 1152) என்பதனால் புணர்ச்சிதான் நிகழாநிற்கவும் அது பிரிதற் குறிப்புக் காட்டி அச்சஞ் செய்தலான் அவர் பிரியாத அஞ்ஞான்றும் இப்படித்தே என்று தோழி கூறினா ளென்க. தோழியர் கூட்டத்துப் புணரிய இருந்த ஞான்றினைக் கூறிக் காட்டித் துறைவன் பிரிந்த தனிமையினையுடைய இஞ்ஞான்று நன்னுதற்கவின் இன்னதாதலும் அதனைப் பலரறிதலும் வியப்பன்று என்று குறிப்பித்தாளென்க. புணரா நிற்கவும் பிரிவச்சத்தால் நுதற்கவின் இன்னதாகும் மென்மையையுடைய ஆதலால் நின்னைச் சிறிதும் பிரிந்து தனிமையின் வைத்தல் தகாதென்றும் நின்னைப் பிரியாது உடனுறை தற்குரிய வரைவினை அவன் விரைந்து செய்தல் வேண்டுமென்றும் சிறைப்புறத்துத் தலைவன் அறியக் குறித்த திஃதென்க. நன்னுதல் என்றாள் அவன் நீவுதற் சிறப்பால். மேனியிற் கவின் என்னாது நுதற்கவின் இன்ன தென்றது மறைத்தற்காகாது அயலறிய உள்ள சிறப்பால். கவினே இன்னது - அழகே இப் பொலிவழிதலையுடைத்து. கடலை இன்றியமையாத இறவினை அக் கடற்றிரை புறந்தள்ளிப் பலர் அறிய விடுத்தாற் போலத் தலைவனை இன்றியமையாத தலைவியை அவன் வரைவு நீட்டித்தல் புறந்தள்ளிப் பலரறிய வைத்தது குறித்ததாம். கிள்ளிமங்கலங் கிழார் 110. வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழி நீர 1 நீலப் பைம்போ துளரிப் புதல 2 பீலி 3 யொண்பொறிக் கருவிளை யாட்டி 4 நுண்முள் ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த வண்ணத் துய்ம்மல 5 ருதிரத் தண்ணென் றின்னா தெறிவரும் 6 வாடையொ டென்னா யினள்கொ லென்னா தோரே. (எ-து) (1) பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது; (2) தலைமகனைக் கொடுமை கூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதுமாம். (வி) வாராராயினும் இன்னாதெறிவரும் வாடையொடு என்னாயினள் கொல் என்னாதோர் வரினும் அவர் நமக்கு யாராகியரோ என்க. வாடைக்குமுன் வருதல் குறித்தவர் வினைமுற்றாமையின் வாராராயினும் தீதாய் எறியவரும் வாடையால் நாமில்லாத தனிமையில் என்னாயினளென்று ஒரு தூது விட்டுத் தம் தீதில் நெஞ்சத்தைப் புலப்படுத்தும் அன்புச் சொல்லு மில்லாதோர் வாடை தானே கொன்றொழித்தபின் வரினும் நமக்கு என்ன உறவினராவர் என்றதாம். வாடை தூக்கும் வருபனி யற்சிரம் நம்மில் புலம்பிற் றம்மூர்த் தமியர் என்னா குவர்கொ லளியர் தாமென வெம்விட் டகன்ற சின்னாட் சிறிது முள்ளியு மறிதிரோ வோங்குமலை நாட (அகம். 78) என்பது களவாயினும் இக் கருத்திற்கு மூலமாதல் நோக்கிக் கொள்க. வரினும் பயன்படாது வேறாதல் வறிதா லிகுளையென் யாக்கை யினியவர், வரினு நோய்மருந் தல்லர் (நற். 64) என்புழியும் வந்தது. யாராகியர் - நீயெமக்கி யாரையு மல்லை, நொதும லாளனை (நற். 395) என்புழிப் போல நொதுமல் என்பது பட வந்தது. வீழ்வாரி னின்சொற் பெறாஅ துலகத்து, வாழ்வாரின வன்கணா ரில் (குறள் 1198) என்பதனால் வரினும் யானிதுகாறும் பிரிந்து வாழ்ந்த வன்கண்ணேன் என்பதை அயலறிந்து பழிக்கச் செய்தவரல்லது வேறு என் செய்தவராவர் எனினும் அமையும். நீர நீலப் பைம்போ துளரி - நீரிலுள்ள நீலத்தின் பசிய போதுகளை அசைத்து. புதல் பீலி யொண்பொறிக் கருவிகளை யாட்டி -புதல்களிற் படர்ந்த மயிற்பீலியின் தெள்ளிய பொறிகளையுடைய கருவிளை மலரை அலைத்து. நுண்முள் ஈங்கைத் துய்ம் மலர் உதிரத் தண்ணென்று - நுண்ணிய முள்ளுடைய ஈங்கையின் துய்யுடைய மலர்க ளுதிரும்படி குளிர்ந்து வீசி, இவற்றின் கண்ணெல்லாம் மலர்களளவில் உளரி, ஆட்டி, உதிரத் தண்ணென்று வீசி என்பால் மட்டும் இன்னா தெறிவரும் வாடை என்றாள். நீர நீலமும், புதல கருவிளையும், நுண்முள் ளீங்கையு மாதலால் ஆண்டுப் பற்றுக்கோடும் பாதுகாவலு முண்மை கண்டு அவற்றை அழியாது உளரி. ஆட்டி, உதிரத் தண்ணென்று பற்றுக்கோடும் பாதுகாவலும் இல்லாமை கண்டு என்னை இன்னாதெறிவரும் வாடை என்றா ளென்க. நுண்முள் ஈங்கைக்குப் பாதுகாவலாதலுணர்க. இங்ஙனங் கொள்ளாக் கால் நீர், புதல், முள் மூன்றும் நின்று பயனிலவாம். பீலி யொண்பொறி - ஒள்ளொளி மணிப் பொறியான் மஞ்ஞை (பரிபா. 18) `மணிப்பொறிக் குடுமிப் பீலி மஞ்ஞை (நற். 357) என்பன வற்றானுணர்க. வாராராயிற் பகைஞர், வரின் நொதுமலர்; ஆதலால் நமக்கு உறவினரல்லர் என்பதாம். தீன்மிதி நாகனார் 111. மென்றோ ணெகிழ்த்த செல்லல் வேலன் வென்றி நெடுவே ளென்னு மன்னையும் அதுவென 1 வுணரு மாயி னாயிடைக் கூழை யிரும்பிடிக் கைகரந் தன்ன கேழிருந் துறுகற் கெழுமலை 2 நாடன் வல்லே வருக தோழிநம் இல்லோர் 3 பெருநகை காணிய சிறிதே. (எ-து) வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது. (வி) நாடன் மென்றோள் நெகிழ்த்த செல்லலை வெறியாடும் வேலன் வேளாலாகிய செல்லல் என்னும். வேலன் வேளென்னும் என்றது வேலன் முருகென மொழியும் (ஐங். 245) என்பது போல வந்தது. தெய்வத் தானாகிய நோயைத் தெய்வம் என வழங்குதலும் உண்டு; நோயணங் கென வுணரக்கூறி (நற். 322) என்பது காண்க. அன்னையும் - நம்மைப் போல் இளையளாயிருந்துழி இவ்வெல்லாம் நன்கறிந்து மூத்த நம் தாயும். வேலன் வேளென மொழிவன், அன்னையும் அவன் மொழிந்த தனையே உணர்குவள். அதுவென உணரும் என்றது முரு கென வுணரும் என்றவாறு. ஆயின் - அச் செல்லலைப் பரிகரித்தற்கு ஆராயின். ஆயிடை - அவ்விடையில். இல்லோர் நம் பெரு நகை காணிய நாடன் சிறிது வல்லே வருக என்றா ளென்க. நாடன் செல்லலை வேள் செல்லலென்று மயங்கிப் பரிகரிக்கப் புகும் வெறியாடற்கண் வேள் வருமுன்னர் நாடன் சிறிது விரைவாக வருக. அப்போது தோழி நம் பெருநகையை இல்லோர் காண்க என்றா ளென்பதுமாம். காணிய - வியங்கோள். வல்லே வருக என்றதனால் வேலன் மீது வேள் ஆவேசித்து வருவதற்கு முன்னர் என்பது குறிக்கப்பட்டதாம். வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் ... ... முருகே (நற். 34) என்பதனால் வேள் வருதலுணர்க. செல்லல் அணங்கன்மை யுணர்ந்தார் தலைவியும் தோழியும் நாடனுமாதலால் நாடனைக் கண்ட மாத்திரையில் வெறியாடலை எள்ளிமற்றை இருவர்க்கும் பெருநகை யுண்டாதல் காட்டினார். இதனால் நாடனுக்குத் தலைவியின் கற்பும் புலனாம் என்க. செல்லல் - வருத்தம். கூழையிரும்பிடிக் கைகரந் தன்ன - கரிய பிடியின்கை சேற்றின் மறைந்தாலொத்த. கேழிருந் துறுகல் - நிறங்கரிய செறிந்த பாறை. கூழை - சேறு. சேற்றிற் காலாழ்த லியல் பாதலிற் கையும் மறைந்தாற் போன்ற என்று கூறினார், துறுகல் கை கரந்த பிடி போலத் தோன்று மலைநாடன் ஆதலால் அவன் செல்லலும் வேள் செல்லல் என மயங்கிக் கொள்ளப்பட்டது என்பதாம். தீன்மிதி நாகனார் - கடித்துத் தின்பதைக் கருவியான் மிதித் துண்ணு நாகனார். பாகடையைக் கருவியான் மிதித்தல் காண்க. தின்னப்படுவது தீன். ஆலத்தூர் கிழார் 112. கெளவை யஞ்சிற் காம மெய்க்கும் எள்ளற விடினே யுள்ளது நாணே பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ 1 நாருடை 2 யொசிய லற்றே கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே. (எ-து) வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (வி) கெளவை அஞ்சின் - அலர் அஞ்சின். காமம் எய்க்கும் - அவரை வழிபடுதற்குக் காரணமாய காதல் என்னை இளைக்கச் செய்யும். எய்த்த நோய்தணி காதலர் (அகம். 22) என்புழிப் போல ஈண்டும் பிறவினையாயிற்று. எள் அற விடினே - இகழ்தல் அறும்படி அக் காதலை விடுவேனாயின். உள்ளது நாணே - என் கற்புப்போய் நாண் மட்டும் உள்ளதாகும். அந் நாணாற் பாதுகாக்கப்பட வேண்டிய என்னலன், பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ நாருடை யொசியலற்று அவருண்ட என்னலன் என்றது அவருண்ட காரணத்தால் என ஏது தோற்றி நின்றது. பெருங்களிறு தலைவர்க்கு உவமையாய் வந்தது. என் நலம் - என் பெண்மை. கண்டிசின் - இதனைக் கண்கூடாகக் காண் என்றவாறு. அவருண்டற்கு முன்னுந் தன்னைக் கண்டிருப் பவளா தலின் இந் நிலை காண் என்றாள். உள்ளது நாணே என்ற அருத்தா பத்தியாற் கற்புப் போம் என்பது பெறப்பட்டது. நாணைப் போக்கிக் கற்பை உள்ளதாக்க வேண்டியது என்பது கருத்து. உயிரிற் சிறந்தன்று நாணே, நாணினுஞ் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று என்பது தொல்காப்பியம் (பொருள். 111). இதனை வரைவு நீட்டித்தவழி வருத்த மிகுதியாய் வழிபாடு மறுத்த தலைவியே தலைவனை ஏற்றுக்கோடற்கு விரும்பியதற்கு நச்சினார்க்கினியர் உதாரணங்காட்டி (தொல். களவு. 20) இது நாணே உள்ளது கற்புப்போம் என்றலின், மறுத்தெதிர் கோடலாயிற்றென்று கூறுதலான் இப் பொருளுண்மை அறிக. காமம் எய்க்கும் - வழிபாடு இளைக்கும் எனினும் அமை யும். காமக்கடவுள் என்னும் பரிபாடற் றொடர்க்கு வழிபடு கடவுள் எனப் பரிமேலழகர் உரைத்தது கொண்டுணர்க. ஒசியல் - ஒடிந்த கொம்பு. நிலம் படாமைக்கு நாருடைமை காட்டினார். நாருடை யொசியல் - என்றதனாற் றேய்ந்த உயிரிற் றொங்குகின்ற பெண்மையைக் குறித்தாள். பெருங்களிறு வாங்க முரிந்த யொசியலை உவமை கூறியதனால், என் மெல்லிய நாணால் அவர் வலியைத் தடுத்து என் பெண்மையைத் தாங்க கில்லேன் என்றவாறு. பெருநா ணணிந்த சிறுமென் சாயன் மாணலஞ் சிதைய2 (அகம். 120) என்றது காண்க. மாதீரத்தனார் 113. ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச் சேய்த்து மன்றே 1 சிறுகான் யாறே இரைதேர் வெண்குரு கல்லதி யாவதும் 2 துன்னல் போகின்றாற் பொழிலே யாமெம் கூழைக் கெருமணங் குறுகஞ் 3 சேறும் ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே 4. (எ-து) பகற்குறி, நேர்ந்த தலை மகற்குக் குறிப்பினாற் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது. (வி) ஊர்க்கும் அணித்தே பொய்கை - உயர்ந்த ஊர்க்குத்தக அண்மைத்தே மக்களாக்காத நீர்நிலை. உம்மை - உயர்வு குறித்தது என்ப (தொல். இடை. 7, கல்லாடர், நச்.) பொய்கைக்குச் சேய்த்து மன்று சிறுகான் யாறு - அப் பொய்கைக்குச் சேய்மைத்தும் அன்று கானிற் சிற்றாறு. இஃது ஐயவும்மை என்ப (தொல்.இடை. 7, கல்லாடர்). பொழில் - அவ் யாற்றங்கரைப் பொழில். இரைதேர் வெண்குரு கல்லது யாவதும் - அவ் யாற்றில் இரை தேர்ந்த வெள்ளிய குருகுகளல்லது வேறு எதுவும். துன்னல் போகின்று - அடைதல் ஒழிந்தது. எம் கூழைக்கு எருமணம் குறுகம் யாம் சேறும் - எம்முடைய கூந்தற்குச் செங்கழுநீர் பறிப்போமாய் எம் அன்னைக்குரைத்து யாம் செல்லுதும். பெரும் பேதை ஆண்டும் வருகுவள் - நின் மாட்டும் பெரும் பேதை அவ்விடத்தும் வருபவளாவள் என்றவாறு. ஆண்டு அவளை எதிர்ப்பட்டுக் கொள்க என்பது எச்சம். நின்மாட் டிவளும், பெரும்பே துற்றனள் (அகம். 310) என்பது காண்க. எருமணம் - செங்கழுநீர். எருமணம் என்பது செங்கழுநீரே என்பர் இரேவணசித்தர். குறுகுதல் - பறித்தல். கழிப்பூக் குற்றும் (அகம். 330) சுனைப்பூக் குற்றும் (142) என்னும் இடங்களிற் காண்க. குறுகம் என்ற பாடத்தால் எருமணம் பூவாதல் தெளிக. இட்ட எருவும் மணஞ்செய்வதொன்றாதலா லிப்பெயர் பெற்றது போலும். கொணர்கம் என்பாரும் உண்டு. யாற்றங் கரைப்பொழில் இவள் கூறிய குறியிடமாம். ஆண்டு இரைதேர் வெண்குருகு அல்லாது யாவதுந் துன்னல் போகின்று என்றாள், யாரும் நும்மைக் காண்பாரில்லை என்பது தெரிய. யாவதும் துன்னல் போகின்று என்றது ஊறு செய்தற்குரிய எவ்வுயிரும் ஆண்டில்லாமை குறித்ததெனினுமமையும். கான்யாறும் பொழிலும் செங்கழுநீரோடையும் தெரித்துக் குறியிடத்தின் சிறப்புணர்த்தினாள். வம்பு விரித்தன்ன பொங்குமணற் கான் யாற்றுப், படுசினை தாழ்ந்த பயிலிணரெக்கர், மெய்புகு வன்ன கைகவர் முயக்கம், அவரும் பெறுகுவர் (அகம்.11) என்பதனான் இதுபோன்ற நல்லிடம் புணர்ச்சிக்கு இனிதாதல் காட்டினாளாம். இக் குறியிடத்து எதிர்ப்பட்டுக் கொள்ளிற் றலைவியை நின்பாலுய்த்துத் தான் எருமணம் குறுவாளாய்ச் சேறல் கருத்து. நீ எதிர்ப்பட்டுக் கொள்ளாயாயின் பெரும் பேதையாதலால் எருமணம் குறுதற்கு ஆண்டும் என்னுடன் வருகுவள் என்று கொள்ளுதலுமாம். பொய்கைக் கரையே குறியிடம் ஆகுமெனின் அஃது ஊர்க்கு அணித்தாதலின் பலர் வரல் பற்றி ஆகாதென்று குறித்தாளாம். குறியிடம் தலைவியுள்ள மனைக்குச் சேய்மைத் தாகாதென்பது பற்றி அணித்தாகிய பொய்கைக்குச் சேய்த்து மன்று சிறுகான் யாறென்றாள். பூக்கொய்யச் செல்வதாகச் சொல்லிக் குறியிடம் புகுதலுண்டென்பது, அலரெழுந் தன்றிவ்வூரே பலருளும், என்னோக் கினளே அன்னை நாளை, மணிப்பூ முண்டகங் கொய்யே னாயின் அணிக்கவி னுண்மையோ வரிதே மணிக்கழி, நறும்பூங் கானல் வந்தவர், வறுந்தேர் போத லதனினு மரிதே (நற். 191) என்பதனான் நன்கறிக. தாய் பூப்பறிக்கத் தலைவியையும் தோழியையும் புறன்விடுதல், எவன்குறித் தனள்கொ லன்னை ... ... கழிசேர் மருங்கிற் கணைக்கா னீடிக், கண்போற் பூத்தமை கண்டு நுண்பல, சிறுபாசடைய நெய்தல், குறுகுமோ சென்றெனக் கூறாதோளே (நற். 27) என்பதனா னுணரலாம். இந் நற்றிணைப் பாடல்களான், எருமணங் குறுகம் சேறும் என்ற பாடத்தின் உண்மைப் பொருள் நன்கு துணியலா மென்க. ஊர்க்கு மணித்தே பொய்கை என்றது கொண்டு ஊருணியை ஊரணி என்றாரு முண்டு. திருக்கோவையில், உற்றவர்க்குச் சேரூருணி (400) என்புழிச் சேர்ஊருணி என்பதற்கு அணித்தாகிய ஊருணி என்று பேராசிரியர் கூறினார். ஈண்டுச் சேர் என்பதற்கு அவர் அணித்தாகிய என்று பொருள் விளக்கினாரல்லது ஊரணி என்று கொண்டு அதற்குப் பொருள் கூறினாரல்லர். அவர்க்குச் சேர் ஊருணி என்று இயைந்து முறைமையாற் சேரப்படும் ஊருணி எனினுமமையும் என்று கூறிச் செல்லுதலானும் இவ்வுண்மை யுணரலாம். சேர்தல் - சார்தல் என்னும் பொருளதாதல், சிறுபடையான் செல்லிடஞ்சேரின் (குறள். 498) என்புழிப் பரிமேலழகர், சேரின் - சாருமாயின் எனக் கூறியது கொண்டுணரலாம். சேர் ஊரணி என்று கருதுவாராயின் சேர்ந்த ஊர்க்கு அணித்தாகிய ஊரணி என்றுரைப்ப ரென் றறிக. ஊருணி என்பதே பெயரென்பது `ஊருணி நீர் நிறைந்தற்றே (குறள். 215) என்புழி `ஊரின் வாழ்வார் தண்ணீருண்ணும் குளம் எனப் பரிமேலழகர் கூறியதனான் அறியப்படும். கேணி பூவா வெரிமருள் தாமரை எனப் புறத்தினும், (364) `ஊருண்கேணி என இந் நூலுள்ளும் (399) வருதலானும் உணரலாம். பொன்னாகனார் 114. நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி 1 நின்குறி வந்தனெ 2 னியறேர்க் கொண்க செல்கநீ செலவியங் கொண்மோ வல்கலும் 3 ஆர லருந்த 4 வயிற்ற நாரை மிதிக்கு 5 மென்மக 6 ணுதலே. (எ-து) இடத்துய்த்து நீங்குந் தோழி தலைமகற்குக் கூறியது. (வி) நெய்தற் பரப்பின் - நெய்தன் மணற் பரப்பின். பாவை கிடப்பி - வண்டற் பாவையைக் கிடக்கச் செய்து. நின்குறி வந்தனென் - நின் அடையாளத்தில் வந்தனென், இயல்தேர்க் கொண்க - இயலுந்தேரையுடைய கடற்றலைவ. நின்குறி என்றது நின் இயல்தேர் மணி ஒலியுடைய அரவத்தை. `கேட்டிசின் வாழி தோழி ... ... ... சேர்ப்பன் தேர் மணிக்குரலே (நற். 78) என்பதனான் உணர்க. புள்ளொலி கேட்டொறுந் தேர்மணித் தெள்ளிசை கொல்லென ஊர்மடி கங்குலுந் துயின்மறந் ததுவே (நற். 287) என்பதுமது. பாவை - வண்டற்பாவை, வண்டற்பாவை வரிமணலயர்ந்தும் (அகம். 330) எனவும், `வண்டற்பாவை (அகம். 212) எனவும் வருதலான் உணர்க. அல்கலும் - பொழுது குறைதலும். செல்கம் - யானும் தலைவியும் செல்வேம். செலவியங் கொண்மோ - அவளை என்னுடன் செல்ல ஏவுதலைக் கொள்வாயாக. நீ வியங் கொள்வ தொழியின் நின்னுட னுறைதலையே விரும்பி அல்கலிலும் இருப்பள் என்பது குறிப்பு. அல்கலும் - பொழுது குறைதலும். என் மகள் நுதல் நாரை மிதிக்கும் - வண்டற்பாவையாகிய என் மகள் நுதலை நாரை மிதித்துச் சிதைக்கும். பொழுது குறையின் என் வண்டற் பாவையை நாரை மிதித்தழித்தலான் நீ குறி தெரியா தொழியினும் ஒழிவை. ஆதலால் அல்கற்கு முன்னர் அவ் வண்டற்பாவை யுள்ளுழிச் செல்க என்பது குறித்தாளென்க. ஆண்டுத் தலைவியை உய்த்து வந்தவளாதலின், அல்கிய அளவின் அவளும் யானும் செல்கம் என்றும், அவளை என்னுடன் செல்ல வியங்கொள் என்றும் கூறினாள். அல்கலுஞ் செல்கம் எனவும், அல்கலும் மிதிக்கும் செலவியங்கொள் எனவும் சேர்த்துரை கொள்க. அல்கலும் - இடைநிலைவிளக்கு. நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி என்றது தலைவியையும் ஆண்டுய்த்த துணர்த்தியவாறு. இடத்துய்த்து நீங்கும் தோழி எனக் கொளுவிற் கூறுதல் காண்க. வண்டற்பாவை - வண்டல் மண்ணாற் செய்த பெண் படிவம். ஈரமண் ஆதலின் அழியுமென்று நாரை மிதிக்கு மென்றாள். அக் குறியிற் றனக்குள்ள அன்பு தோன்ற என் மகள் என்றாள். ஆரலருந்திய வயிற்றினையுடைய நாரைகள் அல்கலில் நெய்தற் பரப்பின் நடக்கும் போது மிதிக்கும் என்பது கருத்து. அருந்திய வயிற்றின் பொறையால் அழுந்த மிதிக்கும்; அதனாற் சிதையும் என்பது கருத்து அவரையருந்த மந்தி பகர்வர் பக்கிற் றோன்றும் (ஐங் 271) என்புழியும் அவரை தின்ற மந்தி பண்ட வணிகர்களைப் போலத் தோன்றும் என்று பொருள் கோடல் காண்க. இனமீ னார்ந்த வெண்குருகு மிதித்த வறுநீர் நெய்தல் போல வாழாள் (நற். 183) என்பது காண்க. சேனாவரையர் ஆர்ந்து என்பது அருந்து எனக் குறுக்கும்வழிக் குறுக்கலென்பர் (தொல். எச். 7). கபிலர் 115. பெருநன் றாற்றிற் 1 பேணாரு முளரே ஒருநன் றுடைய 2 ளாயினும் புரிமண்டு 3 புலவி தீர 4 வளிமதி யிலைகவர் 5 பாடமை யொழுகிய 6 தண்ணறுஞ் சாரல் மென்னடை மரையா துஞ்சும் நன்மலை நாட நின்னல திலளே 7. (எ-து) உடன்போக்கு ஒருப்படுத்து மீளும் தோழி தலைமகற்குக் கூறியது. (வி) பெருநன் றாற்றிற் பேணாரு முளரே - என்பது - பிறர் தாம் விரும்பிய பெருநன்மையை ஒருவர் செய்யின் அவரை அந் நிலையிற் போற்றாதாரும் உலகில் உள்ளாரோ என்றவாறு. நீ விரும்பிய பெரு நன்றாகிய இன்பத்தை நினக்கு ஆற்றுதலால் இந் நிலையில் இவளைப் பேணுகிற்பை என்பது கருத்து. ஈண்டு விரும்பிய பெருநன்று இவள் இளமையிற் பெருநலத்தால் ஆற்றும் பெரிய இன்பம். ஒரு நன்றுடையளாயினும் - இல்வாழ்க்கையின் ஆற்றும் அறம் மட்டும் உடையளாயினும். என்றது அருத்தாபத்தியால் நினக்கு ஆற்றும் இன்பம் உடையவள் அல்லளாயினும் என்றவாறு. இது முதுமை குறித்தது. நன்று அறனாதல், நன்றி மறப்பது நன்றன்று (குறள். 108) என்புழிக் காண்க. புரிமண்டு - விரும்புதல் சிறந்து. சிறத்தல் இன்பம் ஆற்றும் நிலையினும் மேம்படல். புலவி தீர அளிமதி - இவள் தன்னிலை நோக்கி நொந்து வெறுத்தல் நீங்கப் பேணு வாயாக. ஈண்டுப் புலத்தல் புலவு வாய்ப்பாண் (பெரும் பாண் 22) என்புழிப் போலத் தன்னை வெறுத்துரைத்தற்கண் வந்தது. ஒரு நன்றுடைமை - இல்லறமாற்றுந் தன்மையே என்பதும் ஊரன் திருமனைப் பெருங்கடம் பூண்ட பெருமுது பெண்டிரேமாகிய நமக்கே (181) என்புழிக் கண்டுணர்க. என் நன்மனை நனி விருந்தயரும் கைதூவின் மையி னெய்தாமாறே (நற். 281) என்பதுமது, மகப்பயக்கும் ஒரு நன்றுடையளாயினும் எனினும் அமையும், மகப் பயந்து பயன்படுவர் குலமகளிர் என்பதும் ஈன்று பயன்படார் பொதுமகளிர் என்பதும் ஐங்குறுநூற்றுரையாளர் (4) கூற்று. இலை கவர்பு - உதிர்ந்த இலைகளைப் பற்றி உண்டு. ஆடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல் - அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த தட்பமும் நறுமணமுமுள்ள மலைப்பக்கத்து. மென்நடை மரையா துஞ்சும் நன்மலை நாட - நடைமெல்லிய மரையான் தங்கி வாழ்தற்கிடமான நன்மையையுடைய மலைநாடனே. நடை மெலிந்த முதுமை நிலையினும் மரையான் கிடைத்ததை இனிதுண்டு நின் மலைச்சாரல் நீழலில் தங்கி வாழ்தல் போல இவளும் நின்னகத்துக் கிடைத்ததை இனிதுண்டு நின்னிழலில் வாழ்வாளாக எனக் குறிப்பித்தாள் என்க. அஞ்சி லோதியென் றோழி தோட்டுயில், நெஞ் சினின்புறா யாயினு மதுநீ, என்க ணோடி யளிமதி, நின்க ணல்லது பிறிதியாது மிலளே (நற். 355) என்பதும் இக் கருத்தே கொண்டு வந்தது காண்க. அளிமதி நின்னலதிலளே - அளிப்பாய், அளித்தற்கு நின்னல்லது வேறான்றை நெஞ்சிலுடையவளாகாள் என்றவாறு. தெய்வத்தையும் வேண்டாள் என்பதாம். கவர்தல் வினையால் பற்றிக்கொண்டுண்ணுதல் குறித்தது கொண்டு நடை மெலிந்த மரையானுக்கு அரிதிற் கிடைக்கும் இலையாகக் கருதப்பட்டது. இலையுணவினும் புல்லுணவே இது விரும்புவதென்பது, செங்கோற் பதவின் வார்குரல் கறிக்கும் மடக்கண் மரையா (363) என வருதலான் அறிக. மரை இலுப்பைப் பூவுண்டல், இருப்பை யறைவாய் வான்புழல் ... மரைகடிந் தூட்டும் (அகம். 107) என்பதனா னறியலாம். இம் மானினம் மூங்கிலுண்ணல், புன்மறைந் தலங்கல் வான்கழை யுதிர்நென் னோக்கிக், கலைபிணை விளிக்கும் கானத்து (அகம். 129) என்பதனான் உணரலாம். இவ்வாறே நெல் உதிரும் போதும் கலை பிணையைக் கூப்பிடுதல் 291 - ஆம் அகப்பாட்டிற் காணலாம். “உயர்மிசை, மூங்கி லிளமுளை திரங்கக் காம்பின், கழைநரல் வியலகம் வெம்ப மழைமறந், தருவி யான்ற வெருவரு நனந் தலைப், பேஎய் வெண்டேர்ப் பெயல்செத் தோடித், தாஅம் பட்ட தனிமுதிர் பெருங்கலை, புலம்பெயர்ந் துறைதல் செல்லா தலங்குதலை, விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகு, மத்தம் (அகம். 241) என்பதும் காண்க, மென்னடை - ஈன்று நாளுலந்த மென்னடை மடப்பிடி (அகம். 85) என்புழிப் போலத் தளர்நிலை குறித்தது. தொழுதற்கு நின்னலது தெய்வமிலள் என்பதுமாம். இல்வாழ்க்கையில் அறனுமின்பமும் ஒருங்கெய்துதல், பிரியா தேந்துமுலை முற்றம் வீங்கப் பல்லூழ், சேயிழை தெளிர்ப்பக் கவைஇ நாளும், மனைமுதல் வினையொடு முவப்ப நினை (அகம். 51) என்புழிக் காண்க. ஒரு நன்றுடை யாளாயினும் அறக் கிழக்கு என்பது மட்டிலுடையளாய் இன்பக் கிழக்கு எனப் படுதலிலளாயினும் எனினும் அமையும், தலைவி தலைவற்கு ஆற்றும் நன்று அறனும் இன்பமும் என இரண்டாதல் காண்க. இளங்கீரனார் 116. யானயந் துறைவோ டேம்பாய் கூந்தல் வளங்கெழு சோழ ருறந்தைப் பெருந்துறை நுண்மண லறல்வார்ந் 1 தன்ன நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே. (எ-து) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்குந் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. (வி) யான் நயந்து உறைவோள் தேம்பாய் கூந்தல் - யான் விரும்பித் தங்கப்பெற்றவளுடைய வண்டுகள் வந்து பாய்கின்ற கூந்தல் வகைகள். இவள் கூந்தல் மெல்லணைத் தங்கியதனால் அதனையே நினைந்தான். குறுந்தா ணாண்மலர் நாறு, நறுமென் கூந்தல் மெல்லணை யேமே (270) என்பது காண்க. நுண்மணல் அறல் வார்ந்தன்ன - நுண்ணிய கருமணலிற் புனல் நின்று வார்ந்து வடிந்தாற் போன்றன. ஆயினும் அவ்வறல் வார்ந்த நுண்மணலினும் சிறந்து நல்ல நெறிப்புடையன, நறிய தட்ப முடையன என்றான் என்க. நெறியும், தட்பமும் உடைமையால் அன்ன என்று கூறித் தான் நயந்துறைதலால் நன்மையானும் தேம்பெய்தலால் நறுமையானும் அவளது அறல்வார்ந்த நுண்மணலினும் நெறிப்பும், தட்பமும் மேம்படுதல் காட்டினான் என்க. சோழர் வளங்கெழு உறந்தைப் பெருந்துறை நுண்மணல் என்க. தேம்பாய் கூந்தல் என்றது தான் வண்டோச்சி மருங்கணைந்த ஞாபகத்தால். நன்னெறி கட்கினிமையாவ துடன் உள்ளத்திற்கும் இனிமை செய்யும் நல்ல நெறிப்பு. ஐவகை வகுத்த கூந்தல் (அகம். 48) என்பது பற்றிப் பன்மையாற் கூறினான். ஊற்றுணர்ச்சியில்லாத கூந்தலளவினைக் கூறி இவள் மற்றை உறுப்பின் மேம்பாடு உய்த்துணர வைத்தவாறாம். கொங்குதேர் வாழ்க்கை என்னும் இறையனார் பாடலும் (2) இக் கருத்தே உடையது காண்க. தேம்பாய் கூந்தல் - தேன்பாய் கூந்தலுமாம். தேம்பாய் கூந்தற் குறும்பல மொசிக்கும், வண்டுகடிந் தோம்ப றேற்றாய் (அகம். 257). அறல் - நீர். தெள்ளறல் பருகிய இரலை (65) என்ப; நுண்மணலாகிய கருமணல் என்பாருமுளர். குன்றியனார் 117. மாரி யாம்ப லன்ன கொக்கின் பார்வ லஞ்சிய பருவர லீர்ஞெண்டு கண்டல் வேரளைச் செலீஇய 1 ரண்டர் கயிறரி 2 யெருத்திற் கதழுந் 3 துறைவன் வாரா தமையினு மமைக 4 சிறியவு முளவீண்டு விலைஞர்கை வளையே. (எ-து) வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது. (வி) ஆம்பலன்ன மாரிக் கொக்கு - மாரியில் நனைந்த கொக்கு. மாரிக் கொக்கின் கூரலன்ன குண்டு நீராம்பல் (நற். 100) என்ப. கொக்கின் கூரும், ஆம்பல் முகைக்கும் கூம்பிய நிலை வடிவினும் வண்ணத்தினும் பொதுவாகும். கொக்கின் பார்வல் - கொக்கின் பார்வையை. இன்க ணுடைத்தவர் பார்வல் (குறள். 1152). அஞ்சிய பருவரல் - அஞ்சியதனா லுண்டாகிய துன்பத்தால். ஈர்ஞெண்டு - குளிர்ச்சியையே விரும்பும் ஞெண்டு. இது பற்றியே இதற்குக் குளிர் என்பது பெயராயிற்று. நெடுகணீர்ஞெண்டு என்பது பற்றிப் பார்வையைக் கண்டஞ்சுதல் கூறினார். ஆம்பலை ஒத்த தேனும் ஆம்பற்கில்லாத பார்வையால் கொக்கென்று காண்டல் தெரிவித்தவாறு. கண்டல் வேரளை - தாழை வேரிடையிலுள்ள பொந்தில். செலீஇயர் - செல்ல, அண்டர் கயிறு அரி எருத்தின் கதழும் - கயிற்றை அறுத்துக் கொண்ட இடையர் வளர்க்கும் எருதைப் போல விரையும். துறைவன் இடையர் எருதைக் கூறியது தாம் பாலுண்ணாது கன்று முதலிலே ஊட்டி வளர்த்தலால் கயிற்றை அறுக்கும் வலியதென்பது தெரிய என்க. ஒரு சிறிய ஞெண்டும் தன் கேட்டைக் குறிப்பினறிந்து அதைப் பரிகரித்தற்கு ஏறுபோல் விரையும் துறையுடையவனாகியும் இக் களவில் அயலால் வருமிடரைக் குறிக்கொண்டு பரிகரித்தற்கு விரை கின்றிலன் எனக் குறிப்பித்த வாறாம். வாராதமையின் - இங்கு வரைவொடு வாராது மனம் பொருந்தின். விலைஞர் கைவளையிற் சிறியவும் ஈண்டுள என்க. அவர் வாராமைக்கு நீ பொருந்தாயாதலால் நீ மேனி மெலிவை. அம் மெலிவு புறத்தார்க்குப் புலனாக நின் கைவளை நழுவி விழுமாதலின் முன்னிளமையிலிடுதற்கு மிகுத்து விலைஞர் கையிற் கொண்ட வளைகள் சிறியவும் உள என்றாள். சிறியவும் - முன்னே கொண்ட சிறியவும். நன்னாகையார் 118. புள்ளும் மாவும் புலம்பொடு வதிய நள்ளென வந்த நாரின் மாலைப் பலர்புகு வாயி லடைக்கக் 1 கடவுநர் வருவீ ருளீரோ 2 வெனவும் வாரார் தோழிநங் காத லோரே. (எ-து) வரைவு நீட்டித்தவழித் தலைமகள் பொழுது கண்டு தோழிக்குச் சொல்லியது. (வி) பகற்புணர் புள்ளும் பிறவிலங்குகளும் புணராத் துன்பொடு தனியிருக்கையின் வதிய வந்த அன்றில் முதலியன இரவிற் புணராதன. புலம்பொடு வதியும் - தனிமையொடு கிடக்கும் (நெடுநல். 166) என்பர் நச்சினார்க்கினியர். நாரின் மாலை - அன்பில்லாத மாலைப்பொழுது. நள்ளென வருதல் - நள்ளென்னும் அநுகரணத்துடன் வருதல். தானும் அவை போலப் புலம்போடு வதியா நிற்க வந்தமையானும் நாரின் மாலை என்றாள். பலர்புகு வாயில் - விருந்தினர் பலர்புக்க வாயிலை. அடைக்கக் கடவுநர் - மூடுதற்கு வினாவுவார். வருவீருளீரோ எனவும் - உள்ளே வருதற்குரியீராய்ப் புறத்தேகினர் உள்ளீரோ என்று அழையா நிற்கவும். நங்காதலோர் வாரார் - நம்பாற்காதலையுடையவர் வாரார் ஆயினர். இதனாற் றலைவன் விருந்தினன் போலப் பலருடன் தலைவி இல்லத்துள் மாலையிற் புக்கு உண்டு தலைவியோடு வதிதல் உணரலாம். அழைத்துப் புகவிடவும் வாரார் என்றவாறு. புள்ளுக்கும் மாவுக்குமுள்ள புலம்பும் நங்காதலர்க்கில்லை போலும் என்பது குறிப்பு. சக்தி நாகனார் 1 119. சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை கான யானை யணங்கி யாஅங் கிளையண் 2 முளைவா ளெயிற்றள் வளையுடைக் கையளெம் மணங்கி யோளே. (எ-து) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்குந் தலைமகன் பாங்கற்கு உரைத்தது. (வி) வெள்ளரவின் சிறுகுருளை என்க. வெள்ளரவு - கிருஷ்ணஸர்ப்பத்தின் வேறு, அவ் வரி - அழகிய பொறி. கான யானை - காட்டியானை; யாருக்கும் வயப்படாதது என்றவாறு. கானம் அணங்குதற் கிடனும் அதுவாதல் நினைக. அணங்குதல் - ஈண்டுத் தீண்டி வருத்துதல்; குருளைக் கும் தலைவிக்கும் ஒத்தல் காண்க. இது இயற்கைப் புணர்ச்சிப் பின்னர்க் கூறுதலாத லுணர்க. அணங்கியாங்கு - சிறிது பெரிதை நலிந்தாற் போல. மெல்லிய இளையள் வலிய பெரியோனை அணங்கினள் என்றானென்க. உளங் கவர்ந்த இளமையும், குறிப்பறிவித்த முறுவலெயிறுகளும் வடுக்கொள முயங்கிய வளைக்கையும் மறக்க இயலாமற் கூறினான். அரவின் குருளை தீண்ட யானை உடம்பெலாம் விடநோய் விரைந்து பரவுச் செய்து வருத்துவது போல, இளையள் தீண்ட என்னுடம்பெலாங் காமநோய் பரந்து துன்புறுவித்தாள் என்று குறித்தவாறு. குருளை - குட்டி. தொடிக்கை வடுக்கொள முயங்கினை (அகம். 142). அணங்குதல் - வருத்துதல். இது பாடியவர் சக்தி நாகனார். இவர் நாகத்தின் சக்தியை உவமை கொடுத்தது ஓரியைபாகும். பரணர் 120. இல்லோ 1 னின்பங் காமுற் றாஅங் கரிதுவேட் டனையா னெஞ்சே காதலி நல்ல 2 ளாகுத லறிந்தாங் கரிய ளாகுத லறியா தோயே. (எ-து) (1) அல்லகுறிப்பட்டு மீளும் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. (2) இஃது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதூஉமாம். (வி) நெஞ்சே! இல்லோன் - பொருளில்லாதான். இன்பங் காமுற்றாங்கு - அப் பொருளானாகும் இன்பமொன்றைக் காதலித்தாற் போல. அரிது வேட்டனை - நீ எய்தற்கரியதைக் காதலித்தாய். என்றது பொருளில்லாத வறியன் செல்வர் மனைக்கண் அப் பொருளானாகிய அரியதோர் துப்புரவைத் தெய்வ வயத்தால் விருந்துண்டு அதன் நன்மையை அறிந்து அத் துப்புரவே தனதாக நாளும் துய்த்தற்கு விரும்பியது போல என்றதாம். இது புணர்ந்த தலைமகள் பிரிந்தவழியோ பின் அல்லகுறிப்பட்ட நிலையிலோ கூறியதாகக் கொள்ளுதலான் அதற்கேற்ப உவமையை இயைத்துரைக்க. காதலி - நீ காதல் செய்தவள். நல்லளாகுத லறிந்தாங்கு - நினக்கு நல்லின்பம் செய்பவளாதலறிந்தாற் போல. அரியளாகுதல் அறியாதோய் - நினக்கு எய்தற்கரியளாதலை அறியாதாய் எத்துணை நல்லளோ அத்துணை அரியள் என்றவாறு. நல்லாளாகுதலை அறிந்தது பால் வரை தெய்வங் கூட்டிய இயற்கைப் புணர்ச்சியிலென்க. ஆண்டு எளிதிற் றுய்க்கப் பெற்றதொன்றே கொண்டு அவளரியளாதலை அறியாதாய் என்பது கருத்து. நல்லளாகுத லறிந்தாங்கு என்பதனால் தான் தலைவியைத் துய்த்தறிதல் புலனாம். கபிலர் 121. மெய்யோ 1 வாழி தோழி சாரல் மைபட் 2 டன்ன மாமுக முசுக்கலை ஆற்றப் பாயாத் தப்ப லேற்ற 3 கோட்டொடு 4 போகி யாங்கு நாடன் தான்குறி வாயாத் 5 தப்பற்குத் தாம்பசந் தனவென் றடமென் றோளே. (எ-து) இரவுக்குறிவரும் தலைமகன் செய்யுங்குறி பிறிதொன்றனால் நிகழ்ந்து மற்று அவன் குறியை ஒத்தவழி அவ்வொப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென் றாள், ஆண்டு அவனைக் காணாது தலைமகள் மயங்கிய வழிப் பின்னர் அவன் வரவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் கூறியது. (வி) மாமுகம் - கருமுகம். முசுக்கலை - கருங்குரங்கிலாண். ஆற்றப் பாயாத் தப்பல் - தன்னைப் பொறுக்கும்படி பாயாத தவறால், ஏற்ற கோட்டு ஒடு போகியாங்கு - அதனைத் தாங்கலுற்ற கொம்பு முறிந்து புண்பட்டுப் போயினாற் போல. ஆற்றல் - பொறுத்தல்; பசி யாற்றல் (குறள். 225). ஆற்றப் பாயாமை தன்னைத் தாங்குவது தெரிந்து பாயாமை. ஓடுபோதல் - முது புண்பட்டுப் போதல். மெய்ப்படு முதுபுண் (சிந். 2881) என்பதற்கு நச்சினார்க்கினியர் உடம்பிலுண்டாகிய ஒடு என்றெழுதல் கண்டு தெளிக. தான் குறிவாயாத் தப்பற்கு - நாடன்தான் செய்த குறி தனக்கு வாயாத தவற்றினால் என் தடமென் தோள்கள்தாம் பசந்தன என்றவாறு. ஏற்ற கோடொடு போகியாங்கு நாடன் என்பது பாடமெனின் நன்கியையும் நாடன் எதுகைத் தொடையாதல் காண்க. கோடு ஒடு போகியாங்கு தோள் பசந்தன என நன்கியைதல் காண்க. ஏற்றகோட்டு ஒடுபோதலாவது பாய்ந்த குரங்கு பற்ற ஏற்றுக் கொண்ட சிறுகிளை நுனி முறிந்து புண்படாது அதனை ஏற்கும் படி அதனாற் பற்றப்படாத அடிப்புறம் முறிந்து புண்படுதல் போலத் தலைவன் குறிவாயாத தவற்றால் அவன் பற்றாது விட்ட தோள்கள் பசந்தன என்றவாறு. இது வினையுவமம். ஒடுபோதற்கு ஒப்புப் பசத்தல். இங்ஙனம் அன்றித் தப்பல் மரக் கொம்பொடு போனாற் போல என்பதே கருத்தாயின் அதற்கேற்பக் குறிவாயாத தப்பல் தடமென்றோளொடு போயிற்றென்று பொருள்படச் சொற்றொடுப்பர் என்க. கோடு முறிந்தது குரங்கின் தவறோ கோட்டின் தவறோ வினாவியுணர்க. குறிவாயாமை நாடன் தவறோ ஒருகால் நந்தவறோ என்று நினைந்து யான் கூறியது மெய்யோ என வினவினாள். தப்பற்குப் பசந்தன எனப்படுதலான் தப்பற்குக் கோட்டொடு போதலே உவமையினுங் கொள்ளப்படும் என்க. ஓரம்போகியார் 122. பைங்கால் 1 கொக்கின் புன்புறத் தன்ன குண்டுநீ ராம்பலுங் கூம்பின 2 வினியே வந்தன்று வாழியோ மாலை ஒருதா னன்றே 3 கங்குலு முடைத்தே. (எ-து) தலைமகள் பொழுது கண்டு அழிந்தது. (வி) ஆம்பலும் கூம்பின - இராப்போதாகிய ஆம்பலும் இன்னும் மலர்ந்தனவில்லை கூம்பின ஆகவும். இனியே வந்தன்று மாலை - இப்போதே வந்தது மாலை. இப்போதே என்றது இப் பகற்போதே என்றவாறு. கடும்பகல் வருதி கையறு மாலை (ஐங். 183) என்பது காண்க. கொக்கின் பின்புறத்தன்ன - கொக்கினது புறத்தை ஒத்துத் தன் வாய் கூம்பின. கொக்கின் கூம்பி நிலையே ஆம்பல் கூம்பு முகைக்கு உவமையாதல் கொக்கின் கூம்பு நிலையன்ன முகைய ஆம்பல் (நற். 280) என்பதனா னறியலாம். ஆம்பல் கூம்பின மாலை வந்தது என்பது இயற்கை விரோதமென்று கருதிக் கூறியவாறாம். ஆம்பல் மலர்ந்தன மாலை வந்தது என்பதே இயற்கைத்து என்றவாறு. இங்ஙனம் கொள்ளாக்கால் பன்னூல் வழக்கிற்கும், இயற்கைக்கு மாறாக ஆம்பல் பகற்போதாமெனக் கூறவேண்டி வருமென்க. அடியார்க்கு நல்லார் மனையறம் படுத்த காதையில் (அடி 14) ஆம்பல் பகற் போதன்று எனத் தெளியக் கூறியதனையும், இதற்கியையவே, கயக்கணக் கொக்கின் கூம்புமுகை யன்ன, கணைக்கா லாம்ப லமிழ்து நாறு தண்போது, குணக்குத் தோன்று வெள்ளியி னிருள்கெட விரியும் (நற். 230) என வருவதனை நோக்கியும், குறிஞ்சிப் பாட்டில், ஆம்ப லாயிதழ் கூம்புவிட ... ... ... துனைஇய மாலை துன்னுதல் காணூஉ என வருதல் கொண்டும் (223-230) இது மாலையில் மலரத் தொடங்கிக் கூம்புவது இயல்பினதாதல் கண்டு கொள்க. அகநானூறு மருதத்திணைப் பாட்டில் விடியற்போது நிகழ்ச்சியைக் கூறிய ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலர் மாந்தி (அகம். 56) என்புழிப் பழையவுரைகாரர், கூம்புவிடு பன்மலர் என்றதனானே ஆம்பல் பூக்குவிதல் கொள்க. ஆண்டுக் கூறிற்றிலரேனுங் குறிப்பினாற் கொள்க என விளக்கியதனான் ஆம்பல் பகற்போதாகாது இராப் போதேயாதல் நன்கு தெளியலாம். மதிநோக்கி யலர்வ ஆம்பல் வான்மலர் என்பது கலித்தொகை (72). காலையில் ஆம்பல்வாய் கூம்பினகாண் என்பது நாச்சியார் திருவாக்கு (திருப். 14 : 2). இவற்றான் ஆம்பல் மாலையிற் கூம்பின என்றல் இயல் பன்மை காணலாம். வாழியோ மாலை - மாலை வாழ்வதாக. மலராமல் ஆம்பல் கூம்பின நிலையினும் முற்பட வந்த தன்மையாற் கெடுவதாக என்பது வாழ்வதாக என்றாள். தன்னை அலர்த்தாது கூம்புவித்து இடர் செய்தல், தான் கெடினும் தக்கார்கே டெண்ணலாகாத் தனி மேதகவால். ஒருதானன்று - சிறிதளவைத்தாகிய மாலை மட்டும் வந்தன்று. நீ நின்று இடர் செய்வதாகிய கங்குலையுந் தன் பின்னுடையது என்றவாறு. இரவரம் பாக நீந்தின மாயின்... ... ... கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே (387) என்பதனான் மாலை சிறிதாதலும் கங்குல் பெரிதாதலும் நினையலாம். ஆம்பல் கூம்பிய நிலையின் வந்து அவ்வாம்பலினு மெல்லிய என்னைக் கூம்பு இடர் செய்தலால் வாழாமைக் குரிய மாலை வாழ்வதாக என இரங்கிக் கூறினாள் என்றலுமொன்று. மாலை வந்தன்று என்பது மாலை மட்டும் வந்தது; அம் மாலையில் வரல் குறித்த தலைவர் யான் கூம்புதல் விட்டு மலர வந்திலர் எனக் குறிப்பிற் கொள்ள வைத்தவாறு. ஐயூர் முடவனார் 123. இருடிணிந் 1 தன்ன வீர்ந்தண் கொழுநிழல் நிலவுக்குவித் 2 தன்ன வெண்மண லொருசிறைக் கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப இன்னும் 3 வாரார் வருஉம் பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே. (எ-து) பகற்குறியிடத்து வந்த தலைமகனைக் காணாத தோழி அவன் சிறைப்புறத்தானாதல் அறிந்து தலைமகட்குச் சொல்லியது. (வி) இருள் செறிந்தாற் போன்ற நிழல், அவ்விருளினும் மேம்பட்டு ஈரமும், அதனாற் றட்பமும்; இவற்றால் உறைந்தார்க்குக் கொழுமை தருவதுமாகிய நிழல் என்றவாறு. குவித் தற்காகாத நிலவைக் குவித்தாற் போன்ற வெண்மணற் குன்றின் ஒரு பக்கத்து. குவித்தன்ன என்றதனான் மணல் குன்றாயிற்று. நிழலையும் வெண்மணலொரு சிறையையு முடைய புன்னைப் பூம்பொழில். புணர்தற்கினிய இருள் வேண்டி நிழலும், நிலவு வேண்டி மணற் குன்றும், மறைவிடம் வேண்டிப் புன்னைப் பூம்பொழிலும் கூறினாள். இது பகற்குறியாதலின் இருளுக்கும் நிலவுக்கும் நிழலும் மணற்குன்றும் கூறினார். பொழில் புலம்ப - இவ்வியற்சோலை ஒருவருமில்லாது தனிமையினிருக்கவும் இப் பயன் கொள்ள வாரார் என்றாள். இனி இப் பயன் கொள்ளவரினும் அதற்கிடையீடாக என்னையர் பன்மீன் வேட்டத்துத் திமில் வருஉம் என்றவாறு. வேட்டம் வாயா தெமர் வாரலரே (நற். 215) என்பதனாற் பன்மீன் வேட்டத் தென்னையர் திமில் வரூஉம் என்றாள் என்க. பன்மீன் வேட்டத்துடன் திமில் வரூஉம் என்றது, பன்மீன் வேட்டம் வாய்த்து வருதலால் அவற்றைக் கொள்வார் பலர் திரள்வர்; அதனால் இன்பம் வாயாதென்பதாம். தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியதாதலின் அவன் குறியிடத் தெய்தினும் இப்போது இடையீடுடைத் தென்றாள் என்க. யாம் இப்போது இங்கு வேண்டிய தலைவர் வாரார். இங்கு இப்போது வேண்டாத என்னையர் திமில் வரூஉம் என்றவாறு. பொழில் புலம்ப இன்னும் வாரார் என்றது பொழில் தனித்து நெடும்போது இருந்தது குறித்ததாம். திமில் - மீன்பிடி படகு. என்னையர் - என் தமையன்மார். திரைச்சுர முழந்த திண்டிமில் விளக்கிற், பன்மீன் கூட்ட மென்னையர் காட்டிய, எந்தையுஞ் செல்லுமா ரிரவே (அகம். 240) என்பதனான் அறிக. பாலை பாடிய பெருங்கடுங்கோ 124. உமணர் சேந்து 1 கழிந்தமருங்கி னகன்றலை ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா 2 டின்னா வென்றி ராயின் இனியவோ பெரும தமியோர்க்கு 3 மனையே. (எ-து) புணர்ந்துடன் போக்கினைத் தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. (வி) உமணர் சேந்து கழிந்த மருங்கின் - உப்புவாணிகர் தங்கிப்பின் கடந்து போய பக்கத்தால். அகன்றலை ஊர்பார்த்தன்ன - அகன்ற இடமுடைய ஊர் பாழாயினது போன்ற. ஓமையம் பெருங்காடு - ஓமை மரங்களுள்ள பெரிய காடு. சேந்து கழிந்த - தங்கிச் சென்ற. சேர்ந்து கழிந்த என்பதூஉம் பாடம். நல்லது கொள்க. ஊரெழுந் தன்ன வுருகெழு செலவி, னீரி லத்தத் தாரிடை மடுத்த, கொடுங்கோ லுமணர் (அகம். 17) என்பதனால் இவ்வுமணர் ஒரு பெருந்திரளாய் ஊரெழுந் தன்ன செலவுடைய ராதலான் இவர் தங்கி இளைப்பாறிச் சென்ற மருங்கு ஊர் பாழ்த்தது போன்றது என்றார். உப்புச்சகடங்கள் நின்ற பக்கங்களாலும், பகடுபல கட்டி நின்ற தறிகளாலும் ஊண் அட இட்ட அடுப்புக்களாலும் ஊர்போலத் தோன்றி அம் மருங்கு மக்களும் பிறவும் சென்றதனால் ஊர்பாழ்த்தாற் போலத் தோன்றுதல் கருதினார். உப்பின் கொள்ளை சாற்றிய கொடுநுக வொழுகை, யுரனுடைச் சுவல பகடுபல பரப்பி, உமணுயிர்த் திறந்த வொழிக லடுப்பின் (அகம். 159) என வருதலான் இஃதறிக. காடு இன்னாவென்றி ஆயின்-நும்முடன் செல்வேற்குக் காடுகள் இன்னாதன என்று நீர் கூறுதீராயின் என்றவாறு. என்றிராயின் என்றதுதான் அங்ஙனம் கருதாது இனியவாகவே கொள்ளும் குறிப்பிற்று. மேல் தமியோர்க்கு என்றதனால் ஈண்டு உடன் செல்வேற்கு என்று கருதியது தெளிவாம். தமியோர்க்கு மனை இனியவோ - காதலருடன் செல்லாது தனிமையிற்றங்கி யிருக்கும் மகளிர்க்கு மனைகள் இனிமையுடையனவோ என்றவாறு. இனிய ஆகாது அக் காட்டினும் இன்னாதன என்று குறித்தாளாவள். தமியோர்க்கு எனப் பிறமகளிர்மேல் வைத்துக் கூறினாள். தான் அங்ஙனம் தனித் திருந்து உயிர்வாழ இயலாமை தெரிய. உடன் செல்லிற் காடுகள் இனியவாம் என்றும், தனித்திருப்பின் வீடுகளும் இன்னாதனவாம் என்றும் குறித்தாள் என்க. உடன் செலவிற் காடும் இனியவாதல், ஆற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடி னதுவல்ல தின்பமு முண்டோ, வெமக்கு (பாலைக்கலி 5) என்பதனா னறிக. இன்னா தன்றே யவரில் லூரே (நற். 216) என்பதனாற் றலைவரில்லாத இடம் இன்னா தாதல் தெரியலாம். அம்மூவனார் 125. இலங்குவளை நெகிழச் 1 சாஅ யானே உளெனே 2 வாழி தோழி சாரற் றழையணி யல்குன் மகளி ருள்ளும் விழவுமேம் பட்டவென் னலனே பழவிறற் பறைவலந் 3 தப்பிய பைத னாரை திரைதோய் வாங்குசினை யிருக்கும் தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே. (எ-து) வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சிறைப் புறமாகச் சொல்லியது. (வி) விளங்கிய வளைகள் நெகிழும்வண்ணம் மெலிந்துயான் ஒருத்தியே உயிருள்ளேன். இக் களவொழுக்கமும் புறத்தார்க்குப் புலனாக வளைநெகிழ மெலிந்த பின்னும் பெண்மைக்கியைய நாணாமல் உயிர் பொறுத்துள்ளேன் யானே என்றாள். மற்று நின்னொடு பிறந்து சிறந்த நின் பெண்மை யாண்டைய தென்றாட்கு விழவு போல ஊர்முழுதும் சிறப்பித்துக் கொண்டாடும் என் பெண்மை துறைவனொடு இடம் பெயர்ந்தது என்றாள் என்க. சாரற் றழையணி யல்குல் மகளிருள்ளும் - மலைச் சாரலிலுண்டாய தழைகளாலாகிய உடையால் அலங்கரிக் கும் அல்குலையுடைய மகளிருள்ளும். என்றது பெண்மை போற்றித் தம் நல்லுறுப்பைத் தழையுடுத்து மறைக்கும் கன்னியர் பலருள்ளும் என்றவாறு. அப் பலருள்ளும் வாழ்வு மேம்பட்ட நலன் இழந்தும் உயிருடனிருத்தற்கு ஏது என்னையெனின் பைதனாரை திரைதோய் வாங்கு சினையிருக்குந் துறைவனொடு கண்மாறியதனால் அவனே வரைவுடன் எய்தி என் உயிர் காப்பன் நசையாலெனக் குறிப்பிற் கொள்ள வைத்தாளாம். விறற் பறை பழலந் தப்பிய பைதல் நாரை - வலிய சிறகு முன்னை வன்மை தவறியதனாற் றுன்புறு நாரை. திரைதோய் வாங்குசினை இருக்கும் - திரை வந்து தோயும் வளைந்த மரக்கிளையில் மீன் வரவு பார்த்திருக்கும். திரை தோய்தற்கேற்ப வாங்குசினை என்றாள். சேயிறாத் துழந்த நுரைபிதிர்ப் படு திரை, பராஅரைப் புன்னை வாங்குசினைத் தோயும், கானலம் பெருந்துறை (அகம். 270) என்பது காண்க. ஈண்டுப் பழவலந் தப்புதலாவது முன்போற் புறத்தே இயங்காமல் தலைவி இற்செறிக்கப்பட்டதனைக் குறித்தது. திரை இருக்குமிடத்து மீனொடு வாராதாயின் நாரை உயிர் வாழாமை போலத் தானுள்ள இடத்துத் தலைவன் வரைவொடு வாரானேல் உயிர் வாழேன் என்று குறித்தாளாம். நலனே துறைவனொடு கண்மாறின்று என்பது போலவே தம்மொடு தானே சென்ற நலனும் (அகம். 103) என வருதலைக் காண்க. இப் பாட்டில் தலைவன் தலைவி முறையே நெய்தல் நிலத்தவனும் குறிஞ்சி நிலத்தவளுமாதல் காண்க. ஒக்கூர் மாசாத்தியார் 126. இளமை பாரார் வளநசைஇச் 1 சென்றோர் இவணும் 2 வாரா ரெவண ரோவெனப் 3 பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத் தொகுமுகை யிலங்கெயி றாக நகுமே தோழி நறுந்தண் 4 காரே. (எ-து) பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (வி) இன்பந் துய்த்தற்குரிய பருவமாகிய இளமையை என் கண்ணும் தங்கண்ணும் பாராராய் முதுமையினும் பிறர்க்குதவும் செல்வத்தை விரும்பிச் சென்றவர். இவணும் வாரார் - இந் நிலையினும் எய்திலர். என்றது கார் இடித்து முல்லை அரும்பீனும் இந் நிலையினும் என்றவாறு. எவணரோ என - எந் நிலையினரோ என்று சொல்லி யானிரங்கா நிற்க. பெயல் புறந்தந்த - மழை காப்பாற்றிய. பூங்கொடி முல்லைத் தொகுமுகை இலங்கு எயிறாக நகும் - தொக்க முகைகள் விளங்கிய பற்களாகக் கொண்டு முல்லை என்னை நகாநிற்கும். நறுந்தண் காரே - முல்லை பூத்தலால் நறிய தண்ணிய கார்ப்பருவத்தின்கண் என்றவாறு. இக் குறுந்தொகையில் (162) கார்புறந்தந்த வியன்புலத்து ... ... முல்லை நீநின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை, நகுவை போலக் காட்டல் தகுமோ என்பது கொண்டு உண்மை உணர்க. முகைவாய் திறந்த நகைவாய் முல்லை (அகம். 244). இங்ஙனமன்றிக் கார் நகுமே என்றால் அது மின்னி நகுமென்று கூறுவர் என்க. நகுவது போல மின்னி (நற். 215) எனவும், வான் நகுவதுபோல் மின்னாட (திணைமாலை. 122) எனவும் வருவன கொண்டு உணர்க. முல்லை நகும் என்பதற்கு ஏது தலைவர் அம் முல்லையைக் காட்டி, மௌவ னலம்வரக் காட்டி யிவைநின், னெயிறேர் பொழுதி னெய்தரு குவமென (நற். 316) கூறிச் சென்றாராதலான் அவரை நம்பி ஆற்றியிருந்தது பற்றியெனக் கொள்ளத்தகும். இங்ஙனம் கொள்ளாது, முல்லைத் தொகுமுகை யிலங் கெயிறாக நகுமே தோழி நறுந்தண் காரே என்று பாடங் கொள்ளின் முல்லையின் திரண்ட முகைகள் விளங்கிய பற்கள் போலாக நறுந்தண்கார் ஒலிக்கும் என்று பொருள் கூறுக. கார்நாற்பதில், முல்லை யிலங்கெயிறின் நறுந் தண்கார் மெல்ல வினிய நகும் (14) என வந்த இடத்துப் பழையவுரைகாரர். முல்லைக் கொடிகள் விளங்குகின்ற மகளிர் பற்களைப் போன்ற அரும்புகளை ஈனும்படி அழகிய குளிர்ந்த மேகங்கள் இனியனவாய் மெதுவாக ஒலியா நின்றன எனப் பொருள் கூறுதல் காண்க. பெயல் புறந்தந்த முல்லை என்றாள் தனக்கு அம் மழை இப்போது பகையாய் வருத்துதல் குறித்து. பொருளில்லா னிளமைபோற் புல்லென்றாள் (குறிஞ்சிக் கலி 1). பொருளில்லாத இளமை பொலிவழிந்துள தாதலின் அதனை ஒரு பொருளாக நோக்காராய் அவ்விளமை பொலிவு பெறுதற்குரிய வளத்தை விரும்பிச் சென்றார் எனினுமமையும். ஈண்டு முல்லை நகுதற்கு ஏது இளமை பொலிவு பெற வேண்டிப் பொருண்மேற் பிரிந்தவர் பாணித்த லான் அவ்விளமையே கழியுமென்று எள்ளுதல் ஆகுமென்க. ஓரம்போகியார் 127. குருகுகொளக் குளித்த கெண்டை யயல துருகெழு தாமரை வான்முகை வெரூஉம் 1 கழனியம் 2 படப்பைக் காஞ்சி யூர ஒருநின் பாணன் பொய்ய னாக உள்ள பாண ரெல்லாம் கள்வர் போல்வர்நீ 3 யகன்றிசி னோர்க்கே. (எ-து) பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்குத் தோழி சொல்லியது. (வி) குருகு கொள - குருகு கொள்ளப்புக்கவளவில். குளித்த கெண்டை - நீருள் மூழ்கித் தப்பிய கெண்டைமீன். தாமரை உருகெழு வான்முகை வெரூஉம் - தாமரையின் அக் குருகின் வடிவு கெழீஇய வெள்ளியமுகையினை அஞ்சி யொளிக்கும். கழனியம் படப்பைக் காஞ்சி ஊர - வயலை அடுத்த தோட்டங்களிற் காஞ்சி மரங்களையுடைய ஊரனே. வான்முகை என்றதனானும் குருகென வெருவுதலானும் இது வெண்டாமரை என்க. ஒரு நின் பாணன் பொய்யனாக - நின்னொரு பாணன் பொய்ய னாகாநிற்க. உள்ள பாணரெல்லாம் - பிச்சைக்குப் புக்குள்ள பாண ரனைவரும். கள்வர் போல்வர் - வாயிற் பொய்த்தல் மட்டில்லாது அற்றம் பார்த்து உடைமையைக் கவர்ந்து மறையுங் கள்வர் போல்வர். நீ அகன்றிசினோர்க்கு - நீ அகன்ற மகளிர்க்கு. உள்ள பாண ரெல்லாம் - பாணராய் உள்ளாரெல்லாம் எனினும் அமையும். தன்னுடன் பாடின்றித் தன்னுடைய கணவனைப் பரத்தையர் சேரிக்குக் கொண்டேகுவாராகக் கருதிக் கள்வர் போல்வர் என்றாள். அகன்றிசினோர்க்கு என்ற பன்மையால் இத் தலைவன் பல்பெண்டிராளன் என அறியலாம். இன்னை யாகுதல் தகுமோ....... நின் சொன்னயந் தோர்க்கே (நற். 283) என்பது போலப் பலர்மேல் வைத்துக் கூறியதென்பதுமாம். குருகு தன்னைக் கொள்ளப்புக அது கண்டு குளித்துத் தப்பிய கெண்டை தனக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் ஆண்டுள்ள தாமரை முகையை நிறவடிவொப்புமையால் வெருவினாற் போல ஒரு பாணன் பொய்க்க அது கண்டு கொண்ட தலைவியர் தமக்குத் தீங்கு நினையாத எல்லாப் பாணரையும் இசையுஞ்சாதியும் ஒத்தல் கண்டு கள்வர் போல்வர் என்று அவரை அஞ்சுவர் என்பது குறித்துப் பாணன் வாயிலாதலை வெறுத்தாள். பரணர் 128. குரைகடற் றிரையது 1 பறைதபு நாரை திண்டேர்ப் 2 பொறையன் றொண்டி முன்னுறை அயிரை யாரிரைக் கணவந் தாங்குச் 3 சேய ளரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே. (எ-து) (1) அல்லகுறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. (2) இஃது உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉமாம். (வி) குரைகடல் என்ற பாடமே கொள்க. இணைத் தெழுதியதனால் `ரை- `ண எனப் படித்தவர் பிழைப்பாகும். திரையின் மீன் கிடையாதுள்ள நாரை துறைமுன்னர்க் கரையிலுள்ள அயிரை உணங்கலைக் கண்டு உண்ண அணவந்தாங்கு என்க பறைதபு நாரை தான் கண்ட மாத்திரையான் தான் பறக்க இயலாத சேய்மையின் காப்பிலுள்ள அயிரை உணங்கலைப் பற்ற அணவந்ததனைத் தலைவன் தான் கண்ட தலைவியை எய்த நினைத்தற்கு உவமித்ததனாற் துணியலாம். அணவருதல் - தலையெடுத்தல். காணாததனைக் கருதி அணவருதல் கூறுதல் பொருந்தாதென்க. புன்றலை மன்ற நோக்கி மாலை, மடக்கட் குழவி யணவந்தன்ன (64) என்புழி நோக்கி அணவருதல் கூறுதலாலுண்மை உணர்க. இதனை நச்சினார்க்கினியர் (தொல்.களவு. 11) புணர்ந்து பிரிந்துழி அன்பு மிகுதியால் தான் மறைந்து அவட் காணுங்கால் ஆயத்திடைக்கண்டு இனிக் கூடுதல் அரிதெனத் தலைவன் இரங்கியதெனக் கூறுதலான் இப் பொருட்கேற்பவே உவமையினும் நாரை அயிரையைக் கண்டு அணவந்தது எனக் கூறுவதே சிறந்ததாமென்க. நாரை குணகடற்றிரை நின்று குட கடற்றொண்டி முன்றுறை அயிரையைக் கண்டு பற்றத் தலையெடுத்தல் கருத்தெனின் அஃது இயற்கைக்கு மாறாகச் சேய்மைய தொன்றிற்கே ஆமல்லது ஆரிரை என்பதனாற் குறித்த அருமைக்கு இயையாமை காண்க. ஆரிரை - கொளற்கரிய காவலிலுள்ள இரை. நுளைச்சியர் காவலிலுள்ள அயிரை இரை என்றவாறு, ஆரிரை என உவமையினில் வந்ததற்கியையப் பொருளிற் பல்லோர் சூழ்ந்த ஆயத்திலிருந்த தலைவி அரியளாதல் கூறினான். தன் கையகன்று போய்க் காணக் கூடிய சேய்மைக்கண் ஆயத்திடை நிற்றல் கண்டு சேயள் என்றான். நாரையுள்ள திரையினின்று அகன்று அயிரை முன்றுறை மணலிற் காணக் கூடிய சேய்மையில் நுளைச்சியர் காவலிலிருத்தலான் அவ்வயிரையும் பறைதபுநாரைக்குச் சேயதுமரியது மாதலுணர்க. பறைதபு - பறத்தல் கெட்ட. பறைதபு முதுகுருகு (ஐங். 180) என்புழிப் பறத்தல் கெட்ட முதுகுருகு என்று பழைய உரைகாரர் கூறுதல் காண்க. இதனால் இந் நாரைக்கு அயிரை சேயதாயிற்று. புக இயலாமையாற் றலைவர்க்கும் தலைவி யுள்ள இடம் காணப்பட்டும், சேயதாதல் தெளிக. ஆயம் நெருங்கியதனால் அதனை அடைவிலக்கிச் சேறற்கண் அண்மையதும் சேய்மையதா மென்க. கூடலொடு பரங்குன்றினிடை, கமழ்நறுஞ் சாந்தின் அவரவர் திளைப்ப, நணிநணித் தாயினும் சேஎய்ச் சேய்த்து என்பதற்குப் (பரிபா. 17 : 23-25) பரிமேலழகர் உரைத்தது கொண்டு தெளிக. தொண்டி குடகடற்றுறையிற் சேரர்க்குரிய பட்டினம் ஆதலாற் பொறையன் தொண்டி என்றார். அலையில் மீன்தேரும் மகிழ நாரை கரையில் காவலிலுள்ள அயிரைப் பரப்பினைக் கண்டு ஆசைப்பட்டு அணவந்தாங்கு என்பதே இயற்கைக்கு இயையும். படர்தி - நினைதி. இதனால் நெஞ்சே நீ நோயுடையாய்: நின்னை யுடைய எனக்கும் நோய் செய்யும் பால ஆவை என்க. எய்தற்காகாத சேய்மையினும் அருமையினும் என்னை ஏவுதலான் நோய்ப்பாலோய் என்றான். நயந்த நெஞ்சே நோய்ப்பா லஃதே (ஐங். 161) என்பது கொண்டுணர்க. நோய் செய்யும் தீவினை யாவை என்றவாறு. நோய்ப்பால் - தீவினையாதல் நற்றிணையுள், சென்ற காதலர் வழிவழிப் பட்ட, நெஞ்சே நல்வினைப் பாற்றே ஈண்டொழிந்து, ஆனாக் கெளவை மலைந்த, யானே தோழி நோய்ப்பா லேனே (107) என வருதலா னறிக. முதுமையாற் பறத்தல் கெட்ட நாரை விரகத்தால் மெலிந்த நெஞ்சிற்குவமையாயிற்று. அயிரை - ஈண்டு வலைஞர் தந்த அயிரை என்க. பறைதபு முது பறவைகள் தரையில் வலைஞர் மீனுணவைக் கொள்ள இருத்தல், பெருநீர் வலைஞர் தந்த கொழுமீன் வல்சிப், பறைதபு முதுகுரு கிருக்குந், துறைகெழு தொண்டி (ஐங். 180) என்புழி இக் கருத்தே வருதல் கண்டு கொள்க. ஈண்டு இத் தொண்டித் துறை வந்தது போல இக் குறுந்தொகைப்பாட்டினும் தொண்டிமுன்றுறை வந்ததெனத் தெளிக. அயிரையாகிய இரை தலைவனைப் பிரிதலான் வாடிய தலைவியின் நலத்திற்கு உவமையாகும். திரையிற்றேடி மீன் கிடையாத முதுநாரை கரையில் வலைஞர் தேடிப்பெற்று உணங்க விட்ட அயிரையைக் கண்டு ஆசையால் தலை யெடுத்தல் இயல்பே யாமென்க. பறைதபுநாரைக்குத் துறை முன்னிடம் நடந்து செல்லற்குச் சேய்மைத்தேயா மென்க. நாரை நடந்துஞ் செல்லுதல் நாரை மிதிக்குமென் மகணுதலே (114) என்பதனா னுணர்க. இனிப் பறைதபுநாரை ஒத்து நெய்தல் நிலத்தவனல்லாத தனக்கு அண்மையளாம் எளியவளுமாகாள் எனவும், இந் நிலத்துக்கே அங்ஙனமாவள் எனவும், கருதிக் கூறினானெனினும் அமையும். நாரை மருதநிலத்துப் புள்ளென்றுணர்க. கடுஞ்சூல் வயவொடு கான லெய்தாது, கழனியொழிந்த கொடுவாய்ப் பேடைக்கு, முடமுதிர் நாரை கடன்மீனொய்யும் (நற். 263) என்பதனானறிக. நெய்தல் நிலத் தலைவி நெய்தல் நிலத்தலைவற்கு அரியளாகாமை, தண்கடற் சேர்ப்ப, நினக்கெவ னரியமோ யாமே யெந்தை, புணர்திரைப் பரப்பகந் துழைஇத் தந்த, பன்மீனுணங்கல் படுபுள் ளோப்புதும் ... ... ... புன்னையங்கானற் பகல் வந்தீமே (அகம். 80) என வருதலானறிக. சேயள் என்பது ஓருறவுமில்லாதவள் எனினும் அமையும். குறிஞ்சிக்கலி முதற் பாட்டில் அவன்வயிற் சேயேமன் யானும் என்புழி நச்சினார்க்கினியர், அவனி டத்து மிகவும் உறவில்லாத யானும் எனப் பொருள் கூறுதல் கொண்டுணர்க. துய்க்கப்படுவதென்பதன்றி அயிரைக்கும் நாரைக்கும் உறவின்மை தெளிக. துய்க்கப்படுதல் தலைவிக்கு மொத்தல் காண்க. உணர்ப்புவயின் வாரா வூடலிற் றலைவன் கூற்றாகவும் கொள்ளலால், தலைவி சேயளாகாமை உணர்க. சேயள் - உறவினளாகாள். கடற்றிரையினின்று நாரை இரையார்தல், தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை நாரை நிரை பெயர்ந்தயிரை யாரும், ஊரோ நன்று (166) என வருதலா னறிக. இனி, வடமலை மிசையோன் கண்ணின் முடவன்..... பொதியில் நீர் வேட்டாங்கு என்பது போலக் கொண்டு குணகடற் றிரையது என்ற பாடமே கூறலாமெனின் ஆண்டு நெடுஞ் சேய்மைக் கண்ணின்று நீர் வேட்டதன்றி ஈண்டைப் போல அணவருதல் கூறாமை கண்டுணர்க. கோப்பெருஞ் சோழன் 129. எலுவ சிறாஅ ரேமுறு1 நண்ப புலவர் 2 தோழ கேளா யத்தை மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப் பசுவெண் 3 டிங்க டோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல் 4 புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே. (எ-து) தலைமகன் பாங்கற்கு உரைத்தது. (வி) எலுவ - பொருளின்கண் எனக்குக் கெழுதகைமை யுடையோய். நச்சினார்க்கினியர் பொருளியலுட் கெழுதகைப் பொதுச் சொல்லுக்கு எடுத்துக் காட்டுதலான் உணர்க. சிறாஅர் ஏமுறு நண்ப - காமம் எய்தினார் இன்புறுதற்குரிய நட்புடையோய். சிறுமை - காமம். செருக்குஞ் சினமும் சிறுமையுமில்லார் (குறள். 431) என்புழிக் காண்க. பெண் கள் பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால் எனக் கம்ப நாடரும் கூறுதல் காண்க. புலவர் தோழ - நன்றுந் தீதும் காணவல்ல அறிஞர்க்குத் தோழமை பூண்டவ. இவற்றால் பொருள், இன்பம், அறம் என்னும் முத்திறத்தும் தனக்குத் துணையாதல் குறித்தான். பின்னை இரண்டானும் முன்னையது பொருட்குத் துணையாதல் உணர்க மாக்கடல் நடுவண் - கருங்கடலிடையே. எண்ணாட் பக்கத்துப் பசுவெண்திங்கள் - பசுவெண் பக்கத்து எண் நாட்டிங்கள் என்க. குளிர்ந்த சுக்கிலபக்கத்து அட்டமிதிதிப் பிறைத்திங்கள் என்றவாறு. தோன்றியாங்கு - தோன்றினாற் போல. கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல் - அளக பந்தியின் அயலில் விளங்குஞ் சிறிய நுதலானது. புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே - யானையைப் புதிதாக அகப்படுத்தல் போல எம்மை அகப்படுத்திப் பிணித்த என்றவாறு. பக்கத்துப் பசுவெண்திங்கள் என்பது செய்புன் யானை (கலி. குறிஞ்சி. 5) என்பது போல வந்தது. கூந்தலாகிய கயிற்றால் பிறைநுதலாகிய தறியின்கண் என் நெஞ்சமாகிய அகப்படாத யானையைப் புதிதாகப் பிணித்தது என்பது கருத்தாகக் கொள்க. பிறைநுதல் என்றான் சிறுதறி என்பது தெரிய. கடல் கடைந்த போது மதி தூணாதல் நினைக. பிணித்தல் வினையால் கயிறுந்தறியுங் கொள்ள வைத்தார்; ஏகதேச வுருவகம். குழலினாற் கட்டி..... புருவத்தாற் புடைத்து (சிந். 1482) என்புழிப் புருவத்தைக் கசையாகக் கூறுதல் காண்க. பிணித்தன்று என்பது வலித்தது. வெள்ளிவீதியார் 130. நிலந்தொட்டுப் புகாஅர்1 வான மேறார் விலங்கிரு 2 முந்நீர் காலிற் 3 செல்லார் நாட்டி னாட்டி னூரி னூரிற் குடிமுறை குடிமுறை தேரிற் கெடுநரு முளரோநங் காத லோரே. (எ-து) (1) பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற் புறுத்தியது. நீ அவர் பிரிந்தாரென்று ஆற்றா யாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூதுவிட்டுக் கொணர்வேன். நின் ஆற்றாமை நீங்குக எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது. (2) தோழி தூது விடுவாளாகத் தலைமகள் தனது ஆற்றாமையாற் கூறியதூஉமாம். (வி) நிலந்தொட்டுப் புகார் - கீழேயுள்ள நாககன்னியரை வேட்டு நிலத்தை அகழ்ந்து காலாற் புகமாட்டார். வானம் ஏறார் - வானர மகளிரை வேட்டு வானத்துக் காலான் ஏறமாட்டார். விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார் - நீரரமகளிரை வேட்டு அக்கரைக்கும் இக்கரைக்கும் குறுக்கே கிடக்கின்ற பெருங் கடலிற் காலால் நடந்து செல்லார். புகுதலும், ஏறுதலும், செல்லுதலும் காலினாதல் தெளிக. நாட்டின் நாட்டின் - நம் நாட்டினும் பிறநாட்டினும்; ஊரின் ஊரின் - நம்மூரினும் பிற ஊர்களினும்; குடிமுறை குடிமுறை தேரின் - ஒவ்வொரு குடிதோறும் முறையாகத் தேடினால் நங்காதலோர் - நம் காதற்குரிய தலைவர். கெடுநருமுளரோ - தப்புவாராயும் வேறிடத்துள்ளாராவரோ என்றவாறு. கணவர் இன்பத்திற்கேற்ப மூன்றிடனும் நினைந்தாள். காலின் என்பதனை மூன்றிடத்தும் கூட்டுக. நம் காதலோராதலான் ஆண்டெல்லாம் உள்ள மகளிரை வேட்டு இயலாத பெரிய வினையை மேற்கொள்ளார் என்பதாம். இது வெள்ளி வீதியார் தாமே தம் காதலனைத் தேடிச் செல்லத் துணிந்தபோது கூறிய தென்பது, நெறிப்படு கவலை நிரம்பா நீளிடை, வெள்ளி வீதியைப் போல நன்றுந், செலவயர்ந் திசினால் யானே (அகம். 147) என ஔவையார் பாடுதலான் அறியப்படும். இவர் தம் கணவனைத் தேடியலைந்து, காலே பரிதப்பினவே (44) என்பதனானு மறியப்பட்டது. இவற்றை எல்லாம் அகத்திணைக் கேற்ற துறையி னமைத்துப் பின்னுள்ளோர் தொகைநூற் கோத்தாரென்க. இடைச்சுரத்துச் செவிலி சென்று தேடத் துணிந்ததாகக் கொண்டு நங்காதலோர் என்பது நம்மாற் காதலிக்கப்பட்ட தலைவன் தலைவி இருவரும் ஆவர் என்று கொள்வர் நச்சினார்க்கினியர் (தொல்.அகத். 37). ஓரேருழவனார் 131. ஆடமை 1 புரையும் வனப்பிற் பணைத்தோட் பேரமர்க் 2 கண்ணி யிருந்த வூரே நெடுஞ்சே ணாரிடை 3 யதுவே நெஞ்சே ஈரம்பட்ட செவ்விப் பைம்புனத் தோரே ருழவன் போலப் பெருவிதுப் புற்றன்றா 4 னோகோ யானே. (எ-து) வினை முற்றிய தலைமகன் பருவ வரவின்கட் சொல்லியது. (வி) தன் தோளணைய ஒத்து அணைந்த தோளையும் தன்கண் நோக்க ஒத்து நோக்கிய கண்ணையுமே நினைந்து பணைத்தோட் பேரமர்க்கண்ணி என்றான். இருந்தவூர் நெடுஞ் சேய்மைக்கண் அரிய இடத்திலுள்ளது. ஈரம்பட்ட செவ்விப் பைம்புனத்து - மழை பெய்து ஈரம் உண்டாதலான் உழுதற்குச் செவ்வியுடைய பசிய கொல்லை யின்கண். ஓரேருழவன் போல - ஒற்றை ஏரால் உழுபவன் பெருக முயன்று விரைதல் போல. நெஞ்சு பெருவிதுப் புற்றன்று - உள்ளம் பெருவிரைவுடைய தாகின்றது. நோகோ யானே - என் மேல் அந் நெஞ்சின் விரைதற்கியையச் சேறலியலாமை யால் யான் நோவேன். இது பருவ வரவின்கட் சொல்லியதாதலின் பருவ மெய்தியவுடன் அதன் பயன்கொள்ள விழைதல் உழவற்கும் தலைவற்கும் ஒத்தல் நினைக. உழவன் நெஞ்சு விரையினும் அவன் ஏர் விரையாமையால் நோதல் கண்டு கொள்க. போகீரப் போழ்தில் ஓரே ருழவன் என்புழியும் விரைதலே கூறினார். சிறைக்குடியாந்தையார் 132. கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள் குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே யாங்குமறைந் தமைகோ யானே ஞாங்கர்1 கடுஞ்சுரை நல்லா னடுங்குதலைக் குழவி தாய்காண் விருப்பி 2 னன்ன சாஅய்நோக் கினளே 3 மாஅ யோளே. (எ-து) கழற்றெதிர்மறை. (வி)கவவுக்கடுமை - தழுவுதலிலுள்ள விரைவு. காமர் வனப்பு - அன்பு செய்யும் அழகு. குவவுமென் முலை - குவிதலுடன் மென்மையுமுடைய முலை. கொடிக்கூந்தல் - ஒழுங்காகிய கூந்தல். தழுவுதலும், வனப்பும், முலையும், கூந்தலும் பெண்டிர்க்கெல்லாம் பொதுமையவாயினும் கவவிற் கடுமையும், வனப்பிற் செய்யும் அன்பும், முலையிற் குவவு மென்மையும் கூந்தலில் ஒழுங்கும் இவட்கே சிறந்தன ஆதலான், யாங்குமறந்தமைகோ என்றான். மறந்தா லுயிருடன் அமையேன் என்பது கருத்து. யாங்கு என்றான், மறவாமைக்குரிய இவற்றுள் என்ன குறைகண்டு மறந் தமைவேன் என்றவாறு. கனவுக்கடுங்குரையள் என்றதனாற் றான் விரும்பியவாறு தன்னை விரும்பியவாறு கூறிக் காட்டினான். தழுவிய நிலையின் மெய்ம்முழுதும் துய்த்தவனாதலால் அவள் சிறந்த வனப்பினையும், அவ் வனப்புடை மெய்யுறுப்புக்கள் எல்லாவற்றினும் மேம்பட்டு இளமைக்கு அடையாளமான குவவு மென்முலையினையும், தாம் இருவரும் கிடத்தற்குரிய பாயலாயின கொடிக் கூந்தலையும் மறவாதவனானான். யானே அமைகோ - யான் தனியே பொருந்து வேனோ என்றவாறு. நடுங்குதலைக் குழவி - நடுங்குகின்ற தலையையுடைய கன்று; தலையை நிமிர்க்க மாட்டாத இளங்கன்று என்றவாறு. கடுஞ்சுரை நல்லான் தாய்காண் விருப்பினன்ன - விரையச் சுரத்தலையுடைய நல்ல பசுவாகிய தாயைக் காணும் விருப்பத்தினை ஒத்த விருப்புடைய, சாஅய் நோக்கினள் - சாய்த்த பார்வையை உடையள். கற்புத்தாள் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி நின்றனள் (ஐந்திணை ஐம்பது.10) ஆதலாற் சாய்த்த பார்வை கூறினான். விலங்கமர்க் கண்ணள் - ஒருக்கணித்துப் பார்க்கும் நோக்கினள் என்றவாறு (அகம். 54). அருகு நோக்கமென் னாவி யலைக்குமே (சிந். 1306) என்பதுங்காண்க. கோட்டிய பார்வை காதல் நோக்காதலாற் கூறினான். இயற்கைப் புணர்ச்சியின் பின்னர் ஆயத்துய்த்த போது தலைவி குழவி தாய்காண் விருப்பிற் சாய்த்துப் பார்த்ததனை நினைந்து கூறினானென்க. நடுங்கு தலை கூறியதும் குழவி தலையெடுத்துப் பார்க்காது சாய்த்துத் தாயைக் காணுகின்ற தன்மையைக் குறித்ததென்க. ஞாங்கர் நல்லான் - தனக்கு நல்ல பசு. ஞாங்கர் - முன். ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே (தொல். எழுத்து 205) நல்லானாகத் தன்னையும், குழவியாகத் தலைவியையும் கூறிய தனான் இவளைக் காக்கும் கடப்பாடு தன்னதே என்று நினைந்தனனாவன். மாயோள் கடுங்குரையள், வனப்பினள், முலையள், கூந்தலள், நோக்கினள் என்க. நோக்கினள் என்று கடையிற் கூறியது அப் பார்வையினைக் கண்டு பிரிவொண்ணாது பிரிந்தவனாதலால் என்க. மாயோள் - மாமை நிறமுடையவள். உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 133. புனவன் துடவைப் 1 பொன்போற் சிறுதினை 2 கிளிகுறைத் துண்ட கூழை யிருவி பெரும்பெய லுண்மையி னிலையொலித் தாங்கென் 1 உரஞ்செத்து முளெனே 2 தோழியென் நலம்புதி 3 துண்ட புலம்பி னானே. (எ-து) வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் சொல்லியது. (வி) புனவன் - புனம்முயன் றாக்கியவன். இறைமுயல் புனவன் (அகம். 146). துடவை - தோட்டத்தில். புனவன் பொன் போற் போற்றிய சிறுதினையின் இருவி. இருவி - அரிதாள். கிளி குறைத்துண்ட கூழை இருவி - கிளி தன் வாயால் ஒடித்துண்டு விட்ட கூழையாகிய இருவி. பெரும் பெயலுண்மையின் - முன்பெய்த பெரிய மழை நீரான் ஈரமுண்மையால், இலை ஒலித்தாங்கு - தழை தழைத்தாற் போல. என் நலம் புதிதுண்ட புலம்பினான் - என் நலத்தைப் புதிதாக உண்டுவிட்ட தனிமையின் கண். தோழி உரஞ் செத்தும் உளென் - வலியழிந்தும் உள்ளேன் என்றாளென்க. உண்ட புலம்பு - வேணீருண்ட குடை (கலித். பாலைக். 23) என்புழி உண்டொழித்த குடை என்றாற் போல வந்தது. புதிது என்றது புதிதாகச் செய்த தலையளியை. பெருமழை பெய்தொழிந்ததன்பின்னும், அதனால் உண்டாகிய ஈரம் சில நாளைக் கிருப்பது போலத் தலைவர் தலையளிசெய்து பிரிந்த பின்னும் அத் தலையளியினாலாகிய ஆதரம் என் நெஞ்சி னுண்மையால் என் மெய்யின் வலிகெட்டும் உயிருடன் உள்ளேன் என்றாள். கோவேங்கைப்பெருங்கதவனார் 134. அம்ம வாழி தோழி நம்மொடு பிரிவின் றாயி னன்றுமற் றில்ல 4 குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப் பூவுடை 5 யலங்குசினை புலம்பத் தாக்கிக் 6 கல்பொரு திரங்கு 7 கதழ்வீ 8 ழருவி நிலங்கொள் பாம்பி னிழிதரும் விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே. (எ-து) வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது. (வி) அம்ம - கேட்பாய். நாடனொடு கலந்த நட்புப் பிரிவின் றாயின் நன்று - ஒருவர் கூட்டலின்றி நாடனொடு யானாக உயிர் கலந்த நட்பானது களவு பற்றிப் பிரிதலில்லையாயின் நன்மைத்தாம் என்றவாறு. எப்போதும் உடனுறைதற் காகாது பிரிய வேண்டுதலிற் களவு நன்றாகாதென்று விரைந்து வரைவொடு தலைவனை வரச்செய்தல் பயன் ஆதல் காண்க. மற்றில்ல - நன்மைக்குக் காரணம் பிரிவின்மையன்றி வேறெவையும் இல்லை என்பது. வேங்கை புலம்பத் தாக்கி அருவி இழிதரும் என்றது அருவி வேங்கை என்றபடி. வேங்கை இன்புறுதற்குக் காரணமாய அருவியே அதன் சினைப்பூ உதிரத் தாக்கி வருத்துதல் போல நாம் இன்புறுதற்கேதுவாகிய இக் களவே நம் நலங்கெட வருத்துதற்கும் ஏதுவாயிற்று என்று குறித்தவாறாம். இன்பமுந் துன்பமு முடைத்தாற் றோழி நங்களவே (நற். 304) என்றது காண்க. அருவி நிலங்கொள் பாம்பின் இழிதரும் என்றதனால் இக் களவொழுக்கம் அயலாரால் உள்ளபடி உணரப்படாமல் வேறாக ஐயுறுதற்குக் காரணமாய் நிலங் கொளப் பரத்தலையும் குறித் தாளாம். குறும்பொறை - சிறு குன்று. தடைஇய - தடவிய, பருத்த; கடவிய கடைஇய என வருதல் போலும். புலம்பு - பூவுடைய கிளைகள் பூவுதிர்ந்து தவிக்க. கதழருவி, வீழருவி என்க. கதழ்தல் - விரைதல். கல்பொருதிரங்கும் - கல்லில் மோதுத லான் ஒலிக்கும். கலந்த நட்பு - உயிர் கலந்தொன்றிய தொன்றுபடு நட்பின் (அகம். 205) என்பது காண்க. பாலை பாடிய பெருங்கடுங்கோ 135. வினையே யாடவர்க் குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க் காடவ ருயிரென நமக்குரைத் தோருந் தாமே அழாஅ 1 றோழி யழுங்குவர் 2 செலவே. (எ-து) தலைமகன் பிரியுமென வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. (வி) ஆடவர்க்கு வினையே உயிர் - தம்முயிரையும் போற்றாது அரிய பெரிய வினைகளையே போற்றி முயறலான் வினையே ஆடவர்க்குச் சிறந்த உயிர் என்ப தாயிற்று. மனையுறை வாணுதல் மகளிர்க்கு ஆடவருயிர் - தம்மில்லத்தைக் கடவாது உறைகின்ற கற்புடைய மகளிர்க்குத் தனியே உயிரென்பதொன்றில்லைத் தம் ஆடவர்தாம் உயிர் என்றவாறு. நமக்கென மொழிந்தவருந் தாமே ஆதலால் நம்முயிராயவர் தம்முயிரைப் பெரிதாக நினையாமை பற்றிச் செலவழுங்குவர் என்க. மகளிரைத் தாங்குதலான் மகளிர்க்கு ஆடவருயிர் என்றவாறு. ஆடவரைத் தாங்குவது வினையேயாதலான் அது ஆட வர்க்கு உயிராயிற்று. நமக்குத் தாம் உயிரென்றுணர்த்தியவ ராதலாற் றம்முயிர் கெடவரினும் சாதலன்ன பிரிவினைச் செய்யத் துணியாமையான் செலவழுங்குவர் என்றவாறு. சாதலன்ன பிரிவு (அகம். 339) என்ப. தம்முயிர் கெடவரினும் - தம்முயிராகிய வினை கெடவரினும், கடைகழிமகளிராகிய பரத்தையரின் வேறு தெரிய மனையுறை மகளிர் என்றாள். மிளைப்பெருங் கந்தனார் 136. காமம் காம மென்ப காமம் அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக் கடுத்தலுந் தணிதலு 1 மின்றே யானை குளகுமென் றாண்மதம் 2 போலப் பாணியு முடைத்தது காணுநர்ப் பெறினே. (எ-து) தலைமகன் பாங்கற் குரைத்தது. (வி) காமம் காமம் என இழித்துக் கூறுவர்; அடுக்கு இழிப்பின் வந்தது. காமம் அணங்கும் பிணியும் அன்று - வெளியினின்று புக்கு உள்ள மருட்டும் அணங்குதாக்கு மன்று; உடல் மெலிவிக்கும் பிணியுமன்று. நுணங்கிக் கடுத்தலும் நுணங்கித் தணிதலுமன்று - அப் பேயும் பிணியும் போல முதலிற் சிறுகிப் பின் மிகுதலும், மிக்க பின்னர்ச் சிறுகித் தணிதலும் இல்லையாம். யானை - களிறு. குளகுமென்று - அதிமதுரத்தழையைத் தின்று. ஆள்மதம் போல - ஆளும் மதத்தை யொப்ப. காணுநர்ப்பெறின் - தாம் காணுநரைத் தமக்குரியராகப் பெற்றால். பாணியும் உடைத்து - காமம் பெருகி நீண்ட காலம் நிற்றலையுடைத்தாம் என்ற வாறு. ஆயுமறிவினர் அல்லார்க் கணங்கு (குறள். 918) என் புழி அணங்கு - அங்குதாக் கென்று கூறி அணங்கு காமநெறி யான் உயிர்கொள்ளும் தெய்வ மகள் எனப் பரிமேலழகர் உரைத்தது கொண்டுணர்க. இத் தெய்வம் பேய்க்கணத்த தென்ப. இவ்வரிய கருத்து சூருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து, தாம்வேண் டுருவின் அணங்குமார் வருமே (அகம். 158) என்பதனாற் றெளியப் படுதல் காண்க. நோயும் அணங்கும் வேறாதல் நோய்நின் னணங் கன்மை யறிந்தும் (நற். 34) என்புழிக் காண்க. இப் பாட்டுப் பாடிய மிளைப்பெருங் கந்தனாரே இத் தொகையுள் 204 ஆம் பாட்டும் பாடியவராதலான், ஆண்டுப் பாங்கன் தலைவனை நோக்கிக் கழறுமுகத்தான், நும்போல்வர் காமம் காமம் என்று உயர்த்துரைப்பார். காமம் அணங்கும் பிணியுமன்றே என்றும், இளம்புல் மூதா தைவந்தாங்கு விருந்தே எனவும் வினாவினானாக அவற்குக் கழறிற்றெதிர்மறையாயின் காமம் காமம் என நின்போல்வார் இழிப்பர்; காமம் நீ கருதுவது போல அணங்கும் பிணியு மன்று; அவைபோற் கடுத்தலும் தணிதலும் உடையதன்று எனவும், கிழப்பசு இளம்புல் மேய்ந்தாற் போன்ற விருந்தன்று; யானை குளகுமென்ற ஆண்மதம் போன்றது எனவும் உயர்த்திக் கூறினனாகக் கொள்க. இப் பாட்டுடைத் தலைவன் கூற்றும், அது பாங்கன் ஆதல்கண்டு பாங்கன் வினாவிற்கு இது விடையாதல் உணர்க. ஆண்டு இளம்புல் மூதா தைவந்தாங்கு விருந்தே என வினாவியது. அங்ஙனம் யானை குளகுமென்றாண்மதம் போலப் பாணியுடையதென்றது காண்க. இதனாற் பாங்கன் துய்த்தபின் உள்ளமு மின்புற்று உடலும் வலிதாதற்குரிய விருந்து போலாகாது துய்த்தபின் உள்ளமும் அணங்கி உடலுமிளைத்தற்குரியது எனக் காமத்தை இழித்தனனாக அவற்குத் தலைவன் அங்ஙனமன்று உள்ளமும் செருக்கி, உடலும் வலியது செய்தற்காய மதத்தை யானைக்குண் டாக்கும் குளகு போன்றதென உயர்த்திக் கூறினானெனக் கொள்க. பெறின் என்றது காணுநரையெல்லாம் தமக்குரிய பெறுதலருமை குறித்தது காண்க. கம்பநாடரும் பெண்கள் பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால் என்றது காண்க. பாணி நெடும்போது தங்குதலைக் குறிப்பது. நெடுந் தேர் பாணி நிற்ப (அகம். 50) என்புழிப் பழையவுரைகாரர் பாணி தாமத காலம் என்றது காண்க. காணுநர்பெறின் நீ காணுநரைப் பெற்றாயில்லை, அங்ஙனம் ஒத்த காட்சிபெறின் நீயும் இன்னையாவை என்று எதிர் மறுத்ததாகக் கொள்க. அணங்கும் பிணியும் புறத்தினின்று உள்ளத்தும் உடற்கண்ணும் புகுவனவாகவும் காமம் உள்ளத்தே கிடந்து குளகுதின்றாண் மதம் போலக் காணுநர்ப் பெற்றவிடத்து பெருகுவதாகவும் வேற்றுமை தெரிந்து கொள்க. நாகமாறிய சினத்த தன்றி யதிங்கத்தின் கவளங் கொண்டால்....... யாவர்க்கும் விடுக்கலாகாது (சிந். 750) என்பதனால் இக் குளகு அதிமதுரத்தின் தழையாதல் அறிக. அதிங்கம் - அதிமதுரம். கிழப்பசுவிற்கு விருந்தாய்ப் பசியாற்றும் இளம் புல்லெனக் கொள்ளற்க. களிற்று யானைக்கு மதம் பெருக்கும் அதிமதுரத் தழை எனக் கொள்க என்றான் என்க. தணிதல் - அவிதலுமாம். நீரடு நெருப்பிற் றணிய (நற். 154) என்ப. பாலை பாடிய பெருங்கடுங்கோ 137. மெல்லிய லரிவைநின் னல்லகம் புலம்ப 1 நிற்றுறந் தமைகுவெ னாயி னெற்றுறந் திரவலர் வாரா வைகல் பலவா குகயான் செலவுறு 2 தகவே. (எ-து) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உணர்த்தியது. (வி) மெல்லியலரிவை என்றான் பிரிவாற்றாத மென்மை குறித்து. நின்னல்லகம் புலம்ப - நின் நல்ல உள்ளம் தனிமை யின் வருந்த. நல்லகம் என்றான் தனக்கு நன்மையாகியது பற்றி. நல்ல ளாகுத லறிந்தாங் கரியளாகுத லறியா தோயே (120) என்பதனான் உணர்க. நிற்றுறந்து அமைகுவெனாயின் - நின்னை நீங்கி உயிருடன் பொருந்துவேனாயின். யான் செலவு உறுதகவு - யான் செல்லுதல் உற்ற தகுதியாம் என்றவாறு. அமைகுவெனாயின் என்றது தான் பிரிந்து உயிருடன் பொருந்தாமை யுணர்த்தி நின்றது. ஒருகால் அங்ஙனம் பொருந்த நின் உயிருடனுள்ள அவ்வமயம் எற்றுறந்து இரவலர் வாரா வைகல் பலவாகித் துன்பமே தருக என்றான் என்க. அமைகு வெனாயிற் பலவாகுக எனவும், அமைகு வெனாயின் யான் செலவுறுதகவு எனவும் தனித்தனிக் கூட்டிப் பொருள் கூறுக. நிற்றுறந்தமையே னாதலான் யான் செல்லுதல் உறுதகவன் றென்றும் ஒருகால் அங்ஙனம் அமையின் யானுள்ள அக் காலம் இரவலர் வாராது வசைவிளைத்து நின்ற நாள்கள் போலத் துன்பமேயாமென்று தான் பிரிய இயலாமை கூறிய முகத்தாற் பிரிவென ஒன்றுண்டென் றுணர்த்தியதனாற் தலைவி அஞ்சுதல் பற்றி இது பிரிவச்ச மாயிற்றென்க. வைகல் பலவாகுக என்றதனால் அமைகு வெனாயின் என்றது உயிருடன் வாழ்நாள் அமைதலையே உணர்த்தல் காண்க. கொல்லன் அழிசியார் 138. கொன்னூர் துயிலினும் 1 யாந்துஞ் சலமே 2 எம்மி லயல தேழி லும்பர் 3 மயிலடி யிலைய மாக்குர னொச்சி அணிமிகு மென்கொம் பூழ்த்த மணிமருள் 4 பூவின் பாடுநனி கேட்டே. 5 (எ-து) (1) குறி பிழைத்த தலைமகன் பிற்றை ஞான்று இரவுக்குறி வந்துழித் தோழி சிறைப்புறமாகக் கூறியது. (2) இரவுக்குறி நேர்ந்ததூஉமாம். (வி) கொன்னூர் - அலர் முதலியவற்றான் அச்சஞ் செய்தலையுடையவூர். பேரூர் என்பதுமாம். கொன்னூர் மாய வரவின் (குறிஞ்சிப்பாட்டு, அடி. 245-246) என்புழி நச்சினார்க்கினியர் கூறியது காண்க. துயிலினும் யாம் துஞ்சலம் என்றாள், துயிலும் ஊர்க்கு இடையீடாகவும் யாம் தலைவன் குறி பார்த்துத் துயிலாதிருந்தது குறித்து. எம் இல் அயலது ஏழ் இல் உம்பர் - எம் மனைக்கு அயலாகிய மனைக்கு ஏழு மனைக்கு அப்பால் நொச்சிக் கொம்பூழ்த்த பூவின் பாடுநனி கேட்டே துஞ்சலம் என்க. பூவின்பாடு - பூவீழ்தலினுண்டாகிய ஓசை. எட்டு வீட்டுக் கப்பால் பூவீழ் ஓசையும் கேட்டே துஞ்சலமாதலான் அவ்விடைத் தலைவர் சிறிது சேய்மைக்கட் குறி செய்திருந்தாலும் யாங் கேளாமையில்லை என்று குறித்தாள். கூடுதல் வேட்கையாற் குறிபார்த்துக் குரனொச்சிப் பாடோர்க்குஞ் செவியோடு (கலித். 46) என்பது காண்க. கங்குலின் விளியோர்த்த ஒடுக்கத்தால் என்பது கலி (48). இதனாற் றலைவி தன் பிழைப்பன்று என்றாள். கொன் - பெருமை. ஏழில் - ஏழின் மலை என்றாரும் உண்டு. அங்ஙனம் கூறின் ஏழிலும்பர் எம்மில் அயலது நொச்சி என்க. மனைய தாழ்வி னொச்சி (அகம். 29) எனவும், மனையிள நொச்சி (அகம். 21) எனவும் நுனை குழைத்தலமரு நொச்சி மனைகெழு பெண்டு (அகம். 203) எனவும் வருதலான் இந் நொச்சி மனைநொச்சியாதலுணர்க. மனைநொச்சி நிழலாங்கண் எனப் பொருநராற்றினும் (185) வந்தது காண்க. நொச்சி மனைநடு மௌவலொடு ஊழ் முகை யவிழ (நற். 115) என்ப. ஒக்கூர் மாசாத்தியார் 139. மனையுறை கோழிக் குறுங்காற் பேடை வேலி வெருகின் 1 மாலை யுற்றெனப் புகுமிட 2 னறியாது தொகுபுடன் குழீஇய 3 பைதற் பிள்ளைக் கிளிபயிர்ந் 4 தாஅங் கின்னா திசைக்கு மம்பலொடு வாரல் வாழிய வையவெந் தெருவே. (எ-து) வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. (வி) வேலி வெருகு இல் மாலையுற்றென - வேலியி லிருந்த வெருகு இல்லில் மாலைப்பொழுதில் வந்த அளவில். கோழி யொடுள்ள குறுங்காற் பேடைக் குஞ்சுகளை அறி யாது புகுமிடன் தொகுபு உடன் குழீஇய - வெருகறியாமற் புகற்குரிய இடத்துத் தொகுத்து தாயுடன் குழீஇக்கொள்ளும் பொருட்டு பைதற் பிள்ளைக் கிளி பயிர்ந்தாங்கு - வெருகு கண்டு துன்புற்ற கிளிப் பிள்ளை அழைத்துக் கத்தினாற் போல. இன்னா திசைக்கும் அம்பலொடு - வருங்கேட்டினை உரைக்கும் ஆரவாரத்துடன் ஐய எந்தெரு வாரல் - ஐய எம் வீதியில் வாரா தொழிக. பிள்ளைக்கிளி - இல்லிற் கூட்டிலுள்ள கிளிப்பிள்ளை. கிளை என்பது பாடமன்றென்பதும், கிளி என்பதே பாடமென்பதும். பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை (தொல். மரபு. 14) என்புழிப் பேராசிரியர் பிறவற்றுடன் பைதற் பிள்ளைக் கிளிபயிர்ந் தாஅங்கு என்பதையும் எடுத்துக்காட்டி, இவை பருந்தும், ஊர்க் குருவியும், கிளியும் என்னும் பறவைமேல் வந்தன என்றதனாலறிக. கூட்டி லிருத்தலாற் றனக்குத் தீங்கில்லையேனும் வெருகு கண்டு தன்னினமாகிய பிறவற்றிற்கெய்தும் ஏதம் பொறுக்காத உள்ளத்தான் குறுங்காற்பேடைக் குஞ்சுகளைத் தாயுடன் குழீஇக் கொள்ளுமாறு பயிர்ந்தாற் போல இவன் தனியே யிருப்பின் இளையரை வவ்விக் கொள்வனாதலாற்றாயருடன் குழீஇக் கொள்ளும் பொருட்டுப் பரத்தையர்க்குப் பாங்கா யினார் அம்பல் தூற்ற வருதலான் அம்பலொடு வாரல் என்றாள். தோழி போலத் தாயர் மகளிரைத் தழீஇக் கொண்டார் என்றலின் புறம்போயும் பயமின்றெனக் காத்த தன்மை கூறிற்று என நச்சினார்க்கினியர் இப் பாட்டிற்குக் கருத்துரைத்ததனால் (தொல். கற்பியல். 9:27-8) பரத்தையர் தாயரும் இவன் பரத்தைமையை வெறுத்தவாறு புலனாம். எவ்வையர் சேரி யிரவு மிமை பொருந்தாக் கவ்வை கருதிற் கடை (புறப். வெண். பெருந். 10) என்பதனால் இன்னா திசைக்கும் அம்பல் என்றார். அள்ளூர் நன்முல்லையார் 140. வேதின வெரிநி னோதி முதுபோத் தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்தும் 1 சுரனே 2 சென்றனர் காதல ருரனழிந் தீங்கியான் றாங்கிய 3 வெவ்வம் யாங்கறிந் தன்றிவ் 4 வழுங்க லூரே. (எ-து) பொருள்வயின் பிரிந்த இடத்து நீ ஆற்றுகின்றிலை என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (வி)வேதினம் - ஈர்வாள்; அது போன்ற முதுகினை யுடைய ஓதி - ஓதி ஓந்தி. ஓதி முதுபோத்து - ஓந்திச் சாதியில் முதிய ஆண். ஆறுசெல் மாக்கள் - வழிச்செல் மாந்தர். புட் கொள - சகுனங்கொள்ள. பொருந்தும் சுரன் - வலமாகச் சேரும் அரிய வழியில். ஓந்தியல்லது நன்னிமித்தங் காண் டற்கு வேறில்லாத பாலை என்பது கருத்து. காதலர் மீளாது சுரனே சென்றனர் என்றதனால் அவர்கட்கும் ஓந்தி புட்கொளப் பொருந்துதல் குறித்தாள். அவர் சென்ற காரணமாக உரன் அழிந்து - வலியழிந்து. ஈங்கு யான் தாங்கிய எவ்வம் - இவ்வாறு யான் துன்பந் தாங்கிய தனை. இவ்வழுங்கலூர் யாங்கறிந்தன்று - இக் கெடுதலையுடைய ஊர் எவ்வாறு அறிந்தது என்றவாறு. இது கற்புக் காலத்துண்டாகிய அலர் என்பர் இளம்பூரணர் (தொல்.கற்பு. 12). நச்சினார்க்கினியரும் அது கூறுவர் (தொல். கற்பு. 21). காதலரைப் பிரிந்து உரனழிந்தும் அவர் வருவரென்னு நசையா லெவ்வந் தாங்கியிருத்தலைத் தீதாகக் கருதியதோ நன்றாகக் கருதியதோ என்றாளென்க. இங்ஙனம் உரைப்பதே கற்புக்காலத்து அலரெழுந்ததென்று கூறுதற்கியைதல் காண்க. புண்ணிய மூர்த்தி தன்னைக் காணலா மென்னுமாசை கடவலா னிருந்தேன் கண்டாய் (கம்பராமாயணம் - உயுத்த. 22) எனச் சீதையார் கூறியது காண்க. உரனழிந்து - யான் உரனழிந்து தாங்கிய எவ்வம் என்றது, உரனழிந்ததனால் உயிர் போகாது எவ்வந் தாங்கியிருத்தலையே குறித்ததுணர்க. இனி நெருப்பெனச் சிவந்த (அகம். 31) என்னும் பாட்டில் சென்றோ ரன்பிலர் என்புழிப் பழைய உரைகாரர், சென்றோ ரென்று சொல்லுதலால் பிரிவாற்றாமை வருந்துகின்றாள் என்று சொல்லுவர் என்றாள் என்று பொருள் கூறினாற் போல ஈண்டும் ஈங்கியான் தாங்கிய எவ்வம் இவ்வழுங்கலூர் அறிந்தன்று - சான்றோராகிய காத லரை அறிந்திலது என்று கருதிக் கூறினாள் எனினுமமையும். சென்றோர் காதலரென அறிந்திலது என்பது குறிப்பெச்சம் என்க. மதுரைப்பெருங் கொல்லனார் 141. வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் 1 கடீஇயர் 2 செல்கென் 3 றோளே யன்னை யெனநீ 4 சொல்லி னெவனோ 5 தோழி கொல்லை 6 நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த குறுங்கை 7 யிரும்புலிக் கோள்வ 8 லேற்றைப் பைங்கட் செந்நாய் படுபதம் 9 பார்க்கும் ஆரிரு ணடுநாள் வருதி சார னாட 10 வாரலோ வெனவே. (எ-து) இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலை மகற்கு வரும் ஏதம் அஞ்சிப் பகற்குறி நேர்ந்த வாய் பாட்டான் அதுவுமறுத்துச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (வி) சாரல் நாட ஆரிருள் நடுநாள் வருதி; அங்ஙனம் இரவில் வாரலெனச் சொன்னதின் மேலும், அன்னை தினைக்கிளி கடீஇயர் எனச் சொல்லின் எவனோ என்க. விளைதினை - விளைந்த தினையினின்று. கிளி கடீஇயர் - கிளிகளைக் கடியும்பொருட்டு. அன்னை செல்க என்றாள் - அன்னை என்னைச் செல்க என்று ஏவினாள் என்று. தோழி நீ சொல்லின் எவனோ - நீ தலைவற்குச் சொல்லின் என் குற்றமோ என்றவாறு. இரும்புலிக் கோள்வல் ஏற்றைச் செந்நாய் படுபதம் பார்க்கு மாரிருள் நடுநாள் வாரல் என்றதனால் ஏதமஞ்சி னாள் எனவும் அன்னை தினைக்கிளி கடீஇயர் செல்க என்றாள் என்றலாற் பகற்குறி நேர்ந்த வாய்பாடாகக் காட்டி, நீ சொல்லின் என்ன குற்றமுடைத்தோ என்றதனால், அதுவும் உடன்படாது மறுத் தாளாகவும் கொள்ள வைத்தா ளென்க. இற்செறித்த அன்னை தினைக்கிளி கடியச் செல்க என்றத னால் அது செய்யாது வேறு வகையின் நாடனொடு விளையாடியிருப்பின் கிளி தினைக்கதிரைக் கவரும், பின் கிளி குறைத்த தினைத்தாள்களை அன்னையெய்திக் கண்டு எம்மை ஆண்டுச் செல்லாம லகற்றிப் பின்னரும் இல்லிலே செறிப்பள் என்று கருதி அப் பகற்குறியும் மறுத்தாளென வுணர்க. அன்னை இவள் தினைக்கிளி கடிதலைப் பார்த்தற்கு வருதலும், ஏவியவாறு கடியாதொழியின் இவளை நீக்கிப் பிறரைத் தந்து நிறுத்தலு முண்டென்பது மெய்யிற் றீரா என்னும் அகப்பாட்டில் (28) “அன்னை, சிறுகிளி கடிதல் தேற்றாள் இவளெனப் பிறர்த் தந்து நிறுக்குவளாயின், உறற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே என வருதலான் உணர்க. கொல்லை - தினைக்கொல்லை. எரிதின் கொல்லை யிறைஞ்சிய ஏனல் (அகம். 288) என்ப. தினை தின்னவந்த யானையைப் புலி பாய்தலியல்பு; யானை பிழைத்தால் ஊரிலுணவு பார்ப்பது மியல்பு. பேழ்வா யிரும்புலி குஞ்சரங் கோட் பிழைத்துப் பாழூர்ப் பொதியிற் புகாப்பார்க்கும் (ஐந்திணை எழுபது 31) என்ப. கொல்லையில் நெடுங்கை வன்மான் ஆகிய கடும்பகை யுழந்த புலியேற்றைச் செந்நாய் படுபதம் பார்க்கும் என்றது பெரி தொன்றும் வாயாத புலி சிறிய தொன்றை அகப்படுக்க அற்றம் பார்ப்பது போல இரவுக்குறி வாயாவிடத்துப் பகற்குறி வாய்க்க அற்றம் பார்ப்பது என்று குறித்தாளாம். பதம் பார்க்கும் என்றதனால் பகற்குறிச் செவ்வியும் வாய்ப்பது கொல்லோ என்று ஐயுற்றுக் கூறியவாறாம். இவற்றால் விரைந்து வரைவொடு வரவே பயன் என்க. செந்நாய் - காட்டுநாய். புலிக் கோள்வல் ஏற்றை - புலியாகிய கொலை வல்ல ஆண். நெடுங்கை வன்மான் - யானை. ஆரிருள் - யாரும் வழங்கரிய இருள். இனி இப் புலி ஏற்றை ஆனேற்றையடித்தற்குச் செந்நாய் துயிலுமமயம் பார்க்கும் எனினும் அமையும். ஆனேறுகளை அடித்தற்கு நாய் படுபதம் பார்க்கும் என்றவாறு. புலிக்கணத் தன்ன நாய் தொடர் விட்டு எந்தையு இல்லனாக (அகம். 158) எனவும், வயநாய் பிற்பட வேட்டம் போகிய குறவன் (அகம். 182) எனவும், சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா, அலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுகக், கன்றுதாய் மருளுங் குன்ற நாடன் (நற். 359) எனவும் வருவனவற்றான் குறிஞ்சிநிலத்தவர் பசுவும் நாயும் வளர்த்தலைக் காண்க. விளியறி ஞமலி (அகம். 140) என்பவாதலான் அதன் படுபதம் பார்த்தல் கூறினாள். சிலம்பின் ஆகொள் வயப்புலி யாகு மஃதென (அகம். 52) என்பதனால் புலி ஆவை அடித்தல் அறிக. புனை மருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற கனை குரலுருமுச் சீற்றக் கதழ்விடை (சிந். 2152) என்பதனான் விடையும் புலியும் பொருதல் காண்க. மான்தலையை அடித்தற்குச் செந்நாய் படுபதம் பார்க்கும் என்பது மொன்று. செந்நாய் வெரீஇய புகருழை யொருத்தல் (அகம். 219) என்பதனால் செந்நாய் கலையைக் கவர்தல் உணரலாம். கபிலர் 142. சுனைப்பூக் குற்றுத் 1 தொடலை தைஇப் 2 புனக்கிளி கடியும் பூங்கட் பேதை தானறிந் தனளோ விலளோ 3 பானாட் பள்ளி யானையி னுயிர்த்தென் 4 உள்ளம் பின்னுந் 5 தன்னுழை யதுவே. எ-து (1) இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்குந் தலைமகன் சொல்லியது. (2) தோழிக்குத் தலைமகன் தன்குறை கூறியதூஉமாம். (வி) தோழியொடு சேர்ந்து சுனையிற் பூப்பறித்து மாலை கட்டிப் புனத்திற் கிளிகளை ஒட்டும் பூப்போன்ற கண்களை யுடைய பேதையாள் என்னுள்ளம் புணர்தற்கு முன்னே யன்றிப் புணர்ந்த பின்னரும் தன்னுழையது அறிந்தனளோ இலளோ என்றவாறு. என்னுள்ளம் தன்னுழையதென்பதைப் புணர்தற்கு முன்னே என் கண்ணாற் பூங்கட்பேதை தான் கண்டறிந்தனளாதலின் புணர்ந்த பின்னும் என்னுள்ளம் அங்ஙனமாவதை யறிந்தனளோ என்றான். பண்டுபோற் குற்றும் தைஇயும் கடிந்தும் ஒழுகுதலான் இலளோ என்றான். தான் அங்ஙனம் ஓர் வினையுஞ்செய்ய இயலாமை தன்னுள்ளம் அவளுடையது என்பதனாற் குறித்தான். என்னுள்ளம் பானாட் பள்ளி யானையி னுயிர்த்துப் பின்னும் தன்னுழையது என்க. நள்ளிருளிற் றுயில்கொள்ளும் யானையை யொப்பப் பெருமூச்சு விட்டுப் பேதை தன்பாலுள்ளது என்றவாறு. உயிர்த்தல் - பெறுதற்கருமை குறித்து நெடுமூச்சுவிடுதல். ஆயத்திற்புக்கு அறியாளாய்ப் பின்னும் எனினும் அமையும். தன்னுள்ளம் முன்னே தன்னுடைய தென்பதனை அறிந்த கண்ணாற் சிறப்பித்துப் பூங்கட் பேதை என்றான். நேரில்லாத போதும் அங்ஙனம் அறியும் வன்மையை ஐயுற்றுப் பேதை என்றான். பூங்கண்ணாற் றன்னைப் பேதுசெய்தவளைப் பேதை என்றான் என்பதும் ஒன்று. உயிர்க்கும் போது நெஞ்சிடங் கொண்ட மார்பு எழுந்தும் அமிழ்ந்தும் காண்டல் பற்றி உயிர்த்தலை அதன் வினையாகவே கூறினான். ஆயத்துப் புகும்போதும் தன்னைத் திரும்பிப் பார்த்துச் சென்றதனாற் பூங்கட்பேதை என்றான் எனினுமமையும். இனி உள்ளம் பின்னுத் தன்னுழையதுவே என்று பாடமாயின், உள்ளம் அவள்தன் பின்புறத்திடத்தது என்க. சிறுகுடிப் பெயருங் கொடிச்சி செல்புற நோக்கி, விடுத்த நெஞ்சம் விடலொல்லாதே (நற். 204) என்பது காண்க. பின்னு - பின்புறம் பின்னுக்கு, முன்னுக்கு என்பவை வழக்கிற் காண்க. மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரனார் 143. அழிய லாயிழை யழிபுபெரி 1 துடையன் பழியு மஞ்சும் பயமலை 2 நாடன் நில்லா மையே நிலையிற் றாகலின் நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற் கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத் தங்குதற் 1 குரிய 2 தன்னுநின் அங்கலுழ் மேனி பாய 3 பசப்பே. (எ-து) வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழி கூறியது. (வி) அழியல் - பிரிவிற்கு வருந்தற்க. அழிபுபெரி துடையன் - நீ வருந்துவை என்று நின்னினும் அழிபு பெரிதாகவுடையன் அழிபு - வருத்தம். பிரிந்த நம்மினும் இரங்கி ... ... ... வருவர் (நற். 208) என்பது காண்க. சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்”. கொள்ளா ராதலின், பழியும் அஞ்சும் - நின்னைக் களவிற் கொண்டு வரையாது விடும் பழி. பழியும் அஞ்சும் பயமலை நாடன் என்றது பழியஞ் சானாயின் அவன் மலை பயன் உதவா தொழியும் என்பது குறித்தது. வசையிலா வண்பயன் குன்று மிசையிலா, யாக்கை பொறுத்த நிலம் (குறள். 239). விளையுள் குன்றுதற்கு ஏது பாப யாக்கையைப் பொறுக் கின்ற வெறுப்பு எனப் பரிமேலழகர் உரைத்தது கொண்டு இஃது உணர்க. நில்லாமையே நிலையிற்றாகலின் - பல்லாற்றானும் நில்லாவுலகத்து நிலையினது நிலையாமை ஒன்றேயாகலான். நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சின் - உலகம் நன்றென்று கொள்ளும் புகழினை விரும்பிய ஒழுகலாற்றினை யுடைய உள்ளத்தோடுள்ள, கடப்பாட்டாளன் - தவிராது செய்யும் ஒப்புரவாளன். தவிருந் தன்மைய வல்ல என்பது கடப்பாடு என்னும் பெயரானே பெறப்பட்டது (குறள். 211) எனப் பரிமேலழகருரைப்பது காண்க. இசை வேட்ட நெஞ்சம் அதற்கேற்ற ஒழுகலாறு முடையதாதல் வேண்டுமென்று நயனுடைய நெஞ்சம் என்றார். மகளிர் நயன் தூக்கி (குறள். 912) என்புழி நயன் ஒழுகலாறு என்றது காண்க. நண்பற்றா ராகி நயமில செய்வார்க்கும் (குறள் 998) என்புழிப் போல நயன் - ஈரம் எனினும் அமையும். ஒப்புரவாளன் பொருள் போலப் பரந்து வெளிப்பட்ட பசப்பு அப் பொருள் போலத் தங்குதற்குரியதன்று என்றவாறு. “ஆர்வுற், றிரந்தோர்க் கீயா தீட்டியோன் பொருள் போற், பரந்து வெளிப்படாதாகி (அகம். 276) என்பதனால் ஒப்புரவாளன் பொருள் பரந்து வெளிப்படுதலுணரப்படும். நயனுடையா னல்கூர்ந்தானாதல் (குறள். 219) என்பதனால் ஒப்புரவாளன் பொருள் நிலையாமை தெளியலாம். அங்கலுழ்மேனி - அழகு ஒழுகு மெய்யின்கண். கடப்பாட் டாளன் பொருள் புகழை உண்டாக்கிப் போதல் போலத் தலைவர்கண் அருளை உண்டாக்கிக் கழியும் என்பது குறிப்பாகும். இனிக் கடப்பாட்டாளனுடைய பொருள் போல அம் கலுழ் மேனி என இயைத்துரைப்பினும் நன்கமையும். ஒப்புரவாளன் பொருள் போல அழகொழுகும் மேனி என்ற வாறு. இசைபட வாழ்பவர் செல்வம் போலக், காண் டொறும் பொலியும் கதழ்வாய் வேழம் (நற். 217) என்பது காண்க. அருள் வல்லா னாக்கம்போ லணிபெறும் (குறிஞ்சிக்கலி 2) எனக் கலியுள்ளும் வந்தது. மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் 144. கழிய 1 காவி குற்றுங் கடல வெண்டலைப் புணரி யாடியு நன்றே பிரிவி லாய முரியதொன் றயர இவ்வழிப் 2 படுதலு மொல்லா ளவ்வழிப் பரல்பாழ் 3 படுப்பச் சென்றனண் மாதோ சென்மழை 4 தவழுஞ் சென்னி விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே. 5 (எ-து) மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. (வி) குற்றும் ஆடியும் பிரிவிலாயம் தன்னடிகட்குரியது. ஒன்று நன்றே அயரா நிற்க இவ்வழிப்படுதலும் ஒல்லாள். மலை நாட்டு அவ்வழிப் பரல் அடிகளைப் பாழ்படுப்பச் சென்றனள் என்க. உரியதொன் றயர்தலும் பாழ்படுத்தலும் அடிகட்கு என்று நினைக. இவ்வாறு அடி கூறாமலே பசுநனை நறுவீப் பரூஉப்பரலுறைப்ப...... வருமே (அகம். 107 என வருதல் காண்க. சென்றனள் என்றதனால் அடிகள் கொள்ளப் பட்டன. அடிகட்கு உரியதொன்றயர்தலாவது - அலத்தக மெழுதல் முதலியன. கழிய காவி - கழியிற் பூத்த காவி மலர்கள். குறுதல் - பறித்தல். கடல் - புணரி. கடலிடத்தனவாகிய புணர்ந்து வரும் அலைகள். புணரி யாடியும் என்றதனால் தலைவி நெய்தல் நிலத்தவ ளாதலும் விலங்கு மலை நாட்டே சென்றனள் என்ற தனாற் றலைவன் குறிஞ்சி நிலத்தவனாதலும் உணரலாம். நெய்தற்கும், குறிஞ்சிக்கும் இடையிலுள்ள பாலைநிலப் பரலை அவ்வழிப் பரலென்றாள். பிறங்கன்மலை - விளங்குதலையுடைய மலை. இல்வழி, அல்வழி என்பனவும் பாடம். இல்வழி - மனைவழி. அல்வழி - வழியல்லாத இடம். செல் - மேகம். விண் - ஆகாயம். கொல்லனழிசியார் 145. உறைபதி யன்றித் 1 துறைகெழு சிறுகுடி 2 கானலஞ் சேர்ப்பன் கொடுமை யெற்றி 3 ஆனாத் துயரமொடு வருந்திப் 4 பானாட் டுஞ்சா துறைநரொ டுசாவாத் 5 துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே. (எ-து) வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (வி) துறைகெழு இச் சிறுகுடி தனித்தார் உறையும் பதியன்று. சேர்ப்பன் கொடுமை - சேர்ப்பன் விரைந்து வரைவொடு வருதல் சொல்லிப் போய் அங்ஙனஞ் செய்யாது தாழ்க்குங் கொடுமை. பிரியேனென் றகன்ற கொடுமையு மாம். எற்றி - நினைந்து. தம்மோன் கொடுமை நம்வயி னெற்றி (நற். 88) என்பது காண்க. ஆனாத்துயரம் - அமையாத உள்ளத் துன்பத்தொடு. வருந்தி - மெய் வருந்தி. பானாள் - பாதியிரவினும்; உம்மை தொக்கது. துஞ்சாதுறைநரொடு - துயிலாது பக்கத்துறைபவரோடு. உசாவா - என்னென்று கேளாத. துயிற்கண் மாக்களொடு - துயிலை மட்டும் கண்களிலுள்ள அறிவில்லாருடன். நெட்டிரா உடைத்து. பாதி நாளளவிற்கு மேலாகிய நெடிய இராவையும் உடைத்து. ஆதலான் உறைபதியன்று. மிக உறங்குதலும், மிக விழித்தலும் ஆகா என்பது ஸ்ரீகீதையாதல் நினைக. விழிப்பும் துயிலும் உடைய கண் துயிலே உடைமை பற்றித் துயிற்கண் மாக்கள் என்றாள். அன்று - உறைபதி அன்றென்றாள் உசாவாமையால். இன்னா தினனில்லூர் வாழ்தல் (குறள். 1158) வெள்ளிவீதியார் 146. அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போ 1 ரிருந்தனர் கொல்லோ தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர் நன்றுநன் றென்னு மாக்களொ 2 டின்றுபெரி தென்னு மாங்கண தவையே. (எ-து) தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடு கின்றுழி வரைவு மறுப்பவோ எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. (வி) பிரிந்தோர்ப் புணர்ப்போர் நம்மூ ரிருந்தனர் கொல்லோ - களவிற் புணர்ந்து பிரிந்தோரைக் கரணத்திற் புணர்ப்போர் நம்மூரில் இருந்தனரோ என்றவாறு. தண்டுடைக் கையரும் வெண்டலைச் சிதவலருமாய் நன்று நன்று என்னும் மாக்களொடு ஆங்கணதவை இன்று பெரிது என்னும் ஆதலான் பிரிந்தோர்ப் புணர்ப்போரிருந்தனர் கொல்லோ என்றாள் என்க. தண்டு - முதுமையில் மெய்தாங்கப் பிடித்த கோல். வெண்டலை - நரைத்தலை. சிதவல் - கிழிந்த துணி. மாக்கள் - வரைபொருள் கொணர்ந்தவர். அவை - வரைபொருள் தக்க தென்றற் குரிய மன்று. மன்றறியக் கொள்வீர் வரைந்து (திணைமாலை நூற்றைம்பது 37) என்பது காண்க. கொணர்ந்தார் பெரிது பெரிது என்ன - அவை இன்றைக்குக் கொணர்ந்தது பெரிது தான் என்றதாகக் கொள்க. இப் பாட்டை வரைவு மறுத்தற்குக் களவியல் உரைகாரர் காட்டலான் (சூத். 29) அக் கருத்திற்குக் கொணர்ந்த மாக்கள் பெரிது பெரிது என்றாரெனவும், ஆங்கணது அவை பெரிதாதல் இன்று என மறுத்தது எனவும் கொள்க. நன்று பெரிதாகும் என்பது தொல்காப்பியம் (உரியியல் 45). இப் பொருட்குப் பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ என்பது புணர்ந்தோரைப் பிரிப்போர் இருந்தனரல்லது இவ்வூரிற் பிரிந்தோரைப் புணர்ப்போர் இருந்திலர் என்பதும் ஒன்று. கொணர்ந்த மாக்கள் நன்று நன்று (பெரிது பெரிது) என்றது முன்னங் குறையாகக் கொணர்ந்தபோது ஆங்கணது அவை நன்றன்று என மறுக்கப் பின்னரும் நிறையக் கொணர்ந்தது குறித்தது. அவை இன்றைக்குப் பெரிது என்றதும் முன்னே குறையக் கொணர்ந்ததைக் குறித்தல் காண்க. கோப்பெருஞ்சோழன் 147. வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன மயிரேர் 1 பொழுகிய வங்கலுழ் மாமை 2 நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல இன்று யி லெடுப்புதி 3 கனவே எள்ளா ரம்ம துணைப்பிரிந் தோரே. (எ-து) தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக் கண்டு சொல்லியது. (வி) வேனிற் பாதிரி - வேனிலின் மலர்தற்குரிய பாதிரி மரத்தினது. கூன்மலர் - இதழ்கள் உட்புறம் தலை வளைதலை யுடைய மலர். மலரன்ன மயிர் என்றது, மலரிலுள்ள மயிரை ஒத்த மயிர். பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர் என்பது நற்றிணை (337). மாமையாலும் பூணாலும், இயற்கையழகுஞ் செயற்கையழகுங் குறித்தான். கனவே இன்றுயிலெழுப்பி மடந்தையையுந் தந்தாய் போன்று தாராதேய்த்தனை. அங்ஙனமாயும் துணைப்பிரிந் தோர் நின்னை நனவில் எள்ளார். இங்ஙனம் நின்னால் ஏமாந்த தம்மையே எள்ளுவர் என்பது எச்சம். பொய்க்கனா மருட்ட (30) வறுங்கை காட்டிய வாயல் கனவின் (அகம். 39) என்பன காண்க. இங்ஙனம் பொய்க்கனா மருட்ட ஏமாந்தவன் தலைவனாதல் தெளிக. இனித் துணைப்பிரிந்தோர் நின்னால் எள்ளப்படாதார் ஆவர். மடந்தையைத் தந்தாய் போன்று அருளப்படுதலான் எனவும், இனிய துயிலினின்று வீணே எழுப்புதலான் எள்ளற்குரியையாயினும் மடந்தையைத் தந்தாய் போறலின் நின்னை எள்ளார் எனவும் கூறினு மமையும். துணைப்பிரிந்து துயிலரிதாதலான் இன்துயிலென்றான். துயிலெடுப்பல் - துயிலினின்று உள்ளத்தை எடுத்தல். துயிலெடை என்பதனான் அறிக. மயிர் ஏர்பு ஒழுகிய அங்கலுழ் மாமை - மயிரெழுந்து வார்ந்த அழகொழுகும் மாமை நிறம். இளங்கீரந்தையார் 148. செல்வச் சிறாஅர் சீறடிப் 1 பொலிந்த தவளை வாய பொலஞ்செய் 2 கிண்கிணிக் காசி னன்ன போதீன் கொன்றை குருந்தொ 3 டலம்வரும் 4 பெருந்தண் காலையும் காரன் றென்றி 5 யாயிற் கனவோ மற்றிது வினவுவல் யானே. (எ-து) பருவங்கண்டு அழிந்த தலைமகளைத் தோழி பருவ மன்றென்று வற்புறுத்தத் தலைமகள் சொல்லியது. (வி) செல்வச்சிறாஅர் - செல்வத்திற் பிறப்புடைய சிறு பிள்ளைகள். சீறடிப் பொலிந்த பொலஞ்செய் கிண்கிணி - சிறிய அடிகளைச் சார்ந்து விளங்கிய பொன்னாற் செய்த சிறு சதங்கை. தவளை வாய கிண்கிணி - தவளைவாய் போன்ற வாய்களையுடைய கிண்கிணி. ஒலித்தற்குப் பரலிடவேண்டி வாய் பண்ணியது. அவ் வாயைத் தவளையினது போலச் செய்தது தவளை நெடும்போது விடாது ஒலிப்பது பற்றி என்க. கிண்கிணி - கிண்கிண் என ஒலிப்பது. கிண்கிணிக் காசினன்ன - சிறு சதங்கையின் ஒவ்வொரு காசினையும் ஒத்த. காசு - பொன்னாற் செய்த தவளை வாய்க் காசு. போது - மலர்தற்கு முந்தியநிலை. கொன்றை குருந்தொடு அலம்வரும் - கொன்றை குருந்தோடு போதீன்று மலர்தற்குத் திகைக்கும், திகைத்தல் - பெருந் தண்மையால் இது மழை பெய்கால மென்று துணிந்தும் பெய்யாமையால் மலர்தற்கு மனஞ்சுழலுதல். கொன்றை போதீனும் பொழுதே வருவல் என்று தெளித்துத் தலைவன் பிரிந்ததனால் அது போதீன்ற பெருந்தண் பொழுதைக் கார் என்று தலைவி கூறத் தோழி அவள் கூறியது கொண்டே கார்ப்பருவத்து மலர்தற்குரிய கொன்றை குருந்தொடு போதீன்றும் மலராது மலர்தற்குத் திகைக்கும் ஆதலாற் காரன்று என்று வற்புறுத்தினாளாகக் கொள்க. காலமில்லாக்காலத்து மரஞ்செடி கொடிகள் தம்மியல்புக்குத் தக குவிதற்கும், மலர்தற்குந் திகைத்தல், நறைகட் பொகுட்டு மலர் குவிய நளினம் திகைப்ப குமுத நாட் பூவெடிப்பத் திசைப்ப வெயில் பம்புஞ் சுடரை எல்லென வான்மறைப்பக் கிரி தொடுஞ் சோலை மலையிற் புயலே (அழகர் பிள்ளைத்தமிழ்) என்பதனானறிக. மற்று யான் காண்பதும், நீ அறைவதும் கனவோ. யானே நனவில் வினாவுவல் என்றவாறு. யான் காண்பது கனவாயின் நீ கார் அன்றென்பதும் கனவாம் என்ற துணிவால் வினவுவல் என்றாளென்க. சிறுகுழி கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர், பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன, காரெதிர் புறவினதுவே (233) என்பதனாற் கொன்றை பொன்போல் மலர்தல் உணர்க. கொன்றை குருந்தொடு அலமரும் அதனால் பெருந்தண் பொழுதைக் காரென்றி என்க. வெள்ளி வீதியார் 149. அளிதோ தானே நாணே நம்மொடு நனிநீ டுழந்தன்று 1 மன்னே 2 யினியே வான்பூங் கரும்பி னோங்குமணற் 3 சிறுசிறை 4 தீம்புன னெரிதர வீந்துக் 5 காஅங்குத் 6 தாங்கு மளவைத் தாங்கிக் காம நெரிதரக் கைந்நில் லாதே. (எ-து) உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது. (வி) நாணே இரங்கத்தக்கது. நம்மொடு நனிநீடுழந்தன்று - காமமுற்ற நம்மொடு நெடிது மிக வருந்தியது. காமம் புறஞ் செலல் வலிக்க அதனைத் தடுத்து நாண் நம்மொடு வருந்தியிருந்தது என்றவாறு. இனி - இப்போது. கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை - கரும்பால் நீர் ஓங்குதற்கிட்ட மணற் சிறுசிறை என்றவாறு. கரும்பின் மணற் சிறுசிறை எனவும், ஓங்கு சிறுசிறை எனவும் கொள்க. சிறுசிறைக்கு ஓங்குதல் இயையாமை நினைக. இன் அசை எனினும் அமையும். சிறுசிறை - நீர்க்குத்தடையாக இட்ட சிறு வரம்பு. தீம்புனல் நெரிதர - தீவிய புனல் பெருகி உடைக்க, வீந்துக்காங்கு - அக் கரும்பு தலைசாய உகுந்தாற் போல. தாங்கும் அளவைத் தாங்கி - தடுக்கும் வலியளவிற்றடுத்து நின்று. காமம் நெரிதர - காமம் பெருகி உடைக்க. கைந்நில்லாது - ஒழுக்கத்துடனில்லாது. கருப்பஞ்சிறையிற் பெருகு நீராதலாற் றீநீர் என்றாள். கரும்பு நடுபாத்தி யன்ன பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே (262) என இனிதாதற்குக் காட்டுதலா னுணர்க. கரும்பால் நீரைச் சிறை செய்தல், “உழவர், காஞ்சியங் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை, மென்கழைக் கரும்பி னன்பல மிடைந்து, பெருஞ் செய்ந்நெல்லின் பாசவல் பொத்தி, வருத்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை மீதழி கடுநீர் (அகம். 346) என்பதனாற் தீஞ்சுவைக் கரும்பின் சிறை உணர்க. கை- ஒழுக்கம். தன் பெண்மை ஒழுக்கம் வளரக் காத்து நின்றதனால் நாணைச் சிறையாக உவமித்தாள். சிறு சிறை என்றது காமமாகிய நீரின் பெருக்கத்தை நினைந்து. அவ்வுயிர் வாழ்தலன்ன காதல் (அகம். 339) என்பதனாற் காமம் அவ்வொழுக்கத்து வாழ்தற்கு இன்றியமையாததாதல் கருதிக் கரும்பின் பாத்தியிற் றீநீரொடு உவமித்தாள். சிறை செய்த நீர் பெருகிச் சிறையையுடைத்துக் கரும்பையும் தலைசாய்த்தல் போலக் காமம் பெருகி நாணாகிய சிறையையுடைத்து என் பெண்மை ஒழுக்கத்தையும் சாய்த்தது என்று வெள்ளி வீதியார் கற்பின் கண்ணே பிரிந்த கணவனைத் தேடி மனைப்புறஞ் செல்லும் போது சொற்றதிஃதென்க. வெள்ளி வீதியைப் போல நன்றுஞ், செலவயர்ந் திசினால் யானே (அகம். 147) என்றது காண்க. இங்ஙனம் கூறின் புறமாதலின் அகத்திணைக்கேற்ப உடன்போக்கு உணர்த்தியபோது ஒருதலைவி கூறியதாக அமைத்தார் பின்னுள்ளோர் என்க. பொருளில் ஒழுக்கத்துடனில்லாது என்றதனால் உவமையினும் சிறைக்கரும்புடனில்லாது அக் கரும்பு கெடச் சிறைபுகுதல் கொள்ளப் பட்டது. வீந்துக்காங்கு - வீய்ந்து உக்காங்கு என்பதன் திரிபு. அந்தரப் பரவி தணிச்சாய் வீவித்துக்காங்கு எனினும் அமையும். நாண் நனிநீடுழத்தலா வது காமம் விடமாட்டாத நம்மைவிட நினைந்த நாணை விடாது நனி நீடு பற்றியீர்த்தலால் வருந்தல். மாடலூர் கிழார் 150. சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி வான 1 மீனின் வயின்வயி னிமைக்கும் ஓங்கு மலைநாடன் சாந்துபுல ரகலம் உள்ளி னுண்ணோய் மல்கும் 2 புல்லின் மாய்வ தெவன்கொ லன்னாய். (எ-து) இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது. (வி) சேணோன் - உயரத்திலுள்ளவன்; மலைப்புனங் களிற் பரணின் மேலுள்ளவன். கல்லுயர் கழுதிற் சேணோன் (அகம். 393) என்ப. மாட்டிய - கொளுத்தி யெறிந்த. நறும்புகை ஞெகிழி - நறிய புகையினையுடைய விடுகொள்ளி. விசும்பின் விடுபொறி ஞெகிழியிற் கொடிபட மின்னி (அகம். 108). கானவ னெறிந்த கடுஞ்செலன் ஞெகிழி (நற். 393) என்பன காண்க. சாந்தஞெகிழி (நற். 172) ஆதலான் நறும்புகை கூறினாள். வயின் வயின் - அவ்வவ்விடங்களில். நாடன் சாந்து புலரகலம் உள்ளின் உண்ணோய் மல்கும் - பிரிந்து நினைத்த மாத்திரையே உள்ளே நோய் பெருகச் செய்யும். அங்ஙனம் உள்ளாது புல்லினால் இன்னும் பெருக நோய் செய்ய வேண்டுவதாகவும், அங்ஙனமன்றிப் புல்லின் நோய் மாய்வதற்கு ஆவது என்னை கொல்லோ என்றவாறு. வான மீனின் இமைக்குமாயினும் இது ஞெகிழி என்று நறும்புகையா லுணரப்படுவது போல இவ்விரவினொழுகும் களவு ஒழுக்கம் உள்ளவாறு தெரியாதாயினும் தலைவன் சாந்து புலரகலத்தின் நறுமணத்தாற் பலர்க்குமறியப்படுதல் கொள்க. சாந்து புலரகலம் என்றது குளிர்தற்குரிய சாந்தும், புலர்தற்குரிய அகலம் என்று அது நினைந்தாற் செய்யும் வெம்மைக்கேற்பக் கூறியதாகக் கொள்க. தூங்கலோரியார் 151. வங்காக் கடந்த 1 செங்காற் பேடை எழாஅலுற 2 வீழ்ந்தெனக் 3 கணவற் காணாது குழலிசைக் குரல குறும்பல வகவும் 4 குன்றுகெழு 5 சிறுநெறி யரிய வென்னாது மறப்பருங் காதலி யொழிய இறப்ப 6 லென்பதீண் டிளமைக்கு 7 முடிவே. (எ-து) பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. (வி) கடந்த செங்கால் வங்காப் பேடை - ஆண் அருகில்லாது கடந்த செங்காலையுடைய வங்கா இனத்துப் பேடை. கணவற் காணாது - தன் துணை யாகிய கணவனைக் காணாமையால். எழாஅலுற வீழ்ந்தென - அது புல்லூறு பற்ற வீழ்ந்ததென்று நினைந்து. குழலிசைக் குரல குறும்பல அகவும் - குழலின் இசைக் குரல்களையுடைய குறியவும் பலவுமாகிய ஒலியிற் கூப்பிடும். சிறுநெறி - ஒடுக்கமான வழிகள். அரிய என்னாது - செல்லற்கரியன என்றெண்ணாது. நம்மை மறத்தற்கரிய காதலியுமாம். ஒழிய - பிரிந்திருக்க. சிறுநெறி யிறப்பல் என்பது - சிறுநெறிகளைக் கடந்து செல்வல் என்பது. ஈண்டிளமைக்கு முடிவே - கிடைத்த இளமைக்கு முடிவு செய்வதாம் என்றவாறு. ஈண்டுதல் எருவைச் சேவ லீண்டுகிளை பயிரும் (அகம். 161) என்புழிப் போல வந்தது. குரல என்னும் பன்மை அகவுங் குறும்பல ஒலிகளைக் குறித்து வந்தது. கணவனைக் கடந்து சிறிது காணாத நிலையில் ஒரு வங்காப் பேடை அதன் ஊறு நினைந்து இடருற்றுக் கூவுமாயின், நம் மறப்பருங் காதலி ஒழியக் குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது இறப்பலென்புழி அவளென்னாவளோ எனத் தலைவன் செலவழுங்கிய வாறாம். இதனால் இளமைக்குத் தக்கது இறப்பருங் காதலியுட னுறைதல் என்பது துணிந்தன்மைக்கு. இனிதுடன் கழிக்கி னிளமை யினிதாலம்ம, வினியவர்ப் புணர்வே (ஐங். 415) என்ப. பொருள்மேற் பிரியும் ஒவ்வொரு நாளும் கிடைத்த இளமையைக் கழிப்பதாதலின் இளமைக்கு முடிவென்றான். முடிவு என்றான் பின்னர்த் தர இயலாதது பற்றி. இளமையுந் தருவதோ இறந்தபின்னே (கலித். 15) என்பது காண்க. கிளிமங்கலங் கிழார் 152. யாவது மறிகிலர் கழறு வோரே தாயின் 1 முட்டை போலவுட் கிடந்து சாயி னல்லது பிறிதெவ னுடைத்தோ யாமைப் பார்ப்பி னன்ன காமங் காதலர் கையற விடினே. (எ-து) வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள். நீ ஆற்றுகின்றிலை என்று நெருங்கிய தோழிக்குச் சொல்லியது. (வி) கழறுவோர் - இடித்துரைப்போர். யாவதும் அறிகிலர் - சிறிதும் அறிகிலார். யாமைப் பார்ப்பி னன்ன காமம் - தன்னை நினையுந் தாய்யாமையைப் பார்த்து வளரும் பார்ப்பை ஒத்துத் தம்மை நினையும் தலைவரைப் பார்த்து வளரும் காமம். தாயில் முட்டை போல - தாயில்லாத முட்டையுட் குஞ்சு போல. உட்கிடந்து - உள்ளே அசையா திருந்து. சாயினல்லது பிறிதெவனுடைத்து - மெலியினன்றி வேறு யாதுடையதாகும். யாமைப் பார்ப்பி னன்ன காமம் - இடைவிடாது தாய்யாமையின் முக நோக்கி மகிழ்ந்து வளரும் இனிய பார்ப்பை ஒத்து இனிக் கரணத்தொடு கூடிய கற்பில் இடைவிடாது தலைவர் முகம் நோக்கி மகிழ்ந்து வளர்தற்குரிய காமம். காதலர் கையறவிடின் - நங் காதலை யுடையவர் நாம் செயலறும்படி வரையாதுவிடின், தாயின் முட்டை போல உட்கிடந்து சாயினல்லது பிறிதெவனுடைத்து - தாய்யாமையில்லாத முட்டையுள் பார்ப்பின் கருப்போல இக் களவினுள்ளே யசைவற்றுக் கிடந்து தேயினல்லது வேறு யாது பயனுடையதாகும் என்றவாறு. தாயில் முட்டையும் கருத்தன்னை நினைந்து பார்ப்பாக்கற்குரிய தின்மையால் ஆண்டே கிடந்து சாய்வது போல இக் களவினுள் தன்னை நினைந்து தம் மனைக்கிழத்தி யாக்கற் குரிய வரைவின்மையால் ஈண்டே கிடந்து சாய்வதொரு தலையென்பாள் அல்லது பிறிதெவனுடைத் தென்றாள். முட்டையுட்கருப் பார்ப்பாதற்குத் தாயின் நினைப்பு இன்றியமையாமையாம். ஆமை முட்டை தாய் நினைந்தாற் குட்டியாகும் (எம்பிரான் சதகம் 20) எனவும், ஆமையின் பறவை போல தன்னகங் கருதி நோக்கித் தடவிச் சந்நிதி யிருத்தி (கைவல்லியம்) எனவும் பிற்காலத்தார் பாடியன கொண்டுணர்க. தாயின் நினைவினான் முட்டையுட் கருப் பார்ப்பாகிப் பின் அப் பார்ப்புத் தாய் முகம் நோக்கி வளருமென்று கொள்க. யாமையிளம் பார்ப்புத் தாய்முக நோக்கி வளர்ந்தசினா அங்கு (ஐங். 45) என்புழியும் கருவில் நினைந்து பார்ப்பாகித் தாய்முக நோக்கி அப் பார்ப்பு வளர்ந்தாற் போல என்பதே பொருளாகக் கொள்க. ஈண்டு இளம்பார்ப்பு என்றதனானும் இது முட்டையுட் கருவாகாது முட்டை யினின்றும் புறம் வந்த பார்ப்பாதல் தெளியலாம். யாமை முட்டையை ஈன்று பிறர் கவராது மறைத்துட் புதைக்கும் இயல்பினதாதலின் அம் முட்டையுட் கருப் பார்ப் பாதற்குத் தாயின் நினைவு மாத்திரையே இறைவன் வேண்டினன் போலும். நிறைச்சூல் யாமை மறைத்தீன்று புதைத்த..... முட்டை (அகம். 162) என்பது காண்க. தலைவர்தம் காமம் நினைந்திலர் என்பது பற்றித் தாயின் முட்டையை அதற்குவமித்தாள். இனி இல்லறத்துத் தலைவர் முக நோக்கி யாமைப்பார்ப்புப் புதைக்கப்பட்டுத் தாயில் லாது போயது போல வளர வேண்டிய முட்டையுட் கருப் போலக் காதல் காதலர் கையறவிடின் முட்டையுட் கருப்போல இக் களவிற் சாய்வதல்லது பிறிதொன்றும் இல்லாமையைக் கழறுவோர் சிறிதும் அறிகிலர் என்று வரைவு நீட்டித்தவழித் தலைவி கூறியவாறாம். கபிலர் 153. குன்றக் கூகை குழறினு முன்றிற் பலவி 1 னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும் அஞ்சும னளித்தெ 2 னெஞ்ச மினியே ஆரிருட் கங்கு லவர்வயிற் 3 சார னீளிடைச் 4 செலவா னாதே. (எ-து) வரையாது நெடுங்காலம் வந்தொழுகுகின்றுழி, நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை? என்ற தோழிக்கு, அவர் வரவு நமக்கு ஆற்றாமைக்குக் காரணமாம் எனத் தலைமகள் கூறியது. (வி) பொழுது மறைதற்குமுன் தான் பயிலுங் குன்றத்துக் கூகை தன் பேடையைக் கூவியிசைப்பினும், முன்றிலிற் பலாவின் பெருங்கொம்பின் முசுக்கலை பாய்ந்து விளையாடினும் என் னெஞ்சம் அஞ்சும் முன்னெல்லாம். மன் - அது கழிந்தது. அஞ்ச வேண்டாதனவற்றிற்கு அஞ்சுதல் குறித்தது. கூகை பேடையைப் பயிர்தலைக் குழறல் எனக் கூறுதல் வழக்கு. உகளுதல் இப் பொருட்டாதல், மந்தி கடுவ னோடுகளும் (ஐங். 