kiwkiya«-- 3 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) மறைபொருளியல் 1  மரணத்தின்பின் மனிதர் நிலை  யோக நித்திரை ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 32+352 = 384 விலை : 480/- மறைமலையம் - 3 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 384 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. á¤âuh  அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார். சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகை மணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத் திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவபுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தை யும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக் காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழ வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழி பேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித் தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமை யூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் இதுவரை வெளியிட்டுள்ள தமிழ்மண் பதிப்பகத்தின் நூல் தொகுப்புகள் 1. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 52 நூல்கள் 2. தொல்காப்பியம் - உரைகளுடன் 15 தொகுப்புகள் 3. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் - 30 நூல்கள் 4. கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி -18 தொகுப்புகள் 5. சாமிநாத சர்மா - 31 தொகுப்புகள் 6. ந.சி.க. நூல் திரட்டு - 24 தொகுப்புகள் 7. சாத்தன்குளம் இராகவன் நூற்களஞ்சியம் - 16 நூல்கள் 8. சதாசிவப் பண்டாரத்தார் - 10 நூல்கள் 9. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் - 24 தொகுப்புகள் 10. செவ்விலக்கியக் கருவூலம் - 15 தொகுப்புகள் 11. தேவநேயம் - 14 தொகுப்புகள் 12. திரு.வி.க. தமிழ்க்கொடை - 26 தொகுப்புகள் 13. உரைவேந்தர் தமிழ்த்தொகை - 28 தொகுப்புகள் 14. கருணாமிருத சாகரம் - 7 தொகுப்புகள் 15. பாவேந்தம் - கெட்டிஅட்டை - 25 தொகுப்புகள் 16. புலவர் குழந்தை படைப்புகள் - 16 தொகுப்புகள் 17. கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 தொகுப்புகள் 18. நாவலர் சோம சுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் - 5 தொகுப்புகள் 19. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் - 39 நூல்கள் 20. தமிழக வரலாற்று வரிசை - 12 தொகுப்புகள் 21. உவமைவழி அறநெறி விளக்கம் - 3 தொகுப்புகள் 22. முதுமொழிக் களஞ்சியம் - 5 தொகுப்புகள் 23. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் - 22 தொகுப்புகள் 24. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 தொகுப்புகள் 25. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை - 21 தொகுப்புகள் 26. ஐம்பெருங் காப்பியங்கள் - 5 தொகுப்புகள் 27. பதினெண் கீழ்க்கணக்கு - 3 தொகுப்புகள் 28. நீதி நூல்கள் - 2 தொகுப்புகள் 29. பி. இராமநாதன் - 10 நூல்கள் 30. யாழ்ப்பாண அகராதிகள் - 2 தொகுப்புகள் 31. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதிகள் - 3 தொகுப்புகள் 32. ந.சி. கந்தையா அகராதிகள் - 2 தொகுப்புகள் 33. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் - 40 தொகுப்புகள் 34. இளங்குமரனார் அகராதிகள் - 2 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கும் அறிஞர்களின் நூல்கள் 1. மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை 2. வ.சுப. மாணிக்கம் 3. பெரியாரியம் (தந்தை பெரியார்) 4. தமிழர் மருத்துவக் களஞ்சியம் 5. தமிழ் - தமிழ் அகராதி பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகச் சேர்த்து பொருள்வழிப் பிரித்து, கால நிரலில் ஒரே வீச்சில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோஜா முத்தையா நூலகம் புலவர் கா. இளமுருகன் (மறைமலையடிகள் மன்றம், புன்சை புளியம்பட்டி) மறை. தாயுமானவர் (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: புலவர். கா. ஆறுமுகம் மணிமொழி கருப்பையா நாக. சொக்கலிங்கம் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி வி. சித்ரா, திருமதி செல்வி, திருமதி மலர், திருமதி ஹேமலதா, திரு. ஆசம், பிராசசு இந்தியா (Process India), திருமதி கலைவாணி, திருமதி புகழ்ச்செல்வி நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்ரா மேலட்டை வடிவடைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், திராவிடன், வே. தனசேகரன், மருது தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை, எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, பிராசசு இந்தியா மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்கு பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும். மறைமலையம் தொகுப்பில் இடம்பெறாத நூல்கள் முதற்குறள் வாத நிராகரணம் (1898), துகளறு போதம் (1898), சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவை குறிப்புரை (1898), வேத சிவாகமப் பிரமாண்யம் (1900), இந்த நான்கு நூல்களும் தமிழகத்தின் பல இடங்களில் தேடியும் எங்கள் கைக்குக் கிடைக்க வில்லை. ஆதலான், மறைமலையம் தொகுப்பில் மேற்கண்ட நூல்கள் இடம் பெறவில்லை. நூலுரை மரணத்தின்பின் மனிதர் நிலை மக்கள் வாழ்வின் இயல்புகளையும் அவர்கள் ஒவ்வோர் உலகங்களில் ஒவ்வொருவகையான உடம்புகள் எடுத்து உலவுதலையும் அவர்கள் உலவும் உலகங்களின் தன்மைகளையும் நன்கு விளக்கி உண்மையை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் காட்டுதல் கண்டு பலரும் விரும்பிக் கற்பாராயினர் எனத்தம் ஞானசாகரக் கட்டுரை ஆர்வமுடன் அறிஞர்களால் ஏற்கப் பட்டது கண்டு நூலாக்கம் செய்கிறார். மறுமைநிலையை உள்ளவாறு விரித்துக் கூறும் நூல் ஒன்றேனும் தமிழில் இல்லாமையால் இதனை இயற்றலானேம் என்று தம் முகவுரையில் அடிகள் கூறுகிறார். இறப்புக்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆத்மாவுக்கு அழிவில்லை. உடலுக்கே அழிவு. வாழ்வில் செய்த வினையை எடுத்துக் கொண்டு வேறோர் உடம்பில் புகுகிறது. வேறு உலகும் உண்டு; வேறு உடம்பும் உண்டு என இம்மை மறுமை பற்றிக் கூறுகிறார். இந்த உடம்புபோக நான்கு உடம்புகள் கண்ணாடி அடுக்குகள் போல் உள. அவை சூக்குமம், குணம், கஞ்சுகம், காரணம் என்பன. பருவுடல் அழியினும் இந்நான்கு உடம்புகளும் அழியா. அவ் வுடம்புகள் நுண்ணுடம்புகள் ஆதலால் நொடிப்போதில் பல்லாயிரம் கல்செல்லும் தன்மைய. என்பதை அமெரிக்கப் பெண்மணி ஒருவர் நிகழ்வு கொண்டு காட்டுகிறார். பருவுடல் முதல் ஐந்துடலும் ஒத்த தோற்றத்ததாய் இருக்கும் என்பதை அடுத்து விளக்குகிறார். பருவுடலும் நுண்ணுடல்களும் உருவ வொப்பு உடையவேனும் வெண்ணிற ஆடை உடையதாய், கையால் தொட இயலாததாய் இருக்கும் என்பதற்குப் பலசான்றுகள் மேலை நாட்டவர் குறிப்புவழி காட்டுகிறார். தீய செய்கையர் உடை கரியதாய் கொடியதாய் இருக்கும் என்றும் குறிப்பிடுகிறார். ஆவி வடிவில் இருந்து எழுதுகோல் தானே எழுதுமாறு செய்தலும், நேருக்குநேர் உரையாடலும் நிகழ்தல் கூடும் என்பதை விளக்குகிறார். இவ்வுலகில் ஒருவருக் கொருவர் பேரன்புடனும் பேரறிவுடனும் தொடர்புகொண்டிருந்தவர் அல்லாமல் மற்றையோர்க்கு அவை நிகழா என்றும், உலக வாழ்வில் எதில் மிகு பற்று வைத்தாரோ அதனை நோக்கி மீள உலகுக்கு ஆவி வடிவில் வருதலுண்டு என்று, நல்லதும் பொல்லதுமாம் ஆவிகளின் வரலாறுகளைக் காட்டுகிறார். பழிக்குப் பழிவாங்கல், தீமைக்குத் தீமை செய்தல் என்பவற்றையும் மேலையர் எழுத்து வழிகாட்டுகிறது. ஒளியாகாய மண்டலம் முதலாக, சனிமண்டில இயற்கை வரை உரைத்து எல்லா மண்டலங்களிலும் உயிர்கள் உண்டு என்று கூறி, வரும் பிறவி பற்றிய நினைவோடு நூலை நிறைவு செய்கிறார். அனைத்தும் மேலை நாட்டவர் குறிப்புகள் கொண்டு தீட்டப்பட்டவையாக உள. யோகநித்திரை யோக நித்திரை என்னும் வடசொல்லுக்கு, அறிதுயில் என்பது பண்டே அமைந்த தமிழ்ச் சொல். அதனால் புதிதுவந்து பழகிவிட்ட சொல்லுக்கு விளக்கமாகப் பழந்தமிழ்ச் சொல்லை மீட்டெடுத்து வழிகாட்டுகிறார் அடிகள். உறங்குவதாகத் தோற்றம் தரினும் உலகியல் எதனையும் அறியாத் தன்னை மறந்த உறக்கமன்று; அறிந்து கொண்டு உறங்கும் உறக்கமாம் அறிதுயில் என்பது. âU.É.f., மறைமலையடிகள் நூல்களில் தலைப்பும் அத்தலைப்பு விளக்கமும் அமைதலைக் காணலாம். பொருளும் அருளும் அல்லது மார்க்கியமும் காந்தியமும் என்னும் திரு.வி.க. நூலையும், `மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி என்னும் அடிகளின் மற்றொரு நூலையும் காண்க. இவ்வாறு இருவர்தம் பலநூல்களின் பெயர்களும் இருத்தலை நூற்பட்டி கொண்டு அறிக. அறிதுயில் நம்மவர் வழக்கில் இருந்த கலை எனினும் உலகளாவிய கலை அது என்பதை விளக்கும் வகையால், மேலை நாட்டவர் காட்டும் சான்றுகளையும் தாம் நேரில் கண்ட சான்றுகளையும் மக்கள் வழக்கில் உள்ளவற்றையும் சான்று காட்டியே நூலைக் கொண்டு செல்கிறார். இருவகைத்துயில், அறிதுயில், மூச்சு, அமைதி, நரம்பு இளக்கம், நினைவை முனைக்க நிறுத்தல், கண்ணும் கருத்தும், தடவுதல், கட்டுரைத்தல், அறிதுயிலுக்கு ஏற்ற காலம், அறி துயிலுக்கு ஏற்றவர், அறிதுயிலில் செலுத்தும் முறைகள், மூவகைத்துயில், பயன்படுத்தும் முறைகள், தண்ணீர் மந்திரித்துக் கொடுத்தல் தீய பழக்கங்களை ஒழிக்கும் முறை, தெளிவுக் காட்சி, சில எச்சரிப்புகள் என்னும் 18 தலைப்புகள் வழியே அறிதுயில் நிலையைக் கோவைப்படுத்தும் முறையே நூற்பொருளை நுண்ணிய நோக்கர்க்கு வெளிப்படுத்தி விடுகின்றதாம். அறிவியல் வல்ல ஆய்வாளன் காட்டும் முறைபோல் தாம் தம் செய்நேர்த்தி விளங்க மெய்ப்பிக்கும் திறம் வாய்ந்தமை வெளிப்பட விளக்கமாக்கும் நூல் இது. மனக்கவர்ச்சி, பொருந்தும் உணவு, பொருந்தா உணவு, மக்கள் நூற்றாண்டு உயிர்வாழ்க்கை முதலிய பல நூல்களும் இத்தகையவேயாம். அறியாமை இருளில் நடைபெறும் துயில் ஒன்று. மற்றொன்று அறிவு என்னும் அருளிலே நிகழும் துயில் என்று பகுக்கும் அடிகள், `தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவ தெக்காலம் என்பது காட்டி மெய்ப்பிக்கிறார். மருள் என்பது அறியாமையைச் செய்வது, அருள் என்பது தூய அறிவு மயமாய் விளங்குவது. பருவுடம்பின்றி உயிர்க்கு அறிவு சிறிதும் விளங்குவது இல்லை. என அறிதுயிலை விளக்குகிறார். ஓகத்திற்கு மூலமாம் மூச்சுக் காற்றுப் பயிற்சியை எளிதில் விளக்குகிறார். இப்பயிற்சி கொள்ளும் நேரம், இடச் சூழல் சினம், கவலை இல்லாமை, நல்லெண்ணப் பொதிவு, பயிற்றுவார் பயில்வார் நிலை என்பவற்றைக் கூறுகிறார். சொல்லுக்கும் செயலுக்கும் மனம் முந்தியதாதலால் மன அமைதியை முதற்கண் கற்றுக் கொள்ள வேண்டும்; தீயவையாம் எண்ணம் இலாமைவேண்டும். எதனைச் செய்தாலும் மனத் தொடும் இயைந்ததையே செய்தல் வேண்டும். மனம் ஒருநிலைப் படச் செய்தல் வேண்டும். நடைப்பழக்க நலம், பழக்கத்தால் செய்யும் வேண்டாச் செயலின் கேடு என்பவற்றையும் அமைதி யில் கூறுகிறார். நரம்புகளைத் தளர விடுதலே இளைப்பாறுதல்; அத்தகை யனுக்கு நினைத்தவுடன் உறக்கம் எய்தும்; இறுகிய உடம்பும், கடுகிய உழைப்பும் அறிவு வளர்ச்சி விரும்புவார்க்கு வேண்டப்படுவன அல்ல என நரம்பு இளக்கத்தில் நவில்கிறார். நினைவை, முனைக்க நிறுத்த வல்லாரே எச் செயலையும் செவ்வையாகச் செய்து முடிக்க வல்லார். நினைவை முனைக்க நிறுத்த வல்லாரே பிறரைத் தம் வயப்படுத்தவும், நினைவாலேயே பிறரைச் செயல் புரிய வைப்பாராயும் விளங்குவர் என்பனவற்றைக் `கண்ணும் கருத்தும் என்பதில் விளக்குகிறார். அதுவே மக்களால் `மருள் எனப்படுகின்றது என்கிறார். தடவுதலாலும், கட்டுரைத்தலாலும் அறிதுயிலில் அமர்த்தக் கூடும் என்பதை விளக்கி, நினைவுத்துயில், நினைவற்ற துயில், நடைத்துயில் என்னும் மூவகைத் துயில்களைத் தக்க எடுத்துக் காட்டுகளுடன் விரித்துரைக்கிறார். தண்ணீர் மந்திரித்துக் கொடுக்கும் முறை மின்னாற்றல் உள்ளாரால் செய்யப்படுவது என்றும், தீய பழக்கங் களை ஒழிக்க அறிதுயில் பயன்படும் என்றும், அறிதுயிலில் ஆழ்த்தப்பட்டாரை விழிப்புறுத்தல் எவ்வாறு என்னும் நிலையைக் கூறி நூலை அடிகள் நிறைவிக்கிறார். மயக்க மருந்து செலுத்தாமல் மயங்க வைத்து நலப் பாடாக்கக் கண்ட கலை இஃது எனல் சாலும்! இதனைக் கையாள்வார் மிகத் தூயராக இருத்தல் கட்டாயமாக வேண்டும். - இளங்குமரன் மரணத்தின்பின் மனிதர்நிலை 1972இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... இதுவும் அறிவுக்கடல் ஐந்தாம் மலரில் இருந்து ஏழாம் மலர் வரை வெளிவந்து நூலுருப் பெற்றது ஆகும். இந்நூலில் இம்மை மறுமை, நுண்ணுடம்பின் காட்சி, அதன் உருவம், ஆவிவடிவில் நின்ற ஒரு மாதின் கடிதம், ஆவியான கிளாடன் துரையுடன் உரையாடல், ஆவி வடிவங்கள் தோன்றக் காரணம், பணப்பற்றுள்ள ஓர் ஆவியின் வரலாறு, ஹாம்லெட்டின் ஆவி வடிவம், கொலையைக் காட்டிய ஒருவனின் நுண்ணுடல், அறக்கடவுளின் ஒளியுடம்பு, ஒளி வானத்தின் இயல்பு, ஒளி வானின் உலகங்கள், நுண்ணொளியுலக வாழ்வு, வேறுபல உலகங்கள், கோளுலகங்கள், கடந்த பிறவியின் நினைவுகள், வரும் பிறவியின் நினைவுகள் முதலிய பகுதிகள் அடங்கி யுள்ளன. - இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள் இரண்டாம் பதிப்பின் முகவுரை இந்நூல் முதன்முதல் நமது ஞானசாகரம் (அறிவுக்கடல்) பத்திரிகையின் ஐந்தாம் பதுமத்து இரண்டாவது இதழில் சௌமிய ஆண்டு ஆவணித்திங்கள் துவக்கஞ் செய்யப்பட்டு, இடையிடையே பகுதிபகுதியாக வெளிவந்து, ஏழாம் பதுமத்து ஒன்பதாவது இதழின்கண் முடிவு பெறலாயிற்று. இதுவரையில் நமது செந்தமிழ் மொழியில் வெளிவராத உண்மைப் புதுப் பொருள் அடங்கிய இந்நூல் மக்கள் வாழ்க்கையின் இயல்பு களையும், அவர்கள் ஒவ்வோர் உலகங்களில் ஒவ்வொரு வகையான உடம்புகளெடுத்து உலவுதலையும், அவர்கள் உலவும் உலகங்களின் தன்மைகளையும் நன்கு விளக்கி உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனிபோற் காட்டுதல் கண்டு பலரும் இதனை விரும்பிக் கற்பாராயினர். ஆயினும், ஞானசாகரம் (அறிவுக்கடல்) பத்திரிகை வாங்குவோரன்றிப் பிறர் இதனைக் கற்பதற்கு ஏற்ற வசதி இல்லாமை கண்டு இதனை இப்போது தனிப்புத்தகமாக வெளியிடலானேம். இனி மக்கள் என்று சொல்லப்படும் உயிர்கள் எண் ணிறந்த உயிர்ப்பாகுபாடுகளில் ஒன்றிற் சேர்ந்தனவேயாகும். ஆனால், மக்கள் என்னும் உயிர்கள் நல்லதிது தீயதிது என்று பகுத்துக் காணுஞ் சிறந்த மனனுணர்வும், தீயதை விலக்கி நல்லதைக் கைப்பற்றியொழுகுங் கடப்பாடும் உடையனவாய் இருத்தலால் இவை ஏனை ஐயறிவுயிர்கள் எல்லாவற்றையும் விடச் சிறந்தனவாகும். ஆகவே, இவை இறப்புப் பிறப்புக் களின் சிறுமையுணர்ந்து இறைவன் திருவடிப் பேரின்பத்தை அடைதற்கேற்ற பெருமை வாய்ந்தனவாகும். இத்துணைப் பெருமைவாய்ந்த இவ்வுயிர்கள் தம் பிறவிப் பெருமை அறியா மலும், தமக்கு உடம்பையும் உலகங்களையும் படைத்துக் கொடுத்துத் தோன்றாத் துணையாய்த் தம்முள் விளங்கிப் பிறவிகடோறும் தமதுயிரைத் தூய்மை செய்துவரும் இறைவன் பேருதவியை நினையாமலும், தம் முற்பிறவிகளை உய்த்துணராமலும், இந்நிலவுலகின் சிறு வாழ்வையே நிலை யாக மதித்துப் பழி பாவங்களை மிகவும் தொகுத்து, மேல் வரும் பிறவிகளைப் பாழாக்குகின்றன. இறைவன் தந்தருளிய இவ்வரிய மக்கட்பிறவியை இங்ஙனம் வறிதாக்குவதன் காரணம் என்னென்று நோக்கியவழி, அவை தாம் இறந்தபின் அடையும் நிலையை ஆராய்ந்து பாராமையே யென்பது நன்கு விளங்கிற்று. உயிர்கள் மறுமையில் எய்தும் நிலைகளைப் பற்றிக் கூறும் நூல்கள் சிற்சில உளவேனும், அவற்றில், எடுத்துக் காட்டப்பட்ட கதைகள் உண்மையுடையனவென்பது புலப்படாமை யால், அந்நூற்பொருள் நம்பத் தக்கவைகளாக நமக்குத் தோன்றவில்லை. அவற்றைத் தவிர மறுமை நிலையை உள்ளவாறு விரித்துக்கூறும் வேறு நூல் ஒன்றேனும் தமிழில் இல்லாமையால், இதனை இயற்றலானேம். இதன்கண் எடுத்துக் காட்டப்பட்ட வரலாறுகளிற் பெரும்பாலன உண்மையாகவே நிகழ்ந்தவையாகும். ஆதலால் மறுமை நிலையை ஒருவாறாயினும் உண்மையான் உணர்ந்து பயன்பெற வேண்டுவார்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்னும் நம்பிக்கையுடையேம். மறைமலையடிகள் மறைமலையடிகளார் மாண்பு தனித் தமிழ்க் கொள்கையின் தந்தையார் மறைமலை யடிகளார்! அக்கொள்கையூற்றம் அவர்க்கு இளமைப் பருவத்திலேயே அரும்பி மலர்ந்தது. அவ்வுணர்வு தோன்றியதற்குப் பின்னர்ச் சிறிதேனும் அசைவின்றிக் கடைப்பிடியாகக் கொண்டு காலமெல்லாம் கடமையாற்றியவர் அவர். சங்கத் தமிழ் நூல்களுள் பலவற்றையும் அவற்றின் உரைகளையும், தொல்காப்பியம் திருக்குறள் ஆகிய நூல்களையும் அவற்றின் உரைகளையும் சைவசித்தாந்த நூல்களையும் அவற்றின் உரைகளையும் களஞ்சியத்தும் கருவூலத்தும் வைத்துக் காப்பார் போல மனத்தகத்துத் தம் பதினைந்தாம் அகவை தொட்டு இருபத்தொன்றாம் அகவைக்குள்ளேயே (1891-1897) பதித்துக் கொண்டார். அதனால், அவரை இருபதாம் அகவையில் (1896) கண்டு நுண்ணிதின் நோக்கிய பேராசிரியர் பெ. சுந்தரனார், மேலை நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுகளுடன் எழுதவும் ஆராயவும் வல்லுநர் ஆவார் என்பது என்னுடைய சிறந்த எண்ணம் என்று சான்று வழங்கினார். பாட்டும் உரையும் ஈட்டும் தேனெனக் கூட்டில் சேர்த்துக் கொண்ட கொங்குதேர் வாழ்வும், இயற்கை உந்துதலும், கூர்த்த மூளையுமே அவர்க்குத் தனித் தமிழ் இயக்கத் தந்தை என்னும் பேற்றை நல்கினவாம். அடிகளாரின் வீறுசால் நோக்கும் தடைவிடைத்திறனால் தம் கொள்கை நிறுவிக் கொள்ளும் கொற்றமும் கண்டு கண்டு துய்த்த துய்ப்பே, தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களின் வழியாக, அற்றை நக்கீரனாரும் பிற்றைச் சிவஞான முனிவரும் ஓருருக் கொண்டு வேதாசலனாராகப் போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார் என்றும், வேதாசலனார் தமிழ், செந்தமிழ் - சங்கத்தமிழ் என்னை அவ்வாறு சொல்லவும் எழுதவும் செய்தது. இந்நாளில் சங்க நூல்களின் சுவையைத் தமிழ் நாட்டுக்கு ஊட்டிய பெருமை வேதாசலனார்க்கு உண்டு என்று அறுதியிட்டுக் கூறுவேன் என்றும், தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகட்கு உண்டு. அவர் தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் ஆராய்ச்சியும் பேச்சும் எழுத்தும் தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும். என்றும், அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியன்மாரை அளித்தது; அடிகளே தென்னாடு; தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது என்றும் போற்று கிறார் (வாழ்க்கைக் குறிப்புகள்) திரு.வி.க. அடிகளாரைப் பற்றி எழுதியுள்ள இக்கருத்துக்களை ஆழ்ந்து எண்ணிப் பார்ப்பின், அடிகளார்க்குத் தமிழுலகம் பட்டுள்ள கடப்பாடு மலைமேல் விளக்கென விளங்கும். அடிகளார் பிறப்பும் தொண்டும் ஆய்வும் வீறும் எத்தகு பெருமைக் குரியன என்பதைத் தமிழுள்ளங் கள் தளிர்ப்புறப் பாராட்டத் தவறா அல்லவோ! தமிழுக்கு அடிகளார் செய்த செவ்விய பணி, அல்லது அடிகளாரால் தமிழ்மொழி பெற்ற நயப்பாடு எளிதா? அவற்றையெல்லாம் விரிய விரிய ஆராய்ந்த மொழி ஞாயிறு பாவாணர், மறைமலையடிகள் பல்துறையாற்றற் பதிகம் பாடினார். அப்பதிகத்தில் ஒரு பாட்டு; ஒரோ ஒரு பாட்டு: மூவா யிரமாண்டு மோது வடமொழியால் சாவாந் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டு வந்த அப்பர் அமரர் மறைமலை யார் என்பது. அப்பர் என்றது தனித் தமிழ்த் தந்தை என்பதைக் குறிப்பது. அமரர் என்பதற்குப் போர் மறவர் என்பது பாவாணர் குறிப்பு. அடிகளார் தொண்டின் பயன்பாட்டை நன்கனம் ஆய்ந்தார் மூதறிஞர் செம்மல் வ.சு.ப. மாணிக்கனார். அதனால், மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் தமிழ்த்தாயின் நெஞ்சு புரையோடாதும் தமிழர் அறைபோகாதும் காத்தது; தமிழின் வயிற்றில் இருந்து முன்பு பல திராவிட மொழிகள் கிளைத்து அதன் பரப்பைச் சுருக்கியது போல மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய திராவிட மொழி பிறந்து தமிழை இன்னும் குன்றிக் குலையாதவாறு தடுத்தது. இன்று பாடநூல்கள் பெரும்பாலும் தமிழ் வடிவாக வருகின்றன. ஒரு சார் இளைஞர் கூட்டம், எழுத்தாளர் கூட்டம் குடிநீரைத் தூய நீராகக் காத்தல் போலத் தமிழைத் தூயதாகக் காத்து வருகின்றன. கலப்பு மிகுதியிருந்தாலும் பல செய்தித் தாள்கள் தமிழ்த் தூய்மையையும் முடிந்த அளவு பேணி வருகின்றன. வாழ்த்துக்கள் வரவேற்புகள் அழைப்பிதழ்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பைங்கூழ் வளரும் பைந்நிலங்களாக மிளிர்கின்றன. இந்நன் மாற்றங்களையெல்லாம் மறைமலையடிகளைப் பெற்றமையால் தமிழ்த் தாய் பெற்றாள். அத்தவமகன் அடிச் சுவட்டை அன்புச் சுவடாகப் போற்றிப் பாலின் தூய்மை போலத் தமிழின் தூய்மையைக் கடைப்பிடித்து வாழும் இளைய மறைமலையடிகள் இன்று பல்கி வருப. ஆதலின் தமிழ் தனித் தடத்திற் செல்லும் புகைவண்டி போலப் பழைய புதிய தன் சொற்களைக் கொண்டே விரைந்து இயங்கி முன்னேறும் என்று உறுதி கொள்வோம் என்றார். (தனித்தமிழ்த் தொண்டும் எழுத்தாளர் கடமையும், கட்டுரை) பழைய புதிய தன் சொற்களைக் கொண்டே விரைந்து இயங்கி (த் தமிழ்) முன்னேறும் என்பது உறுதி யாயிற்றா என வினாவின், அடிகளாராலேயே மெய்ப்பிக்கப் பட்டமையை, தேனும் பாலும் போன்ற தூய தீந்தமிழ்ச் சொற்களால் உரைநடையும் செய்யுளுமாகிய இருவடிவிலும் பல்துறை தழுவி ஐம்பதிற்கு மேற்பட்ட அருநூலியற்றி முதலிரு கழக நிலைக்குத் தமிழைப் புதுக்கி அதற்குப் புத்துயிர் அளித்தவர் மாநிலத்தில் மக்கள் உள்ளவரை மறையாப் புகழ்பெற்ற மறைமலையடிகளே என்கிறார் பாவாணர் (வடமொழி வரலாறு. முன்னுரை) தகவார்ந்த தமிழ் எழுதுவதற்குத் தம்மை மேற்கோளாகக் கொள்ளல் சாலும் என்பதை, யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் நீங்கள் செவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழை யின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள் என்று கடிதத்தில் பொறித்தமை விளக்கிக் காட்டும். (மறைமலையடிகளார் கடிதங்கள்-1). அடிகளார் நூல்களைக் கற்றால் தமிழின் முழுதுறு பரப்பைக் கற்ற பயன் செய்யும் என்பது அவர் தம்மைத் தாமே மதிப்பிட்ட மதிப்பீடாம். அதனை அவர் தம் திருமகனார் மறை. திருநாவுக்கரசு அவர்கள் யான் ஐம்பது ஆண்டுகட்கு மேலாக ஏராளமான நூல்களை ஆராய்ந்து கண்ட முடிவு களை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல. உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறிய முடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்குந் தொல்லையை மேற்கொள்ள வேண்டியதில்லை. அது முடியவும் முடியாது. தேவையும் இல்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளையெல்லாம் பிழிசாறாக யான் வடித்துள்ளேன். என் நூல்களைப் படித்தால் போதும். அதனால் தமிழ் முழுதுங்கற்ற பயனை அடையலாம் என்பர் என்கிறார். (மறைமலையடிகள் வரலாறு - 827) எடுத்துக்கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு என்பது நினைவும் சொல்லும் செயலும் ஒருப்பட்டு நிற்கும் ஒரு தன்மையாம். அத்தன்மைக்குத் தம்மைத் தாமே சான்றாக்கிக் கொண்டு நிலைப்படுத்திய சான்றோர் மறைமலையடிகளார் என்பது இதுவரை கண்டவற்றால் விளங்கும். தனித் தமிழ் ஊற்றம் ஏற்படு முன்னரே தமிழ்ச் சொல் பிறசொல் என்னும் ஆய்வு மேற்கொண்டிருந்தார் அடிகளார். 1902இல் ஞானசாகரம் என்னும் மாதிகையை அடிகளார் தொடங்கினார். ‘தமிழ் வடமொழியினின்றும் பிறந்ததா? என்றும் தமிழ் மிகப் பழையதொரு மொழி என்றும் கட்டுரைகள் அந்நாளிலேயே எழுதினார். 1903இல் கலைநூற் புலமைப் பாடநூல்களுள் ஒன்றாக முல்லைப்பாட்டு இருந்தது. அதற்கு அரியதோர் ஆய்வுரை கண்டார் அடிகள். இப்பாட்டினுள் இடைச் சொற்களையும் வேற்றுமை உருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற்கள் சிறிதேறக் குறைய ஐந்நூறு சொற்களாகும். இவற்றுள் முன் வந்த சொல்லே பின்னும் வருமாயின் பின்வந்தது எண்ணப்படவில்லை. இவ்வைந்நூறு சொற்களுள் நேமி, கோவலர், படிவம், கண்டம், படம், கணம், சிந்தித்து, விசயம், அஞ்சனம் என்னும் ஒன்பதும் வடசொற்கள். யவனர் மிலேச்சர் இரண்டும் திசைச் சொற்கள். ஆக இதனுட் காணப்பட்ட பிறமொழிச் சொற்கள் பதினொன்றேயாம். எனவே இப்பாட்டினுள் நூற்றுக்கு இரண்டு விழுக்காடு பிற சொற்கள் புகுந்தன என்றறிக; ஏனையவெல்லாம் தனிச் செந்தமிழ்ச் சொற்களாகும் என்று ஆய்ந்து எழுதுகிறார். (பக்.56) 1906இல் பட்டினப்பாலை கலைநூற்புலமைக்குப் பாடமாக இருந்தது. அதற்கும் ஆய்வுரை கண்டார் அடிகளார். இப்பாட்டின்கண் சிறிதேறக் குறைய ஆயிரத்து முந்நூற்று அறுபத்தொன்பது சொற்கள் இருக்கின்றன. இவற்றுட் பதினொரு சொற்கள் வடசொற்களாம். அவை மகம், அங்கி, ஆவுதி, பூதம், மது, பலி, பதாகை, அமரர், கங்கை, புண்ணியம், சமம் என்பனவாம். ஞமலி என்னும் ஒரு சொல் பூழி நாட்டுக்குரிய திசைச் சொல்லாகும். ஆகவே இப்பாட்டில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு பிற நாட்டுச் சொற்கள் கலந்தன என்பது அறியற்பாற்று. இதனால் இவ்வாசிரியர் காலத்தில் தமிழ் மிகவும் தூயதாய் வழங்கப்பட்டு வந்ததென்பது புலப்படும் என்க என்கிறார். (பக் 77) தமிழ்ச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் எண்ணிக் காட்டிய அடிகளார் எழுதிக் காட்டிய அளவில் நின்றாரா? இல்லை! மறுபதிப்புகளில் தம் எழுத்தில் அங் கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்த பிறமொழிச் சொற்களைக் களைந்தார். அவ்வாறு களைந்ததையும் நூல் முகப்பில் குறிப்பிட்டார். பிறபிற நூல்களிலும் அம்முறையே செம்முறையெனக் கைக்கொண்டார். 1902ஆம் ஆண்டில் அடிகளார் தோற்றுவித்த மாதிகை ஞானசாகரம் என்பது. 1911இல் தோற்றுவித்தது. சமரச சன்மார்க்க சங்கம். தனித் தமிழ் வாழ்வாகிய அடிகளார் சுவாமி வேதாசலமாக இருந்த தம் பெயரை, மறைமலையடிகள் ஆக்கினார். ஞான சாகரத்தை அறிவுக்கடலாக் கினார். சமரச சன்மார்க்க சங்கத்தைப் பொதுநிலைக் கழகமாக்கினார். தம் கொள்கைக்குத் தாமே சான்றானார். சான்றோரைச் சார்ந்த சான்றோர் எவ்வாறாவர்? அவரும் சான்றாவர் தாமே! பால சுந்தரமாகப் பயில வந்தவர். இளவழகனார் ஆனார்! அழகரடிகளும் ஆனார்! அடிகளார் மகளார் திரிபுர சுந்தரியார் முந்நகரழகி யானார்; மருகர் குஞ்சிபாதம் தூக்கிய திருவடியானார்! பின்னர்ப் பிறமொழிப் பெயருடையார் தனித் தமிழ்ப் பெயர்களைத் தேடித் தேடிப் பெருமிதமாக மாற்றிப் பேணும் நிலைமை தமிழ் மண்ணுக்கும், கடல் கடந்தும் நிலங்கடந்தும் வாழும் தமிழ் கூறு நல்லுக மண்ணுக்கும் இயல்நெறி யாயிற்று! அடிகளார் கொள்கையில் வீறிய மொழிஞாயிறு பாவாணரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் உலகத் தமிழ்க் கழகம் கண்டு சிற்றூர் பேரூரெல்லாம் பேராலமரமெனக் கால்கொள்ள வைத்து வளர்த்தனர். இவ்வியக்கச் செயலால் மாறேம் என்பாரும் மாறி வருதல் கண்கூடாக் கண்டறிய வாய்க்கின்றது. மாறி நின்றோரும் மாறி நிற்கும் நிலைமையும் இல்லாமல் இல்லை! ஒட்டு மொத்தப் பார்வையாகப் பார்த்தால் ஒருநிலைப்பாடான மொழியாக்கச் செயற்பாடு, வாழும் மக்கள் முயற்சியளவில் நின்றுவிடாது! ஆளும் அரசுக்கே பெரும்பங்கு உண்டு. ஆளும் அரசு, வாழும் அறிஞர் பெருமக்களை அவர்கள் வாழுங் காலத்திலேயே பயன்படுத்தி மொழி யாக்கச் செயல்களை நிறைவேற்றுதல் வேண்டும். எந்தமண் எமக்கு ஆளுரிமை தந்ததோ அம்மண்ணின் மொழிக்கு வாழுரிமை செயல்களையெல்லாம் செய்தே ஆவேம் என்னும் திண்ணிய நோக்கும், ஆக்கச் செயல்களும் தொடர்ந்து கிளர்ந்து நடைப்பட்டிருக்கு மானால் அடிகளார் இயக்கம் தோன்றி எண்பான் ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் ஆட்சி மொழிச் சிக்கலோ, பயிற்று மொழிச் சிக்கலோ, வழிபாடு வழக்கு இசை அறிவியல் என்பவற்றின் நிலை மொழிச் சிக்கலோ இருக்க வாய் ப்பில்லையாம். அவ்வாய்ப்புகள் உண்டாதலே அடிகளார் மாண்பையும் கடைப்பிடிகளையும் உலகறியச் செய்யும் உயர்வினதாம்! இங்குக் குறிக்கப்பட்ட மாண்பு மொழி பற்றியதே! அடிகளாரின் பல்துறையறிவும், சமயச் சீர்திருத்த நோக்கும், பிறவும் தனித்தனி மாண்பினவாம். இரா. இளங்குமரன் உள்ளுறை பக்கம் 1. இம்மை மறுமை 15 2. சூக்குமசரீரங்கள் 19 3. சூக்குமசரீர யாத்திரை செய்த ஒருவர் சரித்திரம் 21 4. சூக்குமசரீரத் தோற்றம் 24 5. சூக்கும உடம்பின் வடிவு 26 6. ஆவி வடிவில் நின்ற ஒரு மாதின் கடிதம் 36 7. ஆவியான கிளாடன் துரையுடன் உரையாடல் 44 8. ஆவிவடிவங்கள் தோன்றுதலின் காரணம் 58 9. பணப்பற்றுள்ள ஓர் ஆவியின் வரலாறு 65 10. ஹாம்லெத் அரசரின் ஆவிவடிவம் 68 11. கொலையைக் காட்டிய குறவன் ஆவேசம் 73 12. பழிக்குப் பழி வாங்கின ஓர் ஆவேசம் 77 13. தீது செய்தவர்க்குத் தண்டனை 86 14. அறக்கடவுளின் ஔயுடம்பு 89 15. ஒளியாகாயத்தின் இயல்பு 93 16. ஒளியாகாய உலகங்கள் 112 17. சூக்கும ஒளியுலக வாழ்க்கை 114 18. இங்குள்ளபடி அங்கும் 131 19. வேறு பல உலகங்கள் 136 20. சூரியமண்டில இயற்கை 137 21. சந்திரமண்டில இயற்கை 140 22. செவ்வாய்மண்டில இயற்கை 142 23. புதன்மண்டில இயற்கை 144 24. வியாழமண்டில இயற்கை 145 25. வெள்ளிமண்டில இயற்கை 148 26. சனிமண்டில இயற்கை 150 27. எல்லா மண்டிலங்களிலும் உயிர்கள் உண்மை 152 28. கடந்த பிறவியின் நினைவுகள் 158 29. வரும் பிறவிகளின் நினைவுகள் 163 1. இம்மை மறுமை மரணம் என்னுஞ் சொல்லைக் கேட்டவுடனே மனிதர் பலரும் திடுக்கிடுகின்றார்கள். அதற்குக் காரணம் யாது? இந்த உலகத்தில் தாம் மிகவும் வருந்தித் தேடிய பொன்னையும், பொருளையும் விட்டுப் பிரிய மனம் இல்லாமற் பலர் வருந்துகின்றனர்; வேறு பலர் தம் அன்பிற் சிறந்த அழகிய மனையாளைப் பிரிய மனம் இன்றி வருந்துகின்றனர்; மற்றும் பலர் தாய்தந்தையர், உறவினர், நண்பர் முதலியோரைப் பிரிய மாட்டாமல் வருந்துகின்றனர்; இன்னும் பலர் பிள்ளைகளையும், உடன்பிறந்தாரையும் விட்டுப் போகக்கூடாமல் வருந்து கின்றனர். இவர்கள் இப்படியிருக்க, வேறு சிலர் முரட்டு சுபாவ முடையவர்களாய் வெட்டுக்கும், குத்துக்கும், கொலைக்கும் துணிந்து மரணம் அடைவதற்கு அஞ்சாதவர்களாய் எந்த நேரத்திலாயினும் தம் உயிரை மாய்த்தற்குச் சித்தமாயிருக் கின்றார்கள். இன்னும் ஒரு வகையார் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று நினைத்து தாம் உண்ணுவதும், உறங்குவதும் சுகித்திருப்பதுந் தவிர வேறு ஒன்றையும் எண்ணாதவர்களாய்க், கடவுளும் இல்லை, ஆத்மாவும் இல்லை, முற்பிறப்பும் இல்லை, பிற்பிறப்பும் இல்லை, புண்ணியமும் இல்லை, பாவமும் இல்லை, எந்த வழியிலாயினும் திரவியத்தைச் சம்பாதித்துச் சுகமாய் வாழ்வதே சுவர்க்கம், அஃது இல்லாமல் வறுமைப்படுவதே நரகம், நான்கு பூதங்களால் ஆன இந்த உடம்பு அழிந்தால் அதனோடு உயிரும் அழிந்துபோகும் என்று சொல்லி மறுமையைப் பற்றிச் சிறிதாயினும் சிந்தியாமல் மிருகங்கள், பறவைகளைப் போற் காலங் கழித்துவருகிறார்கள். இப்படிச் சொல்லிய இந்த மூன்று திறத்தாரும் இந்தச் சரீரம் அழிந்த பின் ஆத்மாவானது அடையும் நிலைமையினைச் சிறிதேனும் பிரயாசை யெடுத்துக்கொண்டு விசாரணை செய்வார்களானால் அவர்கள் மேற்சொல்லியவிதமாகக் காலங்கழிக்க இடம் இராது. மரணம் என்னுஞ் சொல்லைக் கேட்டவுடனே திடுக்கிடுவோர், மரணத்திற்குப்பின் ஆத்மாவுக்கு உண்டாகும் சக்தியையும், இன்பத்தையும் அறிவார்களானால் மரணம் அடைந்த பிறகும் தம் ஆத்மாவானது தமக்கு உற்றாரா யுள்ளவர்களோடு உறவாடி மகிழக்கூடும் என்றும், அவர் களுக்குப் பலவகையான உதவிகளும் செய்யக்கூடும் என்றும் அறிந்து மரணத்திற்குச் சிறிதும் அஞ்சாமல் வாழ்வர். பாவ வழிகளிற் புகுந்து கொலைத்தொழிலிற் பழகி மரணத்திற்குத் துணிந்து தம்முயிரைத் துரும்பு போல் நினைத்திருப்பவர்கள், மரணம் அடைந்தபின் தம் கெட்ட செய்கைகளால் தாம் அடையும் பெருந்துன்பத்தை அறிவார் களானால் இந்தப் பிறவியில் தம்மைத் திருத்திக்கொண்டு எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்து சிறப்படைவார்கள். நாத்திகம் பேசிக்கொண்டு இந்த உடம்போடு எல்லாம் போய்விடும் என்று சொல்லித் திரிபவர்கள், தம் உடம்பு அழிந்தாலும் தம் உயிர் அழியாமல் நின்று பலவகையான மாறுதல் அடைந்து பல பிறவிகளிற்பட்டுச் சுழல்வதை எள் அளவேனும் அறிவார்களானால், தாம் பிசகாக எண்ணிய எண்ணங்களை எல்லாம் மாற்றித் தாம் விருத்தி அடைவதற்கான வழிகளைத் தேடிக் கொண்டு சுகமாய் வாழ்வார்கள். ஆகவே, மனிதர்கள் எல்லாரும் இந்தப் பிறப்பையே பெரியதாக எண்ணி, இனிவரும் பிறப்புக்களையும், இறந்த பிறகு ஆத்மா அடையும் நிலைமையினையும் சிறிதாவது விசாரியாமல் காலங்கழிப்பது மிகவும் பொல்லாதது. இன்றைக்கு உயிரோடு இருப்பவன் ஒருவன் நேற்று நான் உயிரோடு இருந்ததில்லை என்றாவது, நாளைக்கு நான் உயிரோடிருக்க மாட்டேன்; எல்லாம் இன்றோடு முடிந்து போயிற்று என்றாவது சொன்னால் அவனை மற்றவர்கள் எல்லாரும் பித்தம் பிடித்தவன் என்று சொல்வார் களன்றோ? நேற்றிருந்தவன் இன்றைக்கும் இன்றிருக்கிறவன் நாளைக்கும் உயிர்வாழ்தலை நாம் பிரத்தியட்சமாய் அறிந்து கொள்வதுபோல, முற்பிறப்பி லிருந்தவன் இப் பிறப்பிலும், இப் பிறப்பிலிருக்கின்றவன் இனிவரும் பிறப்பிலும் இருப்பான் என்பது திண்ணம். நேற்றுக் கட்டத்தொடங்கிய ஒரு வீடானது நேற்றே கட்டப்பட்டு முடிவுபெறாமல், இன்றும் நாளையும் கட்டப்படுதல் போல, முற்பிறவிகளில் நாம் கட்டத் தொடங்கிய மோட்ச வீடானது அப் பிறவிகளிலேயே முடிவுபெறாமல், இப் பிறவியிலும் இனிவரும் பிறவிகளிலும் கட்டப்பட்டுக் கொண்டே வரும். நேற்றுத் துவங்கிய ஒரு தொழிலானது இன்றும் நாளையும் தொடர்ச்சியாக வருவது போலவே, முற்பிறவிகளில் துவங்கிய நமது கர்மமும் இப் பிறவியிலும் இனிவரும் பிறவிகளிலும் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும். ஆத்மாவானது என்றும் அழிவில்லாத பொருள்; அது மேலே போர்த்துக்கொண்டுவரும் இந்த உடம்புக்குத்தான் அழிவே யல்லாமல் அறிவுரூபமாயிருக்கும் அந்த உயிருக்கு எக்காலத்தும் அழிவேயில்லை. இன்றைக்கு ஒரு வீட்டில் குடியிருக்கும் ஒருவன் இன்னுஞ் சில மாதங்கள் கழித்து வேறொரு வீட்டுக்குப் போவதுபோல, இப்போது இந்த உடம்பில் இருக்கும் உயிரானது இதை விட்டு மற்றொரு பிறவியில் மற்றோர் உடம்பிற்குப் போகின்றது. ஒரு வீட்டிலிருந்த ஒருவன் வேறொரு வீட்டிற்குப் போகும் போது, தான் அவ் வீட்டைவிட்டுப் போனாலும் தன் வாழ்க்கைக்கு அவசியமென்று அவ் வீட்டிலே சேர்த்து வைத்த பொருள்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு போவதுபோல, உயிர் இந்த உடம்பிலிருக்குங்கால் செய்து சேர்த்த வினைகளை மாத்திரம் எடுத்துக் கொண்டு இதனை விட்டு வேறோர் உடம்பிற் செல்கின்றது. ஆகவே, நம்முயிரோடு சேர்ந்து வருவன நாம் செய்யும் வினைகளே யல்லாமல், நம்முடம்பும் அவ்வுடம்பின் சம்பந்தத்தால் வந்த மற்றப் பொருள்களும் அல்ல. இதுபற்றி யன்றோ முற்றத்துறந்த பட்டினத்துப் பிள்ளையார், அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு கைத்தலை மேல்வைத்து அழுமைந் தருஞ்சுடு காடுமட்டே பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே என்று அருளிச் செய்தனர். ஆகவே, இந்த நில உலகமும் இதில் உலாவிவரும் உடம்பும் மாத்திரமே மெய்ப்பொருள்கள் என்று எண்ணுதல் கூடாது. அப்படி எண்ணுவதினால் மனிதர் பலவகையிலே பிழையான காரியங்களைச் செய்து இப் பிறவியில் துன்பமடைவதல்லா மலும், இனிவரும் பிறவிகளிலும் துன்பம் அடைகிறார்கள். இஃது இப்போது எனக்கு உருசியைத் தருகிறதென்று பிசகாக நினைத்துப் பனம் பழத்தை வேண்டியமட்டும் புசித்தவன் ஒருவன் இன்னுஞ் சிலநாட் கழித்துப் பித்தநோயாற் பிணிக்கப்பட்டு வருந்துதல்போல இப்போது இஃது எனக்கு நல்லதெனக் கருதித் தீயவழியில் ஒழுகினோன் மறுமையில் அதனால் வருந் துன்பத்திற்கு உள்ளாவது நிச்சயம். ஆகையால், இந்நிலவுகத் தினுஞ் சிறந்த வேறு உலகங்கள் உள்ளன என்றும், அவ்வுலகங்களிற் சஞ்சரிப்பதற்கு இந்த உடம்பைக் காட்டினும் இன்னும் வேறு உடம்புகள் உள்ளன என்றும் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டுவது ஒவ்வொருவருக்கும் முதன்மை யான கடமையாம். இந்த உடம்பு அழிந்துபோகவே எல்லாம் அழிந்துபோகும் என்று எண்ணுவதும் சொல்லுவதும் பெரும் பிழையாகும். 2. சூக்குமசரீரங்கள் இந்த நில உலகத்தில் இயங்கும் இந்த உடம்பு மிகவும் தடிப்பாய்க் கனத்த பொருள்களின் சேர்க்கையால் உண்டானது; ஆகையினாலேதான் இதனைத் தூலதேகம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. கனத்த பொருளான இத்தூலதேகம் மென்மையான காற்றிலும் ஆகாயவெளியிலும் சஞ்சரிக்க மாட்டாததாக இருத்தலின், இஃது உலாவுவதற்கு ஏற்றதான இந்த நில உலகம் நமக்கு வாய்த்திருக்கின்றது. ஆனால், இந்தத் தூலதேகத்தினுள்ளே இன்னும் வேறு நான்கு உடம்புகள் அமைக்கப் பட்டிருக்கின்றன; வெங்காயச் சருகுகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட் டிருத்தல்போல நமக்குள்ள இவ்வுடம் புள்ளும் ஒன்றன்மேல் ஒன்றாக கவிந்திருக்கின்றன; வெங்காயச் சருகுகளில் ஒன்று மற்றொன்றினை ஊடுருவிக் கொண்டு நில்லாது, மற்றுக் கண்ணாடியின் அப்புறத்தே தோன்றின ஒளியானது அதனை ஊடுருவிக்கொண்டு அதன் இப்புறத் தேயும் விளங்குதல்போல இத் தூல உடம்பில் வியாபித்திருக்கின்றன. இந்த நான்கு உடம்புகளும் ஒன்றுக்குமேல் ஒன்று நுண்ணிய தாகவும் மெல்லியதாகவும் இருக்கும். இவ்வுடம்பு களின் தன்மையெல்லாம், ஞானசாகரம் 3ஆம் பதுமத்தில் வெளியான சிவராஜ யோகம் என்னும் சொற்பொழிவில் விரிவாக எழுதியிருக்கின்றோம். அங்கே கண்டு கொள்க. இந்த நான்கு உடம்புகளும் சூக்குமசரீரம், குணசரீரம், கஞ்சுக சரீரம், காரணசரீரம் என்று பெயர் பெறும்; அல்லது அவை பிராணமயகோசம். மனோமயகோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமயகோசம் என்று வேறு பெயர் இட்டும் வழங்கப்படும். நமது கண்ணுக்கு எதிரே தோன்றும் இந்தத் தூல வுடம்பானது அழிந்துபோனால், அதற்குள் வியாபித்திருக்கும் மற்ற நான்கு உடம்புகளும் அது போல் அழிந்துபோவதில்லை; அவை நான்கும் உயிரோடு மிக்க ஒற்றுமை உடையனவாய்ப் பிறவிகள் தோறும் தூல உடம்புகளிற் சென்று பிரவேசிக்கும். ஆகவே, மரணம் என்பது சாதாரணமாய் நமக்குள் ஐந்து உடம்புகளில் ஒன்று மாத்திரம் நம்மைவிட்டுப் பிரிந்து அழிந்து போவதை அறிவிக்கின்றது. இங்ஙனம் நம்முடைய ஐந்து கூறுகளில் ஒன்று அழிந்து போவதை உற்று நோக்குங்கால், நாம் இதற்காக ஏன் துக்கிக்க வேண்டும்? என்பது புலப்படும். இந்தத் தூலத்தேகம் போனால் மற்றும் ஒரு தூலதேகம் அவசியம் வரப்போகிறது. இதற்காக நாம் கவலைப்படுவது ஏன்? இதனைக்காட்டிலும் நுட்பமான நம்முடைய மற்ற உடம்புகள் இதுபோல் விரைவில் அழிந்து போகாமையானும், அவ் வுடம்புகளைப் பாதுகாப்பதற்கு நற்செய்கையும் நற்சிந்தனையுமே அவசியமாகுமல்லது தூல உடம்பிற்கு வேண்டும் சோறுந் தண்ணீரும் கூறையும் அல்லவாகலானும், அந்தச் சூக்கும சரீரங்களில் இருந்தே நாம் செய்தற்கு அருமையான பல காரியங்களையும் செய்யலா மாகலானும், நாம் அந்தச் சரீரங்களில் நமது அறிவு நிகழும்படி செய்து கொள்ளல் வேண்டும். நம்முடைய தூலசரீரமானது நாம் நினைத்தபடி யெல்லாம் இயங்கவல்லது அன்று; இடத்தினாலும் காலத் தினாலும் அதன் செய்கைகள் வரையறுக்கப் பட்டிருக்கின்றன; சென்னையிலிருக்கும் ஒருவன் சிதம்பரம் போக எழுந்தானானால் அவன் எவ்வளவு வேகமாய்ச் சென்றாலும் அங்கே போய்ச் சேருவதற்குப் பலநாள் செல்லும்; நம்முடைய சூக்குமசரீரங்களோ அதுபோல் அவ்வளவு மிகுதியாகக் காலத்தினாலும் இடத் தினாலும் வரையறுக்கப் படுவனவல்ல; கண்மூடிக் கண் திறப்பதற்குள் பல்லாயிரம் மைல் தூரம் போய்த்திரும்பும் சக்தி உடையன. இதனை மெய்ப் படுத்துதற்கு உண்மையாக நடந்த ஒரு செய்தியை இங்கே எடுத்துக் கூறுவாம். 3. சூக்குமசரீர யாத்திரை செய்த ஒருவர் சரித்திரம் அமெரிக்கா தேசத்திலுள்ள ஒரு பெண் தன் கணவன் வியாபார காரியமாகத் தூரதேசம் போய்விடத் தான் பல வருடங்கள் தனிமையிருந்தனள்; அவள் கணவன் அவளை விட்டுப் பிரிந்துபோன சில வருடங்களாக அவளுக்குக் கடிதங்கள் அனுப்பிவந்தான்; பிறகு திடீரென்று அவனிட மிருந்து கடிதம் இன்றுவரும், நாளை வரும் என்று எதிர்பார்த்த வண்ணமாய் இரண்டொரு வருடங்கள் கழித்தாள்; பின்னுங் கடிதம் வந்திலது; அதனால் அவள் மனம் சகியாதவளாய் மிகவும் வருந்திக் கப்பல் யாத்திரை போய் வருவார் பலரையும் உசாவித் தன் கணவன் இருக்குமிடம் தெரிவிக்கும்படி வேண்டினாள்; அவர்களெல்லாரும் அவள் கணவனிருக்குமிடந் தெரியாதென்றே சொல்லி விட்டார்கள். அனலிற்பட்ட புழுப் போல் துடிதுடித்துத் தன் நேசர்கள் பலரிடம் போய் யான் என்செய்வேன்! v‹brŒnt‹! என்று பதறியழுதாள். அப்போது அவர்களுள் ஒருவர் இன்னாரிடம் போய்க் கேட்பையானால் அவர் உன் கணவனிருக்குமிடம் அறிவிப்பர் என்று அவளை ஒரு பெரியவரிடம் அனுப்பினார். மனித சஞ்சாரம் மிகுதியாயில்லாத ஒரு தனியிடத்தில் வசித்துக் கொண்டிருந்த அப் பெரியவரிடம் போய் அந்தப் பெண் தன் குறையை அறிவித்தாள். அப் பெரியவரும் அந்தப் பெண்ணைப் பார்த்து மனம் இரங்கி அம்மா, நீ இவ்விடத்திலேயே இரு, நான் அந்த அறைக்குள்ளே போயிருந்து திரும்பிவந்து உனக்கு உன் கணவனைப்பற்றித் தெரிவிப்பேன்; நான் வரும் அளவும் நீ எவ்வகையான சப்தமுஞ் செய்யாமல் இங்கேயே இரு, என்று அங்கே ஓர் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொண்டார். இந்தப் பெண் சிறிது நேரம் அங்கே காத்திருந்து பார்த்தும் அவர் வராமையால், சப்தம் இடாமல் அடிமேல் அடிவைத்துப் போய் அவ்வறைக்கதவில் சாவித் துவாரத்தின் வழியாக உள்ளே நோக்கினாள். நோக்க, அப் பெரியவர் ஒரு சாய்வான நாற்காலியில் பிணம்போற் சாய்ந்திருக்கக் கண்டாள். அதைப் பார்த்ததும் இன்னது செய்வது என்று அறியாளாய்த் தான் முன்னிருந்த இடத்தில் வந்து, மிக்க விசனத்தோடும் உட்கார்ந்துகொண்டு சிந்தித்திருந்தாள். இவள் இப்படி உட்கார்ந்திருந்த சில நிமிஷங்கட்கெல்லாம் மறுபடியும் அவ்வறையின் கதவு திறக்கப்பட்டது; உடனே அப் பெரியவர் அப் பெண்ணிடம் வந்து, அம்மா நின் கணவன் இலண்டன் மாநகரத்தில் சுகமாக இருக்கின்றார்; இப்போது தான் நான் அவரை ஒரு வசதியான சாப்பாட்டு விடுதியில் சந்தித்தேன்; சந்தித்து, நீர் அமெரிக்காவிலுள்ள உம் மனைவிக்கு நெடுங்காலமாகக் கடிதம் எழுதாதிருப்பது பிசகு; அந்த அம்மை இதனால் மிகவும் விசனம் அடைந்திருக்கிறாள் என்று சொன்னேன். அதன்மேல் அவர் கடிதம் எழுதியிருக்கிறார்; அஃது உனக்கு இந்தக் கப்பலில் வரும்; அதற்கு அடுத்த கப்பலில் உன் கணவனே உன்னிடம் வந்து சேர்வார், என்று கூறினார். இவ்வமுத வாசகத்தைக் கேட்டதும் அந்தப் பெண் மிகவும் மனம் மகிழ்ந்து அப்பெரியவருக்கு வந்தனஞ் செய்து தன் வீட்டுக்குப் போயினாள். அப்பெரியவர் சொல்லியபடியே இரண்டொரு தினத்தில் வந்த கப்பலில் தன் கணவனிடமிருந்து அவளுக்குக் கடிதம் வந்தது; அதற்கு அடுத்த கப்பலில் கணவனும் வந்து சேர்ந்தான். அந்தப் பெண் இவற்றையெல்லாம் பார்த்துப் பேரதிசயம் அடைந்தவளாய்த் தன் கணவனிடம் இதனைத் தெரிவியாமல், அவனை அழைத்துக் கொண்டு அப்பெரியவரிடம் போனாள். அவள் கணவன் அப்பெரியவரைக் கண்டதும் ஆச்சரியம் அடைந்து, இலண்டன் மா நகரத்தில் நானிருந்த ஆகார விடுதிச் சாலையில் இப் பெரியவரைச் சில வாரங்களுக்கு முன் சந்தித்தேன்; நான் உனக்கு நெடுநாளாய்க் கடிதம் எழுதாமல் இருந்து விட்டமையால் நீ விசனமாய் இருப்பதாயும் உடனே கடிதம் எழுதுவதோடு சீக்கிரம் உன் மனைவியிடம் போய்ச்சேர் என்றும் சொல்லிப் போனார் என அவளிடம் கூறினான். பின் அவ்விருவரும் அப் பெரியவரை வணங்கி அவரால் ஆசீர்வதிக்கப்பெற்று வீட்டுக்குத் திரும்பினார்கள். இஃது உண்மையாக நடந்த காரியம். இதில் சம்பந்தப்பட்டவர்கள் பேர், இடம், இது நடந்த நாள் முதலியன வெல்லாம் அனாவசியமென்று யாம் இங்கே காட்டவில்லை. இதனால் அறியவேண்டும் உண்மைகளே இங்குக் கவனிக்- கத்தக்கன. அமெரிக்கா தேசத்திற்கும் இலண்டன் மாநக ரத்திற்கும் எத்தனையோ ஆயிர மைல் தூரம் இருக்கின்றது; அத்தனை ஆயிரமைல் தூரத்தையும் மேற் சொன்ன பெரியவர் தமது சூக்குமசரீரத்தால் ஆகாய வழியே சில நிமிஷங்களிற் கடந்துசென்றார். பிறகு அவள் கணவன் கண்ணெதிரே அச் சூக்குமசரீரத்தையும் புலப்படும்படி செய்து அவனோடு சம்பாஷணையும் நடத்தினார். இதில் இன்னும் ஒரு விசேடமும் கவனிக்கத் தக்கது. அவள் கணவன் இலண்டனிற் கண்ட அப் பெரியவரின் சூக்குமசரீரத்தின் வடிவும், திரும்ப அவரை அமெரிக்காவில் பார்த்தபோது கண்ட தூலசரீரத்தின் வடிவும் ஒன்றாயிருந்தன என்றமையால், சூக்குமசரீரமானது தூல சரீரத்தின் வடிவையே முழுதும் ஒத்திருக்கும் என்பது இனிது பெறப்படுகின்றது. அவையிரண்டும் அங்ஙனம் வடிவத்தால் ஒத்திருந்தாலும், தூலசரீரம் கனமுடையதாய் நிலத்தில் மாத்திரம் சஞ்சரிக்கக்கூடியது; சூக்குமசரீரமோ கனமில்லாத மெல்லிய பொருளாய் அந்தரத்தில் மாத்திரம் இயங்கவல்லதா யிருக்கின்றது. ஆகையினாலேதான், சூக்குமசரீரத்தில் உலாவும் பேய்களுக்கும், தேவர்களுக்கும் கால் நிலத்திற் பாவாது என்று சாமானிய சனங்களும் சொல்லுகிறார்கள்; அஃது உண்மை யேயாகும். 4. சூக்கும சரீரத் தோற்றம் இனித் தூலசரீரம், சூக்குமசரீரம், குணசரீரம், கஞ்சுகசரீரம், காரணசரீரம் என்னும் நம்முடைய ஐந்து உடம்புகளும் ஒன்றாகக் கட்டுப்பட்டு நின்றாலும், தூல சரீரமும், சூக்குமசரீரமும் நேரே பொருத்தமுள்ளனவாய் ஒன்றினுடைய வடிவையே மற்றொன்றும் உடையதாயிருக்கும்; குணம், கஞ்சுகம், காரணம் என்னும் மற்ற மூன்று சரீரங்களும் இவ்விரண்டு சரீரங்களினும் வேறு பட்ட சுபாவமுடையனவாய்ச் சூக்குமசரீரத்தைக் காட்டிலும் சூக்குமமானவை களாயிருக்கும். சூக்கும சரீரம் தூல சரீரத்தின் வடிவையும் பாவனையையுமே உடையதாயிருக்கும் என்பதற்கு மேலே யாம் எடுத்துக் காட்டிய உதாரணமே சான்று. இன்னும் இரண்டொரு காட்டுகின்றோம். எம் மாணாக்கரில் சந்தான கிருஷ்ணன் என்பார் ஒருவர் உளர். இவர் இயற்கை யிலேயே மிருதுவான சுபாவமும், நுண்ணறிவும் உடையவர். இவருக்குச் சூக்குமசரீரத் தோற்றங்கள் கனவிலும் நனவிலும் அடிக்கடி தோன்றுவதுண்டு. இவர் கொஞ்சம் சிறு பிள்ளை யாயிருக்கும்போது, இவருக்கு உறவினரான ஒருவர் வீட்டில் மரணம் அடையும் நிலையிலிருந்தனர். வீட்டிலுள்ள மற்றவர்கள் அவர் படுக்கையைச் சூழ்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். இப்படி யிருக்கையில் அங்கே அருகில் நின்ற சிறுபிள்ளையான சந்தான கிருஷ்ணன், அதோ அதோ! என்று கூறினார்! அங்குள்ளவர்கள் எல்லாரும் திடுக்கிட்டுச் சுற்றிலும் மேலும் நோக்கினார்கள்; அவர்கள் கண்ணுக்கு ஒன்றுந் தென்படவில்லை; அந்தப் பிள்ளை மாத்திரம் சற்று நேரம் முன் சொன்னபடியே சொல்லிற்று; உடனே மரணாவதை யிலிருந்தவரைத் திரும்பிப் பார்க்க அவர் பிணமாய்க் கிடந்தார். இன்னும் ஒரு வீட்டில் ஒரு பெண் பிள்ளை நோவாய்க் கிடந்தாள்; இவள் ஈன்ற மக்களில் ஒரு பிள்ளை தூரதேசத்தில் ஒரு வீட்டில் அவளுக்கு நெருங்கின சுற்றத்தாரிடம் இருந்தது. ஒருநாள் அப் பிள்ளை கட்டிலிற் படுத்து உறங்குகையில், தூரதேசத்தில் நோயாய்க் கிடந்த அப் பிள்ளையின் தாய் இங்கே அப் பிள்ளை உறங்கிக் கொண் டிருக்கும் கட்டிலின் பக்கத்தே குனிந்து நின்று அதனை உற்றுநோக்குவதை அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஏவற்காரி ஒருத்தி பார்த்து உடனே வீட்டிலுள்ளாரிடம் போய் அறிவித்தாள்; அவர்கள் எல்லாம் அதிசயப்பட்டு வந்து பார்க்கையில் ஒன்றையுங் காணவில்லை; ஆனால் சில நாழிகைக்குள் எல்லாம் தூரதேசத்திற் பிணியாய்க் கிடந்த அப்பிள்ளையின் தாய் இறந்துபோனாள் என்று தந்தி சமாசாரம் வந்தது. இன்னும் இப்படியே நடக்கும் சம்பவங்கள் கணக்கில் லாமல் இருக்கின்றன. கிறிதுவர்கள், மகம்மதியர்கள் கல்லறை களில் நடுநிசியிற் சிலர் போக நேரிட்ட போது அக்கல்லறை களின் பல திறப்பட்ட வடிவங்கள் உலாவுதலையும், உட்கார்ந் திருத்தலையும் கண்டு அதிசயப்பட்டுத் திரும்பிவந்து சொல்லிய செய்திகளும் பல உண்டு. இங்கே ஒன்று கவனித்தல் வேண்டும். ஒருவர் இறந்தபின் அவர் உடம்பைப் புதைத்து வைப்பதைக் காட்டிலும், தீயிலிட்டு எரித்துவிடுவதே நல்லதென்று நல்லறிவுடையோர் பலரும் கருதுகின்றார்கள். ஏனென்றால், இத் தூலசரீரத்திற்கும் அதற்கு அடுத்த சூக்குமசரீரத்திற்கும் மிகவும் நெருங்கின உறவு இருப்பதால், இத் தூலசரீரம் அழியா திருக்குந்தனையும் அதனோடு நெருங்கிய சம்பந்தமுள்ள சூக்குமசரீரம் அதன் பக்கத்தே வந்து உலவிக் கொண்டிருக்கும். மனிதர்க்கு இத் தூலசரீரத்தில் அவ்வளவு அபிமான மிருப்பதால் இத் தூல சரீரம் உள்ள அளவும் அவர்கள் கொண்ட அபிமானத்தைத் தோற்றுவிப்பதாகிய சூக்குமசரீரம் அதன் பக்கத்திற் சஞ்சரித்துக்கொண்டே நெடுங்காலம் இருப்பதும் உண்டு. தூலசரீரத்தைத் தீயிலிட்டுக் கொளுத்தி விட்டால், சூக்குமசரீரம் இங்கு வந்து உலவுதலைவிட்டு நீங்கிப்போம். 