kiwkiya«-- 23 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) சமயம் - 4  மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் (தொகுதி -2) ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 8+296 = 304 விலை : 380/- மறைமலையம் - 23 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 344 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்றுஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். குறைந்த அளவில் எஃப், ஏ., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலையடிகளின் தனித்தமிழ்த் தொண்டும் எழுத்தாளர் கடமையும் மறைமலையடிகளின் தனித்தமிழியக்கம் தமிழ்த் தாயின் நெஞ்சு புரையோடாதும் தமிழர் அறை போகாதும் காத்தது. தமிழின் `வயிற்றிலிருந்து முன்பு பல திராவிட மொழிகள் கிளைத்து அதன் பரப்பைச் சுருக்கியது போல, மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய திராவிட மொழி பிறந்து தமிழை இன்னும் குன்றிக் குலையாதவாறு தடுத்தது. இன்று பாட நூல்கள் பெரும்பாலும் தமிழ் வடிவாக வருகின்றன. ஒரு சார் இளைஞர் கூட்டம் எழுத்தாளர் கூட்டம் குடிநீரைத் தூயநீராகக் காத்தல்போலத் தமிழைத் தூய தமிழாகக் காத்து வருகின்றன. கலப்பு மிகுதி யிருந்தாலும் பல செய்தித் தாள்கள் தமிழ்த் தூய்மையையும் முடிந்த அளவு பேணி வருகின்றன. சொற்பொழிவுகள் நல்ல தமிழில் கேட்கப்படுகின்றன. வாழ்த் துக்கள் வரவேற்புக்கள் அழைப்பிதழ்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பைங்கூழ் வளரும் பைந்நிலங்களாக மிளிர்கின்றன. இந் நன் மாற்றங்களையெல்லாம் மறைமலையடிகளைப் பெற்றமை யால் தமிழ்த்தாய் பெற்றாள் அத் தவமகன் அடிச்சுவட்டை அன்புச் சுவடாகப் போற்றிப் பாலின் தூய்மைபோலத் தமிழின் தூய்மையைக் கடைப்பிடித்து வாழும் இளைய மறைமலை யடிகள் இன்று பல்கிவருப. ஆதலின் தமிழ், தனித்தடத்திற் செல்லும் புகைவண்டி போலப் பழைய புதிய தன்சொற்களைக் கொண்டே விரைந்து இயங்கி முன்னேறும் என்று உறுதி கொள்வோம். - டாக்டர் வ.சுப. மாணிக்கம் மறைமலையடிகள் நூற்றாண்டு நினைவு மலர் (பக். 15 - 26) நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்ரமணியன்திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: âUkâ வி. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசுஇந்தியா திருமதி`புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் தொகுதி - 2 பொருளடக்கம் பக்கம் 9. திருப்பெருந்துறை மிழலைக் கூற்றத்திலுள்ளது 3 10. பௌத்தமதம் தமிழ்நாட்டில் தலையெடுத்ததும் ஒடுங்கியதும் 15 11. வீடுபேற்றின் கண்ணும் உயிர்கள் உளவாதல் 29 12. சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை 58 13. கட்குடிப்பாட்டும் சூதாட்டப்பாட்டும் இருக்கு வேதத்தில் காணப்படல் 86 14. மந்திரம் என்னும் சொல் தூய தமிழ்ச்சொல் 104 15. மாணிக்கவாசகரும் நம்மாழ்வாரும் 128 16. சைவசமயச் சான்றோர் பொய்கையாழ்வார் கருத்தொருமை 154 17. நாச்சியார் பெரியாழ்வார் முதலியவர்களைப் பற்றிய ஆராய்ச்சி 169 18. திருமங்கையாழ்வார் காலம் 183 19. பழைய வடநூல்களில் சிவபெருமானின் முழுமுதன்மை 214 20. பன்னீராழ்வார்களின் காலவரையறை 251 9. திருப்பெருந்துறை மிழலைக் கூற்றத்திலுள்ளது இனி, அடிகளின் வரலாற்றுவழியே சென்று எதிர்ப் பக்கத்தவர் கூறும் ஏனைய மறுப்புகக்களையும் ஆராய்வாம். திருவாரூர்த் திருப்பதிகத்தில் திருநாவுக்கரசு அடிகள் நரியைக் குதிரைசெய்வானும் என்று அருளிச் செய்திருப்பது மாணிக்கவாசகர் பொருட்டு இறைவன் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடலையே வெள்ளிடைமலைபோல் விளக்குவ தாகவும், மாணிக்கவாசகரை ஏனை மூவர்க்கும் பிற்பட்டவ ராக்குதற்கு முனைந்துநிற்போர் அஃது அவர் பொருட்டு நிகழ்ந்தது அன்றென அதனை யடியோடு புரட்டப் பார்க்கின்றார்கள். சான்றுகள் இல்லாதவற்றை யெல்லாம் இஃது அப்படியிருக்கலாம். இப்படி யிருக்கலாம் என்று வெற்றெண்ணங்கொள்ளும் இவர்கள், மாணிக்கவாசகப் பெருமான் தம்பொருட்டு இஃது நிகழ்த்தப்பட்டதாகத் தாமே திருவாசகத்திற் பல இடங்களில் அருளிச் செய்திருக்கவும், அவர் காலந்தொட்டு இது காறும் வந்திருக்கும் வரலாற்று நூல்களும் தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டார் வழங்கி வரும் வழக்குரைகளும் எல்லாம் அஃது அவர் பொருட்டே நிகழ்த்தப்பட்ட தாகுமென ஒரேமுகமாய்க் கூறாநிற்பவம். இவை யெல்லாவற்றிற்கும் முரணாக ஏதொரு சான்றுமின்றி முழுப்புரட்டாக, நரியைக் குதிரை செய்வான் என்றது மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்த்தியதனை யன்று. அஃது எல்லாம்வல்ல இறைவன தாற்றலைக் குறிப்பிக்க எழுந்த ஒன்றாம் என எதிர்ப்பக்கத்தவர் அழிவழக்குப் பேசுவாராயினர். எல்லாம் வல்ல இறைவன் செயலைக் காட்டுதற்கு நரியைக் குதிரை செய்வானும் என்னும் ஒன்றனைக் குறிப்பிட்டு ஓதவேண்டியதென்னை? அணுவை மலையாகவும் மலையை அணுவாகவும் கல்லைக் கயிறாகவுங் கயிற்றைக் கல்லாகவும் ஆக்கவல்லான் என்று கூறலாகாதோ? பேராற் றலைப்பற்றிப் பேசுங்காற் சிறுமகாருங்கூட இங்ஙனமன்றோ பேசக் காண்கின் றேம்? இவ்வாறு இறைவனது ஆற்றலை உலகத்தார் வழங்கும் பொதுமுறையில் வைத்துரையாது, நரியைக் குதிரை செய்வானும் என்று சிறப்பு முறையில் வைத்தோதிய தென்னை? என்று ஆழ்ந்தாராய வல்லார்க்குத் திருநாவுக்கரசுகள் ஏனைச் சமயத்தார் போலக் கடவுளை மனமொழிகளுக் கெட்டாதவன், குணங்கள் இல்லாதவன், இன்னனென் றறியப்படாதவன் என்றுமட்டுங் கூறுங் கொள்கையினர் அல்லர்; அன்பரல்லார்க்கு இறைவன் அங்ஙனம் எட்டா நிலைமையனாயினும், அன்பராயினார்க்கு அவன் மிகவும் அணியனாய் நின்று அருள்செய்தலையே தனக்கு இயற்கையாக வுடையவன் என்று அவனது அருள்நிலை யினையும் அவ்வருள் நிலையிற் படிந்து அவனுக்கு அணுக்கராய் நிற்கும் அன்பர் நிலையினையும் அறிவுறுக்கும் சைவக் கொள்கையினர்; ஆதலால், அவர் ஏனையோர்போலக் கடவுளை எட்டா நிலைமைக் கண் வைத்து ஓதாது. அவன் தன் அருட்பெருந்தகைமையால் தன் அன்பரையும், ஒரோவொரு காற்பெருந் தீவினையாளரையுங் கூடத், தடுத்தாண்டு அவர்க்குத் தன் அருளை வழங்கிய இவ்வுலகத்து உண்மை நிகழ்ச்சிகளை எடுத்துச் சொல்லிச் சொல்லி, அன்பினால், அகங்குழைந்து அவ்வடியவர்களைப் போல் தமக்கும் அவ்வருட்பேறு கிடைக்கவேண்டுமெனப் பாடுங் குறிப்பே யுடையர். அக்குறிப்பினால், மாணிக்கவாசகர் பொருட்டு இறைவன் எளியனாய் வந்து நரி பரியாக்கிய தனையும், தாயைப்புணர்ந்த ஒரு பெருந் தீவினையாளனுக்கும் அத் தீவினை யொழித்தமையினையும், பதஞ்சலி புலிக்கான் முனிவர்கட்கு உலகுயிர்களை இயக்குந் தனது இயக்கமாகிய திருக்கூத்தைக் காட்டினமையும், திருநாளைப்போவார் என்னும் நந்தனார் பொருட்டு விதையிடாமலே வயல்களில் நெற்பயிர் விளைவித் தமையும் ஆகிய அருட்டிறங்களை அவர் எடுத்தோதினார். பொதுவாக இறைவனுடய அளவிலா ஆற்றல்களைச் சொல்லுதலால் எவர்க்கும் அன்புண்டாகாது; அவன் தன்னடியவர் பொருட்டு எளியனாய் வந்து எவராலுஞ் செய்தற்கு ஆகாதவற்றைச் செய்த சிறப்பியல்புகளைக் கேட்ட வளவானே எவர்க்குந் தம்மை மீறியே உள்ளம் நெக்கு நெக்குருகி அன்பு மேலெழும். ஆகவே, பேரன்பின் துறையில் அமிழ்ந் திருந்த திருநாவுக்கரையர், முதலான அருட்செல்வர்க்கு, இறைவன் இங்ஙனஞ் சிறப்பாகத் தன்னடியவர்பாற் செய்த சிறப்பியல்புகளை நினைந்து நினைந்து அவை தம்மை ஓதி ஓதி அன்பால் உருகுதலே கருத்தா மல்லது. பிறி தெவ்வாற்றானும் உணரப்படாத இறைவன் பொது வியல்புகளைச் சொல்லுதலிற் கருத்து இல்லையாகு மென்க. உலக வழக்கினுள்ளும் நல்லா ரொருவரைப் பிரிந்த அவர் நண்பர். அந் நல்லவர் ஆங்காங்கு ஏழை எளியவர்க்கும் ஏனையோர்க்குஞ் செய்த அவ்வந் நற்செயல்களை எடுத்துச் சொல்லிச் சொல்லி அன்பினால் ஆற்றாது அழுதல் காண்டு மன்றே. இவ்வாறு சிறப்பியல்புபற்றி நிகழும் அன்புரைகளே தேவார திருவாசகங்களினும் ஏனை யன்பர்கள்அருளிச்செய்த திருப்பாட்டுகளினும், நிரம்பி யிருத்தல் காணப்படும். படவே, நரியைக் குதிரைசெய்வானும் என்று திருநாவுக்கரசு அடிகள் அருளிச்செய்தது மாணிக்க வாசகர் பொருட்டு இறைவன் நரிகளைக் குதிரைகளாக்கிக் கொணர்ந்த சிறப்பியல்பினையே உணர்த்துவதாகுமென்று கடைப்பிடிக்க ஒரு செய்யுளுக்காதல், அச் செய்யுளிலுள்ள ஒரு சொற்றொடருக்காதல் உரை செய்யுமிடத்து ஆக்கியோன் கருத்தறிந்து அதற்கு உரையுரைக்க வேண்டுமே யல்லாமல் தமக்கு வேண்டியவாறெல்லாம் உரை கூறுவது பொருத்தமில் போலியா மென்பது தமிழ் வரலாறு உடையாரும் அவரோடு ஒத்தாரும் உணரக் கடவராக! அற்றேல், நரியைக் குதிரைசெய்தல் முதலாக மேற்கூறிய திருவிளையாடல்கள் இன்னார்பொருட்டு நிகழ்ந்தன வென்று கூறாமையால், அவை இறைவன் பொதுவியல்புகளையே உணர்த்துமென்று தமிழ் வரலாறு உடையார் உரைத்தாரா லெனின்; திருநாவுக்கரசுகள் அத் திருவிளையாடல்களை வரன்முறையே முற்றுங் கூறுவேமென்று புகுந்து, இடையே அஃது இன்னார் பொருட்டு நிகழ்ந்ததெனக் கூறாது விட்டிருப்பினன்றோ அவ்வாறு தடை நிகழ்த்துதல் ஆம். மற்று, அவர் இறைவனை எழுத்துதற் பொருட்டுத் தனித்தனியே அருளிச்செய்த பாடல்களில் அங்ஙனம் வரலாற்றுக் குறிப்புகள் எல்லாங் காணப்புகுதலினும் பெரியதொரு பிழைபாடு பிறிதில்லை. அல்லதூஉம், நரியைக் குதிரையாக்கிய திருவிளை யாடலும் பிறவும் இன்னார் பொருட்டு நிகழ்ந்தன வென்பது தமிழ்நாட்டி லுள்ளார் எல்லாரும் நன்குணர்ந்தே ராகையால், அவை இன்னார் பொருட்டு இயற்றப்பட்டன வென்று வேண்டா கூறாது. அவை இறைவன் அருண்மேலவாதல் ஒன்றையே கருதிப் பாடினா ரென்க. எனவே, இன்னார் பொருட்டென்று பெயர் கூறினுங் கூறாதுவிடினும் அவை அவ்வவ்வடியாரைச் சுட்டாது போதல் இல்லையென்பது பட்டினத்தடிகளும் தம் மகவையரிந்து உணவூட்டிய சிறுத் தொண்டரும் மனையாள் கூறிய ஆணையினால் இளமைக் காலத்தே துய்க்கும் இன்பத்தைவிட்ட திருநீலகண்டரும், கண்ணை இடந்து அப்பிய கண்ணப்பரும் நிகழ்த்திய அரிய அன்பின் செயல்களைமட்டுங் குறிப்பிட்டு, வாளால் மகவரிந் தூட்டவல் லேன் அல்லன் மாதுசொன்ன சூளாள் இளமை துறக்கவல் லேன் அல்லன் தொண்டுசெய்து நாளாறிற் கண்இடந் தப்பவல் லேன் அல்லன் நான்இனிச்சென் றாளாவ தெப்படி யோதிருக் காளத்தி அப்பனுக்கே என்று அச் செயல்களைச் செய்த அடியார் பெயர்களைக் கூறாது அருளினமையுங் காண்க. இங்ஙனமே, அடிகளும் மண்பான் மதுரையிற் பிட்டமுது செய்தருளி என்றும், பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பெரும்பித்தனே என்றும் பிட்டுத்தந்த முதியோளைக் குறியாது அருளிச் செய்தலும் உற்றுணரற்பாற்று. ஆதலால் தமிழ் வரலாறு உடையார் நிகழ்த்திய தடை போலியேயாகும். இனி, மாணிக்கவாசகர் விச்சதின்றியே விளைவு செய்குவாய் என்று அருளியதும் நந்தனார் பொருட்டு நிகழ்ந்ததையே குறிப்பது; அதனால், நந்தனார், வாதவூரடிகட்கும் முற்பட்டவராதல் பெறப்படும். அது நிற்க. இனிக் கழுமலம் அதனிற் காட்சி கொடுத்தும் என்று அடிகள் அருளியது ஏன் திருஞானசம்பந்தப் பெருமாற்கெதிரில் இறைவன் தோன்றியதை யுணர்த்தியதாகக் கொள்ளுதல் கூடாது? எனத் தமிழ்வரலாறுடையார் வினாவுகின்றார். திருஞானசம்பந்தர் ஒருவர்க்கன்றி வேறெவர்க்குங் காட்சி தந்திலன் இறைவன் என்பது பெறப்படுமாயினன்றே அவ்வாறு பொருள் கோடல் பொருந்தும்? அடியவரெதிரே தோன்றிக் காட்சிதருதல் ஒருகாலத்தொருவர் பொருட்டன்றிப், பல காலத்தும் அடியார் பலர் பொருட்டும் நிகழ்வதொன்றா கலின் அதற்கவ்வாறு பொருள் கோடல் பொருந்தாதென மறுத்த உரோமச முனிவர்க்குத் திருக்கழுமலத்திற் சிவபிரான் காட்சி தந்ததனைக் குறிப்பிட்டுத் திருஞானசம்பந்தப் பெருமானே திருப்பிரமபுரப் பதிகங்களுள் வழிமொழிந் திருவிராகப் பதிகத்தில் ஒழுகலரிது என்னும் இறுதிச் செய்யுளில், முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத் தொழுதுஉலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவும்உரை கழுமலநகர் என்று அருளிச்செய்திருத்தலின், அவர்க்குமுற்பட்ட வாதவூரர் அருளிச்செய்திருப்பதும் அவ்வுரோமச முனிவர்க்குக் காட்சி தந்ததனையேயாமென் றுணர்ந்துகொள்க. முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி என்றது உடம்பெங்கும் உரோமம் உடைய உரோமச முனிவரையேயாம். இவ்வுரோமச முனி வரைப்போல் இன்னும் எத்தனையோ அடியவர்க்கும் இறைவன் அக் கழுமலத்திற் காட்சி தந்திருக்கலாமாகலின். காட்சி கொடுத்த லாகிய பொது நிகழ்ச்சியைத் திருஞானசம்பந்தர் ஒருவர் பொருட்டாக மட்டும் நிகழ்ந்ததாகவைத் துரைகூறுதல் குற்றமாமென்க. மற்று, நரியைக் குதிரை யாக்கியதோ அங்ஙனம் பொதுநிகழ்ச்சியாகாமல், மாணிக்கவாசகர் ஒருவர் பொருட்டே நிகழ்ந்ததொன்றாகையால் அதனைப் பொதுவாக வைத்து உரை கூறுதலுங் குற்றமா மென்க. இங்ஙனமே செந்நாவர்பரசும், மண்சுமந்தபாடல் என்னுஞ் செய்யுட் பொருள்களும் பொது நிகழ்ச்சியா யிருத்தலின் இவற்றையும் ஒவ்வொருவர்மேல் வைத்து உரையுரைக்க முயலல் ஏலாதென்க. இவ்வாறு பொதுப்பட நிற்பவற்றிற்குச் சிறப்பாகவும், சிறப்பாக நிற்பவற்றிற்குப் பொதுவாகவும் தலைதடுமாற்றமாக உரையுரைப்பார் செயலே நகையாடற் பாலதாமன்றி, ஆன்றோர் தொன்று தொட்டுத் திருவாதவூரடிகள் பொருட்டு நிகழ்ந்ததாக வழங்கிவரும் நரிபரியான திருவிளையாடலை அவ்வடிகள் பாலதாக வைத்துரைத்தல் நகையாடற் பாலதன்றெனத் தமிழ் வரலாறுடையார் உணரக்கடவராக. இனி, ஆழ்ந்ததொரு நீர்நிலையில் அகப்பட்டு ஏதொரு பற்றுக்கோடுங் காணாது உள்ளமிழ்ந்துவோன் தத்தளித்துத் தன்னருகே மிதந்ததொரு சிறு துரும்பை விரைந்து கைப் பற்றினாற் போல, நரியைக் குதிரை செய்தானும் என்று இறந்த காலத்தில் ஓதாது செய்வானும் என்று எதிர்காலச் சொல்லால் அப்பர் அருளிச்செய்தமையானே, அஃது அவர் காலத்திற்கு முன்னே நடந்ததென்று கொள்ளுதற்கிடமில்லை யெனத் தமிழ் வரலாறு உடையார் கூறினர். நரியைக் குதிரை செய்தல் அப்பர்க்கு முன்னே நடந்ததில்லையாயின் தமக்குப் பிற்காலத்தே நடக்கப் போவதனை முன்னறிந்து அப்பர் அருளிச்செய்தாரென வரலாற்று நூற்புலவர் எவரேனும் ஒப்புவரா? புன்சடை, பின்தயங்க வாடுவாய் என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருவாலவாய்த் தேவாரத்திற் போந்த ஆடுவாய் என்னுஞ் சொல்லுக்கும் இனிமேல் ஆடுவாய் என்பது பொருளாகுமா? தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே பதஞ்சலி முனிவர் பொருட்டு இறைவன் வெள்ளியம்பலத்தில் திருக்கூத்து இயற்றினதனை யன்றோ1 திருஞானசம்பந்தர் அங்ஙனம் புன்சடை பின்தயங்க ஆடுவாய் என்று எதிர்காலச் சொல்லின் வைத்து ஓதினார். இவ்வாறு இறந்தகாலத்தில் நிகழ்ந்த தொன்றனை எதிர் காலத்தின் வைத்து ஓதுதலும், எதிர் காலத்தின் நிகழற்பால தொன்றனை இறந்த காலத்தின் வைத்து ஓதுதலும் பண்டைத் தமிழ்வழக்கின் உண்மை. இறப்பே எதிர்வே ஆயிரு காலமுஞ் சிறப்பத் தோன்றும்மயங்குமொழிக் கிளவி2 என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறினமை கொண்டு அறியப்படும். இச் சூத்திரத்திற்கு உரைவகுத்த சேனாவரையரும் நச்சினார்க்கினியரும். இவர் பண்டு இப்பொழிலகத்து விளையாடுவர்; நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான். பின் நீ என்செய்குவை. என இதற்கு மேற்கோளுங் காட்டினார். இங்ஙனமே திருவாதவூரடிகள் அருளிச்செய்த திருக்கோவை யாருள்ளும், அருந்தும் விடம் அணியாம் மணிகண்டன்,3 தக்கன் வேள்விமிக்க எரியார் எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன்4 எனவும், அருந்திய, அழித்த என இறந்தகாலச் சொற்களின் ஓதற்பாலன அருந்தும், அழிக்கும் என எதிர்காலச் சொற்களின் வைத்து ஓதப்பட்டிருத்தல் காண்க. அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல், புக்குப் பல்பலி தேரும் புராணனை5 என்று அப்பரும், தேர்ந்த என்று கூறற்பாலதனைத் தேரும் என்று எதிர்காலச் சொல்லின் வைத்துக் கூறுதல் காண்க. இங்ஙனமே நரியைக் குதிரை செய்வானும் என்றற் றொடக்கத் தனவும் இறந்த காலத்து நிகழ்ந்தவற்றை எதிர்காலச் சொற்களின் வைத்து ஓதின வாகலின், இவ்வுண்மை தேராது அவையெல்லாம் அப்பர்க்கு முன் நிகழ்ந்தனவாகாவென்றுரைத்த தமிழ் வரலாறு உடையார் கூற்றுப் பெரியதோர் இழுக்காதல் உணர்ந்து கொள்க. இனி, நரியைக் குதிரைசெய்ததாகிய திருவிளையாடல் மாணிக்கவாசகர் பொருட்டே இயற்றப்பட்டமை தொன்று தொட்டுவரும் வரலாறுகளாற் றுணியப்படுவதுடன் அடிகள் தாமே திருவாசகத்தின்கண் அருளிச்செய்திருக்கும் அருளுரை களானும் நன்கு தெளியப்படும். அவைதம்மை முன்னரே எடுத்துக் காட்டி விளக்கியிருக்கின்றேம். மேலும், சிற்றம்பலம் புகழும் மயலோங்கிருங்களி யானை வரகுணன். என்று அடிகள் திருக்கோவையாரில் அருளிச் செய்திருக்குஞ் சொற்றொடரிற் புகழும் என நிகழ்காலச்சொல் வந்திருத்த லானே அடிகள் வரகுணன் காலத்தவர் என்பது பெறப்படும் என்று கூறிய தமிழ் வரலாறு உடையார் பின்னர், நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சது ஏற்றும் பெருந்துறையான் என்று அடிகள் அருளிச்செய்தவிடத்தும் அங்ஙனமே ஏற்றும் என நிகழ்காலச்சொல் வந்திருத்தல் கொண்டு, நரிபரி யாக்கியதும் மாணிக்கவாசகர் பொருட்டுச் செய்யப்பட்டு, அவர் காலத்திலேயே மதுரைமாநகரின்கண் நிகழ்ந்தமை பெறப்படு மென உரையாமல் அஃது அவர்காலத்து நிகழ்ந்தது அன்றெனத் தாங் கூறியதற்கே முன்னொடுபின் முரணாக நடுநிலைதிறம்பி அழிவழக்குப் பேசியது நன்றாமா? மாணிக்க வாசகர் வரலாற்றை முன்னும் பின்னும் தொடர்புபடுத்தி அதற்கிடையில் இன்றியமையாக் கொளுவுபோல் நிற்கும் நரிபரியானசெய்தி, அவர்பொருட்டு நடந்தது அன்றாயின், அடிகளது வரலாறே இல்லையாம். மாணிக்கவாசகரென ஒருவர் இருந்திலர், திருவாசகந் திருக்கோவையார் என்பனவும் அவர் செய்தனவல்ல. இவையெல்லாம் பிற்காலத்தில் எவரோ கட்டிவிட்டனர். என உண்மையாராய்ச் சிக்குக் கட்டுப் படாமல், உலகவழக்கும் நூல் வழக்குமெல்லாம் முழுப்பொய் எனத் தாம் வேண்டியபடியெல்லாம் எளிதிற் கூறிப் போவார்க் காயின், நரிபரியானது மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்ந்தது அன்று எனக் கூறுதலும் அமையும். ஏனை நூல்வழக்கிற்கும் ஆன்றோர் வழக்கிற்குங் கடடுப்பட்டு நின்று உண்மை யாராய்ச்சி செய்வார்க்காயின் அங்ஙனம் உரைப்ப தொரு சிறிதும் அமையாதென்க. இந் நரிபரியாக்கிய திருவிளை யாடல், ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்த தென்று முன்னரே காட்டப்பட்ட கல்லாடம், 14ஆவது செய்யுளின் கண், வெடி வாற் பைங்கட் குறுநரி யினத்தினை ஏழிடந் தோன்றி இனன்நூற் கியைந்து வீதி போகிய வால் உளைப் புரவி ஆக்கிய விஞ்சைப் பிறைமுடி யந்தணன். என்று சொல்லப்பட்டிருத்தலானும், அங்ஙனமே பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் அதன் 49ஆம் செய்யுளில், உரகன்வாய் கீண்ட மாதவன் போல மண்ணகழ்ந் தெடுத்து வருபுனல் வைகைக் கூலஞ் சுமக்கக் கொற்றாள் ஆகி நரைத்தலை முதியோள் இடித்தடு கூலிகொண் டடைப்பது போல உடைப்பது நோக்கிக் கோமகன் அடிக்க அவனடி வாங்கி எவ்வுயிர் எவ்வுல கெத்துறைக் கெல்லாம் அவ்வடி கொடுத்த அருள்நிறை நாயகன் என்று குறிக்கப்பட் டிருத்தலானும் அவை யிரண்டும் ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நிகழ்ச்சிகளாதல் பெறப்படும். படவே. அவை நிகழ்ந்தபோ துடனிருந்த மாணிக்கவாசகரும் ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவராதல் தேற்றமாம் என்க. இனி, அப்பர் அருளிச்செய்த திருப்பூவணத்தேவாரம் முழுவதூஉம் சிவபெருமான் திருவுருவச் சிறப்புக்களையே எடுத்துக் கூறுதலால், அதன் ஒன்பதாஞ் செய்யுளிற் போந்த மணியார் வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றும், என்னுஞ் சொற்றொடரும் வைகைக் கரையின்மேல் இறைவன் ஒரு கொற்றாளாய்ப் பிட்டுக்கு மண்சுமந்து நின்ற கோலத்தினையே அறிவுறுத்துமெனச் சிறிது தமிழறிவுடை யாரும் அறிவர். ஈதிங்ஙனமாகவுந், தமிழ்வரலாறு உடையார் அஃது அத் திருவுருவினை உணர்த்தவில்லை. சோமசுந்தரக் கடவுள் வைகைக் கரையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருப்பதனையே உணர்த்துகின்ற தென்கின்றார். மதுரைத் திருக்கோயிலுள் இறைவன் எழுந்தருளி யிருப்பதனைச் சுட்டுங் குறிப்பு இப் பாட்டினுட் சிறிதும் இல்லாமையும், இப் பாட்டும் இதன் முன்பின்னுள்ள பாட்டுக்களும் இறைவன் திருவுருவ வகைகளையே விரித்துச் சொல்லுதலும் இத் திருப்பதிகத்தைப் பயில்வார் எவர்க்கும் நன்கு விளங்குமாகலின், தமிழ்வரலாறு உடையார் கொண்ட பொருள் போலிப் புரைப்பொருளாதலை யாங் கூறல்வேண்டா. வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழுந் திருமுடியும் இலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. என்னும் அப் பதிகத்தின் முதற்செய்யுளேபோல் அதன் ஏனையெல்லாச் செய்யுட்களும் இறைவன் அடியார் பொருட்டு ஆங்காங்குக் கொண்ட கோலங்களையே விரித்துரைத்தல் காண்க. வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறம் என்பதும், வைகை யாற்றின் தூயகரையின் மேற் பாண்டியன்முன் ஒரு கூடையில் மண்சுமந்து நின்ற கூறுபாடுந் தோன்றும் என்று நேரே பொருள்படுதலும் நின்ற திறம் என்னுஞ் சொற்களின் ஆற்றலும் ஆக்கியோன் கருத்துமெல்லாம் இப் பொருளுக்கே இடந்தருதக்கலும் வெள்ளிடை மலைபோல் விளக்கமாம். ஆதலால், திருநாவுக்கரசுகள் இச் செய்யுளிற் குறிப்பிட்டது தமது காலத்திற்கு முன்னும், மாணிக்கவாசகர் காலத்தின் கண்ணும் நிகழ்ந்த பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடலையா மென்று கடைப்பிடிக்க. இனி, ஒரு சாரார் மலையாளத்தின் மேல் கடற்கரையிற் பெருந்துறை என்னும் ஒரு கடற்றுறைப் பட்டினம் உண்டென்றும், திருவாதவூரடிகள் அமைச்சராய் இருந்துழி அங்கே தான் குதிரைகொள்ளச் சென்றாரென்றும் உரையா நிற்பர். அது பொருந்தாது. தமிழ்நாட்டின் தென்பகுதியிற் றிருப்பெருந்துறை யுளதென்பது நன்குபுலப்பட, அடிகளே தென்பாலைத் திருப்பெருந்துறை யுரையுஞ் சிவ பெருமான்6 என்றும், தென் பெருந்துறையாய்7 என்றும், தென் பெருந் துறை நாயகன்8 என்றும், தென் பெருந்துறைச் சேவகன்9 என்றும், பலவிடங்களினும் அருளிச்செய்திருத்தலின், அதனை மேல்கரைக்கண் உள்ளதென்று கோடல் யாங்ஙனமென மறுக்க அல்லதூஉம், திருப்பெருந்துறையும் அதனை யடுத்துள்ள ஊர்களும் பண்டை நாளில் மிழலைக் கூற்றத்தில் இருந்தனவாகக் கொள்ளப் பட்டமை, மிழலைநாட்டு நரியெல்லாம் அழைத்துத் தெருட்டி என்று பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடல் (28-11) கூறுமாற்றால் நன்குணரப்படும். அங்ஙனம் மிழலைநாட்டிலுள்ள நரிகளையே பரிகளாக்குதற்கு இறைவன் கொண்ட ஏதுவால், நரிக்குடி எனப் பெயர் பெற்றதோர் ஊரும் அதன்கண் இன்றும் உளதென்று நம்பியார் கூறினர். இம் மிழலைக் கூற்றம் நெய்தல் நிலத்துள்ள தென்பதும், இது வேள் எவ்வி என்னும் வேளாளர் தலைவன் ஆட்சியிலிருந்த தென்பதும், நெல்லரியும் இருந்தொழுவர் செஞ்ஞாயிற்று வெயின்முனையின் தென்கடற் றிரைமிசைப் பாயுந்து என்னும் புறப்பாட்டினால் (24) அறியப்படும். நெய்தல் நிலமாவது கடலுங் கடல்சார்ந்த இடமுமேயாகலான் மிழலைக் கூற்றமும் அதன் கண்ணதான திருப்பெருந்துறையும் கி.மு. முதல் நூற்றாண்டின் இறுதியிலிருந்த வேள் எவ்வியின் காலத்தும், அவனை யடுத்து இரண்டு நூற்றாண்டுகட்குப் பின்வந்த அடிகள் காலத்தும் கடற்கரையைச் சார்ந்திருந்தமை தெற்றென விளங்காநிற்கும். அடிகளிருந்த காலத்திற்குப் பின் இப்போது ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் கழிந்தமையின், முன்னே திருப்பெருந்துறைக்கு அருகிலிருந்த கடல் இப்போது சிறிதேறக் குறையைப் பதினான்கு கல் விலகிப் போய்விட்டது. இதனாலும் அடிகள் காலம் மிகப் பழையதாதல் தெளியப்படும். திருப்பெருந் துறையை உள்ளடக்கிய இம் மிழலைக்கூற்றம் சோழநாட்டின் றென்பகுதியா யுள்ளதென்று கனகசபைப் பிள்ளை யவர்களும் தாம் இயற்றிய பதினெண் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழர் என்னும் ஆங்கில நூலிற்10 கூறினார். தஞ்சைக் கல்வெட்டு ஒன்றிலும், திருப்பூவனத்துச் செப்புப் பட்டயத்திலும் இம் மிழலைக்கூற்றங் குறிப்பிடப்பட்டுளதெனவும், திருப்பெருந் துறை, துஞ்சலூர், தண்டலை என்னும் ஊர்கள் இக் கூற்றத்தைச் சேர்ந்தவையாமெனவுங் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்காரரா யிருந்த வெங்கையரவர்களும் புறநானூற்றுப் பதிப்புக் குறிப்பொன்றில் எழுதியிருக்கின்றார். இறைவன் எழுநூறு நரிகளைக் குதிரைகளாக உருமாற்றிய ஏதுவினால் எழுநூற்று மங்கலம் எனப் பெயரிதோர் ஊறும் திருப்பெருந் துறைக்கு இரண்டு நாழிகை வழிக்கு அப்பால் உளதென்று திருவாளர் சாமிநாதையரவர்களும் குறிப்பெழுதியிருக் கின்றார்கள்11 ஆகவே, மாணிக்கவாசகர் குதிரை கொள்ளச் சென்ற கடற்றுறைப் பட்டினம், சோழநாட்டின் தென்பகுதிக் கண்ணதான மிழலைக் கூற்றத்திற் சேர்ந்த திருப்பெருந் துறையேயா மென்பது தெளிந்து கொள்க. மேலும், மாணிக்க வாசகர் சேரநாட்டில் உள்ள பெருந்துறைக்குச் சென்றா ரென்பதற்கு அவரைப் பற்றிய எந்த நூலுள்ளும் எங்கும் ஏதொரு சான்றுங் காணப்படாமையின், அங்ஙனங் கூறுவாருரை கொள்ளற்பால தன்றென விடுக்க. அடிக்குறிப்புகள் 1. நம்பியார் திருவிளையாடல், பதஞ்சலிக்கு நடஞ் செய்தது 2. தொல்காப்பியம் சொல், சேனாவரையம் 249 3. திருச்சிற்றம்பலக்கோவையார் 272 4. அதுவே 340 5. தேவாரம், பொது சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை 14. 6. திருவேசறவு 7 7. கோயிற்றிருப்பதிகம் 2 8. சென்னிப்பத்து 1 9. அதுவே 2 10. The Tamils Eighteen Hundred Years Ago, p.83. 11. நம்பியார் திருவிளையாடல் பதிப்பு 63ஆம் பக்கம் 10. பௌத்தமதம் தமிழ்நாட்டில் தலையெடுத்ததும் ஒடுங்கியதும் இனி, மாணிக்கவாசகப் பெருமான் தில்லைமா நகரிற் சென்று பொன்னம்பலக் கூத்தனை வணங்கியபடியாய்த் தவஞ் செய்து கொண்டிருந்த நாட்களிற் சிவபிரான் திருத்தொண்டர் ஒருவர் இலங்கைத் தீவுக்குச் சென்றமையும், அங்கே அவரை எதிர்ப்பட்ட புத்தர்களின் குரு ஒருவர் சைவ சமயம் பரவுதலைப் பொறாராய்த் தம் இலங்கை மன்னனுடன் தில்லைக்குப் போந்து மாணிக்கவாசகப் பெருமானொடு வழக்கிட்டமையும், வழக்கிடுதற் பொருட்டுக் கூட்டப்படட அப்பேரவைக்களத்திற் சோழ வேந்தன் தலைவனாய் விளங்கி வீற்றிருந்தமையும், இலங்கை மன்னன் அச்சோழனுக்குக் கீழ் அடங்கினவனாதலின் திறை கொணர்ந்து வைத்து அவ் வேந்தனை வணங்கினமையும் மேலே மாணிக்கவாசகர் வரலாற்றிற்1 கடவுண்மா முனிவர் அளிச் செய்த திருவாதவூரடிகள் புராணத்தில் உள்ளவாறே யெடுத்து விளக்கிக் காட்டியிருக்கின்றேம். தமிழ்மொழி பேசுந் தொண்டர் ஒருவர் அந் நாளில் இலங்கைக்குச் சென்று அங்குள்ள புத்தர்க்குப் பொன்னம்பலத்தின் பெருமையை எடுத்துச் சொன்னார் என்பதனால், அக் காலத்தில் இலங்கையின் வடபகுதிகளில் தமிழ் மொழி வழங்கினமை அறியப்படும். இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னரே, அஃதாவது கி.மு. 177ஆம் ஆண்டு முதல் 155 ஆம் ஆண்டுவரையில் சேனன், குத்திகன் எனப் பெயரிய தமிழரசர் இருவர் ஒருவர்பின் ஒருவராய் இலங்கையின் தலைநகராகிய அநுராதபுரத்திற் செங்கோல் செலுத்தின ரெனவும், கி.மு. 145 முதல் 101 வரையில் ஏளாரன் என்னுந் தமிழ்மன்னன் தான் பௌத்தமதத்தைத் தழுவாதவனாயிருந்தும், எல்லார்க்கும் பொதுவான செங்கோலரசினை எல்லாரும் உவக்கும்படி மிகவுஞ் செவ்வையாக நடாத்தினனெனவும், இவன் சோழநாட்டிலிருந்து வந்தவனெனவும், பின்னர்க் கி.மு. 44 முதல் 26 வரையில் புலகத்தன், பாகியன், பனையமாவன், பிளையமாவன், தாடிகன் எனப் பெயரிய தமிழ் மன்னர் ஐவர் அரசாண்டனரெவும் இலங்கைப் பௌத்த அரசர் வரலாறு கூறும் மகாவம்ஸம் புகலாநிற்கும்.2 இங்ஙனங் கிறித்து பிறப்பதற்கு முன் நூற்றாண்டுகளிலே யன்றி, அவர் பிறந்த பின் நூற்றாண்டுகளிலும் தமிழரசர் பலர் இலங்கை அநுராதபுரத்தில் ஆட்சி செலுத்தினர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் வரையில் தமிழ்மன்னர் அறுவர் அரசாண்டனரெனத் திருவாளர் அருணாசலம் அவர்கள் தாம் எழுதிய இலங்கை வரலாற்றின் குறிப்புகள்3 என்ற நூலிற் காட்டியிருக்கின்றார்கள். திரும்பவுங் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலுந் தமிழரது ஆட்சி ஓங்கியிருந்த தென்றும் அதனாற் பௌத்த மன்னர்கள் தமது பழைய தலைநகராகிய அநுராதபுரத்தை தமிழரசர்க்கு ஒப்படைத்துவிட்டுத் தாம் புலத்திய நகரம் என்பதன் சிதைவாகச் சிங்கள மொழியில் வழங்கும் பொலன்னுருவா என்பதனைப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமக்குத் தலைநகராக ஆக்கிக்கொண்டார்களென்றும் அவர்களே அந்நூலில் நன்கெடுத்துச் சொல்லினர்.4 ஆகவே, தமிழும் தமிழரசர்களும், தமிழ் மக்களும், அவர் தம் வழக்க வொழுக்கங்களும் அவர்தம் சமயக்கொள்கைகளும் இரண்டாயிர ஆண்டுகட்கு முற்றொட்டே இலங்கைத் தீவின் வடபகுதிகளிற் பரவத் தொடங்கி இற்றைநாள் வரையுந் தொடர்ந்து வந்திருத்தல் நன்கறியக்கிடத்தலின், மாணிக்க வாசகர் காலத்தில் தமிழ்மொழி அங்கே பரவியிருந்தமை தேற்றமாம் என்க. அதனால், அங்கே சென்ற சிவத்தொண்டர் பொன்னம்பலத்தின் விழுப்பங்களை தமிழ்மொழியில் எடுத்துச் சொன்னாரென்பது பொருத்தமே யாதல் தெளிக. இனி, அடிகள் மூன்றர்ம நூற்றாண்டின்கண் இருந்தவ ராயின், அக்காலத்திற் றென்னாடெங்கணும் பரவியிருந்தன வாகியச் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இருபெருங் காப்பியங்களானுந் துணியப்படும் பௌத்தசமயக் குரவர்கள் அடிகளோடு வழக்கிட்டிருத்தல் வேண்டுமன்றே! அங்ஙனம் பக்கத்திருந்த பௌத்தர்கள் வழக்கிடாமல், இலங்கையிலுள்ள பௌத்தர்கள் மட்டுமே தில்லைக்குப் போந்து அவரொடு வழக்கிட்டாரென்பது என்னையெனிற்; பௌத்தமத முதலாசிரியராகிய கௌதமசாக்கியர் அருளறத்தின் சிறப்பையும் பயனையுமே அறிவுறுத்த வந்தவ ரென்பதூஉம், அவர் அறிவுறுத்தவைகளெல்லாம் சைவ சமயக் கோட்பாடு களோடு முழுதொத்தனவேயா மென்பதூஉம் முன்னரே நன்கு விளக்கிக் காடடியிருக்கின்றேம். அவர்க்குப் பின்வந்த அவர்தம் மாணாக்கர்களே அவ்வாசிரியர் கூறாத சூனியவாதம் ஆகிய இல் வழக்குப் பேசிப் பற்பல பொருந்தாக் கொள்கைகளைக் கட்டிவிட்டமையும், அங்ஙனங் கட்டிவிட்டோருள் முற்பட்டவ ராகிய சௌத்திராந்திக பௌத்தரின் மாயாவாதக் கொள்கை களும் கௌதமர் பாளி மொழியில் அறிவுறுத்திய அறிவுரைகளும் பொருந்த ஈனயான பௌத்தம் இலங்கைத்தீவின் மட்டுமே பண்டு தொட்டுப் போற்றி வைக்கப்பட்டமையும், உலகவழக்கோடு ஒவ்வாத மாயாவாத பௌத்தத்தை மக்களிடையே பரவச்செய்தல் இயலாதது கண்டு கி.பி. முதல் நூற்றாண்டில் நாகார்ச்சுனர் என்னும் பௌத்தகுரு ஒருவர் சைவசமயத்தில் ஓர் உட்பிரிவாகிய சாத்தமத மந்திரக் கிரியைகளையுங் கோட்பாடுகளையும் எடுத்துச் சேர்த்துத் திருத்திப் புதுக்கிய மகாயான பௌத்தமே பின்னர் இமயத்தின் வடக்கே தொட்டுத் தெற்கே குமரியீறாகப் பரவலாயினமையும் அடிகளது வரலாற்றில் விளக்கிக்காட்டி யிருக்கின்றேம். அவ்வாறு காட்டியதுகொண்டு, அடிகள் காலத்தில் இவ்விந்தியநாடு முழுதும் - எனவே அதன் பகுதியாகிய இத் தமிழ்நாடு முழுதும் பரவியிருந்தது மகாயான பௌத்தமே யல்லாமல் ஈனயானபௌத்தம் அன்றாதல் பெறப்படும். ஈனயானம் இலங்கையின் மட்டுந்தான் வழங்கிய தொன்றாகும். சைவ சாத்த மதங்களின் கோட்பாடுகளைத் தழுவித் திருத்திய மகாயான பௌத்தமே இவ் விந்திய நாடெங்கும் பரவியிருந்த தென்பது. வடமொழியில் மிக வல்லுநராய் விளங்கிய வித்தியா பூஷணம் அவர்கள் எழுய இந்தியநாட்டு வரலாறு5 என்னும் நூலிலும் நன்கெடுத்துக் காட்டப்பட் டிருக்கின்றது. மாணிக்க வாசகர் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு முற்பட்டதாகிய மணிமேகலையை ஆராய்ந்து நோக்கினால், அப்பொழுது தமிழ்நாட்டிற் பரவியிருந்தது. மகாயான பௌத்தமே யாதலும் நன்குபுலனாம். இம் மகாயானம் சைவசமயக் கொள்கை களோடும், வழிபாட்டு முறைகளோடும் பெரிதொத்து நின்றமையால், அதற்கும் சைவசமயத்திற்கும் ஏதொரு பகைமையும் நேர்ந்திலது. இங்கிருந்த மக்கள் சிவபிரான் கோயில்கட்குஞ் சென்றனர். பௌத்த சைத்தியங் கட்குஞ் சென்றனர். சிவபிரான் றிருக்கோயில்களைப் போலவே ஆங்காங்குப் புத்தராலயங்களும் அமைக்கப்பட்டிருந்தன. புத்தராலயங்களிற் சிவபிரான் திருவுருவங்களும் அம்மையின் றிருவுவருங்களும் வைத்து ஒருங்கு வணங்கப்பட்டது. வடக்கே காசிக்கு அருகிலுள்ள சாரநாதத்தில் அழிந்து பட்ட பௌத்தப் பள்ளியிலிருந்து எடுக்கப்பட்ட புத்த ருருவங்களோடுகூட, உடனெடுக்கப்பட்ட சிவபிரான் றிருவுருவம் நந்தி அம்மை முதலியனவும் வைக்கப்பட்டிருத்தலை இன்றும் நேரே சென்று காணலாம். கி.பி. 55 முதல் 78 வரையில் வடமேற்கிந்தியாவை அரசாண்ட இரண்டாங் கத்பிசி என்னும் மன்னன்6 சிவபிரானிடத்து மிக்க அன்புடையனாத லால் தான் வழங்குவித்த பொற்காசுகளிற் சிவபிரான் றிருவுருவமும் நந்தியும் பொறித்து விடுத்தனன்.7 அவற்குப்பின் அரசுக்குவந்த கானிஷ்க மன்னன் பௌத்த சமயத்தைத் தழுவினவனாயிருந்தும் அப் பொற்காசுகளைச் சிதையாமல் அவற்றை அவ்வாறே தானும் வழங்கு வித்தனன்; சைவசமயத்தைத் தழுவிய மகாயான பௌத்தமே அப்பெரிய பௌத்த வேந்தன் காலத்திற் பரவியிருந்தமை இதனால் நன்குணரப்படும். கி.பி. 606 ஆம் ஆண்டில் அரசுக்கு வந்து வட நாட்டை யாண்ட ஹர்ஷ வேந்தனுங்கூட மகாயான பௌத்தத்தைத் தழுவிச் சிவபிரானிடத்தும் அன்புடையனாய் விளங்கினான்.8 இக் ஹர்ஷ வேந்தன் குடும்பத்தினரும் இவற்கு முன்னோருங் கூடச் சிவபிரானிடத்தும் புத்தரிடத்தும் அன்பராய்த் திகழ்ந்தனர். இங்ஙனமே, தென்னாட்டிலிருந்த அக்காலத் தரசர்களும் புலவரும் பிறரும் சைவசமயத்தையும் அதனோ டொத்த மகாயான பௌத்தத்தையுந் தழுவியிருந்தன ரென்பதற்குச் சேரன் செங்குட்டுவன் என்னும் மாப் பெருவேந்தன் தான் சிவபிரானிடத்தே அன்புடையனா யிருந்தும் தனது தலைநகராகிய வஞ்சியிற் பெரிய பௌத்தப் பள்ளிகள் இருக்க இடந் தந்தமையும், அவன் றம்பியும் சிலப்பதிகார ஆசிரியருமாகிய இளங்கோவடிகளும், அவ்விருவர்க்கும் நண்பரான மணிமேகலை ஆசிரியர் கூலவாணிகன் சாத்தனாரும் பௌத்த சமயத்தைத் தழுவி நின்றமையும், அங்ஙனமாயினும் அவ்விருவரும் சிவபிரானைச் சொல்லும் இடங்களில்லாம் அவரை உயர்த்துச் சொல்லுதலும் சான்றா மென்க. இவ்வாறு தமிழ்நாட்டினுள் எங்கணும் மகாயான பௌத்தமே பரவியிருந்ததனால் அதற்குரிய பௌத்த குரவர்க்கும் சைவசமயாசிரியரான மாணிக்கவாசகர்க்கும் ஏதும் வழக்கு நேர்ந்தில தென்பது மற்று. இலங்கையிலிருந்த பௌத்தமோ சூனியவாதங் கடைப்பிடிக்கும் ஈனயான பௌத்தமே யாகலின், அதற்குரிய பௌத்த குரவரே சைவசமயத்திற்கும் முற்றும் மாறாய் நிற்கலானார்; அதனாற்றான், அவர் இலங்கையினின்றுந் தில்லைக்குப் போந்து அடிகளோடு வழக்கிட்டனரென் றுணர்ந்து கொள்க. இனிச், சைவசமயத்தைத் தழுவிய மகாயான பௌத்தம்கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் மெல்லமெல்ல இலங்கையினுள்ளும் நுழையலாயிற் றென்பதற்கு கி.பி. 263 முதல் 285 வரையில் இலங்கையில் அரசாண்ட ஓகாரிகதிஸன் தனது சமயக் கொள்கைக்கு மாறான வேதுல்யமதத்தை அடக்கித், தனது மதத்தினையே விளங்கச் செய்தனனென்று மகாவம்ஸம் கூறுதலே9 சான்றாம். இவ் வேதுல்யமதம் என்பது சிலகால் வைதுல்யம் என வழங்கப் படுமெனவும், அதனைக் கூறுஞ் சூத்திரங்கள் வடக்கேயுள்ள மகாயான பௌத்தத்தைச் சேர்ந்தவாமெனவும் அதனை நன்காய்ந்தோர் கூறாநிற்பர். இனிக், கி.பி. 302முதல் 315 வரையில் இலங்கையை யாண்ட கோடாபயன் அல்லது மேகவண்ணா பயன் காலத்தில் அபயகிரி விகாரத்திலிருந்த அறுபது புத்தகுருமார் (பிக்ஷுக்கள்) வேதுல்ய மதத்தைத் தழுவினரென்றும், அதனால் அவ்வரசன் அவர்களை இலங்கையினின்றுந் துரத்தவே அவ்வறுபதுபேரும் சோழ நாட்டுக்கு ஏக, அங்கிருந்த சங்கமித்தன் என்னும் புத்தகுரு ஒருவர் அவ் வறுபதுபேருள் ஒருவரைத் துணையாகப் பற்றிக் கொண்டு இலங்கைக்குச் சென்று தூபராமத்திற்கூடிய ஒரு பேரவையில் அப்போதிருந்த இலங்கைப் பௌத்த குருக்களின் தலைவரோடு வழக்கிட்டு அவரை வென்றன ரென்றும், அதுமுதல் அவ்வரசன், வழக்கில் வென்ற சங்கமித்தன் என்னுங் குரவர்பால் அன்புமீதூரப் பெற்றனரென்றும் மகாவம்ஸமே கூறாநிற்கின்றது.10 மாணிக்கவாசகர்க்கும் இலங்கைப் பௌத்தர்க்கும் நடந்த வழக்கு மகாவம்ஸத் தின்கண் வெளிப்படையாகக் கூறப்படா விடினும், இவ் வரலாறுகளை உற்றுநோக்குங்கால் அத்தகைய தொன்று ஓகாரிகதிஸன் என்னும் இலங்கையரசன் காலத்திற்கு முன்னர் நடந்தமை உண்மையென்பது புலப்படும். அவ்வழக்கில் தோல்வியுற்றுச் சைவசமயந் தழுவிய பௌத்தர்களே, அவ்வரசன் காலத்தில் வேதுல்யமதத்தவ ராகக் கொள்ளப் படுவாராயினர். கோடாபயன் அல்லது மேக வண்ணாபயன் என்னும் இலங்கை மன்னன் காலத்திலும், இவ்வேதுல்ய மதத்தின் குருவாகச் சோழ நாட்டினின்றும் போந்த ஒருவரே தூபராமத்திற்கூடிய பேரவையிற் பௌத்த குருமார்களின் தலைவரை வென்றவராகச் சொல்லப்படுதலால், இங்ஙனம் வெற்றிகொண்ட சங்கமித்தன் என்னும் வேதுல்யமத குருவே, மாணிக்கவாசகப் பெருமானோடு வழக்கிட்டுத் தோற்றுச் சைவசமயந் தழீஇப் பின்னர் இலங்கைக்குப் போந்து சைவசமயக் கோட்பாடு உடையதாகிய நமது வேதுல்ய மதத்தை அங்கு நாட்டினாராதல் வேண்டும். சங்கமித்தன் என்னும் இவ் வேதுல்யமத குருவைப் பற்றி மகாவம்ஸம் கூறுவனவெல்லாம் ஆராயுங்கால், அவர் சைவசமயத்தினராதலை நன்கு வலியுறுத்தும், மேகவண்ணா பயனுக்கு முப்பத்தேழு ஆண்டு முற்பட்ட ஓகாரிகதிஸன் காலத்திலேயே இவ் வேதுல்யமதம் இலங்கையிற் புகுந்தமை மேலே காட்டப்பட்டமையால், கி.பி. 250 ஆம் ஆண்டிற்கும் 260ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், அஃதாவது சிவபிரான் அடியவனான வரகுணபாண்டியன்றன் மகன் அரசுபுரிந்த காலத்திலேதான் மாணிக்கவாசகப் பெருமானுக்கும் இலங்கைப் பௌத்தர்கட்கும் வழக்கு நடந்ததாகல் வேண்டு மென்பது பெறப்படும். இனி, மகாவம்ஸம் உரைக்கும் வரலாறுகளை நன்காய்ந்து பாராதார் தூபராமப் பேரவைக் களத்தில் வென்றிபெற்ற சங்கமித்தனையே மாணிக்க வாசகராகக் கூறாநிற்பர். மாணிக்கவாசகர் தில்லைத் திருக்கோயிற் கூடிய அவைக்களத்தே பௌத்தரை வென்றா ரென்று திருவாதவூரர் புராணம் நுவலுகின்றதேயல்லாமல், அவர் இலங்கைக்குச் சென்று அவர்களை வென்றாரென்று நுவல்கின்றிலது. அதனால், இலங்கையிற் பௌத்தரை வென்றவர் மாணிக்கவாசகர் அல்லர். அவராற் சைவசமயந் தழீஇ அவர்க்கு மாணாக்கராம் உரிமை பெற்ற சங்கமித்தரே யாவரென்பது பகுத்துணர்ந்துகொள்க. இனி, இவ்வாறு சோழநாட்டினின்றும் இலங்கையுட் புகுந்த வேதுல்யமதத்தைப் பற்றியும், அதற்கும் இலங்கைப் பௌத்தர்க்கும் நடந்த வழக்கைப்பற்றியும், மகாவம்ஸம் புகலும் செய்திகளெல்லாம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் நான்காம் நூற்றாண்டின் துவக்கத்திலும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பனவாய் இருக்கின்றனவேயல்லாமற், கல்வெட்டுகளிற் காணப்படும் வரகுணபாண்டியர் இருவர் காலத்திலும் நிகழ்ந்தவைகளைக் குறிப்பினவாயில்லை. கி.பி. 350 ஆம் ஆண்டிற்குப்பின் பௌத்தமதம் இந்தியா இலங்கை யென்னும் இரண்டிடங்களிலும் வரவரக் கிளர்ச்சி குன்றிப் போய்விட்டது; அதனைக் கைக்கொண் டொழுகுவோர் தொகையும் வரவரச் சுருங்கிப்போய் விட்டது. மேலும், ஒன்பதாம் நூற்றாண்டினரான வரகுண பாண்டியர் காலத்திற் சோழமன்னர் வலிகுன்றி ஒளிமழுங்கி யிருந்தமை மேலே காட்டினாமாகலின், அக் காலத்திருந்த சோழனுக்கு இலங்கை மன்னன்கீழ் அடங்கிக் கடமை செலுத்தினவன் ஆதல் செல்லாது. அதுவேயுமன்றி, ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியி லிருந்த இரண்டாம் வரகுணபாண்டியன் இலங்கையின் மேலும் படையெடுத்துச் சென்றானென்பது முன்னே காட்டின மாதலின், அக்காலத்தில் மாணிக்கவாசகர்க்கும் இலங்கைப் பௌத்தர்க்கும் தில்லையிற் வழக்கு நடத்திருத்தலும் ஆகாது. அதன்பொருட்டுக் கூட்டப்பட்ட அவைக்களத்திற் சோழ மன்னன் தலைவனாய் வீற்றிருக்க அவனுக்கு அப்போது இலங்கை மன்னன் கடமை கொணர்ந்து வைத்து வணங்கினா னென்றலும் ஆகாது. இவ் விரண்டாம் வரகுணன் இலங்கை மேற் படையெடுத்துச் சென்று, கி.பி. 846 முதல் 866வரையில் அரசாண்ட சிங்கள அரசன் முதலாஞ் சேனனை முறியடித்து, அவனது தலைநகராகிய அநுராதபுரத்தையும் அழித்தன னாகை யால்,11 அப்போது இலங்கைப் பௌத்தர்களும் அவர்களின் அரசனும் மாணிக்கவாசரோடு வழக்கிடுதற் பொருட்டுத் தில்லைக்கு வந்தாரென்றல் ஒரு சிறிதும் ஆகாமை காண்க. எனவே, சோழவேந்தர் இலங்கை மன்னரைத் தங்கீழ் அடக்கிப் பொலிந்தும். இந்தியா இலங்கையிற் பௌத்தசமயம் ஓங்கிக் கிளர்ச்சிபெற்றிருந்ததும், திருவிளையாடலிற் சொல்லப்பட்ட சிவனடியானான வரகுணபாண்டியன் தனது பாண்டி நாட்டளவில் அமைதியுற்றிருந்தது மெல்லாம் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன்னரே யாகையால், மாணிக்கவாசகர்க்கும் இலங்கைப் பௌத்தர்க்குந் தில்லையிற் சோழவேந்தன் அவைத் தலைமையில் நடைபெற்ற வழக்கு கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதிக் கண்ணதாதல் ஐயுறவின்றித் துணியப்படுமென்க. அதுவேயுமன்றி அடிகள் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்தவராயின், அக்காலத்திற் சோழர்கள் வலியொடுங்கிப் பல்லவ வேந்தர்கள் வலிமிகுந்திருந்தமையின், அப் பல்லவர்களை ஒரு சிறிதாயினுங் குறிப்பிடாதிரா மற்று அவர் அவர்களை ஒரு சிறிதாயினுங் கூறாது. தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங்கன் வரக் கூவாய்12 என்று சேர சோழ பாண்டியர் மூவரையே தமது திருவாசத்திற் குறிப்பிட்டு அருளிச்செய்திருக்கின்றார். அவர் பல்லவர் ஆட்சிக்காலத் திருந்தனராயின். அங்ஙனமிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் என அவர் களைக் குறிப்பிட்டு அருளிச்செய்தவாறு போற் றாமும் எங்காயினும் அருளிச் செய்திருப்பர். அவ்வாறின்றிச் சேர சோழ பாண்டியரென்னும் மூவரையே அவர் குறிப்பிட்டிருத்தலின், அவர் இத் தமிழ்நாட்டில் அம் மூவேந்தரது ஆட்சியைத் தவிரப் பிறிது ஏதுங் கலவாதகாலத்து. அஃதாவது நான்காம் நூற்றாண்டிற்கு முன், இருந்தவரென்பது தெற்றென விளங்கா நிற்கும். இனி, மணிமேகலை என்னும் அரும்பெருந் தமிழ்க் காப்பியம் இயற்றப்பட்ட இரண்டாம் நூற்றாண்டில் அறுவகைப்பட்ட சமயக்கோட்பாடுகளும் ஆங்காங்கு இருந்தன வாயினும். அவற்றுட் புத்தசமயமே ஏனை யெல்லாவற்றினும் மிக்கிருந்தமை அந் நூலால் நன்கறியக் கிடக்கின்றது. அதற்கு ஒரு நூற்றாண்டு கழிந்துவந்த மாணிக்கவாசகர் காலத்தும் அங்ஙனம் அறுவகைச் சமயங்களும் ஆங்காங்கிருப்பினும் அவற்றுட் புத்த சமயமே ஏனையெல்லாவற்றினும் மிக்கு நின்றமை. புத்தன் முதலாய் புல்லறிவிற் பல்சமயந் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்க13 என்று அடிகளே புத்தசமயத்தை முதற்கண் வைத்து அதன் பெயரை எடுத்தோதுமாற்றால் இனிது விளங்கும். மற்று அவர், புத்தசமயம் ஒடுங்கிச் சமணசமயம் மிக்கு ஓங்கிய பின் நூற்றாண்டுகளில் இருந்தனராயின், அங்ஙனமிருந்த திருஞான சம்பந்தர் அப்பர் சுந்தரர் என்னும் மூவருந் தாம் அருளிச்செய்த திருப்பதிகங்களுள் அச் சமண் மதத்தவரையுங் குறிப்பிட்டவாறு போற் றாமுங் குறிப்பிட்டிருப்பர். அவ்வாறவர் தாம் அருளிச் செய்த திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் நூல்களில் ஓரிடத்தாயினும் சமண்மதத்தைக் குறிப்பிட்டுரை யாமையானும் அவர் குறிப்பிட்டுக் கூறியதெல்லாம் புத்த சமயம் ஒன்றேயாகலானும். அவர் சமண்சமயம் மேலோங்கி நிலவியகாலத் திருந்தவர் அல்லரென்பதூஉம், அதற்குமுற் புத்தசமயம் கிளர்ந்து நின்ற காலத்திருந்து அதனை ஒடுக்கியவராவ ரென்பதூஉந் தெளியப்படும். இப் புத்தசமயத்தையே அடிகள் மிண்டியமாயா வாதம் என்று அருளிச்செய்தனர். அடிகள் காலத்தில் மாயாவாதம் என்னுஞ் சொற் புத்தசமயத்தையே உணர்த்திய தென்பது. வாமன்சிவராம் என்பவர் எழுதிய வடமொழி யகராதியிலுங் குறிக்கப்பட்டிருக்கின்றது.14 முதலிற் புத்தசமயத்திற்கு பெயராய் வழங்கிய மாயாவாதம் என்னுஞ் சொல், அப் புத்தசமயம் ஒடுங்கி அதனோ டொப்பதாகிய ஏகான்மவாதம் தலை யெடுத்துப் பரவத் துவங்கியபின் அதற்கும் பெயராய் வழங்கலாயிற்று. தமக்கு மற்றொட்டேயிருந்த இவ் வேகான்ம வாத மாயா வாதத்தைச் சைவத் துறவி வேடம் புனைந்து கொண்டு சங்கராசாரியர் இவ் விந்தியாநாடெங்கணும் பரப்பியபின் அச்சொல் முதலிற் றான் உணர்த்திய புத்தசமயப் பொருளை யிழந்து ஏகான்மவாதப் பொருளைப் பெறுவதா யிற்று. ஆகவே, இக் காலத்தில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டில் மாயாவாதம் என்னுஞ் சொல் ஏகான்மவாததின் மேற்றாய்க் குறிக்கப்பட்டிருத்தல் பற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லை. அதனால் அடிகள் சங்கராசாரியர்க்குப் பிற்பட்டவராதலுஞ் செல்லாது அடிகள் காலத்து வழங்கிய மாயாவாதமும் சங்கரர் காலத்து வழங்கிய மாயாவாதமும் வெவ்வேறாதல் கண்டுகொள்க. இனி, ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ் நூல்களிற் எங்கும் மாயாவாதம் என்னுஞ் சொல்லாதல். அதன் கொள்கையாதல் காணப்படுகின்றிலது எனத் தமிழ் வரலாறு உடையார் கூறினர் ஒன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தவராக இப்போது வரலாற்றுநூற் புலவரெல்லாரானுங் கொள்ளப்படுஞ் சுந்தரமூர்த்தி நாயானார் தாம் அருளிச்செய்த திருத்தொண்டத் தொகையில் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் என்று குறிப்பிட்டிருத்தலின், திருமூல நாயனாரும் அவர் அருளிச்செய்த திருமந்திரம் மூவாயிரம் ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் தெள்ளிதிற் றுணியப்படும். இன்னும், திருஞானசம்பந்தப் பெருமான் திருவாடுதுறையிற் றிருக்கோயில்கொண்டு எழுந்தருளியிருக்குஞ் சிவபிரானை வணங்கச்சென்றக்கால், அக்கோயிலின் பலிபீடத் தருகே தமிழ்மணங் கமழக் கண்டு அதனை அங்கு உடன் நின்றார்க்கு அறிவிப்ப, அவரிற் சிலர் அப் பலிபீடத்தருகே அகற்றிப் பார்த்தலும், அதனடியிற் புதைத்து வைக்கப்பட்டிருந்தது புலனாக அதனை எடுத்துப் பிரித்து நோக்கியவழி அது திருமூல நாயனார் அருளிச் செய்த திருமந்திரமாயிருத்த லுணர்ந்து, அவர் அதன் அருமைபெருமை களை விரித்துரைத்துப் பின்னர் அதனை இத் தமிழ்நா டெங்கணும் பரவச் செய்தனர் என்னும் ஒரு வரலாறு தொன்றுதொட்டு வழங்கிவருகின்றது; இவ் வரலாறு தேவாரத்திருமுறையில் திருவாவடுதுறைத் திருஞான சம்பந்தர் திருப்பதிகத்தின் கீழேயும் நெடுங்காலமாக வரையப்பட்டு வருகின்றது. திருமூலநயனார் திருவாவடுதுறையி லெழுந்தருளி யிருந்து திருமந்திரம் மூவாயிரஞ் செய்யுட்கள் அருளிச் செய்தமை சேக்கிழார் அடிகள் அருளிச்செய்த திருத் தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தால் நன்கு விளங்குவதோடு, திருமூல நாயனாரே திருமந்திரத்திற் சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.15 எனவும், மூலன் உரைசெயத மூவாயிரந் தமிழ் மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே.16 எனவும் ஓதுமாற்றானுங் தெளியப்படும். ஆகவே, தாம் சிவபிரான் திருவடிநீழல் எய்துகின்றுழித், திருமூலநாயனார் தாம் இயற்றி யருளிய திருமந்திர நூலின் ஏட்டுச் சுவடியை ஆண்டுள்ள திருக்கோயிற் பலிபீடத்தினடியில் ஒருசிறு செப்புப் பேழையிற் புதைத்துவைத்துச் சென்றமை உண்மையேயாதல் வேண்டு மென்க. இவ் வுண்மை வரலாறுகொண்டு திருமூல நாயனாரும் அவரியற்றியருளிய திருமந்திரமும் ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்திற்கு முற்பட்டே இருந்தமை தெற்றென விளங்கா நிற்கும். எனவே, திருமந்திர நூலின் காலம் ஆறாம் நூற்றாண்டின் இடைக்கண்ணதாகக் கோடலே பொருத்த மாதல் காண்க. அங்ஙனம் தேவாரத்திற்கும் முற்பட்டதாகிய திருமந்திரத்தில் ஐயைந்து மாயாவாதிக்கே17 என மாயாவாதப் பெயரும் அதனால் உணர்த்தப்படுங் கொள்கையும் ஒருங்கு கூறப்பட்டிருத் தலின், ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ்நூல்களில் எங்கும் மாயாவாதம் என்னும் பெயராதல் கொள்கையாதல் காணப்படவில்லை யென்னுந் தமிழ் வரலாறு உடையார் கூற்று முழுப் பொய்யாதல் காண்க. தமது காலத்திற்கு முன்னரேயிருந்த மாயாவாதந் தமது நோக்கத்திற்கு இசைந்ததாயிருந்தமை கண்டே சங்கராசாரியார் அதனைப் பெரிதுமுயன்று எங்கும் பரவச் செய்தனர். அது கிடக்க. இனிச் சங்கராச்சாரியாராற் பரப்பப்பட்ட மாயாவாத வேதாந்தக் கொள்கைகள் இவையென்பதை மாணிக்கவாசகர் வரலாறுவிலும், சைவசமயக் கோட்பாடுகள் இவை யென்பதையும் முன்னமேயே விளக்கிக் காட்டியிருக்கின்றேம். அங்ஙனம் எடுத்துக்காட்டிய சைவசமயக் கோட்பாடுகள் எல்லாவற்றிற்கும் மேற்கோள்களும் ஆண்டே உடனெடுத்துக் காட்டியிருக்கின்றேம். அவ் விருவேறு கோட் பாடுகளையும் ஒப்பிட்டு நோக்குவார்க்கு மாணிக்கவாசகர் தெளிந்த சைவ சித்தாந்தச்செல்வரே யாவரல்லது. எல்லா வாற்றானும் பொருந்ததாய்ப் புரைப்பட்டு நிற்கும் மாயாவாத வேதாந்தக் கொள்கை ஒரு தினையளவும் உடையரல்லரென்பது ஐயுறவின்றிப் பட்டப்பகற்போல் விளங்கிக்கிடக்கும். இவ்வாறு விளங்கிக் கிடப்பவும் இவ் வுண்மையினை ஒரு சிறிதாயினுந் தெளிந்துணரமாட்டாத தமிழ் வரலாறு உடையார் ஏகான்மவாத வாடை மாணிக்கவாசகர் மாட்டும் வீசியதாகத் தமக்குத் தோன்றியவாறே கூறினார். அதற்கவர்கொண்ட சான்று என்னையெனின்; தேவாரம் அருளிச்செய்த அப்பர் சம்பந்தர் முதலான ஆசிரியர் தாம் சிவமானதாக யாண்டும் உரையாதிருக்க. அடிகளோ சிவமாக்கி ஏனை ஆண்ட எனக் கூறியது ஒன்றாம். அப்பர், தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும்யானும் ஆகின்ற தன்மையனை (பொது. மறுமாற்றத் திருத்தாண்டகம். 7ஆம் செய்யுளில்) என்று அருளிச் செய்ததனையும், சம்பந்தர், அப்பரிசிற் பதியான அணிகொள் ஞானசம்பந்தன் என உருவார்ந்த என்னுந் திருப்பிரம புரப்பதிகம் 11ஆஞ் செய்யுளில் அருளிச்செய்ததனையும் அவர் அறிந்திலர்போலும்! மேலுஞ், சிவம் ஆதல் என்னுஞ் சொற்றொடரைக் கண்ட துணையானே அது மாயாவாதப் பொருளை யுணர்த்து மென்றல், அதுபற்றி யெழும் மாயாவாதக் கோட்பாட்டிற்கும் சைவசித்தாந்தக் கோட்பாட்டிற்கும் உள்ள வேறுபாட்டினைப் பகுத்துணர மாட்டாதார் கூற்றாம். அழுக்குப்போக மினுக்கிய ஒரு செம்பின் கட்டிக்கும். இயற்கையிலேயே அழுக்கின்றி மின்னும் ஒரு செம்பொற் கட்டிக்கும் உள்ள இயற்கை வேறுபாட்டினை யறியாமற் புறத்தே அவையிரண்டும் ஒரே நிறத்தனவாய்த் தோன்றுதல் ஒன்றேபற்றி அவை யிரண்டும் ஒன்றே யென்பார் கூற்றுக்கும் மேற்காட்டிய சொற்றொடரின் புறத்துப் பொருளே பற்றி மாயாவாதத்தையும் சைவசித்தாந்தத் தையும் ஒன்றென்பார் கூற்றுக்கும் யாம் சிறிதும் வேற்றுமை காண்கின்றிலம். இனிச், சிவம் ஆதல் என்பதற்கு மாயா வாதிகள், சிவம் என, உயிர் என இரண்டு தனி முதல்கள் இல; சிவம் ஒன்றேயுளது; இச் சிவம் தன்னகத்திருந்து எழுந்ததொரு மாயையின் வலியாற் பற்றப்பட்டு உயிர்களும் உலகமுமாய்த் தோன்றாநிற்கின்றது. இவ்வாறு தோன்றுமிது வெறுந் தோற்றமேயல்லது உண்மை அன்று; பொய்யாம் இதனை மெய்யாக் கருதுங்காறும் அறியாமை உளதாம்; அவ்வறியாமை யுள தாங்காறும் உயிர்தானும் உளதாம்; இவையெல்லாம் இல்லாத வெறும்பாழ், இவையெல்லாமாகத் தோன்றும் யானே உண்மையில் என்றும் உளதாகிய சிவம் எனக் கருதி அவ்வாறு நிற்றலே உயிர் சிவமாவதாகு மென்று இவ்வாறு உரைப்ப உரைப்பவே, பொய்யாகிய மாயையாற் கட்டுப்பட்டு வெறுந் தோற்றமாய் நிற்பதூஉஞ் சிவமே, அத் தோற்றத்தினை வெறும் பொய்யென நினைந்த வழி நிற்பதூஉஞ் சிவமே; அச்சிவத்தைத் தவிர வேறேதொரு பொருளும் இல்லை யென்பதே மாயாவாதி களின் முடிந்த கோட்பாடாதல் விளங்கும். அடிகள் திருப்பாட்டிற் சிவம்ஆக்கி என்றிருத்த லால், மாயாவாதிகள் கூறும் இக் கோட்பாடிற் சிவம் என்னும் பெயரை யாம் வைத்து அதனை வரைந்தாம்; மற்று மாயாவாதிகளோ சிவம் என்று சொல்லார், பிரமம் என்றே சொல்வர் மாயையாற் பற்றப் படாததே சிவம்எனச் சைவசித்தாந்திகள் ஒருமுகமாய் வற்புறுத்துரைத்தலின், மாயையாற் கட்டுறுத்தப்படும் தமது பிரமத்திற்குச் சிவம் என்னும் பெயரை அவர் வழங்காமை நன்றேயாம். அதுகிடக்க. அடிக்குறிப்புகள் 1. 75ஆம் பக்கம் முதல் 80ஆம் பக்கம் வரையில் 2. Prof. Geiger’s Mahavamsa, ch. XXI & XXXIII, see also Prof. Rhys Davids’ Buddhism pp.233 & 234 and his Buddhist India p. 311. 3. Sir P. Arunachalam’s Sketches of Ceylon History, Kings’ List 2. 4. Ibid. p. 33. 5. History of India by S.C. Vidyabhushana and M. Prothero. pp. 186-188. 6. Dr. V. Smith’s Early History of India. p. 255. 7. The Imperial Gazetteer of India “The Indian Empire Vol. II p. 139. 8. Ibid. p. 296 9. See Prof. Geiger’s Mahavamsa. p. 259 10. Ibid. p. 264-265 11. The Indian Empire Vol. II p. 331. 12. குயிற்பத்து. 7. 13. திருத்தோணோக்கம் 6 14. மாயாவாத : The doctrine of illusion (a term applied to Buddhism)”. The practical Sanscrit English Dictionary by Vaman Shivram Apte. M.A. 1890. 15. திருமந்திரம் 140 16. திருமந்திரம் சிறப்புப் பாயிரம் 3046 17. திருமந்திரம் 2139 11. வீடுபேற்றின் கண்ணும் உயிர்கள் உளவாதல் இனிச், சைவசித்தாந்திகள் சிவம் ஆதல் என்னும் அச் சொற்றொடர்க்குக் கூறும் பொருள் யாதோவெனிற் கூறுதும்; மலம், மாயை, வினை என்னும் மூன்றும் எக்காலத்தும் இல்லாத வெறும் பொய்ப்பொருள்களாயின், என்றும் உள்ள சிவம் அவற்றாற் பற்றப்படுவ தென்றேனும் அல்ல தவற்றாற் பற்றப்பாடத தென்றேனும் உரைக்கும் உரைக்குப் பொருள் சிறிதும் இல்லை. ஆமை மயிரிற்றிரித்த கயிற்றால் அவ் ஆன்கன்றைக் கட்டிவைத்தான் அல்லது வைத்திலன் என்னுஞ் சொற்றொடரை ஒருவன் சொல்லியவழி அதற்குப் பொருள் காணப்புகுவாரைப் போல், உண்மையில் இல்லாத மும்மலங்க னாற் சிவம் கட்டுப்பட்டதெனவாதல் அல்லது இல்லதென வாதல் கூறுவாருரையும் நகையாடற் பாலதேயா மாகலின், இறைவன் மும்மலங்களாற் பற்றப்பட்டானென்று உரைப்பினும் அவை மூன்றும் என்றுமுள்ள பொருள்களென்றே கொள்ளல் வேண்டும். தூய பசும்பொன் எக்காலத்துங் களிம்பினாற் பற்றப்படாதவாறு போல. இயற்கையே விளங்கிய அறிவினால் எல்லா ஆற்றலும் உடையதாகிய சிவமும் மும்மலங்களாற் பற்றப்படாததாகும். மேலும், சிவம் எக்காலத்தும் ஒரு பெற்றித்தாய் விளங்கும் பேரறிவுப் பொருளாகலின், அஃருகாலத்து மாயையாற் கவரப்பட்டு அறியாமை யுடையதாயிற் றென்றலும். பின்னர் அவ்வறியாமை நீங்கித் தன் நிலையில் நிற்கு மென்றலும் ஒவ்வா ஒவ்வாவாகவே என்றும் ஒரு தன்மைத்தாய் நிற்குஞ் சிவத்தைச் சிவம்ஆதல் என்று ஆக்கச் சொற் கொடுத்துக் கூறுதலும் ஒவ்வாதாம். மற்று, ஒருகாற் சிவம் ஆகாவாயிருந்து பின்னரொரு காற் சிவமாக நிலைமாறுவனவற்றையே அவ்வாறு சிவமாதல் என்னுஞ் சொற்றொடர்கொண்டு வழங்குதல் ஏற்புடைத்து. அங்ஙனம் முன்னர் ஒருகாற் சிவமாகாமலிருந்து பின்னரொரு காற் சிவமாவன யாவையென்றால், அவைதாம் நம் கண்ணெதிரே காணப்படும் பலதிறப்பட்ட உயிர்களாதல் வேண்டுமென்க. இவ் வுயிர்களெல்லாம் மலம் மாயை வினையென்னும் மும்மலங்களாற் பிணிக்கப்பட் டிருத்தலையும் நம்மெதிரே காண்கின்றோம் எல்லா உயிர்களும் அறியாமை யுடையனவாய் இருக்கின்றன; இவ்வாறிருப்பது மலத்தின் செயல் எல்லா உயிர்களும் மாயையால் ஆக்கப்பட்ட உடம்புகளும் அவ்வுடம்புகளில் மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் உணர்வு நிகழ்ச்சிக்கு வாயிலான அறிவுப் பொறிகளும், உணர்ந்தபின் தொழில்புரியும் நா கை கால் குறி குதம் முதலான தொழிற்பொறிகளும், உடம்பினுள் நின்று இவற்றை இயக்கும் மனம் நினைவு அறிவு நான் என்னும் அகக்கருவிகளும் உடையனவாய் அவற்றின் உதவியால் அறியாமை சிறிது சிறிதா நீங்கி அறிவு விளங்கப்பெற்று வருகின்றன; இவ்வாறு அறிவு விளங்குதற்கு உதவிசெய்வது மாயையின் செயல். இங்ஙனம் மலம் மயை யென்னும் இரண்டின் அகமாய் நின்று உயிர்கள் வினைசெய்யுங்கால் நல்வினையுந் தீவினையும் என இருவகைவினைகள் தோன்றும்; அடுத்தடுத்துச் செய்யும் இவ்வினைகளால் உண்டாம் பழக்கத்தை உயிர்களின் அறிவிற் பதித்தல் வினையின்செயல். இனி, மலத்தால் அறியாமையும், மாயை வினைகளால் அவ்வறியாமை நீங்கி அறிவுவிளங்குதலும் உயிர்கண்மாட்டு இடையறாது நிகழ்தலை நாம் நேரே காண்கின்றனமாயின். மலம் ஒன்றுமே செம்பிற் களிம்புபோல உயிர்களோடு இயற்கையாய்ப் பொருந்திநின்று அதன் விழைவு அறிவு செயல்களைத் தொன்றுதொட்டு மறைத்துநிற்பதா மென்பதூஉம். ஏனை மாயையும் வினையும் அம்மல நீக்கத்திற்கும் அறிவு விளக்கத்திற்கும் உதவியாய் இடையொரு காலத்து உயிர்கட்கு வந்து வாய்த்தனவாமென்பதூஉம், மலநீக்கத்திற்கு உதவிசெய்யும் இவ்விரண்டும் அம்மலத்தோடு உடன்நின்று அதன் சார்பால் தாமும் ஒரோவொருகால் உயிர்கட்கு மயக்கத்தை வருவித்தலின் அதுபற்றி இவையும் மலமென வழக்கப்படுவவாயின வென்பதூஉம் நன்கு கருத்திற் பதித்தல்வேண்டும். இனி, அறியாமையைச் செய்யும் மலத்தின் வலியை யொடுக்கி, உயிர்கட்கு அறிவைத் தோற்றுவித்தற் பொருட்டே எல்லாம்வல்ல சிவம் மாயையிற் றிரட்டிய பல்வேறு உடம்பு களையும் அவையிருத்தற்குப் பல்வேறு உலகங்களையும். அவை நுகர்தற்குப் பல்வேறு பண்டங்களையும் ஆக்கிக் கொடுத்திருக் கின்றது. உயிர்கள் வேண்டாதிருக்கையிலும் இவ்வாறெல்லாம் செயற்கரும் பேருதவிகளை அவ்வுயிர்கட்கு ஆற்றிவரும் இன்பவுருவான சிவத்தின் திருவருள் நோக்கம் என்னை யென்றால், அறிவு விளங்கப்பெற்றபின் அவை அம்மும்மலப் பற்றுவிட்டுச் சிவத்தோடு இரண்டறக்கலந்து தாமும் சிவமாய் நிலைபெயராப் பேரின்பவுருவாய் இருக்க வேண்டுமென்பதே யாம். மாயை வினைகளின் உதவியாற் சிறிது சிறிதாக அறியாமை தேய்ந்து அம் முறையே அறிவு விளக்கப் பெற்றபின், எல்லா உயிர்களும் பேரின்பநிலையமாய் விளங்குஞ் சிவத்தைத் தலைக்கூடுதலிலேயே தமது கருத்தை நாட்டி, உலகத்திலும் உலகத்துப் பொருள்களிலும் தம்மைச் சூழ்ந்துள்ளாரிலும் தம்முடம்பிலுந் தம்மிலுஞ் செல்லும் உணர்வை மடித்துத் திருப்பித், தமது உணர்வுக்கு உணர்வாய் நிற்கும் சிவத்திலே படிவித்துச் சிவமாயே அமர்ந்திருக்கும். இங்ஙனம் உயிர்கள் மலத்தினின்றும் நீங்கச் சிவத்தைத் தலைக்கூடிச் சிவமாதலையே, சைவசித்தாந்தம் சிவமாதல் என்னுஞ் சொற்றொடர்க்குப் பொருளாக அறிவுறுத்தா நிற்கும். எனவே மலம் மாயை என்பனவும் அவற்றோடு உடனாய் நிற்கும் பல்வேறு உயிர்களும். இவை யெல்லாவற்றையும் ஊடுருவிக் கொண்டே இவற்றாற் பற்றப்படாது நிற்கும் சிவமும் என்றும் எக்காலத்துமுள்ள உள்பொருள்களே யாமென்ப தூஉம், இவை தம்முள் உயிர்கள் மலமாயையின் பற்றுவிட்டுச் சிவத்தைத் தலைக்கூடுதல் என்பது முன்நின்ற நிலையினின்றும் பெயர்ந்து பின்னொரு பெயரா நிலையைப் பெற்றுப் பேரின்ப வுருவாய் நிற்கும் அத்துணையே யல்லது அவ்வுயிர்கள் தம் முதல் கெட்டு இல்லாத வெறும் பாழாய்ப்போதல் அன்றென்பதூஉம் சைவசித்தாந்தத்தின் முடிந்த கோட்பாடு களாமென்று தெளிந்துகொள்க. இனி, ஈண்டெடுத்துக் காட்டிய இவ்விருவகைக் கோட்பாடுகளுள் மாணிக் கவாசகர் மாயாவாதக் கோட்பாடு உடையரோ, அன்றிச் சைவசித்தாந்தக் கோட்பாடு உடையரோ என்பது ஆராயற்பாற்று மாயாவாதிகள் பிரமத்தைத் தவிர வேறேதொரு பொருளும் இல்லையென்பர்; சைவசித்தாந்திகள் சிவமும் உயிர்களும் உயிர்களைப் பொதிந்த மும்மலங்களும் எக்காலத்தும் உண்டென்பர். சைவசித்தாந்த முதலாசிரியரான திருமூலர். பதிபக பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற்பசு பாசம் அநாதி பதியினைச் சென்றணு காபசு பாசம் பதியணு கிற்பசு பாசம்நில் லாவே1 எனவும், அவர்க்குப்பின் சந்தான குரவரில் முதல்வரான ஆசிரியர் மெய்கண்ட தேவர், நெல்லிற் குமியும் நிகழ்செம்பினிற் களிம்புஞ் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன்மம் அன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள் அலர்சோகஞ் செய்கமலத் தாம்2 எனவும், ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றே பதிபசுவாம் ஒன்றென்ற நீபாசத் தோடுளை காண்3 எனவும் அருளிச்செய்தமை காண்க. இவற்றிற்கு இசையவே திருவாதவூரடிகளும். வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போதுநான் வினைக்கேடன் என்பாய் போல இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை ஆட்கொண்டுஎம் பிரான் ஆனாய்க்கு4 என்று அருளி செய்தார் மலத்தின் இயல்பு அம் மலத்தையுடைய உயிர்கள் செய்யும் வினையாலன்றி அறியப்படாமையின், தொல்லாசிரியரெல்லாரும் மலத்திலே கிடத்தலை வினையிலே கிடத்தலாகவே பெரும்பான்மையும் உரையாநிற்பர். உயிர்கள் தொன்றுதொட்டு வினையிலே கிடக்கும் உண்மையை ஈண்டு அடிகள் தம்மேலேற்றி வினையிலே கிடந்தேனை என்றார். இயற்கையிலேயே சிவபிரான் மலத்தினாலும் அதன் வழிவரும் வினையினாலும் பற்றப்படாமலிருந்து ஏனை உயிர்களின் மலவினையைக் கெடுத்தலின் அவனை வினைக்கேடன் என்றார். சிவபிரானது முழுமுதற் றன்மையை அறியமாட்டாது. அறியாமையிற் கிடக்குஞ் சிற்றுயிர்கட்கு அவனே அவை தமக்கு அறிவித்தலான்றி அவை அவன்றன் முதன்மைத் தன்மையை உணரமாட்டாவென்பது தெரிப்பார். இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்றார். அங்ஙனம் அவன் அறிவிக்க அறிந்தவழிச், சிவபிரான் எல்லா அறிவும் எல்லா இன்பமும் ஒருங்குடையனாய். எல்லா உலகங்களையும் எல்லா உயிர் களையுந் தனக்கு உடைமையும் அடிமையுமாக உடைய ஆண்டவனாதலும், ஏனைச் சிற்றுயிர்களெல்லாம் அவனரு ளால் அறிவுவிளங்கி அவனைத் தலைக்கூடி அவனது பேரின்பத் திற்படிந்து அவனுக்கு அடிமைகளாதலுந் தெளிப்பார் என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு என்று கூறினார். இங்ஙனமே, செந்தமிழ்த் தொல்லாணை நல்லாசிரியரான தொல்காப்பியனாரும், வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூல் ஆகும்5 என்று இறைவனியல்பு மலவினையின் இயற்கையே நீங்கி விளங்கும் அறிவினதாலும், மலவினையிற் கட்டுண்டு அறியாமையிற் கிடக்கும் ஏனைச் சிற்றுயிர்கட்கு அறிவு கொளுத்துவான் வேண்டி அவன் முதல்நூல் அருளிச் செய்தலும் நன்கு தெருட்டினமை காண்க. மெய்கண்ட தேவரும், அறிவிக்க அன்றி அறியா உளங்கள் செறியுமாம் முன்பின் குறைகள்6 என்று இறைவனியல்பும் ஏனைச் சிற்றுயிரி னியல்பும் நன்குணர வைத்தாரென்க. அகத்தே உயிர்களின் அறிவை மறைக்கும் மலமும், புறத்தே அவ் வுயிர்களின் கட்புலனை மறைக்கும் இருளும் ஒன்றே யாகலின், மலத்தை இருள் எனவும், அஃது அறியாமையைச் செய்தலின் அஞ்ஞானம் எனவும், அம் மலம் சிவத்தைத் தலைக்கூட வொட்டாது உயிர்களைக் கயிறுபோற் கட்டி நிற்றலின் அதனைப் பாசம் எனவும் கலக்கத்தை உயிர்கண்மாட்டு வருவித்தலின் மலம் எனவும், அதனால் உயிர்கள்பால் நிகழும் வினைகள் கொடியவா யிருத்தலிற் கடியவினை எனவும், அது தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றியிருத்தலிற் பழமலம் எனவும், அஃதெல்லாத் துன்பத்திற்கும் முதலாயிருத்தலிற் பாசவேர் எனவும், அடிகள் ஆண்டாண்டு ஓதுதலை, வல்வினையேன் றன்னை மறைந்திட மூடிய மாய இருளை, (சிவபுராணம், 50,51). என்னுடையிருளை ஏறத்துரந்தும் (கீர்த்தித்திருவகவல். 6). அவன் வாங்கியஎன், பாசத்திற் காரென்று அவன் தில்லையின் ஒளிபோன்று (திருக்கோவையார். 109), அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே (சிவபுராணம் 40). பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே (சிவபுராணம், 64). பாசத்தளையறுத்து ஆண்டு கொண் டோன் (திருக்கோவையார். 115), கடலின்திரை யதுபோல்வரு கலக்கம்மல மறுத்துஎன், உடலும் எனது உயிரும்புகுந்து ஒழியா வண்ணம் நிறைந்தான் (உயிருண்ணிப் பத்து. 6). கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப், பழமலம் பற்றறுத்து ஆண்டவன் (திருப்பாண்டி பதிகம். 8), பாசவேர் அறுக்குகம் பழம்பொருள் தன்னை (பிடித்த பத்து.7) என்றற் றொடக்கத்துத் திருவாசகம் திருக்கோவையார் அருளுரைகளிற் கண்டுகொள்க. உயிர்களைப் பொதிந்த இம் மலத்தினியல்பைக் கூறுகின்றுழி, அடிகள் உடனே சிவத்தினியல் பையும் நல்லறிவு, என் உடலும் எனது உயிரும் புகுந்து ஒழியா வண்ணம் நிறைந்தான், கழிவுஇல் குருணை, பழம் பொருள், அவன் தில்லையின் ஒளி என்றற் றொடக்கத்து அடை மொழிகளால் இனிது விளங்கவைத்தமையும் பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாலதாகும். இவ்வாற்றாற் பழம்பொருளாகிய சிவம் எஞ்ஞான்றும் நல்லறிவினதாதலும், மலந்தீர்ந்த உயிர் தன்முதல் கெட்டுப்போகாமல் நிற்க அதன்உடம்பிலும் உயிரிலும் அச்சிவம் புலப்பட்டுத் தோன்றி அதன்கட் பிரிவின்றி நிறைந்து விளங்குதலும் அஃது எஞ்ஞான்றும் நீங்காத அருளுடையதாய் உயிர்களின் மலத்துன்பத்தை நீக்கி அவற்றிற்குத் தன் பேரின் பத்தை வழங்குங் குறிப்புடைத்ததாலும், அஃது அன்பர்க்கு அருள்செய்தற்பொருட்டு நிறைந்து நிற்குந் தில்லையாகிய அறிவு வெளி (சித் அம்பரம்) ஒளிவடிவிற் றாதலும் அடிகள் நன்கு தெருட்டியருளினார். இவ்வாறு காட்டியவற்றுள், உயிருஞ் சிவமும் தனித்தனி முதல்களாதலும், உயிர் மும்மலப்பற் றுடையனவாய்த் தொன்று தொட்டிருப்பச் சிவம் இயற்கையே விளங்கிய தூயஅறிவும் அருளும் உடையத்தாய் யாண்டும் நிறைந்து நிற்றலும், அஃது உயிர்களை மும்மலப் பற்றினின்றும் விடுவித்து அவை தம்முள் முனைத்து விளங்கி அவை தம்மைத் தனது சிவவுருவாக்குதலும் நன்கு பெறப்பட்டமையால் மாணிக்கவாசகப் பெருமான் தெள்ளத் தெளிந்த சைவ சித்தாந்தச் சான்றோரே யாதல் ஐயுறவின்றித் துணியப்படும். மும்மலப் பிணிப்பினின்றும் விடுவிக்கப்பட்ட தூய உயிர்கள் பாற் சிவம் முனைத்துத் தோன்றி அவை தம்மைத் தன்னுள் அடக்கித் தன்னையே காட்டிநிற்கும் மென்பது சைவசமய ஆசிரியர் ஏனையோர்க்கும் உடம்பாடாம்; அது. சுத்தச் சிவனுரை தானதிற் றோயாமன் முத்தர் பதப்பொருண் முத்திவித் தாம்மூலம் அத்தகை ஆன்மா அரனை அடைந்துஅற்றாற் சுத்த சிவம்ஆவ ரேசுத்த சைவரே. (திருமந்திரம், 1414) அனாதி சீவன்ஐம் மலம்அற்று அப் பாலாய் அனாதி யடக்கித் தனைக்கண்டு அரனாய்த் தனாதி மலங்கெடத் தத்துவா தீதம் வினாவுநீர் பாலாதல் வேதாந்தத் துண்மையே. (திருமந்திரம், 2362) உயிரைப் பரனை உயர்சிவன் றன்னை அயர்வற் றறிதொந் தத்தசி யதனாற் செயலற் றறிவாகி யுஞ்சென் றடங்கி அயர்வற்ற வேதாந்த சித்தாந்த மாமே (திருமந்திரம், 2363) என்று திருமூலநாயனாரும், எம்பிரான் என்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங்கு எம்பிரான் ஆட்ட ஆடி என்னுளே உழிதர் வேனை எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால் எம்பிரான் என்னின் அல்லால் என்செய்கேன் ஏழை யேனே (தேவாரம், பொது) என்று திருநாவுக்கரசு நாயனாரும், திகழ்ந்தமெய்ப் பரம்பொருள், சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடம் (திருப்பிரமபுரம், பந்தத்தால், 7) என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயானரும், நான்அவன் என்று எண்ணினர்க்கு நாடும்உளம் உண்டாதல் தான்எனஒன்று இன்றியே தான்அதுவாய் - நான்என ஒன்று இல்லென்று தானே எனும்அவரைத் தன் அடிவைத்து இல்லென்று தானும் இறை (சிவஞானபோதம், 10, 1, 1) என்று ஆசிரியர் மெய்கண்ட வேத நாயனாரும் ஓதிய வாற்றால் நன்குதெளியப்படும். திருமூலர் வேதாந்தம் என்றது உபநிடதங்களை, தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார். பற்றுக பற்று அற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசுஅறு காட்சி யவர்க்கு. சார்புஉணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய். என்று அருளிச் செய்தனவும் இக் கருத்தேபற்றி வந்தன. சிவத்தின் திருவடியைச் சேர்தல் என்பதூஉம் அவன் றிருவருளிற் படிதலேயன்றிப் பிறிதன்று. அடிகளும், தென்னன் பெருந்துறையான் காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி. (திருவம்மானை. 6) என்று அருளிச்செய்ததூஉம் காண்க. இறைவனது திருவுருவம் பருப்பொருளால் ஆக்கப்படாமல், மிக நுண்ணிய அவன்றன் அருளால் ஆவதாம். ஆகவே, அவன்றன் றிருவடி ஏனை மக்கள் தேவர்க்கு மாயையிற் றிரட்டப்பட்ட அடிகள்போல் ஓர் இடத்தைப்பற்றி நிற்பன அல்ல; அவை யெல்லையில்லாத பரப்பையெல்லாம் ஊடுருவிக் கொண்டு எல்லா உயிர்கண் மாட்டும் நிறைந்திருப்பனவாம். ஆகையால், யாண்டும் நிறைந்து நிற்கும் சிவத்தோடு, தூய உயிர்கள் கலந்து நிற்குமென்று உரைப்பினும், அல்ல தவன் திருவடியை அவை சார்ந்துநிற்கு மென்று உரைப்பினும் இரண்டும் ஒன்றேயாம்; வேறுபாடு சிறிதுமில்லை. இக் கருத்துப்பற்றியே ஆசிரியர் மெய்கண்ட தேவர், பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும் எண்ணுஞ் சுவையும்போல் எங்கும் ஆம் அண்ணல்தான்.7 என்றதூஉம், தெய்வத் திருவள்ளுவர், மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்.8 என்றதூஉம். சங்கப்புலவரான நக்கீரனார், சேவடி படருஞ் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையுஞ் செலவு9 என்றதூஉம் என்க. இந் நுண்பொருளுண்மை தேற்றுஞ் சைவசித்தாந்தம் உணராதார், தாம் பருப்பொருளிற் பயின்ற பயிற்சியேபற்றி இறைவன் றிருவடியைச் சேர்தல் என்பது உயிர்கள் அவனோ டொன்றாகாமல் வேறுவேறாய் நிற்குந் துவிதமாமென்றும், சிவமாதல் என்பது அவை முதல்கெட்டுச் சிவமாயிருக்கும் அத்துவிதமாமென்றும், அப்பர் திருஞான சம்பந்தர் சுந்தரரெல்லாந் துவித முத்தியையே யோதுவ ரென்றும், மாணிக்கவாசகரோ மாயாவாத அத்துவித முத்தியையே கூறுவரென்றும் தமக்கு வேண்டியவாறெல்லாம் உரைப்பர்; இவர் இவ்வாறன்றி மற்றென் செய்வர்! சிவம் ஒன்றாயே ஒழியாமலும், சிவத்தின் வேறாய்த் தனித்து நில்லாமலும் பாலோடு அளாயநீர்தன் முதல்கெடாமல் அப் பாலின் தன்மையாய் அதனுடன் பிரிவறக் கலந்துநிற்றல்போல், தூயதான உயிரும் தன் முதல் கெடாமல் அச் சிவத்தோடு இரண்டறக் கலந்து நிற்றலையே அத்துவிதமுத்தி என்று சைவசித்தாந்த நூல்கள் புகலா நிற்கும். இஃது. ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக நின்று சமய நிராகாரம் நீங்கியே நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற் சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே10 என்று தெய்வத் திருமூலர் அருளிச்செய்தமையால் நன்குணரப்படும் சிவம் ஒன்றே உளதாயின ஏகம் என்று கூறுதல் அமையும். சிவமும் உயிரும் தனித்தனி வேறாய்நிற்பின் துவிதம் என்று கூறுதலையும்; அங்ஙனம் ஒன்றாயும் இரண்டாயும் நில்லாமற் பிரிவறக் கலந்து நிற்றலால் அவ் விரண்டற்ற நிலையை உணர்த்துதற் பொருட்டே வடமொழிச் சான்றோர்கள் அத்துவிதம் என்னுஞ் சொல்லை ஆக்கி அதனை ஏகம் ஏவருத்ரோ நத்விதீயாய ததே11 என ஏகர்வேதத்துவம் சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம ஆத்மா12 என மாண்டூக்கிய உபநிடத்தும், உருத்திர சிவப்பெயர் களோடு தலைப்பெய்து உரைப்பாராயினர். பழைய வடநூல் களுட்போந்த இவ் அத்துவிதச் சொற்குப் பொருள் தேறமாட்டாது. அஃது ஏகம் என்றே பொருள்படுமென மற்றையொரு சாராருமாகச் சங்கராசாரியாரை யுள்ளிட்ட உரைகாரரெல்லாம் அதற்குப் பொருந்தாப் பொருள்கூறி இழுக்கினார். மற்றுச் சிவஞான போதம் அருளிச்செய்த ஆசிரியர் மெய்கண்டதேவ நாயானார் ஒருவரே. ஒன்றும் இரண்டும் ஆகா இரண்டற்ற தன்மை என அதற்கு மெய்ப் பொருளுரைத்தார். இவ்வாறு அவர் அச்சொல்லின் மெய்ப்பொருள் கண்டமைபற்றியே, பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித மெய்கண்ட நாதன் அருள் மேவுநாள் எந்நாளோ என்று பிற்காலத்துச் சான்றோரான தாயுமானச் செல்வரும் அவரை அத்துவித மெய்கண்டான் என்று வழுத்தினர். இவ்வாறு ஒன்றும் இரண்டுமாகாமற், சிவத்தொடு இரண்டறக் கலந்த தூய உயிர்கள் சிவவுருவாய் நிற்கும் வீடு பேற்றின் நிலையே, சிவமாதல் என்னுஞ் சொற்றொடரால் அறிவுறுக்கப் படுஞ் சைவசித்தாந்த முடிபொருளாகலின், அம் முடிபு தேற்றிச் சிவமாக்கி எனையாண்ட எனக் கூறிய மாணிக்கவாசகப் பெருமானை, மாயாவாதவாடை வீசப்பெற்றாரெனக் கூவிய தமிழ்வரலாறுடையார் கூற்று உண்மையறியாமையின் உள்ளீடு இல்லா வெறும் பதடியேயாம் என்க. அற்றேற், பிரமம் ஒன்றே உலகுயிர்களெனப் பலவாய்த் தோன்றாநின்ற தென்னும் மாயாவாத வேதாந்தக் கோட்பாட்டிற்கு இசையவே மாணிக்கவாசகரும், நிலன்நீர் நெருப்புயிர்நீள் விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்துநின்றான் உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ என்று கூறினாராலெனின்; அற்றன்று, இறைவன் எல்லாப் பொருள்களிலும் பிரிவின்றிக் கலந்து நிறைந்து நிற்கும் இயல்பு பற்றி, அவன் ஒருவனுமே பலவாகி நின்றானெனக் கிளந்த தல்லாமல், அவனையன்றி வேறேதொரு பொருளும் இல்லா திருக்க, அவன் ஒருவனே பலபொருளுமாய்க் காணப்படு கின்றான் என்னுங் கொள்கைப்பற்றியன்று ஒன்றே பல பொருளிலுங் கலந்து நிற்கும் முறைபற்றி அவ்வாறு அடிகள் ஓதினாரென்பதற்கு, அவர் எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் என்று மேலே கிளந்துரைத்ததே சான்றாம். புணர்ந்து நிற்றல் என்பது கூடிநிற்றல் என்னும் பொருளைப் பயக்குமே யல்லாமல், ஒன்று மற்றொன்றாய்க் காணப்படுதல் அல்லது திரிவு படுதல் என்னும் பொருளைப் பயவாது ஓர் உடம்பினுட் கலந்து நிற்கும் உயிர் அவ்வுடம்பின் ஐம்பொறிகளினு ஐம்புல உணர்வு தோற்றுவித்தல் பற்றிப் பலவாய்க் காணப்படினும், உண்மையில் அஃது அவற்றின் வேறாய்த்தான் ஒன்றேயாதல் போல, இறைவனும், உலகத்துப் பொருள்கள் எல்லாவற்றினும் விரவிநின்று அவ்வவற்றினூடே தன்னியகத்தைத் தோற்று வித்தல்பற்றி அவை பலவாய்க் காணப்படினும், உண்மையில் அவன் வேறாய்த்தான் ஒருவனே யாவன் என்று கடைப்பிடிக்க இவ்வுண்மை சிவஞானபோத 2ஆம் சூத்திரம் முதலதி கரணத்தின்கண் ஆசிரியர் மெய்கண்டதேவரால் நன்கு விளக்கப்பட்டது. சிவம் எல்லாப் பொருளுள்ளுங் கலந்து நிற்குமெனக் கொள்ளுதலே அடிகளது கோட்பாடென்பதற்கு, நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே (திருச்சதகம், 46) என்று அவர் தெளித்துரைத்தமையே சான்றாம். எள்ளும் அதனுட் கலந்து நிற்கும் எண்ணெயும் பொருட்டன்மையால் வேறாயுங் கலப்பினால் ஒன்றாயும் நிற்றல்போல, உலகுயிர்களும் சிவமும் தன்மையால் வேறாயும் கலப்பினால் ஒன்றாயும் நிற்குமெனக் கூறியவதனால், அடிகள் சைவ சித்தாந்தத் தெளிபொருளாளராதல் நன்கு துணியப்படும். பிரமமே பழுதையிற் பாம்புபோல் உலகுயிராய்க் காணப்படுகின்றதென விவர்த்த வாதங் கூறும் மாயாவாதிக்கும், பிரமமே பால் தயிரானாற்போல் உலகுயிர்களாய்த் திரிந்ததெனப் பரிணாம வாதங் கூறும் ஏகான்மவாதிக்கும் எள்ளிலெண்ணெயை உவமங் கூறுதல் ஒருவாற்றானும் ஏலாதென்க. மேலும், எல்லாப் பொருள்களுமாய் இறைவன் உளன் என்று தாம் புகன்றவள வானே அவன் ஒருவனே அங்ஙனம் பலவாயினான், அவனை யன்றி வேறேதொரு பொருளும் இல்லையெனச் சிற்றறிவினார் மயங்கிக் கொண்டுவிடுதலுங் கூடுமெனக் கருதியேபோலும் அடிகளே. நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ காலாய் அவை அல்லையாய் (கோயிற்றிருப்பதிகம். 6) என்றும், பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்குஒளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி (திருவெம்பாவை. 18) என்றும், பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்து அவை அல்லையாய் நிற்கும் எத்தனே, (பிடித்தபத்து. 8) என்றுந் தெளித்துரைத்துக், கலப்பினால் எல்லாப் பொருள்களும் எல்லாவுயிர்களுமாய் நிற்கும் முதல்வன் தன்மையால் அவற்றின் வேறாதலை நன்கறியவைத்தார். இவ்வாறெல்லாம் அடிகள் அருளிச்செய்தது போலவே திருநாகரசு நாயனாரும், இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாய் எறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாய்அட்ட மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நெருநலையாய் இன்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே (நின்ற திருத்தாண்டகம். 1) என எல்லாம் கலப்பினாற் சிவமாய் நிற்றலையுணர்த்தியபின், தன்மையால் அவன் அவையெல்லாவற்றினும் வேறாதலைத் தெரித்து, விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணு நின்னுந் திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில் அரிதரு கண்ணியாளை யொருபாக மாக அருள்கா ரணத்தின் வருவார் எரியர வாரமார்பர் இமையாரு மல்லர் இமைப்பாரு மல்லர் இவரே (பொது, சிவனெனுமோசை, 2) என்று தெளித்தருளிச் செய்தமையுங் காண்க. அற்றேல், உயிர் அணு அணுவாய்க் கெட்டு இறுதியில் இல்லையாய்ப்போம் என்பது புலப்பட அடிகள், சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாந்திருப்பெருந் துறையுறை சிவனே என்றருளிச் செய்தனராகலெனின்; இதுவும் அடிகளின் திருவுளக்கருத்தை ஆராய்ந்து பாராமையோடு அச் சொற் றொடர்ப் பொருளின் ஆழத்தையும் உணர்ந்துபாராக் குறையால் நேர்ந்த பிழை பாடாம். இச் சொற்றொடருள்ள செய்யுள் முழுதும் ஈண்டெடுத்துக் காட்டி அதன் பொருளை ஆராய்வாம்: இன்றுஎனக்கு அருளி இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்ற நின் தன்மை நினைப்புஅற நினைந்தேன் நீஅலாற் பிறிதுமற்று இன்மை சென்றுசென்று அணுவாய்த் தேய்ந்துதேய்ந்து ஒன்றாம் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றுநீ அல்லை அன்றிஒன்று இல்லை யார்உன்னை அறியகிற் பாரே (கோயிற்றிருப்பதிகம். 7) என்னும் இச் செய்யுள் முதலடிக்கண்நின்ற உவமையாகிய ஞாயிற்றின் எழுச்சி இச் செய்யுட்கண் உள்ள நுண் பொருளை விளக்குதற் கருவியாய் நிற்றலின் முதற்கண் அஃது ஆராயற் பாற்று. கதிரவன் கீழ்பாற் றோன்றாமறைநிலா இரவில் எங்குந் திணிந்த இருள் பரம்பி நிற்கின்றது. அவ்விருளில் மக்கள் விழித்திருப்பினுந் தம்மையுங் காணமாட்டுவார் அல்லர். தமக்குப் புறம்பாயுள்ள ஏதொரு பொருளையுங் கூடக் காணமாட்டுவார் அல்லர்; மற்று ஞாயிற்றினொளி அளவுபடா விளக்கத்தோடுங் கீழ்பால் எழுந்த துணையானே முன்னே பரவி இருந்த பேரிருள் கட்புலனாகாதாய் மறைந்துபோக மக்களுங் கண்ணறிவு துலங்கி எல்லாப் பொருளையுங் காணப் பெறுகின்றனர். எனினும், பகலவன் கீழ்பால் நின்று மேலெழுந்து வானில் தலைக்கு நேரே உச்சியில் வருங்காறும் மக்களெல்லாருந் தமக்குப் பக்கத்தே தமது நிழலையும் காண்கின்றனர்; அப்போது அவர்களுடம்பின் எப்பக்கத்தும் ஞாயிற்றின் ஒளி படுவதில்லை; அவ்வொளி ஒருபக்கத்தே மட்டும் படமற்றொருபக்கம் நிழலுடையதாகவே யிருக்கின்றது; ஆயினும் கதிரவன் கிழக்கே தோன்றுங்கால் மிக நீண்டு காணப்படும் மக்களுடம்பின் நிழலானது. அவன் மேன்மேல் எழஎழத் தானும் வரவரத் தேய்ந்து தேய்ந்து சிறுத்துக் கொண்டே போகின்றது. பின்னர்த் தலைக்கு நேரே வான் உச்சியில் அவன் வந்த துணையானே, அவனது பேரொளி மக்கள் உடம்பெங்கும் பட்டுமிளிர அவரது உடம்பின் நிழல் ஒருசிறிதும் இல்லையாய் ஒழிகின்றது. இவ்வளவுங் கதிரவன் உச்சிப்போதில் வருந்துணையும் நிகழும் நிகழ்ச்சியாம். இந் நிகழ்ச்சியை இனி இவ்வுலகத்தில் இவ்வுடம்போடு கூடியிருக்கும்போதே இறைவன் திருவருட் பேற்றை எய்தி, விரைவில் அவனோடு இரண்டறக் கலக்கப் போகுந் தூயஉயிரின்கண் நிகழும் நிகழ்ச்சியோடு பொருத்திப் பார்த்தல் வேண்டும். இவ்வுலகத்தில் உள்ளஞான்றே தூயதான உயிரின்முன் இறைவன் சொல்லொணா அருளொளியோடு தோன்றுதலும், இதற்குமுன் அவ்வுயிரின் அறிவுக்கண்ணைப் பொதிந்திருந்த ஆணவ மலவல்லிருள் பெரும்பான்மையும் மறைந்துபோக அவ்வருளொளியின் உதவியால் அவ்வுயிர் தன்னையும் தன்னிறை வனை ஏனையெல்லாப் பொருள் நிகழ்ச்சிகளையும் காண வல்லதாகின்றது. அங்ஙன மாயினுந் தான் உடம்போடு கூடி நிற்றலால், அவ்விறைவனொளி மேலெழுந்து தன்னுயிரில் முழுதுந் தோயுங்காறுந் தன்னுடம் பாகிய மாயாமலத்தையும் அதன் வாயிலாக வரும் இருவினையாகிய நிழலையுந் தன்னொரு பக்கத்தே காணாநிற்கும். மற்று இறைவனொளி மேன்மேல் எழ எழ இருவினையாகிய நிழலும் அணு வணுவாய்த் தேய்ந்து கொண்டே வருமாகலின், பின்னர் அவ்வொளி அவ்வுயிரின் நேர் உச்சியில் வந்த துணையானே அவ்வினை நிழல் முற்றும் அற்றுப் போக, இறைவனது அருளொளி அவ்வுயிரின் எம்மருங்கும் பட்டு மிளிரா நிற்கும். இவ்வியல்பினைப் பின்னும் ஓர் எடுத்துக் காட்டானும் விளக்குவாம். தூயதொரு பளிங்குக் கண்ணாடியை ஒரு மாளிகையின் மேல்முற்றத்தின் நடுவே வைத்து அதனைச் சூழச் சிவப்பு மஞ்சள் நீலம் முதலான பலநிறங்களுடைய மலர்களை வைத்திடுக. ஒளியில்லாத இராக்காலத்தே அவை இங்ஙனம் வைக்கப்பட்டாற், பளிங்கின் விளக்கமும் அதனைச் சூழ்ந்துள்ள மலர்களின் நிறமும் சிறிதும் புலனாகா மற்றுக் கதிரவன் கீழ்பால் எழுந்தவளவானே இருள் மறைந்து போகாநிற்கும்; போகவே, பளிங்கின் விளக்கமும் அதனைச் சூழ்ந்துள்ள மலர்களின் வடிவும் நிறமும் அவை அதன்கட்டோன்றும் எதிர்த் தோற்றமும் எல்லாம் ஒருங்கே காணப்படும். இன்னுங் கதிரவன் கீழ்பாலிருந்து வானுச்சியிற் சிறிது சிறதா ஏறுந்துணையும் அப் பளிங்கினுட் மலர்களின் வடிவும் நிறமும் சிறிது சிறிதாக் குறைந்துகொண்டே வந்து, கடைப்படியாகக் கதிரவன் அப்பளிங்குக்கு நேர் உச்சியிற் சேர்ந்த துணையானே, அவை முற்றுந் தோன்றாவாய் ஒழிய, அப்பளிங்கு முழுதுங் கதிரவன் ஒளிவடிவாயே காணப்படும். பல்வகை வடிவும் நிறமும் உடைய அம் மலர்கள் அப்போது அப்பளிங்கின் மருங்கேயிருந்தும், அவற்றின் அவ்வடிவும் நிறமும் அதன்கட் சிறிதுந் தோன்றா; அப்பளிங்கின் இடமெல்லாம் முழுதும் பகலவனொளியாற் கவரப்பட்டபடியாகவே இருக்கும். இந்நிலையிற் கதிரவனும், கதிரவனொளியால் முழுதுங் கவரப்பட்ட பளிங்கும். அப்பளிங்கின் பக்கத்தே பல்வேறு வகைப்பட்ட மலர்களும் உள்ளவே யல்லாமல், அவற்றுள் ஒன்றாயினும் இல்லா தொழிந்ததின்று காலைப் பொழுதிற் பளிங்கினுட் பகலவ னொளியோடு விரவித் தோன்றிய அம் மலர்களின் வடிவும் நிறமும், உச்சிப்பொழுதில் அதன்கட் காணப்படாவாய்ப் போகப் பகலவன் ஒளியே அதன்கண் முழுதுமாய்த் தோன்றும். அத்துணையே வேறு பாடல்லது. முன்னும் பின்னும் அப்பொருள்கள் சிறிதும் இல்லையாய் ஒழிந்தில. இந் நிகழ்ச்சியோடு ஒப்பவே இறைவனது அருட்பேற்றின் நின்றார் நிலையும் உள்ளதென அறிதல் வேண்டும். இறைவனருளாற் பற்றப்பட்டார்க்கு ஆணவஇருள் ஒழிந்ததாயினும், அவ்வருள் விளக்கம் முறுகி அவர்மாட்டு முனைக்குங் காறும், உடம்பும் அது வாயிலாக வரும் இருவினைகளும் அவர்க்கு உளவாம். அங்ஙனம் அவை உளவாயினும், பகலவன் வானுச்சியில் ஏறுந்தோறும் பளிங்கினுள் விளங்கித் தோன்றும் மலர்களின் வடிவும் நிறமும் அம்முறையே அணு அணுவாய்க் குறைந்து கொண்டு வந்து, அவன் நேர் உச்சியில் வந்தவளவானே அவை முற்றும் அதன்கட் காணப்படுதல் இல்லையாய் ஒழிதல்போல, இறைவனதருள் விளக்கம் முதிருந்தோறும் முதிருந்தோறும் அவ்விளக்கம் மிகப் பெறுவார்க்குள்ள மாயை வினைகளின் பற்றும் அம்முறையே அணு அணுவாய்த் தேய்ந்து, பின் அவ் விளக்கம் அவருயிரை முழுதுமாய்த் தேய்ந்து, பின் அவ் விளக்கம் அவருயிரை முழுதுமாய்க் கவர்ந்து அதனைத் தன் வடிவாக்கிய துணையானே அப் பற்றும் அவர்பால் முற்றும் இல்லையாய் ஒழியும். இவ்வாறு அணு அணுவாய்த் தேய்ந்தொழிவது மாயை வினைகளின் பற்றேயல்லாமற் பிறிதன்றென்பது மேற்காட்டிய உவமையானும் நன்கு விளங்கும். அங்ஙனம் அருட்பேறு ஒன்றே யுடையராய் அடியார் நிற்கும் அவ் வீட்டுநிலையிற் கடவுளும் உண்டு. அவனருளைத் தலைக்கூடி நிற்கும் அடியாரின் உயிரும் உண்டு, அவரைப் பற்றுத்லொழிந்து நிற்கும் மல மாயை வினைகளும் உண்டு; முன்னெல்லாம் உயிரைப் பற்றிநின்ற அம் மும்மலப் பிணிப்பு விட்டு உயிர் முதல்வன் அருள் வடிவாய்த் தன்கண் அவ்வருளே முனைத்து நிற்கத் தான் அதன்கட் பிரிவற நின்று பேரின்பம் நுகர்ந்திருக்கும் அத்துணையே அதன் முன்னிலைக்கும் பின்னிலைக்கும் உள்ள வேறுபாடா மல்லது பிறிதில்லை யென்பது அறிந்துகொள்க. அருளாற் பற்றப்பட்டு முன்னரே ஆணவமலங் கெடப்பெற்றார்க்குப், பின்னர் அணுஅணுவாய்த் தேய்ந்து கெடுவது அவ்வாணவச் செயலை இன்னுந் தம்முட் சிறிது கொண்டு நிற்கும் மாயை வினைகளின் பற்றேயாதலும், அப்பற்று அறவிடுதற் பொருட்டே உயிர் தான்வேறு இறைவன் வேறென இரண்டாய் முனைத்துக் காணாது அவ்விறைவனரு ளோடு ஒற்றித்து நின்று அதுவாய்க் காணுதலும் ஆகிய வீடுபேற்றின்கண் நிகழும் இந் நுண்ணிய இயல்புகளை ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார், அவனே தானே யாகிய அந்நெறி ஏக னாகி இறைபணி நிற்க மலமாயை தன்னோடு வல்வினை யின்றே13 என்னுஞ் சூத்திரத்திற் குரைத்த பொழிப்பானும். ஆண்டு நாமல்ல இந்திரியம் நம்வழியின் அல்லவழி நாமல்ல நாமும் அரனுடைமை - ஆமென்னின் எத்தனுவின் நின்றும் இறைபணியார்க் கில்லைவினை முற்செய்வினை யுந்தருவான் முன் என்றும், இங்குளி வாங்குங் கலம்போல ஞானிபான் முன்செய் வினைமாயை மூண்டிடினும் - பின்செய்வினை மாயையுட னில்லாது மற்றவன்றான் மெய்ப்பொருளே ஆயவதனால் உணரும் அச்சு என்றும் அருளிய திருவெண்பாக்களானும் அறிந்துகொள்க. இவ்வாறு இறைவனருள்வழி யொன்றிலேயே யுறைந்து நிற்பார்க்குத், தமக்குப் புறத்தேயுள்ள புறப்பொருளுணர்வும், தம்மோடு உடனாய் நிற்குந் தமது உடம்பைப் பற்றிய வுணர்வும் தமக்கு அகக்கருவிகளாய் நிற்கும் மனம் முதலியவற்றைப் பற்றிய வுணர்வும், இறுதியிற்றான் ஒருபொருள் எனத் தன்னைப்பற்றிய வுணர்வும், நிகழாமல் ஒருங்கே கெட்டொழிய வேண்டுதலின், மலமாயை வினைகளின் பற்று ஒழிகின்றுழியே அவற்றோடு உடனாய் நிகழும் இவ்வுணர்வுகளும் அணுவணுவாய் ஒழியுமென்பது பெற்றாம். இவ்வியல்பு, அடிகளே. வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல்நீர் மண்கெடினும் தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டேன் னுள்ளமும்போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ14 என்று அருளிச்செய்த வாற்றானுந் தெளியப்படும். முடிந்த வீட்டு நிலைக்கண் நிகழும் இம் முடிந்த நிகழ்ச்சியை அறிவுறுத்துதற் கன்றே தெய்வத் திருமூலரும், தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்தபின் நானும் அழிந்தமை நான் அறி யேனே15 என இதனை முடிந்த முடிபாய் வைத்து இறுதிக்கண்ணதான ஒன்பதாந் தந்திரத்தில் ஓதினார். இங்ஙனமெல்லாம் புறப்பொருள் அகப்பொருள்களிற் சென்றவுணர்வு அற்றுத் தூயதான உயிர் இறைவனைத் தலைக்கூடுதலை இறைவனடியைத் தலைகூடுத லாகவே வைத்து அதற்கடுத்த இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப் பொருளிற் பொருளாய்ப் பொருந்தஉள் ளாகி அருளால் அழித்திடும் அத்தன் அடிக்கே உருளாத கன்மனம் உற்றுநின் றேனே16 என்னுஞ் செய்யுளுள்ளும் நன்கு விளக்கியருளினார். இறைவ னோடு இரண்டறக் கலக்கும். இம் முடிந்த வீடுபேற்றினை இறைவன் திருவடிப் பேறாகவே சைவசித்தாந்தத் தொல்லாசிரிய ரான திருமூலரும் சைவசமயாசிரியருங் கூறாநிற்க. இதனை ஒரு சிறிதாயினும் நுணுகியுணரமாட்டாத தமிழ் வரலாறு உடையார் திருவடிப்பே றொன்றே சைவசமயாசிரியர் வேண்டியதாமென்றும், சிவமாதலாகிய பேறு மாயாவாதம் பற்றி யெழுந்த தொன்றாகலின் அதனைத் தம்மேல் ஏற்றிச் சொல்லிக்கொண்ட மாணிக்கவாசகர் ஏகான்மவாதவாடை வீசப்பெற்றாரென்றுந் தமக்குத் தோன்றியவா றெல்லாங் கூறி இழுக்குற்றார். தூயதானவுயிர் இறைவனோடு இரண்டறக் கலந்துவழி, இதற்குமுன் தன்மாட்டு நிகழ்ந்த புறப்பொருளுணர்வு அகப்பொருளுணர்வு முற்றும் அவிந்துவிட, இறைவனதுணர்வு ஒன்றுமே தன்னகத்துத் தலை யெடுத்துநிற்கத் தன்னுணர்வு அதனுள் அடங்கி அதன்வடிவாய் உரைவரம்பிகந்த பேரின்பப் பெருக்கிற் படிந்து வயங்கா நிற்கும்! அங்ஙனம் நிற்குங்கால், தூயதான அவ்வுயிர் தன்முதல் ஒரு சிறிதுங் கெடாமலே இருக்கும் இவ்வுண்மை தெரித்தற்கே, முத்திதனில் மூன்று முதலும் மொழியக்கேள் சுத்தஅநு போகத்தைத் துய்த்தல் அணு - மெத்தவே இன்பங் கொடுத்தலிறை யித்தைவிளை வித்தல்மலம் அன்புடனே கண்டுகொள்அப் பா17 என்று அருட்செல்வரான மனவாசகங்கடந்தாரும் அருளிச் செய்வாராயினர். புறப்பொருள் அகப்பொருள்களோடு ஒருங்கியைந்து அவற்றின்வழித் தோன்றும் உணர்வில் உறைத்து நிற்குங்கால், உயிர் அங்ஙனம் உணருந் தன்னையும் தனக்குள் நிற்குந் தலைவனையும் உணரமாட்டாதாய் அப் புறப்பொருள் அகப்பொருளுணர்வாயே நிற்றல்போல, அதுதான் இறைவ னருளிற் றோய்ந்து அவ்வருளுணர்வாயே நிற்குங்காலும் அவ்வருளுணர்வாய் நிற்குந் தன்னையுணராதாய்த் தன்னை ஊடுருவி நிற்கும் முதல்வனுணர்வாயே நிற்குமென்க. உலகின் வழிப் பதிந்த உணர்வொடு நிற்கும் உயிர்க்குச் சிவம் விளங்காது; சிவத்தின் வழிப் பதிந்த உணர்வோடு நிற்குந் தூயஉயிர்க்கு உலகந்தோன்றாது; இங்ஙனம் இருதிறப்பட்டு நிற்கும் உயிரின் நிலை. மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே18 என்று ஆசிரியர் திருமூலநாயனார் ஓதினமைகொண்டு தெற்றென அறியப்படும். இன்னும் இதனை நாடோறும் எல்லார்க்கும் நிகழும் நிகழ்ச்சியொன்றானும் விளக்கிக் காட்டுதும். நறுமணங் கமழுந் தித்திப்பான தேனை ஒருவன் நன்கு சுவைத்துப் பருகுகின்றுழி, அவனது உணர்வெல்லாம் அதன் இன்சுவையில் ஒன்றுபட்டு அச்சுவை வடிவாய் நிற்றலைக் காண்கின்றேம் அல்லேமோ? அந் நிலையில் அவன் அச் சுவையுணர்வு ஒன்றாயே நிற்பதன்றி. அதனைச் சுவைக்குந் தன்னையாவது, ஏனைப் பிறபொருள்களையாவது, முழுமுதற் கடவுயைவது பிரித்துணர மாட்டுவான் அல்லன்; அச் சுவையுணர்வு ஒன்றாயே நிற்றல்பற்றி உயிராகிய தானும் இல்லாது ஒழிந்திலன்; அந் நிலையில் தான் ஒருவன் உளனாய் இருந்தும் தன்கட்பிறந்த அச் சுவையின்பத்திற் படிந்து, அவ்வின்பவுருவாயே நிற்பனாயினன்; இச் சிற்றின்ப நிகழ்ச்சிக்கண்ணும் அவனுக்கு அந்நேரத்திற்கு முன்னிருந்த மற்றைப்பொருள் உணர்வுகண்மட்டும் அணுஅணுவாய்த் தேய்ந்து காணப்படாமற் போயினவேயல்லாமல். அவ் வின்பத்தை நுகரும் அவன் அணுஅணுவாய்த் தேய்ந்து இல்லாத வெறும் பாழாய்ப்போயினானல்லான்; எல்லாரிடத்தும் நேரே காணப்படும் இந் நிகழ்ச்சியோடு ஒப்பவே, பெயராப்பேரின்ப முதல்வனோடு தூயதான உயிர் ஒன்று கூடிய வழியும் தான் அவ்வின்பவுருவாய் ஏனையெல்லா வுணர்வுகளையும் அறவே விட்டு அருளுணர்வாய் நிற்குமல்லாமல், தன் முதல்கெட்டு இல்லாத வெறும் பாழாய்ப்போகாதென்றும் அறிந்து கொள்க. அல்லதூஉம், எம் அறிவால் அறியப்படும் எவ்வகைப் பொருளும் இல்லாத வெறும் பாழாய் ஒழிதல் எஞ்ஞான்றும் இல்லை. அறிவில்லாத பருப்பொருள்கள் அணுவணுவாய்ப் பிரிந்து ஐம்புலனுக்குந் தெரியாமல் மறைதலும், பெயர்த்தும் அவ்வணுக்கள் ஒன்றோடொன்று ஒட்டிப் பல்வேறு உருக்களாக ஐம்புலன்களுக்குத் தோன்றுதலும் ஆகிய இருவேறு நிலைகளை மாறிமாறி எய்தும் அத்துணையே யல்லாமல் அவைகளும் இல்லாத வெறும் பொய்ப்பொருள் களாய் ஒழிதல் எஞ்ஞான்றும் இல்லை. அறிவில்லாத பருப் பொருள்களே பாழாய் ஒழிதல் ஏலாதாயின் அறிவுருவினதாய் இடத்தானுங் காலத்தானும் வரையறுக்கப்படாத தாம் உயிர் இல்லாத வெறும் பாழாய் ஒழிதல் யாங்ஙனம்? இற்றை ஞான்றை இயற்கைப் பொருணூலாரும் ஏதொரு பொருளும் என்றும் இல்லா வெறும் பொய்யாய்ப் போதல் எக்காலத்தும் இல்லையென்று கட்டுரைத்து விளக்குவர். ஆகவே, இன்று அருளி இருள் கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை என்பது நின் திருவருளைப் பெறுந் தகுதிவாய்ந்த இக் காலத்து எனக்கு நின் அருளை வழங்கி அங்ஙனம் அதனை வழங்குகின்றுழியே என்னைப் பொதிந்த ஆணவ இருளையுந் துரந்து பளிங்கினள் நிழலைச் சிறிது சிறிதாகக் குறைத்துப் பின் அதனை இல்லையாக்கி வான்மேல் எழாநின்ற ஞாயிற்றை யொப்ப, என்னுள்ளத்தின்கண் விளங்கித் தோன்றாநின்ற நின் இயல்பினை எனவும், நினைப்பு அற நினைத்தேன் என்பது என்னுள்ளும் புறம்புமாகிய எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்கும் நின்னை, இதற்குமுன்னெல்லாம் புறத்தே நிற்குமவனாக மட்டுங்கருதி முன்னிலைப்படுத்து என்னின் வேறாய் வைத்து யான் நினைந்துவந்தது போலில்லாமல், அங்ஙனம் வேறாய்க் காணும் நினைப்பு முற்றும் ஒழிய, என்னுள் நீயும் நின்னுள் யானுமாய் நிற்கும் அப் பிரிவில்லா நிலையின் இயல்பினை நின்திருவருளாற் கண்டு கொண்ட இக் காலத்தே நின்னருள் வழிநின்ற உணர்வி னேனாய் நின்னை நினைப்பே னாயினேன்; அங்ஙனம் நினைந்த வளவானே எனவும், நீ அலால் பிறிதுமற்று இன்மை சென்றுசென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்று ஆம் திருப்பெருந் துறையுறை சிவனே என்பது உரைப்பரும் விளக்கத்தினையாய்த் தோன்றி என்னை நின் வண்ணமாக்கிய உன்னையல்லாமல், மாயை வினைகளுள் வேறு ஏதும் இல்லாததாய், அதுதானும் அது தன்னைப் பற்றிய வுணர்வும் அணுஅணுவாய்க் கழிந்து கழிந்து தேய்ந்து தேய்ந்து போக, எஞ்சி நிற்பது நின்னுணர்வு ஒன்றேயாம். திருப்பெருந் துறையில் விளங்கி யெழுந்தருளிய சிவபெருமானே எனவும், ஒன்றும் நீ அல்லை அன்றிஒன்று இல்லை யார்உன்னை அறியகிற் பாரே என்பது நின்திருவருட் பரப்பில் அடங்கிக் கிடக்கும் மும்மலங்களும் உயிர்களும் என்னும் இவற்றின் இயல்பு அறியாமையுஞ் சிற்றறிவுமா யிருத்தலின் என்றும் நுண்ணிய அறிவுப் பேரொளியாய் வயங்கும் நீ அவை அவ்வாறு நின்னுள்ளிருத்தல் பற்றி அவற்றுள் ஏதும் ஆவாய் அல்லை. எல்லாவற்றிற்குங் களைகணாய் நிற்கும் நின்னை யல்லாமல் அவற்றுள் ஏதுந் தாமாகவே தனித்துநிற்க வல்லதாதலும் எஞ்ஞான்றும் இல்லை. மும்மலக் கட்டில் நிற்கின்ற எல்லையில் நின்னைத் தம்மின் வேறாய் வைத்து முன்னிலைப் படுத்துக் காண்பார்க்கு அவர் காணும் அக் காட்சியினுள்ளாகவே நீ மறைந்திருத்தலின் அவர் நின்னைக் காண்டல் இயலாது. இனி அம் மும்மலக் கட்டின் நீங்கி நின் திருவடிப் பேறெய்தி நின்னருள்வழி நின்று பேரின்பந் திளைத்து நின்னுணர்வினராய் நிற்பார்க்கும் அந் நிலையில் நீவேறு தாம்வேறாய் நின்று காண்டலும் இயலாது. இங்ஙனம் இவ்விருவகை நிலைகளின் நிற்பவரன்றிப் பிறர் இன்மையின், இந் நிலையிலுள்ளார் எவர்தாம் நின்னை அறியமாட்டுவார்! எனவும் பொருள்படுதல் காண்க. இவற்றுட் சிவவுணர்வாய் நிற்றல் என்பது மலம் மாயை வினை உயிர்கள் என்பவற்றுள் ஒன்றனிடத்தும் ஒரு தினைத் துணையும் நினைவுசெல்லாமற் றன்னையும் நினையாமற், சிவம் ஒன்றையே நினைந்தபடியாய் நிற்றல். உயிர் எப்பொருளை நினைந்தாலும் அப் பொருளின் இயல்பினைத்தான்பெற்று அவ்வுருவாய் நிற்குந் தன்மைத்தாகலின், அது சிவத்தை நினைந்து அந்நினைவு ஒன்றிலேயே உறைத்து நிற்க நிற்க. அது சிவத்தினியல்பைப் பெற்று அவ்வுருவாய் நிற்பதாகின்றது. இஃது இவ்வாறு சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடைத்தாதல் பற்றியே ஆசிரியர் திருவள்ளுவனாயனார் உயிரினியல்பை நீரினியல் போடு ஒப்பிட்டு, நிலத்தியல்பால் நீர் திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு19 என்றும், தாயுமான அடிகள் அதனைப் பளிங்கினியல் போடு ஒப்பிட்டு, யாதொன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று பந்தமறும் பளிங்கனைய சித்து நீயுன் பக்குவங்கண் டறிவிக்கும் பான்மை யேம் யாம்20 என்றும் அருளிச் செய்வாராயினர். இவ் வுண்மையினையே தெய்வத் திருமூலரும் திருவடிஞானஞ் சிவம் ஆக்குவிக்கும்21 என்று தேற்றியருளினார். இங்ஙனம் இறைவனியல்பைத் தன்னியல்பாகத் கருதினாலன்றி உயிர் தன்னைப் பொதிந்த மலக்கட்டு அறப் பெறாது சிற்றினத்தாரோடு சேர்ந்து அவர்க்குரிய களவு கட்குடி சூது முதலான தீவினைகளிற் பயின்றான் ஒருவன் அவருள் ஒருவனாகத் தன்னைக் கருதி அவர்க்குரிய இயல்பே தனக்குரிய இயல்பாகப் பிறழ நினைந்திருக்குங்காறும், அவன் அத்தீவினை களினின்றும் அவற்றால்வருந் துன்பங்களினின்றும் ஒருசிறிதும் விடுபடான். மற்று அவன் தான் படுந்துன்பங்களின் முதல் தான்சேர்ந்த தீயோரின் சேர்க்கையால் வந்ததென்றும், அவரியல்பின் வழியே தன்னியல்பினைச் செலவிடுத்தது குற்றமாமென்றும் உணர்ந்து, அவரின் வேறாகத் தன்னைக் கருதி, அம்மட்டில் அமையாது நல்லார் குழுவிற் சேர்ந்து இனி அவர் தமக்குள்ள சிறந்த இயல்பே தனக்கும் உரியதாகற் பாலதெனக் கடைப்பிடித்து அவ்விழுமிய இயல்பிற்றன் கருத்தை நிறுத்தி அவ் வண்ணமாய் நின்றக்கால், அவனை முன்னே பற்றிய தீவினைகளும் அவற்றாற் றான்பட்ட துன்பங்களும் அவனை முற்றும் விட்டுப்போக, அவன் பின்னர்த் தான் சேர்ந்த நல்லாரியல்பே தன்னியல்பாய்க் கொண்டு அதனால்வரும் நல்லின்பத்திற் படிந்திருத்தல் காண்டு மன்றே! அது போலவே உயிர் தான் கட்டுண்டிருந்த ஆணவம் மாயை வினை என்னும் மும்மலப் பிணிப்பு அற்று நீங்கும் பொருட்டு, அவற்றினியல்போடு ஒன்றுபட்டு நில்லாது. சிவத்தினியல்போடு ஒருமித்து அதுவே தானாய் நிற்கும் நிலையில் இடையறாது பழகுதலே செயற்பாற்று; இவ் விடையறாப் பழக்கம் ஏறியபின் உயிரைப் பற்றிய மலத்தினியல்பு விட்டுப்போக உயிர் சிவத்தினியல்பாய் நிற்கும்; மலம் அறுதற்பொருட்டுச் செயற்பாலதாகிய இப் பழக்கத்தினையே ஆசிரியர் திருமூல நாயனாரும். தானவ னாகுஞ் சமாதி கைகூடினால் ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்22 என்று நன்கருளிச் செய்தனர். இனி, இங்ஙனஞ் சிவத்தினியல் பைத் தன்னியல்பாய்க் காணுங் காட்சியையே வடமொழி உபநிடத மறை சோகம்பாவனை எனவும், சித்தாந்த மாமறையாகிய ஆகம நூல் சிவோகம்பாவனை எனவுங் கூறுமென்பது தெரிப்பார். அவரே, மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம் சென்னினய தான சிவோகமாம் ஈதென்ன அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள் துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே23 எனவும் அருளிச் செய்தார். இவ்வுண்மை முடிபை எவரும் விளக்கமாய்த் தெரிந்து கொள்ளும் பொருட்டே மிகத் தெளிவான தமிழில், யாதொன்று பவிக்க நான், அதுவாத லால்உன்னை நானென்று பாவிக்கின் அத்துவித மார்க்கம்உறலாம் ஏதுபா வித்திடினும் அதுவாகி வந்துஅருள்செய் எந்தைநீ குறையும் உண்டோ24 என்று தாயுமான அடிகளும் அருளிச் செய்தனர். உயிர் இவ்வாறு சிவமாந் தன்மையைப் பெறுதலுக்கு ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார் கருடத்தியானம் பண்ணி, அரவின்நஞ்சு தீர்ப்பானை உவமையாகவு மெடுத்துக் காட்டிக், கண்டதை அன்றன் றெனலிட்டுக் கண்டசத்தாய் அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் - பண்டணைந்த ஊனத்தைத் தான்விடுமா றுத்தமனின் ஒண்கருட சானத்திற் றீர்விடம்போற் றான்25 என்று அவ்வியல்பைத் தெற்றென விளக்கினமை காண்க. புறத்தே காணப்படும் எருவையின் (கருடனின்) வடிவோடு ஒத்ததொரு மந்திர உருவினை மனத்தாற் கற்பித்துக் கொண்டு, அவ்வுரு விலேயே தன் கருத்தினை நாட்டி அதனை அவ்வண்ணமாக்கிப் பயின்ற மந்திரகாரன், பின் அரவு தீண்டப்பட்டான் ஒருவனை அம்மந்திரவுருவில் நின்று நோக்கிய வளவானே அவற்கேறிய நஞ்சு நீங்கிப் பிழைத் தெழுதல்போல, மும்மலமாகிய நஞ்சு ஏறிய எயிர் அம் மலப்பகையாகிய சிவத்தினியல்பை நினைந்து அதிற்றன் கருத்தை நிறுத்தி அவ்வண்ணமாய் நின்றவளவானே, அங்ஙனம் முனைத்த சிவத்தினியல்பிற்குமுன் மலத்தினியல்பு நிற்கமாட்டா தாய் வலிமடங்கி யொழிய உயிர் சிவமாயே நிற்குமென்பது தெளிவுறுத்தப்பட்டதாயிற்று. உயிர் தன்னால் நினைக்கப்பட்ட பொருளினியல்பைப்பெற்று அவ் வண்ணமாய் நிற்குமாற்றை இஞ்ஞான்றை மனநூலாரும்26 நாடோறும் நிகழும் உண்மை நிகழ்ச்சிகள் எண்ணிறந்தவற்றை எடுத்துக்காட்டி நன்கு விளக்குவர். இவ்வாறெல்லாம் முன்னர் மலங்களோ டொருங்கு சேர்ந்து அம்மலத்தினியல்பைப் பெற்று நின்றதூஉம், பின்னர்ச் சிவத்தோடொன்றுகூடி அச் சிவத்தினியல்பைப் பெற்றுச் சிவமாய் நிற்பதூ உம் உயிரேயல்லாமல், இயல்பாகவே மலங்களின் நீங்கிநின்று மலத்தாற் பற்றப்பட்ட உயிர்களை முத்தொழிற்கட் படுத்துப் புனிதமாக்கிவருஞ் சிவம் அன்றாகலான், முழுமுதற் சிவமே மலங்களாற் பற்றப்பட்டு உயிராயிற் றென்பாருரையும், உயிர் மலங்களிற் றீர்ந்தவழி அம் முழுமுதற் சிவமேயாமல்லது உயிரென்று ஒரு தனிமுதல் இல்லையென்பாருரையும் உண்மைக்கு மாறான பொய்ம்மை யுரைகளாமென் றொழிக. இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமாதலின், இவ்வுண்மையின் பரப்பெல்லாம் எமது சிவஞானபோத ஆராய்ச்சியிற் கண்டுகொள்க. மேலும், தம்மைப் பிணித்த பசுத்தன்மை பாசத் தன்மைகளை அறுத்து இறைவன் தனது திருவடிக் கண்ணே தம்மைப் பிணிப்பித்துக்கொண்ட வாற்றினையும், அவ்வாறு செய்த அதுவே தம்மைச் சிவமாக்கியாண்டமை யாதலையுந் தெளித்து அடிகளே, பத்திமையும் பரிசும்இலாப் பசுபாசம் அறுத்தருளிப் பித்தன்இவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே27 எனவும், சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட அத்தன்எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே28 எனவும் அருளிச்செய்தமை காண்க. அங்ஙனம் உயிர் சிவமாக்கப் பட்ட வழியும், அஃது இறைவனைப் போலப் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னுந் தொழில்களைச் செய்யமாட்டாதாய், இறைவனது திருவடிப் பேரின்பத்திற் றிளைத்தபடியாய் ஆண்டவனுக்கு அடிமை யாகவே நிற்கப்பெறு மென்னும் உண்மை. சிவம் ஆக்கி என்றதனோடு அமையாது எனை ஆண்ட என மேலும் இருசொற் றலைப்பெய்து, ஆண்டும் அவற்குத் தாம் அடிமைத் திறம் பேணிக்கிடக்கு மியல்பினை அடிகள் அருளிச் செய்தவாற்றால் நன்கு புலப்படும். இது சைவசித்தாந்தக் கொள்கையேயாதல், சிவஞானபோத முதனூலாசிரியராகிய மெய்கண்ட தேவநாயனார், ஒன்றலா, ஈறே முதல் அதனின் ஈறலா ஒன்றுபல வாறே தொழும்பாகும் அங்கு29 என்றும், அவைஅவன் அன்றில்லைப் பொன்ஒளிபோல் ஈசன் அவைஉடைமை ஆளாம்நாம் அங்கு30 என்றும் இருகால்ஓதி முடிந்த வீடுபேற்றின்கண்ணும் உயிர் சிவத்திற்கு அடிமையேயா மியல்பினை வற்புறுத்தியவாறு பற்றி உணர்ந்து கொள்க. வீடுபேறெய்திய உயிர் திருவருளின்ப நுகர்ச்சி யொன்றற்கே உரித்தாமல்லது. அஃது ஆண்டு இறைவற்குரிய ஐந்தொழிலுஞ் செய்யமாட்டாமை ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார்க்கு முதன்மாணாக்கரான அருணந்தி சிவனார். செம்பிரத குளிகையினாற் களிம்பற்றுப் பொன்னாய்ச் செம்பொனுடன் சேரும்மலஞ் சிதைந்தாற் சீவன் நம்பனுடன் கூடுமெனிற் பொன்போல் அல்லன் நற்குளிகை போலஅரன் நணுகும்மலம் போக்கி அம்பொன் அடிக் கீழவைப்பன் அருங்களங்கம் அறுக்கும் அக்குளிகை தானும் பொன் ஆகா தாகும் உம்பர் பிரான் உற்பத்தி யாதிகளுக் குரியன் உயிர்தானுஞ் சிவானுபவம் ஒன்றினுக்கும் உரித்தே31 என்று அருளிச்செய்தமையாற் றுணியப்படும் என்க. ஈண்டுக் காட்டியவாற்றால், சிவமாதல், சிவமாக்குதல், அணு அணுவாய்த் தேய்ந் தொன்றாதல், பேதமின்மை, அத்துவிதம் என்னுஞ் சொற்றொடர்களைக் கேட்டதுணை யானே அவற்றின் உண்மைப்பொருளை ஆராய்ந்து பாராமலும், அவை தம்மை வழங்கிய ஆக்கியோன் கருத்து இதுவென ஓராமலும், அவை தமக்கு மெய்ப்பொருளுரைத்த தொல்லாணை நல்லாசிரியர்களாகிய தெய்வத்திருமூலர், மெய்கண்டதேவர் என்னுஞ் சான்றோர் திருமொழிகளை ஒரு பொருட்படுத்தாமலும், மாயாவாதவழி யொன்றையே மெய்யெனத் தேறிய தமது மயக்கவறிவு கொண்டு இச் சொற்றொடர்களுக்கு மாயாவாதப் பொருளையேற்றி, அவ்வாற்றால் மாணிக்கவாசகப் பெருமானை மாயாவாதி ஆக்க முயன்ற தமிழ்வரலாறுடையார் செயல் அறிஞராற் பெரிதும் அருவருத்தொதுக்கற்பாலதாமென விடுக்க, என்று ஈண்டுக்காட்டிய பொருளே இன்றெனக் கருளி என்னுந் திருப்பாட்டுக்கு மெய்ப்பொருளாம்: இஃதிப்பொருட்டாதல் பற்றியன்றே சைவசித்தாந்த சந்தானாசிரியரான உமாபதி சிவனார் தமது சங்கற்ப நிராகரணத்தில் திரண்டாம் பயனெனுந் திருவருள் தெளியிற், சென்று சென் றுணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம்; என்றிறையியற்கை யியம்புதல் தகுமே என் றிச் செய்யுளையே எடுத்தோதி யருளிச்செய்தார். தாம் எழுதிய தமிழ் வரலாறு என்னும் புத்தகத்தில் அதன் ஆக்கியோர் எழுத்துப் பிழை சொற்பிழை சொற்றொடர்பிழை பொருட்பிழை முதலியன பொதுள எழுதியமாட்டில் அமையாது. தாம் திருவாசகத்திலிருந்து எடுத்துக் காட்டிய தொரு மேற்கோளினையுந் தந்ததென்றன்னைக் கொண்டதுன் றன்னை எனப் பிழைபட எழுதினார். இம் மேற்கோள் தந்ததுன்றன்னைக் கொண்ட தென்றென்னை32 என்று இருத்தல் வேண்டுமென்பதை அறியார் போலும்! அது நிற்க. அடிக்குறிப்புகள் 1. திருமந்திரம். 159 2. சிவஞானபோதம் 2, 2, 4 3. அதுவே 2, 1, 2 4. திருவாசகம் திருச்சதகம் 22 5. தொல்காப்பியம் மரபியல் 94 6. சிவஞானபோதம் 8, 2, 2 7. அதுவே 2, 1, 3 8. திருக்குறள் 3 9. திருமுருகாற்றுப்படை 62-64 10. திருமந்திரம் 1411 11. எசுர் 1, 8, 6 12. மாண்டூக்கிய உபநிஷத் 7 13. சிவஞானபோதம் 10ஆம் சூத்திரம் 14. திருவாசகம், திருத்தெள்ளேணம் 18 15. திருமந்திரம் 2911 16. அதுவே 2912 17. உண்மை விளக்கம் 51 18. திருமந்திரம் 2251 19. திருக்குறள் 452 20. ஆகாரபுவனம் சிதம்பரரகசியம் 18 21. திருமந்திரம் 1572 22. அதுவே 2281 23. அதுவே 2364 24. எங்கு நிறைகின்ற பொருள் 3 25. சிவஞானபோதம் 9, 2, 3 26. Psychologists such as Myers, W. James. T.J. Hudson, etc. 27. திருவாசகம் கண்டபத்து 7 28. அச்சோப்பதிகம் 1 29. சிவஞானபோதம் 1, 3-1 30. அதுவே 2, 4 31. சிவஞானசித்தியார் 11, 2-3 32. திருவாசகம் கோயிற்றிருப்பதிகம் 10. 12. சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை இனி, ஆகமங்களிற் சொல்லப்படும் ஆணவம் மாயை வினை யென்னும் மும்மலங்களும், இருவினையொப்பும் தேவராங்களிற் காணப்படாமையால், ஆகமநூல்கள் பரவுதற்கு முன் தேவாரங்கள் பாடப்பட்டனவாமென்றும், மும்மலம், இருவினையொப்பு என்னும் இவற்றைப் பற்றிய குறிப்புகள் திருவாசகத்தின்கட் காணப்படுதலின் ஆகமம் சிறிது பரவத் தொடங்கிய காலத்தேதான் திருவாசகம் பாடப்பட்டதாதல் வேண்டுமென்றும், ஆகமம் பரவியபின் அதிற் சொல்லப்பட்ட தீக்ஷையை ஆசிரியன்பாற் பெறுதல் அடியார்க்கு இன்றியமை யாததாயிற் றென்றும், அவ்வாறு தீக்ஷை பெற்றவர் திருவாதவூ ரடிகள் ஒருவரேயன்றி ஏனை நாயன்மார் அது பெற்றவரல்ல ரென்றும், அதனால் அடிகள் ஏனை மூவர்க்கும் பிற்பட்ட வராகலா மென்றும் தமிழ்வரலாறுடையார்தமது கொள்கையினைக் கூறினர்; இங்ஙனம் கூறுகின்றழித் தாம் உரைப்பவற்றிற் றமக்கே துணிவு பிறவாதவாறுபோல் நெகிழ்ந்துரையாடியும் போனார். ஆயினும், இவர் காட்டிய இவ்வேதுக்கள் பொருந்தாமை காட்டுதும்: சைவ சமயாசிரியராகிய சுந்தரமூர்த்தி நாயனார் தாமருளிச் செய்த திருத்தொண்டத்தொகையில் திருமூல நாயனாரைக் குறிப்பிட்டிருத்தல் கொண்டும், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருவாவடுதுறைக்கு எழுந்தருளிய காலத்து ஆண்டுத் திருக்கோயிலிற் புதைத்து வைக்கப்பட்டிருந்த திருமந்திர நூலினை வெளிப்படுத்தி அந் நூலின் அருமையும் அதனை ஆக்கிய திருமூலநாயனாரின் பெருமையும் அங்குள்ளார்க்கு எடுத்துரைத்து அந் நூலினை வழங்கவைத்தா ரெனத் தொன்று தொட்டு வரா நின்ற வரலாறு கொண்டும். திருமந்திரம் ஆறாம் நூற்றாண்டின் இடையில் இயற்றப்பட்ட தொன்றாதலை மேலே விளக்கிக்காட்டினாம். காட்டவே, தேவாரங்கள் பாடப்படுதற்கு முற்றொட்டே திருமந்திரம், உண்மை பெற்றாம். தேவாரப் பாட்டுக்களில் மும்மலங்கள், இருவினையொப்பு என்பவற்றைப் பற்றிய குறிப்புகள் வெளிப்படையாய்க் காணப்படாவிடினும், தேவாரத்திற்கு முந்திய திருமந்திரத்தில் அவை விளக்கமாகச் சொல்லப் பட்டிருக்கின்றன வல்லவோ? மும்மலம் வாட்டுகை மாட்டாதார் எனவும்.1 ஆணவம் மாயையுங் கன்மமும் ஆம்மலம் காணும் முளைக்குத் தவிடுமி ஆன்மாவும் தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும் பேணுவாய் மற்று பாசம் பிரித்தே2 எனவும் ஆசிரியர் திருமூலர் பலவிடத்துங் கிளந்தோதுதலின், திருமூலர்க்கு முன்னரே மும்மல இயல்புகளும் அவற்றின் பெயர்களும் வழங்கினமை நன்கு பெறப்படுதலின், தேவாரத்தில் அவை காணப்படாமை பற்றித் தேவாரத்திற்குப் பின் அவை வழங்கத் துவங்கின வென்றல் ஆராய்ச்சியுணர்வில்லார் கூற்றாம். இன்னும், திருமூலநாயனார், அநாதி பசுவியாத்தி யாகும் இவனை அநாதி வந்த மலம்ஐந்தால் ஆட்டி3 என்று மலம் ஐந்தாதலுங்கூறி, அவ் வைம்மலம் ஆவன : ஆணவம் ஆகும் அதீதமேல், மாயையும் பூணுந் துரியஞ் சுழுத்திபொய்க் காமியம், பேணுங் கனவும் மாமாயை, திரோதாயி காணு நனவின் மலக்கலப் பாகுமே4 என்பதனால் இவையேயா மென்பதூஉந் தெளியவைத்தார். இவரைப் போலவே அடிகளும் பலவிடங்களில். மூலமாகிய மும்மலம் அறுக்கும் (கீர்த்தித்திருவகவல், 111) எனவும், மும்முலங்கள் பாயுங், கழுக்கடை, (திருத்தசாங்கம், 4) எனவும், மயக்கமாயதோர் மும்மலப் பழவல்வினை. (திருக்கழுக்குன்றப் பதிகம்,7) எனவும், உள்ளமல மூன்றும் மாய (பண்டாய நான்மறை, 2) எனவும், மும்மை மலம் அறுவித்து (அச்சோப்பதிகம், 9) எனவும் மும்மலங்களை ஓதியதோடு, மலங்கள் ஐந்தாற் சுழல்வன் தயிரிற் பொருமத் துறவே (நீத்தல் விண்ணப்பம். 29) என மலங்கள் ஐந்தாதலும் ஒருவயின் அருளிச்செய்தார். எனவே, ஆணவம் மாயை வினை என்னும் மும்மலங்களில் இடைநின்ற மாயையை இரண்டாகக்கொண்டு ஒன்றைத் தூயமாயை, மற்றொன்றைத் தூவாமாயை என வழங்குதலும், உயிர்கள் இம்மைப் பிறவியிற் இன்பதுன்பங்களை நுகருங்கால், உம்மைப் பிறவியிற் செய்தனவும் அம்மைப் பிறவியிற் செயக்கடவனவுமாய வினைகளையும் வினைப் பயன்களையும் அவை தெரிந்து இடையறாத் துன்பத்தின் மூழ்காவாறு, ஆணவமலம் நீங்கும்பதம் வருந்துணையும் அதனோடு உடனாய்நின்று அவ்வுயிர்களின் அறிவுக்கு அவை தோன்றாமல் மறைத்து உதவிவரும் இறை வனருளை அங்ஙனம் மறைக்கு மியல்புபற்றி மலம் என ஒரோவழி வழங்குதலும் அடிகட்கு உடம்பாடாதல் பெற்றாம். பெறவே, மாயையைச் சுத்தமாயை, அசுத்தமாயை எனவும், ஆணவத்தோடுடனாய், நின்றுவினை வினைப் பயன்களைத் தோன்றாமல் மறைக்கும் அருளைத் திரோதானம் எனவும் கொண்டு, இவைதம்மை ஆணவம், கன்மம் என்னும் இரண்டொடுகூட்டி மலம்ஐந்து என்று கொள்ளும் சைவசித்தாந்தக் கோட்பாடு ஒன்றே திருவாதவூரடிகள் கோட்பாடாகுமல்லாமல், அவ்வாறு ஐந்து மலங்களின் உண்மை கொள்ளா ஏனைச் சமயங்களுள் வேறேதும் அடிகளது கோட்பாடு ஆகாமையும் நன்கு பெற்றாம். ஆகையால், அடிகளை மாயாவாதியாக்க முயலுந் தமிழ்வரலாறுடையார் கருத்து ஒருசிறிதும் நிரம்பாதென விடுக்க. இனித், தேவார காலத்திற்குமுன் ஆகமங்கள் பரவி வழங்கினவல்ல வென்ற கூற்றை ஆராய்வாம். தேவாரத்தில் ஆகமத்தைப் பற்றிய குறிப்புச் சிறுபான்மையுண்டென்று உடன் பட்டவர், அச் சிறுபான்மைபற்றி அதன் வழக்கமும் அஞ்ஞான்று சிறுபான்மைத்தாதல் வேண்டுமென்று கருது கின்றார். தேவாரத்தில் ஆகமக்குறிப்புக் காணப்படுதலால் தேவாரகலத்திற்கு முன்னரே ஆகமம் உண்டென்பது பெற்றாம். திருவிற்கோலத் திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம், வகுத்தவன் என்று அருளிச்செய்திருத்தலே அதற்குச் சான்றாம். இவ்வுண்மை பெறப்பட்டபின், தேவார காலத்திற்கு முன் ஆகமங்கள் பரவி வழங்கிய துண்டோ இல்லையோ என ஆராய்ந் துறுதிப்படுத்தல் வேண்டின், தேவாரத்தில் அதுபற்றிக் காணப்படுஞ் சிறுபான்மைக் குறிப்பு ஒன்றே கொண்டு அம் முடிபுக்கு வராமல், வேறு பழைய நூல்களிற் காணப்படுங் குறிப்புகளையுஞ் சான்றாகக் கொண்டே அம்முடிபினைக் காட்டல் வேண்டும். தேவாரத்திற்கு முற்பட்டுக் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடையில் இயற்றப்பட்டதென மேலே காட்டப்பட்ட திருமந்திர நூலின் இடையே ஐந்தாந்தந்திரத்தில், ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு மோகமில் நாலேழும் முப்பேத முற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன் றாக முடிந்த அருஞ்சுத்த சைவமே5 என்று போந்த திருப்பாட்டால், முதலில், ஒன்பது வகையாய்த் தோன்றிய ஆகமங்களிலிருந்து பின்னர் இருபத்தெட்டாக மங்கள் பிறந்து வழங்கினவென்பது பெறப்படுகின்றது. திருமூலநாயனார் காலத்தில் இருபத்தெட்டாகமங்கள் வழங்கினவாயின் அவை தம்மைச் சிறுபான்மை வழக்கம் எனக் கூறுதல் யாங்ஙனம் பொருந்தும்? ஆகமம் எனப்பெயரிய நூல் ஒன்றே இருந்ததாயின் அதனைச் சிறுபான்மை வழங்கியதெனக் கூறல் ஒருவாறு பொருந்தினும் பொருந்தும். முதலில் ஒன்பது வகையாயும் பின்னர் இருபத்தெட்டாயும் விரிந்து வழங்கிய சிவாகமங்களைச் சிறுபான்மை வழக்கமுடையன வென்றல் பொருந்துமோ கூறுமின்! திருமந்திர நூலைச் செவ்வனே கற்றறியாதாரே ஆகம வழக்கத்தை நன்குணராமற் றமக்குத் தோன்றிய வாறெல்லாம் பிழைபடக்கூறு நீரராவர். எனவே அடிகள், மன்னு மாமலை மகேந்திரம் அதனிற் சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும் (கீர்த்தித்திருவகவல், 9, 10) என்றும், மற்றவைதம்மை மகேந்திரத் திருந்து உற்றஐம் முகங்க ளாற்பமணித் தருளியும். (கீர்த்தித்திருவகவல், 19, 20) என்றும் பலவிடங்களில் அருளிச்செய்திருத்தல் கொண்டு ஆகம வழக்கம் மிகுந்திருந்த காலத்தில் அவர் இருந்தாரென்பது பெறப்படுமேயன்றி, அதனால் அவர் தேவார காலத்திற்குப் பிற்பட்டிருந்தாரென்பது எட்டுணையும் பெறப்படாதென்க. அற்றேல், திருவாசகத்தில் ஆகமங்கள் பலவிடத்துங் குறிப்பிடப்படுதல் லல்லாமல் தேவாரத்தில் அருகி யாண்டோ சில விடங்களில் அவை குறிப்பிடப்படுதல் என்னையெனின்; மாணிக்கவாசகப் பெருமானுக்கு முற்காலத்தே கடவுளும் உயிரும் இல்லாத வெறும்பாழெனக் கூறும் ஈனயான பௌத்தம் சான்றோர்க்கும் உலகத்தார்க்கும் இசையாமையின் ஒடுங்கிப் போக, அறிஞர் பலர்க்கும ஒப்ப முடியுமாறு சைவசமயக் கோட்பாடுகளைத் தழுவி வகுத்த மகாயான பௌத்தமே யாண்டும் பரவி வழங்கலாயிற்று; அக் காலத்தே தான் பௌத்தாகமங்களைப் போன்ற சைவாமகங்கள் எழுதப்பட்டுப் பௌத்த சமயக் கோட்பாடுகளை மறுத்துச் சைவசமய உண்மைகளை அளவை நூன்முறையால் தொடர்பு படுத்து விளக்குவவாயின; அக்காலத்திற்குமுற் சைவசமய உண்மைகளைத் தடைவிடைகளான் விளக்கி அளவை நூன்முறை வழுவாது விரித்து ஆராய்ந்து காட்டும் நூல்கள் தமிழிலாயினும் வடமொழியிலாயினும் சிறிதும் இருந்தில. ஏன்னறால், உலகத்தாரும் அறிவடையாரும் கைக்கொண் டொழுகும் உண்மைகளை, அவற்றிற்கு மாறாய்ச் சிலர் தோன்றி அவற்றை மறுத்தாலன்றி, அவ்வுண்மைகளை வழக்குநெறி வழுவாது வினாவிடைகளால் விரித்து விளக்கவேண்டுங் கடன் வேண்டப்படாமையால் என்க. கடவுளுண்டு, உயிருண்டு, உயிரைப்பற்றிய மலம் உண்டு. உயிரெடுக்கும் பிறவிகள் உண்டு. அப் பிறவிகள் உலவும் உலகம் உண்டு. மலத்திற் றீர்ந்த உயிர் கடவுளைச் சார்ந்து இன்பநுகர்த லுண்டு என்னும் உண்மைகள் எல்லா மக்களிடத்தும் இயற்கையே காணப்படுங் கோட்பாடுகளாகும்; இவைகளை மறுப்பார் இல்லாத காலங்களில் தோன்றிய நூல்களில் இவ் வுண்மைகள் மட்டுங் காணக்கிடக்கு மேயல்லாமல் இவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் காணப்படா. இம் முறைமைக்கு இசையவே, பௌத்த காலத்திற்கு முற்பட்ட வடநூல் தமிழ்நூல்களில் இக் கோட்பாடுகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் காணப்படுகின்றில. பௌத்த சமயந் தோன்றிக். கடவுள் உயிர் மலம் முதலான மெய்ப்பொருள்களை இல்லாத வெறும் பாழ் என மறுக்கப் புகுந்தபின்னரே, அது கூறும் மறுப்புரைகளை ஆராய்ந்து அவற்றின் உண்மையை நாட்டும் நூல்கள் வடமொழி தென்மொழிகளில் உண்டாயின. பௌத்த காலத்திற்கு முற்றோன்றிய வடநூல்கள் இருக்கு, எகர், சாமம், முதலான மந்திரப்பகுதிகளும் அவற்றின்கட் சொல்லிய வேள்விமுறைகளை விரிக்கும் சதபதம் தைத்திரீயம் முதலான பிராமணங்களும், ஈச, கேந முதலான உபநிடதங்களும் பிற சிலவுமாம்; ஏனை நூல்களெல்லாம் பெரும்பாலும் பௌத்தகாலந் தொட்டே விரிந்தனவாகும். இனி, வடநாட்டிற் பிறந்த பௌத்த சமண மதங்கள் அந் நாட்டிற் பெரிதும் பரவினாற்போல், அவை தோன்றியபின் நெடுங்காலம் வரையில் தென்னாட்டிற் பரவாமையானும், அவை அங்ஙனம் தென்னாட்டிற் பரவத் துவங்கியதும் கிறித்து பிறந்த முதல் நூற்றாண்டு துவங்கி ஏழாம் நூற்றாண்டுவரை யிலாகலானும் அப் பௌத்த சமண மறுப்புரைகளை எதிர்த்துக் கடவுளுண்மையை நாட்டப்புகுந்த ஆகமம், திருவாசகம், திருமந்திரம், ஞானமிர்தம், தேவாரம், சிவஞானபோதம் முதலான தமிழ் நூல்களெல்லாம் கி.பி. முதல் நூற்றாண்டிற்குப் பின் அடுத்துடுத்துத் தோன்றுவ வாயினவென்க. கிறித்து பிறப்பதற்கு முற்றோன்றிய தமிழ் நூல்களெல்லாம் இயல் இசை நாடகங்களைப் பற்றிய தொல்காப்பியம், முறுவல், சயந்தம், களரியாவிரை, பரிபாடல் முதலியனவும் அறம் பொருள் இன்பங்களை விளக்கும் நாலடியார் திருக்குறள், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை முதலியனவுமே யாம். கடவுள் உயிர் உலகம் என்னும் முப்பொருளைப் பற்றிய உண்மைகள் ஆராய்ச்சி வகையால் மிகவிரிக்கப்படாமல் உண்மைகளாகவே வைத்துப் பண்டைத் தமிழ் நூல்களிற் சொல்லப்பட்டமையால், ஆசிரியர் திருமூலர் அவைகளைக் குறித்துச் சொல்லுங்கால், அங்கிமி காமைவைத் தான்உடல் வைத்தான் எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும் தங்கிமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம் பொங்கிமி காமைவைத் தான்பொரு டானுமே6 (97) என்று அருளிச்செய்தார். தமிழ் நூல்களும் அவற்றின் பொருள் களும், சிலவாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினாரான மக்கள் உணர்ந்து மெய்ப்பயன் பெறுதற்குத் தக்க அளவு வைத்து அறிவின் எல்லை கடவாமல் அழகுற அமைக்கப்பட்டன என்பது இத் திருப்பாட்டினால் நன்கு விளங்குகின்றது. நெருப்பானது உலகிற் பயன்படத்தக்கவளவு ஏனை நான்கு பொருளோடு அடக்கிவைத்து அமைக்கப்பட்டிருத்தல் போலவும், காய்ச்சப் படும் பால் பொங்கி வழிந்து போமாயின் எவர்க்கும் பயன்படாது போமாதலால் அஃது அவ்வாறு ஆகாமைப்பொருட்டுக் கைவல் ஆயர் அதனைக் குழிசியின் உள்ளடாக்கிக் காய்ச்சிப் பயன்படுத்துதல் போலவும், தமிழ் நூல்களும் அவற்றின் பொருள்களும் அமைக்கப்பட்டிருந்தன வென்று திருமூல நாயனார் உவமை யெடுத்துக் காட்டி விளக்கியவதனால், அம் முப்பொருளுண்மைகளை விரித்த வடமொழி நூல்கள் பயன்படத்தக்க வகையாய் அமைக்கப் படாமல், தன்னெல்லை கடந்த தீயும் பொங்கி வழிந்து போன பாலும்போல் அளவின்றி விரிந்து தம்மையுணர்வார்க்குப் பெருந்தடுமாற்றத்தை விளைத்துப் பயன்படாவாயின வென்னும் உண்மையையும் அறியவைத்தார். இனி, இங்ஙனம் பயன்படும் வகையாய் ஆக்கப்பட்ட தமிழ் ஆகமநூல்கள், பௌத்தமதம் தமிழ்நாட்டிற் பரவிய கி.பி. முதல் நூற்றாண்டு துவங்கி இயற்றப்பட்டமையாலன்றே அவற்றின் மொழிபெயர்ப்பாய் இஞ்ஞான்று உலாவும் பௌட்கரம் முதலிய ஆகமநூல்களில் பௌத்த மத மாயாவாதக் கொள்கைகள் எடுத்து மறுக்கப்படுகின்றன.7 இங்ஙனம் சிவாகமங்கள் பௌத்தமத காலத்தில் தோன்றி மிக்கு வழங்கினமையால், அக்காலத்திருந்த திருவாதவூரடிகள் அவைதம்மைத் தாம் அருளிய திருவாசகத்தில் அடுத்தடுத்துக் குறிப்பிடுவாராயினர். அப் பௌத்த காலத்திற்குப் பின் சமண்மதம் தலையெடுத்து அக்காலத்திருந்த தமிழ்ச் சிவாகமங்களை நெருப்பிட்டுக் கொளுத்தி அழித்துவிட்ட மையின், சமணகாலத்தில் அவை வழங்காதொழிந்தன, திருநாவுக்கரசு நாயனாரைக் கடலில் வீழ்த்தியும், நீற்றறை யிலிடுவித்தும் பலகொடுந்தொழில்களாற் கொல்ல முயன்ற சமணர்கள் சிவாகம நூல்களைவாளாவிடுவார்களோ? திருஞானசம்பதப் பெருமானைப் பல்லாயிரம் அடியார் களோடு வைத்துத் தீயிட்டுக் கொளுத்திய அச் சமணர்கள் சிவாகம நூல்களைக் கொளுத்தாமல் விட்டிருப்பார்களோ? சமணர் களைப்போல் பௌத்தர்கள் சைவசமயத்திற்கு அத்துணைக் கொடும் பகைவர்கள் அல்லர்; அதனால் அவர்களது காலத்திற் சைவசமய நூல்களுக்கு அத்துணை இடர் நேர்ந்திலது. பௌத்தர்களும் சைவர்களும் ஒருமித்து வாழ்ந்தமை மணிமேகலை, சிலப்பதிகாரம் என்னும் பழைய செந்தமிழ்க் காப்பியங்களால் நன்கு புலனாகின்றது. சமணர்களோ அவர்போல் அல்லர்; சைவசமயத்தை வேரோடு அழிக்கக் கங்கணம் கட்டிநின்றவர்; இவர்களது கொடுமைக்கு அஞ்சியே திருமந்திரம் என்னுந் தமிழ்ச் சிவாகமநூல் உலகில் வழங்காமல் திருவாவடுதுறைக் கோயிற் பலிபீடத்தின்கீழ்ப் புதைத்து வைக்கப்பட்டிருந்தது. தேவார திருவாசகங்கள் தில்லைச் சிற்றம்பலத்தறையிலே பூட்டி வைக்கப்பட்டன; அங்ஙனம் அவர்க்கஞ்சிப் பூட்டிவைக்கப்பட்ட அவைகளிற் பெரும் பகுதியைக் கறையான் தின்று அழித்தது! இப்போது அவைகளில் எஞ்சி நிற்பது மிகச் சிறுபகுதியேயாகும். ஞானமிர்தம் என்னுந் தமிழாகமம் அஞ்ஞான்றிருந்த சைவமடங்களிற் பெரிதும் பாதுகாத்து வைக்கப்பட்டமை யாலன்றோ அஃது இஞ்ஞான்று யாம் காணக்கிடைத்தது. இங்ஙனமாகச், சைவசமய உண்மைகளை விரித்துரைக்கும் சிவாகமநூல்கள் சமணகாலத்திற் பெரும்பாலும் அழிந்து பட்டுப் போனமையின், அவற்றின் பயிற்சியும் அருகிப்போக, அக்காலத்திருந்த சைவசமயாசிரியர்களான திருநாவுக்கரையர். திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்திகள் தாம் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகங்களில் ஆகமங்களைப் பற்றி அடுத் தடுத்துக் கூறிற்றிலர். உண்மை இவ்வாறிருக்க, இதனை யுணராத தமிழ்வரலாறுடையார் தேவாரத்தில் அவை அடுத்தடுத்துக் குறிப்பிடாமை ஒன்றேகொண்டு, அவை தேவாரகாலத்திற்குப் பின்னர்த்தான் மிக்கெழுந்து பரவின வென்று பிழைபட வரைந்தார்; திருமந்திரம் ஞானாமிர்தம் என்னுந் தமிழ் ஆகமநூல்களைக் கற்றறிந்தனராயின் இவ்வாறெல்லாம் வரைந்து இழுக்குறார். அது நிற்க. அஃதொக்கும், ஆகமங்கள் தமிழ்மொழியில் இயற்றப் பட்டிருந்தனவென்றால் என்னை? காமிகம் முதலான அவையெல்லாம் வடமொழியிலன்றோ எழுதப்பட்டிருத் தலைக் காண்கின்றேமெனின்; அவ்வியல்பினையும் விளக்கிக் காட்டுதும்: இஞ்ஞான்றுள்ள காமிகம் முதலிய ஆகமங்கள் வடமொழியில் எழுதப்பட்டிருத்தல் கொண்டு அவை பண்டைக் காலத்தன வென்றால் பொருந்தாது. இருக்கு, எகர் முதலிய வேதங்கள், பிராமணங்கள், பழைய உபநிடதங்கள் முதலியன எழுதப்பட்டிருக்கும் வடமொழியும், புராணங்கள் ஆகமங்கள் எழுதப்பட்டிருக்கும் வடமொழியும் வேறுவெ றாவனவாகும்; முன்னையது ஆரியமொழி யென்றும், பின்னையது சமகிருத மொழி யென்றுங் கூறப்படும்: இவ் விரண்டின் அமைதிகளும் இலக்கணங்களும் வெவ்வேறாகும்; இவற்றுள் முன்னையதாகிய ஆரியமொழி மிகப்பழைய காலத்தது. பின்னையதாகிய சமகிருத மொழி அதற்குப் பன்னெடுங்காலம் பிற்பட்டது. பின்னையதாகிய சமகிருத மொழியிலும் பின்னும் பிற்பட்ட உரைநடைகள் பலவுண்டு; காமிகம் முதலிய ஆகமங்கள் எழுதப்பட்டிருக்கும் சமகிருத மொழி பிற்காலத்துச் சொற்களும் குறியீடுகளும் இலக்கண முடிபுகளுங்கொண்ட உரைநடையால் அமைந்திருத்தலானும், இவ்வுரைநடை பழைய ஆரியமொழி நூல்களுள் யாண்டுங் காணப்படாமையானும் இந்நூல்கள் மிகவும் பிற்பட்ட காலத்தே இயற்றப்பட்டன வென்பது திண்ணமாம். அல்லதூஉஞ், சிறிதேறக்குறைய இருநூறாண்டுகட்கு முன்னிருந்த சிவாக்கிர யோகிகளும், அவர்க்குப் பின்வந்த சிவஞான யோகிகளும் தம்முரைகளுட் குறித்து வைத்ததை நம்பி, ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார் அருளிச் செய்த சிவஞானபோதம்என்னுஞ் சைவசித்தாந்தத் தமிழ் முதல் நூலை, இரௌரவாகமத்தின் இறுதியின் உள்ளதாகத் தமிழ்ப் புலவர் சிலராற் பிழைபட எண்ணிக்கொள்ளப்பட்ட வட மொழிச் சிவஞானபோதத்தின் மொழி பெயர்ப்பென்று கூறுவாருஞ் சிலர் உளர். மெய்கண்ட தேவர் தாம் அருளிச் செய்த சிவஞானபோதத்தின் மொழி பெயர்ப்பென்று கூறுவாருஞ் சிலர் உளர். மெய்கண்டதேவர் தாம் அருளிச் செய்த சிவஞானபோதத்தை வடமொழிச் சிவஞான போதத்தின் மொழிபெயர்ப்பென்று யாண்டும் கூறிற்றிலர்; மெய்கண்ட தேவர்க்கு முதன் மாணாக்கரும், ஆகம நூலுணர்ச்சியன் மிக்கவரும், சிவஞானபோதத்தின் வழி நூலாகிய சிவஞான சித்தி என்னும் அரும் பெருநூலை ஆக்கியவரும் ஆகிய அருணந்தி சிவனாரும் தம் ஆசிரியர் அருளிச்செய்த அச் சிவஞானபோதநூல் வடமொழியி னின்றும் மொழி பெயர்த்துச் செய்யப்பட்டதென யாண்டும் ஓதிற்றிலர். அவர்க்குப்பின் சார்பு நூலாகிய சிவப்பிரகாசமும், ஏனை ஏழு சைவசித்தாந்த நூல்களும அருளிச்செய்த உமாபதிசிவனாராதல் அதனை மொழிபெயர்ப்பு நூலென்று கூறினரோவெனின், அவரும் அங்ஙனம் எங்குங் கூறிற்றிலர். மெய்கண்டதேவர் சிவஞானபோதம் அருளிச்செய்தது இற்றைக்கு அறுநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னராகும். அவர் காலத்திலாதல், அவர்க்கு முற்பட்ட காலத்திலாதல் வடமொழியில் சிவஞானபோதம் என்பதொரு நூல் இருந்ததென்பதற்கு ஏதொரு சான்றுங்காண்கிலேம். மெய்கண்டதேவர் காலத்திற்கு நானூறாண்டு பிற்பட்டிருந்த சிவாக்கிரயோகிகள் முதலாகத்தான் வடமொழிச் சிவஞான போதத்தின் பெயர் கூறுவாரைக் காண்கின்றேம். எனவே, சிவாக்கிரயோகிகள் காலத்தோ அல்லது அதற்குச் சிறிது முந்தியோதான் வடமொழிச் சிவஞானபோதம். மெய்கண்ட தேவர் அருளிய தமிழ்ச் சிவஞான போதத்தினின்றும் மொழிபெயர்த்து வட மொழியிற் செய்யப்பட்டதா மென்பது நன்கு பெறப்படும். வடமொழிச் சிவஞானபோதத்தின் பன்னிரண்டாஞ் சூத்திரத்து இறுதியில், ஏவம் வித்யாச் சிவஜ்ஞாநபோதே சைவார்த்த நிர்ணயம் எனப் போந்த குறிப்பானது இங்ஙனமாகச் சிவஞானபோதம் என்னும் நூலிற் சைவப்பொருள் உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றது என்று பொருள் தந்து நிற்றல் கொண்டு, வடமொழியில் அதனை மொழிபெயர்த்துச் செய்தவர் உண்மையை மறையாமல் தாம் மொழிபெயர்த்து உரைத்த சைவசித்தாந்தப் பொருள் முன்னரே சிவஞானபோதத்திற் சொல்லப்பட்டிருக்கின்றதெனத் தெளிவுறக் கூறினமையே யாங் கூறும் உண்மைக்குச் சான்றாம். தமிழைப் பார்த்து வடமொழியில் மொழிபெயர்த்தவரே உண்மையை ஒளியாமற் சொல்லியிருக்க, உண்மை யாராய்ச்சிக்குக் கட்டுப்படாமல், யாம் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என அழிவழக்குப் பேசுவாரை யொப்பப் பார்ப்பனர் சிலரும் அவர் வழிப்பட்ட தமிழ்ப் புலவர் சிலரும் தாங்கூறுதற்குப் பழைய சான்றுகள் காட்டாது போதலோடு அமையாது. ஏவம் வித்யாச் சிவஜ்ஞான போதே என மேற்காட்டிய குறிப்புக்கு இங்ஙனமாக இந்தச் சிவஞான போதத்தில் என்று அக் குறிப்பில் இல்லாத இந்த எனும் ஒருசொல்லை வருவித்து, ஈண்டுச் சிவஞானபோதம் என்றது பன்னிரண்டு சூத்திரங்களிற் கூறிய இந்த வடமொழிச் சிவஞான போதத்தையே எனப் பொருந்தாப் பொருளும் உரைத்தார். வடமொழியில் அதனை ஆக்கினோர் தாம் ஆக்கிய அதனையே இந்தச் சிவஞானபோதம் என்று கூறல் வேண்டினராயின் இந்த என்னும் பொருளைத் தருவதாகிய ஏதமிந் என்னும் வடசொல்லை அதனொடு கூட்டி, ஏதமிந் சிவஜ்ஞான போதேஎன்று சொல்லியிருப்பர்; மற்று, அவர் அச்சொல்லைக் கூட்டாது வாளாது சிவஞானபோதம் என்னும் நூலில் என்று பொருள்படும் சிவஞானபோதே என்னுஞ் சொல்லைமட்டுங் கூறிச்சென்றாராகலின், அங்ஙனம் ஆக்கியோன் கருத்துக்கு மாறாக இந்தச் சிவஞானபோதம் என்று பொருள் உரைப்பாரது போலியுரைப் பொய்ம்மையைச் சான்றோர் கண்டு நகுவராகலின் அவரது கருத்து நிரம்பு மாறில்லையென்க. எனவே, வடமொழிச் சிவஞான போதத்தின் இறுதிச் சூத்திரத்திற் போந்த இக்குறிப்பு ஒன்றுமே அஃது ஆசிரியர் மெய் கண்டதேவர் அருளிச் செய்த தமிழ்ச் சிவஞான போதத் தினின்று பிற்காலத்தவரால் மொழிபெயர்த்து செய்யப்பட்ட தென்பதனை நாட்டுதற்குப் போதிய சான்றாம். அதுவேயுமன்றி, மெய்கண்ட தேவர்க்குப் பன்னெடுங் காலம் பின்ருந்த கடவுண்மாமுனிவர் நாம் இயற்றிய திருவாதவூரடிகள் புராணத்திற் சிவபிரான் மாணிக்கவாசகரை அடிமை கொள்ளும் பொருட்டுத் திருப்பெருந்துறையிற் குருந்தமரம் ஒன்றன் நீழலிற் குருவடிவு தாங்கி அமர்ந்திருந்த காலையில் தமது கையொன்றிற் சிவஞானபோதம் என்னும் நூலை ஏந்தியிருந்தாரென்று கூறினாற் போல, மெய்கண்ட தேவர்க்கு முன்னிருந்த பெரும்பற்றப் புலியூர் நம்பியார் தாம் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் அங்ஙனமே திருவாதவூரடிகட்குச் சிவபெருமான் குருவடிவுகொண்டு மெய்ப்பொருள் அறிவுறுத்த எழுந்தருளியிருந்தமை கூறுகின்றுழி அவர் கையிற் சிவஞானபோதம் இருந்ததென்று உரையாமையால், அப்பெரும்பற்றப் புலியூர் நம்பி காலத்திற் சிவஞானபோதம் என்பதொரு நூல் இருந்ததில்லை யென்பதூஉம், ஆசிரியர் மெய்கண்ட தேவர் அருளிச் செய்த பின்னர்த்தான் அந்நூல் ஒன்று முதலிற் றமிழிலும், அதன்பின் அதன் மொழிபெயர்ப்பாய் ஒன்று வடமொழியிலும், உளவாயின வென்பதூஉம் இனிது விளங்குகின்றன வல்லவோ? தமிழ்ச் சிவஞானபோத நூலில் வடசொற்கள் சில காணப் படுதல்பற்றி அதனை வடநூல் மொழிபெயர்ப்பு என்று கூறத் துணிந்தாரும் உளர். தூய பண்டைத் தமிழ் வழங்கிய காலத்திற் றோன்றிய தனித்தமிழ் நூல்களாகிய சிலப்பதிகாரம், மணிமேகலை என்பவற்றிலும் அங்ஙனமே வடசொற்கள் சில காணப்படுதல் பற்றியும், திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம், ஞானாமிர்தம், தேவாரம் என்பவற்றிலும் அங்ஙனமே சில வடசொற்கள் காணப்படுதல் பற்றியும் அவையெல்லாம் வடநூல் மொழிபெயர்ப் பென்று கூறுதல் கூடுமோ? உண்மையாராய்ச்சி இதுதான் என் றுணரமாட்டா தார் தாம்கொண்ட கொள்கையை எங்ஙனமாயினும் நிலை நிறுத்தக் கருதி எதுதான் சொல்லத் துணியார்! தமிழ்ச் சிவஞானபோதத்திற்கு எத்தனையோ நூற்றாண்டுகள் முற்பட்டதாயிருந்தும், என் பேரனுக்கு என் முப்பாட்டன் மகன் என்பார் கூற்றோடொப்ப, ஒரு பார்ப்பனர் இரௌரவாகமத்தின் ஒரு சிறிய ஏட்டை மொழிபெயர்த்த மெய்கண்ட தேவர் என்று மெய்கண்ட தேவரை ஆங்கில மொழியில் இகழ்ந்தெழுதியது அவ்வாறெழுதிய தமக்கே இகழ்ச்சியாய் முடிந்ததை அறிந்திலர். ஆங்கிலம் உணர்ந்தாரிற் பெரும்பாலார் தமிழ்நூல் உண்மைகளை ஓர் அணுத்துணையும் உணராதவராகலின் அவர் இடையே எவரும் ஏதும் சொல்லலாம். அது நிற்க. ஈண்டுக் கூறியவாற்றாற் சிவஞான போதம் என்னும் ஒப்புயர்வற்ற ஆகமநூலும் முதலில் தமிழிற் செய்யப்பட்டதே யல்லாமல் வடமொழியிற் செய்யப்பட்டதல் லாமை நன்கு விளங்கும். மேலும், சிவஞானபோதத்தின் கருத்துப்பொருள் அறிவிக்கும் சூர்ணிகைக் கொத்ததை திருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோயிலில் இருக்கும் பொல்லாப் பிள்ளையார் அருளிச்செய்து, அதனை மெய்கண்டதேவர்க்கு வழங்கினார் என்று ஆராய்ச்சியில்லாச் சைவ நூற்புலவர்கள் கூறி வருகின்றனர்; ஆனால், இதனை ஆராய்ந்து பார்த்த ஒரு புலவரோ அச் சூர்ணிகைக் கொத்துச் சுவாமிநாத தேசிகர் என்பவரால் இயற்றப்பட்டதென அஃதெழுதிய ஏட்டுச் சுவடிகளின் ஈற்றில் குறிக்கப்பட்டிருத்தலை எடுத்துக் காட்டினார்.8 இங்ஙனமே உண்மையல்லாப் பொய்க் கதைகளை ஆராய்ந்துபாராமல் உண்மையென நம்பி அவற்றை விடாப் பிடியாய்த் தழுவி நடப்பாரே இத் தமிழ் நாடெங்குங் காணப்படு கின்றனர். இத்தகையோர், பிற்காலத்துக் கோயிற் குருக்கண் மாரால் வடமொழியில் மொழிபெயர்த்து வைக்கப்பட் டிருக்கும் காமிகம் முதலான ஆகமநூல்களைச் சிவபெருமான் அருளிச்செய்தன வென்று புகலுதல் ஒருவியப்பன்று. அல்லதூஉம். இஞ்ஞான்று வழங்கும் வடமொழி ஆகமங்களிற் பெரியதுஞ் சிறந்ததுமான காமிகாகமத்தின் நான்காம் படலம். 437,438,439 ஆம் சுலோகங்களிற் சிவபெருமானுக்கு வழிபாடு ஆற்றுங்கால் தமிழ்வேதங்கள் ஓதுதல்வேண்டும் என்பது குறிக்கப்பட்டிருத்தலின், தமிழ் வேதங்களாகிய தேவார திருவாசகம் அருளிச் செய்த திருஞானசமபந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வர்க்கும் பிற்பட்ட காலத்தேதான் அக் காமிகாகமம் இயற்றப்பட்டமை தெள்ளிதிற் புலனாம். இன்னும், சிவபெருமானுக்குத் திருவிழாச் செய்யப்படுங் கால் ஏழாம் நாளிலே, திருஞானசம்பந்தர்க்குத் தோற்றுச் சமணர்கள் கழுவில் ஏறின செய்தி கொண்டாடப்படுதல் வேண்டுமென்று உத்தரகாரணாகமங் கூறுகின்றது.9 அதனால் அவ்வாகமம் திருஞானசம்பந்தர் காலத்திற்கு மிகவும் பிற்பட்டு எழுந்ததாதல் நன்கு துணியப்படும். இன்னும், இவ் வடமொழி ஆகமங்களில் தேவாரப்பதிகங்கள் ஓதும் தமிழ் இசைப்பெயர் களுங் காணப்படுகின்றன. இவ்வாற்றாற் காமிகம், காரணம் முதலான வடமொழி யாகமங்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின் தமிழ்நாட்டின்கண் இருந்த கோயிற் குருக்கண் மாரால் எழுதப்பட்டவைகளாதல் இனிது பெறப்படும். இனித், திருமூலராற் குறிப்பிடப்பட்ட ஆகமங்களோ கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே இயற்றப்பட்டனவாதல் வேண்டும்; ஆகையால், அவர் மொழிந்த ஆகம நூல்களும், இப்போது வடமொழியிற் காணப்படும் ஆகம நூல்களும் ஒன்றே யாகாமை எவர்க்கும் வெள்ளிடை மலை போல் விளங்கும். திருமூலராற் குறிக்கப்பட்ட ஆகம நூல்கள் வேதாந்த சித்தாந்த உண்மையை ஒன்றாக முடித்துக்காட்டுந் தூய சைவசமய ஞானம் ஒன்றையே விளக்கு மென்பது. ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு மோகமில் நாலேழும் முப்பேதம் உற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன் றாக முடிந்த அருஞ்சுத்த சைவமே (திருமந்திரம். 