277) என்பதான் உணர்க. குழறல் கேட்டும், உகளல் கண்டும் அஞ்சுதல் குறித்தாள். மேல் ஆரிருட்சேறல் கூறுதலான் இவை பொழுது மறைதற்கு முன்னெனப்பட்டன. இனி - இக் காலம் என்றது இக் களவுக் காலத்து என்றவாறு. ஆரிருட்கங்குல் - அரிய இருளிரவில். சாரல் - மலைச்சாரலில். அவர்வயின் செலவு - அவரிடத்துத் துணையாய்ச் செல்லுதலை. நீளிடை ஆனாது - நெடுநாளாக ஒழியாது. இடை - காலம். துணையாய்ச் செல்லுதல் - அவர்க்கு உதவப்போதல். “நெஞ்சம்.... இருளிடை மிதிப்புழி நோக்கி யவர், தளரடி தாங்கிய சென்ற தின்றே (அகம். 128) என்புழி அவர் தளர்ந்த அடிகளைத் தாங்கற்குச் சென்ற தென்று கூறுதல் காண்க. பொழுது மறைதற்குமுன் அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சிப் பிறரால் உதவப்பட வேண்டிய பெண்மை நெஞ்சம் ஆரிடைக் கங்குலில் ஊறுமிக்க சாரல் நீளிடையில் ஆண்ட கையினர்வயின் காத்துச் செல்லுத லொழியா தென்று அவர் வரவில் தலைவி தனக்குள்ள ஆற்றாமையைப் புலப்படுத்தியவாறாம். நீளிடைச் செலவானா தென்பதனாற் பல்காற் சேறல் குறித்தா ளாதலின் வரையாது நெடுங்காலம் வந்தொழுகுதலாகத் துறையுட் கூறினாரென்க. துறையுள் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்பது அவரைக் களவினின்று வரைவொடு வரும் வண்ணம் வேறுபடுத்தற்குக் காரணம் என்றவாறு. அவர் ஆரிருட்கங்குலில் நம் வயிற் செல்லுந்தோறும் என் நெஞ்சம் அவர் வயிற் செலவு ஒழியாமை கூறி ஆற்றாமையை அவர்க்குணர்த்து வதே அவரை வேறுபடுத்தற்குக் காரணம் எனத் தலைவி கூறியவாறாகக் கொள்க. அவர் வயின் அளித்துச் செல வானாது என்க. என் நெஞ்சம் அளித்தென்று கொண்டு இரங்கத்தக்க தென்பாருமுளர். அளியையுடையது அதனால் உதவற்குச் செலவானாதென்பது நன்கு பொருந்தும். சாரல் நீரிடை - சாரல் நீர்வழி என்பதும் உண்டு. மதுரைச் சீத்தலைச் சாத்தனார் 154. யாங்கறிந் தனர்கொ றோழி பாம்பின் உரிநிமிர்ந் தன்ன வுருப்பவி ரமையத் திரைவேட் டெழுந்த சேவ லுள்ளிப் 1 பொறிமயி ரெருத்திற் குறுநடைப் பேடை பொரிகாற் 2 கள்ளி விரிகா யங்கவட்டுத் 3 தயங்க விருந்து புலம்பக் கூஉம் 4 அருஞ்சுர வைப்பிற் கானம் பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே. (எ-து) பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து தலைமகள் தோழிக்கு உரைத்தது. (வி) பாம்பின் உரி நிமிர்ந்தன்ன - பாம்புகளின் தோல்கள் நிமிர்ந்து நின்றாற் போன்ற. உருப்பு அவிர் அமையத்து - வெய்ய கானல் - படர்ந்த கோடையில். கானம் பிரிந்து சேணுறைதல் வல்லுவோர் - காட்டிற் பிரிந்து சென்று நெடுங்காலம் சேய்மைக் கண் தங்கவல்லுநர்; இங்ஙனம் பிரிந்து சேணுறையும் வன்மையை யாங்கறிந்தனர் கொல் என்க. யாங்கென்றாள் அவ்வாறு தெரியின் தானும் அவர் பொருட்டுப் பிரிந்துறையும் வன்மை பெறலாமென்று. சேண் - சேய்மைக் காலங்குறித்து வந்தது. சேய்நாட்டுப் பிரிந்து ... சேணுறைநர் (அகம். 59) என்புழிப் பழையவுரைகாரர் தாழ்க்க வுறைகின்றவர் எனப் பொருள் கூறியது கொண்டுணர்க. யாங்கறிந்தனர் எனத் தலைவி வினாஅயது தோழி அவரைப் பற்றிப் பின்னுங் கேட்டற்கு அவாவியது என்பர் நச்சினார்க்கினியர். இரைவேட்டெழுந்த சேவலுள்ளி - பேடையை அருத்திய பின்னர்த் தான் உண்ணும் இரையை லிரும்பி எழுந்து சென்ற சேவலை நினைந்து அப் பேடை கள்ளியங்கவட்டுத் தயங்க இருந்து தனியாநிற்கப் பொறாது கூவும் அருஞ்சுரம் என்க. தயங்க இருந்து - மனந்துளங்க இருந்து. கள்ளியங்கவடு கூறியது இருத்தற்கு வேறு மரமின்மை குறித்தது. பொரிகாற் கள்ளி - பொரிந்த அடியை யுடைய கள்ளி. பேடை விரிந்த காயுடைய கவட்டிலிருத்தல் கூறியது வெயிலில் வெடித்துத் தன்னை இரியச் செய்யாமை கருதி, கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி துறைமென் றூவித் துணைப்புற விரிக்கு மத்தம் (174) என இந் நூலுள் வருதலான் அறிக. அக் கானத்துப் புள்ளும் துணைபிரிய இயலாதாக அது கண்டும் பிரிந்து சேணுறைதல் வல்லுவோர் என்றவாறு. உரோடகத்துக்காரத்தனார் 155. முதைப்புனங் கொன்ற வார்கலி 1 யுழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான்வந் 2 தன்றே மெழுகான் றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி மரம்பயி லிறும்பி 3 னார்ப்பச் சுரனிழிபு மாலை நனிவிருந் தயர்மார் 1 தேர்வரு மென்னு 2 முரைவா ராதே. (எ-து) தலைமகள் பருவங்கண்டு அழிந்து சொல்லியது. (வி) முதைப்புனம் - தரிசு கிடந்த பழங்கொல்லை. கொன்ற ஆர்கலியுழவர் - உழுததனாலாகிய நிறைந்த மகிழ்ச்சியையுடைய உழவர். உழவர் - ஈண்டு முல்லை நிலத்து உழுபவர். விதைக் குறுவட்டி - விதையையுடைய சிறிய ஒலைக்கடகம். போதொடு பொதுள - விதைத்துப் பின்னர் வெறுவி தாகாது போதுகள் நிறைய. பொழுதோ தான் வந்தன்று - அவர் தெளித்த மாலைப் பொழுதோ தானாக வந்தது. பொழுதறிந்து (நெடுநல்வாடை 41) அந்திக்கால மென்றறிந்து என்பர் நச்சினார்க்கினியர். மெழுகான்று - உருவகுத்த மெழுகு உருகி இல்லையாய பின். ஊதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி - ஊதுகின்ற உலையிற் பொன்பெய்தாக்கிய பிளந்த வாயினையுடைய தெள்ளிய மணிகள். மெழுகுரு மண்பாவை மேதையான் காய்த்தி, ஒழுகுருகு செம் பொன்னா லுண்ணிறைந்ததே போல் (நீலகேசி. தருமவுரை. 133) என்பதால் அறிக. ஆன்று - இல்லையாய். “ஞாயிறு...... பயங்கெடத் தெறுதலின், அருவியான்ற பெருவரை மருங்கின் (அகம். 91) என்பது காண்க. மணிகள் மரம் பயிலிறும்பி னார்க்க என்க. இறும்பு - குறுங்காடு. சுரனிழிபு - அருவழிகளில் இழிந்து, தேர்வருமென்னு முரை வாராது மாலை நனி விருந்தயர்மார் வாராது - மணியார்ப்பத் தேர் வருமென்னும் உரை மாலையில் விருந்தும் மிகப் புரிதற்பொருட்டு வாராது பொழுதுதான் வந்தது என்றவாறு. தான் என்பது அஃதன்றி இது வந்தது என்பது குறித்தது. பேராசிரியர் திருக்கோவையுள் இவ்வாறு கூறுதல் காண்க. விருந்து - ஈண்டுப் புதிதாக இடும் உணவு. திருந்துவேல் அண்ணற்கு விருந்திறை சான்மென (மலைபடுகடாம் 319) என்புழிப் போல வந்தது. நினைக்குறு பெருந்துயரம் (நற். 123) என்பது போல விதைக்குறு வட்டி வந்த தென்பதுமாம். தொல்காப்பியக் கற்பிய லுரைக்கண் (சூத். 6) நச்சினார்க்கினியர் இப் பாட்டை எடுத்தோதி இது தலைவி பொழுது கண்டு மகிழ்ந்து கூறியது என்பது எழுதினர் பிழைப்பாகும். பொழுது கண்டு அழிந்து கூறியதென்று துறையிற் கூறியவாறே படிக்க. விதையைச் சொரிந்து வட்டி போது நிறைந்து வருதல் தன் காதல் கொண்டு சொல்லிய தூது அவர் காதல் கொண்டு சொல்ல வருதல் குறித்தது. அங்ஙனம் தேர் வரும் என்ற உரை வாராததனால் அழிந்து கூறினாள் தலைவி என்க. ஆர்கலியுழவர் - நிறைந்த ஆர்ப்பினையுடைய உழவர் என்பதுமாம். உழுது முடித்து ஆர்த்தல் அவரியல்பு. ஆர்ப்பின் மழைத் துளி பொழியும் என்பது மரபு, குறவ னார்ப்பின் எழிலி நுண்பல் லழிதுளி பொழியும் நாட (ஐங். 251) என்பதனா லுணர்க. பாண்டியன் ஏனாதிநெடுங்கண்ணன் 156. பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கி னன்னார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் 1 படிவ 2 வுண்டிப் பார்ப்பன மகனே எழுதாக் 3 கற்பி னின்சொ 4 லுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்து முண்டோ மயலோ விதுவே. (எ-து) கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது. (வி) பார்ப்பன மகனே - பார்ப்பனக் குலமகனே. செம்பூ முருக்கு - முள்முருக்கின் வேறாகிய பலாசம். நல்நார் - நல்லதோடு. நன்மை கூறியது தோடுரித்தாற் பட்டொழிவது குறித்து. தண்டு - கோல். தாழ்கமண்டலத்து என்றதனால் தண்டு ஏந்திப் பிடித்ததாகக் கொள்க. கமண்டலம் - கரகம். படிவ உண்டி - விரத முடித்துண்ணும் உணவு. முக்கால் விளித்தற்கேற்பத் தண்டும் கமண்டலமும் படிவவுண்டியுமே கூறினான். எழுதாக்கற்பினின் சொலுள்ளும் - காதாற் கேட்டுப் பயில்வதன்றி எழுதாக் கல்வியாகிய வேதத்தின் இனிய வுரையுள்ளும். உம்மை உயர்வு சிறப்பு. கற்பு - கல்வி. இன்சொல் - இனிய உபதேசமொழி. பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ - முற்பிறப்பிற் கூடிப் பிரிந்த காதலரை மறுபிறப்பிற் புணர்விக்கும் உபாயமும் உள்ளதோ. உள்ளதென்பாயேல், இது மயலோ - இஃது அவ் வேதம் தள்ளிய மயலெனப்பட்ட காமமாகுமோ என்றவாறு. பிரிந்தோரைப் புணர்க்கும் மருந்து எழுதாக் கற்பாகிய வேதத்தின் இதோபதேசமாயின் அவ் வேதந் தள்ளிய மயல் இஃதாகுமோ என்றவாறாம். அந்தணனாகிய பாங்கன் அரசனாகிய தலைவனை நோக்கி நீ விழைந்தது வேதந் தள்ளிய மயல் என்றானாக, அரசன் அவனை நோக்கி முன்னைப் பிறப்பிற் பிரிந்தாரைப் புணர்க்கும் உபாயம் அவ் வேதத்தி லுண்டாதலான் இது அம் மறை தள்ளிய மயலாகாதென்று கூறுமுகத்தான் தான் விழைந்தவள் பிறவி தோறும் தன்னைக் கூடிவருபவள் என உணர்த்தி இன்றியமையாமை விளக்கியவாறாம். புணராமைக்குரிய தடையைத் தீர்த்துதவலான் மருந்தெனப்பட்டது. கணவற்கொரு நோன்பு. பொய்த்தாய் பழம்பிறப்பிற் போய்க் கெடுக.... சோம குண்டஞ் சூரியகுண்டந் துறை மூழ்கிக், காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு, தாமின் புறுவருலகத்துத் தையலார், போகஞ்செய் பூமியினும் போய்ப் பிறப்பர் (சிலப். கனாத்திறம் 59-62) என்பது முதலியவற்றான் பிரிந்தார்ப் புணர்க்கும் உபாயங்கள் வேத வழக்கொடு பட்டனவாதல் காண்க. பிறப்பிற் றுனைந்து பெருகத் தேர் பிறங்கும் மொளியார் (திருக்கோவை 328) என்பதனாற் பிறவிதோறும் கூடி வருதலுணரலாம். உண்டோ என்புழி ஓகாரம் அசை எனினுமமையும். நின் சொலுள்ளும் என்பாருமுளர். பிரிந்தோரைப் புணர்க்கும் வேத மந்திரங்களும் உண்டு. வேதம் வல்லார்வாய்க் கேட்டறிந்து கொள்க. புணர்க்கும் பண்பின் மருந்து - புணர்விக்கும் குணத்தையுடைய மருந்து. முக்காலழைத்தல் ஒரு வழக்குப் போலும். சிறுவெள் ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே, துறைபோ கறுவைத் தூமடி யன்ன, நிறங் கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே (நற். 70) என வருதலான் என்க. அள்ளூர் நன்முல்லையார் 157. குக்கூ வென்றது கோழி யதனெதிர் துட்கென் றன்றென் 1 றூய நெஞ்சம் 2 தோடோய் 3 காதலர்ப் பிரிக்கும் வாள்போல் 4 வைகறை வந்தன்றா லெனவே. (எ-து) பூப்பெய்திய தலைமகள் உரைத்தது. (வி) மாண்குர லியம்பற்குரிய மனைச் செறி கோழி குக்கூ என ஒலித்தது. மனைச்செறி கோழி மாண்குர லியம்பும் (அகம். 122). கூ - கூவுதல். கூஉக்கூஉ மேவும் (பரிபாடல் 19) என்பது காண்க. பொறிமயிர் வாரணம் குறுங்கூ விளிப்ப (மணிமேகலை 7 : 116) என்ப. தூய்மையல்லா துணர்ந்து விரைந்து கத்தியது. அதன் எதிர் - அதன் நேரில். என் தூய நெஞ்சம் துட்கு என்றன்று - என் தூய உள்ளம் துட்கென அஞ்சியது. தோய்காதலரைத் தோள் பிரிக்கும் வாளைப் போல வைதற்குரிய பூப்பு வந்தது எனத் துட் கென்றன்று என்க. கறை - பூப்பு. கொழுநனை யில்லாள் கறையும் (திரிகடுகம். 96). காதலரைப் பிரிக்கும் வாள் போறலின் வையப்படும் கறை என்றாள். வாள்போல் வைக் கப்படும் கறை என்பதுமாம். பதிற்றுப்பத்துள் வைதலை என்பது வைத்த இடம் என்று பழைய உரைகாரர் பொருள் செய்தது கண்டுணர்க. தலைவி வைகறை என்று கவர் பொருள் மறையாற் கூறியதாகக் கொள்க. இங்ஙன மன் றாயின் குடுமிக் கோழி நெடுநகர் இயம்பும், பெரும்புலர் விடியல் (234) என்புழிப் போல விடியலென்று கூறலா மென்க. மனையுறை கோழி தூய்மை அல்லாததை யுணரவல்லது என்பது சுக்கிர நீதியிற் சோதனை கூறியவிடத்து நஞ்சு முதலிய தூய வல்லாதன கலந்ததைக் கோழிகள் உணர்ந்து விரைந்து கத்தும் (முதல் அத்தியாயம் 326-329) என்று கூறுதலான் உணரலாம். இதனாற்றான் மாண்குரல் இயம்பாது குக்கூ என்றதாமென்க. பறவைகள் நுண்ணிய மூக்குணர்ச்சி மிக்கன என்பது தெளிந்தது (சிந். விமலை. 5). இங்ஙனம் கொள்ளாது கோழி விடியலையே குறித்துக் குக்கூ என்றதெனின் 107 ஆம் பாட்டிற் போலப் பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக். கடுநவைப் படீஇயரோ நீயே..... யாணரூரன் றன்னொடு வதிந்த, ஏம வின்றுயி லெடுப்பி யோயே (107) என வைதுரைப்பளென்க. ஈண்டுக் கோழியை வைதற்கில்லாமையால் பிரிக்கும் வாள் போன்ற கறையை வைதற்குரியதாக்கினாள். தூய நெஞ்சம் என்றது தன்னுடம்பு தூய தன்மை குறித்தது. பாட்டிற் கறையைப் பூப்பென்று பொருள் கொண்ட காரணத்தாலே பூப்பெய்திய தலைமகளுரைத்தது எனத் துறை கூறினாரென்க. நச்சினார்க்கினியரும், முந்நாளல்லது (தொல். பொருள். 31) என்னும் களவியற் சூத்திர உரையில், இது முந்நாளைப் பிரிவாகிப் பூப்பிடைப் பிரிவு வந்துழித் தலைவி கூறியது என்றார். கூட்டிய ஞான்று பிரிவரென் றஞ்சப் பண்ணுதல் வைகறையாகிய காலைக்கெல்லாம் பொதுவையாகவும் இது பூத்த காலைப் பிரிவாகக் கூறுதற்கு கறையல்லது வேறு சொல்லே ஈண்டு இல்லாமை நோக்கி உண்மையுணர்க. தோள் பிரிக்கும் வைகறை என்றதனால் உடம்பு தொடலாகாமை குறித்தாள். பொருந்தலை பூத்தனள் நீங்கென (பரிபாடல், பக்கம் 125) என்புழி இவ்வுண்மையறிக. விடியல் வருதற்கு நெடுநேரமுன்னே குக்கூ என்றதனால் நெஞ்சங் கறை வந்தன்றெனத் துட்கென்றன்று என்றதாகக் கொள்ளக் கிடத்தல் காண்க. இதனாலிது பொறி மயிர்வாரணம் வைகறை யியம்ப (மதுரைக் காஞ்சி 173, 174) என்பது போன்றதல்லாமை நன்குணர்க. உடலுள் ஒளித்து நின்று வாழ்த்துழி இருவேறு படுத்தப் புறப்படுதலால் வாள் கறைக்கு உவமையாயிற்று. வளியிடை போழப்படா முயக்கினைப் போழ்தலாற் கறைவாளாகக் கூறப்பட்டது. முயக்கிடைத் தண்வளி போழினும் பொறாளாதலின் போழுங் கறையை வைதற்குரியதென்றாள். ஔவையார் 158. நெடுவரை மருங்கிற் பாம்புபட 1 விடிக்கும் கடுவிசை யுருமின் கழறுகுர லளைஇக் 2 காலொடு வந்த கமஞ்சூன் மாமழை ஆரளி யிலையோ நீயே பேரிசை இமயமும் 1 துளக்கும் பண்பினை துணையில ரளியர் 2 பெண்டிரிஃ தெவனே.3 (எ-து) தலைமகன் இரவுக்குறி வந்துழி அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. (வி) காலொடு வந்த கமஞ்சூன் மாமழை என்பதனைக் கமஞ்சூன் மாமழையொடு வந்த கால் என மாறி விளித்தது கருத்தாகக் கொள்க. மெய்ப்பாட்டியலுரையில் (சூத். 6) பேராசிரியர் இது வாடைக்குக் கூறியதெனக் கொள்ளுதல் காண்க. குடுமியவாகப் பிறர் குன்று கெழு நாடே (புறம். 58) என்புழிக் குன்று கெழு நாடு என்பது நாடு கெழு குன்று என மாறியது போலக் கொள்க. நெடுவரை மருங்கிற் பாம்புபட - நெடியவரையைத் தன் மருங்கின் வைத்த ஆதிசேடனை வலிகெட. இடிக்கும் கடுவிசை யுருமின் - மோதுங் கடிய வேகத்தோடு கூடிய இடிகளுடன். குழறு குரலளைஇ - சினக்கும் ஓசை கலந்து. பேரிசை இமயம் துளக்கும் பண்பினை - எல்லா மலையினும் சிறந்த பெரிய இசையினையுடைய மேருவையும் நடுக்கும் பழைய வலியுடையை. ஆரளி இலையோ நீயே - நீயே நிறைந்த அருளுடையையல்லையோ. துணையில்லாதாரும், பிறர் அளிக்குரியரும் ஆகிய பெண்பாலரிடத்து இஃது எவன் - இவ் வலி காட்டுவது யாது பயனுடைத்து என்றவாறு. இமயம் மேருவிற்கு வழங்குதல், இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் (குறிஞ்சிக்கலி 2) செல்விடைப் பாகன் திரிபுரஞ் செற்றுழி, வல்லுயர் சென்னி இமயவில் நாணாகி (பரிபாடல்- திரட்டு 1:76) என்பனவற்றான் உணர்க. வாயுபகவான் ஆதிசேடனோடு பகைத்து மேருவைத் துளக்கிய செய்தி, நாக மெடுக்கும் காலவர் காற்றிடியொடு மோடிய அந்நாள், முடுக்குறக் கடலிற் செல்லு முத்தலைக் கிரியு மொத்தான் (கம்பர்-கடறாவு படலம் 23) என்பதனான் உணர்க. இமயமும் துளக்கும் பேரிசைப் பண்பினை எனினு மமையும். ஆரளியிலையோ என்றது, வளி வழங்கு மல்லன்மா ஞாலம் கரி (குறள். 245) என்பதனானறிக. மழையின்றியும் நெடும்போது உயிர்கள் வாழும். காற்றின்றிச் சிறிது பொழுதும் வாழ இயலாமை குறித்து உயிரெலாங் காக்கும் அளி என்பாலில்லையோ என்றாள். இங்ஙனம் எப்போதும் உயிர்கட்கு உதவிவரும் நீ இப்போது சினந்தெறிதலால் ஆரளி இலையோ என்றாள் எனினுமமையும். பகைத்த இடத்து அங்ஙனம் எறிதல் தகும்; அளியர் பெண்டிரிடத்து இஃது எவன் என்க. வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் 159. தழையணி யல்கு றாங்கல் 1 செல்லா நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக அம் மெல் லாக நிறைய வீங்கிக் 2 கொம்மை 3 வரிமுலை 4 செப்புட னெதிரின யாங்கா குவள்கொல் 5 பூங்குழை யென்னும் அவல நெஞ்சமொ டுசாவாக் 6 கவலை மாக்கட்டிப் பேதை 7 யூரே. (எ-து) (1) தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறி வுறுத்தது. (2) உயிர் செல வேற்று வரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉமாம். (வி) தழையுடை அணிந்த பெரிய அல்குல் தனியே தாங்க லாற்றாது நடுவே நுழைந்த சிறிய இடைக்குத் துன்பமாக அழகிய மெல்லிய மார்பு நிறையப் பருத்து முலைகள் இணைச்செப்புடன் எதிர்ந்தன. சிறுநுசுப்பு என்றதனாற் பெரிய அல்குல் என நினைந்தாளாம். பெரிய அல்குல் தாங்கலாற்றாதாகவும் சிறு நுசுப்பு நடுப்புக்குத் தாங் குவையோ என்று அதற்கு எவ்வமாக வீங்கு முலைகள் செப்புடன் எதிரின. செப்பு - வடிவுவமை. காதலன் உள் ளத்தை அடைத்து வைத்தலிற் செப்பென்பதுமாம். இந் நிலையில் வருந்திய சிறு நுசுப்பினை அணைத்து ஏந்தற்குரிய கொழுநனைச் சேர்க்கா தொழியின் எங்ஙன மாவள் பூங்குழை என்னும் அவலங்கொள் நெஞ்சுடன் பிறர் கவலை உசாவா மாக்கட்டு இப் பேதையூர் என்க. பருவமெய்திய கன்னியைத் தனியே மனைக்கண் வைத்து மூக்கவிடுதல் ஆகாதென்னும் மிருதியுணராமையாற் பேதையூர் என்றும், மாக்கட்டு என்றும் கூறினாள். அவலம் - பிறர் வருத்தங் கண்டு தாமும் அவலித்தல். யாங்காகுவள் என்றது உயிர் செல்லுதல் குறித்து நின்றது (இளம்பூரணர் தொல். களவு. 21). அல்குல் முழுதும் தாங்கல் செல்லாது நடுவில் நுழை சிறுநுசுப்பிற்கு என்க. கவலை உசாவா மாக்கட்டு - கவலையை வினவியறியாத மாக்களை யுடையது. முலை செப்புடனெதிரின. இவற்றை ஞெமுக்குதற் குரியவன் இல்லையாயிற் பூங்குழை எப்படியாவள் என்க. உசாவுதல் கேட்காத காதிலிட்ட குழைகளும் பாரமாதல் குறிப்பு. மதுரை மருதன் இளநாகனார் 160. நெருப்பி னன்ன செந்தலை யன்றில் 1 இறவி 2 னன்ன கொடுவாய்ப் பெடையொடு 3 தடவி னோங்குசினைக் 4 கட்சியிற் பிரிந்தோர் கையற நரலு நள்ளென் யாமத்துப் பெருந்தண் வாடையும் வாரார் இஃதோ தோழிநங் காதலர் வரைவே.5 (எ-து) வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கித் தோழி வரைவரென ஆற்றுவிப்புழித் தலைமகள் கூறியது. (வி) செந்தலையன்றில் பெடையொடு கூட்டினுள் ளிருந்தும் புணராமையின் பிரிந்தோர் செயலற வருந்திக் கதறும் நள்ளென் யாமத்து என்க. ஆணும் பெண்ணும் ஒரு கூட்டிருந்தும் இரவில் அன்றில் புணராது உயங்கல், கடவுண் மரத்த முண்மிடை குடம்பைச், சேவலொடு புணராச் சிறுகரும் பேடை, யின்னா துயங்குங் கங்குலும் (அகம். 270) என வருதலான் அறிக. இதனான் அன்றே புகழேந்தியார், செவ்வாய அன்றில் துணை யிழப்பச் சென்றடைந்தான், வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு (நளவெண்பா 104 :3) என்றாரென்க. இது சக்கரவாகம் போற் பகற்புணர் புள்ளென்க. துணையுடன் உடனுறையும் பொழுதும் நரலுதல் புணர்தலாகாமையான் உயங்கி ஒலித்தவாகவே கொள்க. ஒரு குடம்பையின் துணைமையில் உள்ளபோது இரவு பற்றிப் புணர்ச்சி நிகழாமையின் உயவுக்குரல் செய்யும் என்றுணர்க. இவ்வுண்மையை, “நண்படைந்த, சேவலுந் தன்னருகிற் சேக்குமா லென்கொலோ, பூந்தலை யன்றில் புலம்பு (ஐந்திணை ஐம்பது 41) என்பதனானறிக. பெண்ணை மேல் பின்னும் அவ்வன்றிற் பெடைவாய்ச் சிறு குரலுக்கு (பெரிய திருமடல், 45) என்பதுமது. மகிழ்ந்தொலித்தலாக நினையற்க. இதனானன்றே, மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத், துணைபுண ரன்றி லுயவுக்குரல் கேட்டொறும் என்றார் நற்றிணையினும் (303). ஈண்டு உயவுக்குரல் கூறுதலான் துணைபுணரன்றில் என்பதற்கு இரட்டையாய்ச் சேர்ந்துள்ள அன்றில் என்று பொருள் கொள்க. அன்றிலொரு கண்துயின்றொரு கண்ணார்வத்தாற்றன் துணைமேல் வைத் துறங்கும் என்றது கண்டுண்மையுணர்க. நரலுதல் - வருந்தி ஒலித்தற்காதல், புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை, யிலங்குபூங் கரும்பி னேர்கழை யிருந்த, வெண்குருகு நரல வீசும், நுண்பஃ றுவலைய தண்பனி நாளே (அகம். 13) என்பதனானும், ஆண்டுப் பழைய உரைகாரர், நரல கதற எனப் பொருள் கூறியதனானும் உணர்க. பெய்பனி நலிய உய்தல் செல்லாது, குருகின் நரலும் (ஐங்குறுநூறு. 457) என வந்தது காண்க. புணரன்றில் என்னும் வழக்கு கிரௌஞ்சமிதுனம் என்பது போன்றது. எப்போது மிரட்டையாகவே இருக்கு மென்க. ஒன்றில் காலை அன்றில் போல (நற். 124) என்பதனா னறிக. வாடையும் - வாடையினும். வாரார் இஃதோ தோழி நங்காதலர் வரைவே - இவ் வாராமையோ நங்காதலர் வரைதற்குக் காரணமாவது. வரைவரென ஆற்றுவிப்புழிக் கூறியதாதலின் வரைதற்குக் காரணமாவதோ வாராமை என்று வினவினாள். வரைதற்குரிய பொருள்களைத் தேடித் தொகுத்தலான் வரத் தாழ்த்தனரெனத் தோழி கூறியதனால் இங்ஙனம் கூறினாள். வாடையும் வாராமையால், நம்முயிர் தேயச் செய்யும் இஃதோ காதலர் வரைவு என்பது என்றாளெனினுமையும். தடவின் ஓங்கு சினைக் கட்சி - தடாமரத்தின் ஓல்கிய கிளையிற் கூடு. துணையுடனிருந்தே நரலுதல் துணை பிரிந்தோர் செயலறுதற்கு ஏதுவாயிற்று. இறவு - முடங்கிறவு என்றதனால் அதனை வளைந்த வாய்ப் பேடை என்றார். நக்கீரர் 161. பொழுது மெல்லின்று பெயலு மோவாது கழுதுகண் பனிப்ப வீசு மதன்றலைப் 1 புலிப்பற் றாலிப் புதல்வற் 2 புல்லி அன்னா 3 வென்னு மன்னையு மன்னோ என்மலைந் தனன்கொ றானே தன்மலை 4 ஆர நாறு மார்பினன் மாரி யானையின் வந்துநின் றனனே. 5 (எ-து) இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்பு மிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றை ஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லு வாளாய்ச் சொல்லியது. (வி) பொழுதும் எல்லின்று - பொழுதுமிருண்டது. இருளிற்றிரிதற்குரிய கழுதுகளும் கண்பனிப்பப் பெயலும் ஓவாது வீசும். அதற்குமேல் அன்னையும் புதல்வனைப் புல்லி என்னை அன்னா என அழைக்கும். இத்தனையும் உளவாகவும் தன்மலை ஆர நாறு மார்பினன் மாரி யானையின் வந்து நின்றனன். என்ன காரியம் மேற்கொண்டு வந்தானோ என்க. எல்லின்று என்றது வழியறிந்தியங்குதற்கு அரியது குறித்தது. பெயலும் வீசும் என்றது இயங்குதற்குத் தடை குறித்தது. அத் தடை கருதாது வந்துழியும் தன்னை எய்தப் பெறாமைக்கு ஏதுவாக அன்னையும் அன்னா என அழைக்கும் என்றாள். புதல்வற் புல்லி என்றது புதல்வனைப் புல்லியதனால் என்னை அழைத்து யான் உடன்கிடப்பதை அறிந்து கொள்வாளாயினள். அங்ஙனம் புல்லாமையின் என்னையே புல்லிக்கொள்வள் என்று கருதியதாம். இத்தனை யிடையீட்டினும் மாரியானையின் வந்து நின்றனன் என்ன காரிய மேற்கொண்டானோ என்றது, இக் களவின் இடையீடு பலவுங் கருதி உடன் கொண்டு செல்ல மேற் கொண்டானோ என்றவாறு. பெயலோவாது வீசவும் வந்து நிற்றலான் மாரி யானையின் என்றாள். வந்து நின்றனன் என்றாள், இருளினும் பெயலினும் வருதலும் அன்னா என அன்னை அழைப்பது கேட்டபின் நிற்றலும் அருமை என்பது குறித்து. இவற்றான் என் மலைந்தனன் கொல் என்றாள். இத்தனையும் யான் பொய்த்துயில் கொண்டு மடிந்து கிடக்க நேர்ந்ததனால் அறிந்தும், அவன் குறியிற்புக இயலகிலேன் என்றாளாம். இது துஞ்சிச் சேர்தல் என்னும் மெய்ப்பாட்டிற்கு உதாரணமாதல் காண்க (தொல்.மெய்ப். 23, பேரா.). ஆரநாறு மார்பினன் என்றது அவர் மார்பு துய்க்க இயலாத யான் அம் மார்பின் ஆரநாற்றந் துய்த்துக் கிடந்தேன் என்றதாம். பிடிபுக்கிருக்குஞ் சோலையில் மழையினனைந்து அது வரவு கருதி நிற்கும் யானையை உவமித்தாள் என்பதாம். அன்னை நறு நாற்றத்தை யுணர்ந்து இஃதோரணங் கென்று புதல்வனைப் புல்லி என்னையும் அன்னா என அழைத்தனள் என்பதாம். “நீவரின், மணங் கமழ் நாற்றத்த மலைநின்று பலி பெறூஉம், அணங்கென வஞ்சுவர் சிறுகுடியோரே (குறிஞ்சிக் கலி 16) என்றது காண்க. ஆரநாறு மார்பினை, வாரற்க தில்ல வருகுவள் யாயே (198) என்பது காண்க. இது செவிலி களவினாற்றல் என்பர் நச்சினார்க்கினியர் (தொல்.களவு. 24). இனித் தொல்காப்பியனார் தலைவன் களவிற் றேரும், யானையும், குதிரையும், பிறவும் ஊர்ந்து இயங்குதல் (தொல். பொருளியல் 18) கூறுதலான் அதற்கியைய மாரியானையின் வந்து நின்றனன் என்றது மழைபோல் இருண்ட யானை யினால் நெறி வந்து ஈண்டு நின்றனன் என்பதும் ஒன்று. கருவூர்ப் பவித்திரனார் 162. கார்புறந் 1 தந்த நீருடை வியன்புலத்துப் 2 பலர்புகு தரூஉம் 3 புல்லென் மாலை முல்லை வாழியோ முல்லை நீநின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை நகுவை 1 போலக் காட்டல் தகுமோ மற்றிது தமியோர் மாட்டே. (எ-து) வினைமுற்றி மீளுந் தலைமகன் முல்லைக்குரைப் பானாய் உரைத்தது. (வி) கார்புறந்தந்த நீருடை வியன்புலம் - ஆறுகள் புரக்கும் மருதம் போலாது மேகம் அளித்த நீரே உடையதென்று குறித்தான். புலத்துப் பலர் புகுதரூஉம் மாலை - புலத்தினின்று பலர் ஊர் புகுதரும் மாலைப் பொழுதில். புல்லென் மாலை - ஒளி மழுங்கிய மாலை. முல்லை நீ பலர் புகு மாலையில் நின் வெண்முகைகளாற் சிறு முறுவல் கொண்டனை. அங்ஙனம் கொண்ட நீ தமியேன் மாட்டு நகுவை போல் இது காட்டல் தகுமோ என்க. கற்படையாளமாக நின்னைப் பேணும் மகளிர்க்குக் காலத்திற் பற்றுக் கோடாகாத தமியர்மாட்டு நகுவைபோல இவ்வாறு அரும்பவிழ்ந்து காட்டல் நின் கற்படையாளத் திற்குத் தகுமோ என்க. முல்லை முறை நிகழ்வு காட்ட என வரும் பரிபாடற் பகுதிக்குப் (15 : 39) பரிமேலழகர், முல்லை கற்பு நிகழ்ச்சியைக் காட்ட என எழுதியது காண்க. தமி யோரைக் கண்டால் இரங்குவதல்லது நகுதல் தகுமோ என்றவாறு. முல்லையைப் பெண்ணாக விளிப்பது முல்லைப்பிராட்டி (நாச்சியார் திருமொழி 10:4) என்பதனான் உணர்க. இனிக் கார்புறந்தந்த முல்லை யாதலால் நீ அக் காரினைத் தரவல்ல கற்புடையாட்டியரைக் காலத்திற் றனித்துவிட்டு, அவர்க்குப் பற்றுக்கோடாகாதார் மாட்டுத் தமியராயினாரை முகையின் முறுவல் கொண்டனையாய் நகுவை போல இது காட்டல் தகுமோ? நேரே நக்கு இகழ்ந்து பழித்தலும் தகும் என்றானாகக் கொள்ளினும் அமையும். கற்படையாளமாக நன்மகளிர் வளர்க்கும் இயல்பினால் முல்லை நகுதற்கு இயைபுண்டென நினைந்தானாம். பலர் புகுதரு மாலை என்றது பலரும் புகத் தலைவன் தாழ்த்து வருதலைக் குறிப்பானுணர்த்திற்று. அருமழை தரல் வேண்டிற் றருகிற்கும் பெருமையளே (குறிஞ்சிக்கலி 3) என்பதனான் கார் கற்புடையாட்டி தருவதாதலுணர்க. அம்மூவனார் 163. யாரணங் குற்றனை கடலே பூழியர் 1 சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன மீனார் குருகின் கானலம் பெருந்துறை வெள்வீத் 2 தாழை 3 திரையலை நள்ளென் கங்குலுங் கேட்குநின் 4 குரலே. (எ-து) தன்னுட் கையாறெய்திடு கிளவி. (வி) பெருந்துறையில் நின் புலவு கடியும் மணமிக்க வெள்ளிய பூக்களையுடைய தாழைகளைத் திரையால் அலைக்கின்ற நின் குரல் நள்ளென் கங்குலுங் கேட்கும். யாரால் வருத்தமெய்தினை என்க. திரையலை நின்குரல் என்க. தன் தீது மாற்றியுதவுந் தாழையை அலைத்தலாற் செய்வதறியாமை குறித்தாள். “தாழை...... வயிறுடைப்போது வாலிதின் விரீஇப், புலவுப் பொருதழித்த பூநாறு பரப்பின், இலர் திரை (அகம். 130) என்புழித் தாழைப்பூப் புலவுக்கடித லுணர்க. கங்குலும் கேட்கு நின் குரலென்றது ஊரெல்லாந் துயிலுங் கங்குலினும் நீ துயிலா தரற்றுங் குரல் கேட்டல் குறித்தாள். கேட்கும் என்றதனால் தலைவி தானும் துயிலாது கேட்டிருத்தல் புலப்படுத்தினாள். தன்னைப் போலத் துஞ்சாது தன் களவினை மறைத்துத் தனக்கினியது செய்யுந் தோழியையும் அலைத்துக் கரைதலால் யாரணங்குற்றுனை என்றாள். “மாக்கடலே, என் போலத் துஞ்சா யிதுசெய்தார் யாருரையாய், என்போலுந் துன்ப நினக்கு (திணைமாலை நூற்றைம்பது 38). இது தன்னுறு துயரங் கடன்மேல் வைத்துக் கூறியதாகும். கடலைப் பெண்பாலாகக் கூறுதல் தமிழ் வழக்கு. ஆழி நங்காய் என்பது நாச்சியார் திருமொழி. பூழியர் - பூழி நாட்டார். சிறுதலை வெள்ளைத்தோடு - சிறிய தலையையுடைய வெள்யாட்டின் தொகுதி. வெள்ளை நால் செவிக் கிடாஅய் (அகம். 156) என வரும். தரையில் புல்லார் வெள்ளைத்தோடு பரந்தன்ன திரையின் மீனார் குருகுகளின் தொகுதியையுடைய கழிச்சோலை என்க. பூழிநாடு புல்லுடைவியன் புலம் உடையதாதலின் அந் நாட்டார்க்கு வெள்ளைத்தோடு மிகுதி கூறினார் (பதிற். 21). அலை - அலைத்தல். புலம்பலைக் கலங்கி (86) என்புழிப் போல. மீனார் குருகின் கானலம் பெருந்துறை என்றது தன்னைப் போலப் பல்லோரை விருந்தூட்டும் பெருஞ்செல்வமுடைமை குறித்தவாறாம். மாங்குடி மருதனார் 164. கணை க்கோட்டு 1 வாளைக் கமஞ்சூன் மடநாகு துணர்த்தேக் 2 கொக்கின் றீம்பழங் கதூஉம் தொன்றுமுதிர் வேளிர் 3 குன்றூர்க் குணாது தண்பெரும் பவ்வ 4 மணங்குக தோழி மனையோண் மடமையிற் புலக்கும் அனையே மகிழ்நற்கியா மாயின மெனினே. (எ-து) காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது. (வி) கணைக்கோட்டு வாளை - திரட்சியுள்ள கொம்பினை யுடைய வாளை மீன் சாதி. கமஞ்சூன் மடநாகு - நிறையுள்ள கருவினையுடைய இளநாகு. நாகு - தலையீற்றுப் பெட்டை. துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம் - தேமாமரத்தின் கொத்திலுள்ள இனிய கனியைப் பற்றிக் கொள்ளும். நாகு நீரிலிருந்தபடியே தேக்கொக்கின் துணர்த் தீம்பழம் கதுவும் என்றது, தேமாவின் கிளை நீர்தோய நீண்டு படிந்தது பற்றி என்றுணர்க. நீடிய மரத்த கோடுதோய் மலிர் நிறை (99) என்பது காண்க. துள்ளிக் கொள்வன தூங்கிய மாங்கனி (கம்ப. பாலகாண்டம், நாட்டுப். 33) என்று கம்ப நாடர் கூறியது. இக் கருத்தே பற்றியது. ஈண்டுத் துள்ளி - பெண்யாமை. பைந்துணர் நெடுமரக்கொக்கின் நறுவடி (பெரும்பாண் 308-309) என்புழி நச்சினார்க்கினியர். பைந்துணர் நறுவடி என இயைத்துப் பொருள் கூறுதல் காண்க. வாளைநாகு பழங்கதூஉம் குன்றூர் என்க. பழையமை யாய் அறிவுச் சுற்றங்களில் முதிர்ந்த வேள் குலத்தவருடைய குன்றூர். தொன்றுமுதிர் வேளிர் குன்றூர் (நற். 280) என்பது போலக் கொள்க. குன்றூர் இப்போதும் அறந் தாங்கிச் சேகரத்துள்ளது. குன்றூர்க்குணாது கடல் என்ற தனால் இது கீழ்கடல் என்றுணர்க. தண்பெரும் பவ்வம் - குளிர் பெருங்கடல். அணங்குக - வருத்துக. மனையாட்டி அறியாமையாற் புலத்தற்குக் காரணமாகும் அத்தன்மையேம் அவன் மகிழ் தற்கு யாம் ஆயினம் என்னின் பௌவம் எம்மை அணங்குக என்றவாறு. அவன் மகிழ்தற்கு மடமையிற் புலக்கும் மனையோள் யனையேம் ஆயினம் என்னின் அணங்குக என்பதுமாம். உருகெழு தெய்வம், புனையிருங் கதுப்பி னீவெய் யோள்வயின், அனையே னாயி னணங்குக என்னென (அகம். 166) என வருவது கொண்டுணர்க. பவ்வம் - கடற்றுறைத் தெய்வம், அந்தி யணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி (அகம். 240) எனவும், அங்குடை முந்நீர் (அகம். 207) எனவும் அணங்குடைப் பனித்துறைத் தொண்டி (ஐங். 174) எனவும் வருவன கொண்டு தெளிக. பெருங்கடற் றெய்வம் என வருங்கலியுள் (131) கடலாகிய தெய்வம் என்பர் நச்சினார்க்கினியர். இனித் தீது போக ஆடுங்கடல் எம்மை வருத்துவதாக என்றாளென்பதும் ஒன்று. தீது போகக் கடலாடியும் (பட்டினப்பாலை 99) நீண்டதோள் மால்கிடந்த நீள்கடனீ ராடுவான், பூண்டநா ளெல்லாம் புகும் (இயற்பா - மூன்றாம் திருவந்தாதி 69) என்பது காண்க. மனையோள் என்றது பரத்தை தான் கிருகணீபதம் பெறாமை குறித்தது. யாண ரூரநின் மாணிழை மகளிரை, எம்மனைத் தந்து நீ தழீஇயினும் அவர் தம், புன்மனத் துண்மையோ வரிதேயவரும், பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து. நன்றி சான்ற கற்பொடெம் பாடாத லதனினு மரிதே (நற். 330) என்பதனால் பரத்தையர் எத்துணைப் பாராட்டுப் பெற்றாலும் கிருகணியாத லில்லாமை துணிக. நின்காதலி எம்போற், புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து, நெல்லுடை நெடுநகர் நின்னின் றுறைய, என்ன கடத்தளோ (அகம். 176) என்பதும் இக் கருத்தையே உட்கொண்டு கூறியதாகும். பரணர் 165. மகிழ்ந்ததன் றலையு நறவுண் டாங்கு விழைந்ததன் 1 றலையு நீவெய் துற்றனை அருங்கரை 2 நின்ற வுப்பொய் 3 சகடம் பெரும்பெய 4 றலையவீந் 5 தாங்கிவள் 6 இரும்பல் கூந்த லியலணி 7 கண்டே. (எ-து) பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பெயர்த்தும் கூடலுறு நெஞ்சிற்குச் சொல்லியது. (வி) உப்பு ஒய் சகடம் : சகடம் ஒய் உப்பு - சகடம் கொண்டு செலுத்தும் உப்பு. பெரும்பெயல் தலைய வீந்தாங்கு - பெருமழை பொழிய அழிந்தாற் போல, இவள் இரும்பல் கூந்தல் இயலணி கண்டு அழிந்து. நறவு மகிழ்ந்ததன்றலையும் உண்டாங்கு - நறவினையுண்டு அறிவு அழிந்ததன்மேலும் அதனைக் கண்டு உண்டாற் போல, நீ விழைந்ததன் மேலும் வெம்மையுற்றனை என்க. நீ விழைந்தன்றலையுமென்றது. அவள் விழையாது மறுத்தலை அருத்தாபத்தியாற் குறித்ததாம். இனி அதன்றலையும் விழைந்து வெய்துற்றனை எனக் கொண்டு, அதன் றலையுமென்பது அவ்வாறு மறுக்கப்பட்டதன் மேலும் என்றதாம் எனினும் பொருந்தும். வெய்துறல் - தாகித்தல். பச்சூன் கொள்ளை மாந்தி வெய்துற்றுத், தேர்திகழ் வறும்புலந் துழைஇ நீர் நயந்து (நற். 352) என்பது காண்க. அருங்கரை நின்ற சகடம் - ஏறற்கு அரிய கரையில் ஏற மாட்டாது நின்ற சகடம். சகடம் நிற்கவும் உப்பு உள்ளமாகவுங் கொள்க. கூந்தல் இயலணி கண்டு கூந்தலுடன் இயன்ற அழ கினைக் கண்டு. நின் அணிமாண் சிறுபுறங் காண்கங் சிறுநனி யேகென (அகம் 261 :7) கொடிச்சி செல்புற னோக்கி விடுத்த நெஞ்சம் (நற்றிணை 204 :11). இரும்பல் கூந்தல் - கரிய பலவாகிய கூந்தல். ஏறற்கரிய என்றது இவன் பெறுதற்கரிய நிலையின் இருப்பது குறித்தது. மகிழ்தல் - கள்ளுண்டு அறிவழிதல். களித்தல் உணர் வழியாதது; மகிழ்தல் அஃதழிந்தது (குறள். 1281) எனப் பரிமேலழகர் உரையால் அறிக. கள்ளுண்டு மயங்கினார் பின்னுங் கள்ளையே விரும்புதல், களித் தார்க்குக் கள்ளற்று (குறள். 1288) என்பதா லறிக. மழை தலைய வீந்தாங்கு - இயலணி மகிழ்ந்தாங்கு என்று கொள்க. கூடலூர் கிழார் 166. தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை நாரை நிரைபெயர்ந் 1 தயிரை யாரும் ஊரோ 2 நன்றுமன் 3 மாந்தை 4 ஒருதனி வைகிற் புலம்பா கின்றே. (எ-து) காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது. (வி) படுதிரை - ஒலிக்கின்ற அலைகள். பெயர்த்தலின் - இடம் பெயர்த்தலான். வெண்பறை நாரை நிரை பெயர்ந்து - பறத்தலையுடைய வெள்ளிய நாரை வரிசை ஆண்டுப் பெயர்ந்து சென்று. அயிரை ஆரும் - கடற்றிரை பெயர்ந்தேறி வடிந்த விடத்துப் பெயர்க்கப்பட்ட அயிரைகளை நாரைநிரை இடம் பெயர்ந்து அருந்தும் என்றவாறாம். நீர் பெயர்ந்து மாறிய செறி சேற் றள்ளல், நெய்த்தலைக் கொழுமீ னருந்த வினக்குருகு (நற். 291) என்பது காண்க. மாந்தை ஊரோ நன்று - அயிரை மீனருந்தும் மாந்தை என்னும் ஊரோ நன்று. மன் - மிகவும் பெரிதுதான். பல்லோர் நிறைந்த பேரூர்தா னென்றவாறு. ஒரு தனி வைகின் - யான் ஒருத்தி தலைவன் இல்லாது தனிமையிற் பொழுது கழிக்கின். புலம் பாகின்று - ஊரே ஒருவருமில்லாது தனிமையாயினது என்றவாறு. காதல ருழைய ராகப் பெரிதுவந்து, சாறு கொளூரிற் புகல்வேன்மன்ற, அத்த நண்ணிய வங்குடிச் சீறூர், மக்கள் போகிய வணிலாடு முன்றிற், புலப்பில் போலப் புல்லென், றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே (41) என்பது போல வந்தது. நாரை அயிரை ஆர்தலால் துப்புரவிற் குறையாமை குறித்தாள். நாரை நிரைபொத் தயிரை ஆரும் என்பது பாடமாயின், நிரைபு ஒத்து ஆரும் - நாரைத்து ஒத்து ஆரும் என்க. மாந்தை - மாந்தரன் ஊர் என்பது மருவிற்று. இது பாடிய கூடலூர்கிழார் மாந்தரனைப் பாடியவர் என்பது 229 ஆம் புறப்பாட்டானறிக. இவன் வேண்ட ஐங்குறுநூறு தொகுத்தவரும் இவரேயாதல் காண்க. மல்லனீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினுஞ், சொல்லவே வேண்டும் நம்குறை (முத்தொள்ளாயிரம் 95) என்னும் அடிகளா னிவ்வூர் மரந்தை யாகாமை தெளிக. கூடலூர் கிழார் 167. முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் 1 குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத் 2 தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே. (எ-து) கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க் குரைத்தது. (வி) கழுவுறு கலிங்கம் - கழுவற்கு உற்ற உடையை; அழுக்குற்ற உடையை. கழாஅதுடீஇ - உடம்பு கழுவாமல் உடுத்தி. முளிதயிர் பிசைந்த காந்தண் மென்விரலாற் றீம்புளித் துழாவிக் குவளையுண்கண் குய்ப்புகை கழுமத் தான் அட்ட பாகர் என்க. முளிதயிர் - பால் நன்கு காய்ந்த தயிர். தீம்புளி - இனிமை தராததற்கு இனிமை தரும்புளி. பாகர் - பாகல் போலி. மெல்விரல் துழந்து அட்ட என்க. பிசைந்த மெல்விரல் கழாஅ கடீஇ என்பதூஉமாம். உமாம் உடம்பு குளியாதது, உடை கழுவாதது, விரல் முளிதயிர் பிசைந்தன. அவற்றா லுற்றுழந்தது தீம்புளி. இந் நிலையிற் கண்கள் குய்ப்புகை கழும அட்டது கைப்புடையதாய பாகல். இத்துணையானும் இனிதெனற்கு ஏது இல்லாமையே காட்டினாள். பாகல் கணவன் உண்டலின் இனிது என - பாகற் காய்க் கறியைக் கணவன் உண்டற்கண் இனிது என்று சொன்ன வளவில். ஒண்ணுதல் முகன் நுண்ணிதின் மகிழ்ந்தன்று - ஒள்ளிய நெற்றியையுடைய தலைவி முகம் நுணுகிப் பயின்றாரன்றிப் பிறர் காணப்படாத தன்மையின் மகிழ்ந்தது என்றவாறு. பாகர் இனிதென என்றது இனியதல்லாதது பாகல் என்பது குறித்ததாம். இது நகுநயம் மறைத்தலாதலின், நுண்ணிதின் மகிழ்ந்தன்று என்றார். நுண்ணியரெங் காத லவர் (குறள். 1126) என்புழிப் போல வந்தது. இப் பாட்டிற் காந்தண் மெல்விரல், குவளையுண்கண், ஒண்ணுதல் முதலியனவெல்லாம் இயற்கையின் இனிமையவாதலான் செயற்கையின் அட்ட பாகலும் பிறவும் இனிமைய அல்லன ஆகவும் கணவன் தன் அன்பினால் புனைந்துரை கூறுதல் கண்டுணர்க. இனிதென மகிழ்ந்தன்று என்க. ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது, வானோ ரமுதம் புரையுமா லெமக்கென (தொல். கற்பு. 5) என்னும் ஆசிரியர் கருத்தொடு வைத்துக் காண்க. ஈண்டு அமுதத்தின் ஏனது நஞ்சு என்று பொருள் கொள்ளுதல் கண்டு இப் பாட்டில் இனிதின் வேறாயது பாகர் என்பது துணியலாம். இக் கருத்தொடு பொருந்தவே, வேம்பின் பைங்காயென் தோழி தரினே, தீம்பூங் கட்டி யென்றனிர் (196) என்புழிக் கைப்பது கட்டியாய்க் கூறுதல் காண்க. தாளிப்புப் பெய்தலிற் பதம் பார்த்தலால் கண் குய்ப்புகை கழும என்றாள். கழும - நெருங்க. நீ கை தொட்டது என்றதற் கியைய விரற்றீம்புளி துழந்தட்ட வென்றார். ஏனது சுவைப்பினு மென்றதற்கியைய பாகர் என்றார். அமுதம் புரையுமாலென என்றதற்கியைய இனிதென என்றார். பாகற்கறிக்குப் புளியிடுதல் வழக்கேயாம். பல்வே றுருவிற் காய் (மதுரைக்காஞ்சி 529) என்று பாகற்காய், வாழைக்காய், வழுதுணங்காய் முதலியவற்றைக் கறி வகைக்குக் கூறுதல் காண்க. மெல்விரல் சேப்ப, வாழை யீர்ந்தடி வல்லிதின் வகைஇப், புகையுண் டமர்த்த கண்ணள் (நற். 120) என்புழி வாழைக்காய்க்கறி வந்தது. பாகர் - பாகு என்பதன் போலியாகக் கொண்டு தீம்புளிக் குழம்பு என்பாருமுளர். ஏற்பது கொள்க. குய்ப்புகை கமழ என்பதும் பாடம். அரிவை நெய்துழந்தட்ட, விளரூ னம்புகை யெறிந்த நெற்றி (நற். 41) என்பது போல ஊனுணவு கூறாமையால் இவள் பார்ப்பனி என்ப. சிறைக்குடியாந்தையார் 168. மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை இரும்பனம் பசுங்குடைப் 1 பலவுடன் பொதிந்து பெரும்பெயல் 2 விடியல் விரித்துவிட் டன்ன நறுந்தண் ணியளே நன்மா மேனி புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள் 3 மணத்தலுந் 4 தணத்தலு மிலமே பிரியின் வாழ்த லதனினு மிலமே. (எ-து) பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. (வி) மாரிப்பித்திகத்து - கார்ப்பருவத்துப் பிச்சியின்; மாரிப் பித்திகம் ஆதலால் நீர்வார் கொழுமுகை என்றார். கொழுமுகை பலவுடன் இரும்பனம் பசுங்குடைப் பொதிந்து - கொழுவிய அரும்புகள் பலவற்றைக் கரிய பனையின் பசிய ஓலையால் கோலிய கலத்தில் வைத்து மூடி. பெரிய மழை பெய்த விடியற் காலையில் அக் குடைக்கலத்தை விரித்துவிட்டாலொத்த நறுமையும் தட்பமுமுடையவள் நல்ல மாமையுடைய மேனியின்கண் என்றவாறு. புனற்புணை யன்னதோள் - புனல் விளையாடற் கிட்ட புணையொத்த தோள்கள் என்றது, இன்ப விளையாட்டிற்கு இன்றியமையாமையும் விடற்கு வொண்ணாமையுங் குறித்ததாம். சாயிறைப் பணைத்தோள் - வளைந்த இறைகளையுடைய மூங்கிலின் மென்மையுடைய தோள்கள். தோள் மணத்தலும் - தோள்களைப் புணர்ந்தவ ளவினும், தணத்தலுமிலம் - அச்சேர்க்கையினின்று நீங்குவது மில்லேம். கழுமு சேக்கையுட் காலையு மாலையும், தழுவு காதற் றணப்பில ரென்பவே (சிந்தா. 1350) என்பதனால் சேக்கை தணவாமையுணரலாம். அத்தகைய யாம் பிரியின் உயிர் வாழ்தல் என்பது அத் தணத்தலின்மையினுமிக இல்லேன் என்றான் என்க. மணத்தலுமென்பது உம்மீற்று வினையெச்சம்; புணர்ந்த அணிமை குறித்து நின்றது. புணர்ச்சி நடக்கலும் (குறிஞ்சிக்கலி.3) என்புழிப் போல தணத்தலுமிலம் என்ற உம்மை புணர்ந்த உடன் புணர்தலில்லாமையைத் தழீஇயது என்க. புணர்ந்த பின்னர் புணர்ச்சியிலரேனும் தணத்தலுமிலம் என்றவாறு. தோளைத் தணவாது அவற்றிற்றுயில் கொள்வேம் என்பது கருத்து. தணத்தற்கருமை தெரிய புனற்புணையை உவமித்தான். ஓரிரவிற் பிறிது சேக்கையின் உயிர் வாழ்வேம் எனினும், அத்தணத்தலு மிலமாகியயாம் சேய்மைக் கண்ணாகலின் உயிர் வாழ்தலிலேம் என்றான். புணர்தற்குரிய சேக்கை யொன்றும் புணர்ந்த பின்னர்த் தணந்து துயிலற்குரிய சேர்க்கைகள் இரண்டும் என்ற மூன்று சேக்கைகள் உண்மை ஐந்து மூன்றுடுக்கப்பட்ட வமளி (சிந்தா. 838) என்புழி நச்சினார்க்கினியர் உரைத்தது கொண்டுணர்க. பிரிய வொணாக் காதல் மிகுதியால். பல்பூஞ் சேக்கையிற் பகலு நீங்கார், மனைவயி னிருப்பவர் மன்னே (அகம்.389) என்பதனான் இவ்வுண்மையுணர்க. அதனினுமிலமே என்புழி அதனினும் என்பது மேலே கூறிய அரிய தொன்றனையே எல்லையாகச் சுட்டியதென்பது தெள்ளியது. வியத்தலு மிலமே... ... இகழ்தல் அதனினு மிலமே (புறம் 192) என்பதனான் உணர்க. வெள்ளிவீதியார் 169. சுரஞ்செல் யானைக் 1 கல்லுறு கோட்டிற் றெற்றென விறீஇயரோ வைய மற்றியாம் 2 நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே பாணர் பசுமீன் சொரிந்த மண்டைபோல 3 எமக்கும் 4 பெரும்புல வாகி நும்மும் பெறேஎ மிறீஇயரெம் முயிரே. 5 (எ-து) (1) கற்புக் காலத்துத் தெளிவிடை விலங்கியது. (2) இனி, தோழி வரைவு நீட்டித்த வழி வரைவு கடாயதூஉமாம். (வி) கல்லுறு கோட்டின் - கல்லையுற்ற கொம்பு போல. சுரஞ்செல் யானையாதலால் ஆண்டு நீர் கிடையாது. மழைக் காலத்தில் நீர்க்கசிவுள்ள பாறைகளைக் கோடையிற் கண்டு நீர் காண வேண்டித் தன் கொம்பாற்குத்த அக் கொம்பு முறிவதைக் குறித்தாள். கல்லூற் றீண்டல கயனற வாங்கி, யிரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர் நொண்டு, பெருங்கை யானை பிடியெதி ரோடுங் கானம் (நற். 186) என்பது கொண்டு உய்த்துணர்க. பசையற்ற கல்லோடுற்ற கோடு போல அன்பற்ற நும்மொடு நக்க எயிறு இறீஇயர் என்றாள். மலைக்குத்து மால்யானை என்பது திருவள்ளுவ மாலை (11). நும்மொடு நக்க - நீ நக்குக் கூறியன மெய்யென்று நம்பி நக்க என்றவாறு. இறீஇயர் - இற்று அழிக. வால்வெள் எயிறு - தூய வெள்ளிய பற்கள். நும்மொடு நக்க எயிறு - நின் வறிதகத்தெழுந்த வாயல் முறுவலுடன் நக்க எயிறு என்க. இது தலைவனை நோக்கி நகை செய்யத் தான் நகுநயம் மறைத்துழி (தொல். மெய்ப். 13. பேரா.) தலைவன் நகை மறைக்கின்றானெனக் கண்டதாதலின் நும்மொடு நக்க என்றாள். இது கற்பிடத்துத் தலைவி கூற்றாகக் கொள்வதே பேராசிரியர் கருத்து, நச்சினார்க்கினிய ரிதனைக் களவிடத்துத் தோழி கூற்றாகக் கொள்வர் (தொல்.களவு. 23). அங்ஙனமாயின் `நும்மும் பெறேஎம் என்பது நும்மையும் வதுவையிற் பெற்றிலேம் என்பதாகக் கொள்க. நீவிர் கூறியவதனையே மெய்யெனக் கொண்டு மகிழ்ந்து நக்க என் வெள்ளெயிறு இறீஇயர் என்றாள் என்ப (தொல்.மெய்ப். 84 பேரா.). நும்மொடு - உள்ளத்தோடு பிற ஆதலும், நகையொடு என்பதும் ஒன்று. பாணர் - மீன் வலைஞர். மீன் சீவும் பாண்சேரியும் (மதுரைக். 269). பசுமீன் சொரிந்த மண்டைபோல - பசுமீன்களை இட்டு வைத்து உகுத்த மட்கலம் போல, ஈண்டுச் சொரிதல் - புறத்து உகுத்தல். பாண் மகன், சின்மீன் சொரிந்து பன்னெற் பெறூஉம் (ஐங்குறு. 49) எனவும், நிதியஞ் சொரிந்த நீவி போலப், பாம்பூன் றேம்பும் (அகம். 313) எனவும் வருவன கண்டுணர்க. பசுமீன் சொரிந்த மண்டை தேனிட்டுச் சொரிந்த மண்டை போலாது, தான்புலவு நாறி வெறுப்புச் செய்தலால், தன்கண் வேறொரு துப்புரவு இட்டு வைத்தற்கும் ஆகாமையால் தனக்கும் வெறுப்பைச் செய்து, தன் தலைவரையும் தழுவப் பெறாத உயிர்க்கு உவமையாக்கி னாள். எமக்கும் என்றது அவ் வுயிரையுடைமையால் எப்படியும் வெறாத தனக்கும் பெரும் புலவாதலைக் குறித்தது. யாக்கைக் குயிரேய்ந் தன்ன நட்பாதலான் (அகம். 339). நும்மும் பெறேம் என்றது நும்மையு மியையப் பெறேம் ஆயினேன் என்றாள். பெறேம் ஆதலால் என் வீணான உயிர் இற்றொழிக என்றாளாம். எயிறு இறீஇயர், உயிர் இறீஇயர் என்றலால் உடம்பையும் உயிரையும் வெறுத்தாளென்பதுமாம். எமக்கும் எனவும் தலைவி பெறேம் எனவும் பன்மையாற் கூறியது தோழியையு முளப்படுத்தி யென்க. மீனிட்டுச் சொரிந்த மண்டை பின்னும் மீனிடுவதற்கே ஆவது போல நீர் தொட்டவள் நீரே தொடுவதற்கு ஆவள் அல்லது வேறாகாள் என்றும், அங்ஙனம் நீவிர் எப்பொழுதும் தொட்டு இருத்தற்குரிய வரைவு இல்லையாயின் இவள் தன்னையே வெறுத்து உயிர் ஒழிக என்பாள் என்றும் தோழி கூறியதாகவும் கொள்ளலாம். கருவூர் கிழார் 170. பலருங் கூறுகவஃ தறியா தோரே அருவி தந்த நாட்குர லெருவை கயநா 1 டியானை கவள மாந்தும் மலைகெழு நாடன் கேண்மை தலைபோ காமைநற் 2 கறிந்தனென் 3 யானே. (எ-து) வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. (வி) அஃது அறியாதோர் பலருங் கூறுக என்க. கேண்மை யறியாதோர் பலரும் பிணி பிறிதாகக் கூறுக என்றவாறு. என்கட் பிணி பிறிதாகக் கூறுவர் (நற். 117) என்பதனான் அறிக. அஃது என்றது பின்னுள்ள கேண்மையினை. கோடையிற் கயநாடி யானைக்கு அருவிதந்த எருவை எதிர்ப்பட்டு அதனை அது கவளமாக மாந்தியது போல வேட்டம் புக்க தலைவற்குப் பால்வரை தெய்வத்தாற் றானெதிர்ப்பட்டுத் தன்னை அவன் துய்த்தற்கு ஆயது குறித்தாள். தலைவனை யானையாக்கித் தன்னை எருவை யாக்கியது அவன் உயர்வும் தன் பணிவும் கருதியதாம். கவள மாந்தும் என்றது அவன் பருகிய ஆர்வம் தெளிய நின்றது. யானை தழைகளைக் கையிற் சுருட்டி கவளமாக்கி உண்பது வழக்கம். தன்னை உணவாக்கியது தான் அவற்கு இன்றியமை யாமை பற்றி எனினும் அமையும். எருவை - கொறுக்கான் தட்டை என்பர் நச்சினார்க்கினியர் (குறிஞ்சிப்பாட்டு 68). நாட் குரல் எருவை - அப்போது உண்டாகிய பூங்கதிர் எருவை. இதனாற் றான் தருணீ என்பது குறித்தாள். நாடன் கேண்மை தலைபோகாமை - நாடன் நட்பு முதலின்று நீங்காமை. யானே நற்கறிந்தனென் - பிறரறிந்திலர் என்றவாறு. இதனா லிக்கேண்மை யறியாதார் பலரும் கூறுவன கூறுக என்றவாறு. கவளமாந்திய யானை பின்னும் அதனை வேண்டி வருவது போலப் பின்னும் தலைவன் வரும் என்பது குறித்தாள் என்பதூ உமாம். தலைபோகாமை - தலைநாள் தன்மையின் நீங்காமை எனினுமாம். தலைநாளன்ன பேணலின் (நற். 332) என வரூஉம். பூங்கணுருத்திரையார் 171. காணினி வாழி தோழி யாணர்க் கடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட மீன்வலை மாப்பட் டாஅங் கிதுமற் றெவனோ நொதுமலர் 1 தலையே. (எ-து) வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. (வி) யாணர்க் கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து - புதுவருவாயான கடிய புனலடைகின்ற கரையையுடைய நெடிய நீர் நிலையில். இட்ட மீன் வலையில் புதுப்புனல டையும் போது கயத்துள்ள மீன்கள் அப் புதுப்புனலில் ஏறிச் செல்லுதல் வழக்காதலால் கடும்புனலடைதல் கண்டு இட்ட வலையென்பது கருதிக் கூறினார். மீன் வலை மாப்பட்டாஅங்கு - உண்டற்குரிய மீனுக்கிட்ட வலை உண்டற்காகாத நீர்நாய் வந்து படுதற் காயினாற் போல. இது - இவ்வில்லம் நம் தலைவற்கு வருமிடன் ஆகாமல். நொது மலர்தலை எவனோ - அயலார் வருமிடமாதல் எப்படியோ என்றவாறு. மீன் வலையில் மாப்பட்டால் மீன் கிடையாத வருத்தமேயன்றி அம் மாவை விடுவிக்க வேண்டிய வருத்தமும் உண்டாயினாற் போலத் தலைவர் எய்தாத வருத்தத்துடன் இந்நொதுமலரை இங்கு நின்றகற்றும் வருத்தமும் உண்டாயதென்று குறித்துக் கூறினாள். தலைவி பிறவிலக்குவித்தது (நம்பி. அகப். 164) என்றது காண்க. அழாஅ தீமோ நொதுமலர் தலையே (நற். 13) என்க. கச்சிப்பேட்டு நன்னாகையார் 172. தாஅ 1 வஞ்சிறை நோப்பறை 2 வாவல் பழுமரம் படரும் 3 பையுண் மாலை எமிய மாக வீங்குத் துறந்தோர் தமிய 4 ராக வினியர் கொல்லோ 5 ஏழூர்ப் 6 பொதுவினைக் கோரூர் யாத்த உலைவாங்கு மிதிதோல் போலத் தலைவரம் பறியாது வருந்துமெந் நெஞ்சே 7. (எ-து) வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. (வி) தாஅ அம் சிறை - பரத்தலையுடைய அழகிய சிறை; என்றது இறகு இறகாக வமைக்கப்பட்ட சிறைகளின் வேறாய் ஒரு பரப்பாக உள்ள சிறை என்றவாறு. இது தோற்சிறை யாதல் உணர்க. தாஅ - பரத்தல். தாதுளி மறப்ப (நெடுநல் வாடை 185) என்பது காண்க. நோப்பறை வாவல் - வருத்தத்துடன் பறத்தலையுடைய வாவல். நோநொந் துறைவி (192) என வரும். `தா என்பதற்கு எதுகைத்தொடை காண்க. பழு மரம் - பழுத்த மரம். படரும் - எண்ணிச் செல்லும். பையுள்மாலை - வருத்தஞ் செய்யும் மாலைப் பொழுது. நல்லதும் வருத்தம் செய்வது பிரிவால். பகல்கரந்த பையுள் கூர் மாலை (புறப்பொருள் வெண்பாமாலை, பெருந்திணை 9) என்ப. பையுள் நல்யாழ் (அகம். 214) என்பது போன்றது. ஈங்கு எமியம் ஆக - இங்கே யாம் தமியமாகுக. துறந்தோர் - அகன்றோர். தமியராக - யாமில்லாது தனியராதலின். இனியர் கொல்லோ - இம் மாலையில் இனிமையுடையரோ. ஏழூர்வினைக்கு ஓரூர்ப் பொது யாத்த உலை என்க. யாத்த உலை - கட்டிய உலையில். வாங்கு மிதிதோல் - வலித்த முக்கும் துருத்தித்தோல், வாங்குதல் - வலித்தல். புலிக்குரன் மத்த மொலிப்ப வாங்கி, (பெரும்பாண். 156) என்ப. மிதித்தல் - அமுக்குதல், தோல்மிதியுலை (பெரும்பாண். 206 - 207) என்புழிக் காண்க. தலைவரம்பறியாது - முடிவெல்லை யறியாது. தலை வரம் பறியாத் தகைவரல் வாடையொடு (அகம். 275) என் புழிப் போல வந்தது. இடம் முடிவிற்காதல் புகலிடமில்லை (சிலம்பு. பக். 426) என்பதற்குச் சொல்லின் முடிவில்லை என உரைத்தது கொண்டுணர்க. யாம் எமியம் ஆக அது பற்றி எம் நெஞ்சம் வருந்தியது. துறந்தோர் தமியராக இனியர் கொல்லோ. அது பற்றித்தான் எம் நெஞ்சம் வருந்தும் என்றாள் என்க. எமியமாக எனப் பன்மை யாற் கூறுதற்கேற்ப எந்நெஞ்சே என்ற பாடமே கொள்க. இஃது அவர் நிலை, யறியுந மாயினன்று... ... அனைத்தாற் றோழி நம் தொல்வினைப் பயனே (அகம். 243) என்புழிப் போல வந்தது. “என், ஆய்நலந் தொலையினும் தொலைகவென்று, நோயிலராக நங்காதலர் (அகம். 115) என்புழிப் போல அவர் இனியராதல் வேண்டி இனியர்கொல் என்றாள் எனினும் அமையும். மதுரைகாஞ்சிப் புலவனார் 173. பொன்னே ராவிரைப் புதுமலர் மிடைந்த 1 பன்னூன் மாலைப் பனைபடு 2 கலிமாப் பூண்மணி கறங்க வேறி நாணட் 3 டழிபட 1ருண்ணோய் வழிவழி சிறப்ப இன்னள் 2 செய்த திதுவென முன்னின் றவள்பழி நுவலு மிவ்வூர் ஆங்குணர்ந் தமையினீங் கேகுமா 3 ருளெனே. 4 (எ-து) குறைமறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது. (வி) ஆவிரைப் பொன்னேர் புதுமலர் என்க. புதுமலர் மிடைந்த நூல்பன் மாலை - புதுமலர் நெருங்க வைத்த நூலிற் பன்மாலை. பூளை எருக்கு என்பு இவற்றைக் கோத்தணித லாற் பன்மாலை என்றான். பூளையாவிரை எருக்கொடு பிணித்து (கலித்தொகை 138) என்பணிந்து (182) எனவும் வருதலான் உணர்க. பனைபடுமா - பனையின் உண்டாய மடன்மா. கலிமா என்றது. ஊர் முழங்குதற்குக் காரணமாதல் குறித்து. நாண் அட்டு அழிபட ருண்ணோய் - அறிவை அழிக்கும் வருத்தத்தையுடைய உள்ளேயுள்ள காம நோய். வழிவழி சிறப்ப - ஊரும் வழியெல்லாம் சிறந்து காட்டலான். இது - மடன் மா ஊர்வதாகிய இஃது. இன்னள் செய்ததென அவள் முன்னின்று இவ்வூர் பழி நுவலும். ஆங்கு உணர்ந்தமையின் - அவ்வாறொன்று துணிந்தமையால். ஈங்கு ஏகுமாறுளென் - குறைமறுக்கப்பட்டு இவ்வாறு வறிதே செல்லுதற்கு உற்றுள்ளேன் என்றான் என்க. மடன்மா மேல் மன்றம் படர்வித்தவள் (கலித். 141) என்பது பற்றி இன்னள் செய்தது இது என ஊர்பழி நுவலும் என்றதாம். அவள் பழி - அவளுக்கு எய்தும் பழி என்பதூஉமாம். வெண்பூதியார் 174. பெயன்மழை துறந்த புலம்புறு 5 கடத்துக் கவைமுட் 6 கள்ளிக் காய்விடு கடுநொடி 7 துதைமென் 8 றூவித் துணைப்புற விரிக்கும் அத்த மரிய வென்னார் 9 நத்துறந்து பொருள்வயிற் பிரிவா 10 ராயினிவ் வுலகத்துப் பொருளே மன்ற பொருளே அருளே மன்ற வாருமில் லதுவே. (எ-து) பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (வி) பெயன்மழை - காலத்தில் எங்கும் பெய்தலையுடைய மழை. துறந்த - பெய்யாதொழிந்த. புலம்புறு கடத்து - தனிமையுற்ற பாலையில். கவைமுள் - கவைத்தமுள். குண்டைக் கோட்ட குறுமுட் கள்ளி (அகம். 184) என்பது காண்க. காய் விடு கடுநொடி - காய்கள் பற்றுவிடுதலான் ஆகிய கடிய ஓசை. துதைமென் றூவி - ஒன்றோடொன்று செறிந்த மெல்லிய இறகு. தாஅவ லஞ்சிறையின் (172) வேறாதல் கூறினார். துணைப்புற விரிக்கும் அத்தம் - துணையாகிய புறவுகளைப் பிரித்தோட்டும் காடுகள். ஆண்டுச் சேர்ந்துறையும் உயிர்களையும் பிரிக்கும் என்று அவற்றின் கொடுமை கூறினார். பிரித்தல் கண்டு இவர் இரங்குவர் என்பது குறிப்பு. அரியவென்னார் - காடுகள் புகற்கு அரியன என்று எண்ணாராய். நத்துறந்து - அருள் செய்தற்குரியவர் அருளப்படு நம்மை விட்டு. பொருள் வயிற்பிரிவாராயின் - தேடும் பொருளிடத்துப் பிரியின். இவ்வுலகத்துப் பொருளே மன்ற பொருள் - இவ்வுலகிற்குரிய பொருள்தான் தேற்றமாக எல்லாரும் உயர்வாகக் கொள் பொருள் ஆம். ஆரும் இல்லது அருளே - உயர்வாக ஆரும் கொள்ளல் இல்லாதது அவ்வுலகிற்குரிய அருள்தான் என்றவாறு. இவ்வுலகத்துப் பொருள் என்றதனால் அவ்வுலகத்து அருள் என்பது கொள்ள வைத்தாள். அத்தம் அரிய என்னார் பொருள் வயிற்பிரிதலாற் பொருள் உயர்வு கருதலும், தன்னைத் துறந்து போதலான் அருளின் உயர்வு கருதாமையும் அறியப்படுதலாற் கூறினாள். அருளிலாளர் பொருள்வயி னகறல் (அகம். 305) என்ப. அவ்வுலகத்துக்குரிய தாதலின் அருள் இவ்வுலகத்து ஆருமில்லது என்பதூஉமாம். பூரியர் கண்ணும் உளவாகும் பொருள்தான் உயர்ந்தோரும் கொள்ளும் பொருளாம். செல்வத்துட் செல்வமாகிய அருளே அவ்வுயர்ந்தாருங் கொள்ளாதது என்பதும் ஒன்று. நத்துறந்து - நம்மைத் துறந்து. உலோச்சனார் 175. பருவத் தேனசைஇப் 1 பல்பறைத் 2 தொழுதி உரவுத்திரை 3 பொருத திணிமண லடைகரை நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம் மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற் கிரங்கேன் றோழியிங் 4 கென்கொ லென்று 5 பிறர்பிற ரறியக் கூறல் அமைந்தாங் 6 கமைக வம்பலஃ தெவனே. (எ-து) பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி உரைத்தது. (வி) பருவத்தேன் - மலர்ந்த பருவத்துத் தேன்; விளையா இளங்களின் வேறு தெரியக் கூறியது. நெய்தல் விளையா விளங்கள் நாற (அகம். 400) என்பதனானறிக. நச்சினார்க் கினியரும் பழுநியதேன் - பருவ முதிர்ந்த தேன் (மதுரைக். 475) என்பர். விளைந்த தேறல் (அகம். 2) என்ப. பல்பறைத் தொழுதி - பலவாகிய பறத்தலையுடைய வண்டின் கூட்டம். இருஞ்சிறைத் தொழுதி யார்ப்பயாழ் செத்து (அகம். 88) என்புழிப் போல வண்டின் கூட்டமாயிற்று. நனைந்த புன்னையின் நனையாத கருஞ்சினையில் தொழுதி தொகூஉம் என்க. இரும்பி னன்ன கருங்கோட்டுப் புன்னை (நற். 249) என்பதனாற் கருஞ்சினை கூறினார். தொகூஉம் பூ - தொகுதற்குக் காரணமாகும் பூ, மாநீர் - பெரு நீர்; கடல் என்றவாறு. விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர் (மதுரைக். 321) என்ப. சேர்ப்பற்கு இரங்கேன் - தோழி நீ வற்புறுத்தலான் சேர்ப்பன் பொருட்டு இரங்குதல் செய்யேன். “சேர்ப்பற், கியானினைந் திரங்கேனாக (நற். 275) என்ப. இங்கு என் கொலென்று - என்னைக்கண்டு இவ்வாறு என்ன வேறுபாடு என்று. பிறர் பிறர்க்கு அறியக் கூறலாகிய அலர் அமைந்தாங்கு அமைக என்பேனாயின் முகிழ் முகிழ்க்கும் அம்பலாகிய அஃது யாது செய்வதாம் என்றவாறு. யானிரங்கேனாயினும், எற்கண்டு பலரறியக் கூறும் அலரும் அம்பலும் ஒழியா. அவற்றிற்கு என் செய்வது என்று கருதிக் கூறினாளாகக் கொள்க. அவர்திறத் திரங்கு நம்மினுந், நந்திறத் திரங்குமிவ் வழுங்க லூரே (289) என்றது கண்டுணர்க. தோழி நீ என்னை இரங்காமை யடக்குவையல்லது பிறர் பிறர் அறியக் கூறும் அலரையும் மற்று அம்பலையும் அடக்கமாட்டிற்றிலை என்பது நினையக் கூறினாள் ஆவள். வருமுலையாரித்தியார் 176. ஒருநாள் வாரல னிருநாள் வாரலன் பன்னாள் வந்து பணிமொழி 1 பயிற்றியென் நன்னர் நெஞ்ச நெகிழ்த்த 2 பின்றை வரைமுதிர் தேனிற் போகி யோனே ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ வேறுபுல 3 நன்னாட்டுப் 4 பெய்த ஏறுடை மழையிற் கலிழுமென் 5 னெஞ்சே. (எ-து) தோழி கிழத்தியைக் குறைநயப்பக் கூறியது. (வி) ஒரு நாள் வாரலன் - ஒரு நாளில் வரவொழிந்திலன். இருநாள் வாரலன். இரு நாளில் வரவொழிந்திலன். பன்னாள் வந்து - நாள் பலவற்றின் வந்து. பணிமொழி - உள்ளம் பணிந்த மொழிகளை. பயிற்றி - பல்கால் விரும்ப நவின்று. பயிற்றிப் பயிற்றிப் பலவுரைப்ப தெல்லாம், வயிற்றுப் பெருமான் பொருட்டு (அறநெறிச்சாரம்) என்பது காண்க. என் நெஞ்சம் நன்னர் நெகிழ்ந்தபின்றை வரைமுதிர் தேனிற் போகியோன் - வரையில் முதிர்ந்த தேனைக் கொள்வார், அத் தேனுள்ள அடையையுமுடன் கொண்டு போதல் போல, என் அன்பு நெகிழ்ந்த நெஞ்சையுங் கொண்டு போயினான் என்றவாறு. தேன் அன்பாகவும், தேனடை அன்புள்ள நெஞ்சாகவும் நினைக; நெகிழ்ந்த அன்பு - முதிர்ந்த தேன் என்பதனாற் குறித்தாள். ஆசு ஆகு எந்தை - எனக்குப் பற்றுக்கோடாயுள்ள என் தலைவன். யாண்டுளன் கொல்லோ - எங்குள்ளானோ. வேறுபுல நன்னாட்டுப் பெய்த - புலன்களையுடைய வேற்று நன்னாட்டுப் பெய்த. ஏறுடை மழையின் - இடியுடை மழையைப் போல. என் நெஞ்சு அவன் உள்ள ஆண்டு நின்று கண்ணீர் பெருக்கி அழும் என்றாள் என்க. வேறுபுல நன்னாட்டுப் பெய்த மழைக்கு நெஞ்சை உவமித்தலான் இவள் நெஞ்சம் இவள்பால் இல்லாது அவன்பால் உண்மை எளிதின் அறியப்படும். யாண்டுளன் கொல்லோ என்றாள் ஆண்டுச் சென்றிரந்தாயினும் தன் நெஞ்சைப் பெறுதல் கருதி. என்னோ டுறைந்தது என்னைக் காணாமையால் அழும் என்றாளாம். உலோச்சனார் 177. கடல்பா டவிந்து கானன் மயங்கித் துறைநீ ரிருங்கழி புல்லென் றன்றே மன்றலம் 1 பெண்ணை மடல்சேர் வாழ்க்கை அன்றிலும் பையென நரலு மின்றவர் வருவர்கொல் வாழி தோழி நாந்தப் 2 புலப்பினும் பிரிவாங் கஞ்சித் தணப்பருங் காமந் தண்டி யோரே. (எ-து) கிழவன் வரவுணர்ந்து தோழி கிழத்திக்கு உரைத்தது. (வி) கடல் பாடவிந்து - கடலோசை யடங்கி. கானன் மயங்கி - கானல் இருளான் மயங்கி. இருநீர்க் கழித்துறை ஒளி மழுங்கியது என்றது கடலொலி அவிந்திருத்தலால் மீன்பிடிபடவு எல்லாம் கடலுள் புக்கனவாதலால் கானற் புறம் திமில் விளக்கு இல்லாது இருள் மயங்கிய தென்றும், கழித்துறையிற் புள்ளெல்லாம் குடம்பை சேர்தலாற் புல்லென்றிருப்ப தென்றும் குறித்ததாம். கடல்பா டவிந்து தோணி நீங்கி, நெடுநீ ரிருங்கழிக் கடுமீன் கலிப்பினும் (அகம். 50) என்னும் பாட்டில் கடலோசை அவிந்தால் தோணி உள்ளே புகும் என்றபடியாம். நீங்க என்றார் - அக்காலம் பார்த்து. கடுமீன் - சுறா முதலியன. `கலித்தல் - செருக்கொடு திரிதல் எனப் பழைய உரைகாரர் கூறியது கொண்டுணர்க. மன்றலம் பெண்ணை - மன்றுப் பெண்ணை. அல், அம் - அசைகள். மன்றிரும் பெண்ணை மடல் சேரன்றில் (கலி. 129) என்ப. அன்றில் நரலும் அமையமும், ஒலியவிந்தடங்கிய நள்ளென் யாமம் ஆதலாற் கூறினாள். ஒலியவிந் தடங்கிய யாமம் நள்ளெனக்...... மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத், துணைபுண ரன்றி லுயவுக்குரல் கேட்டொறும் (நற். 303) என்பது காண்க. இங்ஙனம் இடம் ஆளற்றுக் காலம் இருள்பட்டிருத்தல் தெரிதலான் இவ்வியல்பைக் கண்டு இப்பொழுது வருவர் போல விருந்தது என்று தோழி கூறினாள் என்க. இது வரைவு நீட்டித் தலைவன் களவின் வருதலாகவே கொள்க. மணங்கம ழைம்பாலா ரூடலை யாங்கே, வணங்கி உணர்ப்பான் றுறை (கலி. 131) என்பது களவின் ஊடுதலாதலென உணர்க. களவினுந் தலைவி சிறுபான்மை புலத்தலுண்டாதலான், நாம்தப் புலப்பினும் என்றாள். புலப்பினும் என்றதனால் களவு புலவாமையே செல்வது குறித்ததாம். ஆங்குப் பிரிவஞ்சி - அப்போது பிரிதலை அஞ்சி. தணப்பருங்காமம் - புலப்பினுந் தணத்தற்கரிய இன்பத்தை. தண்டியோர் - விடாது பணிந்து இரந்து கொண்டவர். புணர்வின் இனிய புலவி (சிந். 1378) என்ப. தலைவர் முன்னே வந்த அமையமும் அஃதாதலின் இன்றும் அவ்வாறிருத்தல் கண்டு தோழி வரவுணர்ந்து கூறினாளாம். இங்ஙனம் தலைவர் வரவிற்கு அனுகூலமாகக் கடல் பாடவிதல் முதலியவற்றை ஏதுவாக்காது ஒழியின் அவை நின்று பயனில்லனவாம் என்க. இவ்வேதுக்களான் இது களவாதல் நன்குணரலாகும். தப்புலப்பினும் - தம்மைப் புலந்தாலும். புலந்தவரும் தணத்தற்கரிய காமம் என்பது கருத்து. ஐம்பாலா ரூடலை யாங்கே வணங்கி யுரைப்பான் (கலி. 131) என்பதனால் வணங்கி உணர்த்துதல் கூறுதலான் அதற்கேற்பத் தண்டுதல் தணிந்து இரந்து கொள்ளுதலாகக் கொள்க. பணிமொழி யன்றோநம் முள்ள முடைக்கும் படை (குறள். 1238) என்பது. தண்டா நோய் (குறள். 1171) என்புழித் தணியா நோய் எனப் பரிமேலழகர் உரைத்தது காண்க. தண்டியோர் - அனைத்தும் பெற்றவர் என்றாரும் உண்டு. இருவகைக் கைகோளினும் ஊடலுணர்த்தல் அலைத்தலான் இல்லை என்று துணிக. நெடும்பல்லியத்தையார் 178. அயிரை பரந்த வந்தண் பழனத் தேந்தெழின் மலரத் 1 தூம்புடைத் திரள்கால் 2 ஆம்பல் குறுநர் 3 நீர்வேட் டாங்கிவள் இடைமுலைக் கிடந்து 4 நடுங்க லானீர் தொழுதுகாண் பிறையிற் றோன்றி 5 யாநுமக் 6 கரிய 7 மாகிய காலைப் பெரிய நோன்றனிர் 8 நோகோ யானே. (எ-து) கடிநகர் புக்க தோழி தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு, முன்னர்க் களவுக்காலத்து ஒழுகலாற்றை நினைந்து அழிந்து கூறியது. (வி) நீரறாத பழனத்து என்பாள் அயிரை பரந்த என விசேடித்தாள். அயிரை நீரில்லுழி உயிர் வாழாமை தெள்ளிது. பழனத்து ஆம்பல் ஆதலால் களையாகக் குறுநர் என்றாள். தூம்புடைத் திரள்காம்பு கூறியது நீர் வேட்டால் அக் காம்பின் தூம்பால் நீர் ஊச்சுதல் குறித்து. மதியெனுங் கலங்கனீரை, ஊதுவண் டுகுத்த தாரா னுவர்ப்பினி னுரிஞ்சி (சிந். 2987) என வந்தது காண்க. நீர் நிலையிற் கிடைத்துள்ள நீரையே கிடையாதது போலக் கருதி வேட்டாற் போல முலையிடைக் கிடந்து, அம் முலை கிடையாதன போல உள்ளம் நடுங்குதலைக் கடிநகர் புக்க விந்நிலையே ஒழீவீர் என்றாளாம். இவள் இடைமுலைக் கிடந்து நடுங்கல் - முன் களவில் அவற்றிற் கிடந்தும் வரைந்து கொள்ளாமையாற் றனக்குக் கிடையாவாக நடுங்குதல். தொழுது காண் பிறையிற் றோன்றி யாம் - தெய்வத் தன்மையாற் காணும்போதே பலரும் தொழல் செய்து காண்டற்குரிய பிறைபோல ஓரோர்கால் வந்து தோன்றினம். `பலர் தொழச், செவ்வாய் வானத் தையெனத் தோன்றி, இன்னம் பிறந்தன்று பிறையே (307) என்ப. ஈண்டுப் பேராசிரியர் தோன்றியாம் என முற்றாகவே கோடல் பிறையிற் றோன்றினம் என்பது முதலாக அவர், பொழுதுமறுப்பாக்கம் (தொல். மெய்ப். 22) என்பதற்கு இப் பாட்டை எடுத்தோதிக் கூறியவாற்றா னறியலாம். ஆண்டு வரைந்த பொழுதினை மறுத்த காலத்தும் நடுங்கலானீர் என்றமையின் இஃது அப் பொருட்டாயிற்று என உரைத்ததும் காண்க. களவிற் பகற்குறி இரவுக்குறியென்று வரையறைப்பட்ட பொழுதை மறுத்து எப்போதும் உடன் உறைதலை வரைந்த வதுவை முதலே பெறுதலான் அங்ஙனம் நடுங்குதலை ஒழிவீர் என்றாள் என்க. நுமக்கு அரியமாகிய காலை பிறையிற் றோன்றியாம். அக்காலைப் பெரிய நோன்றனிர் - அப்போது எம் பெரிய தவறுகளைப் பொறுத்தருளினீர். அங்ஙனம் தவறிழைத்ததற்கு அழிவேன் யான் என்று தோழி கூறினாளென்க. தோழி களவுக்காலத்து ஒழுகலாற்றை நினைந்து அழிந்து கூறியது என்று துறைகூறுதல் கண்டுணர்க. பேராசிரியர் இத் துறையில் கூறியது கொண்டே மேல் உரைத்தவாறு பொருள் துணிந்தனர் எனத் தெளிக. நச்சினார்க்கினியர் (கற்பியலில் 9) இதனுள் முலை யிடைக் கிடந்தும் பனிக்கின்ற நீர் அரியமாகிய காலத்து எங்ஙனம் ஆற்றினீர் என நோவா நின்றேன். இங்ஙனம் அருமை செய்தலால் தெறுதற்கு உரியேனாகிய என்னைச் சிறப்பித்துக் கூறலாகாது என்றவாறு காண்க என வேறாக முடித்தார். தேற்றுதற்குரியேன் என்பது எழுதினவர் தவறு. தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணும் என்பதற்குக் கூறியதனான் உண்மையுணரலாம். தெறுதல் அழன்று நோக்குதல் என உரைத்ததும் காண்க. தலைவி களவில் தலைவனுடன் புணர்ந்திருக்கும் நிலையில் இவ்வாறே வருந்துதல், குவளை குறுநர் நீர்வேட் டாங்கு, நாளு நாளுடன் கவவவுந் தோளே, தொன்னிலை வழீஇய நின்றொடியென. ... ஆரிருள் வருதல் காண்பேற்கு யாங்கா கும்மே யிலங்கிழை செறிப்பே (நற். 332) எனக் கூறுதலானும் இவ்வுண்மையுணர்க. இதனால் இவர் கலியாணவளவும் ஓர் அமளிக்கட் கிடந்து வேதவிதி பற்றிக் கூட்ட நிகழாமையால் தலைவற்குப் புணர்ச்சி விதும்பல் உண்டாதல் கண்டு தோழி கூறியதெனக் கருதிக் கூறுதல் உணரலாம். அரிய காலைப் பெரிய நோன்றனிர்; வரைந்து எளியமாகிய காலைச் சிறிது நோனாது நடுங்கல் ஒழிகிலீர்; இதற்கு யான் நோகோ என்றாள் என்பது இவர் கருத்தாகும். பேராசிரியர் தோழி தன்னொழுகலாற்றை நினைந்து அழிந்து கூறியதெனக் கொண்டார். நச்சினார்க்கினியர் தலைவன் ஒழுகலாற்றை நினைந்து அழிந்து கூறியதெனக் கொண்டார். இது வேற்றுமையென்க. குட்டுவன் கண்ணனார் 179. கல்லென் 1 கானத்துக் கடமா வாட்டி எல்லு மெல்லின்று ஞமலியு மிளைத்தன செல்ல லைஇய 2 வுதுவெம் 3 மூரே ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த குயவுடைப் பசுங்கழை 4 தின்ற கயவாய்ப் பேதை யானை சுவைத்த கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே. எ-து பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது. (வி) கானத்துக் கடமா வாட்டி எல்லும் எல்லின்று என்றது காட்டிற் கடமாவை அலைத்துப் பகல் கழிந்த தல்லது வேறு நீ கருதிய பயன் பெற்றுக் கழித்ததில்லை என்றவாறு. ஞமலியும் கடமாபின் விரைவின் ஓடி இளைத் தன. மீண்டும் நும்மூர் சேறற்கு இரை உண்டு வலிபெற வேண்டும் என்றவாறு. எல்லின்று செல்லல் ஐய என்றதனால் இரவுக்குறி நேர்ந்தாள் போன்றாளாம். உது எம்மூர் என்றது நெடுஞ்சேய்த்தன்று என்றதாம். அடுக்கத்துத் தேன் கிழித்த பசுங்கழை என்றதனால் விருந்திற்குரிய தேன் நிறைந்தமை காட்டினாள், நிலைபெய் திட்ட மால்பு நெறி யாகப், பெரும்பயன் றொகுத்த தேங்கொள் கொள்ளை...... திருந்து வேலண்ணற்கு விருந்திறை சான்மென (மலைபடு. 316-319) என்புழித் தேன் விருந்துண வாத லுணரலாம். ஓங்குவரை யடுக்கத்து மால்பு வைத்து ஏறி எடுத்தற்குரிய பருவத்தீந்தேனை கழை கிழித்து வடியச் செய்தலான் அவ்வுணவும் எளிதிற் கிடைப்பது குறித்தாள். கழை பொதிர்ப்பத் தேன் சொரிந்து காய்த்தினை களார்த்து, மழைதவழுங் குன்றில் வயமா முழங்க (சிந். 2778) என்றார் தேவரும். எடுத்த வேயெக்கி நூக்குயர்பு தாக்கத், தொடுத்த தேன் சோரும் வரைபோலுந் தோற்றம் (பரிபாடல் 16 : 45-46) என்பதற்குப் பரிமேலழகர். பனியால் வளைந்தவேய் அப் பனி நீங்க மேலே கிளர்ந்து மிசைச் சென்று தாக்குதலால் தேன் சோர்ந்து விழும் வரையொக்கும் தோற்றம் என உரைத்ததனையும் நினைக. குயவுடைப் பசுங்கழை தின்ற கயவாய் என்க. குயவு இளமை; திவாகரம் பார்க்க. `கயவாய் என்பதற் கொத்த எதுகைத்தாதலின் `குயவுடை என்பதே பாடமாதல் தெளிக. இளமூங்கிற் சாற்றுக்குக் கரு தழுவும் என்பதனால் பேதை யானை என்றாள். வழுவப் பிண்ட நாப்ப ணேமுற், றிருவெதி ரீன்ற வேற்றலைக் கொழுமுளை, சூன்முதிர் மடப்பிடி நாண்மேய லாரும் (நற். 116) என்பது பார்க்க. கழை தின்ற கயவாய் என்றாள். வயிறு தெரியாது வாயின் சுவையால் உண்டது பற்றி; சுவைத்த என்றது காண்க. அங்ஙனம் சுவைத்தாலுங் கெடாது கூழையளவிற்றாகிய மூங்கிற்வடு என்று குறியிடங் காட்டினாள். குவட்டு இடையது - குவட்டின் நடுவண் அவலிலுள்ளது என்று குவடு இரு புறனும் ஊர்க்கு மறைவாயமைதல் குறித்தாள். தின்ற யானை சுவைத்த என்றது வளர்ந்த கழையைத் தின்று கூழையாயதைப் பற்றாது, வாயால் சுவைத்தது என்றாளாம். இரவில் பனியில் வளைந்த கழை விடியலில் வெயில் காய விசைத்தெழும்போது தேனைக் கிழிக்கும் என்க. காற்றசைத்தலாற் கழை கிழித்தலுமாம். காம்பு கால்பொரக் கண்ணகன் மால்வரை, பாம்பு நான்றெனப் பாய்பசுந் தேறலே (கம்ப. பால. நாட்டு 85) என்பர் கம்ப நாடர். குவையுடைப் பசுங்கழை என்பதூஉம் பாடம். குவை - தொகுதி. கடமா - கடமான் கடமான் கொழுங்குறை (மலைபடு. 175) என்ப. எம்மூர் என்று கூறி நும்மூரே எம்மூராதல் இனி வரைதலான் ஆக வேண்டுவதென்று குறித்தாளாம் கயவாய் - கீழிழிந்தவாய். கச்சிப்பேட்டு நன்னாகையார் 180. பழூஉப்பல் 1 லன்ன பருவுகிர்ப் பாவடி இருங்களிற் றினநிரை மேய்ந்தவ் வரின்மாய்ந் தறைமடி 1 கரும்பின் கண்ணிடை யன்ன பைத 2 லொருகழை 3 நீடிய சுரனிறந் தெய்தினர் 4 கொல்லோ பொருளே யல்குல் அவ்வரி வாடத் துறந்தோர் வன்ப ராகத்தாஞ் சென்ற நாட்டே. எ-து பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது. (வி) பழூஉ - பேய். `பழுவும் பாந்தளும் (குறிஞ்சிப்பாட்டு 259). பருவுகிர் - பருத்த நகம்; `பருவுறை (271) போல நின்றது. பாவடி - நிலத்தே பாவும் அடி என்பர் நச்சினார்க்கினியர் (கலி. 20). இருங்களிறு - கருங்களிறு. களிற்று இன நிரை மேய்ந் தவ்வரில் மாய்ந்து - இனி மாக்களிற்று நிரை மேய்தலான் அத் தூறு மாய்ந்து. முளைவளர் முதல மூங்கின் முருக்கிக், கிளையொடு மேய்ந்த கேழ்கிளர் யானை (அகம். 332) என்பது காண்க. மழகளிறு மிகீஇத்தன், கான் முளை மூங்கிற் கவர்கிளை போல, வுய்தல் யாவது என்பது பதிற்றுப் பத்து (84). அரில் - மூங்கில் ஒன்றோடொன்று பிணங்கிய தூறு. அரில் மாய்ந்து - தூறு மாய்ந்து. இருவெதிர்ப் பைந்தூறு (மதுரைக்காஞ்சி 302) என்ப. அறைமடி கரும்பு - அறுத்தலான் மடிந்த கரும்பு. அறைக்கட் கரும்பு (சிலப். காடுகாண். 80) என்ப. அறைமடி கரும்பின் கண்ணிடையை யொத்த வாடிய ஒற்றை மூங்கில் நீடிய சுரன் என்க. பருமை குறைந்து வாடிச் சிறுகோலாய் நீடியதென்பார் அறுத்து மடிந்த கரும்பின் கண்ணினிடயை உவமித்தார். கண்ணிடை - இருகணுவிற்கு மிடைப்பட்டது. வாங்கமைக் கண்ணிடை கடுப்ப (அகம். 18) எனவும், வேயமைக் கண்ணிடை (அகம். 152) எனவும் வருவன கண்டுணர்க. சுரனிறந்து துறந்தோர் பொருளெய்தினர்கொல் - அல்குல் அவ்வரி வாடத் துறந்தோர் தாம் சென்ற நாட்டு நம்மை எண்ணாத வன்னெஞ்சராக இருந்து பொருள் எய்தினர் கொல் என்றாள் என்க. வன்பராக என்றாள், அங்ஙனமாத லரிதென்பது கருதி. யேந்தல் வரின் மாய்ந்து என்பது எழுதினர் பிழையாற் கொம்பையடுத்து மகரம் விடுபட்டது ஆராய்ந்துணர்க. களிற்றின நிரையிற் றப்பி ஒரு கழை நீடியது போல அவ் வரிவாடத் துறந்தோர் இடையூறுகளிற் றப்பிப் பொருள் எய்தி நீடுதல் குறித்தாள். அறை - பாத்தி யெனவுங் கூறுவர். கிளிமங்கலங் கிழார் 181. இதுமற் 1 றெவனோ தோழி துனியிடை இன்ன ரென்னு மின்னாக் கிளவி இகுமருப் 2 பெருமை யீன்றணிக் காரான் உழவன் யாத்த குழவியி னகலாது பாஅற் 3 பைம்பயி ராரு மூரன் திருமனைப் பலகடம் 4 பூண்ட பெருமுது 5 பெண்டிரே 6 மாகிய நமக்கே. (எ-து) தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. (வி) இகுமருப்பெருமை - தாழ்ந்த கொம்பினையுடைய எருமை. இருமருப்பு என்பது எழுதினர் பிழைப்பாகும். ஆனினம் போல் உயர ஓங்காது தாழ நீளுதல் இவற்றில் பலவற்றிற்கு இயல்பு. படுகோட் டெருமை (திணைமொழி ஐம்பது, மருதம் 1) என்புழிப் பழைய உரைகாரர், தாழ்ந்த கொம்பினை யுடைய எருமை என்று பொருள் உரைத்தது நோக்கிக் கொள்க. ஈன்றணிக்காரான் - எருமையாகிய ஈன்றணிமையை உடைய கரிய ஆன். காரான் - அச் சாதிப்பெயர். உழவன் பிரித்துக்கட்டி கன்றினின்று தான் அகலச் செல்லாது. பாற்பைம்பயிர் - பால் முற்றிய பசிய பயிரை. ஆருமூரன் - மேயும் ஊரன். கன்றிற்குத் தங்கட் பாலையுண்டாக்கும் பசிய பயிர் என்பதும் ஈண்டைக்கு இயையும். அவன் எருமைக் குள்ள குடும்பப்பற்றும் இல்லன் என்று தலைவனைத் துனித்தவாறாம். திருமனை - திருமகள் தங்கும் மனை. சீமத்தான கிருகம் என்றவாறு. மனைப்பல்கடம் - மனைவாழ்க்கைக் குரிய பல்வகைக் கடப்பாடுகள். அவை : தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் முதலியவரை ஓம்ப வேண்டுவன அமைக்குங் காரியங்கள். பூண்ட - உடம்பில் பூண்போல இக் கடப்பாடே உயிர்க்குப் பூணுதல் குறித்தாள். பெருமுது பெண்டிரேம் - பேரறிவுடைய பெண்டிர்த் தன்மையையுடையேம். ஊரன் திருமனைக் கடப்பாடுகளைப் பூணுதல் ஊரனைத் தழுவலி னும் இனிதென்று உணரும் பேரறிவுடைமை குறித்தது. நமக்கு அவரோடு முதிர்ந்த கலாமாகிய துனியினிடத்து இத் தீய ஒழுக்கின ரென்றுரைக்கும் இன்னாத சொல் ஆகிய இஃது யாது பயனுடைத்து என்றவாறு. தீய ஒழுக்கம் - பரத்தைமை. திருமனைக்குரிய நன்மைகளிடையே துனியுண் டாதலும் அதனிடையே அவர் இத்தகையரென்று இன்னாக் கிளவி கூறுதலும் ஏற்காதென்று எவன் என்றாள். அவர் துனியிடை எனக்கொண்டு அவர் வெறுக்குமிடத்து எனினும் அமையும். மனைப்பல கடம் பூண்டது பற்றி விரும்ப வேண்டியவர் அது செய்யாது துனித்தது குறித்தது. இளம்பூரணர் - அடங்கா ஒழுக்கத்தையுடைத் தலைவன் இவனென்பது காண்க (தொல். கற்பு. 9). கடம்பூண்டதனால் வினையும், பெருமுதுபெண்டா கியதனால் உள்ளமும் தூயமாகிய நமக்குச் சொன்மட்டு அங்ஙனமாகாது இன்னாக்கிளவியாதல் எவனென்றா ளென்க. முதுமை அறிவுக்காதல் முதுவா யிரவலன் (புறம். 48) என்புழிக் காண்க. பல கடம்பூண்ட பெருமுதுமை யாதலான் அறிவேயாதல் தெளிக. மடல் பாடிய மாதங்கீரனார் õ182. விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல் மணியணி பெருந்தார் மரபிற் 1 பூட்டி வெள்ளென் பணிந்துபிற ரெள்ளத் தோன்றி ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித் 2 தெருவி னியலவுந் 3 தருவது கொல்லோ கலிழ்ந்தவி 4 ரசைநடைப் பேதை மெலிந்தில 5 ணாம்விடற் 6 கமைந்த தூதே. (எ-து) தோழியாற் குறை மறுக்கப்பட்ட தலைமகன், தன் நெஞ்சிற்கு உரைத்தது. (வி) பெண்ணை விழுத்தலை விளையன் மடல்மா - பனையின் உயர்ந்த உச்சியில் முற்றுதலையுடைய மடலான் ஆகிய குதிரை. மாமடல் என்பதனை மாற்றுக. தெருவின் மடன்மா வியலவும் தருவது கொல் என்க. பேதையாகிய மெலிந்திலள்பால் இனி நாம் விடற்கமைந்த தூது தெருவிற் பிறரெள்ளத் தோன்றி மடன்மா ஒரு நாண் மருங்கின் இயலவும் தருவதுதான் கொல்லோ என்றான் என்க. குறை மறுக்கப்பட்டவன் கூற்று ஆதலால் பின்னும் தூது விடற்கமைந்தான் என்பது பொருந்தியதன்று. இயலவும் என்ற உம்மை நாண் நீக்கி எள்ளத்தோன்றுதலைத் தழீஇ நின்றது. `தெருவின் இயல்பு தருவது என்பதூஉம் பாடம். ஒரு நாள் மருங்கில் பெரு நாண் எனப் பாடம் கொண்டு என் பக்கல் ஒரு நாளில்லாத நாண் என்று கருதி எந்நாளும் என் பக்கல் உள்ள நாண் என்றான் எனினும் அமையும். நாம் விடற்கமைந்த தூதுக்குப் பேதை மெலிந்திலள். அம் மெலியாமை தெருவின் இயலவும் தருவது கொல் என்றான் எனினும் அமையும். ஈண்டு விடற்கமைந்த என்பது - விட்ட என்னும் பொருட்டு. கலிழ்ந்தவிர் பேதை என்பது அழகொழுகி விளங்கும் பேதை. அசை நடையாற் பேது செய்தலாற் பேதை என்றான். தன் நெஞ்சு அறியாமையாற் கூறினான் என்பதும் ஒன்று. ஔவையார் 183. சென்ற நாட்ட கொன்றையம் பசுவீ நம்போற் பசக்குங் காலைத் தம்போற் சிறுதலைப் பிணையிற் றீர்ந்த நெறிகோட் டிரலை மானையுங் காண்பர்கொ னமரே புல்லென் காயாப் பூக்கெழு 1 பெருஞ்சினை மென்மயி லெருத்திற் றோன்றும் கான 2 வைப்பிற் புன்புலத் 3 தானே. (எ-து) பருவ வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி யுரைத்தது. (வி) தாம் சென்ற நாட்டின் ஆகிய கொன்றைகளின் பசிய பூக்கள் நம்மைப் போல் பசக்கும் கார்ப்பொழுதில். கொன்றை ஊழுறு மலரிற் பாழ்பட முற்றிய பசலை (அகம். 398) என்றாற் போல் கூறாது கொன்றை நம்போற் பசக்கும் என்றது தன் பசலையின் மிகுதி புலப்படுத்தியவாறு. அது கார்ப்பொழுதிற் பசக்கும். இவள் தலைவன் பிரிந்த பொழுதே பசந்தனள். இதனான் இவள் பசப்பின் உயர்பு துணிக. தம்போல் - நம்மைப் பிரிந்து வாழும் தம்மைப் போல். நம்மவர் பிணையிற் றீர்ந்து வாழும் இரலைமானையும் காண்பர் கொல்? காணார். பிணையொடு பிரியா இரலையே காண்பர் என்று, தம் போல் தனித்து இருத்தலை ஒருவிலங்கினும் காணார் என்றபடி. புல்லென் காயா - இம் மழைக்கு முன் எல்லாம் ஒளிமழுங்கிய காயாஞ்செடி பூக்கெழுசினை கார் வர உள்ளித் தலையெடுக்கும் மயில் எருத்தம் போன்ற கானவைப்பு; கான வைப்பிற் புன்புலத்தான் - காட்டுநிலத்துப் புஞ்செய்யில் புன்புலத்தாற் காண்பர் கொல் என்றது, நகரமாந்தரிடம் காணப்படும் இவ்வன்பில்லாச் செயல் காட்டில் விலங்கினும் காண்பதில்லை என்பது குறித்தது. தாமே நம் அன்பு நினைந்து வாராவிடினும் இவ் விலங்குகள் கண்டு நினைந்து வருவர் என்பது கருத்தாம். காயாவும் மயிலும் கார் கண்டு தலையெடுப்பன வாதலாற் கூறினாள். தான் அக் கார் கண்டு மாழ்குதல் குறிப்பு. நெறி கோடு - நெறித்த கொம்பு. ஆரியவரசர் யாழ்ப்பிரமதத்தனார் 184. அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லை குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே இதற்கிது மாண்ட தென்னா ததற்பட் 1 டாண்டொழிந் தன்றே 2 மாண்டகை 3 நெஞ்சம் மயிற்க ணன்ன மாண்முடிப் 1 பாவை நுண்வலைப் பரதவர் மடமகள் கண்வலைப் படூஉங் கான 2 லானே. (எ-து) கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. (வி) ஆன்றோர்க்கு அறிகரி பொய்த்தல் இல்லை - குண மமைந்த பெரியோரிடத்து அறிந்த சான்றினைப் பொய்யாக்கி வேறு கூறல் இல்லை. சிறுகுடிச் செலவு பரதவர் மடமகள் கண்வலைப் படூஉங் கானலால் குறுகல் ஓம்புமின் - சிறுகுடியிற் செல்லற்கண் பரதவர் மடமகள் கண்வலைப்படும் கழிச் சோலை வழியால் குறுகுதலைப் பரிகரித்திடுமின். என்னையெனின், மாண்டகை நெஞ்சம் - எம் மாட்சிமையால் தகைமை பெற்ற நெஞ்சம். இதற்கிது மாண்டது என்னாது - இவ்வின்பத்திலும் நீ கூறும் நிரதிசயவின்பமாகிய இது மாண்டது என்று எண்ணாமலே. அதற்பட்டு - என்னை நோக்கி வீசிய அக் கண்வலையின்கண் அகப்பட்டு. ஆண்டொழிந்தன்றே - என்னிடம் மீளாமல் அவ் விடத்தே தங்கிற்று. ஆன்றோர்க்கு உருபு மயக்கம். பொய்த்தல் இல்லை - கரிபொய்த்தல் இல்லை, அறிகரி பொய்த்தல் இல்லை; அதுவும் ஆன்றோர்க்குப் பொய்த்தல் இலை என்றானாகக் கொள்க. இங்ஙனம் கொள்ளிற் றலைவன் அந்தணனாகிய பாங்கனை ஆன்றோனெனக் கூறி எனக்கு அறிவுறுத்து நீயும் குறுகல் ஓம்புக என்று கருதினனாக நினையலாம். மாண்டகை நெஞ்சம் என்றது அந்தணனாகிய நின்பால் பல கேள்வி கேட்டு மாட்சிமையிற் சிறந்தும் கண்வலைப்படுதல் குறித்தது. இது, வீட்டின்பத்திற்குரிய நீ இன்னையாதல் தகாது என்று கழறிய பாங்கற்குத் தலைவன் கூறியதாகக் கொள்க. இதற்கிது மாண்டது என்னாது - இவ்வுறுப்பிற்குச் சிறந்தது இவ்வுறுப்பு என்று ஆராயாமல் என்பதும் ஒன்று. அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கில்லை எனத் தன்னையே ஆன்றோனாகக் கருதிக் கூறினானென நினைப்பாரும் உண்டு. மயிற் கணன்ன மாண் முடிப் பாவை - மயில் கண்ணுடைய பீலி போன்ற மாட்சிமைப்பட்ட முடியினையுடைய பாவை போன்றவள். கண் ஆகுபெயர். கொடிச்சி கூந்தல் போலத் தோகை யஞ்சிறை விரிக்கும் (ஐங். 300) என்ப. கலி மயிற் கலாபத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் (225) என்பனவுங் காண்க. சிறுமீனும் தப்பாது அகப்படுத்தலான் நுண்வலைப் பரதவர் என்றான். மீன்வலைப் பரதவர் மகளாதற்கு ஏற்ப நெஞ்சம் ஆகிய மீனைக் கண் வலையில் அகப்படுத்தல் கூறினார். மடமகள் - கண்டார்க்கு மடமையைச் செய்யும் மகள். பாவை என்றான் தன்னுள் எழுதிக் கொண்டதனால். மாண்முடியைச் சிறப்பித்தான் தனக்குப் பாயல் ஆதலான். கூந்தல் மெல்லணை யேமே (270) காண்க. பரதவர் வலையை இவள் பெரிய கண்வலையால் நுண் வலையாக்கியது கருதிக் கூறினான் என்பதும் ஒன்று. நுண்ணிடை என்புழிப் போலச் சிறுமையுணர்த்தியது. பரதவர் வலை ஒன்றுமறியாத மீனை அகப்படுக்கும்; இவள் கண்வலை என் மாண்டகை நெஞ்சத்தை யகப்படுத்தது. கண்வலை வீசிய போது உள்ள மீனிழந்தான் என்னுந் திருக்கோவை இது கொண்டு கூறியதாம். மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 185. நுதல்பசப் பிவர்ந்து 1 திதலை வாடி நெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடி நெகிழ்ந் 2 தின்ன ளாகுத னும்மி 3 னாகுமெனச் சொல்லி னெவனாந் தோழி பல்வரிப் பாம்புபை யவிந்தது போலக் கூம்பிக் கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள் கன்மிசைக் 4 கவியு நாடற்கென் 5 நன்மா 6 மேனி யழிபடர் நிலையே. (எ-து) தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை, வேறுபட்டாயால் என்றாட்குக் கிழத்தி உரைத்தது. (வி) இவர்ந்து வாடிச் சாஅய் நெகிழ்ந்து என் நன்மா மேனி அழிகின்ற துன்ப நிலையில் இன்னள் முன் போல ஆகுதல் நும்மால் ஆகும் என்று நாடற்குச் சொல்லின் என்ன கேடு ஆம் என்றாள் என்க. வேறுபட்டாய் என்று வேறு பட்ட எனக்கே சொல்கின்றனை. இவ் வேறுபாடு செய்த நாடற்குக் கூறிப் பரிகரித்தல் செய்திலை என்றவாறு. இவர்ந்து முதலிய செய்தெ னெச்சங்களைச் செயவெனெச்சங் களாக்கிக் கொள்க. நெகிழ்ந்து இன்னள் ஆகுதல் நும்மின் ஆகுமென்றாள் இறந்த செய்தியை எதிர்வதாகக் கூறியதாதல் கண்டு உண்மையுணர்க. கொண்டலிற் கூம்பித் தொலைந்த காந்தள் தானுண் டாய கன்மிசைக் கிடந்து அக் கொண்டலையே வணங்கியது போலக் கவிந்து காட்டுதல் கூறித் தானும் தன்னை வருத்திய தலைவனையே வணங்கி நலம் பெறுதல் குறித்தாளாம். கொண்டலிற் கூம்பித்தொலைந்த காந்தள் என்றது இரவுக்குறி வந்தொழுகா நின்ற நிலையில் அதனாலே வாடும் தன்னைக் குறித்ததாம். நன்மாமேனி காந்தள் வாடாத முன்னை நிலைக்கும், அழிபடர் நிலை வாடிய பின்னை நிலைக்கும் கொள்க. பாம்பு பையடங்கச் செய்வதும் கொண்டற் கொக்கும். ஈண்டுப் பாம்புபையவிதல் தோழியின் வாட்டமாக நினையலாம். ஒக்கூர் மாசாத்தியார் 186. ஆர்கலி யேற்றொடு 1 கார்தலை 2 மணந்த கொல்லைப் 3 புனத்த முல்லை மென்கொடி எயிறென முகைக்கு 4 நாடற்குத் துயிறுறந் தனவாற் றோழியென் 5 கண்ணே. (எ-து) பருவ வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) ஆர்கலி ஏறு - நிறைந்த ஓசையை உடைய இடி, கொல்லைப் புனத்த முல்லை - காடுகளிற் புனங்களிலுள்ள முல்லை. முல்லைமென் கொடி எயிறென முகைக்கும் - முல்லையாகிய மெல்லிய கொடிகள் முறுவலிக்கும் பற்களைப் போல அரும்பும். இதனால் நாடன் பொருட்டு என் கண்கள் துயில் துறந்தன என்றாள் என்க. முல்லை நீ நின் சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை (162) என்றது காண்க. அவர் முல்லையரும்பும் பருவம் வருவம் என்று குறித்துச் சென்றாராதலின் அவ்வாறே அரும்புதல் கண்டு அவர் வருவரென்று அவரை எதிர் கோடற்பொருட்டுத் துயில் துறந்தன என்றாள். மலரும் மௌவன் மாச்சினை காட்டி, யவ்வள வென்றா ராண்டுச் செய் பொருளே.” (அகம். 23) என்பதனாலிவ்வாறு கூறிச் செல்லுதலுணரலாம். வருவே மென்ற பருவ முதுக்காண்... சொல்லுபவன்ன முல்லைமென் முகையே (358) என இந் நூலுள்ளும் வந்தது காண்க. நாடற்கு என இவ்வாறு தனியே வருதல் “தப்பலேற்ற, கோட்டொடு போகி யாங்கு நாடன், தான் குறிவாயாத் தப்பற்கு (121),” அறிதற்கமையா நாடனொடு (377) என வருவன காண்க. முகைக்கும் என்பதை முற்றாக்காது முல்லைமென் கொடி முகையும் நாடற்கு என எச்சமாக்கின் அங்ஙனம் பருவ வரவு கூறுதல் வழக்கன்று என்க. முகையும் - அரும்பும். கபிலர் 187. செவ்வரைச் செச்சை 1 வருடை மான்மறி சுரைபொழி தீம்பா லார மாந்திப் பெருவரை நீழ லுகளு நாடன் 2 கல்லினும் 3 வலியன் றோழி வலிய னென்னாது மெலியுமென் னெஞ்சே. (எ-து) வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. (வி) செவ்வரைச் செச்சை - சிவந்த அரையினை யுடைய வெட்சியின் கீழுள்ள வருடை மான். சுரை பொழி தீம்பால் மறி ஆர மாந்தி - வருடையொடு பெண்மான் மடி பொழிந்த தீவிய பாலினைக் கன்று வயிறு நிறையக் குடித்து, பெருவரை - பெரிய மலையில், நீழல் உகளும் நாடன் - நீழலில் துள்ளி விளையாடும் நாடன். வருடை அவ்வினத்துத் தகராகவும் மான் அவ்வினத்துப் பெண்ணாகவும் கொள்க. மானினம் சிலம்புபாய் வருடையொடுகளும் (சிந். 1238) என்புழி இங்ஙனம் வருதல் காண்க. ஆணும் பெண்ணும் கன்றுமாக இனிது வாழ்தல் குறித்த வரையாகையால் அங்ஙனம் வாழ இயலாதுள்ள தன்னை நினைந்தாள் என்க. வருடைமான் - வருடையொடு கூடிய மான். மறியிடைப்படுத்த மான்பிணை போலப், புதல்வ னடுவணனாக நன்றும், இனிது மன்றவர் கிடக்கை (ஐங். 401) என்புழி மான்பிணை என்பது கலைமானொடு கூடிய பிணை என்றாற்போல வந்தது. இவ்வாறு விலங்குகள் வாழ்தல் கண்டு தன்னை நினைதல், “ஆமான், புல்லிய குழவித் திங்கட் பொழிகதிர்க்.... கவரியூட்ட நம்பியை நினைக்கும் (சிந். 355) என்புழியும் காண்க. செவ்வரைச் செச்சை என்றாள் செங்கால் வெட்சி (முருகாறு. 21) என்பது பற்றி. பெருவரையில் செவ்வரைச் செச்சையின்கீழ் நிழலில் உகளும் என்க. செச்சைக் கண்ணி வெட்சிமாலை என்றார் நச்சினார்க்கினியர் (முருகாறு 21). இளம்பூரணரும் செச்சைக் கண்ணியன் (அகம். 48) என்பதற்கு வெட்சிக் கண்ணியன் என்றார் (தொல். களவு. 24). “வெட்சி, கொல்புனக் குருந்தொடு கல்லறைத் தாஅழ் (அகம். 133) என்பதனால் இவ் வெட்சி கற்பாறைகளை அடுத்திருத்தல் அறியலாம். “வேயும், வெதிரமும், வெட்சியும், குளவியும் (பெருங்க. 250) எனக் குறிஞ்சியிற் கூறுதல் காண்க. இனிச் செவ்வரைச் சேக்கை வருடையெனக் கொண்டு செவ்விய மலைகளிற் றங்குதலையுடைய வருடை என்பாரும் உளர். வருடை மலையிற் றங்குதல், பெருவரை நீழ லுகளும் என்றதனாலே பெறப்படுதலான் அதனையே ஈண்டும் கூறினாரோவென ஐயுறப் படுவது அக் கொள்கைக்கண் வரை என்பது ஈரிடத்தும் ஒன்றாதல் காண்க. நாடன் கல்லினும் வலியன் - என்னைச் சேர மழைநாள் நள்ளிரவில் புலி முதலியவற்றிற்கு அஞ்சாது அரவின் பைத்தலை இடறிக் கடுங்கராமுள்ள கான்யாறும் கடந்து வருதலான் கல்லைக் காட்டினும் வன்மையன் (அகம். 328) பார்க்க. வலியன் என்றாள் அக் கல்லினும் வலியன் என்னைப் பிரிந்துபோம் போது வலியனாதல் மாத்திரையும் உடையன் என்று நினையாமல் என் நெஞ்சு மெலியும் என்றவாறு. நின் னாய்நலமுள்ளி வரினெமக் கேமமாகும் மலைமுத லாறே (நற். 120) என்றது காண்க. பிரிந்து விரைவினெய்தாமையாற் கல்லினும் வலியன் என்று தலைவனை இயற்பழித்த தோழிக்குத் தலைவி என்னைப் பிரிந்துள்ள நிலையில் அங்ஙனமாகாமை தெளியக் கூறியவாறாம். செவ்வரைச் செச்சை வருடை - சிவந்த அரையினையுடைய தகராகிய வருடை என்றதூஉம் ஆம். வருடைத்தகர் என்றவாறு. வருடைக் கோடுமுற்றிளந் தகர் (அகம். 378) என்பது காண்க. வாராமை பற்றி வலியன் என்றது வாரா வன்கணாளர் (நற். 89) எனத் தோழி கூறுதலான் உணர்க. மதுரை அளக்கர் நாழலார் மகனார் மள்ளனார் 188. முகைமுற் றினவே முல்லை முல்லையொடு தகைமுற் றினவே 1 தண்கார் வியன்புனம் வாலிழை நெகிழ்த்தோர் 2 வாரார் மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே. (எ-து) பருவங்கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது. (வி) முல்லைக்கொடிகள் முகைப் பருவத்தின் நின்று போதுப் பருவமாக முதிர்ந்தன. அம் முல்லைகளொடு தண்ணிய காரினால் வியன் புனங்கள் ஏர் முற்றின. தகை - ஏர். கார்கலந் தன்றாற் புறவே பலவுட, னேர்பரந் தனவாற் புனமே (ஐங். 417) என்ப. மாலை வந்தன்று - மாலைப்பொழுது வந்தது. வாலிழை நெகிழ்த்தோர் என் மாணலங்குறித்து வாரார் - பிரிந்து மேனி இளைக்கச் செய்து வாலிய இழைகளை நெகிழ்வித்தோர் பிரிதற்கு முன்னர் மாட்சிமைப்பட்ட என் நலத்தை யான் எய்துதல் குறித்து வாராது தாழ்ப்பர் என்றவாறு. என் மாணலம் குறித்தே மாலை வந்தன்று என்றால் வாலிழை நெகிழ்த்தோர் என்றதனால் இழந்ததைத் தெளியப்பட்ட மாணலம் அவர் பிரிந்ததன் மேலும் தன்பால் உளதெனக் கருதிய தாம் என்க. வருதும் என்று தெளித்த மாலை வந்தது. வருது மென்றவர் தாம் தேடு பொருட்குறித்துத் தாம் அப் பொருளினும் மாண்ட என் மாண்நலம் குறித்து வாரார் என்பது கருத்து. அப் பொருளினும் மாண்டதென்றது அவர் இனிது துய்த்தற்கு ஆவது கருதி. இதனால் தன்னைப் புகழ்ந்ததாகாது. செல்க தேரே..... நாணுடையரிவை மாணலம் பெறவே (அகம். 34) என்பது காண்க. உவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன்.... ஆய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே (அகம். 4) என்புழிப் பழைய உரைகாரர், நின்னல நினைந்து, தோன்று நாடன் எனக் கூட்டுக என உரைத்ததும் காண்க. மதுரை ஈழத்துப் பூதன்றேவனார் 189. இன்றே சென்று வருவது 1 நாளைக் குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி விசும்புவீழ் 2 கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக் 3 காலையிற் செலீஇ 4 மாலை யெய்திச் சின்னிரை வால்வளைக் குறுமகள் பன்மா ணாக மணந்துவக் 5 குவமே 6. (எ-து) வினை தலைவைக்கப்பட்ட விடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்தது. (வி) சென்று நாளை வருவது இன்றே - இங்கு நின்று அங்குப் போய் நாளை அங்கு நின்று மீண்டு இங்கு வருவது என்பது இல்லையேயாம். காலையிற் செலீஇ மாலை எய்தி - காலை விடியலிலே தேரை நேமிப் பைம்பயிர் துமிப்ப முடுகச் செலுத்திப் போய், மாலையில் அவ்வாறே செலுத்தி மீண்டு. குறுமகள் பன்மாணாக மணந்து உவக்குவம் என்றான் என்க. தலைவியை ஓரிராப் போதும் பிரிந்திருக்கப் பொறாது கூறினான் என்பதே சிறந்ததாதல் காண்க. பொய்யா மொழியாரும் இக் கருத்தே கொண்டு காலைப் பொழுது கடும்பரித் தேர்பண்ணிக், கானகம் போய், மாலைப் பொழுது வருகுவல் யான் (தஞ்சைவாணன் கோவை 262) எனக் கூறியது காண்க. தேர் முடுக நேமி பைம்பயிர் துமிப்பச் செலீஇ என்பது செலவிற்கும் வரவிற்கும் கொள்க. இன்றே என்றான் தான் துணிந்தது பாகன் புலன்கொளற் பொருட்டு. சின்னிரை வால் வளையை நினைந்தது - அவை தன்பிரிவால் நெகிழ்ந்து உழலாமை கருதி. பன்மாண் ஆகம் - மாண்பு பலவும் பெறற்கு உரிய ஆகம். மணந்து உவக்குவம் - அவ்வாகம் காணாது பகலெல்லாம் கழிந்த வெக்கை தீரக் கலந்துவக்குவம் என்பது கருத்து. சின்னிரை வளை கூறினான். சில்கல னணிந்த மெல்லென் யாக்கை (பெருங்கதை - உஞ்சை 34 : 23) என்பது குறித்து. இளம்பிறை யன்ன நேமி - இளம்பிறையின் வட்டம் போன்ற உருளை. இளம்பிறையாய் உள்ளபோது அதன் முழு வட்டமும், ஒரு கோடு சுற்றியது போலக் காண்பது பற்றி உவமித்தார். விளங்கு சுடர் நேமி என்றது பொற்பட்டம் சுற்றியது பற்றி. “மூழ்கிய, பல்கதி ராழி மெல்வழி யறுப்ப (அகம். 234) என்ப. வெண்தேர் - வெண்பொற் றகடுகள் பதித்த தேர். பொலம் படைப் பொலிந்த வெண்சுடர் (205) என்பது காண்க. இஃது அணிமைக்கட் பிரிவாகவும் நீடேன் என்று நீங்கியதாகவும், முறையே இளம்பூரணரும், நம்பியகப் பொருளுரைகாரரும் கூறுவர். வேந்துவிடு தொழிலொடு செலினும், சேந்துவரலறியாது செம்மல் தேரே (242) என்பதனால் இன்று போய் இரவிற்றங்கி நாளை வருவல் எனக் கூறுதல் அத்துணைச் சிறந்த தாகாமை காண்க. பூதம் புல்லனார் 190. நெறியிருங் கதுப்பொடு பெருந்தோ ணீவிச் செறிவளை நெகிழச் செய்பொருட் ககன்றோர் அறிவர்கொல் வாழி தோழி பொறிவரி வெஞ்சின வரவின் பைந்தலை துமிய நரையுரு 1 முரறு மரையிரு ணடுநாள் நல்லே றியங்குதோ 2 றியம்பும் 3 பல்லான் றொழுவத் தொருமணிக் 4 குரலே. (எ-து) பிரிவிடை யாற்றா ளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (வி) நெறியிருங்கதுப்பு - நெறிந்த கரிய கூந்தல். கூந்தலொடு பெருந்தோள்களைத் தடவித் தலையளிசெய்த அளவில். செறிவளை நெகிழ இவர் பிரிவர் என்று கருதி அத் தோள்கள் மெலிதலால் அவற்றிற் செறிந்த வளைகள் நெகிழா நிற்க. செய்பொருட் ககன்றோர் - அது கண்டு தாம் செய்யும் பொருளின் பொருட்டு நம்மைப் பிரிந்தோர். நீவியபோதே செறி வளைகள் நெகிழா நிற்க என்று கூறியது அவ் வளையணிந்த தோள்கள் அவர் கருத்தினை யுணர்ந்து மெலிந்தன என்று குறித்தற்கு. தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு, முன்ன முணர்ந்த வளை (குறள். 1277) என்பதனான் உணர்க. கதுப்பும் தோளும் அவர் உறையும் பொலிவு பெற்றிருத்தல் குறித்து நெறியிருங்கதுப்பு என்றும் பெருந்தோள் என்றும் கூறினாள். அந் நிலையில் தான் மெலிந்தபோது செய்யும் தலையளியைக் காட்டி நீவியதனால் இஃது ஒன்றுடைத்து என்று தோள்கள் மெலியச் செறிவளை நெகிழ்ந்தன என்க. பொறிவரி - பொறித்த புள்ளிகள். அரவின் வெஞ்சினப் பைத்தலை - அரவின் வெய்ய சினத்திற்கு அறிகுறியான படத்தலை. பைந்தலை தொடை நோக்கி மெலிந்தது. துமிய - துணிந்து வீழ. நரையுருமு உரறும் - பெருமையையுடைய இடியேறு முழங்கும். அரையிருள் நடுநாள் - அரைநாள் நடுஇருள் என்றது ஒரு நாள் பாதியாகிய இருட்போதின் நடுவண் என்றவாறு. பானாள் இரவில் (கலித். 90) என்புழி, ஒருநாளிற் பாதியாகிய இராப் பொழுதிலே என நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. நள்ளென் யாமத்து.... பானாள் இரவின் (அகம். 328) என வரும். நல்லேறு இயங்குதோறு - பல் ஆனுக்கு நன்மையைத் தரும், ஆனேறானது மழை பெய்ததனால் கோட்டு மண்கொள்ள இயங்கும் தோறும். இயம்பும் பல் ஆன் தொழுவத்து - கதறும் பல ஆனினங்களை யுடைய தொழுவில். ஒரு மணிக்குரல் அறிவர்கொல்? - அவர் ஈண்டு உள்ள போது உவந்த மழையிரவில் அவ்வேற்றின் கழுத்துக் கட்டிய ஒரு மணியோசையைக் கேட்டறிவர்கொல் என்றாள் என்க. அவ்வொரு மணிக்குரல் அடங்க அப் பல்லானும் இயம்பும் குரலே கேட்டறிவர் என்பதாம். இது பிணையிற் றீர்ந்த.... இரலையும் காண்பர் கொல் (183) என்பது போலக் கூறியதாம் என்க. மழை பெய்யும் போது நல்லேறு தம்மைவிட்டுத் தனியே இயங்கப் பொறாது பல்லானும் கதறுதல் கேட்டு அறிபவர் தம்மை அகன்ற யாம் இப்போது இவ்வாறாம் என்றறியாது தாழ்ப்பர் என்பது குறித்தாள். இயம்புதல் பேரொலி செய்தற்காதல் பூசல் விண்டோய் விடரகத் தியம்பும் (அகம். 8, குறுந். 241) எனவும், அருவி விடரகத் தியம்பும் (42) எனவும், வேழம் வெரீஇய இயம்பும் (நற். 228) எனவும் வருமிடங்களிற் காண்க. `மழை பெய்தமையாற் கோட்டுமண் கொள்ளுமவை என,’ `நிலஞ் சாடுபவை (கலி. முல்லை. 6) என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறியது கொண்டுணர்க. இவ்வாறே எருமையில் ஆண் இயங்கு தோறும் எருமையில் ஆன் மணியசைத்தல் குறுந் தொகை 279 ஆம் பாட்டில் காண்க. சிந்தாமணியுள் தேவர், வாளுழலை பாய்ந்திளைய வளநா கிட்டின மென்னுந், தானொழியப் போரேறு தனியே போந்த தெனவெண்ணி, நீளருவிக் கண்ணீர்வீழ்த் தலறி வண்ணங் கரிந்துருகிக், கோளுழுவை யன்னாற்குக் குன்றமுநின் றழுதனவே (சிந். 1226) என்புழித் தொழுவின் தடையால் உழலைத் தடியையும் பாய்ந்து ஏறு தனியே அகன்றளவில் அதற்கு இனமாகிய இளநாகு முழுதும் கண்ணீர் வடித் தலறுதலை உடன்பட்டுக் கதைக் கேற்றவாறு உருவகித்துச் செல்லுதற்கு இக் குறுந்தொகைப் பாட்டே நினைப்பென்று உய்த்துணரத்தகும். ஏற்றுக்கும் மணி கட்டுவது, தகைவெள் ளேற்றணற் றாழ்மணி யோசையும் (சிந். 1314) என்பதனான் அறிக. தலைப்பு இல்லை 191. உதுக்கா ணதுவே யிதுவென் 1 மொழிகோ நோன்சினை 2 யிருந்த விருந்தோட்டுப் புள்ளினம் தாம்புணர்ந்த தமையிற் பிரிந்தோ ருள்ள 3 தீங்குர லகவக் கேட்டு நீங்கிய ஏதி லாள ரிவண்வரிற் போதிற் பொம்ம லோதியும் புனையல் எம்முந் தொடாஅ லென்குவ மன்னே.4 (எ-து) பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) நீங்கிய ஏதிலாளர் அகவக் கேட்டு வரின் - நம்மைப் பிரிந்து போய அயன்மையுடையோர் புள்ளினங்கள் அகவக் கேட்டு வந்தாராயின் என்க. நோன்சினை யிருந்த - தம்மைத் தாங்கக் கூடிய வலிய சினைகளி லமர்ந்த. இருந்தோட்டுப் புள்ளினம் - பெருந் தொகுதியாகிய வினப்புட்கள். தாம் புணர்ந்தமையின் பிரிந்தோ ருள்ள - தாம் துணையொடு புணர்ந்து வாழ்தலினால் பிரிந்தோர் தம் துணையை நினையும் வண்ணம் தீவிய குரலால் தம்முள்ளழைத்தலை நீங்கிய ஏதிலாளர் கேட்டு வரின். புனையல் தொடாஅல் என்குவம் அது உதுக்காண் என்றாள் என்க. பிரிந்தோருள்ளத் தீங்குரலகவ என்றதனால் அகவக் கேட்டு நீங்கிய ஏதிலாளர் என இயைய வைப்பது பொருந்தாமை காண்க. கேட்டும் நீங்கிய என்பது கருத்தாயின் பிரிவோருள்ள எனப் பாடுவர் என்க. கையறத் துறப்போர் கழறுவ போல (நற். 242) என வருதல் காண்க. இவண் வரின் - இப்போது வரின் என்றது புள்ளினம் அகவாநிற்கும் இவ்வமையம் வரின் என்றவாறு. இவை அகவற்குமுன் வாராமையால் அன்பின் அவர்தாமே இயல்பின் வந்தவராகாது இப் புள்ளினம் அகவி அறிவுறுத்தல் கேட்டு வந்தவ ராதலான் அவரைச் செறுத்துப் புனையல் தொடா அல் என்குவம். அது உதுக்காண்மன் என்றாள் என்க. குறித்த பருவத்து வருவம் என்று அங்ஙனம் வாராமையாற் பொய்யாகத் தொட்டுச் சூளுற்றமையான் அவைகொண்டு புனையல் தொடாஅல் என்றாள். புனைதலும் தொடுதலும் கையின் வினையாதல் காண்க. பொம்மல் ஓதியும் போதிற் புனையல் - பெருமையுடைய கூந்தல்களையும் போதுகளாற் புனையவருதல் ஒழிக. எம்மும் தொடாஅல் - எம்மையும் தொடுதல் ஒழிக. உவ்விடத்து அதனை மிகவும் காண் என்றாளாம். நம்பி அகப்பொருள் உடையார், இஃது ஊடல் என்னும் உரிப்பொருள் வந்தது எனக் கூறுதலான் அவர் கருத்திற் கேற்பக் கூறின், போதுகில் நீ தப்பியெய்தி மனைக்கண் பரத்தையர் கூந்தலைப் புனைந்த கையால் தொடப்படாது, பெருமை பெற்ற எம் கூந்தலைப் புனையல் எனவும், அவர் மெய் அணைத்த கையால் எம்மையும் தொடாஅல் எனவும் கூறுவம் என்று மொழிந்தாள் எனக் கொள்க. நாளும் புகுக, பரத்தைய ரில்லிற்போய் அவர் கூந்தல் புனைக - அவரைத்தொடுக என்பது கருத்தாகக் கூறுவம் என்றாள் என்பது பொருந்தும். இப் பாட்டினால் ஊடல் உரிப்பொருளையே கொண்டு சிந்தாமணியுள் தேவர், தோடேந்து பூங்கோதை வேண்டேங் கூந்த றொடே லெம்மில், பீடேந் தரிவையரிற் பெயர்கென் றூடு மடவார் (சிந். 1229) எனப் பாடுதல் கண்டு உண்மையுணர்க. பிரிந்தோருள்ளார் என்று பாடமாயின் பிரிந்தோரை நினையாவாய் அகவ என்க. அகவக் கேட்டும் நீங்கிய என்று கொண்டு, “குயில், புகன்றெதி ராலும் பூமலி காலையும், அகன்றோர் (நற்.118) என்பது காட்டுவாரும் உளர். ஆண்டுப் பூமலி காலையும் அகன்று தாழ்ந்திருப்பவர் என்பதே பொருளாதல் தெளிக. கேட்டு அகன்றவர் என்பது இல்லாமை காண்க. உடம்பொடு தொடர்புடையதாயினும் உடம்பின் வேறுபட்டே ஓதியை முற்கூறி எம்மும் என்பதனால் என் மெய்யும் என்றாள் என்பது. கச்சிப்பட்டு நன்னாகையார் 192. ஈங்கே வருவ ரினைய லவரென 1 அழா அற்கோ வினியே நோய்நொந் 2 துறைவி மின்னின் 3 றூவி யிருங்குயில் பொன்னின் உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை 4 நறுந்தாது கொழுதும் பொழுதும் வறுங்குரற் 5 கூந்த றைவரு வேனே. (எ-து) பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிரழிந்து கிழத்தி உரைத்தது. (வி) நோய் நொந்து உறைவி - என் நோய்க்கு நொந்து என்னுடன் தங்குதலை உடைய தோழி. கங்கு லுயவுத்துணை யாகிய துஞ்சா துறைவி (அகம். 298) எனத் தோழி கூறப்படுதல் காண்க. குயில்தாது கொழுதும் பொழுதும் குரல் வறிய கூந்தல் தைவருவேன் ஆகிய யான் என்க அவர் மாப்பூத்தற்கு முன்னர் வருதும் என்று தெளித்த பொழுது தப்பிக் குயில் அத்தாது கொழுதும் பொழுது இது என்பது கருத்து. பொழுதும் என்ற உம்மை அவர் வாரேன் என்ற பொழுதும் தைவந்ததைக் குறித்தது. குரல் - பூங்கொத்து, “கூந்தற், போது குரலணிய (அகம். 104) என்ப. தலைவர் இல்லாதபோது புனையாமையால் குரல் வறும் கூந்தல் என்றாள். மண்ணாக் கூந்தன் மாசறக் கழீஇச், சில்போது கொண்டு பல்குர லழுத்திய வந்நிலை (நற். 42) என்பது காண்க. அவர் நீவ வேண்டுவதைத் தானே தைவருவேன் என்பது கருத்து. நெறியிருங் கதுப்பொடு பெருந்தோள் நீவி (190) என்றது காண்க. ஈங்கே வருவராகிய அவர், இனையல் என - வருந்தற்க என்று என் நேரில் வந்து சொல்லி இனியே அழாஅற்கு இப்பொழுதே அழாதமைவேன். ஓ - அசை. நீ சொல்ல அமையேன் என்பது எச்சம். அவர் வருவர் இனையல் ஈங்கு என்று நீ சொல்ல அழாது அமைவேனோ என்பாரும் உளர். அதற்கும் அவர் சொல்ல அமைவேன் என்பது எச்சமாம். அவர் வருவர் இனையல் என்று கூந்தலைத் திருத்தச் சொல்லினை. அங்ஙனம் நின் சொற் கேட்ட நிலையில், கூந்தல் தைவருவேன் ஆயினேன். அல்லது நீ சொல்லியவாறு குயில் தாது கொழுதும் பொழுதும் வந்திலர். அதனால் இனி நீ வருவர் என்று சொல்லிய அவர் இனையல் என அழாது அமைவேன் என்றாள், என்க. இருங்குயில் மின்னின் தூவி - கரிய குயிலின் மின்னும் கட்கு இனிய சிறைகள். பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. தூவி பொன்னின் உரைத்தல் விளங்கும் உரைகல்லை யொப்ப. மாச்சினை - மாவின் அரும்பு, சினை நறுந்தாது - அரும்பினுள்ள நறிய மகரந் தங்களை. கொழுதும் பொழுதும் - கோதியணையும் வேளையிலும் தைவருவேன் என்க. அரிசில் கிழார் 193. மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன இட்டுவாய்ச் 1 சுனைய பகுவாய்த் தேரை 2 தட்டைப் பறையிற் 3 கறங்கு நாடன் தொல்லைத் திங்க ணெடுவெண் ணிலவின் மணந்தனன் மன்னெடுந் 4 தோளே இன்று முல்லை முகைநா றும்மே. (எ-து) தோழி, கடிநகர் புக்கு, நலந் தொலையாமே நன்கு ஆற்றினாய் என்றாட்குக் கிழத்தி உரைத்தது. (வி) மட்டம் - மட்டு, கள்; அம் பெற்றது. மட்டொளித் துண்ணு மாந்தர் (சிந். 2533). சுவையும் கலங்காமையும் கருதி, மட்டம் பெய்த மணிக்கலத்தன்ன சுனை என்றாள். மணிக்கலத் தகத்தமிர் தனைய மாண்பினாள் (சிந். 1172) என்புழிக் காண்க. இட்டு வாய்ச் சுனை - குறுகிய வாயை உடைய சுனை. சுனைய தேரை - சுனையிலுள்ள தவளைகள். தட்டைப்பறை யாகிய கரடிகையைப் போல ஒலிக்கும் நாடன். அரிக்குரல் தட்டை (மலைபடு. 9) என்னும் மலைபடுகடாத்து, தட்டை - கரடிகை என்றார் நச்சினார்க்கினியர். அடியார்க்கு நல்லார் அரங்கேற்றுகாதை உரையில் (அடி 27) கரடிகையைத் தோற்கருவியாகக் கூறுதல் காண்க. மூங்கிலிற் செய்த கிளிகடி கருவியா காமைக்குப் பறை என்றார். பெருத்த கரடிகையே பேரி என்பது சுத்தானந்தப்பிரகாசம். தேரை யொலியின் மானச் சீரமைத்துச் சில்லரி கறங்குஞ் சிறுபல் லியத்தொடு (அகம். 301) எனவும், “தேரை, சிறுபல்லியத்தி னெடுநெறிக் கறங்க (அகம். 154) எனவும் வருவன கொண்டு தேரை யொலியுடையது பல்லியவகைகளுள் ஒன்றாகிய தோல் வாச்சியம் என்றறியப்படும். இவ்வுண்மை, தட்டைத் தண்ணுமைப் பின்ன ரியவர், தீங்குழ லாம்பலி னினிய விமிரும் (ஐங். 215) என்பதனால் தெளிக. சென்ற திங்களைத் தொல்லைத் திங்கள் என்றாள். கடிநகர் புகுமுன் வரைவு நீட்டித்தது குறித்து. நிலவின் மணந்தனன் என்றாள், அந் நிலவால் பலரான் அறியப்பட்டு அலராயினபின் வரைந்தா னென்பது கருதி. நெடுந்தோள் இன்றும் முல்லை முகை மணநாறும் என்க. இனித் தலைவன் முல்லையணிந்து மணந்தனன் என்றும் அது பற்றியே தோள் முல்லை முகை நாறும் என்றும் கொள்க. முல்லை இளைஞர் சூடுதல், இளையோர் சூடார் வளையோர் கொய்யார்.... முல்லையும் பூத்தியோ (புறம். 242) எனவும், முல்லைத் தளையவிழ் அலரித் தண்ணறுங் கோதை, இளையருஞ் சூடி வந்தனர் (நற். 367) எனவும் வருமிடங்களிற் காண்க. புணர்ந்த மகளிர்க்குத் தலைவர் அணிந்த மணமே புதிது நாறுதல். நாற்றமும் தோற்றமும் (தொல். களவு. 23) என்னுஞ் சூத்திரத்து உரையில் நச்சினார்க்கினியர், நாற்றமாவது ஓதியும் நுதலும் பேதைப் பருவத்துத்தக நாறாது தலைவன் கூட்டத்தான் மான்மதச் சாந்து முதலியனவும் பல பூக்களும் விரவி நாறுதல் என உரைத்துத் `தாங்கரு நாற்றம் தலைத்தலை சிறந்து, எனவும், `நுதலும், நுண்வியர் பொறித்து வண்டார்க்குமே எனவும், வருவனவற்றை மேற்கோள்காட்டுதலான் அறியப்படும். இவற்றிற்கேற்பவே நற்றிணையுள். ஓங்குமலை நாட.... யுறுபகை பேணா திரவின் வந்திவள், பொறிகிள ராகம் புல்லத் தோள்சேர், பறுகாற் பறவை யளவில மொய்த்தலிற், கண்கோளாக நோக்கிப் பண்டு, மினையை யோவென வினவினள் யாயே (நற்.55) என வருதல் காணலாம். இப் பாட்டில், சாந்த ஞெகிழி காட்டி, ஈங்காயினவால் என்றிசின் யானே எனத் தோழி உரைத்தலான் இப் புது மணம் தலைவன் பூசிய சாந்த மணமாதல் உணரலாம். இன்னும் நற்றிணையுள், அறியேன் போல உயிரேன், நறிய நாறுநின் கதுப்பென் றேனே (நற். 143) என வருதலும் காணலாம். ஐங்கூந்த லுளரச், சிறுமுல்லை நாறியதற்குக் குறுமறுகி, யொல்லா துடன்றெமர் செய்தா ரவன்கொண்ட, கொல்லேறு, போலுங் கதம் (கலித். முல்லை5) இதன்கட் தலைவன் கூந்தலிலணிந்த முல்லை நாறுதல் கூறியது காண்க. தலைவன் புணரும் போதணிந்தனவே தலைவியின் கண் நாறுதல் நந்திக் கலம்பகத்தில், என்னை யானே புகழ்ந்தழிந்தேன் என்னாதே யெப்புவிக்கு, மன்னர் கோனந்தி மாதுங்கன் பொன் முடியின், மேலவருடுந் தொண்டை விரைநாறு மின்னமுமென், கால்வருடுஞ் சேடியர் தங்கை (89) என்னும் பாடலான் வலியுறுதல் காண்க. இனி மன்னும் ஏதிலர் நாறுதி (பரிபா. 8) என்பதனால் புணர்ந்த மைந்தர்க்கு மகளிருடைய மணம் நாறுவதாகப் பாடுதலான் மைந்தர்க்கும் மகளிர்க்கும் இயல்பாக வுள்ள மணம் தொட்ட மெய்க்கெல்லாம் வருவதாகக் கூறுதல் பண்டை வழக்காகும். இன்றைக்கும் எனக்கு இயல்பாகிய செண்பக மணம் நாறாது மணந்த அவனுக்கு இயல்பாகிய முல்லை முகைமணம் மிக நாறும் என்றாள். நன்மகளிர் செண்பக மணநாறும் மேனியராதல், சண்பகத் தணி கோதை நின்றாடனி, நண்ப னைந்நினை யாநறு மேனியே (சிந். 1324) என்பதனானும் அதற்கு நச்சினார்க்கினியர், சண்பகத்தினது கோதையையொத்த நறுமேனியை யுடையாள் என உரைத்ததனாலும் அறியலாம். உயர்மைந்தர்க்கு இயல்பாகவே நறுமணமுண்டென்பது, வண்டார் சோலை வார்மணல் நாறப் புகுகின்றான், கண்டான் சேர்ந்தான் காளையைக் கல்விக் கடலானே (சிந். 1636) என்புழி, விஜயன் தன் மண நாறச் செல்கின்றவன் கண்டான் எனவும், அவனே ஜீவகனை மண நாறுதலிற் கண்டா னெனவும் நச்சினார்க்கினியர் உரை கூறுதலான் அறியலாம். கம்பநாடர் - இளையவர் பயிலிடம்... சண்பகவனமாம் (பால. 80 : 1-3) எனவும் கந்தனை யனைவர்... கலைதெரி கழகம், நறைவிரி புறவம் (பால. 80 : 2, 4) எனவும் கூறுதல் இவ் வழக்குப்பற்றி என்றுணரலாம். இங்ஙனம் திருத்தக்க தேவரும் கல்வியிற் பெரிய கம்பரும் நன்மைந்தர்க்கும் நன்மகளிர்க்கும் நறுமணமுண்மை உடன்படுதல் அல்லது அவை கலந்தார் மெய்யினும் நாறுமென்பதுடன்படாமை அறிக. யாண்டும் தலைவன் பூசிச் சூடிக் கலத்தலே நூல்களிற் கேட்கப்படுவது. அறையுற் றமைந்த வார நீவிப், புரையப் பூண்ட கோதை மார்பினை, நல்லகம் வடுக்கொள முயங்கி (அகம். 