kiwkiya«-- 7 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) ïy¡»a« -2  சாகுந்தல நாடக ஆராய்ச்சி ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 24+304 = 328 விலை : 410/- மறைமலையம் - 7 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 352 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுந்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீ காரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமிகள் வலி யுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணை யையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெரு மக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழ வைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: âUkâ வி. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணிபிராசசு இந்தியா திருமதி`புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன்,கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். சாகுந்தல நாடக ஆராய்ச்சி 1960இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... காளிதாசரின் காலம், திறன் ஆகியவற்றை இந்நூலில் அடிகளார் ஆராய்ந்துள்ளார். நாடக இயல்பு, நாடக வரலாறு, நாடக அமைப்பு, நாடகக் கதை யமைப்பு, நாடக மாந்தர் இயற்கை. கதை நிகழும் இடமும் காலமும், நாடக அமைப்பிற் காணப்படும் சில குறைபாடுகள், காளிதாசர் காலப்பழக்க வழக்கங்கள் எனப் பல கூறுகளாகச் சாகுந்தல நாடக ஆராய்ச்சி அமைந்துள்ளது. இந்நூலின் நாடகக் கலை தனித்தும் ஒப்பீட்டு நிலையிலும் ஆராயப் பெற்றுள்ளது. முன்னை நாள் நல்லிசைப் புலவர்கள், உலகியற்கை, மக்கள் இயற்கைகளின் உண்மை வனப்புகளை உணர்ந்து உணர்த்தும் மெய்யறிவு மேன்மை மிக்கவர்கள். இத்தகு இயல்பினால் இளங்கோவடிகள் சிறந்த நல்லிசைப் புலவராக விளங்குகிறார். காளிதாசரின் முதிர்ந்த புலமையும், நாடக நூல் நுட்பங்கள் நன்குணர்ந்த உணர்வும் குறிப்பிடத்தக்கன வாகும். இவ்வாறு அடிகளாரின் சாகுந்தல நாடக ஆராய்ச்சி அறிவு நலம் பெருக்கும் அரிய ஆராய்ச்சியாகும். அழகிய இனிய எளிய தமிழ் நடையையும் இந்நூல் கொண்டு விளங்குகிறது. - டாக்டர் நா. செயப்பிரகாசு மறைமலையடிகள் இலக்கியப்படைப்புகள் (பக். 19) PREFACE “A play attains artistic perfection just in proportion as it approaches that unity of lyrical effect, as if a sony or ballad were still lying at the root of it, all the various expression of the conflict of character and circumstance calling at last into the compass of a single melody or musical theme.” - Walter Pater. What Pater, the profound critic and the master of an inimitable English prose style, has said in the above extract taken from his essay on ‘Shakespeare’s English Kings’ applies closely to the Sakuntala the famous drama of the Sanscrit poet Kalidasa. The theme of the drama is that which, with all the lyrical charm, treats of the deep love that had sprung between Sakuntala who lived in the hermitage of her foster-father removed far away from the busy haunts of men and the king Dushyanta who accidentally visited her there while he was on a hunting campaign in the forests at the foot of the Himalayas. The plot of the drama is not variegated, as in the comedies of Shakespeare by any artistically inwoven under plots, but is extremely simple and by means of the passionate love-songs that appear all through and by its easily comprehensible unity produces in effect markedly lyrical. Nevertheless, the interest of the plot rises at the point where the poet complicates the situation by skilfully introducing into it the curse of the sage Durvasa and making it appear for a time as if the unity had been broken by that unforeseen circumstance and by the conflict of character exhibited between an innocent young woman absorbed in her recent love experience and the easily irritated sage who had suddenly appeared before her. Still the lyrical unity runs clearly through the succeeding events by the interest of the plot being attached anew to the loss and recovery of the ring which the king put on the finger of Sakuntala when he returned to his capital. From this it must be evident how artistically the poet Kalidasa has, for the purpose of the play, perfected this simple story taken from the Mahabharata, the great store-house of the Indian legends, by introducing into it the curse of Durvasa which is not found in its original source but which has been skilfully created by the poet himself. Though the creation of this incident looks admirable, so far as it seves as an indispensable hinge on which the plot turns, I might be permitted to question whether it is not inconsistent with the stainless character of a saintly person. I have discussed this point in the following critical study of the Sakuntala and have shown how Shakespeare stands superior to Kalidasa in this respect. But in the art of delineating the main and the sub-ordinate characters that appear in this drama kalidasa is not in any way inferior to Shakespeare but to a remarkable degree is his equal. With what great acuteness Kalidasa has penetrated to the inward nature of each character, in what brief, pointed expressions of thought and feeling he has so well brought it out, and in what strong relief he sets one in contrast with or foil for the other, can be grasped only by those who make an attentive and discerning study of the speeches of each personage. To the best of my understanding I have, in the following critique, shown at length these psychological differences which the poet has so carefully observed and noted in his characters. Years ago I happened to hear in English lecture delivered by an able brahmin scholar on this drama of Kalidasa. After dwelling on some of the excellences of the play, when he came to speak of the character - study of the poet, he, instead of going right through the speeches manners and actions of each dramatic personage, and trying to exhibit whether or not there were special features in each, summarily dismissed it by saying that Kalidasa was sadly wanting in his delineation of character and is therefore no peer of Shakespeare the prince of the dramatists. That sweeping remark of the learned lecturer kindled in me a burning desire to make a comparative study of the dramatic art of the two poets, and from that time onward I have been reading critically not only the plays of Kalidasa and Shakespeare but also the commentaries on their plays. Unfortunately in the whole range of either Sanscrit or English Literature I could not meet even a single commentary on Kalidasa’s dramas that is worth mentioning along side of the very interesting and illuminating Shakespearian commentaries produced by Ulrici, Gervinus, Schlegel, Swinburne, Dowden, Brooke, Bradley, Symons, Hudson, Moulton, Corson, Brandes and others. In this life no one can experience a pleasure comparable in its height, amount and intensity to the intellectual and aesthetic pleasure which a study of these celebrated commentaries afford. The pleasure given by these is equal only to that yielded by the plays themselves, nay, I may venture to say it is even a degree higher than that. In this class of brilliant Shakespearian commentaries must be included also J.A. Symond’s critical estimates both of the British dramatists and of the old Greek tragedians Aeschylus, Sophocles and Euripides, since these mark an epoch of higher dramatic criticism. The great literary pleasure experienced in the study of these Shakespearian commentaries, impelled me to attempt after their model a deep and discriminating study of the dramatic art of Kalidasa, a Tamil translation of whose mature production the Sakuntala I produced in the year 1906 and a second edition of which is now issued with notes and the following critique which embodies the results of my study. This and my similar critical commentaries on the ancient Tamil Idylls the Mullaippattu, and the Pattinappalai, I believe, may serve to remove to a certain extent the reproach that the modern Tamil literature is sadly barren of higher critical prose writings. If the reader finds this my claim justifiable, I shall consider my labour as sufficiently recompensed. In the following critique, besides showing the merits of Kalidasa’s dramatic art, I have also fixed his date in the first half of the fifth century A.D. basing it on the indisputable epigraphical evidence and co-ordianting this evidence by that afforded by the work itself. Finally I am glad to say that, in tracing the origin and growth of the drama in India, I quite accidentally lighted on the discovery that this art took its rise not from among the alien Aryas but from the indigenous Tamils themselves. I believe I have in the following critique sufficiently explained all the facts that led me to this most important discovery. Pallavaram, VEDACHALAM 6-1-1934 பொருளடக்கம் பக்கம் 1. நாடக இயல்பு 9 2. நாடக வரலாறு 17 3. நாடக அமைப்பு 22 4. நாடகக் கதையமைப்பு 26 5. நாடகமாந்தர் இயற்கை 42 6. கதைநிகழும் இடமுங் காலமும் 109 7. காளிதாசர் வரலாறு 119 8. காளிதாசரது காலம் 124 9. காளிதாசரது நல்லிசைப் புலமை 133 10. இந்நாடக அமைப்பிற் சில குறைபாடுகள் 143 11. காளிதாசர் காலத்துப் பழக்கவழக்கங்கள் 160 1. நாடக இயல்பு வடமொழி நல்லிசைப்புலவரான காளிதாச ரியற்றிய சாகுந்தல நாடக அமைப்பின் திறனும் நுட்பமும் வனப்பும் பயனும் ஆராய்ந்து தெளிவதற்குமுன், நாடகத்தின் இயல்பும் அஃது இப்பரதநாட்டின் கட்டோன்றிய வரலாறுந் தெரிந்து கொள்ளல் இன்றியமையாததாகலின், முதலில் நாடகத்தின் இயல்பு இன்னதென்பதனை ஒரு சிறிது விளக்குவாம். ஆறறிவுடைய மக்களும் அவரல்லாத ஏனை இயங்கும் உயிர்களுஞ் செய்யும் முயற்சிகள் எல்லாம் அறிவு முயற்சியுந் தொழின் முயற்சியும் என்னும் இருபெரும் பிரிவில் வந்து அடங்கிநிற்கின்றன. இவ்வாறு எல்லாவுயிர்கள் மாட்டுங் காணப்படும் இவ்விருவகை முயற்சி களும் பொதுவாகத் துன்ப நீக்கத்தையும் இன்ப ஆக்கத்தையுமே அவாவி நிற்பனவாகும். இவ்வுயிர்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாக உள்ள துன்பங்கள் பசியும் காமமுமாகவே காணப் படுகின்றன. பசித்துன்பத்தை உணவினாலும், காமத்துன்பத்தை ஆணும் பெண்ணுமாய் ஒருங்கு மருவுதலானும் போக்கி, அவ்வாற்றால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்ந்து வருதலைக் கண்கூடாக நாம் கண்டு வருகின்றனம் அல்லமோ? இங்ஙனமாகத் தமக்கு இயற்கையே எழும் இருவகைத் துன்பங்களையும் நீக்கி அவ்வாற்றால் இருவேறு இன்பங்களை நுகரும் இயங்கும் உயிர்கள் அவ்விருவகையின்ப நுகர்ச்சி யளவில் அமைதி பெறாமல், வேறுமோர் இன்பத்தை நுகர்தலில் விழைவு மிகுந்து நிற்கின்றன. அஃதியாதோவெனில், அவை தாந் தாம் விரும்பு மாறெல்லாம் விளையாடி நுகரும் இன்பமேயாம். பார்மின்கள்! பசியுங் காமநுகர்ச்சியுந் தீர்ந்தபிறகு பூனை நாய் முதலிய உயிர்களும் எவ்வளவு கிளர்ச்சியுடன் விளையாடி இன்புறு கின்றன! பூனையானது மரங்களைப் பிறாண்டியும், பதுங்கித் துள்ளியும் விளையாடுதலை எவரும் பார்த்திருக்கலாம். தோழமைகொண்ட இரண்டு நாய்கள் பொய்யாக ஒன்றை யொன்று கௌவியும். ஒன்றோடொன்று முன்கால்களாற் பிணைந்தும், ஒன்றைவிட் டொன்று அப்புறங் குதித்தோடி மீண்டு வந்து கௌவியும், ஒன்றை யொன்று நோக்கியபடியாய்ப் பதுங்கியும், ஒன்று ஒன்றன் மேற் பாய்ந்தும் இங்ஙனமெல்லாம் விளையாட்டயர்ந்து மகிழ்தலை எவரும் பார்த்திருக்கலாம். இன்னும் வெளி நிலங்களிலும் மலைச் சாரலின் கண் உள்ள பள்ளத்தாக்குகளிலும் மேயும் ஆடுமாடுகள் புல் மேய்ந்தபின் ஒன்றோடொன்று முட்டியும், ஒன்றன்மேலொன்றேறியும், ஒன்று துரத்த மற்றொன்று வாலைக் கிளப்பிக்கொண்டு ஓடியும், துள்ளியும் விளையாடிக் களித்தலை அங்குச் சென்றவர்கள் பார்த்திருக்கலாம். இங்ஙனமே மக்களாய்ப் பிறந்த மன்னுயிர்களும் பல வகையான விளையாடல்களால் தம் ஒழிவு நேரங்களைக் களிப்புடன் கழித்து வருகின்றன. மக்களல்லாத மற்றை யுயிர்கள் பகுத்தறிவு இல்லாதனவாகலின், அவை தம்முடைய விளையாட்டுக்களை ஓர் ஒழுங்கான முறையில் விளையாடவும், அவை தம்மைப் பிறவுயிர்களுக்கு ஒழுங்கான முறையில் விளையாடிக் காட்டவும் வல்லன அல்ல. மற்று, மக்களோ தமக்குள்ள பகுத்தறிவு வன்மையால் தாம் விளையாடும் வகைகளை ஓரொழுங்குபட அமைத்துக்கொள்வதுடன், தம்மோ டொத்தார்க்கும் அவை தம்மை ஓர் ஒழுங்குறக் காட்டி அவர்க்குப் பெருமகிழ்ச்சியினை விளைவித்தும் வருகின்றனர். இவ்வாறு மக்கள் ஓர் ஒழுங்கான முறையில் விளையாடும் விளையாடல்கள் அத்தனையும் முதலில் எவ்வாறு தோன்றலாயின வெனின்; முதிர்ந்த பருவத்தினராயிருக்கும் மக்கள் துவக்கத்தில் எந்த நிலையினராயிருந்து எவ்வாறு விளையாடினரென்பதை ஆராயவே அவைதோன்றிய வுண்மை தெற்றென விளங்காநிற்கும். பார்மின்கள்! நாம் விளையாடும் பருவத்துச் சிறுவர் சிறுமிகளாய் இருந்த ஞான்று எங்ஙனம் விளையாடினோம்? சோறு சமைக்கும் விளையாட்டும், `பெண்ணு மாப்பிளை வைத்து மணஞ் செய்விக்கும் விளையாட்டும் அல்லவோ விளையாடினம்? ஏனைச் சிற்றுயிர்களைப்போலவே, மக்களும் பசி காமம் உடையர்; என்றாலும், பசித்தபோது ஒழுங்கான முறையில் உணவு சமைத்து உண்ணவுங், காமவேட்கை யெழுந்தபோது ஒழுங்கான முறையில் ஆணும் பெண்ணுமாக மணந்து காமவின்பம் நுகரவும் மக்கள் ஒழுங்கான அறிவுமுயற்சி வாய்ந்தவராயிருத்தல்போல, விலங்கினங்கள் வாய்ந்தவாகாமை தெளியக்கிடந்த தொன்றாம், மக்கள் செய்யும் முறையான அறிவுமுயற்சிகள் எல்லாம் இவ்வாறு சமையற்றொழிலும் மணவினையும் என்னும் இரண்டில் வந்தடங்கி ஒழுங்காக நடைபெறக் காண்டலின், அவர் தஞ்சிறுவர் சிறுமிகளுந் தாமுஞ் சோறு சமைத்தும் பெண்ணு மாப்பிளை வைத்து மணம்புரிவித்தும் விளையாட்டு அயரா நிற்கின்றனர். ஆகவே, பிற்பருவத்தில் மக்கள் அயரும் பல்வேறு விளையாடல்களுக் கெல்லாம் முற்பட்டு முதலாய்நிற்பன சிறார் அயரும் இவ் விருவகை விளையாடல்களேயா மென்பது தெற்றென உணர்ந்து கொள்ளப்படு மென்க. இனித், தம் பெற்றா ருற்றார் செய்யுஞ் செயல்களைக் கண்டு அவற்றைப்போல் தாமுஞ் செய்து விளையாட்டு அயர்வதிற் சிறுமகார்க்கு உண்டாம் மகிழ்ச்சியின் இயல்பினை ஆழ்ந்து ஆராயுங்கால், ஓர் ஒழுங்கான அமைப்பையும் ஒரு கிளர்ச்சியான செயலையுங் கண்டு அவைபோற்றாமுஞ் செய்தலிலும், அல்லது அவைபோற் செய்து காட்டப்படுங் காட்சி யிலுமாக மக்கள் பெரிதும் இன்புறுந்தன்மையரென்பது நன்கு புலனாகாநிற்கின்றது. சிறுமகார் தம் பெற்றோர் செய்யுஞ் சமையற் றொழிலைப் பார்த்துத் தாமும் மணற்சோறு சமைத்து இன்புறுதல் போலவே ஆண்டு முதிர்ந்தவர்களுந் தம்மாற் பாராட்டப்படுவார் செய்யும் நல்வினை தீவினைகளைப் பார்த்து அவர்போற் றாமுஞ் செய்து இன்புறுகின்றனர். கல்வியறிவிலுஞ் சொல் வன்மையிலுஞ் சிறந்தார் ஒருவர் ஓரவைக்களத்தேறிக் கடவுளின் அளவிறந்த ஆற்றலையும் அவர் எண்ணிறந்த உலகங்களையெல்லாம் வான்வெளியிற் பந்துகள்போல் வைத்துச் சுழற்றுதலையும் அவ் வுலகங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள எண்ணிறந்த உயிர்களுக்கும் எண்ணிறந்த வியத்தகும் உடம்புகளைக் கொடுத்து அவர் அவை தமக்கு அறிவுவிளங்கச் செய்துவரும் அருட்டிறங்களையும், நாம் நம் கண்ணெதிரே காண்பதுபோல் எடுத்துரைத்து நம் அறிவையும் அன்பையுங் கவர்ந்து சென்றக்கால், நாம் அதனால் அவர் வயமாகி அவரைப்போற் பேசவும் அவரைப் போற் கைகால் அசைக்கவும் விழைகின்றனம் அல்லமோ? அவ்விழைவு மீதூரப் பெற்றக்கால் அவர்போல் அவைகளைச் செய்யக் கற்று நாம் மகிழ்தலும் உண்டன்றோ? இங்ஙனம் நல்வினை செய்வாரைக் கண்டு நாமும் அவர் போற் செய்யவுஞ் செய்து மகிழவும் முனைந்து நிற்றல் போலவே, தீவினை செய்வாரைக் கண்டும் அவர்போற் செய்யவுஞ் செய்து மகிழவும் முனைந்து நிற்பாரும் உலகில் மிகப் பலரா யிருக்கின்றனர். கடவுள் இல்லையென்றும், எல்லாம் இயற்கையே யென்றும், ஊன் உண்டல், கட்குடித்தல், வரை துறையின்றி மருவல், ஏமாந்தவர் பொருளைக் கவர்தல், ஏமாறாதவரையும் ஏமாற்றுதல், அறிவில் ஏற்றத் தாழ்வின்மை யின் ஒருவர் ஏனையொருவர்க்கு அடங்கா தொழுகுதல் முதலிய வினைகளையெல்லாம் அவரவர் தத்தம் வன்மை மென்மைகட் கேற்பச் செய்தல் குற்ற மாகாதென்றும் ஆரவாரத் தோடு உரையாடுவார் திறத்தைக் கண்டு அவரை வியப்பாரும், அவர் போற்செய்ய விரும்பு வாரும், செய்தொழுகுவாரும் வரவர மிகுதல் காண்டுமன்றோ? இன்னும் ஒரு மலைச் சாரலை யும் அதன் கீழுள்ளதோர் ஏரிக் கரையில் மான்மந்தைகள் நீரருந்தி நிற்றலையுங் கண்டு மகிழும் மகிழ்ச்சியைவிட, அக் காட்சியினை எள்ளளவும் பிசகாமல் வரைந்து வைத்திருக்கும் ஓர் ஓவியத்தினைக் கண்டு அதனை வியந்து மகிழும் மகிழ்ச்சி நம்பால் மிகப் பெரிதா யிருக்கின்ற தன்றோ? இங்ஙனமே, நாம் ஓர் அரசனையும், அவன் அரசி யையும், அவன்றன் அமைச்சர் படைத்தலைவர் படையாட் களையும், அவனை எதிர்க்கும் அவன்றன் மாற்றரசர் அவனுக் குரியார்கள் முதலாயினாரையுங் காண நேரும் போதும், அவர் உரையாடுவனவற்றைக் கேட்க நேரும் போதும், அவர் செய்யுஞ் செயல்களைப் பார்க்க நேரும் போதும் அச்சத்தொடு விரவிய ஒருவகை மகிழ்ச்சியினை அடைகின்றனரேனும், அம் மகிழ்ச்சி, அவர்களைப்போற் கோலம்பூண்டு அவர்களைப் போல் உரையாடி அவர்களைப் போல் நடமாடிக்காட்டும் நாடகக்காரரைக் கண்டு நாம் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடாக மாட்டாது. ஆகவே, உண்மையாக உள்ள ஒரு தோற்றத் தினையும், உண்மையாக நிகழும் ஒரு நிகழ்ச்சியினையுங் கண்டு எய்தும் இன்பத்தினும் அவற்றைப் போல்வனவாந் தோற்றத்தையும் நிகழ்ச்சியையுங் கண்டு எய்தும் இன்பமே மக்களுள்ளத்தைப் பெரிதுங் கவரும் பெற்றியதாய்க் காணப்படுகின்றதென ஓர்ந்துகொள்க. இன்னும், உண்மையானதொரு தோற்றத்தையும் நிகழ்ச்சி யையுங் கண்டு களிக்குங்காலும், நாம் அவற்றைக் காணும் அவ்வளவில் அமைதிபெறாமல், அவற்றோடொத்த அழகிய தோற்றங்களையும் நிகழ்ச்சிகளையும் அந்நேரத்தில் உடன் நினைந்தோ நினைந்து சொல்லியோ மேலும் மிகக் களித்த லிலே மிக முனைந்து நிற்கின்றனம் அல்லமோ? திருத்தமான அமைப்பும் பொன்நிறமும் வாய்ந்து திகழும் ஒரு மங்கையைக் காண்பவர், அவளைத் தாம் கண்டு மகிழுங்கால் ஆ! இவள் ஒரு பொற்பாவையை யொத்துப் பொலிகின்றாள்! என்று அவளுக்கு ஒரு பொற்பாவையை ஒப்பாக எடுத்துச் சொல்லி வியந்து மகிழ்தலைக் காண்டுமல்லமோ? பின்னேயுள்ள சாகுந்தல நாடகத்திலுஞ் சகுந்தலையின் வடிவழகைக் கண்ட துஷியந்த மன்னன், மோவா மலரோ நகங்களை யாத முழுமுறியோ! ஆவா கருவி துருவாது பெற்ற அருமணியோ! நாவாற் சுவையாப் புதுநற வோ! செய்த நற்றவங்கள் தாவா தொருங்கு திரண்டுவந் தால்அன்ன தையலரே! என்று அவளது புத்தெழில் நலத்தின் இயல்புக்கு ஒத்த பல அரும்பெரும் புதுப் பொருள்களை உவமையாக எடுத்துச் சொல்லிப் பெரிது மகிழ்தல்காண்க. இவ்வாறே, மனக் கவர்ச்சியினை விளைக்கும் எந்த உயர்ந்த தோற்றத்தை எந்த அழகிய பொருளைக் கண்டாலும், அவற்றோடொத்த பிறபொருட்டோற்றத்தையும் அழகையும் ஒருங்கு நினைந்து மகிழ்தலே மக்களுள்ளத்தின் இயற்கை நிகழ்ச்சியாகக் காணப் படுகின்றது. இந்நிகழ்ச்சியின் முதற்றோற்றமே சிறாரிடத்து மணற்சோற்று விளையாட்டாகவும் மரப்பாவை மணமாகவும் முகிழ்க்கின்றது. இனி, உலகநடையில் முதன்மையுற்றுத் தோன்றும் இருவகை நிகழ்ச்சிகளை இங்ஙனம் ஒப்புமை வகையால் உள்ளடக்கிய இவ்விருவகைச் சிறார் விளையாட்டுக் களிலிருந்தே, இம்மலர் தலையுலகிற் பலதலைமுறையாய்ப் பரந்து விரிந்த நிகழ்ச்சிகளை யெல்லாங் கண்ணாடிபோற் றன்னகத்தே பொதிந்துவைத்து விளங்கக் காட்டும் நாடகம் ஆகிய மாந்தர் விளையாட்டுத் தோன்றலாயிற்றென்றுணர்தல் வேண்டும், நாடகம் என்னுஞ்சொல் விளையாட்டு என்னும் பொருளை யுடையதென்பதற்கு மாணிக்க வாசகப் பெருமான் அருளிச்செய்த, புகவே தகேன் உனக் கன்பருள் யானென்பொல் லாமணியே! தகவே எனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை மிகவே யுயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாவமுதே! நகவே தகுமெம் பிரான்என்னை நீசெய்த நாடகமே! (திருச்சதகம், 10) என்னுந் திருவாசகச் செய்யுளே சான்றாம். இன்னும், பொது மக்கள் எல்லாரும் நாடகத்தை ஆட்டம் என்று வழங்கி வருதலும் உற்றுநோக்கற்பாற்று. இன்னும் இது குதி என்னும் முதனிலையிற்றேன்றிய கூத்து என்னுஞ் சொல்லானும் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே, விளையாட்டு, நாடகம், ஆட்டம், கூத்து என்னுஞ் சொற்களெல்லாம் முதலில் ஒரே பொருளை யுணர்துவனவாய்ப், பின்னர் நாடகமுறைகள் பல்கப் பல்கச், சிறிது சிறிது பொருள் வேற்றுமை யுடையவாயின வென்க. இனி நாடகம் ஆடும்வகை துவக்கத்திலிருந்தே எவ் வெவ்வாறு மாறுதலெய்தி வரலாயிற்றென்பது ஆராயற் பாற்று. ஒருவனையும் ஒருத்தியையும் வைத்து மணம் புரிதலைக் காணுஞ் சிறார்கள் தாமும் அங்ஙனம் மணஞ் செய்வித்து விளையாடத் தொடங்குகையில், மணமகனுக்கு அடை யாளமாக ஆண்வடிவாய்ச் சமைத்த ஒரு மரப்பாவை யினையும் மணமகளுக்கு அடையாளமாகப் பெண்வடிவாய்ச் சமைத்த ஒரு மரப்பாவையினையும் ஒருங்குவைத்து, அவை தமக்குத் தாம் அறிந்தவாறு ஆடையணிகலன்கள் அலங்கல் சாத்தி ஒப்பனை செய்து விளையாடல் கண்டாமன்றோ? அதுபோலவே, ஆண்டில் முதிர்ந்த இளைஞரும் பிறருந் தாம் முதன்முதற் றுவங்கிய நாடகத்தையும் மரப்பாவைகள் கொண்டே நடத்திக் காட்டினர். இது பாவைக் கூத்து என்றும் பொம்மலாட்டம் என்றும் இன்று காறும் வழங்கி வருகின்றது. யாம் சிறு பிள்ளையா யிருந்த காலத்தில் அரிச்சந்திரநாடகம் முற்றும் அழகிய பாவைக் கூத்தில் வைத்துத் திறம்பட நடத்தப்பட்ட தனைப் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேம். இங்ஙனம் மரப்பாவையாற் சமைத்த பாவைகளைக் கொண்டு நாடகம் நடத்தப்படுதல் போலவே, தோலாற் சமைத்த பாவைகளைக் கொண்டும் நாடகம் நடத்தப்படுதல் பண்டைக் காலந்தொட்டே யுளதென்பது சிலப்பதிகார அரங்கேற்றக்காதைக்கு அடியார்க்கு நல்லார் உரைத்த வுரையால் நன்கறியப்படும். ஆனாலும், இவ் விருவகைக் கூத்தில் மரப்பாவைக் கூத்தே ஏனைத் தோற்பாவைக் கூத்துக்கும் முற்பட்ட தென்பது, தோற்பாவைக் கூத்துந் தொல்லை மரப்பாவை யியக்கமும் என்னுஞ் சிவஞான சித்திச் செய்யுளிற் பழமைப்பொருடருந் தொல்லை என்னுஞ் சொல் மரப்பாவைக் கூத்துக்கு அடைமொழியாய் நிற்றலால் தெளியப்படும். எனவே, மரப்பாவை தோற்பாவைகளாலேயே முதன்முதல் நாடகம் நடத்திக் காட்டப்பட்டதென்பது உணர்ந்துகொள்க. வடமொழிப் பழநூலாகிய மாபாரதத்தின் கண்ணும் (3,30,23,5,39,1) பாவைக்கூத்து மொழியப் பட்டிருத்தலானும், ஆசிரியர் குணாட்டியராலே இயற்றப்பட்ட பிருகத்கதையில் அசுரர்க்குத் தச்சனான மயன் என்பவனின் புதல்வி தன் றோழிக்குப் பாவைக்கூத்துக் காட்டி அவளை மகிழ்விப்பவள் என்பது கூறப்பட்டிருத்தலானும் இது வடநாட்டின் கண்ணும் பண்டைநாளிற் பரவியிருந்தமை நன்குணரப்படு மென்க. இனி, உயிரற்ற பாவைக்கூத்தில் வைத்து மாந்தரின் உலகியலொழுக்கத்தை நடத்திக் காட்டுவது பேருழைப் பினையும் பெருவருத்தத்தினையுந் தருவதல்லாமலும், உயிருள்ள மக்களின் குணங்குறிகளை உண்மையில் உள்ளபடியே புலப்படுத்துதற்கும் ஆகாமையின் அவ்விடர்ப்பாடு கண்டு, பின்னர் இளைஞர்களையே நாடகம்ஆடப் பழக்கி அவர்கள் பலவகைக் கோலம்பூண்டு ஒரு கதையினை நடத்திக் காட்டுமாறு அறிஞர் வகுத்தனர். இவ்வாறு மக்களே நாடகம் ஆடக் கற்றுக்கொண்டபின், இது மிகுந்துவரப் பாவைக்கூத்து நாளடைவில் அருகி வரலாயிற்று, என்றாலும், பாவைக்கூத்து முற்றுமே மறைந்து போகாமல், இடையிடையே இன்றுகாறும் நடைபெற்று வருதலை ஒரோவிடங்களிற் காணலாம். அற்றேல் அஃதாக கூத்திற்கும் நாடகத்திற்கும் வேறுபாடு என்னையெனிற் கூத்தென்பது ஒரு கதையின் ஒரு பகுதியை ஒருவரேனும் அன்றி ஒருசிலரேனும் ஆடிக் காட்டுவதுங், கதையே தழுவாது ஒரு செய்யுட் பொருளைக் கண் கை கால் முகம் முதலான உறுப்புக்களின் இயக்கங்களால் ஆடிக் காட்டுவதும், விழாக்காலங்களில் ஒருவரேனும் ஒருசிலரேனும் பாட்டுங் கொட்டுங்கொண்டு மகிழ்ச்சிமிக்கு ஆடுவதும் எனப் பலதிறப்படும். இதன் விரிவெல்லாஞ் சிலப்பதிகார அரங்கேற்று காதைக்கு அடியார்க்கு நல்லார் கூறியவுரையிற் கண்டுகொள்க. மற்று, நாடகம் என்பதோ முழுவதூஉங் கதை தழுவிவரும் கூத்தாகும், இஃது அடியார்க்கு நல்லாருரையானும் நன்கறியக் கிடக்கும். என்றாலும், நாடகம் என்னுஞ்சொல் ஒரோவொரு காற் கதை தழுவாத கூத்தின்மேற்றாயும் வருதல் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி என்னுந் திருவாசகத்தால் (திருச்சதகம், 7) விளங்காநிற்கின்றது. 2. நாடக வரலாறு இனி, முதல்முதல் நாடகமானது சிவபிரானாலும் உமைப் பிராட்டியாராலும் ஆக்கப்பட்டதென்றும், சிவபிரானால் வகுக்கப்பட்டது. தாண்டவம் என்னும் பெயர்த்தாய் ஆண் மக்கள் மும்முரமாய் ஆடுங் கூத்தாமென்றும், உமைப் பிராட்டி யாரால் வகுக்கப்பட்டது. லாயம் என்னும் பெயர்த்தாய் நிலத்தினின்றும் மேல்எழாத அடிகளின் அசைவொடு முன்னும் பின்னுமாக ஆடிச்சென்று கை கண் புருவம் இதழ் முதலிய உறுப்புக்களாற் காதல் நிகழ்ச்சியினைப் புலப்படுத்தி இசையுடன் கூடி இனிது நடைபெறுங் கூத்தாமென்றுந் தசரூபகங் கூறாநிற்கின்றது (1,10) இங்ஙனமே முத்திராராட்சசமும் மாலதிமாதவமும் நுவலுதல் காண்க. காளிதாசருந் தாமியற்றிய மற்றொரு நாடகமாகிய மாளவிகாக்கி நிமித்திரத்திற் கணதாசர் என்னும் நாடக ஆசிரியர் வாயிலாகச் சிவபிரானும் அம்மை யுமே நாடகத்தை முதன் முதல் ஆக்கினோராவ ரென்பதனைத் தெளிவுறுத்தல் கருத்திற் பதிக்கற்பாற்று. மேலுங், கி.மு.700ஆம் ஆண்டில் அஃதாவது இற்றைக்கு 2600 ஆண்டுகளுக்குமுன் இருந்தவராக முடிவு செய்யப் பட்டிருக்கின்ற பாணினி முனிவர்1 தமது அட்டாத்தியாயி யிற் குறிப்பிட்டிருக்கும் நட சூத்திரங்கள் என்னும் நூல் இஞ்ஞான்று நாட்டிய சாதிரம் என்னும் பெயரால் வழங்கிவருகின்றது, எனவே, இந்நூல் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னமே இயற்றப்பட்ட மிகப் பழைய நூலாதல் தானே போதரும். இத்துணைப் பழையதாகிய நாட்டிய சாதிரத்தின் கண் திரிபுரதகனம் என்னும் நாடகக் காப்பியங் குறிப்பிட்டிருத்தலாற், பண்டைக் காலத்திருந்த முன்னோர்கள் முதன் முதல் ஆடக்கண்டு களித்தது சிவபிரான் முப்புரங்களை எரித்த கதை தழுவிய நாடகமேயாதல் தெற்றெனப் புலனாகின்றதன்றோ? அக்கதை தழுவிய நாடகம் அத்துணைப் பழையதாய் இருத்தல் பற்றியன்றே பிற்காலத் திருந்த வத்சராஜன் (கி.பி.1163) என்னும் நாடகப் புலவனும், அப்பெயர்பூண்ட திரிபுரதாகம் என்னும் நாடகக் காப்பியத் தினை இயற்றுவானாயினனென்பது, என்றிவ்வாறு தமிழர்கள் வணங்கிய தமிழ்த்தெய்வமாகிய சிவபிரானும் அம்மையுமே நாடகத்தை முதன்முதல் ஆக்கினவர் களென்னும் வரலாறு பண்டுதொட்டு வருதல்கொண்டுஞ், சிவபிரான் முப்புரம் எரித்த நிகழ்ச்சியே முதன்முதல் நாடகமாகச் செய்து நடித்துக் காட்டப் பட்டதென்று வடமொழிப் பழநூலாகிய நாட்டிய சாத்திரங் கூறுதல் கொண்டும் பண்டைக்காலத்தில் நாடகநூல் உண்டாயது தமிழ்மக்களுள்ளே தாம் என்று அறிதல்வேண்டும். தமிழில் இயற்றப்பட்ட பழைய நாடக நூல்கள் இஞ்ஞான்று காணக்கிடையாமை பற்றியும், இக்காலத்து வழங்கும் நாடகக் காப்பியங்க ளெல்லாம் ஆரியம் பிராகிருதம் அர்த்தமாகதி மராட்டி முதலான வடநாட்டு மொழிகளில் எழுதப் பட்டிருத்தல் பற்றியும் நாடக நூல்கள் வடமொழிக்கே யுரியவை போலுமென்று மலையற்க. ஏனெனின், வடக்கேவந்து குடியேறிய ஆரியர்கள் நடனமுங் கூத்தும் இயற்றத் தெரிந்தவர்கள் அல்லரெனவுங், கதைதழீஇய நாடகம் பண்டையாரியர்க்குள் நடைபெற்ற தென்பதற்கு ஆரியவேத நூல்களுள் யாண்டும் ஏதொருகுறிப்புங் காணப்படவில்லை யெனவும் வடமொழியாராய்ச்சியில் மிகச் சிறந்தவராகிய கீத் (Keith) என்னும் ஆசிரியர் நன்காய்ந்து முடிவுகட்டி யிருத்தலால்2 நடனமும் நாடகமுங் கூத்து மெல்லாம் முதன் முதற் கண்டறிந்து நூல்கள் எழுதினோர் பண்டைத் தமிழாசிரியர்களேயாதல் நன்கு பெறப்படாநிற்கும். இதனாலன்றே தொன்றுதொட்டு இயலும் இசையும் நாடகமுந் தமிழுக்கே உரியவாதல் தெரித்துச் சான்றோரெல்லாந் தமிழை முத்தமிழ் என்று வழங்கி வருகின்றார் இவ்வாறே ஆரியத்தைத் த்ரிதம் என்னும் அடை கொடுத்து வழங்கல் வடநூல்களுள் யாண்டுங் காணப்படா மையின், அவ்வழக்குத் தமிழுக்கே சிறந்ததாதல் தெளியப்படும் என்பது. அல்லதூஉம், நாடகத்தை முதற்கட் டோற்றுவித்த இறைவன் அதனைப் பரதமுனிவனுக்குக் கொடுத்து, அதனை அவன் வாயிலாக வழங்க விடுத்தனன் என்று நாட்டிய சாத்திரம் உரை தருதலால், நாடகத்திற்கு முதலாசிரியன் பரதனே யென்பதூஉம் நன்கு பெறப்படுகின்றது. சிவபிரான் தமிழர்கள் வழிபட்டு வந்த முழுமுதற் கடவுளேயாதலும், அவனைத் தீப்பிழம்பொளியில் வைத்து வணங்கித் தீவளர்த்த தமிழ் வகுப்பினர் பரதரே யாதலும் எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலில்3 விரிவாக விளக்கிக் காட்டப்பட்டிருக்கின்றன. இப்பெற்றியரான தமிழ்ப்பரத வகுப்பினரிற் றோன்றிய பரதமுனிவ னொருவனுக்கே சிவபிரானால் நாடகம் வழங்கப் பட்ட தென்னும் பண்டை வரலாறு, பழைய நாடகக்கலை தமிழ்மக்களுள்ளேதான் தோன்றி நெடுக வழங்கிவரலாயிற் றென்னும் உண்மையினை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விள்ள விளக்குதல் கண்டு கொள்க. அல்லதூஉம், இஞ்ஞான்று வடமொழிக்கண் உள்ள நாடகங்களின் ஈற்றில் நுவலப்படும் வாழ்த்துரையும் பரதவாக்கியம் எனப் பெயர் கூறப்பட்டு வருதலும் இதற்குப் பின்னுமொரு சான்றாய் நிலையும் அதுவேயுமன்றிப், பாசன் என்னும் நாடகப்புலவனைத்தவிர, அவனுக்குப்பின் வந்தோரான சூத்திரகன் காளிதாசன், ஹர்ஷன், பவபூதி முதலான வடமொழிநாடகப் பேராசிரிய ரெல்லாருந் தாம் இயற்றிய நாடகக்காப்பியங்களின் முதலிலும் இடையிலும் ஈற்றிலு மெல்லாஞ் சிவபிரானையே வணங்கியும் வழுத்தியுங் குறிப்பிட்டும் இருத்தலும், அப் பெருமானைச் சிறந்தெடுத்து வழிபடுந் தமிழ்ப் பேராசிரியர்களே நாடகம் வல்லாராதலை நன்கறிவுறுத்தும் அடையாளமாமென்க. இங்ஙனஞ் சிவபிரான் முப்புரங்களை யெரித்த கதை தழீஇப் பண்டுதொட்டு நடித்துக் காட்டப்பட்டு வந்த நாடகங் கொடுகொட்டி என்னும் பெயர்த்தாய்த் தமிழ் நாட்டின் கண்ணும் பழமைக்காலத்தே நடிக்கப்பட்டு வந்த தொன்றாம். இற்றைக்கு 1700 ஆண்டுகளுக்குமுன் அரசு வீற்றிருந்த செங்குட்டுவன் என்னுஞ் சேரவேந்தன், தன்னைப் பழித்த வடநாட்டு அரசர்மேற் படையெடுத்துச் சென்று, அவரை யெல்லாம் போரில் வென்று, சிறைப்படுத்திக் கண்ணகியின் உருவஞ் சமைத்ததற்கு இமயமலைக் கண் ஆய்ந்தெடுத்த கருங்கல்லை அவர் தலைமீதேற்றிக் கொணர்வித்துத், தன் மாப்பெருந் தேவியோடும் நாடக அரங்கேறி நாளோலக்கம் இருந்த ஞான்று பறையூர்க் கூத்தச்சாக்கையன் என்னும் நாடகம் வல்லான், சிவபிரான் முப்புரமெரித்த கொடுகொட்டி, நாடகத்தையே அவர் முன்னிலையில் நடித்துக்காட்டி அவரை மகிழ்வித்தனனென்று, அப்போது அவரோடு ஒருங்கிருந்து அதனைக் கண்ட ஆசிரியர் இளங்கோவடிகள். ஆங்கவள் தன்னுடன் அணிமணி அரங்கம் வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஏறித் திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும் பரிதரு செங்கையிற் படுபறை ஆர்ப்பவுஞ் செங்கண் ஆயிரந் திருக்குறிப் பருளவுஞ் செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும் பாடகம் பதையாது சூடகந் துளங்காது மேகலை ஒலியாது மென்முலை அசையாது வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது உமையவள் ஒருதிற னாக ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து. (சிலப்பதிகாரம், நடுகற்காதை, 65-77) என்று அருளிச்செய்திருக்குமாற்றாற், கொடுகொட்டி நாடகந் தமிழ்நாட்டின்கண்ணும் ஆடப்பட்டு வந்தமை நன்கறியப்படு மென்பது. அங்ஙனமாயினும், பண்டைத்தமிழ் மொழிக்கண் இயற்றப்பட்ட நாடகக்காப்பியங்களும், அக்காப்பிய இலக் கணக்கூறும் நாடகத் தமிழ்நூல்களுஞ் சிலப்பதிகார உரை யாசிரியரான அடியார்க்கு நல்லார் காலத்திலேயே ஐயகோ! இறந்து போயின! அவை அங்ஙனம் இறந்துபட்டது எதனாலெனிற் கூறுதும்; இசை நாடகங்களை அருவருப்பாரான பௌத்த சமண்சமயத்தவர்கள் வடநாட்டினின்றும் பெருந் திரளாய்ப் போந்து இத்தமிழ் நாடெங்கணுங் குடி புகுந்து வைகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல், அவர் தங் கோட்பாடுகளிற் சிக்குண்ட தமிழாசிரியர்களும் அவர்போல் அவற்றை அருவருத்து விடவே அந்நூல்களெல்லாம் அங்ஙனம் அழிந்துபடலாயின! அவர்க்குப்பின் சைவசமயத்தை வளர்த்து வந்த ஆசிரியர்களும், ஈரநெஞ்சம் அற்ற பௌத்த சமண் துறவொழுக்கமுறைகளைத் தழீஇத் தமக்குப் பண்டேயுரிய விழுமிய அன்பினைந்திணை ஒழுக்கவியல்களை ஒரீஇத் தாமும் அவர்போல் இசை நாடகத் தமிழைக் கைந்நெகிழ விட்டனர்! இங்ஙனம் தம் நாட்டுட்புகும் அயலவர் ஒழுகலாறுகள் எத்திறத்தவாய் இருப்பினும் அவை தம்மை ஆராயாது கைப்பற்றித், தமக்குரிய சீர்த்த பண்டையுரிமைகளை யெல்லாம் எளிதில் இழந்து விடுதற்கண் முன் நிற்பா ரான நந் தமிழ்மக்களிடையே இசைநாடகத் தமிழ் இறந்துபட்டது இயல்பேயன்றோ? இசை நாடகம் மட்டுமோ! இயற்றமிழ் நங்கையுங்கூடத் தன் தனிச்சிறப்பை வரவர இழந்து, அயல்மொழிச் சொற்பொருள் நஞ்சு தன் கண் அளவின்றி விரவப்பெற்றுக் குறையுயிருடையளாய்த், தன்னை முன்போல் அருகாப் பேரிளமையிற் பெருக வைக்கும் ஓர் ஆண்மைப் பெருமகன் உதவியை வேண்டிநிற்றல் அறியாதார் யார்? அதுநிற்க. இனித், தென்றமிழ் நாட்டவர் நிலை இவ்வாறாயினும், வடநாட்டில் ஆரியமொழியைத் தழீஇ நின்ற நம் முன்னோர் நிலை அத்துணை இரங்கத் தக்கதாயில்லை. வடநாட்டிலிருந்த அறிஞர் ஆரியமொழியை வழங்கப் புகுந்திடினுந், தமக்குரிய இசை நாடகங்களையும் ஒரே தெய்வக் கோட்பாட்டையுங் கைவிடாராய், அவை தம்மை முதல்வைத்தே இயல் இசை நாடக நூல்களுஞ் சமய ஆராய்ச்சி நூல்களும் பிறவும் வட மொழிக்கட் டொடர்பாக இயற்றி வரலானார். என்றிவ்வாறு வடமொழிக் கண் நாடகநூல் வந்த வரலாற்றின் உண்மை அறிந்துகொள்க. அடிக்குறிப்புகள் 1. இம்முடிவை எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலின் 729ஆம் பக்கம் முதற் காண்க. 2. Read Dr. A. B. Keith’s ‘The Sanscrit Drama, pp.25-27. 3. மாணிக்கவாசகர் காலம் பக்கம், 16 164 - 67. 3. நாடக அமைப்பு இனி, நம்போன்ற மக்களுட் சிலர் தமதியற்கைக்குந் தமது சொல்லுக்குந் தமது ஒழுகலாற்றிற்குந் தமது இன்ப நுகர்ச்சிக்கும் ஒத்து நிற்பாரோடு உறவுகொண்டும், அவற்றுக்கு மாறுபட்டு நிற்பாரொடு பகைகொண்டும் ஒழுகாநிற்புழி, அவர்தம் வாழ்நாள் நிகழ்ச்சிகள் ஒன்றோ டொன்று பிணைந்து சிக்குண்டு, ஈற்றில் அச் சிக்கு விடுபட்டு நன்றாய் முடிதலுஞ், சிக்கு விடுபடாது தீதாய் முடிதலுங் காண்டு மன்றே. இங்ஙனம் இருவேறு வகைப்பட்டு முடியும் மக்களியற்கை நிகழ்ச்சிகளின் தொடர்பே கதையென்னும் பெயர்த்தாய் நாடக அரங்கின்கண் வைத்து ஆடுவாரால் நடத்திக் காட்டப்படுவதாகும். எனவே, நாடகத்திற்கு உயிராவது ஒரு சிறந்த கதையேயா மென்பதூஉம், அக்கதையின் கட் டொடர்புபட்டு நிற்கும் மக்களையும் மக்கள் நிகழ்ச்சிகளையும் நாடக அரங்கின்கட்போந்து ஆடிக்காட்டு வார் அங்ஙனம் ஆடிக்காட்டுதற்கு இசைந்த முறையால் எல்லாம் வைத்து ஒரு நல்லிசைப் புலவனால் தொடுக்கப் படுவதே நாடகக்காப்பியமா மென்பதூஉம் இனிது பெறப்படும். அற்றேல், கதைநூலுக்கும் நாடக நூலுக்கும் வேறுபாடு என்னையெனிற், கதைநூல் எழுதும் ஆசிரியன் தன் உரையாகக் கூறவேண்டுவன வெல்லாங் கூறுதற்கு உரியன், மற்று, நாடக நூலாசிரியனோ, நாடகக்கதையுள் வருவார் பெயரும், அவர் வருதல்போதலும், அவர்வரும் இடமுங்காலமுங் குறிப்பதன்றி, அங்ஙனம் வருவார் இயற்கை செயற்கைகளும் அவர் வருதல்போதல் வகைகளும் அவர்வரும் இடங்களின் இயற்கை காலத்தின் நிலைகளுந் தானே நேர்நின்று விரித்துக் கூறுதற்கு உரியான் அல்லன் அன்றி அவைகளைக் கூற விழைகுவானேல், தான் இயற்றும் நாடகக்கதையில் வருவார் வாயில்நின்றே அவை தம்மைச் சுருக்கமாக வருவிப்பானல்லது, தானே அவை தம்மைக் கூறப்பெறான், கதைநூலாசிரியனோ தான் வரையுங் கதையுள் வருவாரின் வேறாகத் தன்னைத் தனிநிறுத்தித், தனக்குமுன் செல்வாராக அவரைத் தன்னெதிர் தொடர்புபட நிறுத்தி அவர்தம் இயற்கை செயற்கைகளையும் அவர்தம் வருதல் போதல் வகைகளையும் அவர் இயங்கும் இடத்தினியற்கை காலத்தின் நிலைகளையும் தான் வேண்டுமா றெல்லாம் விரித்தேயாயினுஞ் சுருக்கியே யாயினும் வரையப்பெறுவன். மேலும், ஒரு நாடகக்கதை நிகழ்ச்சியானது ஓர் இரவில் ஒன்பது மணிக்குத் துவங்கி இரண்டல்லது மூன்றுமணிக்குள் நடத்திக் காட்டுதற்கு இசைந்ததாக இருக்கவேண்டுமாதலால், அது விரிந்து செல்லுதற்கு இடம்பெறாது; அன்றியும். மிக விரிந்த பாரதக் கதை இராமாயணக் கதை கந்தபுராணக் கதை முதலியவற்றை நாடகமாக நடத்திக் காட்டப்புகுவாரும், அவை தம்மைப் பல பகுதிகளாகப் பிரித்து, அவ் வொவ்வொரு பகுதியையும் ஒவ்வோரிரவில் முடிக்கத்தக்க பற்பல நாடகங்களாக இயற்றி நடத்திக் காட்டக் காண்டுமாகலின், நாடகமென வகுக்கப்படுவ வெல்லாம் ஓரிரவில் நடத்திக் காட்டுதற்கு ஏற்ற சுருங்கிய அளவுடையதாகவே இருத்தல் வேண்டுமென் றுணர்ந்து கொள்க. இவ்வளவு கடந்து இயற்றப்படுவன நாடகமுறையில் இயற்றப்பட்டாலும், அவை ஓரிரவில் ஆடிக் காட்டுதற்கு இசையாமையின் நாடகமாதல் செல்லாதென்க. மற்றுக், கதைநூற்கதைகளோ அங்ஙனம் ஆடிக் காட்டப்படுவன அல்லவாய், எத்தனை நாட்களேனுந் தொடர்ந்து பயிலுதற்கேற்ற அமைப்புடைய வாகலின், அவை ஆசிரியன் வேண்டு மாறெல்லாம் விரிந்து செல்லுதற் கேற்ற பெற்றியவா மென்று கடைப்பிடிக்க. இன்னும், நாடகம் என்பது பரந்துபட்ட இந் நிலவுலகத்தின் ஒரு பகுதியிலோ அன்றிச் சில பகுதியிலோ நடைபெறும் மக்கள் சிலர் பலரின் இயக்கத் தொடர்பை வரை யறைப்பட்ட ஒரு சிறிய இடமாகிய அரங்கின் கண்ணே அழகு மிகுத்து ஆடிக்காட்டுந் திறனுடையது; அத்திறத்தினை நினைந்து பார்க்குங்கால், ஒரு புல்நுனிமேல் நின்ற ஒரு சிறுபனித் திவலையானது தன்னைச் சூழவுள்ள பெரிய இயற்கைப்பொருட் டோற்றங்களைத் தன்னகத் தடக்கிக் காட்டுந் திறத்தினையே அதற்கு ஒப்பாகச் சொல்லலாம். மற்று, விரிந்த ஒரு கதைநூலோ அங்ஙனமே விரிந்த மக்களியல் நிகழ்ச்சிகளைத் தன்கண் நீளக்காட்டுந் தன்மையுடையது அதற்கு மிக அகன்றதோர் அழகிய ஏரிநீர், தனக்குமேல் முழுநிலா வட்டமிட்டு வயங்க அதனைச் சூழ வான்மீன் றொகுதிகள் பொன்றுகளென மிளிரத் தோன்றும் ஒரு பெரு நீல வான்பரப்பைத் தன்கண் விளங்கக் காட்டுதலையே உவமையாகச் சொல்லலாம். இவ்வாறு அவையிரண்டற்கும் உள்ள வேற்றுமை யுணர்ந்து கொள்ளல் வேண்டும். இனிப், பண்டைநாளில் நாடகங்கள் செய்யுளும் உரையும் விரவிய நடையில் ஆக்கப்பட்டன. மற்றுக், கதைநூல்களோ செய்யுள்நடை ஒன்றிலேயே இயற்றப்பட்டன. நாடகங்கள் ஏன் அங்ஙனஞ் செய்யுளும் உரையுங் கலந்த நடையில் ஆக்கப் பட்டன வெனின் அவை, உலகத்தில் நிகழும் மக்கள் ஒழுகலாறு களைப் பெரும்பாலும் அங்கு நிகழுமாறே யெடுத்து ஆடிக் காட்ட வல்லாரால் ஓர் அரங்கின்கண் வைத்து நடத்திக் காட்டப்படுந் தன்மையவாதலால், உலகத்திற் கல்வியறிவிலும் ஆற்றலிலும் மிக்க மேன்மக்களின் உரை யாட்டுகளைச் செய்யுள் நடையிலும், அவரல்லாத ஏனை மக்களின் உரையாட்டுகளை அவரவர் உயர்வு தாழ்வுக்கேற்ற உரைநடையிலுமாக இயற்கைக்கு மாறாகாமல் நடத்திக் காட்டினால் மட்டுமே அவற்றை நேரிருந்து காண்பார்க்கு இன்பம் உண்டாம்; ஆகவே, நாடகங்களெல்லாம் இயற்கைநெறி திறம்பாமல் அங்ஙனம் இருவகை நடையும் ஒருங்குவிராய் அமைக்கப்படலாயின. மற்றுக், கதைகளை நுவலுங் காப்பியங்களோ, அரங்கின்கண் வைத்து அவை தம்மை நடத்திக் காட்டுவன அல்லவாய், இயற்கை செயற்கைகளை யெடுத்து விரிக்குந் தம் ஆசிரியன்றன் அஃகியகன்ற அறிவின்றிறங்களையே பெரும்பான்மையும் புலப்படுத்துவனவாய்த், தம்மை ஊன்றிப் பயில்வார்க்குச் சொற்சுவை பொருட்சுவைகளைப் பெருகுவிக்கும் பெற்றிய வாகலின், அவைதம் இயலுக்கு ஏற்பச் செய்யுள் நடைவளம் ஒன்றே பொருந்தலாயின வென்க. எனவே, காளிதாசரும் அவர்க்கு முன், பின் னிருந்த நாடக ஆசிரியரு மெல்லாந் தாம் தொடுத்த நாடகக்கதையுள் வருவார் உயர்வு தாழ்வுக்கேற்ற செய்யுள்நடை உரைநடைகள் விரவிய முறையிற் றம்முடைய நாடகநூல்களை இயற்றினாராக, வியாசரும் வான்மீகியும் அவர்போன்ற ஏனைக் காப்பிய நூலாசிரியரு மெல்லாந் தாம் நுவலுங் கதைகளைத் தம் அறிவின் றிறனால் எத்துணைச் சுவை பெருக நுவலலாமோ அத்துணைக்கேற்ப முழுதுஞ் செய்யுள் நடையிலேயே யாக்கலாயினா ரென்றுணர்ந்துகொள்க காளிதாசரும் நாடகமுறை விடுத்துக், காப்பியமுறை தழீஇக் கதை நூல் யாக்கப் புக்குழிச், செய்யுள்நடை யொன்றனையே மேற்கொண்டார் என்பதற்கு, அவரியற்றிய இரகுவம்சம், குமாரசம்பவம் முதலிய பொருட்டொடர்நிலைச் செய்யுட்களே சான்றா மென்பது. 4. நாடகக் கதையமைப்பு இனி, இங்ஙனம் அமைக்கப்படும் நாடகம் என்னும் ஓர் அழகிய உடம்புக்கு உயிர்போல்வது, அதனூடு தொடர்ந்து நிகழுங் கதையே யாகும். வல்ல ஓர் உயிர் இல்லாத வெற்றுடம்பு ஏதொரு பயனும் உடையதாகாமை போலக், கதைச்சுவை நிரம்பாத நாடகமும் பயனுடைய தாகாது ஏனென்றாற், கதைச்சுவை வாயாத நாடகத்தைக் கண்டு இன்புறுவார் உலகில் எவருமே இலராகலினென்பது. அஃதொக்கும்; கதைச்சுவை யென்பது இன்னதென் றறிந்திலமாகலின், அதனை ஒருசிறிது விளக்கிக் காட்டுக வெனிற், காட்டுதும். ஓர் அரசிளைஞன், தன் நகரத்திற்குப் புறம்பேயுள்ள கானகத்தில் உலவும் புலி கரடி முள்ளம்பன்றி யானை முதலான மறவிலங்குகள் தன்கீழ் வாழுங் குடிமக்கட்குத் தீங்கு இழையாவாறு, திங்களுக்கு ஒருகால் தன் ஏவலாளர் சிலருடன் படைக்கலந் தாங்கிக் குதிரை யூர்ந்துசென்று, அதன்கண் வேட்டமாடித் திரும்புவான் என்ற அளவுமட்டும் ஒரு சிறுகதை ஒருவர் சொல்வராயின் அதனைக் கேட்பார் சிறிதும் இன்புறார். மற்று, அதனை அவ்வாறு கூறாது, அங்ஙனம் வேட்டம் ஆடித் திரும்பும் வழக்கம் உடைய அவ்விளைஞன் ஒருகால் அக் கானகத்தினூடு கொடியதொரு முள்ளம் பன்றியைப் பின்றொடர்ந்து தான் இவர்ந்த குதிரையை விரைந்து செலுத்திச் செல்வுழித், தன்னுடன் போந்த ஏவலாளரைப் பிரிந்து, அதன்பின்னே அக்காட்டினூடு நெடுந்தொலைவு போய்விட்டான். அவன்முற் சென்ற பன்றியோ அவன் கண்களுக்கும் எட்டாமல் அடர்ந்த புதர்களினூடு மறைந்தோடிவிட்டது. அந்நேரம் பகலவன் வான் உச்சியில் எறிக்கும் வேனில் நண்பகல், தானுந் தன்குதிரையும் நெடுவழி வந்தமையால் மெய் வியிர்த்து நாவறண்டு களைப்புற்று, மேற்செல்ல மாட்டாமல் ஓரிடத்தில் அயர்ந்து நிற்கவேண்டுவது இன்றியமையாததாயிற்று. உடனே, அவன் தன் குதிரையைவிட்டுக் கீழிறங்கி, அதனை அருகு ஓடிய மலை நீரருவியில் நீர் பருக்கிக் கரையிற் புல்மேயவிட்டுத், தானுந் தனது விடாய் தணித்து ஒரு மரநீழலில் அமர்ந்தான். அமர்ந்தானுக்கு அயர்விறை கண்ணுறக்கம் வர அங்குக் கொழுமையாய் வளர்ந்திருந்த புல்லின்மேற் படுத்தான்; படுத்துச் சிறிது நேரத்திலெல்லாந் தன்னை மறந்து துயில்வானாயினன் இவன் இவ்வாறிருக்க, அக் கானகத்தில் உலவுங் கொடிய வேங்கைப்புலி யொன்று இரைதேடி அப் பக்கமாய் வந்தது. அங்கே புல்மேயுங் கொழுவிய அக் குதிரையைக் கண்டு, அதனைக் கொன்று தின்றற்கு வாயைத் திறந்தவாறாய் அதன்மேற் பாய முயல்கையில், அக் குதிரை வெருக்கொண்டு ஓடித், துயின்று கொண்டிருந்த தன் அரசிளைஞன் அருகே சார்ந்து கனைக்க, அவனுங் கதுமென விழித்தெழுந்து நின்று சூழ நோக்கினான். இதற்குள் அப்புலி தன் முயற்சிக்கு இடையூறு விளைப்பவனாய் எழுந்துநின்ற அவ் விளைஞனைக் காண்டலுந், தான் அக் குதிரைமேற் பாய்வது விடுத்து, அவ் விளைஞன்மேற் பாய்ந்தது. அஃதங்ஙனம் பாய்தலையுந், துயின்றெழுந்த தன் தலைவன் தனது வேற்படை நிலத்திற் கிடப்பத் தான் வெறுங் கையனாய் நிற்றலையுங் கண்ட அக் குதிரை ஓர் இமைப் பொழுதில் தன் றலைவற்கும் அவன் மேற் பாயும் அப்புலிக்கும் இடையே பாய்ந்தது. இது கண்ட இளைஞன் ஒரு குதியிற் கீழ்க்கிடந்த தனது வேற்படையைக் குனிந்தெடுத்து, அதனை மிகவுந் திறமையாகச் சுழற்றி அப் புலியின் முகத்தின்மேல் ஓச்சி, அதனைக் கொன்று வீழ்த்தினான். இந்நேரத்தில் அவன் றன் ஏவலாளரும் அவன்பால் வந்து சேர்ந்து அக்குதிரையின் நன்றி மிக்க ஆண்மையினையுந், தம் அரசிளைஞன் றன் பேராண்மை யினையும் வியந்து, வீழ்த்தப்பட்ட அப் பெருவேங்கைப் புலியினையும் உடன்கொண்டு, எல்லாருமாய்த் தம் நகருக்குத் திரும்பினர் என்று அவ் வரசிளைஞற்கு ஒருநாள் நிகழ்ந்த வியத்தகு நிகழ்ச்சியினை யெடுத்துக் கூறினால், அதனைக் கேட்பார்க்கு, நன்றியுந் திகைப்பும் இரக்கமும் அச்சமும் ஐயமும் முடிவறியும் வேட்கையூம் வியப்பும் மகிழ்ச்சியும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி அவரைப் பெரிதும் இன்புறுத்துமன்றோ, யாங்ஙனமெனிற், குடி மக்களைப் பாதுகாக்கும் ஒரு நல்ல அரசற்குப் புதல்வனாய் வளவிய செல்வவாழ்க்கையில் உறையும் ஓர் அரசிளைஞன் தன் நலத்தைக் கருதாது தன் குடிமக்கள் நலத்தையே கருதி மறவிலங்குளை வேட்டமாடச் சென்றா னென்பது கேட்டு நன்றியுணர்வும், அங்ஙனஞ் சென்றவன் அச்சந்தரத்தக்க அக்கானகத்தினூடு தன் ஏவலாளரையும் பிரிந்து தனியே செல்லுமாறு நேர்ந்தது என்பது கேட்டுத் திகைப் புணர்வும், ஒருநாளும் நீர்விடாயும் பசித்துன்பமுங் களைப்பும் அறியா தான் கடுவேனில் நண்பகலில் அக் காட்டிற் றனிச்சென்று விடாய்த்து வருந்தினான் என்பது கேட்டு இரக்கவுணர்வும், அயர்ந்துறங்கும் அவ் விளைஞற்கு அணித்தாக மறவேங்கை ஒன்று வந்ததென்பது கேட்டு அச்சவுணர்வும், அவ்வேங்கை குதிரைமேற் பாய்தலொழிந்து அவ் விளைஞன்மேற் பாயப் புக்க தென்பது கேட்டு இஃது யாதாய் முடியுமோ என்னும் ஐயவுணர்வும், இஃதெங்ஙனம் முடிவ தாயிற்றென அறியவிழையும் வேட்கையுணர்வும், அவ் வேங்கை தன் தலைவன் மேற் பாயப் புகுவது கண்ட அக் குதிரை தனக்கு வரும் ஊறுபாட்டையும் ஒரு பொருட்படுத்தாது அவற்கும் அதற்கும் இடையே பாய்ந்தமை கேட்டும் அந்நொடியில் அவ்விளைஞன் தன் வேற்படையை எடுத்தோச்சி அப் புலியைக் கொன்று வீழ்த்தமை கேட்டும் வியப்பொடு கலந்த மகிழ்ச்சி யுணர்வும், அவ் விளைஞனைப் பிரிந்த ஏவலர் அவன்பால் வந்து சேர்ந்து எல்லாருமாய்த் தமது நகர்க்கு இனிதுபோய்ச் சேர்ந்தமை கேட்டு ஆறுதல் கலந்த மகிழ்ச்சியுணர்வும் ஒன்றன் பின்னொன்றாய்த் தோன்றி இக்கதை கேட்பாரைப் பெரிதும் இன்புறுத்துகின்றமையி னென்பது. இவ்வாறு ஒரு கதை நிகழ்ச்சி சிறிதாயிருப்பினும் பெரிதா யிருப்பினுந் தன்னைக் கேட்பார்க்கு மேற்காட்டிய பல்வகை யுணர்வுகளை எழுப்புந் தகைத்தாய் அமைக்கப்படுதல் வேண்டுமென மாணிக்கவாசகப் பெருமான் தாம் அருளிச்செய்த திருச்சிற்றம்பலக்கோவை யாரில் மேல் உரைத்த சிறுகதையைத், தீவாய் உழுவை கிழித்ததந்தோ சிறிதே பிழைப்பித் தாவாமணிவேல் பணிகொண்டவாறின்றொர் ஆண்டகையே என்று அஃகிய அறிவால் இரண்டடியிற் றிறம்படக் குறித்து அறிவுறுத்தருளினமை கண்டு இறும்பூதெய்துக. எனவே, ஒருவன் அல்லது ஒருத்தியது ஒழுகலாறு ஏதோர் இடை யூற்றானுந் தடைப்படாது சென்று முடியுமாயின் அதனை எடுத்துரைப்பதும் அதனைக் கேட்பதுங் கூறுவார்க்குங் கேட்பார்க்கும் வியப்பினால் நிகழும் இன்பவுணர்வினைப் பயவாமையின் அஃது ஒரு கதையாகத் தொடுக்கற்பால தன்றென்பதூஉம், அவ்வாறன்றி இடையூறுகளால் தாக்குண்டு நன்றாகவோ தீதாகவோ முடியும் ஒருவரது ஒழுகலாறே இருதிறத்தார்க்கும் வியப்பினையும் இன்பவுணர்வினையுந் தந்து கதையாகத் தொடுக்கப்படுதற்குரித்தாமென்பதூஉம் இனிது விளங்கா நிற்குமென்க. அற்றேல், அங்ஙனம் இடையூறுகளால் தாக்குண்ணும் ஒருவரது ஒழுகலாறு மட்டுமே வியப்பினையும் இன்பத் தினையுந் தருதல் என்னையெனின் ஓர் யாற்று வெள்ளத்தின் விரைவும் விரைவின்மையும் வலிவும் வலிவின்மையும் அதனைக் குறுக்கிட்டு நிற்கும் அணையின் உரங்கொண்டே அறியப் படுதல்போலவும், ஒரு நெருப்பின் வன்மையும் மென்மையும் அதனால் எரிக்கப்படும் ஒரு கானகத்தின் அளவுபற்றியே உணரப்படுதல்போலவும், ஒரு சூறைக்காற்றின் கடுமையுந் தணிவும் அதனால், அலைத்து முறிக்கப்படும் மரங்களின் நிலைபற்றியே அளந்தறியப்படுதல் போலவும் ஒருவருடைய அறிவாற்றல் உடலாற்றலும் மனநலமும் அவையின்மையு மெல்லாம் அவரது ஒழுகலாற்றை வந்து இடைமறிக்கும் இடை யூறுகளின் வன்மை மென்மை வாயிலாகவே நன்களந்தறியப் படுமென்க. அங்ஙனம் வந்து மறிக்கும் இடையூறுகளுக்கும் அஞ்சாது அவற்றை மேற்கடந்து செல்வான்றன் ஆண்மை யினைக் கண்டு வியந்து மகிழ்தலும், மற்று அவ்விடை யூறுகளை எதிர்ந்தும் அவற்றை மேற்கொள மாட்டாது அயர்ந்து மாழ்குவானைக் கண்டு இரங்கி வருந்துதலும், இனி அவை தம்மைக் கண்டு அஞ்சியோடு வானைக் கண்டு இழித்து இகழ்தலும் மக்கள் எல்லார் மாட்டும் இயற்கையாய் நிகழக் காண்டுமன்றே. ஆகவே, அத் தன்மையவாம் இடையூறுகளால் தாக்கப்படாதவன்றன் உரமும் உரமின்யும் அறிதற்கு வேறு விழுமிய வாயில் ஒன்றுங் காணப்படாமையின், அப் பெற்றியான்றன் ஒழுகலாறு மக்களெவர்க்கும் விழுமிதாம் இன்பம் பயவாமையும் இயற்கையாய்க் காணப்படுகின்றது. இவ்வாற்றாற், கதை களென்றற்குச் சிறந்தன இடையூற்றின் வாயிலாக ஒருவன்றன் அல்லது ஒருத்திதன் உள்ள நிலையினைப் புலப்படுத்தி, அவ்வாற்றால் அதனைப் பயில்வார்க்குங் காண்பார்க்குங் கேட்பார்க்கும் இன்ப வுணர்வினை எழுப்பும் நீரவா மென்று தெளிந்து கொள்க. இனி, இச்சாகுந்தல நாகடத்தின்கண் நுவலப்படுங் கதை நிகழ்ச்சியும் இடையிடையே வந்து குறுக்கிடுந் தடைகளால் அந்நிகழ்ச்சிக்குரியாரின் இயற்கை நிலைகளைப் புலப்படுத்தி அவற்றை யுணர்வார்க்கு அச்சமும் வியப்பும் முடிவறி வேட்கையும் மகிழ்ச்சியும் பயந்து அவரை இன்புறுத்துமாறு ஒருசிறிது காட்டுவாம். துஷியந்தவேந்தன் தேரிலமர்ந்து வில்லுங்கணையும் ஏந்தி ஒரு மானைப் பின்றொடர்ந்த வண்ணமாய் ஒரு கானகத்தினூடு விரைந்து செல்கின் றுழித் துறவோர் சிலர் இடையே புகுந்து அம்மானினைக் கொல்ல லாகாதென்று மறிக்க, அரசனும் அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அதனைக் கொல்லாது விட்டு விடுகின்றான். இதனால், அரசன் ஓருயிரைக் கொல்ல முனைந்து நின்றவழியும், அறவோர் சொல்லுக்கு அடங்கி அதனை அவ்வாறு செய்யாது விட்ட மனநலன் உடைய னாதல் புலனாகின்றதன்றோ? இன்னும், நடுவே புகுந்த துறவோர், மேல் நடைபெறவேண்டுங் கதை நிகழ்ச்சிக்கும் வழி செய்குநராய் நிற்றலும் அறியற்பாற்று; யாங்ஙனமெனின், அவர்கள் அவ்வரசனைக் கண்ணுவர் ஆசிரமத்திற்குச் சென்று அங்கே சகுந்தலையால் விருந்தேற்கப் படுமாறு ஏவுகின்றமையினென்பது. இனி, அவ்வாசிரமத்திற்குள் நுழைந்த அவ்வரசன் தனக்குச் சிறிது தொலைவிற் சகுந்தலையும் அவடன் தோழி மாருங் குடங்களில் முகந்த நீரை இளஞ்செடிகளுக்கு விட்டுக் கொண்டு உரையாடி வருதலையும், அவர்கள் அழகில் மிக்கவராய் இருத்தலையுங் கண்டு, அவர்கள்பால் உடனே செல்லுதற்கு மாட்டானாய், மரச்செறிவுகளின் மறைவில் நின்றபடியாய் அவர்களை நோக்கி அவருரையாட்டுகளையுங் கேட்கின்றான். இந்நேரத்தில் ஒரு வண்டு சகுந்தலையின் முகத்தண்டை பறந்து வந்து அவளைத் துன்புறுத்தா நிற்க, அத்துன்பத்தினின்று தன்னை விடுவிக்குமாறு அவள் தன் தோழிமார்களை வேண்டியழைக்கின்றாள். தோழிமாரோ, தமது நாட்டுக்கு அரசனான துஷியந்தன் அண்டையில் இருத்தலை அறியாரா யிருந்தும், பகடிக்காக நம்மையெல்லாங் காக்கும் அரசன் துஷியந்தனைக் கூப்பிடு! என்கின்றனர்; என்றதும், மறைவி லிருந்த அரசன் தன்னைத் தெரிவித்துக் கொள்ளுதற்கு அதுதான் தக்கநேரமெனக் கருதி அவ்வண்டை ஓச்சுவான்போல் அதனை அதட்டிய வண்ணமாய் அவர்மருங்கு அணைகின்றான். பார்மின்கள் அரசனது இயக்கத்திற்குத் தடையாய்ப் புகுந்த துறவோர் அவற்குச் சகுந்தலையைக் காட்டினர் சகுந்தலையின் இயக்கத்திற்குத் தடையாய்ப் புகுந்த ஒரு வண்டு அவட்கு அரசனைக் காட்டிற்று. இன்னும், பின் நிகழ்ந்த தடையானது சகுந்தலை சிறிதுவருந் துன்பத்திற்கும் அஞ்சி வெருளும் மென்றன்மை யுடைய ளென்பதனையும், இத்துணை மெல்லியல் புடையாள் இனித் தன் கணவனால் தனக்கு விளையுந் துன்பத்தை எங்ஙனந் தாங்குவாளென்ப தனையும் அறிவித்தல் காண்க. இவ்விருவகைத் தடைகளால் இடை மறிக்கப்பட்டுச் செல்லும் இக்கதை நிகழ்ச்சி, தன்னைப் பயில்வார்க்கு வியப்பு, முடிவறியும் வேட்கை, இரக்கம் முதலிய வுணர்வுகளைக் கிளறி மகிழ்ச்சி செய்தல் உணர்ந்துகொள்க. இன்னும், அரசன் மேற் சொல்லியவாறு சகுந்தலையின் தோழிமாரோடு உரையாடிக்கொண்டு தான் சகுந்தலை மேற்கொண்ட காதலைப் புலப்படுத்தியுஞ், சகுந்தலை தன் மேற்கொண்ட காதலை உய்த்தறிந்துந் தானும் அவரும் இன்புற்று நிற்கையில், அக்கானகத்தினூடு ஒரு காட்டியானை அதனை யுழக்கிக்கொண்டு வருதலை யுணர்ந்து அங்கு இயங்குவார் இடும் பெருந்திகில்ஓசை அவரது நேய நிகழ்ச்சிக்கு இடையூறாய்ப் புகுந்து? அம்மகளிரையும் அவ்வரசனையும் வேறுபிரித்து, இதனைப் பயில்வார்க்கு அச்சத்தினையும், பின் இக்கதைநிகழ்ச்சி யாதாய் முடியுமோ என முடிவறியும் வேட்கையினையும் விளைவித்து நிற்ற லறிந்து கொள்க. மேலும், அங்ஙனஞ் சகுந்தலையைச் சடுதியிற் பிரிந்து தன் கூடாரத்துட் சென்றுவைகி அவள்வயப்பட்ட நினைவினனாய், மறித்தும் அவள்பாற் செல்லுதற்கு வாயிலென்னை யென்று ஆராய்ந்து வருந்திக்கொண்டிருக்கும் அரசன்பால், மீண்டும் அவ்வாசிரமத்திலுள்ள துறவிகள் சிலர்போந்து, கண்ணுவ முனிவர் வரும்வரையில் தாம்வேட்கும் வேள்விகட்கு அரக்கரால் இடுக்கண் உண்டாகாதவாறு அவற்றைப் பாதுகாக்கவென்று வேண்ட, அரசனும் அதற்குடனே இயைந்து, மீளத் தான் சகுந்தலைபாற் செல்லுதற்கு அதனையே ஏற்றதொரு வாயிலாகப் பற்றுதல் காண்க. மீண்டும் நேர்ந்த இத்துறவோர் வேண்டுகோள், இடையறுந்த மணிக்கோவைப் பொற் சரட்டினை இணைக்கும் பொன் ஆசுபோல், இடை விட்ட இக்கதை நிகழ்ச்சியினைத் தொடர்பு படுத்துதலின், இஃது இதன் முடிவறியும் வேட்கை கிளர்ந்தார்க்குப் பெருமகிழ்ச்சியினைப் பயத்தல் தேர்ந்துகொள்க. இன்னுந், துறவோரின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசன் மீண்டுங் கண்ணுவரது பாழிக்கு (ஆசிரமத்திற்கு)ச் செல்லத் துவங்குகையில், அரசன்றன் அன்னை தனது நோன்பு முடிவின்கண் தன்னோடு உடனிருக்குமாறு அரசனைக் காலந் தாழாது நகருக்கு மீள்க எனக் கட்டளை விடுத்தமை, பின்னும் அரசற்கோர் இடையூறாய்ப் புகுதல் காண்க. இங்ஙனம் மறித்தும் புகுந்த இடையூற்றை அரசன் தன் நண்பனாகிய விதூஷகனை நகர்க்குப் போக்கு மாற்றல் நீக்கிவிடுதலின், இதுவுங் கதை நிகழ்ச்சியினை மீண்டுந் தொடர்புபடுத்துங் கருவியாய்ப் பயில்வாரை இன்புறுத்துதல் அறிந்துகொள்க. அதுமேயுமன்றி, இரண்டாம்வகுப்பின் ஈற்றில், இந் நாடக ஆசிரியன் மேல் வருங் கதை நிகழ்ச்சிக்கு ஒருபெருங் காரணமாகத் தந்திருக்குங் குறிப்பும் பெரிதும் வியக்கத்தக்கதா யிருக்கின்றது. மேலே, சகுந்தலையை முற்றும் மறந்துவிட்ட அரசன்பாற், கண்ணுவரால் விடுக்கப்பட்டுச் சென்ற அவள், அவன் தன்னைக் கானகத்தில் மணந்த வரலாறுகளை யெல்லாம் எத்துணையோ எடுத்துரைத்தும், அவன் அவைகளை நினைவு கூரர்க்கில்லானாய் அவளை வெறுத்து ஒதுக்கிய பிற் சிலநாளிற் கிடைத்த தனது கணையாழியைக் கண்டு, அவளைத் தான் மணந்த வரலாறுகளையெல்லாம் நினைவுகூர்ந்து தன் நேயனாகிய விதூஷகன் அவ்வரலாறுகளைத் தனக்கு நினைவூட்டாமை என்னை யென்று அவனை வருந்திக் கேட்டலும், அவ்விதூஷகன் உண்மையில் எனக்கு அத்துறவி மகளிடத்தில் எவ்வகையான விருப்பமும் இல்லை. *** நான் பகடியாய்ச் சொன்ன சொற்களை உண்மையாக நினையாதே என்று அரசன் இரண்டாம் வகுப்பின் ஈற்றிலே கானகத்திற் றனக்குச் சொல்லிய சொற்களை எடுத்து மொழிந்தமை காண்க. ஆகவே, மேல்நிகழுங் கதைநிகழ்ச்சி யினை முன்னுணர்ந்து, அதற்குதவியாக அரசன் வாய்மொழியில் வைத்துக் காளிதாசர் இரண்டாம் வகுப்பின் ஈற்றிற் கூறிய சொற்களின் பயன் பெரிதும் நினைவுகூர்ந்து வியக்கற்பாலதா மென்க. இன்னும், அரசன் சகுந்தலையை மணந்து சிலநாள் வைகிப், பின்னர்த் தன் நகர்க்கு ஏகி, அவளைத் தன்பால் அழைத்துக்கொள்ள விழைந்தவன், அது செய்யாது அவளை முற்றுமே மறந்துபோய் விட்டான். இவ்வளவில் இந்நாடகம் நின்று விடுமாயின், அரசன் அவளை அங்ஙனம் அறவே மறந்துபோயது என்னை யென்றும், அவனால் அங்ஙனங் கைவிடப்பட்ட சகுந்தலையின் வாழ்க்கை பின்னர் எவ்வாறு ஆயிற் றென்றும் அறிய மாட்டாமையிற் பயில்வோர் உள்ளம் அமைதிபெறாது அதனால் இந்நாடகஞ் சுவைகுன்றிக் குறைபாடு உடையதாகும். ஆகவே, ஆசிரியர் காளிதாசர், சகுந்தலை மாட்டுப் பெருங்காதல் கொண்டவனாகிய அவ்வரசன் அவளை அங்ஙனம் எளிதிலே மறந்துவிடுதல் இயலாமை யுணர்ந்து, அவன் அவளை முற்றும் மறந்து போதற்கு ஒருபெருங்காரணங் கற்பிப்பாராய்த், துருவாசர் சாபத்தை இந்நாடகத்தின் நான்காம் வகுப்பின் துவக்கத் திலேயே வருவித்தல் காண்க. தன் ஆருயிர்க் காதலனையே நினைந்து அவன்வயமாகிய உள்ளத்தினளாய்த், தன்னையுந் தன்னைச்சூழ நிகழும் நிகழ்ச்சிகளையும் ஒருங்கேமறந்து, அயர்ந்து தன்குடில் வாயிலில் அமர்ந்திருந்த சகுந்தலை, சடுதியில் விருந்தினராய்ப் போந்த துருவாசரின் வருகையையும் உணராதிருப்பவே, அவர் அவள்மேற் சீற்றங்கொண்டு நின்மனம் எவன்வயப்பட்டு எவனையே நினைந்து கொண்டிருக்கின்றதோ, அவன் *** நினைவூட்டப் பட்டாலும் நின்னை நினையா தொழிக என்று வசை (சாபம்) கூறிச் சென்ற ஒரு நிகழ்ச்சியினை ஆசிரியர் ஈண்டுப் படைத்து மொழிந்தமையும், இவ்வளவிலும் அக் கதை நிகழ்ச்சியினை அறுத்து நிறுத்தாமல், நினைவு கூர்தற்கு அடையாளமான ஓர் அணிகலத்தைக் காண்டலும் அவ்வசவு நீங்கும் என்று அது தீர்தற்கும் வழி செய்து, சகுந்தலை மீண்டுந் தன் காதலனைக் கூடுவதாகிய நிகழ்ச்சி யினைத் தொடர்புபடுத்து வைத்தமையுமாகிய அருந்திறன் பெரிதும் பாராட்டற் பாலதொன்றாய்த் திகழ்கின்றது. அதுவேயுமன்றி, மேற் சொன்னவாறு நேர்ந்த துருவாசர் வசையினைச் சகுந்தலை அறிவளாயின், அவள் தன் கையில் அரசன் அணிந்த கணையாழியின்பாற் கருத்து மிக வுடையளாய் அது தன் கையைவிட்டு நழுவாமற் பாதுகாத்து ஒழுகு வளாகலின், அரசன் அவளை மறத்தலும் நேராது. அது நேராதாகவே, மேற் கதை நிகழ்ச்சியுஞ், சகுந்தலையின் மனத் திட்பத்தையுங் கற்பின் கடப்பாட்டையும் ஊடுருவி ஒளிர மாட்டாதாய்ச் சுவைகுன்றி யொழியும். ஆகவே, ஆசிரியர் காளிதாசர் அத்துணைக் குறைபாடுகளும் இதன்கண் ஏறாமை விலக்குதற் பொருட்டு ஈண்டுச்செய்த செய்கைத்திறம் நுட்பம் நினையுந் தோறும் பேருவகையினை ஊட்டாநிற்கின்றது. துருவாசர் வருகையினையும், அவர் கூறிய வசைமொழி யினையும் அறிந்த தோழிமார், அவைதம்மை அறியாதிருந்த சகுந்தலைக்கு அவற்றை அறிவியாமலே விடுமாறு செய்த ஆசிரியரது நுட்ப வினைத்திறன், கதையின் றொடர்பை உள் நுழைந்து கண்டு இணைக்கமாட்டார்க்கு விளங்காதாயினும், அதனை அவ்வாறு கண்டு தொடுக்க வல்லார்க்குப் பெரியதோர் இறும்பூதினைப் பயக்குமென்க. மேலும், ஏழுவகுப்புகளாகப் பிரிக்கப்பட்ட இந்நாடகக் கதைச் சுவையானது, துவக்கத்திலிருந்து படிப்படியே உயர்ந்து நடுநிற்கும் நான்காம் வகுப்பின்கண் இனி யுயர்தற்கு எல்லை இல்லையாமளவில் வந்து நிற்றலும், அதன் கட் சொல்லப்பட்ட துருவாசர் வசைமொழியானது ஒரு மணிக் கோவையினை இணைக்குங் கொக்குவிற்போல முன்பின் கதை நிகழ்ச்சியினைத் தொடர்புபடுத்துங் கருவியாய் உறுதலும் நினைவிற் பதிக்கற் பாலனவாகும். இந் நாடகத்தினைப் பயில்வார் இதன் நடுநிற்கும் நான்காம் வகுப்பினை நோக்கிச் செல்லுங்காற் சகுந்தலை தன் கணவனால் மறந்துவிடப்பட்டுத் தனியாளாய்த் துயர்கூர்ந்து நிற்கும் நிலையினை நினைந்து கவலையும், உயர்ந்தோர் நிலையிற்றப்பார் என்பதனால் ஆறுதலும், இன்னாமை வந்தக்கால் இறைவனையே துணையாகப் பற்றுதலுந், துருவாசர் வசைமொழியினை யுணர்ந்து அச்சமும், அது தீர்தற்காம் மருந்தினை அறியப்பெறுதலால் மனத்தேர்ச்சியுங், கருக் கொண்டு கணவனால் மறக்கப்பட்ட சகுந்தலையின்பால் இரக்கமும், அவள் தந்தையார் அவளையும் அவள்கூடிய யாழோர் மணத்தையும் மகிழ்ந்தேற்றமை தெரிந்து உவகையுஞ், சகுந்தலையைக் கணவன் இல்லத்திற்கு ஏகுவித்தல் வேண்டி அவ் வாசிரமத்திலுள்ள மகளிர் அவட்கு மங்கள வாழ்த்துச் செய்யும் முறைகண்டு ஒருவகை மகிழ்ச்சியுந் தோழிமாரும் அவள் தந்தையும் அவளைவிட்டுப் பிரியுங்காற் படும் ஆற்றாமையால் மன உருக்கமும், அவள் தந்தையார் அவட்குக் கூறும் அறிவுரையின் வாய்மையால் இலல்றவுணர்ச்சியும் ஒன்றன்பின் ஒன்றாய்த் தோன்றிநிற்றலுணர்ந்து இன்புறுமாறு ஆசிரியர் இதனை அமைத்த திறம் பெரிது பெரிது இதன்பின், தன்பாற்போந்த சகுந்தலை தன் காதன் மனைவியே என்பதனை நினைவுகூராது அவளை அரசன் விலக்கியவுடன் அவள் ஓர் அரம்பை மாதினால் எடுக்கப்பட்டு வான்வழியே மறைந்து போயினாள் என மொழியும் அவ்வளவில் இந் நாடகக் கதை முடிக்கப்படுமாயிற், பின்னும் அது பயில்வார்க்கு முடிவறியும் வேட்கையினைத் தணியாமை யிற் குறைபாடு உடைத்தாம். அக்குறைபாடு நீக்குதற்கு ஆறாம் வகுப்பிலிருந்து ஆசிரியர் இக்கதையினை நடாத்துந்திறன் சிறிது காட்டுதும். செம்படவன் ஒருவன் பிடித்த மீன் ஒன்றன் அகட்டிலிருந்து எடுக்கப்பட்ட கணையாழி ஒன்று துஷியந்த மன்னன் பெயர் செதுக்கப்பட்டதா யிருத்தல் கண்டு காவலாளர் அதனை அவ்வரசன்பாற் கொணர்ந்து கொடுக்கின்றனர். அரசன் தன் பெயர் பொறிக்கப்பட்டுள்ள அதனைக் காண்டலுந், துருவாசர் இட்ட வசைமொழியின் தீது நீங்கப் பெற்றானாய்த், தன்னால் விலக்கப்பட்ட சகுந்தலையைத் தான் காதன்மணம் பரிந்துகொண்டஞான்று தான் அவளது கைவிரலில் அணிந்த கணையாழியே அத வென்றும், அவள் தன்பால் வருகின்றுழி வழியிலிருந்த ஒரு வாவி நீரில் அவள்தான் அறியாதபடியே அஃது அவள் கையை விட்டு நழுவி விழுந்ததாகல்வேண்டமென அவளுடன் போந்த கௌதமி அம்மையார் கூறியது வாய்மையே யாகல் வேண்டுமென்றுந், தான் அவளை மணந்த வரலாறுகளை அவள் தன்முன்னே எடுத்துரைக்க அவற்றைத் தான் பொய்யெனக் கருதியதெல்லாம் நினைவிழப்பே யென்றும் நன்கு நினைவுகூர்ந்து அரசன் ஆற்றொணாத் துயரமெய்திப் புலம்பும் வகைகளையொல்லாம் ஆசிரியர் இதன் ஆறாம் வகுப்பின்கண் மெல்லென நுவன்று மெல்லச் செல்லுதல் காண்க. இன்னும், இந்நாடகக் கதை நிகழ்ச்சியினைப் படிப்படியே உயர்த்துக் கொண்டுசென்று, நான்காம் வகுப்பின் இறுதியிலே ஓர் ஆற்றாமைக்கு இடனாய் அதனை உச்சி யிலேற்றின ஆசிரியர், பின்னர் ஐந்தாம் வகுப்பிலே மிக்கதொரு துயரத்தில் அது கீழ் இறங்குமாறு செய்து, அதன் ஈற்றில் அதனைக் கரைகாணாத துயர்க்கடலில் அமிழ்த்துவாராய்க், கதைத் தலைவியாகிய சகுந்தலையையே கட்புலனுக்குத் தென்படா வாறு வான்ஊடு மறையச் செய்த திறன் ஓர்ந்துகொள்க. அங்ஙனங் கதைத்தலைவியையுந் தலைவனையுந் துயர்க் கடலுள் அமிழ்த்தி, அத்துணையில் அதனைவிட்டுப் போதல் நல்லிசைப்புலமை யாகாமையின், அத்துயர்க் கடலுள் அமிழ்ந்தார் அனைவரையும் அதனிலிருந்தும் மேலெடுத்து விடுதற்கு ஆறாம் வகுப்பில் ஆசிரியன் செய்த சூழ்ச்சித் திறனை இன்னுஞ் சிறிது காட்டுதும், தலைமகள் தலைமகன் அவர்க் குரியாரை யெல்லாம் பெருந்துயர்க்கடலுட் படுப்பித்தற்கு ஏதுவாய் நின்றது, அரசன் சகுந்தலை கையிலிட்ட கணையாழி உற்றநேரத்தில் அவளது கைவிரலினின்றுங் கழன்று ஒரு பெருந்தடத்தினுள் அமிழ்ந்திப் போன நிகழ்ச்சியேயன்றோ? அங்ஙனம் ஆழ்ந்தாரை யெல்லாம் அதனிலிருந்தெடுத்து இன்பக்கரை சேர்க்கலுறுவார், முன்னே தானும் ஆழ்ந்து பின்னே எல்லாரையும் இடர்க் கடலுள் ஆழ்த்திய அக் கணையாழியினை முதற்கண் மேலெடுத்தலே செயற்பாலதாம். தான் ஆழ்த்திய பொருளை மேலெடுத்த விடவே, அதனால் ஆழ்ந்தா ரெல்லாரும் மேலுயர்ந்து கரைசேர்ந்தின்புற்றிருத்தல் தானாகவே நிகழும். ஆகவே, ஆசிரியர் காளிதாசர் ஆறாம் வகுப்பின் துவக்கத்திலேயே, அக்கணையாழியினை மேற்கொணரலாயினாரென்க. அங்ஙனம் அதனை மேற்கொணருமிடத்தும், ஐந்தாம் வகுப்பின் இறுதியில் துன்பத்தால் ஊடுருவப்பெற்று மகிழ்ச்சியை இழந்தார்க்கு, அதனை மீண்டும் வருவித்து அவருள்ளத்தை ஆற்றுதலன்றோ செயற்பாலதாம் ஈண்டு ஆசிரியனும் அங்ஙனஞ் செய்ததுண்டோவெனின் உண்டு. தான் பிடித்த மீனின் வயிற்றைக் கீண்டக்கால் அதனிலிருந்தெடுத்த அரசனது கணையாழியை விலை செய்யக் கொணர்ந்த செம்படவனை ஊர்காவற்காரரும் அவர்க்குத் தலைவனான கொத்தவாலும் பிடித்துக் கொள்ள, அவனும் அவரும் உரையாடும் பகுதிகள் நகைச்சுவை பயத்தலுடன், அவனைக் கொடுமையாக நடத்தாமற் கொத்தவால் அவன் வாய்மொழி யின் உண்மை கண்டு அவனுக்கு அரசனிடமிருந்து பரிசு வாங்கிக் கொடுத்து, அவனுடன் கேண்மை பாராட்டிச் செல்லும் பகுதியும் முதற்கட்டோன்றிய நகைச்சுவையினைச் சிதையாதாய்ப் பயில்வாருடன் எல்லாரையும் மகிழவைத்தல் காண்க. நான்காம் வகுப்பிலிருந்து உள்ளங்குழையுந் துன்பத்தின் பக்கமாய்த் திரும்பி, ஐந்தாம் வகுப்பின் ஈற்றிற் பெருகி நிரம்பிய துயர்க்கடலுட் போந்து விழுந்த இந்நாடகக்கதை நிகழ்ச்சியை ஆறாம்வகுப்பின் துவக்கத்திலேயே அதன்கண்ணிருந்தும் எடுத்து நகையும் மகிழ்வும் மேன்மேன்மிகுமாறு அதற்கு மீண்டும் உயிர்ப்பேற்றிக் கொண்டுசென்று, ஏழாம் வகுப்பின்கண் ஆசிரியன் அதனை இனிது முடிக்கும் அரிய பெரிய புலமைத்திறங் கண்டு இன்புறுக. இனி, இந்நாடகக் கதைநிகழ்ச்சிக்கு ஓர் அச்சாணி போல் இடைப்புகுந்து நின்ற துருவாசர் வசைமொழிக்கு ஒருமீனை அடையாளமாக நிறுத்தியுஞ், சகுந்தலை துஷியந்தனை இடை நின்று பிணிக்குங் காதல் அன்பிற்கு ஒரு கணையாழியை அடையாளமாக நிறுத்தியுங், காதலராவார் தம்மை ஒருங்கு பிணிப்பித்த இறைவன் திருவருட்டுணையினை நாடாது தாம் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்த நிலைமையினையே நினைந்து துயர்கூர்ந்து நின்றால் அவரது உள்ளந்திட்பம் இன்றி நீர்போல் நெகிழ்ந்த பதத்ததாயிருத்தலின் அத்தகைய வுள்ளத்தையே பிறரிட்ட வசைமொழி பற்றியிருக்கும் என்பதற்கு அம்மீன் இருக்கும் ஒரு தடாகநீரை அடையாளமாக நிறுத்தியுந், தனது துணையை எதிர்பாராத காதலர்க்கும் அவரது அன்பின் மிகுதியைப் பாராட்டி இறைவன் றிருவருளே ஒருகாற் றுணையாய்ப் போந்துநின்று அவரதுள்ளத்தைப் பற்றிய வசைமொழியினைப் போழ்ந்து அதனால் விழுங்கப்பட்ட அவரது காதலன்பினை மீள்வித்து மிளிரச் செய்யும் என்பதற்குத் தற்செயலாய்த் தான் வீசிய வலையிற் சிக்குண்டு போந்த ஒரு மீனின் வயிற்றைப் போழ்ந்து அதன்கண்ணிருந்தும் எடுத்த அரசனது கணையாழியை வெளிக்கொணர்ந்த ஒரு செம்படவனது செயலை அடையாளமாக நிறுத்தியும் ஆசிரியன் இந்நாடகத்தை