5. சூக்கும உடம்பின் வடிவு இனி இந்தச் சூக்கும சரீரத்தின் வடிவம் தூலசரீரத்தின் வடிவத்தையே பெரும்பாலும் ஒத்திருந்தாலும், அது மேலே போர்த்திருக்கும் ஆடை மிகவும் வெண்மையாய் மெல்லிய தாயிருக்கும். ஆனாலும், சூக்குமசரீரத்தின் அம் மெல்லிய வெள்ளாடையானது கண்ணுக்கு மாத்திரம் தோன்றுமே அல்லாமல், கையினாற் பிடித்தால் அகப்படுவது அன்று. இவ்வாறு, சூக்கும உடம்புக்கும் அதன் மேற் போர்க்கப்பட்ட ஆடைக்கும் வெண்ணிறம் வருவது அவ்வுடம்பினுள் வசிக்கும் உயிரின் பரிசுத்தத்தைப் பொறுத்ததாக இருக்கின்றது. ஓர் ஆன்மா பரிசுத்தமான சிந்தனையுடையதாக இருக்குமாயின், அப் பரிசுத்தத்திற்குப் பொருந்த அதன் சூக்கும உடம்பும் ஆடையும் தும்பை மலர்போன்ற வெண்ணிற முடையதாகின்றன. அங்ஙனமின்றி அவ்வான்மா தீயசிந்தனையும் தீயசெய்கையும் உடையதாயின் அவற்றிற்கு இசையவே அதன் சூக்கும உடம்பும் ஆடையும் கரியநிறம் உடையவாகின்றன. தீயோர் இறந்த பிறகு அவர் ஆவேச உருவத்தைக் கண்டவர்கள் அது கன்னங்கறே லென்றிருந்ததைக் கண்டு அச்சமடைந்தார்கள்; இன்னும் பலர் அக்கரிய வடிவின் றோற்றத்தினால் தாங்குதற்கு அரிய அச்சமுற்று உயிரிறந்தும் போனார்கள். இவ்வுண்மையை உள்ளபடி உணர்ந்தால், இந்நில உலகத்தில் தாம் உயிரோடு இருக்கும் நாட்களில் தீயசெய்கைகளைச் செய்பவர்கள் அவற்றை விடுத்து நல்வழிப்படுவார்கள். இரண்டு கையும் விரித்தாற் பாவம் என்று அலட்சியமாய்ச் சொல்லித் தீய செயலே செய்பவர்கள், தாம் இறந்த பிறகு இருள் உலகத்தில் இருள் வடிவு தாங்கி அலைவதைச் சிறிதேனும் அறிவார்களானால் அத் தீய செயல்களைச் செய்ய முந்துவார்களா? முந்தவே மாட்டார்கள். தீய செயலைச் செய்தோன் ஆன்மாவானது மரணத்திற்குப்பின் தன் உறவினரிடத்தில் வந்து பேசிய செய்திகள் பல இருக்கின்றன. அவனது ஆவேசமானது பார்ப்பதற்குப் பயங்கரமான கரிய வடிவுடையதா யிருந்ததல்லாமலும் அது மிகவுந் துன்பப் படுவதாகவுந் தெரிந்தது; தனக்கு ஒன்றுந் தெரியாதபடி மிகவுந் தடிப்பான இருள் எங்குஞ் சூழ்ந்திருக்கின்றது என்றும், அவ்விருள் உலகத்திற் சிறிதும் இடந்தெரியாமல் தான் அலையும்போது தனக்கு அளவில்லாத அச்சமுந் துன்பமும் உண்டாகின்றன வென்றும், தன்னைப் போலத் தீயவழியில் ஒழுகினோர் ஆவேசங்கள் தன்னை வந்து வருத்துகின்றன என்றும் அத் தீயவன் ஆவேசம் பலமுறை சொல்லிப் புலம்பி யிருக்கின்றது. அவ்வாறு சொல்லிப் புலம்பிய ஆவேசங்கள் பிறகு தம் உறவினரைப் பார்த்துத் தமக்குத் துன்பம் அகலவும், தம்மைச் சூழ்ந்திருக்கும் இருள் நீங்கவும் கடவுளைப் பிரார்த்திக்கும்படி கேட்டதுண்டு. அவற்றின் வேண்டுகோளுக்கு இணங்கிய உறவினர் அப்படியே கடவுளைப் பிரார்த்திக்கச் சில நாட்களிலெல்லாம் அவ்வாசேங்களைச் சுற்றியிருந்த இருள் நீங்கிச் சொல்லுதற்கரிய அழகோடுங்கூடிய ஒரு பிரகாசந் தோன்றியதென்றும் அவ்வாவேசங்களே பின்னொருகாற் சொல்லியிருக்கின்றன. இதனால், நம்மவர்கள் இறந்த பிறகும் நாம் அவர்களுடைய நன்மையைக் கோரிப் பிரார்த்தனை செய்வது அவர்களுக்கு உண்மையிலேயே சுகத்தைக் கொடுக்கும் என்பது தெளிவாகும். இந்தக் கருத்தை உள்ளிட்டே திவச நாட்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. ஆனால், இக் காலத்தில் உள்ளவர்கள் அத் திவச நாட்களின் தாற்பரியத்தை அறியாமல், பார்ப்பார் இரண்டொருவரைத் தமது வீட்டுக்கு அழைப்பித்து, அவர்கள் தாமே பொருள் தெரியாமற் பிழையாகச் சொல்லும் சில சமகிருத வசனங்களைத் தாமும் பொருள் தெரியாமற் கேட்டு, அவர்களுக்கு ஏராளமாகக் காய்கறி அரிசி முதலிய வற்றைக் கொடுத்துத் தாம் ஏதோ சாதிர சம்மதமாய் நடந்து விட்டதாக மகிழுகிறார்கள்! சுத்த மூடத்தனமாகச் செய்யும் இந்தக் கர்மத்தினால் இறந்துபோன நம்மவர்களை நல்வழியிற் சேர்ப்பிப்பது கூடாத காரியம் . பின்னை எப்படி அவர்களுக்கு நன்மை செய்யலாமென்றால், திவச நாளில் அற்ப ஆகாரம் உண்டாவது, அன்றி நாள் முழுதும் உபவாச மிருந்தாவது தலை முழுகிச் சுத்தமான ஆடை அணிந்து, தாமே பொருள் தேடி உண்ணமாட்டாத கூன், குருடு, நொண்டி, சப்பாணி, நோயாளி முதலியோர்க்கு அன்னமிட்டு ஆலயத்திற்குக் காலை, நண்பகல், மாலை என்னும் முப்பொழுதும் சென்று இறைவனிடத்தில் மனத்தைப் பதிய வைத்து, “என் ஆண்டவனே! என் அப்பனே! அருட் கடலே! இறந்துபோன என் மூதாதைகளெல்லாரும் பரிசுத்த முடையவர்களாய்ப் பரிசுத்தமான வழிகளிற் சென்று கடைசியாக உன் திருவருட் பேரின்பத்தைப் பெறும்படி கருணை செய்ய வேண்டும்! கருணாமேகமான ஐயனே! என் மூதாதைகள் இந்த நில உலகத்தில் இருந்த நாட்களில் தாம் அறிந்தும் அறியாமலும் செய்த பெரும் பிழைகளை யெல்லாம் தேவரீர் பொறுத்தருளி, அவர்கள் அப் பிழைகளால் மறுமை உலகத்தில் வருந்தா வண்ணம் அவர்கட்கு நின் அருள் வெளிச்சத்தைக் காட்டி அவர்களெல்லாரையும் மோட்ச வழியிற் சேர்க்கத் திருவருள் பாலிக்கவேண்டும்! என்பது போலப் பிரார்த்தனை செய்வதுதான் நலமுடையதாகும். இதுதான் இறந்துபோய் இருள் உலகத்தில் வருந்திக் கொண்டிருக்கும் நம்மூதாதைகளை நல்வழியிற் சேர்ப்பிக்க வல்லதாகும். இப்படிச் செய்வதை விடுத்து அடுத்த வீட்டுக்காரனுக்காக அமாவாசை விரதம் என்பதைப் போலப் பார்ப்பாரை வரவழைத்து ஏதோ அவர்கட்குத் தொலைக்க வேண்டுவதைத் தொலைத்துவிட்டு, அப்புறம் தம்முடைய இலௌகிக காரியங்களைச் செய்து கொண்டிருப் பது உமிக் குற்றிக் கைசலித்தலோடு ஒப்ப வெறும் பயனற்ற செய்கையேயாம். அதனால் இறந்துபோன நம்மவர்கட்குச் சிறிதும் பயன் விளைவதில்லை; முழுமூடத் தனமாக இப்படித் திவச நாளைக் கழிப்பித்தலால் தமக்கும் தம் மூதாதைகட்கும் பின்னும் அளவிறந்த துன்பத்தையே வருவித்துக் கொள்ளு கிறார்கள் மானிடர்! அந்தோ! இவர்கள் எஞ்ஞான்று இம் மூடவழியை விட்டு நலம் பெறப் போகிறார்கள்! அது நிற்க. இனி, இந்நில உலகத்தில் உயிரோடு இருந்த நாட்களிற் பரிசுத்த சிந்தனையும் பரிசுத்த செய்கையும் உடையவரா யிருந்தவர்கள் இவ் வுலகவாழ்க்கையைத் துறந்து சென்றபின், மறுமை உலகத்தில் தூய வெண்ணிறமான சூக்கும தேக முடையவர்களாய்ப் பிரகாசமான ஒளி உலகத்தில் இன்புற்றிருக் கின்றார்கள். இவர்கள் தாம் தேவவுருவாக இன்புற்று வாழ் தலைத் தம்மோடு ஒத்த நால்வர்களுக்கும் இந் நில வுலகத்திற் சூக்குமதேகத்தோடுந் தோன்றி அறிவுறுத்தி யிருக்கின்றார்கள். என் ஆசிரியர் சோமசுந்தர நாயகரவர்களுக்கு இப்படிப்பட்ட தோற்றங்கள் பலமுறை தோன்றியதுண்டு. அவற்றுள் ஒன்றை இங்கே எடுத்துக் காட்டுவோம். நாயகரவர்களுக்கு மூன்று புதல்விமார் இருந்தனர். அவருள் கடைசிப் புதல்வியார் சொல்லுதற்கரிய அழகும் தேசசும் வாய்க்கப் பெற்றவர். அந்தப் பெண்மணியார் வளருந்தோறும் அவருடன் பரிசுத்த சிந்தனையும் பரிசுத்த செய்கையும் ஒருங்குவளர்ந்து வந்தன. அவர் எந்நேரமும் தேவனைத் தியானஞ் செய்வதிலும் தேவபூசை செய்யுங் காலங்களிற் சிலமுறை பூசை அறைக்குள் அவர் சிரிப்பதும் பேசுவதுங் கேட்டு நாயகரவர்கள் மிகவும் வியப்படைந்ததுண்டு. அப் பெண்மணி யாரைத் தந்தையார், பூசையில் தனியே ஏன் சிரித்தா யென்று கேட்டபோது முருகன் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றார் என்று பலமுறை அவர் சொல்லினார். இவ்வாறு நடந்து வருகையில் அப் பெண்மணியார் பருவமுதிர்ந்து புஷ்பவதி யாய்ச் சில நாட்களிற் கடுமையான சுரநோயாற் பிணிக்கப் பட்டுப் பின் சுகம் அடைந்தார். சுகம் அடைந்தபின் அவரை எண்ணெயிட்டுத் தலைமுழுகுவிக்கும் நாளில், அயலூரிலிருந்த நண்பர் ஒருவரிடமிருந்து நாயகரவர்கட்கு ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தைப் பிரித்துப் பார்க்கையில் யான் நேற்றிரவு ஒரு பொல்லாத கனவு கண்டேன். உங்கள் வீட்டில் யாராவது சுரநோயாய்க் கிடந்து சுகப்பட்டிருந்தால் அவர்கட்கு இப்போது எண்ணெயிட்டு தலைமுழுக்குச் செய்விக்க வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்தது. ஐயோ! அக்கடிதம் சிறிது முந்தி வராமற் போயிற்று. அக் கடிதம் வந்து சேர்வதற்குக் கொஞ்ச நேரத்திற்கு முன்னே தான் நாயகரவர்கள் பெண்மணியாருக்குத் தைலநானம் செய்விக்கப்பட்டது. அன்றே அவர்க்குத் திரும்ப வுங் கடுஞ்சுரங் கண்டு எவ்வகையான சிகிச்சையானாலும் நீங்காதாய் அப் பெண்மணியாரை உலக வாழ்க்கையினின்றும் அகற்றியது. அதனால் நாயகரவர்கட்கு உண்டான மனத்துயரம் இவ்வளவென்று அளவிட்டுச் சொல்லல் முடியாது. அப்பெண் மணியார் இறந்து ஒருவருடமாகியும் நாயகரவர்கள் மனத்துயர் நாளுக்கு நாள் பெருகிவந்தது. இப்படியிருக்க ஒருநாள் சாய்மான நாற்காலியிற் சாய்ந்த வண்ணமாய் நாயகரவர்கள் தனியே இருந்தார்கள். அப்போது அவர்கட்கு எதிரே ஒரு தோற்ற முண்டாயிற்று. முதலில் எப்போதுங் கண்டிராத ஒரு பெரும் பிரகாசமும், அப் பிரகாசத்தின் நடுவிலே சொல்லுதற் கருமையான அழகோடுங் கூடிய ஒரு மாளிகையும், சுத்த வெண்மையான நிறத்தோடுங் காணப்பட்டன; அம்மாளிகை யைச் சூழப் பொன் உருவாகத் தழைத்த பசிய மரங்களும் சிறிய சிறிய மலைப்பாறைகளும் அவற்றினிடையே ஓடிவரும் அருவி நீர்களுந் தோன்றின. இவற்றை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் போது, அம் மாளிகையின் முன்புறத்தே உள்ள கதவு மெதுவாகத் திறந்தது; உள்ளேயிருந்து ஒரு பெண் மகளார் தோன்றினார்; அவருடைய உருவமோ சுத்தப் பிரகாச மயமாய் விளங்கினது; அவர் மேலே போர்த்திருந்த ஆடையோ பால் நுரையைப் போல் அவ்வளவு இலேசாகவும் நுண்ணிதாகவுந் துவண்டது; அவர் உருவத்தைச் சுற்றிலும் ஓர் ஒளிவட்டமும் காணப்பட்டது. அவ் வுருவத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் நாயகரவர்கள் எதிரிலே அது கிட்டவந்தது! கிட்டவந்த அவ்வுருவத்தைப் பார்த்தபோது அது மரணமடைந்த தம் அருமை மகளாரின் வடிவமாயிருப்பவே நாயகரவர்கள் கண்களில் நீர்த்துளி முத்து முத்தாய் விழுந்தன. உடனே அப் பெண்மணியார் வடிவம் வாய்திறந்து என் அருமைத் தந்தையே! நீங்கள் இப்போது பார்க்கும் என் நிலைமை எவ்வளவு சிறந்ததாக இருக்கின்றது! மண்ணுலகத்தை யான் விட்டுவந்ததற்காக நீங்கள் ஏன் வருத்தப்படுதல் வேண்டும்? என்று சொல்லிக்கொண்டே திரும்பவும் அம் மாளிகையினுட் புகுந்து மறைந்து போயிற்று. அது முதற்கொண்டு நாயகரவர்கள் அம் மகளின் பிரிவால் உண்டான பெருந்துயரம் ஆறப் பெற்றார்கள். இதுகொண்டு பரிசுத்த சிந்தனையும் பரிசுத்த செய்கையும் உடையோர் இறந்தபின் அடையும் ஒளிவடிவும் பேரின்பமும் இனிதறியப் படும். இனிக் குழந்தைப்பருவத்திலே இறந்துபோகும் ஆன்மாக்களின் சூக்கும உடம்பின் வடிவம் அதிபரிசுத்த வெண்ணிறமுடையதாய் இன்பவுலகிலே உலாவுகின்றது. ஏனெனில், சூது, கொலை, களவு, வஞ்சம் முதலான இழி குணங்கள் வளரும் வாலிபப்பருவம் மனிதப்பருவம் வரையில் அவ்வுயிர்கள் இந் நிலவுலகின்கண் இல்லாமல், அவ் விழிகுணங்கள் சிறிதுங் காணப்படாத குழவிப் பருவத்திலேயே அவை இவ்வுடம்பைத் துறந்து செல்வதனால் அவைகள் அவ்வாறு அதிபரிசுத்தமான சூக்கும உடம்பு பெறுகின்றன. இறந்துபோன குழந்தைகளின் சூக்கும வடிவங்களைப் பார்த்த வர்களெல்லாரும் எமது கருத்தையொட்டியே சொல்லு கின்றார்கள். குழந்தைகளின் சூக்குமவடிவங்கள் பொன்னொளி வீசிப் பொலியக் கண்டதே அல்லாமல், அவைகள் இருள் உலகத்திற் கிடந்து இருள்வடிவு தாங்கி நின்றதைப் பார்த்தவர்கள் யாருமே இல்லை. குழந்தைகளின் அவ்வடிவங்க ளெல்லாம் தேவவடிவங்களாகவே உலாவுகின்றன. இதற்கு யானும் என் மனைவியுங் கண்ட அனுபவங்கள் சிலவும் சான்று பகர்கின்றன. எங்களுக்கு மரகதவல்லி என்னும் ஓர் அருமைப் பெண் மகவு இருந்தது. அஃது ஒருவருடக் குழந்தையா யிருக்கும்போதே மிக்க அமைதியும் நற்சிந்தையும் உடையதாய் விளங்கிற்று. எங்கள் வீட்டிற்குத் திருநீறு பூசின பெரியவர்கள் யாரேனும் வந்தால் அவர்கள் எதிரிலே ஓடிவந்து அவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டுத் திரும்பி ஓடித் தானிருக்குமிடத்திலே போய் அமைதியாயிருக்கும். எங்களுக்கு அதன் செய்கைகள் ஆச்சரியமாகவே தோன்றின. நாளுக்குநாள் அதன் உடம்பில் பொன்மயமான காந்தியும் அழகும் விளங்கின. இப்படி நடந்து வருகையில் அதற்கு ஒன்றரை வருடமுஞ் சில மாதங்களுமாயின. ஒரு நாளிரவு திடீரென அக் குழந்தை தொண்டைகட்டிப் புரண்டு புரண்டு அழுதது; மறுநாட் காலையில் வைத்தியரை அழைப்பித்துப் பார்ப்பித்தோம். அவர் அந் நோயின் தன்மையே அறியாமற்போனார்; அன்று மாலையில் யான் அதனை கையில் வைத்திருக்கும்போது அந்தோ! அது திடீரென இறந்து போயிற்று. அதனால் யாங்கள் அடைந்த துயரம் இவ்வள வென்று இங்கே எழுத முடியாது. எனக்கு அக் குழந்தையின் பிரிவாற்றாத் துயரம் நெடுநாள் வரையிற் பொறுக்கக்கூடாததா யிருந்தது. இப்போது அக் குழந்தையின் அருமையை நினைக்க நினைக்க என்னெஞ்சம் பகீரென்கின்றது! பின் ஒருநாளிரவு யான் அரைத் தூக்கமா யிருக்கையில் ஓர் அழகிய சோலையாற் சூழப்பட்ட ஒரு மேலடுக்கு மெத்தைவீடு தோன்றியது; அவ்வீடு வெள்ளை வெளேல் என்று சுண்ணாம்பு தீற்றப் பெற்றுப் பளப்பளப்பாய் விளங்கியது; அவ்வீட்டின் படிக்கட்டுகளின் மேல் யான் ஏறுவதுபோலவும், அதன்மேல் மாளிகையிலிருந்து இறந்து போன என் மரகதவல்லி என்னும் மகவு அண்ணே, அண்ணே என்று கூப்பிடுவது போலவும் உணர்ந்து, அதன் கூப்பிடும் ஓசைகேட்டவுடனே அம்மா, அம்மா என ஓவென்று அலறிக் கொண்டு மேன்மாளிகையில் ஏறினேன். ஏறிப் பார்க்கையில் அக் குழந்தை பாலாவிபோல் சுத்த வெண்மை யான வடிவந் தாங்கி என் எதிரே அந்தரத்தில் நிற்கக் கண்டேன். உடனே பெருந் துக்கத்தோடும் அழுதுகொண்டு அதனைப் பிடித்தணைக்க கிட்டப்போய்க் கையை விரிக்கையில் அஃது என் கையில் அகப்படாமல் அந்தரத்திலே பறந்து மறைந்து போயிற்று. என் மனைவியும் சிலமுறை அக் குழந்தை மாமரச் சோலையில் ஒரு மாமரத்தின் அடியிலே சுத்த வெண்ணிறத் தோடும் நிற்கக் கண்டு என்னிடம் சொல்லியதுண்டு. இனி இன்னோரன்ன உண்மைகளைத் தாமே பாராத வர்களும் அவற்றை நம்பாதவர்களுமான சிலர், நாயகரவர் கட்கும் எனக்குந் தோன்றிய ஒளிவடிவங்கள் வெறுங் கனா நிகழ்ச்சியே அல்லாமல் அவை உண்மையாகமாட்டா என்றும், அவை உண்மையாகாது போகவே அவற்றைக் கொண்டு பரிசுத்த சிந்தனையுடையோர் சூக்குமசரீரங்கள் மிக வெண்மையான ஒளிவடிவோடு துலங்குமென்றது பொய்யாம் என்றும் சொல்லி நகைப்பர். அவர்கள் தம் பேதைமையால் அங்ஙனம் நகையா திருக்கும் பொருட்டு பிரபல ஆதாரங்களோடுங் கூடித் தோன்றின இவை போலும் நிகழ்ச்சி ஒன்றனை இங்கே எடுத்துக்காட்டுவாம். இங்கிலாந்து தேசத்தில் யூலியா என்றும் எல்லன் என்றும் சொல்லப்பட்ட இரண்டு பெண்பிள்ளைகள் இருந்தார்கள். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பிரியா மிக்க அன்புடையராய் நட்புரிமை கொண்டு வாழ்ந்து வந்தனர். இவர்களிருவரின் அன்பின் மிகுதிக்கு எல்லையே இல்லை. இப்படி யிவர்கள் சகோதர ஒருமையுடன் வாழ்ந்து வருகையில், தமக்கு மரணகாலம் வரும்போது ஒருவரை விட்டு ஒருவர் எப்படிப் பிரிந்து போவது என்று வருந்துவர். அங்ஙனம் வருந்துகையில் யார் முன்னதாக இறக்கின்றனரோ அவர், கூடுமானால் உயிரோடிருக்கும் மற்றவரை வந்து காண்கிற தென்று உடன்பாடு செய்து கொண்டார்கள். இறந்துபோனவர் அவ்வாறு தெளிவாக விளங்கிக் கண்ணுக்கு எதிரே தோன்றினால், இறந்த பின்னும் மனிதர் உயிர் தொடர்பாய் நின்று அன்புடையாரிடத்து அன்பு பாராட்டி வரும் என்னும் உண்மையை அதனால் உயிரோடிருப்பவர் இனிது உணர்ந்து நலம் பெறுவார்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். இவ்வாறு சில வருடங்கள் கழிந்தன. பிறகு, யூலியா என்னும் மாது மரணமடைந்தாள். நற்குண நற்செய்கையுடைய அம் மாதரின் மரணமானது அவள் நண்பர்கட்கெல்லாம் மிக்க துயரத்தை விளைத்ததென்றாலும், அவள் ஆருயிர்ச் சினேகிதியான எல்லன் என்பவளுக்கு விளைத்த துக்கம் இவ்வளவென்று வரையறுத்துச் சொல்வது யார்க்கும் முடியாது. தன் வாழ்க்கையின் அற்புத ஒளி மரண இருளிலே மறைந்து போயிற்றென்றும், அவளையின்றி இனித் தான் உயிர்வாழ முடியாதென்றும் எல்லன் என்பவள் நினைந்து நினைந்து உருகினாள். ஆனால், ஓர் இரவு அவர்கள் முன் செய்து கொண்ட சொல்லுறுதி நிறைவேறியது. எல்லன் என்பவள் தன் பழைய வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கையில் திடீரெனப் படுக்கையினின்றும் எழுப்பப்பட்டாள். அஃது இரவுகாலமாயிருந்தும், அவளிருந்த அறை மாத்திரம் பேரொளி யால் நிரம்பி விளங்கிற்று. உடனே அவளது படுக்கையின் பக்கத்தில் யூலியா தான் உயிரோடிருந்த காலத்தில் எப்படி யிருந்தாளோ அப்படியேயான உருவத்தோடு மகிழ்ச்சியுஞ் சாந்தமுந் தன் முகத்தில் இனிது விளங்க நின்று கொண்டிருந் தாள். இப்படிச் சில நிமிடங்கள் சிரித்த முகத்தோடு வாய் பேசாமல் நின்றனள். எல்லன் என்பவளோ தன் சினேகிதியின் வடிவத்தைக் கண்டவுடனே திகிலடைந்தவளாய்ப் பேசாதிருந் தாள். அதன்பிறகு அவ் வடிவமானது மெதுவாய்க் கரைந்து மறைந்து போயிற்று. இவ்வாறு சில மாதங்கள் சென்றன. அதன்பின் எல்லன் என்பவள் இலண்டன் மாநகரத்திற்கு வந்தாள். வந்த நாளின் இரவிலே திரும்பவும் யூலியாவின் வடிவம் எல்லன் என்பவட்கு எதிரே தோன்றியது. இப்போது இலண்டன் மாநகரத்தினின்றும் பிரசுரிக்கப் பட்டு உலகம் எங்கும் பரவும் பிரசித்த ஆங்கிலப் பத்திரிகையான குறிப்புகளின் குறிப்பு* (The Review of Reviews) என்பதன் தலைவரும், மகாவித்து வானும், பெரும் பிரபுவுமான டெட் என்னும் துரை, எல்லன் என்பவள் தங்கியிருந்த வீட்டிலே போய்த் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு எல்லன் என்னும் மாது தன் சினேகிதி யூலியாவின் வடிவம் முதல் ஒருமுறை வந்த விவரத்தைத் தெரிவித்துப் பின்னும் யான் நேற்றிரவு இவ்வறையிலே அவளைத் திரும்பவும் பார்த்தேன், இரண்டு முறையிலும் அவளை ஒருபடியாகவே கண்டேன். யான் தூங்கிக் கொண்டிருக்கையில் திடீரென எழுப்பப்பட்டேன். எழுந்த வுடனே அவள் என் படுக்கையின் பக்கத்தில் நிற்கக் கண்டேன். முதன்முதல் அவள் எனக்குத் தோன்றிய போது, அவள் இறந்து நெடுநாளா காமையால் அது துயர மிகுதியாற் றோன்றிய என் மனத் தோற்றமாக இருக்கலாமென்று நினைத்தேன்; ஆனால், நேற்றிரவில் தோன்றிய அவள் வடிவழகைப்பற்றி அப்படி நினைக்கக் கூடவில்லை. அவளை யான் தெளிவுபெறக் கண்டு, அவள் முன் சொல்லிய சொல்லை நிறைவேற்றுவதற்கு வந்த யூலியாவே யென்று அறிந்தேன். ஆயினும் யான் அவள் பேசக் கேட்கவில்லை. அவள் ஏதோ எனக்குச் செய்தி கொண்டு வந்தாளென நினைந்தேனாயினும், அவள் சொல்ல விரும்பியது இன்னதென்று யான் கேட்கக் கூடவில்லையே! என்று அவரிடம் வருந்திக் கூறினாள். அதனைக் கேட்டிருந்த டெட் என்னுந் துரைமகனார் தமக்கு யோகசக்தி யொன்று வாய்க்கப் பெற்றிருந்தமையால், அச் சக்தியின் உதவியால் யூலியாவிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை அறிந்து கொள்வோமென்று சொல்லினர். அவரிடமிருந்த அவ்வியோகசக்தி யாதென்று கேட்பீர்களானால், அதனைப் பற்றிச் சிறிது இங்கே சொல்லுகின்றோம். தானே எழுதுதல் என்பதுதான் அவரிடமிருந்த யோகசக்தி யாகும். அஃதாவது: அவர் தமது கையில் ஓர் இறகு ஏந்திக் கொண்டு மேசையின்மேலே கடிதம் வைத்து அக் கடிதத்தின்மேல் இறகை வைப்பாரானால், அவரது கை தானாகவே எழுதிக் கொண்டு போகும். அப்படி எழுதும் போது அவர் தம்முடைய முயற்சி சிறிதும் இன்றி அக்கை எழுதிக்கொண்டு போகும் வழியே விட்டிருப்பார். அவரது கை அங்ஙனம் தானாகவே எழுதி முடித்த விஷயங்களைப் பார்த்தால் அவை முன்னாளில் நடந்த செய்திகளையும், இனி நடக்கப்போகுஞ் செய்திகளையும் தெளிவாகச் சொல்லி யிருக்கும். இவ்வளவு அற்புதமான சக்தி இந்தத் துரைமகனாரிட மிருந்தமையால், இவர் தமது கையைச் சூக்குமஉடம்பில் நிற்கும் யூலியா பிடித்தெழுதக் கொடுப்பதாகச் சொல்லி, அதற்கு வேண்டும் ஏற்பாட்டோடு அமர்ந்திருந்தார். இறந்து போகியும் சூக்கும உடம்பில் நின்ற யூலியா என்னும் அவ் வடிவமானது அத் துரைமகன் பக்கத்தே நின்று அவர் கையைப்பிடித்து எழுதத் தொடங்கியது. அஃது அவர் கையைப்பிடித்து எழுதுவது சாமானிய மனிதர் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அகக்கண் இயற்கையிலேயே திறக்கப்பட்டுள்ள சிலர் கண்களுக்கு மாத்திரம் மிகவும் தெளிவாகத் தோன்றியது. இங்ஙனம் அந்த யூலியா என்னும் பரிசுத்த பெண்மணியின் வடிவம் எழுதிய பல கடிதங்களுள் அது தன் சினேகிதியான எல்லன் என்பவளுக்கு முதன்முதல் எழுதிய கடிதத்தை இங்கே தமிழில் மொழிபெயர்த்து எழுதுகின்றோம். 6. ஆவிவடிவில் நின்ற ஒரு மாதின் கடிதம் என் அன்பே, யான் உன்னை விட்டு வந்தபோது முழுதும் யான் உன்னைப் பிரிந்துபோனேன் என்றோ அல்லது நீயும் இங்கே வரும்வரையில் யான் உன்னைப் பிரிந்தேனென்றோ நினைத்தாய். நீ மரணம் என்று சொல்லும் அதற்குப் பிறகு யான் உன் பக்கத்திலேயிருப்பதுபோல, அதற்குமுன் உன்னுடன் நான் ஒருபோதும் இருந்ததில்லை. என் உடம்பாகிய கட்டினின்றும் யான் விடுதலை பெறக் கண்டேன். அஃது யான் முன்னறியாத ஒரு புதுமையை எனக்கு விளைவித்தது. என் உடம்பு கிடந்த படுக்கையின் பக்கத்திலே யான் நெருங்கி நின்று கொண்டிருந்தேன்: என் கண்களை மூடுதற்குமுன் என் அறையிலிருந்த பொருள்களை எந்த நிலைமையிற் கண்டேனோ அதே நிலைமையில் அவற்றை யெல்லாம் பார்த்தேன். இறந்து போவதில் ஏதொரு துன்பமும் யான் உணர்ந்திலேன்; மிக்கதோர் அமைதியும் சாந்தமும் மாத்திரம் உணர்ந்தேன். அதன் பிறகு யான் மறுபடியும் விழித்துப் பார்க்கையில் என் அறையிலே எனது பழைய உடம்பிற்கு வெளியிலேயே யான் நின்று கொண்டிருக்கக் கண்டேன். முதலில் யான் இவ்வளவு சுகமாயிருப்பதைப் பற்றி வியப்படைந்தேன். அதன் பின்றான் என்னுடம்பைக் கடந்துயான் வந்துவிட்டேனென்று கண்டேன். பின்னுஞ் சிலநேரம் காத்திருந்தேன்; அதன்பின் கதவு திறந்தது. அன்புள்ள அ-என்பவள் உள்ளே வந்தாள். அவள் மிகவும் விசனமுடையவளாயிருந்தாள்; அவள் என் ஏழை உடம்பை பார்த்து அதுவே நான் ஆனதுபோல் ஏதோ சில சொன்னாள். அவளை நான் பார்த்தவண்ணமாகவே நின்றேன்; ஆனால் அவள் நினைவெல்லாம் யான் விட்டுவந்த என் பழைய உடம்பின் வசப்பட்டு நின்றன. அதனைப் பார்த்தவுடன் என்னால் சிரியாமலிருக்கக் கூடவில்லை. நான் பேசுவதற்கு முயன்றிலேன்; என்ன நடக்கப்போகிறதென்று பார்க்கிறதற்கு மாத்திரம் காத்திருந்தேன். அதன்பிறகு வெதுவெதுப்பான மிகுந்ததோர் ஒளி என்னறையினுள் வருவதாக உணர்ந்தபோது ஒரு தேவ தூதியைக் கண்டேன். பெண் உருவாகக் காணப்பட்ட அவள் என்னண் டையில் வந்து என்னை நோக்கிக் கூறியதாவது : புதிய வாழ்க்கையின் நிலையை உனக்கு அறிவுறுத்தும் பொருட்டு யான் இங்கே அனுப்பப்பட்டிருக்கிறேன் என்பதேயாம். அவளை யான் ஏறிட்டுப் பார்த்தபோது அவள் மெதுவாக என்னைத் தொட்டு நாம் போகவேண்டும் என்று சொல்லினாள். பிறகு யான் என் அறையினையும் அதனுட்கிடந்த என் ஏழை உடம்பினையும் விட்டு வெளியே போயினேன். எனக்கு அது மிகவும் புதுமையாய்த் தோன்றியது; தெருக்களி லெல்லாம் ஆவேசங்கள் நிறைந்திருந்தன. நாங்கள் அதனைக் கடந்து செல்லுகையில் அவைகளை யான் பார்க்கக் கூடிய தாயிருந்தது; அவைகள் எங்களைப் போலவேயிருந்தன. என்னுடன் வந்த கந்தருவப் பெண்ணுக்குச் சிறகுகள் இருந்தன; அச் சிறகுகள் மிகவும் அழகோடு விளங்கின. அவள் முழுதும் வெண்மையான ஆடை உடுத்திருந்தாள். இங்ஙனம் யாங்கள் முதலில் தெருக்களின் வழியே சென்று, அதன் பிறகு அந்தரத்தின் வழியே சென்று, எனக்கு முன் இறந்துபோன என் நண்பர்களிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கே அன்புள்ள ம-வும், ம-வும் ஈதல் அ-வும் இன்னும் பலரும் இருந்தார்கள். அவர்கள் எனக்கு ஆவேச உலகத்தைப் பற்றி மிகுதியாகச் சொன்னார்கள். அவ் வுலகத்தின் ஏற்பாடுகளை உணர்ந்து, அவற்றிற்கு ஏற்ப யான் என்னாற் கூடிய வரையில் உபயோக மானவளாயிருக்க வேண்டு மென்றும், அவர்கள் எனக்குச்சொன்னார்கள். இந் நேரமெல்லாம் என்னுடன் தங்கியிருந்த கந்தருவப் பெண்ணானவள் யான் என் விவரங்களைச் சொல்லும்படி எனக்குச் சகாயம் செய்தனள். சூக்கும உடம்பிலிருக்கும் ஆன்மாக்கள் இந் நிலவுலகத் திலிருந்தது போலவே அங்கு மிருந்தார்கள்; அவர்கள் அங்கிருந்து ஒருவரையொருவர் அன்பு பாராட்டினார்கள். அங்கே அவர்கள் உணவு தேடுதற்காக உழைக்க வேண்டுவது இல்லாவிட்டாலும், அவர்கள் அங்கே செய்ய வேண்டுந் தொழில்கள் இன்னும் மிகுதியாகவே யிருந்தன. பிறகு யான் உன்னை நினைந்து விசனப்பட்டு உன்னிடம் திரும்பிவரல் வேண்டுமென விரும்பினேன்; உடனே அக் கந்தருவப்பெண் என்னை ஆகாய வழியே அதிவேகமாக அழைத்துக் கொண்டு வந்து முன்னிருந்த விடத்தில் விட்டனள். யான் இறந்துபோன அறையினுள்ளே புகுந்தபோது என் உடம்பு அங்கே கிடந்தது. எனக்கு அதன்மேல் சிறிதும் பற்றில்லை; ஆனால் பழைய ஆடைபோற் கழிக்கப்பட்ட அதன் மேற் கவிந்து கொண்டு நீங்கள் எல்லாரும் அழுததைப் பார்த்தபோது எனக்கு விசனமுண்டாயிற்று. உன்னோடு பேசுதற்கு விரும்பினேன். என் அன்பே! நீ முழுதும் கண்ணீரால் நனைக்கப் பட்டிருந்ததைக் கண்டு, உன்னை மகிழ்விக்க யான் மிக முயன்றும் அது கூடாமையால் விசனம் அடைந்தேன். உன்னுடன் பேசி உனக்கு எவ்வளவு அருகாமையில் யான் இருக்கின்றேன் என்பதைச் சொல்ல விழைந்தும், நான் சொல்லுவதை நீ கேட்கும்படி செய்யக் கூடவில்லை. நான் இதற்காக முயன்றேன், ஆனால் நீயோ அதனைக் கவனித்திலாய். அதன்மேல் என் தேவதூதியை நோக்கி, எப்போதும் இப்படித்தான் ஈது இருக்குமோ என்று கேட்டேன். அதற்கு அவள், சிறுது பொறு. அவளோடு நீ பேசுதற்கு உரிய காலம் வரும், ஆனால் இப்பொழுதோ அவளுக்கு நீ சொல்வது கேளாது, அதனை தெரிந்து கொள்ளவும் முடியாது, என்றாள். அதன்பின் என்னை மறுபடியும் அக் கந்தருவப் பெண் அழைத்துக்கொண்டு போய்விட்டாள். இதற்கு முன் யான் சென்றறியாத மிக அகன்ற ஓர் அழகிய இடத்திற் போயிருக்கக் கண்டேன். அங்கேயான் தனியாயிருந்தேன்; வேறு யாரையுங் கண்டிலேன்; ஆனால் நீயோ ஒருபொழுதுந் தனிமையிலி ருப்பதில்லை. நாம் எல்லாம் எப்போதும் முழுமுதற் கடவுளின் சந்நிதானத்திலேயே வசிக்கின்றோம். நானோ ஒருவரையுங் காணவில்லை. பிறகு ஒரு குரலொலி வரக் கேட்டேன். அஃது எங்கிருந்து வந்ததென்றேனும், யார் பேசினாரென்றேனும் யான் காணக் கூடவில்லை. யூலியாவே, உன்னை எவன் காப்பாற்றி னானோ அவன் உன்னோடு பேசுவதற்கு விழைந்துள்ளான் என்னுஞ் சொற்களை மாத்திரங் கேட்டேன். யான் உற்றுக் கேட்டும் இவற்றைத் தவிர வேறு சொற்கள் பேசப்படவில்லை. அதன்பிறகு, ‘யார் அங்கே பேசுகிறது? என்று வினாவினேன். உடனே கொழுந்து விட்டெரியும் தீத்திரளைப் போன்று மக்கள் உருவத்தோடு ஒன்று தோன்றக் கண்டேன். முதலில் யான் அச்சம் அடைந்தேன். பின்னே அஞ்சாதே! எல்லாம்வல்ல இறைவனுடைய அந்தரங்கங்களை உனக்கு அறிவுறுத்தும்பொருட்டு நியமிக்கப்பட்டுள்ளவன் யான் என்று அவ்வாண்வடிவம் மொழிந்தது. அதன் பின்னர்த் தீப்பிழம்பு போன்ற அவ்விளக்கமானது, இறப்பில்லாத தேவர்களுடைய பேரன்பினின்றும் தோன்றுவதென்று தெரிந்து கொண்டேன். பின்னால், சோதிவடிவான அவ் வாண்வடிவு என்னை நோக்கி யூலியாவே! என் இரட்சகரைப் பார்! என்று சொல்லவே, யானும் மேல்நோக்கி அவரைப் பார்த்தேன். அவர் என் அருகாமையில் ஒரு பீடத்தின் மேல் அமர்ந்திருந்து காதற் செல்வியே, என் தந்தையின் வீட்டிலே மாளிகைகள் பல இருக்கின்றன; நீண்ட நாளாக நீ என்மேல் அன்பு பாராட்டி வந்தமையால் இதோ இங்கிருக்கின்றேன். உனக்கு நான் ஓர் இடம் சித்தப்படுத்தியிருக்கின்றேன், என்றனர். உடனே நான் ஓ! என் ஆண்டவனே! v›Él¤âš? என்று வினவ, அவர் முறுவலித்தார். அங்ஙனம் முறுவலித்த அந்த நகையின் ஒளியிலே அங்குள்ள இடத்தின் றோற்ற மெல்லாம் மாறி விளங்கியது. அஃது இலியுசரனே என்னும் ஊரில் என் விடுதியின் சாளரங்களின் வழியே யான் பலமுறையும் நோக்கிய போது ஆல்ப் என்னும் மலைத்தொகுதியின் றோற்றமானது சூரியன் மறையும் மாலைக்காலத்தில் எவ்வகையான மாறுதல் அடைந்து தோன்றியதோ அவ்வகையாகவே காணப்பட்டது. அச்சமயத்தில் யான் தனியே யில்லையென்று கண்டேன். என்னைச் சுற்றிலும் எனக்கு மேலும் அன்பும் அழகும் ததும்பிய வடிவங்கள் பல உலாவின. அவற்றுட் சில எனக்குத் தெரிந்தவர்களின் வடிவங்களாகவும், மற்றுஞ் சில யான் முன்னறி யாதனவாகவும் இருந்தன. ஆயினும், எல்லாரும், நண்பர்களாகவே யிருந்தனர்; அவ்வாகாசமே அன்பு நிறைந்த தாயிருந்தது. எல்லாரின் நடுவிலே, என் ஆண்டவனும் இரட்சகரு மானவர் அமர்ந்திருந்தனர். அவர் மனிதருள் மனிதனைப் போல் இருந்தார். இத்தாலிய தேசத்து பிரா ஆன் ஜலிக்கோ என்னுஞ் சிறந்த ஓவியக்காரரால் எழுதப்பட்ட சித்திரங்கள் சிலவற்றிலே நீ பார்த்திருக்கும் இனிய வியக்கத்தகும் அமைதியெல்லாம் அவரிடத்தில் நிறைந்திருந்தன. இனிய கருணை மலிந்த அவரது அன்பான பார்வையோ என் உயிருக்கு உயிரானதா யிருந்தது. அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். அவருடன் இருக்கும் இதுவே மோட்சவீடு. அவர் எதிரே இருக்கப்பெறுகின்றேம் என்னும் உணர்ச்சியானது இவ்வுலகத்தின் ஆகாசத்திற்கும் உன்னுடைய உலகத்தின் ஆகாசத்திற்கும் எவ்வளவு வித்தி யாசத்தை உண்டு பண்ணுகிற தென்பதனை நீ தெரிந்துகொள்ள முடியாது. இன்னும் யான் உனக்கு எழுத விரும்பிய விஷயங்கள் பல இருந்தும், யானும் அவற்றை எழுதக்கூடவில்லை, எழுதி னாலும் நீயும் அவற்றை தெரிந்துகொள்ளுதல் முடியாது. ஒன்றுமாத்திரம் யான் உனக்குச் சொல்லக்கூடும்! அஃதாவது: நாம் என்றும் பாவித்ததைக் காட்டிலும் அவர் மேம்பட்ட வராகவே யிருக்கின்றார். எல்லா வரங்களையும் கொடுப்பவர் அவரே. நல்லனவாயும், அன்பினவாயும், இனியனவாயும், தூயனவாயும், மேலனவாயும் இருப்பவற்றைப் பற்றி நாம் தெரிந்தனவெல்லாம் அவர்க்குரிய வரம்பில்லாத ஆனந்த சொரூபத்தில் விளக்கமில்லாப் பிரதிபலனங்களாகும். அவர் நம்மிடத்து மிக உருக்கமான அன்பு பாராட்டுகின்றார். ஓ! எல்லன், எல்லன், நீயும், நானும் சில சமயங்களில் மிக ஆழமானதென்றும் திணிந்ததென்றும் நமக்குத் தோன்றிய அன்போடு ஒருவரையொருவர் நேசித்ததுண்டே, அப்படிப் பட்ட மிகச் சிறந்த காதலும் அவர் நம்மிடத்துப் பாராட்டுகின்ற அன்பினது வெளிறின பிரதி பலனமே யாகும். அவருடைய அன்போ, நம் மன அறிவின் ஆற்றல் எட்டிய வரையில் வருணித் தாலும் அதனையுங் கடந்து அப்பாற்சென்று மிக்கதொரு வியப்பும் அற்புதமும் உடையதாய் விரிந்து நிற்கின்றது. அவருடைய பெயரும் அன்பே! அவர் எதுவாயிருக்கின்றாரோ அதுவே இதுவாம். அஃது அன்பே! m‹ng!அன்பே! உனக்கு நான் ஒவ்வொன்றுஞ் சொல்ல முடியாது; நீயும் அதனை அறிந்துகொள்ள முடியாது. ஆனால், நிலவுலகத்திலே இருந்தபோது நம் மனத்தாற் பாவித்தும் இராத அவ்வளவு இன்பமான நிலையிலே நான் இருக்கின்றேன். எனக்கு முன்னே சென்ற என் நண்பர்களோடு கூடியிருக்கின்றேன். இங்கே யாரும் முதியோராய்க் காணப்படவில்லை. என்றும் அழியாத இளம்பருவமென்று தோன்றுகின்ற வடிவத்தோடு இளைஞராயிருக் கின்றோம். நம்மை இன்னா ரென்று தெரிவித்தற் பொருட்டுப் பழைய உடைகளை நாம் மேலணிந்து கொள்வதுபோலப் பழைய உடம்புகளை அல்லது அவை போன்ற சூக்குமதேகங்களை நாம் வேண்டும்போது மேற்கொள்ளக்கூடும்; ஆயினும், இங்கே நம்முடைய சூக்கும தேகங்கள் இளமையாயும், அழகாயும் இருக்கின்றன. நாம் முன்னிருந்த நிலைமைக்கும் இப்போதிருக்கின்ற நிலைமைக்கும் ஒற்றுமை யிருக்கின்றது. பழைய நிலைமையோடு உள்ள இந்த ஒப்புமையால் புதிய நிலைமையை நாம் தெரிந்து கொள்ளக் கூடும்; ஆயினும் பிந்தியது அதற்கு வேறானதே. இந்த ஊனுடம்பை விட்டுப்போன உயிரானது அதி சீக்கிரத்தில் இளம்பருவத்தினதான புதிய சூக்கும உடையை அணிந்து கொள்கின்றது; இச் சூக்குமதேகத்திற்கோ எவ்வகையான சிதைவும் நேர்வதில்லை. நாங்கள் இங்கே எந்த வகையாக வசிக்கிறோம் என்பதைப் பற்றியாவது, எங்கள் காலத்தை எவ்வாறு செலவழிக்கிறோம் என்பதைப் பற்றியாவது விரித்துச் சொல்வது எனக்கு மிகவுங் கடினமாயிருக்கின்றது. நாங்கள் இங்கே இளைப்படைவதே இல்லை; நிலவுலகத்தில் உறங்கினதுபோல இங்கே உறங்க வேண்டியதுமில்லை; உணவு அருந்தலாவது தண்ணீர் பருகவாவது வேண்டியதுமில்லை; இவைகள் தடித்த தூல தேகத்திற்கே இன்றியமையாது வேண்டப்படுவன; இங்கேயோ அவைகள் நமக்கு வேண்டுவதில்லை. சூரியன் மறையும் போதேனும் அல்லது அது தோன்றும் போதேனும் உண்டாகும் வெளிச்சத்தில், அதன்ஒள்ளிய கதிர்கள் சொரிதலினால் வசீகரமான அழகொளி பரந்த நிலத்தின் தோற்றத்தை நீ மனமகிழ்ச்சியோடும் அமைதியோடும் காணும்பொழுது உனக்குண்டாகும் உள்ளக் கிளர்ச்சி மிக்க நிமிடங்களை நீ நினைவுகூர்ந்து பார். அப்படி நீ அனுபவித்த அனுபவத்தைக் கொண்டுதான் நாங்கள் இங்கே அனுபவிக்கும் ஆனந்தானு பவத்தை உனக்கு அறிவுறுத்தக்கூடும் என்று நினைக்கின்றேன். இங்கே அமைதி உண்டு; இங்கே கிளர்ச்சி உண்டு; இங்கே அழகுண்டு; இவை எல்லாவற்றின்மேலும் இங்கே அன்புண்டு. எங்கும் அழகும் களிப்பும் அன்புமே. மோட்ச உலகின் இரகசியம் அன்பே! அன்பே. கடவுள் அன்பே உருவாக இருக்கின்றார்; நீ அன்பிலே மறைந்தால் கடவுளிடத்திலே காணப்படுவாய்.* அன்புஞ் சிவமும் இரண்டென்ப ரறிவிலார் அன்பே சிவமாவ தியாரு மறிகிலார் அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே என்னும் ஆசிரியர் திருமூலயோகிகள் திருவாக்கும் இங்கு உற்று நோக்கற் பாலது. நீ இந் நிலவுலகத்தின் பாவத்தைக் குறித்தும் துக்கத்தைக் குறித்தும் நாங்கள் இங்கே உணர்வது யாது என்று கேட்கின்றாய். நாங்கள் அதனைப் பார்க்கின்றோம் என்றும், அதனை நீக்க முயல்கின்றோம் என்றும் விடை பகர்கின்றோம். ஆனால், அஃது எங்களை முன் வருத்தியதுபோல இப்போது வருத்துகின்ற தில்லை; ஏனெனில் நாங்கள் அதற்கு வேறான பக்கத்தைக் காண்கின்றோம். ஆகையால் கடவுளின் அன்பை நாங்கள் ஐயுறக் கூடவில்லை. நாங்கள் அதில் வசிக்கின்றோம். அஃதொன்றே உண்மையானது. உலக வாழ்க்கையில் பாவங்களும் துக்கங்களும் சடுதியில் மறைந்துபோகும் சாயை போலிருக் கின்றன. அவைகள் நிலத்தில் மாத்திரம் இருப்பன அல்ல; இவ்விடத்திலும் பாவமும் உண்டு துக்கமும் உண்டு; இங்கே நரகமும் இருக்கின்றது சுவர்க்கமும் இருக்கின்றது. ஆயினும், சுவர்க்க லோகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியே நரகத்தை இல்லாமற் செய்கின்றது. நாங்கள் அன்பினால் இரட்சிப்பு அடையவும், அகந்தையை ஒழித்தலால் மீட்சியடையவும் எப்போதும் கற்றுக் கொண்டு வருகின்றோம். அகந்தையைப் பலியிட்டாலன்றி இரட்சிப்பு உண்டாவதில்லை. தேவகுமாரனுடைய இரகசியம் இதுவன்றி வேறு யாது? இவ்வளவோடு யூலியா என்னும் மாதுசிரோமணி தனது சூக்குமதேகத்தில் இருந்தபடியே டெட் துரையவர்கட்கு அவர் கையைப் பிடித்து எழுதிய முதற் கடிதம் முடிவு பெறுகின்றது. இன்னும் இப்படியே பரிசுத்த சிந்தையுடைய இம் மாதரார் எழுதிய கடிதங்கள் பல இருக்கின்றன. இம் மாதரார் இன்னும் டெட் துரையவர்களுக்குக் காலங்கள்தோறும் அரிய பெரிய மெய்ப் பொருள்களை எழுதி உதவிபுரிந்து வருகின்றார். சில நாட்களுக்குமுன் யூலியா என்னும் இம் மாதரார் உதவியால் டெட் துரையவர்கள், காலஞ்சென்ற நம் விக்டோரியா அரசியாரவர்களிடம் முதன் மந்திரியாயிருந்து இறந்துபோன கிளாட்டன் துரையவர்களின் ஆவேசத்தோடு 1909ஆம் வருடம் அக்டோபர் மாதம் 30ஆந் தேதி நடாத்திய உரை யாடலின் விரிவை இங்கிலாந்து தேசத்திற் பிரசுரமான ஆங்கிலப் பத்திரிகைகளினும் இவ்விந்தியா தேசத்திற் பிரசுரமான ஆங்கிலப் பத்திரிகைகளுடன் பிரகடனம் பண்ணியிருந்தார்கள். இங்கிலாந்தில் நடைபெறும் தினசரி வர்த்தமானம் என்னும் பத்திரிகையின் ஆசிரியர் ஒருநாள் டெட் துரையவர்களிடம் சென்று, இப்போது எல்லாருடைய மனத்தையுங் கவர்ந்திருக்கும் அரசாங்க காரியங்களைப்பற்றிச் சூக்கும சரீரத்தில் வசிக்கும் கிளாட்டன் மந்திரியாரின் அபிப்பிராயங்கள் இவையென்று யூலியாவின் உதவியினால் தெரிந்து சொல்லும்படி அவரை வேண்டினார். அவருடைய வேண்டுகோளுக்கு டெட் துரை யவர்கள் இசைந்து சூக்கும சரீரத்தில் வசிக்கும் யூலியாவுக்கு இதனை எவ்வாறிருந்து அறிவிக்க வேண்டுமோ அவ்வாறு அறிவித்தார். டெட் துரையவர்களுக்கும் ஆவேச உலகத்திற் சூக்கும சரீரத்திலிருக்கும் யூலியா முதலானவர்களுக்கும் உரையாடல் நடந்தேறுகையில் பலர் அவருடன் கூட இருந்து இவ்வதிசய சம்பவத்தைப் பார்த்தார்கள். அன்று காலையிற் சூழவிருந்தவர்களில் ஆவேசங் கொள்வோன் ஒருவன் வழியாக யூலியா என்னுஞ் சூக்கும தேக மாதரார் சொன்னதாவது: கிளாடன் துரை அவர்களை நான் அழைத்து வரலாமென்று எண்ணினேன்; ஆனால், அவர் மறுபடியும் இந்த மண்ணுலகத்திற்குத் திரும்பிவர மனம் இல்லாதவராயிருத்தலின் அது மிக மிகக் கடினமா யிருக்கிறது, என்பதேயாம். 7. ஆவியான கிளாட்டன் துரையுடன் உரையாடல் இதன்பிற் சிறிது நேரம் எல்லாரும் வாய்பேசாதிருந் தார்கள்; கடைசியாக மறுபடியும் உரையாடல் தொடங்கியது. அங்கே நடந்த உரையாடலைச் சுருக்க மெழுதுவோர் ஒருவர் குறித்துக் கொண்டே வந்தார்; கூட விருந்தவர்களும் குறிப்புகள் எழுதி வந்தார்கள். ஆவேசங் கொள்ளப்பட்டவன், சூக்கும தேகவாசிகள் பேசுகின்ற சொற்கள் நெடுந்தூரத்திலிருந்து வருவதுபோற் றோன்றுதலால் அச் சொற்கள் எல்லாவற்றையுந் தான் கேட்பது மிகவுங் கடினமாயிருக்கிறதென்றும், யூலியா, கார்டினல் மான்னிங் முதலான சில ஆவேச உருக்களை அன்றி மற்றவற்றைத் தான் காணக்கூடவில்லை யென்றுங் கூறினான். கிளாட்டன் துரையவர்களின் சொற்களை மிகவும் உறுத்துக் கேட்கவேண்டி யிருந்தமையால், இந்த உரையாடல் முடிந்ததும் ஆவேசங் கொள்வோனுக்குக் களைப்பும் தலைவலியும் உண்டாயின. அவர்கட்குள் நடந்த அவ் உரையாடலை இங்கே மொழி பெயர்த்து எழுதுகின்றோம். இப்போது பலர் பேசுங்குரல் எனக்குக் கேட்கின்றது. முதலிற் பேசுகிறவர் கார்டினல் மான்னிங். அவர், உங்களுக்குச் சாந்தம் உண்டாக்கக்கடவது என்கிறார். என் அன்புள்ள சினேகிதியோடு உன்னிடம் வந்து நிற்பது எனக்குப் பிரியமாகவே யிருக்கின்றது. இப்போது கிளாட்டன் துரையவர்கள் உன்னிடம் வரப்போகின்றார் என்கிறார், என்று ஆவேசக் காரன் கூறினான். மற்றொரு குரல் : இன்று காலைநேரத்தில் இங்கே கூடியிருப்பவர்கள் பக்கமாக எனது கவனம் திருப்பப்பட்டது. என்னிடமிருந்து உங்கட்கு ஆக வேண்டுவது யாது? அதற்கு டெட் துரை : தாங்கள் கிளாட்டன் துரை அவர்களா? கிளாட்டன் : மண்ணுலகத்தில் யான் கிளாட்டன் என்று சொல்லப்பட்டேன். இப்போது அரசாங்கத்தில் உள்ள என் பழைய கட்சிக்காரர் நிலையினையும், அரசாங்க முறையினையும் யாரோ ஒருவர் என்னுடன் பேச விரும்புவதாக அவ்வம்மை என்னிடம் சொன்னாள். இஃது அப்படித்தானா? டெட் : ஆம், ஆம்; முதலாவது அரசிறைக் கணக்கைப் பற்றியும் பிரபுக்கள் சபைக்கு நேர்ந்திருக்கும் இடரான நிலையைப்பற்றியும் தங்களபிப்பிராயந் தெரிய வேண்டு கின்றேன். சென்ற இரவு இந்த மாதரார் கையைப் பற்றித்தான் தாங்கள் எழுதினீர்களோ என்பதைத் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளுகிறேன். கிளாட்டன் : ஆம்; அவ்வம்மையின் வீட்டிற் சிலகாலம் யான் இருக்கநேர்ந்தபோது இவளிடம் எனக்குப் பட்ச முண்டாயிருந்ததனாலும், அவள் என் நினைவுகளை எல்லாம் தெரிந்து எழுதிக் காட்டினாள் என்று யான் அறிந்ததனாலும் அப்படி அவள் கையைக் கொண்டு எழுதினேன். மேலும் இப்போது உம்முடன் உரையாடும் இந்த முறை எனக்குத் தொந்தரவாயும் கலக்கமாயும் இருத்தலால், இதைவிட அம் மாதரார் கையைப்பற்றி எழுதும் வழியே எனக்கு மிகப்பிரியமானது. டெட் : எனக்குத் தோன்றுவது என்ன வென்றால், அவ்வம்மையாருக்கு அரசாங்க முறையைப் பற்றி ஒன்றுந் தெரியா தாகையால், எதனையும் உறுதிப் படுத்திச் சொல்வது அவர்கட்குக் கடினமாயிருந்தது. தினசரி வர்த்தமானப் பத்திரிகாசிரியர் அரசிறைக் கணக்கைப்பற்றியும், பிரபுக்கள் சபைக்கும் குடிமக்கள் சபைக்கும் நேர்ந்திருக்கின்ற முட்டுதலைப் பற்றியும் தாங்கள் ஏதேனுந் தங்கள் கருத்தை அறிவிக்கக்கூடுமா என்று விரும்பிக் கேட்கிறார். பணிவோடும் நன்றியறிவோடும் தங்களை நினைவுகூர்ந்து வருகின்றவர்கள் கேட்கும் பிரிய வினாக்களுக்குத் தங்கள் கருத்தை விடையாகப் பகரக் கூடுமாயின் நன்றாகும். கிளாட்டன் : அத்தகைய நினைவை நீர் பட்சமாய் எடுத்துக் கூறியதற்கு யான் வந்தனஞ் செய்கின்றேன்; ஆனாலும், யான் மண்ணுலக விவகாரங்களிற் சிறிதும் பற்றின்றி வேறாய்ப் போய்விட்டமையால், திரும்பவும் அரசாங்க வுலகமாகிய அரங்கத்தை வந்து காண்பது எனக்குப் பிரியமில்லா ததா யிருக்கின்றது. இப்போது மாத்திரமன்று; எனக்கெப்போதுமே அது பிரியமில்லாததாயிருந்தும், என் வமிசத்தார்க்கு யான் செலுத்தவேண்டிய கடமையின் பொருட்டாகவே யான் அதில் சம்பந்தப்பட்ட நிலையிலிருந்தேன். இப்போதோ யான் இறைவனுடைய வியக்கற்பாலதாம் அருள் வெளிப்பாட்டையும், அவ்வருள் விளக்கம் தேவகுமாரன் வழித்தாக மிகப் புலப்படுதலையும், அவ் வருட்டோற்றத்தின் ஒரு நிலையாய் அதனோடு இயைபுற்றிருக்கும் ஞான சமகாரத்தையும் உணர்ந்து அதனோடு ஒன்றுபடும் முயற்சியில் நிரம்பவுங் கருத்தூன்றியிருக்கின்றேன். ஆகையால், மற்றும் ஒருமுறை இவ்வரசாங்க அரங்கத்திற் சம்பந்தப்படுவது எனக்கு மிகவும் அருவருப்பாயிருக்கின்றது, மிகவும் வெறுப்பாயிருக்கின்றது. டெட் : நல்லது, ஐயா கிளாட்டன் துரையவர்களே! முன்போலவே இப்போதும் இது கடமையிற் சேர்ந்ததொரு காரியம். அதனால் நன்மை விளையுமென்று நீங்கள் கருதாவிட்டால், அதனைப்பற்றி ஒரு சொல்லாவது நீங்கள் சொல்லும்படி யான் தங்களைக் கேட்கமாட்டேன். கிளாட்டன் : அன்புள்ள ஐயா! தூலதேகத்தை விட்டு வந்தது முதல் யான் அரசாங்க விஷயங்களில் தொடுப்பின்றி இருத்தலானும், நிலையின்றி மறைந்து போகும் மண்ணுலகக் காரியங்களைப் பார்க்கிலும் என்றும் நிலைபேறாயுள்ள ஆன்மலாப விஷயத்தில் என் கருத்தெல்லாம் ஊன்றி நிற்றலானும், இப்போது நீர் உசாவிய விஷயத்தில் என் கடமை யாதென்று சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன். ஆயினும், இப்போது இத்தேசத்தாரின் மனநிலையைக் கலங்கச் செய்துவரும் பகிரங்க விஷயங்களில் என் கவனமானது ஆராய்ந்து தெளிவாகத் திருப்பப்பட்டிருந்ததனாலே, இவ் விஷயங்களின்மேல் யான் கொண்ட கருத்துக்களைச் சுருக்கமாக உரைக்கின்றேன். என்னுடைய அபிப்பிராயத்தில், மேல் மண்டபச் சபையார் பொருள் சம்பந்தமாக வந்த இந்த ஏற்பாட்டை அங்கீகரியாமற் றள்ளிவிடு வார்களானால், அது அவர்கட்கு நல்லறிவு கொண்ட நடக்கையாக மாட்டாது. தீர்வைகளின் சீர்திருத்தத்தைப் பற்றியன டெட் : நிலத்தைப்பற்றியும் அனுமதி கொடுப்பதைப் பற்றியுங் கொண்டுவந்த யோசனைகளைப் பற்றித் தங்கள் அபிப்பிராயம் யாது? கிளாட்டன் : முந்தியதை யான் ஏற்றுக் கொள்ளு கின்றேன். அனுமதி தருவதைப்பற்றிய பிந்திய விஷயங்களில் எனக்கு ஒரு சிலவே உடன்பாடாயுள்ளன. அப் பத்திரத்தின் இந்தப் பகுதியானது மிகவும் கண்டிப்பாகத் தழுவப்படல் வேண்டுமென்று வற்புறுத்தக்கூடாது. ஏனெனில், அவைகளிற் காட்டப்பட்ட ஒப்பந்தங்களிற் சில சிறிதும் ஒழுங்கில்லாதன வாய்ச் செய்யப்பட்டிருக்கின்றன; அவைகள் வற்புறுத்தப் படுமானால் அனுஷ்டானத்துக்குக் கொண்டுவரும்போது அவை மிக்கதொரு குழப்பத்தையும் மனவருத்தத்தையும் விளைவிக்கும். இங்கே ஆவேசக்காரன் சொல்லியது : ஒரு நொடி நேரம் அவர் சும்மா இருக்கிறார். அவரைக் கொண்டு வந்து இங்கே தொடர்பு படுத்துவது மிகவும் பிரயாசையாக இருக்கிறது. டெட் : தினசரி வர்த்தமானப் பத்திரிகாசிரியரால் அனுப்பப்பட்ட கேள்விகளை உங்கட்கு வாசித்துக் காட்டட்டுமா? கிளாட்டன் : தயைசெய்து அவற்றை நிறுத்தி மெதுவாகப் படியும்; அப்படிப் படிக்கும்போது அவற்றை நன்றாய்ச் சிந்தியும்; உம்முடைய மனத்தினின்றே அக் கருத்துகளை யான் தெரிந்து கொள்ளுகின்றேன். அதன்படியே டெட் துரையவர்கள் அவற்றைப் படித்தார். டெட் : ஐயா கிளாட்டன்! இவைகள் என்னுடைய கேள்விகள் அல்லவென்பது தாங்கள் அறிவீர்கள். இத்தகைய கேள்விகளை உங்களிடம் கேட்க யான் கனவிலுந் துணிந்திருக்கமாட்டேன். ஆயினும், இவைகளுள் ஏதேனும் நன்மை நோக்கி விடையளிக்கத் தக்கதென்று தங்கட்குத் தோன்றுமானால் அஃது எனக்கு மிக்க மகிழ்ச்சி தருவதாகும். கிளாட்டன் : இந்தக் கேள்விகளுக்கு விடையளிக் குங்கால் இவற்றுள்ளிருக்கும் விஷயங்கள் மிக்க ஆழ்ந்த சிந்தனையோடு திருத்தமாகச் சொல்லற் பாலனவா யிருக்கின்றன. இத்தகைய கேள்விகளுக்குச் சுருக்கமான விடையளிப்பது கூடாத காரியம்; ஒழுங்கின்றித் தைக்கத் தக்கவிதமாக மாத்திரம் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களின் மேல் என் கருத்துக்களை உருவாக்கிச் சொல்லுவது கூடாத காரியம். இரண்டு பக்கத்தைப்பற்றியும் சொல்லவேண்டுவன மிகுதியாயிருத்தலால், யான் சொல்ல விரும்பிய வற்றை எல்லாம் சொல்வது மிகவும் பிரயாசையான கருமம். எனக்கு வெறுப்பா யுள்ள இவ்வுலக விவகாரங்களில் யான் கூடி நிற்கும் இச் சில நிமிஷங்களுக்கு மாறாக, இவை எல்லாக் கேள்விகளையும் சிக்கறுத்துச் சொல்வதற்கு எத்தனையோ நாட்களும் எத்தனையோ மணி நேரங்களும் வேண்டும். என் நண்பரே! நீர் இதனை உண்மையாகவே சிந்தித்துப் பார்க்கவேண்டும். டெட் : உண்மைதான்; ஆனால் நீங்கள் இவ்வுலகத் திருந்த ஞான்று அஞ்சல் அட்டைகளிற் சுருக்கி எழுதிய நற்புத்தி போதங்களால் எம்மை ஊக்கமுறுத்தி நடத்தி வந்ததுபோல, இப்போதும் தாங்கள் அவ்வஞ்சல் அட்டையின் சாரம் போன்ற தங்கள் கருத்துக்களைச் சுருக்கமாக உருவாக்கிக் கூறலா மன்றோ? கிளாட்டன் : ஆவேசக்காரரான இக் கனவானுடைய மூளையின் சக்தியானது சிறிதாக இருத்தலால் அதன் வாயிலாக இவ்வேலையை நிறைவேற்றுவிப்பது மிகவுங் கஷ்டமாயிருக் கின்றது. என்னுடைய நினைவுகள் வெளிப்படுதற்குக் கருவியாயிருக்கும் இக் கனவானிடத்து எனக்குள்ள எல்லா நன்குமதிப்போடும் யான் சொல்வது யாதெனில், யான் விரும்பியவண்ணம் எதனையும் விரித்து விளக்கிச் சொல்வது சிறிதுங் கூடாத காரியமாயிருக்கின்றது. டெட் : பிரபுக்களுக்குங் குடிமக்களுக்கும், கட்சிக் காரர்களுக்கும் மகாஜனங்களுக்கும் இடையில் உண்டாகும் சச்சரவிலுங் குழப்பத்திலும் தாங்கள் திரும்ப ஒருமுறை வந்து சம்பந்தப்படும்பொழுது தங்களுள்ளத்திற் போர்த் தழும்பேறிய இயற்கை உணர்ச்சியானது கிளர்ச்சி பெற்றுத் தோன்ற வில்லையா? பிரபுக்களுடன் சண்டை கிளாட்டன் : என் அன்புள்ள நண்பரே! ஆம், அஃது அப்படித்தான்; ஆனாலும், அதைத்தான் யான் விலக்க முயல்கின்றேன் என்பதை நீர் அறிய விரும்புகின்றேன். இத் தன்மையான கலவரங்களினின்றும் என்னை விடுவித்து, யான் விரும்பும் வழியே செல்லவிழைகின்றேன். டெட் : அப்படியானால், இனிமேற் றாங்கள் எங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லையா? உரிமைப் பொருளாய் நீங்கள் எங்களுக்கு விட்டுப்போன பிரபுக்களுக்கும் எங்களுக்குமுள்ள சச்சரவைப்பற்றி நீங்கள் இனிக் கவலைப் படுவதில்லையா? அச் சச்சரவு இப்போது தான் மும்முரமாய் வருகின்றது. எல்லாப் பொறுப்புக்கும் எல்லாத் துன்பத்திற்கும் உள்ளாயி ருக்கின்றவர்களுக்கு மனக்கிளர்ச்சி உண்டாகும்படி நீங்கள் சொல்லத்தக்கது ஒன்றும் இல்லையா? கிளாட்டன் : அதில் எனக்குக் கவலையிருக்கிறது. சண்டையை உண்டாக்க எனக்கு முன்னேயிருந்த விருப்பமும், இது சம்பந்தமாக இவ்விஷயத்தில் முன்னே யான் சொல்லினவும் எல்லாம் மேல்மண்டபச் சபையார் ஆட்சியுரிமை பெறலாகா தென்பன வேயாகும். டெட் : ஆம், ஐயா கிளாட்டன் துரையவர்களே! யாங்கள் செய்துவரும் சண்டையில் யாங்களே வெற்றிபெறும் வண்ணம் எங்களை ஆசீர்வதிப் பதற்கும் உங்கட்கு மனம் வரவில்லையே! இம் மண்ணுலகில் நடைபெறுங் காரியங்களில் தங்களைவிடக் கார்டினல் மான்னிங் துரையவர்களுக்கு மிகுந்த இரக்கம் இருக்கிறதன்றோ? கிளாட்டன் : உம்முடைய நிலைமையோடு யான் மிகவும் நெருங்கிச் சம்பந்தப்படுகையில், எனக்குள் இந்தத் தீ மறுபடியுங் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியதை உணர் கின்றேன். இதனால் யான் சில நாட்கள் உம்மோடிருக்க விரும்புகின்றேன். யான் அறைகூவும் ஓசை