100) என்பது முதலாக வருமிடங்களி லிஃது உணரலாம். பிற்காலத்து நைடதம் பாடிய அதிவீரராமபாண்டியர் பூவிலை மகளிர் பிறமலர்கட்கும் தம்முயிர்ப்பினரால் செண் பக மண மூட்டிய நிலையில் அவற்றைச் செண்பகமாகவே நினைந்து கொள்வார் என்று பாடுகின்றனர். இது கொண்டு கலந்த தம்பதியர்க்குள் அவரவர்க்கியல்பாகிய மணம் மாறி மணக்குமெனின், அவரியற்கை மணமே மணவாதவ ராதல் ஒருதலையென்க. இதனால் நன்மக்கட்கியல்பாகிய நறுமணம் அவரவர்க்கண் நிலைத்து நின்று மணப்பதல்லது கலந்தார் மெய்யினும் புக்கு மணத்தல் கூறுதல் ஐங்குறு நூற்றுரை காரர், முயக்கம் பெற்ற வழிப் பிறந்த வெறி நாற்றத்தால் பண்டையள வன்றி வண்டுகள் மொய்த்தனவாக, `இதற்குக் காரணமென் என்று செவிலி கேட்பதாக `தாதுண் வெறுக்கைய வாகியவள், போதவிழ் முச்சி யூதும் வண்டே (93) என்புழிக் கூறுதல் காணலாம். அவன் களவில் என்னை மணந்ததனாலாகிய அவன் நறுமணம் இன்று மென்தோளில் நாறுதலான் நன்றாற்றி னேனா என்றாளாம். கோவத்தனார் 194. என்னெனப் படுங்கொ றோழி மின்னுபு 1 வானேர் 2 பிரங்கு மொன்றோ 3 வதனெதிர் கான மஞ்ஞை கடிய வேங்கும் ஏதில கலந்த விரண்டற்கென் 4 பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே. (எ-து) பருவ வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) வான் மின்னுபு ஏர்பு இரங்கும் - புயல் மின்னி எழுந்து ஒலிக்கும். ஒன்றோ - அஃது ஒன்றுதானோ. அதன் எதிர் - அப்புயலின் எதிரில். கான மஞ்ஞை கடிய ஏங்கும் - காட்டிலுள்ள மயில்கள் கடுமையவாக இசைக்கும். ஏதில கலந்த இரண்டற்கு - தலைவர் உடனுறையும் போது நட்பாய் இப்போது பகையாயினவை என்னை வருத்தற்குத் தம்முட் கலந்த இவ்விரண்டன் பொருட்டு. பேதை நெஞ்சம் பெருமலக்குறுமே - என் அறிவில்லாத உள்ளம் பெருங் கலக்கத்தையடையும். இவ்வாறு கலக்குறுவதன் காரணம் யாதென்று சொல்லப்படும் என்றவாறு. ஒரு மாலையிற் சூன்முகில் கண்டு மயில் களித்துக் கூவி ஆடுதல் கண்டு நின்றபோது இயற்கைப் புணர்ச்சியிற் கூடியவள் ஆதலான் இவற்றை நட்பாகக் கருதியுள்ளவள் தலைவரில்லாத போது தம் குரலான் வருத்துதலான் ஏதில கலந்த என்றாள். இங்ஙன மலக்குறுதற்குக் காரணம் அவர் வாராமையன்றி வேறு யாது கூறப்படும் என்று என்னெனப் படுமோ என்றாள். கலந்தார்க்கு மழை உதவி செய்வதாதல் இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே (நற். 139) என்பதனான் அறிக. விருந்தெவன் செய்கோ.... மழைக்கே (நற். 112) என்பது காண்க. வம்பு அன்று மெய்யே பருவம்தான் என்று தெளிய மேலும் வான் இரங்கும். கீழும் மயில் எங்கும். இவ்விரண்டிற்கும் பேதை நெஞ்சம் பெருமலக்குறும் என்றாள். என் பேதை நெஞ்சம் என்றாள் அவர் பிரிய உடன்பட்டதனால்.இப் பாட்டுப் பாடியவர் கோவத்தன் எனப்படுவார். கோவாகிய வத்சன் என்றவாறு. வத்சநாட்டினின்று இங்குக் குடியேறிய கோசருள் ஒருவராவார். தேரதரனார் 195. சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேரப் படர்சுமந் தெழுதரு 1 பையுண் மாலை யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர் இன்னா திரங்கு மென்னா ரன்னோ தைவர 2 லசைவளி மெய்பாய்ந் துறுதரச் 3 செய்வுறு 4 பாவை யன்னவென் மெய்பிறி தாகுத லறியா தோரே. (எ-து) பிரிவிடைப் பருவ வரவின்கட் கிழத்தி மெலிந்து கூறியது. (வி) சினம் போன்ற வெம்மையைச் சினம் என்றாள். எரிசினம் தவழ்ந்த (அகம். 75) என்புழிச் சினம் ஆகுபெயர். நெருப்பு என்று பழைய உரைகாரர் கூறுதல் காண்க. குன்றம் - அத்தகிரி. சேர - சேராநிற்க. படர்சுமந்தெழுதரு பையுண் மாலை - என்னிடம் வைத்தற்குத் துன்பத்தைச் சுமந்து தோன்றுதலான் எனக்குத் துன்பமாகிய மாலைப் பொழுதில். யாண்டுளர் கொல் - சேய்மைக் கண்ணோ அணிமைக் கண்ணோ உள்ளனர். வேண்டுவினை முடிநர் - தாம் வேண்டிய காரியம் முடிக்கின்றவர்; நம் காரியம் முடியாதவர் என்பது குறிப்பு. வினை முடிநராகிய அறியாதோர் மாலை யில் இரங்குவள் என்று வாயானும் சொல்லார். இந் நிலை யின்னாது ஐயோ என்றவாறு. மெய் தைவர லசைவளி - அவர் உடனுள்ளபோது உடம்பைத் தடவி மென்மையின் அசைந்து வரும் காற்று. பாய்ந்து உறுதர - அவரில்லாத போது புலியாகப் பாய்ந்து மேற்கொள்ளலால் பாய்தல் வினையால் புலியாகக் கொள்ளப்பட்டது; ஏகதேச உருவகம். செய்வுறு பாவை யன்ன என் மெய் - செயல் பொருந்திய பாவையை ஒத்த என்னுடம்பு; பாவையின் உடம்பு வேறென்று காண்பது, செயலால் என்றவாறு. வினை அமை பாவையினியலி (நற். 362) எனவும், பாவை இயல்கற்றன்ன வொதுக்கினள் (அகம். 162) எனவும் வருவன கொண்டுணர்க. பிறிதாகுதல் அறியாதோர் - பிரிந்த காலத்துச் செயலொழிந்த பாவை வடிவாதலை உய்த்துணராதவர். இரங்கும் என்னார் அன்னோ என்றாள் என்க. நெஞ்சால் அறியாதோர் வாயால் இரங்கும் என்றார் `ஐயோ என்றவாறு. நெஞ்சுதான் வாயான் அவிழ்தல் என்பது நெஞ்சுவா யவிழ்ந்தனர் காதலர் (அகம். 129) என்பது காண்க. இன்னா திரங்குதலாவது வருதும் என்ற பொழுதில் வாராது பொய்த்த இன்னாதின்கண்ணே பல சொல்லிப் புலம்பல் என்பதாம். இனி மாலை இன்னாது எனவும், மாலையில் இரங்கும் எனவும் சொல்லார் என்பதூஉமாம். இன்னாதிரங்கல் - வெறுத்து வருந்தல் எனினு மமையும். இன்னா திரங்கி என்பதற்கு வெறுத்து வருந்தி எனப் பொருள் கூறினார். புறப்பொருள் வெண்பா மாலை உரைகாரர் சாமுண்டி தேவநாயகர். (பெருந். பெண்பாற் கூற்று 3). அன்னோ என்றாள் தன் தலைவிதியை நொந்து. குறித்த பொழுதின் எய்தாமையான் நம்மின்னாதிற்கு இரங்கும் என்றார் என்றலும் ஒன்று. நம் வயின் வருந்து நன்னுதலென்ப, துண்டு கொல் வாழி தோழி... ... நெடுநீர்ச் சேர்ப்பன்ற னெஞ்சத் தானே (நற். 303) எனக் கூறுதல் காண்க. மிளைக்கந்தனார் 196. வேம்பின் பைங்காயென் றோழி தரினே தேம்பூங் கட்டி யென்றனி ரினியே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கட் டண்ணிய தரினும் வெய்ய 1 வுவர்க்கு மென்றனிர் ஐய வற்றா 2 லன்பின் 3 பாலே. (எ-து) வாயில் வேண்டிப்புக்க கிழவற்குத் தோழி கூறியது. (வி) பைங்காய் என்றாள், வேம்பின் பழமாயின் இனிக்கும் என்பது கருதி. தேம்பூங் கட்டி என்றனிர் - இனிய பூமணமுள்ள கருப்புக்கட்டி என்று இளமைப் பருவத்துக் கூறினிர். வேம்பின் பைங்காயென்றது, அக் காய் போன்ற கைப்புடையதொன்று என்றவாறு. என்றனிர் என்றதனால் இவ்வாறு அவர் முன்னர்க் கூறியதையே குறித்தாளாம். ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோ ரமுதம் புரையுமா லெமக்கு (தொல்.கற்பு. 5. நச். ) என்றது காண்க. தோழிதரினே - தோழி கையாற்றரின், அவள் கை தொட்டது கட்டியாயிற்று அவ்விளமை என்றவாறு. இனி, என் தோழி பெருமுது பெண்டாகியவிப்போது தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர் - தண்ணியவாகிய இனிய தரினும் வெம்மையாய் உவர்த்தன செய்யும் என்று கூறினிர் உவர்க்கும் என்றதனால் இனியன ஆதல் குறித்தாள். பாரி தீநீர்ப் பெருஞ்சுனைத் தெண் நீர் இனிதாதல் புகழ் பெற்றதாதலால் கூறிற்றிலள் என்பதூஉமாம். பாரி நீரினும் இனிய சாயலள். அவன் பறம்பு தண்பறம்பு எனப்படுவதாம். அப் பறம்பிற் சுனை பனிச்சுனை எனப்படுவது. அந் நீர் என்றுங் கலங்காத தெண்ணீர், அந் நீரினும் தைத்திங்களிற் றண்ணியவற்றை என்று சிறப்பித்தல் காண்க. பாரியைக் கூறியது, புண்ணியவான் மலையில் சுனையாதலான் வற்றாது இனியதாதல் உண்டு என்பது குறித்து, அறனில் வேந்த னாளும் வறனுறு குன்றம் (அகம். 109) சுனைநீர்மை காட்டியவாறு. ஐய இயல்பின் மாறுபட்ட விவை வியப்பின. அன்பின் பாலற்று - அக்காலத்துள்ள அன்புத்திறம் வேம்பின் பைங்காய் தீம்பூங்கட்டியாகும் அத்தன்மைத்து இயல் பாயிற்று; இக்காலத்து அவ்வன் பில்லாத் திறம் பாரி பனிச் சுனைத் தெண்ணீர் தண்ணியன வாய் உவர்க்கும் அத் தன்மைத்து என்றவாறு. அற்று அன்பின் பால என்று பாடங்கொள்ளின், அன்பால் அற்று - அக்காலத்து இவள் கண் வைத்த அன்பி னால் அத் தன்மைத்து எனவும், இன்பாலற்று - இக்காலத்து அப்பரத்தையர் கட்டுய்த்த அன்பினால் இத்தன்மைத்து எனவும் பொருள் கூறுக. முன்னது களவின் இனிமையில் இனித்தது குறித்தது எனவும் பின்னது கற்பின் முதுமையில் உவர்த்தது குறித்ததெனவும் கொள்ளலுமாம். ஐய என விளித்ததாக்கி என்றனிர் என்பாரும் உண்டு. அங்ஙனமாயின் செறலில் பன்மை யொருமை மயங்கிற்று என்க. கச்சிப்பட்டு நன்னாகையார் 197. யாதுசெய் வாங்கொ றோழி நோதக நீரெதிர் கருவிய காரெதிர் கிளைமழை ஊதையங் குளிரொடு பேதுற்று மயங்கிய கூதி ருருவிற் கூற்றம் காதலர்ப் பிரிந்த வெற்குறித்து வருமே. (எ-து) பருவவரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) நீரெதிர் கருவிய கார் - நீர் கூடிய திரட்சியையுடைய கார்காலத்திற்கு. எதிர்தல் - கூடுதல். போரெதிர்ந் தேற்ற (பரிபாடல் 18) என்புழி எதிர்ந்து போரேற்ற எனக் கொண்டு தம்முட் கூடி எனப் பொருள் கூறுதலான் உணர்க. காரெதிர் கிளைமழை ஊதையங் குளிரொடு - கார்காலத்திற்குப் பின்னாகிய கிளை மழை வாடையை உடைய குளிரால் பேதுற்று மயங்கிய எற்குறித்து எனவும், காதலர்ப் பிரிந்த எற்குறித்து எனவும் கூறிக் கொள்க. பெருமழைக் காலத் திற்குப் பின்னர் அதன் கிளை மழையைத் தூற்றும் வாடைச் சிறு குளிரால் உடல் வேறுபட்டு உள்ளம் மயங்கிய எற் குறித்து. ஆடிய இளமழைப் பின்றை, வாடையுங் கண்டிரோ (நற். 229) என்பது காண்க. கூதிர் உருவிற் கூற்றம் வரும் - கூற்றமானது கூதிர்கால வடிவில் வரும் என்க. காரெதிர் .... குளிர் - காருக்குப் பின்னாகிய குளிர் என்பது வேனில் எதிர் வரவு மாறி (பரிபா. 11) என்புழிப் போல வந்தது. எதிர்தல் - பின்னாதல் குறித்து நின்றது. கிளை மழை - பெருமேகத்திற் சிதறிய கிளை மேகங்கள். வயவுப்பிடி இனத்தின் வயின் வயின் தோன்றி, இருங்கிளைக் கொண்மூ வொருங்குடன் றுவன்றிக், காலை வந்தன்றாற் காரே மாலை... ... கூதிர் அற்சிரத் தூதை தூற்ற, பனியலைக் கலங்கிய நெஞ்சமொடு (அகம். 183) என்பதனால் கிளைமழை இயல்பும், கார்காலத்தையடுத்துக் கூதிர் காலம் வருதலும் உணர்க. ஈண்டுக் குளிர் சிறுபோதின் உள்ள தென்றும், கூதிர் நெடும்போதாகிய முன்பனிப்பருவம் என்றுங் கொள்க. குளிராற் பேதுற்று மயங்கிய நிலையில் காதலரைப் பிரிந்து அவர் வரல் நசைஇ உயிர் வைத்துள்ள என்னைக் கொலை குறித்துக் கூதிர் உருவிற் கூற்றம் நோதக வரும்; யாது செய்வாம் கொல் என்றாள் என்க. கூற்றம் காதலர்ப் பிரிந்த எற்குறித்து நோதக வரும் என்றாள். இதே கூதிர்காலம் காதலர் உடனுறையும் அமையத்து இன்பத்திற்கு உதவியாயிருந்தது என்பது குறித்தது. இதனால் அவர் குறித்த பருவத்து வாராமையான் அவருள்ள இடத்துச் சென்று சேர்ந்து உயிர்தப்புவதோ, அது நெறியன்றென்பது கொண்டு இக் கூற்றம் நம் உயிர்கொள நிற்பதோ இவ்விரண்டினுள் யாது செய்வாங் கொல்! ஒன்று துணிந்துரையாய் தோழி என்பது கருத்து. நோதக - நோதலே பிரிந்துள்ள நமக்குத் தக்கதாக. கபிலர் 198. யாஅங் 1 கொன்ற மாஅஞ்சுட் 2 டியவிற் கரும்புமருண் 3 முதல பைந்தாட் செந்தினை மடப்பிடித் தடக்கை யன்ன பால்வார்பு கரிக்குறட் டிறைஞ்சிய 4 செறிகோற் 5 பைங்குரற் படுகிளி கடிகஞ் சேறு மடுபோர் எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத் தார நாறு மார்பினை வாரற்க தில்ல 6 வருகுவள் யாயே. (எ-து) தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. (வி) மாஅஞ் சுட்டு - மாமரங்களை எரித்து. மாஅஞ் சுட்டு என்பது பலாஅம் பழுத்த என்னும் பதிற்றுப்பத்துப் போல (61) மெலிந்தது. யாஅங்கொன்ற - யாமரங்களை வெட்டி எறிந்த, இயவில் - வழி இடத்தில். மலைகளிலும் மாமரம் உண்மை, தேங்கொக் கருந்தும் முள்ளெயிற்றுத் துவர்வாய் வரையாடு வன்பறழ்த் தந்தைக், கடுவனும் அறியும் (26) என்புழிக் காண்க. கரும்பு மருள் முதல - கரும்பொத்த அடியினையுடைய. வேய் மருள் பணைத்தோள் (அகம். 1) என்புழிப் போல மெய்யுவமத்திற்கு வந்தது. மடப்பிடித் தடக்கை அன்ன பால்வார்பு - பிடித் தடக்கையன்னவாய்ப் பருத்து பால் வார்த்து. கரிக்குறட்டு - கரிதலையுடைய சந்தனம் முதலிய கட்டைகளின்மேல். குறடு - குறைந்த கட்டை. இறைஞ்சிய - வளைந்த. செறிகோற் பைங்குரல் - கோலிற் செறிந்த பசிய கதிரில். கதிரில்லாத தினை அரிதாளை, கோற்றலை யிருவி (அகம். 38) என்பதனான் அறிக. சாந்தம் முதலிய மரஞ்சுட்டு உண்டாக்கிய எரிதினைக் கொல்லை (அகம். 288) ஆதலால் ஆண்டு எரிந்த கரிக் குறடுகளில் இறைஞ்சிய ஏனல் என்றதாம். கதிர்ப்பொறை குறித்து தாங்குதற்குப் பற்றுக் கோடு கூறியதாகும். உலைக்கொடிறு எனின் அது குறடு என முந்து நூல் களில் பயிலாமை காண்க. கொடிறு போல் காய வாலிணர்ப் பாலை (நற். 107) என்ப. குரற்படு கிளி - கதிரிற் பாய்கின்ற கிளிகள். தேம்படு கவுள (முல்லைப்பாட்டு 31) என்புழிக் காண்க. கடிகம் சேறும் - கடிந்தோராய்ச் செல்லுதும். அடுபோர் எஃகு - போரை அடுகின்ற வேல். விளங்கு தடக்கை மலையன் - தான் பிடித்ததனால் விளங்குதற்குக் காரணமான பெருங்கையுடைய மலையமான் காரி. அவன் கானத்து என்றது முள்ளூர்க்காட்டை. சாந்த மணக்கும் மார்புடையையாய் வாராதிருக்க யாய் வருகுவள் என்றது, எம் மலைக்குரியது பூசி வருக என்றேனும், இயல்பில் மணம் உள்ளனை ஆதலால் பூசாது வருக என்றேனும் குறித்தா ளாம். யாய் வருகுவள் என்றது யாம் கிளி கடியும் புனத்து மலையன் கானத்து ஆரம்நாறும் மார்பினையாய் வந்து இவளையணையின் இவளும் அவ்வாரம் நாறுவளாதலின் யாய் மகள்கண்ணே அப் புதுமணமுணர்ந்து இஃதென்கொல் என்று ஐயுற்றுப் புனத்தே கிளிகடிதல் செய்தல் மெய்யே நிகழ்வது காண வருவள். இதனால் அவளை யஞ்சுதும் என்பது குறித்தாள். சேறும் ஆண்டு வாரற்க என்பது கருத்தாயின் குறியிடம் பெயர்த்தது ஆகாமை காண்க. தாய் மகள்கண்ணே புதுமணமுகந்து வினாவல், அறுகாற் பறவை அளவில் மொய்த்தலின், கண்கோளாக நோக்கிப் பண்டு, மினையை யோவென வினவினள் யாயே (நற். 55) என்பதனால் அறிக. இயவிற் செந்தினை என்றது, ஊருக்குச் சென்று வர அணித்தான வழியாக்கிய இடங்களிலே புனம் உண்டாக்கி விளைப்பது கருதி. மலையன் முள்ளூர்க் கான நாற வந்து (312) என்பது காண்க. பரணர் 199. பெறுவ தியையா தாயினு முறுவதொன் றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க் 1 கைவள் 2 ளோரி கானந் தீண்டி எறிவளி கமழு நெறிபடு கூந்தல் மையீ 3 ரோதி மாஅ யோள்வயின் இன்றை யன்ன நட்பி னிந்நோய் இறுமுறை யெனவொன் றின்றி மறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே 4. (எ-து) தோழி செறிப்பறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. (வி) இற்செறித்தலான் அவளை இவ்வுலகத்து அடைவ தென்பது கிட்டாதாயினும் உறுவது ஒன்றுண்டு - மிக்கதாகிய ஒரு நன்மை இனி உண்டு என்க. மன் - அஃது உறுதியாம். இதனால் நெஞ்சே வாழிய - அவள் நினைப்பிலே வாழ்வாயாக. திண்டேர்க் கைவள்ளோரி - பிறர் வெல்ல வொண்ணாத திண்ணிய தேரும் கைவண்மையும் உடைய ஓரி என் பவனுடைய. கானம் தீண்டி - கொல்லிக் கானத்தைத் தடவி. எறிவளி கமழும் - எறிகின்ற கோடை மணக்கும். எறிவளி என்றதனால் கோடையாயிற்று. குடகாற் றெறிந்த குப்பை (பெரும்பாண். 240) என்ப. கோடை சென்றெறியும் கொல்லிச் சிலம்பினும் என்பது கல்லாடம் (52:13). ஓரி கைவண்மையால் கானம் மணம் மாறாது வளமுடைமை குறித்தான். “ஓரி.... கொல்லிக், கார்மலர் கடுப்ப நாறும் (அகம். 208) என்பது காண்க. ஈரோதி - வகிர்ந்த முன் மயிர். இதனால் ஈண்டுக் கூந்தல் பின் மயிராகக் கொள்க. யாரிவனென் கூந்தல் கொள்வான் (கலி. 89) என்பதனாலிது காண்க. தாழ்மென் கூந்தல் (அகம். 21). இணையீரோதி (முருகாறு. 20). ஈண்டு ஒன்றுக்கொன்று இணையாக வகிர்ந்த ஓதி என்று பொருளாதல் காண்க. இவ்வுண்மை ஐம்பால் வகுத்த கூந்தற் செம்பொற், றிருநுதற் பொலிந்த தேம்பா யோதி (நற். 160) என வருதலாற் றெளியப்படும். “குவளை, யுள்ளகங் கமழுங் கூந்தன் மெல்லிய, லோதி யொண்ணுதல் (ஐங். 225) என்பது காண்க. இந்த இறுமுறையென வொன்றின்றி - இவ் விரக நோய் முடியுமுபாயம் ஒன்று இல்லாமல் இன்றையன்ன நட்பின் - இன்றே நட்பினால். மறுமையுலகத்தும் மாஅ யோள் வயின் மன்னுதல் - மறுபிறப்புடைய உலகத்தும் எனக்கு நிலை பெறுதல் கிடைக்கும். ஆதலான் உறுவ தொன்றுண்டு மன் என்க. நோய் தீரும் உபாயம் ஒன்று இல்லாமல். இன்றை யன்ன நட்பின் - இன்றே போன்ற நட்பினால். மறுமையுலகத்தும் மாஅயோள் வயின் மன்னுதல் - மறுபிறப்புடைய உலகத் திலும் நிலை பெறுதல் கிடைக்கும். ஆதலான் உறுவதொன் றுண்டுமன் என்க. நோய் தீரும் உபாயம் இல்லாமையால் நானே முடிவில் என்றும் நட்பு உயிரின்கண் ணுண்மையால். அது பற்றுவழிச் சேறல் இயல்பு ஆதலான் அதற்கு மறுமையுலகத்தும் அவள்வயின் மன்னுதல் கிடைக்கும் என்றும் கருதினான் என்க. நோய் மறுமையில் மன்னுதல் பொருந்தாதலின் இவ்வாறு கூறப்பட்டது. ஔவையார் 200. பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ் 1 மீமிசைத் தாஅய 2 வீஇ சுமந்துவந் 3 திழிதரும் புனலும் வாரார் தோழி மறந்தோர் மன்ற மறவா நாமே கால மாரி மாலை மாமழை 4 இன்னிசை யுருமின் முரலும் 5 முன்வர லேமஞ் செய்தகன் றோரே. (எ-து) பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி, பருவமன்று; வம்பு என்றவழித் தலைமகள் சொல்லியது. (வி) காலமாரி மாலை மாமழை - மாரிக்காலத்து மாலையிற் கரிய மழை. இன்னிசை யுருமின் முரலு முன்வரல் - இனிய இசையை மெல்லிய இடியினால் இசைக்கும் முன்னர் மீண்டு வருதலை. ஏமஞ் செய்தகன்றோர் - உயிர்காவலாகச் செய்து பிரிந்தவர். பிரியும்போது போதற்கு இருந்த உயிரை மழை முரலுமுன் வரல் குறித்துப் போகாது காவல் செய்து போயவர் அம் மழை பெய்த குன்றத்துத் தண்கலுழ் இழிதரும் புனலும் வாரார். இதனால் மன்ற மறந்தார்; நாம் மறவாம் என்றாள். இஃது இன்னிள வேனிலும் வாரார், இன்னே வருது மெனத்தெளித்தோரே (அகம். 229) என்பது போலுமென்க. மன்ற மறந்தார் என்றது மழை முரலு முன் வருவேம் என நங்கண் ஏமஞ் செய்ததையும் மறந்தார்; நம்மையும் மறந்தார். அவரங்ஙனம் செய்ததனையும் அவரையும் நாம் மறவாம் என்றாளென்க. புனலும் வாரார் என்றது, வாடையும் வாரார் (160) என்பது போல வந்தது. மன்ற இடை நிலைவிளக்காதலான் தேற்றமாக மறந்தார்; நாம் தேற்றமாக மறவாம் என்பது கருத்தாம். வீஇ சுமந்து வந்திழிதரும் புனலும் வாரார் என்றது அவர் வாராமையால் அப் புதுப்புன லாடுதற் கில்லை யென்றும், அப் பூக்கள் முடித்தற் கில்லை என்றும் குறித்தாளாம். வீசுமந்து வந்திழிதரும் என்றது அப் பூக்களின் மிகுதி சூடாது கழிதல் கருதி. மலையல ரணியுந் தலைநீர் நாடன் (புறம். 390) என்னும் பாட்டால் மலையலர்களை யாறு தர அணிதலுண்டென்றறியலாம். பூநாறு தண்கலுழ் என்றதனால் அந் நீர் ஆடுதற்குரிய இனிய பண்பு குறித்தாளாம். மழை இன்னிசை யுருமின் முரலுமுன் - மழையானது முழவொத்து இன்னிசையுருமினோடு முரலுதற்கு முன்னம். மண்கணை முழவி னின்க ணிமிழ்விற், கெதிர்வ பொருவி.... ஏறுமா றிமிழ்ப்ப (பரிபாடல் 22) என்ப. ஏமஞ்செய்த கன்றோர் - இன்பஞ் செய்து பிரிந்தோர் என்பதூஉமாம். இன்னிசை யுருமொடு என்பது (அகம். 58). 201. அமிழ்த 1 முண்கநம் மயலி 2 லாட்டி பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபு நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை நெல்லி யம்புளி மாந்தி யயலது 3 முள்ளி லம்பணை மூங்கிற் 1 றூங்கும் 2 கழைநிவந் தோங்கிய சோலை 3 மலைகெழு நாடனை வருமென் றோளே. (எ-து) கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றனாய் என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) நம் அயலிலாட்டி மலைகெழு நாடனை வரைவொடு வருவனென்று அன்று சொற்றாள். யாம் விரிச்சி நிற்ப வருவ னென்று நற்சொல் சொன்ன வாயால் தேவர் அமிழ்தத்தை அருந்துவாளாகுக. உண்டற்குரிய வாய் வருவிக்கப்பட்டது. அயன் மனையிலுள்ளவ ளாதலான் அவள் கூறியது நன்கு கேட்டாய் என்றவாறு. நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை - நீலநிறமுடைய மெல்லிய சிறையின் கண்ணே கூரிய நகங்களையுடைய வாவற் பறவை. தோற்சிறையில் உகிருடைமை வாவற்கே சிறந்தது பற்றிக் கூறினாள். பால்கலப்பன்ன தேம் கொக்கு அருந்துபு - பாலொடு கலந்தாலன்ன தேனின் தன்மையை இயல்பாக உடைய மாம்பழத்தை அருந்த வேண்டி. நெல்லியம்புளி மாந்தி - இம் மாங்கனிகளிருக்க நெல்லிக்காயின் புளிச்சுவையைச் சுவைத்து. அயலது - அயலிடத் துள்ளதாகிய. முள்ளில்லாத பணைத்த மூங்கிற்கண்ணே தொங்கும்படியாக அம் மூங்கிற்கோல்கள் நிமிர்ந்தோங்கிய சோலைமலைநாடனை வரும் என்றாள் ஆதலான் என்றவாறு. கோல் மிகவும் ஓங்குதலால் அக் கோலின் இடையிடையே முள்ளில்லாது பணைத்த கிளை மூங்கிலிற் றொங்கும் என்றாள். முள்ளில்லாமை வேண்டியது பரந்த சிறையினதாதலாற் கிழியாமைகுறித்து. இரவில் இனிய மாங்கனி அருந்த விரும்பிய வாவல் நெல்லியம் தீம்புளி உண்டு பகலெல்லாம் அயலது மூங்கிற் தூங்குவது போல, நம் தலைவரும் கல்யாண அறைக்கண் என்னொடு முறையான இல்லறத்து நல்லின்பம் துய்க்க வேண்டி இந் நாள் வரும்வரை என்பது நாணொடுக்கமட்டில் நோக்கிச் சிறிதின்புற்று என்னொடு கூடாது அயலிற் கிடந்து வேதவிதி பிறழாது ஆற்றியது பெரிதன்றியான் ஆற்றிய தொன்றுண்டோ என்று தலைவி தோழிக்குக் கூறினாளாகக் கொள்க. அருந்துபு - அருந்த; அறை காய்பு (அகம். 1) காய எனப் பழைய உரைகாரர் பொருள் கொண்டது காண்க. கம்பநாடரும், பூசை முற்றவு நக்குபு புக்கென (கம்ப. அவையடக்கம் -4) எனப்பாடுதல் காணலாம். இங்ஙனம் கூறுவதே கடிநகர் வேறுபடாது நன்காற்றினை யென்றதற்கு இயைவது தெளிக. வாவற்கு மென்சிறை வள்ளுகிர் கூறியது அதனால் தூங்க வேண்டியது பற்றி. தூங்குசிறை வாவல் (சிந். 498) என்பதும் இக் கருத்து. அள்ளூர் நன்முல்லையார் 202. நோமென் னெஞ்சே 1 நோமென் நெஞ்சே புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக் 2 கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங் கினிய செய்தநங் 3 காதலர் இன்னா செய்த னோமென் னெஞ்சே. (எ-து) வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. (வி) புன்புலத்து - உழாது புல்லிதாகிய பாழ்ங் கொல்லையில். பாழூர் நெருஞ்சி (புறம். 155) என்பது காண்க. அமன்ற - நெருங்கிய. சிறியிலை நெருஞ்சியானது கண்ணுக்கினிய புதிய மலரையும் பின் முட்களையும் உண்டாக்கினாற் போலக் களவுக் காலத்து இனியன செய்த நங்காதற்குரியவர் இக் கற்புக்காலத்து இன்னாதன செய்தற்கு என் நெஞ்சு நோம். யான் நோவா தொழியினும் என் நெஞ்சு நோம் என்றாள். நெருஞ்சி முட் பயந்தாங்குக் காதலர் இன்னா செய்தல் என உவமையும் பொருளும் எழுவாயின் இனிதியைதலான் நெருஞ்சிக் கட்கின் புதுமலர் என்பது பாடமாகாமை அறியப்படும். பொருட் கேற்ப உவமையிலும் புதுமலர் பயந்த நெருஞ்சி முட்பயந்தாங்கு என்பது கருத்தாகக் கொள்க. கட்கின் புதுமலர் என்றதனால் முள் ஐம்பொறிக்கும் இன்னா திழைத்தல் குறித்துத் தனக்கை வகை இன்பமும் இல்லாமை குறித்தாள். நெருஞ்சிப் பழத்து ஐம்முள் உண்மை ஈண்டைக்கு நினைக. இனிய செய்யாததன் மேலும் இன்னா செய்தற்கு நெஞ்சு நோம் என்றதாகக் கொள்க. இனிய செய்யாமை - தனக்கின்பம் அளியாமை. இன்னா செய்தல் - அவ்வின்பத்தைப் பரத்தையர்க் களித்து அவர் பாலன்பின னாதல், இவ்விருசெயலுங் கருதி முக்காலும் நோம் என்றாளெனினுமமையும். முக்காற் கூறுதல் வழக்கு. சுடரை நோக்கு நெருஞ்சிப் பூப்போற் தன்னையே களவினோக்கி அதனான் முன்னர்க் கட்கினிமை செய்தல் குறித்தாளாம். முன்னே இனிய பூவும் பின்னே இனிய கனியும் உதவுவன போலக் களவினுங்கற்பினும் இனிமையே செய்யுங் காதலரையுடையார் பெண்டிர் பலருளராகத் தான் அங்ஙனமில்லாமைக்கு நோம் என்றாளென்பதுமாம். முதலிற் புதுமலர் போல. கட்கினியராதல் காட்டிய பின்னர் நெருஞ்சிப்பழம் போலப் பல்வகையினும் இன்னா செய்பவராயினர். என் பேறு நினைந்து என் நெஞ்சு நோம் என்பது. நெடும்பல்லியத்தனார் 203. மலையிடை யிட்ட நாட்டரு மல்லர் மரந்தலை தோன்றா ஊரரு மல்லர் கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும் 1 கடவுள் நண்ணிய 2 பாலோர் போல ஒரீஇ 3 ஒழுகு மென்னைக்குப் பரியலென் 4 மன்யான் 5 பண்டொரு காலே. (எ-து) வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (வி) வழி அரிதாக மலைகள் இடையிட்ட நாட்டினரும் அல்லர். இதனால் நண்ணு வழியிருத்தல் கூறினாள். தலை தோன்றா மர ஊரருமல்லர் - இடந் தோன்றாது மறைத்தற் குரிய மரங்களை உடைய ஊரினுமல்லர். இதனாற் கண்ணிற் காண இருத்தல் கூறினாள். இவற்றால் நாடும் ஊரும் வேறாகாது தன்னூர்ச் சேரியிலே இருத்தல் குறித்தாள் என்க. இது கண்ணிற் காண நண்ணு வழியிருத்தலானும் அறியலாம். அவர் கண்ணிற்காண யான் அவர் நண்ணு வழியிலிருந்தும், கடவுள் நண்ணிய பாலோர். போல - தெய்வத்தை நெருங்கிய குலத்தோர் போல, பால் - குலம் என்பது வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பாலொருவன் (புறம். 183) என்பதனாற்றெளிக. கடவுள் நண்ணிய என்பதனால் இவர் கீழ்ப்பாலோரை நெருங்காமை அகறல் குறித்தாள். ஒரீஇ ஒழுகு மென்னைக்கு - என்னை நெருங்காது சேய்மையினொழுகும் என் தலைவற்கு. பரியலென் - இப்போது யான் இரங்குதல் செய்யேன். மன் யான் பண்டொரு காலே - அங்ஙனம் மிகப் பரிதல் செய்தது என்னை மரீஇ ஒழுகிய முன்னொரு காலத்தே என்றவாறு. கடவுள் நண்ணிய பாலோர் தேவ குலத்தார் என்பதனானறிக. பாலோர் போல ஒரீஇயொழுகும் என்றது அங்ஙனம் அல்லாமல் தானும் அவரும் ஒத்த குலமாதல் குறித்தது. ஒத்த குலத்தவராய் என்னையே மருவியிருந்துவிட்டு, இப்போது பாலோர் இழிகுலத்தோரை வழியிற் கண்டு ஒரீஇ ஒழுகுதல் போல என்னை இழி வாக்கி ஒதுங்கிச் செல்வர் என்று பரியலென் என்றாள். தம்மை உகப்பாரைத் தாம் உகப்பர் என்பது குறிப்பெச்சம். கடவுள் நண்ணிய பாலோர் என்பது ப்ராஹ்மண பதத்தை மொழி பெயர்த்துக் கூறியதாம். ப்ருஹ்மத்தை நண்ணியவர் என்பது அதன் பொருளாதலா னுணர்க. மிளைப்பெருங்கந்தனார் 204. காமங் காம மென்ப 1 காமம் அணங்கும் பிணியு மன்றே நினைப்பின் முதைச்சுவற் 2 கலித்த முற்றா விளம்புல் 3 மூதா தைவந் 4 தாங்கு விருந்தே 5 காமம் பெருந்தோ ளோயே6. (எ-து) தலைமகற்குப் பாங்கன் உரைத்தது. (வி) தாழ்த்துச் சொல்ல வேண்டிய தொன்றைக் காமம் காமம் என எடுத்துச் சொல்வர். நினைப்பின் - உண்மையை நினையின். காமம் அணங்குதாக்குதலும் நோயும் அல்லது வேறோ அன்றே எனவும் விருந்தே எனவும் வினவினனாகக் கொள்க. இங்ஙனம் வினாவிக் கழறிய பாங்கற்குத் தலைவன் விடையாகக் கூறியது 136 ஆம் பாட்டு என்பது மேலே விளக்கினாம். முதைச்சுவற் கலித்த - பழைய மேட்டில் தழைத்த. முற்றா விளம்புல் - இளமை நிரம்பாத புல்லை. மூதா தைவந்தாங்கு - முதிய பசு நாவினாற் தடவினாற் போல. விருந்தே - விருந்துணவாவதோ. பெருந்தோளோய் - காமஞ் செய்தற்கு முன்னம் பெருந்தோளுடைமையைக் குறித்தது, இறைவா தடவரைத் தோட் கென்கொலாம் வந்தெய்தியதே (திருக்கோவை 20) என்றது காண்க. விருந்தே என்று வினாவிக் காமம் உடல் வலி செய்வதன் றென்றும். பிணியன்றே என்றும், உடலைக்கெடுப்ப தென்று அணங்கன்றே என்று உள்ளத்தை மயக்குவதென்றும் அறிவுறுத்திக் கழறினான் என்க. இவற்றிற்கு விடையாகவே தலைவன், காமம் அணங்குமன்று பிணியுமன்று என்றும், யானை குளகுமென்று ஆள் மதம் போன்றதென்றும் 136 ஆம் பாட்டால் உரைத்தானென்க. இரண்டு பாடலும் பாடியவர் ஒருவரேயாதலும் நினைக. விருந்தாயிற் றுய்த்தபின் உடல் வலி பெறுதலும், உள்ளம் இளையாது மகிழ்தலும், காமமாயிற் துய்த்தபின் உடல் இளைத்தலும், உள்ளம் அணங்குதலும் கருதிப் பாங்கன் கூறினான் என்க. உலோச்சனார் 205. மின்னுச்செய் கருவிய 1 பெயன்மழை தூங்க விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப் பொலம்படைப் 2 பொலிந்த 3 வெண்டே 4 ரேறிக் கலங்குகடற் றுவலை 5 யாழி நனைப்ப இனிச்சென் றனனே யிடுமணற் 6 சேர்ப்பன் யாங்கறிந் தன்றுகொ றோழியென் தேங்கமழ் திருநுத லூர்தரும் பசப்பே. (எ-து) வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) மழை தூங்க - மழை மேகம் மேலே அசைய. ஆடு அன்னம் விசும்பு பறை நிவந்தாங்கு - நீர்நிலைகளில் விளை யாடிய அன்னங்கள் விசும்பிற் பறத்தலுடன் உயர்ந்தாற் போல. பொலம் படைப் பொலிந்த - வெண்பொன்னாற் படுத்த தகடுகளாற் பொலிவு பெற்ற. வெண்டேரேறி - வெள்ளிதாகிய தேரிலேறி. யானைக்கொம்பாற் செய்தது பற்றியும் வெள்ளிதாகலாம். ஆயம் ஆடுதலாற் கலங்கிய கடலின் துவலைகள். ஆழி நனைப்ப - உருளைகளை நனையாநிற்க. என்றது இன்னும் ஈரம் புலராத அணிமை குறித்தது. இனிச் சென்றனன் - இப்போது சென்றனனாவன். இடுமணற் சேர்ப்பன் - நம்மாலிடப்பட்ட மணற் சேற்றினை உடைய சேர்ப்பன். இவ்வுண்மையைத் தொடலை யாயமொடு கடலுடனாடியும், சிற்றி லிழைத்தும் சிறுசோறு குவைஇயும், வருந்திய வருத்தம் தீர யாஞ்சிறி, திருந்தன மாக வெய்தவந்து, தடமென் பணைத்தோள் மடநல் லீரே, யெல்லு மெல்லின் றசைவுமிக உடையேன், மெல்லிலைப் பரப்பின் விருந்துண்டி யானுமிக், கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ (அகம். 110) என்பது முதலாக வருவன வற்றுட்காண்க. ஈண்டுச் சிறு சோறு மணலே யாதலுணர்க. நச்சினார்க்கினியர் உண்டிகளை ஆடு மணலாற் செய்த சிற்றில் என்றார். மணற் சிற்றில் (கலி. 50). இடுமணல் என்றது நல்விருந்து செய்யாது இரங்குதற்கு ஏதுவாயது. மணற் சேர்ப்பு என நினைவாரும் உண்டு. என் தேங்கமழ் நுதல் - திலகத்தாற் றேன்மணங் கமழ்கின்ற திருநுதல். யாங்கறிந்தன்றுகொல் - எங்ஙனம் அவர் செல்வர் என அறிந்ததோ. பசப்பூர்தரும் - அவன் செல்லற்கு முன்னே தன்கட் பசலை ஊர்தரா நிற்கும் என்றவாறு. மேனி பசப்பூர்வது (குறள். 1185) என்புழிப் போல நுதல் பசப்பூர்தரும் என வந்தது. முயக்கிடைக் கைகளை யூக்கப் பசந்தது, பைந்தொடிப் பேதை நுதல் (குறள். 1238) என்புழிப் போல பிரிவாற்றமாட்டாது உறுப்பு நலனழிதல் உரைத்ததாம். அவன் புறப்படுதற்கு முன்னர்த் தன்னை நீவியபோது அறிந்தது போலும் என்பது எச்சம். இனிச் சேர்ப்பன் தேர் ஏறிச் சென்றனன்; பசப்பு நுதலை ஏறிச் செலுத்தும் என்பதூஉமாம். இவர்தந்தென் மேனிமே லூரும் பசப்பு (குறள். 1182) என்புழிப் போலக் கொள்க. ஐயூர் முடவனார் 206. அமிழ்தத் 1 தன்ன வந்தீங் கிளவி அன்ன வினியோள் குணனு 2 மின்ன இன்னா வரும்படர் செய்யு மாயின் உடனுறை 3 வரிதே காமம் குறுக லோம்புமி னறிவுடை யீரே. 4 (எ-து) கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. (வி) இனியோள் அந்தீங்கிளவி அமிழ்தத்தன்ன - மெய்யினி யோளுடைய அழகிய இனிய மொழிகள், இங்குப் பாவிகட்கெய்த அரிதாய் அறமே செய்தாரும் ஆங்குப்போய் தேவருடம்பிற்றுய்த்தற் குரிய அமிழ்தத்தை ஒத்து எமக்கு ஈண்டே சுவை செய்வன. இனியோள் குணனும் அன்ன - அவ்வினியோள் குணங்களும் அவ்வமிழ்தத்தையே ஒத்தன என்றான் என்க. இனியோள் என்றது கண்டமாத்திரையே மெய்யான் இனிமை செய்தல் கருதி. இதனால் மெய்யும் கிளவியாற் சொல்லும், குணனால் உள்ளமும் கூறித் திரிகரணமும் சிறத்தல் காட்டினான். இன்ன - நுகருந்தோறும் இனியனவாகிய சொல்லும் மெய்யுங் குணனும் ஆகிய இவைகள். நுமக்கு இன்னா அரும்படர் செய்யுமாயின் - சாதலாகிய இன்னாமைக்குக் காரணமாகிய அரிய துன்பத்தை நுமக்குச் செய்யும் என்பது கருத்தாயின். காமம் உடனுறை வரிதே - காமமானது நும்மனோர் உடனுறைவது அரிதேதான். அறிவுடையீர் - அது கேடாக அறியும் அறிவுடைய நீர். குறுக லோம்புமின் - அதனை நெருங்குதலினின்று நும்மைக் காத்துக் கொள்மின். சாதலி லின்னாத தில்லை (குறள். 230) என்பதனால் ஈண்டின்னாமை சாதலாகத் துணியப்பட்டது. நுமக்குச் சாதல் செய்யும் அரும்படர் காமம். எமக்கோ அவள் திரிகரணமும் அச் சாதலை மாற்றும் அமிழ்தம் என்று கருதிக் கூறியது கண்டு உண்மையுணர்க. இங்ஙனம் தலைவன் கழறிய பாங்கற்கு இனிதாக உரைத்த நயங்காணமாட்டாது நான் அறியாமையாற் காமநோயுற்றேன்; இனிச் செய்யுமாறியாது; நீவிர் அங்ஙனஞ் செய்யற்க என்று தலைவன் கூறியது என்று அகப்பொருட் கேற்காது உரைத்தாருமுண்டு. உறையனார் 207. செப்பினஞ் 1 செலினே 2 செலவரி தாகுமென் றத்த வோமை யங்கவட் டிருந்த இனந்தீர் பருந்தின் புலம்புகொ 3 டெள்விளி 4 சுரஞ்சென் மாக்கட் குயவுத்துணை யாகும் கல்வரை யயலது 5 தொல்வழங்கு 6 சிறுநெறி நல்லடி பொறிப்பத் தாஅய்ச் சென்றெனக் கேட்டநம் மார்வலர் பலரே. (எ-து) செலவுக் குறிப்பறிந்து அவர் செல்வாரென்று தோழி சொல்லக் கிழத்தி உரைத்தது. (வி) செலினே ஆகும் செப்பினம் செலவு அரிது என்று என்க. யாமே செல்லின் இவளைப் பிரிதல் கூடும்; மொழிந்தேமாய்ச் செல்லுதல் அரியது என்று அவர் துணிந்த தனால், அவர் நல்லடிகள் தாஅய்ச் சென்ற எனக் கேட்ட நம் ஆர்வலர் பலர் என்க. சென்ற என என்பது சென்றென என்று விகாரப்பட்டது. நல்லடி என்றாள் என்றும் தன்னைப் பிரியாது தன்கை யால் வருடப்பெற்ற நன்மை நினைந்து. நல்லடி பொறிப்ப - நல்லடிகள் சுவடுபட என்றது கல்வரைச் சிறுநெறியாதலால் அக் கற்கள் சுவடு பட அழுந்துதல் குறித்தது. பொறிப்பத் தாஅய் என்றது அங்ஙனம் கற்கள் சுவடுபட அழுந்தா நிற்கத் துன்பம் பொறாது அவ்விடத்தினின்று பெயர்ந்து தாவிச் சென்று என்றவாறு. கல்லுற்ற நோய் வருத்தக் காலுநடை யற்றேன் (தொல். களவு.11 உரை மேற்கோள்). கேட்ட நம் ஆர்வலர் - நல்லடிகள் சென்ற எனக் கண்டார்வாய்க் கேட்ட நம்கண் அன்பினர். பலர் என்றது இப்பலரும் நல்லடி சென்ற எனக் கேட்டு மொழிய அறிந்த என்னுடன் ஆர்வமின்மையால் நீயொருத்தி அவர் செல்வர் என்று தாழ்த்து வந்து மொழியலாயினை என்று கொள்ள வைத்தாளாம். அத்த ஓமை அங்கவடு - பாலையிலுள்ள ஓமை மரத்தின் கவடு. அம்சாரியை. `நிழலி லோமை (அகம். 223). முளிசினை யோமை (396) என்ப. இனந்தீர் பருந்து - பெடையை நீங்கிய பருந்து. புலம்புகொள் தெள்விளி - தனிமை வருத்தங்கொண்ட தெள்ளிய ஓசை. சுரஞ்செல் மாக்கட்கு - சுரத்திற்றம் மினந்தீர்ந்து செல்லும் மனவறிவு பெறாதார்க்கு. உயவுத்துணை யாகும் - துன்பத்திற்குற்ற துணையாகும். என்றது நீவிரும் என்போல இனந்தீர்ந்து புலம்புறுதிர் கொல்லோ எனத் துன்பம் வினாவுதல் போல இசைப்பது குறித்தது. உயவு - துன்பம். துன்பத்திற் கியாரே துணை (குறள் 1299) என்றது காண்க. கல்வரை - உளதாயிற் கற்களன்றி மரங்களில்லாதமலை. தொல் வழங்குசிறுநெறி - பண்டு நடந்த சிறுவழி என்றது பின்னொருவரும் நடவாமை குறித்தது. கல்வரை யயலது நெறி அயலில் இரு புறனும் கல்வரைகளை வைத்து நடுவிற்செல்லும் இட்டரு நெறி என்றவாறு. சிறுநெறி என்றதனாற் றோல் (யானை) வழங்குவதாகா தென்க. துறையுட் செலவுக்குறிப் பென்பது. குறிப்பிற் கண்டிசின் யானே..... பண்டினு நனிபல வளிப்ப (நற். 177) என்பது போல அது. கபிலர் 208. ஒன்றே னல்லே 1 னொன்றுவென் 2 குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெரிதாள் 3 வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் 4 நின்று கொய 5 மலரு நாடனொ 6 டொன்றேன் தோழி யொன்ற 6 னானே. (எ-து) வரைவிடை ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) நாடனொடு ஒன்றேன் - நாடனொடு வரைவிற் கூட மாட்டாதுள்ள யான். ஒன்றனான் - ஒரு காரணத்தினால். ஒன்றேன் அல்லேன் - உயிரோடு பொருந்தாதேன் ஆகேன். ஒன்றுவென் - உயிரோடு பொருந்துவேன் என்றாளென்க. பொருகளிறு மிதித்ததனால் நெரிந்த அடியினையுடைய வேங்கைமரம். குறவர் மகளிர் - குறப்பெண்கள். கூந்தற் பெய்ம்மார் - கூந்தலிற் பெய்தற் பொருட்டு. நின்று கொய மலரும் நாடன் - அம் மகளிர் ஏறாது நின்றே எளிதிற் கொள்ள மலரும் நாடன். இளம்பூரணர் இப் பாட்டு இறைச்சிப் பொருள் கோளாக்கி இதன்கண் வேங்கையைத் தலைவனாகக் கொண்டு முன்னம் அரியனாயவன் இப்போது எளியனாயினான் என்று கூறிக் காட்டினார் (தொல்.பொருள். 34) இது மகளிர் நின்று கொய மலரும் என்பதற்கு இயைபுபட நில்லாமையான் இதனை உள்ளுறையுவமமாகவே கொண்டு பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் வேங்கையைத் தலைவியாகவே கருதினர் (தொல்.உவம. 25 பேரா. தொல். அகத். 47 நச்). பொருகளிறுகள் - வரைவுடன் படுவாரும், வரைவு மறுப்பாரு மாகிய இருதிறத்தாரென்க. வரைவுமறுத்தாராற் சாய்க்கப்பட்டு, வரைவுடன் படுவாரான் அடியோடு வீழாது தாங்கப்பட்டு நிற்குந் தலைவிக்குப் பொருகளிற்றாற் சாய்ந்தும் சாயாது நிற்கும் வேங்கை உவமமாயிற்று. அவ் வேங்கையை மகளிர் நின்று கொய்தல் தலைவி பலரான் அலைப்புண்டு நிற்றற்குவமையாயிற்று. அங்ஙனம் சாய்ந்து அலைப் புண்ணும் நிலையினும் என்றதனான் உயிரோடு ஒன்றுவன் என்றாளென்க. ஒன்றனான் என்பது யானிறந்துபடல் செய்யாதபடி ஆற்றுவித்து என்னை உடன் கொண்டு போவது சொல்லியவொரு செய்தியான் என்று வரைவுடன்படாராயிற் செய்வது உடன் போக்கேயாதல் தெளிக. தமர்வரைவு மறுத்தலான் உயிரோடு ஒன்றேனாதற்குரிய யான் அங்ஙனம் ஆகேன்; ஒன்றனான் ஒன்றுவேன் என்றாளாம். பாலை பாடிய பெருங்கடுங்கோ 209. அறந்தலைப் 1 பட்ட நெல்லியம் பசுங்காய் மறப்புலிக் குருளை கோளிடங் கறங்கும் 2 இறப்பருங் குன்ற மிறந்த யாமே குறுநடைப் 3 பலவுள் ளலமே 4 நெறிமுதற் கடற்றிற் 5 கலித்த முட்சினை 6 வெட்சித் தளையவிழ் பல்போது கமழும் மையிருங் 7 கூந்தன் மடந்தை நட்பே. 8 (எ-து) பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது. (வி) பாலையிற் செல்வோர் நீர்வேட்கையுற்று அருந்த நீர் கிடையாது உயிர்போம் அமையத்து அவர் செல்லுயிர் நிறுத்தற்குக் (அகம். 271) காரண மாதலான் ஓரறியுயிராகிய அறஞ்செய்தலிற் றலைப்பட்ட நெல்லி என்றான். தான் பாலையிற் சென்ற போது தான் அருந்தி உயிர்பிழைத்த தையே நினைந்து கூறினானவன். மறப்புலிக் குருளை கோள் - கொலைப்புலிக்குட்டி பாய்ந்து கொள்ளற்கண். இடங்கறங்கும் - அதற்குப் பொருந் தாத இடப் புறத்து வீழ்ந்து உருளும் குன்றம் என்க. நெல்லி தின்னாத புலிக் குருளை நீர் வேட்கையாற் றின்று நீர்காண் வேண்டி இடப் பக்கத்துக் கறங்குதலான் தின்னற்காகாது உருண்டு கிடக்கும் என்பது கருத்து. அறந்தலைப்பட்ட நெல்லியாதலாற் கொலைப் புலிக்குருளைக்குதவாது காயை இடத்துதிர்க்கும் என்பதாம். புலி இடம் வீழ்ந்த துண்ணா திறக்கும் (நாலடி. 300) என்ப. கோள் - பாய்ந்து கொள்ளுதல். நெல்லியம் பசுங்காய் கோளாகக் குருளையிடங்கறங்கும் என்பதும் ஆம். கோள் - கொத்து. நெல்லிக்காய் கொத்தாக இருத்தல். சிறியிலை நெல்லிச் சிறுகாய்த் துணரும் (பெருங்கதை 1:51) என்பதனா னறியலாம். இறப்பருங் குன்றம் - பிரிந்து போகும்போது விரைந்து நடத்தற் கரிய மலைகளை. இறந்த யாம் - மீண்ட போது விரைந்து கடந்தயாம். குறுநடைப் பலவுள்ளலம் - விரை தற்குத் தடையாய்க் குறுமையின் நடத்தற்குக் காரணமான பல இடர்ப்பாடுகளையும் நினையலாம். நெறிமுதல் மடந்தை நட்பே உள்ளினம் - வழியடியிற் பெருநடைக்குக் காரணமாக எம் மடந்தையின் நட்பினையே நினைந்தனம். உள்ளலம் என்ற எதிர்மறைக்கு மறுதலையாய உள்ளினம் என்ற உடன்பாடு வருவிக்கப்பட்டது. கற்றார் கடையரே கல்லாதவர் (குறள். 395) என்புழிப் போல. நட்பேயுள்ளுதலான் குறுநடைப்பல உள்ளாது பெருநடையின் விரைந்து வரலானேன் என்பது குறிப்பு. வேண்டா நடையர் மென்மெலவருக, தீண்டா வைமுட் டீண்டி நாஞ்செலற் கேமதி வலவ தேரே (நற். 21) என்ற நற்றிணையானும் இக் குறுநடைப் பொருளுய்த்துணரலாம். பொருள்மேற்பிரிந்தபோது பலநினைந்து குறுநடை கொண்டு வழி நெடிதாதல் கண்டவன் மீளும்போது நட்பே நினைந்து பெரு நடைகொண்டு வழி குறிதாதல் தேர்ந்து கூறியவாறாம். அரும்பொருள் வேட்கை யாகிநிற் றுறந்து, பெருங்க லதலிடைப் பிரிந்த காலைத், தவநனி நெடிய வாயின வினியே, யணியிழை வுள்ளியாம் வருதலி, னணிய வாயின சுரத்திடை யாறே (ஐங். 359) என்பது காண்க. நீளிடை யரிய வாயினு மெளிய வன்றே.... நெடுமானோக்கி நினுள்ளியாம் வரவே (ஐங். 360). என்பதும் அது. கடற்றிற் கலித்த - காட்டிற் றழைத்த. முட்சினை வெட்சி - முட்போன்ற அரும்புகளையுடைய வெட்சியின். தளையவிழ் பல்போது - பிணியவிழ்ந்த பல பேரரும்புகள். கமழும் மையிருங் கூந்தல் - கமழும் மேகம் போற்கரிய கூந்தல். தான் மீண்டு வந்த போது காட்டினின்று கொணர்ந்து சூட்டிய வெட்சிப் போதுகள் மணக்குங் கூந்தல் என்றது வந்த அணிமை குறித்தது. நிற்பிரிந் துறைநர், தோள் துணையாக வந்தனர், போதவிழ் பூவிரும் புகவே (ஐங். 496) தலைவன் மீளற்குமுன் வறுங்கூந்த லாதல் உணரலாம். நெறிமுதற் கடற்றின் எனினு மமையும். இதன்முள் ளொப்பின் முகைமுதிர் வெட்சி (அகம். 133) என்பதனால் முட்சினை என்பதே பாடமாத லுணர்க. காக்கைபாடினியார் நச்செள்ளையார் 210. திண்டேர் நள்ளி கானத் தண்டர் பல்லா பயந்த நெய்யிற் றொண்டி முழுதுடன் விளைந்த 1 வெண்ணெல் வெஞ்சோ றெழுகலத் 2 தேந்தினுஞ் சிறிதென் றோழி பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு 3 விருந்துவரக் 4 கரைந்த காக்கையது பலியே. (எ-து) பிரிந்து வந்த தலைமகன் நன்காற்றுவித்தாய் என்றாற்குத் தோழி உரைத்தது. (வி) என் தோழி தன் பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியாக வெஞ்சோறு எழுகலத்தேந்தினும் சிறிது என்க. நள்ளி தன் கானத்து அண்டர் நிரைகளை வெட்சிமறவர் கவராத வலியுடைமை குறித்துத் திண்டேர் கூறிற்று. நள்ளி கானம் - தோட்டி மலைக்காடு. இஃது ஓசூர்ப்புறத் துள்ள அங்குசகிரிப் பக்கமாகும். ஓசூர்ப்புறம் இன்றைக்கும் ஆநிரையாற் சிறந்துள்ளது. அண்டர் பயந்த - இடையர் வளர்த்த. பல்லா நெய்யின் - பல பசுக்களுடைய நெய்யோடு. என்குற்ற மாகுமிறைக்கு (குறள். 436) என்புழிக் குற்றமாகும் என்பது ஆகுங் குற்றம் என்றாற் போலப் பல்லா பயந்த என்பதும் வந்தது. தொண்டி - தொண்டிநாடு, நாடு முழுதும் உடன் விளைந்த வெண்ணெல் - உடன் விளைந்த வெண்ணெல் என்றது பருவந் தப்பாது பருவத்துடன் விளைந்த வெள்ளிய அரிசியையுடைய நெல் என்றவாறு. வெஞ்சோறு - விரும்பத்தக்க சோறு; சூடாறாத சோறுமாம். ஏந்தினும் - சுமந்து நின்றாலும், என்றது ஒவ்வோர் உண்கலமாக ஏழு கலமும் நிறைந்த நெய்யின் வெஞ்சோற்றை உண்டொழியும் வரைத் தோளிற்றாங்கி நின்றாலும் என்றவாறு. பலி சிறிது - அவள் தெய்வத்தை வழிபட்டு இடும்பலி உணவு சிறியதாகும், பெருந்தோளை நெகிழ்வித்த துன்பத்தை நீக்குதற்கு. தோள் நெகிழ்த்தலாவது தோளை மெலிவித்துத் தோள்வளையை ஓடச்செய்தல். விருந்துவரக் கரைந்த காக்கை - அத் தோளையே அனுபவிக்கும் விருந்துவரக் கரைந்த காக்கை. தோள் புதிதுண்ட (அகம். 320) என்பது வழக்காதல் காண்க. வேறு அதிதியாக வரும் விருந்தினும் தன் தோளை விருந்தாகக் கொள்ளும் விருந்தாகிய தலைவன் வரக் கரைந்த சிறப்பு நோக்கிச் சிறியதென்றாள். தலைவன் பெருந்தோட்கு விருந்து தலைவியின் கூட்டமாதலை, விருந்துமாக நின் பெருந்தோட்கே (பதிற். 81) என்பதனால் உணர்க. இனி விருந்து வரக் கரைந்த காக்கை என்பதனை விருந்து வாரா நிற்கக் கரைந்த காக்கை எனக் கொண்டு காக்கை கரைந்ததாகிய நிமித்தமும் அதன் பயனாகிய விருந்து வருகையும் உடனிகழ்ந்தன என்று கருதி அங்ஙனம் பயனுடனிகழக் குறித்த சிறப்பைப் பாராட்டி இங்ஙனம் கூறினாள் என்பதுமாம். பலரணி மணிக்குடம் மண்ணு நீரொடு...... அலர் கதிர்க் கரும்பிளை மடுப்ப (சிந். 1252) என்புழி நச்சினார்க்கினியர், மணிக்குடம் மண்ணு நீர்ப் பயனாகவும், கொடிவலம் (காக்கை வலமாதல்) அதற்கு நிமித்தமாகவுங் கூறுதல் கண்டுணர்க. இது பிரிந்த காலத்து நன்காற்றுவித்தாய் என்ற தலைவற்குத் தோழி கூறிக்காட்டிய தாதலான் எம்பெருமான் என்னைப் பாராட்டிக் கூறுதலை நல்லுரை யென்னேம். நும்மை வரக் கரைந்த காக்கை அன்றோ மிகவும் போற்றத் தக்கது என்று கூறுமுகத்தான் காக்கைவாயிற் கட்டுரை போல என்வாய்ச் சொல்லை நம்பி ஆற்றிய அவளும், யான் உரைத்தவாறு குறித்தபொழுதில் ஈண்டெய்தி அவள் தோட்கு விருந்தாகிய நீவிருமே என்னாற் பாராட்டற் குரியீரென்று குறித்தாளாவள். இப் பாட்டில் தலைவனும் தலைவியும் பார்ப்பனராதல் உணவாலும் காக்கைபலி யிடுதலானும் தெளியலாம். பச்சூன் பெய்த பைந்நிண வல்சி, பொலம்புனை கலத்திற் றருகுவென் (ஐங்குறு. 391) என்பது போல ஊனுணவாக இல்லாமை நோக்கிக் கொள்க. 167 ஆம் பாட்டில் உணவு கொண்டே பார்ப்பனராகக் கூறுதல் காண்க. காவன் முல்லைப் பூதனார் 211. அஞ்சி லோதி யாய்வளை நெகிழ நேர்ந்துநம் மருளார் 1 நீத்தோர்க் கஞ்சல் எஞ்சினம் வாழி தோழி யெஞ்சாத் 2 தீய்ந்த 3 மராஅத் தோங்கல் 4 வெஞ்சினை 5 வேனி லோரிணர் தேனோ டூதி ஆராது பெயரும் தும்பி நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே. (எ-து) இடைச்சுரத்துக் கவலுவன கண்டு நம்மை ஆற்றாரென நினைந்து மீள்வர்கொல்? எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது. (வி) அம் சில் ஓதி - அழகிய நுண்ணிய முன்மயிரினை உடையாய்; விளி. சில் - தலையணியுமாம். சில்லியல் கோதையை (கம்ப. யுத்த. இலங்கை கேள்வி 3) என்பது காண்க. ஆய்வளை நெகிழ - மெலிவைப் பிறர் ஆய்தற்குக் காரணமான வளைகள் நெகிழா நிற்க. நம் அருளார் - நம்மை அருளாராய். நீத்தோர்க்கு - விட்டுப் பிரிந்தோர்க்கு. நேர்ந்து - அங்ஙனம் அருளாது நீத்தற்கண் உடன்பட்டதனால். அஞ்சல் எஞ்சினம் - அவர் பொருட்டு அஞ்சுதல் குறைந் தேமாவம். அவரும் சுரனிறந் தோரே ஆவர். இடைச்சுரத்து மீள்வரல்லர் என்பது குறிப்பு. பிரிவு உரைத்தபோதே நம் வளை நெகிழா நிற்க அவர் நம்மை நீத்தற்குடன் பட்டேம். அவ் வளை நெகிழ்தல் கண்டு அவர் நம் மருளார் நீத்தார். அந் நீத்தோர்க்கு நேர்ந்ததாவது அவர் நீத்தற் குடன்பட்டதேயாம். இது நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் (குறள். 1181) என்புழித் தலைவி தானே அவர் நல்காமையை, அஃதாவது தன்னை நல்காது பிரிதலை உடன்பட்டேன் என்று கூறியது போன்ற தொன்றென்க. ஆண்டுத் தலைவி யான் செய்து கொண்ட துன்பத்தினை ஒருவருக்குச் சொல்லலும் பழியாம் என்று கருதியது போல ஈண்டும் யாம் செய்து கொண்ட தவற்றில் அவர் பொருட்டு அஞ்சல் என்ற சொல்லும் இல்லாது குறைந்தேமாவேம் என்றாளென்க. நேர்ந்து அஞ்சல் - நேர்ந்தபின் அவர்க்கு அஞ்சாதேயிரு. எஞ்சினம் - எஞ்சாநாம் உயிரோடு எஞ்சுநாம்; எஞ்சினம் ஆதலான் அவர் ஓரிடையூறுமின்றிச் சுரனைக் கடந்து சென்றோரே யாவர் என்றாள் என்பது நன்கு பொருந்தும். அவர்க்கு ஏதம் உளதாயின் நாம் ஈண்டு எஞ்சியிரேம் என்னுந் துணிவாற் கூறினாளென்று கொள்க. எஞ்சுதல் எஞ்சினா ரிவ்வுலகத் தில் (நாலடி. 21 : 4) என்பது போல வந்தது. தீய்ந்த கடம்பின் ஓங்குதலுள்ள வெய்யகிளையில் வேனிற் பருவத்துண்டாகிய ஒரு பூங்கொத்தைத் தன் கிளையிற் பெடை யாகிய தேனினத்தொன்றுடன் அவ்விணர் திறத்தற்கு ஊதுதல் மட்டும் செய்து குறைந்த தேனுடைமையால் அப் பெடையை அருந்தவிட்டுத் தான் அருந்தாது பெயர்ந்திருக்கும் தும்பியை யுடைய நீரில்லாது வைக்கப்பட்ட நிலத்துப் பாலையைக் கடந்தோரேயாவர் என்க. வண்டுந் தேனும் சுரும்பும் ஞிமிறும் தும்பியின் கிளையாதலாற் தும்பி தேனோடூதி ஆராது பெயரும் (சிந். 392) என்றாள். துய்த்தற்குச் சிறிது கிடைத்த அளவினும் பெடையைத் துய்க்க விட்டுத் தும்பி ஆராதிருந்து இக் கொடிய நிலத்து வாழா நிற்க, யாம் கிடைத்தது கொண்டு காதலியை அருத்திப் பசித்தும் பதி பெயராது வாழ்தல் தேற்றாது பொருள் வேட்டுச் சுரன் புக்கேம். நம் காதலி நம் பிரிவில் என்னாவளோ என்று தலைவன் கவன்று மீள்வனென்பது தலைவி நினைப்பு. தும்பி தேனோடூதி ஆராது பெயரும் என்றதனாற் தும்பி ஆணாகவும், அதன் கிளையாகிய தேன் பெண்ணாகவும் கொள்ளலாயிற்று. சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப், பிணைமா னினிதுண்ண வேண்டிக் கலைமாத்தன். கள்ளத்தின் ஊச்சும் சுரம் (ஐந்திணை ஐம்பது 32 : 3) என்பது காண்க. தேனொடு ஆராதூதி என்பதுமாம். ஓங்கல் வெஞ்சினை - ஓங்குதலல் லாத வெஞ்சினை எனினும் ஈண்டைக் கேற்கும். நெய்தற் கார்க்கியனார் 212. கொண்க னூர்ந்த கொடுஞ்சி 1 நெடுந்தேர் தெண்கட லடைகரைத் தெளிமணி 2 யொலிப்பக் காண 1 வந்து நாணப் பெயரும் அளிதோ தானே காமம் விளிவது மன்ற நோகோ யானே. (எ-து) குறைநேர்ந்த தோழி குறைநயப்பக் கூறியது. (வி) தெளிமணி - அவன் வரவு தெளிதற்குரிய மணி. கொண் கனானவன் ஊர்ந்த தேர் மணி ஒலிப்பக் காண வந்தும் என்க. காணவந்தும் - நம்மைக் காணவந்தும். நாணப் பெயரும் - நாம் காண்டற்கு நாணுதலால் நம்மைக் காணாது பெயர்ந்துபோம். நாணப் பெயர்த்தல் (கலி. குறிஞ்சி 12) என்புழி நச்சினார்க்கினியர், நம்மை நாண் வருத்துகை யினாலே அவனைப் போக்குதல் என்றது போல் ஆயமும் அயலும் அறியுமென்று அஞ்சி நாம் நாணா நிற்பப் பெயரும் என்றவாறு. காமம் அளிது - இத்தகைய காமம் இரங்கத்தக்கது. தானே விளிவது மன்ற - தானே உள்ளே கிடந்து வற்றுவது தேற்றமாக. யான் நோகோ - யான் இதற்கு வருந்துவேன். காணவந்தும் என்றது யாம் சென்று காண்டற்கரியவன் என்பதுபட நின்றது. காமம் நாணைக் கடந்து செல்லாதாயின் அச் சிறைக்குள்ளே கிடந்து தானே விளிய வேண்டுவதுதான் என்றவாறு. களவில் தலைவனைக் கூடும் தலைவியர் நாணினைக் கடந்த காதலேயுடைய ரென்பது, உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல, நாணுவரை நில்லாக் காமம் நண்ணி, நல்கினள் வாழியர் வந்தே (அகம். 208) என்பதனாற் றெளியலாம். சிந்தாமணியுள்ளும், புல்லி நின்றமெய்ந் நாண்புறப்பட்டது.... இயைந்தனர் (1329) என்றது காண்க. நோகோ என்றாள் இக் காமம் உட்கிடந்து சாம்புதல் குறித்து. கார்க்கியன் - கர்க்கி கோத்திரத்தவன். கச்சிப்பேட்டுக் காஞ்சிக்கொற்றனார் 213. நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக் 2 கவைத்தலை முதுகலை 3 காலி னொற்றிப் பசிப்பிணிக் கிறைஞ்சிய 4 பரூஉப்பெருந் ததரல் 5 ஒழியி 1 னுண்டு வழுவி 2 னெஞ்சிற் றெறித்துநடை 3 மரபிற்றன் 4 மறிக்குநிழ லாகி நின்றுவெயில் 5 கழிக்கு மென்பநம் இன்றுயின் முனிநர் சென்ற வாறே. (எ-து) நம்பெருமான் நம்பொருட்டு இடைநின்று மீள்வர் எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது. (வி) முதுகலை - அறிவுடைய கலையானது. காலின் - மரத்தடியில். ஞெரேரெனக் கவைத்தலை ஒற்றி - கவைக் கொம்பின் நுனைகொண்டு விரையப் பாய்ந்ததனால். பசிப்பிணிக்கு இறைஞ்சிய - தன் மறியின் பசியாகிய பிணி தீர்தற்குப் பெயர்ந்து வளைந்த. பரூஉப்பெருந் ததரல் - பருத்த பெரிய பட்டையை ஒழியின் உண்டு - தன்மறி உண்டொழியின் தானுண்டு. வழுவில் நெஞ்சின் - குற்றமற்ற உள்ளத்தோடு. தெறித்து நடைமரபின் - துள்ளி நடத்தலை வழிவழியாக உடைய. தன் மறிக்கு - தன் கன்றுக்கு. நிழலாகி - தன் மெய்யே நிழல் செய்வதாக. நின்று - அசையாது நின்று. வெயில் கழிக்கு மென்ப - வெயிலைக் கன்றுக்குப் படாது நீக்கும் என்பர். நம் இன்றுயில் முனிநர் - நங்கண் இனிய துயிலுதலை வெறுத்தவர். சென்றவாறு - போய வழி. ஆண்கலை மறிக்கு நிழலாக நின்று வெயில் கழிக்கும் என்ப ஆயினும் பொருள் நசை நன்குடையராதலான் இடைநின்று மீளார் என்றாள் என்க. கவை - கவை மருப்பு. கவைத்தலை - அம் மருப்புக் கவையின் நுனி. கால் - பாதத்தின் பராரை. கருங்கால் வேங்கை (26 - 47) கால்வேம்பு (24) காலுகா (274) என்பன காண்க. மருப்புக் கவையுளவாகக் காலால் ஒற்ற என்க. ஒற்றுதல் ஈண்டுப் பாய்தல். ஆளி புகர்முகத் தொற்றி (அகம். 252) என்புழிப் போல. ததரல் - மரப்பட்டை. ததரல் சிதறுதலாதலாற் சிதறிப் பட்டை என்பதுமாம். களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல், கல்லா வுமணர்க்குத் தீமூட்டாகும் (அகம். 257) என்பது காண்க. கவைத்தலை - கவைநுனி. தலை நுனிக்காதல், புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின், தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்த நின் கண்ணே (நற். 39) என்புழிக் காண்க. ஒழியின் உண்டு என்பதை மறி உண்டு ஒழியின் எனக்கொண்டு, தான் உண்ணாது நின்று வெயில் கழிக்கும் எனினுமமையும். இன்துயில் - இருவருக்கும் இனிய துயில் துவிமுலை யாகத் தின்துயில் (அகம். 240) ஆதல் காண்க. இதனான் நின்னினும் பொருளை மதித்து நசையுடையராதல் குறித்தாள். முதுகலை தானுள்ளுழிக் கிடைத்த சில்லுணவாற் றன் கன்றை யருத்தி அதற்கு நிழலாக நிற்பது கண்டு தாமும் அங்ஙனம் எளிதின் அருத்திப் பதியின் வாழ்வறியாது சுரம்போந்ததற்குக் கவன்று மீள்வர் என்பது தலைவியைக் குறிப்பதாகத் தோழி நினைத்துப் பொருள் நசை நன்குடையார் இடையில் மீளார் என்றாள். “நம்வயின், மெய்யுற விரும்பிய கைகவர் முயக்கினு, மினிய மன்ற... சென்றோர்க்குப் பொருளே (ஐங். 337) என்றது காண்க. கூடலூர் கிழார் 214. மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து 1 வித்திய பிறங்குகுர லிறடி காக்கும் புறந்தாழ் அஞ்சி லோதி யசையியற் கொடிச்சி திருந்திழை யல்குற்குப் பெருந்தழை யுதவிச் செயலை முழுமுத லொழிய வயல 2 தரலை 3 மாலை சூட்டி 4 ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே. (எ-து) தோழி வெறியாட்டு எடுத்துக் கொண்டவிடத்து அறத்தொடு நின்றது. (வி) கானவன் மரங்கொல் புனம் - கான்வாழ் குறவன் மரங்களை எறிந்த புனத்தில். துளர்ந்து வித்திய - களை கோட்டாற் களைகளைக் களைந்து விதைத்த இறடி என்க. இறடி - கருந்தினை. பிறங்கு குர லிறடி - பெருத்த குரலையுடைய இறடி. புறந்தாழ் ஓதி - முன்நுதல் தொட்டுப் பின்னே தாழ்ந்த ஓதி. நன்னுத லுலறிய சின்மெல் லோதி (நெடுநல். 138) என்பது பற்றி இவ்வாறு கூறப்பட்டது. அசை இயல் - அசைந்த நடை. அசை நடைக் கொடிச்சி (ஐங். 298) என்ப. ஓதியையும் அசையியலையு முடைய கொடிச்சி. திருந்திழை அல்குல் - தன்கண் அணிதலாற் றிருந்திய இழையினை யுடைய அல்குல். அதற்குப் பெருமையைச் செய்யுந் தழையைத் தலைவன் உதவியதனால். உதவல் வினையாற் பெருமை புலப்படுத்தினாள். தலைவனா லுடுத்தப் பட்ட பெருமை கூறியது. தலைவன் உதவியதனால் அசோகு பரிய அடியளவின் விடப் பட்டதாகவும், அதனா னுண்மையை உய்த்துணர மாட்டா இவ்வழுங்கலூர். அரலை மாலை சூட்டி அயலது ஏமுற்றன்று என்க. அழுங்கலூர் - கெடுதலையுடைய ஊர். அரலை மாலை - விதைகளைக் கோத்த மாலை. அரலை மரலாம் பிங்கலம். அரலை விதையாம். ருத்திராக்கமரத்து விதையாலாகிய மாலை. இம் மரம் மிகுதியாகவுள்ள காடு. அரலையங்காடு என வழங்கும். இம் மரமுள்ள குன்றம், அரலைக் குன்றம் (59) என வந்தது காண்க. சூட்டி - வேலற்குச் சூட்டி. அயலது ஏமுற்றன்று - இவளுக்கு யாதோரியைபு மில்லாத அயன்மையையுடைய தாகிய வெறியாட்டின்கண் மயங்கிற்று. துறையுள் வெறியாட்டுக் கூறுதலான் அதற்கேற்ப அயலது என்பதாதலுணர்க. மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 215. படரும் பயப்பயர் 1 பெயருஞ் சுடரும் என்றூழ் மாமலை மறையு மின்றவர் வருவர் கொல்வாழி தோழி நீரில் வறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை குறும்பொறை மருங்கி னமர்துணை தழீஇக் கொடுவரி 2 யிரும்புலி காக்கும் நெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே. (எ-து) பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. (வி) பயப்புப் படரும் - பசலை புறப்பட்டுச் செல்லா நிற்கும். அயர்பெயரும் சுடரும் - அயர்ந்த வடிவும் விளங்கா நிற்கும். அயர்வு மெய்ந்நிறுப்பவும் (316) என வரும். இவற்றால் சுரனிறந்தோர் என்றூழ் மாமலை மறையுமின்று வருவர்கொல் பாலையைக் கடந்து சென்றவர் பருதி பெரிய மலையில் மறைதற்குரிய இப்பொழுது தலைவர் வருவர் போலும் என்க. படரும் சுடரும் என்று தீதுபோதலும் நலம் எய்தலுங் குறித்தாள். பெயர் என்பது வடிவிற்கு ஆதல் கூந்தலென்னும் பெயரொடு (பரிபா. 3 : 31) என்புழிப் பரிமேலழகர், கூந்தன்மா என்று கண்டார் சொல்லும் வடிவோடு என உரைத்தது காண்க. பெயர் ஆகுபெயர் என்பர். பேராசிரியர் உவமவியலுள் (சூத். 31) பெயரென்பது பொருளுணர்த்து தலின் அதனை வடிவின்பாற் படுத்துக என உரைப்பது கண்டுணர்க. என்றூழ் மாமலை மறையு முன்னா ளெல்லாம் பசலை நிலைத்து நின்று வடிவு புல்லென்றிருந்த நின்கண் இன்று மாறிப்பசலை வெளியிற் செல்லாநிற்கும், வடிவும் சுடரா நிற்கும்: இவற்றால் அவர் வருவர் போலும் என்றாளென்க. அவர் புறப்படுதற்குமுன்னே அவர் பிரிவுணர்ந்து பசந்து சுடர் முழுகிய நின் வடிவம் அவர் வருவதையும் அறிந்ததாகும் என்று கருதி வற்புறுத்தாளாம். அயர் பெயர் - அயரும் வடிவு. அயர்வு மெய்ந்நிறுப்பவும் (316) என்ப. சென்றார் வருவர் நுதற்கிவர்ந்தேறுமொளி (கைந்நிலை 19) என்பதனையும், அதற்குப் பழையவுரைகாரர், சென்றால் நீடாதே வருவர் நினது நுதற்குப் பரந்தேறா நின்றது ஒளியாதலான் எனக் கூறியதனையும் நோக்குக. எண்ணிய நாளகம் வருதல் பெண்ணியற், காமர் சுடர் நுதல் விளங்கும். தேமொழி யரிவை தெளிந்திசின் யானே (ஐங். 466) என்பதனானும் உணர்க. இந் நூலுள்ளும் சுரிவளைப் பொலிந்த தோளுஞ் செற்றும், வருவர் கொல் வாழி தோழி (260) என்றது காண்க. நாடன் சேர்ப்பன் வருவான் கொல் தோழி, திகழுந் திருவமர் மார்பு (திணைமொழி ஐம்பது 9) என்புழிப் பழைய உரைகாரர், சேர்ப்பன் விரைந்து வருவான் கொல்லோ தோழி முன்பு போலப் பொலிவழிந்திராது நினக்கழகமர்ந்த மார்பும் பொலிவுடைத்தாயிருந்தது. ஆதலான் எம்பெருமான் விரைந்து வருமென்று முற்கொண்டு நமக்கறிவிக்கின்றது போலும் என உரைத்தது காண்க. `படரும் பயப்பயர் என்பதற்குப் பயப்பும் அயர்வும் புறஞ் செல்லா நிற்கும் என்பதும் ஒன்று. படர்தல் - செல்லுதல். சிறந்தோ ருலகம் படருநர் போல (பரிபா. 19), சேட்புலம் படருந் ததர்கோ லுமணர் (அகம். 390) என்ப. நீரின்மையுடன் பின்னும் ஊறாத கயம் என்பாள் நீரில் வறுங்கய மென்றாள். அக் கயந் துழவியதனால் அதினின்று விலங்கிய மருப்பி யானை என்க. மருப்பு என்பதே யானைத் தந்தத்தை உணர்த்தல் இருப்பை மருப்புக் கடைந்தன்ன கொள்ளை வான்பூ (அகம். 267) என்புழிக் காண்க. யானை தானமர் துணையாகிய பிடியைப் புலியினின்று குறும்பொறை மருங்கிற் காக்கும் நெடுவரை என்க. குறும் பொறைக்குந் தனக்கும் இடையிற் பிடிநிற்கக் காத்தல் கருத்து. கொடுவரி இரும்புலி - வேங்கை. முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் திரிந்த நிலனாதலாற் குறும்பொறை மருங்கும் நெடுவரை மருங்குங் கூறினாள். நீர்பெறாத நிலையினும் யானை அமர்துணை. தழீஇப் புலியினின்று காப்பது கூறி ஆணுக்குப் பெண்ணிடத்துள்ள அன்புகுறித்து இவ் யானைக்குக் குறைந்தவராகார் நம் தலைவர் என்று வற்புறுத்தினாளாம். கச்சிப்பேட்டுக் காஞ்சிக்கொற்றனார் 216. அவரே, 1 கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே யானே, தோடா ரெல்வளை நெகிழ 2 வேங்கிப் 3 பாடமை சேக்கையிற் படர்கூர்ந் 4 திசினே அன்ன ளளிய ளென்னாது மாமழை இன்னும் பெய்ய முழங்கி 5 மின்னுந் தோழியென் னின்னுயிர் குறித்தே. (எ-து) பருவ வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) அவர் - அவர் தமியராக. நிலையில்லதைக் கேடில் விழுப் பொருள் என்றது இகழ்ச்சிக் குறிப்பு. நிலையாப் பொருட்பிணி (350) என்பது காண்க. அது தரும்பொருட்டு இறந்தார். வாடா வள்ளி - (தொல். பொருள். புறத். 5) என்பது வள்ளிக் கூத்தாகலான் அஃதன்மைக்குப் பாசிலை என்றடை கொடுத்தாள். இதனால் இனிதாக் காண்டற்குரிய வள்ளிக் கூத்துக்கள் நாட்டைவிட்டுப் பாசிலை வள்ளியேயுடைய காட்டிற் சேறல் பயனின்றென்பது குறிப்பு. வாடா வள்ளியின் வளம்பல தரூஉ நாடு (பெரும்பாண் 370) என்றது காண்க. யானே - யான் தனியே. எல்வளை நெகிழ - உடம்பு மெலிதலான் எல்வளை நெகிழ்ந்துழல்; ஏங்கி - உள்ளம் கவன்று. தோடார் பாடமை சேக்கையில் - மலரினிதழ்கள் நிறைந்த பலபடியாகப் படுத்தல் அமைந்த பாயலில். படர்கூர்ந்திசினே - பிரிவு வருத்தமிக்குளேன். அன்னள் அளியள் என்னாது - சிறிது முன் பெய்ததற்கு அந்நிலையடைந்தவள் பின்னும் பெய்யின் இரங்கத்தக் கவளாவாள் என்று கருதாமல். மாமழை இன்னும் பெய்ய முழங்கி மின்னும் - கரியமழை திரும்பவும் பெய்தற்குக் குமுறி மின்னா நிற்கும் என்றவாறு. இன்னும் பெய்ய என்றதனால் சிறிது முன்பெய்தது குறித்தாள். பெய்து அன்னளாதல் கண்டும் என் இன்னுயிர் குறித்து இன்னும் பெய்ய என் காதுங் கண்ணுங்கெட முழங்கி மின்னும் என்க. உயிர் குறித்துச் சரம் பெய்வதாக என்பது கருத்து. தோடமை தூமடி விரித்த சேக்கை..... புலம்பொடு வதியு நலங்கிள ரரிவை (நெடுநல்வாடை 135 - 166) என்ப. தோடமை செறிப்பி னிலங்குவளை (நற். 282) என்புழிப் போலத் தோடு வளைக்கு அடை எனினுமாம். தங்கால் முடக்கொல்லனார் 217. தினைகிளி 1 கடிகெனிற் 2 பகலு மொல்லும் 3 இரவுநீ வருதலி 4 னூறு மஞ்சுவல் யாங்குச்செய் வாமெம் மிடும்பை நோய்க்கென ஆங்கியான் கூறிய வனைத்திற்குப் 5 பிறிதுசெத் 6 தோங்குமலை நாட னுயிர்த்தோன் மன்ற ஐதே 1 காமம் 2 யானே கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே. (எ-து) உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது. (வி) தினை கிளி கடிக எனத் தாய் சொல்லிற் பகலும் ஒல்லும் எனின் என்றதனால் என்னாமையாற் பகலுமொல் லாது என்றாளாம். அவ்வொல்லாமைக்கு அஞ்சுதலுடன் நீ இரவு வருதலின் ஊறும் அஞ்சுவல். நுமக்கு இடும்பையாகிய எம் காம நோய்க்கு யாங்குச் செய்வாம் என யான் ஆங்குக் கூறிய அனைத்திற்கு - எங்ஙனம் செய்வாம் என்று யான் அவ்விடத்துச் சொல்லிய அவ்வளவிற்கு. பிறிது செத்து - உடன்கொடுபோய் வரைதலாகிய வேறொன்று கருதி. நாடன் உயிர்த்தோன் - நாடன் எனக்கு விடைசொல்ல லாற்றாது பெருமூச்சுவிட்டான். காமம் மன்ற ஐதே - தேற்றமாகக் காமம் வியப்பினதேயாம். யானே கழிமுதுக் குறைமையும் பழியுமென்றிசின் - அந் நிலையில் யான் நின்னொ டுசாவா மலே அங்ஙனம் உடன்கொடு போய் வரையக் கருதிய தன் கணுள்ள மிக்க அறிவுடைமையினையும் இங்ஙனம் பகலினும் இரவினும் களவின் ஒழுகுவதின்கணுள்ள பழியினையும் கூறினேன் என்றா ளென்க. கழியக் காதல ராயினுஞ் சான்றோர், பழியொடு வரூஉ மின்பம் வெஃகார், வரையி னெவனோ (அகம். 112) என்புழி எங்ஙனமாயினும் வரையாது களவினின்பத்தினைப் பழி யொடு வரூஉம் மின்பமாகக் கூறுதல் கண்டுணர்க. உடன் போக்கையே கருதிப் பழியுடைத்தென்றாளெனின் அது நயப்பக் கூறியதாகா தென்க. குறிஞ்சிக்கலியுள் தலைவன் வரைவொடு வந்ததைச் சிறப்பிக்குமிடத்துப் பசலையு மம்பலு மாயப் புணர்ச்சியு மெல்லா முடனீங்கச், சேயுயர் வெற்பனும் வந்தனன் (3) என்பதனாற் பொய்யாகிய களவுக்கூட்டம் நீங்குதற்குத் தலைவி உடன்படுதல் காண்க. கொண்டு தமர் கழிந்துழிக் கொடுப்போரின்றியுங் கரண நிகழ்த்த லுண்மை `வெளிப்பட வரைதல் (தொல்.களவு. 49) என்புழிக் காண்க. வரைவுடன் படுவாரும் மறுப்பாருமாகிய இரு திறத்தார் நடுநின்று தலைவியும் தலைவனும் இடர்ப்படாமல் ஒரு தலையாக வரைதல் நிகழுமாதலிற் கொண்டுதலைக் கழிந்து வரைதலைக் கழிமுதுக்குறைமை யுடையதென்றாள். இவ்வாறு பிறிதொன்று கருதச் செய்தது காதலே யாதலான் அதனை வியந்து கூறினாள். தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு (குறள். 422). ஆதலாற் பழியுடைக் களவினை ஒரீஇ, கொண்டு தலைக்கழிந்து வரைதலாகிய நன்றின் உய்ப்பதைக் கழிமுதுக் குறைமை யுடைய தென்றாள். கொற்றனார் 218. விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக் கடனும் பூணாங் 1 கைந்நூல் 2 யாவாம் 3 புள்ளு மோராம் 4 விரிச்சியு நில்லாம் உள்ளலு முள்ளா மன்றே தோழி உயிர்க்குயி ரன்ன ராகலிற் றம்மின் றிமைப்புவரை யமையா நம்வயின் மறந்தாண் டமைதல் வல்லியோர் 5 மாட்டே. (எ-து) பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) நம் வயின் மறந்து - நம்பால் நினையாது மறந்து. ஆண்டு அமைதல் வல்லியோர்மாட்டு - நெடுந்தூரத்துப் பொருந்தற்கு வல்லுதல் செய்தவர் திறத்து. சூலிக்குக் கடனும் பூணாம், கைந்நூல் யாவாம், புள்ளும் ஓராம், விரிச்சியும் நில்லாம், உள்ளலுமுள்ளாம். என்னையெனின் அன்றே உயிர்க்குயிரன்னர் தம் மின்றாகலின் இமைப்புவரை யமையாம் ஆதலா னென்க என்றவாறு. தோழி நின் கருத்துப்படி நம்வயின் மறந்து ஆண்ட மைதல் வல்லியோர் விரைந்து வெற்றியுடன் வருதற் பொருட்டுச் சூலத்தை உடைய கொற்றவைக்குக் கடன் பூணுதலும், அதற்கு நோன்பு மேற்கொண்டு கையிற் காப்பாக நூல் யாத்தலும், அதுபற்றிச் சொற்புள்ளை ஓர்த்தலும், விரிச்சி நின்று நற்சொல் கேட்டலும், இவைபற்றி நிகழும் பயன்களை யுள்ளுதலும் செய்யாம். இவை எல்லாம் அவரைத் தம்முயிர் வேறாக வைத்து அவர் குறித்த பருவம் தப்பிய பின்னரும் ஆற்றியிருந்து உயிர்வாழ்வாரன்றே செய்வனவாகும். அவர் என்னைக் கூடியவன்றே உயிர்க் குயிராகிய அத் தன்மையர் தம்மளவில்லையாகலின் இனி இமைத்தல் எல்லையாவும் உயிரொடு பொருந்தாம். ஆதலான் யாம் இவை செய்யாம் என்றாளென்க. தம்மின்று - தம்மறிவின்று. தள்ளியுஞ் செல்பவோ தம் முடையார் (திணைமாலை நூற்றைம்பது 84) தம்முடையார் தம்மறிவுடையார் என்பர் பழைய உரைகாரர். உயிர்க்குயிர் அன்னர் தம்மின்றாகல் என்பது நம்வயின் மறந்தாண்டமை தல் என்க. மறத்தற்கு அறிவின்றாதல் வேண்டுமென்று கூறினாள். அவர் பிரிவில் யாம் ஆற்றியிருப்பது உயிர்க்குயிர் அன்னர் நம்வயின் மறவாதவராதலான் நம்மை நினைந்து வருவர் என்னும் நசையன்றே. அந் நசைகெடத் தம்மறிவின்றி நம்மை மறந்து ஆண்டமைதல் வன்மையராதலால், அவர் வரவு பற்றியன எவையும் யாம் செய்யாம். இனி இமைப் பளவும் அமையாம் என்றாளாகக் கொள்க. அமைதல் ஆற்றுதலுமாம். வாரா தமைவானோ (குறிஞ்சிக் கலி 5 ; அடி. 25) சூலிக்குக் கடன் பூணுதல் - தலைவன் வென்றி எய்தி வருமாறு கொற்றவைக்குப் பரவுக்கடம் பூணல் (சிலப். வேட்டுவ வரி, கைந்நூல் - இதனைக் கடிகை நூலென்பர் நக்கீரனார் நெடுநல்வாடை 142) நோன்பு புகும் முகூர்த்தத்துக் கட்டப் படுதலான் என்க. ஆண்டமைதல் வன்மைக்கு வருந்தாம், மறந்தாண்டமைதல் வல்லியோராதற்கு உயிர் தரியோம் என்பது கருத்தாகக் கொள்க. அவர் மறவாமை ஒன்றுதான் தலைவி உயிர் தரித்தற்கு ஏது. அவர் மறந்தனர் கொல்லோ (307) என்றேதான் தலைவி உள்ளம் ஐயுற்று வருந்தும் என்க. இது விளியுமெ னின்னுயிர் வேறல்ல மென்பா, ரளியின்மை யாற்ற நினைந்து (குறள். 1209) என்புழிப் பரிமேலழகர், என்னுயிர் கழிகின்றது பிரிவாற் கன்று அவரன்பின்மைக்கு என்பார் என்றது போல ஈண்டு உயிர்க் குயிரன்னர் எனவும், அளியின்மை என்றது போல மறந்தாண்டமைதலும், விளியும் என் இன்னுயிர் என்றது போல இமைப்பு வரையமையாம் எனவும் வருதல் கொண்டு உண்மை உணர்க தலைவர் பிரிவின்கண் வருவரென்னும் நசையால் ஆற்றியிருந்த தலைவி, மறந்து மமைகுவர் கொல்லென் றெண்ணி (அகம். 223) ஆற்றாமை மீதூர்தல் இயல்பேயாம். விடர்முகை அடுக்கத்து விறல் கெழு சூலி என்றது அயிரை மலைக் கொற்றவை (பதிற். 79) எனவும், ஏழிற் குன்றத்துக் கானமர் செல்வி (அகம். 345) எனவும் வருமிடங்களிற் போல மலைகளிலுறையும் துர்க்கையைக் குறித்தது. சூலி நீலி என்பதும். கலையமர் செல்வி கடனுணி னல்லது (சிலப். வேட்டுவவரி 12.1-68) என்பதனால் இவட்குரிய பரவுக் கடனைக் `கடன் என வழங்குவதும் காணலாம். விடர்முகையடுக்கத்து - பிளப்பினை யுடைய முழைஞ்சுகளையுடைய வரையடுக்குள்ளவிடத்து. விறல் கெழு சூலி - வெற்றிகெழீஇய சூலி. விறல் - வெற்றி. விறல்சால் நன்கொடி (மதுரைக்காஞ்சி 371) என்ப. வெற்றி வெல்போர்க் கொற்றவை (முருகாறு. 258) என்ப. உயிர்க்குயி ரன்னராகலிற் றம்மின்றமையாம் என்பது மாம். வல்லியோர் - வல்லுதல் செய்தோர். வல்லுவோர் (154) வல்லுநர் (385) வல்லாதோர் (நற். 84) என வருதலான் வினைப்பெயராதலறிக. உள்ளல் - கணிவாய்ப் பல்லிப் பாடோர்த்து உள்ளலுமாம். உள்ளுதொறு படூஉம் பல்லி (அகம். 351) எனவும், பல்லி நள்ளென் யாமத்து முள்ளு தொறும் படுமே (நற். 333) எனவும் வருவன காண்க. தோளிடந் துடிக்கின் நலமென உள்ளுதலும், தும்மல் உள்ளுதலுமாம். வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார் 219. பயப்பென் 1 மேனி யதுவே நயப்பவர் 2 நாரி 3 னெஞ்சத் தாரிடை யதுவே செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே ஆங்கட் செல்க மெழுகென வீங்கே வல்லா கூறி யிருக்கு முள்ளிலைத் 4 தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க் 5 கிடமற் றோழியெந் 6 நீரிரோ வெனினே. 7 (எ-து) சிறைப்புறம். (வி) பயப்பு என் மேனியது - பயலை நோய் என் உடம் பிடத்தது. அந் நோய் நீங்க நயப்பது, என்கண் அன்பில்லா அவர்கண் அன்பு வைத்துச் சென்ற நெஞ்சத்துடன் செல்லுதற்கரிய இடத்துள்ளது. இற்செறிவுக்குரிய காவலும் சேய்மைக்கட் சென்றது என்றது தாய் ஒரு காரியத்தை மேற்கொண்டு வெளியிற் செல்லுதலும் தந்தை தன் தொழில் செய்யப் புறம் போதலும் கருதியது. “எந்தையும், நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும்..... கழனிச் சென்றனள்...... இனிவரி னெளியள் (269) என்பது போலக் கொள்க. நயப்பு, செறிவு - ஆகுபெயர்கள். அறிவு - உயிரைப் பற்றிக் கிடக்கும் அறிவு. ஆங்கண் செல்கம் எழுக என - அவர் உள்ளுழிச் செல்வாம் எழுக என்று. வல்லா கூறி ஈங்கே இருக்கும் - யான் மாட்டாதன சொல்லி யான் அங்ஙனம் செய்யாமையின் ஈண்டே என்னுடனிருக்கும். ஆதலான் எந்நீரிரோ எனின் - என்ன தன்மையிலுள்ளீர் என்று வினாவின், சேர்ப்பர்க்கு இடம்மன் - கடற்றுறையுடைய தலைவர்க்கு என்பால் விடை பெறுதற்கு மிக்க செவ்வியாம் என்றவாறு. அவருள்ள ஊரிடைச் சேறலால் என் நாரில் நெஞ்சம் என்றாள். அதனினுங் கொடிதே.... வாரா என் நாரில் நெஞ்சும் (நற். 98) என்பது காண்க. இப் பாட்டு 269 ஆம் பாட்டுப் போலப் பகலே சிறைப்புறமாகக் கொள்க. தாழைச் சேர்ப்பன் என்றது தாழை பூத்த செவ்வி கண்டு அதன்கட் போந்து சூடுதலல்லது தாழையே சென்று தன் பூவைச் சூட்டாமை போலத் தலைவன் போந்து தன்நலந் துய்த்தலல்லது தான் சென்று நலத்தை நல்கா நிலை குறித்ததாம். முள்ளிலைத் தாழை என்றது சூடநினைப்பார் தாழையின் பூவிற்குக் காவலாகிய முள்ளுடைத் தோட்டிற்கு அஞ்சாது புக்கு தன்னைக் கொள்ளுங் குறிப்பாயிற்று. தாழைக்கு முள்ளுடைத்தோடு காவலாதல், எயிறுடை நெடுந்தோடு காப்பப் பலவுடன், வயிறுடைப் போது வாலிதின் விரீஇ (அகம். 130) என்பதானறிக. நயப்பவர் நாரில் நெஞ்சத்து என்பதூஉம் பாடம். ஆங்கட் செல்கம் - என்றது ஆங்குள்ள ஆரிடைச் செல்கம் என்றதாம். ஒக்கூர் மாசாத்தியார் 220. பழமழைக் 1 கலித்த புதுப்புன வரகின் இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை 2 இருவிசேர் 3 மருங்கிற் பூத்த முல்லை வெருகுசிரித் தன்ன பசுவீ 4 மென்பிணிக் குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின் வண்டுசூழ் மாலையும் வாரார் கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே. (எ-து) பருவ வரவின்கட் கிழத்தி தோழிக்கு உரைத்தது. (வி) பழமழை - இளமழையல்லாத முதிர் மழை என்றவாறு. ஐங்குறுநூற்றுரைகாரர், பொங்கலிள மழை (276) என்பதற்கு மேற்கருக்கொண்டு முற்றிப் பயன்படுவ தாய இளமுகிலை என உரைத்தது கொண்டு பழமழைப் பொருளுணர்க. ஈன்று நாளுலந்த வாலா வெண்மழை (அகம். 139) என்ப. புதுப்புன வரகு - புதிதாகத் திருத்திய புன்செய் வரகு. பலகால் விழைந்த பழம்புனம் போலக் கொழுப்புற்றதன்றா தலான். குறைத்தலை இருவிப்பாவை - இளையகொழுந்து உடையதாயது கூறினாள். விலங்குகள் சிரித்தல் செய்யா ஆதலின் வெருகு சிரித்தாற் போன்ற பசுவீமுல்லை. சிரித்தது செங்கட் சீயம் (கம்ப.) என்பது நரசிங்கமாகிய தெய்வமாதலுணர்க. மழையும் பழையதாய் இருவியும் பாவையீன்று முல்லை யும் பூத்து வண்டு சூழா நிற்க, அவர் குறித்த மாலையும் யாம் தழைத்து மகிழ்ந்து விருந்து சூழ்ந்து நிற்கும் வண்ணம் பொருட்பிரிந்தோர் வாரார். இதனால் நம்மினும் அவர்க்குப் பொருள் பெரிதாதல் கண்டிசின் - காண்பாய் என்றாளென்க. பாவை - கள்ளியம் பாவை (நற். 314) பதவின் பாவை (அகம். 23) என்பன காண்க. இருவி - கதிர் அரிந்த தாள். அது பாவை ஈன்று அப் பாவை குறைத்தயைவாக இரலை மேய்ந்தது என்று கருதுக. உறையூர் முதுகொற்றனார் 221. அவரோ வாரார் முல்லையும் பூத்தன பறியுடைக் கையர் மறியினத் தொழியப் பாலொடு வந்து கூழொடு பெயரும் யாடுடை யிடைமகன் சென்னிச் 1 சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே. (எ-து) பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) தலைவர் பிரியும்போது யான் வந்துதான் பூக்குமென்ற முல்லைகளும் அவர் வாராராகப் பூத்தன. கானஞ் சென்று காணாமற் பூத்தன என்றி யாங்ஙனம் அறிந்தனை எனிற் கானத்து நின்ற பாலொடு வந்து கூழொடு பெயரும் இடைமகன் சென்னியிற் சூடியன எல்லாம் அம் முல்லையின் சிறுபசுமுகையேயாம்; இதனால் அறிந்தேன் என்று தலைவி கூறினாளென்க. பாலொடு மனையின் கண் வந்தவன் உண்டு பெயர்வானாகவும், கூழொடு பெயரும் என்றது மனைக்கண் வாராது கானத்து இரவிற் சேக்கை கொள்வாராய் அதற்குரிய பறியோலைக்கையிலுடையார் பலர். செம்மறியாட்டினங்களிடத்துத் தங்குதலான் அவர் உண்ணற்கு வேண்டியது குறித்தது. பாலொடு வந்து பெயரும் என்றதனால் பாலினட்ட கூழொடுபோம் என்பது கருத்தாம். முல்லை பூத்தன என்றதனாற் கார்ப்பருவத்து மாலைப் பொழுது கண்டு கூறினாளென் றுணர்க. இடையன் கூழொடு பெயரும் போதும் அஃதாம். பெயரும் யாடுடை இடைமகன் - ஆடுகளைத் தனக்குச் செல்வமாக உடைய இடைக்குடியில் மகன். மகன் சூடிய முகை என்றது அவர் வாரார் ஆதலால் தான் சூடலாகாமை குறித்ததாம். சிறைக்குடியாந்தையார் 222. தலைப்புணைக் 2 கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் 3 கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை 4 விட்டுப் புனலோ டொழுகின் ஆண்டும் 5 வருகுவள் போலு மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் 6 செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கட் டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே. (எ-து) பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுத்தல். (வி) தளிரன்னோள் - எல்லா உறுப்பும் ஊற்றின்பம் செய்தலான் உடம்பு தளிரை ஒத்தவள். இவள் தலைவியே என்பது இப் பாட்டைத் தோழி கூற்றாகக் கூறிய இறையனார் களவியலுரையாரை நச்சினார்க்கினியர் மறுத்தலான் (தொல்.களவு. 11) நன்கு தெளியலாம். தலைப்புணை - புணையின் தலைப்பக்கம், கொளின் - தோழி தனியே கொள்ளின். தளிரன்னாள் ஆங்கு அவளுடன் கொள்ளும். கடைப்புணை - புணையின் கடைப்பக்கம். தோழி தலைக் கொள்ளின் ஆண்டுத் தலைவி உடன் கொள்ளுதல் தலைப்புறம் என்பது பற்றியாமெனின் தோழி கடைக் கொள்ளின் இவள் கடையினும் அவளுடன் கொள்ளுமாத லான் இவள் கருத்துத் தலைப்புறம் என்பது பற்றியதன்று. தோழியுள்ள இடம் என்பது பற்றி அவளுடன் உறைதற்குரிய இடமே தனக்கிடனாகத் துணிந்தது பற்றியே என்றவாறு. இதனால் தோழி புணையின் தலையும் கடையும் விட்டுப் புனலோடொழுக நேரின் ஆண்டும் தளிரன்னோள் வருகுவள் போலும் என்றானென்க. இதனால் உயிரோ ரன்ன செயிர் தீர் நட்பி னைக் (நற். 72) குறித்தாள். ஆண்டும் என்றது புனலொடு தோழி ஒழுகும் அவ்வரிய இடத்தும் என்றவாறு. வருகுவள் என்றது ஒருத்தி புனலொடொழுகின் அவளை எடுக்கத் தான் முற்பட்டு ஆங்கு நீந்தியிருப்பது குறித்தது. அது தன்னிடம் என்றவாறு. போலும் என்றான். அங்ஙனஞ் செய்தல் அவளுக்கு அருமை என்பது குறித்து. மாண்ட அன்னோள் என்க. தளிரால் மெய்யும், அம் மெய்யிற் சிறந்ததாகிய கண்ணுமே கூறின், தலைவி மெய் அவளையே யுறுவதும் அவள்கண் இவளையே நோக்குவதுந்தெரிந்து. புணை கைவிட்டு - தெப்பத்தைக் கையாற் பற்றுதலை விட்டு. இதனாற் புணையைக் கையாற் பற்றி நீந்தும் நீர்விளை யாட்டிற் கண்டு தலைவன் கூறியதாகும். அவளொ டொக்க இயலாதாயினும் அன்பால் அவ்வொழுகு நீரினும் வருகுவள். இதனால் இவள் உயிர்த்தோழியாதல் துணிவேன். இவ ளையே துணையாய் யானும் பற்றுவன் என்பது கருத்தாம். மாரிப்பித்திகத்து எனவும், துணிதலைத் தலைஇய தளிர் எனவும் உவமைகளை விசேடித்தவாற்றாற் பித்திகத்துக்கு மாரிப் பருவமும் தளிர்க்குத் துளியும் போல இத் தோழி தலைவிக்கு இன்றியமையாமையும் நினைந்தானாம். இவை தொல்காப்பியனார் கூறிய நோக்கு (தொல் - செய்யு. 102) என்பதனாற் கொள்க. மழைக்கண் - குளிர்ச்சியையுடைய கண்கள். துளித்தலைத் தலைஇய தளிர் - துளியைத் தலைப்பெயலிற் பெய்யப் பெற்றுண்டாகிய தளிர். துளித்தலைத் தலைஇய மணியே ரைம்பால் (அகம். 8 : 15). மதுரைக்கடையத்தார் மகன் வெண்ணாகனார் 223. பேரூர் கொண்ட வார்கலி விழவிற் செல்வாஞ் செல்வா மென்றி யன்றிவண் 1 நல்லோர் நல்ல 2 பலவாற் றில்ல 3 தழலுந் 4 தட்டையு முறியுந் தந்திவை ஒத்தன நினக்கெனப் 5 பொய்த்தன கூறி அன்னை 6 யோம்பிய வாய்நலம் என்னை 7 கொண்டான்யா மின்னமா லினியே. 8 (எ-து) வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) அன்று - நம்மொடு கூடிய ஞான்று. நல்லோர் நல்ல பல - நல்லோர்க்குரிய நன்மொழிகள் பலவாக விருந்தன. தலைவன் அன்று இவண் நல்லோர் கூறும் நல்லமொழிகள் பல கூறினான் என்றவாறு. தில்ல - அவை விரும்பத்தக்கன தாம். மற்று நிகழ்ந்தது வேறு என்கின்றாள் மேல். என்னை - என் தலைவன். நினக்கு இவை ஒத்தன எனப் பொய்த்தன கூறி - நின் செயற்கும் நின் மெய்யழகிற்கும் இக் கருவிகளும் இவ்வுடையும் பொருந்தியன என்று பொய் பட்டன சில சொல்லி. தழலுந் தட்டையும் முறியும் தந்து - தழல் தட்டை என்னும் கிளிகடி கருவிகளையும், தழையா லாகிய உடையையும் என் கட்டந்து. அன்னை ஓம்பிய ஆய்நலம் கொண்டான் - என் தாய் புரந்ததும், ஆயத்தார் ஆய்ந்ததுமாகிய என் நலத்தைத் தான் கொண்டு போயினான். இனி யாம் இன்னம் - இப்போது யாம் இந் நிலையிலுள்ளேம் என்றவாறு. அன்னை ஓம்பிய ஆய்நலனுக்கு அவன் தன்னை யளிப்பது ஒத்தது அது செய்யாது, என்கண் இவை ஒத்தன என்று பொய் கூறி, அந் நலங்கொண்டான். இப் பண்ட மாற்றில் அவனால் வஞ்சிக்கப்பட்டு இழந்த நிலையிலுள் ளேம். இவ் வஞ்சத்தைப் பற்றி அவனைக் கண்டு கேட்டற் பொருட்டு அவன் வருதற்குரிய விழவிற் செல்வாம் செல்வாம் என்றி என்றாளென்க. என்னை என்றாள் ஒன்று தான் கொள்ளாமலே தனக்குதவற்குரியவன் என்பது பற்றி. அன்னை ஓம்பிய ஆய்நலம் இப்போது அவ்வன்னையும் ஆயமும் தன் வேறுபாடு காண நிற்பது குறித்தது. செயற்கைய சில தந்து இயற்கை நலங் கொண்டான் என்பதும் ஒன்று. விழவிற் சென்று அவனைக் காண்டற்கு ஒன்றேறட்டுக் கூறினாள். பேரூர் கொண்ட விழவு - திருவோண விழவு ஆகும். ஓணமாகிய நன்னாளில் ஊரிலுள்ளாரெடுத்த விழ விடத்தே (மதுரைக்காஞ்சியுரை, அடி. 191) என நச்சினார்க் கினியர் கூறுதலான் அறிக. யாங் கொடுத்தது கொள்ளா மாயினும் இங்ஙனம் பொய்த்தன கூறிக் கொடுமை செய்தாய் எனக் கண்டு சொல்லற்குச் செல்வாம்; செல்வாமென்று தாழ்க்கின்றாய் என்றவாறு. தழல் - கிளி கடிகவண். கூவன் மைந்தனார் 224. கவலையாத்த வவல நீளிடைச் செற்றோர் கொடுமை யெற்றித் 1 துஞ்சா நோயினும் நோயா கின்றே கூவற் குரலான் 2 படுதுய ரிராவிற் 3 கண்ட உயர்திணை யூமன் போலத் துயர்பொறுக் கல்லேன் றோழி நோய்க்கே. (எ-து) பிரிவிடை இறந்துபடுமெனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது. (வி) கவலை யாத்த அவலம் - யாதுசெய்வதென்னும் எண்ணம் பின்னிய வருத்தம் பலருமறியத் திகழ்தரு மவலம் (அகம். 95). ஆதலாற் கவலை யாத்த அவலம் என்றாள். கவலை பிணித்த அவலத்தையுடைய நீண்டகாலம் நம்மை வெறுத்தவருடைய கொடுமையினை நினைந்து துயிலாத நோயினும் நோயாயினது. நாளிடைச் சேப்பி னூழியி னெடிதே (ஐங். 482) என்பதனால் பிரிந்த தலைவிக்குச் சிறுவரையும் நீளிடையாகத் தோன்றிற்று. இடை - காலம் இடையின்று குறுகி (புறம். 54) என்ப. நீடினன் என்று கொடுமை தூற்றுதல், நீடின மென்று கொடுமை தூற்றி (ஐங். 478) என்பதனானறிக. நீடினர் மன்னோ காதலரெனநீ, யெவன்கை யற்றனை (அகம். 359) என்பதுங் காண்க. நீளிடை யத்த நோக்கி வாளற்றுக் கண்ணுங் காட்சி தௌவின (நற். 397) என்புழியும் நெடும்போது அருவழி நோக்கி எனப்பொருள்படுதல் காண்க. செற்றோர் என்பதே பாடமென்பது எற்றி எனவரும் எதுகைத் தொடை நோக்கி அறிக. இன்பத்தொடு கழியும் நீளிடையைக் கவலைபிணித்த அவலத்தோடு கழிக்கச் செய்தலாற் செற்றோர் என்றாள். இவ்வுண்மை `செற்றோர் (குறள். 1255) என்பதற்குப் பரிமேலழகர் இன்பத்தொடு கழியுங்காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலிற் செற்றோரென்றாள் எனக் கூறியது இக் குறுந்தொகை கொண்டு எனத் துணியலாம். குரலான் கூவற் படுதுயர் - தனக்கினிய செந்நிறப்பசு கிணற்றின் வீழ்ந்த துன்பத்தை. இராவிற் கண்ட உயர்திணை ஊமன் போல - இரவிற் பார்த்த உயர்குலத்து ஊமனைப் போல. துயர் தோழி நோய்க்கு பொறுக்கல்லேன் - துயர்கின்ற தோழியின் உள்ள நோயினால் நான் உயிர் தாங்க இயல்கிலேன் என்றாளென்க. தனக்கினிய ஆன் கூவற்படுதுயரை இரவிற் கண்ட ஊமன் தன்னுயர் குலத்திற்கேற்ற நெஞ்சினருளால் இரங்கித் தானும் துயர்தலன்றி அதனைக் குவலினின்று எடுக்கவும் அதைப் பற்றிப் பிறர்க்குரைக்கவும் இயலாது கவன்றாற் போலத் தோழியுந் தனக்கினிய யான் விரகக் குழி வீழ்ந்து வருந்துவதை இவ்விரவிற் கண்டு தனக்கியல்பாகிய அன்பினால் இரங்கித் தானுந் துன்புறு தலல்லது என்னை எடுக்கவும் என்னைப் பற்றிப் பிறர்க்குரைக்கவும் இயலாது கலங்குகின்றாளாதலான் அவள் நோய்க்கு யான் பொறுக்ககில்லேன் என்றும், அந் நோய் என் துஞ்சா நோயினும் நோயாயினதென்றும் தலைவி கூறினா ளென்க. உயர்ந்தார் கண்ணேயல்ல தில்லாமையால் அருளுடையானை உயர்திணை யூமன் என்றாள். திணை - குலன். உயர்ந்தோர்கணல்ல தில்லாத அருட்செல்வம் (குறள். 241) என்பர் பரிமேலழகர். நாடன் குடிநன்குடையன்... அன்பினன் (அகம். 352) என்பதும் காண்க. ஊமன் போலத் துயர் தோழி - ஊமனைப் போலத் துயரும் தோழி. ஆனாது துயருமென்கண் (அகம். 195) என்புழிப் போல வந்தது. துயர் தோழி - வினைத்தொகை. தான் பிரிவிடை இறந்து படுமெனக் கவலும் தோழிக்கு, ஆன் கூவலில் வீழ்தலால் இறந்துபடுமெனக் கவலும் ஊமன் உவமையாகிப் பொருள் சிறத்தல் காண்க. உயர்திணை ஊமன் என்றது தான் கூவலில் வீழ்ந்ததற்குக் கவல்கின்றான் என்பது உணரும் மனனுணர்ச்சி நிரம்பாது அஃறிணைக் குரலான் என்பது குறித்து நின்றது. அவ்வான் கூவலில் வீழ்ந்து வருந்துவது போல யான் விரகக்குழி வீழ்ந்து வருந்துவேனாயினும் அவ்வானினும் வேறாய் உயர் திணையாதல் பற்றித் தனக்குக் கவல்கின்ற தோழி நோய்க்குத் தான் பொறுக்க மாட்டாது தன்னோயினும் மிக நோவல் என்றாளென்க. இரவிற் கண்ட ஊமன் என்றது இரவிற் கதவடைத்துத் துயில்வாரை எழுப்பும் வாய்வலியில்லன் என்பது குறித்ததாம். ஈண்டுப் பிரிந்து சென்றோர் கொடுமை எற்றி வந்த நோயினும் தன்னைப் பிரியாது உடன் உறையும் உயிர்த்தோழி தன்கண் அன்புடைமை யாற்றன்துயர்க்குத் துயர்வதாதலான் அந் நோய்க்குத் தான் நோதல் மிக்கது என்னும் கருத்திற் கூறினாள். துறையுள் பிரிவிடைத் தலைவி இறந்துபடுமெனக் கவன்ற தோழி என்றதற்கியைய ஆன் இறந்துபடுமெனக் கவன்ற ஊமன் அவட்கு உவமையாக நின்று பொருளைச் சிறப்பித்தல் உணர்க. சேதா சிறந்ததாதலிற் குரலான் என்றாள். தன் அவலத்தைக் காலத்தின் மேலேற்றினாள். அந் நீள்காலம் அவலத்தொடு கழிதலான், அத்த நீளிடை யழப்பிரிந் தோரே (307) என்புழி நீளிடை அழ அத்தம் பிரிந்தோர் எனக் கொள்ளப்பட்டுப் பொருள் சிறத்தல் காண்க. இனிக் கவலையாத்த அவல நீளிடைச் சென்றோர் என்ற பாடத்திற்குக் கவலைக்கிழங்குக் கொடிகள் பிணித்த பள்ளங்களை யுடைய நீளிடம் என்க. கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி (233) என்ப. வாரண முதிர்கறி யாப்பிற் றுஞ்சு நாடன் (நற். 297) என்பதனாற் கொடிகள் பின்னுதலை யாத்தலாகக் கூறுதலுணர்க. கபிலர் 225. கன்றுதன் பயமுலை மாந்த முன்றிற் றினைபிடி 1 யுண்ணும் பெருங்கன் னாட 2 கெட்டிடத் 3 துவந்த 4 உதவி கட்டில் வீறுபெற்று மறந்த மன்னன் போல நன்றி மறந் தமையா 5 யாயின் மென்சீர்க் கலிமயிற் கலாவத் தன்னவிவள் ஒலிமென் கூந்த லுரியவா 6 நினக்கே. (எ-து) வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது. (வி) கன்று தன் பயமுலை மாந்த என்றது தலைவன் தன் சுற்றத்திற்குத் தன்னுடம்பாலும் பயன்பட நின்று தன் காரியஞ் செய்பவன் என்னுங் குறிப்பிற்று. முன்றிற் றினைப்பிடி உண்ணும் என்பது இவளை வரைந்து அங்ஙனஞ் சுற்றமாக் காது உடையவர் உடன்பாடின்றி அவரறியாம லிவளுள்ளுழி வந்து இவள் நலத்தைத் தன் பேறாகக் களவிற் றுய்ப்பவன் என்னுங் குறிப்பிற்று. கெட்டு - தான் கேடெய்தி. இடத்து உவந்த உதவி - காலத்திற் பெற்று மகிழ்ந்த உதவியை. கட்டில் வீறு - அரசணைச் சிறப்புக் கட்டில் வீறுபெற்று. உதவி மறந்த மன்னன் போல. நன்றி மறந்து - யான் உதவிய நன்றியை மறந்து. அமையாயாயின் - தங்காயாயின். இவள் ஒலிமென் கூந்தல் நினக்கே உரியவாம். என்றவாறு. நினக்கே உரிய அக் கூந்தலிற் கிடந்த நினக்கே தொட்டுச் செய்வன உரியவாம் என்றதாம். இல்லையேல் நினக்குரியவாகா என்பது இறந்துபடுதல் குறித்தாள். மென்சீர் - மெல்லிய அழகு. சீர்கெழு திருவிற் சோலை (பரிபாடல். 22:23) என்ப. ஒலித்தல் - தழைத்தல். “சேறும்.... கூந்தற் கிழவரைப் படர்ந்தே (புறம். 113) என்புழிப் பழையவுரைகாரர், கூந்தலைத் தீண்டுதற்குரியாரை என்றது காண்க. நுதற் கிழவன் (34) என்பதும் அது. கூந்தல் நாறைங்கூந்தல் (அகம். 65) உரிய எனப் பன்மையாற் கூறினார். தலைமுடி சான்ற (அகம். 7) என்புழிப் பழையவுரைகாரர், பன்மை கூறிற்று முடிப்பன்மை நோக்கி என்றது காண்க. கூந்தல் உரிய நினக்கே ஆம் என்பதும் பொருந்தும். கெட்ட இடத்து கெட்டிடத்து என மருவியதுமாம். பூச்சூட்டிய நினக்கே கூந்தலுரிய என்பதுமாம். அமையா யாயின் ஆற்றியிராயாயின் என்பதும் ஆம். மென்சீர்க் கலாவம் எனினும் அமையும். மயில் கலாவம் விரித்துள்ள போது அதன்கண் இன்னோசையுண்டாதல் உணர்க. மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனார் 226. பூவொடு புரையுங் கண்ணும் வேயென விறல் வனப்பெய்திய தோளும் பிறையென மதிமயக் குறூஉ நுதலு நன்றும் நல்லமன் வாழி தோழி யல்கலும் தயங்குதிரை பொருத தாழை வெண்பூக் குருகென மலரும் பெருந்துறை விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே. (எ-து) வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) சேர்ப்பனொடு நகாஅ ஊங்கு - சேர்ப்பனொடு மகிழாத முன்பு. கண்ணும் பூவொடு புரையும் - என் கண்களும் பூவொடு ஒக்கும். தோளும் வேயென விறல்வனப் பெய்திய - என் தோள் களும் மூங்கிலென்னுமாறு எல்லாரை யும் வென்றி கொண்ட அழகினை எய்தின. நுதலும் பிறையென மதிமயக்குறூஉம் - என் நெற்றியும் பிறை என்னும் வண்ணம் அப் பிறையாயிருந்து பின் வளர்ந்த மதியை மயக்கஞ் செய்யும். நன்றும் நல்ல - இங்ஙனம் பெரிதும் நல்லன. மன் - இப்போது அது கழிந்தது என்றவாறு. மதி மயங்குதல், மதியு மடந்தை முகனு மறியா, பதியிற் கலங்கிய மீன் (குறள். 1116) என்பது போல வந்தது. மதியிருப்பன்ன மாசறு சுடர்நுதல், (அகம். 192) என்பதனால் வடிவினும் ஒளியினும் தான் பிறையாயிருந்த நிலையை ஒத்து மாசறுதலான், ஒவ்வாமை கருதி மதி மயங்குமாறு கூறினாள். கழிந்தனவற்றிற் கிரங்குதலாற் றற்புகழ்தலாகாது. நகாஅவூங்கு இவை நல்லன என்று இப்போது இவையே தனக்குத் தீயவாதல் குறித்தாள். தான் ஆற்றினும் இவை ஆற்ற மாட்டாது புறத்தாரறியப் பசப்பன என்பது கருத்து. தாழை வெண்பூக் குருகென மலரும் பெருந்துறை என்றதனால் தாழை உண்மையிற் பூத்துள்ளது. குருகென்று மயங்கிக் கொள்ளப்பட்டு ஒருவருமெடுக்க முயலாமையாற் சூடாது கழிந்தாற் போல, தலைவன் தன்னிலை உண்மையின் உணராமையானும் வரைய முயலாமையானும் தான் அவனாற் துய்க்கப்படாது கழிவலோ என்பது தலவி குறித்ததாகும். அல்கலும் தயங்குதிரை பொருத தாழை வெண்பூ என்பது இரவுதோறும் காமக்கடலால் அலைக்கப்படுந் தன்னைக் குறிப்பதாம். விரிநீர்ச்சேர்ப்பன் என்றதனால் தலைவன் செல்வக் குறைபாடிலன் என்று கூறி விரைந்து வரைதற்குள்ளம் இல்லாமை குறித்தாளாம், நகாஅ வூங்கு என்றதனால் நக்கபின்னர் பசலையாகி விளியும் என்பதாம். பசலை யாகி விளிவது கொல்லோ... ... துறைவனொ டிலங்கெயிறு தோன்ற நக்கதன் பயனே (381) என்பதனா னறிக. சீறூ ரினிதுமன் றம்ம ... ... தேரோர் நம்மொடு நகாஅ வூங்கே (நற். 135) என்பது காண்க. ஓத ஞானியார் 227. பூண்வனைந் 1 தன்ன பொலஞ்சூட்டு நேமி வாண்முகந் துமிப்ப வள்ளிதழ் குறைந்த கூழை நெய்தலு முடைத்திவட் டேரோன் போகிய கான லானே. 2 (எ-து) சிறைப்புறம். (வி) பூண் அணிந்தாற் போன்ற பொன்னால் விளிம்பைச் சூட்டுதலையுடைய உருளையின் ஒற்றிய வாய் துணித்தலான் வளவிய இதழ்கள் சிதைந்த காரணத்தாற் கூழையாகிய நெய்தற் கொடியும் உடையது. தேரில் வந்த தலைவன் இவணின்று மீண்டுபோகிய நம் கழிக்கரைச் சோலையில் என்றவாறு. தேரோன் போகிய கானலான் என்பது தேரோன் தேர் போகிய கானலான் என்றவாறு. உடம்பொடு புணர்த்தலாற் கொள்க. தேரோன் போகிய கானலான் குறைந்த நெய்தலும் உடைத்து என்புழி உம்மை தேரோன் போகிய காரணத்தான் அந் நெய்தல் போற் சிதைந்த நின்னையும் உடைத்து என்று இறந்தது தழீஇயதாகக் கொள்க. நெடுந்தேர் நேமி போகிய, இருங்கழி நெய்தல் போல, வருந்தினள் (336) என வருதலான் அறிக, விளங்குசுடர் நேமி (189) என்பது பற்றி வாள் ஒளி எனப்பட்டது. தேரோன் போகிய கானலான் குறைந்த நெய்தலுடைமை கூறியதனால், அவனும் பிரிவு வருத்தத்தான் வள்பு ஆய்ந்து ஊராமை குறித்தாள். அலவ னோம்பி வலவன் வள்பாய்ந் தூர (நற். 11) என்பது கொண்டுய்த்துணர்க. தேரோன் போகிய என்றது தலைவனே தேரியியக்கிச் சென்றது குறித்தது. வருதேர் நேமியால் நெய்தல் குறைதல் கூறாது போகிய போது வறியதனால் அவன் மனஞ்சோர்ந்து ஊர்ந்தது குறித் தாளாம். இங்ஙனம் கொள்ளாக்கால் தலைவிக்குத் தழையும் பூவும் நல்க இருக்கும் நெய்தலைச் சிதைய ஊர்ந்தான் எனப்பட்டு அருளிலனும் அன்பிலனும் ஆவன் தலைவன் என்க. கவிசார்வ பௌமனும் சாகுந்தலத் திற் பூச்சிதையாது இனிது மெல்லிதாக எடுத்தணியும் இளமங்கையரைத் தயை நிறைந்தவராகக் கூறுதல் காண்க. செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தனார் 228. வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை குருகுள ரிறகின் 1 விரிபுதோ 2 டவிழும் கான 3 னண்ணிய சிறுகுடி முன்றிற் 4 றிரைவந்து பெயரு மென்பநத் 5 துறந்து நெடுஞ்சே ணாட்டா ராயினும் நெஞ்சிற் கணியர் 6 தண்கட னாட்டே. (எ-து) கடிநகர் வேறுபடாது நன்காற்றினாய் என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) தாழையின் ஊழுறு முகை விரிபு குருகுளர் இறகிற் றோடவிழும் கானல் என்க. ஊழுறு முகை - முற்றிய அரும்பு. குருகுளர் இறகின் - குருகு சிறையடிக் கொண்ட தூவிபோல. இறகுளரும் (புறப்-வெண்) என்பதற்குச் சிறையடிக் கொள்ளும் என்றார் சாமுண்டி தேவநாயகர், தோடு - மடல். நாரை யுளர வொழிந்த தூவி (ஐங். 153) என்ப. ஊழுறு முகை இறகின் விரிவு அவிழும் கானற் சிறுகுடி என்றதனால் ஒன்றை மற்றொன்றாகக் காணும் ஊர் என்பது குறித்தாள். ஈண்டுத் தன் வேறுபாட்டினை அணங்கெனக் காணுதல் ஆகும். அங்ஙனமுள்ள களவில் நம்மை வரைவிடைவைத்துத் துறந்து நெடுஞ்சே ணாட்டாராயினும் அவர் தண்கடனாட்டுத் திரை நம் சிறு குடிமுன்றில் வந்து பெயரும் என்பராயினர். ஆதலான் என் நெஞ்சிற் கணியராயினார் என்றாள் என்க. களவிலே துறந்து சேணாட்டாராயினும் எம் முன்றிலில் அவர் கடனாட்டுத்திரை வந்து பெயர்தல் ஒன்றால் என் நெஞ்சிற் கணியராய் யான் வேறுபடாது ஆற்றுதற்குக் காரணமாயவர் கடிநகராகிய சதுர்த்தி மணவறையில் ஓரமளியில் நெஞ்சிற்கும் மெய்யினுக்கும் அணியராய் உள்ள நிலையில் வேத விதிபற்றிக் கூடாமல் யான் ஆற்றியிருந்ததற்குக் காரணமாகாளோ என்று கொள்ளவைத்த வாறாம். வீழ்தாழ் தாழை - தன்முகை மடலைத் தொடுத்தற்குரிய நாரும் தன்கண்ணே விழுதாக உடைமை குறித்தது. மோதாசனார் 229. இவனிவ ளைம்பால் பற்றவு மிவளிவன் புன்றலை 1 யோரி வாங்குநள் 2 பரியவும் 3 காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா தேதில் சிறுசெரு வுறுப மன்னோ 4 நல்லைமன் றம்ம 5 பாலே மெல்லியற் றுணைமலர்ப் பிணைய லன்னவிவர் 1 மணமகி 2 ழியற்கை காட்டி யோயே. (எ-து) இடைச்சுரத்துக் கண்டார் தம்முள்ளே சொல்லியது. (வி) தெருவில் விளையாடும்போது இவள் ஐம்பால் - தலைமயிரினை இவள் தெரியாதபடி இவன் பற்றவும், அது தெரிந்து இவள் பற்றிய இவன் புல்லிய தலைமயிரினை வளைத்தனளாய் ஓடவும் இவனும் இவளும் சிறுசெரு உறுப என்க. இவள் வளைத்து ஓடியது இவன் பின்னரும் தன் ஐம்பால் பற்றுவான் என்பது பற்றியாகும். அங்ஙனம் ஓடுதல் கண்டு இவனும் ஓடி இவளைம்பாலைப் பற்ற இவளும் இவன் புன்றலை யோரியை வளைத்து நிற்கும் நிலையிற் காதற் செவிலித்தாயர் இருவரையும் விடுவித்துத் தவிர்க்கவும் தவிராது ஒருவரை ஒருவர் விடாமைக்குச் சிறு செருப்புக்கு நிற்பர்முன்; அது கழிந்தது. அஞ்ஞான்று இவ் விருவரையும் செருவுறும் நிலையிற்று. மெல்லிய கால் (காம்பு) இரட்டையாகச் சேரத் தொடுத்த மலர் மாலையை ஒத்துக் காணப்பட்ட இவர் உள்ளத்தாற் கலவாது ஒருவரை ஒருவர் வெறுத்த நிலையின் மாறி மணத்தில் மகிழும் இயல்பைக் காட்டினாய் ஆதலால் விதியே கேள். நீ தேற்றமாக நல்லை எனப்படுவை என்றவாறு. மகிழியற்கை காட்டியோய் என்றதனால் இவர்முன் வேறாய்ச் செருவுற்றதனை நினைத்தவாறாம். உடம்பால் விடாமற் செருவுற்ற இவரை உள்ளத்தாலும் விடாதபடி நட்கச் செய்து மகிழ்வித்த நீ நல்லை என்றவாறு. பலர் தம் பதியாமணத்திற் கூட்டியது தவறென்று வருந்தும் இயற்காட்டுகின்ற, நீ துணைமலர்ப் பிணையலன்ன இவர் மணத்தில் மகிழியற்கை காட்டினாய்; இவ்வருமையால் நீ நல்லை என்றாரெனினுமமையும். இளமையிற் சேர விளையாடி நட்டாரும் மணந்து கலகப்படுதலுண்டாதலான் இளமையிற் செருவுற்றாரிருவரை இங்ஙனம் காதலெழு வித்துச் சுரத்திலும் உடன்போகச் செய்தலால் நல்லை என்றார் எனினுமமையும். பிறர் பலர் கூறுமாறு தீயையல்லை என்றவாறு. ஏதில் சிறுசெருவுறுவர் நட்டாராய் ஒருவரை ஒருவரின்றி யமையாராயினார் என்பது கருத்து. துணைப்பிணையலை நினைந்தது இவர் மெல்லிய இயல் இச் சுரவழி நடத்தல் தகா தென்பது குறித்து. ஒருவர்க்கொருவர் மாலைபோற் றழுவி இன்புறுவரென்பதுமாம். என்மார்பிற் கோதைய (புறப். வெ. பொதுவியல். 16 : 3-4) சுரநடை பாலே எனத் தலைவன் கூறுதல் காண்க. இனிப் பாலே நல்லை என்றது நல்லறஞ் செய்தாயாவை: அங்கண் விசும்பி னகத்துறைக.... பயில்வளையை நல்கிய பால் (புறப். வெ. பொதுவியல் 42:2-4) என்றது கொண்டறிக. அறிவுடை நம்பியார் 230. அம்ம வாழி தோழி கொண்கன் தானது துணிகுவ 1 னல்லன் யானென் பேதை மையாற் பெருந்தகை 2 கெழுமி நோதகச் செய்ததொன் றுடையேன் 3 கொல்லோ வயச்சுறா 4 வழங்குநீ ரத்தம் 5 சின்னா ளன்ன 6 வரவறி யானே. எ-து வலிதாகக் கூறிக் குறைநயப்பித்தது. (வி) வயச்சுறா வழங்குநீர் அத்தம் - ஆளை எறிய வல்ல சுறாமீன் திரியும் கடல் வழியில், நீர் -கடல். எறிசுறா (318) என்பர். கொண்கன் அன்ன வரவு சின்னாள் அறியான் - கடற்றுறைத் தலைவன் சுறாமீன் திரியும் கடல்வழியில் முன் வந்தாற் போன்ற அவ் வரவினைச் சில நாளளவில் அறிந்திலன் என்றது அன்ன வரவினைப் பின்னாள் அறிவன் என்றவாறு. அவன் வயச்சுறா வழங்கும் நீரத்தத்துப் பன்னாள் வருவது கூறுவதே வரவு வலிதாகக் கூறியதாதல் காண்க. இதுவே கறை நயப்பித்தற்கு ஏதுவாதலுங் காண்க. பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி (176) என்பதே வழக்காதல் காண்க. கொண்கன் தானது துணிகுவனல்லன் - கொண்கன்றான் அவ் வாராமையை நெடுநாளுந்துணிந்து செய்பவன் அல் லன். மற்று யான் என் அறியாமையால் நினக்குப் பெருந்தகை நிலையுண்டாக விரும்பி அவனை வருந்தச் செய்ததாகிய சூழ்ச்சி ஒன்றுடையேன் என்றாள் என்க. பெருந்தகை கெழுமுதலாவது அவன் விரைந்து வரைந்து கொள்ளுதலான் தலைவிக் குண்டாகும் உயர்ந்த தகுதியை விரும்புதல். நோதகச் செய்ததாவது - காவல் கடியர் எனச் சொல்லி அவனைச் சேட்படுத்தியது. சேட்படுத்தல் என்பது தலை வனைச் சேய்மைக்கண் நிறுத்துதல் அல்லது தலைவனை வாராமைச் செய்வதல்லாமையும் நினைக. அது துணிகுவன் அல்லன் என்பதனால் - அவன் வாராமை துணிபவன் அல்லன் என்பது பொருளாதலான் அவன் பன்னாளும் வருதலே செய்தான் என்பதே கருத்தாகக் கொள்க. இனி வலிதாகக் கூறி எனத் துறையிற் கூறிய வலிது மடலூர்தல் என்று கொண்டு பாட்டுள் தான் அது துணிகு வனல்லன் என்பது அம் மடன்மாவைத் தான் துணிகுவன் அல்லன். நின்கண் அன்பால் வரவு கருதி யான் அவனைச் சேட்படுத்ததனால் அது துணிகுவனாயினான். அங்ஙனம் சேட்படுத்த இடத்தும் பன்னாள் வரவறிந்தனன் என்று தோழி குறைநயப்பக் கூறினாள் என்பதும் நன்கு பொருந்தும். அச் சேட்படையான் மடன்மா கூறுமிடனு முண்டு (தொல். களவு. 11) என நச்சினார்க்கினியர் கூறுதலான் அறிக. பாலை பாடிய பெருங்கடுங்கோ 231. ஓரூர் 1 வாழினுஞ் 2 சேரி வாரார் சேரி வரினு மார முயங்கார் ஏதி லாளர் சுடலை போலக் காணாக் கழிப மன்னே நாணட்டு 3 நல்லறி விழந்த 4 காமம் வில்லுமிழ் கணையிற் சென்றுசேட் படவே. (எ-து) வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (வி) ஏதிலாளர் - அயன்மையையுடைய தலைவர். தம் சேரியுள்ள ஓருரிலே பரத்தையருடன் வாழ்தல் செய்யினும் தம் சேரியில் வருதலுஞ் செய்யார். சேரி ஆர வரினும் - ஒருகால் உணவுக் காலத் துண்ணல்வேண்டிச் சேரி வருவாராயினும். முயங்கார் - தழுவ நில்லார் என்க. யான் தழுவுமளவு பொருந்தார். சுடலை போலக் காணாக்கழிபமன் - சுடலையைக் காணாமற்கடப்பது போல என்னைக் கண்ணெடுத்துப் பாராமற் செல்வர். சுடலையைக் கண்டு அதனை நெருங்காது கடப்பது போல என்னை அணுகாது கடந்து செல்வர் என்பதுமாம். சுடலை போல என்றது அவரால் தான் தீண்டப் படாமை ஒத்தல் கருதி. நாணட்டு - என் உடன்பிறந்து வளர்ந்த நாணை அடுதல் செய்து, தன் கண்ணும் நல்லறிவை இழத்தற்குக் காரணமாய்க் களவில் இயற்கைப் புணர்ச்சிப் போதில் அவர்க்கு என்பாலுண்டாகிய காதல், வில்லுமிழ் கணையிற் றானே வழுவிப்போய் எங்கேயோ சேய்மைக் கண் அகப் பட்டுக் கொண்டதனாற் சுடலை போலக் கழிப என்றாள் என்க. வில்லுமிழ் கணையிற் சேறல் என்றது, வில்லாளி குறிவைத் தெய்தற்குமுன் அவ் வில்லை வளைத்த நாண் விசையால் குறியில்லாவிடத்துக் கணை தானே வழுவிச் சென்று வீழ்தலை. பின்னர் மீளாமையுங் கருதியதாகும். இயற்கைப் புணர்ச்சியில் தலைவி நாணிழத்தலும் தலைவன் அறிவிழத்தலும் அணங் கன்னவட் காயிடைப், புல்லி நின்றமெய்ந் நாண்புறப்பட்டது, கல்செய் தோளவன் காமரு பேருணர், வெல்லை நீங்கிற் றியைந்தன ரென்பவே (சிந். 1329) என்பதனானறிக. தன் தகுதிக்கொப்ப உரிமையாதற்குரியளல்லாத என்பாற் செய்த காதல் ஆதலால் நல்லறிவிழந்தகாமம் என்றாள். தாதுண் வேட்கையிற் போதுதெரிந் தூதா, வண்டோ ரன்னவவன் றண்டாக் காட்சி (நற். 25) எனக் களவிற் றலைவி கூறுதல் கண்டுணர்க. சாயலு நாணுமவர் கொண்டார் (குறள். 1183) என்பது பற்றித் தன்னாணட் டாரும் அவர் என்று கருதிக் கூறினாள். நான் அவரைத் தொடுதற்கு நாணிய நிலையில் என் நாணை அட்டு நல்லறிவிழந்து தாமே என்னைத் தொட்டுச் சேர்ந்தவர் இப்போது ஏதிலாளராய் யாம் முயங்க விரும்பிய நிலையில் நல்லறிவுடையாராகிச் சுடலை போலத் தீண்டற்காகாமை புலப்படுத்திப் பார்த்தலுஞ் செய்யாது கழிவர் என்றாளாம். ஏதிலாளர் என்பது 191 ஆம் பாட்டிற் போலத் தலைவர் அயன்மை குறித்துச் சேறலில் வந்தது. பிறர் `ஏதிலாளர் சுடலை போல எனக் கொண்டார், தம் சுடலையாயிற் தீண்டற்குரிய தென்பது அவர் கருத்துப் போலும். பொதுவிற் சுடலை தீண்டற் குரிய தன்றென்பது எல்லா மிருதிக்கும் ஒத்தது. ஊண்பித்தையார் 232. உள்ளார் கொல்லோ தோழி யுள்ளியும் வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ மரற்புகா 1 வருந்திய 2 மாவெருத் திரலை உரற்கால் யானை யொடித்துண் 3 டெஞ்சிய யாஅ வரிநிழற் 4 றுஞ்சும் மாயிருஞ் சோலை மலையிறந் தோரே. (எ-து) பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. (வி) உள்ளார் கொல்லோ - நின்னை நினையாரோ; நினைவர் என்றவாறு. உள்ளியும் - நினைந்தும் தாழ்த்தால், வாய்ப் புணர் வின்மையின் வாரார் கொல்லோ – வாய்மையின்கட் புணர்தலில்லாமையின் வாராரோ என்றது, வாய்மையின்கட் புணர்தலுண்மை யான் வருவர் என்றவாறு. உள்ளியும் வாராராயின் அவர் வாய்மையிற் புணர்தல் இல்லாமையான் அங்ஙனம் பொய்யாகாமைபற்றி வருவர் என்றாள். இதனை நுமரே செய்த பருவம் வந்து நின்றதுவே, எம்மி னுணரா ராயினும் தம்வயிற், பொய்படு கிளவி நாணலு. மெய்யா ராகுத னோகோ யானே (ஐங். 472) என்பது கொண்டுய்த்துணர்க. தமக்கெய்தும் வாய்மையொடு புணர்தலில்லாமை காரணமாக வருவர் என்பதாம். இதுவே தோழி வற்புறுத்தியதற்கு இயைவது காண்க. செய்பொருட் ககன்றன ராயினும் பொய்யலர் வருவர் (நற். 246) என்பதே போலு மிஃதென்க. மரற்புகா அருந்திய - மரலுணவை உண்ட என்றது. உண்ணத் தகாத தொன்றைப் பசியால் உண்டல் குறித்தது. மாஎருத் திரலை - பெரும் பிடர்க் கலையானது. யானை ஒடித்துண்டதனாற் குறைந்த யாமரத்தின் வரிநிழலில் உறங்குதற்குக் காரணமான மாய்ந்த பெருஞ்சோலையை யுடைய மலைவழியை இறந்தோர் தமக்கு வாய்மையொடு புணர்தலில்லாமை காரணமாக வாராரோ என்றது வாய்மையொடு புணர்தலுண்மையின் வருவர் என்றவாறு. மலையில் இருஞ்சோலை கடுவெயில் காய்தல் பற்றி மாய்தலால் இரலை வேறு நிழல் காணாது யானை ஒடித்துண்டெஞ்சிய யாமர நிழலிற் துஞ்சுதல் கூறினார். இதற்கு எதிராய நன்மலையை, யானை கறங்குவெள்ளருவி யொலியிற்றுஞ்சும் பிறங்கிருஞ் சோலை நன்மலை (குறிஞ்சிக்கலி 6) எனப் பாடுதல் கொண்டு இஃது இருஞ் சோலை மாய்மலையாதல் உணரலாம். அந்நிலத்துப் பிறந்து பயின்ற விலங்கும் உணவானும் உறையுளானும் மிடிப்படுதல் காட்டு முகத்தால் தலைவர்க்கு அந் நெறிக்கண் உள்ள இடர்ப்பாடு உணரவைத்து, அவை எல்லாந் தீர்ந்து நின் னுடன் இன்புற்று வாழத் தழைத்தால் வரும் வாய்மையொடு சேர்தல் காரணமாக வருவர் என வற்புறுத்தினா ளென்க. இனி வினை வாய்த்த செவ்வி யுணராமையின் வாராரா யினரோ என்றாருமுண்டு, அஃது அரும்பொருள் முடியாதாயினும் வருவர் (நற். 208) என்வும், செய்பொருள் வயங்காதாயினும் வருவர் (அகம். 333) எனவும் தோழி வற்புறுத் தற்கட் கூறுவனவற்றோடு பொருந்தாமை காண்க. சிறந்த செய்தியின் மறந்தனர் கொல்லோ (அகம். 235) என்பது போன்றன தலைவி கூற்றாதல் நோக்குக. பேயனார் 233. கவலை கெண்டிய வகல்வாய்ச் 1 சிறுகுழி கொன்றை யொள்வீ 2 தாஅய்ச் செல்வர் பொன்பெய் பேழை 3 மூய்திறந் தன்ன காரெதிர் 4 புறவி னதுவே யுயர்ந்தோர்க்கு 5 நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோ 6 ளறியாச் சொன்றி நிரைகோற் குறுந்தொடி தந்தை 7 யூரே. (எ-து) பட்டபின்றை வரையாது சென்று வினைமுற்றி மீளும் தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது. (வி) கவலை - கவலைக்கிழங்கு. அகல்வாய் கூறியது கிழங்கின் பருமை தோன்ற. சிறுகுழி என்றது ஆழமில்லாமை பற்றிச் சிறிதளவிலே கிழங்ககப்படுதல் குறித்தான். உணவாகிய கிழங்கினைத் தந்த குழி பூவால் நிறைத்தல் கூறி உயர்ந்தோர்க் களித்தலும் யாவர்க்கும் ஒப்புரவும் உடைய தந்தை நம்மாற் போற்றத்தகுமென்பது குறித்தான். குறுந்தொடி தந்தை என்றது, `ஐயை தந்தை (அகம். 63) என்றது போலவும், ஆய்தொடி யரிவையர் தந்தை நாடே (புறம். 117) என்றது போலவும் சிறப்புக் குறித்து வந்தது. உயர்ந்தோர்க்கு - தன்னுடன் உண்ணலாகாத உயர்ந்த குலத்தவராகிய அந்தணர்க்கு நீரொடு சொரிந்து எஞ்சிய செல்வத்தில் தன்னுடன் உண்பார் எவர்க்கும் வரைந்து கொள்ளுதலறியாத சோற்றையுடைய குறுந்தொடி தந்தையூர் காரெதிர் புறவினது. வரை கோளறியாச் சொன்றி என்றது கற்குந் தனக்கு வேறு, இடப்படும் பிறர்க்கு வேறென்று வரைந்து கொள்ளாத சோறு. சோறு வேறென்னா..... அடிசில் (பதிற். 45) என்புழிக் காண்க. குறுந்தொடி கற்பாலும், தந்தை மன்னனாகையாலும், காரெதிர்தல் கூறினான். களவு வெளிப்பட்டதனால் அவ்வூரில் வரைவொடு புகுதல் குறித்துப் பாகற்கு உணர்த்தினான். அந்தணர்க்கு நீரொடு பெய்தல் அறநூல் முறை. கைப்பெய்த நீர் கடற்பரப்ப (புறம். 362 : 12) என்ப. நிரைகோற் குறுந்தொடி என்றான், தான்வரைவு நீட்டித்ததனால் அக் குறுந்தொடியும் நெகிழ மெலிவள் என்பது பற்றி. மிளைப் பெருங்கந்தனார் 234. சுடர்செல் வானஞ் 1 சேப்பப் படர்கூர்ந் தெல்லறு 2 பொழுதின் முல்லை மலரும் மாலை யென்மனார் மயங்கி யோரே குடுமிக் கோழி நெடுநக 3 ரியம்பும் பெரும்புலர் விடியலு மாலை பகலு மாலை துணையி லோர்க்கே. (எ-து) பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) செல்வானம் சேப்பச் சுடர் படர் கூர்ந்து எல்லறு பொழுது - வெண்முகிலுடைய விசும்பு செந்நிறமெய்தச் சூரியன் செல்லுதல் மிக்கு ஒளியற்ற பொழுதினை, இல் முல்லை மலரும் மாலை என்மனார் - இல்லத்து முல்லைகள் மலரும் மாலை என்பர். மயங்கியோர் - கலந்தோர்மேல்தான் விடியலு மாலை பகலுமாலை என்பாளாதலான் எல்லறு பொழுதுமட்டும் மாலை என்பாரை நோக்கியதாதலுணர்க. மாலையே வல்லை.... பொழுது (குறள். 1221) என்பது காண்க. இல்லத்து முல்லை வளர்த்தல்,” மனைமரத் தெல்லுறு மௌவல் (19) எனவும் மனைய தாழ்வி னொச்சி சூழ்வன மலரு மௌவல் (அகம். 23) எனவும், மனையிள நொச்சி மௌவல் (அகம். 21) எனவும், `மனைநடு மௌவல் (நற். 115) எனவும் வருவன கண்டுணர்க. மனைவளர் முல்லை (சிலப். புறஞ்சேரி 120) என்ப. படர்கூர்தல் - செலவுமிகுதல். படர்கூர் ஞாயிற்றுச் செக்கர், (மதுரைக். 431-432) என்னும் இடத்தில் நச்சினார்க் கினியர், செலவுமிக்க ஞாயிற்றையுடைய செக்கர் எனப் பொருள் கூறுதல் காண்க. மயங்குதல் - கலத்தல். தோள் மயங்கி (271) என்புழிப் போல வந்தது. மேல் துணையி லோர்க்கு என்றலால் ஈண்டுத் துணையோடு கலந்தோரையே குறித்தல் உணர்க. இல்முல்லை மலரும் மாலை என்றது கலந்தார் சூடி மகிழ்தல் குறித்தது. மல்லிகை யலங்கல் சூட்டிக் குழல்புரை கிளவியோடுங் கொழும்புகை யமளி சேர்ந்தான் (சிந். 1503) என்பது காண்க. துணையிலோர்க்கு விடியலுமாலை பகலும் மாலை என்றது துயிலாமையான் வாளற்றுப் புற்கென்ற கண்ணால் நோக்கலான் அவை ஒளி மழுங்கிய மாலையாய்த் துன்பஞ்செயத் தோன்றுதல் குறித்ததாம். விரகியர்க்குக் கண்ணொளியறுதல், `கண்ணும் வாளற்ற கைவளை சோருமால் (சிந். 998) என்பதனா, னறிக. நீளிடை யத்த நோக்கி வாளற்றுக் கண்ணுங்காட்சி தௌவின (நற். 397) எனவும், வாளற்றுப் புற்கென்ற கண்ணும் (குறள். 1261) எனவும் வருதல் காண்க. தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற் கடும்பகல் வருதி கையறு மாலை (ஐங். 183) என்புழிக் கடும்பகலில் மாலை வருதல் கூறுதல் கொண்டு உண்மை உணர்க. எல்லாப்பொழுது மாலையாகத் தோன்றுதலான் `மாலைக்கண் என்ற வழக்குமுண்டு. கலந்தார்க்கு மாலை இன்பஞ்செய்வது மாலைநோய் செய்தன் மணந்தா ரகலாத, காலை யறிந்த திலேன் (குறள். 1226) என்பதனா னுணர்க. கலந்தார்க்கு இல்லத்து முல்லை மலரும் மாலை என்றது துணையிலோர்க்கு இல்லத்து நோய் மலரும் மாலை என்றதை நினைவித்த தாகும். துணையிலோர்க்குத் துன்பஞ் செய்யும் மாலையின் வேறாய் விடியலும், பகலும் தனித்தனித் தோன்றுமாயின் அவர் காமநோயுற்றது பொய்யாம் என்பது பற்றி இங்ஙனம் கூறினாள். பொழுதிடை தெரியிற் பொய்யே காமம் (32) என்ற நியாயம் ஈண்டைக்கு நினைக்க. தலைவி தான் பிரிவு நோயுழத்தல் எப்போதும் உள தல்லது மாலை என்ற ஒரு சிறு பொழுதைக்கு மட்டும் உரிய தன்றென்பது கருத்து. தலைவர் மாலை வருவம் என அகன்றனர் ஆதலான் அதையே கருதியிருப்பார்க்கு எல்லாப் பொழுதும் அதுவாகத் தோன்றுதல் குறித்தாள் என்பதும் ஒன்று. நெடுநகர்க்கண் கோழி இயம்புதற்குக் காரணமான விடியல் என்க. பெரும்புலர் விடியல்- இராப்பொழுது பெரிய புலர் தலையுடைய விடியல். மாயெண்டனார் 235. ஓம்புமதி வாழியோ 1 வாடை பாம்பின் தூங்குதோல் கடுக்குந் தூவெள் 2 ளருவிக் கல்லுயர் நண்ணி 3 யதுவே நெல்லி மரையின மாரு முன்றிற் புல்வேய் குரம்பை நல்லோ ளூரே. (எ-து) வரையாது பிரிந்து வருவான் வாடைக்கு உரைப்பா னாய்ப் பாகற்கு உரைத்தது. (வி) வாடை நல்லோள் ஊர் ஓம்புமதி - வாடையே நல்லோள் உள்ள ஊரினைத் தீண்டாது பரிகரிப்பாயாக. கடவு ளொண்பூ வடைதல் ஓம்பி (பெரும்பாண் 290) என்புழிப்போல வந்தது. வாடை பரந்து செல்லும் இயல்பினதாதலின் அவ்வூரைத் தீண்டின் அவளையுந் தீண்டியே தீர்வதாம் என்று கருதி ஊரையே பரிகரி என்றான். தான் வரைவொடு வருவதாகக் குறித்த காலம் வாடைக்கு முந்திய தாதலின் வாடை வந்தும் தான் வாராமை கண்டு பழித்து வருந்தாமைக்கு நல்லோள் ஊர் ஓம்புமதி என்றான். வாடையும் வாரார், இஃதே தோழி நங்காதலர் வரைவே (161) என்பது வரைவு நீட்டிப்ப ஆற்றாள் கூறியதாதல் கண்டு உண்மையுணர்க. தன்னைத் தீண்டிய கடுமை உணர்ந்து இவ்வாறு தீண்டின் அவள் பொருள் என்று கருதியும் ஓம்புமதி என்றான். புல்வேய் குரம்பை நல்லோள் என்றது புல்வேய்தலால் அவளுள்ள குரம்பையும் நின்வேகந்தாங்காது ஆக அந் நல்லவள் எங்ஙனந் தாங்குவள் என்பது குறித்தது. நெல்லி மரையினம் ஆருமுன்றில் - நெல்லிக்காயை ஆணும் பெண்ணுமான இனமரை உண்ணும் முற்றம் என்றது இவை கண்டு தான் தலைவனொடு கூடி வாழாமை கருதி நெஞ்சு நொந்து தலைவன் வரவு நோக்கி இருப்பள் என்ற குறிப்பிற்று. மழைக் காலத்துக்குப் பிந்தியது வாடையாத லான் வற்றிச் சிறிதாக ஒழுகும் அருவியாதல் கருதி பாம்பின் தோல்கடுக்கும் என்றான். இதனால் ஒன்று மற்றொன்றாகத் தோன்றுதல் காட்டி வரைய இருக்குந் தன்னைத் தலைவி வேறாகக் கருதி வருந்துவள் என்பது குறித்தான். அருவிக்கல்லுயர் நண்ணியது - அருவியையுடைய குன்றிலுயர்த்துப் பொருந்தியது என்றதனால் இந் நிலத்து என்கண் வீசி வருத்துகின்ற நீ ஆண்டுக் குன்றேறிச் செல்ல வேண்டுதலான் அவ்வூர்க்குப் போதலை ஓம்புக என்றா னாகும். பின் வரைவொடு வரல் குறித்துப் பாகற்குத் தலைவி ஊருள்ள இடன் அறிவுறுத்தினானாகும். இனி, வடபுல வாடைக்குப் பிரிவோர் மடவர் (நற். 