ஆக்கியிருக்கும் நுண்மாண் நுழைபுல வியல்பு உய்த்துணர்ந்து களிக்கற் பாலதா மென்க. இனிக் கணையாழியை காணாமுன் அரசனால் விலக்குண்டு வானூடு மறைந்து ஏகிய சகுந்தலை எவ்வாறு ஆயினாள் எனவுங், கணையாழியைக் கண்டபிற் சகுந்தலையைத் தான் மணந்த வரலாறுகளெல்லாம் ஒரு சிறிதும் விடாமல் நினைவு கூர்ந்து ஆற்றொணாத் துயர் கொண்ட அரசன் எவ்வா றாயினான் எனவும் அவர் தம் முடிவு அறியும் வேட்கை அடங்கப்பெறாதாய் இதனைப் பயில்வோருள்ளந் துயருறுமாகலின், அதனையும் விடுவித்தற்கு ஆசிரியன் இதன் ஆறாம் வகுப்பின் ஈற்றிலும், ஏழாம் வகுப்பிலுஞ் செய்யுஞ் செய்கைத் திறனையும் ஈண்டுக் காட்டுதும். அரசன் தனது கணையாழியைக் கண்டதுமுதற் சகுந் தலையையன்றிப் பிறிது எதனையும் நினையமாட்டானாய்க் கழிபெருந்துயர் கூர்ந்து, அவளது வடிவழகை ஓர் ஓவியமாக வரைந்தவாறே தனது இளமரக்காவில் இருப்புழிப், பிள்ளைப் பேறின்றி இறந்துபோன பெருஞ் செல்வரான ஒரு வணிகரின் செய்தி கேட்டுத், தனக்கும் புதல்வற்பேறின்மையால் தனது நிலைமையும் அங்ஙனந்தான் ஆகப் போகின்றதென்னும் எண்ணந் தோன்ற ஆற்றகில்லா இடும்பையுற்று அயர்ந்து மெய்ம்மறந்து கிடக்கின்றான். அந்நேரத்தில், ஓ பார்ப் பானைக் காப்பாற்று பார்ப்பானைக் காப்பாற்று என்னும் ஓலக் குரலொலி சடுதியில் எழவே, அரசன் உடனே உணர்வுகூடி யெழுந்து, தன் நண்பனும் விதூஷகனுமான மாதவியன் என்பான் கட் புலனாகாத ஒரு கொடும்பேயால் மேலெடுக்கப் பட்டு அரண்மனையின் உச்சித்தளத்தின்கண் வைத்துக் கழுத்து முறிக்கப்படுகின்றான் என்ப தறிந்து, அந்நொடியே வில்லுங் கணையும் ஏந்தி அப்பேயைத் தொடர்ந்து அரண்மனைமேற் செல்ல, அவனெதிரே இந்திரன் தேர்ப்பாகனான மாதலி வருகின்றான். அவனைக் காண்டலும் அரசன் அம்பை வில்லினின்றும் எடுத்துவிட்டு, அவன் வந்தசெய்தி கேட்டறிந்து, இந்திரனுக்குப் பகைவரான ஓர் அரக்கர் கூட்டத்தைத் தொலைக்கும்பொருட்டு அவனது வேண்டுகோட்படியே அவன் கொணர்ந்த வானவூர்தியில் ஏறி இந்திரனது வான்நகர்க்குச் செல்கின்றான் என்னும் இத்துணையில் இக்கதை நிகழ்ச்சியினை ஆசிரியர் ஆறாம் வகுப்பின் கட்டொடர்புபடுத் திருத்தலின், இதனைப் பயில்வாரது உள்ளம் அரசன்றன் ஆற்றா நிலைமையினை யறிந்து, அஃதெவ்வாறு ஆயிற்றென மேலும் அறிதற்கு அவாவிய வேட்கையினை இஃது ஒரு சிறிது தணிவு செய்தல் காண்க. அற்றாயினும், ஆறாம் வகுப்பின்கண் ஒரு சிறிது தணிவு செய்யப்பட்ட முடிவறியும் வேட்கை, வானுலகிற் சென்ற வேந்தன் எவ்வாறாயினான் என அறிதற்கு மேலுங் கிளர்ந்து நிற்குமாகலின், அதனை முற்றுந் தணிவுசெய்தல் யாண்டெனின் அதற் கன்றே ஏழாம் வகுப்பு எழுந்த தென்பது ஏழாம் வகுப்பின் துவக்கத்திலேயே, துஷியந்த மன்னன் அரக்கர்களைத் தொலைத்து அவ்வாற்றால் தேவேந்திரற்குப் பேருதவிபுரிந்து, அவன் தனக்குச் செய்த பெருஞ்சிறப்புக்களை ஏற்று, அவனது வானவூர்தியில் இவர்ந்து மண்ணுலகுக்குத் திரும்புகின்றான் என்பது நுவலப்பட்டமையால், அரசனது வான் செலவை அறிவான் வேண்டி யெழுந்த வேட்கையினை ஆசிரியன் சுருங்கிய கூற்றிலேயே தணித்தானாயிற்று. இனிச், சகுந்தலையின் பிற்கால நிலையினை அறிதற்கு முனைந்து நின்ற வேட்கையினைத் தணிவுசெய்து, அவ்வாற்றால் இந்நாடகக் கதை நிகழ்ச்சியினை இனிது முடிக்கும் ஆசிரியன்றன் அறிவாற்றல் உணரற்பாற்று. வான்வழியே மண்ணுலகு நோக்கிக் கீழ் இழிந்துவருந் துஷியந்தன் அவ்வழியிற் றனக்கெதிரே பொன்னொளி துலங்கத் தோன்றிய ஏம கூடம் என்னும் மலை காசியப முனிவர் தம் மனைவியொடு தவம் புரியும் பெருமைவாய்ந்த தென்பது மாதலி சொல்லக் கேட்டு, அம் முனிவரை வணங்குதற்கு விழைந்து அம்மலைக் கண் இழிந்து அங்குள்ள தவப்பள்ளிக்குச் செல்கையில் இடையே விளையாடிக் கொண்டிருந்த சர்வதமனன் என்னுஞ் சிறுவன் சகுந்தலைக்குந் தனக்கும் பிறந்த மகனே யென்ப துணர்ந்து, பின்னர் அங்குள்ள முனிவர் மகளிரால் தன்கணவன் வந்தசெய்தியறிந்து தனக்கெதிரே வந்த சகுந்தலையைக் கண்டு ஆற்றாமை மிக்கு வருந்த, அங்ஙனமே சகுந்தலையும் நெஞ்சம் நெக்குருகிக் கண்ணீர் சிந்தப், பின்னர்த் தானும் அவளும் புதல்வனும் மாதலி அழைப்பச் சென்று காசியபரையும் அவர்தம் மனைவியாரையும் வணங்கி அவர் தம் அருள்பெற்று, வானவூர்தியில் மீண்டும் ஏறித், தனது நகர்க்குப் போந்து இனிது வாழ்ந்தனன் என ஆசிரியர் இந்நாடகக் கதையினை முற்றுந் தொடர்புபடுத்தி முடித்துப், பயில்வாரது உள்ளத்தின் வேட்கையைத் தணிவுசெய்து, அவரை மிக மகிழச் செய்த திறன் கண்டு வியந்திடுக. இவ்வேழாம் வகுப்பின்கண் ஆசிரியர் வியப்பும் மகிழ்ச்சியும் ஆற்றாமையும் அமைதியும் அடுத்தடுத்துத் தோன்றுமாறு கதை நிகழ்ச்சியினைத் திருப்பித் திருப்பிச் செலுத்துஞ் செய்கைத் திறனை என்னென்பேம்! காசியபரது தவப்பள்ளியின் அருகே அரசன் சிறிது அமர்ந்திருக்கையிற், சடுதியில் ஒருசிறான் ஒரு சிங்கக் குட்டியை இழுத்த வண்ணமாய் முனிவர் மகளிர் இருவருடன் வருதலும், அரசன் அவனைக் காண்டலும் அவன்மீது விழைவு மிக்கு முளை யிலேயே அவனிடத்துக் காணப்படும் ஆண்மையினை வியந்து அவன் பிறப்பினை ஆராய்தலும், அங்ஙனம் ஆராய்கையில் அவன் துஷியந்தனுக்குஞ் சகுந்தலைக்கும் பிறந்தமகன் என்பதை அம்முனிவர் மகளிர் அவனோடு உரையாடுஞ் சொற்களி லிருந்தும், அரசன் அச்சிறுவனது கையினின்றுங் கழன்று கீழ்விழுந்த காண்டகத்தைத் தான் தன் கையிலெடுத்தும் அதனால் அவன் ஊறுபடாதிருத்தல் கொண்டு, அம்மகளிர் இறும்பூதுற்று உரைத்த உரைகளிலிருந்தும் அச்சிறான் தன் மகனே என்று துணிதலும், இந்நிகழ்ச்சியெல்லாம் அம் மகளிரால் அறிந்து போந்த சகுந்தலையும் அரசனும் ஒருவரை யொருவர் நோக்கி ஆற்றாமையுறுதலும் பிறவும் எத்துணை நுட்பமாக எத்துணை அழகாக எத்துணை இனிமையாக ஆசிரியனால் இடையே தொடுத்தமைக்கப்பட் டிருக்கின்றன! இங்ஙனம் நாடகக் காப்பியம் அமைத்தலிற் காளிதாசரன்றிப் பிறர் எவர் வல்லார்! என்க. 5. நாடகமாந்தர் இயற்கை இனி, ஒரு நாடகக் கதை நிகழ்ச்சியில் தலைவன் தலைவியராயும், அவர்க்கு நண்பர் பகைவர் நொதுமலராயுந் தொடர்புபட்டு நிற்பார் இல்வழி, அந்நாடகமுந் தொடர்ந்த கதை நிகழ்ச்சி இல்லதாய் முடியும் அஃதில்லையாகவே அஃதொரு நாடகமாதலும் இல்லையாம். ஆகவே, ஒரு நாடகத்திற்குத் தலைவன் தலைவியரும் அவரொடு தொடர் புடையாரும் இன்றியமையாது வேண்டப்படுவ ரென்பது. அங்ஙனம் நாடகத் தலைமக்களும் பிறரும் அதற்கு முதன்மையாய் நிற்பினும், அவருடைய மன இயற்கையும் ஒழுகலாறுமே அதன் கதைநிகழ்ச்சிக்கு அடுத்த நிலையில் முதன்மையுடையவாய்த் தோன்றுகின்றன. ஏனைப் பொது மக்கள் எல்லாரிடத்துங் காணப்படும் பொதுவியற்கையும் பொதுநிகழ்ச்சியுமே தலைமக்களாக எடுக்கப்பட்டாரிடத்துங் காணப்படுமாயின், அவர் மற்றை எல்லாரையும் போல் மணந்துகொண்டு நடாத்தும் இல்வாழ்க்கை அதனைக் காண்பார்க்குங் கேட்பார்க்கும் ஏதொரு சுவையும் பயவாது பயவாதாகவே, அஃதொரு நாடகக்கதையாகத் தொடுக்கப் படுதற்கும் ஏற்றதாகாது. ஆதலால், நாடகக் கதைநிகழ்ச்சிக் குரியராகத் தெரிந்தெடுக்கப்படுந் தலைமக்களும் பிறருமாகிய மாந்தர் ஏனைப் பொதுமக்களிடைக் காணப்படாத தனிப்பட்ட இயற்கையுந் தனிப்பட்ட ஒழுகலாறும் உடையராக இருத்தல் இன்றியமையாததாகும். அவ்வாறு அவர் ஒவ்வொருவருர்க்குந் தனிச் சிறப்பாக உள்ள இயற்கைக்கு இசையவே அவரவர் ஒழுகலாறும் நடைபெறாநிற்கும். இவ்வொழுகலாறுகள் ஒன்றோடோன்று வந்து பிணையுங்கால், ஒன்றையொன்று தழுவியும், ஒன்று மற்றொன்றை எதிர்ந்து விலக்கியுஞ் செல்லுமாற்றாற் சுவைமிகவுடையவாய்த் தொடர்ந்துபோய் ஒரு கதையாக முடியக் காண்கின்றாம். எனவே, நாடகமாந்தரின் ஒழுகலாறுகளெல்லாம் அவரவர் இயற்கையின் வழியவாய்த் தோன்றி நாடகக் கதையினை நடாத்துமென்றுணர்தல் வேண்டும். இனி, நாடகமாந்தராகத் தெரிந்தெடுக்கப் பட்டாரின் ஒழுகலாறுகளுட் சில நல்லனவாயுஞ் சில தீயனவாயுஞ் சில இரண்டிலுஞ் சாராதனவாயுஞ் சில இரண்டுங் கலந்தனவாயும் நிகழக்காண்டலின், அவ்வொழுகலாறுகளை யுடையாரின் மனஇயற்கைகளும் நல்லனவாயுந் தீயனவாயும் இரண்டிலுஞ் சாராதனவாயும் இரண்டுங் கலந்தன வாயும் இருக்குமென்பது உய்த்தறியப்படும். ஏனென்றால், உலகிய லொழுக்கத்தில் மக்களின் பலவேறு இயற்கைக்கு இசையவே அவர் பேசுவனவுஞ் செய்வனவும் புறத்தே புலனாதல் காண்கின்றாம். அன்பும் அறிவும் மிக்க சான்றோன் ஒருவன் சொல்வனவுஞ் செய்வனவு மெல்லாம், அவனைச் சார்வார்க்கு அன்பையும் அறிவையுந் தந்து அவரை மகிழ்வித்தல் காண்டு மல்லமோ? அவையிரண்டு மில்லாக் கொடியரின் சொற்களுஞ் செயலுமோ அவரைத் தலைப்படுவார்க்கு அச்சத்தையுந் துன்பத்தையுந் தருகின்றன! மற்று, நலந்தீங்கில்லாச் சோம்பேறிகளின் சொற்செயல்கள் எவர்க்காயினும் நன்மையையேனுந் தீமையை யேனுந் தந்ததுண்டோ? இன்னுஞ் சிலர் சிலகால் நல்லராயுஞ் சிலகால் தீயராயுஞ் சிலர்மாட்டு நல்லராயும் ஏனைச் சிலர்மாட்டுந் தீயராயும் நடத்தலுங் காண்டு மன்றே தன் மனைவிமக்கள்பால் அன்புடையனாய் நல்லனாய் ஒழுகும் ஒரு கள்ளன், ஏனைப் பிறர்பால் அன்பில்லாத தீயனாய் அவரது பொருளைக் கவர்ந்து செல்லுதலுங்காண்டுமே! ஆகவே கட்புலனாகாத மாந்தரின் மனவியற்கை, கட்புலனாகும் அவர்தஞ் செயல்களானுஞ் செவிப் புலனாகும் அவர்தஞ் சொற்களானுமே ஆராய்ந்து அறியப்படுமென்க. அஃதொக்குமன்னாயினும், ஒரோ வொருகால் நல்லார் ஒருசிலர் தஞ் சொற் செயல்களால் தீயார் போலவுந் தீயார் ஒருசிலர் தஞ் சொற்செயல்களால் நல்லார் போலவும் பிழைத்தறியப்படுதலுங் காண்டுமேயெனின் புறத்தே நிகழாநிற்கும் நல்லார் தீயாரின் சொற் செயல்களின் ஊடுபுகுந்து அவரது மனவியற்கையினை ஆழ்ந்து ஆய்ந்து காணமாட்டாப் புல்லறிவினார்க்கு, நல்லாரைத் தீயாராகவுந் தீயாரை நல்லாராகவுங் கருதிவிடும் பிழைபாட்டுணர்ச்சி உண்டா மாயினும், உயிரினியல்புகளை உள்ளவாறு ஆராய்ந்து அளந்து காணும் நுண்ணறிவினார்க்கு அப்பெற்றித்தாகிய பிழை பாட்டுணர்ச்சி உண்டாகாதென்க, இங்ஙனம் நல்லாரைத் தீயாராகவுந் தீயாரை நல்லாராகவும், நல்லதைத் தீயதாகவுந் தீயதை நல்லதாகவுங் கருதிவிடும் பிழைபாட்டுணர்ச்சி பொதுமக்கள் பால் மிகுந்து காணப்படுதல் கண்டன்றே, நல்லிசைப் புலவர்களான இளங்கோவடிகள், காளிதாசர் முதலான ஆசிரியர் நுண்மாண் நுழைபுலம்மிக்க சிலப்பதிகாரம், சாகுந்தலம் அனைய காப்பிய நூல்களும் நாடக நூல்களும் இயற்றி, அவை வாயிலாக மக்களிற் சிறந்தார் இழிந்தார் தம் மனவியற்கைகளின் உயர்பு இழிபுகளை உள்ளவாறு புலப்படுத்தி, அவ்வாற்றால் அப்பிழை பாட்டுணர்ச்சியினைத் தொலைக்குஞ் செந்நெறி காட்டிப் பேதையுலகினைத் தெருட்டு வாராயின ரென்க. இனி, நாடகமாந்தரின் இயற்கை அவரவர் சொற் செயற் றொடர்புகளாற் புலனாகாமல் இரா. நல்லார் தமது நல்லியற்கை புறத்தார்க்குப் புலனாகாமல் ஒரோவொரு காரணம்பற்றிச் சிலகால் அதனை மறைத்துவைத்து ஒழுகுவாராயினும், பொல்லார் பிறரை ஏமாற்றுதற் பொருட்டுத் தமதியற்கை வெளியார்க்கு விள்ளாதவாறு அங்ஙனமே வைத்துக் கரந் தொழுகுவாராயினும், இரு திறத்தார் இயற்கைகளுமே அங்ஙனம் எக்காலுந் தொடர்பாக மறைத்து வைக்கப்படுதற்கு அடங்கிக் கிடவா. அவர் அறியாமலே அவரதுண்மை யியற்கை அவருடைய சொற் செயல்களின் வாயிலாய் இடையிடையே புலனாய்விடும். ஆகவே, ஒருவன் அல்லது ஒருத்தியின் முழுமன நிலையை அவர் ஒரோ வொருகால் நிகழ்த்துஞ் சொற் செயல்களிலிருந்து அறிந்துகோடல் ஒரு சிறிதும் ஏலாது. தொடர்பாக அவர்தம் ஒழுகலாறுகளை நுனித்தறிந்து அளந்து காணவல்லார்க்கே, அவ்வம் மாந்தர்தம் உண்மை மனவியற்கை விளங்காநிற்கும். மக்களின் உலக வாழ்க்கையில் ஊடுருவி நுழைந்து அவரவர் மன வியற்கைகளையும் அவற்றால் விளையும் நன்மை தீமைகளையும் உண்மையான் உணர்ந்து காண்பார் மிக அரியர். ஒரோ வொருகால் ஒரோவொருவர் மாட்டுக் காணப்படுஞ் சொற்செயல் நிகழ்ச்சியிலிருந்து அவரது மனநிலையைப் பிழைபடத்துணிந்து நடப்பாரே இம் மண்ணுலகில் மிகப் பலராய் இருக்கின்றனர். இவ் வியல்பிற்றாகிய பிழை பாட் டுணர்ச்சியினாலேயே இவ்வுலகில் அளவுபடா அல்லல்கள் நாடோறுங் கிளைத்து ஆறறிவுடைய உயர்ந்த மக்கள் வாழ்க்கையினைப் பாழ்படுத்துகின்றன. தொடர்பாக ஒருவரது ஒழுகலாற்றினை ஆழ்ந்து ஆராய்ந்து பாராதார் அவரது மனநிலையினை யாங்ஙனங் காண மாட்டுவார்? மகிழ்ந்து கிளர்ந்திருக்குங்கால் ஒருவனை வைத்துப் பிடித்த நிழலுரு ஓவியமும், அவனே துயருற்று வாடி வதங்கி யிருக்குங்கால் அவனை வைத்துப்பிடித்த ஓவியமும், அவனே ஆழ்ந்த கருத்தினனாய் ஆன்றோர்தம் அறிவுரைகளை ஆராய்ந்து அமைதியாயிருக்குங்கால் அவனை வைத்தெடுத்த ஓவியமும், அவனே நோயுற்று நொந்து மெலிந்திருக்குங்கால் அவனை வைத்துப்பிடித்த ஓவியமும், அவனே பசித்தும் விடாய் கொண்டும் உணவினை அவாவியிருக்குங்கால் எடுத்த ஓவியமும், இன்னும் இங்ஙனமே அவன் ஓரொருகால் ஓரொருவகையாய் இருந்தக்கால் எல்லாம் வைத்துப் பிடித்த பல்வேறு ஓவியங்களுந் தனித்தனியே அவனது வடிவின் முழுத்தன்மையினையுங் காட்டுமோ? காட்டாவன்றே, மற்றுத், தனித்தனியே அவன துருவ இயல்பினை முற்றுங் காட்டாத அவ்வோவியங்களை யெல்லாம் ஒருங்கு தொகுத்து, அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை நன்களந்து காணவல்ல நுண்மாண் நுழைபுலமுடையார்க்கே அவனதுருவத்தின் முழுவியற்கையும் இனிது விளங்கா நிற்கும். இதுபோலவே. மக்கள் ஓரொருகால் நிகழ்த்துஞ் சொற் செயல்களிலிருந்து அவரது முழு மனவியற்கை யினையுந் தெளிந்துகோடல் இயலாதென்றும். அவரது வாழ்க்கையிற் றொடர்பாக நடைபெறுஞ் சொற்செயல் நிகழ்ச்சிகளைப் புடைபட வைத்தளந்து நுணுகிக் காண வல்லார்க்கே அவரது முழு மன வியற்கையும் விளங்கித் தோன்றுமென்றும் உணர்ந்துகொள்க. இனி, இம்மண்ணுலகத்து வாழ்வாரில் விலங்குகளை ஒப்பவும் ஒரேவகையாய் இயங்கும் பொறிகளை (இயந்திரங் களை) யொப்பவும் ஏதொரு மாறுதலுமின்றி உண்டுடுத்துப் புணர்ந்து மகவீன்று உறங்கிக்கழியும் பொது மக்கள் பெரும்பாலார் நிகழ்த்துஞ் சொற்செயல்கள், அவரெல்லார்க்கும் பொதுவாய்ப் பிரிந்து தனிவிளங்குஞ் சிறப்பியல்பு ஏதும் உடையவாகாமையின், மக்களை அறிவிலும் ஆற்றலிலும் இன்பத்திலும் மேம்படுவித்தற்கு ஒரு நாடக நூல் எழுதும் ஆசிரியன் அப்பொதுமக்களின் பொது நிகழ்ச்சி களையே எடானாய், அவருட்சிறந்தார் சிலரின் சொற்செயல் நிகழ்ச்சிகளையே நனிதெரிந்தெடுத்து, அவை தம்மை ஒரு கதையாகத் தொடுத்துத் திரித்து, அவ்வாற்றால் அவர்தம் மனவியற்கைகளை முகந்து கொடுத்து, உணர்வுடையா ரெல்லாரும் அவற்றை ஆரப்பருகி இன்பமும் அறிவும் பெறுமாறு செய்வனென்க. இங்ஙனம் மக்களுட் சிறந்தார் தம் ஒழுகலாறுகளையே அவன் விதந்தெடுத்து நுவல்கின்றுழிப், பொதுமக்கள் ஒழுகலாறு களையும் விடானாய், அவற்றுள் வேண்டுவன எடுத்து, அவை தம்மையும் விழுமியார் ஒழுகலாறுகளின் ஊடே ஊடே புகுத்து அமைத்துச் செல்லுதலையுங் கடனாக் கொள்வன். இஃது எற்றுக்கோ வெனிற்; பாலினை அடுத்துப் புளிங்காடியையும் நுகர்ந்தார்க் கல்லது பாலின் இனிமையும் நலனும் புலனாகா. பொற்றகட்டில் உயர்ந்த சிவப்புப் பச்சை மணிகளைப் பதிக்கலுறுவான், அம்மணிகளின் அடியில் மெல்லிய சிவப்புப் பச்சைச் சாயத்தகடு களையும் உடன்பதித்து அவ்வாற்றால் அம் மணிகளின் சுடரொளியை மிகுதிப்படுத்தல் கண்டாமன்றே. ஓவியக்காரர் ஓவியங்களில் ஒளியின் பக்கத்தே நிழலையும் வரைந்து அவ்வாற்றால் அவ்வொளியின் துலக்கத்தை மிகுதிசெய்தலுங் காண்டுமன்றே இங்ஙனமே, சிறந்தார் ஒழுகலாறுகளை நுவல்வோன். மேலும் அவற்றைச் சிறப்பித்தல் வேண்டி, இழிந்தார் ஒழுகலாறுகள் சிலவற்றையும் அவற்றோடு உடன்வைத்துக் காட்டிச் செல்லுதல் அவன்றன் அரிய செய்கைத்திறமாமென் றுணர்ந்துகொள்க. இனி, நாடக ஆசிரியன் உயர்ந்தார் இழிந்தார் ஒழுகலாறு களைத் தெரிந்தெடுத்துப் புனைகின்றுழி, அவ்விரு திறத்தாரின் இயற்கைகளொடு தான் ஒன்றாயும் வேறாயும் நின்றே அது செய்வனென்பது. தன்னால் நுவலப்படுந் தலைவன் தலைவியர் முதலான நாடகமாந்தரின் மனவியற்கையொடு தான் ஒன்றாய் நில்லாதவழி ஆசிரியன் அவரியற்கையினை நன்குணர்ந்து கொள்ளமாட்டான். இனி, அவரியற்கையோடு ஒன்றாயே கலந்து விடுவானாயின், தன்னைமறந்து அவர் ஒழுகுமாறே ஒழுகுவன்; அவ்வாறாகவே அவன் கிறுக்குக் கொண்டவனாய் அவர் தம் ஒழுகலாறுகளைப் பிறர்க்கெடுத்துக் காட்டி நாடகநூல் இயற்ற மாட்டுவானல்லன். ஆகவே, நாடக ஆசிரியன் தன்னாற் கூறப்படுவார்தம் பல்வேறு இயற்கை களோடு உடனாய் நின்று அவற்றை நன்குணர வல்லனாத லொடு, தான் அவற்றின் வேறாய் நின்று தன் கூர்த்தமதியால் அளந்துணர்ந்த அவை அவர்தந் தொடர்பான ஒழுகலாறு களில் இனிது விளங்கித் தோன்றுதலையுந் காட்டவல்லனாவன். இங்ஙனந் தான்கொணர்ந்து நிறுத்தும் நாடகமாந்த ரியற்கைகளோடு ஒன்றாயும் வேறாயும் நின்று அவர்தம் ஒழுகலாறுகளை நுவன்று நாடக நூல் யாக்குந் திறம் நாடக நூல் எழுதப்புகுவார் எல்லார்க்கும் எளிதில் அமைவ தன்று. இத்துறையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றித் திகழ்பவர் ஆங்கிலத்திற் சேக்குவீயரும் (Shakespeare), அருந் தமிழில் இளங்கோவடிகளும், வடமொழியிற் காளிதாசருமே யாவர். ஏனென்றால், உயர்ந்தார் இழிந்தார் தம் இயற்கைகளின் உள்நுழைந்து அவற்றின் ஒற்றுமை வேற்றுமை களைக் கண்டறிதலுங், கண்டறிந்தவற்றைப் புறத்தார்க்குப் புலனாக்கு தலும் எளிய அல்ல. அற்றேல், அவை அங்ஙனம் எளிய வாகாமை என்னை யெனிற், கூறுதும். உயிரில் பொருள்களெல்லாம் அறிவும் இல்லாதன. மற்று, உயிருள்ளனவோ அறிவும் ஒருங்குமுள்ளன. அறிவு தான்வேண்டியவாறு இயங்கவல்லது; தன் இயக்கத்தை மறிப்பதுண்டாகுமேல் அதனைக் கடந்து செல்லுதற்குச் சூழ்ச்சி செய்தலும், அதன்படி முடித்தற்கு முயற்சி செய்தலும் வல்லது. மற்று, உயிரில் பொருள்களோ அறிவும் இல்லன, ஆகையால், அவை தாம் வேண்டியவாறெல்லாம் இயங்க வல்லன அல்ல; அல்லவாகவே, அவை ஒருவர் இயக்கினால் இயங்குவதும், அவ்வியக்கத்தை ஒன்றுவந்து இடைமறித்தால் நின்று போவதுமே உடையன. இவ்விரண்டன் வேறு பாட்டினை அறிதற்கு ஒரு சிற்றெறும்பினையும் ஒருசிறு கோலியு ருண்டை யினையும் ஒப்பிட்டுப் பார்மின்கள்! சிற்றெறும்பு தான் வேண்டியவாறெல்லாம் இயங்குதலையுந், தான் செல்லும் வழியில் ஏதேனும் வந்து குறுக்கிட்டால் அதன்மேல் ஏறியோ அல்லது அதனைச் சுற்றியோ அல்லது தான் வந்தவழியே திரும்பியோ ஏகுவதன்றி வாளா நில்லாமையையும் உற்று நோக்குக! மற்றுக், கோலியுருண் டையோஒரு சிறுவனால் உருட்டப்பட்டவழி உருண்டு ஓடுதலும், இடையே ஒரு பெருங்கல்லாற் றடுக்கப்ப்டடவழி ஓடாது நின்றுவிடுதலும் நோக்குக! இவ்விரண்டன் இயல்பு களையும் ஒப்பிட்டுப் பார்க்குங்கால், உயிருள்ள பொருள்கள் எல்லாம் அறிவும் உடையனவாயிருத்தலால் அவைதாம் விரும்புமாறெல்லாம் இயங்க வல்லனவா மென்பதூஉம், ஏனை உயிரில் பொருள்களோ அறிவில்லாதனவா யிருத்தலால் அவை அங்ஙனம் இயங்கமாட்டாதனவா மென்பதூஉம் நன்கு புரிந்து விளங்காநிற்கும். உயிரில் பொருள்களின் இயற்கை நாடோறும் இப்படியே யிருக்குமென்றும், பிறி தொன்றால் அதன் இயக்கம் மறிக்கப்பட்ட வழி அஃதிவ்வாறு இருக்குமென்றும் நாம் உறுதியாய்ச் சொல்லலாம். காந்தக்கல் இருப்பூசியைத் தலைப்பட்டால் அதனைத் தன்மாட்டு ஈர்த்துக்கொள்ளு மென்றும், அதற்கும் அவ்விருப்பூசிக்கும் இடையே ஒரு கல்லாயினுங் கட்டையாயினும் வைக்கப் பட்டால் அஃது அதனைத் தன் மாட்டு இழாமற் கிடக்கு மேயல்லால் அதனை வேறுவழியாய் இழுக்க அறியாதென்றும் நாம் திட்டமாய்ச் சொல்லலாமன்றோ? மற்று, ஓர் எறும்பு அங்ஙனமே ஒரு தடையால் மறிக்கப் பட்டவழி, அஃது அதன் மேல் ஏறிச் செல்லுமோ, அல்லததனைச் சுற்றிச் செல்லுமோ, அல்லது தான் வந்தவழியே திரும்பிச் செல்லுமோ என்பதனை அஃது இயங்கத் துவங்கியபின் அல்லாமல் முன்னே சொல் லுதல் எவர்க்கேனும் ஏலுமோ? ஏலாதன்றே. சிற்றுயிர்களின் இயக்கத்தையே முன்னறிந்து சொல்லுதல் இயலாதபோது, ஆறறிவிற் சிறந்த மக்களின் இயக்கங்களை அளந்து அவர்தம் இயற்கைகளை உறுதிப்படுத்திக் கூறுதல் எல்லார்க்கும் எளிதில் வாய்க்குமோ! என்றாலும், இம்மண்ணுலகில் அத்திபூத்தாற் போல் அருமையாய்த் தோன்றி அறிவாற்றலில் மிக்கு விளங்கும் நல்லிசைப் புலவர் ஒருசிலரே, பல்வேறு வகைப்பட்ட மக்களின் பல்வேறு இயக்கங்களையும் ஒரு தொடர்புபடுத்து அளந்து, அவ்வாற்றால் அவர்தம் இயற்கை களைப் பிரித்துவைத்துக் காட்ட வல்லராவரென்க. மக்களுள் ஒருவரது இயற்கை பிறரொருவரது இயற்கையை முழுதும் ஒத்து இராது. வெளிப் பார்வைக்கு ஒற்றுமையுடையபோற் றோன்றும் மாந்தரின் இயற்கைகள், கூர்த்தாராய்ந்தறிந்து காணவல்லார்க்கு நுண்ணிய வேற்றுமைகள் பற்பல உடையவாய்ப் புலப்படும். கல்வியும் நுண்ணறிவும் ஓவாமுயற்சியும் உடைய மேலோர் மடிவில்லா ஒழுகலாறுகள் பல உடையராதலின், அவ்வொழுகலாறுகளின் தொடர்புகொண்டு அவர்தம் இயற்கைகளை அறிந்துரைத்தல் நுண்மாண் நுழைபுலமுடையார்க்கு இயலும். மற்றுக், கல்வியும் நுண்ணறிவும் முயற்சியும் இலராய்க் கட்டைபோலவுங் கற்போலவும் பொறி (இயந்திரம்) போலவும் மடிந்து கிடப்பார்க்கு அல்லது தம் வயிறு நிரப்புதற்கு வேண்டுமளவே சிறிதொரு முயற்சியை மாறாமற்செய்து வருவார்க்கு, அவர்தம் ஒழுகலாறுகள் பலவேறு வகையவாய் நடைபெறாமையின், அவர்தம் இயற்கைகளின் வேறுபாடுகளைக் கண்டறிதல் நுண்ணறிவு வாய்த்தார்க்கும் இயலாது. அதனாலன்றே நாடக நூலாசிரியர் மேலோர் ஒழுகலாறுகளையே பெரும்பான்மை யெடுத்துத் தொடுத்து, ஏனைக் கீழோர் நடைகளை அத்துணையெடாது சிறுபான்மையே யெடுத்து இயைத்துத் தம் நாடகங்களை இயற்றுவாராயினரென்க. அங்ஙனமாயினும், மேலோர்பாற் புலனாய்த்தோன்றும் இயற்கை வேறுபாடுகள் அத்துணையும் ஏனைக் கீழோர்பாலும் புலனாகாமல் ஒளிந்து கிடக்குமென் றுணர்ந்துகொள்க. உயர்ந்தார் இழிந்தார் எல்லாருள்ளும் ஒருவரது உருவத்தின் அமைப்பும், அவரது நடையும், அவர்தங் குரலொலியும், பேச்சுமெல்லாம் பிறர் ஒருவருடைய உருவ அமைப்பையும், நடையையுங் குரலொலியையும் பேச்சையும் ஒத்திராமல் வேறுபட்டிருத்தல் எல்லாரும் விளங்க அறிந்த உண்மை யன்றோ, என்றாலும், மக்களெனப் படுவாரெல்லார்க்கும் உருவமும் நடையுங் குரலும் பேச்சும் பொதுவில் ஒத்திருத்தலும், அவை மக்களினுந் தாழ்ந்த விலங்கினங்களின் வடிவம் நடை குரல் முதலியவற்றோடு ஒரு சிறிதும் ஒவ்வாதிருத்தலும். அங்ஙனமே எல்லாரும் அறிந்தனவாகும். இவ்வாறாக மக்களின் புற இயற்கைகள் ஒன்றோடொன்று ஒவ்வாத சிறப்பியல்புகளும், மக்கள் என்னும் பொதுமையில் ஒத்த பொதுவியல்புகளும் உடையவாய்க் காணப்படுதல் போலவே, அவர்தம் அக இயற்கைகளும் ஒன்றையொன்றொவ்வாத சிறப்பியல்பும் மக்களென்னும் பொதுமையில் ஒத்த பொதுவியல்பும் உடையவாய்க் காணப்படுகின்றனர். புறவியற்கை கண் முதலிய புலன்களால் நன்கறிப்படுதல் போல, அகவியற்கை அவற்றால் அறியப் படாமல் அவற்றின் வாயிலாக நுண்ணறிவினால் ஆழ்ந்தாராய்ந்து தெளியப்படுவனவா யிருத்தலால், நுண் மாண் நுழைபுலமுடையார்க்கன்றி ஏனையார்க்கு அவற்றை நன்கு நுனித்தறியும் அறிவு வாயாது ஆதலினாற்றான், மக்கள் மனவியற்கைகளின் ஒற்றுமை வேற்றுமைகளை நன்களந்து காட்டவல்ல நாடக ஆசிரியர்கள், ஏனை நூலாசிரியரின் மேலாக வைத்துக் கொண்டாடப்படுகின்றாரென்பது மக்களின் புற இயற்கைகளையும், மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களின் புற இயற்கைகளையும், மலை கடல் நாடு காடு நகர் முதலான புறப்பொருட் டோற்றங்களையும் உற்றுநோக்கி யுணர்ந்து, அவை தம்முள் வனப்பு மிக்க கூறுகளை ஆராய்ந்தெடுத்துச் செய்யுள் உரை இயற்றுதலும் அரியதொரு புலமைத் திறத்தின்பாற் படுமேயாயினும், அஃது அவையெல்லாவற்றின் அகத்தும் நுழைந்து அங்குப் புதைந்து கிடக்கும் அவையிற்றின் பொதுவியல்பு சிறப்பியல்புகளை வரன்றிக் கொணர்ந்து நங் கண்ணெதிரே ஒளிர வைக்கும் ஆன்ற புலமைத் திறத்திற்கு ஈடாகாது. எனவே, சாகுந்தலம் போன்ற நாடக நூலுஞ், சிலப்பதிகாரம் போன்ற பெருங்காப்பிய நூலும் இயற்றி மக்கள் மனவியற்கைகளைப் புலங்கொளக் காட்டும் காளிதாசர் இளங்கோவடிகளைப் போன்ற நல்லிசைப் புலவர்க்கு, ஏனைப் புலவர்கள் ஒவ்வாரென்பது பகுத்துணர்ந்து கொள்ளப்படும். இனி, ஆசிரியர் காளிதாசர், சாகுந்தலம் என்னும் இந்நாடகக் காப்பியத்தின்கட் கொணர்ந்தியைத்த நாடக மாந்தரின் அகவியற்கைகள், அவர்தம் ஒழுகலாறுகள் ஒன்றோடொன்று பிணைந்து ஒரு கதையாகத் தொடர்ந்து செல்லுமாற்றால் இதனைப் பயில்வார்க்கும், இதனை நாடக அரங்கின்கட் காண்பார்க்கும் நன்கு புலனாமாறு விளக்கிச் செல்லும் அரிய புலமைத் திறத்தினை ஈண்டெடுத்துக் காட்டுவாம். இந்நாடகத்திற்குத் தலைமகள் ஆவாள் சகுந்தலையுந் தலைமகன் ஆவான் துஷியந்தனும் ஆகலானும், இவர் இருவருடைய ஒழுகலாறுகளின் பிணைப்பின்றி இந்நூல் திரித்துத் தொடுக்கப் படாமையானும் இவ்விருவர் இயற் கைகளே முதற்கண் ஆராய்ந்துரைக்கற்பாலன. இவ் விருவருள் ளுஞ் சகுந்தலையை விதந்தெடுத்து, அவளது பெயரையே இந்நூற்குப் பெயராக ஆசிரியன் அமைத்திருத்தலை உற்றுநோக்குங்கால், இந்நாடகக் கதையுள் முதன்மை பெற்றுச் செல்வது சகுந்தலையின் ஒழுகலாறே யென்பது நன்கு விளங்காநிற்கும். மற்றுத், துஷியந்தன் ஒழுகலாறோ அவன் சகுந்தலையைக் கானகத்திற் றலைப்பட்டு முயங்கிப் பிரிந்து போய், அவளை அறவே மறந்து கைவிட்டுப் பிற்கண்ட கணை யாழியால் அவளை நினைவு கூர்ந்து அதன்பின் நேர்ந்த வானுலகச் செலவால் அவளைத் தற்செயலாய் மீண்டுந் தலைக்கூடிய அவ்வளவில் முடிகின்றது. இவனது ஒழுகலாறு இக் கதைத்தொடர்பில் முழுதுந் தொடர்ந்துநில்லாது இடை யறுந்து பட்டுப், பின்னர் அவன்செயலாயன்றித் தற் செயலாய் அதனூடு விரவிப் பெருந்துயர்க் காரணமாய்ப் பயில்வார்க் இன்பம் பயவாததொன்றா யிருத்தலின், அதற்குரிய அவன் பெயரை இந்நாடகத்திற்குப் பெயராய் நிறுத்தாது ஆசிரியன் விட்டது சாலப் பொருத்தமுடைத்தாதல் காண்க. இவ்வாறு இந்நாடக நிகழ்ச்சியில் முதன்மையுற்று நிற்குந் தலைவியாகிய சகுந்தலையின் அகப்புற இயற்கைகளே முதற்கண் ஆராயற்பாலனவா யிருக்கின்றன. இம் மங்கையின் பிறப்பு வரலாற்றை ஆராய்பவர்க்கு, இவள் நேரே காணப்படா விடினும் அழகில் மிக்கவளாகத்தான் இருக்கவேண்டுமென்னும் உறுதியுண்டாம். அழகில் மிகச் சிறந்தவளாகப் புராண நூல்களால் நுவலப்படும் மேனகை என்னுந் தேவமாதுக்குந், தவத்தான் மனந்தூயராய்ச் சுடரொளி வீசும் விசுவாமித்திர முனிவர்க்கும் புதல்வியாய்ப் பிறந்த சகுந்தலை அழகிற் குறைந்தவளாயிருத்தல் கூடுமோ அல்லிக்கொடியிற் கவின் கெழுமிய அல்லிமலரல்லாற் பிறிதொன்று உளதாமோ! பொன்னொளி திகழும் மடமான் வயிற்றில் மின்னொளி துலங்கும் பெடைமான் கன்றன்றிப் பிறிதொன்று பிறக்குமோ நீலமும் பசுமையுஞ் சாலக்கலந்த கோலக்கலாவ மயிலுக்கு ஆலுந்தோகை அழகிய மயிலல்லது ஏலப்பிறப்ப தினி வேறுண்டோ! இருந்தவாற்றால் மாதரின் எழில் நலங்களை யெல்லாம் ஒருங்கு கூட்டித் திரட்டிச் சகுந்தலையின் வடிவழகை இறைவன் படைத்தனனென்றே அறிதல்வேண்டும். ஆசிரியர் காளிதாசர் இவளது உருவழகினைப் பிறருரைகளிலிருந்து ஆங்காங்குப் புலப்படுத்தி யிருக்குங் கூறுகளையெல்லாம் ஈண்டு ஒருங்குதொகுத்துக் காண்குவமாயின், அஃது அவள் வடிவினை வரைந்த ஓவியம்போல் நமது அகக்கண் எதிரே விளங்காநிற்கும். முதன் முதல் அவளை நம்முன் கொணர்கையிலேயே புதிது அவிழ்ந்த மல்லிகைமலர்போல் அவள் மெல்லி யளாயிருக்கும் பொதுத் தோற்றங் குறித்துரைக்கப் பட்டமை (10 ஆம் பக்கம்) காண்மின்! முறுக்குடைந்து புதிதாக மலரும் மல்லிகை மலர் நறுமணம் பரப்பி எத்துணை மெல்லிய வெண்மைநிறம் உடையதாய்ப் பொலிகின்றது! அங்ஙனமே இவளது மேனி வெண்மைநிறந் தோற்றிக் கட்டிளமையழகிற் கனிந்து விளங்குவதுடன். மென்மைத்தன்மை காட்டி இவள் செல்லுமிடனெல்லாந் தூயமணம் வீசியுந் துலங்காநிற்கிறது! இங்ஙனங் காணப்படும் இவளது மேனியின் வனப்புச் செயற்கை யாலன்றி இயற்கையழகு நலங்கனிந்த தொன் றென்பது (10) இவளைக் கண்டு வியந்த துஷியந்த மன்னன் வாயுரையாற் புலனாகவைத்த ஆசிரியனது அறிவின் நுட்பம் மிக வியக்கற்பாலது. மேலே, புதிது அவிழ்ந்த மல்லிகை மலருக்குச் சகுந்தலையின் மேனியை ஒப்பிட்டவள் அவள் தோழியர் இருவரில் அனசூயை என்பவளே யாவள், இத்தோழியோ துறவிகளுடன் கானகவாழ்க்கையில் இருப்பவள், இயற்கைக் காட்சிகளையும், ஆண் பெண் பாலாரின் இயற்கைத் தோற்றங்களையுமன்றி, நகர வாழ்க்கை யிலுள்ள செயற்கைக் காட்சிகளையும் அங்குறையும் மாதர் ஆடவரின் செயற்கைத் தோற்றங்களையுங் கண்ட வளல்லள். ஆகவே, அவள் தான் உறையும் அக்கானக உறையுளில் நாடோறுங் கண்டுமகிழும் மல்லிகைப் பூவின் இயற்கை யழகையே சகுந்தலையின் இயற்கையழகின் மெல்லிய தூய தோற்றத்திற்கு உவமையாக எடுத்துக் கூறினள். மற்றுத், துஷியந்த வேந்தனோ இயற்கைக் காட்சிகளையும் நகரத்தி லுள்ள செயற்கைக் காட்சிகளையும் ஒருங்குணர்ந்தவன், ஆதலால் அவன் நகரத்திலுள்ள மாதர்கள் ஆடை அணிகலன் கள் கொண்டு ஒப்பனை செய்யும் முகத்தால் தமதழகை மிகுத்துக் காட்டுதலையும், அவ்வாறன்றிக் கானகத்துறையும் மகளிர் ஒப்பனை ஏதுமேயின்றித் தமதழகு தானே மிக்குத் தோன்ற ஒழுகுதலையும் ஒத்துநோக்கி, ஒப்பனை சிறிதுமிலதாய் ஒளிராநின்ற சகுந்தலையின் இயற்கையழகைக் கண்டு பெரிதும் வியப்பானாயினான். இன்னும், அரசன் தன்தோழனாகிய விதூஷகனுக்குச் சகுந்தலையின் எழில்நலனை எடுத்துக்கூறுஞ் செய்யுளில் (34). அவன் அதற்கு உவமையாகக் காட்டும் பொருள்கள் அத்துணையுஞ் செயற்கைப்படுத்தப் படாமல் இயற்கையிற் காணப்படுமாறே உளவாகவைத்து நுவலுதலுங் கருத்திற் பதிக்கப்பாற்று. பிறரெடுத்து மோந்த மலர் தன் இயற்கை வளங் குன்றுதலின் எவராலுந் தொடப்படாமல் மரஞ் செடி கொடிகளிற் புதிதுமலர்ந்த மல்லிகை மலரின் வெள்ளிய நிறனும் மணனுமே சகுந்தலையின் மேனி நிறத்திற்கும் அதன்கணிருந்துண்டாம் மணத்திற்கும் உவமையாகற் பாலவென்றும், நகத்தாற் கிள்ளியெடுத்த தளிர் வாடி வதங்கித் தன் பளபளப்பினை இழத்தலிற் புதிது துளிர்த்த தளிரின் பளபளப்பே அவளது மேனியின் பளபளப்பிற்கு உவமையாகற் பாலதென்றுங், கடற்சிப்பி யின்றும் எடுத்துத் துளையிட்ட முத்துமணி நடுவே புரையுடைத்தாய்த் தன்னொளியிற் குறைபாடுடையதாய் விடுதலின், எடுத்த அளவேயன்றித் துளையிடப்படாமற் போற்றிவைக்கப்பட்ட முழுமுத்தின் ஊற்றினிமையும் ஒளியுமே இவளுடம்பின் ஊற்றினிமைக்குந் தூயவொளிக்கும் உவமையாகற் பாலவென்றும், மலர்களி னின்றும் எடுத்துச் சுவைக்கப்படுந் தேன் எச்சிலாய் அருவருக்கப்படுதலின், அவற்றினின்றும் எடுக்கப்படாமல் அவற்றின்கண் நிரம்பித் துளும்புந் தூய தீஞ்சுவைத்தேனின் இனிமையே இவளது அழகின் இனிமைக்கு உவமையாகற் பாலதென்றும் நுவன்று, அரசன் இவளது இயற்கைத் தூய புத்தெழில் நலனை விதந்து களித்தல் காண்க. சகுந்தலை, உயர்ந்த பட்டாடைகளை யுடுத்தித் திகழும் நகரத்துச் செல்வமங்கையரைப்போலாது, மர நாரினால் நெய்த மரவுரியாடையினையே யணிந்திருந்தாலுஞ், சடைப்பாசி யினாற் சூழப்பட்டு நடுவே அலர்ந்திருக்கும் தூய வெண்டாமரை போலவுங், களங்கம் உடையதாயிருந்தும் ஒளிவிளக்கம் வாய்ந்து திகழும் வெண்டிங்கள் போலவும் விளங்குகின்றாள் என்பதும் அரசன்வாயுரையாற் புலனா கின்றது. இன்னும், அவளது உடம்பின் நீண்டுதுவளும் மெல்லிய அமைப்பு ஓர் இளம்பூங் கொடியின் அமைப்பை ஒத்திருத்தல், அவடன்தோழி பிரியம்வதை கூறும் உரையால் அறியக் கிடக்கின்றது (12). பின்னுஞ், சகுந்தலையின் கூந்தல் கரியவாய் நீண்டிருத்தலும் (22); இவடன் புருவங்கள் பிறைவடிவினவா யிருத்தலும், விழிகள் பெரியனவாய் மடமானெனப் பிறழ்தலும் (48-87, 27); கன்னங்கள் தாமரையிதழ்போல் வெண்மையிற் செம்மைநிறம் விரவித் தெளிந்து திகழ்தலும் (45); கீழ் இதழ் இளந்தளிர்போற் சிவந்து தோன்றுதலும், தோள்கள் மென்கொம்புபோல் மென்மை வாய்ந்திருத்தலும் (11- 12); கொங்கைகள் பருத்துப் புடைத்துக் காணப்படுதலும் (10); இடுப்புச் சிறுகிப் பிட்டங்கள் பெருத்திருத்தலும் (45, 42); தொடைகள் இளவாழை மரம்போல் அடியிற் பருத்து வரவரச்சிறுகி வழு வழுப்பாய்ப் பொலிதலும், அடிகளிரண்டின் சேர்க்கை மலர்ந்த செந்தாரைப்பூவென வடிவும் வண்ணமும் மென்மையும் வாய்ந்து விளங்குதலும் (51) ஆசிரியன் இந்நூலின் இடை யிடையே அரசன் உரையாட்டுக் களிலிருந்துஞ், சகுந்தலை தன் றோழிமா ருரைகளிலிருந்தும் புலப்பட வைத்திருத்தல் காண்க. இங்கொன்று கருதற்பாலதுளது; பிற்றைஞான்று செய்யுள் நூல்கள் ஆக்குவான் புகுந்த வடமொழி தமிழ் மொழிப் புலவர்கள் ஒரு நங்கையின் அழகிய தோற்றத்தை எடுத்துரைக்குங்காலெல்லாம், அவடன் உச்சியிலிருந்து உள்ளங்கால்வரையிலுள்ள உறுப்புக்களைத் தமக்குத் தோன்றியவாறெல்லாம் பலப்பலவகையாய்ப் புனைந்து மீக்கூறிப் பற்பல செய்யுட்கள் இயற்றித் தந்திறமையைக் காட்டுதலில் முனைந்து நிற்கின்றார். இவ்வாறு புனைந்துரைப் போர் தாம் மீக்கூறும் புனைந்துரைகள் தம்மால் எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு மடந்தையின் வனப்பின் தனி இயற்கையை உள்ளவாறே புலப்படுத்துகின்றனவாவென்று ஒரு சிறிதும் உணர்ந்து பார்க்கின்றாரில்லை. அழகுடைய மங்கையர் பலராதல்போலவே, அவர்க்குள்ள அழகுகளும் பலவேறு வகையவாய் அமைந்திருக்கும். வடநாட்டு மகளிர் நிறம் பெரும்பாலும் வெண்மையாயிருக்கும், அவ்வெண்மை நிறமுஞ், சிலர்க்குச் சலவைக்கல்லின் நிறத்தையும், வேறு சிலர்க்கு மல்லிகை மலரின் நிறத்தையும், மற்றுஞ் சிலர்க்குச் சிறுசிவப்புக்கலந்த தாமரை யிதழின் நிறத்தையும், பின்னுஞ் சிலர்க்குப் பொன்னொளி கலந்த சில பூவின் நிறத்தையும் ஒத்ததாயிருக்கும். தென்னாட்டு மகளிர் நிறமோ பெரும்பாலும் வெளிறின கருமையாயுஞ், சிறு செம்மை கலந்த கருமையாயும் இருக்கும். இவருட் சிலர் பொன்னிறமாயும், வேறு சிலர் யானை மருப்பின் நிறமாயும் இருப்பர். ஆகவே, வடநாட்டின்கண் உள்ள மகளிர் எண்ணிறந்தாருள் தாம் எடுத்துக் கொண்ட தலைமகள் ஒருத்தியின் அழகிய நிறத்தைக் கூறலுறும் நல்லிசைப்புலவன் ஒருவன், அவட்கு உண்மையில் உரிய நிறத்தை விளங்கக் காட்டல் வேண்டினனாயின், அந்நிறம் உடைய ஒரு பெருளை யெடுத்துக் காட்டுதலே பொருத்தமாம். நல்லிசைப்புவலரான காளிதாசர் சகுந்தலையின் மேனி நிறத்திற்குப் புதிது அவிழ்ந்த மல்லிகை மலரின் நிறம் ஒன்றைமட்டுமன்றி வேறெதனையும் எடுத்துரையாமை பெரிதும் பாராட்டற்பாலதாகும். இவ்வாறன்றி, ஓரிடத்தில் மல்லிகைப்பூவின் வெண்மை நிறத்தையும், பிறிதோரிடத்தில் மாந்தளிரின் சிறுசெம்மை கலந்த பளபளப்பான கருமை நிறத்தையும், மற்றுமோரிடத்திற் பொன்நிறத்தையும், பின்னுமோரிடத்தில் மின்னிறத்தையும் அவளது நிறத்திற்கு ஒப்பாக வைத்துச் சொன்னால், ஒன்றினொன்று முரணான வேறான அந்நிறங்கள் அவடன் மேனியின் உண்மை நிறத்தைக் காட்டாவாய்ப் பெரியதொரு குழப்பத்தை உண்டாக்குதலின், அவடன் வடிவம் இன்ன தென்றே புலப்படாதாய் ஒழியும். அங்ஙனம் ஒழியவே, மக்களின் அகவியற்கை புறவியற்கைகளை ஓவியத்தில் எழுதினாற்போல் விளங்கக் காட்டுந்திறம் வாயாத அப்புலவனும் நல்லிசைப் புலவன் ஆகான். நிறத்தைக்கொண்டே மாதர் ஆடவரில் இன்னாரை இன்னரென்று குறிப்பிட்டறியும் அறிவு எல்லார் மாட்டும் நிகழக் காண்டலால், அத்துணை முதன்மையான மேனி நிறத்தைப் பகுத்தறிந்து விளங்கக் காட்டமாட்டா ஒருவன் நல்லிசைப் புலவனாதல் யாங்ஙனமோ வென்பது தமிழில் இராமாயணம் பாடிய கம்பன் சீதையின் மேனி நிறத்தை அவள் கணவன் இராமன் வாயிலாகப் புலப்படுத்துகின்றுழி, என்னிறம் உரைக்கேன்! மாவின் இளநிறம் முதிரும் மற்றைப் பொன்னிறங் கறுக்கும் என்றால் மணிநிறம் உவமை போதா மின்னிறம் நாணி எங்கும் வெளிப்படா ஒளிக்கும் வேண்டின் தன்னிறந் தானே ஒக்கும் மலர்நிறஞ் சமழ்க்கு மன்றே! என்று கூறிய செய்யுள் (கிட்கிந்தா காண்டம், நாடுவிட்ட படலம், 65) சீதையின் மேனிநிறம் இன்னதென்று குறித்துக் கூறாதாய்ப் பெரியதொரு குழப்பஞ்செய்தல் காண்க. சகுந்தலையைப் போலவே சீதையும் வடநாட்டுப் பெண் வடநாட்டுப் பெண்மக்கட்குரிய பொதுநிறமாகிய வெண்மை யை மட்டுங் கூறினாலும், ஒருவாறு அவளது வடிவத்தை நம் அகக்கண் எதிரே காண்டல்கூடும். அவ்வளவுதானுங் கூறகில்லாது, தென்னாட்டு மாதரின் மாந்துளிர் நிறத்தை முதலிலும், பொன்னிறத்தை அதன் பின்னும், மணியின் நிறத்தை (ஒன்பது மணிகளும் வெவ்வேறு நிறத்தனவாதலால் அவற்றுள் இன்னமணியின் நிறம் என்று குறியாமையும் ஒரு பெருங்குறைபாடு) அதன் பின்னும், மின்னலின் நிறத்தை அதன் பின்னுமாக வைத்துக் குழப்பிச், சீதையின் மேனி நிறம் இன்னதெனக் காட்டும் இயற்கை நுண்ணுணர்வின்றிப்போயது நல்லிசைப் புலமையாமோ? கூறுமின்! இங்ஙனமே, உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரையிற் சீதையின் உருவழகை இராமன் தன் தூதுவனாகிய அனுமானுக்கு விரித்துக் கூறுவதாக வைத்துக் கம்பன் வாளா பாடியிருக்குஞ் செய்யுட்கள் முப்பத்து நான்கிலும் இயற்கைக்கு மாறாகக் காணப்படும் பிழைபாடுகள் மிகப் பல. அவை யெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிகவிரியும். இயற்கையை ஆராயும் நுண்ணுணர்வால் அவையெல்லாங் கண்டுகொள்க. மேலும், நல்லிசைப் புலவனாவான் ஒருவன் ஒரு தோற்றத்தைப் புனைந்துரைக்கின்றுழி, அதனை அணுவணு வாய் வகுத்து, வகுத்த அவ்வொவ்வொன்றனையும் விரித்துக் கூறிப் பயில்வாருணர்வை இளைப்புறச் செய்வானல்லன்; அத்தோற்றத்தின் சில விழுமிய கூறுகளை மட்டுந் திறம்படத் தொட்டுக் காட்டி, அவ்வாற்றாற் பயில்வார்தம் உள்ளவுணர் வினை எழப்பி, அஃது அக்கூறிய சில பகுதிகொண்டு அத்தோற்றம் முழுமையும் விளங்கக் கண்டு களிக்குமாறு செய்வன். நல்லிசைப் புலவன்றன் இவ்வரும்பெருந் திறற் பெற்றியை எமது முல்லைப் பாட்டாராய்ச்சியுரையிலும் நன்கு விளக்கிக் காட்டியிருக்கின்றேம். ஈண்டுஞ் சிறிது காட்டுதும்; தெய்வத் திருவள்ளுவர் ஒரு தலைமகன் தன் காதலியின் வடிவழகைத் தன் பாங்கற்கு எடுத்துரைக்கும் முறையிற் பாடியிருக்கும், முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல்உண்கண் வேய்த்தோ ளவட்கு. (திருக்குறள், 1113) என்னும் ஒரு மிகச் சிறிய ஒன்றேமுக்காலடிப்பாட்டில் ஓரழகிய மாதின் வடிவத்தை எத்துணை விளக்கமான ஓர் ஓவியமாக எழுதிக் காட்டியிருக்கின்றார்! பார்மின்! அம்மங்கையின் மேனி மாவின் இளந்தளிரெனப் பளபளப்பான நிறமுடையதாயும், அவடன் பற்கள் முத்துப்போல் வெண்மையும் ஒளியும் வடிவும் வாய்ந்தனவாயும், அவளுடம்பு நறுமணங் கமழ்வதாயும், அவள் கண்கள் மயிலை பாய்ந்து வேற்படைபோற் பிறழ்வனவாயுந், தோள்கள் பச்சைமூங்கிலின் இரு கணுக்களுக்கிடையே பசுத்து வழுவழுப்பாய்த் திகழுங் கரணைகளை யொப்பனவாயும் இருக்குமென்று அவளது உருவத் தோற்றத்தை எவ்வளவு தெளிவாய் நமக்குப் புலனாமாறு காட்டியிருக்கின்றார்! மிகச் சுருங்கிய சொல்லிற் றான் எடுத்த பொருளைப் பளிங்குபோற் றுலங்கக்காட்டும் இதுவன்றோ நல்லிசைப் புலமை! இச் செய்யுளிற்போந்த இளந்தளிர் இன்னதென்பது கூறப்படா விடினும், இத் தென்றமிழ்நாட்டு மகளிரின் அழகிய மேனி நிறத்திற்கு மாந்தளிரை உவமை கூறுதலே தொன்றுதொட்ட வழக்காய்ப் போதரக் காண்டலின், ஈண்டு ஆசிரியர் குறித்த தூஉம் அம்மாந்தளிரேயென்பது சிறிது தமிழாராய்ச்சி செய் தாரும் அறிவரென்க. இன்னும் இங்ஙனமே, திருவாதவூரடிகள் தாம் அருளிச்செய்த திருச்சிற்றம்பலக் கோவையாரில், ஒரு தலைமகன் தன் ஆருயிர்க்காதலியின் உருவடையாளங்களைத் தன் பாங்கற்குக் குறிப்பிக்கும் முறையில் வைத்து அருளிச் செய்திருக்கும், விழியாற் பிணையாம், விளங்கிய லான்மயி லாம், மிழற்றும், மொழியாற் கிளியாம், முதுவா னவர்தம் முடித்தொகைகள், கழியாக் கழற்றில்லைக் கூத்தன் கயிலைமுத் தம்மலைத்தேன், கொழியாத் திகழும் பொழிற்கெழி லாம்எங் குலதெய்வமே என்னுந் திருப்பாட்டின் பொருளை உற்று நோக்குமின்! தன் காதலியின் மிக அழகிய உறுப்பாகிய விழிகளுக்குப் பெடை மான் உவமையும், இத்தென்றமிழ்நாட்டுப் பெண்ணாகலின் அவடன் பளபளப்பான மாமைநிறத்திற்கு அழகிய நீலமயிற்றோகை உவமையும், அவடன் மழலை மொழிக்குக் கிளிமொழி யுவமையும் ஆகிய மூன்றே காட்டி அவளது எழிலுருவினை அவன் நன்கு விளங்க வைத்தவாறாய் அடிகள் அருளிச்செய்திருக்கும் அருட்பெரும் புலமையின் திறத்தை என்னென்பேம்! ஒரு மங்கையின் ஓர் உறுப்பின் அமைவுக்கு ஓருவமையே பொருந்துமன்றிப் பலவுவமைகள் பெரும்பாலும் பொருந்தா. ஒரு மடந்தையின் முன்பற்கள் வெள்ளியவாய் அடிமுதல் முனை வரையிற் சரிவாய்த் திரண்டு முனை மழுங்கி யிருக்குமாயின், அவற்றின் அமைப்போடு ஒத்த மயிலிறகின் அடியாகிய முருந்தினை அவற்றிற்கு உவமை கூறுதல் பொருந்தும்; மற்று முத்தினை உவமை கூறுதல் பொருந்தாது. அன்றி முத்துக் கோவைபோல் உருட்சிவாய்ந்த பல்வரிசை மாதர் சிலர்க்குக் காணப்படுகின்றமையின், அதற்கு முருந்தினை உவமை கூறுதல் பொருந்தாது. இங்ஙனமே வெண்மையாய் வட்டவடிவமான முகம் மாதர் சிலர்க்கு இருத்தலின் அதற்குத் திங்களுவமை பொருந்தும், சிலரது முகம் மேலுங் கீழுங் குறுகி நடுவே சிறிதகன்றிருத்தலின் அதற்குக் கோழிமுட்டை வடிவினை உவமை கூறுதல் பொருத்தமாம். இங்ஙனமே, அவ்வவ்வுறுப்பின் அமைவினை உற்றுநோக்கி அததற்கேற்ற உவமை கூறுதலே நல்லிசைப்புலமை யாகு மன்றி, அவற்றின் வடிவுக்கு ஒவ்வாதவைகளை யெல்லாம் வாய் கொண்ட மட்டும் எடுத்துரைத்துப் பாடிவிடுதல் நல்லிசைப் புலமை யாகா தென்று கடைப்பிடிக்க பண்டைச் செந்தமிழ் இலக்கியங்களி லெல்லாந் தானெடுத்த பொருளுக்கு ஏற்ற உவமையே காணப்படு மன்றிப் பிறிதேதும் நுவலப்படுத லில்லை. அழகிய மாத ராடவரின் உருவ அடையாளங்களைப் புனைந்துரைக் கின்றுழியும் விழுமிய சில சொல்லாற் கூறுதலல்லது, கம்பன் கூறுமாப்போல் வாளாவிரித்துரைத்துப் பயில்வாருணர்வை இளைப்படையச் செய்தலும் பழந் தமிழ் நூல்களுட் காணப்படுதலில்லை. ஓர் அழகிய பாடினியின் எழில்மிகு வடிவினை ஓவியத்தில் வரைந்து காட்டினாற் போல் மொழிந்துகாட்டும் பொருநராற்றுப் படை யென்னும் பழந்தமிழ் நூற்பகுதியை ஈண்டெடுத்துக் காட்டுதும் - அறல்போல் கூந்தல் பிறைபோற் றிருநுதல் கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண் இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப் பலவுறு முத்திற் பழிதீர் வெண்பல் மயிர்குறை கருவி மாண்கடை யன்ன பூங்குழை யூசற் பொறைசால் காதின் நாண் அடச் சாய்ந்த நலங்கிளர் எருத்தின் ஆடமைப் பணைத்தோள் அரிமயிர் முன்கை நெடுவரை மிசைஇய காந்தண் மெல்விரற் கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு வள்ளுகிர் அணங்கென உருத்த சுணங்கணி யாகத்து ஈர்க்கிடை போகா ஏர்இள வனமுலை நீர்ப்பெயற் சுழியின் நிறைந்த கொப்பூழ் உண்டென உணரா உயவு நடுவின் வண்டிருப் பன்ன பல்காழல்கு லிரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கிற் பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி அரக்குருக் கன்ன செந்நிலன் ஒதுங்கலிற் பரற்பகை யுழந்த நோயொடு சிவணி மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள் நண்பகல் அந்தி நடையிடை விலங்கலிற் பெடைமயில் உருவிற் பெருந்தகு பாடினி. என்றிங்ஙனம் இருபத்து மூன்று அடிகளில் ஓரழகிய பாடினியின் உறுப்புக்கள் அமைவுக்கு ஏற்ற ஒவ்வோருவமையே கூறி அவள் எழிலுருவினை நம் அகக்கண்ணெதிரெ விளங்கக் காட்டும் இப்பழந்தமிழ் நூற்பகுதி எங்கே! முப்பத்து நான்கு செய்யுட்கள் அல்லது நூற்று முப்பத்தாறு அடிகளிற் சீதையின் உருவத்தை ஒன்றினொன்றொவ்வாப் பலபடியான உவமை களாற் பிழைபட விரித்தும் அவளுருவினை விளங்கக் காட்ட மாட்டாக் கம்பராமாயணம் எங்கே! ஏணிவைத்துப் பார்த்தாலும் முன்னைநூற் செய்யுட் புலமைக்குப் பின்னை நூற்புனைவு எட்டமாட்டாத தொன்றாகவே தாழ்ந்து நிற்கின்றது! இனிப், பண்டைநூல் வழக்கை யடுத்துத் தோன்றிய பெருங்காப்பியமாகிய சிலப்பதிகாரத்திலும் ஆசிரியர் இளங்கோவடிகள் கண்ணகியின் வடிவழகைக் கோவலன் வாயினின்றும் புலப்படுக்கும் மனையறம் படுத்த காதையில் இருபத்து மூன்றடிகளில் அதனை விளங்க வைத்திருக்குந் திறம் பெரிதும் பாராட்டற் பாலதொன்றாய்த் திகழ்கின்றது. கண்ணகி தென்னாட்டு மாதாகலின் அவளுருவின் நிறத்தைத் தெரிக்கும் ஆசிரியர், மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞைநின் சாயற்கு இடைந்து தண்கான் அடையவும் என்று அதனை நீலமயில் நிறத்தோடு உவமித்திருக்கும் நுட்பங் கண்டுகொள்க. இனி, இடைக்காலத்தெழுந்த பெரியபுராணம் கம்பராமாயணம் முதலான காப்பிய நூல்கட்கெல்லாம் பெருங்காப்பியச் சுவையும் நடையும் இன்னவெனக் காட்டிய பெருங்காப்பிய நூலாகிய சீவகசிந்தாமணி யுள்ளும் ஆசிரியர் திருத்தக்கதேவர், சச்சந்தன் மனையாளாகிய விசயையின் பேரெழிலுருவை முடிமுதல் அடிகாறும் விரித்துரைக்கும் பதினாறு செய்யுட்கள் அல்லது அறுபத்துநான்கடிகளில் அவடன் உறுப்புக்கட்கேற்ற ஒவ்வோருவமையே பெரும் பாலும் எடுத்துக்காட்டிக், கடைப்படியாக அவளது மேனி நிறம் வலம்புரிச்சங்கின் வழுவழுப்பான வெண்மை நிறத்தை யொத்து விளங்கியதென்பார், வலம்புரி சலஞ்சலம் வளைஇயது ஒத்தனள் குலம்புரிந் தனையதோர் கொடியின் நீர்மையாள் என்று மொழிந்ததூஉம் காண்க. விசயை வடநாட்டு மங்கையாகலின் அவளது நிறம் வெள்ளிய சங்கின் நிறத்தை யொத்திருந்ததென்றல் பெரிதும் பொருத்தமுடைத்தாதல் தெளியற்பாற்று. இனி, ஒரு மடந்தையின் உறுப்புக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோருவமையே யன்றிப் பலவுவமைகள் கூறல் வேண்டினும், அவ்வவற்றின் வண்ணம் வடிவுஅளவு சுவை என்பவற்றோடு ஒத்தபொருள்களை யெடுத்துக் கூறினாலும் அவை பொருந்து மெனலாம். வட்டமான முகம்வாய்ந்த ஓர் அழகிய நங்கை மாந்தளிர் நிறத்தினளாயிருப்பினும். அவளது முகத்தின் வடிவுக்கும் விளக்கத்திற்கும் வெள்ளிய மதியை யுவமை கூறுதல் இழுக்காது அவளது மேனியிற் பொற் புள்ளி வடிவான அழகிய தேமல் காணப்படுமாயின் அதற்குப் பொற்றுகளையும், சிதறிய முட்டையின் மஞ்சட் கருவையும் உவமை கூறுதல் வழுவாகாது. இங்ஙனமே பொருத்தம் உள்வழி யெல்லாம் ஒன்றுக்குமேற் பலவுவமைகள் காட்டுதல் குற்ற மன்றாயினும். பொருத்தமில்வழி ஒன்றினொன் றொவ்வா வுவமைகளைப் பலபட விரித்துக்காட்டி வெறுஞ் சொல்லார வாரம் புரிதல் நன்றாகாதென்க. இனி, ஈண்டு ஆசிரியர் காளிதாசர் சகுந்தலையின் உருவின் நிறத்திற்கும் உறுப்பின் அமைவுகளுக்கும் முழுதும் ஒத்த ஒவ்வோ ருவமையே யெடுத்துக்காட்டி, அவளழகிய வடிவினை நம் அகக் கண்ணெதிரே ஓர் அரும்பெறல் ஓவியமாய் விளங்க நாற்றிய நல்லிசைப் புலமை பெரிதும் நினைவுகூரற் பாலதா மென்க. இச்சாகுந்தலத்தின் மட்டுமேயன்றித், தாம் முதன் முதல் இயற்றியதாகக் காணப்படும் மாளவிகாக்நிமித்திரம் என்னும் நாடக நூலிலுங் காளிதாசர் மாளவிகை என்னும் நாடகத் தலைமகளின் உருவழகைச் சுருக்கமாகவே யெடுத்துக்கூறி, அதனை இனிது விளங்க வைத்திருக்கின்றார். அவளது முகம் நீண்ட விழிகளையுடையதாய் மழைக்கால மதியின் ஒளிவாய்ந்து திகழ்கின்றது; அவளுடைய இரண்டு கைகளுந் தோளின்கண் மெல்லெனச் சரிந்து காணப்படுகின்றன; அவடன் கொங்கைகள் ஒன்றையொன்று நெருங்கித் தொடுதலுடன் உயர்ந்து தோன்று கின்றன; அவளுடைய விலாப்பக்கங்கள் இழைத்துச் செய்தன போற் பொலிகின்றன; அவளது இடை ஒரு கைப்பிடியுள் அடங்குவதாய் உளது; அவளிடுப்பின் கீழ்ப்பகுதிகளோ அகன்றிருக்கின்றன. அவளடி விரல்கள் சிறிதே வளைந்திருக் கின்றன; இந்தவாற்றால், ஆடல் ஆசிரியன் ஆடுவாளுருவம் எவ்வளவு விழுமியதாய் இருக்கவேண்டு மெனத் தன் உளத்தின்கண் எண்ணினானோ அவ்வளவு விழுமிதாகவே இவளது வடிவம் உருவாக்கப் பட்டிருக்கின்றது! என்று அக்கிநிமித்திரன் என்பான் மாளவிகையின் எழில்வடிவை வியந்து கூறும் முகத்தால், ஆசிரியன் அதனை நம் அகக் கண்ணெதிரே நன்கு புலனாமாறு காட்டுதல் காண்க. இங்ஙனமாக எள்ளளவும் பழுதில்லா ஓரழகிய யாக்கையின்கண் உறையும் ஓருயிர் இனிய இயற்கை வாய்ந்ததா யிருக்குமே யல்லாது இன்னா இயற்கை யுடையதா யிருக்குமோ? சகுந்தலை புறத்தே அழகுமிக்கவளாய் இருந்தது போலவே அகத்தேயும் அழகுமிக்க குணங்கள் அமைந்த வளாய்க் காணப்படுகின்றாள். இவள் மிக மெல்லிய உடம்புடையவளாய் இருந்துந் தன்னுடம் பின் வருத்தத்தையும் பாராமற் பூஞ்செடிகளி னிடத்தும் மிக்க அன்புடையவளாய், அவை வாடாமற் செழித்திருக்கும் பொருட்டுத் தானுந் தன் தோழி மாருடன் குடங்களில் முகந்த நீரை அவற்றிற்கு விடுவள். இன்னும், அவ்வாசிரமத்தில் உறையும் மான்களையுந் தன்மகவுபோற் கருதி அத்துணை யன்புடன் வளர்த்துவந்தவள் (72), இவ்வாறு ஓரறிவுயிர்களிடத்தும் ஏனைச் சிற்றுயிர்க ளிடத்தும் அளவில்லா அன்புடையவளாய் ஒழுகிய அவள், ஆறறிவுடைய மக்கள்பால் எத்துணைப் பேரன்பு பூண்டு ஒழுகுவள்! இதனால் அவளுயிர் அன்பென்னுந் தேனமிழ்து நிரம்பித் ததும்புந் தூய ஒரு பொற்குடமென்றே அறியற் பாற்று. இத்துணை அன்பும் அதனால் மென்றன்மையும் ஒருங்கு கெழுமிய உள்ளத்தினளாய் இருத்தலினாலேயே அன்புக்கு மாறான சிறியதொரு வன்செய்கையைச் சிற்றுயிர்கள்பாற் கண்டாலும் இவள் மிக அஞ்சுவள். இவள் பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு வருகையில் அதனாற் கலைக்கப் பட்ட ஒரு கருவண்டு தன் முகத்தண்டை பறந்துவருதல் கண்டு பெரிதும் வெருக்கொண்டு, அதற்கு ஒதுங்கிப்போய்த், தன்னைக் காக்கும்படி தன் தோழிமாரை அழைக்கின்றாள். அவடன் தோழிமாரோ அவள் அங்ஙனம் அஞ்சி வருந்துவதைக் கண்டு பகடி பண்ணுகின்றனர். அதனால், அவளினும் அவடன் றோழிமார் சிறிது வல்லென்ற நெஞ்சமுடையராதல் அறியப்படுகின்றதன்றோ? பெண்பாலார் ஆண்பாலாருள் வேறுபட்ட இயற்கையுடையாரை ஒருங்குவைத்து ஒப்பிட்டு நோக்கினால் மட்டுமே, அவர் தம்முட் காணப்படும் வன்மை மென்மைகளின் இயல்பு நன்கு புலனாகா நிற்கும். இங்கே துறவாசிரமத்தில் மென்குணங்களில் வளர்ந்த மகளிருள்ளும் வன்மை மென்மை சிறுசிறு வேறுபாட்டுடன் காணப்படுதலை, ஆசிரியர் காளிதாசர் சகுந்தலையினிடத்தும் அவளோடு உடன்வளர்ந்த அவடன் றோழிமாரிடத்தும் வைத்துக் காட்டும் நுட்பம் பெரிதும் நினைவிற் பதிக்கற்பாற்று. இன்னும், அன்பிலும் மென்றன்மையிலுஞ் சிறந்தார் எவராயிருப்பினும், அவர்பால் வாய்ச்சொற்கள் மிகுதியாய்க் காணப்படா. ஆண்பாலாரிலும் இவ்வியல்பினர் உண்டு. பெண் பாலரிலும் இவ்வியல்பினர் உண்டு. இவரெல்லாம் பெரும் பாலுந் தஞ்செய்கையினாலேயே தமதியற்கை பிறர்க்குப் புலனாக ஒழுகுவரேயல்லால், தம்வாயாற் பலப்பல சொற் களை மிகுத்துச் சொல்லார் மிகுத்துச் சொல்லாவிடினும் இவர் அவ்வக்காலங்களிற் கூறுஞ் சில சொற்களும் பொருள் நிறைந் தனவாய் ஆணித்திறமாய் இருக்கும். இங்ஙனமே அன்பிலும் மென்றன்மையிலுஞ் சிறந்தாளான சகுந்தலையுந் தன் றோழிமாரோடுந் தன் காதலனோடும் பேசுஞ் சொற்கள் சிலவாகவே காணப்படுகின்றன. தன் றோழிமாருடன் பேசுவனவும் அவ்வாசிரமத்திலுள்ள மரஞ் செடி கொடிகளின் அழகிய தோற்றத்தைக் குறிப்பனவாகவே யிருக்கின்றன (12, 13). புதிது மலர்ந்த ஒரு மல்லிகைக் கொடி ஒரு தேமாமரத்தினைச் சார்ந்து நிற்கும் இனிய காட்சியினை இவள் காட்டியபோது, இவடன்றோழி பிரியம்வதை யென்பாள் சகுந்தலை தானுந் தகுந்த ஒரு கணவனை மணக்கலாகுமா வெனக் கருதுகின்றாள் என்று பகர்ந்து பகடி செய்ததற்கு, இதுதான் உன் உள்ளத்தில் உள்ள உண்மையான எண்ணம் என்று சுருங்கிய விடை கூறித் தன் பேச்சை முடித்துவிடுகின்றாள். துஷியந்த மன்னன் இவர்கள்பாற் போந்து உரையாடும்போதுஞ், சகுந்தலை அவன் வினாயதற்கு விடைதராமலே நிற்க, இவடன் றோழி மாரே அவன் வினாயவற்றிற்கெல்லாம் விடைகூறி உரையாடு கின்றனர். தான் அவன்மேற் பெருங் காதல் கொண்டமையின், அவனது வரலாற்றினையறிதற்கு அவள் பெரிது விழைந்தும், அதனைத் தான் வாய் திறந்து கேட்டிலள். இன்னும் இவள் துஷியந்த மன்னன்மேல் அளவிறந்த காதல் கொண்டவளாய்த், தன்றோழியர் உதவியால் அவனைக் கூடுகின்ற காலத்தும், இவள் தன் காதலனுடன் உரையாடுஞ் சில சொற்களும் அவன் தன்னைத் தொடாதபடி தடுப்பனவாயிருக்கக் காண்டுமே யல்லாற் பிற இல்லையே. மேலுந், தன் காதலன் தன்னை அக்கானக உறையுளிலே விட்டுப் பிரிந்துபோய்ப் பல நாட்கள் கடந்தும், இவள் அவனையே நினைந்து, கனவின் கண் உலவுவாரைப்போல் தன்னை மறந்திருந்த நிலையினளாகப் புலப்படுகின்றனளேயன்றி, அவன் தன்னை மறந்திருந்த குற்றத்தையாவது தான் அவன்பாற் செல்ல வேண்டும் முறை யினையாவது தன் றோழிமாருடனும் எடுத்துப் பேசின வளாகத் தெரியவில்லை. பின்னர் இவள் தந்தையார் இவளைக் கணவன் இல்லத்திற்கு விடுத்தற் பொருட்டு வேண்டும் ஒழுங்குகள் செய்யும்போதும், இவள் முடிவாகத் தன் றந்தையார் ஆசிரமத்தை விட்டுப் போம் போதுந், தான் வளர்த்த மல்லிகைக் கொடியையும் மான் கன்றையுந் தன் றோழிமாரையுந் தன் றந்தையாரையும் விட்டுப் பிரியும் ஆற்றாமையாற் சில மொழிகள் நுவன்று நெஞ்சம் நெக்குருகு கின்றனளே யன்றி, ஆண்டும் மிகுதியாய் எவையும் பேசுகின்றிலள். இனித், தன் றந்தையால் விடுவிக்கப்பட்டுத் தன் கணவன் துஷியந்தன்பாற் சென்று அவன் முன்னிலையிற் சகுந்தலை நிற்புழி, அவன் இவளைக் கானகத்தில் மணந்து கொண்ட வரலாறுகளையெல்லாம் முற்றும் மறந்து, இவளை ஓர் அயலவன் மனைவியாகவே கருதித், தன்னுடன்போந்த முனிவ ரோடு உரையாடும்போதும், இவள் அவன் சொற்களைக் கேட்டு உளம் நடுநடுங்கி ஆவிசோர்ந்தனளே யன்றி, அவன் தன்னை மணந்த உண்மையைத் தானே யெடுத்து மொழிந்து அதனை நிலைநாட்டப் புகுந்திலள். பின்னர்த், தன்னுடன் போந்த முனிவரர் தாம் அதுபற்றி அரசற்குச் சொல்ல வேண்டுவன வெல்லாஞ் சொல்லி முடித்து, இறுதியில் தான் தன் கணவற்குச் சொல்லவேண்டுவவற்றைச் சொல்லுமாறு சகுந்தலையை ஏவ, அவளும் அவன் தன்னை மணந்த காலையில் நேர்ந்த சில இனிய அடையாளங்களை அப்போதுஞ் சுருங்கிய சொற்களாலேயே தெரிவிக்கின்ற னளே யல்லாமல் விரிவாய்ப் பேசுகின்றிலள். அவ்வாறவனுக்கு மெய்ப்பிக்க வேண்டிய காலையிலும், விழுமிய காதற் கிழமையினையே மறந்து போயபின் அதனை நினைப்பூட்டு தலாற் பயன் உளதாமோ எனவும் எண்ணுகின்றாள். முடிவாக அரசன் மாரீசரது ஆசிரமத்தில் இவளைத் தற்செயலாய்த் தலைப்பட்டு, இவளையும் இவள் வயிற்றிற் பிறந்த தன் மகன் சர்வத மனனையும் அழைத்துச் செல்கின்ற ஞான்றும், இவள் தன் காதலனை மீண்டுந் தலைக் கூடப்பெற்ற நல்வினையை நினைந்து நெஞ்சம் நெக்குருகி அவன்பாற் சில சொற்கள் புகல்கின்றனளே யன்றி, ஆண்டும் மிகுதியாய்ப் பேசக் காண்கிலேம். என்றாலுந், தன் நல்லியற்கையையுங் கற்பொழுக்கத்தை யுந் தன் காதலன் அறியாமற் பிழைத்து இழித்துப் பேசியபோது மட்டும் இவள் பெருஞ் சினங்கொண்டு, கீழ்மகனே, உன் மனநிலைக்கு இணங்கப் பிறரையுங் கருதுகின்றாய். அறக்கடமை என்னுஞ் சட்டையைப் போர்த்துக் கொண்டு, மேலே புற்களால் மூடப்பெற்றுக் கீழே மறைந்திருக்குங் கிணற்றை யொத்த உன்னைப்போல் வேறு யார்தாம் நடப்பர்? என்று ஆணித்திறமாய்ப் பேசிய சில சொற்களுந் துஷியந்தன் உள்ளத்தை நிலைகலக்கி, அவன் இவளது கள்ளமில் இயற்கையை நம்பும்படி செய்தல் காண்க (94). சகுந்தலை தன் ஒழுக்கத்தை அரசன் பழித்துப் பேசிய ஞான்று மட்டும் பெருஞ் சினங்கொண்டு அவனை இகழ்ந்துபேசியதை உற்று நோக்குங்காற், குணமென்னுங் குன்றேறி நின்ற இவளது வெகுளி கணமேயுங் காத்த லரிதாய்க் காணப்படுகின்ற தன்றோ? தூயவுள்ளத்தினர் கொண்ட வெகுளி, தமது நிலையை உண்மையான் உணரார்க்கு அதனை யுணர்த்தாது கழியாது. இன்னும், இச்சில சொற்களால் தனது மெய்ந் நிலையைப் புலப்படுத்தி, அரசனது அறியாவுள்ளத்தை நிலைகலக்கிய சகுந்தலையின் சொல்லாற்றல் அவளது தூயவுள்ளத்தின் ஆற்றல்வழித்தாய்ப் போந்தமையும் நினைவுகூரற்பாற்று. பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சிலசொல்லல் தேற்றா தவர் என்ற தெய்வத் திருவள்ளுவனார் திருமொழியால் மாசற்ற சில சொற்களைச் சொல்லவல்லார் பல சொற்களை வீணே கூற விரும்பாராதலும், அதற்குச் சகுந்தலை சிறந்த ஓர் எடுத்துக் காட்டாய் நிற்றலும் அறிந்துகொள்க. அற்றேல், அத்துணைக் கற்பொழுக்கத்திற் சிறந்தவளாகிய சகுந்தலை தன் கணவன் அறியாமையாற் றன்னை இகழ்ந் துரைத்தாலும், அதனை அவள் பொறுத்தலன்றோ செயற்பாலது, அவ்வாறின்றி அத்துணைக் கடுஞ்சினங் கொண்டு அவனை அங்ஙனம் இழித்துப்பேசியது சால்பாகுமோவெனிற்; சால்பாகுங்காண்; என்னை? சால்புக்கும் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டாகலின். கற்பொழுக்கத்தின் மிக்காரான நங்கையர்க்கு அக்கற்பினும் மிக்கது பிறிதில்லை; தொல்லாசிரியரான தொல்காப்பியனாரும் மகளிர்க்கு, உயிரினுஞ் சிறந்தன்று நாணே, நாணினுஞ் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்றென. என்று (பொருளதிகாரம், 112) ஓதியருளினமை காண்கின்றுழி, எத்துணைப் பொறுமையுடைய நல்லாருந் தமது கற்புக்கு இழுக்கு நாடுவாரை எதிர்ப்பட்டக்கால் தமது உயிரையும் வெறுத்து, அவரை ஒரு பொருட்டாகக் கருதாது அவரை மாறுகூறித் தாக்குவர்; இது மகளிருட் சிறந்தாரியற்கை. மற்றுத், தமது கற்புக்கு ஏதம் உண்டாகாவழியெல்லாம் பொறுமையின் மிக்காராய் ஒழுகும் நங்கையர்பால், அதற்கு ஏதமுண்டாகும் வழியும் பொறுமை வேண்டுவார், அவர்தங் கற்பொழுக்க வலிவும் மனத்திட்பமும் அறியாரே யாவரென விடுக்க, நாடகநூற் புலமையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சேக்குவீயர் என்னும் ஆங்கில ஆசிரியருந் தாம் வரைந்த கார்காலக் கதை என்னும் நாடகத்தில் வரும் எரிமியோள் என்னும் அரசியுந் தன் கணவன் தன்னைக் கற்பொழுக்கத்தில் வழுவியவளாகக் கருதித் தன்னைக் குறைகூறிய காலையிற், சகுந்தலையைப்போலவே, அவன்மேற் சினங்கொண்டு, அங்ஙன் ஒருகயவன் அறைந்தன னாயின் இங்ஙன் ஞாலத்து இழிதகவு நிறைந்த கொடியோன் ஆவன் அக்கொடியரிற் கொடியோன் தலைவ நீஎனைப் பிழைத்தறி தீயே! என அவனை இழித்துப் பேசினமை காண்க. இவ்வாறு தமது கற்பொழுக்கத்துக்கு ஆகாதது ஒன்று நேர்ந்தக்கால் தமது நாணத்தையுந் துறந்து தமது உண்மை நிலையைப் புலப்படுக்கும் நங்கைமார், தமக்கு அத்தகைய இடர்நேரா வழியெல்லாம் நாணத்தின் மிக்கவராகவே ஒழுகாநிற்பர். இவ்வியல்பு சகுந்தலையினிடத்து மிக்குக் காணப் படுகின்றது. துஷியந்த மன்னன் கானகத்திற்போந்து இவளை முதன் முதல் எதிர்ப்பட்டு, நுங்கள் தவவொழுக்கம் நன்கு நடைபெறுகின்றதா? (14) என்று உசாவிய போதும், இவள் நாணத்தால் அவற்கு ஏதும் விடைகொடாமல் வாய்வாளாது நிற்ப, இவடன் றோழிமாரே அவன் வினாயவற்றிற்கெல்லாம் விடைதந்து அவனை மகிழ்வித்தல் காண்க. இந்தவாற்றால் இவள் தன் றோழியரை விடநாணத்தில் மிக்கவளாய்ப் புலனாகின்றாள். இன்னும், இவள் துஷியந்தன்மேல் அளவிறந்த காதல் கொண்டவளாய், அதனால் ஆற்றாமை மிக்கு வருந்துங் காலத்துந், தனக்கு இயற்கையே யுள்ள பெருநாணினால் அதனைத் தன் ஆருயிர்த் தோழியரான அனசூயை, பிரியம் வதைக்குந் தெரிவிக்க மாட்டாமற் பெருந்துயருறுகின்றாள். பின்னர்த் தோழிமாரே இவள் படுந்துயர்க்குக் காரணங் காதலாயிருக்கலாமென உய்த்துணர்ந்து, உள்ளத்திலுள்ளதை உரைக்கும்படி அவளை வற்புறுத்திக் கேட்க, அப்போதும் அவள், எனக்குள்ள காதலோ மிகவும் வலிவுடையதா யிருக்கின்றது, அதைப் பற்றி என் தோழிமாருக்கும் நான் உடனே சொல்லக் கூட வில்லையே (44) என்று தனக்குட் சொல் கின்றாள். பின்னும் பின்னுந் தோழிமார் வேண்டிக் கேட்ட பிறகும் அவர்க்கு அதனை அவள் புலப்படுத்து கின்றுழித், தோழி, இத்தவ அடவியைப் பாதுகாப்பவரான அந்த அரச முனிவர் என் கண்ணிற் பட்டது முதல் என்று பாதி சொல்லி, நாணத்தால் மேற்சொல்லற்கில்லாது நின்று விடுகின்றாள். அதற்கு மேல், தன்றோழிமாரின் உதவியால்தான் தன் காதலனைத் தலைக்கூடுங் காலத்தும், நாண்மிக்கவளாய் அவனொடு மிகுதியாய் உரையாடாது அவனை விட்டுத் தன்றோழி மாரிடஞ் செல்லுதற்கே அவள் முயலுதலும் உற்று நோக்கற் பாற்று. பின்னர்த், தன் காதலன் தன்னை மருவியவுடன் அவனை விட்டுச் செல்கின்றுழி, ஏ நெஞ்சமே! நின்னால் வேண்டப்பட்ட பொருள் நினக்கு எளிதிலே கிடைத்த பொழுது நின் நாணத்தை விடுத்தாயில்லை. இப்போது நீ அவனைப் பிரிந்து துயரமெய்திப் பரிவடைதல் ஏன்? என்று அவள் தன்னுட் கூறிய சொற்கள் நாணம் மிக்க அவளது இயற்கையை நன்கு புலப்படுத்தல் காண்க. இத்துணைச் சிறந்த நல்லியல்புகள் உடையளான சகுந்தலைக்குஞ் சிறிது பொறாமைக் குணம் இருப்பது அறியற் பாற்று. இவடன் றோழிமார் இவளைத் துஷியந்தனொடு தலைப்படுவிக்கு ஞான்று, அரசற்குக் காமக்கிழத்தியர் பலர் உளராதலை நினைவு கூர்ந்து, அங்ஙனம் பலரை நச்சியொழுகுமவன் தன் மாட்டு உண்மைக் காதலனாய் நடத்தல் யாங்ஙனம்? என்பது புலனாகத், தமது உவளகத்திலுள்ள மகளிரைப் பிரிந்தமையால் வருந்தி யிருக்கின்ற இவ்வரசரை வருத்தப்படுத்த வேண்டாம், விடு என்று இவள் நுட்ப வறிவொடு நுவலும் உரைக்கண் இவளது சிறு பொறாமை தெற்றென வெளியாதல் காண்க. எத்துணை விழுமிய இயற்கை யுடையார்க்குஞ் சிறு சிறு குற்றங்கள் இருந்தாலல்லது அவ்வியற்கையின் விழுப்பந் திகழ்ந்து காணாது. ஒருபால் ஒளியும், ஒருபால் நிழலுங் காணப் படினல்லது ஓவிய உருக்கள் விளங்கித் தோன்றா, நறுமணங் கமழுந் தாமரை, ஆம்பல், குவளை முதலான மலர்களும் அழகிய அகவிதழ்களுடன், அழகில்லாப் புறவிதழ்களும் ஒருங்கு பொருந்தப் பெற்றிருத்தல் காண்டுமல்லமோ? சுடர்ந்தெரியும் விளக்கொளியின் அடியிற் கரிய கறள் கட்டுதலுங் காண்டுமல்லமோ? எல்லாவுயிர்க்கும் இன்றியமையாதாய் ஒழுகும் இனிய யாற்றுநீரி னிடையே நுரை திரண்டு செல்லுதலுங் காண்டுமே? இராக்காலத் திருள் பருகி நீலவானிடையே பாற்கட்டியென வயங்கும் முழுமதியுங் களங்கமுடைய தாதல் காணாதார் யார்? ஆகவே, எத்துணைச் சிறந்த மக்களியற்கையிலுஞ் சிறவாத சிலவும் உடன் காணப்படுதலே அது தனக்கு ஒரு சிறப்பினைத் தோற்றுவியா நிற்கின்றது. மக்க ளியற்கையில் நலமும் நலமில்லனவும் இங்ஙனம் விரவிக் காணப்படுதலை நன்காய்ந்தறிந்து, அவ் விரண்டனையும் ஆண்டுள்ள படியே யெடுத்து விளங்கக் காட்டுந் திறம் நல்லிசைப் புலமை வாய்ந்த சிலர்க்கே உளதாம். ஏனையோர் மக்களியற்கையில் ஒருங்கு காணப்படும். இவ் விரண்டனையும் எடுத்துக் காட்டமாட்டாது, நல்ல தொன்ற னையே யாதல் தீயதொன்றனையே யாதல் மிகுத்துக் காட்டி இழுக்குவர். அவர் அவ்வாறு செய்வன கருத்து நன்றுடையார் பால் தீயதேதும் இராது. தீயதுடையார்பால் நல்லதேதும் இராது. என்பதேயாகும். இப்பெற்றியார் உயிர்கட்குப் பிறவி வந்ததன் நோக்கம் இன்னதென்று உணராதவரே யாவர். தீயது ஒரு சிறிதுங் கலவாத நல்லியல்பே யுடையார்க்குப் பிறவி ஏன் வரல்வேண்டும்? என அவர் உற்றுணர்ந்து காண்பாராயின், அங்ஙனங் கூறி இழுக்கார். மற்று, நல்லிசைப் புலமை மலிந்த ஆசிரியர் காளிதாசரே மேன் மக்களின் விழுமிய இயற்கை யைக் கொணர்ந்து காட்டு மிடத்தும், அவ்வியற்கையுள் விரவிக் காணப்படும் குறைபாடுகள் சிலவற்றையும் துருவி யாராய்ந்து அவை தம்மையும் ஆண்டுள்ளபடியே யெடுத்து உடன்கொணர்ந்து காட்டுதல் பெரிதும் வியக்கற்பால தொன்றாம். அன்பிற்கே ஒரு தூய கொள்கலனான சகுந்தலையின் தூய உள்ளத்திலும், அவ் அன்பிற்கு மறுதலை யான பொறாமையும் ஒரு சிறிது விரவியிருத்தலை ஆசிரியர் எத்துணை நுட்பமாக விளங்கக் காட்டியிருக்கின்றார் இனி, இங்ஙனம் பொறாமையுற்றுக் கூறிய சகுந்தலையின் சொற்களைக் கேட்ட அரசன், அவட்கு அது நீங்குமாறு வலியுறுத்திப் பகர்ந்த உறுதிமொழிகளைக் கேட்ட அளவானே, சகுந்தலை மேலேதும் உரையாளாய் அவன் சொற்களை நம்பிவிட்ட வாய்மையினை (56) உற்று நோக்குங் கால், அன்பின் மிக்கார் உரைகளை இவள் எளிதில் நம்பிவிடும் உள்ளப் பான்மை யுடையளாதல் தெற்றெனப் புலனாகா நிற்கின்றது. அங்ஙனம் நம்பியபின், அந் நம்பிக்கையில் உறுதியாக நிற்பதன்றி, அதனினின்றும் வழுவுதல் இவள்பாற் சிறிதுங் காணப்பட வில்லை. துஷியந்தன் சகுந்தலையை மருவிப் பிரிந்து தனது நகர் செல்கின்றுழித் தன்பெயர் பொறிக்கப்பட்ட கணையாழியை அவளது விரலிலிட்டு, ஆறெழுத்துக்களால் ஆகிய அப்பெயரின் ஒவ்வோர் எழுத் தையும் நாளுக்கு ஒன்றாக எண்ணிக் கடை யெழுத்தை எண்ண வரும் நாளில் தன் தூதுவன் சகுந்தலையைத் தன்நகர்க்கு அழைத்துச் செல்ல வந்து நிற்பன் என்று அவட்கு உறுதி மொழி புகன்று சென்றானென்பது அவனது துரையினின்றே போதருகின்றது (113). எனவே கானகத்திற் சகுந்தலையை விட்டுச்சென்ற அரசன், அங்ஙனம் விட்டுச்சென்ற நாளி லிருந்து ஆறாம்நாள் அவனை அழைப்பித்துக் கொள்வா னாகல் வேண்டும். மற்று, அவனோ அது செய்யாது அவளை முற்றுமே மறந்து போயினான். இந்நிலையிற் காதன்மிக்க மனைவிக்குந் தன் கணவன்பால் வருத்தமுஞ் சினமும் பகைமையுந் தோன்றாதிரா, என்றாலுஞ், சகுந்தலையோ தன்னை மறந்த தன் காதற்கணவனைத் தான் சிறிதும் மறவாளாய், அவனைப் பற்றிய நினைவு தன் உள்ளத்தை முழுதுங் கவர்ந்து கொள்ள அதன் வயப்பட்டவளாய்த், தன்னையுந் தன்னைச் சூழ நிகழும் நிகழ்ச்சிகளையும் ஒருங்கு மறந்த நிலையினளாய்க் காணப்படுகின்றனளே யல்லால் (74, 75) தன் கணவன் தான்சொன்ன சொற் பொய்த்துத் தன்னை ஏமாற்றியது கண்டு அவன்மேற் சினமும் பகைமையும் கொண்டு அவனை அருவருத்து அவனை இகழ்ந்து பேசியவளாகப் புலப்படவில்லை. மற்றுச், சகுந்தலையின் தோழியான அனசூயையே இரண்டகஞ் செய்த கயவனான ஒருவனுக்குப் பேதையளான எங்கள் தோழி தன்னைக் கொடுத்துவிடும்படி செய்த காமவேள் இப்போதாவது மனநிறைந்திருக்கட்டும் என்று அரசனை இழித்து பேசுகின்றாள் (65). இவ்வாறு அரசனைத் சினந்து இகழும் அனசூயை நிலையோடு, அவனைச் சினத்தலையே அறியாத சகுந்தலையின் நிலையினை ஒப்பிட்டு நோக்குங்கால், தன்னாற் காதலிக்கப்பட்டான்மேற் றான் வைத்த அன்பு ஒன்றுமே நிரம்பித் ததும்புவதான அவளது தூய வுள்ளம் பிறி தோருணர்வுக்கு இடந்தரமாட்டாதாய் நிற்குந் தனிப்பெரு விழுப்பந் தெற்றென விளங்கா நிற்கும். சகுந்தலையின் மாசற்ற காதல் உள்ளப்பான்மையினை ஏனை மகளிர்ப்பாற் காண்டல் அரிதரிது பழந்தமிழ் மாதருட் கண்ணகியார் ஒருவர்மட்டுமே அத்தகைய விழுமிய தூய காதலுள்ளம் வாய்த்தவர். சகுந்தலையின் தூயவுள்ளப் பெருமையினைத் தெளிய அறிந்து புலப்படுத்திய காளிதாசரது நுண்மாண் நுழைபுலத்திற்குக் , கண்ணகியாரது காதற்றூய கற்புள்ளம் பெருமையினை நன்குணர்ந்து தெருட்டிய இளங்கோவடிகளது அஃகி யகன்ற நல்லிசைப் புலமையே ஒப்பதாகும் என்க. இனிச் சகுந்தலையின் உடம்பும் உயிரும் வேறெங்கும் காண்டற்கரிதான ஒரு தூய பேரன்பினால் ஊடுருவப்பட்டு அவ் அன்புருவாகவே ஒளிர்தலால், தன்னை மறதியினால் மறுத்துவிட்ட தன் காதலன், அம்மறதி நீங்கிப், பின்னர் ஏமகூடத்தின் கண்ணதான மாரீசரது தவப்பள்ளியில் தன்னை மீண்டுந் தலைப்பட்டு, அன்பினால் அகங்கரைந் துருகுதல் கண்டஞான்றும், அவள் அவன் செய்பிழையினை யெல்லாம் ஒரு தினையளவும் பாராட்டாது, அவன் செய்த அப்பிழையுந் தன் தீவினையால் நிகழ்ந்ததென்றே கருதி, எம்பெருமான் எழுந்திருக்க! திண்ணமாகவே முற் பிறவியில் தூய அறவினைகளைத் தடை செய்த என் தீவினையானது அந்நாட்களில் தன் பயனை விளைவித்தது, அதனாலலேதான், இயற்கையில் இரக்க முடையராயிருந்தும் என் காதலர் அவ்வாறு என்னிடம் நடந்தனர் (143, 144) என்று மொழிந்திடுகின்றாள். தீம்பாலும் ஒரு காலத்திற் புளிக்கும், நறுமலருந் தன் மணத்தை இழக்குங், குளிர் மழையும் பெய்யுங்காலந் தவறும், ஆனால் சகுந்தலையின் தூய காதலுள்ளமோ பழி நினையாது, தன் காதலையும் இழவாது, அதனைப் பொழியுங்காற் பொழிவதும் பிழையாது. சேக்குவீயர் தமது அரும்பெரு நாடகக் காப்பியமாகிய சிம்பிலீனிற் கொணர்ந்து நிறுத்திய இமோசின் என்னும் இளவரசி, தன் காதலன் தனது கற்பொழுக்கத்தில் ஐயுறவு கொண்டு தன்னை வாளினாற் போழ்ந்து படுக்குமாறு தன் ஏவலன் ஒருவனை ஏவ, அவ்வேவலன் அங்ஙனமே செய்வான் போல் அவனை ஒரு காட்டகத்துக் கொண்டுசென்று, தன் தலைவன் தனக்கிட்ட கட்டளையினை அவட்கு எடுத்து ரைப்ப, அதுகேட்ட இமோசின் தன் காதலன் தன்னை அருவருத்தபின் தான் உயிர்வாழ்தலில் விருப்பமிலளாய், வருக, ஏட, வாய்மையை ஆகுக! நின், தலைவன் இட்ட சொலைநிறை வேற்றுக! நீஅவற் காண்புழி ஏழையேன் பணிவிற்குச் சான்று மொழிமோ! ஏன்றெனை நோக்குதி உறையின் வாளை உருவுகென் யானே; பற்றுதி யதனை, வெட்டுதி யதனாற் குற்ற மிலாதஎன் காதல் அரணாஞ் செற்றமில் நெஞ்சத்தைச், சிறிதும் அஞ்சலை! வெற்றென உளதஃது வெந்துயர் ஒழிய;நின் தலைவனும் ஆண்டிலன், தொலைவில் செல்வமாய் ஆங்கவன் அமர்ந்ததூஉம் யாங்கா கியதே! மற்றவன் கட்டளை பொட்டெனப் புரிக! என்று கூறி அவ்வேவலன் தன்னை வெட்டிவிடுமாறு