இனி- ஆவேசக்காரன் : அஃதின்னதென்று யான் அறியக் கூடவில்லை; தனக்கே உரியதாக அரண்வகுத்துப் பாதுகாக்குஞ் செயல் ஒழியக் கடவது. ஆனால் இது போதுமான சொற்றொடரன்று என்பது போலக் கேட்கின்றது. டெட் : இந்தப் பழைய அரங்கத்திற்குத் திரும்பவும் உங்களை அழைத்ததனால் உங்கள் உள்ளத்தைப் புண்படுத்து கின்றிலோம் என்று யான் எண்ணுகின்றேன். அப்படிச் செய்வதை மெய்யாகவே யான் சிறிதும் வேண்டேன். கிளாட்டன் : இஃது, யான் முன்சொன்னபடியே, எனக்குப் பிரியமில் லாததாயினும், இதனால் யான் மனம் வருந்துவேனல்லேன். ஆவேசக்காரன் : அவர் அறைகூவும் ஓசையைக் கேட்க முயல்கின்றேன். அவ்வோசை இச் சொற்றொடர் போலக் காணப்படுகின்றது: குடிமக்களின் அபிப்பிராயங்களைத் தழுவாத சோம்பேறிக் கூட்டம் ஒழியக்கடவது. சண்டையிட்டு உண்மை தெளியுங்காலம் நெருங்கிவந்து விட்டது. என்னுடைய குடிமக்கள், என் பழைய போர் வீரர்கள் நாட்டிலுள்ளார் எல்லார் முயற்சியினையும் இதன் பொருட்டு எழுப்பக் கடவராக. இப்போது நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின்ற வல்லமை உடையார் பலரையும் பொறுக்கானவர்களையும் ஒருங்கு சேர்க்கும் அறைகூவல் இதுவேதான். டெட் : அரசிறைக் கணக்கைப் பிரபுக்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவார்களானால், இப்படி நடக்க வேண்டுவது அவசியம் என்று வற்புறுத்துவீர்களா? இன்னும் இவர்களைப் பிரித்துவிடுதல் உங்கட்குச் சம்மதமா? கிளாட்டன் : இந்த நொடியில் இவர்களைப் பிரித்து விடுவது என் கருத்தில் நல்லதென்று தோன்றவில்லை. அரசாங்க விஷயமாய் பார்க்கும்போது சமாதானமே நல்லதாகும்; ஆனால், இந்த முடிபு செவ்வையாகச் செய்யப்படாமல், முறை தவறி உறுதி செய்யப்படுமானால், அப்போதுதான் எல்லாரும் ஒன்று சேர்ந்து உறுதியோடும் மனத்தெளிவோடும் உடனே போர்க்கு எழவேண்டும். டெட் : அப்படியானால் பிரபுக்கள் சபையாரை முழுதுந் தொலைக்க வேண்டுவதுதானா? கிளாட்டன் : இல்லை, இல்லை; என் எண்ணத்தைப் பிழைபட நினையாதீர். இப்போது ஏற்படுத்தப் பட்டிருக்கிற பிரபுக்கள் சபையாரை மாத்திரந்தான் போக்கவேண்டும். வேறு ஓர் இரண்டாவது மண்டபச் சபையாரை ஏற்படுத்துவதில் யான் முற்றும் உடன்பாடு உடையேன். டெட் : திரவிய சம்பந்தமான நிர்வாகத்தை அவ்விரண்டாவது மண்டபச் சபையார் வசத்தில் ஒப்புவிக்கத் தங்கட்கு விருப்பமா? கிளாட்டன் : திரவிய நிர்வாகம் குடிமக்கள் சபையார் வசத்திலேயே முற்றும் ஒப்புவிக்கப்படல் வேண்டும். என்றாலும் அதனை இன்று காலையில் எடுத்து விவரிக்க என்னால் முடியாது. டெட் : அஃதாவது, நீங்கள் இரண்டாவது மண்டபச் சபை ஒன்று நிலைபெறுத்த வேண்டுமென்றும், அரசிறைக் கணக்கைச் செவ்வையாக முடிக்கக்கூடுமானால் நாட்டிலுள் ளாரை ஏவிப் பிரபுக்கள் சபையைக் கலைக்க வேண்டுவதில்லை யென்றும் கருதுகின்றீர்களோ? கிளாட்டன் : யான் சொல்லக் கருதியதை நீர் மிகவுஞ் செவ்வையாக அறிந்து கொண்டீர். டெட் : ஐயா கிளாட்டன் துரையவர்களே! தங்கட்கு யான் நிரம்பவுங் கடமைபட்டவனா யிருக்கின்றேன். முப்பது வருடங்களுக்குமுன் தங்கட்கும் எனக்கும் இருந்த உறவுரிமையை நினைத்துத் தங்களை யான் வரம்புகடந்து நெருக்கி அபிப் பிராயங் கேட்கிறேனென்று உட்கொள்ள மாட்டீர் களென்பது என் நம்பிக்கை. தேவ வுலகினின்றும் அமரர்கள் கீழே இறங்கித் துராய் நாட்டின் புழுதி நிறைந்த போர்க்களத்திற் புகுந்து போரிற் கலந்து சண்டையிட்ட ஓமர் காலத்தைப்போல் இந்நாட்கள் காணப்படவில்லையா? தன்னுடனிருந்த பழைய அலுவலர்கள் கிளாட்டன் : ஆம், அஃது அப்படித்தான்; யான் சிறிது நேரத்திற்குமுன் மொழிந்தபடி மாணவகனுக்குள்ள மனக் கவர்ச்சியும் போர்வீரனுக்குள்ள மன எழுச்சியும் என்னிடத்துத் திரும்பவுந் தோன்றுதலை உணர்கின்றேன். ஆனால், யான் நெருங்கிச் சேர்ந்து நிற்பதற்குத்தக்க எவர் ஒருவரையும் காண்பது அரிதாயிருக்கின்றது. இப்போதுள்ள இவ்வாவேசக்காரருடன் சேர்ந்து நிற்பதில், இம்மண்ணுலகச் சேர்க்கையைத் தெளிவாக உறுதிப்படுத்திக் கொள்வது முடியவில்லை. டெட் : உங்கள் பழைய நண்பரான மார்லி பிரபு அவர்களின் சேர்க்கை நல்லதாயிராதா? கிளாட்டன் : இச் சமயத்திற்கு அவசியம் வேண்டற் பாலனவான சுறுசுறுப்பும் மனவெழுச்சியும் அவரிடம் இல்லாமையால் அவர் இக் காரியத்திற்குப் பயன்படமாட்டார். டெட் : லாயட் ஜார்ஜ் அவர்களைப் பற்றி எப்படி? கிளாட்டன் : இதற்கு வேண்டும் சுறுசுறுப்பும் மன எழுச்சியும் அவரிடம் இருக்கின்றன; ஆனால், இவற்றைப் போலவே அவசியமான கவனமான சொல்லும், மனநிறைவும் மனநிலையும் அவரிடம் இல்லை. அதுவும் துன்பம். துன்பம். டெட் : தங்கள் பழைய நேசரான பால்வர் துரை யவர்களைப் பற்றி எப்படி? அவர் மற்றக் கட்சியிலிருக்கிறார்; ஆனாலும், தெளிந்த, நிலையான அவர் சிந்தையின் வழியாகத் தாங்கள். கிளாட்டன் : ஆம், கனந்தங்கிய அந்நண்பரினது உருவத்தின் வாயிலாகக் கீழான இவ்வுலகங்களில் தொடர்பு பட்டு நிற்றல் எனக்கு உண்மையிற்கூடிய தொன்றேயாகும்; என்றாலும் இப்போர் எழுச்சியினால் உண்டாகற்பாலதான உக்கிர குணத்தை அவரிடத்தில் விளைவித்தல் கூடாதகாரியம்; அதுவேயுமன்றி, நீர் முன்னமே சொல்லியபடி, அவர் நமது கட்சியிலிருந்து வேலை செய்யவுமில்லையே. டெட் : உவெட்மின்டர் என்னுமிடத்தில் இவர் களோடு தாங்கள் ஏதேனும் தொடர்பு வைத்திருக்கின்றீர்களா? கிளாட்டன் : ஏதோ ஓரானொரு காலத்தில் அவர்களுடன் யான் தொடர்புகொள்வதுண்டு. இங்கே கூடியிருக்கும் இந்த மந்திரச் சபையார் ஏவிவிட்ட மந்திர சக்தியானது என்னைக் கொண்டுவந்து இச்சமயத்தில் இவ்வரசாங்க காரியத்தில் பிணைத்துவிட்டது. இந்தச் சச்சரவில் யான் எவ்வளவுதூரம் தலையிட்டுக்கொள்ள அனுமதி யுண்டோ, அவ்வளவுக்கு இதிற் தொடர்பு கொண்டவர்களை ஊக்க முறுத்திச், சுதந்தர உரிமையாகிய பெருமை மிக்க பழங்கொடியை அவர்கள் கையிற் பிடித்துக்கொண்டு முன் நடக்க முயல்கிற்பேன். நான் முற்கூறியபடி வேறு விஷயங்களில் எனக்குக் கருத்தூன்றி நின்றாலும், இதனை யான் செய்து முடிப்பேன். டெட் : ஐயா கிளாட்டன் துரையவர்களே! தங்கட்கு வந்தனம். இனி இம் மற்றக் கேள்விகளைப் பற்றி யாது சொல்லுகிறீர்கள்? கிளாட்டன் : இக் கேள்விகளுக்கு விடை சொல்ல விரும்புகிறேன்; ஆனால், இப் பெண்மணியாரின் கையைப் பற்றி அவற்றை எழுதிக் காட்டுகிறேன். டெட் : அதற்காகத் தங்கட்கு மிக்க வந்தனம். இக் கேள்விகளைப் பற்றி எனக்கே அபிப்ராயங்கள் இருத்தலால், யான் தங்கள் விடைகளை எழுதிக் கொள்வதைக் காட்டிலும், இவ் விஷயங்களைப் பற்றி ஒன்றுமேயறியாத இப் பெண்மணியார் அவற்றை எழுதிக் கொள்வது மிக நல்லதாகும். கிளாட்டன் : இப் பெண்மணியின் கையை யான் முற்றும் உபயோகப்படுத்தக் கூடுமென்று காண்கின்றேன்; நாளையாவது, அல்லது அதற்கும் முன்னேயாவது இவர் எனக்குச் சமயந் தருவாரானால், இவர் வாயிலாக அவற்றை எழுதிவைப்பேன். டெட் : ஐயா கிளாட்டன் துரையவர்களே! இக் கேள்விகளை யான் சிறிது மாற்றிக் கூறுவதைப் பற்றித் தங்கட்குச் சிந்தையில்லை? கிளாட்டன் : அதனை உமது விருப்பப்படி செய்யலாம். நாம் வெற்றி யடையப் போகின்றோம். தன்னலமும், தற்சுதந்தரமும், தடுத்துக் கேட்கப் பொறாமையும் என்னும் இவற்றின் வலிமை மிக்கிருந்தாலும், நாம் வெற்றி அடைவோம். நுட்ப அறிவுள்ளவர்களும், வெளிப்படையாய் நிற்பவர்களும் பகைவராயிருத்தலின் இவர்களை வெல்லும்பொருட்டு நாம் இடுஞ்சண்டை மிகவுங் கொடுமை யாகத்தானிருக்கும். ஆங்கி லேய சாதியாரைப்பற்றிய சரித்திரத்தில் இது மிகவும் ஆபத்தான காலம். குடிமக்களால் நிர்ணயிக்கப்படுகின்ற செய்கைக்குத் தக்கபடி அவர்கள் பெருக்கமடைவதும் அல்லது சுருக்க மடைவதும் காணப்படும். அவர்கள் திருத்தமான வழியிற் செல்வார்களானால் அதிசீக்கிரத்திற் பெருக்கம் அடைவார்கள். தீர்வைச் சீர்திருத்தமாகிய இரகசிய மருந்தால் அவர்கள் மயக்கப் படாதிருக்கக் கடவராக! தம்மிடத்துள்ள தன்னலம் பாராட்டு தலை அறத்துடைத்துத் தமது கருத்தைத் தமக்குரிய உண்மைச் சம்பவத்திலும், தம் சாதியாரின் சுகத்திற்கு அவசியமாய்ப் பிராணாதாரமான விஷயங்களிலும் ஊன்ற வைப்பாராக! இப்போது நாம் உம்மை விட்டுப் போக வேண்டும். டெட் : மறுமையுலகத்திற் சென்றவர்களுக்கும், நாளும் உழைப்பு மிகுந்த இம் மண்ணுலக்தி லுள்ளவர்களுக்கும் இங்ஙனம் உரையாடல் நடந்தேறு வதால் இவ்வுலகத்தார்க்கு ஏதேனும் பயன் விளையுமென்று தாங்கள் நினைக்கின்றீர்களா? கிளாட்டன் : இச் செய்தியில் என் சொந்தக் கருத்து இது : மிகவும் பத்திரமாகப் பாதுகாத்துச் செய்யப்பட்டாலன்றி, எம்முடைய நிலையிலுள்ளார்க்கும் உங்கள் உலகத்திலுள் ளார்க்கும் இங்ஙனம் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்துவது மிகவும் இடர்தருவதாகும். ஆகையால் அதனை வலுக்கட்டாயம் பண்ணுவது ஆகாது. டெட் : ஐயா கிளாட்டன் துரையவர்களே! நாங்கள் இங்கே வைத்திருப்பதுபோல மிகவும் பத்திரமாகச் செய்தால்? கிளாட்டன் : என்னாற் பார்த்தறியக் கூடிய வரையில் இந்த மந்திரக் கூட்டத்தைச் சூழ ஏற்படுத்தப் பட்டிருக்கும் காவல்கள் மிகவும் உபயோக முள்ளனவாயும், இம் மண்ணுலகை அடுத்துச் சுற்றிக் கொண்டிருக்கும் தீய பேய் வடிவங்கள் அணுகவொட்டாமல் தடுப்பனவாயும் இருக்கின்றன. ஆகவே, அதிசாக்கிரதையோடும் ஆழ்ந்த சிந்தனையோடும் நடத்தப் படுமானால், இம் மந்திரக் கூட்டத்தார் செய்யும் முயற்சி பயன்படுவதாயிருக்கும். டெட் : கடைசியாகத் தங்களுடன் யான் நடத்திய உரையாடலில், இறந்துபோகும் இம் மாந்தருக்கு இதுதான் மிகவும் முதன்மையாகப் பேசவேண்டிய செய்தி என்று கூறினீர்களா? கிளாட்டன் : ஆம், ஆம். அதனை யான் நன்றாக நினைவுகூர்கின்றேன். அப்போது யான் உமக்குச் சொல்லியதை இப்போது மறுபடியும் திருப்பிச் சொல்லுகின்றேன். மக்களுள் ளத்தைப் பற்றியிருக்கும் பல விஷயங்களுள் மெய்யாகவே இதுதான் முதன்மையானது; தெளிவாகவும், சாதிர நுணுக்கத்திற்கு இசைந்ததாகவும், மத சம்பந்தமுடையதாகவும் வைத்து இதனை ஆழச் சிந்திப்பதுதான் மன்பதை முழுவதுக்கும் மிகுந்ததொரு பற்றினை விளைவித்துப் பெரும் பயனைத் தருவதாகும். எனக்குச் சமயம் வாய்த்தவுடனே என்னுடைய கருத்துக்களை வெளியிடுவதற்கு முயல்வேன். இம் மந்திரக் கூட்டத்தைத் தம் பொறுப்பில் வைத்திருப்பவரும், இனிய சொல்லும் வசீகரமும் உடையவருமான யூலியா என்னும் மாதரார் எப்போது யான் தன் கையை உபயோகப்படுத்திக் கொள்ளலா மென்பதனை அறிவிப்பதாக வாக்களித்திருக்கிறார். காலை வந்தனம். டெட் : காலை வந்தனம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. சூக்கும சரீரியான யூலியா சொல்லுகிறாள் : கிளாட்டன் துரையவர்கள் இங்கே நெடுநேரம் தொடர்புற்று நிற்பது அவருக்கு மிகவுந் துன்பமா யிருக்கிறது. டெட் : முழுவதும் பெறும்வரையில் திங்கட்கிழமைப் பத்திரிகையில் இவை தம்முள் ஒன்றும் வெளியிடாதிருப்பது நன்றென்று நினைக்கிறீர்களா? யூலியா : எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து வெளியிடுவதுதான் நல்லதாகும். டெட் : இடம் வேண்டுமே என்பதுதான் ஆலோசனையாக இருக்கிறது. இப்போதுள்ள வரையில் நடந்த உரையாடலைப் பிரசுரிப்பதென்றால் அது மூன்று பத்திகளைக் கவர்ந்துகொள்ளும்; அவர் இன்னும் எழுதப்போவதைச் சேர்த்தால் எல்லாம் ஆறு பத்திகளைக் கவர்ந்துகொள்ளுமே! யூலியா : அதைப் பற்றி உங்கள் விருப்பப்படி செய்யலாம். இச் செய்திகளைப் பற்றி நீங்கள் என்னிலும் நன்றாய் அறிவீர்கள். இன்று காலையில் உங்களுடன் வந்திருந்த கனவானும் நீங்களும் அதைப் பற்றி ஏற்பாடு செய்யுங்கள். கார்டினல் இதோ வந்திருக்கிறார். டெட் : அன்புள்ள கார்டினல் அவர்களே! கிளாட்டன் துரையவர்கள் சொல்லியவெல்லாம் தாங்கள் கேட்டீர்களன்றோ? திரும்பவும் அவர் இங்கே வருவது அவருக்கு மனவருத்தத்தை உண்டு பண்ணுமோ? கார்டினல் மான்னிங் : இல்லை, இங்கே திரும்பவும் வருவது அவருக்கு எந்தவிதமான மனவருத்தமும் உண்டாக்கவில்லை; மேலும் அவரும் நானும் நேசித்து வந்த அறிவில்லாத குருட்டுச் சனக்கூட்டத்திற்கு அஃதெவ்வளவோ பயன் றருவதாயிருக்கும். டெட் : இன்னும் ஏதாவது வரப்போகின்றதா? உவில்லி சொல்லுகின்றது : தந்தையே! இந்த மந்திரக் கூட்டத்தை இப்போது பிரித்துவிடுங்கள். கிளாட்டன் துரையவர்கள் இங்கே வருவதற்காக எவ்வளவோ பிரயாசை உண்டாயிற்று; யாரும் இளைப்படையும்படி நாங்கள் கோரவில்லை. அரசாங்க வியவகாரிகள் பலர் இங்கே இந்தக் காலைப்பொழுதில் வந்திருக்கிறார்கள். இன்னுங் கிளாட்டன் துரையவர்கள் பேசுவதைக் கேட்டவர்களும் பலர். இவ்வளவோடு டெட் துரையவர்களுடன் கூடிய மந்திரக் கூட்டத்திற்கும், கிளாட்டன், யூலியா முதலான சூக்குமசரீர வாசிகளுக்கும் நடந்தேறிய உரையாடல் முடிவுபெற்றது. மேலெடுத்துக் காட்டிய இரண்டு நிகழ்ச்சிகளும் மெய்யாக நடந்தனவாகும். டெட் துரையவர்களுக்கும் யூலியா முதலான ஆவேச வடிவங்கட்கும் இப்படிப்பட்ட உரையாடல்கள் நாளதுவரையில் நடந்தே வருகின்றன. இவை போன்ற உண்மை நிகழ்ச்சிகளைச் சிறிதாயினும் நம்பாமல் பிதற்றித் திரிவோர்களும் டெட் துரையவர்கள் பிரத்தியட்சமாகச் செய்து காட்டும் இவை தம்மைக் கண்டு வாய்பேசாமற் போகின்றார்கள். மேலும், இவற்றை அத் துரைமகனார் இரகசியமாகச் செய்து காட்டலின்றிப் பலருங் குழுமியிருக்கின்ற சபை நடுவிலே நடத்தி மெய்ப்பித்து விடுகின்றார். சூக்குமசரீர வாசிகளான ஆன்மாக்க ளோடு நாம் கலந்துறவாடக் கூடுமென்றும், அவர்கள் இம் மண்ணுலகத்துலவிய தூல தேகத்தைக் கழித்துவிட்டுப் போன பிறகும் அவர்கள் மாட்டு அன்பு பாராட்டி ஒழுகிய நம்மனோரை மறவாது ஒரோவொரு காலங்களில் அவர்க்கு முற்றோன்றித் தம்மாலாம் உதவிகளெல்லாம் செய்குவர் என்றும் யாம் கூறிய உண்மைப் பொருள் மேலெடுத்துக் காட்டிய மெய்ச்சரித்திரத் தால் நிலைபெறுதல் காண்க. அவ்வாறாயின் நம்மிடத்து நீங்கா அன்புரிமை பாராட்டிய உறவினர் எல்லாரும் இறந்துபோன பிறகு சிறிதாயினும் நமக்கு எதிரே தோன்றக் கண்டதில்லையே யெனின்; மேலே காட்டிய உதாரணங்களில் இறந்து போனவர்கள் திரும்பவும் வந்து இங்குள்ளார்க்கு உதவி புரிதல் தெற்றென விளங்குதலின், சிலர்க்குத் தோன்றாதது கொண்டே எல்லார்க்குந் தோன்று வதில்லை யென்று கூறுதல் பொருந்தாது. நல்லது, ஆவேச வடிவங்கள் சிலர்க்கு மாத்திரந் தோன்றுதலும் பலர்க்குத் தோன்றாமையும் என்னையெனிற் கூறுகின்றாம். 8. ஆவிவடிவங்கள் தோன்றுதலின் காரணம் இறந்து போனவர்களின் ஞானநிலை அன்புநிலையும் அவர்களுக்கு உறவினராய் உயிரோடிருப்பவர்களின் ஞான நிலை அன்புநிலையுமே ஆவேசங்கள் தோன்றுதற்கும் தோன்றா ததற்குங் காரணமாகும். இதனைச் சிறிது விரித்துக் கூறுகின் றோம். உயிரோடிருக்குங் காலத்து இரண்டு பெயர் ஏதோ உலகவொழுக்கத்திற்காக ஒருவரோடொருவர் சேர்ந்திருந் தார்களே யல்லாமல் அவர்கள் தம்முள் அன்பு பாராட்டியது இல்லையானால், அவ்விருவரில் ஒருவர் இறந்தபிறகு அவர் கட்குள் எவ் வகையான சம்பந்தமும் இல்லாமற் போகின்றது. மேலும், உயிரோடிருந்த காலத்துத் தமது அறிவைப் பெருகச் செய்யாமல் நிலையற்ற உலகக் காரியங்களிலேயே அழுந்தி அறியாமை வயப்பட்டு இருந்தவர்கள் இறந்து சூக்கும சரீரத்திற்குப் போனால், அங்கும் அறிவில்லாமல் இருளில் அழுந்திக் கிடப்பார்கள். அப்படி அறிவில்லாமற் கிடப்பவர்கள் இவ் வுலகத்திலுள்ளாரை அறிந்துவந்து இவர்களுடன் உறவாடல் முடியாது. அதுவே யுமன்றி, இங்கு உயிரோ டிருப்பவர்கள் நல்லறிவுடையராயும் நல்ல அன்புடைய ராயுமிருந்தால், அறிவோடும் அன்போடும் இறந்துபோன தம்மவர்களை அழைத்து உரையாடலாம். இங்குள்ளவர்கள் மறுமையொன்று இருக்கிறதென்றும், அம்மறுமை யுலகத்தில் அளவிறந்த ஆன்மாக்கள் இருக்கிறார் களென்றும், அவர்களை வருந்தி அன்போடு அழைப்பின் அவர்கள் நம்முடன் வந்து உறவு கலப்பார்களென்றும் சிறிதாயினும் நினையாமலும்., யாராவது அறிவுடையோர் சொன்னாலும் அவர்கள் சொல்லை மதியாமல் அவ நம்பிக்கையுற்றும் பொன்னே பொருளென்று உலகச் சேற்றிற் கிடந்து புரள்கின்றார்களாகலின், அவர்களிடத்தில் சூக்கும சரீரவாசிகள் எப்படி வந்து கலக்கத் துணிவார்கள்? இம் மண்ணுலகத்தில் ஒருவருக்கொருவர் உபகாரிகளாய் வாழ்ந்து வரும் நம்மனோரில் எவர் ஒருவரை மதியாமல் அலட்சியஞ் செய்கிறாரோ அவரை மற்றவரும் மதியாமல் அலட்சியஞ் செய்கிறாரன்றோ? எம்மையொருவர் மதியா விட்டால் யாமும் அவரை மதிப்பது இல்லையன்றோ? நிலவுலக வாசிகளாகிய நம்மிடம் ஏதோருபகாரத்தையும் எதிர்பாராத சூக்கும வாசிகளான ஆன்மாக்கள் தம்மை எவரேனும் விரும்பி வருந்தி யழைத்தாலல்லாமல் அவர்கள் இங்குள்ள நம்ம னோரிடம் வந்து உரையாடவே மாட்டார்கள். மேலும், இவ் வுலகத்தில் உயிரோடிருந்த நாட்களில் கண்டது மெய் காணாதது பொய் சாமியை யார் கண்டார்? பூதத்தை யார் கண்டார்? உயிர் என்று கூட ஒரு பொருள் இருக்கிறதா? இந்த உடம்புதான் உயிர்; நன்றாக உண்டு உடுத்துப் பொருளைத் தேடி இன்புற வாழ்வதுதான் வாழ்க்கை என்று இவ்வாறெல்லாம் சொல்லிக் காலங்கழித்தவர்கள் இவ்வுடம்பை விட்டுப் பிரிந்து சூக்கும சரீரத்தோடும் மேல் உலகங்களுக்குப் போனால், அங்கேயுள்ள தோற்றங்களையும் காட்சிகளையுங் கண்டு அங்கும் அவற்றை நம்பாமல் தாம் ஏதோ கனவு காண்பதாக எண்ணி ஒன்றுந் தோன்றாமல் மயங்கிக் கிடக்கின்றார்கள். இப்படிக் கிடப்பவர்கள் பலராகையால், இவர்களை இங்குள்ளவர்கள் நினைத்து அழைத்தாலும் இவர்கள் அதனைத் தெரிந்து வந்து உரை யாடுவது அரிதினும் அரிதாம். இதற்கு மெய்யாக நடந்த ஒரு கதையினை இங்கே உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றாம்: பௌதிக சாத்திர ஆராய்ச்சியில் மிகவுந் தேர்ந்தவரான ஒரு பண்டிதரிருந்தார். அவர் இவ்வுலக அமைப்புகளையும் ஐம்பூதங்களின் இயல்புகளையும் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து அறிந்தவராயினும், இவ்வைம்பூதங்களின் வேறாக ஆன்மா ஒன்று இருக்கிறதென்றேனும், கடவுள் ஒன்று உள்ளதென்றேனும், மறுமை யொன்றிருக்கிற தென்றேனும் நம்பினதில்லை. பிறகு அவர் மரணக்காலம் வந்து இறந்து போனார். பௌதிக சாத்திர உணர்ச்சியினால் அவர் அறிவு தெளிவடைந்து இருந்தமையால் சூக்குமசரீரத்தோடும் மேலுலகத்திற்குப் போனவுடனே அங்குள்ள காட்சிகளையும் தோற்றங்களையும் கண்டு, தாம் முன்னிருந்த நிலவுலகத்திற்கு அவை முற்றும் மாறுபட்டுத் தோன்றவே அவற்றைச் சிறிதும் நம்பாமலும், தாம் இறந்து போனதை நினையாமலும் நிலவுலகத்தில் இருந்துகொண்டே தாம் கனவு காண்பதாக எண்ணி எண்ணி மயக்கமுற்றுக் கிடந்தார். இப் பண்டிதர் உயிரோடு இருந்த நாட்களில் இவருக்கு நெருங்கின நண்பரான யோகி ஒருவர் இருந்தார். இந்த யோகியாரும் இவருடைய மகனார் ஒருவரும் யோகாப்பியாச முதிர்ச்சியினாலே இத் தூல சரீரத்தில் இருந்துகொண்டே சூக்குமசரீரத்திற் பிரவேசித்து மேல் உலகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை அறிந்துவருவதும், அவ் வுலகங்களில் உள்ளார்க்குத் தம்மால் ஏதும் உதவி செய்யக் கூடுமானால் அதனைச் செய்வதும் உண்டு. ஒருநாள் இந்த யோகியார் இறந்து போன தம் நண்பரான பௌதிக சாத்திர பண்டிதர் இப்போது எவ்வகையான நிலையில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டித் தம் மகனாரை அழைத்து நீ சூக்குமசரீரத்திற்போய் அவர் நிலைமையை அறிந்துவா என்று ஏவினார். அவர் அப்படியே மேலுலகத்திற் சென்று மிகவும் பிராயாசையோடு அப்பண்டிதரைக் கண்டு அழைத்து வினவியபோது பண்டிதர் பின்வருமாறு சொல்லப் புகுந்தார்: இப்போது யான் இருக்கும் நிலைமையானது வசதியின்றி மிகவும் மயக்கமுள் ளதாயிருக்கின்றது. ஆயினும், யான் காணும் இப் புதுக் காட்சியானது கனவேயாமென்றும், என்னெதிரிற் றோன்றும் உமது வடிவமானது கனாவடிவே யாமென்றும் சொல்வதுதான் பொருத்தமாகத் தோன்று கின்றது, என்று மிக்க அவநம்பிக்கையோடு பேசினார். பிறகு கடைசியாக அவர் அவ் விளைஞரைப் பார்த்து நீர் சொல்லுகிறபடியே நீர் உண்மை யான ஆளாகவும், என் பழைய நண்பருடைய மகனாராகவும் இருந்தால் உமது உண்மையை மெய்ப்படுத்தும் பொருட்டு உம்முடைய தந்தையிடம் இருந்து ஏதாவது ஒரு செய்தி கொண்டு வாரும். என்றார். இந் நிலவரையினுள்ளிருக்குங்காறும் யோகிகளின் சீடர்கள் இத்தகைய செய்தி கொண்டுவந்து மேல் உலகங்களில் உள்ளார்க்கு மெய்ப்படுத்திக் காட்டுதல் கூடாது என்று கண்டிப் பான விலக்கு ஏற்படுத்தப் பட்டிருந்தாலும், இந்தப் பண்டிதரின் அதிர்ஷ்டவசத்தால் இவர்க்கு மாத்திரம் அப்படிச் செய்து காட்டலாம் என்று மேல் உலக அத்தெய்வத்தினி டமிருந்து அனுமதி தரப்பட்டது. அதன்மேல் அவ்விளைஞர் நிலவுலகத்தில் தம் தந்தையிடம் திரும்பி வந்து நடந்ததை அறிவித்தார். தந்தையார் அதற்கு இசைந்து தம் புதல்வர் பிறப்பதற்குமுன், தமக்கும் தம் நண்பரான அப் பண்டிதருக்குந் தெரிய நடந்த சில முதன்மையான செய்திகளைச் சொல்லி அனுப்பினார். அச் செய்திகளைக் கேட்டவுடன் அவர் தாம் மறுமையுலகத்தில் வந்திருப்பதாக உண்மை உணர்ந்து அவ்வுலக இயல்புகளை அங்கிருந்தவாறே ஆராய்ந்து அறியத் தலைப் பட்டார். உண்மையாக நடந்த இந் நிகழ்ச்சியினால், இந் நிலவுலகில் உயிரோடிருக்கும் நாட்களில் நாத்திகம் பேசித் திரிவது மக்களாய்ப் பிறந்தவர்களுக்கு மிகுந்த பொல்லாங்கினை விளைக்குமென்பது தெற்றெனப் புலப்படுகின்றதன்றோ? இப்படியாகவும், இந்த மண்ணுலகத்தில் இருப்போரிற் பெரும்பாலார் ஆன்ம விசாரணை தெய்வ விசாரணை செய்யாமல் பொழுது விடிந்து எழுந்தது முதல் பொழுதுபோய்த் தூங்கப்போகும் அளவும் பணமோ பணம் என்று பேயாய் அலைந்து திரிகிறார்கள். ஆகையினாலும், தூங்கும்போதும் இவர்கள் கனவு காண்பதெல்லாம் பணத்தைப் பற்றினவே யாகையினாலும் மண்ணோடு சேர்ந்த மண்ணைச் சம்பாதிப் பதற்கு இவர்கள் தமது அரிய அறிவைச் செலவிட்டு அவ்வறிவை மண் வடிவாகச் செய்துவிடுகின்றார்க ளாகையினாலும் இவர்கள் இறந்துபோன பின்னும் பணமோ பணம் என்று சூக்கும சரீரத்திற் பேயாய் அலைந்து திரிவார்கள்; பணத்தி லேயே சிந்தை அழுந்தி நிற்கும் அவர்களை இங்குள்ளவர்கள் வருந்தி யழைத்தாலும் அவர்களை அதனைத் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியில்லாமல், அறிவு இருண்டு கிடப்பார்கள். ஆதலினாலேதான், நம்மனோரிற் பெரும் பாலார்க்குச் சூக்குமசரீர வாசிகளான அவர்கள் எதிர் வந்து தோன்றுதற்கு இடம் இல்லாமற் போகின்றது. அது மாத்திரமோ! உயிரோடு இருப்பவர்களிற் பெரும்பாலாரும் பணம் பணம் என்றே நாள் முழுதுங் கழித்தலால் ஏகாந்தமான ஓரிடத்திற் பரிசுத்த சிந்தனையோடும் இருந்து மனத்தை ஒரு வழிப்படுத்தக் கூடாமலிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவர்கள் சூக்குமசரீர வாசிகளைக் காணவேண்டுமென்று ஆசைப் பட்டால், அது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப் பட்டது போற் கைகூடாமற் போவது திண்ணமன்றோ! மேலும், இவ்வுலகில் உயிரோடிருந்த நாட்களில் பரோபகாரசிந்தை மேற்கொண்டு, ஏதோ கடமைக்காக இலௌகிக காரியங்களைச் செய்து உழல்பவர்கள் இவ்வுலக காரியங்களைச் செய்யும்போதெல்லாம் யான் இவற்றினின்று எப்போது விடுபடுவேன்! எப்போது யான் என் மனத்தை ஒருவழிப்படுத்தி எல்லாம் வல்ல எம்பெருமான் றிருவருளைப் பெறுவேன்! பிறப்பு இறப்புத் துன்பங்களி னின்றும் யான் மீளும்நாள் எந்நாள் என்று எந்நேரமும் சிந்தித்தபடியாகவே நாட்கழிப்பராதலால், இப்படிப்பட்ட பெரியோர் இவ்வுலகக் கட்டினின்றும் அகன்று மேலுலகங்களிற் சென்ற பிறகு, திரும்ப இங்குள்ளவர்கள் வருந்தி அழைப்பினும் இங்குள்ளவரோடு வந்து பெரும்பாலும் உறவு கலக்கமாட்டார்கள். இந் நிலவுலகத் தொடர்பை வெறுத்துச் சென்றவர்கள் மறுபடியும் இதனை விரும்பி வரமாட்டார்கள் என்பது உண்மையேயன்றோ? இதற்கு, இப்போது சூக்குமசரீர வாசியாயிருக்கும் கிளாட்டன் துரையவர்கள் டெம் துரையவர்களிடம் மொழிந்த சொற்களே சான்றாகுமன்றோ? அப்படியாயின் திரும்பிவரப் பிரியமில்லாத கிளாட்டன் அவர்கள் டெட் துரை யவர்களிடம் திரும்பி வந்து பேசியது என்னையெனின்; டெட் அவர்கள் நற்சிந்தையும் நற் செய்கையும் உள்ள பரோபகார துரைமகனா ராதலானும், இவர்க்கு உதவி புரிபவரான யூலியா என்னும் மாதர் சிரோமணியார் சூக்குமசரீரத்திலிருந்தபடியே டெட் அவர்களிடம் திரும்பி வரும்படி கிளாட்டன் அவர்களை வேண்டி அழைத்தலானும் அவர் வேண்டா விருப்பாய்த் திரும்பி வந்து அங்ஙனம் உரையாடினார். இதுகொண்டு, இங்கிருந்து அழைப்பவர்கள் பரோபகார சிந்தையும் தூய அறிவும் உடையராயிருப்பின் மேலுலகங்களிற் சென்றோர் ஓரோவொருகால் திரும்பி வந்து இவர்களுடன் உரையாடுவார் என்பது இனிது அறியப்படும். அங்ஙனம் அவர் வேண்டா விருப்பாக வந்து உரையாடினும், அவர் பரோபகாரமாக இவ்வுலகத்திற் செய்த நற்செய்கையை எடுத்துக்காட்டி அவருக்கு உற்சாகத்தை ஊட்டி பின்னுஞ் சில உதவிகள் செய்யும்படி வேண்டினால் அவர் அதற்கு இணங்கிச் செய்வரென்பதும் கிளாட்டன் துரையவர்கட்கும் டெட் துரையவர்கட்கும் நடந்த உரையாடலினால் இனிது அறியலாகும். ஆனாலும், பரோபகாரமான காரியமன்றிப் பிறிதொன்றும் செய்தற்கு அவர் உடன்படமாட்டார் என்பதனை இது படிப்போர் நன்றாக மனத்திற் பதித்தல் வேண்டும். இங்கேயிருந்த நாட்களில் தீயசெய்கைகளை இடைவிடாது செய்து மனம் வைரமேறி இறந்துபோன தீயோர் சூக்குமசரீர வாசிகளாய் இருள் உலகத்தில் தீய நினைவோடுதானே அலைந்து திரிவர்; அப்படிப்பட்டவர்களைத் தாம் இங்குள்ளவர்கள் பேய் என்று சொல்லுகிறார்கள். மாரண மந்திரங்களிற் பழகி அம் மந்திர சகாயத்தால் அக்கொடிய பேய்களை அழைக்கும் தீய மந்திரவாதிகள் சிலர் அவற்றை இங்கு அழைத்து அவற்றின் உதவியால் சிலர்க்குத் தீங்கு செய்து வருகிறார்கள் என்பது உண்மையே. தீயோர் தமக்குள் உண்டாகும் உறவானது சில நாளில் அவர்கள் எல்லார்க்குமே பெருந்தீங்கினை விளைவித்து அவர்களைப் பெருந்துன்பத்தில் ஆழ்த்துவதுபோலத், தீய பேய்களை வரவழைக்கும் மந்திரவாதிகள் சில நாளில் அவற்றால் தாமும் அழிந்து, தம்மால் அவைகளும் பெருந்துன்பத்தை அடையச் செய்வார்கள். ஆகவே, தீயோர்களான சூக்கும சரீர வாசிகள் பொல்லாத ம.ந்திரவாதிகள் சிலரின் சொல்லுக்கு இணங்கிப் பொல்லாங்கு செய்ய முன்வருவது போல, மிக நல்லவர்களான சூக்குமசரீர வாசிகள் பிறர்க்குத் தீங்கு செய்வதற்குச் சிறிதும் உடன்பட மாட்டார்கள். அவ்வாறாயின், தீய பேய்கள் மாத்திரம் மந்திர வாதிகளுக்கு வசப்பட்டுப் பிறர்க்குத் தீங்கு செய்யும்படியான வலிவை எவ்வாறு அடைகின்றன வென்றால், இங்கே தீயவர்களாயிருந்து இறந்து போனவர்கள் சூக்குமசரீரத்திற்குச் சென்றவுடனே ஏதும் தோன்றப்பெறாத இருள் உலகத்தில் அலைந்துகொண்டிருப்பர்; யார்க்கு எது பழக்கமோ அவர்க்கு அதுவே எப்போதும் நினைவிலிருப்பது இயற்கை யாதலால், இங்கிருந்த நாட்களில் தீயநினைவு தீயசெய்கைகளிலே பழகினவர்களுக்கு இறந்த பின்னும் சூக்கும சரீரத்தில் அத்தீய நினைவுந் தீய செய்கையுமே இடைவிடாது தோன்றிக் கொண்டிருக்கும்; அப்படிப் பட்டவர்களுக்கு இவ்வுலகத்தில் உள்ள பற்றுச் சிறிதும் நீங்காமையினால் இறந்த பிறகும் அவர்கள் சூக்குமசரீரத்தோடு இவ்வுலகத்திலுள்ள தீயோர் கூட்டங்களிலும், அசுத்தமான இடங்களிலும் வந்து திரிந்து கொண்டிருப்பர். உயிரோடிருந்த போது மாமிசத்தை வரை துறையில்லாமற் புசித்துக் கள்ளைக் குடித்து வெறி கொண்டு தம்மோடொத்தவர்களுடன் சண்டையிட்டுத் திரிந்தவர்கள் இறந்தபிறகும் அவ்வாசை தம்மை விட்டு அகலாமையினால், இறைச்சி விற்கும் இடங்களிலும் கள்ளுக்கடைகளிலும் மது மயக்கத்தாற் சண்டையிடுவோர் கூட்டங்களிலும் வந்து திரிகுவர். இவ்வாறு இவர்கள் தாமாகவே வந்து திரிவதற்கு ஆசையுள்ளவர்களா யிருத்தலினால், மந்திரவாதிகள் இவர்களுக்கு வேண்டிய மது மாமிசம் முதலியவற்றை உணவாகக் காட்டி விரும்பி அழைத்தால் அதற்கு இசைந்து இவர்கள் வராமல் இருப்பார்களா? அழைத்ததே போதுமென்று ஓடிவந்து அம் மந்திரவாதிகள் விரும்பியபடி தீய காரியங்களைச் செய்வர். பிறர்க்குத் தீங்கு செய்யும்படியான அவ்வளவு வலிவு அவர்களுக்கு எங்ஙனம் வந்ததெனின்; செல்லுமிடத்திலேதான் அவர்கட்கு வலிவு செல்லுமே யல்லாமல், மற்ற விடங்களில் அஃது உண்டாகா மாட்டாது. இறைச்சிகள் முதலியவற்றைப் புசித்துத் தீய நினைவும் தீய செய்கையும் உடையரா யிருப்பவரிடத்திலும், அசுத்தமான இடங்களில் அசுத்தமாக வசிப்பவரிடத்திலும் அத் தீய பிசாசுகள் தொடர்ந்து சென்று துன்பஞ் செய்யுமே யல்லாமல் சுத்த உணவருந்திச் சுத்த நினைவு சுத்த செய்கை யுடன் வாழ்வோரிடத்தில் அவை வருதற்குச் சிறிதும் துணிய மாட்டா; ஒருகால் ஏவிவிடும் மந்திரவாதியின் மந்திரபலத்தால் முன் செலுத்தப்பட்டு நல்லவரிடத்தில் வந்தாலும் அவற்றின் செயல் அங்குச் சிறிதும் பலியாமை யினால் திரும்பிப் போய் ஏவிவிட்ட மந்திரவாதியையே துன்புறுத்தும். ஆகையால், நல்லவர்களுக்கு அவைகளால் எஞ்ஞான்றும் துன்பமுண்டாவ தில்லை யென்க. இன்னும் இவ்வுலகை விட்டு அகன்றவர்கள் திரும்பவும் இதனை நோக்கி வருவதற்குக் காரணம் இங்குள்ள பொருள்களின் மேல் அவர்கட்குள்ள பெரும்பற்றேயாகும். பணத்தின்மேல் அளவிறந்த ஆசைவைத்து இறந்தவர்கள், தாம் பணம் வைத்த இடத்தை வந்து வந்து சுற்றுவர். ஆங்கில மகா வித்துவானான டெயிண்டன் மோஸ என்பவர் வரவழைத்துப் பேசிய ஆவேசங்களில் ஒன்றின் சரித்திரத்தை இங்கே உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றோம். 9. பணப்பற்றுள்ள ஓர் ஆவியின் வரலாறு 1877 ஆம் வருடம் ஆகடு மாதம் 18ஆந் தேதி டெயிண்டன்மோஸ என்பவருக்கு எதிரிலே வயது முதிர்ந்த ஒரு கிழவியின் வடிவந் தோன்றியது. தோன்றிய அவ் வடிவம் பின்வருமாறு அவருடன் பேசத் தொடங்கி, நான் நிலவுலகத்தில் இருந்த போது நல்லெண்ணமுந் தூயசிந்தையும் நல்லொழுக்கமும் இரக்கமும் அன்பும் உடையவளாயிருந்தேன். எனக்குமுன் இறந்துபோன என் கணவனோ பணத்தை மிகுதியாகத் தேடிக் குவிப்பதில் மிக்க ஆசையுடையவரா யிருந்தமையால், இறந்த பிறகும் இவ்வுலகத்திலேயே பற்றுள்ளவரா யிங்குவந்தே அலைந்து கொண்டிருந்தார்; இறைவனுடைய திருவருளை நாடி மேலுள்ள இன்ப உலகங்களிற் செல்ல அறிவில்லாதவராய் இங்கேயே சிறைப் பட்டுக் கிடந்தார். நானோ, இவர் இவ்வுலகப் பற்றைவிட்டு எல்லாம் வல்ல பெருமான் திருவடிக்கு எப்போது ஆளாகுவார் என்று இடைவிடாது இறைவனை வேண்டி வழுத்தி வந்தேன். எனக்குங் காலம்வர யானும் நிலவுலகத்தை விட்டு நீங்கி என் கணவனுடன் வந்து சேர்ந்து என் வற்புறுத்துதலாலும் வேண்டுகோளாலும் அவர் இவ்வுலகப் பற்றையும் பொரு ளாசையையும் அகற்றும் படி செய்து அவருடன் இறைவன் திருவருளை நாடி மேல் உலகங்களிற் செல்கின்றேன், என்று கூறியது. இந்தக் கிழவியின் கணவனுடைய ஆவேச உருவானது மேற்சொல்லப் பட்ட டெயின்டன் மோஸ என்பவருக்கு எதிரிற் பதினோருநாள் தோன்றியது. அவ் வுருவம் வரும்போது சிலசமயம் மனஎரிவோடு சத்தமிட்டுக் கொண்டும், வேறு சிலசமயம் உ என்று ஆவி போக்கிக் கொண்டும், மற்றுஞ் சிலசமயம் மேசை மேல் உராஞ்சுவதுபோல் ஓசை செய்து கொண்டும் மன அமைதியின்றித் தோன்றும். அவ் வுருவம் வெளிப்பட்டுத் தோன்றியபோது அதனைச் சுற்றிலும் உள்ள அந்தரவெளியில் உண்டான அலைச்சலினால் அஃது எவ்வளவு நிர்பாக்கியமான நிலையிலிருந்ததென்பது புலனாயிற்று. அது வந்தபோதெல்லாம் தான் தன் துன்பத்தினின்று விடுபடும் பொருட்டு இறைவனை நோக்கி வேண்டும்படி டெயிண்டன் மோஸ என்பவரைக் கேட்டது. நிலவுலகத்திலிருந்தபோது பொன்னே அதற்குத் தெய்வ மாயிருந்தமையால், தனது பொக்கிஷம் வைக்கப்பட்ட இடத்திலே பொற்சங்கிலியாற் கட்டப்பட்டுக் கிடந்தது. அவ்வாவேசம் தோன்றிய போதெல்லாம் அதன் துன்பத்தைப் பார்த்துத் தமக்கு உண்டான வேதனையும், அதனைப்பற்றித் தெரிந்ததனால் விளைந்த விசனமும் இவ்வளவென்று சொல்லினாற் சொல்லிக் காட்ட முடியாதென்று டெயின்டன் மோஸ எழுதுகின்றார். அதற்குச் சூக்கும சரீரத்திலுள்ள பெயர் துக்கம் என்பதாம். அதற்கு அவ்வளவு துக்கம் வருவதற்குக் காரணம் யாதென்று வேறொரு சூக்குமசரீர வாசியை வினவியபோது பேராசையே என்று அவர் விடை பகர்ந்தார். என்றாலும், இப்பேராசையைத் தவிர அவனிடத்தில் வேறு தீயகுணம் இல்லை; அவன் இவ்வுலகத்திற்கு உரிய கடமைகளினின்று வழுவியதுமில்லை. அப்படியிருந்தும் அவன் சூக்குமசரீரத்திலே தன் பேராசையால் மிக வருந்தித் தன் நல்ல மனையாள் தன்னுடன் வந்து சேர்ந்து தன்னை உயர்த்தும் வரையில் அதனை எதிர்பார்த்துக் கிடந்தான். இதனாற் பணத்தின் மேலும் மற்ற உலகத்துப் பொருள்கள் மேலும் அளவிறந்த ஆசை வைத்திருந்து இறப்பவர்கள் மறுமையுலகத்திற்குப் போனாலும், அங்கே யிருக்கும் மனமின்றி மறுபடியும் இப்பொல்லாத உலகத்திற்கு வந்து உரைக்கலாகாத பெருந்துன்பம் உற்று உழலுவார்கள். ஆகையாற் பொருளைச் சம்பாதிப்பவர்கள் அப் பொருள்மேற் பற்று வையாமல் தாமும் அதனாற் பெறவேண்டிய பயன்களைப் பெற்றுப் பிறர்க்கும் அதனைப் பலவகையாற் கொடுத்து உள்ளங் கனிந்து உதவிசெய்து, மறுமையுலகத்தில் பேரின்பத்தை அனுபவித்தற்கு இப்போதுதானே வழிப் பிறப்பித்தல் அறிவுடைமைக்கு அழகாகும் என்க. இனி இந் நிலவுலகத்தில் உயிரோடிருந்த காலத்தில் பிறர் தமக்குப் பெருந்தீங்குகள் செய்ய அவர்களைத் தண்டிக்க முடியாமல் மனவயிரத்தோடும் உயிர்விட்டவர்கள் சூக்கும சரீரத்திற் போனவுடன் மீண்டுவந்து தீமை செய்தவர்களைத் தண்டிக்கும் வரையிலே இங்குத் திரிந்துகொண்டு இருப்பர். உலகமெங்கும் பிரசித்திபெற்ற ஆங்கில மகா வித்துவானான ஷேக்பியர் எழுதிய ஹாம்லெத் என்னும் நாடகக் காவியத்தினின்றும் ஓர் உதாரணம் எடுத்துக் காட்டுவாம். 10. ஹாம்லெத் அரசரின் ஆவிவடிவம் டென்மார்க் தேசத்து அரசனான ஹாம்லெத் என்பவன் மிகவும் நல்ல குணங்கள் அமைந்து செங்கோல் செலுத்தி வந்தான். இவ் வரசன் பட்டமகிஷியான ஜெர்ட்டூர்ட் என்பவள் வயிற்றில் இவ் வரசனுக்குள்ள எல்லா நற்குணங்களும் ஒருங்கு பொருந்தபெற்ற ஓர் அழகிய புதல்வன் பிறந்து வளர்ந்து நல்ல வாலிபப்பருவத்தோடும் விளங்கினான். அவ்வாறு நிகழுங் காலத்தில் இவ் வரசனுடைய சகோதரனான கிளாடிய என்பவனுக்கும் அரசன் மனைவிக்கும் இரகசியத்தில் நேசம் உண்டாகி நாளுக்குநாள் முதிர்ந்து வந்தது. இந்தத் துரோகியான சகோதரன் அரசன் மனையாளைக் கவர்ந்துகொண்டது மல்லாமல், அரசனைக் கொன்று இராச்சியத்தையும் அபகரித் துக்கொள்ள எண்ணினான். இஃது இப்படியிருக்க அரசனான ஹாம்லெத் திடீரென இறந்து போனான். அரசன் சோலையிற் படுத்து உறங்குகையிற் பாம்பு கடித்து இறந்துபோனான் என்று எங்கும் பேச்சுண்டாயிற்று. அரசன் இறந்த இரண்டு மாதத்திற்குள் எல்லாம் அவன் சகோதரனான கிளாடிய அரசன் மனைவியை மணம் செய்துகொண்டு சிங்காதனம் ஏறி அரசு புரிவானாயினான். இறந்துபோன அரசன் மகனான இளைய ஹாம்லெத் மாத்திரம் தன் தந்தை திடீரென்று இறந்துபோனதையும், தன் தந்தைபால் மிக்க அன்புடைய மனைவியாய் ஒழுகிய தன் தாயான ஜெர்ட்டூர்ட் தன் சிற்றப்பனைக் கணவன் இறந்த இரண்டு மாதத்திற்குள் கலியாணஞ் செய்துகொண்டதையும் எண்ணி எண்ணி மனம் அழிந்து ஆறாத்துயர்க்கடலில் அழுந்தினவனாய்ச் சாந்த குணத்திற்கு இருப்பிடமான என் அருமைத் தந்தையைக் கொன்ற பாம்பு என் சிற்றப்பனே. என்றந்தையைக் கடித்த பாம்பு இப்போது சிங்காதனத்தின்மேல் இருக்கின்றது, என்று கருதித் தந்தை இறந்தநாள் முதல் துயரமிகுந்து தன் மனக் கிளர்ச்சியையும் நகைமுகத்தையும் இழந்தான். உலகமெல்லாம் அவனுக்குவெறும் பாழாய்த் தோன்றியது. இவன் அன்னையும் சிற்றப்பனும் இவனை உற்சாகப்படுத்த மிக முயன்று பார்த்தும் அது சிறிதுங் கைகூடவில்லை. இஃது இவ்வாறிருக்க, அரண்மனைக்கு எதிரேயிருந்த மேடைமேல் காவற்காரர் காவலிருக்கும் நாட்களில் ஒரு நாட் பாதி இரவில் ஓர் உருவம் அவர்கள் கண்ணுக்குத் தென்பட்டது. இறந்துபோன ஹாம்லெத் அரசன் தரிக்கும் வழக்கப்படியே அஃது உச்சி முதல் உள்ளங்கால் வரையில் இருப்புச் சட்டை அணிந்திருந்தது. அதன் முகமோ வெளுத்து விசனமுங் கோபமுங் கலந்த குறியோடு தோன்றியது; அதன் தாடியோ பார்ப்பதற்குப் பயங்கரமாய் அரசன் உயிரோடிருந்த நாளிற் கண்டது போலவே கருமையும் வெண்மையுங் கலந்ததாயிருந்தது. கடிகாரத்திற் பன்னிரண்டு மணி அடித்த வுடனே அது தோன்றியது. இங்ஙனம் மூன்றுநாள் தொடர்ச்சி யாகத் தோன்றியதாயினும், காவற்காரர்கள் அதனுடன் பேசியும் அது மறுமொழி ஒன்றுஞ் சொல்லவில்லை. ஆனால், ஒருமுறை அது தம்மோடு பேசுதற்குத் தலையை நிமிர்த்தி அசைத்த சமயத்தில் கோழி கூவிப் பொழுது விடிந்தமையால் அது மறைந்துபோயிற்றென்று காவற்காரர்கள் அறிவித்தார்கள். இளவரசன் இவர்கள் சொல்லியதைக் கேட்டுப் பெரிய தொரு வியப்படைந்தான். சொல்லியது ஒவ்வொன்றும் மிகவும் பொருத்தமாக இருந்தமையால் அது நம்பக்கூடாததாகவும் இல்லை. ஆகவே, அன்றிரவு போர்ச்சேவகர்களுடன் தானுங் காவலிருக்குமிடஞ் சென்று காத்திருந்தால் தானும் அவ் வுருவத்தைக் காணக்கூடும் என்றும், அங்ஙனம் அவ் வுருவம் தோன்றுவது ஏதோ தெரிவிக்க வேண்டுவதற்கே யல்லாமல் வீணாக அன்று என்றும், இதுவரையில் அது வாய்திறவாமற் போனாலும் தன்னைக் கண்டவுடன் அது பேசும் என்றும் தனக்குள் ஆராய்ந்து அறிந்தான். எப்போது இரவு வரும் வரும் என்று மிகவும் ஆத்திரத்தோடு எதிர்பார்த்திருந்தான். இராக்காலம் வந்தவுடன் ஒரேஷியா, மார்சில என்பவர்களுடன் காவலிடத்திற்குப் போய், அவ் வுருவந் தோன்றும் மேடைமேற் போயிருந்தான். அன்று இரவு குளிர் மிகுந்திருந் தமையாலும், மேல்வீசுங் காற்றுச் சில்லென்று இருந்தமையாலும் ஹாம்லெத் முதலிய அம் மூவரும் அவ் விரவின் குளிர்மிகுதியைப்பற்றிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். சடுதியில் ஒரேஷியோ என்பவன் இதோ அவ் வுருவம் வருகின்றது என்று கூவினான். தன் தந்தையின் ஆவியைக் கண்டதும் ஹாம்லெத் திடுமென அச்சமும் வியப்பும் அடைந்தான். முதல் அவன் தேவதூதர்களையும் தேவர்களையும் நினைந்து தம்மை அவர்கள் காக்கும்படி வேண்டினான்; ஏனென்றால், அது தீயதோ நல்லதோவென்றும், அது நன்மைக்கு வந்ததோ தீமைக்கு வந்ததோ வென்றும் அவன் தெரிந்துகொள்ளக் கூடாமையால், ஆனாற் சிறிதுநேரஞ் சென்றபின் அவனுக்குத் தைரியம் உண்டாயது. அவன் தந்தையின் உருவம் அவனை மிக்க இரக்கத் தோடும் பார்த்துத் தான் அவனுடன் பேச விரும்புவதுபோற் றோன்றியது. ஹாம்லெத் அவ் வுருவத்தை உற்று நோக்கிய போது, தன்தந்தை உயிரோடிருந்த காலத்து எவ்வண்ணம் இருந்தாரோ அவ்வண்ணமாகவே அது காணப்பட்டதனால், அவன் அதனை நோக்கி ஹாம்லெத்* (ஹாம்லத் என்னும் இளைஞனின் தந்தை பெயரும் ஹாம்லெத் என்பதே யாம்) என்னும் அரசனே, என் தந்தையே, மிகவும் அமைதியாகத் தாங்கள் வைக்கப்பட்ட கல்லறையினின்றும் இப்போது, நீங்கள் வெளிப்பட்டு நிலவொளி பரந்த இந்த நிலத்திற்கு வந்த காரணம் இன்ன தென்று தெரிவிக்க வேண்டுகின்றேன். தங்கள் மனத்திற்கு அமைதியைத் தரத்தக்க தான ஏதும் யான் செய்ய வேண்டு மாயின் அதனை எனக்குத் தெரிவிக்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன் என்றான். இச் சொற்களைக் கேட்டதும், இருவரும் தனியே இருந்து பேசுவதற்குத் தக்கதாகத் தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு வரும்படி அவ்வுருவம் அவனை சைகைசெய்து அழைத்தது. ஒரேஷியோவும், மார்சிலசும் இஃது ஏதோ ஒரு தீய பேயாக இருத்தலால் அதோ தோன்றுகின்ற கடற் பக்கத்திற்காவது, பயங்கரமான செங்குத்து மலைச் சிகரத்திற்காவது உம்மை ஏமாற்றிக்கொண்டுபோய் அங்கே தனது கரிய பயங்கரமான பேய் வடிவத்தைக் காட்டி உமது அறிவைத் திரிபு அடையச் செய்யு மாகையால் அதனைப் பின் தொடர்ந்து போகவேண்டாம். என்று சொல்லி அரசிளைஞனை மிகவுந் தடுத்தார்கள். ஆனால், அவர்கள் சொல்லிய மொழிகள் ஹாம்லெத் மனஉறுதியைச் சிறிதும் மாற்றமாட்டா வாயின; ஏனென்றால் அவன் தன் உயிரை இழப்பதுபற்றிச் சிறிதுங் கவலைப் படவேயில்லை. மேலும், தன் உயிர் என்றும் அழியா நிலைமைத்தாகலின் அதற்கு அவ் வாவேசம் யாது தீங்கு இழைக்க வல்லதாகும்? என்று அவன் தனக்குட் சிந்தித்துப் பார்த்து அவர்கள் எவ்வளவு தடுத்துங் கேளாமல் அஃது எங்கே அவனைப் போகும்படி ஏவியதோ அங்கே சென்றான். இருவருந் தனியேயிருக்குமிடம் வந்ததும் அவ் வாவேசம் வாய்திறந்து குரூரமாகக் கொலை செய்யப்பட்ட யான், நின் தந்தை ஹாம்லெத்தின் ஆவி. நீ முதலிற் சந்தேகித்தபடியே நின் சிற்றப்பனான கிளாடிய, தன் தமையன் சிங்காதனத்தில் ஏறுதற்கும் தன் தமையனான ஹாம்லெத் அரசனைக் கொலை செய்தான். அக் கொலை எவ்வாறு நடந்ததெனிற் கேள் : அரசன் வழக்கப்படி பிற்பகல் தோட்டத்தே உறங்குகையில், துரோகியான அவன் தம்பி அங்கே திருட்டுத்தனமாய்ப் புகுந்து நச்சுப் பூண்டின் திராவகத்தை அவன் காதில் ஊற்றினான். அத் திராவகம் மனிதனுடைய உயிருக்கு மிக்க பகையாகையால் பாதரசம்போல அஃது உடம்பிலுள்ள இரத்தக்குழாய்கள் எல்லாவற்றிலும் அதிவேகமாகப் பரவி இரத்தத்தை உறிஞ்சி உடம்பின் மேலெல்லாம் குட்டம் பிடித்தாற்போலச் சிதல் சிதலாகச் செய்து, அவனுடைய உயிரை மனைவியினின்றும் அரசாட்சியினின்றும் பிரித்துக் கொள்ளை கொண்டு போயிற்று. நீ தந்தையை அன்புடன் நேசித்தது உண்மையாயின் நீ அவனைப் பழிக்குப்பழி வாங்க வேண்டும், என்று அவனுக்கு ஆணையிட்டுக் கற்பித்தது. பின்னும் அஃது அவனிடத்தில் அவன் றாய் தன் கற்பு நிலை வழுவித் தன் முதற் கணவனுக்குப் பொய்யாளாய்ப் போன தல்லாமலும், அவனைக் கொன்றவனை மணஞ் செய்து கொண்டது பற்றியும் மிகப் புலம்பியது; என்றாலும் அவன் தன் சிற்றப்பனைப் பழிக்கு பழிவாங்க எவ்வளவு முயன்றாலும் முயல்க, தன் அன்னைக்கு மாத்திரம் எத்தகைய தீங்கும் இயற்றலாகா தெனவும் அவளை மறுமையிற்றேவதண்டனைக்கும் இம்மையில் தன் மனச்சான்றின் தண்டனைக்கும் விட்டு விடுதலே சால்புடைத்தா மெனவுஞ் சொல்லித் தன் புதல்வனை எச்சரித்தது. இளவரசனான ஹாம்லெத், ஆவிவடிவமாகத் தோன்றி இங்ஙனம் உரைத்த தன் தந்தைக்கு அவ்வுரைப்படியே நடப்பதாக வாக்களித்தவுடனே அவ்வாவேசம் மறைந்து போயிற்று. அதன்பின் நடந்தவை இவ் விஷயத்திற்கு இயைபில்லாதனவாகலின் இவ்வளவோடும் இச் சரித்திரப் பகுதியினை நிறுத்திக் கொள்கின்றாம். இந்த நிகழ்ச்சியைக் கொண்டு தெரிந்துகொள்வது யாது? தான் அறியாமல் தன்னை ஒருவன் கொலை செய்தாலும் கொல்லப்பட்டவனுடைய உயிர் சூக்குமசரீரத்திற் சென்ற வுடனே தன்னைக் கொன்றவன் இன்னானென்பதை எளிதில் அறிந்து அவனைப் பழிக்குப்பழி வாங்கித் தண்டிக்கும் பொருட்டு ஆவேச உருவில் வெளிப்பட்டு உயிரோடிருக்கும் ஏனையோர்க்குக் கொலை வரலாறு முழுதும் அறிவிக்க வல்லதாகும் என்பதே. கொலை செய்யப்பட்டவன் தீயனா யிருந்தால் அவனுயிர் சூக்குமசரீரத்திற் சென்றவுடன் கொலை வரலாற்றைப் பிறர்க்கு அறிவித்துத் தண்டிக்கும் நியாயவுணர்ச்சி இல்லாமல், தானே கொலை செய்தவனைப் பிடித்துக்கொண்டு அல்லும் பகலும் இடைவிடாது அவனைத் துன்புறுத்திவரும். நல்லவனுயிரோ அங்ஙனம் தானே அவனைத் துன்புறுத்துதற்கு விருப்பமில்லாமல் நீதி மிகுந்து, நியாயம் அறியவல்லார்க்குக் கொலை வரலாற்றை அறிவித்து அவனைத் தண்டிக்கும். ஹாம்லெத் அரசன் மிகவும் நல்லவனாகையால் தன்னைக் கொலை செய்த தம் தம்பியைத் தானே பற்றிக்கொண்டு வருத்தாமல், தன் மகனுக்குத் தான் இறந்த வரலாற்றை அறிவுறுத்தி, அவனைக் கொண்டு அக் கொலைஞனைத் தண்டிக்கலாயிற்று. இவ்வாறே நமது இவ் விந்திய நாட்டில் நடக்குஞ் சம்பவங்களும் பல உண்டு. அவற்றுள் ஒன்று இங்கெடுத்துக் காட்டுகின்றாம். 11. கொலையைக் காட்டிய குறவன் ஆவேசம் சேலம் சில்லாவில் அனங்கூர் என்னும் ஓரிடம் இருக் கின்றது. அவ்வூரில் நாலைந்து குறவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு வழிப்பறி கொள்ளையிடுதல், கொலை செய்தல் முதலிய மிகக் கொடிய செய்கைகளை நெடுநாளாகச் செய்துகொண்டு, அரசாங்கத்துச் சேவகர் கைக்கும் அகப் படாமல் நெடுநாளாகத் தப்பி வந்தார்கள். இவ்வாறு நடந்து வருகையில் அக்குறவர் ஐவரில் ஒருவன் திடீரென்று காணாமற் போயினான். அரசாங்கத்துக் காவற் சேவகர்கள் அவ்வழிப்பறி கொள்ளை நடக்கும் பாட்டையில் இராக்காலத்தே போய் அலைந்து திரிவது வழக்கம். ஒரு நாள் ஒரு சேவகன் நிலவெரிக்கும் இரவில் வழக்கம்போலத் தனியனாக யாரும் நடவாத ஒரு பாட்டையில் போய்க்கொண்டிருக்கும் பொழுது, அவனுக்கு எதிரே ஒரு மரத்தின் நிழலிலே ஒரு மனிதன் தன்னந்தனியாக நின்றுகொண்டிருக்கக் கண்டான். கண்டதும் கடுக நடந்து அம்மனிதனருகிற் போய்ப் பார்க்க அவனொரு குறவனாகக் காணப்பட்டான். நெடுநாளாக அப்பக்கங்களில் வழிப்பறி கொள்ளை செய்யும் குறவர்களில் இவன் சேர்ந்த வனாக இருக்கவேண்டுமென்று தனக்குள் எண்ணி அச்சேவகன் அவனைப் பிடித்துக்கொள்வதற்குக் கையை நீட்டி அக்குறவன் கையைப் பிடித்தான்; அக்குறவன் கை கண்ணுக்கு மாத்திரம் தோன்றியதேயல்லாமல் சேவகன் கைக்கு அகப்படாமல் காற்றைப்போலிருந்தது; இதைப் பார்த்ததும் சேவகன் மிகவும் வெருண்டு இஃது ஏதோ பேய் வடிவமாக இருக்கின்றது. என்று அஞ்சி நின்றான். இதற்குள் குறவன் வடிவாக நின்ற அவ் ஆவேசம் அச்சேவகனுக்குச் சைகைசெய்து அவனைத் தன்னுடன் பின்றொடர்ந்து வரும்படி அழைத்தது. அது சொல்லியபடி செய்யாக்கால் அஃது என்ன தீமை செய்யுமோ என்று அஞ்சினவனாய் அவன் அதன் பின்னாலே போக, அது பெரும்பாட்டையினின்று பிரியும் ஓர் ஒற்றையடிப் பாதையின் வழியாக அவனை அழைத்துக்கொண்டு சிறிது தூரம் போய் நாகதாளிச் செடி மிகுதியாய் அடர்ந்துள்ள ஓரிடத்திற் சென்று, அச்செடிகளின் நடுவே சந்து வெளியாக இருந்த ஓர் இடத்தைக் காட்டி நின்றது. அது காட்டிய அவ்விடத்தைத் தானாகவே தோண்டிப் பார்க்க அஞ்சித் தன்னோடுள்ள சேவகர்களிற் சிலரையும் சேர்த்துக்கொண்டு வந்து அவ்விடத்தைப் பரிசோதிக்கலாமென்று அங்கே அடையாளக் குறி ஒன்று செய்துவைத்தான். சேவகனுடைய குறிப்பைத் தெரிந்து கொண்டவுடனே அவ்வாவேசம் மறைந்துபோயிற்று. அது மறைந்துபோனதும் சேவகன் இஃது ஏதோ அற்புதமாக இருக்கின்றது! இந்தப் பேய் ஏதோ ஒரு முக்கியமான செய்தியை நமக்குத் தெரிவிக்க வந்திருக்கின்றது, என்று தனக்குட் சிந்தித்த வண்ணமாய் திரும்பித் தானிருக்குமிடம் வந்து, தன் சேவக நண்பரிற் சிலருக்கு முன்னாளிரவு நடந்த வரலாற்றை அறிவித்து, அப்பேய் காட்டிய இடத்திற்கு அவர்களைத் தன்னுடனே வரும்படி கேட்டான். அவர்களும் அதற்கு இசையவே, மறுநாட் காலையில் தான் அடையாளம் இட்டு வந்த அவ்விடத்திற் சென்று அங்கே நிலத்தை அகழவும், அதனுள் ஒரு பிணம் இருந்தது. அப்பிணத்தை வெளியே கிடத்திப் பார்க்கையில் முன்னாளிரவு தோன்றிய பேயின் வடிவத்தை ஒத்த குறவன் உடம்பாயிருந்தது. அப்பிணம் உடம்பெங்குங் கத்தியாற் பலவாறு வெட்டப்பட்டு இருந்தமையால், அச்சேவகர்கள் தங்களோடு இணங்கி வராமையால் மற்றக் குறவர்கள் இக்குறவனைக் கொன்று இங்கே புதைத்துப் போய் விட்டார்கள்; இக்குறவனுடைய ஆவேசம் தன்னைக் கொலை செய்தவர்களை வெளிப்படுத்திப் பழிக்குப்பழி வாங்க வேண்டுமென எண்ணித்தான் அப்படித் தோன்றி இதனைக் காட்டிக் கொடுத்தது, என்று தமக்குள் முடிவு செய்து கொண்டு, அக்குறவனைக் கொன்ற மற்றக் குறவர்களைக் கண்டு பிடிக்கும்படி அன்றைப் பகலெல்லாம் முயன்றும் சிறிதும் அவர்கள் முயற்சி பயன்படவில்லை. அதன்மேல் அவர்கள் இன்றிரவு நாம் இவ்விடம் வந்திருப்போமானால் நேற்றுத் தோன்றிய ஆவேசமே திரும்பவுந் தோன்றி நமக்கு ஆட்கள் இன்னார் என்பதையுங் காட்டிவிடும் என்று தீர்மானித்து அன்றிரவு அங்கே போயிருந்தார்கள். அவ்வாறு அவர்கள் அங்கிருக்கையில் நடு இரவில் அவ்வாவேசம் தமக்கெதிரே வரக் கண்டார்கள். முதல் நாளில் அதனைக்கண்ட சேவகன் அதன் அருகிற் போய் உன்னைக் கொலை செய்தவர்கள் இன்னாரென்றும் அவர்கள் இவ்விடத்தில் இருப்பவர்களென்றும் யாங்கள் தெரிந்து கொள்ளக் கூடவில்லையே என்றான். அதன்மேல் அந்தப் பேய் அவனைத் தன் பின்னே வரும்படி குறி காட்டிற்று. அதற்கு இசைந்து அவன் அதன் பின்னே போக அவன் நண்பரும் அவனைப் பின் தொடர்ந்து சென்றார்கள். இப்பேய் பல விடங்களும் தாண்டி அவர்களை அழைத்துப் போய்த் தன்னைக் கொலை செய்த குறவர்கள் இருக்கும் குடிசைகளின் எதிரே போய் நின்றது. உடனே சேவகர்களெல்லாம் மிகுந்த எச்சரிக்கை யோடும் அக்குடிசைகளின் உள் நுழைந்து அங்கிருந்த குறவர் களைப் பிடித்துக்கொண்டார்கள். அதன்பின் அவ்வாவேசம் மறைந்துபோயது. பிடிக்கப்பட்ட அப்பொல்லாத குறவர்களைக் காவற் சாலைக்குக் கொண்டுவந்து நன்றாகப் புடைக்கவே, அவர்கள் நடந்த உண்மைகளையெல்லாம் வெளிப்படுத்திவிட்டார்கள். அவர்கள்வாய்ப் பிறப்பிற் றெரிந்த உண்மைகளில் இஃது ஒன்று. கொலை செய்யப்பட்ட குறவன் தம்மவர்களில் ஒருவன் என்றும், ஆனால், அவன் தாங்கள் செய்யப் போகும் ஒவ்வொரு தீய காரியங்களையும் செய்யவேண்டா மென்று தடுப்பவனென்றும், ஒருநாள் தாங்கள் மிகுந்த பொருள் எடுக்கக்கூடிய ஓரிடத்தைக் கொள்ளையிட்டு அங்குள்ளவர்களையெல்லாம் கொன்றுவிட வேண்டுமெனத் தீர்மானித்த போது அவன் அதற்கு இணங்கி வராமல் மிகவுந் தடை செய்தமையால் தாங்கள் அவனைக் கொலைசெய்ய நேர்ந்ததென்றும் சொன்னார்கள். பிறகு அவர்களை நியாயமன்றில் செவ்வையாக விசாரித்து அவர்கட்கு மரணதண்டனை விதிப்பித்தார்கள். இதிற் சம்பந்தப்பட்ட பெருங்குற்றவாளிகள் நெடுநாள் சேவகர் கைக்ககப்படாமற் றப்பியும், கடைசியாக அப்பேய் வடிவத்தால் நன்கு காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். மேலே காட்டிய உண்மை வரலாற்றினால் நல்லவன் ஆவேசம் தானே கொலைஞரை வருத்தாமல் நீதி செய்வார் வாயிலாகவே அவர்களைத் தண்டிக்குமென்பது நன்கு பெறப்பட்டது. அக்குறவர்களின் வாய்ச்சொற் களினாலே கொலைசெய்யப்பட்ட குறவன் நல்ல குணம் வாய்ந்தவன் என்பது ஐயமின்றி அறியப்படுகின்றது. இனிக் கொலை செய்யப்பட்டவர் தாம் இறக்குங் காலத்துத் தம்மைக் கொன்றவரை எவ்வாறு தண்டிக்க வேண்டுமென எண்ணுகின்றனரோ அவ்வாறே தாம் இறந்து சூக்குமசரீரத்திற் போனவுடன் அவர்களைத் தண்டிக்க வல்லராவர். பிறராற் கொலைசெய்யப்பட்டாலும். அன்றித் தாமே தற்கொலை செய்து கொள்ளும்வண்ணம் பிறரால் மிகத் துன்புறுத்தப்பட்டாலும் இறக்குங்காலத்து அவர் எங்ஙனம் நினைத்தாரோ அங்ஙனம் பின்னால் நிறைவேற்றக்கூடிய ஆற்றல் அவர்க்குச் சூக்கும சரீரத்தில் உண்டாகின்றது. இதற்கு நாகபட்டினத்திற் சில ஆண்டுகளுக்குமுன் நடந்த ஒரு நிகழ்ச்சியை உதாரணமாக இங்கே எடுத்துக் காட்டுகின்றோம். இவ்வரலாற்றிற் சம்பந்தப்பட்டவர்கள் பெயர் இருப்பிடம் முதலியவற்றை எடுத்துச்சொன்னால் உயிரோடிருக்கும் அவர்கள் சந்ததியார்க்கு அது மிக்க மனவருத்தத்தை உண்டு பண்ணுமாகையால் அவற்றைக் காட்டாமல் நடந்த வரலாற்றை மாத்திரம் கூறிச் செல்வாம். 