366) என்று தான் சொல்லப் படாமைக்கு நல்லோள் ஓம்புமதி என்றா னென்பதுமாம். நரிவெருத்தலையார் 236. விட்டென 1 விடுக்குநாள் வருக வதுநீ நொந்தனை 2 யாயிற் றந்தனை சென்மோ குன்றத் தன்ன குவவுமண லடைகரை நின்ற புன்னை நிலந்தோய் படுசினை வம்ப நாரை சேக்கும் தண்கடற் சேர்ப்பநீ யுண்டவெந் நலனே. 1 (எ-து) வரைவிடை வைத்துப் பிரிவான் இவள் வேறு படாமை ஆற்றுவி என்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது. (வி) விட்டென - நீ இவள்பால் வாராதுவிட்டாய் என்று சொல்ல. விடுக்கு நாள் வருக - இவள் உயிர் விடுக்கு நாள் வருவதாக என்றதனால் இவள் உயிர் விடுக்கும்வரை நீ இவளை விட்டாயெனக் கூறலாகாதென்று நீவிடின் உயிர் வாழல ளென்பது குறித்தாளாம். இனி விடுக்குநாள் - நீ இவளை விடுக்குநாள். விட்டென வருக - இவள் உயிர் விட்டாள் என வருக எனக் கூறினும் இக் கருத்தே தருவதாகும். அது நீ நொந்தனையாயின் - அங்ஙனம் உயிர் விடுதற்கு வருந்தினையாயின் எந்நலந் தந்தனை சென்மோ என்றாள் என்க. நொந்தனை என்பதே பாடமென்பது தந்தனை என்னு மெதுகை நோக்கி அறிக. நலந்தருதல் நீ செல்லாமையினும், நலமிழத்தல் நீ சேறலினும் உண்டாதலான் நின்னாலியலா தென்று தெரிய நலந் தந்தனை சென்மோ என்றாள். அடைகரைப் புன்னைப் படுசினை வம்ப நாரை சேக்கும் என்றது மருதநிலத்து நாரை தன்னிலமல்லாத நெய்தலிற் றான் வயிறாரத் துய்த்த நன்றியால் தன்னிலஞ் செல்லாது தங்குதல் காட்டி, நீயும் இவளை விடாது இவளுள்ளவிடத்தே தங்குதற் குரியை என்று குறிப்பித்து இவளுடன் வாழ்தற்குரிய வரைவினை நினைவித்தாளாம். வம்ப நாரை என்றது வேற்று நிலத்தாதல் பற்றி. நாரைப் பார்ப்பின மோம்புதண் மருதம் (சிந். 2102) என்ப நாரை தான் வாழுமிடமாகிய மருத நிலத்தை மறந்தாற் போல (அகம். 40) என அகப்பாட்டுரை காரர் கூறுதலானும் உணர்க. தோழி கூற்றாதலின் நீ உண்ட எந்நலனே என்ற பாடமே பொருந்திற்றாகும். அள்ளூர் நன்முல்லையார் 237. அஞ்சுவ தறியா தமர்துணை தழீஇய 1 நெஞ்சுநப் 2 பிரிந்தன் றாயினு மெஞ்சிய கைபிணி நெகிழினஃ தெவனோ நன்றும் சேய வம்ம விருவா 3 மிடையே மாக்கடற் றிரையின் முழங்கி 4 வலனேர்பு கோட்புலி வழங்குஞ் சோலை எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே. 5 (எ-து) பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகனுக்கு உரைத்தது. (வி) நெஞ்சு அஞ்சுவ தறியாது - என்னெஞ்சம் குறித்த பருவந் தப்பில் தலைவி என்னாகுவளோ என்று யான் அஞ்சுதலை அறியாமல். அமர் துணை தழீஇய - தான் விரும்பிய துணைவியைத் தழுவுதற்கு. நம்பிரிந் தன்றாயினும் - நம்மைப் பிரிந்தது ஆயினும், எஞ்சிய கை - அந் நெஞ்சுடன் செல்லமாட்டாது ஈண்டுத் தங்கிய கைகள். பிணி நெகிழின் - பிணிப்பு நெகிழ்தலின். அஃது எவனோ - அந் நபுஞ்சகத்தால் யாது பயனோ என்றவாறு. இருவாம் இடையே நன்றுஞ் சேய் - இருவேமுக்கு இடையேயுள்ள இடங்கள் பெரிதும் சேய்மைய வாகும். இங்ஙனம் சேய ஆதலேயன்றி, முயக்கிடை மலைவு - இன்றை சென்று அவளை முயங்கற்குத் தடையாகிய கோட்புலி வழங்கும் காடு மாக்கடற் றிரையின் எனைத்தென் றெண்ணுகோ என்றானென்க. சோலை - காடு. புலி வழங்கும் காடு ஒன்றன்பின் ஒன்றாய்க் கடத்தற்கரிய கடற்றிரை போன்றுண்மை குறித்து எவ்வளவிற்றென் றெண்ணு வேனோ என்றான். கடல் போற்கானம் (அகம். 199) என்பதனாலிஃதுணர்க. முழங்கி வலனேர்பு கோட்புலி வழங்குஞ் சோலை என்றது, புலிவழங் கதர கானத்தானே (ஐங். 316) எனவும், வேறுபட்டிரும்புலி வழங்குஞ் சோலைப் பெருங்கல் வைப்பிற் சுரனிறந்தோரே (நற். 274) எனவும் வருவன போல வந்தது. புலி வழங்குஞ் சோலையாகிய முயக்கிடை மலைவு கடற்றிரை போல எவ்வளவினதென்று தொகையிடுகோ என்றான். சேய்மையும் இடையிட்ட புலி வழங்குகாடுகளும் கூறி இன்று இரவு கையால் முயங்கும்படி புகுதல் அரிதென்று கவன்றானாம். திரையின் முழங்கிப் புலி வழங்குஞ் சோலை என இயைத் துரைப்பாரு முளர். கோட்புலி முழங்கி ஏர்புவலன் வழங்குஞ் சோலை என்க. வலன் வழங்குதல் - தான் அடிக்கும் விலங்குகளைத் தனக்கு வலப்பக்கத்திட்டுத் திரிதல். இடம் வீழ்ந்த துண்ணாமையின் இவ்வாறு கூறினான். கடுங்கட் கேழலிடம்பட வீழ்ந்தென, அன்றவண் உண்ணாதாகி...... இருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் புலி (புறம். 190), “இடம்படின், வீழ்களிறு மிசையாப் புலியினும் (அகம். 29) என்பன காண்க. ஏர்பு - எழுந்து கோட்புலி - கொலைப்புலி. குன்றியனார் 238. பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் 1 துயிற்றி ஒண்டொடி மகளிர் வண்ட லயரும் தொண்டி யன்னவெந் நலந்தந்து கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே. (எ-து) தலைமகன் பரத்தையின் மறுத்தந்து வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது. (வி) பாசவல் - வறுக்காது பச்சையா யாக்கும் அவல். பாசவலிடித்தற்குத் தெரிந்தெடுத்த கதிர் நெல்லாதலின் ஆய்கதிர் நெல் என்றான். `அவற்பதத்த செந்நெ லருந்தி (வச்சத் தொள்ளாயிரம்) என்பது காண்க. துயிற்றி - வினை செய்யாது கிடப்பித்து. நின்னை நயவாத ஆயத்து மகளிர் வேண்டியதுண்டு விளையாடாநிற்க நின்னை நயந்த யாம், உணவும் விளையாடலு மின்றி நலனிழந்துள்ளே மாதலான் நீ பரத்தையர் சேரியிலினிச் செல்லேன் என்றெமக்குத் தந்த சூளை நீ கொண்டு, நீ கொண்ட எம் நலத்தை எமக்குத் தந்து செல்க என்றாள். சூள் விட்டேம் என்று சூள் பெற்றார் கூறாதோழியிற் சூள் பொய்த்தார்க்கு ஏதம் வருமாதலின் அங்ஙனம் ஓர் ஏதம் நினக்குவரின் இவள் வாழாளாதலாற் கொண்டனை செல் என்றாளாம். மகிழ்ந என்றது நீ மகிழ்தற்குப் பலரை உடையை யேனும் இவள் மகிழ்தற்கு நின்னையன்றி யிலள் என்பது குறித்தது. ஒண்டொடி மகளிர் என்றது நின்னை நயவாதார் வளைகள் நழுவாமல் ஒட்பம் பெறுதல் காட்டித் தலைவி மெலிவுணர்த்தினாளாம். ஆசிரியன் பெருங்கண்ணனார் 239. தொடி ஞெகிழ்ந் 1 தனவே தோள்சா யினவே விடுநா ணுண்டோ 2 தோழி விடர்முகைச் சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தன் நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி பாம்புமிழ் மணியிற் றோன்றும் முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே. (எ-து) சிறைப்புறம். (வி) மலைகிழவோற்குத் தொடி ஞெகிழ்ந்தன - மலை கிழவோன் பொருட்டு நம் தொடிகள் நெகிழ்ந்துள்ளன. தோள்கள் மெலிந்தன. இங்ஙனம் ஆதலின் இனியும் அவன் வரைவொடு வாராது நீட்டிப்பின் அவன் பொருட்டு நான் நாண் விடுதலுண்டோ என்றாள். விடுநாண் - நாண் விடுதல். அஃதாவது தலைவன் வரை விடை வைத்துப் பிரிந்துழித் தலைவி பிரிவாற்ற கில்லாது அறிவழிந்து நாணுவரையிறத்தல். அவன் வாராது தாழ்த்தலான் இந் நாண்வரை இறத்தல் உண்டாங்கொல்லோ என்று தேறுத லொழிந்த காமத்து மிகுதிறத்திணை (தொல். அகத். 54) நினைந்து தன் கையறவால் இது கூறினாளாம். நாண் விடுதலுண்டோ என்று உரைத்த அளவோடு நிற்றலான் இது களவொழுக்கத்தினிறுதி மெய்ப்பாடாகிய கையறவுரைத்தலாவதல்லது நாண் விடுதலெய்தி மன்றத் திருந்த சான்ற வரறிய அழுதும் அரற்றியும் புகாமையிற் பெருந்திணையாகாமை கண்டு கொள்க. இச் சிறைப்புறத்து, அருங்கடி யன்னை காவனீவிப், பெருங்கடையிறந்து மன்றம் போகிப், பகலே பலருங் காண வாய்விட், டகல்வயற் படப்பை யவனூர் வினவிச், சென்மோ வாழி தோழி (நற். 365) என்பதும் நாண்விடத் துணிந் துரைத்ததாகக் கொள்க. நிறையரியர் மன்னளிய ரென்னாது காம, மறையிறந்து மன்று படும் (குறள். 1138) என்புழிக் காமம் மறையிறந்து மன்றுபடும் எனக் கூறியதனையும் நோக்குக. நெகிழ்ந்தன, சாயின, இனி நாண் விடுதலுண்டோ? அந் நாணினும் சிறந்த உயிர்விடுதலுண்டு எனக் கூறினா ளென்க. பாடில கலுழுங் கண்ணொடு சாஅய்ச், சாதலு மினிதே காதலந் தோழி (நற். 327) என்றது காண்க. விடுநாணுண்டோ என்றதற்கு விடுமுயிர் உண்டு என்பது விடையாகக் கொள்க. சிலம்பு கமழுங் காந்தள் ஊதுந்தும்பி பாம்புமிழ் மணியிற் றோன்றும் என்றது தொடி நெகிழ்தலானும் தோள் நெகிழ்தலானும் ஊர் முழுதும் அலராதற்குரிய இந் நோய் அணங்கு தாக்காகக் கருதப்படுமென்றும், மணியுமிழ் பாம்பாக அச்சஞ்செய்தலை யுடைய காந்தள் பறித்துச் சூடப்படாது வாடியொழிதல் போல இற்செறிப்பிற் காவலின் கடுமையால் அஞ்சித் தலைவன் துய்க்காமையாற் றான் சாம்பி அழிதலைக் குறித்ததென்றும் கொள்ளத்தகும். ஊதுந் தும்பி தோன்றும் - காந்தள் உள்புக்கு ஊதும் தும்பி வெளிப்படும் என்றவாறு. உமிழ் மணியை உவமித்தது காண்க. முந்தூழ் வேலி மலை என்று முள்ளுடை மூங்கில் வேலி கூறியதனால் தலைவன் புகற்கரிய காவலுடைமை குறித்தாளாம். முள்ளுடை மூங்கில் (ஐந்திணையெழுபது 36) என்ப. கொல்லன் அழிசியார் 240. பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக் கிளிவா யொப்பி னொளிவிடு பன்மலர் 1 வெருக்குப்பல் 2 லுருவின் முல்லையொடு கஞல 3 வாடை வந்ததன் றலையு நோய்பொரக் 4 கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக் கடலாழ் கலத்திற் றோன்றி 5 மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே. (எ-து) வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) புதலிவர்ந்த பைங்கொடி யவரையின் பனிப்பன்மலர் என்க. பனிப்பன்மலர் - பனியிற் பூத்த பல மலர்கள். அவரை பூக்கு மரும்பனி யற்சிரம் (82) அவரைக் கொழுமுகை யவிழ..... அற்சிரம் வந்தன்று (அகம். 21) என்ப. புதலில் ஏறிப் படர்ந்த அவரை `புதல பூங்கொடி யவரை (அகம். 104). விரகியாய தனக்கு முல்லை எயிறீன்று அச்சஞ்செய்தலான் வெருக்குப் பல்லுருவின் முல்லை என்றாள். கிளிவாய் ஒப்பின் அவரைப் பல்மலரும் பனிவரவு குறித்து வருத்துவதேயாம். கிளியும் வெருகும் தம்முட் பகையாயின எனினும் என்னை வருத்தும் பொருள்கட்கு உவமையாய் ஒத்தன என்பது குறிப்பு. பேச்சுப் பேச்சென்னும் பெரும்பூனை வந்தக்காற் கீச்சுக்கீச் சென்னுங் கிளி (தென்றல் விடு தூது) என்பது காண்க. கஞல - நெருங்கிச் சேர மாலையிலே தலைவன் எய்தாமை பற்றித் தான் சூடலாகாமையான் மிகவும் வருந்துவது தோன்ற முல்லையொடு என உயர்த்திக் கூறினாள். அவரை சூடும்பூவன்மை யுணர்க. உடம்பெல்லாந்தொட்டு வருத்துதலான் வாடை வந்ததன் றலையும் என்றாள். வாடை வந்ததன் மேலும் அவர் மணி நெடுங்குன்று தோன்றிக் கடலாழ்கலத்தின் நோய் பொர மாலை மறையும் என்க. நோய் பொர மறைதல் ஆழ்கலத்திற்கும் குன்றிற்கும் ஒத்தல் காண்க. காணுந் தான் வருந்த மறைதலாற் கடலாழ் கலத்தை உவமித்தாள். கடலில் நெடுந்தூரம் செல்லுதலாற் கூம்புந் தெரியாது ஆழ்ந்த மரக்கலத்தை உவமித்தாள் எனினும் அமையும். பரதவர் பெருங்கடன் மடுத்த, கடுஞ்செலற் கொடுந்திமில் போல, நிவந்துபடு தோற்றமொ டிகந்து மாயும்மே (அகம். 330). என்புழித் தேர்மறைதற்குத் திமில் மறைதலை உவமித்தல் காண்க. பனிவாடை பெரும்பொழுதாகவும் மாலை சிறுபொழு தாகவும் கொள்க. வாடை வந்து வருத்துமிடத்தும், கட்கினிதாகத் தோன்றியது அவன் குன்று. அதுவும் மறைய மாலை வந்தது என்று கவன்றாளாவள். கபிலர் 241. யாமே காமந் 1 தாங்கவுந் 2 தாந்தம் கெழுதகை மையி 3 னழுதன தோழி கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் 4 மன்ற வேங்கை மலர்பத 5 நோக்கி ஏறா திட்ட வேமப் பூசல் விண்டோய் விடரகத் தியம்பும் குன்ற நாடற் கண்டவெங் 6 கண்ணே. (எ-து) பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) யாமே காமம் தாங்கவும் - அவராற் காமவின்பந் துய்த்த யாமே அவர் பிரிவாலுண்டாய காமநோயைப் பொறுக்கா நிற்கவும். குன்ற நாடனைக் கண்ட எங் கண்கள் தாம் தம்முடைய மிக்க தகுதிப்பட்டான் அழுதன என்றவாறு. தகைய - தகுதிப் பாடு. `நட்பினு ளெழுந்த தகைமையின் (கலி. நெய்தல். 20). அவரான் இவட்குண்டாய இன்பமாகிய கடலினும், அவர் பிரிவா லிவட் குண்டாகிய துன்பம் பெருங்கடலாதலின் இஃதியாம் காட்ட இவட்குவந்ததன்றோ என்றெண்ணித் தாம் எல்லாவுறுப் பினும் சிறந்தனவாய் பெருந்தகைமைக்கியைய அழுதன என்றாளாக. கடலாற்றாக் காமநோய் செய்தவென் கண் (குறள். 1175) காண்க. கெழுதல் - மிகுதல். கண்ணிற் சிறந்த உறுப்பில்லை என்பதுங் காண்க. என் நோய்க்குக் கண்கள் இரங்கின; அக் கண்களி னும் சிறந்த என் தலைவன் இரங்கிலன் என்பது குறிப்பெச்சம். கன்றாற்றுப்படுத்த சிறார் வேங்கை மலர் பதநோக்கி ஏறாதிட்ட பூசல் விடரகத்தியம்பும் குன்றநாடன் என்றது தமக்குரிய காரியமாகிய விளையாடல்களை முடித்த ஆயம் இவள் வேறுபாடு நோக்கி, இவள் உயர்வு கருதி, இவள் விளையாடாமலே உண்டாக்கிய அலர் தாயருந் தன்னையரு மறியச் செய்து இவன் செவியினும் புகாநிற்கவும் வரைய முயலாது வாளாவிருப்பவன் என்றது குறித்ததாம். ஏமப்பூசல் - மயக்கத்தையுடைய ஆரவாரம். மயக்கமாவது புலிபுலி என்று பூசலிடுதலான் இஃது ஆகொள்வயப்ப புலியாகு மென்று பிறர் மயங்குதல். ஆகொள் வயப்புலி யாகு மிஃதென (அகம். 52) என வருதல் காண்க. பூசல் புலியோ என மயங்க வைத்தல் போல இவ் வேறுபாடு அணங்கு தாக்கோ என்று இவள் தாயரை மயங்கப் பண்ணுதலும் கொள்க. கன்றாற்றுப் படுத்த - மேய்த்த கன்றுகளை வழிப்படுத்திய. குழற்றத்தனார் 242. கானங் கோழிக் 1 கவர்குரற் சேவல் ஒண்பொறி 2 யெருத்திற் றண்சித ருறைப்பப் புதனீர் வாரும் பூநாறு புறவிற் சீறூ ரோளே மடந்தை வேறூர் வேந்துவிடு தொழிலொடு செலினும் 3 சேந்துவர 4 லறியாது 5 செம்ம 6 றேரே. (எ-து) கற்புக்காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது. (வி) கானங் கோழிக் கவர்குரற் சேவல் - காட்டுக்கோழி யொடு முயங்கிய கழுத்தினையுடைய சேவல் என்றவாறு. கவர்கணைக் காமனார் (கலி. மருதம் 29) என்புழிக் காண்க. குரல் - கழுத்து. மறிக்குர லறுத்து (276) என்ப. தண்ணிய துளி துளித்தலான் ஒள்ளிய புள்ளிகளையுடைய பிடரிகளிற் புதலினின்று நீர் வார்ந் தொழுகுதற்குக் காரணமான பூநாறு புறவின் சீறூரோள் என்க. ஆண்மகன் பிடரி நீர் பெண்ணின் பிடரியில் வழிய விடுவதோர் மணச்சடங்காக நிகழ்வது தென்னாட்டுக் கோயா வகுப்பினுளுண்டு.* இதனால் அவள் மணந்து வாழ்தலைக் குறித்தாளாம். இவை உத்ரூபன ஏதுவாம். வேந்து விடுதொழிலான் வேறூர் செலினும் செம்மல் சேந்து வரவு தேர் அறியாது. தலைவன் தங்கிவருதலைத் தேர் அறியாது தலைவனுடன் வருதலையே அறியும் என்றவாறு. தான் தங்கி வருதலை அறியினும் செம்மல் தங்கி வருதலைத் தேர் அறியாது என்று கொண்டு ஒருகால் இடையீடு படினும் செம்மல் தங்கி வாரான் என்று கருதிக் கூறினாள் என்பதும் அமையும். நிறைவதங் காத்தெவ்வம் பணியச்சென் றானுமன் வந்தன்றிச் சேந்தறியான் (திருக்கோவை 204) என்பதும் இக் கருத்தே தழீஇ வந்தது காண்க. வேந்து விடுதொழிலொடு சென்றும் சேந்து வரலறி யாது என்றதனால் விரைவில் அவ் வினை முடித்து வரும் ஆற்றலுடையன் என்பது தோன்றச் செம்மல் என்றாள். கடிநகர் - மணம்புக்கமனை. சீறூரோனே மடந்தை என்று வேறூர் செலினும் என்றதனால் செல்லும் வேறூர் பேரூராய்த் தங்குவதற்கு உரியதாயினும் தங்காமை குறித்த தாம். இதனால் விரைந்து வருதற்கேற்ற தேர் உடைமையாற் செல்வமும், மடந்தைபால் அவன் வைத்துள்ள காதலுடன் கூறினாள். அவனகம் பிணித்த தலைவி மாண்புகளைக் குறிப்பித்தாள். வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும், வாய்ந் தன வென்ப வவர்பெறும் பொருளே (தொல். மரபு. 81) என்பதனால் இத் தலைவன் தண்டத்தலைவன் என்றுணரப் படும். நெடுந்தகை செம்ம லென்றிவை பிறவும், பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித்தன்றே (தொல்.மரபு. 71) என்பத னால் விலக்கிய செம்மல் என்னும் பெயரைக் கூறுதலால் இவன் அந்தணன் அல்லாமை பெறப்படும். புதனீர்வாரும் என்றது கானம் புதவின்கீழ், கோழியுஞ் சேவலும் வதிதல் பற்றி. பூநாறு புறவாற் றலைவன் நாட்டுவளங் குறித்தாளாம். நம்பிகுட்டுவனார் 243. மானடி 1 யன்ன கவட்டிலை யடும்பின் 2 தார்மணி யன்ன வெண்பூக் 3 கொழுதி ஒண்டொடி மகளிர் வண்ட லயரும் புள்ளுமிழ் 4 பெருங்கடற் சேர்ப்பனை உள்ளேன் றோழி படீஇயரென் 5 கண்ணே. (எ-து) வன்புறையெதிர் அழிந்து சொல்லியது. (வி) மான் அடி அன்ன - மானின் அடிக்கவட்டுக் குளம்பினை ஒத்த. என் கண் படீஇயர் - என்கண்கள் துயிலுக. அங்ஙனம் கண்கள் துயிலுவ ஆயின் சேர்ப்பனை உள்ளேன் என்றாள் என்க. துயிலுதல் என்பது மனம் ஒன்றையு நினையா தொடுங்குதல் காரணமாகக் கண்படுதல் ஆதலின் துயிலு தலுண்டானாலன்றி அவனை உள்ளாமையுண்டாகா தென்று அவனை உள்ளற்க என்று வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி எதிரழிந்து கூறியவாறாம். உள்ளம் அவனை நினைதலிற் துயிலாத கண்களைத் துயில்வித்து அவன் நினைவுண்டாகாதவாறு செய்ய வல்லமோ என்பது கருத்தாம். துறைவனை உள்ளேன் றோழி படீஇயரென் கண்ணே (ஐங். 142) என்பது மறக்க வேண்டுமென்ற தோழிக்கு இதுவே போற் றலைவி கூறியதாதல் காண்க. அவனை நினையாமை எய்தித் துயிலெய்தல் இயலாமையால் றுயிலெய்தின் நினையாமை எய்தலாமென்று அதுவும் இயலாதவாறு தெளித்தாளென்க. மகளிர் தார்மணி போன்ற நல்ல அரும்பின் மலரைக் கொழுதி வண்டற் பாவைக்குச் சூட்டி மகிழும் சேர்ப்ப னாகியும் தான் என்னைச் சூட்டாது மடிந்திருப்பான் என்று குறித்தாள். தார் - புரவித்தார் ஆகும். மானடியும், மணியும் வடிவுவமையின் வந்தன. படல் - துயிலுதல். படலொல்லா (குறள். 1136) துயிறலைப் பொருந்தா என்றது காண்க. புள்ளுமிழ் பெருங்கடற் சேர்ப்பன் என்றது பல்லோர்க்கு விருந்தளிக்கும் பெருஞ்செல்வ முடைமை குறித்துத் தானவனுடனுறைந்து அவ் விருந்தோம்பல் செய்யப் பெறாமை நினைந்தவாறாம். கண்ணனார் 244. பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத் துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவ 1 முயறல் கேளே மல்லேங் கேட்டனம் 2 பெரும ஓரி முருங்கப் பீலி சாய நன்மயில் வலைப்பட் டாங்கியாம் உயங்குதொறு முயங்கு 3 மறனில் யாயே. 4 (எ-து) இரவுக்குறி வந்தொழுகாநின்ற தலைமகற்குத் தம் காவல் மிகுதியாற் புறப்பட்டு எதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை ஞான்று தோழி, வரைந்து கொளினல்லது இவ் ஒழுகலாற்றின் இனிக் கூடல் அரிது என வரைவு கடாயது. (வி) உரவுக்களிறு போல் வந்து - காவலையஞ்சாத வலியுடைய யானைபோல் வந்து. இரவு வருதல் களிற்றுக்கும் ஒக்கும். கதவ முயறல் - கதவினைத் தள்ளுதல். அயிற் கதவம் பாய்ந்துழக்கி (முத்தொள். 22) என்பதால் யானையின் செயலுமாம். முயறல் - முயறலா லுண்டாகிய ஓசைக்கு ஆகுபெயர். கேளேம் அல்லேம் கேட்டனம் - நின் உறவினேம் அல்லே மாய்க் கேட்டனம் என்றது கதவந் திறத்தற்குரிய உறவின மாயும் உடனே சென்று திறக்க இயலாமையால் உறவல்லே மாய்க் கேட்ட அளவிலிருந்தேம் என்றவாறு. எதிர்மறை யானும் உடன்பாட்டானும் ஒன்றையே கூறியதெனக் கொள்வாரும் உண்டு. பெரும என்றாள் தம் சிறுமையும் திறவாத்தவற்றின் பெருமையுந் தோன்ற. ஓரி முருங்க - உச்சிக்கொண்டை முறிய. கூம்புமுதல் முருங்க எற்றி (மதுரைக்காஞ்சி 377) என்பர். பீலி சாய - தோகை நிலைகுலைய. நன்மயில் - நலமுண்டற்குரியமயில். வலைப் பட்டாங்கு யாம் உயங்குதொறும் - வலையில் அகப்பட்டாற் போன்று யாங்கள் இளைத்து மூச்சு விடுந்தோறும். அறனில் யாய் - தலைவியைப் பெருமானாகிய நினக்கு வழங்கும் அறனில்லாத தாய். முயங்கும் - தன்னுடம்பினா லணைத்துக் கொள்வாள். வலைப்பட்ட மயில் வலை நீக்கி வெளியிற்செல வருந்தி அசையும்தொறும் அவ் வலையை நெகிழவிடாது இறுகப் பிடித்தல் போல் யாய் முயங்குதலைக் குறித்தவாறாம். பெரும நீ முயங்கி இனியசெயவேண்டிய தலைவியைத் தாய் முயங்கி வருத்தும் என்பது கருத்து. தாய் கடுஞ்சிறையாதல், பிணிகொ ளருஞ்சிறை யன்ன (அகம். 122) என்புழிக் காண்க. இச் சிறைவீடு செய்ய விரைவின் வரைவதே நலமென் றுணர்த்தியவாறு. மாலை மாறன் 245. கடலங் கான லாய மாய்ந்தவென் நலமிழந் ததனினு நனியின் னாதே வாள்போல் வாய கொழுமடற் றாழை மாலை 1 வேனாட்டு 2 வேலி யாகும் மெல்லம் புலம்பன் கொடுமை பல்லோ ரறியப் பரந்துவெளிப் படினே. (எ-து) வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) ஆய மாய்ந்த என் நலன் கடலங்கானல் இழந்ததனினும் நனி இன்னாதென்க. கடற் சோலையில் நலன் இழத்தல், பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் புதுநல னிழந்த புலம்புமா ருடையள் (81) என்பது காண்க. மெல்லம்புலம்பன் கொடுமை - மெல்லிய கடற் சேர்ப்பனைப் பற்றி நீ அறிந்து கூறுங் கொடுமை. பல்லோரறிய - நின் னொருத்தி வாயிலாகப் பலரறியும் வண்ணம். பரந்து வெளிப்படின் - வெளிப்பட்டுப் பரப்பின், என் நலனி ழந்தனினும் நனியின்னாது என்க. இவ்வாறு தோழி இயற்பழித்தவழித் தலைவி அதற்குடன் படாது அவனைப் பாதுகாத்தொழுகல், தொடியொடு தோணெகிழ நோவ லவரைக், கொடிய ரெனக்கூற னொந்து (குறள். 1236) யான் நீ அவரைக் கொடியரெனக் கூறலைப் பொறாது என்னுள்ளே நோவா நின்றேன் என்று தலைவி கூறுதலால் அறியலாம். தலைவன் கொடுமை வெளிப்படின் நனியின்னாது என்றலாற் றான் கூறிய தாகாமையும், பல்லோ ரறியப் பரந்து வெளிப்படின் என்றதனாற் றோழி ஒருத்தி அறிந்துரைத்த தாதலும் நன்கு துணியலாம். குறளுள்ளும் அவரைக் கொடியரெனக் கூறல் என்றுளதாக ஆண்டு நீ கூறல் எனப் பொருள் செய்தது போல ஈண்டுங் கண்டு கொள்க. கொடுமையாவது களவின் அழிவு செய்து பின் அது பற்றிக் கவலாது நெகிழ்ந்து வரைவு நீடிப்பது. வாள்போல் வாய கொழுமடற் றாழை என்றது தாழை கொழுமடலுடையது வாள்போல் வாயுடைய தோடும் உடைய தாயினாற் போல இக் களவு இன்பமுடையதாயும் துன்பமுடைய தாயும் இருத்தல் இயல்பென்று குறித்தாள். தாழை மாலை வேல் நாட்டு வேலியாகும் என்றது இக் களவொழுக்கமே தலைவன் இன்பந்துய்த்தற்குத் தடையு மாகும் என்னுங் குறிப்பிற்று. தாழை மாலை - தாழைகளின் வரிசை. வேல்நாட்டு வேலி - வேல்களை ஊன்றிய வேலி. வாள்போல் வாய தாழை - வாள்போன்ற வாயினையுடைய தோடுகளையுடைய தாழைகள். கொழுமடல் - பூவின் கொழுவிய மடல், முள்ளின்மை தெரியக் கொழுமடல் என்றாள், பயப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார். நல்காமை தூற்றா ரெனின் (குறள். 1190) என்றிருத்தற்குரிய கற்புடைத் தலைவிக்கு களவில் அவர் கொடுமை பரந்து வெளிப்பட்டுக் கூறக் கேட்பது இயலாமையான் தான் நலமிழத்தலினும் நனியின்னாதென்றாள். இதனாற் களவு வெளிப்படாமல் வரைவது தலைவி கருத்தாகும். துறந்தோர் தேஎத்திருந்து நனி வருந்தி, யாருயிர் கழிவ தாயினும் நேரிழை, கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்புநீர்த், தண்ணந் துறைவ னாண, நண்ணார் தூற்றும் பழிதா னுண்டே (நற். 382) என்புழிப் போலத் தலைவன் நாணாமைக்குக் கூறினா ளெனினுமமையும். இனித் தலைவி தலைவன் வரைவொடு வாராது தாழ்த்த நிலையினை வெறுத்து அவன் கொடுமையைத் தோழிக்குக் கூறிவிட்டு, இது பரந்து வெளிப்பட்ட பொருளாகி இங்ஙனம் வெளிப்படின் இன்னாதெனக் கூறினாள் என்றலுமொன்று. இது களவியலுள்ள தலைவி கூற்றில் விட்டுயிர்த் தழுங்கினும் (தொல். களவு. 20:7) என்பதனுள் அடங்கும். விட்டுயிர்த்தழுங்கலாவது களவொழுக்கத்தைத் தமர்க்கு உரைத்தற்குத் தோழிக்கு வாய் விட்டுக் கூறி, அக் கூறிய தனையே தமர் கேட்பக் கூறாது தவிர்தல் என்பர். தலைவி தோழிக்குத் தலைவன் கொடுமை கூறுதலுண்டென்பது யாயறி வுறுதலஞ்சிப் பானாட், காவ னெஞ்சமொடு காமஞ் செப்பேன், யானின் கொடுமை கூற (அகம். 298) என வரும் குறிஞ்சித்திணைப் பாட்டா னறிக. மரனில் வேல் என்பதூஉம் பாடம். வேல் - மரமில்லாத படைவேல் என்றவாறு. கபிலர் 246. பெருங்கடற் கரையது 1 சிறுவெண் காக்கை களிற்றுச்செவி யன்ன பாசடைமயக்கிப் 2 பனிக்கழி 1 துழவும் 2 பானாட் டனித்தோர் 3 தேர்வந்து பெயர்ந்த 4 தென்ப வதற்கொண் டோரு மலைக்கு மன்னை 5 பிறரும் பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர் இளையரு மடவரு 6 முளரே அலையாத் தாயரொடு நற்பா 7 லோரே. (எ-து) சிறைப்புறம். (வி) சிறுவெண் காக்கை - வெண்மை சிறிதுடைய காக்கை. முழுதுங் கரிய காக்கையின் இது வேறு. கருங் காக்கை (பொருநர். 184) பாசடை - கழிக்கயல் நெய்தலின் பசிய இலை. இந் நிலத்து நெய்தற் பாசடைக்கு யானைக் கன்றின் செவியை உவமித்தல், “இரும்பிடி..... நெய்தற் பாசடை புரையு மஞ்செவிப் பைதலங் குழவி தழீஇ (நற். 47) என்பதனா லறியப்படுதலால் ஈண்டுக் களிறு குழவிக்களி றாக நினையலாம். மயக்கி - கலக்கி. பனிக்கழி - குளிர்ச்சியை யுடைய கழிநீர். கடற்காற்றாற் குளிர்ச்சி கூறினாள். துழவும் பால் நாள் - துழாவும் ஒருநாட் பாதியாகிய பகலில். பால்நாள் என்பது ஒருநாளிற் பாதி என்பர் அகப்பாட்டுரை காரர் (அகம். 8). நச்சினார்க்கினியர் நாளிற்பால் பானாள் என்பது மரூஉ என்பர் (கலி. 90) இப் பாதிநாள் இரவுக்கே பெருவழக் கிற்றாயினும் சிறுபான்மை இப் பாட்டிற் போலவும், “பானாள்..... மலர்கொய்யு மாய மெல்லா முடன்கண் டன்றே (311) என்புழிப் போலவும் பகலுக்கும் வழங்குதல் கண்டு கொள்க. பானாட் கங்குலும் பகலு மானா தழுவோள் (அகம். 57) என்புழி நாட்பாதியாகிய இரவும் நாட்பாதியாகிய பகலும் அமையா தழுவோள் எனவே பொருளாதல் காண்க. ஈண்டு இரவின் இயங்காத காக்கை இரைதேர்ந்துழவுதல் கூறியதனால் இப் பானாள் பகலேயாதல் தெள்ளிதாம். பகல் வெல்லுங் கூகையைக் காக்கை (குறள். 481) என்பதனாற் காக்கை பகலியங்கும் புள்ளாதல் காண்க. காக்கை மாலையில் ஒடுங்குதல், காக்கை புன்க ணந்திக் கிளைவயிற் செறிய ... ... வந்தமாலை (நற். 343) என்பதனா னறிக. கடற்சிறு காக்கை காமர் பெடையொடு, வெள்ளிறாக் கனவு நள்ளென் யாமத்து (அகம். 170) என்பது காண்க. இது பனிபுலந்துறைதல், சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோடு..... பனிபுலந்துறையும் (334) என வருதலா னறியலாம். இன்னும் நற்றிணையுள், “மாயிரும், பரப்பகந் துணிய நோக்கிச், சேயிறா வெறிந்த சிறு வெண்காக்கை, பாயிரும் பனிக்கழி துழைஇப் பைங்காற், றான்வீழ் பெடைக்குப் பயிரிடூஉச் சொரியும் (31) என வருதலான் காக்கை தெளிந்த நீர்ப்பரப்பின் தெளிந்த நிலையைக் கண்ணால் நோக்கி, அதன்கண் இறாவினை எறிதற்குப் பகற் போதின் இன்றியமையாமையைக் காண்க. சிறுவெண் காக்கை நீந்துநீ ரிருங்கழி யிரைதேர்ந்துண்டு (313) என்பது காண்க. அன்றியும் தலைவன் தேர் பகலினும் வருதலுண் டென்பது நெடுந்தேர் பாணி நிற்ப பகலு நம்வயி னகலா னாகி (அகம். 50) எனவும். நெடுந்தேர் கடைஇ..... புன்னையங் கானற் பகல் வந்தீமே (அகம். 80) எனவும் வருவன கொண்டுணரலாம். இவ்வுண்மை தலைவன் தேரைப் பானாள் மலர்கொய்யும் ஆயமெல்லாம் உடன் கண்டது என்றதனால் வலியுறுத்தல் காண்க. ஆயம் இரவில் மலர் கொய்தலில்லாமையானும், ஆயமெல்லாம் தேர் வரவினை உடன்காண்டற்குப் பகல் இன்றியமையாமை யானும் உணர்ந்து கொள்க. இஃது அரை நாள் என்பது பெரும்பான்மை இரவிற் கலந்து சிறுபான்மை, விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம், இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர், பொருதிறஞ் சாரா அரைநா ளமயத்து (நெடுநல்வாடை 74-76) என்புழிப் போலப் பகற் பொழுதுக்கும் வந்ததுபோலக் கொள்ளப்படும். ஞாயிறு மேற் கெழுந்து ஒருபுறஞ்சாரா அரைநாள் என்றது பகலாத லுணர்வது போல இதுவும் அமயம் பற்றித் துணியப்படும் என்க. `அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் (280). இரவோ பகலோ துணியலாகாமையும் நோக்குக. பல்பூங் கானற் பகற்குறி வந்துநம், மெய்கவின் சிதையப் பெயர்ந்தன னாயினும் (நற். 235) எனவும் வரும். மயக்குதல் - உழக்குதல். எருமை நீல விரும்போத்து வெறி மலர்ப், பொய்கையாம்பன் மயக்கும் என்ப. நாட்பாலிற் றனித்து ஓர் தேர் வந்து பெயர்ந்தது என்ப. பகலின் இளையர் பலரில்லாது தனிமையான் ஓர் தேர் மட்டும் வந்து பாணிக்காமல் திரும்பச் சென்றது என்பர் பிறர். அதற்கொண்டு அன்னை ஓரும் அலைக்கும் - சொல்லைக் கொண்டு தன்னுள்ளே என்னைக் குறித்து ஆராயும், என்னை வருத்தும். அங்ஙனம் தேர் வந்து பெயர்ந்துழி யானேயன்றி இளையரும் மடவருமாகிய மகளிர் பிறரும் உளராவர். அவரெல்லாம் தம்மை வருத்தாத தாயரொடு நல்வினையுடையராவர். நான் ஒருத்தியே அலைக்குந் தாயொடு தீவினையுடையேன் என்பது எச்சம். நற்பால் - நல்லூழ். பாக்கியமென்பதுமாம். தன்னொடு பலருளராதல், நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும், என்னே குறித்த நோக்கமொடு (அகம். 110) என வருதலான் அறியலாம். மலர் தார் மார்பன் நின்னோற் கண்டோர் பலர்தில் வாழி தோழி ... ... ஓர்யா னாகுவ தெவன்கொல், நீர்வார் கண்ணொடு நெகிழ் தோளேனே என்புழிப் பலர் காண்டல் கூறியது நினைக. அலைத்தல் - இற்செறித்துக் காவல் செய்தல். இளையர் - இளைமையுடையவர், மடவர் - அழகுடையவர். மடம் - இயற்கை அழகு. மடக்கணீர் சோரும் (சிலப். ஆய்ச்சியர். 2-2) மடம் - ஈண்டு அழகு. மடவரல், மடமான் போல என அடியார்க்கு நல்லார் கூறுதலானுணர்க. இளமையுடையாரெல்லாம் அழகுடை யாரும் ஆதல் அருமையாற் கூறினாள். பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர் என்பதனாற் செயற்கையழகு குறித்தாள். பிறர் நலனிழவாமையாலும் நற்பாலோர் ஆவர். இவ்வொழுக்கத்தாற் றாயர்க்கும் ஆகாது இற்செறித்தலாற் தலைவற்கும் ஆகாது தப்புதலாற் தன்னைத் தீப்பாலளாகக் கருதிக் கூறினாள். சேந்தம் பூதனார் 247. எழின்மிக 1 உடைய தீங்கணிப் 2 படூஉம் 3 திறவோர் செய்வினை யறவ தாகும் கிளையுடை மாந்தர்க்குப் புனையுமா ரில்லென 4 ஆங்கறிந் திசினே தோழி வேங்கை வீயா 1 மென்சினை வீயுக யானை ஆர்துயி லியம்பு 2 நாடன் மார்புரித் தாகிய 3 மறுவி னட்பே. (எ-து) 1. கடிநகர்த் தெளிவு விலங்கினமை யறியத் தோழி கூறியது. 2. வரைவுடன்பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉமாம். (வி) நாடன் மார்பு உரித்தாகிய மறுவில் நட்பு எழின் மிகவுடையது. நாடன் மார்பு என்றும், உரியதாதற்குக் காரண மாகிய குற்றமற்ற நட்பு. எழில்மிக உடையது - எல்லாருங் காண எழுச்சிமிகவுடைத்து, ஈங்கு அணிப் படூஉம் - அஃது இங்கு அணிமை காண உண்டாகும். திற வோர் செய்வினை யறவதாகும் - நன்றுந்தீதும் கூறுபடுத் தலையுடையோர் செய்யுங் காரியம் அறமுடையது ஆகும். இவை எல்லாம் யாங்ஙனம் அறிந் தாயெனின், கிளையுடை மாந்தர்க்கு இல்புனையும் என ஆங்கு அறிந்திசின் - தலைவன் சுற்றமாக உடைய மாந்தர் பொருட்டு நம் மனை புனையப் படும் என்று சொல்ல அங்கு அறிந்தேன் என்றாளென்க. துறையுட் கடிநகர்த் தெளிவு விலங்கினமை யறியத் தோழி கூறியது என்றது தலைவன் தெளித்த தெளிவு வேறாகாமை கல்யாண மனையாற் றெளியக் கூறியது என்று கொள்க. விலங்கினமை - வேறாத லில்லாமை, விலங் கோரார் (குறிஞ்சிக் கலி. 16) என்புழி நச்சினார்க்கினியர், வோறாக ஓராராய் என உரைத்தது கொண்டுணர்க. கடிநகராற் றெளிவு - கடிநகர் புனைந்து கடவுட்பேணி வேறுபடாமை கூறியதனால், `புனையுமா ரில்லென என்ற பாடமே மூலமாதல் உணர்க. யானை ஆர்துயில் வீயாமென்சினை வீயுக வேங்கை இயம்பும் நாடன் என்றியைக்க. யானையின் ஆர்க்கின்ற துயிலானது கெடாத மெல்லிய கொம்புகளில் மலர்களு திருமாறு வேங்கை மரத்தின்கட் போய் ஒலிக்கும் நாடன் என்றவாறு. யானை துயிலும் போது வாயான் உயிர்க்காது தூம்பு போலத் துதிக்கையான் உயிர்த்தலான் ஆர்க்கின்றது கருதி ஆர்துயில் எனப்பட்டது. உயிர்த்தலின் உண்டாகிய காற்று கொம்புகளில் மலர் உகும்படி வேங்கையின் ஒலிக்கும் என்பது கருத்தாகக் கொள்க. யானை துதிக்கை கோடியர் தூம்பி னுயிர்த்தல், ஓய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை, தொகுசொற் கோடியர் தூம்பி னுயிர்க்கும் (அகம். 111) என்பதனால் உணர்க. “யானை... ... கையெடுத் துயிர்ப்பின், நல்லிணர் வேங்கை நறுவீ... ... மணிநிற விரும்புதற் றாவும் (அகம். 202) என்ப. பள்ளி யானையின் வெய்ய உயிரினை (நற். 253) என்ப. ஆர்துயில் என்றது தலைவன் வரைவொடு விரையாது அலரெழுதற்குக் காரணமாகப் பாணித்ததாகவும், அத் துயில் வீயுக வேங்கைக்கண் இயம்புதலாவது அப் பாணிப்பானாகிய அலர் நலங்கெடத் தலைவியை வருத்திய தாகவும் கொள்க. இங்ஙனம் செய்தலான் மறுவுடைத்தாகக் காணப்பட்ட நட்புக் கடிநகர் புனைதலாற் றூயதாதல் தெளித்தமையான் மறுவில் நட்பு என்றாள். மார்புரித்தாதலாவது வாழ்ந்தாலும், இறந்தாலும் தலைவிக்கே மார்பு உரியதாதற் சிறப்பினை உணர்த்தியது, இது வதுவைப்பட்ட குலமகட்குரிய சிறப்பென்பது, என்கணவ ரென்கணவ ரென்பா ரிகல்வாடத் தங்கணவன் தார்தம் முலை முகப்ப - வெங்கணைசேர், புண்ணுடை மார்பம் பொருகளத்துப் புல்லினார் (புறப்பொருள். வெண். 24) என்பதனான் உணர்க. இதனால் இது பரத்தையர் நட்புப்போலாது மறுவில் நட்பு ஆதலுணரலாம். களவி னொடுங்கிக் கிடந்த நட்பு வதுவையான் ஊரறியத் தோற்றஞ்செய்தலான் எழுச்சிமிக உடையதென்றாள். திறவோர் மறைவிற் செய்யும் வினையும் அறமுடையதாகும் என்று தலைவனைத் திறவோருள் ஒருவனாக வைத்துக் கூறினாள். கடிநகர்த் தெளிவு விளங்கினமை யறிய என்பது பாடமெனின் நன்கியையும். விலங்கினமை - வேறின்மை. விலங்கு - வேறு. விலங்கோரார் மெய்யோர்ப்பின் (குறிஞ்சிக்கலி 16) என்பது காண்க. உலோச்சனார் 248. அதுவர லன்மையோ 1 வரிதே யவன்மார் புறுக 2 வென்ற 3 நாளே குறுகி 4 ஈங்கா கின்றே தோழி கானல் ஆடரை புதையக் கோடை யிட்ட அடும்பிவர் 5 மணற்கோ டூரே 6 நெடும்பனை 7 குறிய வாகுந் துறைவனைப் பெரிய 8 கூறி யாயறிந் 9 தனளே. (எ-து) வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது. (வி) அது என்றது வரைவினை. அவ் வரைவு வருதலின் வேறாதல் இல்லை. வரைவு வருத லுறுதி என்பது குறித்தற்கு எதிர் மறைமுகத்தான் வற்புறுத்தினாள். வரைவு நீட்டித்தவழி ஆற்றாமை எய்தலின் அது வரைவாதல் தெளிக. அவன் தன் மார்பினைப் பொருந்துக என்று தெளிவகப்படுத்திய நாளே நெருங்கி இங்கு வரலாகின்றது. பெரிய கூறித் துறைவனை யாய் அறிந்தனள். முருகணங்குதல், சூரணங்குதல், பௌவ மணங்குதல், பேய்மருட்டல் முதலாகப் பரிகரிக்க இயலாதன வாய பல பெரியனவற்றை அவற்றைத் தீர்ப்பாரிடங் கூறி, முடிவில் இவளை அணங்கிய துறைவனைத் தாய் அறிந்து கொண்டாள். ஆதலால் வதுவை வரலன்மையோ அரிதே என்றாளென்க. ஆடரை புதையக் கோடை யிட்ட அடும்பிவர் ஆகுமணற்கோடு ஊர - அடிமறையக் குடகாற்று வீசியிட்ட அடுப்பங் கொடி யிவர்கின்ற நாம் விளையாடு மணற்குன்று மேலும் சென்று உயர்தலான். நெடும்பனை குறியவாகுந் துறைவனை - நெடிய பனைகள் தம் பயனை நின்று பறித்தற் கெளியவாகக் குறியனவாகுங் கடற்றுறையுடைய தலைவனை. மணற்கோடு உயர உயர நமக்கெட்டாத நடும்பனை எளிதிற் பயன் துய்க்கக் குறுகியது போல யாம் களவின் அரிதின் ஒழுகிய நாள் உயர உயர யாம் எளிதில் இன்பந் துய்த்தற் குரிய வதுவை நெருங்கியது என்றது கருத்து. அடும்பிவர் மணற்கோடு என்றது அவர் படர்தற்குரிய களவொழுக்க மாம். அது கோடை யிட்டது என்றது ஊழ் தொகுத்தது என்றவாறு. பெரிய - செயற்கரியன. அவை கூறுதலாவது - வேலன் முதலாயினாரிடம் அவராற் பரிகரிக்க ஆகாதனவற்றைத் தாய் சொல்லுதல். பனை மரத்தின் அடி அசையாதாதலின் ஆடுமணற் கோடு எனப்பட்டது. விளையாடு மரத்தின் அடி என்பதுமாம். `அவன்மார் பிறுகவென் நாளே என்பது பாடமாயின் அவன் மார்பிலே சென்று முடிக என்ற நாள் என்க. கபிலர் 249. இனமயி லகவு மரம்பயில் கானத்து நரைமுக வூகம் பார்ப்பொடு பனிப்பப் பருமழை பொழிந்த சார லவர்நாட்டுக்1 குன்ற நோக்கினென் 2 றோழி பண்டை யற்றோ கண்டிசி னுதலே. (எ-து) வரைவிடை வைப்ப, ஆற்றகிற்றியோவென்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) இனமயில் - ஆணும் பெண்ணும் ஆகிய மயில். அகவும் - மகிழ்ந்து கூவும். மரம்பயில் கானத்து இனமயி லகவும் படுமழை என்க. மயில் அகவுதற்குக் காரணமான பெருமழை. படுசினை - பெரிய கொம்புகள் (அகம். 11) என்றார் அகப்பாட்டுரைகாரர். `மஞ்ஞை மாயினங் கால மாரி பெய்தென வதனெதிர் ஆலலு மாலின (25) என்றது காண்க. நரைமுகவூகம் - நரைமயிரினை முகத்தினுடைய கருங் குரங்கு. இதற்கு முகங்கரிதென உணர்க, கருமுக முசு (அகம். 121) என்பது காண்க. பார்ப்பொடு பனிப்ப - குட்டியுடன் நடுங்க. மரம் பயில் கானம் இடைநிலை விளக்கு. கானத்து மயில், கானத்து ஊகம் எனக் கொள்க. சாரல் நாட்டு அவர் குன்ற நோக்கினென் நுதல் பண்டை யற்றோ - குன்ற நோக்கிய அளவில் யான் அவரைக் கண்டதொத்த மகிழ்ச்சி என்னுள்ளத் துண்டாயது. அம் மகிழ்ச்சியால் என் மெய் பூரித்தது. அதனால் நுதல் பசப்பு நீங்கியதாமென்று துணிந்து நுதல் பண்டையற்றோ என்றாள், பண்டை என்றது குறை நோக்குதற்கு முந்திய நிலையினை. அவர் பிரிவிற்கு முந்தி அவர், முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் (குறள். 1238) ஆதலின் நுதல் பண்டையற்றோ என வினவினாள். நோக்கிய கண்ணிற்கு அயலதாதலின் நுதலை நினைந்தாள் என்றலும் ஒன்று. மறைக்கப்படாமல் அயலறி பசலை உடைத்தஃதாதல் தெளிக. நுதலின் தன்மை கூறின் நோக்கிய கண்களின் பசப்புப் பற்றிக் கூறவேண்டாம் என்பது கருத்து. இவ்வகையாற் றலைவி ஆற்றுமாறு குறித்தாளாவள். தாமலார் மகனார் இளங்கண்ணனார் 250. பரலவற் படுநீர் மாந்தித் துணையோ டிரலை நன்மா 1 னெறித 2 லுகளும் மாலை வாரா வளவைக் காலியற் கடுமாக் 3 கடவுமதி பாக நெடுநீர்ப் பொருகயன் முரணிய வுண்கட் டெரிதீங் கிளவி தெருமர லுயவே. 4 (எ-து) தலைமகன் பாகற்கு உரைத்தது. (வி) பரலவற் படுநீர் - பரற்கற்களையுடைய பள்ளத்து மழையா லுண்டாகிய நீரினை. துணையோடிரலை - துணை யோடுள்ள கலை. நன்மான் எறிதலும் - தன் நல்ல பிணைமானை நுகர்வித்த அளவில். மாந்தி - தான் பருகி. உகளும் - அதனுடன் புணர்ந்து விளையாடும். மாலை வாரா அளவை - மாலைப் பொழுது வாராத எல்லையில். பரலவற் படுநீர் சிறிதாதல் நினைந்து முந்துறத் துணையாகிய நன்மானை நுகர்வித்து இரலை பிந்தி மாந்துதல் கூறினான். இது, சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறு (கலி. பாலை. 10) என்பது போல வந்தது. சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப் பிணைமா னினிதுண்ண வேண்டிக் கலை மாத்தன் கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் (ஐந்திணை ஐம்பது 38) என்பதுங் காண்க. எறிதல் - நுகர்வித்தற் பொருட்டாதல் எச்சத்து ளாயினுமஃ தெறியாது விடாதே காண் (கலி. 149) என்புழி, எறியாது விடாது என்பதற்கு நச்சினார்க்கினியர், நுகர்வியாது போகாது என உரை கூறியது கொண்டுணர்க. உகளுதல் - புணர்ந்து விளையாடற் காதல், குறவர் முன்றில் ... ... கல்லா மந்தி கடுவனோ டுகளும் (ஐங். 277) என்புழிப் பழைய உரைகாரர், நாணாது மந்திகடுவனோடுகளும் எனப் பொருள் கூறியதனானுணர்க. மாலை வாரா வளவைக் கடுமாக் காலியற் கடவுமதி - மாலை வாராத எல்லையில் கடிய குதிரையைக் காற்றின் செலவிற்றூண்டுவாயாக என்க. காற்றின் செலவிற் செல்லுந் தகுதியுண்டென்று கடுமா என்றான். மாலை வாரா அளவை என்றான் தனக்குந் தலைவிக்கும் துன்பம் தருவது கருதி. பெருநீரிற் பொருகின்ற இருகயல்களோடு மாறுபட்டமை யுண்ட கண்கள் என்றான். அழிநீர்ப் பெருக்கின் மிளிர்வனவா மென்று நினைந்து. என் நெஞ்சத்தை உண்ட கண்கள் என்பதுமாம். உண் கண்களுடைய தெரித்த தீஞ்சொலுடை யவள் உள்ளம் சுழலும் நிலையினின்று உய்யும் வண்ணம் கடுமாக் கடவுமதி என்றவாறு. தன்னை நொந்துரைப்ப தாயினும் சுவை குன்றாமைபற்றித் தீங்கிளவி என்றான். நெடுநீர்க் கயலுண்கண்ணால் உடம்பும், தெரிதீங் கிளவியாற் சொல்லும், தெருமரலால் உள்ளமும், ஒருங்கு வருந்தலைக் குறித்தான். தெரிதீங்கிளவி தெரித்தகணை என்புழிப்போல வந்தது. இடைக்காடனார் 251. மடவ 1 வாழி மஞ்ஞை யாயினம் 2 கால மாரி 3 பெய்தென வதனெதிர் ஆலலு மாலின 4 பிடவும் பூத்தன காரன் றிகுளை தீர்கநின் படரே கழிந்த மாரிக் கொழிந்த பழநீர் புதுநீர் கொளீஇய வுகுத்தரும் நொதுமல்5 வானத்து முழங்கு குரல் கேட்டே. (எ-து) பிரிவிடைத் தோழி, பருவமன்று பட்டது வம்பு என்று வற்புறுத்தியது. (வி) மாரிபெய்து - மழை பெய்ததன் காரணமாக. காலம் என - கார் காலமென்று. மஞ்ஞை ஆயினம் - மயில்களாகிய தெரிந் தெடுக்கப்பட்ட புள்ளினம். ஆலலும் ஆலின - மகிழ்ந்தன அன்றி ஆலுதலுஞ் செய்தன. `ஆய்மயில் (குறள். 1090) என்பதற்குப் பரிமேலழகர் உரைத்தது காண்க. ஆலுதல் - கூவுதல். ஆடுமயி லகவும் நாடன் (264) காண்க, அதனெதிர் - அம் மயில்கள் ஆலுமதற்கெதிரில். பிடவும் பூத்தன - பிடாச் செடியும் மலர்ந்தன. மடவ - இவை மடமையுடையன. காரன்று - மெய்ம்மையிற் கார்காலமன்று. நின் படர் தீர்க - நின் எண்ணம் நீங்குக. நின் எண்ணம் என்றது தலைவியுங் காரென நினைப்பதை. அவை போல நீ மடவையல்லையாதலான் யானினைப்பது போல நினைத்தற்குரிய என்று இகுளை என்றாள். கழிந்த மாரிக்கு - சென்ற மாரிக் காலத்தில். ஒழிந்த பழநீர் - பெய்யாது வைத்திருந்த பழைய புனலை. புதுநீர் கொளீஇய - புதிய புனலாகக் கொள்ளும்படி. உகுத்தரும் - உகுத்தல் செய்யும். நொதுமல் வானத்து - காலத்துக்கு அயன்மையாகிய மேகத்தின். முழங்குகுரல் கேட்டு மஞ்ஞை ஆயினம் ஆலின என்க, மாயினம் என்பது பாடமாயின் விலங்கு இனம் என்க, புட்களையும் விலங் கெனல் விலங்கானேன் விலங்கினேன் எனச் சடாயு கூறியதாகக் கம்பநாடர் பாடியதனால் அறியலாம். மட நடை மாயினம் (கலி. 92). மாயினம் - அன்னத்திரள் எனக் கூறுதல் கொண்டுணர்க. ஐயறிவுடைய மயில் காலமென ஆலின ஆதலின், ஓரறிவுயிராகிய பிடவும் பூத்தன; இவை எல்லாம் நம் போல் ஆறறிவுடைய வல்லவாதலின், மடவ என்று கூறி, இது பருவம் ஆயின் அவர் வரவு தப்பாது என்று தேற்றியவாறாம். மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை (66) என்றதனால் பிடாக்களும் மடவ எனச் சேர்த்துரைக்க லாயிற்று. எவ்வுயிர்க்குந் தீங்கின்றித் தலைவி உயிர் காத்த லாயிற்று. எவ்வுயிர்க்கும் தீங்கின்றித் தலைவி உயிர் காத்தலால் இது, குற்றப்பெயராய் யாகாமை நினைக. கைந்நிலையுள், மடவமயில் கூவ (36) என்பது பற்றி மஞ்ஞை மடவ எனினுமமையும். கிடங்கிற் குலபதி நக்கண்ணனார் 252. நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த 1 கொடிய னாகிய குன்றுகெழு நாடன் வருவதோர் 2 காலை யின்முகந் திரியாது 3 கடவுட் கற்பி னவனெதிர் 4 பேணி மடவை மன்ற நீயெனக் கடவுபு துணியல் வாழி தோழி சான்றோர் புகழு முன்னர் 5 நாணுப 6 பழியாங் கொல்பவோ காணுங் காலே. (எ-து) தலைமகன் வரவறிந்த தோழி, அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம்பெருமாட்டி தீயன கடிந்து நன்காற்றி னாய் என்றாட்குக் கிழத்தி உரைத்தது. (வி) நெடிய திரண்ட தோள்கள் அவர் பிரிவிற் றாமே மெலிந்து வளைகளை நெகிழ்வித்தன. தோழி நீ கூறுமாறு குன்று கெழு நாடன் கொடியன் ஆகுக. ஆகிய என்பது வியங் கோள், அங்ஙனமாயினும் நம் கடவுட் கற்பினால் அவன் வருவதோர் காலை நின்னின்முகந் திரியாது எதிர்பேணி நீ மன்றமடவை எனக் கடவுபு துணியல் தோழி என்றாள் என்க. அவன் வருவதாகிய ஒப்பற்ற பொழுது என்றாள், அவன் வருவதே பெரிதென்று கருதிய வுள்ளத்தால், நீ அவனைக் கொடியன் என்று கருதுதலான் அதற்கேற்ப நின்முகந் திரியுமாதலின் இனிய முகந் திரியாது என்றாள். இன்முக மலர்ந்து எதிர்பேணுதல் வேண்டுவது என்பது கருத்து. என்பாற் காட்டும் இன்முகம் அவர்பாற் றிரியா தென்றாள் எனினும் அமையும். இங்ஙனம் ஒழுகுவது நம் கடவுட் கற்புத் திரியாமைக் கென்று கூறினாள். தன்னோடு அவட்கு வேற்றுமையின்மையானும், அவள் செய்வது தான் செய்வதாகவே கருதப்படுமாதலானும் என்க. கடவுட் கற்பு - கடவுட் டன்மையையுடைய கற்பு. கடவுண் மழையும் கற்பினிற்றல் காண்க. இன்முகந் திரிந்து எதிர் பேணாது துணியின் கற்பின் கடவுட்டன்மை கெடும் என்பது கருத்து. நீ மடமையுடையை தேற்றமாக என்று கேட்டு வருந்தாதேகொள். சான்றோர் முன்னர்ப் புகழும் நாணுப சால்புடைய தம்முன்னர்ப் புகழ்தலையும் நாணுவர். புகழத் தொடங்குமுன்னர் நாணுவர் என்பதுமாம். பழி காணுங்கால் யாங்கு ஒல்பவோ - அத்தகைய மென்மையுடை யோர் பழியைக் கண்டுரைக்குங்கால் எங்ஙனம் தாங்க வல்லரோ என்றவாறு. கீதமே நயந்து காண ஓடினார் (சிந். 2037) என்புழிப் போலக் கொண்டு, காணுங்கால் - கேட்குங்கால் என்பதுமாம். சான்றோருள் ஒருவனாகத் தலைவி கூறியது, அவள் கொடியன் என்றது குறித்து. நாடன் கொடியனாகிய என்பதே கருத்தென்பது அவன் என்னுஞ் சுட்டான் உய்த்துணரலாகும். இங்ஙனம் கொள்ளாக்கால் நாடன் அவன் எனப்பட்டு வேண்டாத சுட்டாதல் காண்க. `மடவை மன்ற நீயெனக் கடவுபு என்புழி வினாவி என்றதற்கேற்ப நீயே அல்லது நீயோ என்பது பாட மாமென நினைப்பது பொருந்தும். கடவுநர் வருவீ ருளீரோ (118) எனவும் வருதல் கண்டுணர்க. பூங்கண்ணனார் 253. கேளா ராகுவர் தோழி கேட்பின் விழுமிது கழிவ தாயினு நெகிழ் நூற் பூச்சே 1 ரணையிற் பெருங்கவின் றொலைந்தநின் நாட்டுயர் 2 கெடப்பி 3 னீடலர் மாதோ ஒலிகழை நிவந்த வோங்குமலைச் சாரற் புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை ஆறுசென் மாக்கள் சேக்கும் கோடுயர் பிறங்கன் மலையிறந் தோரே. (எ-து) பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. (வி) தோழி நாம் தூது விட்டு மொழியாமையால் நின்னாட்டுயர் மலையிறந்தோர் கேளாராகுவர். நின் நாட்டுயர் - பிரிந்தது முதல் நாள்தோறும் படும் நின் துயர். கெடப்பின் விழுமிது கழிவதாயினும் - துயர் கேட்க நேரின், தேம் தேடப்புக்க சிறந்த பொருள் இடையில் மீண்டு வருதலாற் றொலைவ தாயினும். விழுமிது - புகழுமாம். கெடப்பின் நீடலர் - நீ கெடும்படி தாங் குறித்த பின்னாள் வரை நீடுதல் செய்வாரல்லர். விழுமிது கழிவ தாயினும் நீடாமல் இடையிலே வருவர் என்றவாறாம். அரும்பொருள் முடியா தாயினும் வருவர் (நற். 208) என்றது காண்க. துயர் கேட்பின் துயர் கெடப் பின்னீடலர் என்பதுமாம். நூற்புச் சேர் நெகிழ் அணையில் - நூலிற் கோத்த பூக் களாற் சேர்க்கப்பட்ட நெகிழ்ந்த படுக்கையின்கண். நெகிழ் அணை என்றது மெல்லணையாதல் குறித்து. ஒலிகழை - நரலுகின்ற மூங்கில். புலிபுகாவுறுத்த மலைச் சாரற் கல்லளை. புகாவுறுத்த - தன்னுணவைத் திணித்த. கல்லளை - கல் முழஞ்சுகளிற் படுக்கை கொள்ளும். நீ மணநாறு பூச்சே ரணையில் வருந்துவை, அவர் ஆறுசென்று புலவுநாறு கல்லளைச் சேக்கையின் வருந்துவர் என்பது குறிப்பு. இனி இறந்தோர் கேளார் - சென்றவர் சேறற்கு முன்னம் நம்மைக் கேளார். கேட்பின் ஆகுவர் - நம்மைக் கேட்பாராயின் நமக்கே ஆகுவர். செல்லார் என்பது கருத்து. இக் கருத்துக்கியைய, `நாட்டுயர் கேட்பி னீடலர் என்பதே பாட மென்று கொண்டு, அத்தகையார் துயர் கேட்பாராயின் நீடுதல் செய்யார் என்பதுமாம். நாம்படர் கூரு மருந்துயர் கேட்பின், நந்தன் வெறுக்கை யெய்தினு மற்றவட், டங்கலர் வாழி தோழி (அகம். 251) என்ப. பாரகாபரனார் 254. இலையி லஞ்சினை யினவண் டார்ப்ப முலையேர் 1 மென்முகை யவிழ்ந்த 2 கோங்கின் தலையலர் வந்தன வாரா 3 தோழி துயிலின் கங்குற் றுயிலவர் 4 மறந்தனர் 5 பயினறுங் 6 கதுப்பிற் பாயலு முள்ளார் செய்பொரு டரனசைஇச் 7 சென்றோர் 8 எய்தின 9 ராலென வரூஉந் தூதே. (எ-து) பருவங்கண்டு வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) இலையி லஞ்சினை - பழுத்துதிர்த்தலால் இவை யில்லாத அழகிய கொம்பு. சினை முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர். தலைவர் - முதற் பூ. கோங்கு இளவேனிலில் மலர்வதென்பது, கோங்கம் பயந்த அணிமிகு கொழுமுகை யுடையும் பொழுதே (ஐங். 343) என இளவேனிற் பத்திற் கூறியதனா னுணர்க. முலையின் முகைபிணி யவிழ்ந்த கோங்கமொ டசைஇ நனை, யதிரல் பரந்த வந்தண் பாதிரி யுதிர்வீ (அகம். 99) என்புழி வேனில் அதிரலுடனும், வேனிற் பாதிரி (அகம். 257) யுடனும் கோங்கம் அரும்பி மலர்தல் கூறுதலுங் காண்க. வேனிற் கோங்கின் பூம்பொகுட்டு (புறம். 321) என்ப. அலர் வந்தன என்றது அவர் வருதற்குமுன் அவர் வருதல் குறித்துத் தெளித்துச் சென்றது நினைந்து. கங்குற் றுயிலின் துயில் - இரவில் யான் துயிலுதற்குக் காரணமான தம்மினிய துயில். துயில் முன்னது வினை. துயில் துறந்து இன்னா கழியுங் கங்குல் (அகம். 237) என்றமையால் துயிலின் கங்குல் என்றா ளெனினு மமையும். கதுப்பிற் பாயல் - கூந்தலணை. இன் - சாரியை. செவியுணவிற் கேள்வி (குறள். 413) என்புழிப் போல வந்தது. குவிமுலை யாகத்து இன்றுயில் (அகம். 140) என்றும் ஆகம் நோமென நினைந்தால் கதுப்பிற் பாயல் கொள்வராதலின் அதனைக் கூறினாள். நின்னிருளைங் கூந்த லின்றுயில் (அகம். 233) என்பது பற்றி இன்றுயிலையும் மறந்தார்; அத் துயிற் கிடனாகிய கூந்தற் பாயலும் உள்ளார் என்றலும் ஒன்று. கதுப்பிற்பாயல் என்றதனால் கூந்தலின் அகல நீளங்களும் குறித்ததாம். பயில் நறுங்கதுப்பு - செறிந்த நறிய கூந்தல். செய்பொருள் தான் நசைஇச் சென்றோர் - செய்ய வேண்டிய பொருளைத் தேடித் தருதல் விரும்பிப் போயவர். கிடைத்த இன்பத்தை விடுத்துக் கிடையாத பொருளைத் தருதல் விரும்பிச் சென்றார் என்பது குறிப்பு. சென்றோர் எய்தினராவ ரென்றற்கு வருந் தூதுரைகள் வாரா ஆதலால் துயில் மறந்தனர், பாயலு முள்ளார் என்றவாறு. சென்றோர் எய்து இன்னர் என வருந்தூது - சென்றவர் மீண்டெய்தும் இத்தன்மையர் என்று எண்ணும்படி வருந்துதூதுரை எனினுமையும். பசலை பாய்த லெளிது மற்றில்ல, சென்ற தேஎத்துச் செய்வினை முற்றி, மறுதர லுள்ளத்த ரெனினும், குறுகு பெரு நசையொடு தூதுவரப் பெறினே (அகம். 333) என்றது காண்க. கடுகுபெருந்தேவனார் 255. பொத்தில் 1 காழ வத்த யாஅத்துப் பொரியரை முழுமுத லுரியக் 2 குத்தி மறங்கெழு 3 தடக்கையின் வாங்கி யுயங்குநடைச் 4 சிறுகட் பெருநிரை யுறுபசி தீர்க்கும் தடமருப் பியானை கண்டனர் 5 தோழி கடன்கட 6 னிறீஇய ரெண்ணி யிடந்தொறும் காமர் பொருட்பிணிப் போகிய 7 நாம்வெங் 8 காதலர் சென்ற வாறே. (எ-து) இடைநின்று மீள்வரெனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. (வி) பொத்தில் காழ - புரையில்லாத வயிரமுடைய. அத்த யாஅத்து - பாலைநில யாமரத்து. பொரியரை முழுமுத லுரியக் குத்தி - முழுவடிமரம் பொரிந்த அரை உரியும்படி குத்தி. அரை - அரைப்பட்டை. யானை வயிர யாத்து அரைப் பக்கத்துக் குத்திய பட்டையை உண்பதுவே இயல்பென்பது, கவைமுறி யாஅத்து நாரரை மருங்கி னீர்வரப் பொளித்துக், களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் (அகம். 257) என வருதலா னறியலாம். பொரியரையைத் தடக்கையின் வாங்கி என்க. உயங்குநடை - இரை தேடி வாடிய நடை. யானையின் உருவத்திற்குத் தக்க கண் அன்மையாற் சிறுகண் என்பது. யானை தன் சுற்றத்தைப் போற்றுதல், கிளைபா ராட்டுங் கடுநடை வயக்களிறு (அகம். 218) என்பதனா னறிக. உறுபசி - மிக்க பசி. பசிதீர்க்குந் தடமருப்பு யானை என்றது தான் தடக்கையும், தட மருப்பும் படைக்கப் பெற்றதன் பயனைக் கொள்ளல் குறித்து. யானை கண்டனர் - யானை கண்டு அன்னராவர். தாமும் வருந்தித் தங்கிளை புரப்பதே தமக்குறு பயனாக எண்ணுவர். என்றவாறு. கடன் கடன் இறீஇயர் எண்ணி - பலவகைக் கடன்களையுந் தீர்க்கும் பொருட்டு எண்ணி. விருந்து ஒக்கல் ஓம்புதலையும் வறியார்க்கு ஈதலையும் குறித்துப் பன்மை புலப்படக் கடன் கடன் என்றார். வான்மீகியார் ஐவகை இருகணங் கூறினார் (அயோத்தியா காண்டம்) காமர் பொருட்பிணி - விருப்பஞ் செய்யும் பொருளாகிய பிணிப்பு. பொருட் பிணிப்பால் இடந்தொறும் போகிய. நாம் வெங்காதலர் - நாம் விருப்பமுறுங் காதலை உடையவர் சென்ற ஆற்றில் யானை கண்டனர் ஆவர் என்க. இனிப் `போத்தில் காழ வூழ்த்த யாத்து என்பது பாடமாயின் இளமையில்லாத வயிரமுடைய முதிர்ந்த யாமரத்து என்க. போத்தெனக் கொள்ளவு மமையுமோ ரறிவுயிர்க்கே (தொல். 580) என்பதனாற் போத்து ஓரறிவுயி ராகிய மரத்தின் சிறுகன்றுக்கு வருதல் காண்க. `தடங்கட னிறீஇயர் என்பது பாடம். 256. மணிவார்ந் தன்ன மாக்கொடி யறுகை 1 பிணிகான் 2 மென்கொம்பு பிணையோடு மாந்த 3 மானே றுகளுங் கானம் பிற்பட 4 வினைநலம் 5 படீஇ வருது 6 மவ்வரைத் 7 தாங்க லொல்லுமோ பூங்குழை யோயெனச் சொல்லா முன்னர் நில்லா வாகி நீர்விலங் கழுத 8 லானா தேர்விலங் கினவாற் றெரிவை 9 கண்ணே. (எ-து) பொருள் விலக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது. (வி) மாக் கொடி - கருங்கொடி. அறுகை பிணிகால் மென் கொம்பு - அறுகின் பிணித்த அடியினின்றுண்டாகிய மெல்லிய தண்டு. பிணிகால் - வேர்பிணித்த அடி. பிணை யொடும் மாந்த என்புழி ஒடு பிணையுண்ணாதாயின் மானேறும் உண்ணா தென்று பிணையின் உயர்வு குறித்து வந்தது. உகளும் - புணர்ந்து விளையாடும். உகளுங் கானம் பிற்பட வருதும் என்றது. இவ்வாறு கானத்தில் மழை பெய்து அறுகை தழைத்து மானினம் உண்டு விளையாடுதற்கு முற்பட வருதும் என்று குறித்தவாறு. வினைநலம் படீஇ வருதும் - செய்வினை நலம்பெற்று வருதும். தான் சேறல் கூறாது வினைநலம்பட்டு வருதலே கூறினான் இவள் மென்மை நோக்கி. அவ் வரை - அச் சிறிய அளவு. தாங்க லொல்லுமோ - யானுடனில்லாமையைப் பொறுத்தல் இயலுமோ. பூங்குழையோய் என்றது இச் சொல் கேட்பிக்குங் காதுகள் தாம் அஞ்சுமோ என்று தான் அவற்றை நோக்கியது குறித்தது. எனச் சொல்லா முன்னர் - என்று முழுதும் சொல்லி முடித்தற்கு முன்னம். நீர் நில்லா வாகி விலங்கு அழுதல் ஆனா - நீர்த்துளிகள் நில்லாவாய்க் குறுக்கிடும் அழுகை அமையாமல் தெரிவை கண்கள் தேர் விலங்கின என்க. என்னைக் காணாதிருந்ததற்கு ஒல்லாவாய்க் கண்கள் அழுது தடுத்தன என்பது கருத்து. தேர்விலங்கின என்றதனாற் பயணத்திற்குத் தேர்வாயில் நின்றது குறித்தான். விலங்கின என்றது நீர்ப்பெருக்கும் சகுனத் தடையும் குறித்தது என்பதும் ஆம். உறையூர்ச் சிறு கந்தனார் 257. வேரு முதலுங் கோடு மொராங்குத் 1 தொடுத்த போலத் தூங்குபு தொடரிக் கீழ்தாழ் வன்ன வீழ்கோட் பலவின் ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம் அகலினு மகலா தாகி இகலுந் தோழிநங் காமத்துப் பகையே. (எ-து) வரைவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) வேரும் முதலும் கோடும் - வேரினும் அடியினும் கொம்பினும். ஓராங்கு - ஒன்று போல; ஓரளவாய பெரும் பழம் உளவாதல் கருத்து. தொடுத்த போலத் தூங்குபு தொடரி - தொகுக்கப்பட்டன போலத் தொங்கித் தொடர்ந்து. கீழ் தாழ்வன்ன - கீழாக வணங்குதலொத்த. வீழ்கோட் பலவின் - வீழ்ந்த கிளைகளை யுடைய பலாமரங்களுடன். வீழ்தல் - விரும்புதலுமாம். ஆர்கலி வெற்பன் - நிறைந்த ஆரவார முடைய மலைத்தலைவன். ஆர்கலி - பலவிற் பழமுண்ணும் பல புட்களின் ஒலி. இழுமென் புள்ளி னீண்டு கிளைத் தொழுதிக், கொழுமென் சினைய கோளி யுள்ளும், பழமீக் கூறும் பலா (பெரும்பாண். 406 - 407) என்பது காண்க. நங் காமத்துப் பகை - நம் காமத்தொடு உடனுறையும் பகையாகிய நாண். வெற்பன் வருதொறும் வரூஉம் - தலைவன் நம்பால் வருந்தோறெல்லாம் நங்கண் வரும் என்றது. பன்னாட் கூடி யொழுகிலும் அந்நாட் கண்டாற் போன்று ஒடுங்கச் செய்யும் என்பதாம். நாணு மறந்தேன் (குறள். 1297) என்புழிப் பரிமேலழகர் உரைத்தது கொண்டுணர்க. அகலினும் - தலைவன் அகன்றாலும். அகலாதாகி - இந் நாண் நம்மை விட்டு நீங்காதாகி. இகலும் - என்னை விடு, அல்லையேல் காமத்தை விடு என்று என்னோடு இகலும் என்றவாறு. தலைவனுடன் செல்லக் காமம் தூண்டுதலும், அங்ஙனம் உடன் செல்ல ஒட்டாது நாண் தடுத்து நிற்றலும் கண்டு காமமும், நாணும் பகையாதல் உணர்.க நாணட்டு நல்லறி விழந்த காமம் (231). நாணுவரை நில்லாக் காமம் (அகம். 208), அளிதோ தானே நாணே, ஆங்கவர் வதிவயி னீங்கப் படினே (395) என்பன போல வருமிடங்களாலும் இவ் வுண்மை யுணர்க. காமம் விடுஒன்றோ நாண்விடு நன் னெஞ்சே (குறள். 1247) என்புழிப் பரிமேலழகர், இரண்டையும் விடாது பெண்மையை நிலைபெறுத்தலின் நல்லை என்றார் என வுரைத்தது கொண்டு தலைவி தம்முள் இகலும் காமமும் நாணும் ஒருங்குடையளாதல் துணியப்படும். அளிதோ தானே நாணே நம்மொடு, நனிநீ டுழந்தன்று மன்னே யினியே .... காமம் நெரிதரக் கைந்நில் லாதே (149) என்பதுங் காண்க. நற்றிணையுள், நாண்விட் டுரையவற் குரையா மாயினும்... மெல்லம் புலம்பற் கண்டுநிலை செல்லாக் கரப்பவுங் கரப்பவுங் கைம்மிக், குரைத்த தோழி யுண்கணீரே (நற். 263) என்புழி நாணத்தால் உரையாத நிலையினைக் கண்ணீர்கள் உரைத்தன என்று கூறிய அருமைபற்றி இஃதுணரலாம். தன்னுயிர்த் தோழிக்கும் நாணத்தாலிது கூறலாகாத மென்மையுள் தலைவி என்பது தன்புல னயந்த வென்னு நாணு நன்னுதல் (நற். 375) என்பதனால் அறியலாம். தலைவன் வருந்தோறும் நாண மிகுமாயினும் நாணத்தால் அவனை நோக்கி வரைக எனத் தானே சொல்ல மாட்டாமலும் அவன் அகன்றபின் அவனுள்ளுழி நாணத் தால் செல்ல மாட்டாமலும் தான் வருந்தும் வருத்தம் நீ வரைவுணர்த்தியதனால் தீரும் என்பது குறிப்பு. அவன் வேரும் முதலும் கோடுந் தொடுத்த கோட்பலவின் ஆர்கலி வெற்பன் ஆதலால் அவனகத்துப் பல்லறமும் அவனுடன் செய்து மகிழ்தல் புலப்படுத்தினாளாவள் என்க. இது வரைவுணர்த்திய தோழிக்கு உரைத்ததாதல் நோக்கி அதற்கேற்பக் கருதிக் கொள்க. தலைவி உடன்போதற்கு இன்றையளவைச் சென்றைக்க (383) என்று கூறியது காமத்தினும் நாண் மிக்க நிலை. இந் நாணுக்கெடத் தோழி சொல்லியது ஆண்டுக் காண்க. பரணர் 258. வாரலெஞ் சேரி 1 தாரனின் றாறே அலரா கின்றாற் பெரும 2 காவிரிப் பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த ஏந்துகோட் டியானைச் சேந்தன் றந்தை 3 அரியலம் புகவி னங்கோட்டு 4 வேட்டை நிரைய வொள்வா விளையர் பெருமகன் அழிசி யார்க்கா டன்னவிவள் பழிதீர் மாணலந் தொழுதன 5 கண்டே. 6 (எ-து)(1)தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. (2) வாயில் நேர்ந்ததூஉமாம். (வி) நீ எம் சேரியில் வாரற்க. நின் மாலையை எமக்குத் தாரற்க. நின் செயல் அலராகின்றது. பலராடு காவிரிப் பெருந் துறை மருதமரத்தில் ஏந்து கோட்டியானையைப் பிணித்த சேந்தனுடைய தந்தை. அரியலம் புகவின் - கள்ளுணவு காரணமாக. அம் சாரியை. அந்தோடு சுடு - அழகிய விலங்கிய தொகுதிகளை வருத்துகின்ற வேட்டையினை யுடைய இளையர் பெருமகன். தோடு - யானைத் தொகுதிகள். யானை விலையினும் மேம்படுதல், விறல்வேழம் வேண்டாள்..... விளைகட் பகர்வாள் விலை”. (புற. வெண். பாடாண். 19) என்பதனா னறிக. இளையர் வேடரென்பதும், இவர் கண்ணிற்கு யானை யின் இளங்கன்றை விற்கும் யானை வேட்டுவர் என்பதும், கறையடி மடப்பிடி கானத் தலறக் களிற்றுக்கன் றொழித்த வுவகையர் ... மூதூர் நறவு நொடை நெல்லிற் புதவுமுதற் பிணிக்கும், கல்லா இளையர் பெருமகன் புல்லி (அகம். 83) என வருதலானும், ஆண்டு இளையர் வேடர் எனப் பழைய வுரைகாரர் கூறியதனானு மறிக. இளை - கரடு. இளைசூழ் மிளை (சிலப். ஊர்காண். வரி. 62) என்பர். இளை - கட்டு வேலி இளையுங் கிடங்குஞ் சிதைய (புறம். வெண். நொச்சி. 37) என்ப. வேட்டம் என்பதையே வேட்டை என வழங்குதல், வின்முன் கணைதெரியும் வேட்டைச் சிறுசிறார் (புறப். வெண். வாகை 23) என்புழிக் காண்க. யானை வேட்டுவன் யானையும் பெறுமே (புறம். 214) என்புழிப் போல அழிசி யானை வேட்டுவனாதலால் அவன் மகன் சேந்தன் சோழர்க்காகக் காவிரிப் பெருந்துறை மருதில் யானை பிணித்தது கூறினார். இவன் கோடைப் பொரு நனாகிய கடிய நெடுவேட்டுவன் போல ஓர் படைத்தலைவனாவனென்றும், இவன் சோழர்க்குரியவனென்றும் கொள்ளலாம். கடிய நெடுவேட்டுவனை, மான்கணந் தொலைச்சிய கடுவிசைக் கதநாய், நோன் சிலை வேட்டுவ (புறம். 205) என விளித்துத், தேரோ டொளிறு மருப் பேந்திய செம்மற், களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே (புறம். 205) எனக் கூறுதல் போல இவனை நற்றிணையில் (190) திதலை எஃகின் சேந்தன் றந்தை, தேங்கமழ் விரிதா ரியற்றே ரழிசி எனச் சிறப்பித்துக் கூறுதல் காணலாம். இவன் சோழர்க்குரிய வீரனென்பது, வெல்போர்ச் சோழ ரழிசியம் பெருங்காட்டு (நற். 87) என்பதனானறிக. சோழர்க் குரிய அழிசி என்பவனின் பெருங்காட்டிடத்து என்பதே இதன் பொருளாம். காவிரிப் பெருந்துறையில் யானை பிணித்ததனாலும் இது துணியப் படும். இவனிருக்கும் ஆர்க்காடு சோழர்க்குரியது என்பது, படுமணி யானைப் பசும்பூட் சோழர், கொடிநுடங்கு மறுகினார்க்காட்டாங்கண் (நற். 227) என வருதலால் நன்கறியலாம். நிரையவொள்வாள் இளையர் - நரக வேதனை செய்யும் ஒள்ளிய வாளினையுடைய இளையர். `அரியலம் புகவி னங் கோட்டு வேட்டை - கள்ளுணவுக்கு அழகிய யானையின் கொம்புகளை அடுகின்ற வேட்டை என்க. கள்விலைக்கு யானைக் கொம்பு கொடுத்தல், அண்ணல் யானை வெண்கோடு கொண்டு, நறவுநொடை நெல்லின் நாண்மகி ழயரும், கழல்புனை திருந்தடிக் களவர் கோமான் (அகம். 61), அரிய லாட்டியரல்குமனை வரைப்பின், மகிழ்நொடை பெறாஅராகி நனைகவுட், கான யானை வெண்கோடு சுட்டி, மன்றொடு புதல்வன் புன்றலை நீவும், அருமுனைப் பாக்கத் தல்கி (அகம். 245) என்பனவற்றானறிக. இவர்குடி முதற்குடியாதலால் வாள் கூறினார். வாட்குடிப் பிறந்த, புலிப்போத் தன்ன புல்லணற் காளை (பெரும்பாண். 128) எனவும், வாளோடு முன்றோன்றிய மூத்தகுடி (புறப். வெண்பா. கரந்தைப். 14) எனவும் வருதல் காண்க. ஆர்க்காடு தஞ்சைக்கு அடுத்துள்ள சோழர் ஊர். இது பண்டு ஓர் கூற்றத்துத் தலைநகராக இருந்தது. ஆர்க்காட்டுக் கூற்றத்துத் திருப்பூந்துருத்தி * எனச் சாசனத்து வருதல் காண்க. ஆர்க்காடன்ன இவள் பழிதீர் மாணலம் - ஆர்க்காடு போல் இவ் விழவு மேம்பட்ட பழிப்பில்லாத சிறப்புடைய நலங்கள். கண்டுதொழுதன - என்சேரியில் வர நின்னைக் கண்டவளவே தொழுதலைச் செய்தன. நின் மெய்யைத் தெய்வப் படிமையாக வைத்து தொழுதற்குரியதன்றென்று தொழுதன என்பது கருத்து. தொழுதன என்றது கற்புப் பழுது படாமைப் பொருட்டு. பழிதீர் மாணலங்களாதலான் பழிப்புடைய இழிந்த பரத்தையர் நலந் தோய்ந்த நின் மெய்யைத் தொட வேண்டாது தொழுதன என்றவாறு. இது, நீத்த கிழவனை நிகழுமாறு படீஇ, காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும் (தொல்.கற்பு. 92:6) என்பது பற்றி வாரல், தாரல் எனக் கண்ணின்று பெயர்த்த விடத்தும், இவள் பழிதீர் மாணலம் நின்னைக் கண்டு தொழுதன என்று தலைவன் நன்னெறி ஒழுகுமாறுபடுத்துக் காத்த தன்மையான் வாயில் நேர்ந்ததுவு மாமென்று கொள்ளப்பட்டதென்க. சேந்தன் பலராடு பெருந்துறைமருதிடத்து யானையைப் பிணித்த என்றது பலருமறியப் பாணன் தலைவனைப் பரத்தை யிடத்துப் பிணித்ததாகவும், அரியலம் புகவின் அந்தோடு வேட்டை என்றது அப் பரத்தையருடன் மகிழ்தற்குத் தன் செல்வம் இழப்பவன் ஆகவும் குறித்துக் கொள்ளலாம். கண்டு தொழுதன என்பது நின்னைக் காணக் கிடைத்ததே பேறாகத் தொழுதன என்பதும் ஒன்று. முனிவில் பரத்தையை யெற்றுறந் தருளாய், நனிபுலம் பலைத்த வெல்லை நீங்கப், புதுவறங் கூர்ந்த செறுவிற் றண்ணென, மலிபுனல் பரத்தந்தாஅங், கினிதே தெய்ய நிற் காணுங்காலே (நற். 230) என்பது காண்க. `அந்தோட்டு வேட்டை என்பது பாடமாயின், அழகிய விலங்குத் தொகுதியின் வேட்டையையுடைய என்க. சோழர் வில் லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை (அகம். 336) என்பதனால் இப் புறம் வில் ஈண்டு குறும்புடைய காவற்காடாதல் தெளியலாம். பரணர் 259. மழைசேர்ந் தெழுதரு மாரிக் குன்றத் தருவி யார்ந்த தண்ணறுங் காந்தள் முகையவிழ்ந் தானா நாறு நறுநுதற் பல்லிதழ் மழைக்கண் மாஅ யோயே ஒல்வை யாயினுங் கொல்வை யாயினும் நீயளந் தறிவைநின் புரைமை வாய்போற் 1 பொய்ம்மொழி கூறலஃ தெவனோ நெஞ்ச நன்றே 2 நின்வயி னானே. 3 (எ-து) காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி அறத்தொடு நின்று, அவனே பரிகரிப்பனென்று கருதியதனைத் தலை மகளும் நயப்பாளாகக் கூறியது. (வி) மழை சேர்ந்து எழுதரும் மாரிக் குன்றத்து - மேகங்கள் திரண்டு ஏறுதற்கு எழும் மாரிக் காலத்து மலையில். அருவி யார்ந்த - அருவி யோர்த்து நிறைந்த. காந்தள் அவிழ்ந்தானா முகை நாறு நறுநுதல் - காந்தளின் இதழ் மலர்ந்தமையாத அரும்புகள் கோல நாறும் நறிய நுதல், என்குற்ற மாகு மிறைக்கு (குறள். 436) என்புழிப் போல நின்றன. முகையாய் அவிழ்ந்தமை யாதன எனினுமமையும். மாயோய் - மாமை நிறமுடையோய். ஒல்வையாயினும் - இக் காப்பு மிகுதிக்கண் அவன் வந்து வரையும்வரைக் காமநோயைப் பொறுப்பையாயினும். கொல்வை யாயினும் - இக் காப்பு மிகுதியைக் கடந்து அவனுடன் போதற்கு நின் நாணினைக் கொல்வையாயினும். நின் புரைமை நீயளந் தறிதி - நின்மனவலியின் உயர்வை நீயே யளத்தலான் அறிவை. இந் நிலையில் நின் காமநோயை மறைத்தும் நின் நாணினைக் காத்தும் வாய்மை போலப் பொய் வார்த்தைகள் சிலவற்றை யான் தாயர்க்குமுன் கூறியாங்குக் கூறுதல் என் பயனுடைத்தோ. நின்வயின் நெஞ்சம் நன்று - நின்கண் நாணினைக் காத்துக் காம நோயைப் பரிகரித்தற்குத் தலைவர் உள்ளம் நன்றாக உள்ளது. ஆதலாற் பொய்ம்மொழி கூறுதலெவனோ என்றதனால் மெய் கூறி அறத்தொடு நின்றேன் என்று கூற்றெச்சத்தாற் கொள்ள வைத்தாளாம். இது காப்பு மிகுதிக்கட் கூறியதாதலின் அம் மிகுதிக்கண் தலைவி செய்வன தலைவன் வரையும் வரை காமநோய் பொறுத்தலும், அந் நோய் பொறாளாயின் காவல் கடந்து அவனுடன் போக்குத் துணியலாயின் அவனுடன் போதலும் ஆகும். பொறுக்கரியது காமம் ஆதலின் அதனை ஒல்வை யாயினும் எனவும், தன்னுடன் பிறந்து வளர்ந்து தன்னை நீங்காது பயின்ற நாணைக் கோறல் அரிதாதலின் அதனைக் கொல்வையாயினும் எனவும், ஏற்ற வினைகளாற் கூறிக் காட்டினாள். உயிரினுந் சிறந்தது நாணாதலின் சிறந்த உயிரைக் கோறலாகக் கூறினாள். நாணட்டு (231) என்றது காண்க. காப்பு மிகுதிக்கட் காமம் அட நின்றும் நாணால் உடன் போக மாட்டாது தலைவி வருந்துதலும் தோழி அந் நாணுக்கெடச் சொல்லுதலும் இந்நூல் 383 ஆம் பாட்டிற் கண்டு கொள்ளலாம். உடன் போகத் துணிந்துழி நாண்தொலைதல், காம நெரிதரக் கைந்நில் லாதே (149) என்பதனாலுணரலாம். காப்பு மிகுதிக்கட் டலைவியே தோழியை அறத்தொடு நிற்பாளாக வேண்டுதல், கண்டர வந்த காம வொள்ளெரி (305) என்னும் பாட்டின்கண், களைவோ ரிலையா னுற்ற நோயே என்பதனான் அறியப்படுதலான் இவ்வறத்தொடு நிலை தலைவி விரும்பிய தேயாதல் நன்கு துணியலாம். துறையுள் தலைவி நயப்பாளாகக் கூறியது என்றதும் இக் கருத்தையே வலியுறுத்தும். காப்பு மிகுதிக் கண் உடன் போக்கு வலித்தல். சிறுகோல் வலந்தன னன்னையலைப்பக் ... கொண்கனொடு செலவயர்ந் சினால் யானே (நற். 149) என்பது போன்றவற்றான் காண்க. கல்லாடனார் 260. குருகு மிருவிசும் பிவரும் புதலும் வரிவண் டூதி வாய்நெகிழ்ந் 1 தனவே சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும் வருவர்கொல் வாழி தோழி பொருவார் மண்ணெடுத் துண்ணு மண்ணல் யானை வண்டேர்த் தொண்டையர் வழையம 2 லடுக்கத்துக் கன்றி லோரா 3 விலங்கிய புன்றா ளோமைய சுரனிறந் தோரே. (எ-து) அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது. (வி) குருகும் - நீர்நிலத்து மேய்ந்த குருகுகளும், தம் வதியிடனோக்கி விசும்பிற் படரும். புதலும் - செடிகளும். வரிவண்டு - பாட்டுடைய வண்டுகள், ஊதுதலான் வாய விழ்ந்தன. வரி - பாட்டு. வரிஞிமிறு (குறிஞ்சிப்பாட்டு 11) தோளும் பொலிந்த சுரிவளைச் செற்றும் - தோள்களும் பொலிந்தனவாய் சுரிந்த சங்கு வளையோடு செறியும். காலமில் காலத்துக் குருகுகள் விசும்பிவர் தலானும், புதல்வாய விழ்தலானும் அவற்றொடு பொருந்தி மெலிந்த தோள்கள் பொலிந்து வளையொடு செறிதலானும், இவை தலைவர் வரவு குறித்த நன்னிமித்தமாயின. நிமித்தம் என்றலால் இவை ஓரோர் போதில் நிகழ்ந்தன வன்றி எப்போதும் நிகழ்தலாகாமை உணரலாம். பறவாத போது பறந்த குருகும், பூவாதபோது பூத்த புதலும், வளை செறியாத போது செறிந்த தோளுமே நிமித்தமாய் அவர் வரவு குறித்தன. இவற்றால் வருவர் கொல் என்றாள். பொருவார் - பொரவிருப்பார்; பகைவர் என்றவாறு. எடுத்து மண் உண்ணும் - அவரைக் களைந்து அவர் மண்ணினைத் தமதாக்கி உண்ணும் தொண்டையர் என்க. அண் ணல் யானை - தலையாய யானை. அங்ஙனம் உண்டற்குத் தக்க யானைப் படையும் தேர்ப் படையும் உடைமை கூறினார். “பகைவர், கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும் ... கொண்டி யுண்டித் தொண்டையோர் (பெரும்பாண். 451-456) என்பது காண்க. தொண்டையோர் வழையமலடுக்கத்துச் சுரன் - தொண்டையருடைய சுரபுன்னைகள் நெருங்கிய மலைச் செறிவின் பக்கத்து அரிய வழியில். கன்றில் ஓர் ஆவிலங்கிய இறந்தோர் - கன்றுள்ள மனையை ஓர்ந்த பசுத் தம்மைக் குறுக்கிட்ட அளவிற் சென்றவர் வருவர்கொல் என்றா ளென்க. பசுக் குறுக் கிட்ட அளவில் அதன் அன்பு தெரிந்து தாமும் அன்புடையராய் இல்லத்து மீள்தற்குரியவர் சென் றார் என்பது கருத்து. இறவாது மீடற்கு நிமித்த முடியாத போது நோக்காது சென்றவர் வரவிற்கு இவை நிமித்த மாகுமோ என்று வருவர் கொல் என்றாளாம். விலங்கிய என்பது, கைபுனை கிளர்வேங்கை காணிய வெருவுற்று (பரிபாடல் 10) என்புழிப் போல வந்தது. ஆண்டுக் காணிய - கண்ட அளவில் எனப் பரிமேலழகர் உரைப்பது காண்க. ஆவிலங்கிய என்றதனால் பயணமாகிய வேளை கோதூளில கம் நம் என்பதாம். அடுக்கத்துப் புன்றாளோமைய சுரன் என்க. இனிக் கன்றில் ஓரா விலங்கிய சுரன் இறந்தோர் என்பதற்கு கன்றில்லாத ஓர் பசு தம்மெதிர் வழி விலங்கி வந்த அளவில் சுரன் சென்றோர் என்பதுமாம். விலங்குதல் - தடுத்தல். கன்றில்லாத ஓர் பசு எதிர் விலங்குதல் நன்னி மித்தமன்று என்று கருதிக் கூறினாள். எதிர்மண்டுங் கடுவய நாகுபோல் (கலி. 116) என்பது காண்க. இமிலே றெதிர்ந்த திழுக்கென் றறியான் (சிலப். கொலைக். 100) எதிர்ந்த தென்பதை எதிர்த்துப் பாய்ந்ததாக அடியார்க்கு நல்லார் கொண்டாற்போல ஆவிலங்கிய என்பதனை ஆவிலங்கிப் பாய்ந்த அளவில் என்று கொண்டு நிமித்த விரோதமான அளவிற் சுரன் சென்றோர் எனினும் நன்கமையும். தோள் விலங்கின செலவே (ஐங். 421) என்பதும் காண்க. புன்தாள் ஓமைய சுரன் - புல்லிய அடிகளையுடைய ஓமை மரங்களையுடைய அருவழி. புன்தாள் - சிவந்த தாள் என்பாருமுளர். கருங்காலோமை (அகம். 117) என்றதனால் அது பொருந்தாது. பசிப்பிடி யுகைத்த வோமைச் செவ்வரை (நற். 279) என்பது பிடியுதைத்துப் பட்டை பெயர்ந்த செவ்வரையைக் கூறிற்று. தொண்டையர் வழையமல் அடுக்கம் வேங்கடமலை யாம். இது பாடிய கல்லாடனார் புறப்பாட்டில் (391) வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென, ஈங்குவந் திறத்தவென் னிரும்பே ரொக்கல் எனப்பாடுதலான் அந் நாட்டவராவர். புறம் 385 பார்க்க. சுரன் அருவழி என்றது, நளிகடற் றிரைச்சுர முழந்த திண்டிமில் (அகம். 240) என்பது பற்றி என்க. கழார்க் கீரன் எயிற்றியார் 261. பழமழை 1 பொழிந்தெனப் பதனழிந் துருகிய சிதட்டுக்கா யெண்ணின் 2 சில்பெயற் 3 கடைநாட் சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் நள்ளென் யாமத் தையெனக் கரையும் அஞ்சுவரு பொழுதி னானு 4 மென்கண் துஞ்சா வாழி தோழி காவலர் கணக்காய் வகையின் வருந்தியென் நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் 5 தானே. (எ-து) இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. (வி) பழமழை - சூன்முதிர் மழை; இளமழையின் வேறு. ஈன்று நாளுலந்த வாலா வெண்மழை (அகம். 139) என்பதுமாம். எள்ளிற்கு அதிக மழை உதவாது. பதனழிந்து - செவ்வி கெட்டு. உருகிய சிதட்டுக்காய் - உள்ளே விதை உருகி இல்லையான குருட்டுக்காய். எட்காயின் கண்களில் உள்ளீடின்மையாற் சிதட்டுக்காய் என்றார்; சிதடு - குருடு. சிறப்பில் சிதடும் (புறம். 28) என்பது காண்க. எண் - எள். எண்ணின் சில்பெயல் கடைநாள் - எள்ளுக்கினிய சில்மழையை யுடைய கடைநாள் என்றது பழமழை பொழிந்த அளவிற் பதனழிந்துருகிய குருட்டுக் காய் எள்ளுக்கினிய சில்மழையை உடைய கடைநாள் என்றவாறு. வில் பெயல் என்பது பாடமாயின் வில்லிட்டுப் பெய்தலையுடைய என்க. சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் - சேற்றை விரும்பும் எருமையும், சேற்றின் நிற்றலை வெறுத்தவ் கூறிக் கூதிர் மிகுதி குறித்தாள். நள்ளென்யாமத்து என்றது நடுவிருட் கூதிரின் கொடுமையை யுணரவைத்ததாம் ஐயெனக் கரைதல் - எருமையின் இயல்பு ஐ என்று அநுராசிகமாக ஒலித்து அறிக. சேற்று நிலை விட்டுப் புறப்பட வேண்டிக் கரையும். அஞ்சு வருபொழுதினாலும் என்றது கூதிருருவிற்கூற்றம் (197) ஆதல் பற்றி அஞ்சுவரு பொழுதினாலும் என்னெஞ்சு வருந்திப் புண்ணுற்ற விழுமத்தான். என்கண் காவலர் கணக்காய் வகையிற்றுஞ்சா என்க. காவலர் - இரவில் ஊர்காப்பாளர்: கணக்காய் வகையைப் போலத் துஞ்சா என்றது - இரவில் நாழிகையை எண்ணுதல் போலவுங் ஒவ்வொரு கணத்தையும் எண்ணித் துயிலாமை குறித்தது. பழமழை பொழிந்த காரணத்தான் பதங்கெட்டுருகிய எட்காய் சின்மழையால் இனிதாதல் என்பது தலைவன் பல்கால் வருதலான் அலரெழுந்து செவ்வி வாயாத கள வொழுக்கம் சில்காற் குறிவயின் வருதலான் இனிதாதலா கவும், சேற்று நிலை முனைஇய செங்கட்காரன் ஐயெனக் கரைதல், தான் இல்லோரால் செறிக்கப்பட்டிருத்தலை வெறுத்து அவனுடன் போதற்கு வருந்து தலாகவும் குளித்துக் கொள்ளலாகும், சேற்றைத் தன்னுடைந்த உள்ளமாக்கினும் பொருந்தும். நள்ளென் யாமத் துயவு தோறுருகி - அள்ள லன்ன வென்னுள்ளமொ டுள்ளுடைந் துளனே வாழி தோழி (நற் : 199) என்ப. `எண்ணின் விற்பெயல் என்பது பாடமாயின் எட்கினிய தநுர்மாதப் பெயல் என்க. அஞ்சுவருபொழுது என்றது, காப்புடை வாயில் போற்றோ என்னும் யாமம் (நற். 132) ஆதல் பற்றி என்பதும் பொருந்தும். பாலை பாடிய பெருங்கடுங்கோ 262. ஊஉ ரலரெழச் சேரி கல்லென ஆனா தலைக்கு மறனி லன்னை தானே யிருக்க 1 தன்மனை 2 யானே நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க 3 உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு விண்டொட நிவந்த விலங்குமலைக் கவாஅற் கரும்புநடு பாத்தி யன்ன பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே. 1 (எ-து) உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது. (வி) ஊர் அலரெழலாதும், சேரி கல்லென ஆரவாரித்த லானும் ஆனா தலைக்கும் அன்னை - ஓய்வில்லாமல் வருத் துந் தாய். தன்மனை தானேயிருக்க - தன்மனைக்கண் அலைத்தற் குரிய யான் இல்லாமற் றான்றனியே ஓய்ந்திருக்க. தன்மனை என்றாள் தலைவி தலைவன் மனையுடையளாத லான். இம் மனை தலைவி மனையல்லாமை நினைக. நெல்லிதின்ற முள்ளெயிறு தயங்க - தலைவனில்லாத தாய் மனைக்கண்ணே பாலுந்தேனும் பருகலானும் விளங்காத எயிறுகள் முறுவலால் விளங்க என்றது, உடன் போக்கிலுள்ள இன்பத்தால் அவ்வுயர்வுடைய இல்லத்தை எள்ளியதனாலுண்டாகும் சிறு நகையால் விளக்கம் பெறுதல் கருதிற்று. சேய்நாட்டுப் பெருமலைக் கவானிற் பெருங்களிற்றடி வழியில் நிலைத்த நடுபாத்திக் கரும்பன்ன நீர் நீ அவனொடு உண்டலை ஆராய்ந்து துணிந்தேன் என்றாளென்க. மலைக் கவான் - தாள் வரை. களிற்றடிவழி - களிற்றுஅடி பதிந்த பள்ளம். அவனோ டுணலான் அங்ஙனமினிக்கும் என்பது கருத்து. வேனில் நண்பகலில் உடன்போக்காதலான் நீரருமை குறித்து பெருங் களிற்றடி வழி நிலைஇய நீர் கூறினாள். விலங்குமலை - குறுக்காயுள்ள மலைகள். பெருஞ்சாத்தனார் 263. மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச் செல்லாற்றுக் கவலை பல்லியங் கறங்கத் தோற்ற மல்லது நோய்க்குமருந் தாகா வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்திப் பேஎய் 2 கொளீஇய ளிவளெனப் படுதல் நோதக் கன்றே தோழி மால் வரை மழைவிளை யாடு நாடனைப் பிழையே மாகிய நாமிதற் 1 படவே. (எ-து) அன்னை வெறியாட்டெடுக்கக் கருதாநின்றாள்; இனி யாம் இதற்கு என்கொலோ செயற்பாலது எனத் தோழி தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது. (வி) மறிக்குர லறுத்து - வெள்யாட்டுக் குட்டியின் கழுத்தை அறுத்து. சிறுமறி கொன்று (362) என்பதும், தாய்முலை பெறாஅ மறி கொலைப் படுத்தல் (அகம். 292) என்பதும் காண்க. தினைப் பிரப்பு இரீஇ - தினை நிறைத்த பிரப்பங் கூடையை வைத்து செல்லாற்றுக் கவலை - வெறியாடற்குச் செல்கின்ற யாற்றிடைக்குறையில். பல்லியங் கறங்க - பல இசைக் கருவிகள் ஒலியாநிற்க. தோற்றம் அல்லது - வேலன் முதலியோரை ஆவேசித்துத் தோன்று தல்லது. நோய்க்கு மருந்தாகா - காம நோய்க்கு மருந்து ஆகாத. வேறுபட்ட பெரிய தெய்வங்கள் பலவற்றை ஒருங்கு வாழ்த்தி. வேற்றுப் பெருந்தெய்வம் என்றது தன் நோய்க்கு மருந்தாதற்குரிய தெய்வம் தன் தலைவன் என்னுங் கருத்தால். பெருந் தெய்வம் என்றது இகழ்ச்சிக் குறிப்பு. தோற்றமல்லது என்றது தம் மடமை தோன்றுவதல்லது எனினும் அமையும். வேலன் வேண்ட வெறிமனை வந்தோய், கடவுளாயினு மாக, மடவை மன்ற வாழிய முருகே (நற். 34) என்பது காண்க. பேஎய்க் கொளீஇய ளிவள் எனப்படுதல் - பேயாற் கொள்ளப்பட்டாள் இவளென்று சொல்ல உட்படுதல். நோதக்கன்று - நோதல் தக்கது. உட்படுதல் - தலைவன் நீவ வேண்டிய நுதலை வேலன் சிறுமறி யுதிரந் தோய்ந்த கையால் நீவற்குத் தலைவி உட்படு தலாகும். சிறுமறி கொன்றிவ ணறுநுத னீவி (362) என்பது காண்க. நாடனாற் கொள்ளப்பட்ட நீ பேய்க்கொளீஇயள் இவள் என்று சொல்ல உட்படுதல் என்றவாறு. நாம் நாடனைப் பிழையேமாகிய இதற்பட நாம் - தலைவனுக்குத் தவறிழையேமாதற் பொருட்டு இக் களவொழுக்கத்திற் படாநிற்க இவள் பேஎய்க் கொளீஇயள் எனப்படுதல் நோதக்கன்று என்றாள் என்க. இவ்வெறி யாட்டிற்கு நாம் உடன்படின் நாடனைப் பிழைத்தே மாவம் என்பது கருத்து. மால் வளர மழை விளையாடு நாடனை என்றது அற முடைமையால் மழையறாத மலைநாடுடையவன் என்பது குறித்தது. கபிலர் 264. கலிமழை கெழீஇய கான்யாற் றிகுகரை 1 ஒலிநெடும் பீலி துயல்வர வியலி ஆடுமயி லகவு நாட னம்மொடு நயந்தனன் கொண்ட கேண்மை பயந்தக் 2 காலும் பயப்பொல் 3 லாதே. (எ-து) ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்றது. (வி) கலிமழை கெழீஇய - மழை ஒலி பொருந்திய அளவில். ஒலி நெடும் பீலி துயல்வர ஆடுமயில் இகுகரை இயலி அகவும் நாடன் என்க. ஒலித்தல் - தழைத்தல். துயல்வர - அசைய. இகுகரை - இடிகரை. கரைபொரு திழிதருங் கான்யாற் றிகுகரை, வேர்கிளர் மராஅத் தந்தளிர் போல, நடுங்கல் (நற். 381) என்புழிக் கான்யாற்றிகுகரை கூறியதனால் உணர்க. குளிர்ச்சி விருப்பினால் இடிகரையும் நோக்கா தியலி அகவும் என்றாள். பறக்கும் வன்மையால் இகுகரைக் கஞ்சா தென்க. நாடன் நம்மொடு விரும்பிக்கொண்ட நட்பு. அவன் பிரிவில் நாமே பசந்தவிடத்தும், அப் பசப்பினைப் பொறுக் காது என்க. ஈண்டு ஒல்லுதல், பழியாங் கொல்பவோ (252) என்புழிப் போலக் கொள்க. கேண்மை நம்மைப் பயக்க விட்டிராது யானறிவல் என்பது கருத்தாகும். தேறுவன் மன்யா னவருடை நட்பே (நற். 309) என்பது காண்க. தலைவி பசந்தது காணின் அது தன்னால் நேர்ந்ததென்று தலைவன் நாணுதல் உண்டென்பது, சிறுமெல் லாகம் பெரும்பசப் பூர. இன்னே மாக எற்கண்டு நாணி (நற். 358) என வருதலா னறியலாம். மழை பெய்யாதாயினும் ஒலிபொருந்திய அளவில் அம் மழை பெய்த நீர் முன் வந்த கான்யாற்று இகுகரையில் ஆடுமயில் சென்று அழைக்கும் நாடன் என்றது பிரிந்த இடத்து முன் தான் செய்குறிகளால் தான் செய்த தலை யளியை நினைத்தின்புறச் செய்பவன் என்பது குறித்தாகும். கருவூர்க் கதப்பிள்ளையார் 265. காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும் தாமறி செம்மைச் சான்றோர்க் 1 கண்ட கடனறி மாக்கள் போல விடன்விட் டிதழ்தளை யவிழ்ந்த வேகல் வெற்பன் நன்னர் நெஞ்சத்தன் றோழி நின்னிலை யான்றனக் குரைத்தனெ 2 னாகத் தானா ணினனிஃ தாகா வாறே. (எ-து) வரையாது பிரிந்த விடத்து, அவர் பிரிந்தது நின்னை வரைந்து கோடல் காரணமாகத்தானெனத் தோழி தலை மகட்குக் கூறியது. (வி) காந்தளங் கொழுமுகை தானே வாய்திறக்கும் பொழுதிற்குக் காக்க வைத்தலைச் செய்யாமல், பண்டும் தாமறி செம்மைச் சான்றோரைக் கண்ட கடனறி மாக்கள் போல, வண்டு இடன் விட்டு இதழ்தளையவிழ்ந்த ஏகல் வெற்ப என்க. காந்தள் விருந்தோம்பும் கடனறி மாக்களாகவும் வண்டு சான்றோராகவும் கொள்க. பண்டுந் தாமறிந்த சான்றோராகிய விருந்தினரைக் கண்ட அளவே முகமலர்ந்து, இடனளித்து அவரைத் தாழ்க் கவைக்காமல் தன்கணுள்ள இனியதை உதவும் கடனறி மாந்தர் போலக் காந்தளங் கொழுமுகைகள் தாம் பண்டுமறிந்த வண்டுகளைத் தம்பால் வரக்கண்ட மாத்திரையே இதழ்தளையவிழ்தல் என்பதை இதழ்தளையவிழ்ந் துதவுதலாகக் கொள்க. கடனறி மாக்கள் செயலதுவாதல் காண்க. இதனாற் றோழி தலைவரைக் கண்ட அளவே அவரைத், தாழ்க்கவைக்காது, அவர்க்குத் தன் நெஞ்சு வாயவிழ்ந்து அவர்க்கு இனியதொன்றைக் கூறி, அவரான் முகமன் உரைக்கப் பெற்றதைக் குறித்தாளாம். நெஞ்சுவாயவிழ்தல், நெஞ்சுவா யவிழ்ந்தனர் காதலர் (அகம். 129) என்பதனா னறிக. தலைவனைக் கண்ட மாத்திரையே அவனைத் தாழ்க்கவைக்காமல் அவனுக்கினிய தாகிய நின்னிலையை யான் தனக்குரைத்தெனனாக என்பதே கருத்தாம். நின்நிலை - உடன்போக்கு உடன்பட்ட நின்னிலைமை. இது தலைவற்கு இனிதாதல் உணர்க. நின்னிலையிஃ தாகாவாறே உரைத்தனனாக - நம் நாண்விட வேண்டியதாதல் கருதி உடன்போக்குதற்குத் துணிந்த நின்னிலையாகிய இஃது உண்டாகாதவாறே தலைவற்கு மொழிந்தனனாக. தான் நாணினன் - தலைவன் தான் வெள்கிளான் என்றவாறு. தான் இந் நிலைக்கு முற்படவந்து வரையாமைக்கு நாணினன்; இதனால் நன்னர் நெஞ்சத்தன் என்றா ளென்க. நக்கீரர் 266. நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன் றின்னா விரவி னின்றுணை யாகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ மறப்பருந் துணைத் தோண் மரீஇத் 1 துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே. (எ-து) வரையாது பிரிந்தவிடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) நமக்குவொன்றிய தூது உரையாத நிலையா ராயினும் என்றது. இது களவில் வரையாது பிரிதந்தாதலின் தூதுவிடின் களவு வெளிப்படுமாதலின், தூது விட்டுரையாத நிலையி லுள்ளவர் என்றதாம். களவிற்றூது புலனெறி வழக்கமன்மை யுணர்க. இன்னா இரவின் - இற்செறிப்பிற் காவல் மிகுதியாற் குறிவழி வாராது தாழ்த்ததனால் இன்னாதாகிய இரவின்கண். தமக்கு இனிய துணையாய் நின்றுதவிய நம் தோட்டத்து வேங்கை மரத்திற்குப் புள்ளின் வாயில் தமக்கொன்றறிதற் பொருட்டுத் தூது மறந்தனர் கொல் என்க. நமக்கு ஒன்று - நாம் அறிதற்குரிய ஒன்று. தமக்கொன்று - தாமறிதற்குரியவொன்று. ஒன்று தெரிவித்தலும், ஒன்று தெரிதலுமே தூதின் பயனாதலுணர்க. துணைத்தோள் மரீஇ - இருதோளானுந் தழுவி. மறப்பருந் துறத்தல் வல்லியோர் - யாம் மறத்தற்குரிய பிரிவினைத் தம் வன்மையாற் செய்தவர். உரையாராயினும் வேங்கைக்கு மறந்தனர் கொல் என்றவாறு. துணைத்தோள் - நமக்குத் துணையாகிய தோள்கள் எனினுமையும். அவர் குறிசெய்த நிலையில் காவல் மிகுதியால் அவர்பாற் செல்லாது இன்னா இரவாக்கிய தாழ்த்த தவறு நம் பாலுண்டாதலான், அதுபற்றி நமக்கொன்றுரையா ராயினும்; அவ் வின்னாவிரவிற் றாம் வந்தது தொட்டு இன்றுணை யாகிய வேங்கைக்கு மறந்தனர் கொல் என்றாள். வேங்கைக்குப் புள்வாய்த் தூதுரையாவது எமக்குப் பன்னாள் இன்னா இரவினின்று துணையாகிய வேங்காய் நீ என்னாயினை என்று புள் வாயிலாக விடுமாற்றம் உய்த்தல் நமக்கு இன்பமாயினார்க்கு நாம் இன்பமாயின நம்மினும் தனக்கோர் வகையானு மின்பஞ் செய்யாத நிலையில் தலைவர்க்கு இன்பமாயின வேங்கை சிறந்து மறத்தற்குரிய தன்றென்று கொண்டு கூறினாள். மறப்பருந் துணைத்தோள் மரீஇ யாமறத்தற்கரிய துணையாகிய தோள்கள் தழுவி என்பதுமாம். வேங்கையில் இருத்தற்குரியது மயிலாதலின் அதனைக் கண்டு ஒரு தூதுரை சொல்ல மறந்தனர்கொல் என்றாள். வேங்கை மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை (26) என்றது காண்க. அவர் தகுதிக்கு அவர் பயின்ற மரமுந்தழைத்து அவர் பிரிவின் வாடி வருந்துமென்றும் அதனை என்றோ புள்வாய்த் தூதுரைத் தறியாமல் மறந்தனர் என்றும் கூறியமுகத்தான் தன் ஆற்றாமை புலப்படுத்தியவாறிஃ தெனக் கொள்க. காலெறி கடிகையார் 267. இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம் 1 ஒருங்குட னியைவ தாயினுங் கரும்பின் காலெறி 2 கடிகைக் கண்ணயின் றன்ன வாலெயி றூறிய வசையி றீநீர்க் கோலமை குறுந் தொடிக் குறுமக ளொழிய ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும் உறன்முறை மரபிற் கூற்றத் தறனில் கோணற் 3 கறிந்திசி னோரே. (எ-து) `மேனின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின் நாமும் பொருட்குப் பிரிதும் என்னும் நெஞ்சிற்கு நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறிச் செலவழுங்கியது. (வி) ஈண்டு பயப்பெருவளம் ஒருங்கு இருங்கண் ஞாலத் துடனியைவ தாயினும் அறிந்திசினோர் பிரியார் என்க. ஈண்டு பயப் பெருவளம் - ஈண்டுதற்குரிய பயன்களையுடைய செயற்கரிய செல்வம் என்றது அறனும் இன்பமுமாகிய பயனைத் தப்பாமற் றருதற்குரிய அரியபொருள் என்றவாறு. ஒருங்கு - சிறிது சிறிதாகத் திரள்வது. ஒரு போதே முழுதும் ஆதல் குறித்தது. பெரும் பொருள் முழுதும் அதனைத் தரும் பெரிய இடமகன்ற உலகத்துடன் தமக்கியைவது, குறு மகளொழிய வருதலின் உண்டா மாயினும், அவ் வாள்வினை மருங்கிற் பிரியார் - அவ்வுலகொடு கூடிய பெருஞ்செல்வத்தான் எய்துவன அறமும், இன்பமுமே யாதலின் அவ் விரண்டும் இவளுடன் முறையாக வாழ்தலின் கிடைத்திருப்பன வாதல் குறித்து. வாலெயி றூறிய வசையில் தீநீர்க் குறுமகள் என்றான். வாலெயி றூறிய தீநீர்க் குறுமகள் எனவும் வசையில் குறு மகள் எனவும் கொள்க. தீநீரால் இன்பமும், வசையின்மையால் அறம் உடைமையும் கருதியவாறாம். கோலமை குறுந் தொடிக் குறுமகள் என்றது தான் பிரிந்தாற் பெருந் தொடியாகுமென்றும் பிரியாதுடனுறைதலால் குறுந்தொடி யாயின என்றும் குறித்ததாம். வசையில் தீநீர் - வாய் எச்சில் என்றும் வசையில்லாத தீவிய நீர் என்று இன்பமே கருதிய தெனினுமமையும். குறுந்தொடி என்பதனால் இவளைப் பிரிதலறமன்று என்று நினைந்தனனென்றலுமொன்று. அறமும் இன்பமும் ஈண்டற்குரிய பொருள் தேடப் பிரிந் துள்ள அறமும் இன்பமு மிழக்கேனென்று செலவழுங் கினானாம். மற்று மேனின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தா ராதலின் நாமும் பொருட்குப் பிரியலாமெனின், அதற்காகக் கூறுகின்றான். மேல் உறன் முறைமரபின் - தள்ளாதுறுதற் குரிய விதியினியல்போடு. கூற்றத் தறனில் கோள் - தன்னை மாற்றுதற்கோர் அறனில்லாத கூற்றம் உயிர் கொள்ளுதலை. நாளும் அறிந்திசினோர் - ஒவ்வொரு நாளும் சிந்தித் தறிந்தவர். குறுமக மகளொழிய ஆள்வினை மருங்கிற் பிரியார் என்றான். என்றும் இளமையோடிருக்கச் செய்யும் விதியின்மையோடு, அவ்விளமையினும் கூற்றம் கொள்ளுத லுண்டென்று தான் நாளும் அறிந்ததைப் பிறர்மேல் வைத்துக் கூறினான். முறைமரபு - விதியியல்பு. இவற்றால் நாளது செலவு மூப்பினது வரவு, மரிதுபெறு சிறப்பிற் காமத் தியற்கையும் (அகம். 353) நினைந்து செலவழுங்கி னானாம். கரும்பின் கால் - கரும்பினடியில். கண்எறி கடிகை அயின் றன்ன தீநீர் - கணுக்களை எறிந்தொழிந்த இடைத்துண்டங்களைத் தின்றாலொத்த தீவியநீர். கண் - கணு வேயமைக் கண்ணிடை (அகம். 152) என்பது காண்க. கருவூர்ச் சேரமான் சாத்தனார் 268. சேறி ரோவெனச் செப்பலு மாற்றாம் வருவி 1 ரோவென வினவலும் வினவாம் யாங்குச்செய் வாங்கொ றோழி பாம்பின் பையுடை யிருந்தலை 2 துமிக்கு மேற்றொடு 3 நடுநா ளென்னார் 4 வந்து நெடுமென் பணைத்தோ ளடைந்திசி னோரே. (எ-து) தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது. (வி) இக் களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாகாமைப் பொருட்டுச் சேறிரோ என - செல்லுதிரோ என்று. செப் பலும் ஆற்றாம் - வாயாற் சொல்லுதலும் பொறாம். வருவீரோ என - செப்பலும் ஆற்றாத எம் ஆற்றாமை தீர வருவீரோ என்று. வினவுதலுஞ் செய்யாம் என்றது சேறிர் எனின் தான் பிரிவுடன் படுதற்கும், வருவிரோ எனின் அவர் வரும்வரை பிரிவாற்றி யிருத்தற்கும் துணிந்தமை புலப்படுத லான் அவ்விரண்டும் கூற இயலாமை காட்டி, எப்போதும் உடனுறைதல் வேண்டியதாம். தோளடைந்தி சினோர் பால் அவர் சென்று வருதும் என்றவழிச் சேறல் குறித்துச் சேறீரோ எனச் செப்பலும், வருதல் குறித்து வருவீரோ என வினாவலும் புரியாத யாம் வரைதலான் உட னுறைதல் வேட்பதை அவரறிய எவ்வாறு செய்வாம் என்றா ளென்க. அறத்தொடு நின்று வரைவதையும், உடன் கொடுபோய் வரைவதையும் நினைந்து யாங்குச் செய்வாம் என்றாளாம். இக் களவொழுக் கத்தில் அவர்க்குளதாம் இடையூற்றை யஞ்சிக் கூறிய தனானும் இதுவே தோழி கருத்தாதல் உணரலாம். பாம்பின் பையுடை யிருத்தலை துமிக்கும் ஏற்றோடு நடுநா ளென்னார் வந்து நெடுமென் பணைத்தோள் அடைந்திசினோர் என்றதனால் தரையில் அரவினாலும், வானில் இடியினாலும் நடுநாளிரவிற் பேயாலும் உண்டாம் இடையூறுகள் நினைந்து அஞ்சிக் கூறினாள். உருமு முரறா தரவுந் தப்பா (பெரும்பாண். 42) என்பதனால் இவை அஞ்சத் தக்கனவாதலறிக. கழுதுவழங்கரைநாள் (அகம். 311) என்பத னால் நடுநாளும் கழுது வழங்குதலான் அஞ்சத்தக்கது என்றதாம். தோளடைந்திசினோர் என்றதனால் முன்னாளிரவில் நிகழ்ந்தது கூறினாளாம். இவ்விரவும் அங்ஙனம் வந்து தோளடையாமை குறித்தா ளென்பதாம். போற்றாய் பெருமநீ காமம் புகர்பட, வேற்றுமைக் கொண்டு பொருள்வயிற் போகுவாய், கூற்றமு மூப்பு மறந்தாரோ டெராங்கு மாற்றுமைக் கொண்டவழி (கலி. 12) என்பது காண்க. இதைப் பாடியவர் கருவூர்ச் சேரமான் சாத்தனாராவர். சேரமான் சாத்தன் சேரமானுடைய சாத்தன். பாண்டியன் கீரன் சாத்தன் என்பது போலும். கல்லாடனார் 269. சேயாறு சென்று துனைபரி 1 யசாவா 2 துசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல வயச்சுறா வெறிந்த புண்டணிந் தெந்தையும் 3 நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும் உப்பை மாறி வெண்ணெற் றரீஇய 4 உப்புவிளை கழனிச் 5 சென்றன ளதனாற் பனியிரும் பரப்பிற் சேர்ப்பற் கினிவரி 6 னெளிய ளென்னுந் தூதே. (எ-து) தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. (வி) துனைபரி யசாவாது - விரைந்து செல்லுதற்கு வருந்தாது. சேயாறு சென்று - நெடுவழி போய். இனி வரின் - இப்போது வந்தால், எளியள் என்னுந் தூதுரையைச் சேர்ப்பற்கு உசாவுநர்ப்பெறின் - சேர்ப்பனுக்கு உசாவியுரைப் பாரைப் பெறின். நன்றுமன் - யான் பெற்றால் மிகவும் நலமுடைத்து, விரைந்து செல்லுதல் வேண்டியது தந்தையுந்தாயும் வருதற்கு முன்னர்ச் சேர்ப்பன் வருதல் கருதி. சேயாறு செல்ல வேண்டுதலான் அச் செலவுக்கு வருந்தாமல் என்றாள். உசாவு நர் என்றாள் களவாதலாற் பிறரறியாமல் ஆராய்ந்து உரைத்தல் வேண்டி. சேர்ப்பன் சிறைப்புறத்தானாதல் அறியாள் போல இங்ஙனம் கூறியது தோழியைப் புறம் போக்குதற்கும் அவன் மலையுட்புக்குத் தன்னுடன் நெடும்போது பாணித்தலாகுமென்ப தறிவித்தற்கும் என்று கொள்க. உசாவுநர் சேயாறு சென்று சேர்ப்பனை அழைத்து வரும் அளவைப் பொழுதும் தன்னுடனுறைதற்குரிய பொழுதாதல் குறித்தவாறு காண்க. புண்தணிந்து எந்தையும் கடல் புக்கனன் என்றது இப் போது தந்தை காவலின்மையுணர்த்தியதுடன், இதுகாறும் கூட்ட மின்மைக்குக் காரணமும் தெளித்த வாறாம். வயச்சுறா எறிந்த புண் என்றது தணிதற்கு நாளதிகமாதற் காரணங் கூறியவாறு. நீனிறப் பெருங்கடல் புக்கனன் என்றது மீளற்கு நேரமதிகஞ் செல்வது காட்டிற்று. யாயும் உப்பை விற்று வெண்ணெல்லைத் தரும்பொருட்டு உப்புவிளை கழனிக்குச் சென்றனள் என்றதுந் தாயில்லாத நேரமும் அதிகமாம் என்பது குறித்ததாம். அதனால் தந்தையும் தாயும் இங்கில்லை யாகிய அவ்வொன்றால் எளியள் என்னும் தூது என்க. பரதவர் நெய்தல் நிலத்து உப்புவிளை கழனிகளில் உப்பை உண்டுபண்ணுபவர் என்றும், இவ்வுப்பினை நெல்லிற்குக் கொண்டு வாணிகஞ் செய்வார் உமணர் என்றுந் தெரிக. பரதவ ரிருங்கழிச் செறுவி னுழாஅது செய்த, வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி ... உமணர் காதன் மடமகள் ... சேரி விலைமாறு கூறலின் (அகம். 140) எனவும், தந்நாட்டு விளைந்த வெண்ணெற்றந்து, பிறநாட் டுப்பின் கொள்ளை சாற்றி, நெடுநெறி யொழுகை நிலவுமணனீந்தி யவணுறை முனிந்த வொக்கலொடு புலம்பெயர்ந்துமணர் போகலு மின்னாதாகும் (நற். 183) எனவும் வருவன கொண்டுணர்க. இவற்றால் ஈண்டு வெண்ணெல் உப்புக்கு உமணர் தரும் வெண்ணெல் என்று தெரிக்க. நீல்நிறப் பெருங்கடல் என்றதனால் கடலில் நெடுந்தூரம் செல்லுதல் குறித்தாளாம். இதுவும் தந்தை தாழ்த்து மீளாதற்கு ஏதுவாம். பனியிரும் பரப்பு - குளிர்கின்ற கரிய பரவை. பாண்டியன் பன்னாடு தந்தான் 270. தாழிரு டுமிய மின்னித் தண்ணென வீழுறை 1 யினிய சிதறி யூழிற் 2 கடிப்பிகு 3 முரசின் முழங்கி யிடித்திடித்துப் 4 பெய்தினி 5 வாழியோ பெருவான் 6 யாமே செய்வினை முடித்த செம்ம லுள்ளமொ 7 டிவளின் மேவின மாகிக் 8 குவளைக் 9 குறுந்தா ணாண்மலர் நாறும் நறுமென் கூந்தன் மெல்லணை யேமே. (எ-து) வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியொடு உடனிருந்து கூறியது. (வி) தாழிருள் - உயிர்கள் தொழில்கள் புரியாது தங்கி யிருத்தற்குக் காரணமான இருள். பெருவான் - செயற் கரிய மழை. மாரி வறப்பிற் றருவாரு மில்லை (நாலடி. 104) என்றது காண்க. கடவுண் மழை (திருக்கோவை) என்ப. பெருவான் இனி மின்னிச் சிதறி முழங்கியிடித்துப் பெய்து இவளின் வாழி என்க. இவளின் வாழி என்றது இவள் கடவுட் கற்பால் மழை வாழ்தல் கருதியது. கடவுட் கற்பொடு ... புகழ்மிகு சிறப்பி னன்னராட்டி (அகம். 184), வான்றருங் கற்பினாள் (கலி. 16) என்பது காண்க. மழை பெய்தற்குமுன் வருதும்; அதுகாறும் ஆற்றியிருக்க எனத் தலைவன் கற்பித்த வாறொழுகிய சிறப்பினை நினைந்து, இவளின் வாழி என்றான். பெண்பால் கொழுநன் வழிச் செலவும் இம் மூன்றும், திங்கள்மும் மாரிக்கு வித்து (திரிகடுகம். 98) என்ப. ஈண்டுப் பெருவான் வாழி என்றது தான் வருதற்குமுன் பெய்து இவள் உயிர் துறவாமைக் காத்த உதவி நோக்கி என்க. யாம் செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு மேவினமாகி நறுமென் கூந்தல் மெல்லணையேம் ஆதலான் இனிப்பெய்து வாழி என்றதனாற் றான் மேவுதற்கு முன்னர்ப் பெய்தலாகா தென்று தான் வேண்டியிருந்தது புலனாகும். `கொண்மூ முழங்கு தொறுங் கையற் றொடுங்கி, நப் புலந்து (அகம். 174) என்று தலைவன் கூறுதலானறிக. செம்மல் உள்ளம் - தலைமை உள்ளம். செய்வினை முடித்தல் தலைமை உள்ளத்தாலென்பது தோற்றுவித்தவாறு. செய்வினை - செயற்குரியவினை. செய்யத் தகாத வினையை விலக்கியது. தகாத புரிதல் இழிவுடைய உள்ளத்தால் என்பது நினையக் கூறினான். இருள் துமிய மின்னி என்றான் பிறவுயிர் துமியாமற் காத்து. இனிய சிதறி என்றான் இன்னாவாய்ச் சிதறாமை குறித்து. ஊழிற் கடிப்பிகு இடித்திடித்து முழங்கி முரசின் - முறையிற் குணிலடிக்கும் அரசர் முரசு போல இடித்திடித்து முழக்கஞ் செய்து. மும்முறை கூறியது வேந்தர் முரசும் மூவகையாக ஒலித்தல் கருதி யெனின் நன்கியையும். ஊழின் என்றதும் இக் கருத்தை வலியுறுத்தும், இடியு முழக்குமின்றி (அகம். 74) என்பதனால் இடித்தலும் முழங்குதலும் வேறாதலுணரலாம். நாண் மலர் நாறுங் கூந்தல் என்றது இவள் கூந்தற்போது குரலணிய வந்தது குறித்தது. கூந்தல் மெல்லணையேம் என்று தன் இன்பங் கூறினான். இவள் உயிர்காத்த மாரிக்குத் தான் செய்யுங் கைம்மாறின்மையால் வாழி என வாழ்த்தி னான். இக் கூந்தல் மெல்லணை கிடைத்தது பெறுவானால் என்பது இவன் கருத்தாம். இது கிழத்தியோடு உடனிருந்து வாழ்த்திய தாதலான் அதற்கேற்பவே உரைக்கலாயிற்று. மென்கூந்தல் மெல்லணை - மெல்லிய கூந்தலாகிய இயற்கை யின் மென்மையாகிய அணை. செயற்கையாகிய அணையின் வேறு படுத்தியவாறு. இவ்வணை மலர்ப்பரப்பாலே மலர் நாறும் என்பதும் ஒன்று. அழிசி நச்சாத்தனார் 271. அருவி யன்ன பருவுறை சிதறி யாறு நிறை பகரு நாடனைத் தேறி 1 உற்றது 2 மன்னு மொருநாண் 3 மற்றது தவப்பன் னாடோண் மயங்கி 4 வௌவும் பண்பி னோயா கின்றே. (எ-து) தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (வி) அருவி - அரிய மலர்களையும், அன்ன பருவுறை - அம் மலர்களை ஒத்த பரிய திவலைகளையும் சிதறி என்க. அருவியாம்பல் (பதிற். 63) என்புழி வீயரிய எண் ஆம்பல் எனப் பழையவுரைகாரர் கூறுதல் காண்க. யாறு நிறைபகரும் - யாறு நிறைபுனலைக் கொடுக்கும். நிறைவெள்ளம் - நிறையாகிய வெள்ளம். (பரிபாடலுரை, பக். 40) என்ப. ஈண்டு நிறை என்பது திறை என இருப்பது தக்கது. கலை யிலாளன் காமர் வேனிலொடு, மலய மாருத மன்னவற் கிறுக்கும் பன்மலர் (சிலப். நாடு காண்காதை 28-30) என்புழி அடியார்க்கு நல்லார், மன்னவற்குக் காமன் வேனிலொடு தென்றலையும் திறையாக இடுதற்குப் பன்மலர்களை எனக் கூறுதல் காண்க. பூவும், புனலும் பெய்து வழிபட்டுத் திறையிடுதல் குறித்தது. பரிபாடலில் (16) விடுமலர் சுமந்து பூநீர் நிறைதலின் என்புழிப் பரிமேலழகர், அருச்சனைப் பூவும் நீரும் நிறைதலாகவு முரைக்க என்றதனையும் நோக்குக. யாறு மலைப்பொருள்களைப் பூவும் புனலும் பெய்து திறையாகக் கொடுக்கும் நாடன் என்பது காண்க. ஏடுகளில் நகரமும் தகரமும் தம்முள் மாறுதல் கண்டது. நல்லது கொள்க. நாடனைத் தேறி - நாடனை யான் என் அறிவாற் றெளிந்து. உற்றது மன்னு மொருநாள் - மிகவும் தோய்ந்தது ஒரு நாட்போதாம். அது அங்ஙனம் தோய்ந்தது மயக்கித் தோள் வௌவும் நண்பின் - என்னைப் பொய்ம் மொழிகளால் மயக்கி என் தோளைக் கவர்ந்து கொண்டதன்மை யாதலான், தவப்பன்னாள் நோயாகின்று - மிகப்பல நாளாக எனக்குப் பரிகாரமில்லாத நோயாகின்றது என்றவாறு. மயக்குதல் - உன்னையொழிய யாரையும் காதலியேன், உன்னை நினையேனேல் உயிர் வாழேன் என்றாற் போன்ற பலவற்றை வாயளவிற் கூறி அறிவு மயங்கவைத்தல். வந்தெனைக் கரம் பற்றிய வைகல்வாய். இந்த விப்பிறவிக் கிருமாதரைச், சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம், தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய் (கம்ப. சுந்தர. சூளாமணி. 34:3) நாடனை யான் தேறி உற்ற நிலையில் அவன் மயக்கி வௌவும் பண்பு இலன் பரத்தைமை யாற் றெளியப் படுதலான். அவ்வுற்றது நோயா கின்று என்றாளாம். தலைவன் பரத்தைமை தெரிந்த தலைவி புல்லுமற் றெவனோ வன்பிலங் கடையே (நற். 174) எனக் கூறுதல் கொண்டுமுன் உற்றது நோயாயினவாறுணர்க. மயக்கிவௌவும் பண் பில்லாது யான் தேறியவாறே தேறி என்னையுற்றவராயின் அவர்கட் பரத்தைமையிராதென்று கருதிக் கூறினாள். இனித் தலைவன் தோளைப் பரத்தையர் மயக்கி வௌவும் பண்பினால் அவ்வுற்றது தவப்பன்னாள் நோயா கின்று என்றாளெனினுமமையும். மயக்கி வௌவும் பண் பில்லை யாயின் நோயின்றி மருந்தாகு மென்று குறித்தாளாம். யாறு நிறைபகரு நாடன் என்றது பரத்தையர் வழிப்பட்டுத் தம் நலங்களைக் கொடுத்தலை விரும்புபவன் என்றவாறு. மாயநின் பண்பின்மை (குறிஞ்சிக்கலி 8) என்புழி மாயம் வல்ல நினது பண்பில்லாமை எனவுரைத்தது நோக்கிக் கொள்க. மற்றை நாளிற் றலைவன் பரத்தைமை நினைந்து அவன் புணர்ந்த முன்னாளிலும் அவனால் நன்கு எண்ணப் பட்டிலே னென்று தலைவி கூறுதல், ஊரன் புணர்ந்த நாள், எல்வளைய மென்றோளே மெங்கையர்தம் போல, நல்லவரு ணாட்ட மிலேம் (திணை மொழி ஐம்பது - மருதம் 7) என்பதனானும், அதற்குப் பழையவுரைகாரர், ஊரன் எம்மைப் புணர்ந்த முன்னாளின் கண்ணும் எல்வளைய மென்றோளேம் எங்கையர் தம்மைப் போல நல்ல மடந்தையருள் வைத்து அவனால் எண்ணப்பட்டிலேம் என உரைத்ததனானும் உணர்க. ஒருசிறைப் பெரியனார் 272. தீண்டலு மியைவது 1 கொல்லோ மாண்ட வில்லுடை யிளையர் 2 கல்லிடு 3 பெடுத்த நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த புன்கண் மடமா 4 னேர்படத் 5 தன்னையர் 6 சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக் குருதியொடு 7 பறித்த செங்கோல் வாளி 8 மாறுகொண் 9 டன்ன வுண்கண் நாறிருங் கூந்தற் கொடிச்சி 10 தோளே. (எ-து) கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. (வி) கொடிச்சி தோள் தீண்டலு மியைவது கொல்லோ என்றான் முன் தீண்டியதும் தீண்டாத அளவினதேயாதலான். இதுவே காமத்தின் இயல்பு. அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ், செறிதோறுஞ் சேயிழை மாட்டு (குறள். 1110) என்றது காண்க. தீண்டலும் என்ற உம்மை உயர்வு சிறப்பு. இயைவது கொல்லோ - தவம் பண்ணியும் இயைவ தோ என்பது கருத்து. வில்லுடை இளையர் - வில்லையே தங்கள் உடைமையாகவுள்ள வேடர். மாண்ட கல்லிடுபு எடுத்த - தம் வில்லால் மாய்ந்தவுடல்களைக் கல்லிட்டு மூடிக் கற்குவித்து உயர்த்திய. இடமகன்ற காட்டில் கொன்ற பிணங்களைச் சருகின் மூடிக் கற்குவித்தல் பாலையிலுள்ள வேடர் வழக்கு. உலர்ந்த வம்பலர் உவலிடு பதுக்கை (77), இறந்த ஆறுசெல் வம்பல ருவலிடு பதுக்கை (297), ஆளழித் துயர்த்த அஞ்சுவரு பதுக்கை (அகம். 215) என்பன கொண்டுணர்க. கானத்துத் தன்னினத்தினின்று முதன்முதற் பிரிந்த காரணத்தான் புன்கண்மையையுடைய இனமான். நேர்பட - ஒன்றியாக. நிழல் தேய்ந் துலறிய மரத்த (அகம் 1) என்புழி, உலறிய - நேரான என்று பழையவுரைகாரர் கூறுதலின் உணர்க. தன்னையர் - தன் தமையன்மார். சிலைமாண் கடுவிசை - வில்லின் மாண்ட கடிய வேகத்தில் கலைநிறத்து அழுத்தி என்க. கடுவிசை என்பது வில் மிக வளைக்கப் படுதலான் நாண் விளிம்பை விட்டு உருவும்படியான விசை. வீங்குவிளிம் புரீஇய விசையமை நோன்சிலை வாங்கு தொடை (அகம். 175) என்பதனான் அறிக. கலிகொள் மள்ளர் வில்விசையின் (அகம். 185) என்ப. இனிச் சிலை ஒலித்தல் எனக் கொண்டு ஒலித்தல் மாட்சிமைப்பட்ட கடிய விசையின் அழுத்திப் பறித்த வாளி என இயைப்பினும் அமையும். வாளி விடும் விசையான் ஒலிக்கும் என்பது, ஆடவர் விடுதொறும் விளிக்கும் வெவ்வாய் வாளி (அகம். 175) என்பதனான் அறிக. கலிகொள் மள்ளர் வில்விசையின் (அகம். 185) என்ப. கலை நிறுத்து அழுத்தி - கலைமானின் மருமத்தில் அழுந்தச் செய்து. குருதியொடு பறித்த - உதிரத்தோடு பிடுங்கிய. செங்கோல் வாளி - கோணாத நேர் கோலாகிய அம்பு. கணை கொடிது யாழ் கோடு செவ்விது (குறள். 279) என்புழிப் பரிமேலழகர், கணை வடிவாற் செவ்விதாயினும் என்றுரைத்தது கொண்டுணர்க. கோல் தெரிந்து, வரிநுதல் யானை யருநிறத்தழுத்தி (அகம். 172) என்பதனாற் கோலே அம்பாதல் காண்க. குருதியொடு பறித்த வாளி என்றதனானே வாளி சிவந்த நிறமுடையதாதல் பெறப்படுமென்க. மாறு கொண்டன்ன உண்கண் - வாளி வேற்றுருக் கொண்டாற் போன்ற உயிருண்ணுங் கண்கள். உண்டுயிரிவள்கண் வாழ்கென்று (சிந். 2457) என்பது காண்க. நாறிருங் கூந்தல் - இயல்பாக நாறும் கரிய கூந்தல். ஒத்த நோக்கினால் அணுகிக் கூந்தலில் வண்டோச்சி அணைந்த தனாற் கண்ணுங் கூந்தலுமே முற்பட நினைந்தான். கொடிச்சி தோள் தோள் தீண்டலு மியைவது கொல்லோ என்றது கரணத்தொடு கூடும் வதுவையிற் றீண்டல் குறித்ததென் பதுமாம். தன் மருமத்திற் பாய்ந்து வருத்தலான் வாளி கண்ணாக மாறு கொண்டது போலு மென்றான். சிறைக்குடி யாந்தையார் 273. அல்குறு பொழுதிற் றாதுமுகை 1 தயங்கப் பெருங்காட் டுளரு 2 மசைவளி போலத் தண்ணிய கமழு மொண்ணுத லோயே நொந்தனை 3 யாயிற் கண்டது மொழிவல் பெருந்தேன் கண்படு வரையின் முதுமால் பறியா தேறிய மடவோன் போல ஏமாந் தன்றிவ் வுலகம் நாமுளே 4 மாகப் பிரியலன் 5 றெளிமே. (எ-து) பிரிவரெனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. (வி) அல்குறு பொழுதின் - குறையும் பொழுதின்கண். தாதுமுகை தயங்க - தாதுக்களையுடைய அரும்புகள் அசைய. பெருங்காடு உளரும் அசை வளிபோல - பெரிய காட்டைத் தைவரும் அசைந்து வருகின்ற காற்றுப் போல. தண்ணிய கமழும் - குளிர் மணங்கள் பலவும் கமழ்கின்ற. ஒண்ணுதலாய் என்றது தலைவர் பிரிவாரல்லர் என்பது நின் ஒண்ணுதலான் யானறிவல் என்னுங் குறிப்பிற்று. பிரிவராயின் அதற்கு முன்னரே நின் நுதல் ஒட்பமாறிப் பசப்பூரும் என்பது கருத்து. தண்ணிய கமழும் ஒண்ணுதல் நீவாது செல்லார் என்பது தெரிய விளித்தானென்பதும் ஒன்று, பிரிவரென நொந்தனையாயின் என் மனத்திற் கண்டதைச் சொல்வல். பெருந்தேன் கண்படு வரைப்பின் - பிறர் செயற்கரிய தேன் தூங்கும் மலைப்பக்கத்து. முதுமால்பு - பழையதாகிய கண்ணேணியில், அறியாது - அதன் வலி அறியாமல். ஏறிய மடவோன் போல - ஏறிய அறிவிலி போல. இவ்வுலகம் ஏமாந்தன்று - இவ்வுயிர் ஏமாந்திருந்தது. இவ்வுயிர் என்றது தலைவன் உயிரை. உலகம் - உயிர்க்கிழவன் என்பர் நச்சினார்க்கினியர். மூவா முதலா வுலகம் (சிந். 1) பிரியல னாக நாம் உளேன் தெளிமே என்க. தலைவன் நம்மைப் பிரியலனாதலான் நாம் உயிருடன் உள்ளேம் தெளி என்றவாறு. மே - அசை. தேன் கொள்ளும் வேட்கையால் அறியாதேறிய மட வோன் தன்னைத் தாங்கும் வலியில்லாத முதுமால்பென்று சிறிதேறி யறிந்து மேலூக்கின் உயிர்க்கிறுதியாம் என்று அஞ்சி அம் மால்பினின்று இறங்கியது போல, நம்முயிர்க் கிழவனும் பொருள் வேட்கையால் அதற்குரிய பழைய வினையில் வலியறியாதிவர்ந்து அஃதிடை முறிந்து உயிர்க்கிறுதிபயக்கு மென்றுணர்ந்து அஞ்சிச் செல வழுங்கினன் என்றாளாம். நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி னுயிர்க்கிறுதி யாகி விடும் (குறள். 476) என்பது வினைவலி யறியாவழிப்படுங் குற்றத்தைப் பிறிது மொழிதலாற் கூறியதாதல் கண்டு ஈண்டும் பொருள் செயல் வினையே ஏணியாத லுணரலாம். ஆள்வினையி னாற்ற வகன்றவா நன்றுணரா, மீளிகொண் மொய்ம்பி னவர் (ஐந்திணை எழுபது 38) என்பது இக் கருத்தைப் பற்றி வந்ததென்க. முதுமால்பு என்றதற்கேற்பத் தலைவனைத் தாங்காது இடைமுறிதற்குரியதோர் அற்பவினை என்பதும் பொருந் தும். இனிப் பொருளையே அறப்பயனெய்தற்கு ஏணியாகக் கருதி, அதன்கண் உள்ளத்தாற் சிறிதேறி, அதன் நிலையாமை யால் வலியிலதென்று பின் தெரிந்து, மேலே சேறலுமாட் டாது அப் பொருள் நினைவை விட்டு மீளலுமாட்டாது ஏமாந்திருந்ததாகக் கருதினுமாம். மடவைகாணன் னெஞ்சே மாண்பொருள் மாட்டோட (ஐந்திணை ஐம்பது 39) என்புழி நெஞ்சுபொருண்மாட்டு விரைதல் கூறுதல் காண்க. முதுமால்பிற் சிறிதேறி அது தாங்காது என்று பின் அறிந்தவன் இறங்கவுமஞ்சுவனாதலுணர்க. ஏமாந்த தன்மைக்கு இது நன்கியையும். பொருட்கிவர்ந்து நில்லாத வுள்ளத்தவர் (ஐந்திணையெழுபது - பாலை 2) என்பது காண்க. பொருள் வானுலக மேறுதற்கு ... படிக்கால் (சிந். 2872) என்பதையும் அதற்கு நச்சினார்க்கினியர், அப் பொருள் ... மறுமையிற் செம்பொனுலக மேறுதற்கு மயக்கமற்ற ஏணியாம் எனவுரைத்ததையும் நோக்குக. நற்றிணையினுந், தாஞ்செய் பொருளள வறியார் (நற். 226) என வருதலான், நன்னுதல் நாம்தம் உண்மையி னுளமே (நற். 226) என்பது போறல் காண்க. துறையுள்ளும் பிரிவரெனக் கவன்றது கூறுதலான் பிரிந்தவ ரல்லராதல் தெளிவாம். உருத்திரனார் 274. புறவுப்புறத் தன்ன புன்கா 1 லுகாஅய்க் 2 காசினை 3 யன்ன நளிகனி யுதிர 4 விடுகணை வில்லொடு பற்றிக் கோடிவர்பு 5 வருநர்ப் பார்க்கும் வன்க ணாடவர் நீர்நசை வேட்கையி னார்மென்று 6 தணியும் இன்னாக் கானமு மினிய பொன்னொடு மணிமிடை யல்குன் மடந்தை அணிமுலை யாக முள்கினஞ் 7 செலினே. 8 (எ-து) பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. (வி) புறவின் முதுகை ஒத்த புற்கென்ற அடியையுடைய உகாய்மரத்து, காசினை அன்ன - மணிக்காசை ஒத்த. நளிகனி - செறிந்த பழங்கள். விடுகணை வில்லொடு பற்றி உகாய்க்கனி உதிரக் கோடு இவர்பு வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர் என்க. விடுதற்குரிய அம்புகளை வில்லுடன் பிடித்துக் கொண்டு உகாய் மரத்தின் கனிகள் உதிரும்படி அதன் கொம்பி லேறியிருந்து வழியிலே வருபவரைப் பார்க்கும் அருளில்லாத ஆண் மக்கள். தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் (குறள். 228) என்புழிப் பரிமேலழகர் வன்கண்ணவர் அருளில்லாதவர் என்றார். வேட்கையின் நார்மென்று - தாகத்தால் மரப்பட்டையைத் தின்று. நீர் நசை தணியும் - நீர்விருப்பங் குறையும். இன்னாக் கானமும். இன்னாமையைச் செய்யும் காடுகளும், அல்குல் மடந்தை அணிமுலையை ஆகம் உள்கினஞ் செலின் இனிய என்றவாறு. முலை ஆகம் உள்கினஞ் செலின் - முலையை நெஞ்சில் நினைவேமாய்ச் செல்லின். உள்கினஞ்செல்லின் - உள்ளங் குளிரும்; உள்ளங் குளிர்ந்தால் உடலுங் குளிரும்; ஆதலான் இன்னாத கானமும் இனிய என்றாளென்க. உடல் சிந்தை வசமன்றோ என்றார் கம்பநாடர். வேமென் னெஞ்ச மெய் வெதும்பும் (சிந். 1663) என்பதும் ஈண்டைக்கேற்ப நோக்குக. ஆகம் - நெஞ்சு (சிந். 