kiwkiya«-- 5 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) kiwbghUËaš – 3  தொலைவிலுணர்தல் ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 32+288 = 320 விலை : 400/- மறைமலையம் - 5 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 தாள் : 16.0 கி. மேப்லித்தோ, * அளவு : 1/8 தெம்மி *  எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 320 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 1000 நூலாக்கம் : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005.யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) தனித்தமிழ் நடையின் தந்தை! அடிகள் அவர்கள் ஏறத்தாழ ஐம்பதாண்டுகள் தமிழ் மொழியின் ஆக்கத்திற்காகவும், தமிழ் மக்களின் முன்னேற்றத்திற் காகவும் அரும்பெருந் தொண்டுகள் ஆற்றிய பெரியார்களுள் தலை சிறந்தவர்கள். தமிழ் மொழி தனித்தியங்கவல்லது என்பதைத் தங்கள் எழுத்தாலும் பேச்சாலும் உலகறியச் செய்த பெருமை அவர்களுக்கே உரியது. நாட்டில் மறைமலையடிகளார் நடை என ஒன்று உருவெடுத்துத் தோன்றிப் பரவியுள்ளது. எனவே, அவர்கள் தனித்தமிழ் நடையின் தந்தை எனற்பாலர். அடிகளார் தமிழ் மக்கள் அனைவரும் தம் பழம் பெருமையை உணர வேண்டும் என்று விரும்பியவர்; இக்காலத் தாழ்ந்த நிலையையும் உணர வேண்டும் என்று விழைந்தவர்; அவை காரணமாக இனி வருங்காலத்தில் தம்மை உயர்த்தி நிறுத்த வேண்டித் தமிழர் பெருமுயற்சி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியவர். இந்தி பொது மொழியாகித் தமிழர்க்குக் கட்டாய மொழியாகும் பெற்றி உடையதன்று என்பதைத் தக்க காரணங்களோடு எடுத்துக் காட்டி வெளிப்படைக் கடிதம் எழுதியவர். - டாக்டர். அ. சிதம்பரநாதச் செட்டியார், எம்.ஏ. (பக். 37-38) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத் திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தை யும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறு வட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக் காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் இதுவரை வெளியிட்டுள்ள தமிழ்மண் பதிப்பகத்தின் நூல் தொகுப்புகள் 1. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 52 நூல்கள் 2. தொல்காப்பியம் - உரைகளுடன் 15 தொகுப்புகள் 3. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் - 30 நூல்கள் 4. கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி -18 தொகுப்புகள் 5. சாமிநாத சர்மா - 31 தொகுப்புகள் 6. ந.சி.க. நூல் திரட்டு - 24 தொகுப்புகள் 7. சாத்தன்குளம் இராகவன் நூற்களஞ்சியம் - 16 நூல்கள் 8. சதாசிவப் பண்டாரத்தார் - 10 நூல்கள் 9. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் - 24 தொகுப்புகள் 10. செவ்விலக்கியக் கருவூலம் - 15 தொகுப்புகள் 11. தேவநேயம் - 14 தொகுப்புகள் 12. திரு.வி.க. தமிழ்க்கொடை - 26 தொகுப்புகள் 13. உரைவேந்தர் தமிழ்த்தொகை - 28 தொகுப்புகள் 14. கருணாமிருத சாகரம் - 7 தொகுப்புகள் 15. பாவேந்தம் - கெட்டிஅட்டை - 25 தொகுப்புகள் 16. புலவர் குழந்தை படைப்புகள் - 16 தொகுப்புகள் 17. கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 தொகுப்புகள் 18. நாவலர் சோம சுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் - 5 தொகுப்புகள் 19. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் - 39 நூல்கள் 20. தமிழக வரலாற்று வரிசை - 12 தொகுப்புகள் 21. உவமைவழி அறநெறி விளக்கம் - 3 தொகுப்புகள் 22. முதுமொழிக் களஞ்சியம் - 5 தொகுப்புகள் 23. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் - 22 தொகுப்புகள் 24. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 தொகுப்புகள் 25. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை - 21 தொகுப்புகள் 26. ஐம்பெருங் காப்பியங்கள் - 5 தொகுப்புகள் 27. பதினெண் கீழ்க்கணக்கு - 3 தொகுப்புகள் 28. நீதி நூல்கள் - 2 தொகுப்புகள் 29. பி. இராமநாதன் - 10 நூல்கள் 30. யாழ்ப்பாண அகராதிகள் - 2 தொகுப்புகள் 31. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதிகள் - 3 தொகுப்புகள் 32. ந.சி. கந்தையா அகராதிகள் - 2 தொகுப்புகள் 33. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் - 40 தொகுப்புகள் 34. இளங்குமரனார் அகராதிகள் - 2 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கும் அறிஞர்களின் நூல்கள் 1. மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை 2. வ.சுப. மாணிக்கம் 3. பெரியாரியம் (தந்தை பெரியார்) 4. தமிழர் மருத்துவக் களஞ்சியம் 5. தமிழ் - தமிழ் அகராதி பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகச் சேர்த்து பொருள்வழிப் பிரித்து, கால நிரலில் ஒரே வீச்சில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோஜா முத்தையா நூலகம் புலவர் கா. இளமுருகன் (மறைமலையடிகள் மன்றம், புன்சை புளியம்பட்டி) மறை. தாயுமானவர் (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: புலவர். கா. ஆறுமுகம் மணிமொழி கருப்பையா நாக. சொக்கலிங்கம் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி வி. சித்ரா, திருமதி செல்வி, திருமதி மலர், திருமதி ஹேமலதா, திரு. ஆசம், பிராசசு இந்தியா (Process India), திருமதி கலைவாணி, திருமதி புகழ்ச்செல்வி நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்ரா மேலட்டை வடிவடைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், திராவிடன், வே. தனசேகரன், மருது தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை, எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, பிராசசு இந்தியா மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்கு பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: âUkâ வி. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி`புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். தனிப்பெருந் தமிழ் மீட்பர் மறைமலையடிகள் கல்விக் கடல்; தமிழ் ஆங்கிலம் சமற்கிருதம் ஆகிய மும்மொழி வல்லுநர்; மருத்துவம், கருநூல் (Embryology), தொலைவுணர்வு (Telepathy), மனவசியம் (Mesmerism), அறிதுயில் (Hypnotism) முதலிய பல்கலை யறிஞர்; நூலாசிரியர், நுவலாசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், பதிப்பாசிரியர், ஆய்வாசிரியர் ஆகிய பல்வகை யாசிரியர்; அடக்க மும் அஞ்சாமையும் உண்மை யொப்புக்கொள்வும் குலமத வேற்றுமை யின்மையும் கொள்கைக் கடைப்பிடிப்பும் கொண்ட பண்பாட் டாளர்; நாட்டிற்கும் மொழிக்குமன்றித் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்; மாபெருந் தமிழ்ப் புலவரும் தமிழ்ப் பேராசிரியரும் தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு தெரியாது, நூற்றிற் கெண்பது விழுக்காடு வடசொற் கலந்து தமிழைப் பேசியும் எழுதியும் பாடியும் வந்த காலத்தில், தமிழ்ப்பயிர் அயற்சொற்களால் நெருக்குண்டு அடியோடழிந்து போகவிருந்த நிலையில், 1916ஆம் ஆண்டிலிருந்து வடசொற்களை அறவே களைந்து, தூய தீந்தமிழில், உரைநடையும் செய்யுளுமாகிய இருவகை வடிவிலும், அறிவியல், சமயம், வரலாறு, ஆராய்ச்சி, திருமுகம், உரை, மொழிபெயர்ப்பு முதலிய பல துறையிலும், ஐம்பான் அருநூல்களை வெளியிட்டு, தமிழில் எந்நூலையும் இயற்றவும் மொழிபெயர்க்கவும் இயலும் என்பதைக் காட்டி, தமிழ் வரலாற்றின் மூன்றாங் காலமாகிய மறுமலர்ச்சித் தனித்தமிழ் ஊழியைத் தொடங்கி வைத்தவர்; முதன் முதல் தனித்தமிழ்த் திருமணஞ் செய்து வைத்தவர்; Can Hindi be the Lingua Franca of India? (இந்தி இந்தியப் பொதுமொழியாயிருக்க இயலுமா?) என்னும் ஆங்கிலச் சிறுநூலில், அறிவியன் முறையிலும் ஏரண முறையிலும் கட்டாய இந்திக் கல்வியை வன்மையாகக் கண்டித்தவர்; இறுதிவரை எழுத்தாலும் சொற்பொழிவாலும் அருந்தமிழ்த் தொண்டாற்றியவர்; இன்றும் இனி என்றும் ஈடிணை யற்றவர்; பல்லவபுரம் பொதுநிலைக் கழகத் தலைவர் மறைமலை யடிகள். மறைமலை யென்னும் மறையா மலையின் நிறைநிலை வாரத்தே நிற்க - இறையும் தமிழன் வடமொழித்தீத் தாழ்வின்றி வாழ இமிழுங் கடல்சூழ் இகம். பாவணர் தமிழ்க் களஞ்சியம் பக். 145- 146 தொலைவிலுணர்தல் 1961 இல் சைவ சித்தாந்த கழகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றியகுறிப்புரை... மக்களுக்கு மெய்யறியும் மேன்மைகளும் தரும் வகையில் அடிகளாரின் நீண்ட கால உழைப்பில் உருவானது இந்நூலாகும். தமிழ் நாட்டில் தொலைவி லுணர்தலாகிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்தாலும், அவற்றை நடுவுநிலையான் நன்காய்ந்து, மெய்ச்சான்று காட்டி உறுதிப்படுத்துவாரும், நூலெழுதுவாரும் இல்லாத தால் அடிகளாரின் முயற்சி அரிய முயற்சியாகிறது. காற்று வெளி, நினைவு வெளி, நினைவு இயல்பு, உணர்வு நுட்பம், கடவுளியல்பு கனவு நிலைகள், தெளிவுக் காட்சி ஆகிய பல்வேறு செய்திகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. கேட்போர் இயல்புகளையும், கேட்கும் முறை களையும், கேட்ட bgருளின்நyந்தீங்குகளையும்கUத்தில்fண்டேகடவுள்கUணைகhட்டுவான்எ‹னும்கlîள்நெ¿க்கரு¤துகளையும்உண்iமகsயும்அடிfளார்இந்üலில்விள¡கியுள்ளார். ப‹dhS« பன்முறையும் ஆய்ந்தாய்ந்து, நினைந்து நினைந்துமெல்லென நூல் ஒவ்வொன்றும் எழுதும் அடிகளார் இயல்பும் அறியப்பெறுகின்றது. - நா. செயப்பிரகாசு மறைமலை அடிகளாரின் இலக்கியப் படைப்புகள் - பக்கம் : 19 முதற்பதிப்பின் முகவுரை இற்றைக்கு இருபத்துநான்கு ஆண்டுகளுக்குமுன் அதாவது விரோதி கிருது ஆண்டு (1911) சித்திரைத் திங்களில் யாம் எழுதத்துவங்கிய தொலைவிலுணர்தல் என்னும் இவ்வுரை நூல், எமது ஞானசாகரம் என்னும் அறிவுக்கடலின் ஆறாந்திருமலரிலும் எட்டாந்திருமலரிலும் ஒன்பதாந்திருமலரிலும் 96 பக்கங்கள் வரையில் வெளிவந்து, பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்தாந் திருமலர்களில் தொடர்ந் தெழுதப்படாமல் நின்றுபோய். மீண்டும் 16-ஆந் திருமலரில் ஆங்கிரச ஆவணி புரட்டாசிக்குரிய ஏழு எட்டு இதழ்களில் தொடர்புகொண்டு வெளிவரத் துவங்கி, இப்போது அதன் பதினேழாந் திருமலரின் எட்டு ஒன்பதாம் இதழ்களில் எல்லாம் வல்ல இறைவன் றிருவருளால் இனிது முடிவு பெறலாயிற்று. இங்ஙனம் இந்நூல் இடையிடையே எழுதப்படாமல் நின்று போயது ஏனெனின்; யோகநித்திரை, மனிதவசியம், மக்கள் நூறாண்டு உயிர்வாழ்தல் எப்படி?, மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் பேராராய்ச்சிப் பெரும்பயன் நூல்களும் வேறுசில சிறு நூல்களும் இடையிடையே எழுதி வெளியிட வேண்டுவது இன்றியமையாததாக நேர்ந்தமையானும், அந்நூற் பொருள்களின் உண்மைகளை உள்ளவாறு ஆராய்ந்து எழுதுதற்குத் தமிழ் ஆங்கிலம் வடமொழி என்னும் இந்நூற் பொருளின் உண்மைகளையும் உண்மை நிகழ்ச்சிகளால் விளக்குதற்கு இன்னும் பல நூல்களைப் பயில வேண்டுவது முதன்மையா யிருந்தமையானும், மேற்கிளந்த நூல்கள் முடியுந்தனையும் இந்நூலை இடையே பல ஆண்டுகள் நிறுத்தி வைக்க இருபத்துநான்கு ஆண்டுகளுக்குப் பிறகாவது இது முற்றுப்பெறும்படி அருள்புரிந்த எம்பிரான் றிருவடிகளுக்கு அடியேங்களின் புல்லிய வணக்கங்கள் உரிய வாகுக! தொலைவிலுணர்தல் என்பது ஐம்புலன்களுக்கும் எட்டாத் தொலைவிலுள்ள பொருள்கள் உயிர்கள் பொருணிகழ்ச்சிகள் உயிர் நிகழ்ச்சிகளை மக்களாகிய நாம் நமதுள்ளத்தால் உணரப் பெறுதலே யாகும். ஐம்புலன்களின் வாயிலாகவன்றி எதனையும் உணரமாட்டாத எளிய நிலையில் நிற்கும் நாம், அவ்வைம்புலன்களுக்கும் எட்டாத இடத்திலுங் காலத்திலும் உள்ள பொருள்களையும் உயிர்களையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் ஒரோ வொருகாற் கனவிலும் நம் அகக்கண்ணெதிரே சடுதியிற்கண்டு, அங்ஙனங் கண்டபடியே பின்னர்ப் புறக்கண்ணெதிரேயும் அவை தோன்றக் கண்டால் அப்போது நாம் எவ்வளவு இறும்பூதெய்துகின்றோம்! கனவிலோ நனவிலோ நாம் நம் அகக்கண்ணாற்கண்டு நினைவுற்ற ஓரிடத்தே அங்ஙனங் கண்டபடியே சிறிதும் பிசகாது நமது புறக்கண்ணேதிரேயுங் காணநேருங்கால் அப்போது நாம் எவ்வளவு வியப்புறுகின்றோம்! இன்னும் நமக்கு இனியராயினார் ஒருவரைப்பற்றி நாம் ஆழ்ந்து நினைந்து கொண்டிருக்கையில், அவர் நமக்கெதிரே வந்தாலும், அல்லாதவரிடமிருந்து எதிர் பாராமலே ஒரு கடிதம் வந்தாலும் அப்போதும் நாம் எவ்வளவு வியப்பினை அடைகின்றோம்! இவ்வாறு ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள் ஒருகாலன்றிப் பல காலும் ஆங்காங்கு நிகழ்தலை நம்மனோர் தம்மாட்டும் பிறர் மாட்டும் அடுத்தடுத்து அறிந்துவைத்தும், அவற்றைப் பற்றி ஆராயாதும், அவ் வாராய்ச்சியாற் பெறும் பெரும்பயனைப் பெறாதும் வாளா நாட்கழித்து மாய்ந்துபோதல் எத்துணை இரங்கத்தக்க தொன்றா இருக்கின்றது! இவ்வுடம்பும் இவ்வுடம்பிலமைந்த ஐம்புலங்களும் நமக்கு அறிவை வளர்த்தற்கும் இன்பத்தைப் பெருக்குதற்கும் இன்றியமையாதவைகளாய் இருந்தாலும், இவையிற்றின் உதவி யில்லாமலே பொருள்களையும் உயிர்களையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் நேரே யறிந்து கொள்ளுதற்குரிய அறிவும் ஆற்றலும் உடையவர்களாய் இருக்கின்றோம் என்பது மேல் நிகழ்ச்சிகளால் விளங்க வில்லையா? இத் துணைச் சிறந்த அறிவாற்றல் நமக்கு இயற்கையாகவே யிருந்தும், ஏதோ ஓர் இருள் நம்மறிவைக் கவிந்து கொண்டிருத்தலினாலன்றோ, இவ்வுடம்பும் இதிலமைந்த ஐம்புலன்களும் அவ்விருளைப் போக்கி நமதறிவை விளங்கச் செய்தற்கு இன்றியமையாக் கருவிகளாக இறைவனால் நமக்கு வகுத்துக்கொடுக்கப் பட்டிருக்கின்றன? கட்பார்வை மங்கிய கண் கண்ணாடியின் உதவியால் தனது பார்வை விளங்கப் பெறுதல் போலவும், புகையிற் பொதிந்த நெருப்புக் காற்றினுதவியால் அப்புகை நீங்கிச் சுடர்ந்தெரிதல் போலவும், பாசி மூடிய நீர் செம்படவர் வலையால் அரிப்புண்ட பின் தெளிந்து விளங்குதல் போலவும். மழைமுகிலால் மறைவுண்ட மதியம் மழை பொழிந்தபின் நீலவானில் நிலவொளி விரித்துச் சாலத் துலங்குதல்போலவும், நம தறிவை மறைத்த இருளும் விலகவிலக அவ்வறிவுஞ் சொலற்கருந் துலக்கமுடையதாகி, ஐம்புல உதவி வேண்டாமலே அண்மையிலுஞ் சேய்மையிலும் முற்கால இக்காலப் பிற்காலங்களிலும் எவற்றையும் எவற்றின் நிகழ்ச்சிகளையும் நேரே காணவல்லதாகிய அறிவுக் காட்சியை நாம் பெறுங்கால், அதற்கு முன் நாம் அறியாமையால் அடைந்த நோயுங் கவலையும் வறுமையும் அவற்றால் வரும் அளவிலாத் துன்பங்களும் நம்மைவிட் டொருங்கே நீங்கிப்போக, நாம் எல்லையற்ற அறிவும் இன்பமும் நிரம்பப் பெற்று, எல்லாம் வல்ல ஆண்டவனது அருட்பேரொளியில் அழிவின்றி நிலை யுதலுறுவோம். ஆகவே, அத்துணைச் சிறந்த அறிவுக் காட்சி நமக்கு இயற்கையே உண்டென்பதனையும், அவ்வறிவுக் காட்சியால் நம் மக்களிற் சிலர் பலர் ஐம்புலன்களுக்கும் எட்டாத அரிய பல நிகழ்ச்சிகளை நேரே காண்டலையும், உண்மையாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு நன்கு விளக்கி, அவ்வாற்றால் மக்கட் பிறவியினை அரிதிற் பெற்றாரெல்லாரும் ஓவாத தமது தவமுயற்சியால், அவ்வறிவுக் காட்சியினை இன்னும் வரம்பின்றிப் பெருகச் செய்து, அதனால் அறியாமையும், அறியாமையினை அடிப்படையாகக் கொண்டு வரும் அல்லல்களும் ஒழிந்து இம்மை மறுமைக்குரிய எல்லா நலன்களையும் எய்தல் வேண்டும் என்னும் நோக்கம் பற்றியே தொலைவிலுணர்தல் என்னும் இந்நூலை இயற்றலாயினேம். இந்நூலின்கண் எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் மெய்ந் நிகழ்ச்சிகளிற் பெரும்பாலன மேனாட்டாசிரியர் ஆராய்ந்து உண்மையென உறுதி செய்தவைகளாகும். இத்தமிழ் நாட்டிலும் ஆங்காங்குத் தொலை விலுணர்தலாகிய நிகழ்ச்சிகள் நாடோறும் நிகழ்கின்றனவாயினும், அவை தம்மை நடுநின்று ஆராய்ந்து பல மெய்ச் சான்றுகளால் உறுதிப்படுத்துவாரும் உறுதிப்படுத்தி நூல் எழுதுவாரும், யாமறிந்தவரையில், எவருமில்லை. அதனால் இத்தமிழ்நாட்டில் நிகழுந் தொலைவிலுணர் நிகழ்ச்சிகளை மிகுதியாய் எடுத்துக் காட்டுதல் எம்மால் இயலாதாயிற்று. எந்நாட்டி லிருப்பினும், எம் மக்கள் குழுவைச் சேர்ந்தவராயிருப் பினும், உண்மைகாணும் வேட்கையும் முயற்சியும் உடைய சான்றோர் ஆராய்ந்து கண்ட மெய்ம்மைகளை எடுத்துக் காட்டுதலே மக்களுக்கு மெய்யறிவைத் தருமாகலின், யாம் எடுத்துக் காட்டிய மேனாட்டாசிரியர் தம் மெய்யுரைகள் நம்தமிழ் நாட்டவர்க்கு மெய்யறிவைப் பயந்து அவர்க்குப் பெருநலன்களை விளைக்கு மென்னும் நம்பிக்கை யுடையேம். இருபத்துநான்கு ஆண்டுகளுக்குமுன் யாம் இந்நூலை எழுதத்துவங்கிய காலத்தில், வடசொற் கலப்பால் நம் செந்தமிழ் மொழிக்குண்டாந் தீதினை உன்னியாதிருந்தேம். அதனால், இந்நூற்படிகள் சிலவற்றில் முதல் ஐம்பத்தொரு பக்கங்கள் வரையிற் சிற்சில வடசொற்கள் கலந்துவிட்டன. இந்நூலின் இரண்டாம் பதிப்பில் அவ்வடசொற்கள் களைந்தொழிக்கப் படும். இதுகாறும் எமது நூற்றொண்டுக்குத் துணைபுரிந்துவரும் இறைவன்றி ருவருள் மேலும் அதற்குத் துணைபுரிவதாக! பல்லாவரம் மறைமலையடிகள் பொதுநிலைக்கழக நிலையம், திருவள்ளுவர் ஆண்டு, இரண்டாம் பதிப்பின் முகவுரை இந்நூலின் முதற்பதிப்பு முகவுரையிற் கண்டபடி தொலைவிலுணர்தல் என்னும் இத்தமிழ்நூல் திருவள்ளுவர் ஆண்டு 1942-இல் (கி.பி1911-இல்) இயற்றத் துவங்கி, இடை யிடையே பல ஆண்டுகளாக எழுதி அச்சிடப்பட்டு 1935-ஆம் ஆண்டில் (கி.பி. 1966-இல்) நூல் வடிவில் வெளிவந்ததாகும். அதன்பின் இவ்விரண்டாம் பதிப்பு, கி.பி. 1939 இல் துவங்கிய மேல் கீழ்நாட்டுக் கொடும் பெரும் போருக்குமுன் பல்லாண்டுகள் இடையிடையே அச்சிடப்பட்டு, அப்போர் முடிந்ததற்குப்பின் இப்போதுதான் வெளிவரலாயிற்று. முதற்பதிப்பின்கண் இருந்த வடசொற்கள் முற்றுங்களைந் தெடுக்கப்பட்டு இவ்விரண்டாம் பதிப்பு முழுதுந் தூய தனித் தமிழ் உரைநடையில் ஆக்கப்பட்டிருக்கின்றது. முப்பத்தைந் தாண்டுகளுக்குப்பின் இந்நூலின் 2-ஆம் பதிப்பை வெளியிடுதற்கு அருள்சுரந்த எல்லாம் வல்ல இறைவன் திருவடிப்போதுகளுக்கு அடியனேன் புல்லிய வணக்கம் உரியதாகுக! பல்லாவரம் பொதுநிலைக்கழக, நிலையம், மறைமலையடிகள் திருவள்ளுவர் ஆண்டு கி.பி. திசம்பர், 1946 பொருளடக்கம் பக்கம் 1. தொலைவிலுணர்தற் பெயர்ப்புதுமை 9 2. நுண்ணிய வெளிகள் 13 3. மனவெளி 17 4. மனவுணர்வை நுட்பமாக்கல் 23 5. உணவு 45 6. மூச்சுவிடும் முறை 55 7. தொலைவில் உணர்வோர் உணர்த்துவோர் 58 8. முதற் பழக்கம் 61 9. இடம் உணர்தல் 63 10. பொருள்களை உணர்தல் 65 11. அறிதுயில் வருவிக்கும் முறை 76 12. தாமே தோன்றும் உணர்ச்சிகள் 88 13. கனவிற்றோன்றும் உணர்ச்சிகள் 95 14. நனவிற்றோன்றும் முன்னறிவிப்புகள் 139 15. பலர்க்குத் தோன்றிய நினைவுருவங்கள் 166 16. தெளிவுக் காட்சி 202 பாவலர்கள் பார்வையில் மறைமலையடிகள் 217 1. தொலைவிலுணர்தற் பெயர்ப்புதுமை இத் தலைப்பெயர் பலருக்குப் புதுமையாகக் காணப் படலாம். அங்ஙனம் புதுமையாகத் தோன்றினாலும் இதனால் உணர்த்தப்படும் பொருளோ பெரும்பாலும் எல்லார்க்குந் தெரிந்ததொன்றேயாம். அன்பிற் சிறந்த மனைவி, நெடுநாளாக ஏதொரு செய்தியுந் தெரிவியாமல் தொலை விலிருந்த தன் காதலனைப்பற்றி ஆழ நினைந்து கொண்டிருக்கையில் திடுமென அவனிடமிருந்து கடிதம்வரப் பார்த்து வியப்படை கின்றாளன்றோ? ஒவ்வொருகால் நாம் நமக்கு இனிய நண்பரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் திடீரென்று எதிரே வர உடனே நாம் வியப்படைந்து உங்களுக்கு ஆண்டு நூறு, இப்போது தான் உங்களைக் குறித்துப் பேசிகொண்டிருந்தோம் என்று சொல்கின்றேம் அல்லமோ? இவ்வாறு தொலைவிலுள்ளவரை நினைப்பதும் நினைக்கப்பட்ட அவர் திடீரென வருதலும் அல்ல தவரிடமிருந்து செய்தி வருதலும் நமது உயிர் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நிகழ்தல் வழக்கத்திற் கண்டு கொள்ளலாம். இங்ஙனம் நாங் காணவுங் கேட்கவும் ஏலாத தொலைதேயங்களில் நிகழும் நிகழ்ச்சிகளை நம் மனமானது எளிதில் உணர வல்லதாயிருக்கின்றது. தொலைநாட்டிலுள்ள ஒருவர் தம் நண்பரைப் பற்றி நினைந்த அப்பொழுதே வேற்றுநாட்டிலுள்ள அந் நண்பரும் அவரைப் பற்றி நினைந்ததைப் பின்னால் வந்த கடிதங்கள் செவ்வையாக விளக்கிக் காட்டியிருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக எமதறி வெல்லையில் உண்மையாக நடந்த ஒரு வரலாற்றினை இங்கெடுத்துக் காட்டுகின்றேம். எமக்குப் பதினைந்து பதினாறு ஆண்டிருக்கும். செந்தமிழ் இலக்கண இலக்கியங்களை மிக்க அருளோடும் எமக்கு எடுத்து அறிவுறுத்திய நல் ஆசிரியரான நாராயணசாமிப் பிள்ளை யவர்கள் நாகபட்டினத்திற் புத்தகக் கடை வைத்திருந்தார்கள். அப்போது யாம் ஆங்கிலக் கல்லூரியில் ஆங்கிலமும் பயின்றுகொண்டிருந்தேமாகலின், ஒவ்வொரு நாளும் மாலையிற் கல்லூரியினின்றும் வந்தவுடனே புத்தகக் கடைக்குச் சென்று அருமையிற் சிறந்த எம்மாசிரியரிடஞ் செந்தமிழ் நூல்களைப் பயில்வது எமக்கு வழக்கமாய் நடந்து வந்தது. இங்ஙனம் நடந்து வருகையில், யாங் கல்வி பயிலும் ஆங்கிலக் கல்லூரியில் மேல்வகுப்பிற் கலை பயின்று வந்த மாணவர் ஒருவர் எமக்குச் சிறந்த நண்பராகித் தாம் அப்போது கற்று வந்த மனோன்மணீயம் என்னும் ஒரு நாடகக் காப்பியத்தை எம்மிடங் காட்டினர். அதனை வாங்கி நோக்குதலும் அக் காப்பியத்தின் சொன்னயம் பொருள் நயங்களுள் கதைப்போக்கும் அதன் புதிய நடையும் எமதுள்ளத்தை மிகவுந் கவர்ந்தன; உடனே அதனை எடுத்துப் போய் எம் ஆசிரியரான நாராயணசாமிப் பிள்ளை யவர்களுக்குச் சொல்லிக் காட்டினேம்; அக் காப்பியத்தின் அருமையைக் கேட்டதும் இதனை இயற்றினவர் யார்? என்று ஆசிரியர் எம்மைக் கேட்டனர். அதற்குத் திருவனந்தபுர அரசர் கல்லூரியில் அறிவுநூற் புலவராய் அமர்ந்திருக்கும் ஆலப்புழை எம்.ஏ.