வற்புறுத்துதல் காண்க. தன் கணவனால் உவர்த்துக் கைவிடப் பட்ட துணையேயன்றி, அவனால் தன்னுயிர்க்கு இறுதிவருதல் நன்கறிந்த வழியுந், தான் அவன்மேல் வைத்த தூய பெருங்காதலினின்று ஓரெட்டுணையும் மாறாத இமோசின் என்னும் மாதர்க்கரசியாரின் தூய மன நிலையே ஈண்டுச் சகுந்தலையின் மன நிலையினை உள்ளவாறு தெளிதற்கு ஓர் அரும்பெறல் எடுத்துக்காட்டாக நினைவிற் பதிக்கற் பாலதாகும் என்க. அஃதொக்கும்மன், இத்துணைவிழுமிய உள்ளத்தளான சகுந்தலை, துஷியந்தனைக் கண்டவளவானே அவனியற் கையை ஆய்ந்துபாராதுந், தன் பெற்றோரது கருத்துடன்பாடு பெறாதும் அவன்மேற் கழிபெருங் காதல் கொண்டது, அவட்கொரு குறைபாடு அன்றோவெனின், அன்று மக்களுள் ஒரு சாரார் அன்பின்வழியராய் ஒழுகுவர்; ஏனையொருசாரார் அறிவின் வழியராய் ஒழுகுவர். அன்பே முனைந்து நிற்கும் உள்ளத்தவர் தம் அன்பிற்குரியாரைக் கண்டவளவானே அவர்மீது அடங்கா அன்பு கொளப்பெறுவர். மற்று, அறிவு முனைந்துநிற்கும் உள்ளத்தவரோ தம்மால் அன்புசெய்தற் குரியாரைப் பல்லாற்றான் ஆராய்ந்து பார்த்து அவர்மீது அன்புடையராவர். ஆனால், அன்பு மிக்கார் தமக்குரியாரைச் சடுதியிற் பெற்று நுகரும் இன்பம் ஏனை அறிவினால் ஆராய்ந்து பார்த்துத் தமக்குத் தக்காரை அடைவார்பால் உளதாகாது. அறிவினும் அன்பே தெய்வத்தன்மை வாய்ந்த தாகலான் அதன் இயக்கம் பிழைபடாது; மற்று மக்களறிவோ எத்துணை தான் ஒருவர்பாற் சிறந்து திகழினும், அதனியக்கம் பிழைபடுந் தன்மையதேயாகும். உலகவழக்கினுள்ளும் ஆண் பாலாராயினும் பெண் பாலாராயினுந் தம்முட் சடுதியில் ஒருவரையொருவர் கண்டு அன்புகொளப் பெற்ற நட்பே தூய தாய் நீண்டு நிலவுகின்றது; ஏனைப் பலவகையான் ஆராய்ந்து பார்த்துக்கொண்ட நட்போ அங்ஙனம் நீண்டு நிலவாமை யினைப் பலர் பலகாற் பழக்கத்தில் அறிந்திருக்கலாம். ஏனென்றால், மக்களறிவினால் அறிந்து காணக்கூடியன வெல்லாம் ஒருவருடைய செயல்களே யாம்; அச்செயல்களின் வாயிலாகவே ஒருவர்க்குள்ள அறிவினளவும் அன்பினளவும் ஒருவாற்றான் உய்த்தறியப்படும். ஒருகாலத்து ஓரிடத்து ஒருசார் மக்களிடையே ஒருவன் செய்யுஞ் செயல்களும் பிறிதொருகாற் பிறிதோரிடத்து வேறோருசார் மக்களிடையே அவனே செய்யுஞ் செயல்களுந் தம்முட் பெரிதும் மாறு பட்டனவாய் நடைபெறுகின்றன. ஒருகால் இரக்கமுடைய னாய் நடப்பவன், பிறிதொருகால் இரக்கமற்ற வன்னெஞ்ச னாய் நடக்கின்றான். சிலரிடையே அறஞ்செய்து ஒழுகுவோன் வேறு சிலரிடையே மறஞ்செய்து ஒழுகுகின்றான். ஓரிடத்து ஒரு குழுவில் அறிவிற் சிறந்தானாய் விளங்குமவன், பிறிதோரி டத்திற் பிறிதொரு குழுவில் அறிவிலனாய் நடந்து இகழப் படுதலுங் காண்கின்றாம். ஆகையால், ஒருவன்றன் அறிவின் அளவையும் அன்பின் அளவையும் உண்மையாக உணரல் வேண்டுமாயின், அவன் ஒரோவொருகால் ஒரோ வோரிடத்து ஒரோவொரு குழுவில் நடக்கும் நடைபற்றித் தெளிந்து கோடல் இயலாது. மற்று, அவன் பலகாலும் பலவிடத்தும் பலர்மாட்டும் நடக்கும் நடைகளை ஒரு தொடர்பாக வைத்துத் தொடுத்துக் காணவல்ல நுண்ணறிவு ஆராய்ச்சியுடை யார்க்கே, அவன்றன் அறிவினளவும் அன்பினளவும் உண்மை யாற் புலப்படும். ஏனையோர்க்கு அவற்றின் உண்மை புலப் படா. இது முன்னுங் காட்டப்பட்டது. இனி, அவ்வாறு ஒருவனது உண்மையை அளந்துகாணல் வேண்டுமாயின், அவன் அறியாமலே அவன்பக்கல் இரவும் பகலும் இருந்து அதனைக் கண்டுணர்தல் வேண்டும்; ஆனால், இஃது எல்லார்க்கும் இயலுமோ? ஒருசிலர்க்கு இயலுமாயினும், அவ்வுண்மையை யுணர்தற்கு எத்தனை ஆண்டுகள் செல்லும்! எத்தனையாண்டுகள் சென்றாலும் அவ்வுண்மை யுணர்ந்த பின்னரே அவரொடு கேண்மைகொள்ளக் கடவோமெனின், அதற்குள் இருவருடைய வாழ்நாளுமே முடிந்து விடும். அவர் எண்ணிய எண்ணமும் எடுத்த முயற்சியும் நிறைவேறா. ஆகவே, அறிவினான் ஆராய்ந்து நட்புச் செய்தலினுந், தமக்குள் அன்பு நிகழுந் திறம்பற்றி நட்புச் செய்தலே நலனுடைத்தாமென்க. அற்றேல், ஆய்ந்தாய்ந்து நட்புக் கொள்ளுதலே செயற்பாலதென்னும் அறிஞருரை என்னாவதெனின் உலகியல் நிகழ்ச்சிக்கண் ஒருவர் தமக்கு ஆவனவற்றையும் பிறருதவி கொண்டன்றி ஆக்கிக்கொளலாகாமையான், அங்ஙனம் உதவியாக நிற்கற்பாலார்தஞ் செயல்களை ஆராந்து அவரது இயற்கையினை இயன்றமட்டுந் தெளிந்து அவரை நண்பராக ஆக்கிக்கொள்ளுதலை வற்புறுத்தவே அவ்அறிஞ ருரை எழுந்தது. மற்று உயிரும் உடம்பும் ஒன்றாதற்குரிய காதலரின் காதற் கேண்மையை நோக்கி அஃது எழுந்த தன்றென்பது என்னை? காதலரின் காதற் கேண்மையோடு ஒக்கும் ஒரு நட்பு ஏனையோர்பாற் பெரும்பாலுங் காணப்படாதாகலினென்க. அங்ஙனம் பெருகி நிறைந்த அன்புருவாய்த் திகழ்வாரது உள்ளமானது, தன்னையொப்ப அன்பிற்றேக்கிய பிறிதோருள் ளத்தைக் கண்டதுணையானே, அதனோடு ஒன்றியொன்றா தற்குப் பெரிது விழைந்து முனைந்து நிற்கும். சகுந்தலையின் உள்ளம் அன்பினால் நிறைந்து அந்நிறைவின் முடிந்த பதமான காதலாய் வெளிப்படுதற்கு ஏற்ற நிலையில் வந்து நின்றது, அத்தன்மையது தன்னோடு ஒப்பதான துஷியந்தனது காதலுள்ளத்தைக் கண்டவுடனே, தானும் புலனாய்த் தோன்ற லாயிற்று. இதனை, மேனாட்டு நாடக நூலாராய்ச்சியிற் சிறந்த ஓராசிரியர் உரைத்த உரையாற் காட்டுமிடத்துக், கொழுவிய ஓர் இளமரக்காவின்கண் முகிழ்விரியாத நிறஞ்சிவந்த ஒரு மலரை நாம் காணநேர்ந்து, அங்ஙனங் காணநேர்ந்த அதே நேரத்தில் ஞாயிற்றின் கதிர்கள் அதன்மேல்விழக் கதுமென அது தன் இதழ்கள் விரிந்து ஒரு நொடியிலே புறம் எங்கும் நறுமணம் பரப்புங் காட்சியையும் நாம் உடன்காண நேர்ந்தால், சகுந்தலை காதலிற் கண்விழித்து ஓர் இமைப் பொழுதில் அவள் பிள்ளைமைப் பருவங் கடந்து மங்கைப் பருவம் எய்திய காட்சியையும் நாம் நங் கண்ணெதிரே கண்டவராவோம்.1 இவ்வாறு துஷியந்தனைக் கண்ட அப்பொழுதே அவன்பால் வரைகடந்த காதலுடையளான சகுந்தலையின் அன்புநிலை, ஆராய்ந்து சென்றும் பிழைபடு வதான அல்லது தன்குறிப்பு நிறைவேறப் பெறாததான அறிவு நிலையினும் விழுமிய தாய்த் தூயதாய்த் திகழ்தலின், ஆண்டு ஆராய்ச்சி நிகழாமைபற்றி வரக்கடவதோர் இழுக்கில்லை யென்றுணர்க. பண்டைத் தமிழ் நூலாசிரியர்க்கும் இதுவே கருத்தாதல். தானே யவளே தமியர் காணக் காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல். என்னும் இறையனாரகப்பொருட் சூத்திரத்தானும், அதற்கு ஆசிரியர் நக்கீரனார் கூறிய உரையானும் உணரப்படும். அற்றேற், சகுந்தலைக்கு வந்த துன்பமெல்லாம் அவள் துஷியந்தன் உள்ளத்தை ஆராய்ந்துபாராது அவன்மேற் சடுதியிற் காதல்கொண்டு அவனை மணந்தமையாலன்றோ? ஆதலான், மிக்கதோர் அன்பின்பாற் பட்டுக் காதல் கொள் வாரது நிலை வழுவுதலுறாதென்றது என்னை? சகுந்தலையின் காதலுள்ளம் வழுவியதின்றாயினும், அவளாற் காதலிக்கப் பட்ட அரசன்றன் உள்ளந் தன்னிலையினின்றும் வழுவிய தன்றோ? ஆராயாமற் செய்துகொண்ட மறைவுமணம் இடராகவே முடிதலைச் சார்ங்கரவன் என்னும் மாணவ முனிவன், தானாகவே பதைத்துச் செய்த ஒரு செய்கையானது இப்படித் தான் துயரத்தைத் தரும், ஆதலால், மறைந்த சேர்க்கையானது நன்கு ஆராய்ந்தறிந்த பின்னரேதான் செயற்பாலது. மனவியற்கை நன்கு தேறப்படாதாரொடு கொண்ட நட்புப் பகையாய் முடிகின்றது. (89) என்று கூறிய மொழியானும் ஆசிரியர் காளிதாசர் நன்கு விளங்கவைத்துளா ரன்றோ? என வினவிற் கூறுதும். புனலோடும்வழிப் புற்சாய்ந்தாற்போலக் காதல் சென்ற வழியே உள்ளமுஞ் சென்று மணங்கூடுலே கழிபெருஞ் சிறப்பிற் றென்பாருங், காதல் சென்ற வழியே உள்ளமுஞ் சென்று கொடுப்பாரும் அடுப்பாருமின்றி மணத்தல் நன்றா காது, மற்ற ஒருவர் ஒருவர் மனநிலையினை நன்காய்ந்து பார்த்து உற்றார் பெற்றார் கொடுப்பக்கொண்டு மணம் புரிதலே நன்று, என்பாரும் என இருபாலாசிரியர் உளர், அவர் தங் கோட்பாடுகளுள் ஈண்டு ஆசிரியர் முன்னையதைத் தழீஇ இந்நாடக நூல் யாக்கப் புகுந்தா ரல்லது, பின்னையதைத் தழீஇ அது செய்திலர். மக்கள் மனவியற்கையினை நன்காய்ந்து பாராது, தாங் கற்ற நூலறிவு ஒன்றுமேகொண்டு ஒருசாரா சிரியர் (இவர் புத்தசமண் ஆசிரியரும் அவரையொத்த ஆரிய நூலாசிரியரும்) கோட் பாடேபற்றி அறிவாராய்ச்சிக்கு முதன்மை தந்து நிற்பாரே ஆராய்ச்சியின் வழித்தாக மணம் நடைபெறல் வேண்டும் என்ப. மற்று, நூலறிவோடு, மக்கள் மனவியற்கையினைத் துருவி யாராய்ந்து காணும் உலகியல் நுண்ணுர்வும் ஒருங்குடை யாரோ காதலன்பின் வழித்தாக மணம் நடைபெறல் வேண்டும் என்ப. ஆசிரியர் காளிதாசர் நூலறிவோடு உலகியல் நுண்ணுணர்வும் ஒருங்கு வாய்த்த நல்லிசைப் புலவராதலால் அவர் இயற்கைக் காதல் அன்பின் வழித்தாக நடைபெறுந் தூயமணத்தின் விழுப்பந் தேற்றுதற்கே இந்நாடகநூல் யாத்திட்டார். அற்றாயிற், காதல் வழித்தான சகுந்தலையின் மணம் இடர் பயந்தவா றென்னையெனின், நூலறிவு ஒன்றுமே யுடையார் அஃது ஆராய்ச்சியின் வழித்தாக நடை பெறாமையின் அவ்வாறா யிற்றென முடிவு கூறுவர். மற்றுக், காளிதாசரோ காதன்மணமும் இழுக்குவது ஊழ்வினையின் வலியாலென்று முடிவுகட்டுவர். இவ்வாறு ரைக்கும் இரு பாலாசிரியரில் எவர்பக்கம் வலியுடைத் தெனின், காளிதாசர் பக்கமே வலியுடைத்து, யாங்ஙனமெனிற் காட்டுதும், உலகத்தவரிற் பெரும்பாலார் குலனுங் குடியுங் குணனுங் கோள்நிலையும் எல்லாம் பலவாற்றானும் நன்காராய்ந்து பார்த்தே இருவரை வாழ்க்கைப் படுத்து கின்றனர். அங்ஙனம் வாழ்க்கைப்படுத்தப்பட்ட மணமக்கள் வாழ்க்கை யிலும் இழுக்கு நேர்ந்தக்கால் (இவ்வாறு இழுக்கு நேர்தல் ஒரு குடும்பத்தினர் மாட்டன்றிப், பல்வகைக் குடியினர் மாட்டும் அடுத்தடுத்து நிகழக் காண்கின்றாம்), அங்ஙனம் இழுக்குண் டானது ஆராய்ச்சியின் குற்றமன்று, அஃது ஊழ்வினைச் செயலே யாமென ஆராய்ச்சிக்குத் தலைமை கூறுவாரும் முடிவுகூறுநிற்கின்றனர். என்று, ஆராய்ச்சியால் நிகழ்ந்த மணவாழ்க்கையிலாதல், காதலன்பால் நிகழ்ந்த மணவாழ்க்கை யிலாதல் இழுக்கு வந்தக்கால் அதற்குக் காரணம் பழவினையே என்று இருதிறத்தாசிரியரும் முடிவு கூறக் காண்டலால், மனைவியுங் கணவனுமாகிய இருவருள் ளமும் அன்பினால் ஒன்றாய்ப் பிணிப்புண்டு மேற்கொளற் பாலதான இல்லற வாழ்க்கைக்குக் காதலன்பின் வழித்தான் மண வாழ்க்கையே வேண்டற்பாலதாகுமன்றி, அதனைவிட்டு ஆராய்ச்சியின் வழிப்படூஉம் மணவாழ்க்கை வேண்டற் பாலதாகாது என்று துணிந்து கொள்க. அத்தகைய காதன் மணவாழ்க்கையில் இழுக்கு வந்தக்கால் அஃது ஏனை மணவாழ்க்கையிற்போல ஊழ்வினையால் வந்ததேயாமாகலின் அஃது அதுபற்றி இகழற்பால தன்றென்பதூஉம், அங்ஙனம் ஊழ்வினையால் வந்த தீதுங் காதலரின் அன்புக்குத் துணை யாய் நிற்கும் முழுமுதற் கடவுளருளால் நீங்குமென்பதூஉங், கொடுந் தீவினையாளரான மக்களிடையே வாழத்தகாத அத்துணைப் பெருங் காதலுடைய ராயின் அஃதுடைய இருவரையும் இறைவனே இம் மண்ணுலகினின்றும் அகற்றி விண்ணுலகில் வாழவைப்ப னென்பதூஉம் அறியற்பாற்று ஈண்டுக் காட்டிய காதன் மணவாழ்க்கையின் விழுப்பந் தேற்றுதற் பொருட்டே சகுந்தலையின் மணத்தை ஒரு நாடகமாகத் தொடுத்து நங் கட்புலனெதிரே காட்டுவான் புகுந்த ஆசிரியர், அம் மணத்தினிடையே புகுந்த இடர் துருவாசரிட்ட சாபத்தினூடு வந்து தன் பயனை விளைவித்த ஊழ்வினையால் நேர்ந்த காதலை நன்குவிளக்கி, அம் மணத்தின் மாட்சியினை இந்நாடக நூல் இறுதிவரையில் நிலை பொறுத்தியிருத்தல் கண்டுகொள்க. எனவே, சார்ங்கரவன் என்னும் மாணவ முனிவன் ஆராய்ச்சி மணத்தின் சிறப்பை யெடுத்துக்கூறியது, காளிதாசரது கருத்தாகாமல், அவரது கருத்துக்கு மாறான ஏனையாசிரியரது கருத்தாய் இடைப் புகுந்தமை தேர்ந்து கொள்ளப்படும். இன்னும், அம் மாணவ முனிவனிலும் அவன்றன் ஆசிரியரான காசியப முனிவர் நூலறிவுடைய ராதலோடு உலகியலும் மக்கள் மனவி யற்கையும் நன்குணர்ந்தவராதலால், அவர்தமது உடன்பாடு பெறாமலே சகுந்தலை துஷியந்தனை மணந்து கொண்டமை தெரிந்து மகிழ்ச்சி மிக்கவராய், வேள்வி வேட்குமவன் கண்கள் புகையால் மறைக்கப் படினும், அவனிடும் பலியானது நல்வினை வயத்தால் நெருப்பில் நேரே விழுந்தது; என்னருமைக் குழந்தாய் தகுதி யுள்ள மாணாக்கனுக்குக் கற்றுக்கொடுத்த கல்வி போல நீயும் எனக்குக் கவலை தராதவளானாய், இன்றைக்கே துறவிகளைத் துணையாகக் கூட்டி நின்னை நின் கணவனிடம் போக விடுகின்றேன். (66) என்று கூறி அவளை ஏன்று கொள்ளுதல் காண்க. இவ்வாற்றால் முதிர்ந்த அறிவுடைய சான்றோர்க் கெல்லாங் காதன் மண வாழ்க்கையே விழுமிய தென்னுங் கருத்துளதாதல் நன்கு விளங்குதலால், அவ் வாழ்க்கையிற் புகுந்த சகுந்தலைக்கு அஃதொரு பெருஞ் சிறப்பினைத் தருவதல்லாற் சிறுமையினைத் தருவதன்றென்பது கடைப் பிடிக்க. அற்றேற், சகுந்தலையாற் காதலிக்கப் பட்டவனான துஷியந்தன் அவடன் தூய பேரன்பிற்குத் தக்கவன்றானோ வெனின்; தக்கவன்றானே யாவன். யாங்ஙனமெனிற் காட்டுதும். துஷியந்தமன்னனது யாக்கை வலிமையிலும் அழகிலுஞ் சிறந்து விளங்குவதென்பது, அவனைக் கண்டு வியக்கும் படைத் தலைவனது உரையாலும் (30), கஞ்சுகி யென்போன், ஆ! எந்தவகையான நிலையிலும் அழகிய வடிவமானது எவ்வளவு அழகாக விளங்குகின்றது! அவ்வளவு கவலையோடு கூடியிருந்தாலும், அரசன் கண்ணைக் கவரத் தக்க தோற்றமுடையராகவே யிருக்கின்றார்! என வியந்துரைக்கும் மொழியாலும் (107), தேவமாதான சானுமதி யென்பாள் மறைந்திருந்து இவனது வடிவழகைக் கண்டு வியந்தவளாய்ச், சகுந்தலை இவரால் தள்ளப்பட்டு வருந்தினாலும், அவள் இவரை நினைந்து உருகுதல் தகுதிதான் என்று நுவலுஞ் சொல்லாலும் (108) நன்கு விளங்கா நிற்கின்றது. இவனைக் கண்ட அப்பொழுதே சகுந்தலை இவன்மேற் பெருங் காதல் கொண்டு, அவனைப் பெறாத நாள்வரையிற் பெருந் துயருழந்தமை, அவள் அரசனுக்கென்று வரைந்த, இரக்கமிலா அரசே! நான் என்செய்வேன்! இரவுபகல் எரிக்கின்றா னென்உடம்பை எழிற்காமன் நின்மேலே பெருக்கின்ற தென்காதல் பேதையேன் நின்நெஞ்சம் இருக்குமா ருணர்ந்திலேன் எனக்கதனை இயம்புதியோ என்னுஞ் செய்யுளாற் றெற்றெனப் புலனாதலால் இவனது பேரழகின் மாட்சியினை மேலுங் கூறுதல் எற்றுக்கு? இத்துணைச் சிறந்த புறவியற்கையுடையனாதல் போலவே, இவன் மிக விழுமிய அகவியற்கையுமுடையனாகக் காணப்படு கின்றான். உயர்ந்தோரைக் காணுமளவிற் பணிந்து அவரது சொல்லுக்கு அடங்கியொழுகும் இவனது சிறந்த இயல்பினை ஆசிரியர் இந்நாடக முதல்வகுப்பின் துவக்கத்தி லேயே புலப்படுத்துகின்றார். விரைந்து செல்லும் ஒரு தேர் ஊர்ந்து கானகத்தே ஒரு மானைப் பின்றொடர்ந்து அதனை எய்தற்கு இவன் முனையும் நேரத்திற் குறுக்கே வந்த துறவிகளைக் காண்டலுந் தன்றேரைக் கதுமென நிறுத்தி, அவர் பணித்தவாறே அம்மானைக் கொல்லாது விட்டு, அவராற் புகழ்ந்து வரங் கொடுக்கப்பட்டமை காண்க (6). இவ்வாற்றால் இவன் சகுந்தலைக்குத் தக்க காதலனே என்பது ஆசிரியர் முதலிலேயே குறிப்பித்தாராயிற்று. இம்மன்னன் இதற்குமுன் கானகத்தின் இயற்கைக் காட்சிகளையுங், கானகத்து உறையுந் துறவோர் குடிக்குரிய மகளிரினழகையும் பார்த்தவனாகப் புலப்படவில்லை. ஆயினும், இவனது உள்ளமானது இயற்கைத் தோற்றங்களையும் அவற்றின் வனப்புகளையுங் கண்டு மகிழ்வதிற் கிளர்ச்சி மிக்கதாயிருக்கின்றது. தன்னாற் பின்றொடரப்பட்டுத் தனக்கு முன்னேயோடும் மானின் நிலையினையுந் (4), தனது தேரின் விரைந்த செலவினால் தனக்கெதிரே தோன்றும் நிலத்தின் றோற்றங்களையுங் (5), காசியபரது தவப்பள்ளியைக் கண்டு அதனைக் குறிப்பனவாக இவன் கூறும் அடையாளங்களையுஞ் (7,8), சகுந்தலையின் உடம்பின் அமைப்பிற்கு இவன் எடுத்துக்காட்டும் இயற்கைப் பொருள் உவமைகளையும் (11), இவன் சகுந்தலையின் வடிவழகைத் தீட்டும் ஓவியத்தில் அதனோடு உடன் சேர்த்து வரைய விரும்பின இயற்கைப் பொருட்டோற்றங்களையும் (109), இன்னும் இவைபோல் இவன் ஆங்காங்கு எடுத்துரைக்கும். இயற்கைப் பொருட் குறிப்புக் களையும் உற்று நோக்கவல்லார்க்குச் செயற்கையாயின்றி இயற்கையாய்க் காணப்படும் அழகிய காட்சிகளில் இவனதுணர்வு கவரப்பட்டு நிற்றல் நன்கு விளங்கும். இயற்கையழகிலே இறைவனது அருளறிவின் விளக்கமுஞ், செயற்கை யழகிலே மக்களது நுண்ணுணர்வின் துலக்கமும் நிகழக் காண்டலாற், செயற்கையழகினை வியப்பாரிலும் இயற்கை யழகினை வியப்பாரது உள்ளமே கழிபெருந் தூய்மையும் அருட்டன்மையும் உடையதாகும். மக்களாற் செய்யப்படுங் கன்னற் சுவையை விழைவாரினும், இறைவனால் ஆக்கப்பட்ட பூந்தேன் சுவையை விழையும் அருந்தவத்தோர் மாட்சியினை அறியாதார் யார்? இங்ஙனமே, தன் நகரத்தின் கண்ணவான அழகிய செயற்கைக் காட்சிகளைவிடக், கானகத்தின் கண்ணவான விழுமிய இயற்கைக் காட்சிளைக் கண்டு வியக்குந் துஷியந்தனது தூய வுள்ள மாட்சியும் அறியற்பாற்று. இனி, அஞ்ஞான்றை வழக்கப்படி இவ்வரசனுக்கு வசுமதி என்னும் பட்டத்தரசி யொருத்தியுங் காமக் கிழத்தியர் பலரும் இருந்தனராயினும், அவரெல்லாம் அழகியராகவே விளங்கின ராயினும் அவர்தஞ் செயற்கை யழகுஞ் செயற்கைக் குணனும் இவனதுள்ளத்தைக் கவர மாட்டாவாயின; அதனால் இவன் அவர்கள்பாற் காதலன்பு கொண்டவனுமல்லன். எல்லா உயிர்கள் மாட்டும் பொதுவாகக் காணப்படுங் காமவிருப்பமே இவனுக்கும் அவர்கள்பால் இருந்ததாகல் வேண்டுமல்லால், ஓராவிற்கு இருகோடு தோன்றினாற்போல ஈருடம்பின் ஓருயிராய்க் கருதுங் தூய காதலன்பு இவனுக்கு அவர்கள்பால் இருந்ததில்லை. ஆகவே, இவன் சகுந்தலையின் இயற்கை வனப்பைக் கண்ட அப்பொழுதே அவள்பாற் பதிந்த காதலன்பு கொளப்பெற்று, அதனாற் றன் கண்ணுங் கருத்தும் ஒருங்கே கவரப்பெற்றா னென்பது. இவன் தன் அரண்மனையிலுள்ள மகளிரைவிடத் தான் கானகத்திற் கண்ட மகளிரையே மிகவியத்தல், ஓ! இப்பெண்கள் பார்வைக்கு எவ்வளவு அழகாய் இருக்கின்றார்கள்! முல்லைக்காட்டுத் துறவோர் குடியில் உறைகின்ற மகளிர்க்குள்ள பேரழகு அரண்மனை யுவள கத்திலேயுங் காணப்படுவதில்லா அத்துணை அருமைத் தாயின், இளங்காவின் மலர்க்கொடிகள் குணத்தாற் சிறந்த காட்டுப் பூங்கொடிகட்குப் பின்னிடைதல் வாய்வதேயாம் (10) என்று இவன் மொழியும் உரையால் தெற்றென விளங்குதல் காண்க. இவ்வாறு சகுந்தலைமேல் தாங்கொணாப் பெருங்காதல் கொள்ளப்பெற்றா னாயினுந், தன்னாற் காதலிக்கப்பட்ட அவள் தனக்கு மனையாளாதற்குத் தக்கவள் தானா என்று ஆராய்ந்தறிந்தபின்னன்றி அவளை இவன் மணந்து கொள்ளத் துணியாமையினை உணர்ந்து பார்க்குங்கால், இவன் ஆடவரிற் சிறந்தார்க்குரிய பெருமையும் உரனுமாகிய இயற்கைக்குணங்கள் உடையானென்பது விளங்காநிற்கும். தொல்லாசிரியராகிய தொல்காப்பியனாரும், பெருமையும் உரனும் ஆடூஉ மேன (கனவியல், 7) என்று உயர்ந்த ஆண்மகற்குரிய குணங்கள் இவையே யாதல் தெளியக் கூறினார். இத்தொகைக் குணங்களைப் பகுத்துக் காட்டுவான் புகுந்த உரையாசிரியர் நச்சினார்க்கினியர், அறிவும் ஆற்றலும் புகழுங் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும் பழிபாவம் அஞ்சுதலும் முதலியனவாய் மேற்படும் பெருமைப் பகுதியுங், கடைப்பிடியும் நிறையுங் கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதியும் என அவ்விரண்டனுள் அடங்குங் குணங்கள் பலவற்றையுந் தெளிவுறுத்தினர். ஆகவே, ஆடவரிற் சிறந்தார்க்குரிய ஆராய்ச்சியறிவு இவன்பால் மிக்கு நிகழ்தல் இந்நாடகநூலில் ஈண்டும் ஏனைப் பலவிடங்களிலுங் கண்டுகொள்க (17, 20, 23, 135, 136). இன்னும், ஆராய்ந்து சகுந்தலை தனக்கு ஏற்றவள் தான் என்றும், அவளுந் தன்பாற் காதலுடையவள் தான் என்றுந் தெரிந்து ஒரு முடிவுக்கு வரும்வரையில் அரசன் தன் உள்ளத்தைக் காதல்வழிச் செல்லவிடாது, ஆராய்ச்சி யறிவின்வழி நிறுத்துந்திறம் பெரிதும் பாராட்டற்பாலது. இஃது உள்ளத்தை ஒருவழி நிறுத்தும் உரன் என்னும் அறிவுவலிமையா மென்க. இங்ஙனம் ஐம்புலவழிச்செல்லும் ஐந்தவாக்களைத் தன் அறிவுவலிமையால் அடக்க வேண்டு மிடன் அடக்கி விடுக்க வேண்டுமிடன் விடுக்கும் ஒருவன் இறைவன தருள்நிலத்திற் பதிந்து முளைக்கும் ஒரு வித்தாகுவன் என்று ஆசிரியர் திருவள்ளுவர், உரன்என்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து. என்னுந் திருக்குறளில் ஓதியருளினார். இத்துணை உள்ள வலிமை யுடையனாதல் பற்றியே துஷியந்தன் இந்நூலுள் ஆங்காங்கு அரசமுனிவர் என்று அழைக்கப்படுவானாயின னென்க. இனி, இத்துணைச் சிறந்த குணங்கள் உடையாரிற் பலர் தமது மேன்மையினைத் தாம் அறியாரா யிருத்தலை உலகநடையில் ஆங்காங்குக் காணலாம். ஆனால் துஷியந்த மன்னனோ தனது உள்ளப்பெருமையினைத் தானே நன் குணர்ந்தவனாயிருக்கின்றான். சகுந்தலை தனக்கேற்ற காதலியாகுவளோ என முதலிற் சிறிது ஐயுற்ற இவன் பின்னர்த் தன் உள்ளப் பெருமையினை நினைந்து, அல்லது நான் ஏன் ஐயப்பட வேண்டும்? என் சிறந்த உள்ளமும் இவள்மேற் காதலுற்று விழைந்தமையால், ஐயமின்றி இவள் அரசகுடியினருடன் மணங்கூடத் தக்கவளேயாவள். ஏனெனில், ஐயப்படுதற்கு ஏதுவான நிகழ்ச்சிகளில் நல்லோர் தம் உள்ளம் எந்தப்பக்கத்திற் சாய்கின்றதோ அதுதான் மேற் கொள்ளற் பாலது என்று அதன் பிழைபடாச் செயலினை எடுத்துரைத்துக் கொள்ளுதல் காண்க. எவன் தனக்குள்ள குற்றங் குணங்களைத் தானாகவே உணர்ந்துபார்க்க வல்லவனா யிருக்கின்றனனோ, அவனே பிறர்க்குள்ள குற்றங் குணங்களையும் நன்கு பகுத்தறிய வல்லவனாவன். எவன் தன் குற்றத்திற்காகத் தன்னை வெறுத்துத் தன்னைச் சினந்துகொள்ள மாட்டாமை யுணர்கின்றானோ, அவனே பிறர்பாற் காணப்படுங் குற்றத்திற் காகப் பிறரை வெறுத்து அவரைச் சினத்தலுஞ் செய்யான். எவன் தன் குற்றத்தைப் பிறர் எடுத்துரைக்குங்காற் றன் மனம் உளைதலையுந் தன் குணங்களை எடுத்துரைக்குங்கால் அது மகிழ்வின் விளைதலையும் உணர்ந்து பார்க்கின்றானோ, அவனே பிறர் குற்றங்களைக் கிளறிச்சொல்லி அவர் நெஞ்சைப் புழுங்கவையானாய் அவர்தங் குணநலங்களை நவின்று அவரை மகிழவைப்பனென்க. எனவே, துஷியந்தமன்னன் தன் அகவியற்கை யினைத் தானே அளந்துணருஞ் சிறந்த உணர்ச்சி வாய்ந்தவனாய் இருத்தலினாற்றான், தன் குடிமக்களிடத்தும் மிக்க அன்புடையனாய் அறத்தின் வழுவாது அரசு செலுத்தினானென்று அறிதல்வேண்டும். அற்றேலஃதாக, இவ்வரசன் தன் உள்ளத்தின் உயர்வைத் தானே யுணர்ந்தாற்போல அதனிழிபையும் உணர்ந்த துண்டோ வெனின், உண்டு. சகுந்தலையைக் கானகத்தில் மணந்து, பின்னர் அவளைப் பிரிந்து அவன் தன்நகர்க்கு மீளுங்கால் அவளுக்குத் தான் சொல்லிவந்த சொல்லைத் தானே மறந்துபோயது குறிப்பிட்டுப் பின், கல்நெஞ்சுடை யனான நான் மறதியினால் அவ்வாறு செய்யத் தவறி விட்டேன் என்று கூறுமாற்றல், அவன் தனக்குள்ள குறை பாட்டையும் உணர்ந்தவனாகவே காணப்படு கின்றானென்க. இவனிடத்தில் இச்சிறு குறைபாடன்றிப் பிறிது ஏதும் இன்மையால், இல்லாதவற்றைப் பற்றிய குறிப்பு இந்நூலின்கட் காணப்படாதது வாய்மையேயா மென்பது. அத்துணைச் சிறந்த உள்ளம் உடைமையினாலேதான், இவன் முதன்முதற் சகுந்தலையையும் அவடன் றோழி மாரையுங் கண்டு உரையாடுங்கால், தன்னை அரசன் என்று அவர்கட்குத் தெரிவித்துக் கொள்ளாமல், அவ்வரசற்குத் தான் ஓர் ஏவலாள் என்றுமட்டுந் தெரிவிக்கின்றான் (17). ஏனென்றால், அரசனே தமக்கு முன்வந்து நிற்கின்றா னென்பதை யுணர்ந்தால், இயற்கையிலேயே அச்சமுடைய அம்மகளிர் திடுக்கிட்டு வெருக்கொள்வர். அதனாற், சகுந்தலை இவன்மேற் காதல் கொள்ளுதலும் இல்லையாம். மேலுந், தான் காதலுற்ற ஒரு நங்கை தானுந் தன்மேற் காதலுறாக்கால், அவளை மணஞ் செய்து வாழ்வது அன்பு அகத்தில்லா உயிர்வாழ்க்கை யாய் முடியும். ஆகவே, அச்சம் இல்வழி அவட்குத் தன்மாட்டுக் காதலன்பு நிகழுமோ நிகழாதோ வென்று ஆராய்ந்துணர்தலும் இன்றியமையாமை கண்டே தன் உண்மை நிலையினை அரசன் வெளியிடானாயினான். உள்ளமேம்பாடு இல்லாத பிறரோ, தாங் காமுற்ற மங்கை தம்மை விரும்பாளாயினும், அவளை அச்சுறுத்தித் தங் கருத்துக்கு இணக்கப் பார்ப்பரன்றி, அவளது நலத்தைச் சிறிதுங் கருதாரன்றே. இதனானும், இம்மன்னனது உயர்குணப் பெற்றி இனிது விளங்குதல் காண்க. இன்னும், இவன் இச்சிறந்த உள்ளம் வாய்ந்தமை யினாலே தான், சகுந்தலையைத் தன் மனைவியாக ஏலாது மறுத்த காலையிற், சகுந்தலையுஞ் சார்ங்கரவனும் இவனை அரச னென்றும் பொருட்படுத்தாது மிக இழித்துப் பேசியும். அதுபற்றிச் சிறிதும் அவர்கள்மேற் சினவனாய்ப் பொறுடை யுடன் அவர்களோடு உரையாடுதல் பெரிதும் வியக்கற்பாலதா யிருக்கின்றது (90, 92, 94, 95), இங்ஙனமே, தன் பட்ட மனைவியான வசுமதி என்பாள் தன்மேல் மனக்கொதிப்புடை யளா யிருத்தலறிந்து இவன் அவள்பால் அச்சமும் பணிவு முடையனா யொழுகு தலும் அறியற்பாற்று (81). இவ்வாறெல்லாந் தன் நங்கைமாரிடத்துப் பணிவும் அச்சமுங் காதலுமுடையனாய் ஒழுகினும், நல்லார்க்குத் தீங்கிழைப்பாரைத் தொலைத்து அவரைப் பாதுகாத்தற் கண் இவன் அஞ்சா ஆண்மையனாய் நடத்தல், இவன் முனிவரது வேள்விக்களத்தில் அரக்கர் அணுகாமற் செய்த திறத்தை மாணவ முனிவன் வியந்துரைத்தமை கொண்டும் (43), இவன் இந்திரன்பொருட்டு அரக்கரை வென்ற போராண்மையைப் புகழ்ந்து தேவர்கள் போற்றுதல் கொண்டும் (130) நன்க றியப்படும். இனிப், பொறுமையும் ஆண்மையுமேயன்றி, உண்மையை ஒளியாமற்பேசும் வாய்மையும் இவன்பாற் காணப்படுகின்றது. இவனுஞ் சகுந்தலையும் ஒருவர்மேல் ஒருவர் பெருங்காதல் கொண்டு முதல்நாட் பிரிந்தபின், தமது ஆசிரமத்தில் வேட்டம் மேற்கொண்டு வந்திருப்பவன் துஷி யந்த மன்னனே யென்று ஆண்டுறையும் முனிவர்கள் அறிந் தமை வழிநாட்களில் அவனுதவியை நாடி அவன்பால் வந்த முனிவர் புதல்வரி ருவரின் உரையால் தெளியக்கிடக்கின்றது (38). வந்திருப்பவன் துஷியந்த மன்னனே யெனுஞ்செய்தி ஆசிரமத்திற் பரவவே, தன்னாற் காதலிக்கப்பட்டவன் அவ் வரசனேயல்லால் அவ்வரசன்றன் ஏவலன் அல்லன் என்பதூ உஞ் சகுந்தலைக்கும் அவடன் றோழிமார்க்கும் விளங்கிய தாகல் வேண்டும். ஆதலினாற்றான் சகுந்தலையை அவடன் றோழிமார் அவனுக்கு ஒப்படைக்குங் கால், தமது உவளகத்தி லுள்ள மகளிரைப் பிரிந்தமையால் வருந்தியிருக்கின்ற இவ்வரசரை வருத்தப்படுத்த வேண்டாம், விடு என்று சகுந்தலை புலந்து கூறாநிற்ப, அரசன் உண்மையை ஒளியாமல், எனக்குக் காதற் கிழத்திமார் பலர் உளரேனும், என் குலத்திற்கு நிலைபெறச் சிறத்தற்கு உரியார் இருவரே யாவர்; இக்கடலை அரைப்பட்டிகையாக உடைய நிலமகள் ஒருத்தி, உங்கள் தோழி ஒருத்தி என்று சொல்லித் தன் மனத்துறுதியை வற்புறுத்துகின்றான். தான் சொல்லிய இவ்வுறுதிமொழி தன் நினைவை மறைத்த மறதியால் இடையே தவறியதாயினும், அம்மறதி நீங்கியபிற் றான் முன் மொழிந்தவாறே சகுந்தலையைத் தனக்கு ஒப்புயர்வில்லாப் பட்டத்தரசியாகவே கைக்கொண்டா னென்பது இந்நாடக நூல் இறுதியில் தெற்றென விளங்கா நிற்கின்றது (139). இன்னும், இம்மன்னன் தன் அரசியல் எக் குலத் தாரையும் எந்நிலையாரையுங் காப்பாற்றிவரும் (83) முறையில் நடைபெறல் வேண்டுமென்னுங் கருத்துறுதி யுடையன். மலரும் பூங்கொடிகள் மலர் தருங்காலத்து மலராவாயின், அது தன்னுடைய தகாத செய்கைகளால் நேர்ந்திருக்கலாமோ என ஐயுறும் அத்துணை அறவுள்ளம் உடையன், அறத்தின் வழுவாது ஒழுகுதலிலேயே கண்ணுங் கருத்துமாய் இருப்பவ னாகலின், தான் மேற்கொண்ட அரசியலைத் தனக்குத் தொடர்பான துன்பந் தருவதொன் றாகவே கருதி வருந்து கின்றான் (84,85). இந் நல்லியற்கைகளேயன்றி, நுண்ணறிவும் இவ்வரசன் மாட்டுத் திகழ்ந்து காணப்படுகின்றது. இவன் சார்ங்கரவன் வழக்குரைகளை மறுத்துப் பேசுங்கால் எத்துணை நுண்ணறி வொடு பேசி அவன் வாயை யடக்குகின்றான்! மேலும் இவன் எதனையும் நன்காய்ந்து பாராது அதனைத் தழுவுதலும் விலக்குதலுஞ் செய்யான் என்பதை முன்னரே விளக்கிப் போந்தாம். அத்துணை ஆராய்ச்சி யுடையானுக்கு நுண்ணறிவு மிகுதல் இயல்பே யன்றோ? இவனது ஆராய்ச்சி நுண்ணறிவின் திறம் இவன் ஓவியம் வரையுந் திறத்தாலானும் நன்கு புலனாதல் காண்க. இங்ஙனமெல்லாஞ் சிறந்த நல்லியற்கையும் அறிவும் ஆண்மையும் ஆற்றலும் மிக்கவனாயிருந்தும், பிறர்க்குத் தன்னைப்பற்றி உயர்த்துக் கூறாமையும், பிறர் தன்னை உயர்த்துக் கூறிய வழி அதற்கு நாணி அவரது துரையாட்டை வேறு முகமாய்த் திருப்புதலும் உடைய இவ்வரசன் எவ்வளவு செருக்கற்ற தன்மையனா யிருக்கின்றானென்பதூஉங் கருத்திற் பதிக்கற் பாலதாகும் (108, 128, 129) இதுகாறும் எடுத்து விளக்கிய வாற்றால், துஷியந்த மன்னனன் சகுந்தலைக்கு ஏற்ற காதன் மணவாளனேயாதல் இனிது விளங்குதலால், அவள் இவனைக் கண்டதுணையே காதலித்து மணங்கூடிய நிகழ்ச்சியில் ஏதுங் குற்றம் இல்லையென்பது தெளியற்பாற்று. இனிச், சகுந்தலையின் தோழிமாரான அனசூயை பிரியம்வதை என்னும் இருவரில் அனசூயையின் இயற்கை முதலில் ஆராயற்பாற்று. சகுந்தலைக்கு அடுத்தபடியாக இவளும் பிரியம்வதையும் அழகிற் சிறந்தவர்களென்பது, அரசன் இவர்களை முதன்முதற் கண்டபோது இவர்களின் அழகை வியந்துரைக்குமாற்றால் நன்கறியக் கிடக்கின்றது. இவள் கள்ளம் இல்லாத உள்ளத்தவளாய்க் காணப்படு கின்றாள். அதனாலன்றோ அரசன் இம் மூவரையும் நோக்கிக் கேட்ட முதல் வினாவுக்கு இவளே விடையளிக்கின்றாள் (15). பின்னரும் அரசன் சகுந்தலையின் வரலாறு தெரிதற்பொருட்டு வினவியவைகட்கெல்லாம் இவளே பெரும்பாலும் விடை பகர்கின்றாள் (19). அதுவேயுமன்றித், தம்மிடம் போந்து உரையாடுவோன் இன்னானென்றறிதற்கு விழைந்து அரசனது வரலாற்றைக் கேட்பவளும் அனசூயையாகவே யிருக்கின்றாள் (16) மேலுஞ், சகுந்தலையின் பிறப்பு வரலாற்றைச் சிறிதும் ஒளியாமல் எடுத்துரைத்தல் கொண்டும் இவளது கள்ளம் இல் உள்ளப்பான்மை நன்கு உணரப்படும். இவ்வாறு அவளது பிறப்பு வரலாற்றை எடுத்துரைக்கின்றுழி, மகளிர்க்கு இயல்பாக உளள நாணம் இவள்மாட்டும் புலனாதல் காண்டுமாயினும், அந் நாண் இயற்கையினும் இவளது கள்ளமில் இயற்கையே இவள்பால் மிக்குக் காணப்படுகின்றது. கள்ளம் அறியாத மகளிர்க்குள்ள நாணம் அது புலனாதற்குரிய இடத்தன்றிப் புலனாகாது. மற்றுக், கள்ளம் அறிந்தார்க்குள்ள நாணமோ வேண்டாவிடத்தும் வெளிப்பட்டபடியாயிருக்கும். எனவே, கள்ளவுள்ளத்திற்கும் நாண்மிகுதிக்குந் தொடர்புண் டென்பது அறியற்பாற்று. இவ்வாற்றால், இவளைவிட நாண் மிகுதியும் உடைய சகுந்தலையும் பிரியம்வதையுங் கள்ள வுள்ளம் வாய்ந்தவராதலும் அறியப்படும். அற்றேல், இக் கள்ள முடைமை இழிக்கற்பாலதாம் பிறவெனின்; அற்றன்று, நாணமும் அச்சமும் மடனுங் கற்பும் உடைய மகளிரின் உயர்ந்த ஒழுக்கத்தின் பாற்பட்ட கள்ளம் இழிக்கற் பாலதாகாது, மற்று, அம்மெல்லிய பெண்மைக் குணங்கள் இலராய், அவை இன்மையிற் கற்பொழுக்கமும் இலரான பெண்டிர்பாற் காணப்படுங் கள்ளமே இழிக்கற் பாலதாகுமென்று கடைப்பிடிக்க. இங்ஙனம் அனசூயை கள்ளம் இல்லாத இயற்கை யுடையளாயினும், நுண்ணறிவிற் சிறந்தவளாகவே விளங்கு கின்றாள். அரசனை இன்னானென்றறிதற்கு இவள் அவனை வினவும் நுட்பமும் பணிவும் (16), அரசன் முன்னிலையினின்று வெகுண்டாள்போற் செல்ல முனையுஞ் சகுந்தலைக்கு இவள் அறிவு சொல்லித் தடுக்கும் நுட்பமும் இனிய மொழியும் (21). அரசன்மேற் றான்கொண்ட காதலைத் தன்னகத் தடக்கி, அதனால் நோயுற்று வருந்துஞ் சகுந்தலையை அந் நோய்க் காரணந் தெரிதற்பொருட்டு இவள் வினவும் நுட்பமும் (44), பிறவும் ஒருங்குவைத்து நோக்குங்கால் இவளது நுண்ணறிவின் விழுப்பந் தெற்றெனப் புலனாகா நிற்கின்றது. இத்துணை நுண்ணறி வுடையளா யிருத்தலினாலேயே அனசூயை பின்வருவதை முன்னறிந்து கவல்பவளாய் இருக்கின்றனள், யாழோர் மண முறையிற் சகுந்தலையை மணந்து, பின்னர் அவளைப் பிரிந்து தன் நகர்புக்க அரசன் அவளை நினைவு கூர்வனோவென இவள் ஐயுற்றுக் கவல்கின்றாள். சகுந்தலை அரசனை மணந்த யாழோர் மன்றலைக் கண்ணுவ முனிவர் அறிந்தால் யாது செய்வரோ வென அஞ்சிக் கலங்கிய பிரியம்வதைக்கு இவளே தேறுதல் சொல்லி அம்முனிவர் இம்முறையை ஏற்பரென வற்புறுக் கின்றாள் (60). இவள் தனக்குள்ள நுண்ணறிவின் திறத்தினா லேயே, நாற்பக்கங்களிற் கண்ணும் நாற்பக்கங்களிற் செவியும் உடையளாய்த் தன்னைச் சூழ நிகழும் நிகழ்ச்சிகளை உடனே அறிந்துகொள்ளும் அறிவாற்றல் வாய்ந்தவளாய் இருக்கின் றாள். அந்நிகழ்ச்சிகளுள் எதனை அறிந்தாலும் உடனே அதற்குத் தக்கது புரிவதிலும் விரைகின்றாள். சகுந்தலை, பிரிந்து சென்ற தன் காதலனையே நினைந்து தன்னை மறந்த நிலையினளாய்க் குடிலில் இருக்கின்றுழி, அங்குப் போந்த துருவாச முனிவரது வருகையினை அவர் நிகழ்த்திய ஒலியால் அறிந்து, அதனைத் தன் மருங்கிருந்த பிரியம்வதைக்கு அறிவித்து, விருந்தினர் வருகையையும் அறியாத சகுந்தலையின் மனநிலையினையும், எளிதிலே வெகுளத்தக்க துருவாசரது மணநிலையினையும் உணர்ந்து. அவரால் அவட்கு ஏதுந் தீங்கு நேராமைப் பொருட்டு அவரை எதிர்கொள்ளுதற்குப் பிரியம்வதையுடன் விரையும் அனசூயையின் முன்னறிவுஞ் சுருசுருப்பும் பெரிதும் பாராட்டற்பாலனவா யிருத்தல் காண்க (62). இன்னும், அனசூயை சகுந்தலையின்பால் வைத்த பேரன்பிற்கும், பிரியம்வதை சகுந்தலையின்பால் வைத்த அன்பிற்கும் வேறுபாடு காணப்படுகின்றது. சகுந்தலை ஒரு சிறு வருத்தமான தொழில் செய்வதைக் கண்டாலும் அனசூயை மனம் வருந்துகின்றாள். சகுந்தலை பூஞ்செடி கட்குத் தண்ணீர் விடுமாறு கற்பித்த அவள் தந்தையார் கண்ணுவ முனிவர் சகுந்தலையை விடப் பூஞ்செடிகள் பால் அன்பு மிக்கவரா யிருக்கின்றனரே எனக் கூறி வருந்துகின்றாள். சகுந்தலை காதல்நோயாற் பெருந்துன்புழக்கின்ற காலையில் அந்நோயின் காரணத்தைத் தெரிவிக்குமாறு வேண்டி, அது தெரிந்தால் அதற்கேற்ற மருந்து தருதல் கூடுமெனவும் மொழிந்திடு கின்றாள். துருவாசர் சகுந்தலைமேற் சினந்து வசைமொழி கூறிச் செல்வது கண்டு, உடன் அவர்பாற் பதைத்தோடிப்போய், அவரது சினத்தை ஆற்றி, அவ்வசை மொழிக்கு விடுதி பெற்றுத் திரும்புகின்றவளும் அனசூயை யாகவே யிருக்கின்றாள் (62, 63). துருவாசர் இட்ட வசைமொழி மிக மெல்லியளான சகுந்தலை கேட்டால் உயிர் தாங்காள் என நுவன்று, அதனை அவட்குத் தெரிவியாமல் மறைத்துவைக்கு மாறும் பிரியம்வதைக்குக் கற்பிக்கின்றாள். சகுந்தலையை மணந்து சென்ற அரசன் அவளை முற்றுமே மறந்துபோயது கண்டு அனசூயை நெஞ்சந் துடிதுடித்து வருந்துவதும், அவ்வருத்த மிகுதியால் அவள் நுவலுஞ் சொற்களும் இவள் சகுந்தலைமாட்டு வைத்த அன்பின் மிகுதியைத் தெரிக்கின்றன (65,66). கண்ணுவ முனிவர் சகுந்தலையைக் கணவனது இல்லத்திற்கு விடுக்கின்ற காலையில், அவடன் றோழிமார் இருவரும் அவளது பிரிவை ஆற்றாது வருந்தினராயினும், அனசூயையே அவடன் பிரிவின்றுயர் பொறாது பெரிது நைந்து அழுதாளாகல் வேண்டும். என்னை? கண்ணுவ முனிவர் அப்போது இவளை நோக்கியே, அனசூயே, அழாதே, நீங்களல்லவோ சகுந்தலையை ஆற்றுதல் வேண்டும் என்று தேறுதல் கூறினாராகலின் என்க. அனசூயை தன்மேல் அளவிறந்த அன்புடையளாயிருத்தலைச் சகுந்தலை நன்கு ணர்ந்தவள் என்பதற்குப், பிரியம்வதை தன் மார்பின்மேல் இறுக்கிக் கட்டிய ஆடையினை நெகிழ்த்தி விடும்படி அவள் அனசூயையைக் கேட்டுக்கொள்ளுதலே சான்றாகும். சகுந்தலையின் மென்மைத் தன்மையினை அனசூயை உணர்ந் தாற்போலப் பிரியம்வதை உணர்ந்திலாமை யினை உற்று நோக்குங்கால், அனசூயை பிரியம்வதையைவிட நுண்ணறி வுடையளாதலும், அதனால் அவள் அவளைவிடச் சகுந்தலையினிடத்து மிக்க அன்புடையளாதலுந் தெளியப் படும். பிரியம்வதை இடக்கர் மொழிகள் பேசுதல் கேட்டுச் சகுந்தலை நாணமுஞ் சினமுங் கொண்டு தன் குடிலுக்குச் செல்லப் புறப்படுகையிலும், அனசூயைக்குச் சொல்லியே புறப்படுகின்றாள். அப்போது அனசூயை அவளத சினத்தைத் தணிக்கச் சொல்லும் அருமை மொழிகள் சிலவாயிருப்பினும் அவை அன்பின் தேன் துளிகளாய் ஆறுதல் பயத்தல் கண்டு கொள்க (21). இன்னுந், தன் அடியில் தருப்பைப் புல்லின் கூரிய முனை குத்தியதைச் சகுந்தலை அனசூயைக்கே காட்டு கின்றாள், முட்செடியின்மேல் அகப்பட்டுக்கொண்ட தனது மரவுரியாடையினை எடுத்து விடுமாறும் அவளையே கேட்கின்றாள் (24,25). இங்ஙனம் அனசூயை தன்பால் வைத் துள்ள அன்பின் மிகுதியைக் கண்டு சகுந்தலை தானும் அவள் பாற் பேரன்பு கொண்டிந்தா ளாயினும், அதனை நிரம்பப் புலப்படுத்திக் கொள்ளாமற், பிரியம்வதையினிடத்தும் ஒத்த அன்பு காட்டி நடந்துகொள்ளும் நுட்பமும், அதனை உய்த் துணர வைத்திருக்கும் ஆசிரியர் காளிதாசரின் அறிவின்றிறனும் பெரிதும் பாராட்டற் பாலனவாகும் என்க. இனிப், பிரியம்வதையோ சிறிது கள்ளம் அறிந்தவளாகக் காணப்படுகின்றாள். ஒரு தேமாமரத்தினைப் பிணைந்தேறிப் படர்ந்த மல்லிகைக் கொடியொன்றன் அழகினை உற்று நோக்கி வியந்துகொண்டிருந்த சகுந்தலை தானும் அக்கொடியைப் போல் ஒரு காதலனை மணக்கலாகுமாவெனக் கருதுகின்றாள் எனக் கூறுபவள் பிரியம்வதையே, அனசூயையோ அத்தகைய தோர் எண்ணம் சகுந்தலைக்கு உண்டென நினையாமலே வினவுகின்றாள் (13). பாம்பின்கால் பாம்பறியும் என்னும் பழமொழிக்கிணங்கச், சகுந்தலைக்கு ஒருகால் உள்ளதாகக் கருதக்கூடிய எண்ணத்தைப் பிரியம்வதை சொல்லியது கொண்டும், அதற்கு மறுமொழியாக, இதுதான் உன் உள்ளத்தில் உள்ள உண்மையான எண்ணம் என்று சகுந்தலை மொழிந்தது கொண்டும் ஒருவர் நெஞ்சத்தை மற்றவர் நன்கறிந்திருந்த பான்மை புலனாகா நிற்கும். இன்னுஞ், சகுந்தலை தான் அரசன்மேற் கொண்ட பெருங் காதலைத் தன் றோழியர்க்குந் தெரிவியாமற் கழி பெருந்துயர்கூர்ந்து கிடப்புழி, அதன் காரணங் காதலா யிருக்கலாமென்று முதன்முதல் உய்த்தறிந்துரைப்பவளும் பிரியம்வதையே. இவள் அதனை யெடுத்துரைத்த பின்னரே அனசூயையும் அஃதவ்வாறிருக்கலாமென ஐயுற்று மொழிகின்றாள் (47). மேலுஞ், சகுந்தலையை அவள் காதலுற்ற அரசன்பால் மறைவாகச் சேர்த்தற்கு வழியாது? என்று அனசூயை வினாயதற்கு ஏற்றதொரு சூழ்ச்சி செய்பவளும், அதன்பிற் சகுந்தலையை அரசன் பால் தலைப்படுவிக்கின்றுழி அனசூயையை அவ்விருவரினின்றும் அகற்றி ஒரு விரகால் அப்பால் அழைத்துச் செல்பவளும் பிரியம்வதையாகவே யிருக்கின்றாள். சகுந்தலையை அரசனிடஞ் சேர்ப்பிக்குங்கால் இவள் அரசனை நோக்கிக் கூறுஞ் சொற்கள் திறமை மிக்கனவாயிருக்கின்றன (53). இதனால் இவள் காலமும் இடமும் அறிந்து இன்னார்க்கு இன்னபடி பேசவேண்டு மென்னும் அறிவு வாய்ந்தவளா யிருத்தலுங் கண்டுகொள்க. என்றாலும், பிரியம்வதை நுண்ணறிவும் பரந்த நோக்கமும் உடையவளாகக் காணப்படவில்லை. இவை யிரண்டும் இல்லாமையாற் பிறரை ஆராய்ந்து பார்க்கும் அறிவாற்றல் இன்றி, அவர்களைச் சொல்லளவிலே நம்பி விடுபவளா யிருக்கின்றாள். யாழோர் மணம் முடித்துச் சென்ற அரசனை நம்பாமல் அனசூயை அவனது மனநிலையில் ஐயுறவுகொண்டு வருந்தாநிற்கப், பிரியம்வதையோ அவனது மனநிலையை அறியற்கில்லாளாய், அவன் ஒரு காலுந் தவறானென்று நம்பிக்கையுடன் பேசுகின்றாள். இங்ஙனமே கண்ணுவ முனிவரது மனநிலையினையும் இவள் அறியாது மயங்கிக் கூற, அனசூயையோ சகுந்தலை கூடிய யாழோர் மன்றலை அம்முனிவர் ஏற்பரென உறுதி புகல்கின்றாள் (60). இன்னும், இவள் அனசூயையைப்போற் சுற்று நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளுங் கருத்து விழிப்பும் உடையவள் அல்லள். குடிலிற் றனியளாய்த் தன்னை மறந்திருந்த சகுந்தலையின்பாற் போந்த துருவாசர் வருகையினை உடனே அறிந்து அதற்கேற்றது செய்ய முனைந்தவள் அனசூயையே யல்லாற் பிரியம்வதை அல்லள் (61). இன்னும், இடுக்கண் நேர்ந்தக்கால் மனவமைதி மேற்கொண்டு, அதனைத் தீர்க்குந்திறம் நுண்ணறிவுடை யார்க்கன்றி, நுண்ணறிவில்லார்க்கு உளதாகாது; மேலும், நுண்ணறிவிலார்க்கு மனவமைதி யில்லாமையால் அவர் தாம் வழுக்கி வீழ்தலேயன்றியும், அவ்விடுக்கணையுந் தீர்க்க மாட்டுவார் அல்லர். பருவகால மழையாற் பெருகி ஆழ்ந்த கன்று செல்லும் ஒரு பேரியாறுதான் வற்கடம் நீக்கிப் பைங்கூழை வளர்த்துப் பயன்றரக் காண்டுமல்லால், வேனிற்காலத்துச் சடுதியிற் பெய்யுஞ் சிறுமழையாற் சிலுசிலுவென்று ஓடிவிடும் ஒரு சிற்றாறு அங்ஙனம் வறட்சி மாற்றி வளந்தரக் காண்டு மில்லையே. அதுபோல, ஆழ்ந்தகன்ற அறிவினளான அனசூயையே துருவாசர் இட்ட வசை மொழியை யறிந்து அதனைத் தீர்த்துச் சகுந்தலைக்கு நலம் பயப்பவளா யிருக்கின்றனளே யன்றிப், பிரியம் வதையோ இடுக்கட்பட்ட அந்நேரத்தில் மனவமைதியின்றி விரைந்து சென்று அதனால் தானும் இடறி வீழ்ந்து, அவ்வசைமொழி தீர்த்தற்கும் ஏதுஞ் செய்யமாட்டாதவனாள் விடுகின்றாள் (62). ஆனாலும் பிரியம்வதை சகுந்தலைமேல் வைத்த அன்பு தன்நலங் கருதாது சகுந்தலையின் நலத்தைக் கருதுவ தொன்றாகவே காணப்படுகின்றது. சகுந்தலை தன் கணவனது இல்லத்திற்குச் செல்லவேண்டும் ஏற்பாடுகள் செய்யப்படுதலை ஓர்ந்து, அவளது பிரிவினை ஆற்றாளாய் அனசூயை மிக வருந்தா நிற்கப், பிரியம்வதையோ அவள் கணவன்பாற் செல்லுதல் குறித்து மகிழ்மீக்கூர்ந்து அனசூயைக்குத் தேறுதல் சொல்கின்றாள் (67). சகுந்தலையின் நலத்தைக் கோரும் இவளது அன்பு சிறந்த தொன்றேயாயினும், அஃது அனசூயை யின் அன்புக்கு ஈடாகமாட்டாது ஒருவர்பால் மிக்க அன்புடை யார் அவரது பிரிவுக்கு வருந்தாமல் இரார்; தம்மைப் பிரிந்து சென்று நன்மை எய்துவாராயினும், அவரது பிரிவினை நினையுந் தோறும் நெஞ்சங் குழையாநிற்பர். சகுந்தலையின் பிரிவுநோக்கி அனசூயை நெஞ்சம் நீராய் உருகும் அளவு, பிரியம்வதை யுருகாமையினை யுணர்ந்து பார்க்குங்கால், இவளது அன்பு அனசூயையின் அன்பினும் ஒருபடி குறைந்த தாகவே காணப்படு கின்றது. ஆனதுபற்றியே இவளை இடது கண்ணாகவும் அனசூயையைத் தனது வலது கண்ணாகவுங் கொண்டு சகுந்தலை இவ்விரு தோழிமார்மாட்டும் அன்பு பாராட்டிவரும் நுட்பம் ஆண்டாண்டுக் கண்டுகொள்க. கிளிச்சிறையென்னும் பைம்பொன்னினாற் செய்த பாவை யொன்று தன் ஒரு மருங்கு வெண்பொற்பாவையும் ஒரு மருங்கு சலவைக்கற்பாவையும் வயங்கத் தான் அவ்விரண்டன் நடுவே ஒளியும் வனப்பும் மிக்குத் துலங்கினாற்போலச், சகுந்தலையும் ஒன்றினொன்று வேறான இயற்கைவாய்ந்த இவ்விரு தோழியருந் தன் இருமருங்கு மிருப்பத் தான் அவர் நடுநின்று விளங்கும் அழகிய காட்சி இந்நாடக நூலின் முற்பாதியிற் கவர்ச்சி மிக்கதாய் மிக்குத் தோன்றுதல் கண்டு கொள்க. இனி, அரசன் துஷியந்தனுக்குத் தோழனான விதூ ஷகனைப்பற்றிச் சிறிது கூறுவாம். இவன் அரசனுக்கு ஆறுதல் புகல்பவனாய் இந்நாடகக் கதை நிகழ்ச்சியில் முன்னும் பின்னுஞ் சிறிது தொடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனனே யன்றி, இக்கதைச் செலவுக்கு இன்றியமையாத ஓர் உறுப்பாக இவன் இதன்கட் பிணைக்கப்பட்டிலன், இந்திரனால் விடுவிக்கப்பட்ட அவன் தேர்ப்பாகனான மாதலி தனது வருகையை அறிவித்தற் பொருட்டு இவனைக் கட்புலனாகாமல் நின்று வருத்தும் இடம் (127), இதன் கதை நிகழ்ச்சிக்கு ஒரு தொடர்புடையதுபோற் காணப்படினும், மாதலி அவனை வருத்தாமலே அரசனெதிர் வருதலும் இயன்று, அது தொடர்ந்து செல்லுதல் கூடுமாகலின், ஆண்டும் விதூஷகன்றொடர்பு இன்றியமையாததாயில்லை. ஆகவே, உலாவிச்செல்லும் வலியனான ஒரு கட்டிளைஞன் விளையாட்டாக ஒரு கோல் கைக்கொண்டு செல்வதல்லது அதனைத் தனக்கோர் ஊன்று கோலாகக் கொள்ளாமைபோல, இந்நாடகக் கதை நிகழ்ச்சியும் இவனை ஒரு விளையாட்டுக் கருவியாக இடையிடையே ஈர்த்துச் செல்வதன்றிப் பிறிதிலாமை காண்க. ஆசிரியர் காளிதாசர் தாம் முதன்முதல் இயற்றிய மாளவிகாக்நிமித்திரம் என்னும் இனிய நாடக நூலின் கதை நிகழ்ச்சிக்கு விதூஷகனை இன்றியமையாத ஓர் உறுப்பாகப் பிணைத்துவிட்டமை போல, அவர் தாம் கடைமுறையாக இயற்றிய இச் சாகுந்தல நாடகக் கதை நிகழ்ச்சியில் விதூஷ கனைப் பிணைத்துவிடாத செயல் என்னையென்று ஆராய்ந்து நோக்குங்கால், உயர்ந்த இயற்கையுடையனல்லாத ஒருவனை, விழுமிய காதலன்பே கருக்கொண்டு செல்லுஞ் சாகுந்தல நாடகக் கதை நிகழ்ச்சியிற் பெரிதுந் தொடர்பு படுத்துதல் வனப்புடைத்தாகாமை கண்டாரென்பது புலனாகின்றது. அல்லாமலும், மாளவிகாக்நிமித்திரத்தில் ஓர் இன்றியமை யாத உறுப்பாகப் பிணைக்கப்பட்டிருக்கும் விதூஷகனுக்கும், இச்சாகுந்தலத்தில் ஒரு விளையாட்டுக் கருவியாகப் பிணைக்கப் பட்டிருக்கும் விதூஷகனுக்கும் வேறுபாடு பெரிதாகக் காணப்படுகின்றது. முன்னையதிற் போதரும் விதூஷகன் சுருசுருப்பு உடையவனாய்க், கதை நிகழ்ச்சிக்கு இன்றியமையாத சூழ்ச்சிகள் செய்வதில் வல்லவனாய்க், காதலரின் நிலையை அறியும் உய்த்துணர்ச்சி வாய்ந்தவனாய் அந்நாடகம் முற்றும் முனைந்து நிற்கப், பின்னையதில் இரண்டாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் மட்டுமே காணப்படும் விதூஷகனோ மடிந்த உள்ளத்துடன் உறக்கத்தில் மிக்க விருப்பு வாய்ந்தவனாய் இருக்கின்றான் (26). அதனொடு கோழை நெஞ்சமும் அச்சமும் உடையவன் (40,41). உணவில் மிக்க விருப்புள்ளவன். அரசன் சகுந்தலையை நினைந்து பெரிதுந் துன்புறுதல் கண்டும், இவன் தனது பசித் துன்பத்தையே மிகுதியாய் நினைக்கின்றான் (114). மாதலி இவனைத் துன்புறுத்துகின்ற காலத்தும் உணவுப் பொருளான கருப்பங்கழியையே இவன் உவமையாக எடுத்துப் பேசு கின்றான் (125). இதனை உற்று நோக்குங்கால் இவன் எந்நேரமும் உணவைப்பற்றிய நினைவே யுடையனாதல் புலப்படும். மேலும், உயர்ந்த தவவொழுக்கமுள்ள துறவிகளை இவன் குறைவாகப் பேசுதலை உணர்ந்து பார்க்குங்கால், இவனுக்கு உயர்ந்த நோக்கம் இல்லாமை தெளியப்படும் (35,117). இவனது இயற்கை இங்ஙனமெல்லாம் இழிந்ததாயிருத்தலி னாற்றான், துஷியந்தனது உவளகத்திலுள்ள அரசமகளிரால் இவன் இழிவாக நடத்தப்பட்டானென்பது விளங்குகின்றது (82). இவன் பேதைமதியுடைய னென்பதும், அரசனும் இவனைப் பற்றி நல்லெண்ணங் கொண்டிலனென்பதும் உணர்தல் வேண்டும் (42). அற்றேல், இத்துணை யிழிந்த இயற்கையுடையனான ஒருவனை, இந்நாடகக் கதை நிகழ்ச்சியில் தொடர்புபடுத்த வேண்டுங் கட்டாயம் இல்லாதிருந்தும், ஆசிரியர் இவனை இதன்கண் இயைத்தது எற்றுக்கெனிற்; பழையகாலத்தரசர்கள் அரசியல் நடத்திய நேரம்போக எஞ்சிய சிறுபொழுதை இனிதாகக் கழித்ததற்பொருட்டு, நகைச்சுவை பயக்க வல்லவரான விதூஷகர் என்னுங் கோமாளிகளைத் தமதருகே வைத்துக்கொள்வது வழக்கம். அதனால், அவ்வழக்கத்தைப் பின்பற்றி, நாடக நூல் யாக்கும் பழைய ஆசிரியர்கள், ஓர் அரசனை நாடகக் கதைத் தலைவனாக வைத்துக் கதை தொடுக்கும் வழியெல்லாம், அவ்வரசன் மருங்கில் இடை யிடையே கோமாளி யொருவனையும் இயைத்து, அவனால் நகைச்சுவை தோன்ற வைத்து அக்கதை தொடுத்தலை ஒழுகலாறாக் கொண்டார். என்றாலும், இவனிடத்திற் சில நல்ல தன்மைகளுங் காணப்படுகின்றன. அரசன் சகுந்தலைமேற் பெருங்காதல் கொண்டு துன்புறுகின்ற காலத்தும், பின்னர்த் தனது மறதியால் அவளை விலக்கிப் பிரிந்து, காணாது போன தனது கணையாழியைக் காண்டலும் அவளை நினைந்து நினைந்துருகி ஆற்றாமையால் நைகின்ற காலத்தும், அவளது வடிவழகை ஓர் ஓவியமாகத் தீட்டி வருந்துகின்ற காலத்தும், எல்லாம் இவன் இனிய சொற்களால் அரசனை ஆற்றும் வகை மகிழத்தக்கதா யிருக்கின்றது. மேலுஞ், சில நேரங்களில் இவன் கூர்த்த அறிவுடையனாத்தோன்றுகின்றமைக்குச், சகுந்தலையின் உருவையும் ஏறக்குறையச் சகுந்தலையோ டொத்த அழகினரான அவடன் தோழிமார் இருவர் தம் உருக்களையுந் தான் வரைந்த ஓவியத்தினை அரசன் இவற்குக் காட்டியக்கால், அம்மூவே றுருவிற் சகுந்தலையின் வடிவை முதலிற் பிரித்தறிய மாட்டாமற் சிறிது மயங்கினனாயினும், பின்னர் அரசன் வினாயதற்கு மேல் அவளது வடிவினை இதுதானெனச் சுட்டி இவன் துணிந்து ரைக்கும் மாற்றும் அறிவும் அழகும் வாய்ந் திருத்தலே சான்றாம் (116). ஆனாலுந், தூண்டப்பட்டாலல்லாமல் தானாகவே விழித்தெழுந்து விளங்கும் அறிவுடையனாக இவன் காணப்படாமையும் நினைவு கூரற்பாற்று. இனி, இந்நாடக் கதை நிகழ்ச்சிக்கு ஓர் இன்றியமையாக் காரணராகப் பிணைக்கப் பட்டிருக்குந் துருவாச முனிவரது இயற்கை சிறிதாகவே இந்நூலுட் புலப்படுத்தப்பட்டுள்ளது. இவர் தவ வொழுக்கத்தில் மிகச் சிறந்தவரென்பதும், ஆனாலும் எளிதிலே பிறர்மேற் சீற்றங் கொண்டு தீமொழி கூறி அவரைத் துன்புறுத்துபவ ரென்பதும், இயல்பாகவே கோணலான தன்மையுடையவரென்பதும் அனசூயை அவரைக் குறித்து நுவலுஞ் சொற்களால் அறியப்படுகின்றன (62). ஒருவர்பால் தினையளவு குற்றங் காணினும் அதனை மலையளவாகக் கருதி அவர்க்குத் தீங்கிழைப்பவர், தவ வொழுக்கத்தின் மிக்கார் குழுவிலும் ஒரு சிலர் இருக்கலாம். என்றாலும், அத்தினையளவு குற்றந்தானுந் தன் கண் இன்றித், தன் காதலன்பாற் சென்ற உள்ளத்தினளாய்த் தன்னையுந் தன்னைச் சூழ நிகழும் நிகழ்ச்சி களையும் அறவே மறந்திருந்த சகுந்தலையின் இரங்கத்தக்க நிலையினைக் கண்டும், உளம் இரங்காது நடுவின்றி வெகுண்டு வசைமொழி கூறும் அத்துணைக் கொடியதொரு குணம் அம்முனிவர் பிரானுக்கு உளதென்பது எளிதிலே நம்பற்பால தன்று. குற்றமில்லா ஒரு விழுமிய மங்கையை வைததாகிய ஒரு பெருங்கொடுமையை இந்நாடகக் கதை நிகழ்ச்சியின் பொருட்டுத் தவத்தான் மிக்க துருவாச முனிவர்க்கு ஏற்றியது ஆசிரியர் காளிதாசர்க்கும் முறையாகாது. இங்ஙனம் இந்நாடக நிகழ்ச்சிக்கு இடையே துருவாசரது வசையைக் கொணர்ந்து புகுத்தியவர் காளிதாசரே யல்லாமற், காளிதாசர்க்குப் பல நூற்றாண்டுகட்கு முன்னரே ஆக்கப்பட்ட இக்கதையினை நுவல்வதாகிய மாபாரதம் அவ்வாறு செய்ததன்று. வேட்டம் மேற்கொண்டு ஒரு கானகம் புகுந்த துஷியந்தன் கண்ணுவ முனிவரது குடிலுக்குச் செல்ல, அங்கே தனியளாயிருந்த சகுந்தலை விருந்து வந்த அவ்வரசற்கு ஆவன செய்ய, அவற்றால் மகிழ்ந்த அரசன் அவளது பேரெழிலைக் கண்டு அவள்மேற் காதல் மீதூரப் பெற்றானாய், அவளது பிறப்பு வரலாற்றினை அவளது வாயினின்றே யறிந்து, அரச குலத்தவனாகிய தான் அவளை மணத்தற்குப் பொருத்தம் உளதா தலையறிந்து, அவட்குத் தனது கருத்தை அறிவிக்க, அவளுந் தன் வயிற்றிற் பிறக்கும் மகற்கு அவன் தன் அரசினைத் தர இசையின் தானும் அவனை மணக்க இசையலாம் என்ப, அதற்கவன் உடம்படவே இருவரும் யாழோர் முறையில் மணம் புரிந்து சில வைகல் கழிய, அரசன் பின்னர்த் தன் நகர்க்குகுத் திரும்பினான். திரும்பிய அரசன், கண்ணுவ முனிவர் இல்லாத வேளையில் தான் சகுந்தலையை மணந்ததுபற்றி அவர் தன்மேற் சினந்து தன்னைச் சுடுமொழி கூறி வைவர் என்னும் அச்சத்தால் அவளைத் தன்மாட்டு வருவியாது வாளாவிருந்துவிட்டனன். மற்றுக், கண்ணுவ முனிவரோ தாம் இல்லாத காலத்தில் அவ்விருவரும் அயர்ந்த மணத்தினைத் தெரிந்து அதற்கு மனம் ஒருப்பட்டுச், சகுந்தலை பெற்றெடுத்த மகற்கு ஆறாண்டு நிறைந்ததும், அவளையும் அவள் மகனையுங் கூட்டி அரசன் பால் விடுத்தனர். அரசனோ ஊராரது பழிச்சொல்லுக்கு அஞ்சி, அவளைத் தான் மணந்ததில்லை யென வெளிக்குச் சொல்லி மறுத்து விட, அந்நேரத்தில் வானத்திற் றோன்றிய ஒரு தெய்வவொலி, அரசன் சகுந்தலையை மணந்தது மெய், இம்மகனும் துஷியந்தன்றன் மெய்ம்மகனே என எல்லாரும் அறிய நுவல, அரசன் மகிழ்மீக் கூர்ந்து தன் மனைவி சகுந்தலையையும் மகன் சர்வதமனனையும் ஏற்று இவனுக்குத் தன் அரசியலை நல்கினான், என்னும் இத்துணையே மாபாரதத்து ஆதிபருவம் நுவலாநிற்கின்றது. ஆசிரியர் காளிதாசர்க்கு மிக முற்பட்டதாகிய இம்மாபாரதப் பகுதியில் துருவாசரது வசையைப்பற்றிய குறிப்பு ஏதுமே காணப்படாமை கருத்திற் பதிக்கற்பாற்று. அற்றாயினும், இக்கதையினை நுவலும் பதுமபுராணத்தின் கண் துருவா சரது வசை மொழியும் பிறவு மெல்லாங், காளிதாசரது இச் சாகுந்தல நாடகத்தில் உள்ளபடியே காணப்படுதல் என்னை யெனிற், காளிதாசர் காலத்திற்குப் பின் இயற்றப்பட்டதாகிய பதும புராணம், இக்கதை காளிதாசரால் அமைக்கப்பட்ட முறையிற் சுவை மிகவுடைத்தாய்த் திகழ்தல் கண்டு, அதனை அங்குள்ள படியே யெடுத்துத் தானுங் கூறியதாகலிற், பதும புராணம் ஈண்டைக்கு மேற்கோ ளாகாதென விடுக்க. இனி, நாடக நூற்புலமையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாச் சேக்குவீயர் (Shakespeare)ï¢rhFªjy நாடகத்தை அமைக்கப் புகுந்திருந்தனராயின், அவர் காதலரின் வாழ்க்கையைச் சீர்குலைத்தற்குத் துருவாசரைப் போன்ற ஒரு தூய முனிவரை மறந்தும் பிணையார். அதனைச் சீர்குலைக்குங் கொடுஞ் செயலுக்குத் தக்க கொடியான் ஒருவனையே கொணர்ந்து பிணைத்திருப்பர். அவர் தாம் இயற்றிய சிம்பிலீன் (Cymbeline), ஓதெல்லோ (Othello) என்னும் அரிய பெரிய நாடக நூல்களுட், சகுந்தலையைப் போலவே தம் காதலர்பாற் சென்ற களங்கமறு தூய காதற் பேரன்பினரான இமோசின், தெசிதிமோனாள் என்னும் நங்கையரின் வாழ்க்கையைச் சீரழித்தற்கு முறையே ஐயாக்கிமன், ஐயாகன் என்னுங் கொடியவரைக் கொணர்ந்து பிணைத்தாரல்லது, காளிதாசரைப் போல் தூய துறவியரை அப்பழிக்கு ஆளாக்கி னாரல்லர், மற்றுக், காதலர்க்கு இடைநின்று தீங்கிழைப் பார்தங் கொடுஞ் செயலைக் களைந்து, அவரை ஒருங்கு கூட்டும் அருண் முயற்சிக்கே சேக்குவீயர் தூய துறவிகளைக் கொணர்ந்து பொருத்தி நாடகக் கதை நிகழ்ச்சியினை இனிது நடாத்தும் மாப்பேராற்றல், அவர் தாமியற்றிய புல்லிய நிகழ்ச்சியாற் போந்த பொல்லாங்கு,2 உரோமியன் சூலியாள்3 என்னும் அரும்பெருநாடகங்களிற், பிரான்சியர், இலாரன்சர் என்னும் அருட்டுறவிகளைக் கொணர்ந்து இணைக்குமாற்றால் நன்கு விளங்காநிற்கும். எனவே, இச்சாகுந்தல நாடகக் கதை நிகழ்ச்சியினைச் சுவைப்படுத்துதற் பொருட்டு ஆசிரியர் காளிதாசர் துருவாசர் வசைமொழியினைக் கொணர்ந்து பிணைத்தது ஓர் அருந்திறலேயாயினுங், காதலரின் தூய காதல் வாழ்க்கையைச் சிதைக்குங் கொடியதொரு முயற்சிக்கு ஒரு தூய துறவியை இயைத்தது. அவர்க்கொரு வடுவே யாமென்று பகுத்தறிந்து கொள்க. இவர் துருவாசர்க்கு ஏற்றிய அப் பழியினை மாபாரத நூல் ஒரு சிறிதுங் கூறக் காணாமையின், துருவாச மாமுனிவர் குற்றமில்லா ஒரு தூய மங்கையை நடுவின்றி வெகுண்டு சுடுசொற் கூறி வையும் அத்துணைக் கொடிய நீர ரல்ல ரென்றுங் கருத்திற் றுணிந்து பதித்துக் கொள்க. இனி, இந் நாடகத் தவியாகிய சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை காசியப முனிவரது இயல்பு சிறிது ஆராயற்பாற்று. இவர் முனிவர்க்குரிய சிறந்த குணங்கள் அத்தனையும் ஒருங்கமையப் பெற்றவராய்க் காணப்படுகின்றார். எல்லா உயிர்களிடத்தும் அன்பும் அருளும் பூண்டு ஒழுகுதல் முனிவர்க்குச் சிறப்பியல் பாகும். அதனால் இவர் தம் மகள் சகுந்தலையினிடத்துப் பேரன்புடையவராயிருத்தல் போலவே, அவள் தோழி மாரிடத்தும், ஓரறிவுடைய மரஞ் செடி கொடிகளிடத்தும் பேரன்பு வாய்ந்தவரா யிருக்கின்றார் (10). இவர் இத்துணைப் பேரன்பு வாய்ந்தவரா யிருத்தலினாலன்றோ, தாம் இல்லாத வேளையில் தமது பாழிக்கு வந்த துஷியந்தனைச் சகுந்தலை தானாகவே மணந்துகொண்டதனையுங் குற்றமாக நினையாத தன்மேலும் அதனைச் சிறந்ததொரு முறையாகவும் பாராட்டிப் பேசுகின்றார் (71). பிறர் குற்றமாகக் கருதத் தக்க ஒழுகலாற் றினையுங் குற்றமாக நினையாது அதனை வியந்து பேசும் இவரது விழுமிய தூய அருளுள்ளத்தின் றன்மைக்குங், குற்றமில்லாத நிலையினளான சகுந்தலையையுஞ் சுடுமொழி கூறி வருத்தியவராகச் சொல்லப்பட்ட துருவாச முனிவரது கொடிய வுள்ளத்தின் பான்மைக்கும் எத்துணை வேற்றுமை! பார்மின்கள்! சகுந்தலையை அவள் கணவன் வீட்டுக்குப் போக்குங்கால், அவளைப் பிரியகில்லாது இவர் நெஞ்சங் குழைந்துரைக்கும் மொழிகள் அவற்றை யுணர்வாருள்ளத்தை யுங் குழைக்குந் தன்மையவா யிருத்தல் காண்க. இவர் இங்ஙனம் அன்பு நிறைந்த இன்ப வுள்ளத்தினராய் இருத்தலுடன் அறிவின் மிக்கவராயும் விளங்குகின்றார். இவர் சகுந்தலையைக் கணவன் இல்லத்துக்கு விடுக்குங்காற் கூறும் வாழ்த்துரையின் நுட்பத்தை நோக்குமின்! சகுந்தலையுந் துஷியந்தனுந் தம் பெற்றாருடன்பாடு பெறாமலே காதல் வயத்தராய்ச் சென்று யாழோர்மணம் புரிந்து கொண்டவ ராகலிற், காதற் கிழமையிற் சிறிதும் பிறழாராய் இனிது வாழ்வரென்னுங் குறிப்பினை அடக்கி, இவ்விருவரைப் போலவே காதன் மணம் புணர்ந்து நீடினிது வாழ்ந்த யயாதி வேந்தனையும் அவன்றன் காதன் மனையாள் சர்மிஷ்டை யையும் உவமை கூறி இவர் வாழ்த்திய அறிவு நுட்பம் பெரிதும் பாராட்டற் பாலதன்றோ, அன்பில் வழியும் பிறரால் வலிந்து புகுத்தப்படும் மணவாழ்க்கையை வேண்டாது, உண்மையன்பின் வழியராய்ப் பிறர் இடைநிற்கப்பெறாமலே மணம்புகுவாரது காதலின்ப வாழ்க்கையினையே வேண்டிப் பாராட்டும் இம்முனிவர்பிரான் காதலன்பின் விழுப்பத்தை எத்துணைச் செவ்விதாக ஆழ்ந்தறிந்தவராயிருக்கின்றார்! இன்னுஞ், சகுந்தலை தன் கணவனது இல்லத்திற்குச் சென்றபின் அங்கு அவள் ஒழுகவேண்டிய முறைகளை இவர் சில சொல்லில் அடக்கி வகுத்துரைக்கும் அறிவின் திறம் நினையுந் தோறுங் களிப்பினை அளிக்கின்றது (77,79). இன்னுந் துஷியந்தனுக்குத் தெரிவிக்குமாறு இவர் சொல்லி விடுக்குஞ் செய்தியுள்ளும், இவர் தமது தவச்செல்வத்தையும் அரசனது அரசியற் செல்வத்தையும் ஒத்த நிலையில் வைத்து மொழியுந் திறமுந், தன் உறவினர் வாயிலாக வன்றித் தானாகவே பேரன்பு பூண்டு காதலித்த சகுந்தலையின்பால் அரசன் நடந்துகொள்ள வேண்டிய முறையினை இவர் தெரிக்கும் நுட்பமும் அங்ஙனமே மகிழற்பாலனவாய் இருக்கின்றன. அவைபோலவே, சகுந்தலை, தந்தையாராகிய தம்மைப் பிரிந்து வாழ்தல் இயலாதென்று கூறி ஆற்றாளாகியபோது, இவர் அவளை ஆற்றுந் திறமும் பாராட்டத் தக்கதா யிருக்கின்றது (79). இவ்வாறெல்லாம் அன்பிலும் அறிவிலும் மிக்காராயுள்ள இம்முனிவரர் உண்மைத் துறவிக்குள்ள பற்றற்ற நெஞ்சம் வாய்ந்தவரா யிருத்தலும் நினைவு கூரற்பாற்று. தம்பால் உள்ளவரையில். தம்மால் ஆவன செய்து முடிக்கும் வரையில் தம்மொடு தொடர்புடையாரிடத்து அளவிறந்த அன்புவைத்து ஒழுகுங் கனிந்த நெஞ்சத்தினரான துறவிகள், அவர் தம்மை அவர்க்குரியார்பால் ஒப்படைத்து விட்டபின், அவரை நினைந்து நினைந்து ஏங்கம் பற்றுள்ளம் உடையராகார். அப்பெற்றியரான உண்மைத் துறவிகளின் பற்றற்ற நிலை இங்கே காசியப முனிவர்மாட்டுங் காணப்படுகின்றது. சகுந்தலையைக் கணவன் இல்லத்திற்குப் போக்கும் வரையில் அவளது பிரிவாற்றாது வருந்திய இவர், அவளை அங்கே போக்கியபின் அவளை நினைந்து துயருறுதலின்றி மகிழ்ந்த மனத்தினராய்த் தமது தவ வொழுக்கத்தின்மேற் செல்லுதலை நான்காம் வகுப்பின் ஈற்றிற் காண்க (80). உண்மைத் துறவிகளாகிய விலையற்ற அரிய முழு மாணிக்கச் சிறு திரளினிடையே யிருந்து ஆசிரியர் தமது மதிநுட்பத்தாற் றேர்ந்தெடுத்து விளக்கி ஒளிரவைத்த இம் முனிவர்மாமணி, அச்சிறு மாத்திரளின் நன்மாட்சியினை விளக்கித் தெள்ளொளி விரிக்கும் நல்லடையாள முழுமணியாய்த் திகழ்தல் கண்டு இன்புறுக! இனி, இந்நாடகத்தின் ஈற்றில் வருவாராகிய மாரீச மாமுனிவருங் காசியபரைப் போலவே அன்பு அருட்குணங் களில் மிகச் சிறந்தாராயிருத்தல் கண்டுகொள்க. இனி, மாதரிற் றுறவு பூண்ட கௌதமியம்மையார் ஆண்டில் முதிர்ந்தவராகவும் அருளொழுக்கத்தில் மிக்கவ ராகவுங் காணப்படுகின்றார் (95,99). காதல் மணமும் முதியோர் உறவினரைக் கலந்தே செய்யப்படுதல் வேண்டுமென்பது இவ்வம்மையாரது கருத்து (89). இவ்வகையில் இவர்க்குங் கண்ணுவ முனிவர்க்குங் கருத்து வேற்றுமை யுளதாதல் அறிந்துகொள்க. இவர் சகுந்தலையைத் தம் மகளைப்போற் கருதி அன்பு பாராட்டுந்தன்மை இதனைப் பயில்வா ருள்ளத்திற்கு மகிழ்வொடு கூடிய ஓர் ஆறுதலைப் பயக்கின்றது. துஷியந்தன் தன் மறதியினாற் சகுந்தலையைப் பிறனொருவன் மனையாளாகவுந் தன்னை ஏமாற்ற வந்தவளாகவும் பிழையாக நினைந்து, அவளையும் இவ்வம்மையாரையும் நோக்கித் தகாத சொற்களை இயம்பிய வழியும், இவ்வம்மையார் அதுபற்றிச் சிறிதுஞ் சினவாது நுவலும் விடைமொழிகளின் அமைதி பெரிதும் பாராட்டதக்கதா யிருக்கின்றது (93). முடிவாக அரசன் சகுந்தலையை ஏலாமல் மறுத்துவிட்ட பின்னருஞ், சாரத்துவதன் சகுந்தலையை அரசனிடத்திலேயே யிருக்கப் பணித்து இவ்வம்மையாருடன் தான் தனது கானக உறையுளை நோக்கிச் செல்லுகையிற், கௌதமியம்மையார் அவளை அந்நிலையில் விட்டுச் செல்ல மனந் துணியாது வருந்தி யுரைக்கும் உரை கொண்டும் இவரது மெல்லிய ஈரநெஞ்சப் பான்மை நன்கு தெளியப்படுமென்பது. இனிக், கண்ணுவரின் மாணாக்கராய்ச் சகுந்தலையைக் கணவனில்லத்தே விடுதற்குத் துணைவராய்ப் போந்த சார்ங்கரவன் சாரத்துவதன் என்னும் இளந்துறவிகள் இருவர் இயற்கையிலும் ஒற்றுமை வேற்றுமைகள் காணப்படுகின்றன. இருவரும் நகர வாழ்க்கையை அருவருத்துப் பேசுகின்றனர் (86). இருவரும் அறிவிலும் பேசும் ஆற்றலிலும் சிறந்தவரா யிருக்கின்றனர் என்றாலுஞ், சாரத்துவதன் ஒருவர்க்கு ஓருண்மையைப் புலப்படுத்துகின்ற காலையில் வெறும் பேச்சு களைப் பேசுதலைக் காட்டிலும், அதனை ஐயுறவின்றி மெய்ப் பிக்குங் கருவியினையே நாடுபவன்; மற்றுச், சார்ங்கரவனோ சொற் போரில் வல்லவன். அரசனுடன் இவன் சொற்போர் புரிகையில், அதனைத் தடுத்து, அரசன் காதன்மணம் புணர்ந்த மெய்ம்மையினை நிறுவும் ஓர் அடையாளங் காட்டுகவென்று சகுந்தலையை ஏவுவோன் சாரத்துவதனே (91). இன்னும் அரசன் செய்த பிழையினை எடுத்துக் காட்டி அவனை யிடித்துப் பேசுவதிற் சார்ங்கரவன் அஞ்சா நெஞ்சுடைய னாய்த் தோன்றுகின்றான்; மற்றுச், சாரத்துவதனோ அத்தகைய நெஞ்சழுத்தம் உடையவனாய்க் காணப்படு கின்றிலன்; இவன் அரசன் முன்னிலையிற் பேசுவன வெல்லாம் மிகச் சில சொற்களே; அச்சொற்களும் அரசனுக்கு ஓர் அடையாளங் காட்டுமாறு சகுந்தலைக்குக் கற்பிக்குமள விலும், இறுதியாக அரசனை நோக்கி, இதோ நும்மனைவி யிருக்கின்றார், நீர் அவரை ஏற்றுக்கொள்ளினுங் கொள்ளுக. தள்ளிவிடினும் விடுக. தன் மனைவியினிடத்து எவ்வகையான தலைமை செலுத்தினும் அது பொருந்துவதே யாம் என்னும் அத்துணையே சொல்லிவிட்டுத், தன்னுடன் போந்த கௌதமி யம்மையாரையும் உடன் மாணாக்கனையும் அழைத்துச் செல்லு மளவிலுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. இனி, அரசனால் விலக்கப்பட்டுச் சகுந்தலை வேறு புகலிடங் காணாத நைந்த வுள்ளத்தினளாய் ஆற்றாது அழாநிற்கையிற், கன்னெஞ்சமுடையாரும் அவளை அந்நிலையிற் காண்குவ ராயிற் றமது கன்னெஞ்சமுங் கரைந்துருகுவ ரன்றிப் பிறிது ஆகார். ஆனாற், சார்ங்கவரனோ தானாகவே பதைத்துச் செய்த ஒரு செய்கையானது இப்படித்தான் துயரத்தைத் தரும் என்று வெடுவெடுப்புடன் பேசிப் புண்ணிற் சுடுகோலை நுழைப்பவனா யிருக்கின்றான்! இதுவும் போதாதென்று, கானகம் நோக்கிச் செல்லுந் தம்முடன், அழுதுகொண்டு பின்றொடர்ந்த சகுந்தலையைப் பார்த்து சீற்றங்கொண்டு தூர்த்தே! தன் னெடுத்த மூப்பாய் இருக்கப் பார்க்கின் றனையோ? அரசன் சொல்லுகிறபடியே நீ இருந்தாயானால், நின் தந்தையார் தமது குடியினின்றும் வழுவிய உனக்கு யாதுதான் செய்யக் கூடும்? அவ்வாறின்றி நின் ஒழுக்கந் தூயதென்றே அறிந்தா யானால், நின் கணவன் வீட்டில் அடிமையாக வாயினும் இருத்தலே உனக்குத் தக்கதாகும். நில், நாங்கள் போகிறோம் என்று கொடிது கூவிச் சொல்லிப் போய்விடுகின்றான். உடன் பழகாதவரும் அத்துணை துயர் கூர்ந்த நிலையிற் சகுந்தலையைத் தனியே விட்டுச் செல்லார்; மற்றுப் பிள்ளைமைப் பருவந் தொட்டே சகுந்தலைக்குத் தமையன்போல் உடன் வளர்ந்து, அவளது தூய நடையும் மெல்லிய இயல்புமெல்லாம் ஒருங்கறிந்தவனா யிருந்தும், அவ்விரங்கத்தக்க நிலையிலும் அவளொழுக்கத்தைத் தானும் ஐயுற்றுப் பேசியதல்லாமலும், அவளை மிக இழிந்த சொல்லால் வைதுவிட்டும் ஏகுஞ் சார்ங்கரவனது அறக் கொடிய நெஞ்சத்தி னியல்பை ஒருங்கால், இவனை யொத்த இரக்கமிலா வன்னெஞ்சர் உலகில் மிகச் சிலரேதாம் இருத்தல் கூடு மென்பது புலனாகும். இக் கொடியானுக்கு அஞ்சிப் போலும் இரக்க நெஞ்சம் வாய்ந்த கௌதமியம்மை யாருஞ் சகுந்தலையை உடனழைத்துக் கொண்டு மீண்டுங் கானகஞ் செல்லாமல், அவளைத் தனியேவிட்டுச் செல்வாரா யினது! சார்த்துவதன் சார்ங் கரவனைப்போல் அத்துணை அறக் கொடியன் அல்லனாயினும், மறுத்துவிட்ட அரசனிடமே சகுந்தலையை விட்டுப் போக எண்ணி அதனை முதற்கண் அரசனுக்குக் கூறுவோன் அவனாகவே யிருத்தலின் அவனும் ஏனையானில் அரைப்பங்கு ஈரமற்ற நெஞ்சினனாகவே காணப்படுகின்றான். இரக்கமும் அருளும் ஒருங்கு குடி கொண்ட கண்ணுவ மாமுனிவர்க்கு இரக்கமில்லா இவ்வன் னெஞ்சரிருவரும் மாணாக்கராய் அமர்ந்தமை தீஞ்சுவை நீர் நிறைந்தொழுகும் ஒரு வளவிய யாற்றின் பக்கத்தே கருங்கற்பாறைகள் அமைந்திருத்தலையே ஒத்திருக்கின்றது! மேலும், இம்மாணவர் இருவரும், பெண்பாலார்க்கு எத்தகைய உரிமையுந் தலைமையும் ஆகாவெனவுங், கணவன் தன்னையொரு தொழுத்தையாக நடத்தினும் மனைவி அதற்கு ஒருப்பட்டு நடத்தலே செயற்பாலள் எனவுங் கருதுபவரா யிருத்தலின், இவர் மக்கட்பிறவியின் ஒத்த உரிமையும் இறைவனது அருள்நோக்கமுஞ் சிறிதும் உணர்ந்தவராகக் காணப்படுகின்றிலரென்க. இனி, மேற்காட்டியவாறு தன் கணவனாலுங் கைவிடப் பட்டுத், தன்னுடன்போந்த உறவினராலுஞ் சினந்து கைவிடப்பட்டுச் சகுந்தலை தனக்கு ஏதொரு சார்புங் காணாளாய்ப் பெருந்துயர்க்கடலுட் கிடந்து, தன் உயிர் தன் உடற்கண் உள்ளதோ! அன்றி அதனைவிட்டுப் புறத்தே யுள்ளதோ வெனப் பொறியும் புலனுங் கலங்கித் துன்புறும் இந்நிலையில், அவளுக்கு ஒரு சார்புங் காட்டாது கதையினை நடாத்தல் நல்லிசைப்புலமை யாகாமையின், ஆசிரியர் காளிதாசர் இப்பேரிடுக்கண் நேர்ந்த இந் நேரத்தில் அவட்கு ஒரு சார்புகாட்டும் நுட்ப அறிவின் றிறம் இதனைப் பயில்வார்க்குப் பெரியதோர் ஆறுதலைப் பயவா நிற்கின்றது. அஃதென் னென்றால், எல்லாருஞ் சகுந்தலையைக் கைவிட்ட அந் நேரத்தில், அரசனுக்குப் புரோகிதரான அந்தணர்பெருமான் அவட்கு ஒரு பெருஞ்சார்பாய்ப் புகுந்து பிள்ளைப்பேறு வரையிற் சகுந்தலை தம் அகத்தேயிருந்தால், பிறக்கும் மகன் அரசடையாளங்கள் உடையனாயிருக்கக் காணிற் பிள்ளையுந் தாயும் அரசனால் ஏற்கப்படலாம், இல்லையேல் அவ்விருவருங் கண்ணுவ மாமுனிவர் குடிலுக்கே திரும்பிவிடச் செய்யலாம் என மொழிந்து, அரசனைத் தமது சொல்லுக் உடன்படுவித்து மகளே என் பின்னே வா! என்று அவளை மிக்க அன்போடு அழைத்துச் செல்லுதலேயாம். இங்ஙனமாகச் சொல்லற்கருந் துன்பம் நேர்ந்தக்கால், அதனை ஒருவாற்றா லாயினும் நீக்கும் மருந்தும் உடன்காட்டுதலே நாடக நூல் யாக்கும் நல்லிசைப் புலவர் திறமாமென்க. இவ்வாறு உற்ற நேரத்திற் றோன்றிய இப்புரோகிதர் உண்மையந்தணர்க்குரிய அருளும் அன்பும் இரக்கநெஞ்சமும் உடையராய்த் துலங்குதல் கண்டுகொள்க. இனி, இந்நாடகக் கதைநிகழ்ச்சி சிக்கலாய் முடிந்த இக்கட்டை அவிழ்த்துவிடுதற்கு இன்றியமையாதவராய்த் தோன்றிய கொத்தவால், காவலாளர், செம்படவன் என்னும் மூவரின் இயற்கைகளைப்பற்றிச் சிறிது ஆராய்வாம். அரசனது நகர்காவற் றலைமை மேற்கொண்ட கொத்தவால் அத் தலைமைக்கேற்ற நடுவுநிலைமையும் பொறுமையும் உண்மை யாராயும் அறிவும் வாய்ந்தவனா யிருக்கின்றான். ஒரு செம்படவன் கையில் துஷியந்த மன்னனது கணையாழி யிருத்தலைக் கண்ட காவலாளர் அவன் அதனைக் களவுசெய்த கள்வனேயெனக் கருதி, அவனைப் பிடித்து அடித்துக் கொணர்கையில், அச்செம்படவன் தான் கள்வன் அல்லாமையுந் தன் வரலாறுங் கூறப்புக்குழி, அவற்றைக் கேட்குமளவு பொறுமை யில்லாதவனாய் ஒரு காவலாளன் அவனை ஏசாநிற்க, அதுகண்ட தலைவனான கொத்தவால். அவன் சொல்லவேண்டுவவெல்லாம் ஒழுங்காகச் சொல்லட்டும் அவனை இடையிலே தடுக்க வேண்டாம் என அவனையடக்கி, அச்செம்படவன் கூறுவனவெல்லாம் அமைதியாகக் கேட்குந்தன்மை மிகவும் பாராட்டற்பாலதா யிருக்கின்றது. குற்றவாளியாகக் கருதிப் பிடிக்கப்பட்டவன் உண்மையிலே குற்றஞ் செய்தவன்றானா இல்லையாவென்று நன்காராய்ந்து ஒரு முடிவுக்கு வருதலே காவற்றலைமை பூண்டாற்கு இன்றியமையாத கடமையாம். அங்ஙனம் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரும்வரையில் அத்தலைவன் எவ்வளவோ அமைதியும் எவ்வளவோ பொறுமையும் வாய்ந்தவனாயிருத்தல் வேண்டும். அவ்வாறின்றி விரைந்து ஆராயாது தானே ஒரு முடிவினைத் துணிந்துவிடுவனாயிற் குற்றஞ் செய்யாதவன் அது செய்தவனாகவுங், குற்றஞ் செய்தவன் அது செய்யாதவனாகவும் பிழைபடக் கருதி ஒறுக்கப்படுவன், படவே, உலகில் அறமும் நடுவுநிலைமையும் இல்லையாய் அரசியலும் மக்கள் வாழ்க்கையும் நிலைகுலைந்து சிதையும். ஆதலாற், குற்றம் ஏற்றப்பட்டு வந்தானைப் பற்றிய வரலாறு முற்றும், அவனது ஒழுக்கத்தின் நலந் தீங்குகளில் ஒன்றைத் திண்ணமாக நிலைபெறுத்துஞ் சான்றுகளும் பலகாற் பலவாற்றானும் ஆராய்ந்து பார்த்து ஓர் உறுதியான முடிவுக்கு வரும் அத்துணைப் பொறுமையும் ஆராய்ச்சியும் வாய்ந்த ஒரு தலைவனை மக்களுள் ஒருவனாக வையாது வான்உறையுந் தெய்வமாகவே வைத்தல் வேண்டும். இந்நாடகக் கதையுட் போந்த கொத்தவால் துஷியந்த மன்னனுக்குத் தான் உறவு பூண்ட மைத்துனக் கிழமைக்கு ஏற்பவும், அவனது செங்கோலரசு இனிது நடைபெறுதற்குத் தான் மேற்கொண்ட காவல் நிலைமைக்கு ஏற்பவும், பொறுமை, உண்மையாராயும் மெய்யுணர்வு முதலான சிறந்த இயல்புகள் பொருந்தப் பெற்றவனா யிருத்தல் மகிழற்பால தொன்றாம். இங்ஙன மெல்லாம் பொறுமையோடு உண்மை யாராய்ந்த வழியும், அவ்வுண்மைக்கு மாறுறாமற் குற்றமில்லாரை இனிது கூறி விடுத்தலுங் குற்றமுடையாரை அறங்கூறி யொறுத்தலுங் காவற்றொழில் புரிவார்க்கு இன்றியமையா நடுவுநிலைமை யாகும். உண்மை கண்டும் ஓறாது குற்றமுடையார்பாற் கைக்கூலி வாங்கிக்கொண்டு நடுவின்றி அறத்தின் வழுவுதல் அரசிய லொழுக்கத்தையும், உலகிய லொழுக்கத்தையும் ஒருங் கழிப்பதாகும். ஈண்டுக் கொத்தவால், செம்படவன் கூறிய செய்திகளைப் பொறுமையொடு கேட்ட பின், அச்செம்படவன் குற்றவாளி யல்லனென ஒருவாற்றாற் றுணிந்து, அவ்வளவில் நில்லாது அவன் கையில் அகப்பட்ட அரசனது கணையாழியின் வரலாற்றையும் நன்கறிந்து தெளிவான் வேண்டி, அதனை அரசற்குக் கொண்டு போய்க் காட்டி, அதனுண்மை ஐயுறவின்றித் தெளிதலுங் குறிக்கற்பாலதாகும். அதுவேயு மன்றிச், சகுந்தலையின் விரலை விட்டு நழுவிக் காணாது போய், அதனால் அளவிலாப் பேரல்லல் விளைத்த தனது கணை யாழியை மீண்டுங் காணக்கிடைத்துப், பழைய நினைவு வரப்பெற்ற உவகையால் அரசன் செம்படவற்கு விலையுயர்ந்த பரிசில் கொடுத்து விடுக்கக், கொத்தவால் அதனை முழுதுமாதல் அதிலொரு பகுதியாதல் மறையாது கொணர்ந்து, முற்றுமே அச்செம்படவற்கு வழங்கிய கரப்பில்லா உள்ளப்பான்மை மிக விழுமிய தொன்றாய்த் துலங்காநிற்கின்றது. மேலுந், தன்கீழ்க் காவலாளர் இச்செம்படவனைச் சுடுசொற் கூறி வையுமாப் போல், தலைவனாகிய கொத்தவால் ஏதொரு வன்சொல்லுங் கூறாமையினை உற்றுநோக்குங்கால் இவன் அமைதியும் இனிய மென்றன்மையும் உடையனாதல் தெற்றென விளங்காநிற்கும். ஈதன்றோ தலைமை செலுத்துவார்க்குரிய சீர்த்த இயல்பாகும்? இத்தகைய சீர்த்த இயல்புகள் வாயாத தலைவர்களது ஆட்சியின் கீழிருந்து பெருந்துன்பம் உழந்தார்க்கே, இக்கொத்தவாற் பெருந்தகையின் அருந்தகை மாட்சி நன்கு புலனாகும். ஆசிரியர் காளிதாசர் இத்தன்மையனான ஒரு சிறந்த ஆண்டகையை ஈண்டு நகர்காவற் றலைமையிற் கொணர்ந் தியைத்தது, அப்பெற்றியனான ஒரு தலைவனின் அருமை பெருமையினை அறிவித்தற்கே போலும் இனிக், கல்லெல்லாம் மாணிக்கக் கற்களேயாயின் மாணிக்கத்தின் சிறப்புந் தலைமையும் புலனாகவன்றே சிறப்பில்லாச் செங்கற்களும் மிகுதியாய் உளவாதலாலன்றே சிறப்புடைய அருமாமாணிக்கத்தினுயர்வு வீறி விளங்கா நிற்கின்றது? அதுபோலக், கொத்தவாலின அரும்பெருந் தகைமை பொள்ளெனப் புலப்படுதல் வேண்டியே, வல்லியற்கையுஞ் சுடுமொழியுங் கூடிய ஏனை அவன் காவலாளரையும் ஆசிரியர் அவனோடு உடன்வைத்துக் காட்டுவாராயினர். நகர்காவற்காரரிற் பெரும்பாலார் இரக்க நெஞ்சமுங் கண்ணோட்டமும் இன்சொல்லும் இல்லா வன் கண்ணரா யிருத்தலைத் தெரிவித்தற்கே, ஈண்டு ஆசிரியர் அக்கூட்டத்திற்கு அடையாளமாகச் சூசகன், சானுகன் என்னும் இருவரையும் ஈண்டுக் கொணர்ந்து காட்டினாரென்க. இனி, இக்கதை நிகழ்ச்சிக்குத் தலைவனுந் தலைவி யுமாயுள்ள துஷியந்தனுஞ் சகுந்தலையுந் துருவாசரது வசை மொழியால் வேறு பிரிந்து நின்ற துயர நிலையை மாற்றி அவரை ஒருங்கு கூட்டுதற்கு, அவர் ஈன்ற மகன் சர்வதமனனும், அவன்றன் ஆண்மைக் குணங்களும் ஒட்டுவாயாயிருத்தல் காட்டுவாம். இந்திரன் நகர் சென்று மீண்டு இந்நிலவுலகு நோக்கிக் கீழ் இழியுங்கால் வழியில் தோன்றிய ஏமகூட மலையைக் கண்டு அதனைச் சுட்டி வினவிய துஷியந்தனுக்கு அம்மலையின் வரலாறும் அதன் கண் மாமுனிவரான காசியபர் தம் மனைவியுடன் தவம் இயற்றுமாறும் மாதலி உரைப்ப, உடனே அரசன் அம்முனிவர் பிரானைக் கண்டு வணங்கும் விழைவுமீ தூர்ந்து, அவரது தவப்பள்ளிக்குச் சென்றவன், மாதலி அம் முனிவரது காலம் அறிந்து வரும்வரையில் ஒரு பிண்டிமர நீழலில் அமர்ந்திருந்தான். அந்நேரத்தில், அங்குள்ள முனிவர் மகளிர் இருவருடன் ஒரு சிறுவன் ஒரு சிங்கக் குட்டியை அதன் தாயினின்றும் பிடித்திழுத்து எடுத்துக் கொண்டு, அம்மகளிர் எவ்வளவு சொல்லியுங் கேளாமல் அதனைக் கசக்கி விளையாட, அம்மகளிருள் ஒருவர் அருகிருந்த அரசனை நோக்கி அதனை அவன் கையினின்றும் விடுவிக்குமாறு வேண்ட, அரசனும் அவ்வாறே செய்கையில், அச்சிறானது வடிவும் அரசனது வடிவும் ஒத்திருத்தல் கண்டு இறும்பூதுற்று அம்மகளிர் அரசனோடு உரையாடும் வகை யிலிருந்து அச்சிறான் தன் மகனே யென்பதும், அச்சிறானின் தாயுந் தன் காதன்மனை யாளுமான சகுந்தலை அங்கே அத் தவப் பள்ளியில் நோன்பு நோற்றுக் கொண்டிருக்கின்றா ளென்பதும் எல்லாம் அரசன் ஒருங்குணர்ந்த பேருவகை யனாய்ச் சகுந்தலையை மீண்டுந் தலைக்கூடப் பெறுகின்றான். இங்ஙனம் நிகழும் நிகழ்ச்சியிற் சர்வதமனனாகிய அரசன் மகனை முதன்முதற் கொணர் கையிலேயே அவனது அஞ்சா நெஞ்சத்தினையும், ஆண்மை யினையும் புலப்படுத்தும் ஆசிரியரது விரகு பெரிதும் வியக்கற்பால தொன்றா யிருக்கின்றது. ஒரு முழு நிலா நாளின் மாலைப் பொழுதின் றொடக்கத்தே கீழ்பாற் றோன்றும் முழுமதியின் செக்கச்சிவந்த வட்டவடிவும், அந்நாளின் அதே நேரத்தே மேல்பால் மறையும் நிலையில் தோன்றுஞ் செஞ்ஞாயிற்றின் செக்கச்சிவந்த வட்டவடிவும் பெரும்பாலும் ஒத்த தன்மையவாய்க் காணப் படினும், ஒன்று ஆற்றலிற் குறைந்து தண்ணென்று விளங்கு தலும், மற்றொன்று ஆற்றலின் மிக்கு வெச்சென் றிருத்தலுங் கண்டாமன்றே. அது போலவே, ஒரு முனிவர் மகனும் ஓர் அரசன்மகனும் வெளித் தோற்றத் தளவிற் பெரும்பாலும் ஒத்திருப்பினும், முன்னையோன் அமைதியும் அச்சமும் உடையனா யிருத்தலும், பின்னையோன் சுருசுருப்பும் அஞ்சா மையும் உடையனாயிருத்தலுந் தனித் தனியே பிரிந்து விளங்கா நிற்கும். இவ்வாறு பிரிந்து விளங்கும் அடையாளங் கொண்டே துஷியந்தன் இச்சிறுவனை, ஏதோ ஓர் உரமான சுடரின் வித்துப் போற் காணப்படுகின்றான் என எண்ணி ஐயுறு கின்றான் (136). ஆசிரியர் இங்ஙனங் கொணர்ந்து இயைத்த இச்சிறான் இல்வழியும், அரசன் காசியப முனிவரை வணங்கச் சென்றக்கால் அவரால் அவன் சகுந்தலை ஆங்கிருக்குஞ் செய்தி அறிந்து அவளைத் தலைக்கூடுதல் போதருமாயினுந், தம் காதலன்பின் சேர்க்கையிற் பிறந்து, வேறு பிரிந்த தம்மை மீண்டும் ஒருங்கு கூட்டும் அச்சிறானை இடைநிறுத்தி, அவ்வாற்றால் அரசற்குஞ் சகுந்தலைக்கும் முன்னிருந்த காதற் பேரன்பினைப் பின்னுந் தூய்தாகப் பெருகச் செய்து, இரண்டு வாவியினை இடைநின்று இயைக்கும் ஒரு சிற்றாறு என அவனைப் பயன்படுத்தி, இந்நாடகக் கதை நிகழ்ச்சியினை ஈற்றில் அன்பு வெள்ளத்திற் றோய்த்துச் சுவை மிகுத்திருக்குந் திறம் உள்ளுந்தோறும் உள்ளத்தைக் களிப்பாற் றுளும்பச் செய்யுந் தன்மைத்தாய்த் திகழ்தல் காண்க. அடிக்குறிப்புகள் 1. Prof. Dowden in ‘Shakspeare’s Portraiture of Women’ in his “Transcripts and Studies,” pp.359-360 இதிலிருந்து மேலெடுத்துக் காட்டிய பகுதியின் மூலத்திலுள்ள Juliet என்னும் பெயர்க்குமாறாகச் சகுந்தலை யென்னும் பெயரை இங்கு அமைத்தேம். 