74) என்று அவர் அருளிச்செய்யுமாற்றால் நன்கு விளங்கும். மாணிக்கவாசகப் பெருமானும் ஆகமநூ லுணர்ச்சி யொன்றால் மட்டும் சிவபெருமான்றன் உண்மைத் தன்மையை எளிதில் அறியலாகுமென்பது புலப்பட, ஆகம மாகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க (சிவபுராணம் 4) என்று கூறியருளினமை காண்க. மற்றுப் பிற்காலத்து வடமொழியில் எழுதப்பட்டு வழங்குங் காமிகம், காரணம், முதலான ஆகம நூல்களோ சிவபிரான் திருக்கோயில்கள் அமைக்கும் முறைகளையும், அவற்கு வழிபாடு ஆற்றும் வகைகளையும், திருவிழாச்செய்யுந் திறங்களையும் இன்னும் இவை போல்வன பிறவற்றையும் விரித்துரைப்பக் காண்டு மன்றி, அவை வேதாந்த சித்தாந்த மெய்ப்பொருளாராய்ச்சிகளை எடுத்துரைக்கக் காண்கிலம்; இவை தமிழிலிருந்த பழைய சிற்ப நூல்களின் (கற்றச்சு நூல்களின்) மொழிபெயர்ப்பே யல்லாமற் பிறஅல்ல. வேதாந்த சித்தாந்த மெய்ப்பொருள் விரிக்கும் பௌட்கரம் முதலான உயர்ந்த அறிவுப் பெருநூல்களை ஆகமம் என்று வழங்காமல், அவைதம்மை உபாகமம் என்று வழங்குதல் என்னை? என்று உற்றுநோக்குங்காற், சிற்ப நூல்களாகிய வடமொழிக் காமிகம். காரணம் முதலியன தோன்றியபின், பௌட்கரம் முதலியவை பழைய தமிழாகம நூல்களினின்று மொழிபெயர்த்துச் செய்யப்பட்டமை தெற்றென விளங்காநிற்கும். திருமூலர் கூறும் பழைய ஆகம நூல்கள் தூய மெய்ப்பொருளாராய்ச்சி நூல்களாதலும், இஞ்ஞான்றுலவுங் காமிகம், காரணம், முதலானவை சிற்பநூல்களாதலுந் தேர்ந்துணர வல்லார்க்குத் திருமூலர் கூறிய பழைய ஆகமங்களும், இஞ்ஞான்றுலவும் புதிய ஆகமங்களும் வெவ்வேறியல்பினவாமென்பது நன்கு புலனாம். அதுவேயுமன்றி, வடமொழியிலுள்ள நால் வேதங்கள், பதினெண் புராணங்கள், தரும நூல்கள்10 முதலியவற்றை யெடுத்துக்கூறிய திவாகரநூல் அங்ஙனமே ஆகமங்களை எடுத்துக் கூறாமை. அந்நூல் தோன்றிய காலத்தில் ஆகமங்கள் வடமொழியில் எழுதப்படவில்லை யென்பதைத் தெளிவுறக் காட்டும் திருமூலர் இருந்த ஆறாம்நூற்றாண்டிற்கு மிகப் பின்னே பத்தாம் நூற்றாண்டில் திவாகர நிகண்டு இயற்றப்பட்ட தாகல் வேண்டும். இக்காலவளவு பிறகு மாற்றிக் கீழ்க்கொணரப் பட்டது. திவாகரமுனிவர் தாம் ஆக்கிய அத் திவாகரநிகண்டின் துவக்கத்தில் முதன் முதற் சிவபிரான் திருப்பெயர்களையும் அதன்பின் திருமால் முதலான தெய்வத்தின் பெயர்களையும் அமைத்துரைக்கக் காண்டலின், அவர் சைவ சமயத்தவராதல் துணியப்படும். அத்துணைச் சிறந்த சைவராகிய அவர் தமது காலத்தில் வடமொழிச் சிவாகமங்கள் வழங்கினவாயின் அவற்றை எடுத்துரையாது விடார். அற்றாயினும், ஆகமம் எனப் பெயரியநூல் திவாகரமுனிவர் காலத்தில் இருந்த தென்பதற்கு, ஆகமம் பனுவல் ஆரிடஞ் சமயம் சூத்திரம் ஐந்தும் நூலினைத் துலக்கும்11 என்று அவர் கூறுதலே சான்றாமாகலின், அக்காலத்தில் ஆகமப்பெயரால் வழங்கிய மெய்யறிவுநூல்கள் தமிழிலேயே இருந்தனவென்பது தேற்றமாம். அற்றேற், காமிகம், காரணம், வீரம், சிந்தம், வாதுளம், யாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் முதலிய ஒன்பது ஆகமங்களைத் திருமூலர் எடுத்தோதுதல் என்னையெனின்; இஞ்ஞான்று வழங்கும் இருபத்தெட்டுச் சிவாகமங்களுட் சேராத யாமளம் காலோத்தரம் என்னும் இரண்டையுஞ் சேர்த்துக் கூறுதலின். இவ்வொன்பது ஆகமப்பெயர்களை மொழிந்த பெற்றநல் லாகமம் என்னுந் திருமந்திரப்பாயிரச் செய்யுள்12 திருமூலர் செய்ததாகது. ஆசிரியர் திருமூலநாயனார் திருமந்திரம் மூவாயிரஞ் செய்யுட்களே அருளிச்செய்தன ரென்பது முன்னியவப் பொருண்மாலைத் தமிழ் மூவாயிரஞ் சாத்தி13 என்று சேக்கிழார் அருளிச்செய்தவாற்றால் அறியக் கிடக் கின்றது. இப்போதுள்ள திருமந்திரத்திலோ நாற்பத்தேழு செய்யுட்கள் மூவாயிரத்திற்குமேல் மிகுதியாய்க் காணப்படு கின்றன. மேலும், திருமந்திரத்தின் முதற்செய்யுள் ஒன்றாவன் றானேஎனத் தொடங்குவததேயாமென்பது இனிது புலப்படச் சேக்கிழார் ஏனவெயி றணிந்தாரை ஒன்றாவன்றான் எனவெடுத்து14 என்று கூறுமாற்றாற் பெறப்படுகின்றது. மற்று, இஞ்ஞான்றைத் திருமந்திரத்திலோ, ஒன்றவன் றானே என்னுஞ் செய்யுளுக்குமுன் போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை என்னுஞ் செய்யுளும், அதற்குமுன் யானை முகக்கடவுள் காப்பாகிய ஐந்து கரத்தனை என்னுஞ் செய்யுளுங் காணப்படுகின்றன. திருமூலர் திருமந்திரத்திலும், அவர்க்கு முற்பட்ட மாணிக்கவாசகர் திருவாசகந் திருக்கோவை யாரிலும், அவர்க்கு முற்பட்ட சங்கத் தமிழ் நூற்களிலும் யானைமுகக் கடவுளாகிய பிள்ளையாரைப் பற்றிய குறிப்பாதல், வணக்கமாதல் எங்கும் எட்டுணையுங் காணப் படாமையின், அந் நூல்கள் தோன்றிய காலங்களிற் பிள்ளையார் வணக்கம் இத் தமிழ்நாட்டின்கண் உண்டாக வில்லை யென்பது தெளியப்படும். அப்பர் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரங்களிற் பிள்ளை யாரைப்பற்றிய குறிப்புகள் காணப்படுதலின்.15 கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியி லிருந்தே யானைமுகக் கடவுள் வழிபாடு இத் தென்றமிழ் நாட்டின் கண் உளதாயிற்றென்று துணிக. இக்குறிப்பு ஒன்றுமே மாணிக்கவாசகப் பெருமான் ஏனை மூவர்க்கும் முந்தியோ ராதலை நாட்டுதற்குப் போதிய சான்றாம். திருமந்திர நூலுள் யாண்டுங் காணப்படாத யானைமுகக்கடவுள் வழிபாடு அதன் முதலில் வைக்கப் பட்டிருத்தலானும், ஐந்து கரத்தனை என்னும் அச்செய்யுளை முதற்செய்யுள் என்று சேக்கிழார் கூறாமையானும் அவை யிரண்டும் பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவா மென்பது துணியப்படும். பாயிரத்துட் குருமடவரலாறு விளம்புஞ் செய்யுட்கள் மூலன்... சுந்தர ஆகமச் சொன்மொழிந் தானே எனத் திருமூலரைப் படர்க்கையிடத்து வைத்துரைத் தலின், அவ்விரண்டும் பிறராற் செய்யப்பட்டமை திண்ணமாம். இங்ஙனமே திருமந்திரப் பாயிரத்தின் இடையிடையே பிறராற் சேர்க்கப்பட்ட செய்யுட்களே, திருமூலர் அருளிச்செய்த மூவாயிரம் பாட்டுக்களுக்குமேல் நாற்பத்தேழாயின. இப் பாயிரத்துள் வேதச்சிறப்பு, ஆகமச் சிறப்புக்களைக் கிளக்கும் பல செய்யுட்களும் பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டன வாய் முன்னொடுபின் முரணுற்றுக்கிடத்தலின், பெற்றநல் லாகமங்காரணம் காமிகம் என இஞ்ஞான்றை ஆகமப் பெயர்களை எடுத்துரைக்கும் அச்செய்யுள் திருமூலர் செய்ததன்றெனக் கடைப்பிடிக்க. இவ்வாறே நூல்களின் பாயிரத்துட் பிறர் தாமெழுதிய வற்றைச் சேர்த்துவிடுந் தீயவழக்கத்தைப் பெரிய புராணம் என்னுந் திருத்தொண்டர்புராண ஆராய்ச்சியுள்ளும் எடுத்துக் காட்டியிருக்கின்றேம். இறையனராகப் பொருள் உரைப் பாயிரத்திலும் நூலினிடையிடையே எடுத்துக்காட்டுகளிலும் இங்ஙனமே பின்னுள்ளார் சிலர் எழுதிச்சேர்த்த உரைப்பகுதி களையும் கலித்துறைப்பாட்டுகளையும் பிரித்தறியும் அறிவு மதுகை யில்லாதார் சிலர், அந் நூலுரை முழுதும் ஆசிரியர் நக்கீரனார் இயற்றியதன்று என எளிதிற் கூறிவிட்டனர். சொற்பொருள் நுட்ப விழுப்பம் வாய்ந்த அத்தகையதோர் அரிய விரிவுரையின் பான்மை, இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகியார், நச்சினார்க்கினியர், என்னுஞ் சிறந்த உரைகாரருரையுள்ளும் யாண்டுங் காணப்படாமையின். அவ் விறையனாரகப் பொருளுரை தெய்வப்புலமை நக்கீரனாரே இயற்றியதாதல் நுண்மாணுழை புலமுடைய தமிழ்ச் சான்றோர்க்கெல்லாம் விளங்கா தொழியாது. பாயிரத்துட் சில பகுதிகளும், உரையி னிடையிடையே விரவிய சில சொற்றொடர்களும் எடுத்துக் காட்டாக வந்துள்ள கட்டளைக் கலித்துறைப் பாட்டுகளும் ஒழித்து, ஒழிந்த உரைப்பகுதிகள் முற்றும் ஆசிரியர் நக்கீரனார் செந்தமிழ் உரைவளந் துறும எழுதிய பழைய அருந் தமிழுரையே யாமென்பதூஉம், அதன்கண் எடுத்துக் காட்டப்பட்டுள்ள சங்கத் தமிழ்ப் பாட்டுகள், தொல்காப்பியச் சூத்திரங்கள், திருக்குறள் வெண்பாக்கள் முதலாயினவெல்லாம் அவர் எடுத்துக்காட்டியனவேயா மென்பதூஉம் இற்றைக்கு இருபத்தேழு ஆண்டுகட்கு முன்னரே யாம் வெளியிட்ட ஞானசாகர முதற்பதுமத்தின் 9, 10 இதழ்களில் இறையனாரகப் பொருளுரை வரலாறு என்பதன்கண் நன்கு விளக்கிக் காட்டியிருக்கின்றேம். அது நிற்க. இனி, ஆசிரியர் திருமூல நாயனார் தாமருளிச்செய்த திருமந்திரநூலை ஆகமம் என்றே கூறி, அதனைத் தாம் சிவபிரான் றிருவருளால் இயற்றினதனை, நந்தி யிணையடி நான்தலை மேற்கொண்டு புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்து அந்தி மதிபுனை அரன்அடி நாடொறுஞ் சிந்தைசெய்து ஆகமஞ் செப்பலுற் றேனே என்று தாமே நன்கெடுத்துரைத்தார். உரைப்பவே பண்டைக் காலத்திருந்த தமி ழ் ஆகம நூல்களெல்லாம் திருமந்திரத்தைப் போல் மெய்ப்பொருள் உண்மையினையே (தத்துவ ஞானத் தையே) கிளக்குமென்பதும் பெற்றாம். இஃதிவ்வாறாகவும் திருமந்திர நூற்பதிப்புக்கு முகவுரை எழுதிய ஒரு பார்ப்பனர்16 ஏதொரு சான்றுங் காட்டாமல் திருமந்திரம் வடமொழி யாகமங்களினின்று மொழிபெயர்த்துச் செய்யப்பட்டதா மென்றும், திருமந்திரமாலை னஎனும் பெயரிலுள்ள மந்திரம், மாலை என்னுஞ் சொற்கள் வடசொற்களே யாமென்றும். ஆசிரியர் சேக்கிழார் அருளிச்செய்த பெரிய புராணம் என்னுந் திருத்தொண்டர் புராணம், வடமொழியி லுள்ள உபமந்யு பக்தவிலாசகம், அகத்யபக்தவிலாசம் என்னும் நூல்களைப் பார்த்துச் செய்யப்பட்டதா மென்றுந் தமக்கு வேண்டியவா றெல்லாங்கூறி மகிழ்ந்தார். வரலாற்றுமுறை வழுவாமல் தக்க சான்றுகள்கொண்டு தமிழாசிரியர்கள் பெரிதும் உழைப்பெடுத்து எழுதும் தமிழ் ஆரிய நூல் வரலாறுகளைப் பிசகென்று முன்பின் ஆய்ந்து பாராமல் உடனே கூறிவிடும் இவர்கள், ஆரிய நூல்களே எல்லாச் சிறப்பும் வாய்ந்த முதல்நூல்கள், தமிழ் நூல்கள் அச் சிறப்பில்லா மொழி பெயர்ப்பு நூல்கள் என்று ஒரு சிறிதும் ஆராய்ந்து பாராது உரைப்பதை எண்ணுங்கால், தாமும் தம்மவரும் இம் மண்ணுலகத் தேவர் களாதலால் தாம் ஏது சொல்லினும் அது மெய்ம்மொழியே யாகல்வேண்டுமெனவும், தம்மவர் அல்லாத ஏனையோ ரெல்லாம் தமக்கு முன்னோ ரென்று தம்மாற் கருதப்பட்ட பழைய ஆரியரால் தாசர்கள் பிசாசுகள் என்று இகழ்ந்து பேசப்பட்டவர்களாதலால் அவர்கள் தமிழ்நூல் களைப்பற்றி மெய்யே கூறினும் அது பொய்யேயாகல் வேண்டுமெனவும் பிழைபட எண்ணுதற்கு ஏதுவாய் நின்ற இவர்களின் தீயசெருக்கே இவரையும் இவர்தம் இனத்தவர் களையும் இங்ஙனமெல்லாம் நடுநிலை திறம்பிக் கூவுமாறு ஏவுகின்ற தென்க. இனித், தமிழ்நூல் வடநூல்களின் உண்மை வரலாற்றினை உள்ளவாறு உணரல் வேண்டின், அவை தோன்றிய காலம், இடம், அவற்றை ஆக்கிய ஆசிரியர் வரலாறு, அந்நூல் இயற்றியதற்குள்ள ஏது, அவற்றின் வழி, அந் நூல்களால் நுவலப்படும் பொருள் என்பவைகளை நன்கு ஆராய்ந்து உரைத்தல் வேண்டும். பொருளால் ஒத்த இரண்டு நூல்களில் எது முந்தியது? எது பிந்தியது? என்று ஆராய்ந்து பார்த்து, அதன் பின்னும் இடவேற்றுமை முதலியனவும் ஒப்பிட்டு நோக்கித், தக்க சான்றுகள் மேலும் இருந்தால்மட்டும் அவ் விரண்டனுட் பிந்தியநூல் முந்திய நூலிலிருந் தெடுத்து இயற்றப்பட்ட தென்றல் ஒக்கும். திருமந்திரம் வடமொழி யாகமங்களினின்று மெடுத்துத் தமிழிற் செய்யப்பட்டதென அப்பார்ப்பனர் கூறல்வேண்டினராயின், திருமந்திரத்திற்கு முன் வடமொழியிலிருந்த ஆகமங்கள் இவ்விவையென்று தக்க சான்றுகள் கொண்டு முதலில் அவர் காட்டுதல்வேண்டும்; அதன்பின், அவ் வாகமங்களின் இவ்விப்பகுதியிலிருந்து திருமந்திரத்தின்கண் உள்ள இவ்விப்பகுதி மொழிபெயர்த்துச் செய்யப்படடனவென்று உறுதிப்படுத்தல் வேண்டும்; இவற்றுள் ஒன்றுதானுங் காட்டாமல் வாளா திருமந்திரம் ஆகமங் களினின்றும் மொழியெர்த்துச் செய்யப்பட்ட தென்றலும், ஆகமங்கள் முதன்முதற் காசுமீரத்திற் கைலைத் தாழ் வரையின்கண் ஆக்கப்பட்டனவென்றலும், அவ்விடத்தின் கண் முதற்றோன்றிய பிரத்தியபிஞ்ஞாதரிசனமே சைவ சித்தாந்தத்திற்குத் தாயகமாம் என்றலும், சிறுமகார் ஒருவரையொருவர் எள்ளி எதிர்கூறும் வெற்றுரையோ டொக்குமெனவே விடுக்கற் பாலன. சிவாகமங்கள் முதன்முதற் காசுமீரத்தில் இயற்றப்பட்டன வென்பதற்கு இப் பார்ப்பனர் காட்டிய சான்று எத்தனை? தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை (திருமந்திரம், 134) என்று திருமூலர் உரைத்ததே சான்றாமெனின்; அவர் தத்துவஞானம் என்று உரைத்தாரே யல்லாமல், ஆகமஞானம் என்று உரைத்திலர். அற்றன்று, தத்துவஞானம் உரைத்த வடநூல் களையே ஈண்டு ஆகமம் என்று கொண்டாமெனின்; அற்றேல், தத்துவஞானம் பொதிந்த உபநிடதங்களை ஆகமம் என்று வழங்காமை என்னை? மேலும், சுவேதாசுவதரம் முதலிய உபநிடதங்கள் முனிவர்களால் ஆக்கப்பட்டன வென்றற்கு, அவற்றுட்சில அவற்றை ஆக்கிய அல்லது கேட்ட முனிவர் களின் பெயர் பூண்டு நிற்றலும், அவ்வுபநிடதப் பொருளைச் சொல்லும் ஆசிரியர் இங்ஙனமே அறிஞர் சொல்லக் கேட்டேம் என்னும் பொருளைப் பயக்கும் இதிகசீருமதீரோணாம்17 என்னுஞ் சொற்றொடரை இடைக்கிடையே கிளந்து செல்லுதலுமே சான்றாம். ஆகவே, உபநிடதங்களை இறைவன் அருளிச்செய்தா னென்றலும் சாலாது. இவ்வாறு, உபநிடதங்களை ஆகமங்களெனப் புகலுதலும், அவற்றை இறைவன் மொழிந்தானென வாய்ப்பறையறைதலும் ஏலாமை யின், தத்துவஞானம் என்று திருமூலர் அருளிச்செய்தது பதி பசு பாசங்களைப் பற்றிய மெய்யுணர்வு எனவே பொதுமையிற் பொருள் பயந்து நிற்குமென்க. அற்றேல், திருமூலநாயனாரே வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல் (திருமந்திரம், 2351) என்று மொழிந்த கருத்து என்னையெனின்; அவர் வேதம் என்றன, பலகோடி சிறுதெய்வ வணக்கங்களையும், கட்குடியும் உயிர்க்கொலையும் மலிந்த வெறியாட்டு வேள்விகளையும் விரித்துப் பண்டை ஆரியக் குருக்கண்மார் செய்த பாட்டுகளே பெரும்பான்மையும் நிறைந்த இருக்கு, எசுர், சாமம் முதலியவைகள் அல்ல. மலந் தீர்தற் பொருட்டு உயிர் தன்னை அதுவாகக் கருதும் சோகம் பாவனையை வற்புறுத்துரைக்கும் பழைய உபநிடதங்களைப் போல் அஞ்ஞான்றிருந்த அறிவு நூல்களையே வேதம் என்றும், கடவுளைப் பொதுமையில் வைத்து அது வென எண்ணின், அவ்வெண்ணம் கடவுளைச் சிறப்பாக நினைத்தற்கு இடந்தர மாட்டாமையின் அது பயன்படாதாயொழிதல் கண்டு, பிற்காலத்துச் சான்றோர் அதனைச் சிவம் எனச் சிறப்பாக வைத்துப் பயிலும் முறையினை விரித்த அறிவுப்பெருநூல் களையே ஆகமம் என்றும் கொள்ளுதலே திருமூலநாயனாரது திருவுள்ளக் கிடையாமென்பது. மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம் சென்னிய தான் சிவோகமாம் ஈதென்ன அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள் துன்னிய ஆகம நூலெனத் தோற்றுமே (திருமந்திரம், 2394) என்று அவர் அருளிச் செய்தவாற்றால் நன்கு புலனாம். இங்ஙனஞ் சோகம்பாவனையைக் கூறும் வேதநூலும் சிவோகம் பாவனையைக் கூறும் ஆகமநூலும் முறையே வடமொழியாகிய ஆரியத்தினும் தென்மொழியாகிய தமிழினும் அக்காலத்தில் ஒருங்கிருந்தன வென்னு முண்மை ஆசிரியர் திருமூலரே, மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்று ஏரியும் நின்றங் கிளைக்கின்ற காலத்தே ஆரிய முத்தமி ழும்உட னேசொலிக் காரிகை யார்க்குங் கருணைசெய் தானே (திருமந்திரம், 75) என்று அருளிச்செய்தவாற்றாற் பெறப்படும். இருக்கு, எசுர், சாமம் முதலானவற்றில் அங்ஙனம் சோகம்பாவனை அறிவுறுத்தும் பகுதிகள் காணப்படாமையின், அதனையறி வுறுத்தும் வேதமென அவராற் கொள்ளப்பட்டவை அவ் இருக்கு முதலியன ஆகாமையுந் தானே தெளியப்படும். அங்ஙனமே, சிவோகம் பாவனையை வலியுறுத்தும் பகுதிகள் காமிகம், காரணம் முதலான இஞ்ஞான்றை வடமொழி யாகமங்களிற் காணப்படாமையின். அதனை வலியுறுத்தும் ஆகமமென அவராற் கொள்ளப்பட்டன. அக் காமிகம் முதலியன ஆகாமையும் இனிது விளங்கற்பாற்று. அற்றேல், யான் முன்னர் மனுவாயிருந்தேன். கதிரவனா யிருந்தேன்; யான் கக்ஷீவான் என்னும் முனிவனாயிருக்கின்றேன், யான் விப்பிரனாயிருக் கின்றேன்; ஆர்ஜுனியின் புதல்வனாகிய குத்சனுக்கு யான் ஆண்டவன்; அறிஞனான உசனாவும் யானே; என்னைப் பார்மின்கள்! என்னும் இருக்குவேதப் பதிகத்தின் முதற்பகுதி18 சோகம்பாவனை கூறுவதாய் முடியாதோ வெனின்; அப்பதிகத்தின் மூன்றாஞ் செய்யுளில் யான் சோமபானத்தைப் பருகிய வெறியாற் சம்பரனுடய கோட்டைகளைத் தகர்த்தேன் என்று இந்திரனே சொல்லக் காண்டலின், அவன் அக்கட் குடிமயக்கத்தால் யான் முன்னர் மநுவாயிருந்தேன், கதிரவனா யிருந்தேன் என்றற் றொடக்கத் துரைகளைப் பிதற்றினனாகலின், இந்திரன் பிதற்றிய அம் மயக்கவுரையைச் சோகம்பாவனையின் மேற்றாக வைத்துரைத்தல் ஒருவாற்றானும் பொருந்தாதென மறுக்க. இருக்கு முதலிய வேதங்கள் பொருந்தாப் புல்லுரை நிறைந்த கூளமேயாகுமென்று பண்டைக் காலத்துச் சான்றோர்கள் கூறினர் என்பதை அவ் வேதங்கட்கு நிருத்தம் எழுதிய யாகாசாரியாரே குறித்திருக்கின்றனர்.19 அவ்வா றிருக்கச், சிவபிரான் ஒருவனையே முழுமுதற் கடவுளாகக் கொண்ட ஆசிரியர் திருமூலர், சிறுதெய்வ வணக்கப் பதிகங்களே பெரும்பான்மையும் நிறைந்த இவ் இருக்கு முதலியவற்றை இறைவன்நூல் என்று கூறத் துணிவரோ? அற்றேல், அஃது இந்த உயிர் (சோயமாத்மா)20 என்னும் மாண்டூக்கிய உபநிடதமும். அது நீ ஆகின்றனை (தத்துவமசி)21 என்னுஞ் சாந்தோக்கிய உபநிடதமும், யான் கடவுளா கின்றேன் (அஹம் ப்ரஹ்மாமி)22 என்னும் பிருக தாரணியக உபநிடதமும் சோகம்பாவனை யினையே வெளிப்படையாய் உணர்த்தக் காண்டலின், அவ்வுபநிடதங்களையே இறைவன் நூல் என்று ஆசிரியர் கொண்டார் என்னாமோ வெனின்; என்னாம். சாந்தோக்கிய உபநிடதம் ஐந்தாம் பிரபாடகம் பதினொன்று முதல் இருபத்துநான்கு வரையிலுள்ள பகுதிகளிற், கல்வியறிவு மிக்க பார்ப்பனக் குருமார் ஐவர் உத்தாலக ஆருணி என்பரைத் தலைவராகக் கொண்டு சென்று, மெய்யுணர்வின் மிக்க வேந்தனான அசுவபதிகைகேயனை யடைந்து அவன்பால் உண்மைப்பொருள் தெளிந்தமையும்; பிருகதாரணியக உபநிடதம் இரண்டாம் அத்தியாயம் முதலாம் பிராமணத்தில் வேதநூல்வல்ல கார்க்கிய பாலாகி என்னும் பார்ப்பனக் குரவன் காசி மன்னனான அஜாதசத்துருவை யடைந்து, அவனுக்கு முழுமுதற்பொருளியல்பினை அறிவுறுத்துவேனெனப் புகுந்து பிழைபாடான பன்னிரண் டுரைகளைக் கூற, அவற்றைக் கேட்ட அம்மன்னன் அவற்கு அவன் கூறியவற்றிலுள்ள பிழைகளை யெடுத்துக்காட்ட, அப் பார்ப்பனன் தன் அறிவின் சிறுமையுணர்ந்து அவ்வரசற்கு மாணாக்கனாகி அவனால் மெய்ப்பொருள் அறிவுறுக்கப் பட்டமையும் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருத்தலின் மக்களால் ஆக்கப்பட்ட அவ்வுப நிடதங்களைக் கடவுள் ஆக்கினானென்றல் ஒவ்வாது. இனி, வருணன் என்னும் முனிவன் மண்டூக (தவளை) வடிவில் நின்று மொழிந்தமையின் மாண்டூக்கியம் என்னும் பெயர்த்தாயிற் றென்று மாதவசாரியார் உரையெழுதி யிருப்பதைக் கொண்டு, மாண்டூக்கிய உபநிடதமும் இறைவன் மொழிந்த தன் றென்பது பெற்றாம். பெறவே, இவ்வுபநிடத நூல்களை மெய்யான இறைவன் நூல் என்று கோடலுந் திருமூலர்க்குக் கருத்தன்று என்பது பெற்றாம். அற்றாயினும், சிவபிரான் முதன்முதல் நந்தியெம் பெருமானுக்குச் சோகம் பாவனை யைச் சுருக்கமாய் வைத்து அருளிச்செய்த வேதநூற் பொருளும், பின்னர்ச் சிவோகம் பாவனையை விரிவாய் வைத்து அருளிச்செய்த ஆகமநூற் பொருளும் ஆசிரியர் மாணாக்கர் முறையில் வழி வழியே இறங்கிப், பின்னுள்ளோர் ஆக்கிய உபநிடதங்களிலும் பொன்னே போற் பொதிந்து வைக்கப்பட்டமையின், அப் பொருள்பற்றி உபநிடதங்களை வேதமெனக் கொண்டு அவற்றையும் முகமனாக இறைவன்நூல் என்று திருவாதவூரடிகள், திருமூலநாயனார் என்னும் இவரை யுள்ளிட்டுவந்த சைவ சமயாசிரியன்மாரெல்லாம் உரைப்பாராயினாரெனின், அஃது இழுக்காது; இத்துணையே யன்றி, இவை இறைவனே மொழிந்த உண்மை முதல் நூல்கள் அல்லவென்று கடைப்பிடிக்க. இங்ஙனமே, வேதாங்கங்கள் எனப்படும் சிட்சை, சந்தசு, வியாகரணம், நிருத்தம், கல்பம், சோதிடம் என்னும் ஆறனையும் சிவபிரான் அருளிச்செய்தன னென்று தேவார திருவாசகங் களுள் அடுத்தடுத்து ஓதப்படுதலும் முகமனுரையேயாம். வேதநூல்களிற் போந்த பதிகங்களை ஓது முறையும் எழுத்துக்களைத் திருத்தமாய்க் கூறுமுறையுங் காட்டுவதே சிட்சை யாகும். சிட்சைக்குரிய இலக்கணங்களை விரிக்கும் நூல்கள் பிராதிசாக்கியங்கள் எனப்படும். இவை ஒவ்வொரு வேதத்திற்குந் தனித் தனியே உள்ளன. இருக்குவேத பிராதிசாக்கியங்களை இயற்றினவர் ஆசுவலாயனார்க்குக் குருவான சௌனகரேயாவர். இனிச், சந்தசு வென்பது வேதத்திற் போந்த செய்யுடகளின் இலக்கணங்கூறுவது இச் செய்யுளிலக்கணம் இருக்குவேத பிராதி சாக்கியத்தின் இறுதியிலுள்ள மூன்று படலங்களிலேயே சொல்லப்பட்டிருக் கின்றது. பிங்கலரால் இயற்றப்பட்ட செய்யுளிலக்கண நூலும் தனியேயுண்டு; ஆயினும், இது மேற்காட்டிய பிராதி சாக்கியத்திற்குப் பிற்பட்டதேயாகும். இனி, வியாகரணம் என்பது சொல்லிலக்கணங் கூறுவது இவ்விலக்கணங் கூறும் நூல்கள் பாணினீயத்திற்கு முன்னரே பற்பல உளவாயினும். பாணினி முனிவர் இயற்றிய இலக்கண நூலே பிற்காலத்தவராற் பெரிதும் பாராட்டப்படுகின்றது. இனி, நிருத்தம் என்பது வேதத்திற் போந்த சொற்களுக்குப் பொருள் அறிவிக்கும் நிகண்டு நூலாகும். இத்தகைய நூல்களும் பழைய காலத்திற் பற்பல உளவாயினும். யாகாசாரரியாராற் செய்யப்பட்டதே நிருத்தம் என வழங்கிவருகின்றது. இனிக், கல்பம் என்பது வேள்விச் சடங்குகள் ஆற்றும் முறையினை வகுத்துக் கூறுவது. இக் கல்பத்தின் முதன்மையாவனவும் விரிந்த பகுதியாவனவும் சிரௌத சூத்திரங்களே யாகும். இவையும் ஒவ்வொரு வேதத்திற்குந் தனித்தனியே யுண்டு. இருக்குவேதத்திற்கு உரியவை சாங்காயன சிரௌத சூத்திரமும் ஆகவலாயன சிரௌத சூத்திரமும் என இரண்டாம்; இவை முறையே சாங்காயன ராலும் ஆசுவலாயனராலும் இயற்றப்பட்டன வாகும். இனிச், சோதிடம் என்பது வேள்விகள் ஆற்றுதற்கு இசைந்த கோள்நிலை காலநிலைகளை வகுத்துக் கூறுவது பழைய வேதகாலத்தில் எழுதப்பட்ட சோதிட நூல் ஒன்றும் இப்போது அகப்படவில்லை. இவ்வாறு எழுத்துச் சொற்பொருள் யாப்பு வேள்விச் சடங்கு கோள் நிலை முதலியவற்றை ஆராய்ந்து அறிவுடையோர் ஆக்கிய கருவி நூல்களை யெல்லாம் இறைவனே ஆக்கினானென்றால் முகமனுரையே யல்லாமற் பிறிதன்றென்பது சிறிதறிவுடை யார்க்கும் விளங்கற் பாலதேயாம். அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் தில்லைச் சிந்தாமணி உம்பரார் அறியா மறையோன் என்னுந் திருக்கோவையார் செய்யுளிற் போல, உலகத்தில் நம்மால் அறியப்பட்ட உயர்ந்த பொருள்களை அன்பின் மிகுதியாற் கடவுளாகவும் கடவுளுக்கு உவமையாகவும் எடுத்துச்சொல்லத லோடொப்ப, உலகத்தின்கண் அரியபெரிய நூல்களாகப் பாராட்டப் படுவனவற்றை யெல்லாம் கடவுளே அருளிச் செய்தானென்றல் அருமுகமனேயாம் அற்றன்று. தூய உள்ளத்தினர் பால் முனைத்து நின்று அவரறிவினை இறைவன் விளக்கி நின்று அவர்க்கு எல்லா உண்மைகளையும் புலப்படச் செய்தலின், அங்ஙனம் இறைவ னருள்வழிநின்ற ஆசிரியர் அருளிச் செய்வனவற்றையெல்லாம் இறைவனருளிச் செய்தானென்றலே முறையாமாலெனின்; அவ்வா றுரைப்பின், அவ் வாசிரியன்மாராகிய உயிர்கள் எல்லாம் அறிவுடையன என்பது போய் அறிவற்ற இயந்திரங்களே (பொறிகளே) யாமெனவும் அறிவற்ற அவை செய்யும் நல்வினை தீவினைகளுக்கு அவை யுரியவல்லவாமெனவும், இவ் வுலகத்தைப் படைத்தல் காத்தல் முதலாக இறைவன் செய்யுந் தொழில்களெல்லாம் எவர் பொருட்டு எதற்காகச் செய்யப்படுகின்றன வென்னும் வினாவுக்கு அங்ஙனம் கொள்வார் விடைகூறுதல் ஆகாமையின் அத்தொழில்களெல்லாம் வெறும் பயனற்றனவேயா மெனவும், தமதறிவுகொண்டு இறைவனை அறிவாரும் அறிவிப்பாரும் இல்லையாய் முடிதலின் இக் கோட்பாட்டின்படி எல்லாம் வெறும் பாழேயாய் முடியுனெவும் உணர்ந்துகொள்க. அல்லதூஉம், இறைவனருள்வழி நின்றாரிற் சிறுமகாவாயிருந்த காலத்திலேயே எல்லாம் ஓதாதுணர்ந்தவரான திருஞான சம்பந்தப் பெருமானினும் மிக்கார் பிறரில்லை; அவரிடத்து இறைவன் முனைத்துவிளங்கி நின்றனனாகலின் அவர் அருளிச்செய்த தேவாரப் பதிகங்களை யெல்லாம் இறைவனே யருளிச்செய்தா னென்னல் வேண்டும். ஆனால், அவற்றை அங்ஙனம் வழங்குவாரைக் கண்டிலம். இறைவனை நேரேகண்டு அவனருளை முற்றும் பெற்றுநின்ற திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருப்பாட்டுகளையே இறைவனருளின வென்றல் அமையாதாயின் திருஞானசம்பந்தப் பிள்ளையாரோடு ஒத்தவரென்றாவது அல்லதவர்க்கு மேற்பட்டவரென்றாவது கொள்ளுதற்கு ஒரு சிறிதும் இடம் பெறாத வேதநூற் புலவர்களும் வேதாங்கநூல் புலவர்களும் இயற்றிய இருக்கு, சிட்சை முதலான நூல்களை இறைவனே அருளிச் செய்தா னென்றல் யாங்ஙனம் பொருந்தும்? வடமொழியிலுள்ள இவ்வாரிய நூல்களை விடத், தமிழ்மொழியிலுள்ள திருக்குறள் எத்தனையோ நூறாயிர மடங்கு உயர்ந்ததென இவ் வுலகின்கண் உள்ள எல்லாரும் ஒத்துரைப்பர். அத் தன்மைத் தாகிய தெய்வத் திருக்குறளையே தமிழ்ச் சான்றோர் இறைவனருளிச்செய்த நூலென்று உரையாமல் திருவள்ளுவ னார் அருளிச்செய்த தென்றே உண்மையாக வழங்கி வருகின்றனர். ஆரியப் பார்ப்பனரோ தமக்கு உயர்வுதேடும் பொருட்டும், தமது உயர்வுக்கு இன்றியமையாத் துணையென்று தம்மாற் பிழையாகக் கருதப்பட்ட இருக்கு, சிட்சை முதலான சிற்றறிவு அருளிச் செய்தனவென்று ஒரு சாரரும், அற்றன்று வேதங்கள் கடவுளாலும் ஆக்கப்படாமல் என்றும் சுயம்பு வாகவே (தானாகவே) உளவென்று மற்றொரு சாராருமாக ஒரு பெரும் பொய்யுரையினைக் கட்டி, அப் பொய்யுரைக்கட்டை விடாப் பிடியாய் வழங்கிவரலாயினார். அவ்வாரிய நூல்களை நேரே பயின்றறிவார்க்கு அந் நூல்கள் சிற்றறிவுடைய மக்களால் இயற்றப் பட்டன வென்னும் உண்மை புலப்பட்டு விடுமாகையால். அவற்றைத் தம்மவரல்லாத பிறர் பயிலுதல் ஆகாதெனவும் அன்றி எவரேனும் பிறர் அவற்றைப் பயில்வராயின் அவர் நாவை இரு கூறாகப் பிளத்தல் வேண்டுமெனவும், எவரேனும் பிறர் அவற்றைக் கேட்பராயின் அவர் செவியிற் காய்ச்சியுருகிய ஈயத்தைச் சொரிதல் வேண்டுமெனவும் பல வகையான கொடுங் கட்டளையுந் தாம் எழுதிய மநு முதலான மிருதி நூல்களில் வரைந்துவைப்பா ராயினர். இங்ஙனமே, இவ்வாரியப் பார்ப்பனர் தம்மினத்தவ ரல்லாத பிறரை ஏமாற்றுதற் பொருட்டும், அவரைப் பாழாக்குதற் பொருட்டும் சூழ்ச்சிசெய்து இதி காசங்கள் மிருதிகள் புராணங்கள் முதலானவற்றிற் கட்டிவைத்த பொய்ப் புரட்டுகளுக்கு ஓர் அளவேயில்லை. அடிக்குறிப்புகள் 1. திருமந்திரம் 479 2. அதுவே 2151 3. அதுவே 2197 4. அதுவே 2220 5. திருமந்திரம் 74 6. அதுவே 150 7. பௌட்கராகமம் 6, 7, 2, 2, 5, 3, 19, 20, 4, 77, 6, 75 8. 1923 வருஷத்தில் கொழும்பில் வெளிவந்த மெய்கண்டான் இதழ் 2, பக்கம் 57 9. See Mr. Gopinatha Rao’s Hindu leonography Vol.1, part-1, p. 55. 10. திவாகரம் பல்பொருட்கூட்டத்தொரு பெயர்த்தொகுதி 11. திவாகரம் ஒலிபற்றிய பெயர்த்தொகுதி 12. திருமந்திரம் 73 13. திருமூலநாயனார்புராணம் 27 14. அதுவே 26 15. திருப்புறம்பயத் திருத்தாண்டகம். 10 திருவலிவலத் திருவிராகப் பதிகம்.5 16. மாவை வே. விசுவநாதப் பிள்ளை பதிப்பித்த திருமந்திரப் புத்தகத்திற் காண்க. 17. ஈசாவாசியோபநிடதம் 10, 13 18. இருக்குவேதம் 4, 26. 1-2 19. திருத்தம் 1, 15, 16 20. மாண்டூக்கியம் 8 21. சாந்தோக்கியம் 6, 8, 7 22. பிருகதாரணியகம் 1, 4, 10 13. கட்குடிப்பாட்டும் சூதாட்டப்பாட்டும் இருக்கு வேதத்தில் காணப்படல் இத்துணைப் பெரும் பொய்யரும் புரட்டருமான ஆரியப்பார்ப்பனரை மெய்யர் என்றும், எஞ்ஞான்றும் மெய்யே கூறுவாரான பழைய தமிழ்மக்களைப் பொய்யர் என்றும் தம்மை ஆரியப்பார்ப்பன இனத்திற் சேர்த்துக் கொண்ட சீநிவாச ஐயங்கார் என்பவர் தாம் ஆங்கிலத்தில் எழுதிய தமிழாராய்ச்சிகள்1 என்னும் புத்தகத்தில் நெஞ்சம் அஞ்சாமல் ஒருபேர் இகழ்ச்சிப் புரட்டுரையினை வரைந்து வைத்து ஒழிந்தார்! அதுவேயுமன்றி அற நூல்களே பழைய தமிழ்நூல்களில் மிகுந்தித்தலால், தமிழர்கள் அறவொழுக்கம் இல்லாதவர்களென்பதும் பெறப்படும் என்று அவ்வையங்கார் கூறினர்.2 உண்மையை யுள்ளவாறே கூறும் பழைய சங்கத்தமிழ் நூல்களையும், பொய்யும் புரட்டும் அளவின்றி நிறைந்த வடநூல்களையும் ஒரு சிறிது ஒப்பிட்டு நோக்குவார்க்கும் எவர் பொய்யர் எவர் மெய்யர் என்பது எளிதில் விளங்காநிற்கும். பழைய தமிழ்நூல்களிற் பொய்க்கதைகள் மருந்துக்கும் அகப்படா இடைப்பட்ட காலத்திலிருந்து தமிழில் வந்த புராணகதைகளெல்லாம் வடநூல்களிலிருந்து மொழி பெயர்த்துச் செய்யப்பட்டனவே யல்லாமல் அவை தமிழுக்கு உரியனவல்ல அக்காலத்துத் தமிழர்களில் உயர்குடிப் பிறப்பினருங், கொடுமேழி நசையுழவரும்3 ஆகிய வேளாளர் நடுவுநின்ற நன்னெஞ்சினராய், வடுவஞ்சி வாய்மொழிந்து4 வாழ்ந்தனரெனப் பட்டினப்பாலை என்னும் பழைய அருந் தமிழ்ப்பாட்டில் அதனை ஆக்கிய அந்தணராகிய உருத்திரங் கண்ணனாரே கூறியிருக்க, இவற்றுக்கெல்லாம் முற்றும் மாறாக ஏதொரு சான்றுமின்றி மெய்யராகிய தமிழரைப் பொய்ய ரெனவும், பொய்கூறுதற்கு அஞ்சா வடமொழிப் பார்ப்பனரை மெய்யரெனவுங் கூறிய சீநிவாச ஐயங்காரது பிறழ்ச்சிப் பொய்யுரை நடுநிலையாளரால் அருவருத் தொதுக்கற் பாலதாமென்க. இனி, ஒழுக்கநூல்கள் தமிழின்கண் மிகுந்திருத்தல் கொண்டு அக் காலத்துத் தமிழர்கள் ஒழுக்க மில்லாதவர்கள் என்ற அவ்வையங்காருரையும் புரைபடு பொய்யுரையாதல் ஒரு சிறிது காட்டுவாம். மேற்காட்டிய பட்டினப்பாலைச் செய்யுளானும், புறநானூறு முதலிய தொகை நூல்களானும் அக்காலத்திருந்த தமிழ்மக்களும், சான்றோரும், அரசர்களும், மாதரும் எல்லாம் அன்பு அருள் ஈகை அறங்களிற் சிறந்து, கொலை களவு பொய் கட்குடி காமம் என்னும் பெருங் குற்றங்களைத் தவிர்ந்து, நடுநிலையிலுங் கற்பினும் மேம்பட்டு விளங்கின ரென்பது தெற்றெனப் புலப்படும். அவ்வியல்பினை விரிப்பிற் பெருகுமாதலின், ஈண்டு ஒரு செய்யுளைக் காட்டும் முகத்தான் அதனைச் சுருங்க விளக்குவாம். கோப்பெருஞ் சோழன் என்னும் அரசன் கேள்வி வாயிலாகத் தான்அன்பு பாராட்டிவந்த பிசிராந்தையாரைப் பன்னெடுங்காலஞ் சென்று காணநேர்ந்தக்கால், அவரது இளமைத் தோற்றத்தைக் கண்டு வியந்து, கேட்குங்காலம் பலவாலோ, நரை நுமக்கு இல்லையாலோ என்று வினாவியவழி, அப்புலவர், யாண்டுபல வாக நரைஇல ஆகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின், மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர், யான்கண் டனையர்என் இளையரும், வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும், அதன்றலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே5 என்னுஞ் செய்யுளை விடையாகக் கூறினர். இதன்கண் தம் மனைவி கற்பின் சிறந்துவிளங்கத் தம் புதல்வர் அறிவான் மிக்கிருந்தமையானும், தமக்கு ஏவல் செய்வோருந் தங் கருத்துப்படி உண்மையாய் ஒழுகி வந்தமையானும், தமது நாட்டின் அரசனும் தீயவற்றைச் செய்யானாய் முறைப்படி செங்கோல் செலுத்தினமையானும், அதற்குமேல் தமதூரின்கட் சான்றோர் பலர் நல்லியல்புகள் அமைந்து, தாழ்மையும், கல்வி கேள்விகளின் மிகுந்து அடங்கிய அடக்கமும் உடையராய் நிறைந்திருந்தமையானுந் தாம் கவலையுந் துன்பமும் எய்தாமல் உயர்ந்த இன்பத்திலேயே நாட்கழித்தமையின் தமக்கு முதுமை வந்திலது என்றார். எனவே, அக்காலத்துத் தமிழ்மக்கள் அன்பு அருள் அறிவு ஒழுக்கம் என்னும் வகைகளில் மிக மேம்பட்டி ருந்தமை நன்கு பெறப்படும். அற்றேல், ஒழுக்கத்தில் உயர்ந்தோராய் விளங்கிய அவரிடையே ஒழுக்கமுறை களை அறிவுறுத்தும் திருக்குறள், நாலடியார் முதலான நூல்கள் பலப்பல தோன்றியவா றென்னை யெனின்; தமிழின்கண் உள்ள ஒழுக்க நூல் களெல்லாம் பௌத்தசமயக் காலத்திற்குப் பின், பௌத்தரும் ஆரியரும் தமிழ் நாட்டின்கண் வந்து குடியேறப்புகுந்த காலந்தொட்டு உண்டாயினவாகும். பௌத்த சமய காலத்திற்கு முற்பட்ட தமிழ்நூல்களெல்லாம் அகப்பொருள் புறப்பொருள் களைச் சுவைமுதிரப் பாடும் பாடல்கள் வாய்ந்தனவா யிருக்கின்றன; பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு முதலியவற்றின் கட் காணப்படும் பழம்பாடல் களே அதற்குச் சான்றாம். மற்றுப், பௌத்தரும் ஆரியரும் தென்னாடுபோந்து குடியேறினகாலம் முதலாக அவர்க்குரிய தீய இயல்புகளையும் ஒழுக்கங்கயும் தமிழ்மக்களிற் பலருந் தழுவி நடக்கப்புகுந்தமையின், அவர் தம்மைச் சீர்திருத்தி மீட்டுந் தம் வழிப்படுதல் வேண்டியே தமிழ்ச் சான்றோர்கள் அங்ஙனம் ஒழுக்கநூல்களைப் பெருக்கி எழுதலாயினாரென்க. இவ் வுண்மையினைத் திருக்குறள் ஒன்றைக்கொண்டே விளக்கிக் காட்டுவாம். ஏனைத்தமிழ் ஒழுக்க நூற் பொருள்களெல்லாம் திருக்குறளில் அடங்குதலின் அவற்றை எடுத்திலம். ஆயினும், சைவசமய நூல்களில் முற்பட்டதாகிய திருமந்திரநூற் பொருளும், பழைய தமிழ்ச்சான்றோர் கொள்கையோடு ஒத்ததென்பதற்கு அதன்கணிருந்துஞ் சிற்சில மேற்கோள் காட்டுதும். பௌத்தசமயத்தின் பழைய பெரும்பிரிவினரான ஈனயானர்கள் பிறவியை அஞ்சி அதனை யொழித்தல் வேண்டின ராயினும், முழுமுதற் கடவுளை நம்பாமையின் அவர்கொண்ட கொள்கை தவறென அறிவித்தற் பொருட்டே, பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார் என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவர் அருளிச்செய்தார். திருமூலரும், வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர் ஊனப்பிறவி ஒழிக்கும் ஒருவனை (21) என் று அருளிச்செய்தார். ஆரியருள் மீமாஞ்சகரும் உயிர்களைக் கொன்று வேட்கும்வேள்வி யொன்றானே வீடுபேறு கைகூடும், இதன்பொருட்டு இறைவன் எற்றுக்கு, இறைவன் ஒருவன் இலன் என்றலே உண்மையாம் எனக் கூறினாராகலின், அவரது தீய கோட்பாட்டை மறுத்தற் பொருட்டே திருள்ளுவர். அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று எனவுங், கற்றதனால் ஆய பயன்என்கொல் வால்அறிவன் நற்றான் தொழாஅ ரெனின் எனவும் அருளிச்செய்தார். இதனோடொப்பவே திருமூலரும், ஓமத்துள் அங்கியின் உள்உளன் எம்இறை (222) என்றும், கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை (198) என்று அருளினார். பௌத்தர், பிறராற் கொல்லப்பட்ட தன் ஊனைத் தின்னலாமென்று சொல்லி அதனை அயின்று வந்தமையானும், ஆரியப்பார்ப்னரும் வேள்வி வேட்கின்றோம் என்று கூறிக்கொண்டு எண்ணிறந்த உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை விழுங்கி வந்தமையானும் அவ் விருவர்தங் கொடுஞ்செயல் களையும் ஒழித்தல் வேண்டியே திருவள்ளுவர், தினற்பொருட்டாற் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல் என்றும், செயிரிற் றலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரிற் றலைப்பிரிந்த ஊன் என்றும் வற்புறுத்தருளினார் திருமூலரும், பொல்லாப் புலாலை நுகரும் புலையரை (242) என்று புலாலுண்பார் அனைவரையும் ஒருங்கே அருவருத்துப் பெரிதும் இகழ்ந்துரைத்தமை காண்க. இருக்கு வேதத்தைச் சேர்ந்த ஆசுவலாயன சூத்திரத்திலும், சாங்காயன சூத்திரத்திலும், வாஜபேயம், ராஜசூயம், அசுவமேதம், புருஷமேதம், சர்வமேதம், என ஐவகை கேள்விகள் வேட்குமாறு சொல்லப்பட்டிருக்கின்றது; சாங்காயனர் இவ் வேள்வி வேட்கு முறைகளை மிகநுணுக்கமாக விரித்துரைக்கின்றார். கிருஷ்ண யஜுர்வேத தைத்திரீய சம்ஹிதையின் நாலாங்காண்டம் ஆறாம் பிரபாடகத்திற் குதிரையைக் கொன்று வேட்கும் அசுவமேத இயல் வகுத்துரைக்கப்பட்டிருக்கின்றது; தைத்திரீய பிராமணத் திலோ (3, 4) சௌத்திராமணி வேள்வியும், ஆண்மகனைக் கொன்று வேட்கும் வேள்வியுங் கூறப்பட்டிருக்கின்றன. சதபதபிராமணம் (7, 5, 2) ஆண்மகன், குதிரை, எருது, செம்மறி, வெள்ளாடு முதலான ஐவகை யுயிர்களின் தலைகளை வெட்டிச், செங்கற் பலிபீடத்தின் அடியிற் புதைக்குஞ் சட்டியில் இடுகவென்று கட்டளையிடுகின்றது; ஒருகால் நூற்றுத் தொண்ணூற்றைந்து ஆண்மக்களை வெட்டி வேள்விவேட்ட குறிப்பும் அந்தச் சதபத பிராமணத்திலேயே காணப்படுகின்றது (13, 6, 2) குதிரையைக் கொன்று வேட்கும்வேள்வி இருக்குவேத முதன்மண்டிலத்தின் நூற்றறுபத்திரண்டாம் பதிகத்திற் றெளிவாகச் சொல்லப் பட்டிருத்தலால், ஆரியர் உயிர்க்கொலை புரிந்து அவற்றின் ஊனைத் தின்றுவந்தமை மறுக்கப்படாத உண்மையேயாம். இன்னும் இதனை விரிப்பிற் பெருகும், இவ் வாரியரது சேர்க்கையாற் றமிழ் அரசர்களும் செல்வர்களும் இத்தகைய உயிர்க்கொலை வேள்விகளை மிகுதியாய்ச் செய்யத்தலைப் படவே, உயிர்க்கொலை எங்கும் பெருகக் கண்டு வருந்தி அதனைத் தடைசெய்தற் பொருட்டே, திருக்குறள் நாலடியார் முதலான அறநூல்கள் மிக்கெழுந்தன. இனி, ஆரியப்பார்ப்பனர்கள் தாம் தேவரினும் உயர்ந்தோ ரென்றும், தமது உதவியினாலேயே தேவர்கள் வானுலகத்தில் இருக்க இடம் பெற்றார்களென்றும்.6 வேள்வியாற்று தலாலாவது பிறரிடம் இரந்து பொருள் பெறுதலாலாவது பார்ப்பனன் குற்றம் எய்தமாட்டான். வேதம் ஓதினும் ஓதாவிடினும் பார்ப்பனன் இகழப்படுவான் அல்லன், கற்றவனாயினுங் கல்லாதவனாயினும் பார்ப்பனன் சிறந்த தெய்வமேயாவான் என்றும்7 எழுதி வடமொழி மகாபாரதத் தினுள் நுழைத்து வைத்தார்கள். அதுமட்டுமோ, ஒரு பெண்ணுக்குப் பத்துப்பேர் கணவர்கள் இருந்தாலும் ஒரு பார்ப்பனன் சென்று அவளது கையைப் பிடித்தால் அப் பார்ப்பனனே அவளுக்குக் கணவனாவன். ஒரு ராஜந்யனும் ஒரு வைசியனுங்கூட அவளுக்குக் கணவன் ஆகார் என்றெழுதி அதனை அதர்வவேதம் 5ஆங் காண்டத்திற் சேர்த்திருப்ப தோடு, தம் மனைவியரை எவரேனுங் கைப்பற்றினால் அவர்க்கு அளவிறந்த துன்பங்கள் வரும் எனவும் அச்சுறுத்தி அதன்கண் வரைந்துவைத்திருக்கின்றனர். ஆரியப்பார்ப்பனர் தமிழ்நாட்டிற் குடியேறித் தம்மைத்தாமே வறிதே உயர்த்திப் பேசிக்கொண்டு தமிழரை ஏமாற்றித் தமிழ்க்குடி மாதர்களின் கற்பை அழிக்க முயன்றமைகண்டே தமிழ்ச் சான்றோர்கள். பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்றும், அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டு ஒழுகலான் என்றும், மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்றும், ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல் என்றும், மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றார் அனைத்திலர் பாடு என்றும், விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் என்றும், எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையுந் தேரான் பிறன்இல் புகல் என்றும், தன்னுயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் என்றும் அறிவுறுத்தி அப் பார்ப்பனரையும், அவர்தம் பொய்ம்மாய வலையிற்சிக்கிய தமிழரையும் அறிவு தெருட்டுவா ராயினர். இச்செய்யுட்களில்: மக்கள் எல்லாரும் நரைதிரை மூப்புப் பிணி சாக்காடும், அறியாமை கவலை துன்பம் முதலியனவும், மல நீர்க்கழிவுகள் முடைநாற்றம் முதலான வாலாமையும் இயற்கையே வாய்ந்த ஊனுடம்பின் பிறப்பினராய் இருத்தலின் அவர் எல்லாரும் பிறப்பளவில் ஒரு தன்மையரேயன்றி ஒருவர் மற்றொருவரின் உயர்ந்தோராதல் செல்லாதென்பதூஉம். அந்தணர் எனப்படுவோர் அறவொழுக்கத்தின் வழுவாது ஒழுகி எல்லா உயிர்களிடத்தும் அருளுடையரேயாவ ரல்லது அறனும் அருளும் இல்லாதார் அப் பெயர்க்குரியரல்ல ரென்பதூஉம், நல்லொழுக்கம் இல்லாதவன் ஒரு காலத்தும் பார்ப்பனனாகமாட்டா னென்பதூஉம், பிறர்பாற் சென்று அவர் பொருளை இரந்துபெறுவது இழிவேயாமல்லது உயர்வாகா தென்பதூஉம் கல்லாத பார்ப்பனர் தம்மை உயர்ந்த குலத்தின ரென்று தாமே சொல்லிக்கொண்டாலும் அவர் கல்வி யறிவுடைய கீழ்க்குலத் தாரினுங் கடைப்பட்டவரே யாவரென்பதூஉம். கல்வி யில்லாதவர் மிருகங்களை (விலங்குகளை) ஒப்பர். கல்வி யுள்ளவரே மக்களாவ ரென்பதூஉம், தம்மை யுயர்ந்தோர் என்னும் பார்ப்பனர் பிறன்மனையாளைச் சென்று கைப்பற்றி னால் அவர் இழிந்தாரேயாவரென்பதூஉம், தம் மனையாளைப் பிறர் கைப்பற்றுதல் பெருந்தீங்கென் றுணர்ந்த பார்ப்பனர் பிறர் மனையாளைத் தாஞ்சென்று கைப்பற்றுதலும் பெருந்தீங் கென்று உணராமை குற்றமேயாமென்பதூஉம் நன்கெடுத்து அறிவுறுக்கப்பட்டமை காண்க. சைவசித்தாந்த முதலாசிரிய ரான திருமூலரும் மேற்காட்டிய திருவள்ளுவனார் கருத்தோடு ஒப்பவே. சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி ஒத்த விடயம்விட்டு ஓரும் உணர்வின்றிப் பத்தியும் இன்றிப் பரன்உண்மை இன்றிப் பித்தேறும் மூடர் பிராமணர் தாம் அன்றே (81) எனவும், அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச் சிந்தைசெய் அந்தணர் (84) எனவும், நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ (80) எனவும், வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர் வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர் (89) எனவும், மூடங் கெடாதோர் சிகைநூன் முதற்கொள்ளில் வாடும் புவியும் பெருவாழ்வும் (98) எனவும், ஞானமிலாதார் சடைசிகை நூல்நண்ணி ஞானிகள்போல நடிக்கின்றவர் தம்மை (99) எனவும், பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை அர்ச்சித்தாற் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் (502) எனவும், ஆறிடும் வேள்வி அருமறை நூலவர் கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில் நீறிடுந் தொண்டர் நினைவின் பயன்நிலை பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே (1861) எனவும், அருளிச்செய்தமை காண்க. இனி, ஆரியப் பார்ப்பனர் சோமப்பூண்டின் சாற்றினாற் சமைத்த கள்ளை மிகுதியாய்ப் பருகி வெறித்திருந்தன ரென்பதும், சூதாட்டத்தில் நிரம்ப இறங்கிப் பலவகையான அல்லலுக்கு இரையாயின ரென்பதும் இருக்கு வேதத்திற் றெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.8 சோமச்சாற்றின் ஆக்கிய கள் மிக்க வெறியினைத் தருவதென்பது அதனைப் பருகிய ஒருவன் அவ்வெறியிற் பாடிய இருக்குவேதப் பாட்டு ஒன்றால் நன்கு புலனாகின்றது. அப்பாட்டின் ஒரு பகுதியை இங்கே மொழி பெயர்த்துக் காட்டுவாம்: இதுதான் எனது தீர்மானம், ஓர் ஆவினை வென்று கைக்கொள்ளல்வேண்டும். ஒரு குதிரையை வென்று கைக் கொள்ளல்வேண்டும்; யான் சோமச் சாற்றைப் பருகி யிருக்கின்றேன் அல்லேனோ கடும் புயற்காற்றைப் போல, யான் பருகியிருக்குங் கள் என்னை உயரத் தூக்கிச்செல்கின்றது; யான் சோமச்சாற்றைப் பருகியிருக்கின்றேன் அல்லேனோ? விரைந்து பறக்குங் குதிரைகள் ஒரு தேரை இழுத்துச் செல்வதுபோல, யான் பருகியிருக்குஞ் சாறு என்னை மேலே சுமந்து செல்கின்றது; யான் சோமச் சாற்றைப் பருகியிருக் கின்றேன் அல்லேனோ? * * * வானுலகும் மண்ணுலகுங் கூட என் ஒருபாதிக்கு ஈடாகமாட்டா; யான் சோமச் சாற்றைப் பருகியிருக்கின்றேன் அல்லேனோ? * * * ஆ! இவ்வகன்ற மண்ணுலகைப் பெயர்த்தெடுத்து இங்கேயாவது ஆங்கேயாவது வைப்பேன்; யான் சோமச் சாற்றைப் பருகியிருக்கின்றேன் அல்லேனோ (10வது மண்டிலம், 119) என்று இதனை இங்ஙனமே இன்னும் நீளமாக அவ்வெறியன் பாடிக்கொண்டு செல்கின்றான். இவ்வாறே சூதாட்டத்திற் கைதேர்ந்த ஒருவன் பாடிய ஒருபாட்டின் ஒரு பகுதியையும் அவ் விருக்கு வேதத்தினின்றே மொழிபெயர்த்து வரைவாம்: வளிமண்டிலம் வரையில் உயர்ந்தோங்கிய மரங்களிற் காய்த்த இச் சூதுகாய்கள் பலகைமேல் உருள்கையில் எனக்கு மிகுந்த களிப்பைத் தருகின்றன. மூஜவான் மலையில் வளரும் சோமப்பூண்டின் மிகுந்த கள்ளைவிட, என்றும் உறங்காத இச் சூதுகாய் என்மனத்திற்கு மிக்க இன்பத்தைத் தருகின்றது. * * * முடிவாக மிஞ்சிய ஒருசிறு முனையையுடைய இச் சூதுகாயின் பொருட்டு என் மனைவியையும் யான் நீக்கி விட்டேன். என் மனைவியும் என்னை அகலவைத்து ஒழுகுகின்றாள்; அவளின் தாய் என்மேற் பகை பாராட்டுகின்றாள்; அல்லற்பட்ட இவனுக்கு ஆறுதல் சொல்வார் எவருங் காணப்படவில்லை. விலையுயர்ந்த ஒரு குதிரை வலிவுகுன்றி மூத்தாற் போல், இந்தச் சூதனுக்கும் ஏதோர் ஊதியமுங் காண்கிலேன். தன் செல்வமெல்லாம் சூதுகாய் என்னும் விரைந்த குதிரையாற், கவரப்பட்டவன்றன் மனைவியை ஆடவர் பிறர் தழுவுகின்றார். (10ஆம் மண்டிலம், 34) என்று நெடுகப் பிதற்றிக் கொண்டு பின்னும் பின்னுஞ் சூதாட்டத்திலேயே தனக்கு விழைவு செல்லுதலைக் கூறிச்செல்கின்றான். இத்தகைய சூதாட்டப் பாட்டுகள், கட்குடிப்பாட்டுகள், வேள்வியில் உயிர்களைக் கொல்லும் பூசாரிப் பாட்டுகள், தமிழர்மேற் போரிடுமுன் இந்திரனை வேண்டிப் பாடிய பாட்டுகள் போல்வனவே மிகுதியும் நிரம்பிய இருக்கு முதலான ஆரிய நூல்கள்தாம் சிவபெருமான் அருளிச் செய்தனவாம்! இங்ஙனங் கூறும் ஆராய்ச்சி யுணர்வில்லாத் தமிழ்ப்புலவர் சிலரின் புல்லியவுரை நகையாடி விடுக்கற்பாலதாமன்றி மற்றென்னை! கட்குடியும், சூதாட்டமும் மிக்க ஆரியர் தமிழ்நாடு புகப்புகத் தமிழரில் மேல்வகுப்பினரும் அவ்விரண்டையுங் கைக் கொள்ளத் துவங்கினமை கண்டு நடுக்குற்றே தமிழ்ச் சான்றோர்கள், உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார் எனவும், ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி எனவும், பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல்உழப்பிக்குஞ் சூது எனவும் அறிவுறுத்தி அவரைக் காப்பாராயினர்; இச் செய்யுட் களின் பொருள் கள்ளை உண்ணல் ஆகாது. அறிவின் மிக்கோ ரால் அஃது உண்பவர் இகழ்ந்து ஒதுக்கப்படுவர் என்பதும், தன் மகன் கள்ளுண்பனாயின் எங்கே கள்ளுண்ட வெறியால் அவன் தன்னைப் பெண்டாள வருவனோவென்று அவன் தாயும் அவனைக் கண்டு நடுங்குவளாயின் சான்றோர் அவனைக் கண்டு அருவருத்தல் சொல்லல் வேண்டுமோ என்பதும், சூதாட்ட மானது தன்னைக் கைப்பற்றினவனுக்கு உள்ள செல்வமெல்லாங் கெடுத்து அவனைப் பொய்பேசச் சொல்லி மற்ற உயிர்களிடத்து அவனுக்கு இரக்கம் இல்லாமற் செய்து அவனைத் துன்பத்தில் அலைக்கும் என்பதுமேயாம். ஆசிரியர் திருமூலரும், மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும் இயங்கு மடவார்தம் இன்பமே எய்தி முயங்கும் (திருமந்திரம், 317) என அருளிச்செய்தமை காண்க. மேற்செய்யுட்களிற் கள்ளுண்டவர் காமம் மிக்கு வரைதுயின்றி ஒழுகுவர் என்று ஆன்றோர் மொழிந்ததற்கு இணங்கவே, ஆரியமாந்தரும் அவராற் றெய்வமாகக் கொள்ளப் பட்டோரும் செய்த காமப் புன்செயல்கள் அவரெழுதிவைத்த நூல்களிலேயே காணப்படுகின்றன. பிரஜாபதி காமங் காழ்ப் பேறித் தன் புதல்வியைப் புணர்ந்து, பின்னர்த் தான்செய்த அத் தீவினையை நினைந்து மிக வருந்தினமை சதபத பிராமணம் (1, 7, 4), ஐதரேய பிராமணம் (3, 33), மத்ய புராணம் (3, 32, 49) முதலிய நூல்களில் வெளிப்படை யாகச் சொல்லப்பட்டிருக் கின்றது. இந்திரன் அங்ஙனமே வெறி கொண்டு கௌதம முனிவரின் மனைவியான அகலிகையைப் புணர்ந்தமை இராமாயண உத்தரகாண்டத்தில் (30, 19-31) குறிக்கப்பட்டிருக் கின்றது. விவவான் புதல்வரான யமனும் யமியும் தமையனுந் தங்கையுமா யிருந்தும், யமி தன் தமையனைப் புணர முயன்றமை இருக்குவேதத்திலேயே (10, 10) நன்கெடுத்துச் சொல்லப்பட்டது. தமிழ்ப் பெருந்தெய்வமாகிய சிவபிரான் காமனை எரித்தோன் என்பது எச் சமயத்தவரும் உணர்ந்ததோர் உண்மையாகலின், அவனை வழிபடுந் தமிழருங் காமத்தாற் பற்றப்பட்டவர் அல்லர் என்பது தானே விளங்கும். அற்றேற், காமவுணர்ச்சியின்றி ஆணும் பெண்ணுமாய் மருவி வாழும் உலகவாழ்க்கை நடவாமையின், தமிழர் அஃது உடையர் அல்லர் என்றல் யாங்ஙனம் பொருந்துமெனின்; அற்றன்று. காமம் என்பது உயர்ந்த அறிவையும் மறைத்து இழிந்தவற்றின்மேல் விழைவு செல்லுமாறு ஒருவனை ஏவி, அது தீர்ந்த அளவானே அவனால் அருவருக்கப்படுவது; தமிழரில் உயர்ந்தோர் இத்தகைய காமப்பிணியாற் பற்றப்பட்டவர் அல்லர்; மற்று, எல்லா வாற்றானும் உயர்ந்த ஓர் ஆண்மகனும், எல்லாவற்றானும் உயர்ந்த ஒரு பெண் மகளும் தம்முள் ஒருவரையொருவர் இன்றியமையாராய், ஓராவிற்கு இருகோடு தோற்றினாற்போல உடம்பால் இருவராய்க் காணப்படினும் அன்பு ஊடுருவிய உயிரால் ஒருவரேயாய்ப் பேரன்பின் வழியாய்ப் பேரறிவு பூண்டு வழுவாதொழுகுங் காதற் கற்பொழுக்கத்தில் நிலைபெற் றோராவர்; இக் காதலன்பின் இயல்பு தொல்காப்பியப் பொருளதிகாரத்தினும், இறையனாரகப்பொருளுரையினும், திருக்குறள் இன்பத்துப்பாலினும் திருச்சிற்றம்பலக் கோவையாரினும் நன்கு விளக்கப்பட்டிருத்தல் காண்க. இக் காதற் கற்பொழுக்கத்தின் உண்மை இலக்கியங்களாய்ப் பெருங்கோப்பெண்டு ஆதிமந்தி, கண்ணகி, மாதவி, மங்கையர்கரசியார், காரைக்காலம்மையார், பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் முதலான தெய்வத்தமிழ் மாதரும் அவர்தங் கொழுநருந் திகழ்ந்தமை காண்க. ஆதலாற், காமப்பிணியால் நிலைகுலையும் உலக வாழ்க்கை, காதலன்பினால் மட்டுமே சீர்திருத்தி நடை பெறுவதாகலின் இப் பெற்றியதான காதலன் புடைய தமிழர்க்கே உலகவாழ்க்கை செவ்விதின் நடைபெறு வதாமென்று உணர்ந்துகொள்க. மேலெடுத்துக் காட்டிய வரலாற்றில் நான்முகக் கடவுள் (பிரமதேவன்) தன் புதல்வியைப் புணர்ந்தபின் காம மயக்கந் தெளிந்து, காமத்தெய்வமாகிய மதனவேளைச் சினந்து, சிவபிரான் நின் உடம்பைச் சாம்பராக விரைவில் எரிப்பர், என்று வைதமையும் மேற்சொல்லிய மச்சபுராண உரையிற் குறிக்கப்பட்டிருக்கின்றது. ஆதலால், ஆரியர் காதலன்பின் இயல்பு இன்னதென்றறியாது குடித்து வெறித்துச் சிற்றின்ப மென்னும் இழிந்த காமத்தின் வழியராய் ஒழுகினராகலின் அவரோடு கூடிய தமிழரும் அவர் போற் கெடாமைப் பொருட்டே திருவள்ளுவனார், சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர் (குறள் - 173) என்று அருளினார். திருமூலரும், காமமுங் கள்ளுங் கலதிகட் கேயாகும் (313) என்றும், மயங்குந் தியங்குங்கள் வாய்மை யழிக்கும் இயங்கம் மடவார்தம் இன்பமே எய்தி முயங்கும் (317) என்றும் அருளிச்செய்தமை காண்க. மேலும், ஆரியமாதர்கள் கற்பொழுக்கமின்றிக் காம இன்பத்தில் மிக்குநின்றா ரென்பதூஉம் பழைய ஆரிய நூல்களால் இனிது புலனாகின்றது. நிதான சூத்திரம் (3, 81), பெண்மக்கள் தமது நடையில் ஒழுங்கில்லாதவர்களா யிருக்கின்றார்கள். மக்களையுந் தேவரையுஞ் சான்றாகக் கொண்டு, யான் எவர்க்குப் புதல்வனென்று உறுதி கூறுகின்றேனோ அவர்க்கே யான் புதல்வனாவேன்; யான் எவரை என் பிள்ளைகளென்று குறிப்பிடுகின்றேனோ அவரும் அங்ஙனமே ஆகுக என்று சொல்வது கொண்டும், வருணப் பிரகாசம் என்னும் வேள்வியை வேட்கும் குரவன்றன் மனைவி பலரைக் கூடியிருக்கவேண்டுமெனக் கருதி, அவளை அவன் வேள்விக் களத்திற்குக் கொண்டு வருகையில் நீ எவ்வெவரோடு கூடியிருந்தனை? எனக் கேட்டு அவள் வாய்மொழி வினவுதலைச் சதபதபிராமணங் (2, 5, 2, 20) கூறுதல் கொண்டும் பண்டை ஆரியப் பார்ப்பன மாதரின் காமவொழுக்கம் இனைத் தென்பது துணியப்படுகின்ற தன்றோ? இத் தன்மையரான ஆரிய மாதர் தென்றமிழ் நாட்டிற் குடிபுகுந்திருந்தமையின், அவரைப் போற் றமிழ்மாதருங் கற்பின் வழுவாமைப் பொருட்டே திருவள்ளுவ நாயனார். பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மை யுண்டாகப் பெறின். எனவும், தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை எனவும், தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் எனவுங் கற்பொழுக்கத்தின் மேம்பாட்டை உயர்த்தெடுத் துரைப்பாராயினர். மேலும், தங் கணவனாற் புதல்வர்ப்பேறு வாயாத ஒரு மாது தன் கணவனது கட்டளைப்படி வேறு ஆடவரை மருவிப் புதல்வர்ப் பெறுமாறும், கைம்பெண்ணைக்கூடிப் புதல்வர்ப் பெறுமாறும் மனுமிருதி, ஒன்பதாம் இயலில், 59, 60, 61ஆம் செய்யுட்கள் வகுத்துரைத்தலின், அஞ்ஞான்றை ஆரியப் பார்ப்பனரே தம் மனைவியரும் மகளிரும் பிறரை மருவுதற்கு இடந்தந்தன ரென்பது பெறப்படும். ஆரிய மாந்தர், தம் இனத்தவரின் தொகை குறையாமல் மேன்மேற் பெருகுதலையே பெரிதுங் கருதிவந்தன ரல்லாமல், தம்மனோர் ஒழுக்கத்திற் சிறந்து விளங்கல் வேண்டுமென்பதை முதன்மையாய்க் கொண்டிலர். தாமும் தம் இனத்தவரும் மட்டுமே செல்வத்தினும் ஏனை நலங்களினும் மிக்குயர்ந்து வாழல்வேண்டும், ஏனையோரெல்லாம் மிடிப்பட்டு இறந் தொழிதல் வேண்டுமென்பதே அவர்கள் இந்திரன் மித்திரன் வருணன் முதலிய தேவர்களை வேண்டிப் பாடிய பாட்டுக்களில் யாண்டுங் காணக்கிடக்கின்றது; இதற்குச் சான்றாக இருக்குவேத முதன் மண்டிலத்திலேயே யுள்ள இருபத் தொன்பதாம் பதிகத்தைப் பார்த்துக்கொள்க. உலகின்கண் உள்ள மக்கள் எல்லாரும் எல்லா நலங்களினும் உயர்ந்து தழைத்தல் வேண்டுமென்னும் அருளிரக்கமாதல், இம்மை மறுமை யிரண்டினும் தூய வுள்ளத்தினராய் இறைவன் திருவடிப் பேரின்பத்தைப் பெறல்வேண்டுமென்னும் உயர்ந்த நோக்கமாதல் ஆரியர்க்குச் சிறிதும் இருந்தில. தாம் வணங்கிய தேவர்க்குத் தாம் ஒன்றுகொடுத்தால் அத்தேவரும் தமக்கொன்று கொடுத்தல் வேண்டும் என அவரோடு வாணிகம் புரிவதே அவ் வாரியரது வழிபாட்டு முறையாகும். இதற்கு ஏற்பவே, தைத்திரிய சம்ஹிதையில் (1, 8, 4, 1) ஓ பங்கிட்டு உண்டோய், நின்வயிறு நிரம்பியபின் உதோ பறந்துசெல்! நன்றாய் வயிறு நிறைந்தபின் திரும்பவும் எம்பாற் பறந்துவா! ஓ இந்திரனே, விலைதீர்த்துக் கொண்ட வாணிகத்திற் போல ஆற்றலையும் வலிமையையும் நாம் மாற்றிக் கொள்வோம்! எனக்கு ஒன்றுகொடுயானும் உனக்கு ஒன்று தருவேன்; எனக்கு ஒன்று கொண்டுவா. யானும் உனக்கு ஒன்று கொண்டு வருவேன். என்று கூறுதலும், இதனோடு ஒப்பவே பகவற்கீதை. (3, 11-16)யும். வேள்வியாற்றுதலால் தேவர்களைச் செழிக்கச்செய், அதனாற் றேவர்களும் நின்னைச் செழிக்கச் செய்வர் என்று கூறுதலும் எமது கூற்றை வலியுறுத்துவனவாம்.9 இங்ஙனமெல்லாம் உயர்ந்த நோக்கம் எட்டுணையும் இல்லாத ஆரியப்பார்ப்பனர் தம்மினத்தவரை யன்றி, ஏனை மக்களையும் அவர்தம் நலங்களையும் சிறிதுங் கருதிப் பாராதவராயிருந்தமையின், அவர் தம்மனோர் தொகையைக் பெருக்கிக் கொள்வதொன்றின் மட்டுமே நாட்டம் வைத்துத், தம் மாதரின் கற்பொழுக்கத்தையும் ஒரு பொருட்டாக நினையா ராயினார். அதனால், அவர் புதல்வர்ப் பேற்றை முதல் நிலையிலும், மாதரின் கற்பொழுக்கத்தை அதற்குப்பின் இரண்டாம் நிலையிலும் வைப்பர்; மற்றுத் தமிழ்மக்களோ மாதரின் கற்பொழுக்கத்தை முதற்கண்ணும், புதல்வர்ப்பேற்றை அதற்குப்பின் இரண்டாம் நிலைமைக் கண்ணும் வைப்பர். இதற்குச் சான்றாக, ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் வாழ்க்கைத் துணை நலத்தை முன்னும் புதல்வரைப் பெறுதலைப் பின்னுமாக வைத்துரைத்தமைகாண்க. இனி, ஒருவற்கு மனைவியாய் வாழ்க்கைப்பட்டாள், அங்ஙனம் வாழ்க்கைப்படுதற்கு முற்றொட்டே அவன்பாற் காதல் என்னும் பேரன்பு கொள்ளப்பெறின் அன்றி, அவள் அவற்கு உயிர்போற் சிறந்த உண்மை மனையாளாய்க் கற்பொழுக்கத்தின் நிலைபெறுதல் ஏலாமையின், கணவனும் மனைவியும் ஆதற்கு முன்னரே கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி அவர் ஒருவரை யொருவர் தலைப் பட்டுக் காதலாற் புணர்க்கப்படும் அன்பின் ஐந்திணை யொழுக்கத்தையே பண்டைத் தமிழர் வேண்டினர். இவ்விழுமிய தமிழ்முறையைத் தெரித்தற்கன்றே ஆசிரியர் திருவள்ளுவர் இன்பத்துப்பாலின் ஒரு தலைமகன் தன் இயல்புக்கு ஒத்த ஒரு தலைமகளைத் தனியே தலைப்பட்டுக் காதலாற் கூடுங் களவியலை முன்வைத்து, அங்ஙனங் கூடிய அவ் விருவரும் பின்னர் இருமுது குரவரும் எதிர்நின்று வதுவையாற்ற வதுவையயர்ந்து இல்லறம் நடாத்துங், கற்பியலை அதன்பின் வைத்து ஓதியதூஉமன்றி, அன்பு இல்வழிக் கணவனும் மனைவியுமாம் இல்வாழ்க்கை சிறிதும் வேண்டப் படாதென்பார். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது எனவும், அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று எனவும் வற்புறுத்து அருளியதூமென்க. மற்று ஆரியரோ, கணவனும் மனைவியுமாய்ப் புணர்க்கப்டும் இருவர் தம்முள் அன்புடையரோ இலரோ என ஆராய்ந்து பாராது, பொருள் குறித்தும் புதல்வர்ப்பேறு குறித்தும் காமங் காழ்ப்பேறக் கண்டும் அவர் தம்மை ஏலாவகையாய்ப் பிணைத்துவிடுவர்; அப் பினணப்பின் கட்பட்ட அவர் ஒழுக்கம் பிழைத்துக் கற்பின் வழீ இயினும் அதனை அவர் ஒரு பொருட்டாக எண்ணார். இப்பெற்றியரான ஆரியர் தமிழ்நாடு புகுந்து தமது பொருந்தாப் புல்லியவாழ்க்கையை நிலைநாட்டவே, இச் செழுந்தமிழ் நாட்டின் கண்ணும் பொய்யும் வழுவும் பொங்கித் தோன்றின; தமிழர்க்குட் பண்டுதொட்டுவந்த காதல் ஐந்திணை யொழுக்கம் விடுபட்டுத், தம்முள் ஒருவரையொருவர் அறியாமலும் காதலியாமலும் இருந்தே பெற்றாரானும் உற்றாரானும் ஏலாவகையாய்ப் பிணைக்கப்படும் ஏலா மணவினை பிற்றைஞான்றைத் தமிழர்க்குட் பரவி நிலைபெறலாயிற்று; இவ்வேலாமுறை நிலைபெறத் துவங்கிய காலந்தொட்டு ஈண்டைத் தமிழ்மாதர்க்குங் கற்பொழுக்கம் நிலைபெறல் அரிதாயிற்று. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திலேயே ஆரியர்ப்பார்ப்பனர் தமிழ்நாட்டின் கட்புகுந்து நிலைபெற்றுத் தம்முடைய வழக்க வொழுக்கங்களைப் பரப்பியதனாற் பொய்யும் வழுவுந் தோன்றித் தமிழர் தம் ஒழுக்க முறைகளைச் சிதைப்பவாயின; இஃது அவர் கூறிய, பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப10 என்னுஞ் சூத்திரத்தால் நன்குணரப்படும். என்றிதுகாறுங் கூறிய இப்பகுதியாற், கிறித்து பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டு முன்னே தொட்டுத் தோன்றிய தமிழ் ஒழுக்க நூல்களெல்லாம், இந் நாட்டின்கட் புகுந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்பாற் காணப்பட்ட நாத்திகக் கொள்கையினையும், வேள்விக்கொலை, ஊன்உணவு, பிறன்மனை நயத்தல், சாதிச்செருக்கு, இரத்தற்றொழில், அருளிரக்கமின்மை, பொய்புனைதல், பேரவா, கட்குடி, சூது, வரையிறந்த காமம், காதற் கற்பொழுக்க மின்மை முதலான கொடுந் தீயவொழுக்கங்களையும் கடிந்து, அவற்றின் வழியராகாமற் றமிழ்மக்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு இயற்றப்பட்டனவே யல்லாமல், நல்லொழுக்க வகைகளில் சிறந்துநின்ற தமிழ்மக்களைச் சீர்திருத்துற் பொருட்டு அவை இயற்றப்பட்டனவல்ல வென்பதூஉம் அவ்வொழுக்க நூல்கள் மிகுந்திருத்தல்கொண்டு பண்டைத் தமிழ்மக்களை ஒழுக்க மில்லாதவர்க ளென்று கூறிய சீநிவாச ஐயங்காருரை உண்மைப் புரட்டும் போலிப் பொய்யுரையா மென்பதூஉந் தெளிந்து கொள்ளப்படும். அடிக்குறிப்புகள் 1. See his remarks in the foot-note in p.194 of ‘Tamil Studies’ 2. Ibid pp 193,194 3. பட்டினப்பாலை. 205 4. அதுவே 207, 208 5. புறநானூறு. 191 6. அனுசாசன பர்வம். 2160 முதல் 7. வனபர்வம். 13436 8. “The leading vices of the Aryan race have always been drinking and gambling. The Rig-Veda bears ample witness to both. “Vedic India by Zenaide A. Ragozin. p.375. 9. “In the grossest sense, sacrifice is a mere bargain. Man needs things which the god posseses, such as rain, light, warmth and health, while he god is hungry and seeks offerings from man; there is giving and receiving on both sides. Foot note 2; The idea of the purely spiritual life of the gods, in particular that they neither eat nor drink is foreign to the Hymns.” A. Barth’s the Religions of India pp. 35-36. 10. தொல்காப்பியப் பொருளதிகாரம். நச்சினார்கினியம் 145. 14. மந்திரம் என்னும் சொல் தூய தமிழ்ச்சொல் இங்ஙனம் ஆரியப்புரட்டைத் தழுவின பார்ப்பனர் ஒருவர் ஏதொரு சான்றுங் காட்டாமல், திருமந்திரம் வடமொழி யாகமத்தினின்றும் மொழிபெயர்த் துரைக்கப்பட்ட தென்று ஒரு பொய்யுரை கூறினாராயின். அவர் கூற்றை ஆராய்ந்த மேன்மக்கள் அதற்கு ஏதொரு சான்றுங் காணாமையின் அதனை வெறும் போலிப் பொய்க்கூற்றெனவே அகற்றாநிற்பர் என்க. திருமந்திரம் முதன்முதற் றமிழிலேயே ஆசிரியர் திருமூல நாயனாரால் இயற்றப்பட்டதா மென்பதனை மேலே விளக்கிக்காட்டினாம். மேலும், தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்1 என்று திருமூலரே அருளிச்செய்தலின், அவர் காலத்தில் ஐவகையாய்ப் பகுக்கப்பட்டு விரிந்துகிடந்த தமிழ்நாடு முழுதும் ஞான (அறிவு) நூலாராய்ச்சியே விரிந்து கிடந்தமை பெறப்படுதலானும், சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம் (திருமந்திரம் - 149) என்று அவர் அருளிச்செய்யு மாற்றாற், படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலைச் செய்யுந் தேவர்க்கும் மேல் வைகி அவர்க் கெல்லாந் தலைவராய் நிற்கும் சதாசிவ நாயனார் தம் தூய மாயாவுலகங்களிலும் இயல் இசை நாடகமென்னும் முப்பகுப்பாய் விளங்கும் அருந்தமிழ் மொழிக்கண் இறைவன் அவர்பால் நின்றும் அருளிய தமிழ் வேதமே வழங்குதல் பெறப்படுதலானும், தமிழ்மக்கள் உலவுந் தமிழ்நாடுகளினும் தேவர்களுலவும் மேன்மேலுலகங்களிலும் தமிழ்வேந்தங்களுந் தமிழ் ஆகமங்களுமே வழங்கினமை தெற்றெனத் துணியப்படும். தேவர்க்கும் எட்டா நிலைக்கண் தமிழ்வேத ஆகமங்கள் வழங்குதல் கண்டே திருநாவுக்கரசு நாயனாரும் அமரர் காணா மறைவைத்தார்.2 என்று அவை தம்மைக் கருத்துட்கொண்டு அருளிச்செய்தார். தெற்கின்கண்ணதாகிய பொதியமலை தொட்டு, வடக்கின்கண்ண தாகிய கைலைமலை (நொடித்தான் மலை) காறுந் தமிழ்த் தெய்வமாகிய சிவபிரான் வழிபாடே பரவியிருந்தமை திருஞான சம்பந்தப் பிள்ளையார் அருளிச் செய்த கயிலையும் பொதியிலும் இடமென உடையார்3 என்னுந் திருமொழியானுந் துணியக் கிடத்தலானும், அஞ்ஞான்றிருந்த சிவபிரான் றிருத்தொண்டர்க ளெல்லாரும் சிவபிரானைப் பாடியதூஉம், சிவ பிரான்றன் முதன்மைத் தன்மைகளை ஆராய்ந்து விளக்கி வரைந்து வைத்த தூஉம், தமிழ்மொழிக்கண் அல்லாமல் வடமொழிக்கண் இன்மை யானும், அன்றி அத்தகைய நூல்கள் வடமொழிக்கண் உளவேல் அவை இவ்விவையென்று உண்மைச் சான்றுகளோடு காலவரையறை செய்து எவரும் இதுகாறுங் காட்டாமை யானும், பழைய உபநிடதங்கள், பாரதம், இராமாயணம் முதலான இதிகாசங்கள், மற்சபுராணம் முதலான இரண்டு மூன்று பழைய புராணங்கள் முதலிய வடநூல்களில் அருகி ஒரோவிடங்களிற் சிவபிரானைப் பற்றிக் காணப்படுங் குறிப்புகள் திருமந்திரம் ஞானாமிர்தம் முதலியவற்றுட் காணப்படும். விரிந்த நுண்ணிய மெய்யுரைகட்குத் தினைத்தனையும் ஈடாகாமையானும் அச் சிறு குறிப்புகடானும் ஆரியராலன்றி ஆரியர்க்கு அறிவு கொளுத்தும் பொருட்டுத் தமிழ் மேன்மக்களாற் சுருக்கமாகக் குறித்துவைக்கப் பட்டவை யாகலானும் வடநூல்களிற் சிவபிரான் முழுமுதற் றன்மைகளும் முப்பொரு ளாராய்ச்சிகளுமே விரிந்து விளங்கிக் கிடந்தன வாயின் அவற்றைப் பயில்வாரெல்லாம் சிவநேயம் மிக்கவர்களா யிருத்தல் வேண்டுமாக மற்று அவரெல்லாம் சிவத்துக்கும் சைவத்துக்கும் முற்றும் மாறாய் நிற்றலைக் காண்டுமாகலானும், தமிழ் நூல்களைச் சிறிதளவு பயின்றாரும் சிவநேயம் மிக்கு அறிவு நூலாராய்ச்சியிற் றலைப்படுதல் நாளுங் கண்டாமாக லானும், இஞ்ஞான்று வழங்கும் ஆகமங்களிற் சொல்லப்பட்ட முறைப்படி கட்டப்பெற்று நடைபெறும் பெரிய பெரிய சிவபிரான் திருக்கோயில்க ளெல்லாம் தமிழ்நாட்டிலன்றி வடநாட்டின்கண் இல்லாமை எவருந் தெளியவறிந்ததொன் றாகலானும், சிவபிரானையும் அவற்கு வழிபாடாற்று முறைகளையும் கடவுள் உலகம் உயிர் என்னும் முப்பொரு ளாராய்ச்சி களையும் வகுத்துரைக்குந் திருமந்திரம் போன்ற பழைய தமிழ் ஆகமங்கள் தனித்தமிழ் நூல்களேயாமல்லது. அவை வடமொழியினின்றும் மொழிபெயர்த்துச் செய்தன வல்ல வென்பதூஉம், அங்ஙனம் மொழிபெயர்த்துச் செய்தற்கு அவற்றினும் முற்பட்ட வடநூல்கள் சிறிதும் இருந்தில வென்ப தூஉம் கடைப்பிடித் துணர்ந்துகொள்க. இனி, மந்திரம் என்னுஞ் சொல் தமிழ்ச்சொல் லென்றாதல் வடசொல்லென்றாதல் உறுதிப்படுத்தல் எளிதில் முடிவதன்று. இஞ்ஞான்று வெளிவந்துள்ள பழைய தனித்தமிழ் நூல்களில்லாம் பழையதாகிய தொல்காப்பியத்தின்கண்ணே. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திர மென்ப.4 என்று கூறப்படுதலின் மந்திரம் என்னுஞ்சொல் மிகப் பழைய காலந்தொட்டே தமிழ்மொழியில் வழங்கினமை பெறப்படும் மந்திரம் என்னுஞ்சொல்லுக்குப் பொருள் பிறர் செவிக்குப் புலப்படாமல் மறைத்துச் சொல்லுதலே யாமென்பதும் இச் சூத்திரத்தால் நன்குணரக் கிடக்கின்றது. ஆகவே, மந்திரம் மறைமொழி யென்பன ஒரு பொருட்கிளவிகளாதல் பெற்றாம். மெய்ப்பொருளுணர்ச்சி பெறுதற்குத் தகுதியில்லாதார் செவிக்கட் சென்று படாவாறு, ஆசிரியன் தகுதியுடைய மாணாக்கர்க்கு மட்டும் செவியறிவுறுத்தும் அரிய மெய்ப் பொருளுரையினையே மந்திரம் என வழங்குதல் தமிழ்நூல் வழக்கு. மற்று இச்சொல் இப்பொருளிற் பழைய ஆரிய நூல்களில் வழங்குதலை அவற்றுள் யாண்டுங் கண்டிலம். பிற்றை ஞான்றை வடநூல்களில் இச்சொல் இப்பொருளில் வழங்குவது உண்டாலெனின்; அது, தமிழ் நூற்பொருள் பற்றிய வழக்கும் வடமொழிக்கட் கலந்தபின் உண்டாயதாகலின், அது வினாவன்றென மறுக்க பழைய ஆரிய நூல்களிற் காணப்படும் மந்திரம் என்னுஞ்சொல் தேவரை வேண்டிப் பாடிய பாட்டுகள் மேற்றாய வருதலின்5 மறை மொழியெனப் பொருள் பயக்கும் மந்திரம் என்னுந் தமிழ்ச் சொல்லும், வேண்டு கோளுரை யெனப் பொருள் பயக்கும் மந்திரம் என்னும் வடசொல்லும் வேறுவேறாதல் பெறப்படும்; இப்பொருள் வேற்றுமை அறியாதார் வெறும் வடிவொப்புமையே பற்றி இவ்இருவேறு சொற்களையும் ஒரு சொல்லெனக் கொண்டு பெரியதொரு குழறுபடை செய்தார். மேலும், தமிழர்க்கு மிகப் பழைய நூலாகிய தொல்காப்பியத்தின் கண்ணே இம் மந்திரம் எனுஞ் சொற் காணப்படுதல்போல, ஆரியர்க்கு மிகப் பழைய நூலாகிய இருக்குவேதப்பாடல்களிலாதல், ஏனை எசுர் சாம வேதப் பாட்டுகளிலாதல், இச்சொல், வழங்குதலைக் கண்டிலம்; மிகவும் பிற்பட்டகாலத்தில் தொகுத்துச் சேர்க்கப்பட்டதாகிய அதர்வவேதத்தில் மட்டும் ஓர் இடத்தே6 மந்திரம் என்னுஞ் சொல் வேண்டுகோளுரை என்னும் பொருளில் வந்திருக்கின்றது. மிகப் பழையதாகிய தொல்காப்பியத்தில் மறைமொழி என்னும் பொருளிற் காணப்படும் மந்திரம் என்னுஞ்சொல். அங்ஙனமே மிகப் பழைய ஆரியநூல்களில் எங்கும் அப்பொருளில் வழங்கக் காணாமையின், அது தனித்தமிழ்ச் சொல்லேயாதல் தேற்றமாமென்க. எனவே, மறைந்த அரும்பொருள்களை யுணர்ந்துந் திருமந்திரநூலுக்குப் பொருந்தும் பெயராய் அமைந்த மந்திரம் என்னுஞ் சொல்லுந் தூய செந்தமிழ்ச் சொல்லேயாதல் அறிக. இனிப், பூந்தொடையலுக்குப் பெயராகிய மாலை என்னுஞ் சொல் வடமொழியிற் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்திற் சுபந்துஎன்பவரால் இயற்றப்பட்ட வாசவதத்தா என்னுங் காவியத்தின்கண்ணே முதன் முதற் காணப்படுவதாகச் செந்தமிழ் மொழியிலோ அது கி.பி. முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்னும் இயற்றப்பட்ட சங்கநூல்களில் மிக்கு வழங்குகின்றது.7 காலத்தால் மிகவும் முற்பட்டதாகிய மாலை என்னுந் தமிழ்ச் சொல்லைக் காலத்தால் மிகவும் பிற்பட்டனவாகிய வடநூல்கள் கடன்வாங்கி யிருக்க வேண்டுமே யல்லாற், பழைய தமிழ்நூல்கள் அவற்றினின்றும் அதனை யெடுத்தல் ஏலாமை யுணர்க. அதனால், திருமந்திரமாலை என்னும் பெயரிலுள்ள சொற்கள் முற்றுந் தூய செந்தமிழ்ச் சொற்களாதல் பெறப்படுதலால், இவ் வுண்மையினை ஆராயாது இப்பெயரை யொரு கருவியாகக் கொண்டு அந்நூலை வடநூலின் மொழிபெயர்ப்பென்று நாட்டப் புகுந்த பார்ப்பனரின் உரை உள்ளீடில்லாப் புரையே யாதல் காண்க. இதுகாறுங் கூறியவாற்றல், திருமூல நாயனார் காலத்திற்கும் அவர்க்கு முற்பட்ட திருவாதவூரடிகள் காலத்திற்கும் முன்னரே மெய்யுணர்வு பரவிய இத் தமிழ் மண்டிலத்தும், தேவர்களுலகிற்கும் மேலதாகிய சதாசிவ மண்டிலத்துந் தமிழ் ஆகமங்களும் தமிழ் வேதங்களும் வழங்கினமை தெற்றெனப் பெறப்படுதலால், அவை தம்மைக் குறிப்பிடுந் திருவாதவூரடிகளும் திருமூலரும், அவற்றின் மொழிபெயர்ப்பாயும் சிற்ப நூல்களாயும் அவற்றின் பெயர் புனைந்து ஆரியர்களால் வகுக்கப்பட்டனவாயும் இஞ்ஞான் றுலவும் வடமொழி யாகமங்களையும் வேதங்களையும் குறிப்பிட்டார். அல்லரென்பதூஉம். திருவாதவூரடிகளாற் குறிப்பிடப்பட்டவை கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட வடமொழி யாகமங்கள் அல்லாமையால் அவர் அவ்வொன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவராதல் செல்லாதென்பதூஉந் தெளியக் கிடந்தவாறுணர்க. கிருத ஊழிக் கண்ணே வேதம் ஒன்றே யிருந்ததென்றும். அதனை யுணரமாட்டா மாந்தர் பொருட்டே பின்னர்ப் பற்பல வேதங்கள் இயற்றப்பட்டன வென்றும் அநுமான் தன் றம்பியாகிய வீமனுக்கு அறிவுறுத்தினமை மாபாரதம் வனபர்வத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது.8 இப் பாரதவுரைக்கு இணங்கவே, பாகவதபுராணமும், முன் நாளில் ஒரே ஒரு வேதந்தான் இருந்தது. எல்லா மொழிகட்கும் முதலதான பிரணவம் (ஓம் என்பது) ஒன்றுதான் இருந்தது9 என்று உரைத்தலும் நினைவுகூரற்பாற்று. இவ் விரண்டு நூல்களாலும் நுவலப்பட்டது இஞ்ஞான்றுலவும் வேதங்கள் அல்லாமையும் அது தூய மெய்யுணர்வினையே பயப்பதாதலும், ஓம் என்னும் மந்திரத்தின் வரிவடிவம் பொருள் வடிவம் தமிழ்மொழி ஒன்றற்கே உரியவாதலின் அதனையறிவுறுக்கும் வேதமும் பழைய தனித்தமிழ் வேதமேயாதலும் எமது உரையின் வாய்மையைக் காட்டும் அடையாளங்களா மென்க. இனி, இஞ்ஞான்றுலவும் வடமொழியாகமங்களின் மட்டுமே தீக்ஷை என்பது சொல்லப்பட்டிருத்தலின், இவ்வாக மங்களுக்குப் பிற்பட்ட காலத்தேதான் அடியார்க்குத் தீக்ஷைப்பேறு இன்றியமையாததாயிற்று; ஆகவே, ஆசிரியன் பால் தீக்ஷைபெற்ற மாணிக்கவாசகர் இவ்வாகமங்கள் பரவிய ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவராதல் வேண்டுமெனக் கிளந்த தமிழ்வரலாறுயைடார் கூற்றை ஆராய்வாம்; தீக்ஷை என்னுஞ் சொல்லும், தீக்ஷையோடு தவமும் பெற்றுச் செல்லும் பிரமஞானிகளினிடமும் யத்ர ப்ரஹ்ம விதோயாந்தி தீக்ஷயா தபஸா ஸக என்னும் அதர்வ வேத வுரையின்கட் சொல்லப் பட்டிருத்தலின் தவஞ்செய்து பிறவி யறுப்பார் தீக்ஷையும் பெறுதல் பண்டைக் காலத்திலேயே யுண்டென்பது பெற்றாம். மேலும், உபமந்யு முனிவர் கண்ணபிரானுக்குச் சிவதீக்ஷை செய்தமையும் பாரதம் அநுசாசனி பருவத்துப் பதினான்காம் அத்தியாயத்திற் சொல்லப்பட்டிருத்தலின், இஞ்ஞான்றை வடமொழிச் சிவாகமங்கள் எழுதப்படுதற்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னரே ஆசிரியன் தகுதியுள்ள மாணாக் கனுக்குத் தீக்ஷைசெய்து ஆட்கொள்ளும் முறையுமுண்டென்பது தெளியப்படும். இவை யெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் அறிவுமதுகை யின்றித், தீக்ஷை ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்புதான் எழுந்ததெனவும், அதனைப்பெற்ற மாணிக்கவாசகர் அவ்வாற்றால் அந் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் இருந்தவராவரெனவுந் துணிந்து எளிதாகக் கூறுதலில் தமிழ் வரலாறுடையார் அன்றிமற்று ஏவர் வல்லார்? யாம் மேற்காட்டியவாற்றால் தீக்ஷை செய்தல் பண்டைநாளிலேயே இருந்தமை நன்கு விளங்குதலின், கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்த மாணிக்கவாசகப் பெருமானுக்கு அது செய்யப் பட்டமை பொருத்தமேயா மென்க. ஈண்டுக் காட்டிய உபமந்யு முனிவர் இற்றைக்கு மூவாயிர ஆண்டுகட்குமுன் னிருந்த கண்ணபிரான் காலத்தவரென்பது இனிது புலனாதலின், இற்றைக்கு ஆயிரத்து ஒரு நூறு ஆண்டுகளுக்குமுன் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றையும், அவரால் வழுத்தப்பட்ட ஏனை நாயன்மார் வரலாறுகளையும் விரித்து வடமொழியில் உபமந்யு பக்த விலாசம் என்பதொரு நூல் இயற்றினாரென்றால் முழுப் பார்ப்பனப் புரட்டேயாம். சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இரண்டாயிர ஆண்டுகள் முன்னிருந்தவரும், பாலனுக்குப் பாற்கடல் அன்று ஈந்தான் றன்னை என்று (திருவாரூர் அறநெறி) அப்பராற் குறிப்பிக்கப்பட்டவரும் ஆன உபமந்யு முனிவர் அந் நாயனார் வரலாற்றினையும் ஏனை நாயன்மார் வரலாறுகளையும் விரித்து ஒருநூல் இயற்றினாரென்றலினும் ஒரு பெரும் புரட்டும் பொய்யும் வேறுண்டோ? இன்னும், இருக்கு வேதத்திற் பல பதிகங்களை இயற்றின வரும், பாரத இராமாயண நிகழ்ச்சிகளில் தொடர்புற்று நின்றவரும் ஆன அகத்தியர் ஒருவரோ பலரோவென்பது விளங்கிற்றில தேனும் அவர் சுந்தரமூர்த்தி நாயனார்க்கு ஆயிர ஆண்டுகளுக்காவது முற்பட்டவராதல் வேண்டுமென்பது மட்டும் அந் நூல்களால் விளங்காநிற்கும். அவ்வாறு அவர்க்கு மிக முற்பட்ட அகத்தியர் தமக்குப் பன்னெடுங்காலம் பிற்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றினையும் ஏனை நாயன்மார் வரலாறுகளையும் விரித்து அகத்திய பக்த விலாசம் என்றொரு நூலியற்றினாரென்றலும் ஒரு முழுப்புரட்டேயாம். ஆசிரியர் சேக்கிழாரால் அருளிச் செய்யப்பட்ட திருத்தொண்டர் புராணத்தின் அருமை பெருமையினைக் கண்டு வயிறெரிந்த பார்ப்பனர், அதனைத் தனித் தமிழ் நூல் என்று கொள்ளுதற்கு மனம் பொறாமல் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துச் செய்ததெனப் பிறர் அதனை மயங்கிக்கொள்ளும்பொருட்டு, அத் தமிழ நூலைப் பார்த்து வடமொழியிற் பலவழுக்கள் மலிய எழுதி வைத்து, அங்ஙனம் எழுதிவைத்த அவற்றுக்கு உபமத்யு பக்தவிலாசம், அகத்திய பக்தவிலாசம் எனப் பொய்ப் பெயர்கள் கட்டிவிட்டுப், பின்னர் அவற்றைப் பார்த்துச் சேக்கிழார் பெரியபுராணம் பாடினாரென ஒரு பெரும் பொய்க்கதையும் வழங்கலாயினர். இனி, ஆரிய முறையைத் தழுவின பார்ப்பனர் இவ்வளவின் அமையாது. அகத்தியனார் தென்னாடு போந்து தமிழ்க்கு இலக்கணஞ் செய்த பின்னரே தமிழ் சீர்திருத்தமுற்று நடை பெறலாயிற்றெனவும், இவர்பாற் றமிழுணர்ந்த தொல்காப்பியனார் யமதக்கினி முனிவரின் மகனாராவ ரெனவும், ஆகவே ஆரிய பார்ப்பன முனிவரராகிய தொல்காப்பினார் செய்த தொல்காப்பியமே தமிழுக்குச் சிறந்த இலக்கணமாய்த் திகழ்கின்றதெனவும், இவ்வாற்றால் தமிழர்க்குவந்த வாழ் வெல்லாம் ஆரியரால் வந்தனவே யாமெனவும் கூறித் தருக்கா நிற்பர். உண்மையிலே தமிழர்க்கு வந்த சிறப்பெல்லாம் ஆரியராலே வந்தனவாயின் அதனை ஒப்புதலில் இழுக்கென்று மில்லை. ஆனால், இவையெல்லாம் பார்ப்பனர் கட்டிவைத்த பொய்க் கதைகளேயல்லாமல் மெய்யாவன அல்ல. தமக்கும், தம்மினத்தார்க்கும் தமக்கே உரியதென்று கொண்ட வடமொழிக்கும், உயர்வு தேடும்பொருட்டுப் பார்ப்பனர் கட்டிய இக் கதைகளெல்லாம் அவர் இத் தென்றமிழ் நாட்டில் வந்து நிலைபெற்ற பிற்காலத்தே எழுந்தனவாகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்வந்த நூல்களிலும் உரைகளிலும் புராணங்களிலும் மட்டும் அகத்தியனார் தொல்காப்பிய னாரைப் பற்றி மேற்காட்டிய கதைகள் காணப்படுகின்றன. மணிமேகலையில் அகத்தியனாரைப் பற்றிய குறிப்புக் காணப்படினும் அவர் தமிழ்க்கு இலக்கணஞ்செய்தா ரென்றவாது, அவர் மாணாக்கர் தொல்காப்பியனா ரென்றாவது அதன்கண் ஏதுஞ் சொல்லப்பட்டிலது. இறையனாரகப் பொருளுரைப் பாயிரத்தில் அகத்தியனாராற் செய்யப்பட்டது அகத்தியம். அவர் இருந்தது தலைச்சங்கம் என்பது கூறப்பட்ட தாலோவெனின்; அவ்வுரைப் பாயிரத்திலுள்ள இன்னோரன்ன வெல்லாம் நக்கீரனார் உரைத்தனவல்ல வென்றும், அவை புராணக்கதைகள் மிக்கெழுந்த பிற்காலத்தே யிருந்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவா மென்றும் இவ் ஆராய்ச்சிவல்லா ரெல்லாம் உரைப்பக் காண்டலானும், அவ் வுரைப்பாயிரத்திற் கண்ட அவற்றுக்கெல்லாம் பழைய நூற்சான்றுகள் சிறிது மின்மை யானும் அவை உண்மையென்று கொள்ளற்பாலன அல்ல. அற்றேற், புறப்பொருள் வெண்பாமாலைப்பாயிரத்தில் அகத்தியனார் தொல்காப்பியனாரைப் பற்றிய இக்குறிப்புகள் காணப்படுதல் என்னையெனின்; புறப்பொருள் வெண்பா மாலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நூல் அன்றாகலின், புராணகாலத்து வந்த அந் நூற்பாயிரத்தில் அவை காணப்படுதல் ஒரு வியப்பன்று. அஃது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தன்று என்பது எற்றாற் பெறுது மெனின்; - ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட திருவாசகம், மணிமேகலை, சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை முதலான பழைய நூல்களிற் சிறிதுங் காணப்படாத யானைமுகக் கடவுள் வாழ்த்தும், நாமகள் வாழ்த்தும் புறப்பொருள் வெண்பா மாலையிற் காணப்படுதல்கொண்டு பெறுதுமென்க. அற்றேல், அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவரெனவும், அப் பன்னிருவரும் ஒருங்குகூடிச்செய்த நூலே பன்னிருபடல மாம் எனவும். அப் பன்னிருபடலத்தின் வழித்தாகவே புறப்பொருள் வெண்பா மாலை இயற்றப்பட்டதெனவும் அவ்வெண்பாமாலைப் பாயிரமாகிய மன்னிய சிறப்பின் என்னுஞ் செய்யுள் நுவலுதல் என்னையெனின்; அது பொருந்தாமை காட்டுதும்; பன்னிரு படலம் என்னும் புறத்திணை நூல் ஆசிரியர் தொல்காப்பியனாரை உள்ளிட்ட அகத்தியர் மாணாக்கர் பன்னிருவரால் இயற்றப்பட்ட துண்மையாயின், அதன்கட் கூறப்பட்ட புறத்திணை யிலக்கணம் தொல்காப்பியத் தின்கட் கூறப்பட்ட புறத்திணை யிலக்கணத்தொடு பெரிதும் ஒத்தல் வேண்டும்; மற்று அஃது அவ்வாறின்றி அதனொடு மாறுபடுதலானும், அப் பன்னிருபடலத்துள் தொல்காப்பியனாராற் செய்யப்பட்ட தாகச் சொல்லப்படும் வெட்சிப்படலப் பொருள் தொல்காப்பிய வெட்சித்திணைப் பொருளுக்கு முரண்பட்டு நிற்றலானும் அவ் வெட்சிப்படலம் தொல்காப்பியனார் செய்ததன்றென்பதும், அதன்கணுள்ள ஏனைப் படலங்களும் அகத்தியர் மாணாக்கராற் செய்யப்பட்டன அல்லவென்பதும் நன்கு பெறப்படும். இதுபற்றியன்றே முதலுரைகாரரான இளம்பூரண அடிகள் பன்னிருபடலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது10 எனவும், பன்னிருபடலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலான வேறுபடச் சில துறை கூறினாராகலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின், அஃது இவர்க்கு மாறாகக் கூறலும் மயங்கக் கூறலுமாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலுங் குன்றக்கூறலு மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக்காட்டின் பெருகுமாதலின், உய்த்துணர்ந்து கண்டுகொள்க11 எனவும், ஓதுவாராயினர். இவ்வாறுரைத்த இளம்பூரண அடிகளின் கருத்தோடு ஒட்டியே, அவர்க்குப்பின் தொல்காப்பியத்திற்கு உரைவகுத்த நச்சினார்க்கினியருங் கூறக் காண்டலின், பன்னிருபடலம் அகத்தியர் மாணாக்கர் பன்னிருவருஞ் சேர்ந்து செய்ததாமென்றல் வெறுங் கட்டுக்கதையே யாம் என்க. இக்கதையை மெய்யென நம்பி அதனை யெடுத்துக் கூறிய பிற்காலத்து நூலாகிய புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரவுரை அதனால் உண்மையன்றென மறுக்க. எனவே, ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்தியர் மாணாக்கரென்றலும் வெறுங் கட்டேயாம். தொல்காப்பி யனார் அகத்தியனார்க்கு மாணாக்கராய் அவர்செய்த அகத்தியத்தின் வழிநூல் செய்தது உண்மையாயின், தொல்காப்பியப் பாயிரச் செய்யுளாகிய வடவேங்கடந் தென்குமரியாயிடை என்பது அவ் வுண்மையினை எடுத்துக் கூறு மன்றோ? மற்றஃது அங்ஙனம் உரையாமல் முந்து நூல் கண்டு என வாளா மொழிதலின், அகத்தியம் தொல்காப் பியனார்க்கு முன் இருந்தது அன்றென்பது பெற்றாம். தமக்கு முன்னிருந்த தமிழ்நூல்கள் பலவற்றையும் நன்காராய்ந்த தொல்காப்பியனார் நூல் செய்தமைபற்றியே முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி என அது கூறுவதாயிற்றென்க. மேலும், ஆசிரியர் தொல்காப்பியனாராதல் தாமியற்றிய இலக்கணப் பெருநூலுள் யாண்டேனும் அகத்தியனாரைக் குறிப்பிட்டனரோ வென்றால் அதுவுமின்று; அவர் தமக்கு முன்னிருந்த ஆசிரியரைச் சுட்டும் இடங்களிலெல்லாம் என்மனார் புலவர் என்று பொதுப் படவே ஓதினார் செந்தமிழ்ப் பண்டைப் பேராசிரியராய் வயங்கிய ஆசிரியர் தொல்காப்பியனாரை வடமொழி வல்லார் ஒருவர்க்கு மாணாக்கராக்கிவிட வேண்டுமென்று விழைந்த பிற்காலத்து ஆரியப் பார்ப்பனரே அவரை அகத்தியனார் மாணாக்க ரெனவும், யமதக்கினி மகனாரெனவும் ஒரு புரட்டுக்கதை கட்டி விட்டார். இவற்றுக் கெல்லாம் தினைத்தனைச் சான்றேனுங் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழந்தமிழ் நூல்களிற் காணப்படாமையால், மேற்காட்டிய கதைகள் வெறும் பார்ப்பனக் கட்டே யாதல் தேற்றமாம். அற்றேல், இளம்பூரணர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியார் முதலான உரைகாரரெல்லாம் இக் கதையினை யெடுத்தாளுதல் என்னையெனின்; அவரெல்லாம் புறப்பொருள் வெண்பா மாலை தோன்றிய கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவராய், ஆரியப் பார்ப்பனர் கட்டிய கதைச்சிக்கலிற் சிக்குண்டோ ராகலின், அவரெடுத்தாளுதல் பற்றி அக் கதைகள் மெய்யென நம்பற்பாலன அல்லவென்க. புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் முதலான செந்தமிழ்த் தொகை நூல்களிற் போந்த மிகப் பழைய பாட்டுகளில் அகத்தியனாரைப் பற்றிய குறிப்பு ஒரு சிறிதுங் காணப்படாமை கொண்டு, அப் பாட்டுகள் இயற்றப்பட்ட காலங்களில் அகத்தியர் என்பார் ஒருவர் இங்கு இருந்திலர் என்பது தெளியப்படும். படவே, அகத்தியர் என்பார் ஒருவர் வடக்கிருந்து வந்து தமிழ்க்கு முதலிலக்கணம்; செய்தாரென்று பின்னுள்ளோர் கட்டிவைத்த கதையும் பொய்யே யாதல் தெளியப்படும். அகத்தியர் அகத்தியம் எனப் பெயரிய நூல் செய்தது உண்மையாயின், அதனோடு ஒருகாலத்ததென்று பின்னுள்ளோராற் சொல்லப்படும் தொல் காப்பியம் இன்று காறும் வழங்கா நிற்பவும் அவ் வகத்தியத்தின் ஒரு பகுதிதானும் காணக்கிடையாமை என்னையெனக் கூறி மறுக்க அற்றேல், உரையாசிரியர்கள் ஆங்காங்குத் தம்முரையுட் சிலவற்றை அகத்தியச் சூத்திரம் என்று காட்டுதலும், சிற்றகத்தியம், பேரகத்தியம், என்னும் பெயராற் சில சூத்திரங்கள் உலவுதலுங் காண்டுமாலெனின்; வடசொற்களும் பிற்றை ஞான்றை யெளிய தமிழ்ச்சொற்களும் கொண்டு ஆக்கப்பட்டுத் திட்ப நுட்பம் இன்றி உலவும் இப் போலிச் சூத்திரங்களைத் தனித் தமிழ்வளனுந் திட்பநுட்பச் செறிவும் வாய்ந்து திகழும் தொல்காப்பியச் சூத்திரங்களோடு ஒப்பிட்டு நோக்குந் தமிழறிஞர் எவர்தாம் அவை தொல்காப்பிய காலத்தில் உண்டான அகத்தியச் சூத்திரங்களாமெனக் கூற ஒருப்படுவர். அப்போலிச் சூத்திரங்கள் பின்னையோராற் கட்டப்பட்டு அகத்தியர் பெயர் புனைந்து விடப்பட்டனவாதல் தமிழிலக்கணம் வல்லார் நன்குணர்வரென மறுக்க. அற்றாயினும், அகத்தியர் எனப் பெயரிய வடநாட்டு முனிவர் ஒருவர் தென்றமிழ்நாடு போந்து தமிழராய்ந்திருந்தார் என்று ஓர் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளாக வழங்கிவரும் பழைய வரலாறு பொய்யாமோ வெனின்; அது பொய்யாகாது; இருக்குவேதத்திற் பலபதிகங்களை இயற்றிய அகத்தியர் மிகப் பழைய காலத்தே இருந்தவர்; அவர் தெற்கேயுள்ள தமிழ்நாடு புகுந்தவர் அல்லர்; தமிழறிந்தவரும் அல்லர். மற்று அவர்க்குப் பன்னெடுங்காலம் பின்னிருந்த மற்றோர் அகத்தியரே இத் தமிழ்நாடு புகுந்தவராகக் காணப்படுகின்றனர். கி.