சுந்தரம் பிள்ளை அவர்களே என்று விடை பகர்ந்தேம். அதுகேட்ட ஆசிரியர் சிறிதுநேரம் சும்மாவிருந்து, யாம் இருபது ஆண்டுகளுக்குமுன் மலையாளஞ் சென்றிருந்தேம்; அப்போது ஒருகால் ஆலப்புழையில் தங்கநேரிட்டது; அப்பொழுது தான் ஆங்கிலமொழியில் கற்றுத் தேறிய சுந்தரம் பிள்ளை என்பவர் ஒருவரைக் கண்டேம்; அவர் பெருமாள் பிள்ளை மகன்; அவரோடு யாம் தங்கியிருந்த சிலநாளும் அவர் எம்மிடம் யாப்பருங்கலக் காரிகையிற் பல ஐயப்பாடுகள் கேட்டுந் தெளிந்து எம்மிடம் பெரிதும் அன்பு பாராட்டி, எம்மைத் தம்முடனேயே இருக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு யாம் இசையாமல் வந்துவிட்டேம். அப்போது அவர்க்கு ஆண்டு இருபது இருக்கலாம். இப்போது நாற்பது இருக்கும். இந்நூல் இயற்றியவர் அவராகத்தாம் இருக்கவேண்டும் என்று மொழிந்தார்கள் . ‘அவ்வாறாயின் அவர்க்கு ஒரு கடிதம் எழுதலாமா என்று ஆசிரியரைக் கேட்டேம். அதற்கு ஆசிரியர் அவ்வாறே செய்க என்று சொல்லித் தாம் இருபது ஆண்டுகட்குமுன் ஆலப்புழை வந்திருந்ததும் அவரைத் தாங் கண்டதும் ஆகிய அடையாளங்களெல்லாம் நன்கு குறிப்பிக்கும் படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவ்வடையாளங்களைக் குறித்து அகவற் பாட்டில் ஒரு கடிதம் எழுதிச் சுந்தரம் பிள்ளையவர்கட்கு விடுத்தேம். அதற்கு மறுமொழிக் கடிதம் பத்துநாட் கழித்து வந்தது; அக் கடிதத்தொடுகூடவே தாம் இயற்றிய மனோன்மணீயம் முழுப் புத்தகம் ஒன்றும் எம் ஆசிரியரவர்கட்குப் பிள்ளையவர்கள் தம் வணக்கவுரைகளுடன் விடுத்தார்கள். அவர் எழுதிய கடிதத்தைப் பிரித்துப் பார்க்கையில் அதிற் பின்வருமாறு எழுதப் பட்டிருந்தது. அன்பார்ந்த ஐயா, யான் ஐந்தாறு நாட்களுக்குமுன் சுகத்திற்காகத் திருக்குற்றாலம் போயிருந்தேன். தங்களைப் பிரிந்து இருபது வருடங்களுக்குமேல் ஆனமையால், இதுகாறும் தங்களை நினையாமலிருந்த யான் திருக்குற்றாலத்தில் போயிருந்த போது, தங்களைப்பற்றி அடிக்கடி நினைக்கலானேன்; தங்கள் நினைவு எனக்கு மிகவும் பலமாகத் தோன்றியது. பிறகு நாலைந்து நாட்கள் கழிந்து திருவனந்தபுரம் திரும்பிவர, என் வீட்டில், தங்கள் மாணவர் வேதாசலம் பிள்ளையவர்கள் தங்களைப்பற்றி எழுதிய கடிதம் வந்திருந்தது. அதனைப் பார்த்ததும் எனக்குண்டான வியப்பு இவ்வளவென்று சொல்ல முடியாது- என்று பின்னுஞ் சிலவற்றைச் சேர்த்து எழுதி யிருந்தார்; ஈண்டெழுதும் பொருளுக்கு அக் கடிதத்திலுள்ள இவ்வளவு மட்டுமே வேண்டுமாகையால், எஞ்சியவற்றை இங்கே பதிப்பியாது விடுகின்றேம். இக்கடிதத்தால் அறியற்பாலது யாது? எம் ஆசிரியரும் யாமுஞ் சுந்தரம் பிள்ளை யவர்களைப்பற்றிக் கருத்தூன்றிப் பேசிக்கொண்டிருக்கை யில், நாகப்பட்டினத்திற்கு நெடுந்தொலைவிலுள்ள திருக்குற்றாலத்தில் அப்போது தங்கியிருந்த சுந்தரம் பிள்ளை யவர்கட்கும் எம் ஆசிரியரைப் பற்றிய நினைவு சடுதியில் உண்டானதன்றோ? இருபது ஆண்டு காலமாக ஒருவரை யொருவர் நினைவு கூராமலிருந்த இவ்விருவரும் ஒரே காலத்தில் ஒருவரை ஒருவர் எமது முயற்சியால் நினைவு கூர்ந்தமை பெரிதும் உற்றுநோக்கற் பாலதாகும். எம் ஆசிரியர் பிள்ளையவர்களை மிகவும் ஆழ்ந்து நினைந்த நினைவானது அதே நேரத்தில் தொலைவிலிருந்த பிள்ளையவர்கள் உள்ளத்திலும் எம் ஆசிரியரைப் பற்றிய நினைவினை உடனே எழுப்பி விட்டது. இக்காலத்திற் கம்பி வழியாக விடுக்கப்படுஞ் செய்தியானது மிக விரைவாகச் சென்று நெடுங்தொலைவி லுள்ளார்க்கும் அறிவிக்கப்படுதலை எல்லாரும் அறிந்திருக் கின்றார்கள். ஆனால், அக் கம்பியினும் விரைவாகச் சென்று நமது நினை வானது ஓர் இமை கொட்டும்முன் பிறர்க்கு நாம் கருதியதை உணர்த்தும் புதுமையினை எவரும் நினைந்து பாராததும், எவ்வகை யுதவியும் வேண்டாமல் நமது நினைவு கடந்து செல்லவிடும் ஆற்றலைத் தம்மிடத்து மிகுதிப்படுத்திக் கொள்ளாததும் ஏனோ? மின்செய்தி விடுப்பதற்குக் கம்பி வேண்டும்; அம் மின்செய்தி விடுக்கத் தெரிந்தவர்கள் உதவி வேண்டும்; அவர்க்குப் பொருள் தரல்வேண்டும். ஆனால், நமது நினைவைச் செலுத்துதற்கோ எதனுதவியும் நமக்கு வேண்டு வதில்லை. நம்முதவியே நமக்கு வேண்டும், தவ முயற்சியில் முதிர்ந்த பெரியார்கள் தாம் இருந்தவிடத்திருந்தே உலகமெங்கும் உள்ள தம் மாணக்கர்க்குத் தம் நினைவுகளைத் தெரியப் படுத்துகின்றார்கள். வடநாட்டிற் பல ஆண்டுகளுக்கு முன் போர்வினைஞர் கலகம் நடந்தபோது, நம் அருந்தவத் தோரிற் சிலர் அதிற் றலையிட்டிருந்தார்கள் என்றும், அவர்கள் மலை முழைஞ்சுகளில் நெடுந்தொலைவில் இருக்கப், படைஞர் களொடு கலந்திருந்த அவர்களின் மாணாக்கர்கள் போர்க் களத்தில் நிகழ்வனவற்றை ஓர் இமைகொட்டுமுன் தங் குருமார்களுக்கு அறிவிப்பரென்றும், அது தெரிந்த குருமார்கள் தம் மாணாக்கர் நடக்க வேண்டு முறை இதுவென ஓர் இமைப் பொழுதில் திரும்ப அறிவிப் பார்களென்றும், இம் மறைவு களைத் தெரியாமல் வெள்ளைக்காரர் மிக வியந்து திகைப் படைவ ரென்றுங் கற்றறிந்தேம். இன்னும் எமது மலையகத்தில் எம் அன்பின்மிக்க மனையாளும் யாமும் ஒருவர் நினைப்ப தனையே மற்றவரும் நினைப்பதும் அடிக்கடி நிகழா நிற்கின்றது. எமதறிவு நிகழ்ச்சியில் நிகழும் இன்னோரன்ன நிகழ்ச்சிகள் பலவாயினும், அவற்றை இங்கெடுத்துக் குறித்தலினும், பிறர்தம் அறிவு நிகழ்ச்சிகளை மொழிதலே பொருத்தமாமென்று எண்ணி அவற்றையிங்கே மிக வெடுத்துக் கூறிற்றிலேம். அது நிற்க. 2. நுண்ணிய வெளிகள் இங்ஙனந் தொலைவிலுள்ள ஒருவர் நினைவானது மற்றொருவர் உள்ளத்தில் எழுவதற்கு ஏது என்னை? வேறு வேறு இடங்களில் உள்ள இருவரையும் ஒன்று படுத்தி இணைக்க நடுவே எவ்வகைப் பொருளும் இல்லாதிருக்கவும், அவ்விருவர்க்கும் ஒரே நினைவு தோன்றுவதெப்படி என்று பலருந் தம்முள் ஐயுற்று மருள்வர். உள் பொருள்களைப் பகுத்தறியும் நுண்ணுணர்வுங் கல்வியும் இல்லாதவர்கள் மட்டுமே இங்ஙனம் மருள்வர்; இத்தன்மையோர்க்குக் கண்ணாற் காண்பதுங் காதாற் கேட்பதும் மட்டுமே மெய்; ஏனையவெல்லாம் பொய். கல்வியும் நுண்ணுணர்வும் உடையாரோ, வெளிப் பார்வைக்கு உடம்பினுள் வாழும் உயிர்கள் தனித்திருப்பது போற்றோற்றினுந், தம்மைச் சுற்றிலும் அவை பலவகையான நுண்ணிய பொருள் களாற் சூழப்பட்டிருத்தலைத் தெள்ளிதில் அறிந்துகொள்வர். நுண்பொருள் நோக்கி என்னுங் கண்ணாடியின் உதவியால் நாம் உயிர்க்கும் மூச்சிலும் அருந்துந் தண்ணீரிலும் இயங்கும் இடைவெளியிலும் எண்ணிறந்த உயிர்கள் மிக நுண்ணிய சிற்றுடம்புகளில் உலவுதலை அறிவுடையோர் உணர்ந்து வருகின்றார்கள். நம்முடைய கண்களுள் வந்து நுழைந்து கண்ணொளியை விளக்குங் கதிரவன் முதலிய பொருள்களின் ஒளியும், புறப்பொருள்களிற் பிறந்து காதினுள் வந்து நுழையும் ஓசையும் எவ்வாறு வருகின்றன என்பதனைக் கூர்ந்து ஆராய்ந்து பார்த்த இயற்கைப் பொருணூற் புலவர்கள், அவை அங்ஙனம் பரந்து உலாவி வருவதற்கு எங்கும் நிறைந்த மிக நுண்ணிய இடைவெளி ஒன்று உண்டென்று கண்டறிந்தார்கள். ஒளியானது ஒர் இமைப்பொழுதில் ஓர் இலக்கத்து எண்பத் தாறாயிரம் மைல் இடத்தைக் கடந்து செல்கின்ற தென்பதைச் சிவஞானபோத ஆராய்ச்சியில் இனிது விளக்கினாம். கண்ணிமைகொட்டும் முன் இவ்வளவு தொலைவிடஞ் செல்கின்ற ஒளியானது, சிலவான்மீன் மண்டிலங்களில் இருந்து இங்கு வருதற்கு ஐம்பது ஆண்டுகளுக்குமேற் செல்கின்றது. இப்படியானால் அவ்வான்மீன் மண்டிலங்கள் இந் நிலவுலகத்திற்கு எவ்வளவு தொலைவில் இருக்கவேண்டு மென்பதைச் சிறிது நினைந்து பாருங்கள்! இத்தனை தொலைவிலுள்ள வான் உலகங்களுக்கும் இந் நிலவுலகத்திற்கும் இடையிலே நிறைந்து நின்று இவற்றையெல்லாம் இணைப்பதற்கு இடைவெளி ஒன்று இல்லாவிட்டால் அவ்வான்மண்டிலங்களில் உள்ள ஒளியானது இங்கே எவ்வாறு வரக்கூடும்? இன்னுங் காதுக்கு எட்டுந் தொலைவிலேயிருந்து ஒருவர் பாடும்போது அப்பாட்டின் ஓசையானது நமது செவியில் வந்து படுவதைப் பாருங்கள்; தொலைவிலிருந்து பாடும் அவருக்கும் இப்பாலிருந்து அதனைக் கேட்கும் நமக்கும் இடையிலே வான்வெளி ஒன்று இல்லா விட்டால் அவ்வோசை நஞ்செவிக்கு எவ்வாறு எட்டும்? ஆகவே, ஓசையும் ஒளியும் உலவுதற்கு இடமாய் எங்கும் நிறைந்துள்ள வான்வெளி ஒன்றுண்டென்பது நன்கு பெறப் படுகின்றதன்றோ? இனி, இவ்விடைவெளியில் நுண்ணணுக்கள் நிறைந்துள்ளன. இவ்வெளியின்கண் எங்கேனும் ஓரிடத்தில் ஒளியாவது ஓசையாவது தோன்றினால் அது தோன்றியவிடத்திலேயுள்ள நுண் ணணுக்கள் அதனால் அசைவு பெற்றுத் தம் பக்கத்தேயுள்ள நுண்ணணுக்களை அசைக்கும்; அந் நுண்ணணுக்கள் தம்மோ டிணைந்து நிற்கும் அணுக்களை அசைக்கும்; இங்ஙனம் ஒன்று மற்றொன்றை அசைக்கக் கடைசியாக நங் கண்ணிலுஞ் செவியிலும் நிறைந்த நுண்ணணுக்கள் அசைந்து நமக்கு ஒளியினையும் ஓசையினையும் புலப்படச் செய்கின்றன. இவ் வியல்பை ஓர் எடுத்துக்காட்டால் விளக்குவாம்; அகன்ற ஓர் ஏரியில் நிறைந்த நீரின் நடுவே ஒரு கல்லை விட்டெறிந்த வழி, அக்கல் விழுந்த இடத்திலுள்ள நீரின் அணுக்கள் அசைந்து தம் பக்கத்தேயுள்ள நீரின் அணுக்களை அசைக்க, அவை தம் பக்கத்தேயுள்ள அணுக்களை அசைக்க, இவ்வாறு அந்நீரின் அணுக்கள் எல்லாம் நாற்புறமும் அலைஅலையாய் அசையக், கரைவரையில் அவ்வியக்கம் வந்து திரும்புவதைப் பாருங்கள்! இங்ஙனமே வான்வெளியிலும் ஒளியும் ஓசையும் இயங்குகின்றனவென்பது அறியற்பாற்று. இனி, நம் ஐம்புலன்களாலும் அறியப்படும் புறப்பொருள்களுள் ஒளியும் ஓசையும் நாற்றமுமே மிக நுட்பமான பொருள்களாகும்; நுட்பமான பொருள்கள் உலவுதற்கு நுண்ணிய வெளியும், பரும்படியான பொருள்கள் உலவுதற்குப் பருப்பொருளான நிலமும் வேண்டப்படுகின்றன. ஒளியும் ஓசையும் மிக நுண்ணிய இடைவெளியில் உலவும்; நாற்றங் காற்றில் உலவும். அற்றேல், மின்னுட்பத்தால் உந்தப்படும் ஓசையானது பருப்பொருளான துத்தநாகக் கம்பி வழியே செல்வது என்னையெனின்; அக்கம்பியிலும் நுண்ணிய வான்வெளியே நிறைந்திருத்தலின், அங்கும் அஃது அவ் வெளியிலேதான் செல்கின்றதென உணர்க. அவ்வாறாயின் வான்வெளியிற் செல்லும் அவ்வோசையைக் கம்பிவழியே செலவிடுத்தல் ஏன் என்றால், வறிதே வான்வெளியில் அவ்வோசையைச் செல்லவிட்டால் அவ்வெளி எங்கும் அது சிதறிப்போகுமாதலால், அஃது அங்ஙனஞ் சிதறாமைப் பொருட்டுக் கம்பி அவ் விடைவெளியில் ஒரு சிறு பகுதியைத் தன்னுள் வைத்து அவ்வோசை ஒரு வழியே செல்ல உதவி புரிகின்றது. அது போக, அமெரிக்காவிலுள்ள நுண்ணறிவாளர் இப்போது கம்பியில்லாமலும் வெறும் வான்வெளியிற் செய்தி விடுக்கக் கற்றிருக்கின்றார்களாகலின், ஓசையானது நுண்ணிய வான்வெளியிலேதான் எங்குஞ் செல்வதென்பது மறுக்கலாகாத உண்மையேயாம் என்க. இனி ஒளியும் இவ்வாறே இடை வெளியில் உலவும் உண்மையும் அறியற்பாற்று. இனி, நாற்றமோ ஓசை ஒளி இரண்டினுஞ் சிறிது பரும்படியான பொருளாகையால், அது தனக்கேற்ற காற்றிலே உலவுதல் செய்கின்றது. காற்றானது வான் வெளியைவிடப் பரும்படியான பொருளாகையால், அது தன்னிடத்தில் நாற்றமானது நடைபெறுதற்கு இடந்தருவதாயிருக்கின்ற தென்க. இனி, இவை யொழியக் கல் மண் மரம் நீர் முதலிய பொருள்கள் எல்லாம் நிலத்திலே மட்டும் இயங்கவல்லன. அவ்வாறாயிற், புறவு பருந்து முதலான பறவைகளின் பருவுடம்புகள் காற்றிலே இயங்குதல் என்னையென்றால், அவ்வுடம்புகள் எக்காலத்தும் இயல்பாகவே காற்றில் இயங்குவன அல்ல; இறக்கைகளின் உதவியாற் காற்றை அலைத்துச் செயற்கையாக அக் காற்றில் இயங்குகின்றன. ஆகையாற், பருப்பொருள்கள் பருப்பொருள்களிலேயே இயங்கும் என்னும் முறை பிறழமாட்டாதென்க. இனி, இந் நிலவுலகமானது உருண்டை வடிவினதாய் இடைவெளியிற் சுழல்கின்ற தென்னுங்கால், இது கதிரவ னுலகத்தானும் அம்புலி யுலகத்தானும் முன்னும் பின்னும் இழுக்கப்பட்டு அங்ஙனஞ் சுழல்கின்றதே யன்றி அது தன்னியற்கை யாகவே அவ்வெளியிற் சுழல்கின்றதில்லையென்க. இவ்வாறு கல் மண் முதலான பருப்பொருள்கள் நிலம் என்னும் பருப்பொருளிலும், நாற்றம் ஓசை ஒளிமுதலான நுண்பொருள்கள் காற்று வெளி முதலான நுண்பொருள்களிலும் இயங்குதல் போலவே, ஓசை ஒளியினும் மிக நுண்ணியவான நம்முடைய நினைவுகள் இயங்குதற்கு வான்வெளியினும் நுண்ணிதான ஒரு நினைவு வெளி இருக்க வேண்டுமென்பது நன்கு பெறப்படும். 3. மனவெளி இவ்வாறு நம் நினைவுகள் நடைபெறுதற்கு இடமாய் உள்ள நுண்ணிய இடைவெளியே மனவெளி எனப்படுவதாகும். மக்கள் உடம்புகளில் அமைந்த அமைவுகளும், அவ்வுடம்புகள் இருத்தற்கு இடமான இவ்வுலகத்தின் அமைவுகளும் தம்முள் ஒப்பனவாகும் என்பதும் நமதுடம்பாகிய இச் சிற்றுலகத்தினுள் ஒன்றினொன்று நுண்ணியவாயிருக்குங் கருவிகளுக்கு நேராகப் புறத்தே இப்பேருலகத்திலும் ஒன்றினொன்று நுண்ணியவான பொருள்கள் இயைந்து நிற்கும் என்பதும், இவ்வுடம்பின் அகத்தேயுள்ள மனம் நினைவு அறிவு முனைப்பு என்னும் நுண்கருவிகளோடு ஒத்த நுண்ணிய வெளிகள் புறத்தே உலகத்திலும் உண்டென்பதுஞ் சிவஞானபோத ஆராய்ச்சியில் நன்கு விளங்க விரித்துக் காட்டியிருக்கின்றேம். இவ்விடைவெளி களெல்லாம் ஒன்றினொன்று நுண்ணியவாய் ஒன்றை ஒன்று ஊடுருவிக்கொண்டிருக்கும். மண் நீர் நெருப்பு காற்று வெளி முதலிய ஐம்பொருள்களுள் மிகவும் நுட்பமானது வான்வெளி என்று சொல்லப்படும். இவ்வான்வெளியினையும் ஊடுருவிக் கொண்டு இதனினும் நுட்பமானதாய் இருப்பதே மனவெளி என்று சொல்லப்படுவது. இவ்விடைவெளி மக்கள் உடம்பினுள் உள்ள மனத்தோடு இயைந்து எங்கும் நிறைந்து நிற்பது. இவ்விடைவெளியினுள் எல்லாருடைய மனமும் அம் மனத்திற் றோன்றும் எண்ணிறந்த நினைவுகளும் ஒருங்கு இயைந்து நிற்கின்றன. ஒவ்வொருவரும் நினைக்கும் நினைவுகளெல்லாம் - அவை பெரியனவேனும் சிறியனவேனும், உயர்ந்தனவேனுந் தாழ்ந்தனவேனும், நல்லனவேனும் தீயனவேனும் எல்லாங் கன்மேற் செதுக்கிய எழுத்துப்போல் அழியாமல் நிலைபெறுகின்றன. யான் எண்ணிய எண்ணம் பிறர் எவர்க்குந் தெரியாதென்று எண்ணி எவனும் மகிழா திருக்கக்கடவன். அவன் இப் பிறப்பு முழுதும் எண்ணிய எண்ணங்கள் மட்டும் அல்ல. மேற்சென்ற எண்ணிறந்த பிறவிகளில் எண்ணிய எண்ணங்களும், இனி வரும் பிறவிகளில் எண்ணும் எண்ணங்களும் எல்லாம் ஒரு தினையளவு கூடப் பிசகாமலுங் குறைந்து போகாமலும் அப்படியே இம்மனவெளியிற் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அருந்தவமுயற்சியால் தமது உள்ளத்தை ஒருவழி நிறுத்தி நுண்ணிய உள்பொருள்களின் இயல்புகளைக் காணும் ஆற்றல் வரும் போது, ஒவ்வொருவருந் தாந்தாம் எடுத்த பிறவிகளின் வரலாறுகளையும் அப் பிறவிகளிற் றாந்தாம் எண்ணிய எண்ணங்களையும் இம் மனவெளி என்னும் புத்தகத்தில் தெளிவாகக் கற்று அறிந்துகொள்வார்கள். இம் மனவெளியில் தமது நினைவைப் பொருத்திவைத்து உணரும் பழக்கம் வாய்ந்தவர்கள், வேண்டுமானால், தம்மிடத்து வரும் ஒவ்வொருவர் நினைவுகளின் இயற்கைகளையும் அவற்றின் நன்மை தீமைகளையும் எளிதிலே அறிந்துகொள்வார்களாகையால், ஒருவருக்குந் தெரியாமல் நாம் இச் செயல்களைச் செய்தோம், நாம் இந் நினைவுகளை நினைந்தோம் என்று எண்ணுவது மிக்கதோர் அறியாமையாகும். அது நிற்க. இன்னும் இம் மனவெளியின் இயல்பை அறியாமை யினாலேதான், மக்களிற் பெரும்பாலார் தாம் எண்ணும் எண்ணங்கள் எல்லாந் தமக்கே உரியனவென்று பிழையாகக் கருதி மிகவுந் துன்பப்படுகிறார்கள். உண்மையாக நோக்குங்கால், நம்முள் ஒவ்வொருவரும் நினைக்கும் நினைவுகளிற் பெரும் பாலன பிறருடையனவே யாகும். மனவலிமை மிக்கவர்கள் நினைக்கும் நினைவுகள் இம் மனவெளியில் எங்கும் பரவி இதன்கட் டமது உள்ளத்தை வைத்தவர்கள் எல்லார் உள்ளத்திலும் பிறக்கும். கல்வியறிவாலாயினும், உயர்ந்த உள்பொருள்களை அறியும் அறிவாலாயினும் மிக்கவர்கள் தம் நினைவுகளை உலக முயற்சிகளினின்றும் பிரித்து ஆழ்ந்த நிலையில் உய்த்து இருத்தும்போது, அவர்கள் அறிவானது மனவெளியில் இயைந்திருக்கின்றது. இங்ஙனம் ஒரு தேயத் திலுள்ள அறிவுடையார் ஒருவர் தமது ஆழ்ந்த நினைவால் மனவெளியில் தொடர்பு உடையராயிருத்தல் போலவே, வேறொரு தேயத்திலுள்ள கற்றவரும் அதிற் றமது கருத்தை நாட்டியிருப்பர். அங்ஙனம் அவ்விருதிறத்தார் நினைவுகளும் அம் மனவெளியிற் பரவுதலால் ஒருவருடைய கருத்துகள் மற்றொருவர் உள்ளத்திலுந் திடீரெனத் தோன்றுகின்றன. இவ்வாறு நினைவுக் கலப்புகள் தோன்றுவது உயிரோடு இருப்பவர் தமக்குள் மட்டும் அன்று. நில வுலகத்தின்மேல் உலவும் இப் பருவுடம்பை விட்டு நுண்ணுடம்புகளில் நுண்ணிய உலகங்களில் உலவும் பேய்கள் தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் முதலியோர் நினைக்கும் நினைவுகளும் இங்குள்ள மக்கள் உள்ளத்திற் றோன்றா நிற்கின்றன. இங்குள்ள மக்கள் நினைவுகளும் மேலுலகங்களிலுள்ள தேவர் முனிவர் முதலான உயிர்களின் உள்ளங்களில் எழுகின்றன. ஆகவே, இங்குள்ளவர்களான நாம் நினைக்கும் நினைவுகள் அவ்வளவும் நம்முடையனவே என்று எண்ணி அகம் மகிழ்தற்கு இடம் இல்லை. நம் நினைவுகளிற் பெரும்பாலான பிறருடையனவேயாம்; நமக்கே உரியனவென்று உரிமை பாராட்டுதற்கு இயைந்தன மிகச் சிலவேயாகும். அங்ஙனமாயின், நம் நினைவுகளிற் சில நல்லனவாயும் பல தீயனவாயும் இருத்தலால் இவற்றில் எவை நம்முடையன வென்று சொல்லுதற்கு ஏற்பன? எவை ஏலாதன? அல்லது, நன்மை தீமை எவற்றிற்குமே நாம் உரியவர்கள் அல்லமோ; அவற்றிற்கு நாம் உரிமையுடையர் அல்லராயின் அவற்றால் நாம் இன்புறுவதுந் துன்புறுவதும் என்னை? என்று பலவாறு வினாவுதற்கு ஏதுவான ஐயம் உண்டாகுமாதலால், அம் முறையை இங்கு ஒரு சிறிது விளக்குவாம். நல்லனவுந் தீயனவுமாய்க் கலந்து நம்முள்ளத்தில் உண்டாகும் நினைவுகளிற் பெரும்பாலான நமக்கே உரியன ஆகாவிட்டாலும், அந் நினைவுகளை ஏற்றுக்கொள்ளுதற்கு இயைந்த ஒரு தன்மையை நாம் நம்மிடத்திற் செய்து கொள்வதனால், அவற்றால் வரும் இன்ப துன்பங்களை அடைதல் நமக்கே உரியதாயிற்று, நம்முடைய மனம் நன்னினைவுகள் நினைப்பதிலேயே பழகி விடுமானால், தூய நல்லியல்பு உடையதான அம் மனம் மற்ற நல்லுயிர்களின் நன்னினைவு களையே ஏற்று அவற்றால் இன்புற்றிருக்கும்; அவ்வாறன்றித், தீய நினைவுகளை நினைப்பதிலேயே பழகி விடுமானால் தூய்தல்லா வியல்பு உடைய அது மற்றப் பொல்லாவுயிர்களின் பொல்லாத நினைவுகளையே ஏற்று அவற்றால் துன்புற்றுச் சுழலும். தூயது தூயதையே கவரும், அழுக்கோ அழுக்கினையே நாடும். ஒருவன் திருடுதல் கொல்லுதல் பொய் சொல்லுதல் முதலான தொழில்களைச் செய்தலிலேயே கருத்தூன்று வனாயின், அவன் மனம் அத்தகைய நினைவுகளால் மிகவும் அழுக்குப்பட்டுத் தனக்கு இயைந்த அழுக்கான நினைவுகளையே விரைவில் ஏற்றுக்கொள்ளும்; வேறு நன்னினைவுகளைச் சிறிதும் ஏற்றுக்கொள்ள மாட்டாதாகும். தன்னைப் போலவே நிலவுலகத்தில் உயிரோடிருக்குந் தீயவர் நினைவுகளையும், நிலவுலகத்தை விட்டு இருள் உலகத்திற் சென்ற தீய பேய்களின் பொல்லாத நினைவுகளையும் எளிதிலே ஏற்றுக்கொண்டு அவற்றால் அவன் அளவிறந்த துன்பத்தை அடைகுவன். தீய பேய்களினாற் பிடிக்கப்பட்டு வருந்துவோர்களை ஆராய்ந்து பாருங்கள்! அவர்கள் எவ்வளவு அழுக்கான செய்கையும் நினைவும் உணவு முதலியனவும் உடையவர்களாய் இருக்கின் றனர்! அவர்கள் இருக்கும் வீடுகளிற் சென்று பார்த்தால் அவை எவ்வளவு தீ நாற்றமும் அழுக்கும் மிகுந்து பார்ப்பவர்க்கு அருவருப்பை விளைவிக்கின்றன! அவர்கள் உணவாகக் கொள்ளும் இறைச்சி முதலியவற்றின் அருவருப்பை என்னென்று சொல்வேம்! நாம் ஆராய்ந்து பார்த்த வரையில் ஒரு வரை துறையின்றி ஊன் உணவுகொண்டு அருவருப்பு மிகுந்து திரிவோர்களையே தீய பேய்கள் பற்றிக்கொள்கின்றன. இந் நிலவுலகத்தில் இருந்த காலத்து மிகவும் பொல்லாங்குடையவர் களாய், வேண்டு மட்டும் இறைச்சி தின்பதில் விருப்பம் மிகவைத்து நாளைக் கழித்து இறந்தொழிந்தவர்கள், நுண்ணுடம்பிற் சென்ற பிறகுந் தமது பொல்லா நினைவு தம்மைவிட்டு அகலாமையின் தமது அவாவினால் இழுக்கப் பட்டுப் புலால் நாற்றம் வீசும் இறைச்சிக்கடைகளைச் சுற்றித் திரிந்து கொண்டிருப்பர். அவ்வாறு திரிந்து கொண்டிருக்கும் அப்பேய்கள் தம்மைப்போலவே பொல்லாங்கு உடையவர்களாய் இறைச்சி வாங்க வருவோரைக் கண்டாற் பிடித்துக் கொள்ளும். இவ்வுண்மை, பேயாடுவோரிடத்திலேயே கேட்டுத் தெளியலாம். ஆவி வந்தேறி ஆடும்போது, நான் கள்ளுக்கடை முடுக்கிலே இவள் மீன் வாங்கி வரும்போது இவளைப் பின்றொடர்ந்து வந்தேன், என்றும், நான் இறைச்சிக் கடையிலே ஒரு மாலை வேளையில் இவளைப் பிடித்துக் கொண்டேன், என்றுஞ் சொல்லுஞ் சொற்கள் நாங் கூறுவதன் மெய்ம்மையைப் புலப்படுத்தும். இத்தகைய பேய்கள் நன்னினைவும் நற் செய்கையுந் தூய்மையும் உள்ள மாதர்களிடத்தும் ஆடவரி டத்தும் அணுகக் கேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. சாக் காட்டு மந்திரஞ் செய்யும் மந்திரகாரர்கள் முன்னமே தெரிந்து கொள்ளாமல் நல்லவர்கள்மேற் கொடிய பேய்களை ஏவிவிட்ட போது. அவைகள் அந் நல்லவர்களிடம் வந்து அவர்கள் நன்னினைவுந் தூய்மையும் உள்ளவர்களாய் இருப்பதைப் பார்த்து அவர்களிடம் அணுகக் கூடாமல் திரும்பிப் போய்த் தம்மை ஏவின மந்திரகாரரையே கொன்ற வரலாறுகள் பலவற்றை நூல்களிற் கற்றறிந்திருக்கின்றேம். உலக வழக்கத்திலுங் கண்டிருக்கின்றேம். ஆகவே, தீயனவும் நல்லனவுந் தம்மை வந்து அணுகுதற்கு மக்கள் தாமே இடந் தருபராக இருக்கின் றனர். முதலிற் றீய எண்ணஞ் சிறிது கொள்வார்களானால் அதனைப் பெரிதாக்குதற்குத் தீயோர் பலர் அவரிடம் வந்து சேர்குவர்; முதன் முதல் நல்லெண்ணஞ் சிறிது கொள்வராயின் அதனையும் வலுப்படுத்து தற்கு நல்லோர் பலர் அவரிடம் வந்து சேர்ந்திடுவர். இவ்வுண்மை உலகம் எங்கும் பிறழாமல் நடைபெறுகின்றது. பாருங்கள், நிலத்தில் ஒரு சிறு எட்டி விதையை ஊன்றினால் அது தன்றன்மைக்கு இயைந்த பொருள்களையே உணவாகக் கொண்டு முளைத்து மரமாகி மிகக் கசக்கும் பல்லாயிரம் எட்டிப் பழங்களைத் தருகின்றது; அவ்வாறன்றி, ஒரு தேமாவின் விதையை ஊன்றினால் அது தன் றன்மைக்கியைந் தவற்றையே உணவாகக் கொண்டு முளை கிளம்பிப் பருமரமாகிப் பல்லாயிரந் தேமாம் பழங்களைப் பலர்க்கும் உதவித், தானும் பயன்பட்டுப் பிறரையும் மகிழ்வுறுத்து கின்றது. உயிர் வகைகளில் மிகத் தாழ்ந்த ஓரறிவுடைய மரம் முதலியவற்றிற் காணப்படும் இவ்வியற்கை ஆறறிவுடைய மக்கள் வரையிற் சிறிதும் பிறழ்ச்சியில்லாமற் காணப்படுகின்றது. இவ்வுண்மையை ஆழ்ந்து ஆராயுங்கால், உயிரோடிருப்பவர் நினைவுகளையும் உயிர் துறந்து நுண்ணுடம்புகளில் இருப்பவர் நினைவுகளையும் ஏற்றுக்கொள்ளும் இருவகைப்பட்ட தன்மை களையும் தம்மிடம் புலப்படக் காட்டும் மக்களே அந்நினைவு களால் தாம் அடையும் இன்ப துன்பங்களுக்கு உரியர் ஆதல் புலனாகாநிற்கும். இனி, இம் மனவெளியின் இயல்பையும் அதிற் றமது உள்ளத்தை நிறுத்தும் முறையையும் அறியா திருக்கையிலேயே பிறவுயிர்களின் எண்ணங்கள் நமது உள்ளத்திலும், நம்முடைய எண்ணங்கள் பிறவுயிர்களின் உள்ளத்திலுஞ் சேர்ந்து தோன்றுமாயின், அவ்விரண்டுந் தெரிந்து பழகுவார்க்கு அவற்றால் வரும் பயன்கள் இவ்வளவென்று நம்மால் எடுத்துச் சொல்லல் ஏலுமோ? இம் மனவெளியானது எங்குமுள்ள வான்வெளியினும் மிக நுட்பமான தாகையால் இதில் ஒருவர் தமது உள்ளத்தை எளிதிலே நிறுத்துவது அரிது. ஏனென்றால், மக்களுடைய மனமானது எந்நேரமும் பருப்பொருளை அறிவதிலே மட்டும் பழகி வந்திருக்கின்றது. பரும்படியான பொருள்களையே அறிந்துவரும் மனம் நுண்பொருள்களை எவ்வாறு அறியும்? பருத்த பொருளைக் காணுங் கண் மிக நுண்ணிய அணுக்களைக் காண்கின்றதா? உரத்த ஓசைகளையே கேட்டுப் பழக்கம் ஏறின நஞ் செவி மிக நுண்ணிய ஒலியைக் கேட்கின்றதா? அருகிலுள்ள நாற்றத்தையே கவரும் மூக்கானது தொலைவிலுள்ள மணத்தை அறிகின்றதா? இல்லையே. இவற்றைப் போலவே இவற்றின் வழியாகப் புறப்பொருள்களை அறிந்துவரும் மனமும் இப் புறப்பொருள் களினும் நுட்பமான மனவெளியினை அறிந்து அதிற்சேர்ந்து நில்லாமற் போகின்றது. அங்ஙனமாயிற் பரும்படியாய் நிற்கும் மனத்தை நுண்ணிதாக்கி, அது நுண்ணிய மனவெளியிற் பொருந்தி நிற்கும்படி செய்யும் வகை யாதெனின்; முதலில் ஐம்பொறிகளை நுட்ப இயல்பு உடையதாம்படி பழக்கினால், அவற்றோடு ஒற்றுமைப்பட்டு நடக்கும் மனமும் நுட்ப இயல்புடையதாகும். அங்ஙனம் அவற்றைப் பழக்குமிடத்தும் மிகவும் பரும்படியான பொறியினின்று துவங்கிச் சிறிது சிறிதாக நுண்ணிய பொறிப் பழக்கம் வரையில் ஏறல் வேண்டும். 