12. பழிக்குப் பழி வாங்கின ஓர் ஆவேசம் நாகபட்டினத்தில் சில ஆண்டுகளுக்குமுன் ஆங்கில மருத்துவங் கற்ற ஒருவர் இருந்தார். இவர் நற்குணமுள்ள ஓர் இந்து பிரபுவே. இவருடைய மகனார்க்கு உரிய காலத்தில் நற்குண நற்செய்கை வாய்ந்த ஒரு பெண் மனைவியானாள். ஆனால், இப்பிரபுவின் மனையாளும் மகளும் மிகவும் கொடுமையான வன்னெஞ்சம் உள்ளவர்கள். இவர்கள் தம் வீட்டுக்கு வந்த புதுப்பெண்ணைக் கண்டு மனம் மகிழாமல் மனம் மிகப் புழுங்கினார்கள். அப்பெண் வீட்டுக்கு வந்த நாள் முதற்கொண்டு மாமியும் நாத்துணாளும் சிறிதும் மனவிரக்கமின்றிக் கரும்பை ஆலையில் வைத்து நசுக்கிப் பிழிதல்போல அந்த நல்ல பெண்ணை வீட்டுவேலை முழுதுஞ் செய்யும்படி ஏவிய தல்லாமலும் தீயசொற்களாலும் தம்கடுகிய முகத்தாலும் அடி உதைகளாலும் அளவுகடந்து வருத்தி வந்தார்கள். அந்தப் பெண்ணோ இவ்வளவு துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு தனக்கு நன்னாள் வரும் வரும் என்று எதிர்பார்த்துச் சிலவாண்டுகள் கழித்தாள். தன் கணவன் தன் நிலைமையைத் தானாகவே தெரிந்துகொண்டு இத்துன்பம் அகலுதற்குரிய ஏற்பாடு செய்வான் செய்வான் என்று பலநாள் நம்பியிருந்தும், ஒன்றும் வழிபிறக்கவில்லை. அவள் தன் கணவனோடு தாராளமாய்க் கூடியிருக்கவும் அக்கொடியார் விடுவதில்லாமை யால் அவள் தன் கணவனிடம் தானே தன் வாய்திறந்து தான் படுந் துன்பங்களைத் தெரிவிக்கவும் நெடுநாள்வரையில் அவளுக்குச் சமயம் வாய்த்திலது. பிறகு ஒருநாள் தெய்வச் செயலாய்த் தன் கணவனுடன் சிறிது தாராளமாயிருக்கச் சமயம் வந்தது. அப்போது அவள் தன் கணவனை மிக்க அன்புடன் பார்த்து, என் ஆருயிர்க்காதலனே! யான் ஏதொரு குற்றமும் செய்யாதிருக்கவும், வீட்டுக்காரியங்கள், அவ்வளவும் யாரும் செய்யாமல் யான் ஒருத்தியே முற்றுங்கவனித்து என்னால் இயன்றளவு மனவருத்தத்திற்கு இடனின்றிச் செய்து வரவும், மனத்திற் கள்ளமின்றி யான் எல்லாரிடத்தும் அன்பு பாராட்டி வரவும் என்னை அன்புடன் பாராமல் என் மாமியும் நாத்துணாளும் எனக்குச் செய்துவருங் கொடுமைகள் இவ் வளவென்று என்னாற் சொல்லமுடியாது. யான் என்ன செய்வேன்! என் பிரிய மணவாளரே! தாங்களே என் நிலைமையை அறிந்து என்னை இத்துன்பத்தினின்று அகற்றுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்; தாங்களும் கவனிக்கவில்லை. தங்களுடன் என் குறையையாவது எடுத்துச்சொல்ல நாம் இருவரும் தனியேயிருக்கச் சமயம் வாய்க்குமாவென்று எதிர்பார்த்தேன். நெடுநாளாக அதுவும் வாய்க்கவில்லை. இன்றைக்கு ஏதோ தெய்வகதியாய் தங்களைத் தனியே சந்திக்க நல்லவாய்ப்புப் பெற்றேன் என்றனள். இவ்வரிய பெண்ணின் கணவனோ இயற்கையில் நுட்ப அறிவில்லாதவனாதலால், இவள் கூறிய இச்சொற்களைக் கேட்டும் அவற்றின் நுணுக்கத்தையும் தன் மனைவியின் அருமைக் குணத்தையுந் தெரிந்துகொள்ள மாட்டாதவனாய் அலட்சியமாக மாமி மருமக்கள்மார்க்கு இது வழக்கந்தான். இவையெல்லாம் என் காதிற் போடாதே என்று சொல்லிப் போய்விட்டான். பிறகு அவள் தன் தலைவிதியை நொந்துகொண்டு, ஒரு நாள் மாமி நாத்துணாளைப் பார்த்து நீங்கள் காலால் இட்ட வேலையை யான் தலையாற் செய்யக் காத்திருக்கிறேன். ஆனால், நீங்கள் மாத்திரம் பட்சமாய் மலர்ந்த முகத்தோடு என்னை நடத்திவந்தால் அதுவே எனக்குப் போதும், என்று கெஞ்சிக்கேட்டாள். இவ்வினிய சொற்கள் அக்கொடி யாரிருவருக்கும் இனிமையைத் தராமல் நாராசத்தைக் காய்ச்சிக் காதிற் செருகினது போல் இருந்தன. உடனே அவர்கள் இருவரும் விளக்குமாறும் தடியும் எடுத்துக் கொண்டு அமிர்தவல்லி போன்ற அப்பெண்ணை உடம்பெங்கும் நன்றாக நைய நறுக்கிப் புடைத்தார்கள். அப்பெண்ணோ பொறுக்கக் கூடாத அவ்வடிகளைப் பெற்றுக் கொண்டும் வாய் திறவாமலும் எழுந்திருக்கக் கூடாமலும் கிடந்தாள். அன்றிரவு வீட்டுக்கு வந்த அவள் கணவன் எப்போதும் போலத் தன் மனைவியைக் கவனியாமலே இருந்து விட்டான். அன்றிரவு அப்பெண்ணுக்கு உடம்பின் நோயும் மனநோயும் மிகுதிப்பட்டன. இனித் தான் இவ்வுலகில் உயிர்வாழ்வதிற் பயனில்லை யென்று கண்டாள். தன் உயிரை இன்றைக்கே மாய்த்து விடுதல்தான் தக்கதென்று தீர்மானித்தாள். நள்ளிரவில் எல்லாரும் அயர்ந்துறங்கும் போது அவள் மெல்ல மெல்ல நகர்ந்து வீட்டின் புழக்கடைப் பக்கத்திலிருந்த கிணற்றண்டை போய் எழுந்து நின்று யான் இறந்துபோன பிறகு ஆவேசமாய் நின்று என் மாமியையும் நாத்துணாளையும் மிகவும் துன்புறுத்தி அவர்கள் உயிரைக் கொள்ளைகொள்ளக் கடவேன், என்று உறுதி செய்துகொண்டு கிணற்றிற் குதித்து மாண்டாள். அவள் விழுந்ததனால் உண்டான ஓசை வீட்டிலிருந்தவர்கள் யார்க்குங் கேட்கவில்லை. வீடு மிக அகன்ற தொன்றாயிருந்தமையினாலும் எல்லாரும் அயர்ந்து உறங்கினமையினாலும் அவ்வோசை கேட்டிலதுபோலும். விடியற் காலையிலெழுந்த வர்கள் கிணற்றில் பார்க்க அப்பெண் பிணமாய்க் கிடத்தலைக் கண்டு திடுக்கிட்டு ஓலமிட்டார்கள். அப்பெண்ணின் கணவன், மாமனார் முதலிய எல்லாரும் வந்து பார்த்தும்... பிணத்தை மேலெடுத்து முதனாளும் அதற்கு மேற்பட்ட நாட்களிலும் மாமி நாத்துணாளால் அப்பெண் குரூரமாய் நடத்தப்பட்ட விவரமெல்லாம் கேட்டறிந்தார்கள். இவ்வாறு அப்பெண் இறந்து பத்துப் பதினைந்து நாட்கள் ஆயின. அவள் மாமியும் நாத்துணாளும் வெளிக்கு விசனம் உடையவர்கள்போற் காட்டினாலும், அவள் இறந்தொழிந்தமைபற்றி உள்ளுக்குள்ளே மிகவும் மகிழ்ந்திருந்தார்கள். அவள் கணவனோ பிறகு தன் மனைவியின் அருமைக் குணங்களைத் தெரிந்து, தன் மனைவியைக் கொன்றவர்கள் தன் தாயும் சகோதரியுமே என்று உண்மை உணர்ந்து துயரக்கடலுள் ஆழ்ந்தான். அப்பெண்மணியில்லாத அவ்வீடு பொலிவிழந்து வெறும் பாழாய்க் காணப்பட்டது. அவ்வீட்டிலுள்ளவர்கள் முகமெல்லாம் கருகிக் களையின்றி வற்றிப் பாழ் அடையலாயின. இராக்காலம் அவ்வீட்டினுள் அமைதி யில்லாததாயிற்று. பொல்லா நெஞ்சினரான மாமியும் நாத்துணாளும் நல்லுறக்கங்கொள்ளாமல் பெருந்திகிலால் துடித்தார்கள். இரவில் ஏதோர் ஓசையும் இன்றியிருக்கையில் திடீரென்று ஓர் அழுகுரல் கேட்டது. பின்னுஞ் சிறிது நேரத்தில் அவ்வோசை அடங்கி அவ்வீட்டில் யாரோ நடப்பது போலச் சரசரவென்னும் ஓர் ஒலி உண்டாயிற்று. பின்னுஞ் சிறிதுநேரத்தில் ஐயோ! ஐயோ!! அடிக்கிறாளே! அடிக்கிறாளே!! என்று பெருங் கூக்குரல் எழுந்தது. அது கேட்டதும், எல்லாரும் எழுந்து அவ்வோசை வந்தவிடத்திற்கே, ஓடிப்போய் பார்க்க, நாத்துணாள் தான் படுத்திருந்த விடத்தினின்றும் பரபரவென்று இழுக்கப்பட்டு உலக்கையால் அடிபட்டுக் கிடந்தாள். அவளை எடுத்துத் தேற்றி நடந்தது என்னவென்று கேட்க, ஐயோ! இறந்துபோன அண்ணி இதோ வந்து என்னைப் பரபரவென்று இழுத்துப்போட்டு உலக்கையால் அடித்தாளே! அவ்வடி என்னால் தாங்க முடியவில்லையே! இதோ என்னை மறுபடியும் உருத்துப் பார்க்கிறாள்; பல்லைக் கடிக்கிறாள்; ஐயோ! என்ன செய்வேன்; இதோ மறுபடியும் உலக்கையை எடுக்கிறாளே! என்று அவள் சொல்லும்போதே அங்கே ஓரிடத்திலிருந்த உலக்கையானது திடீரென்று அந்தரத்தில் வந்து அவள் முதுகில் தாக்கியது; சுற்றிலும் உள்ளவர்கள் அதைப் பிடித்தார்கள்; அங்ஙனம் அவர்கள் அதைப் பிடிக்கையில் அஃது அவர்கள் கையைவிட்டு நழுவிப் போயிற்று. இங்ஙனமே அந்த நாத்துணாளை இறந்து போனவளின் ஆவேசம் ஒவ்வோர் இரவும் வருத்துவாதாயிற்று. வீட்டிலுள்ள ஆண்மக்கள் எல்லாரும் எத்தனையோ பரிகாரங்களும் மந்திரங்களும் செய்து பார்த்தும் ஒன்றும் பயன்படவில்லை. நாளேற நாளேற அந்த வீட்டிற் கூக்குரல் மிகுதிப்படலாயிற்று. அந்த நாத்துணாள் தன் படுக்கை யினின்றும் திடீரென மேலே தூக்கப்பட்டுப் பொத்தென்று கீழே வீழ்த்தப்பட்டாள்; அவள் உண்ணுஞ் சோற்றிலே அசுத்தமான பொருள்கள் வந்து வீழ்ந்தன; ஒவ்வொருநாள் விளக்குமாற்றால் அடிபட்டாள்; ஒவ்வொருநாள் அவள்மேல் சாணத்தண்ணீர் வந்து வீழ்ந்தது; ஒவ்வொருநாள் தடியால் அடிபட்டு அவள் உடம்பெங்குங் கன்றி இரத்தங் கட்டின; இவ்வாறு ஒரு மாதம்வரையில் அவள்பட்ட துன்பங்களுக்குக் கணக்கில்லை. இங்ஙனந் துன்பப்படும் போதெல்லாம், இந்தப் பாவி என்னை அடிக்கிறாளே, கடிக்கிறாளே, உதைக்கிறாளே, சிதைக்கிறாளே என்று சொல்லுவதும், இகழ்வதும், திட்டுவதும் அன்றி, அவள் உயிரோடு இருந்தபோது நாம் எவ்வளவு துன்பம் அவளுக்குச் செய்தோம் என்று சிறிதும் நினையாமலும் நாம் செய்தது தவறாயிற்றே என்று மனம் இரங்காமலும் கடினசித்தம் உடையவளாயிருந்தாள். நாளேற, நாளேற இத்துன்பங்களால் அந் நாத்துணாள் உடம்பு இளைத்து எலும்பு வெளித்தோன்றி ஊதினாற் பறக்கும் இயல்பு உடையவளானாள். இப்படி யெல்லாம் ஒருமாதம் கழிந்தது. ஒருநாளிரவு எல்லாம் ஓர் ஓசையும் இன்றி அமைதியாயிருந்தது. அவ்வீட்டிலுள்ள எல்லாரும் மிகவும் அயர்ந்து உறங்கினார்கள். கதிரவன் கீழ்த் திசையிற் றோன்றுஞ் சமயமாயிருந்தது. அப்போது, இறந்துபோன அப்பெண்ணின் கணவன் ஒரு கனவு கண்டான்; தன் மனைவி தன் பக்கத்தில் மிகவும் அமைதியோடு நின்றுகொண்டு தன்னுடன் பேசுவதாக நினைத்தான். முதலிற் சிலநேரம் அவள் பேசுவது இன்னதென்று தெரிந்துகொள்ளக் கூடவில்லை. அதன் பிறகு அவன் உற்றுக் கேட்கையில் என் ஆருயிர்க் காதலனே! நான் உயிரோடு இருந்தபோது நான் உம்மை அணுக வொட்டாமல் பலவகையாலும் என்னை வருத்திவந்த உம் சகோதரி ஒழிந்தாள்; என் அன்புள்ள நாயகனே! நான் உமக்கு ஏதுந் தீங்குசெய்வேன் என்று எண்ணாதீர்கள். உம்மை என் கண்மணிபோற் பாதுகாத்து வருவேன்; நான் உயிரோடு இருக்கும்போது நீர் என்னிடம் அன்பு பாராட்டாவிடினும், இப்போதாயினும் என்னிடம் நீர் அன்பு பாராட்டி வருவீரானால் அஃதொன்றுமே எனக்குப் போதும், என்று பேசக் கேட்டான். அது கேட்டவன் திடுக்கிட்டு எழுந்தான். எழுந்து தன் சகோதரி படுத்திருந்த இடத்திற்கு ஓடினான். அங்கே அவளைக் காணவில்லை. இவன் செய்த அரவத்தால் வீட்டிலுள்ள எல்லாரும் விழித்துக் கொண்டார்கள். வீடெங்கும் அவளைத் தேடினார்கள்; எங்கும் காணவில்லை. பிறகு வீட்டிலுள்ள கிணற்றிற் போய்ப்பார்க்க அவள் அதிற் பிணமாய் மிதக்கக் கண்டார்கள். இங்ஙனம் இவள் இறந்தபிறகு இரண்டு வாரங்கள் வரையில் அவ்வீட்டில் எவ்வகையான கலவரமும் இல்லாதிருந்தது; எல்லாம் அமைதியாகவே யிருந்தது. தன் மகள் இறந்ததால் உண்டான வருத்தம் அவள் தாய்க்கும், தன் மனைவியையும் சகோதரியையும் இழந்ததால் உண்டான துயரம்... அவ்வீட்டிற்குடையவரான வைத்திய பண்டிதருக்கும் அன்றி மற்றெல்லாம் அமைதியாகவே இருந்தன. தம் மருமகளை இழந்ததுபற்றி இப்பண்டிதர் மனம் மிக வருந்தினாரே யல்லாமல் அவள் மாமி சிறிதும் வருந்தவில்லை. அவளோ தன் மகள் இறந்த வருத்தத்தை மிகவும் பாராட்டி வந்தாள். இங்ஙனம் ஒரு மாதஞ் சென்றது. ஆனால், அம்மாமியாரின் அறிவு நாளுக்குநாள் ஒரு நிலைப்படாமல் வந்தது, சிறிது சிறிதாகத் தன் நினைவையும் இழந்து வந்தாள்; தான் இன்னாள் என்பதையுங் கூடச் சிற்சில சமயங்களில் மறந்துபோனாள். பைத்தியங் கொண்டவர்கட்கு உள்ள செய்கையெல்லாம் இவளிடத்துங் காணப் பட்டன. இதற்காக ஆங்கிலவைத்திய பண்டிதரான இவள் கணவனும் இவள் மகனும் இவளுக்கு வந்த இச்சித்தப் பிரமையை நீக்கச் செய்த முறைகளுக்கு ஓர் அளவே இல்லை. இப்படியெல்லாஞ் சில வாரங்கள் கழிந்தன. இஃதிப்படி யிருக்க- திடீரென்று ஒருநாள் விடியற்காலையில் நாகபட்டினத்தின் கடற்கரையருகிலே ஒரு பிணம் வந்து ஒதுங்கிக் கிடக்கிறதென்னும் ஒரு சொல் எங்கும் உலாவியது. ஊரவர்களிற் பலர் அங்கே அதனைப் பார்ப்பதற்குப் போய்க் கூடினர். ஊர்க்காவற் சேவகர்களும் ஆங்கில வைத்திய பண்டிதர்களும் அங்கே அதனைப் பரிசோதனை செய்தற்கென்று போய்ச் சேர்ந்தனர். இங்ஙனஞ் சேர்ந்து நின்றவர்களில் ஒருவருடைய பார்வை அப்பிணத்தின்மேல் விழுந்த மாத்திரத்திலே அவர் கண்களில் நீர் துளித்துளியாய் விழுந்தது; அவர் உடலம் பதறியது; வாய் குழறியது; தம்மை மறந்தோடி அப்பிணத்தின் மேல் விழுந்து அலறினார். அவர் யாரென்பீரேல், இச்சரித்திரத்தில் சம்பந்தப்பட்ட ஆங்கில வைத்திய பண்டித ரென்று தெரிமின்கள்; அப்பிணம் தன் மருமகளை வருத்தி மடிவித்த மாமியாரே யல்லது வேறன்று. அப்பிணத்தின் முடிமுதல் அடிகாறும் துணியினால் வரிந்து கட்டப் பட்டிருந்தது; நெற்றியில் தீட்டிய குங்குமஞ் சிறிது கலைந்திருந்தது. இம் மாமி தன் வீட்டிலிருந்து நள்ளிரவிலே புறப்பட்டு எவ்வாறு வந்தாள். எப்படிக் கடலிலே வீழ்ந்தாள் என்பது யாருக்குமே தெரியாது. இவள் கணவனாரான ஆங்கில வைத்திய பண்டிதர் ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் வெளியே கடற்கரை வரையில் உலவப்போவது வழக்கம். அங்ஙனம் போகும் இவர் சடுதியிலே ஒரு பிணம் கடற்கரையில் வந்து ஒதுங்கிக் கிடக்கிற தென்னுஞ் சொல்லைக் கேட்ட வுடன் அதனிடம் வந்து கடைசியாக அது தம் மனைவியாகவே இருக்கக் கண்டு மிகவுந் துன்புற்று நைந்தார். மாமியார் இறந்ததன் பிறகு, இவளையும் இவள் மகளையும் கொன்ற மருமகளின் ஆவேசம் அவ்வீட்டில் ஏதும் ஆரவாரஞ் செய்தலின்றி ஒழிந்தது. என்றாலும், இந்நிகழ்ச்சியின் பிறகு அவ்வீடு செழிக்கவில்லை. சில நாளில் அவ்வாங்கில வைத்திய பண்டிதரும் இறந்தார். அவ்வீட்டுக்கு உடையவரான அவர் மகனும் அதனைப் பிறர்க்கு விற்றுவிட்டு எங்கேயோ போய்விட்டார். இங்ஙனம் அந்தக் குடும்பமே பாழாய்ப் போய்விட்டது. இவ்வரலாற்றினால் அறியக் கிடக்கும் உண்மை யாது? பிறரால் நீதியின்றி அளவுக்குமேல் துன்புறுத்தப்பட்டவர்கள் தாம் இறக்குங்காலத்துத் தமக்குத் தீங்கு செய்தவரிடம் பழிக்குப்பழி வாங்கவேண்டு மென்னும் எண்ணத்தோடும் உறுதிகொண்டு போவார்களானால், அவர்கள் இறந்தபிறகு சில நாட்களிலெல்லாம் தமது சூக்குமசரீரத்தில் அந்நினைவுக் கேற்ற வலிவு அடைந்து, தமக்குத் தீங்கிழைத்தவர்க்குப் பொறுக்கலாகாத பெருந்துன்பத்தை விளைக்கின்றார்கள் என்பதேயாம், இதனைப் போலவே நடந்த உண்மை வரலாறுகள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன; அவை யெல்லாம் இங்கெடுத்துக் காட்டப் புகுந்தால் இஃது அளவின்றி விரிந்து போகும். இவ்வரலாறுகளின் காரணத்தை மாத்திரம் உற்று நோக்குவேமாயின், துன்புறுத்தப்பட்டவர்கள் இறக்கும் போது மாத்திரம் பழிவாங்க உறுதிகொண்டு விடுவராயின், தாம் இறந்த பிறகுந் தம்மெண்ணத்தைக் கட்டாயம் நிறைவேற்று விப்பரென்பது திண்ணமென்றல் செவ்வையாக விளங்குகின்றது. ஆகையால், தம் உயிரை விரும்புபவர்கள் பிறவுயிர்கட்குந் தீங்கு இயற்றாது இருக்கக்கடவராக. இதுபற்றியன்றோ இவ் வுண்மைகள் எல்லாம் முற்றவுணர்ந்த முதலாசிரியரான திருவள்ளுவ நாயனார், பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற்ற மக்கின்னா பிற்பகற்றாமே வரும் என்று அருளிச் செய்வாரா யினர். முதற் பொழுதிற் பிறர்க்கு ஒருவன் ஒரு தீமையினைச் செய்வானானால், அத்தீமை செய்தவனுக்குப் பிற்பொழுதில் அவசியம் வந்தே தீரும். மற்றக் கீழ்த்தர உயிர்கட்கு இல்லாப் பகுத்தறிவு பகுத்துணர்ச்சிகள் மனிதப் பிறவியில் காணப் படுதலால், அப்பகுத்தறிவுணர்ச்சி கொண்டு மனிதர் தமக்குத் தீங்கு செய்தார்க்குத் தாமும் இப்பிறவியிலேயே தீங்குசெய்ய முன் நிற்பர்; இப்பிறவியிற் செய்யலாகா விட்டால் மறுபிறவியிற் சூக்குமசரீரத்திற் சென்ற மாத்திரையானே பழிக்குப்பழி வாங்குவர்; சூக்கும சரீரத்தினும் பழிவாங்க ஏலாவிட்டால் திரும்பவும் மனிதப் பிறவியிற் பிறந்து பழி வாங்குவர். எத்தனை பிறவி எடுத்தாயினும் பழிக்குப்பழி வாங்காமல் மாத்திரம் விடார். அது கிடக்க, சூக்குமசரீரத்திலும் பழி வாங்க ஏலா விட்டால் மறுபடியும் மனிதப்பிறவி எடுத்தாயினும் அதனை முடிப்பரெனக் கூறியதேன் என்றாற் கூறுகின்றாம். உடனே பழிக்குப்பழி வாங்குதலும், சிறிது பொறுத்துப் பழி வாங்குதலும், அல்லது அதுவுங் கழித்து வேறொரு மனிதப் பிறவி யெடுத்தபின் அவ்வாறு செய்தலும் ஆகிய இவையெல்லாம் துன்புறுத்தப்பட்டவர் நிலைமைக்கும் அவர் அதனைத் தாங்கும் அளவுக்கும், அவர் மனத்தில் ஏறிய வைரத்திற்கும், அவர் அறிவின் வலிமைக்கும் ஏற்ற வகையாய் வந்து பொருந்தும். இவற்றுள் ஒவ்வொன்றையும் அடைவே விளக்கிக் காட்டுவோம். ஒருவன் தன்னிலும் மேம்பட்ட செல்வம் உடையார்க்குத் தீங்கு செய்வனானால் அவர் தமக்கு மிகுதியாய் உள்ள செல்வவளத்தால் பலரைத் தமக்குத் துணை கொண்டு தீங்கு செய்தவனை உடனே எளிதில் வருத்திப் பழியைத் தீர்த்துக்கொள்வர். இவ்வாறன்றி மிகுந்த செல்வம் உடையான் ஒருவன் தன்னினும் மிகத் தாழ்ந்த ஏழை ஒருவனுக்குத் தீங்கு செய்வன் ஆனால், அவ்வேழை தானும் அவனுக்கு உடனே தீங்கு செய்யமாட்டாமையின் தான் அது செய்தற்குச் சமயம் வாய்க்குந்தனையும் சும்மா இருப்பன். இன்னும் நல்லவர் ஒருவர்க்கு ஒருவன் தீங்கு செய்துவந்தால் அவர் தமது நற்குண மிகுதியால் அத்தீங்கினை ஒருபொருட் படுத்தாது அலட்சியமாய் விட்டிருப்பராதலால், அவர் அதனைச் செய்தவனுக்கு உடனே தாமும் தீங்கு செய்யாமல் இன்னும் பார்ப்போம். இன்னும் பார்ப்போம் என்று விட்டிருப்பர். அங்ஙனம் இன்றிப் பொல்லாதவன் ஒருவனுக்கு மற்றொருவன் ஒரு தீங்கு செய்தால், அவன் தன் பொல்லாத குணத்தால் உந்தப்பட்டு உடனே மற்றவனுக்குத் தானும் தீங்கு இயற்றிவிடுவன். இனிப் பிறர் பழியினை மிகுதியும் பாராட்டி மனவைரம் கொள்ளாத வனுக்கு ஒருவன் தீங்கு செய்து வந்தால் அவன் அதனை மிகுதியும் பாராட்டான். ஆகையால், தீங்கிழைத்தவனுக்குத் தன் மனம் வைரம் ஏறும் அளவும் தான் ஏதும் இன்னல் இயற்றாமலே ஒழுகுவான். எளிதில் வைரம் ஏறும் ஒருவனுக்கு அங்ஙனத் தீங்கு செய்யப்படுமாயின் தீங்கு செய்தவன் அவனால் உடனே தண்டிக்கப்படுதல் திண்ணமாமென்க. இனி அறிவின் நுட்பங்கள் வாய்ந்தார் ஒருவர்க்கு ஒருவன் தீதுசெய்வானானால், அவர் தம் அறிவின் நுட்பத்தால் மிக இலேசிலே அவனுக்குப் பலவகையில் துன்பத்தை விளை வித்துத் தண்டிப்பர். அறிவில்லான் ஒருவனுக்குப் பிற னொருவன் இன்னா செய்தால், அவன் தன் அறிவின்மையால் அவனுக்கு அதனைத் திருப்பிச் செய்தற்குரிய வழிவகைகள் தெரியாமல் சும்மா இருந்து விடுவன். இங்ஙனம் இப்பிறவி யிலேயே தனக்குத் தீது செய்தவனுக்குத் தானும் தீங்கு செய்தல் பலதிறப்பட்டு ஏறியுங் குறைந்தும் விரைந்தும் தாழ்ந்தும் நடைபெறுதலை நமதனுபவத்திற் காண்கின்றோம் அன்றோ? இதுபோலவே ஏனைப் பிறவிகளினும் வைத்து அறிந்து கொள்ளல் வேண்டும். 13. தீது செய்தவர்க்குத் தண்டனை மிக நல்லவராய் இருப்பவர் ஒருவருக்கு ஒருவன் இடை விடாது தீதுசெய்து வருகுவனானாலும், அவர் அதனை ஒரு பொருட்டாய் எண்ணாமலும், அதுபற்றி மனத்துள் வைரங் கொள்ளாமலும், வைரம் இல்லாமையால் அவனைத் தண்டிக்க விரும்பாமலும் போவராதலால் அவர் தூலசரீரத்தை விட்டுச் சூக்குமசரீரத்திற் போன பின்னும் அவனுக்கு எவ் வாற்றாலும் தீங்கு செய்ய முன்வரார். இதற்குப் பெரியபுராணத்திற் சொல்லப்பட்ட மெய்ப்பொருளார் என்னும் அரசர் பெருமானின் சரித்திரமே தக்க சான்றாம். தமக்குக் கொடும் பகைவன் என்பது தெரிந்தும், அப்பகைவன் துறவிவேடந் தரித்து வந்தமை கண்டு அவனை அவ்வரசர் பெரிதும் உபசரித்துப் பீடத்தின்மேல் இருக்க வைத்தார். பிறகு அவன் அவ்வரசரைத் தன்னோடு தனித்திருக்கும்படி கேட்க, அதற்கு அவர் அவ்வாறே இசைந்து தம் அருமை மனைவியாரை அப்புறத்தே அனுப்பிவிட்டார். உடனே அரசர் தனிமை யிலிருப்பது கண்ட பாதகன் தன் கக்கத்தில் மறைத்து வைத்திருந்த குற்றுடைவாளினை உருவி அவ்வரசரின் அருமைத் திருமார்பிலே பாய்ச்சினான்; அவ்வாறு அக்கொடியன் பாய்ச்சியபோதும் அவ்வரசர் ஏதும் சினந்து அதனைத் தடாமல் அதனை ஏற்றுக் கொண்டார்; இவன் வாளிற்குத்திய அரவங் கேட்டுப் புறத்தேயிருந்த தத்தன் என்னுங் காவற்காரன் உள்ளோடி வந்து அக்கொடியவனைப் பிடித்துக்கொள்ள, உயிர் துறக்கும் நிலைமையில் அவ்வரசர் தத்தா, இவர் நம்மவர். இவர்க்கு ஏதுந் தீங்கு வராமே இவரைப் புறங்கொண்டுபோய் விடுக என்று சொல்லி உயிர் நீத்தருளினார். இதனால், மெய்ப்பொருளார் என்னும் அரசரினும் நல்லவர் எனச் சொல்லப்படுதற்குரியார் உளரோ சொல்லுமின்! இத்தன்மையான மிக அரிய நற்குணத்திற் சிறந்த மெய்ப் பொருளார் தமது தூலசரீரத்தைவிட்டுச் சூக்குமசரீரத்திற் சென்றபிறகுந் தமது நற்குணத்திற் சிறிதும் பிறழமாட்டார்; ஆகையால், அவரைக் கொன்றவன் அவரால் சிறிதுந் துன்புறுத்தப்படுவான் அல்லன். அங்ஙனம் பழியே நினையாத நல்லவர்க்குத் தீங்கிழைப் போர் தண்டிக்கப்படாமல் தப்புவராயின், உலகத்தில் தீமைசெய்வோர் தொகை மிகுதிப்படுமேயெனின், எல்லா உயிர்க்கும் உயிர்க்குயிராயும் அறிவுக்கு அறிவாயும் நிறைந்து விளங்குகின்ற கடவுள் தீயவன் நெஞ்சிலும் மனச்சாட்சியா யிருந்து அவன் செய்த தீமைகளை அவனுக்கு எந்நேரமும் அறிவித்து, அவனுக்கு ஓயாத துன்பத்தை வருவித்து வருத்தித் திருத்துவராதலின் அவன் நாள் ஏற நாள் ஏற நல்லவனாய்த் திரும்புவன்; ஆதலால், தீயோர் தண்டிக்கப்படாமற் போதலும், அவர் தொகை பெருகுதலும் இல்லையென்க. மேலும், யாரும் அறியாமல் நல்லோர்க்குத் தீங்கு செய்தவன், அத்தீங்கினைப் பிறர் அறியாமல் மறைத்து வைக்குமளவும் அதனாற் பெருந் துன்பம் உழப்பனாதலால் தன் மனநோய் தாங்கமாட்டாமல் தானே தன்னுள் மறைத்துவைத்த தீய செய்கையைப் பிறர்க்கு வெளியிட்டுவிடுவான். அவனது தீய செய்கையை உணர்ந்த உலகத்தவர் அவனைப் பலவகையால் துன்புறுத்தி வருவராதலின் அவன் தன் ஆயுள் காலமெல்லாம் சொல்லுதற்கரிய பெருந் துன்பத்தையே அனுபவிப்பவன் ஆவன். அதுவல்லாமலும், இந்நிலத்தின்மேல் உள்ள நாளெல்லாம் துன்பமே உழந்தவனுக்கு அவன் இறக்குந் தறுவாயிலும் அத்துன்பவுணர்வே அவன் முன் வந்து நிற்கும்; அத்துன்ப நினைவோடு அவன் இத்தூலசரீரத்தை விட்டுச் சூக்குமசரீரத்திற் சென்ற மாத்திரத்திலே, அத்துன்பம் நூறுமடங்கு ஆயிரமடங்கு மிகுதியாய்ப் பெருகி அவனை நெருப்பிலிட்டு வாட்டுவதைப் போல் வருத்தும், அதுவன்றியும், நல்லவர்க்குத் தீங்கு செய்தும், இங்குள்ளவர் அதனை அறியாவாறு தப்பினவன் மறுமையிற் சூக்குமவுடம்பிற் சென்றவுடனே, இத்தகையோரை மிகவும் தண்டித்தற் பொருட்டுத் தென்றிசைக்கண்ணேயுள்ள சூக்கும வுலகத்தில் முழு முதற்கடவுளால் நியமிக்கப்பட்ட அறக்கடவுள் அவனைப் பிடித்து அவன் செய்த குற்றங்களை அவனுக்கு விளங்க அறிவித்து இருள், அளறு என்று சொல்லப்படும் நரகங்களில் அவனை விழுவித்து வருத்துவர். 14. அறக்கடவுளின் ஒளியுடம்பு இங்ஙனம் தீங்கு செய்தவரை நிரயத்திற் றள்ளித் துன்புறுத்தவும் நன்மை செய்தவரைத் துறக்கத்திற் செலுத்தி இன்புறுத்தவும் நியமிக்கப்பட்ட அறக்கடவுள் இருக்கும் உலகம் மிகவுஞ் சூக்குமமான ஆகாய அணுக்களால் ஆக்கப்பட்டு, இந் நிலவுலகம் போன்ற எண்ணிறந்த அண்டங்களைத் தன்னுள் ளடக்கி வியாபித்து நிற்பது. இவ்வாகாயம் நம்முலகத்தைக் கவிந்திருக்கும் பூதாகாயத்தினும் பன்மடங்கு நுண்ணியதாய் அதில் அரசு செலுத்தும் அறக்கடவுளின் சிந்தையோடு ஒன்றுபட்டு நிற்பதாகும். அவ்வறக் கடவுளின் உடம்பு நமதுடம்பு போற் பருப்பொருள்களால் ஆக்கப் பட்டதன்று; அது மிக நுண்ணிய பொருளாற் றேசோமயமாய் அமைந்து விளங்கும் ஒளியுடம்பேயாகும். அவருடம்போடும் சிந்தையோடும் ஒருங்கு இயைந்து அளவுபடாத பல அண்டங்களையும் வியாபித்த இவ் வொளி ஆகாய மெங்கும் அவ்வறக் கடவுளின் அறிவும் வியாபித்து உடன் நிற்கும்; இந்த நுண்ணிய ஒளி ஆகாயத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் அத்தனையும், இவ்வொளி யாகாயத்தினுட் பட்ட அண்டங்கள் பலவற்றின் நிகழும் நிகழ்ச்சிகள் அத்தனையும், அவ் வண்டங்களிற் பிறந்து இருந்து இறக்கும் எண்ணற்ற உயிர்களின் அறிவு நிகழ்ச்சிகள் அத்தனையும் அவ்வறக் கடவுளின் உள்ளத்திலே உடனே தோன்றாநிற்கும். பூதாகாயத்தினும் மேற்பட்டு, நமது மனத்தோடு ஒன்றுபட்டு நிறைந்த மானத ஆகாயத்தையும் அவ் வொளியாகாயம் ஊடுருவிக் கிடப்பதாகலின், நம் முள்ளத்திற் சடுதியிலே எழுந்து மறையும் சிற்றெண்ணங்கள் முதல் அங்கு நிலைபெற நிற்கும் வல்நினைவுகள் வரையில் எல்லாம் ஒரு சிறிதும் பிசகாமல் கல்மேற் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் போல அவ்வொளியா காயத்தின்கட் பதிக்கப்பட்டு அழிவின்றிக் கிடக்கும்; அவை யெல்லாம், நம் கண்ணெதிரே விரிக்கப்பட்ட புத்தக எழுத்துக்கள் போல, அவ்வறக் கடவுளின் திருவுளக் கண்ணெதிரே திறக்கப்பட்டுக் கிடக்கும். அவ்வாண்டவனுக்கு, நம்மனோர்க்கு இருப்பனபோற் புறக்கண்ணென்றும் அகக்கண்ணென்றும் இருவேறு வகையான கண்கள் இல்லை. அவருடைய அகக் கண்ணும் புறக்கண்ணும் ஒரே இயல்பினவாய், ஒன்றிற் புலப் பட்ட காட்சிகள் மற்றையதிலும் உடனே புலப்படுமாறு அமைந்திருக்கும். நம்முடைய புறக்கண்களுக்கு ஒரு பொருளின் வெளிப்பக்கம் மாத்திரமே காணப்படுவதாயிருக்கும்; அதன் உட்பக்கமும், மற்ற மூன்று பக்கங்களும் காணப்பட மாட்டா. மற்று அவ் வாண்டவன் கண்களுக்கோ எல்லாப் பொருள்களின் எல்லாப் பக்கங்களும் ஒரே முறையில் செவ்வையாக விளங்கித் தோன்றும். இருந்த விடத்தில் இருந்தே ஏனை எல்லா விடங்களினும் நிகழும் நிகழ்ச்சிகளெல்லாம் காண்டற்குரிய இத் தெளிவுக் காட்சி இங்குள்ள மாந்தர் சிலரிடத்துஞ் சிற்சில சமயங்களிற் காணப்படுவதுண்டு. தேசோமயமான சூக்கும சரீரத்தில் அமைந்த இத் தெளிவுக்காட்சியானது, அச் சூக்கும சரீரங்களோடு தூலசரீரத் தொடர்பும் உடைய மக்களிடத்துத் தன்ஒளி மழுங்கி மறைந்து நிற்கின்றது. இங்ஙனம் இது மறைந்து நிற்பதனாலேதான் மிக மறைத்துச் செய்யும் வினைகளையும் உடனே தெரிந்து கொள்ளுதற்குரிய இத் தெளிவுக்காட்சி ஒன்று உண்டென்பதனையும், இக் காட்சியினையுடைய தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் முதலான சூக்குமசரீர வாசிகள் பலர் உளரென்பதனையும், இவரெல்லார்க்கும் முதல்வராய் இத் தெளிவுக்காட்சியின் எல்லையற்ற வியாபக வுணர்வினாலே எல்லா வுயிர்களின் நல்வினை தீவினைகளையும் பகுத்தறிந்து அவ்வவற்றிற்கு உரிய இன்பதுன்ப அனுபவங்களை அவ்வ வர்க்குப் பிறழாது நுகர்விக்கும் அறக்கடவுள் ஒருவர் உண்டென்பதனையும் அறியமாட்டாத மாந்தர் பல தீவினைகளை மறைவிற்செய்து அவற்றால் மறுமையிற் பல நரகங்களிற்பட்டு வருந்தி இம்மையிலும் பிறப்பு இறப்பு வட்டங்களிற் கிடந்து சுழல்கின்றனர். நம்முடைய அறிவுக ளெல்லாம் பருப்பொருளான இத்தூலவுடம்பின் வழியே சென்று, இந் நிலத்தோடு இயைபுடைய பருப்பொருள்களையே பற்றிக்கொண்டு நிற்கின்றன; ஆனதனாற்றான், நமதறிவு உள்மடங்கிச் சூக்கும வுடம்பின் வழியே நடைபெறுகின்றிலது; நடைபெறாதாகவே, அச் சூக்குமவுடம்பின் மாத்திரம் புலப்படு வதான தெளிவுக்காட்சியும் நமக்கில்லையாய்ப் போகின்றது. மற்றுத் தென்றிசைக்கண்ணே சூக்கும உலகத்தில் உள்ள அறக்கடவுளுக்கோ தேசோமயமான சூக்கும வுடம்பேயன்றி, வினைவயப்பட்ட இப் புழுத்த புலையுடம்பு இல்லாமையாலே, அவருக்கு அச் சூக்கும வுடம்பின் வழியே நடைபெறும் தெளிவுக் காட்சி அண்டங்கள் பலவற்றையும் ஊடுருவி நிறைந்து நிற்கும் ஒளியாகாய மெங்கும் இயைபுபட்டு நிற்றலால், அவ் வாகாயத்தில் சூக்குமமாய்ப் படிந்துகிடக்கும் உயிர்களின் எல்லா நினைவுகளும் எல்லாச் செய்கைகளும் அதன்கண் என்றும் விளக்கமாகத் தோன்றியபடியே நிலைபெற்றிருக்கும். இவ்வாறு எல்லா நிகழ்ச்சிகளையுந் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் இவ் வொளியாகாயத்தையே புராண கதைகள் உருவகப்படுத்திச் சித்திரகுத்தன் கணக்குப் புத்தகம் என்று கூறுகின்றன; அவ் வாகாயத்திற் சூக்கும வுருவாய் நின்று எல்லாவற்றையும் அறியும் தெளிவுக் காட்சியையே சித்திரகுத்தன் என்றும், அக் காட்சியையுடைய அறக் கடவுளையே அச் சித்திரகுத்தனுக்கு எசமானனான இயமன் என்றும் பழைய அக் கதை நூல்கள் அவற்றை வேறு வகையால் வைத்துரைத்தன. ஆகவே, மறைவிற் செய்தனவும் மறைவின்றிச் செய்தனவும் அகத்தே நினைந் தனவும் புறத்தே நடந்தனவுமாகிய எல்லாம் ஒரு கடுகளவும் மாறாமல் குறையாமல் இவ் வொளி யாகாயத்தில் தீட்டப்பட்டுக் கிடக்குமென்பது உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெளிவாகப் புலப்படுதலால், யார்க்குந் தெரியாமல் இன்ன தீமையை இன்னவர்க்குச் செய்து விட்டோம் என்று மனப்பால் குடித்து மகிழ்வார் மகிழ்ச்சி வெறும் பொய்மகிழ்ச்சியேயாம். இவர் ஒரு தீய செயலைச் செய்தற்கு நினைத்த மாத்திரத் தாலே அந்நினைவு அறக்கடவுளின் திருவுளத்திற் றோன்ற, அவர் இவ்வேழையுயிரின் பேதைமைச் செயலைக் கண்டு பெரிதும் இரங்குவர். எனவே, நல்லவர் ஒருவருக்கு மறைவிலே தீங்குசெய்து, அவர் அதனைப் பாராட்டாமல் விடுதலின் அவராலும் மறைவிற் செய்த அதனை உலகத்தவர் அறியாமலி ருத்தலின் உலகத்தவ ராலும் ஒறுக்கப்படாமல் தப்பினவன் தன்செயல் எல்லாம் முழுதுமுணர்ந்த அறக்கடவுளால் இம்மை மறுமை யிரண்டிலும் மிகவும் ஒறுக்கப்படுதல் திண்ணமாகலின் நல்லவர்க்குத் தீங்கிழைத்தவர் எத்திறத்தானும் தப்ப மாட்டா ரென்றுணர்க. நல்லது; அஃது உண்மையாயின் ஆகுக. எல்லா நிகழ்ச்சி களும் ஒளியாகாயத்தில் பொறிக்கப் படுகின்றன என்பதும், அவ்வாகாயத்தில் பொறிக்கப்பட்ட அவற்றைத் தெளிவுக்காட்சி யுடையோர் உடனே உணர்ந்துகொள்வரென்பதும் நமது அனுபவத்திற் காணப்படாமையின் அவை உண்மையே யாகுமென்பது எவ்வாற்றால் துணியப்படுமெனின், அவற்றின் உண்மைக்கு இஞ்ஞான்றுள்ள ஆதாரங்கள் சிலவற்றை இங்கெடுத்துக் காட்டுகின்றோம். 15. ஒளியாகாயத்தின் இயல்பு இஞ்ஞான்று அமெரிக்கா தேசத்தில் அகக்கண் திறக்கப்பட்ட அறிவோர் சிலர் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்து ஒளியாகாயத்தில் பொறிக்கப்பட்டுக் கிடக்கும் நிகழ்ச்சிகளைப் புத்தகம் விரித்துப் படிப்பதுபோற் படித்தறிந்து நூல்கள் எழுதுகின்றனர். இதற்கு ஓர் உதாரணம் வருமாறு : இப்போது அமெரிக்காவில் அகக்கண் திறக்கப்பட்டு விளங்கும் அறிவோரான இலெவி என்பவர் இற்றைக்கு ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் நிலவின இயேசுக் கிறித்து என்னும் பெரியார் இவ் இந்தியதேயத்தில் வந்து பல்லாண்டிருந்து அருந்தவத்தோர் பலருடன் பழகி அவர் பால் இரகசிய உண்மை உபதேசங்கள் பெற்றுச் சென்ற வரலாறு களெல்லாம் ஒளியாகாயத்தில் நன்கு பொறிக்கப் பட்டிருத்தலை இனிதறிந்து ஓர் அரிய பெரிய üš*(The Aquarian Gospel of Jesus the Chrit, Recovered from Akasic records by Levi) எழுதி வெளியிடுவித்திருக் கின்றார்; அந்நூலின் அருமைகளையும் அதில் எழுதப்பட்ட வரலாறுகளின் உண்மைகளையும் அந் நூலைத் தமது தெளிவுக்காட்சியினுதவிக் கொண்டு ஒளியாகா யத்தினின்றும் பெயர்த்தெழுதின ஆக்கியோன் பெருமைகளையும் இனிது விளக்கி, அவ்வமெரிக்கா தேயத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் மாட்சிமை தங்கிய எச்.ஏ. காபீன் என்பவரால் அந் நூலுக்கு ஒரு முகவுரையும் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதுவரையிலும் வேறெந்த வகையாலும் அறியப்படாமலிருந்த அரிய பெரிய இரகசியங்களும் உண்மைகளும் இந்நூலின்கண் இப்போதுதான் வெளிப்பட்டிருக்கின்றன. இவற்றைக் கல்வி கேள்விகளின் மிக்க அறிவுடையோர் பலரும் சிறிதும் ஐயம் உறாமல் உண்மையென்றே கைக்கொண்டு பாராட்டி வருகின் றார்கள். இவ்வாற்றால் மிகவுஞ் சூக்குமமான ஒளியா காயம் ஒன்று உண்டென்பதும், அதன்கண் எல்லா நிகழ்ச்சிகளும் அழிவின்றிப் பதிக்கப்பட்டு நிலைபெறுமென்பதும், அந்நிகழ்ச்சி களெல்லாம் தெளிவுக் காட்சியுடையார்க்கு இனிது புலப்பட்டுத் தோன்று மென்பதும் நன்கு பெறப்படுகின்றன வல்லவோ? அது நிற்க. ஒளியாகாயம் ஒன்றுண்டென்பது உண்மையே யாயினும், பருப்பொருள்களைப் போல் உருவம் இல்லாத எண்ணங்களும் செயல்களும் ஆகிய நுண்பொருள்களுக்கு உருவம் உண்டென் றாலும், அவை அவ் வொளியாகாயத்தில் பதிக்கப்பட்டு நிலைபெறுமென்றாலும் எங்ஙனம் பொருந்துமெனின்; நம்முடைய கட்புலனுக்குத் தோன்றும் பருப்பொருள்களுக்கு மாத்திரமே உருவமுண்டென்றும், அதனுக்குப் புலப்படாத நுண்பொருள்களுக்கு உருவம் இல்லையென்றும் கூறுதல் நுண் பொருளாராய்ச்சி யில்லார் கூற்றாம். நமது செவிப் புலனாற் கவரப்படும் பலவகை யொலிகளும் கட்புலனுக்குத் தோன்றா தனவாயினும், அவை தமக்கும் உருவம் உண்டென்று அமெரிக் காவிற் பிரபல பௌதிக சாத்திர பண்டிதரான எடிசன் என்பவர் ஐயமின்றி நாட்டியிருக்கின்றனர். அவராற் செய்து காட்டப் பட்டிருக்கின்ற xÈbaGâ*(phonograph) என்னுங் கருவி இவ்வுலகமெங்கு முள்ள நாடு நகரங்களெல்லாம் பரவி இவ்வுண்மையை அறிவில்லாரும் அறியும்படி இனிது விளக்கிக் காட்டுகின்ற தன்றோ? அவ் வொலிஎழுதி யென்னுங் கருவியின் எதிரே ஒருவரிருந்து ஒரு பாட்டு பாடினால், அப்பாட்டின் ஒலிகள் அக் கருவியில் அமைந்த தட்டிலே வரிவரிகளாகப் பதிந்து விடுகின்றன; அங்ஙனம் அவை பதியப்பெற்ற தட்டை மறுபடியும் அக் கருவியில் வைத்து இயக்கினால் அவர் பாடிய படியே எள்ளளவும் பிசகாமல் கேட்பவரெல்லாம் வியக்கும்படி பாடுகின்றது. இன்னும் உலகம் எங்கணும் புகழ்பெற்ற பௌதிக சாத்திர பண்டிதராய்ப் பிராஞ்சு தேயத்தின்கண் இருக்கும் பாரடக்* (Dr. Baraduc) என்னும் அறிஞர் கட்புலனாகாத மக்களும் பிறவுயிர் களும் நினைக்கும் நினைவுகளையும் எண்ணங்களையும் விருப்பங் களையும் கட்புலனாகும்படி வைத்துப் படம்பிடிக்கக் கூடு மென்று முடிவாகக் காட்டியிருக்கின்றார். இத்தகைய ஒளியா காய ஆராய்ச்சியில் மிகவுந் தேர்ச்சியடைந்தவரான ஒருவர் பாரடக் பண்டிதரைப் பார்க்கச் சென்ற போது, அவர் மக்கள் மன அசைவு நினைவசைவுகளைப் பிடித்த படங்களின் ஒருதொகுதியை அவருக்குக் காட்டினராம். தான் அருமையாக வளர்த்த ஒரு பறவை இறந்து போக, அதனைப்பார்த்து அழுதுகொண்டிருந்த ஒரு சிறு பெண்ணை வைத்துப்பிடித்த படத்தில் அப் பறவையையும் குழந்தையையும் சூழ மனக் கலக்கத்தால் உண்டான வலை போல் விந்தையான ஒருவகை வடிவம் காணப்பட்டது. சடுதியிலே திடுக்கிடப் பண்ணப்பட்ட இரண்டு குழந்தைகளை வைத்துப் பிடித்த படத்திலே பொட்டுப் பொட்டாய்த் துடிதுடிக்கும் ஒரு வடிவம் தோன்றியது. தம்மைப் பழித்துப் பேசக்கேட்டவர் வெகுண்ட போது பிடித்த படத்தில் புள்ளிபோன்ற அல்லது அரை குறையான மணிகள் போன்ற வடிவங்கள் காணப்பட்டன. திருத்தியடைந்த ஒரு பூனையின் குறுகுறுத்த ஓசையினாலே மெல்லென நிறந்தோய்ந்த ஒரு மேகநிறந் தோன்றியது. இருண்ட ஓர் அறையிலே ஒருவரை வைத்து அவர் நெற்றிக்கு அருகே யாவது, மார்பு அல்லது கைக்கு அருகேயாவது பிடித்த ஒருவகையான மெல்லிய தகட்டிலே அவர் நினைவின் வடிவங்கள் பதிகின்றனவாம். பிராண சத்தி யானது களிமண் போல மிகவுங் குழைவான தன்மை யுடைய தாயிருக்கின்றது: ஆவேச உருவில் நிற்கும் கொற்றன் ஒருவனது கட்புலனாகாத கையினால் உருவாக்கப்பட்டாற்போல அத்துணை உயிர்க் கலையுள்ள வடிவங்களால் அது பதிவு கொள்ளப் பெறுகின்றது. சூக்கும வுடம்பில் நிற்பவர்களின் நினைவின் உருவங்களும், மனத் தோற்றத்தின் நிழற் படங்களு மான இவை நினைவை ஒருவழி நிறுத்தலால் உண்டாக்கப் படுகின்றன; இங்ஙனம் ஒர் உத்தியோகதர் ஒருகால் தமது கருத்தை ஒரு கழுகுவடிவின் மேல் நிறுத்தினார். உடனே அக் கழுகின் உயர்ந்த வடிவம் அம் மெல்லிய தகட்டிலே புலப்பட்டுத் தோன்றியது. மற்றொரு தகட்டில் ஒரு குதிரை முகத்தின் ஒருபக்கத்து நிழல் காணப்பட்டது. என்று பாரடக் என்னும் அம் மகாபண்டிதர் கூறுகின்றார். தாம் வைத்திருக்கும் அம் மெல்லிய தகடுகளிலே சிற்சில சமயங்களில் முகங்கள் பல வந்து தோன்றுகின்றன என்றும், ஒருமுறை ஒரு தாயின் நினைவினால் ஓர் இறந்த குழந்தையின் வடிவம் தோன்றலாயிற்றென்றும், அவர் மொழிகின்றனர். ஒருகால் சூக்குமவுடம்பிற் சென்று பார்த்ததனால் பதிந்த ஓர் உருவத்தைப்பற்றிப் பின் வருமாறு அவர் கூறுகின்றார். பியூகாரெட் என்னும் ஊரிற் பிரபல வைத்திய சாத்திரபண்டிதராய் இருக்கும் ஆடியூ என்பவரால், ஒருவர் ஓரிடத்தில் நினைத்த நினைவு தொலைவிலிருந்த பிறிதொரு தகட்டிற்சென்று பதிந்து தோன்றின வியப்பான நிகழ்ச்சி தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தொலைவிற் றோன்றும் உணர்வு நிகழ்ச்சிகளை ஆராய்ந்தறிவதில் விருப்பம் வைத்தமையாலே அவரும் அவர்தம் நண்பரான இட்ராடி பண்டிதரும், அந் நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துப் பார்க்கும் ஆராய்ச்சி முறையால், ஒரு நினைவின் உருவத்தைத் தொலைவிற் சித்தஞ் செய்து வைக்கப்பட்ட மெல்லிய தகட்டின்மேற் பதியவைக்கக் கூடுமா என்பதனை உறுதிப் படுத்தல் வேண்டுமெனத் தீர்மானஞ் செய்தார்கள். இதனைச் செய்து பார்ப்பதற்கென்று குறிப்பிக்கப் பட்ட மாலைக்காலம் வந்தது. ஆடியூ பண்டிதர் தாம் படுக்கைக்குப் போகு முன்னரே நிழற் படம் எடுக்குந் தமது கருவியைத் தமது படுக்கையின் பக்கத்தே வைத்தார். இட்ராடி பண்டிதரோ அவரை விட்டுப் பிரிந்து போய்ப் பல நூறுமைல் தூரத்திற்கு அப்பால் இருந்தனர். இவர் தம் நண்பரோடு செய்துகொண்ட ஏற்பாட்டின்படி தாம் தூங்கச்செல்லும் முன்பே, பியூகாரெட் என்னும் ஊரில் தம் நண்பராற் சித்தஞ் செய்து வைக்கப்பட்டிருக்கும் மெல்லிய தகட்டின் மேல் தமதுருவம் படும்படி நினைத்துத் தமது நினைவை ஒருமுகப் படுத்தியிருந்தார். மறுநாட் காலையில் அவர் விழித்தெழுந்த பிறகு, தமது கனவில் அதனை உண்மையென்று கண்டமையாலே தமது முயற்சி நிறைவேறியதெனத் தெளிந்தார். உடனே அவர் தம்மிருவருக்குந் தெரிந்த மற்றொரு நண்பருக்கு அதனை எழுதித் தெரிவிக்கவே, அந்த நண்பர் ஆடியூ பண்டிதர் இருப்பிடத்திற்குச் சென்று, அவர் அம்மெல்லிய தகட்டிற் பதிந்த வடிவம் புலப்படுமாறு செய்விக்கும் முயற்சியிலிருக்கக் கண்டார். அத் தகட்டின்மேல் திருத்தமான மூன்று வடிவங்கள் காணப்பட்டன; அவற்றுள் ஒன்று மிகத் தெளிவாயும் உயிருள்ளது போன்றும் இருந்தது. அஃது இட்ராடி பண்டிதர் நிழலுருக் கருவி* (photographic camera) யைக் கூர்ந்து நோக்குவதாக விளங்கக் காட்டியது; அக் கருவியின் கடைசி முனையானது அத் தோற்றத்திலிருந்து வருவதுபோற் றோன்றிய ஒருவகையான மின்னொளியாற் றுலங்கியது. இட்ராடி பண்டிதர் பியூகாரெட் என்னும் ஊருக்குத் திரும்பிவந்தபோது ஆவிவடிவான தமது படத்தின் உருவ வொற்றுமையினைக் கண்டு மிகவும் வியப்படைந்தார்; அந்தப் படமோ வழக்கமான முறைகளால் எடுக்கப்படும் மற்றை நிழற்படங்களைவிட, அவர் முகத்தின் அச்சு அடையாளங் களையும் ஏனைச் சிறப்புக் குறிகளையும் தெளிவுறக் காட்டியது. இங்ஙனம் பிராஞ்சு தேசத்தில் புகழ்பெற்ற பண்டிதராய் விளங்கும் பாரடக் அவர்களால் உறுதிப்படுத்தப் பட்டிருக்கும் உண்மைகளை உற்று நோக்கும் எவர்தாம் அறிவுக்கும் உருவம் உண்டென்பதை உணராமற்போவர்? இன்னும் இச் சூக்கும ஒளியாகாயத்தின் இயல்புகளை இனிது ஆராய்ந்து அவற்றைத் தமது அனுபவத்திற் கொண்டு வந்திருக்கும் ஜே. மாக்லௌட் கிரேக் என்னும் அமெரிக்க வித்துவான், இவ்வொளி யாகாயத்தின் றன்மையை விரித் துரைத்த உபந்நியாசம் மிகவும் பயன்படுவதாகலின், அதனை இங்கே தமிழில் மொழிபெயர்த்துத் தருகின்றாம். சூக்கும ஒளியாகாயத்தில் தன்னைத் தோற்றுவிக்க விரும்பும் மாணவன் உள்ளத்தை ஒருமுகப் படுத்துதலே அதற்குத் திறவுகோலாமென்று அறிந்துகொள்வன். நாம் நமதுடம்பை விட்டுச் சிறிதுநேரம் பிரிந்துபோய், வேறோர் ஆகாயத்தில் முழுதுணர்வோடு தோன்ற விரும்புவோமாயின், நாம் நம்மையே நன்கு வசப்படுத்திக் கொள்ள வேண்டுவது இன்றியமை யாததாகும். சூக்கும ஒளியாகாயத்தில் யான் முதன்முதற் றோன்றிய அனுபவம் எட்டொன்பது வருடங்களுக்கு முன் சிட்நி என்னும் ஊரில் நிகழ்ந்தது. யான் எனதுடம்பைவிட்டுப் போவதுபோல் உணர லானேன்; என்றாலும், யான் அதனோடு ஒட்டிக் கொண்டி ருப்பது போலவே அவ்வுணர் விற்றென்பட்டது. அதன் பிறகு ஓர் இமை கொட்டுவதற்குள் யான் இரண்டிடத்தில் இருக்கக் கண்டேன். ஒரு நாற்காலியின்மேல் உட்கார்ந்திருந்த என்சொந்த ஊனுடம்பினோடு சேர்ந்தாற்போல் யான் மற்றொரு நாற்காலியின் மேல் உட்கார்ந்திருந்தேன். ஒரு நொடிப்பொழுது யான் வெருட்சி அடைந்தேன்; எப்படியோ அஃது என்னைத் திடுக்கிடப் பண்ணியது; அதன்பின்னர் யான் எனதுடம்பினுள் திரும்புவது போற் றோன்றியது. இத்தகைய தோற்றத்தில் எனக்கு விருப்பம் உண்டாகவே இதனை ஆராய்ந்து அறிதற்குத் தலைப்பட்டேன். உணர்வோடு கூடிய எனது அடுத்த அனுபவம் இந்த நகரத்தில் யான் பரவசப்பட்ட நிலையிற் பிரசங்கம் புரியுங் காலத்தில் தோன்றுவதாயிற்று. யான் ஆகாயத்தில் மிதந்து செல்வதாக உணரலானேன்; யான் நெடுந்தூரம் பிரயாணஞ் செய்வதுபோற் காணப்பட்டது. ஒரு மணி நேரம் ஓர் உபந்நியாசம் செய்தபிறகு யான் திரும்பவும் உணர்வுபெற்று விழித்து அக்கிராசனரை நோக்கி, யான் நியூஸீலண்டில் உள்ள க்ரைட் சர்ச் என்னும் இடத்திற்குக் போயிருந்தேன் என்று கூறினேன். அதற்கு அவர் புன்சிரிப்புக்கொண்டு ‘அங்கே எவரைப் பார்த்தீர்கள்? என்று கேட்டார். யான் ஒருவரைப் பார்த்தேன்; ஆனால் அவர் மேடை மேல் இல்லை. மற்று அக்கிராசனரா யிருக்கக் கண்டேன்என்று விடைபகர்ந்தேன். யான் சொல்வது புதுமையாகக் காணப்படினும், முன் சொல்லியது நிகழ்ந்த இரண்டு வாரத்திற்குள் க்ரைட் சர்ச் என்னும் இடத்திலிருந்து எனக்கு இரண்டு செய்திகள் வந்தன; முற்கூறிய அதே நாளின் மாலைக்காலத்தில் தெளிவுக் காட்சி யுடைய மூவர் யான் அங்கே தேவாலய மேடைமேல் நிற்கக் கண்டனராம். அச்சமயத்தில் உள்ளபடியே யான் எனதுடம்பை விட்டுப் போயிருக்க வேண்டுமென உணர்ந்தேன். சூக்கும சரீரத்தில் நிற்கும் ஆவேசம் ஒன்று எனதுடம்பைக் கைப்பற்றி அதன் வாயிலாகத் தான் பேசுவதற்கு அதனை உபயோகப் படுத்து கையில், யான் எனதுடம்பின் பக்கத்தே முன்னே பல தடவை களில் நிற்கக் கண்டேன். ஆனதனால், யான் க்ரைட் சர்ச் என்னும் இடத்திற்குச் சென்று நினைவோடு திரும்பி வந்ததைப் பற்றி வியப்படையவில்லை. ஆனால், அதே சமயத்தில் யான் அவர்களால் தெரிந்துகொள்ளப் பட்டதுபற்றி மிகவுங் களி கூர்ந்தேன்; என்னை அங்ஙனம் கண்ட பெருமாட்டிகளில் இருவர் மனோதத்துவ நூலாராய்ச்சிக்கு அமைந்த எனது மாணவர் குழாத்திற் சேர்ந்து தமது மனோசக்தியை மிகுதிப் படுத்திக் கொண்டார்களாகையால் எனது மகிழ்ச்சி பின்னும் மேற்படுவதாயிற்று. இன்னும் இதனை ஆராய்ந்து செல்லவே, உடம்பை விட்டு எளிதாகவும், விரும்பியபடியும் செல்லுவதற்குக் குறிப்பான பழக்கம் அவசியம் வேண்டுமென்பது கண்டேன். ஒருமுறை, க்ரைட் சர்ச் என்னும் இடத்தில் யான் பரவசப் பட்ட நிலையிற் பேசிக்கொண்டிருந்த பொழுது, என்னுடம்பை விட்டு உவெல்லிங்டன் என்னும் ஊருக்குப் போய், நியூஸீலண்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்த என் மனைவியையும் குழந்தையையும் சூக்கும ஒளியாகாயத்திற் சந்திக்கக்கூடுமா என்று பார்க்க விரும்பினேன். அந்த இரவு படுக்கைக்குப் போனவுடனே, மனவொருமை யினாலும் மந்திர மொழியினாலும் எனதுணர்வைச் சூக்கும நிலையிற்கொண்டு சென்று, ஒருவகையான அறிதுயிலில் அமர்ந்தேன்; அதன்பின்னர், எனதுடம்பை விட்டு உவெல்லிங் டனுக்குச் செல்வதாகத் தெளிய நினைவு கூர்ந்தேன். அப்பால் யான் படகினுள்ளே சிற்றறையில் இறங்கி என் மனைவியையும் மகவையுங் கண்டேன்; இது மாத்திரம் அன்று; அக்காட்சியிற் சிறந்த என் சிறு பையன் தன் தாயை நோக்கி, அதோ அப்பா வந்திருக்கிறார் என்று சொன்னான்; என் மனைவியும் யான் தன்னுடன் மெய்யாக இருப்பதாகவே உறுதியாக உணர்ந்தாள். மறுநாட்காலையில், இலிட்டில்டன் என்னும் இடத் திற்குப் படகு வந்தவுடனே சென்று என்மனைவியிடத்தில் இரண்டொரு சொற் சொல்லியபிறகு இங்கேயே இரு, நான் கீழே போய் நீ இருந்த அறை இதுதான் என்று தெரிந்து கொள்ளுகிறேனா என்று பார், எனக் கூறினேன். அதன்பிறகு யான் நேரே ஓர் அறைக்குச் சென்று, கண்காணிச்சியைப் பார்த்து, ‘கிரேக் என்பவர் மனைவி இருந்த அறை இதுதானா? என்று வினாவ, அவளும் ஆம்என விடை பகர்ந்தாள். இதற்கு முன்னாள் இரவில் அவர்களின் திட்டமான நிலைமையையும், அவர்கள் எங்ஙனம் படுத்திருந்தார்களென் பதையும், அவர்கள் இருந்த அறையின் இடத்தையும் மாறாமல் நினைவுகூர்ந்தே னாதலால், மறுநாட் காலையில் அதனை உடனே குறிப்பிட வல்லவனானேன். இங்ஙனம் இதிற் சித்திபெறவே, இனிச் சமயம் வாய்க்கும்போதெல்லாம் இன்னும் இதனை ஆராய்ந்து அறிதற்குத் தீர்மானித்தேன்; சில ஆண்டுகளுக்குமுன் சிட்நி என்னும் இவ்விடத்தில் எனக்கு ஒரு சமயம் வாய்த்தது; அப்படிப்பட்ட சமயம் இனி எனக்குக் கிடைத்தல் அரிது; அல்லது அதனை யான் மிகுதியாய் விரும்புகிறேனென்றுஞ் சொல்லக்கூடவில்லை. ஆன்மசக்தியை மிகுதிப்படுத்துவதற்கு ஒரு சிறு மாணவர் குழாத்தினை வைத்துப் போதித்து நடத்தி வருகையில் மாணவரில் ஒருவர் என்னை நோக்கித் தென்னாப்பிரிக்காவில் உள்ள என் மகனைப்பற்றி எப்படியாவது நீங்கள் எனக்குச் செய்தி கொண்டுவரக் கூடுமாயின் - இது போயர் - சண்டை நிகழ்ந்த காலத்தில் நேர்ந்தது - அஃது என் மனைவிக்கு ஆன்மதத்துவ ஆராய்ச்சியில் ஆவலை உண்டுபண்ணுதற்குக் காரணமா யிருக்குமென்று நம்புகின்றேன், என்று கூறினார். ஆகையால், இந்தச் செய்தியைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஒரு விசேட முயற்சி செய்யவேண்டுமென்று நாங்கள் எல்லாருந் தீர்மானித்தோம். ஒவ்வொருவரும் கைகோத்துக் கொண்டு என்னோடொத்த மனநிலையிலுள்ளவர்களாய் எனக்கு உதவி செய்வா ரானார்கள்; சிறிது நேரத்திற்கெல்லாம், யான் ஒரு பரவசப்பட்ட நிலையை அடைந்தேன். அப்பொழுது என் உடம்பைப் பற்றியிருந்த ஓர் ஆவேசமானது அங்கிருந்த மற்றவர்களை நோக்கி இவர் இறந்தவரைப்போற் கிடந்தாலும், இவரை நீங்கள் தொடப்படாது. நாங்கள் நெடுநேரம் இவ் விடத்தைவிட்டுப் போயிருப்போம்; அப்போது இவ்வுடம்பை யாருந் தொடுதல் ஆகாது என்றது. அதன்மேல், அவர்கள் என்னை அப்பொழுது நாற்காலியில் வசதியாக இருக்க வைத்தார்கள்; அவ்வளவுதான் அதைப் பற்றி யான் நினைவு கூர்ந்தது. ஏறக்குறைய முக்கால்மணி நேரத்திற்குப் பிறகு அதே ஆவி மறுபடியும் எனதுடம்பைப் பற்றிக்கொண்டு அங்கிருந்தவரை நோக்கி, உம் மகன் தென்னாப்பிரிக்காவில் காயப்பட்டுக் கிடக்கின்றான். இப்போது அவன் உமக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறான்; இன்னும் இரண்டு மூன்று வாரத்தில் அவனிடமிருந்து உமக்குச் செய்தி வரும் என்று கூறியது. இங்ஙனம் நிகழ்ந்ததைப் பற்றி எனக்கு யாரும் எதுவுந் தெரிவிக்கக் கூடாதென்று முன்னமே கேட்டுக் கொண்டேன். அவ்விரவு யான் வீட்டுக்குப் போனபோது, உயிர்ப்பான உண்மைத் தோற்றத்தைப்போல், அந் நிகழ்ச்சி முழுதும் என்னெதிரே காணப்படலாயிற்று. கவர்ச்சி மிக்க ஆடவர் நால்வர் என்னைச் சூழ்ந்திருந்ததும், அவர்கள் என்னிடம் ஓர் ஆவேசத்தைக் கொண்டுவந்ததும், போர் நிகழுங் களத்திற்கு யான் அவர் களோடு கூடிச்சென்றதும், அங்கு யான் அமைந்த அனுபவத்தால் போரின் திகிலான நிகழ்ச்சிகளை என்றும் மறவாதபடி யான் உணரலானதும் மிகவுந்தெளிவாக நினைவுகூர்ந்தேன். மிகவும் அச்சந் தருவதான அவ்வனுபவத்தில் ஆடவரும் பெண்டிர் சிலரும் அப்போது தாம் தமதுடம்பைவிட்டுப் பிரிந்து போயும், அவர்கள் அதனை அறியாமல் தாம் தனதுடம்பிலி ருப்பதாகவே