1332)கற்புடையாட்டி உருவினை உள்ளிச் செல்லுதலால் விடுகணை வில்லொடு பற்றி வருநர்ப் பார்க்கும் வன்கணாடவர் உள்ள காடுகளும் ஏமமாய் இனிய ஆகும் என்று கருதிக் கூறினானாகவும் கொள்க. மாரி எண்கின் மலைச்சுர நீளிடை, நீநயந்து வருதலெவனெனப் பலபுலந், தழுதனை யுறையு மம்மா வரிவை.... நின் ஆய்நல முள்ளி வரினெமக், கேம மாகு மலைமுத லாறே (நற். 192) என்று களவிற் றலைவன் கூறுதல் காண்க. நீர் அரிய வேனிலிற் பாலையிற் சேறல் குறித்தானாதலாற் அக் காலந் தெரிய உகாய்க்கனி உதிர்தல் கூறினான். உகாஅய் மென்சினை யுதிர்வன கழியும் வேனில் (அகம். 293) என்றது காண்க. ஒக்கூர் மாசாத்தியார் 275. முல்லை யூர்ந்த கல்லுய 1 ரேறிக் கண்டனம் வருகஞ் சென்மோ தோழி எல்லூர்ச் சேர்தரு 2 மேறுடை யினத்துப் 3 புல்லார் 4 நல்லான் பூண்மணி 5 கொல்லோ செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு வல்வி லிளையர் 6 பக்கம் போற்ற ஈர்மணற் காட்டாறு வரூஉம் தேர்மணி கொல்லாண் 7 டியம்பிய வுளவே. (எ-து) பருவ வரவின்கண் வரவு நிமித்தந் தோன்றத் தோழி தலைமகட்கு உரைத்தது. (வி) ஈர் மணற் காட்டாறு - தண்மணற் காட்டு வழி. ஆண்டு இயம்பிய உளவே - உள்ளவே ஆண்டு இயம்பிய. யான் உள்ளிய அளவே ஆண்டு இயம்பியன என்றது யான் இப் போது அவர் வரவு உள்ளினேன்; அவ்வுள்ளிய அளவிலே ஆண்டு நற்சொற்கள் இயம்பிய என்றவாறு. இதுவே துறையுள் வரவு நிமித்தந் தோன்றக் கூறியது என்றதற்கு இயைதல் காண்க. இவ் வரவு நிமித்தந் தோன்றியதனால் நாள்தொறும் மாலையில் ஊர்புகும் நல்லான் மணிகொல் தேர்மணி கொல் கண்டனம் வருகஞ் சென்மோ என்றாள். மணிக்குரல் கேட்டவுடன் என்க. உளவே - உள்ளவே; தெருமரல் உயவே (250) என்புழி உய்யவை என்பது போலும். தலைவர் வருவம் எனக் குறித்தது இம் மாலையே யாதலானும், நாள்தொறும் ஆன் ஊர்புகுநேரமும் அஃதாதலானும் இரண்டையுங் கூறினாள். தேர்மணி யாயின் மகிழ்தலும், தேர்மணியின்றி ஆன்மணியாயிற்றுன் புறுதலும் செய்தலாற் றெளியக் கண்டனம் வருகம் என்றாள். முல்லை ஊர்ந்த கல் என்பதும் ஈர்மணற் காட்டாறு என்பதும் மழை பெய்தது காட்டிப் பருவவரவு குறித்தன. ஏர் கொள் கருங்கொடி முல்லை கவின முழங்கி (திணைமொழி ஐம்பது 26) என்ப. முல்லை யூர்ந்தகல் உயர்ஏறி - முல்லை மேலேறிப் படர்ந்த கல்லின் உயரத்து ஏறி. தலைவர் தேர் வருவது தெரியின் முல்லை சூடுதற்கேற்பக் கூறினாள். எல் ஊர்ச் சேர்தரும் – ஒளியுள்ள போதே ஊரிற் புகுதரும். ஏறுடை யினத்து நல்லான் - ஏறுடைமையாற் றுணையோடு கூடிய நல்ல பசுக்கள் என்றது உத்தீவன ஏது. ஆன்மணியை முற்படக் கூறியது நாள்தோறும் மாலையிற் கேட்பது கருதி. புல்லை யார்ந்து மக்கட்கு நன்மை செய்யும் பசுக்கள். புல்லுண்டு பால் பொழிதல் கருத்து. படுபுல் லார்ந்து, நெடு நில மருங்கின், மக்கட்கெல்லாம், பிறந்தநாள் தொட்டுஞ் சிறந்ததன் றீம்பா, லறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டு, மிதனொடு என்பது (மணிமேகலை ஆபுத்திரன் 51-55). செய்வினை - செய்தற்குரிய நல்வினை. அதனை முடித்த செம்மல். செம்மல் - நாயகன். சித்தன் பெரியவன் செம்மல் (சிலப். நாடுகாண். 183) நெடுந்தகை செம்மல் என்பது தொல்காப்பியம் (629) என்புழிக் காண்க. செம்மலானவன் உள்ளமோடு வரூஉந் தேர்- அவன் விரையும் உள்ளத்தோடு தொடர்ந்துவரும் தேர் என்பது கருத்து, துனைபரி துரக்குந் துஞ்சாச் செலவின், எம்மினும் விரைந்துவல் லெய்தி ... மென்றோள் பெறநசைஇச் சென்றவென் னெஞ்சே (அகம். 9) என்றது காண்க. செம்மலானவன் வல்வில் இளையர் உள்ளமொடு பக்கம் போற்ற வரூஉந் தேர் என்பதுமாம். சேந்துவர லறியாது செம்மல் தேரே (242) என்பது நோக்கி உணர்க. இங்ஙனம் கொள்ளாக்கால் தலைவன் இல்லாது வரூஉந் தேராதல் காண்க. கேட்பது ஆன்மணியோ தேர்மணியோ என்று ஐயப்பட்டு உண்மை காண்டற்குச் செல்லுதல் கூறியதனால், மணியோசை நிமித்தமாகாமை தெளியப்படும். தெளியப் பட்ட நிமித்தத்தின் பின் மணியோசையைக் கேட்டு, அதை நிமித்தத்தின் பயனாகக் கருதி, மாலைப் பொழுதுபற்றி ஆன்மணி யோசையோ என்று ஐயுற்றுக் கண்டனம் வருகம் என்றதாகக் கொள்க. தேர் மணியோசை வரவு தெரிப்பதல்லது வரவு நிமித்தம் ஆகாமையும் நினைக. 260 ஆம் பாட்டில் நிமித்தங்கள் வருவர் என்று துணிதற்கு ஏதுவாதல் காண்க. உளவே ஆண்டு இயம்பிய - உள்ளிய அளவிலே அங்கே நிமித்தங்கள் பல்கால் இயம்பின என்றது பல்காற் பல்லி படுவதைக் குறித்ததெனினும் அமையும். இங்ஙனம் பல்லி படுதொறும் பரவி அந் நிமித்தத்தின் பயனாகத் தலைவர் வருதலைக் காணவேண்டி, மாலையில் வாயில் வந்து தலைவி நிற்பது. பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக், கன்றுபுகு மாலை நின்றோள் (அகம். 9) என்பதனா னறியலாம். ஈண்டு அதுவே தோழியாற் கூறப்பட்டதென்று கொள்க. கூழிக்கொற்றனார் 276. பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும் 1 பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவள் உருத்தெழு வனமுலை 2 யொளிபெற வெழுதிய தொய்யில் காப்போ ரறிதலு 3 மறியார் 4 முறையுடை யரசன் செங்கோ லவையத் தியான்றற் கடவின் யாங்கா வதுகொல் பெரிதும் பேதை மன்ற அளிதோ தானேயிவ் வழுங்க லூரே. (எ-து) தோழிக்குக் குறைமாறாமல் தலைவன் கூறியது. (வி) பைஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்தும் - பசிய சாய்க் கோரையுள்ள பள்ளங்களிற் பாவைக்கு வேண்டியவற்றை ஆராய்ந்து கொண்டும். குறுமகள் பாவை தைஇயும் - குறமகளுடைய விளையாட்டுப் பாவையைப் பண்ணித் தந்தும். இவள் முலையில் யான் எழுதிய தொய்யில் அறிதலுமறியார் காப்போர் என்க. உருத்தெழு வனமுலை - சினந்தெழுகின்ற வனப்பினையுடைய முலைகள். சினத்தல் - உவமையாய்ப் புலவர் கூறுவன பலவற்றையும் கோபித்தல். ஒளிபெற எழுதிய தொய்யில் ஆதலான் இக் களவொழுக்கம் எளிதின் அவர் அறியலாகும் என்பது குறிப்பு. எழுதியது அறிவராயின் இவளைக் கரந்து காவாது எனக்கே நல்குவர் என்பது கருத்து. காப்போர் என்றான் தான் புகற் கருமையின் அவளைக் கரந்து காப்பின் வைத்தலான். முலை எழுதிய தொய்யில் புணர்ச்சியிற் சிவத்தலான் அதன் முன்னையினுந் தான் ஒளிபெற எழுதியது கண்டும் அறியார் என்றான். இதனால் முன்னுறு புணர்ச்சியுண்மை காட்டியவாறு. மணவாத கன்னியர் முலையில் தொய்யில் எழுதல் உண்டென்பது, புள்ளித் தொய்யிற் பொறிபடு சுணங்கின், ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம், புல்லென் மாலை (அகம். 239) என்றதனா லறியலாம். ஈண்டுப் பிறைதொழு கன்னியர்க்குத் தொய்யில் கூறுதல் காண்க. தொய்யில் இன்ன தென்பது, தூமணி முலைக டம்மைத் தொழுதகக் கமழுஞ் சாந்திற், காமரு காம வல்லிக் கொடிகவின் கொண்டு பூத்துத். தூமணி கொழுந்து மென்றோட் டுயல்வர எழுதி னானே (சிந். 2442) என்றதனானும், அதற்கு நச்சினார்க்கினியர், காமவல்லியாகிய கொடி முலைகள் தம்மை இடங்கொண்டு கவின்பூத்துத் தோளிலே கொழுந்தசையும்படி தொழுதக்க சாந்தினா லெழுதினான் என்க,” என்றதனானுமுணர்க. எழுதிய தொய்யில் அறியார் என்றது தொய்யிலெழு தியது அறியார் எனினுமமையும். அறியார் காப்போராயினும் நன்று செய்தாரை அழித்தலும் தீது செய்தாரைத் தெறுதலும் ஆகிய முறையை உடைய வேந்தன் கோல் கோடாத அவையின்கண் யான் காக்கப்பட்ட தன்னை வினாவின். யாங்காவது கொல் - இவள் நாணம் எங்ஙனம் ஆவதோ என்றவாறு. பெரிதும் பேதைமன்ற - இவள் தேற்றமாக மிகவும் பேதையாயினாள். உள்ளது புலப்பட அறத்தொடு நின்று வரைதலல்லது உடன்போதல் செய்யாது நாண் மீதூரப்பட்டு ஒடுங்கிக் காப்பினின்று காம நோயுழத்தலாற் பெரிதும் பேதை என்றான். அவையத்துக் கடவின் - மன்றத்து மடலூர்ந்து வந்து கடவின் என்றவாறு. யான் தற்கடவின் என்றான் இவள் நாணினைத் தான் காத்தொழுகுவதே தன் கருத்தென்பது தெரிய. தற்கடவின் என்றதனாற் பேதை தலைவியேயாதல் தெளியலாம். தன்னைக் கடவிச் செய்தலாற் றன்னைத் தூற்றும் படி செய்பவள் தானே யாதலாற் பெரிதும் பேதை என்றான். தூற்றலும் பழியே (32) என்பதனால் அது செய்ய மாட்டாமை தெரியக் கடவின் என்றான். அவள் பேதையாயினும் அவட்குப் பாங்காகிய நீயும் அறிவில்லை யாவையோ என்பான் இவ்வழுங்கலூர் அளிதோ என்றான். இவ் வருத்தமுடைய ஊர் அறிவில்லதோ என்றவாறு. அளியரோ அளியர் (அகம். 43) என்புழி அளியர் என்பது அறிவில்லாதோர் என்றவாறு. எனப் பழையவுரைகாரர் கூறியது காண்க. நேரே அறிவில்லாய் என்று கூறமாட்டாமல் ஊர் அறிவில்லதோ என்றான். பாவை - பஞ்சாயைக் கிழித்துச் செய்த பாவை. காய்க் கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ (கலி. 76) என்புழி நச்சினார்க்கினியர். தண்டாங் கோரையைக் கிழித்துப் பாவையாகத் தந்த அச் சிற்றுபகாரத்திற்கோ என்பது காண்க. ஓரிற் பிச்சையார் 277. ஆசி றெருவி னாயில் 1 வியன்கடைச் செந்நெ லமலை 2 வெண்மை வெள்ளிழு தோரிற் பிச்சை யார மாந்தி அற்சிர 3 வெய்ய வெப்பத் தண்ணீர் 4 சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே மின்னிடை நடுங்கு கடைப்பெயல் 5 வாடை எக்கால் வருவ 6 தென்றி 7 அக்கால் வருவரெங் காத லோரே. (எ-து) தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாயது. (வி) ஆசில் தெரு - பொய் கொலை களவு கட் காமமாகிய குற்றங்கள் கடிந்தார் உறையுந் தெரு என்பது. இதனால் அகந்தூயார் உறையுந் தெரு என்றாள். நாயில் வியன்கடை - நாயில்லாத சிறந்த மனைவாயிலில். இதனாற் புறந்தூய்மை குறித்தாள். நாய்விளி கேளாது மறைவிளி கேட்கும் வியன் கடை என்பது கருத்தாம். கடை என்றாள் மனையினுட் புகாது கடைத் தலையில் நின்று மாது கரங்கொள்வான் ஆதலான். செந்நெல் அமலை - செந்நெற்சோற்றுத் திரளை. ஊன மலை (கலி. 50) என்ப. எதிக்கு நூல்கள் விதித்த எட்டுக் கவளம் என்றவாறு. வெண் மை - நரை எருமையின். வெள் ளிழுது - வெண்ணெய்யோடு மை - எருமை. வைகு புலர் விடியல் மைபுலம் பரப்ப (41) என்பது காண்க. நரை எருமை பசுவொப்பது என்பது பற்றி வெண்மை என்றாள். அன்று கடைந்தெடுத்த இழுது என்பது தெளிய வெள்ளிழு தென்றாள். ஓரிற்பிச்சை ஒப்போரில்லாக எட்டில்லிற் சென்று எண்கவளம் பிச்சையாகக் கொள்ள வேண்டாது எம் ஒருமனைக்கண்ணே அப் பிச்சை முழுவதும் பெறுதல் கருதிற்று, செந்நெல்மலை வெண்மை வெள்ளிழுது என்பவற்றால் உணவின்றூய்மை குறித்தாள். ஆர மாந்தி - உடலோடு பொருந்தற் பொருட்டு உண்டு. இதனாற் பசியொழிதலளவே குறித்தாள். அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் - பனிக்காலத்திற் கேற்ற விரும்பத்தக்க வெப்பத்தொடு கூடிய மெல்லிய நீரை. தண்வளி (குறள். 1239) என்புழிப் போலத் தண்மை மென்மைக்கு ஆயது. நாவிற்கு மினிதாய்த் தீதறவெறியுந் தண்மையும் நுண்மையும் தனக்கிணையான தெண்ணீர்.” வெப்பஞ் செய்து பின் தட்பமாகிய நீர் என்பதும் ஒன்று. சேமச் செப்பிற் பெறீஇயர் - மூடியாகிய காப்புடைய கமண்டலத்திற் பெற்று வைப் பாயாக. இதனாற் றாகம் தீர்தல் குறித்தாள். இவற்றிற்குமேல் நீ வேண்டுகிலாய் என்பது குறிப்பு. மின்னிடை நடுங்குங் கடைப்பெயல் வாடை - மின்னலை ஒத்த இடையினையுடைய தலைவி நடுங்குதற்குக் காரணமாக மழையின் கடையில் வாடை எப்போது வருவது அப்போது எங்காதலர் வருவர் என்று கூறாநின்றாய். ஆதலான் அப்போது எம் ஓரிற் பிச்சைமாந்தி நீர் பெறீஇயர் என்றா ளென்க. எங்காதலர் வந்த பின்னர் அவருடன் துறவோர்க்கெதிர்தல் செய்வளாதலின் அவ்வமயம் நீயே பெறீஇயர் என்றாள். நீயே என்றது அவ்வாறு பருவத்தையும், அவர் வரவினையும் உரைத்த நீயே பெறுக என்றதாம். இங்ஙனம் மகிழ்வுரைத்த திருவாய்க்குச் சோறும் நீரும் ஊட்டி எந்நன்றியறிதலைப் புரிவேமாக என்பது குறிப்பு. மின்னிடை நடுங்கும் வாடையுடன் அவள் நடுங்காமைக்குக் காரணமாக எங்காதலர் வருவர் என்றி என்க. எக்கால் வருவது அக்கால் வருவர் என்றது உடன் வருதல் குறித்தல் காண்க. அறிவன் தலைவற்கு உசாத்துணையாய் அவற்கு உறுதி கூறும் வாயிலாதலான் அவனையே அவன் குறித்த பருவமும், அப் பருவத்து அவன் தப்பாது வருதலும் வினாவியறிந்து தோழி கூறினாளாம். துறையுள் அவன் குறித்த பருவ வரவு என்பது அவன் குறித்த பருவத்து வருதல் எனப் பொருள் கொள்ளக் கிடத்தல் காண்க. தலைவியும் தோழியும் பருவத்தினும் பருவத்து அவன் வருதலையே தெரிய விரும்புவர் என்பது நன்குணரலாம். இப் பாட்டில் தலைவி பார்ப்பனி என்று உய்த்துணரலாகும். ஈண்டு அறிவன் துறவியாகிய முனிவன் என்று கொள்க. வாயிற் கடையின் மாது கரப்பிச்சை கூறுதலான் அறியலாம். என்றி - என்று கூறுகின்றாய். புதுவது கவினினை யென்றி (கலி. 128) என்ப. பேரி சாத்தனார் 278. உறுவளி யுளரிய 1 வந்தளிர் மாஅத்து முறிகண் டன்ன மெல்லென் சீறடிச் சிறுபசும் பாவையு மெம்மு 2 முள்ளார் கொடியர் வாழி தோழி கடுவன் ஊழுறு தீங்கனி யுதிர்ப்பக் கீழிருந் தேற்பன 3 வேற்பன 4 வுண்ணும் பார்ப்புடை 5 மந்திய 6 மலையிறந் தோரே. (எ-து) பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் உரைத்தது. (வி) உறுவளி - தீண்டுமியல்புடைய காற்று. சுடுதீ என்பது போலக் கொள்க. உளரிய - தடவிய. மாஅத்து அந்தளிர்முறிகண் டன்ன - மாமரத்து அழகிய தளிரையும் முறியையும் கண்டாற் போன்ற மெல்லென்கின்ற சீறிய அடிகளையுடைய சிறிய பசிய குழவியையும், எம்மையும் உள்ளாராய் மலையிறந்தோர் என்க. தளிரும் முறியும் வேறென்பது தொல்காப்பியனார், இலையே தளிரேமுறியே தோடே (தொல்.மரபியல். சூத். 642) என்ப தனானறிக. பதிற்றுப்பத்துரைகாரரும், ததைந்த காஞ்சி (பதிற். 23) என்புழித் தளிரும் முறியும் வேறுவேறு கூறுவர். ஈண்டுத்தளிர் செம்மை பற்றியும், உவமையாயின என்னலாம். ஈண்டுப் பாவை தானீன்ற பெண்ணிளங் குழவி என்பது தெரிய மெல்லென் சீறடிச் சிறு பசும்பாவை என்றாள். நிறங்கிளர் சீறடி நெய் தோய் தளிரின் (சிலப். வரந்தரு. 19) என மணிமேகலைக்குக் கூறுதல் காண்க. வயங்கொளி நிழற்பா றலலி னெறித்த கூந்தற், குழற்குரற் பாவை யிரங்கநத் துறந்து (அகம். 265) என்புழியும் பெண் மகவாதல் காண்க. இத் தலைவியர் பெண்மகப் பெற்றவரென்க. புதல்வர்ப் பெறுதலொடு, மகளிர்ப் பெறுதலும் இவர்க்குக் கூறு தலுண்டென்பது. அவரும் பைந்ததொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, நன்றி சான்ற கற்போ, டெம்பா டாத லதனினு மரிதே (நற். 330) என்பதனான் நன்கறிக. துறைவற்குப் பைஞ்சாய்ப் பாவையை யீன்றனன் யானே (ஐங். 155) என்புழிப் பழையவுரைகாரர், மகப் பேற்றிற்குரிய காலம் கழிய ஒழுகுகின்றாய் எனக் கூறியதனா னும் தலைவிக்கு ஈன்ற பாவையை உடையளாகும் வேட்கை இனி துணரப்படும். நற்றிணையுள், ஈனாப் பாவை (127) என்பதும் ஈனும் பாவைக்கு மறுதலையாதல் காண்க. ஈண்டுத் தலை வரும், பாவையும் தானுமாக இயைந்ததொரு குடும்பமா தற்குப் பொருந்தவே செல்வழியிற் கடுவனும் பார்ப்புடை மந்தியும் பின்னைக் கூறுதலானும் உண்மையுணரலாம். இதுவென் பாவைக் கினியநன் பாவை (ஐங். 375) என்புழி என் பாவை என்பது என் புதல்வி என்றாதலும், மயிற் கணன்ன மாண்முடிப் பாவை (184) என்புழித் தலைவியா தலும் நோக்கி இப் பாவை என்னுஞ்சொல் இடநோக்கிப் பொருளுணர வேண்டுவதா மென்க. தாம் பெற்ற குழவியையும், எம்மையும் உள்ளாராதலாற் கொடியர் என்றாள். இக் கொடுமையாலவர் ஒரு கேடுமிலராக வாழி என்றாள். வாழி ஆதன் வாழி அவினி (ஐங். 1) என்ப. கடுவன் மரத்தின் மேலிருந்து ஊழுறு தீங்கனி யுதிர்ப்ப என்றது மரத்தின் மேலிருந்தும் கடுவன் தான் முந்துற வுண்ணாது முதிர்ந்த இனிய கனிகளையுதிர்த்து மந்திக்கும் பார்ப்புக்கும் ஊட்டும் அன்புடைமை தெரிய வைத்ததாம். கீழிருந்து எனக் கூறுதலான் கடுவன் மேலிருந்து உதிர்த்தல் பெறப்பட்டது. தீங்கனியுதிர்ப்ப என்றதனாற் றானுண்ணாமை தெரிந்தது. மரமேறுதற் றொழிலின்னுங் கற்று நிரம்பாத பார்ப்புடைமையான் மந்தி கடுவனுடன் மரத்திலேறியிருக் காமை குறித்தாள். ஏற்பன ஏற்பன - ஏந்தின ஏந்தின ஆய கனிகளை உண் ணும் மந்தி. பார்ப்புடை மந்தி - மகவுடை மந்தி (29). பார்ப் புடை மந்தியைக் காக்கும் கடுவன் நிலைமை பாவையை யுடைய மனையாட்டியை இல்லத்தே இருந்து தலைவர் காக்க வேண்டுவதை அறிவுறுத்தாது விடுமோ என்பது கருத்து. இங்ஙனம் செல்வழியிற் கண்டும் இறந்தோர் கொடியர் என்பதுமாம். மதுரைமருதன் இளநாகனார் 279. திரிமருப் பெருமை யிருணிற மையான் பருமிட றியாத்த பகுவாய்த் தெண்மணி புலம்புகொள் யாமத் தியங்குதொ 1 றிசைக்கும் இதுபொழு 2 தாகவும் வாரார் கொல்லோ மழைகழூஉ மறந்த 3 மாயிருந் துறுகல் துகள்சூழ் யானையிற் பொலியத் தோன்றும் இரும்பல் 4 குன்றம் போகித் 6 திருந்திறைப் பணைத்தோ ளுள்ளா தோரே. (எ-து) வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) திரிமருப் பெருமை - திரிந்த கொம்பினையுடைய ஆணெருமை. திரிமருப்பு - சுருட்டைக் கொம்பென வழங்குவது மள்ளரன்ன தடங்கோட்டெருமை (ஐங். 94) என்புழிப் போலக் கடாவாயது. எருமை மறம் - கடாப் போலச் சிறக்கணித்துநிற்கு நிலை என்று நச்சினார்க்கினியர் கூறுதலானும் உணர்க. எருமை போரோ ரோபுகழ் கொடுத்துமே என்னுந் தக்கயாகப் பரணி உரையில், எருமை பெண்ணொழி மிகு சொல்லாகக் கொள்ளுதல் காண்க. இருள்நிற மையான் என மேலே கூறுதலானும் இஃது ஆணாதல் தெளியலாம். புலம்பு கொள் யாமத்துத் திரிமருப் பெருமை இயங்கு தொறும், இருணிற மையான் பருமிட றியாத்த பகுவாய்த் தெண்மணி இசைக்கும் இது பொழுது என்க. கடா இயங்குந் தொறும் அதனைப் பிரிதற்கு மனமில்லாத ஆன் எருமையும் உடனியங்குதலால் அதன் பரிய கழுத்திற் கட்டிய மணி ஒலிக்கும் இவ்வமயம் என்றாளென்க. மையான் - எருமையான். பருமிடறு என்பதே பாடமென்பது பகுவாய் என மோனையிற்றொடுத்தது கொண்டுணர்க. வருமுலை, வருமருப்பு என்பன போல்வது மிடறன்மையுணர்க. மேல், நல்லே றியங்குதோ றியம்பும், பல்லான் றொழுவத் தொருமணிக் குரலே (190) என்புழி ஏறும், ஆனும் கூறி யாங்கு ஈண்டுக் கடாவும், காரானும் கூறினா ரென்றுணர்க. புலம்பு கொள்யாமத்து இது பொழுதாகவும் - தனிமை கொண்ட இரவில் இவ்வமயமாகவும் என்றவாறு. சிறுவீடு மேய்தற்கண்கடாவும் காரானும் உடன் சேறல் குறித்தாள். இது பொழுதாகவும் வாரார் கொல்லோ - காமபோகத்திற் கினிதாகிய இரவு கழிதல் குறித்து இரங்கியவாறாம். மழைகழூஉ மறந்த - மழை கழுவுதல் மறந்த. மாயிருந்துறுகல் - கரிய பெரிய பாறை. புழுதி சூழ்ந்த யானையைப் போலச் சிறக் கத் தோன்றும் இரும்பல் குன்றம் என்க. யானையிற் றோன்று இரும்பல்குன்றம் பொலியப் போகித் தோளுள்ளாதோர் எனினும் அமையும். வழங்கும் செல்வத்தால் தாம் பொலிதற் பொருட்டுச் சென்றார் என்பது கருத்து. ஒன்று ஒன்றாகத் தோன்றும் குன்றம் என்றதனால் ஆண்டுச் செல்வத் தோற்றம் அல்லது உண்மையிற் பயனின்மை குறித்தாளாம். தோளுள்ளாதோர் - கிடைக்கும் பொருள் வேண்டிக் கிடைத்த இன்பத்தை இழந்து மறந்தவர் என்றவாறு. திருந்திய சந்தினையுடைய மூங்கில் போன்ற தோள்கள் தம் பிரிவால் இன்னபடியாமென உள்ளாதோர் என்பதும் ஒன்று. நக்கீரர் 280. கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் 1 நெஞ்சுபிணிக் கொண்ட வஞ்சி லோதிப் பெருந்தோட் குறுமகள் 2 சிறுமெல் லாகம் ஒருநாள் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் 1 யானே. (எ-து) கழற்றெதிர்மறை. (வி) கேளிர் - எனக்குக் கேள் ஆயினிர். நீர் கேளிராய் நாளும் வாழி. என் நெஞ்சு பிணிக்கொண்ட - என் நெஞ்சத்தைப் பிணித்தல் கொண்ட குறுமகள் என இயைப்பதும் ஒன்று. சிறு மெல் லாகம் - இளைய மெல்லிய மார்பு. ஒருநாள்புணர - ஒரு நாள்வலிய அணைக்க. புணரின் - நான் அணைக்கப்பெறின். அதன் மேல் யான் அரைநாள் வாழ்க்கை யும் வேண்டலென் - நான் அரை நாட்பொழுது உயிர் வாழ்தலும் விரும்பேன் என்றவாறு. பிறந்து எய்த வேண்டிய பயன் முழுதும் எய்திய தாதலால் மேல் அவள் புணராத அரைநாள் வாழ்க்கையும் வேண்டேன் என்றான். ஒத்த இன்பம் இருவரும் துய்த்தல் கருதிக் குறுமகள் ஆகம்புணரத் தான் புணரின் என்றான். இங்ஙனம் அணைப்பவனை அணைக்கப் பெறாத மரப்பாவையை அணைத்தா மென்று புணரப்புணரின் எனக் கூறினான். ஆகம் - மார்பு. அம்மெல்லாக நிறைய வீங்கி ... ... முலை செப்புடனெதிரின (159) என்ப. அஞ்சில் ஓதிப் பெருந்தோட் குறுமகள் என்றான் தான் கிடந்த கூந்தற்பாயலும், அணைத்த தோள்களும் மறக்க முடியாது நெஞ்சு பிணித்தலான். கேளிர் கேளிர் நாளும் வாழியோ யான் புணரப் பெறின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் என்றானென்க. இத்தகைய இன்பமொன்றில்லாது இவ்வுலகில் நாளும் வாழ்தல் இவள் ஆகம் புணரப் புணரும் சிறுபோது வாழ்க்கைக்கு ஒவ்வாதென்று பாங்கனை மறுத்தா னென்க. எல்லா மெவனோ பதடிவைகல் ... ... அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்த நாளிவண் வாழு நாளே (323) என்பதனால் இவ்வுண்மையுணர்க. பாங்கன் அந்தணனாதல் தெரியக் கேளிர் எனப்பன்மையாற் கூறினான். கேளிர் - முன்னது கேட்பீர் எனினும் ஈண்டைக்கமையும். நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ (திருப்பாவை 2) என்பது காண்க. குடவாயிற் கீரத்தனார் 281. வெண்மணற் பொதுளிய பைங்காற் கருக்கின் கொம்மைப் போந்தைக் குடுமி வெண்டோ 1 டத்த வேம்பி னமலை வான்பூச் சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக் குன்றுதலை மணந்த காலம் சென்றனர் கொல்லோ சேயிழை நமரே. (எ-து) பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு தோழி வற்புறுப் பாட்குக் கிழத்தி உரைத்தது. (வி) சேயிழை - விளி. நமர் - நம்மவராகிய தலைவர் சுரி யார் உளைத்தலை பொலிய - தம் கடைகுழன்ற ஆர் சூடிய மயிர்த்தலை மேலும் விளங்க. போந்தைக் குடுமி வெண் டோடு வேம்பின் அமலை வான்பூச் சூடிக் கானஞ் சென்றனர் கொல்லோ என்க. ஆருடைய சுரியுளைத் தலை என்க. ஆர் - ஆத்தி. இது பாடியவர் சென்னிதன் குடவாயிற் கீரத்தனார் (அகம். 44) ஆதலான், அவர்தம் சோணாட்டுத் தலைவற்கு ஆருளைத்தலை கூறி, அவன் மற்றை இருவேந்தர் நாடுகளிலும் பொருண்மேற் பிரிதலான், அந் நாடுகட்கும் அவன் நட்புரியனாதல் தெரியப் போந்தையும் வேம்பும் அத் தலையிற் பொலியச் சூடிச் சேறல் கூறினார். போந்தை சேரர்க்குரியது. வேம்பு பாண்டியர்க்குரியது. ஒன்றே சூடிற் பகை தெரிதல் வேண்டியதாகு மென்று இது தன்னுறுதொழிலின் நட்பாதல் தெரிய மூன்றுஞ் சூடிச் சேறல் கூறினாள். அவ்வந்நாட்டுப் பாலையில் ஆறலை கள்வர் அலைக்காமைக்கும் சூடினான் என்பதுமாம். உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப் போந்தை வேம்பே ஆரென, வரூஉ மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். புறத். 5) என்புழித் தன்னுறு தொழிற்குச் சூடுதல் நச்சினார்க்கினியர் உரை நோக்கி அறிக. ஈண்டும் தொல்காப்பிய முறைக்கியையவே அவர் சொல்லே போற்றிப் போந்தை வேம்பு ஆர் எனக் கிடத்தல் நோக்கி உண்மை உணர்க. பாலை நிலத்து வில்லுடைக் குறும்பின் அவ்வந்நாட்டரசற்குரியவனாக வழிச் செல்வோர் கூறிப் போதல், செவ்வரைநாடன் சென்னிய மெனினே, தெய்வ மடையிற் றேக்கிலைக் குவைஇநும், பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவீர் (பெரும்பாண். 103-5) எனக் கூறுதலான் அறியலாம். போந்தை பெருமணலுலகமாகிய நெய்தல்நிலத்து மரமாதலான் அதற்கியைய வெண்மணற் பொதுளிய என்றார். வெண்மணற் பொதுளிய கொம்பைப் போந்தையின் பைங்காற் கருக்கின் குடுமி வெண்டோடு என்க. பொதுளிய - தழைத்த. பைங்காற்கருக்கு - பசிய மடற்கருக்கு. குடுமி வெண்டோடு - உச்சி வெண்குருத்தோலை. கொம்மைப் போந்தை - அடி கொம்மையாகிய பனை. அத்த வேம்பின் அமலை வான்பூ - பாலையிலுள்ள வேப்ப மரத்தின் ஒரு திரளான வெள்ளிய பூக்கள். தோடும், பூவும், ஆருளைத்தலை பொலியச் சூடிச் சென்றனர் கொல். தலைவர் ஊறிலாது சேறல் குறித்துச் சூடிச் சென்றனரோ என்றாள். போந்தைக் குடுமிக் கொம்மை வெண்டோடு எனினும் அமையும். கொம்மை - இளமை. நாகம் போத்தனார் 282. செவ்விகொள் வரகின் செஞ்சுவற் கலித்த கெளவை 1 நாற்றின் காரிரு ளோரிலை நவ்வி 2 நாண்மறி 3 கவ்விக் 4 கடன்கழிக்கும் காரெதிர் தண்புனங் 5 காணிற் கைவளை நீர்திகழ் சிலம்பி னோராங் கவிழ்ந்த 6 வெண்கூ தாளத் தந்தூம்பு புதுமலர் ஆர்கழல் புகுவ 7 போலச் சோர்குவ 8 வல்ல வென்பர்கொ னமரே. 9 (எ-து) வினைவயிற் பிரிந்தவிடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது. (வி) செஞ்சுவற் கலித்த செவ்விகொள் வரகின் கெளவை நாற்றின் காரிரு ளோரிலை - சிவந்த மேட்டு நிலத்துத் தழைத்த பருவச் செவ்வி கொண்ட வரகின் சிள்வீட்டி னாரவாரமுள்ள மழைக்கு இருள்கின்ற நாற்றினுடைய ஓரிலையை. கவ்வைப் பரப்பு (அகம். 89) என்புழிச் சிள்வீட்டினாரவாரத்தையுடைய பரப்பு என்றார் பழையவுரைகாரர். வரகின் தோட்டினை இலை என்று வழங்குவது இடுமுறை நிரம்பிய வீரிலை வரகின் (நற். 121) என்பதனான் அறிக. நவ்விமறிக் கவ்வி நாட்கடன் கழிக்கும் என்க. நவ்விமறி - நவ்விப்பிணாவின் கன்று. நவ்விப் பிணா (அகம். 7. துறை) என்ப. நவ்வி ... பிணையெனப்படுமே (தொல். 613) என்ப. ஓரிலை கவ்விய அளவிலே நாட்பசி தீர்ந்து கடன் கழிக்கும் என்றது அவ்விலையின் செழுமை குறித்தது. நாட்கடன் - காலையூண் கடன். நவ்வி நன்மறி என்பதூஉம் பாடம். நவ்விப் பிணையின் நன் கன்று என்றவாறு. கழிக்கும் காரெதிர் கானம் காணின் - கழித்தற்குக் காரணமான கார்ப்பருவம் எதிர் கொண்ட காட்டைத் தாமில்லாது நீ மட்டும் பார்க்கின். நமர் நின் கைவளை சோர்குவவல்ல என்பர் கொல் என்றவாறு. இது பருவத்திற் றோழி கானங் கண்டபின் கிழத்திக் குரைத்தது என்க. தலைவனுந் தலைவியுஞ் சேர்ந்து காட்டினைக் காண்டல், நன்னல மெய்தினை புறவே நின்னைக், காணிய வருவதும் யாமே, வாணுத லரிவையொ டாய்நலம் படர்ந்தே (ஐங். 420) என்பதனா னுணர்க. தண் புனங் காணின் என்றது தனித்துக் காண்டல் விரும்பாமை குறித்தது. காணிற் கண்டநின் கையின் வளைகள் சோர்வன வல்ல என்று எண்ணுவரோ நம்மவர் என்றவாறு. தலைவி பருவத்துத் தழைத்த கான் தனியே கண்டு வருந்தி நிற்றல், தேனவன்றன் கானத்தெழினோக்கித் தானவின்ற, கற்புத் தாள் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி, நிற்பாள் நிலை (ஐந்திணை ஐம்பது 10) என்பதனானும் அதற்குப் பழையவுரைகாரர், தான் பயின்ற கற்பென்னும் சிறைத் தாளினைச் செறித்து உயிர் காத்துக் கவுண்மிசைக் கையூன்றி நிற்பாளது நிலைமையை என்றுரைத்ததனானும் அறிக. நவ்வியும் மறியும் கண்டவுடன் தான் இவ்வாறு மகப்பெற்று மகிழும் இளமை பிரிவிற் கழிகின்ற தென்று உள்ளஞ் சோர்தலால் உடல்மெலிந்து கைவளை சோர்தல் கூறினாள். கெளவை நரற்றின் கார் என்று கொண்டு ஆரவார முழக்கும் இனிய கார் என்பதுமாம். காரிருள் ஓரிலை - மழை இருளிலுண்டாகிய ஓரிலை எனினுமமையும். ஓராங்கவிழ்ந்த - ஒன்று போல மலர்ந்த வெண்தாளத்துப் புதுமலர். அந்தூம்பு ஆர் கழல்பு - அழகிய உட்டுளையுடைய ஆர்க்குக் கழன்று. வெண்கூதாளம் - வெண்தாளி. வெண்மை பற்றிச் சங்குவளைக்கு உவமை கூறினார். பாலை பாடிய பெருங்கடுங்கோ 283. உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர் இல்லோர் வாழ்க்கை யிரவினு 1 மிளிவெனச் 2 சொல்லிய வண்மை 3 தெளியக் காட்டிச் சென்றனர் வாழி தோழி யென்றும் கூற்றத் தன்ன கொலைவேல் மறவர் ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் 4 செகுத்த படுமுடை 5 பருந்துபார்த் திருக்கும் நெடுமூ திடைய 6 நீரி லாறே. (எ-து) தலைவன் பொருள்வயிற் பிரிந்தவழி ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு, அவர் பிரிய ஆற்றே னாயினே னல்லேன். அவர் போயின கானத்துத் தன்மை நினைந்து வேறு பட்டேன் என்று கிழத்தி சொல்லியது. (வி) உள்ளது - தாம் தேடாது தாயத்தின் உள்ளதாயது. சிதைப்போர் - அச் செல்வத்தை அழிப்பவர். ஆக்கஞ் சிதைவின்றி யெச்சத்திற் கேமாப் புடைத்து (குறள். 112) ஆக உள்ளதாதலான் அதனைத் துய்ப்பவரைச் சிதைப்போர் என்றார். உளரெனப்படாஅர் - அவ்வுள்ளது துய்த்து உயிர் வாழ்கின்றாராயினும் அங்ஙனம் உயிருள்ளாராக எண்ணப் படார்; இறந்தாராகவே எண்ணப்படுவர். அச் சிதைப் போர் வாழ்க்கை இல்லோர் இரவினும் இளிவென - அவர் உள்ளது சிதைத்து உயிர்வாழ்தல் இயல்பாகவே வறியராயவர் இரந்துவாழ்தலினும் இளிவரவிற்று என்று அரிதுமன் றம்ம இன்மைய திளிவே (நற். 262) என்ப. இல்லோர் வாழ்க்கை இறவினு மிழிவென என்பது பாடமாயின், உள்ளது சிதைத்தபின் இல்லோராய் வாழ்தல் சாவினும் இழிவாய தென்று என்க. என்றது இல்லோராய் வாழ்தற்குச் சாதல் மிகவும் மேலாயது என்பது கருத்து. சொல்லிய - சொற்ற அளவில். அண்மை தெளியக் காட்டி - தாழ்க்காதுவரும் அண்மைநாளை நான் தெளியும் வண்ணம் சுட்டிக் காட்டி. இஃது அரும்புதற்கு முன் வருவல் என்றாற் போல அண்மை தெரிவித்தல் அண்மை தெளியக் காட்டியதும். மௌவல் ... ... நின்னெயிறேர் பொழுதி னேய்தருவேம் (நற். 316); அதுகாறும் ஆற்றியிருப் பேனாயினும், மறவர் வழங்குநர்ச் செகுத்த நீரிலாறு சென்றனராதலான், வேறுபடுவேன் என்றாளாகக் கொள்க. சென்றனர் வாழி என்னும் என்றதனால் அவர்க்கு ஏதம் வாராது வாழ்த்தினாள். தோழி விளி, இங்ஙனம் அஞ்சி வாழ்த்தியதனால் தலைவி வேறுபாடு காணப்பட்டதாமென்க. சொல்லிய வன்மை எனப் பாடங் கொண்டு சொல்லிய மனவலி என்பதும் உண்டு. கூற்றத்தன்ன கொலைவேல் மறவர் - கூற்றத்தை ஒத்த கொலை தப்பாத வேலையுடைய மறவர். ஆற்றிருந்து - வரும் வழி யிருந்து. அல்கி வழங்குநர்ச் செகுத்த - பொழுதுபட்டு வழி நடப்பவரைக் கொன்ற. அல்கல் - இரவு வருதல் (114), படுமுடை - பெருமுடை - நாற்றமுடைய தசை. முடை - ஆகு பெயர். கலவுக் கழி கடுமுடை (அகம். 3) என்புழிப் போலப் பார்த்திருக்கும் என்றது பெருமுடை நாற்றம் உண்டாம் அளவும் காத்திருக்கும் என்றவாறு. அந்த நாற்றமுள்ள தசையே பருந்து விரும்புவதென்க. படுமுடை நசைஇய பறைநெடுங் கழுதிற் பாறு (அகம். 24) என வருதல் காண்க. நெடுமூதிடைய - நெடிய பழமையான இடையீடுகளை யுடைய. நீரில் ஆறு - நீரில்லாத வழி. சென்றனர் என்றும் வாழி என்றாளென்க. இடை - இடையீடு (புறப்வெண், பொது வியல் 6) இடையீடுகளைத் தம் வலியால் நீங்கினும் நீரின்மைக்கு என் செய்வரோ என்று அஞ்சுதலான் என்றும் வாழி என்றாளாம். மூதிடை - முதுமையான இடையீடு. ஆறலைகளவே அந் நிலத்துத் தொன்று தொட் டுண்மையாற் கூறினாள். மிளைவேள் தித்தன் 284. பொருத யானைப் புகர்முகங் கடுப்ப மன்றத் துறுகன் மீமிசைப் பலவுடன் ஒண்செங் காந்த ளவிழு 1 நாடன் அறவ னாயினு மல்ல 2 னாயினும் நம்மே சுவரோ தம்மிலர் கொல்லோ வரையிற் றாழ்ந்த வால்வெள் 1 ளருவி கொன்னிலைக் குரம்பையி னிழிதரும் இன்னா திருந்தவிச் சிறுகுடி யோரே. (எ-து) வரைவிடைத் தோழி கிழத்திக்கு உரைப்பாளாய் உரைத்தது. (வி) யானை முகப்புகர் கடுப்பத் துறுகன் மீமிசைக் காந்தள் பல உடன் அவிழும் நாடன் என்க. காந்தள் போலச் செம்புகர் ஆதல் வேண்டிப் பொருதயானையைக் கொண் டார். வேலாண் முகத்த களிறு (குறள். 500) என்புழிப் போல முகம் முகத்திலுள்ள கோட்டிற்கு ஆகுபெயரெனக் கொண்டு, பொருதயானைக் கோடு கடுப்பக் காந்தள் அவிழும் என்பதுமாம், கொன்ற யானைக் கோடுகண் டன்ன செம்புடைக் கொழுமுகை யவிழ்ந்த காந்தள் (நற். 294) என்ப. பொருத யானை வெண்கோடு கடுப்ப, வாழை யீன்ற வையேந்து கொழுமுகை (நற். 225) என்ப. துறுகல்லிற்கு யானையும் காந்தட்குப் புகரும் உவமையாயின. நற்றிணை யினும் யானைமுகத்து வரிக்குக் காந்தளை உவமித்தார் (176). அறவனாயினும் - வரைதற்குரிய அறநெறியை யுடைய னாயினும், அல்லன் ஆயினும் - அந் நெறியை விட்டு மட லேறுவானாயினும். நம் ஏசுவரோ - இக் களவொழுக்கம் பற்றி நம்மை ஏசுவரோ. தம் இலர்கொல் - அவ்வேச்சுரை தமக் கில்லாராவரோ. அறநெறியின் வரையின் அவனுக்கு வரைவுடன் படுதலும். மடலேறிவரின் அவனுக்குத் தலைவியை வழங்கலும் குடியோர் செயலாதலின் அவ்வேச்சுரை அவர்கண்ணே முடியும் என்பது பற்றிக் கூறி னாள். தம்மிலர் - தம் அறிவிலர் என்பதும் ஈண்டைக்கு ஆம். தம்முடையார் - தம் மறிவுடையோராதல் காண்க. (திணை மாலை நூற்றைம்பது 84). வால்வெள் அருவி விடியலில் இலைக்குரம்பை போல இழிதரும் இச் சிறு குடியோர் என்க. விடியல் - கொன்னிளம் பருதி (சிந். 173). கொன் இலைக்குரம்பை - இலையான் வேய்ந்த குடில். அருவி இலைக்குரம்பை போல இழிதரும் என்றது அருவியின் இருபுறமும் மரங்கள் செடிகள் கழித்தனவான இலைகளை எடுத்து அவற்றாற் போர்க்கப் பட்டு வருதலான் என்க. இதனை நடுநாட் கனைபெயல் பொழித்தெனக் கானக் கல்யாற்று, முளியிலை கழித்தன முகி ழிண ரொடுவரும், விருந்திற் றீநீர் (நற். 53) என்பதனானறிக. இனிக் குரம்பையினொடு இழிதரும் என்று கொண்டு புனங்காப்பவர் இருத்தற்குக் கட்டிய குடில்களைப் பிடுங்கி இழிதரும் எனினுமமையும். இன்னாதிருந்த இச் சிறுகுடியோர் - என்மாட்டு வெறுத் திருந்த இச்சிறுகுடியிலுள்ளவர். நம்மேசுவரோ தம்மிலர் கொல் என்க. இன்னாதிரங்கி - வெறுத்திரங்கி என்பார் புறப்பொருள் வெண்பாமாலை உரைகாரர். சேய்மைக்கண் யானைப் புகர்முகம் போலக் காணப் பட்டு அணுகிய நிலையில் துறுகற்காந்தள் ஆயினாற் போல, நாடன் நெருங்காத நிலையில் அறவனல்லன் போல நினையப்பட்டு நெருங்கிய நிலையில் அறவனாகத் தெரியப்படு வான் என்று கருதினாளாம். ஈண்டு இலைக் குரம்பை ஈத்திலைக் குரம்பை என்பாரு முளர். அது பாலைக்கல்லது வரையிற்றாழ்ந்து வால்வெள்ளருவி இழிதரும் குறிஞ்சிக்கு இயையாமை நோக்கிக் கொள்க. பூதத் தேவனார் 285. வைகா வைகல் 1 வைகவும் வாரார் எல்லா வெல்லை யெல்லவுந் 2 தோன்றார் யாண்டுளர் 3 கொல்லோ தோழி யீண்டிவர் சொல்லிய பருவமோ விதுவே பல்லூழ் புன்புறப் பெடையொடு பயிரி 4 யின்புற விமைக்க ணேதா கின்றோ ஞெமைத்தலை 5 ஊனசைஇ 6 யொருபருந் 7 திருக்கும் 8 வானுயர் பிறங்கன் மலையிறந் தோரே. (எ-து) பருவங்கண்டு வேறுபட்ட விடத்து வற்புறுத்துந் தோழிக்கு வன்புறை எதிரழிந்து தலைமகள் சொல்லியது. (வி)வைகாவைகல் வைகவும் வாரார் - விடியாத விடியல் விடியவும் வாரார். வைகுதல் -விடிதல். வைகுநிலை மதியம் போலப் பையெனப், புலம்புகொ ளவலமொடு. புதுக்கவி னிழந்த, நலங்கெழு திருமுகம் (அகம். 299) என்பதனா னுணர்க. வைகல் - விடியல். கதிர் விரி வைகலின் (கலி. 96) என்புழிக் காண்க. எல்லா எல்லை எல்லவும் தோன்றார் - மங்காத பகல் மங்கவும் தோன்றுதலிலர். எல்லுதல் - ஒளிமயங்குதல். எல்லு மெல்லின்று (179) என்பது கொண்டு தெரிக. விடியா விடியல் என்றது இரவை முனிந்தவாறு. மங்காத பகல் என்றது பகலை முனிந்தவாறு. தலைவனைப் பிரிந்த தலைவி இரவையும் பகலையும் முனிதல், எல்லியா கெல்லையென் றாங்கே பகல் முனிவே, னெல்லிய காலை யிராமுனிவேன் (கலி. 144) என்பதனா னறியப்படும். ஈண்டு எல்லிய காலை - இராவான காலம் என நச்சினார்க்கினியர் கூறுதலானும் எல்லுதல் என்பது இராவாதல் எனப் பொருள் படுதல் காண்க. ஈண்டு யாண்டுளர் கொல்லோ - இப் பொழுது எங்கு உள்ளாரோ. இவ்வுலகத்து எங்குள்ளரோ என்பதுமாம். இவர் - நீ வருவர் எனக் கூறிய இவர். இவர் சொல்லிய ஈண்டு பருவமோ இதுவே என்பதுமாம். ஈண்டுப் பருவம் - அடையும் பருவம். காப்புச் சிறந்து தீண்டருங் குரையணம் மணங்கியோளே (அகம். 372) என்ப. புன்புற - புற்கென்ற புறா. பயிரி - அழைத்து. பெடையொடு பல்லூழ் இன்புற - பெடையோடு பன்முறை இன்பமுறா நிற்க. என் இமைக் கண் ஏதாகின்றோ - இவற்றைக் கண்ட இமையுடைய கண்களுக்கு யாது உண்டாயினதோ. துன்பமோ இன்பமோ என்று ஏது என்றாள். புறா - புற எனக் குறியதன் கீழாக் குறுகிற்று. புன்புற என்றது சிறபுன் புறவொடு சிற்றெழால் சீறும் (திணை மொழி ஐம்பது 15) என்புழிப் போல வந்தது. இவை மாடப்புறாக்கள் என்க. புறாக்கள் துணையோடு துயின்ற முன்றிலின்கண் விளையாடுவன கண்டு ஆற்றகில்லாள் (திருக்கோவை 328) என உரைகாரர் கூறுதல் கண்டுணர்க. வண்ணப்புறவின் செங்காற் சேவல், வீழ்துணைப் பயிருங் கையறு முரல்குரல், நும்மிலின் புலம்பக் கேட்டொறும், பொம்ம லோதி பெருவிதுப் புறவே (நற். 71) இதனா னிவ்வுண்மை யுணர்க. வற்புறுத்துந் தோழியை எதிர் அழிந்து இவற்றைக் காணும் என் கண்களுக்கு ஏதாயினதோ என்று வினாவி அது நீ தெரியாய் என்று குறிப்பிற் கொள்ள வைத்தாளாம். இனி ஓரிமைப் பொழுதின்கண் எனக்கு யாதாயினதோ என்று வினாவினா ளென்பதும் ஒன்று. ஞெமைத்தலை - ஞெமை மரத்தின் உச்சியில். ஊன் நசைஇ - ஊன் உணவை விரும்பி, ஒரு பருந்து - துணையில்லாத ஒற்றைப் பருந்து. இருக்கும் - காத்திருக்கும். வான்வரை உயர்ந்த பிறங்கலுடைய மலைப் பக்கத்தைக் கடந்தோர் வாரார், தோன்றார் யாண்டுளர் கொல் என்க. இனி வைகாவைகு அல் வைகவும் வாரார் என்று கொண்டு கழியாது தங்கிய இரவு கழியவும் வாரார் என்பதுமாம். எயிற்றியனார் 286. உள்ளிக் காண்பென் 1 போல்வன் 2 முள்ளெயிற் றழிழ்த 3 மூறுமஞ் செவ்வாய்க் கமழகில் ஆர நாறு மறல்போற் 4 கூந்தற் பேரமர் மழைக்கட் கொடிச்சி 5 மூரன் முறுவலொடு மதைஇய 6 நோக்கே. (எ-து)(1) இரந்து பின்னின்ற கிழவன் குறை மாறாமற் கூறியது. (2) பாங்கற்குச் சொல்லிய தூஉமாம். (வி) கொடிச்சி முறுவலொடு மதைஇய நோக்கே - கொடிச்சியின் நகையோடு செருக்கின் பார்வையினையே உள்ளிக் காண்பென் போல்வல் - நினைத்த அளவில் எதிரே காண்பேன் போலாவேன். நோக்கினைக் காண்டலாவது அவள் தன்னைப் பார்ப்பதைத் தானும் பார்த்தல். மூரன் முறுவலொடு மதைஇய நோக்கு என்றதனால் அவள் நோக்கி மெல்ல நகுதலைத் தான் கண்டதனை மறப்பறியாமையால் எப்போதும் உள்ளி, எப்போதும் காண்பேன் போல்வல் என்றான் எனினுமமையும். மூரல் முறுவல் - முகிழ்நகை. முகிழ்நகையை மூரல் முறுவல் என்றார் புறப்பொருள் வெண்பாமாலை யுரைகாரர் சாமுண்டிதேவநாயகர். முள்ளெயிற்று அமிழ்தம் ஊறும் வாய் என்றதனால் தான் உண்டதும், அஞ்செவ்வாய் என்றதனான் தான் கேட்டதும், கமழ் அகில் ஆரநாறும் கூந்தல் என்றதனால் தான் மோந்தும், அறல் போற்கூந்தல் என்றதனால் தான் உற்றதும், பேரமர் மழைக்கண் என்றாதல் தான் கண்டதும் உள்ளுதல் குறித்தான். அஞ் செவ்வாய் - சொல்லால் அழகிய செவ்விய வாய். அறல் போல் மெத்தென்று குளிர்ந்து நெறித்த கூந்தல் என்க. மழைக்கண் - தன் எல்லாவுறுப்பும் குளிரச் செய்த கண்கள். பேரமர்க்கண் என்றான் முதலிற் செற்றாற் போல் நோக்கியது குறித்து. அமர்க்கண் - அமருடைய கண். அமர்க்கண் போரைச் செய்யும் கண் (கலி. 75) என்றார் நச்சினார்க்கினியர். கொடிச்சி - குறிஞ்சி நிலத்தலைவி. கமழ் அகில், கமழ் ஆரம், தனித்தனி நாறும் இரண்டுஞ் சேர மணக்குங் கூந்தல். செவ்வாயும், கூந்தலும், கண்ணும் என்னு மூன்றனுள் கூந்தல் அகிலார நாறுதல் கூறினானாதலின், வாய் முறுவலும், கண் நோக்குமே வேறு உரைத்தது கொடிச்சி தன் சிறுகுடியிற் பெயர்ந்த போது தன்னைத் திருமித் திருமி நோக்கி முறுவலித்துச் சென்றதை உள்ளியெனின் நன்கியையு மென்க. ஆண்டுச் செல்புறத்துக் கண்ட கூந்தலையே ஈண்டு நினைந்து கூறினானாவன். சிறுகுடிப் பெயருங், கொடிச்சி செல்புற நோக்கி, விடுத்த நெஞ்சம் விடலொல்லாதே (நற். 204) என்பது காண்க. இனிப் பாங்கன், மலையுறை குறவன் காதன் மடமகள், பெறலருங் குரையள், அருங்கடிக் காப்பினள் (நற். 201) ஆதலால் அவளை உள்ளல் கூடாது என்றானாக. அங்ஙனம் உள்ளாளாயினும் அவளை உள்ளிய அளவிலே காண்பேன் போல்வன் என்று அவள் தன் நெஞ்சிற்கு அரியளா காமையை இங்ஙனம் தலைவன் கூறினான் என்பதும் ஆம். இது பாங்கற்குக் கூறியதூ உமாம் எனத் துறைவகுத்தது காண்க. கச்சிப்பேட்டு நன்னாகையர் 287. அம்ம வாழி தோழி காதலர் இன்னே கண்டுந் துறக்குவர் 1 கொல்லோ முந்நாற் றிங்க ணிறைபொறுத் தசைஇ ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக் கடுஞ்சூன் மகளிர் போல நீர் கொண்டு விசும்பிவர் கல்லாது 1 தாங்குபு புணரிச் செழும்பல் குன்ற நோக்கிப் பெருங்கலி வான மேர்தரும் 2 பொழுதே. (எ-து) பிரிவிடை வேறுபட்ட தலைவி நம்மைத் துறந்து வாரா ரென்று கவன்றாட்குப் பருவங்காட்டித் தோழி வருவரெனச் சொல்லியது. (வி) காதலர் - நின்கட் காதலை யுடையவர். வானம் ஏர் தருபொழுது கண்டும் இன்னே துறப்பர் கொல்லோ துறந்திரார் என்றவாறு. இன்னே - இப்பொழுதே. முந்நாற் றிங்கள் நிறை கடுஞ்சூல் பொறுத்து அசைஇ ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கை மகளிர் போல என்க. முந்நாற் றிங்கள் - பன்னிரு திங்கள். கருக் கொள் காலம் பன்னிருமதியமும் ஆதல் இராமாவதாரத்தால் அறியலாம். (வால்மீகி ராமாயணம் பால காண்டம் 18). கன்னியராய்ச் சூற்கொள்ளுதலாற் கடுஞ்சூல் என்றாள். நிறைகடுஞ்சூல் பொறுத்தலாற் றளர்ந்து நடத்தல் மாட்டாத வயாவாற் பசிய புளியின் வேட்கையையுடைய மகளிர் போல. பசும் புளி - தீயிற் சுடாத புளி. புளிவேட்கை புளிகுடிசடங்கின் விருப்பம் என்பதுமாம். குடநாட்டு வீரக்குடி மகளிர் கருக்கொண்டால் அவர்க்குக் கரைத்த பசும் புளியை ஒரு வாளியின் வழியாக வாயில் வார்ப்பதோர் சடங்காகப் பண்டு தொட்டு நிகழ்வது காணலாம். இதுவே பசும் புளி வேட்கைக்கு ஏதுவாகும். நீர் கொண்டு - கடலில் நீரைக் கொண்டு. விசும்பு இவர் கல்லாது - விண்ணிற் பொறையால் ஏற இயலாது. தாங்குபு - பொறையைத் தாங்கி. புணரிச் செழும்பல் குன்றம் நோக்கி - கடலையடுத்துள்ள செழிய பலமலைகளைக் கண்டு, பெருங்கலி வானம் - பெரிய ஆரவாரத்தையுடைய மேகம். ஏர் தரும்பொழுது எழும் அமயம். காதலர் வானம் குன்ற நோக்கி ஏர் தரும் பொழுது கண்டும் இன்னே துறக்குவர் கொல்லோ என்றாளென்க. கடலிற் கொண்ட நீரைஅக் கடலடுத்த மலையிற் பெய்ய ஏர் தரும் பொழுது என்க. புணரிக்குன்றம் - கடன்மலை. விசும்பிவர் கல்லாது நீர் கொண்ட இடத்தை அடுத்துள்ள மலையை நோக்கி ஏர் தரும் என்றதனாற் புணரி கடலாகக் கருதப்படுமென்க. வானம் ஏர் தரும்பொழுது இன்னே யாம் இது கண்டும் துறக்குவர் கொல்லோ எனினுமமையும். சூன்முதிர் முகில் (பரிபாடல் 20:3) என்பதுபற்றி வானுக்கு மகளிரை உவமை கூறினார். கருவுயிர்க்கும் தருணத்துள்ள கடுஞ்சூன் மகளிரை உவமை கூறியதனால் அம் மகளிர் கருவுயிர்க்கும் அமயம் கணவர் பிரிந்துறையாது விரைந்து வருதல் போலத் தலைவர் வானம் பெய்யும் அமயம் விரைந்து வருவர் என்பது குறித்தாளாம். கபிலர் 288. கறிவள ரடுக்கத் தாங்கண் முறியருந்து குரங்கொருங் கிருக்கும் 1 பெருங்க னாடன் இனிய னாகலி னினத்தி னியன்ற 2 இன்னா மையினு மினிதோ இனிதெனப் படூஉம் புத்தே ணாடே. (எ-து) தலைமகனது வரவுணர்ந்து, நம்பெருமான் நமக்கு அன்பிலனென்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) அடுக்கத்தாங்கண் கறிவளர் முறியருந்து - அடுக்காகிய மலையுள்ள அவ்விடத்து மிளகுக் கொடியில் வளர்ந்த முறிகளை ஆர்ந்து. ஆர்ந்து என்பது அருந்து என மரீஇயது (தொல். எச்ச. சேனாவரையருரை) குரங்கு ஒருங்கிருக்கும் பெருங்கனாடன் - குரங்குகள் ஒன்று கூடி வதியும் பெருமலை நாடன். இனிய கனியருந்தும் அமயம் இருத்தல் போல அழலும் கறிமுறியருந்தும் அமயமும் குரங்குகள் ஒருங்கிருக்கும் என்பதனாற் பெருஞ்சோறும் சிறுசோறும் அவனோடு கூடியுண்டலே சிறந்தது என்று தான் துணிந்தது குறித்தாளாம். இனியனாகலின் - புணர்ந்துழியும், பிரிந்துழியும் ஒத்தினியனாதலான். பிரிந்துழி இனியனாதலாவது அவன் நயனுடைமையை இடைவிடாது நினைந்து மகிழ்தற்குரிய சிறப்பினனாதல். நாட னயமுடைய னென்பதனா னீப்பினும், வாடன் மறந்தன தோள் (ஐந்திணையெழுபது - குறிஞ்சி 2) என்பது காண்க. இஃதுயர்ந்த காமத்திற் குரியதோர் சிறப்பென்க. தலைவனும் இவ்வாறே பிரிவினு மினித்தல், எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார், நினைப்ப வருவதொன் றில் (குறள். 1202) என்புழிப் பரிமேலழகர் புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிதென்பான் எனைத்து மினிதென்றான் எனக் கூறியதனான் உணர்க. இனத்தி னியன்ற இன்னாமையினும் - எம்முளொப் பினியன்ற துன்பத்திலும் துன்பமில்லாது - இன்பத்தின் மட்டும் ஒத்தியன் றினிதென்னப்படும் தேவருலகம் இனியதாமோ என்றவாறு. இன ஒப்பாதல் தின்றானா இனவைகல் (மதுரைக் காஞ்சி 214) என்புழிக் காண்க. இன்பம் ஒத்துத் துய்த்தற்கு யாண்டும் எல்லாரும் ஆவர். துன்பம் ஒத்துத் துய்த்தற்கு யாரும் அரியர். எம்முள்ளே பிரிவுத்துன்பம் இருவர்க்கும் ஒத்த தன்மைத்து ஆகவும், அவர் அன்பிலராதல் எங்ஙனம் என்னுங் கருத்தாற் கூறினாள். ஈண்டு இன்னாமை என்பது துன்பம் என்னும் பொருட்டு. இன்னாமை இன்ப மெனக் கொளின் (குறள். 630) என்புழிக் காண்க. பெருங்கண்ணனார் 289. வளர்பிறை போல வழிவழிப் 1 பெருகி இறைவளை நெகிழ்த்த வெவ்வ நோயொடு குழைபிசைந் தனையே மாகிச் சாஅய் உழைய ரன்மையி 2 னுழப்ப தன்றியும் மழையுந் தோழி மான்றுபட் டன்றே பட்ட மாரி படாஅக் கண்ணம் 3 அவர்திறத் திரங்கு நம்மினும் நந்திறத் திரங்குமிவ் வழுங்க லூரே. (எ-து) காலங்கண்டு வேறுபட்டாளெனக் கவன்ற தோழிக்கு, காலத்து வந்திலரென்று வேறுபட்டேனல்லேன்; அவரைப் புறத்தார் கொடிய ரென்று கூறக் கேட்டு வேறுபட்டேன் என்று தலைமகள் சொல்லியது. (வி) வளர்பிறையும் மாலையிற் றோன்றித் துன்பஞ் செய்தலான் உவமித்தாள். இன்னாப் பிறந்தன்று பிறையே யன்னோ (307) என்றது காண்க. வழிவழிப் பெருகி - பின்னே பின்னே பெருக்கமெய்தி. இறை வளை நெகிழ்ந்த - சந்து வளை நெகிழ்த்த. எவ்வ நோயொடு - பிரிவுத் துன்பமாகிய நோயால். நோய் - புறத்தார்க்குப் புலனாக்குதல் பற்றிய உள்ள நோய். நின்னோ டுண்டலும் - நின்னா லுண்டலும் (குறிஞ்சிப். 207) என்பது போல வந்தது. குழை பிசைந்தனையே மாகி - உடம்பு தளிரைத் தேய்த்த அத்தன்மையேமாய். மாலை பிசைந்திடப்பட்ட தொத்தாள் (சிந். 1539) என்பது காண்க. சாஅய் - மெலிந்து. உழப்பது - யாம் வருந்துவது. உழைய ரன்மையின் - நம்முழையர் அல்லாமை யால். பிரியாக் காதலொ டுழைய ராகிய நமர் (அகம். 241) என்ப. அன்றியும் - அங்ஙனம் அல்லாமையன்றியும். மழையும் மான்றுபட்டன்று. மழையும் பருவமென்று மயங்கிப் பெய்தது. பட்டமாரி - இங்ஙனம் பெய்த மாரிக்கண். படாஅக் கண்ணம் - துயிலாத கண்களுடையே மாயினேம். நந்திறத் திரங்குமிவ் வழுங்கலூர் - அங்ஙனமுள்ள நம் பொருட்டுச் சில சொல்லும் இக் கெடுதலுடையவூர். நம்மினும் அவர் திறத்திரங்கும் - நம்மின் மிகவும் அவர் பொருட்டுப் பல சொல்லா நிற்கும். இரங்குதல் - கூறுதல். புலம்பெலாந் தீர்க்குவே மன்னென் றிரங்குபு (கலி. 83) என்பது காண்க. நம்மினும் - நம்திறத்துச் சொல்லுதலினும் மிக. நந்திறத்திரங்குமூர் என்றதனால் நம்மினும் என்றதற்கு நம் திறத்து இரங்கலினு மிக என்று கொள்ளப்பட்டது. இதனால் அவர் திறத்துப் பல சொல்லுதல் துணியலாயிற்று. அவர் திறத்துப் பல சொல்லுதலாவது அவரைக் கொடியர் எனப் பலவாறு கூறுதல். தொடியொடு தோணெகிழ நோவ லவரைக், கொடியரெனக் கூறனொந்து (குறள். 1236) என்புழிக் காண்க. அவரைப் புறத்தார் கொடியரெனக் கூறக் கேட்டு வேறுபட்டேன் எனத் துறையுட்கண்டதற்கு இதுவே ஏற்பதாதல் நன்கு நோக்கிக் கொள்க. கல்பொரு சிறுநுரையார் 290. காமந் தாங்குமதி யென்போர் தாமஃ தறியுநர் 1 கொல்லோ வனைமது 2 கையர்கொல் யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல இல்லா குதுமே. 3 (எ-து) வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது. (வி) தலைவர் நெடுங்காலம் பிரிந்திருப்பவும், காம நோயைப் பொறுத்திருப்பாய் என்று தெருட்டுவோர். இது தெருட்டுந் தோழிக்குத் தலைவி கூறியதென்பர் நச்சினார்க் கினியர். (தொல். கற். 6). தாம் அஃது அறியுநர்கொல் -தாம் அதனைப் பொறுக்கும் உபாயம் அறிகிற்பரோ. அனை மதுகையர்கொல் - அவ்வுபாயத்தாற் பொறுக்கும் அவ்வளவு வலியுடையரோ. அவர் என்பால் மெல்லியலார் ஆகார் என்பது கருத்து. யாம் எங் காதலர்க் காணேமாயின் - ஓரூரிலுள்ள போதும் எங்காதலரை உரிய காலத்தில் யாம் காணேம் ஆயின். அவர் கண்டிருக்க யாம் காணேமாயின் எனினும் அமையும். பெரு நீர்க் கல்பொரு சிறுநுரை போல - கல்லில் மோதிய கடற் சிறு நுரை போல. செறிதுனி பெருகிய நெஞ்சமொடு - திணிந்த துன்பம் பெருக்கெடுத்த நெஞ்சுடன். மெல்ல மெல்ல இல்லாகுதும் - பையப் பைய இல்லையாவேம். பெருநீர் - வெள்ளம் - மோதுவது வெள்ளம், மோதும் இடம் கல். இவற்றிடைப்பட்டது சிறு நுரை, என்றவாறு. வெள்ளம் காமமாகவும், கல் பிரிவாகவும், சிறுநுரை தலைவியின் சிற்றுயிராகவுங் கொள்க. பெருநீர் - கடல் எனினுமமையும். பெருகிய நெஞ்சமொடு என்றதற்கியைய உவமையின் குமிழி, மொக்குள் என ஒன்று பெரு நீர்க்கு நினைந்தாளென்பது பொருந்தும். அனைமதுகையர் கொல் என்று இகழ்ச்சிக் குறிப்பாற் பிறரைக் கூறியதனால் தன் தாங்கலாகா நொய்மை தோன்றத் தன்னை நுரையாகக் கூறினாள். நுரைகிழிந்த தனைய நொய்ம்மை (சிந். 699) என்பது காண்க. வரையுரை யுருவி னுரைபல சுமந்து (பரிபாடல் 7) என்பதனால் மலை போன்ற பெரிய நுரைகளுமுண்மையாற் சிறு நுரை என்றாள். யாம் காதலர்க் காணேமாயின் இல்லாகுதும். தாங்குமதி என்போர் கணவரை நெடுநாட் பிரிந்தும் இருந்து காமம் தாங்கு மதுகையர் போலும் என்றாளென்க. கபிலர் 291. சுடுபுன 1 மருங்கிற் கலித்த வேனற் படுகிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே இசையி னிசையா 2 வின்பா ணித்தே கிளியவள் விளியென வெழலொல் லாவே 3 அதுபுலந் 4 தழுத கண்ணே சாரற் குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை வண்டுபயில் பல்லிதழ் கலைஇத் 5 தண்டுளிக் கேற்ற மலர்போன் றனவே. 6 (எ-து) பாங்கற் குரைத்தது. (வி) சுடுபுன மருங்கில் - காடு சுட்டு உண்டாக்கிய கொல்லைப் பக்கத்து. கலித்த ஏனற் படுகிளி - பெருகிய தினையின் வீழ் கிளிகள். கடியும் கொடிச்சி இசையின் இசையா - தம்மைக் கடிகின்ற கொடிச்சியின் இசையின் இசைந்து. கைக்குளிர் இசை பாணித்து - அவள் கையிலுள்ள தம்மைக் கடியும் குளிர் என்னுங் கருவி கேட்டற்கு இனிய தாளத்தை யுடையது என்றவாறு. அவள் விளி கிளி என - அவளோசை கிளியோசை என்று. எழலொல்லா - எழுந்து போவதற்கு இசையாவாம். சாந்தங் கமழக் கிளிகடியுங் கார்மயி லன்னா. ளிமிழக் கிளியெழா வார்த்து (திணைமாலை நூற்றைம்பது 3:2-4) என்புழிப் பழையவுரை காரர், கார்மயி லன்னாள் தான் வாய் திறந்து `ஆலோ வென்றியம்புதலாற் றம்மினமென்று கிளிகள் ஆர்த்துப் போகா எனக் கூறியது காண்க. இதனாற் கிளிகடிதற்கு இசைத்தல், விளித்தல் வேறு வேறெனக் கொள்க. புலர்குர லேனற் கிளிகடி பாடலும் (அகம். 118) என்பது காண்க. படுகிளிகள் கடியும் கொடிச்சி யிசையி னிசைந்து கைக்குளிர் இன்பாணித்தென அவள் விளி கிளி என எழலொல்லா ஆதலான் அது புலந்தழுத கண்கள் தண்டுளிக்கேற்ற குவளை மலர் போன்றன. கொடிச்சி சினந்து கடி நிலையினும், புலந்தழுத நிலை யினும் இனியளாதல் இங்ஙனமென்று காட்டி அவள் தன்னை விரும்பிய நிலையிலுள்ள இன்ப வடிவை அறிவா னளந்துணரப் பாங்கற்குக் கூறியவாறாம். குறிஞ்சிக் கொடிச்சிக் கேற்பச் சாரற் குண்டு நீர்ச்சுனைப் பூத்த குவளையை அவள் கண்ணிற் குவமித்தான். புலந்தழுத நிலை கருதி இதழ் கலைந்து மழைத்துளிக்கேற்ற மலரை உவமித்தான். இதழ்கள் கலைதற்கு வண்டுகள் பயிறலை வேண்டினான். பயிறல் - செறிதல். மரம் பயில் கானம் (249) என்ப. பரணர் 292. மண்ணிய சென்ற வொண்ணுத 1 லரிவை புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற் 2 கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை பொன் செய் பாவை கொடுப்பவுங் 3 கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரையத்துச் 4 செலீஇயரோ 5 வன்னை ஒருநாள் 6 நகைமுக விருந்தினன் வந்தெனப் பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே. 7 (எ-து) தோழி இரவுக்குறிக்கட் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது. (வி) தப்பல் செய்ய நினைந்து சென்றவளல்லள் என்பாள் மண்ணிய சென்ற அரிவை என்றாள். மண்ணிய - குளிக்க ஒண்ணுதல் அரிவை என்றாள் அவள் நுதலின் ஓட்பங் கண்டும் ஒருவன் உருகாதவனாதல் வியப்பு என்பது தெரிய. ஒண்ணுதற் கோஒ உடைந்ததே. ஞாட்பினு ணண்ணாரு முட்குமென் பீடு (குறள். 1088) என்பது காண்க. அரிவை என்றாள் யாரும் விஸநம் பண்ணலாகாத பெண் பிறப்பு என்பது அறிய. புனல்தருபசுங்காய் - தான் குளித்த புனல் தந்த பைங்காய். தான் பறித்த தப்பலில்லை என்பாள் புனல் தருகாய் என்றாள். உண்மையிற் புனல்தான் மரத்தை வளர்த்ததாதலின் அது தரற் குரிமை உண்டென்பதாம். உடையவனும் விரும்பி உண்ணத்தக்க தன்றென்பாள் பசுங்காய் என்றாள். தின்ற தப்பற்கு - தின்ற தவற்றிற்கு. பைங்காய்க் கேற்பத் தின்னல் வினை கூறினாள். தின்றது ஒரு தப்பல் ஆகாதென்பது குறிப்பு. தன் தப்பற்கு - நன்னன் தன்னறிவாற் கருதிய தவற்றிற்கு. பொன் செய் பாவை அவள் நிறை - பொன்னாற் செய்த படிமையை அவள் நிறை அளவாக. ஒன்பதிற்றொன்பது களிற்றொடு கொடுப்பவும் கொள்ளான். எண்பத்தொரு களிறுகளோடு கொடா நிற்கவும் அவற்றைக் கொண்டு விடானாய். பெண் கொலை புரிந்த நன்னன் போல - அவளைக் கொலை செய்த நன்னன் என்பானைப் போல பெண் என்பது சுட்டு மாத்திரையாய் வந்தது. சுட்டினை ஆளாது பின்னும் பெண் என்றது அக் கொலையின் கொடுமை தெரிய. அன்னை வரையா நிரையத்துச் செலீஇயர் - என் தாய் தன்னகத்துப் புக்க பாவியரை எக்காலமும் நீக்காத நரகத்துச் செலுத்தப்படுவாளாக. நகைமுக விருந்தினன் - முறுவல் முகமுள்ள விருந்தாக என் கேள். ஒரு நாள் வந்தென - ஒரு பகல் வந்தானாக. பகை முகவூரின் - பகலெல்லாம் பகைமுகத்துள்ள ஊரின்றன்மை யுடன். துஞ்சலோ இலள் - இரவிலுந் துயிலுதல் இல்லையா யினாள். ஆதலான் நன்னன் போல வரையா நிரையத்துச் செலீஇயர் என்றாளென்க. பகை முகவூர்த்தன்மை, விருந் தேலாமை. அன்னை விருந்தேலாத தவற்றுடன் இரவினுந் துயிலாது தன்னைக் காத்தது கருதி இங்ஙனம் கூறினாள். நச்சினார்க்கினியர் புகாக் காலத்துத் தலைமை மிக்க தலைவன் புக்கதற்கு விருந்தேலாது செவிலி இரவுந் துயிலா தாளைத் தலைவி முனிந்து கூறியது என்று கூறியது காண்க. (தொல்.களவு. 16). இனன் என்பது இங்ஙனம் வருதல் இன்னா தினனில்லூர் வாழ்தல் (குறள். 1158) என்புழிக் குறிப்பறியுந் தோழி என்று பரிமேலழகர் உரைத்தது கொண்டுணரலாம். இம்மனைக்கு விருந்தாய்த் தனக்கு இனனாதல் நோக்கிக் கூறினாள். இவ்வரிய விருந்தின் முகங்கொன்ற பொல்லாங்காற் பெண் கொலை புரிந்த நன்னன் புக்க வரையா நரகம் புகுவாளாக என்றாள். விருந்ததாகிய தன்னினங் கொன்றது தன்னைக் கொன்றதே யாதலின் அன்னையும் பெண் கொலை புரிந்தவளாவள் என்று கூறினாள் எனினும் அமையும். நன்னன் அயலாள் ஒருத்திக்கு ஒரு நாளை ஒரு பொழுதைத் துன்பமாகிய சாதலைப் புரிந்தான். அன்னை வளர்த்தவளை வைத்து நாளுங் கொலை யினுங் கொடிய துன்பத்தைச் செய்பவளாவள். பசுங்காய் தின்ற பெண்ணைக் காத்தற்குப் பொற் பாவையும், களிறும் தர விருந்தார் போலத் தன்னை வதுவை யிற் கொண்டு உயிர் காத்தற்குத் தன்னாடு முழுதுந்தர விருப்பார் தலைவன் தமர் என்பது குறிப்பிற் கொள்ள வைத்தாளாம். இக் கருத்தா னன்றே நச்சினார்க்கினியர், தலைமைமிக்க தலைவன் என்றாரென்க. நகைமுக விருந்திற்குப் பகைமுக மாயின கொடுமையை நினைந்து கூறிய வசை இஃதென்க, தலைவன் நகைமுகமே அன்னை ஐயுற்றுப் பகைமுகங் கொள்ளற்கு ஏதுவாதல் நினைக. ஒரு நாள் என்றது வாராத அருமை வரவு என்பது தெரிய நின்றது. அத்தகையோன் வந்த அளவே ஏலாமை நினைந்தனள். விருந்தின் முகங்கொன்ற நெஞ்சிற் புல்லாள னாக (சிந். 2319) என்பது நினைக. இதன் கனி தின்றார் நெடுநாள் வாழ்வர் என்று சொல்லித் தான் பெற்ற ஓர் மாங்கன்றை ஏழில் மலை நன்னன் ஆற்றோரத்து வைத்துப் போற்றி வளர்த்தானாக, அது பல்லாண்டு சென்று ஒரு காயே காய்த்தது; அக் காய் முற்றாமலே ஆற்றில் உதிர்ந்தது. யாற்றிற் குளித்த அரிவை ஒருத்தி அதனை எடுத்துத் தின்றாள். இது தவறாக அவன் கருதி அவளைக் கொன்றனன் என்ப. கள்ளிலாத்திரையனார் 293. கள்ளிற் கேளி ராத்திரை 1 யுள்ளூர்ப் பாளை 2 தந்த பஞ்சியங் 3 குறுங்காய் ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும் ஆதி யருமன் மூதூ ரன்ன அயவெள் 1 ளாம்ப லம்பகை 2 நெறித்தழை தித்திக் குறங்கி னூழ்மா றலைப்ப வருமே 3 சேயிழை யந் திற் கொழு நற் 4 காணிய வளியேன் 5 யானே. (எ-து) பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்க தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) கள் இல் கேளிர் ஆத்திரை - கள்மனைக்குக் கேண்மை யுடையார் பயணம். உள்ளூர் ஓங்கிரும் பெண்ணைப் பாளை தந்த பஞ்சியங் குறுங்காய் நுங்கொடு பெயரும் ஆதியருமன் மூதூர் அன்ன சேயிழை - ஊர் நடுவில் ஓங்கிய கரிய பனையின் பாளை தந்த புறத்தே பஞ்சி நாரையுடைய குறிய காயாகிய நுங்குள்ள வரை உண்டாய். அந்த நுங்கு மாறுபட, மாறுபடுதற்கிடமாயுள்ள ஆதி யருமன் என்பவனுடைய மூதூரை ஒத்த செவ்விய இழைகளை யுடைய பரத்தை கள்ளிற்கேளிர் ஆத்திரை நுங்கொடு பெயரும் என்றதனாற் பரத்தை வரவும் தலைவன் கையிற் பொருளுண்டாம் போது உண்டாகி அப்பொருளில்லை யாக இல்லையாம் என்பது குறித்தாளாம். அப்பொருளாக்கிய அணிகலனுடையாளென்று சேயிழை என்றாள். கள்யாத்திரை நுங்கொடு மாறுதல் கண்கூடாகக் கண்டது. பெயர்தல் இடமாறுதலுமாம். அயவெள்ளாம்பல் - நீர்நிலையிலுண்டாகிய வெள்ளிய ஆம்பல். அம்பகை நெறித்தழை - அழகிய மாறுபட்ட முழுநெறித் தழையுடை. தித்திக் குறங்கின் ஊழ்மாறலைப்ப - தேமற்றுடையில் முறையே மாறி மாறி அலைக்க. இங்ஙனம் வசீகரிக்க உடுத்தலும் நாண் கெடுத்துத் தித்திக்குறங்கு தெரிய அவ்வுடை அலைப்ப வருதலும் அப் பரத்தைக் கியல்பு. இதனைக், கொண்டி மகளிர் ... ... நீர் நனை மேவர நெடுந் தொடர்க் குவளை வடிம்புற வடைச்சி மணங்கமழ் மனைதொறும் பொய்த லயர (மதுரைக். அடி. 583-589) என்பதற்கு நச்சினார்க்கினியர், அங்ஙனம் விளையாடி வசீகரித்துப் பொருள் வாங்குத லவர்க்கியல்பு எனக் கூறியதனையும் நோக்கி உணர்க. மூதூ ரன்ன சேயிழை கொழுநற் காணிய அந்தில் வரும் - சேயிழை தன் கொழுநனைக் காண அங்கு வருவாள். அங்ஙனம் வசீகரிக்கினும் கொழுநன் ஆகான் என்பது கருத்தாகலின் இகழ்ச்சிக் குறிப்பாம். எங்கணவ ரெங்கணவ ரென்பா ரிகல் வாட (புறப். வெண். 24) என்பது கொண் டுணர்க. அளியேன் யானே - இங்ஙனம் வசீகரிக்கத் தெரியா தேன் யானே. அளியர் - அறிவில்லாதோர் என்றது காண்க. (அகம். 43) அளியேன் - இரங்கத்தக்கேன் என்பதுமாம். இனி அளியேனாகிய யான் கொழுநனைக் கண்ட அளவிலே சேயிழை நெறித்தழை தித்திக் குறங்கின் ஊழ்மாறலைப்ப அந்தில் வருமே என்று தலைவி தோழிக்குக் கூறினாள் என்பது நன்கு பொருந்தும். ஈண்டுக் காணிய என்பது கைபுனை கிளர்வேங்கை காணிய வெருவுற்று (பரிபாடல் 10) என்புழிப் போல வந்தது. யான் காண்டற்குப் பரத்தை பொருள் என்பது கருத்து. நுங்கொடு பெயரும் - நுங்கு கொண்டு பெயரும் என்பாரு முளர். ஆதியருமன் - ஆதிவழியினனாகிய அருமன். இவன் மூதிற்குடியினன் என்பது நற்றிணையுள் மூதி லருமன் பேரிசைச் சிறுகுடி (நற். 367) என்பதனா லறியலாம். அஞ்சியாந்தையார் 294. கடலுட னாடியுங் கான லல்கியும் தொடலை யாயமொடு தழுவணி 1 யயர்ந்தும் நொதுமலர் போலக் கதுமென வந்து முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே 2 தித்தி பரந்த 3 பைத்தக லல்குற் றிருந்திழை 4 துயல்வுக்கோட் 5 டசைத்த பசுங்குழைத் 6 தழையினு முழையிற் 7 போகான் தான்றந் தனன்யாய் காத்தோம் பல்லே. (எ-து) பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பறிவுறீஇயது. (வி) கடலிற் றலைவியுடன் விளையாடியும் கழிக்கரைச் சோலையில் உடன் தங்கியும் மாலையாகிய ஆயத்தவரோடு குரவையில் அணியாக நின்று கூத்தாடியும். தழூஉ அயர்தல் - குரவைக் கூத்தாடுதல், அயர்வர் தழூஉ (கலி. 103). தொடலை - மாலை, நொதுமலர் போலக் கதுமென வந்து - அயன்மை யுடையார் ஒப்ப விரையப் புக்கு. முயங்கினன் செலினே அலர்ந்தன்று மன் - இவளைத் தழுவிச் செல்வா னாயினுமே மிகவும் அலருண்டாயது. செலினுமே என்பது விகாரப்பட்டது. தித்தி பரந்த பைத்தகல் அல்குற் றிருந்திழை - பாம்பின் பொறிப் படத்தின் றன்மைத்தாய் அகன்ற அல்குலினையும் திருந்திய இழையினையுமுடைய தலைவி யின். உழையிற் போகான் - பக்கனின்று பெயர்ந்து போகாத தலைவன் தான். துயல்வுக் கோட் டசைத்த பசுங்குழைத் தழையினும் - அல்குற் கோட்டிற் கட்டிய அசைதலையுடைய பசிய குழைகளாகிய தழையுடையினும் மிக, கோட்டசைத்த துயல்வுப் பசுங்குழைத் தழையினுமென்க. யாய் காத்து ஓம்பலே - தாய் காவல் செய்து தனக்குக் கிட்டாது பரிகரித் தலை. தந்தனன் - தனக்குத் தந்து கொண்டான் என்றவாறு. தழையுடையோ சிலவுறுப்புக்களை மறைக்கும். தாய் இவளை முழுது மறைத்து இற்செறித்தாள். ஆதலான் தழையுடையினும் யாய் காத்தோம்பல் தந்தனள் என்றாள். தழையுடை பருவம் வந்த கன்னியர் அற்றம் மறைக்க உடுப்பதென்பது முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின, தலைமுடி சான்ற தண்டழையுடையை, யலமர லாயமொ டியாங்கணும் படாஅல் (அகம். 7) என வருதலான் அறியலாம். கன்னியின் அல்குற் கோட்டை யாருந் தீண்டலாகாதபடி காத்துக் கிடத்தலான் தழையுடையையாய் காவற்கு உவம மாக்கினாள். இவ்வுண்மை கன்னிக் கலிங்க மகிலார்ந்து கவ்விக் கிடந்த குறங்கினாள் (சிந். 1658) என்புழி நச்சினார்க்கினியர், கணவன் தீண்டாத கலிங்கம் விரும்பிக் கிடந்த குறங்கினாள் என உரைத்தது கொண்டுணர்க. கற்புடையாட்டிக்கு ஆடையும் அணிகலமும் போல நூற்குச் சிறப்புப் பாயிரமும் பொதுப் பாயிரமுமாம் என்று கொள்ளுதலாற் கற்புடை மகளிர்க்கு இன்றியமையாத மெய்க் காப்பு உடையாத லுணரலாம். நன்மகளிர்க்கு சிறந்த புறக் காவலாகிய உடையினைத் திருத்தக்க தேவர், வண்டு மூசும் அணிநிறப் போர்வையா யவரும்பெற னாணும் (சிந். 1655) என்பதனான் நாணாகச் சிறப்பித்தது காண்க. கண்ணன் துரோபதைக்குப் புடவை சுரந்தது நோக்கிக் கொள்க. தீப்பற்றிய நிலையினும் துகில் போற்றல், தவழும் புதல்வரை யொருகையாற் றழீஇப், பவழஞ் சேர்ந்த பல்கா ழல்குலர், அவிழ்ந்த பூந்துகி லங்கையி னசைஇ (பெருங்கதை - உஞ்சைக். ஊர் தீயிட்டது 145- 147) என்பதனாற் காண்க. மேற்செலினே அலர்ந்தன்று என்றும், ஈண்டுத் திருந்திழை உழையிற் போகான் என்றுங் கூறிக் காட்டி இங்ஙனம் போகான்றான் யாய் காத்தோம்பலைத் தந்தான் என்றாள். இவள் மானங்காத்தற்குத் தழையுடை எப்போதும் வேண்டுதல் போல இவள் மேனிமுழுதுங் காக்கத் தாய்தான் நாளும் வேண்டுதல் குறித்தாள். இனித் தழையினும் உழையிற் போகான் என்று கிடந்தபடியே வைத்துத் தழையுடையினும் திருந்திழை உழையினின்று போகான் எனக் கூறுவாருமுளர். ஈண்டுத் தழையினும் போகான் என்றது தழையுடை நீக்கப்பட்டு வேறுவேறாகும். இவன் நீங்காது ஒருவனே ஆவன் என்பது பற்றி இங்குத் தலைவன் தலைவியின் தழையுடையாகக் கூறியது போலத் திருத்தக்கதேவர் அவன் அவள் மேகலையாக விரும்புதல் கூறுவர். நகைமா மணிமாலை நடைக் கொடிநின், வகைமா மணிமே கலையா யினதே லசையா தென தாவி தழைக்கும் (சிந். 1379) என்பது காண்க. இதனால் இழிந்த உவமையாகாமை உணர்க, கோடு - அல்குற் கோடு. கோடு - உயர்ந்த பக்கம். பொலங்காசு நிரைத்த கோடேந் தல்குல், நலங்கேழ் மாக்குரல் குழையொடு துயல்வர (அகம். 269) என்பது காண்க. `பசுங்கழைத் தழையினும் என்பது பாடமாயின் துயல்வுக் கோட்டு அசைத்த - பெயர்தலையுடைய குளக் கரையின் கட் பிணித்த. பசுங்கழைத் தழையினும் - பசிய மூங்கிற்கோல்களுடன் திணித்த தழைகளினும் மிக நெருக்க மாக யாய்காத்தோம்பல் தந்தனள் என்க. கரைபெயரு மெனின் அது பெயராமைக்குக் கழைக் கோல்களை அதனோரத்து நட்டுப் பிணித்து மண் சிதறாமல் இடையிற் பல ஓலைத் தழைகளையும் செவ்வனத் திணித்துக் காப்பது வழக்கம். துயலல் - பெயர்தல். அங்ஙனம் காத்த பசுங்கழைத் தழையினும் அகலாது தாய் நெருங்கிக் காத்தல் குறித்தது, இது சிறு கோட்டுப் பெருங்குளங் காவலன் போல, அருங்கடி யன்னையும் துயின்மறந் தனளே (அகம். 252) என்பது போல்வதொன்றாம். இனி இப்பாடத்திற்குங் கிடந்த படியே வைத்துப் பசுங் கழைத் தழையினும் உழையினின்று போகான் என்றாலும் பொருந்தும். இனி துயல்வுக்கோடு - அசைதலையுடைய நட்டமரக் கோடுகள் என்றும், அசைத்த பசுங்கழைத் தழை அக் கோடுகள் அசையாமைக்குக் கட்டிய கருப்பங்கழையொடு கூடிய தழை என்றும் கொள்ளுதலுமாம். நீர்ச்சிறை செய்யுமிடத்துக் கோடு நட்டுக் கரும்பைப் பிணிப்பதுண் டென்பது, உழவர் காஞ்சியங் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை, மென்கழைக் கரும்பி னன்பல மிடைந்து, பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி, வருத்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை (அகம். 346) என்பதனானறிக. கோட்டிற் பிணித்த கழைத்தழையினும் உழை யினின்றகலான் என்க. பசுங்கழைத்தழை என்பதனைப் பசுந் தழைக் கழை என மாறினும் பொருந்தும். நீங்கான் ... கொல்புனற் சிறையின் (புறம். 263) தான் போகானாய்க் கரையைக் கொல்லும் புனலின்கண் அணைபோல எதிர் நின்று என்பது காண்க. தூங்கலோரியார் 295. உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும் 1 தழையணிப் பொலிந்த வாயமொடு துவன்றி விழவொடு வருதி 2 நீயே யிஃதோ 3 ஓரான் 4 வல்சிச் சீரில் வாழ்க்கை 5 பெருநலக் குறுமகள் வந்தென இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே. (எ-து) வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது. (வி) தலைவனை நோக்கி ஆயமொடு துவன்றி வருதி என்றதனால், ஆயம் ஈண்டுப் பரத்தையர் கூட்டமாயிற்று. அணிப் பொலிந்த ஆயம் - தலைவன் தந்த பல அணிகளாற் பொலிந்த ஆயம் என்றது இயற்கை நலமில்லாமை குறித்தது. தழையை யுடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும் பொலிந்த ஆயமொடு நெருங்கி விழாவுடன் வருதி நீயே. வதுவையின் மணந்த உரிமை மகள் இல்லிற் புலம்ப விழவொடு வருதி என்று நீயே என்றாளாம். ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை - ஒரு பசு உடைமையான் வந்த பகற் சோற்றையுடைய செல்வமில்லாத வாழ்வு. பெருநலக் குறுமகள் வந்தென - பெரும்பாக்கியமுடைய இளமகளாகிய தலைவி வந்த அளவில். விழவாயிற்று - தலைவன் புறத்துப் பரத்தையருடன் விளையாடிவரும் விழாவுடையதாயினது. இஃதோ இனி - தலைவன் இப் பாக்கியவதியை நெகிழ்ந்தால் இதுவே யாமோ இனிமேல். என்னுமிவ்வூர் - என்று இவ்வூரார் சொல்வர் என்றவாறு. நச்சினார்க்கினியர், (தொல்.பொருள். சூத். 32) இவளை நெகிழ்ந்தால் பழைய தன்மையாமென்று அறிவர் இரங்கிக் கூறியவாறு எனக் கூறியது காண்க. தோழி - ஊர் என்று ஊரிலுள்ள அறிவரை நினைந்து கூறினாளாகக் கொள்க. வல்சி - பகற்சோறு என்பர் நச்சினார்க்கினியர் (சிந். 591). இதனாற் பகற் சோறுண்டால் இராச்சோறில்லாத சீரில் வாழ்க்கை என இவன் முன்னிலை கூறியவாறாம். பெரும்பாக்கனார் 296. அம்ம வாழி தோழி புன்னை அலங்கு சினை யிருந்த வஞ்சிறை நாரை அறு கழிச் 1 சிறுமீன் முனையிற் 2 செறுவிற் கண்ணாறு 3 நெய்தல் கதிரொடு நயக்கும் தண்ணந் துறைவற் காணின் முன்னின்று கடிய கழற 4 லோம்புமதி கொடியோள் இன்ன ளாகத் துறத்தல் நும்மிற் 5 றகுமோ வென்றனை துணிந்தே. (எ-து) காணும் பொழுதிற் காணாப் பொழுது பெரிதாக லான் ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத் தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. (வி) புன்னை அலங்குசினை என்றது கடற்காற்றால் அசையும் கொம்பாதல் குறித்து. அசைதலான் அப் புன்னையினும் நாரை ஓரிடத்திருக்கப் பெறாமை குறித்தாள். இஃது அடுத்தடுத்துக் குறிபெயர்தலைக் கருதியதாம். நாரை அறுகழிச் சிறுமீன் முனைதலைத் தலைவன் அரிதிற் பெறும் களவின்பத்தை வெறுத் தலால் நினைந்தாளாம். அறுகழி - நீரறுகழிப் பள்ளங்கள். சிறுமீன் - அயிரை. நாரை செறுவிற் கண்ணாறு நெய்தல் கதிரொடு நயக்கும் என்றது தலைவன் தனக்குரிய மனைக்கண்ணே தன் சுற்றத்தோடு தன்னை வதுவையிற் கொண்டு துய்த்தலை நயக்கும் என்றதாம். நாரைக்கு மருதத்துச்செறு உரிய நிலனாத லுணர்க. நெய்தல் - செறுவிற் களையாய நெய்தல். கதிர் - நெற்கதிர். தாழ்ந்தும் உயர்ந்தும் மனையிற் றுய்த்தல் நினைப்பு. துறைவற் காணின் என்றதனால் அவனைக் காண்டல் அருமையாதல் குறித்தாள். இதனானன்றே துறையுட் காணும் பொழுதிற் காணாப் பொழுது பெரிதாகலான் என்றாரென்க. முன்னின்று கடிய கழற லோம்பு மதி என்றாள். அவன் நெடும்போது துறத்தலாற் கடிய கழறற்குரியன் என்பதும் அங்ஙனம் உரியனாயினும் பழியொல்லான் ஆதலான் அவன் முன் நின்று கழறுதலைப் பரிகரி என்பதும் குறித்தாளாம். தொடியோள் என்றது தலைவன் துறந்ததை அவளாற்றி யிருப்பினும். அவளுடம் பாற்றாமையைத் தொடியே காட்டுதல் குறித்தது. இன்னளாக என்றது தலைவன் புணர்ந்தவளினும் இவள் வேறென்னும் படியாகத் துறத்தல்.நும் இல் தகுமோ - நீத்தல் நும் குடிக்குத் தக்கதோ. என்றனை துணிந்து கழற லோம்புமதி - என்று கருதினை யாய்த் துணிந்து இடித்துரைத்தலைப் பரிகரி என்றவாறு. இல் தகுமோ என்பது இற்பிறந்தார் (குறள். 951) என்புழிப் போல வந்தது. நாடன் குடிநன்குடையன் (அகம். 352) ஆதல் குறித்ததாம். அவற்குத் தகுமேனும் அவள் குடிக்குத் தகாது என்பது கருத்து. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் 297. அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர் வைவார் 1 வாளி விறற்பகை பேணார் மாறுநின் றிறந்த 2 வாறுசெல் வம்பலர் உவலிடு பதுக்கை யூரிற் றோன்றும் கல்லுயிர் நனந்தலை நல்ல கூறிப் புணர்ந்துடன் போதல் பொருளென உணர்ந்தேன் மன்றலவ 3 ருணரா வூங்கே. (எ-து) தோழி வரைவு மலிந்தது. (வி) இவ் விளிம்பின் நாண் ஏற்றின் வளைத்த விசையால் அவ் விளிம்பை நாண் உருவி நழுவற்குக் காரணமான வளை வினையுடைய வில்மறவர் என்க. விளிம்பு என்பது வில்லில் நாண் உருவாமைக்கிட்ட வரைக்கடை. இவ் வரை யுள்ள கடையை நாணுருவுதல் விசையின் மிகுதியாலென்க. இதனையேதான் வீங்குவிளிம் புரீஇய விசையமை நோன்சிலை (அகம். 175) என்பதனாற் கூறினார் என்க. ஈண்டு வீங்குதல் மேலெழுதல். வீங்குசிலை (அகம்.89) என்ப. வைவார் வாளி - மறவராகிய வைபவருடைய அம்பு, வைதார்த்தல் அவர்க் கியல்பு. உயிர்க்கும் அம்பினர்..... ஆர்த் துடன் அரும்பொருள் வவ்வலின் (அகம். 291) என்பது காண்க. செருவேட்டுச் சிலைக்குஞ் செங்க ணாடவர் (அகம். 157) என்ப. வை வார் வாளி - கூரிய நீண்ட அம்பு என்பதுமாம். வாளி யாகிய வலிய பகையை மதியாராய் மாறுபடநின்று உயிரிறந்து ஆறு செல்புதியர். இவர் சாத்தர். இவரைத் - திருந்துவாள் வயவர் (அகம். 89) என்பர் உவலிடு பதுக்கை - சருகையிட்டு மூடிய கற்குவியல்கள். ஊர்போலக் காணப்படும் குன்றுகளு யர்ந்த அகன்ற இடத்து. நல்ல கூறி - அச்சமில்லாத நல்லன பலவுங் கூறப்பட்டு, புணர்ந்து - கூடி உடன் போதல். பொருளென - அவருடன் செல்லுதல் காரியமென நீ சிறிது நைபொருட்கண் செல்லாமை நன்று (திணைமாலை. 32:3-4) என்புழிக் காண்க. மன்றலவர் உணராவூங்கு - வதுவையினை அவர் தெளியாதமுன்னே. உணர்ந்தேன் - யான் தெளிந்திருந்தேன். அவர் உணரா ஊங்கு என்றதனால் இப்பொழுது அவர் மன்றல் உணர்ந்தனர் என்று குறித்தாளாம். தொன்றியன் மரபின் மன்ற லயர (அகம். 112) என்ப. மன்றலவர் என்பது மன்றவவர் எனப் பாடம் பிறழ்ந்தது. தோழி வரைவு மலிந்தது எனத் துறை வகுத்தது கண்டு உண்மை யுணர்க. லகரவகரங்கள் விரைந்தெழுதற்கண் வரிவடிவில் பெரும் பான்மை ஒத்தல் நினைக. நல்லுரை கூறுதல் என்பது தலைவி நவில்வதுமாகும். நம்மொடு நன்மொழி நவிலும் பொம்மலோதி (அகம். 353) என்ப. இடைச்சுரத்துக் கூட்டம் உண்மையிற் புணர்ந்துடன் போதல் கூறினாள். பரணர் 298. சேரி சேர மெல்ல வந்துவந் தரிது வாய்விட் டினிய 1 கூறி வைக றோறு நிறம்பெயர்ந் 2 துறையுமவன் 3 பைத 4 னோக்கம் நினையாய் தோழி இன்கடுங் கள்ளி 5 னகுதை 6 தந்தை 7 வெண்கடைச் 8 சிறுகோ லகவன் மகளிர் மடப்பிடிப் பரிசின் மானப் 9 பிறிதொன்று குறித்ததவ 10 னெடும்புற நிலையே. (எ-து) கிழத்திக்குத் தோழி குறை மாறாமற் கூறியது. (வி) சேரிசேர - சேரியி லுள்ளவர் தம் இல்லஞ் சேர்ந்த அளவில். மெல்ல வந்து வந்து - அடியோசைப் படாமற் பலகால் வந்து. வைகல்தோறும் என மேற்கூறுதலான் உணர்க. அரிது வாய் விட்டு - பல்காலன்றி அருமையாக ஓரோர்கால் வாய விழ்ந்து. இனிய கூறி - தான் கருதியது கூறாது நம் காதுக்கினியன சில சொல்லி. வைகல்தோறும் - நாள்தோறும். நிறம் பெயர்ந்து - வண்ணம் வேறுபட்டு. உறையுமவன் - நாம் குறை மறுக்கே மென்று நினைந்து உயி ரோடு தங்குமவன். பைதல் நோக்கம் - உள்ளவருத்தம் புலப் படுத்தும் பார்வையை. நினையாய் நினைக்கின்றாயல்லை. இன்கடுங்கள்ளின் - இனிய களிப்புக் கடுமையையுடைய கள்ளினாற் குறைவில்லாத. அகுதை தந்தை - அகுதைக்குத் தந்தையின். வெண்கடைச்சிறுகோல் அகவன் மகளிர் - வெண் பொற்பூணைக் கடையிலுடைய தஞ்சாதிக்கடை யாளமாகிய சிறுதலைக்கோலையுடைய பாடல் மகளிர்க்கு. மடப்பிடிப் பரிசில் மான - இளம்பிடிகளாக நல்கிய பரிசிலைப் போல. பிறிதொன்று குறித்தது - வேறு ஒரு காரியத்தை முடிப்பது கருதியது. அவன் நெடும்புறநிலை - அவன் நெடும்போது நம்புறத்தே நிற்பது என்றவாறு. மடப்பிடிப் பரிசில் பிறிதொன்று குறித்ததென்பது முன்னம், மகிழ்நன் மார்பே வெய்யை யானீ (73) என்னும் பாட்டில் விளக்கப்பட்டது. பிடிப்பரிசிலால் நன்னன் நறுமா அழிந்த வரலாறு. ஆண்டுக் காண்க. மடப்பிடிப் பரிசில் நன்னன் பழியைப் பரப்பி அவன் நறுமாவைக் கொன்றாற் போல இவன் நெடும்புற நிலையிற் சூழ்ந்ததும் நம் பழியைப் பரப்பி நம் நாணினைக் கொல்வதாம் என்றவாறு. அது மடலேறுதல் என்று குறிப்பித்தாளாம். அவள்பழி நுவலு மிவ்வூர் (173) என்பதனால் மடலேறுதல் தலைவி பழியைத் தூற்றுதல் ஆதல் உணர்க. 73ஆம் பாட்டில் நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போக்கிய, ஒன்றுமொழிக் கோசர் வன்கட் சூழ்ச்சி என்றதனையும், ஈண்டு அகவன் மகளிர் மடப்பிடிப் பரிசின் மானப் பிறிதொன்று குறித்தது என்பதனையும் சேரக் கொண்டு இவ் வரலாற்றுண்மை உணர்க. இவர்தம் சூழ்ச்சிக்கு அகவன் மகளிரை வாயிலாக்கியது நன்னன் அகவன் மகளிரைப் பெரிதும் போற்று பவனாதல்கருதி எனின் நன்கு பொருந்தும். இவ்வுண்மை, இருங்கழை யிறும்பி னாய்ந்துகொண் டறுத்த, நுணங்குகட் சிறுகோல் வணங்கிறை மகளிரொ, டகவுநர்ப் புரந்த அன்பிற் கழறொடி, நறவுமகி ழிருக்கை நன்னன் (அகம். 97) என்பதனான் அறியக் கிடத்தல் காண்க. ஈண்டுஞ் சிறுகோல் மகளிர் என்றது காண்க.* வெண்மணிப் பூதியார் 299. இதுமற் 1 றெவனோ தோழி முதுநீர்ப் புணரி கிளைக்கும் புள்ளிமிழ் 2 கானல் இணர்வீழ் 3 புன்னை யெக்கர் நீழற் புணர்குறி வாய்த்த 4 ஞான்றைக் கொண்கற் கண்டன மன்னெங் 5 கண்ணே யவன்சொற் கேட்டன மன்னெஞ் 6 செவியே மற்றவன் மணப்பின் மாணல மெய்தித் தணப்பின் ஞெகிழ்பவென் 7 றடமென் றோளே. (எ-து) சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி)முதுநீர்ப் புணரி - பழையதாகிய நீருடைய கடல். நீரினின்று நிலமுண்டாதல் நினைவு. புணரி திளைக்குங் கானல் - கடல் தழுவும் கழிச்சோலை. எக்கர் - மணற்குவியல். நீழல் என்பதனால் இது பகற்குறி என்றவாறு. புணர்குறி வாய்த்த ஞான்றை என்றது குறிவாய்த்துப் புணர்தலருமை குறித்தது. புள்ளிமிழ் கானல் என்றது - மக்கள் குரல் இல்லாமை குறித்தது புன்னை இணர்வீழ் எக்கர் என்றது - அங்கும் ஒரு பூப்படுக்கை வாய்த்தல் கருதியது. கொண்கன் என்றதனாலும் புன்னை இணர் வீழ் எக்கர் நீழற் புணர்குறி வாய்த்தது கூறியதனானும் இருவரும் நெய்தல் நிலத்தவராதல் தெளியலாம். கொண்கன் எய்தியது முதற் பிரியும் வரை மிகவும் கண்டன கண்கள். அவனுடனுறையும் போது முழுதும் அவன் சொற்களை மிகவும் கேட்டன செவிகள். அங்ஙனமாகவும் இவற்றின் முற்படக் கலப்பின் மாண்புடைய நலம் எய்தி நீப்பின் மெலிந்து தளர்வன என் தடமென் றோள்கள். அறிவுள்ள பொறிகளாகிய கண்ணும் செவியும் விகாரமின்றி இருப்பவும், அறிவில்லாத கன்மேந்திரியமாகிய தோள்கள் விகார மெய்துவன. இதுமற் றெவனோ என்றாளாம். தோள்கள் உற்றறிவனவாகவே கொள்ளின் மணத்தலாகிய பேறும், தணத்தலாகிய இழவும் கண்ணினுஞ் செவியினுங் காட்டில் தோள்கட்கு அதிகமாதல் குறித்துக் கூறினாளென்க. கண்டபின்னுங் கேட்ட பின்னும் உறுவதே முடிந்த பயனாதல் நோக்கிக் கொள்க. திருவள்ளுவனாரும் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் (குறள். 1101) என்பதனால் உறுதலையே காண்டல் முதலிய வற்றிற்கு மேலாக வைத்துக் கூறுதல் காண்க. இனி மணப்பின் மாணலமெய்தித் தணப்பின் ஞெகிழ்ப என்றது கண் காட்சிக் கலப்பினும் செவி சொற்கலப்பினும் மாணல மெய்துவன எனினும், அக் காட்சியும் சொற் கேட்டலும் தணப்பின் ஞெகிழ்வன தோள்களே என்று தெரிந்து இது மற்றெவனோ என்றாளெனினுமமையும். காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின், நீங்குமென் மென்றோட் பசப்பு (குறள். 1265) என்பது போல வருவன கண்டுணர்க. இனிக் கண்ட கண்ணும், கேட்ட செவியும் மணப்பினும் தணப்பினும் தம் இன்ப துன்பங்களைப் புறத்தார்க்குப் புலனாக்காதிருக்கவும் தோள்கள் மட்டும் மணப்பின் மன்னலத்தாற் பூரித்துத் தணப்பின் ஞெகிழ்ந்து புறத்தார்க்கு என்னைக் காட்டிக் கொடுப்பன இது மற்றெவன் என்றாளென்பதுமாம். தணந்தமை சால வறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள் (குறள் 1233) என்ப. இது கற்பினுள் இக் கருத்தே பற்றி வந்தது காண்க. சிறைக்குடி ஆந்தையார் 300. குவளை நாறுங் குவையிருங் கூந்தல் ஆம்ப னாறுந் தேம்பொதி துவர்வாய்க் 1 குண்டுநீர்த் தாமரைக் கொங்கி 2 னன்ன நுண்பஃ றித்தி 3 மாஅ யோயே நீயே, அஞ்ச லென்றவென் சொல்லஞ் சலையே யானே, குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்கும் கடல்சூழ் மண்டிலம் பெறினும் விடல் சூழலனா 1 னின்னுடை நட்பே. (எ-து) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகள், பிரிவச்சமும் வன்புறையுங் கூறியது. (வி) குவளை நாறுங் கூந்தல் - சூடாது குவளை மணக்குங் கூந்தல். குவைஇருங் கூந்தல் - திரட்சியையுடைய கரிய கூந்தல். ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வாய் - ஆம்பல் மணக்கும் இனிமை பொதிந்த பவளவாய். இனிமை - சொல்லினிமையும், ஊறுநீரினிமையும். பவளத்தைச் செம் மைக்கு உவமை கூறலான் ஆம்பலை மணத்திற்குக் கொண்டார். குண்டு நீர்த்தாமரை என்றது வாடாமை குறித்தது. கொங்கு - தாது. மணத்துடன் மென்மைக்குங் கூறினான். தித்தி - திதலை மாஅயோய் - மாமை நிறமுடையாய். குவளை நாறுங் கூந்தலால் மோந்தும், தேம்பொதி துவர் வாயாற் கேட்டும் உண்டும், கொங்கின் நுண்பல் தித்தியால் உற்றும், மாஅயோய் என்பது மெய்முழுதும் உள்ள மாமையாற் கண்டும் இன்புற்றவாறு கூறிக் காட்டினான். கொங்கு மென்மைக்குக் கொண்டான். கொங்கு தாது. கொங்கிற்றித்தி, கொங்கின் மாயோய் என்று கூறிக் கொள்க. எல்லாவற்றிலும் தாமரைத் தாது மண முண்மை கூறியது பத்மினி என்பது அறிய. இயற்கைப் புணர்ச்சியில் ஐவகைப் புணர்ச்சியும் தலைவன் பெறுதல் திருக்கோவையுட் பிரிவுணர்த்தற்றுறையுட் பேராசிரியர், ஐவகைப் புணர்ச்சி யும் பெற்றுப் புணர்வதன் முன்னும் புணர்ந்த பின்னும் ஒத்த அன்பினனாய் நின்ற தலைமகன் எனக் கூறுதலானுணர்க. அஞ்சாதேகொள் என்ற என் சொல்லினால் அஞ்சுதலை யுடைய நீயே அஞ்சலை என்பது. பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை (பதிற். 90) என்புழித் தோன்றலை என்பது போல நின்றது. தலைவன், பிரியேன், அஞ்சல் என்றான். தலைவி இவன் அஞ்சல் என்ற சொல்லானே அஞ்சுதற்குரியதொன்றுண்டென்று அஞ்சுதலடைந்தாள், அதுகண்டு அவளைத் தேற்றி விடல் சூழ்கிலன் என்றா னென்க. பிரிவச்சமும் வன்புறையும் கூறியது எனத் துறை வகுத்தல் காண்க. கடல் சூழ் மண்டிலம் பெறினும், நின்னுடை நட்பு - நின்னை உடைமையாகக் கொள்ளுதற்குக் காரண மான நட்பினை, யானே விடல் சூழலன் - யானே விடுதலை நினையேன். கடல் சூழ் மண்டிலத்து ஐம்பொறியுஞ் சேர ஓரூழி இன்பந் துய்ப்பதற்குரிய உயர் பொருள் இவளன்றி வேறின்மையால் விடல் சூழலன் என்றான். குறுங்கா லன்னம் குவவுமணற் சேக்குங் கடல் என்றதனால் மருதத்து அன்னம் நெய்தலிற் போய்த் தங்கும் என்பதை நினைப்பூட்டி, நீ என் மனைக்கண் வதுவையின் வந்து தங்குவாய் எனக் குறிப்பாலுணர்த்தினானாம். தடஞ்சிறை யன்னங் குருகொடு நாரைப் பார்ப்பின மோம்புதண் மருதம் (சிந். 2102:3) என்ப. சூழலனால் - ஆல் - அசை. நீர்நிலையை அடுத்து இவ் வியற்கைப் புணர்ச்சி நிகழ்தலின் ஆண்டுள்ள நீர்ப்பூ மூன்றையுங் கூறினான். குண்டு நீர்க் குவளை, குண்டுநீ ராம்பல் என மற்றை இரண்டிற்கும் கூட்டியுரைக்க. குன்றியனார் 301. முழவுமுத லரைய 1 தடவுநிலைப் பெண்ணைக் கொழுமட லிழைத்த சிறுகோற் 2 குடம்பைக் கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல் வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல் மன்றம் போழு 3 மின்மணி 4 நெடுந்தேர் வாரா தாயினும் வருவது போலச் செவிமுத லிசைக்கு மரவமொடு துயிறுறந் 5 தனவா றோழியென் கண்ணே. (எ-து) வரைவிடை வைப்ப ஆற்றகிற்றியோ என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. (வி) முழவு முதல் அரைய - முழாப் போல் உண்டாகிய அடிப் பக்கத்தையுடைய. முதலுதல் - உண்டாதல். தடவு நிலைப் பெண்ணை - பெருமையையுடைய நிலையினை யுடைய பனை. தடவுநிலைப் பலவின் (பெரும்பாண். 77) என்பது காண்க. கொழுமடல் இழைத்த - கொழுவிய மட்டையினிடையிற் கட்டிய. மடன்மா (தொல். களவு. 11:20) என்பதனால் உணர்க. ஈண்டு ஓலை அன்று. கொழுமடல் என்றது அகமடல் ஆதல் பற்றி. அன்றி லெக்கர்ப் பெண்ணை யகமடல் சேர (அகம். 160). சிறுகோற்குடம்பை - சிறுசிறு முட்கோல்களா லாகிய கூடு. முண்மிடை குடம்பை (அகம். 270) என்பது காண்க. கூட்டிலுள்ள கருங்காலுடைய ஆண் அன்றிலை விருப்பமுடைய தலைச் சூலானாய வயாநோயுடைய பேடை அன்றில் அழைத்துக் கூவும் பாதி நாளாகிய இரவில். கடுஞ்சூல் வயா நிலையினும் அகவும் என்றும், ஒரு கூட்டினுள்ளே சேவலோடுறையும் போதும் பிரிந்ததாக நினைந்து கொண்டு அகவும் என்றும், அன்றிற்பெடையின் அன்பு புலப்படுத்தினாள். இதனை, நண் படைந்த, சேவலும் தன்னருகிற் சேக்குமா லென்கொலோ, பூந்தலை யன்றிற் புலம்பு (ஐந்திணை ஐம்பது 41) என்பதனான் உணர்க. மன்றம் போழுந் தேர் கங்குலில் வருதலால் போழத் தகாத மன்றத்தையும் போழ்ந்து வருதல் குறித்தாள். தேர் இரவில் வந்த தென அலராதற்கு இதுவே காரணமாதலும் நினைக. மின்மணி - மின்னுகின்ற மணிகள். பெடை அகவும் பானாளாதலால் அவ்வமயம் தேர் வாராதாயினும் வருவது போலக் காதடியில் இசைக்கும். அப் புள்ளரவத்தால் என் கண்கள் துயில் நீங்கின என்றாளென்க. நள்ளென் கங்குற் புள்ளொலி கேட்டொறும், தேர்மணித் தெள்ளிசை கொல்லென, வூர்மடி கங்குலுந் துயில்மறந் ததுவே (நற். 287) என வருதலான் இவ்வுண்மையுணர்க. தன்பக்கல் சேவலுள்ள போதும் இல்லது போல நினைந்து பெடையன்றில் அகவுவதும், தேர் வாராதாயினும் வருவது போல அவ்வரத்தாற் றுயிலாமையும் அன்பின் பெருக்கத்தாளாதல் காட்டினாள். துணை பக்கலுள்ள போது கடுஞ்சூல் பேடை பிரிந்ததாக நினைந்து அகவு மாயின், இன்பந்துய்த்தற்குரிய நிலையிற் துணைவரைப் பிரிந்துள்ள தான் ஆற்றுவது அரிதாயினும் அவர் தேர் வருவதாக நினைந்திருப்பலென்று கொள்ள வைத்தாளாம். மாங்குடிகிழார் 302. உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே அருந்துய ருழத்தலு மாற்றா மதன்றலைப் பெரும்பிறி தாக 1 லதனினு மஞ்சுதும் அன்னோ வின்னு 2 நன்மலை நாடன் பிரியா நண்பின 3 ரிருவரு மென்னும் அலரதற் 4 கஞ்சினன் கொல்லோ பலருடன் துஞ்சூர் யாமத் 5 தானுமென் நெஞ்சத் தல்லது வரவறி யானே. 6 (எ-து) வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. (வி) இது வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த பொழுது கூறியதாதலின், அருந்துயர்-ஆற்றுவாரில்லாத பொறுத்தற்கரிய துயர் என்க. வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் (தொல். களவு. 21) என்புழி வருந்துதல், ஆற்றுவா ரின்மையின் வருத்த மிகுதல் என நச்சினார்க் கினியர் கூறியது கொண்டுணர்க. உழத்தலும் - பன்னாள் உழந்திருத்தலும். ஆற்றாம் - பொறுக்காம். அதன்தலை - அதற்குமேல். பெரும்பிறிதாகல் - இறந்து படுதல். ஒருநாளொரு பொழுதைத் துன்பமாயினும் அதனினும் அப் பன்னாள் அருந்துயருழத்தலினும். அஞ்சுவதும் - அஞ்சு கின்றோம். அன்னோ - ஐயோ. என்றது உயிர்கலந் தொன்றிய நட்பால் தலைவனும் இறந்துபடுமென்றஞ்சி அன்னோ என்றதாம். இவள் பன்னாளுழத்தல் இன்னும் என்பதனாற் பெறப்பட்டது. தான் உயிர் பொறுப்பதோ, விடுவதோ என்று அஞ்சும் இந் நிலை வந்தும் நன்மலை நாடன் அலரதற்கு அஞ்சினன்கொல். அஞ்சுதல் யாங்ஙனம் புலனாயிற்றெனின் ஊரிற் பலர் உடன் துஞ்சும் யாமத்தின் கண்ணும் என் நெஞ்சத்தல்லது வரவு அறியான் ஆதலான் என்க. நேரில் வருகின்றனன் என்பது கருத்து. தோழீ அது புரைத்தோ உரைத்திசின் - அங்ஙனம் அவர் அஞ்சுதல் உயர்ந்ததோ சொல்லிக்காண் என்றவாறு. யாம் பெரும்பிறிதாதல் அஞ்சுதும்; நாடன் அலர் அஞ்சினன். அவன் இறந்து படாமைக்கு யாம் இறந்து படுதலை அஞ்சுதும்; யாம் இறந்து படுமாறு நாடன் என் நெஞ்சத்தல்லது வரவறியானாய் அலரஞ்சினன். அது புரைத்தோ என்று வினாவினாளென்க. அன்றும் ஓவும் அசைகள். அவன் வர நேர்ந்தபோது தான் இல்லையாயினால் அவன் என்னாவனோ என்று அஞ்சுதல் குறித்தாளாம். அவள் அஞ்சுதற்குக் காரணமான அலரும், இருவரும் பிரியா நண்பினர் என்றதன்றி வேறு பொய் கூறிற் றில்லையே என்றதாம். இவ்வலரே ஆருயிர் நிற்றற் கேதுவாதலன்றி அஞ்சுதற்கு ஏதுவாகாது என்பதாம். அலரெழ வாருயிர் நிற்கும் (குறள். 1141) என்பது தலைவன் கூற்றாதல் காண்க. வரைவிடை வைத்துப் பிரிந்த இடத்துத் தலைவியும் அலர்நாண வொல்வதோ (குறள். 1149) எனக் கூறுதல் காண்க. இப் பாட்டிற் பெரும்பிறிதாகு நிலையின் அலருக்குத் தலைவி தானும் அஞ்சாமை குறித்து அஞ்சினன் கொல் என்றாளாகக் கொள்க. பலர் உடன் துஞ்சுதல் - பலர் ஒன்று சேரத்துயிலுதல், துஞ்சூர் யாமத் தானும் நெஞ்சத்தல்லது வரவறியான் என்றது பகலில் ஊர்முழுதும் அறிய வரைவொடு வருதலை அறிய வேண்டுபவன் என்பது குறித்ததாம். நெஞ்சத்தல்லது வரவறியானாகவும், இருவரும் மெய்யிற்பிரியா நண்பினர் என்று பொய்யே கூறும் அலராகிய பழியுரைக்கு அஞ்சினன் கொல் என்பதும் ஆம். அம்மூவனார் 303. கழிதேர்ந் 1 தசைஇய கருங்கால் 2 வெண்குரு கடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல் உடைதிரை 3 யொலியிற் றுஞ்சுந் துறைவ 4 தொன்னிலை நெகிழ்ந்த வளைய ளீங்குப் 5 பசந்தனண் 6 மன்னென் றோழி யென்னொடு மின்னிணர்ப் புன்னையம் புகழ்நிழற் பொன்வரி யலவ னாட்டிய ஞான்றே. (எ-து) செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது. (வி) கழிதேர்ந்து அசைஇய - கழிச்சேற்றின் நீரைத் தேடி இளைப்பாறும், வெண்குருகு அடைகரைத் தாழை குழீஇ - வெண் குருகு கரை அடைந்த தாழையிற் றன்னினத்தோடு தொக்கு. கொடுங்கழி யிரைநசை வருத்தம் வீட மரமிசைப் புள்ளும் பிள்ளையொடு வதிந்தன (நற். 385) என்பது காண்க. பெருங் கடற்றிரையுடை ஒலியிற்றுஞ்சுந் துறைவன் என்க. தொன்னிலை நெகிழ்ந்த வளையள் - நீ மெய்யாற் பிரிதற்கு முன்னிலையினே வளை நெகிழ்ந்தவள். தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு, முன்ன முணர்ந்த வளை (குறள். 1277) என்பது காண்க. தலைவன் தலைவியை ஆயத்துய்த்தவுடன் நெகிழ்ந்தது கண்டவளாதலின் இங்ஙனம் கூறினாள். ஈங்குப் பசந்தனள் - இப்படி மிகப் பசந்தனள் என்றது அன்னை தெரிந்து இற்செறிக்குமாறு பசந்து காட்டினாள். இது செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது ஆதல் காண்க. மின் இணர்ப்புன்னை - வெண்பொன்போன் மின்னும் பூங்கொத்துக்களையுடைய புன்னைகள். புகர் நிழல் - புள்ளி பட்ட நிழற்கண். அலவன் என்னொடு ஆட்டிய ஞான்றே - நண்டினை என்னோடலைத்து விட்ட நாளே. ஞான்றே பசந்தனள் என்க. தலைவி தான் ஆட்டிய அலவனை என்னோடு செல்ல ஆட்டிய ஞான்றே என்றதாகக் கொள்க. தோழி அவ்வலவனோடு செல்லத் தலைவி தளர்ந்தனளாக இருந்த புன்னையம் புகர் நிழலிற் றலைவன் எய்தி அணைந்ததைக் குறிப்பானுணர்த்தினாளாம். அடைகரை யலவ னாட்டி, யசைஇயின ளிருந்த வாய்தொடிக் குறுமகள், நலஞ்சால் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும், பெறலருங் குரையள் (அகம். 280) என்பது காண்க. கழிதேர் ... ... துறைவ என்றது இவளைத் தேடி வந்து இற்செறிப்பான் இளைப் புற்று நின்னிடத்து நின்னினத் தொடு தங்கி ஈண்டுண்டாய அலராரவாரிக்க வரவு முயல்வது மடிந்திருப்பாய் நீ என்று குறிப்பிற் கொள்ளவைத்தவாறாம். பொன்வரி அலவன் - முதுகிற் பொன்போன்ற இரேகைகளை யுடைய ஞெண்டு. ஆட்டிய ஞான்றே பசந்தனள் என்றது அஞ்ஞான்று அவன் இவளைத் துய்த்தறிந்த நாளாதலின் அவன் மறத்தற்காகாதென்று கொண்டு என்க. கணக்காயன் தத்தனார் 304. கொல்வினைப் 1 பொலிந்த கூர்வா யெறியுளி 2 முகம்பட மடுத்த முளிவெதிர் 3 நோன்காழ் தாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து 4 வாங்குவிசைக் கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீ னெறிய நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து வெண்டோ டிரியும் வீததை கானற் கைதையந் தண்புனற் சேர்ப்பனொடு செய்தனெ மன்றவோர் பகைதரு நட்பே. (எ-து) வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) கொல் வினைப் பொலிந்த கூர்வாய் எறி உளி முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ் - கொற் றொழிலால் விளங்கிய கூரிய வாயினையுடைய எறிந்து கொல்லும் உளியை எதிராக அழுந்தப் பொருந்திய காய்ந்த திணிமூங்கிலின் வலிய கோலை. பக்கத்து மடுத்தது அல்லாமை தெரிய முகம்பட என்றார். வெதிர் - திணிமூங்கில் என்பர் அகப்பாட்டுரைகாரர் (அகம். 29). கொடுந்திமிற் பரதவர் - வளைவினையுடைய மீன்பிடி படகு களிலேறிய கடலோடிகள். தாங்கரு நீர்ச்சுரத்து எறிந்து - தான் கரைகடந்தால் யாருந் தடுத்தற்கரிய கடலின் அருவழிகளில் வீசி. நோன் காழெறிந்து வாங்கு விசைக் கோட்டு மீன் எறிய - ஈர்க்கின்ற விசையின்கண் எறியப்பட்ட கோடுடைய சுறாமீன் வந்து எறிதலான் அன்னத்துத் தோடு இரியும் என்க. வீ ததைகானல் - மலர் நெருங்கிய கழிச் சோலை. நெடுங்கரை இருந்த கானல் என்றும், அன்னத்து வெண்டோடிரியும் கானல் என்றும் இயைத்துக் கொள்க. கொடுந்திமிற் பரதவர் சுறா வேட்டம் இரவின் நிகழ்வ தொன்றாதலாற் கரையிருந்த அன்னம் எனப்படாது அவை கழிச் சோலைகளிலுள்ளனவாகக் கருதப்படுமென்க. இவ்வுண்மை, இறவருந்தி யெழுந்த கருங்கால் வெண்குருகு, வெண்குவட் டருஞ்சிறைத் தாஅய்க் கரைய, கருங்கோட்டுப் புன்னை யிறை கொண் டனவே, கணைக்கான் மாமலர் கரப்ப மல்குகழித் துணைச் சுறா வழங்கலும் வழங்கு மாயிடை. யெல்லிமிழ் பனிக்கடன் மல்குசுடர்க் கொளீஇ, யெமரும் வேட்டம் புக்கனர் (நற். 67) என்பதனா னறிக. இக் கோட்டுமீன் எறிசுறா எனப்படும். எறிசுறா நீக்கி (அகம். 350) எனவும், கடுமுர ணெறி சுறா (நற். 303) எனவும் வருதல் காண்க. இதனாற் பரதவர் எறிந்து வாங்கு விசையின் அது வந்து எறிதல் கூறினர். இம் மீன் எறி உளியால் எறிந்த பின்னும் துள்ளிக் கிளம்புதல், எறியுளி பொருத ஏமுறு பெருமீன், புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட, விசும்பணி வில்லிற் போகிப் பசும்பிசிர்த், திரைபயி லழுவ முழக்கி யுரனழிந்து, நிரைதிமில் மருங்கிற் படர்தரும் (அகம். 210) என வருதலானறிக. அன்னத்து வெண்டோடு - அன்னத்து வெள்ளிய தொகுதி. எறியுளி - கயிறுகடை யாத்த கடுநடை எறியுளி (நற். 388) என்ப. மன்ற - தேற்றமாக. சேர்ப்பனொடு செய்தனெம் பகை தரும் ஓர் நட்பு - பல பகை தரும் ஓர் நட்பு என்றவாறு. பகை - தாயும் ஊரும் பிறவும். நட்டமுதலே கூடியுறையப் பெறாது களவுபற்றிப் பிரிய நேர்தலாற் சாதலன்ன பிரிவைத்தரு நட்பே செய்தனெம் என்றாளெனினு நன்கமையும். பிரிவின் றாயின் நன்று ... நாடனொடு கலந்த நட்பே (134) என்றது காண்க. காமமாகிய பகையைத் தரும் நட்பு என்பதும் உண்டு. குப்பைக் கோழியார் 305. கண்டர 1 வந்த காம வொள்ளெரி 2 என்புற நலியினு மவரொடு பேணிச் சென்றுநா முயங்கற் கருங்காட் சியமே வந்தஞர் களைதலை யவராற் றலரே உய்த்தனர் விடாஅர் 3 பிரித்திடை களையார் 4 குப்பைக் கோழித் தனிப்போர் போல 5 விளிவாங்கு விளியி னல்லது களைவோ ரிலையா 6 னுற்ற நோயே. (எ-து) காப்புமிகுதிக்கண் தோழி அறத்தொடு நிற்பாளாகத் தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது. (வி) கண் பார்த்துத் தருதலான் வந்த காமமாகிய ஒள்ளிய தீ. எமக்கு இந்நோய் செய்த கண் (குறள். 1176) என்ப. காட்சி யடியாகப் பிறந்த காமம் ஆதலிற் கண்தர வந்த என்றார். கண்ணென்னும் பொறி தீயாகிய பூதத்தினுண்டாத லான் அஃது எரிதற்கு இயைபுண்மை நினைக. ஈண்டுக் காமம் என்பது தலைவனைத் தழுவி நுகரும் வேட்கை. வேறு ஒன்றானும் அவியாமையின் ஒள்ளெரி என்றாள். என்பு உறநலியினும் - என்பைத் தீண்டா நிற்க வருத்தினும். உள்ளத்தளவினில்லாது உடம்பையும் எரித்தல் குறித்தது. சென்று - குறியிடைப் போய். அவரொடு பேணி முயங் கற்கு - அவரோடொத்துப் புணர்தற்கு. பேணல் - ஒத்தல். பெருநறாப் பேணியவே கூர்நறா வார்ந்தவள் (பரிபாடல் 7:63-4). நாம் அருங்காட்சியம் -நாம் அரிய பார்வையி லுள்ளோம். என்றது தாய் இடையறவுகடாது காவல் செய்து பார்த்திருத்தலைக் குறித்ததாம். இது காப்பு மிகுதிக்கண் தலைவி கூறியதாதல் காண்க. அருங்காட்சி அருங்கடி என்றது போல வந்தது. தலைவன் காண்டற்கரிய நிலையிலுள்ளேம் என்பதும் ஒன்று. வந்து - வரைவுடன் எய்தி. அஞர் களைதலை - வருத்தந் தீர்த்தலை. அவராற்றலர் - அவர் செய்திலர். பிரித்து உய்த்தனர் விடாஅர் - பிரிவித்து மனையகத்துச் செலுத்தி விடார். இடைகளையார் - வெற்றிதோல்வி கட்கிடையே விலக்கார். குப்பைக் கோழித்தனிப்போர் போல - குப்பையின் மேயுங் கோழிகள் தாமே தனிமையின் நிகழ்த்திய போரினைப் போல; போர் போல முடிவுழி முடியினல்லது யானுற்ற நோய் களைவோரில்லை என்றாளென்க. விடார், களையார் கோழித் தனிப்போர் போல என்றாவது விரித்துரைக்க. குப்பைக் கோழித் தனிப் போரில் வெற்றி தோல்வி களால் தமக்கு மகிழ்ச்சியும் வருத்தமுமின்றி அயன்மையுடன் காண்பார் போல, யானும் நோயும் பொரும் போரில் நீ அயன்மையான் உள்ளனையென்று தோழிக்குக் குறித் தாளாம். நாம் அருங்காட்சியம் என்று தோழியை உளப் படுத்திக் கூறிய தலைவி ஈண்டு யானுற்ற நோய் என்றாள். அந்நோய்க்கு நீ அயலாவை என்பது தோன்ற. களையார் கண்டிருக்கும் போர் ஆதலாற் களையார் போர் என்றாள். இழிந்தோர் காணும் கூத்தை இழிந்தோர் கூத்து என்றாற் போல்வது. நோய் தன்னைப் புறத்தார்க்குக் காட்டி மீப்போதலும் புறத்தார்க்குப் புலனாகாமை வேண்டித் தான் அதனை அடக்கலும் ஆதலால் கோழித்தனிப் போராக உவமித்தாள். இனி உய்த்தனர் விடார் - ஈண்டுள்ளார் தாமேயும் தலைவன் பாற் செலுத்தி விடார். பிரித்திடை களையார் - நோயையும் என்னையும் பிரித்து இடையிற் களைய மாட்டார் என்பதுமாம். அம்மூவனார் 306. மெல்லிய வினிய மேவரு 1 தகுந இவைமொழி யாமெனச் 2 சொல்லினு மவைநீ மறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன் காமர் மாஅத்துத் 3 தாதமர் பூவின் வண்டுவிழ் பயருங் 4 கானற் றண்கடற் 5 சேர்ப்பனைக் கண்ட பின்னே. (எ-து) காப்பு மிகுதியால் நெஞ்சுமிக்கது வாய் சோர்ந்து கிழத்தி உரைத்தது. (வி) என் நெஞ்சே நீ நாடனைக் காணாதபோது மெல்லிய இனிய மேவருதகுந இவை அவன்முற் சொல்வாம். என்று என்னை உளப்படுத்தி அவனைப் புலந்து சொல்லி னும், நாடற் கண்ட பின்னே அங்ஙனம் செய்தற்கு அவை மறத்தியோ என்க. எனக்குச் சொல்லிய நீ மறத்தல் இயையா தென்று ஐய வினாவிற் கூறினாள். ஓ அசையாக்கி எனக்குச் சொல்லினும் நாடற் கண்டபின் நீ அவை மறத்தி என்பதும் நன்கியையும். அவை மறத்தி என்றது நீ இவை மொழியாமென்றற்குக் காரணமான நாடன் தவறுகளை மறந்தொழிகின்றாய் என்றதாம். இது வாரார் என்னும் புலவி யுட்கொண்டு கூறியது (நற். 11). காணுங்காற் காணேன் தவறாய (குறள். 1286) என்பதனால் அவை என்பது நாடன் தவறுகளாதலுணர்க. இனி அவை என்பது நீயே பல்காற் சொல்லிய அவற்றை என்பதும் ஒன்று. நீ அவனைக் காணாதபோது அவன் தவறுகளை எண்ணிப் பொய்க் காய்வு காய்ந்து என்னொடு சொல்லினும் அவனைக் கண்டபின் அவைகளை மறத்தி போலும் என்றாளாகக் கொள்க. பொய்க் காய்வு காய்தியென் னெஞ்சு (குறள். 1246) என்பதும், ஆண்டுப் பரிமேலழகர் கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக் கின்றதனாற் பயனில்லை என்று கூறியதும் கண்டு கொள்க. மெல்லிய - மெல்லோசையுடையன. இனிய - இன் பொருளுள்ளன. மேவரு தகுந - விளைவினால் விரும்பத் தக்கன இவை மொழியாம் என்றது அவன் வரைவொடு வாராத அயன்மை பற்றிய ஊடலான். இது களவாதலான் ஊடற்போலி எனப்படும். அவன் வயின் பரத்தையும் (தொல். களவு. சூ. 20) என்பதனானுணர்க. களவிற் புலவி வரைதல் வேட்கைப் பொருளதென்பது பொருளியலிற் பொழுது மாறுங் காப்பு.... மென்றிவற்றின் வழுவினாகிய குற்றங் காட்டலும் (தொல். களவு. சூ. 16) என்பதனான் உணர்க. ஈண்டு நச்சினார்க்கினியர், முயங்கல் பெறுகுவ னல்லன், புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே (நற். 119) என்பதை எடுத்துக் காட்டுதல் கொண்டுண்மையுணர்க. சொல்வதும் செய்வதும் ஒவ்வாமையான் நீ தீங்குறாது வாழி என்றாள். மாஅத்து பூவின் வண்டு வீழ்பயரும் கானற் சேர்ப்பன் என்றது இல்லத்துத் தன் செல்வமே பெரிதாகக் கருதி அதிற் களிப்பவன் என்னும் குறிப்பினதாம். இன்பத்தில் அயன்மையாயினன் என்றது கருத்து. கடம்பனூர்ச் சாண்டிலியனார் 307. வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச் செவ்வாய் வானத் தையெனத் தோன்றி இன்னம் 1 பிறந்தன்று பிறையே யன்னோ 2 மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன் உயங்குநடை மடப்பிடி வருத்த நோனாது நிலையுயர் யாஅந் தொலையக் 3 குத்தி வெண்ணார் கொண்டு கைசுவைத் 4 தண்ணாந் தழுங்க னெஞ்சமொடு முழங்கும் அத்த நீளிடை யழப்பிரிந் தோரே. (எ-து) பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி சொல்லியது. (வி) வளையுடைத் தனையதாகி - சங்க வளையை யுடைத்த அளவினதாய், உடைத்த அனையது உடைத் தனையது என நின்றது. பலர் தொழ - கன்னியர் பலர் தொழாநிற்க. என்றது தலைவனைத் தெய்வமாக வுடைய தான் தொழாமை குறித்தது. ஐயென - வருத்தக் குறிப்புடன் யான் ஐயென்று வெறுத்துச் சொல்ல, ஆவியா வழலென வுயிர்க்கும் ஐயென, மேவிப்பூ நிலமிசை யிருக்கு மெல்லவே (சிந். 1025) என்புழிப் போலக் கொள்க. செவ்வாய் வானத்து இன்னம் பிறந்து தோன்றிற்று என்க. தோன்றிப் பிறந்தன்று என்பதனை மாறுக. இன்னம் பிறந்தன்று என்றது முன்னை மாலையும் வருந்தப் பிறந்தது குறித்தது. நீளிடை அத்தம் அழப் பிரிந்தோர் அன்னோ தாமே மறந்தனர் கொல்லோ - நெடும் போது நாம் அழும் வண்ணம் பாலையரு வழியிற் பிரிந்து சென்றோர் தாமே இளம்பிறை தோன்றுவதன் முன்னே வருதும் என்று தெளித்ததை ஐயோ மறந்தனரோ. அவருள்ள இடத்தும் ஈண்டுத் தோன்றுவது போலவே பிறை பிறந்து தோன்றுமன்றே. அது கண்டும் தாமே தெளித்த போதினை மறந்தனர் கொல்லோ என்றா ளென்க. நீளிடை - நெடும்போது. இடை - காலம் (புறம். 54). நீளிடை யத்த நோக்கிவா ளற்றுக் கண்ணுங் காட்சி தௌவின என்னீத்து (நற். 397) என்புழியும், நெடும்போது அருவழி நோக்கி எனப் பொருள்படுதல் காண்க. நாளி டைச் சேப்பி னூழியி னெடிதே (ஐங். 482) என்பதனாற் பிரிந்த தலைவிக்குச் சிறுபோதும் நெடிதாதலுணர்க. இனி நாம் அழாநிற்க அத்த நீளிடைப் பிரிந்தோர் நம்மை மறந்தனர் கொல்லோ என்பாரு முளர். நாமழப் பன்னாள் பிரிந்த அறனி லாளன் (ஐங். 229) என்றவாறு. உயர்நிலை தொலைய - உயர்ந்து நிற்குநிலை கெட என்பதும் ஈண்டைக்கு நோக்குக. பிரிந்து சேணுறைநர் (அகம். 59) என்புழிப் பிரிந்து தாழ்க்க வுறைகின்றவர் எனப் பழையவுரைகாரர் கூறுவது கண்டுண்மையுணர்க. மாலையு முள்ளா ராயிற் காலை, யாங் காகுவங் கொல் (அகம். 14) என்பது காண்க. களிறு தன் மடப்பிடியின் உயங்குநடை வருத்தம் நோனாது என்க. உயங்கு நடை வருத்தம் நோனாது - தளர்ந்த நடைக்குக் காரணமானதாக வருத்தத்தைப் பொறாது. யாஅம் உயர்நிலை தொலையக் குத்தி என்றது யாமரஞ் சாயக் குத்தி என்றவாறு. உயர் நிலை தொலைய - உயர்ந்து நிற்கும் நிலைகெட. வெண்ணார் கொண்டு - பிடி வெள்ளிய பட்டையைக் கொள்ளுதல் காரணமாக. கைசுவைத்து - களிறு தான் வறுங்கை சுவைத்து. அண்ணாந்து முழங்கும் - இத்தனைக்கும் காரணமாகப் பெய்யாத வானை மேலெடுத்து நோக்கி முழங்கல் குறித்தாள். கைசுவைத்து முழங்குதல், நெடுநல் யானை நீர்நசைக் கிட்ட, கைகறித் துரறும் ... வறுஞ்சுனை (அகம். 329) என்பதனானு முணர்க. அழுங்கல் நெஞ்சமொடு - வருத்தமுடைய மனத்துடன், முழங்கு மத்தம் - கதறும் பாலை யருவழி; களிறு பிடி வருத்தம் நோனாது முழங்கும் அத்தம். பிரிந்தோர் என்றது பிரிந்தோர்க்கு நினைப்பூட்ட ஆண்டு விலங்குகள் உண்டு என்றவாறு. பிரிவிற்பெரும் போது தலைவி அழுதலாற் றோழி கடுஞ்சொற் சொல்லியதாகக் கொண்டார். ஆடவ ரழுந்தி வீழ்ந்தும் பிரிவிடை யழுங்கல் செல்லார், பீடழிந் துருகும் பெண்ணிற் பேதைய ரில்லை என்றாள்.” (சிந். 1388) என்பதனால் தோழி கடுஞ் சொற் கூறுத லுணரப்படும். நீயென்னை வருத்தி ஐயெனச் சொல்லப் பிறை இன்னம் பிறந்தன்று என்று கொண்டு தோழி கடுஞ்சொற் சொற்றதாகக் கூறினும் நன்கியையும். செவ்வாய் வானத்துத் தோன்றி - செவ்வானத்துவாய்த் தோன்றி. அவ்வாய் வளர்பிறை சூடிச் செவ்வா, யந்தி வானத் தாடு மழை (பெரும்பாண் : 412-13) என்புழிச் செவ்வானத்துப் பிறைமதிவாய் என நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. பெருந்தோட் குறுஞ்சாத்தனார் 308. சோலை வாழைச் 1 சுரிதுகும் பினைய 2 அணங்குடை யருந்தலை 3 நீவலின் மதனழிந்து மயங்குதுய ருற்ற மையல் வேழம் உயங்குயிர் மடப்பிடி யுலைபுறந் 1 தைவர ஆமிழி சிலம்பி னரிதுகண் படுக்கும் மாமலை நாடன் கேண்மை காமந் தருவதோர் கைதாழ்ந் தன்றே. (எ-து) வரைவிடைக் கிழத்தியை வன்சொற் சொல்லி வற்புறுத்தியது. (வி) சோலை வாழை - சோலையாகிய வாழை என்பர் நச்சினார்க்கினியர் (மலைபடு. 131). மையார் கதலிவனத்து (திருக்கோவை 262) என்பது பற்றி வாழைச் சோலை என்பதுமாம். சுரிநுகும்பு - சுரிந்த இளங்குருத்து. வானம் பாய் தளி பொழிந்தெனப், புன்னுகும் பெடுத்த நன்னெடுங் கானத்து (அகம். 283). வரிமரல் நுகும்பின் வாடி (நற். 92) என்பன காண்க. சோலையாகிய வாழையிற் சுரிந்த குருத்து வருந்த அவ் வாழைக்கன்றுகளுடைய அரிய தலையோடு கையாற் றடவி உண்டலால் வலியழிந்து என்க. அணங்கு - இளையதற்குப் பெயராதல் ஆளியினணங்கு மரியின் குருளையும் (சிலப். வஞ்சி. காட்சி. 148) என்புழிக் காண்க. நீவல் - உண்டு நீக்கலுமாம். மதனழிந்து - வலிகெட்டு. மயங்குதுய ருற்ற மையல் வேழம் - மயங்குதற்குக் காரணமான துன்பமெய்திய பித்தினையுடைய யானை. மையல் - பித்து. மைய லொருவன் களித்தற்றால் (குறள். 88) என்ப. ஒருவகை வாழையை மிகுதியாக வுண்ணிற் பித்தேறுமென்பது நாட்டுங் கதலியது நாளுந் துவர்ப்பதனாற் றீட்டு பித்த மையஞ் செருக்குங் காண் என்பதனா லறியலாம். கதலீது நகதாவன என்ற வடமொழி வழக்கும் நோக்குக. `அணங்குடை அருந்தலை என்புழி அருந்தலை என்றது கன்றாதல் பற்றித் தலையிற் குருத்து வந்தும் வாராதுமுள்ள நிலைமை குறித்தது. வேழத்தின் மையல் நிலைகண்டு உயங்கிய உயிர்ப்பினையுடைய மடப்பிடி என்க. உலைபுறந்தைவர - உலைந்த முதுகைத் தடவாநிற்க. உலைபுறம் என்றது பித்தேறிய தனாற் றன்னைத் தாங்கலாற்றாது முதுகு உலைந்திருத்தலைக் குறித்தது. ஆம் இழி சிலம்பின் - நீர் வழிகின்ற வரைப் பக்கத்தில். அரிது கண்படுக்கும் என்றது மருட்சியுள் தெருட்சியுமுடைமை பற்றி. நாடன் - பெருமலைநாடன். மடப்பிடி தான் அன்புற்ற வேழம் பித்தேறித் தனக்குதவா நிலையினும் வலியப் பெற்று அதனைப் பேணி வழிபட்டிருப்பது போல நீயும் அவன் மனைப்புக்கு அவனை எந்நிலையினும் பேணுதற்குரியை என்றும், அதனால் எல்லா நலனும் பெறுதற் குரியை என்றும் குறிப்பித்தாளாம். நாடன் கேண்மை காமம் தருவதோர் கை தாழ்ந்தன்றே - அத்தகை நாடன் கேண்மை இம்மையில் அறமும் இன்பமும் அம்மையிற் றுறக்க இன்பமுந் தருதற்குரியது இக் களவிற் காமம் தருவது என்பது ஒரு சிறிது தாழ்ந்ததே என்றாளென்க. மணந்து இல்லறத் தொழுகிற் புத்தேளிர் வாழும் உலகினும் பெருஞ்சிறப்புத் தருவதற்குரிய நாடன் கேண்மை காமந் தருவதென்பது ஒரு கை தாழ்ந்ததே என்றதாம். கை ஈண்டுச் சிறுமைக் காயது. கைஞ்ஞானம் - என்னும் நாலடியுட் காண்க. எழின்மிக வுடைய தீங்கணிப் படூஉம், திறவோர் செய்வினை யறவதாகும்.... யானை ஆர் துயி லியம்பு நாடன், மார்புரித் தாகிய மறுவி னட்பே (247) என்புழித் தலைவன் நட்பின் ஏற்றமும், அவன் செய்வினை தலைவிக்கு அற முடைத்தாதலும் கூறுதல் காண்க. மணந்து இல்லறத் தொழுகி நன்மகப் பெற்றுத் துறக்க மெய்தற்குரியது நாடன் கேண்மை என்பது, இம்மை யுலகத் திசையொடும் விளங்கி, மறுமை யுலகமு மறுவின் றெய்துப, செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச், சிறுவர்ப் பயந்த செம்மலோரெனப் பல்லோர் கூறிய பழமொழி (அகம். 66) என்பதனானுணர லாம். சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் (அகம். 112:11-12) என்பதனாற் களவிற் காமத்தைத் தாழ்ந்ததென்றாள். மணந்தெய்தும் சிறப்பினைக் குறிப்பின்வைத்து விரைந்து அறக்கிழத்தியாதற்குரிய நீ அவன் கேண்மையைக் காமந்தருவ தாக நினைவதும் அக் காமம் பெறாது வருந்து வதும் பேதைமை யாமென்று கடுஞ்சொற் கூறி வற்புறீ இயினாளென்க. அந்தமில் சிறப்பிள் மக எனத் தொல்காப்பியனார் கற்பியலிற் கூறுதல் காண்க. களவொழுக்கத்தான் வருஞ் சிற்றின்பமின்றியே வரைந்து கொண்டு நின்னோடொழுகு வன் (ஐங். 262 உரை) என்பது கருத்து. இதனால் தனக்கொத்த இல்லறம் இன்னதென்று தலைமகள் மனத்துட்படக் கூறினாளாகக் கொள்க. காம மாசுண்ட காதற் கதிர்வளைத், தோளினாரும் (சிந். 2588) என்பதன் கருத்துங் காண்க. மையல் வேழம் கண்டுபடுதற்கு ஆமிழி சிலம்பு கூறியது பித்தேறினாரை மிகுதியாக நீராட்டும் வழக்கை நினைந்த தெனிற் பொருந்தும். ஓர் கை தாழ்ந்தன்று என்பது ஓர் செயலிற்றங்கிற்று என்பாருமுளர். அங்ஙனமாயின், ஓர்கைத் தாழ்ந்தன்றே என்ன வேண்டுமென்க. ஐகார விறுதிப் பெயர்நிலை முன்னர், வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே (தொல். உயிர்மயங்கியல். சூத். 78) என்ற விதி காண்க. உறையூர்ச் சல்லியன் குமாரனார் 309. கைவினை மாக்கடஞ் செய்வினை முடிமார் சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்ப 1 நீடிய 2 வரம்பின் வாடிய 3 விடினும் கொடியரோ 4 நிலம்பெயர்ந் துறைவே மென்னாது பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும் நின்னூர் 5 நெய்த லனையேம் 6 பெரும நீயெமக் 7 கின்னா தனபல 8 செய்யினும் 9 நின்னின் றமைதல் வல்லா மாறே. 10 (எ-து) பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது. (வி) கைவினை மாக்கள் - கையாற் றொழில் செய்யும் மாந்தர். கருங்கை வினையர் என்பது (பெரும்பாண். 223). செய்வினை முடிமார் - தாம் இயல்பாகச் செய்யும் தொழிலை முடிப்பாராய். என்றது நெய் செய்து கதிர் கொய்து முடிப்பாராகி என்றதாம். முன்னே சுரும்புகள் உண்ண மலர்ந்த மணம் சிதைக்கப்படா நிற்க. கீழ்த்தல் - சிதைத்தல்; கீழ்தலின் பிறவினை. கீழ்ப்பட என்று பாடங் கொள்வாரு முளர். அதற்குக் கீழே பட்டொழிய என்க. பின்னே வாடவிட்டுச் சிதைப்புண்ணுதல் தெரிய மலர்ந்த வாசம் என இறந்த காலத்தாற் கூறினாள். நீடிய வரம்பின் - வரம்பு நீடிய இடத்து. வாடிய விடினும் - நெய்தலை வாடும் வண்ணம் அங்கே விடப்பட்டாலும். அம் மாக்கள் கொடியரோ கொடியரென்று சொல்லற்குரிய ரல்லர் என்றவாறு. ஈண்டு வாடிய விடுதல் என்பது கைவினை மாக்கள் வினைமுடிவிலே தாம் துய்க்க விரும்பிய நெற்கதிரைக் கொள்வாராகி அச் செறுவிலுள்ள நெய்தலை நீரிட்டுப் பேணாது சிதைத்து அஃது உலர்ந்து வாடிக் கெடக் கை விடுதலாகக் கொள்க. தலையளி செய்யாத நிலையினும் மனைக்கண்ணே வாடிக் கிடந்து தலையளி பெற்றால் மலர்ந்து விளங்குதல் தம் இயல்பாதலான் நீர் பெய்தால் மலர்ந்தும் நீர் பெய்யாது விடின் வாடியும். நீடிய வரம்பின் மலர்ந்தும் வாடியும் இருத்தல் தலைவிக்குமொத்தல் நோக்கிக் கொள்க. பெயர்த்தும் கடிந்த செறுவிற் பூக்கும் நெய்தலனையேம். நீர் பெய்யப் பெற்றாற் றிருமவும் கைவினைமாக்கள் தாம் வாடக் கடிந்த செறுக்கண் அவ்விடத்தே பூக்கும் நெய்தல் அனையேம் என்றாள். சுரும்புண மலர்ந்த வாசம் கீழ்ப்ப என்றது தலைவன் தன்பால் எய்தாமையால் அவனுடன் எய்தும் பல் விருந்தும் உண்ணும் இல்லறப் புகழ் சிதைக்கப்படுதலைக் குறித்தது. கோவலன் பரத்தையிற் பிரிந்துழிக் கண்ணகியார் தாம் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோட லிழந்ததாகக் (சிலப். 