4. மனவுணர்வை நுட்பமாக்கல் நம்முடைய பொறி உணர்வுகளில் நமது உடம்பின் உணர்ச்சியே மிகவும் பரும்படியானது; வாயின் உணர்ச்சியோ உடம்பினுஞ் சிறிது நுட்பமானது; மூக்கின் உணர்ச்சியோ வாயினும் நுட்பமானது; செவியின் உணர்ச்சியோ கண்ணினும் நுட்பமானது. ஆகையால், இவற்றைப் பழக்கத் துவங்கும்போது முதலில் உடம்பிலிருந்து தொடங்கல் வேண்டும். மண், நீர், நெருப்பு, காற்று என்னும் பொருள்கள் தன்மேற் படும்போது, உடம்பினிடத்தே உணர்வு காணப்படுகின்றது. இம் மண் முதலிய நான்கு பொருள்களிலும் மண் மிகவும் பரும்படியானது, நீர் அதனினுஞ் சிறிது நுண்ணியது, நெருப்பு அதனினும் நுண்ணியது, காற்று அதனினும் நுண்ணியது. இப்பொருள்கள் மேலே படும்போது உண்டாகும் உணர்வானது வெவ்வேறு உடம்புகளில் வெவ்வேறு வகையாய் ஏறியுங் குறைந்துந் தோன்றும். எருமை மாட்டின்மேல் ஒரு பெருந் தடிகொண்டு தாக்கினாலும் அஃது அதனை ஒருபொருட்டாய் எண்ணாது. ஆனால், அப்பெருந்தடி ஒரு மெல்லிய மானின் உடம்பின்மேல் பட்டால் அஃது அதனைத் தாங்கமாட்டாமல் இறந்துபோம். ஆகவே, எருமை உடம்பின் உணர்விலும் மானுடம்பின் உணர்வானது மிகவும் நுண்ணிதென்பது பெறப்படா நிற்கும். இங்ஙனமே மக்கள் உடம்புகளிலும் உணர்வு பல்வேறு தன்மைப்பட்டுத் தோன்றுகின்றது. மட்ட அறிவு உடையவன் உடம்பு மிகவும் முரடுபட்டுக் காணப்படுகின்றது; கூரிய அறிவுள்ளவன் உடம்போ முல்லைப்பூப்போல் மிகவும் மென்மை வாய்ந்து விளங்குகின்றது. முரண்ட உடம்புள்ள மட்டி பரற் கற்கள் மேல் நடந்தாலும் அவன் அடிகள் நோகா; அவன் உடம்பு குளிருக்கு நடுங்காது, வெயிலுக்குத் தளராது, அவன் கைகள் இரும்பே; மெல்லிய உடம்பு வாய்ந்த அறிஞனோ பூமேல் நடப்பினும் அவன் அடிகள் நோம். அவன் உடம்பு குளிரைப் பொறாது, வெயிலைத் தாங்காது; அவன் கைகளும் மற்ற உறுப்புகளும் அனிச்ச மலரினும் மெல்லியனவே. உயிர்களுக்கு அறிவு மிகுதிப் பட மிகுதிப்பட அவைகளிருக்கும் உடம்புகளும் வரவர மென்றன்மை உடையனவாகும்; அறிவு கடைசியில் மிக நுண்ணிதாய் வளர்ந்து முற்றிய பிறகு உடம்பானது காற்றினும் நொய்தாய் இந் நிலவுலகில் இயங்காமல் விசும்பில் இயங்கவல்லதாகும். இதனாலன்றோ அறிவின் மிக்க சித்தர்களும் முனிவர்களும் தேவர்களும் நிலத்தில் இயங்காமல் வான்வெளியில் உலவுகின்றனர்? ஆகவே, உடம்பின் உணர்வானது மிக நுட்பம் உடையதாம்படி செய்துகொள்வது மனத்தை ஒருவழிப்படுத்துதற்கும், அறிவை மிகுதிப்படுத்துதற்கும் உதவியான பழக்கமாகும். இனி, உடம்பினுஞ் சிறிது நுண்ணிய இயல்பு வாய்ந்த வாயுணர்வும் ஒருவனது அறிவின் ஏற்றக்குறைச்சலுக்கேற்பப் பல திறப்பட்டுத் தோன்றுகின்றது. மட்ட அறிவுள்ளவன் தான் உண்ணும் பண்டத்தின் சுவையையும் நேர்த்தியையும் பாராமல் தன்பசி அடங்கு மட்டுங் கஞ்சியோ கூழோ கிடைத்ததை நிரம்ப உண்ணுகின்றான். நுண்ணறிவு மிக்கவனோ தான் உண்பது சிறிதாயிருந்தாலும் அது சுவை மிக்கதாய் நறுவிதாகச் சமைக்கப் பட்டதாய் இருந்தால் மட்டுமே மனம் உவந்து உண்கின்றான். சிலர் காரம் மிக்கவற்றைக் கண்ணீர் ஒழுகவொழுக அருந்துகின்றனர்; வேறு சிலர் புளிப்புக் காடியாய் இருப்பதனைப் பார்ப்பவர் வாயுங் கூச விழுங்குகின்றனர். இவையெல்லாம் நுண்ணறிவுடையார்க்குச் சிறிதும் பொருந்தாதனவாம்; அறுசுவைப் பண்டங்களையும் அளவாக ஒவ்வொன்றைனையும் நன்கு சுவைத்துப் பார்த்து இன்புற்றுச் சிறிதே அருந்தி ஒழுகுவதே அவர் தமக்கு இயற்கையாம்; தித்திப்பு; துவர்ப்பு, கைப்புச் சுவையுள்ள பொருள்களை விரும்புதல்போல, அவர் புளிப்பு, கார்ப்பு, உவர்ப்புச் சுவைகளை விரும்பமாட்டார். அறிவிற் குறைந்தவர்களுக்கே புளிப்பு, கார்ப்பு, உவர்ப்புச் சுவைகள் மிகவும் வேண்டப் படுவனவாகும். ஒருவர் உண்ணும் உணவுப் பொருள்களின் அளவையும் இயற்கையையும் ஆராய்ந்து பார்த்து அவர்கள் அறிவும் இயல்பும் இப்படியிருக்கு மென்று செவ்வையாக அறிந்து கொள்ளலாம். பாருங்கள்! சிலர் பிற வுயிர்களின் உடம்பைச் சிதைத்துக் கொண்டுவந்த இறைச்சியை எவ்வளவு விருப்பத்தோடு உண்கின்றார்கள்! கொலைத்தொழிலாற் பிறவுயிர்கள் படுந் துன்பத்தைச் சிறிதாயினும் ஆழ்ந்தறியும் அறிவு இருந்தால் அவர்கள் அப்படிச் செய்வார்களா? ஆகையால், இறைச்சி யுண்பவர்கள் சிறிதும் அறிவில்லாதவர்கள் என்பது பெறப்படு கின்றதன்றோ? பிற வுயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை உண்டு பிழைக்கும் புலி, அரிமா முதலான வல்விலங்கின் கொடுமையையும் அறிவின்மையையும், புற்பூண்டு தழை வைக்கோலைத் தின்று பிழைக்கும் யானை, குதிரை, மாடு முதலிய மெல்விலங்குகளின் அமைதியையும் அறிவுடைமையையுஞ் சிறிது கருதிப் பாருங்கள்! சுவை தெரிந்து உண்ணப் படும் மெல்லிய இனிய காய்கறி உணவுகளால் உயிர்களுக்கு அறிவு மிகுதிப்படுமாகலின், வாயுணர்வினை இம்முறையால் அறிந்து நுண்ணிதாக்கவே அதனால் மனவுணர்வும் நுண்ணிதாகி மனவெளியிற் பொருந்தி முக்கால நிகழ்ச்சிகளையும் அறியவல்லதாகும். இனி, மூக்குணர்வும் பரும்படியாக நடைபெறவிடாமல் அதனை நுட்பப்படுத்தல் வேண்டும். இப்போது நிலஉலகில் உள்ள மக்களிற் பெரும்பாலார்க்கு இவ்வுணர்ச்சி மிகவும் மழுங்கிக் கிடக்கின்றது. மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்கள்மாட்டுக் காணப்படும் இவ்வுணர்வின் சுருசுருப்புக்கூட மக்களிடத்தில்லாமை பெரிதும் வருந்தத் தக்கதொன்றாம்! நாயானது தன் தலைவன் சென்ற வழியை மோப்பத்தால் அறிந்து அவனிடஞ் செல்கின்றது; கள்வர் திருடர் நெடுந்தொலைவில் வரும்போது அவரது வருகையை மோப்பத்தால் அறிந்து குரைக்கிறது. கண் இல்லாத எறும்புகள் மிகவுங் கருத்தாய்த் தொலைவில் வைக்கப்பட்ட நெய்க்குடுவையை மோப்பத்தால் தெரிந்துகொண்டு அதனிடஞ்சென்று அதனை மொய்த்துக் கொள்கின்றன. இங்ஙனந் தொலைவில் நிகழும் நிகழ்ச்சிகளையும் வெறு மோப்பத்தால் அறியும் ஏழையும் உயிர்களின் அறிவுகூட மக்களிடங் காணப்படாதிருக்க, இவ்வேழை மக்கள் தம்மை உயர்வாகக் கருதி இறுமாந்திருத்தல் என்ன தீவினை! தமக்குப் பின்னும் முன்னும் பக்கத்தும் வரும் இடர்களையே அறிய வலியற்றவர்களாய் இருக்கின்றார்கள்! தம்மைச் சுற்றிலும் மிகவுந் தீநாற்றஞ் சூழ்ந்து கொண்டு தம் உயிரின் வலிவை உரிஞ்சிக் கொண்டிருக்கவும், அதனை உணராமல் மூக்குணர்வு மழுங்கிக்கிடக்கும் இவர்கள் நிலைமை மிகவும் இரங்கற்பாலது! எனவே, மூக்குணர்வினை நுட்பப்படுத்திச் சுற்றிலும் நிகழும் நிகழ்ச்சிகளை நாற்றத்தின் வாயிலாக உணர்ந்துவரின், அதனால் மனவெளி நுட்பமாகி மனவெளியைப் பொருந்தி நெடுந் தொலைவில் உள்ளவற்றையும் எளிதிலே அறியும். இனிக், கண்ணுணர்வினையும் பருப்பொருட் காட்சியினின்றும் மேல் எழச்செய்து நுண்பொருட் காட்சியிற் பழக்கிவரல்வேண்டும். பருப் பொருள்களான கல், மண் முதலியவற்றைக் காணுமிடத்தும், அவற்றில் மிகச் சிறிய பொருள்களை உற்றுப்பார்க்கப் பழகுக. முதலில் அழகிய சிறு கூழாங் கல்லைச் சிலநாள் உற்றுப்பார்த்தும், அதன் பிற் சிறிய மண்துகள் பொற்பொடி முதலியவற்றிற் பார்வை வைத்தும், அதன்பின் தாமரையிலைமேல் நீர்த்துளியை விட்டு அதனை நோக்கியும், அதன் பின் விளக்கின் கொழுந்தைக் கருத்தூன்றிப் பார்த்தும் இங்ஙனம் முதன் மூன்று உள்பொருள்களை நோக்கும் முகத்தாய் கண்ணுணர்வினை நுட்பப்படுத்தி வரல்வேண்டும். எல்லார்க்குங் கண்ணானது மிகச் சிறந்த உறுப்பாகையால், அதனைச் சடுதியிலே நுட்பப்படுத்த முயன்றால் பன்னாளும் பருப்பொருளிலேயே பழகிய அதனுணர்வு, திடீரென நுண் பொருட் காட்சியிற்றிரும்புதலால் மழுக்கம் அடைந்து கெட்டுப்போனாலும் போகும். ஆதலால், இதனை நுண்பொருட் காட்சியிற் பழக்குவது படிப்படியாக நிகழும்படி மிகவுங் கருத்தாக மெல்லெனச் செய்துவரல் வேண்டும். ஆனதுபற்றியே, துவக்கதிற் கல், மண் முதலான நிலத்துப் பொருள்களிலும், அதன்பின் நீர்த்துளி நெய்த்துளி முதலான நீரியற் பொருள் களிலும், அதன்பின் விளக்கொளியாகிய தீப்பொருளிலும் பழக்கி வரும்படி கூறினாம். இங்ஙனம் முதன்மூன்று பொருள்களிற் பழகி வந்தபின், கட்புலனுக்குத் தென்படாத இடைவெளியை உற்று நோக்கத் துவங்குக. புறப்பொருள்களில் இடை வெளியை உற்றுநோக்குதல் ஒன்றே கண்ணுணர் வினையும் அதன் வாயிலாக மனவுணர்வினையும் நுட்பப்படுத்துதற் குரிய மிகச் சிறந்த பழக்கமாகும் என்று உணர்மின்கள்! இவ்வாறு கண்ணுணர்வினை நுட்பப் படுத்திய பிறகு நெடுந்தொலை விலுள்ள பருப்பொருள்களை உற்று நோக்கவும், அதன்பின் தொலைவிலுள்ள நுண்பொருள்களை உற்றுநோக்கவும் பழகி வருக. இதிற் பழக்கம் முதிர்ந்தபின், நிலாக் காலத்து இரவில் நுண்ணிய பொருள்களை நோக்கப் பழகிவரல் வேண்டும் அதுவுங் கைவந்தபின் நிலவில்லாத இருட்காலத் திரவில் முதலிற் பருப்பொருள்களையும் அதன்பிற் சிறுபொருள் களையும், அதன்பின் மிகச்சிறிய பொருள்களையும், அதன்பின் நுண் பொருள்களையும் உற்றுநோக்கிப் பழகி வருக. இங்ஙன மெல்லாம் பழகிக் கண்ணுணர்வு நுட்பமாய் வலுப்பட்ட பின்னர், அக் கண்ணுணர்வு தொலைவிலும் அருகாமையிலும் உள்ள எவ்வகைப்பட்ட பொருள்களையுங் காண வல்லதாகும். ஏனைமக்களின் கண்ணுணர்வுக்குப் புலனாகாதனவும் இங்ஙனம் பழகினவர் கண்ணுணர்வுக்கு எளிதிற் புலனாம். இது கைவந்தவுடனே பார்வை செல்லாமற் நடுநின்று மறைக்குஞ் சுவர் மலை, காடு நாடு முதலியவற்றிற்கு அப்பாலுள்ள பொருள் களையுந் தாம் காண்பதாகத் தமது கட்பார்வையினை ஒரு முகமாக வைத்து எண்ணிவரப் பழகுக. இப் பழக்கம் முதிர்ந்தபின் அது கைவரப் பெற்றவர் ஒரு தேயத்தில் ஓரிடத்திலிருந்தே எத்தேயத்தும் எவ்விடத்தும் நிகழும் நிகழ்ச்சிகளை யெல்லாங் கண்டுணர வல்லராவர். இனிச், செவியுணர்வினை நுட்பப்படுத்தப் பழகுதல் கண்ணைப் பழக்குதலினும் எளிதாவதாம். கண்ணுணர்வு மிக நுண்ணிய பொருள்களைக் காணும்படி பழக்குங்கால் படிப்படியே செல்லாவிட்டால், கண்ணுறுப்புத் தன்நிலை குலைந்து கெடும். மற்றுச் செவியோ நுண் ஒலிகளைக் கேட்கும்படி பழக்கப்படுவதிற் சிறிதுங் கெடாது. ஆகையால், அருகே தோன்றும் நுண்ணொலிகளையுந் தொலைவே தோன்றும் நுட்ப ஓசைகளையுங் கருத்தூன்றிக் கேட்டலில் அச்சமின்றி யாரும் பழகலாம். ஏனையோர் செவிகளுக்குப் புலனாகாத மிக நுண்ணிய ஒலிகளையுந் தாங் கேட்பதாக எண்ணி ஒரு தொடர்பாகப் பழகிவரவே சில காலத்துள் எல்லாம், அருகிற் சில சிற்றுயிர்கள் இடும் ஒலிகளுந் தொலைவிற் றோன்றுஞ் சிற்றொலி பேரோசைகளுந் தெளிவாக வந்து செவிப் புலனிற்றோன்றும். இவ்வரிய பேறு கைவரப் பெற்றமை யினாலன்றோ தவவொழுக்கத்தில் மேம்பட்ட புலவர் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள தம் மாணாக்கர்களைக் குறித்துச் சிலவற்றைச் சொல்ல அச் சொற்களை நெடுந்தொலைவிலிருந்த அவர்கள் கேட்டு அவ்வாறே ஒழுகுதலும், ஒரு பெரிய இடரிலே அகப்பட்டுத் தத்தளிக்கும் ஒருவர் கூவியழுத சொற்களை நெடுந் தொலைவிலிருந்த முனிவர்கள் கேட்டு விரைந்து வந்து அவரை அவ்விடரினின்று மீட்டலும் நிகழா நிற்கின்றன. இங்ஙனஞ் செவியுணர்வு நுட்பப்படுத்தப்பட்ட வுடனே புறத்தே செயற்பாலனவாம் நுண்ணிய பழக்கங்கள் முற்றுப்பெற்றன வென்று அறிதல் வேண்டும். இதுகாறுங் கூறிய பொறியுணர்வுகளைப் பழக்கும் முறைகள் இவற்றிற் பழகி அறியாதார்க்குப் பழக அரியனபோற் காணப்படுமாயினும், மிகவும் பருப்பொறியாகிய மெய்யினை நுண்ணிய ஊற்றுணர்விற் பழக்கத் துவங்குவார்க்கு அதனைத் துவங்கும்போதே அஃது எளிதாயும் மகிழ்ச்சி தருவதாயுங் காணப்படும். இன்னும், ஒரு பொறியுணர்வினை நுண்ணிதாக்கவே ஏனைப் பொறியுணர்வுகளுந் தாமாகவே நுண்ணிய நிலையினை அடையத் துவங்குமாகலின், ஒரு பொறியுணர்வினை நுண்ணிய நிலையிற் பழக்கியபின் ஏனைப் பொறியுணர்வுகளையும் அந்நிலையிற் கொண்டுபோய்விடுவது மிக எளிதிலே கைகூடற் பாலதொன்றாய் முடியுமென்று உணர்க. அஃது எதனாலென்றால், ஐம்பொறிகளும் வேறு வேறியற்கை யுடையனவாயிருப்பினும், அவ்வைம்பொறிகளினுஞ் சேர்ந்து நின்று அறியும் மனவுணர்வு ஒருகாற் பதப்படத் துவங்கியபின், ஏனைப் பொறிகளின் வழியேயும் அது பின்னும் பின்னும் பதமெய்துதல் எளிதிலே கைகூடி வருதனாலென்றுணர்க. இனி, ஐம்பொறி யுணர்வுகளொடு கூடிய மனவுணர்வினை ஒருகாலத்து ஓரிடத்து வைத்தே நுட்பப் படுத்தி அவ்வாற்றால் எல்லாவுணர்வுகளையும் ஒருங்கே நுட்பமாக்கும் அரசியற் றவமுறை, மெய்க் குரவனை எதிர்ப்பட்டு அவனறிவுக்கும் அறிவுமொழி பெறும் நல்வினை வாய்ந்த மிக முறுகிய மனநிலை யுடைய மாணாக்கருக்கன்றி ஏனையோர்க்கு வாயாதாகலின், யாம் ஈண்டு எடுத்துக் கூறிய முறைகளே எத்திறத்தவரும் படிப்படியே பழகித் தம்முணர்வுகளை நுட்பப்படுத்திப் பயன் பெறுதற்கு ஏற்பனவாமென்று கடைப்பிடிக்க, இங்ஙனம் மெய், வாய், கண், மூக்குச், செவி என்னும் ஐம்பொறிகளின் வழியே புறத்துச்செல்லும் மனவுணர்வினை நுட்பம் ஆக்கியபின், அகத்தே செல்லுங்காலும் அது மேலு மேலும் நுட்பமாகும் படி அதனைப் பழக்கி வருதல் வேண்டும். அகத்தே மனவுணர்வு நடைபெறுங்காலத்து அஃது அமைதியுற்று நுணுகாமல், வருத்தங், கவலை, அச்சஞ், சினம், பொறாமை, அவா முதலான பல தீய தன்மைகளால் தாக்கப்பட்டு, நிலைகலங்கி வலிவுகுன்றிப் போகின்றது. இவ்விழிந்த தன்மைகளின் இயல்பையும் இவற்றின் சேர்க்கையால் ஆவியின் வலிவு குறைந்து போதலையும் யோகநித்திரையைப் பற்றிப் பேசிய எமது நூலில் மிக விரித்து விளக்கியிருக்கின்றேன்; அவற்றை அணுகவிடாமல் உள்ளத்தை ஒருநிலைப் படுத்தும் வகை யினையும் அங்கே காட்டியிருக்கின்றேம். அம் முறைகளை நன்றாக நினைவில் இருத்தி அவற்றின்படி நடந்துவரின் மிக எளிதிலே உள்ளமானது ஒருநிலைப்படும். இன்னும் மனிதவசியம் என்னும் எனது நூலிலும் நினைவை ஒரு வழி நிறுத்தல் என்னுந் தலைப்பின் கீழ்ச் சொல்லிய முறைகளும் பெரிதும் நினைவு கூர்ந்து பழகற் பாலனவாம். இனி, இவ்விடத்தும் இதற்குரிய முறைகள் சிலவற்றை எடுத்துக் கூறுவாம்; இழிந்த தன்மைகளுள் எதுவும் வந்து நுழைய வொட்டாமல், எந்நேரமும் நமது உள்ளத்தை நல்நினைவிற்கு இடமாம்படி செய்தல் வேண்டும் தெளிந்தோடும் ஒர் யாற்றுநீரானது, சாக்கடை நீரின் சேர்க்கையால் அழுக்குற்று அருவருக்கத் தக்கதாய் விடுதலும், மலைப் பாறைகளிலிருந்து முத்து முறியென ஓடிவரும் இனிய நீரின் கலப்பால் மிகத் தெளிந்து விளங்குதலும் போலத், தீய நினைவுகளின் சேர்க்கையால் தெளிவான உள்ளமும் அழுக்குப்பட்டுக் கலங்கலாதலும், நல்நினைவுகளின் கூட்டுறவால் அது மேலுமேலுந் தூய்மை எய்தி விளங்குதலும் நேர்கின்றன. முடைநாற்றம் வீசுந் தீய பொருளொடு கூடிக் கலங்கல் அடைந்த நீர் தன்னை அடுத்துள்ள பொருள்களையுந் தன்கண்ணே காட்டமாட்டாது; அதுபோலத் தீய நினைவின் வழிப்பட்டுக் கலங்கல் எய்திய உள்ளத்திற்கும் அருகே நிகழும் எண்ணங்களுந் தோன்றாது மறையும். அதுவேயுமன்றி அது நினைவுவலிமையினையும் வரவர இழந்துவிடும். அங்ஙனமின்றி, நன்னினைவொடு பொருந்தி நின்ற உள்ளமோ தெளிவுபெற்று நிற்றலால், அதன்கண் அடுத்து நிகழும் எண்ணங்கள் மட்டுமேயன்றி மிகவுந் தொலைவிற் றோன்றும் எண்ணங்களும் விரைவிலே வந்து தோன்றாநிற்கும்; முற்காலத்தும் இக் காலத்தும் இனிவருங் காலத்தும் நிகழும் நிகழ்ச்சிகள் அத்தனையுந் தெளிவுள்ளம் உள்ளவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெற்றென விளங்கா நிற்கும். ஆகையால், இத்துணைச் சிறந்த முக்கால வுணர்ச்சியாகிய அரும்பெரும் பேற்றை அடைய விரும்பும் நல்வினையுடையார் ஒவ்வொரு வருந் தமது மனத்தைத் தெளிவுபட வைத்தலாகிய அரும்பெரு முயற்சியை அடுத்தடுத்துச் செய்துவரல் வேண்டும். இனி, நன்னினைவின்வழியே உள்ளத்தை வைத்துப் பழக்கும் முறைதான் யாதோவெனின்; அதனையும் ஒரு சிறிது இங்கே விளக்கிக் காட்டுவாம். இன்பந் தராத நினைவுகளைப் பற்றிநிற்கும்படி மனத்தை ஏவினால் அதற்கு அஃது எளிதிலே மடங்கி நில்லாமல் வருத்தத்தை விளைவிப்பதோடு, இத்தன்மையவான பழக்கங்களில் அவனுக்கு வெறுப்பினையும் பின்னர்த் தோற்றுவிக்கும். ஆகவே, அதனை அங்ஙனம் பழக்குவதற்கு முயலல் ஆகாது. இயல்பாகவே அஃது எந்த நன்னினைவை மகிழ்வொடு பற்றி நிற்குமோ அதனை அறிந்து அதன்கண்ணே அதனைப் படிவித்தல் வேண்டும். அங்ஙனம் அஃது இயல்பாகப் பற்றி நிற்கும் நினைவுகள் தாம் யாவையோவெனின், அவை அதற்கு ஆரா மகிழ்ச்சியினையும் பெருங்களிப்பினையுந் தோற்று விப்பனவேயாம் என்க. மகிழ்வினையும் உள்ளக் கிளர்ச்சியினையும் ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு வகையாற் பிறப்பிக்கும் நன்னினைவுகள் பற்பல இருப்பினும், அவை எல்லாவற்றுள்ளும் அழகு, அறிவு, அன்பு என்னும் மூன்று தன்மைகளைப் பற்றிய நன்னினைவுகளே எல்லார்க்கும் எவ்விடத்தும் எக்காலத்தும் பெருங் களிப்பினைத் தருவனவாமென்பது அனைவரானும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையேயாம். அழகு முதிரச் சலவைக்கல்லில் திருத்திய ஒர் அரிய வடிவத்தையேனும், இயற்கை நிறங்கள் முகிழ்த்துத் தோன்ற ஓவியக்காரன் முனைப்பாகத் தீட்டிய ஓர் இனிய ஓவியத்தின் உருவத்தையேனும், அழகு கனிந்தொழுக உலவுஞ் சிறுவர் சிறுமியரையேனுங் கண்டு களிப்படையாதார் உளரோ? அமைந்து நிரம்பின கல்வியுடையோன் தோண்டுந்தோறுஞ் சுரக்குஞ் தெண்சுவைத் தண்ணீரைப்போல் நூற்பொருளை எடுத்து உரைக்குந்தோறும் விரிந்து விரிந்து புலப்படாநின்ற அறிவின் அருமை பெருமைகளைக் கண்டு வியந்து மகிழாதாருண்டோ? எல்லா உயிர்களிடத்துங் கரைகடந்த இரக்கம் உடையோனாய் அவற்றின் துயர்கண்டு பொறாமல் தன்னை வருத்தியேனும் அப்பிறவுயிரின் துன்பந் துடைத்து, அருளொழுக்கமே தன் உயிரொழுக்கமாய் மேற்கொண்டு, இங்ஙனம் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் எழப் பெற்றமையானே இளகிய மென்னெஞ்சொடு எல்லாம்வல்ல இறை வனிடத்தே என்பெலாம் நெக்கு நெக்குருகி ஒன்று பட்டு நிற்கும் பெரியோன் அன்பிற்றிறத்தைக் கண்டு பிறிது பட்டு அன்புடையராகாரும் உண்டோ? சொல்லுமின்! எனவே அழகு, அறிவு, அன்பு என்னும்மூன்றினையும் பற்றி நினைக்குமிடத்தெல்லாம் மக்களெல்லார்க்கும் இயற்கையாகவே மகிழ்ச்சி எழ, அவர் உள்ளமும் எளிதிலே அந்நினைவின் வழிப்பட்டு நிற்றலால் இம்முறையால் உள்ளத்தைத் தெளிவுபெறச் செய்தலே எளிதான முறையாமென்பது இனிது பெறப்படும். இனி, அழகு அறிவு அன்பு என்னும் மூன்றும் பண்புகளே யன்றிப் பண்புகளையுடைய பொருள்கள் அல்ல. பண்புகளை எவ்வளவுதான் நினைப்பினும் அவை மக்கள் உள்ளத்திற்குப் புலப்படமாட்டா. பண்புகளை நினைக்கப் புகுந்தால், அப் பண்புகள் தோன்றாமல் அப் பண்புகளையுடைய பொருளே நினைவில் வந்து தோன்றும். முல்லைப் பூவின் மணத்தை நினைக்கப்புகுந்தால் அந்த மணம் மட்டும் நினைவுக்கு வராமல் தன்னையுடைய பூவொடு கூடியே அது நினைவில் எழும். வாழைக்கனியின் சுவையை நினைக்கப்புகுந்தால் அச்சுவை மட்டுந் தனித்து நினைவில் எழாமல் அது தன்னையுடைய அக்கனியொடு கூடியே நினை விற்றோன்றாநிற்கும். மேலும், முல்லைப்பூவின் மணமும் வாழைக்கனியின் சுவையும் அப்பொருள்களைத் துய்த்துப் பார்ப்பவர்க்கே யல்லாமல் மற்றையர்க்குச் சிறிதும் விளங்க மாட்டா; ஏனென்றால் அந்த மணமும் அந்தச் சுவையும் முல்லை வாழை என்னும் அப்பொருள்களின் வழியாகவன்றி வேறு தனித்து நின்று துய்க்கப்படுதல் எங்கும் இல்லை. இதுபோலவே, அழகு என்னும் பண்பை நினைக்கப்புகுந்தால், அப் பண்பு தனித்து நில்லாத தொன்றாகையால் அதனையுடைய ஏதேனுமொரு பொருளையே நினைக்க வேண்டிவரும்; அறிவு என்னும் பண்பை நினைக்கப் புகுந்தால் அதுவுந் தனித்து நில்லாத பண்பேயாகலின் அதனையுடைய அறிஞன் ஒருவனையே நினைக்கவேண்டி வரும்; இங்ஙனமே அன்பு என்னும் பண்புந் தனியே நினைக்கப்படுவ தல்லாமையால் அதனை நினைக்குமிடத்தெல்லாம் அன்புள்ள ஒருவனையே நினைக்க வேண்டி வரும் என்க. அதுவேயுமன்றிப், பண்பு பண்பையுடைய பொருளும் எவ்வாற்றானும் பிரிவுபடாமல் ஒன்றுபட்டே நிற்கும் இயல்புவாய்ந்தனவாம்; பண்பு அழிந்தால் அதனோடு ஒன்றாயுள்ள பண்பியும் அழியும், பண்பியழிந்தால் அதனின் வேறல்லாத பண்பும் அழியும். ஆகவே, பண்பிப் பொருளினும் பண்பே நுண்ணியதாகலின் அப் பண்பை மட்டுமே நினைவிற்குக் கொண்டுவர முயல்வே மென்றுங், கடவுளை முகங்கைகால் முதலான உறுப்புகளுடைய ஓர் உருவப் பண்பிப் பொருளாக வைத்து வணங்கக் கடவேம் அல்லமென்றும் உரைப்பார் உரை ஒரு சிறிதும் பொருந்தமாட்டாதென் றுணர்க. பண்புகளை நினைக்கப் புகுவார் எல்லார்க்கும் அப் பண்புகளின் வேறல்லாத பொருள் உடனே நினைவிலெழப் பெறுதல் மாறா இயற்கையாக இருத்தலின், மிக நுண்ணிய பண்பு நிலையில் வைத்துக் கடவுளை வழிபடுவே மென்பார்க்கும் அப் பண்புகள் திரண்ட பிழம்பான கடவுளின் றிருவுருவம் அவருள்ளத்தில் தோன்றாமற் போதல் இல்லை யென்க. பண்பென்றும் பண்பியென்றும் வேறு பகுத்துணர்தற் கியலாமற் பிரிவின்றி நிற்கும் ஒரு பொருளிற் பண்பை மட்டும் நினைக்கப் புகுவேம் என்றும், பண்பியை மட்டும் நினைக்கப் புகுவேமென்றுந் தமக்குத் தோன்றியவாறெல்லாம் பொருளினி யற்கைக்கு மாறாகப் பேசுவோர் உண்மை தெரியமாட்டாத மடவோரே யாவர். அங்ஙனமன்று, பண்பு பண்பியினின்று பிரியாதாயினும், நினைவின்கண் அதனைப் பிரித்து நினைக்க மாட்டுவே மெனின்; எப்பொருள் எத்தன்மையதாயிருக்கின்றது, அப் பொருளை அத்தன்மைபட நினைதலே மெய்ந்நினைவு அல்லது சத்தியபாவனை யென்று சொல்லப்படும்; இவ்வா றன்றி ஒரு பொருளை அப்பொருளின் கண் நிகழாத நிகழ்ச்சி பற்றி நினைப்பது பொய்ந் நினைவு அல்லது அசத்தியபாவனை யென்று சொல்லப்படும். இனி, மெய்ந் நினைவு உண்மையான மெய்ப்பயன்களைத் தருவது போலப், பொய்ந் நினைவு மெய்ப் பயன்களைத் தராது பொய் படுமாகலின், கடவுளை வெறும் பண்பளவாகக் கொண்டு வழிபடுவே மென்பார்க்கு, அவரது வழிபாடு கடவுளியல்பொடு மாறுபட்ட பொய்வழிபாடாய்ப் போதலின், அவர் அப்பொய் வழிபாட்டால் இம்மை மறுமைப் பயன்களில் ஒரு தினைத்தனையும் பெறாரென்பதே முடிபு. ஆகவே, இவ்வியல்பினரான பொய்யறிவினர் இறுமாந்து உரைக்கும் பொய்யுரை ஈண்டுக் கருதற்பால தன்றென விடுக்க, எனவே, அழகு அறிவு அன்பு என்னும் பண்புகளை நினைக்கப் புகுந்தால் அப் பண்புகளையுடைய பொருள்கள் தாமே நினைவிற் றோன்றும் என்று உணர்க. இனி, அழகு என்பது பெரும்பாலுங் கண்ணறிவைப் பற்றி நிற்கும் ஓர் இனிய தன்மையாகும்; இஃது ஏதேனும் ஒரு பொருளைப் பற்றி நிற்பதன்றித் தனித்து நில்லா தாகையால், இதனை நினைவுக்குக் கொண்டுவருமிடத்தும் இது பற்றி நிற்கும் பொருள்களையே நினைத்துப் பார்க்கப் பழகிவரல் வேண்டும். வான் அளாவித்தோன்றும் மலைகளை யேனும், எல்லையின்றி விரிந்து கிடக்குங் கடலையேனும், மடமான் தொகுதிகள் அச்சமின்றி யுலவுங் காடுகளையேனும், இன்னும் இவைபோன்ற நிலத் தோற்றங்களையேனும் நினைவிற் கொண்டுவந்து பயிலல் வேண்டும். இங்ஙனஞ் சில நாட்கள் பழகிய பிறகு திருத்தமாகச் செய்யப்பட்ட கல்வடிவுகளையும், அருமையாக வரையப்பட்ட ஓவியங்களையும் அகக் கண் எதிரே கொண்டுவந்து நோக்குக. அதன் பின்னர் அழகின் மிக்க ஆடவர் மகளிர் என்னும் இருதிறத்தாரில் எவரையேனும் அடிக்கடி நினைவிற் கொண்டுவருக. உயிரில்லாத ஏனைத் தோற்றங்களை அகக்கண்ணிற் பார்க்கும் பழக்கத்தினும், உயிரொடு கூடிய உருவங்களை நினைக்கும் பழக்கமே சிறந்ததாகும்; இனிஉயிரொடு கூடிய உருவங்களுள்ளும், அறிவில் மிக்கவற்றின் உருவங்களை நினைத்தலே மிகச் சிறந்ததாகும்; இனி அறிவின் மிக்க உயிர் வடிவங்களினும் அவ்வறிவோடு அன்பும் மிக்க உயிர் வடிவங்களை நினைவிற்கொண்டு வருதலே அதனினும் மிகச் சிறந்த பழக்கமாகும். அழகு அறிவு அன்பு என்னும் மூன்றொடு தெய்வத் தன்மையும் வாய்ந்த உயிர் வடிவை உணர்ந்து இன்புறுவது அதனினும் மிகச் சிறந்த பழக்கமாகும். திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவுருவம், அழகு அறிவு அன்பு என்னும் மூன்று தன்மைகளொடு குழந்தைப் பொழுதே எல்லா அறிவும் முதன்மையும் நிரம்பின தெய்வத் தன்மையும் பொருந்தப்பெற்ற விழுப்பம் உடையதாகலின், அவ்வருமைத் திருவுருவை இடையறாது நினைவிற் கொண்டுவந்து பழகும் நற்பெரும் பழக்கம் மனவுணர்வை நுட்ப மாக்குதற்கு மிக இயைந்த தொன்றாமென்பது கடைப்பிடிக்க. இனி, எல்லையற்ற அழகும், எல்லையற்ற அறிவும், எல்லையற்ற இன்பமும் உடைய உயிர்ப்பொருள் கடவுளை யன்றி வேறொன்றும் இல்லையென்பது திண்ணமாகலானுங், குற்றம் என்பது அணுத்துணையும் இல்லாத அறிவுடைய உயிர் கடவுள் ஒன்றே என்னும் உண்மை எல்லார்க்கும் ஒப்ப முடிந்த தொன்றாகலானுந், தமதுணர்வை மிகவும் நுண்ணிதாக்க