நினைந்து ஒளியாகாயத்திலும் தொடர்ந்து போர் நிகழ்த்துதலைக் கண்டு, அவர்களிற் பெரும்பாலார் தமது தூலசரீரத்தை விட்டு வந்த உண்மை சிறிதும் தெரிந்திலரென மெய்ப்பட அறிந்தேன். போரினாலும் போரின் கொடுமைக ளினாலும் விளையும் பயன் இன்னது தான் என்று முன்னிலையிலும் இப்போது நன்கு தெளியப் பெற்றேன். இந்தக் கொடுமைகள் எல்லாவற்றின் இடையில் ஓர் அழகிய தோற்றத்தைக் கண்டு நினைவு கூர்ந்தேன்; பெண்கள் கூட்டம் ஒன்று, போராடி அலமரும் இவ் வேழை உயிர்களுக்கு அவை தமது நிலவுடம்பை விட்டு வந்ததனை அறிவுறுத்தி உதவ உழைப்பெடுத்தலைக் கண்டேன்; அவர்கள் அணிந்திருந்த தூய வெள்ளிய ஆடைகளி னாலும் அவர்களைச் சூழ்ந்திருந்த ஒளிவட்டத்தினாலும் அவர்கள் சூக்கும மேலுலகங்களிலிருந்து வந்த தேவதூதர்களே யென்று யான் சொல்லமாட்டுவேன். போர் செய்யச் செல்லும் படைவீரர்களை மகிழ்வுறுத்தி ஒருவரை ஒருவர் கொலைபுரியும்படி ஏவும் மனிதன், சூக்கும ஒளியாகாயத்தில் யான் கண்ட அனுபவத்தைத் தானும் காண்ப னாயின், அவன் அங்ஙனங் கூவுதலை விடுத்து இணக்கம் உறுவிக்கும் சபைகளிற் சேர்ந்துழைக்க முந்துவன். ஆன்மதத்துவப் பொருள்களை இங்ஙனம் யான் தொடர்ந்து ஆராய்ந்து செல்கையில் ஒருமுறை யான் சிட்நி என்னும் இவ்வூரில் ஒரு புதுமையான அனுபவத்தைக் கண்டேன். மாதர் ஒருவர் மிகவும் இடர் உற்றவராய்ப் பேய்குடி கொண்ட வீட்டைப்பற்றி எனக்கு ஏதேனுந் தெரியுமாவென்று என்னைக் கேட்டார். அதற்கு யான் ஏதும் தெரியாதென்றும், ஆனால், அத்தகைய தொன்றை நெடுங்காலமாகத் தேடிக் கொண்டிருக் கின்றே னென்றும், அதனை யான் பார்க்க வேண்டுமென்றும் மொழிந்தேன். அதன்மேல் அவர் தம் வீட்டில் ஒரு சிறு மந்திரக் கூட்டமிட்டுப் பார்க்கும்படி என்னை வேண்டிக் கொண்டனர். நிலத்திற் காணப்ப்டாத வியப்பான கூக்குரல் ஒலிகள் தோன்று வதனாலும், கதவுகள் திடீரென்று திறப்பதனாலும், மேசைகள் தங் கால்கள் மேல் விறுவிறென்று சுழல்வதனாலும், சாளரக் கதவுகள் சடசட வென்று ஓசையிடுவதனாலும் தாம் மிகவுந் துன்புறுத்தப் படுவதாகக் கூறித் தமது வீடு ஆவேச வடிவங்களாற் சூழப்பட்டி ருப்பதாகத் தோன்றுகின்ற தெனவும் மொழிந்தார். யான் இன்னுஞ் சிலரோடு அம் மாதரார் வீட்டுக்குச் சென்று, அங்கே மந்திரச் சிறு கூட்டமொன்று கூடினோம். அங்ஙனம் நாங்கள் உட்கார்ந்த மாத்திரத்தில் ஏதோ ஒரு வகையான தோற்றம் என் தலைமேல் வர உணர்ந்தேன். யான் தெரிந்து கொண்டபடி சூக்கும ஆவேசம் ஒன்று உடனே என்தலையின் பின்புறத்தை நெருக்கிப் பிடிக்கத் தொடங்கியது. என் தலையானது என் தோள்களிலிருந்து முறுக்கி யெடுக்கப் படுவதுபோல் உணர்ந்தேன். என்னுடைய அனுபவங்களில் இம்முறை தான், யான் என்வலி கொண்ட மட்டும் தடுத்துங் கூடாமல் யான் இருந்த நாற்காலியி னின்றுங் கீழே இழுத்துப் போடப்பட்டேன். எழுந்து மறுபடியும் நாற்காலியில் உட்கார்ந்த பிறகு. என் தலையின் உச்சி வழியே யான் வெளிப் புறப்பட்டுப் போவதுபோல் உணர்ந்தேன்; பின்னுஞ் சிறிது நேரத்திற் கெல்லாம் அவசமானேன். அதன்பின் என்னுடம்பை ஆவேசம் ஒன்று பற்றிக்கொண்டு தான் ஒரு கப்பற்காரனாக இருந்தனன் என்றும், கழுத்து முறிபட்டு அவச் சாக்காடு எய்தினன் என்றும், காட்லாண்டு தேசத்திலுள்ள தன் மகள் ஒருத்திக்குச் செய்தி அறிவிக்க விரும்புகின்றனன் என்றும் மந்திரக்கூட்டத்தில் உள்ளார்க்குக் கூறினது. அவன் ஒருகாலத்தில் இவ் வீட்டில் தங்கியிருந்தனனாம்; அதனால், அவன் இங்கே திரும்பிவந்து இங்குள்ளவர் தன் புதல்விக்குச் செய்தி அறிவிக்கும்படி செய்ய நினைத்தனனாம். அதன்மேல் அம் மந்திரக்கூட்டத்தை நடத்துந் தலைமகன் ஆம், உமது இருப்பை இங்குள்ளவர்க்குத் தெரிவிக்க வழக்கமல்லாத இம் முறையை நீர் கையாண்டதேன்? நீர் இவர்களை அச்சுறுத்தியது மாத்திரம் அன்று; அவர்கள் இவ் வீட்டையே முற்றிலும் விட்டுப்போக விரும்புமாறு செய்து விட்டீரே. உண்மையில் இவ்விடம் பேய் பிடித்ததெனப் பெயர் பெற்றுவிட்டது; இங்குள்ள குடிகள் இதனை விட்டுப் போய் விடுவார்களாயின் இது வெறுமை யாகவே இருக்கும்படி நேரக்கூடுமே என்றார். அதற்கு அவ்வாவி, யான் இவர்களுக்குச் செய்தியறிவிக்கக் கூடியவனானது பற்றி மகிழ்ச்சி அடைகின் றேன்; இவ் வீட்டுக்கார அம்மை ஆவேசங்களோடு இயைவு படுதற்குரிய சூக்கும இயல்பு வாய்ந்தவரென்றும், அவருடைய நாற்காலிகளையும் மேசைகளையும் கிலுகிலுக்கப் பண்ணின சூக்கும பிராண சக்தியினை அவ் வம்மையினி டத்திலிருந்தே யான் இழுத்துக் கொண்டேனென்றும் நீர் அவ் வம்மைக்குத் தெரிவித்தல் வேண்டும், என்றது. ஆவேச வடிவில் நின்ற அவன் தன் பெயரையும் தன் மகளின் விலாசத்தையும் தெரிவித்தான். இது நடந்த மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு, எங்கள் மந்திரக் கூட்டத்திலிருந்த ஒருவர் என்னிடம் வந்து, முற்சென்ற இரவில் நமக்குத் தெரிவிக்கப்பட்டது உண்மையெனக் கண்டுபிடித்தேன். ஓர் அம்மையோடு யான் பேச நேரிட்டதில், அந்த அம்மை ஆவிவடிவிற் றோன்றிய அவ் வாடவனைத் தான் அறிவள் என்றும், அவன் இவ் வீட்டில் தங்கியிருந்தது உண்மையே யென்றும் உரைத்தாள், எனக் கூறினர். சில மாதங்கள் கழிந்த பிறகு, அவ்வாவேச வடிவில் நின்றவன் மகளிடமிருந்து கடிதம் வந்தது; அதில் அவள் தன் றந்தை எங்கிருந்தாரென்பதும், அவர் உயிரோடிருந்தனரோ இறந்துபோயினரோ என்பதும் தான் அறிந்திலள் எனத் தெரிவித்தாள்; ஏனென்றால், பல ஆண்டு களாக அவனைப் பற்றி அவள் கேள்விப்படவே இல்லை. முற்சென்ற நிகழ்ச்சியில் மிகவும் விநோதமானது இது: பேய்பிடித்த வீடு என்பதைப்பற்றி அவ் வீட்டுக்காரன், குடித்தனக்காரர் வீட்டைவிட்டுப் போகாமைப் பொருட்டு வாடகையைக் குறைத்திருந்தான். தன்னை வந்து காணும் ஆவி தன்னை விட்டு நீங்கினதனால் உவகையுற்ற அம் மாது, பேய்க்கூச்சல் நின்றுபோன வகையை வீட்டுக்காரனுக்கு எடுத்துச் சொல்லவே, அவன் வீட்டு வாடகையை உடனே உயர்த்தி விட்டான்! இந்த அனுபவமானது, பேய்பிடித்த வீடுகள் என்பன மனவலியில்லாத ஆடவர்களும் ஆண்டின் முதிர்ந்த கிழவிகளும் கொண்ட வீண் எண்ணங்களின் தோற்றங்கள் அல்ல வென்பதும், அவைகள் உண்மையே யாகுமென்பதும், தங்கள் வீடுகளில் கூக்குரலொளிகளால் அலைக்கப்படுபவர்கள் ஆன்மதத்துவ இயல்பில் திறமை வாய்ந்த ஒருவருடைய துணையைப் பெறமாட்டுவார்களாயின் ஆவியுருவில் நிற்கும் எவரோ ஒருவர் தம்முடன் ஏதோ அறிவிக்க நாடுகிறாரென்று தெரிந்து கொள்வரென்பதும், நுண்ணுடம்பில் உலவும் ஆவியானது தனது இருப்பை அறிவிக்க இம் முறையைக் கைக்கொள்கின்ற தென்பதும் எனக்குச் சிறிதேனும் ஐயம் இல்லையாம்படி நாட்டியது. தமக்கு மிகவும் இன்றியமை யாததான ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்பும் ஆடவரும் பெண்டிருமே அவர்கள் என்று நீங்கள் உண்மைப் படுத்திக் கொள்ளுங்கால் அவ்வாவியின் வருகையில் இயற்கைக்கு மாறான தீமை ஏதும் இல்லை என்பது இனிது விளங்கும். தாம் இப் பருவுடம்பை விட்டுப் போயினும், இவ் வுடம்போடு கூடியிருக்கும் ஏனையோர்க்கு ஏதோ அறிவிக்க வேண்டுமென்னும் விருப்பம் இன்னும் அவ் வாவி யுருவில் நிற்பவர்கள்பாற் குடிகொண்டிருக்கின்றது. மாணவகனுக்கு இன்பம் பயக்கும் ஆன்மதத்துவக் காட்சிகள் இன்னும் பல இருக்கின்றன. மானத ஆகாயத்தைப் பற்றி எனக்கு முதன் முதல் உண்டான அனுபவங்கள் பலவற்றில் ஒன்று கும்பலான ஒரு நாடக சாலையில் நிகழலாயிற்று. நண்பர்கள் சிலரோடு யான் மெல்போர்ண் என்னும் இடத்தில் நடைபெற்ற நடனவிருந்திற்குச் சென்றிருந்தேன். அப்போது சடுதியிலே என்னெதிரிற் றோன்றிய ஒரு மானதக் காட்சியை உணரலானேன். எங்கள் சொந்த வீடு எனக்கு நேர் எதிரிலே நிற்பதாக உணர்ந்தேன். யான் அதனை மிகவுந் தெளிவாகப் பார்க்கக் கூடியதா யிருந்தது; பின்னும் அதனை யான் உறுத்துப் பார்த்தபோது அதன் சுவரின் ஊடே என் அன்னையின் அறையை நேரே கண்டேன்; பின் அதனுள்ளே என் அன்னையார் இறந்துபோனாற்போற் படுத்துக் கிடக்கக் கண்டேன். ஓர் அரைமணி நேரம் வரையில் இத் தோற்றத்தை என்னிடத்தினின்றும் அகற்றப் பார்த்தேன்; ஆயினும் முடிவில் அதனை நெடுநேரந் தாங்கக்கூடாதவன் ஆனேன்; ஏனெனில் அஃது அவ்வளவு உண்மையாய்த் தோன்றியது. யான் அந்த நடன விருந்திற்கு அழைத்துச் சென்ற நங்கைக்கு இத்தோற்றத்தைக் குறித்துச் சொன்னபோது, அவ்வம்மை இஃது அப்படி யிருந்தால், யானும் உம்முடன் வருவது நல்லது என்று கூறினார். உடனே நாங்கள் வீட்டுக்கு விரைந்து சென்றோம்; சென்றதும் யான் மெத்தைமேற் பாய்ந்தேறி, என் அன்னையார் அறைக்குட்சென்று, அவர் நிலத்தின் மேற் படுத்துக்கிடக்கக் கண்டேன். அன்னையார் மூச்சுப் பிடிப்பு நோயாற் பற்றப்பட்டுக் கிட்டத்தட்ட இறந்தவர் போலிருந்தார். யான் உடனே ஒரு வைத்தியரை அழைத்துவர, அவர் ‘உம்முடைய தாயார் நோய்கொண்டிருப்பதாக நீர் எங்ஙனம் அறிந்தீர்? என்று என்னை வினவினார். நடன சாலையில் இருந்தபோது இச் செய்தி மிகவுந் திண்ணமாகத் தோன்றியதனால் வீட்டுக்குப் போய் அங்கு ஏதேனும் உண்டா என்று பார்க்கத் தீர்மானித்தே னென்றும் அவருக்கு எடுத்துரைத்தேன். அதன்மேல் அவர் யான் நல்லநேரத்தில் வந்தேனென்று மறுமொழி புகன்றார்: யான் அங்ஙனஞ் செய்ததுபோல உடனே திரும்பி வந்திலேனாயின், என் அன்னையார் மூச்சு அடைபட்டுப் போயிருப்ப ரென்பது திண்ணமேயாம். நாம் நமது ஆன்மசக்தியை வெளிப்படுத்தும் போது இந்தப் பருவுடம்பை விட்டுப்போவது எளிதிலே கை கூடுவதாகும்; முதன் முதல் அவ்வுணர்ச்சி புதுமையுள்ளதாய்த் தோன்றும்; நீங்கள் உங்கள் உடம்பைவிட்டுத் தனித்து நிற்பது போலவும், உங்களையும் உங்கள் பருவுடம்பையும் இயைப்பதற்கு மெல்லிய ஒரு பிராணச் சரடு மாத்திரம் உள்ளது போலவும் உணருகையில் அது சிறிது புதுமையுள்ள தாகவே தான் இருக்கும்; ஆனால், அடுத்தடுத்துப் பழகிய பிறகு சூக்கும ஒளியாகாயத்தை உங்களுக்குச் சொந்த இடமாகவே நினைக்க நேரும்; அவ் வுணர்வாகாயத்திற் சுற்றிலுமுள்ள பொருள்களோடு தன்னுணர் வுடன் பொருந்தப் பெற்றதற்கு மகிழ்ச்சி அடைவது மாத்திர மன்று, அங்கே நீங்கள் ஞானத்தையும் அடைகிறீர்கள். உறங்குங் காலங்களில் தம்மை ஆன்மசக்தி உடையவர்களென்று தெரிந்து கொண்டோர் மாத்திரமன்று, மற்றும் பலரும் தமதுடம்பை விட்டுச் செல்கின்றனர் என்றும், நாம் காணும் கிளர்ச்சியுள்ள கனவுகள் பலவும் வெளிப் பார்வைக்கு நம்முடம்பு தூக்கத்தி லிருப்பதுபோற் றோன்ற நாம் நம்முடம்புகளை விட்டுப் புறஞ்சென்று அனுபவித்த அனுபவங்களின் நினைவுகளே என்றும் நான் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றேன். இங்ஙனம் யான் கண்ட மிக அரிய அனுபவங்களில் பின்வருவது ஒன்று: ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குமுன் யான் நியூஸீலண்டு என்னும் ஊரில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த பொழுது ஆவிவடிவில் நிற்கும் மாந்தர் பலரோடு பொருந்தப் பெறுவே னாயினேன். தெளிவான உள்ள நிலைமை யுடையேனாய், இந் நிலவுலகத்தை அடுத்துள்ள மண்டலத்தைக் கடந்து இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்லவேண்டு மென்னும் கடைசியான நினைவோடு யான் உறங்கச் சென்றேன். யான் எனதுடம்பை விட்டுப் புறப்பட்டதும் எனதுணர்வு துரிதப்படுதலை உணர்ந்தேன்; அத்ததைகயதான சூக்கும ஆன்ம உணர்ச்சியை இதற்குமுன் யான் என்றும் கண்டறியேன். உயர்ந்ததோர் உலகத்தின்கண் உள்ள ஓர் அனுபவத்தைப் பெறப் போகின்றேன் என்பது எனக்கு உறுதியாய்த் தோன்றிற்று; பின் சொல்லப் படுவது உண்மையாக நிகழ்ந்ததாகும். ஆவியிருவிலுள்ள மக்கள் பலரைக் கண்டேன்; என்னைச் சுற்றி ஒரு வட்டமாய் அவர்கள் உட்கார்ந்தார்கள்; அவ்வாகாயத்தின் ஊடே நாங்கள் மிதந்து செல்வதுபோற் றோன்றியது; அங்ஙனம் அசைந்து செல்வதைத் தெளிய உணர்ந்தேன்; அங்குள்ளவற்றின் நிலைமை மிகவுந் தூயதாயும் தெய்வத்தன்மை யுடையதாயும் இருந்தது; எனக்குப் புதியதோர் அறிவும் ஆற்றலும் வருவதாகவும், மிகவும் தெளிவான பார்வை கொடுக்கப் படுவதாகவும் காணப்பட்டது. அதன்பிறகு உற்றுக் கேட்பது போல் நின்றுகொண்டிருந்த ஓர் ஆயிரம்பேரை நன்றாய்ப் பார்த்தேன்; ஆனால், சிறிது நேரம் வேறொருவரையும் யான் காணக்கூடவில்லை. எனது பார்வை வரவரப் பெரிதான வுடன், ஒரு பீடத்தின் மேல் மிகவும் வயது முதிர்ந்த அழகிய ஆண்மகன் ஒருவர் நிற்கவும், கிளர்ஒளிவட்டம் ஒன்று அவரது தலையைச் சூழ்ந்திருக்கவும் பார்த்தேன். அவர் வெண்மையான நீண்ட நிலையங்கி ஒன்று உடுத்தியிருந்தார்; அவர் அங்கே குழுமியிருந்த மாந்தரை நோக்கிப் பேசுதலைத் தெளிவாய்க் கேட்டேன். அங்குள்ளவர்களோடு யான் மிகுதியாய்ப் பழகியபிறகு, இந்த ஆசிரியர் இவ்வாண் பெண் மக்களுக்கு ஆன்ம தத்துவ உணர்ச்சியை எழுப்ப முயன்று கொண்டிருந்தன ரெனவும், இன்னும் மேலான உலகத்திற்குச் செல்லும் பொருட்டு அவர்கள் முயலும் வண்ணம் அவர்களை ஊக்கிக் கொண்டிருந்தன ரெனவும் தெரியப் பெற்றேன். இந்தப் பருவுடம்பில் இருக்கையில் மிகவுஞ் சிறப்பாகப் பேசக்கூடிய பலர் பேச்சுக்களைக் கேட்டிருக்கின்றேன்; ஆனால், இவர் பேசும்போதோ இவருடைய சொற்கள் தெய்வசக்தி நிறைந்துவரக் கண்டேன்; தமது ஆன்ம சக்தியினையும் தம்முள் நிறைந்த தெய்வ சக்தியினையும் வளரச் செய்தவராயும், யான் இதுவரையில் எதிர்ப்படாத மிக உயர்ந்த மண்டலத்தில் இருப்பவராயும் உள்ள ஒருவரோடு இணங்கி அவருடன் கூடியிருப்பதுபோல் என் உள்ளம் எங்கும் உணரலானேன். அவரைச் சுற்றிலும் அழகிய ஓர் ஒளியின் கதிர்கள் விரிந்து எரிவதுபோல் தோன்றின; அவரது தலையைச் சூழப் பல நிறங்களைக் கண்டேன். இன்னும் எனது பார்வை தெளி வடையவே, களங்கமற்ற வெள்ளிய ஆடைகள் உடுத்திருந்த பதினைந்து அல்லது இருபது ஆடவரும் பெண்டிரும் அவருடன் இருத்தலைத் தெரிந்துகொண்டேன்; அவர்கள் தமது ஆன்ம சக்தியினாலும் அதன் விளக்கத்தினாலும் உலகபாலனஞ் செய்யும் ஒரு கூட்டத்தவரென்றும், உயர்ந்த மண்டலங் களிலிருந்து கீழுள்ள மண்டலங்களுக்குச் செய்தி கொண்டு வருபவர் களென்றும் எனக்குப் புலப்பட்டது. அதன்பின்னர் என்னிடம் வந்து எனக்கு ஆவிவடிவில் நின்றே செய்தி அறிவித்த தேவதூதன் ஒருவனால், அச் சிறந்த பெரியவர் உலகபாலனக் கூட்டம் ஒன்றோடு மேலுலகங்கள் ஒன்றிலிருந்து வந்து கீழே முதல் உலகத்தில் இருக்கும் மக்களுக்கு ஆன்மசக்தியை நிரப்புதற் பொருட்டும், மேலுள்ள மானத உலகத்திற்கு அவர்கள் தாமே செல்லும்படி தன்முயற்சி செய்ய வேண்டும் அவசியத்தை அவர்களுக்கு வற்புறுத்திக் காட்டுதற் பொருட்டும் பேசிக் கொண்டிருந்தனரென அறிவுறுத்தப்பட்டேன். இவ்வனுபவத்தின் பின்னர் எனது தூலதேகத்திற்குத் திரும்பியவுடனே யான் ஒரு தெய்வசக்தியால் நிரம்பப் பெற்றேன்; பின் நாட்களிலெல்லாம் யான் வேறு மனிதனா யினேன் என்றுணர்ந்தேன். இத்தெய்வசக்தி அத்தனை வலியுடையதாய்த் தோன்றினமையால் ஆன்ம தத்துவ உலகங்கள் ஒன்றில் யான் அடைந்த இவ் வனுபவமானது எனக்கு அளவிறந்த நன்மையைச் செய்ததென உணர்ந்தேன். மேலறி வுடைய தேவர்களோடு நாம் ஒன்று சேர்க்கப்பட்டக்கால் அது நம்மைத் தப்பாமல் வலிமைமிக்க ஆடவரும் பெண்டிரும் ஆக ஆக்குகின்றது; ஏனென்றால், ஆன்மதத்துவ உலகங்களில் நீங்கள் இயங்க வல்லவராகு முன்னமே, உங்களைச் சூழ்ந்திருக்கும் ஆற்றல் மிக்க சூக்கும சரீரவாசிகளுக்குக் கீழ் அடங்கின நிலையில் நீங்கள் உங்களை மனவொருமையினால் வைத்துக் கொள்ளுந் திறமை உடையவர்கள் ஆகவேண்டும்; அங்ஙனம் ஆனபின், நீங்கள் உங்கள் உடம்பைவிட்டுப் புறப்படும்போது, அறிந்தோ அறியாமலோ இவ்வுலக வாழ்வில் எதனைப் பெறும் நோக்கத்தோடு முயன்று வந்தீர்களோ அதற்கு இசைந்த மானத உலகத்திற்குச் செல்வீர்கள். ஆன்மதத்துவ வுலகங்களிலேனும் ஒளியாகாயத்திலேனும் தமக்கு அறிவு விளங்குதலைச் செய்துபார்க்க விரும்புவோர் யான் சொல்வனவற்றைப் பின்பற்றி நடக்கவேண்டும். இதனைச் செய்து பார்ப்பதற்கென்று குறிப்பிட்ட மாலைக் காலத்திற்குமுன் பகல்முழுதும் உணவு கொள்ளாமல் இருக்கவேண்டும்; நில உலகத்தைப் பற்றிய எல்லா நினைவுகளையும் அறவே ஒழித்துவிடல் வேண்டும்; எல்லா மாந்தர்களிடத்தும் இரக்கமும் அன்பும் மிக்க நினைவோடு அமைதியாகப் படுத்துக்கொள்ளல் வேண்டும்; அதன் பிறகு உங்கள் உடம்பைவிட்டுப் போய்ச் சூக்கும உலகங்களிற் கண்ட அனுபவங்களைத் திரும்பவும் இந்நிலவுலகத் திற்கு வரும்போது நினைவுகூர்தல் வேண்டுமென்னும் வேட்கை யோடு கூடிய நினைவை உங்கள் உள்ளத்தில் எழுப்பிக் கொண்டே அசைவின்றி அமைதியாக உறங்கச் செல்லுக; இங்ஙனஞ் செய்தால் நீங்கள் பட்ட வருத்தத்திற்கெல்லாம் ஈடுகட்டுவதற்கு மேலான எண்ணங்களைப் பெரும்பாலும் எய்தப்பெறுவீர்கள் என்னும் உறுதி யுடையேன். ஆனால், இதற்கும் இதுபோன்ற மற்ற எல்லா விஷயங்களுக்கும் வேறொரு தீதான பக்கமும் இருக்கின்றது. நாம் ஒளியாகாயத்தில் வெளிப்படும்போது நல்லவர்கள் கூட்டத் தையே நாம் எந்நேரமும் பொருந்தும்படி வாய்ப்பதில்லை. ஒருசமயத்தில் யான் அடைந்த அனுபவமானது பலநாள்காறும் என்னைத் துயரமான நிலைமையில் வைத்தது. யான் எனதுடம்பைவிட்டுப் புறப்பட்டேன்; இந் நிலவுலகத்தில் எனக்குள்ள நேசரைப்போலவே ஒளியா காயத்திலும் எனக்கு நண்பராயுள்ள தேவதூதன் ஒருவரோடும் யான் அறிவொளி பெறாத உயிர்கள் உள்ள இடத்திற்குப் போக நினைத்தேன். அங்குள்ள ஆடவர் மானத ஆகாயத்தின் இருளில் தடவிக்கொண்டு போதலைப் பார்த்தேன். அவர்களிற் பலர் தாம் நிலவுடம்பைவிட்டு வந்ததாகவே தெரிந்து கொள்ள வில்லை; அதனைத் தெரிந்து கொண்டவர்களுங் கூட அறிவு வளரப் பெறாதவர்களாயும் வளராத நிலையிலுள்ளவர்களாயும் இருந்தனர்; ஆவிவடிவில் நின்ற இவ்வுயிர்கள் பலவற்றைச் சூழ உள்ள பொருள்களின் நிலைமைகளைப் பார்த்து, நுண்ணு டம்பில் நிற்கும் ஒரு கெட்டமனிதன், ஓர் அறிவில்லாதவன், நிலவுடம்பில் நிற்கும் ஒருவனைக் காட்டிலும் மிகவும் கெட்டவனாவன் என்னும் உண்மை முற்றும் உணரப்பெற்றேன்; இவ்விஷயத்தைக் குறித்து பேசும் இவ்விடத்தே மரண தண்டனையின் கொடுமையைப்பற்றி வற்புறுத்திச் சொல்ல விரும்புகின்றேன். யான் ஆன்மதத்துவ உணர்ச்சி யுடையவனா யிருத்தலால், நமதரசியல் விதிப்படி கொலை புரியப்பட்டுத் தமதுடம்பைப் பிரிந்து போன ஆடவர் பலரை யான் சந்தித்ததிலிருந்து, அவர்கள் தமது உடம்பைவிட்டுப் போனதும் தொலைவிலுள்ள ஏதேனு மோர் அழகிய உலகத்திற்குச் செல்லாமல் இந்த நில உலகத்தையே சுற்றிக்கொண்டு துன்பத்தினாலும் பிழைபட நடந்ததனால் உண்டான மனக் கலக்கத்தினாலும் பற்றப்பட்டு மானத இருளில் தாம் இருக்கக் கண்டனரென்பதை யான் தெரிந்துகொண்டேன்; அவர்களிற் பலர் பழிவாங்கும் எண்ணம் உடையோராய் மெல்லிய இயற்கை யுடையவரைப் பிடித்துக் கொண்டு அவர்களைப் பிசகி நடக்கும்படி ஏவுகின்றனர். இஃதுண்மையென்று நான் அறிவேன்; ஆனதனால் யான் பின்வாங்காமற் சொல்வது இது: உடம்போடிருக்கும் மனவலி யில்லாத ஆடவரையும் பெண்டிரையும் தமக்கு இரையாக்கிக் கொண்டு அவர்களைப் பழிச்செயலுக்குத் தூண்டும்படி, கொலையாளிகளைக் கொன்று சூக்கும உலகத்திற்கு அனுப்புதலைப் பார்க்கிலும் அவர்கள் இந்த நிலவுலகத்திலேயே தாராளமாய்த் திரியும்படி விட்டுவிடுதல் நல்லது. அதிசயமான இந்த உலகம் நமக்கு அண்டையில் இருப்பதை மெய்யாக உணர்ந்து, அறிவு விரியாத எத்தனை ஆடவரும் பெண்டிரும் நமக்கு எவ்வளவு அருகிலிருக் கிறார்களென்பதை அறியுங்கால், நாம் உரப்பான தூய நினைவுகளை நினைக்க வேண்டுவது எத்துணை அவசியம் என்பதை நாம் பாராட்டிப் பேசுவோம். வசீகர முறையை உற்று நோக்கினால் நாம் நம்மிடம் வருவிக்கும் உயிர்கள் நம் எண்ணங்களோடு ஒத்த இயல்புடையன வாயிருக்கின்றன; ஆகையால், ஒளியும் உதவியும் உயர்ச்சியும் வாய்ந்த நினைவுகளை நினைப்பதிலேயே நாம் கருத்தாயிருந்து, நம்மிடம் நல்லவைகளே அணுகும்படி இழுக்க வேண்டும். மிகச் சிறந்ததையே பெற வேண்டுமென்னும் விருப்பத்தை உருவேற்றி, உங்களுக்கு உதவி செய்யக்கூடிய வரையே உங்களிடம் இழுக்க நீங்கள் முயலும்வரையில் ஆன்மதத்துவ வாழ்க்கைக்குரிய உயர்ந்த மண்டலங்களிலேனும் ஒளியாகாயத்தி லேனும் சிறிதும் அபாயமில்லை; ஏனெனில், அங்கே உங்கள் வலியுள்ள மானத ஆகாயமே உங்களைச் சூழ்ந்திருத்தலால், அதுவே உங்களை எப்போதும் பாதுகாக்கும். யான் நியூஸீலண்டில் வைத்து நடத்திய மந்திர வகுப்பின் கண் ஒருகால் எனக்கொரு புதிய அனுபவம் உண்டாயிற்று. அப்பியாசம் முடிந்தபிறகு அவ் வகுப்பு மாணவகரில் ஒருவர் தமக்கு அன்றிரவு வியப்பான ஓரனுபவம் உண்டாயிற்றென்று சொன்னார். அதன்மேல் அவர் சென்றிருந்த இடம் எதுவென்று வினவினேன்; அதற்கவர் தாம் கடிகார கோபுரத்தைச் சுற்றிக் கொண்டிருந்ததாகக் கூறினர். அவர் ஆன்மசக்தி பெரிதும் மிகப் பெற்றவர் என்பதனை யான் அறிவேன்; ஆனால், அவர் இதற்கு முன் தாம் உடம்பைவிட்டுச் சென்றதாகச் சொன்னதே யில்லை. அங்கே எவரையேனும் பார்த்ததுண்டா வென அவரைக் கேட்டேன்; தாம் இருவரைக் கண்டதாகவும் அவர்கள் பெயர் இன்னவை என்றும் அவர் மறுமொழி புகன்றார். பின்னர் யான் விசாரணை செய்ததில் அவ்விருவரும் பிசகில்லாமல் விவரித்துச் சொல்லப்பட்டன ரென்றும், அவர் சுட்டிச் சொல்லிய நேரத்தில் அவ்விருவரும் அவ்விடத்தைக் கடந்துபோய்க் கொண்டிருந்தன ரென்னும் கண்டு கொண்டேன். ஆகவே, சூக்கும ஒளியா காயத்தின்கண் அறிவு நிகழப் பெறுதல் குறிப்பிட்ட சிலர்க்கு மாத்திரமே யுள்ளதென்று கூறுவாதாகா தெனவும், ஏறக்குறைய எல்லாவுயிர்களுமே சில காலத்தில் தம் ஆன்மதத்துவ அனுபவங்களைத் தம்முணர்வோடு நினைவு கூர்ந்து வருவனவாகுமெனவும் அறியப் பெறுகின்றோம். இஃது உங்களுக்கு ஆன்ம ஞானத்திற்கு உதவியாவது மாத்திரம் அன்று; இந்தப் பருவுடம்பை விட்டுச் செல்லுமாறு அல்லது எந்த மண்டிலத்திற்கேனும் உங்கள் மனஞ்செல்லும்படி அதனை உண்ர்வோடு செலுத்துமாறு உள்ளத்தை ஒருவழி வைக்கப் பழகினால் இந்த நிலவுலகத்திலேயுங்கூட உங்களுக்கு நேரில் இல்லாமற் பல்லாயிரமைல் தூரத்திற்கு அப்பால் உடம்போடு கூடியோ அல்லது அதனோடு கூடாமலோ இருக்கும் உங்கள் நண்பர்களுடன் கலந்துபேசுதற்குந் திறமை வாய்க்கப் பெறுவீர்கள். என்று இதுகாறும் போந்த மாக்லௌட் கிரேக் என்பவரின் உண்மையனுபவ உபந்நியாசத்தால் ஒளியா காயத்தின் இயல்புகளும் ஆண்டு நிகழும் நிகழ்ச்சிகளும் இவ்வுடம்பி லிருந்தபடியே அதிற் செல்லுமாறும் பிறவும் இனிது விளங்குதல் காண்க. இன்னும் அகக்கண் திறக்கப் பட்டு அவ்வொளி யாகாயத்திலுள்ள உலகங்களைக் கண்டவர்கள் பின்வருமாறு அவற்றை வருணித்துச் சொல்லி யிருக்கிறார்கள். 16. ஒளியாகாய உலகங்கள் இந்நிலவுலகத்துப் பருப்பொருள்கள் உண்மையாக இருத்தல் போலவே ஒளியுலகங்களின் பொருள்களும் அழியா விழுப்பம் உடையனவா யிருக்கின்றன. அவ் வுண்மை யுலகங்களிலேதான் உங்களுக்கு என்றுமுள்ள குறைவுகள் நிறைவு செய்யப்படும். தமது நறுமணத்தை எங்கும் நிரம்பச் செய்யும் கொழுவிய மலர்களும் செடிகளும் சூழ்ந்த அழகிய மாளிகைகளால் அலங்கரிக்கப் பட்டுள்ள இனிய நிலத் தோற்றங்கள் கண்ணைக் கவரத் தக்கனவாயிருக்கின்றன. பொன் மயமான ஞாயிற்றின் ஒளியில் குவடுகளும் பக்கங்களும் முழுகப்பெற்ற மலைகளும் அங்குள்ளன. வெண்மையான அருவிகள் ஓடப்பெற்றனவும் வளஞ்சிறந்த பசும்புல் நிலங்களால் உடுக்கப்பட்டனவுமாகிய பள்ளத்தாக்குகளும் அங்குள்ளன. தமக்கு மேல் உள்ள தெளிந்த வானத்தைத் தம்மிடத்தே காட்டும் மேற்பரப்பும், புற்களும் மலர்களும் நிறைந்த கரை ஓரங்களும் எல்லையற்ற அன்பின் உணர்ச்சியை இனிதாக முணுமுணுத் தோடும் தெளிபளிங்கன்ன தண்ணீரும் பொருந்தப் பெற்ற யாறுகளும் அங்கு விளங்கா நிற்கும்., பரிமளமான இளங்காற்றுக் கன்னத்தின்மேல் வீசுவதும் உள்ளிழுக்குந் தூயகாற்றும் ஆன்மாவைப் பரவசப்படுத்துகின்றன. மேலான நீலநிறம் வாய்ந்த வானமும் அங்கு நிலவும்: கீழுலகத்துள்ள நல்லவர்க்குக் கனிந்த செழுங்கதிரைச் சொரியும் ஞாயிற்றின் பல திறப்பட்ட வண்ணங்களோடு கூடிய பளப்பளப்பான கதிர்கள் தோய்ந்து கிளரொளிமிக்கு விளங்கும் முகிற் குழாங்கள் கற்றைக்கற்றையாக அவ்வானிலே மிதந்து செல்லா நிற்கும். மிகவுஞ் செழுமையான தோகைகளுடைய பறவைகள் அமிழ்தம் போன்ற இனிய பாட்டுக்களை மிழற்றிக் கொண்டிருக்கும். நம்மைச் சுற்றியுள்ள எழில் நலங்களைப் பருகுவார்போன்று களிக்கும் பருவம் முதிர்ந்த ஆண் பெண் என்னும் இருபாலரோடும் கூடிக்கொண்டு கள்ளம் அறியா மகிழ்ச்சி துளும்பும் இனிய மழலைச் சொற்களை மொழிந்து அழகிய இளங்குழவிகள் விளையாட்டயரும்; அங்ஙனம் அவர்கள் விளையாடுங்கால், இடையிடையே தமது பேரின்பத்தின் பொருட்டாக இத்தனை அரிய பொருள்களையும் தமக்கு அமைத்துக் கொடுத்த அன்புமிக்க தந்தைக்கு நன்றியும் வணக்குமுஞ் செலுத்துவோராய் இருப்பர். அம்மேலான நிலம் எல்லாரும் கடைசியாகச் செல்லும் இடமாயிருக்கிறது. சிலர் அதனைத் தாம் செய்த நல்வினைகளால் எய்துகின்றனர்; வேறுசிலர் மிகுந்த துன்பத்தையும் இடரையும் அனுபவித்து அதன்பின்னர் அதனை அடைகின்றனர்; மற்றுஞ் சிலர் கழிவிரக்கத்தினால் தூய்மை செய்யப்பட்டு அதனைப் பெறுகின்றனர்; அங்ஙனமாயினும் எல்லார்க்கும் அது சிறப்பும் நலமும் நிறைந்த உண்மையான புகலிடமே யாகும். இனி அமெரிக்கா தேயத்து ஐக்கிய மாகாணத்தின் கண் நியாயாதிபதியாயிருந்த எட்மண்ட் என்னும் பெரியோர் தாம் சூக்கும சரீரத்தில் நின்றவாறே மந்திர சக்தி மிக்க ஒருவர்மேல் ஆவேசித்து இலண்டன் மாநகரத்தில் ஒரு பெருங் கூட்டத் தார்க்குப் புரிந்த உபந்நியாசம் சூக்கும ஒளியுலக வாழ்க்கையின் இயல்புகளை நன்கு புலப்படுத்துதலின் அதனையும் இங்கே மொழிபெயர்த்து எழுதுகின்றாம். 17. சூக்கும ஒளியுலக வாழ்க்கை வேறொருவர் உடம்பை இரவலாகப் பற்றிக் கொண்டு புதுமாதிரியாக இன்று நான் இருவகை யுலகங்களின் வாழ்த்துரைகளோடும் வந்திருக்கிறேன். எனது உயிர் வாழ்க்கையில் யான் அடைந்த பெருவெற்றியின் - மரணத்தைச் செயித்ததன் - வரலாற்றினை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வல்லவனா யிருக்கின்றேன். எனது உடம்பு தனியே விட்டு விடப்பட்டது; ஆனால் எனதுயிரோ உங்கள் நடுவில் நான் இருந்த காலத்து இருந்தது போலவே திரும்பவும் புதிதான சுறுசுறுப்போடும் எல்லாச் சக்திகளோடும் முழுமையாகவே இருக்கின்றது. இப்போது யான் புதிதாகக் கண்ட இந்நிலையில் உண்டான மனக்கிளர்ச்சியி னாலும் ஊக்கத்தினாலுமே நிறைந்திருக்கின்றேன். இறப்பு என்று சொல்லப்படும் நிலைமாறுதலின் வழியாக யான் ஒருசிறிதும் துன்பம் உழவாமலே நிலவாழ்க்கையைக் கடந்துவந்தேன். என்னுடம்பு மெலிந்துபோனது உண்மைதான்; சென்ற சில ஆண்டுகளாக வலிவின்மையினாலும் தளர்ச்சியினாலும் யான் வருந்திக் கொண்டிருந்ததும் உண்மைதான்; என்றாலும், ஒரு தொடர்பான உபதேசங்களைக் கேட்டதனாலும், சூக்கும சரீரத்திலுள்ள என் நண்பர்களோடு அடிக்கடி கலந்துறவாடின தனாலும் சாக்காடென்பது அஞ்சத்தக்க தன்று என நான் அறிந்துகொண்டேன். எனது நிலவாழ்க்கையின் கடைசி நாட்களில், நிலவுலகத்தைத் துறந்து செல்வதற்குச் சில வாரங் களுக்கு முன்னிருந்தே ஓர் அன்புள்ள ஆவி என்னுடனிருந்து கொண்டு எனக்கு உதவி செய்வதை உணரலானேன். இந்த ஆவி, எனது நிலவாழ்க்கையின் இளம்பருவத்தில் எனக்கு நண்பரா யிருந்தவரேதாம்; இந் நண்பர் இறந்ததனால் எனக்குண்டான துயரமே இறந்தவர்களின் ஆவி எந்த மண்டிலத்திற்குச் செல்லக்கூடுமென்பதனைத் தெரிந்து கொள்ளும் விருப்பத்தை என்பால் எழுப்பி விட்டது. யான் கல்வியறிவு பெற்றுவந்த ஆண்டுகள் எல்லாவற்றிலும் இந்நண்பர் எனக்குப் பிரியாத் துணையுடனிருந்து வழிகாட்டி வந்தார். என் வாழ்நாள் எல்லை அணுகுதலும் அவள் எனக்கு ஆறுதலை உண்டு பண்ணினாள்; அவள் என்னை வரவேற்றுச் சூக்கும உலகத்திற்குச் செல்லும் வழியையும் எனக்குக் காட்டினாள். அவளுடைய அன்பான உதவியினால் அச்சத்தையும் மரணத்தையும் பற்றின எல்லா நினைவுகளையும் யான் அறவே ஒழித்துவிட்டேன்; ஆவிவடிவில் எங்களை மறுபடியும் ஒருங்குகூட்டும் நேரத்தை மிகுந்த களிப்போடும் எதிர்நோக்கி வாழ்த்தினேன். துன்பம் இன்றியே இவ்வுடம்பைக் கடந்து சென்றேன்; துன்பத்தைப்பற்றி யான் உணரவும் இல்லை; ஆனால், என்னுடம்போ இனிதாக இளைப்பாறிக் கிடந்தது; அதனி னின்றும் விடுபட்ட எனதுயிரோ, பழுதாய்ப்போன ஒரு சட்டை யைப் பார்ப்பதுபோல, அதன்மேல் அந்தரத்தில் நின்று கொண்டு அதனைப் பார்த்தது. ஒரு நொடிப் பொழுதேனும் கழிந்து போவதை யான் உணர்ந்திலேன். எனதுள்ளம் உறங்க வில்லை. என் ஆன்ம உணர்வுகளில் எதனையும் ஓர் இமைப் பொழுதேனும் யான் இழந்து விடவும் இல்லை. யான் இறந்து போகப் போகிறேன் என்பது எனக்குத் தெரியும். எனதுயிர் பருவுடம்பைப்பற்றி யிருந்த நிலையைப் படிப்படியாக விட்டு வரும் ஒவ்வோர் இமைப்பொழுதையும் நான் அறிந்தேன். எனக்குப் பக்கத்திலே யிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்த அன்பர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று காணும் பொருட்டும் யான் செல்லுகிற புதிய வாழ்க்கையைக் குறித்து அவர்கள் அஞ்சுகிறார்களா என்று நோக்கும் பொருட்டும், பற் பல ஆண்டுகளாக நாங்கள் ஒன்றுசேர்ந்து கற்றறிந்த பொருள் களிலிருந்து அவர்களை இதனைச் செவ்வையாகப் பொறுத்துக் கொள்ளுகிறார்களா வென்று தெரியும் பொருட்டும், நீங்கள் விட்டுப் புறப்பட வேண்டிய ஒரு வீட்டைச் சுற்றிப் சுற்றிச் பார்ப்பதுபோல, இடையிடையே எனதுடம் பாகிய குடியிருப்பினுள் யான் நுழைந்தேன். அவர்கள் மனவுறுதி யோடும் அன்பான உருக்கத்தோடும் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தனர்; பிரிந்துபோகும் உயிரின் பருவுடம்பைப் பறிகொடுப்பதில் ஓர் அருவருப்பு மாத்திரம் - அன்பாக நேசிக்கப்பட்ட நண்பரின் உடம்பைச் சார்ந்திருக்க வேண்டு மென்னும் மிகு விருப்பம் மாத்திரம், இன்னும் அவர்களிடத்தில் மறைவா யிருந்த தென்பது உண்மை. உறக்கமாவது குறைந்த உணர்ச்சியாவது இடை நிகழக் கண்டேனில்லை; பல ஆண்டுகளாகச் சங்கிலியிற் கட்டுண்டு கிடந்தவன் அக் கட்டு அறுந்ததுங் குதித்து எழுமாறு போலப் புதிது காணப்பட்ட எனதுயிர் வாழ்க்கையில் யானும் மனக்கிளர்ச்சியோடு சென்றேன். எனது உயிர் வாழ்நாளின் பிற்பகுதியில் உண்டான நோய் வருத்தத்தால் யான் விலங்கிடப் பட்டவனைப் போல் இருந்தேன். தாங்குவதற்குக் கூடாத தளர்ச்சி உண்டானமை யினாலே, இவ் வூனுடம்பாகிய சங்கிலியாற் பிணிக்கப்பட்டுக் கிடந்தே னெனவே எண்ணினேன். சிறையில் அடைக்கப்பட்டிருந்து வெளிப்பட்ட ஒருவன் இனிய காற்றில் வந்து அமிழ்ந்துவது போலவும், பொன் மயமான கடலிற் பாய்வது போலவும் யானும் அங்குக் களிப்பாற் றுள்ளினேன். எனக்குச் சொந்தமாயிருந்த இளமையும் வலிமையும் ஆண்மையும் ஆகிய எல்லாம் திரும்பவும் என்னிடம் வரக் கண்டேன். என்னைப் பற்றின மட்டில் இதனினும் இன்னும் மேலான சிலவற்றை உணரலானேன்: சூக்குமதத்துவ உயிர் வாழ்க்கையில் யான் மிகுந்த அனுபவ முடையவனாயிருந்தும், ஆவி வடிவில் நிற்போர் பலரை யான் என்னிடம் வரக் கண்டும் அவர்களோடு யான் கலந்துறவாடியும், என்னை நிலவுலகத்தோடு பிணித்துவைத்த கட்டுக் கடைசியாக அறுபட்ட பின்னர் அல்லாமல் சூக்கும வாழ்வின் இயல்பை இதற்கு முன் உண்மையாக உணர்ந்தேனில்லை. எனதுருவ மானது இளமையும் வலிவும் உடைய உருவமாக முற்றும் புதுக்கப் பட்டதனைக் கண்டு அளவிறந்த வியப்படைந்தேன். இதற்குமுன் எனக்கு அறிமுகமா யிருந்தவர்களையும் எனக்குத் தெரிந்த நண்பர்களையும் யான் கண்டு, அவர்கள் ஒவ்வொருவரும் இளைஞராயும், தமக்குப் பிற்பாடு சேர்ந்த சூக்கும வாழ்க்கையின் அனுபவத்தால் அறிஞராயும் விளங்குதலைத் தெரிந்தேன். அப்போது தான் முதன்முதல் குரலொலியும் அல்லாமல், வேறோர் ஓசையும் அல்லாமல், ஒரு சொல்லும் அல்லாமல் உயிர்க் கலப்பாய் மாத்திரம் உள்ள ஆவி யொலியின் உணர்வாற்றலைத் தெளிந்துகொண்டேன். என்னைச் சுற்றியுள்ளார்க்கு என் நினைவு ஒவ்வொன்றும் தெளிவாய்த் தோன்றியதோடு, என்னுடைய சொற்களும் நன்கு புலப்படுத்தப்பட்டன. புறம்பேயுள்ள ஒரு பொருளைப் பற்றி நீங்கள் பேசிக்கொள்வது போலவே, யான் அப்புறப்படுத்திவந்த உடம்பைப் பற்றியும் பேசிக் கொண்டோம். எனக்குப்பின் என் உடம்போடு விடப்பட்ட ஐம்பொறிகளைப் பற்றிய உணர்ச்சியால் யான் இதற்கு முன்னெல்லாம் சிறிது அறிவு மூடப்பட்டிருக்க, இப்போதோ யான் ஆன்ம சக்திகள் முழுதும் நிறையப் பெற்ற ஆவியாகக் குறிப்பிட்டுப் பேசப்பட்டேன். எனக்கு முதலில் உண்டான நினைவு: யான் என் புதல்விகளோடு பேசக்கூடுமா? என்பதேதான்; ஆனால், அஃது என்னாற் கூடவில்லை; அஃதாவது செவிப்புலனாகும் ஒலி அங்கிருக்க முடியாது; ஆயினும், அவர்கள் உள்ளத்தில் யான் எண்ணியவற்றைத் தெளிவாகவும் இனிது விளங்குமாறும் பதியவைக்கக்கூடும். என் உடம்பு அழிந்து போயிற் றென்றும், உயிராகிய தீப்பொறி அவிந்து போயிற்றென்றும் தான் தெரிந்திருந்தாலும் என் கடைக்கோடி மகள் யான் தன் எதிரிலிருப்பதை நன்கு அறிந்திருந்தாள். இதனை அடுத்து எனக்குவந்த ஆன்ம உணர்ச்சியாவது இயக்கத்தைப் பற்றியதேயாம். குதிரைகளின் மேலாயினும், அல்லது வேறு வழக்கமான ஊர்திகளிலாயினும் சூக்கும உலகத்தின் ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்கு யான் கொண்டுபோகப் படுதலைக் கண்டேன். இப்போது யான் புதிது தோன்றிய ஆன்ம உணர்ச்சியாகிய இச்சையின் வலிவைத் தெளியலானேன். என் தோழர், நாம் இப்போது நமது சூக்கும உலக விடுதியைப் போய்ப் பார்ப்போம் என்று எனக்குக் கூறினார். ஏறிச்செல்வதற்கு ஏதேனும் ஓர் ஊர்தி கிடைக்குமா வென்று சுற்றி நோக்கினேன்; இவ் விருப்பம் என்மனத்தில் ஏறியவுடனே, முதலில் மெதுவாகவும், பின்னர் எனது விருப்பம் மிகுதிப்படுதலும் மிகுந்த விரைவோடும், கடைசியாக இடையே பொருள்கள் இருந்தாலும் யான் அவற்றைக் காண ஏலாத அத்தனை விரைந்த செலவோடும் யான் சவாரி போதலை வியப்புடன் கண்டேன். நாங்கள் விரைந்து சென்ற அச் செலவு ஓர் இமைப்பொழுது தான் இருக்கும். நாங்கள் அளவுபடாத இடைவெளியைக் கடந்து சென்றதாகத் தோன்றியது. சில வேளை உலகங்கள் பல எம்மைக் கடந்து போயிருக்க வேண்டு மென்று எண்ணினேன்; மற்றுஞ் சிலவேளை தத்தம் எல்லைகளிற் செல்லும் கோள்களின் தெளிவான ஓசைகளை யான் கேட்டதாகவும் எண்ணினேன்; வேறு சில வேளை தொலைவில் ஒலிக்கும் இசையின் ஓசையை யான் செவியேற்றதாகவும் எண்ணினேன். ஒளியும் நிழலும் ஒருங்கு கலந்து பரவியுள்ள விளக்கமான வாயில் ஒன்றினுள்ளே நாங்கள் இப்போது வந்து நின்றோம். சூக்கும உலகத்திற்கும் தூல உலகத்திற்கும் நடுவில் உள்ளதான நுழைவாயில் இதுதான் என்றும், இதன் வழியாக ஆன்ம தத்துவ உண்மை யுலகுக்கு யான் செல்லப்போகிறேன் என்றும் சொல்லக்கேட்டேன். முன்னே எனக்குத் தோன்றிய காட்சிகளில் யான் அங்கே சென்றிருந்த துண்டு. முன்னெல்லாம் மற்றையோர் உதவிகொண்டு யான் அச் சூக்கும உலகங்களைப் பார்த்துவந்தேன்; ஆனால் இப்போதோ யானே என் ஆன்மசக்திகளைக் கொண்டு பார்க்கலானேன். முன்னர் எனக்கு நேர்ந்த பார்வையினும் இப்போது நேர்ந்தது முற்றிலும் வேறானதாயிருந்தது. இப்போது நாங்கள் சென்ற ஒவ்வோரி டத்தும் புதிய புதிய அழகுகளைக் கண்டேன். என் அகக் கண்ணானது சுற்றிலுமுள்ள பொருள்களைக் காணத்தக்க சுறுசுறுப்புடையதானதோடு, அப்பொருள்களின் ஆன்மாக் களையும் நன்கு காணலாயிற்று; ஒவ்வொரு வடிவமும் இங்குள்ள சுவர்களைப்போலத் தொடக்கூடியதா யிருந்தாலும், உள்ளும் புறம்பும் நன்கு விளங்கித் தெளிவாயிருந்தது; யான் கண்ட எல்லாப் பொருளிலும் ஒரு சீவதாது ஊடுருவித் தோன்றியது. இனி, அக் கட்டிடத்தின் தன்மையைப்பற்றி விசாரணை செய்யலானேன். யான் புகுந்த வாயிலின் அமைப்பானது யான் சிந்திக்கக்கூடிய எல்லவாற்றைப் பார்க்கிலும் மிகப் பருமனான கோபுரவாயிலை அல்லது ஒரு தேவாலயத்தைப் பெரிதும் ஒத்ததா யிருந்தது, பலதிறப்பட்ட நிழலும் பல அளவான நிறங்களும் நிரம்பப் பொருத்தமாகவும் தெளிவாகவும் கலந்து கூட்டப்பட்ட அழகிய உருவங்களோடு அக் கட்டிடம் சேர்ந்து நின்றமையாலே அதனை உயிரோடு கூடிய ஓர் உருவமாகவே யான் நம்பக்கூடியதா யிருந்தது. என் தோழர் எனது கருத்தை உணர்ந்து இந்தப் பொருள் நிலத்தின் மேலுள்ள எல்லாப் பொருள்களினும் வேறென்பது முற்றிலும் உண்மைதான்; சலவைக்கல்லின் துண்டுகளாலும், உயர்ந்து மணிகளாலும் அமைக்கப்பட்டிருப்பது போல் தோன்றினாலும் இது சீவதாது நிறைந்த நினைவின் வடிவேயன்றி வேறன்று. நீர் இப்போது நுழைந்திருக்கின்ற உலகத்தின் சீவமண்டிலமேயன்றிப் பிறிதன்று. இவ்வழியே செல்லும் ஒவ்வோர் உயிரும் இவ் வாயிலின் அழகை மிகுதிப்படுத்துதற்கு வேண்டும் நலத்தினைச் சிறிது கொடுத்துச் செல்கின்றது, என்று கூறினார். துறவியைச் சூழ்ந்துள்ள கதிரொளி வட்டத்தைப் போல வெண்மையும் நீலமுங் கலந்த வாயுமண்டிலம் என்னைச் சுற்றியிருக்கக் கண்டேன். இந்த நீலவாயு மண்டிலம் என்னைச் சூழத் திருத்தமான வடிவெடுத்தது; உடனே அவ் வாயிலின் ஊடே ஒரு வழி தென்பட்டது; அதில் யான் சென்றேன். பின்னர் அதனைத் திரும்பிப் பார்த்தேன்; மற்றோர் உயிர் அந்நிலத்திற் புகுந்தமைக்கு அடையாளமாக அவ் வாயில் அங்ஙனம் இருக்கும்படி விடப்பட்டது. அப்பொழுது அவ்வாயிலின் வளைவுகளும், அவற்றிற்கு அலங்காரமாய் அமைந்த உருக்களும், அவற்றில் எழுதப்பட்ட வடிவங்களும் வரவரக் குரல் ஒலி காட்டுவனபோற் றோன்றிப், பிறகு தெளிவான இசையில் என் உயிரை நல்வரவேற்றன. இதற்குமுன் யான் கேட்ட இசையுள் இது சேர்ந்ததாயில்லை; இசைக்கருவியிலிருந்து எழும் ஒலி போலிருந்தது. செவிப்புலனால் அல்லாமல் உயிரின் அறிவால் மாத்திரம் கேட்கப்படுவதாயுள்ள முதிர்ந்த நினைவின் இசைப்பொருத்தத்தையே அது பெரிதும் ஒத்திருந்தது. என் ஒரே தோழரும் யானுமாகப் பின்னுஞ் சென்றோம்; ஏனெனில் யான் பார்த்த மற்ற ஆவிகள் எல்லாம் இப்போது மறைந்து போயின. பின்னும் யாங்கள் அப்பாற் சென்றோம். இவ் வேளையில் அகன்ற ஓர் அதிசயமான இடம் என் காட்சிக்குப் புலனாயிற்று. இரண்டு பக்கங்களிலும் பெரிய மலைவீழ் ஆறுகள் பள்ளத்தாக்குகளிற் சுழன்று சென்றன; அழகிய அருவிகள் மலைப் பக்கங்களில் துள்ளிக் குதித்தன. சூக்கும உலகத்திலுள்ள எமது இருப்பிடத்திற்கு இது நுழைவாயி லாகுமென்று நினைவு கூர்ந்தேன். இரண்டு மலைத்தொடர்களுக்கும் நடுவே ஊர்தி ஏதுமில்லாமலே நாங்கள் வாய் பேசாது மிகு விரைவாய்ச் சென்று, ஒரு திறந்தவெளியிற் சேர்ந்தோம். சூக்கும உலகத்தில் நாங்கள் இருப்பதற்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட இடம் இங்கேதான் இருந்தது. ஓர் அறைக்குச் செல்லும் வாயிலைப் பார்க்கிலும் அகன்றதல்லாத ஓர் ஒடுக்கமான பாதையில் நாங்கள் புகுந்தபோது, உரத்த பாறையென்று காணப்பட்ட ஒன்றிலிருந்து புதுமையான பல பாவைகளும் படிவங்களும் மங்கலாய்த் தோன்றுவதை யான் குறிப்பாய்ப் பார்த்தேன். இப் பாவைகள் பழக்கமான முகங்களும் உருவங்களும் உடையனவா யிருத்தலும், மனத்திற்குப் புலனாயுள்ள பொருள்களையும் எண்ணங்களையும் சொற்களையும் போற் றோன்றுதலும் கண்டேன். எனதுயிர் வாழ்நாளில் உண்டான ஒவ்வொரு நினைவையும் ஒவ்வொரு செயலையும் யான் பார்த்தேன். அவைகளிற் சில நிழலுள்ளனவா யிருந்தன; வேறு சில மிக இன்பமான உருவங் களுடையனவா யிருந்தன; இன்னுஞ் சில பகைமையுங் கொடுமையும் வாய்ந்த சாயலு டையனவா யிருந்தமையால் அவற்றை மறந்து விடுவதில் விருப்பமுடையேனாயிருந்தேன்; பின்னுஞ் சில இகழ்ச்சிக்கும் சினத்திற்கும் இணங்கின வாயிருந்தன; ஆனால், இன்னும் முன்னே யான் சென்றபோது மேலான அன்புள்ள முகங்களும் வடிவங்களும் நிரம்பவும் மிகுதியாயிருக்கவும், யான் உயிருள்ள ஆவியாய் அத் திறந்தவெளியிற் சென்றதும் அன்போடும் இரக்கத்தோடுங் கூடியவற்றை அல்லாமல் வேறுருவங்கள் இல்லாதிருக்கவும், மகிழ்ச்சி நிறைந்தவற்றை அல்லாமல் வேறொலிகள் இல்லாதிருக்கவுங் கண்டேன். ஒரு மங்கையின் கழுத்தணியில் தனித்தனியே பதிக்கப் பட்ட முத்துக்களைப்போல ஒவ்வொரு துளியும் அத்தனை தெளிவாக வுள்ள ஒரு நீரோட்டத்தில் யான் இங்கே அமிழ்ந்தினாற்போற் காணப்பட்டது. இத்துளிகள் ஒவ் வொன்றும் சில அன்பான நினைவை அல்லது தெளிவான சாரத்தை உள்ளடக்கி நிற்பதுபோல் தோன்றியது; இந்த நீரோட்டத்தில் யான் அமிழ்ந்தினதும், மண்ணுலகத்தில் உண்டான கறைகள் சிலவற்றை எடுத்துவிடுவதுபோல ஒவ்வொரு துளியும் என் நுண்ணுடம்பில் கொட்டினது. அந் நீரோட்டத்தில் நெடு நேரம் யான் இருக்க இருக்க அதனைத் தாங்கிக் கொள்வது எனக்கு எளிதாயிற்று. முதலில் அது நெருப்பைப் போற் சுட்டுக் கொளுத்துவதாகக் காணப்பட்டது; பின்னர் அது மேலும் மேலும் இனியதாகி ஒவ்வொரு துளியும் என் உள்ளத்திற் சில உண்மைகளைத் தெரிவித்து என்னுடன் பேசக் கண்டேன். கடைசியாக அதன் மற்றப் பக்கத்தில் யான் மேலெழுந்தவுடனே, என் தோழரால் புன்சிரிப்போடு வரவேற்கப்பெற்றேன். இஃது உமது மண்ணுடம்பின் கடைசியாக உள்ள கறைகளை நீக்குகின்றது; ஆயினும், நீர் மண்ணுலகிற் செய்த எல்லாப் பிழைகளின் முடிவான பயன்களையும் இது நீக்குகின்றிலது, என்று அவர் மொழிந்தார். அந்த அம்மையாருக்கும் எனக்கும் உள்ள சில வித்தியாசம் என் உணர்வுக்குத் தென்படலாயிற் றென்றும், அவ்வம்மையின் நிலைமையை யான் இன்னும் முற்றும் அடையவில்லை யென்றும், ஆனாலும் அந்த இனிய நீரோட்டத்தில் முழுகியதிலிருந்து யான் மிகுந்த அறிவையும் மிகுந்த கல்வியினையும் எய்தி எனக்கிருந்த குறைபாடுகள் படிப்படியே நீங்கப்பெற்றேனென்றும் தெரிந்துகொண்டேன். இந்த நிலத்தின்மேற் பெயர் அறியப்படாத மலர்களால் இருபுறத்தும் அலங்கரிக்கப்பட்டுள்ள ஓர் அழகிய கொடிப் பந்தருக்கு அவ்வம்மையார் என்னைப் பின்னர் வழி நடத்திக் கொண்டு சென்றனர். நீங்கள் பார்த்துப் பழக்கப் பட்டிருக்கிற வடிவங்களும் உருவங்களும் அவைகள் அல்ல; அவைகளின் மணங்களே செவிகளுக்கு இனிய ஓசைகளைத் தருகின்றன; அவற்றின் உருவங்களும் நிறங்களுமோ சில எண்ணங்களையும், வழுத்துரைகளையும், உயர்ந்த நாட்டங்களையும் தெரிவித்தன. எங்கள் இருப்பிடத்தின் வாயிலுக்கு இன்னும் அருகில் அவ்வம்மையார் என்னை அழைத்துச் சென்றனர். அதன் வடிவையும் உருவையும் யான் பார்க்கக் கூடியதாயிருந்தது. அதன் சுவர்களையும் வாயிலையும் யான் உங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லிக் காட்ட முடியும். அதன் உருவமைப்பில் யான் கண்ட ஒவ்வொரு வடிவிலும், என்னுடனிருந்த அவ்வம்மையாரின் இயல்புகளை யான் தெரிந்துகொள்ளக் கூடியதா யிருந்ததென்று சொல்லுவதைத் தவிர மற்றொன் றையுஞ் சொல்லி உங்களை இங்கே வீணே நிறுத்திவைக்க மாட்டேன். அவ்வம்மையார் இங்கிருந்த காலத்திலும் சூக்கும உலகத்திலும் அவர் தமக்கு வழக்கமாயுரிய எண்ணங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்த தென்பதை யான் காணக் கூடியதாயிருந்தது. இறைவனை வழுத்திய ஒவ்வொரு சொல்லும் செயலும், நல்நாட்டமும், உருக்கமான அறச் செய்கையும் இவ்வுறையுளில் உருவு கொண்டிருந்தன. என்னுடைய எண்ணங் களுங்கூட அங்கு இடையிடையே பின்னப்பட்டிருத்தலைக் கண்டேன். யான் கொண்ட நல்லெண்ணங்களும், வேண்டுகோள் மொழிகளும், நல்நோக்கங்களும், நெடுநாளைக்கு முன்னமே யான் மறந்து போன செய்கைகளும் அங்கே உயிரோடு அழகாய் விளங்கினவே யல்லாமல் வேறுதூணாகவும் பாவை யாகவுந் தோன்றவில்லை. எனதுயிர் வாழ்க்கையிற் கிளைத்த நினைவுகளும் வாழ்த் துரைகளும் நல்நாட்டங்களும் எனக்கெதிரில் ஒரு வரிசையாக ஒழுங்குபடுத்தப் பட்டிருத்தலைக் கண்டேனேயன்றி என்னுடைய குறைபாடுகளைக் கண்டேனில்லை; ஆகவே, அவரை நோக்கி : இஃது என்னை? இந்த நமது இருப்பிடத்தில் என் நல்லெண்ணங் களை மாத்திரங் காண்கின்- றேனே யல்லாமல் என் குறை பாடுகளைக் காணவில்லையே? என்று உடனே வினவினேன். அதற்கு அவ்வம்மையின் நினைவு ‘நம் ஆன்மாக்கள் இருக்கும் சூக்கும உறைவிடத்தில் குறைபாடுகள் இருக்கமுடியா; அவற்றை நீர் வாயிலினிடத்தே கண்டிருப்பீர்; உமது வழிநெடுக நீர் அவைகளைப் பார்த்திருப்பீர்; உயிர்த் தன்மை வாய்ந்த சூக்கும உறைவிடத்தில் குறைவில்லாதனவே முடிவான உருவும் வடிவும் எடுக்கக்கூடும்? என்று விடை பகர்ந்தது. யான் எவ்வளவு குறைபாடு உடையவன் என்பதை அப்போதுதான் கண்டேன்; யான் தகுதியற்றவன் என்னும் உணர்ச்சியானது அவ்வின்ப நிலங்களிலிருந்து என்னைப் பின்வாங்கிச் செல்லும்படி செய்யவல்லதா யிருந்தது; ஆனால், அவ்வம்மையார் என்னை அச்சமேனும் நடுக்கமேனும் அடையலாகாதென்று கற்பித்தார். ஏனெனில், மண்ணு லகத்தைப் பற்றிய ஒவ்வொரு நினைவும் குற்றமும் எனது முயற்சியினாலேயே நீக்கப்பட வேண்டுமாதலின் என்பது. இவ்விடத்தே நிலையாகத் தங்குவதற்கு ஏற்ற தன்மை இன்னும் உம்மிடத்தில் முற்றும் உண்டாகவில்லை; உமது இல்லம் இதுதான்; உமது முயற்சியினாலும், கடவுள் வழிபாட்டி னாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாழிகையும் வளரும் அறிவினாலும் சூக்கும உலகின்கண் உள்ள இவ்வீட்டின் கண் தாராளமாய் மகிழ்ச்சியும் தன்னுணர்வும் மிகுந்து நீர் இருக்கப்பெறுவீர், என்று அவ்வம்மையார் மொழிந்தார். அதன்பிறகு தான் முதன் முதல் யான் களைப்படையக் கண்டேன். இப் புதிய உறையுளின் பேரொளியும், உள்ளத் தெழுந்த களிப்பும், துன்பத்தினின்றும் விடப்பெற்ற உணர்ச்சியும் என்னைக் களைப்படையச் செய்தன. யான் ஓர் உயிரென்றும், இனி யான் என் உடம்பிற் புகுதலாகாதென்றும் உடனே நான் தெரிந்து கொள்ளக் கூடவில்லை. முந்திரிக் கொடிகளாலும் மலர்களாலும் பின்னலாயுள்ள ஒரு பந்தரினால் இவ்வுறையுளின் மற்றப் பகுதியினின்றும் பிரிக்கப்பட்டதுபோற் றோன்றிய ஒரு தனியறைக்கு அவ்வம்மையார் என்னை நடத்திச் சென்றார். இதற்குட்சென்று இவ்வளவு நேரம் என்று அறியாமல் நெடுநேரம் அங்கே உறங்கினேன்; யான் மறுபடியும் விழித்தெழுந்ததும் என் ஆன்மசக்திகளெல்லாம் புதுக்கப் பட்டதுபோல் உணர்ந்தேன்; என்னை முதலிற் களைப்படையச் செய்த மகிழ்சிறந்த ஆன்மதத்துவ எழில் நலங்கள் இப்போது என்னை மிகவும் வலிவடையப் புரிந்தன. எப்போதும் என் பக்கத்திலிருந்த அவ்வம்மையாரை நோக்கி, இப்போது நான் ஆயத்தமாய் இருக்கின்றேன்; இச் சிறந்த உயிர்வாழ்க்கையை இன்னும் மிகுதியாக எனக்குக் காட்டுங்கள், என்றேன். முதலில் மெதுவாகவும் வேண்டாவெறுப்பாகவும் இருந்ததுபோல் அல்லாமல் இப்போதுடனே எங்கள் வழியானது திறந்து காணப்படுவதாயிற்று; எனக்கெதிரே தூரத்திலிருந்தாலும் தெளிவாகப் புலப்பட்ட ஆவிகளின் கூட்டம் ஒன்றைக் கண்டேன். மண்ணுலகத்தில் எனக்கு மிகுந்த பழக்கமும் அறிமுகமும் உள்ளவராயிருந்தவர்களை அருகிற் கண்டேன். அவ் ஆவேசக் கூட்டத்தினின்றும் வந்து என்னை முதன்முதல் வாழ்த்தித் தாம் அங்கு வந்திருத்தலைத் தெரிவித்தற் பொருட்டு மிகவும் பரபரப்போடு முயன்றவர் நியூயார்க் நீதிமன்றம் என்னும் பத்திரிக்கைக்கு முன்னே ஆசிரியரா யிருந்த ஹொரெ கிரீலி என்னும் என் நேசரேதாம். இவர் சில காலம் ஆன்மதத்துவ விசாரணை செய்தவராயிருந்தாலும், வெளிக்கு அவ்வாறு தோன்றினார் அல்லர். உம்மை வாழ்த்திப், பல ஆண்டுகளாக நீதியின்றிருந்த நிலையை மாற்றிக் கொள்ள விரைந்து வந்தேன், என்று அவர் கூறினார். ah‹ ‘m~J v‹id? என்று வினவினேன். அதற்கு அவர் நீர் இந்தப் புதிய உயிர் வாழ்க்கையைப் பற்றி எடுத்துக் காட்டின சான்றுகளை நான் குறைவாக மதித்தேனே; இப்போது இஃது உண்மைய னுபவமா யிருத்தலைக் கண்டு இங்ஙனம் கண்ட உண்மையை உமக்கு எடுத்துரைத்தனால் மனஅமைதி பெற்றிருக்கின்றேன், என்று அவர் மறுமொழி புகன்றார். சூக்கும உலக வாழ்க்கை யைப் பற்றி அவர் தமக்குச் சிறிதுந் தெரியா தென்பதனை யான் எந்நேரமும் அவருக்குச் சொல்லி வந்தேன்; நாங்கள் எல்லாரும் ஒருங்கு சேர்ந்து சூக்கும தத்துவ ஆராய்ச்சிக் கூட்டம் இட்டு உட்கார்ந்த காலங்களிலெல்லாம், அவர் அரசாங்க காரியங்களைச் சீர்திருத்தஞ்செய்யும் முயற்சியில் தமது கருத்தைச் செலுத்துவார்; யானோ ஆன்மதத்துவ ஆராய்ச்சியிற் கருத்தாயிருந்தேன். அவர் அங்ஙனம் விட்டுச் சொல்லியதைக் கேட்டு மகிழ்ந்தேன்; அஃது எனக்கு ஆறுதலை உண்டுபண்ணி வலியைத் தந்தது. ஆன்மதத்துவ ஆராய்ச்சியில் எனக்குதவி யாயிருந்தவரும் எனக்குச் சிறந்த பழைய நண்பரும் ஆன மேப் பண்டிதரை யான் பின்னர் எதிர்ப்பட்டேன். உடனே அவர் என்னை நோக்கி, ஆ! நான் நிலவுலகத்திலிருந்தபோது சடப் பொருளின் வேறாகச் சித்துப் பொருளுக்குள்ள ஆற்றல்களைப் பற்றி எனக்குச் சிறிதுந் தெரியாது; ஆனால் இப்போதோ நீர் கண்ட காட்சிகளெல்லாம் பெரிதும் உண்மையென்றே காண்கின்றேன், என்று மொழிந்தார். என்னை வரவேற்று வாழ்த்தும் பொருட்டு இவ்வொளி யுலகத்தில் ஒருவர் பின் ஒருவராய் வந்தவர் களையெல்லாம் யான் உங்களுக்கு வரிசையாய்ச்சொல்ல வேண்டுவதில்லை. வரவேற்கப்பட்ட உயிர்களை வாழ்த்த வேண்டுமென்று அவ் ஆவிகள் தமக்குள் கூடிப் பேசிக் கொண்டார்களென்று தோன்றியது; என்றாலும், அவர்கள் ஒன்று கூடியது அதன் பொருட்டாகவே அன்று. அவர்கள் அங்கே தமது வழக்கப்படி குழுமியது