2. Much Ado About Nothing. 3. Romeo And Juliet. 6. கதைநிகழும் இடமுங் காலமும் இனி, இந்நாடகக்கதை நிகழும் இடமுங் காலமும் இன்னவென்பது காட்டுவாம். இந்நாடகத்தின் முதல் நான்கு வகுப்புக்களிற் காட்டப்பட்ட நிகழ்ச்சிகள், இமயமலையின் அடிவாரத்தே யுள்ளதான கண்ணுவமுனிவரது தவவுறையுளில் நடைபெறுவனவாகும். ஐந்து ஆறாம் வகுப்புக்களின் நிகழ்ச்சிகள் துஷியந்த வேந்தனது தலைநகரான அத்தினா புரத்தின்கண் நடைபெறா நிற்கின்றன. இறுதியிலுள்ள ஏழாம் வகுப்பின் நிகழ்ச்சிகள் ஏமகூட மலைக்கண்ண தான மாரீச மாமுனிவரது தவப்பள்ளியில் நடைபெறுகின்றன வென்க. இனி, அங்ஙனம் அவ்விடங்களில் நிகழும் நிகழ்ச்சிகள் எக்காலத்தே துவங்கி மற்று எக்காலத்தே முடிவுபெறு கின்றனவென்பது சிறிது ஆராயற்பாற்று. வேனிற்காலம் இப்போதுதான் தொடங்கி யிருக்கின்றதெனச் சூத்திரதாரன் இந்நாடக முன்னுரைக் கண்ணே கூறக் காண்டலாலும், அரசர்கள் வேட்டமேற் செல்லுதற்கேற்ற காலம் வேனிற் காலமே யாகலானுந் துஷியந்த மன்னன் தேரூர்ந்து வேட்ட மாடுதற் பொருட்டுக் கானகம் நோக்கிச் செல்லும் நிகழ்ச்சியும், அதனையடுத்து நிகழும் ஏனை முதல் வகுப்பு நிகழ்ச்சிகளும் இளவேனிற்காலத் துவக்கமாகிய சித்திரைத் திங்களில் நடைபெறுவனவாதல் அறியப்படும். அதுவேயுமன்றி, அரசன்றன் அன்னையார் தாம் வடசாவித்திரி என்னும் நோன்பினை நோற்கும் வரலாறும், அது முடிவுபெறும் நான்காம் நாளில் தம்புதல்வன் தம்முடன் இருக்கவேண்டிய முதன்மையுங் குறிப்பிட்டுக் கரபகன் என்பான்வழி விடுத்த செய்தி கானகத்திலிருக்கும் அரசற்கு அறிவிக்கப்படுதலை இரண்டாம் வகுப்பின் ஈற்றிற் காண்க (40,41). இவ் வடசாவித்திரி நோன்பானது சித்திரைத் திங்கள் பதினைந்தாம் நாட்கண் முடிவுபெறுவதென்பது காத்தியவேமர் என்னும் உரை யாசிரியரால் உரைக்கப்பட்டது. எனவே, சித்திரைத் திங்கள் வளர்பிறையிற் பன்னிரண்டாம் நாள் அரசற்கு அச்செய்தி அவன்றன் அன்னையாரிடமிருந்து வந்ததாகல் வேண்டு மென்பது பெறப்படும். படவே, அரசன் சித்திரைத் திங்களின் றொடக்கத்திலேயே வேட்டமேற்கொண்டு கானகம் புகுந்தமை யும் அறியப்படும். சகுந்தலையிருந்த கண்ணுவரது பாழிக்கு வரும்முன், அரசன் பலநாட்கள் அக்கானகத்தின் மற்றைப் பகுதிகளில் வேட்டமாடிக்கொண் டிருந்தானாகல் வேண்டு மென்பதூம் இரண்டாம் வகுப்பின் முதலில் விதூஷகன் தனது துன்பத்தை வாய்விட்டுச் சொல்லிப் புலம்புமாற்றால் நன்கு விளங்காநிற்கின்றது. அரசன்றன் அன்னையாரிடமிருந்து செய்தி வந்தது சித்திரை பன்னிரண் டாம் நாளில் என்பது, அப்பன்னிரண்டாம் நாளில் அரசன் கானகத்திருக்கும் இருப்பினை நுவலும் இரண்டாம் வகுப்பின் ஈற்றிற் குறிக்கப்படுதலால், முதல் வகுப்பின் நிகழ்ச்சி அதற்கு முந்தின பதினோராம்நாட் பிற்பகலில் நடந்ததாகல் வேண்டும். அரசன் பிற்பகல் மூன்று மணிக்கு வேட்டமேற்கொண்டு, ஒரு மானைத் துரத்திய படியாய்க் கண்ணுவரது பாழிக்குள் நுழைந்த நேரம் ஏறக்குறைய நான்குமணியாய் இருக்கலாம். அந்நேரத்திற் சகுந்தலையும் அவடன் றோழிமாரும் பூஞ்செடி கொடிகட்குத் தண்ணீர்விடத் துவங்கியதும் பொருத்தமாகவே காணப்படு கின்றது. ஏனெனில், இளஞ்செடி கொடிகட்குந் தண்ணீர் விடுதற்கேற்ற பொழுது காலையும் மாலையுமே யாம். இது கொண்டு, அரசன் சகுந்தலையையும் அவடன் பாங்கி மாரையுங் கண்டு உரையாடியதும், அவரைக் காண்டற்குமுன் வேட்டமேல் ஒரு மானைத் துரத்திச் சென்றதும் எல்லாம் அந்நாளின் காலைப்பொழுது துவங்கி நடந்தன வாகல் வேண்டுமென்று கூறினாரும் உளர். அது பொருந்தாது. என்னை? அரசன் காலையில் துயில்நீங்கி யெழுந்தது முதல் நீராடுதல், இறைவனை வழிபடுதல், உணவெடுத்தல், இளைப் பாறுதல், நூல் ஓதுதல், அரசியல் நடாத்தல் முதலான கடன் களைச் செய்யவேண்டி யிருத்தலானும், வேட்டமாடப் புகுந்த இந்நாட்களில் அரசியல் நடாத்தல் இல்லையாயினும் ஏனைக் கடன்களைச் செய்தல் இன்றியமையாததாயிருத்தலானும், இவை தமக்கெல்லாம் ஒருநாளின் முற்பாதியும் பிற்பாதியில் முற்பகுதியுங் கழிய வேண்டி யிருத்தலானும் என்பது. எனவே, அரசன் காலைப் போதிலேயே வேட்டமாடப் புகுந்தா னென்பாருரை கொள்ளற் பாலதன்றென மறுக்க. ஈண்டுத் துஷியந்தமன்னன் சகுந்தலை யைக் கண்டு அவடன் றோழிமாரோடு உரையாடி அவரைப் பிரிந்த நேரஞ் சாய்ங்காலமே யென்பது, முதல் வகுப்பின் முடிவிற் போந்த, ஓ! துறவிகளே துறவாசிரமத்திலுள்ள விலங் கினங்களைக் காக்கும்பொருட்டு நீங்கள் இங்கேயே இருங்கள். துஷியந்த மன்னன் வேட்டமாடிக் கொண்டு கிட்ட வருகின்றா ரென்று செய்தி எட்டுகின்றது, அங்ஙனம் வருதலிற் குதிரைக் குளம்படிகளாற் கிளப்பப் பட்ட புழுதி, சாய்ங்கால வெயில் வெளிச்சத்திற் றோய்ந்து, ஆசிரமத்து மரக்கிளைகளில் உலரத் தொங்கவிட்டிருக்கும் ஈர மரவுரியாடைகளிற் படிவது விட்டிற்கிளிகள் தொகுதி தொகுதியாய் வந்து விழுவதுபோல் தோன்றுகின்றது (23). என்னும் பகுதியிற் சாய்ங்காலவேளை குறிப்பிடப்பட்டிருத் தல்கொண்டு ஐயுறவின்றித் துணியப்படும். எனவே, முதல் வகுப்பின் கதைநிகழ்ச்சி சித்திரைத் திங்கள் பதினோராம் நாட் பிற்பகலிற் றொடங்கிச் சாய்ங்கால வேளையில் முடிவு பெறுகின்றமை நன்கு தெளியப்படுமென்க. இனி, இரண்டாம் வகுப்பின்கட் காட்டப்பட்ட இந் நாடகக் கதைநிகழ்ச்சி சித்திரை பன்னிரண்டாம்நாட் காலையிற் றுவங்கி அன்று மாலையில் முடிவு பெறுகின்றது. இனி, மூன்றாம் வகுப்பின் றொடக்கத்திற் கண்ணுவ முனிவரின் மாணாக்கன் ஒருவன், அவ் வாசிரமத்தின்கண் வேட்கப்பட்ட வேள்விகள் துஷியந்த மன்னனது வில் லாண்மையால் எவ்வகையான இடையூறும் அரக்கர்களால் எய்தாமல் விலக்கப்பட்டு இனிது நிறைவேறுதலைச் சொல்லி வியத்தல்கொண்டும், ஆண்டுள்ள சகுந்தலை அப்போது காதல்வெப்பம் பொறாளாய் வருந்திக் கிடக்கும் நிலை அவள் கூறும் மொழிகளாற் புலப்படுதல் கொண்டும் இரண்டாம் வகுப்பின் நிகழ்ச்சிக்கும் மூன்றாம் வகுப்பின் நிகழ்ச்சிக்கும் இடையிலே பலநாட்கள் கழிந்தமை உய்த்துணரப்படும். படவே, சித்திரைத் திங்கள் கழிந்து, வைகாசித் திங்களின் றொடக்கத்திலே இம்மூன்றாம் வகுப்பின் நிகழ்ச்சி நடை பெற்றிருக்கலாமெனக் கருதுதல் இழுக்காகாது. என்னை? வெம்மை மிகுந்த இந்நண்பகற் காலத்தைச் சகுந்தலை தன் தோழி மாரொடு, பச்சிளங் கொடிப் பந்தரால் மூடப்பெற்ற மாலினி யாற்றங் கரையிலேதான் கழிப்பள் எனவும், ஆ! புதுத் தென்றல் எப்போதும் உலாவப்பெறுகின்ற இவ்விடம் எவ்வளவு இனிதாயிருக்கின்றது! எனவும் (45) அரசன் குறிப்பிடும் இளவேனிற்கால நிலைக்கு ஏற்றது, அவ்விள வேனிற்காலப் பிற்பாதியான வைகாசித் திங்களின் றொடக்கமே யாகலி னென்க. அரசன் வைகாசித் திங்களின் றொடக்கத்து ஒரு நாளின் முற்பாதியில் முனிவர்கள் வேட்ட வேள்வியினைக் காத்து நின்றவன், அது முடிந்ததும் அம்முனிவர்களால் விடை தரப்பெற்றுத் தான் இளைப்பாறும் இடந் தெரிந்து செல்லக் கருதுகையிற், சகுந்தலையைக் காணும் விழைவு மீதூர்ந்து அவள் இருக்கும் இடம் நாடிச் செல்லுங்காலம் அந்நாளின் பிற்பாதியேயாம். அப்பாதியிற் சகுந்தலையைத் தலைக்கூடி அவன் அவளை விட்டுப் பிரிந்த மாலைப் பொழுதோடு இந்நாடகத்தின் மூன்றாம் வகுப்பு முடிவு பெறுதல் காண்க. இங்ஙனஞ் சகுந்தலையைக் கூடிய அரசன் நீண்ட காலம் அக்கானகத்தில் இருந்தவனாகக் கருதுதற் கிடமில்லை. ஏனென்றால், வேட்ட மேற்கொண்டு வந்த அவன், முனிவர்களின் விருப்பத்திற் கிணங்கி அவர்கள் வேட்ட வேள்விகள் முடியுந்தனையும் அவற்றைக் காத்து அங்கிருந்து, அவை முடிந்தபின் ஆண்டிருத்தற்கு வேறு காரணம் உடையனல்ல னாகலினென்பது. அவ்வேள்விகளெல்லாம் பெரும்பாலும் முழு நிலாநாளின் முடிவனவாதலால், அரசன் சிறிதேறக் குறையப் பதினைந்து நாட்களே சகுந்தலையை மணந்து அக்கானகத்தில் இருந்தானாகற்பாலன். ஆகவே, அவன் வைகாசித் திங்களின் முழுநிலா நாளுக்குப் பின்னர்த் தன்நகர்க்கு மீண்டானென்று உய்த்துணர்தல் வேண்டும். இனி. நான்காம் வகுப்பின் நிகழ்ச்சி நடைபெற்ற காலம் இன்னதென்பது ஆராயற்பாற்று. இந்நான்காம் வகுப்பினை யடுத்த ஐந்தாம் வகுப்பின்ககட் சகுந்தலை தன்னுடன் போந்தாருடன் சென்று அரசனெதிர் நிற்கின் றுழி, அவன் அவனை நோக்கிக் கருக்கொண்ட குறிகள் நன்றாய்த் தோன்றும் இம்மாதர்க்கு நானே கணவனென்று ஐயுற்று இவரை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்ளலாம்? (84) என்று கூறும் உரையால், அப்போது சகுந்தலையின் வயிற்றகத்துள்ள கரு வெளியார்க்குப் புலனாகத் தக்கவளவு நன்கு வளர்ந் திருந்தமை அறியப்படும். படவே, சகுந்தலை கணவனில்லத்திற்கு விடுக்கப் பட்ட காலஞ் சிறிதேறக்ககறைய எட்டாந்திங்கள் அல்லது தைத்திங்களிலே யாமென்பதும் இனிது பெறப்படும். அப்போது மழை காலங்கழிந்து முன்பனிக்காலம் நடைபெறா நின்றது; வெயிலின் வெப்பமுந் தோன்றாநின்றது; அதனாலே தான் சகுந்தலையை வழிவிடுக்குங்காற் காசியப முனிவரது தவத்தின் பெருமையால் அவ்வழியில் அழிவெங் கதிர் வருத்தம் அடர்ந்த நிழன் மரங்கள் அகற்றி மகிழ்ச்சி அளித்திடுக! (67) என்று வானத்தின்கண்ணின் றெழுந்த தெய்வவொலி வாழ்த்தா நின்றது. இத்தன்மைத்தாகிய முன்பனிக் காலத்தின் ஒரு நாளிலே - பெரும்பாலும் அது தைத்திங்களின் துவக்கமாயிருக்கலாம் - இந்நான்காம் வகுப்பின்கட் சொல்லப்படுங் கதைநிகழ்ச்சி நடைபெறுவதாதலை, அப்போது காணப்படும் அக் கானகத்தின் இயற்கைத் தோற்றத்தைப் பிரியம்வதை கூறுவது கொண்டும் உய்த்தறியலாம். சகுந்தலையின் பிரிவு ஆற்றாது அக்கானகமுந் துயருறு கின்றதென அவள் சொல்கின் றுழிப், பழுத்த இலைகளை உதிர்க்கின்ற கொடிகள் கண்ணீர் சிந்தி அழுதலைப் போலிருக்கின்றன! எனக் குறிப்பிடுகின்றாள். அங்ஙனம் பழுத்துப்போன இலைகளை மரஞ் செடி கொடிகள் உதிர்க்கின்ற காலம் முன்பனிக் காலமாகிய மார்கழியுந் தையுமே யாகலானும், பெற்றரில்லத்திருந்த மணமகளைக் கணவனில்லத் திற்குப் போக்குவது தைத்திங்களிலேயே நிகழ்தல் தொன்று தொட்ட வழக்கமாய்ப் போதரலானும் இந்நான்காம் வகுப்பின் நிகழ்ச்சி தைத்திங்கட் டொடக்கத்திலே தான் நடை பெறுகின்ற தெனக் கோடல் இழுக்காகாதென்க. இன்னும், அத் தைத்திங்களிலேயும் முழுநிலா நாளினை அடுத்த பின்னாற் அன்றே இந்நான்காம் வகுப்பின் நிகழ்ச்சி நடைபெறாநின்ற தென்பதற்குக், காசியபமுனிவரின் மாணாக்கன் ஒருவன் அன்றை விடியற்காலையில் மேல்பால் முழுமதி மறையுந் தறுவாயிலுங் கீழ்பால் இளஞாயிறு அப்போதுதான் தோன்றி விளங்கும் நிலையிலும் இருத்தல் கண்டு, இலைகிளர் பூண்டுக்குத் தலைவ னாகிய சுடரொளி மதியங் குடபால் வரையின் ஒருபுறஞ் செல்லாநிற்ப ஒரு புறம் வைகறை யென்னுங் கைவல் பாகனை முன்செல விடுத்துப் பொன்போன் ஞாயிறு கீழ்பா லெல்லையிற் கிளறு மன்றே. (94) எனக் கூறுதலே சான்றாம். ஒரே நேரத்தில் அங்ஙனந் திங்களும் ஞாயிறும் மேல் கீழ்பால் எல்லைகளிற் றோன்றல் முழுநிலா நாளின் விடிய லிலன்றி ஏனைநாளில் நிகழாமையின், இந்நான்காம் வகுப்பின் நிகழ்ச்சி அந்நாளினை அடுத்த விடியற்காலையிற் றுவங்கி நண்பகல் வரையில் நிகழாநின்றமை தெற்றென ஓர்ந்து கொள்ளப்படும். இன்னும் இவ்வகுப்பின் நிகழ்ச்சி அந்நாளின் நண்பகலில் முடிதலைச், சார்ங்கவரன், பகலவன் வானத்தின் மேற்பாகத்தில் இவர்ந்து விட்டான். அம்மையாரவர்கள் விரைதல் வேண்டும் என்று கூறுமாற்றால் தெளிந்து கொள்க. இனி, இந்நான்காம் வகுப்பின் நிகழ்ச்சிக்கும் ஐந்தாம் வகுப்பின் நிகழ்ச்சிக்கும் இடையிலே சிறிதேறக் குறைய மூன்று அல்லது நான்கு நாட்கள் கழிந்திருக்கலா மென்பது உய்த்தறியப் படும். துஷியந்தன் தன்நகர்க்குப் புறப்படும் பொருட்டுச் சகுந்தலைபால் விடை பெறுகின்றுழி, அவள் கண்களில் நீர்ததும்ப நின்று பெருமான், எத்தனை நாட் சென்றபின் எனக்குச் செய்தி விடுப்பீர்? என்று வினவ, அவன், தன்பெயர் செதுக்கப்பட்ட கணையாழியை அவள் விரலிலிட்டு, ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வோர் எழுத்தாக இக்கணையாழி யிலுள்ள என்பெயரை எண்ணிக் கொண்டு வா; கடை யெழுத்திற்கு நீ எண்ண வரும் நாளில் என் கண்மணி! நின்னை என் உவளகத்திற்கு அழைத்து வரும்பொருட்டு ஒரு தூதுவன் நின்பால் வந்து நிற்பன் (113) எனக் கூறிய விடை மொழி யிலிருந்து, அரசன் தன் நகரமாகிய அத்தினாபுரத்திற்குச் செல்ல மூன்று நாளும், அங்கிருந்து அவனால் விடுக்கப்படுந் தூதுவன் சகுந்தலைபால் வந்துசேர மூன்று நாளுஞ் செல்லுமென்பது பெற்றாம். பெறவே, சகுந்தலையும் அவட்குத் துணைப் போந்தாரும் இமயமலைச் சாரலின் கண்ணதான தமது கானக உறையுளிலிருந்து அத்தினாபுரஞ் சென்று சேர்தற்கு மூன்று அல்லது நான்கு நாட்களே கடந்திருக்க வேண்டுமென் றுணர்தல் வேண்டும். அது நிற்க. இனி, ஐந்தாம் வகுப்பின் நிகழ்ச்சி ஒரு நாளின் பிற்பாதிக்கண்ணே நடைபெறுவதாய்த் தோன்றுகின்றது. சகுந்தலையும் அவட்குத் துணைப் போந்தாரும் அத்தினா புரத்தின் கண்ணதான அரசனது அரண்மனையில் வந்து சேர்ந்த நேரம் நண்பகற்காலமா யிருக்கின்றது. இஃது, அவர்களது வருகையைக் கஞ்சுகி யென்னும் ஏவலாளன் அரசனுக்கு அறிவிக்கவேண்டிச் செல்லுங்கால், தன் மக்களைப் போலக் குடிகளுடைய அலுவல்களை யெல்லாம் பார்த்துவிட்டு, நண்பகல் வெப்பத்தால் வெதும்பிய அரசியானையானது சுற்றிலுந் தன் யானை மந்தையைப் புல் மேயவிடுத்துத் தான் தனியே ஒரு குளிர்ந்த நீழலில் இளைப்பாறுதல்போல, அரசனும் இளைப்புற்ற மனத்தொடு தனியே இவ்விடத்தில் இளைப்பாறிக் கொண் டிருக்கின்றார். (83) எனத் தனக்குட் சொல்லிக் கொள்ளும் உரையால் தெற்றென விளங்கா நிற்கின்றது. ஆகவே, இவ்வகுப்பின் நிகழ்ச்சி ஒரு நாளின் பிற்பகலிற் றுவங்கி அதன் ஈற்றில் முடிகின்றதென ஓர்ந்துகொள்க. இனி, இவ்வைந்தாம் வகுப்பின் நிகழ்ச்சிக்கும் இதனை யடுத்த ஆறாம் வகுப்பின் நிகழ்ச்சிக்கும் இடையே எத்துணைக் காலங் கடந்ததென்பது சிறிது ஆராயற்பாற்று. அரசன் சகுந்தலையின் கைவிரலில் இட்ட கணையாழி அவளது கையை விட்டுக் காணாது போய்ப் பின்னர்ச் செம்படவன் வழியே மீண்டுங் கிடைக்க, அதனைக் கண்ட துணையானே அரசன் தான் சகுந்தலையை மணந்த வரலாறு முற்றும் நினைவுகூர்ந்து ஆற்றொணாத் துயருழத்தலைக் காட்டும் ஆறாம் வகுப்பின்கண், அவன் கருக்கொண்டுவந்த தன் மனையாளான சகுந்தலையை விலக்கி விட்டுப் பிள்ளை யில்லாக் கொடியனாயிருக்குந் தன்னையுந், தன் னரசுக்குப் புதல்வன் இல்லாமையால் அது சீரழியப் போதலையும் நினைந்து ஆற்றானாயவழி, மேனகை யால் விடுக்கப்பட்டு எவர் கண்ணுக்கும் புலனாகாமல் நின்று அரசனது அவ் ஆற்றாமையினைக் கண்ட சானுமதி என்னுந் தேவமாது, தமக்கு மகனிருப்பதை அறியாது இவர் வருந்து கின்றாரென்று கூறும் உரையாலும், ஆறாம் வகுப்பின் நிகழ்ச்சி யினை யடுத்து நடைபெறும் ஏழாம் வகுப்பின் நிகழ்ச்சிக்கட் காட்டப்படுஞ் சர்வ தமனன் என்னுந் துஷியந்தன் மகன் ஐந்தாண்டுக்குக் குறையாத அகவையினனாய் இருக்க வேண்டு மென்பது தெளியக் கிட்ததலாலும் அரசன் தன்மாட்டு வந்த சகுந்தலையை விலக்கிய நிகழ்ச்சியொடு முடியும் ஐந்தாம் வகுப்பின் காலவெல்லைக்கும், மீண்டுந் தன் கணையாழி யினைக் கண்டு சகுந்தலையை நினைவு கூர்ந்து ஆற்றானாகிய அரசனது நிலையினைக் காட்டும் ஆறாம் வகுப்பு நிகழ்ச்சியின் கால வெல்லைக்கும் இடையே ஐந்து ஆண்டுகள் கழிந்து போயிருக்க வேண்டுமென்பது நன்கு புலனாகா நிற்குமென்க. இனி, ஆறாம் வகுப்பின் நிகழ்ச்சியானது, தான் பிடித்த மீன் வயிற்றினின்றும் எடுத்த ஒரு கணையாழியை ஒருநாட் காலைப் பொழுதில் விற்கக் கொணர்ந்த ஒரு செம்படவனை ஊர்காவற்காரர் பிடித்துக்கொண்ட நேரத்திலிருந்து தொடங்குகின்றது. அரசனது இளமரக்காவில் விழாக் கொண்டாடுதற்குரிய வேனிற் காலந் தோன்றியும், அரசன் கணையாழியைக் கண்டவுடனே சகுந்தலையை மணந்த வரலாறு முற்றும் நினைந்து அவளது பிரிவை ஆற்றானாய காரணத்தால், வேனில்விழாக் கொண்டாடலாகாதென்று தடை செய்திருப்பனைக் கஞ்சுகி என்பான். எடுத்துரைக்கும் உரை கொண்டு (105). இவ்வாறாம் வகுப்பின் நிகழ்ச்சி வேனிற் காலத் துவக்கத்தே நடைபெறுவதாதல் அறியப்படும். அரசன் கணை யாழியைக் கண்டவுடனே வேனில் விழாவைத் தடை செய்த கட்டளை, அவ்விளமரக்காவினை ஒழுங்கு செய்து கொண்டிருந்த பாங்கியர் இருவரும் அறியாதது, அவர்கள் அரண்மனையை விட்டு அக்காவினுக்கு வந்து சில நாட்கள் ஆயினமையால் என்று அவருள் ஒருத்தி கூறும் மொழி கொண்டு (105). செம்படவனிடத்திருந்து கணையாழி பெற்றமை நுவலும் இடையுரைக்கும், அரசன் இளமரக்காவின்கண் இருந்து ஆற்றாமைப் படும் நிகழ்ச்சியினைக் கூறும் பகுதிக்கும் நடுவே சில வைகல் கழிந்தமை உய்த்துணரப்படும். இங்ஙனமாக அரசன் தனது இளமரக்காவிலிருந்து ஆற்றாமைப்படும் நேரம் வேனிற்காலத் தொருநாளின் நண்பகற் காலம் என்பது அறிந்து கொள்க. அதன்பின் அரசன் மாதலி கொணர்ந்த தேரில் ஏறித் தேவேந்திரற்கு உதவி செய்தற் பொருட்டு வானுலகு நோக்கிச் செல்லும் நேரம் அந்நாளின் பிற்பகலாகக் காணப்படுகின்றது. அவ்வளவோடு இவ்வாறாம் வகுப்பின் நிகழ்ச்சி முடிவு பெறுதல் காண்க. இனி, ஆறாம் வகுப்பின் நிகழ்ச்சிக்கும் ஏழாம் வகுப்பின் நிகழ்ச்சிக்கும் இடையே சில நாட்கள் கழிந்தனவாகல் வேண்டும். இந்திரனுலகு சென்ற துஷியந்த மன்னன அவற்குப் பகைவரான அரக்கர்களொடு பொருது அவர்களைத் தொலைத்து, அவனாற் சிறப்புப் பெறுதற்குக் குறைந்தபடி பதினைந்து நாட்களாவது சென்றனவாகல் வேண்டும். அரக்கர்களைத் தொலைத்தபின் மறுநாளே துஷியந்தன் மாதலி ஊருந் தேரிலேறித் தன் நகர்க்கு மீள மண்ணுலகு நோக்கிக் கீழ் இழிகின்றானென்பது, ஐய மாதலி, நேற்று நான் அரக்கரொடு போர் புரியச் சென்ற கிளர்ச்சியில் வானின்கண் எழும்போது இத்துறக்க நாட்டின் இடங்களை வழியில் நோக்கிற்றிலேன். இப்போது வாயுமண்டலத்தின் எவ்விடத்தே வந்திருக்கின்றோம்? (130). என்று அவன் மாதலியை நோக்கி நிகழ்த்தும் வினாவுரையால் தெற்றென விளங்குகின்றது. இங்ஙனமாக மறுநாளே நிலவுலகு நோக்கிவரும் அரசன் அந்நாளின் எந்நேரத்தே வானுலகி னின்றும் புறப்பட்டு, எந்நேரத்தே மண்ணுலகை அண்மினா னெனின்; அவன் ஊர்ந்த தேர் நிலத்திலன்றி வானூடு செல்வ தொன்றாதலால், அந்நாளின் பிற்பகலிலே அவன் புறப்பட்டு, மாலைக் கால வெயில் வெளிச்சம் இருக்கும்போதே மண்ணுலகின் கண்ணதான ஏமகூடமலையில் விரைந்து போந்து இழிந்தனன் என்பது புலனாகா நிற்கின்றது. இஃது எற்றாற் பெறுது மெனின், மாலைக் காலத்து மங்கொளி மருங்கிற் புயலரண் போலப் பொருந்தித் தெளிபொன் உருக விட்டாலென மருவித் தோன்றிக் குணகடல் குடகடல் கழூஉவக் கிடக்கும் வளஞ்சா லிம்மலை யாதோ வுரைமோ! (132) என்று அரசன் ஏமகூடமலையின் மாலைக் காலத் தோற்றத்தைக் கண்டு வினவுதலாற் பெறுது மென்பது. பின்னர் அவன் அம் மலைக்கட் சென்று தன் மகனையும் மனைவியையுந் தலைக்கூடி, அவருடன் சென்று காசியப முனிவரையும் அவர்தம் மனைவி யாரையும் வழிபட்டுத் தன் நகர்க்குத் திரும்பிய காலம் அம் மாலைக் காலத் திறுதியா யிருக்கலாமென்று உய்த்துணர்தல் வேண்டும். எனவே, இச்சாகுந்தல நாடகக் கதை நிகழ்ச்சி துவங்கி முடிந்த காலப் பரப்பு ஐந்தரை அல்லது ஆறு ஆண்டு ஆகல் வேண்டுமென்பது அறிந்துகொள்ளப்படு மென்க. 7. காளிதாசர் வரலாறு இனி, இச் சாகுந்தல நாடகத்தை இயற்றிய ஆசிரியர் காளிதாசரின் வரலாறு உண்மை வழுவாது வழங்கக் காண் கின்றிலேம். இவர் பிறந்தநாடு இன்னதென்பதும், இவரைப் பெற்றார் இன்னவரென்பதும், இவர் கலைபயின்று வளர்ந்த வாறும் பிறவும் இவை யென்பதும் ஒரு சிறிதளவாயினும் உண்மையாகப் புலப்படவில்லை. இவரைப் பற்றி யிப்போது வழங்குவனவெல்லாம் அவரவர் தத்தமக்கு வேண்டியவாறு கட்டி வழங்கும் வெறும் பொய்க் கதைகளேயன்றிப் பிறவல்ல. சமகிருத மொழி உலக வழக்கில் இல்லாமல் நூல் வழக்கின் மட்டும் பயின்று வந்த காரணத்தானே, அம்மொழிப் பயிற்சியுடையார் தத்தமக்குத் தோன்றிய வாறெல்லாம் பொய்யும் புளுகும் புனைந்து கட்டி, அதன்கட் பொய்ந்நூல்கள் பல எழுத இடம் பெற்றார். போச சரித்திரம் என்பது வெறும் பொய்க் கதையே யல்லாமல், அது காளிதாசரது வரலாற்றுண் மையினை உள்ளவாறே தெரிப்ப தொன்றன்று. ஏனென்றாற், போசன் என்னும் மன்னன் தாரை என்னும் நகரிற் கி.பி.1040 முதல் 1090 வரையில் அரசாண்டவ னென்பது ஒரு கல்வெட்டினால் அறியக் கிடக்கின்றது.1 மற்றுக், காளிதாசரோ கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற் பாதியி லிருந்தவரென்பது ஆராய்ச்சியாற் பெறப்படுகின்றது. ஆகவே, போசனுக்கு அறுநூறு ஆண்டு முற்பட்டவராகிய காளிதாசரை, அவனோடு ஒருங்கிருந்தவராகக் கூறும் போச சரித்திரம் வெறுங் கட்டுக் கதையேயாதல் தெளியப்படுகின்றதன்றோ? ஆயினும், இவர் வடநாட்டிற் குடியேறி வைகிய தமிழ் மக்களில் இடையர் வகுப்பிற் பிறந்தவரென்பதும், இளமைப் பருவத்திலேயே கல்விப் பொருள் பெறுதற்கு இன்றியமையாது வேண்டிய செல்வப்பொருள் இல்லாமையால் இவர் வறியராய் ஆடு மாடு மேய்த்துக்கொண் டிருந்தன ரென்பதும், அங்ஙனம் வறுமையால் வருந்தினுங் கல்வி பயிறலில் இவர் இடையறாத விழைவுகொண் டிருந்தமையால் இவர் தமக்கு எல்லாம் வல்ல இறைவியின் அருளால் எங்ஙனமாகவோ கல்வியறிவு வாய்ப்பதாயிற் றென்பதும், இவர் பிறந்தது தமிழக் குடியே யாயினுந் தமது காலத்தில் தாமிருந்த வடநாட்டில் மிக்கு வழங்கிய வடமொழியைப் பயின்று அதில் நல்லிசைப் புலவராய் வயங்கின ரென்பதும், இவர் தம்மிடத்து மிக்க அன்பு பூண்டொழுகிய ஒரு காதற் பரத்தையைத் தமக்கு உரியவளாகக் கொண்டு வாழ்ந்தன ரென்பதும் போன்ற சில குறிப்புக்களே இவரைப்பற்றி அறியக்கிடந்தனவாகும். இவர் இறைவியாகிய காளியின் அருளாற் கல்வியில் வல்லராகித் தீஞ்சுவைப் பாக்கள் இயற்றுந் திறம்பெற்று, அம்மைக்குத் தொண்டு பூண்டு ஒழுகினமையாற் போலும் இவர், காளிதாசர் என்னும் பெயர் பெறலாயினது முதலிற் கல்வி யறிவும் பாட்டுப் பாடும் வன்மையும் இல்லாதவராய் இருந்தார் இவர் பின்னர் இறைவ னருளால் அவ்விரண்டிலும் வல்லராய்த் திகழ்ந்த நிகழ்ச்சி இந்நாட்டிலே மட்டுமன்றி அயல் நாட்டிலும் நேர்ந்தமை வரலாற்று நூல்களால் அறியக் கிடக்கின்றது. இற்றைக்கு 1253 ஆண்டுகளுக்கு முன்னிருந்த காட்மன் என்னும் ஆங்கில நல்லிசைப் புலவர் பா இயற்றுதலில் வல்லராயதூஉம் இறைவன் திருவருளினாலே யாம். இவர் முதலில் ஒரு திருமடத்தில் ஊழியக்காரரா யிருந்தனர். அத்திருமடத்தில் திருவிழா நடக்குங் காலங்களில் அங்குள்ள முனிவரரும் பிறரும் யாழினை இயக்கி ஒருவர்பின் ஒருவராய் இறைவனைப் பாடிக்கொண்டு வருகையில் தமது முறை வரும்போது தமக்கு ஏதும் அங்ஙனம் பாடத் தெரியாமை பற்றிக் காட்மன் என்பவர் உளமும் உடலுங் குன்றித் தனியே போயிருப்பது வழக்கம். ஒருகால் அங்ஙனந் திருவிழா நடைபெறுகையில், அவர் அத்திருமடத்தினுள்ளே செல்லுதற்கு அஞ்சித், தாம் பார்த்து வருங் குதிரைக் கொட்டகையிற் போயிருந்தவர் அயர்ந்து உறங்கிவிட்டனர். அப்பொழுது அவரது கனவின்கண் ஒரு தெய்வந் தோன்றித் திருமடத் தினுள்ளே திருவிழா நடைபெறு கையில் நீ ஏன் இங்கே படுத்துறங்குகின்றனை? என்று வினவ, அவர் ஐயனே, யான் பாட அறியேனே! என்று விடை கொடுத்தனர். மீண்டும் அத்தெய்வம் நீ பாட்டுப் பாடத் துவங்கு. உனக்கது வரும் என்று கட்டளையிட, அவர் பெருமானே, யான் எதைப்பற்றிப் பாடுவேன்? என்று கேட்க, அத்தெய்வம் இறைவன் முதன் முதற் படைத்த படைப்பு வரலாற்றினைப் பாடு என ஆணை தந்து மறைந்து போயது. அதன்பின் அவர் உடனே விழித்து எழுந்து பார்க்கத், தமக்குப் பாட்டுப் பாடும் ஆற்றல் மிகுந்து பொங்கக் கண்டு இறும்பூதுற்றவராகி, உடனே திருமடத்தினுட் சென்று இறைவனது படைப்பின் றோற்றத் தைப்பாடி, அதனை ஒரு தொடர்நிலைச் செய்யுளாகக் (காவியமாகப்) பாடியருளினார். அவர் அங்ஙனம் அருளிச் செய்த நூல் இன்னும் ஆங்கிலத்தில் வழங்கி வருகின்றது. இனி, இத்தென்னாட்டின் கண்ணும் இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன் இருந்த சைவ சமய ஆசிரியரான திருஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டுள்ள சிறுவரா யிருந்த ஞான்றே, இறைவனையும் இறைவியையுந் தங்கட் புலனெதிரே கண்டு, அவரால் ஒரு பொன் வள்ளத்திருந்து ஞானப்பால் ஊட்டப்பெற்றுத், தமிழ்ச் சுவை நிரம்பிய அருமைத் திருப்பதிகங்கள் ஆயிரக்கணக்காக அருளிச் செய்தமையும், அவை தேவாரம் என்னும் பெயரால் இன்றுகாறும் வழங்கி வருதலும் எவரும் அறிவர். இவர் மூன்றாண்டு அகவையினராய் இருந்த போதே கடவுளை நேரே கண்டு ஞானப்பாலூட்டப் பட்ட அவ்வரலாறு, அவர் அருளிச் செய்த திருப்பதிகங் களிலேயே அகச் சான்றாகக் குறிப்பிடப் பட்டிருத்தல் காண்க. இதன் விரிவு மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது பெருநூலிற் காணப்படும். இங்ஙனமே, காளிதாசர் அருள் பெற்றுப் பாடினமைக்கு வலுவான அகச்சான்று புறச்சான்றுகள் காணக் கிடையா வாயினும், அவர் அது பெற்றமை கூறுங் கதையில் ஒரு சிறிதேனும் உண்மை யிருக்கலாம். என்றாலுஞ் சான்றில்லா மையின் அதனை வற்புறுத்தாது விடுதலே வாய்வதா மென்க. இனிக், காளிதாசரது சமயம் இன்னதென்பது சிறிது ஆராயற்பாற்று, இச் சாகுந்தல நாடக நூலின் முதலிலும் முடிவிலும் இவர் சிவபெருமானையும் அவர்தஞ் சிறப்படை யாளங்களையும் விதந்தெடுத்துக் கூறி வணங்கிக் கடவுள் வாழ்த்து உரைத்தமையானும், இங்ஙனமே இவர் தாம் முதலில் இயற்றிய மாளவிகாக்நிமித்திரம் என்னும் நாடக நூன் முகத்தும், அதற்குப் பின் இயற்றிய விக்ரமோர் வசீயம் என்னும் நாடக நூன்முகத்துஞ் சிவபிரானுக்கே வாழ்த்துக் கூறினமை யானுங், குமாரசம்பவ காவியத்திற் சிவபிரானே முழுமுதற் கடவுளென (2,58) இவர் நிலை பெறுத்திச் சொல்லுதலானும் இவரது சமயம் சைவமே யாதல் தெற்றெனத் துணியப்படும். இனிக், காளிதாசர் இயற்றிய நூல்கள்: மாளவிகாக் நிமித்திரம், விக்ரமோர்வசீயம், சாகுந்தலம் என்னும் நாடக நூல்கள் மூன்றுங், குமாரசம்பவம், இரகுவம்ஸம் என்னுங் காவிய நூல்கள் இரண்டும், மேகதூதம் என்னுஞ் சிறு நூல் ஒன்றும், ஆக ஆறு நூல்களே யென வடமொழி வல்லா ரனைவரும் ஒத்து ஒருமுகமாய்க் கூறுகின்றனர். ஆயினும், இவர் இயற்றியனவாக வழங்கி வரும் ஏனை நூல்கள்: குந்தேச்வர தௌத்யம், ருது சம்ஹாரம், அம்பாதவம், கல்யாணதவம், காளீதோத்ரம், காவ்ய நாடகாலங்காரம், கங்காஷ்டகம், கடகர்ப்பரம், சண்டிகா தண்டகதோத்ரம், சர்சாவம், ஜ்யோதிர்விதாபரணம், துர்கடகாவ்யம், நளோதயம், நவரத்ன மாலா, புஷ்ப பாண விலாசம், மகரந்தவதம், மங்களாஷ் டகம், மகாபத்யஷ்டகம், ரத்நகோசம், ராக்ஷஸ காவ்யம், லக்ஷ்மீதவம், லகுதவம், வித்வத்விநோத காவ்யம், வ்ருந்தாவனகாவ்யம், வைத்யமநோரமா, சுத்திசந்த்ரிகா, சிருங்காரதிலகம்? சிருங்காரரசாஷ்டகம், சிருங்காரசார காவ்யம், சியாமளாதண்டகம், சுருதபோதம், சேதுபந்தனம் முதலிய பலவாம். இவையெல்லாஞ் சாகுந்தலம் இயற்றிய காளிதாசர் செய்தன ஆகா என்பது, அவையற்றின் பெயர்களை உற்று நோக்குதலானேயே விளங்கும். இவை தம்முள், இறைவியாகிய காளியை வழுத்து முறையிற் பாடப் பட்டிருப்பன சிலமட்டும் ஒருகால் இவராற் பாடப் பட்டனவாய் இருக்கலாம். இறைவியின் அருளைப் பெற்று இவர் பாடுந்திறல் எய்தியது உண்மையாயின், இவர் காளிமேற் பாடிய நூல்களும் உண்மையாய் இருக்கலா மல்லவோ? அவை யொழிந்த ஏனைய நூல்கள் காளிதாசராலேயே இயற்றப் பட்டன வென்று கோடற்குச் சான்றேதும் இல்லையென்க. அற்றேல், இத்துணைப் பல நூல்கள் அவரியற்றியனவாக வழங்கப்பட்ட லாயினது என்னை யெனிற்; காளிதாசர்க்குப் பின் அவரது பெயர் பூண்ட புலவர் பலர் இருந்தமையின், அவர்களியற்றிய நூல்களெல்லாம் முதற் காளிதாசர்க்கு உரியனவாக மயங்கவைத்துப் பின்னுள்ளாரால் வழங்கப்பட லாயின. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னிருந்த இளைய இராசசேகரன் என்பான் தான் இயற்றிய செய்யுள் ஒன்றில், காளிதாச த்ரயீகிமு எனக் கூறுதல்கொண்டு, அவன் அறிந்த காளிதாசர் மூவரென்பது பெறப்படா நிற்கின்றது. இவ் இராசசேகரன் காலத்திற்குப் பின் இன்னும் எத்தனை காளிதாசர்கள் இருந்தனரோ! இனையரெல்லாம் பிற் பிற் காலத்தே இயற்றிய எளிய நூல்களின் கால அளவைகளை ஆராய்ந்துணரும் வரலாற்று நூலறிவு வாய்ப்பப்பெறாதார், அவை தம்மை யெல்லாம் முதற் காளிதாசர் இயற்றிய நூல்களோடு ஒருங்குவைத்தெண்ணிப் பிழைபடலாயினாரென விடுக்க. அடிக்குறிப்பு 1. A. Weber’s The History of Indian Literature, pp.201,202 8.காளிதாசரது காலம் இனிக், காளிதாசர் இருந்த காலம் இன்னதென்பதனை ஆராய்ந்து காட்டுவாம். இற்றைக்கு ஐம்பது ஆண்டுகள் முன்னரே காளிதாசரது காலத்தை ஆராய்ந்த ஆசிரியர் மாக்மூலர் அது கி.பி. நான்கல்லது ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகாதென்று முடித்துக் கூறினார். 1 அவர் கண்ட அம் முடிபே, பின் அதனை மேலும் மேலும் ஆராய்ந்த ஆசிரியர் கண்ட முடிபுமாயிருக்கின்றது. கி.பி. 634ஆம் ஆண்டிற் செதுக்கப்பட்ட ஐகோல் கல்வெட்டு ஒன்றிற் காளிதாசர், சுபந்து, பாரவி, குணாட்டியர் என்னும் ஆசிரியர் நால்வரும் ஒருங்குசேர்த்து உரைக்கப்பட் டிருக்கின்றனர். இவருட் பாரவி என்னும் புலவர் இயற்றிய கிராதார்ச்சுநீயம் என்னும் நூலிற் பதினைந்து காண்டங்களுக்கு உரையெழுதிய அவிநீதர் என்பார் கி.பி. 470ஆம் ஆண்டில் இருந்தாரென நாயவர்மரது கருநாடக பாஷா பாஷணத்தில் தெற்றென விளக்கப்பட்டிருக்கின்றது.2 இவ்வாற்றாற் காளிதாசரும் பாரவியுங் கி.பி. நான்காம் நூற்றாண்டிலாதல் ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் இருந்தாராகல் வேண்டுமென்பது நன்கு பெறப்படாநிற்கும். இனி, விக்கிரமாதித்த வேந்தனது அவைக்களத்தே தன்வந்தரி, க்ஷபணகன், அமரசிங்கன், சங்கு, வேதாள பட்டன், கடகர்ப்பரன், காளிதாசன், வராகமிகிரன், வரருசி என்னும் ஒன்பது மணிகளும் விளங்கினரென வடமொழிச் செய்யுள் ஒன்று குறிப்பிடுகின்றது. இச்செய்யுள், இற்றைக்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே அஃதாவது கி.பி. பதினாறாம் நூற்றாண்டின்கண் இயற்றப்பட்ட நூல் ஒன்றிலேமட்டுங் காணப்படுகின்றதெனவும், வான் நூலாசிரியரான வராகமிகிரர் அவந்திமாநகரிற் பிறந்து கி.பி. 587ஆம் ஆண்டில் இறந்து பட்டமையால் அவர்க்கு ஒரு நூறாண்டு முற்பட்டிருந்த வராகக் காணப்படுங் காளிதாசர் வராகமிகிர ரோடு ஒருகாலத்து ஒருங்கிருந்தாரெனல் பொருந்தாதெனவும் வடநூலாராய்ச்சி யில் மிக வல்லுநரான ஆங்கில ஆசிரியர் ஒருவர் கூறுகின்றார்.3 ஆனாற், புத்தகயாவிற் காணப்பட்ட கல்வெட்டு ஒன்று கி.பி. 948ஆம் ஆண்டிற் செதுக்கப்பட்டதொன்றாகலான், அது விக்கிரமாதித்தியன் உலகிற் புகழோங்கிய வேந்தனேயாவன்; ஆதலினாற்றான், அவனது அவைக்களத்தே ஒன்பது சிறந்த புலவர்கள் நவரத்நங்கள் எனும் பெயர்பூண்டு விளங்கலாயினர். எனக் கூறுதல் கொண்டு, காளிதாசரும் அவருடன் ஒருங்குவைத் தோதப்பட்ட புலவர்களும் அவ்விக்கிரமாதித்திய வேந்தனது அவைக் களத்தே யிருந்தது வாய்மையேயாகல் வேண்டுமென உரோமேச சந்திரதத்தர் உரை நிறுவினார்.4 இவ்விரு வேறு கோட்பாடுகளும் ஒன்றோடொன்று பெரிது முரணுதலால் இவ்விரண்டனுள் எது பொருந்துவ தென்பது ஆராயற்பாற்று. ஆசிரியர் காளிதாசர் இயற்றிய நாடகக் காப்பியங்கள் மூன்றனுள் விக்ரமோர்வசீயம் என்பது விக்கிரமாதித்தன் பெயர் முதன்மொழியைத் தன் பெயரின் முதற்கட் கொண்டிருத்தலால், தம்மைப் பாதுகாத்த வேந்தனான விக்கிரமாதித்தனது நன்றியை நினைவுகூர்தற்கு ஒரு குறியாகவே அவர் அப்பெயரை யமைத்து அதனை யியற்றினாராதல் நன்கறியப்படும். தம்மைவைத்துப் புரந்த காவலர் செல்வர்களின் பெயர்களை, அவர் செய்த நன்றிக் கறிகுறியாகத் தாம் இயற்றும் நூல்கட்குப் பெயராக அமைத்தலும், அல்லது அந்நூல்களின் இடையிடையே பெய்துரைத்தலும் நல்லிசைப் புலவர்கள்பாற் பண்டுதொட்ட வழக்கமாய்ப் போதருகின்றன. இது சேந்தன்திவாகரம், திருத்தொண்டர் புராணம் முதலிய தமிழ் நூல்களிலும் வைத்து நன்கறியப்படும். படவே, காளிதாசர் தாம் விக்கிரம வேந்தனாற் பாதுகாக்கப்பட்ட நன்றியை நினைந்தே விக்ரமோர்வசீயம் என அவனது பெயர்சூட்டி அந்நாடக நூல் யாத்தமையும், அதனால் அவர் விக்கிரமாதித்தன் அவைக்களத் திருந்தமையும் உய்த்தறியப்படும். மேலும், அவ்விக்கிரமாதித்த வேந்தன் செங்கோல் ஓச்சிய தலைநகரான உச்சயினியில் மஹாகாலர் எனும் பெயரால் வழிபடப்படுஞ் சிவபிரான் றிருக்கோயிலைக் காளிதாசர் தாமியற்றிய மேகதூதத் திற் (31) குறிப்பிடுதல்கொண்டு, அவர் அந்நகரத்தில் இருந்தாரெனவோ, அல்லது அஃது அவ்வரசற்குஞ் சிவபிராற்கும் உரியவாந் தலைமையும் விழுப்பமும் உடைமை கண்டு அது தேற்றுதற்கு வேட்கைமீதூர்ந்து அது செய்தாரெனவோ கோடல் இழுக்காது. இங்ஙனம் அவர் விக்கிரம வேந்தனது அவைக் களத்தே யிருந்தமை உய்த்தறியப்படவே, அவரது காலமும் அவ்வரசனது காலமாகவே அறியப்படாநிற்கும். அற்றேல், அவ்வேந்தனிருந்த காலந்தான் யாதோவெனிற் காட்டுதும் விக்கிரமாதித்தியன் என்பது அரசர் பலரும் பலகால் மேற்கொண்ட ஒரு சிறப்புப் பெயராகக் காணப்படுகின்றதேயன்றி, அஃது ஒருவற்கேயுரிய இயற் பெயராகக் காணப்படுகின்றிலது. முதலாஞ் சந்திரகுப்த மன்னனும், இரண்டாஞ் சந்திரகுப்த வேந்தனும், கந்த குப்தனுஞ், சாளுக்கிய அரசர் பலரும் விக்கிரமாதித்தியன் எனும் பெயரைச் சிறப்பாகப் புனைந்திருந்தனரென்பது இவ் விந்தியதேய வரலாற்றினால் நன்கறியக்கிடக்கின்றது5. என்றாலும், வெற்றியிற்சிறந்த மன்னர் மன்னனாய் விளங்கிய இரண்டாஞ் சந்திரகுப்த வேந்தனுக்கு அப்பெயர் உரிமை யாயினாற்போல, ஏனை மன்னர்க்கு அஃது உரிமை யாயிற்றில்லை யென்று இந்தியவரலாற்று நூலாசிரிய ரெல்லாரும் ஒருங்கொத்து ஒருமுகமாக நுவலா நிற்கின்றனர். வென்றிவேந்தனாய் ஏனையரசரையெல்லாந் தன்கீழ்ப்படுத்த சிறப்பேயன்றிக், கல்வியின் மிக்க புலவர் குழாத்தையுந் தன் அவையின் கண்ணே வைத்துக் கலை வளம்பெருக்கிய தனிப்பெருஞ் சிறப்பும் இரண்டாஞ் சந்திரகுப்தனாகிய விக்கிரமாதித்த வேந்தனுக்கே உரித்தாய்த் திகழ்கின்றது. அவ்வேந்தன் வெட்டுவித்த கல்வெட்டுக்களும், அவன் வழங்குவித்த காசுகளும் எல்லாங் கி.பி.400ஆம் ஆண்டு முதல் 413ஆம் ஆண்டுவரையிற் சென்ற நாட்பெயர்களே தங்கட் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்களெல்லாங், காளிதாசருடைய நூல்களைப்போலவே வைதர்ப்பநெறி பற்றி யியற்றப்பட்டுள்ளன வென்று இவ் வியல்புகளை நுணுகியாராய்ந்த ஆசிரியரொருவர் முடிவு கட்டிச் சொல்கின்றார்.6 இவ்வாற்றால் ஆசிரியர் காளிதாசர், இரண்டாஞ் சந்திரகுப்தனாகிய விக்கிரமாதித்தன் வென்றி வேந்தனாய் விளங்கிய கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலே தான் இருந்தமை நன்கு துணியப்படுமென்பது. அற்றேற், கி.பி. 507ஆம் ஆண்டிற் பிறந்து 587ஆம் ஆண்டில் இறந்த வான் நூலாசிரியரான வராகமிகிரர், ஆசிரியர் காளிதாசரோடு ஒருங்கிருந்தாரெனக் கூறும் அவ்வடமொழிச் செய்யுட் குறிப்பு என்னாவதெனிற் கூறுதும். இரண்டாஞ் சந்திரகுப்த விக்கிரமாதித்தனைப் போலவே, அவன் மகன் குமாரகுப்தனுங், குமாரகுப்தன் மகன் கந்தகுப்தனும் வென்றிவேந்தராய் விளங்கித், தாம் வட மொழிப் புலமையில் வல்லுநராயிருந்ததொடு வடமொழி வல்ல புலவர்களையுந் தம் அவையில் ஒருங்குவைத்து வடமொழிக் கல்வியை வளர்த்து வந்தனரென்பது வரலாற்று நூலாசிரியரால் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. ஆகவே, விக்கிரமாதித்தனால் நிறுவப்பட்ட வடமொழிப் புலவரவையிற் காளிதாசரும், அவன்றன் மகனாலும் பேரனாலுந் தொடர்ந்து ஓம்பப்பட்ட அப்புலவரவையில் வராகமிகிரர் முதலான ஏனைப்புலவரும் வெவ்வேறுகாலத் திருந்தனராகவும், வரலாற்று நூலறிவு வாயாத பழைய வடமொழிப் புலவர் எவரோ ஒருவர் அப்புலவர்கள் இருந்த காலவேற்றுமை ஆராய்ந்து பாராது, அவரெல்லாம் அவ் வவையில் இருந்த ஒன்றே பற்றி அவரையெல்லாம் ஒரே காலத்தவராகப் பிழைபட வைத்து அவ்விடுதிச் செய்யுளை இயற்றினராகற்பாலார். மேலும், விக்கிரமாதித்த வேந்தன்றன் பேரனான கந்தகுப்தன் தன் பாட்டனுக்குரிய விக்கிர மாதித்தன் என்னுஞ் சிறப்புப் பெயரைத் தானும் புனைந்து கொண்டானாகலிற், பாட்டன் காலத்திருந்த புலவர்களையும், பேரன் காலத்தும் அவற்குப்பின் அரசுபுரிந்த ஏனைக் குப்தவேந்தர்காலத்தும் இருந்த புலவர்களையும் எல்லாம், அச்சிறப்புப் பெயரொற்றுமை பற்றி ஒருகாலத் தொருங்கிருந்த வராகப் பிழைபடுத் துரைத்தார் அவ்விடுதிச் செய்யுளை யாக்கியோரெனக் கோடலே பொருத்தமாமென விடுக்க. இனிச், சுபந்து என்னும் புலவர், தாம் இயற்றிய வாசவதத்தை என்னுங் கதைநூலிற்போந்த செய்யுள் ஒன்றில், விக்கிரமாதித்த வேந்தன் தமது காலத்தை யடுத்துத் துஞ்சினானென்பது போதர, இப்போது விக்கிரமாதித்தியன் தன் புகழை நிறுவித் தான் மறைந்தேகினான், அரசியல் மாட்சியும் மறைந்தேகியது, புதிய ஆசிரியர்கள் இம் மண்மிசைத் தோன்றி ஒருவரை யொருவர் தாக்குகின்றனர். வெள்ளிய நாரைப் பறவைகள் மறைந்தேகப் பெற்றதும், கொக்குகள் விளை யாடப் பெறாததும், ஞாயிறு படூஉம் மாலைக் காலத்தே பொன்னிறப் பறவைகள் உலாவப் பெறாததுமான நீரில்லா ஓர் ஏரியைப்போல அவ்வேந்தனும் இலனாயினனே! என்று கூறுதலின், அப்புலவர் அவ்விக்கிரமவேந்தனை யடுத்து அவற்குப் பின்னிருந்தமை தெளியப்படும். ஆசிரியர் காளிதாசரும் அவ்வேந்தனுக்குப்பின் அவன்றன் மகனான குமாரகுப்த மன்னன் காலத்தும் இருந்தனரென்பது, அவரியற்றிய குமாரசம்பவம் என்னும் அரும்பெருங் காப்பியம் அவ்வரசன் பெயரையும் நினைவுகூர்விக்கும் ஒரு குறியாக அமைத்து அவரால் இயற்றப்பட்டிருக்குமாற்றால் உய்த்தறியப் படுமென்க. இனி, இக்குமாரகுப்த மன்னன், கௌதமசாக்கிய புத்தருக்கு, அலகபாத்து மாகாணத்தைச் சேர்ந்த மங்குவாரில் ஓர் உருவச்சிலை அமைத்துவைத்த ஞான்று. அச்சிலையின்கீழ்ப் பொறிப்பித்த கல்வெட்டுக் கி.பி. 448ஆம் ஆண்டின் கண் அச்சிலை ஆங்கு வைக்கப்பட்டமை குறித்து நுவல்கின்றது. இதனானுங் காளிதாசர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பாதியில் விக்கிரவேந்தன் காலத்தும் அவன்றன் மகன் குமாரகுப்த மன்னன் காலத்துந் தொடர்ந்திருந்தமை நன்கு தெளியப்படும். மேலே காட்டிய சுபந்து என்னும் புலவரும் ஐந்தாம் நூற்றாண்டின் முற்பாதியிலிருந்தமை துணியப்படுத்தலானும், ஆசிரியர் காளிதாசர் இயற்றிய நூல்களின் சொற்பொருள் நயங்களுஞ் சுபந்து என்னும் புலவர் இயற்றிய நூற் சொற் பொருள் நயங்களும் இருவர்க்கும் பொதுவாகக் காணப் படுதலானுங், காளிதாசர் சுபந்து என்னும் புலவர் இருவருங் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பாதியிலிருந்தமை ஐயுறவின்றித் துணியற்பாலதா மென்க. இனி, ஆசிரியர் காளிதாசர் தாம் இயற்றிய நூல்களிற் சிவபிரானையும் அவர்தந் திருப்புதல்வரான குமாரக் கடவுளையும் வழுத்துஞ் சைவசமயத்தவரா யிருந்தும், அவர் தம்முடைய நூல்களில் ஓரிடத்தாயினும் யானைமுகக் கடவுளாகிய விநாயகரைக் குறிப்பாலாயினும் வெளிப்படை யாலாயினுங் கூறக் காண்கிலேம். ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றிலிருந்து வடநூல் தமிழ் நூல்கள் இயற்றிய சைவசமய ஆசிரியர்கள் எல்லாருந் தம் நூன்முகத்தே விநாயகக் கடவுளுக்கு வணக்கங் கூறுதலைத் திறம்பா ஒழுகலாறாக் கொண்டு வருகின்றார். சிவபிராற்கன்றி வேறு எத்தெய்வத் திற்கும் வணக்கமுந் தனிப்பதிகமும் ஓதாத சைவ சமயாசிரியர் களான திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவருந் தாம் அருளிச்செய்த திருப்பதிகங்களில் விநாயகக் கடவுளைக் குறிப்பிட்டுக் கிளந்து கூறியிருக்கின்றனர். மற்று, மாணிக்க வாசகரோ தாம் அருளிச்செய்த திருவாசகந் திருக் கோவையார் என்னும் நூல்களில், விநாயகரைச் சிறிதுங் குறிப்பிடக் காண்கிலேம்; அங்ஙனமே, காளிதாசர் தாம் இயற்றிய நூல்களிலும் இவ்விருவர்க்கும் முந்தியகாலத்திருந்த வடமொழி தென் மொழிப் புலவர்களுந் தாம் இயற்றிய நூல்களிலும் யாண்டும் விநாயகக் கடவுளைப்பற்றிச் சிறிதுமே கூறக் காண்கிலேம். விநாயகக்கடவுள் வழிபாடு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலோ அதற்குச் சிறிது பின்னரோ உண்டாயதன்றி, அதற்கு முன் அஃதிருந்தல்லாமையினை, யாம் இயற்றிய மாணிக்கவாசகர் காலம் என்னும் பெருநூலின் 869 முதல் 871ஆம் பக்கங்களில் அகப்புறச் சான்றுகள் கொண்டு நன்கு விளக்கிக் காட்டியிருக்கின்றேம். அதன் விரிவை அங்கே கண்டுகொள்க. காளிதாசரும் மாணிக்கவாசகரும் விநாயகக் கடவுள் வழிபாடு உண்டாதற்குமுன் முறையே ஐந்தாம் நூற்றாண்டின் முற்பாதியிலும் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் இருந்தமையாற்றான், சைவசமய ஆசிரியராகிய அவ்விருவர் நூலிலும் யானைமுகமுடைய பிள்ளையாரைப் பற்றிய குறிப்பு ஒரு சிறிதுங் காணப்படாத தாயிற்றென்றும், மற்று அவ்வைந்தாம் நூற்றாண்டிற்குப் பின் வந்த சைவசமய ஆசிரியர் எல்லார் நூல்களிலும் பிள்ளையார் வணக்கமும் அவரைப்பற்றிய குறிப்புங் காணப்படலாயினது யானைமுகக் கடவுள் வழிபாடு இந்நாட்டின்கட்டோன்றி அஃது யாண்டும் பரவியபின் அவர் எல்லாரும் இருந்தமையினாற்றா னென்றும் பகுத்துணர்ந்துகொள்ளல் வேண்டும். அற்றேலஃதாக, கிறித்து பிறப்பதற்குமுன் 56 ஆம் ஆண்டிற்றோன்றி இன்றுகாறும் வழங்கிவராநின்ற விக் கிரமசகம் என்பது விக்கிரமாதித்த வேந்தனாற் றோற்றுவித்து வழங்கப்படுவதொன்றாகக் காணப்படுதலின், அவ்வேந்தனும் அவனது அவைக்களத்திருந்த காளிதாசரும் இற்றைக்குச் சிறிதேறக்குறைய இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தாரெனக் கோடலே வாய்வ தாகுமன்றிக், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பாதயில் அவரிருந்தாரெனக் கோடல் வாயாதென ஒருசாரார் கூறுத லென்னையெனின்; அவர் கூற்றுப் பொருந்தாமை காட்டுவாம். விக்கிரமசகம் என்பது முதலில் விக்கிரமாதித்த வேந்தனாற் றோற்றுவிக்கப்பட்ட தொன்றன்று, அது மாளுவக்குடியினரில் ஒரு பகுதியினர் ஒரு குழுவாகக் கூடித் தம்மவர் முன்னேற்றத் திற்கு இன்றியமையா முயற்சிகள் சில செய்யத் துவங்கியதற்கு நினைவுக்குறியாக, அவர்கள் அம்முயற்சி துவங்கிய நாளிலிருந்து அதனையும் வழங்கத் துவங்கினர்; அப்போது அது மாளுவசகம் என்னும் பெயரால் வழங்கப்பெற்று வந்தது. பின்னர் விக்கிரமாதித்த வேந்தன் தான் செங்கோல் ஓச்சிய ஞான்று, அம்மாளுவக் குடியினரின் சிறந்த அறிவு முயற்சிகளைக் கண்டு வியந்து, இவ்விந்திய நாட்டில் மிகச் சிறந்த ஒரு வகுப்பினராம் வரிசையினை அவர்கட்கு அளித்தனன். அங்ஙனம் அவன் தமக்குச் செய்த நன்றியை நினைந்து, அம்மாளுவருந் தாம் வழங்கி வந்த மாளுவசகத்தை அவ்வேந்தன் பெயர் தொடுத்து விக்கிரமசகம் எனப் பின்னர் வழங்கிவரலாயினர். இவ்வரும் பெறலுண்மை ஓர் ஆங்கில ஆசிரியர் (Fleet) கண்டு பிடித்த ஓர் அரிய கல்வெட்டிலிருந்து புலப்படுவதாயிற்று. இக்கல்வெட்டுச், சிந்திய நாட்டில் தசபுரம் என்னும் ஊரின் கண் உள்ள சிவபிரான் திருக்கோயிலின் முகத்தே ஒரு கருங்கற் பலகைமேற் பொறிக்கப் பட்டிருக்கின்றது. அக்கல்வெட்டினால் அறியக் கிடப்பது இது: கூர்ச்சர நாட்டிலிருந்து தசபுரத்திற்குப் போந்து ஆண்டுக் குடியேறிய பட்டு நூற்காரரில் ஒரு வகுப்பார் ஒரு குழுவினைக் கூட்டினர். குமாரகுப்தன் இந்நிலவுலக மெல்லாம் ஒருங்கே ஆட்சி செலுத்திய அஞ்ஞான்று, சிற்றரசனான விசுவவர்மன் என்பானுக்கு மகனாக பந்துவர்மன் என்பான் தசபுரத்தில் ஆளுகை செய்துவந்தான். அப்போது ஒரு பட்டு நூற்காரக் கூட்டத்தார் அங்கே ஒரு திருக்கோயில் அமைப்பித்தனர். அக்கோயில், இடியொலி இனிமையாகத் தோன்றும் பருவத்தே மாளுவக் குடியினரின் சகம் உண்டாகி 493 ஆண்டுகள் கடந்த காலத்தே கட்டி முடிக்கப்பட்டது.8 என நுவலும் இக் கல்வெட்டினாற், கி.மு. 56ஆம் ஆண்டில் உண்டான சகம் மாளுவக் குடியினரால் உண்டாக்கப்பட்டு மாளுவசகம் என்னும் பெயர்த்தாய் 450 ஆண்டுகள் வழங்கப்பட்டுவந்து, பின்னர் விக்கிரமாதித்த வேந்தன் அம்மாளுவக் குடியினர்க்குச் செய்த பெருஞ் சிறப்பினை நினைந்த அம்மாளுவரால் அவர் தமக்குரிய அச் சகம் விக்கிரமவேந்தனுக்குரிய தொன்றாகப் பின்னர் மாற்றி வைத்து வழங்கப்படலானமை இனிது புலனாதல் காண்க. ஆகவே, விக்கிரமசகம் எனப் பிற்றைஞான்று அது வழங்கலானமை ஒன்றே கொண்டு, அதனை ஆக்கியோன் விக்கிரமவேந்தனே யெனவும், அவன் அச் சகந் தோன்றிய கி.மு.56ஆம் ஆண்டி லிருந்தானெனவும், அதனால் அவனது அவைக்களத் திருந்த ஆசிரியர் காளிதாசருங் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தவரே யாகற்பாலாரெனவுங் கோடல் பெரியதொரு தலை தடுமாற்றமாய் முடிதல் கண்டு கொள்க. அஃதவ்வா றொழியவே, விக்கிரம வேந்தனும் அவன்றன் மகன் குமார குப்தனும் வென்றி வேந்தராய் விளங்கிய காலங் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியேயாதல் வேண்டுமென்பது கல்வெட்டுக்களாலும் ஏனை அகச்சான்று புறச் சான்று களாலும் நன்கு தெளியக் கிடத்தலின், அவ்வேந்தர் இருவர் காலத்துந் தொடர்ந்திருந்த ஆசிரியர் காளிதாசரும் அவ்வைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேதான் இருந்தா ரென்பது ஐயுறவின்றிப் பெறப்படும் உண்மை முடிபாமென்க. அடிக்குறிப்புகள் 1. Max Muller’s India-What can it teach us?” p.91. 2. A.A. Macdonell’s A History of Sanscrit Literature.” p.318. 3. Prof. A.A. Macdonell. 4. R.C. Dutt’s A History of Civilisation in Ancient India, Vol.2, p.128. 5. Vincent Smith’s The Early History of India, pp.290, 332,427. 6. Prof. A.A. Macdonell in “Sanscrit Literature,” p 320. 7. R.C. Dutt’s Civilisation in Ancient India/ Vol.2, p.51. 8. See R.C. Dutt’s Civilisation in Ancient India, Vol.2.pp.51,52. 9. காளிதாசரது நல்லிசைப் புலமை இனி, உலகியற்பொருள் உயிர்ப்பொருள் என்னும் இரண்டின் றன்மைகளையும், அவை யொன்றோடொன்று பிணைந்து நிற்கும் முறையிற் பின்னவற்றின்பாற் றோன்றும் இன்ப துன்ப நிகழ்ச்சிகளையும், அவ்வியற்பொருள் உயிர்ப் பொருள்கள் சிற்சிலவற்றின்மேல் வைத்து, ஒரு கண்ணாடியிற் காட்டுமாப்போல், இவ்வரும்பெரு நாடகத்திற்காட்டும் ஆசிரியர் காளிதாசரது நல்லிசைப் புலமை இருவகையில் ஆராய்ந்து உரைக்கற்பாற்று. உலகியற் பொருள்களில் வான் ஒன்றும் ஒழிய, ஒழிந்த வளி தீ நீர் நிலம் என்னும் நான்கும் அவற்றின் பயன்களும் நம்முடைய புலன்களுக்குப் புலனாகும் புறப்பொருள்களாகும்; மற்றை, ஓரறிவு முதல் ஐயறிவு ஈறாக உடைய சிற்றுயிர்களும் ஆறறிவுடைய மக்களுமோ உடம்பள வானன்றி உயிரளவால் நம்முடைய ஐம்புலன்களுக்கும் புலப்படாமல் நமதுளத்தின் உய்த்துணர்ச்சி ஒன்றற்கே புலனாகுந் தன்மையுடைமையால் அவ்விரு கூற்றுயிர்களும் அகப்பொருள்களே யாகும். தமிழ் நூன்முறையிற் பாகு பாடுற்றுக் கிடக்கும் இவ்விருவகைப் பொருளியல்புகளுட் புறப்பொருளியல்பு நிகழ்ச்சி சிறிதாகவும் ஏனையகப் பொருளியல்பு நிகழ்ச்சி பெரிதாகவுங் காட்டுவதே நாடகக் காப்பிய இலக்கணமாகும். மற்றுப், புறப்பொருளியல்பை மிகுத்தாதல் அன்றி அகப்பொருளியல்பின் அளவோடு ஒப்பவைத்தாதல் நுவல்வது ஏனைச் சிறுகாப்பிய பெருங் காப்பிய இலக்கணமாவதோடு, இவையல்லாத தனிப் பாட்டுக்களின் இலக்கணமும் ஆகும். இங்ஙனமாக நாடகக் காப்பிய இலக்கணமும் ஏனைக் காப்பிய இலக்கணமுந் தம்முட் சில பல வேறுபாடுகள் உடையவாம் நுட்பத்தினை, ஆசிரியர் காளிதாசர் இச் சாகுந்தல நாடக நூல் யாக்குங்கால் உணர்ந்தாற் போல, இதற்கு முந்திய விக்ரமோர்வசீயம் மாளவிகாக்நி மித்திரம் என்னும் நாடகங்களை யாக்குங்கால் நன்குணர்ந் திலர். யாங்ஙனமெனிற், காட்டுதும். புரூரவவேந்தன், தன் காதலி ஊர்வசி தன்னை விட்டுச் சடுதியிற் பிரிந்து மறைந்துபோயதை ஆற்றானாய்த், தானும் அவளும் விளையாட்டயர்ந்த கந்தமாதன கானகத்தின்கட் டனியிருந்து ஆண்டுள்ள உயிர்ப்பொருள் உயிரில்பொருள்களை விளித்தும், அவைதாம் தன் காதலியின் வடிவழகினை யொத்திருத்தல் வியந்தும், பலவாறு அணிந்துரைத்துப் புலம்பும் விரிந்த புலம்பலுரைகள் வனப்பு மிக்கனவாய் இருப்பினும், அவை விக்கிரமோர்வசீயம் என்னும் அந்நாடக நூலின்கண் வரற்பாலன அல்ல; மற்று அவை நாடக முறையிற் செல்லாத ஏனை நூல்களின் கண்ணேதாம் வரற்பாலன. இதுபோலவே, இவர் முதன் முதல் இயற்றிய மாளவிகாக்நிமித்ரம் என்னும் நாடகத்தும் மாளவிகை என்னும் அந்நாடகத் தலைமகளை அக்கிநிமித்திரன் என்னும் அரசன் முன்னிலையிற் கொணரும் பொருட்டு, ஆடலாசிரியர் இருவர்தந் திறனைப் புலப்படுக்கும் முகத்தாற் செய்யுஞ் சூழ்ச்சியும், அதனை விரிக்கும் முதலிரு வகுப்பின் பொருள்களும் ஏனைக் காப்பியங்களிலன்றி நாடகக் காப்பியங்களுள் வருதற்குரிய அல்ல. இங்ஙனமே இச்சாகுந்தல நாடக ஆறாம் வகுப்பின் கண்ணும் பொழிலின் வனப்பு, அதனிடத்தே பாங்கிமார் இருவர்க்குள் நிகழும் உரையாட்டு, அதில் அரசன் சகுந்தலையை விலக்கிவிட்டமையால் துயருழந்திருக்கும் நிலை, அந்நிலையிற் சகுந்தலையின் உருவழகினை ஓவியமாக வரைந்து அளவின்றியே அவன் ஆற்றானாந் தன்மை ஆகிய இவை யெல்லாம் நாடக நிகழ்ச்சிக்குப் புறம்பாய்ப் பெருங்காப்பிய நூலின்கண் வரற்பாலனவேயாயினும், மேற்காட்டிய இரண்டு நாடகங்களிலும் நாடகக் கதை நிகழ்ச்சிக்குப் பெரும்பாலும் இன்றியமையாதனை வல்லவாய் வந்த அப் புனைந்துரைகள் போலாது, இவை நாடகக் கதை நிகழ்ச்சியோடு ஒருவாறு தொடர்புடையவாய்ப் போதரக் காண்டலின், இவை நாடக இலக்கணத்தோடு அத்துணை மாறுபாடு உறுவன அல்ல. என்றாலும், இன்னோரன்ன மெல்லச் செல்லும் புனைந்துரைப் பொருள்கள் பெருங்காப்பியங்களுள்ளே விரவற்பாலன வல்லால், விரைந்த செலவினையுடைய நாடக நிகழ்ச்சிக் கிடையே விரவுதல் பொருந்தாதென்றுங் கடைப்பிடிக்க, சாகுந்தல நாடகம் யாக்கும்ஞான்று ஆசிரியர் காளிதாசர் முதிர்ந்த புலமையும் நாடக நூல் நுட்பங்கள் நன்குர்ந்த உணர்வும் வாய்க்கப் பெற்றமையால் நாடக நிகழ்ச்சியில் வருதற்குரிய வல்லாதவைகள் பெரும்பாலுந் அதன்கட் புகுதற்கு இடந்தராமலே விழிப்பாயிருந்தனரென் றுணர்ந்துகொள்ளல் வேண்டும். அற்றாயின், அவர் அவ்வாறாம் வகுப்பு நிகழ்ச்சிகளிற் பெரும்பாலன கதை நிகழ்ச்சிக்குச் சிறிதுந் தொடர்பில்லனவா யிருப்பவும், அவையிற்றை விடாது முழுதுங் கூறிய தென்னையெனின்; அரசனால் விலக்குண்டு சகுந்தலை மறைந்துபோயதைக் கிளக்கும் ஐந்தாம் வகுப்பின் நிகழ்ச்சிக்கும், மீண்டும் அரசன் சகுந்தலையைத் தலைக் கூடிய வரலாறு நுவலும் ஆறாம் வகுப்பின் நிகழ்ச்சிக்கும் இடையே ஐந்தாண்டுகள் கழிந்தனவாதல் வேண்டுமென்பதை மேலே (115 ஆம் பக்கத்தில்) விளக்கிக் காட்டியிருக்கின்றேம். ஓர் இரவின் ஒரு பாதிக்குள் இச் சாகுந்தல நாடகத்தினை நாடக அரங்கின் கண் நடாத்திக் காட்டலுறும் நாடக ஆசிரியன், சகுந்தலையை விலக்கிய அரசன் ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் அவளைத் தலைக்கூடுங் காறும் எந்நிலையிலிருந்தா னென்பதை யறிய நாடகங் காண்பாரெல்லார்க்கும் விழைவு மீதூர்ந்து நிற்கு மாகலின், அதனையுணர்ந்து அது தீர்த்தற்கு அவ்வைந்தாண்டு நிகழ்ச்சிகளிற் கதையொடு தொடர் புள்ளனவாய் விழுமியவாய் உள்ள சிலவற்றையேனும் எடுத்து அவன் ஆண்டுச் சிறிது நேரமாயினுங் காட்டற்பாலனாவன். இம்முறை வழுவாமலே ஈண்டு இவ்வாறாம் வகுப்பிலும் ஆசிரியன், சகுந்தலையைப் பிரிந்து ஆற்றானாகிய துஷியந்த மன்னன் தனது பொழிலின் கண் இருந்த நிலையைக் காப்பியச் சுவை துளும்பக் கூறினாரென்க. எனவே, இது கூறியது குற்றமாகாது வனப்பு மிக்கிருத்தலுந் தானே விளங்கும். இனி, ஆசிரியர் இந்நாடகத்தைத் துவங்கும்போதே, பின்னே காட்டப்படுங் காதலின்ப வொழுக்கமாகிய அகப் பொருளுக்கு ஏற்ற புறப்பொருள் களாகிய வேனிற்காலத்தையும் அதன்கண் வீசுந் தென்றற்காற்றையும், அது பாதிரிமுகிழ்களில் அளைந்து வந்து பரப்பும் நறுமணத்தையும், அக்காலத்தே இனிமை பயக்குந் தண்ணீர் முழுக்கையும், அடர்ந்த மர நிழல்களில் அப்போது வரும் இனிய அயர்ந்த துயிலையுஞ் சூத்திரதாரன் வாயிலாகப் புலப்படுத்துதலும், அரசன் கானகத்திற் புகுந்து சகுந்தலையை மணக்கப் போவதனைச் சேய்மையிலிருந்து போதரும் வண்டு மலர் முகிழை முத்தமிடுதலில் வைத்து நடியின் வாயிலாகக் குறிப்பிடுதலுங் காண்க. இனி, அரசனாற் பின்றொடரப்பட்ட மான் தன்னைப் பின்றொடரும் அரசனைத் திரும்பித் திரும்பி நோக்கிய படியாய் ஓடுதலையும், அச்சத்தால் அது கழுத்தைச் சுருக்கிக்கொண்டு தன் பின்றொடைகளைப் பரப்புதலையும்; அரசன் தன் தேரின் மிக விரைந்த ஓட்டத்தைத் தெரிவிக்கும்பொருட்டுத் தொலைவிற் சிறியவாய்க் காணப்பட்ட பொருள்கள் சடுதியிற் பெரியவராய்த் தோன்றுதல் குறித்தலையுங்; கண்ணுவ முனிவரது பாழிக்குள் நுழைந்த மன்னன் ஆண்டுக் கண்டு ரைக்கும் முகத்தாற் பேட்டிளங் கிளிகள் மரப்பொந்துகளின் அகத்தே யிருத்தலின் மரங்களின் கீழ்க் காட்டுத் தானியங்கள் இறைந்து கிடத்தலையும், இங்குதிப்பழங்களை நசுக்கின கற்கள் நெய்ப்பற்றினால் மினுமினுவென்று மிளிர்தலையும், அங்கு மான் கன்றுகள் அச்சமின்றி உலவுதலையும், நீர்நிலைகளுக்குப் போம்வழிகளில் மரவுரியாடைகளின் ஓரங்களினின்று சொட்டின நீர்க்குறி வரிவரியாயிருத்தலையும், நீரோடுங் கால்வாய்களில் தென்றற் காற்றால் எழுப்பப்பட்ட சிற்றலைகள் மரங்களின் வேர்க் கற்றைகளை அலைசு தலையும்; மெல்லிய காற்றால் அசையும் மாந்துளிர்கள் சகுந்தலையைக் கைவிரல்களால் அழைப்பது போற் றோன்றுதலையும், புதிய பச்சிளந்தழைகள் பொதிந்த தேமா மரத்தைப் பின்னிக் கொண்டு மல்லிகைக் கொடிகள் வெண்மலர் துதைந்து விளங்குதலையும், ஏழிலைப்பாலை மரத்தின்கீழ் எக்கர்மணல் இருத்தலையுங்; குதிரைக் குளம்படிகளாற் கிளப்பப்பட்ட புழுதியானது சாய்ங்கால வெயில் வெளிச்சம்பட்டுப் பசியநிறம் பெறுதலையும், அது மரங்களில் தொங்கவிட்டிருக்கும் ஈர மரவுரியாடைகளின்மேல் வந்து படிதலையும், வேட்டம் ஆடுவாராற் கலைக்கப்பட்ட ஒரு காட்டுயானை ஒரு மரக்கிளையை முறித் தெடுத்துக்கொண்டு படர்கொடிச் சுருள்கள் தன்னுடம்பெங்குஞ் சுற்றியபடியாய் வெருக் கொண்டு ஓடிவருதலையும்; மலையருவி நீரில் உதிர்ந்தழுகிய சருகுகள் நிரம்பிக்கிடத்தலால் அந்நீர் கசப்பாய் வெது வெதுப்பாய் இருத்தலையுங்; காட்டெருமைகள் நீர் நிலைகளிற் புகுந்து தம் மருப்புக்களால் நீரையடித்துக் குழப்பு தலையும், மான் மந்தைகள் மர நிழல்களிற் குழாங் கொண்டிருந்து அசைபோடுதலையும், பெரிய காட்டுப் பன்றிகள் கூட்டங் கூட்டமாய்க் குட்டையோரங்களிற் கோரைக் கிழங்குகளைக் கிண்டித் தின்னுதலையும், புது மல்லிகைப் பூக்கள் காம்பு கழன்று கீழ் உள்ள எருக்கஞ் செடிகள்மேல் விழுதலையும், ஒரு கற்பாறையால் தகைக்கப் பட்ட ஓர் யாற்றுநீர் இருபிளவினதாய் ஓடுதலையும், வெயில் வெப்பத்தால் வெதும்பிய மெல்லியலார் உடம்பைத் தண்டொடுகூடிய தாமரையிலைகளாலும் நரந்தம்புல்லின் நெய்யாலுங் குளிரச் செய்தலையும், பிரப்பங்கொடியால் வளைக்கப்பட்டிருக்கும் பச்சிளங்கொடிப் பந்தரின் வாயிலிலே வெண்மணல் பரப்பப்பட்டிருத்தலையும், வெள்ளைச் சலவைக்கல்லின்மேல் மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்கள் பரம்பிக் கிடத்தலையுந், தாமரையிலைகள் கிளிப்பிள்ளை களின் மார்புபோல் மெதுவாய் இருத்தலையும், இளமான் கன்றுகள் பிரிந்துபோன தம் தாயைத்தேடி இங்கும் அங்குமாய் மருள விழித்தலையும், முழு நிலை நாளின் சாய்ங்கால வேளையிற் கிழக்கே முழுமதியும் மேற்கே செஞ்ஞாயிறும் ஒருங்கே காணப்படுதலையுந், தென்னோலை யால் முடைந்த ஒரு பூங்கூடை தன்னுள்ளே மகிழம்பூ மாலை வைக்கப்பட்டுக் காசியபரது பாழியிலுள்ள ஒரு மாமரக் கிளையில் தொங்கவிடப்பட்டிருத்தலையும், ஆணும் பெண்ணு மாய்க் கூடிய அன்னப்புட்கள் கரை மருங்கில் மணன்மேல் அமர்ந்திருப்ப மாலினியாற்று நீர் சில்லென்று ஓடுதலையும், அதன் இருகரையிலும் உள்ள பக்கமலைகளில் அழகிய மான்கள் மேய்தலையும், மரவுரியாடைகள் தொங்கவிடப் பட்டிருக்குங் கிளைகளையுடைய மரங்களின் நீழலிலே படுத்தக்கிடக்குங் கலைமான் கொம்புகளின்மேற் பெட்டை மான்கள் தமது இடக்கண் தேய்த்தலையும், மாலைக்கால் வெயில் வெளிச்சந் தோய்ந்து உருகிய பொன்போல் ஏமகூட மலை தோன்றுதலையுஞ் சுருங்கிய சொற்களால் ஆங்காங்கு விளங்கக்கூறி இயற்கைப் புறப் பொருள்களின் அழகிய தோற்றங்களை ஓவியத்தில் வரைந்து காட்டினாலென ஆசிரியர் காளிதாசர் நம் அகக்கண்ணெதிரே காட்டுந்திறம் நினைந்தொறும் வியந்து பாராட்டத் தகுவதாய்த் திகழ்தல் காண்க. இங்ஙனம் ஆசிரியர் காளிதாசர் இயற்கைப்பொருட் டோற்றங்களின் வனப்பை நேர்ந்துழியெல்லாம் எடுத்து விளம்புதல்போலவே, பகுத்தறிவுவாய்ந்த மக்கட் பிறப்பினரில் விழுமியார் மிகச் சிலரே ஆங்காங்கு உளராதலை நன்கு ஆராய்ந்து கண்டு, அவர் தம்முள்ளும் ஒரு சிலரைப் பிரித்தெடுத்து, அவரை இந்நாடகத் தலைமகன் தலைமகள் பாங்கன் பாங்கியர் அறவோர் முதலியோராகப் பிணைத்து, அவர்தம் ஒழுகலாறுகளை ஒற்றுமை வேற்றுமை வகையால் ஒரு தொடர்புபடுத்து, அவர்தம் உடம்பின் அழகும் உள்ளத்தின் விழுப்பமும் படிப்படியே ஏறியுங் குறைந்தும் புலனாதல் காட்டும் முகத்தால், அவ்விழுமியார் சிலர் தாமும் ஏனை மக்களின் வேறாஞ் சிறப்பியல்புகள் உடையராதலுடன், தம்முள்ளும் வேறுவேறாஞ் சிறப்பியல்புகள் தனித்தனியே யுடையராதலும் நுண்ணிதின் ஆங்காங்குப் புலப்படுத்தி யிருத்தலை, மேலே நாடக மாந்தர் இயற்கை யினை விரித்துரைத்தக்கால் நன்கு விளக்கிக் காட்டியிருக்கின்றேம்; அவ்வியல்புகளெல்லாம் ஆண்டுக் கண்டு கொள்க. இனி, இந்நாடக நூலுள் ஆசிரியர் காளிதாசர் ஆங்காங்குக் கூறும் பொருட்குறிப்புக்கள் கொண்டு இவரது உள்ளப்பான்மை இன்னவென்பதும் அறியக்கிடக்கின்றது. ஓவியத்தினையும் அதன்கண் வரையப்படும் உருக்களையும் இவர் அடுத்தடுத்துக் கூறக்காண்டல், இவர்க்கு ஓவியக் காட்சியில் மிக்க விருப்புள தென்பது தேறப்படும். இங்ஙனமே, இசையிலும் பாட்டிலும் இவர் பெரிதும் ஈடுபட்டவரா யிருக்கின்றார். இன்னும், அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்மீக்கூரும் இவர், தேமாவின் அண்டையில் வளர்ந்து அதனைப் பிணைந்து நிற்கும் மல்லிகைக் கொடியின் றோற்றத்தைப் பலகாலும் விளம்பக் காண்டலின், இவர்க்கு அதன்கட் டனிவிருப்புண்டென்பது விளங்கா நிற்கின்றது. இனி, இவர் புராணக் கதைகளை ஆங்காங்குக் கொணர்ந்து இசைவிக்கின்றமையின், இவர்க்கு அக் கதைகளின் பால் நம்பிக்கை யுளதென்பதுந் தெளியப்படும். திரிசங்கு மன்னன் துறக்கவுலகத்திலும் இடம் பெறாமல் இம் மண்ணுலகத்திலும் இருந்து வாழாமல் இரண்டிற்கும் இடைப் பட்ட வான்வெளியில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தங்குமாறு விசுவாமித்திரர் பணித்த கதையினை விதூஷகன் வாயிலாக இவர் அறியவைத்தல் காண்க. இங்ஙனமே, தக்கன் சிவபிரானை ஒதுக்கி ஆற்றிய வேள்வி, அப்பெருமான்றன் சினத்தீயிற்றோன்றிய வீரபத்திர ரால் அழிக்கப்பட்டு ஒழிய, அவ் வேள்விக்களத்தில் வந்திருந்த தேவர்கள் அனைவரும் அவராற் பலவகையால் ஒறுக்கப் பட்டுப் பலமுகமாய் ஓட, அவ் வேள்வியின் அகத்துநின்ற தெய்வமும் வெருக்கொண்டு ஒரு மான் வடிவெடுத்து வானூடு ஓடா நின்றது. அதுகண்ட வீரபத்திரர் அந்த மானைப் பின்றொடர்ந்து சென்றாரென வாயு புராணமும் மாபாரதமும் நுவலுங் கதைக் குறிப்பினையும், இவர் துஷியந்தன் ஒரு மானைப் பின் றொடர்ந்து செல்லுதற்கு உவமையாக எடுத்துரைத்தல் காண்க. இன்னும், ஆயிரம் படமுடிகளை யுடையதான ஆதிசேடன் என்னும் பாம்பு இந் நிலைவுலகத்தைத் தன் தலைமேல் தாங்கி நிற்கும் என்னுங் கதைக்குறிப்பை, அரசன் எக்காலும் அரசியற் கடமைகள் தாங்கிநிற்றலைக் கூறுங்கால் உவமையாக எடுத்துக்காட்டுதல் காண்க (பக்கம் 83). இன்னும், ஊருவர் என்னும் முனிவர் கடுந் தவத்தின் மிக்க ஆற்றலுடையராய்த் திகழ்தல்கண்ட தேவர்கள், அவர்பால் ஆற்றன்மிக்க புதல்வர்களைப் பெறுவான் வேண்ட, அவரும் அதற்கு ஒருப்பட்டுத், தமது தொடையினின்றுந் தோற்றுவித்த தீக்கடவுள் தனக்குத் தக்கதோர் உணவு கேட்க, நான்முகன் அதனைக் கடலடியில் இருத்தினான் என்னுங் கதைக் குறிப்பை, இவர், அரசன் காதல் வெப்பம் பொறாதுரைக்கும் உரையிற் புலப்படுத்தல் காண்க (44). இவையேயன்றித், திருமால் நரசிங்கவடிவிற் றோன்றி இரணியகசிபு என்னும் அரசனைக் கொன்ற கதையும் (130). வாமநன் என்னுங் குள்ளவடிவிற் றோன்றிப் பலிவேந்தனைப் பாதலம் புகச்செய்த கதையும் (130) ஏழாம் வகுப்பின்கண் மாதலி கூறும் உரையில் இவரால் எடுத்தாளப்பட் டிருத்தல் காண்க. இன்னுங், காசியபர் ஒருவரே தேவர்க்கும் அசுரர்க்குந் தந்தையாவரென்றும் (132), உரோகிணி என்னும் வான்மீனே சந் திரற்குரிய காதற்கிழத்தி யென்றும் (143). இந் நிலவுலகமானது ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டுள தென்றும், அவ்வொவ்வொரு தீவினையும் உப்புக்கடல் கருப்பஞ்சாற்றுக் கடல் முதலிய ஏழு கடல்கள் சூழ்ந்திருக்கின்றன வென்றும் புகலும் புராணக் கதைகளை இவர் ஏழாம் வகுப்பின்கண் இடையிடையே தொடுத்திருத்தல் காண்க. திருமால் எடுத்தனவாகப் புராணங்கள் கூறும் பத்துப் பிறவிகளில் நரசிங்கம் வாமனம் என்னும் இரண்டு பிறவி களைத் தவிர, ஏனை இராமன் கண்ணன் முதலான பிறவி களின் கதைக் குறிப்பு, இவர் இயற்றிய நாடகங்களிற் காணப் படாமையினை உற்றுநோக்குங்கால், இவர் இருந்த காலத்தில் அவரும் பலராமன் பரசுராமன் முதலியோருந் திருமாலின் பிறவிகளாகக் கொள்ளப்படவில்லை யென்பதும், அவரும் பிறருந் திருமாலின் பிறவிகளென்று கூறுங் கதைகள் காளிதாசரது காலத்திற்குப் பின் வடக்கிருந்து தென்னாட்டிற் குடி புகுந்த ஆரியராலும் அவர் வழிச் சார்ந்தாராலும் புதிது படைத்துச் செய்யப் பட்டனவாகு மென்பதுந் தெற்றென விளங்காநிற்கும். இனிக், காளிதாசர் இந்நாடகத்தும் பிறாண்டும் பின் வருங் கதை நிகழ்ச்சிகளை முன்னே குறிப்பால் உணர்த்தி ஆங்காங்கு