மு. முதல் நூற்றாண்டிற் கடைச்சங்கத் தலைமைப் புலவராய் வயங்கிய ஆசிரியர் நக்கீரனார், மகளிர் கூந்தற்கு இயற்கை மணம் உண்டென பதை அவர்க்கு அறிவித்தற்பொருட்டு வடக்கிருந்து மலைய மலையில் வந்திருந்த அகத்தியர் என்பார் அவர்பால் வருவிக்கப் பட்டு அவர்க்கு அவ்வுண்மையினை அறிவுறுத்தினா ரெனவும் ஒரு வரலாறு பெரும்பற்றப்புலியூர் நம்பி, தாம் இயற்றிய திருவிளையாடற் புராணத்திற் பாடியிருக்கின்றார். 12 இதுகொண்டு உள்ளதை உள்ளவாறே எடுத்துரைக்கும் தூய தமிழ்ச்செய்யுள் வழக்கோடு, உள்ளதற்கு மாறாவதும் இல்லாதவற்றை யெடுத்துரைப்பதுமாகிய வடமொழிச் செய்யுள் வழக்கும் தமிழ்மொழிக் கண் வந்து கலந்தமையும், அங்ஙனம் அதுவந்து கலத்தற்கு ஏதுவாய்நின்ற அகத்தியர் என்னும் வடநாட்டு முனிவரின் வருகையும் எல்லாம் ஆசிரியர் நக்கீரனார் காலத்தில் நிகழ்ந்தன வாதல் நன்கு பெறப்படும். படவே, நக்கீரனார் காலத்தவராகிய அகத்தியரே தமிழ்நாடு புகுந்தவரல்லாமல், அவர்க்குமுன் அப்பெயர் புனைந்தார் பிறர் ஒருவர் ஈண்டு வந்தமைக்கு ஏதொரு சான்றும் மிகப் பழைய தமிழ்ச் செய்யுட்களில் எட்டுணையுங் காணப்படாமையின், நக்கீரனார்க்கு மூவாயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்னிருந்த ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனாரை அகத்தியனார் மாணாக்கரென்றல் பெரியதொரு புரட்டுரையேயா மென்க. அவற்றன்று அகத்தியர் என்னும் முனிவர் தாம் இருக்கும் உடலத்திலேயே இறப்பின்றி எத்தனையோ நூறாயிரம் ஆண்டு உயிரோடு இருப்பவராகலின், நக்கீரனார்க்குப் பல்லாயிரம் ஆண்டு முன்னிருந்த அகத்தியரே நக்கீரனார் காலத்தும் இருந்தாரெனக் கொள்ளாமோவெனிற்; கொள்ளாம். நூறாண்டிற்கு மேல் இரு நூறாண்டிற்குள்ளாக உயிர் வாழ்வார் சிலர் தம்மையே அருகி ஒரோவிடத்துக் காண்கின்றாமன்றி, இருநூறாண்டிற்குமேல் உயிரோடிருந் தாரை யாண்டுங் காணாமையானும், மிகப் பழையதாகிய ஈசாவாசியோ பநிடதம் மக்கள் வாழ்நாளை நூறாண்டின் அளவாகவே வைத்து வரையறுத்துக் கூறுதலானும்,13 எங்கும் நிகழும் உண்மை நிகழ்ச்சிக்கு மாறாக அங்ஙனம் அகத்தியரென்பாரைப் பன்னூறாயிரம் ஆண்டு ஒருபடலத் திலேயே உயிர் வாழ்வாராக உரைப்பது வரலாற்று நூலாரின் உண்மை யாராய்ச்சிக்கு ஒரு சிறிதும் இசையாதென விடுக்க. ஆகவே, இருக்குவேத காலத்து அகத்தியரும் நக்கீரனார் காலத்து அகத்தியரும் வேறு வேறாவர் என்பதூஉம் நக்கீரனார் காலத்து அகத்தியரே தமிழ்நாடு புகுந்தவராவ ரென்பதூஉம் துணிபொருளாமென்க. அற்றேல், இராமன் என்னும் வடநாட்டு மன்னன் ஒருவன் இலங்கையில் அரசுபுரிந்த இராவணன் என்னும் அரசன்மேற் படையெடுத்துவந்த ஞான்று. அகத்தியர் இருந்த பாழிக்குச் சென்று அவரால் வரவேற்கப்பட்டானென வடமொழி வான்மீகி இராமாயணம் புகலாநிற்கின்றது. அதனால், அகத்தியர் இராமன் காலத்தவரென்பது புலனாதலின், அவர் தென்னாட்டின்கட் புகுந்தது நக்கீரனார் காலத்துக்குப் பன்னூறாண்டின் முன்னரே யாதல்வேண்டும்; ஆகலான், அவரை நக்கீரனார் காலத்தவராக ஓதுங் கதை பொய்யாகவே கொள்ளற்பால தெனின்; அற்றன்று; இராமாயணத்தின்கட் சொல்லப்பட்ட கதையை உண்மையென்று நம்பத் தலைப்பட்டமையால்வந்த குழறுபடைகட்கு ஓர் அளவே யில்லை. அக்கதை உண்மையாக நடந்ததன்று. உலக இயற்கையிற் காணப்படும் நிகழ்ச்சிகள் சில, வல்லோன் ஒருவனால் ஒரு கதையாக ஆக்கப்பட்டன. இருக்குவேதத்திற் சீதை யென்னும் அணங்கு வயல் நிலங்களுக்குத் தெய்வமாகவும் உழவுசாலாகவும் சொல்லப்படுகின்றாள்; மழைக் கடவுளாகிய இந்திரன் அச் சீதைக்குக் கணவனாகவும் ஆண்டே சொல்லப்படுகின்றான்.14 இதற்கு ஏற்பவே, வான்மீகியார், தமது இராமாயணத்தும் சீதை நிலத்தின்கண் உழவுசாலினின்றும் பிறந்தாள் எனவும், மறித்தும் முடிவுநாளில் நிலத்தின்கண்ணே மறைந்து போயினாளெனவும் புகன்றார்.15 ராம் என்னுஞ் சொல் இந்திரனுக்குரிய ஒரு பெயராகவே இருக்குவேதத்திற் பல பதிகங்களினுங் காணப்படுகின்றது.16 ஆகவே, மழைக் கடவுளுக்கும் நில மகளுக்கும் உள்ள இயற்கை இயைபே. பின் வந்த புலவோரால் இராமனுக்கும் சீதைக்கும் இடைநிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியாக வைத்து இராமாயணம் என்னும் ஒரு கதையாகக் கட்டப்பட்டது; இஃது இல்லோன் தலைவனாக இல்லது புணர்க்கும் நாடகவழக்குப் பற்றி வந்ததென்பதனை அறியாதார் இது தன்னை மெய்யாக நம்பி அதனாற் பெரிதும் இடர்ப்படுவாரயினர். இஃது இல்லது புணர்க்கும் நாடகவழக்குப் பற்றி வந்ததென்பதனை நன்காராய்ந் துணர்ந்த புலவோரெல்லாம் இராமாயணத்தை ஒரு வரலாற்ற நூலெனக் கொண்டிலர்.17 கிறித்து பிறப்பதற்கு 380 ஆண்டுகளுக்கு முன்னமே எழுதிவைக்கப்பட்ட புத்தசமய நூலாகிய ஜாதககாதைகளுள் ஒன்றாகிய தசரத ஜாதகம் என்பது இராமன் கதையைக் கூறுகின்றது. தசரதன் என்னும் அரசன் தன் இரண்டாம் மனைவிக்கு அஞ்சித், தன் முதன் மனைவியின் மக்களாகிய இராமன், இலக்குமணன், சீதை என்னும் மூவரையும் தான் இறக்கும் பன்னிரண்டு ஆண்டு அளவும், தனது நகரத்தைவிட்டுச் சென்று வேறொரு நகரத்திலேனும் அன்றியொரு காட்டிலேனும் மறைந்திருந்து, தான் இறந்தவுடன் திரும்பிவந்து தனது அரசியலைக் கைக்கொள்க வென ஏவினா னெனவும், அங்ஙனமே அம் மூவரும் இமயமலைச் சாரலிற் சென்று வைகிப் பன்னீரியாண்டு கழிந்தபின் தம் நகரத்திற்குத் திரும்பிவந்தனரெனவும், திரும்பிவந்த அம்மூவரும் மூத்தவனாகிய இராமன் சீதையை மணந்துகொண்டு செங்கோல் ஒச்சினானெனவும் அத் தசரத ஜாதகம் புகலா நிற்கின்றது. இதன்கட் சீதையை இராமனோடு உடன் பிறந்த தங்கையாகவும், பின்னர் அவளையே அவன் மணந்து கொண்டதாகவும் சொல்லுங் கதையை உற்று நோக்குமிடத்து, இஃது உண்மையாக நடந்த தன்றென்பதூஉம் வானும் நிலனும் படைப்புக் காலத்தே மாயை என்னும் ஒரு முதற்பொருளினின்றே தோன்றுதல்பற்றி அவ்வானின் தெய்வமாகிய இராமமெனன்னும் இந்திரனும் நில அணங்காகிய சீதையும் உடன்பிறந்தவரென்று ஓதப்படு வாராயின ரென்பதூஉம், பின்னர் அவ்வானினின்று பொழியும் மழையும் அம் மழையை ஏற்கும் மருதநிலமும் கணவனும் மனைவியும் இயைதல் போலுதலின் இராமனுஞ் சீதையும் மணந்து கொண்டாரென அவ்வாறு அதன்கட் கூறப்படு வாராயின ரென்பதூஉம் நன்கு விளங்கா நிற்கும். இவ்வளவே அத் தசரத ஜாகத்திற் சொல்லப்பட்ட தல்லாமல், இராமன் தெற்குநோக்கிச் சென்றானெனவாதல், அவன்றன் மனைவி யாகிய சீதையை இராவணன் எடுத்துப் போயினா னெனவாதல், குரங்குகளைப் படைதிரட்டிக்கொண்டு இலங்கை ஏகி இராவணனொடு பொருது அவனை மடித்துச் சீதையை மீட்டு வந்தானெனவாதல் அதன்கண் ஏதுஞ் சொல்லப் படவில்லை. அதன்கட் காணப்படாத இவையெல்லாம் அத் தசரத ஜாதகத்திற்குப் பின்னெழுந்த வான்மீகி இராமாயணத் தின்கட் புதியவாய்ச் சேர்க்கப்பட்டனவாதல் வேண்டுமென்பது இதனால் நன்கு புலனாகின்றதன்றோ? அங்ஙனமாயின், வான்மீகி இராமாயணம் என்பது தசரத ஜாதகத் திற்குப் பின் உண்டான தொன்றென்று கோடற்கு மேற்கோள் என்னையெனின்; பௌத்த வேந்தனாகிய அசோகனது கால்வழி ஒடுங்கியபின் கி.மு. 185திற் சுங்கமரபினை நிலைநாட்டிய புஷ்பமித்திரன் (புஷ்யமித்திரன்) பௌத்த மதத்திற்குப் பெரும் பகைவனாய்த் தோன்றிப் பார்ப்பன வேள்வி மதத்தைப் பெரிதும் பரவச் செய்த காலத்திலேதான் பௌத்த மதம் மிகவும் இகழ்ந்து பேசப்படுவதாயிற்று.18 இவ்வாறு பௌத்த மதத்தை இழித்துரைக்கும் உரை வான்மீகி இராமாயணத்தின் இடையே.19 காணப்படுதலின், இது பௌத்தமதம் ஒடுங்கிய புஷ்பமித்திரன் காலத்தில் இயற்றப்பட்ட தென்னும் உண்மை இனிது புலனாம். மேலும், அப் புஷ்பமித்திரன் காலத்தில் இருந்த பதஞ்சலி முனிவர் பாணினி முனிவரது வியாகரணத்திற்கு வகுத்த பேருரையின் குறிப்பு. அவ் வான்மீகி இராமாயண உத்தர காண்டத்தின் 36ஆவது சருக்கத்தின்கட் காணப்படுதல் கொண்டும்.20 இவ் விராமாயணம் எழுதப்பட்ட காலம் அப் பதஞ்சலிமுனிவ ருரைக்கும் பிற்பட்டதென்பது துணியப்படும். ஆகவே, தசரத ஜாதகத்திற்கு இருநூறாண்டு பிற்பட்டுத் தோன்றிய வான்மீகி இராமாயணம். அத் தசரத காதையிற் காணப்படாத கதைகளைப் புதியவாகப் படைத்திட்டுக்கொண்டு பார்ப்பன மதத்தைத் தென்னாட்டிற் பரப்ப முயன்றமை தெள்ளிதின் விளங்கும். இராமன் தன் தந்தையின் ஏவலால் இமயமலைச் சாரலிற்சென்று வைகினானென்று தசரத காதை கூறாநிற்க. இராமாயணமோ அவன் விந்தமலைக்குத் தெற்கே தண்டகாரணியத்தில் வந்து சேர்ந்தான் என்றது. இதனாற், பண்டைப் பார்ப்பனர் தமது கொள்கையைத் தெற்கே கொணர்ந்தமை பெறப்படுமே யல்லாமல், இராமன் தெற்கே போந்தமை பெறப்பட மாட்டாது. இனி, இலங்கை வேந்தனாகிய இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதும், இராமன் குரங்கினங்களைப் படைகூட்டிச் சென்று இராவணனொடு பொருது அவனைக் கொன்று அவளை மீட்டு வந்ததும் தசரத ஜாதகத்திற் காணப்படாதிருக்கப் பின்வந்த இராமாயணத்திலோ இவையெல்லாம் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதனால், இவையெல்லாங் கற்போர்க்கு இன்பம் பயத்தல் வேண்டிக் காப்பியப்புலவன் தன் கருத்தாற் படைத்திட்டுக் கொண்ட வெறுங்கதையேயல்லாமல் உண்மையாய் நிகழ்ந்தன அல்லவென்பது தெற்றென விளங்கா நிற்கும். இதனாலன்றோ கி.பி. முதல் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழந்தமிழ்ப் பாட்டுக்களில் எங்கும் இராமனைப் பற்றி யாதல் இராவணனைப் பற்றியாதல் எதொரு குறிப்புங் காணப்பட வில்லை. தமிழகத்தின் கண்ணதாகிய இலங்கையில் இராவணன் எனப் பெரிய பெருவேந்தன் இருந்தது உண்மையாயின், அவனுக்கும் இராமனுக்கும் பெரும்போர் நிகழ்ந்தமை மெய்யாயின் எத்தனையோ சேர சோழ பாண்டியர்களையும் ஏனையோரையுந் தம்முடைய பாட்டுகளிற் குறிப்பிட்ட பண்டை நல்லிசைத் தமிழ்ப் புலவர்கள் அவ் விருவரையும் அவர் தமக்குள் நடந்த போரையுங் குறியாது விடுவரோ? புறநானூற்றில் ஊன்பொதிபகங்கடையார் என்னும் புலவர் ஒருவர் மட்டுமே இராமாயண கதையைத் தமது பாட்டொன்றிற் குறிப்பிட்டிருக்கின்றார். அதனால், இவர் இராமாயண கதை தமிழ்நாட்டில் பரவத் துவங்கிய கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்தவராதல் வேண்டும். இராமாயண கதை தமிழ்நாட்டில் வந்து பரவியும். அது மாபாரத கதையைப் போலத் தமிழ்ப்புலவர் உள்ளத்தைக் கவர்ந்திலது; ஏனெனில் உள்ளதை உள்ளவாறே எடுத்துரைக்கும் உண்மைச் செந்தமிழ்ச்செய்யுள் வழக்கிற் பழகிய பழந்தமிழ்ப் புலவர்க்கு, இல்லதைப் புனைந்துகூறும் இராமாயணம் சிறிதும் ஒவ்வா தாயிற்று. மற்று, மாபாரதக் கதையோ பெரும்பான்மையும் உண்மையாய் நிகழ்ந்த நிகழ்ச்சியினைக் கூறுவதாகலின், அது தலைச்சங்க காலத்திருந்த முரஞ்சியூர் முடிநாகராயர் முதற் பிற்காலத்திருந்த புலவர் ஈறாகத் தமிழ்நாட்ட றிஞராற் பெரிதுங் கொண்டாடப்படுவ தாயிற்று. கி.பி. இரண்டாம் நூற்றாண் டிலிருந்த பெருந்தேவனார் ஒருவரும், ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்த பெருந்தேவனார் மற்றொருவரும் பழைய நாளிலேயே மாபாரதக் கதையைத் தமிழில் மொழி பெயர்த்துப் பாடினர். இராமாயணமோ கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற் கம்பர் மொழிபெயர்த்துப் பாடும் வரையில், தமிழ்ப் புலவர் எவராலும் பாராட்டி மொழி பெயர்க்கப் படாமை பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாற்று. அல்லதூஉம், பாரதக்கதை நிகழ்ச்சியில் தொடர்புற்று நிற்குங் கண்ணபிரான் திருமாலின் வடிவமாகக் கருதித் தமிழ்நாட்டிற் பழைமைதொட்டு வழங்கப்பட்டு வந்தாற்போல, இராமன் வணங்கப்படாமையை உற்று ஆராயுங்காலும் கண்ணனைப்போல் இராமன் உண்மையாயிருந்தவனல்லன் என்பது விளங்கா நிற்கும். புறநானூறு, அகநானூறு முதலான தொகை நூல்களிற் காணப்படும் பழைய பாட்டுகளில் மட்டுமேயன்றித், திருமாலுக்கென்றே பாடப்பட்ட பண்டைத் தமிழ்ப் பாக்களும் அடங்கிய பரிபாடலிலுங் கண்ணபிரான் வணக்கமேயல்லாமல், இராமனைப் பற்றிய குறிப்பு ஒரு சிறிதாயினுங் காணப்படவில்லை. ஆதலால், இராம இராவணப் போர் தென்னாட்டின்கண் உண்மையாக நடந்ததன் றென்பதூஉம். பரிபாடற் பாட்டுகள் இயற்றப்பட்ட காலத்தில் இராமாயண கதை தென்னாட்டிற்கு வரவில்லையென்பதூஉம் நன்கு பெறப்படும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னுந் தனித்தமிழ்க் காப்பியங்கள் இயற்றப்பட்ட காலத்திலேயும்கூடக் கண்ண பிரானுக்குக் கோயில்கள் இருந்தமை புலனாகின்றதன்றி, இராமனுக்குக் கோயில்கள் இருந்தமை புலனாகவில்லை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திருவாசகந், திருக்கோவையாரிலுங் கண்ணபிரான் பெயர் மட்டும் ஆங்காங்குக் காணப்படுவதல்லாமல், இராமன் பெயர் ஓரிடத்தாயினுங் காணப்படவில்லை. இவைகொண்டு கி.பி. மூன்றாம் நூற்றாண்டுவரையில் தென்னாட்டவரால் இராமன் ஒரு தெய்வமாகக் கருதி வணங்கப்படவில்லை யென்பது தானே போதரும். வைணவ சமயத்திற்குரிய பன்னீராழ்வார்களில் முதல்வரான பொய்கையாழ்வார் காலத்திலுங்கூட இராமனது வணக்கம் மிகுந்த பரவாமை யாற்போலும். அவர் தமது திருவந்தாதியிற் கண்ணன், வாமனன், வராகன், நரசிங்கன் முதலான திருமால் வடிவங்களையே எங்கும் மிகுத்துப் பாடி, மலையாற் குடைகவித்து, அடைந்த அருவினையோடு என்னும் இரண்டு செய்யுட்களில் மட்டும் இராமனை அருகி வழிபட்டுப் பாடியிருக்கின்றார்! இதனாற், பொய்கையாழவாரது காலத்திலே தான் இராமாயண கதையும், அதன்வழியே இராமனது வணக்கமும் இத் தென்றமிழ் நாட்டிற் பரவத் துவங்கினமை பெறப்படும். அற்றேற், சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவையிலும் வேறு சில இடங்களிலும் இராமன் கதை சொல்லப்பட்டவா றென்னையெனின்; இராமாயண கதை ஆண்டுச் சொல்லப்பட்டதே யல்லாமல், அவ்விடங்களிலும் இராமன் பெயர் காணப்படாமையும், அக் கதைக்குரியோன் மாயோனாகவே கூறப்பட்டமையும், அம்மாயோன் வழிபாடுதானும் ஆயர் தமக்குள் வழங்கினமையும் உற்று நோக்குங்கால் உண்மையில் இல்லாத இராமனைத் தெய்வமாகக் கோடல் பழைய தமிழ்மக்கட்கு உடம்பாடின்மை பெற்றாம். ஊன்பொதி பசுங்குடையார் தமது பாட்டுள் இராமன் பெயர் குறித்தோதினரேனும், அவனை அவர் ஒரு தெய்வமாக விதந்தோதாமையும் நினைவிற் பதிக்கற்பாலதாகும். எனவே, இராமாயணம் இத் தமிழ நாட்டின்கண் மிக்குப் பரவத்துவங்கிய காலமும் இராமனும் மாயோன் வடிவமாகக் கருதப்பட்டு வணங்கப்படலான காலுமுங் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிற் காணப்படாமையாற், சமண்மதம் ஒடுங்கிய ஏழாம் நூற்றாண்டின் பிற்பாதிக்குப் பின்னர்த்தான், அவ்விரண்டும் மேலோங்கலாயின வென்பது பெறற்பால தாகும். இம் முறையால் நோக்கும்வழிப் பொய்கையாழ்வாரது காலமும் ஏழாம் நூற்றாண்டின் பிற்பாதிக்கண்ணதாதலும் தானே பெறப்படும். மேற்காட்டியவாற்றாற் கி.மு. முதல் நூற்றாண்டின் கண் இயற்றப்பட்ட வான்மீகி இராமாயணத்திற் போந்த இராமன் கதை உண்மையாக நடந்ததல்லாமையால், அகத்தியர் இராமன் காலத்தவரென்றலும் உண்மையன்றென ஓர்க. மேலும் வான்மீகி இராமாயணம் அகத்தியர் இருப்பினை நிகழ்காலத்தின்கண் வைத்து உரைப்பதோடு, ஒன்றற்கொன்று பெரிதுஞ் சேய்த்தாக வுள்ள அகத்தியர் இருப்பிடங்கள் பலவற்றை எடுத்தோதுதலின் அகத்தியப் பெயர்பூண்ட முனிவரர் பலர் இவ்விந்திய நாடெங்கணும் இலங்கையினும் அக்காலத்திருந்தனர் என்பது பெற்றாம். ஓர் அகத்தியர் வடக்கே கோசலநாட்டின்கண் ஓடும் வேதசுருதி யாற்றங்கரையை யடுத்த ஓர் இடத்தில் இருப்பவராகச் சொல்லப்படுகின்றார்.21 மற்றோர் அகத்தியர் விந்திய மலைக்குத் தெற்கே சேய்மைக்கண் உள்ள கோதாவரி யாற்றங்கரையை யடுத்ததோர் இடத்தில் இருப்பவராகச் சொல்லப்படுகின்றார்.22 பின்னும் ஓர் அகத்தியர் மலையமலை மேல் இருப்பவராகச் சொல்லப்படு கின்றார்.23 இன்னும் ஓர் அகத்தியர் இலங்கைத்தீவின் தெற்கே குஞ்சரமலையி லிருப்பவராகச் சொல்லப்படுகின்றார்.24 எனவே, அகத்தியப் பெயர்கொண்ட முனிவரர் பலர் கி.மு. முதல் நூற்றாண்டில் இவ் விந்தியநாட்டினும், இலங்கையினும் இருந்தமை வான்மீகி இராமாயணத்தைக் கொண்டே துணியப்படுதலின், அப்பலருள் தமிழ்நாட்டின் தெற்கே மலையமலைக்கண் வந்து வைகிய அகத்தியரே நக்கீரனாக்கு வடநூற்பொருள் அறிவுறுத்தின வராதல் வேண்டுமென்றும் தெளிக. கி.பி. இரண்டாம் நூற்றாண்டின்கண் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலையினாதல், அவற்றிற்கு முற்பட்ட தனிச் செந்தமிழ்த் தொகை நூல்ளினாதல், அகத்தியர் தமிழ்க்கு இலக்கணஞ் செய்தாரென்பது ஒரு சிறிதுங் காணப்படா மையின், அவர் அவ்வாறு தமிழில் ஏதும் நூல் யாத்ததில்லை யென்பது தெளியப்படும். உண்மை இவ்வாறிருக்கப் பிற்றை ஞான்று வடமொழியிற் புராண கதைகளைத் தம் மனங்கொண்டவாறு படைத்தெழுதிய பார்ப்பனரே, அகத்தியர் வடக்கிருந்து வந்து தமிழுக்கு இலக்கணஞ் செய்து தமிழை வளம்படுத்தித், தொல்காப்பியர் முதலான மாணாக்கர் பன்னிருவர்க்கு அதனைச் செவியறிவுறுத் தினார் என்று ஒரு பெரும் பொய்க்கதை கட்டிவிட்டார். கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குப் பின்வந்த நூலாசிரியர் உரையாசிரியர் எல்லாரும் அப் பொய்க்கதையினை மெய்யென நம்பி அதனைத் தம் நூலுள்ளும் உரையுள்ளும் தழீஇ எழுதினார்; ஆகவே, பின் வந்தோர் கூறும் நூலுரை கொண்டு அக்கதை நம்பற்பால தன்றென விடுக்க. அற்றேற், கி.மு. 380 ஆம் ஆண்டுகட்கு முற்பட்ட அகத்திய ஜாதகத்தில் அகத்தியர் என்பார் ஒருவர் வடக்கிருந்து தென் கடலில் உள்ள காரைத்தீவில்25 வந்து தவம்புரிந்தமை நுவலப்படுதலின், அவ் வகத்தியரே தமிழ்க்கு இலக்கணஞ் செய்தாரென்று கொள்ளாமோ வெனிற்; கொள்ளாமன்றே, என்னை? அகத்திய ஜாதகத்திற் சொல்லப்பட்ட அகத்தியர் என்பார் புத்த சமயக் கொள்கையைத் தழுவினவராய்த் தாம் பிறந்த குடியின் செல்வ வாழ்க்கையில் வெறுப்புற்றுத், துறவுபூண்டு, தென்கடற் கண்ணதாகிய காரைத்தீவில் வந்து தனியிருந்து நோற்றமை ஒன்றே ஆண்டுக் குறிக்கப்பட்டதன்றி, அவர் மலையமலைக்கண் வந்து வைகித் தமிழ்க்கு இலக்கணஞ் செய்தாரென்பது ஓர் எட்டுணையுங் கூறப்படாமையின் என்பது, என்று இத்துணையுங் கூறியவாற்றால், அகத்தியப் பெயர் பூண்டார் பலரில் ஒருவர் கி.மு. முதல் நூற்றாண்டில் இத் தென்னாடு போந்து இங்குள்ளார் சிலர்க்கு வடநூற்பொருளை அறிவுறுத்தினார் என்னும் அத்துணையே உண்மையாவதா மன்றி, அவர் கிறித்து பிறப்பதற்குப் பன்னூற்றாண்டுகட்கு முன்னரே தமிழ்நாடு புகுந்து தமிழ்க்கு முதல் இலக்கணஞ் செய்தாரென்பதும், அவர் தொல்காப்பியனார் யமதக்கினி மகனாரென்பதும் உண்மையாகா வென்க. இவையெல்லாம் பிற்காலத்தெழுந்த பார்ப்பனப் புராணப் பொய்யுரையா மென்றே கடைப்பிடிக்க, கி.மு. முதல் நூற்றாண்டில் நக்கீரனாரோடு ஒருங்கிருந்த அகத்தியர், கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றையும், அவரால் வழுத்தப்பட்ட ஏனை நாயன்மார் வரலாறுகளையும் விரித்து அகத்திய பக்தவிலாசம் என ஒருநூல் வடமொழியில் இயற்றினாரென்றலும், அதனைத் தமிழில் மொழிபெயர்த்து ஆசிரியர் சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் பாடினாரென்றலும். அங்ஙனமே முழுப் புரட்டுரையாதல் காண்க. சேக்கிழார் அருளிச் செய்த இந் நூலையே எவரோ ஒரு பார்ப்பனர் வடமொழியில் மொழிபெயர்த்து வைத்து அதற்கு அகத்திய பக்தவிலாசம் எனப் புனைவு பெயர் கட்டிவிட்டார் என்க. இனித், திருமந்திரநூன் முகவுரைகாரர், காசுமீரத்தின் கட் டோன்றிய பிரத்திய பிஞ்ஞா தரிசனமே சைவசித்தாந்தத் திற்குப் பிறப்பிடமாம் என்றதும் பொருந்தாமை காட்டுவாம்; காசுமீரத்திற் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்த வசுகுப்தர் என்பவராற் கண்டெடுக்கப்பட்ட சிவசூத்திரங்க ளுக்கு அவர் உரை எழுதின காலந்தொட்டுப் பிரத்திய பிஞ்ஞை என்னும் சைவக் கொள்கை. காசுமீரத்திற் பரவத் துவங்கி, அவர் வழியில் வந்த அபிநவ குப்தர், க்ஷேமராஜா என்பவர்கள் காலம் வரையில் அஃதாவது கி.பி பதினோராம் நூற்றாண்டு வரையில் அந்நாட்டில் திகழ்ந்ததொன்றாம்.26 இப் பிரத்திய பிஞ்ஞா தரிசனத்திற்கு முதல் நூலாகிய சிவ சூத்திரங்கள், சிவாகமங் களாகிய சைவ தந்திரங்களினின்று தோன்றினவாமென்றும், இச் சைவதந்திரக் கொள்கைகள் தென்னாட்டிலே வளர்ந்து ஓர் ஒழுங்கான கோட்பாடாகக் கி.பி. முதல் நூற்றாண்டுகளிலே முறைப் படுத்தப்பட்டன வென்றும், சைவ தந்திரமானது வடக்கே சென்று கூர்ச்சர நாட்டில் இலகுலீசபாசுபதம் ஆகவும், காசுமீரத்திற் பிரத்திய பிஞ்ஞா தரிசனம் ஆகவும் வழங்கலாயிற்றென்றும் இவற்றை நன்காய்ந்த திருவாளர் சீநிவாச ஐயங்காரவர்கள் இனிது விளக்கிக் காட்டி யிருக்கின்றார்கள்.27 இவ்வாறு சிவாகமங்களும் அவற்றின் கோட்பாடுகளும் இத்தென்றமிழ் நாட்டிற் பிறந்து வளர்ந்து உருப்பெற்றச் சைவ சித்தாந்தத் தனி முதல்களாயிருப்பவும், இவையே வடக்கே சென்று பிரத்திய பிஞ்ஞா தரிசனத்தைக் காசுமீரத்தில் தோற்றுவித்தனவா யிருப்பவும், இவ் வுண்மையை அடியோடு புரட்டி வடநாட்டுப் பிரத்திய பிஞ்ஞையே தமிழ்நாட்டுச் சைவ சித்தாந்தத்திற்குத் தாயகமாயிற்றென்று திருமந்திரப் பதிப்பின் முகவுரையில் எழுதிய பார்ப்பனர் தமது கொள்கையை நாட்ட வேறு யாதுதான் சொல்லார்! காசுமீரத்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியிற் றுவங்கிய பிரத்திய பிஞ்ஞையானது, அதற்கு முன்னரே கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்நாடெங்கணும் பரவியிருந்ததும், திருமந்திரநூற் களஞ்சியத்தில் மிகுதியாகச் சேர்த்து வைக்கப்பட்டதுமாகிய சைவ சித்தாந்தத்திற்குத் தாயகமா மென்றல் என் முப்பாட்டனைப் பெற்றவன் யான் என்பானுரையோடொப்ப வைத்து எள்ளி நகையாடற் பாலதாமென விடுக்க. இவ்வாற்றாற், பழைய சிவாகமங்கள் என் றோதப்பட்டனவெல்லாம் திருமந்திர நூலையொப்பத் தமிழ் நாட்டில் தமிழ் மொழியிலேயே ஆக்கப்பட்ருந்தனவேயா மென்பதூஉம், திருவாதவூரடிகளாலுந் திருமூலநாயனாராலுங் குறிப்பிடப்பட் ஆகமங்களென்பன கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்த தமிழாகமங்களே யல்லாமற் பண்டைத் தமிழ்த் தச்சுநூல்களின் மொழிபெயர்ப்பாய் இஞ்ஞான்று உலவும் காமிகம், காரணம் முதலான வடநூல்கள் ஆகா வென்பதூஉம், இவ் வாகமங்களுக்கு உபாகமங்களாய்ப் பின்னர்ச் சேர்க்கப்பட்டிருக்கும் பௌட்கரம், மிருகேந்திரம் முதலான வடநூல்களே பண்டைத் தமிழ்ச் சிவாகமங்களினின்றும் மொழிபெயர்த்த அறிவுப் பெருநூல்களாம் சிவாகமங்கள் ஆகுமல்லது ஏனைக் காமிகம், முதலாயின அச் சிவாகமங்கள் ஆதல் செல்லாதென்பதூஉம் உணர்ந்துகொள்க. இங்ஙனமாகத் திருவாதவூரடிகளாற் குறிப்பிடப்பட்ட ஆகமங்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின் மொழிபெயர்த்துச் செய்யப்பட்ட காமிகம் முதலிய வடநூல்கள் அல்லாமையால், இவ் வுண்மையை ஆராய்நது பாராமல், ஆகமம் என்றதே பற்றி இவை தம்மையே அடிகள் குறித்தார் எனப் பிறழக் கொண்டு, அவ்வாற்றால் அடிளது காலத்தைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னதாக்கப் பெரிது முயன்ற தமிழ் வரலாறு உடையாரது முயற்சி வெறும் பாழாய் முடிந்தமை காண்க. அஃதொக்குமாயினும், காமிகம் முதலியன திருக்கோயில் கள் கட்டுவிக்கும் முறைகளை வகுத்தல்பற்றி அவை தமிழிலிருந்த பண்டைத் தச்சு (சிற்ப) நூல்களினின்றும் மொழிபெயர்த்துச் செய்தனவாமென்று மேலே கூறிய தென்னை? தமிழில் தச்சு நூல்கள் உண்மைக்கு மேற்கோள் கண்டிலமாலெனின்; அறியாது வினாயினாய்; கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடையிலிருந்த வராகமிகிரர் தாமெழுதிய பிருகத்சம்ஹிதையில் நக்நஜித் என்னுந் திராவிடரால் எழுதப்பட்ட சிற்பசாதிரம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் கொண்டு.28 கி.பி. ஆறாம் நூற்றாண்டின் கண் இருந்தமை நன்கு புலப்படும். அதனால், திருக்கோயில் அமைக்கும் வகைகளை விரித்துரைக்கும் காமிகம் முதலிய நூல்கள், பழையகாலத் திருந்த தமிழ்த்தச்சு நூல்களின் மொழி பெயர்ப்பாதல் ஒரு தலையாமென்க. காமிகம் முதலியவற்றிற் காட்டிய முறைப்படி அமைக்கப்பட்ட பழைய சிவபிரான் திருக்கோயில்கள் இத் தென்றமிழ் நாட்டிலன்றி, வடநாட்டின் கண் எங்குங் காணப்படாமையின், இவ்வமைப்பினை வகுக்குங் கற்றச்சு நூல்கள் தமிழ்நாட்டிற்கே உரியனவாமென்று கடைப்பிடிக்க. அடிக்குறிப்புகள் 1. திருமந்திரம், 1619 2. திருநல்லூர்த் திருத்தாண்டகம், 9 3. திருக்கழுமலப் பதிகம், அயிலுறுபடையினர் என்னுஞ் செய்யுள் 4. தொல்காப்பியம் செய்யுளியல். 179 5. See T. Goldstucker’s Panini, p.52. Panini office publication 6. அதர்வவேதம். 19, 54, 3 7. குயில்வாய் அன்ன கூர்முகை யதிரல். பயிலாது அல்கிய பல்காழ் மாலைபுறநானூறு. 269 8. 1 மாபாரதம் வனபர்வம் 1234-11255 2, 9, - 14, 48 9. பாகவதபுராணம் 19, 43, 8 10. தொல்காப்பியம் புறத்திணையியல், 2 ஆஞ் சூத்திரவுரை 11. அதுவே, 5 ஆஞ் சூத்திரவுரை 12. 18 குறுமுனிக்குத் தமிழுரைத்த திருவிளையாடல் 13. ஈசாவாசியம், 2 14. இருக்குவேதம் 4,57 15. வான்மீகி இராமாயணம் 1, 66: 7, 97 16. இருக்குவேதம் 1,10: 1, 51: 1, 52 17. See for instance, Prof. A. Weber’s The History of Indian Literature, p.192 Prof. A.A. Macdonall’s A History of Sanscrit Literature, p. 312. Dr. A. Barth’s Religions of India, pp.176-177 and Dr. V.A. Smith’s The Oxford History of India, p.30. 18. The Cambridge History of India, Vol. 1.p. 223, see also Dr. V.A. Smith’s The Oxford History of India, p. 118. 19. 2. 106. 20. The Riddles of the Ramayana by C.V. Vidya. p. 22. 21. வான்மீகி இராமாயணம் 2, 49 22. அதே நூல் 3, 13 23. அதே நூல் 4, 41 24. அதே நூல் 4, 41 25. இத் தீவு யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ளது. 26. See ‘The Siva-Sutra-Vimarsini of Ksemaraja’ translated into English by Mr. P.T. Srinivasa Iyengar, p. 7. 27. “It (the Siva Tantra) developed into an organized system of beliefs and practices in South India in the earlier centuries of the Christian era ***. The Siva Tantra travelled North and became the Lakulisa Pasupata of Gujarat and the Pratyabhijna of Kasmir” - Siva - Sutra- Vimarsini, English translation by Mr. P. T. Srinivasa Iyengar, p. 19. 28. Hindu Iconography by Mr. T.A. Gopinatha Rao, Vol. 1, Part 1, pp. 58, 59. 15. மாணிக்கவாசகரும் நம்மாழ்வாரும் இனிப், பிறந்த ஞான்றை எல்லாம் ஓதாதுணர்ந்த துறவியாகிப் புளியமரத்தின் (புளியாழ்வார்) அடியிலே தவத்திலமர்ந்து, உலகம் உய்தல்வேண்டித் `திருவாய் மொழியினை அருளிச்செய்த நம்மாழ்வார், பிறந்தபின் தாய் தந்தையரால் வளர்க்கப்பட்டு ஆசிரியனால் அறிவுறுக்கப் பட்ட பன்னூற்பொருளும் பல்லாண்டு ஓதியுணர்ந்து அரசர்க்கு அமைச்சராயிருந்த மாணிக்கவாசகர் இயற்றிய `திருவாசகத் தைப் பார்த்துத் தமது `திருவாய்மொழியை இயற்றியருளி னாரென்றால் பொருந்தாது; மற்றுத் `திருவாய் மொழியைப் பார்த்தே மாணிக்கவாசகர் `திருவாசகம் இயற்றினாரென்று கோடலே பொருத்தமுடைத்து என்பது படத் `தமிழ்வரலாறு உடையார் எழுதிய பகுதி ஆராயற் பாற்று. நம்மாழ்வார் தாயின் கருப்பையைவிட்டு இந்நிலத்தின்கட் பிறந்த நாள்முதற் பாலுண்ணாதவராகி, அழுதலுஞ் சிரித்தலு மின்றி வறிதே கிடப்பப், பெற்றோர் அக்குழவியின் நிலைகண்டு கலங்கித், திருக்குருகூரிலுள்ள திருமால் கோயிலிற் கொண்டு போய், அங்குநின்ற புளியமரத்தின் அடியிலே கிடத்த, அவர் பதினாறாண்டளவும் ஏதொரு செயலுமின்றித் தவமிருந்து, பின்னர்த் தம்பால் வந்த மதுரகவியாழ்வார் பொருட்டுத் `திருவிருத்தம் `திருவாசிரியம் `பெரிய திருவந்தாதி, `திருவாய்மொழி முதலியவற்றை அருளிச் செய்தார் என அவர்க்குப் பன்னூறாண்டு பின்வந்த வைணவமதப் புலவர்கள் எழுதி வைத்திருக்கின்றனர். நம்மாழ்வார் பிறந்தபொழுதே பாலும் உண்ணாது பிறிதேதொரு செயலுமில்லாது பதினா றாண்டு அளவும் தவத்திலிருந்தமைக்கு மெய்ச்சான்றுகளும், அவர் எல்லாம் ஓதாதுணர்ந்து பாடினமைக்கு மெய்யடை யாளங்களும் உளவாயின், அவரைக் கடவுட்டன்மை யுடையவராகவும், அவர் அருளிய பாடல்களை உண்மை யறிவுரைகளாகவுங் கோடலில் இழுக்கொன்று மில்லை. ஏனெனில், இறைவனது முழுமுதற் றன்மையைச் சிற்றறிவுடைய மக்களுக்கு அறிவித்தற் பொருட்டுப், பேரறிவுடைய பெரியார் எந்நாட்டிலும் எவ்வினத்திலும் எம்மதத்திலும் பிறத்தல் உண்டு. ஆனாலும், இங்கே யாம் ஆராய்தற்கு எடுத்துக்கொண்ட நம்மாழ்வார் பிறந்த நாள்தொட்டே எல்லாம் ஓதாதுணருங் கடவுட் டன்மை உடையவர்தாமா என்பதற்கு ஏற்ற சான்றுகள் காணினன்றி, அவரை அவ்வாறுகொண்டு, அவருரையினை மெய்யெனத் தழீஇ யொழுகல் உலகிற்குப் பெரிதுந் தீங்கு பயப்பதொன்றாம். அவரைப் பற்றிப் பின்னுள்ளோர் எழுதிவைத்த இக்கதை ஒன்றனையே கொண்டு அவரை அங்ஙனங் கடவுட்டன்மை யுடையராகக் கருதுதல் வழுவாம்; என்னை? ஒருவர்பால் அளவுகடந்த பற்றுவைத் தோர் அவரைக் கடவுளாக உயர்த்துப் பேசுதலும், ஒருவர்பாற் பெரும் பகைமை கொண்டோர் அவரை இழிந்த விலங்கினுங் கடைப்பட்டவராக இழித்துப் பேசுதலுங் கண்டாமாகலின், ஒருவர்பாற் பற்று வைத்தோரும் பகைமை கொண்டோருங் கூறும் மெய்யல்லா உரைகளை மெய்யென நம்பி அவரை உயர்ந்தா ரென்றேனும் இழிந்தாரென்றேனும் முடிவுகட்டல் நடுவுநிலை யுடையார்க்கு இசையாதாகலின் என்க. அற்றேல், நம்மாழ்வாரின் உண்மைத் தன்மைகள்; தெளிதற்குச் சான்றாகற்பாலன யாவையெனிற்; சான்றுகள் புறச்சான்றும் அகச்சான்றும் என இருபாலனவாம்: அவற்றுட் `புறச்சான்று என்பன பற்றும் பகைமையும் இல்லா நடுநிலையாளர் கூறும் மெய்யுரைகள்: இம் மெய்யுரைகளோடு ஒக்கும் வழியும் உண்மையொடு மாறுபடா வழியும் பற்றுடையோரும் பகைமையுடை யோருங் கூறுவனவுந் தழுவற்பாலனவே யாகும். இனி, `அகச்சான்று என்பன, ஓர் ஆசிரியன் தான் இயற்றிய நூல்களில் தன் குறிப்பின்றியே தன் வரலாற்றினையும், தன் இயற்கையினையுங் கூறிவைப்ப, அவைதாம் அறிவுடை யோரால் ஆராய்ந்தெடுக்கப்பட்டு அவ்வாசிரியர் வரலாற்றுந் தன்மையுந் துணிதற்குச் சான்றாய் நிற்பனவாகும். இவ் விருவகைச் சான்றுகளுள் நம்மாழ்வார் வரலாறு துணிதற்கு, மேலே காட்டியபடி அவர்பாற் பற்றுள்ளோர் எழுதிவைத்த கதையைத் தவிர வேறு பொதுவான புறச்சான்று ஏதுங் காண்கிலேம். இனி, அவரியற்றிய `திருவாய்மொழி முதலியவற்றில், அவர் பிறந்தபொழுதே பாலுண்ணாது தவத்திலிருந்து எல்லாம் ஓதாதுணர்ந்தமைக்குக் குறிப்பு ஏதேனும் உளதோ வெனின் அதனையுங் காண்கிலேம். மற்றை மக்களைப் போலவே, தாமும் யாக்கைவழி யுழன்று நோயானும் இருவினைகளானும் வருந்தும் ஓருயிராகவே தம்மைப் பல்காலுங் குறிக்கின்றார். முந்நீர்ஞாலம் என்னும் பதிகத்தில், ஆக்கையின் வழியுழல்வேன், வெந்நாள் நோய்வீய வினைகளை வேரறப் பாய்ந்து, எந்நாள் யான் உன்னை இனிவந்து கூடுவெனே, பன்மா மாயப் பல்பிறவியிற் படிகின்ற யான், தொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து, நின்மா தாள்சேர்ந்து நிற்ப தெஞ்ஞான்று கொலோ என்றற் றொடக்கத்து அவர் மொழிகள் அவரைப் பொதுமக்களுள் ஒருவராகவே வைத்து உரைப்பக் காண்கின்றோம். இம் மக்கட்டன்மையின் வேறாக அவருக்குக் கடவுட்டன்மையும் உண்டென்பதற்கு ஏதொரு சான்றும் அவரியற்றிய பாடல்களினுங் காணாமையின், அகச்சான்றும் இன்றாம். புறச்சான்று அகச்சான்று இரண்டுமில்லா இக்கதையை அவர்பால் மிகுதியும் பற்று வைத்த ஒரு வைணவப் புலவர் நம்மாழ்வாரைச் சைவசமயா சிரியராகிய திருஞானசம்பந்தரினும் மேம்பட்டவராகக் கூறவிழைந்து அங்ஙனம் ஒரு பொய்க்கதை கட்டிவிட்டாரென்க. யாங்ஙன மெனின், திருஞானசம்பந்தர் மூன்றாண்டுள்ள சிறுகுழவியா யிருந்த காலத்து இறைவனும் இறைவியும் அவரெதிரே தோன்றி, அவருக்குத் தமது அருட்பாலை ஊட்ட, அஃதுண்ட அவர் எல்லாம் வல்ல ஆசிரியராய் எல்லாம் ஓதாதுணர்ந்து அருள் துளும்புஞ் செந்தமிழ்த் திருப்பாட்டு களைச் சென்றசென்ற திருக்கோயில்கடோறும் அருளிச்செய்தா ரென்னும் வரலாற்றுக்கு எதிராக, அவரினும் மிக்கதொரு மேன்மையை நம்மாழ்வாருக்குக் கூறல்வேண்டியே அவ் வைணவப் புலவர் `நம்மாழ்வார் பிறந்த ஞான்றுதொட்டே பாலுமுண்ணாது தவத்திலிருந்து திருவாய்மொழி அருளிச் செய்தார் என்று கதை கட்டினாராதல் வேண்டும். திருஞான சம்பந்தர் பாலுண்டு பாடினாரென்றால், நம்மாழ்வார் பாலுமுண்ணாது பாடினாரென்பது கழிபெரு மேன்மையா மென அப் புலவர் நினைத்தார் போலும்! அற்றேல், திருஞானசம்பந்தர் சிறுமகவாயிருந்த காலத்து அம்மையப்பரால் நேரே அருட்பால் ஊட்டப் பெற்றமைக்கு அகச்சான்று அவரருளிச்செய்த செந்தமிழ்ப் பாக்களுள் உளதோவெனின் ; `மாணிக்கவாசகர் வரலாறு 131, 132 -ஆம் பக்கங்களில், போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதுஎனத் தாதையார் முனிவுறத் தான்எனை ஆண்டவன் என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய பாடலினை எடுத்துக்காட்டி அவ்வியல்பினை விரித்து விளக்கியிருக் கின்றேம். மேலும், திருஞானசம்பந்தப் பெருமான் `திருநனி பள்ளியிலுள்ள சிவபிரானை வணங்குதற்குச் சென்றபோது, அவர் தம் தந்தையாரது பிடரிமேல் இருந்த படியாய்த் திருப்பதிகங் கட்டளையிட் டருளினாரென்பது அப்பதிகத்தின் ஈற்றில், ஞானமுனிவன் இடுபறையொன்ற அத்தர் பியல்1 மேல் இருந்து இசையா லுரைத்த பனுவல் என்று அருளிச்செய்த வாற்றாற் பெறப்படும். தந்தையின் பிடரிமேல் அமர்ந்திருக்கத்தக்க குழந்தை மூன்று முதல் ஐந்தாண்டிற்கு மேற்பட்டிருத்தல் ஆகாமையால், திருஞான சம்பந்தர் இத்திருப்பதிகத்தை அருளிச்செய்த காலத்துச் சிறுமதலையாயிருந்தா ரென்பது இனிது துணியப்படுமன்றே? இன்னும், மதுரையிற் கூன்பாண்டியன் மனைவி மங்கையர்க் கரசியரால் அழைக்கப்பட்டு அங்குச் சென்ற காலத்தும் திருஞானசம்பந்தர் சிறுபிள்ளையாகவே யிருந்தா ரென்பது, அவரைச் சமணர்கள் பழித்துப் பேசிய போதுஅவர் அருளிச் செய்த, மானின் நேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள் பால்நல் வாய்ஒரு பாலன் ஈங்கிவன் என்று நீபரிவு எய்திடேல் யானை மாமலை யாதியாய் இடங்க ளிற்பல அல்லல்சேர் ஈனர் கட்குஎளி யேன்அ லேன்திரு வால வாய் அரன் நிற்கவே. என்னுந் திருப்பாட்டின்கண் அப்பெருமான் தன்னைப் `பால் பருகுதலால் மணங்கமழா நின்ற வாயினையுடைய ஒருசிறு குழந்தை என்று குறிப்பிடுதல் காண்க. மதுரைக்குச் சென்ற போதே அவர் சிறு பிள்ளையாயிருந்தமை தெளியப் படுதலின், இறைவனையும் இறைவியையும் அவர் நேரே கண்டு அவர்தம்மால் அருட்பால் ஊட்டப்பட்ட ஞான்று, மூன்றாண் டுடைய மிகச் சிறு மகவாய் அவர் இருந்தமை சிறிதும் ஐயமின்றித் துணியற்பாலதாகும். இவ்வாறு திருஞானசம்பந்தர் சிறு மதலையாயிருந்தபோதே கடவுளைத் தமது கட்புலனால் நேரே கண்டு அருள்பெற்றுச், செயற்கரும் புதுமைகளெல்லாம் அக்கடவுள் அருளாற் செய்து, உலகிற்கு முழுமுதற் கடவுளின் உண்மையினையும் அக்கடவுளின் அருட்பெருந்தன்மை வினையுந் தெருட்டின மைக்கே அகச்சான்று புறச்சான்றுகள் காணப்படு தலின், அவர் மூவாண்டிற்கடவுளைக் கண்டு பாடினமையே உண்மை நிகழ்ச்சியாதல் காண்க. இவரைப்போல் நம்மாழ் வாரும் சிறு மகவாயிருந்த ஞான்றே கடவுளைக் கண்டு பாடினமைக்கு அவரது `திருவாய்மொழிப் பாட்டுகளில் ஏதொரு சான்றுங் காணப்படாமையின், நம்மாழ்வாரைப் பற்றிய கதை பின்வந்த வைணவப் புலவராற் புதிதாய்க் கட்டிவைக்கப் பட்ட பொய்க்கதையேயாதல் `உள்ளங்கை நெல்லிக்கனி போற் சிறிது ஆராய்ந்து காண்பார்க்கும் இனிது விளங்கா நிற்கும். அதுவேயுமன்றி, நம்மாழ்வார் பிறந்த ஞான்று தொட்டே பாலும் உண்ணாது பதினாறாண்டளவும் தவத்திலிருந்தா ரென்பது சிறிதும் நம்பற்பாலதன்று. அவர் பத்துத் திங்கள் அன்னையின் கருப்பையிற் றங்கிப் பிறந்தா ரென்றமையால், அவர் எம்மனோரைப்போலவே ஊனுங் குருதியும் நிறைந்த உடம்பு உடையரென்பது பெறப்படும். படவே, ஊன் உடம்புடைய எம்மனோரெல்லாம் உணவின்றி உயிர்வாழ்தல் ஒருவாற்றானும் ஏலாமையால், நம்மாழ்வாரும் ஏதேனும் உணவு கொண்டே உயிர்வாழ்ந் தாராதலுந் தானே பெறப்படும். இவ்வுண்மைக்கு மாறாக நம்மாழ்வார் பிறந்தநாட் டொட்டே பாலுமுண்ணாது தவங்கிடந்தா ரென்றலினும் பெரும்புளுகுரை பிறிதுண்டோ நடுநிலையுடையீர் கூறுமின்! இப்புளுகுரையை நடுநின்று ஆராய்வாரெவரும், இக்கதை நெறி திறம்பிய மதப்பற்றுடைய வைண வரால் நம்மாழ்வாரைத் திருஞான சம்பந்தரினும் மேம்பட்டவராக ஆக்கிவிடுதற் பொருட்டுக் கட்டப்பட்ட பொய்க்கதையோ யாதலைக் கண்டுகொள்வர். இனி, மாணிக்கவாசகப்பெருமான் தமது இளமைக் காலத்தே எல்லாக் கலைகளையும் ஓதியுணர்ந்து வளர்ந்தமை உண்மையே யாயினும், அவர் அதுபற்றிக் கடவுட்டன்மை யுடையரல்லர் என்று கூறிய `தமிழ் வரலாறு உடையாரது உரை உண்மையறியா வெளிற்றுரையேயாம். மாணிக்க வாசகர் தாம் கடவுளை நேரே கண்டமையும், அவர்க்குத் தாம் அடிமையானமையும். திகழாநின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய். (குழைத்த பத்து.10) என்று தாமே அருளிச்செய்தவாற்றாற் குறிப்பிட்டிருக் கின்றார். அவ்வியல்பெல்லாம் முன்னரே வரையில் விரித்து விளக்கிக்காட்டி யிருக்கின்றேமாதலால், அவற்றையே ஈண்டு மீளவும் எடுத்து விரித்திலம். கடவுளை நேரே காண்டல் எளிதன்று. உலகத்தில் மக்களாய்ப் பிறந்தார் படும்பாடெல்லாங் கட்புலனாகக் கடவுளைக் கட்புலனாற் கண்டு உண்மை தெளிந்து, பிறவியறுத்து, அவன் றிருவடியைத் தலைக் கூடுதலையே பொருளாய்க் கொண்டுநிற்கின்றன. அத்துணைப் பெறற்கரும் பொருளாகிய கடவுளை நேரே காணப்பெற்று அவன் றிருவடிக்கு ஆளானாரிலுங் கடவுட்டன்மையுடையார் பிறர் உளரோ புகலுமின்! கடவுளைக் கண்டவர்க்கே கடவுட்டன்மை யுளதாமன்றி, அவரைக் காணாதவர்க்கு அஃது உளதாதல் யாங்ஙனம் உரைமின்! கடவுளை நேரே கண்டு அவன் றிருவருளை நேரே பெற்ற மாணிக்கவாசகரும் திருஞானசம்பந்தரும் அக் கடவுளைப் பற்றிக் கூறும் மெய்ம்மொழிகள் நமக்கெளியவாய் அருகிருப்ப, அவற்றைக் கைக்கொண்டு பிறவிப் பயன்பெறாமற், கடவுளைக் காணாதாரையும் அவர் கூறும் மயக்க வுரைகளையும் நம்பிக் கடவுள் அல்லாத மக்களைக் கடவுளெனத் துணிந்தும், கடவுளைக் காணாதாரைக் குரவரென இறுகப் பற்றி அவர் மேற் பொய்க்கதைகளை ஏற்றியும், சைவம் வைணவம் என்று வழக்காடியும் ஐயகோ மக்கள் தம் பிறவிப்பயனை இழந்து வாளா மடிகின்றனரே! அதுகிடக்க. இனி, நம்மாழ்வார் இயற்றிய பாடல்களையே நன்காராய்ந்து பார்ப்பின் அவர் ஓதாதுணர்ந்தவரல்ல ரென்பதூஉம், அவர் முழுமுதற் கடவுளைக் கண்டறி யாமையின் கடவுட்பொருள் இதுதான் என்று துணியமாட்டாது பெரிதும் இடர்ப்பட்டு மயங்கினரென்பதூஉம், அதனால் அவர் கடவுட் டன்மையுடையரல்ல ரென்பதூஉம் இனிது புலப்படும். நம்மாழ்வார் தமது இளமைக்காலந்தொட்டே பற்பல நூல்களையும் பன்னாளும் ஓதியுணர்ந்தவ ரென்பதற்குரிய அடையாளங்கள் அவர்தம் பாட்டுக் களிலேயே காணப்படு கின்றன . அவற்றுட் சில காட்டுவதும்: அங்கமெலாங் குறைந்துஅழுகு தொழுநோ யாராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்ப ராகில் அவர் கண்டீர் யாம்வணங்கும் கடவு ளாரே என்று திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்த கருத்தை எடுத்துக், குலந்தாங்கு சாதிகள் நாலிலுங் கீழ்இழிந்து எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்க ளாகிலும் வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற்கு ஆள்என்றுஉள் கலந்தார் அடியார் தம்அடி யார்எம் மடிகளே என்று நம்மாழ்வார் பாடினமை காண்க. தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ் சார்வி னுந்தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடா தேஎந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்! இம்மை யேதருஞ் சோறுங் கூறையும் ஏத்த லாம்இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே என்னுஞ் செய்யுளை முதலாகக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார்அருளிய பதிகப்பொருளை எடுத்துக்கொண்டு என்னாவ தெத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்! மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள் மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால் தன்னாக வேகொண்டு சன்மம்செய் யாமையுங் கொள்ளுமே. என்று நம்மாழ்வாரும் ஒரு பதிகம் பாடினமை காண்க. அறுசுவையுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் -வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓர் இடத்துக் கூழ்எனின் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் -ஏனை வினையுலப்ப வேறாகி வீழ்வர்தாங் கொண்ட மனையாளை மாற்றார் கொள என்னும் நாலடியார் செய்யுட்பொருளை யெடுத்து, உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுல காண்டவர் இம்மையே தம்மின் சுவைமட வாரைப் பிறர்கொள்ளத் தாம்விட்டு வெம்மி னொளிவெயிற் கானகம் போய்க்குமை2 தின்பர்கள் என்று நம்மாழ்வார் பாடியிருக்கின்றனர். கரைபொரு திரங்குங் கனையிரு முந்நீர்த் திரையிடு மண லினும் பலரே யுரைசெல மலர்தலை யுலகம் ஆண்டுகழிந் தோரே (235-237) என மதுரைக் காஞ்சியிலும், தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் நெடுவரை இழிதரு நீத்தஞ்சால் அருவிக் கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று வடுவாழ் எக்கர் மணலினும் பலரே (553-556) என மலைபடுகடாத்திலும் போந்த சொற்பொருள்களை எடுத்துக்கொண்டு, நினைப்பான் புகில்கடல் எக்கரில் நுண்ம ணலிற்பலர் எனைத்தோர் உகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர் என்று நம்மாழ்வார் பாடினார். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள (1101) என்னுந் திருக்குறளின் சொற்பொருளை யெடுத்துக், கண்டுகேட் டுற்றுமோந் துண்டுழலும் ஐங்கருவி கண்டஇன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் என்று நம்மாழ்வார் பாடுதல் காண்க. அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ அன்புடைய மாமனும் மாமியும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ என்னும் திருநாவுக்கரசு நாயனார் திருப்பாட்டைப் பார்த்துச், சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலாகத் தாய்தந்தையும் அவரேயினி யாவாரே என ஐந்தாம்பத்தின் முதற்பதிகத்தில் நம்மாழ்வார் ஓதுகின்றனர். ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய் (1147) என்னுத் திருக்குறளின் சொற்பொருள்களைக் கிடந்தபடியே யெடுத்து, ஊரவர் கெளவை எருவிட் டன்னைசொல் நீர்ப்படுத்து என்று நம்மாழ்வார் பாடுதல் காண்க. இன்னுந் `திருவாசகத்தைப் பயின்று அதிலுள்ள சொற் பொருள்களையும், திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருப்பதிகங்களில் மிகப் பழகி அவற்றின் சொற்பொருள் களோடு இசைகளையுந் தழுவி நம்மாழ்வார் பாடியிருக்குஞ் செய்யுட்களையும் எடுத்துக் காட்டப்புகின் இது மிக விரியும். அதுவேயுமன்றித் `தமிழ் வரலாறுடையார் திருவாசகத்தைப் பார்த்து நம்மாழ்வார் பாடினாரல்லர் என வழக்கிடுதலால், வழக்கிலுள்ள அதனை எடுத்துக்காட்டுதற்கு அமர்ந்திலம் என்க. முன்னர் எடுத்துக்காட்டிய பழந்தமிழ்ச் சான்றோர் செய்யுட் சொற்பொருள்களை நம்மாழ்வார் தாமியற்றுஞ் செய்யுட்களிற் றழுவிக் கூறுகின்றுழிச், `சண்டாளர் `மனிசர், `சன்மம், `எக்கல், `உகம் என்னும் பிற்காலத்து மக்களின் கொச்சைத் தமிழ்ச்சொற்களை எடுத்து வழங்கக் காண்டலானும், இன்னோரன்ன சொற்கள் தேவார திருவாசகங்களினும் அவற்றிற்கு முற்பட்ட தமிழிலக்கியங் களினுங் காணப் படாமையானும், நம்மாழ்வார் திருவாய் மொழி பாடிய காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டிலாதல் அதற்கும் சிறிது பின்னாதல் கொள்ளப்படும். இன்னும், பவித்திரன், `சாதுவன், `கருமபலன் `சன்மசன்மாந்தரம் `விரோதம், `காலசக்கரம், `கலியுகம், கிதியுகம், `விசாதி (வியாதி), `கீர்த்தித்து, `வைட்டணவர், `முக்கியம், `சுண்டாயம், `விபரீதம், `தன்மபாவம், `வெளுமை, `அரவிந்தலோசந, `கருமகதி, `மூர்ச்சிக்கும், `சராசரம், `சாரதி, `விசித்திரம், `விடமம், `கரசரணம், `துப்புரவு, `அன்னவசம், `அமநுராகம், சம்மதித்து,`மதுரபோகம், `பிராக்கள், `இன்றிக்கே முதலான வடசொற்கள் சொற்றொடர்களும், சில தமிழ்ச்சொற்களும் பிற்காலத்தனவே யல்லாமல், கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டன அல்ல. இவை தம்மைப் பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ்நூல்களிற் காண்டலியலாது. நம்மாழ்வார் நல்ல செந்தமிழ்நடையிற் பாடிக்கொண்டு செல்லுதற்கு இடையிடையே இச் சொற்கள் சொற்றொடர் களைப் புகுத்தி விடுகின்றாராகலினாலும், திருமால் பெயர்களுள்ளும் முற்காலத்து வழங்காத வடமொழிப் பெயர்களை இவர் மிகுதியா யெடுத்து வழங்குதலினாலும் வடசொற்களும் வைணவக் குறியீடுகளும் தமிழில் மிக்கு விரவத் தொடங்கிய கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரேதான் இவர் இருந்தாராகற்பாலர். வைணவ ஆசிரியரான ஆழ்வார்களின் காலங்களை நடுநிலை வழாது நின்று ஆய்ந்து உரைத்த திருச் சீனிவாச ஐயங்கார் அவர்களும், நம்மாழ்வார் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டின்கட் படுவதாமெனவே வலியுறுத்தார்.3 மேற்காட்டியவாற்றால் நம்மாழ்வார் தமக்கு முன்னிருந்த பழந்தமிழ் நூல்களையும் சைவத்திருமுறை களையும் நன்கு ஓதியுணர்ந்த புலவராதலோடு தமது காலத்துப் பரவிய தமிழ் வடமொழி வழக்குகளையுந் தழுவித் `திருவாய்மொழி பாடியவாரவரென்பதுந் தெற்றென விளங்குதல் காண்க. எனவே,இவர் ஓதாதுணர்ந்தவர் என்று பின்னுள்ள வைணவப்புலவர் எழுதி வைத்தது வெறுங் கட்டுக்கதையே யல்லாமற் பிறிதில்லை. திருஞானசம்பந்தப் பெருமான் ஓதாதுணர்ந்து பாடினவர் என்பதற்கு அடையாளம் என்னையெனிற் பழைய தமிழ்நூல்களின் சொற்றொடர்களுங் கருத்துப்பொருள்களும் அவர் அருளிய பாட்டுக்களிற் காணப்படாமையேயா மென்பது. மேலும், திருஞானசம்பந்தர் திருக்கோயில்கட்குச் சென்றுழி அவ்வப்போது நினைந்த வளவானே திருப்பதிகங்கள் வெவ்வேறாய் அருளிச் செய்திருக்கின்றார். நம்மாழ்வாரோ, தாம் இயற்றிய `திருவாய்மொழி ஆயிரம் பாட்டுகளையும், ஒருபாட்டின் ஈற்றுச்சொல் அதற்கடுத்த பாட்டின் முதற்சொல்லாக வரும் `அந்தாதித் தொடையின்கட் படுத்து இயற்றியிருக்கின்றார். மேலும், `திருவாய்மொழி ஆயிரம் செய்யுட்களில் முதற் பத்துச்செய்யுட்கள் பாடும்போதே, அவர்அதனை ஆயிரஞ் செய்யுட்களால் ஆக்க வேண்டுமென்னுங் கருத்துக்கொண் டிருந்தாரென்பது, பரனடிமேற் குருகூர்ச் சடகோபன் சொல் நிரல்நிறை ஆயிரத்து இவைபத்தும் வீடே என்று அவர் கூறினமையாற் பெறப்படும். பெறப்படவே, இவர் திருமால் கோயில்கடோறுஞ் சென்று, சென்ற வளவானே அன்பினால் அகங்குழைந்து ஆங்காங்கு இறைவனைக் கதுமெனப் பாடினாரல்ல ரென்பதூஉம், தேவார திருவாசங் களுக்கு எதிராகத் திருமாலுக்கும் செந்தமிழ் வழுத்துரைச் செய்யுட்கள் இருத்தல் வேண்டு மென்பதே கொண்டு அவை தம்மைப் பாடினாரென்பதூஉம், `தேவாரப் பதிகங்கள் ஒன்றற்கொன்று தொடர்பின்றி அவ்வத் திருக்கோயில்களில் நினைந்தவளவானே தனித்தனியே பாடப்பட்டமையால் அவற்றுட் பல பதிகங்கள் அழிந்து போனமை கண்டு, அங்ஙனமே தாம் திருமால் மேற்பாடுஞ் செய்யுட்களும் அழிந்து போகவிடாமல் அவை தம்மை ஒரு தொடர்பு படுத்துதற் பொருட்டே அவற்றை `அந்தாதித் தொடையின்பாற் படுத்துப் பாடினாராதல் வேண்டு மென்பதூஉம், ஆகவே நம்மாழ்வார், வைணவ சமயத்தின் பாற் பற்றுடைய ஒரு சிறந்த தமிழ்ப்புலவரே யல்லாமல் இவர் இறைவனை நேரே கண்டு அவன்பால் அன்பு மீதூரப் பெற்று அவனருளைப் பெறுவான் வேண்டிநினைந்த நினைந்த போழ்தெல்லாம் நெஞ்சம் நெக்குருகிப் பாடினாரல்ல ரென்பதூஉம், அதனால் அவர்பால் ஏதொரு கடவுட்டன்மையுங் காணப்பட்டில தென்பதூஉம் தெற்றென விளங்காநிற்கும். அற்றேல், மாணிக்கவாசகரும், `திருச்சதகம் நூறு செய்யுட்களையும், `நீத்தல் விண்ணப்பம் `ஐம்பது செய்யுட் களையும் `அந்தாதித் தொடையின்பாற் படுத்துப் பாடியவா றென்னையெனின்; `திருச்சதகம் திருப்பெருந் துறையிலும், `நீத்தல் விண்ணப்பம் திருவுத்தர கோச மங்கையிலும் அடிகளால் அருளிச் செய்யப்பட்டன வாகலின், அவற்றுள் முதல்நூறு ஒரு தொகுதியாகவும், பின் ஐம்பதும் மற்றொரு தொகுதியாகவும் தனித்தனியே பாடப் பட்டிருத்தலானும், `திருவாசகத் தின்கண் உள்ள ஏனைத் திருப்பதிகங்களும் ஒன்றற் கொன்று தொடர்பின்றித் தனித்தனியே பாடப்பட்டிருத்த லானும், அவை நம்மாழ்வார் பாட்டுக்களைப்போற் செயற்கை யாய் ஒரு தொடர்புபட நில்லாமல். தனித்தனியே நினைந்த நினைந்தவழிப் பேரன்பின் பெருக்கால் இயற்கையாய்ப் பாடப்பட்டன வாகுமென்று தெளிக இனி, இவையெல்லாம் ஒருபுறம் நிற்க. நம்மாழ்வார் கடவுளை நேரே காணும் பெரும்பேறு பெற்றிலராயினும், முழுமுதற் கடவுளிலக்கணம் இதுதான் என்று ஆராய்ந்துணரும் அறிவு மதுகையும், அதனால் அம் முழுமுதற் கடவுள் ஒன்றனையே வழுத்தும் மன ஒருமைப்பாடு மாயினும் உடையரோவெனின்; அவை தாமும் அவர் உடையரல்ல ரென்பது காட்டுவாம். உலகிற்கு முழுமுதற் கடவுள் ஒருவனே உளன் என்று காட்டாமல், நான்முகன் திருமால் உருத்திரன் எனக் கடவுளர் மூவர் உளர் எனக் கூறி, அம்மூவரில் ஒவ்வொருகால் ஒவ்வொருவரை உயர்த்தி ஏனையரைத் தாழ்த்தி, இந் நாவலந் தீவின்கண் உள்ள பொதுமக்கள் அம்மூவரில் ஒவ்வொருவரைப் பற்றிக் கொண்டு வழக்காடிப் போர்புரியவுந், தாம் அப் பொதுமக்களின் வேறாய் நிலவுலகக் கடவுளரென அவர் தம்மாற் பாராட்டப் படவும் சூழ்ச்சி செய்து ஆரியப்பார்ப்பனர் கட்டிவிட்ட புராணப் பொய்க்கதை களையே உண்மையென நம்பி நம்மாழ்வார், பெரிய அப்பனைப் பிரம னப்பனை உருத்திர னப்பனை (8 ஆம் பத்து, 1,11) எனவும், தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனிமுதலை (8 ஆம் பத்து, 8,4) எனவும் கடவுளர் மூவர் என்றம், அம்மூவரிற் றிருமாலே சிறந்த கடவுள் என்றுங் கூறுகின்றார். உலகிற்கு முழு முதற்கடவுள் ஒருவரேயுளர் அல்லாமல், மூவர் உளராதல் யாங்ஙனம்? படைத்தற்றொழிலை நிகழ்த்துதற்கு ஒரு கடவுளும், காத்தற்றொழிலை நிகழ்த்துதற்கு மற்றொரு கடவுளும், அழித்தற்றொழிலை நிகழ்த்துதற்கு வேறொரு கடவுளுமாகக் கடவுளர் மூவர் உளராயிற், படைத்தற் றொழிலைச் செய்வோன் காத்தல் அழித்தல்களைச் செய்யமாட்டுவான் அல்லனெனவும், அங்ஙனமே காத்தல் அழித்தல்களைச் செய்வோரும் தத்தந் தொழிலையன்றிப் பிறதொழில்களைச் செய்யமாட்டுவா ரல்லரெனவுங் கொள்ளப்பட்டு, அவரெல்லாம் வரம்பிலாற் றலுடைய முழுமுதற் கடவுளாகா ரென்பது தானே பெறப்படும் அற்றன்று, திருமாலே தமக்குரிய காத்தற்றொழிலோடு ஏனையிரண்டு தொழில்களையும் புரிவரெனின்; நன்று சொன்னாய், திருமாலே முத்தொழிலும் புரிபவராயிற், படைத்தல் அழித்தல்களுக்கு வேறிரு கடவுளரைக் கொண்டது எற்றுக்கு? அதுவேயுமன்றி, நாரணன் நான்முகன் அரன் என்னும் மூவரையுமே உள்ளத்து இருத்திப் பற்றறுத்தல் வேண்டுமென்பது போதர நம்மாழ்வார், ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற நன்றெழில் நாரணன் நான்முகன் அரன்என்னும் இவரை ஒன்றநும் மனத்துவைத்து உள்ளிநும் இருபசை யறுத்து (1,3,7) v‹W T¿abj‹id?ஒன்றென்றாவது பலவென்றாவது அறிதற்கரிதான வடிவுடையது யாது? அஃது இம்மூவரின் வேறா? ஒன்றா? வேறாயின், அஃது அம் மூவரின் மேற்பட்ட முழுமுதற் கடவுளாதல் வேண்டும். மற்று அஃது அம் மூவரோடு ஒன்றுபட்ட பொருளாயின், ஓர் அறிவுப் பொருள் மூவேறு அறிவு பொருளாகப் பகுக்கப்படுதல் யாங்ஙனம்? அறிவில்லாத பருப்பொருள்களே ஒன்று பலவாகப் பகுக்கப்படுதலைக் காண்டும். அவற்றைப் போலவே அறிவுப் பொருளும் ஒன்று பலவாகப் பகுக்கப் படுதலை யாண்டாயினுங் கண்டார் உளரோ? அல்லதூஉம், ஒன்றெனவாதல் பலவெனவாதல் அறிதற்கரிய பொருள், பின் மூன்றாயதை மட்டும் அறிவது யாங்ஙனங் கூடும்? அற்றன்று, ஒன்றெனப் பலவென அறிதற்கரிய முழுமுதற்கடவுள் யாண்டும் ஊடுருவி நிறைந்து எவற்றினும் மேற்பட்டதாய் நிற்க, அதனுள் நான்முகன் திருமால் உருத்திரன் என்னும் மூவரும் தனித்தனி நிற்பரெனின், யானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள் என்றபடி இம்மூவரும் முதல்வர் அல்லர், இம் மூவரின் வேறாய் எல்லாம் வல்லதாய் நிற்கும் முழுமுதற் கடவுள் பிறிதுஒன்று உண்டென்பது, நம்மாழ்வார் வாய்மொழியினா லேயே பெறப்படுகின்றதன்றோ? அவ்வாறு மூவரின் வேறாய் முழுமுதற் கடவுள் ஒன்றுண் டென்பதனை உடன்பட்ட நம்மாழ்வார் பின்னர் அதனை மறந்து, அம்மூவரில் ஒருவராய திருமாலையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு, தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்த் தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுட் கண்வளரும் வானோர் பெருமான் மாமாயன் வைகுந் தன்எம் பெருமானே (1,5,40) என்று இசைத்தது முன்னொடுபின் பெரிதும் முரணுறு தலைச் சிறிதாராய்ச்சியுடையரும் நன்கறிவர். இவ்வாறு முன்னொடுபின் முரண உரைநிகழ்த்திய நம்மாழ்வார், முழுமுதற்கடவுள் நிலையிற் றாம் உயர்த்து வைத்த தம் திருமாலையே இறுகப்பற்றி, அவரது வழிபாட்டளவி லாவது உறைத்து நின்றனரோவென்றால் அதுவும் இன்று. சிவபிரானே முழுமுதற் கடவுள் என்பதை, மூன்றாம் ஆண்டில் அப் பிரானை நேரே கண்டு அவனருட் பால் உண்டு வளர்ந்த திருஞானசம்பந்தப் பிள்ளையார் தாம் சமணர் சாக்கியரோடு இட்ட வழக்குகளில் நன்கு நிலைநாட்டி யிருக்கின்றன ராகலின், அதனை நன்குஉணர்ந்த நம்மாழ்வார், தாம் சிவபிரான் வழிபாட்டைக் கைவிட்டால், தமக்கு இம்மையிற் பெருந்துன்பமும் மறுமையில் நிரயமும் வாய்க்குங்கொலென அஞ்சியே திருவாய்மொழியில், அரிஅயன் அரன் என்னும் இவரை உணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின் (1,3,6) எனவும், கடிகமழ் கொன்றைச் சடையனே யென்னும். (7.2.10) எனவும், பூத்தண் துழாய் முடியாய்புனை கொன்றையஞ் செஞ்சடையாய் (7,6,3) எனவும், என்மலைமகள் கூறன்றன்னை.... எயின்மூன் றெரித்த வென்றுபுலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ (7,6,7) எனவும், மாயோனை முக்கணம்மானை நான்முகனை அமர்ந்தேனே (8,4,10) எனவும், முனியே நான்முகனே முக்கண் அப்பா (10,10,1) எனவும் முக்கட் பெருமானையும் இடை யிடையே வழுத்திக் கொண்டு சென்று, இறுதியில், அவாவறச் சூழ்அரியை அயனை அரனை அலற்றி அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் (10,10,11) என்று சிவபிரான் திருப்பெயராலேயே முடித்துக் கூறியிருக்கின்றார். புராண கதைகளை நம்பிக் கடவுளர் மூவர் உளர் என்றும், அவருட் றிருமாலே முதல்வராவர் என்றுங் கொண்டு நம்மாழ்வார் பெரிதுமயங்கி யிடர்ப் பட்டனராயினும், திருஞானசம்பந்தப் பிள்ளையார்க்கு மூன்றாண்டிலே தோன்றி யருள்செய்து, முதல்வனில்லை யெனப் பாழ்ங்கொள்கை பேசிய சமண சாக்கியரை அவர் வாயிலாக அடக்கித் திருத்தி யருள்புரிந்த சிவபிரான் முழுமுதற் கடவுளா யன்றிப் பிறிதாதல் செல்லாதென வரவரத்தெளிந்து துணிவு கொண்டே நம்மாழ்வார் `அரன் என்னுந் திருப்பெயரை முடிந்த நிலையாக வைத்துச் சொல்லித் தமது `திருவாய்மொழியை முடித்தாராகல் வேண்டுமென்பது நடுவுநின் றாராய்வார்க்கு விளங்கா தொழியாது. எனவே, நம்மாழ்வார் முழுமுதற்கடவுள் நிலையைத் தாமாகவே முழுதுணர்ந்து அதன் கண் மட்டும் உறைத்து நின்றவர் அல்லரென்பதூஉம், அதனால் அவர் திருஞானசம்பந்தப் பெருமானையாதல் மாணிக்கவாசகப் பெருமானையாதல் ஒத்த கடவுட்டன்மையுடைய ரல்லரென்பதூஉம் நன்கு போதரும். மேலும், உலகிற்கு முதலாய் நிற்குங் கடவுள் அப்பனாகிய தானும் தன்னோடு பிரிப்பின்றி நிற்கும் அம்மையும் ஆய் ஒன்றும் இரண்டுமல்லா இரண்டற்ற நிலையில் ஆண்பெண் உருவாய்த், தீயும் நீரும் ஒப்பச், சிவப்பு நீலநிறங்களோடு கூடிநின்று, உலகத்தைப் படைத்துக்காத்து அழிக்கும் உண்மையினை முன்னரே வைத்து இனிது விளக்கிக் காட்டியிக்கின்றேம். ஈண்டும் சிறிது விளக்குவேம். உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களுந் தீயின் கூற்றிலும் நீரின் கூற்றிலும் அடங்கும். தீயும் நீரும் ஒன்றியைந்து நிற்குங்காறும் படைத்தல் காத்தல்கள் நிகழும்; தீ மிகுந்தவிடத்து நீரை உரிஞ்சி எல்லாப் பொருள்களையும் அழித்துவிடும். எனவே, படைத்தல் காத்தல்களைச் செய்வது தீயும் நீரும் சேர்ந்த சேர்க்கையே யாதலும்,அழித்தலைச் செய்வது தீ நீரிற் பிரிந்து மிகுதலே யாதலும் தெற்றென விளங்கும். விளங்கவே படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிற்கும் ஏதுவாவன தீயும் நீரும் என்னும் பொருள்கள் இரண்டேயல்லாமல் மூன்றல்லாமையும் புலனாம். இத் தீயும் நீரும் அறிவில்லாப் பொருள்களாதலால் அவற்றை இயக்குதற்கு அறிவுடைய முதல்கள் இரண்டு இன்றியமையாது வேண்டப்படும். தீயினுள் விளங்கும் அறிவுடைப்பொருளே சிவம் என்றும், நீரினுள் விளங்கும் அறிவுடைப்பொருளே அம்மையென்றும் அறிவுநூல்கள் நுவலாநிற்கும். இவ்வாறு இவற்றுள் விளங்குதல் பற்றியே தீயின்நிறமான சிவப்புவடிவு சிவபிராற்கும், நீரின் நிறமான நீலவடிவு அம்மைக்கும உரியனவாகச் சொல்லப்பட்டன. இது குறித்தே இருக்குவேதத்துள்ளும் த்வம் அக்நே ருத்ரோ4 (அக்கினி, நீ உருத்திரனாய் இருக்கின்றனை) என்னும் உரையும் எழுந்தது. `உருவென்னுஞ் சொல்லுக்குச் `சிவப்புநிறம் `வெப்பம், `அச்சம் என்னும் பொருள்கள் உண்மை, உருவப் பல்பூத் தூஉய்,5 வெயில் உருப்புற்ற வெம்பால்6 உருஉட் காகும்7 என்னும் பழைய தமிழ்நூற் சொற்றொடர்களாற் புலப்படுதலிற், செம்மை நிறத்தை சினத்தையும் அச்சத்தையுந் தோற்றுவிக்கும். அழிப்புக் காலத்துச் சிவபெருமாற்கு `உருத்திரன் என்னுந் தமிழ்ச் சொல்லைப் பண்டை இருக்குவேதகாலத் தமிழர்கள் பெயராக அமைத்து வழங்குவாராயினர். எனவே, படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலையும் செய்வோர் அப்பனும் அம்மையுமாய்ப் பிரிவற்நிற்கும் முதல்வர் இருவரேயல்லாமல், மூவர் அல்லர். இவ்வுண்மை அம்மை யப்பரது விளக்கத்திற்கு இடனாய்நிற்கும் தீ நீரின் றொழில் களானுந் தெளியப்படும். தீ தனித்து எரியுங்கால் ஏதொரு பொருளும் அதன்முன் நிற்கலாற்றாது அழிந்துபடும். மற்று அது நீரொடு கலந்து தனது வெம்மை குறைந்து ஓர் அளவில் நிற்குங்கால், அது பல செயற்கருந் தொழில் களெல்லாம் செய்யவல்லதாகும். தீயும் நீரும் ஒருங்கு கலத்தலாற்றோன்றும் நீராவி பலவகைப் பொறிகளையும் இயக்கிப் பல்வேறு வியத்தகு தொழில்களெல்லாம் செய்தலை இஞ்ஞான்று உலகம் எங்கணும் காண்கின்றேம் அல்லேமோ? தீயின் சேர்க்கையின்றி நீர் உறைந்து பனிக்கட்டியாயவிடத்தும், நீரின் சேர்க்கையின்றித் தீயே மிக்கெழுந்து எல்லாவற்றையும் எரிக்குமிடத்தும் உலகின் கண் ஏதேனும் நடைபெறுமா? நடைபெறாதன்றே. உலகினும் உலகத்தில் இயங்கும் உயிர்களின் உடம்புகளினும் தீயும் நீருங் கலந்துநிற்க வேண்டுமளவுக்குக் கலந்து நிற்றலினாற்றான் உலகுயிர்களின் தோற்றுமும் அவற்றின் நிலைபேறுங் காணப்படுகின்றன. ஆகவே, அம்மையப் பரப்பது சேர்க்கையே படைப்புக்குங் காப்புக்கும் ஏதுவாகு மல்லது, நான்முகனுந் திருமாலுந் தனித்தனியே அவை தமக்கு ஏதுவாகார் என்க. அல்லதூஉம், உண்மையான் நுணுகிநோக்குமிடத்துப் படைப்பும் அழிப்பும் எனத் தொழில்கள் இரண்டே உளவல்லது, காப்பு என்பதொரு தனித்தொழில் தனியே நடைபெறுவதன்று. `படைப்பு என்பது யாதென ஆராயுங் கால் ஐம்பொறிகளுக்கும் புலனாகா நுண்டுகள் ஒருங்கு சேர்க்கப்பட்டு அவ் வைம்பொறிகட்கும் புலனாகும் வடிவுடையவாமாறு ஆக்குவதேயாம். `அழிப்பு என்பது அங்ஙனந் திரட்டி வடிவாக்கப்பட்ட துகள்கள் வேறு வேறாகப் பிரிந்துபோமாறு பிரித்து விடுவதேயாம். நம்முடம்பினும் உலகத்தினும் இவ்விருவகைத் தொழில் களும் இடையறாது நடைபெறுகின்றன. நமதுடம்பு எண்ணிறந்த நுண்டுகள்களால் ஆக்கப்பட்டிருக்கின்றது. இத் துகள்கள் ஒவ்வோர் இமைப் பொழுதும் புதிய புதியவாய் நமதுடம் பின்கட் சேர்க்கப்பட்டு வராநிற்பப், பழைய துகள்கள் அங்ஙனமே ஒவ்வொரு நொடியும் பிரிந்து பிரிந்து நமதுடம்பை விட்டு அகன்றுபோகின்றன. இவ்வாறு புதிய துகள்கள் புதிய புதியவாய்த் திரட்டப்பட்டு நமதுடம்பின்கட் சேர்க்கப்பட்டு வருங்காறும் நமதுடம்பு இங்கு நிலைபெறும் மற்றுப் புதிய துகள்கள் அங்ஙனம் ஒவ்வொரு நொடியும் சேர்க்கப் படாமல் நின்றுபோகப், பழைய துகள்கள் ஓர் உடம்பினின்றும் கழிந்துகொண்டே போமாயின், அவ்வுடம்பு விரைவில் அழிந்துபோகும். இம்முறையால் ஆழ்ந்து நோக்குமிடத்துப் புதிய துகள்கள் இடையறாது படைக்கப்பட்டு வருதலே உடம்பு நிலைபெறுதற்கு ஏதுவாதல் விளங்கும். எனவே, இடையறாத படைப்புத் தொழிலே காத்தற் றொழிலாகுமல்லாற், காத்தற்றொழிலென வேறொன்று தனியே யுண்மை ஒருவாற்றானும்பெறப்படமாட்டாது. அதனாற் காத்தற் றொழிலுக்குத் திருமாலென ஒரு தெய்வம் தனியே வேண்டுமெனக் கொண்டாரது கோட்பாடு சிறிதும் பொருந்தாது. படைத்தற்றொழிலைச் செய்யும் அம்மையே காத்தற்றொழிலையுஞ் செய்பவளாவாள். மேலும், காத்தற்றொழிலைத் தனியே தெய்வம் ஒன்று உளதெனக் கொள்ளினும் வேறொருவராற் படைக்கப் பட்டதனையே அது காக்கவேண்டுதலானும், படைக்குந் தெய்வம் படைத்தற் றொழிலைச் செய்யாதாயிற் காக்குந் தெய்வங் காத்தற் றொழிலைச் செய்யமாட்டாமையானும், எவற்றையும் அழிக்குந்தெய்வம் ஒன்று உளதெனக் கோடல் வைணவர்க்கும் உடன்பாடாகலின் அவ் வழித்தற் றொழிலைச் செய்யுந் தெய்வத்தின் முற்காக்குந் தெய்வந் தன்றொழிலை எக்காலும் நடத்தல் இயலாமையானும், அன்றிக் காக்குந் தெய்வத்தின் முன் அழிக்குந் தெய்வத்தின் வலி செல்லா தெனின் அழித்தற் றொழிலே எக்காலும் நடைபெறாதாகல் வேண்டும் மற்று அஃது உலகின்கட் கண் கூடாய் நிகழக காண்டு மாகலின் அழித்தற் றெய்வத்தின் முன் காத்தற் றெய்வத்தின் வலி நிற்க லாற்றாமையானும் அங்ஙனம் காத்தற் றொழிலுக்கெனத் தனியேகொண்ட தெய்வம் முதன்மையும் ஆற்றலும் இல்லாதாய் ஒழிதல் வேண்டும். அவ்வாறொழியவே, திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொள்ளுங் கோள் ஒருவாற்றானும் ஒவ்வாதென்க. இவ்வாற்றால் அழித்தற் றொழிலைச் செய்யும் உருத்திரனே எல்லா ஆற்றலும் வாய்ந்த முழுமுதற் கடவுளாவன் என்று தெளிக. இவ்வுண்மை தெரித்தற்கே சிவஞான சித்தியாரிலும், இறுதியாங் காலந் தன்னில் ஒருவனே இருவ ருந்தம் உறுதியின் நின்றா ரென்னின் இறுதிதான் உண்டா காதாம் அறுதியில் அரனேஎல்லாம் அழித்தலால் அவனால்இன்னும் பெறுதும்நாம் ஆக்க நோக்கம் பேரதி கரணத்தாலே. என்னுந் திருப்பாட்டும் எழுந்தது. எல்லாம் வல்லோனாய் எல்லாவற்றையும் அழிக்கும் முதல்வனொருவனே, எல்லாம் அழிந்தொழிந்த இறுதிக்காலத்தில் எஞ்சிநிற்பவனாகலின், திரும்பப் படைப்பு நிகழவேண்டியக்கால் அஃது எஞ்சிநிற்கும் அவ்வுருத்திரன்மாட் டிருந்தே தோன்றுமென்பதும் பெற்றாம். பெறவே, படைப்பும் அழிப்பும் அவற்றிடையே நிகழும் காப்பும் என்னும் முத்தொழிற்கும் உரிய முதல்வன் உருத்திரன் ஒருவனே யாதலுந் தானே பெறப்படும். இவ்வுண்மையெல்லாம் `சிவஞானபோதம், `சிவஞானசித்தி என்னும் அறிவு நூல்களிலும் அவற்றின் உரைகளிலும் நன்கு விவரித்துரைக்கப்பட் டிருத்தலின், அவற்றையே ஈண்டு மீளவிரித்தல் வேண்டா. இனி, மேலே காட்டியவாற்றால் முழுமுதற் கடவுள் அப்பனும் அம்மையுமாய் நிற்குமியல்பும், அதுவே முத்தொழில்களைப் புரியுமாறும் இனிது தெளியக்கிடந் தமையின், அம் முழுமுதற்கடவுளை நேரே காணும் பெறற்கரும் பேறுபெற்ற மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலான அருட்டிருவாளர் களெல்லாம் அம்முழுமுதற் கடவுளைப், புராண கதைகளுட் சொல்லப்பட்ட நான்முகன் திருமால் காலஉருத்திரன் என்னும் மூவர்க்கும் மேற்பட்ட அம்மையப்பராகவே வைத்து ஓதி வழுத்துவரல்லது, அம் மூவரில் ஒருவராகக் கொண்டு வழுத்துதற்கு ஒருசிறிதும் ஒருப்படுவாரல்லர். இது, மூவரும் முப்பத்துமூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான் என்றற்றொடக்கத்து அவர்தம் அருளுரைகளால் நன்கு தெளியப்படும். இவ்வுண்மையினை மாணிக்காவாசகர் வரலாறு100 ஆம் பக்கம் முதல் 101 ஆம் பக்கம் வரையிலும் எடுத்துக் காட்டியிருக்கின்றோம். அங்ஙனமே திருஞான சம்பந்தப் பிள்ளையார், முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன் (திருமழபாடி) எனவும், மூவரிலும் முதலாய் நடுவாய மூர்த்தியை (திருப்பாச்சிலாச்சிராமம்) எனவும், திருநாவுக்கரசு நாயனார், முந்தையார் முந்தியுள்ளார் மூவர்க்கு முதல்வரானார் (திருவிடைமருதூர்) எனவும், மூவுருவின் முதலுருவாய் இருநான்கான மூர்த்தியே யென்று முப்பத்துமூவர் தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ் செம்பவளத் திருமேனிச் சிவனே (பொது) எனவும், சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோம் அல்லோம் சிவபெருமான் றிருவடியே சேரப் பெற்றோம் (பொது) எனவும், சுந்தரமூர்த்தி நாயனார், முந்தி யாகிய மூவரின் மிக்க மூர்த்தி யைமுதல் காண்பரி யானை (திருவாழ்கொளிபுத்தூர்) எனவும் அருளிச் செய்தமை காண்க. எனவே, சைவசமய ஆசிரியர்களாற் `சிவன் `உருத்திரன் என்னும் பெயர்களால் வைத்து வணங்கப்பட்டது முழுமுதற் கடவுளே யல்லாமற், புராணகதைகளுட் சொல்லப்பட்ட மூவரில் ஒருவரான காலஉருத்திரர் அன்று. இனிச், சைவசமயாசிரியர்க்கு முன்னிருந்த சைவ சமயச் சான்றோர்களால் வணங்கப்பட்டு வந்ததூஉம் முழுமுதற் கடவுளே யென்பதற்கு, அம் முழுமுதலுக்குப் பேரிலக்கண மாயுள்ள பிறவாமை இறவாமையாகிய தன்மைகளே சிவபிராற்கு உரியனவாகப் பழைய நூல்களுள் ஓதப்படுதலே சான்றாம். பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் என்று `சிலப்பதிகாரத்திலும்8 போந்தமை காண்க. சிவபிரான் முழுமுதற் கடவுளாதல் பற்றியே பண்டை நாளிருலிருந்த தமிழ்ச் சான்றோர்கள் முதலிற் சிவபெருமான் றிருக்கோயிலையும், அதன்பின்னர் ஏனைத் தெய்வங்களின் கோயில்களையும் வைத்து வழிபட்டு வந்தனர். இஃது, ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும், கடல்வளர் புரிவளை புரையு மேனி அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும், மண்ணுறு திருமணி புரையு மேனி விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும், மணிமயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என ஞாலங் காக்குங் கால முன்பிற் றோலா நல்லிசை நால்வ ருள்ளும்9 என்று `புறநானூற்றிற் சிவபெருமான் முதற்கண் வைத்து ஓதப்பட்டமை காண்க. இவ்வாறே `சிலப்பதிகாரத் திலும்,10 `மணிமேகலையிலும்11 சிவபிரானும் அவன் றிருக்கோயிலும் ஏனை எல்லாத் தெய்வங்களுக்கும் அவர் தங்கோயில்கட்கும் முன்வைத்து உரைக்கப்படுதலும் உணரற்பாற்று. எனவே, பிறந்திறப்பனவெல்லாம் சிற்றறிவுடைய உயிர்களாதலும், அவ் வுயிர்கட்குப் பல்வேறு உடம்புகளைத் தந்து அவை தம்மைப் பிறவிவட்டத்தில் வைத்துச் சுழற்றி அவற்றிற்கு அறிவுவளரச் செய்யும் முதல்வன் பிறப்பு இறப்புக்கள் இல்லாத தூய பேரறிவினனாதலும் பண்டைச் செந்தமிழ் நூலாசிரியர் மெய்யுரைகளால் இனிது விளங்காநிற்கின்றன. அப் பண்டையோர் மெய்ம் மரபின் வழிவந்த சைவசமயாசிரியர்களும் பிறப்பு இறப்பு இல்லாத் தனிப்பெருங் கடவுளையே `சிவன் `உருத்திரன் என வைத்து வழிபட்டனர் என்பதற்குப், பிறப்பு இறப்பு இல்லாத் தனி முதன்மையே அப் பெருமானுக்குரியதாக அவர் அடுத்தடுத்து எடுத்துக் கூறுதலே சான்றாம். மாணிக்கவாசகப் பெருமான், யாவர்க்குந் தந்தைதாய் தம்பிரான் தனக்கு அஃதிலான் (திருச்சதகம், 47) எனவும், துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ, இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் (பிடித்தபத்து, 10) எனவும், திருஞானசம்பந்தப்பெருமான், பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ்ப் பிழையாத வண்ணம் (பொது) எனவும், தந்தை யாரொடு தாயிலர் தம்மையே (பொது) எனவும் திருநாவுகரசு நாயனார், பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார் (திருப்பந்தணை நல்லூர்) எனவும், மூவான் இள கான் முழுவுல கோடுமண் விண்ணுமற்றும் ஆவான் (பொது) பெரியான் பெரியார் பிறப்பறுப் பான்என்றுந் தன்பிறப்பை அரியான் அடிநிழற் கீழதன்றோ என்றன் ஆருயிரே. (பொது) எனவும், செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ, அத்தன் என்றுஅரி யோடு பிரமனுந் துத்தியஞ்செய நின்றநற் சோதியே (பொது) எனவும், நூறுகோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர் ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே (பொது) எனவும், சுந்தரமூர்த்தி நாயனார், ஆரும் அளவறியாத ஆதியும் அந்தமும் ஊரும் ஒன்றில்லை (பொது) எனவும் அருளிச் செய்தல் காண்க. இங்ஙனம் பண்டைநாள், தொட்டுப் பின்றைநாள் வரையில் வழிவழி வந்த சைவசமயச் சான்றோர்ளெல்லாம் பிறப் பிறப் பில்லா முழுமுதற் கடவுளையே `சிவம் என வைத்து, அதனையன்றிப் புராணங்கள் கூறிய மூவரையாதல் மற்றுப் பிற தெய்வங்களையாதல் மறந்தும் வணங்காராக, நம்மாழ்வாரோ பிறப்பு இறப்புக்களுட்பட்ட நான்முகன் திருமால் இந்திரன் முதலான தெய்வங்களையும், திருமாலினுந் தாழ்ந்தவர்களாய் இம் மண்ணுலகத்திற் பிறந்து மாண்ட கண்ணன் இராமன் முதலாயினாரையும் பெரிதுயர்த்து ஒரு வரைதுறையின்றி வணங்குகின்றனர். வாங்குநீர் மலருலகில். நிற்பனவுந் திரிவனவும் ஆங்குயிர்கள் பிறப்புஇறப்புப் பிணிமூப்பால் தகர்ப்புண்ணும் (திருவாய்மொழி, 4,9,5) எனவும், நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியேயென் றிவையொழியக் கூயேகொள் ளடியேனைக் கொடுவுலகங் காட்டேலே (5,1,10) எனவுங் கூறித் தாம் பிறப்பு இறப்புத் துன்பங்களினின்றுங் கரையேறுதலை வேண்டும் நம்மாழ்வார், மீனாய் ஆமையு மாய்நர சிங்கமு மாய்க்குற ளாய்க் கானார் ஏனமு மாய்க் கற்கி யாம்இன்னுங் கார்வண்ணனே (5,1.10) என்றும், மனப்பரிப்போடு அழுக்கு மானிடசாதியில் தான்பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு (6,4,7,) என்றும் தாமே தங்கடவுளின் பல பிறவிகளை யுடன்பட்டு மொழிதலும், தம் பிறவியொழித்தற்குப் பிறவியொழியாத பிறன் ஒருவனை வேண்டுதலும் நினைந்துப் பார்க்கும்வழி, அவர் முழுமுதற் கடவுளில்பினைச் சிறிதாயினும் உணர்ந்து பார்க்கும் ஆராய்ச்சியறிவுடைய ரல்லரென்பது துணியப்படும் அன்றோ? இப் பெற்றியினரான நம்மாழ்வாரைக் கடவுட் டன்மையுடைய ரெனவும்,எல்லாம்வல்ல முதல்வனை நேரே கண்டு அவனை வணங்கி வாழ்த்துதலிலேயே ஒன்றுபட்டு உறைத்துநின்ற மாணிக்கவாசகப்பெருமானைக் கடவுட் டன்மை யிலரெனவும் தலைதடுமாறி மயக்கவுரை நிகழ்த்திய `தமிழ் வரலாறுடையாரது பிழை பாட்டுரையினும் மிக்கதொரு பிழையினை யாண்டுங் காணேம். இன்னும், நல்வினை தீவினையின் பயனாய் அறியாமை நீக்கத்தின் பொருட்டு உயிர்கட்கு வரும் பல பிறவிகளும் அவற்றால் வரும் பாவங்களும் எல்லாம்வல்ல இறைவனுக்கு இல்லாமை பற்றியே அவனை அறிவுநூல்கள் அறவாழி அந்தணன்12 அல்லது `புண்ணியன் என்று புகலாநிற்கும். இப் `புண்ணியன்என்னுஞ் சொற் சிவபிரானுக்கே உரித்தாய் வழங்கப்பட்டமை, போதலர் சோலைப் பெருந்துறை எம் புண்ணியன் என்று மாணிக்கவாசகப் பெருமானும், மருந்து வானவர் தானவர்க் கின்சுவை புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல் (திருவெறும்பியூர்,3) என்றும், புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னை (திருப்பூந்துருத்தி) என்றும், நாக்கொண்டு பரவும் மடியார்வினை போக்கவல்ல புரிசடைப் புண்ணியன் (திருவலஞ்சுழி, 7) என்றும், நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன் (பொது) என்றும், ஆதி நாயகன் ஆதிரை நாயகன் பூதநாயகன் புண்ணிய மூர்த்தியே. என்றும் திருநாவுக்கரசு நாயனாரும் அருளிசெய்த வாற்றானும், வைணவ சமயத்தாழ்வார்களுள் முதல்வரான பொய்கை யாழ்வார், பொன்திகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகந் தாய நெடுமாலும் - என்றும் இருவரங் கத்தால் திரிவரேனும் ஒருவன் ஒருவனங்கத் தென்றும் உளன் என்று அருளிச்செய்தமையானும் அறியப்படும். அப்பர் அடுத்தடுத்து வழங்கிய `புரிசடைப் புண்ணியன் என்னுஞ் சொற்றொடரைப் பொய்கையாழ்வார் அங்ஙனமே தாமும் எடுத்து வழங்குதலை உற்றுநோக்குங்காற், சிவபிரானைப் புண்ணியன் என்று கொண்ட அப்பரது கருத்தைப் பொய்கை யாழ்வார் முற்றுந் தழுவினமை புலப்படும். இவ்வாற்றாற் பொய்கையாழ்வார் அப்பருக்குப் பின் கி.