உயிர்களின் இருப்பைப் பற்றிய வரலாறுகளை ஆராய்ந்து பேசுதற் பொருட்டேதான். அவர்கள் கும்பு கும்பாய் ஒழுங்காகக் கூடியிருந்ததுபோற் காணப்பட்டனர்; ஒவ்வொரு கும்பின் நடுவிலும் தலைவர் ஒருவர் இருந்தார். ஒன்றன் நடுவில் பிராங்க்லின் என்பவரைக் கண்டேன்; அவர் தம்மைச் சூழ இருந்தோர்க்கு இப்போது மண்ணுலகத்தில் உண்டாகும் தோற்றங்களைப்பற்றிச் சில சூக்கும பரிசோதனை செய்யும்படி அவர்களுக்கு எடுத்துக் காட்டிக்கொண்டிருந்தார். பூதபௌதிக நூலாராய்ச்சியிலுள்ள எல்லா விஷயங்களிலும் அவர் தலைமைவாய்ந்த பேரறிவினர். அவர் சூக்கும உலக வாழ்க்கையிற் புகுந்தது முதல் மின்சார விளக்கங்களையும் அதுபோன்ற சக்திகளையும் பற்றிய ஆராய்ச்சியே அவருக்குப் பிரதான விஷயமா யிருந்தது. அவர் புதியனவாகக் கண்டு பிடித்த உண்மைகளே சடத்தின் தோற்றங்கள் என்று சொல்லப் படுகின்றன. தமக்குப் பிரியமான அவ்விஷய ஆராய்ச்சி யினாலும் படிப்பினாலும் அவர் மாத்திரமே அதே சூக்கும உலகத்திலுள்ள மற்றவர்களுதவியோடு பருப்பொருள் அசைவுகளையும் இயக்கங்களையும் ஓசைகளையும் மண்ணுலகத்திலுள்ள மந்திர சக்தியுள்ளோர் வழியே வெளிப்படும் ஆவிகளையும் பற்றிய குறிப்புகளை உண்மைப் படுத்திக் காட்டிக் கொண்டிருந்தார். அவரைத் தலைமையாகக் கொண்ட ஆவேசக் கூட்டத்தவர் அவரிடத்தினின்றும் பல உண்மைகளைத் தெரிந்து பிறகு மற்ற ஆன்மாக்களுக்கு அவற்றை அறிவுறுத்துகின்றனர். இப்போது இவ் ஆவிகள் இம் மண்ணுலக மெங்கும் பரவிச் சிற்சத்தி, சடசத்தியை ஆளவல்லதாம் உண்மையை மாந்தருக்கு வெளியிட்டு மெய்ப்படுத்திக் காட்டுகின்றனர். இவ் விளக்கங் களிற் புலனாகி அவர்தம் விசேட மனவியற்கையோடு பொருத்தமுற்று நிற்கும் குறிகளையும் இடங்களையும் பற்றிச் சொல்வதற்கு எனக்கு நேரமும் இல்லை; இஃது அவசியமும் அன்று. எனினும், பருப்பொருளில் உண்டாம் தோற்றங்கள் அலை அலையாய் எழுகின்றன வென்றும், இவைகள் ஒரு மையத்தினின்றும் தோன்றி இந்நிலவுலகத்தில் நெடுந்தூரத்தில் உள்ளவர்களும் இச் சத்திகளிற் சிறிது பெறும் அளவுக்குக் கடலலைகள் போல இம் மண்மேற் பரவிச் செல்கின்றன வென்றும் நீங்கள் தெரிதல்வேண்டும். சூக்கும ஆவி வடிவங்கள் கட்புலனாகும் என்னும் உண்மையானது முதன்முதல் அமெரிக்கா நாட்டிற் றோன்றி இப்பொழுது இங்கிலாந்து நாட்டின் மேற் றாவிச்செல்கின்றது. அஃது இங்கும் வந்து கிட்டியது; இனி அது தூரதேசங்களுக்குஞ் சென்று சேரும்; கடைசியாக, இன்னுந் தோன்றாத பிறிதோர் அலையினாற் பின்றொடரப்படும். ஆகவே, இஃது ஒழுக்கநூல் முறை யாதலோடு பௌதிக நூல் நுட்பங்களைத் தெரிந்து கொண்ட ஒரு மேலான ஏற்பாடாகவும் தோன்றுகின்றது. நிலத்தின் மேலுள்ள பௌதிகநூல் வல்லார் பலரைவிடச் சூக்கும உலகங்களில் உள்ளோர் இப் புதிய சத்திகளின் இயற்கையைத் தெரிந்துகொள்வதிலும் ஆராய் வதிலும் நிரம்பவுங் கருத்தாயிருக்கின்றனர். மானத ஆவேசத் தோற்றங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் தமது வலியையும் நேரத்தையும் செலுத்தி நிற்பவரான மற்றொருவரைப் பிறிதோர் இடத்திற் கண்டேன். அவரும் கல்வியின் மிக்கவராயிருந்தார்! யோக நித்திரையைப் பற்றித் தாம் கண்டுபிடித்த கோட்பாடுகளால் பௌதிகநூற் சரித்திர காலத்தில் ஒரு பெரிய விசேஷத்தை விளைவித்த மெசுமர் (Mesmer) என்பவரைப் பற்றியே யான் குறிப்பிட்டுச் சொல்லு கின்றேன். அவர் இப்போது ஆவேசங்களை வசப்படுத்தும் வசிய நூலாராய்ச்சியில் தலையிட்டிருக் கின்றனர். அவருக்கு மாணவகரும் கூட விருந்து உதவிசெய்வோரும் உளர்; இவர்கள் ஓரெண்ண முடையவராய் ஒன்றுபட்டு மந்திரசக்தி வாய்ந் தோரை ஆவேசித்தும், அவர்கள் மேலோங்குதற்கு உதவி செய்தும், தம் நண்பர்க்குச் செய்தி அனுப்புமாறு தம்மைச் சூழ்ந்திருக்கும் ஆவேசக் கூட்டத்தார்க்கு ஒத்தாசை புரிந்து கொண்டு மண்ணுலகத்தின்மேல் இயங்குகிறார்கள். உங்கள் இருப்பிடங்களுக்கு வந்து கதவைத் தட்டுதலானும் ஆவேசம் ஏறி ஆடுதலானும் நீங்கள் அறியாத வேறு வகையானும் தமது இருப்பை உங்களுக்கு அறிவிக்கும் வண்ணம் புதிதாகக் கண்டுபிடித்த இவ்வுண்மை யைப் பிள்ளைகளைப்போற் கற்றுக்கொண்டு வந்த கணக்கில்லாத பல்லாயிரம் ஆவிகள் தனித்தனிக் கூட்டமாக இவர்களைச் சூழ்ந்திருக்கக் கண்டேன். நீங்கள் உங்கள் நண்பர்களுக்குச் செய்தி அறிவிக்கும்படியான ஒருவழியை அல்லது தந்தியைக் கற்றுக்கொள்ளுதற்கு வகுப்புகளிற் சேர்வதுபோல, ஆன்மதத்துவ வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதற்குரிய இச் சபைகளிற் சேரும் விருப்பம் உள்ள உங்கள் நண்பர்கள் இந் நிலவுலகத் துள்ளார் பலர்க்கு உண்டு: இப்போது நிலவுலகத்தை அசைத்துவரும் அவ் வாற்றலைப் பெறும் பொருட்டும், மனிதர்க்கு ஆவேசங்களின் உண்மையைத் தெரிவித்தற் பொருட்டும் அவைகள் அவரைச் சூழ்ந்து நின்றன. இனிப் பல தேச மாந்தரின் சரித்திரங்களைப் பற்றிக் கருத்தாய்ப் பேசிக்கொண்டிருந்த வேறோர் உயர்ந்த கூட்டத்தாரைக் கண்டேன்; இந் நிலவுலகத்தைத் துறந்து சென்ற ராஜதந்திர நிபுணர்களின் முகங்களையும் உருவங்களையும் யான் அக் கூட்டத்தின் இடையே தெளிவாகத் தெரிந்து கொள்ளக் கூடியதா யிருந்தது. ஒரு கூட்டத்தின் இடையே உவாஷிங்டன் என்பவர் நிற்கக் கண்டேன். தமது இரத்தவெறி அடங்கப் பெற்றமையால் இப்போது தேசமாந்தரின் வளத்தையும் சுகத்தையும் கோரிக்கொண்டு மற்றக் கூட்டங்களின் நடுவே நிற்பவரான நெப்போலியன் என்பவரையும் சீசர் என்பவரையும் கண்டேன். ஒளிவிளங்கு முகங்களும் கதிர் விளங்கும் புருவங்களும் உடையோராய், ஐக்கிய மாகாணப் பெருங்கழகத்தில் சுதந்திர உணர்ச்சி நடைபெற்றாற்போல அவ்வத் தேசக் குடிமக்களின் சட்ட நிருமாணக் கூட்டங்களில் இயங்குதற்கு விருப்பம் வாய்ந்த பெரிய ஆவேசக் கூட்டத் தார்க்கு அவர்கள் கற்பித்துக் கொண்டிருத்தலைக் கண்டேன். சுதந்திர விருப்பம் வாய்ந்தமையால் இலிங்கன் என்பவர் ஆவியுருவில் எழுந்துலவு தலையுங் கண்டேன்; கதிர் விடும் அவ் வொள்ளிய கூட்டத்தில் மாந்தரின் திருத்தத்திற்குரிய இன்னும் பெரிய ஏற்பாடு களெல்லாம் செய்யப்படுதலையுங் கண்டேன். முன்னே இறந்து போன சார்ல சம்நர் என்பவர் ஆவி யுலகத்தில் எழுந்து இங்கே போல அங்கும் அடிமைகளின் சுதந்திரத்தைப் பற்றி வழக்கிடக் கண்டேன். இப்போது யான் உங்களுக்குத் தெரியப்படுத்தக் கூடாத இன்னும் பலரையுங் கண்டேன்; அவர்கள் எனக்கு அறிமுகம் உள்ளவர்களே; ஆனாலும் அவர்களுடைய உணர்வும் எண்ணமும், எனக்குப் புதியவாய்த் தோன்றின. என் உட்கருவி களின் அளவுக்கு மேற்பட்டனவாய் இருத்தலை யறிந்தேன். என்றாலும், யான் இத் தோற்றங்களிற் பழகப்பழக, எத்தனையோ ஊழிக் காலங்களாக அறிவில் முதிர்ந்து வந்த ஆன்றோர் திருவடிக்கீழ் இருந்து உபதேசங் கேட்டுவரும் கூட்டத் தாரிடையில் யான் சேரச்சேர, யான் இங்கிருந்த காலையிற் செய்ய மாட்டாமலிருந்த ஒரு பெரு முயற்சியைச் செய்யவல்லவனாவேன் என்று சொல்லக்கேட்டேன்; அதனை யான் இம் மண்ணுலகத்திற் செய்ய மாட்டா மலிருந்தது ஊனுடம்பின் வலிவின்மையானும் வரையறைப்பட்ட கருவி களின் இயல்பினா னுமேயாம்; ஆயினும், யான் அம் முயற்சியில் மிகுந்த ஆவல் உடையேனா யிருந்தேன் என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். எனது வேலை இனி மேற்றான் தொடங்க வேண்டுவதாய் இருக்கின்றது. இனி என்னுடைய முயற்சிகளும் எண்ணங்களு மெல்லாம் யான் அறிவு பெறுதலிலும், யான் பெற்ற அவ் வறிவை அறியாமையிற் கட்டுப்பட்டுக் கிடக்கின்ற வர்களுக்கு எடுத்துப் புகட்டுவதிலும் குவிந்து நிற்கின்றன. ஒவ்வொரு மனிதருக்குங் கொடுக்கப் பட்டிருக்கின்ற அறிவென்னும் பெருங் கொடையானது எல்லாவற்றையும் அரித்து வரும் காலத்திற்கும் அகப்படாமல் பிழைத்திருத்தலும், காலமும், உடம்பும் அழிந்துபோகத் தான் அழியாமல் தனக்குரிய ஆவி மண்டிலத்தில் தன்னிருப்பி லிருத்தலும் எவ்வளவு வியப்பாகவும் தெய்வத்தன்மை வாய்ந்த தாகவும் குறைவற்றதாகவும் இருக்கின்ற தென்பதை யான் உணர்ந்தேன். இன்னும், ஓ! யான் விட்டுவந்த மாந்தர்கள் தமது அகக்கண் திறக்கப்பெற்று யான் காண்பதுபோலக் காண்பார் களாயின் யான் இப்போது அறிவதைப் போலத் தாமும் அறிவராயின், எத்தனையோ ஊழிக் காலங்களாகக் கவிந்து கொண்டு வரும் மரண பயத்தினின்றும் நீங்கி எவ்வளவு பேரின்பங்களை அடை வார்கள்! அவர்கள் நித்திய வாழ்வி னையும் அமிருதத்தையும் நேருக்கு நேர் காண்பரல்லரோ! என்று உணர்வேன் ஆனேன். ஆனால், இங்கே முழுதும் இன்பநுகர்ச்சியே உள்ளதன்று. மறுபடியும் என் குறைபாடுகளை உணரலானேன்; இவ்வுணர்ச்சி தோன்றியதும் என் உள்ளம் கிளர்ச்சி குன்றித் துன்ப முறலா யிற்று. அவர்கள் எவ்வளவுதான் என்னை வரவேற்று மகிழ்ந் தாலும், ‘நான் என்ன குழந்தையா யிருக்கின்றேனே! என்று எண்ணினேன். ஊழி ஊழியாக அறிவுமிகப்பெற்ற ஆன்றோர் நடுவிலிருந்து கொண்டு இங்ஙனம் யான் உணரவே ஒரு சிறு பிள்ளையைப் போலக் கூச்சம் எய்தி என் உள்ளத்தின் வெறுந் தன்மையை நினைந்தேன். அதன்பிறகு யான் முன்னே கண்டறி யாத ஏதோ ஓரிடத்திலிருந்து உருவங்கள் பல வெளி வந்து என் எதிரே மண்டியிட்டு, ஆன்மதத்துவ வாழ்க்கையைப் பற்றித் தாங்கள் எனக்கு முதன் முதற் கற்பித்தீர்கள்; மண்ணுலகத்தி லிருந்தபோது முதன் முதற் றங்களிடத்திருந்தே உயிரின் இருப்பைப்பற்றி யான் அறிவுகூடப் பெற்றேன், என்று ஒவ்வொன்றாய்ச் சொல்லிக்கொண்டே என் அடிகளின்மேல் ஒவ்வொரு மலரை இட்டன. புகழ்ப் பாட்டுகளும் வேண்டு கோள் மொழிகளும் வந்ததுபோலவே, அப் பூக்களோடு நறிய சாம்பிராணிப் புகையும் வந்தது. இந் நிவேதனங்களை என்னுள்ளம் உறிஞ்சி யுட்கொள்ளவே, யான் வீரியம் மிகப் பெறுதல் ஓர்ந்தேன்; அதனால் என் உருவமும் வலிவடைந்தது. யான் இவர்களுக்கு உதவி செய்ததைப் பற்றிக் களிகூர்ந்தேன். அவர் தமது அன்பினாற் செலுத்திய காணிக்கைகளினால் யான் சூழப்பெற்றிருக்கக் கண்டேன். தாங்கள் இதனை எமக்குச் செய்தீர்கள்! யாங்கள் நிலவுலகத்தை விட்டு வருதற்கு முன்பே எமக்கு மறுமையைப்பற்றித் தெரிவித்தீர்கள்; ஆகவே இப்போது எமது காணிக்கையைத் தங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பிக் கின்றோம் என்று அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு யான் ஒளி மிகப்பெற்றேன் போல் தோன்றியது; யான் முன்னே நோக்கிக்கொண்டிருந்த ஆன்றோர் அணிந்திருந்த உடைபோல எனது உடையும் காணப்பட்டது; புதிது புதிதாக வருங் காணிக்கையினால் நன்றியறிதலைப்பற்றி என் உள்ளம் நினைவு மிகுந்து வலிவடைந்தது; கடைசியாக யான் ஆகாயத்திற் பறந்து சென்று, எனக்கு அறிமுகம் உள்ளவர்கள் நடுவிற்போய் அமர்ந்தேன். இப்போது நீர் எங்களில் ஒருவராயினீர், என்று அவர்கள் என்னை நோக்கிக் கூறினார்கள். பழக்கப்பட்ட நினைவுகளும் அசட்டையாற் புகுந்த எண்ணங்களும் ஏறி உயிரில் உண்டான கறைகளினின்றும் விடுபட்டு யான் தனியே யிருக்கின்றேன். என்றாலும், யான் காண்கின்ற ஆன்றோர் பலர் அடைந்திருக்கும் உயர்ந்த நிலையை யான் அடைதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் கழிய வேண்டு மென உணரப் பெற்றேன். காண்டற்கும் ஏலாத அத்தனை பள பளப்புள்ள ஆன்மாக்கள் சில இருக்கும் ஒளியுலக வாழ்வின் உரிமையை நான் பெறுதற்கு முன் யான் என்னை வயப்படுத்து தற்கு நெடுங்காலம் உழைப்பெடுக்க வேண்டும். சில வேளைகளில் என் அன்புள்ள தோழர் என் பக்கத்திருக்க நாங்கள் இருவேமும் அரவமின்றித் தனித்திருக்கும் எங்கள் சூக்கும இருப்பிடத்தின் கண்ணே அமர்ந்திருந்து. மேனிலை யிலுள்ள சான்றாரோடு கலந்து பேசுகின்றோம்; அவர்களில் ஒருவரின் உண்மையைப் பற்றியும் நிறைந்த அன்பைப்பற்றியும் மாந்தர் நன்குணர்ந் திருக்கின்றனர். ஆயினும், அம் மாந்தர் அவர் சென்ற வழியே சிறிதும் செல்கின்றார்களில்லை; அவருதவியைப் பெற்று அவர்கள்மேல் உயர்வதுமில்லை. இங்ஙனம் கூடியிருக்கும் ஆவேசக் கூட்டங்களுக்கு நிரம்பவும் மேலே, உயர்வும் அறிவும் நன்மையும் மிக்க ஆன்றோர் குழாத்திற்கு மிகவும் மேலே மண்ணுலகத்தாரால் உரைத்தற்கும் எழுதுதற்கும் அரிதான துலக்கமும் அளவற்ற அன்பும் கதிர் விரிக்கும் வடிவமும் வாய்ந்த ஒரு விளங்கு மொளியை யான் காணக்கூடியதா யிருந்தது; அத் திருவுருவத்தின் கட்டளைகளை இப்போது யான் உங்களுக்கு எடுத்துப் புகல்கின்றேன். நீங்கள் ஒருவரை யொருவர் நேசிக்கக் கடவீர்கள் என்பதே அதுவாம். இம் மொழிகளானவை தேவதூதர்கள் ஆவேசங்கள் முதலியோர் உள்ளங்களிற் புகுந்து அவ் வழியே உங்கள் நெஞ்சங்களிலும்கூட நுழைந்து, அச்சம் பகை வயிற் றெரிச்சல் போராட்டங்கள் முதலியவற்றை யெல்லாம் ஓட்டி இந்த நொடியிலிருந்தே உங்களை இறைவன் திருவருளோடு ஒன்றுபடுத்தா நிற்கும். என்றிதுகாறும் எடுத்துக் காட்டிய உண்மைகளால் சூக்கும ஒளியாகாயத்தின் இயல்புகளும், அதன்கண் உலவும் சூக்கும சரீரவாசிகளின் பல திறப்பட்ட நிலைகளும் இனிது விளங்கா நிற்கும். அஃது அங்ஙனமாயினும், இங்கெடுத்துக் காட்டிய சரித்திர உதாரணங்களிற் பெரும்பாலன மேல் நாடுகளில் வசிக்கும் வெள்ளைக்காரர் தமக்குரிய அனுபவங்களா யிருத்த லின், மறுமையுலகங்கள் என்று ஈண்டெடுத்து விளக்கப்பட்டவை அனைத்தும் வெள்ளைக்காரர் ஆவிகள் மாத்திரம் நிறைந்தன வாயிருக்கும் போலும் என்று கருதி ஐயமுறுவார்க்கு அவ்வையம் நிகழாமைப் பொருட்டு அதைப்பற்றிய உண்மையினையும் ஒரு சிறிது தெளிவுப்படுத்திக் காட்டுவாம். 18. இங்குள்ளபடி அங்கும் இவ்வுண்மையை நன்குணர வேண்டுவோர் இந்நில வுலகத்தின் இயற்கைகளைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பராயின் அது செவ்வையாகப் புலப்படும். இம் மண்ணுலகத்தின் மேற்பரப்பானது பல நாடுகளாக வகுக்கப் பட்டுக் கிடக்கின்றது; அவ்வந் நாடுகளில் உள்ள மக்களின் முகங்குறி குரல் சாயல் முதலியனவெல்லாம் பலதிறப்பட்ட வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன; அங்குள்ள பறவைகளும் விலங்கினங்களுங் கூடப் பல்வேறு தன்மை யுடையனவாய்த் தோன்றுகின்றன; ஆங்காங்குள்ள மரஞ்செடி கொடிகளுங்கூட வேறுவேறு இயற்கையுடையனவாகவே யிருக்கின்றன; இவ்வுயிர்ப் பொருள் களோடு ஒன்றுபட்டு இயந்து நிற்கும் நில அமைப்புகளுங்கூட வேறுபட்ட இயல்பினவாகவே யிருக்கின்றன. ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் வெள்ளைக்காரர் எவ்வளவு வெண்மையான நிறமும் அழகும் உயர்ந்த தோற்றமும் உடையராயிருக்கின்றனர்! ஆப்பிரிக்கா நாட்டில் வசிக்கும் நிகிரோவர் எவ்வளவு கருமையான நிறமும் பருத்த உதடும் நீண்ட மோவாயும் சுருண்ட மயிருமுள்ளவராய்ப் பார்க்கப் பாந்தமின்றி யிருக்கின்றனர்! சீனதேசத்தில் உள்ள மாந்தர் அகன்ற முகமும் சப்பை மூக்கும் பழுப்பான நிறமும் உடையவரா யிருக்கின்றனர்; நம் இந்திய நாட்டில் உள்ளவர்களோ திருத்தமான அவயவங்களுடை ராயினும் சிலர் கரிய நிறமும் வேறு சிலர் பொன்னிறமும் மற்றுஞ் சிலர் இவ்விரண்டிற்கும் பொதுவான நிறமும் உள்ளவராய் இருக்கின்றனர்; அமெரிக்கா தேசத்திலுள்ளவர்களோ தடித்த உறுப்புகளோடு செவேலென்ற செந்நிறமும் வாய்ந்து காணப் படுகின்றனர்; இங்ஙனம் பலதிறப்பட்ட இயற்கைகளுடைய மக்களோடு ஒத்த இயல்பினவாக அவர்களைச் சூழ்ந்துள்ள பிராணிகளும் மரஞ் செடி கொடிகளும் ஏனைப் பொருள்களும் இருத்தலை ஊர்ப் பிராயணஞ் செய்தவர்கள் நன்குணர்வார்கள். இன்னும் இவ்வாறு பலவேறு வகையாகக் காணப்படும் மக்களுடைய சமயக்கொள்கைகளும், அவ்வச் சமயங்களில் வணங்கப்படும் தெய்வங்களும், அவற்றை வழிபடும் முறைகளும், நடையுடை பாவனைகளும் அளவிறந்த பேதங்கள் உடையன வாய் இருக்கின்றன. இத்தனை பேதங்களையும் தாமே நேரிற் கண்டாயினும், அல்லது நூல்களிற் பார்த்தாயினும் உலகி யலறிவு முதிரப்பெற்றவர்களுக்கே யாம் இங்கே கூறிய வேறுபாடுகளின் மிகுதி புலப்படா நிற்கும். தாமிருக்கும் இடத்தையன்றி வேறெதனையும் எவ்வாற்றானும் அறிந்து கொள்ளாதவர்க்கு இவ்வுண்மை ஒரு தினைத்துணையும் புலப்படாது. அவர்கள் கிணற்றுத் தவளையையே ஒப்பர். அவர்க்குத் தாமிருக்கும் நாடே ஒப்புயர்வற்றது; வேறு சிறந்த நாடுகள் பல இருக்கின்றன என்று அறிந்தோர் சொல்லினும், அவர் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்; ஒருகால் ஏற்றுக் கொண்டாலும் அவை மக்களும் பிறவுயிர்களும் இல்லாத வறட்டு நிலமாகத்தான் இருக்க வேண்டுமென்று நினைப்பர்; அன்றி ஏதோ ஒரு வகையாய் பிற நாடுகளிலும் மக்களும் மற்றை உயிர்களும் இருக்கலாம் என்று எண்ண நேர்ந்தாலும், அம் மக்கள் மிருகத்தை ஒத்தவராய் இருப்பார்களே யல்லாமல் தம்மைப்போல் நாகரிக வாழ்க்கை உடையவராய் இருக்கக்கூடும் என்று அவர் நினைக்கமாட்டார். பின்னர் ஒருகால் தமக்குள்ள சிறிது நல்வினை வயத்தால், மற்றை மாந்தரும் சிறிது நாகரிக முடையவர்தாம் என்று கருத நேர்ந்தாலும், அவர்கள் தம்மினும் அழகிற் குறைந்தவரே யாவரெனவும், அவர்களுடைய நடை யுடை பாவனைகள் தம்மினும் மிகத் தாழ்ந்தனவே யாகு மெனவும், அவர்கள் கைக்கொண்டுள்ள சமயக் கொள்கைகள் பயனற்ற வெறும் பொய்களேயாமெனவும், அவர்கள் மறுமையில் நரகத்தையே அடைவரெனவும், தாமும் தம் சமயமும் தம் தெய்வமுமே உயர்ந்தனவா மாதலால் தாம் மட்டுமே மறுமையில் துறக்க வாழ்வடைவது திண்ணமெனவும் கூறிச் செருக்குவர். தம்முடைய அறிவும் அனுபவமும் உயர்ந்தனவோ என்று ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தற்கும் அவர் ஒரு சிறிதும் ஒருப்படமாட்டார். இன்ன தன்மை வாய்ந்தவர், அயல்நாட்டவர்க்கு அவர் தம் மத இயல்புகளுக்கியைந்த துறக்க நரக உலகங்களும் மறுமையில் உளவாய் இருக்குமென்று எள்ளளவும் உணர மாட்டார். ஆகவே, அவ்வியல்பினரை விடுத்து விரிந்த நோக்கமும் தம்மோடு பிறரை ஒப்பிட்டுப் பார்க்கும் ஆராய்ச்சியும் வாய்ந்தவரைக் குறித்தே இவ்வுண்மையை இங்கு வரையப்போகின்றாம். மேலே காட்டியவாறு பலவேறு வகைப்பட்ட நாடுகளும் ஆங்காங்குப் பல்வேறு வகையான மாந்தர்களும் இந் நிலவுல கத்தில் இருத்தல்போலவே, இதனைக் கடந்துள்ள எண்ணிறந்த கோடி யுலகங்களிலும் அவரவர் தன்மைக்கும் சமயக்கொள் கைக்கும் ஏற்ற இடங்கள் அளவில்லாமல் இருக்கின்றன. இங்குள்ள மாந்தர்கள் இந் நிலவுலகத்தை விட்டு வேறு மேலுள்ள உலகங்களுக்குச் செல்வதையே இறத்தல் என்று சொல்லுகிறோம். தமிழில் இறத்தல் என்னுஞ் சொல்லுக்குப் பொருள் கடத்தல் அல்லது ஓரிடத்தை விட்டு வேறோர் இடத்திற்குப் போதல் என்பதேயாம். இந்த நிலமானது தன்னோடொத்த பொருள்களைத் தன்பால் இழுத்துக் கொள்ளும் ஆற்றல்வாய்ந்ததாய் இருத்தலின், நாம் இருத்தற்கு இடமாயுள்ள இந்த நம் மண் உடம்போடு கூடி நாம் மேல் உலகங்களுக்குச் செல்ல இயலாதவர்களாயிருக்கிறோம். இந்த மண்ணுடம்பு பருப்பொருளாயி ருத்தலில் இது தன்போற் பருப்பொருளாயுள்ள இந் நிலத்தால் இழுத்துக் கொள்ளப் படுகின்றது. இவ்வாறு இவ்வுடம்பு இந் நிலத்தைக் கடந்து மேற்செல்லமாட்டாமைப் பற்றியே, இதனுள்ளிருந்த உயிர்தான் மேற் செல்லுதற்கு இசைந்த நுண்ணிய வுடம்போடு கூடி இதனை விட்டுப் போகின்றது. இதனையே மரணம் என்றும் சாவு என்றும் இறப்பு என்றும் வழங்கி வருகிறார்கள். இனி வெள்ளைக்காரர் தாம் வசிக்கும் நாட்டின்கண் ஓர் ஊரிலிருந்து பிறிதோர் ஊருக்குச் செல்வதுபோலவும், நம் இந்தியர் தாம் வசிக்கும் இவ்விந்திய நாட்டின்கண் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் போவது போலவும் இச் சாதியார் தமக்கு உறைவிடமாயுள்ள இந் நிலவுலகத்தைக் கடந்து செல்லுங்காலும் தத்தம் இயல்புக்கு ஒத்த மேலுலகங்களுக்கே ஏகுகின்றார்கள். இனி ஊக்கமும் உழைப்பும் மிகுந்து அறிவாற் சிறந்தவர்கள் தாம் வசிக்கும் நாடுகளின் எல்லையுங் கடந்து தொலைவிலுள்ள ஏனை நாடுகளுக்குஞ் செல்வதுபோல, மேலுலகங்களிலும் ஓருலகத்திற்குரியவர்களிற் சிலர் ஏனையோர் உலகத்திற்குஞ் செல்வதுண்டு. ஆயினும், இஃது இங்கு நிகழ்வதைக் காட்டினும் மேலுகங்களிற் சிறுபான்மையே நிகழுகின்ற தென்பது ஆவி வடிவங்களில் நிற்போர் கூறும் உரைகளைக் கொண்டு துணியப்படுகின்றது. வெள்ளைக்காரர் ஆவி வடிவங்கள் தாம் உலவும் உலகங்களைப் பற்றியும், தம்மினத்தவரைப் பற்றியும் தாம் தொழுதுகொண்டு வந்த தெய்வத்தைப் பற்றியும் கூறுகின்றனவே யல்லாமல், வேறு நாட்டவரான நம் இந்தியரின் ஆவிகளைப் பற்றியும் அவை யுலவும் மண்டிலங்களைப் பற்றியும் அவர் வழிபட்ட தெய்வங்களைப் பற்றியும் உரைப்பக் காண்கின்றிலேம். இப் பரதகண்ட வாசிகளான நம்மவர் ஆவிகளும் அங்ஙனமே தம்முலகங்களைப் பற்றிப் பேசக் கண்டனமே யல்லாமல், வேறு அயல்நாட்டவர் அனுபவங்களையும் நிலைகளையும் பற்றி ஒரு சிறிதும் உரைப்பக் காண்கின்றிலேம். ஆகவே, இம் மண்ணுலகத்தில் ஓரிடத்திருந்து மற்றோரிடத்திற்குச் செல்வதைக் காட்டிலும், மேலே ஒருவகை யுலகங்களில் உறைபவர் பிறிதொருவகை யுலகங்களுக்குச் செல்வது அருமையாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டு மென்னும் உண்மை உய்த்துணரப்படுகின்றது. இஃது ஏது காரணத்தால் என்றால், இப்போது ஒரு நாட்டில் உறைபவர்கள் வேறு ஒரு நாட்டில் உறைபவர்களைத் தம்மினுங் கீழ்ப்பட்டவராக நினைத்தலாலும், ஒருவர் சமயக் கொள்கைகளையும் தெய்வத்தையும் உலக நடைகளையும் மற்றவர் பொருந்தாதன வென்றும் பொய்யென்றுங் கருதுதலாலும் அவர் சிறுபான்மை அறிவும் பழக்கமும் உடையவரா யிருக்கின்றனர். இந்த நிலைமையிலுள்ள இவர்கள் மேலுலகங்களுக்குச் சென்றவிடத்து அங்கும் இச் சிற்றறிவும் சிறு பழக்கமுமே மேற்பட்டவரா யிருத்தலால், அவர்க்கு ஏனை யுலகங்களைப் பற்றியும் அங்குள்ள ஆவிகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமற் போகின்றது. எல்லா வுயிர்களும் அறிவு உடையனவே யாமென்று, தம் அறிவை மறைத்த அறியாமை நீக்கத்திற்கு ஏற்ப அவை பலவகை யுடம்புகளிற் புகுமாறு சேர்ப்பித்து அவற்றை ஒன்றினொன்று ஏற்றமான பிறவிகளின் மேற்கொண்டு செல்லும் இறைவன் ஒருவனே யென்றும், மக்கள் தமது பல்வேறு வகையான தரங்களுக்கு ஏற்ப பலவற்றைத் தெய்வமாக வணங்குவராயினும் அவற்றின்கண் ணெல்லாம் நின்று அவர் செய்யும் வழிபாடுகளை ஏன்றுகொண்டு அவர் தம் தகுதிக்கேற்றபடி யெல்லாம் அருள் வழங்குவான் அவ்விறைவன் ஒருவனே யல்லது வேறு பிறர் இல்லை யென்றும், அவ்விறைவன் திருவருளைப் பெறுதற் குரியரான எல்லாவுயிர் களும் ஓரினமாதலால் அவர் தமக்குள் இருவினை வயத்தால் நேர்ந்த வேறுபாடுகளை நோக்காது ஒரே தந்தைக்குப் புதல்வராம் இயைபை நினைந்து உளம் உருக நேசித்து ஒருவர்க் கொருவர் உதவியாய் நின்று ஒழுகுதலே செயற்பால தென்றும், நிலையில்லாத இவ்வுலக வாழ்க்கையில் வினை வயத்தாற் பிறந்த நிலையில்லாத வேறுபாடுகளையே பெரியனவாகக் கருதி ஒருவரை யொருவர் மனம் வாக்குக் காயங்களால் ஒரு சிறிதேனும் தாழ்த்த முயலுதல் பெருங் குற்றமாமென்றும் இங்ஙனமெல்லாம் விரிந்த நோக்கத்தோடும் பேரறிவோடும் மிகக் குழைந்த பேரன்போடும் தமதுயிரை இம் மண்ணுலகில் இருக்கையிலேயே தூயதாக்கிக் கொண்ட சான்றோர் சிலர் மாத்திரமே இதனைக் கடந்து மேலுலகங் களுக்குச் சென்ற வழியும் எல்லாம் வல்ல ஒரு பேர் இறைவனை நேர் முகமாகக் காணப்பெற்று எல்லா மண்டிலங் களையும் அம்மண்டிலங்களில் உலவும் எல்லா வகையான ஆவி வடிவங்களையும் காண்குவர். ஏனையோர்க்கு இவ்வரும் பெரும் பேறு வாயாது. இது நிற்க. 19. வேறு பல உலகங்கள் இனி இந்நிலவுலகத்தைத் தவிர வேறு பல உலகங்கள் உண்டென்பதற்குப் பிரமாணம் என்னை யெனின்; முற்காலத்தில் வராக மிகிரர் முதலான வானநூல் வல்லார் எழுதிய உண்மைகளும், இக்காலத்து வானநூற் புலவர்கள் புதிய புதியவாக ஆராய்ந்துரைக்கும் மெய்ப் பொருள்களுமே சான்றாம். நமக்குப் பகலில் வெயில் வெளிச்சத்தையும் இரவில் நிலவு வெளிச்சத்தையும் தரும் சூரியமண்டில சந்திரமண்டில இயற்கைகளைச் சிறிது ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பவர்க்கு வானிற் சுழலும் உலகங்களின் தன்மை சிறிதேனும் தெரியாமற் போகாது. நம் கட்புலனுக்கு நாடோறும் விளங்கித் தோன்றும் இவ்விரண்டைவிட இன்னும் எத்தனையோ மடங்கு பெரியன வான உலகங்கள் பற்பல இருப்பினும் அவை மனத்திற்கும் எட்டாத் தொலை தூரத்தில் உலவுதலால் அவைகள் நம் ஊனக் கண்களுக்குத் தென்படுவதில்லை; இருட்காலத்திரவில் வானத்தில் இறைக்கப்பட்ட முத்துக்கள் போற் றோன்றும் வான் மீன்களில் இச் சூரிய சந்திர மண்டிலங்களைப் பார்க்கிலும் எவ்வளவோ பங்கு பெரியனவாயுள்ள உலகங்கள் கணக்கில் லாமல் இருக்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றைப் பற்றிப் பின்னே பேசுவோம். அவையெல்லாம் சூரிய சந்திர மண்டிலங் களைவிட நெடுந்தூரங்களிற் செல்லுதலால், நம்முடைய கண்களுக்கு முத்துக்களைப் போல் அவ்வளவு சிறியனவாய்த் தோன்றுகின்றன. சூரிய சந்திர மண்டிலங்களோ நமது மண்ணுலகத்தை விட மிகப் பெரியனவாய் இருத்தலோடு, மற்றை வான் மீன்களைவிட அருகிலுஞ் சுழலுதலால் அவை நம் விழிகளுக்குத் தெளிவாய்ப் புலப்படுகின்றன. 20. சூரியமண்டில இயற்கை சூரிய மண்டிலம் நமது மண்ணுலகத்திற்கு ஒன்பது கோடியே முப்பது லட்சம் மைல் தூரத்தில் உள்ளதென்று இஞ்ஞான்றை வானநூற் புலவர் கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு மைல் அல்லது இரண்டு மைல் உயரமுள்ள ஒரு மலையின் உச்சியில் ஓங்கி வளர்ந்திருக்கும் ஓர் ஆலமரம் கீழிருந்து நோக்கும் நம்மனோர் கண்களுக்கு எவ்வளவு சிறியதாகவும் அம் மலையுச்சியில் ஏறிப் பார்ப்பவர்க்கு எவ்வளவு பெரியதாகவுந் தோன்றுகின்றது. இனி இருபது மைல் அல்லது முப்பது மைல் உயரமுள்ள ஒரு மலைமேல் அவ் வாலமரம் இருப்பதாக வைத்துக் கொள்வோமாயின் அது கீழிருந்து நோக்கும் நம் கண்களுக்குச் சிறிதும் புலப்படாதென்பது எவரும் உணர்வ ரன்றோ? அன்றிப் புலப்படுமென்றே எண்ணுவோமாயினும், அஃது அதற்குத் தக்க பரிமாணம் உடையதாய் நமக்குத் தெரிந்துள்ள ஆலமரங்களைவிட எத்தனையோ பங்கு பெரியதாயிருக்க வேண்டுமென்று உணர்வோமன்றோ? இருபது முப்பது மைல் தூரத்திலுள்ள பொருள்களே மிகவும் பெரியனவா யிருக்க வேண்டுமென்று நமக்குத் தோன்று மானால், நூறுமைல், ஆயிர மைல், பதினாயிர மைல், ஒரு லட்ச மைல், பத்து லட்சம் மைல், ஒரு கோடி மைல் தூரங்களிலிருந்து நம் விழிகளுக்குத் தோன்றும் பொருள்கள் வரவர எவ்வெத் தனை மடங்கு பெரியனவா யிருக்கவேண்டுமென்பதை நாம் விண்டு சொற்றலும் வேண்டுமோ? சூரியமண்டிலமோ ஒன்பது கோடியே முப்பது லட்சம் மைல் தூரத்திலிருந்தும் நம்முடைய கண்களுக்குச் செவ்வனே விளங்கித் தோன்றும் பெருவடிவம் வாய்ந்ததாய்க் காணப்படுகின்றது. ஆகவே, அது நம்முடைய கண்களுக்குத் தோன்றுகிறபடி யன்றித் தன்னியற்கையில் மிகப் பெரியதொரு கோளமாயிருக்க வேண்டுமென்னும் உண்மை இனிது விளங்குகின்றது; அதன் அளவினைக் கணக்கிட்டுப் பார்த்த வானநூல் வல்லார் அஃது இந் நிலவுலகத்தைவிட ஒரு கோடியே இரண்டு லட்சம் மடங்கு பெரியதென்று முடிவு கட்டியிருக்கிறார்கள். இதனை இன்னுந் தெளிவாய்க் காணல் வேண்டின், சூரியனை இரண்டடி யுயர முள்ள ஒரு பந்தாகவும் இம் மண்ணுலகத்தை ஒரு பட்டாணிக் கடலையாகவும் பாவித்து அவ் விரண்டினையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சூரியனுடைய பேரளவும் இந்த நிலத்தின் சிற்றளவும் கருத்தில் நன்றாய்ப் பதியும். இங்கிருந்து பார்ப்பவர்க்குச் சூரியன் நன்கு புலப்பட்டுத் தோன்றுதல்போலச் சூரிய மண்டிலத்திலிருந்து நோக்குவார்க்கு இந் நிலவுலகம் ஒரு கடுகளவு கூடத் தோன்றாது. இனிச் சூரிய மண்டிலம் அளவிடப்படாத அழல் ஆவியாற் சூழப்பட்டிருத் தலின் அது பேர் ஒளிப் பிண்டமாய்த் திகழ்கின்றதென்றும், அதிற் பல்லாயிர மைல் அகல நிகளமுள்ள கருமையான இடங்கள் பல காணப்படுகின்றன வென்றும் இஞ்ஞான்றை வானநூல்வல்லார் தொலைவு நோக்கிக் கண்ணாடி* (Telescope) யின் உதவிகொண்டு தெரிந்து எழுதுகிறார்கள். அது மிகவும் நெடுந் தூரத்திலுள்ள தாகையால் அதன் தன்மைகளையும் அங்குள்ள பொருள்களையும் விரிவாகவும் நுணுக்கமாகவுந் தெரிந்து கொள்ளக் கூடவில்லை. என்றாலும், வானநூல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய ஆன்றோரான ஹெர்ஷல்* (Sir John Herschel) என்பவர் இந் நிலவுலகத்துள்ள பருவுடம்போடு கூடிய உயிர்கள் உயிர்வாழ்தற்கு ஏலாத அத்துணைப்பெரிய அழல் நிரம்பிய இயற்கையுடையது சூரிய மண்டிலமாயினும் அம் மண்டிலத் தின் இயல்புக்கு ஒத்த உடம்போடு கூடிய உயிர்கள் அங்கு வாழுமென்பது அறிவின் அனுபவத்திற்கு இசைந்த தாகும், என்னுங் கருத்துப்பட எழுதியிருக் கின்றாராகலின், ஞாயிற்று மண்டிலத்திலும் அதற்கு இசைந்த உடம்போடுலவும் உயிர்கள் உண்டென்பது தேற்றமேயாம். இவ்வுண்மை காணமாட்டாத வான நூற் புலவரிற் பலர் ஞாயிற்று மண்டிலத்தில் உயிர்கள் இல்லை என்று தாம் அவ்வுண்மையை முற்றுந் தெரிந்தாற்போற் கூறினார். மேலே காட்டியவாறு ஞாயிற்று மண்டிலத்தினும் எத்தனையோ பங்கு மிகச் சிறிதாகிய இந் நிலவுலகம் உயிர்கள் உறைதற்கு இடமாக அமைக்கப்பட்டிருக்க, மிகப் பெரிதான சூரியவுலகம் மாத்திரம் உயிர் வாழ்க்கையில்லாத வெற்றிடமாய் அமைந்திருக்கிற தென்னும் உரை அறிவுக்கும் அனுபவத்திற்கும் பொருந்திய தாயில்லை. மேலும், மக்களுடம்பு நிலைபெற முடியாத கொழுந்து விட்டெரியும் தீ நடுவில் ஏதும் வருத்த மின்றி யிருக்கும் சில பிராணிகளை இஞ்ஞான்றை உயிர்நூல்* (Biology) வல்லார் தெரிந்தெடுத்துரைக்கக் காண்டலால், அழல் மயமான ஞாயிற்று மண்டிலத்திலும் ஒளிமயமான உடம்புகளில் உறையும் உயிர்கள் உண்டென்பது இனிது பெறப்படும். இங்ஙனம் ஒளிமயமான நுண்ணியவுடம்புகளில் உறையும் உயிர்களையே தேவர்கள் என்று இங்குள்ளோர் வழங்கி வருகின்றனர். தேவன் என்னும் சொல்லுக்குப் பொருள் ஒளிவடிவினன் என்பதேயாம். அதுகிடக்க. 21. சந்திரமண்டில இயற்கை இனிச் சந்திரமண்டிலத்தைப்பற்றி ஒரு சிறிது கூறுவாம். இது நமது நிலவுலகத்திற்கு இரண்டு லட்சத்து முப்பத்தேழா யிரத்து முந்நூறுமைல் தூரத்தில் உள்ளது! இது சூரிய மண்டிலத்தைவிட நமக்கு மிகவுங் கிட்ட உலவுகிறதென்றே சொல்லலாம். இவற்றின் சேய்மை அண்மைகளை இன்னுந் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புவார்க்கு மற்றுமொரு வழி காட்டுவாம். ஒருமணி நேரத்திற்கு முப்பதுமைல் தூரம் மேலே செல்லக்கூடிய ஒரு வானவூர்தியில் ஒருவர் அல்லும் பகலும் ஓயாது பிரயாணஞ் செய்யக்கூடுமாயின் அவர் சூரிய மண்டிலத்திற் போய்ச் சேரச் சிறிதேறக்குறைய முந்நூற்றைம் பத்து நான்கு ஆண்டுகள் ஆகும். இனி, அவர் அதே ஊர்தியில் அங்ஙனமே சந்திரமண்டிலத்திற்குச் செல்லக்கூடுமாயின் சற்றேறத்தாழ ஓர் ஆண்டில் அங்கே போய்ச் சேரலாம். இப் பிரயாணக் கால அளவினைக் கொண்டு நமதுலகத்திற்கு ஞாயிற்று மண்டிலம் எவ்வளவு சேய்மையிலிருக்கிற தென்றும் திங்கள் மண்டிலம் அதனினும் நமக்கு எவ்வளவு அண்மையிலி ருக்கிறதென்றும் நன்கு பகுத்தறிந்து கொள்ளலாம். இனி, நமது நிலவுலகம் சிறிது கூடக்குறைய எண்ணாயிர மைல் குறுக்கள வுள்ளதாயிருக்கத், திங்கள் மண்டிலமோ இரண்டா யிரத்து இருநூறு மைல் மாத்திரமே குறுக்களவுள்ளதாகக் கணக்கிடப் பட்டிருத்தலால், அது நிலவுலகத்தை விடச் சிறியதென்றும் அதனால் அது நிலத்தின் ஆற்றலால் இழுக்கப்பட்டு நிலவுலகத்தைச் சுற்றிச் சுழலுகிறதென்றும் இனிதறிந்திருக் கின்றோம். இனித் தொலைவு நோக்கிக் கண்ணாடியின் உதவிகொண்டு நோக்கும் வானநூற்புலவர் திங்கள் மண்டி லத்தில் ஆயிரத்துக்கு மேல் மலைகள் பல காணப்படுகின்றன என்கின்றனர். இந்த மலைகளே நம்முடைய வெறுங் கண்களுக்குக் கறைகறையாகத் தோன்றுகின்றன. இன்னும் இதிற் பாலை நிலங்கள் பல இம் மண்ணுலகத்தில் இருப்பன போல் இருக்கின்றன. இவ்வுலகத்தில் ஆங்காங்கு எரிமலைகள் இருத்தல்போலத் திங்கள் மண்டிலத்திலும் பெரிய பெரிய எரிமலைகளும், எரிமலை வாய்களும் காணப்படுகின்றன. இவையே யன்றிப் பெரும்பள்ளத்தாக்குகளும், மலைப்பிளப்பு களும், மலையருவிகளும்கூட அதிற் றென்படுகின்றன. பெரிய எரிமலை வாய்களிலிருந்து வெள்ளிக்கம்பி போன்ற ஒளி வடிவங்கள் கிளம்பி நெடுந்தூரம் செல்லுகின்றன; ஆனாலும் இவற்றின் உண்மை இன்னதென்று விளங்கவில்லை. பச்சை நிறமான கடல்களுங்கூட அங்கிருக்கின்றன. உயிர்கள் உயிர் வாழ்தற்கு வேண்டும் வெப்பமும் அங்குள்ளதாகத் தெரிந்துரைக் கப்படுதலால்* (சந்திர மண்டிலத்திற்கு 1971இல் சென்றுவந்த அமெரிக்க விண்வெளி அறிஞர்கள் அங்கு உயிர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்) சந்திர மண்டிலத்திலும் உயிர்கள் உண்டென்பது உய்த்துணரப் படுவதாகும். அது நிற்க. 22. செவ்வாய் மண்டில இயற்கை இனிச் செவ்வாய் மண்டிலத்தைப்பற்றிச் சிறிது பேசுவாம். நமது நிலவுலகத்திற்குச் சந்திரமண்டிலம் மிக அருகில் இருப்பதுபோல் இல்லாவிட்டாலும், சூரியனைவிட நமக்குக் கிட்டத்திலிருப்பதும் பெரும்பாலும் இந் நிலவுலகத்தை ஒத்திருப்பதும் செவ்வாய் மண்டிலமே தான். இது சூரியனைச் சுற்றிச் செல்லும் வான்வழி நேர்வட்டமாய் இல்லாமல் கோழி முட்டை வடிவினதாய் இருத்தலின் ஈது இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை மூன்றரைக்கோடி மைல் தூரத்தில் இந் நிலத்திற்கு அண்மையிற் காணப்படுகின்றது; மற்றைக் காலத்தில் இதற்கு ஆறுகோடியே பத்துலட்சம் மைல் தூரம் அகன்று போகின்ற தாகலின் அப்போது அது செவ்வையாகக் காணப் படுவ தில்லை. இனி இஞ்ஞான்றை வானநூல் ஆசிரியர்கள் நிரம்பச் சிறந்த தொலைவு நோக்கிக் கண்ணாடிகளால் நோக்கிச் செவ்வாய் மண்டிலத்திற் செம்மண் நிலமும் பச்சை நிறமுள்ள கடல்களும் அமைந்துள்ளனவென்று கூறுகிறார்கள். இவ்வாறு அதன்கண் உள்ள மண் சிவப்பா யிருத்தலினாற்றான், அஃது இராக் காலத்தில் செவ்வென்ற ஒளியை வீசுகின்றது; இது பற்றியே தமிழிலும் செவ்வாய் என்னும் பெயர் அதற்கு வழங்கி வருகின்றது. இனி, இந் நிலவுலகத்தின் வடக்கு முனையான உத்தர துருவமும் தெற்கு முனையான தட்சிண துருவமும் குளிர்மிகுந்த இடங்களாகலின், அங்கேயுள்ள நிலமுங் கடலும் பல்லாயிர மைல் தூரம் வெண்மையான பனிப்பாறைகளால் மூடப்பட்டிருக்கின்றன; இதைப்போலவே செவ்வாய் மண்டிலத்தின் வடமுனை, தென்முனை இரண்டிலும் ஆயிரத்து இருநூறு மைல் தூரம் வரையில் தூவெள்ளையான பனிக்கட்டி நிறைந்து பரவியிருக்கின்றது. இங்ஙனம் பரவி யிருப்பது பனிக்கட்டிதான் என்று எவ்வாறு உறுதிப்படுத்தக் கூடுமெனின்; இந் நிலவுலகத்தின் அவ் விரண்டு முனைகளிலும் வேனிற்கால வெப்பம் மிகும்போது அங்குள்ள பனிப்பாறைகள் உருகிச் சுருங்குதல் போலவும், மறித்தும் குளிர்காலத்துக் குளிர் மிகும்போது அப் பனிப் பாறைகள் மிகப் பெருத்துப் பரவுதல் போலவும் செவ்வாய் மண்டிலத்தின் அவ் விரண்டு முனை களிலும் வேனிற் காலத்தில் அவ் வெண்பனிப் பிண்டம் சிறுக வும், குளிர்காலத்தில் அது பெருகவுங் காண்கின்றோம். இன்னும் அச் செவ்வாய் மண்டிலத்தில் ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லும் அகல நிகளத்தில் மிகப் பெரிய பெரிய யாறுகள் பற்பல ஓடுகின்றன. இவ் யாறுகள் அதன் வடமுனை தென் முனை வரையில் ஆங்காங்குள்ள பனிப்பாறைகளோடு தொடர் புற்றிருக்கின்றன; அப் பனிப்பாறைகள் உருகுங்காலத்து அவ் யாறுகள் நீர் நிரம்பிச் செவ்வாய் மண்டிலத்தின் மேற் பரப் பெங்கும் குறுக்குமறுக்குமாய்ப் பாய்ந்து அதன் நிலத்தை வளம்படுத்துகின்றன; இவற்றுள் இரண்டு யாறுகள் இரட்டை யாக நெடுக ஓடுகின்றன. இவ்வாற்றால், பனிக்கட்டியும் நீரும் யாறும் நிலனும் கடலும் காலமும் இங்குள்ளது போலவே, செவ்வாய் மண்டிலத்திலும் அமைந்திருக்கும் உண்மை நன்கு தெளியப்படுகின்றது. இன்னும் உயர்ந்த மலைகள் பலவும் அம் மண்டிலத்திற் றோன்றுகின்றன. இம் மண்டிலம் நமது நிலவுலகத் திற் காற்பங்குதான் பரிமாணம் வாய்ந்தது. இதன்கண் மக்களி னுஞ் சிறந்த அறிவுடையரான உயிர்கள் வாழ்கின்றன ரென்று இப்போது வானநூல் ஆராய்ச்சி வல்ல பண்டிதர்கள் உரைக் கின்றனர். அது கிடக்க. 23. புதன் மண்டில இயற்கை இனிப் புதன் மண்டிலத்தைப்பற்றி மிகுதியான விவரங்கள் வானநூற் புலவராற் கண்டறியப்படவில்லை. அது நமது நிலவுலகத்திற்கு ஐந்துகோடியே முப்பது லட்சம் மைல் தூரத்தில் சூரியமண்டிலத்திற்கும் நமது மண்டிலத்திற்கும் இடையே சூரியனைச் சுற்றிப்போகின்ற தென்றும், நமது மண்ணுலகத்தை விட அது சிறியதாகுமென்றும், அது தன்னைத் தானே இருபத்தைந்து மணி நேரத்தில் சுற்றுவதால் அம் மண்டிலத்தின் கண் உள்ள ஒருநாள் நமது நாளுக்குச் சிறிதேறக் குறைய ஒத்ததே யாமென்றும், அஃது எண்பத்தெட்டு நாட்களில் சூரியனைச் சுற்றிச் செல்லுதலால் அங்குள்ள ஓர் ஆண்டு நமது ஆண்டில் நான்கிலொரு பாகமே ஆகின்றதென்றும் இஞ் ஞான்றை வானநூற் புலவர்கள் கூறுகின்றார்கள். நமது மண்ணுலகத்தின் நிழல் சந்திரமண்டிலத்தின்மேற்படுவதால் சந்திரன் வளர்வதுந் தேய்வதும்போற் காணப்படுகின்றதன்றோ? அங்ஙனமே புதன் மண்டிலத்தின் மேலும் ஏதோ மற்றொரு மண்டிலத்தின் நிழல் படுவதனாலே, அதுவும் வளர்வதுந் தேய்வதும்போற் காணப் படுகின்றது. புதன் மண்டிலத்தின் ஒளி சிறிது சிவப்பாகத் தோன்றுகின்றது; ஆனால் அதன் காரணம் இன்னதென்று புலப்படவில்லை. பழைய வானநூற் புலவர் ஒருவர் புதன்மண்டிலத்தில் பதினொரு மைல் உயரமுள்ள ஒரு மலை காணப்படுகின்றதெனக் கூறியிருக்கிறார். நமது நிலமண்டிலத் திலிருக்கும் மலைகளிலெல்லாம் மிகப் பெரியது ஐந்து மைல் உயரத்திற்குமேல் இல்லை. புதன் மண்டிலத்தை மேலே கவிந்திருக்கும் ஆவி தடிப்பானதா யிருத்தலால், இங்கிருந்து நோக்குவார்க்கு அங்குள்ள பொருள்களின் நிலை இன்ன தென்று புலப்படவில்லை. அது நிற்க. 24. வியாழ மண்டில இயற்கை இனிப் பிருகற்பதி உலகமெனப் படுவதாகிய வியாழ மண்டிலம் நமது நிலவுலகத்திற்கு அணிமையிலுள்ள மண்டிலங் களிற் சூரியனைத் தவிர ஏனை எல்லாவற்றைவிட மிகவும் பெரியதாகும். நமது மண்ணுலகத்தைப் போன்ற ஆயிரத்து முந்நூறு உலகங்களை ஒருங்கு சேர்த்துத் திரட்டினால், அங்ஙனந் திரட்டப்பட்ட பிண்டம் வியாழ மண்டிலத்தின் அளவினை ஒப்பதாகும் என வானநூற் புலவர் ஒருவர் கணக்கிட்டிருக் கின்றார். இது சூரிய மண்டிலத்திற்கு நாற்பத் தெட்டுக்கோடியே முப்பது லட்சம் மைல் தூரத்திலும், நமது நிலமண்டிலத்திற்கு முப்பத்தொன்பதுகோடி மைல் தூரத்திலும் சுழன்று செல்கின்றது. இவ் வியாழ மண்டிலத்தைச் சூழ அரைக் கச்சை போன்ற கருகலான பட்டைக்கம்பி வடிவங்கள் காணப் படுகின்றன; இவற்றுள் இரண்டு பட்டைகள் அகலமாகவும் இவ்விரண்டின் இருபுறத்தும் உள்ளவை குறுகலாகவும் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் அம் மண்டிலத்தின் நடுவே யோடும் வரைக்குப் பக்கத்தே நேர்வரிசைகளாகவே ஓடுகின்றன. இவை என்ன வென்று ஆராய்ந்த வானநூல் ஆசிரியர் சிலர் இம் மண்டிலம் தடிப்பான முகிற் கூட்டங்களாற் சூழப்பட்டிருக்கின்ற தெனவும், அம் முகில்களின் நடுவேயுள்ள பிளப்புக்களின் வழியே தோன்றும் அம் மண்டிலத்தின் இறுகிய நிலமே அங்ஙனம் கீற்றுக் கீற்றாகக் காணப்படுகின்றதெனவும் கருதுகின்றனர். அதனைச் சூழ்ந்த முகிற் கூட்டங்கள் அடிக்கடி நிலை மாறக் காண்டலால் அங்கே பெரும்புயற் காற்றுக்கள் அடிக்கின்றனவென்றும் உய்த்துணர்கின்றனர். புள்ளி வடிவங்கள் பல இம் மண்டிலத் தின்கண் அடிக்கடி காணப்படுகின்றன. 1878ஆம் ஆண்டிலிருந்து மிகவுஞ் செந்நிறமான ஒரு கறை வடிவு பல ஆண்டுகள் வரையில் இதிற் காணப்பட்டு வந்தது; இவ்வடிவு இருபத்தேழாயிரம் மைல் நிகளமும் எண்ணாயிரம் மைல் அகலமும் வாய்ந்ததாயிருந்தது; அதனுருவம் முட்டையை ஒத்து விளங்கிற்று; நான்கு ஆண்டுகள் காறும் இக்கறையின் செந்நிறமும் மாறாமலே தோன்றி வந்தது; அதற்குப் பிறகு அதன் வடிவம் அப்படியேயிருக்க அதன் நிறம் மாத்திரம் மாறிப் போயிற்று. ஆனால் இவ் வடிவத்தின் உண்மை யின்னதென்று புலப்பட வில்லை. இனி, இம் மண்டிலத்தில் இவ்வாறு காணப்படும் கறை வடிவங்களுக்கும், ஞாயிற்று மண்டிலத்தில் இங்ஙனமே காணப்படும் கறை வடிவங்களுக்கும் ஏதோ ஓர் ஒற்றுமை யிருக்கவேண்டுமென வானநூலாசிரியர் கருதுகின்றனர்; இவை ஒரு மண்டிலத்திற் காணப்படுகையில் மற்றையதிலும் காணப்படுகின்றன. இனி நமது நிலமண்டிலம் ஒரு நிமிடத்துக்குப் பதினேழு மைல் விழுக்காடு தன்னைத் தானே சுற்றிக்கொண்டுபோக இவ் வியாழ மண்டிலமானது ஒரு நிமிடத்திற்கு நானூற்று அறுபத்தாறு மைல் விழுக்காடு தன்னைத் தான் சுற்றிக் கொண்டு செல்கின்றது. இஃது இங்ஙனம் விரைந்து செல்லுதலால் இம் மண்டிலத்தில் நடுவரை யோடும் இடம் பிதுக்கமாகவும் வடமுனை தென்முனைகள் தட்டை யாகவும் உருவமைந்திருக்கின்றன. இஃதேன் இத்துணை விரைவாகச் செல்கின்றதெனின், இது ஞாயிற்றுமண்டிலத்திற்கு மிகவும் தொலைவிலிருத்தலால் அங்கு நின்றும் நமக்கு வரும் அவ்வளவு வெப்பம் இவ் வியாழ மண்டிலத்துள்ளார்க்கு வரமாட்டாது; ஆகவே, இது மிகவுங் கடுவிரைவோடு சுழலுதலி லிருந்து அக் குறைந்த வெப்பம் நிறைவு செய்யப்படுமாறு முதல்வன் அங்ஙனம் அமைப்பானாயினான். இன்னும் இவ் வியாழ மண்டிலம் தன்னிடத்திருந்தே வேண்டுமளவுக்கு வெப்பத்தைப் பிறப்பிக்க வல்லதா யிருத்தலினாலேயே, அங்குள்ள நீர் ஆவியாக மாறி முகிற்கூட்டங்கள் அங்கே உண்டாயிருக்கின்றன. இனி இவ்வியாழ மண்டிலத்தைச் சுற்றி ஐந்து சந்திர மண்டிலங்கள் சுழன்று செல்கின்றனவென இஞ்ஞான்றை வானநூற் புலவர் உயர்ந்த தொலைவு நோக்கிக் கண்ணாடியால் கண்டுரைக்கிறார்கள். இவ்வியாழ மண்டிலம் பத்து மணி நேரத்தில் தன்னைத் தானே சுற்றுவதால் அங்குள்ளார்க்குப் பகற்காலம் ஐந்துமணி நேரமும் இராக்காலம் ஐந்துமணி நேரமுமே யுள்ளதென்று அறியப் படும்; ஐந்துமணி நேரமுள்ள அவிராக்காலமும் அடுத்தடுத்து ஐந்து சந்திர மண்டிலங்களினால் விளக்கப் படுதலின் வியாழ மண்டிலம் என்றும் ஒளியுடையதாகவே விளங்குமென்பது பெறப்படும். இனி, இது ஞாயிற்று மண்டிலத்தைச் சுற்றி வருவதற்குப் பன்னிரண்டு ஆண்டுகள் செல்லுதலின், நமக்குப் பன்னிரண்டு ஆண்டு கொண்ட ஒரு கால அளவை வியாழ மண்டிலத் துள்ளார்க்கு ஓர் ஆண்டு ஆகுமென்பது அறியற் பாலதாம். இது கிடக்க. 25. வெள்ளிமண்டில இயற்கை இனிச் சுக்கிரவுலக மெனப்படும் வெள்ளி மண்டிலமும் நமதுலகிற்கும் சூரியனுலகிற்கும் இடையில் இயங்குவதேயாகும். இது ஞாயிற்று மண்டிலத்தைச் சுழன்று கொண்டு நமது நிலவுலக முகமாய் வருகையில் இதற்கும் நமக்கும் இரண்டு கோடியே ஐம்பதுலட்சம் மைல் தூரம் இருக்கின்றது; இது நம்மை விட்டுச் சூரியனுக்கு அப்பக்கமாய்ச் செல்லும் போது இதற்கும் நமக்கும் இடையில் பதினாறுகோடி மைல் தூரம் ஆகின்றது. ஆகையால், இது நமதுலகத்தின் பக்கமாய் வரும்போது இதனை உற்றுப் பார்த்து விவரங்கள் தெரிந்து கொள்வதற்கு இடமுண்டாவது பற்றி, அச் சமயத்தை வானநூற் புலவர்கள் ஆவலோடு நோக்குகின்றார்கள். இவ் வெள்ளி மண்டிலமானது நமது மண்ணுலகத்தின் பரிமாணமே யுள்ளது. திங்கள், புதன் மண்டிலங்களில் வளர்தல் குறைதல்கள் காணப் படுவது போலவே வெள்ளி மண்டிலத்திலும் அவை காணப் படுகின்றன. புதன் மண்டிலத்தைவிட வெள்ளி மண்டிலத்தின் ஒளி நிரம்பவுங் கிளர்ச்சியுள்ள தாய் ஒளிருகின்றது. பல தடவைகளிற் புள்ளிகளும் நிழல்களும் வெள்ளி மண்டிலத்தின் மேற் றோன்றினமையால் அவை அங்குள்ள மலைகளின் அடையாளங்களா மென்று உய்த்துணரப் படுகின்றன. வான நூற் புலவர் ஒருவர் தாம் புதன் மண்டிலத்தில் மிக உயரமான மலையைக் கண்டது போலவே வெள்ளி மண்டிலத்திலும் அத்தகையவான மலைகள் பல இருக்கக் காண்பதாக உரைக்கின்றார். வெள்ளி மண்டிலமும் நமதுலகத்தைப் போலவே சற்று ஏறத்தாழ இருபத்துநான்கு மணி நேரத்தில் தன்னைத் தானே சுற்றுகின்றது; ஏழரை மாதத்தில் ஞாயிற்று மண்டிலத்தைச் சுற்றிவருகின்றது. இவ் வெள்ளிமண்டிலத்தின் தென்முனையில் ஒரு புள்ளி வெளிச்சம் அடிக்கடி காணப் படுதலால், அஃது அங்கே மிக உயர்ந்துள்ள மலை முகட்டின் மேற் படும் ஞாயிற்றின் ஒளிதான் என்று உறுதிப் படுத்தப் பட்டிருக்கின்றது. இம் மண்டிலத்தின் வடமுனை தென்முனை இரண்டும் ஒரே காலத்திற் கட்புலனா கின்றனவென்றும், அம் முனைகளிற் பெரும் பனிப்பாறைகள் தென்படுகின்றனவென்றும் மற்றொரு சிறந்த வானநூற் புலவர் கூறுதலால், நம்முலகத்தும் செவ்வாய் மண்டிலத்தும் உள்ள வடதுருவ தென்துருவ இயற்கைகளே வெள்ளியுலகத்தும் உண்டென்பது தெளியப் படும். இவ்வாற்றல் வெள்ளி மண்டிலத்தில் அவ்வுலகத்திற்கு இயைந்த உடம்போடு கூடிய உயிர்கள் உண்டென்பதும் துணியப்படும். இது நிற்க. 26. சனிமண்டில இயற்கை இனிச் சனிமண்டிலத்தைப்பற்றிச் சிறிது கூறுவாம். சொல்லுதற் கடங்காப் பேர் அழகும் பேரொளி விளக்கமும் வாய்ந்து காணப்படும் சனிமண்டிலக் காட்சி பேர் அற்புதம் உடையதாய் இருக்கின்றது. இது ஞாயிற்று மண்டிலத்திற்கு எண்பத்தெட்டுக் கோடியே அறுபது லட்சம் மைல் தூரத்திலும், நமது நிலவுலகத்திற்கு எழுபத்தொன்பது கோடியே முப்பதுலட்சம் மைல் தூரத்திலும் சுழலுவ தொன்றாகையால், இத்துணை நெடுந் தூரத்திலிருந்து நோக்கும் நம் வெறுங் கண்களுக்கு அஃது ஒரு சிறு புள்ளி வடிவினதாகவே தோன்றுகின்றது. ஆனால் மிகப் பெரியதும் சிறந்ததுமாகிய ஒரு தொலைவுநோக்கிக் கண்ணாடியின் வழி இதனை நோக்குவார்க்கு இது புலப்பட்டுத் தோன்றும் அற்புதக் காட்சியை என்னென்று கூறுவேம்! இம் மண்டிலம் நடுவில் ஓர் உருண்டை வடிவமும், அவ்வுருண்டையில் மோதிரம் இட்டாற் போன்ற ஒரு வளைய வடிவமும் அமைந்து மிகுந்த ஒளியோடும் துலங்குகின்றது. இதனைச் சோதியுருவான ஒரு சிவலிங்க வடிவமாகவே சொல்லலாம். இம் மண்டிலத்தின் ஒளியினையும் வடிவினையும் நோக்கிய வான நூலாசிரியர் எவரும் இதனை வியந்து புகழ்ந்து பேசாமற் போவதில்லை. இனி, மேலெடுத்துப் பேசிய வியாழமண்டிலத்திற் காணப்பட்ட அரைக்கச்சுப் போன்ற வரிவடிவங்கள் இச் சனிமண்டிலத்தின்கண்ணும் காணப்படு கின்றன; இவையும் அங்குள்ள முகிற்குழாங்களின் பிளவுகளின் ஊடே தோன்றும் அவ்வுலகத்தின் நிலமென்றே உய்த்துணரப் படுகின்றன. இவ்வுலகத்தின் நிறம் மஞ்சள் கலந்த வெண்மை யாகவும், இதன் வரிவடிவங்கள் சில சாம்பல் நிறம் உடையனவாகவும் சில பச்சை நிறம் உடையனவாகவும் புலப்படுகின்றன. இதன் தட்சிண துருவமாகிய தென்முனை வடதுருவத்தைவிடக் கருமையாகவும் நீலமாகவும் தென் படுகின்றது. வியாழமண்டிலத்திலுள்ள வரிவடிவுகள் நேரா யிருக்க, இச் சனிமண்டிலத்திலுள்ளவை வளைந்து காணப் படுகின்றன. இவ்வுலகத்தின் உத்தர தட்சிண துருவங்களில் நிற மாறுதல்கள் புலப்படுதலால், அவ்விடங்களில் பனிப்பாறைகள் உருகுதலும் உறைதலுமா யிருக்கக்கூடுமென்று புகழ்பெற்ற வானநூற் புலவர் ஒருவர் நுனித்தறிகின்றார். இனி இச் சனிமண்டிலத்தைச் சூழ்ந்துள்ள ஒரு வளையமானது தன்னில் மூன்று கூறாய்ப் பிளவுபட்டு மூன்று வளையங்களா யிருக்கிற தென்றும், அவற்றுள் முன்னுள்ள முதல் வளையம் ஒளி மிக்கதாயிருப்ப உள்ளமைந்த ஏனையிரண்டும் வரவர ஒளி குறைந்தனவாய்த் தோன்றுகின்றனவென்றும், நமது பார்வைக்கு வளையம்போல் விளங்கும் இவையெல்லாம் சனியுலகத்தைச் சூழ்ந்தோடும் எண்ணிறந்த சிற்றுலகங்களே யாமென்றும் வான்நூலார் மொழிகின்றனர். இனி நமது நிலவுலகத்தை ஒரு திங்களுலகமும், வியாழமண்டிலத்தை ஐந்து திங்களுலகமும் சுற்றியோடுதல்போல, இச் சனி மண்டிலத்தையும் எட்டுத் திங்கள் மண்டிலங்கள் அவ்வவற்றிற் கியைந்த உடம்போடு கூடிய உயிர்கள் உறைதல் கூடுமெனவும், அவ் வெட்டுலகங்களிலும் உறையும் உயிர்களுக்கு அவற்றின் நடுவேயுள்ள சனி மண்டிலம் வெயில் வெளிச்சந் தருவதேயாகக் கூடுமெனவும், இவ் வமைப்பின் திறத்தை உற்று நினைக்கும் வழிச் சூரியனையும் சூரியனைச் சூழ்ந்து செல்லும் கோள்களையும் போலவே சனியும் சனியைச் சுற்றிப்போகும் உலகங்களும் இறைவனால் ஏற்படுத்தப் பட்டுள்ளனவெனவும் வானூலாசிரியர் ஒருவர் இயம்புகின்றார். இனி இச் சனிமண்டிலம் பத்தரைமணி நேரத்தில் தன்னைத் தானே சுற்றுவதால் இம்மண்டிலத்தில் உள்ளவர்க்கு ஒரு பகல் ஐந்தேகால் மணியும் ஓர் இரவு ஐந்தேகால் மணியும் ஆகின்றன. இனி இம்மண்டிலம் ஞாயிற்றினைச் சுற்றிவர நம்முடைய ஆண்டுகள் முப்பது கழிதலால், நமது ஆண்டு முப்பது கொண்டதே சனி யுலகத்துள்ளார்க்கு ஓர் ஆண்டு ஆகிறது. இது நிற்க. 27. எல்லா மண்டிலங்களிலும் உயிர்கள் உண்மை இனி இதுகாறும் எடுத்துக் காட்டப்பட்ட உலகங்களில் உயிர்கள் உடம்போடுகூடி உயிர் வாழ்வதற்கேற்ற தன்மைகள் உண்டோ இல்லையோ வென்பதனைச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம். யாற்று மணலை அளவிடினும் அளவிடப்படாத பெரிய பெரிய உலகங்களெல்லாம் இருட்காலத்திரவில் வானத்தின்கண் முத்துக்கள் சிதறிக் கிடந்தாற்போற் சிறிய சிறியவாய்த் துலங்குதலை நாம் கண்கூடாய்க் காண்கின்றோம் அல்லமோ? ஒரு நொடிப்பொழுதில் இரண்டுலட்சம் மைல் தூரம் கடுகிச் செல்லும் வெளிச்சமானது அவற்றுட் சில மண்டிலங்களிலிருந்து நமது மண்ணுலகத்திற்கு வர ஐம்பதி னாயிரம் ஆண்டுகள் ஆகின்றனவென்று இஞ்ஞான்றை வானநூற் புலவர்கள் கணக்கிட்டிருக்கின்றனர். இங்ஙனமாயின் அத்தனை