வேண்டும் என்னுங் கருத்துடையார் எல்லாருங் கடவுளின் திருவருளுருவை எந்நேரமும் ஒழிவின்றி நினைவுகூர்ந்து வரல்வேண்டும். இங்ஙனம் நினைக்குங்காலும் அவ்வருளுருவை எல்லா அழகும் எல்லா அறிவும் எல்லா இன்பமும் நிறைந்து ஒளிதுளும்புந் திருந்திய வடிவினதாக நினைந்து, அந் நினை வின்கட் பெரிதும் இன்புறுதற்குப் பழகுக. இப் பழக்கங் கைவந்து உயிரின் நினைவு அதிற்றோய்ந்து அவ்வண்ணமாயபின் எக்காலத்து நிகழ்ச்சிகளையும் எவ்வுலகத்து நிகழ்ச்சிகளையும் அஃது எளிதிலே ஒருங்குணர வல்லதாகும். இவ்வருளுருவ வழிபாட்டில் தலை நின்றவர் யாவரே யாயினும் அவர் அழகு அறிவு அன்பு என்னும் அவ்வருமைத் தன்மைகள் நிறையப் பெற்றவராய்த் துலங்குவர். பண்பும் பண்பையுடைய பொருளுந் தம்முட் சிறிதும் பிரிதல் இல்லாத தற்கிழமைப் பொருத்த முடையன வென்றும், அவற்றுள் ஒன்றை நினைக்கவே மற்றொன்றுந் தானாகவே நினைவில் எழுமென்றும் முன்னரே நன்கு விளக்கிக் காட்டின மாகலின், அவ் வருளுருவத்தைப் பற்றிய நினைவானது தன்னுட் பொதிந்த அவ்வருமை இயல்புகளைத் தானே தோற்றுவிக்கு மென்பது மறுக்க ஏலாத உண்மை நிகழ்ச்சியேயாகும். இக் காலத்து உளநூற் புலவர்கள் ஆராய்ந் துரைக்கும் முடிபுகளும் பொருளை நினைக்கும் நினைவு அப்பொருட் பண்புகளையும் உடனே தோற்றுவிக்குமென நாட்டுகின்றன. அறிஞரான ஜிபோட்டோ என்னுந் துரைமகனார் தொலைவிலுணரும் நிகழ்ச்சிகளைப் பற்றித் தாம் ஆராய்ந்த பலவற்றுள் ஒன்றைப்பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்:- பி. என்னும் பெருமாட்டியார் தமக்குள்ள தலைநோயைப் பற்றி என்னிடம் முறையிட்டார். யான் எனது கையை அவ் வம்மையாரின் நெற்றிமேல் வைத்தேன், சில நேரங் களிலெல்லாம் அவர் ஓர் இழைந்த அறிதுயில் வரப்பெற்றார்; அவ்வுறக்கத்தை மிகுதிப்படுத்தாமலே யான் அவரிடத்தில் அமைதியையும் நலத்தையும் பற்றிய உணர்வை எழுப்ப முயன்றேன்; அதற்கு, முதலில் என்னிடத்தே அவ்வுணர்வை எழுப்புவித்துக் கொள்ள வேண்டிக், காற்றுந் தண்ணீரும் பகல் வெளிச்சமும் நிரம்பி விளக்குங் கடற் காட்சியினை என் நினைவிற் கொண்டுவந்தேன். அங்ஙனம் யான் என்னுள் உணரத் துவங்கிய வுடனே, அம் மாதரார் ‘யான் இப்போது சிறிது நலமாயிருப்பதாக உணர்கின்றேன்; காற்று எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கின்றது! என்று கூறினார். அதன்பிறகு யான் பூல்வார்டு செயிண்டு மிக்கல் என்னும் இடத்திற் சிறிது துளிக்கும் மழையில் நடப்பதாக என்னுள் எண்ணப் புகுந்தேன்; அவ்வாறு எண்ணவே, விரைந்து செல்லும் மக்களையுங் குடைகளையும் என்னுட் காண்பே னாயினேன். உடனே அந்த அம்மையார் ஈது என்ன புதுமையா யிருக்கின்றது! யான் பூல்வார்டு செயிண்டு மிக்கல் என்பதன் கோடியில் இருப்பதாக எனக்கு ஒரு தோற்றமுண்டாகின்றது. மழை பெய்கிறது; மக்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; கூட்டமாய் விரைந்து செல்லுகிறார்கள். அவர்களெல்லாருந் தெருவின் மேற் செல்லு கிறார்கள்; யானும் அவர்களொடு செல்லுகிறேன். காற்று மிகவுங் குளிர்ச்சியாயிருக்கிறது. அஃது எனக்கு இனிய இளைப்பாறும் உணர்வைத் தருகின்றது; என்றார். இச் சொற்களைக் கூறிய பிறகு அவர் தங் கண்களைத் திறந்தார்; தம் மனத்திற் பதிந்த அவற்றைப் பற்றிப் பின்னும் உறுதியுரை மொழிந்தார். இங்ஙனமே இத் துரைமகனார் தம்மால் உறங்கச் செய்விக்கப்பட்ட பலரிடத்துத் தாம்நினைந்த நினைவுகள் நினைந்த அளவில் தோன்றும்படி செய்து ஆராய்ந்து பார்த்த ஆராய்ச்சிகள் பல; இத்துரை மகனாரைப் போலவே இன்னும் பலரும் இவ்வாறே ஆராய்ந்து பார்த்து வருகின்றார்கள். இவ்வாராய்ச்சியில், அமைதியுங் குளிர்ந்த காற்றின் உலவுதலும் வாய்ந்த கடற்காட்சியாகிய ஒரு பொருளின் றோற்றத்தை நினைந்த அளவானே, அப் பொருட்டன்மைகளான அமைதியுங் குளிர்ச்சியும் அறிதுயிலில் அமர்ந்திருந்த அம் மாதரார்பாற்றோன்றிய உண்மை நிகழ்ச்சி பெரிதும் உற்றறியற் பாலதாம். எனவே, பொருளை நினைக்கும் நினைவு அப்பொருட் டன்மைகளையுந் தானே தோற்றுவிக்குமென்று யாம் முன்னே கூறியவுரை மறுக்கலாகாத மெய்யுரையே யாமென்பது புலப்படுகின்ற தன்றோ? உயர்ந்த பொருட்டன்மைகளைத் தம்மிடத்து வருவித்து அவற்றைத் தம் வழிப்படுத்திக் கொள்ள அவாவும் நன்மக்கள் எல்லாரும், அப் பொருள்களை ஓவாது நினைவுகூர்ந்து வருதல் இன்றியமையாத பழக்கமாகும். இதனை விடுத்து நினைக்க வராத பண்புகளை மட்டுமே நினைக்கக் கடவேமென்று மயக்கவுரை கூறி அம் மயக்கவுரையாற் பிறரை ஏமாற்றி ஒழுகுவார் சொற்களை நம்பிப் பொருள் நினைவை விட்டு இம்மை மறுமைப் பயன்களை இழக்கும் பொய்ந் நெறியிற் செல்லா வண்ணந் தம்மைப் பாதுகாக்க வேண்டுவது ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத கடமையாம். இதுகாறும், விழித்திருக்கும்போது மனவுணர்வை நுட்பமாக்குதற்கு இசைந்த பழக்கங்களையே விளக்கிக் காட்டினாம் இனித், துயிலும் போதும் அதனை நுட்பமாக்குதற்குரிய வழிவகைகளைப்பற்றிப் பேசப் போகின்றாம். பெரும்பாலும் பாதி நாள் நமக்குத் தூக்கத்திலே கழிந்து போகின்றது. தூக்கத்திற் சென்றவுடனே உயிர்களெல்லாம் அறிவிழந்து உயிரற்ற கற்போற் கிடக்கின்றன. தூக்கத்திலே, இன்னதென்று சொல்லுதற்குக் கூடாத ஒரு பேரிருள் நமதறிவை வந்து சூழ்ந்து கொள்ளுதலை மட்டும் வழக்கத்தில் அறிந்திருக்கின்றோம். இத்தகைய தூக்கமானது ஒவ்வொரு நாளின் இராப்பொழுதிலும் நமதறிவை வந்து விழுங்க, அதனால், விழுங்கப்பட்டு அதன் வயிற்றகத்தே செயலின்றிக் கிடக்கும் நாம். அங்கே உடனிருந்து உதவுங் கடவுளின் திருவருளால் திரும்பத் திரும்ப எழுப்பப் பட்டு விழித்துக்கொள்கின்றோம். இங்ஙனம் நாடோறும் இப் பேரிருளிற் போய்த் தங்கியிருந்து வருதலினாலேதான், பகற் காலத்தில் நாம் மிக முயன்று தேடிய நம் அறிவிற்பெரும்பாகத்தை நாள் ஏற நாள் ஏற இழந்து வருகின்றோம். பகலிற்றேடிய அரிய அறிவுப் பொருட்டிரளை இரவிற் றூக்கமாகிய எல்லையற்ற இருளிலே கொண்டு போய்ச் சொரிந்து, பின்னர் அப் பொருள் முழுதுஞ் சொரிந்தவிடந் தெரியாமையால் முழுதுமெடுக்க ஏலாமற், சிறிது சிறிதே கைக்கொண்டு வருகின்றோம். விழித்திருக்கையிற் றுலக்கப்படுகின்ற நமதுயிரின் அறிவு மறுபடியும் தூங்குகையில் அப்பேரிருட் சாயலால் மங்கிப் போகின்றது. இதனாலேதான் மக்களுயிர்க்கு மறதித்தன்மை மிகுந்து காணப்படுகின்றது. ஊசி நுனையை உடம்பினுள்ளே அழுந்தச் செருகினாலும் அதனை அறியமாட்டாத அத்துணை அறியாமையொடு மெய்ம்மறந்து தூங்குகின்றவனுக்கு, விழித் திருந்தாலும் அறிவு கூர்மையுற்று விளங்காது, அவ்விடத்தே மறதித் தன்மை மிக வேரூன்றி நிற்கும் இவ்வாறு இயற்கையிலேயே அறிவிழத்தற்கு ஏதுவான அறியாமைத் துயில் எல்லா வுயிர்களிடத்தும் நிறைந்திருப்பினும், அதனை நீக்கிக்கொள்ளும் நன்முயற்சி மக்களுயிர்கள் மாட்டு மட்டுமே காணப்படுகின்றது; அங்ஙனம் மிக அரிதிற் காணப்படும் அந் நன்முயற்சியினையுங், கட்குடித்துஞ் சாராயம் மாந்தியுங் கஞ்சா அவின் தின்றும் எந்நேரமும் ஒழிவின்றிப் போக்கித், தமதறிவை மீளா இருளில் முழுகுவிக்கும் மாந்தரின் தீய புன்செயல் நிரம்பவும் அருவருக்கற் பாலதாகும். அந்தோ! இவர் தமது புல்லறிவு கொண்டு தம்மைக் கடைப்பட்ட விலங்குகளினுங் கடைப்பட்டவராக ஆக்கிக்கொள்வது கண்டு எவர்தாம் அவர் தன்மைக்கு இரங்காமற் போவர்? இயற்கையிலேயே உயிரது அறிவின் வலியை உரிஞ்சும் வல்லிருள் உயிர்களின் உள்ளத்தே அமைந்திருக்கத், திருவருளுதவியாற் சிற்சில பொழுதுகளேனும் விளங்காநின்ற சிறிய அறிவை அது தானும் விளங்கவொட்டாது கள்ளானுங் கஞ்சாவானும் மயங்கச்செய்யும் மாந்தர் ஏதுக்குத்தான் இம் மக்களுடம்பிற் பிறந்தனரோ அறிகிலம். அருட்களஞ்சியமாகிய ஆண்டவன் செயலால் விழித்திருக்கும் போது விரிந்து விளங்கும் இச்சிறிய அறிவின் உதவியைக் கள்சாராயங் கஞ்சா அவின் முதலான மயக்கப் பொருள்களாற் பாழாக்கிவிடாது, அதனைப் பண்படுத்தி அவ்வழியே சென்று தூக்கத்திலுள்ள அறியாமை வல்லிருளைத் தொலைக்க வகை தேடுதல் மக்கட்பிறவி யெடுத்தார் செய்தற்குரிய பயன்படு செய்கையாம். அவ்வாறாயின், தூக்கத்திலும் அறிவு நிகழும்படி செய்யவே, உயிர்களுக்கு இளைப்பாறுதல் இல்லையாய் ஒழியும்; அஃதொழியவே, உடம்பு நிலைகுலைந்து நோய்மிகும். ஆகையால், இஃது உயிர்களுக்கு அறிவு மிகுத்தற்குரிய வழியாதல் யாங்ஙனம் எனிற்; கூறுதும். தூக்கம் என்பது உயிர்கள் இளைப்பாறுதற்கு அமைந்த நிலையேயல்லாமல், அவைகள் அறிவிழந்து கிடத்தற்காக வந்ததன்று. அறிவிழந்து கிடப்பதனாலேதான் உயிர்களுக்கு இளைப்பாறுதல் கூடுமென நினைப்பது பெரும் பிழை. அறிவிழந்த நிலையே இளைப்பாறுதல் ஆகுமென்று உரைப்பின் அறிவே இல்லாத கல் மண் முதலியன எப்பொழுதும் இளைப்பாறுகின்றனவென்றும் அவற்றின் நிலை உயிர்களின் நிலையைவிட மிகச் சிறந்த தாகுமென்றும் அன்றோ கூறுதல் வேண்டும்? அங்ஙனங் கூறுதல் பொருந்தாமையின், அறிவிழப்புக்கும் இளைப்பாறு தலுக்குஞ் சிறிதும் இயைபில்லை யென்பது தெள்ளிதிற் பெறப்படும். அவ்வாறாயின், இளைப்பாறுதல் இன்னதென்பதும், தூக்கம் இன்னதென்பதும், ஒருசிறிது விளக்கிக்காட்டுக வெனிற்; காட்டுகின்றாம். நாள் முழுதுஞ் செலவு செய்யப்பெற்ற அறிவு விழைவு செயல்களின் முயற்சியால் உடம்பிலுள்ள ஆவி வலிமை கழிந்து போகின்றது; கழிந்துபோன அதனைத் திரும்பவும் உடம்பில் உண்டாக்கிக் கொள்வதற்குச் சும்மாயிருப்பதாகிய நிலையே இளைப்பாறுதல் என்று சொல்லப்படும். நாம் நம்முடைய முயற்சிகளைக் கழிந்து போக விடாமற் சிலநாழிகை நேரமேனும் வறிதே இருப்பமாயின், நம்முயிரிலும் உடம்பிலுங் கலந்து நின்று உதவிவரும் இறைவ னருளாற்றலானது நமக்கு வேண்டும். ஆவி வலிமையினை உடனே அவற்றில் நிரப்பிவிடும். நீர் வருங்காலும் வடிகாலும் உடைய ஓர் ஏரியானது ஓயாமல் வடிகாலின் வழியே தண்ணீரை ஒழுகவிட்டுக் கொண்டிருக்கு மாயின், அதன்கண் நீர் நிறைந்திராதென்னும் உண்மை எவரும் அறிந்ததேயாம்! நிலத்திற்கு வேண்டுமளவு நீரைப் போகவிட்டு வடிகாலை அடைத்துவைத்தால் அது வருங்காலின் வழியே மிகுந்த நீரைப்பெற்று நிறைந்திருந்து, பின்னரும் வேண்டும்போது விளை புலங்களுக்கு நீரைக் கொடுத்துப் பயன்படும். அதுபோலவே, நாம் இடையிடையே இளைப்பாறுவதனால், முன்னே செலவு செய்யப்பட்ட ஆவிவலியானது திரும்பத் திரும்ப நம்முள் நிறைக்கப்பட்டுப் பின்னும் பின்னும் நாம் வேண்டிய முயற்சிகளைச் செய்தற்கு நம்மை வலிவுடையவராக்கி வரும். அங்ஙனம் இளைப்பாறுதல் இன்றி ஓயாமல் முயல்வதிலேயே ஆவியைச் செலவழித்து வந்தால் முதுமைப் பொழுதாகிய வேனிற்காலம் வரும் முன்னமே ஆவிவலிமை முழுதும் வறண்டு உயிரை உடம்பினின்றும் அகலச் செய்யும். ஆனது பற்றியே, இரவில் இளைப்பாற்று தற்பொருட்டு உயிர் களுக்குத் தூக்கம் வருகின்றது. இனித், தூக்கமோ அறியாமையில் நடைபெறுகின்றதல்லாமல், அறிவொடு சிறிதும் நடைபெறக் காணோம். அங்ஙனமாயின், இளைப்பாறுதல் என்பது அறியாமையிற்றான் நிகழவேண்டுவதுபோலும் எனின், அது பொருந்தாது. தொழில் செய்து அலுத்துப்போனவர்கள் அறிவோடிருந்து இளைப்பாறுதலையும் நாம் பார்த்திருக்கின்றோமே. இன்பமான கதையைப் பிறர் ஒருவர் எடுத்துச்சொல்ல அதனைக் கேட்டு மகிழ்ந்து கொண்டே, வேலை செய்ததனால் உண்டான இளைப்புத் தீர்ந்து தொழிலாளிகள் மனக்கிளர்ச்சியோடுஞ் செல்வதை நாம் எப்போதும் பார்க்கலாமே. இன்பத்திலே நம தறிவு உறைத்து நிற்கையில் நமக்கு எவ்வகையான அலுப்புந் தோன்றாமையை நாமும் நமது பழக்கத்திற் பலகாலுங் கண்டிருக்கலாம். மக்களின் அறிவு உடம்பிலுள்ள உறுப்புகளின் வழியாகப் பலதுறையில் மாறி மாறி ஓடுவதனாலேதான் அயர்ச்சியும் இளைப்பும் வந்து மூடுகின்றன. எந்நேரமும் ஓயாமற் கல்வி பயின்றுவருபவர்களுக்கு அயர்ந்த தூக்கம் வருவதில்லை, உடம்பின் உழைப்பு மிகுதியாயுள்ளவர்களுக்கே தம்மை மறந்த தூக்கம் வருகின்றது. ஆகையால், தம்மை மறந்து தூங்கும்படியான அவ்வளவுக்கு உடம்பை உழைப்பில் விடுவது அத்தன்மையாக விரும்பத் தக்கதன்று. தன்னை மறந்து தூங்குவதுதான் உடம்பின் நலத்தைப் பாதுகாப்பதற்கு வழியென்றும், ஆகவே அதனை வருவித்தற்குக் கடுமையான உழைப்புக் கட்டாயமாக வேண்டற்பாலதேயா மென்றும் பெரும்பாலார் பிழைபடக் கருதுகின்றனர். இந்த மக்கட்பிறவி எடுத்தது கடுமையாக உழைத்தற்கும் பின்னர் அதனால் அறிவின்றித் தூங்குதற்குந்தாமா? தூக்கம் மிகுதியாயில்லாதவர்களுக்கு உடம்பின் நலங் குறையும் என்றால், நன்றாய் உழைக்கும் மாடுகளுங் குதிரைகளுந் தம்மை மறந்து உறங்காமை என்னை? அங்ஙனம் உறங்காமலிருந்தும் அவை நல்ல நிலைமையோடு இருப்பதென்னை? எல்லாரும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவில் அவற்றின் கிட்டச் சென்றால், அவை உணர்விழந்து தூங்காமல் உணர்வோடிருத்தலைக் காண்கின்றோமே; தம்மை மறந்து தூங்குவதுபோற் காணப்படும் நாய் பூனை முதலான உயிர்களின் அருகே ஒருவர் அரவமின்றி எவ்வளவு மெதுவாய்ச் சென்றாலும் அவை உடனே எழுந்து ஓடுதலையுங் காண்கின்றோமே. நெடுநாள் உயிரோடிருந்த முதியவர்கள் தாம் உணர்வு கெட்டு உறங்கியதில்லை யென்றும், எவ்வளவு நேரந் தூங்கினாலும் நல்லுணர்வோடு கூடியேதாம் இருந்தனரென்றுந் தம் வரலாற்று நூல்களிற் கூறவுங் கேட்டிருக் கின்றோம். அப்படிப் பட்ட அம் முதியோர்களெல்லாம் நல்ல நிலைமையோடு ஒரு நூற்றாண்டுவரையில் உயிரோடிருந்தார்களென்பதும் மறுக்கப்படாத உண்மையாம். இவ்வாற்றால், நன்கு இளைப்பாறுதற்பொருட்டு அறிவிழந்த தூக்கம் வேண்டப்படுவதில்லையெனவும், உணர்வோடிருந்து தூங்குவதால் உடம்பின் நலம் பழுதுபட மாட்டாதெனவும் இனிது தெளியப் பெறுகின்றோம். மற்று, உணர்வோடிருந்து துயிலுவதால் அறியாமை நீங்கி அறிவொளி பெருகிப் பேரின்பம் மிகுந்து உயிரையும் உடம்பையும் வலுப்படுத்திப் பல்லூழிகாலம் உயிரோடிருக்கச் செய்யுமென்னும் உண்மை செவ்வையாகப் புலப்படுகின்றது. அங்ஙனமாயின் உணர்வோடிருந்து துயின்று நன்றாக இளைப்பாறுதற்கு வழி யாது என்றால், அவ்வழியின் பாகுபாடுகளை முறையாக எடுத்துக் கூறுவாம். பகற் காலத்தில் மிகுதியாக உழைக்கின்றவர்களுக்கே இராக்காலத்தில் தம்மை மறந்த தூக்கம் வருதலால், உடம்பை மிகுந்த உழைப்பின்கண் வருத்துதல் ஆகாது. அவ்வாறாயின் உழைப்பாளிகளாய் இருக்கும் மக்களுக்கு இவ்வுயர்ந்த பழக்கங்கள் கைகூடுமாறு யாங்ஙனமெனின், அவர்களும் இவற்றைச் செய்யவிரும்பி உயர்ந்த அறிவு நிலையை நோக்குவார்களாயின் நாம் இங்கே சொல்லியவாறு உடம்பின் உழைப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டுவது அவர்களுக்கும் இன்றியமையாததே யாகும்; அவர்களுக்கு அவ்விருப்பமும் உயர்ந்த நோக்கமும் எளிதிலே வரமாட்டா. அவர்கள் மிகவுந் கீழேயுள்ளதாகிய பிறவிப் படியில் நிற்கின்றார்களாதலால், மேல்நிலையில் உள்ள அறிவுக் களஞ்சியத்தைப் பெறுதற்குமுன் அவர்கள் இன்னும் பல பிறவிப்படிகளைத் தாண்டிவரல் வேண்டும். அப்படியாயின், அவர்கள் தாமிருக்கும் நிலையிலேயே பதப்படும்படி செய்தற்கு இசைந்த முறைகள் இல்லையோ வென்றால், உண்டு; அவர்களது நிலைக்கு ஏற்பச் சில நல்லொழுக்க முறைளையும் இரக்கத்தையுங் கற்பித்து வந்தால் அவர்கள் சிறிது சிறிதாக மேலேறுவர் என்பது திண்ணம்; இம் முறைகளையுங் கூடக் கற்பியாமல் அவர்களைப் பராமுகஞ் செய்து விடுவோமாயின், அவர்கள் குடிகொலை முதலான மிகவுந் தீய செயல்களிற் பழகி மக்கட்பிறவியினுந் தாழ்ந்த பிறவிகளிற் கீழ் இறங்கிப் போகுவர். இனி, அவர் பின்பற்றத்தக்க முறைகள் அல்லாமையால் அவரைப்பற்றி இங்கே பேசுதலை விடுத்துப், பிறவிப் படிகளில் மேலேறிப் பதமுடையராய் வந்திருப்பார் பெரிதுங் கைக்கொள்ளற்பாலனவாகிய உயர்ந்த பழக்கங் களைப்பற்றிப் பேசப்புகுவாம். உடம்பை மிகுந்த உழைப்பின்கண் விட்டால் ஆவியின் வலிவு வீணே கழிந்து போதலுடன், அறிவைப் பண்படுத்தும் முயற்சியும் இல்லாது போகும். அதனால் அறியாமையும் நீங்காமல் உயிரைப் பற்றிபடியே கிடக்கும்; இந்த நிலையில் உள்ளவர்களுக்கு இராப்பொழுது வந்தவுடனே அறிவு மயங்கிப் பிணம்போற் கிடக்குந் தூக்கம் வந்து கூடிவிடும். ஆகவே, பிறவிப் படிகளில் எத்தனையோ ஊழிக் காலங்களாக ஏறிச் சிறிது மேல்நிலைக்கு வந்தவர்கள் நிரம்பவுங் குறிப்பாகக் கருதற்பாலது இது; பாழும் வயிறு வளர்த்தலையே பெரிதாக எண்ணி, இந்த நிலவுலகத்து வாழ்வையே நிலையாகக் கருதி, அளவுக்கு மேற்பட்ட பொருளைத் தொகுத்து வைத்தலிலேயே அவா மிகுதியாகக் கொண்டு காலைமுதல் நள்ளிரவுவரையில் ஓயாது பலதுறைகளிலும் முயன்று அல்லற் படுவதை ஒழித்து விடுதல் வேண்டும். இத்தகைய அல்லல்வாழ்க்கையால் அளவு கடந்த கவலையுந் துன்பமும் வந்து ஆவியின் வலிவை உரிஞ்சி விடுகின்றன. ஆதலால், வேண்டுமளவுக்குப் பொருள் தேடும் முயற்சியைக் கூடுமானவரையுஞ் சிறுகச் செய்து, மற்றுப் பெரும்பான்மை முயற்சியை அறிவைப் பண்படுத்தித் துலக்குவதிலேயே செலுத்துதல் வேண்டும்; அறிவால் மிக்க சான்றோர்கள் வரைந்த நூல்களை இடைவிடாது கற்றுவரல் வேண்டும். எதனைச் செய்தாலும் அதனை அறிவோடிருந்து செய்தல் வேண்டும். அச்சங் கவலை பொறாமை முதலான இழிந்த தன்மைகள் வந்து, உள்ளத்தைக் கலங்கச் செய்யாதபடி அதனைத் தெளிவாக வைத்துக் கொள்ளல் வேண்டும். இவ்விழிந்த தன்மைகளாற் பற்றப்பட்டவர்களின் உடம்பு ஆவி வலிவினை மிகுதியும் இழந்து விடுதலால், அதனால் அவர்கட்கு அலுப்பு நிரம்பவும் உண்டாகி அவர்களை அறிவில்லாத கடுந் தூக்கத்தில் அழுத்திவிடும். இத்தன்மையவான இழிந்த தன்மைகளுக்கு இடங்கொடாமல் முன்சொல்லியவாறு பழகிவரவே, இரவில் அறிவில்லாக் கடுந்தூக்கம் வருவது சிறிது சிறிதாகக் குறையும். இனிய உறக்கத்திலுங் கூட உணர்வு மிகுதியாகக் குறையாமற் சுற்றிலும் நடப்பவற்றைத் தெரிந்து கொள்ள வல்லதாகும்; அது நிற்க. அங்ஙனம் உணர்வோடு உறங்குவது அறிவைத் தெளிவு படுத்துதற்கு இசைந்ததேயாயினும், அதனால் நன்கு இளைப்பாறுதலும் நலமுறுதலும் உண்டாகுமாறு யாங்ஙனமெனின், அதனையுஞ் சிறிது விளக்குவாம் தன்னை மறந்த தூக்கத்தில் இளைப்பாறுதல் மிகுதியாய் உண்டாவதற்கு ஏது என்னென்றால், அப்போது மக்கள் அறிவு உடம்பின் புறத்தேயுள்ள ஐம்பொறிகளிற் கலந்து நின்று புறப்பொருள்களைச் சிறிதும் அறியாமல் வேறாய் நிற்றலால் அந்நிலையில் ஆவியின் வலிவு மிகவுந் கழிவு படாமல் உடம்பில் நிறைந்து நிற்கின்றது; அங்ஙனம் நிறைந்து நிற்பது தான் இனிய இளைப்பாறுதலை உண்டாக்குதற்கு ஏதுவாகின்றது. இதனை ஆராய்ந்து பார்க்க விரும்பினால், அயர்ந்துறங்கும் ஒரு சிறு குழந்தையின் பக்கத்தே சென்று அதன் கைகால்களை மெல்லென நாம் எடுத்துப் பார்த்தல் வேண்டும்; அதன் கையை எடுத்து மேலே தூக்கும்போதும் அக் குழந்தையின் அறிவுமுயற்சி அதிற் சிறிதுந் தோயாமலிருக்கின்றது; அக் கையை மெல்லென நாம் விட்டுவிடும்போதும் அம் முயற்சி அதிற் சிறிதுமில்லாமல் அதுதானே துவண்டு விழுகின்றது. விழித்திருக்கும்போது ஒருவர் மற்றொருவரது கையை உயரத் தூக்கிச் சடுதியில் அதனை விட்டுவிட்டால், குழந்தையின் கையைப்போல் அவரது கை அங்ஙனந் துவண்டு விழாமல் உயரத்திலேயே நிற்பதைக் காணலாம். தூங்குங் குழந்தையின் கையையே அல்லாமல் நன்றாய் அயர்ந்துறங்கும் எவரது கையை அங்ஙனந் தூக்கிக் கீழே விட்டாலும் அது துவண்டு தானே கீழ் விழுதலைப் பார்க்கலாம். ஆனால், விழித்திருக்குங் குழந்தையின் கையையும் அங்ஙனமே அதற்குத் தெரியாமல் உயரஎடுத்துச் சடுதியில் விட்டுப்பாருங்கள். அது தூங்குங் குழந்தையின் கையைப் போலவே துவண்டு கீழ்விழும்; ஆனால் விழித்திருக்கும் பெரிய ஆட்கள் கையை அங்ஙனமே மேலே தூக்கிக் கீழே விட்டால் அது துவண்டு கீழ்விழாமல் மேலேயே நிற்கும். இங்ஙனங் குழந்தைகளின் கைமட்டும் விழிப்பிலும் உறக்கத்திலுந் துவண்டு கீழ் விழ, ஆண்டிற் பெரியவர்கள் கையோ அயர்ந்த உறக்கத்தி லன்றி விழிப்பு நிலையிற் றுவண்டு விழாமல் இருப்பதன் வகை என்னென்றால்; குழந்தைகளின் நினைவு எப்போதும் ஓரிடத்தி லேயே ஒரு பொருளிலேயே முனைத்து நிற்கின்றது; அதனால் அதன் நினைவு ஏதேனும் ஒன்றைப் பற்றி நிற்கும் படி செய்துவிட்டு, அதன் கைகால்களை நம் விருப்பப்படி எவ்வாறு அசைத்தாலும் அவை அவ்வாறெல்லாந் துவண்டு அசையும். ஆனால், ஆண்டிற் பெரியவர் நினைவோ ஒன்றையும் ஓரிடத்திற் பற்றிநில்லாமற் பலவகையாய் மாறி மாறி ஓடுதலால், அவரது நினைவை ஒருவழியிற் றிருப்பிவைத்து அவர்தங் கைகால்களை நாம் அசைக்குமிடத்து, அஃது அவ்வொரு நிலையில் நில்லாமல் அவ்வுறுப்புகளிலும் வந்து நிறைதலினால் அவை நாம் விரும்பியபடியெல்லாம் அசையாமல் தந் நிலையிலேயே நிற்கின்றன. மேலுங், குழந்தைகளுக்கு ஒரு நொடிப் பொழுதில் உறக்கம் வந்து கூடுதலையும், பெரியவர்களுக்கு அங்ஙனம் எளிதில் துயில்வராமையையும் ஆராய்ந்து பாருங்கள். குழந்தைகள் ஒரேநினைவாயிருத்தலால் அவ்வாறு சடுதியில் உறக்கம் வருகின்றதென்றும், ஆண்டில் பெரியவர்கள் பலகோடி நினைவுகளில் உழலுதலால் நினைத்தபடி துயில்கூடாமல் வருந்துகின்றனரென்றும் அறிதல் வேண்டும். இன்னுங் குழந்தைகள் நிலத்தே தவறிவிழுந்தால் பெரிய காயம்பட்டு வருந்தாதிருத்தலையும். பெரிய ஆட்கள் அங்ஙனம் விழுந்தாற் பெருங்காயப்பட்டு நெடுநாள் வருந்துதலையும் ஒப்பிட்டுப் பார்க்குங் காற், சிறுபிள்ளைகளின் உடம்பு எப்போதுந் துவண்ட நிலையிலும் பெரியவர்களின் உடம்பு பெரும்பாலும் எப்போதும் விறைத்த நிலையிலும் இருக்கும் உண்மை புலப்படா நிற்கும். உடம்பு துவண்டிருத்தற்கு ஏதுவாவது நினைவின் ஒருமையேயாம் என்றும், அது முறைப்பாயிருத்தற்கு ஏதுவாவது நினைவு சிதறுதலே யாமென்றும் உணர்ந்து கொள்க. ஆகவே, நினைவை ஒருவழிப்படுத்தி அஃது உடம்பின் புறத்துறுப்புகளிற் கலந்து நில்லாமல் வேறுமுகமாய் நிற்கும்படி செய்து உடம்பைத் துவண்ட நிலையில் வைத்துக்கொண்டால் மிகவும் நன்றாய் இளைப்பாறுதல் கைகூடும். மக்களினுந் தாழ்ந்த விலங்கினங்கள் தமதுடம்பை இங்ஙனம் மிகவுந் துவண்ட நிலையில் வைத்துக் கொள்வதனாலேதான், அவைகள் தம்மை மறந்த உறக்கங் கொள்ளாமலிருந்தும், மக்களினும் மிகுந்த இளைப்பாறுதலைப் பெற்று வலிவுடையனவா யிருக்கின்றன. ஆதலால், உணர்வோடு உறங்குவது மிகுந்த இளைப்பாறு தலையும் நலத்தையும் விளைவிக்குமென உணர்ந்துகொள்ளல் வேண்டுமென்க. 5. உணவு இனி, உறக்கத்திலும் உணர்வொடு கூடியிருந்து இளைப்பாறவும், அதனால் மனவுணர்வை நுட்பமாக்கவும், அவ்வுணர்வை வளர்த்தற்கு ஒப்பற்ற கருவியாய் வாய்த்த நமதுடம்பைப் பாதுகாக்கவும் ஒரு பெருங்கருவியாய் உள்ள உணவைத் தூயதாகத் தெரிந்தெடுத்து உட்கொள்ளுதல் பெரிதுங் கருத்திற் பதிக்கற் பாலதாகும். ஏனென்றால் உணவின் றன்மைக்கு இசையவே உடம்பின் முதற்பொருள்களும் உருவாக்கப்படுகின்றன. கொழும்புல்லுந் தெளிந்த மலையருவி நீரும் பருகிவாழும் மான் மரை குதிரை ஆ முதலான விலங்கினங் களின் உடம்பு எவ்வளவு தூயதாகவும் எவ்வளவு அழகியதாகவும் அமைந்திருக்கின்றன! அவ்விலங்குகள் எவ்வளவு அமைதியாகவுங் களங்கமற்றனவாகவும் இருக்கின்றன! அருவருப்பான வுணவைத் தின்னும் பன்றியும் நாயும் பூனையும் புலியும் முடைநாற்றம் வீசும் பொல்லா உடம்புடை யனவாயிருத்தலோடு அவை எவ்வளவு கொடுமையும் வெடுவெடுப்பும் மிகப்பெற்றனவாயு மிருக்கின்றன! இவற்றை நோக்குமிடத்து உணவினால் விளையும் நன்மை தீமைகள் தெளிவாகப் புலப்படுகின்றனவல்லவோ? இனித், தூயவான உணவுப் பொருள்களை உட்கொள்ளப் புகுந்தாலும், மக்கள் ஏனையுயிர்களினுந் தமக்குள்ள அறிவின் மேன்மைக்கு ஏற்பச் சுவை மிகுந்தவைகளையே ஓர் அளவாக அருந்திவரல் வேண்டும். பல்வகைச் சுவைகளும் தெரிந்து