பி. ஏழாம் நூற்றாண்டி லிருந்தவராதலும் தெற்றென விளங்கும். அடிக்குறிப்புகள் 1. `அத்தர் பியல் என்பது `அப்பனது பிடரி எனப் பொருள்படுவதாகும்; `பியல்பிடரி எனப் பொருடதல், பியல் ஊகமும் என்று `பெருங்கதை (1,58,87)யுட் போந்தவாற்றானும் அதன் குறிப்புரையானும் உணர்க. 2. `குமை என்னுஞ்சொற் குழைவுப் பொருட்டாகலின் அஃதிங்கே `கூழ் எனப் பொருள் தந்தது. 3. See his ‘Tamil Studies’, pp. 324 - 338. 4. இருக்கு, 2,1,6, 5. திருமுருகாற்றுப்படை, 241. 6. சிறுபாணாற்றுப்படை. 8. 7. தொல்.உரியியல், 4. 8. இந்திரவிழவூரெடுத்த காதை, 169. 9. புறநானூறு, 56. 10 ஊர்காண் காதை, 7. 11 விழாவறை காதை, 54. 12. குறள்: 8. 16. சைவசமயச் சான்றோர் பொய்கையாழ்வார் கருத்தொருமை இனிப், பொய்கையாழ்வார் தாம் அருளிச்செய்த `முதற் றிருவந்தாதியின் ஈற்றிற் பொன்திகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும்என்னுஞ் செய்யுளை அமைத்தபடியை ஆராயும் வழி, அவரும் பார்ப்பனர் கட்டிவிட்ட புராண கதைகளினால் இடையிடையே பெரிதும் ஈர்ப்புண்டு நான்முகன் திருமால் உருத்திரன் எனக் கடவுளர் மூவர் உளரெனவும் அம் மூவருள்ளும் திருமாலே முதல்வ ரெனவுங் கொண்டு நெடுநாள் மயங்கி இடர்ப்பட்டன ரேனும், பின்னர்த் தாம்செய்த நல்வினைப் பயத்தால் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளின் திருவுருவினைத் தாம் நேரே கட்புலனாற் காணும் பெறற்கரும் பேறு பெற்று, அத் திருவுரு ஒருபாற் சிவந்த நிறத்தினையுடைய சிவவடிவாயும் மற்றொருபால் நீலநிறத்தினையுடைய மால்வடிவாயும் இருக்கக் கண்டு, அதுவே இறைவற்கு உண்மை வடிவாமெனத் தெளிந்து, அச்செய்யுளை அந் நூலின் இறுதியில் முடிந்த முடிபாக வைத்துஅருளிச் செய்தாராகல் வேண்டுமென்பது புலனாகா நிற்கும். திருக்கோவலூரில் ஓர் இடைகழியில் தாம் இறைவன் றிருவுருவினை நேரே கண்டமையினைப் பொய்கையாழ்வார் நீயுந் திருமகளும் நின்றாயால் என்று தாமே குறிப்பிட்டு அருளிச் செய்திருக் கின்றனராகலின், அது மறுக்காலாகா உண்மையே யாமென்க. அங்ஙனம் ஈருருவும் ஓருருவாய் நின்ற இறைவனை நேரே கண்ட துணிவினாற்றான் அவர் தாங்கண்ட அவ் வுருவின் ஒரு பக்கத்தின பெயர் `அரன் மற்றொரு பக்கத்தின் பெயர் `நாரணன் ஆம் என்றும், ஒரு பக்கத்தின் ஊர்தி எருது மற்றொரு பக்கத்தின் ஊர்தி எருவையாம் என்றும், இருகூறும் உரைத்தநூல் `மறை யாகும் என்றும், அவ்விரண்டுள் ஒன்று அமர்ந்திருப்பது மலை மற்றொன் றமர்ந்திருப்பது கடல் ஆம் என்றும், ஒன்று காத்தற் றொழிலைச் செய்வது மற்றொன்று அழித்தற் றொழிலைச் செய்வதாம் என்றும், ஒன்றன் திருக்கையிலுள்ளது முத்தலைவேல் மற்றொன்றன் கையிலுள்ளது ஆழியாம் என்றும், ஒன்றன்நிறம் நெருப்பின் செந்நிறம் மற்றொன்றன் நிறம் நீலமாம் என்றும் தெளிவுற விளக்கி, அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள் ஊர்தி உரைநூல் மறைஉறையுங் கோயில் -வரைநீர் கருமம் அழிப்புஅளிப்புக் கையதுவேல் நேமி உருவம்எரி கார்மேனி ஒன்று. என்று அருளிச் செய்தார். இங்ஙனமே பின்னும், அவர் ஏற்றான்புள் ளூர்ந்தான் எயில்எரித்தான் மார்பிடந்தான் நீற்றான் நிழல்மணி வண்ணத்தான்- கூற்றொருபால் மங்கையான் பூமகளான் வார்சடையான் நீண்முடியான் கங்கையான் நீள்கழலான் காப்பு. என்று வற்புறுத்தருளிச் செய்தலுங் காண்க. இவ்வாறு முழுமுதற் கடவுளின் திருவுற ஒருபாற் செம்மை நிறத்தினை யுடைய சிவமாயும் மற்றொருபால் நீல நிறத்தினையுடைய திருமாலாயும் அமைந்து நிற்குமென்பது அவ்விறைவனுருவை நேரே ஒருகாலன்றிப் பலகாலுங் கண்ட திருஞானசம்பந்தப் பெருமான், மாதொருபாலும் மால்ஒரு பாலம் மகிழ்கின்ற நாதன். (திருப்பிரமபுரம், எய்யாவென்றி என்னும் பதிகம். (2) என்றும், ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால் கூறனார் (திருத்தென் குடித்திட்டை,6) என்றும் அருளிச் செய்யுமாற்றானும் நன்குணரப்படும். இதனோடு ஒப்பவே திருநாவுக்கரசு அடிகளும், குடமாடி இடமாகக் கொண்டான் கண்டாய். (திருக்கோடிகா) என்றும், அரியலாற் றேவியில்லை யையன் ஐயாற னார்க்கே.1 (திருவையாறு) என்றும், பாகம் மாலை மகிழ்ந்தனர் (திருவையாறு) என்றும், மால்ஒரு பாகமாக மகிழ்ந்தநெய்த் தானத்தாரே (திருநெய்த்தானம்) என்றும், மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார்போலும் (திருவிடைமருதூர்) என்றும், மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார். (பொது) என்றும் பலகால் அருளிச் செய்திருத்தலும், பேயாழ்வார். தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவுஞ் சக்கரமும் சூழரவும் பொன்நாணும் தோன்றுமால் -சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய்இசைந்து. என்று அருளிசெய்தமையுங் கருத்திற் பதிக்கற்பாலனவாகும். இவ்வாறே பண்டைத் தமிழ்ச் சான்றோரும், நீல மேனியினையுடைய அம்மையை இடப்பக்கத்தே ஒருகூற்றிற் கொண்ட சிவபிரானே முழுமுதற்கடவுளெனத் தெளிய வுணர்ந்து வழிபட்டமை, நீலமேனி வாலிழை பாகத் தொருவன திருதாள் நிழற்கீழ் மூவகை யுலகம் முகிழ்த்தன முறையே2 என்பதனாலும், ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே செவ்வான் அன்ன மேனி அவ்வான் இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று எரிஅகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமான் உரிவை தைஇய யார்கெழு மணிமிடற் றந்தணன் தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே3 என்பதனாலும், பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்4 என்பதனாலும்,செவ்விதின் உணர்ந்து கொள்க. அற்றேல், நூறுகோடி பிரமர்கள் நொந்தினார் ஆறுகோடி நாராயணர் அங்ஙனே என்று நாராயணர் பலர் உளரெனவும், அவரெல்லாம் பிறந்திறக்கு நீரெனவுங் கூறிய சைவசமய ஆசிரியரே, பிறந்திறவா முதல்வனின் ஒருகூறு திருமால் என்று மொழிதல், முன்னொடுபின் முரணாம் பிறவெனின்; அற்றன்று, இறைவனில் ஒருகூறாய் நிற்குந் திருமால் பிறப்பிறப்பு இல்லா உலகன்னையாம் முதல்வியே யல்லாமற் பல பிறவி யெடுத்துழலும் நாராயணர் அல்லர். இவ்வுண்மை, முதன்முறை இடைமுறை கடைமுறை தொழிலிற் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே5 என்னும் பரிபாடற் பாட்டின் அடிகளானும் உணரப்படும். திருமாலின்மேற் பாடப்பட்ட பரிபாடற் பாட்டுகள் கிறித்து பிறப்பதற்கு இருநூறாண்டுகட்கு முன்னரே இயற்றப் பட்டனவாகும் என்பதற்கு, அப்பாட்டுகளுள் யாண்டும் கண்ணனாவது இராமனாவது குறிப்பிடப்படாமையே சான்றாம். பிற்றைஞான்றை வைணவ சமயத்தாரால் திருமாலின் விழுமிய பிறப்பினராய்க் கொள்ளப்பட்டுப் பெரிது வணங்கப்படுங் கண்ணனும் இராமனும் அப்பாடல் களுட் சிறிதுங் குறிப்பிடப்படாமையை ஆராயுங்கால், அவ் விருவரைப் பற்றிய கதைகள் இத் தென்றமிழ்நாட்டிற் பரவுதற்கு முன்னரே திருமால் பிறப்பு இறப்பு இல்லா முதல்வராகப் பண்டைத் தமிழ்ச் சான்றோராற் பரவப்பட்டு வந்தமை புலனாம். வடக்கிருந்துவந்த ஆரியப்பார்ப்பனர் தாங்கொணர்ந்த `மாபாரத `இராமாயணக் கதைகளால் கண்ணன் இராமன் என்னும் இருவரையுந் தெய்வங்களாக்கி அவரைத் திருமாலோடு ஒன்றுபடுத்திய பின்னரே தான், அக் கண்ணன் இராமன் என்பார்க்குரிய பிறப்பு இறப்புக்கள் திருமாலுக்கும் உரியனவாக ஏற்றப்பட்டன. அதற்கு முன்னெல்லாம் தமிழ்ச்சான்றோர்கள் சிவபிரானையுந் திருமாலையும் ஒன்றாகவே வைத்து வழிபட்டு வந்தார்கள்; `சைவம் `வைணவம் என்ற இருவகைச் சமயப் பகுப்பு அக்காலத்தில் இத் தமிழ்நாட்டின்கண் இருந்ததே இல்லை; கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய செந்தமிழ்ப் பாட்டுக்களில் எங்குஞ் `சைவம் `வைணவம் என்னுஞ் சொற்கள் சிறிதுங் காணப்படா. வடக்கிருந்துவந்த ஆரியப்பார்ப்பனர், தமிழ் நன்மக்களுள் இருந்த ஒற்றுமையைக் குலைத்து, அவர் தம்மை வேறுபிரித்து, அவர் தமக்கெல்லாந் தாமே மேலாக நிற்றல் வேண்டியே, திருமாலை யுயர்த்திப் புராண கதைகளைப் படைத்து `வைணவம் என்னும் ஒரு மதத்தையும் தனியே யுண்டாக்கினர். மற்றை மக்களைப்போலவே பிறந்து பலவகைத் துன்பங்களில் உழன்று இறந்துபட்ட கண்ணன் இராமன் முதலாயினாரைத் `திருமாலின் அவதாரங்கள் எனப் புகன்று, அவர்களை அத் திருமாலினும் மிக்கவராக வைத்து வழிபடும் ஆரியரது புன்செயலைக் கண்டவளவானே, எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளைப் பிறப்பு இறப்புக்களிற் கிடந்து உழலும் மக்களுக்கு ஒப்பாகவைத்துச் சொல்லுதலிற் சிறிதுங் கருத்து உடன்படுதல் இல்லாத தமிழ்ச்சான்றோர்கள் தமது மேம்படுகொள்கை, புதிது தோன்றிய `வைணவ மதத்தின் முற்றும் வேறாதலைப் பொள்ளெனப் புலப்படுத்தல் வேண்டியே தாம் முழுமுதற் கடவுளுக்குப் பெயராய் இட்டு வழங்கிய `சிவம் என்னும் பெயராற் `சைவம் என்னும் ஒரு குறியீட்டை யுண்டாக்கி அதனைத் தமது கோட்பாட்டிற்குப் பொருந்திய பெயராய்த் தாமும் வழங்கலாயினர். பண்டைத் தமிழ் மக்களால் ஒரே தெய்வமாக வைத்து வணங்கப்பட்டு வந்த `அம்மையப்பரே பின்னர் இருவேறு தெய்வங்களாகப் பிரிந்ததும், அவ்விரண்டுள் `திருமால் தமது பண்டை முழுமுதற்றன்மை யிழந்து கண்ணன் இராமன் என்பாரினுந் தாழ்ந்த நிலைமையை யடைந்ததும், அதனால் முன்னர் ஓர் இனத்தினராயிருந்த தமிழ்நன்மக்கள் பின்னர்ச் `சைவர் `வைணவர் என இருவேறு பகுப்பினராய்ப் பிரிந்து வேறுபட்டதும் ஆகிய இவையெல்லாம், ஆரியப் பார்ப்பனரில் ஒரு கூட்டத்தார் கி.பி.முதல் நூற்றாண்டில் `மாபாரதக் கதையினையும், மற்றொரு கூட்டத்தார் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் `இராமாயணக் கதையினையும் இத் தென்றமிழ் நாட்டிற்கொணர்ந்து அவை தம்மை மிகப் பரப்பிய காலம் முதல்முறையே நிகழ்ந்து வளர்ந்தனவாகும். கண்ணனிலுந் திருமால் இழிந்தோராகத் தாழ்ந்தப்பட்டமைக்கு நம்மாழ்வார், திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள்எம் பெருமான் தன்மையை யார் அறிகிற்பார்.6 என்று கூறுதலே சான்றாம். வடக்கிருந்து வந்த ஆரியப் பார்ப்பனர் இந்திரன், வருணன், மித்திரன் முதலான சிறுதெய்வங்களுக்கு உயிர்க்கொலை வேள்விகள் வேட்டு அவரை வணங்கும் நீரரேயல்லாமல், முழுமுதற் கடவுளையும் அதனை வழிபடும் அன்பின் முறைகளையும் ஒரு தினையுளவுதானும் அறிந்தவர் அல்லர். மக்களைத் தெய்வங்களாக வணங்குதலே அவ்வாரியர்க்கு மிக்க விருப்பத்தினையும் மகிழ்ச்சியினையுந் தருவதல்லது. முழுமுதற் கடவுள் வணக்கம் அவர்க்குச் சிறிதும் உவப்பினைத் தருவதன்று; அதனால் அவர் அதனை எட்டிக்காயினுங் கைப்பதாக நினைந்து இகழாநிற்பர். இப் பெற்றியினராகிய அவ்வாரியர் இத்தென் தமிழ்நாடு புகுந்ததும் தமிழ்ச் சான்றோர் அறிவானும் நாகரிகத்தானும் தம்மினும் மிகச் சிறந்தோராய் விளங்கி முழுமுதற்கடவுளை அம்மையப்பராக வைத்து வணங்கும் விழுமிய முறையினைக் காண்டலும், பல சிறுதெய்வ வணக்கத்திலும் வெறியாட்டு வேள்வியிலும் பழகிய தமதறிவுக்கு அஃது எட்டாமையால், தாம் புனைந்து கட்டிக் கொணர்ந்த மாபாரத இராமாயணக் கதைகளின் உதவிகொண்டு உருக்கமான அக் கதைகளிற் சொல்லப்பட்ட கண்ணையும் இராமனையும் உயர்பெருந் தெய்வங்களாக்கி, உயர்ந்த கல்வியறிவும் பகுத்துணர்ச்சியும் இல்லாத் தமிழ்ப் பொதுமக்கள் அக்கதைகளை மெய்யென நம்பி மனங்கரைந்து அவ்விருவரையுமே திருமாலின் அவதாரமென மயங்கிக் கொண்டு வழிபடுமாறும், முழு முதற்கடவுளாகிய சிவபெருமானையும் அவனோடு இரண்டறக் கலந்துநிற்கும் அம்மையாகிய திருமாலையும் வணங்கும் வணகக்கத்தைக் கைவிடுமாறும் செய்துவிட்டனர். இதுகண்ட தமிழ்ச் சான்றோர்கள் எளிய கதைகள் எழுதும் முகத்தாற் `சிவம் என்பது பிறப்பு இறப்பு இல்லா முழு முதற்கடவுளே யாதலைத் தாமும் தமிழ்ப்பொதுமக்கட்குத் தேற்றும் பொருட்டுச், சிவபெருமானுக்குச் சிறந்த அடியவர்களான அரசர்கள் செய்த ஆண்மைச் செயல்களைச் சிவபிரானே செய்தனவாகக் கதைகள் புனைந்து `சைவபுராணம் `கந்தபுராணம் முதலிய பல புராணங்களையும் இயற்றி வழங்கவிட்டார்ககள்; சிவபிரான் கோயில்களை நிறைய எடுப்பித்து, அவற்றின்கட் சிறந்த பல திருவிழாக்களும் நடைபெறுமாறு செய்தார்கள்; அக் கோயில்கள் அமைக்கும் முறைகளையும் அவற்றின்கண் வழிபாடு ஆற்றும் முறைகளையும் விரித்துப், பழைய நாளிலிருந்த தமிழ் ஆகம நூல்களின் பெயராற் `காமிகம், `வாதுளம், முதலான நூல்களையும் வடமொழியில் எழுதிவைத்தார்கள். இவ்வளவும் தமிழ்ச் சான்றோர்கள் செய்து வைத்தமை யினாலேதான், கண்ணனும் இராமனும் பெரிது வணங்கப் படும் இந்நாளிலுங் கூட முழுமுதற்கடவுளாகிய சிவபிரானை வணங்கும் வணக்கமும் இன்னும் இடையிடையே காணப் படுகின்றது. இங்ஙனம் அவர்கள் செய்துவையாவிட்டால் கண்ணன் இராமன் முதலியோரையும், ஏனைச் சிறு தெய்வங்களையும் வணங்கும் வணக்கமே இத் தென்றமிழ் நாட்டிலும் முழுதும் பரவியிருக்கும். இங்ஙனமாகக் `கந்தபுராணம் முதலான சைவ புராணங்களை ஆன்றோர்கள் எழுதிவைத்தது, `பாரதம் `இராமாயணம் முதலான கதைகளைக் கேட்டு மக்ளைத் தெய்வமாக மயங்கி வழிபடும் பொதுமக்களை அத்தகைய கதைகளின் வாயிலாகவே மெல்லெனத் திருப்பி முழுமுதற் கடவுளாகிய சிவபிரான் வழிபாட்டில் நிறுத்திக் கொள்ளும் பொருட்டுச் செய்த ஒரு சூழ்ச்சியேயாகும். இச் சைவ புராணங்களெல்லாம் இறைவனுடைய நுண்ணிய இயல்புகளை உணரமாட்டாத பருப்பொரு ளறிவினார்க்கு அவற்றைத் தெருட்டும்பொருட்டு அவை தம்மை உண்மையில் நிகழ்ந்த கதைகள்போல் வைத்து உணர்த்த எழுந்தனவாகும். எல்லாம்வல்ல இறைவனுயர்வைப் புலப்படுத்துதற்கு ஒரு கருவியாக எழுதப்பட்ட இச் சைவபுராணங்களே, உண்மை யறிவில்லாரால் அவனது உயர்வைக் குறைக்குங் கருவியாகவுங் கொண்டுவந்து விடப்பட்டன. யாங்ஙனமெனிற் சிறிது காட்டுதும்: உயிர்களைப் பொதிந்து வருத்தும் ஆணவம் மாயை வினை என்னும் மும்மலங்களும் இறைவனது அருள் நெருப்பால் எரிக்கப்படுதலேயே, பொதுமக்கள் எளிதில் உணர்ந்து கொள்ளும் பொருட்டு, வானத்திற் பறந்து செல்லும் மூன்று தீய அரக்கர் தம் பட்டினங்கள் இறைவனது நெற்றிக்கண் நெருப்பால் எரிந்தனவாக வைத்து ஒரு புராணக்கதை எழுதப்பட்டது. இதுவே இக்கதையின் கருத்தாதல், அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள், முப்புர மாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யார்அறி வாரே.7 என்று திருமூலநாயனார் அருளிச்செய்தமையால் அறிப்படும். இவ்வுண்மைப் பொருளறியாத சைவரிற் பருப்பொருளறிவினார், சிவபிரானே தேவர் சமைத்த தேரின் மேல் அமர்ந்து அவ்வரக்கரின் அப்பட்டினங்கண்மேல் வில்லுங் கணையும் ஏந்திச்சென்று அவற்றை எரித்தான் என்று உரைப்பர்; அதுகேட்ட மற்றைச் சமயத்தார் `எங்கும் நிறைந்த நும் கடவுள் ஒரு தேர்மேல் ஏறி, ஓரிடத்திருந்து பிறிதோரிடத்திற்குச் செல்வது எப்படி? எவற்றையும் நினைந்த அளவிலே ஆக்கவும் அழிக்கவும் வல்லவன் நுங்கடவுளாயின் அவன் வில்லுங்கணையும் ஏந்தி அவ் வரக்கர்மேற் போர்புரியச் சென்றது எற்றுக்கு? மக்களைப் போல அவனுக்கு வில்லுங் கணையுந் தேருங்கூட வேண்டுமோ? அவ்வரக்கரின் அப்பட்டினங்கள் மூன்றுபருப்பொருள் களாகையால் அவை நிலத்தின்மேல் இருக்கத்தக்கனவே யல்லாமல் வானத்திற் பறப்பது யாங்ஙனம்? என்று இன்னோரன்ன கேள்விகளைக் கேட்பராயின், அவற்றிற் கெல்லாம் அச் சைவர் விடைகூற இயலாமல் விழிக்கின்றனர். இன்னும், எல்லா உலகங்களின் படைப்புக்கும் ஏதுவாகி யிருக்கின்ற புள்ளிவடிவினதாகிய விந்துவும் வரிவடிவினதாகிய நாதமுஞ் சேர்ந்த சேர்க்கையே ஓங்காரமாகும். இந்த ஓங்காரத்தில் விளங்கும் முதல்வன் படைப்புக்கு முந்திய தோற்றமுடையனாய், விந்துநாதச் சேர்க்கையாற் பிறந்த முதலோசையில் முனைந்து நிற்பவனாகலின், அவன் விந்துநாதங்களை இயக்கிநிற்கும் அம்மையப்பருக்கு மூத்தபிள்ளை போல்வனாதலைத் தெரித்தற்கே, ஓங்காரம் போன்ற முகவடிவினையுடைய யானை யினுருவினை மேற்கொண்டு அம்மையப்பர் சேர்ந்த சேர்க்கையினின்றும் யானைமுகக் கடவுள் தோன்றினா ரென்னும் ஒரு புராணக்கதை வரைந்துவைக்கப்பட்டது. இக் கதையின் உண்மை இதுவாதலை உணராத சைவரிற் சிற்றறிவினார், திருக்கைலாயத்தின் சுவரிலே வரைந்திருந்த யானையின் உருவினைக் கண்டு சிவபிரான் காமங் காழ்ப்பேற அதுகண்ட பிராட்டி தான் பெட்டையானையின் வடிவினை எய்தலும், பெருமான் களிற்றியானையின் உருவுகொண்டு அதனொடு புணர்ந்தனனாக யானை முகத்தினையுடைய மூத்தபிள்ளையார் தோன்றினார்; இந்நிகழ்ச்சி உண்மையே யாகுமென நம்பி உரை நிகழ்த்துவர். இவ்வுரையினைக் கேட்ட மற்றைச் சமயத்தவர் `நுங்கடவுள் மக்கள் தேவரினும் இழிந்த யானையின் உருவையெடுத்துப் புணர்ச்சி செய்ய விழைந்த அத்துணை இழிந்த காமம் உடையரோ! எனவும், `தன் முகத்தை அழகிய தேவ வடிமாகத் திருத்திக்கொள்ள மாட்டாமல், மக்களினுந் தாழ்ந்த யானையின் முகவடிவமாகவே அமர்ந்திருந்த பிள்ளையார், யானையினுஞ் சிறந்த மக்களைத் திருத்துவது எங்ஙனம்? எனவும் வினாவி நகையாடா நிற்பர். இவ்வாறே முருகக் கடவுளின் பிறப்பைக் கூறுங் கதைகளும், அவர் சூரபன்மனோடு எதிர்த்துப் போராடினரெனக் கூறுங் கதைகளும்; சிவபிரானையும் அம்மையையும் பற்றியெழுந்த ஏனைக் கதைகளும் எல்லாம் உண்மையில் நிகழ்ந்தன அல்ல; அக் கதைகளெல்லாம் சைவசித்தாந்த நுண்பொருள்களை யுள்ளடக்கிப் பருப்பொருளறிவினாரைத் தெருட்டுதற் பொருட்டுப் புனைந்து வைக்கப்பட்டனவாகும். மாணிக்க வாசகப் பெருமானை யுள்ளிட்ட சைவசமய ஆசிரியன்மார் இன்னோரன்ன கதைகளைத் தழுவிச் சிவபிரானைப் பாடினமை, அக் கதைகளுட் கிடந்த நுண்பொருளை நோக்கியே யல்லாமல், அவை உண்மையில் நிகழ்ந்தவை என்னுங் கருத்துப் பற்றியன்று. அந் நுண்பொருளெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகுமென அஞ்சிவிடுத்தாம். இவ்வாறெல்லாம் சிவபுராண கதைகள் பெருகலானது, வடக்கேயிருந்து வந்த ஆரியப்பார்ப்பனர் பாரத இராமாயண கதைகளை இத் தென்றமிழ் நாட்டிற் கொணர்ந்து பரப்பிக், கண்ணனையும் இராமனையும் உயர்பெருந் தெய்வங்களாகப் புகுத்திய காலந்தொட்டு நிகழ்ந்ததாகும். இக் கதைகள், தம்மை ஆக்கியோர் கருதிய பயனைத் தந்திலவாயினும், சிவபிரான் பிறப்பு இறப்பு இல்லாத் தனிமுதல்வனாய், ஏனையோர் வணங்கும் தெய்வங்கள் எல்லாவற்றிற்கும் மேலான முழுமுதற் கடவுளே யாவன் என்பதனை நாட்டுதலில் ஒருமுகப்பட்டு நிற்கின்றன. இப் புராண கதைகளுள் யாண்டும் சிவபிரான் ஒரு தாயின் கருப்பையுட் டங்கிப் பிறந்து வளர்ந்து இறந்தான் எனக் கூறப்படாமையே பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாலதாம் விழுமிய உண்மையாகும். சிவபிரானோடு இரண்டறக் கலந்துநிற்கும் அம்மையாகிய திருமாலும், அவனைப் போலவே பிறப்பு இறப்புத் தன்மைகள் சிறிதும் இல்லாதவள் ஆவள். திருமால் பத்துப் பிறவிகள் எடுத்தனரென்றலும், அப் பிறவிகளில் பல அல்லல்களுழந்து பின்னர் இறந்தனரென்றலும போல்வன வாகிய கதை களெல்லாம் வடக்கிருந்து வந்த ஆரியப்பார்ப்பனர் கட்டிவிட்டவைகளாகும். அக் கதைகளிற் கூறப்படுவோர், உண்மையிலே திருமாலின் அவதாரங்கள்அல்லர்; அவருட் சிலர் அறிவு ஆற்றல்களில் ஏனை மக்களைவிடச் சிறிது உயர்ந்தவரும், மற்றுஞ் சிலர் கதைபுனைந்த ஆரியக் குருமாரால் உள்ளவர்போல் வைத்துக் கட்டிச் சொல்லப் பட்ட வரும் ஆவர்; இத்தகைய இவர்கட்கும் முழுமுதற் பொருளாகிய திருமாலுக்கும் ஏதொரு தொடர்பும் இல்லையென்பது கடைப்பிடிக்க. அற்றேற், பண்டையோர் வணங்கிய திருமால் ஆண் வடிவினரேயாக அவரைப் பெண்பாலாக ஓதுதல் என்னை யெனின்; உலகத்திலுள்ள ஆற்றல்களெல்லாம் வெப்ப தட்பங்கள் என்னும் இருவகை யியக்கங்களினும், அமைப்பு களெல்லாம் ஆண் பெண் என்னும் இருவகை வடிவுகளினும், வண்ணங்க ளெல்லாஞ் சிவப்பு நீலம் என்னும் இருவகை நிறங்களினும் அடங்குமாற்றை முன்னரே விளக்கிக் காட்டினாம்.8 அவ்வாற்றால் தீ வடிவு ஆண்டன்மையின் பாலதாய்ச் சிவந்த நிறத்தினதாதலும், நீர்வடிவு பெண்டன்மையின் பாலதாய் நீலநிறத்தினதாதலும், ஆண்டே விளக்கிக் கிடந்தன. ஆகவே, நீலநிறத்தினையுடைய திருமால் பெண்டன்மை வாய்ந்த தெய்வமேயாக வேண்டுமல்லாமல், ஆண் டெய்வமாதல் செல்லாது. `நாராயணன் என்னுஞ் சொல்லும் நீர்க்கடவுள் என்னும் பொருளையேதரக் காண்டாலானும், நாராயணன் மோகினி யென்னும்1 பெண் வடிவு கொண்டு சிவபிரானைக் கூடி ஐயனாரை ஈன்றனன் எனக் கூறும் புராணகதையின் கருத்துத் திருமாலைப் பெண் டெய்வமாகக் கொள்ளு தலையே நோக்கி நிற்கலானும், நாராயணன் ஆண் டெய்வ மாயின் `நாராயணி என்னும் பெண்பாற் பெயர் அவற்கு மனைவியாகிய திருமகளை யுணர்த்த வேண்டுமாகவும் அஃது அங்ஙனம் அவளை யுணர்த்தாது சிவபிரான் காதலியாகிய அம்மையையே யுணர்த்துதலானும், திருமால் தன் புதல்வனாகிய நான் முகனைத் திருமகன்பாற் பெற்றான் என உரையாது தானே தனது கொப்பூழினின்றுந் தோற்றுவித்தானென அவன்றன் சிறப்புக்களை விரிக்கும் புராணங்களெல்லாம் ஓதுதலானும் திருமால் பெண் டெய்வமேயாதல திண்ணமென்க. அற்றேற், பண்டை நல்லாசிரியர்கள் திருமாலை ஆண் வடிவாகவும் வைத்துரைத்தது என்னையெனின்; பழைய தாகிய காலத்தே அனல்வடிவினனாகிய சிவபிரானைக் காணும்பேறு வாய்ந்த அடியார்கள் அப்ப னுருவினைத் தெளியக் கண்டாற்போல, அவனுள்ளடங்கிச் செவ்வனே புலப்படாது நீலநிறத்தின் அளவாய்த் தோன்றிய அம்மை யினுருவினை அங்ஙனந் தெளியக் காணப்பெறாமையின் அந்நீலவுருவினையும் ஆண் வடிவினதாகவே கருதினாராதல் வேண்டும். இவ்வுண்மை தீக் கொழுந்தினை உற்றுநோக்கு மாற்றானும் நன்குணரலாம். பெருவிளக்கத்தோடுந் திகழும் தீக்கொழுந்தின்கட் செந்நிறத் தாகிய அதன் வடிவு நமக்குச் செவ்வனே புலனாதல்போல, அத் தீக்கொழுந்தின்கண் அடங்கித் தோன்றும் நீரின் நீலவடிவு அத்துணை எளிதிற் புலனாகமற் காணப்படுமாறும் ஆராய்ந்துணரர் பாற்று எனவே அப்பனது வடிவு ஒளியினைத் தருந் தீ வடிவிற்றாகலின் அதனைக் காணப்பெறும் அடியார் அவனது ஆண் டன்மையினை எளிதில் உணரப்பெறுவ ரென்பதூஉம், அப்பனுள் அடங்கி நிற்கும் அம்மையின் வடிவு நீர்வடிவிற்றாய்ச் சிறு நீலநிறத்ததாகலின் அவள் தானாகவே முனைத்துத் தோன்றித் தனது பெண்மை வடிவினைப் புலப்படுத்தினல்லால் அவளது அவ்வடியினை எளிதினுணர்தல் அடியார்க்கு ஏலாதா மென்பதூஉம் இனிது பெறப்படும். அப்பனுருவினைத் தெளியக் கண்டாற்போல, அம்மை யுருவினைத் தெளியக் காணப்பெறாது அதனையும் ஆண் வடிவிற்றாகவே பிழைபட வைத்துப் பண்டையோர் வழிபாடு ஆற்றிவராநிற்ப, அவர்க்குப் பின் அவரினுந் தூய உள்ளுணர்வின் மிக்கோராய் வந்தோர் அப்பனோடு அம்மையும் முனைத்துத் தோன்றி அருள்செய்யப் பெற்ற பெறற்கருந் தவமுடைய ராகலின், அவர் நீலவுருவிற்றோன்றி அருள் புரிந்த தெய்வம் பெண் வடிவிற்றாம் உண்மை உண்மை யுணர்ந்து அதனை அவ்வடிவிற்றாகவே வைத்து வழுத்துதலும் பரவுதலுஞ் செய்வாராயினர். இவ்வாறு அத் தெய்வத்தின் உண்மை யுணர்ந்த பின்னும், தமக்கு முன்னிருந்த பண்டையோர் அந் நீலவுருவினை ஆண் வடிவினதாக வைத்தது பிழையென அறிந்தாராயினும், அவ் வழிபாட்டில் உறைத்து நின்றார்க்கு மனப்புழுக்கம் உண்டாகாமைப் பொருட்டு அவர் கொண்டவாறே திருமாலைத் தாமும் ஆண் வடிவினராகக் கொண்டு, அங்ஙனங் கொள்ளினுந் திருமால் அம்மையின் வேறல்லாமையைப் புலப்படுத்துதற்கு அம்மை திருமாலின் தங்ககையாவாள் எனவும், இருவரும் நீலநிறத்தினரேயாவ ரெனவும் பகர்ந்து அவ் விருவரையும் ஒப்பவைத்துச் சிவபிரானோடுகூட்டி வணங்கி வரலாயினர். இவ்வுண்மை தெரித்தற் பொருட்டே திருஞானசம்பந்தப் பெருமானும், மாதொருபாலும் மால்ஒருபாலும் மகிழ்கின்ற நாதன் என்று அருளிச்செய்தமையினை முன்னும் எடுத்துக் காட்டினாம். இனி, ஆண்வடிவினை உயர்வாகவும், பெண்வடிவினை இழிவாகவுந் தமது அறியாமையால் நினைக்கப் புக்க மாந்தர்களின் காலந்தொட்டுத், திருமாலை ஆண் வடிவில் வைத்து வழிபட்டு வந்தோர் பின்னர் அவரைப் பெண் வடிவினராகக் கோடற்கு மனம் ஒருப்படாராய்ச், சிவபிராற்கு உமைப்பிராட்டி யிருத்தலோ டொப்பத், திருமாற்கும் ஒரு பிராட்டியைச் சேர்க்க விழைந்து `திருமகள் என்னும் ஒரு பெண் டெய்வத்தைப் புதிது படைத்து அவரொடு பொருத்தி, அவ்வாற்றாற் சைவ சமயத்துக்கு எதிராக வைணவ சமயத்துக்கும் ஆண் பெண் வடிவின தாகிய ஒரு தெய்வத்தை நிலைநாட்டினர். இவ்வாறெல்லாம் பண்டைத் தமிழரின் ஒரே தெய்வக் கொள்கை இருவேறு வகையினதாய்ப் பிரிந்து, வடக்கிருந்து வந்து குடியேறிய ஆரியரின் புராண கதைக் கலப்பால், நாளேற நாளேற ஒன்றற்கொன்று பெரிதும் மாறுபட்டுப் பகைமை யுடையனவாயின. அங்ஙனமாயினும், தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் கொண்ட ஒரு முழுமுதற் கொள்கையே தமிழ்மக்கட்கு உரிய தொன்றாக லானும், அதுவே `சைவசமயம் என்னும் பெயராற் பிற்காலத்து வழங்கப்பட்டு வருதலாலும், எச்சமயத்தார்க்கும் ஒரு முதல்வனே அவரவர் தகுதிக்கேற்ப அருள்புரிந்து வருகின்றனன் என்பது சைவசமயக் கோட்பாடாகலானும், இக் கோட் பாட்டினைக் கொண்ட தமிழ்ச் சைவர்கள் பிறசமயத் தெய்வங்களையும் பழியாமல் அவைகளையும் இன்றுகாறும் வணங்கிவரா நிற்கின்றார். நாகூர்த் துலுக்கர் கோவிலிலும், வேளாங் கண்ணிக் கத்தோலிக்கக் கிருத்துவர் மாதா கோவிலிலும் திருப்பதி, சீரங்கம், காஞ்சிபுரம் முதலான இடங்களிலுள்ள திருமால் கோவில்களிலுஞ் சென்று வணங்கும் பெருந் தொகையினர் சைவசமயத்தவராகவே யிருத்தலும், மற்றைச் சமயத் தெய்வங்களின் பெயரைச் சைவர்கள் தமக்கும் பெயராக வழங்கிக் கொள்ளுதல்போல ஏனைச் சமயத்தவர் அங்ஙனம் மற்றைச் சமயத் தெய்வங்களின் பெயரைத் தாமெடுத்து வழங்காதிருத்தலும் ஓர்ந்து நோக்குங்காற் சைவசமயத்தவர்கள் மட்டுமே ஒரு முழுமுதற் கடவுளை எங்கும் வணங்கி எச் சமயத்து மாட்டும் பகை பாராட்டாத இயற்கை யுடையவ ரென்பது நன்குபுலனாம். ஆரியரது கலப்பு நேர்தற்குமுன் பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற்கடவுளை அகக்கண் புறக்கண் இரண்டும் ஒத்துக்கண்டு வழிபட்ட தமிழ்ச் சான்றோர்கள், அஃது ஒருபாற் சிவன் எனும் நாமந் தனக்கே யுரிய செம்மேனி எம்மானாயும், மற்றொருபால் மணிதிகழ் உருவின் மாயோன் அல்லது நீலமேனி வாலிழை யாயும் நிற்கும் உண்மை யியல்பினைத் தெளியவுணர்ந்து அதனையே வழுத்துதலும் பரவுதலுஞ் செய்துபோந்தனர். ஆரியக் கலப்பு நேர்ந்த பிற்காலத்திலும் இறைவனது திருவருட் பேரொளி நிரம்பப்பெற்ற மாணிக்க வாசகப் பெருமான், திருமூல நாயனார், திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலான சைவசமய ஆசிரியர்களும் முழுமுதற்கடவுளை நேரே காணுந் தவத்திருவுடையராய் அதனைப் பிறப்பு இறப்பில்லா அம்மையப்பராகவே வைத்துப் பரசினர். திருஞானசம்பந்தப் பிள்ளையாரை அடுத்துத் தோன்றிய பொய்கை பேய் என்னும் ஆழ்வார் இருவரும் சிலகாலமெல்லாம் ஆரியப் பார்ப்பனர் கட்டிவிட்ட புராண கதைகளில் மயங்கி யிடர்ப் பட்டனராயினும், தமக்குஇறைவன் திருவருளுருவைக் காணும் பெரும்பேறு வாய்த்தபின் இரண்டுருவும் ஒன்றாய் இசைந்த அம் முழுமுதற் கடவுளையே வணங்கி வாழ்த்தினர். மற்று, நம்மாழ்வாரோ இறைவனுருவை நேரே காணப்பெருமையின் தம் வாழ்நாள் எல்லையளவும் புராணகதைகளுட் போந்த மூவரையே தெய்வமென நம்பி இடர்ப்பட்டுப், பாடித், திருஞானசம்பந்தப் பெருமானுக்கு அருள்செய்த தெய்வம் முழுமுதற் கடவுளா யன்றிப் பிறிதாதால் செல்லாதென்னும் அச்சத்தால் அரனை அலற்றி வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் என முடிவிற் கூறி ஆறுதல் எய்தினார். உண்மையிலே தெய்வத்தன்மையுடைய பொய்கையாழ்வார் பேயாழ்வாருக்குத் தெய்வத்தன்மை உரையாமல், தெய்வத் தன்மையுங் கடவுளுணர்ச்சியுஞ் சிறிதும் இலரான நம்மாழ்வாரைப் பின்னுள்ளோர் கட்டிவிட்ட கதையின்கண் ஆராயாமற் சிக்குண்டு, தெய்வத்தன்மை யுடையரெனக் கிளந்த போலியுரையி னளவில் அமையாது, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளால் நேரே அருள் செய்யப்பெற்ற தெய்வத்திருவாளரான மாணிக்கவாசகப் பெருமானிலும் அவர் சிறந்தாரெனப் புரையுரை நிகழ்த்திய `தமிழ் வரலாறுடையாரது கூற்றினும் பெரியதோர் அறியாமையுடையது பிறிதுண்டு கொல்! அடிக்குறிப்புகள் 1. முதற் திருவந்தாதி, 5. 2. ஐங்குறுநூறு, கடவுள்வாழ்த்து. 3. அகநானூறு, கடவுள்வாழ்த்து. 4. புறநானூறு, கடவுள்வாழ்த்து 5. பரிபாடல், 3, 71-72. 6. திருவாய்மொழி, 8 ஆம் பத்து, 3, 9 7. திருமந்திரம், 329. 8. மாணிக்கவாசகர் வரலாறு, தொகுதி -2, பக்கம், 144. 17. நாச்சியார் பெரியாழ்வார் முதலியவர்களைப் பற்றியஆராய்ச்சி இனிச், `சூடிக்கொடுத்த நாச்சியாரும் பிறந்த நாட் டொட்டே ஓதாதுணர்ந்தவரெனக் கொண்டு, அவ்வம்மை யாரும் `திருவாசகத்தைப் பார்த்து `குயிற்பத்து முதலியன பாடினரென்றல் அமையாது, மற்று அவ்வம்மையார் கண்ணபிரான்மேற் பாடிய `குயிற்பத்தைப் பார்த்தே மாணிக்காவாசகர் `குயிற்பத்து முதலியன பாடியிருத்தல் வேண்டுமென்பதுபடத் `தமிழ் வரலாறுடை யார் கூறுவதுஞ் சிறிது ஆராயற்பாலது. சூடிக்கொடுத்த நாச்சியார் தெய்வத்தன்மை யுடையரென இவர் எதனைக் கொண்டு துணிந்தாரென்பது இவரது உரையின்கட் காணப்படவில்லை; ஒரு பூந்தோட்டத்தில் மண்ணைக் கிளறுகையில் நிலத்தின்கண் இருந்து பெரியாழ்வார் என்பவராற் கண்டெடுத்து வளர்க்கப் பட்டார் இவ் வம்மையார் என்று பின்னுள்ள வைணவப் புலவர் எழுதிவைத்திருக்குங் கதையை மெய்யென நம்பியே `தமிழ் வரலாறுடையார் இவரைத் தெய்வத்தன்மை யுடையராகக் கருதினாராதல் வேண்டும். எத்துணைச் சிறந்த பெரியாரும் மக்கள் யாக்கை எடுக்கும்பொழுது, இறைவன் வகுத்த நெறிப்படியே தாய் தந்தையர் சேர்க்கையாற் றாயின் கருப்பையிற் புகுந்து ஊனுடம்பு திருந்திப் பின் நிலத்திற் பிறக்கின்றனர். வைணவர் தாம் தெய்வமாக வழிபடுங் கண்ணனும் இராமனுங்கூட அந் நெறிப்படியே தேவகி கோசலை என்னும் மாதர்களின் கருப்பையிற் றங்கியே பிறந்தனர். அவ்வாறிருக்கச் சூடிக்கொடுத்த நாச்சியார் மட்டும் நிலத்தின் கீழிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டா ரென்றல் எத்துணைப் பொய்யான உரை கருப்பையிற் பிறத்தல் குற்றமாமென அங்ஙனம் பிறந்தனராயிற், குற்றமாக அவ்வாறு பிறந்த கண்ணன் இராமன் என்பாரிலும் அவ்வம்மையார் உயர்ந்தாராகல் வேண்டுமன்றோ? அங்ஙனம் அவரினும் உயர்ந்தவராயின் அவர் கண்ணன் இராமன்மேற் கனிவு கொண்டு பாடியதென்னை? இவர் முழுமுதற் கடவுளியல்பினை யுணர்ந்து எங்காயினும் பாடியிருக் கின்றனரோ வெனின் அதுவுமில்லை. அங்ஙனமிருக்க இவரைத் தெய்வத்தன்மை யுடைய ரென்றுகோடல் எவ்வகைச் சான்று பற்றி? இம் மாநிலத்து மக்களுள் ஒருவனாய்ப் பிறந்த கண்ணனையே உயர்பெருந் தெய்வமாகக் கருதி இவர் பாடியிருக்கின்றனரே யல்லாமல், பிறப்பு இறப்புகளில்லாத் திருமாலைப் பாட வில்லையே. கண்ணனையும், அக் கண்ணனுக்கு முதல்வரான திருமாலையுங் கூட வணங்காமல், எல்லாம்வல்ல சிவ பிரானையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு, அப்பிரானால் நேரே அருள்செய்யப் பெற்ற மாணிக்கவாசகப் பெருமான் இச்சூடிக்கொடுத்த நாச்சியார் என்னும் ஆண்டாளின் பாடல்களைப் பார்த்துப் பாடினா ரென்னும் `தமிழ் வரலாறுடையாரது பிறழ்ச்சியுரையினும் மிக்கதொரு பிறழ்ச்சியுரை பிறிதில்லை. இனிக், கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ்நூல்களிற் காணப்படாத `நந்தகோபன் குமரன் `கிரிசைகள் `பற்பநாபன் `செகுடு (செவிடு), `கும்பகரணன் `குள்ளக்குளிர `மருகள், `பஞ்சசயனம் `அபிமாநபங்கம், `காரியம் `அருத்தித்து `பாஞ்சசன்னியம் `சம்மானம் `சங்கற்பித்து `சிரமப்பட்டோம், `உரோடம் (ரோஷம்), `மசுமை, `இருடீகேசன், `சிரீதரன் `சரற்கால சந்திரன் `மதுசூதன், `அன்னவசம், `இந்திரகோபம் `கண்ணாலம் `(கல்யாணம்), `சிசுபாபாலன், `இங்குத்தை,` கோவர்த்தநன், `விநதை சிறுவன் `தேநுகன், `விருந்தாவனம் முதலான வடசொற்கள் சொற்றொடர் களுங் கொச்சைத் தமிழ்ச் சொற்களும் ஆண்டாளின் பாடல்களிற் காணப்படுதலானும், `காப்புநாண் கட்டல், `பொரிமுகந்து அட்டல் முதலாகப் பிற்காலத்து நடைபெறுந் திருமணச் சடங்குகளை ஆண்டாள் ஒன்றன்பின் ஒன்றாய் முறையாகக் கூறுமாறு போலப் பழைய தமிழ்நூல்கள் வேறெவையுங் கூறக் காணாமையானும், இத்தகைய பின்றைச் சொல்வழக்குகளும் பொருள் வழக்குகளும் ஒரு சிறிதாயினும் மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த `திருவாசகந் திருக்கோவையாரின் கட் காணப்படாமல் அவற்றின்கட் காணப்படுவன வெல்லாம் பழைய சொல்வழக்குக்குகளும் பொருள் வழக்கு களுமாகவே இருப்பக் காண்டலானும் சூடிக்கொடுத்த நாச்சியார் இயற்றிய பாட்டுக்கள் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதா மென்றலும், அவற்றைப் பார்த்து மாணிக்க வாசகப் பெருமான் `திருவாசகம் பாடினா ரென்றலும் தினைத்துணையும் பொருந்தா. சூடிக்கொடுத்த நாச்சி யாருடைய செய்யுட்களிற் போலவே, அவர் தம் தந்தையாரான பெரியாழ்வார் இயற்றிய செய்யுட்களிலும் பின்றைக்காலக் கொச்சைத் தமிழ்ச்சொற்கள் சொற்றொடர்களும் வடசொற்கள் சொற்றொடர்களும் இடையிடையே விரவிக்கிடத்தலின் அவ்விருவரும் அவை விரவத்துவங்கிய கி.பி. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தவராதல் திண்ணமாம்.1 ஆழ்வார்கள் காலங்களை நடுநின்று நன் காராய்ந்த திருச் சீநிவாச ஐயங்காரவர்களும் பெரியாழ்வரது காலம் கி.பி. 1840க்கும் 1915க்கும் இடப்பட்டதாதல் வேண்டுமெனவே யுரைத்தல் காண்க.2 இனித், தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய `திருப்பள்ளியெழுச்சியைப் பார்த்தே மாணிக்கவாசகர் `திருப்பள்ளியெழுச்சி பாடினாராதல் வேண்டுமென்பது படக் கிளந்த `தமிழ் வரலாறுடையாரது கூற்றுஞ் சிறிது ஆராயற்பாற்று. தொண்டரடிப் பொடியாழ்வார் `திருப்பள்ளி யெழுச்சி பாடிய பின்றைக் காலத்திற் புராணக்கதைகளும், அவற்றிற் சொல்லப்பட்ட தேவர்கள் முனிவர்களின் பெயர்களும் இத் தென்றமிழ்நாட்டில் மிகுந்து பரவலாயின வென்பதூஉம், மாணிக்கவாசகப் பெருமான் `திருப்பள்ளி யெழுச்சி அருளிச் செய்த பண்டை நாளில் அவை அத்துணை மிகுதியாய் இங்கே பரவவில்லை யென்பதூஉம் அவ்விரண் டனையும் நடுவுநின்று ஒப்பிட்டு நோக்கும் அறிஞரெவரும் நன்குணர்ந்து கொள்வர். ஈண்டும் அவ்வியல்பினைச் சிறிது ஒப்பிட்டுக் காட்டுதும். தொண்டரடிப் பொடியாழ்வார் இயற்றிய திருப்பள்ளி யெழுச்சியில், வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா எம்பெரு மான்படி மக்கலங் காண்டற்கு ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர் தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ தோன்றினன் இரவியுந் துலங்கொளி பரப்பி அம்பர தலத்தின்நின் றகல்கின்ற திருள்போய் அரங்கத்தம் மாபள்ளி எழுந்தரு ளாயே என்றும், ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமிக் கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம் மாதவர் வரவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் ஆதலி லவர்க்குநா ளோலக்கம் அருள அரங்கத்தம் மாபள்ளி எழுந்தரு ளாயே என்றும் போந்த செய்யுட்களையும் இவற்றின் கருத்தோடு ஒருபுடையொத்த, இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. பூதங்க டோறும்நின்றா றாயெனின் அல்லாற் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லாற் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயற்றிருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந் தேதங்கள் அறுத்தெமை யாண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. என்னுந் திருவாசகச் செய்யுட்களையும் ஒப்பிட்டு நோக்குக. தொண்டரடிப் பொடியாழ்வார்ருடைய செய்யுட்களில், `தும்புரு நாரதர், `கின்னரர் `கெருடர் `கந்தருவர் `சாரணர், `இயக்கர்,`சித்தர் முதலிய வடமொழித்தேவர் முனிவர் பெயர்கள் ஒரு தொடர்ப்படக் கூறப்படுதல் போலத் `திருவாசகத்தும் அதற்கு முந்திய தமிழ்நூல்களிலுங் கூறப்படாமை காண்க. `நாரதர் என்னும் முனிவர் பெயர் `சிலப்பதிகாரத்திற் காணப்படினுந் `தும்புரு என அடையடுத்த அப்பெயரும், `கின்னரர் என்னும் பெயரும் பழைய நூல்களுள்ளுந் திருவாசகத்துங் காணப்படா. சாரணர், இயக்கர், சித்தர் முதலான ஏனைப்பெயர்கள் சிலப்பதிகாரம் முதலிவற்றுள் அருகி ஒரோவிடங்களிற் காணப்படினும், இவ்வாழ்வார் தம் பாட்டுக்களினும் ஏனைப் பிற்காலத்தார் பாட்டுக்களினுங் காணப்படுமாறு போல, அவைஅங்ஙனம் பெருவரவினவாய் அவற்றின்கண் ஒருசேரக் காணப்படா. மேலும், விடியற்காலையிற் கோயிற்கதவந் தாழ்நீக்கித் திறக்கும்பொழுது புகர்நிறமுள்ள ஆவினையுங் கண்ணாடியினையுந் திருமாலுருவத்தி னெதிரே கொண்டு செல்லும்பிற்காலத்து வழக்கம் மேலெடுத்துக் காட்டிய இவ்வாழ்வரது முதற்பாட்டிற் சொல்லப்பட்டாற் போற் பழைய நூல்களில் எங்கும் காணப்படுகின்றிலது. இவ்வாழ்வார் `திருப்பள்ளியெழுச்சி நான் காஞ்செய்யுளில் மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம், ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம்மரசே என்று பாடியிருக்கின்றார்; இதன்கண் ஓசைமுழக்கம் உடைய `அவபிரதம் என்னும் வடசொல்லும், அச் சொல்லாற் குறிக்கப்படும். `வேள்வி முடிவிற் செய்யும் நீராட்டும் இவ்வாழ்வார் இருந்த காலத்திற் புகுந்தனவேயல்லாமல் இவர்க்கு முற்பட்ட சைவ வைணவத் தமிழ்நூல்களிற் காணப்படா. இன்னும் இவர் காம்பறத்தலை சிரைத்தலைத்3 தமது `திருமாலையுட் கூறுகின்றார். தமிழ்நாட்டில் மயிர்முடி களைதல் முன்னரே யுண்டேனும், அதனைச் `சிரைத்தல் என்னுஞ் சொல்லாற் கூறல் பிற்காலத்து வழக்கேயாம். அதுவேயுமன்றி, `அச்சுதன் `பிராயம், `மனிசர், `கத்திரபந்து, `கெருடவாகநன், `முற்கலன் `ஊனகாரகர், `மருதர் `வசுக்கள் `குமரதண்டம் முதலான பிற்காலத்துப் புகுந்த வடசொற்களையுந் தம்முடைய செய்யுட்களில் இடையிடையே விரவவைத்தனர். இன்னோரன்ன சொற்களுஞ் சொற்றொடர்களுந் `தேவார திருவாசகங் களினாதல், பொய்கை பேய் பூதம் என்னும் முதலாழ்வார் பாடல்களினாதல் காணப்படாமையின், தொண்டரடிப் பொடியாழ்வார் தேவார திருவாசக காலத்திற்கு மிகவும் பிறபட்டவராதலை நுணுகிய தமிழ் நூலாராய்ச்சி வல்லார் எளிதில் கண்டுகொள்வர். மேலும் இவ்வாழ்வார் திருமாலைப் `பித்தன்4 என்று ஓரிடத்துக் கூறினர். சிவபிரானைப் `பித்தன் என்று நுவலுதற்கேற்ற அருள்விளையாட்டுக்கள் அவன் உடைமைபற்றிச் சைவசமய ஆசிரியர்களே அப் பெருமானைப் `பித்தன் என்று அடுத்தடுத்தழைத்துப் பாடா நிற்பர். `பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறைப் பெரும்பித்தனே என்னுந் திருவாசகத் திருப்பாட்டும், பித்தாபிறைசூடி என்னுஞ் சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பாட்டும் பிறவுமே அதற்குச் சான்றாம். முதலாழ்வார்களுள் எவரும் திருமாலை அங்ஙனம் `பித்தன் என்றுரைப்பக் கண்டிலம் சிவபிரானுக்குப் பித்தன் என்னும் பெயர் மிகப் பரவி வழங்கலானதுசுந்தரமூர்த்தி நாயனார் காலந்தொட்டே யாம். ஆகலான், அச் சொல்லைத் தாம் வணங்கிய திருமாலுக்கும் சைவசமய ஆசிரியர் போற் கூற விழைந்தே அவர்கட்குப் பின்னிருந்த இவ்வாழ்வார் அதனைத் தமது பாட்டில் இயைத்தாரென்பது இவ்வாராய்ச்சி வல்லார்க்கு நன்கு விளங்காநிற்கும். அது வல்லாமலும், இவ்வாழ்வார் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களையும் நன்கு பயின்று அவற்றைப்போற் பாட விழைந்தமை, வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகந் தன்னுட் சென்றிலேன் ஆத லாலே செந்நெறி யதற்குஞ் சேயேன் நின்றுளே துளும்பு கின்றேன் நீசனேன் ஈச னேயோ இன்றுளேன் நாளை யில்லேன் என்செய்வான் தோன்றி னேனே1 என்னுந் திருநாவுக்கரசு நாயனார் திருநேரிசையோ டொப்ப இவ்வாழ்வார், போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனைய மாட்டேன் தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன் காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அதுதன் னாலே ஏதிலேன் அரங்கர்க் கல்லேன் என்செய்வான் தோன்றி னேனே என்று பாடிய பாடலால் இனிதுவிளங்கும். இவ்வாழ்வார் சிவபிரானை யாண்டும் இகழ்ந்து பேசாமையானும், புலையற மாகிநின்ற புத்தொடு சமணம் எல்லாங் கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம். என்று இவர் புத்தர் சமணரைப் பழித்துப் பேசியவாறு போலச் சைவ சமயத்தவரைப் பழித்துப் பேசாமையானும், சைவசமயம் உயர்வும் சைவசமயாசிரியரது தெய்வத்தன்மையும் மிக்கு விளங்கிய காலத்தை ஒட்டிஇவ் வாழ்வார் இருந்த வராதல் வேண்டுமென்பது பெறப்படும். எனவே, கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்த சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பின்னே, அஃதாவது பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தே தொண்டரடிப் பொடியாழ்வார் இருந்தமை தேற்றமாம். ஆகவே,திருவாசக காலத்திற்கும் தேவார காலத்திற்கும் பிற்பட்டவராகிய இவ் வாழ்வாரே திருவாசகத்திற் போந்த `திருப்பள்ளியெழுச்சியைப் பார்த்துத் தாமும் திருவரகங்கப் பெருமாள்மேல் ஒரு திருப்பள்ளியெழுச்சி பாடினாரே யல்லாமல், இவரைப் பார்த்து மாணிக்கவாசகர் பாடினாரல்ல ரென்பது கடைப்பிடிக்க. இனித், திருமங்கை யாழ்வாருடைய செய்யுட்களும் பிற்காலத்துக் கோயிற்குறிப்புகள் சொற்கள் கதைகள் விரவப் பெற்றனவாயிருத்தலானும்,தேவார திருவாசகங்களின் அமைப்பையே பெரிதொட்டிச் செய்யப்பட்டனவாயிருத்த லானும், அவற்றுள்ளுஞ் சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருப்பதிக இசைகளோடொப்ப அமைக்கப்பட்டன பலவாயிருத்தலானும், முதலாழ்வார் மூவர்போலாது திருமங்கை யாழ்வார்தம் பாக்கள் சிவபிரானைப் பலகாலும் இழித்துப் பாடுதலானும் இவர் தம் பாக்களும் இவரும் வைச சமயாசிரியர் எல்லார்க்கும் பின்னே, அஃதாவது சுந்தரமூர்த்தி நாயனாரது காலத்துக்கு ஒரு நூற்றாண்டிற்குப் பின்னே, வைணவ சமயம் சவை சமயத்திற்கும் முற்றும் மாறாய் விலகிக் கிளர்ச்சி பெற்ற கி.பி. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்தமை தேற்றமாம். யாங்ஙனமெனிற் காட்டுதும்: முதலாழ்வார் பாடல்களில் வடநாட்டுத் திருமால் கோயில்களுள் எதுவுங் கூறப்படா திருக்கத், திருமங்கையாழ்வார் பாடல்களிலோ `பிரிதி `வதரி `வதரி யாச்சிரமம், `சாளக்கிரமம் `நைமிசாரணியம் முதலான வடநாட்டுத் திருமால்கோயில்களும் பெரிதெடுத்துப் பாடப்பட்டிருக்கின்றன. தென்னாட்டுத் திருமால் கோயில்களும் இவ்வாழ்வார் பாடல்களிலும் சடகோப ஆழ்வார் பாடல்களிலும் மிகுதியாய்க் காணப்படுமாறு போல் ஏனையாழ்வார் தம் பாடல்களிற் காணப்படுகின்றில. இதனால், இவ்வாழ்வார் இருவர் காலத்திலும் வைணவ மதம் பெரிதுங் கிளர்ச்சி பெற்று நின்றமையும், திருமால் கோயில்கள் ஆங்காங்குப் பெருகி விட்டமையும் இனிது புலனாம். முதலாழ்வார் பாடல்களிற் குறிப்பிடப்பட்ட திருமால் கோயில்கள் `திருவேங்கடம் `திருக்கடிகை `திருவிண்ணகர் `திருவெஃகா `திருக்கோவலூர் `திருவரங்கம் திருத்தண்கால் திருக்கோட்டியூர் திருமாலிருஞ் சோலைமலை, திருத்தஞ்சை திருமல்லை திருக்குடந்தை திருப்பாடகம், அத்தியூர் திருவல்லிக்கேணி, திருநீர்மலை திருக்கச்சி, திருவேளுக்கை, திருவனந்தை, அட்டபுயகரம் முதலியவைகளே யாம். இவ் விருபதுக்கு மேற்பட்ட திருமால்கோயில் வேறெதும் முதலாழ்வார் மூவர் பாடல்களிற் காணப் படுதலின்று. மற்றுத் திருமங்கையாழ்வார் பாடல் களிலோ இவ்விருபதில் பத்தொன்பதும் இவற்றிற்கு மேல் இன்னும் அறுபத்தாறு திருமால் கோயில்களுங் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அற்றன்று,முதலாழ்வார் பாட்டுக்களில் திருமால் கோயில்கள் எல்லாம் எடுத்துரைக் கப்படாமை பற்றி, அவை அக்காலத்து மிகுதியாய் இல்லையென்றால் யாங்ஙனம்? முதலாழ்வார் மூவரும் தொண்டை நாட்டவர்களாதலின், அவர் அந்நாட்டைவிட்டுச் சோழநாடு பாண்டிநாடு சேரநாடு களுக்குச் சென்றிலர். அதனால் அவர்கள் ஆங்காங்குள்ள திருமால் கோயில்களைப் பாடிற்றில ரென்னாமோ வெனின்; என்னாம். சோழநாட்டின்கண் உள்ள `திருக்குடந்தை `திருவரங்கம் `தஞ்சை என்பன பூதம் பேயாழ்வார் பாடல்களிலம், பாண்டிநாட்டின்கண் ணுள்ள `திருமாலிருஞ் சோலைமலை, `திருக்கோட்டியூர் `திருத்தண்காலூர் என்பனவும் சேரநாட்டின்கண் உள்ள `திருவனந்தை என்பதும் அங்ஙனமே அவ் விருவர்தம் பாக்களிலும் பாடப்பட் டிருத்தலின் அவர்களுட் பூதத்தாழ்வார் பேயாழ்வார் இருவரும் தொண்டைநாட்டிற்குப் புறம்பே சென்றிலரென்றல் பொருந்தாது. அங்ஙனமன்று, அவர்கள் தொண்டை நாட்டில் இருந்தபடியே ஏனை நாடுகளிலுள்ள அத்திருக்கோயில் களையும் பாடினார்களெனக் கொள்ளாமோ வெனின்; அற்றேல், அந் நாடுகளிலுள்ள ஏனைப் பெரும்பாலனவற்றை விட்டு அவற்றுட் சிலவற்றை மட்டுமே அவர்களுள்இருவர் பாடியதும் ஏனைப் பொய்கையார் அச்சில தாமும் பாடாமையும் என்னை யென்பார்க்கு விடை கூறுதல் ஆகாமை யானும், அவர்கள் பாடிய அச் சில திருக்கோயில்களைத் தவிர வேறுபல இருந்தனவென்பதற்கு வேறொரு சான்றும் இல்லாமையானும், முதலாழ்வார் மூவர் காலத்தும் இருந்த திருமால் திருக்கோயில்கள் அவர்களுடைய பாக்களிற் குறிப்பிடப்பட்ட அச்சிலவே தவிரப் பிற இருந்திலவென்பது தேற்றமாம் என்க. மற்று, மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த `திருவாசகம், `திருவை கோவையாரிற் குறிப்பிடப்பட்ட சிவபிரான் திருக்கோயிலுள்ள திருப்பதிகள் ஐம்பத்து நான்கு; அப்பர் திருஞானசம்பந்தர் சுந்தரர் என்னும் மூவரும் அருளிச்செய்த தேவாரங்களிற் குறிப்பிடப்பட்ட சிவபிரான் திருக்கோயிற் பதிகள் இருநூற்று எழுத்து நான்கு ஆகவே, மாணிக்கவாசகப் பெருமான் வயங்கிய கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலேயே இத் தமிழ்நாடெங்கணும் சிவபிரான் திருக்கோயில்களே மிகுந்திருந்தமையும், கி.பி. ஆறு, ஏழு, எட்டாம் நூற்றாண்டில் திகழ்ந்தஅப்பர் சம்பந்தர் சுந்தரர் என்னும் ஆசிரியர் காலங்களில் இன்னும் மிகுதியாய் அவை பெருகியிருந்தமையும் நன்கு துணியப்படும். சுந்தரமூர்த்தி நாயனார் காலம் வரையில், திருமாலும் சிவபிரானோடு சேர்த்துச் சைவர்களாலேயே வழிபாடு செய்யப்பட்டு வந்தமையின், திருமாலுக்கென்று வேறு தனிக்கோயில்கள் கட்டப்படாமற், சிவபிரான் திருக்கோயில் களினுள்ளேயே திருமாலின் திருவுருவமும் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது. பின்னர்ச் சிவபிரானை விட்டுத் திருமாலை மட்டும் வழிபடுவார் தொகை பெருகப் பெருகத், திருமாலுக் கென்றே தனிக்கோயில்களும் அமைக்கப்பட்டு அவற்றின் தொகையும் பெருகலாயிற்று. பழைய காலத்தில் அமைக்கப் பட்ட திருமால் கோயில்களில் திருமாலின் திருவுருவோடு சிவபிரான் திருவுருவும் ஒருங்கு வைத்து வழிபாடு ஆற்றப் பட்டமைக்குத், தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவுஞ் சக்கரமும் சூழ்அரவும் பொன்நாணுந் தோன்றுமால் - சூழுந் திரண்டருவி பாயுந் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய், இசைந்து. என்று பேயாழ்வார் அருளிச் செய்திருத்தலே சான்றாதல் காண்க. இதுகொண்டு பேயாழ்வார் காலத்தில் திருவேங்கடமலையின் மேல் சிவபிரானுந் திருமாலும் ஒருங்கு வைத்து வணங்கப் பட்டமைஇனிது புலனாகின்ற தன்றோ? திருவரங்கத்திற் பிள்ளையார் திருவுருவம் இருத்தலும், இவ்வாறே `திருக்கோட்டியூர் `திருக்குறுங்குடி முதலிய பழைய திருமால் கோயில்களினுட் சிவபிரான் கோயிலும், ஏனைப் பழையதிருமால் கோயில்களில் வில்வ மரங்களும் வில்வ இலைகளைத் தூவி இறைவனை வழிபடுதலும் வேறு சில சிவ அடையாளங்களுங் காணப்படு தலானும், இங்ஙனமே `தில்லையம்பலம், `திருவண்ணாமலை முதலான சிவபிரான் றிருக்கோயில்களிலும் திருமால் கோயில்கள் உள்ளடங்கி யிருத்தலானும் பண்டைக் காலத் தமிழ்மக்கள் இவ்விரண்டு திருவுருவினையும ஒரே கோயிலின்கண் ஒருங்குவைத்து வழிபாடு செய்து போந்தமை நன்குவிளங்கும். ஆகவே, திருமாலுக்கென்று தனிக்கோயில்கள் பெருகலானமை முதலாழ்வார் மூவர் காலத்திற்குப் பின்னரேயா மென்பது திண்ணமென்க. அற்றேற்,பொய்கை பேய்பூதம் என்னும் ஆழ்வார் மூவரும் ஒரே காலத்தினராகலான் அம்மூவரும் ஒன்று கூடியே திருமால் கோயில்ககோடறுஞ் சென்றனர் என்று தொன்றுதொட்டு வைணவர்கள் வழங்கிவராநிற்ப, அம்மூவருட் பொய்கையார் சோழநாட்டின் கண்ணதான `திருவரங்கம் ஒன்றை மட்டும் பாடித் தொண்டைநாடு அல்லாத மற்றை நாடுகளிலுள்ள திருப்பதிகளைப் பாடாமையும், தொண்டை நாட்டுள்ளுந் `திருவெஃகா `திருவிண்ணகர் `திருக்கோவலூர், `திருவேங்கடம் என்னும் நான்கைத்தவிர ஏனையவற்றை அவர் பாடாமையும், ஏனையிருவர் ஏனை நாடுகளிலுமுள்ள திருப்பதிகளைப் பாடுதலும் என்னையெனிற், கூறுதும் பொய்கையாழ்வார் கச்சித் திருவெஃகா என்னுந் திருப்பதியிற் பிறந்தருளினவர். அவர் தொண்டை நாட்டிலுள்ள மேற்கூறிய நான்குதிருக் கோயில்கட்கும் நேரே சென்று அங்குள் இறைவனைப் பாடினாரென்பதற்கு வேண்டும் அடையாளங்கள் அவர் அருளியஅச் செய்யுட்களிலேயே இருக்கின்றன. ஆனாற் சோழநாட்டின் கண்ணதாகிய `திருவரங்கத்தை அவர் குறிப்பிடுகையில் அத் திருப்பதிக்குத் தாம் செல்லாமல் தாம் தொண்டைநாட்டில் இருந்தபடியாகவே அதனைப் பாடியருளினார் என்பதற்குரிய அடையாளம் அவரது செய்யுளிற் காணப்படுகின்றது. யாங்ஙனமெனின், அன்று, கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை.5 என்று அவர் அத் திருப்பதியைக் குறிப்பிட்டுத் தாம் திருவரங்கப் பெருமாள் எழுந்தருளிய திசையைக் கண்டதாகப் புகன்றனரே யன்றித், தாம் அங்குச் சென்று அப்பெருமாளை நேரே கண்டு தொழுததாக உரைத்திலாமை யான் என்பது. மற்று அவர் `திருவேங்கடத்தைப் பாடியவழி வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் நாளும் புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தித் - திசைதிசையின் வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே6 என அத் திருக்கோயிலில் வழிபாடு செய்வார் வழிபடுமுறை களை தாம் நேரே கண்டமைக்கு அறிகுறியாகச் `செய்யும் என்னும் நிகழ்கால் வினைச்சொற் பெய்துரைத்தலும், அங்ஙனமே பெருமாள் `திருவேங்கடத்தில் நின்ற திருக்கோலத் தோடும் `திருவிண்ணகரில் இருந்த திருக்கோலத்தோடும் `திருவெஃகாவிற் கிடந்த திருக்கோலத்தோடும் `திருக்கோவலூரில் நடந்த திருக்கோலத்தோடும் எழுந்தருளுமாற்றினைத் தாம் நேரே கண்டு, வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங்கிடங்கின் நீள்கோவற் பொன்னகரும் - நான்கிடத்தும் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றாற் கெடுமாம் இடர் என்று அருளிச் செய்தலும் நுணுகி நோக்கவல்லார்க்குப் பொய்கையாழ்வார் தொண்டை நாட்டைவிட்டு ஏனை நாடுகளுக்குச் சென்றிலரென்பது தெற்றென விளங்கா நிற்கும். ஆகவே, பேய் பூதம் என்னும் மற்றை ஆழ்வார் இருவரோடுங் கூடிப் பொய்கையாழ்வார் திருமால் திருப்பதிகடோறுஞ் சென்றாரெனகக் கூறும் வைணவருரை பொருந்தாமை கண்டுகொள்க. இவ்வாற்றாற், பொய்கை யாழ்வார் பாடிய `விண்ணகர் என்பது அவர் பிறந்தருளிய `திருவெஃகாவிற்கு அணித்தாய்க் கச்சியிலுள்ள பரமேச்சுர விண்ணகரமே `யல்லாமல் , சோழநாட்டின்கண் திருக்குடந்தைக்கு அருகிலுள்ள திருவிண்ணகரும் அன்று, `வைகுந்த விண்ணகரம், `அரிமேய விண்ணகரம், காழிச் சீராம விண்ணகரம் நந்திபுர விண்ணகரம் முதலியனவும் அன்று என்னை? சோழநாட்டின்கண் உள்ள இவ்வைந்து விண்ணகரங்களுள் `திருவிண்ணகர் பிற்காலத்து ஆழ்வார்களான திருமங்கையாழ்வார் சடகோப ஆழ்வார் என்னும் இருவரானும், ஏனை நான்கும் திருமங்கையாழ்வார் ஒருவரானுமேயன்றி ஏனை யாழ்வார்களாற் பாடப்படாமையின் இவ்வைந்தும் முதலாழ்வார் மூவர் காலத்திற்கும் பிற்பட்ட டெழுந்தனவேயாதல் பெறப்படும். பொய்கை பேய் என்னும் ஆழ்வார் இருவரும பாடிய விண்ணகரம் கச்சியிலுள்ள `பரமேச்சுர விண்ணகரமே யா மென்பதற்கு அவ்விருவரும் அதனை அதற்குஅருகிலுள்ள `திருவெஃகாவோடு உடன் சேர்த்து வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் எனவும், விண்ணகரம வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்7 எனவும் அருளிச்செய்தலே சான்றாம். அதுவேயு மன்றிப், பொய்கை யாழ்வார் தாம் பிறந்ததொண்டை நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குச் சென்றிலரென்பது மேற்காட்டினமாகலானும், அவர் காலத்தில் அப் பெயர் கொண்ட திருப்பதிகள் பிற உளவாயிருப்பினும் அவை தம்மைஅவர் பாடியிரா ரென்பதற்கு, அவர் ஏனை நாட்டுத் திருப்பதிகளைப் பாடாமையே சான்றாமென்பது இனிப், பேய்பூதம்என்னும் ஆழ்வார் இருவருமோ ஏனை நாடுகளிலுள்ள ஏனைத் திருமால்கோயில் கட்குஞ் சென்று அவை தம்மைப் பாடினமை மேலெடுத்துக் காட்டினமாகலின், அவ்விருவரானும் ஏனைப்பொய்கை யாரானும் பாடப்பெற்ற திருமால் திருப்பதிகள் இருபதைத் தவிர வேறுபல அம்மூவர் காலத்தில் இருந்திலவென்பது தேற்றமாம். மற்றுத், திருமங்கையாழ்வாரோ இவ் விருபதுக்குமேல் அறுபத்தாறு வேறு திருமால் திருப்பதிகளைப் பாடியிருக்கின் றாராகலின், வைணவ சமயம் பெரிதுங் கிளர்ச்சிபெற்றுத் திருமால் கோயில்கள் இந் நாவலந்தீவெங்கும் அமைக்கப்பட்ட கி.பி. ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் இவ்வாழ்வாரும் இதே ஏதுவினாற் சடகோப ஆழ்வாரும் இருந்தமை இனிது துணியப்படுமென்க. இனிப், பெரியாழ்வார் ஆண்டாள் நம்மாழ்வார் முதலியோர் இயற்றிய செய்யுட்களிற் கொச்சைத் தமிழ்ச் சொற்களும் புதிதுபுகுந்த பிறசொற்களும் வடசொற்களும் காணப்படும். அவ்வளவு திருமங்கையாழ்வார் பாக்களில் அவை காணப்படாவாயினும், `மனிதப்பிறவி, `வாநரம் `நரநாரணன் முதலான புதிது புகுந்த சொற்களும், இராமாயணத்திற் போந்த பரதன் `சத்துருக்கன், `இலக்குமன், `மைதிலி, `கரன், `கவந்தன், `விராதன், `தயரதன் முதலான பெயர்களும், `தேநுகன், `பூதனை முதலான ஏனைப் பெயர்களுந் தடையின்றி விரவக்காண்டலின், இவர் அப்பெரியாழ்வார் முதலிய மூவர்க்கம் சிறிது முன்னே இருந்தாராதல் வேண்டும். அடிக்குறிப்புகள் 1. “His style is modern and contains large admixture of colloquial and provincial words and many Sanscrit tadbavas.” Mr. M. Srinivasa Aiyangar’s Tamil Studies, P.321. 2. Ibid, 323. 3. திருமாலை, 38. 4. அதுவே, 4. 5. முதல்திருவந்தாதி, 6. 6. அதுவே, 37, 7. பேயாழ்வார் மூன்றாந் திருவந்தாதி, 62. 18. திருமங்கையாழ்வார் காலம் இனி, முதலாழ்வார் மூவர் தம் பாடல்களிற் கண்ணன்வாமநன் வராகன் நரசிங்கன் முதலான திருமால் வடிவினர் மேற்பாடப்பட்டனவே மிகப் பலவாயும், இராமன்மேற் பாடப்பட்டன மிக சிலவாயும் இருப்பத் திருமங்கையாழ்வார் பாடல்களிலோ இராமன்மேற் பாடப் பட்டனவும் இராமன் கதை கூறுவனவும் சாலப்பலவா யிருக்கின்றன. அதனால், இராமாயண கதை இத் தென்றமிழ் நாட்டில் மிக்குப் பரவிய காலத்தேதான் இவ்வாழ்வார் இருந்தமை தேற்றமாம். இராமாயண கதை கி.பி.முதல் நூற்றாண்டுக்கு முற்பட்ட பழந்தமிழ்ப் பாடல்களில் ஒரு சிறிதுங் காணப்படாமையும், கி.பி. முதல் நூற்றாண்டின் துவக்கத்தி லிருந்தே அது தமிழ்நாட்டிலுள்ளார்க்குச் சிறிது சிறிதாகத் தெரிய லானமையும் மேலே விளக்கிப் போந்தாம். தொன்று தொட்டுத் தமிழ்நாட்டிலும் வடநாட்டிலும் மிகவும் பரவியிருந்தது சைவசமயக் கொள்கையேயாம். வடநாட்டில் இடையே தோன்றிய பௌத்த சமண மதங்கள் தொடக்கத்திற் சைவசமயத்திற்கு மாறாக நில்லாவிடினும் நாளேற நாளேறத் தாம் தனித்து நிற்கும் ஆற்றல்பெற்ற வளவானே அதனொடு பெரிதும் மாறுபட்டு, அதனைத் தழுவினார்க்குப் பெரிதுந் தீங்கிழைப்பவாயின. அக்காலங்களில் வைணவ மதம் வடநாட்டிற்றனி நின்று பரவி நில்லாமையாற், பாரத இராமாயண கதைகள் பௌத்தசமண மதங்களுக்கு எதிரே தலைதூக்கி நின்று அங்கும் பரவினவல்ல. அஞ்ஞான்று அரசுவீற்றிருந்த பௌத்த சமணமதங்களோடு எதிர் நிற்கலாற்றாத ஆரியப்பார்ப்பனர் வடநாடு துறந்து தமிழ்நாடு புகுந்து இங்கு நிற்க நிலைக்களம் பெற்ற பின்னரே தான் தாம் தம்முடன் கொணர்ந்த பாரத இராமாயண கதைகளைத் தமக்கு உயர்வுண்டாம் வகையிலும், தமிழ் நாட்டவர் மனங்களைத் தம்மாட்டு ஈர்க்கும் வகையிலும் வரவரப் பெருக்கியெழுத லாயினர். மாபாரதமானது முதலில் எண்ணாயிரத்து எண்ணுறு சுலோகங்கள் மட்டும் உடையதாயிருந்தென்பதும், அதன்பிற் சில நூற்றாண்டுகள் கழித்து அஃது இருபத்து நாலாயிரஞ் சுலோகங்கள் உடையதாக முன்னையிலும் மும்முடங்கு பெருக்கி எழுதப்பட்ட தென்பதும் அதன்பின் சில நூற்றாண்டுகள் செல்ல நூறாயிரஞ் சுலோகங்களுடையதாக முதலிலிருந்ததற்குப் பன்னிரண்டு மடங்கு பெருக்கி எழுதப் பட்டதென்பதும் அதன் றொடக்கத்திலுள்ள `ஆதிபருவத் திலேயே தெளிவாகச் சொல்லப்பட்டிருக் கின்றன.1 முதலிற் சுருக்கமாயிருந்த பாரத கதை கிறித்து பிறப்பதற்குப் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்த தொன்றாகும்; அதன்பின் 8800 சுலோகங்களுடையதாகச் செய்யப்பட்டது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலும், பின்னர் 20,000 சுலோகங் களுடையதாகச் செய்யப்பட்டது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலும் பின்னும் நூறாயிரஞ் சுலோகங்க ளுடையதாக ஆக்கப்பட்டது கிறித்துவுக்குப் பின் நான்காம் நூற்றாண் டிலுமாக வரவரப் பெருக்கி யெழுதப்பட்டன வாகுமென வடமொழி வல்ல ஆசிரியர் மாக்டனல் உயர்ந்த பல சான்றுகள் காட்டி நன்கு விளக்கியிருக்கின்றார்.2 விஷ்ணுவின் பல்பிறப்புக்களையும், கண்ணன்றன் ஆண்மைச் செயல்களையும் விரித்துக்கூறும் `ஹரிவம்சம் என்னும் நூல் பதினாயிரஞ் சுலோகங்கள் உடையதாகச் செய்து பாரதத்தின் இறுதியிற் சேர்க்கப்பட்டதுங் கி.பி.நான்காம் நூற்றாண்டிலேயே மென்பதூஉம் அவராற் காட்டப்பட்டது. இதற்கு முற்பட்ட பாரதக்கதையிற் கண்ணனது குழவிக் காலத்து ஆண்மைச் செயல்களும் பிறவும் ஒரு சிறிதுங் கூறப்படாமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று. எனவே கண்ணன் திருமாலின் பிறப்பாகக் கொள்ளப்பட்டதும், அவனுக்கு அரிய பெரியஆண்மைச் செயல்களை ஏற்றிக் கூறியதும் எல்லாம் கி.மு. மூன்றா நூற்றாண்டிலிருந்து பார்ப்பனர் களாற் புனைந்து சேர்க்கப் பட்டனவாகும். இவ்வாறு தமது உயர்வினை நிறுத்தல் வேண்டியும் ஏனை மக்கள் எல்லாரையுந் தங்கீழ் அடக்கி வைத்தல் வேண்டியுமே பார்ப்பனப் புலவர்கள் காலங் கடோறும் பாரதக்கதையைப் பெருக்கி யெழுதிவரலாயினர். இவ்வுண்மையும் மேற்காட்டிய ஆங்கில ஆசிரியரால் நன்கெடுத்துக் காட்டப்பட்டது.3 இங்ஙனமே, வான்மீகிமுனிவர் இயற்றியதாகச் சொல்லப் படும் இராமாயண கதையும் முன்னாள் முதல் இந்நாள்வரையும் இடையிடையே பார்ப்பனர்களாற் பெருக்கி எழுதப்பட்டு வந்ததொன்றாகும் இவ்வாறு பற்பல காலங்களிலிருந்த பற்பலர் தாம்தாம் வேண்டியவைகளை எழுதியெழுதி இடையிடையே சேர்த்துவந்தமையால் இதன்கட் கூறப்படுஞ் செய்திகள் ஒன்றோடொன்று பெரிதும் மாறுபட்டுக் கிடக்கின்றன. அவற்றுட் சில ஈண்டெடுத்துக் காட்டுதும்; விரிவஞ்சி அம் மாறுபாடுகள் முற்றும் எடுத்துக்காட்டிலம். கிட்கிந்தா காண்டத்திற் சுக்கீரிவன் முதலில் தனக்கு இராக்கதர்களின் இருப்பிடமும் அவர்களின் வலிமை குடும்பம் முதலியவைகளைப் பற்றிய குறிப்புஞ் சிறிதுந் தெரியாவென்று கூறினமை நுவலப் பட்டிருக்கின்றது; ஆனால் அதன் பிற்பகுதியிலோ இந் நிலவுலகத்திலுள்ள இடங்களைப் பற்றிய வரலாறும், இலங்கை இராவணனுக்கு உரியதாதலும் இவன் தான்விடுத்த தூதுவர்களுக்கு விரிவாக அறிவித்தமை தெரித்துரைக்கப் பட்டிருக்கின்றது. இதுகொண்டு முற்பகுதியை யெழுதியவர் தென்னாட்டுக்கு வராமல் வடக்கின்கண்ணே இருந்த வராதலும் பிற்பகுதியை யெழுதிச் சேர்த்தவர் இத்தென்னாட்டின் கண் வந்து குடியேறி இவ்விடங்களை நன்குணர்ந்தவராதலும் தாமே நன்குவிளங்கும். வான்மீகி இராமாயணத்திற்கு இருநூறாண்டு முற்பட்டதாகிய `தசரத ஜாதகத்திலும் தன் றந்தையின் கட்டளையால் அரசு துறந்துசென்ற இராமன் இமயமலைச் சாரலிற் சென்று வைகிப் பன்னீரி யாண்டு கழித்து வந்து தனதரசைக் கைக்கொண்டான் என்னும் அவ்வளவே சொல்லப் பட்டிருக்கின்றதல்லாமல், அவன் தென்னாடு நோக்கின் சென்றானெனவாதல், தன் மனைவியைக் கவர்ந்துசென்ற இராவணனொடு பொருது அவனை மடித்து அவளை மீட்டுவந்தானெனவாதல் ஒரு சிறிதுங் கூறப்படாமையால், இவையெல்லாந் தென்னாடு போந்த பார்ப்பனராற் பின்னர் எழுதிச் சேர்க்கப்பட்டனவா மென்பதை மேலும் எடுத்துக் காட்டினாம். இருக்கு வேதத்தில் மழையைப் பெய்விப்பவனாக வணங்கப்படும் இந்திரனாகிய இராமனுக்கும், அம்மழை வளத்தைப் பெறூஉம் உழவுசாலாகிய சீதைக்கும் உள்ள தொடர்பினையே பின்னர் ஒரு கதையாகப் புனைந்து கட்டினர் என்பதனையும் மேலே விளக்கினாம். மற்று, இக் கதையை அவ் விருக்குவேத நிகழ்ச்சியோடு தொடர்புடைய புனைந்துரை நாடக வழக்காகக் கொள்ளாது,`இராமன் சீதை எனப் பெயரிய அரசனும் அரசியும் உண்மையிலிருந்தவரே யாவரெனக் கொள்ளினும் அவ்விருவருந் தென்னாடு போந்தமைக்கும், இராவணன் என்போனால் துன்புற்று மீண்டமைக்கும்மிகப் பழைய வடநூல் தமிழ் நூல்களிற் றினையளவு சான்றுதானும் இல்லையென்க. இன்னும், இப்போதுள்ள வான்மீகி இராமாயணத்தில் `மந்தரை என்பாள் `கைகேயிக்குச் சொல்லுமிடத்தில் `இராமனுக்கு மனைவிமார் பலர் இருந்தமையினைக் குறிப்பிட்டிருக்கின்றாள். ஆனால், `இரகுவம்சம் என்னும் நூலெழுதிய காளிதாசரோ அவனுக்குச் சீதையை மட்டுமே மனைவியாக உரைநிகழ்த்துகின்றார். இவ்வாற்றால், தசரதன் இராமன் பரதன் என்பார்க்கு மனைவிமார் பலருளரெனக் கிளந்த செய்யுட்கள் பிறரால் வரைந்து சேர்க்கப்பட்டமை புலனாம். இன்னும், அகலிகையென்பாள் இந்திரனொடு மருவினமை பற்றிக் கௌதமராற் கல்லாக உருமாறிக் கிடக்கும்படி சினந்துரைக்கப்பட்டாள் என்றாதல், பின்னர் இராமனது அடித் துகள் பட்டவளவானே தனது பழைய வுருவினைப்பெற்று நின்றாள் என்றாதல் ஏதும் வான்மீகி இராமாயணம் பகரவில்லை. அவள் இழைத்த அக் குற்றத்திற்காகக் கௌதமர் அவளைநோக்கி: இவ்வாசிரமத் துள்ளார் எவர் கண்ணிலும் படாமல், காற்றையன்றி வேறேது உணவும் எடாமல், திருநீற்றிற் கிடந்தபடியாய், நீ செய்த குற்றத்தை நினைந்து வருந்தித் தவம்புரியக் கடவை! என்று சினந்துரைத்தன ரெனவும், அவ்வுரைப் படியே அவள் திருநீற்றிற்கிடந்து தவமியற்றி, இராமன் தனது ஆசிரமத்திற்கு வந்த ஞான்று அத் தவம் முடிவு பெற்றமையின், வந்த அவனை வரவேற்க, அவன் தன் மனைவியோடும் தம்பியோடும் அவ் வகலிகையின் அடிகளில் வீழ்ந்து வணங்கினன் எனவும் வான்மீகி இராமாயணம் புகலா நிற்கின்றது;4ஆனாற், பின்வந்த காலிதாசரை யுள்ளிட்ட புலவரோ அவள் கல்லாகச் சமைக்கப்பட்டுக் கிடந்து இராமன் றிருவடிபடுதலும் பழைய உருப்பெற்று எழுந்தாள் என உண்மையைப் பிழைக்கப் கூறினர். இன்னும், வான்மீகி இராமாயணத்தின் முதற்கண்ண தாகிய பாலகாண்டத் துவக்கத்தில் நாரதர் இராமனது வரலாற்றினைக் கூறிமுடிக்கின்றுழி, அவன் இறந்தபின் பிரமலோகஞ் செல்வான் என்று புகன்றனரே யன்றி, விட்ணுலோகஞ் செல்வான் என்று புகன்றிலர். இராமன் உண்மையிலே திருமாலின் பிறப்பா யிருந்தானேல், இறந்தபின் அவன் விட்ணுலோகஞ் செல்வானென்று விளம்புதல் வேண்டும். மற்று அவ்வா றுரையாமையால் நாரதர் அவனை விட்ணுவின் பிறப்பென்று கொள்ளாமல், மக்கட் பிறப்பினருள் ஒருவன் எனவே கொண்டனரென்பது புலனாம். ஆனால், இதன் இறுதிக்கண் உள்ள `உத்தரகாண்டத்திலோ நான்முகக் கடவுள் இராமனை அவனது முடிவுநாளில் தனது திருமாலுடம்பிற் புகும்படி வேண்டிக்கொண்டாரென முன்னதனொடு மாறுபட்டதொரு கதை காணப்படுகின்றது. பாலகாண்டத்தின் முதலில் இராமன் வரலாற்றினை எடுத்துரைக்கும் நாரதர் அவனைத் திருமாலின் அவதாரமென்று அதன்கட் சிறிதும் உரையா திருக்க, உத்தரகாண்டம் அதனொடு முரணி அவனைத் திருமாலின் பிறப்பாகக் கூறுதலானும், இங்ஙனமே பால காண்டத்தின் 15 ஆம் இயலும் தேவர்கள் திருமாலை அடைந்து `இராவணனைக் கொல்லும் பொருட்டு இராமனாகப் பிறந்தருளுக எனக் குறையிரந்தார்களென முன்னதனொடு முரணக் கூறுதலானும், இராமன் திருமாலின் பிறப்பாயின் அவன்றன் மனைவி சீதை இலக்குமியின் பிறப்பாக வேண்டுமாகவும் அவளை அங்ஙனம உரையாது அவள் தனது முற்பிறவியிற், `குசத்துவசன் புதல்வியாகிய `வேதவதியா யிருந்தனள் என்று இதன் யுத்தகாண்டம், 60 ஆம் இயல் உரை தருதலானும் பாலகாண்டத்தின் இடையிடையே பல பகுதிகளும் உத்தரகாண்டமும் பின்வந்தோரால் நாளடைவே எழுதி எழுதிச் சேர்க்கப்பட்டமை தெற்றென விளங்கா நிற்கும். மேலும், இராவணனுக்குப் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் இருந்தன என்பது பழைய இராமாயணப் பகுதிகளிற் பெறப்படவில்லை. இலங்கையிற் சீதையைத் தேடச் சென்ற அநுமான் இராவணனது அரண்மனை யுட்புக்குச் செல்கின்றுழி இராவணன் பருத்த தலையுங் கழுத்தும் உடையனாய்க்5 கட்டிலின்மேல் உறங்குதலைக் கண்டான் என்னும் அவ்வளவே சொல்லப்பட்டிருக்கின்றது. இராவணன் போர்க்களத்தில் வந்து நின்றக்காலும் ஒற்றைத் தலையும் இரண்டு கண்களும் உடையனாகவே இருந்தமை குறிக்கப் பட்டிருக்கின்றது. போர்க்களத்தில் இராமன் இராவணனைக் கண்டு உரைகூறினமை சொல்கின்ற விடத்தும், அவன் மக்களெல்லாரையும் போல் ஒரே தலையுடையனா யிருந்தன னெனவே சொல்லப் பட்டிருக்கின்றான். இன்னும், போர்க் களத்தில் இராவணன் உயிரிழந்துவிழ அவன்றன் மனைவிமார் அவன்பாற் போந்து புலம்புதலைப் புகல்கின்ற விடத்தும் அவன் ஒற்றைத் தலையும் இரண்டு கைககளும் உடையனாயிருந்த தன்மையே நுவலப்பட்டிருக்கின்றது. ஆகவே, இராவணனுக்குப் பத்துத்தலைகளும் இருபது கைகளும் கற்பித்துக் கூறிய கதை பின்னரெழுதிச் சேர்க்கப் பட்டதாதல் தெள்ளிதின் விளங்கும். இராமாயண கதை தென்னாட்டிற் சிறிது தெரியத் துவங்கிய கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட தமிழ்ப் பெருங்காப்பியங் களிலும் தமிழ்ப்பாட்டுக்களிலுங்கூட இராவணன் குறிக்கப் படும் இடங்களும் கபிலரது குறிஞ்சிக் கலிப்பாட்டு ஒன்றிற்றவிர வேறு யாண்டும் அவன் பத்துத் தலையுடையனாயிருந்தன னென்பது சொல்லப் படாமையின், முதலில் இராமாயண கதையை ஆக்கியோர் அவனை ஏனை மக்களைப் போன்ற வடிவுடையனாகவே வைத்துக் கதை புனைந்தாரென்பதூஉம், கி.