அவை தமக்குத் தோற்றுவாய் செய்யுந்திறம் பெரிதும் பாராட்டற் பாலதா யிருக்கின்றது. எடுத்துக் காட்டாக, இந்நாடக முகத்துப் போந்த முன்னுரையில் நடியென்பாள் மிழற்றிய இன்னிசைப் பாட்டைக் கேட்டு அதன்வயப்பட்ட உணர்வினனாய்த் தன்னை மறந்திருந்த சூத்திரதாரன், அந் நடியானவள் அவன் மேற்கொண்ட கடமையினை நினைவுறுத்த, ஆ! என் அன்பே, நன்கு நினைப்பூட்டப் பட்டேன்; இவ்விடத்தே துஷியந்த அரசன் துள்ளியோடும் புள்ளிமான் பின்னே செல்வது போல, யானும் இன்புறுத்தும் நின் இசைப் பாட்டின் இன்னிசை யால் வலிந்து இழுக்கப் பட்டுச் சென்று அதனை முற்றும் மறந்தேன் கண்டாய்! என்று தான் முடித்துச் சொல்லும் உரைக்கண், உடனே அடுத்து நிகழப்போகும் அரசனது மான்வேட்டத்திற்குத் தோற்றுவாய் செய்த நுணுக்கமுந் திறமுங் கண்டு கொள்க. இன்னும் இங்ஙனமே ஐந்தாம் வகுப்பின் ஈற்றில், தன் மனையாளை மனையாளென் றறியாமல் நீங்கியபின் வருந்தும் அரசன், என் மனைவி யல்லள் என்று என்னால் நீக்கப்பட்ட அம் முனிவர் மகளை நான் நினைவு கூரக் கூடாதது உண்மையே; ஆயினும், என் நெஞ்சம் மிக வருந்துவதை உற்று நோக்கி னால், அஃது, அவளை நான் மணஞ்செய்த துண்டென்று ஒரு சான்று காட்டுவதாகவே தோன்றுகின்றது. எனக் கூறும் உரைக்கண், உடனே அடுத்து நிகழும் ஆறாம் வகுப்பின் நிகழ்ச்சி முதலில், அவன் சகுந்தலையைக் காதன் மணம் அயர்ந்தமைக்குச் சான்றான கணையாழி மீண்டுங் கிடைக்கப்போவதனை, முன்னரே குறிப்பித்து வைத்திருத்தல் அறிந்தகொள்க; யாங்ஙனமெனின், அவளை நான் மணஞ் செய்த துண்டென்று ஒரு சான்று காட்டுவ தாகவே தோன்று கின்றது என்ற இறுதிச் சொற்றொடர், உடனே அடுத்து அகப்படுங் கணையாழியாகிய சான்றுக்கு ஒரு தோற்று வாயாகவுந் தோன்றுதல் அறிந்துகொள்க. இவையே யன்றி, ஒருவர் தாஞ்செய்த குற்றத்தைப் பிறரொருவர் தற்செயலாய்க் கூறும் வாய்மொழியின் வாயிலாக ஆசிரியன் உணரவைக்கும் நுட்பமும் மிகவும் மகிழற்பால தொன்றா யிருக்கின்றது. ஐந்தாம் வகுப்பின் முதலில் தன் காதற்பரத்தையான அமிசபதிகையென்பாள் பாடிய, விழுநறவு வேண்டிவிரி மாவிணரிற் பருகிச் செழுமுளரி யிடைவறிது சேருமிள வண்டே! செழுமுளரி யிடையிருந்து திகழ்மாவை நீயோர் பொழுதுமறந் துறைகுவது பொருந்துமோ உரையாய்? என்னும் இசைப்பாட்டைக் கேட்டதும் அரசன், துருவாசர் இட்ட வசையால், தான் சகுந்தலையை மணந்த வரலாற்றினை மறந்துபோகியும், அப்பாட்டின் பொருளால் தன் மனங் கலக்குறுத்தப்பட்டு, இத்தன்மையான பொருளைத் தரும் இப் பாட்டைக் கேட்டவுடனே, காதலொருவரைப் பிரியா திருக்கையிலும், எனக்கு ஏன் இத்தகைய பெருங் கலக்கம் உண்டாகின்றது? எனத் தனக்குட் சொல்லித், தான் செய்து மறந்துபோன குற்றத்தைத் தான் அறியாமலே ஒருவாறு நினைந்து வருந்து மாறு வைத்து ஆசிரியன் அமைத்த இந்நுண்ணமைப்பு ஏனை யெல்லாருஞ் செய்தற்கு எளிதில் வாய்வதன்று. இன்னுங், காசியபரது தவப்பள்ளியில் துஷியந்த மன்னன் தன் புதல்வன் சர்வதமனனைத் தலைப்படுமாறும், அங்ஙனம் அவனைத் தலைப்படுகின்றுழி, அவனைத் தன் மகனென அவன் உணருமாறும், அதன் பின்னர் இரு பொருள் படுஞ் சகுந்தலாவண்யம் என்னுஞ் சொற்றொடர்கொண்டு அரசன் தன் மனையாளான சகுந்தலை அங்கிருத்தலை யுணருமாறும் பிறவுமெல்லாம் எத்துணை நுட்பமாக எத்துணைத் திறமையாக ஆசிரியனால் தொடுக்கப்பட்டுள்ளன வென்பதை நன்கு ஆராய்ந்து பார்மின்கள்! இவைபோலும் நுண்வினைத் திறங்கள் இந்நாடகத்திடையிடையே மிளிர்தலை நுனித்தாராய்ந்து அறிதலே செயற்பாலது; அவையெல்லாம் ஒருங்கே ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியுமென விடுக்க. 10. இந்நாடக அமைப்பிற் சில குறைபாடுகள் தம் தந்தை கண்ணுவரது தவப்பள்ளியில் அவர் இல்லாதபோது விருந்தினனாய் வந்த துஷியந்த மன்னனை வரவேற்றுச், சகுந்தலையின் தோழிமார் அவற்குச் செய்யும் விருந்தோம்பல்கள் பாராட்டற்பாலனவே யாயினும், அவர்கள் அரசனைக் கண்டு முதன்முதல் உரையாடும்போதே, சகுந்தலையை அவற்கு மனைவியாக்க விழைந்து, அன்புள்ள சகுந்தலா, இன்று உன் தந்தை இங் கிருந்தால் தம் வாணாள் முழுமைக்கும் மிக விலையுயர்ந்த களஞ்சியமாய் உள்ளதைக் கொடுத்து, இச் சிறந்த விருந்தினரை மகிழ் வித்திருப்பர். (17). என நாணஞ் சிறிதுமின்றி மொழிந்தனராக ஆசிரியன் நுவல்வது பொருத்தமாயில்லை. புதிது வந்த ஒருவனொடு பழகியறியா முன்னரே, சகுந்தலையைப் போலவே மணமாகா இளம் பருவத்து மங்கையரான அனசூயை பிரியம் வதை யென்னும் அவடன் றோழிமார் இருவருந் தம் அச்சமும் நாணமும் விண்டு, அவ்வரசற்குச் சகுந்தலையை மணஞ் செய்வித்தல் பற்றித் தாமே அவனிடம் வலிந்து பேசினா ரென்றல், அச்சம் நாணம் மடம் என்னும் விழுமிய பெண்மைக் குணங்கள் இயற்கையே யுடைய மகளிர்க்குச் சிறிதும் ஏலாது. ஆகவே, அரசனை முதன்முதற் கண்ட அப்பொழுதே அவர் அங்ஙனம் அவன் எதிரே மொழிந்தனராக ஆசிரியன் நுவன்றது ஒரு குறைபாடேயாம். இங்ஙனமே இந் நாடகத்தின் முதல் இரண்டு வகுப்புக் களிலுஞ் சகுந்தலையின் தோழிமார் இருவருந் தமது நாண்டகைமைக்கு இசையாவாறு இடையிடையே உரை நிகழ்த்தினராக ஆசிரியன் கூறுவனவெல்லாம், ஆசிரியன் உயர்ந்த பெண்மைக் குணங்களை நன்காராய்ந்துணராக் குறைபாட்டால் நிகழ்ந்தனவே யாகுமல்லால், அவை அப்பெண் மக்கள்பால் உண்மையில் நிகழ்ந்தனவாகா வென்று கடைப் பிடிக்க. அற்றன்று, கானகத்தே துறவோர் குடியில் வளர்ந்தவரான அம் மாதரா ரிருவருங் கள்ளங் கவடு சிறிது மறியா வெள்ளை யுள்ளத்தினராகலான், அவர் அங்ஙனம் பேசினாராதல் கூடும்; ஆகலான், அவர்தாம் பேசியதனைப் பேசியபடியே கூறியது ஆசிரியனுக்குக் குற்றமாகாதா லெனின்; நன்று சொன்னாய், சகுந்தலையுந் துறவோர் குடியில் வளர்ந்தவளாகலின், அவளும் அங்ஙனமே அரசனொடு நெருங்கி அளவளாய்ப் பேசினா ளென்று ஆசிரியன் கூறுதல்வேண்டும்; மற்றுச், சகுந்தலையோ அரசனொடு சிறிது பேசும் அளவுக்குங் கூசி வாய் வாளாதிருந்தனள் எனக் கிளக்கும் ஆசிரியன், அவடன் றோழிமார்மட்டும் அங்ஙனம் நாண் துறந்து, பேசும்வரை கடந்து பேசினாரெனல் அடாது. கானகத்திருப்பினும் நாட்டகத் திருப்பினுந் துறவறத் திருப்பினும் இல்லறத் திருப்பினும் பெண் பாலார்க்குரிய அச்சம் நாணம் மடம் என்னும் இயற்கைக் குணங்கள் அவர்பால் என்றும் எவ்விடத்தும் உளவாயே காணப்படும். அவ்வியற்கைக் குணங்களை மேற்கொண்டு எழூஉம் ஏனைக் காதல் சினம் வஞ்சம் முதலான உள்ள வேறுபாடுகள் மிக்குத் தோன்றுங்காலன்றி, மற்றைக் காலங்களில் அப் பெண்மைக் குணங்கள் புலனாகா தொழியா வென்று பகுத்துணர்ந்து கொள்க. இனி, இந்நாடகக் கதை நடந்துசெல்லுதற்கு ஓர் அச்சாணியாக ஆசிரியன் துருவாசரது வசைமொழியினை இடையே பிணைத்தது நுட்ப வினைத்திறத்தின்பாற்படுவ தொன்றேயாயினும், அருந்தவத்தான் மனந்தூயரான அத்துறவி, பிழையேதுஞ் செய்திலாச் சகுந்தலையாகிய ஓரிளம்பருவப் பெண்மேற் கடுஞ்சினங் கொண்டு அவளை வைது, அவளை அளவிறந்த துன்பத்திற்கு ஆளாக்கினாராக ஆசிரியன் உண்மையில் நடவாத தொன்றனைப் புனைந்து கட்டியது ஒரு பெருங் குறைபாடே யாகும். இதனை முன்னரும் விளக்கிக் காட்டினாம். நாடகக்காப்பியப் புலமையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பேராசிரியராகிய சேக்குவீயர், காதலன்பிற் கனிந்தார்க்கு உதவியாகவன்றி, அவர் தமக்குப் பகையாகத் தூயரான துறவிகளைப் பிணையாத நுட்பமும் முன்னரே எடுத்துக்காட்டினாம். இனி, இயற்கைக்கு முழு மாறான நிகழ்ச்சிகளை ஆசிரியன் இந்நாடகக் கதை நிகழ்ச்சியின் இடையிடையே புகுத்தி யிருப்பது, இதனைப் பயில்வார்க்கு உண்டாம் இன்பவுணர் வினைச் சிதைப்பதா யிருக்கின்றது. சகுந்தலை துஷியந்த மன்னனை யாழோர் முறையில் மணந்து கருக்கொண்டிருக்குஞ் செய்தியினை, வானின்கட் டோன்றிய ஒரு தெய்வ ஒலி, அவள் தந்தை காசியபர்க்கு அறிவித்த தெனும் புனைந்துரை, பயில்வார்க்கு மகிழ்ச்சி தருவதாயில்லை; அவடன் றோழிமார் வாயிலாகவே அச் செய்தி அவரது செவிக்கு எட்டியிருக்க வேண்டுமாகலான். இச் சிறு நிகழ்ச்சிக்கு ஒரு தெய்வ ஒலியினைக் கொணர்ந்து மாட்டியது நாகரிக அறிவின்பாற் பட்டதாயில்லை யென்றுணர்க. இதுவேயுமன்றிக், காசியபர் தம் மகள் சகுந்தலையைக் கணவன் இல்லத்திற்குப் போக்குங்கால் அவளை ஒப்பனை செய்தற்பொருட்டாகத், தமது பாழியிலுள்ள மரங்களை வேண்ட, அவை பட்டாடைகளையுஞ் செம்பஞ்சிக் குழம்பை யும் மணிக்கலன்களையுங் கான்றனவென்று ஆசிரியன் புனைந்து கட்டியதும், அரசனை வானுலகுக்கு அழைத்துச் செல்லும்பொருட்டு வானூடு கட்புலனாகாது வந்த மாதலி, அரசற்கு விதூஷகனான மாதவியனைப் பிடித்துக்கொண்டு மேற்சென்று அவனது கழுத்தை முறிக்கலாயினானென இயற்கையொடு திறம்பி இசைவின்றி இசைத்ததும் பிழை பாடுகளேயாகும். இன்னுந், தேவர்க்கரசனான இந்திரற்கு அரக்கரால் நேர்ந்த இடரை, மண்ணுலகத்துளனான ஒரு மன்னன், அவ் விந்திரனால் அழைக்கப்பட்டு வானுலகு சென்று நீக்கினா னென்றல், சிறிதும் நம்பகத்தக்கதா யில்லை. ஏமகூட மலைக் கண்ணதான மாரீசரது தவப்பள்ளியில் வைகுஞ் சகுந்தலையை அரசன் மீண்டுங் கண்டு தலைக்கூடுதற்கு வாயிலாகவே, காளிதாசர் அவன் வானுலகு சென்று திரும்பிய நிகழ்ச்சியைப் படைத்துத் தொடுத்திட்டார். இயற்கைக்கு மாறான இந் நிகழ்ச்சியை இங்ஙனம் படைத்து மொழியாமல், இயற்கையோ டொத்த ஒரு நிகழ்ச்சியால் அவன் அவளைத் தலைக்கூடுமாறு ஆசிரியர் செய்திருந்தன ராயின், இந்நாடகம் சுவை பெரிது முதிர்ந்து, பயில்வார்க்குக் கழிபேரு வகையினை அளியா நிற்கும். இவர் ஆரியப் புராணக் கதைப் பொய்ம்மையிற் சிக்குண்டு மயங்கி விட்டமையின், இயற்கைச் செந்நெறி பிழைத்து இங்ஙனமெல்லாம் ஏலாதவற்றை இயைத்து இடை யிடையே இழுக்கினாரென்க. மற்று, உலகவிற்கை மக்களியற்கையொடு மாறு கொள்ளா வாறு நாடக நூல்யாக்கும் வகைகளை விரித்து விளக்கிய தொல்காப்பியம், இறையனாரகப்பொருள் முதலான பண்டைத் தமிழ் நூல்களி னாசிரியர்க்கும், அவர் வழி பிழையாது போந்து கலித்தொகை, அகநானூறு, திருச்சிற்றம் பலக்கோவையார் முதலான நாடகத் தமிழ் நூல் யாத்த நல்லிசைப் புலவர்க்குங், காளிதாசரைப் போல் உலகவியற்கை மக்களியற்கையொடு திறம்பிக்கூறுவாருரைகள் ஒரு சிறிதும் உடம்பாடாகாவாய்க் காணப்படுகின்றன. தமிழ்த் தொல் லாசிரிய ரெல்லாரும் அவ்விருவகை இயற்கைகளோடு ஒருங் கொப்பவே நாடகக்கதை நிகழ்ச்சியினை நலமுற நடாத்துமாறு ஈண்டுச் சில எடுத்துக் காட்டுக்களின் வைத்து இனிது விளங்கக் காட்டுதும் :- தன்காதலன்பால் அளவின்றியே பெருகிய காதற் பேரன்பினளாய்த், தன்னையுந் தன்னைச் சூழ நிகழும் நிகழ்ச்சி களையும் அறவே மறந்து அன்புருவாய் வைகிய சகுந்தலையின் கற்புள்ள மாட்சியினைக் கண்டு வியவாது, அவளைத் துருவாச மாமுனிவர் வைதுரைத்தா ரெனக்கிளந்த காளிதாசர்போலாது, கீழே காட்டப்படுங் கலித்தொகைச் செய்யுளை யாக்கிய தமிழாசிரியர், காதன்மிகுதியால் ஒருவரையொருவர் தழீஇப் பிணைந்து சென்ற காதலனுங் காதலியுமாம் இருவரையுங் கண்ட முக்கோல் அந்தணர் என்னும் மாமுனிவர் அவர்தங் காதற் பேரன்பை மிக வியந்து அஃது அறமே என மகிழ்ந்து போந்தாரெனக் கூறுதல் நினைவில் நன்கு பதிக்கற் பாலதாகும். தன்மகளும் அவள் காதலனும் ஒருங்குசென்றவழி தேடிச் சென்ற செவிலித்தாய் எதிர்வரும் முக்கோலந்தணரை வினாதல்:- எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல் உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவல்அசைஇ வேறுஓரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை அந்தணீர்! வெவ்விடைச் செலன்மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனுந் தம்முளே புணர்ந்த தாம்அறி புணர்ச்சியர் அன்னார் இருவரைக் காணிரோ? பெரும! அதற்கு அம்முக்கோலந்தணர் கூறும் விடை:- காணேம் அல்லேம், கண்டனம் கடத்திடை ஆணெழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய மாணிழை மடவரல் தாயிர் நீர் போறிர்! பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என்செய்யும்? நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்? தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்? சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே எனவாங்கு, இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்! சிறந்தானை வழிபடீஇச் சென்றனள் அறந்தலை பிரியா ஆறும் மற்றதுவே (பாலைக்கலி, 9) இவ்வரும்பெறற் பழந்தமிழ்ப்பாவிற், பெற்றார் உற்றார் உடம்பாடு சிறிதுமின்றித் தம்மகளும் அவள் காதலனுந் தமக்குள் தாமேயறிந்த புணர்ச்சியினராய்த், தம்மவரை யெல்லாம் விட்டுப்பிரிந்து போயது குற்றமேயெனக் கருதிய செவிலித்தாய், அவ்வழியே எதிரிற்போந்த அருந்தவத்தோரைக் கண்டு, அங்ஙனம் போய அவரது ஒழுகலாறு குற்றமுடைத் தாகலின், அவ்விருவரையுங் கண்டதுண்டேல் அவர்தமக்கு அந்தணீர் நல்லறிவு தெருட்டினீரோ என்னுங் கருத்தை அகத்தடக்கி வினவியதும்; அதுகேட்ட அம்முனிவரர் அவளது கருத்தறிந்து, அவளுக்கு அறிவுரைபகர்வாராய்ச், சந்தனமும் முத்தும் இசையும் மலையிலுங் கடலுளும் யாழுளும் பிறப்பினும் அவை பிறந்த இடத்திற்குப் பயன்படாவாய் அணிவார்க்குங் கேட்பார்க்குமே பயன்படுதல்போல, நும்மகளுந் தான் காதலித்த தன்னைக் காதலித்த ஆண்டகை யொருவனுக்கே பயன்படற் பாலளாகலின், அவளது கற்பு மாட்சியும் அவன்றன் காதற் பெருமையும் உணர்ந்து அவரைக் கடிந்துரையேமாய், அன்பிற்பிணைந்த அவரது காதற் கிழமையினைக் கண்டு அது தலையான அறமேயெனக் கருதி மகிழ்ந்து போந்தேம்; ஆகலின், நீவிரும் அவ்விருவர்க்காகத் துன்புறல் விடுமின் என விடை கூறி அவளை ஆற்றியதும், எத்துணை அழகாக எத்துணை அறிவாக மக்களியற்கையோ டொட்டி, அம்முனிவரர் தந்தவமாட்சிக்கும், அக்காதலர்தம் விழுமிய ஒழுக்கத்திற்கும் வடுவுண்டாகாமல் எடுத்திசைக்கப் பட்டிருக்கின்றன பார்மின் மணங்கூடுதற்கு முன்னரே நிகழ்ச்த காதலொழுக்கத்தால் ஒருவரையொருவர் இன்றியமையாராய்த் தமர் தம்மை வேறுபிரித்து வேறுபிறர்க்கு மணம்புணர்த்துவர் கொலோவென்னும் அச்சத்தால், தமரறியாமலே புறம் போந்துவருங் காதலர் இருவரை எதிரே கண்ட துறவிகள், அவர்பாற் சினங்கொண்டு அவரை வைதுரையாமல், அவர்தங் காதற்கிழமைக்கு மகிழ்ந்து போந்ததல்லாமலுந், தன் காதல னோடுசென்ற அந்நங்கையின் செவிலித்தாய்க்கும் அவடன் காதற்கற்பின் மாட்சியை வியந்துரைத்து, அஃது அறமேயென வலியுறுத்தினாரென, அத்துறவோரின் அருளுக்கும் அறிவுக்கும் பொருந்த மேற் காட்டிய அருந்தமிழ்ச்செய்யுளை யாத்த தமிழ்ச்சான்றோரின் அறிவும் உணர்வும் உயர்ந்தோர் ஒழுகலாற்றினை எத்துணை நுட்பமாகக் கவர்ந்திருக் கின்றன! காதற் கற்பினைக் கண்டு மகிழாது அஃதுடைய சகுந்தலையை வைது, அவளைச் சொல்லொணாப் பெருந்துன்பத்திற்கு ஆளாக்கினாரெனத் துருவாசமா முனிவர்க்கு அருளின்மையை யும் உணர்வின்மை யையுங் கற்பித்த காளிதாசரின் அறிவும் உணர்வும் இவ்வகையில் தமிழ்ச் சான்றோரின் நுண்ணிய விழுமிய உள்ள நிலைக்கு எத்துணைத் தாழ்ந்த நிலையில் நிற்கின்றன! அருள் துளும்பும் நெஞ்சத்தினரான அடியாரின் உள்ளநிலையை உள்ளவாறு ணர்ந்து நாடகநூல் யாப்பதிற் பழந்தமிழ்ச் சான்றோரும், ஆங்கிலத்திற் சேக்குவீயரும் ஒருங்கொத்த நிலையில் நிற்றல் எஞ்ஞான்றும் மறக்கற் பாலதன்று. இன்னும் இங்ஙனமே, பழந்தமிழ்க் கால வெல்லையை யொட்டிப் போந்த மாணிக்கவாசகப் பெருமானும் பழைய தமிழ்ச்சான்றோர் சென்றநெறி சிறிதும் பிழையாராய், மின்றொத் திடுகழல் நூபுரம் வெள்ளை செம்பட்டுமின்ன ஒன்றொத்திட, உடையாளொடொன்றாம் புலியூரன் என்றே நன்றொத்தெழிலைத் தொழவுற்றனம், என்னதோர்நன்மைதான் குன்றத்திடைக் கண்டனம் அன்னை நீசொன்ன கொள்கையரே என்றும், சுரும்பிவர் சந்துந் தொடுகடன்முத்தும் வெண்சங்கும் எங்கும் விரும்பினர் பாற்சென்று மெய்க்கணியாம், வியன்கங்கைஎன்னும் பெரும்புனல் சூடும்பிரான் சிவன் சிற்றம்பலம் அனைய கரும்பன மென்மொழியாரும் அந்நீர்மையர் காணுநர்க்கே என்றும், புணர்ந்துடன் போந்தகாதலரைக் கண்டு மகிழ்ந்து போந்த அருந்தவத்தோர், செவிலித்தாய்க்கு அவர்தங் காதற் கிழமையின் விழுப்பந்தேற்றி, அவளை ஆற்றுவித்தாரெனத் திருச்சிற்றம்பலக்கோவையாரில் அருளிச்செய்திருத்தல் கண்டுகொள்க. இனித், தன் காதலனைக் கூடிக் கருக்கொண்டிருக்குஞ் சகுந்தலையின் நிலையினைத், தமது தவப்பள்ளிக்குத் திரும்பிப் போந்த கண்ணுவ மாமுனிவர்க்கு, அவடன் றோழிமார் அச்சத்தாற் றெரிவியாதிருந்துவிட்டனரென்றும், அம் முனிவர் பிரான் தமது வேள்விச் சாலையிற் சென்ற காலையில் வானின் கட் டோன்றிய ஒரு தெய்வவொலியே அதனை அவர்க்கு அறிவிப்பதாயிற்றென்றுங் காளிதாசர் நுவலாநிற்க, மற்றுப் பண்டைத் தமிழாசிரியரோ இன்னோரன்ன புல்லிய நிகழ்ச்சிக்கெல்லாந் தெய்வத்தை இடைக் கொணர்ந்து நுழையாராய், உலகியலோடொட்டவே வைத்துக் கதையினை நடாத்துமாறு காட்டுதும்:- ஒரு தலைவி தமரறியாமலே தான் விழைந்த ஒரு காதற்கணவனை யாழோர் மணம் புணர்ந்து ஒழுகாநிற்புழி, அவ்விருவரையுந் திருமணம் புணர்த்தி இல்லற வாழ்க்கையில் நிலைப்பித்தற் பொருட்டும், அத்தலைவியைப் பெற்றோர் வேறெவாக்கும் மக்கட்கொடை நேராமைப்பொருட்டும், அவடன் இன்னுயிர்ப் பாங்கியே, அவட்கும் அவடன் காதலர்க்கும் உண்டான காதற்கிழமையினைத் தக்கதோ ராற்றால் முதலிற் செவிலித்தாய்க்கு அறிவுறுத்தா நிற்ப ளென்றும், அதுகேட்ட செவிலித்தாய் அஃது அறமே யெனவுணர்ந்து அதனை நற்றாய்க்கு அறிவுறுப்பளென்றும், அந் நற்றாயும் அதனை அங்ஙனமே அறமெனக் கருதித் தன் கணவற்கு அறிவிப்பளென்றும், அவனும் அதனை அன்னதாகவே நினைந்து பார்த்துத் தன்னையர்க்குந் தமர்க்கும் அறிவியா நிற்பனென்றும். இங்ஙனம் அவ்விருவர்க்குள் உண்டான மறைந்த காதற்கெழுதகைமையினைத் தோழியிற் றுவங்கி ஒருவர் ஒருவர்க்கு அறிவித்து மறை புலப்படுத்துவதே அறத்தொடு நிற்றல் ஆகுமென்றுந் தொல்லாசிரியராகிய தொல்காப்பியனார், பிறன்வரை வாயினும் அவன்வரைவு மறுப்பினும் முன்னிலை அறனெனப் படுதலென் றிருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் என்னுங் களவியற் சூத்திரத்திற் (23) கிளந்தமையுந், தொல்காப்பிய அகப்பொருளுக்கு வழிநூல் செய்த ஆசிரியர் இறையனார், தோழிக் குரியவை கோடாய் தேஎத்து மாறுகோள் இல்லா மொழியுமா ருளவே (இறையனாரகப்பொருள், 14) என்னுஞ் சூத்திரத்து ஓதினமையுங் காண்க. இவ்விறை யனாரகப்பொருட் சூத்திரத்திற்கு விழுப்பேருரை வகுத்த ஆசிரியர் நக்கீரனார் அறத்தொடு நிற்றலை விளக்கி யெழுதிய உரைப்பகுதி அழகும் அறிவும் ஒருங்குவிராய்த் துலங்குதலின், அதனை இங்கே பெயர்த்தெழுதிக் காட்டுவாம்:- இதன் பொருள் தோழி சொல்லுதற்கு உரிய செவிலித் தாய்மாட்டு மாறு கொள்ளாமைச் சொல்லுஞ் சொற்களும் உள என்றவாறு. எற்றினொடு மாறுகொள்ளாமையெனின்; தாயறி வினொடு மாறுகொள்ளாமையுந், தலை மகள் பெருமையொடு மாறுகொள்ளாமையுந், தலைமகள் கற்பினொடு மாறு கொள்ளாமையுந், தோழி தனது காவலொடு மாறுகொள் ளாமையும், நாணினொடு மாறுகொள்ளாமையும், உலகி னொடு மாறுகொள்ளாமையும் எனக் கொள்க. *** தாய் பிற்றை ஞான்று சிறுகாலையே படிமக்கலத் தொடும் புக்காள், மகளை அடியிற் கொண்டு முடிகாறும் நோக்கினாள், நோக்கி, அன்னாய்! என் மகள் பண்டையள் அல்லளால். இவ்வேறுபாடு எற்றினான் ஆயிற்று? நின்னால் அறியப்படுவ துண்டோ? என்னும். என்றவிடத்து, இவள், அன்று கொண்டு என்னாலுஞ் சிறிதுண்டு அறியப்படுவது, யாதோ வெனின், எம்மைக் கூழைக் கற்றைக் குழவிப் பிராயத்து மாழை கலந்த ஏழை நீர்மையாரொடு நாட்கோலஞ்செய்து விளையாடி வம்மினென்று போக்கினாய் போக்கின்வழி, யாம்போய், ஒரு வெண்மணல் பரந்த தண்மலர்ப் பொழிலிடை விளையாடி நின்றேமாக, ஒரு தோன்றல் ஒரு சுனைக்குவளைப் பூக்கொண்டு அவ்வழியே போந்தான், போதர, நின்மகள் அவனைநோக்கி, அப்பூவினை என்பாவைக்கு அணியத் தம்மின் என்றாள், அவனும் பிறிது சிந்தியாது கொடுத்து நீங்கினான். இஃது அறிவது அறியாக்காலத்து நிகழ்ந்தது. அறிவதறியாக் காலத்து நிகழ்ந்தததனை, அறிவதறிந்து, கொண்டார்க் குரியார் கொடுத்தார் என்பதும் உரியார்க்குரியார் பொற் றொடி மகளிர் என்பதும் நினைந்து, அவனை வழிபடாது பிறிதோராறு ஆவதாயின் இக் குலத்துக்கு வடுவாங் கொல்லோ வென் கருதினமை யான் நின்மகள் வேறுபட்டது என்னும். எனவே, தாயறிவினொடு மாறுகொள்ளா தாயிற்று; என்னை? விளையாடி வம்மின் என்றமையின். இனிப், பெருமையொடு மாறு கொள்ளாதாயிற்று. அக்காலத்து நற்செய்கை செய்ததனை இக்காலத்து நினைந்தமையின். இனிக், கற்பினொடு மாறு கொள்ளாதாயிற்று. இவ் வாறன்றிப் பிறிதோராறு ஆயினவிடத்துக் குடிக்கு வடுவாமெனக் கருதின மையின். இனித். தன் காவலொடு மாறுகொள்ளா தாயிற்று. இருவரும் இருந்த நிலைமைக்கண் நிகழ்ந்த தென்றமையின், இனி, நாணினொடு மாறுகொள்ளாதாயிற்று. அறிவதறியாக் காலத்து நிகழ்ந்ததென்றமையின். இனி, உலகினொடு மாறு கொள்ளாதாயிற்று. உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர் என்ற மையின். (14வது சூத்திர உரை) இனித் தோழிக்கும் உரித்து என்ற உம்மை யால், தலைமகட்கும் அறத்தொடுநிலை உரித் தென்பது. அஃதாமாறு, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தானும், பாங்கற்கூட்டங் கூடியானுந் தெருண்டு வரைந் தெய்தலுற்றுத் தமரைவிடும், விட்ட விடத்து அவர் மறுப்ப, அஃது இலக்கண மாகலான். அங்ஙனம் மறுத்துவிடத்துத் தலைமகள் வேறுபடும். எம் பெருமான் மறுக்கப் பட்டமை யான் மற்றொரு வாறாங் கொல்லோ வெனக் கலங்கி வேறுபாடு எய்தினபொழுதே தோழிக்குப் புலனாம். புலனாயின விடத்து, எம்பெருமாட்டி நினக்கு இவ்வேறுபாடு எற்றி னான் ஆயிற்று? என்னும். என்றவிடத்து, இஃதெனக்குப் பட்டது: இன்னவிடத்து ஒரு ஞான்று நீ ஆயங்களுடன் தழையுங் கண்ணியுங் கோடற்கு என்னிற் சிறிது நீங்கினாய்; யான் நின்று ஒரு மணிச்சுனை கண்டேன்; கண்ட அம் மணிச்சுனை தான் ஆம்பலே குவளையே நெய்தலே தாமரையே என்றிப் பூக்களால் மயங்கி மே தக்கது கண்டு, வேட்கையான் ஆடுவான் இழிந்தேன்; இழுக்கிக் குட்டம்புக்கேன்; புக்குத் தோழியோ வென, நீ அங்ஙனங் கேளாய் ஆயினாய்; ஆக, ஒரு தோன்றல் தோன்றிவந்து எனது துயர் நீக்கு தற்காகத் தன்கை நீட்டினான்; நீட்டின விடத்து மலக்கத்தான் நின் கையெனப் பற்றினேன்; பற்ற வாங்கிக் கரைமேல் நிறீஇ நீங்கினான். நீ அன்று கவலுதியெனச் சொல்லே னாயினேன். நீ எவ் வெல்லைக் கண்ணுங் கைவிடா தாய் அஞ்ஞான்று கைவிடலினை ஆக்கிற்று விதியாகாதே? இனிப், பிறிதொன்றாங் கொல்லோ வெனக் கலங்கி வேறுபட்டேன் என்று தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நிற்கும் (29வது சூத்திர உரை). இப்பிற்பகுதியிற் றலைமகள் தோழிக்கு அறத்தொடு நின்ற வழி, அஃது ஊழ்வலியால் நிகழ்ந்த தென்றமையின், அது தோழி தன் காவலொடு மாறுகொள்ளாதாயிற்று. இனி, அது தலைமகள் நாணினொடு மாறுகொள்ளாதாயிற்று, எத்துணை மனவலிமையுடையாரும் நீருள் மூழ்கி உயிர் தத்தளிக்குங்கால் தம்மைக் காப்பதொரு துரும்பையும் அந்நேரத்துக் கைப்பற்றுவ ராகலின்; என்று முற்பகுதியிற் சொல்லா துவிட்டதனை ஆராய்ந்து உரைத்துக்கொள்க. இங்ஙனமாகப், பண்டைத் தமிழ்மக்கள், தம்முட் காதலர் ஆவார் இருவர்க்குள் நிகழ்ந்த காதலொழுக்கத்தை அவர்தம் பெற்றோர் உற்றார்க்குத் தெரிவித்துக்கொள்ளும் நாகரிக முறையினை ஆசிரியர் நக்கீரனார் விரித்துக்காட்டி யிருக்கும் இவ்விழுமிய உரைப்பகுதிகொண்டு நன்கு அறிந்துகொள்க. இந்நாகரிக முறையே உலகியலிற்சிறந்த ஓர் ஒழுகலாற்றிற்கும், அதனோடு ஒட்ட நாடக நூல் அமைக்கும் நல்லிசைப் புலவன்றன் மதி நுட்பத்திற்கும் மிக இயைந்ததொன்றாகும். காளிதாசர் இவ்வியல்பினைத் தமிழாசிரியரைப் போல் நன்கறிந்திருந்தனராயிற், சகுந்தலையின் காதலொழுக்கத்தினை அவடன் தந்தை கண்ணுவமா முனிவர்க்கு அறிவித்தற் பொருட்டு இயற்கைக்கு மாறாய்ச் சென்று ஒரு தெய்வ வொலியினைக் கொணர்ந்து பிணைத்திரார்; மற்று, அவடன் றோழிமாரே அதனை முதலிற் கௌதமியம்மையார்க்கு அறிவிப்ப, அவர் அதனைக் கண்ணுவமாமுனிவர்க்கு அறிவிப்ப, அம்முனிவர்பிரானும் அதனை ஏற்று மகிழுமாறு செய்திருப்பர். கண்ணுவமாமுனிவர் காதற்பேரன்பின் வழித்தான் யாழோர் மன்றலை ஏற்குந்தன்மையர் என்பது அனசூயைகூறும் உரையால் நன்குபுலனாதலின் (60), தோழிமார் அதனை அவர்க்குக் கூற அஞ்சியிருப்பரென்று, கொள்ளுதற்கும் இடமில்லை. அங்ஙன மிருக்கக், காதற் கிழமையின் விழுப்பம் உணர்ந்த அம்முனிவர்பிரான்றன் உள்ளப்பான்மை யினை நன்கறிந்த பின்னரும் அவடன் றோழிமார் அவர்க்கு அதனை அறிவியாதிருந்து விட்டன ரென்றும், ஆகவே வானிடை நிகழ்ந்த ஒரு தெய்வவொலியே அவர்க்கதனை அறிவித்த தென்றுங் கொன்னே உலகியலொடு மாறுகொண்டு காளிதாசர் அதனைப் புணர்த்தியது ஒருகுறை பாடேயாமென விடுக்க, அதுவேயுமன்றிப், புதிதுவந்த ஏதிலனான ஓர் அரசனைக் கண்டதுஞ் சகுந்தலையை அவற்கு மணஞ்செய்து கொடுக்க அவடந்தை விரும்புவரென அத்தோழியர் அவன் முன்னிலையில் அவட்குச்சொல்லினரென அவர்க்கு அச்ச மின்மையையும் நாணமின்மையையும் முன்னர்க் கற்பித்த காளிதாசர் பின்னர்அவர் தமக்குத் தந்தையாகக் கருதி நெடிதுபழகிய கண்ணுவ முனிவர்பால் அச்சங்கொண்டு அதனைச் சொல்லாது விட்டனரெனப் புனைந்தது முன்னெடு பின் மாறுகொண்டு நிற்றலும் ஓர்க. இனி, அரசன் முன்னிலையிலன்றிச் சகுந்தலையின் பக்கமாய்த் திரும்பி மறைவாய் அவளது செவியில் அதனைப் பகர்ந்தனரெனக்கோடுமெனின்; ஆண்டும் அக்குற்றஞ்சாரா தொழியாது; என்னை? ஏதிலான் ஒருவனைக் கண்ட அந்நொடியே அவன்றன் இயற்கையினை ஆராய்ந்து பாராது, கதுமென அவளை அவற்கு மணமகளாக்குதல் குறித்து அவட்கு அவ்விருவரும் உரைத்தாரெனிற், சகுந்தலையை அத்துணை எளியளாகக் கருதியகுற்றமும், அவள் மாட்டும் அதனை நாணமின்றியுரைத்த குற்றமும் வராநிற்கும் அல்லதுஉம், அரசனுடன் சகுந்தலையைப் பொருத்துங்காறும் அத் தோழிமார் இருவருங் கூறுவனவுஞ் செய்வனவுமெல்லாம் அச்சமும் நாணும் உடைய பெண்டகைமைக்கு இயையாவா யிருத்தலையும் முன்னரே விளக்கிப் போந்தாம். மற்றுத், தலைவியையுந் தலைவனையும் இடைநின்று இயைவிக்குந்தோழி தனது பெண்டன்மைக்கு ஏற்பவுந், தலைவி தன் தலைமைத் தன்மைக்குப்பொருந்தவுந், தலைவன் தான் காதலித்த தலைவி தனக்குக் கிடைத்தற்கரியள் என்று கருதி ஏங்கவும் ஒழுகி அவர் தம்மைப் பொருத்தும் நுட்பவகைகள், உயர்ந்த மக்களியற்கையோடும், அதற்கேற்ற அவர் தம் ஒழுகலாறோடும் ஒருங்கொத்து நிற்குமாறு வைத்துத் தமிழ்த்தொல்லாசிரியர் நாடக நூல் யாத்தமை, ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்த நாற்றமுந் தோற்றமும் என்னுங் களவியற் சூத்திரத்தானும், இறையனாரகப் பொருளிற் போந்த, ஆங்குணர்ந் தல்லது கிழவோள் தேஎத்துத் தான்குறை யுறுதல் தோழிக் கில்லை முன்னுற உணரினும் அவன்குறை யுற்ற பின்ன ரல்லது கிளவி தோன்றாது உள்ளத் துணர்ச்சி தெள்ளிதிற் கரந்து கிழவோள் தேஎத்துக் குறையுறூஉம் உளவே குறிப்பறி வுறூஉங் காலை யான என்றற் றொடக்கத்துச் சூத்திரங்களானும் அவற்றிற்கு விரித்த ஆசிரியர் நக்கீரனாரதுரை யானும் நன்குணர்ந்து கொள்க. அவையெல்லாம் ஈண்டு விரிக்கின் இது வரம்பின்றிப் பெருகும் என்க. அது நிற்க. ஈற்றில், இந்திரனது வேண்டுகோளுக்கு ஒருப்பட்டுத் துஷியந்தன் வானுலகுசென்று மீண்டானென ஒன்று புனைந்தது. இயற்கை நிகழ்ச்சியோடு ஒவ்வாதாயினும், அது மீண்டும் அரசன் சகுந்தலையைத் தலைக்கூடுதற்கு ஒரு வாயிலாய் நிற்றலானும், அவ்வாற்றானன்றிப் பிறிதொரு வாற்றான் அவ்விருவரையும் மீண்டும் ஒருங்கு தலைப் பெய்வித்தல் சுவைகனிந்து காட்டா தாகலானும், அஃது இல்லது இனியது நல்லதென்று நல்லிசைப் புலவரால் நாட்டப்பட்ட நாடக வழக்கின் பாற்படுவதொன்றாகலின், அதனையும் ஒரு குறைபாடாகக் கூறுதல் அமையாதாம் பிறவெனின்; அற்றன்று, உரையாசிரியர் நச்சினார்க்கினியர், நாடகவழக்கினும் எனுஞ் சூத்திரவுரையில் (தொல்காப்பியம், அகத்திணையியல், 53). புனைந்துரைவகையாற் கூறுபவென்றலிற் புலவர் இல்லனவுங் கூறுபவாலோ வெனின், உலகத் தோர்க்கு நன்மைபயத்தற்கு நல்லோர்க் குள்ளன வற்றை ஒழிந்தோர் அறிந்தொழுகுதல் அறமெனக் கருதி, அந்நல்லோர்க் குள்ளனவற்றிற் சிறிது இல்லனவுங் கூறுதலன்றி, யாண்டும் எஞ் ஞான்றும் இல்லன கூறாரென்றற்கன்றே நாடகம் என்னாது வழக்கென்பாராயிற்றென்பது. இவ்வதிகாரத்து நாடகவழக்கென்பன, புணர்ச்சி உலகிற்குப் பொதுவாயினும், மலைசார்ந்து நிகழுமென்றுங் காலம்வரைந்தும் உயர்ந்தோர் காமத்திற் குரியன வரைந்தும் மெய்ப்பாடு தோன்றப் பிறவாறுங் கூறுஞ்செய்யுள் வழக்கம். இக் கருத்தானே முதல் கரு வுரிப்பொருளென்ற மூன்றே, நுவலுங்காலை என்று புகுந்தார் இவ்வாசிரியர். இப் புலனெறி வழக்கினை இல்லதினியது புலவரான் நாட்டப்பட்டது என்னாமோவெனின், இல்லதென்று கேட்டோர்க்கு மெய்ப்பாடு பிறந்து இன்பஞ் செய்யா தாகலானும்; உடன் கூறிய உலகியல் வழக்கத்தினை ஒழித்தல் வேண்டு மாகலானும் அது பொருந்தாது. அல்லதூஉம், அங்ஙனங்கொண்ட இறையனார்க்களவிய லுள்ளும், வேந்துவினை யியற்கை பார்ப்பார்க்கு முரித்தே அரசரல்லா ஏனையோர்க்கும் புரைவதென்ப ஓரிடத்தான எனவும், வேந்தற் குற்றுழிப் பொருட்பிணிப் பிரிவென் றாங்க விரண்டும் இழிந்தோர்க் குரிய எனவும், நான்கு வருணமுங் கூறி, நால்வகைத் தலை மக்களையும் உணர்த்தலின், இல்ல தென்பது தொல்லாசிரியர் தமிழ் வழக்கன்றென மறுக்க. என்று வலியுறுத்திக் கூறியவாற்றால் இல்லது என்பதற்கு யாண்டும் எஞ்ஞான்றும் இல்லது எனப் பொருளுரைத்தல் தொல்லாசிரியரது தமிழ் வழக்கிற்கு இசையாமை தெள்ளிதின் விளங்கற்பால தாகும். பட்டது பட்டாங்கு கிளக்குந் தமிழ்ச் சான்றோர் மலிந்த இத்தென்றமிழ் நாட்டிலிருந்து அவரது புலனெறிவழக்கிற் பயின்றிருந்தனராயிற் காளிதாசர் யாண்டும் எஞ்ஞான்றும் நடவாத இப்புனைந்துரையும் இதுபோல்வன பிறவும் இந்நாடக நூலின்கட் படைத்துப் புகுத்தியிரார் இயற்கையில் நடவாப் பொய்ந் நிகழ்ச்சிகளைத் தாம் வேண்டியவாறெல்லாம் படைத்து வழங்கவிடும் ஆரியர் நிறைந்த வடநாட்டின்கண் இருந்தமையினாற்றான் அவர் இவை போல்வனவற்றைத் தாமும் படைத்துத் தாம் இயற்றிய அரிய நூல்களில் ஆங்காங்கு நுழைத்து இழுக்குவாராயினர் என்க. அற்றேல், துஷியந்த மன்னன் இந்திரற்கு உதவி செய்தற் பொருட்டு வானுலகு சென்று மீண்ட பொய்ந் நிகழ்ச்சியினை விட்டுப், பிறிதொரு மெய்ந் நிகழ்ச்சியால் அவன் சகுந்தலையை மீண்டுந் தலைக்கூடுமாறு செய்து இந்நாடக நிகழ்ச்சியினை நன்கினிது முடித்தல் இயலுமோ வெனின், இயலும்; அது காட்டுதும்:- இந்திரன் என்பான் கடாரதேயத்தின்1 அரசனே யாவன். இத்தேயங் கிழக்கே யுள்ளமையால் இந்திரன் கீழ்த்திசைக் காவலன் என்று பண்டுதொட்டு வடநூல்களில் நுவலப்பட்டு வருகின்றனன். இந்திரனது நாட்டில் ஐராவதம் என்னும் யாறு ஓடுவதாகவும், அதன்கண் வெள்ளையானை யுளதாகவும், அவன் மழையினை வருவிக்குந் தேவனாகவும் வடநூல்கள் நுவலுமாறே, இஞ்ஞான்றும் அந்நாட்டில் ஐராவதம் எனப் பெயரிய யாறு ஓடா நிற்கின்றது, வெள்ளை யானையும் அதன்கண் உளது. மழை வருவிக்குந் திருநாளும் அதன்கட் கொண்டாடப்பட்டு வருகின்றது. மழை அடுத்தடுத்து மிகுதியாகப் பெய்து வருதலால் இந்நாட்டின் அரசன் மழைக்கடவுள் எனக் கூறப்பட்டதூஉம் பொருத்தமாகவே யிருக்கின்றது. இதன்கண் நெற்பயிரின் விளைவு நனிமிகுந் திருத்தலால் இந்நாட்டவர்க்குள் வறுமையே யில்லை அதுவேயுமன்றிப், பொன்னும் விலையுயர்ந்த பல்வகை மணிகளும் இதன்கண் நிரம்பியிருத்தலால் இது பொன்னா டெனப் பெயர்பெறலானதும் வாய்வதேயாம். இப்பெற்றிருத்தான வளவிய கடாரதேயத்து விளை பொருள்களையும் பொன்னையும் மணிகளையுங் கவர்ந்து கோடற்பொருட்டு அந்நாட்டையடுத்துள்ள பெரிய பெரிய மலைத்தொடர்களிலுங் காடுகளிலும் உறைவாரான வேட்டுவர் களும் பிறரும் அதன்கட்புகுந்து அந்நாட்டவர்க்கும் அவர்தம் அரசற்கும் இடர் விளைத்துவருவதல் இயல்பேயாம். அதனால் அவ்வரசன் பிறநாட்டு வலிய ஓர் அரசனது உதவியை நாடுதலும் இயல்பேயாம். ஆகவே, இந்திரன் எனப் பெயரிய கடாரநாட்டு மன்னன் தனக்குந் தன் நாட்டுக்கும் இடர் பெரிது விளைக்கும மலையர் காடவரின் குறும்பைத் தொலைப்பான் வேண்டித், தனக்கு நண்பனான ஆற்றலிற் சிறந்த துஷியந்த மன்னனையும் அவன்றன் படைஞரையுந் தன் நாட்டிற்கு வருவித்திருக்கலாம். அங்ஙனம் வருவிக்கப்பட்டு அக்கடார மன்னற்கு வேண்டும் உதவியாற்றித் துஷியந்தன் திரும்புங் காலையில், வழியிடையே ஒரு மலைமீ திருந்த ஒரு முனிவரது பாழியைக் கண்டு, ஆண்டுச்சென்று அம்முனிவரை வணங்கப் புக்கவன் தன் மகனையும் மனைவி சகுந்தலையையும் அதன் கட் டலைப் பட்டானாகல் வேண்டும், என்றிங்ஙனங் கொணர்ந்து பொருத்துவதே மெய்ந்நெறி வழுவாச் சான்றோர் தம் புலனெறி வழக்கிற்குப் பொருந்துவதாமென்று கடைப் பிடிக்க. இன்னுந், துஷியந்தன் வானவூர்தி இவர்ந்து இந்திரன் நாடு சென்றானென்பது பொய்ந்நிகழ்ச்சியின்பாற் படுவதன் றாகலிற் காளிதாசர் அது கூறியது வனப்புடைத்தேயாம். என்னை? இஞ்ஞான்றைப் பறவைப் பொறியைப் போல்வ தொன்று பண்டை நாகரிக மக்களாற் பயன்படுத்தப்பட்டு வந்தமை, வலவன் ஏவா வானவூர்தி எனப் புறநானுற்றுச் செய்யுள் ஒன்று (27) குறிப்பிடுமாற்றானும், வானின்கட் செலுத்தப்படும் மயிற்பொறி யொன்றனைச் சீவகசிந்தாமணி (273 ஆஞ் செய்யுள்) நுவலுமாற்றானும் நன்கறியப்படுதலி னென்பது. இனி, இக்கூறிய குறைபாடுகள் விரவாமல் இச்சாகுந்தல நாடகத்தை ஆசிரியர் காளிதாசர் இயற்றியிருந்தனராயின், இது மறுவற்ற வான்மதி போலவும், நுரையற்ற திரைநீர் போலவும், புரையற்ற பருமுத்தம் போலவும், விலையற்ற முழு மாணிக்கம் போலவுந் தலைசிறந்து விளங்குமென்பதில் தட்டில்லை யன்றோ? என்றாலும், எத்துணைச் சிறந்தார் மாட்டும் இன்னோரன்ன சில குறைபாடுகள் உளவாதல் மக்களியற்கை யேயாய்ப் போதரக் காண்டலால், ஓர் ஓவியத்தில் நிழல்படும் பகுதி ஒளிபடும் ஏனைப்பகுதியினை மிக விளங்கச் செய்தல்போல, இக்குறைபாடுகள் சிலவும் இவர் இதன்கண் அமைத்த நலங்கள் பலவற்றையும் பெரிது திகழச்செய்யும் பெற்றிய வாய் நிற்றல் உணர்ந்துகொள்க. அடிக்குறிப்பு 1. கடாரதேயம் இக்காலத்திற் பர்மாதேயம் என வழங்கப்படுகின்றது. 11. காளிதாசர் காலத்துப் பழக்கவழக்கங்கள் புத்தசமயந் தோன்றியபிற் றோன்றிய துறவோரொழுக்க மானது, தம்மால் அன்பும் அருளும் புரிதற்குரிய தம்மனைவி மக்களைச் சிறிதும் இரக்கமின்றிக் கைவிட்டுப் போய்த், தாமுந் துன்புற்றுத் தம்மாற் பெரிதும் ஓம்பப்படுதற்குரிய அன்னாரையுந் துன்பத்திற் படுப்பித்து, இம்மைப்பயனையும் இழந்து, அதனால் இனி வரக்கடவதாகிய மறுமைப்பயனையும் இழந்து, இறைவன் வகுத்த அன்புநெறி அருள்நெறியினைப் பாழ்படுத்துதற்கே இடஞ் செய்வதாயிருக்க; அச்சமயந் தோன்றுதற்கு முன் இவ்விந்திய நாடெங்கணுமிருந்த அறவோரின் தூய அருளொழுக்கமோ அவர்தம் மனைவி மக்களோடு ஒருங்கிருந்தே தவம்புரியுந் தன்மைத்தாய்த், தாமும் அவரும் இறைவனது அருள்நெறியிற் செல்லுதற்கு இடஞ் செய்யும் பேரின்ப வொழுக்கமாய் ஒளிராநின்றது. மாரீச மாமுனிவர் ஏமகூட மலைக் கண்ணதான தமது தவவுறையுளில் தம் மனைவியாரான அதிதி யம்மையாரோடு ஒருங்கிருந்து தவம்புரியும் வரலாறு இந்நூலின் ஏழாம் வகுப்பின்கண் நுவலப்படுதல் காண்க. சகுந்தலையின் வளர்ப்புத் தந்தையாரான காசியப முனிவர் மணங்கூடாத பிரமசரிய வாழ்க்கையிலிருப்பவ ரென்பது துஷியந்த மன்னனது வாய்மொழியாற் புலப்படினும், அவர், பெண்பாலாரை அருவருத்து அவரை யகன்று வைகும் பௌத்த பிட்சுக்கள் இஞ்ஞான்றை மாயாவாத முனிவர்கள் போலாது, கௌதமி யம்மையார் என்னும் ஒரு பெண்பாற் றுறவியுடனுந், தாம் எடுத்து வளர்த்த சகுந்தலையுடனும் அவடன் றோழி மாருடனும் ஒருங்கிருந்தே தமது தவப் பள்ளியிற் றவம்புரிந்தமை நினைவுகூரற்பாலது. இன்னுங், காசியப முனிவரது கானகப் பாழியிலும், அதனையடுத்திருந்த பாழியிலும் வைகித் தவம் புரிந்த முனிவர்களுந் தம் மனைவிமாரோடு ஒருங்கிருந்தே தவஞ்செய்தமை இந்நாடகத்தின் நான்காம் வகுப்பினால் (68) நன்கறியப் பெறுகின்றேம். பண்டைக்காலத்தில் அருந்தவவொழுக்கத்திற் றலை சிறந்து நின்ற முனிவர்கள் பல்லாண்டுகள் தம்மை மறந்து தவம் புரிவதிற் கருத்தழுந்தி நின்றமை, கரையான்புற்றிற் பாதி மறைந்த வடிவத் தோடும், பாம்புரிகள் ஒட்டிக்கொண்டுள்ள மார்போடும், பழங்கொடி களின் இளவிழுதுகள் வளையமாய் இறுகச்சுற்றிக் கொண்டிருக் குங் கழுத்தோடுந், தோள்வரையில் தொங்கிக்கொண் டிருப்பதும் பறவைக்கூடுகள் நிரம்பப்பெற்றது மான சடை முடியோடுங் கதிரவன் ஒளி வட்டத்தின் எதிர்முகமாய் நின்றபடியே அடிமரம் போல் அசைவின்றி அதோ தவம்புரியும் அம் முனிவருள்ள இடம் அதுதான். என்று மாரீசரது தவப்பள்ளியைக் குறிப்பிடும் இந் நாடகத்து ஏழாம் வகுப்பின் பகுதியால் இனிதறியக் கிடக்கின்றது (133). அதுவேயுமன்றி, அம்முனிவர்கள், தமதகத்தே ஒளி வடிவிற் றுலங்காநின்ற இறைவனது அருளுருவிற் பதிந்து நின்ற தமது கருத்தைப் புறத்தே திருப்பி இஞ்ஞாலத்தில் இயங்கவிடுங் காலங்களிலும், அகத்துக்கண்ட ஒளியோடு ஒப்பதான தீயினொளியை வேள்விக்குண்டங்களில் வளர்ததுப் புறத்தேயுந் தமது நினைவை அவ்வொளியின்கண் நிறுத்தி இறைவனை வழிபட்டுவருதலில் நிரம்பவும் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு முனிவர்கள் வேட்டுவந்த வேள்விகளில், ஆடுமாடு முதலான எத்தகைய உயிருங் கொல்லப்பட்ட குறிப்புச் சிறிதுங் காணப் படாமையின், அவர் வேட்ட அவ்வேள்விகள் அருளறத்தின் பாற்பட்டன வாதல் தெளியப்படும். ஆனால், அஞ்ஞான்றைப் பார்ப்பனர் ஆற்றிய வேள்வி களிலும், அரசர்கள் ஆற்றிய வேள்விகளிலும் ஆக்கள் கொலை செய்யப்பட்டமை முறையே ஆறாம் வகுப்பிற் செம்படவன் கூறும் உரையாலும் (100), ஐந்தாம் வகுப்பில் அரண்மனை வாயில் காவலன் கூறும் உரையாலும் (85) நன்கறியப் படுகின்றது. அஃதல்லாமலும், பழையநாளிலிருந்த பார்ப்பனர் விலங்கின இறைச்சியை உணவாகக்கொண்டுவந்தமை இதன் இரண்டாம்வகுப்பின் துவக்கத்திற் பார்பனனாகிய மாதவியன் கிளக்குஞ் சொற்களால் தெளியப்படுகின்றது. வடநாட்டின் மட்டுமேயன்றித் தென்றமிழ்நாட்டில் அஞ்ஞான்று குடியேறி வைகிய ஆரியப் பார்ப்பனரும் ஊன்உண் வாழ்க்கையராய் இருந்தமை புறநானூற்றில் நல்லிசைப்புலவராகிய கபிலர் பாடிய செய்யுளாற் புலனாதலை, இதன் விளக்கவுரைக் குறிப்பின்கண் விளக்கிக்காட்டி யிருக்கின்றேம். அதுவேயுமன்றி, அஞ்ஞான்றிருந்த பார்ப்பனர் அரசனைப் பகடி மொழிகளால் மகிழ்விப்போராயும், அவற்காக மகளிர்பாற் றூது செல்வோராயுமிருந்தனர். இனி, அரசர்கள் செங்கோலோச்சி ஆண்டு முதிர்ந்த பின், தமதரசைத் தம் மக்கள்மேல் ஏற்றித், தாம் தம் மனைவியருடன் கானகம்புக்குத் தவவாழ்க்கையைக் கைக்கொள்ளும் வழக்கம் பண்டை நாளில் நிகழ்ந்தமை, நான்காம் வகுப்பிற் காசியப முனிவர் பகரும் மொழியாற் புலனாகின்றது (79). அரசர்கள் தம் குடிமக்களிற் செல்வராயுள்ளார் மகப் பேறின்றி இறந்துபட்ட வழியும் அவர்தம் பொருளைக் கவர்ந்து கொள்ளாமல், அவர்க்கு எவ்வகையிலேனும் உறவினராய் உள்ளாரைத் தேடி, அவர்க்கு அதனை ஒப்படைக்கும் நடுநிலையுடையராயிருந்தமை துஷியந்தனது வாய் மொழியாற் போதருகின்றது (121, 122). அஞ்ஞான்றை அரசர்கள் ஒரு வழக்கின் உண்மையைத் தெரிந்து தீர்மானித்தற்கு மிகச் சிறந்த சான்றுகளை ஆராய்ந்து தெளிவதிற் கருத்துமிக்கிருந்ததூஉம், வலிய சான்றுகள் காட்டாது வாளா சினந்துபேசுவார் மொழிகளையும் பொறுமையுடன் கேட்டிருந்ததூஉந், துஷியந்தன் தன் மனையாளான சகுந்தலையைத் தன்மாட்டுக் கொணர்ந்த முனிவரின் மாணவருடன் வியக்கத்தக்க அமைதியுடன் உரையாடுமாற்றால் தெளியப்படும் (88-96). அஞ்ஞான்றை அரசர்கள் எக்குலத்தாரையும் வேற்றுமையின்றிப் பாதுகாத்து வந்தனர் (89); தமது கடமையைப் பெரிதும் ஓம்பினர். (83). கிரேக்கநாட்டு ஐயோனிய (Ionian Greeks) மாதர்கள் இவ்விந்திய தேசத்து அரசர்கட்கு மெய்காப் பாளராகக் கையில் வில்ஏந்தி நிற்றல் இரண்டாம் வகுப்பின் றொடக்கத்தில் விதூஷகன் கூறும் மொழிகளால் அறியப் படுகின்றது (27). காளிதாசர்க்கு முன்னிருந்த பாசன் என்னும் ஆசிரியர் இயற்றிய நாடக நூலிலும், அவர்க்குமுன் முதல் நூற்றாண்டில் தமிழ் நாட்டின்கண் இருந்த ஆசிரியர் நப்பூதனார் இயற்றிய முல்லைப்பாட்டிலும் இங்ஙனமே யவனர்கள் இந்நாட்டரசர்க்கு மெய்காப்பாளரா யிருந்தமை நுவலப்படுதல் காண்க. இதுகொண்டு மேல் பாலுள்ள கிரீசு உரோம் முதலான நாடுகளிலுள்ளாரும் இவ் விந்திய நாட்டாரும் பண்டைநாளிலிருந்தே வாணிக வாழ்க்கையில் ஒருங்கு அளவளாவிய வரலாறு தெற்றெனப் புலனாகின்றது. பழையநாள் அரசர்களுஞ் செல்வர்களும் மனைவிமார் பலரை மணந்திருந்ததுடன், மனைவியர்க்கு அடுத்த நிலையிற் காதற்பரத்தையர் பலரையுந் தமக்கு உரிமையாக வைத்திருந்த ணனர் (54, 80, 118). காதற்பரத்தையரென்பார் ஒருவனுக் குரிமையாக இருமுதுகுரவரால் வளர்த்துச் சேர்த்துவைக்கப் பட்டவர்; பலர்க்குப் பொதுவான பொதுமகளிர் அல்லர். இருமுதுகுரவர் அறிவும் உடம்பாடுமின்றி ஓர் ஆடவனும் ஒரு மங்கையும் எதிர்ப்பட்டுத் தமக்குள் உண்டான காதலன்பு காரணமாகத் தாமே மணஞ்செய்து கொள்ளுதலும், அதனையறிந்த அவர்தம் பெற்றாரும் உற்றாரும் பிறரும் அக்கா தன் மணத்தை மகிழ்ந்து ஏற்றலும் அக்காலத்தே வழக்கமாய் நடந்துவந்தனை இந்நாடக நூலானும், பிற பழைய நூல்களானும் நன்கறிகின்றோம். அரசர்களுங்கூட அந்நாட்களில் ஓவியம் எழுதுதலில் வல்லராயிருந்ததை உற்று நோக்குங்கால், அவரல்லாத பிறரும் ஓவியத்துறையில் வல்லராயிருந்தமை தெளியப்படும். இங்ஙனமே இன்னிசை பாடுந் திறமும் அக்காலத்தில் எங்கும் பரவியிருந்தது. அதுவேயுமன்றி, ஆண்பெண் பாலார் இருவருங் கல்விப் புலமையிற் சிறந்து செய்யுள் இயற்றும் ஆற்றலும் இனிது வாய்க்கப்பெற்றிருந்தனர். சகுந்தலை ஒரு செய்யுளை இயற்றித் தருமாறு அவடன் றோழிமார் அவட்குக் கற்பித்ததையும், அங்ஙனமே அவள் இனியதொரு செய்யுள் இயற்றினமையும் நோக்குங்கால் அஞ்ஞான்றைப் பெண் மக்கள் மொழிப் புலமை மிக்கவராதல் நன்குணரப்படும். இன்னும், இச்சாகுந்தல நாடகத்தும் இதற்கு முற்றோன்றிய வடநூல் தமிழ்நூல்களிலும் பெரும்பாலும் இயற்கையிலுள்ள வனப்புக்களே எடுத்துரைக்கப்பட்டிருத்தலை ஆராய்ந்து பார்க்குங்காற், பிற்றைஞான்று தோன்றிய புலவர்கள் திருத்தமான மெய்யுணர்வின்றிப் பொய்யும் புளுகும் பொருத்த மில்லனவும் புனைந்துகட்டி அவை தம்மை நூல் வனப்புகளாகக் கொள்ளுதல் போலாது, முன்னைநாளிருந்த நல்லிசைப் புலவரும் அவருடைய நூல்களைப் பயில்வாரு மெல்லாம் உலகவியற்கை மக்களியற்கைகளில் உள்ள உண்மை வனப்புக்களையே உள்ளவாறு கண்டுங் காட்டியும் உணர்ந்தும் மகிழுந் திருந்திய மெய்யறிவு மிக்காராயிருந்தமை தெளியப் படும். இனிக், கிரேக்கதேயத்தவரும், மேல்நாட்டவர் பிறரும் இவ்விந்திய நாட்டுக்குக் கடல்வழியே மரக்கலம் ஊர்ந்துவந்து இதன்கண் வாணிகஞ்செய்தது போலவே, இவ்விந்திய நாட்டவரும் மேல்நாடு கீழ்நாடுகளுக்குக் கடலூடு நாவாயிற்சென்று வாணிகம் நடாத்திய வரலாறு, துஷியந்தன் ஆறாம் வகுப்பில் தனமித்திரன் என்னுஞ் சிறந்த வணிகரைப் பற்றி நுவலும் மொழிகளாற் புலனாகின்றது (121, 122) அஞ்ஞான்றை வணிகவகுப்புச் செல்வர்களும் மனைவிமார் பலரை யுடையராயிருந்தமையும் ஆண்டே விளங்கிக் கிடக்கின்றது. இனி, அரசர்க்கும் பிறர்க்கும் ஏவற்றொழில் புரிவா ரெல்லாந் தத்தங் கடமைகளைச் செவ்வையாகச் செய்து வந்தமை, இந்நாடகத்துப் போந்த கஞ்சுகி, கொத்தவால், காவலாளர் முதலனாரைப்பற்றிய குறிப்புக்களால் நன்கு விளங்கும். இவ்வேவலரிற் பலர் கட்குடியராய்க் காணப்படு கின்றனர் (100). இனிக், காளிதாசர்காலத்தும், அவர்க்கு முற்பட்ட பண்டைக்காலத்தும் இவ்விந்தியநாடு எங்கமிருந்த முனிவரும் அரசரும் பிறரு மெல்லாம் ஒரே முழுமுதற் கடவுளைச் சிவபிரான் என்னுஞ் சிறப்புப்பெயர்கொண்டே வணங்கி வழிபாடு செய்துவந்தனர். சிவபிரானை வழிபடுதற்குத் தீ வடிவினையே சிறந்தகருவியாகக் கைக்கொண்டு, அத்தீயினை வளர்க்கும் வேள்விக்களங்களை இந்நாடெங்கும் வகுத்திருந் தனர். அவ்வேள்விக்களங்களே பின்னர்ச் சிவபிரான் திருக் கோயில்களாகவும், வேள்வித் தீ வடிவினை யொத்த நீண்டு குவிந்த கல்வடிவே சிவலிங்கமாகவும் வகுத்து வைக்கப்பட்டன. முற்பிறவியிற் பழகிய பழக்கத்திற்குத் தக்கபடி இப் பிறிவியில் எல்லார்க்கும் நினைவுஞ்செயலும் நிகழுமென்னும் நம்பிக்கை இவ்விந்திய நாடெங்கும் பரவியிருந்தது (82). இறந்துபோன மூதாதையர்க்கு எள்ளுந் தண்ணீரும் இறைத்து வழிபாடுசெய்தலை இந்நாட்டவர் மிகவும் உறுதியாகக் கைக்கொண்டிருந்தனர். அங்ஙனம் மூதாதை யர்க்குச் செய்யும் வழிபாடு வழிவழி நிகழல்வேண்டியே ஆண் மகப்பேற்றை இன்றியமையாததாகக் கருதினர் (121, 122). மகளிர் தாம் காதலித்த கணவரை மணங்கூடுதல் வேண்டிக் காமதேவனுக்கு வழிபாடு செய்துவந்தனர். மணங் கூடும்வரையில் தாம் காமவேளின் துன்பத்திற்கு ஆளாகாமைப் பொருட்டு அஞ்ஞான்றைமாதர்கள் வைகாநசம் என்னும் ஒரு நோன்பினையும் நோற்றுவந்தனர். கணவரொடு வாழும் மகளிர்தம் இதழ்களுக்கு இங்குலிகம் ஊட்டி ஒப்பனை செய்துகொண்டனர் (143). சூல்கொண்ட மகளிர்க்கு இந்நாளிற்போலவே அந் நாளிலும் முதுகுநீரிடுதலாகிய சீமந்தச்சடங்கு செய்து வந்தனர். மாதர்க்கு வலக்கண் துடிப்பது பின்வருந் தீங்கினை அவர்க்கு முன்னறிவிப்பதாகு மென்றும், ஆடவர்க்கு வலத்தோள் துடிப்பதும் அவர்க்குப் பின்வரும் நன்மையினை முன்னறிவிக்குங் குறியாகுமென்றும் இந்நாளிற் போலவே அந்நாளிலும் ஒரு நம்பிக்கையிருந்தது (86, 135). பிறர் கண்கட்குப் புலப்படாமல் அவர்களெதிரே இயங்கும் ஒரு மந்திரமுறையினை முன்னுள்ளோர் அறிந் திருந்தனர் (103). வேனிற்காலத்துக் துவக்கத்திற் பழைய காலமக்கள் ஒரு பெருந்திருவிழாக் கொண்டாடிவந்தனர் (104). சாகுந்தல நாடக ஆராய்ச்சி - முற்றும்- மறைமறையடிகள் ஆராய்ச்சித்திறன் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பொருளடக்கம் 1. மறைமலையடிகள் 169 2. ஆராய்ச்சி 173 3. அடிகளார் பயின்ற நூல்களும் பயின்ற முறையும் 177 4. அடிகளார் காட்டும் ஆய்வியல் நெறிமுறைகள் 189 5. அடிகளார் இயற்றிய நூல்கள் 197 6. இலக்கிய ஆராய்ச்சித் திறன் - பட்டினப்பாலை ஆராய்ச்சி 208 7. சமய ஆராய்ச்சித் திறன் 221 8. அடிகளாரின் அறிவியல் ஆராய்ச்சித் திறன் 240 9. அடிகளார் சமய நோக்கு 254 1. மறைமலையடிகள் நாகையில் (நாகப்பட்டினத்தில்) தோன்றியவர் அடிகளார். நாவும் கையும் தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சைவத்திற்கும் பயன்படத் தோன்றிய தவப்பெருமகனார் மறைமலையடிகளார்! சொக்கலிங்கர், சின்னம்மை குடல் விளக்கப் பிறந்தவர், தமிழ்த்தாயின் குடல் விளக்கம் செய்யப் பிறந்த தமிழ்த் தோன்றலாகத் திகழ்ந்தார். தெய்வத் திருப்பெயராம் வேதாசலத்தையும், மறைமலை யாகக் கண்டும் கொண்டும் தமிழ் மண்ணுக்கு வழிகாட்டி யாகவும் வழி கூட்டியாகவும் விளங்கிய ஒளிப் பிழம்பு அடிகளார்! உரையும் பாட்டும் உடையோர், விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தியும் பெறுவர் என்பது பழந்தமிழ்ப் பாட்டனின் பாட்டு. சான்றோரால் பாடு புகழ் பெறும் மண்ணே, மாணுறுமண் என்று பாராட்டப் பட்ட காலத்தில் கிளர்ந்த பாட்டு அது. அப் பாட்டுக்குத்தக எண்ணற்ற புகழ்மணி, உரையும் பாட்டும் கொண்டு திகழ்ந்தவர் அடிகளார். அவற்றை விரித்தல் நம் ஆய்வன்று; விடுத்தலோ தோய்வன்று. உரைக்கு ஒருவர் பாட்டுக்கு ஒருவர். இருவரும் எவர்? தென்றலும் ஞாயிறும் ஆவர். தென்றல், தமிழ்த் தென்றல் திரு.வி.க. ஞாயிறு, மொழி ஞாயிறு பாவாணர். முன்னவர் உரை, வாழ்க்கைக் குறிப்பில் கண்டதும் மறைமலையடிகள் மாண்பில் கண்டதும். பின்னவர் பாட்டு, மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலரில் கொண்டது. உரை : அற்றை நக்கீரனாரும் பிற்றைச் சிவஞான முனிவரரும் ஓருருக் கொண்டு வேதாசலனாராகப் போந்து, இற்றைத் தமிழ் வளர்க்கிறார் என்று யான் அவரைச் சொல்லாலும் எழுத்தாலும் போற்றுவ துண்டு. வேதாசலனார் தமிழ் செந்தமிழ் - சங்கத்தமிழ் என்னை அவ்வாறு சொல்லவும் எழுதவும் செய்தது. இந்நாளில் சங்க நூல்களின் சுவையைத் தமிழ் நாட்டுக்கு ஊட்டிய பெருமை வேதாசலனார்க்கு உண்டு என்று அறுதியிட்டுக் கூறுவேன். அவர் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர் வடமொழியும் தெரிந்தவர் வா.கு.பக்.163 தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலை யடிகட்கு உண்டு. அவர் தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் ஆராய்ச்சியும் பேச்சும் எழுத்தும் தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும் மரமும் முழங்கும். அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுந்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியன் மாரை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது. மறைமலையடிகள் மாண்பு - முன்னுரை பாட்டு : மறைமலையடிகள் பல்துறையாற்றற் பதிகம் 1. பேராசிரியர் நூலும் நுவல்வும் நுணங்குரையும் நன்பதிப்பும் சாலும் இதழும் சமமாக - மேலுயர்வுப் பேராசிரியர் பெரும்பேர் மறைமலையார் நேரா ருளரிந் நிலத்து. 2. பெரும் புலவர் தொல்காப் பியமுதலாந் தொன்னூலும் பின்னூலும் பல்காற் றனிப்பாடல் பட்டயமும் - ஒல்காப் பெரும்புலவ ருள்ளும் பெரியார் தனியே அரும்பொன் மறைமலை யார். 3. பாவலர் உரைநடையும் பாவும் ஒருங்கே சிறந்த விரைவுடையார்சில்லோர் வியன்பார் - மறைமலையார் செம்மைப் பொருளணிசேர் செய்யுள் திருவொற்றி மும்மணிக் கோவை முறை. 4. ஆராய்ச்சியாளர் நுண்மதி கல்வி நுடங்காத் தறுகண்மை நண்ணிலை மன்னலம் நல்வாய்மை - திண்முயற்சி சாலுமா ராய்ச்சிச் சதுரர் மறைமலையார் பாலையும் முல்லையும் பார். 5. மும்மொழிப் புலவர் மொழியும் இலக்கியமும் முத்தமி ழும்பேச் சழியும் வடமாங் கிலமும் - கழிபுலமை கொண்ட மறைமலையார் கோன்மை தமிழ்நிலமுன் கண்டதும் கேட்டது மில். 6. மொழிபெயர்ப்பாளர் வேற்று மொழியின் விரகன் விழுப்பனுவல் ஆற்று மரபும் அரும்பொருளும் - தேற்றி அடிகள் மொழிபெயர்க்கும் ஆற்றற்குச் சான்று முடிகொள்ளுஞ் சாகுந் தலம். 7. சொற்பொழிவாளர் இன்குரலும் இன்சொல்லும் இன்னிசையும் இன்கதையும் நன்பொருளும் ஏதுவுடன் நற்காட்டும் - தென்பாய்ப் பகைவரு முண்ணாது பன்னாளும் வேட்கும் வகையடிகள் சொற்பொழிவு வாய்ப்பு 8. எழுத்தாளர் கடிதமும் கட்டுரையும் கண்டனமும் கற்கும் படியெழுதும் பாடமும் பன்னூல் - நடிகதையும் மற்றோர் உரைமறுப்பும் மன்னும் பதினவரை வற்றார்மறைமலை யார். 9. பல்கலைச் செல்வர் தோற்றும் தொலையுணர்வு தூய மனவசியம் ஆற்றும் அறிதுயில் ஆர்வாழ்வு - மாற்றும் மறுமை மறைமலையார் மாணுங் கலைகள் பொறுமை யுடன்கற்ற போக்கு. 10. தனித்தமிழ் தந்தையர் மூவா யிரமாண்டு மோதும் வடமொழியாற் சாவாந் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார். (அமரர் = போர் மறவர்) -மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் - பாமாலை 1-2. பொழிவுத் தலைப்பு, மறைமலையடிகளின் ஆராய்ச்சித் திறன். ஆதலால் மறைமலையடிகளைப் பற்றிய ஆய்வும் தோய்வும் உடையவர்களும், அவரால் மதித்தும் பாராட்டியும் போற்றப் பட்டவர்களுமாகிய இவர்கள் உரையும் பாட்டும் கண்ட அளவில், ஆராய்ச்சிக்குச் செல்வோம். 2. ஆராய்ச்சி ஆய்தல் என்பதற்கு ஆராய்தல், காய் முதலியவைகளைப் பிரித்தெடுத்தல், தெரிதல், தெரிந்தெடுத்தல், நுண்மை, முன்னுள்ள தனிற் சிறிதாதல், வருந்துதல், அழகமைதல், அசைதடில், சோதனை செய்தல், கொண்டாடுதல், கொய்தல், காம்பு களைதல், நுழைந்து பார்த்தல் என்னும் பதினான்கு பொருள்களை அகர முதலிகள் தருகின்றன. ஆய்தல் என்பது, பொதுமக்களும் பெருக்கமாக வழங்கும் வழக்குச் சொல். அவர்கள்நூலாய்தலைச் சுட்டாமல், காய் ஆய்தல், கீரை ஆய்தல் என வழங்குகின்றனர். அவ்வாய்தல் பொருளைச் செவ்விதின் அறிவார், இவ்வாய்தல் பொருளையும் எளிதில் இனிதில் அறிவார். காய் ஆய்தல் : கொத்தவரை என்னும் காயை, ஒடித்தல் அறுத்தல் என்று சொல்லலாமல் ஆய்தல் என்பதே நாட்டுப்புற வழக்கு. காயில் முற்றியது, பூச்சி பிடித்தது, கெட்டுப் போனது என்பவற்றை ஒதுக்கிக், கறிக்குத் தக்க பதனமைந்த காய்களைப் பறிப்பதே ஆய்தல் என வழங்கப்படுகிறதாம். பறித்தபோது ஆய்ந்தது போலப் பின்னும் ஆய்தல் உண்டு. அவ்வாய்தல், நுனி மூக்கும் அடிக்காம்பும் அகற்றுதல், முதுகு நரம்பு எடுத்தல், அளவிட்டு ஒடித்தல் என்பனவாம். பறிக்கும் போது முற்றல் முதலியன வந்துவிடினும் இவ்விரண்டாம் ஆய்வில் விலக்கப்பட்டு விடும். கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ளல் ஆய்வுப் பொருளாதல் புலப்படும். கீரை ஆய்தல் : கீரை ஆய்தல் என்பது பொதுமக்கள் வழக்கே. கீரையுள் ஒருவகை அறுகீரை; அறைக் கீரை என்பது அது. பழுத்த இலை, அழுகல் இலை, பூச்சிபட்ட இலை என்பவற்றை விலக்கி, மாசு தூசு நீக்கி, நரம்பு அகற்றி நல்லன கொள்ளலே கீரை ஆய்தலாம். நாம் கருதும் ஆய்வு, ஆய்தல், ஆராய்தல், ஆராய்ச்சி என்பனவற்றை இவ்வாய்தலொடு பொருந்தக் கண்டு இருவகை வழக்கும் கைகோத்து நடையிடும் தமிழியல் மாட்சியை அறிந்து மகிழலாம். ஆய்தல் , ஆராய்தல் : திருக்குறளில் ஓரதிகாரப் பெயர் (80). நட்பு ஆராய்தல் என்பது அதில் வரும் ஒரு குறள் (729) ஆய்தலை அடுக்குகிறது. ஆய்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும் என்பது அது. தூதிலே (69) இரண்டு குறள்கள் அன்ப அறிவு ஆராய்ந்த சொல்வன்மை (682) அறிவு உரு ஆராய்நத கல்வி (684) என்கின்றன. ஆய்தலும் ஆராய்தலும் பெருக வழங்கிய வழக்குச் சொற்கள் வெளிப்படை. நாடுதல் என்பதும் ஆய்தல் பொருளே ஆதலால் குணம் நாடிக் குற்றமும் நாடி (திருக், 504) என்றும் நோய் நாடி நோய்முதல் நாடி (திருக், 948) என்றும் பெருவழக்காயின. இனி, ஆய்தலுக்கும் வேறுபாடு உண்டோ எனின் நுண்ணிதாக உண்டு என்பதாம். ஆர் என்பது அது. ஆர் என்பது அருமைப் பொருளது. ஆய்ந்ததை மேலும் நுணுகி ஆய்தல், ஒருமுறைக்குப் பன்முறையாய் ஆய்தல் ஆராய்தலாம். ஆய்வு என்பதற்கு நுண்மைப் பொருள் உண்டோ எனின் எழுத்துகள் அனைத்தினும் நுண்ணிய ஒலியுடைய எழுத்து ஆய்த எழுத்தே என்பதை எழுத்தியல் அறிந்தார் எவரோ அறியார்? ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்பது தொல்காப்பியம் (சொல். உரி. 32) ஆய்தத்திற்கு ஆஃகன்னா, அஃனேம் என்பவும் பெயர்கள். அவற்றிலுள்ள அஃகு என்பது நுண்மை அல்லது நுணுக்கப் பொருள் உடையதாதலை, அஃகி அகன்ற அறிவு நுண்மாண் நுழைபுலம் என்னும் குறளாட்சிகளால் (175, 407) தெளியலாம். மாசு நீக்கி மணியாக்கல் போலக், காணுதற்கரிய நுணுக்கங்களைக் கண்டுரைத்தல் ஆராய்ச்சி என்பதன் பொருளதாதல் இச்சொல் வழியால் நாம் அறிந்து கொள்ளத் தக்கதாம். ஆய்வு என்பது எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் நம் முந்தையர் அறுதியிட்டுள்ளனர். ஆய்வுக்கு இன்றி யமையாத் தலைமைப் பண்பு நடுவு நிலைமையாகும். முறை மன்றங்களில் முறைமைக்கு இலக்கணமாகக் கொள்ளப்பட்டுள்ள சமன்கோல், பழந்தமிழர் கொண்ட நடுவுநிலைச் சான்று என்பதைச், சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி என்னும் வாய்மொழி வழியே நாம் அறியலாம். இன்னதொரு சான்று நுகக் கோல் நடுவாணியுமாம் என்பதை நாம் அறிவோம். அதனைக், கொடுமேழி நசையழவர் நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் என்ற பட்டினப்பாலை பாட்டும் (205-7) ஒன்றை விருப்போடு பார்த்தலும், ஒன்றை வெறுப்போடு பார்த்தலும் நடுவு நிலைப் பார்வை ஆகாது என்பதை, வாரம் பட்டுழித் தீ யவும் நல்லவாம் தீ ரக் காய்ந்துழி நல்லவும் தீ யவாம் என்று சிந்தாமணி உரைக்கும் (888) செவ்விதின் ஆயும் முறை இன்னது என்பதைக் காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கள் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்ற குண்ம் தோன்றா தாகும் உவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும் என்று அறநெறிச் சாரம் அறிவுறுத்தும் (42) முழுதுறு வாழ்வையும் பழுதறும் ஆய்வுக்கே பயன்படுத்திய அடிகளார், அவ்வாய்வுக்கு மூலப் பொருளை இளந்தைப் பருவ முதலே தேடிக் கொண்டதையும் அவர் நூலாய்ந்த முறையையும் மேலே காணலாம். 3. அடிகளார் பயின்ற நூல்களும் பயின்ற முறையும் அடிகளார் ஒன்பதாம் வகுப்பளவே பள்ளிக் கல்வி பெற வாய்த்தது. அதன் பின் தனிக் கல்வி கற்கவே வாய்த்தது, பொத்தக வாணிகர் நாராயணசாமி என்பார் அறிவறிந்த புலமைத் தொடர்பு அடிகளார்க்குக் காலத்தால் வாய்த்த பேறு ஆயிற்று. தம் பதினைந்தாம் அகவை முதல் இருப்பத்தோராம் அகவைக்குள் கற்ற நூல்கள் இவை என்பதை அடிகளார் தாம் இயற்றிய திருவொற்றியூர் முருகர் மும்மணிக் கோவை முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியம் திருக்குறள் சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தோம். கலித்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், நாலடியார் முதலிய நூல்களிற் பெரும் பகுதிகள் அங்ஙனமே நெட்டுருச் செய்து முடிக்கப்பட்டன. சிவஞான போதம் சிவஞான சித்தியார் என்னும் நூல்கள் இரண்டும் முழுமையும் நெட்டுருச் செய்து முடிக்கப் பட்டுள்ளன. இவையேயன்றி நன்னூல் விருத்தி, இறையனார் அகப் பொருள் உரை. தண்டியலங்காரம் முதலான நூல்களும் முன்னமே முழுமையும் நெட்டுருச் செய்து முடிக்கப்ப ட்டனவாகும். கல்லாடம், சீவக சிந்தாமணி, பெரிய புராணம் என்னும் நூல்களின் சொற்சுவை பொருட் சுவைகளில் பெரிதும் மூழ்கியிருந்தும் அவற்றிலிருந்து எடுத்துப் பாடஞ் செய்த செய்யுட்கள் மிகுதியாய் இல்லை, என்றாலும் அவற்றின் சொற்பொருள் நயங்கள் எமதுள்ளத்தில் வேரூன்றி நின்றன. இங்ஙனமாக விழுமிய தமிழ்ப் பழநூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று என்கிறார். அடிகளார் 15.6.1876 இல் பிறந்தார், அவர்க்கு இருபத்தோராம் அகவை என்பது 1897 ஆம் ஆண்டு அந்த ஆண்டுகள் தொல்காப்பியம் (1847. 1868. 1885) சிலப்பதிகாரம் (1880) சிந்தாமணி (1887) கலித்தொகை (1887) பத்துப்பாட்டு (1889) மணிமேகலை (1894) புறநானூறு (1894) என்பவை அச்சில் வெளிப்பட்டிருந்தன, திருக்குறள் மூலம் 1812 ஆம் ஆண்டிலும். உரைப்பதிப்பு 1830 ஆம் ஆண்டிலும் வெளிப்பட்டன, இந்நூல்களையெல்லாம் அடிகளார் கற்றுத் தெளிய மனங் கொள்ளவும் வாய்ந்தன, ஐங்குறுநூறு. அகநானூறு, பதிற்றுப் பத்து, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல்ஆகிய நூல்கள் 1903 முதல் 1918 ஆம் ஆண்டுகளுக்குள் வெளிவந்தவை. ஆகலின் இவை அடிகளார் தம் இளந்தைப் பருவக் கல்வி நூல்களுள் இடம் பெற்றில, இவற்றைப் பின்னே கற்றார் என்று கொள்ளுதல் முறையாம். அடிகளார் தம் ஆய்வுக்கெனத் தொகுத்து வைத்த நூல் தொகுதிகள் எத்தகையவை என்பதையும் அவற்றை அடிகளார் பயன்படுத்திய வகையையும் 24.8.58 இல் சென்னை இலிங்கித் தெருவில் மறைமலையடிகள் நூலகத் திறப்பு விழாவில் நூலக இயக்குநர் முனைவர்திரு. அரங்கநாதனார் எடுத்துரைத்தார். அடிகளார் நூல்களையெல்லாம் முற்கால ஊழிகளின் காலங்கடந்த மதிப்புடைய கருத்துகளின் திருவுருக்கள் என்றே கருதினார். அவற்றை அந்நிலையிலே பயன்படுத்துவதற்கு அவர் விதிர்விதிப்புக் கொண்டார். தாம் பயன்படுத்தியதன் பின், அவர் இதனைச் சேர்த்துத் தொகுத்து வைத்த சபரியின் செயலையே நினைவூட்டுவதாகும், சீராமன் இலக்குமணன் ஆகியவர்கள் சேவையில் ஈடுபட்டு அவர்களுக்கு அளிப்பதற் காகவே சபரி அவற்றின் தொகுப்பைத் திரட்டியதும் இதுபோலப் பொதுமக்கள் சேவையை உளத்தில் கொண்டே தான் என்பது குறிப்பிடத்தக்கது. அடிகள் ஏடுகளைத் திரட்டிச் சேர்த்தவை கடவுளின் திருவுணவுக்காகக் கண்ணப்பர் உணவு தேர்ந்தெடுத்துச் சேர்த்த முறையை ஒப்பதாகும். முதலில் தாம் தின்று சுவை பார்த்துக் கடவுளுக்கு ஏற்றதென்று கருதாத எதனையும் கண்ணப்பர் கடவுளுக்குப் படைக்க முன் வந்ததில்லை, மறைமலையடிகள் செயலும் இதுபோன்றதே. தொகுதியில் உள்ள நூல்களில் அவர் முற்ற முழுக்க வாசிக்காதது, வாசித்து, இது மக்களுக்கு அளிக்கும் தகுதியுடையது என்று அவர் தேர்ந்தெடுக்காதது, ஒன்று கூடக் கிடையாது, ஏடுகள் ஒவ்வொன்றுக்கும் அவர் தனித்தனியாக அட்டை உறை இட்டுத் தூசிபடாமல் உன்னிப்பாகக் காத்து வைத்த முறையையும், ஏடுகள் ஒவ்வொன்றையும் வரிவரியாக முழுதும் வாசித்துப் பயன்படுத்திய பின்னும் புத்தம் புதியன போல அவற்றைப் பேணிய வகையையும் காண்போர் வியப் படையாமல் இருக்க முடியாது, ஏடுகளை அவர் வருங்காலப் பொதுமக்கள் பயனீடு நோக்கியே பேணி வைத்திருந்தார் என்பதற்குச் சான்றுகள் தேவைப்படுமானால், அதற்கு இஃது ஒன்றே போதியது ஆகும் புத்தகங்கள் பயனீட்டுக்கே உரியவை என்னும் எனது நூலகத் துறையின் முதல் ஒழுங்கை அடிகள் தம் நோக்கத்தில் அன்றே கொண்டிருந்தார் என்பது தெளிவு என்கிறார். - மறைமலையடிகள் நூல்நிலையம் 20 ஆம் ஆண்டு விழாமலர் 1-2. தொகுப்பு : அடிகளார் தொகுத்து வைத்த நூல்கள் ஏறத்தாழ நாலாயிரம் ஆகும். அவற்றுள் ஏறத்தாழ மூவாயிரம் நூல்கள் பல்வேறு துறைப்பட்ட ஆங்கில நூல்கள். எஞ்சியவை மிக அரியவையான தமிழ் நூல்களும் வடமொழி நூல்களுமாம், வெளிநாட்டில் வெளிப்பட்ட நூல்களை அரிதின் முயன்று தொகுத்தன். பிழைதிருத்தல் : ஒரு நூலை ஓதத் தொடங்குமுன் அந்நூலில் பிழைதிருத்தப் பட்டி இருக்குமானால் அதனைக் கண்டு அதில் குறித்தவாறு பிழை திருத்தம் செய்து கொண்ட பின்னரே ஓதுவதை முறையாக நூலில் இடம் பெற்றிருப்பின் அவற்றையும் குறித்தார். ஓதுதல் நாள் தவறாமல் குறித்த நேரங்களில் நூல் ஓதுதலை அடிகளார் சிக்கெனக் கடைபிடித்து வந்தார், விழுப்புண் படாத நாள் வீண் நாள் என வீரர்கள் கருதுவது போலவும் பெரியனைப் பேசாத நாளெல்லாம்பிறவா நாளே என அடிகளார் பேசுவது போலவும், ஓதா நாளெல்லாம் ஒழிந்த நாள் எனக் கொண்டு கற்றவர் அடிகளார். மன அமைதி இன்மையைப் புத்தகங்களைப் படிப்பதால் போக்கிக் கொள்வேன் படியாமல் ஒரு நாளைக் கழிப்பது பேரிழப்பாகும் இன்று பகல் முழுதும் ஓய்வாக இருந்தேன் ஆனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கவே விரும்புகிறேன். தாம் இன்புறுவதற்கும் மெய்யறிவு பெறுவதற்கும் இல்லாமல் தம்மைச் சார்ந்த மக்கள் அறிவு பெறச் செய்தற்கும் அவர்கள் சிறப்புற வாழ்தற்கும் படியாமல் எதற்காக வறிதே ஓய்வாக இருப்பது? இவை அடிகளார் தம் நாட்குறிப்பில் பொறித்துள்ள சில நன்மணிகள். இவற்றால் அடிகளார் கொண்டிருந்த கல்விக் காதல் விளக்கமாகும். நூல் எடுத்தலும் முடித்தலும் : ஓதுதற்கு எடுக்கப்படும் நூல் இன்ன நாளில் எடுக்கப் பட்டது என்றும் இன்ன நாளில் முடிக்கப்பட்டது என்றும் நாட்குறிப்பிலோ நூல்களிலோ குறிப்பது அடிகளார் வழக்கம். ஏலாதி படித்து முடிக்கப்பட்டது. ஆசாரக் கோவை படிக்க எடுக்கப்பட்டது என்பது ஒருநாளில் எழுதிய குறிப்பு. ஐந்திணை ஐம்பது படிக்க எடுக்கப்பட்டது என்பது மற்றொருநாளில் எழுதிய குறிப்பு. யாழ்ப்பாணத்து வண்ணை நகர் சுவாமிநாதபண்டிதர் 1911 ஆம் ஆண்டில் தேவாரத் திருமுறையைப் பதிப்பித்தார். அப்பதிப்பில் ஒரு நூலை இது பதிப்பாசிரியாரால் சுவாமி வேதாசலம் அவர்களுக்குக் கையுறையாக அனுப்பப்பட்டது. 25.2.1912 என்று எழுதியனுப்பியுள்ளார். அதனை ஓதி முடித்த அடிகளார் அந்நூலின் இறுதியில் நீண்ட காலமாக ஓதி வந்த இத்தெய்வத் தமிழ்த் திருமறை சாலி 1849 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 3 ஆம் நாள் முடிக்கப்பட்டது. மறைமலையடிகள் 18 ஆம் நாள் டிசம்பர் 1920 ஏ.டி. எனப் பொறித்துள்ளார். கோடும் குறியும் : நினைவு கொள்ளத்தக்க சொல்லோ சொற்றொடரோ காணப்பட்டால் அவற்றின் கீழ் அடிக்கோடு இடுதலும் பக்கக் கோடு போடுதலும் அடிகளார் வழக்கமாகும். ஐயுறத் தக்க கருத்துக்களோ மறுதலையான கருத்துக்களோ காணப் பெற்றால் அவ்விடங்களில் வினாக்குறி இடுவார். அச்சுப் பிழைகள் உளவாயின் அச்சு மெய்ப்பைத் திருத்துமாறு இடப்படும் குறியீடு களை இடுவார். ஒப்புமை சுட்டல் : பயிலும் நூல்கருத்துக்கு ஒத்த கருத்து வேறு நூலில் காணப்படுமாயின் அதனை ஆங்குக் குறித்து வைப்பது அடிகளாரின் வழக்கமாகும். இயல்பாய ஈசனை என்னும் திருக்கழிப்பாலைத் தேவாரத்தில் வரும் மயலாய மாயக் குரம்பை என்னும் தொடருக்கு மலமாக் குரம்பை திருவாசகம் எனக் குறித்துள்ளார். முன்னமிரு மூன்று சமயங்களவையாகி என்னும் திருப்பு கலித்தேவாரத்தில் இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை என்னும் திருவாசகப் பகுதியைக் காட்டியுள்ளார். இவ்வாறே அரிதாக வழங்கும் சொல்லுக்கு ஒப்புமை காட்டலும் அடிகளார் வழக்காகும். குறுந்தொகை 15 ஆம் பாடல் விளக்கவுரையில் (உ.வே.சா. பதிப்பு) கல்யாணம் என்ற சொல்லைச் சுட்டி இச்சொல் நாலடியாரில் வந்தது காண்க என்று குறிக்கிறார். வரலாறு சுட்டல் : நாட்டு வரலாறு, இலக்கிய வரலாறு, புலவர் வரலாறு முதலிய வரலாற்றுக் குறிப்புகள் காணும் இடங்களில் “Historical” எனக் குறிப்பிடுகிறார். இன்னும் “Historical fact” என்றும் கூறுகிறார். வெண்ணிப் பறந்தலைப் போரை (புறம். 66) “Refers to a great historical war” எனக் குறித்துள்ளார். இக்குறிப்புகள் வரலாற்றுத் தொகுப்புக்கு உதவுதல் ஒருதலை. காலம் காட்டல் : இப்பாடல் இக்காலத்துப் பாடப்பட்டது என்றும், இப்புலவர் இவர் காலத்துக்கு முற்பட்டவர் என்றும், இன்னவாறு காலநிலை சுட்டுதல் அடிகளார் படித்த நூல்களில் காணக் கிடக்கும் குறிப்புகளுள் ஒன்றாம். வடாஅது பனிபடு நெடுவரை (6) பாணர் தாமரை (12) கடுந்தேர் குழித்த (15) நல்யாழ் ஆகுளி (64) என்னும் புறப்பாடல்களில் இது குமரி நாடு கடல் கொள்ளப்படு முன் பாடப்பட்டது என்னும், குறிப்புகள் உள்ளன. ஆவும் ஆனியல் என்னும் பாடலில் (9) இப்பாட்டு பஃறுளியாறு கடல் கொள்ளுவதற்கு முன் பாடப்பட்டது என்னும் குறிப்பு உள்ளது. இவ்வாறே மார்க்கண்டேயனார் (365) கோதமனார் (36) பாடிய புறப்பாடல்களில் “This was Composed in 3000 B.C.” என்னும் குறிப்புளது. இனி, ஒகர முதன்மொழி தொல்காப்பியர் கூறாமையின் அவர் இவர்க்கு (காரி கிழார்க்கு) முற்பட்டவர் என்றுணர்க என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் (புறம்.6), சகர முதன்மொழி தொல்காப்பியர் சொல்லியற்றிலர் என்று குறிப்பிடப்பட்டி ருப்பதும் (புறம். 365) புறாநானூற்று உரையாசிரியரை “The Commentator was Posterior to Chintamani” என்று குறிப்பிட்டிருப்பதும் அரிய கால ஆராய்ச்சிக் குறிப்புகளாம். இது பெற்றாம் எனல் : செய்யுளில் வரும் குறிப்புக் கொண்டு இதனால் இது பெற்றாம் என்று ஒரு வாய்பாட்டு நெறியில் குறிப்பிடல் அடிகளார் வழக்கமாகும். தெற்கின் கண்ணது உட்கும் திறம் பொருந்திய கன்னியாற்றின் தெற்கும் என்னும் உரைப்பகுதியில் (புறம். 