உண்ணாதவரையில் நாவினுணர்வும் அதனோடு ஒற்றுமைப்பட்ட மனனுணுர்வும் நுட்பமாய்ப் பெருகி வளரா; ஓர் அளவாய் உண்ணாமல் மிகுத்துண்டாலுங் குறைத் துண்டாலும் உடம்பு நோய்க்கு இரையாய்விடும். மேலும், மிகுதியாய்த் தின்பவர்க்குத் தூக்கமுஞ் சோம்பலும் மேற்பட்டு அவர்களது அறிவினையும் மழுங்கச் செய்யும்; குறைத் துண்பவர்க்குக் களைப்புந் தளர்வும் மிகுதிப்பட்டு அவர்களது அறிவினையும் நிலைகலங்கச் செய்யும். ஆகையால், அவரவர் உடம்பிற்கு வேண்டும் அளவறிந்து உணவெடுப்பது எல்லார்க்கும் இன்றியமையாத கடமையாம். இந் நுட்பங்கள் உணராதார் பலர், பசியெடுத்த வேளைக்கு எது கிடைத்தாலும் நிறைய உண்ணுதலை விடுத்து, நாச்சுவை பார்ப்பதுங் குறையச் சாப்பிடுவதுங்கூடா, என எளிதாய்ப் பேசிவிடுகின்றனர். அறிவு விளக்கத்தை நாடாதவர்க்கு, அங்ஙனஞ் சுவை தெரிந்து அளவாய் உண்ணாமற் கண்டதைக் கண்டமட்டும் எருமைபோற்றின்பதும் எதனையும் எளிதாய்ப் பேசி ஏளனஞ் செய்வதும் பொருத்தந்தான். அறிவுவளர்ச்சியினை நாடு வார்க்கோ சுவையுணர்வும் அளவாய் உண்டலும் இன்றி யமையாது வேண்டப் படுவனவேயாம். அங்ஙனஞ் சுவை தெரிந்துண்ணல் வேண்டின் திறமான பண்டங்களை வாங்கு தற்கும் அவற்றை நலம் பெறச் சமைத்தற்கும் மிகுந்த பொருள் வேண்டுமேயெனின்; அப்படியன்று, விலைகுறையக் கொண்ட கீரை, கிழங்கு, வரகு, சோளம் முதலிய நயத்த பொருள்களே யாயினும், அவற்றையும் நுண்ணறிவால் எவ்வளவோ சுவைமுதிரச் சமைத்துக் கொள்ளலாம்; விலையுயர்ந்த பருப்பு, நெய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, தேங்காய்,கோதுமை, சீரகச்சம்பா முதலான சீர்த்த பொருள்களேயாயினும், நுண்ணறிவொடு சமைக்கப்படா விட்டால் அவை சிறிதுஞ் சுவைப்படமாட்டா. ஆகவே, சுவை கனியச் சமைக்கும் நுண்ணறிவு முயற்சி யுண்டானால் எத்தனை நயத்த பொருள் களையுஞ் செவ்வையாக ஆக்கிக் கொள்ளலாம்; ஆகையாற், சுவைமிக்க உணவு கூட்டுதற்கு விலையுயர்ந்த பண்டங்களும் பெரும்பொருளும் வேண்டுமெனக் கூறுதல் சிறிதும் பொருந்தா தென்க. சுவைமிக்க உணவு கூட்டுதற்கு நுட்ப அறிவு வேண்டு தலானுஞ், சுவை முதிர்ந்த உணவை யுண்பார்க்கு நுண்ணறிவும் மகிழ்ச்சியும் உண்டாதலானும் இனிய உணவின் மேன்மை யாங் கூறாமலே எவர்க்கும் விளங்குவதொன்றேயா மென்க. இன்னும், இன்சுவை யுணவினால் உடம்பு நோயின்றித் தளிர்த்தலால் அதன் மேன்மை பின்னும் பின்னும் ஆராயற் பாலதேயாம். இக் காலத்து உடம்பு நூல்1 வல்ல ஆங்கிலப் புலவோர், உண்ட உணவு தீனிப்பையிற் சேர்ந்த அளவானே அங்கது நன்றாய் அரைக்கப்பட்டுக் குழம்புபோல் ஆதற்கு, வாயில்வைத்த கவளத்தொடு சேர்ந்து உள்ளிறங்கும் வாய்நீர் நிரம்பவும் உதவிசெய்கின்றதென்று உரைக்கின்றார்கள். தீனிப்பை மெல்லிய தன்மை யுடையதாகையால், அஃது உணவை ஏற்றுக்கொள்ளும் முன் அவ்வுணவை நன்றாய் அரைத்துப் பதப்படுத்திக் கொடுக்கும்படி வாயும் அதன் கண் அண்ணமும் பல்லும் நாவும் நீரும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பாருங்கள்! வாயில் ஓர் உணவுப்பொருளை வைத்தவுடனே நாவின்கீழ் நீர் சுரந்து அதனை நனைத்துக் கொண்டேயிருக்கின்றது; நாவோ அதனை இருபுறத்துமுள்ள பற்களிற் சேர்த்துச் சேர்த்து அரைப்பித்து மேலண்ணத்திற்பொருத்தி இனிமைகாட்டிப் பிறகதனைக் கீழ் இறக்கி விடுகின்றது; இவ்வாறு அரைபட்டுக் கீழ்ச் சென்ற அவ்வுணவு இரைப்பை நீரோடு எளிதிற் கூடிச் செரித்துப் போகின்றது. இங்ஙனம் வாயினுள் அரைக்கப்படாமல் தீனிப்பைக்குட் செல்லும் உணவோ அங்கே வலிதா யிருத்தலால் இரைக் குடலால் அரைக்கப்படாமல் நிற்கின்றது; அதனால் அது செரியாமற் போதலோடு மெல்லியல்பு வாய்ந்த தீனிக் குடலுக்குங் கடுந்தொழிலைக் கொடுத்து அதனையும் புண்ணாக்கித் தானும் பதனழிந்து நஞ்சாய் விடுகின்றது. இதனாலேதான் மாந்தரிற் பலருக்கு வயிற்றுளைச்சலென்னும் நோய் உண்டாகின்றது; வலிய பொருளை அரைக்கமாட்டாமற் புண்படுகின்ற தீனிக் குடலிலிருந்து ஒழுகுஞ் செந்நீர் வெளிப்படுங்கால் மிகுந்த உளைச்சலை உண்டாக்குகின்றது. இவ்வாறெல்லாம் உடம்பி னகத்தே நடைபெறும் நிகழ்ச்சிகளை நன்குணர்ந்த வர்களுக்கு, உணவை மெல்லாமல் அப்படியே விழுங்குவதால் நேரும் பொல்லாங்கின் கொடுமை எவ்வளவு பெரிதாய்க் காணப்படும்! இவற்றுள் ஒன்றும் உணர்ந்து பாராமல் உணவை மென்று தின்னல் ஆகாது என்றும், நெடுநேரம் மெல்லுதற்கு ஒழிவு காலம் இல்லை என்றும் எளிதாய்ப் பேசித் திரிபவர்கள், நுண்ணு ணர்வும் இன்பமும் பெறாமற் பலவகைநோய்களாற் பற்றப் பட்டுக் காலம் முற்றாமுன்னரே இறந்தொழிவர்! வாயிற் பெய்த ஒவ்வொரு கவளத்தையும் வாய்நீரிற் கூட்டி நன்றாய் அரைத்துக் குழைத்து உண்பவர்கள் சுவையால் இன்பமும் உணர்வும் மிகப்பெற்று, அதனை மென்பதப்படுத்தி யிறக்குதலால் தீனிப் பையையும் புண்படுத்தாமல் வைத்து, அவ்வுணவையும் எளிதிற் செரிப்பித்துத் தூயசெந்நீரை உண்டுபண்ணிக் கொள்வராகலின், அவர் நீண்டநாள் திண்ணியராய் உயிர்வாழ்ந்து அறிஞராய் விளங்குவர் என்க இன்னும், வாயிற் சுரக்கும் நீரின்கண் உடம்பை வளர்க்கும் முதற்பொருள்கள் அமைந்திருக்கின்றன வென்றும், அதனால் வாயிற் பெய்தபண்டம் அந்நீரில் நன்றாகக் கலந்து குழம்பாய் உள்ளிறங்குமாயின், தீனிப்பை அதனை எளிதாகச் செந்நீரிற் சேர்ப்பிப்பதோடு அவ் வாய் நீரிலுள்ள வலிய முதற்பொருள்களையும் அதன் வழியாக எங்கும் பரவச் செய்து உடம்பை வலுப்படுத்து மென்றும் இக்காலத்து உடம்பு நூல் வல்லாருங் கூறுதலின் உணவுப் பண்டத்தை நன்றாக வாய்நீரிற் கலப்பித்தற்கு அதனை அடுத்தடுத்துப் பல முறையும் மென்று தின்பது இன்றியமையாததாகின்றது; இதுவன்றியும், பலமுறை மெல்வதால் தாடையும் நன்றாய் அசைந்தசைந்து வலுப் படுகின்றது. இங்ஙனமெல்லாஞ், சுவையின்பமும், நுண்ணு ணர்வும், எளிதிற் செரித்தலும், உடம்பு வலுப்படுதலும் முதலான நன்மைகள் பலவும் விளைதற்கு வாயிலா யிருத்தலின் உணவை நன்றாய் மென்றுண்ணும் பழக்கம் அறிவுடையார்க்கு முதன்மை யாக வேண்டப்படுவதேயாகும். தமது நினைவைப் பிறர்க்குப் புலப்படுத்தவும் பிறர் நினைவைத் தாம் அறிந்து கொள்ளவும் பழகும் அறிஞர்க்கு உணவைச் சுவைப்பட மெல்லுதல் அவர் கருதிய பயனை விரைவிற் றருவதாகுமென்க. இனி, இயல்புள்ளவர்கள் நெய் பால் தயிர் வெண்ணெய், உழுந்து துவரை கோதுமை அரிசி, வாழைக்காய் தேங்காய் உருளைக்கிழங்கு, நாரத்தம்பழம் சீமையிலந்தைப்பழம் வாதுமைப்பழம் முதலான தூய வலிவான உணவுப்பொருள் களைக் காலமும் இடமும் அளவும் அறிந்து உட்கொண்டு வருவார்களாயின், அவர்களுடம்பு அழகுமுதிர்ந்து மினுமினு வென்று மிளிர்வதோடு, அறிவும் மிக நுணுகி வளர்ந்து பிறராற் செயற்கரிய செயல்களையெல்லாஞ் செய்ய வல்லதாகும். மற்று, இயல்பில்லாதவர்களோ தமது நிலைமைக்குத் தக்க அறைக்கீரை தூதுளங்கீரை, சிறுகீரை, பொன்னாங் காணிக்கீரை, மணித் தக்காளிக்கீரை, கலவங்கீரை முதலியவற்றைப் பல வகையாகப் பதப்படுத்தி மேற்சொன்னவாறு அருந்தி வருவார்களாயின், அவர்களும் மெல் இயல்புள்ளவர்கள் அடையும் பயன் களெல்லாம் அடைகுவர். விலையுயர்ந்த வலிவுப்பொருள்களை உண்பவர்களுங் கூட இங்கே கூறிய கீரைவகைகளைச் சமைத்துண்ணல் வேண்டும்; செந்நீர் துப்புரவாதற்கும், உடம்பிற்சேரும் நச்சுநீரை அகற்றுதற்கும், உடம்பினுறுப்புகளை உரப்படுத்துதற்கும் இக்கீரை யுணவு இன்றியமையாது வேண்டப்படுவதாகும். இயல்புடையவர்க்கே கட்டாயமாய் வேண்டப்பட்ட இவ்வுணவை, விலை சிறிதாயிருத்தல்பற்றித் தாழ்வாக நினையாது உயர்வாகவே நினைந்து ஏராளமாய் வாங்கி உண்ணுதற்கு ஏழை எளியவர்கள் முன்னிற்பாராக. இனிச், சீமையிற் புகழ்பெற்ற ஆங்கில மருத்துவராய் விளங்கும் xUt®2 தீராநோய்கொண்டு வருவார் பலர்க்குங் கீரைகளையும் ஆவின்பாலையும் பலவகையாகப் பதப்படுத்திக் கொடுத்து அவர்க்குள்ள நோய்களை உலகம் வியக்கும்படி தீர்த்துவருகின்றார். தங்கண் நச்சுநீர்3 இன்றி, உடம்பிலுள்ள நச்சுநீரை அப்புறப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை கீரை பால் முதலிய சைவ வுணப் பொருள்களேயாம் என்று அவர் மிகவுந் திறம்பட நூல்கள் எழுதி விளக்குவதொடு, தாங் கூறியவற்றைப் பழக்கத்திலுஞ் செய்துகாட்டுகின்றார். அவர் கூறுவதிலுஞ் செய்வதிலும் இறைச்சி யுண்பது பெரிதுந் தீதாம் என்னும் உண்மை நன்கு விளங்கிவருகின்றது. இறைச்சியில் நச்சுநீர் இருததலால், அதனை உண்பவர் உடம்பிலும் நச்சுநீர் பெருகி உரைத்தற்குங் கேட்டதற்குங் கொடுமையான பல நோய்களை வருவிக்கின்றது. ஆதலால், இயல்புள்ளவர். இல்லாதவராகிய இருதிறத்தாரும் ஆடு மாடு பன்றி கோழி மீன் முதலான எவ்வகைப்பட்ட உயிரின் உடம்பையுஞ் சிதைத்து அவற்றின் ஊனை உண்ணாதிருக்கக் கடவராக. ஊனுண்ணல் இரக்கமற்ற கொடுஞ்செயலாய் இருப்பதோடு அதனைச் செய்கின்றவர்க்கும் அது நோய்களை விளைத்து அவர் உயிரைக் கொள்ளை கொண்டும் போதலால், தற்பாதுகாப்பின் பொருட்டாகவாவது ஒருவரும் ஊன்றின்றலாகாது. ஊனுக்குச் செலவழிக்கும் பணத்தில் எட்டிலொரு கூறிருந்தால் இனிய நல்ல சைவவுணவு உட்கொண்டு நன்கு வாழலாம் என்று ஊனுண்பாரே கூறுகின்றனராதலாற், செட்டாய்ச் செலவு செய்து எஞ்சிய பணத்தை நல்ல துறைகள் பலவற்றிற் பயன்படுத்துதற்குச் சைவவுணவே மிகவும் இசைந்த தென்று கடைப்பிடித்தல் வேண்டும். இன்னும், ஏழை எளியவர்கட்குச் சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை முதலான உரமான சைவ வுணாப்பொருள்கள் நயமாய்க் கிடைக்குமாதலால், அவர்கள் இறைச்சியுண்டலை அறவே விட்டு இம்மணிகளைக் கைக்கொள்வாராக. நயமாய் விற்கும் இப்புன்செய்ப் பயிர் நன்செய்ப் பயிர் விளைவுகளைப் பெற்று நன்றாகச் சமைத்துப், பரபரப்பின்றி மெதுவாகச் சுவைத்துத் தின்னல்வேண்டும். மக்களினுந் தாழ்ந்த ஆடுமாடு குதிரை முதலான உயிர்கள் இத் தொழிலை எவ்வளவு திருத்தமாய்ச் செய்கின்றன! அவை தீனி எடுக்குங்கால் விரைவதேயில்லை, அதனை மெல்ல மெல்ல வாயுள் வைத்து அரைத்து மன நிறைவோடு உள்ளிறக்குகின்றன. மக்கள் விலங்குகளினும் மேலான அறிவைப் பெற்றும், இவ்வுயிர்களிடத்துக் காணப்படும் இயற்கையைப் பின்பற்றி ஒழுகாமல், அதற்குப் பெரிதும் மாறுபட்டு நடக்கின்றார்கள் இலையில் நிறையக்குவித்த சோற்றையுங் கறியையும் ஐந்து நொடிகளில் எடுத்துப் பரபரப்பொடு விழுங்கி எழுந்தவர்களையும் பார்த்திருக்கின்றோம். இத்தனை பரபரப்போடு உண்பவர்களுக்கு யாது சுவை தெரியப் போகின்றது! உண்ட வுணவை அறச்செய்வதற்கு முதன்மையாக வேண்டப்படும் வாய்நீர் பரப்பரப் போடுண்ணும் உணவிற் கலவாதாகையால், அங்ஙனம் விழுங்கப்படும் உணா தீனிப்பையிற் செரியாமல் அழுகிநின்று பல நோய்களை வருவிக்கும். அல்லும் பகலும் நெற்றித் தண்ணீர் நிலத்தில் விழக் கைவருந்த மெய்வருந்தப் பாடுபட்டுப் பணந்தேடுவது எதன்பொருட்டு? சாண் வயிற்றின் பொருட்டன்றோ? இவ்வாறெல்லாம் பாடுபட்டும், அப் பாட்டினால் வந்த அரிய உணவை அமைதியாயிருந்துண்டு மகிழாதவர் பெறும் பயன் என்னை! இனி, மற்றொரு முதன்மையான செயலிலும் மாந்தர் உலக இயற்கை நன்னிகழ்ச்சிக்கு மாறாய் நடக்கின்றனர். மக்களினும் கீழ்ப்பட்ட மற்றை யெல்லா உயிர்களுங் காய் கனி கிழங்கு கீரை கடலை உழுந்து துவரை முதலிய எல்லா உணாப்பொருள் களையும் இயற்கையில் உள்ளபடியே யெடுத்து நன்றாய் மென்று தின்கின்றன. மாந்தரோ அவற்றை நெருப்பில் வேவுவித்து அவற்றின் இயற்கைத் தன்மையைக் கெடுத்து உண்கின்றனர். இங்ஙனஞ் செய்தலால் அவ்வுணாப் பொருள்களில் உள்ள வலுவான பாகம் அழிந்துபோகின்றது. இத் தின்பண்டங்களைப் பச்சையாக உண்ணுஞ் சிற்றுயிர்களுக்குள்ள வலிவும் நலமும், இவற்றை அவித்துத் தின்னும் மாந்தர்க்கு வருவதில்லை. இயற்கைக்குப் பொருந்த இவற்றைப் பச்சையாகவே உண்ணுஞ் சிற்றுயிர்கள் இவற்றையுண்ட பின் இவற்றின் பிழிவுகள் அவைதம் உடம்பில் நன்றாய்க் கலந்து போகச், சக்கையான பாகம் அவைகளால் வருத்தமின்றி வெளியே கழித்து விடப்படுகின்றது. மக்கள் உண்ணும் உணவிற் பிழிவான பாகம் சிறிதேயிருத்தலால், அஃது அவர்கள் உடம்பிற் கலக்கக் காலந்தாழ்ப்பதோடு, அதனிற் பிரிந்த சக்கையும் எளிதில் வெளிப்படுவதில்லை; இதனாலேதான் பலர் மலச்சிக்கலாற் பெரிதுந் துன்புறுகிறார்கள்! விலங்கினங்களில் எவையேனும் இங்ஙனம் மலச்சிக்கலாற் றுன்புறுவதுண்டோ? கூறுமின்! கடலை துவரை உழுந்து முதலியவற்றிலுள்ள தோலுந் தவிடும் மலச்சிக்கலைப் போக்குந் தன்மை வாய்ந்தன; அவற்றை மக்கள் கழித்துவிட்டு அவற்றின் உள்ளுள்ள பருப்பை மட்டும் நன்றாய் வேகவைத்துத் தின்கின்றனர். அதனால் அவர் மலச்சக்கையைக் கழிக்க இயலாமல் வருந்துகின்றனர்; ஆனால், இவர்களாற் கழித்துவிடப்பட்ட உமியையுந் தவிட்டையும் இரையாகக் கொள்ளும் அச்சிற்றுயிர்களோ அங்ஙனம் வருந்துவதில்லை, அவை நல்ல செம்மை வாய்ந்து திண்ணியவாய் இருக்கின்றன. அவ்வாறாயின், மக்கள் இனி விலங்குகளைப் போல் எல்லாவற்றையும், பச்சையாகவே உண்ணல் இயலுமோ வெனின்; அமெரிக்கா இங்கிலாந்து முதலான அயல்நாடுகளில் இந் நுட்பங்களை நன்குணர்ந்த அறிவுடையோர் பலர் காய் கனி கிழங்கு முதலான எல்லா உணவுப் பொருள்களையும் பச்சையாகவே உண்ணப் பழகி வருகின்றார்கள்; அவர்களிற் பலர் அப் பழக்கத்திற் றேர்ச்சிபெற்றும் விளங்குகிறார்கள். இவ்வாறு இம் மேலோர்க்கு இப் பழக்கம் எளிதாய் இருப்ப, நம் தமிழ்நாட்டிலுள்ளவர்க்கு மட்டும் இது கடுமையாய்க் காணப்படுவானேன்? நம்மனோர்க்கு மனவுறுதியும் மேலான துறைகளிற் செல்லுதற்கு ஆவலும் இல்லாமையோடு, அறிவில்லாத பிறர்செய்யும் ஏளனத்திற்கும் பெரிதும் அஞ்சுவர்; தாம் பழகியதொன்று எவ்வளவு தீயதாய் இருப்பினும் அது வழக்கமானது, விட முடியாது என்று சொல்லிக்கொண்டே யிருப்பர். இத் தன்மையுடையார்க்கு எல்லா உணாப் பொருள்களையும் பச்சையாக உண்டலே நல்லது எனக் கூறுவமாயின், அவ்வுண்மை கூற வரும் நம்மையே ஏளனஞ் செய்து நகையாடு தற்கு முந்துவர். மற்றை நாட்டிலுள்ளவர்கள் கல்வியிலுங் கைத்தொழிலிலும் உழவிலுங் கொண்டுவிற்றலிலும் நூலுணர்ச்சியிலும் புதிய புதிய பொறிகள் ஆக்குவதிலும் நாளுக்குநாள் வளர்பிறைபோற் பெருகிவர நம்மவரோ இவையொன்றிலுங் கருத்தில்லாதவர்களாய் நாளுக்குநாள் தேய்பிறைபோற்குறைந்து கொண்டே போகின்றனர்! ஐயகோ! இவர்கள் தமதறியாமையினையுந் தீயவழக்கங்களையுஞ் சோம்பலையும் நல்லோரைப் பழித்தலையுங் கைவிட்டு முன் ஏறும் நாள் எந்நாள்! அது நிற்க. இனி, மக்கள் எல்லாருஞ் சமைத்துண்டலை அறவே விடுத்து, எல்லா உணவுப் பொருள்களையும் பச்சையாகத் தின்றல் இப்போது எளிதில் முடியாததாய்க் காணப்படுதலால், உள்ள நிலைமையை இயன்றவரையிற் சீர்திருத்துதற்கு முயறலே பயன்படுவதாமெனின்; எல்லாரும் அங்ஙனஞ் செய்தல் இயலாவிடினும் முக்கால நிகழ்ச்சிகளையும் உணர்தற்கு மிக விரும்புகின்றவர்களாயினும் எல்லா உணவுப் பொருள்களையும் பச்சையாகவே உட்கொள்ளுதற்குப் பழகிவரல் வேண்டும். தீயில் அவற்றை வேவுவித்து உண்ணும் மற்றையோர் தமது உடம்பைச் செவ்வையான நிலைமையில் வைத்தற்கு வேறு சில செயற்கை முறைகளைப் பின்பற்றல் வேண்டும். ஏனென்றால் இயற்கை முறைக்கு மாறான தொன்றைச் செய்து அதனால் உடம்புக்கு ஒரு பொல்லாங்கு வந்தாற் பின்னர் அதனை நீக்குதற்கு மற்றொரு செயற்கை முறையினைப் பின்பற்ற வேண்டுவது கட்டாயமாய் இருக்கின்றதன்றோ? பச்சையாய் உள்ள காய்கனி கிழங்கு கீரை விதைகளில் உடம்புக்கு வேண்டிய வலிவான பொருள்கள் அத்தனையும் அமைந்திருக்கின்றன. ஆனால், அவற்றை நெருப்பிலிட்டு வேவுவித்தாலும், வேவுவித்த நீரை இறுத்து விட்டாலும் அவற்றின்கண் இருந்த பசையும் ஆவியும் அகன்று அவை சாறற்ற வெறுஞ் சக்கையாய் விடுகின்றன. அதனால், அவை தீனிப்பையிற் செரித்துச் செந்நீராய் மாறுதற்குஞ், செந்நீரிற் சேராது கழிந்த சக்கையை வெளிப்படுத்துதற்கும் இன்றியமை யாத நெய்ப்பும் ஆவியுஞ் சாறும் இல்லாமற் போதலால், பெரும்பாலார்க்குச் செரியாமையும் மலச்சிக்கலுந் தோன்றி அவரை வருத்தி வருகின்றன உணாப் பொருள்களைப் பச்சையாக உண்ணாமல், இயற்கைக்கு மாறாய் அவற்றை வேவுவித்து உட்கொள்ளுதலால் இப் பொல்லாங்குகள் நேர்கின்றன. செயற்கையால் நேர்ந்த இப் பொல்லாங்குகளைத் தீர்க்க வேண்டுமாயின், அவற்றிற்கேற்ற செயற்கை முறைகளைக் கையாண்டே தீரவேண்டும். தீனிப்பைபிற் சென்ற உணவில் வேக்காட்டாற் பிரிந்துபோன நீர் திரும்பவும் அதிற் சேர்க்கப் பட்டாலன்றி அது செரியாது. ஆகையால், நாடோறும் ஒரு நாழிகைக்கு ஒருகால் இரண்டு மூன்று மிடறு தண்ணீர் அருந்திவரப் பழகுதல் வேண்டும். இங்ஙனம் பழகிவரவே, தீனிப்பை உணவைச் செரிப்பித்தற்கு வேண்டிய நீர் பெற்று அதனைப் பதப்படுத்தும். அதனொடு மலக்குடலிற் சென்ற சக்கை வேவுவித்த உணவின் கழிவாதலால் அது வெளிப்படுதற்கு வேண்டிய அளவு நெய்ப்பு அதனில் இல்லாமற் போக அது வறண்டு அக் குடலை இறுகப் பற்றிக் கொள்கின்றது; ஆதலால், அவ்வப்போது சேருஞ் சக்கையை அக்குடலினின்றும் அகற்றுதற்கு நீரேற்றி4 என்னுங் கருவிகொண்டு மாலைக் காலத்தில் கீழ்வாயிலின் வழியே, சிறிது விளக்கெண்ணெயாவது பன்னீர்ச்சுவர்க் காரமாவது கலந்த ஒரு படி வெந்நீரை ஏற்றி அக்குடலைக் கழுவித் துப்புரவு செய்தலும் வேண்டும். இதனைக் கையாளும் முறைகளும் உடம்பின் நலம் பேணுதற்கு இன்றியமையாத ஏனைமுறைகளையும் யாம் எழுதிய `மக்கள் நூறாண்டு உயிர் வாழ்தல் எப்படி? என்னும் நூலுட் கண்டுகொள்க. அடுத்தடுத்துத் தண்ணீர் பருகுவதாலும் மலக்குடலைக் கழுவுவதாலுந் தீயிற் சமைத்த உணவை உட்கொள்ளுதலால் விளையும் பொல்லாங்குகளைக் கடக்கலாம் இவ்வாறெல்லாம் உணவையும் உணவால் வரும் பயன்களையும் ஓர் ஒழுங்காக் கியபின் உடம்பு மிகவும் நல்ல நிலைமையை எய்தித் தன்னிடத் துலவும் உயிரின உணர்வு மிகுதிப்படுதற்கு உதவி செய்யும் என்க. செவ்வையான வீடு கட்டவேண்டும் ஒருவன் அதற்குரிய கல்லுஞ் சுண்ணமும் மரமுந் தேடித் தொகுத்துக், கட்டுதற் றொழிலில் வல்ல கொற்றர்களையும் அமர்த்திக் கொள்வது இன்றியமையாததாய் இருத்தல் போல, இந்த உடம்பை ஒழுங்கான முறையில் வைத்தற்கு விரும்புவோரும் அதற்குரிய பண்டங்களைக் கருத்தாய்த் தேடித் தொகுத்து, உள்ளுள்ள தீனிப்பை மலக்குடல் நெஞ்சப்பை முதலியன நன்றாகத் தத்தந் தொழில்களைப் புரியும்படி செய்தல் வேண்டும். ஆனது பற்றித், தீனிப்பை மலக்குடலைத் துப்புரவாய் வைத்து அவற்றை நடைபெற விடுமாறு சொல்லி முடித்தமையின், இனி நெஞ்சப்பையை ஒழுங்காக நடைபெறுவித்தற்பொருட்டு மூச்சுவிடுமுறையைச் சிறிது எடுத்துப் பேசுவாம். அடிக்குறிப்புகள் 1. Physiology 2. Alexander Haig, M.A., M.D., 3. Uric acid. 4. Enema 6. மூச்சுவிடும் முறை விரைய மூச்சுவிடும் உயிர்கள் நீண்டநாள் உயிர் வாழாமையும், மெல்ல நேரஞ்சென்று மூச்சுவிடும் உயிர்கள் நீண்டகாலம் உயிர்வாழ்தலும் உயிர்நூல் வல்லாரால் நன்காராய்ந்து சொல்லப்பட் டிருக்கின்றன. ஒரு நிமிடத்திற்குப் பன்னிரண்டுமுறை மூச்சுவிடும் மக்கள் சிறிதேறக் குறைய நூறாண்டு உயிரோடிருப்பார்கள். ஒரு நிமிடத்திற்குப் பதினாறு முறை மூச்சுவிடுங் குதிரையோ இருபத்தைந்து ஆண்டிற்குமேல் உயிரோடிருப்பதில்லை யென்று கணக்கிட்டிருக்கின்றார்கள். இங்ஙனமானால், ஒரு நிமிடத்திற்கு முப்பத்தாறு முறை மூச்சுவிடும் புறாவும் எவ்வளவு விரைவில் இறந்துபடும் என்பது புலனாகின்றதன்றோ? இனி, ஒரு நிமிடத்திற்கு மூன்றே முறை மூச்சுவிடும் யாமை நெடுங்காலம் உயிரோடிருக்கின்றதென உயிர் நூலார் ஆராய்ந் தறிந்திருக்கின்றார்கள்; ஓர் யாமை நூற்றுப்பத்து ஆண்டு உயிரோடிருந்ததை அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இதுவேயுமின்றி, இது நெடுங்காலம் மூச்சை அடக்கிக் கொண்டு பட்டினி கிடக்க வல்லதென்றும், மிகவும் அமைதியான இயற்கை யுடைய தென்றும் அறியப்பெறுகின்றோம். இஃது ஐப்பசித்திங்கள் இறுதியில் நிலத்தின்கீழே உறங்கப்போய்த், திரும்பவுஞ் சித்திரைத் திங்கள் முதலில் நிலத்தின்மேல் வரும் வழக்கம் உடையது. ஆகவே, ஓராண்டில் ஐந்து திங்கள் உணவும் உயிர்ப்பும் இன்றி இஃது உறங்கிக் கிடக்கின்றது. மழைக் காலத்தில் வெளியே எங்கும் உலவுவதில்லை. பால் உள்ள செடிகளின் இலைகளையே விருப்பத்தோடுந் தின்பது. இங்ஙனம் இது தவமுயற்சியிற் றலைநிற்குந் துறவோர் ஒழுக்கத்தை ஒத்ததா யிருத்தல் கண்டன்றோ தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார், ஒருமையுள் யாமையோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து என்று அருளிச் செய்தனர்! இவ்வுண்மையை உணர்ந்து பார்க்குங்கால் மூச்சை அடுத்தடுத்து ஓடவிடாமற் றடை செய்வதனால் உணவு குறைந்து உயிர்வாழ்க்கை நீளுவதோடு அறிவாற்றலும் அளவின்றிப் பெருகும் என்பதும் விளங்கா நிற்கும். இஃது எங்ஙனமெனிற் காட்டுதும்; நாம் மூச்சை உள்ளிழுக்கும்போது உயிர்க்காற்று அகத்தே செல்கின்றது; நாம் அதனை வெளிவிடும்போது நச்சுக் காற்றுப் புறத்தே கழிகின்றது. உட்செல்லும் உயிர்வளி நெருப்பினை எரியச்செய்வதாதலால், அஃதுட் செல்லுந்தோறுந் தீனிப்பையிலும் அதன் கீழும் உள்ள நுண்ணிய தீயை மிகுந்து எரியச்செய்யும். புறத்தேயுள்ள தீ மிகுந்தெரியுந்தோறும் அதற்கு விறகும் நெய்யும் இடுவது போல, அகத்தேயுள்ள தீ முறுகி எரியும்போதும் அதற்கு வலிய உணவும் நீரும் இடைவிடாது இடுதலால் அவற்றை உடம்பிற் கலப்பித்தற்கு ஒழிவின்றி இயங்கும் அகக் கருவிகள் விரைவிற் பழுதுப்பட்டுப்போக மூப்பும் இறப்பும் விரைந்து வருகின்றன. எளிதிற் செரியாத ஊனைத் தின்னும் புலி ஓநாய் முதலான உயிர்கள் தாம் உண்ட ஊனைச் செரிப்பித்துக்கொள்ளல் வேண்டி இரையெடுத்த பின் விரைந்து விரைந்து உலவுதலைப் பலர் பார்த்திருக்கலாம். அவ்வாறவை உலவுதலால், உயிர்க்காற்றை அடுத்தடுத்து உள்ளிழுக்க, உட்செல்லும் அவ் உயிர்வளி தீயைமிகுத்து அவ் ஊனை எரித்துச் செரிக்கச் செய்கின்றது. இதனால் அக் கருவிகள் விரைந்து தேய்தலின் புலி கரடி ஓநாய் முதலான ஊன் தின்னிகள் நீண்டநாள் உயிர் வாழாமல் இறக்கின்றன. சைவ உணாப்பொருள்களைக் குறைய உண்கின்றவர்கட்கு அவை எளிதிற் செரிப்பன வாய் இருத்தலால், அவர் உயிர்வளியை மிகுதியாய் உள்ளிழுக்க வேண்டுவதில்லை. அதனால் அவர்தம் உடம்பின் அகக்கருவிகள் விரைந்து இயங்காமல் மெதுவாக நடத்தலால் அவை பழுதுபடாமலிருந்து உடம்பை நெடுங் காலஞ் செவ்வையான நிலைமையில் வைக்கும். ஆனதுபற்றியே சைவவுணாப் பொருள்களுள்ளும் எளிதிற் செரிப்பனவற்றை வேண்டும் அளவறிந்து மெல்லச் சுவைத்து உண்ண வேண்டிய திருக்கின்றது. இவ்வாறு உணவுக்கும் அவ்வுணவைச் செரிப் பித்தற்கு உள்ளிழுக்கும் உயிர்வளிக்கும் நெருங்கிய இயைபு இருத்தலால், நல்ல உணவைக் குறைத்து உண்ணும் முகத்தால் மூச்சின் ஓட்டத்தை மெல்ல நடைபெறச் செய்தல் வேண்டும். இங்ஙனம் ஓர் ஒழுங்கு செய்துகொண்டபின், மூச்சினோட் டத்தைப் பின்னும் பின்னுங் குறைத்துக் கொண்டே வருதல் வேண்டும். ஒரு நிமிடத்திற்குப் பன்னிரண்டு முறை மூச்சு விடுதலைச் சுருக்கிப் பத்துமுறை எட்டுமுறை ஆறுமுறை நான்கு இரண்டு ஒன்றென்று ஒடுக்கிக் கொண்டுவந்து கடைசியாக மூச்சின்றியே நெடுநேரம் இருக்கப் பழகுதல்வேண்டும். இங்ஙனம் பழகாவிட்டால், இப் பழக்கத்தில் நிரம்பத் தேர்ச்சிபெற்று ஒரு நிமிடத்திற்கு மூன்று முறையே மூச்சுவிடும் யாமையைக் காட்டிலும் மிகவுந் தாழ்ந்த நிலைமையில் உள்ள மக்கள் தம்மை மேலாக நினைந்து இறுமாந்திருத்தல் எவ்வளவு பேதைமையாய் முடியும்! ஆதலால் தொலைவான இடங்களில் நிகழும் நிகழ்ச்சிகளை அறியவிழையும் உயர்ந்த நோக்கம் வாய்ந்த மக்கள் மூச்சை வரவரச் சுருக்கும் பழக்கத்திற் கருத்தொருமித்து நிற்கக் கடவராக. இனி, ஒரு நிகழ்ச்சியைத் தொலைவிலிருந்து உணர்வோரும், அதனை அவர்க்குத் தொலைவிலிருந்து உணர்த்துவோரும் மூச்சுவிடும் இம் முறையைத் தமக்குள் இசைவு படுத்திக் கொள்ளல் வேண்டும். ஒருவர் ஒரு நிமிடத்திற்குப் பத்துமுறை மூச்சுவிட்டால் மற்றவரும் ஒரு நிமிடத்திற்குப் பத்துமுறையே மூச்சுவிடுதல் வேண்டும்; அதனிற் குறைதலும் மிகுதலும் ஆகா. இருவர்க்கும் மூச்சின் ஓட்டம் ஒத்துநின்றால் ஒருவர் நினைப்பது மற்றவர் உள்ளத்திலும் உடனே தோன்றும்; அஃதொத்து நில்லாவிட்டால் ஒருவரது நினைவு மற்றொருவர்க்குத் தோன்றாது. ஆகையால், தொலைவிலிருந்து ஒருவர் நினைவை ஒருவர் அறியவிரும்பும் இருவரும் இம் மூச்சின் ஓட்டத்தைத் தமக்குள் ஒரேவகையாய் நடைபெறச் செய்து கொள்வதொடு, மேலெடுத்துக் கூறிய பழக்கங்களிலுங் கடைப்பிடியாக நிற்றல்வேண்டும். 