16 : 72-73) கூறுதலான் இஃதுணர்க. நின்னூர் நெய்தல் - நின் மருதநிலத்தூர் நெய்தல். செறுவிற் பூத்தலானும் இந் நிலனுணரப்படும். பரத்தையிற் பிரிவும், அதுபற்றி ஊடிச் சில சொல்லுதலும், அந் நிலத்தொழுக்கமாதற் கேற்பக் கூறினாள். பெரும என்றாள். இவ்வாறு அறக்கிழத்தியை வாடவிடுதல் நின் பெருமைக்குத் தகாதென்பது தெரிய, இன்னாதன பல செய்தல் - தம்மைப் பேணாது கைவிடுதலும் பரத்தையரை இல்லுய்த்துப் பேணி வழிபடுதலுமாம். கைவினைமாக்கள் நெல் அறுத்த பின்னர் நெய்தலைத் தம் எருமை வந்து மேய்தலும் ஈண்டைக்கேற்ப நினைக. “நாணினென்..... தன்கைத் தொடுமணி மெல்விரல் தண் ணெனத் தைவர, நுதலுங் கூந்தலு நீவிப், பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே (அகம். 386) என்புழிப் பரத்தை தலைவியை நீவிச் சேறல் கூறுதலான் உணர்க. தலைவியோடு தனக்கு வேற்றுமை யின்மையாற் றன்னையும் உளப்படுத்தி எமக்கும் என்றும் அனையேம் என்றும் கூறினாள். இன்னாதனபல செய்யினும் என்றது இனிது தலையளித் தலையும் என்றதைத் தழீஇ நின்றது. இன்னா செய்யினு மினிதுதலையளிப்பினும், நின்வரைப் பினளென் றோழி (34) என்றது காண்க. நீர் பெய்யினும், நீர்பெய்யாது காய்ந்து வாடவிடினும் என நெய்தற்கு மேற்றிக் கொள்க. நின்னின்றமைதல் வல்லா மாறே - நின்னின்று உயிர் பொருந்துதல் மாட்டாத ஏதுவால் நெய்தலை அனையேம் என்றவாறு. இனி நெய்தலைக் கிழங்கொழியச் சினையை நீடிய வரம்பிலிடினும் அது திரும்பவும் கடிந்தவயலிற் பூக்கும் என்று கொண்டு கூறுவாருளர், இவ்வாறு தலைவிக்குக் கூறுமிடத்து முதலொழியச் சினைசிதைத்துப் புறத்தெறிதற் கொன்றியைக்க லாகாமை நோக்கி அறிக. இனி மாக்கள் நெற் செய்தல் செய்வினை முடித்தல் தலைவன் இல்லற நிகழ்த்தலாகவும், அந்நெற் செய்யப் பாய்த்திய நீர்ச் செறுவில் அந் நெல்லுடன் வாழ்ந்து மலர்ந்து அந் நெற்செய்த லில்லையாயின போது வாடிச் சாய்ந்து திரும்பவும் அந் நெற் செய்யும் போது பூக்கும் நெய்தல்கள் அவ்வில்லறத்தாற் சிறப்புப் பெறும் வாயிலாகவும் கொண்டு அவ்வாயில்களெல்லாம் அடங்க உளப்பாட்டுத்தன்மைப் பன்மையாற் றோழி கூறினாளென்பது மமையும். இக் கருத்து எருமையாடிய அள்ளன், மணிநிற நெய்தலாம்பலொடு கலிக்குங், கழனி யூரன் (96) என்னும் ஐங்குறு நூற்றில் பழையவுரைகாரர், பரத்தையர் பலரொடு மொழுகுதல் கண்டு பொறாதிருந்த தலைமகள், தலைமகன் மனைக்கட் புகுந்துழி உடன்படுதல் கண்ட வாயில்கள் தம்முள்ளே சொல்லியது”எனவும், எருமை உழுதுழக்கிய அள்ளற் கண்ணே நெய்தலுமாம்பலும் கலிக்கும் என்றது தலைமகற்கு வேண்டுவன புரிகின்ற இல்வாழ்க்கைக்கண்ணே தாம் பெறுகின்ற சிறப்புக் கூறியவாறு எனவும் விளக்கிய வாற்றான் இஃதுணர்க. மாறு ஏதுப்பொருளுணர்த்தல், நறுந்தண் மார்பன், இன்னினி வாரா மாறுகொல், சின்னிரை யோதியென் னுதல்பசப் பதுவே (ஐங். 22) என்புழிக் காண்க. பெருங்கண்ணனார் 310. புள்ளும் புலம்பின பூவுங் கூம்பின கானலும் புலம்புநனி 1 யுடைத்தே வானமும் நம்மே போலு மம்மர்த் தாகி எல்லை கழியப் புல்லென் றன்றே இன்னு முளெனே 2 தோழி யிந்நிலை 3 தண்ணிய கமழு ஞாழற் றண்ணந் துறைவர்க் 4 குரைக்குநர்ப் 5 பெறினே. (எ-து) வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது. (வி) புள்ளும் புலம்பின - புட்களும் வதியுங் கூடுகளிற் புக்குத் தனித்தன. புலம்புதல் - தனித்தல். இருள் வரவாதலான் ஒலித்தன ஆகா. வெள்ளி தோன்றப் புள்ளுக்குர லியம்பு (புறம். 385) எனக் காலைக்கே கூறுதல் காண்க. புள்ளும் மாவும் புலம்பொடு வதிய (118) என்ப. பூவும் கூம்பின - கடற்றாமரை முதலிய பகற் பூக்களும் குவிந்தன. கானலும் புலம்பு நனியுடைத்து - கழிக்கரைச் சோலையும் ஆயம் சேரியிற் சேறலான் ஒருவருமின்றித் தனி நிலையை மிக வுடைத்து. வானமும் - ஆகாயமும். எல்லை கழிய - ஞாயிறு கழிய. நம்மே போலும் மம்மர்த்தாகி புல்லென்றன்று - நம்மையே ஒக்கும் மயக்கத்தை யுடையதாகிப் பொலி விழந்தது. இருள் பட்டது என்றவாறு. எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்றே (355) என்ப. இந்நிலை - இவ்வாறு காலமும் இடனும் பிறவும் அநுகூலமாய் மறைபுலப்படலாகாதுள்ள இத் தனி நிலை மையைத் துறைவர்க்கு உரைக்குநர்ப்பெறின் இன்னும் உளெனே - துறைவர்க்குப் போய்ச் சொல்வாரைக் கிடைக்கப் பெறின் என்று தோழிக்குக் கூறியதனால் அவளதற்கு ஆயினளில்லை என்று முனிந்தாளாம். இதனானே முனிந்து கிழத்தி தோழிக்குரைத்ததென்றார் என்க. தண்ணிய கமழு ஞாழற் றண்ணந் துறைவன் என்றது அவள்கட் குறை இல்லை என்னும் குறிப்பிற்று. உரைக்குநர்ப் பெறாத குறையேயுண்டென்று குறிப்பித்தாள். நம்மே போலு மம்மர் - நந்நெஞ்சு மம்மர்போலு மம்மர் என்றவாறு. மம்மர் நெஞ்சினோன் (அகம். 56) என்ப. எல்லை சென்றபின் மலருங் கூம்பின ..... புள்ளும் பிள்ளையொடு வதிந்தன வதனாற், பொழுதன் றாகலிற் றமியை வருதி (நற். 385) என்று காலமும், இடமும் அநுகூலமாதல் காட்டித் தலைவனை வருதி என்றது காண்க. ஈண்டுப் பொழுது - பகல். ஞாழல் - புலி நகக்கொன்றை. ஞாழற் றண்ணந் துறைவற்கு என்பதனாற் றலைவன் நிலனும் கானலும் புலம்புநனி யுடைத்தே என்பதனாற் றன்னிலனும் நெய்தலாதல் காட்டினாள். இதனால் தலைவற் குணர்த் தற்கும் அவன் வருதற்கும் எளிதென்று குறித்தாளாம். சேந்தன் கீரனார் 311. அலர்யாங் கொழிவ 1 தோழி பெருங்கடற் புலவுநா றகன்றுறை வலவன் றாங்கவும் நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர் யான்கண் டனனோ விலனோ 2 பானாள் ஓங்கல் வெண்மணற் றாழ்ந்த புன்னைத் தாதுசேர் நிகர்மலர் கொய்யும் ஆய மெல்லா முடன்கண் டன்றே. எ-து அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப்புறத் தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. (வி) பெருங்கடற் புலவு நாறு அகன்றுறை நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர் என்க. வலவன் தாங்கவும் - பாகன் பரியினை வார்பு வலித்து ஓட்டம் விலக்கவும். இயங்குநர்த் தாங்கும் (சிலப். காடுகாண். 145) என்பது காண்க. பரியுடை வயங்குதாள் பந்திற் றாவத், தாங்கவுந் தகைவரை நில்லா (நற். 249) என்பதனாற் றாங்கப்படுவது பரியாதலுணர்க. நில்லாது கடந்த மணிகளாற் கல்லென்ற கடிய விரைவினை யுடைய தேர். புலவு நாறு அகன்றுறை பின் நின்று கழிந்த தேர் என்க. வலவன் றாங்குதல் தலைவியைத் திரும்பிப் பார்த்தல் குறித்துத் தலைவன் பரியை மெல்லச் செல்ல விடுமாறு பாகனை ஏவிய குறிப்பிற்று. தாங்கவும் நில்லாது கழிந்த என்றது இயல்பாகவே விரைந்த செலவினையுடைய புள்ளியற் கலிமாவுடைய தேர் என்பது பட நின்றது. குரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரிநிமிர்ந்து, காலெனக் கடுக்கும் கவின்பெறு தேரும் என்பது மதுரைக்காஞ்சி (387-8), பரி நில்லாது கழிதற்குப் புலவு நாறுதலும் ஏது எனின் நன்கமையும். நல்லபரி நறுமண மன்றிப் பிறிது பொறாதென்க. இடும் அயிர்ப் புரவியும் என்னும் மதுரைக்காஞ்சியையும், அதற்கு நச்சினார்க்கினியர், இட்ட வாசங்களையுடைய குதிரைகளும் எனவுரைத்ததனையும் நோக்கி அறிக. ஈண்டு அயிர் என்பது நறுமணத்திற்குப் புகைக்குங் கண்டசருக்கரை. குடதிசை மருங்கின் வெள்ளயிர் (சிலப். அந்தி. 35) என்பது காண்க. தேர்யான் கண்டனனோ இலனோ - தேரைத் தெரித லால் எவ்வளவிற் பார்த்தேனோ மறைதலால் எவ்வளவிற் பார்த்திலேனோ. எல்லார் பானாள் மலர் கொய்யும் ஆயம் எல்லாம் உடன்கண்டன்றே - அவை எல்லாவற்றையும் அரைநாளாகிய பகலில் பூக்கொய்யும் ஆயம் சேரக்கண்டதே யாம். இங்ஙனமாகவும் அவ்வாயத்தார் எடுக்கும் அலர்கள் எங்ஙனம் ஒழிவன என்பது எல்லோரும் பலவாறு எடுக்கும் பழி மொழியாதலின் ஒழிவ எனப் பன்மையாற் கூறினாள். பால்நாள் - ஈண்டு நாட்பாதியாகிய பகற்கு ஆயிற்று. ஒருதிறஞ்சாரா அரைநாள் (நெடுநல். 175) அரைநாள் நடுப் பகற்கு வந்தாற்போல்வது. மலர் கொய்யும் ஆயம் உடன் கண்டது கூறுதலால் இது துணிக. இது தலைவன் பகற்குறிவந்து பெயர்ந்ததாகக் கொள்க. பல்பூங் கானற் பகற் குறி வந்துநம், மெல்கவின் சிதையப் பெயர்ந்தன னாயினும் (நற். 235) என்பது நோக்குக. பகலிற் றேரிற் றலைவன் வருதல் 345 ஆம் பாட்டினுள் காண்க. பானாள் நாட்பாதியாய பகலையு முணர்த்தல் 246 ஆம் பாட்டுரையினுங் கண்டு கொள்க. புன்னையங் கானல் பகல்வந் தீமே (அகம். 80) என்பதுங் காண்க. ஓங்கியவெண் மணலால் உயரமில்லாத தாழ்ந்த புன்னை என்றது ஏறாது மலர் கொய்தற் கெளிமை காட்டியவாறு. நிகர்மலர் - ஒளிமலர். மின்னிலைப் பொலிந்த விளங்கிண ரவிழ்பொன், தண்ணறும் பைந்தா துறைக்கும், புன்னையங் கானற் பகல்வந் தீமே (அகம். 80) என்றது நோக்குக. ஆயம் - மகளிர் தொகுதி. உடன்கண்டன்று - தேரை என்னுடன் கண்டது எனினுமமையும். என்னையும் பார்த்துத் தேரையும் பார்த்தது என்றவாறு. யாங்கொழிவ என்றது வரைந்தாலன்றி வேறெவ்வாறொழிவன எனுங் குறிப்பிற்று. கபிலர் 312. இரண்டறி கள்விநங் 1 காத லோளே முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன் முள்ளுர்க் கான நாற 2 வந்து நற்ளென் 3 கங்கு னம்மோ ரன்னள் 4 கூந்தல் வேய்ந்த விரவுமல ருதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி அமரா முகத்த 5 ளாகித் தமரோ 6 ரன்னள் வைகறை யானே. எ-து இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்கு வரைவுடைமை வேட்பக் கூறியது. (வி) கங்குல் நம்மோரன்னள், வைகறைத் தமரோரன்னள்; ஆதலான் இருபடியாயும் ஒழுகலறிந்த கள்வமுடையவள், தமர்க்கு ஏதின்மை படவும், நமக்குக் காதன்மை படவும் முறையே தன் தோற்றப் பொலிவை அவர்முன் மறைத்தலும், நம்முன் வெளிப்படுத்தலும் ஆகிய இரண்டினை அறிந்த கள்வி என்பதுமாம். காதன்மை கண்ணுளே யடக்கிக் கண்ணெனும் தூதினாற் றுணிபொரு ளுணர்த்தித் தான்றமர்க் கேதின்மை படக்கரந் திட்ட வாட்கணோக்கு (சிந். 1485) என்றார் பிறரும். நங்காதலோள் - நங்காதன்மையுடையவள். முரண்கொள் துப்பின் செவ்வேன் மலையன் - துப்பின் முரண்கொள் செவ்வேன் மலையன் என்க. மூவருள் வேண்டிய ஒருவற்குத் துணைவலியாதலான் பிறர்க்கும் மாறுபாடு கொண்ட செவ்விய வேற்படையையுடைய மலையமான் திருமுடிக்காரி, மூவருள் ஒருவன் துப்பா கியரென (புறம். 122) என இவனை வேண்டுதலான் இஃதுணர்க. முன்ளூர்க்கானம் நாறு வந்து - அவன் முள்ளூர் மலைக்காடு போன்ற இயற்கை மணநாறத் தோற்றப் பொலிவுடன் குறிக்கண் நம்பால் எய்தி. நள்ளென் கங்குல் - நடுஇரவில். நம்மோ ரன்னள் - நம்மொடு ஒருதன்மை யனாவள். வைகறையான் - விடியற்கண், கூந்தல் வேய்ந்த - நாம் கூந்தலிற் சூட்டிய. விரவுமலர் பலகலந்த - மலர்களை உதிர்த்து - தமரறியாமல் உதறிவிட்டு. ஊர்நறுங்கதுப்பு - கங்குல் புணர்ச்சியான் அலைந்த நறிய மயிரினை. சாந்து எண்ணெய் நீவி - மயிர்ச்சாந்தும் எண்ணெயும் தடவி. அமரா முகத்தளாகி - நம்மை அமர்ந்த உள்ளமுடையளாகிய நிலையிலே நம்மை முகத்தால் விரும்பாதவளாகி. தமரோரன்னள் - தமர்க்கு முகத்தான் அமர்ந்த ஒரு தன்மையள் என்றவாறு. நள்ளென் கங்குலில் இவள் வரவு நறுமணம் நாற வந்ததனால் அறிந்தனனாதலின் அதனையே கூறினான். உயர்நன்மகளிர் இயற்கையிற் செண்பகமண நாறுமேனியராதல் சண்ப கத்தணி தோகை நின்றாடனி, நண்பனைந் நினை யாநறு மேனியே (சிந். 1324) என்பதனாலும், ஆண்டு நச்சினார்க்கினியர், சண்பகத்தினது கோதையை ஒத்த நறுமேனியுடையாள் எனவுரைத்த தனானும் தெளியப்படுதல் முன்னரே காட்டினாம் (193). வைகறை யானே தமரோ ரன்னள் எனத் தலைவன் கூறுதலான் கங்குற் றலைவியைக் கூடிய இவனே விருந்தினனாகத் தலைவியுள்ள மனையுட் புக்கு இதனை நேரிற்கண்டனன் ஆவன் என்க. இதனானன்றே இளம்பூரணர் தான் புகுதற்குத் தகுதி யல்லாத காலத்துக்கண், அகம்புக்கு எதிர்ப்பட்டுழி அவரால் நீக்கப்படாத விருந்தின் பகுதி யானாகியவழித் தலைவன் கூறியது (தொல்.களவு. 17) என்றாரென்க. உதிர்த்து என்றதனாற் றலைவன் வேய்ந்த விரவுமலராதல் உணரலாம். குழற்சிகைக் கோதை சூட்டிக்கொண்டவன் (சிந். 252) என்ப. சாந்துறை நறுங்கதுப்பு - சாந்து அலைந்த நறுங் கதுப்பு என்பதுமாம். நங்காதலோளை இருவகையாக ஒழுகவைத்துக் கள்வியாக்கினே னென்று வருந்த வரைதல் வேட்கையாற் கூறினான் என்று கொள்க. கங்குலிற் றன்னோ ரன்னளாய் அமர்ந்த முகத்தளாயவள். வைகறையிற் றம்மோரன்னளாய் அமரா முகத்தளாதலைக் கண்டு, எப்போதும் எவ்விடத்தும் தன்னமர்ந்த முகத்தளாகக் காட்டற்குரிய வதுவையை வேட்டுக் கூறினான். உதிர்த்து நீவி - என்றது புணர்ச்சியா லுண்டாகிய சின்னங்களை மறைத் தொழுகுதல் குறித்தது. அமரா முகம் - விருப்பங்காட்டாத முகம். இனி இரண்டறிகள்வி, நம்மோரன்னளாதலும், தமரோரன்ன ளாதலுமாகிய இரண்டாலும் தன் கள்ளம் அறியப்பட்டவள் என்பதும் ஒன்று. 313. பெருங்கடற் கரையது 1 சிறுவெண்காக்கை நீத்துநீ ரிருங்கழி யிரைதேர்ந் துண்டு பூக்கமழ் பொதும்பர்ச் 2 சேக்குந் துறைவனொ டியாத்தேம் 3 யாத்தன்று நட்பே அவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே. எ-து இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவுணர்ந்து பண்பிலர் என்று இயற்பழித்த தோழிக்கு அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோவென்று சிறைப்புறமாகத் தலைமகள் இயற்பட மொழிந்தது. (வி) கரையது காக்கை - கரையிடத்ததாகிய காக்கை. சிறு வெண்காக்கை மேலே கூறினாம் (246). இரவில் நீத்து நீர் ஏறி வடிந்த இருங்கழிக்கண்ணே பகலில் இரையை ஆராய்ந்து கண்டு என்க. காக்கை தேர்ந்துண்டு என்பதனால் இங்ஙனம் கூறினாம். காக்கை பகற்புள்ளாதலும் நினைக. நீத்து - நீந்தற்குரிய வெள்ளம். கழியோத மல்குதொறும் (9) என்பதனாற் கழியிற் கடனீரேறி வடிதல் உணர்க. பொதும்பர்ச்சேக்கும் - பொழிலிற் றங்கும். காக்கை உண்டுசேக்கும் துறைவன் என்று தலைவனுடைய வருந்தவேண்டாத வளமிகுதி கூறி, வரைவிற்கு வேண்டுவன முயலாது தன் கருமஞ்செய்து மனைக்கண்ணே தங்குவான் என்பது குறித்தாளாம். இது, பொதும்பர்ச் சேக்கும் (ஐங். 162) என்பதற்கு ஐங்குறுநூற்றுரைகாரர் கூறியது கொண்டுணர்க. இவ்வைங்குறுநூற்றிற் கண்டபடியே `பொதும்பர்ச் சேக்கும் என்ற பாடமே எம் குறுந்தொகைப் பிரதியிலுள்ளது. துறைவனொடு நட்பு யாத்தேம் - துறைவனோடு உறவு யாப்புண்டேம். யாத்தன்று - அங்ஙனம் எம்மை யாத்தது. அவிழ்த்தற்கரிது - இனி யாரானும் கட்டவிழ்த்தற்கு அரியதாம். அது முடிந்து அமைந் தன்றே - அது தானே முடியப்பட்டுப் பொருந்தியது. பிறர் ஒருவர் யாத்தலில் லாமையான் பிரிவின்றியைந்தது. துவராநட்பின் இருதலைப் புள்ளை யொப்ப எம் முளாயினேம் (அகம். 12) என்பதாம். துறையுள், அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோ எனக் கூறுதலான் முன்பிறப்பிலேயிருந்து அவர் பிறந்தபோது உடன் பிறந்த திவ்வுறவு எம்மை யாத்தது என்றும் அதனால் அவிழ்தற்கரிய தென்றும் கூறினுமமையும். முடிந்தமைந்தன்றே என்பதற்கு மேற் கூறியதற் கேற்ப ஆயுள் முற்றிய பின்னும் வரும் பிறவியினும் அமைந்ததாம் என்று கொள்ளலாம். இப்பொருட்கு முடிந்தும் என்ற உம்மை செய்யுள் விகாரத்தாற்றொக்கதாகக் கொள்க, நட்பு - உறவு. இதனைக் களவிற்கொள்ளாது கற்பிற்கொண்டு இது தலைவன் தவறிலன் என்றதென்பர் நச்சினார்க்கினியர் (தொல். கற். 6). அங்ஙனமாயின், காக்கை ... ... சேக்கும் துறைவன் என்றது பகலில் மனையகத்துண்டு இரவிற்பரத்தையர் சேரியிற்றங்கு பவன் என்பது கருத்தாக் கொள்க. பேரிசாத்தனார் 314. சேயுயர் விசும்பி னீருறு கமஞ்சூற் றண்குர லெழிலி யொண்சுட ரிமைப்பப் 1 பெயறாழ் பிருளிய 2 புலம்புகொண் மாலையும் 3 வாரார் வாழி தோழி வரூஉம் மின்னுற லிளமுலை 4 ஞெமுங்க இன்னா வைப்பிற் 5 சுரனிறந் 6 தோரே. எ-து பிரிவிடை வேறுபட்ட கிழத்தி வற்புறுத்துந் தோழிக்குப் பருவங்காட்டி அழிந்து கூறியது. (வி) சேயுயர் விசும்பின் - சேய்மையின் உயர்ந்த ஆகாயத்தின் கண். நீருறுஎழிலி - நீர் உறுதற்குக் காரணமான மேகம். கமஞ்சூற் றண்குர லெழிலி - நிறைந்த சூலாற் றாழ்ந்த குரலையுடைய மேகம். ஒண்சுடரிமைப்ப - ஒள்ளொளியாகிய மின்னலை விட்டுவிட்டு விளங்க. பெயல் தாழ்பு - மழை இறங்கி. இருளிய புலம்பு கொள் மாலையும் - இருண்டதனால் ஒளி மழுங்கிய மாலைப்பொழுதிலும். வரூஉம் இன்உறல் இளமுளை ஞெமுங்க - எழுந்துவரும் இனிய ஊற்றின்ப முடைய இளையமுலைகள் அழுந்த, `சாந்தகங்கிழிய மாலைத் தடமுலை ஞெமுங்கப் புல்லி (சிந். 2552) என்பது காண்க. வீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பால், கல்லா வன்பறழ் கைந்நிறை பிழியுந் (நற். 57) என்புழியும் இப்பொருட்டு. இன்னாவைப்பிற் சுரன் இறந்தோர் வாரார் - இன்னாத ஊர்களையுடைய பாலைநிலத்தைக் கடந்து சென்றவர் வாரார் ஆயினர், இன்னாத ஊர் - பாழூருமாம். வாழி - அவர் ஆண்டு வாழ்க. துறையுள் தலைவி அழிந்து கூறிய தென்றலான் வாழி என்று செறலிற் கூறினாளென்க. ஞெமுங்க - அவர் அணைத்து அழுத்தலான் அழுந்த என்க. முலை ஞெமுக்குவோரே (புறம். 337) இன்னுறல் - இனிய ஊற்றின்பம் இன்னுற லாகம் (அகம். 399) என்ப. இறந்தோர் ஞெமுங்க வாரார் என்றவாறு. மாலையும் வாரார் - இற்றைக்காலையே வருவது தெளித்துச் சென்றது குறித்தது. மதுரைவேள் சுரதத்தனார் 315. எழுதரு மதியங் கடற்கண் டாஅங் கொழுகுவெள் ளருவி யோக்ங்குமலை நாடன் ஞாயி றனையன் 1 றோழி நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே. எ-து வரைவிடையாற்ற கிற்றியோ என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) எழுதருமதியம் - உதிக்கின்ற திங்கள், கடற்கண் டாஅங்கு - கடற்றிரையிடைக் காணப்பட்டாற்போல ஒழுகு கின்ற வெள்ளிய அருவி என்க. இலங்கு வெள் ளருவி போலவும் நிலங்கொண் டனவாற் றிங்களங் கதிரே (அகம். 362) என்புழித் திங்களங்கதிர்க்கு அருவி உவமையாய் வந்தது. மதியமும், கடற்றிரையும் அருவிக்கும் மலைக்கும் உவமை யாயின. கடல் - ஆகுபெயர். கடற்றிரையே மலையொடு பொருவல் மாமலை அணைந்த கொண்மூப் போலவும் - தேறுநீர்ப் புணரியொடு யாறுதலை மணக்கும்.... கடல் ஆடியும் எனவருவதில் (பட். 95-99) காணலாம். இனி மதியம் கடல்கண்டாஅங்கு என்பது பாட மாயின் மதியத்தைக் கடல்கண்டாற் போலப் பொங்கிப் படரும் வெள்ளருவி என்க. இரவுத்தலை மண்டிலம் பெயர்ந்தென வுரவுத்திரை எறிவன போல (நற். 375) எனவும்,” உருகெழு பெருங்கடல் உவவுக்கிளர்ந் தாங்கு (அகம். 201) எனவும் வருவன கொண்டு இஃதுணர்க. பெருகி வருநிலையில் யாற்றைக் கடலோடு பொருவக் கூறலுண் டென்பது மோடு கொள்புனல் மூரி நெடுங் கடல், நாடுமுற் றியதோ வெனநண்ணிற்று (சிந். 35) என வருதலான் உணரலாம். இதனால் தன்னைக் கண்டால் மதியங் கண்ட கடல் போலப் பொங்கும் அளிபெரிதுடையன் என்பது குறித்ததாம். நாடன் ஞாயிறனையன் - நாடுடைய தலைவன் தன் தோற்றப் பொலிவால் உலகெலாம் இருள்கடிந்து விளக்கஞ் செய்யும் பரிதியை ஒப்பான். அவன் தகுதிக்கு யான் ஒவ்வாள் ஆயினும் என் பெரும் பணைத் தோள் வேய்மருள் பணைத் தோள் (நற். 85) என்புழிப் போலப் பணை - பணைத்தலுமாம் ஞாயிறு தோற்றஞ் செய்து செல்லும்போது அதனை உடனோக்கும் நெருஞ்சிப் பூக்களை ஒத்தன. நெருஞ்சிகள் கண்ணிலவேனும் பரிதி சேய்மைக்கட் டோற்றஞ் செய்தகாலை அதனை எதிர்கொண்டு ஈண்டு இருத்தல் போல, என்தோள்களும் கண்ணிலவேனும் சேய்மைக்கண் அம்மலையிலுள்ள நாடன் தோற்றஞ்செய் போது நோக்கி ஈண்டு எதிர்கொண்டு இருப்பன என்றாளாகக் கொள்க. பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ, வேர்தரு சுடரி னெதிர் கொண்டாஅங்கு (புறம். 155) என வருதலான் இஃதுணர்க. இன்றியமையாமை கருதி கண்ணில் பொருளும் நோக்கியதாகக் கூறுதல் இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க், கொண்பெருங் கானத்துக் கிழவன், தண்டாரகல நோக்கின (புறம். 155) என ஆண்டை வருதலான் அறிக. பூத்தநெருஞ்சி போலத் தன் தோள்களும் பசலைபூத்தலும் நினைக. நெருஞ்சிப் பூவைப் பசலை வான்பூ என்றது காண்க. இதனால் நாடன்மலை இவளுள்ள சிறுகுடிக்கு அடுத்துள்ளதும் அம்மலை. இவள் காணப் பகலிற் றோன்றல் கூடுமென்றும் உய்த்துணரலாம். இது பாடியவர் வேள்குடிப்பிறந்த சுரதத்தன் என்னும் பெயருடையார் என்று கொள்க. கண்டரதத்தன் (317) என்னும் பெயரான் உணர்க. பெரும்பணைத்தோள் என்றது முன்பெரிய மூங்கிலை யொத்த தோள்கள் இப்போது பசலைமையுடன் நெருஞ்சி யனைய என்ற குறிப்பிற்று. தும்பிசேர்கீரனார் 316. ஆய்வளை நெகிழவு 1 மயர்வுமெய்ந் நிற்பவும் 2 நோய்மலி வருத்த மன்னை யறியின் உளெனோ 3 வாழி தோழி விளியா துரவுக்கடல் பொருத 4 விரவுமண லடைகரை ஓரை மகளி ரோராங் காட்ட 5 வாய்ந்த வலவன் றுன்புறு துனைபரி 6 ஓங்குவரல் 7 விரிதிரை 8 களையும் துறைவன் சொல்லோ 9 பிறவா யினவே. (எ-து) வரைவிடை வேறுபடுகின்றாய் என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) ஆய்வளை நெகிழவும் - தோட்குத்தக ஆய்ந்து செறிந்த வளைகள் உழலவும். அயர்வு மெய்ந்நிற்பவும் - உள்ளத் தயர்ச்சி புறம் போந்து மெய்க்கண் நிற்கவும், இவற்றால் ஆய உடம்பின் நோயையும். உள்ளமலி வருத்தத்தையும் அன்னை அறியின் விளியாதுளெனோ என்க. நோய் - பிரிவு நோய்; வருத்தம் - தலைவன் வரைவோடு வராத வருத்தம். நோய்க்காரணத்தையும், வருத்தக் காரணத்தையும் அன்னைதானே அறிய நேரின் என்க. விளியாது உளெனோ-இறவாது உள்ளேனாவலோ என்றவாறு. உரவுக்கடல் - வலிபொருந்திய கடல். ஓரைமகளிர் - விளையாட்டு மகளிர். ஓராங்கு - ஒருபெற்றிப்பட. ஓராங்கு மலைந்தன (புறம். 16) ஆட்ட - அலைக்க. ஆய்ந்த அலவன் - ஓடி இளைத்தலான் நடை சுருங்கிய ஞெண்டு ஓய்த லாய்த னிழத்தல் சாஅய் ஆவயி னான்கு முள்ளத னுணுக்கம் (தொல். உரி. 32) என்றார். மடப்பிடி யன்ன மனையாரோ டாயாநடை (பரி. 10) என்பதையும், அதனுரையையும் நோக்கிக் கொள்க. அலவன் துன்புறு துனைபரி - ஞெண்டின்றுன்பமுற்ற விரைகின்ற செலவை. இளைத்து நடை சுருங்குதலாற் பின்னும் துன்புற்று விரைகின்ற செலவு என்றார். ஞெண்டின் துன்புறு செலவைத் திரை களையும் என்றது கடற்றிரை மகளிர்க்கு முற்போந்து அஞ்ஞெண் டினைத் தன்கட் கொண்டு மீளுதலாற் றவிர்க்கும் என்றவாறு. இதனால் ஆய மெல்லாம் ஒருபெற்றியாக என்னைப் பழிகூறி அலைக்காநிற்க, நான் அதற்குத் துன்புற்று, அத்தலைவன் பால் தனியே செல்ல விரைதலை அவனே இடையிற் புகுந்து மணந்து கொள்வன் என்று குறித்தாளாம், அங்ஙனம் மணத்தற்குரியவன் சொற்கள் வேறாயின ஆதலான் அன்னை அறியின் விளியாதுளேனோ என்றாளென்க. பிறவாதல் செய்கையால் வேறாதல். சொல்லின் நட்பும். வினையிற் பகைமையு முடைமையால் வேறாயின என்றாள். வினை வேறு சொல்வேறு பட்டார் தொடர்பு (குறள். 819) என்புழிப் பரிமேலழகருரை நோக்கி உணர்க. மதுரைக் கண்டரத்தனார் 317. புரிமட மரையான் கருநரை நல்லேறு தீம்புளி நெல்லி மாந்தி யயலது தேம்பாய் 1 மாமலர் நடுங்க வெய்துயிர்த் தோங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன் நம்மைவிட் டமையுமோ மற்றே கைம்மிக வடபுல வாடைக் கழிமழை தென்புலம் படருந் தண்பனி நாளே. எ-து பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. (வி) புரிமட மரையான் - ஏறு விரும்பிய இளமரையில் ஆனும். கருநரை நல்லேறு - அதனான் விரும்பப்பட்ட கரிய பெருமையையுடைய நல்லகலையும். தீம்புளி நெல்லி மாந்தி - பாலையிற் றீவிய புளிப்பினையுடைய நெல்லிக் கனியைத் தின்று. அயலது - பக்கத்துள்ளதாகிய. ஓங்குமலைப் பைஞ் சுனையினீரை. அந் நீரை மூடிய தேன் பாய்கின்ற பெரு மலர்கள் நடுங்கி ஒதுங்க வெய்தாக மூச்சுவிட்டுப் பருகும்நாடன் என்க. பசி நீங்கவும், தாகம் நீங்கவும் உண்ணும் போதும் பருகும் போதும் ஆணும் பெண்ணும் பிரியாது உடனியைந்து வாழ்தல் குறித்து இங்ஙனம் அவர்தம் நாட்டிடத்து அறிவில் விலங்கும் ஆண்டுத் தனிமையிற் றங்காமை கண்டவராதலான் விரைந்து வருவரென்று வற்புறீஇயினாள் என்க. இவை வற்கடத்து உண்ணாத துண்ணுழியும் இயைந்துண்டு வாழ்தல், வரிமரற் கறிக்கு மடப்பிணைத் திரிமருப் பிரலைய காடு (அகம். 133) என வருதலான் அறியலாம். ஆர்கழல் புதுப்பூ உயிர்ப்பி னீக்கித், தெள்ளறல் பருகிய திரிமருப் பெழிற்கலை, புள்ளியம் பிணையொடு வதியு மாங்கண் (அகம். 184) என்பது போலக் கொள்க. கைம்மிக - தனக்குச் சிறுமை மிக. நம்மை விட்டு - நம்மைத்தனியே நீத்து. அமையுமோ - பொருந்துவனோ. கை - இகழ்வுமாம். வட புல வாடைக்கு - வடக்கணிலத்து நின்று வரும் வாடைக்காற்றுக்கு. அழிமழை - அழிந்தமழை. தென்புலம் படரும் - தெற்கணிலத்துச் செல்லும். தண்பனிநாள் - தண்ணிய பனிநாளில். இதனால் உத்தராயணத்துத் தைத் திங்கள் பனிநாள் குறித்தாள். அழி மழை என்றாள் - தென்புலம் படர்ந்து அறுதலான். எழிலி தென்புல மருங்கிற் சென்றற் றாங்கு (நற். 153) என்பது காண்க. நரை - பெருமை. நரைக்கணிட்டிகை பலிபீடத்திற்காதலான் உணர்க. தண்பனிநாளே நம்மைவிட் டமையுமோ என்றது அற்சிரம் வந்தன் றமைந்தன் றிதுவென, எப்பொருள் பெறினும் பிரியன்மினோவெனச். செப்புவல் வாழியோ துணையுடையீர்க்கே (அகம். 217) என்பது பற்றி என்க. எழிலி தெற்கேர் பிரங்கு மற்சிரக் காலையு மரிதே காதலர்ப் பிரிதல் (நற். 5) என்பதுங் காண்க. அம்மூவனார் 318. எறிச்சுறாக் 1 கலித்த விலங்குநீர்ப் பரப்பின் நறுவீ ஞாழலொடு புன்னை தாஅய் 2 வெறியயர் களத்தினிற் றோன்றுந் துறைவன் குறியா னாயினுங் குறிப்பினும் பிறிதொன் றறியாற் 3 குரைப்பலோ யானே வேய்க்களிப் 4 பணையெழின் மென்றோ ளணைஇய வந்நாட் பிழையா வஞ்சினஞ் செய்த களவனுங் கடவனும் 1 புணைவனுந் தானே. (எ-து) கிழவன் கேட்கும் அண்மையனாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) எறியும் சுறா மீன்கள் மிக்குள்ள விளங்கும் கடலுடைய நிலத்து; சுறா எறியும் என்பது வயச்சுறா வெறிந்த புண் (269) என்பதனா னுணர்க. நீர் - கடல். நறுவீ ஞாழலொடு புன்னை தாஅய் - ஞாழல் நறுவீயொடு புன்னை நறுவீபரந்து வெறியாடுகளம் போலத் தோன்றும் துறைவன் என்க. ஞாழல் நறுமலர் தினை போல்வன வாதலாற் றினையும் மலரும் தூவப்பட்டுள்ள வெறியயர்களத்திற் றோன்று மென்றாள். நனைமுதிர் ஞாழற் றினைமருள் திரள் வீ (397) என்பது காண்க. வெறியயர் களத்து மலரொடு தினை தூவப்படுதல் சிறு தினைமலரொடு விரைஇ (முருகாறு. 218) என்பதனானும் உருவச் செந்தினை நீரொடு தூஉய் நெடுவேட் பரவு மன்னை (அகம். 272) என்பதனானும் அறியலாம். தண்துறையுடைய இலங்குநீர்ப்பரப்பு வெறியயர் களத்திற் றோன்றலால் இவ்வாறே நாம் காதலித்தவளுள்ள மனையினும் வெறியாடிடம் இழைக்கப்படுமென்று நினைத்தற்குரியவன் என்பது குறிப்பாம். இப்பணை எழில் மென்றோள் - முன்னம் பணை போன்ற எழிலையும் மென்மையுமுடைய இத்தோள்களை, அணைஇய - அணைதற்பொருட்டு. அந்நாள் - இயற்கைப் புணர்ச்சிக்குரிய அந்நாளில். பிழையா வஞ்சினம் செய்த களவனும் - தப்பாத சூள் செய்த களவனும். கடவனும் - அதைநிறைவேற்றும் கடப்பாடுடையவனும். புணைவனும்-அங்ஙனம் நிறைவேற்றப் புணை புக்கவனு மாகிய தானே. குறியான் ஆயினும் - அவ் வஞ்சினத்தைக் குறித்துக் கொள்ளானாயினும், குறிப்பினும் பிறிதொன்றறி யாற்குத் தானே குறியான் என்று யாம் பலபடியாக தேரே குறிப்பிற் காட்டினும் அறிந்தொழுக மாட்டாதானுக்கு. யானே வேய்க்க உரைப்பலோ - யானே கேட்கச் சொல்வலோ என்றவாறு. கிழவன் கேட்கும் அணிமையினாதலால் வேய்க்க என்றாள். வேய்த்தல் - ஒற்றியுணர்தல். ஒற்றி என்பதற்கு வேய்த்து என்றார் நச்சினார்க்கினியர் (மதுரைக்காஞ்சி 642). இங்ஙனம் கொள்ளாது குறிப்பினும் என்பது துறைவன் குறிப்பானாயினும் என்று கொண்டால் குறித்துக் கொண்ட விடத்துப் பிறிதொன்றறியான் என்றல் பொருந்தாமை நோக்குக. தானே குறியானாயினும் யானே குறிப்பினும் பிறிதொன்றறியாற்கு உரைப்பலோ என்பதே இயைபுடைத் தாதல் காண்க. பிறிதொன்றறியாமையாவது இக் களவினொழுகுவதன்றி வரைந்து கொண்டொழுகுதலை யறியாமை என்றவாறு. பிறிதொன்று உடன் கொண்டுபோய் மணத்தலுமாம். குறிப்பிற்காட்டலாவன குறிமறுத்தலும், அன்னை அறிவள் என்றலும், அலராயிற்று என்றலும் போல்வன. புணைவன் - புணை புகுவான். நீ புணை புகுகென (அகம். 392) என்பதனா னுணர்க. கள்வன் என்பது பாடமாயின் பிழையாத வஞ்சினஞ் செய்த கள்வன் என்பது பொருளாகக் கொள்க. கள்வன் என்றற்குப் பிழையாத வஞ்சினம் இயையாமை காண்க. பிழையாகச் செய்த லாற்றான் அது குறியானாயினும் என்றியையும். வேய்க்க என்னும் இவ்வரிய பாடம் தெரியாது வேறு வேறு கொண்டு கூறினர். பிறரெல்லாம். புணை வாயிலுமாம். பெட்ட வாயில் பெற்று (தொல்.களவு. 11 நச்.) அவளைப்புணை பெற்று நின்ற தலைவன் என்றது காண்க. நனைகவுள் யானையால் யானையாத் தற்று (குறள். 678) என்புழிப் போல முன்னுள்ள விசேடணம் பின்னதற்கும் இயைதலிற் கூறப்பட்டது. தாயங்கண்ணனார் 319. மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து கான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும் கையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி 1 மையணி 2 மருங்கின் மலையகஞ் சேரவும் மாலை வந்தன்று மாரி மாமழை 3 பொன்னேர் மேனி நன்னலஞ் 4 சிதைத்தோர் இன்னும் வாரா ராயின் என்னாந் தோழிநம் மின்னுயிர் நிலையே. (எ-து) பருவவரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை யெதிரழிந்து சொற்றது. (வி) மானேறு - கலைமான்கள். மடப்பிணை தழீஇ - இளம்பிணை மான்களைத் தழுவிக் கொண்டு. மருள் கூர்ந்து - மனமயக்க மிக்கு. புலிவரவுதெரிய மாட்டாது இருளால் மருள் கூர்தல் கூறினாள். கானம் நண்ணியபுதல் - காட்டிற்செறிந்த தூறுகளில். மறைந்து ஓடுங்கவும் - ஒடுங்கிமறையவும். கையுடை நன்மா - யானைகள். மா - குதிரையன்மைக்குக் கையுடைமை கூறினாள். பிடியொடு பொருந்தி - பெண்யானைகளோடு கூடி, மை அணி- மருங்கின் கருமையணிந்த உடலோடு. மலையகம் சேரவும் - மலையின் உள்ளிடத்துள் சேரவும். திரளவும் வந்த மழையாற் கழுவப்படலால் மையணி மருங்கின் என்றாள். மழை வந்தன்று என்றதனால் மையணி மருங்கு என வேறே மழையணிந்த பக்க மெனக்கூற வேண்டாமையுணர்க. மாரிமாமழை - மாரிக் காலத்துக் கரிய மழை மாலை வந்தன்று - மாலையொடு வந்தது. ஏறு பிணையொடு தழீஇ யொடுங்க. நன்மாப் பிடியொடு சேர மழை மாலையொடு வந்தது. இவற்றைக் கண்டு தனியிருக்க வைத்தலான் மேனிநன்னலஞ்சிதைத்தோர் என்றாள். பொன் ஏர் மேனி - பொன் போன்ற உடம்பு. நன்ன லஞ்சிதைத்தோர் - நல்ல அழகினைப் பிரிந்து கெடுத்தவர். அவர் கூறியபடி மழைக்குமுன் வருவார் என்ற தோழி வன்புறை கூறுதலால் மழைவந்தபின்னும் வாராராயின ரென்று இன்னும் என்றாள். நம் இனிய உயிர் நிற்பது எப்படியாகும்? அவர் வரல்நசைஇ உயிர் நிற்பதாதலின் வாராராயின் என்னாம் என்றாள். தானிறந்தாலுடன் இறக்கும் இயல்பினள் தோழியாதலால் நம்மின்னுயிர் நிலை என்றாளாம். இவளன்றிப் புலம்புக ழொருவ யானும் வாழேன் (குறிஞ்சிக்கலி 16) என்பது தோழி கூற்றாதலுணர்க. தும்பிசேர்கீரனார் 320. பெருங்கடற் பரதவர் கோண்மீ 1 னுணங்கல் 2 அருங்கழிக் 3 கொண்ட விறவின் வாடலொடு நிலவுநிற வெண்மணல் புலவப் 4 பலவுடன் எக்கர்தொறும் பரக்குந் 5 துறைவனொ டொருநாள் நக்கதோர் பழியு மிலமே போதவிழ் பொன்னிணர் மரீஇய புள்ளிமிழ் 1 பொங்கர்ப் புன்னையஞ் சேரி யிவ்வூர் கொன்னலர் தூற்றுந்தன் 2 கொடுமை யாலே. (எ-து) அலரஞ்சி ஆற்றாளாகிய தலைமகள் தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது. (வி) பெருங்கடற் பரதவர் - பெரிய கடலில் வினை செய்தற்குரிய வலைஞர். நுண்வலைப் பரதவர் (184) என்ப. கடலோடுழத்தல் இவர் இயல்பாய வினை என்பது கடலொ டுழந்த பனித் துறைப் பரதவர் (பதிற். 48:4) என வருதலான் அறிக. வயச் சுறா வெறிந்த புண்டணிந் தெந்தையு நீனிறப் பெருங்கடற் புக்கனன் (269) என்பது காண்க. கோண் மீனுணங்கல் - அடுத்தாரைப் பாய்தலையுடைய சுறா வற்றல். பாய்ந்துடன் கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடு வலை (அகம். 340) என்பதனானுணர்க. கோள் - பாய்தல். உழுவை கோளுற வெறுத்த மடக்கண் மரையான் என்பதனையும் (மலைபடுகடாம் 505-507) அதற்கு நச்சினார்க்கினியர் புலிபாய்தலு றுகையினாலே தன்னுடலை வெறுத்த.... மரையான் என உரைத்ததனையும் காண்க. கோள்- ஈண்டுத் தீங்குமாம். அருங்கழிக் கொண்ட - நீரரிய கழிகளில் எளிதிற் கொண்ட. இறாமீன் வாடலொடு - கடற்றிரையேறும் போது உடன்வந்து நீர் குறைந்த கழிகளில் கிடப்பன இறா என்க. இறவின் முழங்கு புறப் பெருங்கிளை புணரி யிகுதிரை தரூஉம் (109) என்றது காண்க. இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங்கடலோதம்”. (அகம். 123) என்றது காண்க. நிலவுநிற வெண்மணல் புலவ - நிலாவண்ண வெள்ளிய மணற்பரப்புப் புலால் நாற இயல்பாக நாறற்குரியதன்று என்பது தெரியநிலவு நிறங்கூறினாள். எக்கர் தொறும் - இடுமணற்குன்றுகள்தோறும். பரிக்கும் - காற் றான் ஓடும். உணங்கல் வாடலொடு பலவுடன் பரிக்குந் துறை வனொடு ஒரு நாள் நக்கதன்கண் ஒரு பழியும் இவ்வூர்க்குச் செய்திலம் . இவ்வூர் இயல்பாகிய தன்கொடுமையாற் கொன்னே அலர்தூற்றும் போதவிழ் புன்னையஞ்சேரியையுடையது. அலர் தூற்றும் என்பது விடுபொன்இணர்மரீஇய புன்னை என்புழிப் பொன் வெண்பொன். ஓர் பழியுமிலேம் என்றது அரியனவும் எளியவையுமாகிய துப்புரவுகளை வானம் வேண்டாது உதவும் துறைவனை இச் சேரிக்கு மருகனாக்கிய புகழுடையேம் அல்லது பழியிலேம். பெருங்கடற்துறைவன் என்றது அவன் பகற்குறி யொழுகியதும், இரவுக்குறியொழுகியதும் ஈண்டுச் சேணினும் பரத்தலை ஒரு கேடாகக் கருதாதவன் என்பதாம். புள்ளிமிழ் பொங்கர் - புட்கள் ஒலிக்கும் பொழில். கொன் - ஒரு பயனின்றியே. கொடுமையாற் றூற்றுங் - கொடுமை யொடு தூற்றும் என்று கொண்டு தான் தூற்றுந்தோறும் தன்கொடுமை பிறரால் அறியப்படுதலன்றி வேறு பயனின் றாம் எனக் கருதினாளென்பதும் ஒன்று. 321. மலைச்செஞ் 1 சாந்தி னார மார்பினன் கனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன் நடுநாள் வந்து நம்மனைப் பெயரும் மடவர 2 லரிவைநின் மார்பம ரின்றுணை மன்ற மரையா விரிய வேறட்டுச் செங்க ணிரும்புலி குழுமு மதனால் 3 மறைத்தற் காலையோ வன்றே திறப்பல் 4 வாழிவேண் டன்னைநங் கதவே. எ-து தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தொடு நிற்பேன் என்றது. (வி) மலைச்செஞ் சாந்தின் - தன் மலைச் செவ்விய சந்தனத்தோடு. ஆரமார்பினன் - தன் கடற்பிறந்த முத் தாரத்தை அணிந்த மார்புடையவன். மலைச்சாந்து என்ற ஆரத்திற்குக் கடல் கொள்ள வைத்தாள்; தன் கடற்பிறந்த முத்தி னாரமும்; தன்மலைக் குறவர் தந்த சந்தி னாரமும், இருபே ராரமு மெழில் பெற வணியும், திருவீழ் மார்பிற் றென்னவன் (அகம். 13) என்ப. சுரும்பு ஆர்சுனைப் பூங்குவளைக்கண்ணியன் - தன் மலைச்சுனையிற் சுரும்பு ஆர்ந்த பூங்குவளைக் கண்ணியன். மடவரலரிவை நின்மார்பு அமர் இன்றுணை - மார்பின் கண்ணியனாய் நடுநாள் நம் மனை வந்து பெயரநிற்பவன், அந்நிலையிற் செங்கணிரும்புலி மறைந்துள்ள மரையானினம் இரிந்தோடக் கலையைக் கொன்றுமுழங்கா நிற்கும். புலி இவ்வாறட்டு முழங்குதல் கேட்டே னாதலான் நின் பெருநாணிற்கியையக் களவு வெளிப்படாமலே விரைந்து வரைதற்குரியனென்று யான் துணிந்தேன். அதனால் சிறிது போது மறைத்தற்குரிய காலையிலோ நங்கதவு திறப்பல். இதனின் வேறாய் நொதுமலர் வரைவோடுவரின் அன்றே திறப்பல். அன்னாய் இதனை வேண்டு என்றாளென்க. அதனான் மறைத்தற் காலையோ திறப்பல், அன்றேதிறப்பல் என்று கூறிக்கொள்க. அன்றே என்பது நொதுமலர் வரையும் அற்றை நாளையே குறித்தல் இன்றியாண்டையனோ (379) என்புழி இன்று என்பது நொதுமலர் வரைய வரும் இற்றை நாளைக் குறிப்பது போலக் கொள்க. இங்ஙனம் சொல்வார் குறிப்பாற்பொருள்கோடல் அன்றறிவாமென்னாதறஞ் செய்க (குறள். 36) என்புழி அன்று என்பது இறக்குஞான்று என்றதனானும் தெளிக. அறத்தொடு நிற்குங் காலத் தன்றி, அறத்தியன் மரபிலள் தோழி யென்ப (தொல்.பொருள். 205) என்பது விதியாதலால் மறைத்தற் காலையோ திறப்பல் என்றாள். உற்றுழியல்லது சொல்லலின் மையின் (தொல்.பொருள். 208) என்ற விதியுங் காண்க. இங்ஙனம் கொள்ளாக்கால் நொதுமலர் வரையுமிடத்து அறத்தொடு நிற்பேன் எனத் துறை வகுத்ததொடு பொருந்தா தென்க. “மன்ற... ... குழுமும் என்றதற்கு நொதுமலர் இரிய அவரெண்ணந் தொலைத்துக் கடிதின் மணமுடிக்கச் செய்வன் என்பதே கருத்தாம். களிறுகோட் பிழைத்த கதஞ்சிறந் தெழுபுலி, யெழுதரு மழையிற் குழுமுங் பெருங்க னாடன் (ஐங். 218) என்புழி நினைத்தனவற்றிற்குக் குறைவரி னதற்கு வெகுண்டு முடிப்பான் எனவுரைத்தது கொண்டு இஃதுணர்க. நொதுமலர் வரைவிடத்து என்புழி இடம் கால இடம் என்க. களவு வெளிப் படாது வரைதலே தலைவியின் தலையாய விருப்பமாதலான் மறைத்தற் காலையோ திறப்பல் என்றாள். நின் மார்பமர் இன்றுணை நின்னசையால் புலிகுழுமா நிற்கவும் ஏதமஞ்சாது மார்பினன் கண்ணியனாய் நம்மனை நடுநாள் வந்துபெயரும். அதனால் நம் களவொழுக்கத்தை மறைத்தற்குரிய காலையோ இஃதன்றே; யாம் நங்கதவு திறப்பல் என்பது இந்நல்லிசைப் புலவர் கருத்தாயின், குறும்படைப்பகழி (333) என்னும் பாட்டிற்போல, குன்றநாடன் பணிக்குறை வருத்தம் வீடத் துணியி னெவனோ தோழிநம் மறையே என்றது கொண்டு, அறத்தொடு நிற்பலெனக் கிழத்திக்குத் தோழியுரைத்தது என்று துறைவகுத்துரைப்பர் என்க. இதனால் வேற்றுமை நன்கு தெளிக. திறப்பல் என்றதனால் நம் அடைத்த கதவு என்பதாகக் கொள்க. உள்ளத் தொன்றை யொளித்துவைத்து அதனை வாய்திறவாது மறைத்ததை வெளிப்படுத்தல் குறித்தலான் வாய் திறப்பல் என்பதனைக் கதவு திறப்பல் என உருவக மாக்கியவாறாம். வாழி என்றாள் மறைத்தற்காலையே வதுவை எய்துக என்பது குறித்து. அன்னை என்றாள் மணந்ததன் பயனாக மகப்பெற்று வாழ்தல் நினைந்து. ஐயூர்முடவனார் 322. அமர்க் கணாமா னஞ்செவிக் குழவி கானவ ரெடுப்ப வெரீஇ 1 யினந்தீர்ந்து கான நண்ணிய சிறு குடிப் பட்டென இளைய ரோம்ப மரீஇயவ ணயந்து மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு மருவி னினியவு முளவோ செல்வாந் தோழி யொல்வாங்கு 2 நடந்தே. (எ-து) தலைமகன் வரவுணர்ந்து தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. (வி) ஆமான் - காட்டுப்பசுவினுடைய. அமர்க்கண் அஞ்செவிக் குழவி - விருப்பமுள்ள கண்களையும், அழகிய செவிகளையுமுடைய குழக்கன்று. ஆமான் - கடமாவிற் பெண். கடம் காடாதல் போல ஆம் என்பதும் காட்டிற்குப் பெயராம். இது திசைச்சொல்; நீலநதிபாயும் தேயத்துத் தொன் மொழியிது. ஆரண்யம் என்பதன் சிதைவுமாம். தாயையே பலகாற் பார்த்தும், அதன் குரலையே பலகாற்கேட்டும் நெஞ்சு தழைக்குஞ் சிறப்பால் இளங்கன்றிற்கு இவ் விரண்டுமே கூறினார். தாயையே பார்த்தும் தாயையே கேட்டும் வாழும் இளம்பெண் எனத் தலைவியையும் குறிப்பிற் கொள்ள வைத்தவாறு. கானவர் எடுப்ப-காட்டகத்து வேட்டுவர் அலைத் தெழுப்ப. கல்லென் கானத்துக் கடமா வாட்டி (179) என வந்தது காண்க. வெரீஇ இனந்தீர்ந்து - அஞ்சித் தனக்கின மாகிய தாயை நீங்கி. கான நண்ணிய சிறுகுடிப் பட்டென - அக் காட்டிலுள்ள சிறு குடியில் வலிந்தகப்பட்டதாக: இளையர் ஓம்ப - ஆண்டுள்ள வேடர் ஊட்டி வளர்க்க. இளையர் - இளையிலுள்ள வேடர். இளையுங் கிடங்குஞ் சிதைய (புறப். வெண்பா. நொச்சி 3) என்ப. இளை- கட்டுவேலியுள்ள காடு. கலனில ராயினும் கொன்று புள்ளூட்டுங் கல்லா இளையர் (அகம். 375) என்பதுங் காண்க. இளையர் வேடர் என்றார் அகநானுற்றுரைகாரர் (83) மரீஇ - பழகி. அவண் - அவ்வேடர் சேரியில், நயந்து - விரும்பி. மனையுறை வாழ்க்கை - கானுறை வாழ்க்கையை விட்டு, இல்லுறைந்து வாழ்தலில், வல்லியாங்கு - வன்மை பெற்றாற் போல. மருவின் - நாம் அவர் மனைபுக்குக் கலத்தலினும் இனியனவும் இங்குளவோ என்க. ஒல்வாங்கு நடந்து செல்வாம் - பொருந்தும் வழியில் நடந்து அவர்மனைச் செல்வோமாக என்றவாறு. அளிதோதானே நாணே ஆங்கவர் வதிவயி னீங்கப் படினே (395) என்றது கண்டுணர்க. பகலே பலருங் காண நாண் விட் டகல்வயற் படப்பை யவனூர் வினவிச் சென்மோ (நற். 365) என்னும் இடத்தில் இவ்வாறே வந்தது. இவையெல்லாம் தோழியொடு உசாவிய அளவாகக் கொள்வர் (தொல்.பொருள். 204). அறியாப்பருவத்துத் தாய் ஓம்ப வாழும் பிறந்தகத் தின்பத்தினும் தலைவன் சுற்ற மோம்ப அறிவுமுதிர்ந்து தலைவனோடு மருவி வாழும் புக்ககத் தின்பத்தின் மேன்மை உவமையாற் குறித்தாள். பதடிவைகலார் 323. எல்லா மெவனோ பதடி வைகல் பாணர் படுமலை பண்ணிய வெழாலின் வானத் தெழுஞ்சுவர் 1 நல்லிசை வீழப் பெய்த புலத்துப் பூத்த முல்லை பசுமுகைத் தாது நாறு நறுநுதல் அரிவை தோளிணைத் 1 துஞ்சிக் கழிந்த நாளிவண் வாழு 2 நாளே. (எ-து) வினை முற்றினான் பாகற்கு உரைத்தது. (வி) பாணர் எழாலின் நல்லிசை வீழ, நறுநுதல் அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்த நாள் இவண் வாழுநாளே. அங்ஙனம் இசை வீழ அரிவை தோளினைத் துஞ்சிக் கழியாத எல்லாம் என் பயனுள்ளன. இன்பமென்னும் உள்ளீடில்லாத வைகல் பதடிகள் ஆம் என்றவாறு. நயந்த காதலித் தழீஇப் பாணர், நயம்படு முரற்கையின் யாத்த பயன்றெரிந், தின்புறு புணர்ச்சி நுகரு, மென்புல வைப்பினாடுகிழ வோனே (ஐங். 407) என்பது கொண்டிஃ துணர்க. ஏழ்புணர் சிறப்பி னின்றொடைச் சீறியாழ், தாழ் பெயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப் பெயர்த்து, வீழ்துணை தழீஇ (மதுரைக்காஞ்சி 559-61) என வருதல் காண்க. சான்றோர் இசையுங் காமமும் விலங்கிற்கும் இவ்வாறே வேண்டுதல், “யானை... யாழிசைப் பறவை யிமிரப் பிடிபுணர்ந்து, வாழையஞ் சிலம்பிற் றுஞ்சும் (அகம். 332) என்பதனா னுணரலாம். கம்ப நாடரும் காமமும் இசையுமே தலையாய இன்பஞ்செய்வன் என்று கொண்டு, பெண்ணி னோக்குஞ் சுவையிற் பிறர்பிறர் தமக், கெண்ணி நோக்கி யியம்பரு மின்பத்தைப், பண்ணி னோக்கும் பராவமிழ் தைப்பசுங், கண்ணி னோக்கின ருள்ளங் களிக்கின்றார். (கம்ப. கங்கைப். 11) எனப் பாடுதல் காண்க. வானத்து எழுஞ்சுவர் நல்லிசை- மேகத்தெழுகின்ற சுவரத்தைத் தன்கட் கொண்ட நல்லிசை என்க. எழுஞ்சுவர் - உச்சஸ்வரம். யாழ் தாழ் பெயற் கனை குரல் கடுப்பப் பண்ணுப் பெயர்த்து என்றது கண்டு இஃதுணர்க. சரணம் சரண் என்றாதல் போலச் சுவரம் என வேண்டுவது சுவர் என ஆயிற்றென்க. “ஸ்வரம்ஸ், இனியதாயில்லை என்றற்கு வர்டீக்நஹீ என்று வட நாட்டார் வழங்குவது காணலாம். மேகம் இன்னிசை செய்தலுமுண் டென்பது. இன்னிசை யுருமொடு கனை துளி தலைஇ (அகம். 58) என்பதனானறிக. எழிலி படுமலை நின்ற நல்யாழ் வடிநரம், பெழீஇ யன்ன வுறையினை (நற். 139) என்றதுங் காண்க. பாணர் - யாழ்ப்பாணர். படுமலை - படுமலைப் பாலைப்பண். துத்தங் குரலாயது படுமலைப் பாலை என்ப. இது பிறக்குமாறு ஆய்ச்சியர் குரவையுள் அடியார்க்கு நல்லாருரையா னறிக. படுமலைப் பண்ணுதலாவது குரலிற் பாகத்தையும் இளியிற் பாகத்தையும் வாங்கிக் கைக்கிளை, உழைவிளரி தாரத்திற்கு ஒரோ ஒன்றைக் கொண்டு சேர்க்கத் துத்தம் குரலாய்ப் படுமலைப் பாலையாகச் செய்தல் (சிலப். ஆய்ச்சி. உரை எடுத்துக்காட்டு : 8-9). வீழ - செவியின் வீழ. செவி விரும்ப என்பதுமாம். பெய்த புலத்துப் பூத்த முல்லை என்பது - மழைபெய்த புறவின் மலர்ந்த முல்லை என்றவாறு. பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ் (200) என்புழிப் போல வந்தது. முல்லைப்பசுமுகைத் தாதுநாறு நறுநுதல் என்றது முல்லை மழைபெய்து முகைத்துப் பூத்துத் தாதுடையதாய் நாறும். தலை நுதல் இயல்பாகவே நாறும் என்ற குறிப்பிற்று, இது தெரியவே நறுநுதல் என்றான். புறவிடைப் பூத்த முல்லை மணத்தை மோந்து, நினைந்த தன் தலைவியொடு வேற்றுமை கண்டு கூறினானாம். எல்லாம் என்றது பயனின்றிக் கழிந்தனவே மிகப்பல என்பது தெரிய. இவண் வைகற்பதடி எனவும், இவண் வாழுநாளெனவும் கூறிக் கொள்க. `வானத்தெழு சுரநல்லிசை என்பது பாடமெனினும் நன்கியையும். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரவுரைக்கட் பல்லிடத்தும் வரம் என்பதனைச் சுரம் என வழங்குவர். இனி வானத்தெழுஞ் சுவர்க்கண் எழாலின் நல்லிசை வந்து வீழாநிற்க அரிவை தோளினைத் துஞ்சிக் கழிந்தநாள் என்பதும் ஒன்று. தன்பெரு மனையில் வானத்தளவும் எழும் மதிற்கண் என்றவாறு. புறத்து நின்றிசைக்கும் தன் பாணர் படுமலை பண்ணிய யாழின் நல்லிசை மதிலகத்து வீழ என்பது கருத்தாகக் கொள்க. இவ்வாறு மாலை யந்தி காவலர், அம்பணை யிமிழிசை யரமிய வியலகத் தியம்பும், நிரைநிலை ஞாயி னெடுமதி லூரே (அகம். 124) எனவருவது கொண்டுய்த்துணரலாம். வேந்தர்மனையகத்து அவரவர்க்குரிய பாணர் தலைவர் தலைவியர்க்கு இன்பமாக யாழ்வாசித்தலுண்டென்பது, மாலையுமுள்ளா ராயிற் காலை, யாங்கா குவங்கொல் பாண என்ற, மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்வேன், செல்வழி நல்யாழிசையினென் பையென (அகம். 14) என்பது போன்ற இடங்களிற் காண்க. கழிந்தநாளை வாழ்ந்தநா ளென்னாது வாழுநாளென்றது நினைந்தபோ தெல்லாம் அவ்வின்பம் உறுவதாகக் கண்டு உயிர்தளிர்க்குஞ் சிறப்பால் என்க. இன்குரற் சீறியாழ் எழாஅல் வல்லை யாயினுந் தொழாஅல், கொண்டு செல்பாண நின் றண்டுறை யூரனை (நற். 380) என்புழித் தலைவி பாணனை வெகுளுமிடத்தும் அவன் யாழிசையின் வன்மையைப் பாராட்டுதல் காண்க. இசைபெறு திருவின் வேந்து (மலைபடு. 39) என அரசன் புகழப்படுதல் காண்க. கவைமகனார் 324. கொடுங்கான் 1 முதலைக் கோள்வ லேற்றை வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை இனமீ னிருங்கழி நீந்தி நீநின் நயனுடை மையின் வருதி யிவடன் மடனுடை மையி னுயக்கும் 2 யானது கவைமக நஞ்சுண் டாஅங் கஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே. (எ-து) செறிப்பறிவுறுக்கப்பட்டு இராவாரா வரைவல் என்றாற்குத் தோழி அது மறுத்து வரைவு கடாயது. (வி) கொடுங்கால் முதலை - வளைவாகிய தாளையுடைய முதலையின். கோள் வல் ஏற்றை - பிறவுயிர்களைப் பற்றுதல் வல்ல ஆண். வழி வழக் கறுக்கும் - தானுள்ள வழியின் பிறவுயிர்கள் வழங்குதலை ஒழிக்கும் இனமீ னிருங்கழி நீந்தி - இவள் பால் நின்னயனுடைமையின் கானலம் பெருந்துறை நீ வருதி என்க. நீந்துங் கழி ஏதமுடைத்து என்பது கருத்து. நயன் - விருப்பம். இவள் தன் மடன் உடைமையின் உயக்கும் - நின் வலியறிய மாட்டாத இவள் தன் இளமையால் அவ் வரவு உயங்கு விக்கும். உயங்குதல் - வாடுதல். உயக்கும் - வாட்டும். இதனால் பெரும யான் அது என் நெஞ்சத்தானே அஞ்சுவல் என்றாளென்க. அது என்றது இராவருதலை. தான் அஞ்சுவது இது பற்றி என்று தெரிய என்னெஞ்சத்தாற் கவைமகநஞ்சுண்டாங்கு அஞ்சுவல் என விளக்கினாள். கவைமக என்பது மகவடிவில்லாது ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழவி. இயற்கையிற் றிரிந்து இவ்வாறு பிறத்தல் இக்காலத்தும் உண்டு. இதனை அலவன் கவைக்கால் என்பது போலக் கொள்க. ஓட்டிய கவைமகவுள் ஒரு பிள்ளை நஞ்சுண்டால், உடம்பு விள்ளாமையால், அந் நஞ்சு மற்றொரு குழவிக்கும் பரவிக் கொல்லுமென்று தாய் அஞ்சுதல் போல யான் அஞ்சுவல் என்று தோழி கூறினாளென்க. கவைமகப் போல விள்ளாது ஈருடம்பு ஓருயிராய் ஒட்டி யுள்ளதனால் நின் ஏதம் இவளையும் ஏதப்படுத்தல் ஒருதலை யென்று கருதி அக் கவைமக நஞ்சுண்டாற்போல தன்னெஞ்சத்தால் அஞ்சுவல் என்றாள். நெஞ்சத்தால் - நெஞ்சத்துக் கொள்ளலால் என்பதுமாம். கவைமக என்றதனை இருகொம்பு ஒட்டிய மரத்தைக் கவைமரம் என்பது போலவும், புள்ளிமான் கலையின் பலகவை ஒட்டிய கொம்பினைக் கவைக்கொம்பு என்பது போலவும் கொள்க. கவைமரங் கடுக்குங் கவலைய மருப்பிற் புள்ளியிரலை (பதிற். 74) என்பது காண்க. இது போலவே யாமே பிரிவின் றியைந்த துவரா நட்பி னிருதலைப் புள்ளி னோருயி ரம்மே,” (அகம். 12) என்று கூறுதலான் ஓருடம்பிலிருதலைக் கவைத்தமகவு என்று கொண்டு அக் குழவி ஒருவாயான் நஞ்சுண்டாற்போல நெஞ்சான் அஞ்சுவல் என்றாளெனினு மமையும். கவைநாக் கட்செவி (கல்லாடம் 87:19) என்ப. உயங்கும் என்பதும் பாடம்; நீ கழிநீந்தி இராவருதற்கு வாடும் என்க. துறையுள் இராவாரா வரைவல் என்றது இரவுக்குறி வந்து அப்பால் வரைவேன் என்றதாம். அது மறுத்து என்றது அவ்விரவுக்குறி மறுத்து என்றவாறு. நன்னாகையார் 325. சேறுஞ் சேறு மென்றலிற் பண்டைத்தன் 1 மாயச் செலவாச் 2 செத்து மருங்கற்று மன்னிக் கழிகென் றேனே 3 யன்னோ ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ கருங்கால் வெண்குருகு மேயும் பெருங்குள மாயிற்றென் னிடைமுலை நிறைந்தே. 1 (எ-து) பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது. (வி) செல்லுதும் செல்லுதும் என்று நாளும் மொழிதலால், பண்டைத்தன் மாயச் செலவாச் செத்து - தொல்லைத் தன் வஞ்சச் செலவாகக் கருதி மாயப்பொய்ம் மொழி (அகம். 6) என்பதனான் மாயம் பொய்யின் வேறாதலுணர்க. வஞ்சச் செலவாவது பரத்தையிற் றங்கி மீண்டவன் வேறொன்றிற் றங்கினே னென்று தலைவியை வஞ்சித்துக் கூறுஞ் செலவு. அது தலைவன் பரத்தையி னகற்சியிற் பிரிந்தோட் குறுகி (தொல்.அகத். 41:22) வாவியுள் யானை கண்டு தங்கினேன்; கடவுளரை வழிபட்டுத் தங்கினேன், பூதப்போர் கண்டு தங்கினேன். புனலாடிச் சென்று தங்கினேன் என்று பல பல கூறுதலான் அறிக. இவ்வுண்மை மருதக்கலி 28 முதல் வரும் பல பாடல்களான் அறிக, தொல் காப்பியனார் பரத்தையி னகற்சியின் என்றதனால் இவன் பரத்தையிற் பிரிந்தவனேயாகவும் அவள் வெகுளாமைப்பொருட்டு வேறொன்றிற் றங்கினேன் என்று மாயச் செலவாயிற்று இது நீ கூறுமாயமோ கைப்படுக்கப்பட்டாய் (மருதக்கலி 28) எனத் தலைவி கூறுதலான் நன்குணரலாகும். இவ்வாறே இவன் புனலாடியதைக் குறித்துத் தலைவி மாயப் புதுப்புனல் பல்காலுமாடிய செல்வுழி (மருதக்கலி. 33) பொய்யெல்லா மேற்றித் தவறுதலைப்பெய்து, கையொடு கண்டாய் பிழைத்தேன் அருளினி (மருதக்கலி 30) என்பதனாற் றலைவன் தன் மாயச் செலவினைத் தலைவி கையோடு கண்டதுணர்ந்து பிழைத்தேன் என்று உடன் படுதலானும் இவ்வுண்மை நன்கறியலாகும். மருங்கற்று - யான் சுற்றம் அற்றேனாய், மன்னிக்கழிக என்றேன் - தனிமையில் நிலைத்து இன்மை கழிவேனாக என்றேன். குறிப்பெச்சத்தால் உடன்பாடு குறித்தாளாம். இங்ஙனம் தன் அன்பிற்குங் கற்பின் பெருமைக்குந்தகப் பிரிவுடன்படுதல், நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் (குறள். 1181) எனத் தலைவி கூறிக்காட்டும் அருமை மொழியா லுணரலாம். ஈண்டு நல்காமை நேர்ந்தேன் என்பது நயந்த தலைவர்க்கு நல்காமலே உடம்பட்டேன் என்னும் பொருளதாம். இதனால் யான் உடன்படாத வழிச் செலவொழிதல் குறித்து அவர் ஒருமாயமுமின்றிப் பல்காற் செல்லுதுஞ் செல்லுதுமென்று என் உடன்பாடு நயந்து கூறினராக, அவ்வுண்மை அறியாது பண்டைக்கூறிய மாயச் செலவாகக் கருதி யான் சுற்றமில்லேனாய் மன்னிக்கழிக என்று நல்காமலே பிரிவு உடன்பட்டேன் என்றாளாகக் கொள்க. இங்ஙனம் கொள்ளாது மன்னிக்கழிகென்றேன் என்பதற்கு நிலைபெற்று நீங்குக என்றேன் என உரைத்தாரு முண்டு. இவ்வாறு தலைவி தலைவற்குக் கூறுதல் இயல்பு மன்று முறையுமன்றென்க. ஆசாகு எந்தை - தனிமைபொருத எற்குப் பற்றுக்கோடாகிய என் தலைவன். யாண்டுளன் கொல்லோ - எங்குள்ளானோ. என்றது பரத்தையிற் பிரிவு ஒரு திங்களிற் பதினைந்து நாளை யிக வாதாதலின் இஃது அவ்வாறன்றி நாள் நீடலான் அம் மாயச் செலவன்றுணர்ந்து வேறியாண்டுளனாயினானோ என்றதாம். பிரியும்போது மாயச் செலவாச் செத்து அப்போதும் உடன்படாம லுடன்படலால் இதுவே துணிவாம். அன்னோ என்றாள் தான் தளிமையின் நாள் கழிக்க உடன்பட்டாளென்று அவரகன்றது நினைந்து. மன்னிக்கழிக என்றேன் என உள்ளபடியே கொண்டு மன்னிக்கழிவேன் என்று கூறினாளாகக் கூறினும் நன்கியையும் கழிகு - கழிவேன். கரிய கால்களையுடைய வெள்ளிய குருகு இரைமேயும் பெருங் குளமாயிற்று - என் முலையிடை நீர்நிறைந்து தலைவனைக்காணா தமையாத கண்கள் இடைவிடாதழுது ஒழுகியநீரால் முலையிடை நிறைந்து குளமாயிற்று என்றவாறு. ஈர்க்கிடைப் போகாது அண்ணாந்தேந்திய வனமுலை கரையாக நின்று நல்ல மார்பிடைத் தடுத்தலால் அழுது வழிந்த நீர் பெருங்குளமாயிற்றென்றாள். நல்லக வனமுலைக் கரைசேர்பு, மல்கு புனல் பரந்த மலரேர் கண்ணே (நற். 33) எனவும், ஆக வனமுலைக் கரைவலந் தெறிப்ப வழுதனள் (நற். 81) எனவும் வருவன வற்றால் முலை கரையாய் வழங்கல் காண்க. நீர் நிறைதற்குக் கரைஇன்றி யமையாமை குளவரைக் கோடின்றி நீர்நிறைந் தற்று (குறள். 523) என்பதனானுணர்க. முலையிடை - விள்ளாத இரு முலையின் நாப்பண். கண்ணொ ழுக்கிய நீர்முலையினட யாகத்துச் சுடுதலுணர்ந்து, இஃ தென்னென்று அக்கண்களால் நோக்கிய அளவில், செழுநீர்த்தடத்துக் கயல்மிளர் வனவாகத் தன்கண்ணிழலாலே தெரிந்து அக் கயல்களை யுண்டற்குரிய குருகு மேயும் பெருங் குளமாயிற்றென்றா ளென்க. கருங்காற்குருகு செங்கானாரையின் வேறு அன்னங்குரு கொடு நாரைப் பார்ப்பினம் (சிந். 2102:3) என்பது காண்க. அழுநீர்ப் பெருக்கமே கூறுதல் கருத்தாயிற் பெருங்குளமாயிற்று என்பதே யமையும், குருகு மேயும் குளம் என்று வாளாகூறாரென்க. தலைவன் பரத்தையர் மாயத் தகப்பட்டுச் சென்ற செலவாதல்பற்றி மாயச் செலவெனப்பட்ட தென்பதுமாம். 326. துணைத்த தோகைப் 1 பிணைப்பெருந் 2 தோளினர் கடலாடு மகளிர் கான லிழைத்த சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி ஒருநாட் டுறைவன் றுறப்பிற் பன்னாள் வரூஉ மின்னா மைத்தே. எ-து சிறைப்புறம். (வி) துணைத்த தோகைப் பிணைப்பெருந் தோளினர் - தம்மூர் ஒத்த மயிலொடு கூடிய மான்கள் போன்ற பெருந்தோளுடையார். கடலாடு மகளிர் - கடலில் ஆடிய மகளிர். மயில் கொல்லோ (குறள். 1081) பிணையோ (குறள். 1085) என வரும். கானல் இழைத்த - கழிக்கரைச் சோலையில் கோலிய சிறு மனைக்கண். துறைவன் ஒரு நாட் புணர்ந்த நட்புத் துறப்பிற் பன்னாள் வரூஉம் இன்னாமைத்து என்க. உற்றது மன்னு மொருநாள் மற்றது, தவப்பன்னாள்..... நோயாகின்றே (271) என்பதே போலுமேனும், அது கற்பாதலும், இது சிறைப்புறம் என்றலாற் களவாதலும் நோக்கி வேற்றுமை காண்க. இனி ஒருநாட் டுறப்பின் அது பன்னாள் வரூஉம் இன்னாமைத்து என்பதூஉமாம். மகளிர் கானலிழைத்த சிறுமனைப் புணர்ந்த நட்பு இன்னாமைத்து என்றதனால் ஊரிற் பெற்றார் பெருமனைக் கண்ணே தன்னைக் கொடுப்பத் துறைவன்கொண்டு எந்நாளுமின்ப மாகத் துறவாது உடனுறைவானாதற்கு வரைவுடன் வருதல் குறித்தாளாம். அம்மூவனார் 327. நல்கின் வாழும் நல்கூர்ந் தோர்வயின் நயனில 1 ராகுத னன்றென வுணர்ந்த குன்ற நாடன் றன்னினு நன்றும் நின்னிலை கொடிதாற் றீஇங் கலுழி 2 நம்மனை மடமக ளின்ன மென்மைச் சாயல ளளிய 3 ளென்னாய் வாழைதந் தனையாற் சிலம்புபுல் லெனவே. (எ-து) கிழவன் கேட்கும் அண்மையனாக அவன் மலையி னின்று வரும் யாற்றிற்கு உரைப்பாளாய் உரைத்தது. (வி) நல்கின் - வளம்படைத்தார் நல்கினால். வாழும் நல்கூர்ந் தோர்வயின் - வாழ்தற்குரிய வறியர்வாய் நயனில ராகுதல் - நலம் இல்லார் ஆகுதல். நன்று என - நங் கருத்தாற் றீதேனும் அவன் கருத்தால் நல்லது என்றி. யாம் பரிகாச மாகச் சொல்ல உணர்ந்த குன்ற நாடன் தன்னினும் - மறைந்து அண்மையினின்று அறிந்து கொண்ட மலைநாடனியல் பினும். துறையுள் அண்மையானாகக் கூறுதல் காண்க. தீஇங் கலுழி நின்னிலை கொடிது - வாய்க்கு மட்டிலினிதாகிய யாறே செயலால் நின்னியல்பு கொடுமையுடையது. நம் மனை மடமகள் - நம்மனைக்குரிய இளமகள். இன்ன மென்மைச் சாயலள் - இத்தகைய மென்மையொடு கூடிய அழகுடையள். அளியள் - நம் அளிக்குரியவள். என்னாய் - குன்றநாடற்குச் சொல்ல மாட்டாய். சிலம்பு புல்லென - அவன்மலை அழகு; அழிய வாழைதந்தனை - அம் மலை வாழையைப் பறித்து என்முன் உய்த்தனை என்றவாறு. சாயல் - அழகு (குறள் 1183). நயன் - நலம். நயமி லொருகை (பரிபாடல் 3:34) என்ப. தலைவன் நல்கின் வாழ்தல் தலைவிக்குயாறு நல்கின் வாழ்தல் வாழைக்கும் ஒத்தல் காண்க. வறுமையால் மெலிதல் நல்கூர்ந்தார்க்கும் தலைவன் அளிசெய்யாத வழி மெலிதல் தலைவிக்கும், கலுழி நின் வலியாத வழிமெலிதல் வாழைக்கும் ஒக்கும். இதனாற் றலைவன் நல்கின் வாழ்ந்து நல்காவிடின் வாழாது நல்கூர்ந்ததாக வாழையையுங் கருதி உலகிய லுரைப்பாள் போன்று நல்கின் வாழும் நல்கூர்ந்தோர் என்றாளென்க. அவர்வயின் நயனிலராகுதல் நன்று. அவர் பாற்றீது செய்ய வல்லவராக வைத்து நன்மையுஞ் செய்யாதராதல் நன்று என்றவாறு. கலுழிநீர் நல்கின் வாழ்தற்குரியதாய்க் கோடைக்கு நல்கூர்ந்த வாழையின்கண் எம்பால் எந்தலைவன் போல் நன்மை செயதிலாமை மட்டும் நன்றென்று கொள்ளின், அவனை ஒப்பாவை அங்ஙனமன்றி நீ நல்கின் வாழும் வாழையை மலை புல்லென வேரோடு பறித்துய்த்து அதற்குத் தீங்கும் செய்தனை யாதலாற் றலைவன் தன்னினும் நின்னிலை கொடிதால் என்றாள். இன்ன மென்மை என்றது தன் முற்றந்த வாழையைச் சுட்டி இத்தகைய மென்மை என்றவாறு. நம்மனை மடமகள் என்னாய் என்றது மலையினின்று இழிந்த கலுழி இனித் தலைவன் மலையேற மாட்டாமையை நினைந்து கூறியதாம். நம் என்றது கலுழி தலைவனை உளப்படுத்திக் கூறுதற்கண் வந்தது. யாறுள்ள மலையின்கண் தலைவன் மனைக்குரிய மடமகள் தானாதல் அறிய வைத்தவாறு. எனக்குயர்ந்த உவமையாகிய வாழைக்கு நன்மை செய்யாது தீங்கு செய்த நீ எனக்கு நல்லையாவையல்லை எனக்குத் தீங்கு செய்தனையாவை என்பது தெரியச் சிலம்பு புல்லெனத் தந்தனை என்றாள். தலைவன் சிலம்பின் தோற்றப் பொலிவினை நோக்கியே அவன் அருமை செய்தயர்த்துழியும் ஆற்றி உயிர் வாழ்கின்றாளாதலான் இங்ஙனம் கூறினாள். யாற்றைத் தன்னொடொத்த பெண்பாலாகக் கருதிக் கூறினாள். இவ்வழக்கு அகப்பாட்டில் எந்தை பல்பூங் கானத் தல்கி யின்றிவட். சேந்தனை செலினே சிதைகுவதுண்டோ ... அவரோங்குமலை நாட்டின் வரூஉவோயே (அகம். 398) என வருதலான் அறிக. தீயகலுழி என்பது பாடமாயின் தீமையையுடைய கலுழும்யாறே என்க. சிலம்பு புல்லென வாழையைப் பறித்தது தீமை; தலைவன் அணிமையனாகக் கேட்டது குறித்தது நன்று என வுணர்ந்த குன்ற நாடன் என்பதற்கு நல்லதென்று யாம் சொல்ல அதனையுணர்ந்த நாடன் எனக் கூறப்பட்டது. பரணர் 328. சிறுவீ ஞாழல் வேரளைப் பள்ளி அலவன் சிறுமனை சிதையப் புணரி குணில்வாய் முரசி னிரங்குந் துறைவன் நல்கிய நாடவச் சிலவே யலரே வில்கெழு தானை விச்சியர் பெருமகன் வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர் 1 புலிநேர் குறழனிலை 2 கண்ட கலிகெழு குறும்பூ 3 ரார்ப்பினும் பெரிதே. (எ-து) வரைவிடை வேறுபடும் கிழத்தியை அவர் வரையும் நாள் அணித்தெனவும் அலரஞ்சலெனவும் கூறியது. (வி) சிறிய பூக்களையுடைய புலிநகக்கொன்றையின் வேரிடையில் பொந்தில் அலவன் சிறுமனைப்பள்ளி கெடக் கடலின் அலைகள் குணிலெறிதல் வாய்த்த முரசுபோல முழங்கி விழுந் துறைவன். அலவன் வேரளைச் சிறுமனைப் பள்ளி சிதைய என்க. இரவில் அலவன் அளையில் ஒடுங்கும். எல்லை சென்றபின் மலருங் கூம்பின ... அலவனும் அளைவயிற் செறிந்தன (நற். 385) என்பது காண்க. கடலலை குணில்வாய்முரசி னிரங்குதலும் இரவிலே என்றறிக. சிறிய ... முழங்குந்துறைவன் என்றதனால் தலைவி இற்செறிப்பிற் சிறுமனையிற்றனிக் கிடக்கை இல்லையாக விரைந்து மணமுரசு முழங்க வருவன் என்பது குறித்ததாம். அலரே விச்சியர்பெருமகன் வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர்புலி நேர்-குறழனிலை கண்ட குறும்பூர்ப் பெரிது ஆர்ப்பினும் நல்கற்கு இடைப்பட்ட நாட்கள் மிகச் சிலவேயாம் என்க. விச்சிக்கோ வழியினர் விச்சியர். அவ் விச்சியர்குடியிற் பெருமகன் என்றவாறு. ஆவியர் பெரு மகன் (சிறுபாண் 86) என்பது போலக் கொள்க. இவன் வேந்தரொடு பொருதநாளில் இவன் படைவீரனான குறழன் என்பானது புலிநேர்நிலையைப் பாணர் கண்ட குறும்பூரிற் பெரிதாக அவர் ஆர்ப்பினும் அதற்கு அஞ்சல் என்றவாறு. வரையும் நாள் அணித்தென்பாள் துறைவன் நல்கற்கு இடைப்பட்ட நாட்கள் தவச்சிலவே என்றாறாம். இதுவே துறையொடு பொருந்துவது கண்டு கொள்க. அவன்மார் புறுக வென்றநாளே குறுகி யீங்கா கின்றே (248) என்றது காண்க. அவர் பெரிதார்ப்பினும் நல்கிய நாடவச்சிலவே என்க. நல்கி - நல்கற்கு. பாடுதுறை முற்றிய என்புழி முற்றிய என்பது முற்றப்பாடுதற்கு எனப் பொருளாதல் காண்க. விச்சியிருந்தவூராகிய விச்சியூரும் குறழன் வென்றி கருதி நல்கியதாகிய குறழன் வயலும் இப்போர் நிகழ்ந்த குறும்பூரும் இன்றைக்கும் அறந்தாங்கிப் பற்றிற் சேரவுள்ளனகண்டு புலிநேர் குறழனிலை என்ற பாடத்தினுண்மை உய்த்துணரலாகும். விச்சியூர் விச்சூர் என வழங்குவது, குணில் - ஈண்டு முரசறைகோல். ஓதலாந்தையார் 329. கான விருப்பை வேனல் 1 வெண்பூ வளிபொரு நெடுஞ்சினை யுஞற்றலி னார் 2 கழல்பு 3 களிறு வழங்கு 4 சிறுநெறி புதையத் தாஅம் 5 பிறங்குமலை யருஞ்சுர மிறந்தவர்ப் படர்ந்து பயிலிரு ணடுநாட் டுயிலரி தாகித் தெண்ணீர் நிகர்மலர் புரையும் நனமலர் மழைக்கணிற் 6 கெளியவாற் பனியே. (எ-து) பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்துந் தோழிக்கு யான் ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. (வி) காட்டிருப்பையின் வேனற்பருவத்து வெள்ளிய பூக்கள். நெடுஞ்சினை வளிபொரும் உஞற்றலின் - நெடிய கிளைகளைக் காற்றுமோது முயற்சியால், ஆர்கழல்பு - ஆர்க்குக் கழன்று. யானை நடக்கும் சிறிய வழி மூடப் பரக்கும் ஓங்கிய மலையை அடுத்த அரிய சுரத்தைக் கடந்தவரை நினைத்து. அவருடன் உள்ளபோது துயில் பயின்ற நடுநாளிருளில் உறக்கம் அரிதாயினவாய்த் தெள்ளிய நீரிடத்துள்ள ஒளி பொருந்திய குவளை மலரை ஒக்கும் நல்ல குளிர்ச்சியையுடைய என் கண்களுக்கு நீர்த்துளிகள் எளி துண்டாம். மலர்கண் - வினைத்தொகை. இருள் நடுநாளிற் கூம்பாத மலர் குவளையாத லுணர்க. பகலிற் குவளையை வெல்வனவாய கண்கள் நடுநாட் டுயிலரிதாகி அவற்றை ஒக்கும் என்றவாறு. துயில் அரிதாதலும் பனிஎளிய வாதலும் சுரனிறந்தவரை நினைதலான் உண்டாதல் கருத்து. யான் ஆற்றுவல் கண்ணிற்குப் பனி எளிய ஆதலாற் பலரறிவர் என்று குறித்தாளாம். வழி சுடாமற் பூப் பரந்தனவேனும் அவ்வழி களிறு வழங்கு சிறு நெறியாதலால் அஞ்சிக் கண்பனி கொள்ளுதல் குறித்தாள். கடுங்கண் யானைக் கரை நீந்தி யிறப்பர்கொல் (33) என வருதல் காண்க. வளிபொரும் உஞற்றலின் வேனற்காற்று மோதும் முயற்சியால் வேனலை வளிக்குங் கூட்டுக. வேனல்வளி – கோடைக் காற்று. சென்றெறியு மியல்பின தாதலிற் பொரும் உஞற்றலின் என்றாள். கோடை சென்றெறியும் கொல்லிச் சிலப்பினும் (கல்லாடம்) என்பது காண்க. நனமலர் மழைக் கணிற்கு என்று பாடம். அதற்கு அகலமாக அலர்செய்கின்ற குளிர்ச்சியையுடைய கண் களுக்கு என்க. நனவென்னும் உரிச்சொல் நனம் எனத் திரிந்தது. கயவென்னுஞ்சொல் மென்மைக்காய் கயமெனத் திரிந்து வருதல் போலுமிஃது என்க. கயம்பட்ட (மருதக்கலி 7). நன்மலரெனப் படிப்பாரு முண்டு. கழார்க்கீரனெயிற்றியனார் 330. நலத்தகைப் புலைத்தி 1 பசைதோய்த் தெடுத்துத் தலைப்புடைப் 2 போக்கித் தண்கயத் 3 திட்ட நீரிற் பிரியாப் பரூஉத்திரி 4 கடுக்கும் பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ இன்கடுங் கள்ளின் மணமில 5 கமழும் புன்கண் மாலையும் புலம்பும் இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே.6 (எ-து) பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது. (வி) நலத்த கைப் புலைத்தி - அழுக்கு அகற்றித் தூயதாக்கு நலத்தையுடைய கைகளையுடைய வண்ணாத்தி. உடையோர் பான்மையிற் பெருங்கை தூவா வறனில் புலைத்தி (நற். 90) ஆதலாற் கையை விசேடித்தார். பசைகொல் மெல்விரற் பெருந் தோட்புலைத்தி (அகம். 34) என்புழி இவர் விரற்பெருந்தோளைச் சிறப்பித்தல் காண்க. படைகொ ணோன்விரல் (முல்லைப் பாட்டு. 77) என்புழி விரல் கைக்கு வந்தது. பசை - கஞ்சிப்பசை என்பர் அகநானூற்றுப் பழையவுரை காரர். தலைப்புடைப் போக்கி - முதலிற் புடைத்தலை நீளச் செய்து. தண்கயத்திட்ட - குளிர்ந்தநீர்நிலையிலே போகட்ட . நீரிற் பிரியாப் பரூஉத்திரி - நீரினால் முற்றும் அவிழாத பருமுறுக் குத்திரி. பரூஉத்திரி என்றது முறுக்கு நீரில் நனைந்து பருத்தது என்க. திரி என்றது முறுக்குடைய ஆடையை. திரி கடுக்கும் பகன்றைப் பொதி அவிழ் வான்பூ - முறுக்குடைய ஆடையை ஒக்கும் பகன்றையின் முகிழ் அவிழும் நிலையிலுள்ள வெள்ளியபூ. பரூஉத்திரியை உவமித்தது பொதியவிழ் நிலையை நோக்கி என்க. இப் பகன்றை வெள்ளியதாய்ச் சுரிமுகமுடைய பொதியுடைத் தென்பது, வளைகளைந் தொழித்த கொழிந்தி னன்ன, தளை பிணியவிழாச் சுரிமுகப் பகன்றை (அகம். 24) என்பதனால் அறிக. வான்பூவின் இனிய கடிய கள்ளினை ஒத்த மணம் இல்லிடத்துச் சூடாது கமழ்தற்குக் காரணமாகும். புன்கண் மாலையும், துணையில்லாத் தனிமையும் சென்ற நாட்டு இன்றுகொல் என்க. கள்ளைப் போல மணமில கமழும் என்பாருமுண்டு, அவர் தன்பாலுள்ள போது புன்கண் மாலையும், தனிமையும் அறியப்படா மையா லவர் சென்றுள நாட்டு இல்லை கொல் என்றாள். இனி ஆம்பற்பூவின் (46) என்ற பாட்டின் உரையில், ஈண்டைக் கேற்பன பலவுங் கொள்க. பகன்றைமலர் தேனுடையதென்பது. பகன்றை நறைக் கொள் மாமலர் (புறம். 235) என்பதனா னறிக. இத் தேன் நறுமணமின்று போலும். (கலி. 73 நச். உரை). இதனை மக்கள் சூடுவது பகன்றைக் கண்ணிப் பல்லான் கோவலர் (ஐங். 87) எனவும் ஏராளர் பனித்துறைப் பகன்றை பாங்குடைத் தெரியல்.... குடி (பதிற். 76) எனவும், பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர் (மலைபடு. 459) எனவும் வருதலா னறிக. வறளடும்பின் இவர் பகன்றை (பொருந. 195) என்பதனாலிது கொடியென்றறியலாம். பகன்றை கமழும் மாலை என்றதனால் இது கடும்பனிக்கால மாலையாம். பாண்டி லொப்பிற் பகன்றை மலருங் கடும்பனி யச்சிரம் (நற். 86) என்பதனானறிக. வாடாப்பிரமந்தனார் 331. நெடுங்கழை திரங்கிய நீரி லாரிடை ஆறுசெல் வம்பலர் தொலைய 1 மாறுநின்று கொடுஞ்சிலை மறவர் கடறுகூட் டுண்ணும் கடுங்கண் யானைக் 2 கான நீந்தி இறப்பர்கொல் வாழி தோழி நறுவடிப் பைங்கான் 3 மாஅத் தந்தளி ரன்ன நன்மா மேனி பசப்ப நம்மினுஞ் சிறந்த வரும்பொரு டரற்கே. (எ-து) செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. (வி) நெடு மூங்கிற்கோல் உலர்ந்து வாடிய பெய்யுநீரற்ற அரிய இடத்து. திரங்குதற்குக் காரணங் காட்டி நீரின்மை குறித்தாள். அந்நிலத் துண்டானவையுந் திரங்குதல் காட்டிப் புகுவார்க்கு வரும் ஏதங் குறித்தாள். இதனால் நிலக்கேடு கூறினாள். மறவர் கடறுகூட் டுண்ணுதல் கூறி அந்நில மக்களால் வரும் கேடு குறித்தாள். ஆறு செல் வம்பலர் மாறுநின்று தொலைய - வழிச்செல் புதியோர் எதிர்நின்று அழியாநிற்க. வம்பலர் அழியச்செய்த இளைப்புத் தீர மறவர் கடறுகூட்டுண்ணும் கானம் என்க. கொடுஞ்சிலை மறவர் - கொடுமையே இயல்பாகவுடைய வில்வேடர். கடறுகூட் டுண்ணும் கானம் - காட்டுயிர்களைக் கொள்ளை கொண்டுண்ணும் பாலை. கடுங்கட் கானவர் கடறுகூட் டுண்ணு மருஞ்சுரம் (பெரும்பாண். 116-7) என்புழி நச்சினார்க்கினியர். காட்டிலுள்ள முயல்களைக் கொள்ளைகொண்டுண்ணும் அரிய பாலை நிலம் என்பது கண்டுணர்க. கடறு - காட்டுள்ள மரஞ்செடி கொடிகட்கு மாம். கோடுகாய் கடற்ற காடு (அகம். 395) என்பதனானுணர்க. கடுங்கண் யானைக் கானம் - அம் மறவரை ஒருகால் வலியாற் கடப்பினும் கடத்தற்கரிய தறுகண் யானைக் கென்செய்வது என்று இரங்கினாள். நீந்தி என்றாள் கடக்கரிய கடல்போற் றோன்றல காடு (அகம். 1) ஆதல் தெரிய. நீந்தி என்னும் வினையால் நீந்த வேண்டிய இடம் நீந்த அரிய நீர ஆக உருவகப்படுத்தினாள். இறப்பர்கொல் - செல்வரோ என்று ஐயத்தி னுரைத்தாள். செல்லுதலைத் துணிந்து கூறிற் றலைவி என்னாவளோ என்னு நினைவால் தோழிநின் மேனி பசப்ப அரும்பொருள் தரற்குக் கான நீந்தி இறப்பர்கொல் என்க. இது தலைவி வேறுபாடு கண்டு தோழி கூறியதாதலின் நின்மேனி பசவாநிற்க நான் அவர் பிரிவரோ என்று ஐயுற்றேன் என்று உரைத்ததாகக் கொள்க. வார லிழிகடா யானை யெதிர் (திணைமாலை நூற்றைம்பது 11) என்ப. நம்மினுஞ் சிறந்த அரும்பொருள் - நம்மினுஞ் சிறந்து காதல் செய்தற்கரிய கிடைத்தற்கரிய பொருள் நம்மினும் பொருளோ காதலர் காதல் (அகம். 53) என்ப. நாம் கிடைத்த தன்மேலும் நம்மைப் பிரிந்து பொருள் செய்ய நினைத்தலிற் கூறினாள். அரும்பொருள் என்றது அங்ஙனம் அரிதாகிய பொருள் மேற் பிரிதல் எதுகருதியெனின் தரற்கு என்றாள். பிறர்க்குத் தருதற்பொருட்டே என்றவாறு. இதனால் தமக்கே இன்பம் பயக்கும் நம்மினும் பிறர்க்கும் இன்பம் பயப்பதாகும். பொருள் அவர் கருத்தாற் சிறத்தல் காட்டினாளாம். இவளினுஞ் சிறந்தன் றித னமக்கென (அகம். 131) என்பதனான் இவ்வுண்மை அறிக. நறுவடிப் பைங்கால் மாஅத்து - இனிய மணமுடைய வடுவையும் பசிய இடியையுமுடைய மாமரத்து. அந்தளி ரன்ன நம் மாமேனி - பசப்ப அழகிய தளிரை ஒத்த நல்ல மாமையை யுடைய நின்மேனி. நின் தளிரன்ன நம்மாமேனி பசத்தலான் இறப்பர் கொல் என்னை. அவர் சேறற்கு முன்னே அவர் செவ்வரென அவர் செய்த தலையளி மிகுதியாலும் படைதுடைத்துக் கூரிதாக்கலானும் அவரைக் குறித் துணர்ந்து தலைவி மேனி தானே பசத்தலாற் றோழி அது கண்டு கூறியவாறு. நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு, மெழுநாளே மேனி பசந்து (குறள். 1278) என்பது காண்க. இதனாற் பிரிந்து செல்லாது உடனுள்ள நிலையில் பிரிவரெனக் குறிப்பாலுணர்ந்த அளவில் மேனி பசவா நிற்க, அதுகண்டும் பிரிந்த நிலையிலென்னாது என்னாவ ளெண்ணாது கானம் இறப்பர்கொல் என்றாளாம். நறுவடிப் பைங்கண் என்பது பாடமாயின் மாஅத்து நறுவடி போன்ற குளிர்ந்த கண்ணும் மாந்தளிரன்ன ஒளியும் பசப்ப என்க. பொன்னெனப் பசந்த கண் (மருதக்கலி. 12) கொன்றைப் பூவிற் பசந்த வுண்கண் (ஐங். 500) என் பவற்றான் கண் பசத்தல் அறிக. செலவுக்குறிப்பாற் புலந்து பசுமையான கண் என்பதும் ஒன்று. பைங்கட் பார்ப்பான் (பரிபாடல் 5:27) என்புழிக் கோபத்தாற் பசியகண் என்றார் பரிமேலழகர். பசுங்கண்ணி னோக்கின ருள்ளங் களிக்கின்றார் என்றார் கம்பநாடர் (கம்ப. அயோத்தி. கங்கைப். 11 : 3-4). மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தனார் 332. வந்த வாடைச் சில்பெயற் கடைநாள் நோய்நீந் தரும்படர் தீர நீ 1 நயந்து கூறி னெவனோ தோழி நாறுயிர் 2 மடப்பிடி தழீஇத் தடக்கை யானை குன்றச்3 சிறுகுடி யிழிதரு மன்ற 4 நண்ணிய மலைகிழ வோற்கே. 5 (எ-து) வரையாது வந்தொழுகாநின்ற காலத்துக் கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது. (வி) வாடைச் சில்பெயல்வந்த கடைநாள் - வாடையொடு கூடிய சில்பெயற் கண் அவள் வந்த கடையாமத்து. நோய்நீந் தரும்படர் தீர - நம் காம நோய்நீந்த அரியதுன்பம் நீங்க வேண்டி. மலைகிழவோற்கே - மலையை உரிமையாக உடைய தலைவனுக்கே. மன்றம் நண்ணிய நீ நயந்து கூறின் எவனோ - வரைவுடன் மன்றிலுள்ள பெரியோரை நண்ணுமாறு நீ விரும்பிச் சொல்லின் யாதாமோ என்றவாறு. வரையாது வாடையிலும் மழையிலும் அவன் வந்த நாட் கடையில் இங்ஙனம் வரையாது களவில் வந் தொழுகுகின்றது நின் தகைமைக்குத் தகாது என்பது தெரியப் பகலில் மன்றத்துள்ள பெரியோரை அடுக்க நீ நயந்து கூறின் என்னோ என்றாளென்க. மன்றம் நண்ணக் கூறுதல் அவ்வவையிலுள்ள சான்றோரே இவ்வரைவு நன்று என்று முடித்தற் குரியராதல் பற்றியாம். “அலரொழிய, மன்றறியக் கொள்ளீர் வரைந்து (திணைமாலை நூற்றைம்பது 37) என்பது காண்க. இந் நூலுள்ளும் நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்போர் இருந்தனர் கொல்லோ, தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர், நன்றுநன்று என்னுமாக்களோடின்று பெரிதென்ன மாங்கண் தவையே (146) என்பதனால் வரைவுடன் படுத்தற்குத் தமராயுள்ள பெரியோர் அவையை ஊருடைமை கூறுதல் கண்டுணர்க. பொதுனோ டாய்ந்த முறுவலாண் மென்றோள் பாராட்டிச் சிறுகுடி, மன்றம் பரந்த துரை (கலி. 102) என்பதனானும் வதுவைக்கு இம் மன்றத் துள்ளாருடன்பாடு வேண்டப்படுதல் காண்க. ஈண்டு மன்றம் என்றது மன்றத்துள்ள சான்றோரை, அச் சான்றோரை முன்னிட்டு அருங்கலங்களோடு வரைவு வேண்டித் தலைவன் வருதல் உண்டென்பது, சான்றோர் வருந்திய வருத்தமு நமதுவான் றோய்வன்ன குடிமையு நோக்கித், திருமணிவரன்றுங் குன்றங் கொண்டிவள், வருமுலை யாம் வழங்கினோ நன்றே (இறையனார் அகப் பொருளுரை மேற்கோள், சூத். 29) என்பதனான் நன்கறியலாம். பணிந்து நங் கல்கெழுசிறுகுடிப் பொலிய, வதுவை யென்றவர் வந்த ஞான்றே (நற். 386) என்னும் நற்றிணையுமது. நாறுயிர்மடப்பிடி தழீஇ - தோன்றும் மூச்சினையுடைய இளம் பிடியைத் தழுவிக் கொண்டு, தடக்கை யானை - வளைந்த கையை யுடைய களிறு. குன்றச் சிறுகுடி யிழிதரு மன்றம் - குன்றத்துக் குறிச்சியில் இறங்குதற்குக் காரணமான பொதியிலாகிய அம்பலம். இம் மன்றத்துக் களிறு பிடியோடு இறங்குதற்கு ஏது, யானைகள் விரும்பும் முருங்கை முதலிய வற்றை வேலியாகக் கொண்ட, ஆல் முதலாய பெருமரங் களின் அடியில் அமைக்கப்பட்டிருத்தல் பற்றி என்றறியத் தகும், களிறு குன்ற நண்ணிக் குறவ ரார்ப்ப, மன்றம் போழு நாடன் (346) என மேல்வருவது காண்க. தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில் (அகம். 251) எனவும், முருங்கை மேய்ந்த பெருங்கை யானை, வெரிநோங்கு சிறுபுற முரிஞ வொல்கி, யிட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென... போர்மடி நல்விறைப் பொதியி லானே (அகம். 167) எனவும் வருவனகொண் டுய்த்துணர்க. யானைபிடிதழீஇ இழிதரு மன்றம் என்றது இருவரையும் சேரக் காண வல்லவர் மன்றத்துள்ளார் என்னுங் குறிப்பிற்று. மலைகிழவோற்கு மன்றம் நண்ணிய கூறினெவனோ என்றது உலகியலொழுக்கம் அது என்று யான் அவற்குக் கூறிய பின்னும் வரையாது வந்து, களவினே ஒழுகுகின்றானாதலின் அவற்கு அதனையே நீயும் நயந்துகூறி னெவனோ எனினுமமையும். தரையக நான்மறைக் கேள்வியர் வேள்வியர், சான்ற வர்தம் உரையகநாடி முன்னிட்டன தாகு முலகியலே (தஞ்சை வாணன் கோவை 94) எனப் பாங்கி தலைவற்குக் கூறியது காண்க. வீழ்பிடியளிக்கு மையல் யானையின் (குறிஞ்சிக்கலி. 18) என்பதனால் தழுவுவது குறித்துத் தடக்கை கூறினாள். வயக்களிற் றொருத்தல் இரும்பிணர்த் தடக்கையி னேமுறத் தழுவக் கடுஞ்சூன் மடப்பிடி (அகம். 78) என்ப. உழுந்தினைம்புலவனார் 333. குறும்படைப் 1 பகழிக் கொடுவிற் கானவன் புனமுண்டு கடிந்த 2 பைங்கண் யானை நறுந்தழை மகளி ரோப்புங் கிள்ளையொடு குறும்பொறைக் கணவுங் குன்ற நாடன் பணிக்குறை வருத்தம் வீடத் துணியி 3 னெவனோ தோழிநம் மறையே. எ-து அறத்தொடு நிற்பலெனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது. (வி) குறும்படைக் கானவன் - சிறுசேக்கையிலுள்ள குறவன். படை - சேக்கை. சிறு சேக்கை - காவலிதணத்துப் புலித்தோலால் அமைத்தது. இவ்வுண்மை, மன்னுயிர் மடிந்த பானாட் கங்குற் காடுதேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅது, வரியதட் படுத்த சேக்கை தெரியிழைத் தேனாறுகதுப்பிற் கொடிச்சியர் தந்தை (அகம். 58) என்பதனானறியப்படும். புலியத ளிதணத்துச் சிறுதினை வியன்புனம் (நற். 351) என்ப. பகழிக் கொடுவிற் கானவன் - அம்பிட்ட வளைந்த வில்லையுடைய குறவன். யானையை எய்தற்கு எப்போதும் கையில் அம்பும் வில்லுமாய்ச் சேக்கையிலிருப்பதைக் குறித்தது. இனிப் படை கண்படை எனக் கொண்டு குறும்படை சிறுதுயில் என்பதுமாம். இரவெல்லாம் வேழம் காத்த விழிப்பாற் பகற் காவல் இன்றியமையாமற் சிறுதுயில் கொள்ளுதல் கருதிற்று. இங்ஙனம் சிறிது துயின்ற அமயமே யானை புனமுண்டது எனின் நன்கியையும். அங்ஙனமாயும் ஓசைப்படாமற்றினைப் புனத்தை உண்டதனாற் கடியப்பட்ட பசியகண்களையுடைய யானை. நறுந்தழைமகளிர் - நல்லதழை உடைய பெண்டிர் ஓப்பும் கிள்ளை. ஓசையை எழுப்பி ஓட்டுங் கிளிகளுடன், குறும் பொறைக்கு-சிறிய மலைக்கு. அணவும் - செல்லத் தலை எடுக்கும். குறும்பொறை நன்னாடு என்றார் நச்சினார்க்கினியர். சிறுமலையைக் காவலாகக் கொள்வது அதனியல். யானை குறும்பொறை மருங்கி னமர்துணை தழீஇக், கொடுவரி யிரும்புலி காக்கும் (215) என்பது காண்க. குறும் பொறையில் மரங்கள் உண்டாதலாற் கிளிகளும் ஆண்டுப் பறந்து சேறலாற் கிள்ளையொடு என்றாள். குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கை (134) என்ப. அணவும் குன்ற நாடன் என்க. உண்டு கானவன் கடிந்த யானை - தமர் வரைவு மறுத்த தலைவனாகவும், மகளிரோப்புங் கிள்ளை - பெண்டிர் அலர் தூற்றல் பொறாத தலைவியாகவும்; யானை கிள்ளையொடு குறும் பொறைக்கு அவாவுதல் தலைவன் தலைவியுடன் தன்னூர்க்குச் சேர எழுதலாகவுங் குறித்துக் கொள்ளலாம். நாடன் பணிக்குறை வருத்தம் வீட - நாடன் பணிதலாகிய குறையினால் ஆகும் வருத்தம் தொலைய என்க. நாடன் வரைவொடு வருமிடத்துத் தந்தையர்க்குந் தன்னையர்க்கும் பணிந்து குறை கூற வேண்டும் என்னும் முறைபற்றி யுண்டாம் வருத்தத்தைக் குறித்தது. பணிந்துநங் கல்கெழு சிறுகுடிப் பொலிய, வதுவை யென்றவர் வந்த ஞான்றே (நற். 386) என்றதும், நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும், புரைய ரல்லோர் வரையல ளிவளென (புறம். 343) என்றதுங் கொற்ற வேந்தர் வரினும் தற்றக, வணங்கார்க் கீகுவ னல்லன்... ஓரெயின் மன்ன னொருமட மகளே (புறம். 338) என்றதுங் கண்டுண்மையுணர்க. அஞ்சுதக வுடையரிவ டன்னை மாரே (புறம். 353) என்ப. நம் மறை துணியின் எவனோ - நம்முடைய களவொழுக்கமாகிய மறைப்பு நம்மில் வெட்டுண்டால் என்னாமோ என்றவாறு. துணிதல் - வெட்டுண்ணல். எண்கின் ... இருள்துணிந் தன்ன குவவுமயிர்க் குருளை (அகம். 201) என்ப. இனி நம் மறையை அன்னை நம்மாலே தெளியின் எவனோ என்பதுமாம். இளம்பூதனார் 334. சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோ 1 டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப் பனிபுலந் துறையும் பல்பூங் கானல் விரிநீர்ச் 2 சேர்ப்ப னீப்பி னொருநம் 3 இன்னுயி ரல்லது பிறிதொன் றெவனோ தோழி நாமிழப் பதுவே. (எ-து) வரைவிடை ஆற்றகிற்றியோ என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. (வி) சிறுவெண்காக்கை மேலே கூறினாம். காக்கையின் செம்மையான வாயினையுடைய பெருந்தொகுதி. வருவது சொல்லும் வாய்பற்றிச் செவ்வாய் என்றாள். சொற்புள் என்பது பெயராத லுணர்க. கரவாது கரைந்துண்ணும் வாயாதலாற் கூறினாள் என்பதுமாம். காக்கை கரவா கரைந்துண்ணும் (குறள். 527) என்ப. மணிவாய்க் காக்கை (அகம். 319) என்பது கொண்டு சிவந்தவாய் என்பதும் ஒன்று. காக்கைச் செவ்வாய்ச் சேவல் (நற். 272) என்ப. எறிதிரைத் திவலை ஈர்ம்புறம் நனைப்ப - எறியும் அலைத் துளிகள் ஈரமான முதுகினை நனையாநிற்க, ஈர்ம்புறம் கூறியது மாலைக் குளிக்குமியல்பின வாதல் கருதி. அதனை மேலும் நனைப்ப என்றவாறு. அதனாற் குளிர் வெறுத்துத் தங்கும் பல்பூங் கழிச் சோலையையுடைய பெருநீர்ச் சேர்ப்பன். பெருநீர் - கடல். சேர்ப்பன் நம்மைப் பிரியின் நாமிழப்பது ஒரு நம் இன்னுயிர் அல்லது பிறிது ஒன்று எவனோ - நாம் இழப்பது ஒரு வேமாகிய நம்மினிய உயிரல்லது பிறிது எவன். உயிர் அல்லது ஒன்றெவன் நாம் இழப்பது என்றாளென்க. நம் இன்னுயிர் என்றது எனக்கு நின்னுயிரும், நினக்கு என்னுயிரும் இனிது என்பது குறித்தது. இழப்பது ஒன்றே தான் என்பது உயிரல்லது பிறிது. அவ்வுயிரிற் சிறந்த நாண் அஃதல்லது ஒன்று கற்பு. நாமிழப்பது உயிரொன்றுதான் என்றதனால் நீப்பின் சேர்ப்பன் இழப்பது பிரியேன் என்ற தன் சூள் என்று குறிப்பிற் கொள்ள வைத்தாளாம். ஞாயிறு மறைந்து பெருந்தோடு பகல் வரும் வரை ஓரிரவிற் பனிபுலந்துறைதல் குறித்து அவ்வாறு அரைநாள் சேர்ப்பன் நீப்பின் உயிரிழப்பது கூறியதனால் இது நெட்டிடைப் பிரிவாகா துணர்க. இது வரைவிடைப் பிரிவாதலுங் காண்க. இது தலைவி புலந்து கூறியது களவினுட் புலவிப்போலி (தொல்.கள. 20 நச்.) இருந்தையூர்க் கொற்றன் புலவனார் 335. நிரைவளை முன்கை நேரிழை மகளிர் இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச் சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து 1 பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும் வெற்பிடை நண்ணி 2 யதுவே வார்கோல் வல்விற் கானவர் தங்கைப் பெருந்தோட் கொடிச்சி யிருந்த வூரே. (எ-து) இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது. (வி) நேரிழை மகளிர் - மெய்க்கு ஒத்த அணிகலன் உடைய பெண்டிர். இருங்கல் வியலறை - பெரியமலையின் கண், அகலமான பாறையில். நிரைவளை முன்கை - நிரைத்த வளைகளையுடைய முன்கையினால். செந்தினை பரப்பி - செவ்விய தினையைப் பரப்புதல் செய்து. சுனைபாய் சோர்விடை நோக்கி - சுனையிற் பாய்ந்து விளையாடுதலால் ஆகிய மதியுடைய அமயம் பார்த்து. சினையிழிந்து - மரக்கிளை யினிறங்கி. பைங்கண் மந்தி - பசிய கண்களை யுடைய பெண்குரங்கு. பார்ப்பொடு கவரும் குட்டி யோடு கவர்ந்து கொள்ளும். வெற்பிடை நண்ணியது - இருமலைக் கிடையில் பொருந்தியது. வார்கோல் - நீளச் செல்லுமம்பினையுடைய. வல்வில் - வன்மையுடைய வில், குறிக்கு இடையிட்டவற்றை ஊடுருவிச் செல்லும் அம்பு ஆதலான் வார்கோல் எனப்பட்டது. அங்ஙனம் செல்வது வில் வன்மையான் ஆதலால் வல்வில் என்றாள். வல்விற் கானவர் தங்கை என்றதனால், அச்சமும், பெருந்தோட் கொடிச்சி என்றதனாற் காமமும் நிகழக் கூறினாள். இருந்த ஊர் - புறப்பட மாட்டாது இற்செறிக்கப் பட்டிருந்த ஊர். சோர்விடை மந்தி தினையைக் கவரும் என்றது நீ வரையாது இங்ஙனம் சோர்வையாயின் ஏதிலார் வரைவு முயல்வர் என்று குறித்தவாறாம். பகலில் மகளிர் பரப்பிய தினையைச் சோர்விடை மந்தி பார்ப்பொடு கவரும் ஆதலான் அங்கு வருதல் கவர்ந்துண்ணும் பார்ப்பிற்கும், மந்திக்கும் தீங்காக முடியுமாதலான் நின் அருளுடை மைக்குத் தகாதென்றும் இரவினை நயப்பின் வல்விற் கானவர் தங்கையாயில்லின்கண் இருத்தலால் எய்தப்பெறாய் என்றும், கூறிக் கொடிச்சி பெருந் தோளை விழைந்தனையாயின் வரைவொடு வருக என்று தோழி குறிப்பித்தவாறாம். குன்றியனார் 326. செறுவர்க் 1 குவகை 2 யாகத் தெறுவர 3 ஈங்கினம் 4 வருபவோ தேம்பாய் துறைவ சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக் கடுமா நெடுந்தேர் நேமி போகிய இருங்கழி நெய்தல் போல வருந்தின ளளியணீ பிரிந்திசி 5 னோளே. (எ-து) தலைமகள் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லி மறுத்தது. (வி) செறுவர்க்கு உவகையாக - அலர் தூற்றி எம்மைச் செறும் அயல்மகளிர்க்கு மகிழ்ச்சியாக. தெறுவர் - எமக்குத் தெறுதல் எம்பால் பொருந்த என்றது தாய் முதலியோர் தெறுதலைக் குறித்தது. சிறுநா ஒண்மணி விளரி யார்ப்ப ஈங்கினம் வருபவோ - தேரிலுள்ள சிறிய நாவினையுடைய ஒள்ளிய மணிகள் விளரி என்னும் பண்போல் ஆரவாரஞ் செய்ய இவ்விடத்து இன்னமும் அறிவுடை ஆண்மக்கள் வருவரோ. இன்னம் என்றது அலர் தூற்றும் செறுவர் உண்டாயதன் மேலும் என்றவாறு. மணி விளரியார்ப்ப வருபவோ எனவும், மணி விளரியார்ப்பப் போகிய எனவும் இடைநிலைவிளக்காக வைத்துக் கூட்டியுரைக்க. மணி ஆர்ப்ப வருதல் களவுவெளிப்படுப்பது ஆதல் கருதிக் கூறினாள். கடுமா - கடியபரி. நெடுந்தேர் நேமி நடத்த இருங்கழி நெய்தல் மலர்போல இடுக்கண்பட்டனள். அவ்விடுக்கணால் அளிக்கத்தக்கவள் ஆயினள் என்றா ளென்க. தேர் வந்தபோது நெய்தல் சிதைதல் கூறாது 227 ஆம் குறுந்தொகைப் பாட்டிற்போல போகியதே அது கூறுதல் காண்க. பொதுக்கயத்துக் கீரந்தையார் 337. முலையே முகிழ்முகிழ்த் 1 தனவே தலையே 2 கிளைஇய மென்குரல் 3 கிழக்கு வீழ்ந் 4 தனவே செறிநிரை வெண்பலும் 5 பறிமுறை நிரம்பின சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற் 6 கியான்ற னறிவலே தானறி 7 யலளே யாங்கா குவள்கொ றானே பெருமுது செல்வ 8 ரொருமட மகளே. (எ-து) தோழியை இரந்து பின்னின்ற கிழவன் தனது குறையறியக் கூறியது. (வி) முலையே முகிழ்முகிழ்த்தன - முலைகளே கோங்க முகிழ் போல அரும்பின. தலையே - தலையிலே. கிளைஇய மென்குரல் - கிளைத்த மெல்லிய மயிர். கிழக்கு வீழ்ந்தன - முதுகின் கீழே வீழ்ந்தன. வெண்பலும் - செறிந்து நிரைத்த வெள்ளிய பற்களும். பறிமுறை செறிநிரை நிரம்பின - விழுந்தெழுந்த முறைமைக்கட் செறிந்த வரிசையாக நிரம்பின. பறிமுறைக்குப் பிற்பட்டதே செறிநிரை நிரம்புதல் என்க. செறிமுறை பாராட்டினாய் ... பறிமுறை பாராட்டினையோ (கலி. 22) என்புழி நச்சினார்க்கினியர் பறிமுறை பாராட்டினாய் செறிமுறை பாராட்டினையோ என மாறிப் பொருள் கூறுக என்ற நயங்காண்க. சுணங்குஞ் சில தோன்றினவே - திதலையுஞ் சிலவாக மெய்க்கண் தோற்றஞ் செய்தன. அணங்குதற்கு முகிழ்த்தல் வீழ்ந்தன நிரம்பின இவை போதாவோ. சுணங்குஞ் சில தோன்றினவே. அணங்குதல் மேலும் என் செய்யுமோ என்பது குறிப்பு. யான் தன் அறிவலே - யான் தன்னை அறிவேனே ஆவேன். தான் அறியலளே - தான் என்னை அறியாளே ஆவள். அவள் என்னை அணங்குதலை யானறிதல் போல அவளை யான் அணங்குபவனாக என்னை அறியாள் என்றவாறு. இதுபற்றியே நச்சினார்க்கினியர் இதனைப் புணர்தல் நிமித்தம் வந்த பாட்டாகக் கொண்டார். (அகத்திணையியல் 14). அங்ஙனமாயிற் றலைவன் தோழி முன்னர்க் கூறியதீதென்று கொள்ளலாம். இது தலைவி தோழியைக் குறையுறும் பகுதியிற்படுதல் உய்த்துணர்க. தலைவி ஊழணி தைவரற்கண் மார்பிற்பூண் தைவரலால் முலைமுகிழ்த் தலும், கூழை விரித்தலால் குரல் கீழ் வீழ்தலும், நகுநயமறைத்தலால் வெண்பல் செறிநிரை நிற்பலும், உடை பெயர்த்து உடுத்தலாற் சுணங்கு சிலவும் தன்னை அணங்க அறிந்தானென்க. உடைமுழுதுங் களையாமையாற் சில அளவிற் சுணங்கு தோன்றின என்றானென்பதூஉமாம். இவர் கருத்திற் கியைய நோக்கின் யாங்கு ஆகுவளோ என்பது எவ்வாற்றான் எமக்கு நலன் துய்த்தற்கு ஆகுவளோ என்றவாறாம். பெருமுது செல்வர் - பழைமையாய் வரும் பெருஞ்செல்வர் குடிக்கு ஒரு மடமகளாயுள்ளவள் என்றவாறு. செல்வரோடு மடமகள் யாங்காகுவள் என்க. இனி நல்லறிவுடைய தொல்பேராசிரியர் இதனை மெய்ப் பாட்டியலிற் கட்டுரையின்மை (சூத். 23) எடுத்துக்காட்டித் தலைமகள் கட்டுரையா திருத்தலின் தலைமகள் தமரினெய்தல் வேண்டினமையின் கட்டுரை இன்மையின் வரைவு கடாத லாயிற்று எனக் கூறுதலால் அவர் பெருமுது செல்வர் ஒரு மட மகள்தானே ஆங்கு ஆகுவள் கொல் எனக் கருதினரென்று நன்கு துணியலாகும். ஆங்கு ஆகுவள் கொல் - செல்வரொடுமட மகளாதலான் அச் செல்வராகிய தமரிடத்துத்தானே நமக்கு ஆகுவள் என்று கருதினானாவன். தானே தன்னைத் தலைவற்கு வழங்கற்கு இயலாமையாற் கட்டுரையின்மை யாயினா ளென்றும், அக்கட்டுரை இன்மை யால் வரைதற்கே உடன்பட்டாள் என்றும் கருதலாம். யான் தன் அறிவல் என்றதனால் தலைவன் இவர் செல்வர் மகள் என்பதும் அறிந்தே கூறினனாவன். இங்ஙனம் கொள்ளாக் கால் தலைவன் தமரின் எய்தல் வேண்டின மையின் என்றற்குப் பொருந்தாமை காண்க. ஆங்கு அச்செல்வரிடத்து என்றவாறு. செல்வர் என்று பன்மையிற் கூறி ஒருமடமகள் என்றதனாற் பல் செல்வர் குடிக்கும் ஒரு மகளாய் அருமை பாராட்டப் பிறந்தவள் என்று கொள்ள வைத்தான். அதனால் அத் தமரினெய்தல் வேண்டினனாம். மடமகள் என்றது தானறியலள் ஆதல் பற்றியாகும். இனி யான் தன் அறிவல் என்றது யான் தன்னை எய்த அறிவல். தான் என்னை எய்த அறியாள் என்பதாகக் கொண்டு, அதனால் ஆங்கு ஆகுவள் என்றானெனினும் நன்கியையும். பெருங்குன்றூர் கிழார் 338. திரிமருப் பிரலை யண்ண னல்லே றரிமடப் பிணையோ டல்குநிழ லசைஇ வீததை வியலரிற் றுஞ்சிப் பொழுதுசெலச் செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலைப் பின்பனிக் கடைநாட் டண்பனி யச்சிரம் 1 வந்தன்று பெருவிற றேரே 2 பணைத்தோள் விளங்குநக ரடங்கிய கற்பின் நலங்கே 3 ழரிவை புலம்பசா விடவே. (எ-து) பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. (வி) திரிமருப்பு இரலை அண்ணல் நல்லேறு - முறுக்கிய இருமருப்பினையுடைய கலைமான்களிற் றலைமையினையுடைய நல்ல ஏறு. அரிமடப் பிணையோடு - மெல்லிய இளம் பெண் மானுடன், அல்கு நிழல் அசைஇ - வெயில் குறைந்த நிழலில் இளைப்பாறி. ஏறு வெயின்நிழலை நாள்நிழல் எனவும், இறங்கு வெயில் நிழலை அல்கு நிழல் எனவும் கூறுதல் நூல் வழக்கு. நளிகடற் றண்சேர்ப்ப நாணிழற் போல, விளியுஞ் சிறியவர் கேண்மை, - விளிவின்றி, அல்குநிழல்போ லகன்றகன் றோடுமே, தொல்புக ழாளர் தொடர்பு (நாலடி. 166) என்பதனான் இவ் வழக்குணர்க. அல்குவெயில் நீழல் அசைந்தனர் செலவே (அகம். 345) என வருதலான் இதன் உண்மை காணப்படும். காலை நிழல் குறைதலும், மாலை நிழல் நீடலுங் காண்டலாற் றங்கு நிழல் என்பது ஈண்டைக்கியையாது. நடுப்பகற்குப் பிற்பட்டது அல்குநிழல் என்க. பகல் குறைந்த அந்தியை `அல்கந்தி (ஆசாரக்கோவை. 9:2) என்பது காண்க. வீததை வியல்அரில் அல்குநிழல் அசைஇத் துஞ்சி - பூக்கள் உதிர்ந்து சிதைந்த அகன்ற தூறுகளின் அல்குநிழலில் இளைப்பாறித் தங்கி. ததைதல் ஈண்டுச் சிதைதல். பொழுது செல - பகற் பொழுது போகாநிற்க. செழும்பயறு கறிக்கும் - செழுமையை யுடைய பனிப்பயற்றைத் தின்னும், புன்கண் மாலை - புன்கண்மை செய்யும் மாலையையுடைய. பின்பனிக் கடைநாள் - பின்பனிப் பருவத்தின் கடையாமத்தில். தண்பனி யச்சிரம் - தட்பத்தால் பனித்தலைச் செய்யும் அச்சிரப் போதில். பெருவிறல் தேர்வந்தன்று - பெரிய வெற்றியையுடைய தலைவன் தேர்வந்ததேயாகும். விளங்குநகர் அடங்கிய கற்பின் நலங்கேழரிவை - மனைக்கு விளக்காகிய நின்னால் விளங்கும் இல்லத்துத் தலைவன் கற்பித்தவாறு அடங்கியுள்ள கற்புடைமையால் புகழ் நலங்கெழீஇய அரிவையே. பணைத் தோள் புலம்பு அசாவிட - நின் பிரிவுக்குமுன் மூங்கிலை ஒத்த தோள்கள் தனிமையும், வருத்தமும் விடும் வண்ணம் தேர்வந்தன்று என்றவாறு. பனிப்பயறு முற்றும் அச்சிரத்து வருதல் குறித்து சென்றனன் ஆதலால் இரலை செழும்பயறு கறிக்கும் மாலையாதல் காட்டி விரைந்து வருவன் என்பது குறித்துத் தேர்வந்தன்று என்றாள். பனிப்பயறு என்பது செந்தமிழ்ப் பாண்டி நாட்டு வழக்கு. இரலை பிணையொடு அசைஇத் துஞ்சிக் கறிக்கும் மாலையாதலான் விலங்குக்குள்ள இன்பமுந் தலைவிக்கு இல்லாமை கருதிப் புன்கண் மாலை என்றாள். பேயார் 339. நறையகில் வயங்கிய நளிபுன 1 நறும்புகை உறையறு 2 மையிற் போகிச் 3 சாரற் குறவர் பாக்கத் திழிதரு நாடன் மயங்குமலர்க் கோதை நன்மார்பு முயங்கல் இனிதுமன் வாழி தோழி மாயிதழ்க் 4 குவளை யுண்கண் கலுழப் பசலை யாகா வூங்கலங் கடையே. (எ-து) வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ்சொற் சொல்லி வற்புறீஇயது. (வி) வயங்கிய நளிபுனம் நறையகில் நறும்புகை - விளங்கிய செறிந்த தினைப்புனத்து எரிந்த நறைக்கொடி யினும் அகில் மரத்தினும் உண்டான நறிய புகை. பயிர்கால் யாப்பக், குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர், நறுங்கா ழாரம் (நற். 5) என்பதனாலறிக. நறை - நறைக்கொடி (ஐங். 276). சூடுறு வியன்புனம். கரிபுறங் கழீஇய பெரும்பாட் டீரத்து, தோடுவளர் பைந்தினை நீடுகுரல் (அகம். 368) என்பது காண்க. உறையறு மையிற் போகி - பெய்து துளியற்ற முகிலை யொத்து விண்ணில் நீண்டு. மை என்றார் பெய்தற்குமுன் கருக்கொண்டிருந்தது தெரிய. சாரற் குறவர் பாக்கத்து - மலைச்சாரலிலுள்ள குறவர் இருப்பாகிய சீறூர்களில். இழிதரும் நாடன் - இறங்கும் நாடுடைய தலைவன். சிலம்படைந் திருந்த பாக்கம் எய்தி (மலைபடு. 162) நாடனுடைய கலந்த பன்மலர்களானாகிய கோதை அணிந்த நல்ல மார்பினை முயங்குதல். குவளையுண்கண் கலுழப் பசலையாகாவூங்கு அலங்கடை இனிதுமன் என்க. அலங்கடை - அல்லாத இடத்து. மன் - அவ்வினிது கழிந்த துன்பமாவது என்க. ஊங்கலங்கடை. `மூன்றலங் கடை என்பது போல வந்தது. பாக்கம் - சிறுகுடிப்பாக்கம் (அகம் . 118). தலைவன் கோதை அணிந்து களவில் வருதல், அரையுற் றமைந்தஆர நீவிப் புரையப் பூண்ட கோதை மார்பினை, நல்லகம் வடுக்கொள முயங்கிநீவந் தெல்லினிற் பெயர்த லெனக்குமா ரினிதே “(அகம்.100) என்பதனா னறிக. பசலை ஆகாவூங்கு இனிது என்றது பசலை ஆகாத முன்னுக்கு இனியது என்றவாறு. பசலையாயின் அயலறிந்து அலர் எழுப்புதலான் அக் களவுமுயக்கம் இனிதாகாது துன்பமாய் முடிவதென்று கடுஞ் சொற் சொல்லியதாகக் கொள்க. குறவர் மறுத்த நறை அகிற்புகை அகன்று சென்று பின்னும் அவர் இருக்கையிலே அவர் நறுமண முவக்க வந்து இரங்குவது போலத் தமர் வரைவு மறுத்த தலைவன் அவரே வரைவுடன்பட விரைந்து அவருவக்க வருவான் என்பது குறித்து வற்புறீஇ யினாளாம். கண்கலுழப் பசலை யாகா வூங்கு என்பதற்குக் கண்ட நின்கண்கள் கலுழும்படி மேனி பசலை ஆகாவூங்கு என்றுரைப்பினு மமையும். மாயிதழ்க் குவளையுண் கண் - கரிய இதழ்களையுடைய குவளையை ஒத்த மையுண்ட கண்கள். `உறையறு மழையின் என்பதும் பாடம். அழிதுளி பொழிந்த இன்குர லெழிலி. எஃகுறு பஞ்சிற் றாகி (நற். 247) என்ப. அம்மூவனார் 340. காமங் கடையிற் காதலர்ப் படர்ந்து நாமவர்ப் புலம்பி 1 னம்மொ டாகி ஒருபாற் படுதல் செல்லா தாயிடை அழுவ 2 நின்ற அலர்வேர்க் 3 கண்டல் கழிபெயர் மருங்கி னொல்கி யோதம் பெயர்தரப் பெயர்தந் தாங்கு வருந்துந் தோழியவ ரருந்தவென் 4 னெஞ்சே. எ-து இரவுக்குறி உணர்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது. (வி) காமங்கடையின் - காமம் பெருகி அலைதலுறின். காமக் கடலைக் கடைய லுற்றான் (சிந். 2030) என்புழி நச்சினார்க்கினியர் காமக் கடல் அலையின்றி நின்றதனை அலைக்க லுற்றான் எனப்பொருள் கூறுதலா னிஃதுணர்க காதலர்ப் படர்ந்து - காதலர்பாற் சென்று. நாம் அவர்ப் புலம்பின் - நாம் அவரைத் தனியே விடத்துணியின், நம் மோடாகி - அக் காமப்பெருக்கி னகப்பட்ட நம்முடன் ஆகியும்; ஆயிடை ஒருபாற்படுதல் செல்லாது - அவ் விரண்டனிடையில் என்னிடனேனும், அவரிடனேனும் ஒரு பகுதியினிலைபட்டிருத்தலை மேற்கொள்ளாது. அவர் அருந்த என் நெஞ்சு வருந்தும் - அவருண்ட நெஞ்சம் வருந்தா நிற்கும். ஆர்ந்த என்பது அருந்த என விகாரப்பட்டது. இவ்வாறு வருதல், அவரை அருந்த மந்தி (ஐங். 271) அவரையை நிறையத்தின்ற மந்தி எனப் பழையவுரைகாரர் உரைத்ததனாலறிக (சேனாவரையர், தொல். எச்சவியல் 7 பார்க்க). அழுவநின்ற - கழிக்கும் கடற்குமுள்ள இடைநிலத்து முன்னே நின்ற. உடல்வே லழுவத்து (புறப் பொருள் வெண்பா. வாகை) மாறுபாட்டினையுடைய வேற்படை நடுவே என்பது காண்க. அழுவம் - இடைநிலம். நிலவரை யழுவத்தான் (பரிபாடல் ; 19:1) என்பது காண்க. அழுவம் - கரைப்பரப்பு எனினும் நன்கியையும். புலவுப்பொரு தழித்த பூநாறு பரப்பி னிவர் திரை (அகம். 130) என்புழிப் பரப்புக் கரைப்பரப்புக்காதல் காண்க. அலர்வேர்க் கண்டல் - மண்ணிற்பிடிப்பு விட்டு நெகிழ்ந்த வேரினையுடைய தாழை. ஓதம், கழிபெயர் மருங்கின் ஒல்கி - கடல் வெள்ளம் கழிக்குப் பெயர்ந்தேறுநிலையில் அவ்வழுவத்தின்பால் ஒதுங்கி. ஒல்குதல் - ஒதுங்குதல். ஒல்கியோர் கொம்புபற்றி யொரு கணா னோக்கி நின்றான் (சிந். 319) என்புழி நச்சினார்க் கினியர், ஒரு கொம்பைப்பற்றி ஒதுங்கி என்றுரைப்பது காண்க. பெயர்தரப் பெயர்தந் தாங்கு - அவ் வெள்ளம் கடற்குப் பெயர்ந்தால் உடன் பெயர்ந்து வந்தாற்போல ஒருபாற்படுதல் செல்லாது நெஞ்சு வருந்தும் என்றவாறு. அலர்தல் - நெகிழ்தல். புதலும் வரிவண்டூத வாய்நெகிழ்ந் தனவே (260) என்பதனான் உணரலாம். தலைவியின் அடங்கிய காமம் முதலில் அடங்கிய கடலாகவும், அக் காமம் கடைதல் அடங்கிய கடல் ஓதம் போல் எழுந்தலை தலாகவும், அக்கடலோதம் இரவிற் கழிபெயர்ந்து அழுவத்திற் பரத்தல் தலைவியின் காமம் பொங்கிக் களவிற் குறியிடஞ்சென்று தலைவனைத் தழுவுதலாகவும், அழுவத்து நின்ற கண்டல் தலைவன் உண்ட தலைவி நெஞ்சாகவும், அக் கண்டல் வேர் அலர்தல் தலைவன் வரைவிற் பிணித்தலில்லாது நெகிழ்ந்ததனாலாய தாகவும், கரைதொடாது அடங்கிய கடல் உடனாகிய கண்டல் தலைவனைத் தொடவியலாது தனியே ஒடுங்கிய தலைவி காமத்தின் உடனாகிய நெஞ்சமாகவும் நினைந்து கொள்க. தலைவனைக் கடல் நிலப்பரப்பான அழுவமாகக் கருதினாளென்க. பெருங்கடற் காழியனையன் (புறம். 330) என்றார் பிறரும். காமம் எத்துணைப் பெருகினும் அதனைக் கடத்தல் இல்லாமையாற் கரை நிலப்பரப்பாகக் கருதினான். அடங்கிய கடல் காமம் மிக்க தலைவி நிலையாகவும் கொள்க. கடலைப் பெண்பாலாகக் கூறுதல் என்போலத் துஞ்சா யிதுசெய்தார் யாருரையாய், என்போலும் துன்ப நினக்கு (திணைமாலை நூற்றைம்பது 38) என்பது காண்க. நாம் அவர்ப்புலம்பின் - நாம் அவரினின்று தனிமைப்படின் என்றது இரவுக்குறிமறுத்துத் தனிமையானிருத்தலைக் குறித்தது. இனி அவர் இருந்த என் நெஞ்சே என்பது பாட மாயின், அவர்கண் இருந்த என் உள்ளம் என்க. இது உவமையிற் கொள்ளுங்கால் கரைக்கண் வந்து பொருந்திய கண்டல் என்பது கருத்தாகக் கொள்க. அழிவி நின்ற அலர் வேய்கண்டல் என்பது பாடமாயின். அழிந்த பூநின்ற கண்டல் என்க. அருவி யாம்பல் என்னும் பதிற்றுப்பத்துட் போல வீ என்பது வி எனக் குறுகிற்று என்க. கழிக்கரை யிற்றாழை இருத்தலும்; அத்தாழை இருக்கும் இடம் அயிர்ச்சேற்றள்ள லழுவமாதலும் உணர்க, தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி (345) எனவும் அயிர்ச்சேற் றள்ள லழுவத்து (அகம். 400) எனவும் வரும். மிளைக்கிழான் நல்வேட்டனார் 341. பல்லி படீஇய 1 பசுநனைக் குரவம் பொரிப்பூம் புன்கொடு பொழிலணி 2 கொளாஅச் 3 சினையினி தாகிய காலையுங் காதலர் பேணா ராயினும் பெரியோர் நெஞ்சத்துக் கண்ணிய 4 வாண்மை கடவ தன்றென வலியா 5 நெஞ்சம் வலிப்ப வாழ்வென் தோழியென் வன்க ணானே. (எ-து) பருவவரவின்கண் வேறுபடுமெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (வி) பசிய அரும்புகளையுடைய குராமரம் பொரிபோல் பூக்களையுடைய புன்குமரத்தொடு சோலையை அழகு கொளச் செய்து, ஒவ்வொரு கொம்பும் இனியதாகிய பொழுதும் என்னை உள்ளத்துப் பேணுதல் செய்யாராயினும், நம்மாற் செயற்கரிய செய்யும் வன்மையாளர் தம் உள்ளத்துத் தூக்கிய பொருள் செயலாண்மை இவ்விளமையிற் செய்யக் கடவதன்று என்று அவர் பிரியும் போது அவரை ஈர்த்துக்கொள்ளாத என் நெஞ்சம் இப்போது என்னை அவருள்ளுழி ஈர்க்கவும் என் வன்கண்மையால் அதனை ஈர்த்து நான் நினையுந்தொறும் கணிவாய்ப்பல்லி ஒலியா நிற்க வாழ்வேன் என்றவாறு. உள்ளுதொறு படூஉம் பல்லி, புள்ளுத்தொழு துறைவி (அகம். 351) என வருதல் காண்க. நினையுந் தொறு நல்ல தொலிக்கும் பல்லியின் சகுனத்தைத் தொழுது வாழ்வள் என்றது தெரிந்து கொள்க. பல்லி படீஇய வாழ்வென் என்க. வலித்தல் - ஈர்த்தல். என் வன்கண்ணான் - அவர் பிரிதற் குடன் பட்ட என்வன்கண்மையான் என்றவாறு. நயந்த வர்க்கு நல்காமை நேர்ந்தேன் பயந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற (குறள். 1181) என்ப. நெஞ்சத்துக் கண்ணிய ஆண்மை என்றது அவர் என் மென்மை நோக்கி வெளிப்படக் கூறாது குறிப்பிற் காட்டி உள்ளத்தே கருதிவைத்த ஆண்மை என்றவாறு. பிரிவுரைக்கும் வன்கண்ண ரல்லாதார் இப்பிரிவுடன் பட்ட வன்கண்ணேன் என்பது கருத்து. பிரிந்து வாழ்தலே வன்கண்மை யானாகு மென்பாள் வன்கணான் வாழ்வேன் என்றாள். பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர் (குறள். 1160) என்பது. இவை எல்லாம் பொறுத்து உயிர்வாழ்வார் ஒருவருமில்லை என்பது குறிப்பாற்றோன்றக் கூறியது என்று பரிமேலழகர் உரைத்தது கொண்டுணர்க. பிரிவை மென்கணான் வாழாதார் முன்னே என் வன்கணான் வாழ்வேன் என்பதாம். பல்லிப்படீஇ நெஞ்சம் வலிப்ப என்று கொண்டு பல்லி ஒலியாநிற்க என்னெஞ்சம் அவர் வருவார் என்று என்னுயிர் போகாது ஈர்க்க என்று கூறினும் அமையும். காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் 342. கலைகை தொட்ட கமழ்சுளைப் 1 பெரும்பழம் காவன் மறந்த கானவன் ஞாங்கர்க் கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும் குன்ற நாட தகுமோ பைஞ்சுனைக் குவளைத் தண்டழை யிவளீண்டு வருந்த நயந்தோர் புன்கண் டீர்க்கும் பயந்தலைப் படாஅப் பண்பினை 2 யெனினே. (எ-து) செறிப்பறிவுறுக்கப்பட்டாள் வரைவின்கட் செல்லாது பின்னும் வரவு வேண்டின் தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி வரைவுகடாயது. (வி) பெரும்பழம் காவல்மறந்த கானவன் - பெரிய பலாப் பழத்தைக் காப்பது மறந்த கான்வாழ் குறவன். கலை கை தொட்ட கமழ்சுளை - முசுக்கலை உண்ட காரணத்தாற் புறந் தோன்றிய சுளைகளால், கைதொடுதல் - உண்டல். அடிசில் கைதொட்டு (சிந். 1818) என்பது காண்க, ஞாங்கர் - அப்பால். கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும் - காவற்குரிமையுடைய பலாமரந்தொறும் பெருவலைகளைக் குரங்கு வராமல் மாட்டும். குன்றநாட - மலைநாடனே. பைஞ்சுனைக் குவளைத் தண்டழையிவள் - வற்றாமை யாற் பசியசுனையின்கட் குவளையின் தண்ணிய தழை யுடையை உடைய இத் தலைவி. ஈண்டு - இல்லிற் செறிப் பாலிருந்து. வருந்தல் தகுமோ - துன்புறத் தகுவாளோ. நயந் தோர் - நின்னை விரும்பியவர். புன்கண் தீர்க்கும் பயன் - துன்பத்தையொழிக்கும் பயனில். தலைப்படாஅப் பண்பினை எனின் - புகாத இயல்பினை என்று நின்னை நான் சொல்லின் என்க. கடியுடை மரந்தொறும் என்பதனை கடியுடை நெடு நகர்க் காவல் கண்ணி (அகம். 232) என்பது போலக் கொள்க. நான் நின்னைப் பண்பினையெனின் என்னை நயந்த இவள் ஈண்டு வருந்தத் தகுமோ என்றவாறு. இவள் தொல்வினை யிங்ஙனமாகவும் இவள் வருந்தத் தகாது என்பது கருத்து. யாம்செய் தொல்வினைக் கெவன்பே துற்றனை (நற். 88) என்பது தோழி கூற்றாதல் காண்க. கடியுடைபடுவலை - குரங்கு வாராமற் கடிதலையுடைய வலை என்பதுமாம். படுவலை - பெருவலை. படுபயனும் பார்த்துச் செயல் (குறள். 674) என்புழிப்போல. குரங்கின் வலையை அகப்படுத்து வருத்துதல் இந்நாட்டு வழக்கன்றாதலால் அகப்படுக்கும் வலையன்றென்க. குரங்கருந்து பண்ணியம் கொடுப்போரும் கரும்பு கருமுகக் கணக்களிப் போரும் (பரிபாடல் 19) என்பதனால் இவ்வுண்மை யுணரலாம். இனி உள்ளுறைகொள்ளினும் கானவன் படுவலை மாட்டியது அந்தீங்கிளவி தந்தை காப்பே (அகம். 288) என்பது தந்தை காப்புணர்த்துவதல்லது தலைவனை அகப்படுப்பதாக நினையப்படாமையுநோக்குக. முடமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம் கல்லுழு குறவர் காதன் மடமகள், கருவிரன் மந்திக்கு வருவிருந்தயரும் (நற். 353) என்பதனையும், ஈண்டைக் கேற்ப நினைக. முசுவுங் குரங்குமிரியத் துனிவு தீர நோக்கி (சிந். 1414) என்பதனையும், அதற்கு நச்சினார்க்கினியர், முசுவுங்குரங்கும் தன்னைக் கண்டு இரிதலின் அவை துனிவு தீரும்படி அருளிப் பார்த்து என்றதனையும் நோக்குக. கயந்தலை மந்தி யுயங்குபசி களை இயர் பார்ப்பின் றந்தை பழச்சுளை தொடினும் (அகம். 288) என்புழிப் போலச் சுனையிற் பலாப் பழம் என்பதாயிற்று. ஈண்டு நயந்த தலைவியின் புன்கண் தீர்க்கும் பயம் தலைப் படாமை - மன்றலிற்புகாமை. பண்பு - இங்கு பல்காற்பயின்று பழகுந்தன்மை எனினுமமையும். தோழி இயற்பழித்தற்குத் தலைவி வருந்திய நிலையில் புறம்வந்து தலைவனைக் கண்டு நெருங்கிச் சொல்லியதென வுணர்க. மற்றும், பலவிற் சேர்ந்த பழமாரினக்கலை, சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇ.... பாயும் (385) என்பதுவாலெனின், அது வெருவச் செய்த அளவே கொள்ளப்படு மென்க. ஈழத்துப்பூதன்றேவனார் 343. நினையாய் வாழி தோழி நனைகவுள் அண்ணல் யானை யணிமுகம் பாய்ந்தென 1 மிகுவலி 1 யிரும்புலிப் பகுவா யேற்றை வெண்கோடு செம்மறுக் கொளீஇ 2 விடர்முகைக் கோடை யொற்றிய கருங்கால் வேங்கை வாடுபூஞ் சினையிற் கிடக்கும் உயர்வரை நாடனொடு பெயரு 3 மாறே. (எ-து) தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது. (வி) தோழி உயர்வரைநாடனொடு பெயருமாறே நினையாய் என்க. இங்கே இற்செறிப்பினிருந்து வருந்தாமல் நாடனுடன் பெயர்ந்து போம் வழியே நினையாய் என்றவாறு. நனைகவுள் அண்ணல் யானை செல்வச்செருக்கும் தலைமையுமுடைய தலைவனாகவும், இரும்புலிப்பகுவாய் ஏற்றை அதன் அணிமுகம்பாய்தல் அலர்வாய் ஊர் தலைவன் எதிரே பழிதூற்றலாகவும், அவ் யானையின் வெண்கோடு செம்மறுக் கொள்வித் தொழிதல் அவன் வலியுடைத் தூய்மைக்கு நாளும் ஓரையுமின்றித் தலைவியை மறைவிற் கொண்டானேல் ஏதம்கொள்வித் தொழிதலாகவும், கோடை ஒற்றுதல் உடன்போதலாகவும், வேங்கைச்சினை வீழ்ந்து வாடுதல் இக் களவொழுக்கம் வீழ்ந்தொழிதலாகவும் உள்ளுறுத்துரைத்து உடன்போக்கு நயப்பக் கூறியதாக நினைக. இனி வாடுபூஞ்சினையின் என்பது உள்ளுறை உவமத்திற்குச் சிறப்புத் தந்து நிற்பதெனினுமமையும். அணிமுகம் - கோட்டால் அணியப்பட்ட முகம். பாய்ந் தென - பாய்ந்ததால். ஏற்றையானை முகம் பாய்ந்தென வெண்கோடு செம்மறுக்கொளீஇச் சினையில் விடர்முகைக் கிடக்கும் என்றியைக்க. விடர்முகை - பிளவுபட்ட மலைமுழை. இருள்முகைச் சிலம்பி னிரைவேட் டெழுந்த, பணைமரு ளெருத்திற் பல்வரி யிரும்போத்து (அகம். 238). இதனால் அது புலிதங்கு முழைஞ்சிலாத லுணரலாம். புண்பட்ட புலி தன், கல்லளைச் சென்று கிடத்தல், வெண்கோட்டி யானை பொருதபுண் கூர்ந்து, பைங்கண் வல்லியம் கல்லளைச் செறிய (அகம். 362) என்பதனான் உணர்க. கோடை - மேல்காற்று. ஒற்றுதல் - மோதுதல். அலரிற் றலைவியைப் போலத் தலைவனையுங் கூறுதல் அலரெழு வாருயிர் நிற்கும் (குறள். 1141) என்ற தலைவன் கூற்றால் உணரலாம். கிடக்கும் உயர்வரை நாடன் கிடத்தற்குக் காரணமாகும் உயர்ந்த மலை நாடன் என்றவாறு. உடன் போக்கின்கண் இடைவழியில் யானையும், புலியும், கோடை எறிதலும் உளவாகச் சொல்லி, அவற்றால் விளையும் துன்பம் நாடனொடு பெயர்தலிற் கடத்தலாகும்; இவ்விற் செறிப்பில் அவனுடன் மருவலில்லாது படுந்துன்பம் கடத்தற் கரிதென்றும், அது தீர உடன்போக்கே நினையத்தகும் என்றும் தலைவிக்குத் தோழி குறித்தவாறாம். இதுவே தோழி கருத்தாதல், புன்கண் யானையொடு புலிவழங் கத்த, நயந்த காதலற் புணர்ந்து சென்றன்றே, நெடுஞ்சுவர் நல்லில் மருண்ட, இடும்பை யுறுவிநின் கடுஞ்சூன் மகளே (ஐங். 386) என உடன் போக்கிய தோழி தாய்க்குரைத்ததனால் அறியலாம். பெயரும் ஆறே நினையாய் என்றாள் அறநெறி அதுவாதலான். அறநெறி இதுவெனத் தெளிந்த பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே (ஐங். 371) என்பதனால் அறியலாம். குறுங்குடி மருதனார் 344. நோற்றோர் 1 மன்ற தோழி தண்ணெனத் தூற்றுந் துவலைப் 2 பனிக்கடுந் திங்கட் புலம்பயி ரருந்த 3 வண்ண லேற்றொடு 4 நிலந்தூங் கணல வீங்குமுலைச் செருத்தல் பால்வார்பு குழவி 5 யருளி நிரையிறந் 6 தூர்வயின் பெயரும் புன்கண் மாலை அரும்பெறற் பொருட்பிணிப் போகிப் பிரிந்துறை காதலர் வரக்காண் போரே. (எ-து) பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் கூறியது. (வி) பொருட்பிணிக் கருதிப் பிரிந்துறை காதலர் பனிக் கடுந்திங்கட் புன்கண் மாலை வரக் காண்போமென நோற்றோர் மன்ற என்றாளாகப் பிரிவு கடிதாக வருத்துதல் பனிக்கடுந் திங்களினாதலான் அத் திங்கள் மாலையைக் கூறினாள். அற்சிரம் வந்தன் றமைந்தன் றிதுவென, எப்பொருள் பெறினும் பிரியன்மினீரெனச், செப்புவல் வாழியோ துணையுடை யீர்க்கே (அகம். 217) எனவும், எழிலி தெற்கேர் பிரங்கு மற்சிரக் காலையும் மரிதே காதலர்ப் பிரிதல் (நற். 5) எனவும் வருவன கொண்டுணர்க. நாடன் நம்மைவிட் டமையுமோ... ... தண்பனி நாளே (317) என வந்தது காண்க. தான் நோற்றிலேன் ஆதலால் வரக்காண்கிலேன் என்பது குறிப்பு. புலம் பயிர் அருந்த - புலத்திற் பயிரை ஆர்ந்த. ஆர்ந்த என்பது அருந்த என விகாரப்பட்டது (தொல்.எச். 7. சேனா.) அண்ணலேற்றொடு - தலைமை பெற்ற விடையோடு. நிலந் தூங்கு அணலஆ - நிலத்திற் றொங்கிய அலைதோற்றாடியை யுடைய பசு. வீங்குமுலைச் செருத்தல் பால் வாய்குழவி அருளி - பாலாற் பருத்த நான்முலைமடி பால்ஒழுகுதற்குக் காரணமாகிய கன்றினுக்கு உள்ளத்து அருள்செய்து. நிரை இறந்து - மற்று உடன்மேயும் பசுநிரையைக் கடந்து ஊர்வயிற் பெயரும் புன்கண் மாலை என்றவாறு. குடும்பப் பற்றால் விலங்கும் மேய்புலத்து வயிறார மேயாது மனைக்கு மீளுதல் குறித்துத் தன் தலைவர்க்கு அப் பற்றின்மை காட்டினாள். அணலான் (புறப். வெண். 1-12). நிலந்தூங் கணல வீங்குமுலைச் செருத்தல், பால்வார் குழவியா நாளிரை யிறந்து என்பதூஉம் பாடம். அணல குழவி ஆ-அணலையுடைய குழவியையுடைய பசு. பொய்தல் மகளையாய் (குறிஞ்சிக்கலி 23) என்பது போலும். நாளிரை இறந்து - பகல்முழுதும் மேய்தற்குரிய இரையினைக் கடந்து என்றவாறு. கன்றை அருளிய ஆவும், ஆவைப் பிரியமாட்டாது ஏறும் மீளுதல் கூறினாள். தலைவர் தனக்கு அருளி மீள்கிலாமை யாற் புன்கண்மை செய்யும் மாலை என்றாள். அரும்பெறற் பொருட்பிணிப் போகி - பெறற்கரிய பொருளையும் பிணித்தற்குச் சென்று வரக் காண்போர் நோற்றோர். பனிக்கடுந் திங்கண் மாலை வரக் காண்போரே மன்ற நோற்றோர் என்றாளாகக்கொள்க. நெட்டிடைச் சென்று தலைவன் வினை முடித்து நன்னிலையில் மீண்டு வருதற்கு அவன் தலைவியின் தவத்தை ஏதுவாக்குதல் உண்டு என்பது, காவியங் கண்ணியொன்றுங் கவலல்யான் உய்ந்த தெல்லாம், நாவியே நாறுமேனி நங்கைநின் றவத்தினென்றான் (சிந். 