மு. இரண்டாவது நூற்றாண்டிற்குப் பின் அக்கதையைப் பெருக்கி வரைந்தோரே அவனுக்குப் பத்துத் தலையும் இருபதுகையும் ஏற்றிவிட்டன ரென்பதூஉம் இனிது புலனாம். எனவே, கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்த கபிலர், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்த மாணிக்கவாசகப் பெருமான் முதலியோர் காலந்தொட்டுத்தான் பத்துத்தலை இராவணன் கதை தமிழ்நாட்டிற் றெரிந்து வரலாயிற்றென றுணர்ந்து கொள்க. இவ்வாறு `வான்மீகி இராமாயணத் தின்கட் காலங்கடோறும் பிற்பின் வந்தோரால் எழுதி யெழுதிச் சேர்க்கப்பட்டவைகள் பற்பல. இங்ஙனமாகப் பல்லோரும் தாந்தாம் வேண்டியவை களை யெல்லாம் படைத்துப் படைத்து அதன்கட் சேர்த்து வந்தமையினாலேதோன், அதன்கட் சொல்லப்படுஞ் செய்திகள் ஒன்றோடொன்று பெரிதும் மாறுகோளுற்று நிற்கின்றன. இதன்கட் காணப்படும் மாறுபாடுகளிற் பெரும் பாலனவற்றை, வடநூலாராய்ச்சியில் நிகரற்று வயங்கிய மியூர் என்னும் ஆங்கில ஆசிரியர் தாம் பெரிதாராய்ந்து தொகுத்தெழுதிய `வடநூல் மூலங்கள் என்னும் நூலின் நான்காம் புத்தகத்தில் நன்கெடுத்துக் காட்டினார்;6 இங்ஙனம் எடுத்துக்காட்டிய இவ்விரிந்த ஆராய்ச்சி யுரையிலேயே இராமன் திருமாலின் பிறப்பா காமையும் அவர் மெய்ச் சான்றுகள் பல கொண்டு நன்கு நிலைபெறுத்தி யிருக்கின்றார். நம் இந்திய நாட்டுஅறிஞரான வைத்தியா என்பவரும் தாம் எழுதிய `இராமாயண ஆராய்ச்சியில் இம் மாறுபாடுகளை எடுத்துக் காட்டியிருக் கின்றார்.7 இன்னும், இப்போது பம்பாயிற் பதிப்பிடப் பட்டிருக்கும் வான்மீகி இராமாயணப் புத்தகத்தையும், வங்காளத்திற் பதிப்பிடப்பட்டிருக்கும் வான்மீகி இராமாயணப் புத்தகத்தையும் சிறிது ஒப்பிட்டு நோக்குவார்க்கும் இம் மாறுபாடுகளும் புதிய சேர்க்கைகளும் எளிதின் விளங்கா நிற்கும். முன்னையதில் ஐந்நூற்று ஐம்பத்தேழு இயல்களும் பத்தொன்பதாயிரத்து எழுநூற்றுத் தொண்ணுற்று மூன்று சுலோகங்களும் இருக்கப், பின்னையதில் அறுநூற்றைம்பது இயல்களும் இருபத்து நாலாயிரத்து ஐந்நூற்று இருபத் தெட்டுச் சுலோகங்களுங் காணப்படுகின்றன; ஆனால், `உத்தர காண்டம் இதிற் காணப்படவில்லை. இவ் வேறுபாட்டோடு, ஒன்றிற் கூறப்படுஞ் செய்திகள் மற்றொன்றிற் காணப் படாமலும், இரண்டிலுங் காணப்படுவனவுங் கூட ஒன்றில் ஒருவாறாயும் மற்றொன்றில் மற்றொருவாறாயுந் திரிபெய்திக் கிடக்கின்றன. வடமொழி முதல் நூலாகியி வான்மீகி இராமாயணமே இப்பெற்றிப்பட்ட பிறழ்ச்சிகள் உடைய தாயின், இதன் தமிழ் மொழி பெயர்ப்பாய் இஞ்ஞான்றுலவுங் கம்பர் இராமாயணத்தின் பிறழ்ச்சிகள் எத்துணையவாம் என்பதனை யாம் உணர்த்துதல் வேண்டா. வடமொழி மூலத்தின் இருவேறு பதிப்பையுங் கம்பர் இராமாயணத்தையும் ஒருங்குவைத்து ஒப்பிட்டு நோக்கு வார்க்கே இவ்வுண்மைகள் புலனாம். அற்றேற், பத்துத்தலையும் இருபது கையுமுடைய இராவணனிருந்ததும், அவன் கைலாயமலையை வேரோடு பெயர்த் தெடுத்தபோது அதன் குவட்டியின்மீ தெழுந்தருளி யிருந்த சிவபெருமான் தமது திருவடிப் பெருவிரல் ஒன்றனால் அம் மலையை யழுத்தி அவன் றன் இருபது தோள்களையும் அம்மலைக்கீழ் அடர்த்து நெரித்ததும், பின்னர் அவன் அப்பெருமானை அழுது குறையிரப்ப இரங்கி அவற்கு வாளும் நாளும் ஈந்தருளிக் காத்ததும் ஆகிய இவை எல்லாம், ஓதாதுணர்ந்த திருஞானசம்பந்தப் பெருமானை யுள்ளிட்ட சைவசமய ஆசிரியன்மார் உண்மையெனக் கொண்டு பதிகங்கடோறும் அவற்றை ஓதுதல் என்னை யெனிற், கூறுதும்; சைவசமய ஆசிரியர் சிவபெருமான் ஒருவனையே குழைந்து குழைந்து உருகிப் பாடுங் கடப்பாடு மேற்கொண்டவர்; தமக்கு முன்னும் தங்காலத்தும் வழங்கிய கதைகளுள் மெய்யாவன இவை, பொய்யாவன இவையென்று ஆராயப் புகுந்தவர் அல்லர்; தமதுள்ளம் உருகுமாற்றாற் சிவபிரான் றன் அருட்செயல் களையும் அருளாண்மைகளையும் எடுத்துரைக்கும் நீரர்; தாங்கண்ட கதைகளுட் சிவபிரான்றன் முழுமுதலாற்றலை எளிதின் எடுத்துக்காட்டுவது எத்தகையதா யிருப்பினும் அதனைத் தாமும் எடுத்தெடுத்துப் பாடி அகங்கரையா நிற்பர். இப்பெற்றியினரான அவர் இராவணன் கதையை யெடுத் தாண்டது, இறைவனது மலையைப் பெயர்த்தெடுக்கும் அத்துணைப் பேராற்றல் வாய்ந்தவனென்று சொல்லப்பட்ட அவனையும் இறைவன் தமது திருவடிப் பெருவிரல் நுதியால் அழுத்தி நெரித்தனன் என்பதனால் இறைவனது அளப்பில் ஆற்றலும், பின்னர் அவன் தனது சிறுமையும் இறைவனது எல்லாம்வல்ல பெருமையும் உணர்ந்து நெஞ்சம் நெக்குடைந்து இறைவனைத் தொழுதவளவானே அவன் அவற்கு இரங்கி வாளும் நாளும் ஈந்தருளினன் என்பதனால் இறைவனது பேரருட்டன்மையும் எல்லார்க்கும் அஃது எளிதின் விளக்குதல் பற்றியேயாம். மேலும், இராவணனைக் கொன்றதைப் பேராண்மையாகக் கருதி அதனால் இராமனை எல்லாம் வல்ல கடவுளாகக் கொண்டு வழிபாடு செய்வாரான ஆரியப் பார்ப்பனரது அறியாமை பற்றி, அவனைத்தமது காற்பெருவிரல் நுனியால் ஊன்றி நெரித்த சிவபிரானே முழுமுதற் கடவுளாதல் தேற்றி அக்காலத்திருந்த சைவ சமயச் சான்றோர்கள் அக் கதையைத் தாமும் படைத்து வழங்கினார். என்னை? `நஞ்சை நஞ்சாற் கொல்லுக! முள்ளை முள்ளாற் களைக! என்னும் ஆன்றோர் வழக்குப் பற்றித் தீது பயப்பதான ஒரு பொய்யை நன்மை பயப்பதான மற்றொரு பொய்யால் மாற்றுதல் மேலோர் நிறுத்திய ஒழுகலாறாகலான் என்க. இத்தென் னாட்டிலாதல் இலங்கையிலாதல் பத்துத்தலையும் இருபது தோளும் உடைய இராவண என்பானோர் அரக்கன் இருந்தது மில்லை; வடக்கிருந்து இராமன் என்பான் இங்கு வந்தத மில்லை; அவன்றன் மனைவி சீதை யென்பாளை இராவணன் சிறைபிடித்துச் சென்றதுமில்லை; இராமன் குரங்குகளைப் படை திரட்டிச் சென்று அவனொடு பொருது அவளை மீட்டு வந்ததுமில்லை; இங்ஙனமாகவும், இல்லாத இவைகளை யெல்லாம் புனைந்துகட்டி இம் முகத்தால் இராமனைத் தெய்வமாக்கி, அவனையே இங்குள்ள அறிவில்லா மக்கள் வணங்குமாறு செய்து, எல்லா வுலகங்களையும் எல்லா வுயிர்களையுந் தோற்றுவித்துக் காத்து அருள்புரியும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவத்தை அம்மக்கள் வணங்காவாறு மாயம்புரிந்த ஆரியர்தம் தீச்செயலையும் அவர் புனைந்த பொய்க்கதையின் உரத்தையுந் தொலைத்தல் வேண்டியே, அவன் திருக்கைலாய மலையைப் பெயர்த் தெடுத்ததும், அஃதுணர்ந்து இறைவன் தனது காற்பெருவிரல் நுனியால் அவனை அம் மலைக்கீழ் அடர்த்ததும் ஆகிய பிறிதொரு கதையைச் சைவசமயச் சான்றோர் தாமும் புனைந்துகட்டி, அவ்வாயிலால் இராவனொடு படை கூட்டிச் சென்று பலநாட் போர்புரிந்த இராமன் சிற்றறிவுஞ் சிறுதொழிலுமுடைய மக்களுள் ஒருவனே யாதலும், அத்துணை வலிமை மிக்க இராவணனைத் தமது திருவடி பெருவிரல் நுனியால் ஒரு நொடியில் அழுத்தி நெரித்த சிவபிரானே எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளாதலுந் தெளியவைத்தார். பத்துத்தலையும் இருபது கையும் உடைய இராவணன் என்பானோர் அரக்கன் இருந்தான் எனல் உலக இயற்கைக்கு முற்றும் மாறான பொய்க்கதையேயாதல்போல, அவன் திருக்கைலாய மலையைப் பெயர்த்தெடுத்தா னென்பதும் ஒரு பொய்க்கதையே யாயினும், எல்லாம்வல்ல இறைவனை வழிபட்டு மக்கள் பேரின்பத்தையடைய வொட்டாது தடைசெய்து, பிறப்பு இறப்புக்களிற் பட்டுழன்ற ஓராண்மகனாகிய இராமனையே வணங்கி அம் மக்கள் தமது பிறவிப் பெரும்பயனை இழக்குமாறு செய்யும் இராம இராவணப் பொய்க்கதையின் இழிந்த நோக்கம் போலாது, சைவசமயச் சான்றோர் கட்டிய பிற்கதை இராம இராவணரின் சிறுமையும் சிவபிரான்றன் முழுமுதற் பெருமையுந் தெரித்து மக்களை அப்பெருமான் றிருவருட்பேற்றிற்கு உரியராக்கும் உயர்ந்த நோக்கம் உடைமையால், இது பெரிதும் பயன்படுதலுடைத்தாம். இத்துணைப் பெரும்பயன் றருதல் பற்றியே இக் கதையை மாணிக்கவாசகர் திருஞானசம்பந்தர் முதலான சைவசமய ஆசிரியன்மார் தாம் அருளிய திருப்பதிகங்களில் எடுத்து வழங்கினரல்லது, உலகவியற்கை மக்க ளியற்கைக்கு முற்றும் ஒவ்வாத அக் கதைகளைப் பேரறிவாளரான அவர்கள் உண்மையென நம்பி அங்ஙனஞ் செய்தார் அல்லர். இங்ஙனமே அவர்கள் எடுத்தாண்ட கதைகளெல்லாம், எல்லாம்வல்ல முதல்வன்றன் அளவில் அறிவாற்றல்களையும், அவன் தன் மெய்யன்பர்க்கு உவந்து செய்யும் அருள்வழக்கங்களையும் நன்கு புலப்படுக்குந் திறத்தவாகலின், அவற்றை அந் நுண்பொருள்பற்றித் தழுவிக்கொள்வதல்லாமல், உலக நடையோடு ஒவ்பவா அவற்றின் பருப்பொருள் ஒன்றேகொண்டு அவற்றைத் தழுவுதல் எட்டுணையும் ஆகாது. எனவே, இன்னோரன்ன கதைகளை எடுத்தாளுதல் கொண்டு திருஞானசம்பந்தப் பெருமான் முதலான அறிவின் எல்லைகண்ட ஆசிரியர், சிற்றறிவினரும் நம்புதற்காகாத அப் பருப்பொருட் பொய்ந் நிகழ்ச்சிகளை மெய்யெனத் துணிந்து தழீ இயினாரென அவர் தம் உண்மைக் கருத்துணராது அவர்மேல் அந் நம்பிக்கையினை யேற்றல் ஏதமாமென்க. மேலும், இராவணன் என்பான் பத்துத்தலையும் இருபது கையும் உடையனா யிருந்தன னென்பது `வான்மீகி இராமாயணத்தின் பழைய பகுதிகளிற் சொல்லப்படாமையை மேலெடுத்துக் காட்டின மாகலானும், இராவணன் திருக்கைலாய மலையைப் பெயர்த்தெடுத்த கதை கூறும் `உத்தரகாண்டம் வங்காளத்திற் பதித்த வான்மீகி இராமாயணத்தின்கட் காணப்படாமை யானும் இவை யெல்லாம் பிற்காலத்து வந்தோரால் எழுதிச் சேர்க்கப்பட்டமை தெற்றென விளங்குதலின், இவ் வியல்புகளை யெல்லாம் ஆராயாது சைவசமய ஆசிரியர் இவை தம்மை உண்மையென நம்பிக் கூறினாரென்னுங் குற்றம் அவர்க்கு உண்டாமாதலால், அவர் அவற்றை ஆராய்ந்து அவற்றை உண்மையெனக் கண்டு கூறினாரென்றல் சிறிதும் ஆகாது; மற்றுத், தங்காலத்து வழங்கிய அக்கதைகள் சிவபிரான்றன் முழுமுதற்றன்மை அறிவுறுக்கும் அந்நுட்பமே பற்றி அவர் அவை தம்மையெடுத் தாண்டனர் என்று கோடலே வாய்ப்புடைத்தாமென விடுக்க. அற்றேல், முன்னை மிகப் பழைய நூல்களிற் காணப்படாத இராம இராவண கதை பின்னைப் பழைய நூல்கள் முதற் காணப்படலாயினது யாங்ஙனமெனிற் காட்டுதும்: இராம இராவண கதை தென்னாட்டிலேதான் வரவரப்பெருக்கி எழுதப்பட்ட தொன்றாகும்; வைத்தியா என்பவருந் தமது கருத்து இதுவே யாதலை அறிவித்திருக் கின்றார்.8 அங்ஙனமாயினுந், தென்னாட்டின்கட் போந்து குடியேறிய ஆரியப் பார்பனர் அவ்வாறு ஒரு கதை படைத்துச் சேர்த்தற்கு முன் அக்கதைக்கு முதலாய் அதனொடு ஒப்பதொன்றைத் தாம் கண்டன்றோ அதனை அங்ஙனம் படைத்துச் சேர்த்தல் வேண்டுமெனின்; அஃதொக்கும், இராம இராவண கதைக்கு முதலாய் அதனை யொப்பதொன்று இத் தென்னாட்டின்கண் வழங்கியது உண்மையேயாம். மற்று, அஃது யாதோவெனின், அதுவே முருகக்கடவுள் இலங்கையை ஆண்ட சூரன் என்னும் அரக்கனை வென்றமை கூறுங் கதையாகும் மிகப் பழைய தமிழ்ப்பாட்டுக்களும விரவியிருக்கும் பரிபாடல் என்னும் பழைய தமிழ் நூலால் கடுவனிளவெயினனார் நல்லிசைப்புலவர் திருமால்மேற் பாடிய இரண்டு பாடல்களும் முருகக்கடவுள்மேற் பாடிய ஒரு பாடலுங் காணப்படுகின்றன. இவ் விருகடவுளரையும் அவர்களிடம் அருள் ஆண்மைச் செயல்களையும் இவர் மிக்க அன்போடுங் குழைந்துருகிப் பாடியிருக்கின்றார். இவர் திருமாள்மேற் பாடியிருக்கும் மூன்றாம் நான்காம் பரிபாடல்களில் இராம இராவண கதை ஒரு தினைத்துணையாயினும் எடுத்துக் குறிக்கப்படாமை நுண்ணிய ஆராய்ச்சி யறிவுடையார் எல்லாரானும் பெரிதுங் கருத்திற் பதிக்கற்பால தொன்றாம். இவர் தாம் அதனை மொழிந்திலராயினும், இரண்டாம் பரிபாடல் பதின்மூன்றாம் பரிபாடல் பதினைந்தாம் பரிபாடல்களை முறையே திருமாள் மேற் பாடிய கீரந்தையார், நல்லெழினியார், இளம்பெரு வழுதியார் முதலான நல்லிசைப் புலவராதல் அவ்விராம இராவண கதையைக் குறித்து ஏதேனும் மொழிந்ததுண்டோ வென்றால் அதுவும் ஓர் எட்டுணையுங் காணேம். பிற்காலத்து வந்த ஆழ்வார்களெல்லாரும் இராமனைத் திருஞமாலின் பிறப்பாகக் கொண்டு அவன் இராவணனைச் செற்ற ஆண்மையைப் பலவாற்றானும் வியந்து பாடிஇருக்க, இவ்வாழ்வார்கட்குப் பன்னெடுங்காலம் முற்பட்டிருந்த கடுவனிளவெயினனார் முதலான பழந்தமிழ்ச் சான்றோர்கள் தாம் திருமாலை வழுத்திப் பாடிய பரிபாடற் செய்யுட்களில் இராமனையாதல் அவன் இராவணனைச் செற்றமையாதல் ஒருசிறிதுங் குறியாமை சாலவும் புதுமையாய்க் காணப் படுகின்றதன்றோ? திருமாலைப் பராவிய பரிபாடற் செய்யுட்களையும் பிற்காலத்தவரான ஆழ்வார் பாடல் களையும் புடைபட வைத்து அளந்து காணவல்ல நடுநிலை யாளர்க்கு, இராம இராவண கதை பரிபாடலிற் காணப் படாமை ஆழ்ந்ததோர் ஆராய்ச்சி யுணர்வினைத் தோற்று வித்து, அங்ஙன மொருகதை அக்காலத்திற் றென்னாட்டில் வழங்காமையினையும், அது பிற்காலத்தில் இங்குவந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனராற் புனைந்து சுட்டப் பட்டமையினையும் பொள்ளெனப் புலப்படுக்கும். இவ்வாறாக, இராம இராவண கதை திருமான்மேற் பாடப்பட்ட மிகப் பழைய பரிபாடற் செய்யுட்களிலும் ஓர் அணுத்துணையுங் காணப்படாததாக, முருகப்பிரான் சூர்மா வினைச் செற்ற கதையோ அக் கடுவனிளவெயினனார் முதலான சான்றோர்இயற்றிய பரிபாடற் செய்யுட்களிற் பலவிடத்தும் விளக்கமாகச் சொல்லப்பட் டிருக்கின்றது. ஐந்தாம் பரிபாடலிற், பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச் சேயுயர் பிணிமுகம் ஊர்ந்து அமர்உழக்கித் தீயழல் துவைப்பத் திரியவிட் டெறிந்து நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய கொன்றுணல் அஞ்சாக் கொடுவினைக் கொஃறகை மாய அவுணர் மருங்கறத் தபுத்தவேல் நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடைக் குருகெடு பெயர்பெற்ற மால்வரை யுடைத்து மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை என்று முருகப்பிரான் கடன்மேற் சென்று சூரபன்மனைக் கொன்று, அவன்றன் கிளைஞராகிய அவுணரை மடித்த வரலாற்றினை ஆசிரியர் கடுவனிளவெயினனார் விளங்கக் கூறினமை காண்க. இங்ஙனமே பதினான்காம் பரிபாடலில், சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே என ஆசிரியர் கேசவனாரும், பதினெட்டாம் பரிபாடலில், போர்எதிர்ந் தேற்றார் மதந் தபக் கார்எதிர்ந் தேற்ற கமஞ்சூல் எழிலிபோல் நீர்நிரந் தேற்ற நிலந்தாங்கு அழுவத்துச் சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய். என ஆசிரியர் குன்றம்பூதனாரும், பத்தொன்பதாம் பரிபாடலில், எவ்வத் தொவ்வா மாமுதல் தடிந்து தெவ்வுக் குன்றத்துத் திருந்துவேல் அழுத்தி அவ்வரை யுடைத்தோய் எனஆசிரியர் நப்பண்ணனாரும், இருபத்தொன்றாம் பரிபாடலில், கொள்ளாத் தெவ்வர் கொள்மா முதல்தடிந்து புள்ளொடு பெயரிய பொருப்புப்புடை திறந்தவேல் என ஆசிரியர் நல்லச்சுதனாரும் முருகக்கடவுள் சூரனைச் செற்ற வரலாறு கூறாநிற்பர். இங்ஙனமே, அகநானூறு (59 புறநானூறு, (23), பதிற்றுப்பத்து (11), திருமுருகாற்றுப்படை (59-61), சிலப்பதிகாரம் (6, 49-51; 23, 188-190) முதலிய பழைய தமிழ்நூல்களிற் கூறப்படும் இவ்வரலாற்றுப் பகுதிகளை ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியுமென அஞ்சி இத்துணையின் நிறுத்தினாம். இவ்வாற்றால், தென்கடற்கண் ஒரு தீவில் தலைமை பெற்றிருந்தோனான சூர் என்னுங் கொடியோன் ஒருவனையும் அவனைச் சார்ந்த கிளைஞராகிய அரக்கரையுந் தொலைத்தற் பொருட்டு முருகப்பிரான் அவர்மேற் சென்று அவரையெல்லாம் மடித்த வரலாறு இத் தென்றமிழ் நாட்டின்கட் பண்டைநாளிலே மிக்கு வழங்கினமை நன்கு புலனாம். இவ்வரலாறு இங்கு வழங்கிய பண்டைநாளில், இராம இராவண கதை இந்நாட்டவர்க்கு எள்ளளவுந் தெரியாது; ஏனெனிற், பிற்காலத்தில் திருமாலைப் பாடிப் பரவினவர்களெல்லாரும இராமனைத் திருமாலின் விழுமிய பிறப்பாகக் கொண்டு அவன் இராவணனைக் கொன்ற வெற்றித் திறத்தை வியந்தெடுத்துப் பலகாலும் விளம்பினாற் போலத், திருமாலைப் பாடிய பழைய பரிபாடல் ஆசிரியருள் ஒருவராயினும் ஓர் அணுத்துணையேனும் அவ்விராம இராவண கதையைக் குறியாமையின் என்பது. இராமயண கதை தென்னாட்டில் வழங்காத பண்டைநாளில் முருகக் கடவுள் சூர்மாவினைச் செற்ற வரலாறு அதன்கண் மிக்கு வழங்கினமையானும், ஆரியப் பார்ப்பனர் தென்னாடு புகுதாத காலத்தே வடநாட்டின்கட் பயின்ற `தசரத ஜாதகத்தில் இராமன் தெற்குநோக்கி வந்தானெனவாதல் அவன் இராவணனைக் கொன்றா னெனவாதல் ஏதொன்றுஞ் சொல்லப்படாமை யானும், ஆரியப் பார்ப்பனர் தமிழ் நாட்டிற் குடியேறியபின், இங்குப் பெருகிவழங்கிய `முருகப்பிரான் சூரனை அட்ட வரலாற்றினைக் கண்டு அது தமிழ்மக்கட்குரிய சைவசமய மேன்மையை இனிது புலப்படுக்குந் திறன் உணர்ந்து மனம் பொறாது, ஆரியராகிய தமக்கும் அத்தகையதோர் உயர்வினை நிலைபெறுத்திக் கொள்வான் விழைந்து, அவ் வரலாற்றினோடு ஒப்ப, `இராமன் என்பான் ஒருவனும் தெற்கே போந்து இலங்கையில் அரசுவீற்றிருந்தஇராவணனைக் கொன்று தேவர்களைக் காத்தான் எனவும், `அங்ஙனம் ஆண்மைச் செயல் புரிந்த இராமன் என்பான், இராவணனைத்தலைக் கொண்ட அரக்கர் குழாத்தினை அழிக்குமாறு நான்முகன் உருத்திரன் முதலான தேவர்க ளெல்லாரும் ஒருங்கு வேண்டியதற்கு இசைந்து இந் நிலவுலகின்மிசைப் பிறந்த திருமாலே ஆவன்எனவும் புதுவதாக ஒரு கதைகட்டி, அதன் வாயிலால் ஆரியப் பார்ப்பன ராகிய தமதுயர்வினையும் தாம் வழிபடு தெய்வமாக்கொண்ட இராமனதுயர்வினையும் நிலைநிறுத்தி வரலாயினரென்னும் உண்மை நன்கு பெறப்படா நிற்கும். எனவே, முருகன் சூர்மாவினைச் செற்றவரலாறு, இராமாயணகதை இங்குத் தெரியத்துவங்கிய கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முற்றொட்டே வழங்கிய மிகப்பழைய வரலாறாகலின், இங்குப்போந்த ஆரியப் பார்ப்பனர் அது தன்னை யேமாற்றி `இராமாயணம் என்னும் பெயரால் மற்றொன்று படைத்துவிட்டனரே யல்லாமல், இராமாயண கதை உண்மையாக நிகழ்ந்த தன்றென்பது துணிபொருளாமென்க. கந்தபுராண கதையினையும், இராமாயண கதையினையும் புடைபட வைத்து ஒற்றி ஒப்பிட்டுக் காணவல்ல நடுநிலையாளர்க்கு, இராமாயண கதை, கந்தபுராண கதையைப் பார்த்து பின்னர்ச் செய்யப்பட்டதொரு பொய்க் கதையே யாதல் தெற்றென விளங்காநிற்கும். அவ்வாறு `இராமாயண கதை பொய்யேயாயின் ஆகுக, `கந்தபுராணகதை மட்டும் மெய்யேயாதல் யாங்ஙனம்? மனமொழி மெய்களுக்கு எட்டாத இறைவன் ஆறுமுகங்களும் பன்னிருகைகளும் உடைய முருகக்கடவுளாக இமயமலை கட் புல்லடர்ந்த ஒரு பொய்கையிலே இம்மண்ணுலகிற் பிறந்தருளினானென்றலும், அவன் தேவர்களைக் காத்தற் பொருட்டு அவர்கட்கு ஓவாது இடுக்கண் புரிந்துவந்த இலங்கை மன்னனாகிய சூரன்மேற் படையெடுத்துச் சென்று, அவனொடு நேர்நின்று பொருது அவனைச் செற்றனனென்றலும், பிறவும் நம்புதற்கு உரிய அல்லவாகலான் எனிற், கூறுதும்: தென்கடற் கண்ணதொரு தீவில் அரசுபுரிந்த சூரன் என்பானொடு பொருது அவனை மடித்த முருகன் என்பான் உண்மையிலே முருகக்கடவுள்அல்லன்; முழுமுதற் கடவுளாகிய சிவபிரானது கட்டிளமைக் கோலமே `முருகன் எனப் படுவதாகும். `முருகு என்னுஞ் சொல் இளமை என்னும் பொருட்டாதலைத் `திவாகரத்திற் காண்க. இறைவனை இங்ஙனம் இளமைக் கோலத்தின் வைத்து வழிபட்டு, அவன்றன் அருளைப்பெற்று அவன் பெயர் பூண்டவனான அரசன் ஒருவனே தென்கடல் நோக்கிப் பெயர்ந்து அதன்கண் ஒரு தீவில் அரசாண்ட சூரனைச் செற்றவனாவான். சிவனடி யாரைச் சிவனெனப் பேணுக என்று சைவ சமயம் அறிவுறுத்தலின், முருகப்பிரான்றன் அடியவனும் அவன் பெயர் பூண்டவனும் ஆன வடநாட்டு மன்னன் ஒருவனை முருகப்பிரானாகவும், அவன் ஆற்றிய ஆண்மைத் தொழிலை முருகப்பிரானே செய்த தொன்றாகவும் பண்டை நாளிருந்த சான்றோர் கொள்வா ராயினர். உமையம்மையே தடாதகைப் பிராட்டியாகவும், இறைவனே சுந்தரபாண்டியனாகவும் போந்து மதுரையிற் செங்கோல் ஓச்சினர் என்றாற்போல் வருங்கதைகளும் இப் பெற்றியன வேயாம்; தடாதகையும் சுந்தரபாண்டியனும் அம்மையப் பரருளை முற்றப்பெற்ற அரசியும் அரசனுமே யாவரென்பது அப் புராண கதையின் உண்மைப்பொருள். தக்கன் வேள்வியைத் தகர்த்த வீரபத்திரரும், தாருகாவனத்து இருடிகளின் செருக்கை யழித்த பிட்சாடனரும் அங்ஙனமே எல்லாம்வல்ல சிவபிரான் அருளை முழுதும் பெற்றுக் கிளர்ந்துநின்ற விடலை மறவரேயாவ ரெனவும், அவரால் தகப்புண்டழிந்த அவ்வேள்விகள், சிவபிரானை வணங்காமல் ஊனையும் சோமப்பூண்டின் சாறாகிய கள்ளையும் அருந்துதல் விரும்பி இந்திரன் வருணன் மித்திரன் போன்ற சிறு தேவர்களை நோக்கி அக்காலத் திருந்த ஆரியர் வேட்ட வெறியாட்டு வேள்வி களேயா மெனவும் உணர்ந்து கொள்க. இவ்வா றெல்லாம் சிவனடியார்களான அரசர்களும் விடலை மறவர்களும் அருந்தவத் தோர்களும் ஆற்றிய செயற்கருஞ் செயல்களைச் சிவபிரான் செயல் களாகவும், அச்செயல்கள் செய்தோரைச் சிவமூர்த்தங் களாகவும், வைத்துப் புனைந்துரை வகையாற் புராணக் கதைகள் வரையப்பட்டமையின், இச் சிவமூர்த்தங்களையும் இவற்றிற்கு அப்பாற்பட்ட முழுமுதற் சிவத்தையும் பகுத்துணர்ந்து கொள்ளமாட்டாத பருப்பொரு ளறிவினார் இச் சிவமூர்த்தங்களையே சிவமெனக் கொண்டு விடுவரென அஞ்சியே, முழுமுதற் சிவத்தின் உண்மையியல்பு (சொரூப இலக்கணம்) தேற்றுவான் எழுந்த சைவசித்தாந்த நூல்களாகிய `திருமந்திரம் `சிவஞானபோதம் முதலாயின. `புராணங்களுட் கூறப்படுஞ் சிவமூர்த்தங்களெல்லாம் முப்பத்தாறு மாயாதத்துவங்களுள் மூவகை யான்மாக்களின் பாலனவேயாம் என்றும், `இம் முப்பத்தாறு தத்துவங்கட்கும் அத் தத்துவங்களுள் நிற்கும் வைகும் மூர்த்திகட்கும் அப்பாற்பட்ட முழுமுதற்பொருளே உண்மைச் சிவமாம் என்றும் இவை தம் மின் வேற்றுமை தெரித்தோதுவவாயின வென்க. எனவே, சிவபுராணங்களுட் கூறப்படும் அரும்பெருஞ் செயல்களைப் புரிந்த சிவமூர்த்தங் களெல்லாம் சிவபிரா னருளை நிரம்பப்பெற்று மாயா தத்துவங்களின் வைகி அவனது ஆணை வழிநின்று அச் செயல்களைப் புரிந்த புனித உயிர்களே யல்லாமல், அவரெல்லாம் மாயா தத்துவங் கடந்த முழுமுதற் சிவமாதல் செல்லாமை சைவசித்தாந்த நுண்பொருள் பற்றிக் கடைப்பிடித் துணர்ந்து கொள்க. அஃதொக்கும்; முழுமுதற் சிவத்தின் வேறாகாத முருகப்பிரானே நேரிற் போந்து சூர்மாவொடு பொருதான் என்றுரைத்தலாற்படும் இழுக்கு என்னையெனின்! ஐந்தாம் பரிபாடலில் முருகவேள் பிறப்பைக் கூறுகின்றுழி, இந்திரன் வேண்டுகோளுக்கு இசைந்து இறைவன் உமை கொண்ட கருவைப் பல துண்டங்களாகப் பிளந்து கழிக்க, அவ்வாறு கழிந்த அக் கருத்துண்டங்களின் விழுப்பம் உணர்ந்த முனிவர்கள் எழுவரும் அவற்றை ஏற்றுப்போய் வேள்வித் தீக்கட் பெய்து, பின்னர் அவற்றை அதன்கண்ணினின்றும் எடுத்துத் தம் மனைவியர் கைக்கொடுப்ப, அவருள் அருந்ததி ஒழியப் பிற அறுவரும் அவற்றைத் தம் கருப்பையிற் செறித்துச் சூன்முதிர்ந்து இமயச்சுனையிற் றாமரைப் பாயலிலே பயந்தாராக, அக் குழவிகளாறும் வளர்ந்து, தம்மை வந்தெதிர்த்த இந்திரனைப் பொருது தொலைக் குங்கால் ஆறு திருவுருவுரும் ஓருருவாயின வென்று அதன் ஆசிரியர் கடுவனிளவெயினனார் அவ்வரலாறு தெரிந் தோதுதல் காண்க. பிற்காலத்தில் வடமொழிக்கண் எழுதப் பட்ட கந்தபுராணம் புகலும் முருகன் பிறப்பு, வரலாறு, பழைய பரிபாடல் வரலாற்றினைத் திரித்து உரைத்தலின், அஃது உண்மையெனக் கொள்ளற் பாற்றன்று. ஆசிரியர் நக்கீரனார், இப்பரிபாடல் வரலாற்றினையே தழுவிக் கூறினாரென்பது `திருமுருகாற்றுப்படை யுரையில் உரைகாரர் நச்சினார்க் கினியர் வரைந்த உரைப்பகுதியானும் நன்கு தெளியப்படும். மண்ணுலகிற் பிறக்கும் யாக்கையின் கரு எம்மனோரைப்போல் தசை என்பு நரம்பு குருதி முதலியவற்றால் ஆக்கப்படுவதே யல்லாமற் `கந்தபுராணம் நுவலுமாறு போல், வெறுந் தீப்பொறியால் ஆக்கப்படுவதன்று. வடநாட்டு மன்னன் ஒருவனுக்குப் பிறந்து முருகன் பெயர்பெற்ற குழவி மக்கள் யாக்கை யுடையதாகலின், அக்காலத்து வழங்கிய வரலாறு அதனை ஊனுடம்பு கொண்டதெனவே குறித்தது; கடுவனிளவெயின னாரும் அம் முருகனைத் தெய்வமாகக் கொண்டாராயினும் அவ்வுண்மை பிழையாமல் அவன் மக்கள் யாக்கை யுடைய னென்னுந் தன்மை தோன்றவே மொழிந் திட்டார். ஆனாற், பிற்காலத்தில் வடமொழிக் கந்தபுராணம் இயற்றினவரோ அவனை முருகக்கடவுளாகக் கொண்டபின் அவனை மக்கள் யாக்கை யுடையனெனக் கூறுதற்கு ஒருப்படராய்ச் `சிவபிரான் றன் ஆறு திருமுகங்களில் மிளிரும் நெற்றிக் கண்கள் ஆறினின்றுந் தோன்றிய ஆறு கனற்பொறிகளே ஆறு திருமுகங்களையுடைய முருகக்கடவுள் ஆயின என்று அவ் வுண்மையைப் பிறழ்த்திக் கூறினார். இன்னோரன்ன பிழைபாடுகள் மக்களைத் தெய்வமாகக் கருதுதலால் நேர்வனவாகும். இனிக், கடுவனிளவெயினனார் என்னும் நல்லிசைப் புலவரோ தங்காலத்து வழங்கிய வரலாற்றினைச் சிறிதுந் திரிபுபடுத்தாமல் உள்ளதை உள்ளபடியே எடுத்து உரைத்தலானும், அவருரைக்கும் அவ் வரலாற்றினால் `முருகவேள் எனப் பெயர் பெற்றோன் ஊனுடம்பு வாய்ந்தோதென்பதே பெறப்படுதலானும், நினைந்தவற்றை நினைந்தவளவே முடிக்கவல்ல இறைவன் ஊன் உடம்பு மேற்கொண்டானென்றல் அவனது இறைமைத் தன்மைக்கு இழுக்காதலோடு இறைவன் என்பான் வினைக்கீடாகப் படைக்கப் படும் ஊனுடம்பிற் பிறத்தலும் அதனை விட்டு இறத்தலும் இல்லான் என்று வற்புறுத்துரைக்கும் சைவ சித்தாந்தக் கோட்பாட்டிற்கும் அது சிறிதும் இசையாமை யானும், சூர்மாவினை அடுதற்கு வந்த அம் முருகவேள் மக்கள் யாக்கையிற் பிறந்த ஓர் அரசிளைஞனேயன்றி எல்லாம்வல்ல முருகக்கடவுள் அல்லன் என்பது திண்ணமாம் என்க. எம்மனோர்க்கு இருப்பிடமான இம் மண்ணுலகத்தினும், எமதூனக் கண்கட்குப் புலனாம் எண்ணிறந்த வான் மீனுலகங் களினும், எமது கட்புலனுக்கும் எட்டாத ஏனை எண்ணிறந்த உலகங்களினும் அளவிடப் படாத உயிர்களை ஒவ்வொரு நொடிப்பொழுதுந் தோற்றியும் அழித்தும் வரும்எல்லா ஆற்றலும் வாய்ந்த முதல்வனான முருகப் பிரான், மக்களுள் ஒருவனாகிய சூரன் என்பானை அழித்தற்கு உருவுகொண்டு படைதிரட்டியும் வருதல் வேண்டுமோ? அவன் நினைந்த வளவானே அச் சூரன் சாம்பராய்ப் போதல் திண்ணமன்றோ? ஆதலால், அவனைத் தொலைத்தற் பொருட்டு வடக்கிருந்து படைதிரட்டி வந்த முருகன் என்பான் முருகக் கடவுளை வழிபடும் ஓர் அடியவனே யன்றி அவனே அம் முருகக் கடவுள் ஆகானென்று கடைப்பிடிக்க. அற்றேற், பரிபாடல் கூறும் முருகன் பிறப்பினுக்கு வழிவிடுமாறு யாங்ஙனமெனின்; இந்திரன் எனப் பெயர் பூண்ட அரிய அரசன் ஒருவன், சிவபிரான் பெயர்பூண்ட தமிழ்மன்னன் ஆற்றல் மிக்கவனாய் இருத்தல் ஓர்ந்து, அத் தமிழ்மன்னன் கால்வழியற்றுப் போதலுக்கு ஒரு சூழ்ச்சி செய்து, அவன் றனக்குப் பிறந்த ஆண்மகவை அவனே வெட்டிச் சிதைக்குமாறு புரிந்துவிட,அத் தமிழ்மன்னனால் தனது உடம்பில் ஆறு இடங்களில் வெட்டுப்பட்டு ஒரு மலைச்சுனையில் எறிந்துவிடப்பட்ட அம்மகவு தமிழ் முனிவர்கள் அறுவராற் கண்டெடுக்கப்பட்டு, அம்முனிவரின் மனைவியர் அறுவரால் வளர்க்கப்பட்டு வளர்ந்து பெரியனாகித், தனக்குக் கேடுசூழ்ந்த இந்திரனாகிய அவ்வாரிய அரசனை வலிதொலைத்துப், பின்னர்த் தன் றந்தையினால் ஏற்றுக் கொள்ளவும் பட்டுத் தனது அரசைக் கைக்கொண்டு, அதன்பிற் றெற்குநோக்கிப் போந்து சூர்மாவினை வென்றமையே அக் கதையின் மெய்ப்பொருளா மென்க. இங்ஙனம் அல்லாக்கால், ஒவ்வோர் உடம்பிலும் ஒவ்வோர் உயிர் உடையவனாய் வளர்ந்த பிள்ளைகள் அறுவரும் ஒட்டி ஒரே உயிருடைய ஒரு பிள்ளையாய் ஆறுமுகங்களும் பன்னிரு கைகளுமுடைய முருகவேள் ஆதல் யாங்ஙனம்? ஒவ்வோர் உயிரும் எஞ்ஞான்றும் அழிவு படாதுள்ள ஒவ்வொரு தனிமுதலேயா மென்றும் ஓர் உயிர் மற்றோர் உயிராக மாறுதல் எஞ்ஞான்றும் எவ்விடத்தும் இல்லையென்றும், ஓர் உயிர் எடுக்கும் உடம்பு அது தனக்குள்ள வினைக் கீடாக வருவதாய் அது தனக்கே யுரியதாவதல்லது அது மற்றோர் உயிர்க்கு உரியதாதல் செல்லா தென்றும் வலியுறுத்திச் சொல்லுஞ் சைவசித்தாந்த உண்மையை நுணுகி யாராய வல்லார்க்கு, அறுவேறு யாக்கைகள் உடைய அறுவேறு பிள்ளைகள் ஒன்றுகூடி ஆறுமுகங்களும் பன்னிருகைகளுமுடைய ஒரு முருகவேள் ஆயினவென்னும் வரலாறு அவ்வரசனின் மிகுந்த ஆற்றலைக் குறிக்கும் ஒரு புனைந்துரைவகையே யல்லாமல் இயற்கைக்கு மாறாகும். அஃது இயற்கை யுண்மையுரை யாகாமை நன்கு விளங்கும். இம் மண்ணுலகத்தின் நில அடுக்குகளை அகழ்ந்து மக்கள் முதல்முதல் உண்டான காலத்தை நிலநூல் வல்லார் கண்டறிந்திருக்கின்றார்கள்; அக்காலம் முதல் இக்காலம் வரையில் அவர்களால் அகழ்ந் தெடுக்கப்பட்ட மக்களின் எற்புடம்புகள் எல்லாம், இஞ்ஞான்றுள்ள மக்கள் உடம்பின் அமைப்பைப்போல் ஒற்றைத் தலையும் இரட்டைக் கைகளும் உடையவனவாய் இருக்கக் காண்டுமேயல்லாமல், அவற்றுள் ஒன்றேனும் ஒன்றுக்கு மேற்பட்ட தலையும் இரண்டுக்கு மேற்பட்ட கையும் உடையதாயிருத்தலைக் கண்டோமில்லை; மேலும், உடம்புநூல் வல்லால் ஓருடம்பில் ஒன்றுக்கு மேற்பட்ட தலையும் இரண்டுக்கும் மேற்பட்ட கையும் இருத்தல் இயலாதென்பதை நன்கு விளக்கிக்காட்டியிருக்கின்றனர். ஆகவே, இயற்கையில் எஞ்ஞான்றுங் காணப்படாத ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் முருகவேளுக்குக் கூறல் அவன்றன் பேரறிவினையும் பேராற்றலினையுங் காட்டும் ஒரு புனைந்துரை வகையே யல்லாமல உண்மையன்றெனத் தெளிக. இவ்வாறு முருகக் கடவுளை வழிபட்டு அவன்றன் அருளைப்பெற்ற முருகவேள் என்னும் வடநாட்டு அரசன் ஆரிய மன்னர்க்கும் முனிவர்க்கும் பெரும் பகைவனாய்த் தென்கடற் கண்ணே அரசு புரிந்த `சூர்மா என்னும் அரக்க அரசன்மேற் படையெடுத்து வந்து அவனை வென்றமையே பண்டுதொட்டு நிகழும் உண்மை வரலாறாம். முதலில் முருகவேளுக்குப் பெருந் தீது செய்தஇந்திரன் என்னும் ஆரிய அரசன், அம் முருகன் பேரறிவும் பேராற்றலும் வாய்ந்தவனாய் இருத்தலை உணர்ந்தபின்,அவனை அடிவணங்கி அவனைத் தனக்கும் தன்னவர்க்கும் உதவியாக அமைத்துக்கொண்டமை வியப்பன்று. ஏனெனில், அறிவாற்றல் நாகரிகங்களிற் சிறந்த தமிழர்களைப் பண்டு தொட்டு ஆரியர்கள் தம் வழிப்படுத்தி வருதல் இத்தகைய கீழறுத்தல்களினாலேயாம். தமிழர்களைத் தாம் எதிர்த்து அழிக்கும் முயற்சி பயன்படாதெனக் கண்டால், உடனே அவர்க்கு அடிமைகளாய் அவர்க்குப் பணிந்தொழுகு வார்போற் காட்டி, அவருள் மிக்காரொரு பக்கத்தாரைத் தமக்கு உதவியாக்கி, அவரைக் கொண்டே அவருள் மற்றொரு பக்கத்தாரை யழித்துக் கெடுத்தல் அவ்வாரியர் இன்றுகாறுங் கைக்கொண்டு போதரும் படிற்றொழுக்க முறையாம். ஆரியர் தம்மை உயர்த்தித்தேவர் எனவும், ஏனைத் தமிழரைத் தாழத்தித் `தாசர் `தயூக்கள், `அசுரர்கள் எனவும் பேசாநிற்பர். அவர்கள் தாம் செய்துபோந்த வெறியாட்டு வேள்விகளுக்குத் தமிழ்மக்களும் தமிழ்அரசர்களும் இசைந்து வராமை கண்டே அவர்களை அங்ஙனம் வெறுப்பதும் இகழ்வதுஞ் செய்வாராயினர். தமிழ் மன்னர்களிற் சிலர் ஆரியருடைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்தமை பற்றியே, அத்தமிழ் மன்னர்களில் வேறு சிலரை அவர்க்குப் பகைவராய்த் தூண்டிவிட்டு, அவர்களுள்ளேயே ஒருவரோ டொருவர் போர்புரிந்து மடியுமாறு செய்துவந்தனர். உயிர்களிடத்து அருளிரக்க முடைய எவர்க்குத்தாம் ஆரியர் தம் உயிர்க்கொலை வேள்விகள் அருவருப்பினை விளைவியா! பண்டு தொட்டே தமிழ்மக்களுட் சிறந்தார் கொலை கடிந்தும் புலவுநீக்கியும் வாழ்பவராகலின், அவர்கள் ஆரியர் வேட்டு வந்த புலைத்தொழில் வேள்விகளை வெறுத்தல் இயல்பேயாம். இதனாலன்றோ தமிழ்நாட்டிற் குடியேறிய ஆரியப் பார்ப்பனர் வேள்வி வேட்டலை இஞ்ஞான்றும் அறவே யொழித்துத், தமிழர் கைக்கொண்ட புலாலுண்ணார் சைவநோன்பினைத் தாமுந் தழீஇ அவராற் பாராட்டப்டுவாராயினர்! இவ்வியல் பினராம் ஆரியர் வடநாட்டுத் தமிழ்வேந்தனாகிய முருக வேளைத் தம்மவர்க்குப் படைத்தலைவனாய் அமர்த்திக் கொண்டுபோந்து, தென்கடற் கண் இலங்கையில் அரசுபுரிந்த சூரனை எதிர்த்து அவனைஅவனால் மடிவித்தது அவர் தம் இயற்கைக்கு ஒத்ததேயாம் என்க. இனி, இங்ஙனஞ் சூரனை மாய்த்த முருகவேள் சைவ சமயத்தவனாய்த் தமிழர்க்குரிய சிவபிரானையே வழிபட்டுச் சைவசமயக் கோட்டிபாட்டினை எங்கும் பரப்புவனாகலின், அவன் கொண்ட வெற்றி தமிழ் மேன்மக்களால் மிகவும் பாராட்டப்பட்டுத் தமிழகம் எங்கும் வியந்து பேசப்படுவ தாயிற்று; அம் முருகவேளும் முருகக்கடவுளேயெனத் தமிழ்நாடெங்கணும் வைத்து வணங்கப்படுவானாயினன் இவ்வாறு, முருகன் சூர்மாவினைச் செற்ற வரலாறு தமிழர்க்கு ஓர் ஆக்கமாய் அவராற் பெரிதுங் கொண்டாடப் பட்டு வருதலைக் கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்கத்தில் இத்தென்னாடு புகுந்து குடியேறிய, ஆரியப் பார்ப்பனர் கண்டு, அவ் வரலாற்றினைத் தமது உயர்ச்சிக்கு இசைந்ததாம்படி திரிக்க விழைந்து, இலங்கையை ஆண்ட சூரன் என்னுந் தமிழ்மன்னனை இராவணனாகவும், அவனைப் பொருது மடித்த முருகனை இராமனாகவும் மாற்றி, அதனோடு பெரும்பாலும் ஒப்பவே இராமாயண கதையை வரவரப் பெருக்கி யெழுதலாயினர். இவ்வாறு அவ்வரலாற்றினை முதலிற் றிரித்து இராமாயண கதையை ஆக்கிய `வான்மீகி என்னும் வடமொழிப் புலவர், முருகனால் அடப்பட்ட சூரன் ஒற்றைத்தலையும் இரட்டைக் கைகளும் உடையனாகவே இருந்தமையின், அவனை இராவணப் பெயர் கொடுத்துத் தாம் மாற்றிய வழியும் அவனை ஏனை மக்களைப்போல் ஒன்றைத் தலையும் இரட்டைக் கைகளும் உடையனாகவே வைத்துக் கூறினர். அவ் வான்மீகிக்குப்பின் இராமாயண கதையைப் பெருக்கியெழுதப் புகுந்த ஆரியப் பார்ப்பனர், சூரனைக் கொன்ற முருகனிலும் இராவணனைக் கொன்ற இராமனைச் சிறந்தோன் ஆக்குதற்குக் கருதி, ஒற்றைத் தலையும் இரட்டைக் கைகளும் உடைய சூரனைக் கொல்லுதற்கு ஆறு தலையும் பன்னிரு கையுங் கொண்டு வந்தது ஆண்மையன்று; பத்துத்தலையும் இருபது கையும் உடைய இராவணனைக் கொல்லுதற்கு ஒற்றைத்தலையும் இரட்டைக்கையும் உடைய இராமனாய் வந்ததே ஆண்மையாம் என்பது போதர, ஆராய்ச்சியுணர்வில்லாத புல்லறிவினாரை மயக்கி, அவர் முருகக்கடவுள் வழிபாட்டைக் கைவிட்டு, இராமனைத் தெய்வமாகக் கைப்பற்றுதல் வேண்டி, இராவணனுக்குப் பத்துத் தலைகளும் இருபது கைகளும் உளவென்று கதைகட்டி, அதனை இராமாயணத்துள் நுழைப்பாராயினர். இவர் இங்ஙனஞ் செய்து இராமனைத் தெய்வமாக்குதல் கண்ட சைவசமயச் சான்றோர்கள், மக்களுள் ஒருவனாகிய அவனைத் தெய்வமாக்கி முழுமுதற் கடவுளாகிய சிவத்தை வணங்க வொட்டாமற் செய்யும் ஆரியரது தீச்செயலை யொழித்துச், சிவமே எல்லாம்வல்ல தென்பதனைக் காட்டக், `கயிலை மலையைப் பெயர்த்த அப் பத்துத் தலை இராவணனின் இருபது கைகளையும் சிவபிரான் தமது காற்பெருவிரல் நுனியால் அம் மலைகீழ் அடர்த்து நெரித்தார் என்னும் பிறிதொரு கதையினைப் படைத்து, அதனை அவ்விராமாயணத்தின் `உத்தரக் காண்டக்கதை ஆக்கி, அவ்வாற்றால் இராமனது சிறுமையும் சிவபிரானது பெருமையுந் தெளியவைத்தனர். அற்றேல், வான்மீகி கூறாத பத்துத் தலையும் இருபது கையும்இராவணனுக்கு உளவாகக் கதைபுனைந்தோர் அவர்க்குப் பின்வந்த பின்னையோரேயென உரைப்பிற், பழைய தமிழ்க் கலிப்பாக்களின் தொகை நூலாகிய `கலித்தொகையில் இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமையமர்ந்து உயர்மலை இருந்தனனாக ஐயிரு தலையின் அரக்கர் கோமான் தொடிபொலி தடக்கையிற் கீழ்புகுந்து அம்மலை எடுக்கல் செல்லாது உழப்பவன்போல என்று 9பத்துத்தலை யிராவணன், சிவபிரான் அமர்ந்த திருக்கைலாய மலையைப் பெயர்க்க முயன்ற கதை எடுத்துரைக்கப்பட்டமை என்னையெனின்; அக்கதை கூறும் அப்பாட்டுள்ள குறிஞ்சிச் கலியை இயற்றியவர் கபிலர் என்னும் நல்லிசைப் புலவரே யாவரென்பது, பெருங்கடுங்கோன் பாலை குறிஞ்சி கபிலன் மருத னிளநாகன் மருதம் - அருஞ்சோழன் நல்லுத்திரன் முல்லை, நல்லந்துவன் நெய்தல், கல்விவலார் கண்ட கலி. என்னும் பழைய வெண்பாவால் அறியப்படும். இக் கபிலர், `இருங்கோவேள் என்னும் சிற்றரசனொருவனுக்கு நண்பர் என்பது, பாரி என்னும் வள்ளலின் மகளிரை அவன் மணந்து கொள்ளுமாறு அவர் அவனை வேண்டியும் வருந்தியும் பாடிய பாடல்களால நன்குவிளங்கும்.10 இவ் விருங்கோவேள் என்னுங் குறுநிலமன்னன், தலையாளங் கானத்திற் பாண்டியன் நெடுஞ்செழியனொடு போர்செய்து அவனாற் கொல்லப் பட்டான். இவன் அக் காலத்திருந்த சேரசோழ பாண்டியர்கட்குப் பெரும்பகைவனாயிருந்தமையின், இவனுக்குப் பின்வந்த இவன் சுற்றத்தாரை யெல்லாம் கரிகாற்சோழன் தொலைத்தான் என்பது இருங்கோவேள் மருங்குசாய என்பதனால்11 விளங்காநிற்கும். எனவே, இருங்கோவேள் என்பான் சோழன் கரிகாற்பெருவளத் தானுக்கு முற்பட்டோனாதலும், அதனால் அவ்விருங் கோவேளைப் பாடிய கபிலரும் கரிகாற் சோழனுக்கு முன்னிருந் தோராதலும் பெறப்படும். `மணிமேகலை, `சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்திற் காவிரிப்பூம்பட்டினத்தில் அரசுபுரிந்த சோழன் `கிள்ளிவளவன் என்பான் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியி லிருந்தவனென்பதை மேலே விளக்கிக் காட்டினாம். இக்கிள்ளி வளவன், சோழன் கரிகாற் பெருவளத்தானுக்குப் பேரனாகலின், இவனுக்கு இரண்டு தலைமுறை முற்பட்ட கரிகாலன் கி.பி. முதல் நூற்றாண்டின் இடையிலாதல் இறுதியிலாதல் இருந்தானாகற் பாலன். ஆகவே, கரிகாலனுக்கும் முற்பட்ட இருங்கோவேள் காலத்தவரான கபிலர் கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்தமை தெளியப்படும். மேலும், பரணர் என்னும் நல்லிசைப் புலவர், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்த சேரன் செங்குட்டுவனையும்,12 அவன்றந்தை `குடக்கோநெடுஞ் சேரலாதனையும்,13 கரிகாற் பெருவளத்தான் றந்தை `உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியையும்14 பாடியிருத்தலால் இவர் கி.பி. முதல் நூற்றாண்டின் இடையிலிருந்து இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில், அஃதாவது சிறிதேறக் குறையத் தொண்ணூறாண்டுக்குமேல் உயிர் வாழ்ந்தாராதல் வேண்டும். இன்றும் நூறாண்டுக்குமேல் உயிர் வாழ்வார் பலரை யாம் பார்த்திருக்கின்றேம். நூறாண்டுக்கு மேல் நூற்றெண்ப தாண்டு வரையில் உயிர் வாழ்வார் பலரின் உண்மை வரலாறுகளை ஆங்கில மொழிவல்லார் ஒருவர் விரித்து விளக்கி ஒருநூல் எழுதியிருக்கின்றார். இவர்க்கு முன்னரே ஆங்கில மொழியில் நல்லிசைப் புலவராய் வயங்கிய ஷெல்லி என்பார் சைவ வுணவின் மேன்மையை இனிது விளக்கி எழுதிய தமது உரை நூலில் முதிய பார் என்னும் புலவர் நூற்று ஐம்பத்திரண்டு ஆண்டும், மேரிபாட்டன் என்னும் அம்மை நூற்றுமுப்பத் தாறு ஆண்டும், `அர்சீனிய, `ரோம்பால்ட் என்னும் இருவர் நூற்றிருபது ஆண்டும், `எபிபேனிய என்னும் முனிவர் நூற்றுப்பதினைந்து ஆண்டும், `அந்தோணி என்னும் முனிவர் நூற்றைந்து ஆண்டும், இவ்விந்திய நாட்டை அரசு புரிந்த துலுக்கவேந்தனாகிய `அவுரங்கசீப் என்பான் நூறாண்டும், இன்னும் பலர் நூறாண்டுக்கு மேலும் உயிர் வாழ்ந்த குறிப்புகளை விளக்கமாக எடுத்துக்காட்டி யிருக்கின்றார்.15 பழைய நாளிலிருந்த அருந்தமிழ்ப் புலவர்கள் சேரசோழ பாண்டிய மன்னர்களாலும், பாரி, பேகன் முதலிய வள்ளல்களாலும், ஏனைச் செல்வர்களாலும் நன்கு போற்றப்பட்டு, எல்லாச் செல்வவளனு முடையராய்க் கவலையின்றிக் கல்விப் பயிற்சியிலேயே காலங் கழித்தமையின் அவர்கள் அங்ஙனம் நீண்ட காலம் உயிர் வாழ்ந்தமை வாய்வதேயாம். இவ்வாறு நீண்டகாலம் இனிது உயிர்வாழ்ந்த பரணர் என்னும் நல்லிசைப் புலவரும், இவர்க்கு விழுமிய நண்பரான கபிலர் என்னும் நல்லிசைப் புலவரும், `வையாவிக்கோப் பெரும் பேகனையும் அவன்றன் மனைவியையும் ஒருமைப் படுத்தல் வேண்டிப் புறநானூற்றிற் சுவைதுளும்பும் பல பாட்டுக்கள் பாடியிருத்தலாற், கபிலரும் பரணரும் ஒரு காலத்தவரென்பது தெற்றெனப் புலப்படும். அங்ஙன மாயினும், வையாவிக்கோப் பெரும்பேகன் காலத்திற் கபிலர் ஆண்டில் மிக முதிர்ந் தோராயும், பரணர் ஆண்டில் இளைஞராயும் இருந்தாராதல் வேண்டும். ஏனென்றாற், கபிலர்க்கு மிகச் சிறந்த நண்பனாகிய `கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறை என்னுஞ் சேரவேந்தன் வென்றியிற் சிறந்துவிளங்கிய காலத்திற் கபிலர் உயிரோடிருந்திலரே என அவ்வரசன் அவரை நினைந்து வருந்திய வருத்தத்தைப், `பொருந்தில் இளங்கீரனார், செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் இன்றுஉள னாயின் நன்றுமன் என்றநின் ஆடுகொள் வரிசைக் கொப்ப16 என்று அவனை நோக்கிப் பாடியவாற்றால் தெளியப்படுதலின் என்க. இனி,இச் சேரவேந்தனாகிய `யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை என்பான். `செல்வக்கடுங் கோவாழியாதனுக்கு இளையமகன் ஆவன் என்பதூஉம், செல்வக்கடுங்கோவாழியா தன்மேற் `பதிற்றுப் பத்தியிலுள்ள ஏழாம்பத்தைப் பாடிய கபிலர், இவனுக்கு மக்களாம் உரிமை பெற்ற `தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறை, `யானைக் கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை என்பவரையாதல், இவர்க்குப் பின் அரசுபுரிந்த `குடக்கோ நெடுஞ்சேரலாதனை யாதல், `சேரன்செங்குட்டுவனை யாதல் மற்றச் `சோழன் கரிகாற் பெருவளத்தான், `நெடுமுடிக் கிள்ளி, யென்பவரை யாதல் பாடிற்றின்மையின், அவர் இவர்கட்கு முன்னும் மாந்தரஞ் சேரலிரும் பொறையின் இளமைக் காலத்தும் இருந்தவராவ ரென்பதூஉம் யாம் இற்றைக்கு இருபஃது யாண்டுக்கு முன் `ஞானசாகர மூன்றாம் பதுமத்தின் ஆறாம் இதழில் வெளியிட்ட `திருக்குறளா ராய்ச்சி ஆசிரியர்காலம் என்பதன்கண் நன்கெடுத்து விளக்கிக் காட்டினேம். அஞ்ஞான்று யாம் அந்நூல் எழுதிய போது, சேரன் செங்குட்டுவன் காலத்தவனான இலங்கைக் `கயவாகு மன்னன் காலம் கி.பி.113 முதல் 125 வரையிலொன்று வரலாற்று நூலாசிரியர்களாற் கொள்ளப் பட்டிருந்தது. அதனாற் செங்குட்டுவன் காலத்தைக் கீழ்வரையாக நிறுத்திக் கணக்குச் செய்துகொண்டு மேலேறிச் `செல்வக்கடுங்கோ கிறித்து பிறப்பதற்முன் 36ஆம் ஆண்டில் அரசு கட்டில் ஏற்றினான் எனவும். அவன் காலத்தவரான கபிலர் கி.மு.முதல் நூற்றாண்டின் பிற்பாதியி லிருந்தார் எனவும் நிறுவினேம். ஆனால், இஞ்ஞான்று தோன்றிய வரலாற்று நூற்புலவர் கயவாகுமன்னன் காலத்தைத் திரும்பவும் நன்காராய்ந்து பார்த்து அவன் கி.பி. 171 முதல் 193 வரையிற் செங்கோல் ஓச்சினான் எனத் துணிந்துரைத்தலின், முன் செய்த காலக்கணக்கு இப்போது செய்திருக்குங் காலக்கணக்கு 58 ஆண்டுகள் கீழ் இறங்கி விட்டது. அதனாற் செல்வக்கடுங்கோவின் அரசு கி.பி. 22. ஆம் ஆண்டிலிருந்து துவங்கியதென்று கொள்ள வேண்டி யிருத்தலின் அவன் காலத்வரான கபிலரும் கி.பி.முதல் நூற்றாண்டின் முற்பாதியிலிருந்தா ரென்பதே இனிக் கொள்ளற்பாற்று. இவ்வாறு கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பாதியிலிருந்த கபிலர், இராவணன் நொடித்தான் மலையைப் பெயர்த் தெடுக்க முயன்ற கதை கூறியது ஒரு வியப்பு அன்று. ஏனெனிற் கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முன்னரேயே அக் கதை படைத் தெழுப்பட்ட இராமாயணம் உத்தரகாண்டம் வழங்கினமை மேலே (398ஆம் பக்கத்தில்) விளக்கிக் காட்டினாமாக லினென்பது. இக் கதையும் கிறித்து பிறப்பதற்கு முற்பட்ட ஆண்டுகளில் இயற்றப்பட்ட பழந்தமிழ்ப் பாடல்களில் யாண்டுங் காணப்படாமையின் அஃது அக் காலத்தில் இத் தமிழ் நாட்டவர்க்குத் தெரியாத தொன்றென்பதூஉம் தெலுங்காணத்தில் வந்து குடியேறிய ஆரியர் கட்டிய இராம இராவண கதைக்கு எதிராக ஆங்கிருந்த பழைய சைவ நன்மக்களே சிவபிரான்றன் முழுமுதற் றன்மையை புலப்படுத்துதற் பொருட்டு அக் கதையைப் படைத்து வைத்தா ரென்பதூஉம் எமது மேற்கோளாகலிற்17 கபிலரது குறிஞ்சிக் கலியில் அக்கதை காணப்படுதல் கொண்டு எமதுரை வழுவாதலில்லை யென்று கடைப்பிடிக்க. கபிலர் வடக்கிருந்து போந்து தமிழ்நாட்டிற் குடியேறிய ஆரியப் பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவராகக் காணப்படுதலின், அவர் அக் கதையினை உணர்ந்தமை பொருத்தமேயாம். மற்றுத், தமிழ்நாட்டில் கி.பி.முதல் நூற்றாண்டின்கண் இருந்த தமிழ் நல்லிசைப் புலவர் எவரும் அக் கதையினைக் கூறாமையே ஈண்டுக் கருதற்பாற்று. இங்ஙனமாகக், கி.பி.முதல் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டவர்க்குச் சிறிது சிறிதாகத் தெரியா துவங்கிய இராம இராவண கதை பின்னர் அவரிடையே மிக்கு வழங்கலானதும், அம் முகத்தால்இராமன் திருமாலின் தெய்வப்பிறப்பாகக் கொள்ளப்பட்டு அவரோடொப்பத் தெய்வமாக வைத்து வணங்கப்படலானதும் எல்லாம் கி.பி. ஏழாம் நுற்றாண்டிற்கும் எட்டாம் நூற்றாண்டிற்கும் பின்னர் வரவரப் பெருகி நிகழ்ந்தவனவாகும். இவ்வுண்மை பழைய திருக்கோயிற் சுவர்களிற் செதுக்கப்பட்டிருக்கும் பழைய கதைக்குறிப்புகளைக் கொண்டும் நன்கு தெளியப்படும். கற்செதுக்கு உருக்களுள் மிகப் பழையவாக இஞ்ஞான்று ஆராய்ந்து தெளியப்பட்டவை, `திருக்கடன் மல்லை எனப் பழைய நூல்களிற் பெயர் கூறப்படும். `மகாபலிபுரத்தின் கண் உள்ள கற்பாறைக் கோயில்களில் அமைக்கப்பட்டிருப்பனவேயாம். இவ்வூரின்கண் உள்ள கற்பாறைகளைக் குடைந்து வியக்கத்தக்க கோயில்களையும் அக்கோயிற்சுவர்களிற் பல உருக்களையும் ஆக்குவித்தோன் கி.பி. ஏழாம் நூற்றாண்டினிடையில் நிகரற்ற வென்றி வேந்தனாய் விளங்கிய `முதலாம் நரசிம்மவர்ம பல்லவமல்லனே யாவன். இவ் வேந்தனது படைக்குத்தான் சிறுத்தொண்ட நாயனார் தலைவராயிருந்தனர்; திருஞானசம்பந்தப் பெருமானும் இவ் வேந்தன் காலத்திலேதான் திகழ்ந்தனர்; இம்மன்னர் பிரானின் தந்தையான மகேந்திரவர்ம பல்லவ அரசனே முதலிற் சமண்மதந் தழுவினவனாயிருந்து, திருநாவுக்கரசு நாயனாரைக் கல்லிற் பிணைத்துக் கடலில் வீழ்த்திப், பின்னர் அவர் அக்கல்லையே புணையாகக் கொண்டு சிவபிரான்றிருவருளாற் கரையேறினதைத் தான் நேரே கண்டு சிவபிரான் றிருவருளை வியந்து அச் சமண்மதம் விட்டுச் சைவசமயந் தழுவினோன் ஆவன். மகேந்திரவர்மன் மகாபலிபுரத்திற் றுவங்கிய திருக்கோயிற் றிருப்பணிகளையே அவன் மகன் நரசிம்மவர்மன் முற்றுவித்து, `மாமல்லன் என்னுந் தன் பெயரால் அவ்வூரை `மாமல்லபுரம் எனவும் வழங்குவித்தான்.18 இவ்வாறு இவ் வேந்தர் இருவராலும் இவர்க்குப் பின்வந்த அரசர் சிலராலும் அமைக்கப்பட்டு இன்றுகாறும் வயங்கும் இத் திருக்கோயில் களும் இவற்றின்கட் செதுக்கப்பட்டிருக்கும் உருக்களும் உலகம் எங்கணும் உள்ள கற்றார் எல்லாரும் வந்து கண்டு `இவற்றை யொப்பதொரு நுண்ணிய அழகிய உண்மையொடு பிறழாத கற்றச்சுவேலை யாண்டுங் கண்டிலேம்! என்று சொல்லிச் சொல்லி வியக்குந் தன்மையவாய் மிளிர்கின்றன. இங்ஙனங் காண்பாரெல்லாம் புதுமை! புதுமை! என்று வியக்கும் இத் திருக்கோயிற் சுவர்களிலுங் கற்பாறைகளிலுஞ் செதுக்கப்பட் டிருக்கும் உருக்களுங்கூட முற்றும் பாரத கதை நிகழ்ச்சிகளைக் காட்டுனவாயும் பிற சிவபுராணக் கதை நிகழ்ச்சிகளைக் காட்டுவனவாயும் இருக்கின்றனவே யல்லாமல், `இராம இராவண கதைநிகழ்ச்சியை ஒரு சிறிதாயினுங் காட்டு வனவாயில்லை. கண்ணனுடைய விளையாடல்களைப் பல வகையானுஞ் சுவைபெறக் காட்டும் இக் கற்றச்சு வேலையில் `இராம இராவண கதை ஓர் எட்டுணையாயினுங் காட்டப் படாமை பெரிதும்ஆராயற் பாற்றன்றோ! இக் கற்றச்சு உருக்களிலுங் கோயில்களிலுஞ் சிவபிரான் திருமால் என்னும் இருவர் தம் அருள் நிகழ்ச்சிகளும் ஒருங்குவைத்துக் காட்டப்பட் டிருப்பினும் முதன்மையான இடங்களிலுங் கருவறைகளிலுஞ் சிவலிங்க வடிவங்களும் சிவபிரான்றன் றிருவுருவங்களும் அமைக்கப்பட்டிருத்தலால், இவற்றை அமைப்பித்த காலத்திற் சிவபிரானே முழுமுதற் கடவுளாக வணங்கப்பட்டமையும், அங்ஙனமாயினுந் திருமாலும் சிவபிரானுக்கு அடுத்த நிலையில் வைத்துத் தொழப் பட்டமையுந் தெள்ளிதிற் புலனாம். இவ்வாறு இருவர் தம் அருள் நிகழ்ச்சிகளும் இனிது காட்டப்பட் டிருக்கும் இக் கற்செதுக்குகளில் `இராம இராவண கதை ஒரு தினைத் துணையுங் காட்டப்படாமையால், நரசிம்மவரும பல்லவ வேந்தன் செங்கோல் ஓச்சயி கி.பி.ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் `வான்மீகி ராமாயணமும அதிற் சொல்லப் பட்ட கதையும் இத் தமிழ்நாட்டின்கட் பரவினவல்ல வென்பது நன்கு புலப்படும். இனி, முதலாழ்வார் மூவருட் பூதத்தாழ்வார் `மகாபலி புரம் என்னுந் `திருக்கடன் மல்லையிற் பிறந்தவரென்பது கடன் மல்லைப்பூதத்தார்19 என்னும் பாயிரச் செய்யுளால் விளங்கா நிற்கும். இன்னும் இவ் வாழ்வாரே, மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே ஏவல்ல எந்தைக் கிடம்20 என்று கூறுதலின், மாமல்லன் எனப் பெயரிய நரசிம்மவரும வேந்தன் தன் பெயரால் இந்நகரத்தை ஆக்கியபின் பூதத்தாழ்வார் இருந்தமை புலனாம். எனவே, நரசிம்ம வருமனது இறுதிக் காலமாகிய கி.பி. 660க்கும் பூதத் தாழ்வாரது காலம் பிற்பட்டதாதல் தெளியப்படும். இனி, இவர் அவ்வரசற்கு எத்தனை காலம் பிற்பட்டவர் என்பதனைத் துணிதற்குங் கருவிகள் வாய்த்துள. முதலாம் நரசிம்ம வருமனுக்கு மகன்இரண்டாம் மகேந்திரவர்மன் ஆவன்; இவனுக்கு மகன் முதலாம் பரமேசுவர்மன் ஆவன்; இவனுக்கு மகன் இரண்டாம் நரசிம்ம வருமன் ஆவன்; இவ்விரண்டாம் நரசிம்ம வருமனுக்கு மகன் இரண்டாம் பரமேசுரவர்மன் ஆவான். இவ் விரண்டாம் பரமேசுவர்மனே காஞ்சி புரத்திலுள்ள `வைகுண்டப் பெருமாள் கோயிலை அமைப்பித்தோன் ஆவன்; அவனால் அமைப்பிக்கப் பட்டது பற்றியே அக் கோயில் `பரமேச்சுரவிண்ணகரம் எனப் பெயர் பெறுவ தாயிற்று.21 இம் மன்னன் கி.பி. 745 இல் இருந்தமை அவன் வெட்டுவித்த கல்வெட்டு ஒன்றினாற் புலப்படுதலின், இவன் அமைப்பித்த `விண்ணகரத்தைத் தம்முடைய செய்யுட் களிற் குறிப்பிட்ட பொய்கையாழ்வார்,22 `பேயாழ்வார்23 என்னும் இருவரும், அவரோ டொருகாலத்தினரான பூதத்தாழ்வாரும் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இடையில் இருந்தமை தேற்றமாம். முதலாழ்வார் பாடிய `திருவிண்ணகரம் கச்சியிலுள்ளதே யல்லாமற் பிறவல்லவென்பதூஉம் மேலே 464, 465 ஆம் பக்கங்களில் விளக்கிக்காட்டினாம். அற்றேல், முதலாழ்வார்கள் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் ஈற்றிலிருந்தவரென மேலே கூறிவைத்து, ஈண்டு அவர் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இடையில் இருந்தவராவரெனக் கூறுதல் என்னையெனின்; இரண்டாம் பரமேசுரவர்மன் கி.பி. 713 இல் உயிரோடிருந்தானென்பது புலனாதலின், அதற்குமுன் அவனது அரசாட்சி துவங்கிய காலம் ஏழாம் நூற்றாண்டின் ஈற்றி லிருக்கலாமாகலானும், முதலாழ்வார் மூவரும் அம் மன்னவன் காலத்தும் இருந்தாரெனக் கொள்ளுதலுங் கூடுமாகலானும் மேலே அங்ஙனம் உரைத்தாம். எங்ஙனமாயினும் முதலாழ்வார் மூவரும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்கு முன்னும், எட்டாம் நூற்றாண்டின் நடுவுக்குப் பின்னும் இந்திலரென்பதே முடிந்த பொருளா மெனக் கடைப்பிடிக்க. அடிக்குறிப்புகள் 1. வியாசபாரதம், ஆதிபருவம், சுலோகங்கள், 81. 101. 105. 2. See Prof. A.A. Macdonell’s ‘A History of Sanscrit Literature’, pp. 282 -288. 3. Ibid, p.286. 4. வான்மீகி இராமாயணம் பாலகாண்டம், 48, 49. 5. நீலஜீமூதஸங்காசோ மஹாபுஜ சிரோதர :வான்மீகி இராமாயணம். 6. Dr. John muir’s Original Sanscrit Texts, Vol. IV. pp. 441 -491. 7. The Riddle of the Ramayana, By C.V. Vaidya, M.A. LL. B. 8. The Riddle of the Ramayana. p.183. 9. குறிஞ்சிக்கலி, 2. 10. புறநானூறு, 201, 202. 11. பட்டினப்பாலை. 282. 12. பதிற்றுப்பத்து, ஐந்தாம்பத்தின் பதிகம். 13. புறநானூறு, 93. 14. அதுவே, 4. 15. ‘A Vindication of Natural Diet’ by the Poet. P.B. Shelley. 16. புறநானூறு 141 - 145. 17. `மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும், தொகுதி - 2, பக் 116-121 18. Dr. G. T. Dubreuil’s The Pallavas, p.41. 19. இரண்டாந் திருவந்தாதி முதல். 20. அதுவே, 70. 21. The Pallavas by Dr. G. T. Dubreuil. p. 46. 22. முதல் திருவந்தாதி. 77. 23. மூன்றாந் திருவந்தாதி. 62. 19. பழைய வடநூல்களில் சிவபெருமானின் முழுமுதன்மை இனி, இம் முதலாழ்வார் மூவருந் தாந் திருமான்மேற் பாடிய பாடல்களில் இரண்டு மூன்றிடங்களிற்றவிர வேறெங்கும்இராம இராவண கதையைக் குறியாமையானும், கண்ணபிரானையும், நரசிங்கன் வாமனன் முதலான ஏனை வடிவங்களையுமே மிகுத்துப் பாடுதலானும் இம்மூவர் காலத்துங்கூட இராம இராவண கதை தமிழ்நாட்டு வைணவர் குழுவிற் பரவி வழங்காமை நன்கு துணியப்படும். எனவே, இராமனைப் பெரிதுபாடி, இராமாயண கதைக் குறிப்புகளைத் தம்முடைய பாடல்களிற் பலகாலும் பலவிடத்தும் பலவாறு எடுத்து விரித்த திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் முதலிய பிறரும் அவரோ டொருங்கிருந் தோரும் எல்லாம் கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப்பின் னிருந்தோராதல் திண்ணமாம் என்க. அற்றேல், முதலாழ்வார் மூவர்க்குப்பின் எத்துணை காலங்கழித்துத் திருமங்கையாழ்வார் இருந்தனரெனின்; அதனையும் ஒரு சிறிது விளக்கிக்காட்டுதும். மேலே குறித்த இரண்டாம் பரமேசுரவர்மனுக்குப் பின் தொண்டை மண்டிலத்தில் அரசுபுரிந்தோன் `நந்திப்போத்தவர்மன் என்னும் இரண்டாம் நந்திவர்ம பல்லவமல்லனே யாவன்; இவனது 62 ஆம் ஆட்சிக்காலத்தில் `திருவல்லம் சிவபிரான் திருக்கோயிலிற் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றினால்1 இவன் அறுபத் திரண்டு ஆண்டுகள் அரசுபுரிந்தானாதல் வேண்டுமென அறிகின்றேம். இவன் கி.பி. 717 முதல் 779 வரையில் அரசு வீற்றிருந்தானென்று வரலாற்று நூலாசிரியர் உறுதிப்படுத்தி யிருக்கின்றனர்.2 வடக்கே விந்தியமலையின் தென்பாலுள்ள தக்கண நாட்டை அரசாண்ட சாளுக்கிய அரசர்கள், தமிழ்நாட்டில் தொண்டை மண்டிலத்தை அரசாண்ட பல்லவ அரசர்களோடு பகைத்து அவர்களைத் தங்கீழ்ப்படுத்தப் பலகால் முயன்றும் அது நிறைவேறிற் றில்லை. இரண்டாம் புலிகேசன் என்னும் சிறந்த சாளுக்கிய வேந்தனுங்கூட அம் முயற்சியில் வெற்றிபெறாமல், முதலாம் நரசிம்மவருமன் படைத்தலைவரான சிறுத்தொண்ட நாயனாரால் தோல்வி யுற்று மடிந்தான். ஆனால், அச் சாளுக்கியவேந்தன் வழியில் வந்தோனான இரண்டாம் விக்கிரமாதித்தனோ, கி.பி. 741 இற் காஞ்சியின்மேற் படையெடுத்துவந்து `நந்திப்போத்த வர்மன் என்னும் நந்திவர்ம பல்லவமல்லனை வென்றான்.3 இந் நந்திப் போத்தவர்மனுக்குப் பின், இவன் மகன் `தந்திவர்மன் அரசுபுரிந்த காலத்தும், வடக்கேயிருந்த `ராஷ்ட்ரகூட மன்னனான மூன்றாங்கோவிந்தன் என்பான் கி.பி. 803 இல் காஞ்சிமேற் படையெடுத்து வந்து தந்திவர்மனை வென்றான்.4 இவ்வாறு இப்பல்லவ அரசர் இருவருந் தக்கணத்திலிருந்துவந்த சாளுக்கிய இராட்டிர கூட மன்னர்களால் தோல்வியுற் றமையின், இவர்களது பல்லவ அரசு பெரிதும் நிலைகுலைந்து நின்றது; அதனால், இவர்க்கு அடங்கித் திறைசெலுத்தி வந்த தொண்டைநாட்டுக் குறுநிலமன்னர்கள் இவர்க்குத் திறை கொடா தொழிந்தனர். சிவபெருமானிடத்து மிக்க அன்பு உடையவரும், சிவபிரானுக்குத் திருக்கோயிற் றிருப்பணி செய்த வருமான இப் பல்லவ வேந்தர் இருவரும் வடக்கிருந்து வந்த மன்னர்களால் தோல்வியுற்றுத் தமக்கு அடங்கிய மன்னருந் தமக்கு அடங்காராய்நிற்கப், பல்லவ ஆட்சியானது நிலைகுலைந்து வருந்துதல் கண்டே, அவ் வேந்தர் பால் அன்புமிக்க சைவசமாயாசிரியரான `சுந்தரமூர்த்திநாயனார்: மண் ணுலகங் காவல் பூண்ட, உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும், பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே5 என்று அவர்பொருட்டு இறைவனை வேண்டிப் பாடியருளினார். இரண்டாம் நந்திவர்ம பல்லவ வேந்தன் சிவபெருமான் மாட்டு மிக்க அன்பு வைத்தவனென்பது, திருக்கச்சியிலுள்ள `முக்தீசுவரம் என்னும் சிவபிரான் கோயில் அவனால் அமைக்கப்பட் டமையாலும், அக்கோயிற் சுவரில் அவன் செதுக்குவித்திருக்குங் கல்வெட்டினாலுந் துணியப்படும்.6 இவன் மகன் தந்திவர்ம பல்லவனும் அங்ஙனமே சிவபிரான்பால் மிக்க அன்புடையோ னென்பது, திருச்சிராப்பள்ளிக் கோட்டத்திலுள்ள `ஆலம்பாக்கத்தில் அவன் எடுப்பித்த திருக்கோயிற் பெருமான் `தந்திலிங்கம் எனப் பெயர்கொண்டு விளங்குதலே சான்றாம். சுந்தரமூர்த்தி நாயனார் தாம் அருளிச்செய்த மேற்காட்டிய பாட்டில் `பல்லவற்கு என ஒருமை வாய்ப்பாட்டால் ஓதாமற் பல்லவர்க்கு எனப் பன்மை வாய்ப்பாட்டால் ஓதித் தந்தையும் மகனும் ஆம் அப் பல்லவ வேந்தர் இருவரையுங் குறிப்பிடுதலானும், மறுக்கஞ் செய்யும் என நிகழ்கால வினைச்சொற்பெய்து உரைத்தலானும் அவர், இரண்டாம் நந்திவர்மனது இறுதிக் காலம் முதல், அவன்றன் மைந்தன் தந்திவர்மனது காலத்தின் முற்பகுதி வரையில் இருந்தாரென்று கொள்ளற்பாற்று; அஃதாவ: சுந்தரமூர்த்தி நாயனாரது காலம் கி.பி. 790 முதல் 810 வரையிலாமென்று துணியலாம். இவ்வாறு இந்நாயனா ரிருந்தது ஐம்பதாண்டெனத் துணியப்படுதலாலும், இவர் `முப்பத்தொண் ணாயிரந் திருப்பதிங்கள் அளிச்செய்தா ரெனத் `திருமுறை கண்ட புராணங்கள் கூறுதலின் இத்துணைப் பெருந் தொகையின வாகிய திருப்பதிகங்களைப் பற்பல திருக்கோயில்கடோறுஞ் சென்று அருளிச் செய்தற்குக் குறைந்தன முப்பத்தைந்தாண்டு களாயினும் வேண்டுமாதலாலும் இவர் தமது பதினாறாம் ஆண்டுமுதல் இறைவன் திருவருள் பெற்றுப் பாடத் துவங்கியிருந்தாலும் இவர் ஐம்பதாண்டு வரையில் உயிர் வாழ்ந்தாராகல் வேண்டும்; அதனால், இவர் பதினெட்டாண்டு மட்டுமே உயிர் வாழ்ந்தாரெனக் கூறும் ஒரு விடுதிப்பாட்டின் கூற்றுப் பொய்க் கூற்றாதல் பெற்றாம். அதுநிற்க. இனித், திருமங்கையாழ்வார் தாம் பாடிய `அட்டபுயகரப் பதிகத்திலும் `பரமேசுரவிண்ணகரப் பதிகத்திலும் உயர்த்துக் குறிப்பிட்ட பல்லவவேந்தன் எவன் என்பது ஆராயற்பாற்று. தென்னவனை முனையிற் செருவில் திறல் வாட்டிய திண்சிலை யோன் பார்மன்னு பல்லவர்கோன் எனவும், வில்லவன் நென்மெலில் வெருவர் செருவேல் வலங்கைப்பிடித்த படைத்திறற் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே எனவும் இவர் உரைக்குமாற்றால், இவராற் குறிப்பிடப் பட்ட பல்லவவேந்தன் தன் காலத்திருந்த பண்டியனையும் சேரனையும் போரில் வென்று நிகரற்ற மன்னர் கோனாய் விளங்கினவ ரென்பது நன்குபெறப்படும். திருமங்கை யாழ்வார், முதலாழ்வார் மூவர்க்கும் பின்னிருந்தோராதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையானும், அம் முதலா;ழவார் மூவரும் கச்சியிலுள்ள `திருவிண்ணகரை ஆக்குவித்த இரண்டாம் பரமேசுவர பல்லவ வேந்தனுக்குப் பிற்பட்டோ ராதலை மேற்காட்டின மாகலானும், திருமங்கையாழ்வாராற் குறிப்பிடப்பட்டோன் அவ்விரண்டாம் பரமேசுரவர்மனுக்குப் பிற்பட்ட பல்லவவேந்தருள் ஒருவனே யாதல் வேண்டும். மேற்காட்டியபடி, இரண்டாம் பரமேசுரனுக்குப் பின் அரசுபுரிந்த இரண்டாம் நந்திப்போத்தரசனும், அவன் மகன் தந்திவர்மனும் வடக்கிருந்து வந்த சாளுக்கிய இராட்டிரகூட அரசர்களால் தோல்வியுற்று வலிகுன்றியிருந்தனராகலின், அவ்விருவரும் பாண்டிய சேர அரசர்களொடு பொருது அவர் தம்மை வென்றாரென்பது பெறப்பட மாட்டாது. ஆனால், இரண்டாம் நந்திப்போத்த வர்மனுக்குப் பேரனும், தந்திவர்மன் மகனும் ஆகிய மூன்றாம் நந்திவர்ம பல்லவனே அங்ஙனம் பாண்டிய சேர அரசர்களைப் போரில் வென்று நிகரற்ற வேந்தனாய் விளங்கினனென்பது அவனைப் பற்றிய கல்வெட்டுக்களானும், அவன்மேற் பாடப்பட்டிருக்கும் `நந்திகலம்பகத் தானும் நன்கு விளங்கா நிற்கின்றது. இவன் திருமாலினிடத்து மிக்க அன்புடைய னென்பதும், இவன் திருக்குடந்தைக்கு அருகில் உள்ள `நந்திபுரவிண்ணகரம் என்னும் திருமால் கோயிலை ஆக்கின னென்பதும் கல்வெட்டுகளிற் புலனாகின்றன. கல்வெட்டுக் களினால் அறியப்படும் முதலாம் வரகுணபாண்டியன், இந் நந்திவர்மனது தலைநகராகிய திருக்கச்சிமேற் படையெடுத்து வந்தபோது, இவன் அவனைத் தெள்ளாற்றைக் கடந்து வராதபடி தடுத்துப் போர்புரிந்துவென்று துரத்தினமையால் இவனுக்குத் தொள்ளாற் றெறிந்த நந்தி என்னுஞ் சிறப்புப்பெயரும் வழங்குவதாயிற்று. இவன் தனது தலைநகராகிய காஞ்சியில் தன் முன்னோரால் அமைக்கப் பட்ட `பரமேச்சுர விண்ணகரம் என்னுந் திருமால் திருக்கோயிலுக்குப் பல சிறப்புகளும் செய்து திருமால் திருவடிக்கண் மெய்யன்புடைய னாய் ஒழுகி வந்தமை பற்றியே, திருமங்கை யாழ்வார் தாம் இயற்றிய `பரமேச்சுவர விண்ணகரப் பதிகத்தில் இவன்றன் அன்பினையும் வெற்றித்திறங்களையும் வியந்து பாடினர். ஆயினும், திருமங்கையாழ்வார் இம் மூன்றாம் நந்திவர்மன் காலத்தவர் அல்லர்; அவனுக்கும் பிற்பட்ட காலத்தே தான் இருந்த வராவர்; யாங்ஙனமெனின், `நந்திரபுர விண்ணகரப் பதிகத்தில், நந்திபணி செய்தநகர் நந்திரபு விண்ணகரம் நண்ணுமனமே எனவும், பரமேச்சுர விண்ணகரப் பதிகத்திற், பல்லவன் மல்லைர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே எனவும், `செய்த, பணிந்த என்னும் இறந்தகால வினைச் சொற்களைப் பெய்து, அவ் வேந்தன் தமது காலத்திற்கு முன்னிருந்தோனென்பதை விளங்கவைத்தமையால் திருமங்கை யாழ்வாரது காலம், மூன்றாம் நந்திவர்மனது இறுதிக்காலமாகிய கி.பி. 854 ஆம் ஆண்டுக்கும் பிற்பட்ட தென்பது பெற்றாம். அற்றேல், `தெள்ளாற்றெறிந்த நந்திவர்மனுக்கும் அவரது காலம் எவ்வளவு பிற்பட்டதெனின், அதனையும் ஒருசிறிது காட்டுதும்: திருமங்கையாழ்வார் தாம் பாடிய `அட்டபுயகரப் பதிகத்தின்இறுதிச் செய்யுளில், மன்னவன் தொண்டையர்கோன் வணங்கும் நீண்முடி மாலை வைரமேகன் தன்வலி தன்புகழ சூழ்ந்தகச்சி அட்டபுயகரத்து ஆதிதன்னை என்று தமது காலத்து அரசுபுரிந்த `வைரமேகன் என்னும் பல்லவ அரசனைக் குறிப்பிட்டிருக்கின்றார். இச்செய்யுளிற்போந்த இவ் விரண்டடிகட்குத், தமிழறிவு நன்கு வாய்ப்பப் பெறாதார் தமக்குத் தோன்றியவாறெல்லாம் பொருளுரைத்து இழுக்கினார். இவற்றிற்கு நேர் பொருள் `அரசனும், தொண்டைய ரென்னும் பல்லவர்க்குத் தலைவனும் ஆயவன் வணங்காநின்ற நீண்ட முடியினையுடைய திருமாலை, வைரமேகன் என்னும் அவ்வரச னுடைய வலிமையும் புகழும் சூழ்ந்த காஞ்சி நகரின்கண் அட்டபுயகரம் என்னுந் திருக்கோயிலில் எழுந்தருளிய முதல்வனை என்பதேயாம்; முதலிற் பொதுவாகப் `பல்லவர்கோன் என்று சொல்லப்பட்ட அரசனே பின்னடியில் அவனுக்குரிய சிறப்புப்பெயரால் `வைரமேகன் என்று குறிப்பிக்கப் பட்டான்; இவ்வாறு அன்பின் மிகுதியால் ஒருவரை முதலிற் பொதுவாகவும் பின்னர்ச் சிறப்பாகவும் வைத்து வேறு வேறு வினைகொடுத்து ஓதுதல் தமிழ்வழக்கேயா மென்பது, ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க் கிளவி7 என்னுஞ் சூத்திரத்திற்குச் சேனாவரையர் உரைத்தவுரையான் உணர்க. பிறரும் முனிவன் வந்தான், அகத்தியன் வந்தான் என எடுத்துக்காட்டுப. எனவே, மேற்செய்யுளில் திருமங்கை யாழ்வார் தொண்டையர்கோன் வணங்கும் என்றதும், வைரமேகன் தன் வலி தன் புகழ்சூழ்ந்த என்றதும் ஓர் அரசன் மேலனவேயாம். முதலடியில் உள்ள `மாலை என்பதற்குப் `பூமாலை என்று பொருளுரைத்து இடர் பட்டாரும் உளர்; அச்சொல் இறைவனாகிய `திருமாலையே யுணர்த்திப், பின்னடியிலுள்ள `ஆதி தன்னை என்பதனோடு ஒத்து நிற்றலை யுணரவல்லார்க்கு அதற்குப் பூமாலை யென்று பொருள் கொண்டாருரை போலியுரையாதல் நன்கு விளங்கும். இனி, இச் செய்யுளிற் குறிப்பிடப்பட்ட `வைரமேகன் என்னும் பல்லவமன்னன் தமது காலத்து இருந்தமை பற்றியே திருமங்கையாழ்வார் வணங்கும் என நிகழ்கால வினைச் சொல்லால் அவனது வணக்கத்தைத் தெரித்தோதினார். இவ் வைரமேகன் என்பான் மூன்றாம் நந்திவர்மனுக்குத் தந்தையான தந்திவர்மனாயிருக்கலாம் என்று `வெங்கையர்8 என்னுங் கல்வெட்டு ஆராய்ச்சிக்காரர் முதலில் ஐயுற்றுக் கூறினரேனும், பின்னர்க் கிடைத்த கல்வெட்டுக்களைக் கொண்டு அப்பெயர் பூண்ட பல்லவமன்னன் மூன்றாம் நந்திவர்மனுக்குப் பின் இருந்தவனே யென்று அவரே கூறுதலானும், திருவொற்றியூர் `ஆதிபுரிசுரர் திருக்கோயிலிற் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றைக்கொண்டு,9 அபராஜித பல்லவேந்தன் மகன் `வைரமேகன் ஆவன் என்பது காட்டப்பட்டிருத்தலானும் அபராஜித வேந்தன் வென்றி வேந்தனாய் விளங்கிய கி.பி. 880இல்10 அவன்றன் மகன் `வைரமேகனும் திருமங்கை யாழ்வாரும் இருந்தமை நன்கு துணியப்படும் நந்திவர்மனுக்கு வைரமேகன் என்னும் பெயர் இல்லாமையின் அவனை அவ்வாறு முதலிற் கொண்டது வழுவெனத் தள்ளப்படலாயிற்று. ஆகவே, திருமங்கையாழ்வார் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தவ ரென யாம் மேலே யுரைத்தது நிலைபெறல் காண்க. இனி, ஆயிரங் கைகளுடைய வாணன் என்னும் அசுரனொடு பொருதுஅவனைக் கண்ணன் அழித்த கதையைத், திருமங்கையாழ்வார் திருமாலுக்கு ஒரு பெருஞ்சிறப்பாக எமுத்துரைக்கின்றா ராகலின் அஃது ஒரு சிறிது ஆராற்பாற்று. வாணன், என்பான் தன் மகள் `உழையின் பொருட்டுச் சிறைவைத்த `அநிருத்தன் கண்ணபிரானுக்குப் பேரகனாகலின், அவனை விடுவித்தற் பொருட்டுக் கண்ணன் வாணனது `சோ வென்னும் நகர்மேற் படையெடுத்துச்சென்று அவனோடு பொருதமை `சிலப்பதிகாரம்11 `மணிமேகலை12 முதலான பழைய தமிழ்க் காப்பியங்களிற் சொல்லப்பட்டிருக்கின்றது; அக்கதை உண்மையாயிருக்கலாம். ஆனால் அவ் வாணனுக்கு ஆயிரந்தோள்கள் உளவாகப் பின்னுள்ளோர் கட்டி விட்டகதை அப்பழைய நூல்களுள் யாண்டுங் காணப் படாமையின், அத வைணவர்கள் புதிதாகப் புனைந்து பாரதத்தினுட் பின்னர் நுழைத்த பொய்யுரை யேயாம். உலக நன்மையின் பொருட்டாகவாதல் தன்னடியவர் நன்மையின் பொருட்டாகவாதல் ஒருவர் ஓர் அரிய செயலைச் செய்தனராயின் அதனை உயர்த்துப் புகழ்தல் ஒக்கும். மற்றுக் கண்ணனோ தன் பேரன் பொருட்டாக வாணனை எதிர்த்தனன்; அது திருமாலுக்குச் சிறப்பாதலும், அதனைப் புகழ்ந்து பேசுதலும் யாங்ஙனம் பொருந்தும்? அஃதெவ் வாறாயினும் ஆகுக. இனி, அங்ஙனங் கண்ணன் அவ் வாணன்மேற் படையெடுத்துச் சென்றபோது, அவ் வாணனது நகரைக் காத்துநின்ற சிவபிரானும், அவர் தம் மகன் முருகவேளும் கண்ணனோடு எதிர்த்துப் போர்புரிந்து அவன்முன் நிற்கலாற்றாது தோற்றோடினர் என்னும் ஒரு பெரும் புளுகுரையைப் புதிது படைத்து அதனை வைணவர்கள் அப் பாரதக் கதையினுள் நுழைத்திருக் கின்றனர். இப் பெரும் புளுகு, வைணவ மதம் சைவத்தின் வேறாய்ப் பிரிந்து தனியே கிளர்ச்சிபெற்ற திருமங்கையாழ் வாரது காலத்தேதான் படைக்கப்பட்டுப் பாரதக் கதையினுள் நுழைக்கப்பட்டதாதல் வேண்டும். ஏனென்றாற், கண்ணன் வாணனொடு புரிந்த போரிற் சிவபிரான் வாணனுக்குத் துணையாய் வந்தெதிர்த்தாரென்பது `சிலப்பதிகாரம்முதலிய பழைய நூல்களுள் யாண்டுஞ் சொல்லப்படவில்லை. வைணவ சமயத்திற்கு முதலாழ்வார் களான மூவருட் `பேயாழ்வாருங் கூட. நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள் ஒன்றியஈ ரைஞ்நூ றுடன்துணிய - வென்றிலங்கும் ஆர்படுவான் நேமி அரவணையான் (80) எனவும், மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன் மகனாம் அவன்மகன்றன் காதல் - மகனைச் சிறைசெய்த வாணன்றோள் செற்றான் (12) எனவும் அருளிச் செய்திருக்கின்றனரே யல்லாமல், அப்போரின்கட் சிவபிரான் வந்தெதிர்த்துத் தோற்றோடினர் என ஓர் அணுத் துணையாயினும் மொழிந்தனர் அல்லர். வாணன் போரிற் சிவபிரானது தொடர்பு முதலாழ்வார் பாடல்களினும் ஏனைப் பழைய நூல்களினும் ஏதுமே காணப்படாதாகத், திருமங்கையாழ்வாரோ, வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக்கணான் வெள்கியோட விறல்வாணன் வியன்தோள் வனத்தைத் துணித் துகந்தான் (7,6) என்றாற்போலப் பலவிடங்களில் அதனைத் தொடுத்துச் சொல்லிச் சிவபிரானை இகழ்கின்றார். ஆயினும்,இவர், திருமழிசை யாழ்வாரைப்போல் வரை கடந்து சிவத்தை இகழ்ந்து பேசிற்றிலர். வாணன் போரிற் சிவபிரான்த் தொடர்பு படுத்தித் திருமழிசையாழ்வார் இகழ்ந்துரைப்பனவற்றிற் சில காட்டுதும்: மோடியோடி லச்சையாய சாபம்எய்தி முக்கணான் கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்து ஓடவாணன் ஆயிரங் கரம்கழித்த ஆதிமால். இண்டவாணன் ஈரைஞ்ஞாறு தோள்களைத் துணித்தநாள் முண்டநீறன் மக்கள்வெப்பு மோடியங்கி யோடிட. (திருச்சதக விருத்தம், 53, 71.) அவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு எவரும் எதிரில்லை கண்டீர் - உவரிக் கடல்நஞ்சம் உண்டான் கடனென்று வாணற்கு உடனின்று தோற்றான் ஒருங்கு. (நான்முகன் திருவந்தாதி, 56) இவையேயன்றி இவர் சிவபிரானை இகழ்ந்து பாடியவை இன்னும் பல. மேலும், இவர் சமணர் புத்தர்களோடு சைவரையும் உடன்சேர்த்து, அறியார் சமணர் அயர்த்தார் பவுத்ர் சிறியார் சிவப்பட்டார் என மிகவும் பழித்துப் பேசுதலின் இவர் சைவ சமயத்தவரைப் பெரிதும் பகைத்தவரென்பது புலனாம். இப்பெற்றியினரான இத்திருமழிசை யாழ்வார் சைவசமய ஆசிரியன்மார்க்காலத் திருந்தனராயின் அவர்க்கும் இவர்க்கும் வழக்கு நேராதிராது. மற்று, அவர்க்கும் இவர்க்கும் வழக்கு நேர்ந்தமைக்கு இவர் தம் பாடல்களிலாதல் தேவாரப் பாடல்களிலாதல் ஏதொரு குறிப்புங் காணப்படாமை யானும், தேவாரப் பதிகங்கள் ஒவ்வொன்றிலும்திருமால் சிவபிரான் திருவடியைத் தேடியறியாக் குறைபாடு சொல்லப்படுதலின் தேவார காலத்தில் வைணவ மதம்கிளர்ந்து நில்லாமை யறியப்படுதலானும், பௌத்த சமணர்களோடு வழக்காடி அம் மதங்களைத் தொலைத்தவர்கள் சைவ ஆசிரியரென்பதற்கே சான்றுகள் காணப்படு தலல்லாமல், வைணவ ஆழ்வார்கள் அவர்களோடு அங்ஙனம் வழக்கிட்டமைக்குத் தினைத்தனைக் குறிப்பும் யாண்டுங் காணப்படாமையானும், பௌத்த சமண மதங்களொடுங்கிச் சைவசமயம் பெரிதுங் கிளர்ந்து ஓங்கிப் பொலிந்த காலத்தில், அதனைச் சார்ந்து வைணவ மதம் மெல்ல மெல்லக் கிளர அப்போது முதலாழ்வார்களும், அவர்க்குப்பின் அது பின்னுங் கிளர்ந்து தனிநின்ற காலத்தே திருமங்கை யாழ்வார், குலசேகரர், தொண்டரடிப்பொடி முதலியோரும், அதற்கும்பின் அது சைவத்திற்கு முற்றும் மாறாய் விலகி அதனைப் பகைத்த காலத்தே `திருமழிசை, `சடகோபர் என்பாரும் இருந்தமை தேற்றமாம். மேலும், திருமழிசை யாழ்வார் தம் பாடல்களிற் காணப்படும். `பற்பநாபன் `லச்சை , `கரன் , ` முரன், `அனந்தசயனன், `புண்டரீகபாத புண்ணிய கீர்த்தி, `ஆகுலம், `தேநுகன், `பத்தியானபாசநம், `பவுண்டிரன், `மாலிமான், `கமாலி, `முகுந்தன், `அச்சுதனனந்த கீர்த்தி, `சுவேதன், `விசாதி, `காகுத்தன். , `மதுசூதன், `சிரீதரன், `சீரணன், `குணபரன் முதலான வடசொற்கள் சொற் றொடர்களும், கீழோர் நமக்குள் வழங்கும் `வாலாட்டுதல் என்னும் தமிழ் ஏச்சு உரையும், முதலாழ்வார் பாடல் களினாதல், அவர்க்கு முற்பட்டோர் பாடல்களினாதல் காணப்படாமையானும், இன்னோரன்ன வெல்லாம் பத்தாம் நூற்றாண்டு முதலிருந்த ஏனையாழ்வார்களின் பாட்டுகளின் மட்டுமே காணப்படு தலானும் திருமழிசை யாழ்வார் கி.பி. பத்தாம் நூற்றாண் டின்கண் இருந்தா ரென்பதே தேற்றமாம் என்க. அற்றேல், மேற்காட்டிய வடசொற்களிற் சில `திவாகரம் முதலான பழைய நிகண்டு நூல்களிற் காணப்படுதலின், அவை பத்தாம் நூற்றாண்டிற் புதிது புகுந்தவையென்றல் யாங்ஙனமெனின்; `திவாகரம் முதலிய நிகண்டு நூலாசிரியர் தமக்கு முன்னும் தங்காலத்தும் வழங்கிய தமிழ்ச்சொற்கள் குறியீடுகள் முதலியவற்றைத் தொகுத்து நூல் எழுதுகின்ற காலத்து, வடமொழியிலுள்ள நிகண்டு நூல்களையும் பார்த்து அவற்றின்கண் உள்ள சொற்கள் குறியீடுகளையும் உடன் எடுத்துச் சேர்த்து அவற்றை ஆக்கினாராகலின், நிகண்டு நூல்களிற் காணப்படும் வடசொற்கள் குறியீடுளெல்லாம் பழைய தமிழ் நூல்களில் வழங்கின அல்லவென்க. நிகண்டு நூல்கள் தமிழ்ச்சொல் வழக்கிற்கே மேற்கோளாகு மல்லாமல், வடசொல் வழக்கிற்கு மேற்கோளாகா வென்று உணர்ந்துகொள்க. ஒரு வடசொல் தமிழின்கட் புகுந்து வழங்கின் காலத்தைத் தெளிதற்கு நிகண்டுகள் அல்லாத ஏனைத்தமிழ் நூல்களே ஆராயற்பாலனவென்க. இவ்வாறு வைணவமதம் சைவ சமயத்துக்குப்பெரிதும் மாறாய் நின்று சிவபிரானை இகழ்ந்து பேசும் அளவின் நில்லாது, சிவபிரானடியவர்கள் அருளிச்செய்த அருந்தமிழ்ப் பாக்கள் நிறைந்து சிவவுருவாய்த் திகழும் செந்தமிழ் மொழியினையும் பாழாக்குதற்கு மடிகட்டி நின்று வடசொற்கள் சொற் றொடர்கள் கதைகள் முதலியவற்றை ஒரு வரைதுறையின்றித் தமிழின்கட் புகுத்தற் தொடங்கிய காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு துவங்கியேயாம். வைணவப் புலவர்களால் இங்ஙனந் தமிழ்மொழி பாழாக்கப் பட்டு வருகின்றமைக்கு, ஆழ்வார்களின் பாடல்களுக்கு உரையெழுதிய புலவர்கள் அவ் வுரையில் வரைதுறையின்றி வடசொற்றொடர்களை இணைத்து அழகில்லா அவ் வுரை நடைக்கு `மணிப்ரவாளம் என ஒரு பெரும்பெயர் சூட்டி விட்டமையும், இன்றுகாறும் வைணவப் புலவர்களா யிருப்போர் தமிழில் வடமொழிக் கலப்பு மிக வைத்து எழுதுதலுமே சான்றாகும். இன்னுஞ் சைவசமயம் ஒன்றுமே செந்தமிழ் மொழிக்கும் அது வழங்கும் மக்கட்கும் பேருரிமையாம் என்பதும், அது நன்கு கண்டே வடக்கிருந்து வந்த பௌத்தர், சமணர், வைணவர் முதலான பிறமதத்தவர் தத்தங் காலங்களில் ஏராளமான வடசொற்களைப் புகுத்திய தமிழில் தத்தஞ் சமயநூல்களை எழுதிச் சைவசமயத்தைக் கீழறுத்து வரலாயினரென்பதும், பிற்காலத்துச் சைவர்களும் அவர் வழிப்பட்டு இடையிடையே வடசொற்களையும் வடமொழி வழக்குகளையுந் தாமெழுதிய தமிழ்நூல்களிற் சிறுபான்மை தழுவி வரைந்தனராயினும் ஏனைப் பௌத்தர் சமணர் வைணவர் முதலான அவரைப்போல் அதனை அத்துணைக் கெடாமல் அதனை இன்றுகாறும் அழகு பெறவே காத்து வழங்கி வருகின்றன ரென்பதற்குச் `சிவஞானமுனிவர், `இராமலிங்க சுவாமிகள், `சபாபதிநாவலர் `ஆறுமுகநாவலர் முதலான செந்தமிழ் வாணரின் செய்யுளுரை நூல்களே சான்றாமென்பதும் மறவாமற் கருத்திற் பதிக்கற்பாலன. இவ் வடமொழி தென்மொழிக் கலப்பினை ஆராய்ந்த மட்டில் நடுநிலை திறம்பாத சீநிவாச ஐயங்காரும், தமிழ்ச்செய்யுளில் சைவர்கள் தமக்கு உரிய அருள் நூல்கள், வைணவர்கட்கு உரியவற்றினும் ஏறக்குறைய மும்மடங்கு மிகவுள. சம்பந்தருடைய பதிகங்கள் மட்டுமே, பன்னீராழ்வார்களும் ஒருங்கு சேர்ந்து செய்த பாடல்களின் அளவு உள்ளன; இவையெல்லாம், தென்னாட்டின்கண் உள்ள தமிழர்க்குட் சைவசமயமே மிக்கு வழங்கினமையே மெய்ப்படுத்தா நிற்கும்15 என்றும், தேவாரப் பதிகங்கள் தமிழ்ச் சைவர்களால் தொகுக்கப்பட்ட பெருந் தொகை நூலாயிருந்தும், தமிழ் நாட்டின் கண் உள்ள மார்த்தப் பார்ப்பனரால் அவை அவ்வளவு நன்குமதிக்கப் படுவதில்லை. சைவக்கொள்கை யானது மிருதிகளிற் சொல்லப்பட்ட சடங்குகளை மிகவும் பொருட்படுத்தவில்லை சிவபிரானிடத்துத் தனியன்பு வைத்து ஒழுகுதலையே தனக்கு ஓர் அடிப்படை யாய்க் கொண்டு, அது சாதிவேற்றுமையின்றி எல்லா இனத்தவரையும் தன்னகத்தே தழுவிக் கொண்டது. சைவக் கோட்பாட்டின் இப் பொது நிலையானது சாதிப்பற்று வாய்ந்த பார்ப்பனருக்குப் பிடியாமையால் இஃது அவர்க்குள் மிக்கு வழங்கிற்றிலது. பெரிது ஒத்த இயற்கையவான இவ் விருவகைத் தமிழ்நூல்கட்கு உள்ள மதிப்புவேற்றுமையால், சிவபிரானையே வழிபடுவாரான தமிழர் பெரும்பாலார் தமக்குள் வைணவமதத்தைப் பரப்புதற்கு முன்னிருந்த வைணவ ஆசிரியர் மிகவுங் கவலையெடுத்தனர்14 என்றும், இவ்வுண்மையை மறையாமல் நன்கெடுத்துக் காட்டினர். இவ்வாற்றால், `பௌத்தம், `சமணம், `மாயாவாதம், `வைணவம் முதலிய மதங்கள் தமிழ்நாட்டவர்க்கப் புறம்பாதலும், அதுபற்றியே அவை பொதுநூலாகிய `சூடாமணிநிகண்டுள்ளும் `புறச்சமயம் என வைத்து ஓதப்படுதலுங்15 கண்டுகொள்க. இங்ஙனமாகத் தமிழ்மொழியில் வைணவர் வட சொற்களைப் பெரிது புகுத்தவும், சைவசமயத்தையும் சிவபிரானையும் பெரிது இகழவும் துவங்கியகாலம், தமிழ்ச் சங்கப் புலவர்களின் இறுதிக்கால வெல்லையாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்றாதல், சைவ சமயாசிரியர் தோன்றிப் பௌத்த சமணமதங்களின் குறும்பை யடக்கித் திகழ்ந்த கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டின் துவக்கம் வரையிற் சென்ற காலத்தின் இடைப்பட்டதென்றாதல் கொள்ளுதற்கு ஏதொரு சான்றும் இல்லாமையின், அக்காலம் சைவ சமயாசிரியர் நால்வரிற் பின்னிருந்தோரான சுந்தரர்மூர்த்தி நாயனார்க்கும் பிற்பட்ட கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் ஈறு அல்லது பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமுதல் நிகழலாயிற்றென்பதே தேற்றமாம். ஆகவே, கண்ணன் வாணனொடு புரிந்த போரிற் சிவபிரானும் முருகவேளும் வந்தெதிர்த்துத் தோற்றோடினர் என்னும் பெரும்புளுகுரை திருமங்கையாழ்வாரது காலம்முதற் படைக்கப்பட்டுப் பாரதத்தின் இடையே செருகப்பட்டதாதல் தெற்றென விளங்காநிற்கும். அற்றேல், அக் கதை பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ்நூல்களிற் காணப்படாமையின் அஃது அந் நூற்றாண்டிற்குமுன் தென்றமிழ்நாட்டின்கண் வழங்கிற்றிலது என்பது மட்டுந்தான் பெறப்படுமே யல்லாமல், அது வடநாட்டினும் பழைய வடநூல்களினும் வழங்கிய தில்லை யென்றல் பெறப்படாதாலெனின்; தமிழ்நாட்டினும் பழைய தமிழ்நூல்களினும் மட்டுமேயன்றி, வடநாட்டினும் பழைய வடநூல்களினுங்கூடச் சிவபிரானை இகழ்ந்துரைக்கும் இகழ்ச்சியுரை ஒருசிறிதுங் காணப்படாதென்பதூஉம், அவற்றுள் எங்குஞ் சிவபிரானது முழுமுதற்றன்மையும் அவனே பிறப்பு இறப்பில்லாத் தனித்தலைமைப் பெருங் கடவுளாதலும் வலியுறுத்துரைக்கப்பட் டிருக்கின்றன வென்பதூஉம், விஷ்ணு முதலிய ஏனைத்தேவர்களெல்லாம் பிறப்பு இறப்புக்கள் உடையராகலின் அவர் எல்லாம் முழுமுதற் கடவுளாகார் என அந் நூல்களே நன்கெடுத்துக் காட்டுகின்றனவென்பதூஉம் ஈண்டு ஒருசிறிது விளக்குதும். வடமொழியிற் பழைய நூல்களென்று அம் மொழி நூல்களை நன்காராய்ந்து உணர்ந்த மாப்பெரும் புலவோர் கொண்டவை பின்வருவனவேயாகும். புராணங்களுள் மிகப் பழைமையானவை `மற்சபுராணம், `வாயுபுராணம், என்பவைகளே யாம்; இவைகள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே இருந்தனவென்பதற்குத் தக்கசான்றுகள் உள.16 சிவபிரான்றன் முழுமுதற் றன்மைகளையே இவையிரண்டும் விரித்துரைக்கின்றன; மற்சபுராணத்திற் சிவபிரான் முப்புரங்களையுங் காமவேளையும் நெற்றிக் கண்ணால் எரித்தமையும், கார்த்திகேயன் பிறப்பும், தாரகாசுரனை அழித்தமையும் பிறவுமாகிய வரலாறுகள் சொல்லப் படுகின்றன. வாயுபுராணத்திற் றக்கன்வேள்வி அழிப்புண்டமையும், யோகஞ் செய்தலால் வருஞ் சிறந்த பயனும், யோகிகள் சிவபிரான் திருவருட்பேற்றினை யடைதலும், சிவபுரத்தின் மாட்சிகளும் விரித்துரைக்கப் படுகின்றன. இவற்றிற்குப்பின் இவற்றை யடுத்துத் தோன்றிய `அக்நிபுராணம், `இலிங்க புராணம், `கந்தபுராணம், `வாமநபுராணம், `கூர்மபுராணம், `தேவிபாகவதம், `பிரமாண்டபுராணம், `மார்க்கண்டே புராணம், `பவிஷ் யோத்தர புராணம் முதலியனவும் சிவபிரான்றன் முழுமுதற் றன்மைகளையும் உமைப்பிராட்டியின் மாட்சிகளையுமே எடுத்துப் புகலுகின்றன. இவையல்லாத `விஷ்ணுபுராணம் பிரமபுராணம் பத்ம புராணம் `விஷ்ணுபாகவதம், `நாரதபுராணம், `பிரமவைவர்த்தபுராணம் `வராகபுராணம், `கருடபுராணம், முதலியனவெல்லாம் கி.