7. தொலைவில் உணர்வோர் உணர்த்துவோர் இனித், தொலைவிலுணர்தல் என்னும் இவ்வரும் புலமைத் திறத்தைப் பெறுதற்கு வேண்டுபவர் தொடக்கத்தில் தாமே இதனைத் தனியாயிருந்து பழகுதல் ஆகாது; பெரும்பான்மையுந் தம்மோடு ஒத்த இயல்பும் ஒத்த விருப்பமும் உடையார் ஒருவரைத் தெரிந்தெடுத்து அவரொடு சேர்ந்திருந்து பழகல் வேண்டும். இவ்வாறு சேர்ந்து பழகும் இருவரில் ஒருவர் தாந் தொலைவிலிருந்து மற்றவர் நினைத்து விடுக்கும் ஒரு நினைவை ஏற்று அறிதல் வேண்டும்; இங்ஙனம் ஒருநினைவை வரவேற்று அறிபவர் உணர்வோர் என்று சொல்லப்படுவர்; மற்றொருவர் தாமுந் தொலைவிலிருந்து ஒருபொருளில் உள்ளத்தைப் பதிய நிறுத்தித் தமது நினைவை உணர்வோர்பாற் செல்லும்படி விடுத்தல் வேண்டும்; இங்ஙனந் தாம் நினைக்கும் நினைவை உணர்வோர்க்கு அனுப்புகின்றவர் உணர்த்துவோர் என்று பெயர் பெறுவர். உணர்வோரா யிருந்து பழகுபவர் அங்ஙனஞ் சிலகாலம் பழகித் தேர்ச்சி பெற்றபின் அந்நிலையை மாற்றிப் பின்னர் உணர்த்துவோராயிருந்து பழகலாம். உணர்வோர் எப்போதும் உணர்த்துவோராயுமே யிருந்து பழகல் வேண்டு மென்னுங் கடப்பாடு இல்லை. உணருநிலையிலும் உணர்த்து நிலையிலும் மாறி மாறிப் பமிலுதலே நலமுடைத்தாம். ஒருவர் மற்றொருவர் நினைவை அறியவுந், தமது நினைவைப் பிறர்க்கு அறிவிக்கவும் வேண்டிய நிலையில் இவ்வுலக வாழ்க்கை நடைபெற்று வருதலால், தாம் உணர்வதொடு பிறர்க்கு உணர்த்தவுங் கற்றலே பலவகையாலும் பயனுடைத்தாம். ஆனதனால், இருவகை நிலையிலும் உறைத்துப் பழகுக. இவ் வருங்கலைப் புலமையை அடைதற்குப் புகும் போது, இதன்பயிற்சியாற் பொருள் திரட்ட வேண்டுமென்னும் எண்ணம் ஒருசிறிதுங் கொள்ளற்க. அழியாச் செல்வமாகிய இப் பெறற்கரும் பேற்றை அழியுஞ் செல்வத்தின் பொருட்டுப் பயன்படுத்தத் துணிந்தால் அதனாற் பல அல்லல்கள் விளையும். இவ்விழிந்த வேட்கையோடு அதனைப் பயிலும்போது அஃது எளிதிற் கைவராது. அன்றி அது வரினும், பொருள் தொகுத்தலின் கண்ணே வேட்கை சென்று பலவகைச் சூதுகளையும் ஏமாற்றங்களையுஞ் செய்யத் துணிந்தால், இவ்வரும் பெருங் கலைப்புலமை வெறும் பொய்யே யென்று பலரும் இகழ்தற்கு இடஞ்செய்யும். ஆனது பற்றி, இக்கலைப் புலமையை அதன் அரும்பெரும் பேற்றின் பொருட்டே உளம் விழைந்து பயின்று தேர்ச்சிபெறல் வேண்டும். இதிற்றேர்ச்சி பெற்று உண்மைக்குப் பாடுபட்டு வருபவர்களின்றன்மை நாளேற நாளேற எல்லார்க்குந் தானாகவே தெரிய வருமாதலால், அவ்வருமை தெரிந்தவர்கள் அவர்க்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்வர். உண்மைக்கு உழைத்துவந்தால் எல்லாம் வல்ல ஐயன் அதற்கு உற்றவர்களைக்கொண்டு கட்டாயம் உதவிபுரிவா னென்பது திண்ணம். ஆதலாற், பொருளை எதிர்பாராமலே இவ்வரிய கலைப் புலமையை விருப்பத்தொடு பயின்றுவருக உணர்வோர் உணர்த்துவோராகிய இருவரும் இங்ஙனம் பொருளை அவாவாது பழகிவருவராயின், அவர் தமது பழக்கத்தின் உறைப்புக்குத் தக்கபடி கண்டாரெல்லாம் வியக்கத்தக்க முக்காலவுணர்ச்சி யினை அடைந்து பல நலங்களைப் பெறுவர். இனி, உணர்வோர் உணர்த்துவோரான இருவரும் உண்மையன்பிற் பிணிக்கப்பட்டவராய் இருந்து இவ்வருங்கலைப் புலமையிற் பயில்குவராயின் இதிற் றேர்ச்சி பெறுவது அவ் விருவர்க்கும் மிக எளிதில் முடியுமென்பதும் உணர்ந்து கொள்ளல் வேண்டும். இதற்குச் சான்றாக, உயர்ந்த காதல் அன்பிற் கட்டுண்ட காதலரின் உயிர் வாழ்க்கையை எடுத்துக் காட்டலாம். காதலனுங் காதலியும் உடம்பால் இருவர்போற் றோன்றினும் உயிரால் ஒருவரேயாய் வாழ்க்கை செலுத்துஞ் சிறப்பினை உன்னித்துக் காண்பேமாயின், அவரில் ஒருவர் நினைக்கும் நினைவினையே மற்றவரும் நினைத்தலும், ஒருவர் ஒன்று சொல்ல நாவெடுக்கும் போதே மற்றவரும் அதனையே சொல்லுதலும் ஒவ்வொரு நேரமும் நம் எதிரே நடைபெறுதலை உணர்ந்து களிக்கலாம். எனவே, இருவர் நினைவை ஒன்றுபடுத்துதற்கு அவர்க்குள் நிகழும் உயர்ந்த அன்பே ஒருபெருங்கருவியா யிருக்கின்றது. அன்பில்லாத இருவர் எத்துணை தான் இக்கலைப் புலமையிற் பழகினாலும் அவர் இதிற் றேர்ச்சிபெறுதல் அரிதேயாகும். அன்புடைய இருவர்க்கு இக் கலைப் புலமை இயற்கையாகவே எளிதில் வாய்ப்பதாய்க் காணப்படுமானால், அவர் பின்னும் இதனைக் கருத்தொரு மித்துப் பழகித் தேர்ச்சிபெற நினைந்து முயல்வராயின் அஃது அவர்க்கு எவ்வளவு விரைவிற் கிட்டுமென்பதனை நாம் சொல்லுதலும் வேண்டுமோ! அவ்வாறாயின், இக்கலைப் புலமையைப் பெறுதற்கு அன்பு ஒன்றுமே போதாதோ, இதனின் வேறாக மேற்சொல்லிய முறைகள் எல்லாங் கைப்பற்றுதல் வேண்டுமோவெனின், அன்பின் முதிர்ச்சியால் இருவர் நினைவு ஒன்றுபட்டுநின்றாலும், இக் கலைப்புலமையை முற்றும் பெறுதல் இயலாது; அன்பொடு கூட அறிவும் உடையராய் மிகமுயன்று மேற்சொல்லிய முறைகளையுந் தவறாமற் பின்பற்றி வந்தால் மட்டுமே இதில் எவரும் வியக்கும்படி தேர்ச்சி யடையலாம். இஃது எது போலவெனிற் காட்டுவாம். ஒரு வயல் நிலம் மிகுந்த நீரொடுகூடி மென்பதப்பட்டு நின்றவளவானே பயிரை விளைத்துத் தராது; அதன்கண் நல்ல விதைகளையிட்டுக் களைபிடுங்கிப் பயிரைப் பாதுகாத்து வந்தால் மட்டுமே பயனடையலாம்; அதுபோல, இருவர் உள்ளமும் அன்பினால் நனைக்கப்பட்டு மென்பதமாய் நின்றாலும், அதுதானே இக்கலைப் புலமையை முற்றும் பயவாது; கூட அறிவென்னும் வித்தை இட்டு இழிக்கத்தக்க பேரவா செற்றம் கலக்கம் முதலியவற்றைக் களைந்து ஓயா முயற்சியால் அப் பழக்கத்தைப் பாதுகாத்து வந்தால் மட்டுமே இப்புலமை பிழைபடாமற் பயன்றரும். இருவர் உள்ளமும் அன்பால் ஒருங்கு இயைந்து நிற்றல் இக் கலைப்புலமையைப் பெறுதற்கு ஒரு சிறந்த கருவியாகு மென்றுமட்டும் உணர்ந்து கொள்ளல் வேண்டும். அதுநிற்க. 8. முதற் பழக்கம் உணர்வோரும் உணர்த்துவோருமான இருவருந் தொலைவான இடங்களிலிருந்து ஒருவரது நினைவை மற்றவர் தெரியத் துவங்குமுன், முதற்முதற் கிட்டஇருந்து அதனை அறிதற்குப் பழகல்வேண்டும். இருவரும் ஓர் அறையில் அல்லது ஒரு வீட்டி லிருந்துகொண்டே பழகலாம். உணர்த்துவோர் கண்ணைத் திறந்துகொண்டு நிமிர்ந்த நிலையில் ஒன்றின்மேல் அமர்ந்து ஒரு பொருளை உறுத்து நினைக்கவேண்டும்; அந்நினைவை ஏற்கு நிலைமையிலிருந்து உணர்வோர் ஒரு சாய்மானக் குறிச்சியிற் சாய்ந்த படியாய் அவரெதிரே அருகில் இருந்து கண்ணை மூடிக் கொண்டு தமது உள்ளத்தில் எந்த நினைவு வலிவாய் வந்து தோன்றுகின்ற தென்பதனைப் பார்த்தல் வேண்டும். இவ்வாறிருவரும் பழகுகையில் உணர்த்துவோர் தம் மெதிரே யிருக்கும் உணர்வோரது வலதுகையைத் தமது இடதுகையிலும், அவரது இடதுகையைத் தமது வலது கையிலும் பிடித்துக் கொள்ளுதல் நன்று. அல்லது உணர்த்துவோர் தமது வலது உள்ளங்கையை உணர்வோரின் நெற்றிமேல் வைத்திருக்க லாம். அது கூடாவிட்டால் ஒருமுழ நீளமுள்ள ஒருகோலை அல்லது ஒரு கம்பியை இருவரும் பற்றிக்கொண்டும் இதனைப் பழகலாம். இங்ஙனம் ஒருவரை யொருவர் தொட்டுக் கொண்டாவது, அல்லது இருவரையுந் தொடர்புபடுத்தும் ஒரு நீண்ட பொருளைப் பற்றிக்கொண்டாவது அவர்கள் பழக வேண்டுவது ஏன் என்றால், மூளையின் அசைவால் நரம்பின் வழியே வெளிப்படும் நினைவுகளானவை தொட்டுக் கொண்டிருக்கும் மற்றவர் கைவழியே ஏறி மூளையிற் சென்று தங்கி அவர்க்கும் அந் நினைவுகளை எழுப்புவிக்கும். அவ்வாறு தொட்டுக் கொண்டிராவிட்டால் அந்நினைவுகள் இடைவெளியிற் சிதறிப்போம். ஓரிடத்திலிருந்து செலுத்தப்படும் ஒரு செய்தி இடையேயுள்ள கம்பியின்வழியே விரைந்து சென்று வேறோர் இடத்திற் புலப்பட்டுத் தோன்றுவதுபோல, ஓரிடத்திற் பிறக்கும் ஒரு நினைவும் அவரொடு பிணைக்கப்பட்டிருக்கும் மற்றவர் கைவழியே சென்று ஏறும். இருவர்க்கும் இடையே இவ்வாறு தொடர்பு செய்து கொண்டு இக் கல்வியைப் பழகப் பழகச் சிலநாட்களில் இடையே தொடர்பு படுத்துங் கருவி இல்லாமலே ஒருவர் நினைவை மற்றொருவர்க்கு ஏற்றுவதும், ஒருவர் நினைவை மற்றொருவர் ஏற்பதும் மிக எளிதிலே நிறைவேறும். துவக்கத்தில் இங்ஙனம் இருவருந் தொடர்புபட்டு நின்று இதனைப் பழகுதலே இயற்கை முறையாமென்பது மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களிடத்துங் கண்டறியலாம். கண்ணுங் காதும் இல்லாத எறும்புகள் விரைந்து ஓடும் போது எதிரே வரும் எறும்புகளுடன் சிறிதுநேரந் தலையொடு தலை முட்டிநின்று பிறகு ஒதுங்கிப் போவதைப் பாருங்கள்! இவை ஏன் இங்ஙனம் ஒன்றையொன்று முட்டிச் செல்கின்றன என்று சிறிது ஆராய்ந்து பார்த்தால், இவை தாம் நினைத்ததனை மற்றையவற்றிற்குந் தெரிவித்தற் பொருட்டேயா மென்பதைக் கண்டுகொள்ளலாம். இரண்டு எறும்புகள் ஒன்றையொன்று முட்டி நிற்குங்கால் ஒன்றன் நினைவு மற்றொன்றிற்கு எளிதிற் புலனாகின்றது. இங்ஙனமே பண்டை நாட்களிற் பேசத் தெரியாத நிலையிலிருந்த பழைய மக்கள் தமக்குள் ஒருவர் நினைவைப் பிறர்க்கு அறிவிக்கவேண்டினால் இருவரும் எதிர் எதிரே நெற்றியொடு நெற்றி சேர்த்துச் சிறிதுநேரம் நின்று அதனை அறிவித்துக் கொள்வர்களென்று பழைய நாள் மக்கள் வரலாற்றை ஆராய்ந்து நூலெழுதுவோர் கூறுகின்றார்கள். தங் கருத்தைப் புலப்படுத்துதற்குச் சொற்கள் அறியாதிருந்த முன்நாளில் மக்கள் தமது நினைவைப் பிறர்க்கு நினைவின் அளவானே உணர்த்தும் ஆற்றல் உடைய ராயிருந்தனர்; ஆனால், அச் சிறந்த ஆற்றல் அவர்கள்பேசத் தெரிந்துகொண்ட உடனே மழுங்கிப் போயினது; மழுங்கினாலும் அது முற்றும் இல்லாமற் போகவில்லை. நெற்றியோடு நெற்றியை வைத்தாயினும், நெற்றி மேற் கையை வைத்தாயினும், அன்றிக் கையொடு கை பிணைந்தாயினும் ஒருவர் நினைவைப் பிறரொருவர்க்கு அறிவிக்கத் தொடர்ந்து பழகினால் மழுங்கிக் கிடக்கும் இவ்வாற்றல் மக்களிடத்துத் திரும்பவும் விளங்கித் தோன்றுமென்பது திண்ணம். 9. இடம் உணர்தல் இங்ஙனம் உணர்வோரும் உணர்த்துவோரும் இயைபுபட்டு நின்றபின் இவர்கள் இருக்கும் அறையின் ஏதேனும் ஒரு மூலையை அல்லது ஒரு சாளரத்தை உணர்த்துவோர் கருத்து ஊன்றி நினைக்க வேண்டும். அவ்வாறு நினைக்கும் போது தமது நினைவு உணர்வோர் உள்ளத்திற் சென்று தோன்ற வேண்டுமென்றும் விரும்புக. இங்ஙனம் உறுத்து நினைத்து விரும்பவே, அவர் நினைத்தது உணர்வோர் உள்ளத்தில் வந்து தோன்றும். தோன்றியவுடனே உணர்வோர் அம் மூலையை அல்லது சாளரத்தை மெல்லச் சென்று தொடக்கடவர். அதனைத் தொடுதற்குச் செல்லுகையில் உணர்த்துவோர் தாம் நினைக்கும் மூலையை அல்லது சாளரத்தை நோக்கித் தமது பார்வையையும் நினைவையும் திருப்புக. இப்படிச் செய்தால் உணர்வோர் குறி தவறாமல் அவர் நினைத்தவாறே சென்று அவ்விடத்தைத் தொடுவர். அவரது நினைவு இவருக்குச் செவ்வனே புலப்படாமற் போக, இவர் தவறான இடத்தை நோக்கிச் செல்வராயின் இது பிசகு என்று இவருக்குத் தோன்றும், அப்படித் தோன்றுகையில் அம் முகமாய்ச் செல்லாமற் சிறிதுநின்று குறிப்பிட்ட இடம் உள்ளத்திற் புலப்படுகிற தாவென்று அமைதியோடு பார்க்க வேண்டும். செவ்வனே அது புலப்படுமாயின் இது தான் குறிப்பிட்ட இடம் என்னும் உறுதியுண்டாம். இங்ஙனமே தொடர்பாகச் சில பல நாட்கள் அருகிலுள்ள இடங்களையும், அதன்பிற் சிறிது அகன்றுள்ள இடங்களையும் நினைத்து நினைத்து இருவரும் பழகிவருதல் வேண்டும். உணர்வோர் தாமே கண்ணை மூடிக்கொண்டு உணர்த்துவோர் நினைவுகளை அறிந்து காட்டலா மென்றாலுஞ், சில நேரங்களில் அவர் தம்மை மறந்து தற்செயலாய்க் கண்ணைத் திறந்துவிடுதலுங் கூடும். ஆதலால், இது நிகழாமைபொருட்டுக் கண்களைத் துணியால் நன்றாக மறைத்துக் கட்டிக்கொள்ளுதல் நலம் உடைத்து. கண்களை மூடுதலானுந் திறவாமல் மறைத்துக் கட்டுதலானும், மனங் கண்ணின்வழியே புறப்பொருள்களைப் பற்றி ஓடும் ஓட்டந் தவிர்ந்து அகத்தே ஓய்ந்துநிற்கும்; அப்போது அதனை ஓருமுகப்படுத்தித் தானே வந்து தோன்றும் நினைவினை உணருமாறு பயிற்றுதல் எளிது. அது நிற்க. 10. பொருள்களை உணர்தல் இனி, மேற்குறித்தவாறு சிலகாலம் பழகியபின், இடங்களை அறியும் ஆற்றல் எளிதிலே உண்டாகும். அதன்பின், இடங்களில் உள்ள பொருள்களை நினைத்து உணர்த்தவும் உணரவும் பழகத் துவங்குக. இப்பழக்கத்தின் முதலில் உருவத்தாற் பெரிய பொருள்களை நினைத்தல்வேண்டும். ஏனென்றால், மனமானது எந்நேரமுங் கண்ணின் வாயிலாகப் புறத்தே யுள்ள நிலம் மலை கடல் மரம் வீடு மாடு குதிரை யாடு மக்கள் முதலான பெரும் பொருள்களின் உருவத்தையே அறிந்து வருதலால், அப்பொருள் களில் ஒன்றனிடத்தே அஃது உறைத்து நிற்றல் வருத்தமில்லாத செயலாம். ஆகையால், தாம் இருந்து பயிலும் வீட்டின்கண் உள்ள தட்டுமுட்டுகளில் மேசை நாற்காலி பெட்டி கடாரம் முதலியவற்றில் ஒன்றை அஃது இருக்கும் இடத்தொடு நினைந்து, அந்நினைவு உணர்வோர் உள்ளத்திற் சென்று பதியுமாறு உணர்த்துவோர் உன்னிப்பாய் ஏவுதல் வேண்டும். உடனே உணர்வோர் உள்ளத்தில் அந்நினைவு புலப்படுமாகலின், அவர் அப்பொருளிருக்கும் பக்கமாய்ப் போகத் துவங்குவர், அவ்வாறு அவர் செய்கையில் உணர்த்துவோர் மிகவும் உறைப்பாய் முதலில் அப் பொருளிருக்கும் இடத்தின் முகமாய்த் தங்கண்ணையுங் கருத்தையுஞ் செலுத்திப் பின்னர் அப்பொருளின் வடிவத்தில் தமது உள்ளத்தை முனைக்க நிறுத்தக் கடவராக. இவ்வாறு செய்தால், உணர்வோர் அந்நினைவைத் தெளிவாக உணர்ந்து அவ்விடத்திற் சென்று அப்பொருளைத் தொட்டுக் காட்டுவர். முதலில் இடத்தையும் பிறகு அதன்கண் உள்ள பொருளையும் நினைக்க வேண்டுமென்றது என்னை? பொருளைமட்டும் நினைந்தாற் போதாதோ? எனின்; உலகத்தில் உள்ள எவ்வகைப்பட்ட பொருளும் ஏதேனும் ஓரிடத்திலிருப்பதன்றி, அதனை விட்டு வேறு தனியே இருக்கமாட்டாது. எந்தப் பொருளை எடுத்தாலும் அஃது எங்கேயிருப்பது? என்றும், எந்த ஆளைப் பார்த்தாலும் அவர் எவ்விடத்தில் இருப்பவர்? என்றும் எல்லாரும் வினாவக் காண்கின்றோம். ஆதலால் ஒரு பொருளை அஃதிருக்கும் இடத்தொடு சேர்த்து நினைவதே இப் பழக்கத்தில் தோச்சிபெற வேண்டுவார்க்கு முதன் முதற்செயற்பாலதாகும். ஆகவே, முதலில் இடத்தையும் அதன்பின் அதிலிருக்கும் பொருளையும் நினைவிற் கொண்டு வருக. இவ்வாறு முதலில் இடங்களையும், பின்னர் அவற்றிலுள்ள பெரும் பொருள்களையும் உணர்த்தவும் உணரவும். பழகித் தேர்ச்சிபெற்றபின், அவ்வவ் விடங்களில் உள்ள சிறு சிறு பொருள்களை உணர்த்தவும் உணரவும் முயல்க. ஒரு செப்புக்காசை யேனும் அல்லதொரு குண்டூசியை யேனும் ஓரிடத்தில் மறைத்து வைத்து அவ்விடத்தையும் அதன்கணுள்ள அப்பொருளையும் உணர்த்துவோர் செவ்வையாக நினைத்தால், உணர்வோர் அதனைக் குறிபிழையாமல் உணர்ந்து அவ்விடத்திற் போய் அதனைக் கண்டெடுப்பர். இடத்தின்கண் உள்ள தட்டுமுட்டுகளையும் வேறு பல பண்டங்களையும் நினைக்குங்கால் அவற்றின் வடிவத்தையும் நிறத்தையுந் தெளிவாக உள்ளத்தே காண்க. ஏனெனில், ஒரு பொருள் மற்றொரு பொருளின் வேறென்று அறியப்படுவதெல்லாம் அப்பொருளின் வடிவத்தினாலும் நிறத்தினாலுமேயாம். தனித்தனி வடிவங்களும் நிறங்களும் இல்லாமல் எல்லாம் ஒரே வடிவாய் ஒரே நிறமாய்க் காணப்படுமாயின், நமக்குப் பகுத்துணர்ச்சியென்பதே இல்லாமற்போக, நாம் அறிவற்ற வெறுங் கட்டைபோற் கிடக்கநேரும். ஆனால், எல்லா இரக்கமும் எல்லா அருளும் உடைய இறைவனோ, நமக்குப் பகுத்துணர்ச்சியினை உண்டாக்கி நமதறியாமையினைத் தொலைப்பான் வேண்டிப் பொருள்களைப் பல வகுப்புகளாகவும், ஒரு வகுப்பினுள்ளும் ஒன்று மற்றொன்றின் வேறாகக் காணப்படுமாறும் பல வேறு வடிவும் பல்வேறு நிறமும் உடையவாம்படி அவற்றைப் படைத்தருளியிருக்கின்றான். இவ்வாறமைந்த பொருள்களின் வடிவையும் நிறத்தையும் நன்கு உற்று நோக்கி அவற்றின் அடையாளங்களை எவர்கள் நன்றாய் நினைவிற் பதித்துக் கொள்ளுகின்றார்களோ அவர்களுடைய அறிவு சொல்லுதற்கரிய விளக்கம் மிகுந்து துலங்குவதாகும். ஐம்பொறிகளிற் சிறந்த கண்ணுக்குப் புலனாகும் வடிவும் நிறமும் பொருள்கடோறும் வேறு வேறாய் இருத்தல் போலவே, செவி வாய் மூக்கு மெய் என்னும் ஏனைய பொறிகளுக்குப் புலனாம் ஓசை சுவை நாற்றம் ஊறென்னும் ஏனைய பண்புகளும் பொருள்கடோறும் வேறுவேறாய்க் காணப்படுகின்றன; இவற்றையும் உன்னித்துப் பார்த்து நினைவில் அமைத்துக் கொள்கின்றவர்களுக்கு அறியாமை தேய்ந்து அறிவு மேன்மேற் கிளருதல் திண்ணமேயாம். எனவே, கண்முதலான பொறிகளுக்கும் புலனாகும் வடிவம் நிறம் முதலான பண்புகளை ஊன்றி நினைக்கவே, அப்பண்பு களையுடைய பொருள்கள் நன்கு அறியப்பட்டனவாய் என்றும் அறியாமல் நினைவில் ஏறிநிற்கும். இவ்வுண்மை, தொலைவில் உணர்தல் என்னும் இவ்வரிய கல்வியை நன்கு ஆராய்ந்து கைகண்ட ஆங்கிலப் புலவர்களால் இனிது வலியுறுத்தப்பட் டிருக்கின்றது. ஆனதனாலே தான், கட்புலனாகாக் கடவுளைத் தொழுமிடத்தும், அழகியதோர் ஆண்மகன் வடிவாகவேனும் அல்லதொரு பெண்மகள் வடிவாக வேனும் ஓர் உருச் சமைத்து, அவ்வுருவிலே தங் கண்ணையுங் கருத்தையும் பதியவைத்துப், பின்னர்ப் புறத்தே காணும் அவ்வுருவை யொத்ததோர் அறிவுருவை உள்ளத்தின்கண் இடையறாது வருவித்து அதனையே தம் முழுமுதற் றாயுந் தந்தையுமாய்க் கரைந்து கரைந்து எண்ணி அன்பொடு வழிபட்டுவரின், அவர் நினைந்த அவ்வுருவாகவே இறைவன் வெளிப்பட்டு அவரைத் தனது திருவடிப்பேரின்பத்தில் இரும்புண்ட நீரிற் றிரும்பாவகைசெய்து வைத்தருளுவன் என்று உண்மை அறிவுநூல்கள் கூறுவவாயின. இவ்வுண்மை உணராதார் தாம் இவ்வுண்மையினும் மேற்பட்ட தொன்றனை அறிந்தார்போல் மயக்கங் கொண்டு, கடவுளை ஏதொரு பண்புமில்லாத பொருளாக வைத்து வழிபடுதலே சிறந்ததெனச் செருக்கிக் கூறுவர். கடவுள் ஒரு பொருளானால் அதற்கும் பண்புகள் இருத்தல் வேண்டும்; பண்பில்லாத பொருள் எக்காலத்தும் யாண்டும் இல்லை. இவ்வாறாக, அதனைப் பண்பற்ற பொருளாக நினைத்தல் வேண்டுமெனக் கூறுதல் மலடி பெற்ற மைந்தன் முயற்கொம்பிலேறி வானிற் பூத்ததொரு தாமரையைப் பறித்தான் என்று கூறும் படுபொய்யேபோல் வெறும் பொய்யாய் ஒழிவதன்றி வேறில்லை. ஒருபொருள் ஒருவரால் அறியப்படுதலெல்லாம் அப்பொருளின் வடிவு நிறம் சுவை ஓசை நாற்றம் முதலான பண்புகளின் வாயிலாகவேயாம். இப்பண்புகள் இல்லையானால் இவற்றையுடைய பொருளும் இல்லையாம். அதனால் இப்பண்புகள் இல்லாததொரு பொருள் எஞ்ஞான்றும் எவரானும் அறியப்படுவதில்லை. ஆதலாற், கடவுளும் பண்பற்ற பொருள் எனின் அதுவும் ஒருவாற்றானும் மக்களால் அறியப்படுவதில்லை. மற்று, உலகங்களையும் உடம்புகளையும் ஓவாது படைக்கும் முதற் கடவுள் ஒன்று உண்டென்பது மெய்யறிவுடைய சான்றோர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தமையின், அஃது எல்லையற்ற அழகும் அறிவும் அன்பும் ஆற்றலும் வாய்ந்த அருள் உருவம் உடைய ஒரு மெய்ப்பொருளேயா மென்பதும், அஃது இப்பண்புகளின் வாயிலாகவே உணரப் படுமென்பதுங் கடைப்பிடிக்க. ஆகவே கடவுளை அருளுருவம் அல்லது அறிவுருவம் உடைய எல்லையற்ற அழகு வாய்ந்த ஒர் ஆணாகவாவது அல்லது ஒரு பெண்ணாகவாவது வைத்து வழிபடுதலே பெறற்கரும் பெரும்பயன் றருவதாமன்றி, இதனொடு மாறுபட்டுரைப்பன வெல்லாம் ஒரு சிறிதும் பயன்படாவென்பது ஆழ்ந்தாராய் வார்க்குத் தெற்றென விளங்காநிற்கும். அதுநிற்க. இத்துணையுங் கூறியதுகொண்டு, தாம் நினைக்கும் ஒரு பொருளின் வடிவத்தையும் அதன் நிறத்தையும் எவ்வளவு தெளிவாக உணர்த்துவோர் தமதுள்ளத்திற் காண்கின்றனரோ அவ்வளவு தெளிவாக உணர்வோரும் தமதுள்ளத்தில் அவற்றைக் காண்குவர் என்று அறிதல் வேண்டும். நன்றாய்ப் பழுத்த குடகுநாரத்தம் பழம் ஒன்றை உணர்த்துவோர் நினைக்கப் புகுவராயின் அதன் உருட்சி வடிவத்தையுந் தோலின்கண் உள்ள பொருட்டுகளையும் மஞ்சள் கலந்த அதன் செந்நிறத்தையும் பிழைபடாமல் நினைவில் இருத்தக்கடவர். இங்ஙனம் நினைத்தால் உணர்வோரும் அதனை உடனே தமதுள்ளத்தின் கட் காணப்பெறுவர். இன்னும் இந்நினைவினை உரப்படுத்தல் வேண்டினால் அப்பழத்தின்கட் கட்புலனாய் நின்ற வடிவத் தையும் நிறத்தையுமேயன்றி, நாவிற்கும் மூக்கிற்கும் புலனாகும் அதன் தீஞ்சுவையையும் நறுமணத்தையுங் கூடச்சேர்த்து நினைவிற்குக் கொண்டுவருக. இவ்வாறு செய்தால் உணர்வோர் உள்ளத்திற் குடகுநாரத்தம் பழத்தைப்பற்றிய நினைவன்றி வேறெதுவும் அந்நேரத்திற் றோன்றாது. இங்ஙனமே எந்தப் பொருளை நினைந்தாலும், அது கட்புலனாம் வடிவும் நிறமும் உடையதாதலொடு, மற்றைப் பொறிகளுக்கும் புலனாகுஞ் சுவை ஊறு ஓசை நாற்றம் என்பவற்றில் எவ்வெவை வாய்க்கப் பெற்றிருக் கின்றனவோ அவ்வவற்றையுங் கூடச் சேர்த்து நினைந்தால், அப்பொருளின் பண்புகள் உணர்த்து வோருள்ளத்திற் றெளிவுபெறத்தோன்றி அவர்தம் அறிவைத் துலங்குவதோடு, உணர்வோருள்ளத்திலும் அந்நினைவு விளக்கமாய்த் தோன்றி அவர் தம் அறிவாற்றலையும் மிகுதிப்படுத்தும். இனி, ஐம்பொறிகளிற் கண் வாய் மூக்கு என்னும் மூன்றுக்கும் புலனாகும் உருவஞ் சுவை மணம் என்னும் பண்புகளையுடைய பொருள்களெல்லாம் பருப்பொருள்களாயிருத்தலின் அவை ஒரு காலத்தில் மூன்று பொறிகளுக்கும் எளிதிற் புலனாதல் கூடும். கூடவே, இம்முப்பொறிகளுக்கும் புலனாகும் பண்புகளை ஒருங்கே நினைத்தலும் எளிதிற் செய்தல் கூடும். ஏனென்றாற் பருப்பொருள்கள் எளிதில் நினைவிற்கு வருதல் இயற்கை யாயிருக்கின்றது. மற்றுச், செவிப்புலனாகும் ஓசையோ கண்வாய் மூக்குகட்குப் புலனாகும் பருப்பொருள் போலாகாமல் மிகவும் நுண்ணியதாய் இருத்தலின் அதனை நினைவுக்குக் கொண்டு வருதல் வருத்தமான செயலாம். இங்ஙனமே மெய்யின்மேற்படுங் காற்றும் ஏனைப் பொறிகளுக்குப் புலனாகாத நுண்மையுடைய தாகலின், அதன் ஊற்றுணர்வினை நினைவிற்குக் கொண்டு வருதலும் அருமையுடைத்தாம். ஆயினுங் காற்றினைத்தவிர உடம்பின் மேற்படும் ஏனைப்பருப் பொருள்களை நினைத்தல் அருமையுடைத்தன்று. இங்ஙனங் கண் வாய் மூக்கு என்னும் பொறிகளுக்குப் புலனாகும் பருப்பொருள்களைத் தெளிவாக நினைத்தல் எளிதிற் கைகூடுவதாயுஞ், செவி மெய் என்னும் மற்றை இருபொறிகளுக்கும் புலனாகும் நுண்பொருள்களை நினைத்தல் எளிதிற் கைகூடுவதல்லாததாயுங் காணப்படுதலால், இதிற் பழகித் தேர்ச்சிபெற விரும்புவோர் துவக்கத்திற் கண் வாய் மூக்கு கட்குப் புலனாகும் பருப்பொருள்களையும், பிறகு செவி மெய்கட்குப் புலனாகும் நுண்பொருள்களையும் முறையாக நினைதற்குத் தொடர்பாக முயன்று வரல் வேண்டும். இங்ஙனம் பழகிவரவே மனமானது நுண்ணிய நிலையினை அடையும். அது நுண்ணிய நிலையினை அடைந்தபின் நுண்ணிய பொருள் களைத் தெளிவாக நினைவுக்குக்கொண்டு வருதலும் எளிது. பருப்பொருள்களைத் தெளிவுற நினைத்தல் எளிதாக இருந்தாலும் அவற்றுள் ஒன்றை நினைக்கப் புகுங்கால் உள்ளம் அஃது ஒன்றிலேமட்டும் நிலையாக நில்லாமல் ஒருநொடிப் பொழுதில் அதனை விட்டு மற்றொன்றிலும், அம் மற்றொன்றையும் விட்டு வேறொன்றிலும், அவ்வேறொன்றையும் விடுத்துப் பிறிதொன்றிலுமாக விட்டு விட்டோடும். கறங்கோலைபோல் இங்ஙனம் ஓயாது சுழலும் உள்ளம் ஒரு பருப்பொருளை நினைக்கும்போது அதனைவிட்டு வேறொன்றற்குப் போகாமல் தடைப்பட்டு நிற்பதற்கு