2099) என்பதனால் உணரலாகும். எழுத்தனான்றந்த வின்ப மின்னுநீ பெறுதி (சிந். 1534) என்பது மது. தண்ணென - உலகம் தட்பமுற. தூற்றும் - துளிகளையுடைய பனியாற் கடிய தைத்திங்கள். பொருட்பிணி - பொருளாகிய பிணிப்புமாம். அண்டர்மகன் குறுவழுதி 345. இழையணிந் தியல்வருங் கொடுஞ்சி 1 நெடுந்தேர் வரைமரு ணெடுமணற் றவிர்த்துநின் றசைஇத் 2 தங்கினி ராயிற் றவறோ 3 தெய்ய 4 தழைதா ழல்கு லிவள்புலம் பகலத் தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி இழுமென வொலிக்கு மாங்கட் பெருநீர் வேலியெஞ் சிறுநல் லூரே. (எ-து) பகல் வந்தொழுகுவானைத் தோழி இரா வா வென்றது. (வி) இழை - பொன்னாற் செய்துபடுத்த விளிம்பு. இயல்வு அருந்தேர் - பிற தேர்களுடன் ஓடுதற்கரிய தேர். கொடிஞ்சி - கையாற்பற்றுதற்குரிய மொட்டுப் போன்ற தேருறுப்பு. மணித் தேர்க்கொடிஞ்சி கையாற் பற்றி (மணிமேகலை 4: 48) தேர் வரை மருள் நெடுமணற் றவிர்த்து நின்றசைஇ - குன்று போன்ற நெடுமணற் புறத்தில் தங்குவித்தீராகி இளைப்பாறி. எஞ்சிறு நல்லூர் - எம் சிறியதேனும் நல்லதாகிய ஊரில். தழைதாழ் அல்குல் இவள் புலம்பகல - தழையுடை தாழ வுடுத்த அல்குலினையுடைய இவள் இரவிலே தனிமை நீங்க. தங்கினிராயின் - தங்கு வீரானால். தவறோ - அது நும்வினைக்குப் பிழையோ என்க. தழைதாழ் அல்குல் இவள் என்பது இவளின்பந்துய்க்கும் இனிய பருவங் குறித்தது. தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி - தாழை நெருங்கிய சுறவுகளாற் கொடிய கழி விளங்கும் அலைகளால். இழுமென ஒலிக்கும் ஆங்கண் - இழுமென்னும் அனுகரண முண்டாக ஆர்க்கும் அவ்வுழி. அந்நீர் வேலி - கடலே காவலாகவுடைய எஞ்சிறுநல்லூர் என்றவாறு. இழுமென ஒலிக்கும் என்பதனால் பகல்வருதல்பற்றி அலர் தொடங்கிற் றென்று குறித்தாளாம். தாழை தைஇய... ஆங்கண் என்பதனால் இரவிற் சேர்தற்குக் குறியிடம் உணர்த்தினாளாம். தாழைதைஇய என்பதனால் மறைவும், கொடுங்கழி என்பதனாற் பிறர் புகாமையும், ஒலிக்கும் என்பதனால் நீவிர் உரையாடினும் அரவங்கேளாமையும் கருதியுரைத்தாளாவள். (பாடம் 346 முதல் 351 மற்றும் 353-ஆம் பாடல்களுக்கு மகாவித்துவான் இரா. இராகவையங்கார் அவர்களால் எழுதப் பெற்ற உரை கிடைக்கவில்லை. அவற்றிற்குமட்டில் டாக்டர் உ.வே. சாமிநாதையர் உரை சேர்க்கப் பெற்றுள்ளது.) வாயிலிளங்கண்ணன் 346. நாகுபிடி நயந்த முளைக்கோட் 1 டிளங்களிறு குன்ற நண்ணிக் குறவ ரார்ப்ப மன்றம் போழு நாடன் றோழி சுனைப்பூங் குவளைத் தொடலை தந்தும் தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியும் காலை வந்து மாலைப் பொழுதில் நல்லக நயந்துதா நுயங்கிச் 2 சொல்லவு 3 மாகா தஃகி யோனே. (எ-து) தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது. (ப-ரை) தோழி, நாகு பிடி நயந்த - இளம்பிடியை விரும்பிய, முளை கோடு இளகளிறு - மூங்கில் முளையைப் போன்ற கொம்பையுடைய இளைய களிறு, குன்றம் நண்ணி - மலை யிடத்தே பொருந்தி, குறவர் ஆர்ப்ப - அங்குள்ள குறவர் முழங்கியதனால், மன்றம் போழும் - ஊரிடத்துள்ள மன்றத்தைப் போழ்ந்து செல்லும், நாடன் - நாட்டையுடைய தலைவன், காலை வந்து - பகலில் வந்து, சுனை பூ குவளை தொடலை தந்தும் - சுனையில் மலர்ந்த குவளைமலர் மாலையை நினக்குத் தந்தும், தினை புனம் மருங்கில் - தினைக் கொல்லையினிடத்தில், படு கிளி ஓப்பியும் - வீழ்கின்ற கிளிகளை நம்மோடு ஒட்டியும், மாலைப் பொழுதில் - பிறகு வந்த மாலைக்காலத்தில், நல் அகம் நயந்து - நல்ல நெஞ்சத்தின் கண்ணே ஒன்றை விரும்பி, உயங்கி - வருந்தி, சொல்ல வும் ஆகாது - அக்கருத்தை வெளிப்படச் சொல்லவும் எழுச்சி பெறாமல், அஃகியோன் - குறைவுற்றான். (முடிபு) தோழி, நாடன் காலைவந்து தந்தும் ஓப்பியும் மாலைப் பொழுதில் நயந்து உயங்கி அஃகியோன். (கருத்து) தலைவன் மாலைப்பொழுதின்கண்ணும் வரும் இரவுக் குறியை நயந்தான்; அதனைக் குறிப்பினால் அறிந்தேன். (வி-ரை) மன்றம் - குறவர் ஊர்களிலுள்ள பொது இடம். பிடியை நயந்த களிறு குன்றம் நண்ணுமென்றது நின்னை நயந்த தலைவன் ஊராருக்கு அஞ்சி மனையகத்தே இரவில் வருவானென்ற குறிப்பை உணர்த்தியது. நல்லகம் என்றலின் அவன் நயந்தது நன்மையையே பயக்கு மென்ற தன் உடம்பாட்டை உணர்த்தினாள்; இத னால் தலைவியைத் தோழி இரவுக்குறி நயப்பித் தாளாயிற்று. (ஒப்பு.) 3. மன்றம் போழ்தல் : குறுந். 301:2. 4. சுனைப்பூங்குவளை : குறுந். 59:2-3, ஒப்பு, 321:2. 5. தலைவன் தலைவியோடு கிள்ளையோப்புதல்: பைந்தாட் செந்தினைக் கொடுங்குரல் வியன்புனம், செந்தார்க் கிள்ளை நம்மொடு கடிந்தோன்”, களிறணந் தெய்தாக் கன்முகை யிதணத்துச், சிறுதினைப் படுகிளி யெம்மோ டோப்பி (அகநா. 242:5-6, 308:9-10). 4-5. சுனைப்பூவினால் தொடலை கட்டுதலும் கிளியோப் புதலும் : குறுந். 142:1-2.8. தலைவன் தன்கருத்தை வெளிப் படையாகச் சொல்லாமை : குறுந். 298:2; கலி. 37:1-5; திருச்சிற். 82,83. காவிரிப்பூம் பட்டினத்துச் சேந்தங்கண்ணன் 347. மல்குசுனை புலர்ந்த 1 நல்கூர் சுரமுதற் குமரி வாகைக் கோலுடை நறுவீ 2 மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும் கான நீளிடைத் தானு நம்மொ டொன்றுமணஞ் செய்தன ளிவளெனின் நன்றே நெஞ்ச நயந்தநின் றுணிவே. (எ-து) பொருள்வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது. (ப-ரை) நெஞ்சம் - நெஞ்சே, மல்கு சுனை புலர்ந்த நல்கூர் சுரமுதல் - முன்பு நீர்மல்கிய சுனை பின்பு வற்றுதலினால் வறுமையுற்ற பாலைநிலத்தில் வளர்ந்த, குமரி வாகை கோல் உடை நறு வீ - இளமையையுடைய வாகைமரத்தின் கொம்பின்கண் உள்ள நறிய மலர், மடம் மா தோகை குடுமியின் தோன்றும் - மடப்பத்தையுடைய கரிய மயிலினது உச்சிக்கொண்டையைப் போலத் தோன்றுகின்ற, கானம் நீள் இடை - நீண்ட காட்டு வழியில், இவள் தானும் நம்மொடு ஒன்றும் மணஞ்செய்தனள் எனின் - இத்தலைவி தானும் நம்மொடு வந்து பொருந்தும் முயக்கத்தைச் செய்வா ளெனின், நயந்த- பொருள் செய்தற்கு விரும்பிய, நின் துணிவு நன்றே - நினது துணிவு நன்மையுடையதேயாகும். (முடிபு) நெஞ்சம், நீளிடையில் இவள்தானும் மணஞ் செய்தனளெனின் நின்துணிவு நன்றே.(கருத்து) தலைவியைப் பிரிந்து செல்லுதல் தக்கதன்று. (வி-ரை) மல்குசுனை - முன்பு நீர்மல்கிய சுனை. குமரி யென்றது இளமை குறித்து நின்றது. எனினென்பது அங்ஙனம் செய்தலரிதென்னும் நினைவிற்று. நன்றே : ஏ தேற்றம். துணிவே : ஏ, அசைநிலை. (ஒப்பு) 1. சுனை புலர்ந்த சுரம் : அறுநீர்ப் பைஞ்சுனை யாமறப் புலர்தலின் (அகநா. 1:12). 2-3. வாகைமலர்க்கு மயிலின் உச்சிச் சூட்டு : வாகை யொண்பூப் புரையு முச்சிய, தோகை (பரி. 14:7-8). 4-5. கானநீளிடை மணஞ் செய்தல் : பயந்தபு கானம், எம்மொடு கழிந்தன ராயிற் கம்மென, வம்புவிரித் தன்ன பொங்கு மணற் கான்யாற்றுப், படுசினை தாழ்ந்த பயிலிண ரெக்கர் மெய்புகு வன்ன கைகவர் முயக்கம், அவரும் பெறுகுவர் மன்னே (அகநா. 11:6-11). 6. நெஞ்சின் துணிவு. சேய்வயிற் போந்த நெஞ் சேயஞ்சத் தக்கதுன் சிக்கனவே (திருச்சிற். 343.) மாவளத்தன் 348. தாமே செல்ப வாயிற் கானத்துப் புலந்தேர் 1 யானைக் கோட்டிடை யொழிந்த சிறுவீ முல்லைக் கொம்பிற் றாஅய் இதழழிந் தூறுங் கண்பனி மதரெழிற் பூணக வனமுலை நனைத்தலும் காணார் கொல்லோ மாணிழை நமரே. (எ-து) செலவுக்குறிப்பறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது. (ப-ரை) மாண் இழை - மாட்சிமைப்பட்ட ஆபரணங் களை அணிந்தோய், நமர் - நம் தலைவர், தாமே செல்ப ஆயின் - நம்மை விட்டுத் தாம் மட்டும் பிரிந்து செல்வாராயின், கானத்து - காட்டினிடத்து, புலம் தேர் யானை கோட்டிடை ஒழிந்த - மேய் புலத்தைத் தேடிச் செல்லும் யானையினது கொம்பினிடத்தே முறிந்து தங்கிய, சிறு வீ முல்லை கொம்பின் - சிறிய பூக்களையுடைய முல்லைக்கொடியின் கொம்பைப்போல, இதழ் அழிந்து ஊறும் கண் பனி - இமையைக் கடந்து ஊறுகின்ற கண்ணீர்த் துளி. தாஅய் - பரவி, மதர் எழில் - மதர்த்த அழகை யுடைய, பூண் அகம் வனம் முலை - அணிகலன்களைத் தன்னிடத்தே உடைய அழகையுடைய நின் நகில்களை, நனைத்தலும் காணார் கொல் - நனைத்தலையும் காணாரோ! (முடிபு) மாணிழை, நமர் தாமே செல்பவாயின், காணார் கொல்லோ! (கருத்து) தலைவர் நின் வருத்தத்தை யறிந்து போதலை யொழிவர். (வி-ரை) தாமே செல்பவாயினென்றது சென்றால் நின்னொடு செல்வாரென்ற நினைவிற்று; தாமே : ஏ பிரிநிலை. புலம் - மேய்புலம் (குறுந். 344:3; மதுரைக். 303). யானை கவளமாகக் கொண்ட பொழுது முல்லைக்கொடி ஒழிந்தது. யானைக் கோட்டிடைக் கொண்ட முல்லை எந்தக் கணத்தில் அதன் வாயுட் புகுமோவென அறியாநிலையி லிருத்தலைப் போல இவள் எப்பொழுது உயிர் நீப்பாளோவென்ற நிலையில் இருப்பாளென்று உவமையை விரித்துக் கொள்க. யானைக் கொம்பினிடத்தே உதிர்ந்து வீழும் சிறிய பூக்களையுடைய முல்லைக் கொம்பைப் போலவென்று பொருள் செய்து, யானைக்கொம்பை நகிலுக்கும் முல்லை மலரைக் கண்ணீர்த் துளிக்கும் உவமையாக்குதலும் ஒன்று. இதழ் - இமை (குறிஞ்சிப். 247). காணார் கொல்லோ வென்றது காண்பாராதலின் செல்லா ரென்ற நினைவிற்று; கொல்லோ: இரங்கற் பொருளில் வந்தது. (ஒப்பு.) 3. சிறுவீ முல்லை : சிறுபாண், 89; நற். 248:1. 4. கண்பனி : குறுந். 86:1, 365:2-6; நற். 197:3; கலி. 3:3, 10:13. 4-5. கண்ணீர் நகிலை நனைத்தல் : குறுந். 325:6; கலி. 77:4 புறநா. 143:13-5; சீவக. 2049. சாத்தன் 349. அடும்பவி 1 ழணிமலர் சிதைஇமீ 2 னருந்தும் தடந்தா ணாரை யிருக்கு மெக்கர்த் தண்ணந் துறைவற் றொடுத்து நந்நலம் கொள்வா மென்றி தோழி கொள்வாம் இடுக்க ணஞ்சி யிரந்தோர் வேண்டிய கொடுத்தவை தாவென் 3 சொல்லினும் 4 இன்னா தோநம் மின்னுயி ரிழப்பே. 5 (எ-து) பரத்தைமாட்டுப் பிரிந்துவந்த தலைமகன் கேட்கும் அண்மையனாகத் தோழிக்குக் கிழத்தி கூறியது. (ப-ரை) தோழி -, அடும்பு அவிழ் அணி மலர் - அடும்பின் கொடியினிடத்தே மலர்ந்த அழகிய மலரை, சிதைஇ - சிதைத்து, மீன் அருந்தும் தட தாள் நாரை - மீனை உண்ணுகின்ற வளைந்த காலை யுடைய நாரை, இருக்கும் எக்கர் - தங்கியிருக்கின்ற மணல் மேட்டையுடைய, தண்ணந் துறைவன் தொடுத்து - தண்ணிய துறையையுடைய தலை வனை வளைத்து, நம் நலம் கொள்வாம் என்றி - நாம் இழந்த பெண்மை நலத்தைப் பெறுவேமென்று கூறுகின்றாய்; கொள்வாம் - அங்ஙனமே கொள்வேம்; ஆயினும், இடுக்கண் அஞ்சி - தாம் உற்ற வறுமைத்துன்பத்துக்கு அஞ்சி, இரந்தோர் வேண்டிய - யாசிப்பவர் விரும்பி இரந்தவற்றை; கொடுத்து அவை தா என் சொல்லினும் - கொடுத்துப் பிறகு அங்ஙனம் கொடுத்த அவற்றைத் தருக என்று சொல்லுதலைக் காட் டிலும், நம் இன் உயிர் இழப்பு - நமது இனிய உயிரை இழத்தல், இன்னாதோ - இன்னாமையை யுடையதோ? அன்று; ஆதலின் அது கருதிலேன். (முடிபு) தோழி, துறைவற்றொடுத்து நலம் கொள்வா மென்றி; கொள்வாம்; கொடுத்தவை தாவென் சொல்லினும் நம் இன்னுயிரிழப்பு இன்னாதோ? (கருத்து) தலைவனை நலந்தாவெனக் கேட்டல் தக்கதன்று. (வி-ரை) மலர்மீது நின்று மீனை அருந்தலின் அம்மலர் சிதைந்தது. தண்ணந்துறைவன்: அம் சாரியை. `நம் நலம் தா என்று தோழி கேட்டல் மரபு; மாணலந் தாவென வகுத்தற் கண்ணும் (தொல்.கற்பு. 9) என்பதனாலும் இந்நூல் 236 ஆம் செய்யுளாலும் இது விளங்கும். இடுக்கண் அஞ்சித் தாவென் சொல்லினுமெனக் கூட்டிப் பொருள் கொண்டு, நமக்கு இடுக்கண் ஒன்று வருவதாயினும் அதற்கு அஞ்சிக் கொடுத்ததை மீட்டும் பெறல் இன்னாதென்ற கருத்தைக் கொள்க. தலைவன் விரும்ப நாம் உடம்பட்டுக் கொடுத்த நலத்தை மீட்டுக் கேட்டலினும், உயிரிழத்தல் நன்றென்றமையின் தலைவனைக் கடியற்க வென்பதை உணர்த்தினாள். (ஒப்பு.) 2. எக்கரில் நாரை இருத்தல் : “இனநாரை... எக்கர்மே லிரைகொள்ளு மிலங்குநீர்த் தண்சேர்ப்ப (கலி. 126 : 3-5.). 1-2. மணல்மேட்டில் அடும்பங்கொடி படர்தல்: குறுந். 248: 4-5. 2-3. எக்கர்த்துறை : குறுந். 53 : 5. 3-4. நலத்தைத் தாவென்றல்: குறுந். 236 2-6, ஒப்பு. 7. இன்னுயிர் : குறுந். 216:7, 334:5. 5-7. கொடுத்ததைத் திரும்பப் பெறாமை : அலைகடல் கடையக்கண்டே னயனைந்து சிரமுங் கண்டேன், மலையிரு சிறகு கண்டேன் வாரிதி நன்னீர் கண்டேன், சிலைமதன் வடிவு கண்டேன் சிவன்சுத்தக் கழுத்துக் கண்டேன், குலவரி யிருகண் கண்டேன் கொடுத்ததை வாங்கக் காணேன் (பழம்பாடல்). ஆலத்தூர்கிழார் 350. அம்ம வாழி தோழி முன்னின்று பனிக்கடங் குரையஞ் 1 செல்லா தீமெனச் சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ 2 ஆற்றய லிருந்த விருந்தோட் டஞ்சிறை 3 நெடுங்காற் கணந்து 4 ளாளறி வுறீஇ ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும் மலையுடைக் கான நீந்தி நிலையாப் 5 பொருட்பிணிப் பிரிந்திசி னோரே. (எ-து) பிரிவுநேர்ந்த (பி-ம் சேர்ந்த) தலைமகள், அவனது நீக்கத்துக் கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீ இயது. (ப-ரை) தோழி -, அம்ம - ஒன்று கூறுவன் கேட்பாயாக: ஆறு அயல் இருந்த இரு தோடு - வழியின் அயலிலே இருந்த பெரிய தொகுதியாகிய, அம் சிறை நெடு கால் கணந்துள் - அழகிய சிறகுகளையும் நெடிய காலையும் உடைய கணந்துட் பறவைகள், ஆள் அறிவுறீஇ - தமக்கு ஊறு விளைக்கும் வேட்டுவ மக்களுண்மையை அறிவுறுத்தி. ஆறு செல் வம்பலர் - வழிப் போகும் பிரயாணிகளது, படை தலைபெயர்க்கும் - சேனைத் திரளை இடத்தினின்று நீங்கச் செய்யும், மலையுடைகானம் நீந்தி - மலையையுடைய காட்டைக் கடந்து நிலையா பொருள் பிணி பிரிந்திசினோர் - நிலையில்லாத பொருள் வேட்கையினால் நம்மைப் பிரிந்து சென்றோர், முன் நின்று - அவர் பிரியுங்காலத்து அவர் முன்னே நின்று, பனிநடும் கரையம் - யாம் பனியினது கடுமையையுடையேம், செல்லாதீம் - ஆதலின் போதலை ஒழிமின், என சொல்லினம் ஆயின் என்று கூறினோ மாயின், செல்வர் கொல் - போவாரோ? (முடிபு) தோழி, முன்னின்று செல்லாதீமெனச் சொல் லினமாயின் பிரிந்திசினோர் செல்வர்கொல்? (கருத்து) நாம் தலைவரை முன்பே தடுத்திருப்பின் செல்லார். (வி-ரை) முன்னின்று - முன்னே நின்று வெளிப்படை யாக. `இனி வரும் பனிக்காலத்தின் கொடுமையை நும் பிரிவின்கண் பொறுத்தலாற்றேம் என்னும் கருத்துப்பற்றி, `பனிக்கடுங் குரையம் என்றாள். குரை : அசைநிலை. செல்லாதீம் - செல்லாதீர். கொல்லோ, ஓ அசைநிலை. ஆறு செல் வம்பலரும் வீரராக இருத்தலின் அவர் கூட்டத்தைப் படையென்றாள் (அகநா. 89:13). தோடு - தொகுதி. கணந்துட் பறவை ஆறலைகள்வர் வருவதை யறிந்து ஒலித்தலின் வம்பலர் பெயர்ந்தனர். மலையுடைக் கானம் - குறிஞ்சி திரிந்த பாலை நிலம். தலைவர் பிரிந்த காலத்தில், நும் பிரிவினால் யாம் வருந்துவேமாதலின் செல்லற்கவெனச் சொன்னோமாயின் அவர் நம் விருப்பத்திற்கு இணங்கிச் செலவு தவிர்ந்து ஈண்டிருப்பர். நாம் அப்பொழுது உடம்பட்டமையின் அவர் சென்றார். ஆதலின் அவர்பாற் குறையில்லை. நாமே அன்று உடம்பட்டு இப்பொழுது வேறுபடுதல் நன்றன்று. நீ ஆற்றியிருத்தல் வேண்டும் என்று தோழி தலைவியை வற்புறுத்தினாள். (ஒப்பு) 1. அம்ம வாழிதோழி : குறுந். 77:1, ஒப்பு. வாழி தோழி : குறுந். 260:4, ஒப்பு. 2. செல்லாதீம் : குறுந். 390:2; நற். 229:3; ஐங். 186:5; அகநா. 300:18. 5. நெடுங்காற் கணந்துள் : நற். 212 : 2. கணந்துட்பறவை : சிலப். 10:117, அடியார். 7. கல்லுடை யதர கான நீந்தி (அகநா. 295:8). 8. பொருட்பிணி : குறுந். 255:7, ஒப்பு. 344:7, ஒப்பு. நிலையாப் பொருட்பிணி : நற். 46:11, 71:1, 126:11, 241:12; கலி. 8:11, 14, 17 ; அகநா. 79:17. அம்மூவன் 351. வளையோ யுவந்திசின் 1 விரைவுறு கொடுந்தாள் 2 அளைவா ழலவன் கூருகிர் வரித்த ஈர்மணன் மலிர்நெறி 3 சிதைய விழுமென உருமிசைப் புணரி யுடைதருந் துறைவர்க் குரிமை 4 செப்பினர் நமரே விரியலர்ப் புன்னை யோங்கிய புலாலஞ் சேரி இன்னகை யாயத் தாரோ 5 டின்னுமற் றோவிவ் வழுங்க லூரே. (எ-து) தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, நமர் அவர்க்கு வரைவு நேரார் கொல்லோ? என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது. (ப-ரை) வளையோய் - வளையை அணிந்தோய், நமர் - நம் சுற்றத்தார், விரைவு உறு கொடு தாள் அளை வாழ் அலவன் - விரைதலையுடைய வளைந்த காலையுடைய வளையின்கண் வாழும் நண்டு, கூர்உகிர் வரித்த - தன் கூரிய நகத்தினால் கீறிய, ஈர் மணல் மலிர்நெறி சிதைய - ஈரமுள்ள மணலையுடைய நீருள்ள வழி சிதையும்படி, இழுமென - இழுமென்னும் ஓசையுண்டாக, உரும்இசை புணரி உடை தரும் துறைவர்க்கு - இடியினது முழக்கத்தையுடைய அலைகள் உடையும் துறையையுடைய தலைவருக்கு, உரிமை செப்பினர் - நீ உரியாயென்றமையை உடம்பட்டுக் கூறினர்; உவந்திசின் - அதனை அறிந்து நான் மகிழ்ந்தேன்; விரி அலர் புன்னை - விரிந்த மலர்களையுடைய புன்னை மரங்கள், ஓங் கிய - உயர்ந்து வளர்ந்த, புலால்சேரி - புலால் நாற்றத்தை யுடைய சேரியிடத்துள்ள, இன் நகை ஆயத்தாரோடு - இனிய நகையையுடைய மகளிர் கூட்டத்தினரோடு. இ அழுங்கல் ஊர் - இந்த ஆரவாரத்தையுடைய ஊர், இன்னும் அற்றோ - இனியும் அலர்கூறும் அத்தன்மையை யுடையதோ? (முடிபு) வளையோய், நமர் துறைவர்க்கு உரிமை செப்பினர்; உவந்திசின்; இவ்வூர் இன்னும் அற்றோ? (கருத்து) தலைவரது வரைவுக்கு நம் தமர் உடம்பட்டனர். (வி-ரை) தலைவியின் ஐயத்தைப் போக்க எண்ணியவள் அவள் உவப்பையடையும் பொருட்டு முதலில், யான் உவந்தேன் என்று கூறினாள்; அதனால் `இவள் கூறப்புகுவது நற்செய்தி என்று தலைவி துணிவாள். அலவன் வரித்த சிறுநெறி சிதைய அலை வீசுமென்பது, ஊரினர் கூறும் அலரெல்லாம் ஒழியத் தலைவன் மணந்து கொள்வானென்ற குறிப்பினது. வரித்தல் - கோலஞ்செய்தல்; இங்கே கோடு கோடாகக் கீறுதலென்றுகொள்க. உடைதரும் - கரையின்மேல் மோதி உடையும். துறைவர்க்கு உரிமையென்றது அவருக்கே தலைவி உரியளென்றபடி; ஓர் ஆடவனுக்கு உரிய பொருள்கள் யாவற்றினும் சிறந்தமை பற்றி மனைவிக்கு `உரிமை என்னும் பெயர் அமைந்தமை இங்கே கருதற்குரியது (பெருங். 1,38:263-7). புலாலஞ்சேரி: அம் சாரியை. புன்னைமலரின் மணமும் புலாலின் நாற்றமும் ஒருங்கு வீசும் சேரியென்றது தலைவன் வரைவுக்கு உடம்பாடு தமரும், வறிதே அலர்கூறும் ஆயமும் உடைய தென்ற நினைவிற்று. (ஒப்பு) 1. கொடுந்தாளலவன் : ஐந். ஐம். 42. 2-3. அலவன் வரித்த நெறி : தண்சேறு களவன் வரிக்கும் (ஐங். 28:2). 4. உருமிசைப் புணரி உடைதருதல் : அகநா. 310:16. 3-4. இழுமென ஒலித்தல் : குறுந். 345:6, ஒப்பு. 6. புன்னையோங்கிய சேரி : குறுந். 320:7, ஒப்பு. புலாலஞ் சேரி : குறுந். 320:1-4; நற். 101:1-5, 338-8; அகநா. 270:2. 7. இன்னகையாயம் : பொருந. 85; சிறுபாண். 220 : ஐங். 397:5; பெருங். 1.36:306, 48:70; பு.வெ. 75. கடியலூர் உருத்திரங் கண்ணனார் 352. நெடுநீ ராம்ப லடைப்புறத் தன்ன கொடுமென் சிறைய கூருகிர்ப் பறவை அகலிலைப் பலவின் சாரன் முன்னிப் பகலுறை முதுமரம் புலம்பப் போகும் 1 சிறுபுன் மாலை யுண்மை அறிவேன் 2 றோழியவர்க் 3 காணா வூங்கே. (எ-து) பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது. (வி) தோழி நெடுநீர் ஆம்ப லடைப்புறத்தன்ன - நெடிய நீரிலுள்ள ஆம்பலின் இலையின் பின்புறத்தை ஒத்த. மென்சிறைய கொடுங் கூருகிர் - மெல்லிய சிறையிடத் தனவாகிய கொடிய கூரிய நகங்களையுடைய. பறவை - வெளவால். வௌவாலின் சிறை மெல்லிதாயிருத்தலாலும், நிறத்தாலும் ஆம்பலிலையின் பின்புறத்தை உவமித்தார். அம் மெல்லிய சிறையிற் கொடிய கூருகிருண்மை இதற்கே சிறந்ததாதலால் அவ்வரிய உறுப்பால் விசேடித்துப் பறவை யென்றொழிந்தார். சிறைய கூருகிர்ப் பறவை இஃதன்றி வேறின்மை தெரிக. இன்சாரல் அகலிலைப் பலவு முன்னி - இனிய மலைச் சாரலில் அகலமான இலைகளையுடைய பலாமரத்தைக் கருதி. பகலுறை முதுமரம் புலம்பப் போகும் - பகற்போதிலுறைந்த பழையமரம் தவிக்கும்படி செல்லும். சிறுபுன் மாலையுண்மை - சிறிய புல்லிய மாலைப் போது இருப்பதை. அவர் காணாவூங்கு - அவரைக் காணாவிடத்து அறிவேன் - தெரிவேன் என்றவாறு. அவரைக் கண்டவிடத்துச் சிறுபுன்மாலையோ தெரியேன், பெரிய இனிய மாலையாகத் தெரிவேன் என்பது கருத்தாய்க் கொள்க. கணவனுடன் உறைவார்க்குக் காலையே பகையாதலும், மாலையினிதாதலும் பிரிந்தார்க்குக் கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் காலை யினிதாதலும், மாலை பகையாதலும், காலைக்குச் செய்த நன்றென்கொல் வென்கொல்யான். மாலைக்குச் செய்த பகை (குறள். 1225) என்புழிப் பரிமேலழகர் உரைத்தன கொண்டுணர்க. சிறுபுன் மாலையுண்மை என்றாரேனும் மாலைசிறு புன்மையதாக வுண்மை என்பதே கருத்தாகக் கொள்க. பகலுறை முதுமரம் புலம்பப் பறவை பலவுமுன்னி இன்சாரற் போகுமாலை என்பதனால் யான் பகலுறையும் இவ்விடம் விட்டு அவன் உள்வழிச் செல்லாமற் காலத்தை நொந் துள்ளேன் என்பது குறிப்பாகக் கொள்க. இதன்கட் பலாமர மாகத் தலைவனைக் கொள்ள வைத்தது கண்டு கொள்க. ஈண்டுக் கூறியது போலவே `பழமீக் கூறும் பலாப்போல ... கச்சியோனே என்று (பெரும். 408-420) கூறுதல் காண்க. ஆண்டுப் பழமீக் கூறும் பலா என்றவர் ஈண்டு அகலிலைப் பலவு என்றார். அவன்கண் இன்பந் துய்க்காவிடத்தும் அவனுடனுறைவு இன்பமுடைய தாகுமென்னுங் கருத்தான். பலவின்சாரல்-பலவால் இனிய சாரல் என்று கொண்டு பலவு பழுத்தினிமை செய்வதைக் கருதினாரென்பதும் பொருந்தும். உறையூர் முதுகூத்தன் 353. ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக் கோடுயர் நெடுவரைக் கவாஅற் பகலே பாடின் னருவி யாடுத லினிதே நிரையிதழ் 1 பொருந்தாக் கண்ணோ டிரவிற் பஞ்சி வெண்டிரிச் செஞ்சுடர் நல்லிற் பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ அன்னை முயங்கத் துயிலின் னாதே. (எ-து) பகற்குறி வந்து ஒழுகும் தலைமகன் வெளிப்பாடஞ்சி இரவுக்குறி நயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின்கண் அன்னையது காவலறிந்து பின்னும் பகற்குறியே நன்று அவ்விரவுக் குறியினென்று பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்துத் தலைமகன் சிறைப்புறத்தானாக வரைவு கடாயது. (ப-ரை) பகல் - பகற்காலத்தில், கோடு உயர் நெடு வரை கவான் - கொடுமுடிகள் உயர்ந்த நீண்ட மலையினது தாழ்வரை யினிடத்தே, பாடு இன் அருவி - ஓசை இனிதாகிய அருவியில், ஆர்கலி வெற்பன் மார்பு புணை ஆக - நிறைந்த முழக்கத்தையுடைய மலையையுடைய தலைவனது மார்பு தெப்பமாக, ஆடுதல் இனிது - நீர்விளையாடல் இனியது; இரவில் - இராக்காலத்தில், பஞ்சிவெள் திரி செ சுடர் நல் இல் - பஞ்சாலாகிய வெள்ளிய திரியையுடைய செவ்விய விளக்கையுடைய நல்ல வீட்டின் கண்ணே, அன்னை - நம் தாய், பின்னு வீழ் சிறு புறம் தழீஇ - பின்னல் தாழ்கின்ற பிடரியைத் தழுவி, முயங்க - அணைப்ப, நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு - வரிசையாகிய இமைகள் ஒன்றோடு ஒன்று பொருந்தாத விழிகளோடு, துயில் - நாம் துயிலுதல், இன்னாது - இன்னாமையையுடையது. (முடிபு) பகலில் அருவியாடுதல் இனிது; இரவில் அன்னை முயங்கத் துயில் இன்னாது. (கருத்து) காப்புமிகுதியால் இரவுக்குறி பெறற்கு அரிது. (வி-ரை) ஆர்கலி - நிறைந்த ஆரவாரங்கள் ; மலையி லுள்ள ஆரவாரங்களைப் பற்றிய செய்திகளை `மலைபடு கடாம் என்னும் நூலிற் காணலாம். பகலே. இனிதே : ஏ அசைநிலை. பெருவரை மிசையது நெடுவெள் ளருவி முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பி (குறுந். 78:1-2) என்று அருவியின் ஒலி சிறப்பிக்கப்படுதலின் அஃது இனியதாயிற்று. அன்னை முயங்கவென்றது அவளது காவன்மிகுதியை உணர்த்தியபடி; இதழ் பொருந்தாது துயிலுத லென்றது துயிலின்மையைக் குறித்தவாறு. இதனால் இரவுக்குறி மறுத்தாளாயிற்று. (ஒப்பு) 1. ஆர்கலி வெற்பன் மார்பு : நற். 104 : 7. 2. வரைக் கவான் : குறுந். 262:6, ஒப்பு. 3. பாடின்னருவி : முழவின்னிசை மூரி முழங்கருவி (சீவக. 1193). (கு-பு) முழவினைப் போன்ற இனிய ஒலியையுடையவெனப் பொருள் கொள்க. 1-3. தலைவன் மார்பு புணையாக நீராடுதல்: வவ்வுவல் லார்புணை யாகிய மார்பினை (பரி. 6:80); கூடியார் புனலாடப் புணையாய மார்பினில் (கலி. 72:15); ஓங்குவரை யிழிதரும் வீங்குபெய னீத்தம் ... பெருமலை நாடன் மார்பு புணை யாக, ஆடுகம் வம்மோ (அகநா. 312: 4-8). தலைவி தலைவனோடு நீராடுதல்: பெருங்க னாடனொடு ... பெருவரையடுக்கத் தருவி யாடி”, அங்க ணறைய வகல்வாய்ப் பைஞ்சுனை ... சார னாடனொ டாடிய நாளே”, “நாடனொடு, சூருடைச் சிலம்பி னருவி யாடி (நற். 259:3-5, 357:7-10), 373:4-5). 5. சுடர் : குறுந். 398:5. 6. பின்னு வீழ் புறம் : குறுந். 246:6,ஒப்பு. 7. அன்னையின் முயக்கத்தைத் தலைவி வெறுத்தல் : குறுந். 84:2. 6-7. சிறுபுறம் முயங்குதல் : அகநா. 19 : 19, 49:5-7. கயத்தூர்கிழானார் 354. நீர்நீ 1 டாடிற் கண்ணுஞ் சிவக்கும் ஆர்ந்தோர் வாயிற் றேனும் புளிக்கும் தணந்தனை 2 யாயினெம் மில்லுய்த்துக் கொடுமோ 3 அந்தண் பொய்கை யெந்தை யெம்மூர்க் கடும்பாம்பு வழங்குந் தெருவில் நடுங்கஞ ரெவ்வங் களைந்த வெம்மே. (எ-து) பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச்சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. (வி) அந்தண் பொய்கை - எந்தை - அழகிய தட்பமுடைய பொய்கை போலப் பலர்க்கும் பயன்படும் எந்தாய். நீடுநீர் ஆடின் கண்ணும் சிவக்கும் - நெடும்போது நீரில் விளையாடின் சிவக்காத கண்களும் சிவப்படையும். நீடு ஆர்ந்தோர் வாயிற் றேனும் புளிக்கும் - நெடும்போதருந்தினோர் வாயிடத்து இனித்த தேனும் புளிப்புச்சுவை செய்யும், என்றது கண் சிவந்தார் ஒளி விளக்கங்காணாது இருள் விழைதலும், தேன் நீடு ஆர்ந்தோர் அதனை வெறுத்துக் கைப்புச்சுவை வேட்டலும் குறிப்பிற்று. மனைக்கு விளக்காய் நிற்கும் தேனாய் எப்போதும் இனிப்பவளுமாகிய தலைவியைத் தணந்து, இருளும் கைப்பதும் போன்ற பரத்தையரை விழைந்தனை என்று கொள்ளவைத்தாளாம். தணந்ததனை யாயின் - நீ பார்க்காமலும், துய்க்காமலும் முழுதும் நீத்தனையாயின். எம்மே எம்மில் உய்த்துக் கொடுமோ - எம்மையே எம் பிறந்தகத்துக்குச் செலுத்திக் கொடுப்பாயாக. எம் ஊரில் அச்சஞ்செய்யும் பாம்பு திரியும் தெருவில் நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே - மெய்ந்நடுங்குதற்குக் காரணமான மன வருத்தத்தை உண்டாக்கிய இடர்ப் பாடு, நின்னாற்களையப்பட்ட எங்களை எம் இல்லுய்த்துக் கொடுமோ என்றவாறு. நடுங்கஞர் - நடுங்குதற்கு ஏதுவாகிய அஞர் என்றார் பரிமேலழகர் (குறள். 1086). எவ்வங் களைந்தவாறு: அப் பாம்பால் உண்டாம் எவ்வம் தனக்காயினும் ஆகுக என்று இவட்காகாதபடி இவளைத் தலைவன் விரைந்தேந்தி நின்று உதவியதாகும். இக்கருத்து நள்ளென்கங்கு னடுங்குதுணை யாயவர், நின்மறந் துறைதல் யாவது (அகம். 129) என்பதனாலும் நன்கறியலாம். அருமைக் காலத்து ஏந்திச் சுமந்து எளிமைக்காலத்து இங்ஙனம் தணந்தனை யாயின் என்க. அந்தண் பொய்கை எந்தை என்பது ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ (176,269) எனத் தலைவன் எந்தை எனப்படுதல் காண்க. தலைவன் பரத்தைமை நோக்கி அவன் மார்பினைப் பலமகளிரும் ஆடும் பொய்கையாக உவமித்தல், பரத்தையர் மனைக்கட் டங்கிப் புணர்ச்சிக் குறியோடு வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியதாக இது போன்றுள்ள ஐங்குறுநூற்றுப்பாட்டில் (84) நறுவீ யைம்பால் மகளி ராடும். தைஇத் தண்கயம் போலப் பலர் படிந்துண்ணும் நின் பரத்தை மார்பே எனவருதலான் அறிக. இதன்கண்நின் பரத்தை மார்பு என்றது நின்பரத்தைமையை யுடையமார்பு என்றவாறு. ஈண்டு பரத்தை என்னுஞ்சொல் அவன் வயிற் பரத்தையும் (தொல். கள. 21) என்புழிப்போல வந்தது. அலமரல் பெருகிய காமத்தின் மிகுதியின்கட் டலைவி கூறிய தென்பர் இளம்பூரணர் (தொல்.கற்பு. 6) ஊருணி யன்னநின் மார்பகம் தோய்ந்த வென்னிளமுலை (கல்லாடம் 80) என்ப. கபிலர் 355. பெயல்கண் 1 மறைத்தலின் விசும்புகா ணலையே 2 நீர்பரந் தொழுகலி னிலங்கா ணலையே எல்லை சேறலி னிருள்பெரிது பட்டன்று பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல் யாங்குவந் தனையோ வோங்கல் வெற்ப வேங்கை கமழுமெஞ் 3 சிறுகுடி யாங்கறிந் தனையோ நோகோ யானே. எ-து இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது. (வி) ஓங்கல்வெற்ப - உயர்மலைத் தலைவ. பெயல்கண் மறைத்தலின் - பெய்யும் மேகம் இடனை மறைத்தலான். விசும்பு காணலை - விசும்பிலுள்ள மீன்களைக் காண் பாயல்லை. நீர் பரந்தொழுகலின் நிலங்காணலை - நீர் எங்கும் பரந்தோடுதலான் கீழ்நிலத்தைக் காண்பாயல்லை. எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று - சூரியன் செல்லுதலான் கீழும் மேலும் இருள் பெரிதாக உண்டாயிற்று. பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல் - நின்னையும் எம்மையுமன்றிப் பலர் துயிலும் பாதிநாளாகிய இரவில். யாங்கு வந்தனையோ - எங்ஙனம் வந்தாயோ. வேங்கை கமழும் எம் சிறுகுடி - ஈண்டுள்ள வேங்கை ஆண்டு மணக்கும் சிறுகுடியுள்ள இடத்தை. யாங்கறிந்தனையோ - எவ்வாறு ஈங்கு வரத் தெரிந் தாயோ. யான் நோகோ - யான் நோவேனோ. இடையீடு மிக்க வழியும் நின் வலியானும், அறிவானும் குறியிடத்தெய்தலான் மகிழ்வேன் என்றவாறு. இதனைப் பெற்ற வழி மலியினும் (தொல்.களவு. 21) என்பதற்கு இளம்பூரணர் எடுத்துக்காட்டுதலான் ஆற்றாமை எண்ணித் தலைவன் வரவில் வியப்பும் மகிழ்வும் படத் தலைவி கூறினாளாத லறியலாம். இதனால் தலைவி நொந்து கூறியதாகத் துறையும் கொள்க. இளம்பூரணர் தலைவி இடையீடின்றித் தலைவனை எதிர்ப்பட்ட ஞான்று புதுவது மலிந்தமையின் அவள் கூறியதென்றலான் உணர்க. நச்சினார்க்கினியர் இதனைத் தலைமகள் ஆற்றின தருமை நினைந்திரங்கலாகக் கூறுவர். அங்ஙனமாயின் யானே நோகு என்று கொண்டு யானே நோவேன் என்றா ளெனக் கொள்க. இவர் கருத்துக்கியையக் கொள்ளின் தலைவி நொந்து கூறியது என்று துறை கூறுக. இதனைத் தோழி கூற்றாக உரைகாரர் யாரும் உடன்பட்டிலர். நம்பியகப் பொருளுரைகாரரும் தலைவியிரங்கியதாகக் கொண்டார் (சூத். 42). இங்ஙனம் ஆகவும் குறுந்தொகையேடு களிலெல்லாம் தலைமகற்குத் தோழி நொந்து கூறியதாகவே வரையப்பட்டிருத்தல் தோழி நொந்து கூறியதெனத் துணியலாம். (தொல்.களவு. 23) பனியிருஞ் சோலை யெமிய மென்னாய், தீங்குசெய் தனையே யீங்குவந்தோயே (அகம். 112) என்பது போல்வதெனக் கொள்க. வேங்கை கமழும் என்றது அம் மரமே குறியிடமாதற் சிறப்பால் வேங்கை கமழ்தல் காரணமாக இடந்தெளியப்படு மேனும் திசையும் நிலனும் தெரியாது மழையிருளில் வந்தது அரிதாதலின் யாங்கு வந்தனையோ என்றாள். வெற்ப எனவும், வேங்கை கமழுமெஞ்சிறுகுடி எனவும் கூறியதனாற் றலைவனும் தலைவியும் குறிஞ்சிநிலத்தவராதல் தெளிக. ஓங்கல்வெற்ப என்புழி ஓங்கல் மூங்கிலுமாம். கயமனார் 356. நிழலான் றவிந்த 1 நீரி லாரிடைக் கழலோன் காப்பக் கடுகுபு போகி அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த வெவ்வெங் 2 கலுழி 3 தவ்வெனக் குடிக்கிய 4 யாங்குவல் லுநள்கொ றானே யேந்திய செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த பாலும் 1 பலவென வுண்ணாள் 2 கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே. (எ-து) மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது. (வி) நிழல் - நிழல் செய்வன. ஆன்று அவிந்த - இல்லை யாய்த் தீந்த. அருவி யான்ற பெருவரை மருங்கின்.... நீர்பயங் காணாது (அகம். 91) என்ப. நீரில் ஆரிடை - நீரில்லாத அரிய நிலத்தில். கழலோன் - தன்னைக் காத்து உடன் கொடுபோகக் கூடிய கழலுடையவன். காப்ப - காவாநிற்க. கடுகுபு போகி - அவனுக்குத் தக விரைந்து சென்று. அறுசுனைமருங்கின் - நீரறும் சுனையின் பக்கத்து. மறுகுபு - நல்லநீர் காணாது மறுகிநின்று. வெந்த எவ்வங் கலுழி - வெயிலால் வெந்த வெறுப்புடைய கலங்கல் நீரை. எவ்வம் - வெறுப்பு. எவ்வந் தீர்ந் திருந்தாள் (சிந். 874) என்பது காண்க. தவ்வெனக் குடிக்கிய - சுருங்கக் குடிக்க. தவ்வென்னுந் தன்மை யிழந்து (குறள். 1144) என்புழிப் பரிமேலழகர் தன் னியல்பிழந்து சுருங்கும் என உரைத்தது காண்க. தலைவன் தன் அன்பு மிகுதியால் இவளை முற்படப் பருக வேண்டுவனேல் அவனாணைப்படி பருகுமிடத்து அவன் பருகற்குப் போதா தென்று நினைந்து சிறிதளவே குடித்துவிடுதல் குறித்ததாம். பிணைமா னினிதுண்ண வேண்டிக் கலை மாத்தன் கள்ளத்தி னூச்சும் சுரம் (ஐந்திணையைம்பது : 38) என்பது நினைக. தானே யாங்கு வல்லுநள் கொல் - ஒருவர் கற்பியாமற் றானே எவ்வாறு வல்லவளாவளோ. எவ்வக் கலுழியையுந் தாகந்தீரக் குடிக்க இயலாமை குறித்தது. புனைசெம் பொற்கலத்து ஏந்திய அம்பொரிக் கலந்த பாலும் என்க. என்றது சென்ற காட்டின் வறுமைக்கு மாறாக வீட்டின் பெருஞ்செல்வ நிலைதோன்ற வைத்தவாறு. பாலும் பலவென வுண்ணாள் - அழகிய பாகுப்பொரியிற் கலந்த பாலையும் பலாச்சுளை போல உண்ணாதவள். இதனால் பலவின்சுளை முன்னே தாய் ஏந்த அதனையும் உண்ணாமை குறித்தாள். உண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் றீஞ்சுளை (அகம். 3) என்பதனான் பலவின் சுளை உயர்வும், பயிர்ப்புறப் பலவி னெதிர்ச்சுளை யளைஇ (அகம். 348) என்பதனால் இது கலந்துண்டலும் அறியலாம். பலவின் குடம்புரை யமிழ்தமும் (பெருங்கதை 1-51) என்பதனாற் பலவின் இனிமையுணரப்படும் பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால், விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்தி (நற். 110) என்பது காண்க. பாலும் பழமும் உண்ணாமை கருதிற்று. முன் உண்டன பல என்ற சொல்லி உண்ணாதாள் என்பதுமாம். இவற்றால் தலைவனுடனுள்ள போது நீரில் நீளிடையில் எவ்வக்கலுழியும் குடிக்க வல்லளாதலும், அவனைப் பிரிந் திருந்த செல்வமனைக்கட் பாலும் பழமும் உண்ணாது பசியுடன் நீள்பவளாதலுங் குறித்தாளாம். உண்ணாமை யாகிய தளிரன்னோள் யாங்கு வல்லுநள் கொல் என்றா ளென்க. கோலமை குறுந்தொடி என்றது உடம்பு நனி சுருங்கியது பிறர்க்குப் புலனாகாமற் றிரட்சியமைந்த காரணத்தையிட்டுச் சிறுதொடி யணிந்தது குறித்தது. தளிரன்னோள் என்றது வெயில் நீரில் லாரிடை வாடுவ ளென்பது கருதியது. செம்பொற் புனைகல முதலியவற்றாற் றந்தையின் பெருவளம் குறித்தாள். அம்பொரி - அழகிய பொரி. பொரிக்கு அழகாவது பாகுடன் கூடி விரும்பப் படுந்தன்மை. கழலோன் காப்ப என்றதனால் அந்நில மாக்களால் வரும் ஏதம் அஞ்சாளாவள் என்பதாம். கபிலர் 357. முனிபட ருழந்த பாடி லுண்கட் பனிகால் போழ்ந்து பணையெழின் நெகிழ்தோள் 1 மெல்லிய வாகலின் மேவரத் திரண்டு நல்ல வென்னுஞ் சொல்லை மன்னிய ஏனலஞ் சிறுதினை 2 காக்குஞ் சேணோன் 3 நெகிழியிற் 4 பெயர்ந்த நெடுநல் யானை மீன்படு 5 சுடரொளி வெரூஉம் வான்றோய் வெற்பன் மணவா 6 வூங்கே. எ-து தோழி, கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது. (வி) வான்றோய் வெற்பன் மணவாவூங்கு - மேகந் தோய்ந்த மலையுடை யான் கலவாத முன்னிலையில். முனிபடருழந்த - கண்ட தம்மையே தாம் வெறுக்கும் துன்பத்தின் வருந்திய, பாடில் உண்கண் - துயிலுதலில்லாத மையுண் கண்களில். பனி கால் போழ்ந்து - நீர்த்துளி கால் போழ்ந்து வாய்க்கால் கீறுதலான். பணை எழில் நெகிழ் தோள் - தம் பெருமையுடைய இயற்கை அழகு நெகிழ்ந்த தோள்கள். மெல்லிய ஆகல் இல் - அங்ஙனம் கண்ணீர்க்கு நெகிழும் மென்மைய ஆதல் இல்லை, மேவரத் திரண்டு - பெண் பாலாகிய யானும் விரும்பத் திரட்சியுற்று. நல்ல என்னுஞ் சொல்லை மன்னிய - நல்லன என்னும் புகழ்ச்சியை நிலையாகப் பெற்றன. வெற்பன் மணவாவூங்கு பணை எழில் நெகிழ்தோள் மெல்லிய ஆதல் இல், நல்லன என்னுஞ் சொல்லை மன்னிய என்றவாறு. இயற்கைப்புணர்ச்சிக்கு முற்பட்டிருந்த தன்மையும், பிற்பட்டிருக்கும் தன்மையும் கூறியது. இவற்றால் மணந்து தணந்தபின்பு தோள்கள் பணையெழில் நெகிழ மெல்லிய ஆயின என்றும், நல்ல என்னுஞ் சொல்லை மன்னிய வல்ல என்றும் தலைவிக்குக் கூறுமுகத்தாற் சிறைப்புறத்துக் கேட்கும் அண்மையனாய தலைவனைத் தோழி வரைவு கடாயவாறாம். பணை - பெருமை. பணை நீங்கிப் பைந்தொடி சோரும் (குறள். 1234) என்புழிக் காண்க. வேயென விறல்வனப் பெய்தியதோளும் (226) என்பது பற்றிப் பணை எழில் மூங்கிலின் அழகு என்பதுமாம். இது சிறுவீ ஞாழற் றுறையுமா றினிதே, பெரும் புலம்புற்ற நெஞ்சமொடு பலநினைந் தியானு மினையேன் ஆயின்... உரவுநீர்ச் சேர்ப்ப னொடு மணவா வூங்கே (நற். 31) என்பது போலும் ஈண்டு மணவாவூங்கு ஆயின் துறையுமினிது, யானும் இனையேன் (வருந்தேன்) என்ற பொருள் கொள்க. சேர்ப்பனொடு நகாவூங்கு கண்ணுந் தோளு நுதலு நல்ல (226) என்னும் பொருளில் வந்ததும் இது. ஏனல் - தினைக்குப் பொதுப்பெயர். அதன் வகை சிறுதினை பெருந்தினை என்க. சிறுகாலத்து விளைவதும், பெருங்காலத்து விளைவதும் ஆகும். ஏனற் பெருந்தினை (பெருங்கதை) என்பது காண்க. தினைகாக்கும் சேணோன் - தினையைக் காத்திருக்கும் மரத்தினுயர்ந்த பரணிலுள்ளவன்; நெகிழியிற் பெயர்ந்த - கொள்ளியினால் மீண்ட; நெடுநல் யானை - நெடியதாயும் அஞ்சுவதஞ்சி மீண்டதனாலுங் கூறினாள். மீன்படுசுடர் ஒளி வெரூஉம் - இருள் கெடவீழும் வான் மீனின் ஒளிக்கு அஞ்சும் வான்றோய் வெற்பன் என்க. தந்தைக்கு அஞ்சிய தலைவன் தனக்கு உதவுவாராய் சான்றோர்க்கும் அஞ்சுபவன் ஆகும் என்னுங் குறிப்பிற்று. சான்றோரை முன்னிட்டு வரைவோடு வாராமை கருதிற்று. தந்தையை யஞ்சுதல். எந்தை யறித லஞ்சிக்கொல், அதுவே மன்ற வாராமையே (ஐங். 261) என்பதனான் அறிக. கொற்றனார் 358. வீங்கிழை நெகிழ விம்ம லீங்கே 1 எறிகட் பேதுற லாய்கோ 2 டிட்டுச் சுவர்வாய்ப் 3 பற்றுநின் படர்சே ணீங்க 4 வருவே மென்ற பருவ முதுக்காண் தனியோ ரிரங்கும் பனிகூர் மாலைப் பல்லான் கோவலர் 5 கண்ணிச் சொல்லுப 6 வன்ன முல்லைமென் 7 முகையே. (எ-து) தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. (வி) வீங்கிழை நெகிழ - இறுகிய அணிகலன்கள் நெகிழ்ந்து உழல. வீங்குதல் - இறுகுதல், வீங்குபிணி நோன்கயிறு (மதுரைக்காஞ்சி : 376) ஈங்கு விம்மல் - இங்கு அழாதேகொள். ஏ எறிக்கட் பேதுறல் - அம்பு எறிகின்ற கண்களிடத்து மயக்கத்தை உறாமலிரு. ஈங்கு எறிகண் எனப் பிரிக்க. ஏஎஒத்து எல்லாருமறிய நோய்செய்தனவே ... குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே (72) என்றது கண்டு கொள்க. ஆய்கோடு இட்டு- நாளை ஆயும் கோடுகளைச் சுவரிலிட்டு. வாய்பற்றும் நின்படர் - வாய்களில் உண்டாகு நிமித்தச் சொற்களைக் கொள்ளுதலால் உண்டாகும் நின் துன்பம். சேண் நீங்க - சேய்மையில் ஒழிய. வருவேம் என்ற பருவம் - யாம் வருதும் என்று தலைவர் தெளித்த கார்ப் பருவத்தை. தனியோர் - காதலரைப் பிரிந்த தனிமையோர். இரங்கு பனிகூர் மாலை - இப்பொழுது நான் இரங்குதற்குக் காரணமான அவருள்ள போது நினக்கு நடுக்கமிக்க மாலைப்போதில். குளிர்ச்சி மிக்க மாலை என்னும் செம் பொருள் இக்குறிப்புணரநின்ற நயம், பனியரும்பிப் பைதல் கொள் மாலை (குறள். 1223) என்பதற்குப் பரிமேலழ கருரைத்தது கொண்டுணர்க. பல்லான் கோவலர் கண்ணிக்கண் முல்லையின் மெல்லிய முகைகள் சொல்லுவன ஒத்தன. உதுக்காண் - அவற்றை உவ்விடத்துப் பார். பருவம் நேரிற்காணப்படாது முகை கண்டு அனுமானித்து உணரநிற்பது தெரியக் கோவலர் காட்டிற் சூடிய கண்ணிக்கண் முகையைச் சுட்டிக்காண் என்றாளென்க. கோவலர் கண்ணி முல்லை மென்முகை வருவே மென்ற பருவம் சொல்லுப அன்ன உதுக்காண் என்றாளென்க. வாய் என்றது வாய்ப் புட்களை, பிறர்வாய்க் கேட்கும் நிமித்தங்கள், காக்கை வாயும், பல்லி வாயும் ஆம். காக்கை வாயினுங் கட்டுரை கொள்வரால் (பெரியாழ்வார் வாக்குத்தூய்மை - 1:4) கணிவாய்ப் பல்லி (அகம். 151) என வருதல் காண்க. கட்பேது கூறியது கோடிட்டு நாளதிகமாதல் கண்டு மயங்குதல்பற்றி. யாம் கோடிட்டு என்பது பாடமாயின் யாம் வருவேம் என்றியைக்க. கார்முல்லை என்பதனால் முல்லை மென்முகை பருவத்திற்கு அடையாளமாயிற்று. பேயனார் 359. கண்டிசின் பாண பண்புடைத் தம்ம மாலை விரிந்த பசுவெண் ணிலவிற் குறுங்காற் கட்டி 1 னறும்பூஞ் சேக்கைப் பள்ளி யானையி னுயிர்த்தன 2 னசையிற் 3 புதல்வற் றழீஇயினன் 4 விறலவன் புதல்வன் றாயவன் 5 புறங்கவைஇ யினளே. 6 எ-து பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது தானே புக்குக் கூடியது கண்டு தோழி பாணற்குச் சொல்லியது. (வி) பாண கண்டிசின் - பாண காண். பண்புடைத்து அம்ம - இல்வாழ்க்கை அன்புடைமையாகிய பண்புடையது கேள். மாலைப்போதிற் பரந்த பசிய வெள்ளிய நிலாவிற் குறிய கால்களை உடைய கட்டிற்கண் மணங்கமழ் மலர்ப்படுக்கையில் அன்பாற் புதல்வனை அணைத்தன னாகிய விறலுடைய தலைவன் கிடை கொண்ட களிற்றைப் போல, உயிர்த்தனன் - பெருமூச்சு விட்டனன் புதல்வன் தாயாகிய தலைவி புதல்வனைத் தழுவிக் கிடக்குமவன் புறத்தைக் கையத்து வளைத்துக்கொண்டாள் என்றவாறு. நறும்பூஞ் சேக்கைக்கண் நகையிற் புதல்வற் புல்லினனாகிய விறலவன் பள்ளியானையி னுயிர்த்தனன். புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினள் என்க. புதல்வனைத் தன் பக்கலிட்டுக் கட்டிற்பூஞ்சேக்கையிற் றலைவி கிடந்தாளாக, விறலவன் புதல்வற்றழுவியுயிர்த் தவனை அப்புதல்வனை அணைத்தபடியே கையாற்புறங் கவையினளென்று கொள்க. இருவரன்பின் விளைவாகிய புதல்வனை நடுவண்இட்டுத் தலைவி தலைவனுடைய புறங்கவைஇய பண்பையே இஃதுணர்த்துவதென்பது, இப்பேயனார், மறியிடைப்படுத்த மான்பிணை போலப், புதல்வனடுவணனாக நன்று. மினிது மன்றவர் கிடைக்கை (ஐங். 401) எனப் பாடிக் காட்டுதலான் அறியலாம். இவர் புதல்வற் கவைஇயினன் றந்தை, மென்மொழிப் புதல்வன் றாயோ இருவருங் கவைஇயினள் (ஐங். 409) என்புழியும் இவ்வாறே தலைவனும் புதல்வனும் தலைவியும் கிடைகொண்டவாறு புலனாதல் காண்க. இனித் தலைவி அவன்புறந் தழுவினள் என்னாது கவைஇயினள் என்றதுங் காண்க. தலைவன் பரத்தையிற் பிரிந்தானாகப் புதல்வன் தாயாகிய தலைவி புதல்வன் மெய்தீண்டியே உறங்குதல் இயல்பென்பது, அகலநீ துறத்தலி னழுதோவா வுண்கணெம் புதல்வனை மெய்தீண்டப் பொருந்துத லியைபவால் (கலி. 70) என்பதனான் அறிக. ஈண்டு அன்புடைமையே பண்பு என்பது அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை, பண்பும் பயனு மது (குறள். 45) என்புழிக் காண்க. இது கற்பும் காமமும் முதலாகச் சொல்லப்பட்ட கிழவோன் மாண்புகளுட் காமம்பற்றி வாயில் கூறியதெனக் கொள்வர் இளம்பூரணர் (தொல்.கற்பி. 11). இதனாலவர் புதல்வன்றாய் நசையின் அவன் புறங் கவைஇயினள் எனக் கொண்டார் போலும். கவைஇயினள் கண்டிசின் பாண என்க. கவைஇயினள் என்பது பாணனைக் கேட்பித்தவாறாம். மெய்ப்பாட்டினுள் உயிர்ப்பு ஒன்றால் அது வேண்டிய பொருளைப் பெறாத வழிக் கையற வெய்திய கருத்தை யுணர்த்தலான் அக் குறிப்பறிந்து தலைவியுங் காமமுடை யளாய்க் கவைஇயினாள் என்றவாறு. மதுரை ஈழத்துப்பூதன் தேவனார் 360. வெறியென வுணர்ந்த வேல னோய்மருந் தறியா னாகுத லன்னை காணிய 1 அரும்பட ரெவ்வ மின்றுநா முழப்பினும் வாரற்க தில்ல 2 தோழி சாரற் பிடிக்கை யன்ன பெருங்குர லேனல் உண்கிளி 3 கடியுங் கொடிச்சிகைக் குளிரே சிலம்பிற் சிலம்புஞ் சோலை இலங்குமலை நாட னிரவி னானே. (எ-து) தலைமகன் சிறைப்புறத்தானாக வெறியஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது. (வி) வெறியென வுணர்ந்த வேலன் - நம் நோய்தீர் மருந்து வெறியாடலென்று அறிந்த வேலன். நோய் மருந்து அறியான் - நோயறியான் அதனால் மருந்தறியான் வேலன். எம்மிறை யணங்கலின் வந்தன் றிந்நோய், தணிமருந் தறிவ னென்னு மாயின் (அகம். 388) என்பதனா லவள் நோய் வேறாகவும் மருந்து வேறாகவும் கூறுதலாற் காணலாம். ஆகுதல் - அன்னை காணிய நம் நோய்க்கு மருந்தாகுதலை உள்ளபடி அன்னை கண்டு கொள்ளுமாறு ஆகுதல். ஆவதொன்றுங் குறியா மறியுயிர் கொள்ள வென்றோ (தஞ்சைவாணன் கோவை 298) என்புழிப் போல வந்தது காண்க. அரும்படரெவ்வம் நாம் உழப்பினும் மலைநாடன் இன்று இரவின் வாரற்க. நாடன் வந்தால் நம் நோய் தணியும். தணிந்தால் அன்னை வெறியாடுதலால் தணிந்ததென்று நோயினையும் மருந்தினையும் வேறாக உணர்வள். தலைவனாலன்றி இங்ஙனம் வெறியாடலால் நோய்தீர்ந்தா ளென்பதும் என் கற்பிற்கு ஒவ்வாதாகும். ஆடிய பின்னும் நோய் தீராமையால் அலராயினும் அது நன்மை பயக்கும். அன்னை ஆகுதல் காண்டற்கு ஏதுவாகும் என்று கருதினாள். இவற்றால் இவ் வெறியாடல் அரும்படர் எவ்வம் உழப்பதே அன்னை உண்மைகாண்டற்கு வாயில் எனக் கூறினாள். இவ்வுண்மை, ஆடிய பின்னும் வாடியமேனி, பண்டையிற் சிறவா தாயி னிம்மறை, யலரா காமையோ வரிதே யஃதான் றறிவ ருறுவிய வல்லல்கண் டருளி, வெறிகமழ் நெடுவேள், நல்குவ னெனினே, செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக், கான்கெழு நாடன் கேட்பின், யானுயிர் வாழ்த லதனினு மரிதே (அகம். 98) என்பதனா னறிக. இரவின் வாரற்க என்றதனால் அவனும் ஆற்றின் வருத்தம் உழத்தல் இல்லையாகுமென்று நினைத்தாள் என்பதுமாம். பிடிக்கை யன்ன சாரல் பெருங்குரல் ஏனல் உண்கிளி - பிடியின் துதிக்கை ஒத்த சாரலினுண்டாகிய பெரியகதிர்க் கொத்துக்களை யுடைய தினையை உண்ணு கின்ற கிளிகளை. கடியும் கொடிச் சிகைக் குளிர் - ஓட்டும் குறமகளின் கையாற்புடைக்கும் குளிர் என்னுங் கருவி. சிலம்பின் - ஒலிக்கப்பட்டால். சிலம்பும் - எங்கும் எதிர் ஒலி செய்யும். இலங்குஞ்சோலைமலை நாடன் வாரற்க என்க என்றது, அயல்வரைவோடு வருதலை இவளைப் பற்றி எழுந்த அலரே கடிந்து பரந்தது என்னுங் குறிப்பிற்று. தில் - இஃது என் விருப்பம் என்றவாறு. ஆகுவதறிவன் என்று அன்னை தந்த வேலன் ஆகுவதறியானாதலால், ஆகுதல் அன்னை அறிய வேண்டி, வாரற்க என்றாள் என்க. ஆகுவதறிவன் ... கன்னன் தூக்கி முருகென மொழியும் (ஐங். 247) என்பதனான் இவ் வழக்குணர்க. வெறியாட்டில் இவள்நோய் தணிதல் தலைவி கற்புடைமைக்கு ஆகாதென்பது, வேலன் கழங்கினா னறிகுவ தென்றால், நன்றாலம்ம நின்றவிவ ணலனே (ஐங். 248) என்பதனையும் நின்ற இவள் நலன் என்றது இவள் கற்புடைமையை எனப் பழையவுரைகாரர் உரைத்ததனையும் நோக்கி உணர்க. கபிலர் 361. அம்மவாழி தோழி யன்னைக் குயர்நிலை யுலகமுஞ் சிறிதா லவர்மலை 1 மாலைப் பெய்த மணங்கம ழுந்தியொடு 2 காலை வந்த 3 காந்தண் முழுமுதல் 4 மெல்லிலை 5 குழைய முயங்கலும் இல்லுய்த்து நடுதலுங் 6 கடியா தோளே. 7 (எ-து) வரைவு மலிந்தவழித் தோழி நன்காற்றினாய் என்றாட்குக் கிழத்தி சொல்லியது. (வி) அம்ம - இது கேட்க. அன்னைக்கு - நந்தாய்க்கு. உயர்நிலை உலகமும் - எல்லாப் பேற்றினும் உயர்ந்த நிலைத்த உலகான வீடும். சிறிது - சிறிய கைம்மாறாகும். நிலையா உலகுகளின் வேறுதெரிய நிலையுலகம் என்றார். உம்மை - உயர்வு சிறப்பு. வீட்டினை வானோர்க் குயர்ந்த வுலகம் (குறள். 346) என வீட்டுலகத்தை வள்ளுவனாரும் கூறுதல் காண்க. இனி, அவண துயர்நிலை யுலகத் துறையு ளின்மை (புறம். 50) என்புழிப்போல உயர்ந்த நிலைமை யையுடைய உலகமும் என்றுரைப்பதுமாம். மாலையில் அவர் மலையிற்பெய்தலான் மணங்கமழ்கின்ற யாற்றின் விடியற் காலையில் வந்த முழுக் கிழங்குடன் கூடிய காந்தளை மெல்லிய இலைகள் குழையும்படி மார்பால் அணைத் தலையும் மனையின்கட்கொண்டுவந்து நட்டு வளர்த்தலையும் விலக்காதாள் ஆதலான் என்றவாறு. மணங்கமழ்தற்கு மணமுள்ளவை நிறைந்த மாலைப் பெய்தல் ஏது - உந்தியொடு - உந்தியால், உந்திநீரின் இரவின் வருதலான் வாடாமை தெரியக் காலை வந்த என்றாள். தன் கணவன் மலைக்குரிய தாதலின் அதனைப் போற்றி வளர்த் தற்குத்தக முழு முதலோடு வந்தது குறித்தாள். தன் ஆதரந் தோன்ற முயங்கினாள். அன்பாலிறுக முயங்கலாயது தன்னடைவே குழைந்தது கண்டு அதுகெடாமற் பின்னு நல்ல நிலை எய்த இல்லுய்த்து நடுதல் செய்தனள் என்க. இக் காந்தளின்கண் இத்துணை அன்பு செய்தது தலைவன் முதல்முதல் இப்பூத்தந்து கூடிய சிறப்புப்பற்றி யென நினைக்கத்தகும். இதனைப் பூத்தரு புணர்ச்சி என்பர். வள்ளிதழ் நீல நோக்கி யுள்ளகை பழுத கண்ண ளாகி (366). இவ்வாறே தலைவன் தந்த பூநினைந்து நோக்குதல் காண்க. இல்லுய்த்து நடுதலை துடவையின்கண் இல்லாது இல்லின் பக்கத்து உய்த்து நடுதலாகக் கொள்க. இது வரைவு மலிந்த வழி நிகழ்ந்தது என்பதனாற்றான் தலைவன் மலைக்காந்தள் எனத் தெரிந்து இவை செய்தற்குடன் பட்டனளென்க. வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார் 362. முருகயர்ந்து வந்த முதுவாய் வேல 1 சினவ லோம்புமதி வினவுவ 2 துடையேன் பல்வே றுருவிற் 3 சில்லவிழ் மடையொடு 4 சிறுமறி கொன்றிவ ணறுநுத னீவி வணங்கினை கொடுத்தி யாயி னணங்கிய விண்டோய் மாமலைச் சிலம்பன் 5 ஒண்டா 6 ரகல முண்ணுமோ பலியே. (எ-து) வெறிவிலக்கித் தோழி அறத்தொடு நின்றது. (வி) வந்த முதுவாய் வேல - இது கடவேன் என்று ஈங்குவந்த பிறரறிதலைச் சொல்லும் வாயினையுடைய வேலனே, முதுவாய் ஈண்டு இப்பொருட்டாதல் இரை நசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி (அகம். 387) அன்னை தந்த முதுவாய் வேலன் (அகம். 388) என்பவற்றானறிக. வினவுவதுடையேன் - நின்னைக் கேட்டறிவ தொன்று உடை யேன். சிவனவோம்புமதி - அதற்கு வெகுளலைப் பரிகரி. இதனால் தன் வினா வெகுளற்குரியது என்று குறிப் பித்தாளாம். பல்வேறு உருவின் - பலவாக வேறுபட்ட பண்ணிய உருப்படிகளையுடைய. காம ருவிற் றாம்வேண்டு பண்ணியம் (மதுரைக் காஞ்சி : 22) என்ப. சில் அவிழ் மடையொடு - சிலவாகிய தினைச் சோற்றுப் பலியுடன். சிறுமறி கொன்று - ஆட்டின் சிறிய குட்டியைக் கொலை செய்து. இவள் நறுநுதல் நீவி - இவளுடைய இயல்பான நன்மணமுடைய நெற்றியைத் தன் குருதியாற்றைவந்து, முருகு அயர்ந்து வணங்கினை ஆயின் - முருகனை வேட்டு வழிபட்டனையாயின், விண்டோய் மாமலைச் சிலம்பன் - வானந் தோய்ந்த பெரியமலையிற் பக்கமலையிலுள்ள தலைவனுடைய, அணங்கிய ஒண்டார் அகலமும் - இவளை வருத்திய ஒள்ளிய தாரணிந்த மார்பமும். பலியே உண்ணுமோ - அப் பலியினையே அருந்துமோ என்றவாறு. முருகற்குந் தலைவற்கும் ஒப்ப மாமலைச் சிலம்பன் என்றாள். இதனால் இவட்குத் தக்கது செய்வதறியாய் தகாதது செய்தி என்று குறிப்பித்தாளாம். அகலமுமுண்ணுமோ என்றது இவள் நறுநுதல் நீவிய சிறப்பால் ஒருகால் உண்ணலுமாமோ என்ற இகழ்ச்சிக்குறிப்புப்படக் கூறியவாறாம். இதனானே சினவ லோம்புமதி என முற்படக் கூறினாளாவள். சிலம்பன் நீவு நறுநுதலை நீ நீவுதலான் ஒருகால் உண்ணாமையுமாம் என்பதனால் ஐயத்தின் வினவினள். இவள் நுதல் நீவுதல், சுடர்நுதல் நீவி நீடு நினைந் தென்முக நோக்கி நக்கனன் (குறிஞ்சிப்பாட்டு 182 : 3) என்பதனான் அறிக. சிலம்பு பெருமலையின் ஒருபுறத்தைக் குறித்தல், ஏழி னெடுவரைப் பாழிச் சிலம்பின் (அகம். 152) என்பதனான் அறிக. இவ்வாறே மலை கெழு வெற்பன் (374) என இந் நூலுள்ளும் வருதல் காண்க. மல்லற் றம்மவிம் மலைகெழு வெற்பு (நற். 93) என்பதும் அது. பல்வேறுரு என்றார் பல்பிரப் பிரீஇ முருகாறு : 234) என்பது பற்றி. இவளை அணங்காத முருகன் வாயுண்ணுமோ, இவளை அணங்கிய சிலம்பன் அகலமுண்ணுமோ என்பதுபடக் கூறினாள் என்பதும் ஒன்று. இதனைப் பேராசிரியர் தலைவி கூற்றாகவே கொண் டார் (தொல்.செய். 197) அங்ஙனமாயின் இவண் நறுநுதனீவி என்புழி இவள் என்று தலைவி தன்னையே சுட்டிக்காட்டிக் கூறினாளென்றேனும், இவண் நறுநுதல் நீவி என்றேனும் கொண்டுரைக்க. `எளித்த லேத்தலென்னும் (தொல்.பொருள். 13) இடத்தில் நச்சினார்க்கினியர் தலைவியும் தோழியும் பிறருடனேயும் உசாவுதல் ஆகக் கொண்டார். செல்லூர்க்கொற்றனார் 363. கண்ணி மருப்பி னண்ண னல்வேறு செங்கோற் 1 பதவின் 2 வார்குரல் கறிக்கும் மடக்கண் வரையா 3 நோக்கி வெய்துற்றுப் 4 புல்லரை யுகாஅய் வறுநிழல் 5 வதியும் இன்னா வருஞ்சுர மிறத்தல் இனிதோ பெரும வின்றுணைப் 6 பிரிந்தே. (எ-து) பிரிவுணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது. (வி) கண்ணிமருப்பின் - தலையிற் சூடும் வட்டக் கண்ணி போலத் தம்முள் வளைந்துகூடிய கொம்பினையுடைய. அண்ணல் நல் ஏறு - தன்னினத்துத் தலைமையுள்ள நல்ல வரைமாட்டிலாண். கண்ணிமருப்பைக் கூடுகொம்பு என்பர் இக்காலத்தார். பதவின் செங்கோல் வார் குரல் கறிக்கும் - அறுகம்புல்லின் செவ்விய தண்டில் வளர்ந்த கூதிர்க் கொத்தைத் தின்னும் மடக்கண் வரையா நோக்கி - தனக்கு மடமை செய்யுங் கண்களையுடைய வரைப் பசுவைப் பார்த்து. வெய்துற்று - தான் பசி வெம்மையைப் பொருந்தி. புல்லரை உகாஅய் வறுநிழல் வதியும் - தேய்ந்த அடியையுடைய உகாய் மரத்தின் இலையில்லாத வறிய நிழலிலே தங்கும், இன்னா அருஞ்சுரம் - இன்னாமை உடைய கடத்தற்கரிய பாலை வழியை. இன்துணைப் பிரிந்து இறத்தல் - இனிய துணைவியை நீத்துக் கடத்தல். பெரும இனிதோ - பெருமானே நினக்கு இனியதாகுமோ என்றவாறு. ஆண்டு வதியும் ஏறு செய்வது கண்டு நினக்குத் துன்ப மாகாதோ என்பது குறிப்பு. வரிநிழல் என்பது பாடமாயின் இலையில்லாத கொம்புகளாய் வரிவரியாயுள்ள நிழல் என்க. பதவின் செங்கோற்குரல் ஆவிற்குப் போதாதென்று கருதித் தானுண்ணாது வெய்துற்று வதிதல் கூறி அவ்விடத்து விலங்கும் துணையின்கட் காட்டும் அன்பு தெளிவித்தாள் வறுநிழல் என்பதனால் கோடையாத லுணரலாம். இதனால் அறுகிற் செங்கோற்குரல் கூறினாள். தலையில் வட்டமாகப் புனைந்தது போறலிற் கண்ணி மருப்பென்றாள். கோட்டங் கண்ணியும் (புறம். 275) என்பதனாற் கண்ணி வளைந்து வட்டமாதலுணர்க. ஔவையார் 364. அரிற்பவர்ப் 1 பிரம்பின் வரிப்புற நீர்நாய் வாளை நாளிரை பெறூஉ மூரன் பொற்கோ லவிர்தொடித் 2 தற்கெழு தகுவி எற்புறங் கூறுமென்ப தெற்றென 3 வணங்கிறைப் பணைத்தோ ளெல்வளை மகளிர் துணங்கை நாளும் வந்தன 4 வவ்வரைக் 5 கண்பொர 6 மற்றதன் கண்வர 7 மண்கொளற் 8 கிவரும் 9 மள்ளர் போரே. 10 (எ-து) வேறொருபரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது. (வி) ஊரன் பொற்கோல் அவிர்தொடித் தற்கெழு தகுவி - ஊரனிட்ட திரட்சியொடு விளங்கும் பொற்றொடியர் என்னைத் தன்னொடு பொருந்த வுரைக்கும் தக்க பரத்தை. தகுவி - என்பது தகாதாள் என இழிவு குறித்தது. தற்கெழு தகுவி என்பது தன்னொடு நிகரா வென்னோடு நிகரி (ஐங். 67) என்புழிப் போல என்னொடு பொருந்தாத தன்னை என்னொடு பொருத்துதல் கருதிற்று. அவிர்தொடித் தகுவி என்பது அவனிட்டது பூண்டு அவனது புறத்தொழுக்கம் அயலார்க்குப் புலனாக விளக்கு தலல்லது வேறு அறனொழுகாதாள் என்பதுபட வந்தது. தான் காமக்கிழத்தியாய்த் தலைவற்கு இல்லற நிகழ்த்தும் இற்பரத்தையாத லறியக் கூறினாள் (தொல்.கற்பு. 10 நச்.). என்புறங்கூறு மென்ப. என்னைப் பழித்து மறைவிற் றூற்று மென்பர். தெற்றென - தெளிய. மகளிர் துணங்கை நாளும் வந்தன - பரத்தையர் ஆடும் துணங்கைக் கூத்திற்குரிய விழா நாட்களும் இவ்வமயம் வந்தனவாம். விரைவு பற்றி வந்தன என்றாள். அவ்வரை - அவ்வெல்லையில் என்றது அத்துணங்கை நிகழும் பொழுதில். அதன் கண்வர - யான் அவ்விடத்தில் வந்தால். கண்பொர - என் கண்பொருத அளவில். மள்ளர் போர் - வீரர் வலி காணும் போரவை. மண்கொளற்கு - களரிகொள்ளு தற்கு. இவரும் - தலைவனைக் களரியிற் காணாமையால் பரந்து பார்க்கும் என்றவாறு. இவர்தல் - பரந்து பார்த்தல். இவர்தல் - பரந்து பாராதே கொள் (மருதக்கலி. 30) என்றார் நச்சினார்க்கினியர். யான் துணங்கையதின்கண் வந்தால் ஊரன் என்கண் பொருத அளவில் அதனின்று தன்னை மீட்கவலியில்லாது ஆண்டே தாழ்த்தலால், அவன் தலைமையினிகழற்குரிய மள்ளர் போரவை களரி கொள்ளுதற்கு ஊரனைக் காணாது சூழப்பார்க்கும் என்றாளென்க. அதன் கண்வர என்றாள் இல்லாள் ஒப்பத் தான் அங்கு வருதற்காகாது தான் தலைவன் இல்லில் இருந்து வாழுஞ் சிறப்புத்தெரிய. இதனால் ஊரன்தன் வெற்றிப்புகழ்க்குக் காரணமாகிய மள்ளர் போர்க் களரியினும் புகாது அவனைத் தன்கட்டாழ்க்கச் செய்யும் தன்னலனை மிகுத்துக் காட்டியவாறாம். மண்கொளற் குலரு மள்ளர் போரே என்பதூஉம் பாடம். அங்ஙனமாயின் மள்ளர் போர் கொளற்கு மண் உலரும் என்க. மண் - முரண்களரி மண். போர் விளையாடற் கென்று பரப்பி நீர் தெளிக்கப்பட்ட மண்ணிடம். இஃது ஊரன் துணங்கையிற் றாழ்த்தலான் உலரும் என்றாளாம். இவ்வாறே நயப்புப்பரத்தை துணங்கையின் வந்தா லிவ்வண்ண மாமென்று தன்னலனைச் சிறப்பித்துக் கூறுதலும், முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவினை, யானவண் வாரா மாறே வரினே வானிடைச், சுடரொடு திரிதரு நெருஞ்சி போல, என்னொடு திரியானாயின் ... உடைகவென் னேரிறை முன்கை வீங்கிய வளையே (அகம். 336) என வருதலான் அறியலாம். மற்றதன் கண்வர என்பது கணவர் - கண்ணவர் எனவும், மண்கொளற்கு என்பது மணங்கொளற் கெனவும் பலபடி யாகப் பாடம் பிறழ்ந்தது செவ்வனம் பொருளியைபு காணாமையால் என்று நினையத்தகும். அரிற்பவர் - பிணக்குள்ளகொடி. பவர்ப்பிரம்பின் வரிப்புற நீர்நாய் - கொடிப்பிரம்புகளின் வரியுள்ள புறத்துக் கிடக்கும் நீர்நாய். வரிப்புறம் பிரம்பினுடையது. பிரம்பின் வரிப்புற விளைகனி (91) என இந்நூலுள் வருதலான் அறிக. வாளை நாளிரை பெறூஉம் - வாளை மீனைக் காலை யுணவாகப் பெறும். இரவிற் றங்கண் வதிந்து விடியலிற் சேரிப் பரத்தையை நுகர்பவன் தலைவன் என்பது குறித்தது. பகற்பொழுதுப் புணர்மார் சேரிப் பரத்தையர் (மருதக்கலி 1) என்ப. விழவிற்பரத்தையர் துணங்கையும் மள்ளர் வில் விளையாட்டும் நிகழுமாதலாற் சேரக் கூறினாள். மள்ளர் குழீஇய விழவினானும் மகளிர் தழீஇய துணங்கை யானும், யாண்டுங் காணேன் மாண்டக் கோனை (31) என்பதனால் தலைவன் ஈரிடத்தும் புகுதற்குரியனாதல் அறிக. உலரும் - வாடும் எனினுமமையும். அதன் கண்வர - அவ்வாடிடத்து வந்தால். இரவுள்ள உள்ளம் உருகும் (குறள். 1069) என்புழி உள்ள என்பது நினைத்தால் எனப் பொருள் செய்தது காண்க. `அரிற்பவர்..... ஊரன் என்றது உயர்ந்த தன்னுடன் வதிந்தும் இழிந்தாளையும் தோயு மியல்புடையவன் தலைவன் என்னுங் குறிப்பிற்று. (தொல்.உவம. 25) பேராசிரியர் உரை பார்க்க. மதுரை நல்வெள்ளியார் 365. கோடீ ரிலங்குவளை நெகிழ 1 நாளும் 2 பாடில கலிழ்ந்து 3 பனியா னாவே 4 துன்னரு நெடுவரைத் ததும்பிய 5 வருவி தண்ணென் முரசி 6 னிமிழிசை காட்டும் மருங்கிற் கொண்ட பலவிற் பெருங்க 7 னாடநீ 8 நயந்தோள் கண்ணே. (எ-து) யான் வரையுந்துணையும் ஆற்ற வல்லளோ என வினாய கிழவற்குத் தோழி சொல்லியது. (வி) கோடு ஈர்வளை - சங்கினையீர்ந்த வளைகள். இலங்கு வளை - கையினின்று விளங்கிய வளைகள். நெகிழ - நெகிழாநிற்க. நீ நயந்தோள்கண்ணே நாளும் பாடிலவாய் அழுது நீர்த்துளி அடங்கா - தலைவனைக் காட்டி இங்ஙனம் மெலியச் செய்தன ஆதலின் தம் செயற்குத் தாம் நொந்து கண்களே கலிழ்ந்து பனியானா என்றாள். மணவாமுன்னைத் தலைவிதோணலமும். மணந்து தணந்தபின்னை அவள் தோள் மெலியும் நேரே காண்பதாம். ஆதலால் இவள் ஆற்றியிருப்பினும் இவள் கண்களே துளியடங்கா ஆம். இதற்கென் செய்வது என்று குறிப்பித்தாளாம், பாடு - துயில். துன்னரு நெடுவரைத் ததும்பிய அருவி தண்ணென் முரசின் இமிழிசை காட்டு நாடன் என்றது, அருவி வருகையே முரசின் இமிழிசையை உண்டாக்கி வருவது போல நின் களவின்வருகையே எவரும் கேட்கும் அலரை உண்டாக்கும் என்றவாறு. மருங்கிற் கொண்ட பலவிற் பெருங்கல் நாட என்றது. அயலூரிற் பிறர் துடவையின் அவர் காவலிலுள்ள கனியைக் களவிற் புக்குத் துய்ப்பவனாகாது, நின்கட் கொண்ட பலவினை நீ துய்ப்பவனாகுக என்று குறிப்பிக்கு முகத்தால் இவளை நின் இல்லத்து நின்னுரிமையாக்கி நுகர்க என்றாளாம். துன்னரு நெடுவரை அருவி என்றதனால் தலைவன் கழி பேருயர்வும் அவன் பயன்பட எளிவருநிலையுங் குறித்தாள். முரசிற் றண்ணென இமிழிசை என்க. தண்ணென் இசை - தாழம் பட்ட இனிய ஓசை. நீ நயந்தோள் கண் பனியானாள் என்று நீ நயந்தவள் துன்பத்தை விரைந்து தீர்த்தற்கு நீயேயுரியை என்று வரைவு முடுகினாள். பெருங்கல் நாட என்றதனால் நின் செல்வச் செருக்கால் இவளை மறவற்க என்றாளாம். பேரிசாத்தனார் 366. பால்வரைந் 1 தமைத்த லல்ல தவர்வயிற் சால்பளந் தறிதற் கியாஅம் யாரோ வேறியான் 2 கூறவு மமையா ளதன்றலைப் பைங்கண் மாச்சுனை பல்பிணி யவிழ்ந்த வள்ளிதழ் நீல நோக்கி யுள்ளகை 3 பழுத 1 கண்ண ளாகிப் 2 பழுதன் 3 றம்மவிவ் வாயிழை துணிவே. (எ-து) காவல் மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறு பாடு கண்டு, இவ் வேறுபாடு எற்றினானாயது? என்று செவிலி வினாவத் தோழி கூறியது. (வி) பைங்கண் மாச்சுனை - பசிய இடமகன்ற பெரிய சுனையின்கண். பல்பிணி யவிழ்ந்த வள்ளிதழ் நீலம் நோக்கி - பிணிப்பவிழ்ந்த பல வளவிய இதழ்களையுடைய நீலமலரைக் கூர்ந்து பார்த்து. உள் அகைபு - தானும் யானும் சுனையில் நீந்திப் பறித்தற்கு இயலாமையால் தன்னுள் வருந்தி. அழுத கண்ணளாகி - அழுத கண்களையுடையளாய், வேறு யான் கூறவும் அமையாள் - வேறு நீலம் உள்ளன அவை எளிதிற் கொள்ளலாகும் என யான் சொல்லவும் அடங்காதாள். அதன்றலை - அதற்கு மேல். இவ்வாயிழை அவர்வயின் துணிவு - ஆராய்ந்த அணிகலன் உடைய இவள் ஆண்டுப் போந்த ஒருதலைவரிடத்து அம் மலரைப் பறித்துத் தனக்கு உதவும்படி துணிதல். பால்வரைந் தமைத்த லல்லது - நல்வினையாகிய தெய்வம் அறுதியிட்டு முடித்தலல்லது. சால்பு அளந்தறிதற்கு யாம் யாரோ - அதன் குணநலத்தை அளவிட்டுத் துணிதற்கு அவ்வூழ் வயத்தமாகிய யாம் என் வலியுடையேம் ஆதலால் இவள் வேறுபாடு பழுதன்று. அம்ம - கேட்பாயாக என்றவாறு. பழுதன்று - குற்றமாகிய காரணமுடையதன்று. பால் வரைந் தமைத்தல் கூறியதனால் நல்லதாகிய காரண முடைமை குறித்தாளாம். பைங்கண் மாச்சுனை என்றது இவளும் தானும் புகற் கருமை குறித்தது. பல்பிணி அவிழ்ந்த வள்ளிதழ் இவள் விரும்புதற்குரிய எழிற்சிறப்புக் காட்டியது. நீல நோக்கி யழுதகண்ணள் என்புழிச் செவிலி வினாவு நிலையில் இவள் தலைவன் முன்னே தனக்குத் தந்த அத்தகைய நீலத்தை நோக்கி யழுதலாகக் கருதினாள் என்க. இது காப்பு மிகுதிக்கண் வேறுபாடு கண்டு செவிலி வினாவத் தோழி கூறியதாதலின் அக் காப்பின்கட் சுனையுமின்று, வள்ளிதழ்நீலமுமின்று. ஆதலான் இவள் செவிலி காண அதனை நோக்குதலும் அழுதலும் இல்லாமை பெறப்படும். துறையுட்காப்பு மிகுதி கூறியது முன்னிகழ்ந்த செய்தியையே இது குறிப்பதென்று தெளிதற்கு என்க. வேறு யான் கூறவும் அமையாள் என்றதும் யாம் யாரோ என்றதும் தோழி தான் காப்பிகழாமை குறித்தனவாகும். அவர் செய்த உதவியை நினைத்து அதற்குக் கைம்மாறு காணாது வேறு பட்டாளெனக் கொள்ளவைத்தவாறாம். இஃதறியாக் காலத்து நிகழ்ந்த தென்றும் அதுவே நினைவாய் இப்போது வேறுபடுவாள் என்றும் தோழி தாய்க்குரைப்பது இறையனார்களவிய லுரையான் உணர்க. ஆண்டு கண்போற் குவளையம் போதங்கோர் காளையைக் கண்டிரப்பத் தண்போதவன் கொடுத்தா ளணிந்தா ளித் தடங்கண்ணியே என்று காட்டுதல் காண்க. இளமையின் உதவியாற்குரிமை யாகும் இவளது திண்ணிய கற்புடைமை புலப்படுத்தியது இஃதென்க. வேறியான் கூறவும் என்பதே என் பிரதியிலுள்ள பாடம்; பண்டை நிகழ்ந்த செய்திக்கு இயைந்து பொருள் கொள்வது காண்க. வெறியாள் கூறவும் அமையாள் என்ற பாடம் காப்பு மிகுதிக்கண் என்ற துறைப்பகுதிக்குப் பொருந்தாமை நன்கு நோக்கிக் கொள்க. ஆயிழை அவர் வயிற்றுணிவு பழுதன்று என்று கொண்டு இதுபோல வரைந்தமைதலல்லது இதன் சால் பளந்தறிதற்கு யாம் யாரோ என இயைப்பினும் இக் கருத்தே கொள்ளும். இனி வெறியாள் கூறவும் அமையாள் எனப் பாடங் கொள்வாருமுளர். வெறியாள் - முருகு மெய்ப்பட்ட புலைத்தி எனக் கொள்ளலாமேனும் ஈண்டைக் கியையுமோ நோக்குக. மதுரை மருதன் இளநாகனார் 367. கொடியோர் நல்கா ராயினும் யாழநின் தொடிவிளங் 1 கிறைய தோள்கவின் பெறீஇயர் 2 உவக்காண் டோழி 3 யவ்வந் 4 திசினே தொய்யன் 5 மாமழை தொடங்கலி 6 னவர்நாட்டுப் பூச லாயம் 1 புகன்றிழி யருவியின் 2 மண்ணுறு மணியிற் றோன்றும் தண்ணறுந் 3 துறுக லோங்கிய மலையே. (எ-து) (1) வரைவுணர்த்திய தோழி தலைமகட்குக் கழியுவகை மீதூராமை உணர்த்தியது. (2) வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலை மகளைத் தோழி ஆற்றும் வகையால் ஆற்று வித்ததூஉமாம். (வி) கொடியோர் நல்காராயினும் - கொடுமையுடைய தமையன்மாருந் தந்தையும் அவர்க்கு நின்னை வதுவையிற் கொடாராயினும்; ஆயினும் என்றதனால் நல்காமையில்லை என்பது குறிப்பிற்கொள்ள வைத்தாளாம். இது வரைவுணர்த்திய தோழி கூற்றாதல் காண்க. அவள் தலைமகட்குக் கழிபேருவகை மீதூராமை உணர்த்தலான் நல்காராயினும் என்பது நல்கின ராயினும் என்பதைத் தழீஇ வந்தது என்பதும் நன்கியையும். கொடியோர் என்றது, கொற்ற வேந்தர் வரினுந் தற்றக வணங்கார்க் கீகுவனல்லன் (புறம். 338) என்றாற் போன்றவராதல் பற்றி என்க. தொடி விளங்கு இறைய - தொடிகள் விளங்கும் சந்துகளையுடையவாய். தோழி நின் தோள் கவின் பெறீஇயர் - தோழி நின் தோள்கள் அழகு கொள்ளும்படி, அவ்வந்திசின் - அங்கேவர. அவர் நாட்டுமலை உவக்காண் - அவர் நாட்டவர் மலையினை அதோ பார். தொடிவிளங்கிறைய தோள் கவின் பெறீஇயர் என்றதா லிப்போது தோள்கள் முன்னை நன்னிலையில் இல்லை என்பது குறித்தாளாம். தொய்யன் மாமழை தொடங்கலின் - உழுதற்குரிய பெரிய மழை தொடங்குதலால். தொய்யல்-உழுதல். தொய்யாது வித்திய துளர்படு துடவை (மலைபடுகடாம் 122) என்பது காண்க. அவர் நாட்டுப் பூசல் ஆயம் - அவர் நாட்டின்கண் மகிழ்ச்சி ஆரவாரமுடைய மக்கள்திரள். புகன்றிழியருவியின் - விரும்பி இறங்கியோடும் அருவியொடு. மண்ணுறு மணியிற் றோன்றும் - கழுவுதலுற்ற மணிபோலத் தோன்றும் தண்ணிய நறிய துறுகற்கள். ஓங்கிய மலை - உயர்ந்த மலை உவக்காண் என்க. மழை தொடங்கலின் அருவியொடு மண்ணுறு மணியிற் றோன்றுந் துறுகலும் உடையது என்று அவர் நாட்டு மலையை விசேடித்தாள். மண்ணுறு மணியிற் றோன்றுந் துறுகல் என்றதனாற் களவு ஒழுக்கம் மாசு கழுவப் பட்ட தென்றும். பூசலாயம் புகன்றிழியருவி என்றதனால் நின் ஆயமெல்லாம் மகிழ்ந்தாரவாரித்தது காண், நீ அவருடன் இனி நீர் விளையாடுதல் கூடும் என்றும், தொய்யன் மாமழை தொடங்கலின் என்றதனால் உடன்படாத தமர் நீவிர் இல்லறம் நடத்த வரைவுடன் படலாயினாரென்றும் குறித்தாளாம். இனி இது வரைவு நீட்டித்தவிடத்து தோழி தலைவியை ஆற்றுவித்தது ஆயின், கொடியோர் நல்காராயினும் - வரையாது கொடுமையுடைய தலைவர் வரைந்து நல்குதல் செய்யாராயினும் என்று பொருள்கூறுக. மழை தொடங்கலும் ஆயம் புகன்றிழியும் அருவியோடு மணியிற் றுறுகல் தோன்றலும் விரைந்து அவர் வரைவர் என்பதற்கு நன்னி மித்தமாகக் கொண்டு தோள் கவின் பெறீஇயர், அவர் நாட்டுமலை உவக்காண் என்றாளாக இத் துறைக்கேற்பக் கொள்ளலாம். ஆயம் - மக்கள்திரள். பல்லாயமொடு பதிபழகி (பட்டினப்பாலை : 213) அகறி ரோவெம் ஆயம் விட்டெனச் சிரறி யவன்போல் (பொருநாறு. 123-4) எனவருதல் காண்க. நக்கீரர் 368. மெல்லிய லோயே மெல்லிய லோயே நன்னா ணீத்த பழிதீர் மாமை பட்பின் 1 வற்பி னல்லது செப்பிற் சொல்லல் கிற்றா 2 மெல்லிய லோயே சிறியரும் பெரியரும் வாழு மூர்க்கே நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தத் திண்கரைப் 3 பெருமரம் போலத் தீதி னிலைமை முயங்குகம் பலவே. (எ-து) வரைவுமலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது. (வி) தன் ஆற்றாமைக்கு ஆற்றாத மென்மை கருதித் தலைவி தோழியை மெல்லியலோய் என விளித்தாள். அடுக்கு ஆற்றாமை மிகுதி குறித்தது. நல்நாண் நீத்த பழி - பிறப்புடன் வளர்ந்த நல்ல நாணை நீத்ததனாலாகிய அலரும். தீர்மாமை - தீர்ந்த மாமை நிறமும். என்றது மாமை நிறந் தீர்தலும் என்றவாறு. சாயலும் நாணும் அவர் கொண்டார் (குறள். 1183) எனவும், தொடிநெகிழ்ந்தனவே தோள் சாயினவே, விடுநா ணுண்டோ.... மலைகிழவோற்கே (239) எனவும் வருவன கொண்டுணர்க. நாண் நீத்த பழியையும், மாமை தீர்தலையும், வற்பி னாற்றுத லல்லது - அவர் வன்புறைகூறித் தெளிவித்தலாற் பொறுத்த லல்லது, செப்பின் - அவற்றினாய ஆற்றாமையை காமவின்ப மறியாத இளைஞரும் அஃதொழிந்த பெரியருமுள்ள ஊர்க்குச் சொல்லின்; சொல் அல்கிற்றாம் - சொல் குறைந்து கிடையாதாகும். `சொல்ல கிற்றோ என்பதூஉம் பாடம். சொல்லும் வல்லமைத்தோ என்றவாறு. பட்பினாற்றுதலென்பதும் பாடம். அவர் பண்பினால் ஆற்றுதல் என்க. பட்பு - பண்பு. பட்படா வைகும் பயன்ஞாலம் (புறப்பொருள் வெண். 8:34) என்ப. நாண் நீத்தவழியாக உள்ள நோயும், தீர் மாமையால் உடல் நோயும் குறித்தாள். பட்பின் வற்பின் இரண்டும் செப்பின் என்பதற் கியைந்த ஓசையினிற்றல் காண்க. நளிநீர் நீத்தத் திண்கரைப் பெருமரம் போல - செறிந்த நீர்ப் பெருக்குடைக் குளத்துத் திண்ணிய கரையிலுள்ள பெரியமரத்தை ஒப்ப. நளிநீர்நீத்தம் என்றது நீத்துடை நெடுங்கயம் (பெரும்பாண் : 289) என்பது போன்ற நீத்தறாத குளத்தைக் குறித்தது. தண்ணீர்ப் பெருக்கால் அழி யாமைக்குத் திண்கரை கூறினாள். ஓடுநீர் அன்மை நளிநீர் கூறினாள். நாளிடைப்படாஅ - நாளிடையறவு படாது. தீதில் நிலைமை - வஞ்சக் கள வில்லாத இல்லற நிலைமைக்கண். பல முயங்குகம் - இனிப் பலவாக அணைவோம் என்றவாறு. ஆற்றின்பெருக்காற் கரையிடியுமாதலால் அதன்கரை மரம் நடுங்குமாதலால் அங்ஙனம் நடுங்காமைக்கு நளிநீர் நீத்தத் திண்கரைப் பெருமரம் என்றாள். கரைபொரு திழிதரு கான்யாற் றிகுகரை வேர் கிளர் மராஅத்தந்தளிர் போல நடுங்கல் (நற். 381) எனக் கூறுதல் காண்க. ஆற்றங்கரை வாழ்மரமென அஞ்சுகின்றேன் (பெரிய திருமொழி - மாற்றமுடை 1:3) என்றார் பெரியாரும். வற்றாத செறிந்த நீள்நீத்தம் தலைவனாகவும், திண்கரை அவன் அழியாத இல்லமாகவும் பெருமரந்தானாகவும் கருதிக் கூறியதாம். குடவாயிற் கீரத்தனார் 369. அத்த வாகை 1 யமலை வானெற் 2 றரியார் சிலம்பி னரிசி 3 யார்ப்பக் கோடை தாக்குங் 4 கானம் 5 செல்வாந் 6 தோழி நல்கினர் நமரே. எ-து தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது. (வி) அத்த வாகை - பாலையருநெறியிலுள்ள வாகை மரத்தின். அமலை வால்நெற்று - நெருக்கமான வெள்ளிய காய்நெற்றுக்கள். அரியார் சிலம்பின் - உள்ளிட்ட பரலார்க் கும் நின் காற்சிலம்பணி போல. அரிசியார்ப்ப - விதைகள் ஒலிப்ப. கோடை தாக்கும் கானம் - மேற்காற்று மோதும் காட்டில். செல்வு ஆம் - செலவு இனி ஆகும். நமர் நல்கினர் - நம் தலைவர் நின்னை உடன் கொண்டுபோக அருளினர் ஆதலான் என்றவாறு. செல்வு - செலவு. செல்வுறு திண்டேர் (மருதக்கலி 20) என்பதனான் உணர்க. அமலை - நெருக்கம். அத்த வேம்பின மலை வான்பூ (281) என்பது நோக்கி அறிக. சிலம்புக்கு நெற்றும், அதன்கண் அரிக்கு அரிசியும் உவமையாகக் கொள்க. இது தொழிலுவமம். உடன் கொடுபோதற்குடன் பட்டது சொல்லும் போதே தெரிய அரியார் சிலம்பினார்ப்ப என்றாள். சிலம்பு கழி நோன்பு தலைவனகத்து நிகழ்வது குறித்துக் கூறினாள். தொடியோள் மெல்லடி மேலன சிலம்பே (7). இடைச்சுரத்துக் கண்டோர் கூறுதல் காண்க. செல்வாம் எனத் தோழி தன்னை உளப்படுத்தித் தன்மைப் பன்மையாற் கூறினாள் என்பது தோழியும் உடன் போதல் வழக்கின்மையால் இயையாமை காண்க. இவ்வுண்மை ஐங்குறு நூற்றுள், போகிய அவட்கோ நோவேன் தேமொழித் துணையிலள் கலுழு நெஞ்சி னிணையே ருண் ணிவட்கு நோவதுவே (378) என வருதலான் நன்கறிக. பதிநோக்கி யன்னையைத் தெண்ட னிட்டேனென்றும் பாங்கியரை, எதிர் நோக்கி நின்று தழுவுகின்றேனெனு மென்னும் பொன்னி, நதி நோக்கி வாழுநல் புதுச்சேரி நன்னாட்டி லென்றன், விதி நோக்கிக் காளைபின் மேவுகின் றேனென்னும் வேதியரே (காங்கேயன் நாலாயிரக் கோவை) என்பதுங் காண்க. கோடை தூக்கும் என்பதும் பாடம். தூக்குதல் அசைத்தல். உறுவளி தூக்கு முயர்சினை (மருதக்கலி - 19) என்புழிக் காண்க. வில்லகவிரலினார் 370. பொய்கை யாம்ப லணிநிறக் கொழுமுகை வண்டுவாய் திறக்குந் தண்டுறை யூரனொ 1 டிருப்பி னிருமருங் கினமே கிடப்பின் வில்லக விரலிற் பொருந்தியவன் 2 நல்லகஞ் சேரி னொருமருங் 3 கினமே 4. எ-து கிழத்தி தன்னைப் புறனுரைத்தாளென்பது கேட்டுப் பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. (வி) பொய்கை ஆம்பல் - ஒருவர் ஆக்காத நீர் நிலையிலுள்ள ஆம்பலினது, அணி நிறக் கொழுமுகையானது வண்டுவாய் திறக்கும் - வண்டுக்குத் தன் இதழ்வாய் திறக்கும். தண்ணிய துறையினையுடைய ஊரன். வண்டு திறத்தற்குரிய செவ்வி அறிந்து புக்கதென்பது தெரிய அணி நிறக் கொழுமுகை என்றும், நல்விருந்து கண்ட அளவில் அவ்விருந்தினிதூட்டத் திறப்பது உயர்ந்தோர் இயல் பென்பது தோன்ற வாய் திறக்கும் என்றுங் கூறினாள். இதனால் என் காமத்தின் செவ்வியறிந்து துய்ப்பவன் தலைவன் என்பதும் அச் செவ்வியிற் றலைப்பட்ட தலைவற்கு இனியளாய் இன்பஞ் செய்தவள் தானே என்பதும் கருதிப் பரத்தை கூறினாள். இது தலைவியறியாள் என்பது கருத்து. மலரினு மெல்லிது காமஞ் சிலரதன், செவ்வி தலைப்படுவார் (குறள். 1289) என்றது காண்க. காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது, வண்டு வாய் திறக்கும் பொழுதிற் பண்டுந், தாமறி செம்மைச் சான்றோர் கண்ட, கடனறி மாக்கள் போல விடன்விட், டிதழ்தளை யவிழ்ந்த (265) என முன்னும் இக் கருத்தேபடக் கூறியது காண்க. செவ்வியறிந்து சேரா நிலையில், தாதுண் வேட்கையிற் போது தெரிந்தூதா, வண்டோ ரன்னவன் தண்டாக் காட்சி (நற். 25) எனக் கூறுதலுங் காண்க. ஊரனொடு இருப்பின் - சேராது ஊரனுடன் இருத்தலைச் செய்தால், சேரின் என மேற்கூறுதல் காண்க. இருமருங்கினம் யாம் - இருவடிவினாவேம். கிடப்பின் - துயிலிடத்தின்கண். துயிலிடம் ஒட்டிய வுயர்திணைக் கிடப்பிடமாகும் (திவாகரம் இடப்பெயர்). கிடப்பின் அவன் நல்லகஞ் சேரின் - கிடக்கைக்கண் அவ்வூரன் நல்ல மார்பினைச் சேர்ந்தணைத்தால். வில்லக விரலிற் பொருந்தி - வில்லைத் தம் முள்ளேயுடைய விரல்களைப் போல. ஒரு மருங்கினம் - ஒருவடிவினம். விற்பிடித்த நிலையில் விரல்கள் வேறுபடாது நெருங்கி ஒருவடி வாதல் போலக் கிடப்பின்கட் சேரின் இருவரெனுந் தோற்ற மில்லையாய் ஒரு வடிவாவேம் என்றாள் என்க. ஒருவ ருடலில் ஒருவர் ஒடுங்கி, யிருவ ரெனுந் தோற்ற மின்றிப், பொருவங் கனற்கேயும் வேலானுங் காரிகையுஞ் சேர்ந்தார் (நளவெண்பா : 174) என்றார் பிறரும். மருங்கு - வடிவு. பொன்னன்னார் மருங்கு போன்று (சிந். 1195) என்புழிக் காண்க. மருங்கினம் - பரத்தை தன் உயர்வு தோன்றப் பன்மையாற் கூறியதாம். வினைக்குறிப்பு ஆக்கம் விரித்தலல்லது பொருளுணர்த்தாது என்பதனால் (தொல்.எச். 36) வடிவினாவேம் எனப் பொருளுரைக்கப்பட்டது. உறையூர் முதுகூற்றனார் 371. கைவளை நெகிழ்தலும் மெய்பசப் பூர்தலும் மைபடு சிலம்பி னைவனம் வித்தி அருவியின் விளைக்கும் நாடனொடு மருவேன் றோழியது காமமோ பெரிதே. (எ-து) வரைவிடை வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (வி) கையின்கண் வளைகள் தாமே நெகிழ்தலும், மெய்யின் கண்ணே பசலை தானே ஊர்தலும் நாடனொடு மருவேன் - அக்கையாலும், மெய்யாலும் மருவற்குரிய நாட னுடனாகப் பொருந்தேன் ஆதலான். அது காமமோ - நாட னுடனுறையும் அவ் வேட்கையோடு பெரிதே - அவனு டனுறையாத இப்போது பெரிதே யாகின்றது என்றவாறு. எப்போதும் வளை நெகிழாமலும், பசப்பூராமலும், நாடனுடன் வாழ அவன் வரைவொடு வந்திலன் என்றாளாம். காமமோ பெரிதே களைஞரோ விலரே (நற். 335) என்ப. மைபடு சிலம்பின் - மேகம் உறங்கும் மலைப்பக்கத்தில். ஐவனம் வித்தி - மலை நெல்லை விதைத்து. அருவியின் விளைக்கும் நாடனொடு - மலையருவி நீரால் விளைவிக்கும் நாடனொடு என்க. தெய்வத்தால் என்கண் நண்பு செய்து வைத்து வதுவையால் நண்பின் பயனைத் துய்த்தற்குரியவன் அது செய்திலன் என்னுங் குறிப்பிற்று. விதைத்து வைத்து நீர் பாய்த்தாது தாழ்ப்பவன் ஆவன் என்பது கருத்து. விளைக்கு நாடன் விளையாதவனாயினான் என்று நினைந்ததாம். விற்றூற்று மூதெயினனார் 372. பனைத்தலைக் கருக்குடை நெடுமடல் குருத்தொடு 1 மாயக் கடுவளி தொகுத்த நெடுவெண் 2 குப்பைக் கணங்கொல் சிமைய 3 வணங்குங் 4 கானல் ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக் கூழைபெ யெக்கர் 5 குழீஇய பதுக்கை 6 புலர்பதங் 7 கொள்ளா விரவை 8 அலரெழுந் தன்றிவ் வழுங்க லூரே. எ-து இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்பத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. (வி) பனைத்தலைக் கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக் கடுவளி தொகுத்த நெடு வெண்குப்பைக் கணங்கொள் சிமையம் வணங்குங் கானல் - பனையின் தலையிலுள்ள அரவாயுடைய நெடிய மடல்கள் அப்பனையின் குருத்தொடு மறையக் கடிய காற்றுத் திரட்டிய நெடிய மணற்குப்பையாற் பலவாகக் கொள்ளும் உச்சியையுடைய வருத்துங் கடற்கரையில் என்றவாறு. ஆழிதலை வீசிய அயிர்ச் சேற்று அருவி - தலைவன் தேருருள் அவ்வவ்விடத்தெறிந்த நுண் மணலுடன் கூடிய சேற்றினையுடைய கழிமுகத்து. கூழை பெய் எக்கர் குழீஇய பதுக்கை - இவள் கூந்தலிற் பெய்த இடுமணலுடன் தொக்க இலைக்குப்பையால். புலர்பதங் கொள்ளா இரவை - விடியும் அமயங்கொள்ளாத இரவிலே. இவ்வழுங்கலூர் அலரெழுந்தன்று - இக் கெடுதலுடைய வூரில் பழிவளர்ந்தது என்றவாறு. கருக்கு - அரவாய். மாய்தல் - மறைதல். கணங்கொ ளிடுமணல் (கலி. 131). சிமை - உச்சி. உயர்சிமைப் பொதும்பிற் புன்னை (அகம். 190) என்ப. கானல் - கடற்கரை. புலவுமணற் பசுங்கானல் பட்டினப்பாலை (94). அருவி - கழிமுகம். (திவாகரம் - பிங்கலம்). யாறெனின் அருவி மதுச் சாரல் வரும் யாறும் (திவாகரம்) என்றதனோடு மாது கொள்ளு மென்க. எக்கர் - இடுமணல். எக்கர் தலைமயிர்க் கிடும் நறுமண் என்பாருமுண்டு. எக்கர் என்பது அப் பொருளில் வாராமையும் ஈண்டைக் கியையாமையும் காண்க. பதுக்கை - இலைக்குப்பை பதுக்கை நிரைத்த (கலி. 12) என்பதனான் உணர்க. ஆழிதலை வீசிய அயிர்ச் சேற்றுக் கழிமுகத்து இவள் கூழையிற் பெய்த இடுமணலும் இலைக் குப்பையும் இவள் பாற்கண்டு இவள் யாமத்துக் கானற் கழிமுகத்துப் பொழிலிற் புக்குத் தங்கி வந்தாளென அறிந்து ஊர் பழிதூற்றல் குறித்தாள். அக் கடற்கரை இங்ஙனம் பலவுஞ் செய்யவல்ல தென்பது தெரியப் பனைத்தலை மடல் குருத்தொடுமாயக் கடுவளி தொகுத்த மணற்குப்பை பலவற்றால் விசேடித்தாள். அணங்குங் கானல் என்றாள். காதல் மிகுதியால் தெய்வங்கள் வருத்துதலையும் பொருட்படுத்தாது குறியிடம் புக்கனள் என்பது தெரிய. உருகெழு தெய்வமும் கரந்துறை யின்றே (நற். 398) எனக் கூறுதல் காண்க. இவ்வாறு குறியிடம் புக்காளைத் தெரிதலுண்மை, படப்பை நின்ற முடத்தாட் புன்னைப், பொன்னேர் நுண்டாது நோக்கி, என்னு நோக்குமிவ் வழுங்க லூரே (அகம். 180) என்பதனான் அறிக. துறைவனை இனி அறிந்திசினே கொண்கனாதல், கழிச்சே றாடிய கணைக்கா லத்திரி, குளம்பினுஞ் செயிறா வோடுவ, கோதையுமெல்லாம் ஊதை வெண்மணலே (நற். 278) என்புழிக் கடற்கரை வழியாக வந்த துறைவன் என்பதற்கு அடையாளமாக அவன் புனைந்த கோதையும் ஊதையால் மணலுடைய தாயினமை கூறுதல் கண்டு இவ்வுண்மை உணரலாம். கூழை பெய்எக்கர் - இவள் கூழை பெய்யும் இடுமணல் என்பதும் நன்கியையும், இவள் கானலில் உள்ள போது இவள் கூழையில் ஊதை தூற்றிய மணல் இங்கு மனைக்கண் வந்த பின்னரும் அக்கூழையினின்று உதிர்தல் கருதிற்று. பதுக்கையாகிய இலைக்குப்பையால் குறியிடம் கடற்கரைக் கழிமுகத்துப் பொழிலாதல் அறிந்தவாறாம். இவ்வாறறியப் பட்டு அலரெழுந்ததனால் இனிவரைவதே தக்கதென்று தலைவற்கு அறிவுறுத்தியவாறாம். மதுரைக் கொல்லன் புல்லனார் 373. நிலம்புடை பெயரினு நீர்தீப் பிறழினும் 1 இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும் வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை யஞ்சிக் 2 கேடெவ னுடைத்தோ தோழி நீடுமயிர்க் கடும்ப லூகக் கறைவிர லேற்றை புடைத்தொடு புடைஇப் 3 பூநாறு 4 பலவுக்கனி காந்தளஞ் 5 சிறுகுடிக் கமழும் ஓங்குமலை நாடனொ 6 டடைந்தநந் 7 தொடர்பே. (எ-து) அலர் மிக்கவழித் தலைமகட்குத் தோழி சொல்லியது. (வி) நிலம் கீழ் மேலாகப் பெயர்ந்தாலும் என்றது பூகம்பம் எய்தினும் என்பதாம். நீர் தீப் பிறழினும் - நீரின் தட்பம் தீக்கும். வெப்பம் நீர்க்குமாக மாறினும். நீர் தீயாகப் பிறழ்ந்தாலும். பெருங்கடற்கெல்லை தோன்றினும் - பெரிய கடற்கு முடியும் ஊழி அது வற்றி ஒழியும் காலம் தோன் றினும் என்க. பெயரினும், பிறழாது எல்லை தோன்றாது அமைந்த நந்தொடர்பு என்க. நிலம் முதலியன மாறினும் நாடனொடு மாறாதமைந்த நந்தொடர்பு வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வையஞ்சிக் கெடுதல் யாதுடைத்தோ என்பது கருத்து. ஊழி பெயரினும் பெயராதமைந்த தொடர்பு இச்சிறு பெண்டிர் கவ்வைக் கஞ்சிக் கெடுதல் என் பயனுடைத்தோ என்றதாம். பெண்டிர் கவ்வையஞ்சிக் கேடு எவனுடைத்தோ என்பது. பெண்டிர் கவ்வையஞ்சாது தொடர்பு வளர்தலையுடையதாம் என்னுங் குறிப்பிற்று யாம் வேண்டுங் கவ்வையெடுக்கு மிவ்வூர் (குறள். 1153) என்றது கண்டுணர்க. நிலம்புடை பெயர்தலும், நீர் தீப்பிறழ்தலும், கடற்கெல்லை தோன்றலும் அஞ்சத்தக்கன வாதல் கூறி இவ்வஞ்சத்தக்கனவற்றாலும், மாறாதமைந்த தொடர்பு கவ்வையஞ்சிக் கேடுடைத்தோ எவன் என்பதுமாம். நீடுமயிர் - உடம்பெல்லாம் நீடிய மயிர். கடும்பல் - வலிய வற்றையும் கறிக்குங் கடியபற்கள். கறைவிரல் - கருமையை யுடைய விரல்கள். குளிரின் வருத்தாமல் மயிரும், பல வற்றையுந் தின்றற்குப் பல்லும், கோடுவாழ் இயல்பிற்றா தலின் பற்றிக்கோடற்கு விரலும் கூறினாள். கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி (மலைபடுகடாம் 311) என்ப. ஏற்றை - ஈண்டுக் குரங்கிலாண் பூநாறு பலவுக்கனி - பூ இல்லாமலே பூப்போல மணக்கும் பலாவின் பழம். ஏற்றை புடைத்தொடுபு உடைஇ - ஏற்றை புடைப்பிற் றோண்டுதலால் உடைந்து, காந்தளஞ் சிறுகுடிக் கமழும் - காந்தள் மணமே கமழ்தற்குரிய குறிச்சியிற் கமழும் ஓங்குமலை நாடன் என்றவாறு. புடை - புடைப்பு. முப்புடைத் திரள்காய் (பெரும்பாண். 364) புடைப்புத் தோண்டுதலாற் சுளையுள்ள இடங் கண்டு தோண்டுதல் குறித்தாள். நாறுபூப்பலவு என்னாது பூநாறு பலவு என்றது கோளியாத லறியவைத்தவாறு. ஏற்றை மறைவிற்றொடுதலால் உடைந்து கனி சிறு குடிக்கமழு மலைநாடன் என்றது களவில் இவன் தலைவியைத் துய்த்தது ஊரெல்லாம் அறியப்பட்டது என்னுங் குறிப்பிற்று. ஏற்றைத் தொடுதல் கண்டு பலவினைக் காத்தல் போல் நின்னை இற்செறித்துக் காத்தல் நேரும் என்று குறித்தாளாம். உறையூர்ப் பல்காயனார் 374. எந்தையும் யாயு முணரக் காட்டி ஒளித்த செய்தி 1 வெளிப்படக் கிளந்தபின் மலைகெழு வெற்பன் றலைவந் திரப்ப நன்று புரி கொள்கையி னொன்றா கின்றே 2 முடங்க லிறைய தூக்கணங் 3 குரீஇ நீடிரும் பெண்ணைத் 4 தொடுத்த கூடினு 5 மயங்கிய மைய லூரே. (எ-து) அறத்தொடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது. (வி) எந்தைக்கும் யாய்க்கும் ஒளித்த செய்தி வெளிப்பட உணரக் காட்டிக் கிளந்தபின் என்க. மலைகெழு வெற்பன் - பன்மலையிலுள்ளவரும் வந்து பொருந்தும் வெற்பினையுடையவன். வெற்பன் தலைவந்து இரப்ப - வெற்பன் முன் வந்து இரத்தலான். நன்று புரிகொள்கையின் - நல்லதை விரும்பும் கோட்பாட்டின். மையலூர் ஒன்றாகின்று - பித்தேறியவூர் நம்முடன் ஒரு தன்மைத்து ஆயினது. தூக்கணங் குரீஇ நீடிரும் பெண்ணைத் தொடுத்த முடங்கலிறைய கூட்டினும் மயங்கிய மையலூர் என்க. தூக்கணங்குருவிகள் நீடிய கரியபனைகளிற் கட்டிய ஓலைநுனியிற் றங்குதலுடைய கூடுகளினும் பலவாக மயக்கமுற்ற மையலூர் என்றவாறு. முடங்கல் - பனையின் தூங்க லோலை. தூங்க லோலை யோங்குமடற் பெண்ணை (நற். 135) என்ப. தூக்கணங்குரீஇ முதுக்குறைக் குரீஇ எனவும் படும் (நற். 366). இவை நிமிர்ந்த ஓலையிற் றம் கூடு கட்டாது முடங்கிய ஓலையினுனியிற் கட்டுதல் காணலாம். முடங்கல் ஓலைக்குப் பெயராதல் மண்ணுடை முடங்கல் மாதவி யீத்தது, மீத்த வோலை கொண் டிடைநெறித் திரிந்து (சிலப். புறஞ்சேரி. 76-77) என்பதனான் உணர்க. முடங்கலிறைய என்பது பறவை யிறையுற வோங்கிய (92) என்பதனான் அறிக. நன்று புரிகொள்கையின் - நன்றாகிய வதுவையைச் செய்யும் முறைமையின் என்பதுமாம். தலைவன் இரப்ப என்றது, அடுத்தன மிரப்பிற் றருகுவன் கொல்லோ (அகம். 280) என்பது பற்றி. இனித் தலைவன் தலை - தலைவற்கு மேலாகிய அவன் தந்தை என்று கொண்டு அத்தந்தை வந்திரப்ப என்பதுமாம். ஒன்றோவின்றே என்பதூஉம் பாடம். அதற்கு ஊர் பழி கூறுவதாகிய ஒன்றை ஓவினது என்று பொருள் கூறுக. மையலூர் - மையல் வேழம் என்பது போலும் (அகம். 388) 375. அம்ம வாழி தோழி யின்றவர் வாரா ராயினோ நன்றே சாரற் சிறுதினை விளைந்த வியன்க ணிரும்புனத் திரவரு 1 வாரிற் றொண்டகச் சிறுபறை பானாள் யாமத்துங் 2 கறங்கும் யாமங் காவல ரவியன்மா ரன்றே. 3 எ-து இரவுக் குறிக்கண் சிறைப்புறமாகத் தோழி தலை மகட்குச் சொல்லுவாளாய் இருபொழுதும் மறுத்து வரைவுகடாயது. (வி) அம்ம - கேட்பாயாக. அவர் இன்று வாரார் ஆயினோ நன்று-இரவில் வருந்தலைவர் இற்றை இரவின் வாராதார் ஆயினோ நன்மைத்தாம். வாரார் ஆயின் என்றது, சிறைப்புறத்து வந்தாராதலையுள் வைத்துக் கூறியதாம். சிறுதினை - சிறிய கால அளவையில் விளைதற்குரிய தினை. விளைந்த வியன்கண் இரும்புனத்து - விளைந்த அகன்ற இடமுடைய கரிய கொல்லை யினது, சூடுறு வியன்புனங் கரிபுறன் கழீஇய பெரும் பாட்டீரத்துத் தோடு வளர் பைந்தினை நீடுகுரல் (அகம். 368) என்பது காண்க. இர வருவாரின் - இராப்பொழுதில் வருபவரால். தொண்டகச் சிறுபறை - குறிஞ்சி நிலத்துக்குரிய தொண்டக மெனப் பெயரிய சிறிய பறை. பால்நாள் யாமத்தும் - ஒரு நாளிற் பாதியாகிய இரவிலும். கறங்கும் - ஒலிக்கும். யாமங் காவலர் - இராப் போதில் ஊர்காப்பார். அவியன்மார் - உறங்கார் இவற்றால் அவர் இன்று வாராராயின் நன்று என்றவாறு. புனத்து இர வருவார் என்பதனை வரையிற் றாழ்ந்த வால்வெள் ளருவி போல் (284) என்பது போலக் கொள்க. அன்று, ஏ - அசைகள். தினைவிளைந்தபுனத்து இர வருவார் என்றது தினைவிளைந்து பயன் கொண்டதன் காரணமாகப் புனத்தினின்று இரவருவார் பறைமுழக்கி கடவுட்குப் பலியிட்டு மகிழ்தலைக் குறித்தது. இவ்வுண்மை பலிபெறு கடவுட் பேணிக் கலி சிறந்து..... நீடினை விளைமோ வாழிய தினையே (நற். 251) என வருதலான் அறிக. தேங்கம ழிணர வேங்கை சூடித், தொண்டகப் பறைச்சீர் பெண்டிரோடு விரைஇ, மறுகிற்றூங்குஞ் சிறுகுடிப் பாக்கத்து (அகம். 118) என்பதனானும் இஃதறியப்படும். இர-இரா. இரவரம் பாக நீயீதன மாயின் (387) என வருதலான் அறிக. குறியதன் கீழாக்குறுகிற்று. இரவரின் வாழேனைய (நற். 292) என்பது மது. கானவர் இரவிற் சிறுகுடிவாராது தினைப்புனத்துள்ள அமயமே தலைவன் காவலரோம்பித் தலைவிபால் வருதற்குரியது என்பது தினைப்பெரும் புனத்துக் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென.... காவல ரறிதல் ஓம்பிப் பையென, வீழாக் கதவ மசையினன் புகுதந்து (அகம். 102) என்பதனா லறியலாம். புனத்தினின்று இர வருவார் என்றதனால் அப்புனத்து விளைவு மிகுதியால் தினை தூற்றிக் கொள்ளற்கண் நெடும் போதாயினமை குறித்தாள். இதனாற் றினை கொய்தது குறித்துப் பகலும் வாராமை விலக்கினாள். இரவரு வாரிற் கறங்கு மன்றத்து இரவில் வருவார் குரவையயர்தல் காரணமாக தொண்டகம் ஒலிக்கும் என்பதாமெனினும் அமையும். காவலர் அவியாமான்றே என்பது பாடமாயின் - காப்பார் மயங்கி உறங்காமல் பறைகறங்கும் என்க. இரவு அரிவாரின் எனப் பாடங் கொண்டு தினையை இரவின் அரிந்து கொள்வார் போலப் பறை கறங்கும் என உரைப்பாரு முண்டு. யாமத்துக் கறங்கும் என்றதனாற் பகலிற் கறங்குதலுங் கூறினாள். இன்று அவர் வாராராயின் நன்று என்பது இன்றைப் பொழுதிற் களவின் வாராராயின் நல்லது என்றதாகக் கொண்டு நாளை வரைவொடு வருவாராயின் நன்று என்னக் கருத வைத்தாள் என்பதுமாம். படுமாத்து மோசி கொற்றனார் 376. மன்னுயி ரறியாத் துன்னரும் பொதியிற் சூருடை யடுக்கத் தாரங் 1 கடுப்ப வேனி லானே தண்ணியள் பனியே வாங்குகதிர் தொகுப்பக் 2 கூம்பி பையென 3 அலங்குவெயிற் பொதிந்த 4 தாமரை உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே. எ-து பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது. (வி) மன் உயிர் அறியாத் துன்னரும் பொதியில் - நாட்டில் மன்னிய உயிர்கள் அறியாத துன்னுதற்கரிய பொதியின் மலை. உயிர்கள் அறியாமைக்குக் காரணம் துன்னுதற்கருமை என்று விளங்கவைத்ததாம். நாட்டில் மன்னிய உயிர் என்றது ஆண்டு வாழ் குறவர் அறிதல் பற்றி என்க. இதனைக் கொடுவரி குழுமுஞ் சாரல், அறையுறு தீந்தேன் குறவ ரறுப்ப, முயலுநர் முற்றாவேற்றரு நெடுஞ்சிமைப், புகலரும் பொதியில் (அகம். 322) என்பதனா னுணர்க. மற்று மன்னுயிர் அறியாப் பொதியில் ஆரம் நாட்டிற் கிடைப்பதும் அக்குறவரானாவது தெளிக. கடலிற் பிறந்த முத்தி னாரமு முனைதிறை கொடுக்குந் துப்பின், தன் மலைத் தெறலருமரபிற் கடவுட் பேணிக், குறவர் தந்த சந்தினாரமும், இருபேராரமுமெழில் பெற வணியுந், திருவீழ் மார்பிற் றென்னவன் (அகம். 13) என்பது காண்க. சூர் - தெய்வம். கடவுட் பேணாது கொள்ளற்காகாமை தெரியச் சூருடையடுக்கத் தாரம் என்றான். சூர்புக லடுக்கம் (மலைபடுகடாம் 239) என்பதற்கு நச்சினார்க்கினியர் தெய்வம் விரும்பிய பக்கமலை என்றது காண்க. ஆரம் - சந்தனம். கடுப்ப - ஒப்ப. வேனிலான் - கோடைக்கண். தண்ணியள் - கமழுந் தண்மணமுடையள். கமழ்தல் அதனியல்பாதலாற் கூறானா யினான். இவ்வாறே தாமரைக்குக் கமழ்தல் கூறாமை காண்க. ஆரந் தண்ணிது கமழும் (அகம். 218) என்ப. பனி - பனிக்கண். வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி - ஞாயிற்றின் குவிந்த கதிர்கள் சுருங்குதலாற் குவிந்து. கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின் (கலி. 134) என்புழிக் காண்க. தொகுப்ப - சுருங்க. விரிப்பி னகலும் தொகுப்பி னெஞ்சும் (புறம். 53) என்பதனா னுணர்க. வெயிற் பொதிந்த ஐயென அலங்கு தாமரை உள்ளகத்தன்ன - ஞாயிற்றின் வெயிலைப் புறம் விடாதுவைத்த அழகிதாக அசையும் தாமரை மலரின் உள்ளிடம் போன்ற. சிறு வெம்மையள் - மிகாத வெப்பமுடையவள் ஆவள் என்றவாறு. பனியிற் சிறுவெம்மையள் என்றதனால் வேனிலிற் பெருந்தண்ணியள் என்று கொள்ளவைத்தானாம். பொதி யிற்கு ஆரம் போலத் தாமரையும் பொதியிற் சுனையிற் பூத்ததாகக் கொள்க. நூலுள்ளே, பொதியில் வேங்கையுங் காந்தளும் நாறி, ஆம்பல் மலரினுந் தான் தண்ணியளே (84) எனப் பொதியிலில் ஆம்பல் கூறுதல் காண்க. குறிஞ்சிப் பாட்டிற் கபிலர் சிலம்பில் முட்டாட்டாமரை (குறிஞ்சி : 80) கூறுதல் காண்க. உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே (தொல். பொருள். அகத். 13) என்பதனாலிது கொள்க. இச் சூருடையடுக்கத் தாஅம் கடுப்ப வேனிலானே தண்ணியள் எனப் பாடங் கொள்வாரும் உண்டு. இதனான் வேனிலிற் கமழ்ந்து தண்ணிய தாய் இன்பஞ் செய்வதும், பனியிற் கமழ்ந்து சிறு வெம்மைத்தாய் இன்பஞ் செய்வதும் ஆகிய ஓரரிய பொருள் இவளன்றி யாண்டு மில்லாமை யான், இவளைப் பிரிந்து வாரேன் வாழிய நெஞ்சே எனச் செலவழுங்கினான் என்க. உயர்ந்த பொருள்களான ஆரமும் தாமரையும் உவமையாக்கி அவ்விரண்டின் உயர்ந்த தன் மையும் இவ்வொருத்திபாலே உண்மை காட்டி, அவற்றைப் பிரியும் காலத்தும் இவளைப் பிரிதற்காகாதவாறு குறிப்பிற் கொள்ளவைத்தானாம். ஆரமும் தாமரையும் மக்கள் வேண்டாத அமயம் உண்டென்பது, வடவர் தந்த வான்கேழ் வட்டந், தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக், கூந்தன் மகளிர் கோதை புனையார் (நெடுநல். அடி 51-53) என வருதலான் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். அச் சாந்தும் பூவும் துறக்கும் பனி வாடையிலும் இவள் சிறுவெம்மையளாய் இன்பஞ் செய்தலாற் பிரியமாட்டாமை விளக்கினான். தாமரையுள்ளகத்து வெம்மையுண்மை மாசறு திருமகள் மலர்புகுந்தாயினும் புறவிதழ்ப் புதவடைத் ததன்வெதுப் புறுக்கவும் (கல்லாடம் 77) என்பதனான் அறிக. மோசி கொற்றனார் 377. மலரே ருண்கண் மாணலந் தொலைய வளையேர் 1 மென்றோண் ஞெகிழ்ந்ததன் 2 றலையு மரற்றா 3 கின்றே தோழியரற் 4 றலையே அறிதற் 5 கமையா நாடனொடு செய்து கொண்டதோர் சிறுநன் னட்பே. 6 (எ-து) வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து கூறியது. (வி) மலரேர் உண்கண் - குவளை மலர் அழகுண்டற் குரிய கண்களின். மாண்நலந் தொலைய - மாட்சிமைப்பட்ட நலந் தொலையாநிற்க. வளையேர் மென்தோள் - இட்ட வளைகட்கு அழகு செய்யுந் தோள்கள். ஞெகிழ்ந்ததன் தலையும் - அவ் வளைகள் கழல மெலிந்ததன் மேலும். அமையாநாடனொடு செய்து கொண்டதோர் சிறுநன் நட்பு - நாம் அமைந்தவாறு தானமை விலாத நாடனொடு அன்பு செய்து பெற்ற சிறு பேதைக்கு நன்மையான நட்பினை ஊரார் அறிதற்கு. அரற்று ஆகின்று - அறிதற் பொருட்டு அவனைக் குறைகூறி வருந்தல் ஆயினது. ஆதலால் தோழி அரற்றலை - தோழி அவனைக் குறை கூறி வருந்தற்க. என்றவாறு. நம் வினைப்பயன் என்றிருக்க என்பது எச்சம். அனைத்தாற் றோழிநந் தொல்வினைப் பயனே (அகம். 243) எனக் கற்பின் வருதல் போல ஈண்டுங் கொள்க. கண் மாண்நலந் தொலைந்து தோள் நெகிழ்தலை நாடன் சிறு நன்னட்பின் விளைவு ஊரார்க்கு அறிதற்கு ஆகா நிற்கவும் அதன் மேலும் வாயானும் அரற்றுதல் அறிதற்கு ஆயினது தெரிவையாதலால் அரற்றலை என்றாள் என்க. அழுங்கல் மூதூரலரெடுத் தரற்ற ... ... அழாஅ முறைதலு முரியம் (அகம். 113) என வருதல் காண்க. அமையா நாடன் என்பது காதலர் அமைவிலராகுதல் நோமென் னெஞ்சே (4) என்புழிப் போல வந்தது. முதலில் அமைந்தவாறு பின் அமையாத நாடன் எனினுமமையும். நலந் தொலைந்த கண்ணும் நெகிழ்ந்த தோளும் அறிவித்தல். நயந்தோர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாருங் கண் (குறள். 1132) எனவும், கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியொடு தொல்கவின் வாடிய தோள் (குறள். 1135) எனவும் வருவன கொண்டுணர்க. இனி ஆற்றாகின்றே தோழி யாற்றலையே என்பது பாட மெனின் தோழி நீ ஆற்றுகின்றாயில்லை. இவ்வாற்றாமை தோள் ஞெகிழ்ந்ததன்றலையும் நாடனொடு செய்து கொண்ட சிறு நட்பினை அறிதற்கு வலியாயினது என்றுரைக்க. ஆற்று - வலி. ஆற்றறுத்தான் (கலி. 144) என்புழி நச்சினார்க்கினியர் என் வலியை அறுத்தான் எனப் பொருள் கூறியது கண்டு உணர்க. செய்து கொண்ட நட்பு என்றது தான் அவன்கண் நட்புச் செய்து அவனின்று தானும் நட்புப் பெற்றதைக் குறித்தது. நாடனொடு தானே செய்து கொண்ட நட்பாதலின் ஊர் அறிதற்கு நாணி உரைத்தாள். செய்ததுங் கொண்டதும் ஒத்த நட்பாதலின் ஓர் நட்பென்றாள். அரற்று - அவன் திறத்துப் பலவுங்கூறி வருந்திக் கூறுதல். அரற்று அழுகையன்றிப் பலவுஞ் சொல்லித் தானே கூறுதல் என்பர் பேராசிரியர் (தொல். மெய்ப். 12). இனி அறிதற்கு அமையா நாடனொடு செய்து கொண்ட தோர் சிறுநன்னட்பு ஆற்று ஆகின்று என்பதும் ஆம். நட்பு இவை பொறுத்தி நாம் ஆற்றியிருத்தற்கு வலியாகின்று. அங்ஙனம் ஆகவும் தோழி நீ ஆற்றலை என்றாளென்க. எய்தற்கமையா நாடனொடு என்பதும் பாடம். கயமனார் 378. ஞாயிறு காயாது 1 மரநிழற் பட்டு 2 மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த் தண்மழை தலையின் றாக 3 நந்நீத்துச் 4 சுடர்வாய் 1 நெடுவேற் காளையொடு மடமா 2 வரிவை போகிய சுரனே. 3 எ-து மகட்போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது. (வி) எல்லிப் போது வழங்காமை முன்னினிதே (இனியவை நாற்பது 34:1) என்பதனால் ஞாயிறு ஒளி செய்து காயாத அளவே வேண்டினாள். சுரனில் நிழன் மரமரிதா தலின் மரநிழலுண்டாகி என்றாள். நிழலில்லாமரம் ஆண்டுக் கூறுதல் காண்க. இலையின் மராஅத் தெவ்வந் தாங்கி (பொருநராற்றுப்படை 50) என்ப. மலைமுதற் சிறு நெறி - மலையடிச் சிறுவழி. சிறுநெறி - புகும் ஊர் சேய்த்தாகாது அளவிற் சிறியதாகிய வழி என்றவாறு. மணன் மிகத் தாய் - நடக்குங் காற்கு மெத்தென மணல்கள் மிகப் பரந்து. தண்மழை தலையின்றாக - குளிர் மழை பெய்ததாகுக. கீழும் மேலும் தண்ணிதாதற்கும் பருகற்கும் மழை பெய்ததாகுக என்றாள். சுரனில் மலைமுதல் நெறியாதலாற் பரல் வருத்தாது மணல் வேண்டினாள். ஞாயிறு காயாத் தன்மையாற் சுடுமணலாகாமை யுணரப்படும். மலைமுதற் சிறுநெறியாதற் கேற்ப நறுமணல் மிகப் பரந்து என்றாள் என்பதும் ஒன்று. பாலை நிலனே தன்னியற்கையின் மாறி இனிதாக வேண்டுதலிற் தெய்வத்திற்குப் பராஅயதாயிற்று. சுரன் ஞாயிறு காயாது என்றதனாற் பாலை தன்னியல்பு மாறிக் குளிரவும், மரநிழற்பட்டு என்றதனா லதுவே காடாகவும் மலைமுதற் சிறுநெறி என்றதனால் அது குறிஞ்சியாகவும் மணன் மிகத்தாஅய் என்றதனால் அதுவே பெருமணலுலகமாகிய நெய்தலாகவும் தண்மழை தலையினது என்பதனால் இந்திரன் அருள மழைவாய்த்த தீம்புனலுலகமாகிய மருதமும் ஆகவும் பராவிய வாறாம். நந்நீத்து - அன்னையும் அத்தனும் அவனாதலான் நாம் இருந்துழி வெதும்பத் தள்ளி. ஆறலைகள்வரினின்று காக்க வல்லவன் என்றற்கு வேற்காளை என்றாள். சுடர்வேல் வாய் வேல் நெடுவேல் எனக் கூட்டியுரைக்க. வாய்வேல் - வெற்றி தப்பாதவேல். மடமா அரிவை - ஒரு காளையை நம்பி நம் நீத்த மடமையும், உடனே போதலால் அழியாத மாமையும் உடைய அரிவை; காளையோடு போகிய சுரன் மழை தலையின்றாக என்க. காயாமைக்கு ஞாயிற்றையும் மரம் நிழற்படுத்தற்கு மாயோனையும் மலைமுதற் சிறுநெறியாதற்குச் சேயோனை யும் மணன் மிகப்பரத்தற்கு வருணனையும் தண் மழை தலையற்கு வேந்தனையும் நினைந்து பராவினாள் என்பதுமாம். ஓமை நீடிய யுலவை நீளிடை, மணியணி பலகை மாக்காழ் நெடுவேற் றுணிவுடை யுள்ளமொடு துதைந்த முன்பி, னறியாத் தேயத் தருஞ்சுர மடுத்த, சிறியோற் கொத்தவென் பெருமடத் தகுவி (அகம். 369) என்பது காண்க. சிறுமுதுக் குறைவி சிலம்பார் சீறடி, வல்லகொல் செல்லத் தாமே (அகம். 17) என்று செவிலி இவள் செல்லுழி இத்தனையும் வேண்டினாள். 379. இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப் பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கினொடு 1 கண்ணகன் மதுத்துளி 2 பெறூஉ நாடன் அறிவுகாழ்க் 3 கொள்ளு மளவைச் செறிதொடி 4 எம்மில் 5 வருகுவை நீயெனப் பொம்ம லோதி நீவி யோனே. (எ-து) நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தொடு நின்றது. (வி) குன்றத்து - மலையில். பழங்குழி யகழ்ந்த கானவன் - முன் ஒரு கால் தான் அகழ்ந்து வைத்த உரிமை கொண்ட பழைய குழியைத் தோண்டிய குறவன், குழி முதலில் அகழ்ந்தவற்குரித்தாதலும் அதனைப் பிறர் அகழாமையும் மலைநில வழக்கென்க. கிழங்கின் - கிழங்கினொடு. நேர் - அக் கிழங்கொத்த பருமனுடைய. கண்அகல் - இடம் அகன்ற. மதுத்துளி பெறூஉம் நாடன் - மதுத்துளியெனச் சொல்லப் பட்ட வைடூரிய மணியைக் கொள்ளும் மலைநாடுடைய தலைவன். மதுத்துளி - வைடூரியத்தின் பெயர். இவ்வுண்மை மட்டு ருவவும் (சிலப். ஊர்காண்காதை : 189) என்புழி அடியார்க்கு நல்லார் தேன்றுளி எனச் சொல்லப்பட்ட வைடூரியமும் என எழுதிய உரையானும், பெரும்பற்றப்புலியூர் நம்பியார் மருவு வயிடூரியத்தின் மீது தூய மதுத்துளி மேவிய தொண்டர் வண்ணந்தானே (திருவாலவாயுடையார் திருவிளையாடல் 25-26) எனப் பாடியதனாலும் அறிக. இம் மதுத்துளி என்றும் பாடமே மத்துளி எனவும், அது பின்னர் மத்துணி எனவும், பலபடியாகப் பிழைக்க எழுதப்பட்டுப் பின்னுள்ளாரால் மத்துணி என்பது, எழுத்து இடம் பிறழ்தலாகக் கொண்டு தூமணி என வரைதலாயிற்றென் றுணர்க. வள்ளி வாரிய குழியினின் வளர்பொன்னும் வயிரமு மிமைக்கும் (சிந். 1565:1) எனவும் வள்ளி கொள்பவர் கொள்வன மாமணி (கம்ப. நாட்டு.) எனவும் வருவன காண்க. ஆழ்ந்த குழியிற் குழும்பிற் றிருமணி கிளர என்பது (மதுரைக்காஞ்சி 273.)அறிவு காழ்க்கொள்ளும் அளவை - அறிவு முதிர்ச்சியைக் கொள்ளும் அளவில். செறிதொடி - செறிந்த வளையலை யுடையாய். நீ எம்மில் வருகுவை என - நீ எம்மனைக்கண் வருகுவையாவை என்று சொல்லி. பொம்மல் ஓதி - இவள் பெருமையையுடைய கூந்தலை. நீவியோன் - தைவந்தவன். நாடனாகிய நீவியோன் நொதுமலர் வரையக்கருதும் இன்று யாண்டுள்ளானோ என்க. கானவன் அகழ்ந்து வள்ளிக் கிழங்கு முற்றாமை கண்டு வைத்த பழங்குழியிற் பின்னே அக் கிழங்கொடு மதுத்துளி பெறூஉம் நாடன் என்றது இளமையில் இவள் கூந்தல் நீவி வைத்துப் பின்பு அறிவு முதிர்ந்த அளவில் இவளுடன் இல்லறமும் பெறுதற்குரியவன் என்னுங் குறிப்பிற்று. கூந்தல் தொட்டவன் கிழவனாமென அறத்தொடு நின்றாள். அறியாப் பருவந்தொட்டு இவள் கற்புப் போற்றி ஆற்றியிருப்பதும் உடன் கூறியவாறாம். பொம்மல் - பெருமை. பொம்மல் வெம்முலை (சிந். 1492) என்புழிக் காண்க. கண்நகல் மதுத்துளி என்பதுமாம். கண் நகல் மதுத்துளி - கண்ணில் விளங்குதலுடைய வைடூரியம். காழ்க் கொள்ளுதல் - முதிர்தல். ஒண்பொருள் காழ்ப்ப வியற்றி யார்க்கு (குறள். 760) என்புழிக் காண்க. கருவூர்க் கதப்பிள்ளை 380. விசும்புகண் புதையப் பாஅய் 1 வேந்தர் வென்றெறி முரசி னன்2பல முழங்கிப் பெயலா னாதே வானங் காதலர் நனிசேய் நாட்டர் நம்முன் னலரே யாங்குச் செய்வாங்கொ றோழி யீங்கைய 3 வண்ணத் 4 தூய்ம்மல ருதிர முன்னரஃ தென்ப 5 பனிக்கடு நாளே. எ-து பனிப்பருவங் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய, பருவ வரவின்கண் வேறுபடுவாளாயினும் கதுமென ஆற்றுவிப்பது அரிதென்னும் கருத்தினளாய்க் கூதிர்ப் பருவத்துத் தலைமகள் கேட்பத் தனது ஆற்றாமை விளங்கத் தோழி சொல்லியது. (வி) விசும்புகண் புதையப் பாஅய் - ஆகாயம் கண்ணிற்கு மறையப் பரந்து. வென்றெறி வேந்தர் முரசின் நன்பல முழங்கி - வேந்தர் வென்றபின் எல்லார்க்கும் வழங்க எறியும் முரசு போல நன்மை செய்யும் பலவாக முழங்கி. வானம் பெயல் ஆனாது மேகம் பெய்தலொழியாது. மேகம் பெய்தல் ஒழியாத இந்நிலையின் பனிப்பருவங்குறித்துப் பிரிந்தவர் ஆதலான். காதலர் - நம் காதலையுடையவர். நனிசேய் நாட்டார் - மிகச் சேய்த்தாகிய நாட்டிலுள்ளனராவர். நம்மை நினைகிலரு மாவர். ஈங்கைய தூஉத்தூய்ம்மலர் உதிர - ஈங்கையினுள்ள தூய பஞ்சு போன்ற உளையினையுடைய மலர்கள் உதிர்தலான். பனிக் கடுநாள் முன்னரஃ தென்ப - கடும்பனிக் காலம் எதிருள்ளதென்பர். யாங்குச் செய்வாங்கொல் தோழி - தோழீஇ அவரில்லாமல் யாம் என்ன செய்வமோ என்றவாறு. யாங்குச் செய்வாங்கொ றோழி யீங்கைத், துய்யவிழ் பனிமலருதிர வீசித், தொழின் மழை பொழிந்த பானாட் கங்குல் (அகம். 252) என வந்தது காண்க. மாரி யீங்கை (அகம். 75) என்பதனால் ஈங்கை மாரிக்குப் பூத்துக் கூதிர்க்கு உதிர்வதாயின, ஈங்கைத் துய்ம்மலர் உதிர்தலாற் கடும்பனி முன்னரஃதென்று தெரிந்து கூறுவர் என்றாள். அஃது அவர் குறித்த பருவமாதலின் அவர் முன்னலராய்ச் சேய்நாட்டா ராயின் யாம் என்ன செய்வாம் என்றாளாகக் கொள்க. ஆற்றுவிப்பது அரிதென்னுங் கருத்தினளாய்த் தனது ஆற்றாமை விளங்கத் தோழி கூறியதெனத் துறையுட் கூறுதல் காண்க. துறையுட் கூதிர்ப்பருவங் கூறியது ஈங்கைத் துய்ம்மலர் உதிர்தல் பற்றி என்று கொள்க. முன்னர்த் தோன்றும் பனிக்கடும் நாளே என்பதூஉம் பாடம். 381. தொல்கவின் றொலைந்து தோணலஞ் சாஅய் அல்ல னெஞ்சமோ டல்கலுந் துஞ்சாது பசலை 1 யாகி 2 விளிவது கொல்லோ வெண்குருகு நரலுந் தண்கமழ் கானற் பூமலி பொதும்பர் நாண்மலர் 3 மயக்கி விலங்குதிரை யுடைதருந் துறைவனோ 4 டிலங்கெயிறு தோன்ற 5 நக்கதன் பயனே. எ-து வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக் கலுறுந் தோழி தலைமகனை இயற்பழித்தது. (வி) வெண்குருகு நரலுந் தண் கானல் - வெள்ளிய குருகுகள் கதறும் குளிர்ச்சியையுடைய கடற்கரை. வெண் குருகு நரல வீசு நுண்பஃ றுவலைய தண்பனி (அகம். 13) கமழ் கானல் - பூமலி பொதும்பராற் கமழ்கின்ற கடற்கரை. பூமலி பொதும்பர் - பொலிவு நிறைந்த பொழில் பொதும்பர் நாள்மலர் மயக்கி - பொழிலிற் காலையுதிர்ந்த மலர்களை மாலையில் மயங்கச் செய்து. விலங்குதிரை - கரையேறாது விலங்குதலைச் செய்யும் அலைகள். உடைதரும் துறை வனோடு - கரையில் மோதிச் சிதறும் துறையையுடையவ னோடு. இலங்கு எயிறு தோன்ற - விளங்கிய பற்கள் தெரிய. நக்கதன் பயன் - நக்கு விளையாடியதன் பயன். விளிவது கொல்லோ - நீ விளிவதுதானோ என்றவாறு. தோள் தொல்கவின் தொலைந்து - தோள் பழைய இயற்கையழகு கெட்டு. நலஞ்சாய் - செயற்கை அழகும் தேய்ந்து. அல்லல் நெஞ்சமொடு - துன்ப உள்ளத்துடன். அல்கலும் - இரவிலும். துஞ்சாது - கண்கள் துயிலாமல். பசலையாகி - உடம்பு பசலையாய். விளிவது கொல்லோ - நீ விளிவதுதானோ என்க. நகுநயமறைத்தல் (தொல். மெய்ப். 13:2) இயல்பாகவும் அவன் செய்த அன்பின் மயங்கி அவன் கூறியதனையே மெய்யென நம்பி எயிறு தோன்ற அவனுடன் நக்கபிழையின் பயன் விளிவது கொல்லோ என்றாளாகக் கொள்க. நக்க எயிற்றில் ஓர் வேறு பாடில்லாமை நினைந்து கூறியவாறு. அவனை அணைந்த தோள்கள் இருவகையழகும் இழந்தன என்றும், அவனை விழைந்த நெஞ்சம் அல்லல் ஆயதென்றும், அவனைக் கண்ட கண்கள் துஞ்சா என்றும், அவன் தழுவிய மெய் பசலையாயதென்றும் கண்டு அவரோடொன்றாகிய உயிர் விளியுமென்று விளிவது கொல்லோ பயன் என்று இயற்பழித்தாளாம். நக்கது பிழையாக நினைதல் நின்னகாப் பிழைத்த தவறோ பெரும்.... மணிமருள் மேனி பொன்னிறங் கொளலே (அகம். 156) என்பதனால் உணர்க. எயிறு தோன்ற நக்க பிழையின் பயன் அவ்வெயிற்றின்வேறாகிய தோளும், நெஞ்சும் கண்ணும் மெய்யும் வேறுபடுதலுடன் உயிர் விளிவதோ என்றவாறாம். நம் ஆற்றாமை கருதியன்றே தோழி யிங்ஙனம் இயற்பழித்தாள். இவள் பழியாமல் ஆற்றுவளென்று தலைவி துணிதல் பயனாகும். இஃது ஆற்று விக்கலுறுந் தோழி கூற்றாகத் துறை கூறுதல் காண்க. வெண்குருகு துறைவன் என்றது தான் வருந்தி யழத் தலைவி நலமயங்கி மீள்பவன் என்னுங் குறிப்பிற்று. குறுங்கீரனார் 382. தண்டுளிக் கேற்ற 1 பைங்கொடி முல்லை முகைதலை 2 திறந்த நாற்றம் புதன்மிசைப் பூவமல் 3 தளவமொடு தேங்கமழ்பு கஞல 4 வம்புப் பெய்யுமான் 5 மழையே வம்பன்று 6 காரிது பருவ மாயின் வாரா ரோநங் காத லோரே. (எ-து) பருவவரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி பருவமன்று வம்பென்று வற்புறீஇயது. (வி) மால் மழை வம்புப் பெய்யும் - மான்ற மழை பருவ மில்லாதபடி பெய்யும். இது வம்பன்றாயின் - கார்ப்பருவமாயின். முல்லை நாற்றம் தளவமொடு தேங்கமழ்ந்து நெருங்கிய அளவில் நங் காதலோர் வாராரோ என்றா ளென்க. மால்மழை, `மழையுந் தோழி மான்றுபட்டன்றே (289) என்பதனாலறிக. தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை - தண்மைக்கே தீர்ந்த பசுமையும் துளிக்கெதிர்ந்த கொடியுமுடைமை கூறியவாறு. முகை தலை திறந்த நாற்றம் - முகிழ்தலை அவிழ்ந்த மணம். புதல்மிசைப் பூவமல் தளவமொடு - தூறுகளின் மேற் படர்ந்த மலர் செறிந்த செம்முல்லையுடன். தேங்கமழ் கஞல - தேன் கமழ்ந்து நெருங்கிய அளவில், நங்காதலோர் வாராரோ. நீ அம் மலர்கள் சூட அவை மலருமளவில் வாராரோ என்றவாறு. முல்லை தளவோடு கஞல வாராரோ என்றது, பருவமாயின் அவை சூடாது கழியத் தாழ்க்கார் என்றதாம். வருதற்கு வேறு ஏது வேண்டா, நங்காதலே அமையுமென்று நங்காதலோர் என்றாள். காலந் தப்புமல்லது அவர் சொற்றப்பார் என்பது குறிப்பு. கானங் காரெனக் கூறினும் யானோ தேறேனவர் பொய்வழங்கலரே (21) என்று துணிபவள் தலைவி ஆதலின் அவட்குத் தோழி இவ்வாறு கூறினாள். வம்பும் பெய்யுமன் மழை என்பதூஉம் பாடம். படுமாத்து மோசி கீரனார் 383. நீயுடம் படுதலின் யான்றர வந்து குறிநின் றனனே குன்ற நாடன் இன்றை யளவை சென்றைக் கென்றி 1 கையுங் காலு மொய்வன வொழுகத் 2 தீயுறு தளிரி னடுங்கி யாவது மிலையான் 3 செயற்குரி யதுவே. (எ-து) உடன்போக வருந்துந் தலைமகளை நாணுகெடச் சொல்லியது. (வி) நீயுடம் படுதலின் குன்றநாடன் யான் றரவந்து குறி நின்றனன். நீயுடம் படுதலின் - நீ அவனுடன் போக்குடன் படுதலால், யான்தர வந்து - யான் அழைத்துக் கொணர எய்தி. குறிநின்றனன் - குறியிடத்து நின்னுடன் புறப்பட நின்றான். கையுங் காலும் ஒய்வன ஒழுக - நின் கைகளும், கால்களும் நின்னைச் செலுத்தச் செல்வனவாய் இயலா நிற்கவும், தீயுறு தளிரினடுங்கி - தீயுற்ற தளிரைப் போல நாணத்தால் உள்நடுங்கி. இன்றையளவை சென்றைக்க என்றி - இற்றை எல்லை செல்வதாக என்கிறாய். இந்நிலையில் யான் செயற்குரியது யாவதும் இல்லை. என்றவாறு. நீ செயற்குரியதே உள்ளது என்பது எச்சம். இந்நாணைக் கெடுத்துக் கற்பைக் காப்பதே நீ செயற்கரியது என்று குறிப்பித்தவாறாம். ஒய்தல் - செல்லுதல், கிளையுள் ஒய்வலோ (புறம். 