6) இதனால் குமரியாறு உண்மை பெற்றாம் என்றும், பதினைந்தாம் புறப்பாடலில் பஃறுளியாறு கடல் கொள்ளப் படுமுன்னரே வேள்வி வேட்டல் உண்மை பெற்றாம் என்றும், ஐம்பத்தாறாம் புறப்பாடலில்சிவபிரான் முதற்கட் கூறப் பட்டிருத்தலின் இவனே முழுமுதற் கடவுள் என்பது பெற்றாம் என்றும், தொண்ணூற்று மூன்றாம் புறப்பாடலில், தமிழ் மறைகள் அறத்தையே கூறும் என்பது பெற்றாம் என்றும், மாணிபால் என்னும் அப்பர்தேவாரத்தில் செம் பொன்னோடு வேய்ந்தமை அப்பர் காலத்திலேயே உண்மை பெற்றாம் என்றும் இன்னவாறு குறிப்புகள் உள. இயற்கையை வியத்தல் : இயற்கை எழிலில் பெருநாட்டங் கொண்ட அடிகளார், செய்யுளில் வரும் இயற்கைப் புனைவுகளில் தோய்ந்து தோய்ந்து உள்ளூறிய சுவையை அள்ளூறி வியந்து பாராட்டுகிறார். அவ்வவ் விடங்களில் “Quite natural” என்றும், “Natural Discription” என்றும், “Fine Natural Discription” என்றும், “Observation of Nature” என்றும் வரைகிறார். வல்வில் ஓரி ஏவிய அம்பு வேழத்தையும் வேங்கையையும் மானையும் பன்றியையும் முறையே வீழ்த்தி உடும் பொடுபட்டுத் தங்கியமையை “Natural hyper bole skill in Archer” என்று நயந்து பாராட்டுகிறார். அதன் அடிக்குறிப்பில் அலையுருவ வெய்ய வாளியை ஏழு மாமரம் எனக் காட்டப் பட்டுள்ள கம்பராமாயணப் பாடல்களை “Unnatural berbole” எனக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்புகளால் இயற்கையை அடிகளார் நெறி திறம்பா முறையில் நோக்கிய நோக்குத் தெளிவாம். நலம் பாராட்டல் : புலவர்களின் பெருமித உணர்வையோ, பிறர்க்கு இல்லாத மேம்பாட்டையோ, ஒப்புயர்வில்லாப் பொருளமைந்த செய்யுளையோ, தாங்குதற்கு அரிய அல்லலையோ பயிலும் போது அவற்றில் தம்மை இழந்து வயப்பட்டு அவற்றின் நலங்களைப் பாராட்டி வரைகிறார் அடிகள். இம்முருகியல் தனிப்பெருஞ் சிறப்பினதாம். சோழன் நலங்கிள்ளி ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடினார். அப்பாட்டில், “Very bold request of a poet” என வரைகின்றார். சோழன் நலங்கிள்ளியுழை நின்று உறையூர் புகுந்த இளந்தத் தன் என்னும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்று வந்தான் என்று கொல்லப் புக்குழிக் கோவூர் கிழார் பாடி உய்யக் கொண்ட பாட்டில், “The honesty of the gold poet” என வரைகிறார். துறையூர் ஓடைகிழார் பாட்டையும் (புறம், 139) பெருஞ் சித்திரனார் பாட்டையும் படித்து உருகி நைந்து “Extreme poverty of the pet” என வரைகின்றார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் புறப்பாட்டையும் (192) நம்பொருள் நம்மக்கள் என்னும் தேவாரப் பாட்டையும் முறையே மிக உயர்ந்த கொள்கை வாய்ந்த பாட்டு என்றும். “High Moral teaching” என்றும் வரைகின்றார். ஊர்க்குறு மாக்கள் என்னும் ஔவையார் பாடலையும், மைம்மீன் புகையினும் என்னும் கபிலர் பாடலையும் பயின்று, “Very fine Picture” என்றும் “Fine Picture” என்றும் குறிக்கிறார். இத்தகு குறிப்புகள் திறமான பாடல்களைத் தேர்ந்து தொகை செய்யப் பெருந்துணையாம். அணிநலம் பாராட்டல் : உவமை முதலிய அணிநலங்கள் செய்யுளில் இடம் பெற்றிருக்கும் எனின் அவற்றைத் தனித்தனி தரங்கண்டு தனித்தனி அடைமொழி நடையிட அடிகளார் பாராட்டுகிறார். எங்கும் பொதுவாகக் காணக் கிடைக்கும் உவமையை ‘Simile’ என்ற அளவில் குறிக்கிறார். தனிச்சிறப்புடையவற்றை அழகிய உவமை எனவும் “Apt simile”, “Fine simile”, “Vivid Simile”, “Natural simile”, “Striking simile from nature”, “High spiritual simile”, “Raresimile” என்று தக்காங்கு உரைக்கிறார். ஒருதாய் தன் இனிய மகவைக் கொஞ்சிக் கொஞ்சிப் பாராட்டி மகிழ்வது போல் உவமையை அடிகளார் கொஞ்சுகிறார். இலக்கணம் இயம்பல் : இலக்கண அருமை இலங்கும் இடங்களில் மிக அரிதான வற்றைச் சுருங்க வரைந்து செல்கிறார் அடிகளார். அருந்தே மாந்த என்பதில், பெயரெச்சத்துக்கு ஈற்றகரம் தொக்கது என்றும் காண்கு வந்திசின் என்பதில் ,சின் தன்மை இடத்தில் வந்தது எனவும் வெலீஇயோன் என்பதில் அளபெடை பிறவினைப் பொருள் தர வந்தது எனவும் உரைத்திசின் என்பதில் இசின் முன்னிலைக்கண் வந்தது எனவும் வரைகின்றார். மேலும் உரையில் இலக்கணக் குறிப்புள்ள இடங்களில் தக்க எடுத்துக்காட்டுக் காட்டுவதும் அடிகளுக்கு இயல்பாகும். னகர வீற்றுச் சொல் வேற்றுமைக்கண் அம்முப் பெற்று நிற்கும் என்றும் குறிப்பிற்குக் கான் என்பதை எடுத்துக் காட்டு கிறார். கானம் என ஆகுமன்றோ. சொல்லாய்வு : சொல்லாராய்ச்சியில் தலை நின்றவர் அடிகளார். தங்கத்தின் மாற்றை உராய்ந்து காண்பார் போலச் சொல்லையும் சொல் மூலத்தையும் ஆய்ந்து கண்ட ஆசிரியர் அடிகளார். தாம் ஆயும் நூல்களில் வரும் தமிழ்ச் சொல், வடசொல், திசைச் சொல் ஆகியவற்றை எண்ணிக் கணக்குப் போட்டுக் காட்டியவர் அவர். ஆதலால் அவர் பயின்ற நூல்களின் உள்ள சொல்லாய்வுக் குறிப்புகள் மிகப் பலவாம். இது தமிழ்ச் சொல், இது வடசொல் எனக் காட்டுவதை அன்றி, ஆங்கிலச் சொல் முதலியவற்றுக்குத் தக்க தமிழ்ச் சொல் உண்டாயின் அவற்றையும் சுட்டுகிறார். உருள் என்னும் சொல்லை ‘Wheel’ என்பதற்கு ஏற்றதாகக் குறிக்கிறார். வானவூர்தி என்னும் சொல்லுக்கு “Aeroplane” என்று குறிக்கிறார். சொல்வகை காட்டுவதுடன் அரிய சொற்களுக்குப் பொருளும் எழுதுகிறார். உரை இ - உலவி; சுரை - உட்டுளை; வங்க - வளைய; தொன்றி தெற்கு - இன்னவை பல. சொற்றொடர் விளக்கமும் ஆங்காங்குக் குறிப்பிடுகிறார் : வழி முடக்கு மாவின் பாய்ச்சல் என்பதற்குக் கோமுத்திரி என விளக்கம் காட்டுகிறார். நரந்தை நறும்புல் என்னும் தொடர்க்கு நறுமணம் வாய்ந்த புல்லும் நரந்தை எனப் பெயர் பெறும் என விளக்கம் தருகிறார். பிணர் - நால்வகை ஊறுகளுள் ஒன்று; இதனை ஜர்ஜ்ஜரா என்பர் வடமொழியாளர்; அது தமிழில சருச்சரை என வழங்கும், இக்காலத்தில் சுரசுரப் பென்பதும் அது என்னும் விளக்க வுரையில் (குறுந். 13) ஏன் இச் சொல்லில் (சருச்சரை) இருந்து (ஜர்ஜ்ஜரா) வந்த தாகாது? என வினாவுகிறார். இச்சொல் இவ்வாறு திரிந்தது எனக் காட்டுவதுடன் ஐயுறத் தக்கதாயின போலும் என்னும் வாய்பாடு பொருந்த அமைக்கிறார். பக்கம் - பக்கு எனத் திரிந்தது. அயங்கு - அசங்கு என்பது அயங்கு என்றாயிற்றுப் போலும் என்பவை இவ்வகைக் குறிப்புகளாம். வழக்குச் சொல், அரிய வழக்குச் சொல் என்ப வற்றையும் அடிகளார் ஆங்காங்குச் சுட்டுகிறார். பெண்டாட்டி - வழக்குச் சொல். யாரளோ சுயசந; கொடுக்குவர் - அரிய வழக்குநற்கு - Rare Use என்பவை இவற்றுக்குச் சான்றாவன. பிரித்துக் காட்டலும் இயைத்துக் கூட்டலும் : சில அருஞ்சொற்களைப் பிரித்துக் காட்டி விளக்கம் புரிகிறார் அடிகளார். அவ்வாறு பிரித்துக் காட்டுதல் பொருள் விளக்கத்திற்கு இன்றியமையாமை உடையதாம். போணிலா என்பதைப் போழ் நிலா என்றும், எட்டனை என்பதை எள்தனை என்றும் பிரித்துக் காட்டுகிறார். கொட்ட முழவிட்ட வடிவட்டணைகள் கட்ட என்னும் தேவாரத் தொடரை, முழவொலிக்கு இசைய இட்ட அடிகள் தாங்கட்ட என்க என எழுதி இயைத்துக் காட்டுகிறார். வைப்பு முறை கூறல் : அடிகளார் தம் சொற்பொழிவில், பொழிவு நிறைவில் சொன்னவற்றைத் தொகுத்துக் கூறுதலை ஒரு நெறியாகக் கொண்டிருந்தார். அம்முறையைக் கட்டுரைகளிலும், நூல்களிலும் மேற்கொண்டார். அதன் சுவடு அவர் பயின்ற நூல்களிலும் காண வாய்கின்றது. திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகங்களைக் கற்ற அவர், எட்டாஞ் செய்யுட்கடோறும் இராவணனை ஒறுத் தருளினமை கூறுவர், ஒன்பதாஞ் செய்யுட்கடோறும் திருமால் நான்முகன் என்பார்க் கெட்டாத நிலை கூறுவர்: பத்தாம் பாட்டுக்கடோறும் அமணரைப் பழிப்பர் என்று கூறுவது வைப்பு முறை கூறலாம். இன்னவையே யன்றிப் பிற வகையாலும் பகுத்து ஆராயும் வகையில் அவர்தம் நூல்பயில் குறிப்புகள் உள. காலமெல்லாம் கற்றுக் கொண்டே இருத்தல் ஆசிரியர்க்கும் ஆய்வாளர்க்கும் இன்றியமையாதது. இவ் வகையில் அடிகளார் தேடிக் கொண்ட அறிவுப் பரப்பு பெரிதாம். அவர்தம் நாட்குறிப்பில் காணப்பெறும் சில குறிப்புகள் அதற்குச் சான்றாவன : 7.1.1899 குர் - ஆனில் கூறப்பட்டிருக்கும் இசுலாமிய மதக் கருத்துக்களை இந்துத்தானி முன்சி வாயிலாக அறிந்து கொண்டேன். 3.3.1900 இராமகிருட்டிணர் வரலாற்று நூலை இன்று முழுவதும் படித்தேன். 30.8.1900 பேராசிரியர் மாக்சு மூலரின் Comparative Philology படித்தேன். 25.3.1901 உபநிடதங்கள் வாடகை நூலகத்தில் இருந்து பெற்றேன். 22.12.1901 விவேகானந்தரின் பக்தியோகம் கர்மயோகம், ஆத்மா ஆகிய நூல்களை வாங்கினேன். 5.5.1905 பாலகங்காதர திலகரின் வேதம் பற்றிய நூலைப் படிக்கத் தொடங்கினேன். 27.11.1907 வேதாந்த சூத்திரங்களுக்குரிய நீலகண்ட பாடியத்தைக் கற்கத் தொடங்கினேன். மொழிபெயர்ப்பாளர் செந்தில்நாத அய்யர்க்கு நம் தமிழ்ச் சைவர் கடப்பாடுடையர். 6.8.1910 விவேகானந்தரின் கர்மயோகம் என்னும் அருமையான நூலைப் படித்தேன். இரண்டொரு கருத்துக் களைத் தவிர விவேகானந்தரின் பொழிவுகள் நெஞ்சை உருக்கும் தன்மையவாய்ச் சைவ சித்தாந்தக் கருத்துக்களுடன் ஒத்துள்ளன. இவை அடிகளார் தாம்பரம் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியராக இருந்த காலத்தில் வரைந்த குறிப்புகளுள் சில. அடிகளார் பயின்ற நூல்களும் அவற்றைப் பயின்ற முறையும் பற்றி அவரே வரைந்த குறிப்புகளின் சிறு தொகுப்பு ஈதாம். ஆய்வியல் நெறிமுறை பற்றியும் அடிகளார் ஆங்காங்குச் சுட்டிக் காட்டியுள்ளதை அடுத்துக் காணலாம். 4. அடிகளார் காட்டும் ஆய்வியல் நெறிமுறைகள் அடிகளார் இயற்றிய அரிய பெரிய நூல் மாணிக் வாசகர் வரலாறும் காலமும் என்பது. அதில் தாம் மேற்கொண்ட ஆராய்ச்சி முறைகளை முகவுரையிலே விரிவாக வரைந்துள்ளார். இடை இடையும் இயம்புகின்றார். அவ்வாறே பட்டினப்பாலை முல்லைப்பாட்டு ஆகிய ஆய்வுரை முகப்புகளிலும் சுட்டுகிறார். அவர் தம் ஆய்வு நெறிமுறைகள் மேலை நாட்டவர் ஆய்வு நெறிகளை ஒப்பதுடன், தமிழின் தனித்தன்மை, தமிழர் தொல்பெரும் பண்பாட்டியல் நாகரிகம்என்பவற்றுடன் பின்னிப் பிணைந்து பிறங்கியவை என்பதைக் கண்டு கொள்ளல் தமிழ் ஆய்வாளர்க்கு நல்வழி காட்டியாம். ஆராய்ச்சி முறை : இந்நூல் எழுதுதற்குக் கைக் கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முறைகள் சிலவற்றைப் பற்றிக் கூற வேண்டுவது இன்றியமை யாததாகின்றது என்று அவரே திட்டப்படுத்திக் கொண்டு எழுதுகின்றார். மாணிக்கவாசகர் வரலாற்றுக் குறிப்புகளிற் பல, அவ்வரலாறு நுவலும் நூல்களில் உள்ளபடியே இங்கு எடுத்து எழுதப்பட வில்லை. ஏனென்றால், அக்குறிப்புகளிற் பல ஒரு புராணத்திற் காணப்பட்டபடியே மற்றொரு புராணத்திற் காணப்படவில்லை. ஒன்றுக் கொன்று முரணாகவே காணப்படுகின்றன; வேறுசில ஒரு புராணத்திலின்றி மற்றொரு புராணத்தில் மட்டும் காணப்படு கின்றன. அம்மாறுபாடுகளும் பிறவும் இந்நூலின்கண் ஆங்காங்கு எடுத்துக்காட்டி அவற்றுள் கொள்ளற் பாலன இவை. தள்ளற்பாலன இவையென்பதை நன்கு விளக்கிக் காட்டியிருக்கின்றேம். இவ்வாறு காட்டும் இடங்களிலெல்லாம் திருவாசகச் செந்தமிழ்ப் பாக்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சான்றுரைகள், அடிகளின் உண்மை வரலாற்றுக் குறிப்புகள் இவையென்று நாட்டுதற்கு உதவியாகக் காட்டப்பட்டிருக் கின்றன. இறைவனை வாழ்த்திப் பாடுஞ் செய்யுட்களில் அடிகள் தம் வரலாற்றுக் குறிப்புகளைத் தம் வயமின்றியே மொழிந்து விடுமாறு நேர்வித்த சிவபிரான் திருவருட்கு எங்ஙனம் நன்றி பகர வல்லேம். அடிகளின் வரலாற்றுக் குறிப்புகளைத் திருவாசகம் திருக்கோவையாரிற் காணப்படும் குறிப்புகளுடன் வைத்து ஒத்து நோக்கி அவை தம்மை எழுதியிருந்தனராயின் புராணக்காரர்கள் அங்ஙனம் தம்முள் மாறுகொண்டுரையார். புராணகாரர் உரைகளில் மாறுகோள் கண்டவழியும், அவற்றுட் காணப்படாத குறிப்புகளை ஆராய்ந்து கண்டு எழுதுகின்றுழியும், திருவாசகம் திருக்கோவையாரின் இடை மிளிரும் வரலாற்றுக் குறிப்புகளே அடிகளின் வரலாற்றுண்மை யினைத் துணிதற்குக் கருவிகள் ஆயின. இவ்வாறாக ஓர் ஆசிரியரின் உண்மை நிலையைத் துணிதற்கு அவர் இயற்றிய நூல்களிலுள்ள சொற்பொருட் குறிப்புகளையே பெருந்துணையாய்க் கொள்ளும் ஆராய்ச்சி முறை இந்நூன் முழுவதும் ஊடுருவி நிற்றல் கண்டு கொள்க. அடிகளின் வரலாறு கிளக்கும் பகுதியில் இம்முறை மிக்கு நிற்றல் தெற்றெனப் புலனாம் என்கிறார். கால ஆராய்ச்சி : இனிக் கால ஆராய்ச்சியின் இன்றியமையாமையையும் அடிகளார் நன்கு விளக்குகிறார். அடிகள் இருந்த காலமும் அக்கால நிலையும் உண்மை யாக விளங்கினாலன்றி, அவரது வரலாற்றின் உண்மையும், அவர் அருளிச் செய்த நூல்களின் உண்மையும், அவற்றின் வாயிலாக அறிய வேண்டி நிற்கும் முற்காலப் பிற்கால நூல்களின் உண்மையும், சைவம் வைணவம் பௌத்தம் சமணம் மாயாவாதம் முதலான சமயங்களின் உண்மையும், அவ்வச் சமயங்களில் காலங்கள் தோறும் புகுந்த புராணக் கதைகளின் உண்மையும், அவ்வக் காலங்களில் தமிழ்மொழி தனித்தமிழும் கலப்புத் தமிழுமாய் நின்ற உண்மையும், அவ்வக் காலங்களில் திரிபெய்தி வந்த ஒழுக்கங்களின் உண்மையும், பிறவும் உள்ளவாறு அறிதல் இயலாது. நூல்களின் காலவரையறை தெரியாத வரையிற் பழையது புதியதாகவும், புதியது பழையதாகவும், மெய் பொய்யாகவும், பொய் மெய்யாகவும் முன்னிருந்த ஆசிரியர்பின்னிருந்த வராகவும், பின்னிருந்தவர் முன்னிருந்தவராகவும் கொள்ளப்பட்டு உண்மை சிறிதும் விளங்காமற் பெரியதொரு தலைதடுமாற்றமே தலைவிரித்தாடும். கால ஆராய்ச்சி செய்து அவ்வக் கால நிலைகளையும் அவ்வக் காலத்திருந்த ஆசிரியர் நிலைகளையும் உணராமை யினாற்றான், நம் நாட்டவர்கள் பொய்க் கதைகளிலும் பொய்த் தெய்வ வணக்கங்களிலும் போலியாசிரியர் மருளுரைகளிலும் வீழ்ந்து மயங்கி உண்மையறிவு வாயாதவர்களாய், அதனாற்றம் பிறவியைப் புனிதப்படுத்தும் வழிவகைகள் தெரியாதவர்களாய், அறிவும் ஆற்றலும் இன்றித் தம்முட் பகையும் பொறாமையும் கொண்டு நோயிலும் வறுமையிலும் உழன்று, தீவினைக் காளாகி மங்கி மடிந்து போகின்றனர். எனவே இம்மக்கட் பிறவியைத் தெய்வப் பிறவி ஆக்குதற்கு இன்றியமையாத கருவியாய் மேம்பட்டு விளங்குவது கால ஆராய்ச்சியால் உரங்கொண்டு துலங்கும் மெய்யறிவு விளக்கமேயாம். இத்துணைச் சிறந்த கால ஆராய்ச்சி முறை இத்தமிழ் நாட்டகத்திலுள்ள அறிஞர் எவராலும் ஒழுங்காகக் கடைப் பிடிக்கப்பட்டு நம் தமிழ் மொழிக்கண் உள்ள எந்த நூலிலும் இதுகாறும் விரிவாகக் காட்டப்படாமையின் மாணிக்கவாசகர் வரலாற்றினும் மாணிக்க வாசகர் காலம் எம்மால் நான்மடங்கு பெருக்கி எழுதப்படுவதாயிற்று என்கிறார். எவ்வெவ் வகையாலெல்லாம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது என்பதையும், சான்றுகள் எல்லாம் எவ்வாறு வைக்கப் பட்டுள்ளன என்பதையும் தெளிவாக வரையறுத்துக் கூறுகிறார் : கால ஆய்வு முறை : புதிது புகுந்த தமிழ்ச் சொல் வடசொற்களாலும், முற்காலத்தின்றிப் பிற்பிற் காலங்களில் தோன்றிய தெய்வ வணக்கங்களாலும், முன்நூல்களில் இன்றிப் பின் நூற்களிற் புனைந்து சேர்க்கப்பட்ட புராணக் கதைகளாலும், முற்பிற் காலங்களிலும் பொருள் வேறுபட்ட சொற்களாலும், சமயக் கோட்பாடுகளாலும், காலங்கள் தோறும் புதிது தோன்றிய பாவகைகளாலும், முன்னாசிரியர்நூலிலுள்ள சொற் பொருட் குறிப்புகளைப் பின்னாசிரியர் தம் நூலுள் எடுத்தாளும் வகைகளாலும், முன்னிருந்தோரைப் பின்னிருந்தோர் குறிப்பாலும் வெளிப்படையாலும் நுவலும் நுவற்சிகளாலும், அவ்வந் நூல்களில் குறிப்பிடப்பட்ட சிவபிரான் கோயில்கள் திருமால் கோயில்களைக் கணக்குச் செய்த தொகைகளாலும், கல்வெட்டுகள் செப்பேடுகள் முதலாயினவற்றில் புலனாம் அரசர்களின் காலக் குறிப்புகளாலும், வடமொழி நூல்கள் அயல் நாட்டவர் வரைந்து வைத்த வரலாற்று நூல்கள் முதலாயின வற்றில் தமிழர் ஆரியர் பற்றி நுவலும் பகுதிகளாலும் இன்னோரன்ன பிறவற்றாலும் தமிழாசிரியர் தமிழ் நூல்களின் காலவரையறைகளும், அவ்வக் கால இயல்புகளும் அவற்றிடையே படும் மாணிக்கவாசகரது காலமும் மிகவும் விழிப்பாக ஆராய்ந்து தெளிவு படுத்தப் பட்டிருக்கின்றன. சான்று : இவ்வாறு செய்கின்றுழி, ஒவ்வொன்றுக்குஞ் சான்றுகள் காட்டப்பட்டிருப்பதோடு, சான்றாக எடுக்கப்பட்ட மேற்கோள் உள்ள நூற்பெயர்களும், அவற்றின்கண் அவை உள்ள இடங்களும் சுட்டிச் சொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வாறு மேற்கோள்கள் உள்ள இடங்கள் கிளந்து குறிக்கப் பட்டிருத்த லால், இந்நூலைக் கற்பவர்கள் யாம் செய்து காட்டும் ஆராய்ச்சி முடிபுகட்கு உள்ள சான்றுகளைத் தாமும் எளிதிற் கண்டு, எம்முடைய முடிபுகள் பொருந்துமா பொருந்தாவா எனத் தாமே வருத்தமின்றி ஆராய்ந்து தெளிதல் கூடும். பெரும்பாலும் தமிழில் உரைநூல்களும் ஆராய்ச்சி நூல்களும் எழுதும் அறிஞர்கள் தமதுகோட்பாடுகட்குச் சான்றாகக் காட்டும் மேற்கோள்கள் உள்ள நூற்பெயர்களைக் கூட மொழியாது போவர்; ஏனென்றால், அங்ஙனங்குறித்துக் காட்டுதற்குப் பொறுமையும், பேருழைப்பும், நூல்களும் வேண்டும். யாம் எம்முடைய வருத்தத்தையும் காலக் கழிவினையும் பொருட்பட செலவினையும் பாராது, உலகத்தில் உண்மை விளங்கி எல்லாரையும் உய்வித்தல் வேண்டும் என்ப தொன்றனையே கடைப்பிடியாகக் கொண்டு, ஒவ்வொன் றுக்கும் மேற்கோள்களும் இடங்களும் குறித்திருத்தலை அன்பர்கள் கருதிப்பார்த்து, இம்முறையினைத் தாமும் கையாண்டு உண்மை ஆராய்ச்சியினை ஓம்பு வாராக! இவ்வாறு தம் ஆய்வுமுறை இன்னதென்றும், இம்முறை துயர்க்கும் இழப்புக்கும் உரியது எனினும் உண்மை காண்டற்கு இன்றியமையாதது என்றும் இதனை மேற்கொள்ளல் ஆய்வார்க்கும் ஆய்வுக்கும் நலப்பாடு என்றும் கூறுதல் விளங்கும். சார்பு இன்மை : ஆய்ஞருக்கு, அவர் இவர் என்றோ, அப்பொருள் இப்பொருள் என்றோ, சார்பு சார்பின்மை என்றோ நடுநிலை பிறழ்ந்து ஆய்வு செய்தல் ஆகாது என்றும் அடிகளார் நெறி காட்டியுள்ளார். இங்ஙனம் ஆராய்ந்து செல்லும் நெறியிற் பிழையெனக் கண்டவைகளை மறையாது, அவை பிழைபடுதலைக் கிளந்து சொல்லியிருக்கின்றேம். எல்லாராலும் தெய்வத்தன்மை யுடைய வராகக் கொள்ளப்பட்ட ஆசிரியர் நூல்களிலும்பிழையெனக் கண்டவைகளை மறையாது வெளிப்படையாக எடுத்துக் காட்டியிருக்கின்றோம். கடவுளல்லாத ஏனை மக்களெல்லாரும் எத்துணைதான் சிறந்தவராயிருப்பினும் பிழைபடாதிரார். இது, தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரே, அரியகற்று ஆசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு என்று அருளிச் செய்தமையானும் தெளியப்படும். ஆகவே, அறிவில்மிகச் சிறந்த சான்றோர்களும் ஒரோ வழிப்பிழைபடுவராயின், அவர் செய்த அப்பிழைகளை உண்மை விளக்கத்தின் பொருட்டு எடுத்துக் காட்டுதல், அவர்பால்யாம் வைத்துள்ள அன்புக்கும் நன் மதிப்புக்கும் எள்ளளவும் பழுது செய்யாது, ஒரோ ஒரு காற் பேரறிவினர்பால்மெய்யல்லாத தோன்றுதலும் உலகியல் நிகழ்ச்சிகளிற் காணக் கிடத்தலின், உண்மையாராய்ச்சி செய்பவர்கள், அவ்வவர்தம் பெருமை சிறுமை பாராது அவ்வவர்பாற் புலனாவனவற்றிலுள்ள பொய்ம்மை மெய்ம்மைகளை ஆராய்ந்து கண்டெழுதுதலே உலகினை வஞ்சியாது அதற்கு நன்மைபயக்கும் விழுமிய ஒழுகலாறாம், அது தேற்றுதற்கன்றோ ஆசிரியர் திருவள்ளு வனாரும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்று அருளிச் செய்வாராயினர், இவ்வாறு உண்மையைக் கண்டெழுதுதலிற் கடைப்பிடியாய் நில்லாது இவர் தெய்வத் தன்மை வாய்ந்த ஆசிரியர், இவரியற்றிய இந்நூலிற் குற்றங் குறையாவது ஏதும்இராது என்று குருட்டுப்பிடியில் உறைத்து நின்று, தாமும் அவர் நூற்பொருளை யாராயாது, ஆராய்வார் சிலர் தம்மையும் கண்டவாறு புறம் பழித்துப் பேசி உலகினை அறியாமையில் அழுத்துவாரும் உளர். அத்தன்மையினார் உரைகளை ஒரு பொருட்டாக வையாது மெய்ம்மை யாராய்ச்சியிற் செல்லுதலே உலகினைத் தேற்றுஞ் சான்றோர் கடனாமென்க. என்று விரிவாக ஆராய்ச்சித் திறன் குறித்து எழுதியுள்ளார். இனி இலக்கிய ஆய்வு செய்வார்க்கு வேண்டும் அரிய தொரு குறிப்பினை முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை மூன்றாம்பதிப்பின் முகவுரையிலே குறிப்பிடுகிறார் அடிகளார். சொல்லாய்வு : உலக வழக்கத்திலுள்ள சொற்களைத் தவிர்த்து முல்லைப் பாட்டில் வந்த ஏனை எல்லாச் சொற்களையும்அகர வரிசைப்படுத்தி அவற்றிற்கெல்லாம் பொருள்கள் எழுதி யிருக்கின்றேம். இவ்வருஞ் சொற்பொருள் வரிசையின் உதவிகொண்டு இச் செய்யுட் பொருள் உணர்ந்து கொள்வது எவர்க்கும் எளிதேயாம். இனி இவ்வருஞ் சொற்கட்குப் பொருள் வரையுங்கால் இம்முல்லைப்பாட்டு வழங்கிய காலத்தில் அதன்கண் வந்த சொற்கட்கு வழங்கிய பொருள்களையும், அக்காலத்தை அடுத்துத் தோன்றிய சான்றோர் நூல்களில் அவற்றிற்கு வழங்கிய பொருள் களையும் எடுத்துக்காட்டியிருக்கின்றேம். ஒரு செய்யுள் வழங்கிய காலத்தும் அதனை அடுத்து வந்த காலத்தும் அச்செய்யுட் சொற்கட்குப் பொருள் தெளிவது அச் செய்யுள் ஆக்கியோன் கருத்தை நன்கறிந்து கோடற்குக் கருவியாம் ஆதலின், இங்ஙனஞ் சொற்பொருள் துணிவிக்கும் முறையைத் தமிழாராய்வோர் அனைவரும் கைப்பற்றி ஒழுகுவராயின் நமதருமைச் செந்தமிழ்மொழி சாலவும் விளக்க முடையதாகித் திகழும் என்கிறார். இக்கருத்தைப் பட்டினப் பாலை இரண்டாம் பதிப்புரையிலும் எழுதுகிறார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்யுரை என்னும் இரண்டிலும் மற்றுமொரு கருத்தை ஆராய்ச்சியாளர்க்கும் நூலியற்று வார்க்கும் வற்புறுத்துகிறார், இக்கருத்து அடிகளார் நூல்கள் அனைத்திலும் கொண்டு போற்றப்பட்டதும், அவர்க்குத் தனிப்பெருமை சேர்த்ததும் ஆகிய கடைப்பிடியாகும். இவ்வாராய்ச்சி யுரையின்கண் மற்றொரு முதன்மையான சீர்திருத்தமும் செய்திருக்கின்றேம். தொன்று தொட்ட சிறப்பும், இலக்கண இலக்கிய வரம்பும், தனக்கெனப் பன்னூறாயிரம் சொற்களும் வாய்ந்து இன்றுகாறும் வழக்குவீழாது உயிரோடு உலாவிப் பன்னூறாயிரம் மக்கட்குப் பெரிது பயன்பட்டு வரும் நமது இனிய செந்தமிழ் மொழியை அயல்மொழிச் சொற்கள் விரவாமற் பாதுகாத்துத் தூயதாய் வழங்கி அதனை வளம்பெறச் செய்வது தமிழராயினார் ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத கடமையாம். சில நூற்றாண்டுகளாய்த் தோன்றி இலக்கண இலக்கிய வரம்பில்லாதது தமக்கெனச் சில சொற்களேயுடைய மொழி களையும், அவற்றிற்குரியாரும் அவற்றிற்கு உரியார் போற்றம்மை எண்ணிக் கொள்வாரும் அவற்றைத் தூயவாய் வழங்கவும் அவற்றை உயிர்ப்பிக்கவும் ஓவாது முயன்றுவர எல்லா நலங்களும் ஒருங்குடைய நமதருமைச் செந்தமிழ் மொழியை நம்மனோர் பயிலாதும் பாதுகாவாதும் கைவிட்டிருத்தல் நிரம்பவும் இரங்கற் பால தொன்றாம். இனியேனும் அவர் அங்ஙனம் மடிந்திராமைப் பொருட்டு, நம்மனோரிற் கற்றவராயிருப்போர் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமற் றனித்தமிழிற் பேசவும் எழுதவும் கடைப்பிடியாய்ப் பழகிவரல் வேண்டும். இதனை முன் நடந்து காட்டும் பொருட்டு, இதற்கு முன் யாம் எழுதிய நூல்களிற் புகுந்த சிற்சில அயன்மொழிச் சொற்களையும் அந்நூல்களைத் திரும்பப் பதிப்பிட்டு வரும். இப்போது முழுதும் களைந்து விட்டு, அவை நின்ற இடத்திற் தூய தமிழ்ச் சொற்களையே நிரப்பி வருகின்றேம் என்கிறார். இக்கொள்கை, அடிகளின் அரிய பெரிய ஆராய்ச்சித் திறனால் கண்டு ஓரியக்கப்படுத்தி வளர்க்கவும் தமிழ் வளமாக்கவும் தமிழ் உயர் தனிச் செம்மொழி என்பதை உலகுக்கு நிலைப்படுத்திக் காட்டவும் ஏந்தாக அமைந்த தாகலின் ஆய்வியல் நெறிமுறை களுள் ஒன்றாகக் கொள்ளத்தக்கது ஆயிற்றாம். 5. அடிகளார் இயற்றிய நூல்கள் அடிகளார் இயற்றிய நூல்கள் ஐம்பத்து நான்கு. அவை வெளிவந்த கால அடைவில் வருமாறு. 1. முதற்குறள் வாத நிராகரணம் 1898 2. சித்தாந்த ஞான போதம் - சதமணிக் கோவை - குறிப்புரை 1898 3. துகளறு போதம் - உரை 1898 4. முனிமொழிப் பிரகாசிகை 1899 5. வேதாந்த மதவிசாரம் 1899 6. வேத சிவாகமப் பிராமண்யம் 1900 7. திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை 1900 8. சோம சுந்தரக் காஞ்சி யாக்கம் 1901 9. ஞான சாகரம் 1902 10. முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை 1903 11. பட்டினப் பாலை ஆராய்ச்சியுரை 1906 12. சைவ சித்தாந்த ஞானபோதம் 1906 13. பண்டைத் தமிழரும் ஆரியரும் 1906 14. சாகுந்தல நாடகம் 1907 15. Oriental Mystic Myna 1908 16. சிந்தனைக் கட்டுரைகள் 1908 17. மரணத்தின் பின் மனிதர் நிலை 1911 18. குமுதவல்லி : நாகநாட்டரசி 1911 19. சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் 1913 20. கோகிலாம்பாள் கடிதங்கள் 1921 21. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் 1921 22. அறிவுரைக் கொத்து 1921 23. யோக நித்திரை : அறிதுயில் 1922 24. வோளாளர் நாகரிகம் 1923 25. மனிதவசியம் : மனக்கவர்ச்சி 1927 26. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1930 27. மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை 1933 28. சாகுந்தல ஆராய்ச்சி 1934 29. சிறுவர்க்கான செந்தமிழ் 1934 30. தொலைவில் உணர்தல் 1935 31. மாணிக்கவாசகர் மாட்சி 1935 32. Ocean of wisdon 1935 33. முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் 1936 34. தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும் 1936 35. Tamilian and Aryan form of and Marriage 1936 36. Ancient and Modern Tamil Poets 1937 37. இந்தி பொது மொழியா? 1937 38. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் 1938 39. Saiva Siddanta as a Philosophyof Practical Knowledge 1940 40. திருவாசக விரிவுரை 1940 41. தமிழர் மதம் 1941 42. கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா 1948 இந்நாற்பத்திரண்டு நூல்களும் அடிகளார் வாழ்ந்த நாளிலேயே அவரால் வெளிப்படுத்தப்பட்டவை 15.9.1950 இல் அடிகளார் புகழ் உடல் எய்தினார். அவர் எழுதி நூலுருப் பெறாதனவும் கட்டுரை வடிவில் வந்தனவும், கைப்படியாய் இருந்தனவும் கொண்டு அவர் காலத்திற்குப் பின்னர் வெளிவந்த நூல்கள் பன்னிரண்டு 43. திருக்குறள் ஆராய்ச்சி 1951 44. மாணிக்கவாசகர் வரலாறு 1952 45. அம்பிகாபதி அமராவதி 1954 46. இளைஞர்க்கான இன்றமிழ் 1957 47. சோமசுந்தர நாயகர் வரலாறு 1957 48. மறைமலையடிகளார் கடிதங்கள் 1957 49. சிவஞானபோத ஆராய்ச்சி 1958 50. Can Hindi be a Lingua Franca of India 1969 51. அறிவுரைக் கோவை 1971 52. உரைமணிக் கோவை 1972 53. கருத்தோவியம் 1976 54. பாமணிக் கோவை 1977 இவற்றின் பின்னே மறைமலையடிகளார் நாட் குறிப்புகள் என்னும் நூல் வெளிவந்தது, அது, அடிகளார் 1898 முதல் 1950 வரை ஆங்கிலத்தில் எழுதியிருந்த நாட் குறிப்புகளில் தேர்ந் தெடுக்கப்பட்ட குறிப்புகளைத் தமிழாக்கித் தந்தது. அது வெளிவந்த ஆண்டு 1988. இந்நூல்கள் அனைத்தும் அடிகளாரின் ஆராய்ச்சித் திறனை வெளிப்படுத்துவனவே என்பது பொதுக் குறிப்பு. சில நூல்களில் ஓரளவும், சில நூல்களில் பேரளவும் ஆய்வுத் திறன் வெளிப்படுதல் நூலியல். எடுத்துக் கொண்ட பொருளைப் பொறுத்தே ஆய்வுத் திறங்கள் வேறுபட, இடனுண்டு, அடிகளார் நூல்களை மருத்துவம், மறை பொருளியல், இலக்கியம், இதழ், சங்க இலக்கிய ஆய்வு, பாடல், நாடகம், புதினம், கடிதம், கட்டுரை, சமயம், தத்துவம், வரலாறு, சமுகவியல் எனப் பதினான்கு வகைப்படுத்திக் கண்டுளர். இவற்றொடு நாட்குறிப்பு இடம் பெறவில்லை எனினும், வரலாறு என்பதனுள் தம்வரலறாக அடங்கும் என்க. முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை என்பனவும், சாகுந்தல நாடக ஆராய்ச்சி, திருக்குறள் ஆராய்ச்சி, சிவஞான போத ஆராய்ச்சி என்பனவும் பெயரிலேயே ஆராய்ச்சியையும் இணைத்துப் பளிச்சிடுவன. மறுப்புக்கு மறுப்பு : அடிகளார் முதற்கண் எழுதிய (1898) முதற்குறள் வாத நிராகரணம் என்னும் நூலே ஆராய்ச்சி நூலாகும். சைவ சித்தாந்த சண்ட மாருதம் எனப்பட்ட சோம சுந்தர நாயகர் நாகையில் ஆற்றிய பொழிவை மறுத்து எழுதினார்க்கு, மறுப்புக்கு மறுப்பு எழுதி மெய்ம்மை நிலை நாட்டிய நூல். அந்நூலே நாயகரை வயப்படுத்தி வைத்தது. நலம் பல சேர்த்தது. அந்நூல் கட்டுரைகள் நாகை நீலலோசனி என்னும் இதழில் முருகவேள் என்னும் புனைபெயரில் வெளியிடப் பட்டு நூலுருப் பெற்றதாகும். அடிகளார் எழுதிய முதற் கட்டுரையே மறுப்புக் கட்டுரை என்பதையும், அறிஞர்களை யெல்லாம் வயப்படுத்தி மெய்ம்மை நாட்டியது அது என்பதையும் சிவஞான முனிவர் மறுப்பனைய மறுப்பாகத் திறத்தோடு விளங்குவது எனப் பாராட்டப் பட்டது என்பதையும் அறியுங்கால், அடிகளார் எழுத்தெல்லாம் ஆய்வுத் திறப்பாடு உடையவையே யன்றிப் பிறிதல்ல என உறுதி செய்யலாம். ஆய்வுக் குறிப்பு : அடிகளார் இயற்றிய சாகுந்தல நாடகம் 150 பக்க அளவில் ஏழு வகுப்புகளில் இயல்கின்றது. அந்நாடக விளக்க உரைக் குறிப்போ 100 பக்க அளவில் அமைகின்றது. காளிதாசர் தழுவிய உலகப் படைப்பு முறை பண்டை இருக்கு வேத வழிப்பட்டது என்று வாழ்த்துப் பகுதியிலேயே தம் ஆய்வை ஓட விடுகிறார். முதன்முதல் நீரே படைக்கப்பட்டது என்பது ஆரிய வேத நூல் வழக்கு. அந்த முதற்பொருள் நீரேயாம்; அது மூச்சு இலதாய்த் தன்னியற்கையினாலேயே மூச்சு விடுவதாயிற்று என்று இருக்கு வேதப் பத்தாம் மண்டிலத்தின் கண்ணதான 129 ஆம் பதிகம் பாடுதல் காண்க. அந்நீரில்இருந்தே தீயும், அத்தீயில் இருந்தே ஞாயிறும் உண்டாதலும் ஆண்டே நுவலப்படுகிறது. இவ்வாற்றாற் காளிதாசர் தழுவிய உலகப் படைப்பு முறை பண்டை இருக்கு வேத வழித்தாதல் காண்க. வேத காலத்திற்குப் பிற்பட்டதான தைத்திரிய உபநிடதத்தில் விசும்பில் இருந்து காற்றும், காற்றில் இருந்து தீயும், தீயில் இருந்து நீரும், நீரில் இருந்து நிலனும் உண்டாயின என்று நுவலப்படுங் கருத்து அவர்க்கு உடன்பாடன்று என்கிறார். அட்ட மூர்த்தம் என்னும் எட்டு வடிவாய் விளங்கும் சிவபெருமானையே வணங்கு முகத்தால் வாழ்த்துரை கூறினார் என்னும் அடிகளார் அதனை நிலைநிறுத்தப் பல சான்றுகளை எடுத்துரைக்கிறார். வேதங்கள் தொகுக்கப்பட்டுப் பிராமணங்களும் பழைய பன்னிரண்டு உபநிடதங்களும் வரையப்பட்ட பண்டைக் காலத்தேசிவபெருமான் ஒருவனே முழு முதற் கடவுளாக வணங்கப்பட்டனன். இவ்வுண்மை மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்னும் எமது நூலில் கண்டு கொள்க. காளிதாசர் பிற்காலத்தெழுந்த புராண முறையைத் தழுவாது, முற்காலத்ததாகிய வேதமுறையைத் தழுவுதலிற் சிவபெருமான் ஒருவனையே முழுமுதற் கடவுளாக வைத்து வாழ்த்துரை கூறுவாராயினர். இங்ஙனமே இவர்தாம் இயற்றிய விக்கிரமோர் வசியம் என்னும் நாடகத்தின் முகத்தும், மாளவிகாகநிமித்திரம் என்னும் நாடகத்தின் முகத்தும், சிவபெருமான் ஒருவனையே முழுமுதற் கடவுளாக வைத்து வாழ்த்துரைத்தல் காண்க என்கிறார். சகுந்தலை, மல்லிகைக்கு நீர் சொரியும்போது ஆங்கிருந்த கருவண்டு அவள் முகத்தண்டை பறந்தது. அதுகண்டு பதறி, தோழியர்களை நோக்கிக் காக்க ஏவ, அவர்கள், தவத்தோர் கானகம் காப்பவர்காவலரே ஆகலின் துசியந்தனைக் கூப்பிடு என்று நகைக்க, தனித்திருக்கும் மகளிர்பால் செல்லுதற்குத் தக்க சூழலை நோக்கிக் காத்திருந்த துசியந்தன் ஒரு வேட்டுவன் என்ன உடனே தோன்றி உதவுகின்றான். இதனை விளக்கும் அடிகளார், மரச் செறிவில் மறைந்து நிற்கும் அரசன் தனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத இளைய மகளிர் பால் செல்லுதல் உயர்ந்தோர் ஒழுக்க மாகாமையின், தான் அவர்கள்பாற் செல்லுதற்கு ஏற்றதொரு நேரத்தை எதிர்பார்த்து நிற்க ஒரு வண்டானது, அவர்களைத் துன்புறுத்தி அவர்களே ஓர் ஆண் மகனுதவியை அவாவிக் கூவுமாறு செய்து, அவன் அவர்களைச் சென்றணுகுதற்கு ஒரு காரணங் கற்பித்தவாறு காண்க. இங்ஙனம் தலைமகன் தலைமகளைச் சென்று சேர்தலை வண்டோச்சி மருங்கணைதல் என்று தமிழ் நூலார் கூறுப, (162) என்றும், துசியந்த மன்னன் வரலாறுகளைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அனசூயை கேட்ட வினாக்களுக்கு அவ்வரசன் உண்மையைத் தெரிவியாமல் தன்னை மறைத்து மொழியும் நுட்பம் உற்று நோக்கற்பாலது. ஒருவனுடைய வரலாறுகள் தெரியாமலே அவனைக் கண்ட அளவில் அவன்மேல் ஆராக் காதல் கொள்ளும் ஒரு மங்கையே அவன் மேல் என்றும் நெகிழாத அன்புடையளாய்க் கற்பொழுக்கத்திற் சிறந்து திகழ்வள். ஒருவன் தன் செல்வத்தையும் அதிகாரத்தையும் (தலைமை யையும்) புகழையும் குடியுயர்வையும் பாராட்டி அவன்மேல் அன்பு கொள்ளும் ஒருமாது அவன்பால்பிறழாத காதலன் புடையளாய் ஒழுகுதல் அரிது. அது பற்றியே அரசன் தனக்குள்ள புறச் சிறப்புகளைத் தெரிவியாது தன்மேற் சகுந்தலையின் மனப்பதிவு எத்தன்மையதாக நிகழ்கின்றதென் ஆராய்ந்து ஓர்கின்றான் என்றாலும் தன் குடிக்கு முதல்வனான புருவின் பெயரால் தன் உண்மையையும் ஒருவாற்றாற் குறிக்கின்றான் என்கிறார் (163) இரண்டாம் வகுப்பில், யவனப் பணிப் பெண்கள் வரவு கூறப்படுகின்றது. அதனைக் குறிக்கும் அடிகளார், யவனம் என்பது கிரேக்க நாட்டின் ஒரு பகுதி. ஐயோனியா என்னும் கிரேக்க மொழிச் சொல் யவனம் எனத் திரிந்தது. இந்திய நாட்டு மன்னர்கள் தம்முடைய அம்புக் கூட்டையும் வில்லையும் பாதுகாத்து வைத்துக் கொடுக்கும் தொழிலில் இவ்வயல்நாட்டு மாதர்களை அமைப்பது பழைய வழக்கம் என்பது இதனால் புலனாகின்றது. இவ் யவனர் தமது நாட்டில் இருந்து தேறல் என்ப பெயரிய இனிய பருகு நீரைக் கொணர்ந்து தமிழ்நாட்டில் அஞ்ஞான்று விலை செய்தமை யவனர் நன்கலந்தந்த தண்கமழ் தேறல் (புறநானூறு 56) என்னும் நக்கீரனார் செய்யுளாலும் அறியக் கிடக்கின்றது என்கிறார். (169) கரடிகள் மக்களின் மூக்கிறைச்சியைத் தின்பதில் மிக்க விருப்பம் உடையன என்பது தசகுமார சரிதத்திலும் கூறப்பட்டது என்று சுட்டுகிறார் (171) நுண்ணறிவு : இடக்கைக் கடகத்தின் மணி தன் நிறம் மாறியதாகக் காளிதாசர் சுட்டுவது ஏன் என்பதை எண்ணும் அடிகளார் விற்பிடிக்கும் கை இடக்கையே ஆதலால் வில்லின் நாண் உரைஇத் துசியந் தனுக்குத் தழும்பு உண்டான இடம் இடத் தோளின்கண் உளதென்பது பெற்றாம். அவ்விடத்தில் அணிந்திருந்த கடகம் அவனது உடம்பின் மெலிவால் அவ்விடத்தை விட்டு நழுவி முன் கையில் வந்து விழுதலும் பெறப்படும். அவன் தன் கையைத் தொங்கவிட்டு உலாவுகையில் மேலுள்ள கடகங்கீழ் நழுவுமென்பது உணரற்பாற்று. அவனது கையிலுள்ள கடகத்தில் குயிற்றிய மணிகள் இப்போது நிறம்மாறி இருப்பதற்குக் காரணம், அவன் இரவிற் றுயில் கொள்ளானாய்ப் படுக்கையிற் கிடந்து சகுந்தலையை நினைந்து ஆற்றானாய்ந் தோறும் அவன் கண்களினின்று பொழியும் நீரின் வெம்மை படுதலேயாம், என்று அவன் இரவின் கட் பட்ட துயரத்தினையும் அறிவித்தற்கு ஒரு குறியாக அதனைக் கூறினாரேயல்லது அவன் படுத்துக் கிடக்கையிற் றோளிலுள்ள கடகங்கழன்று கீழிறிங்கியதென்று கூறப்பு குந்தா ரல்லர் என்கிறார் (183-4) தவச் சாலையில் வளர்ந்த மங்கை சூழ்ச்சி யறியாள் என்று கௌதமி கூறியபோது அரசன், கற்றுக் கொள்ளாமலே வரும் திறம் என்பதைக் குறிக்கும் வகையால் தம் குஞ்சுகள் வாளின்கட் பறக்கும் வரையிற் குயிற்பெடைகள் அவை தம்மை வேறு பறவைகளைக் கொண்டு வளர்த்து வரல் உண்மையன்றோ? என்கிறான். இதனை விளக்கும் அடிகளார், குயிற்பெடைகள் தாம் இடும் முட்டைகளை அடை காக்கத் தெரியா வாகலால், அவை தம் முட்டைகளைக் காக்கையின் கூடுகளில் இடக், காக்கைப் பெடைகள் அவற்றையும் தம்முட்டையென்றே கருதி அடைகாத்துக் குஞ்சு பொரித்துப் பொரித்த குயிற் குஞ்சுகளுக்குத் தங்குஞ்சுகளுக்கு ஒக்கச் சேர்த்து இரை கொடுத்து வளர்த்தமையும், வளர்த்தபின் அக்குயிற் பிள்ளைகள் காக்கையை விட்டுப் பறந்தோடிப் போதலையும் தோப்புகளில் இன்றும் பார்க்கலாம். அரசன் எடுத்துக் காட்டிய இவ்வுவமையின் வாயிலாக, மேனகைக்குப் பிள்ளையாகப் பிறந்தும் சகுந்தலை அவளால் வளர்க்கப்படாமல் காசிபரால் வளர்க்கப்பட்டு வளர்ந்த குறிப்பும் ஈண்டு நாடக ஆசிரியர் உய்த்துணர வைத்தல் காண்க என்கிறார். நாடக நூற் குறிப்புகளிலேயே இவ்வாறு பல பல ஆய்வுத் திறங்களைக் காட்டிக் காட்டிச் செல்கிறார். கோகிலாம்பாள் கடிதங்கள் அடிகளார் எழுதிய புனை கதை நூல். கடித வழியாகக் கதை சொல்லும் உத்தியில் வெளிவந்தது, அதன் முகப்பிலே புனை கதை அமைப்பு, பயன்பாடு எத்தகையவாக இருத்தல் வேண்டும் என்பதை ஆராய்ந்து எழுதுகிறார். உலக வழக்குக்கு மாறுபடாமை உற்றவாறே எடுத்துரைத்தல் விழுமியதாகத் தொடுத்தல் இவை புனைவாளன் கடமை எனப் புகல்கின்றார். உலக இயற்கையிலும் மக்கள் இயற்கையிலும் ஒரு சிறிதும் காணலாகாதவைகளைப் படைக்க, அவற்றை ஆய்ந்து பாராமல் அவ்வாறே எடுத்து மொழிந்தவை பெரியதோர் அருவருப் பானவை என்கிறார். ஒரு குரங்கு கடலைத் தாண்டிற்று என்றல், அஃது ஒரு மலையைப் பெயர்த்துக் கொணர்ந்தது என்றல் ஒருவன் பத்துத் தலையும் இருபது கைகளை உடையவனாய் இருந்தான் என்றல், பொருந்தாப் புனைவு ஒருத்தியை வேறொருவன் சிறையாக எடுத்துச் சென்றக் கால் அவள் இருந்தநிலத்தைப் பெயர்த்தெடுத்துச் சென்றான் என்றல், ஒருவன் தன் கையில் இருந்த வட்டத்தைச் சுழற்றி யெறிந்து பகலவனை மறைத்தான் என்றல், இன்னவை மக்கள் இயற்கையில் எங்கும் எவரும் காணாதன. இத்தகைய புனைவுகளை ஒரு கதையிலாவது ஒரு நாடகத்திலாவது செய்வது நல்லிசைப் புலமை ஆகாது என்கிறார். புதுக் கதைகளும் நாடகங்களும் ஆக்குதலின் நோக்கம், இன்பச் சுவையினையும் அதனோடு அறிவு விளக்கத்தினையும் தந்து, அவ்வகையால் மனமாசு நீக்கி மக்கள் ஒழுக்க நெறியைத் தூய்மையாக்குவதே என்று திட்டப்படுத்துகிறார். கடுத் தின்னாதானைக் கட்டிபூசித் தின்னச் செய்தல் போலவும், நீர் வேட்கையினைக் கானல் நீர் காட்டி நன்னீர் குடிப்பித்தல் போலவும், நூலியற்றலின் நோக்கத்தைச் சிலப்பதிகாரம் கூறுதல் போலவும் புனைவு செய்தல் வேண்டும் என்று மேற்கோள் காட்டுகிறார். அந்நெறி திகழவே நூலை நடத்திச் செல்கின்றார். இனிச் சிறுவர்க்கான செந்தமிழ் என்னும் நூலிலே, மலையைப் பற்றி எழுதும் அடிகளார், மலை என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமையினை யுடையது, மல் என்றால் வலிமை. மலைகள் எல்லாம் பெரும்பாலும் வலிவான கருங்கல்லால் ஆக்கப்பட்டிருக் கின்றன. மிகவும் உயரமாக இருக்கும் மலையை ஓங்கல், பிறங்கல், பொருப்பு, வெற்பு என்றும், ஓரிடத்தில் குறுக்கே வளர்ந்து நீண்டு கிடக்கும் மலையை விலங்கல் என்றும்; ஒன்றன்மேல் ஒன்று அடுக்கடுக்காய் வளர்ந்திருக்கும் மலையை அடுக்கல் என்றும்; மூங்கில் காடுகள் உள்ள மலையை வரை என்றும், காடுகள் அடர்ந்த மலையை இறும்பு என்றும்; சிறிய மலையைக் குன்று, குவடு, குறும் பொறை, என்றும் மண்மிகுந்த மலையைப் பொற்றை, பொச்சை என்றும், மலைப்பக்கத்தைச் சாரல் என்றும் பழைய தமிழ் நூல்கள் கூறா நிற்கும் என்கிறார். இளைஞர் உள்ளத்தே மொழி வளத்தை எளிதில் ஆக்கிவிட இயலும் என்பதன் சான்று இது. இரண்டு பண்டப் பைகள் என்பதொரு சிறுகதையைச் சிறுவர்க்கு வரைகின்றார் அடிகளார். ஒவ்வோர் ஆடவனும் தனக்கு முன்னே ஒரு பையும் தனக்குப் பின்னே ஒரு பையும் தொங்க விட்டுக் கொண்டு செல்கின்றான்; அவ்விரண்டு பைகளிலும் குற்றங்களாகிய பண்டங்களே நிறைந் திருக்கின்றன. ஆகவே, ஒவ்வொருவரும் பிறருடைய குற்றங்களை நோக்கும் கட்பார்வையுடையராயும், தம்முடைய குற்றங்களைப் பாராக் கண்ணில் குருடராகவும் இருக்கின்றனர் என்கிறார். பெரிய அறிவுரையை, எளிய காட்சிக் கதையால்விளக்கி விடுகிறார் அடிகளார். அடிகளார் இயற்றிய நூல்கள் என்னும் இப்பகுதியிலே ஒரு நாடக நூலையும், கதை நூலையும், சிறுவர் நூலையும் எடுத்துக் கொண்டு எழுதுவானேன் என்னும் வினா எழும்பலாம். சுவை மிக்கதாகவும் எளிமையானதாகவும் எழுத வேண்டிய நூல்களிலேயும் ஆராய்ச்சித் திறம் வெளிப்படச் செய்யும் அடிகளார், ஆராய்ச்சி நூல்களில் எவ்வாறு ஆழ்ந்து சென்று மூழ்கி முத்தெடுப்பார் என்பதை அறிந்து கொள்வ தற்காகவே இங்கு இப்பகுதி எழுதப் பட்டதாம். அடிகளார் நூல்களை இலக்கியம்,சமயம், அறிவியல் என முப்பாலுள் ஒரு வகையாக அடைவு செய்து விடலாம். அவற்றை ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொள்ளின் அளவுப் பெருக்கமாம் என்பதால், வகைக்கு ஒரு நூலாக எடுத்துக் கொள்ளுதல் சாலும் அவ்வகையில் இலக்கிய ஆரய்ச்சி வகையில் பட்டினப் பாலை ஆராய்ச்சியைக் காண்போம். 6. இலக்கிய ஆராய்ச்சித் திறன் - பட்டினப்பாலை ஆராய்ச்சி 1906 ஆம் ஆண்டில் கலைநூற் புலமை மாணவர்க்குப் பாடமாக வைக்கப்பட்ட நூல் பட்டினப் பாலை. அது பத்துப் பாட்டுள் ஒன்பதாம் பாட்டு. பத்துப் பாட்டுக்கும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை உண்டு. அவர், செய்யுள் இயற்றிய ஆசிரியர் கொண்ட முறைக்கு மாறாகச் செய்யுளில் உள்ள சொற்களையும் சொற்றொடர்களையும் தமக்குத் தோன்றியவா ரெல்லாம் முன் பின்னாக மாற்றி உரை கூறியிருந்தார். நச்சினார்க் கினியர் உரையை முதற்கண் விளக்கி, அதன்பின் ஆசிரியர் கொண்ட பொருள் முறையே வைத்து அடிகள் மாணவர்க்குப் புத்துரை கூறினார். ஆங்கில நூல் உணர்ச்சியால் பகுத்தாராயும் அறிவு ஆற்றல் வாய்ந்த அம்மாணவர்கள், நச்சினார்க்கினியர் உரை செய்யுளுக்கு இசையவில்லை என்றும், அடிகள் புத்துரையே செய்யுளுக்கு மிக இசைந்து ஆக்கியோன் கருத்தை விளக்குவதாய் அமைந்தமையுடன் பயிலுதற்கு எளிதாய் இருத்தலையும் கூறினர். பதிப்புச் செலவைத் தாமே ஏற்றுக் கொண்டு பதிப்பிடவும் செய்தனர். அதற்கு முன்னர் 1903 ஆம் ஆண்டில் கலைநூற் புலமை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு உரை அச்சீடும் பட்டினப்பாலைக்கு முன்னோடியாம். ஆராய்ச்சி உரை : தாம் எழுதிய அவ்வாராய்ச்சியுரைகளைப் போன்றது ஏதும் அதற்குமுன் தமிழில் எவராலும் எக்காலத்தும் எழுதப்பட்டதில்லை. தமிழின் அருமையை உணர்தற்கு வழி அறியாமையால் தமிழைப் புறம் பழித்து வந்த மாணவர், எமது ஆராய்ச்சியுரையினைச் சிறிது பயின்ற அளவானே அதன்கண் அவா மிகுதியும் கொண்டு, அதனை விரும்பிக் கற்கலாயினர். தமிழ்ப் புலவர்களிற் பலரும் அவ்வாராய்ச்சியுரையினைப் பார்த்து வியந்து மகிழ்ந்து அதனைச் சிறந்தெடுத்துப பாராட்டி எமக்குத் திருமுகங்களும் எழுதி விடுத்தனர் என்கிறார்அடிகள். அதே ஆண்டில் நிகழ்ந்த மதுரைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் அடிகளார் இப்புத்துரை ஆய்வை நிகழ்த்தினார். அவ்வவையில் இருந்த தலைவர் பாண்டித் துரையாரும், பெரும்பேராசிரியர் உ.வே. சாமிநாதையர், இலக்கணக் கடல் அரசஞ் சண்முகனார் முதலிய புலவர்களும் அவ்வாராய்ச்சி யுரையினைப் புகழ்ந்து பாராட்டிப் பேசினர். இரண்டாம் பதிப்பின் முகவுரையிலே யாம் எழுதுவன பலர்க்கும் உதவியாய் நின்று மேன்மேல் உண்மை நுண்பொருள் ஆராய்தற்கு வழிதிறந்து காட்டிப் பயன்டுதல் பற்றியும், அவற்றால் நம் செந்தமிழ் மொழியின் அருமை பெருமைகளைத் தமிழ் வழங்கும் நாடெங்கும் பரவுதல்பற்றியும் யாம் பெரிதும் உளம் மகிழ்ந்து எல்லாம் வல்ல இறைவற்கு நன்றி செலுத்துகின்றேம் என்று அடிகளார் மகிழ்கின்றார். இப்பட்டினப்பாலை ஆராய்ச்சியுரையைப் பாட்டின் இயல்பு, பட்டினப்பாலைச் செய்யுள், பொருட்பாகுபாடு, பாலை, வாகை, பாட்டின் வரலாறு, ஆக்கியோன் வரலாறு, பாட்டுடைத் தலைவன், பாட்டின் நலம் வியத்தல், இப்பாட்டின்கண் தோன்றிய பழைய நாள் வழக்க ஒழுக்க வரலாற்றுக் குறிப்புகள், பாவும் பாட்டின் நடையும், விளக்க உரைக் குறிப்புகள், அருஞ் சொற்பொருள் அகர வரிசை என்னும் பதின்மூன்று பாகுபாடாக வகுத்துக் கொண்டு வரைந்துள்ளார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சி யுரையையும் பதின்மூன்று வகைப் பாகுபாட்டிலேயே எழுதினார் எனினும், அப்பாட்டுக்குத் தக்கச்சில வேறுபாடுகளும் உண்டு என்க. ஆயினும் இவ்வீருரையும் ஒரு நெறிப்படச் செல்லுதல் மேலோட்டமாக எவர்க்கும் புலப்படும். பாட்டின் இயல்பு : ஒரு நிலையின்றி ஓடும் அறிவை ஒழுங்குபடுத்துதற்காக அவ்வறிவு பற்றிச் செல்லும் உலகியற் பொருள்களில் அழகு மிக்கவற்றை விரித்துக் கூறி, விரியும்அறிவைச் சுருக்கி அகமுகப் படுத்தி உணர்வெழச் செய்வது, நல்லிசைப் புலவர் தம் பாட்டு என்று பாட்டின் இயல்புரைக்கும் அடிகள், அவ்வியலில் பட்டினப்பாலை இயலும் பான்மையை எடுத்துரைக்கிறார். ஆசிரியர் உருத்திரங்கண்ணனார், புறப்பொருளில் அளவு கடந்து செல்லும்நம்மறிவை மடக்கி நிறுத்துவதற்காக முதல் 218 அடிகள் வரை உண்மை மாறாது காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். பாகன் வயப்படாது கடிவாளத்தை அறுத்துக் கொண்டோடும் குதிரையை அப்பொழுதே பிடித்து நிறுத்தி இடர்ப்படாமல், அதன் போக்கிலே ஓடவிட்டு அயர்வுற்ற நிலையில் எளிதாகப் பாகன் அதனை வயப்படுத்துவது போலப் புறப் பொருளில் விரியச் சென்ற அறிவை அகமுகப்படுத்தி ஒடுக்கி அகப்பொருளில், வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய, வாரேன் வாழிய நெஞ்சே என இரண்டடியான் மாத்திரம் மிகச் சுருக்கிக் கூறிய ஆசிரியர் நுட்பத்தைப் பாராட்டுகிறார். 301 அடியுடைய இப்பாட்டில் 297 அடிகளில் புறப்பொருளும் 4 அடிகளில் மட்டுமே அகப்பொருட் சுருக்கமும் உள்ளமையை நயக்கிறார் (16, 17) பால் கறந்த மாத்திரையே உண்பார்க்குச் சுவை பயக்கு மாயினும் அதனை வற்றக் காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப் பின்னுண்பார்க்குக் கழிபெருஞ்சுவை தருதல் போலவும், முற்றின கருப்பங்கழியை நறுக்கிப் பிழிந்த மாத்திரையே அதன் சாற்றைப் பருகுவார்க்கு அஃது இனிமை விளைக்கு மாயினும், மேலும் அதனைப் பாகு திரளக் காய்ச்சிச் சருக்கரைக் கட்டியாக எடுத்துண்பார்க்கு ஆற்றவும் பேரினிமை பயத்தல் போலவும், உரையும் நலம் பயப்பதொன்றே யாயினும், அதனைக் காட்டினுஞ் செய்யுளாற் பெறப்படும் பயன் சாலவும் பெரிதாம் என்கிறார். மேலும், பாட்டெல்லாம் அறிவு நிலையைப் பற்றிக் கொண்டு போய் உயிர்களின் உணர்வு நிலையை எழுப்பி விடுவதாகும். உரையெல்லாம் அறிவு நிலையைப் பற்றியே நிகழுமல்லது அதன்மேற் சென்று உணர்வு நிலையைத் தொடமாட்டாதாகும். பெரியதோர் மலை முழைஞ்சினுட் பொன்னும் மணியும் சிதறிக் கிடத்தல் வியப்பன்று; ஒரு சிறு கற்பிள விலே அரிய பெரிய முழு மணிகள் அடுக்கடுக்காய்க் கிடந்து எடுக்குந்தோறும் குறைபடா திருத்தலே பெரிதும் வியக்கற்பாலதாம். சிறிய வான்மீன்கள் அகன்ற அவ்வானத்திற் காணப்படுதல் ஒரு வியப்பன்று; அகன்றவானும் வேறு மாடமாளிகை கூட கோபுரங்களும் ஒரு சிறிய கண்ணாடியினுட் காணப்படுதலே மிகவும் வியக்கற்பால தாம். எனப் பெரிய உரைக்கும், சிறிய பாவுக்கும் உள்ள இயல்பை விளக்குகிறார். பாடற் சுவையையும் சுருக்க வடிவையும் அருமையாக விளக்கும் அடிகள் அவ்வகையாலேயே இப்பாடலை ஆய்ந்து வரைகின்றார். பொருட் பாகுபாடு : பொருட் பாகுபாட்டினைக் காவிரியாற்றின் சிறப்பு, சோழ நாட்டு மருத நில வளம், பாக்கம், படப்பை முதலியன. சோறிடும் அட்டிற் சாலைகள், பள்ளிகள், காளி கோட்டம், குப்பம், புறச்சேரி, காவிரித் துறை, கடையாமம், சங்கங்கொள்வோர், பண்டக சாலை, அங்காடித் தெரு, கொடிச் சிறப்பு, பொருள் வளம், வேளாளர் குடியிருப்பு, காவிரிப்பூம் பட்டினச் சிறப்பு, கருக் கொண்ட பொருள், கரிகாலன், இளந்தை வெற்றி, மருத நிலம் பாழாதல், அம்பலங்கள் பாழ்படல், மன்றம் பாழ்படல், கரிகாலன் வெற்றித் திரு. கருப்பொருள் முடிபு எனப் பாகுபாடு செய்து வினைமுடிபு காட்டுகிறார். இம்முறையே முறையாய்ப் பொருட்பாகு பாட்டுக்குத் திரண்ட பொருள் தருவதுடன் பின்னே விளக்க உரைக் குறிப்புகளும் வரைகின்றார். அகப்பொரும் பாலையும், புறப்பொருள் வாகையும் ஒத்தியலும் வகையை அகத்தே நிகழும் அன்பை வெற்றி காணும் பாலையும் புறத்தே நிகழும் பகைவர் மறத்தை வெற்றி காணும் வாகையும் தம்முள் ஒப்புமையுடையவாதல் தெற்றெனப் புலப்படும் என்கிறார் (48) பாட்டின் வரலாறு : பாட்டின் வரலாற்றை உய்த்துணர்ந்து காட்டல் இழுக்காது எனக் கூறி, அப்பாட்டின் பொருளைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் அகவாழ்வொடு சார்த்தி அருமையாய் உரைக்கிறார். உருத்திரங்கண்ணனார் தம் ஆருயிர்க் காதலியொடு மருவியிருந்து இல்லறம் நடத்துங்கால் அவர்தம் பொருள் வளஞ்சுருங்க, வறுமை வந்து நலிய, அதனைக் களைய விரும்பிக் கரிகாற் சோழனிடத்துச் செல்லக் கருத, பிரிவுக்குப் பொருந் தாராய் மனைவியார் வருந்த, அவர் ஆற்றாமை தணித்துப் பின்னொரு கால்அவ்வேந்தனைக் கண்டு பாடிப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசிலாகப் பெற்றார்என்று வரைகின்றார். ஆக்கியோன் வரலாறு : இப்பகுதியில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் அந்தணர் என்பதையும் கடியலூர் என்னும் ஊரிற் பிறந்தவர் என்பதையும் விளக்குகிறார். இவர்தம் சமயம் குறித்து ஆய்வு நிகழ்த்தி இருபாற் கருத்துகளை உரைக்கிறார். பெரும்பாணாற்றுப் படையில் இப்புலவர் பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் என்றமையால் வைணவ சமயத்தார் எனின், தொண்டைமான் வழிபடு கடவுள் திருமால் ஆகலின் அதனை வழிபட்டுச் செல்ல அப்பாணரை நோக்கிக் கூறினாரன்றித் தாம் வழிபடு தெய்வமாகக் குறித்தார் எனல் ஆகாது என்கிறார். அவ்வாறு வைணவர் எனின், கடம்பமர் நெடுவேள் என முருகக் கடவுளைக் கூறியது கொண்டு இவர் சைவ சமயத்திற்கரியவர் என்பார்க்கு மறுத்துரைக்க லாகாமையின் இவர் சமயம் இதுவென்பது துணியப்படாது போலும் என்க என்கிறார். மேலும் இவர் பெயரால், உருத்திரனுக்குக் கண் போன்ற இளைய பிள்ளையாரான முருகக் கடவுளைக் குறிப்பதால் அப்பெயரைச் சைவ சமயம் தழுவினாரே வழங்குதல் மரபாதலால் இவர் சைவ சமயத்திற்குரியராம் போலும் எனக் கூறல் இழுக்காது என்கிறார். பாட்டின் நலம் : பாட்டின் நலம் வியத்தல் பகுதியில், உவமையின் சிறப்பை இனிதின் ஆய்கின்றார். பொருள்களைக் கிடந்தவாறே சொல்லிக் கொண்டு போம் நெறி தன்மை நவிற்சி எனவும், அங்ஙனம் சொல்லிப் போதற்கு இடை இடையே உணர்வு சலியாமைப் பொருட்டுச் சுவை வேறுபடுத்தி அப்பொருளொடு இயைந்த பிற பொருட் டோற்றத்தை எழுப்பு நெறி உவமை உருவகம் எனவும், பெயர் பெறா நிற்கும். இவற்றின் வேறாக ஆயிரம் புனைந்துரைகள் கூறினாராயினும் அவையெல்லாம் இவ்வுவமை உருவகம் என்னும் இரண்டிலே அடங்கும் என்று கூறித் தொல்காப்பி யனார் உவமவியல் ஒன்றே வகுத்துக் காட்டிய உயர்வை விரிக்கிறார். உருத்திரங்கண்ணனார், இப்பட்டினப்பாலையில் இருபது உவமைகள் காட்டியுள்ள மையை வரம்பிட்டுரைக்கும் இவர் அவ்வுவமை யமைதியையும் விளக்குகிறார். உலகியற் பொருள்களில் அழகாற் சிறந்து மக்கள் மனவுணர்வை எளிதிலே கவர்தற் பயத்தவான அரிய பெரிய பொருள்களைக் கூறும் வழியெல்லாம் தன்மை நவிற்சியும், அவற்றிடையே இயற்கையழகுப் பொருளின் வேறாவன சில வந்தால், அவற்றை அழகு பெறக் கூறல் வேண்டி உவமையும் வைத்துரைக்கும் நுட்பம் பாராட்டற்பாலது என்கிறார். ஆசிரியர், உலகியற் பொருள்களைக் கிடந்தவாறே வைத்துக் கூறுவதையும், உலக இயற்கைப் பொருள் தோற்றங் களை இடையறாது திரிந்து கண்டு வியந்து கழிபெருமகிழ்ச்சி அடைந்தவர் என்பதையும், வானநூல் வல்லுநராகத் திகழ்ந்தார் என்பதையும் விரித்துரைக்கிறார். வரலாற்றுக் குறிப்புகள் : இப் பகுதியில் பௌத்த சமண சமய வளர்ச்சி, பரவிய வகை என்பவற்றை அசோகர்கல்வெட்டு பாகியாள் வழிநடைக் குறிப்பு என்பவற்றாலும் சைன சூத்திரம், மணி மேகலை என்பவற்றாலும் உறுதிப்படுத்தி உருத்திரனார் உரைப் பொருத்தத்தை ஏற்கிறார். கடல் வாணிகம், பண்டையரசர் செங்கோன்மை, கந்தழி என்பவற்றை ஆய்ந்துரைக்கிறார். கரிகால் வேந்தன் போர்த்திறம் அறச் செயல் என்பவற்றையும் தொகுத்துரைக்கிறார். பாவும் பாட்டின் நடையும்: இப்பகுதியில் நால்வகைப் பாவும் அகவல், வெண்பா என இரண்டனுள் அடங்குதலைத் தொல்காப்பிய வழியில் எடுத்துரைக்கிறார். அகவலும் வஞ்சியும் கலந்த பட்டினப் பாலை நடையை, அகவலோசையும், இன்பங் குறையாமைப் பொருட்டுத் தூங்கலோசையும் கொண்டிருத்தலையும், அகவலடிகள் 138 என்றும் வஞ்சியடிகள் 163 என்றும் அவற்றின் இயைபு பாலும் தேனும் கலந்தாற்போன்றது என்றும், இஃது உருத்திரங்கண்ணனார் இசையறிவு மாட்சி என்றும் இயம்புகிறார். வஞ்சி அடிகள், அகவலடிகளை ஆங்காங்கு ஒரு சேரக் கூறுமிடத்தும் அவை ஓரோசையாய்ச் செல்ல வொட்டாமல் எதுகை மோனை முதலிய எழுத்தமைதிகளானுஞ் சிறிது சிறிது ஓசை வேறுபடுத்திப் போகின்றார் என்பதை நன்கனம் எடுத்துக் காட்டி விளக்குகிறார். தம்மாற் பாடப்படும் பொருள் வழியே தம் அறிவை வைத்து மொழிந்து போகுங்கால் இடர்ப்படாது தோன்றும் எதுகை மோனைகளையே அமைத்திடுகின்றார். பொருளுரைக் கேற்ற எதுகை மோனை எளிதிற்றோன்றா விடத்து எதுகை போல ஓசை பொருந்துஞ் சொற்களைப் பதித்திடுகின்றார் என்று எடுத்துக் காட்டுகின்றார். பொருளுக்கு இசையச் சொற்பொருத்தும் முறை இவ்வாசிரியரோடு ஒருகாலத்தினரும் இவர்க்கு முன்னோரு மான பண்டைச் செந்தமிழ்த் தண்டா நல்லிசைப் புலவர் தமக்கெல்லாம் பொதுவிலக்கணமாம் என்று பாராட்டும் இவர், பிற்றை ஞான்றைத் தமிழ்ப் போலிப் புலவரோ பொருட்சிறப்புச் சிறிதுமின்றி வெறுஞ் சொல்லாரவார அமைப்பிலேயே தம் அறிவைக் கழித்துத் தெளி தமிழுக்குந் தமக்கும் இழுக்குத் தேடுவாராயினர் என்று இரங்குகின்றார். இப்பாட்டின் நடையை, இனிய தெளிதமிழ்ச் சுவையூறிய முழுமுழுச் சொற்களால் இப்பாட்டு முற்றும் அமைந் திருக்கிறது. அவற்றின்கட் டொடர்புபட்டு எழூஉம் இன்னோசை குழல் யாழ் முதலிய கருவிகளினின்று போதரும் ஒலிபோல் மிகவும் தித்தியா நின்றது என்றும், நீர்மடையிலே தெள்ளத் தெளிந்த அருவிநீர்திரண்டு ஒழுகுதல் போல் இச் செய்யுளோசையும் மெல்லென்று மொழு மொழுவெனச் செல்கின்றது என்றும், மாம்பழச் சாறு பெய்த குடுவையின் எப்பக்கத்தே பொத்திட்டு நாவை நீட்டினும் அதன் வழியே யொழுகும் அச்சாறு தித்தித்தல் போல, இவ்வரிய செய்யுள் எவ்விடத்தே அறிவு தோயினும் ஆண்டு இனிமையே விளையா நின்றது என்றும், பயன்படாது நிற்கும் சொல் ஒன்று தானும் இதன்கண் காணப்படுவதில்லை. விலை வரம்பறியாப் பட்டாடையின்கண் ஒவ்வோர் இழையும் பிணைந்து நின்று அவ்வாடையினை ஆக்குதல்போல, இதன்கண் ஒவ்வொரு சொல்லும் ஒன்றை ஒன்று கௌவிக் கொண்டு இச்செய்யுளை ஆக்குகின்றது என்றும் இப்பாட்டின் நயங்களைப் பாராட்டுகிறார். அடிகளார் ஒரு நூலை எப்படிச் சொல் சொல்லாக எண்ணிப் படித்தார் என்பதை விளக்குவதுபோல், இப்பாட்டின்கண் சிறிதேறக்குறைய ஆயிரத்து முந்நூற்று அறுபத்தொன்பது சொற்கள் இருக்கின்றன. இவற்றுட் பதினொரு சொற்கள் வடசொற்களாம். அவை மகம், அங்கி, ஆவுதி, பூதம், மது, பலி, பதாகை, அமரர், கங்கை, புண்ணியம், சமம் என்பவனாம். ஞமலி என்னும் ஒரு சொல் பூழி நாட்டிற்குரிய திசைக் சொல்லாகும். ஆகவே இப்பாட்டில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு பிற நாட்டுச் சொற்கள் கலந்தன என்பது அறியற் பாற்று. இதனால் இவ்வாசிரியர் காலத்தில் தமிழ் மிகவும் தூயதாக வழங்கப்பட்டு வந்த தென்பது புலப்படும் என்க என்கிறார். எடுத்துக் கொண்ட பாட்டை ஆர்வத்தால் பாராட்டு கிறார். என்று எண்ணுவார். உண்டாயின் இம்முல்லைப் பாட்டை ஏனை ஒன்பது பாட்டுகளோடும் ஒப்ப வைத்து நோக்குங்கால் இஃது ஏனையவற்றைப் போல் மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினதாகக் காணப்படவில்லை என்றும், இழுமென் ஓசையுடன் தித்திப்பாக எழுதப்பட்ட ஓரடியை யாவது இம்முல்லைப் பாட்டில் காண்டல் அரிது, இஃது ஏனையவற்றை நோக்கப் பெரும்பாலும் எங்கும் வல்லென்ற ஓசையுடையதாய் இருக்கின்றது என்றும், ஏனைப் பாட்டு களிற் போலச் சொல்லின் கொழுமை இதன்கண் மிக முதிர்ந்து தோன்றாமையின் இது தன்னைக் கற்பார்க்கு ஏனைய போல் மிக்க சொல்லின்பம் பயவாது என்று கருதுகின்றாம் என்றும் எழுதுகின்றார் (முல்லைப் பாட்டு 57) அடிகளார் ஆய்வுத் திறத்தை வெளிப்படுத்தத் தக்க மற்றொரு குறிப்பும் இதன்கண் உண்மை அறியத் தக்கதாம். முல்லைப் பாட்டின் நடையினால் அதனை இயற்றிய ஆசிரியர்நப்பூதனார் துற வொழுக்கமும் வல்லென்ற இயல்பும், அறிவாழமும் மிக்க மன அமைதியும் உடையர்என்பது குறிப்பாக அறியப்படும் என்றும், காட்டிடத்தையும் மழைக் காலத்தையும் தலைவி தனிமையையும் பொருளாகக் கொண்டு இச் செய்யுள் யாத்தமையானும் துறவோர் கருவிகளை உவமை எடுத்துக் காட்டுதலானும் அவையே இவர் தன்மையாம் என்பது தெளியப்படும்என்றும் நுண்ணிதின் ஆய்ந்து கூறுவது அஃதாம். விளக்க உரைக் குறிப்புகள் : இப்பகுதியில் மிக இன்றியமையாத மாட்டு என்பதன் இலக்கணத்தை முற்பட விரிவாக ஆய்ந்து தெளிவாக வரைதலை மேற்கொள்கிறார் அடிகளார். ஆசிரியர் நச்சினார்க்கினியர் அம் மாட்டினைக் கொண்டே நூலாசிரியர் உளப்போக்கிற்கு மாறாக உரை கண்டார் என்பதை மேலே விரிவாக எடுத்துக் காட்டி விளக்குதலால், இவ்விளக்கம் இன்றியமையாதது ஆயிற்றாம். மாட்டு : ஒரு பொருள் ஓரிடத்துச் சென்று ஒருவாற்றான் முடிந்தும் முடியாமலும் நிற்பப், பிறிதொரு பொருள் அவ்விடத்தி னின்றும் தோன்றி நடந்து போய்ப் பிறிதோரிடத்து முடிந்தும் முடியாமலும் நிற்ப, இங்ஙனமே இடையில் வருவன எல்லாம் அமைய, கடைசிப் படியாக அப்பாட்டின் பொருள் முற்றுப் பெறுவதாகும். இவ்வாறு இடை இடையே முடிந்தும் முடியாமலும் நிற்கும் பொருள்கள், கடைசியாக அப்பாட்டின்கட் கருக்கொண்ட முதற்பொருளைச் சார்ந்து முடியுமாகலின் சார்பு பொருள்கள் என்று பெயர் பெறுவனவாகும். இச்சார்பு பொருள்களோடு கூடிச் சிறந்து விளங்கும் பொருள் முதற் பொருள் எனப்படும். முடியணிவேந்தன் ஒருவன் அருமணி குயிற்றிய செங்கோல் கைப்பற்றி அரியணை, வீற்றிருப்ப, அவனைச் சார்ந்து நின்று, அவன்தன் அரசியற் சுற்றமெல்லாம் விளங்கி னாற்போல ஒரு பாட்டின் கட் கருக்கொண்ட முதற்பொருள் அதற்கு ஓருயிராய்ச் சிறந்து நிற்ப ஏனைச் சார்பு பொருள் களெல்லாம் அதனைச் சூழ்ந்து கொண்டு அதனைச் சிறப்பித்து அவ்வாற்றால் தாமும் விளங்கா நிற்கும் என விளக்கும் அடிகளார், நச்சினார்க்கினியர் அதனைக் கொண்டுணர்ந்த வகையை வெளிப்படுத்துகிறார். மாட்டும் நச்சினார்க்கினியரும் : மாட்டு என்னும் பொருள்கோள்முறை இதுவேயாதல் அறிய மாட்டாத நச்சினார்க்கினியர், இப்பத்துப்பாட்டு கட்கும் ஒருமுறையுமின்றி ஓரிடத்து நின்ற ஒரு சொல்லையும், பிறிதோரிடத்து நின்ற பிறிதொரு சொல்லையும் எடுத்து இணைத்து உரை உரைக்கின்றார். அங்ஙன முறைகூறுதல் நூலாசிரியன் கருத்துக்கு முற்றும் முரணாதலானும், இவர்க்கு முன்னிருந்த நக்கீரனாரை உள்ளிட்ட தொல்லாசிரியர் எவரும் இவ்வாறு உரை உரைப்பக் காணாமையாலும் நச்சினார்க் கினியர் உரைமுறை கொள்ளற்பால தன்றென மறுக்க என வரைகின்றார். விளக்க உரைக் குறிப்புப் பகுதியிலே இம்மாட்டு இலக்கண விளக்கம் முதல் 18 இடங்களில் அவரை அடிகளார் மறுத்து எழுதுகிறார். அவற்றுள் ஓரிரு இடங்களைக் கண்ட அளவானே, அடிகளார் கொண்ட வரைமுறை இயல்பாக நூலாசிரியன் கருத்தொடும் இணைந்து செல்லுதல் விளக்கமாகும். அகனகர் வியன்முற்றத்துச் சுடர்நுதன் மடநோக்கி னேரிழை மகளி ருணங்குணாக் கவருங் கோழி யெறிந்த கொடுங்காற் கனங் குழை பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு முக்காற் சிறுதேர் முன்வழி விலங்கும் விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக் கொழும் பல்குடிச் செழும்பாக்கம் என்னும் பகுதி இப்பாடலின் 20 முதல் 27 ஆம் அடிகளாகும். இவ்வடிகளின் பொருளாக, பாக்கங்களிலே அகன்ற வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவ்வீட்டு முற்றங்களிலே உலர வைத்திருக்கும் நெல்லுக்குக் காவலாய் இருக்கும் சிறுபெண்கள் ஒளி விளங்கு நெற்றியும் கள்ளம். அறியாத பார்வையும் திருந்திய அணிகலன்களும் உடையர். இவர்கள் அந்நெல்லைத் தின்ன வரும் கோழிகளை வெருட்டும் பொருட்டு எறிந்த சுறவுக்குழைகள் அம்முற்றத்திற் சிதறிக் கிடந்து, அங்கே சிறுபையன்கள் மூன்று உருள் உடைய சிறிய தேரைக் குதிரையின்றி இழுத்துக் கொண்டு வருகையில், அதன் உருள்களை இடறி அச்சிறு தேர் போகாமல் வழிமுன்பை விலக்குகின்றன. தாம் மனங் கலங்குவதற்குக் காரணமான பகை தமக்குச் சிறிது மில்லாமையால் மனக் கொழுமை யினையுடைய பல குடிகள் நிறையப் பெற்றிருக்கின்றன அப்பாக்கங்கள் எல்லாம். என்று அடிகளார் வரைகின்றார் (33) இவற்றுக்கும் வேண்டும் உரைவிளக்கக் குறிப்புகளையும் வழங்குகின்றார் (81-82) சுடர் நுதல் மடம் நோக்கின் (21) நேரிழை மகளிர் உணங்கு உணா கவரும் (22) கோழி எறிந்த கொடு கால் கனம் குழை (23) பொன்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் (24) முக்கால் சிறுதேர்முன் வழி விலக்கும் (25) அகல் நகர்வியன் முற்றத்து (20) குறும்பல்லூர் (28) என்று கொண்டு இஃது இருஞ்செருவின் (72) விலங்குபகையல்லது கலங்குபகை யறியாப் பாக்கமென மேலே கூட்டிற்று என்று உரைவரைகின்றார் இனியர். பாட்டுச் சென்ற வாறே எளிதிலே பொருள கொள்ளக் கிடக்கும் இவ்வடிகட்கு இப்பொருள் காணமாட்டாத நச்சினார்க்கினியர் இவற்றை ஓரியைபுமின்றிக் கையினுங் கலத்தினும் மெய்யுறத்தீண்டிப், பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ திருஞ்செருவின் என்னும் எழுபது எழுபத்திரண்டு எழுத்து மூன்றாம் அடிகளோடு சேர்த்துப் பொருளுரைத்துப் பின்பவற்றைக் கொண்டு வந்து கொழும்பல்குடிச் செழும்பாக்கம் என்ப தனொடு கூட்டி முடித்து இடர்ப்படுகின்றார், இங்ஙனம் பொருளுரைத்தல் பாட்டின் வரன்முறை சிதைத்தலாமன்றிப் பிறிதென்னை? என்கிறார். இவ்வாறே 59 - 74 ஆம் அடிகளின் பொருள் முறையைக் கண்டு நச்சினார்க்கினியர் உரையை ஓரியைபுமின்றிக் கூட்டி முடித்து இடர்ப்படுகின்றார் என்றும், போலியுரை கூறினார் என்றும், பெரியதோர்இடர்விளைத்துப்பாட்டின் பொருணயஞ் சிதைத்தார், இவர்போல் இங்ஙனம் உரைக் குழப்பம் செய்வார் பிறரை வேறுயாண்டும் கண்டிலம் என்றும் வருந்தி யுரைக்கின்றார். 193 - 212 ஆம் பொருளியைபைக் காணும் அடிகள், அவ்வாறு இயைத்தது தீம்பாலுண விருப்ப அதனை உவர்த்தொதுக்கி அறிவு மயக்கும் கள்ளுண்பார் திறனோ டொப்பதாயிற்று எனத் துன்புறுகிறார். அடிகள் சால்பு : நச்சினார்க்கினியரை இவ்வுரைப் போக்கால் வருந்தியுரைக்கும் அடிகளின், செந்தண்மையுள்ளமும் புலப்படாமல் போகவில்லை. நச்சினார்க் கினியர் உரை கூறாவிடின் இப்பத்துப பாட்டுகளின் பொருள் விளங்குவது அரிதேயாதல் பற்றியும், இவர் தொல்காப்பியம், கலித்தொகை முதலிய பண்டைச் செந்தமிழ் நூல்கட்கு அரிய பெரிய தண்டமிழுரை வகுத்தது பற்றியும் இவரை நெஞ்சார வழுத்தி இவர்க்குத் தொண்டு பூண்டு ஒழுகும் கடப்பாடு மிகவுடையேமாயினம், இவர் வழுவிய இடங்களிலும் இவரைப் பின்பற்றி உலகை ஏமாற்றுதல் நடுவுநிலை யாகாதாகலின் இவர் தம் வழூஉக்களைக் களைந்து திருத்திய பின் இவரைச் செந்தமிழ் மாமுகில் வள்ளலாய்க் கொண்டு வழிபடுவோம் என்க என்று எழுதும் பகுதி இவர்தம் ஆய்வியல் அறநெஞ்சையும் செந்தண்மை சேர அந் தண்மையையும் ஒரு சேரக் காட்டுவதாம். பட்டினப்பாலையில் அமைந்துள்ள 27 பொருத்துவாய்களையும் (மாட்டுகளையும்) அருமையாக இணைத்து நூலாய்வை நிறைவு செய்கிறார். மேலாய்வுக்குப் பயன்படும் வகையிலும் இன்னவாறு நூலில் வரும்அருஞ் சொற்பொருள் அகரவரிசைகளையெல்லாம் ஒரு சேரத் தொகுப்பின் ஓர் அரிய அகர முதலி வாய்க்கும் வகையில், அகவ முதல் வைகல் ஈறாக அருஞ்சொற்களை அடைவு செய்து, சொற்பொருளும் விளக்கமும் வரைந்து வைத்து, இவ்வகரவரிசை கொண்டே நூற்பொருளைக் கற்பார் தாமே கண்டு கொள்ள வழி காட்டியுள்ளார். இலக்கிய ஆய்வாளர் செய்தக்க செயற் பாடுகளைச் செய்து காட்டிய ஆய்வுச் சான்று இப்பட்டினப் பாலை ஆராய்ச்சியுரை என்பதைச் சொல்லி அடுத்துச் சமய ஆராய்ச்சித்திறன் என்னும் பகுதியைக் காணலாம். 7. சமய ஆராய்ச்சித் திறன் மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் அடிகளார் ஆராய்ச்சி நூல்களில் மிக விரிவானது இந்நூல். இந்நூல் சமய ஆய்வா மணிவாசகர் வரலாற்று ஆய்வா, அவர்தம்கால ஆய்வா, தமிழ் இலக்கிய ஆய்வா, சமயச்சீர்திருத்த ஆய்வா, தமிழக வரலாற்றாய்வா எனின் எல்லாம்தகும் என்னுமாறு அமைந்தது. மணிவாசகர், சமய நால்வருள் ஒருவர் என்பது எவர்க்கும் ஒப்ப முடிந்த முடிவு ஆகலான், சமய ஆய்வு எனத் தலைப்புத் தரப்பட்ட தாம். ஞான சாகர முதற்பதுமத்தில் மாணிக்கவாசகர் கால நிருணயம் என்றொரு கட்டுரையை அடிகளார் எழுதினார் (1903) அதன்பின் அக்கட்டுரையை மறுத்து எழுதியவர்களின் கருத்து களை ஆராய்ந்து அவற்றை மறுத்து 1908 ஆம் ஆண்டில் மாணிக்கவாசகர் காலம் என்னும் பெயரில் ஞானசாகர நான்காம் பதுமத்தில் எழுதினார். அதன்பின் இருபது ஆண்டுகளாய்ப் பொதுவாகத் தமிழ்நூல்களின் கால அளவை பற்றியும், மாணிக்கவாசகர் கால வரையறைப் பற்றியும் அறிஞர்கள் பலராலும் எழுதி வெளியிடப்பட்ட கட்டுரைகளையும் நூல்களையும் ஆராய்ந் தார். தொல்காப்பியம் முதல் சிவஞானபோதம் இறுதியாக வந்த தென்னூல்வடநூல்களின் காலங்களையெல்லாம் வரையறை செய்து நிறுவி, அம்முகத்தால் மாணிக்கவாசகர் காலம் சைவ சமய சமயாசிரியர் மூவர் காலத்திற்கும் முற்பட்டது என்றும் அது கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்றும் கண்டார். அதனை விரித்தெழுதி நூலாக வெளியிட்டார். மாணிக்கவாகர் வரலாறும் காலமும் ஆங்கில முகவுரை, தமிழ் முகவுரை என்னும் இருபாற் பகுதிகளையும் தனியே 48 பக்க அளவில் கொண்டுள்ளது. (24+24) பொருளடக்கம் மிக விரிந்த வகையால் பொருள் அனைத்தையும் அடைவுறக் காணுமாறு 76 பக்கங்களில் இயல்கின்றது. மாணிக்கவாசகர் வரலாறும் ஆய்வும் 164 பக்கங்களைக் கொண்டுள்ளது. பிறப்பு முதல், சிவ வொளியில் மறைந்தமை வரை பதினெண் பகுப்புகளில் அப்பகுதி அமைந்துள்ளது. பெயர் மாணிக்கவாசகர் பிறப்பு என்னும் முதற்பகுதியில் இவர் தாய் தந்தையார் பெயர் புலப்படவில்லை என்கிறார். தந்தையார் பெயர் சம்பு பாதாசிரியர் என்றும் தாயார் பெயர் சிவஞான வதியார் என்றும் சிலர் வழங்குவதை மறுக்கின்றார். இப்பெயர்களை, நம்பியார் திருவிளையாடலோ, திருவாதவூரர் புராணமோ கூறவில்லை. இத்தகைய பெயர்கள் பழைய நாளில் இருந்த தமிழர்க்குள் வழங்கப்படவில்லை என இரண்டு காரணங்களைக் காட்டுகிறார். திருஞானசம்பந்தர் தந்தையார் பெயர் சிவபாதவிருதயர், தாயார் பெயர் பகவதியார் என்பதை உளங்கொண்ட பிற்காலத்தார் எவரோ இப்பெயர்களைப் புனைந்து கட்டிவிட்டனர் என்கிறார். மாணிக்கவாசகரின் பிள்ளைப் பெயர் இன்னதென்று புலனாகவில்லை என்றும் இவர், திருவாதவூரர் மாணிக்க வாசகர் என்னும் பெயர்கள் இயற்பெயர்கள் அல்ல என்கிறார். பரஞ்சோதியார் மணிவாசகர் காலம்பாண்டியன் அரி மர்த்தனன் என்று சொல்லியது சான்று அற்றது அப்பெயர் வடமொழிப் பெயராதலால் ஐயுறற் பாலது என்கிறார். இறைவன் அருள் பெற்றது வரையான வரலாறுகளை எடுத்துரைத்த அளவில் அருள் பெற்ற வரையுள்ள ஆய்வு என ஆய்கின்றார். திருப்பெருந்துறையை அடுத்த அளவில், அன்பின்மிக்கு அங்கே வைகுதல் கருதித் தம்மொடு வந்தாரிடம் ஆவணித் திங்களில் பரிகள் அடையும் என்று அரசற்கு அறிவிக்கக் கூறியதால் திரும்பினர் என நம்பி திருவிளையாடல் கூறுகிறது. திருவாதவூரர் புராணமோ, மணிவாசகர் மனமாற்றம் கண்டு உடன்வந்தார் தாமே திரும்பி வேந்தனிடம் உரைத்தனர் என்கிறது. உளவியல் : இவ்விரண்டனுள் புராண உரையே பொருத்தமானது என்கிறார் அடிகளார். திருப்பெருந்துறையை அணுகியவுடன் தமக்கு நேர்ந்த உள்ள உருக்கத்தைக் கண்டு சடுதியில் தம் பரிவாரங்களையும் பாண்டியன்பால் திருப்பிவிட்டனர் என்னும் நம்பியார் கூற்று ஆராய்ந்து செய்யாக் குற்றத்தை அடிகள்பால் ஏற்றுவதாய் முடிதலானும், எதனையும் தீரத்தெளிந்து செய்யும் அமைச்சியற்றிறத்தில் தலைநின்றார் அடிகள் என்பது இருபுராணங்களுக்கும் உடன்பாடாகலின், அவரது அத்தன்மைக்கு இழுக்காகாமல் அவர் தம் ஆசிரியனால் அடிமை கொள்ளப்பட்ட பின் தாம் மேற்கொண்டு வந்த வினையை மறந்திருக்க அப்பரிவாரங்கள் தாமாகவே அவரை அகன்று பாண்டியன் பாற் சென்றன என்று மற்றத் திருவாதவூரர் புராணங் கூறுதலானும் என்பது. தம் செயலற்றுச் சிவன் செயலாய் நின்று உலகியல் நிகழ்ச்சிகளை மறந்திருப்பாரைக் குற்றங் கூறுவார் யாண்டும் இலர். பேய் பிடியுண்டாரையும் வெறிபிடித்தாரையும் தம் கடமைகளின் வழீயினார் எனக் குறைகூறுதல் எவர்க்கும் உடன்பாடன்று என்று தீரத் தெளிவாய் உறுதியுரைக்கிறார். உளவியல், சட்டத்தின்முன் மதிப்பீடு செய்யப்படுதல் உண்மையை உளங்கொள்வார் இவ்வாய்வுரையின் தெளிவு காண்பார். பரிவாரங்கள் அகன்ற பின் பெருந்துறைக் கோயிலுள் மணிவாசகர் புக ஆங்கே அடியார் புடை சூழ மெய்க் குரவனைக் கண்டார் என்கிறது நம்பி திருவிளையாடல் திருப் பெருந்துறையில் ஒரு சோலையின் பால் அறிவு நூல் ஓதும் ஒலிகேட்டு அதனை ஒற்றரை ஏவியுரைத்து அவர் வந்து உரைத்தன்பின் குரவனையும் அவனைச் சூழ்ந்த அடியார் குழாத்தையும்கண்டார் என்கிறது வாதவூரர் புராணம். இவ்கூற்றிலேயும் நம்பிதிருவிளை யாடல் பிழைபடுகிறது என்கிறார் அடிகளார். குருந்து : கோயில் : திருப்பெருந்துறையில் அடிகள் சென்ற காலத்து ஆண்டுச் சிவபிரான் திருக்கோயில் இருந்ததில்லை என்பதற்கு அதன்கண் இஞ்ஞான்றும் சிவலிங்க வடிவம் இல்லாமையும், ஆண்டுச் செய்யப்படும் நாள் வழிபாடு மாணிக்கவாசகர் பெருமாற்கும் அவரை ஆண்டருளிய ஆசிரியன் வைத்துச் சென்ற திருவடிச் சுவட்டிற்குமே ஆற்றப் படுதலும் திருவிழாவென்னும் சிறப்பு வழிபாடு மாணிக்க வாசகப் பெருமாற்கே செய்யப்படுதலும் சான்றாமென்க என்கிறார். மேலும் அடிகள் இறைவன் ஆசிரிய வடிவிற்றோன்றி அடிமை கொண்டருளிய மையையே சொல்வதல்லாமல் திருக்கோயில் உண்டெனக் கொண்டு திருப்பதிகங்கள் அருளிச் செய்யாமையையும் நிறைமலர்க்குருந்தம் மேவிய சீர் ஆதியே என்றமையயும், அடிகட்கு அருட்பாடு நிகழ்ந்த பின்னரே திருக்கோயில் அமைக்கப்பட்டது என்பதையும் கூறுகிறார். அடிகட்கு முன்னும் ஆங்குத்திருக்கோயில் உண்டு என்னின், அதன்கண் இந்நாள்வரை சிவலிங்கம் இல்லாமையும், அடிகட்குமுன் இருந்ததாயின் ஆங்குச் சிவலிங்கம் இருந்திருத்தல் வேண்டும் என்றும் முன்னே இருந்து பின்னே இல்லை என்பது பொருந்தாது என்றும் கூறி, திருவாதவூரர் புராணவுரையே உண்மை வரலாறாம் என உறுதிசெய்கின்றார். சிவஞானபோதம் முதலியன : குரவன் கையில் சிவஞான போதம் இருந்தது என்பது கட்டிச் சொன்னது என்றும், குரவன் பன்னாள் நிலமிசைத் தங்கினான் அல்லன் ஐந்தெழுந்துண்மை உணர்த்திய ஞான்றே மறைந்தருளினன் என்றும், அடிகள் அன்பின் வடிவாய் மனந்திரிந்து நின்ற நாளில் அரசன் செல்வத்தைத் திருப்பணிக்குச் செலவிட்டமை குற்றமாகாது என்றும் அறப்பணிக்குத் தானே அளியாது போர்ப் பகைக்குச் செலவிட இருந்த பணத்தைத் திருப்பணிக்குச் செலவிட ஏவியது இறைவர்க்கும் இழுக்காகாது என்றும், அப்பாண்டிய மன்னன் இறைமையிற்கனிந்த வரகுணன் அல்லன் என்றும் அடிகள் திருத்தொண்டில் அவர்தம் மனைவியாரும், அருமை மகளாரும் ஒன்றி நின்றனர் என்றும், திருவெம்பாவை அந்நாளில் அவர்கள் பொருட்டாகத் திருப்பெருந்துறையிலே அருளிச் செய்யப்பட்டது என்றும், நரிபரியாக்கியமை அடிகட்கே அன்றிப்பிறர்க்கன்று என்றும், அடிகளைச் சிறைப்படுத்தி வருத்தியது திருவாதவூரிலேயே என்றும், அடிகளை வருத்துங்கால் குயிற்பத்துப்பாடப் பட்டது அன்று என்றும், பரிமேல் வந்த பாகனைக் கண்டு காதல் கொண்டார் உரையாக அன்னைப்பத்து பாடப் பட்டது அன்று என்றும், பாகற்குப் பாண்டியன் நல்கிய துகிலைச் செண்டுகோலின் வாங்கினான் என்பதே சரி என்றும் குதிரைப் பாகன் மன்னனிடம் விடைபெற்றுச் செல்லும் போது பாடப்பட்டதன்று பிடித்த பத்து. இது தம் இல்லம் சென்று பாடியது என்றும், இறையருளால் வைகையில் வெள்ளம் வந்தது எனக் கொள்ளாமல், அறிவில்லா மழையால் வெள்ளம் அடிகட்கு இரங்கி வந்தது ஆகாது என்றும், ஒரு கூடை மண்ணால் பேருடைப்பை அடைத்து மறைந்த இறைவனைப் பிரிந்த துயரால் செத்திலாப் பத்துப்போலும் சில பதிகங்களை அடிகள் பாடினார் என்றும், திருமுதுகுன்றம்; திருவெண்ணெய் நல்லூர் என்னும் திருப்பதிகளுக்குச் சென்று அடிகள் வழிபட்ட சான்று இன்று என்றும், ஒவ்வொரு திருக்கோயிலில் ஒவ்வொரு கால் ஒன்றும் சிலவும் பலவுமாய் அடிகளாற் பாடப்பட்ட பாட்டுகளே பின்னுள்ளோரால் தமக்குத் தோன்றியவாறு தொகுத்தும் வகுத்தும் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை யெல்லாம் நுண்ணிய ஆராய்ச்சியுடையார்க்கன்றி ஏனையோர்க்கு ஒரு சிறிதும் விளங்கா என்றும் கூறுகிறார். மெய்ப்பொருள் : புத்தரொடு சொற்போர் தொடங்குதல் புத்த சமயக் கோட்பாடுகளை மறுத்தல், சைவசமயக் கோட்பாடுகளை விளக்கல், சமயக் கொள்கைகள் ஆராய்ச்சி, நால்வரே நல்லாசிரியர்கள், பொருந்தாக் கொள்கைகள், பௌத்த குருவுக்கு விளக்கிக் காட்டிய உண்மைகள் ஆகியவை முற்றிலும் மெய்ப்பொருள் ஆய்வேயாம். இவ்விரிவுப்பகுதிகள், அடிகளே திருவாசகத்தின் அகச் சான்று கொண்டு எழுதிய தாகும். இதனை திருவாதவூரர் புராணத்திற்காட்டப்படாத இதனை யாமே கூர்த்தறிந்தெழுதி, அங்ஙனம் எழுதிய சைவ சமயக் கோட்பாடுகள் முற்றும் மாணிக்கவாசகப் பெருமான் தழீஇயினவே யாம் என்பதற்குச் சான்றாக அவர் அருளிச் செய்த திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவையார் என்னும் இரு நூல்களிலிருந்து மேற்கோள்களும் உடனுக்குடன் எடுத்துக் காட்டலானேம் என்கிறார். 