ஓர் எளியமுறை இருக்கின்றது. அஃது யாதெனிற், காட்டுவாம். அகத்தே நினைக்கும் ஒரு பொருளின் நினைவைப் புறத்தே அதனோடு ஒப்பதான ஒன்றைச் செய்யும்படி ஏவினால் அஃது அப்பொருளைவிட்டு வேறொன்றனை நினைக்க மாட்டாது. அகத்தே நடைபெறும் ஓர் அறிவு முயற்சியைப் புறத்தே ஒரு செயலிற் கட்டுப்படுத்தும் முறை, புறப் பொருளிலேயே எந்நேரமும் நினைவைச் செல்ல விடுத்துக் கொண்டிருக்கும் நம்மனோர்க்கு மிகவும் பயன்றருவதொன்றாம். ஒருதெங்கின் இளநீரிலே தனது மனத்தைச் சிறிது நேரம் நிறுத்திவைக்க வேண்டுகின்றவன் அதன் வடிவத்தைப் போலக் களிமண்ணிலேனும் நெட்டியிலேனுங் கல்லிலேனுங் கட்டை யிலேனுஞ் செய்யப் புகுவனாயின் அவனது மனம் அப்பொருளி ளினைவிலேயே வருத்தமின்றி நெடுநேரம் நிலைபெற நிற்கும். ஒரு பருப்பொருளின் வடிவத்தை நினைக்கும் நினைவு நிலைபெற வேண்டி அதனை யொப்பதான வடிவை வேறொரு பருப் பொருளிற் செய்து கொண்டிருக்கும் முறை சிறந்ததேயானாலும், இதனை எல்லாருஞ் செய்தல் கூடாமையால், இதனினும் உயர்ந்ததான மற்றொரு முறை எவருஞ் செய்யத் தக்கதாக இருக்கின்றது. அஃது யாதோவெனின், ஒரு கடிதத்தில் எழுதுகோலால் அதன் உருவத்தைக் கூர்ந்து எழுதலேயாகும். கல் மண் முதலியவற்றில் திரட்டிச் செய்யும் உருக்களைக் காட்டினுங், கடிதத்தில் துகிலிகையால் அவற்றை எழுதிப் பார்க்கும் முறை எத்திறத்தவரும் எளிதிற் செய்தற்கு இசைந்ததாய் இருப்பதுடன் அஃது அறிவினையும் மிகக் கூர்மைப் படுத்துதலால் உயர்ச்சி வாய்ந்ததாகவும் இருக்கின்றது. எங்ஙனமென்றாற், பருப்பொருள்களெல்லாம் அகலம் நிகளம் பருமை என்னும் மூன்றளவு உடையனவாகும். ஆகையால், ஒரு பருப்பொருளின் வடிவத்தைக் கல் மண்போன்ற வேறொரு பருப்பொருளிற் செய்து அமைத்தல் அத்துணை வருத்தமான செயல் அன்று. ஆனால், அகலம் நிகளம் மட்டும் உடைய ஒரு கடிதத்தின் மேற்பரப்பின்மேல், அகலம் நிகளம் பருமை என்னும் மூன்றளவு உடைய ஒரு பருப்பொருளின் வடிவத்தைப் பிழைபடாமல் எழுதிக் காட்டுதல் பெரிதும் அருமையான செயலாம். அகலம் நிகளம் பருமை என்னும் மூன்றளவுடைய ஒரு குதிரையின் வடிவை, அங்ஙனமே மூன்றளவுடைய ஒரு முருக்கமரத்திற் றிரட்டி யமைத்தல்போல, இரண்டளவுடைய கடிதத்தின் மேற்பரப்பிலே அதன்வடிவை வரைந்து காட்டுதல் எளிதன்று. ஒருபருப்பொருளின் திரட்சி வடிவைக் கடிதத்தில் வரைந்து காட்டுதற்கு நுண்ணிய பார்வையுங் கூரிய அறிவும் முதன்மையாய் வேண்டும். அது வல்லாமலுந், தான் எழுதும் பருப்பொருளுக்கு இயற்கை நிறம் எதுவோ அதனை இசைவான சாயத்தால் விளக்கி எழுதவுங் கற்றுக்கொள்வனாயின், அவன் அறிவும் நினைவும் மிக மேம்பட்ட துலக்க முடையனவாய் உரம் பெற்றுத்திகழும். ஆதலால், ஒரு கடிதத்தின் மேல் ஒரு பருப் பொருளின் வடிவத்தை வரைந்து காட்டும் முறை அதனைப் பற்றிய நினைவை மிகவும் நிலைப்படுத்து மென்றும், அதனால் அவ் வழியிற் பழகி ஒரு நினைவைப் பிறர்க்கு உணர்த்துவோர் தொலைவில் உணர்தல் என்னும் இவ் வருங்கலைப் புலமையிற் சிறந்து நிற்பரென்றும் உணர்தல்வேண்டும். நினைத்த பொருளைக் கடிதத்தில் வரைந்து காட்டும் இம் முறையின் மேன்மையை உற்று நோக்குங்கால், தமது நினைவைப் பிறர் மனத்தில் எழுப்ப வேண்டும். எவரும் அந்நினைவைக் கடிதத்தில் எழுதலால் அதனை எளிதில் நிறை வேற்றலாமென்று தெரிந்து கொள்ளல் வேண்டும். உணர்த்துவோர் தாம் நினைத்த ஓர் இளநீரை ஒரு கடிதத்தில் வரைந்துகொண்டிருக்க, உணர்வோரும் அதனையே தமது கடிதத்திலும் வரைவர். உணர்த்துவோர் ஒரு குதிரையை எழுத உணர்வோரும் உடனே அதனைத் தமது கடிதத்தில் வரைவர். உணர்த்துவோர் நாரத்தை எலுமிச்சை முதலான பழங்களின் பெயரையேனுந், தென்னை மா பலா வாழை முதலான மரங்களின் பெயரையேனுந், தாம் நினைத்த ஒரு நண்பரின் பெயரையேனும், ஒன்று இரண்டு முதலான எண்களின் பெயரையேனும், ஞாயிறு திங்கள் முதலான நாட்பெயரையேனும், மேசை நாற்காலி முதலான தட்டு முட்டுகளின் பெயரையேனும், வட்டம் சதுரம் கோணம் முதலான உருவங்களையேனும், வேறு விலங்கினங்களின் உருவங்கள் அல்லது பெயர்களையேனுந் தமது கடிதத்திற் குறிப்பிடுவராயின், உணர்வோரும் அவற்றைப் பெரும்பாலும் பிழைபடாமற் றமது கடிதத்திலுங் குறித்துக் காட்டுவர். இதனை நன்கு ஆராய்ந்து பார்த்த அறிஞர் ஒருவரின்1 ஆராய்ச்சிகள் பலவற்றுள் ஒன்றனை இங்கு எடுத்துக் காட்டுவாம்; உணர்த்துவோர் இருவரை ஒரு பக்கத்திலும், உணர்வோர் ஒருவரை மற்றொரு பக்கத்திலும் இருக்கவைத்து, உணர்வோர் எந்த வகையானும் உணர்த்துவோரையும் அவர் செய்வன வற்றையும் பாராதபடி அவர் கண்களை நன்றாய் மறைத்துக் கட்டிய பின்னர், உணர்த்துவோர் ஒருவர் கையிற் சதுரவடிவம் வரையப்பட்ட ஒரு கடிதத்தையும், மற்றொருவர் கையிற் சாய்ந்த சிலுவை வடிவம் வரையப் பட்ட மற்றொரு கடிதத்தையுங் கொடுத்து, அவ்விருவரும் அவ்வடிங்களை உன்னிப்பாய்ப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவ்விருவரில் ஒருவர் மற்றவர் கையிலுள்ள உருவத்தினை அறியார். அவ்விருவருந் தத்தங்கடிதத்தில் உள்ளதை வாய்பேசாமல் உறுத்து உன்னிப் பாய்ப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப் பட்டனர். அந் நேரத்தில் தமது மனத்தில் எது தோன்று கின்றதோ அதைத் தெரிவிக்கும் படியாகவுங் கண் கட்டப் பட்டிருக்கும் உணர்வோர் கற்பிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் உணர்வோர், யான் இரண்டு உருவங்களைக் காண்கின்றேன் - முதலில் ஒன்றையும் பிறகு அதன்கீழ் மற்றொன்றையுங் காண்கின்றேன். நான் எதனை வரைவதென்று தெரியவில்லை. நான் இரண்டில் ஒன்றைத் தெளிவாய்க் காணக்கூடவில்லை. என்றனர். அதன்மேற், கண்டதைக் கண்டபடியே வரையும்படி கேட்டுக கொள்ளப்படவே, அவ்வுணர்வோர் ஒரு சதுரத்தை எழுதி அதனுட் சாய்ந்த ஒரு சிலுவையை எழுதிக் காட்டினர். இங்ஙனம் எழுதியது ஏன் என்று கேட்டபோது, ஒரு சதுரத்தினுட் சாய்ந்த ஒரு சிலுவையைத் தான் எழுதியதன் வகை தமக்கே தெரியாதென்று உரைத்தார். ஆயினும், அதன் உண்மை இது; உணர்த்துவோர் இருவரும் ஒரே காலத்திற் றனித்தனியே நினைத்த இருவேறு வடிவங்களும் ஒன்றோ டொன்று கலந்து உணர்வோர் உள்ளத்திற் றோன்றினமையால், அவர் தாங் கண்டவாறே அவை யிரண்டையும் ஒன்றினுள் ஒன்றாய் வரைந்து காட்டினர். இதனால் நாம் அறியற்பாலதும் ஒன்று உளது; உணர்வோர் ஒருவராய் இருக்க உணர்த்துவோர் பலராய் இருந்து பலவற்றை நினைப்பராயின், அவை யெல்லாம் ஒன்றோ டொன்று கலந்து ஒரு கும்பலாய்த் தோன்றிக் குழப்பத்தை வருவிக்கும். ஆகையால் இக் கலைப் புலமையைப் பெறுதற்குப் பழகுகையில், உணர்த்துவோர் ஒருவரும் உணர்வோர் ஒருவருமாய் இருந்து பழகுதலே குழப்பமின்றி இதனைத் தெளிவாய் உணர்ந்து தேர்ச்சி பெறுதற்கு ஏதுவாம் என்க. எதனை நினைந்தாலும் அதனை ஒரு கடிதத்தில் வடிவமாகவோ அல்லது பெயரளவாகவோ உணர்த்துவோர் எழுதுவராயின், அதனைப் பற்றிய அவரது நினைவு அதனினின்றுங் கலையாமல் அதன்கட் சிறிது நேரமேனும் ஒன்றுபட்டு நிற்குமாதலால், அதனை உணர்வோர்க்கு அது செவ்வனே புலப் பட்டுத் தோன்றும். உணர்வோர் உணர்த்துவோராகிய இருதிறத்தினர்க்கும் நினைவு வலுப்பட்டு இக் கலைப்புலமைத் தேர்ச்சியை உண்டுபண்ணும் வரையில், தாம் நினைக்கும் எதனையுங் கடிதத்திலிட்டு எழுதும் முறையைக் கடைப்பிடித்தல் வேண்டும். தமது நினைவு வலுப்பட்டபின் கடிதத்தின் உதவி வேண்டாமலே ஒருவரது நினைவை மற்றவர் எளிதில் அறிந்துகொள்ளலாம். இனி, உணர்த்துவோர் பலராயிருப்பினும் அப்பலரும் பல நினைவுகளை உடையராகாமல் ஒரு பண்டத்தையே நினைக்கும் ஒரு நினைவே உடையரானால், அந்நேரத்தில் அதனை உணர்வோர் பிழைபடாமல் அதனை நன்குணர்ந்து உரைப்பர். ஓர் ஊரிலிருந்த ஒரு சமய குருவின்மக்கள்2 முற்பிறவியிற் செய்த நல்வினையால் பிறப்பிலேயே இக்கலைப்புலமையில் தேர்ச்சி பெற்று விளங்கினர். அச் சிறு பிள்ளைகட்கு வாய்த்த இவ்வருங் கலைப்புலமைத் திறத்தை ஆராய்ந்து பார்க்கும் பொருட்டுச் சென்ற ஓர் அறிஞர்3 அச் சிறுவரது திறத்தை ஆராய்ந்து பார்த்த ஆராய்ச்சிகள் பலவற்றுள் இதுவும் ஒன்று; அச் சிறுமகாரில் ஒருவர் ஓர் அறையிற் போய்க் கதவைச் சாத்திக் கொள்ளும்படி கற்பிக்கப்பட்டார். அதற்கு அடுத்த மற்றோர் அறையின் கண் அவ்வீட்டிலுள்ள குடும்பத்தாரை இருக்க வைத்து, அவ்வறிஞர் அந்நேரத்திற் றமக்குத் தோன்றிய ஒரு பொருளைச் சிறிது நினைத்துப் பின்னர் அதன் பெயரை ஒரு துண்டுக் கடிதத்தில் எழுதி, அதனை அங்கிருந்த குடும்பத் தார்க்குக் காட்டி, எவரும் வாய் பேசாமலே அதிலெழுதப் பட்ட பண்டத்தினை ஒருமித்து நினைக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர்கள் எல்லாரும் அவர் சொல்லியபடியே சிறிதும் வாய்பேசாதிருந்து அக்கடிதத்திற் குறிப்பிட்ட பண்டத்தை நினைந்த சில நேரத்திலெல்லாம், பக்கத்து அறையிலிருந்த சிறுபிள்ளை கதவைத் திறந்து கொண்டு வருவது கேட்டது; உடனே அடுத்த அறையிலிருந்த அனைவரும் இருக்கையினின்று அசையாமலும் வாய் பேசாமலும் அத் துண்டுக் கடிதத்தை மறைத்துக் கொள்ளவும், அக் குழந்தை இவர்களிருந்த அறைக்குள் வந்து அவர்க ளெல்லாரும் ஒன்றாய் நினைத்த அப் பண்டத்தின் பெயரைச் சொல்லிற்று. இதனை அடுத்துச் செய்த ஆராய்ச்சிகளுள், அடுத்த அறையிலிருந்த குடும்பத்தவர் எல்லாம் அவ் வீட்டிலுள்ள பண்டங்களில் ஏதேனும் ஒன்றை ஒரு காலத்தில் ஒருமித்து நினைக்கவும், நினைந்த அப் பண்டத்தை அச் சிறு பிள்ளை தானே அறிந்து எடுத்து வந்து கொடுக்கவும் கற்பிக்கப்பட்டனர். கற்பிக்கப் பட்டபடியே அவர் அடுத்தடுத்து நினைந்த பண்டங்கள் ஒவ்வொன்றையும் அப் பிள்ளை தவறாமல் எடுத்தெடுத்து வந்து கொடுத்தது. இங்ஙனமாக அவ்வறிஞர் ஆறு நாட்கள் வரையில் அவர்களோடிருந்து ஆராய்ந்து முந்நூற்றுப் பன்னிரண்டு ஆராய்ச்சிகளுஞ் சிறிதும் பிழைபடாமல் நிறைவேறின. இவற்றை எண்ணிப் பார்க்குங்கால் உணர்த்துவோர். பலராயிருப்பினும் அவர் ஒரு காலத்து ஒரு பண்டத்தினையே உன்னிப்பாய் ஒருமித்து நினைப்பராயின், அதனை உணர்வோரும் அதனை உள்ளவாறே பிழையாமல் உணர்வரென்னும் உண்மை நன்கு பெறப்படும். உணர்வோர் அறிவும் மேற் பிறவியிற் செய்த நல்வினைப் பயத்தாலும் இப் பிறவியிற் செய்து கொண்ட பழக்கத்தாலும் நன்கு தெளிவடைந்திருத்தல் வேண்டும். இனி, உணர்த்துவோர் யோகநித்திரை என்னும் அறிதுயில் வாயிலாக உணர்வோரது அறிவைத் தெளிவடையச் செய்து அவரை அருகில் இருத்தியும், அன்றித் தொலை விலிருக்கச் செய்துந் தாம் நினைப்பனவற்றை அவர் பிறழாமல் நினைக்கும்படி செய்யும் மற்றொரு நன்முறையும் உண்டு. உணர்த்துவோர் முதற்கண் நல்லதொரு முறையால், உணர் வோரை அறிதுயிலிற் போகச் செய்து, அதனால் அவரது நினைவு தமது நினைவின் வழிப்பட்டு நிற்கச் செய்துகொள்ளல் வேண்டும். அங்ஙனம் அவரை அறிதுயிலிற் செலுத்துதற்கு இசைவான நன்முறைதான் எதுவோவெனின்; அதனைக் காட்டுதும். அடிக்குறிப்புகள் 1. Professor Lodge, University College, Liverpool. 2. The Children of Rev. Mr. Creery of Boston 3. Professor Barrett. 11. அறிதுயில் வருவிக்கும் முறை கொளுத்திய ஒரு மெழுகுத் திரியையேனும், பளபளப்பாக வுள்ள ஒரு வெள்ளிக் காசையேனுந், தெளிவான ஒரு பளிங்கு உருண்டையையேனும் உணர்த்துவோர் தாமே கையிற் பற்றிக் கொண்டாவது, உணர்வோர் சாய்ந்திருக்கும் நாற்காலியினெதிரே உள்ள ஒரு சிறு மேசைமேல் அவரது கட்பார்வை சிறிது மேல் நோக்கும் உயரத்தில் நன்றாய்த் தெரியும்படி வைத்தாவது அவர் அதனைக் கண்ணிமை கொட்டாமற் பார்க்கும்படி செய்தல் வேண்டும். கட்டாயமாக இமைக்க வேண்டி யிருந்தால் அல்லாமல், உணர்வோர் சிறிதுங் கண் இமைத்தல் ஆகாது. இங்ஙனமாக அவர் சிறிது நேரம் அதனை உற்று நோக்கியபின், உணர்த்துவோர் தமது இடதுகையின் விரல்களை ஒன்றோடொன்று சேராமல் விரித்து, உணர்வோரின் பின்றலைப் புறத்தே தொட்டாவது தொடாமலாவது மேலிருந்து கீழ்நோக்கிப் பலமுறை தடவல் வேண்டும். தடவுகையில் உள்ளங்கையைக் கவிழ்த்தபடியாய்த் தடவி, இறக்கி, மறுபடியுங் கையை மேல் உயர்த்துகையில் இறக்கின வழியே நேராக மேல் உயர்த்தாமல் ஒரு பக்கச் சாய்வாய் உயர்த்துதல் வேண்டும். இவ்வாறு அடுத்தடுத்துப் பின்றலைப் புறத்தே தடவிய சிறிதுநேரத்திற்குப் பின், உணர்த்து வோர் உணர்வோரைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ளும் படி கற்பித்து, அதன் பிறகு தம் வலக்கை இடக்கை இரண்டின் விரல்களையும் ஒன்றன்மேல் ஒன்றுபடாமல் விரித்துக்கொண்டு, உள்ளங் கைகளைக் கவிழ்த்த படியாய் உணர்வோரின் நெற்றிக்கு நேரே தொட்டாவது தொடாமலாவது கீழ்நோக்கி அவரது முழங்கால் அளவுந்தடவல் வேண்டும்; அங்ஙனங் கீழ்நோக்கித் தடவிய கைகளை மறுபடியுந் தடவுதற்காக மேலுயர்த்துகையில் நேராக எதிராக உயர்த்தாமல், இரண்டு கைகளையும் பிரித்து அவர் தம் விலாப்பக்கங்களிற் பக்கச் சாய்வாய் உயர்த்தித், திரும்பவும் முன்சொன்னவாறே கீழ்நோக்கித் தடவுதல் வேண்டும். இங்ஙனந் தடவுகையில் தூக் - கம் - தூக்கம் - தூக்கம் - தூக்கம் - அயர்ந்த தூக்கம் - இனிய தூக்கம் என்று ஆழ்ந்து நீண்ட குரலில் திருப்பித் திருப்பி மெல்லச் சொல்லுக. இங்ஙனந் திருப்பிச் சொல்லச் சொல்ல, உணர்வோர் நெடுமூச் செறிந்து தூங்கத் தொடங்குவர். இவ்வாறு அவர் தூங்கத் துவங்குவதைப் பார்த்தவுடனே, மறுபடியும் அவரது தலையிலிருந்து முழங்கால் அளவும் முன்சொல்லி யவாறே கீழ்நோக்கி ஏழெட்டுமுறை தடவி நல் - ல தூக்கம், ஆழ்ந்த தூக்கம், இன்பமான தூக்கம் நன்றாய் ஆழ்ந்த தூக்கம் - ஆழ்ந்த - தூக்கம் என்று அடுத்தடுத்து மெல்ல நிறுத்திச் சொல்லுக. இங்ஙனஞ் சொல்லியபின், அவர் நன்றாய்த் தூங்கக் காணலாம். அதனைக் கண்டபின் அவரைநோக்கி; இப்போது நன்றாய்த் தூங்கும். நான் சொல்வதைத் தவிர வேறு எதுவும் உமக்குக் கேளாது; நான் சொல்வது மட்டும் உமக்குக் கேட்கும். நன்மையைக் கோரி நான் உமக்குச் சொல்லுகிறபடி செய்யக் கடவீர். நான் எழுப்புகிறபோது நீர் நன்றாய்த் தூங்கி எழுந்திருப்பீர், என்று சொல்லுக. பல பிறவிகளிற் சீர் திருந்தி வந்து இப் பிறவியிலும் ஒழுங்குபட்டிருக்கும் உயிராயின் அவ் வுணர்வோர் இரண்டொருகால் இங்ஙனம் அறிதுயிலிற் செலுத்தப்பட்ட அளவானே மிகச்சிறந்த நுண்ணிய உணர்வினைப் பெற்று, உணர்த்துவோர் நினைக்கும் நினைவுகளையும், உணர்த்துவோர் கோரியபடி பிறர் நினைக்கும் நினைவுகளையுந் தாம் அறிதுயிலில் இருக்கையிற் செவ்வனே உணர்ந்து கூறுவர். உணர்த்துவோர் இன்னும் அவரை நன்றாய்ப் பழக்குவராயின், அறிதுயிலிலிருந்து விழித்தெழுந்த பின்னும் உணர்த்துவோர் விரும்பியபடி யெல்லாம் பிறரெண்ணங்களை இனிதுணர்ந்து உரைப்பர். அவ்வாறு பல பிறவிகளிலும் இப் பிறவியிலுஞ் சீர்திருத்தம் அடைந்து வராத உயிராயின் அவருக்கு அறிதுயிலை எளிதிலே வருவித்தல் இயலாது. அதனை அவர்பால் வருவித்தற் பொருட்டுப் பலகாலும் பலநாளும் முயன்று வரல் வேண்டும். அடுத்தடுத்து முயன்று பழகினால் எத்தகையோரிடத்தும் அறிதுயிலை வருவிக்கலாம். இனி, உணர்வோர் அறிதுயிலிற் கிடக்கும்போது உணர்த்துவோர் பின்வருமாறு சொல்லுதல் வேண்டும். உமது உடம்பு எப்போதுஞ் செவ்வையான நிலைமையில் இருக்கும். உமது அறிவு தெளிவாகவும் நுட்பமாகவும் விளங்கும். நீர் என் அருகிலிருந்தாலும், என்னை அகன்று தொலைவி லிருந்தாலும், யான் நினைக்கும் நினைவுகளையும் யான் குறிப்பிடுவோர் நினைவுகளையுஞ் செவ்வனே அறிந்து சொல்வீர், நீர் எங்கிருந்தாலும் யான் வேண்டியபோது ஆழ்ந்த இனிய தூக்கத்திற்குச் செல்வீர். மறுபடியும் யான் வேண்டியபோது செவ்வையாக விழித்தெழுந்து உம்முடைய அலுவல்களைப் பார்ப்பீர் என்று ஏழெட்டுமுறை இவற்றைத் திருப்பித் திருப்பிச்சொல்லுக. உணர்த்துவோர் இவ்வாறு கூறிய சொற்கள் உணர்வோரது நினைவில் ஏறி அவரைப் பதப்படுத்தி யிருந்தால், அதனைத் தெரியும் பொருட்டு உணர்த்துவோர் ஒரு மோதிரத்தை அல்லது ஒரு சாவியை அல்லது ஓர் எழுதுகோலை அல்லது வேறேதேனும் ஒரு பொருளை நினைத்து அதிற் றமது நினைவினைச் சிறிதுநேரம் பதிய நிறுத்துக. உணர்வோர் உள்ளம் நுண்ணிய பதத்தை அடைந்திருக்குமாயின், உடனே அவர் உணர்த்துவோர் எண்ணிய பொருளைத் தவறாமல் எடுத்து உரைப்பர். இவ்வறிதுயிலில் நன்கு பழகியபின் உணர்வோரும் உணர்த்துவோரும் ஒருவரையொருவர் பிரிந்து எவ்வளவு தொலைவான ஊர்களில் இருந்தாலும் உணர்த்துவோர் வேண்டியபடி யெல்லாம் உணர்வோர் பிழைபடாமற் செய்வர். இம் முறையின் மேன்மையினை ஆராய்ந்து பார்த்த நுண்ணறிவின ரெல்லாரும் இதனை மிகப் பாராட்டிப் பேசுதலும் எழுதுதலுஞ் செய்து போதருகின்றார். அறிதுயிலில் நன்கு பழக்கப்படுத்தப்பட்ட ஒருவர் தாம் அயர்ந்த தூக்கத்திற் கிடக்கையில் உணர்த்துவோர் தமக்குக் கட்டளையிட்டபடியே அவர் தொலைவிலிருந்து செய்தவற்றைக் கூட இருந்து பார்த்த ஆங்கில மருத்துவ நூல் அறிஞர் ஒருவர் எழுதிய ஒரு பகுதியை இங்கெடுத்துக் காட்டுகின்றாம்:- இருபத்திரண்டு ஆண்டுள்ள ஓர் அழகிய மாது இக்கலைப் புலமையில் தேர்ச்சிபெற்று உணர்த்துவோர் ஒருவரால்1 நாலைந்து முறை அறிதுயிலிற் செல்லும்படி பழக்கப் படுத்தப்பட்டிருந்தார். இம் முறையினை நன்காராய்ந்து பார்க்க விரும்பிய ஆங்கில மருத்துநூற் புலவர் ஒருவரின்2 வேண்டுகோளுக்கு இசைந்து இவ்வம்மையாரும் இவரை அறிதுயிலிற் பழக்கிய அறிஞரும் ஒருநாள் அவர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இந்த அரிய முறையினைக் கண்டறியும் ஆவலால் வேறு சிலரும் அங்கே வந்திருந்தார்கள். அம்மருத்துவர் வீட்டின்கண் உள்ள அகன்றதோர் அறையின் கண் அவ் விளையமாதர் அங்கு வந்த மற்றையோருடன் பேசிக் கொண்டிருக்கையில், அம் மருத்துவர் தம்மோடிருந்த அவ்வுணர்த்துவோரை அழைத்துக் கொண்டுபோய் அம்மாதர் அவரைப் பார்க்கக் கூடாத மற்றோர் அறையில் இருக்கச் செய்து, யான் அந்த அம்மையிடத்தும் மற்றவரிடத்தும் போய்ப் பேசிக்கொண் டிருக்கின்றேன். இடையே நான் சிறிது கனைப்பேன்; அந்த ஒலியைக் கேட்டதும் நீர் இந்த அறையிலிருக்கும் அம் மடந்தையை அறிதுயிலிற் போகச் செய்தல் வேண்டும், என்று அவர்க்குக் கற்பித்து விட்டு, அவ்வறையினின்றும் வெளியே வந்து கதவைத் தாழிட்டுக் கொண்டு, அந்த அம்மையாரும் மற்றையோரும் பேசிக்கொண் டிருக்கும் அறைக்குட் புகுந்து அவர்களொடு அளவளாவிப் பேசியிருக்கலானார். எல்லாரும் பேசுஞ் செய்தியில் கருத்து ஊன்றி ஈடுபட்டிருக்கையில், நடுவே அத் துரைமகன் சிறிது கனைத்தார். அக் கனைப்பொலி நிகழ்த்திய சிறிது நேரத்திலெல்லாம், அம் மாதரார் முகம், உணர்த்துவோர் முன்னே அமர்ந்திருந்த இருக்கையின் பக்கமாய்த் திரும்பியது. கூட இருந்த அம்மருத்துவர் அம் மாதரை நோக்கி யாது நேர்ந்தது என்று வினாவ, அவ்வம்மை ஒன்றுமில்லை என்று விடை கூறினார். அவ் வம்மையின் கண்கள் இமையாமல் நின்றன. மற்றை அறைக்குள் இருந்த உணர்த்துவோர் தமது கையை நீட்டிச் சிறிது அசைத்த அளவிலே, அம் மாதரார் தாமிருந்த நாற்காலியை விட்டெழுந்து, பின் தள்ளும் நடையொடு மெல்ல நடந்து உணர்த்துவோர் இருந்த மற்றை அறைக்குட் சென்றார். உணர்த்துவோரோ தாம் இருந்த இருக்கையினின்று அசையாமலும், ஏதோர் ஓசையும் புரியாமலும் இருந்தார். தாம் நினைத்தவாறே அறிதுயிலில் நடந்து தம் அருகில் வந்த அம் மாதரின் கண்களுக்கு நேரே இவர் இரண்டு விரல்களை நீட்ட, மறுபடியும் அப் பெண் முன்னிருந்த அறைக்குப் போகும்படி அவராற் செலுத்தப் பட்டு வந்து நாற்காலியில் அமர்ந்தார். இன்னும், அறிதுயிலி லிருக்கும் அம் மாது விழித் தெழுந்தவுடனே சிறிதுநேரங் கழித்து அடுத்துள்ள அறைக்குட் போய் அங்குள்ள இசைப்பெட்டியினை3 இயக்கி ஓர் இசை பாடு மாறும். அதன்பின் அங்குள்ள பல புத்தக வரிசைகளிலிருந்து தாம் எண்ணிய ஒரு புத்தகத்தைத்தெரிந்தெடுக்குமாறும், மண்டியிட்டு அதனை அம் மருத்துவர் கையிற் கொடுத்து அதில் உள்ள சில சொற்களை ஒரு வகையான குரலில் திருத்தமாகச் சொல்லுமாறுங் கட்டளை யிடப் பட்டனர். அதன்பின், விசிறியால் மெல்ல வீசி அவர் எழுப்பப்பட்டார். விழித்தபின், தூக்கத்தில் நடந்த தொன்றும் அவர் அறியாராய், மற்றவர்களோடு முன்போற் பேசிக் கொண்டிருந்தார். ஆனாற், சிறிதுநேரஞ் சென்றதும், அம்மாதரின் கண்கள் உறுத்த பார்வை உடையவாயின; நீக்க முடியாத ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர் போல் அப்பெண்மணியார் தம திருக்கையினின்றும் எழுந்து, தாம் உணர்த்துவோராற் கற்பிக்கப்பட்டபடியே இசைப் பெட்டியில் ஓர் இசை பாடிப், பின் புத்தக வரிசைகளிலிருந்து அவர் கருதியதொரு புத்தகத்தைப் பிழைபடாமல் எடுத்து, அதனை முழந்தாளிட்டபடியாய் அம் மருத்துவர் கையிற் கொடுத்து, ஒருவகையான குரலிற் சில சொற்களையுந் திருத்தமாகச் சொன்னார். அவர் மண்டியிட்ட நிலையிலிருந்தபோது அவ்வறிதுயிலினின்றும் எழுப்பப்படவே, தாம் அந்நிலையிலிருந்ததற்காகச் சிறிது சினமும் வருத்தமும் உடையவர் போற் காணப்பட்டார். அதன்பின் அம் மாதர்க்குச் சில சிற்றுண்டிகள் தரப்பட்டன; அவர் அவற்றுள் ஓர் அடையைத் தின்று கொண்டிருக்கையில், அவர்க்குப் பின் பக்கத்திற் சிறிது தொலைவில் இருந்த உணர்த்துவோர்க்கு அம்மருத்துவர் கண்ணால் ஒரு குறி செய்தார். அதனை அறிந்த அவ்வுணர்த்துவோர் தமது கையை ஓசைப்படாமல் அசைக்கவே, அம் மடந்தை உடனே தலையைத் திருப்பிக் கொண்டு தூங்கலாயினார். இங்ஙனந் தூங்குகையிலும், அவ்வுணர்த்துவோர் கோரியபடியெல்லாம் அவர் செய்வா ராயினார். தோட்டத்திற் சென்று மலர்கள் பறித்துச் செண்டு கட்டுவதுபோல் நினைக்க, அங்குத் தோட்டமில்லாதிருந்தும் அவர் அதனுள் நுழைந்து நறுமலர் கொய்து செண்டு கட்டுவதுபோற் செய்வாராயினார். பின்னர் அப்பூஞ் செண்டை முகந்து இன்புறல் வேண்டுமென்று நினைக்க, அவர் கையிற் பூஞ்செண்டு இல்லாதிருக்கவும் அஃது உடையவர் போல் முகந்து மகிழ்ந்தார். அதன் பிறகு அந் நறுமணம் மிக்க காரம் உடையதென்று கூற, அம் மாதர் பல காற்றும்மினார். உணர்த்துவோர் தமது கையால் அமர்த்திய பிறகு தான் அத் தும்மல் நின்றது. இங்ஙனமே, உணர்த்துவோர் நினைத்தபடியுஞ் சொல்லியபடியுமெல்லாம் அம் மங்கையர் அறிதுயிலிற் சென்று, வியப்பான பல செயல்களைப் புரிவாராயினார். இது நிற்க. அறிதுயிலிற் சென்ற ஓர் உயர்ந்த உயிர் தன்னொடு தொடர்புடையவர்கள் நினைக்கும் நினைவுகளை நன்கு அறிந்துரைக்கும் உண்மை நிகழ்ச்சிகளைச் செவ்வையாக ஆராய்ந்து முடிவுகட்டிய உயிர்நிலை ஆராய்ச்சிக் கழகத்தார்4 செய்த ஆராய்ச்சிகளிற் சிலவும் ஈண்டு எடுத்துக் காட்டுதல் வேண்டும். ஏனெனில், உயர்ந்த கலை நூற் புலமையில் நிரம்பத் தேர்ச்சிபெற்று இவ்வுலகமெங்கும் பெரும்புகழ் பெற்று விளங்கும் புலவோர் பலர் அக்கழகத்தில் ஒருங்கு சேர்ந்திருந்து, எவரும் ஐயுறுதற்கில்லாதபடி இவ்வரிய பெரிய முறைகளைத் தீர ஆராய்ந்து தெளிவுபடுத்தி யிருக்கின்றனர்; ஆதலால், அவர் செய்து பார்த்த ஆராய்ச்சிகளிற் சில எடுத்துக் காட்டினும் அவை இவ்வுண்மையை நிலைநாட்டி எத்திறத்தவரையும் அறிவூட்டி மகிழ்விக்கும். ஒரு நாள் ஓர் அம்மையார் அறிதுயிலிற் செலுத்தப்பட்டு உணர்வோராய் இருக்க, அவருக்கு உணர்த்துவோரான ஒரு துரைமகன் அவரைத் தொடாமலும் அவரொடு பேசாமலும் அவர்க்குப் பின்னே இருத்தப்பட்டார். இம் முறையினை ஆராய்ந்து பார்ப்பதற்கென்று அங்கு வந்திருந்த கற்றறிவிற் சிறந்த மற்றொரு பெருமாட்டியார், ஒரு சிறு பையன் கையில் ஒரு பந்து ஏந்தி நிற்பதாக நினைக்கும்படி அவ்வுணர்த்துவோர்க்குக் கற்பித்திருந்தார். அங்ஙனமே அத்துரைமகன் அந் நினைவை உறுத்து நினைந்த சில இமைப்பொழுதிற்குள், அறிதுயிலில் அமர்ந்திருந்த