நெடுந்தூரத்திலிருந்தும் நங் கண்களுக்குப் புலனாகும் அம் மண்டிலங்கள் எவ்வளவு பெரியனவா யிருக்கவேண்டும்! அவைகளிற் சில நமது ஞாயிற்று மண்டிலத்தைவிட எத்தனையோ பங்கு பெரியனவா யிருக்கின்றன! இனி நமது கட்புலனுக் கும், மிகவுயர்ந்த தொலைவுநோக்கிக் கண்ணாடிக்கும் எட்டாத இடங்களிற் சுழன்று செல்லும் எண்ணிறந்த உலகங்களைப் பற்றியும், அவற்றின் பேரளவினைப் பற்றியும் எமது சிற்றறிவு கொண்டு எங்ஙனம் எடுத்துரைக்கவல்லேம்; இத்தனை உலகங்களுக்கும் நாம் இருக்கும் இம் மண்ணுலகத்தை ஒப்பிட்டுக் சொல்லப் புகுந்தால், இமயமலையைப்போன்ற எண்ணிறந்த பல மலைகளுக்கு மணலின் ஒரு துகளை ஒப்பாக வைத்துச் சொல்வதே சிறிது பொருத்தமுள்ளதாகக் காணப் படும். ஏனைப் பேருலகங்களுக்கு ஒரு சிறு துகளையும் ஒவ்வாத இந் நிலவுலகம் மாத்திரம் மக்களும் மற்றைப் பல்லுயிர்களும் உயிர்வாழ்வதற்கு ஏற்ற இடமாக இறைவனால் வகுக்கப் பட்டிருக்க , அங்ஙனமே அவ் வருட் பொருளால் அமைக்கப் பட்ட அப் பெரிய பெரிய மண்டிலங்களெல்லாம் உயிர் வாழ்க்கைக்கு ஏற்றன வல்லவாய் இருக்கக் கூடுமோ? உயிர் வாழ்க்கைக்கு ஒரு சிறிதும் பயன்படாமல் அத்தனை உலகங்களையும் அவ்வாண்டவன் வேறு ஏதுக்காகப் படைத்தான்? என்று வினாவுமிடத்து அதற்கு வேறு விடை இன்மையின் உயிர்கள் இருத்தற் பொருட்டாகவே அவற்றை அமைத்தருளினா னென்பது சிற்றறிவினார்க்கும் இனிது விளங்கற் பாலதேயாம். எல்லாவுலகங்களும் உயிர்கள் இருத்தற்கு இடமாகவே அமைக்கப்பட்டன வென்பது பெறப் படவே, அவ்வெல்லா வுலகங்களினும் பலதிறப்பட்ட உயிர்கள் உண்டென்பதும் தானே பெறப்படும். இவ்வுண்மை இங்ஙனம் எளிதிற் பெறப்படுமாயினும், இதனை இம் முறையால் நம்பமாட்டாதவர்க்கு, அதன்கண் நம்பிக்கை பிறப்பித்தல் வேண்டி இஞ்ஞான்றை இயற்கைப் பொருள்நூலாராய்ச்சியின் வழியே அவ் வுண்மையை ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம். ஞாயிற்றின் ஒளி வெளிப்பார்வைக்கு வெண்மை நிறம் உடையதுபோற் றோன்றினும் அதனை உண்மையில் ஆராய்ந்து பார்க்குங்கால் அது சிவப்பு, கிச்சிலி, மஞ்சள், பச்சை, நீலம். அவுரி, ஊதா என்னும் எழுவகை நிறங்கள் உடையதாகவே இருக்கின்றது. இவ்வேழு நிறங்களும் கலக்கவேண்டும் அளவுப் படி ஒருங்கு கலந்த தொகுதியே வெண்மை நிறம் எனப்படுவதல் லாமல், வெண்மை எனத் தனியே ஒருநிறம் யாண்டும் இல்லை. இஃது எங்ஙனம் அறியக் கூடுமெனின், மூன்று பட்டை வடிவினதாய் உள்ள ஒரு பளிங்குத்துண்டை ஞாயிற்றின் கதிரின் எதிரே பிடித்தால், அக்கதிர் அப் பளிங்கினூடே நுழைந்து அதற்கு அப்பால் எழுவகை நிறங்களோடு பிளவுபட்டுத் தோன்றும். இனி இவ் வுலகத்தும் ஏனையுலகங்களினும் உள்ள ஒவ்வொரு பொருளும், இவ் வெழுவகை நிறங்களுட் சில பல கலத்தலாற் பிறக்கும் அளவிறந்த நிறங்களில் தனித்தனியே தமக்கென உரிய நிறங்கள் உடையனவாய் இருக்கும். பொன்னின் நிறம் எக்காலத்தும் ஒருபடித்தாகவே தோன்றும். வெள்ளி ஈயம் இரும்பு காந்தம் முதலான பொருள்களின் நிறங்களும் தனித்தனி வேறு வேறாகவே எஞ்ஞான்றுங் காணப்படும். இப் பொருள்களின் மேலிருந்து வரும் ஒளியை மேற்சொன்ன பளிங்குத் துண்டினூடே நுழைய விட்டு அப்புறம் பார்த்தால் இவ் வுலோகங்கள் ஒவ்வொன்றும் தன்னித்தனி வெவ்வேறு நிறம் உடையதாதலை நன்கு கண்டுணரலாம். இங்ஙனம் கண்டுணர்ந்த பின், ஒருவர் இவ் வுலோகங்களை நம் கண்ணெதிரே காட்டாமல் மறைவிற் பிடித்துகொண்டு அவ் வுலோகங்களின் ஒளியை மாத்திரம் நாம் வைத்திருக்கும் பளிங்குத் துண்டினூடே புகவிடுவராயின், அத் துண்டின் புறத்தே தோன்றும் நிறங்களைக் கொண்டு அவர் மறைவிற் பிடித்திருக்கும் உலோகங்கள் இன்னின்னவை யென்று உறுதியாகச் சொல்லலாம். இங்ஙனமாகிய ஒளியாராய்ச்சியை இஞ்ஞான்றை இயற்கைப் பொருள்நூலார் இன்னும் நுட்பமாக நடத்துதற் பொருட்டு, மேற்சொன்ன பளிங்குத்துண்டுகளைத் திறம்பட அமைத்த g˧F¡fh£á*(Spectroscope) என்னும் ஓர் அரிய கருவியினை இயற்றியிருக்கின்றார். மிகச் சிறந்த இக் கருவியி னுதவி கொண்டு வானின்கண் உலவும் மண்டிலங்கள் பலவற்றிலிருந்து வரும் ஒளியைப் பார்த்து அம் மண்டிலங்களில் உள்ள பொருள்கள் இவ்விவைதாம் என்று உறுதிப்படுத்தி யுரைக் கின்றார். இனி இவ் வியல்பிற்றாகிய ஒளியாராய்ச்சியை ஞாயிற்று மண்டிலத்தின் கட் செலுத்திப் பார்த்தவிடத்து, அம் மண்டிலத்தில் ஏராளமான இருப்புக் கனிகள் உண்டென்பது புலப்படலாயிற்று. சூரியனாகிய இரண்டடி உயரமுள்ள ஒரு பந்திற்குப் பட்டாணிக் கடலை யளவினதாகிய இந் நிலவுலகத்தின் கண் ஆறறிவுடைய மக்களுக்குப் பலவகையானும் பயன் பட்டுவரும் இருப்புக் கனிகள் மிகுதியாய்க் காணப்படுமாயின், இதனினும் எத்தனையோ கோடிமடங்கு பெரிதான ஞாயிற்று மண்டிலத்தின்கண் உள்ள இருப்புக் கனிகளின் ஏராளமான அளவை எங்ஙனம் கணக்கிட வல்லேம்! அங்ஙனந் திரளாக இருக்கும் அத்தனை இருப்புக் கனிகளும் ஞாயிற்று மண்டிலத் தில் உயிர்வாழும் சிறந்தோர்க்குப் பயன்படுமாறு அமைக்கப் பட்டனவென்று சொல்லுதல் அல்லால் வேறு யாது சொல்லக் கூடும்? இன்னும் இங்ஙனமே உவர்க்காரம் காந்தம் சுண்ணாம்பு முதலியனவும் ஞாயிற்று மண்டிலத்தில் இருக்கின்றன; செம்புந் துத்தநாகமுங்கூட அங்கேயுள்ளன. ஆனால் இவை இரும்பு உவர்க்காரம் முதலியவற்றை விடக் குறைந்த அளவினவாகவே காணப்படு கின்றன. பளிங்குக் காட்சியினால் துணியப்பட்ட இவ் வுலோகங்களைத் தவிர மற்றவை ஞாயிற்றுமண்டிலத்தில் இல்லையென்று சொல்ல முடியாது. ஏனென்றால், அம் மண்டிலம் நமது நிலவுலகத்திற்கு மிகவும் நெடுந்தூரத்தி லிருத்த லால், அங்கே பெருந்திரளா யிருக்கும் பொருள்களின் ஒளியே இங்குக் காணப்படும்; அளவு சுருங்கிய பொருள்களின் ஒளி இங்கே தோன்ற மாட்டாது. என்றாலும், ஆறறிவுடைய மாந்தர்க்குப் பலவகையானும் பயன்படும் இரும்பு, செம்பு, துத்தநாகம் முதலான உலோகங்கள் அங்கு இருத்தல் தெளியப் பட்டமையால், அவற்றோடு இனமான பொன், வெள்ளி, ஈயம் முதலான ஏனை யுலோகங்களும் அவற்றின் சிறிது குறைந்த அளவினவாக ஆண்டுள்ளன வென்பதும் உய்த்துணரப்படும். இனி ஞாயிற்று மண்டிலம் இயற்கையில் ஒளியுடைப் பொருளாயிருத்தலின் அங்கிருந்து வரும் அதன் ஒளியைப் பளிங்கு காட்சியினாற் பகுத்துப் பார்த்து அங்குள்ள பொருள்கள் இவ்விவைதாமென்று உறுதிப்படுத்தல் இயலுகின்றது. ஞாயிற்றைச் சூழ்ந்து செல்லும் மற்றை மண்டிலங்களிற் சில அதுபோல் ஒளியுடைப் பொருள் அல்லாமையால், பளிங்குக் காட்சியி னுதவிகொண்டு அவற்றின்கண் உள்ள பொருள்கள் இவைதா மென்று நிலையிட்டுரைத்தல் ஏலாமையா யிருக்கின்றது. ஆயினும், ஞாயிறும் ஞாயிற்றைச் சூழ்ந்து செல்லும் மண்டிலங்களும் ஓரினப் பொருள்களாதலால், அவற்றுள் நடுநின்று சிறந்ததாய் விளங்கும் ஞாயிற்றிலே காணப்படும் பொருள்கள் அதனோ டினமான ஏனை யுலகங்களினும் உண்டென்பது பெறப்படும். இதற்கு, ஞாயிற்றைச் சூழ்ந்து செல்லும் உலகங்களில் ஒன்றான நமது நிலமண்டிலத் துள்ள பொருள்களும் ஏறக்குறைய ஒத்த இயல்பினவாய் இருத்தலே சான்றாகும். பளிங்கு காட்சியி னுதவிகொண்டு மற்ற உலகத்துப் பொருள்களின் இயற்கை தெளியப்படாதாயினும், வேறொரு வகையால் அது புலப்பட்டுவருகின்றது. அஃது யாதெனிற் கூறுவாம். மற்ற உலகத்துப் பொருள்களிற் சில பகுதிகள் ஆங்காங்குள்ள எரிமலைகளின் கிளர்ச்சியாலும் வேறுசில காரணங்களாலும் அங்கு நின்றும் பிரிக்கப்பட்டு ஆகாயத்தில் உலவிக் கொண்டிருக்கின்றன. அவை நமது மண்ணுலகத்தி னருகாமையில் உலவ நேருகையில் இதனால் இழுக்கப்பட்டு இதன்கண் வந்து விழுகின்றன. இவற்றையே ஆகாயக்கற்க ளென்று வழங்கி வருகிறார்கள். இக் கற்கள் இராக்காலத்தில் பச்சை, நீலம், சிவப்பு, மஞ்சள் முதலான ஒளிகளோடு எரிந்து கொண்டு கீழ் விழுதலைப் பலர் பார்த்திருக்கலாம். இவற்றை இக் காரணம் பற்றி எரிகொள்ளி என்றுஞ் சொல்வதுண்டு. இவ்வாறு கீழ்விழும் கற்களைத் தொகுத்து வைத்துக் கொண்டு இவற்றை ஆராய்ந்து பார்த்த இரசாயனநூல் வல்லார், இந் நிலவுலகத்துப் பொருள்களின் தன்மையே ஏனையுலகத்துப் பொருள்களினுங் காணப் படுகின்றதென உரை நிறுவுகின் றார்கள். இவ் வாராய்ச்சி முறையால் நோக்கும் வழியும் மற்ற வுலகத்துப் பொருளமைப்பிற்கும் நமது நிலவுலகத்துப் பொருளமைப்பிற்கும் வேறுபாடு மிகுதியாய் இன்றென்பது தெற்றென விளங்கா நிற்கும். இன்னும் நமது நிலவுலகத்திற்போலவே செவ்வாய் மண்டிலத்திலும், வெள்ளி, வியாழன், சனி மண்டிலங்களினும் மழைபெய்தற்குக் காரணமான நீராவி சூழ்ந்திருக்கின்ற தென்பதை வானநூல் வல்லார் பளிங்குக் காட்சியினுதவி கொண்டு இனிதறிந் திருக்கின்றார்கள். அதனால் அம் மண்டிலங்களில் தண்ணீர் மிகுதியாய் உண்டென்பதும் துணியப்பட்ட முடிவாகும். மக்களும் பிறவுயிர்களும் உயிர் வாழ்தற்கு இன்றியமையாப் பொருளான தண்ணீரை அவ் வுலகங்களில் அமைத்த முதல்வன் அவ்வுயிர்களை அங்கு அமையா தொழிவனோ? இனி இதுகாறும் ஆராய்ந்து வந்த ஞாயிற்று மண்டிலமும் அதனைச் சூழ்ந்தோடும் எட்டு மண்டிலங்களுமே யல்லாமல், இவற்றினும் மிகமிகப் பெரியனவாய் இவற்றினும் நெடுந் தூரத்திற் சுழல்வனவாய் உள்ள பல ஞாயிறுகளையும் அவற்றைச் சூழ்ந்தோடும் பற்பல உலகங்களையும் இஞ்ஞான்றை வான்நூற் புலவர்கள் நுண்ணிய பல கருவிகளி னுதவிகொண்டு ஆராய்ந்து அவற்றின் தன்மைகளை விளக்கி வருகின்றார்கள். அங்ஙனம் அவர்கள் விளக்கிக் காட்டும் முடிபுகளெல்லாம் நமதாராய்ச்சிக்கு அகப்பட்ட அவ்வுலகங்களில் ஆறறிவுயிர் களும் மற்ற ஒன்று முதல் ஐயறிவு ஈறாக உடைய உயிர்களும் இருத்தற்கேற்ற பொருள்களும் அமைப்புகளும் வாய்ந்துள்ளன வென்றும், அதனால் அவ்வுயிர்கள் அவற்றின்கண் வாழ்தல் திண்ணமே யாமென்றும் நாட்டுகின்றன. இன்னும் அவ்வுலகங் களைப் பற்றிய ஆராய்ச்சிகளெல்லாம் ஈண்டு விரித்துரைக்கப் புகுந்தால் இது வரம்பின்றிப் பெருகுமாதலால் இவற்றை இவ்வளவோடு நிறுத்துகின்றாம். இன்னும் இவற்றை மிகுதி யாய்த் தெரியவேண்டுவோர் அவற்றைத் தனியே எடுத்துக் கூறும் நூல்களைப் பயின்றறிதல் வேண்டும். அது நிற்க. 28. கடந்த பிறவியின் நினைவுகள் இதுகாறும் எடுத்துக்காட்டிய வானநூல் உண்மைகளால் விசும்பின்கட் சுழன்று செல்லும் எண்ணிறந்த உலகங்களின் அளவை நோக்க நமது நிலவுலகம் ஒரு தினையளவு தானும் அவற்றிற்கு ஒவ்வாதென்பதும், அத்துணை மிகச் சிறிதான இது மக்களும் பிறவுயிர்களும் உயிரோ டுலாவுதற்கு இடமாய் அமைந்ததுபோலவே ஏனை மண்டிலங்களும் பல திறப்பட்ட உயிர்கள் நிலவுதற்கு இடமாகவே அமைந்துள்ளன வென்பதும், இச் சிறிய மண்ணுலகத்தைத் தவிர மற்றை யுலகங்களில் உயிர்கள் இல்லையென மறுத்தல் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் அனுபவத்திற்கும் முற்றும் முரணாமென்பதும் நன்கு பெறப்பட்டன. பெறவே, இந் நிலத்திலுள்ளவர்கள் இங்கெடுத்த உடம்பைவிட்டு வேறுலகங்களுக்குச் செல்லுவதும், வேறுலகங் களில் உள்ளவர்கள் அங்கங்கெடுத்த வுடம்பை விட்டு இந்நிலத்தில் வந்து பிறப்பதும் இடையறாது நிகழ்கின்றன. அவரவர் நினைவுக்குஞ் செயலுக்கும் ஏற்ற உடம்புகளும், அவ்வுடம்புகள் உலவுதற்குரிய உலகங்களும் இறைவன் திருவருளால் இயைக்கப்படுகின்றன. ஓருலகத்தில் ஒருவகையான உடம்போடு கூடியிருப்பவர்கள் அதே யுடம்போடு வேறு லகத்திற் சென்று இருக்கமுடியாது. ஆகையால் அந்தந்த மணடிலத்தின் தன்மைக்கேற்ற உடம்புகள் உயிர்களுக்கு இன்றியமையாது வேண்டற்பாலனவாகும். இதற்கு இம் மண்ணுலகத்தில் உள்ள நமதனுபவமே சான்று. நிலத்தில் வாழும் நாம் நீரில் வாழல் கூடுமோ? நீரில் வாழும் மீன் முதலிய உயிர்கள் நிலத்தில் இயங்குமோ? இன்னும் நீரில் உலவும் நீர்யாமையின் உடம்பின் அமைப்பையும் நிலத்தில் இயங்கும் நிலயாமையின் உடம்பின் அமைப்பையும் சிறிதுற்றுப் பாருங்கள். நீர்யாமை நீரில் நீந்துதற்கேற்றபடியாகத் தன் காலடிகளில் விரல் இல்லாமல் விசிறிபோல் இணைக்கப்பட்ட தோலுடையதாய் இருக்கின்றது; நிலயாமையோ அவ்வாறின்றி அடிகளில் விரலுடையதாய்க் காணப்படுகின்றது. இங்ஙனமே இந் நிலத்தின்கட் பல்வேறிடங்களில் உயிர்வாழும் செந்துக்களுக்கும் மாந்தர் களுக்கும் அவ்வவ்விடத்திற் கேற்ற உடம்புகள் இயைந் திருத்தலைச் சிறிதாராய்ந்து பார்ப்பவர்களுங் கண்டுகொள்ளக் கூடும். இவ்வாறு ஓருலகத்திலேயே பலவே றியல்புகளும் அவ்வியல்புக்கொத்த உடம்புகளுங் காணப்படு மாயின், நெடுந்தூரத்திற் சுழலும் பலவேறு தன்மையுடைய உலகங்களில் உள்ள பல உயிர்களுக்கும் பலவகைப்பட்ட உடம்புகள் உண்டென்பதை யாம் விண்டு கூறுதலும் வேண்டுமோ? ஓருயிர் தான் செல்லும் உலகத்தின் இயல்புக்குப் பொருந்தின ஓர் உடம்பை மேற்கொள்ளும் என்றும், அங்ஙனம் மேற்கொள்ளப் படும் அது பூதசாரவுடம்பு எனப் பெயர் பெறும் என்றும் நம்முடைய ஞான நூல்களும் தெளிவாகக் கூறுகின்றன. இது நிற்க. இவ்வாறெல்லாம் உயிர்கள் பலவுலகங்களிற் செல்லு வதற்கும், அங்குள்ள வுயிர்கள் இங்கு வந்து பிறவி யெடுப்ப தற்கும் நம் நனவினும் கனவினும் தோன்றும் உணர்வு நிகழ்ச்சிகளே ஒரு பெருஞ்சான்றாம். நனவு நிலையிருக்குங்கால் கனவு பொய்யாம் என்றலும், கனவு நிலையிருக்குங்கால் நனவு பொய்யாம் என்றலும் உயிரின் நினைவுத்தன்மை யறிந் தோர்க்குச் சிறிதும் ஆகாவாம்; நினைவி னியற்கையை ஆய்ந்துணரமாட்டாத பேதை மாக்களே ஒருநிலையி லிருக்குங்காற் பிறிதொரு நிலையைப் பொய் யென்பர். காசிக்குச் சென்றவர் காஞ்சி மாநகரை இல்லாத பொய்ப் பொருளென்று மறுத்தலும், காஞ்சிக்கு மீண்டபின் அவர் காசிமாநகரை இல்பொருளென்று கூறுதலும் சிறிதேனும் பொருந்துவதில்லாப் பித்துரையாதல் போல, ஒரு நிலை யிலுள்ளவர் பிறிதொரு நிலையின் உண்மையுணராமல் அதனைப் பொய்யென் றுரைத்தல் பெரியதோர் அறியாமையும் மயக்க வுணர்ச்சியுமாம். கனவிற்றோன்றும் உணர்வு நிகழ்ச்சிகளில் பெரும்பாலான முற்பிறவியின் அனுபவங்களாகும்; மற்றுப் பல இப் பிறவியின் அனுபவங்களாகும்; சிறுபான்மைய இனிவரும் நிகழ்ச்சிகளுக்கு முன் அனுபவங்களாகும். முற் பிறவியின் பின்அனுபவங்களுக்கும், இனி நிகழ்வனவற்றின் முன் அனுபவங் களுக்கும் உண்மையாய் நிகழ்ந்த சிற்சில உதாரணங்களை ஈண்டெடுத்துக் காட்டுவாம். ஒரு பெரிய மிருகத்தின் கால்களினிடையே குடைந்து செய்யப்பட்ட ஒரு கோயிலையும், அக்கோயிலில் நடைபெறும் கிரியைகளையும், அதனைச் சூழ்ந்த நிலத்தோற்றத்தையும், அங்கு மேற்கவிந்துள்ள வானின் நீல நிறத்தையும் ஒருவர் தெளிவாய் நினைவுகூர்ந்தனர்; இவர் இப்பிறவியில் அத்தகைய கோயி லையும் அதனோடு சேர்ந்த பிறவற்றையும் எங்குங் கண்டவர் அல்லர், நூல்களிற் படித்தாயினும் பிறர்வாய்க் கேட்டாயினும் உணர்ந்தவருமல்லர். கனவினும் நனவினும் இவர் அடிக்கடி நினைவுகூர்ந்துவந்த அவ்வமைவுகள் எங்குள்ளன என்று ஆராயப்புகுந்த துரைமகன் ஒருவர் அவற்றைப் பழைய எகுபதி* (Ancient Egypt) நாட்டின்கண் இருப்பனவாக அறிந்து பெரிதும் வியப்புற்றார். முன்னொரு பிறவியிற் பழைய அவ்வெகுபதி நாட்டிற் பிறந்திருந் தமையால் இவர் தாம் அப்போது அங்கு கண்ட அமைவுகளை இப் பிறவியில் தெளிவாக நினைவுகூர்ந்து வந்தார். இவர் இங்ஙனம் நினைவுகூர்ந்துவந்த அவ்வமைவுகளை இப்போதும் அப் பழைய எகுபதி நாட்டிற்குச் செல்பவர் நன்கு கண்டுண ரலாம். அங்கே பெரியதொரு காட்டுவிலங்கின்* (Egyptian sphinx) உருவம் அமைக்கப்பட்டிருத்தலும் அவ்விலங்கின் முன்னங் கால்களின் நடுவே ஒருகோயில் குடைந்து செய்யப் பட்டிருத்தலும், பிறவும் எவருஞ் சென்று காணலாம். இவர் வேறொரு பிறவியில் நம் இந்திய நாட்டின் ஒரு மலைப்பக்கத்தே பிறந்திருந்தமையால் அந் நினைவையும் இந்நினைவோடுகூட அடிக்கடி நினைத்து வந்தார். இன்னும் ஒருவர் தாம் பல பிறவிகளிற் கண்ட அனுபவங்களை யெல்லாம் நினைத்து வந்தனர். முன்னொரு பிறவியில் தாம் சீனதேசத்தின் உள்நாடொன்றிலுள்ள ஓர் ஆலயத்தில் கண்ட காட்சிகளையும், அங்கு நடந்த மறைவான சடங்குகளையும், தாம் அவ் வாலயத்திற் செய்த ஊழியத்தையும், பேசிய சொற்களையும், நடைபெறுவித்த கிரியைகளையும் தெளிவாக நினைவுகூர்ந்து வந்தார். இவர் நினைந்தவை அத்தனையும் உண்மை யனுபவங்கள் என்று அவற்றை ஆராய்ந்தவர் மெய்ப்படுத்தி யிருக்கின்றார். மற்றும் ஒருவர் தாம் தொடர்பாக ஏழு பிறவிகளில் அனுபவித்த அனுபவங்களையும், அவ்வப் பிறவிகளில் தாம் இருந்த இடங்களையும், அங்கே தாம் பூண்டிருந்த பெயர் களையும், இன்னும் பல வரலாறுகளையும் மிகவும் நுணுக்கமாக நினைவு கூர்ந்து வந்தனர். இவரது நினைவின் ஆற்றல் நிரம்பவும் புதுமையாயும் வியப்பைத் தருவதாயும் இருந்தது. இவர் இப்போதுள்ள நாட்டுக்கு மிகவுந் தொலைவிலுள்ள ஓர் அயல்நாட்டிலே முற்பிறவியிற் பிறந்திருந்தனர். ஒரு பிறவியில் தாமிருந்த இடத்தையும் அதனைச் சூழ்ந்துள்ள பொருள் களையும் பெரிதும் நினைவு கூர்ந்தமையால் அவற்றை இவர் இப் பிறவியில் தாமே நேரிற் சென்று கண்டு தமதனுபவம் உண்மையெனத் தெளிந்து கொண்டார். இவரது மற்றொரு பிறவியின் அனுபவம் இவர் சென்றறியாத பிறிதோர் அயல் நாட்டின்கண் உள்ளதென்று அதனை ஆராய்ந்தோர் நிறுவிக் காட்டி யிருக்கின்றனர். இவ்வாறு உயர்ந்த அறிவினரான ஒரு சிலர்க்குத் தோன்றும் நினைவுகளை ஆராய்ந்து பார்க்க, அவை மேற்சென்ற பிறவிகளில் அவர்க்கு நிகழ்ந்த அனுபவங்களின் பயனாய் அவர்தம் உள்ளத்திற் பதிந்துகிடந்து, இப் பிறவியிலே அவர்தம் தூய அறிவின்கண் விளங்கித் தோன்றலாயின என்னும் உண்மை அறியப்படுகின்றது. ஆகவே, கனவிற் காணப்படுங் காட்சிகளிற் பெரும்பாலன மேற் கழிந்துபோன பிறவிகளின் மெய்யனு பவங்களே யல்லது, அறியார் சிலர் கூறுமாறு வெறும் பொய்த்தோற்றங்கள் அல்லவென்பது நன்கு பெறப்படும். நம்மனோருட் சிலர் பலர்க்கு இத்தகைய மேற்பிறவி யனுபவங்கள் கனவினும் நனவினும் மேற்கிளர்ந்து தோன்று தலைத் தாமாகவே யறிந்து வியப்படைந்து வருதலையுங் கண்டிருக்கின்றோம். இப் பிறவியில் இதற்குமுற் கண்டறியாத சிலரை ஒரோவொருகாற் கண்டு இவரை எங்கேயோ பார்த்தாற்போலிருக்கின்றதே! என்று பற்பலகால் நாம் வியப்படைந்திருக்கின்றனம் அல்லமோ? மற்றுஞ் சில புதிய இடங்களுக்குச் செல்ல நேரிட்டபோது அவற்றைப் பார்த்து, இவ்விடத்தினை நாம் முன்னே கண்டாற்போலிருக் கின்றதே! என்று இறும்பூதுகொள்ளப் பெறுகின்றனம் அல்லமோ? ஆன்றோர் சிலர் நூல்களைப் பயின்றறியுங் காலத்து அதில் கூறப்பட்டவை சில பல நமக்குத் தெரிந்தனவாயிருத்த லுணர்ந்து அகம் மகிழ்ந்து வியக்கின்றனம் அல்லமோ? இங்ஙனமே இன்னும் இப்பிறவியிற்றோன்றும் அனுபவங்களிற் சில பல யாம் இப் பிறவியில் முன்னறியா தனவாயிருந்தும், அறியப்பட்டன போற் காணப்படுதலுணர்ந்து, அவற்றின் உண்மை இனைத்தென்று அறியாமல் மயங்குதலும் உண்டு. ஆயினும், இன்னோரன்னவை யெல்லாம் மேற்கழிந்து போன எண்ணிறந்த பிறவிகளிற்றொகுத்த மெய்யனுபவங்களின் தோற்றங்களே யென்று பிறவிகளின் தொடர்பறிந்தோர் ஐயமறத் தெளிந்து கொள்வர். இனி நமது கனவுநிலையில் மேற்பிறவியின் அனுபவங்கள் மாத்திரமே யன்றி இப் பிறவியின் அனுபவங்களும் இப் பிறவியினும் வரும் பிறவியினும் இனி வரற்பாலனவாகிய அனுபவங்களும் முற்றோன்றுதல் உண்டு. இப் பிறவியில் இப்போது நிகழும் அனுபவங்களின் தோற்றத்தை எவரும் உணர்ந்திருத்தலால், இனி வரற்பாலனவாகிய அனுபவங்களின் முற்றோற்றத்தை மாத்திரம் ஈண்டு ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம். 29. வரும் பிறவிகளின் நினைவுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்றி சையில் நடந்த வெள்ளைக்காரர் சண்டையில் போர் வீரராய்ச் சேர்ந்திருந்த ஒரு வெள்ளைக்காரரும் அவர் தம் மகனார் இருவரும் ஓர் ஊரில் கூடாரத்தே தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த ஊருக்கு நெடுந்தூரத்தே உள்ள மற்றோர் ஊரில் அவர்களின் குடும்பத்தார் இருந்தனர். ஒருநாட் காலையில் தந்தையார் தம் புதல்வர் இருவரையும் நோக்கி, “நும் தாயார் நேற்றிரவு இறந்து போனதாகக் கனாக் கண்டேன்,” என்றார்; அது கேட்டு மிகவும் ஆச்சரியம் உற்றவராகி அவர் தம் புதல்வர் இருவரும் “ஓ!ஓ! நானும் அங்ஙனமே கனாக் கண்டேன், என்று தனித்தனியே கூறினார். பின்னர் அவர் இதன் நிச்சயத்தை ஆய்ந்தபோது, அவர்கள் கனவிற் கண்ட படியே அப் புதல்வரின் அன்னையார் அன்றிரவில் உயிர் துறந்தாரென்பது புலனாயிற்று. நியாயதுரந்தரர் ஒருவர் ஒருநாள்இரவிற் கடிதங்கள் எழுதி அவற்றைப் பன்னிரண்டரை மணிக்குத் தாமே எடுத்துக் கொண்டுபோய்த் தபாலிற் சேர்த்து வந்தார். வந்தபின் தாம் அணிந்திருந்த சட்டைகளைக் கழற்றி வைக்கையில், பெருந் தொகை பெறுதற்குரியதாய் அற்றைப்பகல் தாம் வாங்கி வைத்திருந்த பணச் சீட்டொன்றைத் தாம் இழந்துவிட்டதாகக் கண்டார். அவர் அதனை எங்குந் தேடிப்பார்த்தும் அது கிடைக்க வில்லை. பிறகு அவர் படுக்கைக்குப் போனார். தூங்கும் போது அப் பணச் சீட்டு தமது வீட்டுக்கு நெடுந்தூரம் அல்லாத ஓர் இடத்திற் சுருளாய்க் கிடப்பதாகக் கனவு கண்டார். உடனே அவர் உறக்கம் நீங்கி எழுந்து தெருவேபோய்த் தாம் கனவு கண்ட இடத்தில் பார்க்க அச் சீட்டுச் சுருளாய்க் கிடக்கக் கண்டு அதனை மகிழ்ந்து எடுத்துக் கொண்டார். ஒருகால் மாதர் ஒருவர் தமது மனைக்கு அருகிலிருந்த ஒரு காட்டில் உலவிவந்து தமதில்லத்தே நுழைந்து தாம் வைத்திருந்த முதன்மையான திறவுகோல் ஒன்றைத் தமது சட்டையிலிருந்து எடுக்கக் கையிட்டார். ஆனால், அஃது எங்கேயோ விழுந்து போயிற்று. பிறகு அவர் மனத்துயரத்தோடும் உறங்குகையில், அத் திறவுகோல் ஒரு மரத்தின் வேரண்டையிற் கிடப்பதாகக் கனவு கண்டார். மறுநாட் காலையில் அவர் தாம் கனவிற் கண்ட மரத்தின் வேரண்டையிற் சென்று பார்க்கச் சாவி அங்கே அகப்பட்டது. ஏராளமான நிலச்சொத்திற்குரிய ஒருவரின் தந்தையார் தமது காலத்தில் தீர்வை செலுத்தாமையால், அவர் தம் புதல்வர் அத் தொகை முழுதும் செலுத்தல்வேண்டும் என்று அவர்மேல் வழக்குத் தொடரப்பட்டது. இது நியாய வழக்கன்று என்றும், தம் தந்தையால் தீர்வை செலுத்தப்பட்டதற்கு முத்திரைச் சீட்டு இருக்கவேண்டுமென்றும் அவர் நினைத்துச் சாதனங்கள் உள்ள இடங்களை ஆராய்ந்து பார்த்ததோடு தம் தந்தையாருக்காக வழக்கு நடத்தினவர்களையுங் கேட்டுப்பார்த்தார்; ஆனால் தமக்கு அனுகூல மாவதெதுவும் அகப்படவில்லை. வழக்குத் தமக்கு மாறாக முடியுங் காலமோ அணுகிவிட்டது. இதனால் அவர் மிகவுந் துயரம் அடைந்தவராய் ஒருநாள் உறங்குகையில் கனவிலே அவர் தந்தையாரின் உருவம் தோன்றி மனவருத்தத் திற்குக் காரணம் யாதென்று வினவியது. அவர் தமது வருத்தத்தின் காரணத்தைத் தெரிவித்ததோடு, நியாயமின்றியே ஒரு பெருந்தொகையைச் செலுத்த நேருவது தமக்குப் பெரிதும் இன்னாததாய் இருந்ததென்றும், தமக்கு அனுகூலமான சாதனம் எதுவும் கிடையாவிட்டாலும் அஃது அநியாயமென்றே உறுதியாய்த் தோன்றிய தென்றுங் கூறினார். அதனைக் கேட்ட அவ்வுரு மகனே! நீ சொல்லியது உண்மையே! நான் தீர்வை செலுத்தியதற்குரிய முத்திரைச் சீட்டுக்கள், இப்போது அலுவலினின்று விடுதிபெற்று இன்ன ஊரிலிருக்கும் இன்னார் பால் உள்ளன, என்று கூறி, ஒரு காரணம் பற்றி அவரை அச் சமயத்தில் என்னுடைய அலுவல் பார்க்க நியமித்திருந்தேன். மிகவும் பழமையாய்ப் போனமையால் அவர் அதனை மறந்து போயிருக்கலாம்; ஆனால் அவருக்கு ஒருகால் யான் பணங் கொடுக்கப் போயிருந்தபோது போர்த்துக்கேசியர் பொன் நாணயத்துண்டு ஒன்றிற்குச் சில்லறை அகப்படாமல் அவரும் நானுமாய் ஒரு விடுதியிற் பானகம் வாங்கி அருந்தி அதனை மாற்றிக் கொண்டதான ஓர் அடையாளத்தை அவர்க்குத் தெரிவிப்பையாயின், அவர் அதனை நினைவு கூர்வர், என்று அவர் பெயர் ஊர் முதலிய வரலாறுகளெல்லாம் முற்றக்கூறி மறைந்துபோயிற்று. இக் கனவு கண்ட கனவான் இ.தன் வரலாறுகள் எல்லாம் நன்கு மனத்திற் பதியப்பெற்றவராய் விழித்தெழுந்து கனவின்கண் தம் தந்தையாற் குறிப்பிடப்பட்ட ஊருக்குச் சென்று அங்கே யிருந்த அப் பெரியவரைக் கண்டுபிடித்தார். அவரிடம் இறந்துபோன தம் தந்தைக்காக அத்தகையதோர் அலுவல் நடத்திய துண்டாவென்று கேட்டார்; அவர் அதனை நினைவுகூரக் கூடாமையால் பிறகு தம் தந்தை சொல்லிய அடையாளப்படி போர்த்துக்கேசிய நாணயத்தைப் பற்றிய குறிப்பை எடுத்துச் சொல்லவே முன் நடந்தவை யெல்லாம் அவர்க்கு முற்றும் நினைவில் வந்தன. நினைவில் வரவே அவர் தம்மிடமிருந்த ஆதரவுகளை யெல்லாம் உடனே தேடிப் பார்த்து, இவர் தம் தந்தைக்குரிய முத்திரைச் சீட்டை எடுத்துக்கொடுத்தார். அச் சீட்டைக்கொண்டு அவர் தமது வழக்கை வென்று அமைதி பெற்றார். இங்ஙனமே இனி வரற்பாலனவாகிய நிகழ்ச்சிகள் கனவின்கண் முற்றோன்றிப் பலர்க்குப் பல நன்மைகளைப் புரிந்த வரலாறுகள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. இங்கெ டுத்துக் காட்டிய உதாரணங்கள் அவ்வளவும் உண்மையாக நடந்தவைகளாகும்; வெறுங் கட்டுக் கதைகள் அல்ல. இவ்வாற்றால், மக்கட்குக் கனவுநிலையிற் றோன்றும் அறிவு நிகழ்ச்சிகள் எல்லாம் மேற்சொன்ன பிறவிகளைப் பற்றி வருவனவும், இப் பிறவியைப் பற்றி வருவனவும், இப் பிறவியினும் இனி வரற்பாலனவாகிய நிகழ்ச்சிகளைப்பற்றி வருவனவுமாய் இருத்தல் வெள்ளிடை மலைபோல் விளங்கற்பாற்று. எனவே, கனவினும் நனவினும் நம்மனோர்க்குத் தோன்றும் நினைவனுபவங்களிற் பெரும்பாலன பலவகை யுலகங்களிற் சென்ற பலவேறு பிறவிகளின் பயனேயாம் என்பதும் இதனிலிருந்து பெறப்படும். இவ்வுண்மை, இப் பிறவியில் நாம் இவ்வுலகத்தில் வாழ்ந்துவரும் வாழ்க்கையின் இயல்பை ஒரு சிறிது உற்று நோக்கினாலும் தெளிவாய் விளங்கும். ஒவ்வொரு நொடியும் நாம் நினைக்கும் நினைவுகள் யாவை என்று ஆராய்ந்து பாருங்கள்! முன்நேரங்களிலும் முன் நாட்களிலும் முன் வாரங்களிலும் முன் மாதங்களிலும் முன் வருடங்களிலும் நம் அறிவின் எதிரில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய எண்ணங்களும் நினைவுகளுமே இடைவிடாது நம்முள்ளத்தில் அடுத்தடுத்துத் தோன்றுகின்றன. ஒருநாளின் பிற்பகலிற் றோன்றும் நினைவுகள் அன்று முற்பகலில் நேர்ந்தவற்றைப் பற்றியனவாயும், அதற்கு முன்நாள் முன் வாரம் மாதம் வருடங்களில் நடந்தவற்றைப் பற்றியனவாயும் இருக்கின்றன. இவ்வுலகில் இப்பிறவியில் முன் நாம் அனுபவித்த இன்பங்கள் கவலைகள் மகிழ்ச்சிகளெல்லாம் கிளைத்தெழுந்து நம் அறிவைக் கவருகின்றனவல்லவோ? இந்நினைவுகளை யெல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தால், இவற்றின் வேறாக நம்மிடத்திற் புதிதாக நிற்கும் நினைவு ஏதொன்றும் இல்லாமைக் காணலாம்; ஒவ்வொருகாற் புதிய நினைவுகள் சில தோன்றுமாயின் அவை அறிவிற் சிறந்தோரிடத்து மாத்திரமே காணப்படு மல்லால் மற்றையோரிடத்துத் தோன்ற மாட்டா. அறிவில் வல்லவர் பின்நாட்களில் தாம் புதிதாகச் செய்ய வேண்டுவதை முன்னே நினைவில் அமைத்து உருப்படுத்து வராதலால் அவர்க்கு மாத்திரமே வருநாள் நினைவு தோன்றும். இங்ஙனமாகக் கற்றார் கல்லாதவர் முதலான எத்திறத்தவர் மட்டும் காணப்படும் நினைவின் பாகுபாடுகளை நுணுக்கமாக ஆய்ந்து பார்ப்பவர்க்கு இப் பிறவியில் கனவினும் நனவினும் தோன்றும் நினைவுகளிற் பெரும்பாலன மேற்சென்ற பிறவிகளில் மேல்கீழ் உலகங்களிலும் இந் நிலவுலகத்திலும் அனுபவித்த அனுபவங்களின் பயனே யாமென்பதும், சிறுபாலன இப் பிறவியிலும் இனிப் பிறவியிலும் இனி வருவனவற்றின் முன் அனுபவங்களே யாமென்பதும் தெற்றென விளங்கும். விளங்கவே, மேலுலகங்கள் பலப்பல உண்டென்பதும், அவற்றின் கண்ணெல்லாம் நாமும் நம்மையொத்த உயிர்களும் வாழ்ந்து வந்ததும் இன்னும் வாழப்போவதும் உண்மையென்பதும் தாமாகவே பெறப்படும். மரணத்தின்பின் மனிதர்நிலை - முற்றும் - முகவுரை சாலிவாகனசகம் 1834-ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் (ஏப்பிரல், 1911) வெளிவந்த நமது ஞானசாகர ஆறாம்பதுமத்து முதல் இதழில் முதன் முதல் துவக்கஞ் செய்யப்பட்ட யோக நித்திரை என்னும் இவ்வரும்பெருங் கல்விநூல், இடையிடையே பல ஆண்டுகளாக மெல்ல மெல்ல வெளிவந்த அதன் ஏழு எட்டு ஒன்பதாம் பதுமங்களில் தொடர்பாக எழுதப்பட்டு, இப்போது நடைபெறும் ஞானசாகரப் பத்தாம் பதுமத்தின் 6,7ஆம் இதழ்களில் முற்றுப்பெறுவிக்கப்பட்டது. ஆகவே, இந்நூல் முற்றுப் பெறுதற்குப் பதினோராண்டுகள் ஆயினவென்று அறிதல் வேண்டும். இவ்வாறு இது மெல்ல மெல்ல எழுதப் பட்டதனால், சென்ற இருபதாண்டுகளாக இக் கலைத்திறத்தைப் பற்றிய பல நூலாராய்ச்சிகளிற் கண்ட முடிபுகளும், பல்லாண்டுகளாக இடையிடையே ஆழ நினைந்து பார்த்துத் தெளிந்த நுணுக்கங்களும், இதிற் சொல்லப்பட்ட முறைகளை நேரே செய்துபார்த்து அறிந்த மெய்ப்பயன்களும் இதன்கண் இயன்றமட்டும் நன்கெடுத்துக் காட்டி விளக்க இடம்பெற்றேம். மக்கள் வாழ்க்கையைப் பலதுறைகளிலுஞ் சீர்திருத்தஞ் செய்து அறியாமையால் வரும் எண்ணிறந்த துன்பங்களையும் எளிதாகப் படிப்படியாய் விலக்கி, உயிரைத் தூயதாக்கி, இப்பிறவியில் அடைதற்கு உரிய மெய்யறிவு இன்பங்களையும், வரும் பிறவியில் நுகர்தற்குரிய பேரறிவு இன்பங்களையும் பிழையாமல் எய்துதற்கு இந்நூல் உண்மை வழி காட்டுவதா மென்பதை இதனைக் கருத்தூன்றிக் கற்று, இதிலுள்ள முறைகளை நன்கு பழகி வருவாரெல்லாரும் தாமே இனிது உணர்வர். இந்நூலில் எழுதப்பட்டிருக்கும் பொருள்கள், யாமறிந்தமட்டில், தமிழ்மொழியில் இதற்கு முன் இவ்வளவு அழகாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் எவராலும் திருத்தமாக எழுதப்படவில்லை. ஐரோப்பா அமெரிக்கா என்னும் புறநாடுகளிலுள்ள வெள்ளைக்கார நன் மக்களே இக்கல்வியின் மறைபொருள்களைச் செவ்வையாக ஆராய்ந்து நூல்கள் எழுதி உலக வாழ்க்கையிலும் பயன்படுத்தி வந்தவர்களாவர். நம் தமிழ்நாட்டிலுள்ள அருந்தவத்தோர் இக்கல்வியினையும் இதனைப் பயன்படுத்தும் முறைகளையும் நன்கு உணர்வராயினும், தகுதியுடைய மாணாக்கர் சிலர்க்கன்றி வேறெவர்க்கும் அவைகளைச் சிறிதுந் தெரிவியாமல் மறைவாகவே வைத்து வந்தனர். இனி, இங்குள்ள மந்திரகாரரிற் சிலர் இம்முறைகளைத் தெரிந்து பயன்படுத்தி வருவாராயினும், இவற்றின் உண்மை களைச் சிறிதாயினும் ஆராய்ந்துகண்டு, அவற்றை உயர்ந்த வழிகளிற் பயன்படுத்தத் தெரிந்தவர் அல்லர். மேலும், அவர் இவற்றைப் பொல்லாங்கான வழிகளிலும் பயன்படுத்தித் தமக்கும் பிறர்க்குங் கேடு விளைப்பவராகவுங் காணப்படுகின்றனர். அருந்தவத்தோரும், மந்திரகாரருங் கையாண்டுவரும் இவ் யோகநித்திரை என்னும் அறிதுயின் முறைகளின் உண்மையினையும் மெய்ப்பயனையும் அறிந்து கொள்ளமாட்டாத மக்கள், அவ்வறியாமையாற் பெரிதும் பிழைபட நடந்து, நிரம்பவுந் துன்புறுகின்றார்கள். இக்கலையின் உண்மையினையும் இதனைப் பயன்படுத்தும் வகையினையும் அறியாதிருக்கும்வரையில், சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினராகிய மக்கட்கு ஐயோ துன்பத்தினின்றும் மீட்சி இல்லை. அதுகண்டு உள்ளங் குழைந்தே, இந்நூலிற் சொல்லிய பொருள்களையும் பயன்படுத்தும் முறைகளையும் பல்காலும் பலபடியாலும் ஆராய்ந்து, நேரேயும் செய்து பார்த்து, இவற்றை எல்லாரும் அறிந்து பயன்பெறும் பொருட்டுத் திறந்தெழுதி ஒரு நூலாக வெளியிடலாயினேம். இவற்றின்கண் தெரிந்தெழுதப் பட்ட முறைகளெல்லாம் நேரே பலகாற் செய்துபார்த்துத் தீதில்லாப் பயன்றருதல் தெளியப் பட்டனவாகலின், இவற்றை ஊன்றிக் கற்றுப் பழகுவார் தாம் வேண்டிய எல்லா நலங்களையும் பெறுவரென்பது திண்ணம். இந்நூலின் முற்பகுதிகள் பல்லாண்டுகட்கு முன்னரே வெளிவந்தனவாகலின், அவற்றின்கண் உள்ள சிற்சில வடசொற்களையுங் களைந்து தமிழ்ச்சொற் பெய்து பதிப்பிடுதற்கு இப்போது நமக்கு இடம் வாய்க்கவில்லை. இந்நூலின் இரண்டாம்பதிப்பில் அவை முற்றக் களைந்து முழுதுந் தூயதமிழாக்கப்படும். இத்துணை யாண்டுகள் கழிந்தும் இந்நூல் முற்றுப்பெறுமாறு செய்த எல்லாம் வல்ல இறைவனை மனமொழிமெய்களாலும் வழிபடுகின்றேம். மறைமலை பொருளடக்கம் பக்கம் 1. இருவகைத்துயில் 173 2. அறிதுயில் 180 3. மூச்சு 188 4. அமைதி 202 5. நரம்பு இளக்கம் 220 6. நினைவை முனைக்க நிறுத்தல் 232 7. கண்ணுங் கருத்தும். 248 8. தடவுதல் 255 9. கட்டுரைத்தல் 261 10. அறிதுயிலுக்கு ஏற்றகாலம் 265 11. அறிதுயிலுக்கு ஏற்றவர் 267 12. அறிதுயிலிற் செலுத்தும் முறைகள் 270 13. மூவகைத்துயில் 282 14. பயன்படுத்தும் முறைகள் 297 15. தண்ணீர் மந்திரித்துக் கொடுத்தல் 310 16. தீயபழக்கங்களை ஒழிக்கும்முறை 314 17. தெளிவுக்காட்சி 332 18. சில எச்சரிப்புகள் 346 1. இருவகைத்துயில் `யோக நித்திரை என்னும் இச்சொற்றொடர் நம்மவர்களிற் பெரும்பாலார்க்குத் தெரிந்த தொன்றே யாம். திருப்பாற் கடலிலே திருமால் யோகநித்திரையில் அமர்ந்திருக்கின்றார் என்னும் உண்மையை நம்மவர்களில் அறியாதார் யார்? எல்லாவுயிர் களையும் வைத்துக் காப்பவரான திருமால் வெறும் நித்திரையில் இருக்கின்றார் என்று வழங்காமல், அவர் யோகநித்திரையில் இருக்கின்றார் என்று வழங்கும் நுட்பத்தை எவரேனும் ஆழ நினைத்துப் பார்த்ததுண்டா? இல்லையென்றே பெரும்பாலும் சொல்லலாம். எண்ணிறந்த உயிர்களையெல்லாந் தமது வயிற்றினுள்ளே வைத்துக் காத்தருளும் அத்திருமால், பொது மக்களான நம்மைப்போல் துயில் கொள்கின்றார் என்று சொல்லின் அஃது எவ்வளவு பேதைமையாகும்! நாம் உறங்கும் போது நம்மை நாமே மறந்து, நம்மறிவை நாமே இழந்து, நம்மைச் சுற்றியுள்ள பொருள்களையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் அறியும் வலிவற்று வெறுங்கட்டை போலவுங் கற்போலவுங் கிடக்கின்றேம் அல்லமோ? இங்ஙனங் கிடக்கும் நம்மைப் போலவே காக்குந் தெய்வமான திருமாலுந் தூங்கிக் கிடப்பரென்றால் அது பொருந்துமோ? இத்தகைய எண்ணங்கள் உண்டாகாமல் இருத்தற்கே திருமால் வெறும் நித்திரை செய்கின்றார் என்று உரையாமல், அவர் யோக நித்திரையில் அமர்ந்திருக்கின்றார் என்று அதனை உண்மையான் உணர்ந்த ஆன்றோர் வழங்கி வருகின்றார்கள். அப்படியானால், திருமால் செய்தருளும் யோக நித்திரைக்கும் நம்மனோர் அமிழ்ந்திக் கிடக்கும் வெறும் நித்திரைக்கும் வேறுபாடு என்னை என்றால்; நம்மனோர் கிடக்கும் வெறுந்துயில் அறியாமை என்னும் இருளிலே நடைபெறுவ தாகும்; திருமால் செய்தருளும் அறிதுயில் தூய அறிவு நிலையாய் உள்ள அருளிலே நிகழுவதாகும். மக்கள் முதலான உயிர்கள் செல்லுந் தூக்கம் இங்ஙனம் இருளிலே நடை பெறுவதனால் அன்றோ இருள்சூழ்ந்த இராக்காலத்திலே எல்லா உயிர்களும் தம்மை மறந்து உறங்குகின்றன; மற்று அருட்டெய்வமான திருமால் தூய பேரொளிப் பரப்பாய் விளங்கும் அருளிலே துயில்கின்றார் என்பதனை உணர்த்துவதற் கன்றோ தூய வெண்மை நிறத்தோடு கூடிய தீம்பாற்கடலிலே அவர் துயில்கொள்கின்றார் என்று அறிவு நூல்கள் இடை விடாது நுவலுகின்றன? எனவே, பொதுவாக எல்லா உயிர்கட்கும் உரிய துயில் அறியாமையோடு கூடி நிகழ்வதென்பதும், காக்குந் தெய்வமான திருமாலுக்கு உரிய துயில் அறிவோடு கூடி நிகழ்வதென்பதும் தெளிவாக அறியப்படுதல் வேண்டும். இனி `யோக நித்திரை என்னுஞ் சொற்கள் வடமொழிக்கு உரியவை; இந்தச் சொற்களினால் திருமால் செய்தருளுந் துயில் அறிவோடு கூடிய தென்பது தெளிவாக விளங்காவிடினும், இவற்றிற்கு நேராக வழங்கும் `அறிதுயில் என்னுஞ் செந்தமிழ்ச் சொற்கள் அத்தூக்கம் அறிவோடு நிகழ்வதென்பதனைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன; பழைய தமிழ்ப் புலவரும் அரவணைப் பள்ளியில் அறிதுயில் அமர்ந்த என்று பாடியிருக்கின்றனர். ஆகவே, `யோக நித்திரை என்னும் வடசொற்களைக் காட்டினும் `அறிதுயில் என்னுந் தமிழ்ச் சொற்கள் பொருள் விளங்கக் காட்டினும், அவ்வட சொற்கள் மிகுதியும் வழக்கத்தில் வந்துவிட்டமையால் அவற்றையே இவ்வரிய பொருள்களுக்குத் தலைப்பெயராக வைக்க லாயிற்று. அங்ஙனம் அவற்றைத் தலைப்பெயராக வைக்க நேர்ந்தாலும், இஃது இனிது விளங்குதற்காக `அறிதுயில் என்னுந் தமிழ்ச் சொற்களையே இதன் கண் அடிக்கடி எடுத்து ஆளுவேம். `அறிதுயில் என்பது அறிவோடு கூடிய தூக்கம். அறிவுள்ள உயிர்களிடத்து மட்டுமே தூக்கம் என்பது காணப்படுகின்ற தன்றி, அறிவில்லாத கல், மண் முதலிய வற்றினிடத்து அது காணப்படவில்லை. இங்ஙனம் உயிர்களிடத்து மட்டுங் காணப் படுவதாகிய தூக்கத்தின் இயல்பை ஆழ்ந்து ஆராயுங்கால் அஃது இருவகைப்பட்டு நிகழுந்தன்மை விளங்கா நிற்கும். அவ்விருவகைப் பட்ட தூக்கத்தில் ஒன்று அறியாமை என்னும் இருளிலே நடைபெறுகின்றது; மற்றொன்று அறிவு என்னும் அருளிலே நிகழ்கின்றது. அறியாமை இருளிலே தூங்கும். தூக்கமே எல்லா உயிர்களிடத்தும் பொதுவாகக் காணப்படுகின்றது; அருளிலே தூங்கும் தூக்கமோ உயிர்கள் எல்லாவற்றி னிடத்தும் அங்ஙனம் பொதுவாகக் காணப்படவில்லை; என்றாலும் தவமுயற்சியி லுள்ள பெரியோர்களிடத்தும் புலவர்களிடத்தும் தேவர் களிடத்தும் அஃது உண்மையாகவே நிகழ்ந்துவருகின்றது. மெய்யறிவு முதிர்ந்த யோகிகளிடத்தும் அருளில் தூங்கும் தூக்கம் இடைவிடாது நிகழும் என்பதை ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டெரித்துத், தூங்காமற் றூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம் என்னும் ஆன்றோர் திருமொழி இனிது தெரிவிக்குமாறு காண்க. அருளில் தூங்கும் தூக்கத்தையே `தூங்காமல் தூங்குவது என்பர், இருளில் தூங்கும் தூக்கத்திற் சிறிதாயினும் உயிர்களுக்கு அறிவு நிகழாமல் எல்லாம் வெறும் பாழாய் இருத்தலின் அது வெறுந் தூக்கம் என்று மட்டும் சொல்லப்படும்; அருளில் தூங்கும் தூக்கத்தில் உயிர்களுக்குச் சொல்லற்கரிய பேரொளியோடும் அறிவு விளங்குமாதலின் அது `தூங்காத் தூக்கம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும். அவ்வாறாயின், அருளில் அறிவு விளங்கப்பெறும் அந்நிலையைத் `தூக்கம் என்று கூறுவது எங்ஙனம் பொருந்துமெனின்; ஒவ்வொரு நாளும் விழித்திருக்கையில் உயிர்களானவை பலதிறப்பட்ட முயற்சிகளில் உழன்று மிகவுங் களைத்துப் போகின்றன; இவ்வாறு பகற்காலம் எல்லாம் உழல்வதால் உண்டாகுங் களைப்புத் தீரும்பொருட்டு இராக்காலத்தில் தூக்கமானது வருகின்றது. இராக்காலத்தில் நன்றாய்த் தூங்கி எழுந்த பிறகு உயிர்கள் திரும்பவும் மிகுந்த சுறுசுறுப்பு உடையனவாய் மறுநாட் பகலில் திரும்பவும் பலதிறப்பட்ட முயற்சிகளில் செல்கின்றன. ஆகவே, தூக்கத்தினால் வரும் பயன் உடம்பின் வழியாக உயிர்க்கு வந்த களைப்பு நீங்கப் பெறுதலேயாம். உயிர் உடம்போடு கூடியிருக்கும் வரையில் இத்தூக்கம் இன்றியமையாது வேண்டப்படுவதாகும். உயிரின் அறிவு உடம்போடுகூடி வெளிமுகமாய் நடைபெறும் போது உடம்பின் உள்ளும் புறம்பும் அமைந்த எல்லாக் கருவிகளும் இடைவிடாது அசைதலால், உடம்பின் வலிவு மிகவுங் குறைந்துபோகின்றது. விளக்கு எரியும் போது தகழியிற் பெய்த நெய்யும் அதில் இட்ட திரியும் முறை முறையே குறைந்து போவதும், அங்ஙனங் குறையுந் தோறும் பின்னும் பின்னும் நெய்யுந் திரியும் இட்டு அதனை எரிய விடுவதும், அங்ஙனம் நெய்யுந் திரியும் இடாவிட்டால் விளக்கு நின்றுபோவதும் நெய்யுந் திரியும் இட்ட தகழியில் விளக்கு ஏற்றாவிட்டால் அவையிரண்டுஞ் சிறிதுங் குறையா திருத்தலும் ஒவ்வொரு நாளுங் காணப்படுகின்றன அல்லவோ? அதுபோலவே, நமதுடம்பாகிய தகழியில் அறிவாகிய விளக்கு எரியும்போது இரத்தமாகிய நெய்யும் திரியாகிய மூளையும் வரவரக் குறைந்து கொண்டே போகின்றன; அங்ஙனம் அவை குறையுந்தோறும், வயிற்றகத்தே யுள்ள பசியும் விடாயும் அக்குறையினை அறிவிக்க, உடனே உணவுந் தண்ணீரும் உட்கொண்டு அக்குறையினை நிரப்பிக் கொள்ளுகின்றோம்; இவ்வாறு சோறுந் தண்ணீருங் கொடாமல் உடம்பினை அசையவிட்டு வந்தாற் சில நாளில் அவ்வுடம்பு அழிந்து போவதுதிண்ணம். இனி உடம்பினைச் சிறிதும் அசையவிடாமலும் நமதறிவினை வெளிமுகமாய்ச் செல்லவிடாமலும் வைத்தாற் சோறுந் தண்ணீரும் வேண்டப் படுவதில்லை; இது பகற் காலத்தில் உணவு வேண்டப்படுதல் போல இராக்காலத்தில் வேண்டப்படாமையின்கண் வைத்து எளிதிற் கண்டு கொள்ளப்படும். இராக்காலத்தில் நமதறிவு உடம்பின் வாயிலாக வெளிமுகமாய்ச் செல்லாமையினாலும், உடம்பின் உறுப்புகள் வெளிமுகமாய் அசைந்து தொழிற் படாமையினாலும் செந்நீர் சுவறாமலும் மூளை வலிவு குறையாமலும் இருக்கின்றன; இங்ஙனம் உடம்பின் வலிவு குறையாமல் இருத்தலினாற்றான் இராக்காலத்தில் உணவு வேண்டப் படுவதில்லையாகின்றது. ஆகவே, இராக்காலத்தில் உண்டாகுந் தூக்கத்தில் நமதறிவு சிறிதும் நிகழாமலும், உடம்பின் உறுப்புகள் வெளிமுகமாய் அசைந்து தொழிற் படாமலும் இருத்தலால் முன்னாளில் உண்டான களைப்பெல்லாம் முழுதும் நீங்கப் பெறுகின்றோம். எனவே தூக்கம் என்பது உயிர்கள் அடைந்த இளைப்பினை நீக்குவிப்பதான ஒரு நிலையாம். இவ்வாறு இருளில் தூங்கும் தூக்கம் இளைப்பினை நீக்குவிப்பது போலவே, அருளில் தூங்கும் தூக்கமும் இளைப்பினை நீக்குவிப்பதாகும். இனி, அருளில் நிகழுந் தூக்கத்தில் உயிர்களுக்கு அறிவு மிக்கெழுந்து விளங்குமாகலின் அங்கே இளைப்பாறுதல் எவ்வாறு கூடுமெனின்; அவ்வியல்பை ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம். விழித்திருக்கையில் உயிர்களின் அறிவானது பருத்த இவ்வுடம்பின் வழியாக இயங்கி வெளியேயுள்ள பொருள்களை அறிகின்றது. இப்பருவுடம்பானது எலும்பு தோல் நரம்பு செந்நீர் முதலான பருப்பொருள்களால் ஆக்கப்பட்டது. பருப் பொருள்கள் மட்டுமே அசைவினால் தேய்வடைந்து குறையும். மின்னல், ஒளி, காற்று முதலான நுண்பொருள்களோ அவற்றைப்போல அங்ஙனம் தேய்வடைந்து குறையமாட்டா. அறிவினால் அசைக்கப்படும் நமதுடம்பின்கண் உள்ள பருப்பொருள்கள் எல்லாம் அவ்வசைவினாற் சிறிது சிறிதாகத் தேய்வு அடைதலால் அத்தேய்வினைத் திரும்பவும் நிறைவு செய்தற்கு உண்டாகுந் தூக்கத்தில் அறிவு இயங்காமல் வறிதே இருக்கின்றது; மேலும், இருகில் தூங்கும் தூக்கத்தில் அறிவு இயங்குவதற்குச் சிறிதும் இடமே இல்லை; எல்லாம் முழு இருளே. ஆனால், அருளில் தூங்கும் தூக்கத்திலோ உயிர்களின் அறிவானது இப்பருவுடம்போடு கூடி இயங்காமல் இதனை விட்டுப் பிரிந்து, நுண்ணிய பொருள்களால் ஆக்கப்பட்ட சூக்கும சரீரம் என்னும் நுண்ணுடம்போடு கூடி அருளில் நடைபெறும்; ஆதலால், இப்பருவுடம்டபிற்குச் சிறிதும் அயர்வு உண்டாகமாட்டாது. உலகம் முழுதும் விளங்குங் கதிரவ ஒளியானது அங்ஙனம் விளங்குதலாற் சிறிதேனுங் குறைபடு கின்றதா? இம்மண்ணுலகமெங்குந் திரியுங் காற்றானது அதனாற் சிறிதேனுந் தேய்வடைகின்றதா? இல்லையே. ஆனால் நாம் நாடோறும் புழங்கிவரும் பொன்கலம் மண்கலம் முதலியன எல்லாம் நாளேற நாளேறத் தேய்ந்துவிடுவதைப் பாருங்கள்! இங்ஙனமே நமதுடம்பும் அறிவினால் இயக்கப்பட்டு நடை பெறும்போது தேய்வடையும், அதனால் இயக்கப்படாமல் வறிதே யிருக்கும்போது தேய்வடையாது, களைப்படையாது. அருட்டூக்கத்தில் இப்பரு உடம்பு எவ்வகைத் தொழிலும் இன்றி வறிதே இருத்தலால் இதற்கு எவ்வகையான தேய்வுங் களைப்பும் உண்டாவதில்லை. அறிவானது காற்று, ஒளி, மின்னல் போன்ற நுண்பொருள்களால் ஆக்கப்பட்ட நுண்ணுடம்போடு கூடித் திருவருள் வெளியிலே இன்புற்று நடைபெறும். இங்ஙனந் திருவருள் வெளியிலே அறிவு நடைபெறுதலால், அவ்வறிவோடு கூடி நிகழாமல் வறிதேயிருக்கும் இப்பருவுடம்பிற்கு இன்பம் மிகுந்து இளைப்பாறுதல் உண்டாகும் என்றும், இத்தூக்கத்தில் உண்டாகும் இன்பத்திலும் மேலானது வேறில்லையென்றும் அறிந்துகொள்க; தூங்காமல் தூங்கும் இத்தூக்கத்தின் மேலான இன்பம் உண்டென்பது மேல் எடுத்துக்காட்டிய `தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது என்னுந் திருமொழியினால் நன்கு விளங்கும். முற்றத்துறந்த முனிவர்கள் உலகத்துப் பொருள்களில் எவ்வகைப் பற்றும் இல்லாமல் தம் அறிவை அகத்தே திருப்பி நுண்ணுடம்புகளின் வழியே அதனைக் கொண்டுபோய், அவ்வுடம்புகளோடு ஒற்றுமைப்பட்டு விளங்குந் திருவருள் வெளியிலே நிகழ விட்டுப், பேரின்பவுருவாய் இளைப்பாறிக் கொண்டு தூங்கிக் கிடப்பர்கள்; இவர்கள் எவ்வளவு காலம் இங்ஙனம் அருட் டூக்கத்தில் இருந்தாலும், இவர்களின் பருவுடம்பு பசிநீர் வேட்கைகளாற் சிறிதும் வருந்தாததாய் இருந்தபடியே இருக்கும். அமெரிக்கா தேசத்தில் அறிதுயிலிற் பிறரைப் பழக்கும் ஆற்றல் வாய்ந்த அறிஞர் சிலர், சிலரை ஆழ்ந்த அறிதுயிலிற் போகச் செய்து அவரைப் பேழையுள் அடக்கம்பண்ணி நிலத்திற்குள் ஒரு கிழமை அல்லது ஒரு திங்கள் வரையிற் புதைத்துவைத்துப் பிறகு மேலே எடுத்து அவர்களை விழிப்பிக்கின்றார்கள்; அங்ஙனம் விழிப்பித்த பிறகு விழித்த அவர்கள் அவ்வாறு ஒரு கிழமை ஒரு திங்கள் வரையில் தாம் நிலத்துட் பிணம்போலப் புதைத்து வைக்கப்பட்டது பற்றிச் சிறிதுந் தமதுடலம் பழுதுபெறாமல் முன்னிருந்த நோய்களும் விலகப்பெற்றுச் செவ்வையாகவே உயிர்வாழ்ந்து வருகின்றார்கள்; இப்புதுமையை அமெரிக்கா நாட்டிற்குப் போனால் இன்றும் கண்ணெதிரே கண்டு தெளியலாம். இவ்வுண்மைகளால் அருள்வெளியில் தூங்கும் தூக்கத்தில் இப்பருவுடம்பு உரம்பெற்று விளங்குமேயன்றிச் சிறிதும் பழுது பெறாமல் எத்தனை காலமேனும் அவ்வாறே நிலைபெற நிற்கும். இருளில் நாம் நாடோறுந் தூங்குந் தூக்கமோ நீடித்திருப்ப தல்லாமையால், இப்பருவுடம்புக்கு இளைப்புத் தீரும் வரையில் உயிரை இருளில் அழுத்திவைத்திருந்து, அவ்விளைப்புத் தீர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அதன் அறிவை வெளிமுகமாக விடுத்துத் தானுங் கலைந்து போகும் என்றறிக. இனி, இங்ஙனங் காட்டப்பட்ட இவ்விருட்டூக்கம் அருட்டூக்கம் என்னும் இரண்டில் இருட்டூக்கம் பெரும்பாலும் எல்லா வுயிர்களிடத்துங் காணப்படுகின்ற தென்பதனை மேலே கூறிப்போந்தாம். ஆனால் உயிர்களின் அறிவை இவ்விருட்டூக்கத் திற் செல்லவிடாமல் ஒரோ வழி திருப்பி அருட்டூக்கத்திற் செல்லவிடக் கற்றுக்கொள்வேமாயின், அதனால் நாம் அளவிறந்த நன்மைகளை அடையலாம்; நல்வழியிற் செலுத்தலாம்; கல்வியில் விருப்பமில்லாதவர்களை அக் கல்வியை மிக விரும்பும்படி செய்விக்கலாம்; நினைவு மிகுதியுமில்லாதவர்களுக்கு அது மிகுந்து வலுப்படும்படி செய்திடலாம்; கணவனோடு இணங்கி வாழாத மணமகளை அவனோடு மிக இணங்கி வாழப்புரியலாம்; குடியர்கள் குடியினை விடவும் சூதாடுவோர் சூதினை நீக்கவும், வேசி வீடே அடைக்கலமாய்க் கிடப்போர் அதனை வெறுத்து விலகவும் தீய நினைவுகளிற் பழகினோர் அப் பழக்கத்தை முற்றத் துறந்து நன்மக்களாகவும், வறியர்கள் செல்வராகவும் செய்து இன்புறுத்தலாம். இவை மட்டுமோ? பலவகை நோய்களாற் பற்றப்பட்டு மருந்துகள் உண்டும் அவை நீங்கப்பெறாமல் அல்லும் பகலும் நைந்து தம்முயிரையே வெறுத்துவிட்ட நோயாளிகளும் அக்கொடு நோய் தீர்ந்து தூய நலமுடையவராய் இன்புற்று வாழச் செய்விக்கலாம். மக்களைப் பெறாமல் மலடுபட்டோர் அம்மலடு தீர்ந்து மக்களைப் பெறவும், ஆண்டன்மை பெண்டன்மை இழந்து அலிகளாகவும் பேடிகளாகவும் இருப்போர் அவ்வலித் தன்மையும் பேடித் தன்மையும் விலகி விறல்மிக்கவராய்ப் பொலியவும், கூன் குருடு முதலான தீராக் குறையுடையோர் அக்குறை தீர்ந்து நிறைவெய்திக் களிப்புறவுஞ் செய்திடலாம். இவ்யோகநித்திரை என்னும் வியத்தகு முறையை முற்றத் தெரிந்து பழகுதலால் மக்கள் அடையாத நன்மைகள் இல்லை. 