பி. பதினோராம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இயற்றப்பட்டன வாகும். வைணவ புராணங்களில் முற்பட்டதாகிய `விஷ்ணு புராணமே கி.பி. 1045 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டதாகும் என்று அதனை நன்கு ஆய்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆங்கில ஆசிரியர் உவில்சன் என்பவர் இனிது விளக்கிக்காட்டி யிருக்கின்றாராகலின்,17 ஏனை வைணவ புராணங்களெல்லாம் வைணவம் சைவசமயத்திற்கு முற்றும் மாறாய்த் தோன்றி அதனைப் பழிக்கத் துவங்கிய பின் வைணவப் புலவோராற் புதியவாய்ப் புனைந்து கட்டப்பட்டனவேயாதல் தெள்ளிதிற் புலனாம். மேற்காட்டிய வைணவபுராணங்களுட் `பத்ம புராணம் இற்றைக்கு முந்நூறாண்டுகளுக்கு முன்னும், `வைணவ பாகவதம் தேவகிரி அரசன் மகாதேவற்கும் அவற்குப்பின் வந்த இராமதேவற்கும் அமைச்சனான ஹேமாத்திரியின் அவை யிலிருந்த போபதேவரால் அறுநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னும், `நாரதபுராணம் `இருநூறாண்டு களுக்கு முன்னும், பிரமவைவர்த்தபுராணம் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னும் வராக புராணம் அறுநூறாண்டுகளுக்கு முன்னும் `கருட புராணம் தொளாயிர ஆண்டுகளுக்கு முன்னும் இயற்றப் பட்டனவாகத் தெரிகின்றன. திருமங்கையாழ்வார் இருந்த கி.பி. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே இப் புராணங்கள் புனைந்துரைக்கப்பட்டன. பழைய பதினெண் புராணங்களிற் சேர்ந்த சிலவற்றின் பெயர்களையே வைத்து இப் புராணங்களை வைணவர்கள் புனைந்து கட்டிவிட்டமையால், ஆராய்ந்து பார்க்கும் அறிவுமதுகை யில்லாதார் இவ் வைணவ புராணங்களைப் பழைய பதினெண் புரணங்களிற் சேர்ந்தனவாகப் பிறழக்கொண்டு மயங்கிப்பெரிதும் இடர்ப்படுவர். உண்மையான் நோக்குவாரெல்லாம் இவை கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் பழைமையைப் பலவாறு திரித்துப் புதுப்பொய் பல புகுத்திச் செய்யப்பட்டன வாதலை நன்கு உணராநிற்பர்.18 இவ் வைணவ புராணங்களுக்கு முற்பட்டனவாக மேலெடுத்துக் காட்டிய மற்சம்,வாயு, அங்கி, இலிங்கம், காந்தம், வாமநம், கூர்மம், தேவிபாகவதம், பிரமாண்டம், மார்க்கண்டேயம், பவிடியோத்தரம் முதலியனவெல்லாம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையில் ஆக்கப்பட்ட பழைய காலத்துப் புராணங்களாய்ச் சிவபிரான் அருட்டிறங்களையும்அம்மையின் அருட்செயல் களையும் எடுத்துரைத்து அவரே முழுமுதற் கடவுளாதலை வலியுறுத்துகின்றன. இவை தம்முள் விஷ்ணுவை முதற் கடவுளாக உயர்த்திச் சிவத்தை இழிக்கும் பகுதி ஓர் எட்டுணையுங் காணப்படமாட்டாது. அதனாற், சைவசமயா சிரியர் காலத்தும், அவர்க்கு முன்னே கி.பி. முதல் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தும் சிவபிரானும் அம்மையுமே எல்லாம் வல்ல முழுமுதற்கடவுளாக வணங்கப்பட்டமை தெற்றென விளங்கா நிற்கும். இனிப்புராணங்களுக்கு முற்பட்ட பழைமையுடையது `வான்மீகி இராமாயணம் ஆகும். இந் நூலின் பழைய பகுதிகளில் இராமன் திருமாலின் பிறப்பாகக் கொள்ளப்பட வில்லை யென்பதூஉம், அவன் ஆண்மையிற் சிறந்த ஓர் அரசனாகவே வைத்து உரைக்கப்பட்டன னென்பதூஉம் மேலே விளக்கிக் காட்டினாம். ஆனால் இவ் விராமாயணத்திலேயே பல இடங்களிலும் தேவர்கள் சிவபிரானையும் உமைப் பிராட்டியையும் வழிபட்டுப் பேறு பெற்ற வரலாறுகள் பல சொல்லப்படுகின்றன. இதன் `பாலகாண்டம், 37ஆம் இயலில், தேவர்கள் அனைவரும் சென்று சிவபிரானையும் அம்மையையும் வழிபட்டுக் கார்த்திகேயனை (முருகவேளை)ப் பெற்று அவனைத் தன் படைத் தலைவனாக அமைத்துக் கொண்டமை நுவலப்பட்டிருக்கின்றது. அதன் 43ஆம் இயலில், பகீரதன் வானுலகத்திலிருந்த கங்கையை மண்ணுலகத்திற்குக் கொணரும் பொருட்டு நான்முகனை வேண்டிப் பெருந்தவம் புரிந்த காலையில், அக்கடவுள் அவன் முற்றோன்றிக் கங்கையின் ஆற்றலைத் தாங்கி அதனை நிலத்து உய்க்கவல்லான் சிவபிரான் ஒருவனே யாதலால் அப்பெருமானை நோக்கி அதுவேண்டித் தவம்புரியக் கடவாய் என ஏவி மறைந்தமையும், 44 ஆம் இயலில் அங்ஙனமே அவன் சிவபிரானை நோக்கிக் இரங்கி அவன் வேண்டியபடியே கங்கையைத் தனது சடைக்கட் டாங்கி நிலத்து உய்த்தமையும் நுவலப் பட்டிருக்கின்றன. இஃது இங்ஙனமாகவும், பிற்காலத்தில் வந்த வைணவப் புலவர்கள் சிவபிரானை இழித்தற்பொருட் விஷ்ணுவின் அடிகளிலிருந்து விழுந்த கங்கையைச் சிவபிரான் சடையிற் றாங்கினார் என இராமாயணத்திற் காணப்படாத ஒரு புளுகுரையைப் புதிது படைத்துத் தாம் புனைந்த புராணங்களில் நுழைப்பாராயினர். விஷ்ணுவே தம் அடிகளிற் கங்கையைத் தாங்கிவிட வல்லுநராயின், நான்முகக் கடவுள் அவரை நோக்கியே தவம்புரியுமாறு பகீரதனை ஏவியிருக்கலாமன்றோ? மற்று நான்முகன் அது தாங்குதற்குவல்லார் சிவபிரானே என மொழிந்ததும், அம்மொழிப்படியே பகீரதன் சிவபிரானை நோக்கித் தவம்புரிந்து தன்குறை முடித்ததும் பண்டுதொட்டு உலகம் அறிந்த உண்மைகளாகலின், இவற்றைத் தம் புளுகுரையால் மறைக்க முயலும் பிற்காலத்து வைணவர் தம் புல்லிய முயற்சி சிறிதும் நிறைவேறாது.ஆகவே, திருமழிசை யாழ்வார், குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்பெய்து மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் - கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு (நான்முகன் றிருவந்தாதி, 9) எனப் புகன்ற இழிப்புரை பொய்யுரையாதலோடு, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை இகழ்ந்த பெருந் தீவினைப் படுகுழியிலும் அவ் வாழ்வாரை வீழ்த்துதல் காண்க. அஃதொக்கும், அவ் வாழ்வார் விஷ்ணு பாதத்தி லிருந்து கங்கை கீழ் இழிந்தாள் எனக் கதைகட்டிச் சொல்லுதற்குத்தான் யாங்ஙனம் இடம்பெற்றார் எனின்; இருக்கு வேதகாலத்தில் `விஷ்ணு என்னுஞ்சொல் பகலவனுக்கே ஒரு பெயராக வழங்கிற்று;19 பகலவன் செல்லும்வழி வான்வெளியே யாகலின், அவ் வான்வெளி `விஷ்ணுபாதம் எனப் பெயர்பெறுவதாயிற்று ; `பதம் `பாதம் என்னும் வடசொற்கள் `அடி அல்லது `அடிச்சுவடு தோய்ந்த இடம் எனப் பொருள்தரும். நிலத்தின்கண் உள்ள நீர் ஆவியாக மாறி மேல் எழுந்து வானத்தின்கண் வைகுதலாற் கங்கை வானுலகத்தின்கண் உளள் என ஆன்றோர் உருவகப்படுத்திக் கூறினர். வான்வெளி `விஷ்ணுபாதம் எனவும், வானத்தினின்று மழையாக இறங்கும் நீர் கங்கை எனவும்,பெயர் பெற்றமையால், இயற்கையில் நிகழும் இந்நிகழ்ச்சியைக் கொண்டு `விஷ்ணுவின் அடியிலிருந்து கங்கை கீழ் இழிந்தாள் எனக் கதைகட்டி அம்முகத்தால் அக் கங்கை நீரைச் சடையில் ஏற்ற சிவபிரானை அவ்வாழ்வார் பழித் துரைத்து மகிழ்ந்தார். இங்ஙனமே பகலவன் காலைப்பொழுதில் வான்வெளியின் ஒருகூற்றையும், நண்பகற்பொழுதில் அதன் நடுக்கூற்றையும், மாலைப்பொழுதில் அதன் மற்றொரு கூற்றையுங் கடந்து செல்லுதலாகிய இயற்கை நிகழ்ச்சியையே `விஷ்ணு மூவடியால் உலகினை அளந்ததாக உருவகப்படுத்தி முன்னோர் கூறினர். இவ்விஷ்ணு வென்னுஞ்சொல் பகலவனை உணர்த்துதல் அறியாத வைணவர்,அவனை ஒரு தனித்தெய்வமாகக் கொண்டு, அவன் மாவலிபாற் குறள்வடிவிற் சென்று மூவடிமண் இரந்து மூவுலகினையும் அளந்தான் என மற்றொரு கதையுங் கட்டி விட்டனர். இவ்வாறே ஆராய்ச்சியறிவு வாயாத வைணவரும் சைவருங் கட்டிவிட்ட கதைகள் அளப்பில; என்றாலும், இத்தகைய கதைகளை எல்லையின்றிப் படைத்து முழுமுதற் கடவுளை வழிபடவொட்டாமல் நம் போன்ற மக்களையே தெய்வமாக வழிபடுமாறு வைணவர்கள் செய்தாற்போலச், சைவர்கள் செய்திடாமை நமதுள்ளத்திற்கு ஓர் ஆறுதலைத் தருகின்றது. சைவர்கள் எத்தனை கதைகளைப் படைத்தனராயினும், பிறப்பு இறப்பு இல்லா ஒரு முழுமுதற் பொருளாகிய சிவத்தை வழிபடுதலினின்றும் அவர் சிறிதும் பிறழ்ந் திலாமையே பெரிதும் பாராட்டற்பால தொன்றாம். அதுகிடக்க. இன்னும், அப் பாலகாண்டம், 45ஆம் இயலில், தேவர்களுந் தைத்தியரும் சாவாமருந்தாகிய அமிர்தம் பெறும் பொருட்டு ஒருங்குகூடிச்சென்று திருப்பாற் கடலைக் கடைய, அதன்கண் வாசுகி உகுத்த நஞ்சு பெருகி அங்கே குழுமிய தேவர்கள்முதன் அனைவரையும் அழிக்கப்புக்கமை கண்டு, அவர்களெல்லாரும் பெரிதும் நடுக்குற்றுச் சிவபிரானை அடைக்கலம் புகுந்து எல்லாம் வல்ல பெருமானே, எம்மைப் பாதுகாத்தருள்க, எம்மைப் பாதுகாத்தருள்க! என்று குறையிரந்தமையும், அங்ஙனமே விஷ்ணுவும் சிவபிரானை நோக்கித் தேவரீரே, எல்லாத் தேவர்கட்கும் முன்உள்ளீர், நீரே எல்லாத் தேவருள்ளும் சிறந்த தலைவராயினீர், ஆதலால் எல்லார்க்கும் வருவதில் முதற்பங்கு தேவரீரையே சாரற் பாலதாகலிற், பெருமானே, முதற்கண் வந்ததாகிய இந் நஞ்சினைப் பருகியருளுக20 என வேண்டினமையும், அவ் விருதிறத்தார் கலக்கத்தையுங் கண்டு இரங்கிச் சிவபிரான் அந் நஞ்சினையே அமிர்தமாகப் பருகி அதனாற் றான் ஏதுந் துன்புறாது தேவர் துயர்களைந் தருளினமையும் நன்கெடுத்துச் சொல்லப்பட் டிருக்கின்றன. இன்னும், அதன் 96 ஆம் இயலில், தக்கன் வேட்ட வேள்விக்கட் கூடிய தேவர்களெல்லாருந் தம்மைப் பெரியராகக் கருதி இறுமாந்து, முதலிற் சிவபிரானுக்குச் சேர்ப்பிக்கற் பாலதாகிய அவியுணவினைச் சேர்ப்பியாது விட, அவர்களது இறுமாப்பை ஒழித்துத் தனது முதற்கடவுட் டன்மை காட்டி அவர்க்கு நல்லறிவு கொளுத்தல்வேண்டிச் சிவபிரான் அவர்களைத் தலையறுத்தும், உடலங்களைப் பிளந்தும் உறுப்புக்களை வெட்டியும் ஒட்டித்தானே வெற்றி முதல்வனாய்த் திகழ்ந்துநிற்பப்,பின்னர் அத்தேவர்கள் எல்லாரும் நல்லறிவு பெற்றுத் தமது சிறுமையும் எல்லாம் வல்ல அப் பெருமானின் பெருமையும் உணர்ந்து அவனை வழுத்த, அவன் அவர்க்கிரங்கி மீண்டும் அவர்தம் உடலங்களையும் பழுதுபட்ட உறுப்புகளை யுஞ் சீர்திருத்திக் கொடுத்தருளி னமையும் நன்கு விளக்கி நுவலப் பட்டிருக்கின்றது. இனி, வான்மீகி இராமாயணத்திற்குப் பன்னெடுங் காலம் முற்பட்டனவாகிய மாபாரதப் பழம் பகுதிகளிலுஞ் சிவபிரான்றன் முழுமுதற் றன்மையும், அவன் தன்னை வேண்டிக் குறையிரந்த அடியார்க்கு அக்குறை முடித்தமையும் பல விடங்களிற் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்பகுதிகளிலுங்கூட இடையிடையே விஷ்ணுவையுங் கண்ணனையும் உயர்த்து உரைக்குங் கதைகள் சிலவற்றை வைணவர்கள் நுழைத்தனா ராயினும், அவர் நுழைத்த அக்கதைகள் பாரதத்திற்கும் மிக முற்பட்ட பிராமணங் களினும் வேத நூல்களினுங் காணப் படாமையானும், மற்றுச் சிவபிரான்றன் இறைமைத் தன்மையை நாட்டுங் கதைகளே மிகப்பழைய அந் நூல்களினெல்லாங் காணப்படுதலானும் விஷ்ணுவையுங் கண்ணன் இராமனையும் உயர்த்த முனைந்த கதைகள் பிற்காலத்துப் போந்த வைணவர் களாற் புதிது புனைந்து புகுத்தப்பட்டனவாதல் தேற்றமாம். இம் மாபாரதத்துட் சிவபிரான்றன் தனித் தலைமைத் தன்மையை நாட்டும் பகுதிகளுட் சில ஈண்டெடுத்துக் காட்டுதும்: பகைவராற் பெரிது காக்கப்படுஞ் சயத்திரதனைக் கோறல் ஏலாமைகண்டு நெஞ்சங் கலங்கிய அருச்சுனனைக் கண்ணன் தேற்றிச் சிவபிரான்மாட்டுப் பாசுபத பெறுகவென அவனை ஏவி, அவனுந் தானுமாக நுண்ணுடம்பில் திருக்கை லாயஞ் சென்று அப் பெருமானை வணங்கிவாழ்த்தி அது பெற்று மீண்டமை துரோணபருவத்திற் சொல்லப் பட்டிருக்கின்றது. அவ் விருவரும் இறைவனை வழுத்துகையிற் சிவபிரான் எல்லாப் பொருள்கட்கும் உயிராவன், எவற்றையும் படைப்பவன் எவற்றிலும் ஊடுருவி நிற்கும் முதல்வன் (விச்வாத்மநே விக்வருஜேவிச்வம் ஆவ்ருத்ய திஷ்டதே) என்று பரவினர். அநுசாசனபவருத்திற், கண்ணன் சிவனடியாரான உபமந்யுமுனிவர்க்குச் சீடனாகி அவர் அறிவுறுத்த மொழிப்படியே, ஒரு திங்கள் கனிகளையே அயின்றும் நான்கு திங்கள் நீரையே அருந்தியும் ஒற்றைக் கால்மேல் நின்று இரண்டு கைகளையும் உயரவெடுத்துந் தவம்புரியச் சிவபிரானும் அம்மையம் அவற்கெதிரே தோன்றினாரெனவும், அப்போது இந்திரனும் விஷ்ணுவும் பிரமனும் ரதந்தர சாமத்தைப் பாடிக்கொண்டு சிவபிரானைத் தொழுதபடியே அவரோடு உடன்வந்தனரெனவும், அக் காட்சியினைக் கண்ட கண்ணன் சிவபிரான்றன் இறைமைத் தன்மைகளைப் பலவாறு எடுத்துரைத்து வணங்கி அப்பனிடத்து எட்டு வரங்களையும் அம்மையிடத்து எட்டுவரங்களையும் பெற்றனனெனவுஞ் சொல்லப் பட்டமை காண்க. (978 - 1034). சாந்தி பருவத்திற் பரசுராமன் கந்தமாதன மலைமேற் சிவபிரானை வழிபட்டுஅவர்பால் மழுப்படைபெற்றுச் சிறந்தமைசொல்லப் பட்டிருக்கின்றது. (1748). சௌப்திக பருவத்திற் சிவபிரான் பரசுராமனை நோக்கிக் கூறுகின்றுழிக், கண்ணன் சிவபிரானை வழிபட்டமை நுவலப்பட்டிருக்கின்றது (312) கர்ணபருவத்தில் (33 - 35 ஆம் இயல்), முப்புரங்களில் உள்ள அசுரர்களாற் பெரிதும் இடுக்கண்உற்ற தேவர்கள் நான்முகனைத் தலைவனாய்க்கொண்டு சென்று, சிவபெருமான் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவர் தம் இறைமைத் தன்மைகளை பலவாறு பாடி வழுத்தித் தங்குறையைத் தீர்த்தருளு மாறு வேண்ட, அவரும் அதற்கிசைந்து அவ்வசுரர்களின் பட்டினங்களைப் பொடி படுத்தினமை புலப்பட்டிருக்கின்றது. அவர் அங்ஙனம் அம் முப்புரங்கண்மேற் சென்ற காலத்துத், தேவர்கள் தமத அறியாமையால் தாமும் அவர்க்கு உதவிசெய்யக் கூடுமென்று கருதி அவர்க்குப் பலபோர்க்கருவி களாய் அமைந்துழி, விஷ்ணுவும் சோமனும் அக்நியும் என்பார் அவர் ஏந்திய வில்லின் நாணுங் கணையுமாய் அமர்ந்தனராகச் சொல்லப்பட்டிருக்கின்றனர். இன்னும், வனபர்வந் தீர்த்த யாத்திரைச் சருக்கத்திற் கலிங்கதேயத்திலோடும் வைதரணி யாற்றங்கரையிலுள்ள திரிபிஷ்டவத்திற் சிவபிரான் வணங்கப்படுதலும், இராமோபாக்கியானத்தில் தக்கணத்தின் மேற்கரையிலுள்ள கோகர்ணத்திற் பிரமன் முதலான எல்லாத் தேவர்களும் சிவபெருமானை வழிபட்டமையுங் கூறப்பட்டிருக்கின்றன. இன்னும், அநுசாசனபருவத்தில் உதிட்டிரன், கண்ணனை நோக்கித் தனக்குச் சிவபிரான்றன் முழுமுதற் றன்மைகளை எடுத்துரைக்குமாறு வேண்ட, அவனும் அதற்கு இசைந்து, சிவபிரானே நிலையியற்பொருள் இயங்கியற்பொருள் எல்லாவற்றையும் படைத்திருக்கின்றான்; ஓ அரசனே! சிவபிரானுக்கு மேற்பட்டது ஏதுமேயில்லை; இம் மூன்றுலங் களிலெல்லாம் அவனே மிகச்சிறந்தோன்; இம் மூன்றுலங் களினும் அவனையொப்பார் எவரும் இன்மையின்,அப் பெரிய தெய்வத்தின்முன் ஏதும் எதிர் நிற்கவல்லதன்று என நெடுகச் சொல்லிக்கொண்டே சென்று, சிவபிரானுக்கு மாறாகச் செய்த தக்கன் வேள்வியிற் பிருகுவின் தாடியைப் பறித்தும், பகனுடய கண்களைக் குத்தியும், பூஷனுடைய பற்களைத் தகர்த்தும், மற்றத் தேவர்களையும் இவ்வாறே ஒறுத்தும்,பின்னர் அவரெல்லாம் நடுங்கி வேண்ட அவர்கட்கு அருள்செய்தும் சிவபிரான் தனது முழுமுதற்றன்மை தெளிவித்த வரலாற்றை அவன் மொழிந்தமை குறிக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் இவ்வாறே சிவபிரான்றன் இறைமைத்தன்மைகளை யுரைக்கும் மாபாரதப் பகுதிகளையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியும். இங்ஙனமாக மாபாரதம் எங்கும் சிவபிரான் ஒருவனே முழுதற் கடவுளாதலும்,ஏனை நான்முகன் திருமால் முதலிய தேவர்களுங் கண்ணனும் அப் பெருமானை வணங்கி வழிபட்டுப் பல நலங்களைப் பெறுவாராதலுந் தெளித் துரைக்கப்பட்டமையினை நடுநின்று ஆராய்ந்து கண்டலாசன் என்னும் ஆங்கில ஆசிரியர் இதிகாசங்கள் இயற்றப்பட்ட பழைய காலத்தில் விஷ்ணுவின் வணக்கம் இவ்விந்தியநாட்டில் எங்கும் இருந்ததிலையென்றும், அக்காலத்தில் சிவபிரான் வணக்கமே இந்நாடெங்கும் நிரம்பப் பரவியிருந்ததென்றும் அரியபெரிய மேற்கோள்கள் பற்பல காட்டி விரித்தெழுதி யிருக்கின்றார்.21 இவ்வாறு விஷ்ணு முதலிய எல்லாத் தேவர்களும் சிவபிரான்முன் எதிர் நிற்கலாற்றாதவர்களாய் அவனே முழுமுதற் கடவுளாதல் உணர்ந்து அவனை வழிபட்டுப் பெறற்கரிய பேறுகளெல்லாம் பெற்றிருக்க, விஷ்ணுவினது ஒரு மிகச்சிறிய கூறாகச் சொல்லப்படுங் கண்ணன்,22 வாணனுக்காகப் பரிந்துவந்து ஏற்ற `சிவபிரானைத் தோற்றோடச் செய்தன னென்னுங் கதை முழுப்பொய்யாய்ப் பின்வந்த வைணவராற் புனைந்து கட்டிப் பாரதத்தின்கண் நுழைக்கப்பட்ட தொன்றாதல் தெற்றெனப் புலனாகின்றதன்றோ? சிவபிரான் அத்துணை எளியவராய் வாணனது கோட்டையைக் காத்து நின்றனராயின், கண்ணனும் அருச்சுனனும் பாசுபதம் வேண்டித் திருக்கையாலஞ் செல்ல வேண்டுவதென்னை? வாணனது கோட்டையிற் சென்றே அவர்கால் அதனைப் பெற்றிருக்கலா மன்றோ? அத்துணைதான் ஏன்? சிவபிரானைத் தோற்றோடச் செய்ய வல்லனாயிற் கண்ணன்தானே அப்பாசுபதத்திலும் மேம்பட்ட தொரு படையினை அருச்சுனனுக்கு வழங்கி யிருக்கலாமன்றோ? சிவபிரான் அமர்ந்திருக்கும் அறிவொளி வடிவினதான திருக்கைலாயத்தை இப் பருவுடம்புகொண்டு சேறல் இயலா தென்பதனை நன்குணர்ந்தன்றோ கண்ணனும் அருச்சுனனும் நுண்ணுடம்பு கொண்டு அங்கே சென்றனர். ஆதலாற், சிவபிரான் வாணன் கோட்டையில் அத்துணை யெளியராக நின்று காத்தனரென்பதூஉம்,அவரைக் கண்ணன் தோற்றோடச் செய்தனவென்பதூஉம் பின்வந்தோர் புனைந்த முழுப்பொய் யாதல் நன்குவிளங்கும். கண்ணனே பல இடங்களிற் சிவபிரான்றன் முழுமுதற்றன்மைகளை விரித்தோதிமையும், அவன் அப் பெருமானைக் காண்டற்குப் பெருந்தவம் புரிந்தமையும் பலகாலும் எடுத்துரைக்கும் மாபாரதப் போக்குக்கு இக் கதை முற்றும் முரணாய் இருத்தலின் இது முழுப்புரட்டாதலும், பேயாழ்வார் இக் கதையினைக் கூறக் காணாமையின் இஃதவர் காலத்தில் இல்லாமல் அவர்க்குப் பின்வந்த திருமங்கையாழ்வார் திருமழிசையாழ்வார் காலம்முதற் கட்டி வழங்கலானமையும் திண்ணமாய் விளங்குமென்க. அற்றேல் அஃதாக, மாபாரதத்திற் சிவபிரான்றன் முழுமுதற் றன்மைகளை விரிக்குங் கதைகள் மட்டும் மிகப் பழையனவாதல் எற்றாற் பெறுதுமெனின், அதுவும் ஒரு சிறிது காட்டுதும்: மாபாரதத்திற்கு முற்பட்டதும் உபநிடதங்களில் மிகப் பழையதுமான கேநோபநிடத மானது. முப்புரங்கள் அழித்தபின்னர் அவற்றை அழித்த வெற்றி தத்தமக்கே உரித்தாகுமெனத் தேவர்கள் ஒவ்வொருவருந் தாந்தாமே நினைந்து இறுமாந்தமையும், அவர்கள் அவ்வாறு பிழைபட நினைந்து அடைந்த இறுமாப்பினை யொழித்துஅவர்கட்கு நல்லறிவு தெருட்டுவான் கருதிச் சிவபிரானே அத்தேவர்களால் முன் அறியப்படாத ஓர் இயக்கவடிவந் தாங்கி அவர்களெதிரிற் றோன்றி அவர்கள் முன்னே ஒரு துரும்பைக் கிள்ளிவிட, அவனை இன்னனென்று அறிவான் புகுந்த தேவர் ஒவ்வொருவரும் அவன் கட்டளையிட்டவாறே அத் துரும்பை அசைக்கமுயன்றும் அஃதவர்களாற் சிறிதும் இயலாமையின் அவர்கள் அஞ்சியோடிப்போக, இறுதியில் அவனைக் காண்பான்புக்க இந்திரனுக்குமுன் அவ்வியக்கன் கட்புலனா காமல் மறைந்துவிட, அதனாற்பெரிது வருந்திச் சிறுமையுற்று நின்றஅவ் விந்திரனுக்குமுன் வானத்தின்கண் உமைப்பிராட்டி யார் தோன்றி அவ்விறைவனியல்பு எல்லாத் தேவர்கட்கும் மேற்பட்டதாதலை அறிவுறுத்தி மறைந்தமையும் தெளிவாகச் சொல்லப்பட்டிருத்தல் காண்க. முப்புரங்களை அழித்த வெற்றி எல்லாம்வல்ல சிவபிரானுக்கே உரித்தாதல் எல்லா நூல்கட்கும் ஒப்ப முடிந்த தொன்றாகவும், இயக்கன்வடிவிற் புலப்பட்டுத் தோன்றி மறைந்த இறைவன்இயல்பை அறிவுறுத்துதற்கு அருள்கனிந்து வந்தஇறைவி உமைப்பிராட்டியாராகலின் அங்ஙனம் இயக்கனாய் வந்தோன் அவள் காதற் கொழுநனாகிய சிவபிரானேயாதல் எளிதிற்பெறப்படா நிற்கவும், இவ்வுண்மையை யுள்ளவாறே எடுத்துரைக்கும் நடுவுநிலைமை யின்றிக் கேநோபநிடதத்திற்கு இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகட்குமுன் உரையெழுதின மாதவசாரியாரும், அறுநூறு ஆண்டுகட்கு முன் உரையெழுதின இராமாநுஜா சாரியரும் ஆகிய வைணவப் புலவர்கள் அங்ஙனம் இயக்க வடிவத்தில் வந்தோன் நாராயணனே எனப் பழைய நூற்கருத்துகட்கெல்லாம் முற்றும் மாறாக உரையுரைத்தார்; அங்ஙனம் இயக்கவடிவிற் றோன்றினோன் நாராயணனே யாயின், தேவர்களெல்லாரும் அவனை முதல்வனாய்க் கொண்டன்றோ முப்புரங்களை அழித்திருத்தல்வேண்டும். பழைய வடநூல்களுள் எதுவும் அவ்வாறு உரைப்பக் காணாமையானும், நாராயணனே இயக்கவடிவிற் போந்து மறைந்தது உண்மையாயின் அவனை யறிவுறுத்துதற்கு அவன்றன் காதற்கிழத்தியாகிய திருமகளன்றோ வரற்பாலள், மற்று அவள் அங்ஙனம் வரக்காணாமையானும் அவ் வியக்கவடிவிற் போந்து தேவர்களின் செருக்கை யடக்கினோன் சிவபிரானேயாதல் ஒருதலை. இதனோடொப்பவே, மாபாரதத்திற் கண்ணன் உதிட்டிரனுக்குச் சிவபிரானது அறிதற்கரிய இறைமைத் தன்மைகளை விரித்துரைக்கும் மற்றொரு பகுதியும் கேநோபநிடத்திற்கு போந்த இயக்கன் சிவபிரானேயாதலை நிலைநிறுத்தும் ஒரு பெருஞ்சான்றாம். சிவபெருமான் முப்புரங்களை நீறாக்கிய பின்னர் ஐந்து குடுமியோடு கூடிய ஒரு சிறுமகவாய் உமைப்பிராட்டியாரின் மடிமீது அமர்ந்திருந் தனன். அப்போது தேவர்கள் எல்லாரும் `இவன் யார்? இவன் யார்? என்று தம்முளே வினவியும், அவனை யறிந்திலர். அதனால் இந்திரன் பொறாமையுற்றுத் தனது குசலிப் படையால் அக் குழவியை எறியப்புக, அஃது அப்படையினைத் தடைசெய்து, அவன் கை வழங்க மாட்டாமல் தடிபோல் மரத்துநிற்கப் பண்ணிற்று. அந் நிகழ்ச்சியைக் கண்டு தேவர்களெல்லாரும் வெருவி, நான்முகன்பாற் சென்று நிகழ்ந்தவற்றை யறிவிப்ப, அவன் தனது அறிவுக்கண்ணாற் கண்டு அம்மகவு எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவபிரானாதலை உணர்ந்து, அப்பெருமானை வழுத்தினான்; அதன்பிற் றேவர்களெல் லாரும் உமை காதலனை வணங்கினர்; இந்திரனும் எப்போதும் போலத் தனது கை வழங்கப்பெற்றான் என்று இதனை இன்னும் விரிவாகக் கண்ணனே மொழிந்தமை அநுசாசனபருவம், 7458 ஆம் செய்யுளிலிருந்து சொல்லப் பட்டிருக்கின்றது. இத் தன்மையவான மிகப் பழைய வடநூற்சான்றுகளுக்கெல்லாம் மாறாக இயக்க வடிவில் வந்த இறைவனை நாராயணன் என்றதூஉம், உண்மை பிறழ்ந் துரைக்குந் தமதுரைக்குச் சான்றாகத் தாமே புதிது புனைந்த பொய்க்கதைக் கூளங்களாகிய புராணங்களை மேற்கோளாக எடுத்துக்காட்டியதூஉம், இராமாநுஜர் மாத்துவர் என்னும் உரைகாரருக்குப் பெரிதும் ஏதமாமென்க. இனி, உபநிடதங்களினும் மிகப் பழைமையாவன `பிராமணங்கள் ஆகும். இவற்றுள்ளும் மிகப் பழையது ஐதரேயபிராமணம். இதன் மூன்றாம் இயல், முப்பத்துமூன்று முப்பத்துநான்காம் பகுதிகளிற் பின்வருமாறு சொல்லப் பட்டிருக்கின்றது: பிரஜாபதி தன் மகளைத் தானே புணர்ந்தமை கண்ட தேவர்கள் வருந்திப் பிரஜாபதி முன் அறியப்பட்ட ஒரு செய்கையைச் செய்கின்றான்என்று கூறி, அவனை ஒறுத்தற்கு ஒருவனைத் தேடினார்கள். தமக்குள் அவனை ஒறுக்கத்தக்க ஆற்றல் உடையார் எவரும் இல்லாமையின், அஞ்சத்தக்க உருத்திரனை நாடி அவனை ஒறுக்குமாறு வேண்ட, உடனே உருத்திரன் அதற்கு இயைந்து தனது மூவிலைவேலாற் பிரஜாபதி பிரானை குத்தி ஒறுத்தான். அதன்பிற் றேவர்கள் சிவபிரானை இருக்கு வேதவுரையால் வழுத்தி வணங்கினர். இருக்குவேதத்தைச் சேர்ந்த மற்றொரு பிராமணமாகிய கௌஷீதகியின் ஆறாம் இயல் முதன் ஒன்பது செய்யுட்கள் வரையிற் சிவபிரான்றன் பெயர்களாகிய பவன், சர்வன், பசுபதி, உக்ரதேவன், மகாதேவன், உருத்திரன், ஈசானன், அசனி முதலியவற்றால் அவனே முழுமுதற் கடவுளாதல் காட்டப் பட்டது. இப் பெயர்களைக்கொண்டே சிவபிரான் வாஜசநேயசம்ஹிதை (39,8, 9) யிலும் மைத்திராயணீ சம்ஹிதை (2, 9, 1)யிலும், அதர்வ வேதத்திலும் (15, 5) வழுத்தப் படுதல் காண்க. இவ்வுண்மைகளை யெல்லாம் நடுநிலைதிறம்பாமல் ஆராய்ந்து பார்த்த ஐரோப்பிய ஆசிரியர்கள் பிராமணங்கள் உண்டான மிகப் பழையகாலத்திற் சிவபிரான் ஒருவனே முழுமுதற்கடவுக வைத்து வணங்கப் பட்டனன் என்று மெய்யுரை கூறினர்.23 இங்ஙனமே, `சாங்காயன பிராமணத்திலும் சுக்லயஜுர் வேத்தைச் சேர்ந்த `சதபதபிராமணத்திலும் (2, 6, 2, 9) சிவபிரானும் அம்பிகையும் ஒருங்கு வைத்து முழுமுதற் கடவுளாக வணங்கப்படுதல் காண்க. பிராமணங்கள் ஆக்கப்பட்ட பண்டைநாளில் விஷ்ணு ஒரு சிறந்த தெய்வமாகக் கருதப்படவில்லை. பிராமணங்களுட் காலத்தாற் பிற்பட்டதாகிய சதபதபிராணமத் திலே தான் முதன் முதல் விஷ்ணுவுக்கு ஓர் உய்ச்சியுண்டானமையும், அதனால் விஷ்ணு இறுமாப்படைந்து தன்னை ஏனைத் தேவர்களி னின்றும் வேறு பிரித்துக் கொண்டு சென்று நாணேற்றிய தன் வில்லின் முனைமேற் றன் மோவாயை வைத்தபடியாய்ச் செருக்குற்று நிற்பத், தேவர்கள் எறும்புகளை ஏவி அவனது வில்லின் நாணைக் கடித்து அறுக்கும்படி செய்ய, உடனே அவ்வில் கடுவிசையோடும் நிமிர்ந்து விஷ்ணுவின் தலையை அறுத்துக் கொண்டு சென்றமையும் சொல்லப்பட்டிருத்தல் காண்க.24 விஷ்ணு இங்ஙனந் தலையறுப்புண்ட செய்தியைக் கூறும் சதபத பிராமணமே, உருத்திரபிரான் விடுத்த கணையாற் பகன்கண் இழந்ததும், பூஷன் பல்லுதிர்ந்ததும், இவற்றைக் கண்ட தேவர்களெல்லாரும் நடுக்கம் எய்திச் சிவபிரானுக்குச் சேர்ப்பிக்கற் பாலதாகிய அவியுணவினைச் சேர்ப்பித்து வணங்கினதும் பலவிடங்களினும் எடுத்து கூறாநிற்கின்றது.25 பிராமணங்களை நன்கு ஆராய்ந்து அவற்றின் உண்மையை அளந்தறிந்த ஆங்கில ஆசிரியரான கீத் என்பவர், ஐதரேயத்திற் சிவபெருமானே தனது உருத்திர வடிவிற் பெரிய தெய்வம்; அங்ஙனமே சதபதத்திலும், வாஜசநேய சம்ஹிதையின் பிற்பகுதிகளிலும், அதர்வ வேதப் பகுதிகளிலும் அவரே முதற்பெருந் தெய்வம்26 என்று ஐதரேய ஆரணியகத்தின் முகவுரையிலும் இம்மெய்ம்மையை முடித்துக் கூறுதலுங் கருத்திற் பதிக்கப்பாற்று. சுக்லயஜுர்வேதத்தின் கண்ணதாய்த் தலைசிறந்து விளங்கும் சதருத்ரீயம் முற்றிலும் சிவபெருமான் ஒருவனே எல்லாத் தேவர்கட்கும் முதல்வனாய், எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா இரக்கமும் எல்லா இன்பமும் ஒருங்குடைய முழுமுதற் கடவுளாய் வைத்து வழுத்தப்படுதல் பெரிது நினைவுகூரற் பாலதொன்றாம். இனி, வடமொழி நூல்கள் எல்லாவற்றுள்ளும் மிகப் பழையதாகிய இருக்குவேதத்தின் முதன் மண்டிலம், 43 ஆம் பதிகம் உருத்திரன் ஒருவனே அறிவிலும் வரங்களை மிக வழங்குதலிலும் ஆற்றலிலுஞ் சிறந்தோன் என்றும், எல்லா உயிர்களின் நோய்த் துன்பத்தை நீக்குவோன் என்றும், அவனே பாட்டுகட்கும் வேள்விகட்குந் தலைவன் என்றும், அவன் கதிரவன் ஒளியைப்போலவும் பொன்னைப் போலவும் விளங்குவோன் என்றும், கடவுளர் எல்லார்க்கும் அவனே தலைவன் (ச்ரேஷ்டோ தேவாநாம்), எல்லாத் தேவரினும் அவனே ஈகையிற் சிறந்தோன் என்றும் எல்லாவுயிர்கட்கும் நலங்களை அருள்வோன் அவனே என்றும் வலியுறுத்திக் கூறுதல் காண்க; அங்ஙனமே அதன் 114 ஆம் பதிகமும் சிவபிரான் ஒருவனே முமுமுதற் கடவுளா தலைத் தேற்றுவ தோடு, அவன் சடைமுடியுடையோனாய், உருத்திரகணங் களுக்குத் தலைவனாய், அருளிரக்க ஈகையில் மிக்கோனாய், வேள்விப் பயனை நிறைவேற்று வோனாய், ஞானியாய் (அறிவோனாய்), உயர்ந்த மருந்துகளைக் கையில் வைத்திருப் போனாய், இறப்பிலியாய்த் திகழுமாற்றை வகுத்துரைக் கின்றது; இரண்டாம் மண்டிலத்து 33 ஆம் பதிகமும் அங்ஙனமே சிவபிரான், தேவர்கள் எல்லாரினும் மிகச் சிறந்தோனாதல் தெரிப்பதுடன் அவனே வலிமையின் மிக்கார் எல்லாரினும் வலிமையிற் சிறந்தோனாவன் எனவும், அவனே சாந்தனாய் (அமைதி மிக்கவனாய்) அடியார்க்கு எளியனாம் எனவும், ஏனைத்தேவர்களாற் போதருந் தீமைகளையெல்லாந் துடைப்பவனாம் எனவும், அவனைவிட ஆற்றலின் மிக்கது எதுவும் இன்றெனவும், புகழ்மிக்கோனாய் என்றும் இளையோனாய்த் தன் தேர்மீது அமர்ந்து முப்புரங்களை அழித்தக்காற் பெரிதும் அஞ்சத்தக்கோனாய்க் கிளர்ந்தனன் எனவும் அறிவுறுத்துகின்றது; அதன் ஐந்தாம் மண்டிலத்து 52 ஆம் பதிகம் உருத்திரனே மருத்துக்களுக்குத் தந்தையாவன், அவன்றன் காதற்கிழத்தியாகிய பிரிசிநி என்னும் உமைப் பிராட்டியே அவர்கட்குத் தாய் ஆகுவள் என்கின்றது; அதன் ஆறாம் மண்டிலத்தில் 16ஆம் பதிகமானது உக்கிரனாகிய சிவபிரான் மூன்று பட்டினங்களைப் பொடிசெய்தான் என நுவல்கின்றது; அதன் 41 ஆம் பதிகம் உருத்திரனே உலகிற்கு முதற்கடவுள் (புவநயபிதரம்) என்கின்றது; அதன் ஏழாம் மண்டிலத்து 46 ஆம் பதிகம் உருத்திரன் தன்வயத்தனாய் நிற்பவனே யன்றி (வதாவ்நே)ப் பிறரைச் சார்ந்து பிறர் துணையை நாடி நிற்பவன் அல்லன் என்கின்றது; பத்தாம் மண்டிலத்து 66ஆம் பதிகம் உருத்திரன் தன்னைச் சூழ்ந்த அடியரான உருத்திரர் என்னுந் தேவகூட்டத்தோடும் போந்து அடியார்க்கு எளியனாய் அருள்வழங்குவோன் என்கின்றது; அதன் 136 ஆம் பதிகமானது, சடைமுடியோனான (கேசி) சிவபிரான் தீ மண்டிலம் நீர்மண்டிலம் இம்மை மறுமையுலகங்கள் எல்லாவற்றையுந் தாங்குவோன் என்பதூஉம், அவன் வெறுவெளியாய்ச் (சிற்றம்பலமாய்) நோக்கப்படுவோன். அவனே ஒளிவடிவினன் (கேசிஇதம்ஜ்யோதிர்) என்பதூஉம், அவன் முனிவர்க்கெல்லாம் முனிவன் (தக்ஷிணா மூர்த்தி) ஆவன் என்பதூஉம், அவன்தன் உருத்திருகணத்திலுள்ள ஒருவரால் நஞ்சினை வருவித்து அதனைப் பருகினன் (கேசிவிஷய பாத்ரேணயத் ருத்ரேணாபிபத்ஸஹ) என்பதூஉம் தெரித்துரைத்தல் காண்க. இவ்வாறு பண்டை வடநூலாகிய இருக்குவேதத்தி னுள்ளேயே சிவபிரான் ஒருவனே முழுமுதற் கடவுளாதலும், அவனே முப்புரங்களை அழித்ததும், அவனே `விஷபானம் (நஞ்சைப் பருகுதல்) செய்ததுந் தெளித்தோதப் பட்டமையானும் இருக்கு வேதத்திற்குப் பின்வந்த அதர்வவேதமும், பிரமணங்கள் உபநிடதங்களும் அவனையே முழுமுதற் கடவுளாய் வைத்துத் திரிபுரசங்காரம் விஷபானம் முதலான அரும்பெரு நிகழ்ச்சிகளை அவன் மேலனவாகவே உரைத்தலானும், இவ்வாறே விஷ்ணுவை அப் பழைய நூல்கள் முழுமுதற் கடவுள் நிலையில் வைத்தாதல் மேற்குறித்த `திரிபுரசங்காரம் முதலிய அரும்பெரு நிகழ்ச்சிகளை விஷ்ணுவின் மேலனவாக வைத்தாதல் யாண்டும் உரைப்பக் காணாமை யானும், இப் பழைய நூல்களின் கருத்துக்கு முழுதும் ஒத்தே இவற்றிற்குப் பின்வந்த `மாபாரதம் `இராமாயணம் `புராணங்கள் எல்லாம் சிவபிரானையே முழுமுதற் கடவுளாக நிறுத்தி ஓதுதலானும். இம் மாபாரதம் முதலான பின்நூல்களிற் சிவபிரான்றன் முதன்மைத் தன்மைகள் கூறும் பகுதிகளே பழைமையான உண்மைப் பகுதிகளா மெனவும், அவற்றுக்குமாறாக விஷ்ணுவையும் அவன்றன் அவதாரங்களாகக் கண்ணன் இராமன் முதலாயினாரையும் உயர்த்திச் சிவபிரானை இகழ்ந் துரைக்கும் பகுதிகளெல்லாம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதற் றோன்றிய வைணவப் புலவர்கள் பொய்யாகப் புனைந்து கட்டி அப் பின்னூல் களின்கண் இடையிடையே நுழைத்தனவாகு மெனவும் பகுத்துணர்ந்து தெளிக. இதுகாறும் ஆராய்ந்து காட்டப்பட்ட வடமொழி வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், மாபாரதம், வான்மீகி இராமாயணம், மற்சபுராணம், வாயுபுராணம், இலிங்கபுராணம், தேவீபாகவதம் முதலாக ஒன்றினொன்றுயர்ந்த பழைய வடநூல்களில் எங்குங் காணப்படாத பொய்க்கதைகளும் விஷ்ணுவையும் அவர் தம் அவதாரங்களையும் உயர்த்துக் கூறிச் சிவபிரானை இகழ்ந்துரைக்கும் உரைகளும் மலிந்த விஷ்ணுபுராணம், பாத்மோத்தரம், வைணவபாகவதம், பிரமாண்ட புராணம், இராமோபநிஷதம், நாராயணோப நிஷதம், ஆத்மோபநிஷதம், ஆங்கீரஸ உபநிஷதம், மகோபநிஷதம், பைங்களோபநிஷதம் முதலாயினவும் மற்றும் இவை போல்வனவும் மதச்சண்டை விளைத்து இந் நாட்டுமக்களின் ஒற்றுமை குலைத்தற்காகக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப்பின் வந்த வைணவப்புலவர்களாற் புதியவாய்க் கட்டப்பட்டனவாதலால், அவை தம்மை நம்பி அறிவுடையோர் முழுமுதற் கடவுளாகிய சிவபிரானது வணக்கத்தைக் கைவிடார். பகுத்தறிவில்லாப் பொய்ப் பற்றுடைய புல்லறிவினரே மிகக் பிற்பட்ட காலத்தெழுந்த இப் பொய்ந்நூல்களை நம்பி, எல்லாம் வல்ல இறைவனை வழிபடாமற், பிறப்பு இறப்புகளிற் கிடந்து உழலும் நம் போன்ற மக்களைத் தெய்வங்களாக வணங்கித் தம் பிறவிப் பயனை இழப்பரென விடுக்க. ஆதலாற், கண்ணன் வாணனொடு புரிந்தபோரிற் சிவபிரான் வந்தெதிர்த்துத் தோற்றோடினன் என்னுங் கதை,அவ் வாணன் போரைக் குறிப்பிட்ட பேயாழ்வாராற் கூறப்படாமையானும், சிவபிரான்றன் முழுமுதற் றன்மையை அடுத்தடுத்துப் பல்காலும் எடுத்து நாட்டும் `மாபாரதக் கருத்துக்கு அப்பெருமானைப் பெரிதும் இழிபுபடுத்தும் அக் கதை பெரிதும் முரணாமாகலானும், அவ்வாறு பழைய நூல்களுள் எதுவும் சிவபிரானை இழித்துரைப்பக் காணாமையின் அக் கதை அவையெல்லா வற்றுக்கும் முற்றும் மாறாமாகலானும், அது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுமுதல் வந்த பொய்ப் பற்றுள்ள வைணவராற் புதிது படைக்கப்பட்டுத் திருமங்கை, திருமழிசை, சடகோபர் முதலியோரான் மட்டும் எடுத்தாளப்பட்ட தொன்றாகு மென்று கடைப்பிடித் துணர்ந்துகொள்க. மேலும், திருமங்கை யாழ்வாரே சிவபிரான் முப்புரம் எரித்த வரலாற்றினை மெய்யெனத் தழுவிப், புரம்எரி செய்த சிவன் (2,3,1) எனவும், திரிபுரம் மூன்றெரித்தானும் (2, 8, 1) எனவும், தழல்நிறவண்ணன் நண்ணார் நகரம்விழ நனிமலை சிலைவளைவு செய்தங்கு அழல்நிற அம்பது ஆனவனே (6, 1, 3) எனவும், புரங்கள் மூன்றுமோர் மாத்திரைப்போதில் பொங்கெரிக்கு இரை கண்டவன் (10, 2, 9) எனவும் ஓதினார்; இங்ஙனம் ஓதுகின்றுழி, ஏனை எல்லாத் தேவர்களும் சிவபிரானுக்கு ஒரோவொரு கருவியாய் அமைந்தாற்போலத் திருமாலும் அவரது வில்லில் ஓர் அம்பாக அமைந்தனர் எனக் கூறியவாற்றாற் சிவபிரானே எல்லாவற்றையும் இயக்கும் முழுமுதற் கடவுளாதலும், திருமாலும் மற்றைத் தேவர்களும்அவன் இயக்கினால் இயங்கும் உயிர்களாதலும் திருமங்கையாழ்வார்க்கும் உடம்பாடாதல் பெற்றாம். இன்னுந், தாம் சாவாமைப் பொருட்டு அமிர்தம் எடுப்பான் வேண்டிக் கடைந்த பாற்கடலுட்பிறந்த நஞ்சால் தேவர்களெல்லாரும் படுசாம்பராய் வெந்து அவியாமைப் பொருட்டுச் சிவபிரான் தானே அந்நஞ்சினைப் பருகிய வரலாற்றினையும் திருமங்கை யாழ்வார் உண்மையென உடம்பட்டு, அண்ணல்செய் தலைகடல் கடைந்ததனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே (6, 1, 2) என்று கூறுமாற்றால், தேவர்க ளெல்லாருந் தாஞ் சாவாமைப் பொருட்டு அமிர்தம் வேண்டினராகச் சிவபிரானோ எல்லாரையும் நீறாக்கும் நஞ்சினை யுண்டும் இறவாதிருந்தனன்; அதனால் அவனே முழுமுதற் கடவுளாதல் அவர்க்கும் உடம்பாடாயிற்று. இன்னும், தக்கன் ஆற்றிய வேள்வியில் திருமாலையுள்ளிட்ட தேவர்களெல்லாரும் சிவபிரானைநீக்கி அவ் வேள்விக்கண் அவியுணர்வுபெற்ற இறுமாப்பினை ஒழித்தற்பொருட்டு இறைவன் அவ் வேள்வி நிலையினைக் குலைத்த வரலாற்றினையுந் திருமங்கை யாழ்வார், தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் (5, 2, 6) என்று கூறுமாற்றால், எல்லாம் வல்ல இறைவனான சிவபிரானைவிட்டுச் செய்யும் நல்வினைகளுந் தீவினைகளாம் என்பதனை அவர் தாமும் உடம்பட்டாராயிற்று. இவ்வாறு இருக்குவேதம்முதற் றிருமங்கையாழ்வாரது `பெரிய திருமொழி இறுதியாகவுள்ள எல்லா நூல்களானுஞ் சிவபிரானே முழுமுதற்கடவு ளென்பது துணியப்படுதலின், மக்கட் கூட்டத்தவரில் ஒருவனாய்த் தேவகியின் கருப்பையிற் றங்கிப் பிறந்து, ஜராசந்தனுக்கு அஞ்சித் தான் முன்னிருந்து மதுரையை விட்டுப்போய்த் துவாரகையைத் தனக்குத் தலைநகராக்கிக் கொண்டு,27 பின்னர் ஒரு வேட்டுவன் ஏவிய கணையால் இறந்துபட்ட கண்ணனுக்குச் சிவபிரான் தோற்றோடினா ரென்னுங் கதையினும் முழுப்புரட்டும் பொய்யுமாவது பிறிதில்லையென விடுக்க. இங்ஙனமாக வைணவமதம் பெரிதுங் கிளர்ச்சி பெற்ற கி.பி. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த திருமங்கை யாழ்வார் அக்காலத்து வைணவப்புலவர்கள் வடமொழியில் தமக்குவேண்டியபடி யெல்லாங் கட்டி விட்ட கதைகளை மெய்யென நம்பினராயினும், சைவசமய ஆசிரியர்கள் அருளிச்செய்த தேவார திருவாசகங்களையும் வடமொழி யிலுள்ள வேதங்கள் பிராமணங்கள் பழைய உபநிடதங்கள் இதிகாசங்கள் புராணங்கள் முதலிய வற்றையும் அவர் நன்கு ஓதியுணர்ந்த புலவராய்க் காணப்படுதலின், சிவபிரான் இறைமைத் தன்மையை நாட்டும் பழைய வரலாறுகளையும் மேற்காட்டியவாறு இடையிடையே தம் பாட்டுகளிற் களங்கமின்றி எடுத்து மொழிந் திடுகின்றார். அதுவேயுமின்றிச், சிவபிரானும் திருமாலும் பிரிவின்றி ஒரு வடிவினராய்த் திகழ்கின்றனர் எனவும் பலவிடத்துங் கூறுகின்றார். அவற்றுட் சில வருமாறு: பிணங்கள்இடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார். (2,6,9) பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து. (3,4,9) அலர்மகட்கும் அரற்கும் கூறாகக் கொடுத்தருளுந் திருவுடம்பன் (3,9,8) வானார்மதி பொதியும்சடை மழுவாளியொடு ஒருபால் தானாகிய தலைவன். (7,9,4) வாசவார் குழலாள் மலைமங்கைதன் பங்கனைப் பங்கில்வைத்து உகந்தான் றன்னை. (7,10,3) கண்ணுதல் கூடிய அருத்தனை. (பாதியனை, 7,10,7) மழுவியல் படையுடை யவன்இடம் மழைமுகில் தழுவிய உருவினர். (8,7,6) அக்கும் புலியினதளும் உடையா ரவர்ஒருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர். (9,6,1) ஏறும் ஏறியிலங்கும் ஒண்மழுப்பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பிலோர் கூறுதான் கொடுத்தான். (9,10,4) குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான் பங்கத்தாய். (திருநெடுந்தாண்டகம், 9) இவ்வாறு திருமங்கையாழ்வார் பாடியிருப்பவைகளை உற்றுநோக்கும்போது, வலப்பால் அப்பனாகிய சிவபிரானும் இடப்பால் அம்மையாகிய திருமாலுங் கலந்த முழுமுதற்கடவு ளியல்பினை அவர் நன்கு உணர்ந்தவராகவே காணப்படு கின்றார். மேலும், தமிழ்ச்சுவை கெழுமித் துலங்கும் பெரிய திருமடல் என்னுஞ் சிறந்த பாவினைத் திருமங்கையாழ்வார் பாடிய தமது இறுதிக் காலத்திற் சிவபிரான்றன் முழு முதற்றன்மை தெளியப்பெற்று அவர்மீது அன்பினால் அகங்கரைந்தார் என்பதற்கு, மன்னு மலையரையன் பொற்பாவை வாணிலா மின்னு மணிமுறுவற் செவ்வாய் உமையென்னும் அன்ன நடைய அணங்கு நுடங்கிடைசேர் பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகலத் தன்னுடைய கூழைச் சடாபாரந் தான்தரித்துஆங்கு அன்ன அருந்தவத்தின் ஊடுபோய் ஆயிரந்தோள் மன்னு கரதலங்கள் மட்டிலத்து மாதிரங்கள் மின்னி எரிவீச மேலெடுத்த சூழ்கழற்கால் பொன்னுலகம் ஏழுங் கடந்துஉம்பர் மேற்சிலும்ப மன்னு குலவரையும் மாருதமுந் தாரகையும் தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும் கொன்னவிலும் மூவிலைவேற் கூத்தன் பொடியாடி அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங்கு அணைந்திலளோ என்று அவர் சிவபிரான்றன் அருட்டிருக்கூத்தை வியந்து பாடியிருத்தலே சான்றாம். இனி,மேற்காட்டிய வாணன்போரிற் சிவபெருமானைத் தொடர்புபடுத்திய கதை வைணவராற் புதிது படைக்கப் பட்டதாதல் போலவே, பரசுராமனைத் திருமாலின் அவதாரமெனக்கொண்டு, அவன் அரசர் கூட்டத்தினை இருபத்தொருமுறை அழித்தான் என்னுங் கதையுங் கி.பி. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டிற்குப்பின் பார்ப்பனராற் பொய்யாகப் புதிது கட்டப்பட்ட தொன்றாகும். ஏனெனில், மாபாரதத்திற் பரசுராமனைப் பற்றிக் கூறும் பகுதிகளில் ஓரிடத்தாயினும் அவன் திருமாலின் அவதாரம் என்பது குறிப்பாலாயினும் வெளிப் படையாலாயினுங் கூறப்பட வில்லை.28 அதுவேயுமன்றி, மாபாரதம் 178 முதல் 180ஆம் இயல்வரையிற், கிருதவீரிய அரசன்பால் அளவிறந்த பொற் குவைபெற்ற பிருகுமுனிவர் குடும்பத்தினர், அவ்வரசனுக்குப் பின் அவன் வழிவந்த மன்னர் பொருளின்றி வறுமைப்பட்டு அப் பிருகுகுடியினர் பாற்சென்று தமக்குச் சிறிது பொருளுதவி செய்யும்படி வேண்ட, அவர்கள் அப்பொருளிற் பெருந்திரளை நிலத்தின்கீழ் மறைத்து வைத்தும் எஞ்சிய சிலவற்றைத் தமக்கு உறவினரான பாப்பனரிடம் கொடுத்தும் அம்மன்னர்களை ஏமாற்ற அம்மன்னருள் ஒருவன் நிழத்தின்கீழ்ப் புதைத்துவைத்த அப்பொருட்டிரளில் ஒருகூறு கண்டெடுக்க, ஏனை மன்னர்கள் முனிவர்களின் படிற்றொழுக்கத்தைக் கண்டு சினந்து அவர்களைக் கொன்று வீழ்த்த, அம் முனிவரின் மனைவியருள் ஒருத்திக்குப் பிறந்த ஔர்வன் என்பான் அம் மன்னர்களை வேரோடு அழிக்க முனைந்தும் அஃதியலாதான செய்தியைப் பராசரர்க்கு அவர்தம் பாட்டனார் எடுத்துக்கூறுகின்றுழிப், பரசுராமனைப் பற்றியாதல் அவன் இருபத்தொரு தலைமுறை அரசரை யழித்தமை பற்றியாதல் சிறிதும் உரை யாமையால், அவனையும்அவன் அரசரை யழித்தமையுங் கூறும் பகுதிகளை, வேளாள அரசர்மேற் பகைகொண்ட பார்ப்பனர்கள் அவர்களை அச்சுறுத்தும் பொருட்டுப் புதியவாய்ப் படைத்து அவற்றை மாபாரதத்தின் பிற்பருவங்களில் நுழைத்து விட்டாரென்று தெளிக.29 மேலே, `திவாகரம் என்னும் தமிழ்நிகண்டு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தொன்றென்று காட்டினே மாயினும், அதன் முதற்கண்ணதாகிய `தெய்வ்ப்பெயர்த் தொகுதியையும், இதன் இறுதிக்கண்ணதாகிய `பல்பொருட் கூட்டத்தொரு பெயர்த்தொகுதியை யும் ஆராய ஆராய அது கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதன்று என்பது புலனாகா நிற்கின்றது. பிற்பட்ட காலத்தனவாகிய பிருகற்பதி, காத்தியாயன, பராசர மிருதிகளையும்,30 அங்ஙனமே பிற்பட்டவனாகிய பிரமம், நாரதீயம், வாமநம்,வராகம், பாகவதம், வைணவம், பிரமவைவர்த்தம் முதலிய புராணங் களையுங் குறிப்பிட்டு, வடமொழித் தெய்வங்கள் சொற்கள் சொற்றொடர்கள் வழக்குகள் முதலியவற்றை மிகுதியாய்த் தழுவிக் கூறுதலின், `திவாகரநிகண்டைக் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகக் கொள்ளுதற்கு இடன் இல்லை. அதனால், அதன்கட் சொல்லப்பட்ட திருமாலின் பத்து அவதாரங்களைக் கி.பி.பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டன வாகக் கொள்ளுதற்கும் இடனில்லை யென்று உணர்க. பரசுராமரைத் திருமாலின் அவதாரமாகக் கட்டி விட்ட கதை கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதல் லாமையினாலே தான், அந்நூற்றாண்டிற்கு முற்பட்டிருந்த பொய்கை பேய் பூதம் என்னும் முதலாழ்வார் மூவரும்தம் பாடல்களில் எங்கும் பரசுராமரை எட்டுணையேனுங் குறிப்பிட்டிலர். தேவாரப் பாடல்களினுந் திருவாசகத்தினுங் கூடப் பரசுராமனைப் பற்றிய குறிப்பு சிறிதுங் காணப் படவில்லை. இவற்றுக்கு முற்பட்ட சங்கத்தமிழ் இலக்கியங் களிலுங் கண்ணன் பலராமனைக் குறிப்பிடும் பாட்டுக்களையே காண்கின்றனமன்றிப், பரசுராமனைக் குறிப்பிடும் பாட்டு ஒன்றையாயினுங் காண்கின்றேம் இல்லை. இவ்வாற்றாற், பரசுராமனைத் திருமாலின் பிறப்பாகக் கொண்ட காலம் கி.பி.பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலும், பின்னர்க் கண்ணன் இராமனைப்போல அவனையும் ஒரு தெய்வமாக வைத்து வணங்கத் துவங்கிய காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி முதலும் நிகழ்ந்தனவாதல் வேண்டும். இங்ஙனமே, கற்கியவதாரம் என்பதொன்றும் முதலாழ்வார் பாடல்களினாதல், அவர்கட்கும் முன்னிருந்தோர் பாட்டுகளி னாதல் தினைத் துணையுங் காணப்படாமையின், கற்கியவதாரம் என்ப தொன்று கொள்ளப்பட்டதும் அதுவும் வணங்கப்பட லாயினும் கி.பி. பத்தாம் நூற்றண்டு முதல் நிகழ்ந்த தாகுமென் றுணர்ந்துகொள்க. கொள்ளவே, வென்றி மாமழு ஏந்திமுன் மண்மிசை மன்னரை மூவெழுகாற் கொன்ற தேவநின் குரைகழல் தொழுவதோர் வகையெனக் கருள்புரியே (5, 3, 1) எனப் பரசுராமனையும், வையங் காக்குங் கடும்பரிமேற் கற்கியை நான்கண்டு கொண்டேன் (2, 5, 3) எனக் கற்கியவதாரத்தையம் ஒருகாலன்றி பலகாலும் பாடிவழுத்திய திருமங்கையாழ்வார் கி.பி.பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலன்றி அதற்குமுன் இருந்தவராதல் பெறப்பட மாட்டாதென்க. ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் பாட்டுக்க ளையும் யாம் கருத்தூன்றி ஆராய்ந்து பார்த்த அளவிற், பரசுராமனையுங் கற்கியையுந் திருமாலின் அவதாரங்களாகக் கொண்டு வணங்கிப் பாடிய பாட்டுக்கள் திருமங்கையாழ்வார் பாடல்களிலும் பெரியாழ்வார் சடகோப ஆழ்வார் பாடல்களிலும் மட்டுமே காணப்படுகின்றன. பெரியாழ்வார், மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் (4, 9, 9) எனப் பலராமன் பரசுராமன் இராமன் என்னும் மூவரையுங் கற்கியையுங் குறிப்பிட்டனர். சடகோபர், நின்றிலங்கு முடியினாய் இருபத்தோர்கால் அரசுகளைகட்ட வென்றிநீண் மழுவா (6, 2, 10) எனப் பரசுராமனையும், மீனா யாமையுமாய் நரசிங்கமுமாய்க் குறளாய்க் கான்ஓர் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னங்கார்வண்ணனே (5, 1, 10) எனக் கற்கியையுங் குறிப்பிட்டார். குலசேகர ஆழ்வார் முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் (9, 9) எனப் பரசுராமனைக் குறிப்பிட்டரேனும், அவனைத் திருமாலின் பிறப்பாகவுங் கொண்டிலர், அவனை வணங்கியும் பாடிற்றிலார்; இராமன், பரசுராமனது வில்லினை வாங்கிக்கொண்டு அவனது தவத்தை அழித்தமை மட்டுமே வான்மீகியிராமாயணத்தில் உள்ளவாறே எடுத்து மொழிந்திடுகின்றார்; இவ்வாற்றாற், குலசேரகப்பெருமாள் காலத்திற் பரசுராமன் திருமாலின் அவதாரமாக வைத்து வணங்கப்படவில்லையென்பதூஉம், ஆகவே அவனைத் திருமாலின் பிறப்பாகக் கொண்டு வழுத்திய திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், சடகோப ஆழ்வார் முதலிய மூவர்க்குங் குலசேகர ஆழ்வார் முற்பட்டவரா ரென்பதூஉம் உணரற்பாலனவாமென்க. அடிக்குறிப்புகள் 1. The inscription of Tiruvallam, No. 76 of 1889. 2. Dr. Dubreuil’s The Pallavas. p.66. 3. Dr. R.G. Bhandarkar’s Early History of Dekkan Ist edition. p.44 4. Ibid, P. 50. 5. கோயிற்பதிகம். 4. 6. See ‘South Indian Shrines’ By Mr. P.V. Jagadisa Ayyar, pp. 86, 95. 7. தொல்காப்பியம், சொல். 42. 8. Dr. G.T. Dubreuil’s The Pallavas. p. 79. 9. No. 158 of 1912. 10. The Pallavas, pp. 84. 11. சிலப்பதிகாரம், கடலாடுகாதை, 54 - 55. 12. மணிமேகலை, மலர்வனப்புக்க காதை, 123 - 124. 13. “It may be remarked here that the sacred literature of the Saivas in Tamil poetry was nearly thrice that of the Vaishnavas, the hymns of Sambandar alone being nearly as voluminous as all the works of the twelve Alvars put together. All these prove the greater popularity of Saivaism among the Tamil people of South India” Tamil Studies p. 218. 14. The Devera hymns which constitute a more voluminous collection of the non -Brahman Saivas are not so much valued by the Smartha Brahmans of the Tamil districts. ‘The Saiva creed...does not appear to have paid much attention to Sastric karma, but taking unsullied devotion to Siva as its basis, it received into its fold all classes of people without any distinction of caste. This catholicity of the Saiva faith rendered it not very popular with the orthodox Brahmans. ‘This disparity in the estimation of the two Tamil Works of exctly similar nature was probably due to the anxiety of the early Acharyas to make the religion of Vishnu more popular among the Dravidians, most of whom were followers of Siva.” Ibid, p. 292. 15. சூடாமணி நிகண்டு 12 ஆந்தொகுதி, 56. 16. See V.A. Smith’s ‘The Early History of India’, pp. 21 -23. 17. See H.H. Wilson’s Puranas, p.120. 18. See H.H. Wilson’s Puranas and R.C.Dutt’s ‘A History of Civilisation in Ancient India’, Vol. II. pp.203 -211. 19. See Dr. A.A. Macdonell’s History of Sanscrit Literature’ p.80. 20. விஷ்ணு சிவபிரானை வேண்டிய இவ்வுரை வடமொழியிற் பின் வருமாறு உளது; தைவதைர் மத்யமாநேது யத்பூர்வம் ஸமுபதிதம் தத்த்வதீயம் ஸீரத்தேஷ்ட ஸீராநம் அகத்தோ ஹியத், அக்ரபூஜாம் இஹ தித்வா க்ரஹாநேதம் விஷம்ப்ரபோ. 23 - 24. 21. See Lassen’s Indian Antiquities, Vol. I. Second edition, pp. 675, 685, 708, 756, 861, 871, 922. 22. விஷ்ணுவின் கரிய மயிர் ஒன்று கண்ணனாகவும், வெளிய மயிர் ஒன்று பலராமனாகவும் பிறந்தனவென்று விஷ்ணு புராணமும் (5, 1, 58) மகாபாரதம் ஆதிபருவம் (7306) புகலுகின்றன. 23. See ‘Rigveda Brahmanas’ translated by Dr. A.B. Keith, pp.25-26. 24. சதபத பிராமணம், 14, 1, 1, 1 - 15. 25. அதுவே 1, 7, 4, 5 - 9; 1, 7, 3, 1 - 10. 26. Aufrecht has Proved that even the Aitareya Siva is the great god in his form of Rudra. Just as he is in the Satapatha, the later books of the Vajasaneyi samhita, and portions of the Atharvaveda” - The Aitareya Aranyaka, by Dr. A.B.Keith. p.33. 27. மகாபாரதம், சபாபர்வம், 626. 28. See Dr. John Muir’s ‘Original Sanscrit Texts’ Vol. I. p. 457, Foot note 242. 29. Ibid. 447 30. யாக்கிய வல்கியமிருதி கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலும், பிருகற்பதிமிருதி கி.பி.ஏழாம் நூற்றாண்டிலும், பராசரமிருதி ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னும் இயற்றப்பட்டனவாகும்; See Introduction, p.110. to ‘The Lows of Manu’, English translation by Dr. G. Buhler; Dr. B.K.Sarkar’s Hidnu Sociology Bk. II. Part, I pp. 9-10 :R.C. Dutt’s Ancient India, Vol. II, pp.196 -202. 20. பன்னீராழ்வார்களின் காலவரையறை திருமங்கையாழ்வார் காலத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியின் முடிபாக ஆழ்வார்கள் இருந்த காலவெல்லைகள் ஐயுறவுக்கு இடனின்றிப் பின்வருமாறு வரைறுக்கப்படும்: பொய்கை, பேய், பூதம் என்னும் முதலாழ்வார் மூவரும் சைவசமயாசிரியரிற் பிற்காலத்தவரான சுந்தரமூர்த்தி நாயனார்க்கு முன்னும், திருஞானசம்பந்தப் பெருமானுக்குப் பின்னும் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந் தோராவர்; இம் மூவருட் பொய்கையாழ்வாரும் பேயாழ்வாரும் ஒருகாலத்தின ரென்பதும் பூதத்தாழ்வார் அவ்விருவர்க்கும் சிறிது பிற்பட்டவரென்பதும் அறியற் பாலன. பொய்கையாழ்வாரும் பேயாழ்வாரும் சிவபெருமானை யிகழாமையோடு, சிவத்தையுந் திருமாலையும் ஓருரு வினராக வைத்து வழிபட்டிருக் கின்றனர். பூதத்தாழ் வாரோ அவ்விருவரையும் அங்ஙனம் ஓருருவிற்கொண்டு வணங்காமை யோடு, 12, 17, 63, 69 ஆம் பாட்டுக்களிற் சிவபிரானை இகழ்ந்தும் பாடியிருக் கின்றார்; இதனால், இவ்வாழ்வார் காலத்தில் வைணவம் சைவத்தின் வேறாய்ப் பிரிந்து சிறிது தலையெடுக்க லாயிற்றென்பது புலனாம். என்றாலும், பூதத்தாழ்வார் இருந்த கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இராமாயணகதையும், நடுவரையில் இராமனைப் பெரிது வணங்கும் வணக்கமும், பரசுராமன் கற்கி என்பாரைத் திருமாலன் பிறப்பாகவைத்து வழிபடுதலும் உண்டாகவில்லை. இனி, இம் முதலாழ்வார் மூவர்க்குப்பின் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிற் சுந்தரமூர்த்திநாயனார் திருக்கைலை சென்ற சில ஆண்டுகளுக்குப்பின் குலசேர ஆழ்வார் இருந்தாராகற்பாலார். இவர் சேரர்குடியைச் சேர்ந்த ஒரு சிற்றரசர்; கொங்குநாட்டிலுள்ள கொல்லிக் கூற்றத்தையும், `கோழி எனப்படுவதாகிய உறையூரையும் ஆண்டவரென்பது, கொல்லிகாவலன் மாலடி முடிமேற் கோலமாங் குலசேகரன் (7, 11) எனவும், கோழியர்கோன் குடைக் குலசேகரன் (9, 11) எனவும் இவர் தம்மைத்தாம் பாடிய பதிகங்களின் ஈற்றிற் சொல்லிக்கொள்ளுமாற்றால் விளங்காநிற்கும். இவர் தம்முடைய பாட்டுக்களில் இராமனை மிகுத்துப் பாடுதலோடு, இராமாயண கதையையுந் தமது பத்தாந்திருமொழியிற் சுருக்கமாக முழுதுமெடுத்துக் கூறியிருக்கின்றார். இராமன் நாடுதுறந்து காடுஏக அதனைப் பொறாது தசரதன் புலம்பியதாக இவர் பாடியிருக்கும் ஒன்பதாந் திருமொழி கற்பார் உள்ளத்தைக் கரைக்குந் தகையதாயிருக்கின்றது. இவர் இராமனிடத்து அளவுகடந்த அன்புடையரென்பது இவர்தம் பாடல்களால் நன்கறியக் கிடத்தலின், முதன்முதல் இவரது முயற்சியினாலேயே இராமாயணகதை இத்தென்றமிழ்நாட்டிற் பரவ, இராமனுந் திருமாலின் அவதாரமாய்த் தெய்வமாக வைத்து வணங்கப்படு வானாயினன் என்க. இவரது காலத்தில், `துதம், `தும்புரு, `நாரதன், `நரகாந்தகன், `உருப்பசி, `மேநகை, `தாமோதரன், `இராகவன், `மனிசர், முதலான வடசொற்களும், `தயரதன், `மைதிலி, `பரதன்,`தாசரதீ, `அயோத்தி, `சீராமா, `காகுத்தன், `கைகேசி, `கௌசலை, `கேகயர், `சுமந்திரன், `சுமத்திரை, `தாடகை, `குகன், `விராதை, `கரன், `தூடணன், `வைதேகி, `இலக்குமன் முதலான இராமாயணகதைப் பெயர்களும் இவர் தம் பாடல்களிற் புகுந்து, அவ் வழியே தமிழிலும் வழங்கலாயின. இவர் சிவபெருமானை மிக இகழ்ந் திலரேனும், இந்திரன் பிரமன் முதலான தேவர்களோடு ஒப்பவே அவரை வைத்திருக்கின்றார். அதனால் இவரது காலத்தில் இராமாயண வழிவந்த புதிய வைணவம் கிளர்ச்சிபெற்றுப் பரவலானமை புலனாம். பரசுராமனாவது கற்கியாவது திருமாலின் அவதாரங்களாக வைத்து இவரால் வழுத்தப்படாமையால், இவ் விருவகை யவதாரங்களும் இவரது காலத்துங்கூட வைணவத்தில் நுழையவில்லை யென்க. இனி, குலசேகரப்பெருமாள் தாம் இயற்றிய தேட்டருந் திறல் என்னும் பதிகத்தின் இரண்டாஞ்செய்யுளில், ஆடிப் பாடி அரங்கவோ என்றழைக்குந் தொண்டரடிப் பொடி எனத் திருவரங்கப் பெருமாள்கோயிலிலில் திருத்தொண்டு செய்துகொண்டிருந்த தொண்டரடிப் பொடியாழ்வாரைக் குறிப்பிட்டிருத்தலிற், குலசேகர ஆழ்வாருந் தொண்டரடிப் பொடி யாழ்வாரும் ஒரேகாலத்தினரென்பது பெற்றாம். தொண்டரடிப்பொடியாழ்வார் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து பத்தாம் நூற்றாண்டின் துவக்கம்வரையில் இருந்தாராகற்பாலார். இவர் புலையற மாகிநின்ற புத்தொடு சமணமெல்லாம் என்று இறந்த காலச்சொல்லாற் கூறுதலிற் புத்த சமண மதங்களின் வலி சைவசமய ஆசிரியரால் ஒடுங்கியபின் இவர் இருந்தமை பெறப்படும். இவர் பாடிய `திருப்பள்ளி யெழுச்சி `புத்த சமயங் கிளர்ச்சிபெற்ற ».ã.மூன்wh« நூற்றாண்டிலிருந்த மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த `திருப்பள்ளி யெழுச்சியைப் பார்த்தே பாடப்பட்டதாகு மென்பதூஉம், இவர் திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்த தேவாரப் பாக்களையும் நன்கு பயின்று அவற்றைப்போற் சில பாடினாரரென்பதூஉம் விளக்கிக் காட்டியிருக்கின்றேம். தொண்டரடிப் பொடியாழ்வார் சிவபெருமானை யாண்டும் இகழ்ந்திலர். இனித், திருமழிசையாழ்வார் பாடல்களிற் புதிது புகுந்த வடசொற்களேயன்றி, இழிசினர் வழக்குஞ் சொற்களும் ஏச்சுரைகளுஞ் சிவபிரானைப் பழித்தலும் நிரம்பி யிருத்தலின் இவர் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தாராவர். இதனை முன்னரே விளக்கிப் போந்தாம். திருப்பாணாழ் வாரும் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்த வராகவே காணப்படு கின்றார். இப்பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்த திருமழிசை யாழ்வார் திருப்பாண் ஆழ்வார் பாடல்களினுங் கூடப் பரசுராமன், கற்கி என்பவர்மேற் பாடப்பட்ட செய்யுட்கள் காணப்படுகின்றில. இனித், திருமங்கையாழ்வாரது சிறப்புக்காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தை யடுத்துவந்த தொன்றாகும் என்பதனைப் பலவாற்றானும் ஆராய்ந்து முன்னரே விளக்கினாம். தென்னாடு வடநாடுகளில் உள்ள திருமால் திருப்பதிகடோறுஞ் சென்று ஆங்காங்கு இவர் திருப்பதிகங்கள் பாடியிருத்தலாலும், இவருடைய பாட்டுக்களே ஏனையாழ் வார்களின் பாட்டுக்களைவிட மிகுதியாயிருத்தலாலும் இவர் நீண்டகாலம் உயிரோடிருந்த வராகக் காணப்படுகின்றார். இவர் திருவரங்கப்பெருமாள் கோயிற்குச் சென்ற போது, தொண்டரடிப்பொடி யாழ்வார் அங்கே திருத்தொண்டு செய்துகொண்டிருத்தலைக் கண்டு அவரை வணங்கிச்சென்றார் என்று வைணவப்புலவர்கள் கூறும் உரை உண்மையாக இருக்கலாம். இவர் தொண்டரடிப் பொடியைக் கண்ட நாளில் அவர்ஆண்டில் மிக முதியராயும், இவர் இளையராயும் இருந்தாராகல் வேண்டும். இவர் இராமாயண கதைவழிப் புகுந்த வடசொற்களையும் பெயர்களையும் தம்முடைய செய்யுட்களில் மிக எடுத்தாண்டனராயினும், தமது காலத்தில் வழங்கத் துவங்கிய கொச்சைத் தமிழ்ச்சொற்கள் தம்முடைய பாடல்களில் விரவ இடங்கொடுத்திலா. `மனிசர் `பொங்கத்தம் பொங்கோ முதலான இழிசினர் வழக்குச் சொற்கள் சில, செந்தமிழ் வளந்துறுமி விளங்கும் இவர்தஞ் செய்யுட்களினும் ஒரோவழி நுழைந்துவிட்டமையினை உற்றுநோக்குங்கால், இவர் ஆண்டில் முதிர்ந்த காலத்திற் கொச்சைத் தமிழ்ச் சொற்கள் மிக வழங்கலாயினவென்பது புலனாம். இவர் சிவபெருமானை ஒரோவழி இகழ்ந் துரைப்பினும், பொய்கை யாழ்வார் பேயாழ்வாரைப் போல் வரவர மெய்யறிவு விளங்கப்பெற்றுச், சிவமுந் திருமாலும் ஓருருவினராய் விளங்கு மாற்றைப் பலகாற் பாடியிருத்தலை மேலே எடுத்துக் காட்டினாம். இனிப், பெரியாழ்வாரும் அவர் தம் புதல்வியார் சூடிக்கொடுத்த நாச்சியாரும் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தாராதலை மேலே விளக்கிக் காட்டினாம். இவர்களுடைய பாடல் களில் வடசொற்களுங் கொச்சைத் தமிழ்ச் சொற்களும் ஏராளமாய் விரவின. திருமங்கையாழ்வார் தம் பாட்டுக்களிற் போலப் பெரியாழ்வார் தம் பாட்டுக்களிலும் பரசுராமனுங் கற்கியுந் திருமாலின் பிறப்புக்களாகக் கொண்டு வழுத்தப்படுதலின், அவரும் இவரும் இவர் தம் புதல்வியாரு மெல்லாம் சிறிதேறக்குறைய ஒரே காலத்திலிருந்தவராவர் எனலாம். பெரியாழ்வார் சிவபெருமானை ஒரொவழி இழித்துப்பேசுவர் இவர் தம் புதல்வியார் சூடிக்கொடுத்த நாச்சியாரோ மாயோன்மேல் வைத்த பெருங்காதலால் அவனை யன்றிப் பிறிதொன்றனை நினைக்க மாட்டாராயினர்; இது காதலிற் சிறந்த பெண்பாலார்க்கு இயற்கையாதலை இறையனாரகப் பொருளில் தானே யவளே என்னுஞ் சூத்திரத்திற்கு ஆசிரியர் நக்கீரனார் உரைத்த விழுமிய உரையிற் காண்க: ஆதலால், இப் பெண்மணிர் சிவபிரானை நினைந்து இகழ்தற்கு இடம் பெற்றிலரென்க. இவர் `திருவாசகத்தைப் பயின்றவ ரென்பதற்குத் திருமொழியில் இவர் பாடிய, வானிடை வாழும்அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்தஅவி கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து கடப்பதும் மோப்பதுஞ் செய்வதொப்ப ஊனிடை யாழிசங் குத்தமர்க் கென்றுன்னித் தெழுந்தஎன் தடமுலைகள் மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன்கண்டாய் மன்மதனே என்னுஞ் செய்யுளைத், திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பெருமான் அருளிச்செய்த, உங்கையிற் பிள்ளை யுனக்கே அடைக்கலமென்று அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போங்கேள் எங்கொங்கை நின்அன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை யுனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க கங்குல்பகல் எங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கு இப்பரிசே எமக்குஎங்கோன் நல்குதியேல் எங்கு எழில்என் ஞாயிறுஎமக்குஏலோ ரெம்பாவாய் (19) என்னுந் `திருவெம்பாவை செய்யுளோடுஒப்பிடடு நோக்குக. நாச்சியாரின் செய்யுள் நடையானது பிற்காலத்தார் செய்யுள் நடையை யொத்திருத்தலும், அடிகளின் செய்யுள்நடையோ பண்டையோர் தம் செய்யுள் நடையை ஒத்திருத்தலும், தமிழறிவு மிக்கார்க்குத் தெற்றென விளங்காநிற்கும். இன்னும் இங்ஙனமே நாச்சியார் பாடிய குயிற்பத்தில் உள்ள, சார்ங்கம் வளைய வலிக்குந் தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன் நாங்கள் எம்மிலிருந்த தொட்டிய கச்சங்கம் நானும்அவனும் அறிதும் தேங்கனி மாம்பொழிற் செந்தமிழ் கோதுஞ் சிறுகுயில லேதிருமாலை ஆங்கு விரைந்துஒல்லை கூகிற்றி யாகில் அவனை நான் செய்வன காணே என்னுஞ் செய்யுளோடு,அடிகள் அருளிச்செய்த, தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேஇது கேள்நீ வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை யாட்கொண்ட வள்ளல் ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது ஆய வொருத்தன் மான்பழித் தாண்டமென் நோக்கி மணாளனை நீவரக் கூவாய் என்னுஞ் செய்யுளை ஒப்பிட்டுநோக்குக.முன்னையது பின்னைநாட் டமிழ்நடையும், பின்னையது சுவைமுதிர்ந்த முன்னைநாட் செந்தமிழ் நடையும் வாய்ந்து தம்மிலே வேற்றுமை காட்டி நிற்றல் காண்க. இவ்வாற்றால், `திருவாசகம் காலத்தால் மிக முற்பட்ட செந்தமிழ்வளங் கெழுமிய தாதலும், நாச்சியார் `திருமொழி வடசொற் கொச்சைத் தமிழ்ச்சொல் விரவிப் பிற்பட்ட காலத் தமிழ் நடையினதாதலும் செந்தமிழறிவு வாய்த்தார்க் கெல்லாம் எளிதில் விளங்காநிற்கும். இவரும் இவர் தந்தையார் பெரியாழ்வாரும் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்திருலிருந்துஅதன் நடுக்காலம் வரையில் இருந்தாராகல் வேண்டும். இனி, நம்மாழ்வார் என்னும் சடகோபர் மேற்காட்டிய ஆழ்வார்கள் எல்லார்க்கும் பிற்பட்டவராய்க் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் ஈற்றில் இருந்தவராவர். இஃது எற்றாற் பெறுதுமெனின், இவர்க்கு முந்திய ஆழ்வார்கள் பாடலிற் காணப்படாத, கொச்சைத் தமிழ்ச்சொற்களும், வட சொற்றிரிபுகளும், இலக்கண வழுவான தமிழ்ச்சொற்களும் இவர் தம் பாடல்களில் மிகப் புகுந்திருத்தலால் இவர் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் ஈற்றிலாதல், அல்லததற்குச் சிறிது பின்னேயாதல் இருந்தாராகல் வேண்டுமென மேலே விளக்கிக் காட்டினாம். இவர் பாடல்களிற் காணப்படும். `கீர்த்தித்து `சுண்டாயம் `வெளுமை, `சம்மதித்து, `பிராக்கள், `இன்றிக்கே முதலான சொற்கள் மேலே காட்டிய ஆழ்வார் எவர் பாடலினுங் காணப்படா. இச்சொற்களுள்ளும் இறுதிக் கண்ணதாகிய `இன்றிக்கே (5,2,11) என்னும் இலக்கணம் வழுவானசொல், நாலாயிரப் பிரபந்தச் செய்யுட்களுக்கு வடசொற் கலந்த உரையெழுதிய பெரியவச்சான் பிள்ளை, `குருபரம்பராப்பிரபாவம் எழுதிய பின்பழகிய பெருமாள்ஜீயர் முதலாயினார் உரைகளில் மட்டுமே காணப்படுகின்றது. அதனால், நம்மாழ்வார் இவ் வுரைகாரர்களின் காலத்தை யடுத்துச் சிறிது முன்னே யிருந்தாராதல் வேண்டும். சடகோபர் காலத்து வைணவர் குழுவிலேதான் பிராக்கள் `இன்றிக்கே முதலான வழுச்சொற்கள் வழங்கத் துவங்கினவாதல் வேண்டும். ஏனென்றால், கொச்சைத் தமிழ்ச்சொற்களை ஏராளமாய்த் தம் செய்யுட்களிற் புகுத்திப் பாடிய பெரியாழ்வாரும் அவர் தம் புதல்வியார் சூடிக்கொடுத்த நாச்சியாரும், சடகோபர் காலத்திலாதல் அல்லதவர்க்குப் பின்னராதல் இருந்தனராயின், இச் சொற்களைத் தாமும் தம் பாடல்களில் எடுத்தாளாது இராராகலினென்க. எனவே, நம்மாழ்வார் மேலே காட்டிய ஆழ்வார்கள் எல்லார்க்கும் பின்னிருந் தவரென்பதே திண்ணமாம். வைணவமதம் பெரிதுங் கிளர்ச்சி பெற்றதும், அதனால் திருமால் கோயில்கள் ஆங்காங்கு அமைக்கப்பட்ட லானதும், வைணவர்கள் சிவபெருமானை மிக இழித்துப் பேசலானத மெல்லாம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் ஈற்றிலிருந்து நிகழ்ந்தமை யினாலேதான், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார் முதலியோர் தம் பாடல்கள் பெற்ற திருமால் திருக்கோயில்கள் பலவாயும், ஏனையாழ் வார்களின் பாடல்கள் பெற்ற திருமால் திருக்கோயில்கள் சிலவாயுங் காணப்படுகின்றன. எனவே, இவ் வாழ்வார்கள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் ஈற்றிலிருந்து பதினோராம் நூற்றாண்டின் துவக்கம் வரையில் இருந்தமை மறுக்கப்படாத உண்மை யாமென் றுணர்.க இனிப், பொய்கையாழ்வார் ஏனையாழ்வார்கட் கெல்லாம் முற்பட்டவ ரென்பது எல்லார்க்கும் உடம்பாடாகலானும், சைவ சமயாசிரியரும் பிறருமெல்லாம் `விருத்தப்பாட்டு களினாலேயே சிவபிரானை மிகுதியாய்ப் பாடியிருக்கப், பொய்கையார் பழைய தமிழ்யாப்பவாகிய `வெண்பாவினா லேயே திருமாலைப் பாடியிருத்தலானும், இவர் சங்கத்தமிழ் நூல்களுட் சேர்ந்த `களவழி `இன்னிலை என்னும் நூல்களை வெண்பாவில் இயற்றிய பொய்கை யாரே யாவரென ஒருசாராரும், சோழன் கோச்ங்கண்ணானொடு பொருது சேரமான் கணைக்காலிரும் பொறை தோற்று அவனாற் சிறையிடப்பட்டவழிக் களவழி என்னும் நூலைப் பாடி அச் சேரமானைச் சிறைவிடுவிடுத்த பொய்கையார் என்னும் நல்லிசைப் புலவருங் கடைச்சங்க காலத்தவரே யாயினும் அவர் `இன்னிலை பாடிய பொய்கையாரின் வேறேயாவரெனப் பிறிதொரு சாராரும், பொய்கையாழ்வார் கடைச்சங்க காலத்திருந்த பொய்கையார் அல்லரென மற்றை யொரு சாராரும் புகலாநிற்பர். இம் முத்திறத்தார் கோட் பாடுகளுள் உண்மையானதூஉம் ஆகாததூஉம் ஆராய்ந்து காட்டுதல் இன்றியமையாததா யிருத்தலின், அவற்றையும் சிறிது ஈண்டு ஆராய்வாம் வெண்பா யாப்பினாற் பாடியிருத்தல் ஒன்றே கொண்டு பொய்கையாழ்வாரைச் சங்ககாலத்தவ ரென்றல் அமையாது. பழந்தமிழ்ப் பாக்களாகிய அகவல், கலி, வஞ்சி என்பன வரவர வழக்கு வீழ்ந்தாற்போல, வெண்பா இன்றுகாறும் வழக்கு வீழ்ந்த தின்று. அகவற்பா இசையோடு கலந்து விட்டுவிட்டு ஓதுதற்கு இசையாதாய் உரைநடைபோல ஓர் ஓசையாய் நீண்டு செல்லுதலிற், பல்வகை இசைகளுடன் விட்டுவிட்டு இனிமையாய் ஓதுதற்கு இசைந்த விருத்தப்பாட்டுத் தோன்றிப்பெரிது வழங்கப் புகுந்த, காலந்தொட்டு அது வரவர வழக்கு வீழ்ந்தது. கலிப்பாட்டோ எல்லாரும் ஓதுதற்கு ஆகாப் பல்வகை இசைதழுவித் தரவு, தாழிசை, தனிச்சொல், கரிதகம், கொச்சகம்,அராகம், அம்போதரங்கம் முதற்பல உறுப்புக் களையுடைத்தா யிருந் தமையின், அதுவும் வழக்கு வீழ்ந்தது. வஞ்சி பாட்டோ கடைச் சங்கத்தார் காலத்திலேயே பயிலாது வீழ்ந்தது. மற்று, வெண்பா யாப்போ விருத்தப் பாட்டுப்போல இடைவிட்டு விட்டு இசையோடு ஓதுதற்கு எளிதாய் நிற்றலின், அஃது இன்றுகாறும் வழக்கு விழாது வழங்கா நிற்கின்றது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் ஈற்றிற் செய்யப்பட்டதாகிய பாரத வெண்பாவும், கி.