164 பக்கங்களில் மாணிக்கவாசகர் வரலாறும் ஆராய்வும் நிகழ்ந்ததாகவும், அது தொட்டு 942 பக்கம்வரை கால ஆய்வுச் செய்தியே விரிகின்றதாம், கால ஆய்வு : வாசகன் என்னும் சொல்அடிகளையே உணர்த்துதல், நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ்வேந்தர் பெயர் கல்வெட்டில் காணப்பெறாமை, திருமுகப்பாசுரம் கல்லாடத்திற் காணப்படுதல், சிவனடியார் பலர் திருத் தொண்டத் தொகையிற் கூறப்படாமை, திருவாசகம் கல்லாடம் புத்த சமண காலங்களில் தோன்றினமை, திருக்கோவையாரின் செய்யுட் பொருள் பழந்தமிழ் நூல் களோடு ஒத்தல், வடநாட்டில் கல்வெட்டுகள் உண்டானமைக்கு ஏது, கடைச்சங்கம் இல்லை யாய்ப் போன காலம், திருப்பெருந்துறை தமிழலைக் கூற்றத் துள்ளமை, பௌத்தமதம் தமிழ்நாட்டில் தலையெடுத்ததும் ஒடுங்கியதும், வீடுபேற்றின் கண்ணும் உயிர்கள் உளவாதல், சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை, கட்டிப்பாடும் சூதாட்டப்பாட்டும் இருக்கு வேதத்தில் காணப்படல், மந்திரம் என்னும் சொல் தூய தமிழ்ச் சொல்லாதல், மாணிக்கவாசகரும் நம்மாழ்வாரும், சைவசமயச் சான்றோர் பொய்கையாழ்வார் கருத்தொருமை, நாச்சியார் பெரியாழ்வார் முதலியவர்களைப் பற்றிய ஆராய்ச்சி, திருமங்கையாழ்வார் காலம், பழைய வடநூல்களில் சிவ பெருமான் முழுமுதன்மை, பன்னீராழ்வார் களின் காலவரை யறை, மாணிக்கவாசகர் குறித்த கடைச்சங்க காலம், முச்சங்க வரலாறும் தொல்காப்பிய காலமும், தொல்காப்பிய காலத் தொடர்ச்சி, இறையனாரகப் பொருளு ரையாராய்ச்சித் தொடர்பு, கடைச்சங்க காலத் தொடர்ச்சி, திருத்தொண்டத் தொகையும் திருவாதவூரடிகளும், அப்பர் சம்பந்தர் இருந்த கால ஆராய்ச்சி, மாணிக்கவாசகர்காலத் திட்ட முடிவு என 28 பகுப்புகளில் மாணிக்கவாசகர் காலத்தை ஆராய்ந்து முடிவு செய்கிறார். அப்பர் தேவாரச் சான்று : தேவார மூவர்க்கு மாணிக்க வாசகர் முன்னவர் என்பதனை உறுதிப்படுத்துதற்கு வலுவான சான்றுகளாக அப்பரடிகள் தேவாரத் தொடர்களைக் காட்டுகின்றார் அவை : அப்பரடிகள் நரியைக் குதிரை செய்வானும் என்றது மாணிக்கவாசகர் பொருட்டே நிகழ்ந்த திருவிளையாட்டே என்பது ஒன்று. மணியார் வைகைத் திருக்கோட்டின் நின்றதோர் திறமும் தோன்றும் என்று அவர் கூறியது மாணிக்கவாசகர் பொருட்டாக இறைவன் மண்சுமந்த திறம் உரைப்பதே என்பது மற்றொன்று. குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டாய் என்று அவர் கூறியது அடிகள் பெயராகிய வாசகன் என்பதே என்பது இன்னொன்று. நிறைவுக் குறிப்பாகப் பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பிலிபிடவூர் பேணும் என அவர் பாடுவதில் உள்ள பெருந்துறை என்பது மாணிக்கவாசகர்க்குக் குரவனாக இறைவன் அருள் செய்த தலமே என்பது பிறிதொன்று. இவற்றால் அப்பரடிகளின் காலத்திற்கு முன்னவர் மாணிக்கவாசகர் என்பதை உறுதிப்படுத்துகின்றார். சங்க காலத்தை அடுத்தே இருந்தார் என்பதை மறுக்கிறார். அடிகளார் பாடிய விருத்தப்பா என்னும் பாவினம் சங்க காலத்தை அடுத்தே இருந்த தில்லை என்று மறுக்கிறார். இனி அப்பரடி களின் காலத்தை ஒட்டிய ஐந்தாம் நூற்றாண் டாகவோ ஆறாம் நூற்றாண்டாகவோ இருத்தல் ஆகாது என்றும் மறுக்கிறார். அடிகளின் பாடல்களில் விருத்தப்பா அரிதாக வழங்கப்படுதலும், கலித்துள்ளலும் அகவலும் பல்கிவரலும் அப்பரடிகள் காலத்தை ஒட்டியிருந்தமைக்குப் பொருந்துவதாகாது என்கிறார். பல்வேறு வகையாலும் உண்மைச் சான்றுகள் என்னும் மணிக்கற்கள் கொண்டு அடிப்படை கோலி, அவற்றின்மேல் எழும்பிய மாணிக்கவாசகர் காலம்என்னும் விழுமிய மெய்ம்மணிக்கோயில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி முதற்றிகழ்ந்து, சைவ மெய்ச் சமயத் தெய்வமும் செந்தமிழ்த் தெய்வத் தனிமகளும் ஒருங்குகூடி மெய்யறிவுச் செங்கோல் ஒளியரசு நடத்தும் மாப் பெரு நிலையமாய் நிலைபேறுற்று நிலவுமாம் என்க மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்னும் இச் செந்தமிழ்த் தனிப்பேர் ஆராய்ச்சி நூல், தொண்டை நாட்டுப் பல்லவபுரத்துத் தமது பொது நிலைக் கழகத் திரு மாளிகையில் நாகைகிழார் மறைமலையடிகளால் இயற்றப்பட்டது. ஓம் சிவம் ... என நூலை நிறைவு செய்கிறார். ஆய்வு விரிவு : இத்துணை விரிவாகக் கால ஆய்வு செய்வது அடிகளார் அடித்தளத்தில் இருந்தது இல்லை என்பது முதற்கண் அவர் கட்டுரையளவாக எழுதியமை கொண்டு அறியலாம். அதன் மறுப்பே, அதனைச் சற்றே விரிக்கத்தூண்டி ஒரு கட்டுரை மேலும் எழுதச் செய்தது, அடிகளார் கொண்ட மேற்கோள்கள் சான்றுகள் ஆகியவற்றைச் சுட்டியே விரிவான மறுப்பாகத் தமிழ் ஆராய்ச்சி நூலாரும் (Tamil studies) தமிழ் வரலாறுடையாரும் எழுதி யமையும், பிறர்பிறர் ஆய்வு மறுப்புகளும், தூண்டுதலாகவே இப்பேராய்வை அடிகளார் மேற்கொண்டார் என்பது ஆங்காங்கு வரும் மறுப்புரைகளால் தெளிவாகப் புலப்படு கின்றது. அவர்களை எதிர்ப்பக்கத்தவர் என்றே பல்கால் குறிப்பிடுதல், தமக்குள்ளாக ஊன்றியிருந்த உண்மையை உறுதிப்படுத்திக் காட்டுதற் குறிப்பை வெளிப்படக் காட்டும். அன்றியும் தமிழ் வரலாறுடையாரே அடிகளார் கருத்தை முழுவதாக மறுத்து எழுதினார் என்பதும், அதற்குத்தக்க விரிவான மறுப்பாக இக் கால ஆராய்ச்சியைச் செய்ததுடன் பல்வேறு இலக்கியக் கால ஆராய்ச்சியும் இதன் கண்ணே செய்தார் என்பதும் எங்கெங்கும் காணப்படுகின்றன. ஆய்வு நுணுக்கம் : இப்பெரிய ஆய்வின் இடையே பற்பல நுண்ணிய ஆய்வுக்கருத்துகைள அடிகளார் வெளியிடுகின்றார். அவற்றை முழுமையாகத் திரட்டல் பலதுறைப் பயன் விளைவாக அமையும். இவண் ஒரு சிறுபகுதி இவ்வாய்வுக்குத் தகக் குறிப்போம். புராணங்கள் எழுதினோர் மிகுந்த ஆராய்ச்சியுடையார் அல்லர்முன்னுள்ள ஒரு புராணம் ஒன்றைச் சொன்னால் பின்வருவோர் அதனை ஆராய்ந்து பாராமல் அதனை அங்ஙனே கூறிவிடுவர். முன்னாசிரியர் மொழிகட்கு ஏற்பவே பின்வந்த புராணகாரர் கூற்றுகட்கு உரைசெய்ய வேண்டும் என்று ஓராய்வு முறையைத் தெளிவிக்கிறார் (167-8) பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலான உரை யாசிரியரின் உரைமுறையை ஆராய்ந்து பார்க்குங்கால் சங்கத் தமிழ் இலக்கியங்கட்குப் பிற்பட்ட காலத்தெழுந்த நூல்களில் இருந்து மேற்கோள்காட்டுதல் அவர்கள் கருத்தன்று என்பது தெற்றென விளங்கும் என்றோர் உரைமரபை வரைகின்றார் (179) ஆகுபெயருள் அணுக்கப் பொருள் ஆகுபெயர், அகல் பொருள் ஆகுபெயர் என்னும் இரண்டனை தாரம் என்னும் சொல்லாய்விடையே சுட்டுகிறார் அடிகளார். ஒரு சினைப் பொருளின் பெயர் அதன் முதலுக்காகி வருதலும் ஒரு நிறத்தின் பெயர் அந்திறத்தினையுடைய பொருட்கு ஆகி வருதலும் அணுக்கப் பொருளுடைய ஆகுபெயராம் என்னை? சினையும் அதன் முதலும், பண்பும் பண்பியும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத தற்கிழமைப் பொருள்களாய் இருத்தலின். மருக்கொழுந்து என்னும் ஓர் உறுப்பின் பெயர் அதனையுடைய நீலப்பூவுக்கும் பெயராகி வரும். இனிக் கங்கையின்கண் வேடச்சேரி, கட்டில் கூப்பிட்டது என்றாற் போல்வனவற்றுட் கங்கை என்பது கங்கைக் கரையினையும், கட்டில் என்பது கட்டிலுள்ளாரையும் உணர்த்து தற்கண் இயற்பெயர்ப் பொருட்கும் ஆகுபெயர்ப் பொருட்கும் அத்துணை நெருக்க மின்மை யின் அவை அகன்ற பொருட்கண் வந்த ஆகுபெயராயின என அரிய இலக்கண ஆய்வு செய்கின்றார். இசையின் இலக்கணங்களெல்லாம் தமிழ் நூல்களிலிருந்தெடுத்தே வடமொழிக்கண் எழுதப்பட்டன என்று வடமொழிக் கண் முதன்முதல் இயற்றப்பட்ட இசையிலக்கண நூல்கள் கூறுதலை எடுத்துக்காட்டி விளக்குகின்றார் (191) தமிழில் இது காறும் அகராதி எழுதினோர் மொழிநூல் வரலாற்று நூல் என்னும் இவற்றின் உணர்வு வாய்க்கப் பெறாதவர் ஆகையால், இப்பொருளில் இச்சொல் தமிழ், மற்று இப்பொருளில் இஃது ஆரியம், இச்சொல் இன்ன காலத்து இப்பொருளில் வழங்கிற்று என்றெல்லாம் அவ்வச் சொற் பொருண்மை ஆராய்ந்து காட்டும் அறிவாற்றலுடைய ரல்லர்; மற்றுத் தமிழினும் ஆரியத்தினும் தாம் கண்ட கண்ட பொருள்களையெல்லாம் தாம் குறித்த சொற்களுக்குக் கூறி ஏட்டை நிரப்பி விடும் நீரர் என அகராதித் துறையில் மேற் கொள்ள வேண்டிய பணித்திறனைச் சுட்டுகிறார். (193 - 194) பாணபத்திரர் என்பாரைத் திருநீலகண்ட யாழ்ப் பாணராகப் பாணர் என்னும் பெயர் கொண்டு மயங்கியமை போலவே, சேரன் என்னும் குறிப்புக் கொண்டு பரிபுரக் கம்பலையிரு செவியுண்ணும் குடக்கோச் சேரனைத்தம்பிரான் தோழரான சேரமான் பெருமாண்மேல் ஏற்றிப் பெரிய புராணம் உரைத்தமையும் (188). திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் பொற்பலகை இடுவித்ததாகக் கூறும் பெரிய புராணச் செய்யுட்கள் இரண்டும், பாண பத்திரர்க்கு இறைவன் பொற்பலகை இட்டாற்போற் றிருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கும்இட்டான் எனக் கூறவிழைந்த எவராலோ மாற்றிச் சேர்த்து விடப் பட்டனவா மல்லது, ஆராய்ச்சியில் வல்ல அருளாளரான ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப்பட்டன அல்ல என்பதையும் குறிப்பிட்டுத் தம் ஆழ்ந்த ஆய்வைப் புலப்படுத்துகிறார். (200) தமிழ்ச் சொல் விழுக்காடு தமிழ்ச சொற்களின் விழுக்காடு காட்டித் திருவாசகத்தின் காலத்தை உறுதிப்படுத்தும் அடிகளார் அதனை நன்கு விளக்குகிறார். திருவாசகம் முழுதும் உள்ள சொற்களை எண்ணிப் பார்க்க முதன்மையாயுள்ளன இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பத்துச் சொற்களேயாம். இவற்றுள் முந்நூற்று எழுபத்து மூன்று வட சொற்கள். இவற்றை வகுத்துப் பார்த்தால், நூறு சொற்களில் தொண்ணூற்றிரண்டு அல்லது மூன்று தமிழ்ச் சொற்களும், மற்றைய எட்டு அல்லது ஏழு வடசொற்களுமாய் முடிகின்றன. முடியவே திருவாசகத்தில் நூற்றுக்கு ஏழு அல்லது எட்டு விழுக்காடு வடசொற்கள் வந்து விரவலாயின என்பது புலப்படும். திருச்சிற்றம்பலக் கோவையாரிற் சமயப் பொருள் மிக விரவாமல் பெரும்பாலும் தமிழ் அகப்பொருளே விரவி நிற்றலால் அதன்கண் நூற்றுக்கு 5 விழுக்காடே வட சொற்கள் கலந்து காணப்படுகின்றன என்று கூறும் அடிகளார், ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் எழுந்த நூல்களில்வடசொற்கள் இருபது விழுக்காடும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் இந்நாள் வரை எழுந்த நூல்களில் நூற்றுக்கு முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது வரையில் வடசொற்களும் நிலைபெற்று விட்டன என்கிறார். பண்டைத் தமிழ் வழக்குச் சிறிது சிறிது வீழ்ந்து, புதிய கலவை வழக்கு மெல்ல மெல்லத் தோன்றும் ஒரு காலத்தே திருவாசக நூல் இயற்றப்பட்டதால் நன்கு விளங்கும் எனச் சொல்வழியே நிறுவுகின்றார். (215). காலப்பகுப்பு : நில நூலார் நிலத்தினைத் துருவி அதன் கீழுள்ள பற்பல படைகளையும், அவ்வப் படைகளிற் புதைந்து கிடக்கும் பற்பல பொருள்களையும் ஆராய்ந்து பார்த்து, அவ்வப் படைகள் உண்டான காலத்தையும் அவற்றில் உலவிய உயிர்கள், அவ்வுயிர்கள் வழங்கிய பண்டங்கள், அப்பண்டங் களிலிருந்த மரஞ்செடி கொடிகள் முதலியவற்றையுமெல்லாம் வழுவாமல் விளக்கிக் காட்டுதல்போலத் தமிழ் நூலாராய்ச்சி செய்வோரும், தனித்தமிழ் உண்டானது முதல் இது வரையிற் போந்த காலத்தையும் துருவிப் பார்ப்பராயின், அது பல படைகளாய்ப் பிரிந்திருக்கவும், அப்படைகளிற் புதைந்து கிடக்கும் தமிழ் நூல்கள் அவ்வக் காலப் படையின் இயல்பையும், அஞ்ஞான்று உலவிய மக்கள் இயல்பையும் தெற்றெனக் காட்டவும் காண்பார்கள் என்றுகூறும் அடிகளார். எமதாராய்ச்சிக்கு விளங்கிய அளவு அக்காலத்தைத் தனித்தமிழ்க் காலம், புத்தகாலம், சமண காலம், சைவ வைணவ காலம், பார்ப்பனக் காலம், ஆங்கிலக் காலம் என ஆறு கூறாக வகுக்கின்றோம் என்கிறார். (223) பாரதப் போர் நிகழ்ந்த போது உடனிருந்த முடிநாகராயர்காலம் தொட்டுக் கி.பி. முதல் நூற்றாண்டு வரையிற் சென்ற காலம் - தனித்தமிழ்க் காலம்; கி.பி. முதல் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு காலம்- புத்த காலம்; கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை - சமண காலம்; கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை - சைவ வைணவ காலம்; கி. பி. பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை - பார்ப்பனக் காலம்; கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இதுவரை சென்ற காலம் ஆங்கிலக் காலம் எனப்பகுத்துக் காட்டுகிறார் (223) திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருவெழு கூற்றிருக்கை என்னும் ஓர் அகவலைத் தவிர வேறு அகவல், வெண்பா, கலி, வஞ்சி என்னும் தூய பழந்தமிழ்ப் பாக்கள் முற்றும் வீழ்ந்து போக அவற்றினின்று பையப் பையத் தோன்றி வளர்ந்து வந்த புதுத் தமிழ்ப் பாக்களே முற்றும் நிலை பெற்றுப் பெருகி வழங்கினமை ஐயமின்றித் தெளியப் படும் என்று கூறித் திருவாசகம் அதற்கு முற்பட்டதாதலை யாப்பியலால் உறுதிப்படுத்துகிறார். (232) கல்வெட்டு : இறந்துபட்ட மறவர்க்குத் தவிர அரசர்கள் தம் பெரும் பீடும் எழுதித் தமக்கும் கல்நாட்டினரென்பது பழைய தமிழ் நூல்களில் யாம் ஆராய்ந்த பகுதிகளில் யாண்டும் கண்டிலேம் என்றும் நாளும் பொழுதும் பிறரால்அலைக் கழிவுற்ற வடநாட்டின் இயல் கல்வெட்டுத்தேவையை ஆக்கியதையும், தென்னாட்டுக்குப் பிறநாட்டார் அலைக்கழிப்புத்தமிழ் வேந்தர் ஒற்றுமையும் பேராற்றலும் கொண்டு விலக்கப் பட்டமையும் அவர் புகழெல்லாம் இலக்கியமாகித் திகழ்தலும் தென்னாட்டில் பழங்காலக் கல்வெட்டுகள் இல்லாமைக்கு ஏதுவாயிற்று என விரிவாக விளக்குகிறார் (238 - 42) வரகுணன் : பெரிய அன்பின் வரகுணன் என்பான் மாணிக்க வாசகர் கால வரகுணன் அல்லன், அவன் இவ்வரகுணன்போல் இறைவன் பால் அன்பில்லாதவனாவன். இருவரும் ஒருவரா மெனக் கொள்ளல் ஆகாது என்பார் (235) கால மயக்கம் : நரியைக் குதிரை செய்வானும் என எதிர்கால நிகழ்ச்சியாகக் கூறியதை இறந்த கால நிகழ்ச்சியாகக் கொண்டு அப்பரடிகளுக்கு முற்பட்டவர் மாணிக்கவாசகர்என்பதை மறுப்பாரை, இறந்த காலத்தில் நிகழ்ந்ததொன்றனை எதிர்காலத்தின் வைத்து ஓதுதலும், எதிர்காலத்தின் நிகழற் பாலதொன்றனை இறந்த காலத்தின் வைத்து ஓதுதலும் பண்டைத் தமிழ் வழக்கின்கண் உண்மை, இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் சிறப்பத் தோன்றும் வழங்கு மொழிக் கிளவி என்று ஆசிரியர் தொல்காப்பியனார்கூறியமையையும் அதன் உரைகளையும் பிறர் சான்றுகளையும் கூறி, அக்கூற்றுப் பெரியதோர் இழுக்கு என மறுக்கின்றார் : (283) சமணர், பற்றிய குறிப்பு இன்மை : மாணிக்க வாசகர் வாக்கில் சமணரைப் பற்றியோ, பல்லவரைப் பற்றியோ குறிப்பு இல்லாமைஅவர் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பதை நிலைப்படுத்தும் என்கிறார் (288- 9) பிள்ளையார் : திருமந்திரத்தில் 47 செய்யுட்கள் மூவாயிரத்தின்மேல் காணப்படுகின்றன. திருமந்திர முதற் செய்யுள் ஒன்றவன் தானே என்பது எனச் சேக்கிழார் உரைத்தாராகவும் அதற்கு முன் போற்றிசைத் தின்னுயிர், என்னும் செய்யுளும், அதற்கு முன் ஐந்து கரத்தனை என்னும் செய்யுளும் காணப்படுதல் பின்னவரால் சேர்க்கப்பட்டவையாம். மாணிக்கவாசகர் நூல்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் பிள்ளையாரைப் பற்றிய குறிப்பு எட்டுணையும் இல்லை. ஆனால்தேவாரத்தில் உள்ளதாகலான் இக்குறிப்பு ஒன்றுமே ஏனை மூவர்க்கும் மாணிக்கவாசகர்முன்னவர் என்பதை நாட்டுதற்குப் போதிய சான்றாம் என்கிறார் (352). மந்திரம்: மந்திரம் என்பது மறைத்துச் சொல்லுதல். மறைமொழி என்பதும் அது. இப்பொருளில் பழைய ஆரிய நூல்களில் வழங்குதல் யாண்டும் கண்டிலேம். இது தமிழ் நூல் வழக்கே என்பது. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப எனத் தொல்காப்பியம் கூறுதலால்புலப்படும் (385) அகத்தியரைப் பற்றிய கதைகள் எல்லாம் கட்டி வைத்த பொய்க் கதைகள். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின் வந்த நூல்களிலும் உரைகளிலும் புராணங்களிலும் மட்டுமே அக்கதைகள் காணப்படுகின்றன. இறையனார் அகப்பொருள் பாயிரத்தில் அகத்தியரைப் பற்றியுள்ள செய்தி நக்கீரனார் உரைத்ததன்று. பிற்காலத்தே சேர்க்கப்பட்டதாம். (390 - 1) அகத்தியர் : பன்னிரு படலம் அகத்தியர் மாணவர் பன்னிருவர் செய்தது என்பது கட்டுக் கதையே. இக்கதையை நம்பிக் கூறிய புறப் பொருள் வெண்பா மாலைப் பாயிரவுரை உண்மை யற்றதாம் (392) சிற்றகத்தியம் பேரகத்தியம் என்பவற்றின் போலிச் சூத்திரங்கள் பின்னையோராற் கட்டப்பட்டு அகத்தியர் பெயர் புனைந்து விடப்பட்டனவாதல் தமிழிலக்கணம் வல்லார் நன்குணர்வர் (394) இராமாயணத்தின்கட் சொல்லப்பட்ட கதையை உண்மை யென்று நம்பத் தலைப் பட்டமையால் வந்த குழறு படைகட்கு ஓர் அளவே இல்லை (396) திருவாதவூரடிகளாலும் திருமூலராலும் சொல்லப்பட்ட தமிழ் ஆகமங்களே, பின்னவர் களால் காமிகம் காரணம் என மொழி பெயர்க்ப்பட்டுள்ளன (406-7) அவை தச்சுக் கலை பற்றிய பழந்தமிழ் நூல்களே (408) சான்றுவகை : சான்றுகள் அகச்சான்றும் புறச்சான்றும் என இரு பாலனவாம். அவற்றுட் புறச்சான்று என்பன பற்றும் பகைமையும் இல்லா நடுநிலையாளர் கூறும் மெய்யுரைகள். அகச்சான்று என்பன ஓர் ஆசிரியன் தான் இயற்றிய நூல்களில் தன் குறிப்பின்றியே தன் வரலாற்றினையும் தன் இயற்கை யினையும் கூறிவைப்ப, அவைதாம் அறிவுடை யோரால் ஆராய்ந்தெடுக்கப் பட்டு அவ்வாசிரியன் வரலாறும் தன்மையும் துணிதற்குச் சான்றாய் நிற்பன. இவ் வகையில் நம்மாழ்வார் பிறந்த பொழுதே பாலுண்ணாது தவத்தில் இருந்து ஓதாதுணர்ந்தமைக்குக் குறிப்பு இருவகைச் சான்றுகளிலும் இல்லை. திருஞானசம்பந்தர் பாலுண்டு பாடினார் என்றால், நம்மாழ்வார் பாலுண்ணாது பாடினாரென்பது கழிபெரு மேன்மையாமெனக் கதை கட்டிய புலவர் நினைத்தார் போலும் (410 - 2) பழந்தமிழ் நூற்பொருளும் சொல்லும் நம்மாழ்வார் பாடல் களில் காணக் கிடத்தலால்அவர் ஓதி உணர்ந்ததும், ஞானசம்பந்தர் பாடல்களில் அவ்வாறு காணக் கிடவாமையால் அவர் ஓதா துணர்ந்தவர் என்பதும் புலப்படும், (4-20) இராவணனுக்குப் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் இருந்தன என்பது பழைய இராமாயணப் பகுதிகளில் பெறப்படவில்லை. கபிலரது குறிஞ்சிக் கலிப்பாட்டில் தவிர எங்கும் அவன் பத்துத் தலையுடையவனாய் இருந்தான் என்பது சொல்லப்படவில்லை, (472) முதலாழ்வார் மூவரும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்கு முன்னும், எட்டாம் நூற்றாண்டின் நடுவுக்குப் பின்னும் இருந்திலர் என்பதே முடிந்த பொருளாம். (499) சுந்தரர் வயது : சுந்தரர் இரண்டாம் நந்திவர்மன் இறுதிக் காலம் முதல் அவன் மைந்தன் தந்திவர்மன் காலத்தின் முற்பகுதி வரை இருந்தார். இவர் காலம் கி.பி. 760 முதல் 810 வரையாம். திரு முறைகண்ட புராணம் 38000 பதிகம் அருளியதாகக் குறித்தலானும், இவற்றைத் திருக்கோயில்கள் தோறும் சென்று அருளிச் செய்தற்கு முப்பத்தைந்து ஆண்டுகளாயினும் வேண்டும் ஆதலாலும், இறையருளால் 16 ஆம் ஆண்டு முதல் பாடத் தொடங்கி யிருந்தாலும் 50 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர் ஆதல் வேண்டும். இவர் 18 ஆண்டு மட்டுமே வாழ்ந்தார் என்னும் ஒரு விடுதிப் பாட்டின் கூற்றுப் பொய்க் கூற்றாம் (510-2) என்று இன்னவாறு, பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்துகிறார். ஆய்வு விரிவு : பழைய வட நூல்களில் சிவபெருமானின் முழுமுதன்மை கூறப்பட்டதையும், பன்னீராழ்வார்களின் கால வரையறை யையும், மாணிக்கவாசகர் குறித்த கடைச்சங்க காலத்தையும், முச்சங்க வரலாறு, தொல்காப்பியர் காலம் என்பவற்றையும் திருத்தொண்டத் தொகை, அப்பர் சம்பந்தர் இருந்த காலம் என்பவற்றையும் விரிவாக ஆராய்ந்து மாணிக்கவாசகர் காலத்திட்ட முடிபு செய்கின்றார். கடைச்சங்க காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் முடிந்தது. அதனையே உயர்மதிற்கூடலின் ஆய்ந்த ஒண்தீந் தமிழின் துறை என்று மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலக் கோவை (20)யில் பாடினார். அவர் பாடிய சங்கம் பின்னர் எழுந்த சமண சங்கம் அன்று (597) தொல்காப்பியர் குறிக்கும் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்பன கதிரும் தீயும் திங்களுமே யாம் (656) பண்டைத் தமிழர் இவற்றை வணங்குதற் குறியாக அம்மூன்றின் வடிவு போன்ற குண்டங்கள் வெட்டுவித்து வேள்வி வேட்டனர். (663) இந்நாளைத் தமிழர் ஆங்கிலர் வழிப்பட்டமை போலவே, அந்நாளைத் தமிழருள் பலர் ஆரியர் வழிப்பட்டு அவர் ஒழுகலாறு களைக் கொண்ட தமிழ் வழக்குக்கு முழு மாறாய் நின்றனர். (694) நூலே கரகம் என்னும் நூற்பாவில் குறிக்கப்பட்ட நூல், கலை நூலே அன்றிப் பூணூல் அன்று (707) உயிர்களை இட வகையால் (வளி, தீ, நீர், மண்) நால்வகைப்பட வகுத்துக் காட்டுதலேயன்றி, அறிவு வகையால் ஆறாகப் பகுத்துக் காட்டுதல் சமணர் கருத்தாதல் கண்டிலம் (718) விசும்பு ஒன்று உள்ளமை ஆங்குக் குறிக்கப் படவில்லை. (720) புத்த சமண ஆசிரியர்கள் தாம் இயற்றும் நூல்களின் முகப்பில் புத்தனையும் அருகனையும் வணங்காதிரார். தொல்காப்பியத்தில் அவ்வாறு வணக்கம் இல்லாமையொடு அவற்றைப் பற்றிய ஒரு சிறு குறிப்புத்தானும் காணப்பட வில்லை (722) இற்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பரிபாடலில் காணப்படும் சகடம், சடை, சண்பகம், சமம், சமழ்ப்பு, சமைப்பின் எனச் சகர முதற்றமிழ் மொழி களையும், ஞமன் என்னும் ஞகர முதற்றமிழ் மொழியினையும், தமிழில் வாரா என்ற தொல்காப்பியர் கி.மு. முப்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் ஆவர் (724) சிலப்பதிகார மணிமேகலைப் பெருந்தமிழ்ப் பாட்டுடைச் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலத்தை வகுத்தற்கும் கடைச்சங்க காலத்தை வகுத்தற்கும் நுறுங்காவைரவாள் போல் நின்று உதவுவது இலங்கை மன்னன் முதற்கயவாகுவின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பதாம் (802) திருமுறை கண்டபுராணம் நுண்ணிய உண்மை யாராய்ச்சியில் தலை நின்றவரும் சைவசித்தாந்த ஆசிரியரில் நாலாம் எண்ணு முறைக்கண் நின்றவருமான உமாபதி சிவாசிரியர் செய்தது ஆகாது. அவர் பெயர் தாங்கிய வேறெவரோ ஒருவர் செய்ததாகல் வேண்டும் (818) வீரசைவம் : கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஈற்றில் வடுக நாட்டில் இருந்து தமிழ் நாட்டிற் குடிபுகுந்து வைகிய வீர சைவ மரபினர் பலருள் பாண்டிய நாட்டில் வைகிய ஒரு தெய்வப் பார்ப்பனக் குடியிலிருந்து மாணிக்கவாசகர் தோன்றினமையால் போலும் அவரை வீர சைவச் சான்றோர் முதலாசிரயராய்க் கொண்டு வழிபாடு செய்து வருவாராயினர். அதனால் சைவசமய குரவர் வரிசையில் வைத்துக் கொண்டாடிற்றிலர். இதனாலேதான் சுந்தரமூர்த்தி நாயனாரும் அவரது திருப்பெயரை விளங்கக் கூறாது பொய்யடிமை இல்லாத புலவர் எனச் சிறிது மறைத்துக் குறிப்பால் கூறினார். வீர சைவமும் சைவரும் ஒரு சமயமே என உண்மை கண்டு உறவு கலந்தபின் மாணிக்கவாசகரையும் நாலாம் சைவ சமயாசிரியராக ஒருப்பட்டுக் கொள்ளும் பெரும்பேறு பெறலாயினர் (821-22) திருவிடை மருதூர் மும்மணிக் கோவையிலே தான் முதன்முதலில் மாணிக்கவாசகப் பெருமான் ஏனை மூவரோடு சேர்த்து நாலாமவராகச் சொல்லப்பட்டிருக் கின்றார். வித்தகப் பாடல் முத்திறத் தடியரும் திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும் என்று பட்டினத்தார் கூறுவதால் அவர் காலத்திற்கு முன், முதல் மூவருமே சைவ சமய ஆசிரியராய்க் கொள்ளப்பட்டனர் என்பதும், அவரது காலத்திலேதான் மாணிக்கவாசகர் நாலாமவராக வைக்கப்பட்டார் என்பதும் விளங்கும், (823-4) ஆரிய நூல் வைப்பு முறை வேதம், உபநிடதம், ஆகமம் என நின்றாற் போலவே தேவாரத் திருப்பதிகங்கள் தமிழ் வேதங் களாகவும், திருவாசகந்திருக்கோவையார் என்பன தமிழ் உபநிடதங் களாகவும், திருமந்திரம் தமிழ் ஆகமமாகவும் ஒன்றற்குப்பின் ஒன்றாக வைத்து முறைப்படுத்தப்பட்டு நிற்கலாயின (860). அவர் வட நாட்டின்கண் இருந்து வந்த மரபினர் என்பது மகேந்திரம் என்பதைப் பயில வழங்கலாலும் சில சொல்லாட்சிகளாலும் விளங்கும் (861-862) அவர் வீர சைவராய்ச் சிவலிங்க அருட்குறியைத் தம் திருமேனியில் அணிந்திருந்தார் என்பது எந்தையே ஈசா உடல் இடங் கொண்டாய் என் மெய்ந் நாடொறும் பிரியா வினைக்கேடா என விளங்கக் கூறுமாற்றால் அறியப்படும் (865) கடல் அகற்சி மாணிக்கவாசகர் காலத்தே தில்லைநகரின் அருகே கடல் நின்றது என்பதூஉம் திருஞான சம்பந்தர் காலத்தே அக்கடல் அந்நகரை விட்டு ஒருகல் வழி எட்டிப் பின்னிட அக்கடல் நீரொடு தொடர்புடைய ஒருகழி மட்டுமே. அந்நகரின் பாங்கர் நின்ற தென்பதூஉம், இஞ்ஞான்று அக்கடல் தில்லையை விட்டு ஏழு கல் விலகிப் போய்விட்டதைக் கணக்குச் செய்யச் சிறிதேறக்குறைய 225 ஆண்டுகளாவது சென்றதாகல் வேண்டும், (874) மொழி, மொழிபொருள் : சமயாசிரியர் மூவர்க்கும் திருமூலர்க்கும் மாணிக்க வாசகர் பின்னவர் எனின் அவர்தம் சொற்கள் சொற் றொடர்கள் யாப்பு ஆகியவற்றை எடுத்தாண்டு இருத்தல் வேண்டும். அவ்வாறு இன்றி மாணிக்கவாசகர் கையாண்ட சொற்கள் சொற்றொடர் கள் யாப்பு ஆகியவற்றை அவர்கள் கொண்டுள்ள சான்றுகள் மிகப் பலவாம் (875- 887) கோயில் அடியார் : சிவபிரான் திருக்கோயில்கள் பண்டை நாளில் எத்துணை இருந்தன, பின்றை நாளில் எத்துணை இருந்தன என ஆராய்ந்து பார்க்கும் முகத்தானும் ஏனை மூவர்க்கும் மாணிக்கவாசகர் முன்னவர் என்பது விளங்கும், (883) மாணிக்க வாசகராற் குறிப்பிடப்பட்ட தொண்டர்கள் எத்துணை பேர் அப்பர் சம்பந்தரால் குறிப்பிடப்பட்ட தொண்டர்கள் எத்துணைபேர் என ஆராயு முகத்தானும் அவர்க்கு மாணிக்கவாசகர் முன்னவர் என்பது புலப்படும் (892) எனப் பன்னெறி ஆய்வுகளாலும் மாணிக்கவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பதை உறுதிப் படுத்துகிறார். ஓராய்வு (குறிப்பாகக் கால ஆய்வு) எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்னும் நெறிமுறையைக் காண விரும்புவார்க்கு இலக்கண நெறிமுறை நூலாகத் திகழ்வது அடிகளார் அருளிய மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்னும் நூல் என்றமைதல் சாலும். 8. அடிகளாரின் அறிவியல் ஆராய்ச்சித் திறன் மக்கள் நூற்றாண்டு உயிர் வாழ்க்கை அடிகளார் இயற்றிய தொலைவில் உணர்தல், மரணத்தின் பின் மனிதர் நிலை, மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை முதலியன அவர்தம் அறிவியல் ஆராய்ச்சித் திறத்தின் சான்றுகளாக விளங்குவன. இவற்றுள் மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை என்பதொன்றை நாம் ஆராய்வுக்கு எடுத்துக் கொண்டாலும் விரிவு மிக்கதேயாம். ஆதலால் அதனையும் சுருங்கிய அளவால் ஆய்ந்து அடிகளார் ஆராய்ச்சித் திறத்தை அறிவோம். மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை என்பது இரண்டு பாகங் களாய்த் தமிழ் ஆங்கில முன்னுரைகளுடன் 658 பக்க அளவில் அமைந்துள்ளது. சில நூல்களைக் கொண்ட பெருநூல் அது என்பதை அதில் வரும் 13ஆம் இயலான உணவு, 14, 15 ஆம் இயல்களான பொருந்தாவுணவு என்பவற்றைக் கொண்டு பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் என்னும் பெயரால் கிளை நூல் ஒன்று கிளைத்தமையால் அறியலாம். நெடிய ஆய்வு மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை அடிகளாரின் ஞானசாகரம் என்னும் திங்கள் வெளியீட்டின் ஐந்தாம் பதுமத்து முதல் இதழில் வெளிவரத் தொடங்கியது. நீண்ட வாழ்க்கை என்பதே முதல் இயல். நூற்பெயரோ மக்கள் நூறாண்டு உயிர் வாழ்தல் எப்படி? எனப் பெயரிய இந்நூல் என முதற் பதிப்பின் முகவுரை கூறுவதால் வெளிப்படும். இதழில்வெளிப்பட்டும் தடைப்பட்டும் 24 ஆண்டு களுக்குப் பின்னரே முடிவு பெற்றது. இக்காலமெல்லாம் இது பற்றிய தமிழ் ஆங்கில வடமொழி நூல்களைப் பயின்றும், அச் செய்திகளைத் தம்மிடத்துச் செயற்படுத்திப் பார்த்தும், அவற்றுள் எவை மிகச் சிறந்தவை யாய்ச், செலவில்லனவாய் எளிதிற் செய்து பயன்தரத் தக்கனவாய் தெளியப்பட்டனவோ அவற்றையே இந்நூலில் வரைந்தார். இரக்க நூல் இத்தகையதொரு பயன் சிறந்த உரைநூல் தமிழ் மொழிக்கண் இல்லாப் பெருங்குறையால், ஆண் பெண் பாலாரிற் பெரும்பகுதியினர் தமது வாழ்க்கையில் பிழைமிக ஒழுகிப் பல்வகை நோய்களாலும் பொருட் செலவாலும் வறுமையாலும் பிடியுண்டு. தாம் ஆண்டு முதிரா முன்னரே இறந்தொழி வதல்லாமலும் தம் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளும், அவர்க்குப் பிறக்கும் பிள்ளைகளும் எல்லாம் அங்ஙனமே பெருந்துன்பங் களுக்கு வழிவழி ஆளாகி மடிந்து போகவும் செய்து விடுகின்றனர். தமிழ் மக்களின் துன்பம் மிகுந்த இக்குறுவாழ்க்கையைக் கண்டு எமதுள்ளத்தில் உண்டான இரக்கமே இந்நூலியற்ற வெளியிடுமாறு எம்மைத் தூண்டலாயிற்று எனத் தமக்கு நேரிட்ட நூலியற்றல் தூண்டலை வரைந்துளார் அடிகள். எழுதிய முறை : இந்நூலை எழுதியுள்ள முறை பற்றியும் விளக்குகிறார் : மக்கள் வாழ்க்கையைப் பற்றிய இந்நூலில், எந்தப் பகுதியையும் மறைத்தெழுதுதல் ஆகாமையாலும், அன்றி, அங்ஙனம் மறைத்தெழுதினால் இன்றியமையாது தெரிந்து ஒழுக வேண்டிய முறைகள் விடப்பட்டு, அதனால் ஆண் பெண் பாலாரை இஃது அறியாமையினின்று எடுக்கமாட்டாதாய்ப் பயனின்றிக் கழியு மாதலாலும் ஆண் பெண் சேர்க்கை, மக்கட்பேறு, கருவிலக்கு முதலான பகுதிகளிற் சொல்ல வேண்டுவனவெல்லாம் ஒரு சிறிதும் மறையாமல் சிறப்பாகவே வரைந்திருக்கின்றேம் என்கிறார். முதற்பாகத்தில் நீண்ட வாழ்க்கை, உயிர்க்காற்று, மூச்சுப் பழக்கம், நெருப்பு, ஒளி, நிறம், நீர், நீர்நிலைகள், குடிநீர், குளிநீர், நிலம், உழவு, உணவு, பொருந்தா உணவுகள், அவற்றின் தொடர்ச்சி, உறக்கம் என்னும் 16 இயல்களும். இரண்டாம் பாகத்தில் ஆண்பெண் சேர்க்கை, இன்பமும் கருவும், மக்கட் பேறு, தாயின் மனநிலையும் கருவின் அமைப்பும், மகப்பேறும் மக வளர்ப்பும், கருவிலக்கு, நோய் இல்லா நீண்ட வாழ்க்கை, மனநிலையும் நீண்ட வாழ்க்கையும் என்னும் 8 இயல்களும் உள்ளன. ஆய்வு முறை : இந்நூற்பொருளை ஆராய்ந்த முறையைப் பற்றியும் அடிகளார் விளக்குகிறார். இதில் சொல்லப்பட்ட பொருள் களையும் முறைகளையும் பற்றி யாம் ஓயாது ஆராய்ந்த படியாகவே இருந்தேம். நோய் வரா வகைகளையும் வந்த நோய் நீக்கு முறைகளையும் பற்றித் தமிழ் ஆங்கில வடமொழிகளிற் சான்றோர் எழுதிய உயர்ந்த நூல்கள் பலவற்றை யாம் பயின்றறிந்த அளவில்நில்லாது, அவை தம்மையெல்லாம் எம்மிடத்தே செய்து பார்த்தும் எம்மைச் சார்ந்தாரிடத்தே செய்து பார்த்தும் அவற்றுள் எவை மிகச் சிறந்தனவாய்ச் செலவல்லனவாய் எளிதிற் செய்து பயன் பெறத் தக்கன வாய்த் தெளியப் பட்டனவோ அவைகளை இந்நூலின்கண் வரைந்திருக்கின்றேம் என்பது அது (முகவுரை - 10) வாழ்க்கையின் மறைபொருள் நுட்பங்கள் முற்றும், நோய் நீக்கும் இயற்கை முறைகள் முற்றும் நன்கெடுத்து விளக்கும் இந்நூல் ஆண் பெண் பாலார் இரு திறத்தினர்க்கும் பெரிதும் பயன்பட்டு அவை நீடினிது வாழ்விக்கும்என்னும் நம்பிக்கை மிகுதியும் உடையேம் என்று இந்நூற் பயனைக் கருதுகிறார் அடிகளார். நூறாண்டு வாழ்தல் : நூறாண்டு வாழ்தல் என்பது அரிதன்று; இயல்பாகக் கூடுவதே என்பதற்கு சேம்சு ஈசுதன் என்பார் ஒருவர், நூறாண்டும் அதற்கு மேலும் உயிர் வாழ்ந்த ஆயிரத்து எழுநூற்றுப் பன்னிரண்டு பெரியார் பற்றி வரைந்த வரலாற்றைச் சுட்டுகிறார். 132 ஆண்டு, 162 ஆண்டு, 150 ஆண்டு, 140 ஆண்டு, 112 ஆண்டு, 180 ஆண்டு - என வாழ்ந்த பெருமக்களை எடுத்துக் காட்டுவதுடன், நீண்ட நாள் உயிர் வாழ்வது எப்படி? என்பதைத் தம் வாழ்வியல் முறையோடு விளக்கிய பெருமக்களையும் சான்றுகளுடன் விளக்குகிறார் அடிகளார். ஆண்டு முதிர்ந்தமையால் உடம்பு தளர்ந்த நிலைக்கு வந்தாலும் அது பற்றி மனக்கிளர்ச்சி குறையாமல் இந்நூலில் நம்மாற் சொல்லப்படும் முறைகளை வழுவாது பின்பற்றி நடப்பார்களானால் திரும்பவும் தமதுடம்பை உரம்பெறச் செய்து எல்லா மக்களும் இனிது வாழ்வர் என்பது திண்ணம் என உறுதி சொல்கின்றார். இயற்கையாக உண்டாகும் இடி, மின்னல், மழை, தீ, நில அதிர்ச்சி, பாம்பு, புலி இன்னவற்றால் ஏற்படும் எதிர்பாராத் துயர்களையும் அருளொளியில் அழுந்தி நிற்கும் அறிவால் வருமுன்னே விலக்கிக் கொள்ள முடியும் என்பதைத் தம் வாழ்வியற் சான்றுகொண்டு விளக்குகிறார் அடிகளார் : வருமுன் விலக்கல் : ஒருமுறை யாம் பலமனேரி யென்னும் ஊரிற் குறுங்காட்டின் நடுவிலுள்ள மாளிகை ஒன்றில் தங்கி யிருக்குமாறு நேர்ந்தது. ஒருநாள் இரவு அதில் யாம்படுத்து உறங்குகையில் ஒரு பாம்பு வந்து எமது கையிற் கௌவுவதாகக் கனவு கண்டு சடுதியில் விழித்துப் பார்க்க, உண்மையாகவே ஒரு கரும்பாம்பு எமது வலது கைம் மேற்புறத்தைக் கௌவிப் பல்லை அழுத்தும் நிலையில் இருந்தது. உடனே அதனைத் தப்பி அப்புறம் எழுந்து போய் உயிர் பிழைத்தேம். மற்றொரு முறை திருநெல்வேலியில் ஒரு வீட்டில் தக்கார் பலரொடு நல்லுரைபேசிக் கொண்டு சுவர்மேற் சாய்ந்து உட்கார்ந்திருந்தேம். அவ்வாறிருக்கையில், அந்தச் சுவரின் அடியில் ஒரு தேள் இருப்பதாக எமக்குச் சடுதியிலே ஒரு நினைவு தோன்றிற்று; உடனே பேச்சை நிறுத்தி அப்புறம் நகர்ந்து திரும்பிப் பார்க்கப் பெரிய கருந்தேள் ஒன்று எமக்குப் பின்னே இருந்தது; அதற்குத் திருவருள் உதவியால் தப்பிப் பிழைத்தேம். இங்ஙனம் யாம் தப்பிப் பிழைத்து வருகின்ற நிகழ்ச்சிகள் பல உண்டு என உள்ளொளியால் உணரப்படும் பாதுகாவலை உரைக்கிறார். மூச்சுப் பயிற்சி : பிராணவாயு என்பதை உயிர்க்காற்று என மொழியாக்கம் செய்கிறார் அடிகளார். உடம்பைப் பாதுகாத்தற்கு வேண்டி முதற் பொருள்கள் அத்தனையும் பிராண வாயுவிலேயே இருக்கின்றன என்கிறார். நாற்றக் காற்றால் நுரையீரல் சுருங்கிப் போய், அப்படியே சுருக்கமாகி நின்றுவிடும் என்பதை நுரையீரலுக்கு வந்த தீங்கு என்கிறார். சிராசு உத்தௌலா என்பவன் ஆங்கிலரொடு பகை கொண்டு அவர்களுள் நூற்று நாற்பத்தாறு பேர்களைப் பிடித்துப் பதினெட்டடி நாற்பக்க அளவுள்ள ஓர் இருட்டறையில் ஒருநாள் இரவு சிறை வைத்து, மறுநாட் காலையில் பார்க்க இருபத்து மூன்று பேர் மட்டுமே கொத்துயிரும் கொலையு யிருமாய்க் கிடந்தார்கள்; மற்ற நூற்று இருபத்து மூன்று பேரும்பிணமாகக் கிடந்தனர் என்னும் வரலாற்றுச் சான்று காட்டி மூச்சுக் காற்றின் தூய்மை இன்றியமையாமையை விளக்குகிறார் (20) மக்களின் மூச்சு ஓட்டத்தால் உண்டாகும் நச்சுக் காற்றானது பகற் பொழுதைக் காட்டிலும் இரவுப் பொழுதில் மிகுதியாகும் என்பதைப் பகலவன் வெளிச்சம் உள்ள பகற்காலத்திற் புற்பூண்டு மரஞ் செடி கொடி முதலான நிலையியற் பொருள்கள் நச்சுக் காற்றை உள்ளே இழுத்துத் தூய உயிர்க்காற்றை வெளியே விடுகின்றன; வெயில் வெளிச்சம் இல்லாத இராக்காலத்திலோ புற்பூண்டு முதலியன உயிர்க் காற்றை உள்ளிழுத்து நச்சுக் காற்றை வெளிவிடுகின்றன என விளக்குகிறார். மக்கள் உறங்கும் போது விளக்குகள் எரியுமானால் அவர்களது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத தூய காற்றை அவை இழுத்துக் கொண்டு அவர்களுக்குத் தீமையை விளைக்கும் நச்சுக் காற்றை மேன்மேல் வெளிவிடுமாதலால் அதனை உள்ளிழுத்து அவர்கள் தமதுடம்பின் நலத்தை இழந்து போவார்கள். இதனாற் போலும் தலைமாட்டில் விளக்கை எரியவிடலாகாது என்று வீடுதோறும் வழங்கி வருகின்றார்கள், எனப் பழநாள் வழக்கின் நலத்தை விளக்குகிறார். தடிப்பான பொருள்களையெல்லாம் நிலமானது தன்னி டத்தே இழுக்கும் தன்மை உடைமையினால்நச்சுக் காற்றானது எப்போதும்நிலமட்டத்தில் உலவிக் கொண்டிருக்கும். உயிர்க் காற்றோ நொய்ய பொருளாகையால் நிலமட்டத்திற்கு மேல் உலவிக் கொண்டிருக்கும், இந்த ஏதுவினால் நிலத்தின்மேல் படுப்பதைக் காட்டிலும், கட்டிலின்மேற்படுப்பதே மிகவும் நல்லதாகும். மூச்சுப் பழக்கம் பற்றிச் சொல்லும் அடிகள் நூறு ஆண்டும் அதற்கு மேலும் உயிர் வாழ விரும்புகின்றவர்களுக்கு இந்த நூலிற் சொல்லப்படும் ஒவ்வொரு பொருளும் விலையிடுதற்கரிய மாணிக்கங்களாகவே தோன்றும். இந்த நூலில் எம்மால் எடுத்துச் சொல்லப்படும் பொருள்கள் எளிதிற் கிடைப்பன அல்ல; ஆகையால் நெடுங்காலம் உயிரோடு இருந்து பயன்பெற வேண்டும் நண்பர்கள் இவற்றை மனத்தின் கண் ஊன்றிப் பெறுதற்கரிய பெரும்பயனைப் பெறுவார்களாக! பின்னே சொல்லப்படும் பொருள் மிகவும் உன்னிற்கற்பால தொரு முழு மாணிக்கமாகும்; நன்றாக உற்றுணர்க என மூச்சுப் பழக்கம் பற்றி உரைக்கிறார். உயிர்க்காற்றுச் சிறிது நேரம் வலமூக்கில் ஓடிவரும்; அப்புறஞ் சிறிது நேரம் இடமூக்கில் ஓடி வரும். அப்புறம் ஒரு சிறிது நேரம் இரண்டு மூக்கிலும் ஓடி வரும். இங்ஙனம் மாறிமாறி ஓடி வருதலும், ஒப்ப ஓடி வருதலும் ஏன் என்று இதுவரையில் நீங்கள் ஆராய்ந்து பாராவிட்டாலும், இவ்வுண்மையை நாம் தெரிவித்த பிறகேனும் இஃது ஏதோ ஒரு பெரும்பயன் தருதற்காகவே இவ்வாறு ஓடி வருகின்றதென உங்கட்குத் தோன்ற வேண்டும் அல்லவா என அதனை ஆழமாக வினாவி விளக்கம் புரியும் அடிகள், அப்பயிற்சியை வாயளவில் அல்ல ஏட்டளவில் சொல்வாரல்லர்; தம் உடலையே ஆய்வுச் சாலையாகக் கொண்டு தாமே ஆய்வா ளராக இருந்து நுணுகி ஆராய்ந்து அந்நுட்பங்களை உணராரும் உணர்ந்து பயன் கொள்ளும் வகையில் உயிர் வளர்க்கும் நெறியை உலகுக்கு வழங்குகிறார் என்பதை உணரலாம். மாறுதல் : மாறுதலே உயிர் வாழ்க்கையாம்; அஃது இன்மையே மாய்வாம் என்னும் கொள்கையை உணர்த்தும் போது ஆய்வின் எளிமையும் அதன் முடிவின் அருமையும் தெளிவாகின்றதாம். உடலின் வலப்பாகத்தை ஞாயிற்று மண்டிலம் என்றும், இடப்பாகத்தைத் திங்கள் மண்டிலம் என்றும், வலமூக்கில் ஓடும் காற்று பகற்கலை என்றும் இடமூக்கில் ஓடும் காற்று மதிக்கலை என்றும், முன்னது வெப்புடையது பின்னது தட்புடையது என்றும், முன்னது விந்து என்றும், பின்னது நாதம் என்றும் (மின்னொளி, நிலவொளி) உடல் சிற்றுலகு என்றும், உடலுக்கு உறைவாம் நிலம் பேருலகு என்றும் விரித்துச் செல்லும் படிமான விளக்கம் அடிகளார் மூச்சுப் பழக்கச் சான்றாம். இரவின் பிற்பாகத்தில் கண்விழித் திருப்பார்க்கும், வேறு முயற்சிகள் செய்வார்க்கும் நோய் விலை கொடுத்து வாங்கினாற் போல வந்து சேரும் என்றும், விடியற் காலத்திற்கு முன்னமே கண் விழிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் அவ் வெண்ணத்தை விட்டு இருபத் தொன்பது நாழிகைக்குப் பின் துயில் ஒழிந்து எழுவதே சிறந்த நலத்தைத் தருவதாகும் என உணர வேண்டும் என்கிறார். வெப்பம் : உயிர் உடம்பில் நிலைபெறுதற்கு முதன்மை யான கருவி சூடே ஆகும் என்பதை நீராவி வண்டி, நீராவிக் கப்பல் ஆகியவை கொண்டு நிறுவுகிறார். உடம்பு நிலைபெறுவதற்குச் சூடு கருவியாவது போலவே, உடம்பு தோன்றுதற்கும், அழிதற்கும் கருவியாய் இருப்பதும் அதுவே என்கிறார். அடை கிடக்கும் கோழி, கருப்பையுள் இருக்கும் கரு, நிலத்துள் இட்டவித்து இவை வெப்பத்தால் உடம்பு கொள்வதை விளக்குகிறார். சுரம் எனப்படும் காய்ச்சல்நச்சுப்பொருள்களை அழித்து நலம் செய்வதை எடுத்துரைக்கிறார். காய்ச்சலைத் தணிக்க உணவு உட்கொள்வதை நிறுத்துவதே நன் மருத்துவம் என்றும், உடலில் நச்சுத்தன்மை சேராமல் தூயதாக்கல் அக்காய்ச்சல் வராமல் தடுக்கும் முற்காப்பு என்றும் விரிவாக விளக்குகிறார். வெயிலுக்கும் குளிருக்கும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் பறவைகளையும் விலங்குகளையும் எடுத்து விளக்கும் வகையில் இயற்கை இறை உயிர்களைப் பாதுகாக்கும் பேரருளை விளக்குகிறார். கதிரோன் வெண்ணிறத்துள் ஊதா, அவுரி, நீலம், பச்சை, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு என்னும் ஏழு நிறங்களும் அடங்கியிருத் தலை மெய்ப்பிக்க, இவ்வெழு வகைச் சாயங்களையும் அளவறிந்து சேர்த்துக் குழைத்தால் வெள்ளை நிறமே வரக்கண்டு தெளியலாம் என்கிறார். கதிரவன் ஏழு நிறங்களையே ஏழு குதிரை என மறைத்துக் கூறினார் என்கிறார். பகலவன் ஒளியும் அவ்வொளியில் அடங்கிய நிறங்களுமே உலகத்தில் உள்ள எல்லா உயிர்களின் உடம்பின் வளர்ச்சிக்கும் கொழுவிய நிறங்களுக்கும் ஏதுவாக இருக்கின்றமையை விளக்கு கிறார். நீர் : நீரைப் பற்றிப் பெரிதாக ஆராயும் அடிகளார், மழை நீரைப் பயன்படுத்தின் பிறநீரால் உண்டாகும் நோய்கள் இல்லாமல் வாழ முடியும் என்றும், அதனை மேற்கொள்வார் அரியர் எனினும் ஆய்வாளர் சொல்லுதல் கடமை என்றும் வலியுறுத்துகிறார். மழைநீர் நிலத்தில் சேர்வதன் முன்னே அதனைத் துப்புரவான வெள்ளைத் துணிகட்டிப் பிடித்துப் பெரிய மண்சாடியில்நிரப்பி வைத்துக்கொண்டு அதனுள்ளே தூசி செல்லாமல் அழுத்தமாக மூடி, அச்சாடியின் கீழே அமைந்த சிறிய நீர்த்தூம்பின் வழியாக அந்நீரை வருவித்துப் புழங்கி வரல் வேண்டும் என மழை நீரைப் பயன்படுத்தும் வழிமுறைகளைக் கூறுகிறார் அடிகளார். நம் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாததாய் உள்ள இரத்தம் அவ்வளவும் நீரேயாகும். இவ்விரத்தத்தை உண்டாக்குவது மட்டுமன்று இதனைத் தூய்மைப்படுத்துவதும் நீரேயாகும் என நீரின் சிறப்பைத் திரட்டி உரைக்கிறார் அடிகள். உடலுழைப்பு மிகுதியாய் உள்ளவர்கள் குளிர்ந்த நீரும் மூளையுழைப்பு மிகுதியாய்ச் செய்பவர்கள் வெந்நீரும் பருகுதல் வேண்டும் என்பதை விளக்குகிறார். ஒரு முறையில்அரைக்கிண்ணத்திற்கு மேல் நீர்பருகுதல் ஆகாது என்றும், அந்நீரையும் சிறிது சிறிதாக உறிஞ்சி வாய் நீரோடு கலந்து சுவை பார்த்துக் குடித்தல் வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். கதிரவன் எழும் முன்னும் மறைந்த பின்னும் நீராடுதல் நன்றென்று கூறுதல் உலக இயற்கையில் நிகழும் மாறுதல்களை அறியாமற் சொல்லுவதாகலின் ஏற்கத் தக்கதன்று என்கிறார். ஓடும் நீரில் மின்கலப்பு உண்டு ஆதலால் அந்நீரில் குளித்தலே நலமாம். கட்டுக்கிடை நீரில் குளித்தல் ஆகாது என்கிறார். உணவு : உணவு, பற்றி விரிவான ஆய்வு செய்யும் அடிகளார், அறிவியலார் பகுத்த வகையில் முதலுணா, கொழுப்புணா, இனிப்புணா, உப்புணா, நீருணா எனக் கூறுகிறார். இவை Protein, Fato, Corbo, - hydrates. salts. water என்பவற்றுக்கு அடிகளார் கொண்ட மொழியாக்கங்களாகும். அவ்வாறே Chlorids, Phosphate of lime, Vitamins என்பவற்றைப் பசுமஞ்சள், எரிகந்தச் சுண்ணம், உய்வனவு அல்லது உய்வுறை என மொழியாக்கம் செய்கின்றார். இவ்வகையால் அடிகளார் மொழியாக்கமாகச் செய்துள்ள அறிவியற் கலைச் சொற்கள் மிகப் பலவாம். மறைமலை அடிகளார் தொகுத்த வடசொல் தமிழகராதி, அறிவியற்கலைச் சொல் அகராதி என இருவகை அகராதிகளை உருவாக்கும் வகையில் சொல்லாக்கமும் மொழியாக்கமும் செய்துள்ளார் அடிகளார். உணவு உண்பது உடலைப் பாதுகாப்பதன்று. உண்ட உணவிலுள்ள சாறுகள் அத்தனையுஞ் செந்நீரிற் கலந்து உடம்பிற் சேருவதே அதனை பாதுகாப்பதாகும் என்றும் மருந்து அறியாமலேயே வெறும்பட்டினி கிடத்தலாலும், மலக்குடரை நாடோறு கழுவிவிடுதலாலும் குறிகளை நீராவியிற் காட்டி நன்றாய் வியர்க்க வைத்தலாலும் எத்துணைக் கடுமையான நோயும் விலகும்படி செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிறார். கடவுளால் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இயற்கை உணவுப் பொருள்கள் மரம் செடி கொடிகளின் பயனான இலை பூ காய் கனி விதை கிழங்கு முலானவை களேயாம். மக்களேயல்லாமல் அசையும் பொருள்களாகிய எல்லா உயிர்ப் பொருள்களுக்கும் இயற்கை உணவான அசையாப் பொருள்களாகிய பயிர்பச்சை களேயாம் என்பதை விரிவாக விளக்குகிறார். அசைந்து திரியும் உயிர்களில் ஒன்று மற்றொன்றைப் பிடித்துத் தின்ன முயலுங்கால் மெலியது தனதுயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, மிகவும் விரைந்தோடித் தப்பிப் பிழைப்பதனைக் கண்டு அறிகின்றோம் என ஒரு சான்று காட்டுகின்றார். கிறித்தவ மறையும் மக்களுக்கும் விலங்கு பறவை முதலிய உயிர்களுக்கும் மரம் செடி கொடி புற்பூண்டுகளை இறைவன் அருளியதாகக் கூறுவதை எடுத்துக் காட்டுகிறார். புற்பூண்டு மரஞ் செடி கொடிகள் அசைந்து திரியாவாய் நிற்றலும், அவற்றின் இலை பூ காய் கனி விதை முதலியவற்றை அசைந்து திரியும் உயிரிகள் தின்னவரும் போது அவை அவற்றோடு சண்டையிடக் காணாமையாலும் இயங்கும் உயிரிகளுக்கு இயங்கா உயிரிகள் உணவாகத் தக்கவை என்பதை உணரலாம் என்கிறார். ஊன் உணவின்றி, இயங்கும் உயிர்கள் எல்லாமும் வாழலாம். ஆனால் புற்பூண்டுகளும்அவற்றின் பயனும் இன்றிமற்றை எந்த உயிரும் உயிர் வாழல் முடியாது என்பதை விளக்கப்படுத்துகிறார். ஊன் உண்ணா உயிரிகளின் தூய்மை, வலிமை முதலிய வற்றையும் ஊன் உண்ணும் உயிரிகளின் தூய்மை இன்மை, வன்மை இன்மை முதலியவற்றையும், ஊன் உண்ணாதார் நெடிய வாழ்வு நலவாழ்வு ஆகியவற்றையும் பல்வேறு சான்று களால் விளக்குகின்றார். நோயிலா நெடுவாழ்வு : நோயில்லா நீண்ட வாழ்க்கை என்னும் கட்டுரை தனிநூலாம் தன்மையது. (214-332) மலக்குடல், சிறுநீர்ப்பை, வியர்வைத்துளை, மூச்சுப்பை என்னும் நான்கு கழிகால்களின் வாயிலாக உடம்பைத் தூய்மை செய்யும் செயன்முறைகளை ஒவ்வொருவரும் தாமே செய்து நலங்கொள்ளும் வகையில் விளக்கியுள்ளார். யாமெடுத்துக் காட்டும் முறைகளைத் தழுவி, அவற்றைக் கருத்தாய்ச் செய்வார்க்கு எத்தகைய மருந்தும் உட்கொளல் வேண்டப் படாது என உறுதி கூறுகின்றார். தாம் கண்டு தெளிந்த மருத்துவ ஆராய்ச்சிக் குறிப்புகள் பலவற்றை இப்பகுதியில் விளக்குகிறார். குளிர்காய்ச்சல், முறைக்காய்ச்சல், நச்சுக்காய்ச்சல் முதலிய வற்றுக்கு ஆட்பட்டவர்கள் மிகவும் கசப்பான நிலவேம்பை நறுக்கி உழக்குத் தண்ணீரில் இட்டு அரையாழாக்காகச் சுண்டக் காய்ச்சி வடித்துக் காலை மாலை அச்சாற்றைப் பருகிவரின் எத்தகைய காய்ச்சலும் நீங்கிவிடும் என்கிறார். தலையில் இருந்து அடிவரையில் வரும்ஒவ்வொரு நோய்களையும் தீர்க்கும் முறை காட்டுவாம் எனத் தொடங்கி கண், மூக்கு, வாய், செவி, கழுத்து, பிடர், நெஞ்சு, மூச்சுப்பை, வயிறு, குடல், விலா, சிறுநீர்ப்பை, விரை, தொடை, கால் ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்களை நீக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்து உடல் முழுதும் வரும் சொறி சிரங்கு, படை, கட்டி, ஆகியவற்றையும் உரைக்கிறார். மண் மருத்துவம், நீர்மருத்துவம், பச்சிலை மருத்துவம் என்பவற்றுடன் ஆங்கில மருத்துவ முறைகளையும் ஆங்காங்கே எடுத்துரைக்கிறார். மனநிலையும் நீண்ட வாழ்க்கையும் என்பதையும் பெருகவே பேசுகின்றார். (333 - 413) நோய் கொண்டார் ஒருவர் அந்நோய்த் துன்பத்திலேயே தமது மனத்தைச் செலுத்தச் செலுத்த அந்நோய் மிகுதிப் படுதலும், அதனை நினையாது இனிய இசைகளைக் கேட்டலிலும் சிறந்த நாடகக் காட்சிகளைக் காண்பதிலும் கவர்ச்சிமிக்க கதைகளைப் பயில்வதிலும் கருத்தை அவர் ஈடுபடுத்தப்படுத்த அந்நோய்த்துன்பம் விலகி நலம் உண்டாகும் என்பதைத் தெளிவிக்கிறார். மனநலம் : அழகுடையாரும், அழகிலார் எனச் சொல்லிப் பழித்து மனத்தே பதிவு கொண்டாராகில் அழகில்லாராகப் படிப்படியே மாறிப்போவர் என்றும், அழகில்லாரும், அழகுடையார் எனப் பாராட்டப் பெற்று அப்பதிவு மிக்காராயின் அழகுடையவர் ஆதலும் காணக் கூடியன ஆகலின் மனநிலைக்கும் உடற் பொலிவுக்கும் உரிய தொடர்பு புலப்படும் என்கிறார். தம்மைப்பற்றிக் குறைவாக எண்ணும் ஒருவருக்கு அறிவும் முயற்சியும் நீடு இனிது வாழ்தலும் இயலாது. அங்ஙனமே பிறரைப் பற்றிக் குறைவாக நினைக்கும் போதும் அவரது நினைவு அக்குறைபாடுகளுள் சிக்குண்டு மேல் நிலைக்குச் செல்ல மாட்டாது கீழ்க்கிடந்து அங்ஙனம் நினைப்பாரையே அழித்து விடுகின்றது என்று இருபாலும் தீமையாம் குறைவுறு நினைவைச் சுட்டுகிறார். கோள்நூல் : இது நல்லநாள், இது நல்ல வேளை, இது தீய நாள், இது தீய வேளை என்னும் கோள்நூல் போலியறிவும், அதன் வழித்தான பொய்ந்நம்பிக்கையும் ஒருவர்க்கு ஏறி விட்டால், அவர்வேறு வகையில் எத்துணைச் சிறந்த ஆராய்ச்சியுடைய வராயினும் கோள்நூற்பொய்ம்மை நன்குணர்ந்தவராயினும் அவரைவிட்டு அப்பொய்ந்நம்பிக்கை நீங்குவதே இல்லை என்னும் அடிகளார் அந்நம்பிக்கை உள்ளத்தில் நுழைய விடாமல் செய்தலே நன்றாகும் என்கிறார். ஐம்பதாண்டுகள் உடைய ஒருவர் கோள்நூல் பார்க்க, உம் மகன் இன்னான் இருந்தால் உங்களுக்கு ஆறு திங்களுள் இறப்பு நேரும், அவன் இறந்துவிட்டால் எழுபத்திரண்டு ஆண்டு வரையில் வாழலாம் என்று கேட்டவர் அவ்வாறே மகனைச் சாவச் செய்தார். அவரும் இரண்டு திங்களில் இறந்தும் போனார் என்றும் தாம் அறிந்த நிகழ்ச்சியைச் சுட்டும் அடிகளார், கோள் நூலிலும் கோள்நூலார் உரையிலும் வைக்கும் நம்பிக்கையினை விட்டொ ழித்தலே பெரிதும் வேண்டற்பாலதாகும் என்கிறார். நீள உயிர்வாழ்தலில் வேட்கை உடையவர் முதுமையைப் பற்றியும் சாவைப் பற்றியும் நிகழும் நினைவுகளையும் எண்ணங் களையும் அறவே விட்டொழித்தல் வேண்டும். இன்றியமையாது தெரிவிக்க வேண்டி இருந்தால் அல்லாமல் ஒருவர் தமது வாழ்நாள் இவ்வளவாயிற்றென்று தெரிவித்தலும் ஆகாது. அதனை நினைத்தலும் ஆகாது. அதனை யெண்ணி மனங்கலங்குதலும் ஆகாது என நீண்ட வாழ்வுக்கு வழி உரைக்கிறார். ஆராய்ச்சியின் நிறைவுரை தொன்மைக்குத் தொன்மையான மொழியும் புதுமைக்குப் புதுமையானதாகவும் திகழவேண்டும். அந்நிலையே உயிரோட்டமமைந்த ஆற்றின் போக்குப் போல என்றும் வளம் செய்வதாய் அமையும். எம் மொழியாயினும் தன் சொற்களைப் போற்றித் தூயதாக வைத்துக் கொள்வதுடன் புதுப்புதுக் கலைச் சொற்களையும் காலந்தோறும் துறைதோறும் பெருக்கிக் கொண்டு வருதல் வேண்டும். அதற்கு அறிவு வல்லார் இடையறவு இல்லாமல் தொடர்ந்து பாடாற்றி வருதல் வேண்டும். அயற்சொற்களை அப்படி அப்படியே எடுத்தாண்டு வருவது ஒரு மொழிக்கு ஆக்கமாகிவிடாது. முயற்சியுடைய மக்கள் அந்நெறியை விலக்கி வழிகாட்டுதல் வேண்டும். கலைச் சொல்லாக்கமோ மொழிபெயர்ப்போ செய்யுங் கால் தம்மொழியின் இயல்பொடு பொருந்தியதாகவே செய்தல் வேண்டும். ஒலிவகையாலும் வடிவ வகையாலும் மொழியியலை மாற்றி அயன்மொழித் தோற்றத்தை ஆக்கிவிடுதல் ஆகாது. இவை பொதுவகையாக மொழியியலில் அடிகளார் கொண்ட குறிக்கோள்கள். அறிவியல் ஆராய்ச்சி வகையில் அடிகளார், எத்துறைக்கும் தமிழ்மொழி ஈடு தருவதே என்பதைத் தம் நூல்களாலேயே மெய்ப்பித்துக் காட்டினார். அவ்வகையில், தம்மையே ஆய்வுக் களமாகக் கொண்டு ஆராய்ந்தார். தம்மைச் சார்ந்தாரையும் அவ்வகைக்குப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டார். அவ்வத் துறையில் ஈடுபட்ட ஆய்வாளர் செயற்பாடுகளையும் நூல்களையும் ஆழ்ந்து கற்று மெய்ம்மங்கள் ஆக்கினார். நடைமுறையொடு, கூடாத பொய்ம்மை கற்பனை புனைவு வகைகளைத் துணிந்து விலக்கினார். தம் அறிவுக்குச் சரியானது என்று தோன்றியதை எந்நிலையிலும் எச்சார்பும் கடந்த துணிவொடு எடுத்துரைத்தார். பிறர் ஆய்வைத் தம் ஆய்வாகக் கொள்ளலோ, பிறர் ஆய்வை அவர் பெயர் சுட்டாது மறைத்தலோ ஆய்வு நெறி ஆகாது என்பதைத் தம் ஆய்வுகளால் நிலை நாட்டினார். இவையெல்லாம் தம் செயற்பாட்டால் தமிழ் உலகுக்கு அடிகள் காட்டிய ஆராய்ச்சி நெறி முறைகள் ஆகும். 9. அடிகளார் சமய நோக்கு அடிகளார் சிவனியச் சார்பு : மறைமலையடிகளார் நாகப்பட்டினத்தை அடுத்த காடம் பாடியில் பிறந்தார். அவர் பிறந்த நாள் 15.7.1876. தந்தையார் சொக்கநாதர். தாயார் சின்னம்மையார். அடிகளாரின் பிள்ளைப் பெயர் வேதாசலம். குடி. வேளாண் குடி. இவையெல்லாம் அடிகளாரின் சிவனியச் சார்பைக் காட்டுவன. அடிகளார் இளந்தைப் பெயர் ஒன்று, முருகவேள். அது இதழ்களுக்கு என அடிகள் தாமே தமக்குச் சூட்டிக் கொண்ட பெயர். நீலலோசனி, பாற்கரஞானோதயம், திராவிட மந்திரி என்னும் இதழ்களில் இப்புனைபெயரால் கட்டுரைகள் வரைந்தார் அடிகள். முருகவேள் என்னும் பெயர் சிவனியச் சார்பாதல் வெளிப்படை. அடிகளாரின் இளந்தைப் பருவ வழிகாட்டிகளுள் ஒருவர் மதுரை நாயகம் என்பார். சிவனியப் பற்றில் தலைப்பட்டவர் மதுரை நாயகர். அவர்தம் சிவனியப் பற்றுமை சைவ சித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகரை நாகை வெளிப்பாளை யத்திற்குப் பல்கால் அழைத்துப் பொழிவு செய்ய வைத்தது. நாயகரின் சொற்பொழிவில் வெளிப்பட்ட ஒரு கருத்தை மறுத்து, சச்சனப்பத்திரிகா என்னும் கிழமை இதழ் எழுதியது. அவ்விதழின் கருத்தை மறுத்து, நாயகரின் உரை மெய்யுரை என்பதை நாகை நீலலோசனியில் அடிகள் முருகவேள் என்னும் பெயரால் எழுதினார். அக்கட்டுரையே நாயகர்க்கு அடிகளாரை அணுக்கர் ஆக்கியது. அதுவே அடிகளாரைச் சென்னைக்கு அழைத்தது. அதுவே அடிகளாரைத் துகளறு போதத்திற்கு உரை எழுதவும், அறிஞர் நல்ல சாமி என்பவரால் தொடங்கப்பட்ட சித்தாந்த தீபிகை (உண்மை விளக்கம்) என்னும் திங்கள் இதழுக்கு ஆசிரியராகவும் செய்வித்தது. அதில் திருமந்திரம், சிவஞான சித்தியார் தாயுமானவர் பாடல் ஆகியவற்றுக்கு உரை வரைய நேர்ந்தது. பின்னே சைவ சித்தாந்த நூல்களை முறையாகப் பாடங்கேட்க வேண்டும் என்னும் ஆர்வம் அடிகளுக்கு எழுந்த போது, நாயகரையே குருவராகக் கொள்ள வாய்ப்பாயிற்று. இவையெல்லாம் அடிகளாரின் சிவனியச் சார்பு விளக்குவன. அடிகளாரின் 22 ஆம் அகவையில், கொடிய நோய் ஒன்று வருத்தியது. அதனைத் தீர்த்தருளுமாறு திருவொற்றியூர் முருகர் மும்மணிக் கோவை இயற்றினார். இன்ப துன்ப நேர்ச்சிகளில் பெற்றோரைக் கூவிக் கூவி அழைத்த அம்மா, அம்மம்மா, அம்மோ, அன்னா, அஞ்ஞை, அப்பா, அப்பப்பா, அப்பப்போ, ஐயா, ஐயோ, ஐயையோ, அச்சா, அத்தா - இன்ன விளிகளை போல, உள்ளத்தே உணர்வால் உந்தியெழும் இறைமையுணர்வே இன்ப துன்பப் போதுகளில் பாடல்களாக வெளிப்படுதல் உலகறி செய்தி, அதனால் அடிகளார் பாடிய இந்நூல் அவர்தம் சிவனிய அழுத்தம் காட்டும். அடிகளார் ஞான சாகரம் (அறிவுக் கடல்) என்னும் இதழ் தொடங்கினார். அதில் மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் வெளியாயது. அதன் முதல் இதழிலேயே சைவம், சைவநிலை என்னும் கட்டுரைகள் வெளிப்பட்டன. அடிகளார், திருப் பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகள் முன்னிலையில் சைவ சித்தாந்த மகாசமாசம் என்னும் அமைப்பு ஒன்றைத் தோற்றுவித்தார். அதன் செயலாளராக இருந்து செழுமையான பணிகளைப் பல்லாண்டுகள் புரிந்தார். அதுவே இன்று சென்னையில் மயிலைப் பகுதியில் சைவ சித்தாந்தப் பெருமன்றமாகத் திகழ்கிறது. சிவஞானபோதம் முதலிய சிவனிய நூல்களில் காணப்படும் கருத்துக்களைத் தெள்ளிதின் விளக்கும் சைவ சித்தாந்த ஞான போதம் என்னும் நூலை அடிகள் வரைந்தார். அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மை. பழந்தமிழ்க் கொள்கையே சைவம், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா. தமிழர் மதம் என்னும் நூல்களையும் வரைந்தார். சிவனியச் சீர்மையும் செம்மையும் நோக்கிச் சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், வேளாளர் நாகரிகம், தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் முதலான நூல்களையும் கட்டுரைகளையும் வரைந்தார். சிவஞான போத ஆராய்ச்சி என்னும் நூலைத் தொடங்கி முற்றுவிக்காமல் நின்றது. நாடெல்லாம் சென்று அடிகள் செய்த பொழிவுகளுள் பெரும்பாலான சிவனியச் சார்பின. அவை எழுத்துருவிலும் வெளிப்பட்டன. அடிகளார் மக்கள் பெயர்கள் நீலாம்பிகை, திருஞான சம்பந்தன், மாணிக்கவாசகன், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி, திரிபுர சுந்தரி என்பனவாம். இப்பெயர்களும் இவர்களின் மக்கள் பெயர்களும் சிவனியப் பெயர்களாக இருத்தல் அடிகளின் உட்கிடையை விளக்கும். அடிகளார் பொன்னினும், மேலாகப் போற்றிய நூலகத்திற்கு மணிமொழி நூலகம் என்பது பெயர். டெடில் மெசின் (T.M.) அச்சகம் என்னும் பெயருக்கு உரிமம் பெற்றிருந்தும், அதனைத் திருமுருகன் அச்சகம் என்று அமைதி கண்டவர் அடிகள். அம்மை அம்பலவாணர் வழிபாட்டை உயிர்ப்பாகக் கொண்டு ஊன்றி நின்றவர் அடிகள். தாம் வாழிடத்து மேலிடத்தை அம்மை அம்பலவாணர் வழிபாட்டுத் திருமாடம் ஆக்கியவரும் அடிகள். இவ்வெல்லாம் அடிகளாரின் சைவச் சார்பினைச் சாற்றுவன. சமயக் காழ்ப்பர் நிலை : ஒரு சமயக் குடிவழியர் - பற்றாளர் - வழிபாட்டாளர், பிற சமயச் சார்வுக்கு இடம் தருவதில்லை. பிற சமய நூல்களைக் கற்றலும் கேட்டலும் கொள்ளார்; பிற சமயச் சால்பினை மேற்கொள்ளல் அரிது. கோழியைப் பாடும் வாயால் குஞ்சினைப் பாடுவேனோ அப்பனைப் பாடும் வாயால் சுப்பனைப் பாடுவேனோ என்று சிவ - முருக வழிபாட்டிலும் வேற்றுமை கண்டோர் களாலேயே, அறுவகைச் சமயங்கள் உருவாகின. தான் வழிபடும் இறைவன் பெயர் தவிர மற்றை இறைவன் பெயர், தன் காதில் விழுதலும் ஆகாது; பிற சமயக் கோயிலும் உருவும்கண்ணில் படுதலும் ஆகாது; அத்தெய்வப் படையலைக் கொள்ளலும் ஆகாது என்று முரட்டு வெறியராய் இருந்தாரும் உளர். உருவ வணக்கம் இழிந்த தென்றும், அதனைக் கொள்வார் அறிவிலார் என்றும் நாளெல்லாம் பழித்த சமயத்தரும், யாதொரு தெய்வம் உலகுக்கு மாதொரு பாகனை அன்றி என்று வீறு பேசியும், பொய்த் தேவு பிற எல்லாம்; எம்மதே மெய்த்தேவு என்று தருக்கியும் நின்றாரும் உளர். சமயச் சால்பர் அடிகள் : இவ்வாறு யாம் பிடித்ததே பிடி. கொண்டதே கொள்கை என்னாமல், பல்லபல சமயங்களையும் ஆய்ந்து நல்னவெல்லாம் நடைமுறைக்காவன என்று மேலேறி நின்ற சான்றோர்களும் உளர். அத்தகு சான்றோருள் ஒருவராக மறைமலையடிகளார் திகழ்ந்தார். கந்த கோட்டம், திருத்தணிகை, திருத்தில்லை என்றெல்லாம் திருக்கோயில் வழிபாட்டில் திளைத்த வள்ளலார் பெருமான், என் மார்க்கம் சன்மார்க்கம்; அதுவே உலகுக்கு நன்மார்க்கம் என்று, ஏறுதற்கு அரிய மலை முகட்டிலே ஏறி நின்று மாயா மணி விளக்கம் காட்டிய சீர்மையைச் சிந்தையில் கொண்ட மறைமலையடிகளால், பல்லவபுரத்தில் தாம் வாழ்ந்த திருமனையில், சமரச சன்மார்க்க நிலையம் என்னும் அமைப்புக் கண்டு ஆருயிர்ப் பணி செய்தமை சமயச் சார்பு கடந்து, சமயச் சார்பு மல்கி பெருந்தக்க நிலையாகும். அந்நிலையமே அடிகளார்க்குத் தனித் தமிழ் உணர்வு தோன்றிய பின்னர்ப் பொது நிலைக் கழகம் என்னும் பொருந்திய பெயர் கொண்டு அருந்திறல் செயல்கள் ஆற்றியது. காலச் சூழல் அடிகளாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர், பல் சமய ஆய்வாளர், பல் சமய ஊடகங் கண்டு அதிலே தோய்ந்து தோய்ந்து உரையும் பாட்டும் ஆக்கிய தோன்றல். சீர்திருத்தத் தொண்டிலே சிந்தை ஒன்றியவர், அந்நிலையிலேயே சீர்திருத்தமும் சிவனியச் சால்பும் நிரம்பியவர் தமிழ்க் காசு எனப் பெற்ற கா. சுப்பிரமணியனார். அக்கால நிலையிலே, முனைப்பான சீர்திருத்தத் தொண்டிலே ஈடுபட்டதுடன் சாதி சமயங்களை ஆய்ந்து அவற்றின் குறைகளை அஞ்சாமல் பரப்பி அரிமா எனக் கிளர்ந்தவர் தந்தை பெரியார். இராசா ராம் மோகனர், அன்னி பெசண்டு அம்மையார், விவேகானந்தர் இன்னோர் தொண்டுகளும் இயக்கமும் நாட்டிலே கிளர்ந்து பரவிய காலச் சூழல். இன்னவெல்லாம், அடிகளார் சமய நோக்கின் உள்ளீடுகளாகி உந்தியெழ வாய்த்தவை. கிறித்தவக் கல்லூரிப் பேராசிரிய நிலையும், அச்சமயப் பரப்பாளர் தொடர்பும் அடிகளுக்கு வாய்த்தமையும் கருதத் தக்கதாம். ஒழுங்கியல் : அடிகளார் எந்த ஒன்றிலும் ஓர் ஒழுங்கு முறையர். நாள்வழிக் கடமைகள் ஆகட்டும், கூட்ட நிகழ்ச்சிகள் ஆகட்டும் - எல்லாம், திட்டப்படுத்திய ஒழுங்கில் இயலச் செய்பவர். இன்ன செயலில் அடிகளார் ஈடுபட்டுள்ளார் என்றால், அது இன்ன பொழுது, என்று கண்டு கொள்ளத் தக்க கால ஒழுங்கினர். இன்ன பொருள் இன்ன இடத்தே தான் இருக்க வேண்டும் என்று திட்டங் கொண்ட இட ஒழுங்கினர். விளக்குத் துடைத்தலா, புத்தகம் தூசி துடைத்தலா, எழுத்துப் பணி புரிதலா எல்லாமும் நெறிப்பட இயற்றும் செயல் ஒழுங்கினர். நுண்மாண் நுழைபுலத்தால் எதனையும் எண்ணி, எண்ணத்தின் வரைபடம் உள்ளத் தோவியமாய்த் திகழ, ஆர அமர எழுத்தோவியமாகப் படைத்து, கலப்பும் பிழையும் வாரா வண்ணம் கவினுற அச்சிட்டு எல்லாமும் எப்பொழுதும் கலைமணம் கமழும் வகையில் செய் நேர்த்திச் செம்மலாய்த் திகழ்ந்தவர் அடிகள். இவற்றின் ஒட்டு மொத்தப் பார்வையும் அவர்தம் சமய நோக்குக்கு வைப்புகளாகத் திகழ்ந்தனவாம். அடிகளார் சமய நோக்கு இன்னது எனத் திட்டப்படுத்த வாய்க்கும் சான்றுகள் பலப்பல. நாட்குறிப்பு, கடிதம், நூல், வாழ்வு என்னும் நான்குமாம். அடிகளார் தொடர்ந்து நாட்குறிப்பு வரைந்தவர். அவர் தம் சமயநோக்கு எத்தகையது என்பதைக் கையில் கனியெனக் காட்டுவது அக்குறிப்பு. கால வரிசையில் அவற்றைக் காணும் போது அவர் தம் சமய நோக்கு விரிந்த வகையும் விழுப்பமும் புலப்படுகின்றன. 5-1-1898 சித்தியாரின் ஆறாம் சூத்திரம் மனப்பாடம் செய்தேன். 7-1-1898 பகவத் கீதையைத் தமிழ்ப் பாடல் வடிவில் மொழி பெயர்க்கத் தொடங்கினேன். 23-1-1898 குலாம் காதிறு நாவலரின் சகோதரர்க்குச் சிலப்பதிகாரப் பாடம் நடத்தினேன். 24-4-1898 தமிழ்ச் சைவ சித்தாந்த சபை தொடங்குவது குறித்துக் கலந்து பேசினோம். 7-1-1899 குர் ஆனில் கூறப்பட்டிருக்கும் இசுலாமிய மதக் கருத்துக் களை இந்துதானி முன்ஷி வாயிலாக அறிந்து கொண்டேன். 13-1-1899 கி.பி. 986 - இல் வைணவ சமயப் பெரியார் இராமாநுச ஆசாரியார் பிறந்தார். 3-3-1900 இராமகிருஷ்ணர் வரலாற்று நூலை இன்று முழுவதும் படித்தேன். 3-12-1900 வேதமோக்த சைவ சித்தாந்த சபையைத் தொடங்குவதற் குரிய அறிக்கையைத் தயாரித்தேன். 25-3-1901 உபநிடதங்கள் வாடகை நூலகத்தில் இருந்து பெற்றேன். 22-12-1901 விவேகானந்தரின் பக்தியோகம், கர்மயோக்ம, ஆத்மா ஆகிய நூல்களை வாங்கினேன். 2-2-1903 சிவனடியார் திருக்கூட்டச் சைவப் பிரச்சார காராக இருக்க இணங்கினேன் 24-6-1903 சைவ சமயமே சமயம் என்று உரையாற்றினேன். 5-6-1905 பாலகங்காதர திலகரின், வேதம் பற்றிய நூலைப் படிக்கத் தொடங்கினேன். 13-6-1905 விவேகானந்தரின் ஞானயோகம் வாங்கிப் பயின்றேன். நுண்ணியவையாகவும் அருமையாகவும் இருந்தன. 2-12-1905 ஈசோப நிடதத்திற்குத் தமிழ் விளக்கவுரை எழுதி முடித்தேன். 15-4-1906 இவ்வாண்டில் நான் செய்த அருஞ்செயல் சைவ சித்தாந்த மாநாட்டைக் கூட்டியதேயாம். 22-12-1906 பிராணாயாமம் பற்றிய உரையை எழுதினேன். 27-1-1907 தவத்திரு. இராசானந்த சுவாமிகள் எனக்கு நிட்டை அருளினார். 27-11-1907 சிவஞான போதத்துக்கு உரை எழுதத் தத்துவ நூல்கள் பல வாங்கி வருகிறேன். 10-8-1909 ஈசனும் உமையுமே என்ற கருத்தில் நம்பிக்கை இழந்து விட்டேன். கடவுளிடம் வேண்டுவதன் மூலம் மாற்றப்பட முடியாத நிலைபேறுடைய விதி பேரண்டத்தில் உள்ளது. மேன்மை பெற்ற ஆன்மாக்களான கடவுளரால் மனிதர்க்கு ஏதேனும் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்ற வில்லை. அனைத்தும் நம் முயற்சியையே சார்ந்துள்ளது. 14-1-1910 வேதாந்த சூத்திரங்களுக்குரிய நீலகண்ட பாடியத்தைக் கற்கத் தொடங்கினேன். மொழி பெயர்ப்பாளர் செந்திநாத அய்யர்க்குத் தமிழ்ச் சைவர் கடப்பாடு உடையர். 6-8-1910 விவேகானந்தரின் கர்ம யோகம் என்னும் அருமையான நூலைப் படித்தேன். இரண்டொரு கருத்துக்கள் தவிர விவேகானந்தரின் பொழிவுகள் நெஞ்சை உருக்கும் தன்மையவாய்ச் சைவ சித்தாந்தக் கருத்துக்களுடன் ஒத்துள்ளன. 31-1-1911 மார்ச்சு 31 உடன் பணிக்காலம் முடியும் என்ற செய்தி, துறவறம் பெறலாம் என்ற எண்ண முடையவனாக இருப்பினும் சிறிது கலக்கத்தைத் தந்தது. 25-6-1911 திருக்கழுக்குன்றப் பூசாரிகள் சொல்வது போல் கழுகுகள் காசியில் இருந்து வரவில்லை. அருகில் இருக்கும் குன்று களில் இருந்தே வருகின்றன. அவை பழக்கப் படுத்தப் பட்டவை என்று எண்ணுகிறேன். 27-8-1911 துறவிக்குரிய துவாராடை புனைந்தேன். 24-12-1911 சமரச சன்மார்க்க நிலையம் ஏற்படுத்தினேன். 2-2-1912 இராமலிங்க அடிகள் சபையில் (வடலூரில்) சன்மார்க்கம் பற்றிப் பேசினேன். அடிகள் ஏற்படுத்திய முறைகளையே மீறிச் சடங்குகளை வேண்டுமென்றே சில வைதிகர்கள் தந்நலத்துக்காக நுழைத்தனர் என்று கடிந்து பேசினேன். 26-3-1912 விவேக பாநுவில் என்னை மறைமுகமாகக் கண்டித்து எழுதிய ஒருவருக்கு மறுமொழியாகச் சாதி வேறுபாடு களைச் சாடிக் கட்டுரை எழுதி வருகிறேன். சாதி முறையை அழித்து மனிதரிடையே சமன்மை கொண்டு வர வேண்டும் என்பதே என் விழைவு. என் எளிய முயற்சிகளுக்கு ஈசன் அருளட்டும். 