அம்மையார்; ஓர் உருவம் வருகின்றது - ஒரு சிறு பையன், என்று கூறினார். உடனே அங்கிதனை ஆராயும் மற்றொரு பெருமாட்டியார்; அவன் தன் கையில் யாது வைத்திருக்கின்றான்? என்று வினவ, அவ்வம்மையார் ஓர் உருண்ட பொருள் - அஃது ஒரு பந்தென்று நினைக்கிறேன், என்று மறுமொழி தந்தார். இனி, மற்றோர் ஆராய்ச்சியில் உணர்வோராயிருக்கும் பொருட்டு அறிதுயிலிற் செலுத்தப்பட்டவர் ஓர் ஆண்மகன். அவர்க்கு உணர்த்துவோராய் அமர்த்தப்பட்டவர் முன் ஆராய்ச்சியில் உணர்த்துவோராய் இருந்த துரை மகனே யாவர். இந்த முறை ஒரு வண்டி நிறைய மீன் வைத்துக்கொண்டு ஓர் ஆள் நிற்பதாக நினைக்கும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். அங்ஙனமே நினைந்த சிறிது நேரத்தில் அவ்வுணர்வோர் கூறுவர். அஃது ஓர் ஆண்மகன் உருவம், ஆம் அங்கே ஓர் ஆள் நிற்கின்றார். அவரை இன்னாரென்று நான் அறியேன். அவர் பழங்கள் விற்பவர் போற் காணப்படுகின்றார். அப்போது அங்கு வந்திருந்த ஒரு பெண்பாலார்; அவரிடத்திற் பழங்கள் இருக்கின்றனவா? என்று கேட்டார். அதற்கு அவர்: அங்கு இருப்பது அவரது வண்டிபோல் தோன்றுகின்றது. ஓ, அவர் என்ன விற்கிறார்? அவர் விற்று விட்டாரென்று நம்புகின்றேன். அவரது வண்டிமேல் யான் ஏதும் பார்க்கக் கூடவில்லை. ஒரு வேளை விற்றுவிட்டார்போலும்! ஆ! சில உருண்ட வடிவான பொருள்கள் இப்போது தென்படுகின்றன. அவைகள் பழங்கள் என்றே நம்புகின்றேன். அவைகள் சிறிது சிவப்பாய் இருக்கின்றன. ஓ, அவை மீன்கள் அல்லவோ, என்று மாறிமாறிக் கடைசியாக நினைந்த பொருளைத் தவறுதலின்றிச் சொல்லிவிட்டார். ஆனால் நினைந்த பொருளை நினைந்தபடியே உணர்வோர் கூறாமல் இடையிடையே மாறிக் கூறிய தென்னையெனின், உணர்த்துவோர் அப் பொருளை நினைக்கையில் அதன் வடிவையும் நிறத்தையுந் தெளிவாக நினையாமல், அதனோ டொத்த பழத்தின் வடிவையும் நிறத்தையும் இடையே நினைந்திருக்கவேண்டும். அஃது அல்லாவிட்டால் உணர்வோர் அறிதுயிலிற் செவ்வனே சென்று அமைதிபெறாமற் சிறிது கலங்கிய நிலையில் இருந்தாராகல் வேண்டும். இவ்விரண்டு குறையும், அல்லது இரண்டில் ஒரு குறையும் இல்லாதாயின் உணர்த்துவோர் நினைந்த பொருளை உணர்வோர் உடனே தெளிவாக உணர்ந்து கூறியிருப்பர். இனி, இவ்வாராய்ச்சியில் வல்ல மற்றொரு துரைமகனார் நுண்ணறிவு வாய்ந்த தம் மனைவியாரிடத்துச் செய்து பார்த்த மற்றோர் ஆராய்ச்சி வருமாறு; ஒருவானக் கப்பல் ஒரு நகரத்திற் குறிப்பிட்ட ஓரிடத்தில் மேலே செல்லுவதாகவும், அதனைப் பெருந்திரளான மக்கள் நின்று பார்ப்பதாகவும் நினைத்துக் கொள்ளும்படி உணர்த்துவோர் கேட்டுக் கொள்ளப்பட்டார். இதில் உணர்வோராயிருந்த பெருமாட்டியார் ஆழ்ந்த அறிதுயிலிற் செலுத்தப் படவில்லை; சிறுதுயிலிலேதான் இருந்தார். உணர்த்துவோர் மேற் சொல்லியதனை நினைந்த அளவிலே, உணர்வோர் கூறுவார். யான் தொகுதியாகப் பலர் நிற்பதைப் பார்க்கிறேன். கூட்டமாகச் சண்டைக்குப் போகிறார்கள். அவர்கள் மிகவும் கலவரமாய் இருக்கிறார்கள். அவர்கள் தண்ணீர் சொரிகிறார்களா? அல்லது கப்பலோட்டிகள் பாய்க் கயிறுகளை இழுக்கிறார்களா? இதற்குள் உணர்த்து வோர், அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று கேட்க, அவ்வம்மையார் அவர்கள் எல்லாரும் மேலே பார்க்கிறார்கள். அஃதொரு வானக்கப்பல், யாரோ ஒருவர் அதில் துன்பப் படுகிறார், என்றனர். அதைக் கேட்ட உணர்த்துவோர் இனி நடக்கக் கூடிய ஒரு காட்சியை யன்றோ நினைந்தேன், என்ன, உணர்வோர் ஓ முதன் முதலாக ஒரு வான ஊர்தியை ஒருவர் பறக்க விடுகிறார். அவர் அங்கே மேலே செய்து கொண்டிருப்பது அதுதான். என்று உண்மையைக் கடைசியாகச் சொல்லி விட்டார். இந்நிகழ்ச்சியின் கண்ணும் உணர்வோர் நினைந்ததனை உடனே சொல்லமாட்டாமல் நடுவே தடுமாற்றம் அடைந்தது, உணர்த்துவோர் தாம் நினைத்ததன்கண் உள்ளத்தை ஒருக்கி நினையாமையினாலேதான் என்று அறிதல் வேண்டும். இனி, அகல இருந்து உணர்த்துவோர், உணர்வோரை அறிதுயிலிற் போகும்படி செய்தலை அக் கழகத்தார் ஆராய்ந்து பார்த்திருக்கின்றனர். அவற்றுள் ஒன்றனை இங்கெடுத்துக் காட்டுவாம்; பிராஞ்சு தேயத்திற் புகழ் பெற்று விளங்கிய மருத்துவர் ஒருவர் தம்மிடம் நோய் தீர்த்துக் கொள்ளவந்த ஒரு நாட்டுப்புறத்துப் பெண் பிள்ளைக்கு நோய் நீக்கி, அவளைத் தொலைவிலிருந்தே அறிதுயிலிற் செலுத்தப் பழக்கலானார். இவர் தாமிருந்த வீட்டுக்கு அரைக்கல் எட்டியிருந்த தம் உடன் பிறந்தாள் வீட்டில் இப் பெண்பிள்ளை இருக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார். அம்மருத்துவரோ டிருந்து இம் முறையினை ஆய்ந்தறியும்படி அங்கே சென்ற கற்றறிவிற் சிறந்த புலவர் மூவர், ஒருநாட் காலையில் திட்டமாய்ப் பதினொரு மணிக்கு அம் மருத்துவர் தமது மருத்துக் கழகத்தில் இருந்தபடியே தம் உடன்பிறந்தாள் வீட்டில் தங்கியிருக்கும் அப்பெண் பிள்ளையை அறிதுயிலிற் செலுத்தும்படி கேட்டுக் கொண்டனர். சில நேரங்களில் அப்பெண்மகள் தனக்குத் தூக்கம் வராதபடி தடை செய்வதில் முயற்சி யுடையவளாய் இருத்தலால், இவ்வாராய்ச்சி நிறைவேறுதற்குச் சிறிதுநேரங்கூடக் கொடுக்க வேண்டு மென்று அவர்கள் தமக்குள் ஏற்பாடு செய்துகொண்டனர். திட்டமாய்ப் பதினொன்றரை மணிக்கு அவர்கள் அமைதியாய் அவளிருந்த வீட்டிற்குட் போய், அவர் ஆழ்ந்த தூக்கத்தோடும் மேடை மேல் உள்ள தனது அறையிலிருந்து கீழே கூடத்திற்கு இறங்கிவரக் கண்டார்கள். முதனாள் இரவில் அம் மருத்துவர் அவளைத் தூக்கத்திற்குச் செலுத்தச் செய்த முயற்சியைப்பற்றி அவர்கள் ஏதுஞ் சொல்லவில்லை. ஆனால், அவள் அவ்விரவில் தான் மிகவும் நோயாயிருந்ததாகத் தூக்கத்திலிருந்தபடியே அவர்கட்குக் கூறினாள். பிறகு, அதே நாளின் மாலைக் காலத்தில் அம்மூவரும் அம் மருத்துவரோடிருந்து உணவு அருந்துகையில், அம்மருத்துவர் தமது வீட்டிலிருந்தபடியே தொலைவிலிருக்கும் அப் பெண்ணைத் தூக்கத்திற்குச் செலுத்தித், தமது விருப்பப்படி அவள் அங்கிருந்து தமது வீட்டிற்க்கு வருதற்பொருட்டு மீட்டும் ஒரு முயற்சி செய்தார். மாலை ஏறக்குறைய ஒன்பது மணிக்கு அவர் தாம் கற்கும் அறைக்குப் போனார். அவ் அறிஞர் மூவரும் இப்போது இவர்களொடு சேர்ந்த மற்றோர் அறிஞருமாக நால்வரும் அப்பெண்மகள் தங்கிய வீட்டண்டை போய், அவ் வீட்டிலுள்ளார் கண்களுக்குத் தெரியாதபடி வெளியே தெருவிற் காத்திருந்தனர். ஒன்பதரைமணி யாவதற்குமுன் அம்மாது தோட்டவாயிற் கதவிலிருந்து பாதிவழி வந்து மறுபடியும் பின்னுக்குப் போவதை அவர்களில் ஒருவர் கண்டார். மற்றை மூவரும் அவளை உன்னித்துப் பார்க்க, அவள் ஆழ்ந்த தூக்கத்தில் நடப்பவளாய் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டு அங்குமிங்குமாய் அலைவதுபோற் காணப்பட்டாள். பின்னுஞ் சிறிது நேரத்தில் அவள் நன்றாய் மூடப் பட்ட கண்களோடும் வெளியே வந்து, அந் நால்வரையும் பாராமல் அவர்களை விரைவாய்த் தாண்டிச் சுற்றுவழியாகச் சென்று அம் மருத்துவர் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அவன் தெருவில் நடந்துவந்தபோது விளக்குத் தூண்கள் மேலும் வண்டிகள் மேலும் பிறவற்றின் மேலும் படாமற் குறுக்கு மறுக்குமாய் நடந்துவந்தாள். எவரும் அவள் எதிரிற் போகவும் இல்லை; அவளொடு பேசவும் இல்லை. எட்டு அல்லது பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவள் நடையில் தள்ளாடினாள்; விழுந்துவிடுவாள் போல எண்ணி நின்று விட்டாள். அப்போது ஒன்பதரை மணியும் ஐந்து நிமிடங்களும் ஆயின என்று அந்நால்வரில் ஒருவர் குறித்துக்கொண்டார். ஏறக்குறைய ஒன்பது மணி நாற்பது நிமிடத்திற்கு அவள் மனத்திட்பம் உடையவளாய் ஒன்பதே முக்காலுக்கும் அம் மருத்துவர் வீட்டின் எதிரே வந்தாள். வந்தவள் அவரை எதிர்ப்பட்டும் அவரை உன்னியாமலே, அவரது வீட்டினுள் நுழைந்து, கீழேயுள்ள அறைகளில் ஒன்றிலிருந்து மற்றொன் றிற்கு விரைந்து சென்றாள். அவள் அவரைத் தெரிந்து கொள்ளுதற்கு முன் அவள் கையை அவர் பிடித்தெடுக்க வேண்டுவதாயிற்று. அதன்பின் அவள் அமைதியுற்றாள். எட்டுமணி ஐம்பத்தைந்து நிமிடம் முதல் ஒன்பது இருபதுவரையில் அம்மருத்துவர் அவளைப்பற்றி நன்றாய்க் கருத்தூன்றி நினைத்ததாகக் கூறினார். ஆனால், ஒன்பது இருபதுமுதல் முப்பத்தைந்து வரையிற் சும்மா மேலாக நினைந்தார்; ஒன்பது முப்பத்தைந்திற்கு அவளை நினைப்பதை வீட்டு வேறொரு விளையாட்டிற் கருத்தைச் செலுத்தினார்; ஆனாற் சில நிமிடங்கள் கழிந்ததும் மறுபடியும் அவளைப் பற்றி எண்ணலானார். அவர் இடையே அவளை நினைப்பதை விட்டிருந்த நேரமும், அவள் தெருவிலே நடை தள்ளாடி நின்றுவிட்ட நேரமும் ஒன்றாய் இருந்தன. பின்னர், மூன்றாம்நாளில் அம் மருத்துவரோடு உடனிருந்து இதனைப் பயிலுந் தோழர் ஒருவர் அம்மாதினை அறிதுயிலினின்றும் எழுப்பி ஏனை நால்வரோடும் இருந்து உணவுகொள்ளும்படி செய்துவிட்டுக் காலை நாலரை மணிக்குத் தமது இல்லத்திற்கு ஏகினார். அவர் தமது வீட்டிலிருந்தே மற்றை நால்வரொடு வேறோர் இடத்திலிருக்கும் அவளைத் தூங்கச் செய்தல் வேண்டுமென்று ஓர் ஏற்பாடு முன்னமே செய்துகொண்டார்கள். ஐந்துமணி ஐந்து நிமிடத்திற்கு அந் நால்வரும் அவ்வம்மையிருந்த இடத்தினுள் நுழைந்து பார்க்க, அவள் கண்கள் மூடப்பட்டு அயர்ந்த தூக்கத்தில் இருப்பது தெரிந்தார்கள். கண்கள் மூடியிருந்தும் அவள் தையல் வேலையை மிகவுஞ் சுறுசுறுப்பாய்ச் செய்து கொண்டிருந்தாள். அம் மருத்துவரினாலேயே தான் தூக்கத்திற்குச் செலுத்தப் பட்டதாக அவள் நம்பும்படி சொல்லிப்பார்த்தார்கள்; ஆனால் அம் மருத்துவரின் தோழராலேயே தான் தூக்கத்திற்குச் செலுத்தப்பட்டதாகத் துணிபுரை கூறினாள். பிறகு, நான்காம் நாள் மாலையில் 2 மணிக்கு அம்மருத்துவரின் தோழர் வீட்டில் அந் நால்வரும் ஒருங்கு சேரலானார்கள். அவர்களில் ஒருவர் கோரியபடியே அவர் அந்த மாது தூக்கத்திற் செல்லுமாறு எண்ணுதற்காகத் தாம்கற்கும் அறைக்குட் போயினார். அந் நால்வரும் அவரது தோட்டத்திற் காத்திருந்து பிறகு மூன்று இருபதுக்கு அந்த அம்மையிருந்த வீட்டிற்குப் போனார்கள். போனதும் ஒருவர் அவளிருந்த அறையினுட் புகுந்து நோக்க, அவள் தன் கையிலிருந்த தையல்வேலையையும் விட்டு ஆழ்ந்த துயிலில் இருக்கக் கண்டார். தான் மூன்று மணி ஐந்து நிமிடத்திற்குத் தூங்கச்சென்றதாகவுந் கூறினாள். இங்ஙனம் அந்த அம்மையைத் தொலைவிலிருந்தே அறிதுயிலிற் செலுத்தித் தாம் எண்ணிய எண்ணங்களின் படி அவள் எண்ணவுஞ் செய்யவும் புரிந்து, அம் மருத்துவரும் அவர் தோழரும் அவள் பால் ஆராய்ந்து பார்த்த இருபத்தைந்து ஆராய்ச்சிகளிற் பதினெட்டு நிகழ்ச்சிகள் செவ்வையாகவே முடிந்தன; மற்ற நான்குமட்டுஞ் சிறிது வழுவின. இவைகளைக் கொண்டு தொலைவிலிருந்தே பிறர்க்கு அறிதுயில் வருவித்துத் தாம் எண்ணியபடியே அவரும் எண்ணுமாறும் நடக்குமாறுஞ் செய்தல் சிலர்க்கு இயலுமென்பது நன்கு பெறப்படுதல் காண்க. அடிக்குறிப்புகள் 1. Dr. Carl S Xtus 2. Dr. George Lutken, M. D. 3. Piano 4. The Society for Psychical l Research 12. தாமே தோன்றும் உணர்ச்சிகள் இதுகாறும் இருவர் உணர்வோரும் உணர்த்து வோருமாய் அருகில் இருந்துந் தொலைவில் இருந்தும் ஒருவர் எண்ணங்களை மற்றவர் உணரும் முறைமைகளை விளக்கிப் போந்தாம். இனி, இங்ஙனம் பழகாதவர் சிலர் தமக்குள்ளுந் தொலைவில் நிகழும் நிகழ்ச்சிகள் தாமாகவே உள்ளத்தில் எழும் வகைகளையுஞ் சிறிது இங்கெடுத்துப் பேசுவாம். ஒருவரிடத்து ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருக்கும் காதலனுங் காதலியும் ஒருவரை ஒருவர் அகன்று தொலைவிலிருக்குங்கால் ஒருவரெண்ணங்களையும் அவர்க்கு நேர்வனவற்றையும் மற்றவர் தெரிந்துகொள்ள முயலா திருக்கையிலும் அவை அவருள்ளத்தில் தாமாகவே வந்து தோன்றுகின்றன. இதற்கு உண்மையாய் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை இங்கெடுத்துக் காட்டுவாம். தன் வாயின்மேல் கடுமையான ஓர் அடிபட்டதாக உணர்ந்து ஓர் அம்மை ஒருநாள் திடுக்கெனத் தூக்கத்தினின்றும் எழுந்து, தன் கீழ் உதடு அறுப்புண்டு இரத்தம் ஒழுகுவதாகவே தனக்குத் தெளிவாகப்பட்டதனால், தனது கைக்குட்டையை எடுத்துச் சுருட்டி அவ்விடத்தில் வைத்துக்கொண்டே தன் படுக்கைமேற் சிறிதுநேரம் உட்கார்ந்து கொண்டிருந்தாள். சிறிதுநேரஞ் சென்றபின் அவள் அத்துணியை வாயினின்றும் அகற்றிப் பார்க்க அதில் இரத்தக்கறை சிறிதும் இல்லாதிருக்கக் கண்டு பெரிதும் வியப்புற்றுத் தனக்கு அங்ஙனம் அடிபட்டிருக்க முடியாதென்றும், அடிபட்டதாகக் கண்டது கனவேயன்றிப் பிறிது அன்றென்றும் உணர்ந்தாள். உடனே அவள் தன் கைக்கடிகாரத்தை நோக்க அப்போது விடியற்காலையில் ஏழுமணியா யிருக்கக் கண்டாள். அப்போது தன் கணவன் அங்கு இல்லாமை தெரிந்து, அக் காலைப்பொழுது மிகவும் இனிதாயிருந்தமையால், அவன் அடுத்துள்ள ஏரியில் விளையாட்டுப் படகு விடப் போயிருக்க வேண்டு மென்று முடிவுகட்டினாள். அதன்பிற் சிறிதுநேரந் தூங்கி யெழுந்து காலை ஒன்பதரை மணிக்குச் சிற்றுண்டி கொள்ளும் பொருட்டு அவள் ஒழுங்குசெய்கையில் அவள் கணவன் சிறிதுநேரங் கழித்து வீட்டுக்கு வந்தான். உணவெடுக்கும் கால் வழக்கம்போல் அவன் அவள் பக்கத்தில் அமராமற்சிறிது எட்ட இருந்துகொண்டு, இடைக்கிடையே தனது கைக்குட்டையை எடுத்துச் சுருட்டி அவளுக்குத் தெரியாமல் மறைவாய் அவன் தன்வாயில் ஒற்றிக்கொள்வதைக் குறிப்பாய்ப் பார்த்தாள். பார்த்ததும் பதறிப் பெருமானே, ஏன் அப்படிச் செய்கிறீர்கள்? என்று கவலையொடு கேட்டு, நீங்கள் காயப்படுத்திக் கொண்டீர்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் அதைப்பற்றிப் பிறகு சொல்லுகிறேன், என மொழிந்தாள். அதற்கு அவன், நல்லது, நான் படகிற் பாய்விரித்துச் செல்கையில் திடீரென ஒரு கடுங்காற்று வந்து சுக்கான் திருப்புஞ் சக்கரத்தைச் சுழற்றிவிடவே அஃது என்வாயின் கீழ் உதட்டில் நன்றாய் அடித்துவிட்டது. அதனால் அடிபட்ட காயத்தினின்றும் இரத்தம் ஓயாமல் ஒழுகுகிறது, என்று கூறினாள். அதன்பின் அவள், அது நேர்ந்தபோது மணி எவ்வளவு இருக்கலாம்? உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்க, அப்போது ஏறக்குறைய ஏழுமணி யிருக்க வேண்டும் என்று விடை கூறினாள். அதன்பின் அவள் தனக்கு உண்டான தோற்றத்தை விரித்துச்சொல்ல அவனுங்கூட இருந்தவர்களும் மிக வியப்புற்றனர். ஒரு நாள் ஒரு மருத்துவர் ஒரு வீட்டின் மெத்தைமேல் நோயாளி ஒருவரைப் பார்த்துவிட்டுக் கீழ் இறங்குகையில், நான்கு ஆண்டுள்ள அவர்தஞ் சிறுமகன் தமது வீட்டுக் கற்படிக் கட்டின் கீழ்விழுந்து நன்றாய்க் காயப்பட்டதாக அவர்க்குச் சடுதியில் ஒரு நினைவு உண்டாயிற்று. இங்ஙனம் முதலிற்றோன்றிய அந்நினைவுக்குப் பின், இடையில் இடப்பட்டிருந்த ஒரு திரைமறைப்பு அப்புறம் இழுக்கப் பட்டாற்போற் காணப்பட, அக் குழந்தை படிக்கட்டின் கீழே விழுந்து கிடக்கவும் அதன் மோவாயில் இரத்தம் ஒழுகவும் நேரே காண்பாராயினர். இந்தத் தோற்றமானது திடீரென மறைந்துபோயிற்று; ஆனால், அதனைப் பற்றிய நினைவு மட்டும் அவர்க்கிருந்தது. அத் தோற்றம் உண்டான நேரங் காலை பத்தரை மணியாதலால் அதனை மட்டும் அவர் குறித்துக் கொண்டார். பிறகு, தாம் பார்க்க வேண்டிய மற்றை நோயாளிகளையும் பார்த்துவிட்டு அவர் தமது வீட்டுக்குப்போக அங்கே அவர்தங் குடும்பத்தார் அவர் குழந்தைக்கு நேர்ந்ததையும் மணி நேரத்தையும் அவர் கண்டபடியே கூறக் கேட்டு மிக வியப்புற்றார். ஒரு பெண்பிள்ளையைக் கடுமையாக அடித்தமையாற் சிறைக் கோட்டத்தில் அடைக்கப்பட்டுப் பின்னர் மன்னித்து விடுதலை செய்யப்பட்ட ஒருவர்க்கு ஒரு மனைவியும் ஐந்து ஆண்டுள்ள ஒரு பையனும் இருந்தனர். அவர் சிறைக் கோட்டத்தில் இருந்தபோது ஒருநாள் அவரது மனைவியிட மிருந்து ஒரு செய்தி அக் கோட்டத்தலைவர்க்கு வந்தது. அறிவின்மிக்க அவ்வாண்பிள்ளை இறந்து போயிற் றெனவும் அதனைத் தன் கணவற்குத் தெரிவித்தல் வேண்டுமெனவும் அத் தலைவர் அதிற் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதன்படியே தலைவர், அவரைத் தாம் இருந்த அறைக்கு வருவித்து அவரைப் பற்றிச் சில வினாவியபின் தாம் ஒரு துயரமான செய்தி தெரிவிக்கப் போவதாகச் சொன்னார். அதற்கு அவர், ஐயா, தாங்கள் சொல்லப்போவது இன்னதென்பதை அறிவேன்: என் பையன் இறந்துபோயினான் என்றார். உடனே தலைவர், அதனை நீர் எப்படி அறிந்தீர்? என்று கேட்டார். சென்ற ஞாயிற்றுக்கிழமை தாங்களுந் தங்கள் சிறு குழந்தையுங் கோயிலுக்கு வந்திருந்தபோது அந்தக் குழந்தை தூங்கிவிட்டது; அதனைத் தாங்கள் கையில் எடுத்துக்கொண்டு வருவதை யான் பார்த்தவுடனே, என் பையன் நீரில் அமிழ்ந்தி இறந்து போனதாகச் சடுதியில் எனக்கோர் எண்ணம் உண்டாயிற்று, அந் நினைவை என் மனத்தினின்றும் அகற்ற யான் எவ்வளவோ முயன்றும் என்னால் இயலவில்லை! என் கண்களில் நீர் ஒழுகிற்று; நீங்கள் என்னை அழைத்தபோது என்நெஞ்சங் கலங்கியது, நான் எண்ணியபடிதான் இருக்கப் போகிறது என்று உணர்ந்தேன், என அவர் மறுமொழி புகன்றார். இவர் தம் குழந்தைமேல் மிகுந்த அன்பு வைத்திருந்தமையால் அப் பிள்ளைக்கு நேர்ந்தது இவர்க்குடனே தோன்றலாயிற்று. மேல்நாட்டில் நூல் ஆராய்ச்சியிற் றேர்ந்த ஓர் அறிஞர் ஒருநாள் ஓர் இளம்பெண்ணைத் தாமிருக்குங் கலைக் கழகத்தில் வைத்து அறிதுயிலிற் போகச் செய்தார். ஒரு கடித வுறைக்குள் வரைந்து வைக்கப்பட்ட ஒரு வரிவடிவினை இன்னதென்று அறியும்பொருட்டு அவ்வம்மை அவ்வறிதுயில் நிலையிலேயே முயன்று கொண்டிருக்கையில், அவ் வறிஞர் தம் நண்பர் ஒருவர் பெயரைச் சொல்லி அவர்க்கு இப்போது யாது நேர்ந்தது? என்று கேட்டார். அந் நண்பரை அந்த அம்மை இக் கலைக்கழகத்தில் இதற்கு முன் இரண்டு மூன்றுமுறை பார்த்திருக்கிறாள். அவர் தம் உடம்பிற் சுட்டுக்கொண்டார், என்று அந்தப் பெண் விடை கூறினாள். அதற்கு அவர், ஓ! அவர் எவ்விடத்தைச் சுட்டுக்கொண்டார்? என்று திரும்ப வினவினார். இடது கையின்மேல்; சுட்டது நெருப்பு அன்று; அஃது ஏதோ ஒன்று; அதன் பெயர் எனக்குத் தெரியவில்லை; அவர் அதனை ஊற்றினபோது என் கருத்தாய் இருக்கவில்லை? என்று அந்த இளமாது கூறினாள். அவர் ஊற்றின அந்தப் பொருள் எந்த நிறமானது? அது சிவப்பு நிறமன்று, பழுப்பு நிறம் உடையது; அவர் மிகுதியாய்ச் சுட்டுக்கொண்டார் - தோல் அவ்விடத்தில் அதைத்திருக்கின்றது என்றாள். இவள் கண்டு கூறியது அத்தனையும் வழுவாதிருந்தது. அன்றைப் பிற்பகல் நான்கு மணிக்கு அந்நண்பர் ஒரு புட்டிலிற் சிறிது முடைநீரை1 ஊற்றல் வேண்டினார். அதனை ஊற்றுகிறபோது அவர் நிரம்பக் கருத்தாய்ச் செய்யாமையால், அது பெய்குழலில் நிரம்பி வழிந்து அதனைப் பிடித்திருந்த அவரது இடது கைம்மேல் ஓடி அதுபட்ட இடமெல்லாஞ் சுட்டுவிட்டது. அவர் உடனே அக்கையைத் தண்நீரில் தோய்த்தாராயினும், அம் முடைநீர் பட்ட இடமெல்லாங் கொப்புளித்துப் போயிற்று. இன்னும், ஓர் அம்மை தனக்குத் தோன்றிய தோற்றத்தைப் பின்வருமாறு குறிக்கின்றாள்; யான் குளிர் காய்ச்சலிற் கிடந்து நலம் அடைந்து வருகையில், யான் எனது அறையில் தனியே இருந்து சாளரத்தின் வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். என் எண்ணமானது ஒன்றிலுங் கருத்தாய் நில்லாமற் பலவற்றிற் சென்று கொண்டிருந்தது; சிறிது நேரத்திற்குப் பின் என் உள்ளமானது ஏதொரு நினைவுமின்றி வெறுமையாகக் காணப்பட்டது; என் கண்கள் நிலைபெற்று நிற்பவாயின; இடைவெளியானது வெள்ளிய நிறம் அடைவதுபோற் காணப்பட்டது. என்னைச் சுற்றிலும் உள்ள பொருள்களை யான் பார்க்கக் கூடியதா யிருந்தாலும், எதனையும் பார்ப்பது மிக வருத்தமாகவே இருந்தது. எவரோ ஒருவர் - அவர் இன்னா ரென்பதும் இன்ன இடத்தின ரென்பதும் யான் அறியேன், துன்பப்படுவதாக என் மனத்திற் பட்டமையால் யான் அவர் பொருட்டுத் துன்பப்படுவதாக உணர்ந்தேன். சிறிது நேரத்திற்குப் பின் அவர் யார் என்பதைத் தெரிந்தேன்; அவரை எப்படித் தெரிந்தேன் என்பதை அறிந்திலேன். ஆள் இன்னார் என்பதை யான் தெரிந்த பிறகு, ஒரு விடுதியிற் சதுரமான ஓர் அறையினையும், யான் இன்னாரென்று தெரிந்த அவ்வாண்மகன் மிகவுந் துன்புற்ற உடம்போடும் உள்ளத்தோடும் அதில் ஒரு படுக்கைமேல் முகங் குப்புறப்படுத்திருப்பதையும் என்னுள்ளே தெளிவாய்க் கண்டேன். அவர் மிக்க துயரத்தால் தேம்பித் தேம்பி அழுதலையுஞ், செவியாற் கேட்டிலேனாயினும், உள்ளத்தால் உணர்ந்தேன். அத் துயரத்தின் தன்மையும் எனக்குப் புலனாயிற்று. ஆனால், புறத்தேயுள்ள அதன் ஏது எனக்குப் புலப்பட்டிலது. இத்தோற்றத்திற்குப் பின் எனக்கு மிகுந்த களைப்பு உண்டாயிற்று; அது நாற்பது நிமிடங்கள் வரையில் மிகுதியாய் இருந்தது; அதன்பின் அது மெல்ல மெல்லக் குறைந்து போயிற்று. இவ்வாறு அந்தப் பெண்பிள்ளை தான்கண்ட தோற்றப் படி துன்புற்ற ஆண்மகனுக்கு அதனை ஒரு கடிதத்திற்குறித்து விடுக்க, அவர் பின்வருமாறு எழுதுகிறார். சில ஆண்டுகளுக்குமுன் யான் ஓர் அலுவலின் பொருட்டு ரோடுத்தீவின்கண் உள்ள ஒரு நகரத்தில் இருக்கையிற், பாடன் நகரத்தின்கண் உள்ள என் வீட்டிலிருந்து சடுதியில் வந்த செய்தியானது மிகவுந் துன்பத்தைத் தருவதாய் என்னை அறக்கலக்கிவிட்டமையால் யான் இறங்கியிருந்த விடுதியில் எனக்கென விடப்பட்ட நாற்சதுரமான பெரிய அறைக்குட் சென்று எனது படுக்கைமேல் நெடுநேரம் பெருந்துயரத்தொடு முகங்கவிழ்ந்து கிடந்தேன். இங்ஙனம் நெடுநேரஞ் சென்ற பிறகு அத் துன்பத்தின் கடுமை தணிந்தமையால் அவ்வறையைவிட்டு வந்தேன். அடுத்தநாள் யான் பாடன் நகரத்திற்குச் சென்றேன். அதற்கு அடுத்தநாள் எனது துயரத்தின் தோற்றத்தைக்கண்ட பெண்மணியாரின் கடிதம் எனக்கு வந்தது. அவ்வம்மை மேலை நியூயார்க்கில் உள்ள ஒரு நகரத்தினின்றும் நாட்குறித்து அக்கடிதத்தை எனக்கு அனுப்பினார். வெள்ளிக்கிழமை இரண்டு மணிக்கு எனக்கு யாது நேர்ந்தது என்பதைக் காலந்தாழாது தமக்குத் தெரிவிக்கும்படி அவ்வம்மையார் கெஞ்சிக் கேட்டார். அதேநாளில் அதே மணி நேரத்திற்றான் நான் முன்னே கூறியபடி தூயரப்பட்டுக் கிடந்தேன். இந்த மாதரார் எனக்கு அறிமுகமான நண்பரேயாயினும், இவர் அனுப்பிய இக் குறிப்புக்கு முன் பல திங்களாக இவரிடமிருந்து ஏதொரு செய்தியுமே எனக்கு வரவில்லை; நெடுங்காலமாக இந்த அம்மையைப் பற்றி யான் நினைக்கவுமில்லை. இன்னும், என்னை அவ்வளவு துன்புறுத்திய அச்செய்திக்கும் அந்த அம்மைக்கும் ஏதோர் இசைவுமில்லை. அவ்வம்மைகண்டது உண்மையேயென உடனே யான் அவர்க்கு எழுதி அறிவித்தேன். இந் நிகழ்சசியினால், ஒருவரை யொருவர் நினையாமல் வேறு வேறிடங்களில் இருந்த விடத்தும் ஒருவர்க்கு உண்டான துன்பம் மற்றவர்க்குத் தானே புலனாகத் தோன்றினமை நன்கு அறியப்படும். இனிப், பலருக்குத் தீதான ஒரு நிகழ்ச்சி எங்காயினும் நடந்தால் அது தொலைவிலுள்ள சிலர்க்குத் தானாகவே வந்து தோன்றுதலும் உண்டு. பெர்த் என்னும் ஊரின் கண் ஒருநாள் ஓர் அம்மை தன் உடன் பிறந்தாளுக்காக ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருக்கையில் ஒரு கொடும்புயற் காற்று அவளது வீட்டைச் சுற்றி அடித்தது. அப்போது திடீரென்று அவளுள்ளத்தில் ஒரு பெருந்திகில் உண்டாயிற்று. அவள் தான் எழுதுங் கடிதத்தில் தன் நினைவை நிறுத்தக் கூடாதவளானாள். சாவையுந் தீதான நிகழ்ச்சியையும் பற்றிய எண்ணங்கள் அவள் உள்ளத்தில் நிலை பெற்றுத் தோன்றின. மக்கள் பலர் அழிந்து போனதைப் பற்றிய திகிலான ஓர் உணர்ச்சியையன்றி, எங்கே எப்படி எப்பொழுது அழிந்தார்களென்று திட்டமாக அவளுக்குவேறேதுந் தோன்றவில்லை. உடனே அவள் மேல்மாளிகைக்குப் பறந்து சென்று தன் தாயிடம் அடைந்தாள். mtŸ m‹id, ‘FHªjhŒ,