253) என்புழிக் காண்க. கால் இயங்கக் கையும் இயங்கலியல்பாதலின் உடன் கூறினார். நின்னுயிர் நின் மெய்யினை உடன்போக்கிற் செலுத்தா நிற்கவும். அவ்வுயிரினுஞ் சிறந்த கற்பைப் போற்றுதற்கு நாணுக்கெடச் சொல்வதல்லது வேறியான் செயற்குரியதில்லை என்றாளாகக் கொள்க. இக் கருத்தானே துறையுந் நாணுக்கெடச் சொல்லியது என்றது காண்க. கையும் என்றதற்கு ஒய்வன வென்பது எதுகையாய் அமைதலுங் கண்டு பாடத்தின் உண்மையறிக. நாணம் ஒன்றே தடையாவதல்லது பிறவெல்லாம் உடன் போக்கில் ஒருப்பட்டு விரைதல் `நீயுடன்படுதலின் என்றதனால் உய்த்துணர்க. ஒய்வன ஒழுக என்ற உண்மைப் பாடப் பொருளுணரமாட்டாது ஒய்யன ஒடுங்கி, ஒய்வன வழுங்கி எனப் பாடத்தைப் பிழைக்க ஏட்டி னெழுதிவிட்டன ரென்க. நின் கையும் காலும் ஒய்வன ஒழுகா நிற்கவும் இன்றையளவை சென்றைக்க என்றி; இது கேட்டு யான் தீயுறு தளிரினடுங்கிச் செயற்குரியது யாவதுமிலை என்றா ளெனினும் அமையும். யான் தர வந்து அவன் நின்னை உடன் கொண்டு செல்லக் குறி நின்றானாகவும் நீ இன்றையளவை சென்றைக்க என்றி. இதற்கு யான் நடுங்கிச் செயற்குரிய பரிகாரம் யாவதும் இல்லை என்றவாறு. இன்றையளவை சென்றைக்க என்றதனாற் றலைவி மறுத்தமை கொள்வர் நச்சினார்க்கினியர் (தொல்.களவியல். 21:3). ஓரம்போகியார் 384. உழுந்துடைக் கழுதிற் 1 கரும்புடைப் பணைத்தோள் நெடும்பல் கூந்தற் குறுந்தொடி மகளிர் நலனுண்டு துறத்தி யாயின் மிகநன் றம்ம மகிழ்நநின் 2 சூளே. எ-து நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளுறவு நன்றாயிருந்தது என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது. (வி) கரும்புடைப்பணைத்தோள் நெடும்பல் கூந்தற் குறுந் தொடி மகளிர் நலனுண்டு உழுந்துடைக் கழுதிற் றுறத்தியாயின் என்க. நீ எழுதிய கரும்பினையுடைய பெருந்தோளையும் நீ நீவிய நெடும்பல் கூந்தலையும் நீயிட்ட குறுந்தொடிகளையும் உடைய பரத்தையர் நலனை உண்டு உழுத்த மலரையுடைய வண்டு போல அவரை விடுவையாயின். மகிழ்ந - மகிழ்நனே. அம்ம - கேட்பாயாக. நின்சூள் மிக நன்று - அவரைத் தொட்டு உரைத்த நின் சபதம் மிகவும் நல்லதாம் என்றவாறு. சூள் - நும்மைப் பிரியேன் என்று பரத்தையர்க்குத் தெளித்த சூளுறவு. கழுது - வண்டு. அரிய கேசர மறுபதங் கழுதொடு..... வண்டெனப் படுமே (திவாகரம். விலங்கின் பெயர் 18) கழுதே வண்டுங் காவற் பரணும் பேயுமெனவே பேசுமுப் பெயரே என்பது இரேவணச்சித்தர் அகராதி நிகண்டு. தாமரையிற்றேனைத் துய்த்துக் களித்த வண்டு. உழுந்திடைப் புக்கு அதன் மலரின் வாய்வைத்துச் சுவை காணாது மீளுதல் போலத் தலைவியைத் துய்த்தும் மகிழ்ந்த மகிழ்நன் பரத்தையரைச் சுவைத்து இன்புறாது மீளுதல் கருதிக் கூறினாளாம். களவுக் காலத்துத் தலைவியைத் தொட்டு உரைத்த சூள் நன்று என்றும், அதனைத் தப்பி இப்போது கற்புக் காலத்துப் பரத்தையர்க்குத் தெளித்த சூள் மிக நன்று என்றும் தோழி நகை யாடியதாகக் கொள்க. கபிலர் 385. பலவிற் சேர்ந்த பழமா 1 ரினக்கலை சிலைவிற் 2 கானவன் செந்தொடை வெரீஇச் செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல் இருவெதிர் நீடமை தயங்கப் பாயும் பெருவரை யடுக்கத்துக் கிழவோ 3 னென்றும் அன்றை யன்ன நட்பினன் புதுவோர்த் தம்மவிப் 4 பழங்கே ளூரே. 5 (எ-து) வேற்று வரைவு மாற்றியது. (வி) பலவிற் பழமார் சேர்ந்த இனக்கலை - பலாமரத்திற் பழங்களை அருந்த இருக்கும் திரண்ட கூட்டமாகிய முசுக்கலைகள். கானவன் சிலையிற் செந்தொடை வெரீஇ - குறவன் சிலைக்கின்ற வில்லின் நேரான அம்பு தொடுத்தற்கு அஞ்சி. சாரல் இருவெதிர் - மலைச் சாரலிலுள்ள பெரிய திணிமூங்கிலும், நீடு அமை - நீடியகுழன் மூங்கிலும். செருவுறு குதிரையிற் பொங்கித் தயங்கப்பாயும் - போருற்ற குதிரையைப் போல உயரவெழுந் தசையப் பாயும். பெருவரை யடுக்கத்துக் கிழவோன் - பெரிய மலையடுக்குகளை யுடையவன், என்றும் - எந்நாளும். அன்றையன்ன நட்பு இனன் - அவ்வியற்கைப் புணர்ச்சி ஞான்று போன்ற நட் பினையுடைய உற்றவனாவன். இப்பழங்கேளூர் புது வோர்த்து - இப் பழைய சுற்றத்தையுடையவூர் நமக்கு இனன் ஆகாத புதியரை உடையது. அம்ம - கேட்பாயாக என்றவாறு. இனன் - இனம்போன் றினமல்லார் (குறள் 822) இன்னா தினனில்லூர் வாழ்தல் (குறள். 1158) என்புழிப் போலக் கொள்க. பழங்கேள் - தந்தையுந் தாயும் முதலாயி னாரை. இப்போது அவ்வுறவெல்லாம் கிழவோனேயாதலாற் பழங்கேளென்றாள். வெதிர் - திணிமூங்கில் என்பர் அகப்பாட்டுரைகாரர் (அகம். 27) அமை - குழன் மூங்கிலாதல் ஆடமைக் குயின்ற வவிர்துளை மருங்கின் (அகம். 82) என்பதனான் அறிக. கலைபாய்வுழி மூங்கில்கள் வளைந்து பின்னிமிர்தற்குக் குதிரை பொங்குதல் உவமையாகக் கொள்க. விட்ட குதிரை விசைப்பின்னன்ன, விசும்புதோய் பசுங்கழை (74) என வந்தது காண்க. ஆர்கலை என்பதை எதிர் காலமாகக் கொள்க. பலவிற் பழம் அருந்த இருக்கும் கலைகள் கானவன் செந்தொடை ஒலி கேட்ட அளவிற் புறத்தோடி ஒளித்தல் போலத் தலைவியை மணக்க விருக்கும் அயலார்குழு தலைவன் நேரே வரைவொடு வரும் மண முரசொலி கேட்ட அளவில் ஓடி ஒளிக்கும் என்று குறித்தாள் ஆவள். இவ்வழுங்கலூரே என்பதும் பாடம். வெள்ளி வீதியார் 386. வெண்மணல் விரிந்த வீததை கானற் றண்ணந் துறைவன் றணவா வூங்கே வாலிழை மகளிர் விழவணிக் 1 கூட்டும் மாலையோ வறிவேன் மன்னே மாலை நிலம்பரந் தன்ன புன்கணொடு 2 புலம்புடைத் தாகுத 3 லறியேன் யானே. (எ-து) பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்து கூறியது. (வி) வெண்மணல் விரிந்த வீததை கானல் - விளை யாட்டிற் கேற்ற வெள்ளிய மணல் பரந்த பூக்கள் நெருங்கிய கடற்கரைப் பொழிலையுடைய. தண்ணந்துறைவன் - குளிர்ந்த துறையை யுடையவன். தண்ணந்துறைவன் விரிக்கும்வழி விரித்தல் என்பர் வயிரமேக விருத்திகாரர் (நேமிநா. 19-20). தணவா ஊங்கு - என்னை அகலாமுன். வாலிழை மகளிரை விழாவணிக்கண்ணே கணவருடன் சேர்க்கும். மாலையோ அறிவேன் - மாலை யாதலையே தெரிவேன். வாலிழை - தூய மங்கலவணி. மன்னே - துறைவன் தணந்தபின் அதுகழிந்த தேயாம். நிலம்பரந்தன்ன புன் கணொடு - என் மட்டிலன்றி உலகமுழுதும் பரந்தா லொத்த ஒளியின்மையொடு. புலம்புடைத்தாகுதல் - தனிமைத் துன்ப முடையதாதலை. அறியேன் யான் - தெரியேன் யான் என்றவாறு. அறிவேனேல் துறைவனைத் தணவவிடேன் என்பது கருத்து. இது, மாலை நோய் செய்தல் மணந்தா ரகலாத, காலை யறிந்ததிலேன் (குறள். 1226) என்பதனானும் அதற்குப் பரிமேலழகர், அறிந்தேனாயி னவர்பிரிவிற் குடம்படேன் என்பதாம் என உரைத்ததனானும் அறிக. நீயே தணத்தற்குடன்பட்டு ஆற்றாயாகுதல் தகாதென்று வற்புறுக்குந் தோழிக்குத் தலைவி அழிந்து கூறியது இஃதாகக் கொள்க. கங்குல் வெள்ளத்தார் 387. எல்லை கழிய முல்லை மலரக் கதிர்சினந் தணிந்த கையறு மாலையும் 1 இரவரம் 2 பாக நீந்தின மாயின் எவன்கொல் வாழி தோழி கங்குல் வெள்ளங் 3 கடலினும் பெரிதே. (எ-து) பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்து கூறியது. (வி) எல்லை கழிய - பகற்பொழுது கழியாநிற்க. எல்லை - பகல். இரவு மெல்லையும் (மதுரைக்காஞ்சி. 239). முல்லை மலர - முல்லைப் போதுகள் மலரா நிற்க. கதிர் சினந் தணிந்த கையறு மாலையும் - ஞாயிறும் இதன் வெம்மை உள்ள வாறறிந்து தன் வெம்மை தணிதற்குக் காரணமான செயலறவு செய்யும் மாலைக் காலத்தேயும். நோதகக் கொலைகுறித் தன்ன மாலை, துனைதரு போழ்தி னீந்தலோ வரிதே (அகம். 364) என்பதனான் இங்ஙனம் கூறப்பட்டது. மாலையாகிய காலையும்-உம்மை கொடுமையி னுயர்வு தோற்றி நின்றது. இரவரம்பாக நீந்தினமாயின் - இரவு எல்லையாதலாற் கடந்தேமாயின். கங்குல் வெள்ளம் - அவ் விரவாகிய ஊழி வெள்ளம். அம் மாலையாகிய கரைகாணும் கடலினுங் கரையில்லாது பெரியதேயாம். ஆதலான் எவன் கொல் - அந்நீந்திய சொல்லால் என்பயன் கொல் என்றவாறு. மாலை இரவு எல்லையில் தானே கழிதலான் நீந்தினேம் என்று சொல்லப்படுவேமாயின் அஃது கரை காணா இரவாகிய ஊழிவெள்ளத்திற் றள்ளிவொழிவதால் யாம் ஒரு பயனும் எய்தினேம் ஆகேம் என்று எதிரழிந்து கூறினாளால் மாலை சிறுபோதின் இரவு வரவொழியுமென்று வற்புறுத்திய தோழிக்குத் தலைவி கூறியதாமென்க. மாலையை முன்கூறி அதனினும் என்று சுட்டுபவள் கடலினும் என்றது முன் நீந்தினேமாயின் என்பதனால் அம்மாலையைத் தான் கடலாகத் தெரிந்தவாறு குறித்ததாம். வெள்ளம் - ஊழி வெள்ளமாதல், வெள்ள வரம்பினூழி (ஐங். 281) என்பத னான் வெள்ளத்தைத் தன்வரம்பாகவுடைய ஊழி எனக் கூறுதல் காண்க. இர-இரா. ஔவையார் 388. நீர்கால் 1 யாத்த நிரையிதழ்க் குவளை கோடை யொற்றினும் 2 வாடா தாகும் கவணை 3 யன்ன பூட்டுப்பொரு தசா வா 4 உமணெருத் 5 தொழுகைக் கோடுநிரைத் தன்ன 6 முளிசினை 7 பிளக்கு முன்பின் மையின் யானை கைம்மடித் துயவும் கானமு மினியவா நும்மொடு வரினே. (எ-து) தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமையுணர்ந்த தலைமகன் சுரத்து வெம்மையும் தலைமகள் மென்மையும் குறித்துச் செலவு அழுங்கலுறுவானைத் தோழி அழுங் காமற் கூறியது. (வி) நீர்கால் யாத்த - நீர் காம்பைப் பிணித்த. நிரை இதழ்க் குவளை - நிரைத்த இதழ்களையுடைய குவளை. கோடை ஒற்றினும் வாடாதாகும் - மேல்காற்று மோதினும் சாம்பாது வளரும். வாடாமைக்கு நீர்கால் யாத்தது ஏது என்க. செல்சுரன் கோடை சென்றெறியும் இயல்பினதென்பதும். இவள் குவளை போல் மெல்லியல் என்பதும், கோடையினும் அக் குவளையை வாடாது வளர்க்கும் நீர் ஆவீர் நீரென்பதும் தெரிய ஓம்படுத்துச் செலவழுங்காமற் கூறினாளாவள். கவணை - கல்லெறி கவண்கயிறு. அதனை ஒத்த பூட்டு - பூட்டாங்கயிறு. பொருது - பொரப்பட்டு. அசாவா - இளைப் பாறாத. உமணெருத்து ஒழுகைக் கோடு நிரைத்தன்ன - எருது களையுடைய உமணர் சகடத்திற் குத்துக்கொம்பை வரிசை யின் நட்டாற் போன்ற. முளிசினை - முளிந்த மரக்கொம்பு களை. யானை கைம்மடித்து - யானை கையால் வளைத்து. பிளக்கு முன்பு இன்மையின் - மரத்தினின்று பிளந்து கொள் ளும் வலியில்லாமையால். உயவும் கானமும் - வருந்தும் காடுகளும். நும்மொடு வரினே - நும்முடன் வருவாளாயின். இனிய ஆம் - இன்பஞ்செய்வன ஆகும் என்றவாறு. நீர்கால் யாத்த - நீர் மறைத்த என்பதுமாம். வறைகால் யாத்தது (பெரும்பாண். 133) என்புழிக் காண்க. சுடு காற்றாதலிற் கோடையைக் கூறினாள். இலையுதிர்ந்து நேரான சினையாதல் தெரியப் பண்டியிற் குத்துக்கொம்பை உவமித்தாள். இவ்வுண்மைப் பாடம் ஒரு பிரதியிற் காணப்பட்டது. ஒழுகைத்தோடு நிரைத்தன்ன முளிசினை என்பது கொள்வாருமுளர். நும்மொடுவரின் என்று தலைவன் உயர்வு தோன்றக் கூறினாள். பூட்டு - வார்கயிறு எனவும்படும். வார்கயிற் றொழுகை நோன்சுவற் கொளீஇப் பகடுதுறை யேற்றத் துமண் (அகம். 173) கோடை யெற்றினும் என்பதும் பாடம். வேட்ட கண்ணனார் 389. நெய்கனி குறும்பூழ்க் 1 காய மாக ஆர்பதம் பெறுக தோழி யத்தை 2 பெருங்க னாடன் வரைந்தென வவனெதிர் 3 நன்றோ மகனே யென்றனென் 4 நன்றே போலு மென்றுரைத் தோனே. (எ-து) தலைமகன் குற்றேவன் மகனால் வரைவு மலிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. நன்றோ மகனே என்றனென் - குற்றேவன் மகனே வரைவு முயற்சி நல்லதோ என்று ஐயுற்று வினாவினேன். நன்றே என்றுரைத்தோன் - நல்லதே என்று தேற்றத் துரைத்தான் ஆதலால், அவன் எதிர் - அங்ஙனம் உரைத்தவன் கைம்மாறாக. பெருங்கல் நாடன் வரைந்தென - பெருமலை நாடன் நின்னை வரைந்து கொண்டவுடன். குறும்பூழ்க் காயம் - அவனுண்ணும் காடைக்கறி. நெய்கனி ஆக - தேனும் பழமுமாக. தோழி ஆர்பதம் பெறுக - தோழி நின்னால் நிறைந்த வுணவு பெறுவானாக. வரைந்தெனப் பெறுக - பெருங்கல் நாடன் மணந்தவுடன் கணவன் மனையில் நின்னால் முதலில் உயர்ந்த விருந்துணவு பெறுவானாக என்றுரைக்க. மலைநாடன் மனைக்கியையத் தேனுங் கனியுங் கூறினாள். நெய் - தேன். தேன் உயர் விருந்தாதல், தேங்கொள் கொள்ளை...... திருந்து வேலண் ணற்கு விருந்திறை சான்மென (மலைபடு. 319) என வருதலா னறிக. நறவிற் றண்டா மண்டையொடு வரையாப் பெருஞ்சோறு (புறம். 261) என்பது காண்க. நெய்கனி குறும்பூழ் காயமாக என்று பாடங் கொண்டு நெய் கனிந்த காடை கறியாக ஆர்பதம் பெறுக என்பாருமுளர். நெய் கனிந்த குறும்பூழ் வறை என்பது அவர் கருத்தாம். நன்றே போலும் என்பது நடுவினின் றுலக மோம்பனல்லதே போலு மென்றான் (சிந். 211) என்பது போல வந்தது. நன்றே என்ற வாய் தேனுங்கனியும் பெறுக என்பதாம். உறையூர் முதுகொற்றனார் 390. எல்லு மெல்லின்று பாடுங் கேளாய் செல்லா 1 தீமோ சிறுபிடி துணையே வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் 2 திறுத்தென வளையணி நெடுவே லேந்தி மிளைவந்து 3 பெயருந் தண்ணுமைக் 4 குரலே. (எ-து) புணர்ந்துடன் போயினாரை இடைச் சுரத்துக் கண்டார் பொழுது செலவும் பகையுங் காட்டிச் செலவு விலக்கியது. (வி) வேற்றுமுனை - வேறுபட்ட பகைப்புலத்தவர். வெம்மையின் - தமக்கியல்பாகிய கொடுமையால். சாத்துவந் திறுத்தென - வணிகர்திரள் வந்து வழியிற் றங்கிற்றாக எண்ணி. வளையணி நெடுவே லேந்தி - வளையம் அணிந்த நெடிய வேலைத் தாங்கி. மிளைவந்து பெயரும் - எம் காவற்காடுவரை வந்து காணாது பெயர்தலின். எழும்பூசல் தண்ணுமையின் குரலாகிய, பாடுங்கேளாய் - ஓசையும் கேட்பாயாக. எல்லு மெல்லின்று - பகற் பொழுதும் இருண்டு சென்றது. இதனால் சிறுபிடி துணையே - இளம்பிடி போன்ற இவள் துணையாக. செல்லாதீமோ - போகாதே கொள் என்றாரென்க. மிளை - ஈண்டுப் பாலை வழிய காவற்காடு. அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கு, முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும், வில்லுடை வைப்பின் வியன்காடு (பெரும்பாண். 80-82) இதனால் இக் காவற்காட் டியல்புணர்க. இக் காவற் காட்டாற் கூறிய திஃதென்க. சாத்து வந்து இறுத்ததென் றெண்ணி வேற்றுமுனை வேலேந்தி மிளை வந்து பெயருந் தண்ணுமைக் குரலாகிய பாடுங் கேளாய் எல்லுமெல்லின்று சிறுபிடிதுணையே செல்லாதீமோ என்க. சிறுபிடி துணையே என்றதனால் நின்னைக் களிறாக அறிந்தேம் என்பது கருத்து. நீ வெல்வையேனும் இவள் அஞ்சுவள் என்பது குறிப்பு. நீ சிறுபிடிக்கு உதவுவாயோ, ஆறலை கள்வரோடு பொருவாயோ அறிகிலேம்; இரண்டும் ஆற்றுதல் அருமைத்தென்று குறித்தார் என்பதுமாம். ஆய மன்னவர்க் கல்லை யெற்கல்லையால் (கம்ப. உருக்காட்டு) என்றார் கம்ப நாடரும். இறுத்ததென என்பது இறுத்தென எனத் திரிந்தது. வேற்றுமுனை தன் வெம்மையினால் சாத்து வந்திறுத் தென வேலேந்திச் சாத்தைக் காணாது மிளைவந்து பெயருந் தண்ணுமைக்குரல் பாடுங் கேளாய் என்றவாறு. இப் பொருட்கு மிளை - நிரையாம். நிரையின் வந்து நிரை யொடு பெயருந் தண்ணுமைக்குரல் என்க. மிளைசூள் கோவலர் (மலைபடுகடாம் 409) என்புழி மிளைநிரை என்றார் நச்சினார்க்கினியர். இதனாலித் தண்ணுமை சேக்கோளறை யுந்தண்ணுமை என்றவாறு. வேட்டக் கள்வர் விசியுறு கருட்கட், சேக்கோ ளறையுந் தண்ணுமை, கேட்குநர் கொல் (அகம். 63) என வருதல் காண்க. பொன்மணியார் 391. உவரி யொருத்த 1 லுழாது 2 மடியப் புகரி புழுங்கிய புயனீங்கு 3 புறவிற் கடிதிடி யுருமிற் பாம்புபை யவிய 4 விடியொடு மயங்கி யினிதுவீழ்ந் தன்றே வீழ்ந்த மாமழை தழீஇப் 5 பிரிந்தோர் கையற 6 வந்த பையுண் மாலைப் பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞை தாஅநீர் நனந்தலை புலம்பக் கூஉந் 7 தோழி பெரும்பே தையே. எ-து பிரிவிடைப் பருவவரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து சொல்லியது. (வி) ஒருத்தல் உழாது - எருதுகள் உழாமையால். உவரி - கொட்டிலில் வினையற்று நிற்றலை வெறுத்து. மடிய - சோம்ப. புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவின் - புள்ளிமான்கள் புழுங்க மேகம் பெயல் நீங்கிய காட்டில். கடிது இடியுருமின் - கடிதாக இடிக்கும் இடியினால். பாம்பு பை அவிய - பாம்புகள் படம் அடங்கிக்கிடக்க. விடியொடு மயங்கி - இன்று விடியலொடு பெய்யும் பருவமறியாது மயங்கி. இனிது வீழ்ந்தன்று மாமழை - எப்படியும் உழவிற்கு இனியதாகத் தாழ்ந்தது. வீழ்ந்தமாமழை தழீஇய - அவ்வாறு தாழ்ந்த கரிய மழையைப் பின்பற்றி. பிரிந்தோர் கையறவந்த பையுண் மாலை - கணவரைப் பிரிந்தவர் செயலறவெய்திய துன்ப மாலைப் போதில். பூஞ்சினையிருந்த போழ்கண் மஞ்ஞை - அம்மழையாற் பொலிவு பெற்ற கொம்புகளிற் றங்கிய போழ்ந்து கொண்ட கண்களையுடைய மயில்கள். தாஅநீர் நனந்தலை புலம்ப - பரக்கும் நீரினையுடைய அகன்ற இடங்களில் இரங்க. பெரும் பேதைய கூஉம் - பெரிய பேதைமையுடையவாதலால் கூப்பிடும் என்றவாறு. பாம்புபை அவிய - பாம்புபை யவிந்தது போலக் கூம்பிக், கொண்டலிற் சிதைந்த வொண் செங்காந்தள் (185) என்பதனாற் பையவிதல் படமடங்குதலாத லறிக. பாம்பு பையவிய என்புழிப் பைபோலவிய என்பதுமாம். நிதியஞ் சொரிந்த நீவி போலப், பாம்பூன் றேம்பும் (அகம். 313) என்பதனாலறிக. ஈண்டு நீவி - பை. விடி - விடியல் என்பது விடிபக லிரவென் றறிவரிதாய் (பெரிய திருமொழி 4-10:8) என்பதனா னறிக. விடியல் மழை வீழ்தலே உழவிற்கினிதாதல் பேருறை தலைஇய பெரும்புலர் வைகறை, ஏரிடம் படுத்த விருமறுப் பூழி, புறம்மாறு பெற்ற பூவலீரத் தூன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால், வித்திய மருங்கின் விதைபல நாறி (அகம். 194) என்பதனான் அறியப்படும். மயங்கி வீழ்ந்தன்று என்றாள். பருவமல்லாமல் வீழ்தல் குறித்து. வீழ்ந்த மாமழை தழீஇவந்த மாலை என்றதனாலும், இது வெங்கதிர் காயும் விடியலில் வீழ்ந்த மழையாதலுணரப்படும், விடியலில் மயங்கி வீழ்ந்தது. மழைக்குப் பருவமென்று மஞ்ஞை மாலையிற் கூவும் ஆதலாற் பெரும் பேதைய எனி னுமமையும். தலைவி அவர் குறித்த பருவமல்லாமை யெண்ணி அழிந்து கூறினாளென்பதாம். போழ்கண் மஞ்ஞை என்பது கண்களைச் சிறையிற் போழ்ந்து வைத்துக் கொண்ட மயில் என்றதாம். உவர்த்தல்-வெறுத்தல் உவரா வீகை (புறம். 201) என்பது காண்க. தும்பிசேர் கீரனார் 392. அம்ம வாழியோ மணிச்சிறைத் 1 தும்பி நன்மொழிக் கச்ச மில்லை யவர்நாட் 2 டண்ண 3 னெடுவரைச் சேறி யாயிற் கடவை 4 மிடைந்த துடவையஞ் 5 சிறுதினைத் துளரெறி 6 நுண்டுகட் களைஞர் தங்கை தமரிற் 7 றீரா ளென்மோ வரசர் நிரைசெல னிண்டோல் 8 போலப் பிரசந் தூங்கு மலைகிழ வோர்க்கே. 9 (எ-து) வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. (வி) மணிச் சிறைத்தும்பி - நீலமணி போன்ற நிறத்தை யுடைய. அகம் சிறைத் தும்பியே. அம்ம - கேட்பாயாக. வாழியோ - இது கேட்பின் நீ வாழி. நன்மொழிக்கு அச்சம் இல்லை - நன்மையைத் தரும் சொல்லைக் கூறற்கண் அஞ்சுவது யார்க்குமில்லையாம். அவர் நாட்டு அண்ணல் நெடுவரைச் சேறி - அவர் நாட்டிடைத் தலைமையான நெடிய மலைக்கட் செல்லுதி. ஆயின் - அங்ஙனம் ஆயின். கடவை - இங்ஙனம் சொல்லக் கடவை. பொருட் சிறப்பும் துடவைக்கு எதுகை ஆதலும் நோக்கி இதுவே பாடமாதலுணர்க. நெடுவரைச் சேறியாயிற் கடவை என்றது பிரசந் தூங்கு மலையாதலான் அவ்வரையிற்றேன் வைத்தற்கு நீ செல்வது இன்றியமையாத தாகும். அங்ஙனமாயின் அம்மலை கிழவோர்க்கு இந் நன்மொழி கடவை என்றாளென்க. பிரசந் தூங்கு மலை கிழவோர்க்கு - தேனடைகள் எடுக்கப்படாமல் தொங்கும் மலையுரிமையுடையார்க்கு. துடவையஞ் சிறுதினை மிடைந்த துளரெறி நுண்டுகட் களைஞர் தங்கை - தந்தை தோட்டத்து அழகிய சிறுதினைக்கண் நெருங்கி முளைத்த பிறவற்றைக் களைக்கொட்டாலெறிந்ததனால் மெய்யிலுண்டாகிய நுண்ணிய பூழியோடு களைதற்குரியராகிய தமையன் மார்க்குத் தங்கை. தமர் அரசர் நிரைசெயற்றிண்டோல் போல - தமராயுள்ள அரசரைக் காத்து நிரையாகச் சூழ்ந்து செல்லற்குரிய திண்ணிய தோற்கட்குப் படை போலுதலால், இற்றீராள் என்மோ - இல்லை விட்டுப் புறநீங்கமாட்டா ளென்று சொல்லுவாயாக. தோற்கடகு காக்குந் தமர்க்கு உவமிக்கப்பட்டது. இது சிலைவிசை யடக்கிய மூரி வெண்டோ லனைய பண்பிற் றானை மன்ன ரினியா ருளரே (பதிற். 45) என வரும். நல்லுரையாளர் தோலனைய பண்பு என்றது தான் அம்பு படிற் றளராது பிறர்க்கு அரணமாகும் தோற்கடகு போன்ற பண்பு என்றவாறு எனவுரைத்ததனா லுணரலாம். “மன்னர், கழிப்பிணிக் கறைத்தோல் நிரை (அகம். 67) என்பதனால் தோல்நிரை கடகுக்காரர் வரிசையாதலுணரலாம். தமர் தோல் போலாகத் தங்கை இற்றீராள் என்க. பிரசந் தூங்குமலை என்பது பிரசந்தூங்குஞ் சேட்சிமை வரை (அகம். 242) என்புழிப் போல உவமையின்றி வந்தது. தும்பி சேறற்கு இயைபு தோன்றக் கூறியதாகும். இற்றீராள் என்றது இல்நீங்கிக் குறியிடம் புகமாட்டாள் என்று தலைவி இற்செறிக்கப்பட்டவாறு கூறியதாம். மணி - மணி நிறம். காந்த ளூதிய மணிநிறத்தும்பி (நற். 17) என்ப. தமரினின்று நீங்க இயலாமை என்மோ அத் தமர் நிரைசெலல் வெண்டோல் போலா நிற்க எனக் கொள்ளினும் அமையும். பரணர் 393. மயங்குமலர்க் கோதை குழைய மகிழ்நன் முயங்கிய நாடவச் சிலவே யலரே கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூட் பாண்டியன் வினைவ 1 லதிகன் களிறொடு பட்ட ஞான்றை 2 ஒளிறுவாட் கொங்க ரார்ப்பினும் பெரிதே. (எ-து) தலைமகன் சிறைப்புறமாகத் தோழி அலர் மலிவுரைத்து வரைவுகடாயது. (வி) மகிழ்நன் மயங்குமலர்க் கோதை குழைய - மகிழ் செய்யுந் தலைவன் கலந்த மலர்களாலாகிய தண்மாலை வாடும் வண்ணம். முயங்கிய - நின்னை இறுக அணைந்த. நாள்தவச் சிலவே - மிகவும் சில வாகிய நாள்களேயாம். அலரே - அயல்கூறும் பழியேயாயின். கூகைக் கோழி வாகைப் பறந்தலை - கூகைக் கோழி என்று வழங்கிய சொற்றொடராற் பெயர் சிறந்த புலவனுடைய வாகை என்னும் ஊர்ப்புறத்துப் போர்க்களத்தில். பசும்பூட்பாண்டியன் வினைவல் அதிகன் - பசும்பூண் கழற்றாத இளம் பருவத்தே பெரும்போர் வென்றதனாற் பசும்பூட் பாண்டியன் எனப் பெயர் சிறந்த தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காரியத்திற்கு வல்லவனாகத் துப்பாய அதிகன். களிறொடு பட்டஞான்றை - ஏறிய களிற்றுடனே மாய்ந்த நாளில். ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே - விளங்கும் வாட்படையையுடைய கொங்குடைய சேரர் ஆரவாரத் தினும் பெரிதேயாயிற்று என்றவாறு. அதிகன் பசும்பூட்பாண்டியற்குத் துப்பாயவன் என்பது, வாய் மொழி நல்லிசை தரூஉ மிரவலர்க் குள்ளிய, நசைபிழைப் பறியாக் கழறொடி யதிகன், கோளற வறியாப் பயங்கெழு பலவின், வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, வில்கெழு தானைப் பசும்பூட் பாண்டியன், களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர (அகம். 162) என்பதனால் உய்த்தறியலாகும். கூகைக் கோழி என்னும் தொடராற் புலவர் பெயர் பெற்றனரென்பது, கூகைக் கோழியானாத் தாழிய பெருங்காடு (புறம். 364) என்பதனானும், அப்புறப்பாட்டுப் பாடியவர் கூகைக் கோழியார் என எழுதப்பட்ட தனானும் உணர்க. இக் கூகைக் கோழியார் இருந்த வாகை என்னும் ஊர் எயினன் என்பவனதாதல், வண்கை யெயினன் வாகை (புறம். 351) என்பதனால் அறியப்படுவது. இங்குக் கூறிய பசும்பூட்பாண்டியற்கு வினைவலனான அதிகன் வாகையூரில் எயினனாற்கொல்லப்பட்டான் என்றும் அது கேட்டுப் பசும்பூட்பாண்டியற்குப் பகையாகிய கொங்காளும் சேரர் ஆர்த்தனர் என்றும் நினைந்து கொள்க. பசும்பூட் பாண்டியன் கொங்குச் சேரரை வென்ற செய்தி, வாடாப்பூவிற் கொங்க ரோட்டி, நாடு பல தந்த பசும்பூட்பாண்டியன் (அகம். 253) என்பதனானும், இடைக்குன்றூர் கிழார் இவனை தந்தை தம்மூ ராங்கட், டெண்கிணை கறங்கச் சென்றாண் டட்டனனே (புறம். 78) என்புழி, தந்தை தம்மூரென்றது தாம் தோற்றிச் செய்த நகரியன்றி உறையூரும் கருவூரு முதலிய ஊர்கள் எனப் பழைய உரைகாரர் விளக்கிய தனானும் அறியலாம். அதிகன் என்னும் பெயர் 162 ஆம் அகப்பாட்டால் அறிந்தது. அதிகனென்று கொண்டு அவனைப் பாண்டியன் வினைவலன் என்பது இமிழ்குரன் முரசி னெழுவரொடு முரணிச், சென்றமர்க் கடந்தநின் னாற்ற றோற்றிய, யன்றும் பாடுநர்க் கரியை (புறம். 99) என்ற தலைமைக்கு இயையாதென்க. அதிகன் வாகை யூரிலில்லாமல் கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைத் தகடூரெறிந்த பெருஞ்சேர விரும்பொறையோடு பொருதுபுண்பட்டவன் என்பது 8ஆம் பதிற்றுப்பத்தாலும், புறப்பாட்டாலும் அறியக் கிடப்பதும் காண்க. இதனால் அதிகனல்லாமல் தம்பகையாகிய பாண்டியற்குத் துப்பாகிய ஒருவன் இறந்தது தெரிந்து கொங்கர் ஆர்த்தனர் என்று கொள்க. பல்வேற் றானை யதிக மானோ, டிருபெரு வேந்தரை யுமுடனிலை வென்று (பதிற்றுப்பத்து 8ம் பத்துப் பதிகம்) என வருவதும் அதிகன் எவர்க்கும் வினைவலன் ஆகாமையைப் புலப்படுத்தல் காண்க. களவிலே தலைவன் கோதை அணிந்து வந்து தலைவியை முயங்கல், அரையுற் றமைந்த ஆர நீவிப், புரையப் பூண்ட கோதை மார்பினை, நல்லகம் வடுக்கொள முயங்கி நீவந் தெல்லினிற் பெயர்த லெனக்குமா ரினிதே (அகம். 100) என்பதனான் அறிக. தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப், பல்லிருங் கூந்தன் மகளிரொல்லா முயக்கிடைக் குழைக வென் றாரே (புற. 73) என்பதனையும் ஈண்டைக்கு இயையநோக்கிக் கொள்க. குழைதல் - குவளல்; வாடலுமாம். மோப்பக் குழையு மனிச்சம் (குறள். 90) என்ப. குறியிறையார் 394 முழந்தா ளிரும்பிடிக் கயந்தலைக் குழவி நறவுமலி பாக்கத்துக் 1 குறமக ளீன்ற குறியிறைப் புதல்வ ரொடு மறுவந் தோடி 2 கூரை முற்றுஞ் சார னாடன் 3 முன்னா ளினிய தாகிப் பின்னாள் அவர்தினை மேஎய்தந் 4 தாங்குப் பகையா கின்றவர் நகைவிளை யாட்டே. (எ-து) வரைவிடையாற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது. (வி) குறங்கு நீளாது முழந்தாள் நீண்ட பெண் யானையினுடைய மென்றலைக் கன்று. நறவுமலி பாக்கத்து - தேன் நிறைந்த குறிச்சியிடத்து, குறமகள் ஈன்ற குறிய இறப்பின் அடியில் விளையாடும் சிறுவருடன் சுழலவந்து ஓடி கூரை முற்றுஞ் சாரல் நாடல். முன்நாள் - தழைக் கூரைகள் முடிவடையு மலைச் சாரலை நாடுதற்கு முந்திய நாள்களில். இனிது ஆகி - விளையாட்டால் இனிமை செய்வ தாகி. பின்னாள் - மலைச் சாரலை நாடிய பிந்திய நாளில். அவர்தினை மேஎய்தந்தாங்கு - அப் புதல்வர் உண்டற்குரிய தினையை மேய்ந்தாற் போல. அவர் நகை விளையாட்டு - நீ காதலித்த அவருடனாய நகை விளையாடல். பகையாகின்று - நினக்குப் பகையானது. குறியிறைக் குரம்பை என்பது (பெரும்பாண். 265) சாரல் - தினைவிளை சாரல். அது தழைக் கூரை முடிந்த இடத்துள்ள தென்பது கருத்து. கூரை வொழுகிய தெருவில் (முல்லைப் பாட்டு 29). மலைச் சாரல் நாடல் இரும்பிடிக் கயந்தலைக் குழவிக்கு இயல்பாதல் காண்க. கன்று தாயை விட்டுப் பாக்கத்துத் தங்குவது தேனசையால் என்பது தெரிய நறவுமலி பாக்கம் என்றாள். குறிய இறப்புக் கியையக் கூரை கூறினாளாம். இனிக் குழவி கூரை முற்று முன்னாள் எனவும், சாரல் நாடல் முன்னாள் எனவுங் கொண்டு குழவி கூரையைச் சூழும் முன்னும், மலைச் சாரலை நாடற்கு முன்னும் உள்ள நாளில் இனிதாகி எனினும் பொருந்தும். நாடல் என்பது நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் (பதிற். 86-7) என வழங்கலான் அறிக. அவர் நகைவிளையாட்டு அவருடன் உள்ள போது நம் உயிர் வாழ்விற்கு ஏதுவாய் இன்பத்தை வளர்த்தது என்றும் அவரில்லாத போது நம் உயிர் வாழ்விற்கு ஏதுவாய இன்பத்தை அழிப்ப தென்றும் உவமையாற் குறித்தாள். 395. நெஞ்சே நிறையொல் லாதே யவரே அன்பின் மையி னருள்பொரு ளென்னார் வன்கண் கொண்டு வலித்துவல் லுநரே அரவுறு மதியிற் 1 கிவணோர் போலக் 2 கனையல 3 ராயினுங் கண்ணினிது படீஇயர் 4 அஞ்சே 5 லென்மரு மில்லை யந்தில் அளிதோ தானே நாணே யாங்கா வாஅது 6 நீங்கப் படினே. (எ-து) வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாகிய கிழத்தி நாம் ஆண்டுச் சேறுமெனத் தோழிக்கு உரைத்தது. (வி) நெஞ்சே - என்னை நிறுத்தற்குரிய நெஞ்சே. நிறை யொல்லாது - என்னை நிறுத்தற்கு இயலாது. அவரே - பிரியுங் காறும் அன்புடையாராகிய அவரே. அருள் பொருள் என்னார் வன்கண்கொண்டு - அருள்தான் உண்மையான பொருள் என்று கருதாதாருடைய வன்கண்மையை மேற் கொண்டு. அன்பின்மையின் வலித்து - என்கண் அன்பில் லாமைக்கண் துணிந்து. வல்லுநர் - இதுகாறும் பிரிந்துவதி யும் வன்மை செய்குநராயினர். வலித்தல் - துணிதல். வேலனு மீர வலித்தான் மறி (ஐந்திணையெழுபது 13) என்புழிக் காண்க. அரவுறு மதியிற்கு - இராகு என்னும் பாம்பு தீண்டிய திங்கட்கு. இவணோர் போல - இங்குள்ள மக்களிடத்துப் போல. கனையலராயினும் - செறிந்த அலர் உணடாயினும். கண் இனிது படீஇயர் அஞ்சேல் - இனிதாகக் கண்துயிலுக. அஞ்சாதே கொள். என்மரும் இல்லை - என்று வாயாற் சொல்லுவாரும் ஈங்கு இல்லை யாம், கண்ணினிது படீஇயர், அஞ்சேல் என்று சொல்வதே. இங்ஙனம் சொல்வதற்கு ஏது என்னென்று வினாவப்பட்டு அலரை உண்டாக்கு மென்பது கருதி கனையலராயினு மென்றாள். வரைவிடை வைத்துப் பிரிதலிற் களவாதல் உணர்க. அவ்வலர் இரவில் இங்குறை எல்லாராலும் நன்கு அறியப்படுதற்கு அரவுறு மதியிற்கிவணோர் போல என்றாள். இங்ஙனம் அலர் மன்னுதல், திங்களைப் பாம்பு கொண்டற்று (குறள். 1146) என ஆளப்படுதலான் உணர்க. இதனால் இன்னாது இன்னில்லூர் வாழ்தல் (குறள். 1158). யாம் காவாது நீங்கப்படின் நாண் தான் அளிது - யாம் இங்குக் காக்கப்படாது அவருள்ளுழி நீங்க உடன்படின் நம்முடன் பிறந்த நாண் ஒன்றுதான் இரங்கத்தக்கது. ஆதலால் ஆண்டுச் சேறும் என்றாள். அருள் பொருள் என்பது மென்கட் செல்வஞ் செல்வமென்பதுவே (நற். 210) என்பதனான் அறிக. இயல்பின் வன்கண் உடையரல்லரென்பாள் அருள் பொருள் என்னார் வன்கண் கொண்டு என்றாள். அன்பின்மையின் வலித்து என்றாள். அன்புண்மையே காண ஒழுகியவராதலின், வல்லுநர் என்றாள், பிரிவு பொறாத மென்மையாளர் என்பதே தானறிந்த தென்று. உறுதல் - தீண்டுதல். மதியிற்கு இவணோர் போல என்றது மதியை அவ்வரவினின்று விடுவித்தற்கு அறியாது பாம்பு கொண்டதென்று பழி மட்டும் கூறுமிவணோர் என்றவாறு. அந்தில் - அசைநிலை. நீங்கப்படின் என்றது அங்ஙனம் நீங்கப்படாமை குறித்து நின்றது. கனையலராயினும் என்ற பாடத்தைக் களையல ராயினும் எனவும், களையாராயினும் எனவும் கொண்டாரும் உண்டு. அங்ஙனமாயின் இவணோர் போல என்பதனை இவணோவர் போல எனக் கொள்வது பொருந்தும். அரவுறு மதியிற்குக் களை யாராயினும் இவண் நோவர் அவர் போலக் காம நோயுற்றேற்கு களையாராயினும் நொந்து பழகியர் அஞ்சேல் என்மருமில்லை யென்றுரைக்க. ஈண்டு இவண் நோவர் என்பது பொருந்துதல், அங்கண் மதிய மரவின் வாய்பட்டெனப்பூசல் வாயாப் புலம்பு மனைக் கலங்கி, ஏதின் மாக்கள் நோவர் தோழி (தொல்.பொருள். அகத். 3. நச்.) என்னும் மேற்கோளான் உணரலாம். அரவுறு மதியிற்கு என்பது அரவுறு துயரம் (ஐங். 173) என்புழிப் போல உறுதல் - தீண்டுதல் பொருளில் வந்தது. அரவு நுங்கு மதியிற்கு என்பதூஉம் பாடம். துறையுள் நாம் ஆண்டுச் சேறும் எனக் கூறியது யாம் நீங்கப் படினே என்பது பற்றி யென்றறிக. ஆங்கவர் வதிவயின் என்று கொள்ளின் நாம் சேறும் என்று கூறாரென்க. வழிபடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே (11) என்புழி இங்ஙனம் கூறாமைக் காண்க. யாங்காவாவது நீங்கப்படினே என்ற பாடமும் உண்டு. யாம் நீங்கப்படின் காவா அது நாணே தானே அளிது என்க. இனி இது வரைவிடை வைத்து வரைபொருட் பிரிவாகக் கொள்ளப்படுமாதலின், அன்பின்மையின் - யாம் வைத்த அன்பு தங்கண் இன்மையினால். அருள் பொருளென்னார் - அருள் உண்மைப் பொருளென்று கருதாதாராகிய. நும் ஐயர் உடைய வன்கண் கொண்டு - வரைதற்குப் பெரும்பொருள் வேண்டிய வன்கண்மை பற்றி வலித்து எத்துணைப் பொருள் கொடுத்தும் கொள்வரென்று துணிந்து. அவரே வல்லுநர் - அம்முயற்சியில் அவரே வன்மை செய்குநராவர். யாம்காவா அது நீங்கப்படினே நாண்தான் அளிது; நமது துயரும் தீரும்; நினைவு நிறைவேறும் என்பது எச்சம் எனினும் நன்கியையு மென்க. அருள்பொருள் என்னார் - தலைவியின் தந்தையுந் தமையன்மாரும். அருள்பொருள் என்னார் வன்கண் - வரைபொருள் வேண்டிய வன்கண்மை யாம். சுற்றத்தார் பொருள் வேண்டுதல், தண்டழை விலையென நல்கின் னாடே (ஐங். 147) என்பதனானும் அதற்குப் பழையவுரைகாரர் உலகை வழங்க வேண்டு முள்ளத்தனாட்டை வழங்கினான் என்பதனானும் அறிக. கயமனார் 396. பாலு முண்ணாள் பந்துடன் 1 மேவாள் விளையா டாயமொ 2 டயர்வோ ளினியே எளிதென வுணர்ந்தனள் 3 கொல்லோ முளிசினை 4 ஓமை 5 குத்திய உயர்கோட் டொருத்தல் 6 வேனிற் குன்றத்து வெவ்வரைக் 7 கவாஅன் 8 மழைமுழங்கு கடுங்குர லோர்க்கும் கழை திரங்காரிடை யவனொடு செலவே. 9 (எ-து) மகட்போக்கிய தாய் உரைத்தது. (வி) பசியுந்தாகமும் இரண்டும் ஒருங்கே நீக்க வல்ல உயர்ந்த பாலையும் இல்லத்துத் தனியே உண்ணமாட்டாள். பந்துடன் மேவாள் - தனியே முற்றத்துப் பந்தினை உடன் பொருந்தாள். விளையாடு ஆயமொடு அயர்வோய் - உண்டலையும், மேவலையும் தன்னுடன் விளையாடிய மகளிர் திரளுடன் புரிபவள். கழை திரங்க ஆரிடை அவனொடு செலவு - மூங்கில்கள் வாடியுலரும் அரியவழியில் அவனுடன் போதலை. இனி எளிதென உணர்ந்தனள் கொல் - இப்போது தனக்கு எளிமையதென்று துணிந்தனளோ என்றவாறு. ஆயமோ டயர்வோள் என்றதனாற் றனியே அவை அயராமை பெறப்பட்டது. முளிந்த சினையையுடைய ஓமை மரத்தை நீர் வேட்கையாற் குத்திய உயர்கொம்புடைய களிறு என்றது குத்திய அளவே கூறியதனால் அவ்வோமையில் நீர்த்துளிபெறாத களிறு என்பது குறித்தாள். நீரின்மை தெரிய முளிசினை கூறினாள் என்க. அக் களிறு வேனிற் குன்றத்து வெய்யபாறையையுடைய கவானில் மழை முழங்கு கடுங்குரலோர்க்கும் ஆரிடை என்றது ஓமையில் நீர்பெறாத ஒருத்தல் மழைக்குரல் ஓர்த்து உயிர் தரிக்கும் அரியவழி என்றவாறு. இதனால் ஆண்டுப் பயின்ற வலிய விலங்கும் வாடுதல் குறித்தாள். கழை திரங்கு ஆரிடை என்றதனால் ஆண்டுண்டாகிய ஓரறிவுயிரும் உலர்தல் குறித்தாள். ஆரிடை - இத்தனையினும் வேறாக நடத்தற்கு அரியவழி என்றவாறு. இதனாலே தாரக போடக போக்கிய மெனப்பட்ட எல்லாம் அவனென்று ஆரிடை அவனோடு செலவு துணிந்தனள் என்றதாம். அம்மூவனார் 397. நனைமுதிர் 1 ஞாழற் றினைமரு 2 டிரள்வீ நெய்தன் மாமலர்ப் பெய்தல் 3 போல ஊதை தூற்று முரவுநீர்ச் சேர்ப்ப தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட் டன்னா 4 வென்னுங் குழவி போல இன்னா செயினு மினிதுதலை யளிப்பினும் நின்வரைப் பினளென் 5 றோழி தன்னுறு விழுமங் 6 களைஞரோ விலளே. 7 (எ-து) வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது. (வி) ஞாழலினது நனையாகவே முதிர்கின்ற தினையொத்த திரண்ட பூக்களை, நெய்தல் மாமலர்ப் பெய்தல் போல - நெய்தலாகிய கரிய மலர்களின் வாயிற் பெய்தலைப் போல. ஊதை தூற்றும் - பனிக்காற்றுச் சிதறும். உரவு நீர்ச் சேர்ப்ப - வலிய கடற் சேர்ப்பனே. இடுமணல் தூற்றும் ஊதையும் நின் கடற்கரையில் நெய்தற்பூவின் மென்மை கண்டு அதற்கியைய ஞாழற்றினை மருள் திரள்வீ தூற்றும் என்பதறிவுறுத்தி, நீ இவள் மென்மைக்குத் தக ஒழுகுவாய் என்று குறிப்பித்த வாறாம். இவ்வாறே கொடுமை குறித்து, அடும்பம ருண்டுங் கொடி யுள்புதைந் தொளிப்ப வெண்மணல் விரிக்குந் தண்ணந்துறைவன் கொடியனாயினுமாக (தொல். களவு. சூத். 20 நச். ) என வருதல் காண்க. தாயுடன்று அலைக்கும் காலையும் - ஈன்றவள் சினந்து வருத்தும் பொழுதும். வாய்விட்டு அன்னா என்னும் குழவி போல - வாய்மூடுதல் விடுத்து அன்னையே என அழும் இளமக ஒப்ப. இனிது தலையளிப்பினும் - நீ இனிதாகத் தலையளி செய்தாலும். இன்னாசெயினும் - இன்னாமையைச் செய்தாலும். என்றோழி நின்வரைப்பினள் - என்னுடைய தோழி நின் எல்லை கடவாதுள்ளவளாவள். தன்னுறு விழுமம் களைஞரோ இலள் - நின்னையன்றித் தன்னுடைய மிக்க துன்பத்தைக் களைவாரை நெஞ்சத் தில்லையாவள் என்றவாறு. குழவி போல நின்வரைப்பினள் என்க. இன்னா செயினுந் தன்னுறு விழுமம்களைஞரோவிலள் என இயைவதன்றி இனிதுதலை யளிப்பினும் தன்னுறுவிழுமங் களைஞரோ இலள் என இயையாமையும், தாயுடன்றலைக்குங் காலையும் என இன்னாசெயினும் என்பது ஒன்றற்கே உவமை கூறியதனையும் நோக்கி இப் பொருளுண்மை யறிக. அன்றியும் இனிது தலையளித்தற்கண் நின்வரைப்பினள் என்று காட்டுவது வேண்டாமையும் அறிக. இது வரைவிடை வைத்துப் பிரிதலாதலான். இவன் இவளை இனிது தலையளி செய்து கூடிப் பின்னர் அயர்ப்பன் ஆயின் அது தலையளி செய்த இன்பத்தினும் தவப்பெரிதாகிய துன்பத்தைச் செய்வதாதலாலும் உய்த்துணர்ந்து கொள்க. நின் தலையளியாற் பெற்ற இன்பத்தினும் நின் பிரிவால் ஆகும் துன்பம் மிகப்பெரிதாமென்பது தெரிய `தன்உறு விழுமம் என்றாள். இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற் றுன்ப மதனிற் பெரிது (குறள். 1166) என்பதனையும் அதற்குப் பரிமேலழகர், பெற்ற இன்பத்தோ டொத்து வரின் ஆற்றலாம் இஃததனளவன் றென்பது கருத்து எனவுரைத்ததனையும் நோக்கி உணர்க. படர்க்கையாலும், பன்மையாலும் களைஞர் நின்னிற் பிரியலர் என்பது குறித்தாள். கண்டா ரிகழ்வனவே காதலன்றான் செய்திடினுங், கொண்டானை யல்லா லறியாக் குலமகள் போல் (பெருமாள் திருமொழி 5) என்பதனால் இலள் என்பதற்கு நெஞ்சத்திலள் என்றுரைத்தாம். பாலை பாடிய பெருங்கடுங்கோ 398. தேற்றா 1 மன்றே தோழி தண்ணெனத் தூற்றுந் 2 துவலைத் 3 துயர்கூர் காலைக் கயலே ருண்கட் கனங்குழை மகளிர் கைபுணை 4 யாக நெய்பெய்து மாட்டிய 5 சுடர்துய 6 ரெடுப்பும் புன்கண் மாலை அரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்பு மெய்ம்மலி 7 யுவகையி 8 னெழுதரு. கண்கலு ழுகுபனி 9 யரக்கு 10 வோரே. (எ-து) பிரிவுணர்த்திய தோழி தலைமகன் பிரிந்து வினைமுடித்து வருந்துணையும் ஆற்றியுளராவரென்று உலகின்மேல் வைத்து உரைத் தாட்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. (வி) பெறுதற்கரிய காதலர் வந்தாரென விருந்தயர்ந்து உள்ளம் நிறைந்து உடம்பு மலிந்த மகிழ்ச்சியினால் எழுகின்ற கண்கள் கலுழ்ந்து விழும் நீர்த்துளிகளை இனித் துடைக்க இருப்போரைக் கணவ ரில்லாது தண்ணெனத் தூற்றுந் துவலையாற் றுயர்கூரும் கூதிர்போதிற் றோழி அத் துயர்நீக்கற்குத் தெளியாமன்றே என்றாளென்க. பிரிந்த தலைவர் மாலையில் வந்தால் அவர் வந்தாரென உள்ள மகிழ்ச்சியாலாகும் உவகைக்கண்ணீரைத் துடைத்தற்கு ஆவாய் அல்லது அவர் பிரிந்து துயர்கூரும் கூதிர்க்கு நீ உதவாய் என்று தன் ஆற்றாமை மீதூரச் சொல்லியவாறாம். இங்ஙனம் கொள்ளாது துயர் கூர்காலை மாலைக் காதலர் வந்தென உவகையினெழுதரு கண்பனி அரக்குவோர்த் தேற்றாம் என்று கொள்ளின் உவகைக்கண்ணீர் துடைக்கப் பட வேண்டுவதென்றும், அது துடைப் போரைத் தெளிகிலேம் என்று தலைவி நினைந்தனளாக் கருதப்படுமென்க. கயலேருண்கட் கனங் குழைமகளிர் - கயலொத்த மையுண்ட கண்கள் தொட்ட கனங்குழை மகளிர். கையுறை யாக எல்லாவுலகுந் தொழுஞ் சோதியாகிய தெய்வத்திற்கு. சுடர் - ஆனெய் வார்த்துக் கொளுத்திய விளக்கு. துயி லெடுப் பும் புன்கண்மாலை - உறங்கிய துன்பத்தை எழச்செய்யும் மாலைப்போதில் காதலர் வந்தெனக் கூட்டுக. பகலில் மனையறத்தால் அடங்கிய துயரைத் துயிலெடுப்பு மாலை என்றவாறு. “கட்கனங்குழை, பூங்குழைக் கமர்ந்த ஏந்தெழின் மழைக்கண் (நெடுநல். 38) என்பதனானறிக. கையுறை நெய்பெய்து என்பதனை, விளக்கி னீர்ந்திரி கொளீஇ ... ... கைதொழுது (நெடுநல். 42-43) என்பதனான் உணர்க. பரணர் 399. ஊருண் கேணி யுண்டுறைத் 1 தொக்க பாசி யற்றே பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் 2 பரத்த லானே. (எ-து) வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (வி) ஊருண் கேணி - ஊரார் உண்ணும் கேணி. கேணி என்பது பொய்கை, வாவி, கயம், கிணறு, படு இவற்றின் வேறாய நீர் நிலை. `வண்டிமிர் பொய்கையும் வாவியுங் கயமுங் கேணியுங் கிணறு நீணிலைப் படுவும் (பெருங்கதை 3:3-6) என்பதனானறிக. உண்டுறைத் தொக்க - ஊருண்ணுந் துறையிற் பரந்துகூடிய. பாசியற்று - பாசியின் அத் தன்மைத்து. பசலை காதலர் தொடுந்தொறு நீங்கி விடுந்தொறும் பரத்தலால் கேணிப்பாசிக்கு மொத்தல் காண்க. உண்கேணியிற் பாசி பரத்தல் கண்டால் ஊரார் அதனை நீக்கி நன்னீராக்க விரைந்து முயலுதல் போலத் தொடுந்தொறும் நீங்கி விடுந்தொறும் பரக்கும் என் பசலையைக் கண்டும் அதனை நீக்க முயலாது வரைவு நீட்டித்தல் என்னோ என்றவாறாம். உண்ணும் நீர்க்குப் பாசியாகாத வாறுபோல அவர்துய்க்கும் இம் மெய்க்குப் பசலை யாகாதென்பதும் உடன் உணர்த்தியவாறாம். பசலை பாசியற்று - பசலை பாசிபோல் வெறுக்கும் அத் தன்மைத்து என்பதும் ஆம். உண்டுறைப் பாசியாதலால் ஊராரால் அறியப்படுதல் போல என் பசலையும் எல்லாரானும் தொடுவுழி நீங்கி விடுவுழிப் பரத்தலான் நன்கறியப்படும் என்று உவமையாற் கொள்ளவைத்தாளாம். ஊருண்கேணி எனவும், உண்டுறை எனவும் உவமையிற் கூறற்கு இதுவும் பயனாதலுணர்க. பேயனார் 400. சேயாறு செல்வா 1 மாயி னிடரின்று களைகலங் 2 காமம் பெருந்தோட் கென்று நன்றுபுரிந் தெண்ணிய மனத்தை யாகி முரம்புகண் ணுடைய வேய்க்களரிக் கரம்பை 3 புதுவழிப் படுத்த மதியுடை வலவோய் இன்று 4 தந்தனை தேரோ 5 நோயுழந் 6 துறைவியை நல்க லானே. 7 (எ-து) வினைமுற்றிவந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது. (வி) சேய்மை வழிச் செல்வேமாயின் பெருந்தோட்கு இடரின்று காமம் களைகலம் என்று இருவர் பெருந்தோள் கட்கும் அபாயமில்லாது காமநோய் களைய மாட்டோம் என்று. நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி - இருவர்க்கும் நன்மையை விரும்பி ஆராய்ந்த மனமுடையையாகி. முரம்புகண் உடைய ஏய் - மேடுகள் இடம் உடையும்படி குதிரையை ஏவி. களரிக் கரம்பைப் புதுவழிப்படுத்த - களர்நிலம் உலர்ந்த கரம்பையிற் புதிய குறுக்கு வழியை உண்டாக்கிய. மதியுடை வலவோய் - அறிவுடைய பாகனே. நோயுழந்துறைவியை நல்கலான் - என் பிரிவு நோயான் வருந்தியும் குறித்தவாறு வருவனென்று உறைபவளை அருளலான். தேரோ இன்று தந்தனை - இன்றைக்குத் தேர்ஒன்றோ இங்கு நீ கொணர்ந்து தந்தனை; என் உயிரும் அதனினுஞ் சிறந்த என் வாய்மையுந் தந்தனை என்றவாறு. நாயுழந்துறைவியை நல்கலான் தலைவியைத் தந்தனை என்று கூறியதாகி ஏதுவும் பயனும் ஒன்றாய் வழுவாதல் காண்க. அம்மூவனார் 401. அடும்பி 1 னாய்மலர் 2 விரைஇ நெய்தல் நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல் ஓரை மகளி ரஞ்சி யீர்ஞெண்டு கடலிற் பரிக்குந் 3 துறைவனொ 4 டொருநாள் நக்கு விளை 5 யாடலுங் கடிந்தன் 6 றைதே காம 7 மெய்தோய் நட்பே. (எ-து) வேறுபாடுகண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள் தன்னுள்ளே சொல்லியது. (வி) அடும்பின் ஆய்மலர் - கொடி அடும்பினுடைய ஆய்ந்த பூக்களை ஆய்கொடிப் பாசடும்பு (அகம். 330) என்ப. விரைஇ - விரைவி. நெய்தல் நெடுந்தொடை வேய்ந்த கூந்தல் - நெடிதாகத் தொடுத்த கண்ணியைச் சூடிய கூந்தல், நீர்வார் கூந்தல் என்றது கடலுடனாடுதல் பற்றி. ஓரை மகளிர் அஞ்சி - விளையாடற்குரிய ஆயத்து மகளிரை அஞ்சி, ஈர்ஞெண்டு - குளிர்ஞெண்டு; மணலை ஈரும் ஞெண்டு என்பதுமாம். கடலிற் பரிக்கும் - கடலினுள் விரைந்து செல்லும் துறைவ னொடு என்க. ஞெண்டு மலர்க்கஞ்சி அவன் கடலில் புக்கது போல நாமும் இவ்விற்செறிப்பிற் பலர்க்கு மஞ்சுதலான் அவன்பாற் புகவேண்டுமென்று குறித்தாளாம். துறைவனொடு மெய் தோய் நட்பு - துறைவனொடு களவில் மெய் தோய்ந்த நட்பு. துறைவனொடு ஒரு நாள் நக்க விளையாடலும் கடிந்தன்று - துறைவனொடு ஒரு நாளைக்குப் பலரறிய விளையாடி நகுதலையும் விலக்கியது. காமம் ஐதே - இக் காமம் வியப்புடைத்து. சேது சமத்தான மகாவித்துவான் பாக்ஷா கவிசேகரர இரா. இராகவையங்கார் இயற்றிய குறுந்தொகை விளக்கம். முற்றும் இத்தொகை முடித்தான் பூரிக்கோ, இத் தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர், இத் தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது.****** செய்யுள் முதற்குறிப்பகராதி எண் : (செய்யுள் எண்) அ அகவன் மகளே 23 அஞ்சிலோதி 211 அஞ்சுவ தறியாது 237 அடும்பவி ழணிமலர் 349 அடும்பி னாய்மலர் 401 அணிற்பல் லன்ன 49 அத்தவாகை யமலை 369 அதுகொறோழி 5 அதுவர லன்மையோ 248 அம்மவாழி தோழி காதலர் 104 அம்ம வாழி தோழி காதலர் இன்னே 287 அம்ம வாழி தோழி கொண்கன் 230 அம்ம வாழி தோழி நம்மொடு 134 அம்ம வாழி தோழி நம்மூர்ப் 144 அம்ம வாழி தோழி புன்னை 296 அம்ம வாழி தோழி முன்னின்று 350 அம்ம வாழி தோழி யன்னைக்கு 361 அம்ம வாழி தோழி யாவதும் 77 அம்ம வாழி தோழி யின்றவர் 375 அம்ம வாழியோ 392 அமர்க்க ணாமான் 322 அமிழ்தத் தன்ன 206 அமிழ்த முண்க 201 அமிழ்து பொதி செந்நா 14 அயிரை பரந்த 178 அரிற்பவர்ப்.... நீர்நாய் 364 அரிற்பவர்ப் ... விளைகனி 91 அரும்பற மலர்ந்த 26 அரும்பெற லமிழ்தம் 83 அருவிப் பரப்பின் 100 அருவி யன்ன பருவுறை 271 அருவி வேங்கைப் 90 அருளு மன்பு நீக்கி 20 அல்குறு பொழுதிற் 273 அலர்யாங் கொழிவ 311 அவ்விளிம் புரீஇய 297 அவரே கேடில் 216 அவரோ வாரார் 221 அழிய லாயிழை 143 அளிதோ தானே நாணே 149 அறந்தலைப் பட்ட 209 அறிகரி பொய்த்த 184 அன்னா யிவனோ ரிள 33 ஆ ஆசி றெருவி னாயில் 277 ஆடமை புரையும் 131 ஆம்பற் பூவின் 46 ஆய்வளை நெகிழவு 316 ஆர்கலி மிதித்த 52 ஆர்கலியேற்றொடு 186 ஆர்கலி வெற்பன் 353 இ இடிக்குங்கேளிர் 58 இதுமற்... துனியிடை 181 இதுமற்... முதுநீர்ப் 299 இரண்டறி களவி 312 இருங்கண் ஞாலத் 267 இருடிணிந் தன்ன 123 இல்லோ னின்பங் 120 இலங்குவளை நெகிழச் 125 இலையி லஞ்சினை 254 இவளே, நின்சொற் 81 இவனிவ ளைம்பால் 229 இழையணிந் தியல்வரு 345 இளமை பாரார் 126 இன்றியாண் டையனோ 379 இன்றே சென்று வருவது 189 இன்ன ளாயின ணன்னுதல் 98 இனமயி லகவும் 249 ஈ ஈங்கே வருவர் 192 ஈதலுந் துய்த்தலு 63 உ உடுத்துந் தொடுத்தும் 295 உதுக்கா ணதுவே 191 உமணர் சேந்து கழிந்த 124 உரைத்திசிற் றோழி 302 உவரி யொருத்த 391 உழுந்துடைக் கழுதிற் 384 உள்ளது சிதைப்போர் 283 உள்ளார் கொல்லோ.... யுள்ளியும் 232 உள்ளார் கொல்லோ.... கிள்ளை 67 உள்ளிக்காண்பென் 286 உள்ளினுள்ளம் வேமே 102 உள்ளினெனல்லனோ 99 உறுவளியுளரிய 278 உறைபதியன்றித் 145 ஊ ஊஉ ரலரெழச் 262 ஊருண் கேணி 399 ஊர்க்கு மணித்தே 113 எ எந்தையும் யாயும் 374 எம்மணங்கினவே 53 எல்லாமெவனோ 323 எல்லு மெல்லின்று 390 எல்லை கழிய முல்லை 387 எலுவ சிறாஅ ரேமுறு 129 எவ்வியிழந்த 19 எழின்மிக உடைய 247 எழுதரு மதியம் 315 எற்றோ வாழி தோழி 90 எறிச் சுறாக் கலித்த 318 எறும்பி யளையிற் 12 என்னெனப் படுங்கொல் 194 ஐ ஐயவி யன்ன சிறுவீ 50 ஒ ஒடுங்கீ ரோதி 70 ஒருநாள் வாரல 176 ஒலிவெள் ளருவி 88 ஒறுப்ப வோவலர் 34 ஒன்றே னல்லே 208 ஓ ஓம்புமதி வாழியோ 235 ஓரூர் வாழினுஞ் 231 க கடல்பா டவிந்து 177 கடலங் கான 245 கடலுட னாடியும் 294 கடும்புன றொகுத்த 103 கண்டர வந்த காம 305 கண்டிசின் பாண 359 கண்ணி மருப்பின் 363 கணைக்கோட்டு வாளை 164 கருங்கட் டாக்கலை 69 கருங்கால் வேங்கை 47 கருங்கால் வேம்பி 24 கல்லென் கானத்துக் 179 கலிமழை கெழீஇய 264 கலைகை தொட்ட 342 கவலை கெண்டிய 233 கவலை யாத்த வவல 224 கவவுக் கடுங்குரையள் 132 கழனி மாஅத்து 8 கழிதேர்ந் தசைஇய 203 கழியகாவி குற்றுங் 144 கள்ளிற்கேளி ராத்திரை 293 கறிவள ரடுக்கத் 288 கன்றுதன் பயமுலை 225 கன்று முண்ணாது 27 கா காணினி வாழி தோழி 171 காதல ருழைய ராகப் 41 காந்தள் வேலி யோங்குமலை 76 காந்தளங் கொழுமுகை 265 காமங் கடையிற் 340 காமங் காமமென்ப நினைப்பின் 204 காமங் காமமென்ப... நுணங்கி 136 காமந் தாங்குமதி 290 காம மொழிவ தாயினும் 42 கார்புறந் தந்த 162 காலே பரிதப் பினவே 44 காலையும் பகலும் 32 காலையெழுந்து கடுந்தேர் 45 கானங்கோழிக்கவர் 242 கான மஞ்ஞை யறையீன் 38 கான யானை தோனயந் 79 கான விருப்பை 329 கு குக்கூ வென்றது கோழி 157 குருகு கொளக் குளித்த 127 குருகு மிருவிசும் 260 குரைகடற் றிரையது 128 குவளை நாறுங் 300 குவியிணர்த் தோன்றி 107 குறுந்தாட் கூதளி 60 குறும் படைப் பகழிக் 333 குன்றக் கூகை 153 கூ கூந்தலாம்பன் முழுநெறி 80 கூன் முண் முண்டகக் 52 கே கேட்டிசின் வாழி 30 கேளா ராகுவர் 253 கேளிர் வாழியோ 280 கை கைவளை நெகிழ்தலும் 371 கைவினை மாக்கடஞ் 309 கொ கொங்குதேர் வாழ்க்கை 2 கொடியோர் நல்கா ராயினும் 367 கொடுங்கான் முதலை 324 கொண்க னூர்ந்த 212 கொல்வினைப் பொலிந்த 304 கொன்னூர் துயிலினும் 138 கோ கோட லெதிர்முகைப் 62 கோடீரலங்குவளை நெகிழ நாடொறும் 11 கோடீரிலங்குவளை நெகிழ நாளும் 365 கௌ கெளவை யஞ்சிற் காம 112 சி சிறுவீ ஞாழல் 328 சிறுவெண் காக்கை 334 சிறுவெள் ளரவின் 119 சிறைபனி யுடைந்த 86 சு சுடர்சினந் தணிந்து 195 சுடர்செல் வானம் 234 சுடுபுன மருங்கிற் 291 சுரஞ்செல் யானைக் 169 சுனைப்பூக் குற்றுத் 142 செ செங்களம் படக் 1 செப்பினஞ் செலினே 207 செல்வச் சிறாஅர் 148 செல்வா ரல்லரென் 43 செவ்வரைச் செச்சை 187 செவ்விகொள் வரகின் 282 செறுவர்க் குவகை 336 சென்ற நாட்ட கொன்றை 183 சே சேணோன் மாட்டிய 150 சேயாறு செல்வாம் 400 சேயாறு சென்று 269 சேயுயர் விசும்பி 314 சேரி சேர 298 சேறி ரோவென 268 சேறுஞ்சேறு 325 சோ சோலை வாழைச் 308 ஞா ஞாயிறு காயாது 378 ஞாயிறு பட்ட வகல்வாய் 92 த தச்சன்செய்த சிறுமா 61 தண்கடற் படுதிரை 166 தண்டுளிக் கேற்ற 382 தலைப்புணைக் கொளினே 222 தலையணி யல்கு றாங்கல் 159 தா தாஅ வஞ்சிறை நோப்பறை 172 தாதிற் செய்த தன்பனிப் 48 தாமரை புரையுங் (கடவுள் வாழ்த்து) தாமே செல்ப வாயிற் 348 தாழிரு டுமிய 270 தி திண்டேர் நள்ளி 210 திரிமருப்பிரலை 338 திரிமருப் பெருமை 279 தினைகிளி கடிகெனிற் 217 தீ தீண்டலுமியைவது 272 து துணைத்த தோகைப் 326 துறுக லயலது 36 தே தேற்றா மன்றே 398 தொ தொடி ஞெகிழ்ந் தனவே 239 தொல்கவின் றொலைந்து 381 ந நசைநன் குடையர் 213 நசைபெரி துடையர் 37 நமக்கொன் றுரையா 266 நல்கின் வாழும் 327 நல்லுரை யிகந்து 29 நலத்தகைப் புலைத்தி 330 நள்ளென் றன்றே 6 நறையகில் வயங்கிய 339 நன்னலந் தொலைய 93 நனைமுதிர் ஞாழற் 397 நா நாகுபிடி நயந்த 346 நாணில மன்ற 35 நி நிரைவளை முன்கை 335 நிலத்தினும் பெரிதே 3 நிலந்தொட்டுப் புகாஅர் 130 நிலம்புடை பெயரினும் 373 நிழலான் றவிந்த 356 நினையாய் வாழி தோழி 343 நீ நீகண் டனையோ 75 நீயுடம் படுதலின் 383 நீர்கால் யாத்த 388 நீர்நீ டாடிற் 354 நீர்வார் கண்ணை 22 நு நுதல்பசப் பிவர்ந்து 185 நெ நெஞ்சே நிறையொல் 365 நெடிய திரண்டதோள் 252 நெடுங்கழை திரங்கிய 331 நெடுநீ ராம்பல் 352 நெடுவரை மருங்கிற் 158 நெல்கனி குறும்பூழ் 389 நெய்தற் பரப்பிற் பாவை 114 நெருப்பி னன்ன 160 நெறியிருங் கதுப் பொடு 190 நோ நோமென் னெஞ்சே.... இமை தீய்ப் 4 நோமென் னெஞ்சே... புன்புலத் 202 நோற்றோர் மன்ற. 344 ப படரும் பயப்பயர் 215 பணைத்தோட் குறுமகள் 276 பதலைப் பாணிப் 59 பயப்பென் மேனி 219 பரலவற் படுநீர் 250 பருவத் தேனசைஇப் 175 பல்லா நெடு நெறிக் 64 பல்லி படீஇய 341 பல்லோர் துஞ்சு 244 பலருங் கூறுக 170 பலவிற் சேர்ந்த 385 பழமழைக் கலித்த 220 பழமழை பொழிந்தெனப் 261 பழூஉப் பல்லன்ன 180 பறைபடப் பணில 15 பனிப்புத லிவர்ந்த 240 பனைத் தலை கருக்குடை 372 பா பாசவ லிடித்த 238 பார்ப்பன மகனே 156 பால்வரைந் தமைத்த 366 பாலு முண்ணாள் 396 பாவடி யுரல 89 பு புரிமட மரையான் 317 புல்வீ ழிற்றிக் 106 புள்ளும் புலம்பின 310 புள்ளும் மாவும் 118 புறவுப்புறத் தன்ன 274 புனவன் றுடவைப்... கடியுண் 105 புனவன் துடவைப் ... கிளிகுறைத் 133 பூ பூண்வனைந் தன்ன 227 பூவிடைப் படினும் 57 பூ வொடு புரையுங் 226 பூ வொத் தலமருந் 72 பூழ்க்கா லன்ன 68 பெ பெய்த குன்றத்துப் 200 பெயர்த்தனென் முயங்கயான் 84 பெயல்கண் மறைத்தலின் 355 பெயன்மழை துறந்த 174 பெருங்கடற் கரையது ... களிற்று 246 பெருங் கடற்கரையது... நீத்துநீர் 313 பெருங்கடற் பரதவர் 320 பெருந்தண் மாரிப் 94 பெருநன் றாற்றிற் 115 பெருவரை மிசையது 78 பெறுவ தியையா 199 பே பேரூர் கொண்ட 223 பை பைங்கால் கொக்கின் 122 பொ பொத்தில் காழ 255 பொய்கை யாம்ப லணிநிறக் 370 பொருத யானைப் 284 பொழுது மெல்லின்று 161 பொன்னே ராவிரைப் 173 ம மகிழ்ந்ததன் றலையு 165 மகிழ்நன் மார்பே 73 மட்டம் பெய்த 193 மடவ மன்ற தடவுநிலைக் 66 மடவ வாழி மஞ்ஞை 251 மண்ணிய சென்ற 292 மணிவார்ந் தன்ன 256 மயங்குமலர்க் கோதை 393 மரங்கொல் கானவன் 214 மருந்தெனின் மருந்தே 71 மல்கு சுனை புலர்ந்த 347 மலரே ருண்கண் 377 மலையிடை யிட்ட 203 மலைச்செஞ் சாந்தின் 321 மழைசேர்ந் தெழுதரு 259 மழைவிளை யாடுங்குன்று 108 மள்ளர் குழீஇய 31 மறிக்குர லறுத்துத் 263 மன்ற மராஅத்த 87 மன்னுயி ரறியாத் 376 மனையுறை கோழிக் 139 மா மாக்கழி மணிப்பூ 55 மாசறக் கழீஇய 13 மாரிப்பித்திகத்து 108 மாரி யாம்பலன்ன 117 மால்வரை யிழிதருந் 95 மாவென மடலு 17 மானடி யன்ன 243 மானேறு மடப்பிணை 319 மி மின்னுச்செய் கருவிய 205 மு முகைமுற் றினவே 188 முட்கா லிறவின் 109 முதைப்புனங் கொன்ற 155 முருகயர்ந்து வந்த 362 முல்லை யூர்ந்த 275 முலையே முகிழ்முகிழ்த் 337 முழந்தாளிரும் பிடி 394 முழவுமுத லரைய 301 முளிதயிர் பிசைந்த 167 முனிபட ருழந்த 357 மூ மூட்டு வேன்கொ றாக்குவேன் கொல் 28 மெ மெய்யோ வாழி 121 மெல்லிய லரிவை 137 மெல்லிய லோயே 368 மெல்லிய வினிய 306 மென்றோ ணெகிழ்த்த 111 யா யாஅங் கொன்ற 198 யாங்கறிந் தனர்கொல் 154 யாதுசெய் வாங்கொல் 197 யாமே காமந் தாங்கவும் 241 யாயா கியளே மாஅயோளே 9 யாயாகியளே விழவு 10 யாயு ஞாயும் 40 யாரணங் குற்றனை 163 யாரினு மினியன் 85 யாருமில்லைத் 25 யாவது மறிகிலா 152 யானயந் துறைவோ 116 யானே யீண்டையேனே.... ஆனா 97 யானே யீண்டையேனே.... ஏனல் 54 வ வங்காக் கடந்த 151 வண்டுபடத் ததைந்த 21 வந்த வாடைச் சில் 332 வளர்பிறை போல 289 வளையுடைத் தனைய 307 வளையோ யுவந்தி சின் 351 வளைவாய் சிறுகிளி 141 வன்பரற் றெள்ளறல் 65 வா வாரலெஞ் சேரி 258 வாரா ராயினும் வரினும் 110 வாருறு வணர்கதுப் புளரிப் 82 வி விசும்பு கண் புதையப் 380 விட்டகுதிரை விசைப்பி 74 விட்டென விடுக்குநாள் 236 விடர்முகை யடுக்கத்து 218 விரிதிரைப் பெருங்கடல் 201 வில்லேன் காலன 7 விழுத்தலைப் பெண்ணை 182 வினையே யாடவர்க் 135 வீ வீங்கிழை நெகிழ 358 வீழ்தாழ் தாழை 228 வெ வெண் மணற் பொதுளிய 281 வெண்மணல் விரிந்த 386 வெந்திறற் கடுவளி 39 வெறியென வுணர்ந்த 360 வே வேட்டச் செந்நாய் 56 வேதினவெரிநி னோதி 140 வேம்பின் பைங்காய் 196 வேரல் வேலி வேர்க் கோட் 18 வேருமுதலுங் கோடும் 257 வேனிற் பாதிரிக் 147 வை வைகா வைகல் 285 குறிப்புகள் 1. நானூறு பாடல்கள் கொண்ட இக் கோவை நூலுக்குக் குறிப்புரை எழுதிப் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகத்தின் வழி 1984ல் வெளிவரச் செய்துள்ளார். 2,. முதல் மூன்று பாடல்கள் கரந்தைத் தமிழ்ச்சங்க வரவேற்புப் பாமாலையிலிருந்தும் பின் மூன்று பாடல்கள் பேராசிரியர் மு. இராகவையங்கார் பாடிய இரங்கற் பாக்களிலிருந்தும் தெரிவு செய்து தரப் பெற்றுள்ளன. 3.. குறுந்தொகை விளக்கம் நூலை 112 பாடல்களுடன் 1946 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தனிப் புத்தகமாக வெளியிட்டபோது எழுதப் பெற்றது இம் முகவுரை. 4. 1930 ஆம் ஆண்டு `கலா நிலையம் என்னும் பத்திரிக்கையின் வாயிலாகத் திரு. இராமரத்தின ஐயர் எழுதிய உரையுடன் குறுந்தொகை நூல் முழுமையாய் வெளிவந்துள்ளது. எனவே 1937இல் வெளிவந்த ஐயரவர்களுடைய உரை மூன்றாம் உரையாதல் வேண்டும். 5.. முன்பு வெளியிட்ட 112 பாடல்களோடு ஏனைய பாடல்களின் உரையும் இப்பொழுது கிட்டியுள்ளமையால் குறுந்தொகை விளக்கம் முழுமையாக இப்புதிய பதிப்பில் (1992) இடம் பெற்றுள்ளது. 6.. வடமொழிப் பேராசிரியர் சர். மானியர் வில்லியம் எழுதிய இந்திய அறிவு மேன்மை என்ற புத்தகம் பக். 524 காண்க. 7.. கடம்பிடி.வேல். பாட வேறுபாடு 8. பவளத்தன்ன. 9. அஞ்சுடர், வெஞ்சுடர், 10, ஏமம். பா.வே. 11. திப்புத்தோளார், திட்புத்தோளர். 12. செங்கோடு, வெண்கோட்டு. 13. கழறொடீஇ. 14. சேயகுன்றம், சேஎய். பா.வே. 1 தும்பீ. 2. கண்டன. பா.வே. 1. கருங்காற். பா.வே. 1. குலத்தார். 2. நோமே, நோமோ. 3. இமைதீய்ப்பன்ன. 4. நோமே நெஞ்சே. பா.வே. 1. நோயேல். 2. மின்னிலை, மென்னிழல். 3. துவலை. 4. தூநீர். பா.வே. 1. முனிவின்றி. 2. மோயான் மன்றந், ஓஒர்யான் மன்ற, ஓஒ யான் மன்ற, ஒரியான் மன்ற, ஓவுயான் மன்ற. பா.வே. 1. மேலவும், மேவுன, மேலவுஞ், மேலவஞ், மேவுந. 2. பாரியர். 3. கயிற்றாடு, கயிறாள். 1. பழுவம். பா.வே. 1. மரத்து விளைந்துகு, மாஅத்துத்தூங்கும், மாத்து விளைந்துகு, 2. தூஉம், 3. தூங்கும். 4. ஆடியிற் பாவை, ஆடியுட் பாவை. 5. மேவின, ஏவின. பா.வே. 1. யாயாதியளே, யாயாகியளோ, 2. செப்பின். 3. தமியள், தமியின். 4. பொய்யாப்பூவின். 5. மெய்சாயுநளே, பொய்காயினளே. 1. மாதர். 2. நம்முண்ணாணி, நம்முணாணி, நம்முள் நாணி. 3. காப்பாடும்மே, கரப்படும்மே, கரப்பாடும்மே, கரப்பாடுதுமே. பா.வே. 1. படீஇ, படீஇய, பறீஇயர். 2. யருள்வர, உள்வர. பா.வே. 1. நெகிழ நாறும், நெகிழ நாடொறும், நெகிழ நாடெறும், நெகிழ நாளும், நெகிழ நாளு. 2. கலழும், கலுழுமங். 3. உய்குவம். 4. எழுகினி, எழுயினி. 5. வாழி, வாழின், வாழிய. 6. முனாவது, முனையது, முனாறுது 1. வல்வேற். 2. காட்டின். 3. தேஎத்தார், தேத்தார். 4. வழிவிடல், முனாது. 5. நட்பே. பா.வே. 1. எறும்பின். 2. உலக்கல், உலைக்கனல். 1. என்பவவர் தேர் சென்றவாறே. 2. நொதுமற் கலுழும், நொதுமற் கலுழுமற்று, நொதுமலற் சுழறும், நொதுமற் கழறும், நொதுமலர்க் கழறும் பா.வே. 1. கெழீஇய. 2. இறும்பிணர்த். 3. ஒருகலை, ஒருதலை, ஒருத்தலைச். 1. னோய்தந். 2. பசலை ஆர்ந்தநம், பசலை ஆர்ந்தன, பசலையான்றன, பசலை யான்றநம். பா.வே. 1. அமிர்துபொதி. 2. அஞ்ச வந்த, அஞ்சி நிவந்த, வஞ்சி வந்த, வஞ்சி அந்த. 3. மறுகி, மறுகுதொறு, மறுகில், மறுகு. 4. நல்லோர். 5. இவனென்ப. 6. வல்லோர். 7. கூறுகயான், கூறுகயாம், கூறயாஅம், கூறுகயாஅம். 8. நண்ணுகம். பா.வே.1. நல்லூர்க் கோசர், நரலூர் கோசர். 2. சேயிலை. 3. தொகுவளை. 4. முன்கை நம்மடந்தை. பா.வே. 1. கணவர்தம், கானவர், கானவர்தம், கள்வர், கானவர். 2. செப்பங் காண்மார். 1. புல்லி. 2. கள்ளிக். பா.வே. 1. பேரெயின் முறுவலார். 2. சூடும். 3. காமங்காழ்க் கொளினே. பா.வே. 1. வேலிக் கோடல் பலவின். பா.வே. 1. வறுமையர் பாணர். 2. வாழியோ நெஞ்சே, வாழியர் நெஞ்சே. 3. மனைமாத். 4. யாருளர், யாருளார், யாரே. 5. நினக்கே. பா.வே. 1. துதைந்த. 2. கொடியிடை யிணரிடுபு. 3. கொன்றைக். 4. தெறேனவர். பா.வே. 1. வலஞ்சுழி மராஅத்து. 2. தேமூர் எண்ணுதல், தேமூ சொண்ணுதல், தேனூர் ஒண்ணுதல். பா.வே. 1. அவர்நன். பா.வே.1. வேங்கை. 2. வேண்கோட். 3. எழுகளிறு எழுக்குளிறு, எழுகுளிறு. 4. குழையக்க, சிதைய, குழையகக். 5. கொட்டியோ, கோட்டியோர், எமைநீத்து, கோடியோர். 6. காதலர்க் கல்லென்றவ்வே, நாம் வெங்காதலர்க் கவலவென்றவ்வே, நாம் வெங்காதலர்க் கலவென்றவ்வே, நாம் வெங்காதலர் நல்கார்கொல்லோ. பா.வே. 1. தானே கள்வன். 2. தானவன். 3. சிறுபசுங் காஅல, சிறுபசுங் காலவே. 4. குருகுமுண்டுதாம். பா.வே. 1. மேக்கெழும். 2. முத்து நிரையொத்த 3. முள்ளெயிற்றுவர்வாய். 4. தந்தை. பா.வே.1. உணீஇய, உணீய, உணீயர், உண்ணிய உண்ணியர். 2. அல்குலெம். பா.வே. 1. முட்டு. 2. ஓரே. பா.வே. 1. புல்லுரைத்தாஅய். 2. பேணீர்க் கேற்றன, பெயணீக் கேற்றன. 3. அரிதயர்வுற்றனை. 4. என்றும். 5. தழீஇயக். பா.வே. 1. அகல்கல், அகலநற். 2. மெய்யுற மரீஇய, மெய்யுற மரீஇ, மெய்யுறல் மரீஇய. 3. வரத்தகை, வாய்த்தகு. 4. கானாமுன் 5. வேறெழுந்து. 6. சாயத். 7. தமியென். 8. மன்றல். 9. அளியென், அளியன். பா.வே. 1. ஆண்டும். 2. யானுமொர். 3. கொண்டீர். 4. நெகிழ்த்து, ஞெகிழ்த்த 5. அடுகெழு, நாடுகெழு 6.ஆடுகள மகளே. பா.வே. 1. ஊர்துஞ்சியாமும். 2. இன்றிப். 3. தோற்றேன், தெற்றென, தேற்றெனத், தோற்றெனத், தேற்றென. பா.வே. 1. படுமரத்து. 2. இனமாணாக்கன், இன்மாணாக்கன். 2. என்ன. பா.வே. 1. ஒல்லார். 2. முன்ஆதியானையங், முனாஅது யானையுண், முனாஅது யானையங். 3. கானலம் பெருந்தேர், கானலம், கானலும். 4. பெருந்தோட்ட மள்ளர். 5. மரந்னதயன்ன, மரந்தையன்னஎம். 6. குழைவிளங்கு. பா.வே. 1. சூல்முதிர்பன்ன. 2. வாடையுநம். பா.வே. 1. மானை மாக்கொடி, மாணமாக்கொடி. 2. நீயல்லேன், நீயல்லன், நினையலேன், நீயலேன். 3. தவாவஞ்சினம், தவாஅ வஞ்சினம். 4. நோயே. பா.வே. 1. நல்கினும். 2. பிளக்கும், பிளிக்கும். 3. பண்பின, அன்பின். பா.வே. 1. அறையின் முட்டை. 2. வெயிலோடு, வெளிலாடு. 3. புன்கண். 4. ஓராங்குத் தனப்ப. 5. உள்ளாதகறல், உள்ளாதகற்றல், உள்ளாதாதல். பா.வே. 1. வெந்தெறற் கடுவளி. 2. பொங்கர்ப் போந்தென, பொங்கர் போந்தென. 3. மலையிடை. பா.வே. 1. யாயும் ஆராயயும், யாயும் யாரா. 2. நானுநீயும். 3. பெய்ந்நீர் போல. பா.வே. 1. புகல்வென், பொலிவேன். 2. புலம்பில் போல. 3. அலப்பேன். பா.வே. 1. தோயுமோ. பா.வே. 1. செல்லாரல்லர். 2. யானிகழ்ந்தெனனே, யானிகந்தனனே. 3. விடுவாள், வீவாள். 4. அவரிகந்தனரே. 5. இருபெயராண்மை. 6. நல்லார்க். 7. அல்லென். 8. அலமறுக்குறுமே. பா.வே. 1. பரிதப் பினவென் கண்ணே. பா.வே. 1. வாளிழை. 2. மகளிர்த் தரீஇய சென்ற, மகளிர் மரீஇய சென்ற, மகளிர் மரீஇச் சென்ற, மகளிர்க் காணிய சென்ற. 3. பெரிதென். 4. சிறுவர் தாயே. 5. தினைப்பிறத் தல்லே. பா.வே. 1. கூம்பியற்சிகர. 2. மன்றத் தெருவின், மன்றத் தெருவை. பா.வே. 1. நன்னுதற். 2. நீங்கு வண்ணம். 3. நசையாடு. பா.வே. 1. மாநீர்ச் சேர்ப்ப. 2. நீயாகியரெங் கணவனை. 3. நெஞ்சின் நேர்பவளே. பா.வே. 1. செவ்வி மருநின். 2. தோய்த், தோஒயத்தாய்த். 3. அன்றவரூழே. பா.வே. 1. கூர்முண். 2. கூனிமாமலர். 3. பாரித். 4. பரிக்கும், பரக்கும். 1. காதலன், காதலேன். 2. யானும் நானும், யானு நானு. 3. கொடியர். 4. மலூரும். 5. அவளொடு மொழிமோ. பா.வே. 1. ஆர்களி மிதித்த, ஆர்கலி மிகுத்த, ஆர்களிறு மிதித்த. 2. சூரசைந்தனையாய், கூரசைத்தனையாய். 3. நிரிந்திலங்கு, நெரிந்திலங்கு, விரிந்திலங்கு 4. பரிந்தனெ னல்லெனொ, பரந்தென னல்லனோ. பா.வே. 1. கினவெம். 2. மகிழ்நன் முன்றின், மகிழ்நனை நறிய, 3. நனைமுது. 4. புன்னைப். 5. செந்நெல் வான்பொரி. 6. நேரிழை பா.வே. 1. யென்னலன். 2. வெரீயக். 3. தூண்டில், தூண்டிலில். 4. கானா நாட னோடு, கானநாட னோடு. பா.வே. 1. திவலையொடு. 2. மங்குல் தைஇய. 3. தைவர லூதையோடு. பா.வே. 1. வேட்டைச் செந்நாய். 2. கிளைத்துண். 3. குழவி மொய்த்த. 4. உணீஇய. 5. என் நெஞ்சு. பா.வே. 1. காமமொடு. 2. போக தில்ல. 3. புன்மை நாமுயற்கே. பா.வே. 1. கேளீர். 2. நிறுக்கலாற்றின், நிறுக்கலாற்றினோம், நிறுத்த லாற்றினோ. 3. ஒன்று மற்றில்லை 4. வெயில்பயின் மருங்கின். 5. உண்கலம். 6. நொண்டு கொளற்கு, மொண்டு கொளற்கு, கொண்டு கொளற்கு. பா.வே. 1. பரதவர் கோமான். 2. அறலைக் குன்றத்து, அதலைக் குன்றத்து. 3. குளவிநாறு நறுநுதல் 4. நிழலோ, நிடலோ. பா.வே. 1. கூதளிராடிய, கூதாளியாடிய, கூதாளராடிய, கூதளிசாடிய. 2. பருவரை. 3. இருகை முடவன், இருங்கை முடவன், இருங்கால் முடவன். 4. உட்குழிச் சிறுகுடை, உட்கைச் சீறுடை. 5. நீட்டுபு நக்கி, உருட்டுபு நக்கி, ஊட்டுபு நக்கி. பா.வே. 1. பொய்கை யூரற் கேண்மை. 2. இன்புற்றனம். பா.வே. 1. நாறிதட், நாறிணர்க், நாறிணர். 2. இடைபட, இடையிடுபு. 3. நறியள். 4. வாயது. 5. முயங்குக இன்னே, முயங்கு கவினே, முயங்குகம் இனிதே, முயங்குக வின்னே, முயங்குகம் இனியே, முயங்குவம் இனியே. பா.வே. 1. கைமிக. பா.வே. 1. அகன்று வருந்தெனப், கன்று வருந்தெனப், கன்று வந்தெனப். 2. மக்கட் குழவி. 3. அலம் வந்தன்ன, அவண் வந்தன்ன, அண வந்தன்ன, அலமந்தன்ன, அவண் வந்தென்ன, என வந்தனரே. 1. நோவே மாகுதல். பா.வே. 1. வன்பாற் றெள்ளறல், வான்பாற் றெள்ளறல். 2. மருவந்துகள. 3. களிதரு தண்கார், துளிதரு தண்கார். 4. வாடை, வரனசை. 5. வருந்திநோ நொந்து 6. இருந்தனிரோ, இருந்தன்றால், இருந்தீரோ, இருந்தினரோ. பா.வே. 1. மடவை மன்ற. 2. சொம்புசேரக் கொடியிணர் ஊழ்த்த, கொம்புசேர் கொடியிணர் பூத்த. 3. வம்புமாரி. பா.வே. 1. வேம்பின். 2. புதுநாண் நுழைப்பாள், புதுநூல் நுழைப்பான். பா.வே. 1. அற்சிரம். 2. இல்லை அவர். பா.வே. 1. கைமை யுய்யாக், கைமை யுயாஅ. 2. வன்பறழ்க் 3. சாரல், சேர. 4. வாழியோஓ வருந்துதும், வாழியோ வருந்துதும். பா.வே. 1. சிலாமல்லிய சிளவி, சிலமெல்லியனை. 2. அனை மெல்லியல்யான், சினை மெல்லியள்யாம், அணைய மெல்லியள்யாம். 3. முயங்கு, யாமுயங்கும். பா.வே. 1. கானவர் நல்குவர் மகளே, கானவர் நல்குவர மகளே, கானவன் நல்குறூஉ மகளே, கானவர் நல்குவா மகளே. பா.வே. 1. அலம்வருந் தகைய, அலவருந் தகைய, அலமருந் ததைய. பா.வே. 1. வேயை யவர்நீ, வெய்யையே நீ, வேயையரனீ. 2. ஞாட்பிற் போக்கிய, நாட்டிற் போகிய, நாட்பிற் போகிய, நாட்டி போகிய, ஞாட்பற் போகிய. பா.வே. 1. வியப்பினன்ன, விசையினன்ன. பா.வே. 1. கேளிய தகையினை நசையினம். 2. சோனை படியும், பூஞ்சுனை படியும். 3. பொன்வலி. 4. பாடிலி பெறீஇயர், பாடினி பெறீஇயர். பா.வே. 1. செல்வ னென்ப, செல்வ மென்ப, செல்ப என்ப, செல்வ வென்பவே, செல்வ என்ப நங். 2. ஓங்கல்வரை, ஓங்கல். 3. மார்பன், வெற்பன். 4. தைஇயத் தண்வரல். 5. வாடை தூங்கும். 6. அற்சிரம், அற்சீர், அற்சீர. 7. நடுங்குநர். பா.வே. 1. இடு நீ ராகும். பா.வே. 1. அயர்வதும். 2. மாட்டுச். 3. பெரும் பேதைத்தே, பெரும் பேதமைத்தே. பா.வே. 1. பொறிதாள். 2. சேர்ந்தனர். 3. ஒல்லோம். 4. தற்பல, தப்பில், தப்பற்குச். 5. சொல்லாதேகல். பா.வே. 1. வந்த விருந்துறை, வந்த விருத்தி, வந்த விருந்தின்றி, வந்த விருந்தினர். பா.வே. 1. தானமஃது. 2. பல்வேல் எழுநி, கூர்வேல் எழினி. 3. முளையான். 4. கிளையொடு நுகர்க. பா.வே. 1. பல்கிளை. 2. இழந்து. 3. பலவுத் திரைக், புலவு திரைக். 4. மடல்தாழ் பெண்ணையம், மடல்சூழ் பெண்ணையெம். பா.வே. 1. காழசில். 2. அற்சிரம். பா.வே. 1. அமிர்தம். 2. கிளைதொறும். 3. தாங்கும். பா.வே. 1. பெயர்த்தனனென், பெயர்த்தனன், பெயர்த்ததனன். 2. வியர்த்தனெம், வெயர்த்தனென். 3. நனியறிந். பா.வே. 1. போனபின் னே. 2. இழையேர், இழையர். 3. நறா. பா.வே. 1. உரைசிறந்து. 2. புழம்புதொறு லம்பும். பா.வே. 1. மான்ற. 2. என்பவர். 3. அல்லர். 4. பசைஇய பசந்தன்று, பசைஇப் பசுந்தன்று, பசைஇ பசந்தன்று. 5. ஞெகிழிய, ஞெகிழி. பா.வே. 1. முரண் சொல்லும், முரண் கொல்லும், முரண் சோலும், முரண் சேரும். 2. சோலை. 3. அலமோ தேமொழி, அலமோ தோழி. பா.வே. 1. பாவடி உழல. 2. பருகுவாய். 3. நுவறல். 4. அழுது. 5. அன்னயிம், அன்னவெம், அன்னவென். 6. பாடிநன். பா.வே. 1. தோழி வாழி. 2. மருங்குல். பா.வே 1. பூநாறு பலவுக்கனியினை, பலவுக் கனியினை. 2. உண்டுறை. 3. சால்பின். பா.வே. 1. அரிப்பவர்ப் பிரம்பின், அரிப்பவர் பாம்பின், அரிற்பவர் பரம்பின். 2. குண்டு நிரிலைஞ்சிக். 3. கெண்டைத்தூஉம். 4. கோன்முனை. 5. இரவூர்ப். பா.வே. 1. மார்த்த, மராத்த, மரத்த, மாத்த. 2. இரைகொண்டவையும். பா.வே. 1. நன்னலந் தொலைந்து 2. நலமிசைச். 3. அல்லரோ. 4. புல்லியது, புலவியது. பா.வே. 1. மருள்வேன். 2. கேட்டின். 3. தக்கக், தக்க. பா.வே. 1. தன்முகைத், கன்முகை, கன்முகைத், கனமுகந், கன்முகத். 2. குறமகள். 3. பெருவரை. பா.வே. 1. நகையேன். பா.வே. 1. என்னலன். 2. ஆதி. பா.வே. 1. துன்னாச் சென்று, துன்னர்ச் சென்று. பா.வே. 1. அல்லெனோ. 2. பள்ளி. 3. நினைந்தனென் அல்லெனோ, நினைத்தனன் அல்லெனோ. 4. நினைந்து. 5. அல்லெனே, அல்லெனோ. 6. மாஅத்த, மாத்த, மராஅத்த. 7. தோடுதோய், கோடுகொய். 8. மலிர்சிறை, மலிர்சிமை. 9. இறைத்துணைச், இறைத்துளை. 10. கொளலே. பா.வே. 1. குவியொடு. 2. கடுக்கும். 3. காந்தளஞ் சிலம்பில். 4. பசுப்பின், பசித்தென. 5. யானைக். பா.வே. 1. வைகலோடு. பா.வே. 1. வருத்தின், வருந்தின். பா.வே. 1. தொடுத்த. 2. நடுங்கஞர். 3. திவவைத். பா.வே. 1. மறைப்பத். 2. கவ்வே, குகவே, குபவே. பா.வே. 1. தொடவைப். 2. கடியொண். 3. சில்குரல், சிறுகுரல். 4. வேர்த்துற்று. 5. கும்மே. பா.வே. 1. ஆற்றிக், இத்திக். 2. நயந்தன்று. பா.வே. 1.. தாமணந்து, தாமளந்து, தம்மளந்து, தாம் வரைந்து. பா.வே. 1. என்னத். 2. நல்விருள். 3. படீயரோ. 4. ஊரனொடு வதிந்த, ஊரனோடு வதிந்த, ஊரன் தன்னோடு வதிந்த. பா.வே. 1. படர். பா.வே. 1. செவ்வறன். 3. உய்யன், உய்வன். பா.வே. 1. முடக்கால். 2. யுணரி. 3. மிகுதிரை, இஃதிரை, இருதிரை. 4. புணரி அவிந்த, புணரிய இந்த. 5. அன்னது மின்ன. பா.வே. 1. நீர். 2. புதல்மலி, புதன்மலி. 3. மலி, பிலி. 4. கருவிளை. 5. துய்வமலர், துய்மலர். 6. எறிதரும், வெறிதரும். பா.வே. 1. அதுவென்று. 2. செழுமலை, சிறுமலை. 3. அல்லோர். பா.வே. 1. முறிந்துநிலம் படர். 2. நாளுடை. பா.வே. 1. சேய்த்துமன்று. 2. யாவரும். 3. கூழைக் கெருமண் கொணர்கஞ், கூழைக் கேர்மணங் குறுகம், கூழைக் கேருமணங் குணர்கம. 4. தையையே. பா.வே. 1. கிடப்பின், கிடப்பினன், கிடப்பினென். 2. வந்தனன். 3. வைகலும். 4. ஆரால் அருந்த, ஆரல் அருந்து, ஆரல் அருந்தும், ஆரல் அருந்திய. 5. மதிக்கும். 6. எனமதி. பா.வே. 1. ஒன்றின் ஆற்றிய. 2. உடையாள். 3. புரிமாண்டு, புரிமான்டு, புரிமாண், புரிமாணாடு. 4. அடுபுலவி தீர. 5. தீர அளிமதி இலை கவரபு, தீரவழிமநி இலைகவரபு, தீரஅமைதி யிலைகவரப். 6. பொழுகிய. 7. இலனே. பா.வே. 1. அறலார்ந். பா.வே. 1. செலீயர், செலீஇ. 2. கயிறிடும், கயிறிரி. 3. பெருந்திறத்தழுந்து, பெருந்தீரத்தழுந்தும், பெருந்திறத் தழும். 4. அமையினும் உம்மை, தமையின் உம்மை. பா.வே. 1. அடைப்பக், அடையக். 2. வருவிர் உளிரோ. பா.வே. 1. சத்தி நாதனார், சத்தி நாகனார். 2. இளைய. பா.வே. 1. இல்லோள். 2. நல்லாள். பா.வே. 1. மெய்யே. 2. மைப்பட். 3. ஒற்ற. 4. கோட்டோடு, கேட்டொடு. 5. வாராத். பா.வே. 1. பைங்கார்க். 2. குவிந்தன. 3. அன்று. பா.வே. 1. இருள் துணித், இருள் திணித். 2. நிலவுக்குவித். 3. இவணும், இன்னா. பா.வே. 1. உமணர்ச்சேர்ந்து. 2. பெருங்காட்டு. 3. தமியேற்கு. பா.வே. 1. ஞெகிழச். 2. உளனே. 3. பறைவந், பறைவலி. பா.வே. 1. நசைச். 2. இன்னும். 3. ஏவணரோஎன, எவணரோ என்பக், என்னரோஎன. 4. நந்துதண். பா.வே. 1. வெணமுகை வெரூஉம், வான்முகை வெருளும். 2. கழனிய. 3. போல்வர்நின். பா.வே. 1. கரையது. 2. திண்தோள், திண்தோட், திண்டோட். 3. தாஅங்குச் பா.வே. 1. எம்முறு, ஏமமுறு, எமமுறு. 2. புலவ. 3. பகுவெண். 4. திருநுதல். பா.வே. 1. புகார். 2. பிறங்கிரு. 3. முன்னீர்காலின், முந்நீராலின், முந்நீராவின். பா.வே. 1. இடமை. 2. பேரமைக், பேர்மைக். 3. ஆறிடை, ஆருடை. 4. உற்றான்றால். பா.வே. 1. குரங்கர்க். 2. விரும்பின். 3. சாஅநோக்கினளே, சாய்நோக்கினள், சாஅய்நோக்கினள், சாஅநோக்கினள், சாஅயநோக்கின். பா.வே. 1. தொடவைப். 2. சிறுதினைக். பா.வே. 1. ஆங்கெண், ஆஅங்கென். 2. உளனே, உள்ளேன். 3. நலம்புத். 4. நன்றுமற் றில்லை, நன்று மாறில்ல. 5. பூவிடை. 6. தூக்கிக், தூக்கி. 7. இரங்கும், இலங்கும். 8. கதம்வீழ், கதழ்ந்துவீழ். பா.வே. 1. அழால். 2. அழுங்கு. பா.வே. 1. தணித்தலும். 2. ஆள்பதம். பா.வே. 1. புலம்பல். 2. செல்லுறு, செலாஅது. பா.வே. 1. துஞ்சினும், துஞ்சிலும். 2. யான்துஞ்சலனே. 3. ஏழிலைஉம்பர், ஏழினும்பர், ஏழில்உம்பரம். 4. மணியருள். 5. ஒர்ந்தே. பா.வே. 1. வெருகினம். 2. புகுவிடன். 3. குழீஇப். 4. கிளைபயிர்ந், கிளிப்பயிர்ந்த, கிளைப்பயிர்ந். பா.வே. 1. போதும். 2. கானே. 3. அழுங்கிய. 4. ஆங்கறிந்தன்று, ஆங்கறிந்தன்றிவ். பா.வே. 1. விளைகினை. 2. கடியா, கடியச், கடிய, கடியாச். 3. செல்கின் 4. சேணெனச், எனநீ. 5. எவனாம். 6. கொல்வல். 7. குறுக்கை. 8. கொலைவல், கொல்வல். 9. படுமதம். 10. நாடநீ. பா.வே. 1. குற்றும். 2. தைஇயப், தைஇம். 3. தன்றோ இலளோ. 4. உயிர்த்தவென், உயிர்த்தெனன், உமிர்த்தலென. 5. பின்னுழந், பின்னுத். பா.வே. 1. அன்புபெரிது, இழிபுபெரிது. 2. பழமலை. பா.வே. 1. தூங்குதற்கு. 2. அரியது. 3. பாஅய. பா.வே. 1. கழியில், கழியா, கழியிற். 2. இவ்வப், இவ்வழி, இல்வழி. 3. பால்பாற், பரல்பாற்,பால்பரற், பரலலாற். 4. சேண்மழை. 5. நாடே. பா.வே. 1. அன்று. 2. சிறுகுடிக். 3. ஏற்றி. 4. வருந்திய. 5. உறைநரொடு சார்வாத். பா.வே. 1. புணர்ப்பவர், புணர்பவர். 2. மாக்களோடு. பா.வே. 1. மயிரேர்வு, மயிரோ, மயிரொடு. 2. மாயை. 3. எழுப்புநி. பா.வே. 1. சிறார் சீறடிப், சிறாஅர் சீறடி, சிறாஅர்ச் சீரடிக். 2. வாஅய பொலஞ்செய், வாஅயபொலன்செய். 3. குருந்தோடு, குறுந்தோடு. 4. அலமரும், அலம்வரும், அலரும். 5. காரன்றேறி, காரெனத் தேறாய், காரெனத் தேறா. பா.வே. 1. நனிநீடமர்ந்தன்று, நனிஉழந்தன்று, நனிநீட் டமர்ந்தன்று, சனிநீட மர்ந்தன்று. 2. மனனே, 3. ஓங்குமன்ற. 4. சிறுசிறைத். 5. வீய்ந்துக், வீழ்ந்துக். 6. காங்கித், காங்குதல். பா.வே. 1. வாஅன். 2. மிகுமினி மல்கும். பா.வே. 1. வங்கர் கடந்த, வங்கா கடந்த, வங்கா கிடந்த, வங்கர்க் கடந்த, வங்கர்க் கடிந்த, வங்கர்க் கிடந்த. 2. எழாலுற. 3. விழந்தெனக் 4. மிகவும். 5. குன்றுறு. 6. பிறப்பல். 7. இன்மைக்கு. பா.வே. 1. காயின. பா.வே. 1. பல்லின். 2. இனித்தென், அழித்தென். 3. அவாவயின், அவர்வரின் 4. சீரா னீளிடை. பா.வே. 1. உன்னிப், உள்ளி. 2. பொரிக்கால். 3. கவட்டுத், காய்ங்கவட்டு, காயங்கவட்டு. 4. கூஉநம். பா.வே. 1. பார்கலி. 2. கான்வந்து. 3. உறும்பின். பா.வே. 1. அயர்வர். 2. என்னுமுன், என்முன். பா.வே. 1. தாழ்மண்டிலத்துப், தாழ் மண்டிலத்து. 2. படிம. 3. எழுத்தாக். 4. நின்சேல், நின்செல், நின்செயல். பா.வே. 1. அன்றே, அற்றென். 2. தூஉநெஞ்சம், தூநெஞ்சம், யெனன னெஞ்சம், தூஉயநெஞ்சம். 3. தேர்பொய்க், தோள்தோய். 4. வான்போல். பா.வே. 1. பாம்பட. 2. செலீஇக். பா.வே. 1. இமையமும். 2. ஆளியர், ஆளர். 3. எவனோ. பா.வே. 1. தாங்கச், உருங்கல். 2. வீங்கிய. 3. கொம்மையர். 4. இளமுலை, அரிமுலை, வருமுலை, வெம்முலை. 5. யாங்காக்கு வென்கொல். 6. நெஞ்சமோ டுசாவாக், நெஞ்சமோ சோவாக். 7. இப்பேத. பா.வே. 1. சிறுகட்பன்றி. 2. இரவின், அரவின். 3. பேடையோடு. 4. ஆங்குசினைக். 5. வரவே. பா.வே. 1. வீசுந்தனலை, வீசுந்தன்றலை. 2. புதல்வர்ப். 3. அன்னாய். 4. தன்மலைய. 5. றோனே. பா.வே. 1. கார்புனம், கார்புனல், கார்புறம், கார்ப்புனம். 2. வியன்புனத்துக், வியன்புனத்து. 3. பல்ஆ புகுதரூஉம், பல்லா புகுதரும். பா.வே. 1.. நகுவல். பா.வே. 1. ஊழி, யூழி. 2. வௌவித். 3. தாழைத். 4. கேட்டும்நின். பா.வே. 1. கனைக்கோட்டு. 2. துணர்த்தேன், துணர்த்தேங். 3. தோன்று முதுவெளி, தொன்றுமுதுவெளி, தொன்றுமுதுவேளிர். 4. பௌவம். பா.வே. 1. விளைந்ததன், விழைத்ததன். 2. இருங்கரை. 3. உப்போய். 4. பெரும்புயல். 5. தலையவிந், தலையவீஇந். 6. தாஅங்கிவள். 7. இயல்வணி. பா.வே. 1. நிரைபெயர்த்து, நிறைபோத்து, நிரைபோத்து. 2. ஊரே. 3. நன்றுநன். 4. மாநகை, மரந்தை. பா.வே. 1. உரீஇயக், உரீஇ. 2. குய்ப்புகை கமழத், குய்புகைகமழ. பா.வே. 1. பசுங்கொடைப். 2. பெரும்புலர். 3. பணைத்தோஒள், பணைத்தோள். 4. மணத்தொறும். பா.வே. 1. சுரஞ்செல்லி யானை. 2. மற்றியான். 3. மண்டைபோல். 4. வெமக்குப், எமக்குப். 5. ஊரே, என் உயிரே. பா.வே. 1. கயனாடு. 2. தலைபோ தாமை நற், தலைபோகாமை நன்கு. 3. அறிந்தனன், நற்கறிந்தனன். பா.வே. 1. நொதுமலர்த். பா.வே. 1. தாஅவல். 2. நொப்பறை, நொவ்வுப்பறை. 3. பேரும். 4. தமியம். 5. கொல்லொரு. 6. வேளூர்ப், வரூர்ப். 7.மென்னெஞ்சே. பா.வே. 1. மிலைந்து. 2. பனைப்படு. 3. நாணடப், நாணப். பா.வே. 1. பழிபடர். 2. இன்னாள். 3. தமையினீர் ஏகுமாறு, தமையனீர் ஏகுமார், தமையினீர் ஏகுமார். 4. உளேனே, உளனே. 5. புலம்பறு. 6. கவைமுடக். 7. கடிநொடி. 8. தொகைமென். 9. வெண்ணார், வண்ணாரந்து. 10. பிரிவர். பா.வே. 1. தேனசைஇய, தேசனைஇயப். 2. பலபறைத். 3. விரவுத்திரை. 4. றோழியீங். 5. எனல் ஏன்று, எனவென்று, எனலென்று. 6. அமைத்தாங்கு. பா.வே. 1. பனிமொழி. 2. நெகிழ்ந்த. 3. வேறுபுனல். 4. புலநாட்டுப். 5. கழுலுமென், கலுழும் என். பா.வே. 1. மன்றவம், மன்றப், மன்றற். 2. நாம்நகப், நாநகப். பா.வே. 1. மலர்ந்த, மலர். 2. திரள்தாள். 3. குறுகார், குற்றுநர், குற்றுனர், குறுகா. 4. கிடந்தும், கிடைந்தும். 5. தோன்றிய. 6. யானுமக்கு. 7. அரியேம். 8. நோன்றநீர், நோகினீர். பா.வே. 1. கல்லெனக். 2. சொல்லைஇ, சேரல்லைஇய, செல்லல்ஐஇய, சொல்லைஇய. 3. அதுஎம். 4. பசுங்களை, பசுங்கிளை. பா.வே. 1. பழூப்பல், பழுப்பல. பா.வே. 1. அறைமடிக், யேந்தல், 2. வைதல், பைகல், வைகல். 3. ஒருகளை. 4. ஏயினர். பா.வே. 1. இதுவுமற்று. 2. இருமருப். 3. பால்பெய், பாஅல், பாஅற்பெய். 4. பல்கடம். 5. பெருமுதிர். 6. பெண்டிர். பா.வே. 1. மார்பில். 2. நீங்கித். 3. இயல்வு, இயல்பு. 4. கலிங்கவிர், கலிந்தவிர், கலிழ்கவின். 5. மெலிந்ததில். 6. ஆம்விடற்கு. பா.வே. 1. புக்கெழு. 2. காள, புன்புல, கானக. 3. கானத். பா.வே. 1. அதர்ப்பட்டு. 2. அன்றென், அதன்றென். 3. நாண்தகை, மாண்தகை. பா.வே. 1. நாண்முதப், மாமுடிப். 2. காண. பா.வே. 1. நுதலைப் பசப்பிவந்து. 2. தொடிநெகிழ்ந்து, தொடிநெகிழ்த்தி. 3. நும்மிற்று 4. கண்மிசைக். 5. நாடற்கு. 6. என்னமர், என்மா. பா.வே. 1. ஆற்றொடு. 2. காத்தலை. 3. தொல்லைப். 4. முகையும். 5. தோழிஎம். பா.வே. 1. சேக்கை. 2. நாட. 3. பலலினும். பா.வே. 1. றினமே. 2. நெகிழ்ந்தோர் வாரார், நெகிழக் கோரார். பா.வே. 1. வருதும். 2. விசும்புவீசு. 3. துமியக், துமிய. 4. காலியற் செலவின். 5. அடைந்துவக், அடைந்துசார். 6. கும்மே, குதுமே, உவக்கும்மே. பா.வே. 1. உரவுரு, வரவுறு, வாவுரு, மாவுரு, நரைஉரும். 2. இயங்குதொறு. 3. இயங்கும். 4. தெழுமணி, எழுமணிக். பா.வே. 1. இதுவேன, இதுவென. 2. நேர்சினை. 3. உள்ளா, உள்ளாது, உள்ளத். 4. என்குவெம் யாமே, என்குவெம் மன்னே, என்குவம் யாமே. பா.வே. 1. இனையவரென்று, இளையவரென. 2. இனிய நோநொந்து, இனியே நோநொந்து. 3. மின்னன், மின்னென். 4. மாஅச்சினை. 5. வருங்குரல். பா.வே. 1. இட்டுவர்ச். 2. தட்டைப். 3. பறையின். 4. மன்னனெம், மன்னெம், மன்னனென், மன்னெந். பா.வே. 1. மின்னுவர, மின்னு. 2. வலனேர்பு, வானே, வரலே. 3. மென்தோடு. 4. இரண்டற்கே. பா.வே. 1. எழுதரும், எழுதகு. 2. தைஇ, தை. 3. ஊர்தரச், ஊதா. 4. செய்யுறு, செய்புறு, செய்யறு. பா.வே. 1. அதுவே வெய்ய. 2. அவற்றால். 3. அன்பின், அன்பிலர், அன்பின, அன்பில, அவ்வன்பின். பா.வே. 1. யாஅம், மாஅம், மாஅங், மாவுங். 2. மரஞ்சுட். 3. கருப்பு மருள். 4. இறைஞ்சியற். 5. செறிகோட், செறிக்கோட், செறிதோட், செறிகோல், செறிதாள். 6. வாறன் மற்றைய, வாரன் மற்றை, வாரல் மற்றைய. பா.வே. 1. திண்தோள், திண்டோட். 2. கைவளர், கைவள. 3. மைஇயீ. 4. பெறினே. பா.வே. 1. தண்கமழ். 2. மீமிசைத் தாஅய், மீமிசைச்சினை மிசைத் தாஅய், மீமிசைத் சினைமிசைத், மீமிசைச் சிரமிசைத், நிலமிசைத் தாஅய். 3. வீசும்வந்து, வீசுமந்து, தாஅய் வீசுமந்து, வீசும் வளிகலந்து, வீழும் வீசுமந்து. 4. மாமறை. 5. உருமின முரலும், உருமின் குரலும், உருமினம் முரறும். பா.வே. 1. அமிர்தம், அமுதம். 2. நம்மயில், மயிலியல், மயலியல், மயலி. 3. அல்லது. பா.வே. 1. . மூங்கி, மூங்கிலில் 2. வாங்கும். 3. சாரல். பா.வே. 1. நோமெ னெஞ்சே, நோமே நெஞ்சே. 2. நெறிஞ்சி, நெரிஞ்சி. 3. செய்தியல், செய்தல், செய்யின். பா.வே. 1. இருந்து. 2. கடவுணண்ணிய, கடவுண்ணிய, கடவுணணிய. 3. வெரீஇயினன், வெரீஇயின், வெரீஇய, வெரீஇ, இரீஇ, எரீஇயின், வெரியின், ஒரீஇயினன், வெரீஇன். 4. பரியலெம், பரியலேம், பரியலேன். 5. மன்யாம். பா.வே. 1. என்பர். 2. முதுச்சுவல், முதுசுவல். 3. இளம்புனம். 4. கைவந். 5. விருந்தோ. 6. ளேயே, ளுனக்கே, உனக்கே. பா.வே. 1. கருவிப். 2. பொலம்பிடைப், பொலம்படை, புலம்பிடை. 3. கலிமான். 4. திண்தேர், ஒண்தேர். 5. திவலை. 6. இகுமணல். பா.வே. 1. அமிர்தந்து. 2. குன்றும். 3. உடனுறைவு, உடலுறைவு. 4. யோரே. பா.வே. 1. செப்பினேம், செப்பினெம், செப்பிநாம். 2. சொலினே. 3. புலம்புகொள். 4. டவ்விளி. 5. பலாது போபட்ட, அல்லது, பலாது, போர்பட்ட 6. தோல்வழங்கு, தேர்வழங்கு. பா.வே. 1. ஒன்றேனல்லென், என்றேனலவென். 2. ஒன்றுவேன். 3. துமித்த நெறிதாள். 4. பெய்மார். 5. நின்றுகொய். 6. மலரும் நாடனொடு, மல்கும் நாடனொடு, மலரும் நாடனோடு, மலையநாடனோடு. 7. என்றிசின், ஒன்றே, ஒன்றேன், ஒன்றி, ஒன்றே. பா.வே.1. சுரந்தலைப், அருந்தலைப். 2. கொளிடங் கறங்கும், கோளிடங் கரக்கும், கோளிடம் சுரக்கும். 3. குறுநடை. 4. பல்லுள்ளலேம், பாலுள்ளலமே, பல்லுள்ளலமே, புள்ளுள்ளலமே. 5. களரில், களிரில், கடத்தில். 6. முடச்சினை. 7. மழையிருங். 8. நண்பே. பா.வே. 1. விழைந்த. 2. ஒருகலத்து. 3. செல்வற்கு. 4. விரைந்துவரக். பா.வே. 1. நொந்துநம் அருளார், நேர்ந்தும்நம் அருளார், நேர்ந்தும் அருளார், நொந்து மருளார், நேர்ந்து மருளார், நொந்துநம் மருளார், நொந்தும்நம் அருளார். 2. எஞ்ச, எஞ்சாது. 3. தீந்த, ளீந்த. 4. மராஅத் தொங்கல். 5. வஞ்சினை. பா.வே. 1. கொடுஞ்சினை, கொடிஞ்சி. 2. தெளிர் மணி. பா.வே. 1. கானல். 2. நோரோரெனக், நெரேரெனக், நேரோரெனக், நேரோரெனல், நோரோரென, நேரோவெனக். 3. முதுபோத்து. 4. இறைஞ்சிப். 5. தாதால், தாளாள். பா.வே 1. ஒளியின். 2. உண்டு அழிவில், உண்டு வெழியின், உண்வெளியின், உண்டுயிரழியின், உண்டு வழியின், உண்டு வழிய, உண்டு வழியல். 3. தெறித்துநகை. 4. மாப்பிற்றன், மாபிற்றன். 5. நின்றுவெயிற். பா.வே. 1. புனந்துழந்து. 2. அயலது, அயலை. 3. ஆலை. 4. சூடி. பா.வே. 1. பைபயப், பையப்பயப், பைப்பயப், பையப்பயப்பய, பைப்பைய, பயப்பயப். 2. கொடுவரை. பா.வே. 1. அவரோ. 2. ஞெகிழ, 3. நாளும் வேங்கி. 4. படர்சார்ந்து. 5. பெய்யு முழங்கும், பெய்ய முழங்கும், பெய்ய முழங்கு, பெய்யும் முழங்கி. பா.வே. 1. தினைக்கிளி. 2. கடிந்தெனில், கடிதெனில், கடிதலின். 3. எல்லும். 4. வருதலும். 5. அனைத்தற்குப். 6. பிறிவுசெத்து. பா.வே. 1. ஐதேஎய், ஐதேய், ஐதெமக். 2. கம்ம, கம் யகம. பா.வே. 1. பூணாது. 2. கைநூல். 3. அயர்வாம், யாவாமற். 4. ஓராமல். 5. வல்லியோ, வலியோர். பா.வே. 1. பசப்பென், பசப்பேன். 2. நயப்ப. 3. நாஅர். 4. அள்ளிலைத். 5. சேர்ப்பற்கு. 6. தோழியென். 7. நீரோ எனினே, நீரோ வெனினே. பா.வே. 1. பழமழை. 2. பரவை. 3. அருவிசேர். 4. பருவீ. பா.வே. 1. சென்னி. 2. தலைப்புணை. 3. கடைப்புணை. 4. புனல்கை. 5. ஆண்டு. 6. கொழுமுகை. பா.வே. 1. என்றிவண் நல்லோர், என்றிவள் நல்லோர். 2. நல்ல, நல்லோம் நல்ல. 3. தில்லே. 4. கலுழும். 5. நினக்கென். 6. அன்னை அன்றி, அன்னை அன்று. 7. என்னைக். 8. இன்னபாலினியே, இன்னமாரே, இன்னமாவினியே, இன்னபாவினியே. பா.வே. 1. சென்றோர் கொடுமை ஏற்றித். 2. குராலான், குராவான். 3. இரவில். பா.வே. 1. திணைபிடி. 2. பெருங்கல் நாட்டு, பெருங்கண்ணாட. 3. கேட்டிடத்து, கட்டிடத்து. 4. உலந்த. 5. மறந்தனை, மறந்தமை. 6. உரியவாம், உரியவால். பா.வே. 1. பூவளைந்து, பூண்வளைந்து. 2. லோனே. பா.வே. 1. குருகுளரிடத்தின், குருகுளிரிடத்தின். 2. விரிவுதோடு. 3. கான. 4. குன்றிற். 5. என்பன்தந், என்பந்தந், என்பதந். 6. அணியரோ, அணியரே, அணியர் அணிய. பா.வே. 1. புன்றளை. 2. வாங்கினள், வரகினள். 3. புனையவும். 4. உறுப்ப மன்னே. 5. நல்ல மன்றம், நல்லை மன்ற மன்றம்ம. பா.வே. 1.. அன்னவர். 2. மனமகிழ், மனைமகிழ். பா.வே. 1. துணிவன். 2. பெறுதகை. 3. உடையன். 4. வயற்சுறா. 5. வழங்கு நீர்த்தவச், வழங்கு நீர்த்தவண், வழங்குநீர் அத்தவச். 6. சின்னாள், இன்ன, சின்னாளினன், சிள்னாளின்ன, தவச் சின்னாளினன். பா.வே. 1. ஓரூஉ, ஒராஅ. 2. வரினும். 3. நாணிட்டு, நாணிட, நாணட. 4. அழிந்த. பா.வே. 1. வரல்புகா, வரற்புகா, மரல்புகா, வறல்புகா. 2. அருந்த. 3. பொளித்துண்டு. 4. வாஅவரி நிழல், யாஅவரு நிழல். பா.வே. 1. கல்வாய்ச், அகய்வாய்ச். 2. பொன்வீ. 3. மூழை. 4. காரெதர், கானெதிர். 5. உணர்ந்தோர்க்கு. 6. வரைகொள, வரைகொள். 7. தாதை, தடக்கை. பா.வே. 1. வானமும். 2. எல்லுறு, எல்லிறு. 3. நெடுங்கரி. பா.வே. 1. வாழிய. 2. தூங்குவெள். 3. அண்ணி. பா.வே. 1. விட்டுடன். 2. நேர்ந்தனை. பா.வே. 1. உண்ட என் நலக்கே, உண்ட எம் நலக்கே, உண்ட என் நலனே. பா.வே. 1. தழீஇ. 2. நெஞ்சுணப். 3. இருவர் தம். 4. முழங்கு. 5. முயக்கி மலைவே, முயக்கிடை மலையே. பா.வே. 1. வாம்பணைத். பா.வே. 1. தொடி நெகிழ்ந். 2. விடுநா ளுண்டோ. பா.வே. 1. பணைமலர். 2. வெருகுப்பல். 3. கஞலி. 4. நோய்போர்க், நோயோர்க். 5. தோற்றி. பா.வே. 1. யாமெம் காமம், யாமே கமம், யாம் எம் காமம். 2. தாங்கலம். 3. மையினான். 4. சிறார். 5. மலர்ப்பதம். 6. கண்டவென். பா.வே.1. கானங்கோழி, கானக்கோழிக். 2. ஒண்பேர், நுண்பொறி, ஒண்பொரி. 3. செல்லினும். 4. சேர்ந்துவரல், சேர்ந்துவர. 5. அரிது, அரியது. 6. செம்மற்.* கூhரசளவடிn : ஊயளவந & கூசiநௌ ளுடிரவாநசn ஐனேயை ஏடிட. ஐஏ ஞயபந. 94. பா.வே. 1. மாணடி. 2. அடம்பின். 3. ஓண்பூக், வெண்பூ. 4. புள்ளிமி. 5. படீயரென், படீகியரே, படிகியரென். பா.வே. 1. இரவுக்கதவு. 2. கேட்டனெம். 3. உயங்குதொறும், உயங்கும். 4. தாயே. பா.வே. 1. மா னில, மரனில, மரலை. 2. வென்னாட்டு, வெனாட்டு, வெனனாட்டு. பா.வே. 1. திரையது. 2. மயக்கிய. பா.வே. 1. பனிக்கழித். 2. துழவம். 3. நீத்தோர். 4. பெயரும். 5. அன்ன. 6. முதியரும். 7. கற்பா, கற்பாலோரே. பா.வே. 1. எழினிமிக, எழினி. 2. தீங்கனிப். 3. புகூஉம். 4. உளையுமார் இல்லென, புனையுமாறு இல்லென, புணையுமாரிவ்வென. பா.வே. 1. யாஅ. 2. ஈயும். 3. ஆய. பா.வே. 1. அதுவர வன்மையோ, அதுவா வன்மையோ, 2. இறுக. 3. ஏன்ற, வேவென்ற. 4. குறீஇ. 5. அடும்பவிர், அடம்பவர், அடம்பிவர், அடம்பு. 6. மணற்கோடுர, மணற்கோடூர், அமன்ற கோடுயர், உயர்நெம். 7. நெடும் பெண்ணை. 8. பெறிய. 9. யாயர்ந். பா.வே. 1. அலர்நாட்டுக். 2. நோக்கினேன். பா.வே. 1. மான். 2. நெறிமுதல், னெறிதலும், னெறிதனின். 3. கடுமா. 4. உகவே. பா.வே. 1. மடவரல். 2. மாயினம். 3. காலை மாரி. 4. ஆலலும் மாலின, ஆலும் மாலின, ஆலு மாலின. 5. நொதுமலர். பா.வே. 1. நெகிடிக், நெகிடி. 2. வருவதொர். 3. தெரியாது. 4. அவனே. 5. முன்னார். 6. நாணுப், நாணாப், நாணார், நானும். பா.வே. 1. பூச்சோர். 2. ஆருயிர், ஆடுதுயர், நின்னாட்டுயர். 3. கேட்பின், கொட்பின். பா.வே. 1. முலையோர். 2. அவிழ்ந்தன. 3. வாரார். 4. துயில்வரல், துயில்வு, துயிலவர், துயில்வர. 5. மறந்தன. 6. பயில்நறும், பயிலினாகும், பயிலிருங். 7. தரலசைஇச், தரல்நசைஇச். 8. சென்றனர். 9. எய்தனர். பா.வே. 1. போத்தில். 2. உருவக். 3. மதங்கெழு. 4. இயங்குநடைச். 5. கண்டன. 6. தம்கடன். 7. போதிய. 8. நாமவெங், நாமஎங். பா.வே. 1. அறுகை. 2. பிணிகால், பின்கான், பினகறன், பின்கறன், பிணையறல், பினகறல், பிணங்கரின், பிணங்கரில். 3. மாந்தி, அமர்ந்த, ஆர்ந்த. 4. கானம்பின்பட, காண்பின்படிவி, கான்பின்பட. 5. விலநலம், விநலம், இருநலம். 6. வருவதும், வருகுவர். 7. அவரைத். 8. அழிதல், இழிதல், அழிதள். 9. தெரியிழை, தேரிவள், தேரிதழ்க். பா.வே. 1. ஓராங்குக். பா.வே. 1. வாராலெஞ் சேரி, வாரலோ வாரலெஞ் சேரி. 2. பெருமா. 3. உறந்தை, உறைந்தை. 4. புகவிளங்கேரட்டு, புகவினந்தோட்டு. 5. தொலைதல, தொலைவன. 6. கண்ணே. * 1. ஊயீல ஏடிட. ஏ. சூடி. 459. திருப்பூந்துருத்தி தஞ்சைக்கு அடுத்துள்ளது. பா.வே. 1. வாய, வாய்போலப். 2. நின்றே. 3. நின்உயிர் நானே. பா.வே. 1. வாய்ஞெகிழ்ந். 2. வழையமர், வழைமலர். 3. கன்றிலேரா, கன்றிலேரா. பா.வே. 1. படுமழை. 2. எண்ணின. 3. சில்பெயல், விற்பெயற், பிற்பெயற், சிற்பெயல், விற்பெயர்க். 4. னாணும். 5. விழுமந். பா.வே. 1. இருக்கத். 2. தன்மசுன், தன்மகள், தன்மனையே. 3. இலங்க. பா.வே. 1. நிலைஇயோரே. 2. பொய்க்கொ, பேய்க்கொ. பா.வே. 1.. நாமிகன். பா.வே. 1. இருகரை, இடுகரை, இருங்கரை. 2. பசந்தக், பசந்த. 3. பசப்பு ஒல், பயப்புஒல். பா.வே. 1. சான்றோர். 2. உரைத்தனன். பா.வே. 1. மறப்பரும் பணைத்தோள் மரீஇ. பா.வே. 1. பெறுவனம். 2. காலறி, காலரி. 3. அறனிலதொன்றது. பா.வே. 1. மாற்றா மருவி, வருவீரோ. 2. இருதலை. 3. ஏறொடு, முருமே. 4. தொடுநாணென்னர், நடுநாள் எண்ணார். பா.வே. 1. துணையரி, துணைவரின், துணைபரி, துணைவர, புனையரி. 2. சாவாது. 3. புண்டணி தந்தை. 4. தரீஇ. 5. கழனி. 6. இளிவரின். பா.வே. 1. வீழ்முறை, 2. ஊழியின். 3. கடிப்பிடு. 4. இடித்திடத்துப். 5. பெய்குனி, பெய்கினி, பெய்யினி. 6. பெருமான். 7.உள்ள மோடு. 8. மேவுதலாகி, மேவலமாகிக், மேவலமாகி. 9. இவளைக். பா.வே. 1. தெரியுற், தெரி. 2. யுற்றஃது, றஃது. 3. ஒருநாள். 4. முயங்கி, மயக்கி. பா.வே. 1. இயைவதுங். 2. வீளையர். 3. கல்லிடுப்பு, கல்லிடு, கல்லிரு படுத்த. 4. மடமான், மடமாண். 5. னேர் ஓர்படத். 6. ததைந்த, தகைந்ததன்னையர், தன்னையர் நசைஇ. 7. குறுதியொடு. 8. வாழி. 9. மாறுகண். 10. நுதற்கொடிச்சி. பா.வே. 1. பொறாதுமுகை, புறாதுபுகை, புதுமுகை. 2. பெருங்காடுள்ள, பெருங்காடுள்ளும், பெருங்காட்டுள்ளும், பெருங்காடுள்ளுறும், பெருங்காகுளரும். 3. நேர்ந்தனை. 4. நாமுளம், நாமுளெம். 5. பிரியலெம், பிரியலம், பிரியலர், பிரியலேம். ப.வே. 1. புன்காய். 2. உகாஅத்துச், உகாஅத், உகரய், உகாஅத்து. 3. சினை, திறவுச்சினை, துச்சினை, துரவுச்சினை, இறவுச்சினை. 4. உதிரல். 5. கொடியவர். 6. னார்மென்ப. 7. மூழ்கினம், முழக்கினம், முயங்கினம், உள்கினம். 8. சொலினே. பா.வே. 1. கல்லுயர்பு. 2. சோதரு. 3. இனத்ததுப். 4. புல்லூர். 5. பூமணி. 6. விளையர். 7. சொல்லாண்டு. பா.வே. 1. தையும். 2. வன்முலை. 3. மிகுதி காப்போர். 4. அறியாது. பா.வே. 1. யாயில், ஆசில். 2. வியன்கடை. 3. அற்சிரை. 4. தண்ணீர்ச்,தெண்ணீர்ச். 5. கடைபெயல். 6. வருவர். 7. என்றிர். பா.வே. 1. உள்ளிய. 2. ரமம். 3. தொப்பன, ஏற்பன, ஏர்ப்பன, ஓர்ப்பன, ஒப்பன. 4. ஒப்ப, ஏற்பன, ஏர்ப்பன, ஓர்ப்பன, வொப்பன. 5. பரர்ப்படை. 6. மந்தியம். பா.வே. 1. வருமிடறு. 2. இயம்புதோறு, இயம்புதொறு. 3. மழைகெழு மறைந்த, மழைகெழு மறந்த. 4. அரும்பல். 5. போக்கித். பா.வே. 1. நாளுநாமென். 2. பெருநாணணிந்த. 1. வேண்டலன். பா.வே. 1. வெண்தோட்டு. பா.வே.1. கவ்வை. 2. நௌவி. 3. நன்மறி, நான்மறி. 4. கௌவிக். 5. காண்புளங். 6. அவிந்த, விரிந்த. 7. உருவீ. 8. சோர்புகு, சோர்கு, சேர்குவ. 9. அவரே. பா.வே. 1. இறவினும். 2. இழிவென. 3. சொல்லிவன்மை. 4. அல்கு கிழங்குநர். 5. படுமுடைப் 6. ருடைய. பா.வே. 1. வீழும். 2. அவலன். பா.வே. 1.. வாள்வெள். பா.வே. 1. வைகல், வைகல். 2. எல்லையும். 3. யாண்டோர். 4. பெடையோ பெயரி, பேடையொடு பயிரி. 5. வமைத்தலை, மைத்தலை. 6. ஊனசையொடு 7. பருந்திருந். 8. இருந்துறுக்கும், இருந்துவக்கும், துயக்கும், திறுக்கும், உயக்கும், உகக்கும். பா.வே. 1. உள்ளிக் காண்பேன், உள்ளிற் காண்பேன். 2. போல்வென். 3. அமிர்தம், அமுத, அமுதம். 4. மலர்போல், மழைபோல். 5. மடந்தை. 6. தைஇய. பா.வே. 1. துறைக்குவர். பா.வே. 1. கவலாது. 3. எழுதரும், ஏர்தரு. பா.வே. 1. இருக்கும். 2. யன்ற. பா.வே. 1. வழிவழி. 2. உழையானமையின். 3. கண்ணும், கண்ணேம். பா.வே. 1. அறியலர். 2. அனையமது, எனைமது. 3. கும்மே. பா.வே. 1. சுடும்புனம். 2. இசைஇ யின்னிசையா, இசைஇ யின்னிசையாய், இசையின் இசையாய். 3. வீழலொல்லாவே, வீழலொல்வர, எழல் ஒல்லாவே, விழல் ஓவாவே. 4. வெய்துபுலந்து, வெய்துபுலந். 5. பல்லிதழ்க் கலைஇத், பல்லிதழ்க் கலைஇய. 6. றவ்வே. பா.வே. 1. பொன்னுதல். 2. றப்பிற், தப்பிற்கு. 3. கொடுப்பினும். 4. நிரயத்துச். 5. செலீஇயளோ, செலீயரோ. 6. ஒருநாள் (இது ஒரு பிரதியில் இல்லை). 7. இலனே. பா.வே. 1. ஆர்த்திய. 2. பள்ளை. 3. வஞ்சியங். பா.வே. 1.. வயல்வெள். 2. பகை. 3. வருமோ. 4. கொழுநகர்க், கொழுநர்க். 5. காணி அளியென். பா.வே. 1. தழூஉஅணி. 2. மனனே. 3. துத்திப்பாந்தள், துத்திப் பாந்தட். 4. திரிந்திழைத், திரிந்திழை. 5. துயவுக் கோட். 6. பசுங்கழைத். 7. உறையின். பா.வே. 1. செறீயும், செறீஇயும். 2. நின்றாய். 3. நீயோர் வின்பயன் யிஃதோ, நீயோராவின் பயன்யிஃதே. 4. ஓரா. 5. சீரில்வாழ்க்கைப், சீரில்யாழ்க்கைப். பா.வே. 1. உறுகழிச். 2. முன்னையிற், முணையின். 3. கண்ணார், கண்ணா. 4. தழல். 5. நும்மிதற், நும்மிதின், நும்மினிற். பா.வே. 1. வைவாய். 2. எதிர்ந்த. 3. மன்றவவ. பா.வே. 1. இனிது. 2. நிலம்பெயர்ந்து. 3. உறைவன், உறையும். 4. மைதல், வன்மைதல், மைய. 5. களிற்றின். 6. அஃகுதை, அஃதை. 7. பின்றை 8. வெண்டைச், வண்கடைச். 9. யானப். 10. குறித்தவன். ** எனக்கு இற்றைக்கு நாற்பத்தைந்து ஆண்டுகட்கு முன்னர் வெண்பாப்புலியுடைய செவ்வூரி லிருந்த வித்வான் முத்துச்சாமி ஐயங்கார் கூறியது இஃதாம். இவரேதாம் `மண்ணிய சென்ற என்னும் பாட்டிற் புன வொரு பசுங்காய் என்ற பாடத்தை முதன்முதற் புனறரு பசுங்காய் எனத் திருத்திப் படிக்கச் சொல்லிய வரும் ஆவர். பா.வே. 1. இதுவுமற். 2. முதுநீர்ப் புணரி திளைக்கும் புள்ளிமிழ். 3. இணரவிழ். 4. வாய்த்தை. 5. மன்னெம், மன்னென், மன்னெ, மன்னங். 6. மன்னும். 7. ஞெகிழ்பவெம், ஞெகிழ்பதட, ஞெகிழ்பஎம். பா.வே. 1. துவர்வாய். 2. கோங்கின். 3. நுண்பல்துத்தி, நுண்பகுறுத்தி. பா.வே. 1. விடல்சூழலென்யான், விடல்சூழிலன்யான், விடல்சூழிலனால், சூழிலனான், விடல்சூழலன்யான், விடல்சூழிலென்யான். பா.வே. 1. முழவுமுதல் அசைய. 2. சிறுபொன். 3. போழின். 4. இன்மணி மணியுடை இனமணி, இனமணி மணியுடை. 5. துமில்மறந். பா.வே. 1. தாதல். 2. பின்னும். 3. நண்பின், அன்பினர். 4. அலர்தற்கு 5. யயரத் 6. யோனே. பா.வே. 1. கழிசேர்ந்து. 2. குறுங்கால். 3. உடைகரை. 4. துறைவர். 5. இங்குப். 6. பசந்தனன், பசந்தணன். பா.வே. 1. தொல்வினைப். 2. எரியுளி. 3. முனிவெதிர். 4. வாய்நீர்சுரத், தெறித்து, நீர்ச்சுரந் தெரிந்து, நீர்சுரத் தெறிந்து, நீர்ச்சுரித் தெறிந்து, நீர்ச்சுரத் தெறிந்த. பா.வே. 1. கண்டரா. 2. தாமவெள்ளெரி, காமவெள்ளெரி. 3. விடார். 4. களைஇயார். 5. தனிப்போர் பொலிவிளி. 6. இல்லையான். பா.வே. 1. பேவருந். 2. யாயெனச். 3. மாத், மாஅத். 4. பயிரும், பபயிரும். 5. தெண்கடல். பா.வே. 1. இன்னாப். 2. அந்நோய். 3. யாஅத்துலையக், யாஅதொலையக், யாஅம்தொலையக். 4. கைவைத்து. பா.வே. 1. வாழை. 2. சுரித்துகும் பிணிய, சுரிநுகும் பணிர. 3. இருந்தலை. பா.வே. 1. உலையுரந். பா.வே. 1. கீழ்ப்பட. 2. நடன, நீடின. 3. வாட, அவரடி, வாடி. 4. கொடியோர், கொடியரேர். 5. நினதூர். 6. அன்னையம், அனையம், அனைய. 7. பெருமநீயெற்கு 8. இன்னாகியபல, இன்னாதியல்பல. 9. செயினும். 10. மாற்றே. பா.வே. 1. புலம்புபெரிது, புலம்நனி. 2. உளனே, உள்ளேன், உளேனே. 3. இன்னிலை, முன்னிலை. 4. துறைவற்கு, துறையவற்கு, துறையவாக். 5. உரைக்குநர். பா.வே. 1. ஒல்வ. 2. டன்றோவிலனே, டன்னோ இலனே, டனெனோ இலனே. பா.வே. 1. களவினம், களவினங், களவினள். 2. நண்ணுற. 3. நள்ளெனக். 4. அன்னோள். 5. முகத்தாள். 6. தமரே. பா.வே. 1. திரையது. 2. பொதும்பிற். 3. யாத்தாம். பா.வே. 1. இழைப்பப். 2. பெயரும் பிருளிய, பெயரும் இருளிய. 3. மாரியும். 4. மின்னுறழ் இழைமுலை, மின்னுறல் இளமுலை, மின்னுறழ் இளமுலை, மின்னும் இளமுலை, மின்னுறழ் இளமுலை, மின்னும் இளமுலை, இன்னுறல் இளமுலை. 5. வைப்பிறன். 6. சுரமிறந். பா.வே. 1. ஞாயிறனையனென், ஞாயிற்றனையனென். பா.வே. 1. ஞெகிழவும், 2. நிறுப்பவும், 3. உளனே, உளேனே. 4. உரவுக் கடல் பொறா, உரவுக்கடல் பொரு. 5. ஓராங்கு காட்ட, ஓராகுக் காட்ட. 6. துனைப்பரி, துனைப்பரிவு, துணைப்பரி. 7. ஓங்குவரல் அருவி, ஓங்குவால் அருவி. 8. திரை. 9. கொவ்லோ, சொன்னனி. பா.வே. 1. தேம்பிய. பா.வே. 1. எறிதருக். 2. தாஅய, தாய. 3. அறியார்க். 4. வெய்யகவிப், யெய்த்தவிப், யெய்திப், வேய்கவின். பா.வே. 1. கள்வனும். பா.வே. 1. பொருந்திய. 2. அமையணி. 3. மாழைப். 4. நன்னிறம். பா.வே. 1. கொண்மீன், கோள்மீன். 2. உணங்கலின். 3. இருங்கழிக், அருங்கழி, இருங்கழி. 4. புலவ, புல்லப், புல்ல. 5. பரிக்கும். பா.வே. 1.. புள்ளுமிழ். 2. தூற்றத்தன், தூற்றுங், தூர்த்தன. பா.வே. 1. மலைச்சேர்அஞ், மலைசேர், மலைச்சேர் அஞ்செஞ்சாந்தின், மலைச் சேர் அஞ்செஞ். 2. மடவார், மடாமா, மடமா. 3. அதனான். 4. திறம்பல். பா.வே. 1. வொரீஇ. 2. ஒல்லாங்கு. பா.வே. 1. எடுஞ்சுவர், அஞ்சுவர. பா.வே. 1. தோளணைத், தோளினைத். 2. வாழ்ந்த. பா.வே. 1. கொடுந்தாள், கொடுங்கோல். 2. உவக்கும், உயங்கும். பா.வே. 1. பண்டைத்தம். 2. செலவா, செல்வர், செலவர். 3. றேனோ. பா.வே. 1. நனைந்தே. பா.வே. 1. கோதைப். 2. பணைப்பெரும். பா.வே. 1. நயனிலன். 2. தீங்கலுழ் உந்தி, தீங்கலுழுதி, தீங்கலுந்தி, தீங்கலுழுத, தீங்கல் உழுநோய், தீங்கலுழிநீ, தீயகலுழி, தீயகலுழ்தி, தீம்கலுழ்உந்தி. 3. சாயலளியள், சாயலளிய. பா.வே. 1. பரணர். 2. புலிநேர்க் குறழ்நிலை. 3. குறும்பர். பா.வே. 1. வேனில். 2. உகுத்தலின், அஞற்றலின். 3. நாகஞாழல், னாகஞாழல், ஆனாது. 4. களிறு வழங்கும். 5. தாவும். 6. நன்மழைக் கண்ணிக்கு, நன்மழைக் கணிக்கு, நன்மலர் மழைக்கணிற். பா.வே. 1. புலைச்சி, புலத்தி. 2. தலைப்புடை. 3. தண்ணயத்து. 4. பரூஉக்கிரி. 5. மணவில். 6. நாடே. பா.வே. 1. கொலைய. 2. யானை. 3. பைங்கண். பா.வே. 1. தீர்நீ. 2. நாறுமயிர். 3. குன்றகச். 4. மன்றல். 5. வோர்க்கே, வோனே. பா.வே. 1. குறும்படை. 2. படிந்த, கழிந்த. 3. துணியில். பா.வே. 1. பைந்தோடு, பெருந்தோட்டு. 2. இருநீர்ச், பெருநீர்ச், அவிரும் பெருநீர்ச், பெருநீர். 3. ஒரு நம்பின். பா.வே. 1. சினையிழந்து, சுனையிழந்து. 2. வெற்பன் நண்ணி, வெற்பி னண்ணி, வெற்பனண்ணி, வெற்பயல் நண்ணி, வெற்பன நண்ணி. பா.வே. 1. செறுவார்க்கு, சிறுவர்க். 2. உறுநகை, உறுவகை. 3. தெருவ. 4. ஈங்கும், ஈங்கனம். 5. அறிந்திசின். பா.வே. 1. முகிழ்முகுத். 2. தலைஇய. 3. கிளைஇய குரலே, கிளையே மென்குரல், கிளையே குரல. 4. கிழக்கர் வீழ்ந். 5. செறிநிறை வெண்பலும், செறிநிரை வேனலும். 6. அணங்குஎன. 7. னறிவ லென்னறி, அறிவல் என்னறி, அறிவல்தானறி. 8. செல்வன். பா.வே. 1. அற்சிரம். 2. தேரென், தேரேன். 3. நலங்கொள். பா.வே. 1. நளிபுனம், நளிபுன், நளிபுனல். 2. உறையுறு. 3. மகளிர்மையின் போகிச், மழையின் போகிச், மகளிர்மையிற்போகிச். 4. நறுவிதழ்க், நறுமாவிதழ்க், மாவிதழ்க், நறுமா இதழ்க். பா.வே. 1. நாமவற் புலம்பின். 2. அழியின், அழுவி, அழிவி, அழிவின், அழுவம். 3. அலர்வேய்க், அலர்வேக், அலர்வேய். 4. இருந்தவென், அலருந்தவென், வருந்தவென். பா.வே. 1. பல்வீ படரிய, பல்லி பட, பல்லி படய, பல்லி படரிய, பல்வீபட்ட, பல்வீ படீஇய, பல்வி பயப்பட்ட. 2. பொழிலணிக். 3. கொளவு. 4. கண்ணியல். 5. வலிய. பா.வே. 1. கமழ்சனப். 2. பணிவினை. பா.வே. 1. பாப்ந்தே. பா.வே. 1.. மிகுவல், மிகுவ. 2. கொளீஇய. 3. பேரு. பா.வே. 1. நோற்றார். 2. திவலைப், திவலை. 3. புலம்பாயிருந்த, புலம்பயிர்க்கு வந்த, புலம்பயிர் அருந்தி. 4. ஏறொடு, நல் ஏறொடு, 5. பால்வார் குழவி, பால்வார் குழவியி. 6. உள்ளி நிரையிறந்து, யாளினிரையிறந்து, வானிரையிறந்தவூர், யாளின் நிரையிறந்து, யானின் நிரையிறந்து, யான் நிரையிறந்து, யாநாள் நிரையிறந்து. பா.வே. 1. கொடிஞ்சி. 2. தவிர்த்தனிர் அசைஇத், தலிர்த்த நிரையசைஇத், தவிர்த்தனிர் அசைஇத், தவிர்த்தனிரைசைஇ, தவிர்த்தனிரை சைஇத், 3. தவறே. 4. தகைய, ததைய, தைய்ய, தைஇய. பா.வே. 1. முனைக்கோட். 2. நயந்துதான் மயங்கிச். 3.. செல்லவு. பா.வே. 1. மல்குசுனைப் புலந்த. 2. கொல்லுடை நறுவீ. பா.வே. 1. பொலந்தேர். பா.வே. 1. அரும்பவி. 2. சிதையமீன். 3. தரவெனச், தரவெனக் கூறலின். 4. சொல்லலும், சொலலினும், 5. மின்னு யிரிழவே. பா.வே. 1. பனிவெங் குன்றஞ். 2. செல்லார் கொல்லோ. 3. விருங்கோட்டஞ்சிறை. 4. கணத்து. 5. நிலையார் பொருட்பிணி. பா.வே. 1. வளையோய் வந்திசின். 2. விரவுங் கொடுந்தாள். 3. ஈர்மண லீர்நெறி. 4. துறைவற்குரிய. 5. சேரியினகை யாய்த்தாயத்தாரே. பா.வே. 1. பொருஞ். 2. அறிவன். 3. தோழியவர், தோழியவற். பா.வே. 1. நிறையிதழ். பா.வே. 1. நீர்நீர். 2. தணந்தனிர், தணிந்தனை. 3. உய்த்துக் கொடுமே. பா.வே. 1. பெயல்கால், பெயல்கான். 2. காணலரே, கானலையே. 3. கமழும். பா.வே. 1. நீழலான்று விரிந்த, நிழலான்ற விரிந்த, நிழலான்று விரிந்த. 2. வெவ்வங், வெவ்வக் 3. கலுழித், காலுழித். 4. குடித்திய, குடித்தி, குடித்து. பா.வே. 1.. பரலும். 2. உன்னாள். பா.வே. 1. ஞெகிழ்தோள். 2. சிறுதினைக். 3. சேணான். 4. ஞெகிழியிற், ஞெகிழியின். 5. மின்படு. 6. மணம்வர. பா.வே. 1. விம்மி யீங்கே. 2. பேதுறல்யாங்கோடு, பேதுறவாய்கோடு. 3. வாய, கவர்வாஅய. 4. படர்தெண்ணீங்க. 5. கோவலர்க். 6. சொல்லுவ, சொல்லு. 7. முல்லைவெண். பா.வே. 1. காட்டில். 2. உயிரா, உயிரான். 3. நசைஇப், நசைஇற், அசைஇப், நசைஇன். 4. தழீயினன், புல்லினென். 5. தாஅயவன். 6. புறங்கவைஇ யினனே, புறங்கவையீனளே, புறங்கயையினளே. பா.வே. 1. காணி. 2. தில்லை. 3. ஒண்கிளி. பா.வே. 1. அவர்நாட்டு. 2. உந்தியோடு, உந்தி, உத்தியொரு. 3. காலை நிவந்த, யேர்குலை நிவந்த. 4. முழுமுதல் காந்தள். 5. மெல்விரல். 6. நடவும், விடுதலும். 7. தோட்கே. பா.வே. 1. வேலன். 2. வினவுதல், வினவல். 3. உயிரே. 4. அடையொடு. 5. சிலம்பில். 6. தண்தார். பா.வே. 1. செங்காய். 2. புதவின், புல்லின். 3. மரையா. 4. யெய்துற்றுப். 5. வரிநிழல், வருநிழல். 6. இன்துனைப், இன்றுனைப். பா.வே. 1. அரிற்பவர், அரிப்பவர். 2. அவிர்தொடி, பொற்கொல்லற் கொடித், விற்கொடி. 3. கெறறென, தேற்றேன். 4. வந்தனர், 5. அவரைக். 6. கண்போர், கண்போல். 7. கண்ணவர், கள்வர், கண்டார், களவர், கணவர். 8. மணங்கொளற்கு, மண்கொணற்கு. 9. வரும். 10. மன்னர் போரே. பா.வே. 1. ஞெகிழ. 2. நாடொறும். 3. கழிந்து, கழிந்துகண், கழிந்து, கலிழும். 4. பணியா நோவே, துளியா னாவே. 5. ததும்பி, 6. முழவின். 7. பெருங்கடல் 8. நாடநின், நாடனீ, நாடனின். பா.வே. 1. பால்வரைத்து. 2. வெனயான், வெறியாள், வேறுயான். 3. உள்ளகைபு, உள்ளகைப். பா.வே. 1. ஒழுகு, அழுகு. 2. கண்ணாளாகிப், கண்ணாளாகின், கண்ணாளாகிய. 3. அழுதன்று, பழுதால். பா.வே. 1. தொடிவழங்கு. 2. பெறீஇ, பெறீஇய. 3. உருவக்கொண்டல், உருவக்கொண்டொழி. 4. ஒழியவந், யலம்வந், அவர்வந். 5. தோயன், 6. துடங்கலின், துணங்கலின். பா.வே. 1. ஆய. 2. அருவி. 3. தண்ணுறு. பா.வே. 1. வன்பின், பண்பின், வனப்பின். 2. கிற்றோ. 3. இடிகரைப், இகல்கரைப். பா.வே. 1. வரைகை, வராகை. 2. வால்நெற்று, வால்நெற்றி, வால்நெற்றின், வானெற்றி. 3. அருவி 4. தூக்கும், தூங்கும். 5. கானலஞ். 6. செலவாந். பா.வே. 1. ஊரனோடு. 2. பொருந்தியலவன், பொருந்தியவர். 3. சேனொருமருங், சேணா ஒருமருங், சேரொருமருங். 4. கிலமே. பா.வே. 1. குருந்தொடு. 2. நெடுமணற், நெடுவெளிக். 3. சிமய. 4. உணங்கும், அணங்கும். 5. கூழைபெய் எக்கர்க். 6. பூதுக்கை, புதுக்கை. 7. உலர்பதம். 8. இறவை, யிரவை, அளவை, இரவை. பா.வே. 1. நீர்த்தீ பிறனும், நீர்தீப் பிறப்பினும், நீர்திரிந்து பிறழினும். 2. கெளமைஅஞ்சல், கெளவையஞ்சி. 3. புடைத்தொடு புடையூப், புடைத்தொடு புடைபூ, புடைத்தோடு புடைபூ, புடைத்தோடு புடையூ, புடைத்தொடு புடையூப். 4. நாறுபல, நாறு. 5. காந்தள். 6. நானொடு, நாடனோடு. 7. அமைந்தநம், அமைந்த. பா.வே. 1. ஒழித்த செய்தியின், ஒளித்த செய்தியின். 2. ஒன்றோ யின்றே, ஒன்றா யின்றே, ஒன்றோ வின்றே. 3. தூங்கணங், தூங்கணம். 4. பெண்ணை. 5. கூட்டினும். பா.வே. 1. இரவரி. 2. யாமத்துக். 3. அவியன் மாரே, அவியன் மான்றே, அவியாமாறே. பா.வே. 1. தாஅங். 2. தொடுப்ப, தொகுப்ப. 3. ஐயென, ஐயேன. 4. பொளந்த. பா.வே. 1. வளையொடு. 2. நெகிழ்ந்ததன் 3. ஆற்றா. 4. தோழியாற். 5. எய்தற்கு. 6. நடையே. பா.வே. 1. காணாத, காணாது. 2. மரநிழல்பட்டு, மாணிழற்படூஉ, மரநிழற் படினிய, மாநிழற்படீஇய, மாண்நிழற்படீஇய 3. தலையின்றாகத், தலையலாரைக்குகந்த. 4. தண்ணளிச், தீறித்துச், தீத்துச், தீறித்து. பா.வே. 1.. சுடர்வாய, சுடர்படு. 2. மடவரல். 3. கானே. பா.வே. 1. கிழங்கின், கிழங்கினே. 2. கண்ணகன்தூமணி, ஏர்கண்ணகன் மத்துளி, கண்ணகன் மத்துணி, கண்ணகன்மாத்துணி, நேர்கண்ணகன் மாமணி, ஏஎர்கனமத்துளி, ஏஎர்கன்மை துணிபெறூஉ, கண்ணமை துணி, ஏஎகண்ணகன்மத்துளி,உண்ணமைமதுத்துணி. 3. அறிவு காழ். 4. சிறுதொடி. 5. எம்பின், எம்மின். பா.வே. 1. புதைப்பாஅ, 2. வென்றறிகினன. 3. யீங்கயத்து, யீங்கெய, யீர்ங், யீஇர்ங், யீங்கக். 4. கயத்தூ, கயத்துக், கயத்துத். 5. முன்னரஃதென்ப, முன்னாதென்ப, முன்னர்த் தோன்றும். பா.வே. 1. பகலை. 2. ஆகிய. 3. நன்மலர், நாள்மலர். 4. துறைவனொடு. 5. தோன்றல் பா.வே. 1. கண்டுழிக் கொற்றம், தண்டுளிக் கெற்றம், தண்டுளிக் கேற்ற, கண்டிசின் தோழி. 2. முகைத்தலை. 3. பூமலி, பூமலர், பூமலர்பு. 4. தேங்கமழ் பூக்கால், தேங்கமழ் பூக்கஞல. 5. வம்பும் பெய்யுமார், வம்பம் பெய்யுமார். 6. வம்பழன்று. பா.வே. 1. சென்றற்கென்றி, செல்கவென்றி, சென்றைக்கசென்றி. 2. ஒடுங்கித் ஒழுங்கத், அழுங்கத், ஒழுங்கி, ஒழுக. 3. யானாவது மிலையான், யாதுமில்லையான். பா.வே. 1. கழுந்தின், கழுத்திற், கழுந்நிற். 2. மகிழ்ந்த, மகிழ்ந்தநின். பா.வே. 1. பழந்தின், பழமருந்து. 2. சிலையிற். 3. கிழவன். 4. தம்மஇப், தாமஇப், தாமிப். 5. அழுங்கலூரே. பா.வே. 1. விழவணி. 2. புன்கணொடும், புன்கணோடும், புன்கண்ணோடும். 3. ஆகுக. பா.வே. 1. மாலை. 2. உயிர்வரம்பு, உயிரை வரம்பு, நிறைவரம்பு. 3. வெள்ளக். பா.வே.. 1. நீர்க்கால். 2. எற்றினும், ஏற்றினும், ஏறினும். 3. களைவணை. 4. அசாஅ, அசா, பொருசா, அசாவ. 5. உமணர், உமணரொழுகைத் உவண்எருத்து, துமணர். 6. கொடுநிரைதன்னை, தோடுநிரைத்த. 7. முழுசினை, முழுச்சினை. பா.வே. 1. குறும்பூழ். 2. அத்தைப் 3. வந்தெதிர். 4. என்றலின், என்றனன். பா.வே. 1. சொல்லா. 2. சார்ந்துவந்து, சரத்துவந்து. 3. யளைவந்து, இளைவந்து. 4. தண்ணுமை. பா.வே. 1. எருத்தல். 2. உழாஅது. 3. புயநீங்கு. 4. யைவி, யவிந்து. 5. தழீஇயப். 6. கையறு, கையறப். 7. கூவும். பா.வே. 1. அணிச்சிறைத், மணிச்சிறை. 2. அவர்நாட்டுத். 3. அண்ணெல், தண்ணென். 4. கபவை, கடமை. 5. துடவைய. 6. துளிரெறி, தளிரெறி. 7. தமராற், தம்மாற், தமரால். 8. நிரைசேர் நுண்தேர், நிரைசெலற், தண்டோர், நிரைசெலல் திண்தோல். 9. வோற்கே. பா.வே. 1. வினைவில். 2. ஞான்றே. பா.வே. 1. யாகத்து, யாகத்துக். 2. மறுவாவந்து ஓடிக், வறுவந்தோடிக், மறுவரவந்தோடிக். 3. கூரைமுற்றும் சாரல் நாடல். 4. அவர் தினை மேய்தந் அவர்தினை மேய்ந், அவர்தினை மோய்ந், வார்தினை மேய்ந், வார்தினை மோய்ந், வார்தினை மேய்தந்து: அவர் தினை மேல்அவர்தந், அவர்தினைப் புனம்மேய்ந், அவர்தினைப்புனம் மேய்ந்து. பா.வே. 1. யாவுறு மதியிற், அரவுநுங்கு மதியிற், யாவது மதியிற், அரவுநுங்கு மதியினுக், யரவுறு மதியிற், அரவுநுங்கு மதியிற்கு. 2. கிவனோர் போல, கிவறோர் போலக், கிவறார்போல, கிவறோர். 3. களையார், களையர், கனையர். 4. கண்ணின்று படீஇ. 5. அஞ்சல். 6. யாங்காவாவது, யாஅங்காவது, யாங்காவாவதுவை, ஆங்கவர் வதிவயின். பா.வே. 1. பந்தும். 2. ஆயமோடு. 3. உரைத்தனள். 4. முறிசினை. 5. ஓமைக். 6. ஒருத்தன், ஒருத்தனல். 7. வெவ்வறைக், வெவ்வரை. 8. கவான். 9. செலலே. பா.வே. 1. நனைமுது, நனைமறு. 2. சினைமருள். 3. பெய்த. 4. அன்னாய். 5. நின்னலதிலலேன், நின்னலதிலளென். 6. தன்னுடை இன்னல். 7. இலரே. பா.வே. 1. செற்றாம். 2. தூற்றம். 3. திவலைத், துவவைத். 4. கையுறை, கையுளை. 5. மாட்டியே. 6. சுடர்துயில். 7. மெய்வலி. 8. உவமைமீன், உவகைமீன். 9. கண்கலிழ் உகுபனி, கண்கலிழ் ஊங்குபனி, கண்கலிழ் உங்குபனி, கண்கலிழ் பழுங்குபனி, கண்கலி முழங்குபணி, கண்கலிழ் உகுபனி, கண்கலிமூங்குபனி. பா.வே. 1. உண்டுறை. 2. விடுவுழி. பா.வே. 1. செல்லாம். 2. களைக, கனைஇக், கனைக, கனைஇ. 3. களரிக் கரம்பை. 4. இனிது, 5. தேரே, தேரேர். 6. நோயுழைந்து. 7. யானே. பா.வே. 1. அடம்பின். 2. ஆர்மலர். 3. பரக்கும். 4. துறைவனோடு. 5. நக்குவளை, குவளை. 6. கடிந்தன்றே, கடிதன்று. 7. ஐதேகம்ம, தேய்க, ஐதெமக்கம்ம, ஐதேய்கம்ம, ஐதேஅம்ம. * இது சுவடிகளில் காணப்பெறும் பழங்குறிப்பு. 307, 391 - ஆம் செய்யுட்கள் மட்டும் ஒன்பதடிகளை யுடையனவாகக் காணப்படுகின்றன.