3-4-1912 போலிச் சைவரும் சாதி வேறுபாடும் என்னும் கட்டுரை எழுதி முடித்தேன். 24-1-1913 மேட்டுக்குப்பம் சென்றேன். இராமலிங்க அடிகள் முன்னாளில் அமர்ந்த புனித அரங்குக்குச் சென்றதும் உளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகிற்று. என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன். 16-4-1913 கல்கத்தாவில், சாங்கியமும் சித்தாந்தமும் என்னும் பொருள் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினேன். 29-3-1914 வடமொழியில் உபநிடதங்களைக் கற்கத் தொடங் கினேன். இசாவசியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். 4-5-1914 பொள்ளாச்சி தாசில்தார் நெல்லையப்ப பிள்ளைக்குச் சைவ சித்தாந்தம் தெரியும் என்றாலும், பிரம்ம ஞான சபையில் அதிக ஆர்வம் கொண்டு வீணாக அதனை நம்பி வருகிறார். 13-9-1914 திராவிடன் இதழின் நேற்றைய பதிப்பில், சிறு தேவதைகட்கு உயிர்ப்பலியிடலாமா? என்னும் என் கட்டுரை வெளிவந்தது. 3-4-1918 (ஐரோப்பியப் போர்ப் பேரழிவு நோக்கம்) கிறித்துவின் சமயம் முழுத் தோல்வியடைந்துள்ளது என்றாகின்றது. 3-3-1919 சைவர் அசைவர் என்ற பிரிவைத் தவிர வேறு பிரிவுகள் கூடா என்று எண்ணுகிறேன். மரக் கறி உண்போரின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும். 3-9-1921 பஞ்சமர்க்கும் பிறசாதி இந்துக்களுக்கும் இடையே நிலவும் பகைமையும் மலபார் மாப்பிள்ளைமாரின் சீற்றமும் வருந்தற்குரியன. 24-12-1921 யாழ்ப்பாணத்தில் கைம்பெண்களுக்கு எளிதில் திருமணம் நடக்கிறது. அவர்கள் திருமண முறிவு பெற்று மறுமணம் செய்து கொள்ளலாம். இது ஒரு நல்ல முறை. பெண்கள் விடுதலையாய் உள்ளனர். 5-6-1924 சைவம் வைணவம் ஆகியவற்றுக்கு இடையேயான அடிப்படை வேறுபாடுகளை விளக்கி எழுதினேன். 27-4-1926 கல்வியும் சமயப் பற்றும் தூய்மையும் உடைய பஞ்சம நண்பர் சிலர் என்னைக் காண வந்தனர். இரவு 8.30 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். 2-9-1927 மயிலாப்பூர் சிவன் கோயிலில் என் மகளின் திருமணம் நடந்தது. சாதி வேறுபாடு பாராட்டாமல் அனைவருக்கும் விருந்திடப்பட்டது. 5-6-1928 திரு. இராமசாமி நாயக்கரும் அவர்தம் கட்சி யினரும் செய்துவரும் கடவுள் மறுப்புப் பிரசாரத் தைத் தடுப்பது குறித்துக் கலந்துரையாடினோம். 22-7-1928 இராயப்பேட்டை பால பக்த சன சபையில் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் பொருள் பற்றிப் பேசுகையில், இராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கோட்பாடுகளையும் அவர் தம் சுயமரியாதை இயக்கத்தின் குறும்புகளையும் வன்மையாகக் கடிந்து கூறினேன். 4-1-1932 சாதியில் உழலும், இந்திய மக்களுக்காகக் காந்தியடிகள் அடிக்கடி சிறை செல்வதும் தியாகம் பல புரிவதும் தேவையில்லை. மூட நம்பிக்கை, பார்ப்பன வழிபாடு முதலானவற்றில் உழன்று சிதறுண்டு கிடக்கும் இந்திய மக்களுக்குத் தன்னாட்சிக்குரிய தகுதி இல்லை. 5-12-1947 சேர்ந்து வாழ விருப்ப மில்லாமல் இந்துக்களும் இசுலாமியரும் வடநாட்டிலே ஒருவர் ஒருவரைக் கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்தியர்க்கு நல்லறிவையும் அன்புணர்வையும் ஈசன் என்றே அருள்வானோ? இக்குறிப்புகளால் அடிகளாரின் பரந்துபட்ட பார்வையும் முற்போக்கான எண்ணங்களும் கடவுள் மறுப்புக் கொள்கையை ஒப்பாக் கடுமையும் புலப்படுகின்றன. சாதி வேற்றுமை ஒழிப்பு, பெண் விடுதலை, கைம்மை மணம், கண்மூடித் தனத்தைக் கருதாமை என்பன வெல்லாம் அடிகளாரின் உட்கிடையில் இருந்தமை வெளிப்படுகின்றன. நாட்குறிப்பில் குறிப்பாக உள்ள இச்செய்திகள் நூல்களில் விரிவாக இடம் பெற்றன. இதனாலேயே அடிகள் சைவம் வைணவம் சமணம் புத்தம், கிறித்தவம், இசுலாமியம் என்னும் பல்வேறு சமயங்களையும் ஆய்ந்த பேரறிஞர் என்கிறார் அரசு. - (ம.அ. வரலாறு 128) அடிகளார் அன்பர்களுக்கு வரைந்த கடிதங்களிலும் இத்தகு குறிப்புகள் இடம் பெற்றது உண்டு. சான்றாகக் காண்க. 6.8.43 தாங்கள் எல்லா நலங்களுடனும் இனிது நீடு வாழ நம் நாகூர் ஆண்டவரும் அருள் செய்வாராக. 19.1242 கோடி கோடியாக ஊரார் கல்வி வளர்ச்சிக் கென்று தந்த பொருளை வைப்பாட்டி மார்க்கும் தாசி வேசிகட்கும் கொலை வழக்கு கட்கும் வாரி இறைத்துக் கொண்டு, கல்விக்கும் மற்றோர்க்கும் நூல் எழுதுவார்க்கும் ஏதோருதவியும் செய்யாத மடாதிபதிகளாகிய துறவி களைப் பெருத்த அவமானமாகக் கருதுவாரும் எவரும் இல்லையே. எல்லாரும் அவர் காலிற் போய் விழுந்து அவர் வீசும் எச்சிற் சோற்றையுண்டு அவரைப் புகழ்ந்து பாடியும் வருகின்றார்களே. ஈதன்றோ கடியத் தக்க பேரவமானச் செயல். ஒழுங்கான முறையில் மனைவி யோடிருந்து சிவத் தொண்டு செய்யும் முறையே ஒழுங்கான துறவு நிலையாகும். இன்னவாறான கடிதச் செய்திகள் அடிகளாரின் சமயச் சால்பையும் சீர்திருத்த நோக்கையும் மெய்த்துறவையும் சுட்டு வனவாம். சைவ சமயம் வடநாட்டில் இருந்து தென்னாடு வந்தது என்றும், வடமொழி வேத நூல்களில் இருந்து, தென்மொழிக்கு வந்தது என்றும் கூறுவார் இருந்தனர். அதன் உண்மையை ஆராய்ந்த அடிகள். ஆரியச் சிறு தெய்வ நூல்கள் சைவ சமய நூல்கள் அன்று என்கிறார். மேலும் சைவ சமயக் கொல்லா விரதம், சிவ அடை யாளம், சிவமந்திரம், சிவமூர்த்தம் (சிற்றம்பலம், கூடலாலவாய்) திருக்கோயில், மும்மல இலக்கணம், தத்துவம், உயிர்ப்பாகுபாடு இன்னவை இருக்கு (வேத) நூலில் எட்டுணையும் இல்லை என்கிறார் (உரைமணிக்கோவை - சைவ சமயத்தின் நெருக்கடியான நிலை 147) இறை, உயிர், தளை, என்னும் முப்பொருள் கொள்கைகளும் தமிழ் வழியவே என்பதைத் தொல்காப்பியம் கொண்டு நிறுவுகிறார் அடிகளார். வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும், என்பதால் இறையுண்மையையும், ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே என்பதால் உயிருண்மையையும், நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்பதால் உலகு உண்மையையும் ஆசிரியர் தொல்காப்பிய னார் உரைத்தார் என்பதைக் குறிப்பிட்டுச் சிவனிய நெறி தமிழ் நெறியே என்பதை மெய்ப்பிக்கிறார். (பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்) இனிக் கடவுள் நிலை என்பது எது என்பதையும் அடிகளார் சுட்டுகிறார். 1. உலகோர் அனைவரும் கடவுள் ஒருவர் உண்டு என்னும் கொள்கையர். 2. உடல் உலகு உலகப் பொருள்கள் ஆகியவற்றை உண் டாக்கிய ஒன்று உண்டு என்னும் கொள்கையர். 3. உயர்ந்த படைப்பாளியைக் கண்டு மகிழக் கருதுவார் போலக் கடவுளைக் காணும் வேட்கையினராக உள்ளனர். 4. கடவுளை வணங்குவோருள் அச்சத்தால் வணங்கு வோர், அன்பால் வணங்குவோர் என இருதிறத்தார். 5. அழியாப் பேரின் பத்தில் இருத்தவே, இறையை வணங்கக் கற்பித்தனர். 6 (அ) சிவபெருமானை அன்றிச் சிற்றுயிர் வடிவங்களைச் செய்து வழிபாடு செய்தல் பெரிதும் குற்றமாகும். (ஆ) அரசனை வணங்காமல் அவனால் ஒறுக்கப்பட்ட குற்றவாளிகளை வணங்குவது போன்றது சிறு தெய்வ வழிபாடாகும். (இ) அதற்குப் பலியிடுவது, தம்மில் வலிமை குறைந்தவர் களைக் கொள்ளையிட்டு, அரசனால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை அரசனாகக் கருதிப் படைத்து அரசன் பகையைத் தேடிக் கொள்வது போன்றதாகும். (ஈ) சைவராய்ப் பிறந்தார் சிறுதெய்வ வணக்கத்தையும் உயிர்ப்பலியையும் விடுத்துப், பிறரும் விடுக்கும் பணி செய்வாராக என்பவற்றை விளக்கி வரைகிறார் - அறிவுரைக் கொத்து; கடவுள் நிலை. கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்பதையும் வலியுறுத்தி எழுதினார் அடிகள்: உயிர்ப் பிறவி நோக்கு, அறியாமை நீக்கமும் அறிவுப் பேறு அடைதலுமாம். தவம் என்பது உயர்ந்த பொருளில் நமது கருத்தை ஒருமுகப் படுத்தி உறைத்து நிற்றல். கடவுள் என்பது உலகும் உயிரும் கடந்து நிற்பது. அது இடம் காலம் பொருட்டன்மை கடந்து நிற்பதுமாம். என்பவற்றையும் விரிவுற விளக்கும் அடிகள். விலங்கின் புணர்ச்சியைக் கண்டு வரம்பு கடந்து காமங் கொண்ட ஓரிழிஞனால் வடமொழியில் கட்டப்பட்ட கதையே யானை வடிவில் பிள்ளையார் பிறந்தார் என்னும் கதை என்று கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகளைத் துணிவுடன் கண்டிக்கிறார். இயற்கையொடு பொருந்திய புனைவே கதைநூலிலும் வேண்டும் என்பவர் அடிகள். சாகுந்தல நாடக ஆய்வால் வெளிப்படுத்துகிறார் : இயற்கைக்கு முழுமாறான நிகழ்ச்சி களை ஆசிரியன் இந் நாடகக் கதை நிகழ்ச்சியின் நடுவே புகுத்தியிருப்பது இதனைப் பயில்வார்க்கு உண்டாம் இன்ப உணர்வினைச் சிதைப்பதாயிருக்கின்றது. சகுந்தலை துசியந்த மன்னனை முறையில் மணந்து கருக் கொண்டிருக்கும் செய்தியினை வானின்கட் டோன்றிய ஒரு தெய்வ ஒலி, அவள் தந்தை காசிபருக்கு அறிவித்த தென்னும் புனைந்துரை, பயில்வார்க்கு மகிழ்ச்சி தருவதாய் இல்லை. அவருடன் தோழிமார் வாயிலாகவே அச்செய்தி அவரது செவிக்கு எட்டியிருக்க வேண்டும். இச்சிறு நிகழ்ச்சிக்கு ஒரு தெய்வ ஒலியினைக் கொணர்ந்து மாட்டியது நாகரிக அறிவின்பாற் பட்டதாய் இல்லை என்கிறார். இத்தகைய நோக்கினராகிய அடிகளார் சிவனியப் புராணங்களையும் ஆழமாக ஆய்ந்து கருத்துக் கூறுகிறார் : புராணங்கள் என்பன, உயர்ந்த அறிவில்லாப் பொதுமக்கட்கு (இறைவன் வரம்பிலா ஆற்றலையும் அடியாரைக் காக்கும் அருட்டிறங்களையும்) உணர்த்துதல் வேண்டி இரக்கமுள்ள சான்றோரால் கட்டி வைக்கப்பட்ட பழைய கதைகளையுடையன வாகும் (உரைமணிக் கோவை 147) பின்னே முழுமுதற் கடவுளை மக்கள் நிலைக்குத் தாழ்த்தியும் தாம் வணங்கத் துவங்கிய மக்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியும் கடவுள் நிலைக்கு மாறான பல கட்டுக் கதைகளைக் காலங்கள் தோறும் புதிய புதியவாய் உண்டாக்கி அவைகளையும் புராணங்கள் என்னும் பெயரால் வழங்க விட்டனர் என்கிறார் (மேற்படி 148) வீரபத்திரரும் பிட்சாடணரும் இறைவன் உருவினர் அல்லர் என்கிறார். கந்தபுராணத்திலும் பரிபாடலிலும் காணப்படும் முருகப் பெருமானைப் பற்றிய கதை முருகப் பெருமான் பற்றியதன்று; ஒரு தமிழ் மன்னன் மற்றொரு தமிழ் மன்னனைக் கொன்ற கதையாகும் என்கிறார் (மறைமலையடிகள் அரசு 131-2) அம்மி மிதித்தல் அருந்ததி காட்டல் போன்றவை இடைச்செருகல் என ஒதுக்குகிறார். பெரியபுராணத்தையும் ஆய்கின்றார் அடிகள் : 1. திருமுகப் பாசுரம் பெற்றவர் சுந்தரர் காலத்தில் இருந்த சேரமான் பெருமாள் நாயனார் அல்லர். 2. பலகை விடுத்தது திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு அன்று. 3. சுந்தரர்க்கும் பரவையார்க்கும் சங்கிலியார்க்கும் நடந்த திருமணங்கள் கயிலாயப் பூங்காவில் கண்ட காட்சியின் விளைவு என்பது பொருந்தாது. 4. பெரிய புராணத்தில் பல இடைச் செருகல்கள் உண்டு என்பவை அவை (மேற்படி 130) இறைமை : கடவுள் ஒருவரே என்பதும், அவர் எவ்வாற்றானும் ஊனுடல் தாங்கி மனிதராகப் பிறவார் என்பதும் அடிகளார் கண்ட முடிந்த முடிவாகும். (மறைமலையடிகள் வரலாறு, 649) காலைக் கதிர் முருகு; மாலைக் கதிர் சிவம் எனவும் காண்கிறார் (தமிழர் மதம்). உயிரியல் : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பெருநெறியா ளராகிய அடிகள் தம் நூல்கள் உரைகளிலும் பயில வழங்கியுள்ள சாதி வேறுபாட்டு ஒழிப்பு, சாதி வேறுபாட்டுத் தீமை என்பவற்றைத் தொகுத்துப் பார்ப்பின் அதுவே ஒரு பெரு நூலாகும் அளவு விரிவினதாம். சாதிப் பிரிவுக் கேடு காதற் காமம் காமத்துச் சிறந்தது என்னும் தொல்காப்பிய வாழ்வியல் வாய்மையை விளக்கும் அடிகள், இக்காதல் மாட்சி இந்நாள் இயல்கின்றதா? இல்லை! இல்லை! சிறிதுமே இல்லை! என்று விளக்குகிறார் : சாதி வேற்றுமை என்னும் தூக்குக் கயிறானது காதல் அன்பின் கழுத்தை இறுக்கி விட்டது. காதல் அன்பிற் சிறந்து மறுவற்ற மதிபோல் விளங்கத் தக்கவரான நம் பெண்மணிகளின் கற்பொழுக்கத்தை நிலைகுலைத்து அதனைப் பழிபாவங்களால் மூடிவிட்டது. எந்தப் பெண்மகளாவது தான் காதலித்த இளைஞனை மணங்கூட இடம் பெறுகின்றனளா? எள்ளளவும் இல்லையே ஏன்? ஒரு சாதிக்குள்ளேதான், ஒருபது வீடுகளேயுள்ள ஓர் இனத்திலேதான் அவள் ஒருவனை மணக்க வேண்டும். அவள் கயல்மீனை ஒத்த கண்ணழகியாய் இருந்தால் என்ன! கண் குருடான ஒருவனைத் தவிர வேறு மணமகன் தன் இனத்தில் கிடைத்திலனாயின் அவள் அவனையே தான் மணந்து தீரல் வேண்டும். அவள் முத்துக் கோத்தாலன்ன பல்லழகியாய் இருந்தால் என்ன! தன் பாழும் இனத்தில் ஒரு பொக்கை வாய்க் கிழவனைத் தவிர வேறு மணமகன் கிடைத்திலனாயின் அவள் அவனையே தான் மணந்து தீரல் வேண்டும். அவள் பலகலை கற்றுக் கல்வி அறிவிலும் இசைபாடுவதிலும் நுண்ணறிவிலும் சிவநேய அடியார் நேயங்களிலும் சிறந்த கட்டழகியாய் இருந்தால் என்ன! இறுமாப்பே குடிகொண்ட தன் சிறுமாக் குடியிற் கல்வியிருந்த மூலையே கண்டறியாதவனும் பாட்டுப்பாட வாயைத் திறந்தால் ஓட்டமாய் வண்ணானை வருவிப்பானும் அறிவை ஓட்டிவிட்ட வெறுமூளையுடையானும், கறுப்பண்ணன் மதுரைவீரன் மாரியம்மன் முதலான வெறுக்கத்தக்க பேய்கட்கு, ஊனும் கள்ளும் படைத்துக் குடித்து வெறிப்பானுமாகிய ஒருவனைத் தவிர வேறுமணமகன் கிடைத்திலனாயின் அவள் தன் சாதியை விட்டு வேறு சாதியிற் கலக்கலாகாமையின் அக்கல்லாக் கயவனையே கணவனாகக் கொள்ளல் வேண்டும். ஆ! பொருளற்ற இச் சாதி வேற்றுமைக் கொடுமையால் நம் அருமைப் பெண்மணிகள் படுந்துயர் மலையிலும் பெரிதோ! அன்றி ஞாலத்திலும் பெரிதோ! இவ்வளவுதான் என்று கூறல் எம் ஒரு நாவால் இயலாது என்கிறார் (பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (21 - 23) எல்லா மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளே யாதலால் அவரெல்லாரும் உடன்பிறப்புரிமை பாராட்டி எல்லாவற்றாலும் ஒருங்கு அளவளாவுதலே நன்றென்று ஏசுநாதரும் மகமது நபியும் கூறிய அறிவுரைகளைக் கேட்டு மேல்நாட்டு மக்களெல்லாரும் ஏதொரு வேறுபாடுமின்றி ஒன்றுபட்டு ஒழுகி உலகிற் சீரும் சிறப்பும் எய்திவருதலைக் கண்கூடாகக் கண்டு வைத்தும் நம் தெய்வ ஆசிரியர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று முடித்துக் கூறிய அறவுரையினை நாம் கடைப்பிடியாது வாழ்நாள் எல்லையளவும் சாதியிறுமாப்புப் பேச்சைப் பேசிக் கூற்றுவனுக்கு இரையாய் ஒழிதல் பிற நாட்ட வராற் பெரிதும் இழித்துரைக்கப்படுகின்றதன்றோ என்று பிற சமயங்களோடு ஒப்பிட்டு உரைக்கிறார் (மேற்படி 32) ஒருவனுக்கு ஒரு பொல்லாத நோய் வந்தால் அதனை நீக்கலுறுவோன் அந்நோயை உண்டாக்கின மூலத்தை அறிந்தாலன்றி அவன் அதனை முற்றும் நீக்கமாட்டுவன் அல்லன். ஒரு நோயின் மூலத்தை அறிந்து அதனை அடியோடு களைந்த அளவானே அந்நோய் முற்றும் ஒழிந்து போம். அதுபோலச் சாதி வேற்றுமைகளை உண்டாக்கிய மூலங் களையும் நன்கு ஆய்ந்து கண்டு பின்னரவ் வேற்றுமைகளை ஒழித்தலே இன்றியமையாத செயற்பாலதாகும். (சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், 77) என்கிறார். பலகுடிக் கலப்பு இல்லாமல் ஒரு குடியிலேயே கொண்டு கொடுத்தலால் உண்டாகும் தீராக் கேடுகளையும் தெளிவாக உரைக்கின்றார் : புதுநீர் வரத்தின்றிப் பழைய கட்டுக்கிடைத் தண்ணீரேயுள்ள ஒரு குளம் நாற்றமெடுத்து நோய்ப் புழுக்களை உண்டாக்கி யார்க்கும் பயன்படாமல் வரவர வற்றி வறண்டு முடிவில் நீரற்றுப் போதல் போல அகல உள்ள குடிகளில் அறிஞராய் வலியராய் நல்லவராய்ப் பிறந்தார் தம் புதிய இரத்தமானது தமது பழங்குடிப் பிறந்தார்தம் உடம்புகளில் வந்து கலத்தற்கு இடம் கொடாத போலிச் சைவக் குடும்பத்தினரும் தமது வலிவிழந்து பழைய இரத்தம் கெட்டு அகத்தும் புறத்தும் நோய்களுக்கு இரையாகி வற்றி வறண்டு தாமும் இருந்த இடம் தெரியாமல்சில காலத்தில் மாய்ந்து போகின்றனர் என்கிறார். கடுஞ்சாதிப்பற்றால் விளையும் கொடும்பாடுகளை மூலங்கண்டு உரைக்கும் முடிவு ஈதாகும் (மேற்படி 81-82) மேலும், மேற்சாதியார் எனக் கூறிக் கொள்ளும் ஓ! இரக்கமற்ற இந்து மக்களே! நீங்கள் (உங்களுக்கு ஒப்பாகிய மக்களை) ஆடு மாடு கழுதை குதிரை பன்றி நாய் முதலான விலங்கினங்களினும் கடைப்பட்டவராக நடத்தியும், அவர்களுக்கு அரை வயிற்றுக் கூழுணவு கூடக் கிடைக்காமல் செய்தும், அவர்களில் ஆண்மக்களாயினவர் கோவணத்திற்கு மேல் ஒரு சிறு கந்தைத் துணி கூட உடுக்கவிடாமலும், அவர்களிற் பெண் மக்களாயினவர் தமது மார்பினை மறைத்து மேலாடை உடுப்பதற்குங் கூட மனம் பொறாமற் சினந்தும், அவர்கள் தூய்மையாய் இருக்கக் கல்வியறிவு தானும் புகட்டாமலும் நும்மோடொப்ப இறைவனாற் படைக்கப்பட்ட அம்மக்களைப் பெருந்துன்பத்திலும் அறியாமையிலும் இருத்தி, அவர்கள்பால் எல்லா வகையான வேலைகளையும் வாங்கி வந்தீர்கள். நுங்களுடைய அவ்வேழை மக்கட்கு உதவிபுரிதற் பொருட்டு அருட்கடலாகிய ஆண்டவன் ஆங்கில நன்மக்களையும் அவர் வழியே கிறித்துவக் குருமார்களையும் இந்நாட்டுக்கு வரும்படி அருள் புரிந்தான் என்கிறார் (மேற்படி 88), ஐயோ! இந்து மக்களே, ஓ போலிச் சைவர்களே, இன்னும் நுங்கட்கு இரக்கமும் நல்லறிவும் வந்த பாடில்லையே. நுங்களை நுங்கள் கால்வழியற்றுப் போக வேரோடு வெட்டி மாய்த்து வரும் பொல்லாத கோடறியாய்ச் சாதி வேற்றுமை இருப்பதுணராது. அதனை நுமக்குச் சிறப்புத் தருவதாக எண்ணி நீங்கள் மகிழ்வது எவ்வளவு பேதைமை. ஊரின் நடுவே வெடிமருந்துக் கொத்தளத்தின் மேலிருந்து கொள்ளிக் கட்டையைச் சுழற்றி மகிழ் வோனுக்கும்நுங்கட்கும் யாம் வேற்றுமை காண்கிலேம். ஒரு தீப்பொறியானது அக் கொத்தளத்தை வெடிக்கச் செய்து அவனையும் அவ்வூரிலுள்ளார் அனைவரையும் சிறிது நேரத்தில் படு சாம்பராக்கி விடுவது போலப் பாழுஞ் சாதி வேற்றுமையால் இனி யுண்டாவதற்கு மும்மரித்து நிற்கும் ஒரு சிறு கலகமானது நுங்களையும் நுங்கள் இறுமாப்பினையும் நுங்கள் சாதிக் கட்டுப்பாடுகளையும் எளிதில் மாய்த் தொழிக்குமேயென அஞ்சுகின்றேம். வெள்ளம் வருவதற்கு முன்னரே அணை கோலி வைத்தல் அறிவுடையார் செயலாதல் போலப் பெருந் தீமைக்கு ஏதுவான கலகம் வருவதற்கு முன்னமே அதனை வருவிக்கும் சாதி வேற்றுமையினைத் தொலைத்து விடுங்கள் என்று சாதி வேற்றுமை கோடரியாய்க் குல அழிவையும் நாட்டழிவையும் செய்வதை உருகி உருகி உரைத்து உய்யும் வழியாவது அதனை ஒழிப்பதே என்று வலியுறுத்துகிறார் (மேற்படி 88-9) சைவ வேளாளர் சாதி வேற்றுமை பாராட்டலால் அவரும் தாழ்த்தப்பட்டவராக்கப் பட்டமையை எடுத்துரைக்கிறார்: தமக்கு உதவி செய்யும் தொழிலாளரைத் தாம் இழிந்த சாதியாராக நினைந்து தருக்கி அவர்கட்குப் பல கொடுமைகளைச் செய்தமையால் அன்றோ சைவ வேளாளராகிய தாமும் பார்ப்பனரால் இழிவு படுத்தப்பட்டு இழிந்த சூத்திரரானார். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்னும் பொய்யாமொழி ஒருகாலும் பொய்படாதன்றோ என்பது அது (சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் - 28) ஆரியர்க்குள்ளும் முந்து வருணப் பிரிவு இருந்ததில்லை என்றும், இருக்கு முதல் ஒன்பது மண்டிலங்களில் வருணச் செய்தி இல்லை என்றும் அவர்கள் இந்திய நாட்டுள் புகுந்து தம்மை வெண்ணிறத்தர் எனவும் கருநிறத்தவரொடு போரிட்ட காலையில் வருணம் தலைகாட்டியது எனவும் விளக்குகிறார் (மேற்படி 30-32) பாணரை நம் திருஞானசம்பந்தப் பெருமானும் திருநீல நக்கரும் தம்மோடு உடன் வைத்து அளவளாவினதும் அவ்வரு மையைத் தீவடிவில் இருந்த ஆண்டவன் (வலஞ்சுழித்து) ஏற்றுக் கொண்டு மகிழ்ந்ததும் போலிச் சைவர் உணரார் கொல்லோ என்றும் (மேற்படி 58) கூறுகிறார். காரைக்கால் அம்மையாரைப் பொருந்தா மணத்தில் சேர்த்தது பிழை என்கிறார் (ப.த.கொ.சை.சமயம் 24) சுந்தரர் வரலாற்றை விரித்துரைத்து இறைவனே குலமணம் தவிர்த்துக் கலைமணம் சேர்த்தார் என்கிறார் (மேற்படி 25) அப்பரடிகளும் அப்பூதியடிகளும் சாதி பாராது கலந்து ண்டலைக் காட்டுகிறார். நமி நந்தியடிகள் ஆரூர்த் திருவிழாவில் கலந்து கொண்டு திரும்பிய காலை இல்லுள் நீராடிப் புகக் குளிநீர் அமைக்குமாறு கூறித் திண்ணையில் கண்ணயர, அதுகால் ஆரூர்ப் பிறந்தார் அனைவரும் அடியாராக இருக்கவும் ஆங்கே இழிகுலத் தீட்டுக் கழித்தல் எற்றுக்கு என்று இறைவன் கனவில் உரைக்கக் குளியாதே இல்லுள் சென்றதை எடுத்துரைக்கிறார் (ப.த.கொ. சை. சமயம் 59) சோமாசி மாறனார்க்கு இறைவன் பறைவடிவு கொண்டு பாலித்ததையும் உரைக்கிறார். மாலியத்திலும் சாதிப்பாகுபாடு இல்லாமையை அரங்கப் பெருமான் லோக சாரங்கர் கனவில் தோன்றிப் பாண்பெருமாளைத் தோளின் மேல் ஏற்றிக் கொண்டு வருக என அவ்வாறே தோளில் கொண்டு திருமுன் விட்டதைச் சுட்டுகிறார் (60) திருமழிசையார் திருவாளனால் வளர்க்கப் பெற்றதையும் எடுத்துரைக்கிறார் (60) இவ்வாறு பலபல கூறும் அடிகளார், நீ தேவாரம் ஓதி என் செய? திருவாசகம் படித்து என் செய? உன் மன அழுக்கு உன்னைவிட்டு நீங்கிற்று இல்லையே! பிறரைச் சேராமல் தாமே கூடியிருந்து சோறு தின்பாரைப் பற்றிப் பெருமை பேசிக்கொள்கிறாய். அப்படி யானால் பிறவற்றைக் கிட்டே சற்றும் அணுகவிடாமல் தாமாகவே தீனி தின்னும் சில விலங்குகள் அவர்களை விடச் சிறந்தன என்றன்றோ சொல்லல் வேண்டும்? என்று கடிந்துரைக்கிறார். (65) இழிகுடியாகக் கருதப்படுவோர் தாம் செய்ய வேண்டும் செயற்பாடுகள் இவை எனவும் அடிகள் உரைக்கிறார். உயர்த்தும் வகை : இழிந்த குடி ஒன்றிற் பிறந்தோர் அதற்குரிய இழிந்த தன்மைகளை விட்டுத் தூயராய் வரும்போது, தம்மை மீண்டும் அவ்விழிந்த குடிக்குரிய பெயராற் கூறித் தம்மைத் தாமே தாழ்வு படுத்திக் கொள்ளல் ஆகாது. ஒரு தூயவர் தம்மைத் தாமே உயர்த்திக் கொள்ள வழி தேட வேண்டுமே யல்லாமல், பிறர் தம்மை உயர்த்துவார் என்று நம்பியிருத்தலாகாது. ஏனெனில் நம்மனோர் சக்கையைப் பிடித்துச் சாற்றை ஒழுக விடும் பன்னாடையைப் போல்வர். உயர்ந்தவர் ஒருவர் பால் உள்ள குற்றங்களை ஆராய்ந்து அவற்றையே பேசும் நீரர் அல்லாமல் அவர்பால் உள்ள உயர்ந்த நலங்களைப் பேசும் இயல்பினர் அல்லர். ஆதலால் இத்தகைய தீய மக்களிடையே தூயராய் உயர்வார் தமது இழிகுடிப் பிறப்பை யுரையாது தம்மைச் சைவர் எனவும் பார்ப்பனர் எனவும் கூறி ஒழுகுதல் வேண்டும். தம்மொடு உடனிருந்து உணவு கொள்ளாதார் வீட்டில் தாமும் உணவு எடுத்தல் ஆகாது. இம்முறையை விடாப் பிடியாய்க் கொண்டு ஒழுகினால்தான் கீழோரில் தூயராய் வருவோர் உயரக் கூடும். இவ்வாறு நாளடைவிற் செய்தே பார்ப்பனரும் சைவரும் உயர்ந்தனர் என்கிறார்(96). தமிழ் வழிபாடு : மும்மொழி வல்லராகிய அடிகளார் தமிழ்நாட்டுத் திருக்கோயில் வழிபாடுகளில் தமிழ்த் தேவார திருவாசகங்கள் ஓதப்படுதலே முறைமை என்பதைப் பேச்சிலும் எழுத்திலும் மிக மிக வலியுறுத்தியவர். தாமே அவற்றை ஓதி வழிபட்டதுடன், ஓதுவா மூர்த்திகளைக் கொண்டும் வழிபட்டவர். அதனையும் தமிழ்ச் சைவர் வலியுறுத்தி நடைமுறைப்படுத்தத் துணியாமையைக் கண்டு வருந்தி, தமிழர்களாகிய எங்களுக்குரிய இத்திருக்கோயில்களில் தேவார திருவாசகச் செந்தமிழ் மந்திரங்களைக் கொண்டு வழிபாடு செய்யாமல் எங்களுக்குப் புறம்பான எங்களுக்குத் தெரியாத வடமொழியைக் கொண்டு ஏன் வழிபாடு செய்கின்றீர்கள் என்று கேட்ட ஆண்மையுடையவர் எவராவது நம் தமிழரில் உண்டா? என்கிறார் (அறிவுரைக் கொத்து 142) செல்வர் கடமை : நம் நாட்டுச் செல்வர்கள், தம் செல்வத்தை ஆக்கவழிக்கு உதவாமல் இழிமைக்கு இடமாக்கி வருதலை எண்ணும் அடிகள் மிக இரங்கி உரைக்கிறார். கல்வி எல்லார்க்கும் பொதுப் பொருள் என்பது தமிழ்நெறி. நம் செல்வர்கள் நம் தாய்மொழிப் பயிற்சிக்கு உதவாமல் பிறமொழிப் பயிற்சிக்குச் செலவிடுதல் ஐயகோ! கொடிது கொடிது! தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை வாங்கத் தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்! நம் தமிழ் நாட்டுக்கு ஆறாயிர நாழிகை வழி விலகிக் கிடக்கும் மேல் நாட்டிலுள்ள கிறித்தவக் குருமார்கள் இந்நாட்டுக்கு வந்து, நூறாயிரக் கணக்காக நம் நகரங்களிலும் சேரிகளிலும் பல்லாயிரக் கணக்கான கல்விச் சாலைகள் திறப்பித்தும், மாதா கோயில்கள் கட்டுவித்தும், இந்நாட்டவர் எல்லார்க்கும் ஏதொரு வேற்றுமையும் இன்றிக் கல்வி கற்பித்தும், கடவுள் உணர்ச்சி உண்டாக்கியும் பேருதவி புரிந்து வாரா நிற்க, நம் நாட்டு ஏழை மக்கள் ஒரு நாளுக்கு ஒருவேளை நல்லுணவு மின்றிப் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து நெற்றிக் கண்ணீர் நிலத்தில் விழப் பாடுபட்டுத் தேடிக் கொடுக்கும் பெரும் பொருளைப் பேழை பேழையாய் வைத்திருக்கும். செல்வர்கள், தமது பெருமைக்கும் தமது நலத்திற்கும் தமது மனைவி மக்களின் ஆடை அகலங் கட்கும் தம் வேடிக்கை விளையாட்டு கட்குமாகத் தமது பெரும் பொருளைச் செலவு செய்து கொண்டு, தமக்கு அப் பொருளைச் சேர்த்துக் கொடுக்கும் ஏழைகளிற் பெரும் பாலாரைத் தீண்டாதவரென ஒதுக்கி வைத்தும் அவர்க்கு நல்லுணவும் நல்வெள்ளாடையும் கூடக் கொடாதும் அவர் வணங்குதற்குத் தம் கோயில்களில் உள்வருதல் கூடத் தகாதென விலக்கியும் அவர் தம்மக்களொடு ஒப்ப இருந்து கல்வி பயிலுதலும் ஆகாதென அவரைத் துரத்தியும் அவ்வேழை மக்கட்குப் பெரும் கொடுமை செய்து வரல், தெய்வத்திற்கு அடுக்குமோ? ஏழையழுத கண்ணீர் சுவடறத் தேயத்து மாய்க்கும் காலம் அணுகுதல் ஓர்மின் என்கிறார். (ப.த.கொ.சை. சமயம் (41-42) அழியாச் செல்வமாம் கல்வியைக் கைப்பொருளாகக் கொண்டவர் அப்பொருளைப் பேணிப் பயன்படுத்தாமல் கெடுதலையும் எடுத்துரைக்கிறார் அடிகள் : இரவில் திருடும் திருடர்க்கும் வழிமறித்துக் கொள்ளை யடிக்கும் வழிப்பறிக்காரர்க்கும் கல்வியை உதவியாய்க் கொண்டு உயர் நிலைகளாகிய மாறு கோலம் பூண்டு கைக்குறி வாங்கும் பகற் கொள்ளைக் காரர்க்கும் வேறுபாடு உண்டோ? ஏழைக் குடும்பங்களைக் கெடுப்பார் எவ்வளவு கற்றும் ஏன்? என்பது அது. இல்லறமே அறம் : இல்வாழ்க்கை ஒன்றுமே அறனென வைத்துச் சொல்லப் படுவதற்கு உரித்தாவதன்றித் துறவு வாழ்க்கை அறம் எனப்படுதற்கு உரிமை உடைத்தன்று என்பது அடிகளார் கொள்கை (ஷ51) அக்கருத்தொடு துறவு மடங்களைப் பற்றித் தெளிந்துரைக்கிறார். மண வாழ்க்கையில் இருந்தக்கால் தாம் செய்து போந்த முப்பத்திரண்டு அறங்களையும் தம் உரிமைச் சுற்றத்தார் செய்து போதருமாறு ஒருங்கு செய்து உலக நன்மையையும் தமது நன்மையையும் நாடி இறைவனை உளங்குழைந்து உருகி வழுத்து வதாகிய தவநிலையைக் கணவனும் மனைவியும் ஒருங்கிருந்து செயற்பாலரென நம் பேராசிரியர் தொல்காப்பியனார் உரைத்தபடி நம்மனோர் செய்து வந்தனராயின் (நிலை இழுகி வழுகி ஒழுகும் இற்றைத் துறவு மடக்) கேட்டுக்கு இடமிராது என்கிறார் (ஷ50) நாட்குறிப்பு கடிதம் நூல் என்பவற்றின் வழி அடிகளார் கொண்ட சமய நோக்குகள் இவை எனக் கண்டோம். இனி இவற்றின் பிழிவு எனத் தக்கதாகவும் இவற்றில் கூறாதனவாம் குறிப்புகள் சில கொண்டனவாகவும் உள்ள சீர்திருத்தக் குறிப்புகள், தீர்மானங்கள் என்னும் இரண்டனைக் காணலாம். அவ்விரண்டும் அடிகளார் சமய நோக்கின் வைப்பகங்களாக விளங்குதல் மிகவுண்மையாம். சீர்திருத்தக் குறிப்புகள் 1. எந்தச் சமயத்தாரேனும் எந்தச் சாதியாரேனும் சிவலிங்கத்தை வணங்குதற்கு விரும்பிக் கோயிலுள் வருவார்களாயின் அவர்களைத் தடை செய்யாமல் வந்து வணங்குதற்கு இடம் கொடுத்தல் வேண்டும். 2. வழிபாடு முழுவதும் நடை பெறுமாறு ஒவ்வொரு கோயிலிலும் ஏற்பாடு செய்ய வேண்டும். 3. திருவிழாக்கள் செவ்வையாக நடைபெறுமாறு செய்வ துடன் திருவிழாவின் உண்மையையும் பயனையும் எடுத்துச் சொல்லல் வேண்டும். 4. பொதுப் பெண்டிர் தொண்டு, பொட்டுக்கட்டல் ஆகியவை அடியோடு விலக்கப்பட வேண்டும். 5. குருக்கள்மார், தமிழ்மொழிப்பயிற்சி சைவசித்தாந்தம் உணர்தல் தேவார திருவாசகம் ஓதல் வல்லவராய் இருக்கும் படி செய்தல் வேண்டும். 6. வரும்படி மிக்க கோயில்களில் இருந்து வரும்படி இல்லாக் கோயில் குருக்களுக்குத் தக்க சம்பளம் கொடுக் கப்பட வேண்டும். 7. இறைவன் திருவுருவத்திற்குக் குருக்கள்மாரே வழிபாடு செய்ய வேண்டுமல்லாமல் வணங்கப் போகிறவர் களெல்லாம் தொட்டுப்பூசித்தல் வேண்டுமென்பது நல்ல முறையன்று. 8. வணங்கச் செல்வோர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று காட்டும் வேறுபாடு அடியோடு நீக்கப்படல் வேண்டும். 9. கோயில் செலவு போக மிச்சத்தைத் தேவாரப் பாட சாலைக்கும் தனித்தமிழ்ப் பாடசாலைக்கும் சைவ சித்தாந்த சபைக்கும் தமிழ்நூல் எழுதுவார்க்கும் சைவசித்தாந்த விரிவுரையாளர்க்கும் வழங்கல் வேண்டும். 10. கோயில் வரும்படி கொண்டு பார்ப்பனர்கட்கு மட்டும் உணவு கொடுத்தலும் ஆரியவேத பாட சாலை அமைத்தலும் ஆங்கிலப் பள்ளிக் கூடங்கட்குப் பொருளுதவி செய்தலும் அடியோடு நீக்கப்பட வேண்டும். 11. சிறுபருவமணத்தை ஒழித்தல் வேண்டும். பெண் மக்களுக்கு 20 ஆண்டும் ஆண்மக்களுக்கு 25 ஆண்டும் நிரம்பு முன் மணஞ் செய்தல் ஆகாது. 12. ஆணையாவது பெண்ணையாவது விலை கொடுத்து வாங்கும் கொடிய பழக்கத்தை வேரொடு களைவதற்கு எல்லாரும் மடிகட்டி நிற்றல் வேண்டும். 13. முப்பதாண்டுகட் குட்பட்ட பெண்கள் கணவனை இழந்து விடுவார்களானால் அவர்களைத் திருமணம் செய்து கொடுத்தல் வேண்டும். 14. ஆண்மக்களில் 40 ஆண்டுக்கு மேற்பட்டவர்கள் இளம் பெண்களை மணம் செய்தல் ஆகாது. 15. நாற்பதாண்டுக்கு மேற்பட்ட ஆண் மணஞ் செய்வா ராயின் அவர் வயதொத்த கைம் பெண்ணையே மணஞ் செய்து கொள்ளும்படி தூண்டுதல் வேண்டும். - இவை அடிகளார், சீர்திருத்தம் என்னும் பகுதியில் எழுதிய கொள்கை விளக்கங்களாகும். பொது நிலைக் கழகம் தோன்றி இருபதாண்டுகள் பணியாற்றிய பின்னே இருபதாம் ஆண்டுப் பெருவிழா ஒன்று நிகழ்ந்தது. அவ்விழாவின் நிறைவில் (12.9.1930) பொது நிலைக் கழகச் சீர்திருத்த முடிவுகள் எனப் பத்துத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு ஆய்வும் நிகழ்த்தப்பட்டன. அத்தீர்மானங்கள் : 1. மடத் தலைவர்கள் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்றுமை இன்றிச் சமயக் கிரியைகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும். 2. கோயில்களில் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்றுமை இன்றிச் சமயக் கிரியைகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும். 3. பழந்தமிழ்க் குடிமக்கள் தீண்டாதோர் எல்லாரையும் தூய்மையாகத் திருக்கோயில்களிற் சென்று வழிபா டாற்றப் பொதுமக்களும் கோயில் தலைவர்களும் இடம் தரல் வேண்டும். 4. கோயில்களில் பொதுமாதர் திருப்பணி செய்தல் ஆகாது. 5. வேண்டப்படாதனவும் பொருட் செலவு மிக்கனவும் சமய உண்மைக்கு முரண்பட்டனவும் அறிவுக்குப் பொருத்த மற்றனவுமான திருவிழாக்களையும் சடங்குகளையும் திருக்கோயில்களிலே செய்தல் முற்றும் கூடாது. தூயதும் வேண்டப்படுவதுமான சடங்கும் திருவிழாவும் குறைந்த செலவிலேயே செய்தல் வேண்டும். 6. சாரதா சட்டத்தை உடனே செயன்முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும். 7. கைம்பெண்மணம் முதல்நூல் முடிவுக்கு ஒத்ததே. மற்றவை முதனூல் முடிவுக்கு ஒத்தவைகள் எனினும் தாலியறுத்தல் மொட்டையடித்தல் வெள்ளைப் புடைவையுடுத்தல் பட்டினி கிடத்தல் முதலிய வெறுக்கத் தக்க செயல்களாற் பெண்களைத் துன்புறுத்தல் ஒவ்வாது. எனவே கைம்பெண்மணம் செயல் முறைக்கு வர அறிஞர்கள் நன்முயற்சி செய்தல் வேண்டும். 8. சாதிக் கலப்பு மணம் வரவேற்கத் தக்கது. 9. தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும். 10. தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. சிறப்பு வகுப்பு (பி.ஏ. ஆனர்சு) ஏற்படுத்தல் வேண்டும். தமிழர்மதம் அடிகளாரின் சமய நோக்கு இன்னது என்பதை ஆற்றொழுக்கெனச் சொல்லிச் செல்வதொரு நூல் தமிழர் மதம். அதன் பெயரே தமிழர் என்னும் ஒருமைப் பெயர் கொண்டு விளங்கும் உயர்வை வெளிப்படுத்தும். மற்றவற்றுள் சைவம் என்ற அடிகள் தமிழர் மதம் என்னும் பெருநிலையில் கண்ட மாட்சி அது. அதில் உள்ளவற்றை அவர்தம் மாணவர் தவத்திரு அழகரடிகள் மறைமலையடிகளார் வரலாற்று மாட்சியில் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இங்குச் சுட்டப் பெற்றவற்றுடன் வேறு சிலவும் கொண்ட அத் தொகுப்புரை காண்க : 1. தமிழர்கள் தமது பழம் பெருமையையுணர்ந்து அதற் கேற்ப நடத்தல் வேண்டும். 2. தமிழ்மொழியைத் தூய்தாய் வளனுற வளர்த்து வருதல் வேண்டும். 3. தமிழ் கற்பார் சிலரும் அடிமை வாழ்க்கையையே தமக்கொரு பெருமை வாழ்க்கை யாகவும் பிழைபட நினைந்து.. ஒழுகுகின்றார் (இதனை அகற்றல் வேண்டும்) 4. பண்டுபோல் தமக்கும் தம் இல்லங்களுக்கும் தம் ஊர்களுக்கும் பிறவற்றிற்கும் எல்லாம் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டும். 5. தமிழரெல்லாரும் தம்மைத் தமிழரென்றே வழங்கக் கடமைப்பட்டிருக்கின்றனர். தம்மை எவரும் சூத்திரர் என்னும் இழிசொல்லால் அழைக்க இடந்தரலாகாது. தாழ்ந்த வகுப்பினராய் இருப்பவரை இழித்துப் பேசுதலும் அழைத்தலும் ஒரு சிறிதும் கூடாது. 6. தொழில் வேற்றுமையால் உண்டான குலவேற்றுமையையே பெரிது பாராட்டித் தமிழ்மக்கள் தம்முள் உண்ணல் கலத்தல்களைச் செய்யாமல், தனித்தனி வெவ்வேறினங்களாய்ப் பிரிந்து வலிவிழந்த துன்ப வாழ்க்கையில் கிடந்துழல்வது நிரம்ப வருந்தத் தக்கதாய் இருக்கின்றது. 7. ஊனுண்ணாச் சைவ ஒழுக்கத்தினின்றும் தாம் சிறிதும் வழுவுதல் ஆகாது. 8. காதலன்பைக் கருதாமல் செய்யும் போலி மணத்தை அறவே ஒழித்து விடல்வேண்டும். 9. (மக்களுக்குச்) செல்வப் பொருளைத் தேடித் தொகுத்து வைக்கும் பெற்றோர், அவர்க்குத் தீமையே செய்பவர் ஆவர். 10. செலவுக்கு மேற்பட்ட பொருளைத் தனித்தமிழ்க் கல்லூரி வைத்துக் கற்பித்தற்குக் கொடுத்தல் வேண்டும். 11. வரை துறையின்றி உணவளிக்கும் அறம் பயன் தரா. 12. உறுப்பறைகட்கும், பிணிப்பட்ட ஏழைகட்கும், கல்வி பயிலும் எளிய மாணவர்க்கும் நூல் ஓதுவிக்கும் வறிய ஆசிரியர்க்கும், புதியன பழையன ஆராய்ந்து பல துறைகளிற் பயன்படும் நூல்கள் இயற்றும் நூலாசிரியர் கட்கும், சொற்பொழிவு நிகழ்த்தும் நாவலர்க்கும், தவவொழுக்கத்தில் நிற்கும் துறவிகட்கும் உணவும் பொருளும் வேண்டுமட்டும் உவந்து நல்குதலே உண்மையான அறமாகும். 13. முழுமுதற் கடவுள் ஒன்றேயன்றிப் பல இல்லை என்னும் உறுதியில் ஒரு சிறிதும் நெகிழலாகாது. 14. பிறப்பு இறப்புகளிற் கிடந்துழன்ற சிறு தெய்வங் களையும் கண்ணன் இராமன் முதலான அரசர்களையும் கடவுள் நிலையில் வழிபடுதல் மன்னிக்கப்படாத பெருங்குற்றமாய் முடியும். 15. திருக்கோயில்களை விட மக்களுக்கு உறுதிபயக்கக் கூடியது வேறெதும் இல்லை. 16. வழிபடும் முறைகளும் வடநாட்டைவிடத் தென்னாட்டின் கண்ணேதான் சிறந்தனவாய் நடைபெறுகின்றன. 17. வடநாட்டுக் கோயில்களில் மக்கள் தாமே நீரும் பூவும் இட்டுவணங்குகிறார்கள். தென்னாட்டு முறை எவ்வளவோ நலந்தருவதாய்க் காணப்படுகின்றது. சிறிதும் மாற்றாமல் நடப்பித்தலே வேண்டற்பாலது. 18. கோயிலுக்கு வழங்குவது உண்மையில் வீணாகுமா? 19. இல்லறத்தார் வேறு துறவறத்தார்வேறு என்னும் தவறான கருத்தை நம் தமிழ்மக்கள் அறவே ஒழித்து விடல் வேண்டும். (தமிழர் மதம் 260-76) என்பவை அவை. மேலும் தாய் தந்தையரையே தெய்வமாக நினைந்து வணங்கி வருதல் வேண்டும் என்பது தமிழர்தம் முதற்றெய்வக் கொள்கை என்கிறார் அடிகள் (த.ம. 73) அதிலிருந்து முளைத்துக் கிளைத்தவையே அம்மை அம்பலவாணர் வழிபாடு என்று விரித்துரைக்கிறார் அடிகள். பன்மனைவியர் மணம் சமயச் சால்புக்கும் ஆடவர்மகளிர் நலத்திற்கும் தக்கதே என்றும், அது பெண்ணிழிமையாகாது என்றும் விரித்துரைத்தல் காலத்தொடும் கருத்தொடும் இயைவதன்றாம். வள்ளுவ நெறியும் ஆகாதாம் (த.ம. 56 - 63க) வேண்டாத அளவுக்கு மக்களுக்குச் செல்வம் சேர்த்து வைத்தலின் தீய விளைவுகள், மாப்பிள்ளையை விலை கொடுத்து வாங்குதல் ஆகியவற்றைக் கடிதல் கருதிப் போற்றத் தக்கவையாம் (த.ம. 67-8) அகப்பாடல்கள் உரைக்குமாறு தம்மவருள் தாய்மாரே முன்னின்று மணச்சடங்கு செய்ததே தொல்காப்பியரால் கரணம் எனப்பட்டது என்பதும், கரணம் என்பது தமிழ்ச் சொல்லே என நிறுவுவதும் இனிய செய்திகள் (த.ம. 188 - 40) அந்நெறியில் தம் குலத்தவரைக் கொண்டாவது கடைப்பிடிக்கத் தக்கதாம். (த.ம. 193) தனித்துறவில் புகுந்தவர் அதில் உறுதியாய் நிற்றல் தம்மால் இயலாதெனக் கண்டால் மீண்டும் மணம் செய்து கொண்டு தவஞ்செய்தலையே மேற்கொள்வாராக என்றும் துறவொழுக் கத்தை மேற்கொண்டார் எவரும் எவரையும் இரந்து உணவும் உடையும் பொருளும் பிறவும் பெறுதல் சிறிதும் ஆகாது என்றும் தவச் சீர்திருத்தமாகக் கூறித் தமிழர் மத ஆய்வை நிறைவிக்கிறார் அடிகள். அடிகளார் கொண்ட சமய நோக்குகளை விரித்தும் விளக்கியும் கூறாமல் தொகுத்தும் சுருக்கியும் கூறியவை இவை. சான்றுகளும் சிலவாகவே உடையவை. சீர்திருத்தம் என்னும் கட்டுரையில் காட்டிய குறிப்புகள், பொது நிலைக்கழகத் தீர்மானங்கள், மறைமலையடிகளார் வரலாற்று மாட்சியில் குறிக்கப்பட்ட தொகுப்புக் குறிப்பு என்னும் மூன்றாலும் பிறவற்றாலும் மறைமலையடிகளாரின் சமய நோக்கள் இவை என்பது தெளிவாக விளங்கும். சமயம் என்பது பண்படுத்தும் கருவி; பாதுகாப்பு அரண்; குமுகாய (சமுதாய) வளர்ச்சிக் கல்வி நிலையம்; ஒட்டுமொத்த உயிர்களின் இறைமை உறையள் - என்னும் முடிவில் அடிகளார் விரிபார்வை அமைந்தது என்பது இவற்றால் புரியும் செய்தியாம்! சமயம் கண்மூடித்தனத்தின் வைப்பகம் அன்று; சீர்திருத் தத்தின் வைப்பகம் - பரப்பகம் என்பதை அடிகளார் நோக்கிலே புரிந்து செயலாக்கம் பெற்றிருப்பின், எத்துணையோ நலங்களைத் தமிழுலகம் கண்டிருக்கும். அந்நிலை இனிமேலேனும் எய்துமாக! மறைமறையடிகளார் ஆராய்ச்சித்திறன் - முற்றும் - மறைமலையடிகளாரின் இலக்கிய படைப்புகள் -நாடக நூல்கள் டாக்டர் நா. செயபிரகாசு நாடக நூல்கள் தமிழ்க் காவலர் மறைமலையடிகளார் சிறந்த இலக்கியப் படைப்பாளராகவும் பயிற்சியாளராகவும் விளங்கியவர். இலக்கியப்படைப்பிலும் ஒன்றிரண்டு துறைகளை மட்டும் சார்ந்து ஒரு வரையறைக்குள் அடங்கிப்போகாமல் அடிகளார் திறன் அனைத்துத் துறைகளிலும் அழகுபட மிளிர்கிறது. அடிகளாரின் நாடகப் படைப்புகளாக (அ) சாகுந்தலம் (1907). (ஆ) அம்பிகாபதி அமராவதி (1954) ஆகியன விளங்குகின்றன சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934) அடிகளாரின் நாடக ஆராய்ச்சி நூலாக அமைந்துள்ளது. இப்படைப்புகளால் சிறந்த நாடக நூலாசிரியராகவும், நாடக நூலாராய்ச்சி யாளராகவும், அத்துறைகளின் முன்னோடியாகவும் அடிகளார் திகழ்கிறார். தனித்தமிழில் தம் கருத்துகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் பெருவிழைவினை அடிகளார் இவ்விரு நாடகங்கள் வாயிலாக நிறைவு செய்துள்ளார்.1 கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப் பெறும் குறிப்பிடத்தகுந்த வடமொழிக் கவிஞர் நாடக நூல் வல்லார்காளிதாசரின் புகழ்மிகு படைப்பு சாகுந்தலமாகும்.2 இம் முதல் நூலின் முறைமை கெடாமலும் தமிழ்நூல் தன்மை தழுவியும் அடிகளார் இதனைத் தமிழாக்கம் செய்துள்ளார். முதல் நூலைச் சிறிதும் பிழைபடாமற் பின்பற்றும் இந்நூலில் பாட்டும் உரையும் கலந்து நிற்கின்றன. மறைமலையடிகள், பாவனந்தம் பிள்ளை, ரா. ராகவையங்கார் ஆகியோரின் சாகுந்தல நாடக மொழியாக்கங்கள் மிகுந்த இலக்கிய நலஞ்செறிந்தனவாகும். முதல் நிலையில் உள்ள அடிகளாரின் மொழியாக்கம் ஒப்பற்ற பேரழகு வாய்ந்ததாகப் பல்வேறு தமிழறிஞர்களால் பாராட்டப் பெற்றதாகும். சாகுந்தல நாடக மொழிபெயர்ப்புகளிடையே அடிகளாரின் படைப்பு குறிப்பிடத் தக்கதாக விளங்குதல் காணலாம். காளிதாசரின் கலைத்திறமும் அடிகளாரின் ஆய்வுத் திறமும் ஒருங்கு விளங்குகிற வகையில் அமைந்தது `சாகுந்தல நாடக ஆராய்ச்சியாகும். இந்நூலின் நாடகக் கூறுகளையும் நாடக மாந்தர் இயல்புகளையும், நாடக ஆசிரியர் வரலாற்றுத் திறங்களையும், நாடகத்தின் குறைநிறைகளையும் அடிகளார் ஆராய்ந்துள்ளார். நூல் நோக்கும் காரணமும் தமிழகத் திரைப்பட உலகில் அம்பிகாபதிப் படத்தைப் பார்த்த பின்பே, அவ்வினிய வரலாற்றுக் கதையில் ஆர்வமும் அதில் காலக் கேட்டால் படிந்துள்ள மாசு மறுககள் அகற்றி, அதில் வரலாற்று வாய்மையும் தமிழ்பபண்பு வாய்மையும் மிளிர் விக்க வேண்டுமென்ற எண்ணம் தமக்கு ஏற்பட்டதாக அடிகளார் இதை எழுதிய காலை தம்மிடம் கூறியுள்ளதாகக் குறிப்பிடுகிறார் பன்மொழிப்புலர் அப்பாதுரையார்.3 அம்பிகாபதி அமராவதி நாடகம் அடிகளாரின் இறுதிக் காலத்தில் இயற்றப்பெற்றதால் அவர்தம் கலைத் திறங்களின் நிறை நிலைகளை இந்நாடகத்தில் காணலாம். இன்றியமையாத உண்மை நிகழ்ச்சிகளை உள்ளதை உள்ளவாறும் உள்ளதை உணர்ந்தவாறும் காட்டி மாந்தர்க்கு உண்மையறிவு ஊட்டும் உயரிய நோக்கினது இந்நூல். `அம்பிகாபதி அமராவதி உரையும் பாட்டும் கலந்த எழில்மிகு இனிய நாடகமாகும். அடிகளாரின் பல்துறை அறிவுக்கும் புலமைக்கும் திறனுக்கும் இந்நூல் தக்க சான்றாகும. பிறமொழிக் கலப்பின்றி, பேச்சுத் தமிழும் கொச்சைத் தமிழும் கொண்டு நாடகநூல் எழுத முடியுமென்பதையும் அடிகளார் மெய்ப்பித்துள்ளார். இன்ப அன்புவாழ்வுக்கு வழிகாட்டும் வகையாலும் இனிய காதலின் இன்பம் பெருகவும் இறையருள் வேண்டிப் பாடுகிறார் அடிகளார். அன்பினுருக் கொண்ட அம்மையினோ டென்றும் ஆர்ந்தருகி இன்பினுயிர்கள் இசைவுடன் வாழ இரங்கியருள் பொன்பிதிர் செஞ்சடைப் பெம்மான் சிவன் இந்தப் புல்லுலகில் துன்பின்றிக் காதலர் வாழ்ந்து தனைத்துன்னத் தூண்டுகவே4 எனத் தம் நூற்கொள்கையை இந்நாடக நூலின் இறுதியில் கூறியுள்ளார். நாடகமென்னும் அழகிய உடலுக்குக் கதையெனும் உயிர் இன்றியமையாதது. கதையமைப்பாலும் கதைக் கருவாலும் அம்பிகாபதி அமராவதி சிறந்து விளங்குகிறது. அடிகளாரின் நாடக நூல்களில் உலகியல் உண்மைகளும் வாழ்வியல் வரையறைகளும் நெறிமுறைகளோடு அழகுபடக் கூறப்பெற்றுள்ளன. அனைத்து வாழ்வுக்கு அடிப்படையாக விளங்கும் இல்லறத்தின் இயல்பு குறித்தும், அதன் மேன்மைக் கான வழிவகை குறித்தும் பெண்டிர்க்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார் அடிகளார். உளவியலும் உலகியலும் கணவன் இல்லஞ் சென்றவுடன் மூத்தோர்க்குப் பணிவிடைகள் செய்தலும், கணவன் வெகுளும் காலங்களில் பொறையுடை யளாயிருத்தலும், ஏவலாளர்பால் நயமாக நடந்து கொள்ளுதலும், செல்வ வளங்களுக்காகச் செருக்கடை யாதிருத்தலும், இல்லக் கிழத்தியாரிடையே இருக்க வேண்டிய இன்றியமையா இயல்புகளாம்.5 கள்ளம் அறியாத மகளிர்க் குள்ள நாணம் அது புலனாதற்குரிய இடத்தன்றிப் புலனாகாது. மற்றுக், கள்ளம் அறிந்தார்க்குள்ள நாணமோ வேண்டா விடத்தும் வெளிப்பட்ட படியாயிருக்கும். எனவே, கள்ளவுள்ளத் திற்கும் நாண் மிகுதிக்குந் தொடர்புண்டென்பது அறியற்பாற்று.6 மேலும், நாணம், அச்சம், மடன், கற்பு, என்னும் மகளிரின் நாற்பெரும் நல்லியல்புகளின் பாற்பட்ட கள்ளம் இழிவுடைத் தன்று. இவையும் இவற்றின் வழியினதான கற்பொழுக்கமும் இலரான பெண்டிர்பாற் காணப்படும் கள்ளமே கடியத்தக்கதும் இழிவுடையதுமாகும்.7 உலகுயிர்களின் முயற்சிகள், அறிவுமுயற்சி, தொழின் முயற்சி என்னும் இருவகையில் அடங்கும். இவ்விருவகை முயற்சிகளின் நோக்கமும், துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமுமே யாம். உலகத்து உண்மை நிகழ்ச்சியின் நிகழ்வு போன்ற பிறிதொன்றின் நினைவும் தோற்றமுமே மக்களுள்ளத்தினைப் பெரிதும் கவரும் இயல்பினதாகும்.8 மனக் கவர்ச்சியினை விளைக்கும் எந்த உயர்ந்த தோற்றத்தை எந்த அழகிய பொருளைக் கண்டாலும், அவற்றோடொத்த பிற பொருட் டோற்றத்தையும் அழகையும் ஒருங்கு நினைந்து மகிழ்வதே மக்களுள்ளத்தின் இயற்கை நிகழ்ச்சியாகக் காணப்படுகின்றது.9 இவ்வாறே, தம் குற்றங்களையும், இயல்புகளையும் எண்ணிப் பார்க்கும் இயல்புக்கேற்பவே, பிறர் நிலைகளையும் மனிதமனம் கருத்திற் கொள்ளும். உறவினரால் செயற்கைத் திருமணங்களின் வழி பிணைக்கப் பட்ட மணமக்களிடத்து உண்மைக் காதலன்பும் உயரிய கற்பொழுக்கமுந் தோன்றி நிலைத்தல் அரிதாகவே உள்ளது. கட்டுப்பாடு கருதியும் கடமையே யென்றும் கரவொழுக்கத் தோடும் செயற்கை மணமுறைகளால் சேர்ந்தோர் பலர் காலங் கடத்துகின்றனர். மணமுறையின் பின், மனமொன்றி ஒருவரை யொருவர் உயிராய்க் கருதியொழுகும் கணவன் மனைவியரும் உள்ளனர். கணவன் மனைவியர்க்குள் உண்டாகும் அன்பு, பிறர் குழைத்து ஊட்டுவது அன்று; அஃதவர்க்குள் இயற்கை யாகவே உண்டாவது10 அவ்வாறு அமையும் காதலன்பு ஆற்றல் மிக்கதாகும். சாதி, குலம், சமயம், செல்வம், தலைமை, தாழ்மை முதலான எதுவுங் காதலன்பினைத் தடைசெய்யவல்லதன்று.11 எத்தகைய கட்டுப்பாட்டிற்கும் அடங்காக் காதலன்பினை அறிவினால் அடக்குதலே ஆண்மையெனக் கருதினாலும், காதலைத் தடை செய்ய வல்லார் எவருமில்லை; அதனைத் தடைசெய்ய வல்லதும் ஏதுமில்லை12 என்னும் கருத்தினர் அடிகளார். தம் சமயக் கொள்கை சைவ சமயமாயிருந்தாலும் எல்லாச் சமயத்தவர்க்கும் ஏற்ற, பொதுநிலைக் கருத்துகளைப் போற்றியவர் அடிகளார். ஒவ்வொருவரும் தத்தம் சமய வாழ்க்கையினை மற்றவர்க்குத் தீது பயவா வகையில் நன்கு நடாத்தி நலம் பயக்கச் செய்ய வேண்டுமென்னும் விழைவினர் அடிகளார். அடிகளாரின் சமயக் கொள்கைகளையும், அவர் அறிவுறத்தும் சமய நெறிகளையும் அவர்தம் நாடக மாந்தர்வழி நன்குணரலாம். தம் நிலையையும் பெருமையையுங் கருதாது தமிழ்ப் புலவர்களில் பெரும்பாலோர் தமக்குப் பொருளுதவி செய்வார் எவராயினும் அவரை அளவு கடந்து போற்றி அவர் எண்ணுவன செய்யும் இயல்பினராயுள்ளனர். தம்மையொத்த பிற புலவர்கள் பெறும் பொருளுதவிக்காகப் பொறாமைப்படும் இவர்கள் தம் மெய்யான மேன்மைச் சைவ சமயக் கொள்கை களிலிருந்து மெல்ல நழுவிச் செல்லம் நஞ்சு நெஞ்சினர்.13 இங்கிருந்த இனிய கலைகளின் இறப்புக்கு இத்தகையோரே காரணமாவர். தம் நாட்டுட் புகும் அயலவர் ஒழுகலாறுகள் எத்திறத்தவாய் இருப்பினும் அவை தம்மை ஆராயாது கைப்பற்றித் தமக்குரிய சீர்த்த பண்டையுரிமைகளையெல்லாம் எளிதில் இழந்து விடுதற்கண் முன்நிற்பாரான நந்தமிழ் மக்களிடையே இசை நாடகத் தமிழ் இறந்துபட்டது இயல்பேயாகும்.14 தம் ஒழுகலாறுகளின் உயர்வுகளையும் பிறவற்றின் பிழைபாடுகளையும் நன்குணர்ந்து தமிழ்மக்கள் பின்பற்ற வேண்டும், உரையாடல் வகையும் திறனும் அடிகளாரின் பிறதுறை நூல்களைப் போன்றே நாடக நூல்களும் நடைநலன்களில் சிறந்து விளங்குகின்றன. இனிய எளிய உரைநடையில் எழிலார்ந்த இயற்கைக் காட்சிகளைக் கண்முன் நிறுத்திக் காட்டுதலில் வல்லவர் அடிகளார். பேட்டிளங்கிளிகள் உள் உறைகின்ற மப்பொந்துகளின் வாய்களிலிருந்து விழுந்து மரங்களின் கீழ்க் காட்டுத் தானியங்கள் இறைந்து கிடக்கின்றன... நெய்ப்பற்றுள்ள கற்கள் சிதர்ந்து மினு மினுவென்று மிளிர்கின்றன.... தென்றள் காற்றாற் சிற்றலை தோன்றுங் கால்வாய் நீரில் மரங்களின் வேர்க் கற்றைகள் முழுகி அலைசப்படுகின்றன. அதோ திகழும் இளமென்றுளிர்களின் நிறமானது தூய்தாக்கிய வெண் ணெயைச் சொரிந்து வேட்கும் புகையினாற் பல்வேறு நிறமாக மாறுகின்றன.15 இவ்வாறு கவின்மிகு காட்சிகளைக் கண்முன் காட்டும் சொல்லோவியங்களை அடிகளார் ஆக்கியுள்ளார். அழகுமிக்க உரையாடல்களை அடிகளார் அமைத்துள்ளார். உருவழகி நான் உன்னை நீக்கினமையினால் உண்டான துயர நினைவு நின் நெஞ்சினின்றும் ஒழிவதாக! அந்நேரத்தில் என்மனம் ஏதோ அறியப்படாத காரணத்தால் வலியதொரு மாயத்தில் மயங்கி நின்றது. இருள் வடிவான மலகுணவலி மிகுந்துள்ளவர்களின் நிலை மங்கலப் பொருள்களித்திலும் பெரும்பான்மையும் இத்தன்மையதாகவே இருக்கின்றது. குருடன் தன் தலையிற் சூட்டப்பட்ட மலர் மாலையையும் பாம்பென்றஞ்சி எறிந்து விடுகிறான்.16 என அரசன் சகுந்தலை யிடம் கூறுமிடத்திலும் விரும்பிய அறம்பொருள் கிட்டும் பொழுது அதனைத் துய்க்கும் அறிவும் திறமும் இயல்பாகவே வேண்டப்படுதல் போலவே ஆசிரியரானவர் அன்புக் காதலரான போது அருகிருந்து அன்பு பாராட்டி உரையாடுதல் வேண்டித் தனக்குள் அமராவதி கூறுமிடத்திலும்,17 அமரா வதியை மறப்பதும் என்னுயிரைத் துறப்பதும ஒன்றே என அம்பிகாபதி கூறுமிடத்திலும்18 கருத்துச்செறிவு உணர்ச்சி ஆகியன மிக்க அடிகளாரின் அழகிய உரையாடல் திறம் வெளிப்படுகின்றது. செறிவான செந்தமிழ் நடையிலும் நாடக மாந்தர்களின் இயல்புக்கும் நிலைக்கும் ஏற்ற வகையிலும் அடிகளாரின்நாடக உரையாடல் அமைந்துள்ளன. கண்மணி! என் காதற் செல்வி! பெறுதற்கரிய பொருளை ஒரு வறியவன் பெற்று இன்புற வேண்டுமானால் அதற்கான முயற்சியை அவன் அல்லும் பகலுஞ் செய்து அல்லற்பட்டே தீரல் வேண்டும்19 எனவும், அடி என் கண்ணாட்டி, வெள்ளாச்சி! என்னடி செய்யிறது! நம்ம ராசா பூசைக்கு வேணும் பூவை எவனோ வேலியெ தாண்டிவந்து ராவேளையில் பறிச்சிக்கிட்டு போனான். ராசாவோ `எங்கடா கருங்குவளைப்பூ, அல்லிப்பூ, தாமரைப்பூ? எங்கடா மகிழம்பூ பவளமல்லி, சந்தப்பூ, நாரத்தம்பூ, பன்னீர்ப்பூ? v§flh Kšiy¥ó, r«g§»¥ó, ã¢á¥ó? என்று நாடோறும் என்னைக் கேட்டுக்கிட்டு என்மேல் சீறி விழுகிறார். இன்னெ ராவுலே அந்தத் திருடெனக் கண்டுபிடிச்சு நாளெக் காலம்பெறெ அவனெ ராசாகிட்ட ஒப்பிக்காவிட்டா, ராசா என்னெ தோட்டத்தெ விட்டுத் தொரத்தி விடுவாராம், என்னடி செய்றிது; நம்ம பிளெப்பு வாயிலே மண்ணுவிழும் போலிருக்குதே!20 எனவும், நம்மஎசமான் ராசாகிட்டே கட்டளெ பெத்துக்கிட்டுக்கையிலே ஒரு ஏடு வைச்சுக்கிட்டு இந்த வளியா வருராங்க. அடெ! நீ களுகுக்கு இரையாய் போவே; அல்லாட்டி நாய் வாயைப் பாப்பே21 எனவும் அமையும் பகுதிகளால் உள்ளதை உள்ளவாறும் உணர்த்தியும் எழுதிக் காட்டும் அடிகளாரின் இயல்புணர்ச்சி பெறப்படுகிறது. எளிய நிலை மனிதர்களின் இயல்புகளையும் தம் சொற்றிறனால் திறம்பட அமைத்துக் காட்டும் ஆற்றலினர் அடிகளார். எளியவர் முதல் எல்லா நிலை மாந்தர் உளநிலைக்கும் ஏற்ப உரையாடல் சிறப்புற அமைக்கப் பெற்றுள்ளதை அடிகளாரின் நாடகங்களில் காணலாம். உரையருமை சாகுந்தல நாடக ஆராய்ச்சியுரையும் அருமைகள் பல வாய்ந்ததாகும். இதில் உரைநடையழகும் ஒப்புமையழகும் ஒன்றிக் கலந்துவிளங்குகின்றன. சிறுசிறு குற்றங்களிருப்பினும் விழுமிய இயற்கையுடையார் விழுப்பம் சிறந்தேவிளங்கும். ஓவிய உருக்களின் விளக்கத்திற்கு ஒளிசார்ந்த நிழலும், நறுமண மலர்களின் அழகுத் தோற்றத்திற்கு அகவிதழ்களோடு அழகற்ற புறவிதழ்களும், இனிய ஆற்று நீரோடு திரண்டிருக்கும் நுரையும் போலப் பெருநிறைகளோடு சிறு குறைகள் சேர்ந்திருத்தல் உலகவியற்கையாம்.22 குறைபாடுகள் விரவாமல் இச் சாகுந்தல நாடகத்தை ஆசிரியர் காளிதாசர் இயற்றியிருந்தனராயின் இது மறுவற்ற வான்மதி போலவும், நுரையற்ற திரைநீர் போலவும், புரையற்ற பருமுத்தம் போலவும், விலையற்ற முழுமாணிக்கம் போலவுந் தலைசிறந்து விளங்குமென்பதில் தட்டிலிலை யன்றோ?23 என அமையும் அடிகளாரின் ஆராய்ச்சியுரை நடை அழகுமிக்கது. ஆராய்ச்சியுரைகளையும் அழகிய இலக்கிய உரைகளாக ஆக்கியளித்தவர் அடிகளார். தன்னைச் சூழ்ந்துள்ள இயற்கைப் பொருட்டோற்றங் களை அழகுபடத் தன்னகத்தே அடக்கிக் காட்டும், புன்நுனி மேல் நிற்கும் பனித்திவலையை ஒத்தது நாடகமாகும். அகன்ற அழகிய ஏரிநீர், வான்நிலா, வான்மீன் தொகுதிகளோடு சூழ்ந்திருக்கும் காட்சியினைக் காட்டுதல் போல மக்களியல்பு நிகழ்ச்சிகளை விளக்கிக் காட்டும் இயல்பினது கதை நூலாகும்.24 இருபெரும் நீர்நிலைகளை இடைநின்று இயைக்கும் ஒரு சிற்றாறெனச் சிறுவனைப் பயன்படுத்தி, அரசனுக்கும் சகுந்தலைக்கும் முன்னிருந்த காதற் பேரன்பினை மேலும் தூய்தாகப் பெருகச் செய்திருக்கும் காளிதாசர் திறன் பாராட்டுதற்குரிய தாகும்.25 விறகுக்காக வளர்ந்த முரட்டுச் செடியினை மென்மலர் இதழால் அறுக்கத் துணிந்தது போன்றது அழகு நலன்மிகு சகுந்தலையைத் தவத் தொழில்களில் ஈடுபடுத்தியதெனவும்,26 துன்பந் தொடர்ந்தது ஏற்கனவே இருக்கும் கட்டிமேற் சிலந்தியெழுந்தாற் போலிருந்ததெனவும், 27 முழுமதி நிலவைத் தன் முன்றானையில் மூட முடியாதது போன்றது காதலன் பெனவும்,28 காதலான்பு பேராறு கடலில் கலப்பதை ஒத்த இயல்பினதெனவும்29 நல்லியல்பு மெல்லியள் மேலிட்ட சாபம், புதுமல்லிகைக் கொடிமேல் வெந்நீர் தெளிப்பதொக்கு மெனவும்,30 நன்மக்கட்பேறு தக்க மாணவனுக்குக் கற்றுத்தந்த கல்விபோல் நற்பயன் தரத்தக்கதெனவும்,31 உள்ளத்துணர்வு களால் உயர்நிலையும் மாறுபடுமென்பதை `பூனையாற் பிடியுண்ட சுண்டெலிபோல் என் உயிரில் யான் நம்பிக்கை யற்றவன் ஆகின்றே னெனவும்32 குறிப்பிடப் பெறுவன அடிகளார் உவமைத் திறனுக்கும் உரையழகுத் திறனுக்கும் சான்றுகளாம். இவற்றில் இயற்கை யோடியைந்த உண்மை களும், எளிய பொருட்புலப்பாடுகளும் சிறப்புற விளங்குகின்றன. முதல் நூல் அழகுகள் தமிழ்நூல் தகுதிகளோடு அடிகளார் கலைத்திறனால் மேலும் மிளிர்கின்றன. தேனும்பாலும் போல இனிமையும் நலனும் பயந்து பிரிவின்றிக் காதலர் வாழ வாழ்த்துக் கூறுதலும்,33 பொய்ம்மைப் புனைகதைகள் பாடுதல் ஒரு முயற்கொம்பின் மேலேறிச் சென்று வான்வெளியில் மாளிகை கட்டுதலை ஒக்குமெனக் கூறுதலும்,34 காதலன்பால் காதலன்பினால் கசிந்துருகும் மனநிலையைக் கதிரவனால் முழுதுருகும் பனிப்பாறையெனக் கூறுதலும், காதலனைக் கதிரவனாகக் காட்டுதலும்,35 காவலர் நடுவில் காதலர் நிலை முட்செடிகளினிடையே கிளம்பிய நெற்பயிர்போல வெனக் கூறுதலும்.36 `அரசரொடு உறவாடுவது நெருப்பொடு உறவாடுதலையே ஒக்குமெனக் கூறுதலும்37 அடிகளாரின் உரையாடல் திறனிலமைந்த உண்மையழகுக் கூறுகளாம். உரையாடல்களின் உணர்வோட்டத்திற்கும் இயல்புணர்ச்சிக்கும் இவ்வுவமையழகுகள் உறுதுணையாக விளங்குதல் வெளிப்படை. மேலும் அவை கருத்துச செறிவுக்கும், கற்பனையழகுக்கும் காரணங்களாகிக் கற்பார் நெஞ்சங்களுக்குக் களிப்பூட்டுகின்றன. காட்சிகளின் சுவைப் பெருக்கத்திற்கும், காட்சியருமை களைக் கண்முன் நிறுத்திக் காட்டுதற்கும் ஏற்ற வகையில் சிறந்த பின்புலங்களைத் தம் உரைத்திறனால் உருவாக்குவதில் வல்லவர் அடிகளார். பனிக்காலத்தே இலையுதிர்ந்த மரஞ் செடி கொடிகள் வெயிற்க்லத்தே புதிது தவிர்த்து அரும்பு கட்டுதலும் அவ்வரும்புகளில் உள்ள தேனைப் பருகுதற் பொருட்டு வந்த வண்டுகள் அவற்றைக் குடைதலும், அதனால் முறுக்கவிழ்ந்த அவ்வரும்புகளிலிருந்து நறுமணம் புறந்தோன்றி வீசுதலும், அப்போது அழகிய மாதர்கள் அசோகமரச் சோலைகளிற் புகுந்து அதன் பூங்கொத்துக்களைப் பறித்துக் காதுகளிற்செருகித் தம்மை ஒப்பனை செய்துகொண்டு விளையாட்டயர்தலும் இயற்கையாய் நிகழ்தலின் அவ்வேனிற் கால அழகினை நடி என்பாள் இங்ஙனம் புனைந்து பாடு வாளானாள்38 என அமையும் பகுதியில் அடிகளாரின் சொற்கள் அழகுக் காட்சியின்பந் தந்து விளங்குதல் இன்புறத் தக்கது. காளிதாசர் நிறை-குறை முதல் நூற்புலவரின் நிறை குறைகளையும் நடுவுநிலையில் எடுத்துக் காட்டும் இயல்பினர் அடிகளார். சகுந்தலை மீண்டும் கணவனை அடையும் வழிவகை நிகழ்ச்சிகளின் தொடர்பு முறை, நாடகவியல்புகளில் புலப்படும் நுண்மாண் நுழைபுல வியல்பு ஆகியவற்றில் காளிதாசரின் பெருந்திறன் வெளிப்படு கிறது.39 நாடகக் கதையினை முற்றுந் தொடர்புபடுத்தி முடித்துப் பயில்வாரது உள்ளத்தின் வேட்கையைத் தூண்டச் செய்து, அவரை மிக மகிழச் செய்யுந் திறனும்,40 நாடக மாந்தரின் ஒழுகாலறுகளெல்லாம் அவரவர் இயற்கையின் வழியவாய்த் தோன்றி நாடகக் கதையினை நடாத்துமென்று உணர்த்தியமையுந் திறனும்,41 காளிதாசரிடையே பாராட்டத் தக்கன. மாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட சாகுந்தல நாடகக் கதையில், சகுந்தலையைத் துருவாசர் வைததாக அமையும் நிகழ்ச்சியும், துருவாசனின் வசவினைச் சகுந்தலை அறியாளாய் அமைத்திருக்கும் முறைமையும் நாடக நிகழ்ச்சியின் சுவை மிகுதி, நாடக நிகழ்ச்சிகளின் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு காளிதாசர் திறம்பட அமைத்தனவாகும்.42 காளிதாசரின் திறம், மக்கள் மனவியற்கைகளைக் காட்டும் வகையில் இளங்கோவடிகளுக்கு இணையாக விளங்குகிறது.43 நாடக மாந்தர்களின் நல்லியல்புகளையும் நுட்பங்களையும் உய்த்துணர வைக்கும் நுண்ணறிவுத் திறம் வாய்ந்தவர் காளிதாசர். காளிதாசரின் நிறைகளை நிலைநாட்டி, நினைவூட்டும் அடிகளார், அவர் குறைகளையும் கூறியுள்ளார். பரதன் காலத்திற்குப் பிந்தியதான அத்தினபுரத்தை அவன் தந்தை துஷியந்த வேந்தன் காலத்துத் தலைநகராகக் காளிதாசர் கூறியிருப்பது காலமுரண் ஆகும்.44 மேலும், காதலரின் தூய காதல் வாழ்க்கையைச் சிதைக்குங் கொடியதொரு முயற்சிக்கு ஒரு தூய துறவியை இயைத்தது அவர்க்கொரு வடுவேயாம்45 இதனால் தூய காதலன்பு போற்றி வளர்க்கும் தமிழ்ப் பெரும் புலவோரின் விழுமிய உள நிலையிலிருந்து காளிதாசரின் நிலை தாழ்ந்தே அமைகிறது என்பது அடிகளாரின் கருத்தாகும். காளிதாசரின் காலம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி யாகுமென46 நாடக நூலாசிரியரின் காலம் காணு தலில் மட்டுமல்லாது, நாடக நிகழ்ச்சிகளின் காலங் காணு தலிலும் ஆர்வங் காட்டியுள்ளார் அடிகளார். இச் சாகுந்தல நாடகக் கதை நிகழ்ச்சி துவங்கி முடிந்த காலப்பரப்பு ஐந்தரை அல்லது ஆறு ஆண்டு ஆகல் வேண்டும்.47 மேலும், ஒரு நாடக முடிவின்கட்சொல்லப்படும் வாழ்த்துரையானது `பரதவாக்கியம் என்று வடநூலின்கட் சொல்லப்படும். ஏனென்றாற் பண்டைக் காலத்தில் முதன்முதல் இசை நாடகங்களைத் தோற்றுவித்த ஆசிரியன் பரதன் என்ற பெயருடையனாதலால், அவனை நினைவுகூர்தற்கு அடையாளமாக, நாடகத்தலைவனாய் நின்றான் ஒருவன் நாடக முடிவின்கட் சொல்லும் வாழ்த்துரை அவ்வாசிரியன் பெயரால் வழங்கப்படுவதாயிற்றென்க48 என அடிகளார் கால ஆய்வு நிலையிலும், கருத்தாய்வு நிலையிலும் உண்மைகளைக் கண்டுகாட்டியுள்ளார். பாடல்கள் அடிகளார் தம் நாடகப் போக்கில் கருத்துச் செறிவும் கற்பனையழகும் உணர்வோட்டமும் வடிவநலனும் வாய்ந்த இனிய பாடல்களை அமைத்துள்ளார். துயர்தாங்கிச் சோர்ந்து செல்லும் சகுந்தலையின் வழித்தடங்களில் கொழுந்தாமரைகள் நடைத்துயர் தீர்க்கவும், அடர்ந்த நிழல்தரு வளமரங்கள் கொடிய கதிர் வருத்தம் களைந்து களிப்பூட்டவும் கமுகுக் காய்கள் கழிந்த மலர்த்துகள் போல் கடுமையிழந்து புழுதியடி கலந்திடவும் மென்காற்று உலவிடவும் வேண்டி அடிகளார் பாடியுள்ள பாடல் குறிப்பிடத்தக்கதாகும்.49 இறைவழிபாட்டிலும் இனிய தமிழ்நலங் கண்டு பாடியவர் அடிகளார். இறைநலனும் தமிழ்நலனும் இரண்டறக் கலந்து விளங்குதலைக் கண்டு காட்டியுள்ளார் அடிகளார். ஒவெனும் தனிச்சிறப்பு வழக்கினையும் இறவா இன்பப் பெரும் புகழ் வாழ்வினையும் தமிழுக்குத் தந்த இறைநிலை போற்றி,50 நாடகத் தமிழ்நூல் நன்கனம் வகுக்கஎன் நாவினும் உணர்வினும் நலக்க இயங்கி நன்றருள் புரிந்திடல் வேண்டும் மன்றி லாடும் மதிமுடி யோயே51 எனத் தமக்கு நாடக நூற்றிறன் வழங்க வேண்டுகிறார் அடிகளார். அம்மையப்பனாகவும் அழகுச் சடை கொண்டு தோலணிந்த ஆண்டவனாகவும் முப்புரங்களையும் மும்மலங் களையும் செற்ற முழுமுதற் கடவுளாகவும் இறைவனைப் பாடியுள்ளார் அடிகளார்.52 அடிகளார் நாடகங்களில் காதலின்பமும் கவிதைச் சுவையும் மிக்க பாடல்கள் மிகுதியாக உள்ளன. கொவ்வைக் கனியைக் குறைத்த இதழுங் குயில்போற் பயில்மொழியும் நவ்வியனைய மதர்விழியும் நறவு வார மணங்கமழும் மௌவற் கொடிபோற் துவள்வடிவும் வாய்ந்த நங்காய் இருபளிங்குங் கௌவி யிடைசேர் மலர்நிறம்போல் இருவே முளமுங் கழுமுமால்53 இப்பாடலில் கொவ்வைச் செவ்வாய், குயில்மொழி, மான்விழி, தேன்சுவை, மணமலர்க் கொடியுடல் எனப் பெண்ணழகு போற்றுகிறார் அடிகளார். மேலும் தேன்மொழி, மீன்விழி மின்னற்கொடி, தவப்பயன் என்றவாறு பல நிலைகளைப் பாராட்டும் வகையில், தேனொக்கும் இன்மொழியாள் தேராத என்நெஞ்சிற் றிகழ்கின் றாளை மானொக்கும் என்றெண்ணி மற்றதனைக் கவர்தற்கு வந்தேன் மின்னே! மீனொக்குங் கண்ணுடையாள் மின்னோக்கிற் கொப்பன்றி மிகுந்தன் னாளைத் தானொக்கும் பொற்பொன்னுஞ் சார்தலிலா மறிதன்னைச் சார்ந்தி லேனே54 எனவும், கன்னற் கண்டில் உருவாக்கிக் கடவுள் விடுத்த கலைமகளோ! என்னென்றுரைப்பேன் நினைக்கண்ட அப்போ தென்னை மறந்தனனே55 எனவும் அடிகளார் கற்பனையழகும் கவிதை நலனும் தோன்றப் பாடியுள்ளார். கடவுளுணர்வும் காதலன்பும் கற்பனையழகும் கருத்துச் செறிவும் இயற்கையழகின் இனிய இன்பமும் மட்டுமல்லாது நகைச்சுவையுணர்வு தோன்றத் தம் நாடகத்தில் கோமாளியை அமைத்துள்ளார் அடிகளார். அம்பிகாபதியைப் பாம்பு கடித்ததும் அமராவதி ஆற்றாது அழுது புலம்பி அரற்றும் வகையில் அடிகளார் அவலச் சுவையையும்56 அமைத்துள்ளார். அடிகளாரின் நாடகக் கூறுகள் அவரின் பல்சுவைப் பயிற்சியையும் தேர்ச்சியையும் காட்டுகின்றன. பிறநூல் தேர்ச்சி அம்பிகாபதி அமராவதி நாடகத்தின் பல்வேறு இடங்களில் அடிகளாரின் பன்னூல் பயிற்சியின் விளைவுகள் விளக்கமுற்றுத் திகழ்கின்றன. `அரச வாழ்க்கையே அல்லலுக்கிடமானது57 என அடிகளார் குறிப்பிடும் தொடர், மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும் காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்58 என்னும் புறநானூற்றுத் தொடர்களையும், மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில்லென59 கூறும் சிலப்பதிகாரத் தொடர்களையும் நினைவிற் கொணரும் தன்மையினவாகும். குறுநதொகையில் செம்புலப்பெயனீரார் பாடலை நினைவூட்டும் வகையில் இருவேம் நெஞ்சமும் ஒருவேம் நெஞ்சமாய்க் காதலிற் கழுமிய மேதகு நிலையை60 காட்டியுள்ளார் அடிகளார். பொன்னின் மிளிரும் புகழ்மேனி புழுதி படியப் புரிந்தீர்! பிரிந்தீர்61 என அம்பிகாபதி கொலையுண்டபோது எழும் அமராவதியின் குரல், பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ62 எனக் கோவலனை இழந்த கண்ணகி கொடுக்கும் குரலை ஒத்திருத்தலை உணரலாம். நீ இப்போதிருக்கும் நிலை நெருப்பாற்றில் மயிர்ப் பாலத்தின் மேல் நடப்பவன் நிலையோடொத்த தாயிருக்கின்றது63 என நயினார் கூறும் தொடர்கள் மனோன்மணீய நாடகத்தில், கருப்போ தேனோ என்றவர் களிப்பது நெருப்பா றும்மயிர்ப் பாலமும் அன்றோ! விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்64 எனவரும் பகுதியைப் போன்றதாகும். பட்டவிடத்தே படும், கெட்ட குடியே கெடும் என்னும் பழமொழி முற்றும் உண்மையே65 என்றவாறு பழமொழி களையும் அடிகளார் தம் நாடகத்தில் கையாண்டுள்ளார். நாடகக் கரு, கதை, நாடகக் கூறுகள், மொழியாக்க முறை, ஆராய்ச்சி ஆகிய அனைத்து நிலைகளிலும் அடிகளார் திறன் சிறந்து விளங்குகிறது. சாகுந்தலம் மொழிபெயர்ப்பின்வழி, மொழியாக்க முறைகளுக்கு ஒரு முன்னோடியாகவும், தமிழ் நாடக உலகினுக்கு ஒரு நற்கொடையாளராகவும் அடிகளார் விளங்குகிறார். காளிதாசரின் கலைப்படைப்பு, அடிகளாரின் ஆழ்புலமையாலும் அழகுத் தமிழாலும் எல்லோர்க்கும் இன்பம் பயக்கும் எழிற் கருவூலமாக விளங்குகிறது. `அம்பிகாபதி அமராவதி நாடகத்தில் அடிகளாரின் தனி நாடக நூல் ஆக்கத்திறம், மனித உளப் பண்பாடுகள் உணர்திறம் ஆகியன வெளிப்படுகின்றன. சுவைமிகு விறுவிறுப்போடும் நிகழ்ச்சிக் கோவைகள் நாடகத்தில் சிறப்புற அமைக்கப் பெற்றிருக்க வேண்டும். இத்தகு இயல்புகளில் `அம்பிகாபதி அமரவாவதி சிறந்து விளங்குகிறது. `சாகுந்தல நாடக ஆராய்ச்சி அறிவு நலன் பெருக்கும் இனிய நூலாகும். இந்நூலில் கால ஆய்வு, கருத்து ஆய்வு, ஒப்பாய்வு, திறனாய்வு ஆகிய பல்நிலை ஆய்வுகளையும் அடிகளார் மேற்கொண்டுள்ளார். சிறந்த மொழி பெயர்ப்பாளர் என்றும், நாடகாசிரியர் என்றும், நாடகநூல் ஆராய்ச்சியாளர் என்றும் முப்பெரும் பெருமை களை அடிகளார்க்கு வழங்குவன அவர்தம் நாடக நூல்களாகும். இணைப்பு சகுந்தலையின் கடிதம் - தமிழாக்கங்கள் 1. மறைமலையடிகள் இரக்கமிலா அரசே! நான் என்செய்வேன்! இரவுபகல் எரிக்கின்றான் என்னுடம்பை எழிற்காமன்! நின்மேலே பெருக்கின்ற தென்காதல் பேதையேன் நின்நெஞ்சம் இருக்குமா றுணர்ந்திலேன் எனக்கதனை இயம்புதியோ? 2. ரா. இராகவையங்கார் அருவில் லவனின் னிடனே பதியும் அகமூர் விழைவே னுடையங் கமெலாம் இரவும் பகலும் வலிதே சுடும்வேள் இவணின் னிதயம் பிறிதோர் கிலனே! 3. ச. பாவனந்தம் பிள்ளை உனதுமன மின்னதென வுத்தமனே நானறியேன் எனதுடலை இரவுபகல் எரிக்கின்ற துனதாசை தனதுவலி யான்மனது தவிக்கின்றேன் இரக்கமிலாய்! எனதுநிலை யறிந்தென்மேல் இரங்கினா லாகாதோ 4. ஆ.கு. ஆதித்தர் அருளின் மன்னவ திருவுள மறியேன் உருவும் உளமும் உனைநினைந் துருக இரவும் பகலும் மாரவேள் வந்து இரக்கமே இன்றி ஒறுத்தற்கோ முறையோ? 5. க. சந்தானம் உனதுள்ளம் யான் அறியேன் உன்னிடம் ஆசைகொண்ட அங்கங்களை இரவும் பகலும் இடைவிடாமல் கருணையின்றிக் காமன் காய்கின்றான். 6. சி.எ. சச்சிதானந்த தீட்சிதர் உனது மனதை அறிகிறேனில்லை. எனக்கு மன்மதன் பகலிலும் இரவிலும் எரித்தலும் செய்கிறான். ஓ, தயவில்லாத வரே! உன்னிடம் விருப்பமுள்ள என் மனதை அடைந்து அதிக ஸந்தாபத்தை உண்டு பண்ணுகிறான். 7. நவாலியூர் எ. நடராசன் கொடிய உள்ளம் படைத்தவரே, உங்கள் மனதை நான் அறியேன். ஆனால் உங்களிடத்து மாறாக் காதலுள்ள என்னை மன்மதன் இரவுபகலாய்ப் பெரிதும் வாட்டுகிறான். (தொகுப்பு: டாக்டர் இரா. குமரவேலன், `தமிழில் நாடக இலக்கியம் பி.எச்.டி.பட்ட ஆய்வேடு, சனவரி, 1972, தட்டச்சுப் படி, ப. இணைப்பு 38) மறைமலையம் (பொருள்வழி பிரிக்கப்பட்டு - காலநிரல் செய்யப்பட்டவை) மருத்துவம்: 1. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் 1921 2. மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை 1, 2 1933 மறைபொருளியல்: 3. மரணத்தின் பின் மனிதர் நிலை 1911 4. யோக நித்திரை அல்லது அறிதுயில் 1922 5. மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி 1927 6. தொலைவிலுணர்தல் 1935 இலக்கியம்: 7. சாகுந்தல நாடகம் 1907 8. சாகுந்தல நாடக ஆராய்ச்சி 1934 இதழ்கள்: 9. ஞானசாகரம் 1902 சங்க இலக்கிய ஆய்வு: 10. முதற் குறள் வாத நிராகணம் 1898 11. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை 1903 12. பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை 1906 13. முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவர் 1936 14. திருக்குறள் ஆராய்ச்சி 1951 பாடல்: 15. மறைமலையடிகள் பாமணிக்கோவை 1977 16. முனிமொழிப் பிரகாசிகை 1899 நாடகம்: 17. அம்பிகாபதி அமராபதி 1954 புதினம்: 18. குமுதவல்லி நாகநாட்டரசி 1911 19. கோகிலாம்பாள் கடிதங்கள் 1921 கடிதம்: 20. மறைமலையடிகளார் கடிதங்கள் 1957 கட்டுரை: 21. சிந்தனைக் கட்டுரைகள் 1908 22. அறிவுரைக் கொத்து 1921 23. சிறுவர்க்கான செந்தமிழ் 1934 24. இளைஞர்க்கான இன்றமிழ் 1957 25. அறிவுரைக்கோவை 1971 26. உரைமணிக் கோவை 1972 27. கருத்தோவியம் 1976 சமயம்: 28. திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவை 1900 29. சோமசுந்தரக் காஞ்சியும், காஞ்சியாக்கமும் 1901 30.கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா 1929 31. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1930 32. மாணிக்கவாசகர் மாட்சி 1935 33. திருவாசக விரிவுரை 1940 34. மாணிக்கவாசகர் வரலாறு 1952 35. சோமசுந்தர நாயகர் வரலாறு 1957 தத்துவம்: 36. சித்தாந்த ஞானபோதம்- சதமணிக் கோவை 1898 37. துகளறு போதம் உரை 1898 38. வேதாந்த மத விசாரம் 1899 39. வேத சிவாகமப் பிரமாண்யம் 1900 40. சைவசித்தாந்த ஞானபோதம் 1906 41. சிவஞான போத ஆராய்ச்சி 1958 வரலாறு: 42. இந்தி பொது மொழியா? 1937 சமூக இயல்: 43. பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் 1906 44. சாதிவேற்றுமையும் போலிச்சைவரும் 1923 45. வேளாளர் நாகரிகம் 1923 46. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் 1938 47. தமிழர் மதம் 1941 மறை மலையடிகள் நாட்குறிப்புகள் 1988 பொது நிலைக் கழக உரை விவேகாமிர்தம் பிரசண்ட மாருதம் வேதாந்த சித்தாந்தம் சைவ சமயப் பாதுகாப்பு ஆங்கில நூல்கள்: 48. Oriental Mystic Myna bi Monthly 1908 49. Ocean of Wisdom’ bi Monthly 1935 50. The Tamilian and Aryan Forms of Marriage 1936 51. Ancient and Modern Tamil poets 1937 52. Can Hindi be the Lingu franca of India? 1937 53. Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge 1940 54. The Concemption of God Rudhra