பி. பன்னிராண்டாம் நூற்றாண்டின் இடையில், இயற்றப்பட்ட நளவெண்பாவும், பன்னிரண்டு முதற் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் வெண்பா யாப்பில் இயற்றப்பட்டு வந்த `மூதுரை `சிவஞானபோதம் வினா வெண்பா `சிவசிவவெண்பா `சோமமேசர் முதுமொழி வெண்பா முதலான அறநூல்கள் அறிவு நூல்களுமே அதற்குச் சான்றாம். ஆதலால்,வெண்பா யாப்பில் திருமாலைப் பாடி யிருத்தல் ஒன்றேகொண்டு பொய்கை யாழ்வாரைக் கடைச்சங்க காலத்தவராக வைத்துரைத்தல் பொருந்தாதெனவிடுக்க. மேலும், பொய்கை பேய்பூதம் என்னும் முதலாழ்வார் மூவரின் வெண்பாயாப்பின் இயல்பினையும், சங்க காலத்துப் பொய்கையார் இயற்றிய `களவழி `இன்னிலை என்னும் நூல்களிலுள்ள வெண்பாயாப்பின் இயல்பினையும் புடை படவைத்து ஆராய்ந்து பார்ப்பின், ஆழ்வார்களது வெண்யாப்புப் பிற்பட்ட கால அமைப்பினையும், `களவழி `இன்னிலையின் வெண்பா யாப்பு முற்பட்டகால அமைப்பினையும் பெற்றிருத்தல் இனிது விளங்காநிற்கும். யாங்ஙனமெனிற் காட்டுதும்; `களவழியில் வட சொற்களெனக் காணப்படுவன: முரசம், பூ (நிலம்), பவளம், குஞ்சரம், கும்பம், கார்த்திகை, மதி,திசை, மதம், கேடகம், உவமன், தாலம் எனப் பன்னிரண்டாகும். இவற்றுள் முரசம், குஞ்சரம், திசை, உவமன் என்பன மிகப் பழைய தொல்காப்பியத்திற் காணப்படுதலின், இவை தமிழிலிருந்தே வடமொழிக்கட் சென்று வழங்கினவா யிருக்கலாமேனும், இப்போது இவற்றையும், பவளம், மதி முதலியவற்றையும் வட சொல்லெனவே கொள்வார் உளராகலின் இவற்றையும் வட சொல்லெனவே வைத்து எண்ணினாம். ஆகவே களவழி நாற்பத்தொரு செய்யுட்களிலுங் காணப்படும் வடசொற்கள் மொத்தம் பன்னிரண்டேயாம். இனி, `இன்னிலையில் வட சொற்களெனக் காணப்படுவனவும், பித்தர், நரகு, சீலன், முனிவன், புவி, காமம், கணம், மாரன், அன்னம், குணம், வீரர், குரவர், எனப் பன்னிரண்டேயாம். இவற்றுள், முனிவன், காமம், அன்னம், குரவர் என்னுஞ் சொற்கள் தமிழிலிருந்து வடமொழிக்கட் சென்று வழங்கினவாயிருக்கலாமேனும, அவற்றையும் வடசொற்களெனவே இஞ்ஞான்றுள்ளார் கூறுதலின் அந் நான்கையும் உடன் சேர்த்து எண்ணினாம். ஆகவே, இன்னிலை நாற்பத்தைந்து செய்யுட்களினும் விரவின வடசொற்களும் மொத்தம் பன்னிரண்டேயாம். இவ்வாற்றாற், களவழி, இன்னிலை என்னும் நூல்கள் ஆக்கப்பட்ட காலத்தில் தமிழ்மொழிக் கண் வடசொற்கள் மிகச் சிறிதே கலந்தமையும், அங்ஙனங் கலந்த அச் சில வடசொற்கடாமுந் தமிழ்ச்சொற் களோடு ஒத்த மெல்லோசை யுடைமையும் நன்கு புலனாம். இனிப், பொய்கையாழ்வார் இயற்றிய `முதற்றிரு வருந்தாதி நூறு செய்யுட்களிலும் விரவிய வடசொற்களோ மொத்தம் அறுபத்துமூன்று; அவை: அங்கம், அசுரர், அந்தரம், அமரர், அயன், அரி, ஆதி, இரணியன், உத்தமன், கங்கை, கஞ்சன், கணம், கதி, கருமம், குணம், கேசவன், சரண்,சார்ங்கம், சிங்காசனம், சிந்தியாது சிந்தை, சிரம், சுராசுரர், சோதி, ஞானம் தநதிரம், தரணி தருமன், தனம், தாமம், திசை, தூபம், நமன், நமோநாரணா, நரகு, நாமம், நாரணன், நிசாசரர், நியமம், நீதி , நேமி, படம், பலி, பாதம், பாரசி, பாவம், புண்ணியம், புந்தி, புவி, பூதம், பூமி, போகம், மதம், மந்திரம், மரகதம், மாருதம், மாவலி, மூர்த்தி, வந்திப்பார், வரம், வராகம், விடம் என்பனவாகும். இவற்றுள் பெரும்பாலான கடைச்சங்க காலத்து நல்லிசைப் புலவர் இயற்றிய செய்யுட்களிற் காணப்படாமையோடு, திருமான் மேற் பாடிய பரிபாடற் செய்யுட்களில் அவை கலத்தற்கு உரியனவாயிருந்தும், அவற்றின் கண்ணும் அவை கலந்தில. கடைச்சங்ககாலத்து இறுதியில், அஃதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஈற்றில் ஆக்கப்பட்ட `சிலப்பதி காரம், `மணிமேகலை, என்பவற்றுள் முன்னையினும் சிறிது கூட வடசொற்கள் கலந்தனவெனும் அவற்றின்கண்ணும், பொய்கையாழ்வாரது அந்தாதியிற் காணப்படும் வடசொற் களிற் பல காணப்படுகின்றில. ஆகவே,கடைச்சங்க காலத்துப் பொய்கையா ரியற்றிய களவழி, `இன்னிலை என்ளபவற்றின் வடசொற் கலப்பு மிகச் சிறிதாயும் பொய்கையாழ்வா ரியற்றிய `அந்தாதியில் அஃது அதனளவிற்கு மிகக் பெரிதாயும், அங்ஙனங் கலந்த அவ்வட சொற்கடாமுங் கடைச்சங்க நூல்களில் வழங்காதனவாயும் இருத்தலின், இப் பெயர்பூண்ட இருவரது வெண்பாயாப்பும் வெவ்வேறு காலத்தில் இயற்றப் பட்டனவாதல், வெள்ளிடை மலைபோல் விளங்காநிற்கும். எனவே, களவழி, இன்னிலை என்னும் நூல்களையியற்றிய பொய்கையார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவராவரென்பதூஉம், `முதற்றிரு வந்தாதி பாடிய பொய்கையாழ்வார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவராரென்பதூஉந் தாமே பெறப்படும். இனிக், களவழி, இன்னிலை என்னும் நூல்களிலுள்ள வெண்பாயாப்பின் இலக்கணத்தையும், பொய்கையாழ் வாரது அந்தாதியிலுள்ள வெண்பாயாப்பின் இலக்கணத் தையும் ஒப்பிட்டு நோக்கும்வழி, முன்னைய இரண்டும் அவ் விலக்கணத்தில் ஒத்துநிற்றலும், பின்னையது அதனின் வேறாய் நிற்றலும் புலனாம். யாங்ஙனமெனிற் காட்டுதும்: ஆசிரியர் தொல்காப்பியனார், வெண்பாயாப்பிற்கு அடிவரை யறை செய்கின்றுழி, நெடு வெண்பாட்டு முந்நால் அடித்தே குறு வெண்பாட்டிற்கு அளவு எழுசீரே1 என்னுஞ் சூத்திரத்தால் `நெடுவெண்பாப் பன்னீரடியின் மிக்கு வராதெனவும், குறுவெண்பா எழுசீரான் இயன்ற இரண்டடியிற் குறைந்து வராதெனவும் வரையறுத்துரைத்தார். உரைப்பவே, நெடுவெண்பாவின் பன்னீரடியிற் பாதியாவது `அளவியல் வெண்பாஎனப் பெயர் பெறுதலும், அது நாலடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் பெற்றுவருதலும், குறுவெண்பா மூன்றடியின் மிக்குவராமையும் ஆன்றோர் இலக்கியத்தான் உணரக் கிடக்குமென அச் சூத்திரத்திற்குப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரையுரைத்தார். எனவே, தொல்காப்பிய இலக்கணம்பற்றி எழுந்த கடைச்சங்கத்தார் நூல்களின் வெண்பாக்களும் இவ் விலக்கணமே பற்றி ஆக்கப்பட்டனவென்ப தூஉம் பெறப்படும். அற்றேல், மேற்காட்டிய `களவழி, `இன்னிலை என்னும் நூல்கள் அவ் விலக்கணம் பற்றி வந்தனவோவேனிற் காட்டுதும். களவழியில் நாண்ஞாயிறுற்ற செருவிற்கு என்பதும், ஞாட்பினுள் எஞ்சிய என்பதும், யானைமேல் யானை என்பதும், கழுமிய ஞாட்பினுள் என்பதும், ஓவாக்கணை பாய என்பதும், பரும இனமா என்பதும், ஆர்ப்பெழுந்த என்பதும், இணைவேல் என்பதும், ஒற்றிவயவர் என்பதும், திண்டோண் மறவர்என்பதும், எவ்வாயும் ஓடி என்பதும், பொய்கையுடைந்து என்பதும், இணரிய ஞாட்பினுள் என்பதும், செவ்வரைச்சென்னி என்பதும், ஓஒஉவமன் என்பதும், வேனிறத்திங்க என்பதும் ஐந்தடிகளான் வந்த அளவியல் வெண்பாவாகும்; நானாற்றிசையும்என்பதும், இருநிலஞ்சேர்ந்தஎன்பதும் ஆறடிகளான் வந்த அளவியல் வெண்பாவாகும்; இங்ஙனம் ஐந்தடியான் வந்தன பதினாறும், ஆறடியான் வந்தன இரண்டும்போக எஞ்சிய இருபத்துமூன்றும் நான்கடியான் வந்த அளவியல் வெண்பாக்க ளாகும்; இந் நான்கடியான் வந்தவற்றுள்ளும் இரண்டாம் அடியில் தனிச் சொல்லின்றி, நான்கடியும் ஓர்எதுகைப்பட நின்றவை 3, 9, 30, 39 என்னும் நான்குமாகும்; ஏனைப் பத்தொன்பது வெண்பாக்களும் இரண்டாம் அடியிற் றனிச்சொற்பெற்று இருவேறு எதுகைகளானும், மூவேறு எதுகைகளானும் வந்தனவாகும். இனி, `இன்னிலையுள்ளுங் காமம்வீழ் இன்பக் கடலாமே என்பதும், ஒன்றுண்டே என்பதும் ஐந்தடியான் வந்த அளவியல் வெண்பாக்க ளாகும்; கடன் முகந்து என்பதும், தோற்றோரே வெல்வர் என்பதும், பேராப் பெரு நிலன் என்பதும் மூன்றடியான் வந்த குறுவெண்பாக்களாகும். இவ்வாறு ஐந்தடியான் வந்தன இரண்டும், மூன்றடியான் வந்தன மூன்றும்போக, எஞ்சிய நாற்பதும் நான்கடியான் வந்த அளவியல் வெண்பாக்களாகும் இந்நான் கடியான் வந்த வற்றுள்ளும், இரண்டாம் அடியில் தனிச்சொல்லின்றி நான்கடியும் ஓர் எதுகைப்பட நின்றவை 2, 12, 16, 18, 23, 35, 36, 39, 44 என்னும் ஒன்பதும் ஆகும்; இரண்டாம் அடியில் தனிச்சொல் எதுகையும் பெற்று நான்கடியும் ஓரெதுகைப்பட நின்றனவுஞ் சிலஉள, அவை: 40, 41 என்னும் இரண்டுமாகும்; ஏனை இருபத்தொன்பதும் இரண்டாம் அடியில் தனிச்சொற் பெற்று முதலிரண்டடியின் முதற்சீரும் இரண்டாம் அடியின் தனிச்சொல்லும் ஓரெதுகையாயும், ஏனையிரண்டடிகளின் முதற்சீர் மற்றோர் எதுகையாயும் வந்தனவாகும். இவ் `இன்னிலை நூல் வெண்பாவின் 1யாப்பமைதி களையும், `களவழி நூல் வெண்பாவின் யாப்பமைதிகளையுங் கருத்தூன்றி ஒத்துநோக்க வல்லார்க்கு, அவை பெரிதும் ஒற்றுமை யுடையனவாய், ஆசிரியர் தொல் காப்பியனார் வகுத்த வெண்பா இலக்கணத்துள் அடங்கிச், சங்ககாலத்து ஏனைச் சான்றோர் அருளிய நான்மணிக்கடிகை, ஆசாரக்கோவை முதலிய வற்றோடு ஒப்புமை யுடையனவாய் நிற்றல் தெற்றென விளங்கா நிற்கும் சங்ககாலத்துச் சான்றோர் ஒருநூல் யாக்கு மிடத்து, அந்நூற்பாக்கள் ஓர்ஓசைப்பட ஒரேவகையாய் நடப்பின் அஃது ஓதுவார்க்குங் கேட்பார்க்கும் ஓசையின்பம் பயவாதாகலின், அந்நூற்பாக்களைப் பல்வேறு வகையான் யாத்து ஓசையின்பம் பலபடியான் மாறிமாறி வந்து முதிரவைப்பர். இவர்இவ்வாறு ஓசையின்பம் முதிர்விக்கும் வகைகளை முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை என்பவற்றிற்கு யாம் எழுதிய ஆராய்ச்சி யுரைகளில் விரித்து விளக்கியிருக் கின்றேம். களவழி, இன்னிலை என்பவற்றை ஆக்கிய ஆசிரியரும் ஏனைத் தொல்லாசிரியரோடு ஒப்ப, ஐந்தடி, ஆறடியான் வந்த அளவியல் வெண்பாக் களையும், மூன்றடியான் வந்த குறுவெண்பாக்களையும், ஓர் எதுகைப்படவந்த அளவியல் வெண்பாக்களையும், ஏனை ஈரெதுகைப்பட வந்த அளவியல் வெண்பாக்களின் இடை யிடைய மடுத்து, அப்பாக்களின் ஓசைபலவாறு மாறிமாறி நடக்குமாற்றான் ஓசை இன்பம் மேன்மேன் முதிர்ந்து திகழுமாறு வைத்தமை காண்க. இனித், திருமான்மேல் முதற்றிருவந்தாதி பாடிய பொய்கையாழ்வாரும், களவழி இன்னிலை பாடிய பொய்கை யாரும் ஒருவரேயாயின், மேலே காட்டிய களவழி, இன்னிலை என்பவற்றின் வெண்பா யாப்பமைதிகள் ஒரு சிலவாயினும் பொய்கையாழ்வாரது திருவந்தாதியிற் காணப்படுதல் வேண்டுமன்றோ? ஆழ்வாரது திருவந்தாதியில் உள்ள வெண்பாக்கள் நூறும் நான்கடியான் அமைந்தவை; `களவழி, `இன்னிலையின் இடையிடையே காணப்படும் ஐந்தடி ஆறடியான் வந்த அளவியல் வெண்பாக்களைப் போன்றது ஒன்றாயினும் ஆழ்வாரது திருவந்தாதியிற் காணப்படுகின்றிலது. `இன்னிலையில் மூன்றடியான் அமைக்கப்பட்ட குறு வெண்பாக்களும் உள; அத்தகைய குறுவெண்பாட்டு ஒன்றாயினும் பொய்கையாழ்வரது திருவந்தாதியில் உளதோ வெனின், அதுவும் இன்று.இனி, நாலடி வெண்பாக்களிலும், இரண்டாம் அடியின் ஈற்றில் தனிச் சொல்லின்றி நான்கடியும் ஓர் எதுகைப்பட வந்தவை பல `களவழியிலும், `இன்னிலையிலும் இடையிடையே விரவி நின்றாற்போல, ஆழ்வாரது திருவந்தாதியிலும் அப்பெற்றியன சிலவேனும் உளவோவெனின், அவை தம்முள் ஒன்றுதானும் அதன் கண் மருந்துக்கும் அகப்படுகின்றிலது. பொய்கையாழ்வாரது திருவந்தாதி யிலுள்ள வெண்பாப் பாட்டுக்கள் முற்றும், பிற்காலத்தார் செய்த `யாப்பருங்கலம், `யாப்பருங் கலக்காரிகை முதலான செய்யுளிலக்கணங்களிற் சொல்லப் பட்ட நேரிசை வெண்பா இலக்கணம் ஒன்றேயுடையவாய் ஓரோசைப்பட நடக்கும் இயல்பினவாயிருக்கின்றன. பொய்கையாழ்வாரேயன்றி, அவரோடு ஒரு காலத்தினரான பேயாழ்வார் பாடிய மூன்றாந் திருவந்தாதிச் செய்யுட்கள் நூறும், பூதத்தாழ்வார் பாடிய இரண்டாந் திருவந்தாதிச் செய்யுட்கள் நூறும் அங்ஙனமே முதலிரண்டிடயின் முதற்சீரும் இரண்டாம் அடியின் இறுதிச்சீரும் ஓரெதுகையாய்ப், பின், இரண்டடியின் முதற்சீர்கள் வேறோர் எதுகைப்படநிற்க வரும் நேரிசைவெண்பா இலக்கணம் ஒன்றேயுடைய வாயிருக்கின்றன. மேலே காட்டியவாறு, கடைச்சங்க காலத்துச் சான்றோர் இயற்றிய வெண்பா நூல்களிற் காணப்படும் பல்வேறு வகையான வெண்பாயாப்பின் அமைதிகள், இம் முதலாழ்வார் மூவரும் இயற்றிய வெண்பா அந்தாதிகளிற் சிறிதுங் காணப்படுகின்றில. அதுவேயுமன்றிக், `களவழி `இன்னிலை என்னும் சங்ககாலத்துப் பொய்கை யாரின் நூல்களிற், பன்னிரண்டு மெல்லோசை வடசொற்களே முறையே சிறு வரவனவாய் விரவிக் காணப்படாநிற்கப், பொய்கையாழ்வாரது முதற்றிருவந்தாதியில் வல்லோசை வாய்ந்த வடசொற்களும், கடைச்சங்கச் சான்றோர் இலக்கியங்களிற் காணப்படாத வடசொற்களும் ஆகஅறுபத்து மூன்ற விரவியிருத்தலை மேலே யெடுத்துக்காட்டினாம்; பொய்கையாழ்வாரது அந்தாதியிற் போலவே பேயாழ்வாரது திருவந்தாதியில் அறுபத்தாறு வடசொற்களம், பூதத்தாழ்வாரது திருவந்தாதியில் அறுபத் தெட்டு வடசொற்களுங்கலந்து காணப்படுகின்றன. சங்க காலத்துப் பொய்கையார் நூல்களாகிய `களவழி `இன்னிலை என்னும் இரண்டிலும் பன்னிரண்டு பன்னிரண்டு வடசொற்களே கலந்திருத்தலையும், கி.பி.எட்டாம் நூற்றாண்டிலிருந்த பொய்கைபேய் பூதம் என்னும் ஆழ்வார் மூவர் பாடல்களிலும் அறுபத்துமூன்று முதல் அறுபத் தெட்டுவரையிலுள்ள வடசொற்கள் கலந்திருத்தலையும் உற்றுநோக்க வல்ல நுண்ணறிவாளர், அவ்வடசொற் கலப்பு வேறுபாடு அவ்வவர் இருந்த காலவேறுபாட்டினையும் இனிது விளக்கிக் காட்டுமென நன்குணர்ந்து கொள்வரென்க. இன்னும், `இன்னிலை பாடிய பொய்கையார், ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய இலக்கணத்தின்வழி நூல் செய்தவர் என்பதற்கு, அவர் அந்நூலின்கட் சில வெண்பாக்களில் ஐஞ்சீரடியும் வரத்தொடுத்தமையே சான்றாம். `இன்னிலை அறத்துப்பால் ஏழாஞ் செய்யுளில் நாம்மீட்டு, ஒறுக்கொணா ஞாங்கர் அடிப்பட்ட சீம்பால்எனவும், பொருட்பால் ஒன்பதாஞ் செய்யுளில் யாம் வெறுக்கை இன்றி அமையாராம் அஃதிலார் மை ஆவின் எனவும், இன்பப்பால் ஐந்தாஞ் செய்யுளில், அழுக்குடம்புச் சீழ்நீரான் யாத்தசீர் மெல்லியலை யாணஎனவும் ஐஞ்சீரடிகள் வந்தமை காண்க. இங்ஙனம் வெண்பாவினுள் ஐஞ்சீரடியும் ஒரோவழி அருகிவரப் பெறு மென்பது, வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீ ரடியும் உளவென மொழிப எனத் தொல்காப்பியத்துச் செய்யுளியல், 63 ஆம் சூத்திரத்தானும், அதற்குப் பேராசிரியரும் நச்சினார்க் கினியருங் கூறிய உரையானும் பெறப்படும். யாப்பருங்கலக்காரிகை யாசிரியரும் அதன் உரைகாரரும், அருகிக் கலியோடு அகவல் மருங்கின் ஐஞ்சீரடியும், வருதற்கு உரித்தென்பர். என்னுங் காரிகையில் (ஒழிபியல், 5) வெண்பாவினுள் ஐஞ்சீரடி வருதலா காதென அதனை விலக்கினார். எனவே, யாப்பருங்கலக்காரிகை எழுதப்பட்ட பிற்காலத்தில் `வெண்பாவினுள் ஐஞ்சீரடி விரவிவரும் வழக்கு வீழ்ந்து பட்டமை புலனாம். முதலாழ்வார் மூவரும் இயற்றிய முந்நூறு வெண்பாக்களில் ஒன்றிலாயினும் ஐஞ்சீரடி வராமையாலும், இவ்வாழ்வார்கள்இருந்த கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகிய `புறப்பொருள் வெண்பாமாலையுள் ளும் ஐஞ்சீரடி விரவிய வெண்பாக் காணப்படாமையாலும், `இன்னிலை வெண்பாக்களுள் அது விரவக்காண்டலானும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டுப் பொய்கையார் `இன்னிலை இயற்றிய காலத்தே ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியாங்கு வெண்பாவினுள் ஐஞ்சீரடி விரவும் வழக்கு இருந்ததென்பதூஉம்,பொய்கையாழ்வார் திருவந்தாதி பாடிய காலத்துக்கு முன்னரேயே அஃதாவது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே அவ்வழக்கு வீழ்ந்துபட்ட தென்பதூஉம் அறியற்பாலன. ஆகவே `இன்னிலை பாடிய பொய்கையாரும் `திருவந்தாதி பாடிய பொய்கை யாழ்வாரும் எழுநூறு ஆண்டுகள் இடையிட்ட வெவ்வேறு காலத்தவராவ ரெனவும் பகுத்துணர்ந்து கொள்க. இனி, இஞ்ஞான்று `இன்னிலையை அச்சிற் பதிப்பித்து அதற்கு உரையும் எழுதியுதவிய உதவியாளர் `களவழி `இன்னிலை `பொய்கையாழ்வார் முதற்றிருவந்தாதி முதலிய மூன்றையும் பற்றிக் கூறியவைகளை யாம் ஆராய்ந்து பார்க்க. அவை பொருந்தாதனவாய்க் காணப்பட்டமையின், அவர்தம் கூற்றுக்களையும் ஆராய்ந்து உண்மை இதுவெனக் காட்டுவாம்: `முதற்றிருவந்தாதிச் செய்யுட்களிற் சில மிக அரிய வெண்பா இலக்கணங்களுக்கு இடனாயிருக் கின்றனவென அவ் வின்னிலைப் பதிப்புரைகாரர் கூறினர்; ஆனால், அவ் வரிய வெண்பா இலக்கணங்கள் இவை யென்பது அவர் எடுத்துக் காட்டிற்றிலர். மற்றுப், பலவேறு வகைப்பட்ட அமைதிகள் வாய்ந்த வெண்பாக்கள் `களவழி, `இன்னிலை என்பவற்றிற் காணப்படுமாறு போலப், பொய்கையாழ்வா ரியற்றிய திருவந்தாதியில் அவற்றுள் ஒரு சில தாமுங் காணப்படாமையே மேலே விளக்கிக் காட்டினே மாதலால், அவர் கூற்றுக் கொள்ளற்பால தன்றென விடுக்க. இனி, முதற்றிருவந்தாதிச் செய்யுட்களில், `நன்பு `புலரி `குரா, `திருவன், `மரிதல், `ஏலும் என்னும் அருஞ்சொற்கள் காணப்படுமாறு போலக், `களவழியில் அத்தகைய அருஞ் சொற்கள் கணப்படுகின்றில எனவும் முதற் றிருவந்தாதிச் செய்யுட்கள் இனியனவாயும் `களவழிச் செய்யுட்கள் இன்னாதனவாயும் இருக்கின்றனவெனவும் அப் பதிப்புரை காரர் கூறிய கூற்று எமக்குப் பெரிதும் வியப்பினைத் தோற்றுவியா நின்றது. அவர் அருஞ் சொற்களென மேலே கூறிய ஆறும் பொய்கையாழ்வாரது முதற் றிருவந்தாதியில் உளவோ என யாம் ஆராய்ந்து பார்க்க, `ஏலும் என்னும் ஒரு சொல்லைத் தவிர, ஏனை ஐந்தும் அவர் தம் செய்யுட்களிற் காணப்படு கின்றில. `ஏலும் என்னும் அவ்வொருசொற் றானும் `ஏனும் என்பதன் திரிபாக எல்லா ஆழ்வர்களானும் புதுவதாக எடுத்தாளப்படுவது. ஏனை ஐந்து சொற்களில் `நன்பு என்பது நலம் என்னும் பொருளிற் பூதத்தாழ்வார் பாடிய இரண்டாந் திருவந்தாதி முதற் செய்யுளிலும், `புலரி என்பது விடியற்காலம் என்னும் பொரு ளிலும் `குரா என்பது குராமரம் என்னும் பொருளிலும் அதன் முப்பத்தோராஞ் செய்யுளிலும் `திருவன் என்பது செல்வன் என்னும் பொருளில் அதன் எண்பத்துநான்காஞ் செய்யுளிலும், `மரிய என்பது `தெரியுங்கால் என்பதற்கு வேறுபாடமாய் வேறோர் ஏட்டுச்சுவடியிற் காணப்பட்டுச் `சாவ என்னும் பொருளில் பேயாழ்வார் இயற்றிய `மூன்றாந் திருவந்தாதியின் ஐம்பத்தைந்தாஞ் செய்யுளிலுங் காணப்படுவ தாயிருக்க, இச்சொற்களெல்லாம் பொய்கையாழ்வாரது முதற்றிருவந் தாதியில் உளவென அப் பதிப்புரைகாரர் பிறழ்ச்சியுரை நிகழ்த்தினமை எமக்குப் பெரியதோர் இறும் பூதினை விளைப்பதாயிற்று. அருஞ்சொற்களென அவர் கொண்டவை தாமும் பொய்கையாழ்வார் பாட்டுக்களில் இல்லாமையால், அதுபற்றி அவ் வாழ்வாரது பழைமையை நாட்டப்புக்க அப்பதிப்புரைகாரது கோட்பாடு நுறுங்கி இல்லையாயிற்று. இனிக், `களவழியில் அருஞ்சொற்கள் இல்லை யென்றதும், அதன் செய்யுட்கள் இனிமையில்லாதன வென்றதும் பிழைபாட்டுரையாம். `களவழி யில் அருஞ்சொற்கள் பற்பல உள; அவற்றுட் சிலவருமாறு: துப்பு,கெழூஉம், தப்பியார், ஞாட்பு, போர்ப்பு, குக்கில், சிரல், உரறி, ஆனாது, குரீஇ, உயங்கும், மைந்து, கடாஅய், நூற, பருமம், சாறு (விழவு), நளிந்த.திமில், எருவை, திரவு, இங்க.இவை போலும் அருஞ்சொற்கள் இன்னும் பலஉள இவையெல்லாம் `புறநானூறு, `அகநானூறு, `கலித்தொகை முதலான சான்றோரிலக்கியங் களிற் பயில்வனவாகும். இன்னோரன்னவை அருஞ்சொற்களா யிருக்க, இவை தம்மை அங்ஙனங் கொள்ளாத அப் பதிப்புரை காரது கோள் வழுகோளாமென்க. அற்றன்று, கற்றார்க்கும் எளிதிற் பொருள் விளங்காத சொற்களே அருஞ்சொற்களென யாம் கோடுமெனின்; தேவார திருவாசங்களினும் பிற்காலத்து ஆழ்வார்கள் பாடல்களினுங்கூடக் கற்றார்க்கு எளிதிற் பொருள் ளிங்காத சொற்கள் பற்பல உள; அசும்பு, அண்ணிக்கும், அவிதா, அள்ளூறு, ஆதம், இறவு, உண்டை, உந்தீபற, உவலை, தட்டுளுப்பு, ஏசறவு, ஏலோர், ஏழில், தழுத்த, கலதி, கிழியீடு, கிறி,கீறு, குதுகுதுப்பு, குலா, சச்சை, சட்டோ, சழக்கு, சிறவு, செடி(தீமை), தழி, திறவு, தென்ளேணம், நாங்கூழ், பட்டி, பப்பு, பளகு, பனவன், புனிதம், பேழ்கணித்தல், பொத்தை, மாழை, வம்பனேன், வயனம், விதுவிதுப்பு, விளாக்கைத்து என்னுஞ் சொற்கள் `திருவாசகத்திற் காணப்படுகின்றன; சங்க இலக்கியங்களிற் பயின்றார்க்கும் இச் சொற்களுக்குப் பொருள் கண்டுதெளிதல் எளிதாகாது; இங்ஙனமே, `திருச்சிற்றம்பலக் கோவை யாரினும் அரிதுணர் பொருளனவாஞ் சொற்கள் பலப் பல உள. தேவாரப்பாக்களில் உள்ள பொருள் பொள்ளெனப் புலப்படாச் சொற்களையும் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியும். கற்றார்க்கும் எளிதிற் பொருளுணராலாகாச் சொற்கள் மிகுந்திருத்தல் கொண்டு, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற் பாடப்பட்ட `திருவாசகத்தையும் கி.பி.ஆறு, ஏழு, ஒன்பதாம் நூற்றாண்டுகளிற் பாடப்பட்ட தேவாரப்பாக்களையும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சங்ககாலத்தில் இயற்றப்பட்டனவென்று கோடல் ஒக்குமோ? கல்வியறிவு சிறிதுடையார்க்கு அருஞ்சொல்லெனத் தோன்றுபவை, அவரின் மிக்க கல்வியும் நுண்ணறிவும் உடையார்க்குஅருஞ்சொல் லெனத் தோன்றா; அவை எளிதிற் பொருள் விளங்குவனவாகவே யிருக்கும். ஆகையால், தமக்கு அருஞ்சொல்லெனத் தோன்றுவது கொண்டு ஒருவர் ஒருநூலின் சொல்வழக்கை நன்காராய்ந்து பாராது அந் நூலைப் பழையதென்றாதல் புதிய தொன்றாதல்முடிபு கட்டுதல்பெரிதும் இழுக்குடைத்தாம். அதுவேயுமன்றி, `இன்னிலைப் பதிப்புரைகாரர்அருஞ் சொற்களென எடுத்துக் காட்டிய நன்பு, புலரி முதலிய ஆறுசொற்களும் அரிதுணர் பொருளனவாகாமை அவற்றிற்கு யாம் மேலே குறித்த பொருள்களானும் இனிது விளங்கும். மேலும், இச் சொற்கள் பூதத்தாழ்வார் பாடல்களில் உள்ளனவே யன்றிப் பொய்கையாழ்வார் பாடல்களில் உள்ளனவும் அல்லவென் பதூஉம் நினை விற்பதிக்கற்பாற்று. இனிக், `களவழிச் செய்யுட்கள் இனிமையில்லாதன என்ற அப் பதிப்புரைகாரர் எவ்வாற்றால் அவை இனிமை யில்லாதனவாயின என்பது காட்டிற்றிலர். அவை சொற்சுவை இல்லாதனவா? அன்றிப் பொருட்சுவை யில்லாதனவா? சொற் சுவையில்லாதன என்று கொண்டாரெனின், ஒழுக்குங் குருதி யுழக்கித் தளர்வார் இழுக்குங் களிற்றுக்கோடு ஊன்றி எழுவர் மழைக்குரல் மாமுரசின் மல்குநீர் நாடன் பிழைத்தாரை அட்ட களத்து (களவழி, 3) என்பது போன்ற செய்யுட்களைச் சொற்சுவை இல்லாதன வென்று தமிழறிஞர்கூற ஒருப்படுவரோ மொழிமின்! மற்று அவை பொருட்சுவைஇல்லாதனவெனக் கொண்டா ரெனிற்,` காவிரி நாடனாகிய கோச்செங்கண்ணான் கழுமலம் என்னும் ஊரின்மேற் படையெடுத்துச் சென்று, அங்கே தன்னை வந்தெதிர்த்த மாற்றாரோடு பொருது அவரைத் தொலைத்து, அவ் வூரினைக் கைப்பற்றிக் கொண்ட நாளில், அவன் போர்புரிந்த களத்திற் குதிரைகளால் உதையுண்டு காம்புமேலாகக் கிடந்த பகைவருடைய குடைகளானவை வயலில் மேயச்சென்ற மாடு களால் உதையுண்டு தண்டுமேலாய்க் கிடந்த காளான்களை ஒத்திருந்தன என்று அப்போர்க்களத்தைப் புனைந்துரைக்கும், ஓ ஓ உவமன் உறழ்வின்றி ஒத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாஉதைப்ப மாற்றார் குடையெல்லாங் கீழ்மேலாய் ஆஉதை காளாம்பி போன்ற புனல்நாடன் மேவாரை அட்ட களத்து (களவழி, 36) என்னுஞ் செய்யுளையும் இதனோடு ஒத்தவற்றையும் பாக்களின் பொருட்சுவை தேர்ந்த புலவோர் பொருட்சுவை இல்லாதன வென்று உரைக்கத் துணிவரோ கூறுமின்கள்! அற்றன்று, பொய்கையாழ்வார் தம் செய்யுட்கள் கடவுள்மேற் பாடப்பட் டிருத்தலின், அவையே இனிமை யுடையன, மற்றுக் `களவழிச் செய்யுட்களோ போர்க் களத்தின்மேற் பாடப்பட்டிருத்தலின்அவை இன்னாதனவே யாமென்று கோடலே எமது கருத்தாமாலெனின்; நன்று சொன்னீர்; கடவுளின்மேல் நெஞ்சுருகிப்பாடும் பாக்கள் இனிமையிற் சிறந்துநிற்றல் போலவே, கடவுள் உயிர்கள்மேல் வைத்த பேரிரக்கத்தால் அவைகட்குப் புல்முதல் மக்கள் ஈறான உடம்புகளையும், அவ்வுடம்புகள் இருந்து உலவுவதற்கு இவ்வுலகத்திற் பல்வேறு இடங்களையும், அவை ஐம்புலன் களாலும் நுகருதற்குப் பலவகைப் பண்டங்களையும் மக்களெவரானும் படைக்க இயலாத அத்துணைத் திறமை யோடும் அழகோடும் படைத்துக் கொடுத்திருத்தலின், அவனது அப் படைப்பின் திறங்களையும், அப் படைப்பின்கண் மக்களுடைய செயல்களால் நிகழும் நிகழ்ச்சி வேறுபாடு களையும் எடுத்துப்பாடுதல் கடவுளைப் பாடுதலோடொப்ப இன்பம் பயப்பனவேயாம். அங்ஙனம் அல்லாக்கால் `அகப்பொருள், `புறப்பொருள் பற்றி யெழுந்த சங்கப் பாட்டுக்களும், `சிலப்பதிகாரம், `மணிமேகலை போன்ற பெரும்பொருட் டொடர்நிலைச் செய்யுட்களும் சான்றோரால் அத்துணை விழுமியவாய்ப் பாராட்டப்படாவன்றே. ஆதலால், இறைவனைப் பாடும் பாட்டுக்களே யன்றி, இறைவனது படைப்பினையும் அப் படைப்பில் நிகழும் நிகழ்ச்சிகளையும் புனைந்துரைக்கும் பாக்களும் நல்லிசைப் புலவர்களால் ஆக்கப்படின் அவற்றோடொப்ப இனிமை மிக்கனவாயே திகழுமென உணர்ந்துகொள்க. அற்றாயினுங், களவழிச் செய்யுட்கள் போர்க்களத்தில் நிகழ்ந்த கொடிய நிகழ்ச்சிகளைக் கூறுதலின், அவை இன்னாதனவேயாமெனிற்; குருதி யொழுகக், குடரும் நிணமும் மூளையுஞ் சிதற, நெஞ்சம் போழப்பட்டுங் கழுத்து அறுபட்டுங் கைகால் முறிபட்டுங் கிடப்ப, இறைவனருளால் அரிதிற்கிடைத்த மக்கள் யாக்கையை மக்கள் தாமே ஒருவாரோடொருவர் பொருது அழிக்குங் கொடுமை, போர்க்கள நிகழ்ச்சிகளை எடுத்துப் பாடும் பாட்டுக் களானன்றி, மற்றையோர்க்கு வேறொரு வாற்றானும் புலப்பட மாட்டாது, மற்று, அப் போர்க்களப் பாட்டுக்களைக் கேட்ட வளவானே அவர் அப் போர்த் தொழிலின் கொடுமை தேர்ந்து, உள்ளம் இளகி அத்துணைத் தீய தொழில் என்றும் நிகழா திருத்தலை வேண்டுவர். நல்லிசைப் புலவராகிய பொய்கையார் `களவழி பாடிய நோக்கமுங், கோச்செங்கண்ணான் தான் செய்த போரினால் விளைந்த கொடுமையை நன்குணர்ந்து, இனி அதனை மேற்கொள்ளாதிருத்தற் பொருட்டும், அவனது போரினால் முன்னரே தன் படைகளையிழந்து உள்ளம் நிலைகலங்கி நிற்குஞ் `சேரமான் கணைக்காலிரும்பொறை யென்னும் புகழோங்கிய சிறந்த மன்னனை மீண்டுஞ் சிறை யிலடைத்து வருத்துதலினும் மிக்க கொடுமை பிறிதில்லை யென்பதனை அப் போர்க்களக் கொடுமை பாடிய பாட்டின் வழிப் புகுந்துணர்ந்து அவனைச் சிறையினின்றும் அவன் விடுதலை செய்தற்பொருட்டுமேயாம். பொய்கையார் பாடிய `களவழி நூலாற் போரின் கொடுமை தெரிந்த பின்னர்தான், சோழன் கேச்செங்கண்ணான், போர்செய்து பிறர்மண் வௌவுதலை அறவே கைவிட்டுச், சிவபெருமானுக்குத் திருவடித் தொண்டனாகி அப் பெருமானுக்கு ஆங்காங்குத் திருக்கோயில்கள் கட்டுவித்து, அத் திருத்தொண்டிலேயே இன்புற்றிருந்தானாதல் வேண்டும். இன்னும், இறைவனால் வகுக்கப்பட்ட அழகிய அமைதிமிக்க இயற்கைமைப்பில், மக்கள் தமது கொடுஞ்செயலால் உண்டாக்குங் கொடிய போர்க்கள நிகழ்ச்சிகளை எடுத்துப் பாடுவான் புகுந்த ஆசிரியர் பொய்கையார். அக் கொடியவற்றின் தோற்றக் கொடுமையைத் தணிவுசெய்தற் பொருட்டும், தாம் பாடுஞ் செய்யுட்களைப் பயில்வாரது நினைவு அக் கொடுநிகழ்ச்சிகளின் வழியே ஈர்ப்புண்ட போகாமல் அவற்றினின்றும் பிரிந்து இறைவன் அமைத்த அழகிய இயற்கைத் தோற்றங்களிற் சென்று பதிந்து அவற்றை வியந்து இன்புற்று நிற்றற் பொருட்டும், தாம் பாடும் அப் போர்க்கள நிகழ்ச்சிகள் பெரும்பாலனவற்றிற்கு இயற்கைத் தோற்றங்கள் பலவற்றை உவமையாக எடுத்துக்காட்டிச் செல்லுதல் பெரிதும் பாராட்டற்பால தொன்றாம். போர்க்களத்திற்குடைகள் காம்பு மேலாகக் கிடத்தலுக்குத் தண்டு மேலாகக் கிடக்குங் காளான்களை உவமைகூறிய பாட்டை மேலே எடுத்துக் காட்டினாம்; இங்ஙனமே ஏனைச் செய்யுட்களிற் பெரும்பாலனவும் இயற்கைத்தோற்ற உவமை காட்டுதல் காண்க. இவ்வாறு பெருங்காப்பியங்களுள்ளும் அடுத்தடுத்துக் காணப்படாத இயற்கைத் தோற்ற உவமைகளை, நாற்பத்தொரு, செய்யுட்களான் அமைந்த இச்சிறிய களவழி நூலின்கண் அதனாசிரியர் பொய்கையார் அடுத்தடுத்துக் காட்டிச் செல்லுதலின் கருத்தை நுனித்துக் காணவல்ல அறிவுமதுகையுடையார், அங்ஙனம் அவ் வாசிரியர் செய்தது, தமது நூலைப் பயில்வார்க்கு அவர் தம் நினைவு தாங்காட்டும் அப்போர்க்களக் கொடுங் காட்சி களிலேயே கிடந்துவிடாது, அவற்றைக் கடந்துசென்று இறைவன் வகுத்த இயற்கைத் தோற்ற அழகிற்படிதல் வேண்டியேயாமென உணர்ந்துகொள்வர். இத்துணை நுண்ணுணர்வுகொண்டு உருவத்திற் சிறிதாகிய இக்களவழி நூல் யாக்கப் பட்டமையாலன்றோ, திருக்குறள் நாலடியார் முதலான விழுமிய நூல்களோடு இதுவும் ஒன்றாகச் சேர்த்துப் பதினெண் கீழ்க்கணக்கினுள் வைத்து ஆன்றோராற் பாராட்டப் படுவதாயிற்று. இங்ஙனமாக நுண்மையும் இனிமையும் முதிர்ந்து திகழுங் `களவழிப் பாட்டுக்களை இன்னா தனவென்று கூறிய அப்பதிப்புரை காரரது உரை வழுக்குரையே யாமென விடுக்க. இனிப், பொய்கையாழ்வார் பாடிய முதற்றிருவந்தாதிச் செய்யுட்களெல்லாம் பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுன்மேற் பாடப்பட்டனவும் அல்ல. சிவபெருமானையுந் திருமாலையும் இவர் ஒன்றுபடுத்தி அருளிச் செய்திருக்கும் 5, 28, 74, 98 ஆஞ் செய்யுட்களும், அங்ஙனமே திருமாலை மட்டும் மனம் உருகிப் பாடியிருக்கும் வேறுசில செய்யுட்களுந் தவிர ஏனைய வெல்லாங் கண்ணன், வாமனன், நரசிங்கன், வராகன் முதலியோர்மேற் பாடப் பட்டனவாகும். பிறப்பு இறப்பு இல்லாத் தனிமுதற் கடவுளைமட்டும் வழிபடுவோரான சான்றோர்க்குப், பிறப்பு இறப்பிற் கிடந்துழல்வாரான மக்களையும் அவரிற் றாழ்ந்த விலங்குகளையும் பாடும் இப்பாட்டுக்கள் அருவருப்பினையும் வருத்தத்தினையும் விளைவியாதிரா. மக்களை மக்களாகவும் தெய்வத்தைத் தெய்வமாகவும் வைத்து மயக்கவுணர்வுக்கு இடமின்றிப் பாடுதல் குற்றம் அன்று; மற்று, மக்களைத் தெய்வமாகவும், தெய்வத்தை மக்களாகவும் பிறழ்த்திவைத்து மயங்கப்பாடுதலே பெரிதுங் குற்றமாவதாம். `திருமால் என்பது பிறப்பு இறப்பு இல்லா எல்லாம்வல்ல இறைவியாகிய உமைப்பிராட்டியே யல்லாற் பிறிதன்றென்பதனை முன்னரே விளக்கிக்காட்டின மாதலால், திருமாலைமட்டும் வணங்குதல் குற்றம் அன்று. மற்றுக், கண்ணன், வாமனன் முதலான மக்களைத்தெய்வமாக வைத்தும், முழுமுதற் பொருளாகிய திருமாலைப் பிறப்பு இறப்புக்களுட் படுத்தும் பாடியதே குற்றமாம். ஆகவே, பொய்கையாழ்வார் திருமாலையுஞ் சிவபிரானையும் விடுத்த, ஏனை மக்களுள்ளுஞ் சிற்றுயிர்களுள்ளும் படுவாரான கண்ணன், வாமனன், நரசிங்கன், வராகன், இராமன் முதலியோரைத் திருமாலாக வைத்துப் பாடியதும், உலகிற்கு முழுமுதற் கடவுள் அம்மையப்பரும் அல்லது மாலுஞ் சிவமுமாம் ஒருவரேயாக அவரைவிடுத்து, முதலாவார் மூவரே எனப் புராணக் கதையை நம்பிக் கடவுளை மூவரெனக் கூறியதும் மெய்யறிவினருக்கு இன்னாதனவாகவே காணப்படும். சைவசமயாசிரியருள் எவரும் இங்ஙனம் வைணவ ஆழ்வார்களைப்போல் யாண்டும் மயங்கிப் பாடிற்றிலர்; அவர்களெல்லாரும் பிறப்பிறப்பில்லாத் தனித்தலைமைக் கடவுளாகிய அம்மையப்பர் ஒருவரையே, மூவர்க்கும் முப்பத்து மூவர்க்கும் மற்றொழிந்த தேவர்க்கும் மேற்பட்டவராக வைத்துப் பாடியிருக்கின்றனரென்பதை மேலே பலகாலுங் வற்புறுத்திப் போந்தாம். பொய்கையாழ்வாரும் பேயாழ் வாரும் இடையிடையே புராண கதைகளான் மயக்குற்றுத் திருமால் அல்லாதவற்றையுந் திருமாலாக் கொண்டு பாடிப் பிழைபட்டனராயினும், இடையிடையே அம்மயக்கந் தீர்ந்து மெய்யுணர்வு தெளிந்து சிவபிரானுந் திருமாலுமாய்க் கூடிய முழுமுதற் கடவுளின் ஓருருவினையுந் திருமாலையுங் குழைந்துருகிப் பாடியிருக்கின்றனராகலின் அவ்விருவரும் எம்மனோராற் பெரிது பாராட்டப்படுந் தகையரேயா மென்க. இனி, `இன்னிலை பாடிய பொய்கையாரும், `முதற்றிரு வந்தாதி பாடிய பொய்கையாழ்வாரும் ஒருவரேயென நாட்டுதற்கு அப் பதிப்புரைகாரர் வேறுசில குறிப்புகள் காட்டினார்; அவை தம்மையும் ஆராய்வாம்; `இன்னிலைச் செய்யுட்கள் சிலவற்றிற் குற்றியலுகரத்தின்பின் வந்த உயிர்கள் உடம்படு மெய் பெற்றிருத்தல்போல, முதற்றிரு வந்தாதிச் செய்யுட்கள் சிலவற்றிலுங் குற்றியலுகரத்தின் பின்வந்த உயிர்கள் உடம்படுமெய் பெற்றிருக்கின்றன வென்று அவை இரண்டற்கும் ஒற்றுமை காட்டினார். இதுபெரிதும் பிழை பாடான ஒற்றுமையே யாகும்; ஏனெனிற், குற்றிய லுகரத்தின் முன் வரும் உயிர், அக்குற்றியலு கரங்கெட நின்ற மெய்யின்மேல் ஏறிவருதலே செய்யுள் வழக்கிலும் உலக வழக்கிலும் இயற்கை யாகக் காணப்படுவ தொன்றாம். `எழுந்து இருந்தான், `மருந்து உண்டான், `நாகு இள வரி வண்டு உண்டு என்றற் றொடக்கத்தன இருவகை வழக்கிலும் `எழுந்திருந்தான், `மருந்துண்டான், `நாகிளவரி வண்டுண்டு என்றுதான் எல்லாராலுஞ் சொல்லப்படுமே யல்லாமல் `எழுந்து விருந்தான், `மருந்துவுண்டான், `நாகுவிளவரிவண்டுவுண்டு, என உடம்படுமெய் புணர்த்துச் சொல்லப்படா. சொற்களைச் சொல்லுங்காற் குற்றியலுகர ஈற்று உகரங்கெட நின்ற மெய்ம்மேல் வந்த உயிரேறி முடிதலே எங்கும் இயற்கையாகக் காணப்படுதலின், அவ் வியற்கையையே ஆசிரியர் தொல்காப் பியனாரை உள்ளிட்ட இலக்கண ஆசிரியர் இலக்கணமாகக் கூறாநிற்பர். குற்றியலுகரத்தின் முன்வரும் உயிர் உடம்படுமெய் பெறுமெனத் தொல் காப்பியனார் யாண்டுங் கூறிற்றிலர். அதனாற், குற்றியலுகரத்தின் முன்வரும் உயிர் உடம்படுமெய் பெறவைத்தல் இயற்கைக்கும் இலக்கணத்திற்கும் மாறான பிழையேயல்லாமற் பிறிதன்று பிழையேயாயினும் வெண்பா வினும் பிற பாக்களினும் முறையே தளையுஞ் சீருங் கெடாமைப் பொருட்டு அவ்வியற்கைக்கு மாறாக அருகி ஒரோவொருகாற் குற்றியலுகரத்தின்முன் வந்த வுயிர்க்கு உடம்படுமெய் கொடுத்து நல்லிசைப் புலவர் செய்யுள் யாத்தலும்உண்டு; இது பிழையே யாயினுஞ் செய்யுள் யாத்தல் வருத்தமான செயலாதல்பற்றி அதனை ஆன்றோர் விலக்காது கொள்வர். எனினுங், குற்றியலுகரத்தின்முன் வரும் உயிர் உடம்படுமெய் பெறுதல் இயற்கைக்கும் இலக்கணத்திற்கும் மாறாய் இன்னா ஓசைத்தா யிருத்தலின், தொல்காப்பியனார் காலத்திற்கு முன்னும் அவர்க்குப்பின் இடைச்சங்க கடைச்சங்கச் சான்றோர் செய்யுட்களினுங், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட `சிலப்பதிகாரம், `மணிமேகலை என்பவற்றினுங் கூட அங்ஙனங் குற்றிய லுகரத்தின்முன் வரும் உயிர் உடம்படுமெய் பெற்று முடிதலை யாண்டுங் கண்டிலேம். மற்று, மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த திருவாசகத் திலோ, அடித்தடித் தக்காரம் என வரற்பாலது சீர் கெடாமைப் பொருட்டு அடித்தடித்து வக்காரம் (அற்புதப்பத்து, 3) என ஓரிடத்தில் மட்டுங் குற்றியலுகரத்தின் முன் வந்த உயிர் உடம்படுமெய் பெற்றுமுடிந்தது. எனவே, பண்டை இலக்கண ஆசிரியராகிய தொல்காப்பியனார் செய்த இலக்கணத்திற்கும், அவர்க்குப் பின்வந்த ஏனைச் சான்றோர் செய்த இலக்கியங் கட்கும் முரணாகப், பாக்களிற் சீர் தளை கெடாமைப் பொருட்டுச் சொற்களையுஞ் சொற்புணர்ச்சிகளையும் ஒரோவழிப் பிழைபட அமைத்தல், திருவாதவூரடிகள் இருந்த கி.பி. மூன்றாம் நூற்றாண்டுமுதல் நிகழ்ந்ததாகல் வேண்டும். இவ்வாறு பண்டைச் சான்றோர்இலக்கண இலக்கியங்கட்கு முரணான பல மாறுதல்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் இத்தென்றமிழ் நாட்டின்கண் நிகழலானமை வேறோராற் றானும் பெறுதும். என்னை? தொல்காப்பியத்துஞ், சங்க இலக்கியங்களிலும் ஒரு சிறிதுங் காணப்படாத `கட்டளைக் கலித்துறை, `விருத்தம் என்னும் பாவகைகளும், புதிய புதிய வடசொற்களும் பாரத ராமாயண புராண கதைகளும், பல்சமயக் கோட்பாடுகளும், பிறவும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இயற்றப்பட்ட தமிழ் நூல்களின் மட்டுமே காணக்கிடத்தலினென்பது. இங்ஙனமாக முன்னோர் நூல்களிற் காணப்படாதனவும், அவற்றோடு ஒரோவழி மாறாவனவு மாகிய பல நிகழ்ச்சிகளின் இடையே, `குற்றியலுகரத்தின்முன் வரும் உயிர் உடம்படுமெய் பெறும் புதுவழக்கும் ஒரோ வொருதால் விரவலாயிற்று ஆகவே உண்மை மாலீர்த்து விருள்கடித்து என 41 ஆஞ் செய்யுளிலும், ஐயுணர்வான் ஆய்ந்து வறஞ்சார்பாஎன 44 ஆஞ் செய்யுளிலுங் குற்றியலுகரத்தின்முன் வந்த உயிர்க்கு உடம்படுமெய் புணர்ந்து ஓதிய `இன்னிலை என்னும் நூலும் அதனாசிரியர் பொய்கையாரும், திருவாதவூரடிகள் இருந்த கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குச் சிறிது முன்னே இருந்தமை தெற்றென விளங்கா நிற்கும். `களவழி நூலில் முன்னோர் வழக்குக்கு முரணான இப்பெற்றியது எதுவுங் காணப் படாமையிற், களவழியும் அதனை யாக்கிய பொய்கையாருங் கடைச்சங்க காலத்தில் அஃதாவது கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னே இருந்தமையுந் தானே பெறப்படா நிற்கும். இவ்வாற்றாற் `களவழியியற்றிய பொய்கையார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னும் `இன்னிலை இயற்றிய பொய்கையார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஈற்றிலும் இருந்தமை பெறப்படுதலின் அவ்விருவரும் வேறு வேறாவரென்பது கடைப்பிடிக்க. இன்னிலை யியற்றிய பொய்கையார் முன்னோர் வழக்கொடு மாறுபட்டது இஃதொன்றின்மட்டுமே யல்லாமல், ஏனைப் பா அமைப்பு முதலியவற்றின் அல்லாமையின் இவரைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஈறு அல்லது மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்திற்குப்பின் கீழ் இறக்குதல் இயலாதென்பதூஉங் கருத்திற் பதிக்கற்பாற்று. `இன்னிலை இயற்றிய பொய்கையார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவரல்ல ரென்பது மற்றுமோ ராற்றானும் பெறுதும். போர்க்களத்தில் வந்து நின்ற அருச்சுனனுக்கு, அவன் நேரிற் பாகனாய் அமர்ந்த கண்ணன் `பகவற்கீதை நூல் செவியறிவுறுத்தின னென்னும் மாபாரதக் கதையை `இன்னிலையின் முதற்செய்யுள் குறிப்பிடுகின்றது. பாரதப்போரை மட்டுங் குறிப்பிட்ட பழந்தமிழ்ப்பாட்டுக் கி.மு. மூவாயிர ஆண்டுகட்கு முன்னரே உளதேனும், மாபாரதக் கதைகளையாதல் கண்ணன் என்னும் பெயராற் கண்ணனது வணக்கத்தை யாதல் குறிப்பிட்ட பழந்தமிழ்ப்பாட்டுக் கிறித்து பிறப்பதற்கு முற்பட்ட காலத்தில் ஒன்றுமே யில்லை. மாபாரதக் கதை தமிழ்நாட்டார்க்குத் தெரியத்துவங்கியதும், அது தமிழின் கண்மொழிபெயர்க்கப்படலானதும், அதன் வழியே கண்ணனுந் திருமாலின் வடிவான ஒரு தெய்வமாக வைத்து ஈண்டுள்ளாராற் பெரிதும் வணங்கப்படலானதும் எல்லாங் கி.பி. முதல் நூற்றாண்டுமுதல் நிகழலாயின வென்பதை முன்னரே விளக்கிப் போந்தாம். ஆகையாற், கண்ணன் அருச்சுனற்குக் கீதைநூல் அறிவுறுத்தியதாகக் கூறும் மாபாரதக் கதையைத் தமது `இன்னிலை முதற்செய்யுளில் எடுத்து மொழிந்த அதன் ஆசிரியர் பொய்கையார் கி.பி.முதல் நூறாண்டிற்கும் பின்னிருந்தோரேயாதல் வேண்டும். `பகவற்கீதை என்னும் நூல் மாபாரதத்தில் எழுதி இடை நுழைக்கப்பட்டது கி.மு.முதல் நூற்றாண்டிற்கு முற்சென்ற தெனல் ஆகாமை யானும்,2 அது தானுந் தமிழ்நாட்டார்க்குத் தெரியலானது கி.பி.முதல் நூற்றாண்டிற்கு முன்னென்றல் இயையாமை யானும், அதனைக் குறிப்பிட்ட `இன்னிலை ஆசிரியர் பொய்கையார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின்கட் பட்டவரென்பதே தேற்றமாம் என்க. இனி, `முதற்றிருவந்தாதி பாடிய பொய்கையாழ்வார் `இன்னிலை பாடிய பொய்கையாரைப்போல், தமது 95 ஆஞ் செய்யுளிற் குற்றியலுகரத்தின்முன் வந்த உயிர்க்கு உடம்படு மெய் புணர்த்தோதினா ரென்றதும் பிழைபாடாம். என்னை? நமோநாரணா வென்னஎன வேறு திருத்தமான பாடமே வைணவப் புலவர்களால் ஒப்புக்கொண்டு பதிப்பிக்கப்பட் டிருத்தலின்3 என்று என்னும் பிழையான பாடத்திற்கு வேறாக என்னஎன்னுந் திருத்தமான பாடம் உளதாகலிற், பிழையான பாடம் இவ் வொன்றைக்கொண்டு பொய்கையாழ்வாரையும், `இன்னிலை பாடிய பொய்கை யாரையும் ஒன்றுபடுத்த முனைந்த இன்னிலைப் பதிப்புரை காரர் கருத்து நிரம்பு மாறில்லையென விடுக்க. பிழையான பாடத்தையே உறுதி யாகக்கொண்டு, அவ் விருவரையும் ஒன்றுபடுத்தலாமெனினுங், குற்றியலுகரத்தின் முன் வந்த உயிர்க்கு உடம்படுமெய் புணர்த்து ஓதிய திருவாதவூரடிகள் உளராகலின், இப் புதிய புணர்ப்புப் பொய்கையாழ்வார்க்குமே உரித்தென்றலும் பொருந்தா தென ஓர்க. இனி, `இன்னிலையின் 27 ஆஞ் செய்யுள் மகவு என முற்றியலுகர ஈற்றான் முடிதல்போலப், பொய்கையாழ்வார் அருளிச்செய்த `முதற்றிருவந்தாதியின் 12, 53, 67 ஆஞ் செய்யுட்களும் முற்றியலுகர ஈற்றான் முடிதலின், அவ் விருநூல்களையும் ஆக்கிய பொய்கையார் ஒருவரே யாவரென இன்னிலைப் பதிப்புரைகாரர் கூறினர். இவர் கூறியபடியுளவா என்று `முதற்றிருவந்தாதியை யாம் எடுத்து உற்றுநோக்க, அதன்கட் 12 ஆஞ் செய்யுளின் ஈற்றில் இயல்பு எனக் குற்றியலுகர ஈறு வந்திருக்கக் கண்டாமே யன்றி, அவர் கூறியபடி முற்றியலுகர ஈறு வரக்கண்டிலேம். உண்மை யிவ்வாறாக, அதனை அப் பதிப்புரைகாரர் புரட்டிக் கூறியது என்னையோ! ஆனால், 53 ஆஞ் செய்யுள் கரவு எனவும், 67 ஆஞ் செய்யுள் உணர்வு எனவும் அவர் உரைத்தவாறே முற்றியலுகர ஈறுகளாலே தாம் முடிந்திருக்கின்றன. இங்ஙனம் வெண்பா யாப்புக்கள் முற்றியலுகர வீற்றான் முடிதல், `இன்னிலை `முதற்றிரு வந்தாதி என்னும் இவ் விருநூல் களிலன்றி, வேறு வெண்பா நூல்களிற் காணப்படா தாயினன்றே, அவற்றின் ஆசிரியரை ஒருவராகக் கூறுதல் ஒருவாற்றாற் கூடினுங் கூடாநிற்கும்? மற்று, வெண்பா யாப்புக்கள் ஒரோவழி முற்றியலுகர ஈற்றான் முடிதலும் உண்டென்பது, கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கட் டங்கியான் தாழ்வு (117) எனத் திருக்குறளிலும் திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் இறந்துபடிற் பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன் தண்ணார மார்பிற் றமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு என முத்தொள்ளாயிரத்திலும் அவ்வாறு முடிந்த செய்யுட்களால் நன்கறியக் கிடத்தலின், அதனை இன்னிலை, முதற்றிருவந்தாதி என்னும் இரண்டுக்குமே வரைசெய்தலும், அங்ஙனம் வரைசெய்த பிழைபாட்டால் வெவ்வேறு காலத் தினரான இன்னிலைப் பொய்கையாரையும பொய்கை யாழ்வாரையும் ஒருவ ரென்றலும் போலி யாராய்ச்சி யாமென மறுக்க. இனி, அப் பதிப்புரைகாரர் `இன்னிலைச் செய்யுட்கள் சிலவற்றிற்கும், `முதற்றிருவந்தாதிச் செய்யுட்கள் சிலவற்றிற்குங் காட்டிய பொருளொற்றுமையும் பொருந்தாதா யிருத்தலின், அப் பிழைபாட்டினையும் ஈண்டெத்துக் காட்டுதும். `இன்னனிலையின் நாற்பதாஞ் செய்யுளாகிய, முப்லை வீழ்வார் விலங்கார் செறும்பாலை முப்பான் மயக்கேழ் பிறப்பாகி - எப்பாலும் மெய்பொருள் தேறார் வெளியோரார் யாண்டைக்கும் பொய்ப்பாலை யுய்வாயாப் போந்து என்பது `காமவெகுளி மயக்கங்கட்கு இடனாகிய பொருள்களை விரும்புவோர் துன்புறுத்தும் பிறவியை ஒழியாராய், முக்குற்றங்களது மயக்கத்துக்கு ஏதுவாகிய எழுபிறப்புட் பட்டுப், பொய்ப் பகுதியாம் பொருள்களே தாம்எவ்விடத்தும் பிழைத்தற்கு வாயிலாகும் எனக் கருதி வந்து, எவ்விடத்தும் மெய்ப்பொருளைத் தெளியாராகலின் அவ்வியல்பினார் அருள்வெளியை உணரார் எனப் பொருள் படுகின்றது. இனி அவர்காட்டிய முதற்றிருவந்தாதி ஏழாஞ் செய்யுளாகிய, திசையுந் திசையுற தெய்வமுந் தெய்வத் திசையுங் கருமங்க ளெல்லாம் - அசைவில்சீர்க் கண்ணன் நெடுமால் கடல்கடைந்த காரோத வண்ணன் படைத்த மயக்கு என்பதோ திசைகளின் நிற்குந் தெய்வங்களும், அத் தெய்வங்களால் இசைவிக்கப்படுஞ் செயல்களும் எல்லாம் மாயோன் தனது மாயையின் வன்மையால் ஆக்கிய மயக்கப் பொருள்கள் ஆகும் எனப் பொருள் தருகின்றது. முன்னையது, உலகத்துப் பொருள்களிற் பற்றுவைத்தவர்க்குப் பிறவி யொழியாமையும் முதற்பொருளை யுணரும் மெய்யுணர்வு வாயாமையும் அறிவுறத்தா நிற்கப், பின்னையதோ காட்சிப் புலனாவன வெல்லாம் மாயோன் படைத்த மாயை என்று மட்டும் உணர்த்தா நிற்கின்றது. இருவேறு புலவராற் செய்யப்பட்டுப் பொருளொற்றுமை சிறிதுமில்லாத இவ் விருவேறு செய்யுட்களின் றன்மை கல்வியறிவு சிறந்துடையார்க்கும் இனிது விளங்கிக் கிடப்பவும், இவ்விரண்டும் ஒருவராற் செய்யப்பட்டுப் பொருளொற்றுமை யுடையவாயின என்ற `இன்னிலைப் பதிப்புரைகாரரது உரை பெரியதொரு மயக்குரையேயாம்; `மயக்கு என்னுஞ்சொற் காணக்கிடக்குந் தமிழ்ச் செய்யுட்களை யெல்லாம் அவர் `பொய்கையார் செய்யுட்கள் எனக் கூறத் துணிவர்போலும்! இனி, `இன்னிலையின் பத்தாஞ் செய்யுளாகிய, இடிப்பதென் றெண்ணி இறைவனைக் காயார் முடிப்பர் உயிரெனினும் முன்னார் - கடிப்பவே கன்றமாந்து தீம்பால் கலழுமே நீண்மோத்தை ஒன்ற உணராதார் ஊங்கு என்பது `இடியிடித்து அச்சுறுத்துதல் பற்றித் தலைசிறந்த மழைமுகிலை எவரும் வெகுளார்; தீயோர் தமது உயிர்க்கு இறுதி பயப்பரெனினும் நல்லோர் அவர்க்குத் தீங்கு செய்ய நினையார், கன்று தனது முலையைக் கடித்த விடத்தும் ஆ அதற்கு மனம் உவந்து தித்திப்பான பாலைச் சுரக்கும், அதுபோலத் தமக்குஇன்னா செய்தார்க்குந் தாம் இனியவே செய்தலைப் பொருந்த உணராதாரினும் ஆட்டுக்கிடாய்களே சிறந்தன எனப் பொருள்படும். இதனோடு பொருள் ஒற்றுமையுடையதென அவர் காட்டிய முதற்றிருவந்தாதியின் முப்பதாஞ் செய்யுளாகிய, தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத் தெளிதாக நன்குணர்வார் சிந்தை -எளிதாகத் தாய்நாடு கன்றேபோல் தண்டுழாயான் அடிக்கே போய்நாடிக் கொள்ளும் புரிந்து என்பதோ `தெள்ளிதாகத் தமது மனத்தைச் செவ்விதின் நிறுத்தி,மெய்யுணர்வு கொண்டு முப்பொருளியல்பினை எளிதாக நன்குணரவல்லாரது நினைவு, தனது தாயை நாடிச்செல்லுங் கன்றைப்போல் எளிதாகத் திருமாலின் திருவடிகளை விரும்பிப்போய்த் தேடிக்கொள்ளும் எனப் பொருள்தரும். இவ் விரண்டுள் முன்னையது தமக்குத் தீதுசெய்வார்க்குந் தாம் தீது நினையாது நன்மையே செய்யும் நல்லாரது இயல்பினை உணர்த்தாநிற்கப் பின்னையதோ `மெய்யுணர்வு வாய்ந்தாரது நினைவு திருமாலின் திருவடிகளை எளிதிற்சென்று தலைக்கூடு மாற்றை, அறிவுறுத்துகின்றது. இவையிரண்டிற்கும் ஏதொரு பொருளொற்றுமையுங் காணப் படாதாகவும், அதனையுளது போல் மயங்கியுரைத்த அப் பதிப்புரைகாரருரை கொள்ளற் பாலதன்றென விடுக்க. கன்றும் ஆவும் அவ் விரு செய்யுட்களினும் உவமையாகக் கூறப்படுதலின், அவ்வுவமையே அவற்றிற்கு ஓர் ஓர் ஒற்றுமையாகக் கொள்ளுதல் ஆகாதோவெனின் : அவ்வுண்மை. பல்ஆவுள் உய்த்து விடினுங் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலை (101) என நாலடியாரினும் போதரக் கண்டாலின், அதனையும் பொய்கையாரே இயற்றினரென்று உரைத்தல் வேண்டும்; மற்று அவ்வாறுரைத்தல் பெரியதொரு தலைதடுமாற்றமாய் முடியுமாகலின், அங்ஙனங் கோடல் ஆகாதென மறுக்க. மேலும், ஐம்புலன்களை அடக்கி உடற்குவருந்துன்பம் பொறுத்துத் தவம்புரிவார் வீட்டுலகத்திற் செல்வரென்பது அறிவுநூல்கள் எல்லாம் புகலும் ஒரு பொதுவுரையாகும். இப்பொதுவுரை `இன்னிலை 42 ஆஞ் செய்யுளிலும், `முதற்றிருவந்தாதியின் 50 ஆஞ் செய்யுளிலுஞ் சிறிது ஒத்துக்காணப்படுதல் கொண்டு அவையிரண்டனையும் ஒருவரே யியற்றினாரென்றல் பெரியதொரு மாறுகோள் உரையாம். இச் செய்யுட்களை நன்கு ஒப்பிட்டுக் காண்பார்க்கு `இன்னிலைச் செய்யுட்கள் பொதுப்பட நிற்றலும், `முதற்றிருவந்தாதிச் செய்யுட்கள் திருமால் மேலனவாய் நிற்றலும் எளிதுணரக்கிடக்குமாகலின், அந்நூல்களை யியற்றிய ஆசிரியர் இருவரும் வெவ்வேறு காலத்தவரென்பதே தேற்றமாம் என்க. இனி, ஒன்றுண்டே என்னும் `இன்னிலை செய்யுள் `உயிர்கள் உண்டு; அவை உடம்பைப் பற்றுக்கோடாகக் கொண்டு வினைகளைச்செய்யும்; மெய்யுணர்வு பிறந்தவழி இருவினைகளை அறுத்துஉடற்பற்றுவிட்டு வீடுபேறெய்தும் எனக் கூறி முடிக்கின்றது. இச் செய்யுட்பொருளை `இன்னிலைப் பதிப்புரைகாரர் விஷ்ணுமத சித்தாந்தம் என்கின்றார். உலகத்தின்கண் உள்ள அறிவுடையா ரெல்லாருந் தொன்று தொட்டுப்பொதுப்பட வழங்கிவரா நின்ற இக் கோட்ப்பாட்டை அப் பதிப்புரைகாரர் வைணவமதத்திற்கே உரித்தாக்கிய தென்னை? ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதாகிய திருமந்திரம் என்னுஞ் சைவசித்தாந்த நூல், பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற்பசு பாசம் அநாதி (159) எனவும், பசுப்பல கோடி பிரமன் முதலாப் பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தாற் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே (2367) எனவும் அக் கோட்பாட்டை நன்கெடுத்து மொழிதலின், அது பழைய தமிழர் கோட்பாடாகிய `சைவசிந்ததாந்தமே யாதல் பெறுதும். திருமந்திரத்தைப்போல், அத்துணைப் பழைமையாகிய வைணவ சித்தாந்த நூல் ஏதேனும் உளதா? ஒன்றும் இல்லையே; அங்ஙனமிருக்க, அக் கோட்பாடு வைணவ மதத்திற்கே உரியதெனத் தமக்குத் தோன்றியவாறு பேசுதல் அப் பதிப்புரைகாரர்க்கு ஏதமாமென அறிக. இவ்வாற்றால் `இன்னிலை இயற்றிய பொய்கையாரை வைணவரென்றலும் ஆகாதென உணர்ந்து கொள்க. அற்றேல், `இன்னிலை பாடிய பொய்கையார் அதன் ஒன்று,மூன்று, இருபத்திரண்டாஞ் செய்யுட்களில் மாயோனை உயர்த்துச் சொல்லிய தென்னையெனின்; முதற்றிருவந்தாதி பாடிய பொய்கையாழ்வாரைப்போல், `இன்னிலை பாடிய பொய்கையாருந் திருமால் திருவடிக்கண் மெய்யன்புடையவரே யாவர்; அது கொண்டு அவ் விருவரையும் ஒருவரெனக் கூறதல் ஆகாது. அவ்விருவரும வேறு வேறாவர் என்பதனை நாட்டுதற்குரிய சிறந்த ஏதுக்கள் பலவும் மேலெடுத்துக் காட்டின மாதலால், அவர் தம் பெயரொற்றுமையும் அவர் தமக்குள்ள திருமால் திருவடி நேயமும் ஆகிய சில பொது ஏதுக்கள் கொண்டு அவ் விருவரையும் ஒருவராகத் துணிதல் பழுதுடைத்தாம். மேலும், `இன்னிலைச் செய்யுட்களிலுள்ள சொல்லமைப்புச் சொற்றொடரமைப்புகள் பொருட்டெளி வின்றிக் கருகலாய் நிற்றலும், `முதற்றிருவந்தாதியின் அவ் வமைப்புகள் பொருட்டெளிவுடையவாய் விளங்கி நிற்றலும், அவ் விரண்டு நூல்களிலுமிருந்து மேலெடுத்துக்காட்டிய சிற்சில செய்யுட்களை ஒப்பிட்டுக் காண்பார்க்கும் நன்கு புலனாமாகலின்,அங்ஙனந் தன்மையால் மாறுபட்ட அவ்விருவேறு நூல்களையும் இயற்றினோர் இருவேறு பொய்கையாரே யாவரென்க. மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் முதலான பெயர்களைப் பூண்டோர் பற்பலர் இஞ்ஞான்றுங் காணப்படுதல் போலவே ஒரே பெயர் பூண்டோர் பற்பலர் பற்பல காலங்களில் முந்நாளிலும் இருந்தனரென்பதூஉம் பெரிதும் நினைவிற் பதிக்கற்பால தொன்றாம். நக்கீரர், கபிலர், ஔவையார் என்னும பெயர் களைப் பூண்ட பற்பலர் பற்பல காலங்களில் இருந்தனர். இவ்வுண்மையை நினைந்து பாராமல் வரலாற்று நூல்கள் எழுதுவோர் முன்னொடுபின் முரணான பல செய்திகளைத் தம்முடைய நூல்களுள் எழுதிச் சேர்த்தலால் அவர் விளைத்தனவும் விளைக்கின்றனவும் ஆகிய குழப்பங்கள் நிரம்பப் பல. இதுகாறும் விளக்கிய மூவேறு பொய்கையாரே யன்றி, யாப்பருங்கலவிருத்தி யுரையிலும் பாட்டியன் மரபிலும் எடுத்துக்காட்டப்படும் மற்றொரு பொய்கையாரும் உளர்; இங்ஙனமே, `பேயார், `பூதத்தார் எனப் பெயர்பூண்ட முன்னோர் பிறருமுளரென்பது அவ்வுரையுட் பெறப்படுதல் காண்க. இனி, விருந்தே தானும் என்னுந் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர உரையில் உரைகாரர் பேராசிரியர் விருந்து தானும் புதிதாகத் தொகுக்கப்பட்டுந் தொடர் நிலைமேற்று. அது `முத்தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினோர் செய்த `அந்தாதிச் செய்யுளும் எனவுணர்க என் றெழுதியதே கொண்டு அவ்வுரைகாரர் பொய்கை யாழ்வாரைக் கடைச்சங்க காலத்தவராக கொண்டனரென ஒருசாரார் கூறாநிற்பர். ஆசிரியர் தொல்காப்பியனார் தங்காலத்து வழங்காமற் பிற்காலத்திற் புதிது புகும் நூல்வகைகள் செய்யுள்வகைகள் உளவாயின் அவை தம்மையும் விலக்காது தழுவிக்கொள்க என்றற்கு இச்சூத்திரம் அருளிச்செய்தார்; ஒரு செய்யுளின் ஈறு அதனை யடுத்த செய்யுட்கு முதலாக வரத் தொடுத்துப் பாடும் `அந்தாதிச் செய்யுள் தொல்காப்பியனார் காலந் தொட்டுக் கடைச்சங்கத் திறுதியாக வந்த சான்றோர் எவரானும் பாடப்படாமையின், அவ்வந்தாதிச் செய்யுள் கடைச்சங்க காலத்துக்குப்பின் வந்த சான்றோராற் புதிது செய்யப்பட்டன வாமென்பது புலப்பட உரைகாரர் பேராசிரியர் புதுவது கிளந்த யாப்பின் மேற்றென்ற தென்னை யெனின், புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்து வரச்செய்து அது முத்தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினோர் செய்த `அந்தாதிச் செய்யுளும்என உரை கூறினார்; இவ் வுரைப்பொருளாற் `பொய்கையாழ்வார் இயற்றிய முதற்றிருவந்தாதி கடைச் சங்கத்தார் காலத்திற்குப்பின் புதிதாகச் செய்யப்பட்ட தொன்றென்பதே வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடப்பவும், அவரது கருத்துக்கு முற்றும் மாறாகப், பொய்கை யாழ்வாரை அவர் கடைச்சங்க காலத்தவராகக் கொண்டாரெனத் தலைதடுமாறி யுரைத்தாருரை நகையாடி விடுக்கற்பாலதாமன்றி மற்றென்னை? பேராசிரியர்க்குப்பின் தொல்காப்பியத்திற்கு உரைகண்ட நச்சினார்க்கினியரும் பின்னுள்ளார் பாட்டியன் மரபிற் கூறிய கலம்பகச் செய்யுள்4 எனவும், இக்காலத்தார் கூறும் அந்தாதிச் சொற்றொடர்5 எனவும் விளங்கக் கூறுதலின், அவரும் பொய்கையாழ்வார் பாடிய முதற்றிருவந்தாதியைப் பிற்காலத்ததெனவே கொண்டாரென்பது புலனாம். தொல்காப்பியத்திற்கு முதலில் உரைகண்டவரான இளம்பூரணர், பொய்கையார் திருவந்தாதியைப் பேராசிரியர் குறித்தாற்போற்றாம் சிறிதுங் குறித்திலாமையின், அவர் பொய்கையாழ்வார்க்கு முற்பட்டவ ராவரென்பதூஉம் அறியற்பாற்று. பொய்கையாழ்வார் கடைச்சங்க காலத்த வராயின், அச்சங்க காலத்திற்குப் பின்னெழுந்த சிலப்பதிகாரம் `மணிமேகலை என்பவற்றையும், அவற்றிற்கும் பிற்பட்ட `புறப்பொருள் வெண்பாமாலையையுந் தம்முரையுள் எடுத்தாண்ட இளம்பூரணர் பொய்கையாழ்வாரது முதற்றிரு வந்தாதியையும் எடுத்தாளாது இரார். ஆகவே, பொய்கை யாழ்வாரது அந்தாதிச் செய்யுளை விருந்தே தானும் என்னுஞ் சூத்திரவுரையிற் குறிப்பிட்ட பேராசிரியர், அவர்குக்குப்பின் கி.பி. ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் இருந்தோரா தலும், அதனை அச் சூத்திரவுரையிற் குறிப்பிடாத இளம் பூரணர் கி.பி. ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டிலிருந்தோ ராதலும் ஈண்டே யறியற்பாலனவாம். அற்றாயின், யாப்பருங் கலக்காரிகை உரைப்பகுதிகள் சில, அடிநிமிர் கிளவி ஈரா றாகும் என்னுந் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர இளம் பூரணவுரையெனப் பதிப்பிடப்பட்டதனுட் காணப்படுதல் என்னையெனின்; இளம்பூரணர் தொல்காப்பிய எழுத்துச் சொற்பொருள் என்னும் மூன்று ஓத்துக்களுக்குந் தாம் எழுதிய உரையுள் வேறு யாண்டுஞ் `சூளாமணி, `சிந்தாமணிச் செய்யுட்களை மேற்கோளாக எடுத்துக் காட்டுதலை காணேமாகலிற், செய்யுளியலில் இரண்டோரிடத்து மட்டும் அவர் அவற்றின் செய்யுட்களை எடுத்துக்காட்டினா ரென்றல் பெரிதும் ஐயுறற்பால தொன்றாம். மேலுந், தொல்காப் பியனாராற், கூறப்படாமற், பின்வந்த `யாப்பருங்கலக் காரிகைக்காரரால் வகுத்துரைக்கப் பட்ட `விருத்தப்பா வகைகள் இவ் வுரையுள் ஆண்டிருந்த வாறே வருவித்து உரைக்கப்படுதலானும், இளம்பூரணருக்குப் பின்வந்த பேராசிரியர் அவ் விருத்தப்பா வகைகளைத் தமதுரையுள் அவ்வாறு வருவித்துரைப்பக் காணாமையானும், அவ் வுரைப்பகுதிகள் இளம்பூரணர் வரைந்தன ஆகாவெனவும், அவை யாப்ப்பருங்கலக்கரிகை யுரையிலிருந்து பிறரால் எடுத்துச் சேர்க்கப்பட்டனவா மெனவும், இவ் வேற்றுமையுணராது அவற்றை இளம் பூரணருரையெனப் பதிப்பித்திட்டது அதனைப் பதிப்பிட்டவரது தவறாமெனவும் பகுத்தறிந்து கொள்க. கொள்ளவே, தொல்காப்பிய முதலுரைகாரரான இளம்பூரணர் `சூளாமணி, `சிந்தாமணி நூல்களின் காலத்துக்குப் பிற்பட்டவரல்ல ரென்பதூஉம், அவர் அவற்றிற்கு முற்பட்ட கி.பி.ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் இருந்ததோ ராவரென்பதூஉம் கடைப்பிடித் துணரற்பாலவாம். எனவே, இளம்பூரணர் காலத்தில் இல்லாததூஉம், பேராசிரியர் காலத்துள்ளதாய் அவராற் பிற்காலத்ததென்று கொள்ளப் பட்டதூஉமான பொய்கை யாழ்வாரது முதற்றிருவந்தாதி கி.பி.எட்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் செல்லாமையுந் தானே விளங்கும் என்பது. அற்றேல், `கைலைபாதி காளத்திபாதி அந்தாதி என்பதொரு நூல் நக்கீரனால் அருளிச் செய்யப்பட்ட தென வழங்கக் காண்டுமாகலின், அந்தாதிச் செய்யுள் பிற்காலத்த தென்றல் யாங்ஙனமெனின்; `நக்கீரனார் என்னும் பெயர் கொண்ட புலவோர் பலர் பற்பலகாலத்திருந்தனரென முன்னரே கூறினமாகலிற், `கைலைபாதி காளத்திபாதி அந்தாதி பாடிய நக்கீரர் கடைச்சங்க காலத்தவர் அல்லரென ஓர்க. பதினோராந்திருமுறையில் திருமுருகாற்றுப்படை நீங்கலாகக் `கைலைபாதி காளத்திபாதி அந்தாதி முதலிய நூல்களை இயற்றிய நக்கீரரும், அங்ஙனமே மூத்த நாயனார், கண்ணப்பதேவர், சிவபிரான், முதலாயினார்மேல், நூல்களிற்றிய கபிலர், பரணர், கல்லாடர், காரைக்காற் பேயம்மையாரு மெல்லாங் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கும் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடையிலிருந்தோ ராவர். கொங்குதேர் வாழ்க்கை என்னுஞ் செய்யுளுக்குக் குற்றங்கூறிய நக்கீரர், கடைச் சங்ககாலத்திற்குப் பின் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் மதுரையில் இருந்ததாகிய மற்றையொரு தமிழ்ச்சங்கத்திற் சமண்புலவர் பலரோடிருந்து தமிழாராய்ந்தவர் ஆவர். இவ் வரலாற்றினைப் பின்னை விளக்கிக்காட்டுதும். இவ்வாற்றால் அந்தாதிச் செய்யுள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது அற்றென்பதூஉந் தெளியக் கிடந்தவாறுணர்க. அற்றாயின், பொய்கையாழ்வார்க்கு முன்னிருந்த நக்கீரரது `கைலைபாதி காளத்திபாதி அந்தாதி பேயம்மையாரது `அற்புதத் திருவந்தாதி முதலியவற்றை எடுத்துக்காட்டாது, அவர்க்கெல்லாம் பின்னர் இருந்த பொய்கையாழ்வாரது முதற்றிருவந்தாதியை மட்டும் பேராசிரியர் தமதுரையுள் எடுத்துக்காட்டிய தென்னையெனின்; பேராசிரியர் வைணவ மதம் பெரிதுங் கிளர்ச்சி பெற்றுநின்ற கி.பி. ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் இருந்தவராகலின், அக் காலத்தில் எங்கும் மிக்கு வழங்கிய பொய்கையாழ்வாரது முதற்றிருவந் தாதியைப் பிற்காலத்தவர் புதிது ஆக்கிய அந்தாதிச் செய்யுள் முதலியவற்றிற்கு எடுத்துக்காட்டாகக் குறித்திட்டாரென்க. என்றிதுகாறும் ஆராய்ந்து காட்டிய கொண்டு, இன்னிலை இயற்றிய பொய்கையார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும், `முதற்றிருவந்தாதி பாடிய பொய்கையாழ்வார் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலும் இருந்தோராவரென்பது முடிக்கப்பட்டமை காண்க. இனிக், `களவழி பாடிய பொய்கையாரோ, `இன்னிலை பாடிய பொய்கையார்க்கும் முன்னே கி.பி. முதல் நூற்றாண் டிலிருந்தோராவர். அஃது யாங்ஙமெனின், அதனையுஞ் சிறிது விளக்கிக் காட்டுதும்: இப் பொய்கையார் சேரமான் கோங்கோதை மார்பன் காலத்தவரென்பது அவர் பாடிய கோதைமார்பிற் கோதையானும் என்னும் புறப்பாட்டால் (48) நன்கு விளங்கும். பழையன் மாறன் என்போன் மாடமலி மறுகிற் கூடல் நகரிற் கிள்ளி வளவனைப் போரிற் றொலைத்தமை கண்டு, இக்கோக்கோதை மார்பன் பெரிதும் உவந்த வரலாற்றினை நக்கீரனார் அகநானூற்றில் (346) எடுத்துப் பாடியிருக் கின்றனர். இன்னும், இவர் `பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனை ஏற்றுவலன் உயரிய என்னும் புறப்பாட்டில் (56) முன்னிலைப் படுத்துப் பாடியிருத்தல் கொண்டு அவ் வரசனும் இவரும் ஒரு காலத்தினரென்பதுந் துணியப்படும். இவ்வரசனையே இடைக்காடனார் என்னும் நல்லிசைப்புலவரும் ஆனா வீகை என்னும் புறப்பாட்டில் (42) முன்னிலைப்படுத்துப் பாடியிருத் தலால் அவரும் இப் பாண்டியன் காலத்தவ ரென்பது புலப்படும். இவ் விடைக்காடனாருங் கபிலருந் தோழர் என்பது பின்னமில் கபிலன் தோழன் பெயரிடைக் காட னென்போன் (நம்பியார் திருவிளையாடல்,20,1) என்பதனால் அறியப்படும். இவ்வாற்றால் நக்கீரனாரும் இடைக்காடனாரும் ஒரு காலத்தவரென்பது பெறப்படுதலானும், `அகநானூற்றில் (78) நக்கீரனார் `கபிலரைப் புகழ்ந்து பாடியிருத்தலோடு அதன் 141 ஆஞ் செய்யுளிற் `சோழன் கரிகாற்பெருவளத்தான்றன் இளமைக் காலத்துச் செய்தியைக் கூறுதலானும் கபிலர், இடைக்காடனார், நக்கீரனார், `களவழி பாடிய பொய்கையார் என்னும் இந் நல்லிசைப் புலவர்களெல்லாருஞ் சிறிதேறக் குறைய ஒரு காலத்தினரென்பது பெறப்படும். அற்றாயினுங், கபிலர் `சோழன் கரிகாற்பெருவளத்தான் காலத்தில் இருந்தில ரென்பதனை மேலே விளக்கிக் காட்டினமாதலானும், நக்கீரனார் அச் சோழவேந்தனது இளமைக்காலத்தில் இருந்தமை புலனாதலானும் கபிலர் ஆண்டின் மிக முதியாரயிருந்தபொழுது, நக்கீரனாரும் பொய்கையாரும் நடுத்தர ஆண்டினராயிருந்த, நக்கீரனார் சோழன் கரிகாற்பெருவளத் தான் காலம் வரையிலும், பொய்கையார் அவனுக்குப் பின்வந்த சோழன் செங்கணான் காலம் வரையிலும் இருந்தாராகற்பாலர் எனவே, `களவழி பாடிய பொய்கையார் கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந் தவராக கபிலரது முதுமைக் காலந் தொட்டு, அவர்க்குப்பின் அந் நூற்றாண்டின் இறுதிவரையி லிருந்தமை கண்டுகொள்க. இனி, ஆழ்வார்கள் எல்லாம் தேவார திருவாசகங்களை நன்கு பயின்றவர்களென்பதற்குச்சான்றாக,அப்பர் ஞான சம்பந்தர் அருளிச்செய்த தேவாரப் பாக்கங்களிலுள்ள பொன்திகழ மேனியன், புரிசடைப் புண்ணியன் முதலான சில சொற்றொடர்களைப் பொய்கையாழ்வார் எடுத்தாண்டமை யினையும், தொண்டரடிப் பொடியாழ்வார் `திருவாசகத்தின் கண் உள்ள திருப்பள்ளியெழுச்சியையும், திருநாவுக்கரசு நாயனாரின் திருநேரிசையையும் பயின்று அவற்றோடொப்பப் பாடிய வற்றினையும் சூடிக்கொடுத்த நாச்சியார் திருவாசகத்தின் குயிற் பத்தைப் பயின்று அதனோடொப்ப தாம் ஒன்று பாடிய வகையினையும் முன்னமே விளக்கிக் காட்டினாம். இன்னுந் திருஞானசம்பந்தப் பெருமானும் சுந்தரமூர்த்தி நாயனாருந் தாம் அருளிச்செய்த திருப்பதிகங்களின் இறுதிச் செய்யுட்கடோறும் தம் பெயரும் தம் ஊர்ப் பெயருங் கூறித். தாம் சிவபிரான்மேற் பாடிய அப் பதிகங்களை அன்புடன் ஓதுவார் இம்மை மறுமைப் பயன்களைப் பெற்றுச் சிவபிரான் திருவடியை அடைகுவர் எனப் பயன் உரைத்து வாழ்த்துமாறு போலவே, பெரியாழ்வாரும், அவர் தம் மகள் நாச்சியாரும், குலசேகரப் பெருமாளும், மதுரகவியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும், நம்மாழ்வாருந் தாம்பாடிய பதிகங்களின் இறுதிப்பாட்டுக் கடோறுந் தம் பெயருந் தம் ஊர்ப்பெயர் முதலியனவும் உரைத்துத் தம்முடைய பதிகங்களைப் பயில்வாரும் அங்ஙனமே இம்மை மறுமைப் பயன்களை யெய்தித் திருமால் திருவடியைச் சேர்குவர் என வாழ்த்துதல் காண்க. அற்றன்று, இவ் வாழ்வார்கள் பாடிய அம் முறையைப் பார்த்தே சைவ சமயாசிரியர் அங்ஙனம் வாழ்த்துரை கூறினார் என்னாமோ வெனின்; என்னாம், என்னை? ஆழ்வார்களுள் முதலாழ்வார் மூவரும் மாணிக்கவாசகர், அப்பர், திருஞான சம்பந்தர்க்குப் பின்னும், ஏனையாழ்வார்கள் சுந்தரர்க்குப் பின்னும் இருந்தோராதலை மேலே பலவாற்றானும் ஆராய்ந்து விளக்கி நிறுவினமாகலின் என்பது. இனிச், சைவசமயாசிரியரும் வைணவ ஆழ்வாரும் ஒருவர் மற்றொருவர் பாட்டுக்களைப் பாராமலே அங்ஙனம் பாடினாரெனல் ஆகாதோவெனின்; அதுவும் ஆகாது; ஒன்றற்கொன்று பெரிது விலகிக் கிடக்கும் நாடுகளில் ஒருவரையொருவர் அறியக்கூடாவாறு அவர் தனித்தனியே இருந்தனராயின், அவர் ஒருவரையொருவர் பின்பற்றாது பாடினாரெனலாம். வைணவ ஆழ்வார்கள் ஐரோப்பா தேயத்திலும் சைவ ஆசிரியர் தமிழ்நாட்டிலும் இருந்து ஒருவரையொருவர் அறியக்கூடாத நிலைமையினராய் வைகி அப் பதிகங்களை அருளிச்செய்தனரென்று கொள்வார் எவரும் இன்மையினானும், அவரெல்லாரும் ஒன்றற் கொன்று மிக அணித்தாயுள்ள இத்தென்றமிழ்நாட்டின் ஊர்களுள்ளேயே வைகியிருந்து இந்நாட்டவர் வழங்கிய செந்தமிழ் மொழியிலேயே தத்தம் பதிகங்களை அருளிச் செய்தாரென்பது எவரும் நன்குணர்ந்ததே யாகலானும், அவருட் பிற்காலத் திருந்தவர் முற்காலத்திருந்தார் செய்யுண் முறைகளைப் பாராமலும் பின்பற்றாமலும் பாடினாரெனல் உலகியலறிவு வாய்ப்பப்பெறாதார் கூறும் பொருத்தமில் உரையேயாம். மேலுஞ், சிவபிரான் வழிபாடும், திருமால் வழிபாடும் இத் தென்றமிழ் நாடெங்கும் பண்டுதொட்டு நடைபெற்றுத் தமிழ்மக்கட்குப் பொதுவாய்ப் பெரிது பரவியிருத்தலின், அவ் விருவகை வழிபாடுகளையும் வலியுறுத்தி அக் கடவுளர்மேற் பாடிய சான்றோர் பாட்டுக்கள் இந் நாடெங்குமுள்ளாராற் பாராட்டப்பட்டு எவர்க்குந் தெரிந்தனவாய்ப் பரவி வழங்குவனவே யல்லாமல், எவர்க்குந் தெரியாமல் அரிதுணர் மறைபொருளாய் ஒரு மூலையில் இருப்பன அல்ல. ஆகவே, சைவசமய ஆசிரியர்கள் காலத்தால் முற்பட்டவராகலின் அவர்கள் அருளிச்செய்த தேவார திருவாசகப் பாடல்கள் இத் தமிழ்நாடெங்கும் பரம்பி வழங்கினவாய் எவர்க்குந் தெரிந்தனவாயே யிருப்பவாகலான், பின்வந்த ஆழ்வார்கள் அவற்றை நன்கு பயின்று, அவற்றைப் போல் தாமுந் திருமால்மேற் பாடவிழைந்து அவ்வாறே செய்தது இயற்கையேயாம். ஆதலால், அவ் விருபாலாரும் ஒருவரை யொருவர் அறியாமல் தனித்தனியே பாடினாரென்றலும் ஒருசிறிதும் ஒவ்வாததென விடுக்க. இனித், திருமங்கையாழ்வார் தேவார திருவாசங்களை நன்கு பயின்றவரென்பதற்குச் சில குறிப்புகள் ஈண்டுக் காட்டுகின்றாம். திருவாசகத்தில், நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன் புலனாய் மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் (திருத்தோணோக்கம், 5) எனவும், அப்பர் தேவாரத்தில், இருநிலனாய்த் தீயாகி நீரும் ஆகி இயமான னாய்எரியுங் காற்று மாகி (பொது) எனவும் வருமாறுபோற், சம்பந்தர் சுந்தரர் தேவாரங்களிலும் வரும் பாடல்கள் பலப்பல. இவற்றோடொப்பவே திருமங்கை யாழ்வார், பாரும் நீர்எரி காற்றினோ டாகாசமும் இவையாயி னான் (1, 8, 7) எனப் பாடினமை காண்க. திருவாசகத்தில், ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றும்இலார்க்கு ஆயிரந் திருநாமம் பாடிநாந் தெள்ளேணங் கொட்டாமோ (திருத்தெள்ளேணம், 1) எனவும், தேவாரத்திற், பிறப்பில் பெருமானை (கோயில், 2) எனவும் அடுத்தடுத்துவருஞ் சொற்றொடர்களைத் திருமங்கை யாழ்வார், பேரும் ஆயிரம் பேசநின்ற பிறப்பிலி (1,8,7) எனத் தஞ்செய்யுளுள் எடுத்தாளுதல் காண்க. `பிறப்பிலி என்னும் பெயர் சிவபெருமான் ஒருவற்கே பொருந்துவ தன்றிப், பத்துப் பிறவிகளுடையரென வைணவரே ஒப்புக் கொண்ட திருமாலுக்குப் பொருந்தாதாகவும், சைவசமய ஆசிரியர் கூறுமாறுபோல் தாமுந் தங்கடவுளுக்குக் கூறவிழைந்து திருமங்கையாழ்வார் `பிறப்பிலி எனும் அப்பெயரைத் திருமாலுக்கும் ஏற்றிப் பாடினார். வைணவ ஆசிரியராகிய வில்லிபுத்தூராழ்வார், பிறப்பிலி இறப்பிலி பிறங்க லரசன்றன் மகளார் நாதன் (மாபாரதம்) என அச்சொற்றொடரைச் சிவபெருமாற்கே உரித்தாக்கிக் கூறுதலும் உற்றுநோக்கற் பாற்று. இன்னும் அப்பர், திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகில் (பொது) என்றருளிச் செய்தாற் போலவே, திருமங்கையார், திருநாமம் எட்டெழுத்துஞ் சொல்லிநின்று (1,8,9) என்று ஓதுதல் காண்க. இனிச், சுந்தரமூர்த்திகள் பொன்னார் மேனியனே என்னும் பதிகத்தில், எம்மான் எம்மனையென் றனக்கெட்டனைச் சார்வாகார் இம்மா யப்பிறவி பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன் மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அம்மான் நினையல்லால் இனியாரை நினைக்கேனே. என்றருளிச் செய்த செய்யுளின் இசையையும் பொருளையுந் தழுவித் திருமங்கையார், தாயே தந்தையென்றுந் தாரமேகிளை மக்களென்றும் நோயே பட்டொழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால் வேயேய் பூம்பொழில்சூழ் வீரையார் திருவேங்கடவா நாயேன் வந்தடைந்தேன் நல்கியாளென்னைக் கொண்டருளே (1, 9, 1) எனப் பாடினமை காண்க. இன்னுந் தேவார திருவாசகங்களுள் அடுத்தடுத்துக் காணப்படும் பந்தணைவிரலி (அப்பர், திருவாவடுதுறை: 10: திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி,8) என்னுஞ் சொற்றொடரைத் திருமங்கையார், பந்தணை மெல்விரலாள் பாவைதன் காரணத்தால். (2, 2, 4) என எடுத்தாண்டமை காண்க. இனி, அப்பர் குரவைகோத்தவனும் (பொது) என்றும், குடமாடி (திருக்கோடிகா) என்றுங் கண்ணனுக்கு வழங்கிய பெயர்களைத், திருமங்கையார், குரவை முன்னே கோத்தானைக் குடமாடு கூத்தன் றன்னை (2, 5, 4) என்று தமது செய்யுளில் எடுத்தாண்டமை காண்க. மீளா அடிமை உமக்கே யாளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தான் மிகவாடி ஆளாயிருக்கும் அடியார்தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே என்றருளியபடியே திருமங்கையாரும், ஆசை வழுவாதேத்தும் எமக்கிங் கிழுக்காய்த் தடியோர்க்குத் தேசம் அறிய உமக்கே யாளாய்த் திரிகின் றேமுக்குக் காசின் ஒளியில் திகழும் வண்ணங் காட்டீர் எம்பெருமான் வாசிவல்லீர் இந்த ளுரீர் வாழ்ந்து போம்நீரே (4,9,4) என்று பாடியிருத்தல் கண்டுகொள்க. இனி, அளவறுப்பதற்கு அரியன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் (திருச்சதகம், 35) என்று திருவாசகத்தும் தேவாரத்தும் அடுத்தடுத்து வருதலைப் பார்த்துத், திருமங்கையாழ்வாரும், வானவர் தமக்குச் சேயனாய் அடியேற் கணியனாய் வந்து (5, 7, 9) என்று ஓதுதல் காண்க. இன்னுஞ் சுந்தரமூர்த்தி நாயனார், அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக வந்த காலன்றன் ஆருயி ரதனை வவ்வி னாய்க்குன்றன் வண்மைகண் டடியேன் எந்தை நீஎனை நமன்றமர் நலியின் இவன்மற் றென்னடி யானென விலக்குஞ் சிந்தை யால்வந்துன் றிருவடி யடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூ ருளானே (திருப்புன்கூர்) என்றருளிச்செய்த செய்யுள் ஓசையினையுஞ் சொற்பொருள்களையுந் தழுவித் திருமங்கை யாழ்வார், நஞ்சு சேர்வதோர் வெஞ்சின அரவம் வெருவி வந்துநின் சரணெனச் சரணாய் நெஞ்சிற் கொண்டுநின் அஞ்சிறைப் பறவைக் கடைக்க லங்கொடுத் தருள்செய்த தறிந்து வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர் கொடிய செய்வன உளஅதற் கடியேன் அஞ்சி வந்துநின் அடியிணை அடைந்தேன் அணிபொ ழிற்றிரு அரங்கத்தம் மானே (5, 8, 4) எனப் பாடினமை காண்க. இனித், திருநாவுக்கரசு நாயனார், பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ எத்தினாற் பத்திசெய்கேன் என்னைநீ இகழவேண்டா முத்தனே முதல்வாதில்லை யம்பலத் தாடுகின்ற அத்தாஉன் ஆடல்காண்பான் அடியனேன் வந்தவாறே (கோயில்) என்றருளிச்செய்த திருநேரிசைப் பதிகத்தின் இசையையுஞ் சொல்நடை யையும் ஒப்பவே திருமங்கையாரும், கையிலங் காழிசங்கன் கருமுகில் திருநிறத்தன் பொய்யிலன் மெய்யன்தன் தாள் அடைவரேல் அடிமையாக்குஞ் செய்யலர் கமலம்ஓங்கு செறிபொழில் தென்திருப்பேர் பையர வணையாள்நாமம் பரவிநான் உய்ந்தவாறே (5, 9, 1) என்று பாடினமை ஓர்க. இன்னும், என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான் (திருவாசகம், திருக்கோத்தும்பி, 8) என்று மாணிக்கவாசகர் அருளிச்செய்ததைப் பார்த்து எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை (7, 2, 6) என்றும், எந்தையை எந்தை தந்தை தம்மானை (7, 3, 3) என்றும், திருவாசகத்தில், எனக்கு எய்ப்பில் வைப்பே. (நீத்தல் விண்ணப்பம், 39) எனப்போந்த சொற்றொடரை யெடுத்து, எனக்கு எய்ப்பினில் வைப்பே (7, 10, 4) என்றுந் திருமங்கையாழ்வார் பாடுதல் காண்க. இனித் திருநாவுக்கரசு நாயனார் திருக்கழிப்பாலைப் பதிகத்தில், வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே என்கின் றாளாற் சினபவளத் திண்டோண்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் என்கின் றாளாற் அனபவள மேகலையோடு அப்பாலைக் க++ப்பாலன் என்கின் றாளாற் கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ என்று பாடியிருத்தல் கண்டுகொள்க. இங்ஙனமே இவர் திருவாசகத்திற் போந்த `கோத்தும்பி முதலியவைகளைப் பார்த்தும், அப்பர் சுந்தரர் தேவாரப்பதிகங்களைப் பார்த்தும் பாடியவை இன்னும் பற்பல; அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டாலுறின் இஃது அளவின்றி விரியுமென அஞ்சி, அவைதம்மை இத்துணையின் நிறுத்து கின்றாம். இதுகாறும் எடுத்துக்காட்டிய இவையே மதச் செருக்கில்லாத மெய்யறிவினாரைத் தெருட்டுதற்குப் போதியனவாதலால், இவை கொண்டு திருமங்கையாழ்வார், சைவசமயாசிரியர் நால்வர்க்கும் பின்னே இருந்தமை `தெற்றெனத் துணிந்து கொள்ளப்படும். இங்ஙனஞ் சுந்தரர் மூர்த்தி நாயனார்க்கும் ஒரு நூற்றாண்டு பின்னேயிருந்த திருமங்கையாழ்வார், தமக்கு இருநூற்றைம்ப தாண்டு முற்பட்டிருந்த திருஞானசம்பந்தப் பெருமானைக் கண்டு அவரொடு வழக்கிட்டாரென வைணவர் கட்டிவிட்ட கதைக்கு ஏதொரு சான்றும் எங்கும் இன்மையின், அக்கதை மதச்செருக்காள்றோன்றிய பெரும் களுகுரை யாமென்று தேர்ந்துகொள்க. தாம் வைணவ சமயத்திற்குரியவரா யிருந்தும் நடுவுநிலை பிறழமாட்டாமையிற் சீநிவாச ஐயங்கார் அவர்கள் தம் சமயத்தவர் கட்டிவிட்ட பெரும் பொய்க்கதைகளைக் கண்டுபெரிதும் அருவருப்புற்று வைணவ ஆழ்வார்களைப்பற்றி உண்மையுள்ளதும் நம்பிக்கைக்கு இடமானதும் ஆன குறைந்தது ஒரு வரலாறாவது இருந்ததாயின், இத்தகைய கட்டுரை ஒன்று எழுதுதற்கு ஏதும் கட்டாயம் நேர்ந்திராது6 என்று தாம் ஒருநூல் எழுதவேண்டிற்றானமைக்கு ஏதுக்கூறினார். பின்னும் அவர் எமது கருத்திற்குட்பட்டமட்டிற் பெரிய புராணத்திற் சொல்லப்பட்ட உண்மை வரலாறுகளிற் சில பல ஒப்பிட்டுக் காணின் மிகவும் நம்பத்தக்கனவா யிருக்கின்றன. ஏனெனிற், சைவர்கள் தம்முடைய நாயன்மார் இருந்த காலங்களைப் பொய்யாக நீட்டிச் சொல்லவில்லை7 என்று கூறியதூஉங் கருத்திற் பதிக்கற்பாற்று. மேலும், மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகத்தைப் பயின்றே சூடிக்கொடுத்த நாச்சியார் தம்முடைய பதிகங்களைப் பாடினாரெனவும் இவர் உண்மையை நடுநிலை திறம்பாமல் எடுத்துக்கூறினார்.8 இங்ஙனமாகத் தேவார திருவாசங்களை நன்கு பயின்ற ஆழ்வார்களெல்லாரும் நாலாயிரப் பிரபந்தப்பதிகங்களைப் பாடினரென்னும் முடிபு இதுகாறும் யாம் விரித்து விளக்கிய ஆராய்ச்சியால் நன்கு விளங்குவதோடு, வைணவரில் நன்கு கற்று நடுநிலை வழுவாது நிற்பார்க்கும் உடன்பாடா யிருத்தலின், இவ்வுண்மைக்கு முற்றும் மாறாகத் `திருவாதவூரடிகள் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரப் பிரபந்தத்தைப் பார்த்தே திருவாசகம் பாடினார் என `தமிழ் வரலாறுடையார் உரைத்தது பெரும்புரட்டுப் பொய்யுரையாமென உணர்ந்து கொள்க. மேலும், வைணவப்புலவர்கள் கட்டி வைத்திருக்குங் கதைகள் பெரும்புளுகு மலிந்தனவா யிருத்தலின், அவற்றிக்குத் தக்க அகச்சான்று புறச்சான்றுகள் காணப்படினன்றி அவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டு உண்மை ஆராயப்புகுதல் அவ் வுண்மைக்கு மாறான பொய்ப்பொருளில் வழுக்கிவிடும் என்பதும்இஞ் ஞான்றை வைணவப் பெரியார்க்கே உடன்பாடா யிருப்பவும், அஃதுணராது அப் பொய்க்கதைகளை உண்மையாக நம்பி அவர் தம் வரலாறு சொல்லப்புகுந்த `தமிழ் வரலாறுடையார் அவ்வாற்றால் வழுக்கி வீழ்ந்து புரைப்பட்டது பெரிதும் இரங்கற்பால தொன்றாமென விடுக்க. அடிக்குறிப்புகள் 1. தொல்காப்பியம், செய்யுளியல், 158. 2. See Gita and Gospel’ by Dr. J.N. Farquhar. 3. 1908இல் சென்னைக் கிறிடியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் திரு.உ.வே.கோபாலசாரியாராற் பதிப்பிக்கப்பட்ட `நாலாயிரப் பிரபந்தப் படியைப் பார்க்க. 4. தொல்காப்பியம், செய்யுளியல், 239, நச்சினார்க்கினியம். 5. அதுவே, 240. 6. No necessity for an essay of this kind should have occurred, had there been at least one reliable and faithful biography of the Vaishnava Saints” p.296, ‘Tamil Studies’. 7. In our opinion some of the historical accounts given in the Periya -purana are comparatively more trustworthy, as the Saivas do not assign fabulous ages to their Nayanars, pp.298. Tamil Studies, by Mr.M.Srinivasa Aiyangar, M.A. 8. Ibid, p. 324.