2. அறிதுயில் இவ்வறிதுயிலானது உயிர்களிடத்து இயற்கையிற் காணப்படாவிடினும், சிலநாட் பழக்கத்தால் அதனை அவர்களிடம் வருவித்து அவ்வுயிர்களை நம் விருப்பப்படி நல்வழியில் திருப்பலாம். இவ்வறிதுயிலை இங்ஙனம் பிற உயிர்களிடம் வருவிப்பது போல, ஒருவன் அதனைத் தன்னிடத்திலும் வருவித்து அதன் றுணையால் தன் உயிரின் ஆற்றலைப் பெரிதும் மிகுதிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இதனைப் பிறரிடம் விளைவித்தல் போலத் தன்னிடம் விளைத்தல் மிகவும் அருமையாகும். தன்னிடத்தில் விளைத்துப் பயன் பெறுதற்கு இடைவிடாத ஒருமைப்பழக்கம் ஒன்றே உதவி செய்யு மல்லது வேறு ஒன்றும் உதவி செய்யமாட்டாது. பிறவுயிர்களிடம் இவ்வறிதுயிலை உண்டு பண்ணுவதற்கு ஒருவன் சில நாட்கள் மனம் ஒருமித்துமுயன்றால் அஃது எளிதிற் கைகூடும். இனி இவ்வறிதுயிலைத் தன்னிடம் விளைவிக்கவும் பிற வுயுர்களிடம் விளைவிக்கவுங் கற்றுத் திறமைமிக்கவர்கள் இவ்விந்திய நாட்டிலுள்ள தவத்தவர் (தவசி) களும், முனிவர்களும், அகத்தவத்தவர் (யோகி) களும், மெய்யுணர்வினர் (ஞானி)களும் ஆவர். இவ்வித்தையானது பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்விந்திய நாட்டிலுள்ள முனிவர்களாற் கையாளப்பட்டு வந்ததாகும். அங்ஙனம் நம் முனிவர்களால் இவ்வரிய வித்தை கையாளப்பட்டு வந்தாலும், பக்குவம் முதிர்ந்த சீடர்களுக்கன்றி மற்றையோர்களுக்கு இதன் உண்மை சிறிதும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இவ்வித்தையானது இந் நாட்டிற்கு மிகப் பழமையான தொன்றாய் இருந்தும், இங்கே விளக்கம் பெற்று வழங்காமல் எங்கோ இலைமறைகாய் போல் இருந்து வந்தது. இஃது இங்கே இப்படியிருக்க, ஐரோப்பாக் கண்டத்தில் இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்த மெசுமர் என்னும் பெரியவர் இவ் வித்தையை எப்படியோ கற்றுக் கொண்டு, அதன் உதவியால் அம் மேல் நாடுகளிலிருந்த உயிர்களை நோய் முதலிய துன்பங்களினின்று நீக்கி, அவைகளுக்கு மிகுந்த நலத்தை உண்டுபண்ணி வந்தார். இம் மெசுமர் என்னும் பெரியவர் நல்ல ஒருமைப் பழக்கம் உடையவராய் இருந்திருக்கவேண்டும். இவர் தம்மிடம் வந்த பலவகைப்பட்ட நோயாளிகளை யெல்லாம் தமது கையால் தொடுதல் ஒன்றானே நோய் நீக்கி நலப்படுத்தினார் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. உயிர்கள் ஒவ்வொன்றனிடத்தும் பிராணசக்தி (Animal Magnetism) யென்று சொல்லப்படுவதாகிய ஓர் ஆற்றல் இருக்கிற தென்றும், அதனை ஒருவன் தன்னிடத்தில் மிகுதிப்படுத்திக் கொண்டு பிறகு அதனைத் தன்னிலிருந்து பிறவுயிருக்கும் பாயும்படி செய்யவல்லவனானால், அதனால் அவ்வுயிர் நோய் முதலிய துன்பங்களினின்று விலகி நலம் பெறும் என்றும், அவ்வாறு அதனைப் பாய்ச்சுங்கால் பிறவுயிரை அறிவோடு கூடி நிகழும் ஒரு வகையான தூக்கத்திற் போகும்படி செய்தல் வேண்டுமென்றும், தன்னிலிருந்து அதனைப் பிறவுயிர்க்குப் பாய்ச்சுவதற்குத் தன் கையினால் அவ்வுயிரின் உடம்பிலுள்ள சில முதன்மையான இடங்களைத் தொடுதலே போதுமென்றும் அவர்தம் மாணாக்கர்களுக்குக் கற்பித்து வந்தனர். இங்ஙனம் அவர் இவ்வரிய பெரிய வித்தையைத் தம் மாணாக்கர் பலருக்குக் காண்பித்தும், அதனைப் பயன்படுத்தும் முறையைத் தாமே செய்து காட்டியும் வந்தமையால் இது மேல்நாட்டிற் பல விடங்களிற் பரவலாயிற்று. பிறகு மேல் நாட்டிலிருந்து கீழ் நாடாகிய அமெரிக்காவில் உள்ளார். இதனைக் கற்றுக்கொண்ட வுடனே இவர்களின் விடாமுயற்சி யாலும் நுண்ணிய நூலாராய்ச்சியாலும் இது மிகவும் விளக்கமுறத் துலங்கலாயிற்று. இப்போது இவ்வித்தையைக் கற்பிக்கும் உயர்ந்த கல்விச் சாலைகள் எத்தனையோ அமெரிக்காவில் இருக்கின்றன; இதனைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் எத்தனையோ இலட்சக்கணக்காய் அங்கே இருக்கின்றார்கள்; இதனைப் பயன்படுத்தி மக்களுக்கு அளவிறந்த நன்மைகளை விளைவிக்கும் உதவியாளர்களும் பலர்; இதனால் தீரா நோய் தீர்ந்தும் ஒழுக்கம் திருந்தியும் நல்லறிவு விளங்கப் பெற்றும் செல்வந் திரட்டியும் பயன் பெற்று வாழ்வோரும் பலர். இப்போது அமெரிக்காவில் மருந்தினால் நோய் நீக்கும் முறையானது கைவிடப்பட்டு வருகின்றது. அதற்கு மாறாக `அறிதுயில் மருத்துவ விடுதிகளும் `இயற்கை முறைக்கழகங்களும் ஆங்காங்கு மிகுந்து வருகின்றன. இந்த வித்தையின் அருமை பெருமைகளையும் இதனைப் பயன் படுத்தும் முறைகளையும் தெளிய எடுத்துப் போதிக்கும் நூல்களும் செய்தித் தாள்களும் அங்கே நாடோறும் புதிய புதியவாகத் தோன்றி உலவிக்கொண்டிருக்கின்றன. இச் செய்தித் தாள் புத்தகங்களை வாங்குதற்பொருட்டும் இவ்வித்தையைத் தெரிந்து பழகுதற்பொருட்டும் கோடிக்கணக்கான பொன் செலவிடப் படுகின்றது. இவ்வளவு முயற்சியும் பொருட் செலவும் இடைவிடாத ஆவலும் இவ் வித்தைக்கு அயலவரான அமெரிக்கா நாட்டு நன்மக்களிடம் காணப்படுவனவாகவும், இதற்குப் பழமைக் காலந்தொட்டு முற்றும் உரியவரான நம் இந்திய நாட்டு மக்கள் இதிற் சிறிதும் நோக்கம் இன்றி அறியாமை யென்னும் முழு இருளில் அமிழ்ந்திக் கிடப்பது பெரிதும் வருந்துதற்குரிய தொன்றாம். இவ் வித்தையானது இந்தத் தமிழ்நாட்டில் நமது தமிழ் மொழியில் முதன் முதல் எம்மாலே தாம் எழுதப்படுகின்ற தென்று துணிந்து சொல்லப்படும். இவ் வித்தையை அமெரிக்கர் அறிந்த அளவினும் மேலாகத் தெரிந்து விளக்குவதற்குத் திருவருள் எமக்கு உதவி புரிந்தது. தமிழ், ஆரியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் உள்ள கலை நூல்கள் யாம் பயிலுதற்குத் திருவருள் இடஞ் செய்தமையால், இம்மூன்றிலும் இவ்வித்தையைப் பற்றி யாம் தெரிந்தவற்றை ஒன்று சேர்த்து அவற்றோடு எமது பழக்கத்தையுங் கூட்டி இஃது எழுதப்படுதலால் இந்நூலில் இனிது விளக்கப்படும் இவ்வித்தையின் பாகுபாடுகள் மிக மேலானவையாம் என்றும், இவற்றின் பழக்கத்தால் விளையும் பயன்கள் மிக மேலானவையாம் என்றும் அன்பர்கள் மனத்தில் அமைத்தல் வேண்டும். அது நிற்க. இனி, இவ்வறிதுயிலானது சூக்குமசரீரம் முதலாக வரவர நுணுகிப்போகும் நுண் உடம்புகளில் வருவிக்கப்படுவதாகும். கட்புலனாகும் பருவுடம்பே தூலசரீரம் எனப்படும். இப்பரு வுடம்பின் உள்ளே, ஒன்றினுள் ஒன்றாய் அமைந்த வெங்காயச் சருகுகள்போல ஒன்றினுள் ஒன்றாய் அடங்கியிருக்கும் நுண்ணிய உடம்புகள் வேறு நான்கு இருக்கின்றன. அவற்றிற்கு நுண்ணுடல் (சூக்குமசரீரம்), பண்புடல் (குணசரீரம்), போர்வையுடல் (கஞ்சுகசரீரம்), முதலுடல் (காரணசரீரம்) என்னும் பெயர்கள் உயர்ந்த நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றின் இயற்கையும் செயலும் ஞானசாகரம் மூன்றாம் பதுமத்திற் சிவராசயோகம் என்னுந் தலைப்பில் மிகவுந் தெளிவாக எடுத்து விளக்கிக் காட்டியிருக்கின்றோம்; அங்கே கண்டு கொள்க; இங்கெடுத்துக் காட்டப்புகுந்தால் இது மிக விரியும். இந்தப் பருவுடம்பிலும், வேறு இந்த நுண்ணுடம்புகள் நான்கிலும் நம்முடைய உயிர் போக்குவரவு செய்கின்றது. ஆயினும் இந்தப் பருவுடம்பில் நமது உயிர் முனைத்து நிற்கும்போது மட்டும் நமக்கு அறிவுவிளங்கக் காண்கிறோமே யல்லாமல், மற்றைய நுண்ணுடம்புகளில் அறிவுநிகழக் காண்கின்றோம் இல்லை. உயிர் பருவுடம்பில் முனைந்து நில்லாமல் நுண்ணுடம்பிற் சென்றவுடனே உறக்கம் வந்து கூடி அறிவைத் தலைக்காட்ட வொட்டாமல் அழுத்திவிடுகின்றது. இதனைக் கொண்டு நுண்ணுடம்பிற் செல்லும் உயிர்களுக்கு அறிவு நிகழ்வதில்லை யென்று சொல்லலாகுமோ வென்றால், மெல்லிய இயற்கை வாய்ந்த ஒரு சிறுவனை அறிதுயில் கொள்ளும்படி செய்தவுடனே, அவன் உயிர் வருவுடம்பை விட்டு நுண்ணுடம்பிற் செல்வதும், அங்ஙனஞ் சென்றதும் மிக்க அறிவுடையதாய்த் தோன்றுவதும் இஞ்ஞான்று பரவிவரும் புதிய பழக்கத்திற் செவ்வையாக விளங்குதலால் நுண்ணுடலிற் சென்ற உயிர்க்கு அறிவு மிகத் துலங்குவதும் உண்டென்பது பெறப்படு கின்றது. ஆகவே, நுண்ணுடலில் அறியாமையே உண்டென்று கூறுவது பொருந்தாது. அங்ஙனமாயின், நுண்ணுடம்பில் பெரும்பாலும் உயிர் அறியாமை வசப்பட்டு நிற்றலும், சிற்சில சமயங்களில் மட்டும் அறிவு மிக்குத் துலங்குதலும் என்னை யென்றால்; அவ்வாறு உயிர் இருதிறப்பட்டு நிற்றற்கு இருவேறு காரணங்கள் இருத்தல் வேண்டுமென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்குகின்றது. உயிரை அறியாமையில் அழுத்தும் மருள் என்னும் ஒரு காரணப் பொருளும், அதனை அறிவாய் விளங்கச்செய்தற்கு அருள் என்னும் ஒரு காரணப்பொருளும் இருக்கின்றன என்பது சிவஞானபோதம் முதலான மெய்யறிவு நூல்களில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. `மருள் என்பது அறியாமையைச் செய்யும் ஓர் அறிவில்லாப்பொருள்; இதனை ஆணவமலம் என்றுஞ் சொல்லுவர். `அருள் என்பது எல்லாம் வல்ல ஆண்டவனது ஓர் அருமைக்குணம்; இது தூய அறிவுமயமாய் விளங்குவது. எந்நேரமும் மருள் வசப்பட்டு நிற்கும் உயிர் இந்தப் பருவுடம்பைவிட்டு நுண்ணுடம்புகளிற் செல்லுமாயின், அவ்விடங்களில் நிறைந்த முழு இருளில் அழுந்தி அறிவின்றிக் கிடக்கும். அங்ஙனம் மருள் வசப்பட்டு நில்லாமல், அருள் வசப்பட்டு நிற்குமாயின் அவ்வுயிர் நுண்ணுடம்புகளிற் சென்றமாத்திரையானே சொல்லுதற்கரிய அறிவொளி விரியப்பெற்று இன்ப வுருவாய் விளங்கும். ஆனால், மக்களிற் பெரும்பாலார் இப்பருவுடம்பில் நின்று தமதறிவை நடைபெறச் செய்யும் போது, அவ்வறிவை அருள் வசத்திலே நிற்க விடாமல் அதனை இடைவிடாது மருளிலே அழுந்தும்படி செய்தலால், அவர்களுக்கு அருள் நாட்டமே இல்லாமற் போய்விடுகின்றது. பாருங்கள்! தூங்கி விழித்த காலந்தொட்டுத் திரும்பவுந் தூக்கத்திற் செல்லும்வரையில் மக்களுடைய நினைவுகளுஞ் செய்கைகளும் எவ்வகைப்பட்டு நிகழ்கின்றன என்பதைச் சிறிது ஆழ்ந்து சிந்தியுங்கள். எல்லாம் வல்ல இறைவனது அருள் ஒளியை நாடுகின்றார்களா? இல்லை, இல்லை. தூக்கத்திலிருந்து விழிக்கும்போதே எவ்வுயிரைக் கொன்று தின்னலாம்? எவனை மோசஞ்செய்து பொருள் தொகுக்கலாம்? இவற்றிற்குத் தடை செய்வாரை எவ்வாறு தொலைக்கலாம்? என்னும் கருத்தோடு எழுந்து, நாள் முழுதும் தாம் கொண்ட எண்ணப்படியே முயன்று, மறுபடியும் தூங்கப் போகுங்கால் அந்நினைவுகளோடு தாமே ஆணவமலத்திற் போய் அழுந்தி, மறுநாட்காலையிலும் இங்ஙனமே எழுந்து இம்முறையே தமது வாழ்நாளைக் கழித்துக் காலனுக்கு இரையாய் ஒழிகின்றார்கள். இவ்வாறு இப்பிறப்பில் முழுவதும் தமது அறிவை மருளிலே அழுத்திவைத்துத் தொலைத்தமை யாலே, திரும்பவும் பிறவிக்கு வருங்கால் அவ்வறியாமை யோடுதானே பிறந்து துன்புறுவார்கள். இவ்வறியாமை தொலையும் வரையில் அருட்பெருங்கடலாகிய ஆண்டவன் உயிர்களை இடை விடாது பிறவிக்கு வரச்செய்து மாயா சக்கிரத்தில் வைத்துச் சுழற்றிக்கொண்டே இருப்பான் என்க. இந்தப் பருவுடம்பு பெற்றதனால் அடையும் பயன்யாது? என்று சிறிது ஆழ்ந்து சிந்திமின்கள். நம்முடைய உயிர் பழமைக்காலந்தொட்டு மருள் வசப்பட்டே நிற்கின்றது. இந்த மருள் நமக்கு எப்போது எவ்வாறு வந்தது என்று எவ்வளவுதான் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தாலும் அவ்வியல்பு நமக்கு ஒரு தினைத்தனையும் விளங்கவில்லை. அஃது ஒரு பெருமறை பொருளாகவே யிருக்கின்றது. சிவஞானபோதம் என்னும் ஞான நூலிலே இம்மருளானது உயிர்களிடத்தில் அநாதி யாகவே தொடர்புபட்டு நிற்கின்றது என்று சொல்லப் பட்டிருக்கின்றது; இது தான் முடிவான கருத்தாகவுந் தோன்று கின்றது. எப்படி யானாலும், இந்த மருள் நம்மைவிட்டு அகலும் பொருட்டாகவே அருள் நிதியான ஆண்டவன் உயிர்களுக்கு அடுத்தடுத்து எண்ணிறந்த பிறவிகளைக் கொடுத்தருளி வருகின்றார். இந்தப் பருவுடம்பை எடுக்குமுன் பேரிருள் வடிவான மருளிலே அழுந்திக்கிடந்த உயிர் இவ்வுடம்பை எடுத்தபின் சிறிது அறிவுவிளங்கப் பெறுதலைப் பழக்கத்திற் றெளிவாய் அறிந்திருக்கின்றோம். இந்தப் பருவுடம்பின்றி உயிர்க்கு அறிவு சிறிதும் விளங்குவதில்லை. சிறிதளவு விளங்கு தற்கு இடந்தருகின்ற இப்பருவுடம்பில் நின்று கொண்டே நாம் இடையறாது முயன்று, நமதறிவை மருளினின்றும் பிரித்து அருளிலே செல்லவிட வேண்டும். எவ்வளவு விரைவாக நாம் நமதறிவை மருளினின்றும் அகற்றி அருளிற் படிவிக்கின் றனமோ, அவ்வளவு விரைவில் நாம் இப்பிறவித் துன்பத்தைப் போக்கிப் பேரின்பத்தின் முழுகி நிலைபெயராது இருப்போம். இங்ஙனம் நாம் அருளிலே செல்லுதற்கு ஓர் இன்றி யமையாத் துணைக்கருவியாக வாய்ந்த இப்பருவுடம்பின் பயனை மக்கள் ஒவ்வொருவரும் நினைவில் இருத்தவேண்டும். இவ்வுடம் பாற் பெற்ற இப்பயனை வீணே இழந்துபோக லாகாது. பொன்னும் பொருளும் பிறவும் நிலையல்ல. எல்லாம்வல்ல முதல்வன், நாமே முயன்று அவனது திருவருளின்பத்தைப் பெறுதற்கான எல்லா வசதிகளையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கின்றார். நாம் வசிப்பதற்கு இவ்வகன்ற உலகத்தைப் படைத்துக் கொடுத்தார்; உணவின் பொருட்டு எண்ணிறந்த பொருள்களை விளைவித்துத் தருகின்றார்; நமக்கு உடனிருந்து உதவி செய்தற்பொருட்டு நம்போன்ற மக்களையும் நமக்குத் துணையாகப் படைத்தருளியிருக்கின்றார். அவரால் நாம் பெற்ற பேறுகள் எண்ணமுடியா ஏட்டில் அடங்கா. இவ்வளவும் அவரிடம் பெற்றுக்கொண்டும் அவற்றின் உதவியால் நாம் மிக முயன்று அவரது பேரின்பத்தைப் பெறுதற்கு விரும்ப வேண்டாமா? நாம் பேரின்பத்தைப் பெறுதற்கு உதவியாகத் தரப்பட்ட இவ் வுடம்பையும் மண் பெண் பொருள்களையும் உதவிப்பொருள்கள் என்று நினையாமல் அவற்றையே பேரின்பப் பொருள்களாக நினையலாமா? நன்றாக ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்! அப்படிப் பிழையாக எண்ணித் தம் வாணாளை வீணே கழித்து நாடோறும் மாண்டு போவோரை நம் கண் எதிரே கண்டும், அதில் நாம் அசட்டையாய் இருக்கலாமா? மிக அருமையிற் கிடைத்த இவ்வுடம்பைச் செவ்வையாகப் பாதுகாத்து, இதன்றுணையால் நமதறிவை மருளினின்றும் பிரித்து அருள்நெறியிலே போகவிட முந்துவோமாக. இந்த மக்களுடம்பு போனால் திரும்பவும் இதுவேவரும் என்பதற்கு என்ன உறுதி இருக்கின்றது? இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ ஏதுவருமோ அறிகிலேன் என்று முற்றத்துறந்த ஞானிகளே இதனை நினைந்து வருந்துவார் களானால், மிகத் தாழ்ந்தவரான நாம் போம்வழி எப்படி? ஆகையால், இவ்வுடம்பில் இருக்கையிலேயே நமதறிவை அருளிற்செல்லும்படி பழக்கி வருவோமாயின், நமதுயிர் இப்பருவுடம்பை விட்டு வேறு நுண்ணுடம்புகள் நான்கிலும் செல்லுங்காலத்து எல்லையற்ற அறிவுவிளக்கம் உடையதாகிப் பேரின்பத்தில் வைகும். நமதுயிரை இங்ஙனம் பழக்கி வருதல்போலவே, பிறருயிரையும் அருள்நெறியிற் செல்லும்படி பழக்கி உதவிசெய்து வருகுவமாயின், எல்லாவுயிர்களிடத்தும் இரக்கம் உடையவரான நம் ஐயன் நம்மைக் காத்தருளுவார். இதுவே நாம் இப்பருவுடம்பு பெற்றதன் பயனாகும் என்று அறிமின்கள்! இனி இப்பருவுடம்பில் நின்றுகொண்டே நமதுயிரை அருளிலே செல்லப் பழக்கும்வகை யாங்ஙனமெனின்; நம் நினைவை எந்நேரமும் ஓயாமல் திருவருட்சிந்தனையில் இருத்துவ தொன்றாலே தான் அது கைகூடற்பாலதாகும். அங்ஙனம் நினைவை ஒரு வழிப்படுத்தித் திருவருளிலே பதிவித்தல் இலேசிலே கைகூடற்பாலதன்றாகலின், அதனை அங்ஙனம் செய்தற்கு எளிதான வழி சிறிது காட்டுகவெனின்; அது மூச்சுப்பயிற்சி செய்தலானும், சுழுமுனை நாடியில் நினைவை நிறுத்தும் இடம் அறிந்து நிறுத்தி ஒடுக்குதலானும் வாய்க்கும். 3. மூச்சு உடம்பின் வலிவுக்கு முதன்மையான மூச்சு ஓட்டத்தை ஒருவாறு ஒழுங்குசெய்து, கொள்ளல்வேண்டும். நல்ல காற்று ஓட்டம் உள்ள ஓர் அறையிலே தனிமையாகப் போய் நாற்காலியிலாயினும், நிலத்தில் மணைமேலாயினும் இருந்து கொள்ளல்வேண்டும். இருந்தபின் முதுகு கழுத்து முதலிய உறுப்புகள் சிறிதும் வளையாமல் நேராக நிற்கும்படி செய்தல்வேண்டும். அதன்பின் வலதுகைப் பெருவிரலால் வலது மூக்கை அடைத்து, இடது மூக்கால் உள்ளிருந்த காற்றை வெளியே மெதுவாய்க் கழித்துவிடுக. அங்ஙனங் கழித்தவுடனே அவ்விடது மூக்கினாலேயே வெளியேயுள்ள காற்றை மெதுவாக உள்ளே இழுத்துப் பிறகு வலதுகை மோதிர விரலால் இடது மூக்கை அடைத்துக்கொண்டு வலது மூக்கைத் திறந்து, உள்ளிழுத்த காற்றை அதன்வழியே மெல்ல வெளிவிடுக. அவ்வாறு வெளிவிட்டபின் மறுபடியும் அவ்வலது மூக்கினாலேயே வெளியேயுள்ள காற்றை உள்ளிழுத்து இழுத்தவுடன் வலது மூக்கை முன்சொன்னவாறே அடைத்துக் கொண்டு, இடது மூக்கைத் திறந்து உள்ளிழுத்த காற்றை அதன் வழியே மெல்ல வெளிவிடுக. இங்ஙனம் இடது மூக்கிலிருந்து வலது மூக்குக்குப் போய்த் திரும்பவும் இடது மூக்கில் வந்து முடிவது ஒரு மூச்சு ஓட்டமாகும். இங்கே சொல்லியவாறு மாறுபடாமல் ஏழுமுறை மூச்சுக் கொள்ளுதல்வேண்டும். இப்பழக்கத்தை விடியற் காலையில் உறக்கம் நீங்கி எழுந்தவுடனும், நீராடிய பின்னும், மாலை நேரத்திலும் வெறுவயிற்றில் முறைதவறாமற் செய்துவருக. இப்பழக்கத்தால் செந்நீர் தூய்மைப்பட்டு உடம்பிலுள்ள அகக்கருவிகள் வலுப்படுவதுடன், மனமும் தலைவிரி கோலமாய்ப் பலவாறு ஓடும் ஓட்டத்தினின்று மடங்கி அடங்கும். சினமாவது வேறு மனவருத்தமாவது கவலையாவது உண்டாகும்போதெல்லாம் மேற்சொல்லியவாறு ஏழுமுறை மூச்சுக் கொண்டால் அவையெல்லாம் நீங்கிச் சிந்தை களங்கம்அற்று அமைதியாய் நிற்கும். சினம், வருத்தம், கவலை, அச்சம், பொறாமை முதலான இழிகுணங்களுக்கு இடந்தருவதனால் உடம்பிலுள்ள அகக்கருவிகள் விரைவில் நிலைகுலைந்து அழிகின்றன; ஆயுள் குறைந்து போகின்றது. எந்நேரமும் இவ்விழி குணங்களுக்கு ஆளாகி வருந்துபவர்களைக் கொள்ளை கொள்ள இயமன் வேண்டாம். இக்குணங்களே போதும். இக்குணங்களாற் பற்றப்படாமல் அமைதியாய் இருப்பவர்கட்கு உள்ள வலிமையும், இவற்றாற் பற்றப்பட்டுக் கலங்குபவர்கட்கு உள்ள வலிவின்மையையும் பழக்கத்திற் கண்டுகொள்க. ஆகவே, இவ்விழி குணங்கட்குச் சிறிதாயினும் இடஞ்செய்பவர்கள் திருவருளைச் சார்ந்திருத்தல் ஒருவாற்றானும் கைகூட மாட்டாது. ஆதலால் இவை தோன்றுமென்பது கண்டவுடனே ஏழுமுறை மூச்சு வாங்கும் முறையை வழுவாமல் பழகிவருக. இங்ஙனம் மூச்சுக் கொள்ளுதலாலே மேற்சொல்லிய இழிகுணங்கள் தமது மும்முரங்கெட்டு அமைதிபெறும்; அவ்வாறு அவை அமைதிபெறாவிட்டால் அத்தீக்குணங்களுக்கு மாறான நற்குணங்களைச் சிந்திப்பதோடு நாம் அவ்விழிகுண வயப்பட்டு நடத்தல் பொருத்தந்தானாவென்று சிறிது ஆராயவுந் தலைப்படுக; அங்ஙனம் ஆராயத்தலைப் பட்டவுடனே அவை இருந்த இடமுந் தெரியாமல் மறைந்து போய்விடும். யாங்ஙனமெனிற் காட்டதும். கோபம்வரத் துவங்குமானால் அதற்கு மாறான சாந்த குணத்தைப்பற்றிச் சிந்தித்திடுக. சாந்தகுணம் உடையவர் எவரையேனும் நினைத்துப் பார்த்து அவர் முன்னிலையில் எத்தகையோரும் அமைதிபெற்று அகம்மகிழ்தலைச் சிந்தித்துப் பார்க்க. கோபமுடையவர் எவரையேனும் அதனை அடுத்து நினைத்துப்பார்த்து, அவர் முன்னிலையில் சிலர் அச்சம் அடைதலையும் வேறு சிலர் அவரைப்போலவே அவரோடு கோபித்துக் கலகம் இடுதலையும் எண்ணிக்கண்டு அதனால் வருந் தீமைகளை உன்னுக. கோபம் வரப்பெற்றவர்க்கு அவர் அறிவு நிலைகலங்கிப் போதல் கண்கூடாய்க் காணப்பட்ட உண்மை அன்றோ? எல்லா நன்மைகளையும் செய்தற்கும் அடைதற்கும் ஒரு பேருதவியாய் நிற்கும். அறிவு தன்நிலை குலைந்துபோகு மானால் கோபம் உடையவர் பித்தங் கொண்டவர்களைப் போல இன்னது செய்வதென்றறியாமல் எதனையுஞ் செய்தற்கு முந்துவர். இதனாலேதான் கோபம் உள்ளவர் கோபம் மிகுந்த வேளையில் கொலை முதலான கொடிய செய்கைகளைச் செய்து, தமது சினந்தணிந்த பிறகு தாம் அவற்றைச் செய்ததற்காகத் தம்மைத் தாமே நொந்து கொள்கின்றனர். கோபமுள்ளவர்க்குத் தமது உடம்பின் வலிமையும் வரவரக் குறைந்து போகின்றது. எவ்வாறென்றால் கோபம்வந்து தணிந்தபிறகு உடம்பில் தளர்ச்சியும் இளைப்பும் உண்டாதலை ஒவ்வொருவரும் அனுபவத்திற் கண்டு கொள்ளலாம். கோபம் என்னுந் தீயானது கொழுந்து விட்டெரியும்போது, நீர்வடிவாய் நெகிழ்ந்திருக்கும் செந்நீரெல்லாம் அதனால் உறிஞ்சப் படுகின்றது. நெருப்பின் சேர்க்கையால் தண்ணீர் சுவறிப் போதலைப் பார்த்ததில்லையா? இதுபோலவே கோபத்தின் சேர்க்கையால் உடம்பின் வலிவும் உயிரின் வலிவும் குன்றிப் போகின்றன. இனி ஏதேனும் ஒரு காரணத்தால் தம் அகத்தே வருத்தம் நிகழப்பெற்றவர் அஃது அங்கே வேர் ஊன்றும் முன் அதனை அவ்விடத்தினின்றும் அகற்றுதற்கு முயலல் வேண்டும். மனம் மகிழ்தற்கு உரிய செய்கைகளையும் மனமகிழ்ச்சியை விளைக்கும் இனியவர் குணங்களையும் உலகத்துப் பொருள்களையும் உடனே நினைவுக்குக் கொண்டுவருதல்வேண்டும். தாமே முன்னர் நுகராதவற்றைப் பின்னர் மனத்தாற் பாவிப்பதென்றால் அது மனத்தின்கட் புலப்பட்டுத் தோன்றி நில்லாது. மேலும் அது பொய்ப் பாவனையே யாகலின் அதனால்வரும் பயனும் பொய்யாகவே ஒழியும். ஆனதுபற்றித் தாம் முன்னர் மெய்யாக நுகர்ந்த ஓர் இன்ப நுகர்ச்சியை நினைவுக்குக் கொண்டுவருதலே தாம் எய்திய வருத்தத்தை எளிதிலே போக்குதற்கு வழியாகும். இனி இம்மக்கள் வாழ்க்கையில் கவலையென்பது இயல்பாகவே வந்து ஒவ்வொருவரையும் வருத்தும் பொல்லாத கொடிய நோயாகும். தாம் தொடங்கிய முயற்சி நன்றாய் முடியுமோ தீதாய் முடியுமோ என்றும், தம்மவர் நோய் கொண்டு துன்புறுதலைப் பார்த்து அவர் சாவரோ பிழைப்பரோ என்றும், தமக்கு முதுமை வரும்போது தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதற்கு மிகுந்த பொருளைச் சேர்த்துக் கொள்ளவில்லையே என்றும், தம் மனைவி மக்கள் முதலாயினார் நல்லொழுக்கமுடையவராய்ச் சீர்திருந்துவரோ சீர்திருந்தாரோ என்றும் இவ்வாறு இன்னும் பற்பலவகையாய் ஒவ்வொருவரும் கவலையடைந்து மனம் வேவுதலை நாம் கண்ணெதிரே காண்கின்றோம். இங்ஙனங் கவலைக்கு இடங்கொடுக்குந்தோறும் மனிதனுக்கு உள்ளக் கிளர்ச்சியும் வரவரக் குறைந்து போகின்றது, முயற்சியுங் குன்றிப் போகின்றது. இவை குறையவே மனநோய் மிகுதிப்பட்டுப்பின் எவ்வகை மருந்தினும் தீராதாய் உயிரைக் கொள்ளைகொண்டு போய் விடுகின்றது. ஆகையால் இப்பொல்லாத கவலைநோய் உள்ளத்திற் றலைக்காட்டாதவாறு செய்துகொள்ள வேண்டுவது (யோகசத்தி) ஒருமையாற்றலைப் பெறவேண்டுவோர் ஒவ்வொருவர்க்கும் முதன்மையான கடமையாம். சிறிது ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் எவருங் கவலையடைய இடமேயில்லை. இருண்ட ஓர் இராக்காலத்து வானத்தை மேனிமிர்ந்து பார்மின்கள்! ஆற்றுமணலினும் அளவிடப்படாத விண்மீன் கூட்டங் கள் காணப்படுகின்றனவல்லவோ? அவ்விண்மீன்களுள் ஒவ்வொன்றும் நாம் இருக்கும் இந்நிலவுலகத்தினும் எத்தனையோ மடங்கு பெரியனவாகும். அவ்விண்மீன் மண்டிலங் களிலிருந்து பார்ப்பவர்களுக்கு நமது நிலவுலகம் ஒருசிறு கடுகளவுகூடத் தோன்றுமோ என்பது ஐயம். இத்துணைச் சிறிதாகிய இந்நிலவுலகத்திலே யிருக்கும் எண்ணிறந்த கோடி உயிர்களில் நாமும் ஒரு சிற்றுயிர். இந்தச் சிற்றுயிரால் உலகத்தில் என்ன பெரிய காரியஞ் செய்யமுடியும்? இவன் ஒன்று நினைத்தால் முடிவது வேறொன்றாய் இருக்கின்றது; இவன் ஒன்றும் நினையாதிருக்கையில் எத்தனையோ இவனை வந்து சூழ்ந்து கொள்ளுகின்றன. நாளைக்கு இது செய்வோம் என்று எண்ணிப் படுத்தவன் மறுநாள் உயிர்பெற்று எழுந்திருப்பதே உறுதியில்லை. மனிதனுடைய அறிவால் எவ்வளவோ திறமையாகவும் ஒழுங்காகவும் அமைக்கப்பட்ட கட்டிடங்களும் சிறந்த நகரங்களும் ஓர் இமைப்பொழுதில் நில அதிர்ச்சியினால் நுறுங்கிக் கீழ்விழுந்து அழிந்து போகின்றன; இன்றைக்கு நிலமாயிருப்பது நாளைக்கு நீரினால் மூடப் படுகின்றது! நீர் நின்ற இடங்களில் நிலங்கள் தோன்றுகின்றன; காற்றினாலும் மழையினாலும் உண்டாகும் மாறுதல்கள் கணக்கற்றன. சூரியர் சந்திரர் இயக்கங்களால் உண்டாகும் மாறுதல்களும் எண்ணிறந்தன. இவற்றையெல்லாம் மனிதன் தன் சிற்றறிவால் சிறிதேனும் மாற்றவல்லவனா? இல்லையே. அங்ஙனமிருக்க மனிதன் பின்வருவதைக் குறித்துக் கவலைப் பட்டு மாய்வது ஏன்? இவனுடைய ஆற்றலுக்கு அடங்கி நடவாத நிகழ்ச்சிகளைப்பற்றி இவன் கவலைப்பட்டு என்செய? அப்படியானால் நாம் முயற்சி செய்வதற்கே இடம் இல்லாமல் வீணே நாட்கழிக்க வேண்டிவருமோயெனின்; அங்ஙனமன்று; தந்நன்மையின் பொருட்டும் பிறர் நன்மையின் பொருட்டும் ஒவ்வொருவரும் நன்முயற்சி செய்யவேண்டியது இன்றியமையாத கடமையேயாம்; என்றாலும் அம்முயற்சி யினால் வரும்பயன் நன்றாகுமோ தீதாகுமோ என்று எண்ணி எண்ணி மனம் ஏங்குதல் சிறிதும் நலமுடைத்தன்று. எண்ணித் துணிக கருமந் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு என்னும் திருவாக்கின்படி ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கும்போதே அது தமக்கும் பிறர்க்கும் நன்றாமாறு வைத்து நன்றாய்ச் சிந்தித்துச் செவ்வனே முயலல்வேண்டும்; எடுத்துச்செய்த அந்நன்முயற்சியினால் இன்னது வருமோ வராதோ என்று ஐயமுற்றுக் கவலையடைதல் ஒன்றே யாரும் விரும்பற்பாலதன்றாம். அடுத்த நிமிடத்தில் வருவது இன்ன தென்று நம்மால் உறுதிசெய்தல் அரிதாகலின் பின்னர் யாது வருமோ எனக் கருதி மனங் கலங்குதல் தக்கதன்று. தன் அறிவுக்கு எட்டிய அளவு தான்றொடங்கிய முயற்சியினால் இத்துணை நன்மைவரும் என்று செவ்வையாக முயன்று வந்தபின் தான் கருதியவாறாக நன்மையே வரும், அல்லது அவ்வாறின்றித் தான் எண்ணியதற்கு முற்றும் மாறானது வரினும் வரும். அவ்வாறு வந்தால் அதனை இவன் தன் குற்றமாக நினைந்து நெஞ்சம் புண்படுதல் ஆகாது. தன்னால் ஆகுமட்டும் நன்முயற்சியே செய்தவன் அம்முயற்சி பாழ்படக் கண்டால் அதனைத் தன் குற்றமென நினையாமல் அஃது ஊழ்வலியின் பான்மையென்றும் கடவுள் செயல் என்றும் உணர்ந்து மன அமைதிபெறுதலே தனது உயிர் ஆற்றலை மிகுதிப்படுத்துதற்கு உரிய மெய்ந்நெறி யாகும். ஏனெனில் மனங்கலங்குதற்கு உரிய நிகழ்ச்சிகள் வந்தகாலத்து அவற்றை ஒரு பொருட்படுத்தாமல் மனத்திட்பத்தோடு நிற்றல் பொது வாக மனித இயல்புக்கு மேற்பட்ட தெய்வ இயல்பேயாகு மன்றோ? வாணிக நுட்பங்கள் எல்லாம் செவ்வையாகத் தெரிந்த வொருவன் மலிந்த ஓரிடத்தினின்று ஒரு சரக்கைத் தன் கப்பலில் ஏற்றுவித்து மிகுந்த விலைப்படும் வேறொரு நாட்டுக்கு அதனைத் தக்க காலத்தே அனுப்புவித்தான். இவன் செய்த இம் முயற்சியில் ஏதும் பழுதே இல்லை. கடலிற் செல்லும் இவனது கப்பல் இடையே எதிர்பாராது நேர்ந்த சூறைக்காற்றில் அகப்பட்டுக் கடலுள் அமிழ்ந்திப் போனதாயின் அதற்கு இவன் யாது செய்யமாட்டுவான்? தன் அறிவாற்றலுக்கு மேற்பட்டுத் தோன்றிய அந்நிகழ்ச்சி கடவுள் செயலால் ஆயதென எண்ணி மன அமைதி பெறுவனாயின் அவன் உலக வாழ்க்கையில் உழலுபவனாயினும் அவனே முற்றத்துறந்த முழுத்துறவி யாவான். மேலும், தான் வாணிகஞ் செய்யத் துவங்குங்காலத்தும் இது நன்றாய் முடியுமோ தீதாய்முடியுமோ என்று ஐயமுற்றுக் கவலைப்படுவனாயின் அவன் அம்முயற்சியைச் செவ்வனே தொடங்கி நடத்த மாட்டாமல் இடை முறிந்துபோவன்! அல்லது அம்முயற்சியைத் தொடங்காமலே வறிது நாட்கழிப்பன். ஆகவே நன்முயற்சியைத் துவங்கி நடத்தும் ஒருவன் அம்முயற்சியாதாய் முடியுமோ என்று கலங்கா திருத்தலே பலவகையாலும் இம்மை மறுமைப் பயன்களைப் பெறுதற்குரிய வழியாகும். இவ்வழியை நன்குணர்ந்த ஆங்கில அமெரிக்க வணிகர்கள் தாம் துவங்கி நடத்தும் பெரிய வணிகங்களிலெல்லாம் அவை பின் எவ்வாறாய் முடியுமோ என்பதைப் பற்றிச் சிறிதுஞ் சிந்தியாமல் தாம் செய்யும் முயற்சிகளை மட்டும் திருத்தமாகச் செய்கின்றார்களெனவும், அதனால் அவர்கள் மற்ற வணிகர்களைப் பார்க்கினும் மிகுந்த ஊதியத்தை அடைந்து பெரிய செல்வர்களாய் இனிது வாழ்கின்றார்களெனவும் தெரிகின்றோம். இங்ஙனமே தம்மவர் நோயால் வருந்தும்போது அவர் எவ்வாறாவரோ என்று கவலைப்பட்டுக் கலங்காமல் அவரை அன்புடன் பார்த்து ஆறுதலான சொற்களைச் சொல்லித் தக்க பரிகாரங்களையுஞ் செய்துவரல் வேண்டும். இவ்வாறு செய்வதை விடுத்து இவர்க்கு வந்தநோய் தீருமோ தீராதோ என்று கவலையுற்றுக் கலங்கியழுது ஆற்றாமைப்படுதல் நோயுற்றவர்க்கு அந்நோயை மிகுதிப்படுத்துவதற்கே இடமாகு மல்லது வேறு நன்மையின்றாம். நோய் கொண்டவர்க்கு அருகேயிருந்து ஆற்றாமைப்படுதல் மிகவுந் தீங்கு பயப்பதே யாகும். ஏனென்றால் தம்பக்கத்தேயிருந்து ஆற்றாமைப் படுபவரை நோயாளிகள் பார்க்குந்தோறும் தாமும் ஆற்றாமைப் பட்டு மனங்கலங்குவர். மனங் கலங்கக் கலங்க உயிராற்றல் குறையும்; அது குறையவே நோய் பெருகி அவரைக் கடிதில் இறக்கச்செய்யும். ஆகையால் நோய்கொண்டவர் பக்கத்தே செல்வோர் அந்நோயின் கொடுமையை மிகுத்துப் பேசாமல், `இந்நோய் எம்மட்டு! இது நாளைக்கே இருந்தவிடமுந் தெரியாமல் மறைந்துபோகும் என்று உள்ளக்கிளர்ச்சி உண்டாகும் வண்ணம் தீரத்தோடு பேசல்வேண்டும்; மகிழ்ச்சியினை விளைவிக்கும் இச்சொற்கள் செய்யும் நன்மையை மிக அரிய மருந்துகளும் செய்ய மாட்டா. இங்ஙனமே முதுமைப்பருவம் வருங்காலத்து என் செய்வோம் என்னுங் கவலையையும் அறவே ஒழித்துவிடல் வேண்டும். நம்மால் இயன்றவரையில் நல்வழியிற் பொருள் தேட முயலல்வேண்டும். நம்முயற்சியினால் மிகுந்த பொருள் தொகுக்க ஏலாவிட்டால் கிடைத்தமட்டில் மன அமைதி பெறுதலே பெரிதும் விரும்பத்தக்கதாம். இதனைவிடுத்து `முதுமை வந்துவிடுமே, இப்போது நமக்குள்ள பொருள் போதாதோ என்று கவலைகொண்டு தம் அளவுக்கு மிஞ்சி அல்லும்பகலும் இடைவிடாது பொருள் ஈட்ட முயல்குவராயின், அதனால் அவர் உடம்பிலுள்ள கருவிகள் தேய்ந்து வலிகுறையத் தாம் திரட்டிய பொருளைத் தாம் நுகரும் முன்னரே இறந்துபோவர். இவ்வாறு தம்மளவுக்குமேல் முயன்று விரைவில் அழிந்தொழிந்தவர் பலர். பார்மின்! மரம் மரப்பொந்துகளில் வசிக்கும் பறவைகளும், காட்டிலும் மலையிலும் மலைக் குகைகளிலும் வசிக்கும் விலங்குகளும் நாளைக்கு என் செய்வோம் என்னுங் கவலையுடையனவாய் இருக்கின்றனவா? அவைகள் எல்லாம் தம் உயிர்வாழ் நாட்களை இனிது கழிக்க வில்லையா? எல்லா உயிர்களையும் வகுத்த இறைவன் அவைகட் கெல்லாம் படியளவாமல் விடுகின்றனனா? அருட்பெருங் கடலான ஆண்டவன் எல்லாவுயிர்களை யுந்தான் குறித்த காலம் வரையிற் காப்பாற்ற இருக்கையில், மனிதர்கள் மட்டும் அவன் அருட்பெருந்தகைமையை நம்பாமல் தமக்குத் தம்மையே துணையாக நினைத்துக் கவலையுறுதல் என்னையோ! இதனால் `நாம் பொருள்தேடும் முயற்சியை விட்டிருக்கவேண்டுமென்பது கருத்தன்று. யானை முதல் எறும்பீறான உயிர் அத்தனைக்கும் படியளக்கும் ஐயன் என் முயற்சியை யறிந்து எனக்கும் படியளவாது போகான் என்று ஒவ்வொருவரும் உள்ளத்தில் உறுதிகொண்டு மகிழ்ந்து முயல்வராயின் அவர்கள் பன்னூறாண்டு பயன்பட இனிதுவாழ்வர்; அதனால் அவர் வாழ்க்கையிற் கவலைகளுந் துன்பங்களும் வினைகளும் சிறிதும் இல்லாமல் ஒழிந்துபோகும். இனித் தம்மனைவி மக்கள் முதலாயினாரிடத்து மிகவும் அன்புடன் ஒழுகி அவர்க்கு நல்லறிவுகளையும் அடிக்கடி புகட்டி நற்செய்கைகளிலும் அவர்களைப் பழகச்செய்துவந்தால் அவர்களைப்பற்றிச் சிறிதுங் கவலையடைய வேண்டுவதே யில்லை. ஒரு குடும்பத்திற் றலைவனாயிருப்பவன் எங்ஙனம் நற்குணத்தினும் நல்லொழுக்கத்தினும் மேம்பட்டுத் தோன்று கின்றானோ, அங்ஙனமே அவனைச் சார்ந்தவர்களும் அவற்றில் மேம்பட்டுத் தோன்றுகின்றார்கள். அவன் நல்லவனும் நற்செய்கை யுடையவனுமாய் இராவிட்டால் அவனைச் சார்ந்தவர்களும் அவனைப் போலவே ஆய்விடுகிறார்கள். ஒரு குடும்பத்தில் முதல்வனாயிருப்பவன் திருடனாய் இருந்தால் அவன் மனைவி மக்களும் பெரும்பாலும் திருடர்களாகவே மாறிவிடுகிறார்கள். விலைமாதர் வீட்டுக்குச் செல்லுந் தந் தந்தையரைப் பார்த்துத் தாமும் விலைமாதர் வீட்டுக்குச் சென்று கெட்ட புதல்வர்கள் எத்தனை பெயர்! கள்ளையுஞ் சாராயத்தையுங் குடித்துப் பெருங்குடியர்களான தந் தந்தைமாரைப் போலவே தாமுங் குடித்துக்கெட்ட பிள்ளைகள் எத்தனைபெயர்! வேட்டையாடிப் பறவைகளையும் விலங்கினங் களையுங்கொன்று அவற்றின் இறைச்சியை விழுங்கியும், பொய் யுரைத்தும், பிறரை வஞ்சித்தும், சூதாடியுந்திரியும் தந் தகப்பன்மாரைப் பின்பற்றித் தாமும் அங்ஙனமே தீநெறியில் நடந்து கெட்ட இளைஞர்கள் எத்தனை பெயர்! எந்நேரமுங் கடுகடுத்த முகத்தோடும் வன்சொற்களோடும் தம் மனைவி மாரை வைதும் அடித்துங்கொடுமை செய்து, அவர்கள் தம்மை வெறுத்து அகன்றுபோய்ப் பிறரைச் சார்ந்தொழுகும் படி செய்யும் கணவன்மார்க்குங் கணக்குண்டோ? இங்ஙனமே தங் குடும்பத்திற் சேர்ந்தவர்களையெல்லாங் கெடுத்துக் கெட்ட வழியிற் புகுத்துவதற்கு அக்குடும்பத்திற் றலைவனாயிருப்பவன் தீக்குணமுந் தீச்செய்கையுமே காரணமாமன்றி மற்றென்னை? ஆகவே, குடும்ப முதல்வனாயிருப்பவன் தான் செவ்வையாக நடந்து காட்டுவனாயின் அவன் றன்னைச் சேர்ந்தவர் களெல்லோரும் தாமே நல்லவர்களாய் நடந்து நலம்படுவர்; அதன் பொருட்டு அவன் சிறிதுங் கவலையடைதல் வேண்டாம். இனி அச்சம் என்னுங் கொடுந்தீயுந் தன்னை வந்து பற்றாமற் செய்துகொள்ளவேண்டும்; அச்சம் உள்ளவனுக்குச் சிறிய காரியங்களுங் கைகூடுவதில்லை. மனவலிமையுள்ளவனுக்குப் பெரிய காரியங்களுங் கைகூடுகின்றன. அச்சம் உள்ளவனைக் கண்டு எல்லாரும் வெறுப்பு அடைகிறார்கள், தீரமுள்ள வனிடத்தில் எல்லாரும் விருப்பம் வைக்கிறார்கள். மனிதனிலுந் தாழ்ந்த சிற்றுயிர்களுங்கூட அச்சம் உள்ளவனைக் கண்டால் அவனுக்குத் தீங்குசெய்ய முந்துகின்றன; மனவலிமையுள்ள வனிடத்திலோ அடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றன. குலைக்கிற நாய் ஓடுகிறவனைக் கண்டால் பின்னும் பின்னும் மிகுதியாய்க் குலைத்துக்கொண்டே அவனைப் பின்றொடர்ந்து கடிக்கப் போவதும், அதற்கு அஞ்சாமல் நின்று தன்னை உறுத்துப் பார்ப்பவனுக்குத்தான் அடங்கிப் பின்வாங்கி ஓடுவதும் பார்த்ததில்லையா? எவ்வளவோ முரட்டுத்தனமுள்ள குதிரை களையெல்லாம் இலேசிலே பழக்குகிறவர்களை நீங்கள் பார்த்ததுண்டா? அவர்கள் மிகக் கொடுமையான குதிரைகளையும் தன்னந்தனியராகவே சென்று அடக்கி ஒடுக்குதலைப் பார்த்தால் அவர்களிடத்தில் ஏதோ மந்திரவலிமை இருக்கிறதென்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை; அவர் களிடத்தில் இருக்கும் மந்திர வலிமை யெல்லாம் மனவலிமையேயாகும். அச்சம் உள்ளவனையும் அச்சம் இல்லாது மனவலிமையுள்ளவனையும் சிற்றுயிர்கள் மிக எளிதிலே தெரிந்துகொள்ள வல்லனவாய் இருக்கின்றன. சிறிதும் அஞ்சாத நெஞ்சினனாய்த் தன்னை உறுத்துப் பார்த்துக் கொண்டே தன்பால் அமைதியோடும் அணுகுபவனைக் கண்டால் எத்தகைய சிற்றுயிரும் அவனுக்கு அஞ்சிப் பணிகின்றன. புலி கரடி சிங்கம் நச்சுப்பாம்பு முதலிய கொடிய செந்துக்களைப் பழக்குகின்றவர் களுக்குள்ள மனவலிமை இவ்வளவென்று வரையறுத்துச் சொல்லல் ஏலாது. ஆயினும், மனிதனுக்குள்ள ஆறறிவில்லாத சிற்றுயிர்களை அடக்குவதற்கு வேண்டும் மனவலிவினும், ஆறறிவோடு கூடிய மனிதர்களைத் தன் வயப்படுத்துவதற்குப் பன்மடங்கு மிகுந்த மனவலிவு வேண்டும். ஆனால், அச்சம் உள்ள அளவும் மனத்திட்பம் உண்டாகாதாகலின் அவ்வச்சத்தை வேரோடுங் களைந்து விடுதலில் கருத்தூன்றுக. தன் மனச்சான்றுக்கு மாறுபாடில்லாமல் நடக்கையில் ஒருவனிடத்தில் அச்சம் நிகழாது; தான் நீதிநெறி வழுவாமல் ஒழுகும்வரையில் ஒருவன் எதற்கும் அஞ்சவேண்டுவதில்லை. உண்மை பிறழாமல் நடப்பவினடத்திலே எவர்க்காயினும் வருத்தமேனுங் கோபமேனும் உண்டாகுமோ? எல்லாரும் அவனை அன்புடன் வியந்து பாராட்டுதலன்றோ? செய்கின்றார்? அங்ஙனம் எல்லாரும் தன்னை விருப்பத்தோடு நேசித்து வருகையில் அவன் அவர்கள் எல்லாரிடத்திலும் மனம் மகிழ்ந்து அளவளாவுவனே யன்றி, அவர்களைக் கண்டு சிறிதும் அச்சம் உறுவான் அல்லனே; ஒரோவொருகால் தான் உண்மைநெறி திறம்பாமல் நடத்தலைக் கண்டு தீயோர் சிலர் அவனுக்குத் தீங்கிழைக்க முயல்குவராயின், உண்மை வழுவாத அவன் அதற்குச் சிறிதும் அஞ்சானாய்த் தன் உண்மையை உலகம் அறியும்படி தெருட்டி அவரைச் சீர்திருத்துதற்கே நினைக்கவேண்டும். ஆண்டவனையன்றி அணுவும் அசையாதாயின் பொய்யாராகிய தீயமக்கள் சிலர் நல்லோனுக்கு எங்ஙனம் தீது செய்யமாட்டுவார்? உண்மை வடிவாய் விளங்குங் கடவுள் உண்மை திறம்பாதவன்மாட்டு மிக முனைத்து விளங்குமாதலின் அந்நல்லோன் முன்னர்த் தீயோர் திரண்டு செய்த தீயவை யெல்லாம் பகலவன்முன்னர்ப் பாயிருள் மாய்ந்தாற் போல முதலறக் கெட்டு ஒழியும். விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன் தவத்தின்முன் நில்லாதாம் பாவம் என்னும் நீதியுரையைக் கடைப் பிடித்துத் தீயோர்க்கு அஞ்சி நல்லவற்றை நெகிழவிடாது அவற்றைக் கிளர்ச்சியோடும் சிக்கெனப் பிடித்தலே உயிர் ஆற்றலை மிகச்செய்வார்க்கு உரியதாகும். மலையுருண்டாலுங் கடல்புரண்டாலும் நிலன் அதிர்ந்தாலும் புயல் அடித்தாலும் அச்சம் அடையாமல் உண்மை நெறியில் உறைத்து நிற்கவேண்டும். எல்லாம் வல்ல இறைவனையே ஒப்பற்ற துணையாக நாடி நிற்கப் பெறுகுவமாயின், நாம் எதற்கும் அஞ்சாது மனத்திட்பத்தை அடைவம். இதுவேதான் நாம் அச்சம் அடையாமல் இருத்தற்கு இலேசான வழியாமென்க. இனித் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார், அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம். என்று தொகுத்துச் சொல்லிய பாவங்கள் நான்கில் அழுக்காறு என்னும் பொறாமையை முதலில் வைத்துச் சொல்லி யிருப்பதனால், இதன் கொடுமை ஏனை மூன்றினும் மிகப் பெரிதாமென்பது நன்கு புலப்படுகின்றது. மற்றைச் சாமானிய மனிதரிடத்திற் காணப்படும் பொறாமையை விடக் கல்வி யறிவுடையோரிடத்தும் செல்வமுடையோரிடத்தும் இத்தீய குணம் நிரம்பவுங் கொழுந்துவிட்டு எரிகின்றது. `இவர் இத்தனை கல்வியுடையரா யிருத்தலையும், இவர் அதனான் மிக்க புகழ் எய்துதலையுங் கண்டு எம் வயிறு எரிகின்றதே, இவர் தொலையும் நாள் எந்நாளோ என்று கல்வியுடையவர் மனம் புழுங்குகின்றனர், `இவர்க்குள்ள பொருள் எமக்கில்லையே பாழுந்தெய்வமே இவர்க்கு மட்டும் இத்தனை பொருளையும் செல்வாக்கினையுந் தந்தனையே, இவர் இவற்றையெல்லாம் இழந்து வறியராய் அலையாரோ. இவர்க்குள்ள செல்வம் எல்லாம் யாம் அடையேமோ என்று பலவாறு மனம் பேதுற்றுச் செல்வரும் பொறாமைப் படுகின்றனர். இங்ஙனம் பொறாமைப்படுகிறவர்களைக் கண்டால் இவர்களுடைய புன்மையைக் கண்டுநமக்குஇரக்கம் உண்டாகாமற் போகாது. பிறர்க்குள்ள பெருமையைக் கண்டு மனம் புழுங்கும் இவர் கல்விகற்று என்பயன்? செல்வம் உடையராய் என்பயன்? இவர் எந்நேரமும் மனப்புழுக்கத்திலே கிடந்து புழுப்போல் துடிதுடித்து இந்நிலத்திலேயே நிரயத்துன்பத்தை எய்து கின்றனர்! அந்தோ! இவர் தமக்குள்ள கல்வியானுஞ் செல்வத் தானுந் தாமும் பயன்பெற்றுப் பிறரையும் பயன்படச்செய்ய அறியாமல் தாம் எப்பொழுதுந் துன்பத்திற்கே ஆளாகிப் பிறரையும் வருத்திப் பேய்போல் அலைதல் பெரிதும் வருந்தத்தக்கதேயாம். இத்தன்மைப்பட்டவர் முகத்தில் அமைதியே இராது, மூதேவி குடிகொண்டிருப்பள். இவரைப் பார்ப்பவரெல்லாம் இயல்பிலே அருவருப்படைகின்றனர், இவர் சொற்களில் நயமே இருப்பதில்லை. இவர் தமக்கு நெருங்கிய உறவினராயுள்ள மனைவி மக்கள் பெற்றார் உற்றார் உடன்பிறந்தார் முதலியவர்களுங் கூட இவரைக் கண்டால் வெறுப்படை கின்றனர். இங்ஙனமானால் இவரைக் கண்ட பிறர் இவரை வெறுப்பது சொல்லவும் வேண்டுமோ? இவர் தம்மை யொத்த இழிகுணமுடைய சிலர் கூட்டத்திலே சிறிதுநேரம் மகிழ்ச்சி கொண்டாலும், அவ்விழிஞர் கூட்டத்திலும் ஒருவர்மேல் ஒருவர் பொறாமையுற்றுப் பழித்துக் கூறுதல் நடைபெறுதலால், அங்கும் அவர் துன்பமே உழக்கின்றார். இவ்வாறு அழுக் காறுள்ளவர் அவ்வழுக்காற்றினாலேயே கேடு அடைதலை இனிது உணர்ந்தன்றே திருவள்ளுவ நாயனார்: அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார், வழுங்கியுங் கேடீன் பது. என்று அருளிச் செய்தார். பகைவர் கேடுசெய்ய வேண்டாமல் தம்மிடத்துள்ள பொறாமையே தம்மைக் கெடுத்து இம்மை மறுமை இன்பங்களை ஒருங்கு இழக்கச் செய்யுமாதலால், அழுக்காறுடையார் அவ்வழுக்காற்றினைத் தம்மிடத் தினின்றும் முதலறப் பெயர்த் தெறிந்து அமைதிபெறுதலே நன்றாம். பிறர்க்குவரும் உயர்ச்சி கண்டு மனம் புழுங்குதல் எத்தகையோரிடத்தும் பொதுவாய்க் காணப்படுகின்றது. அம்மனப் புழுக்கம் தமதுள்ளத்து வேர்க்கொள்ளும் முன்னரே உடனே அதை மாற்றி வேறுவழியில் திருப்புதல் வேண்டும். யாங்ஙனமெனின் காட்டுவதும். `இவர்க்கு வந்த இத்தனை உயர்ச்சியும் இவரிடத்துக் காணப்படும் நல்லறிவு நற்குண நற்செய்கை நற்பொருள் நற்கல்வியால் வந்ததேயாகும்; இவரிடத்துள்ள இந்நன்மை காரணமாகவே எல்லாம் வல்ல இறைவன்றிருவருள் இவரை இங்ஙனம் உயர்த்துவதாயிற்று. இவர் உயர உயர உலகத்தவர்க்கு நன்மையே உண்டாகு மாதலின், இவரது உயர்ச்சியைப்பற்றி யாம் அகம் மகிழக் கடவேம்; இவரைப் போலவே யாமும் நன்னெறி பற்றி ஒழுகினால் அருட்களஞ்சியமான ஐயன் எம்மையும் உயரச் செய்குவான்; இதனை விடுத்து இவரது உயர்ச்சி கண்டு யாம் மனம் புழுங்கியது எவ்வளவு பேதைமை! என்று கூர்ந்து ஆராய்ந்து அதனைமாற்றி அன்பு ஊறும் உள்ளம் உடையராகுக. இதுகாறும் எடுத்துக்கூறிய தீயகுணங்கள் தமதுள்ளத்திற் சிறிதுந் தலைக்காட்டாதவாறு பழகவல்லார்க்கு அவர்தம் சிந்தையானது களங்கமற்ற தூயவானம்போல் தெளிவாய் இருக்கும்; அதிற்றோன்றும் அவர்தம் அறிவிச்சை செயல் களெல்லாம் ஒருங்கு திரண்டு அவ்வானத்திற்றிகழும் ஞாயிறு போல் ஒளிவிரிந்து துலங்காநிற்கும். அவை அங்ஙனந் துலங்கவே அவற்றில் நிறைந்து புறப்படும் அறிவாற்றல் அளவற்றவலுடையதாய் அவர் வேண்டிய வெல்லாம் வேண்டியவாறே பெறுமாறு எய்துவிக்கும். இவ்வியல்பினராய் உள்ள பெரியவரின் உயிர் மிகவும் தூய்மை உடையதாய்ப் பொலியுமாகலின், அவ்வுயிரின் வழிப்பட்ட அவரதுடம்பும் மிக்க தூய்மை உடையதாகிப் பொன்னிறமாய் வலிவுற்று விளங்கி ஒரு நூற்றாண்டினும் மிகுந்த நாள் அவ்வுயிர்க்கு இருப்பிடமாய் நிலவும். ஏனென்றால், மனிதனுடைய நினைவின் வழித்தாகவே அவனுடம்பும் அவ்வுடம்பில் அமைந்த கருவிகளும் இயங்கா நிற்கும். குடிகாரன் உடம்பையும் அவன் உறுப்புக்களையும் உற்றுப் பாருங்கள். குடியன் அல்லாத தூயோன் உடம்பையும் உறுப்புக் களையும் சிந்தித்துப் பாருங்கள்; அவை இரண்டிற்கும் உள்ள வேற்றுமை எளிதிற் புலப்படும். இவ்வாறே எந்நேரமும் சினங்கொள்பவன் முகத்தையும் சினமின்றி அமைதியே யுடையவன் முகத்தையுஞ் சிறிது உற்றுப்பார்த்தால் அவை தமக்குள்ள வேற்றுமை தெள்ளிதிற் புலப்படும். இன்னுந் துயரமுள்ளவன் முகக்குறியும், மனமகிழ்ச்சியுள்ளவன் முகக்களையும் எளிதிலே கண்டு கொள்ளலாம். பொருளை நல்வழியிற் செலவிடாமல் இறுகப் படிக்கும் பிசுனனுடைய முகச்சுளிவையும், அதனை அருளோடு நல்வழியில் ஏராளமாய்க் கொடுக்கும் ஈகையாளன் முகத்தெளிவையும் எவரும் இனிது தெரிந்துகொள்ளக் கூடும். இப்படியே உயிர்களின் நற்குண நிகழ்ச்சிக்கு இயைந்த உறுப்புக்களின் அமைவையும், தீக்குண நிகழ்ச்சிக்குப் பொருந்தின உறுப்பின் சுளிவுகளையும் உற்றுப்பார்த்துப் பழகிவரும் பழக்க உணர்வால் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாய் உணரலாம். அல்லது உறுப்படையாளங்களைக் கொண்டு ஒருவர் உள்ளத்தின் உண்மைகளை நிச்சயித்துரைக்கும் உறுப்படையாள நூலைக் கொண்டும் மனிதர் இயற்கைகளைப் பெரும்பாலும் நன்கறியலாம். ஆகவே, உயிர் ஆற்றலினையும் உடல் ஆற்றலினையும் ஒருங்கு பெருகச் செய்யவேண்டும் என்னும் நல்விருப்பம் உடையவர்களெல்லாரும் மேற் கூறியவற்றைப் புறக்கணித்து விடாமல் நல்ல குணங்களிற் பழகுவதற்கு இடையறாது முயன்றுவரல் வேண்டும். சிலர் நற்குணங்களிற் பழகுவது அருமையாயிருத்தலின் அது செய்தற்குக் கூடவில்லை என்று போக்குக் காட்டுகின்றார்கள். தீக்குணத்திற் பழகுவதுந் துன்பம், அதனால் வருவதுந் துன்பம், அதனால் இம்மை மறுமை யிரண்டினும் அனுபவிப்பதுந் துன்பம்; இவ்வாறு எப்போதுந் துன்பத்திற்கே இடமாய் எல்லாராலும் வெறுக்கப்படுவன வாகிய தீக்குணங்களிற் பழகுவது கடுமையோ, பழகுதற்கும் நல்லனவாய்ப் பழகிய பின் இன்பத்தை அளிப்பனவாய் இம்மை மறுமை யிரண்டினும் மாறாத நலத்தை மேன்மேலும் விளைவிப்பனவாய் உள்ள நற்குணங்களிற் பழகுவது கடுமையோ என்று சிறுமகாரைக் கேட்பினும் அவர் நற்குணப்பழக்கமே எளியதும் இனியதும் எனக் கூறுவராகலின் அச்சிறுமகார்க்குள்ள அறிவுதானும் இல்லாமல் தம்மைப் பெரியவராய்க் கருதியிருப்பவர் நற்குணப் பழக்கம் கடுமையானதென்று உரைக்கும் உரை நகைத்தற்கே இடமாவதாமென்க. 4. அமைதி இனி, மேற்கூறிய தீயகுணங்களை விட்டு நற்குணங்களிற் பழகுவதற்கும் உயிர் ஆற்றலை வீணே கழியவிடாமல் அதனைத் தடுத்து நிறுத்தித் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளுவதற்கும் மிக எளிதான ஒரு வழி இருக்கின்றது. இஃது ஆற்றின் நீரோட்டத்தை உற்றுப் பார்த்து அறிய வல்லவர்களுக்கு எளிதிலே புலப்படற்பாலதேயாம். ஆழமின்றிக் குறைந்த அளவுள்ள நீரோடும் ஆற்றினையும், ஆழம் மிக உடையதாய் மிகுந்தநீர் வெள்ளமாய்ப் பெருகி ஓடும் ஆற்றினையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆழமில்லாத சிறிய நீர் ஆரவாரத் தோடும் மிக விரைவாய் ஓடுகின்றது; ஆழமுள்ள மிகுந்த நீர் ஓசையின்றி அமைந்து செல்லும் ஒருவகை இனிய வேகமுள்ள தாய்ச் செல்லுகின்றது. இனி இவ்வாற்றின் இவ்விருவகை நீரோட்ட இயல் பினையும் அவையில் நின்று பேசும் புலவர் தன்மைகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஒருவர் ஒரு நிமிடத்தில் ஒன்பதினாயிரஞ் சொற்களை நிறைத்து அதிவேகமாய்ப் பரபரப்போடு பேசுகின்றார்; இவர் பேசுவனவற்றை அவையிலிருந்து கேட்போரில் யாருமே தெரிந்துகொள்ள மாட்டாதவர்களா யிருக்கின்றனர். கேட்பவர்களில் அறிவுடையராயிருப்பவர் `ஓ! இவரென்ன பொருளின்றி வெறுஞ் சொற்களை வாரியிறைத்து வீண்பொழுது போக்குகின்றார்! என்று அவர் தன்மைக்கு இரக்கமுற்று இருப்பர்; கேட்பவர்களில் அறிவில்லாத பேதைகள் `ஆ! இவர் திறமையை என்னவென்றுதான் சொல்லுகிறது! சும்மா முகில்போற் பொழிகிறார்! இவர்சொல்வதை நாம் அறிந்து கொள்ள ஆற்றலில்லையே! என்று வியப்படைகிறார்கள். அறிவுள்ளவர் அறிவில்லாதவர் என்னும் இருதிறத்தாரும் இங்ஙனம் பேசிக்கொள்வதிலிருந்தே இவ்விரு திறத்தார்க்கும் இத்தகைய புலவோர் சொற்பொழிவு சிறிதும் பயன்படுவ தில்லை என்பதைத் தெளிந்து கொள்கின்றோம். இனி மற்றொரு புலவர் தாம்பேசும் பொருளிலே கருத்தைப் பதியவைத்து அப்பொருளை எல்லார்க்கும் இனிது விளக்குவதற்கு எவ்வளவு சொற்கள் வேண்டுமோ அவ்வளவு சொற்களையுந் தேர்ந் தெடுத்து ஒரு வரிசைப்பட வைத்து ஆழ்ந்து அமைதியோடும் ஆரவாரமின்றி அளவான வேகத்தோடும் பேசுகின்றார்; இவர் பேசுவனவற்றைக் கேட்கும் அறிவுள்ளவர் அறிவில்லாதவர் ஆகிய எத்திறத்தவரும் இவர் தெளித்துப் பேசியவற்றைக் கேட்டு யாம் அறியப்பெறாதன வெல்லாம் விளக்கமாய் அறியப் பெற்றோம் என்று மனம் மகிழ்கின்றார்கள். இன்னுங் கோடைகாலத்து முகிலின் செயலையும் கார்காலத்து முகிலின் செயலையும்சிறிது பகுத்தறிந்து பாருங்கள்; கோடைகாலத்து முகில் சடுதியிற்றோன்றி ஒரு நொடிப் பொழுதிற் சடசடவென்று பல துளிகளை வாரி இறைத்து அடுத்த நொடியில் மறைந்து போகின்றது; இம்மழையால் நிலத்திற்கும் உயிர்களுக்கும் எவ்வகையான பயனும் உண்டாகக் காணோம். மற்றுக் கார் காலத்து மழையோ வானமெங்குங் கறுத்து எங்குங் கவிந்து ஒரே நிலையாக அமிழ்த தாரையென மழைநீரைப் பொழிந்து நிலத்தை வளம்படுத்திப் பயிர் பச்சைகளைச் செழிக்கச் செய்து எல்லா மன்னுயிர்கட்கும் அளவற்ற பயனை விளைக்கின்றது. இவ்வாறு எடுத்துக்காட்டிய இப்பொருள் நிகழ்ச்சிகளைக் கொண்டு அவசரமும் ஆரவாரமும் உள்ள இடங்களிலே பயன்படு பொருளும் நன்மையும் காணப்படுவதில்லை யென்பதும், அவையில்லாமல் அமைதியும் ஆழமும் உள்ள இடங்களிலே பயன்றருபொருளும் பெரு நன்மையும் பொருந்திக் காணப்படுமென்பதும் நன்கு தெரிந்துகொள்ளல் வேண்டும். இனி, அமைதியாக உள்ள ஆற்று வெள்ளம் மிகவும் ஆழமுடையதாயிருத்தல் போல, அமைதியாக இருப்பவர் அறிவானது மிகவும் ஆழ்ந்து செல்லுந் தரத்ததாய்த் தெளிவாய் இருக்கும் பரபரப்பும் ஆரவாரமும் உள்ளவர்க்கு அறிவு ஆழ்ந்து செல்லாது தெளிவாயும் இராது; இவருடைய உயிராற்றல் வீணே அழிந்தொழிவதல்லாமல் அஃது இவர்க்கும் பயன் படாது பிறர்க்கும் பயன்படாது. ஆகவே, உயிராற்றல் மிகுதிப்பட்டு அறிவும் ஆற்றலும் மேன்மேல் பெருக வேண்டுவார்க்கு எந்தக் காரியத்திலும் அமைதியோடிருக்கப் பழகுதல் இன்றியமையாத ஓர் அரிய பயிர்ச்சியாகும். அதனைப் பழகுமாறு யாங்ஙனம் எனிற் காட்டுதும். சொல்லுக்குஞ் செயலுக்கும் மனம் முந்தியதாகையால் முதலில் மன அமைதிபெறக் கற்றுக்கொள்ளல் வேண்டும். ஒருவர் ஏதேனும் ஒரு நல்ல காரியத்தைப்பற்றி நம்முடன் வந்து பேசும்போது, உடனே அதனை மனம் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டு பேசுதலும், அல்லததனை வெறுத்து மறுத்துப் பேசுதலும், அல்லது அதனைப்பற்றிய நமது கருத்தை உடனே சொல்லுதலுங் கூடாவாம்; அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டு அதில் விருப்பு வெறுப்புக் கொள்ளாமல் அதன் நன்மையை நமதுள்ளத்திலே நன்கு ஆராய்ந்து பார்த்து நம்மிடத்திலேயே அதன் முடிபை வைத்துக்கொள்ளல் வேண்டும். பிறகு அவர் நமது கருத்தைக் கேட்க விரும்பினால் மட்டும் நமது உள்ளக் கருத்தை உள்ளவாறே வெளியிடல் வேண்டும்; அங்ஙனம் வெளிவிடுங் காலத்தும் விரையாமல் வெகுளாமல் அமைதியோடும் அதனை வெளிவிட்டுச் சொல்லல்வேண்டும். ஒருவர் நமது கருத்தைக் கேளா திருக்கையில் நாமே அதனை வலியச் சென்று கூறுதல் பெரிதும் இகழத் தக்க தொன்றாம். இனி மற்றொருவர் பொல்லாத ஒரு காரியத்தை வந்து சொல்லும்போது அதனையும் கேட்க விருப்பம் இருந்தால் அமைதியோடுங் கேட்டு அது தனக்கும் பிறர்க்கும் தீங்கு பயப்பதாயிருந்தால் அதனை உள்ளத்தில் வையாது மறந்துபோகல் வேண்டும்; கூடுமானால் அது சொன்னவரை நயமாக நல்வழியில் திருப்பி அவரும் அதனை மறக்கும்படி செய்தல்வேண்டும். ஒருவர் ஓர் ஊர்ப் பயணம் போக வேண்டியிருந்தால், பயணம் புறப்படவேண்டிய காலத்துக்கு முன்னரே உடன்கொண்டு செல்லுதற்குரிய பொருள்களை ஓய்வாக எடுத்து முறைப்படக் கட்டிச் செல்லுமிடத்தில் முன்னரே தமது வரவைத் தெரிவிக்க வேண்டியவர்களுக்குத் தெரிவித்துக் குறித்த காலத்தில் மன மகிழ்வோடு புறப்படல் வேண்டும்; இங்ஙனஞ் செய்யாமல் பயணம் புறப்படுஞ் சமயத்தில் பொருள்கள் தேடித் தொகுத்தலும், அப்போதுதான் சொல்லவேண்டியவர்களுக்குச் சொல்லப் போதலும், குறித்த காலம் அணுக அணுக எல்லாம் எடுத்து வைக்கப்படாமையால் மிகப் பரபரப்புடன் இன்னது செய்வதெனத் தெரியாமல் திகைத்துக் கலங்குதலும், வண்டிபுறப்படுஞ் சமயத்தில் மிக விரைந்து ஓடுதலும், செல்லும் இடத்தில் முன்னாகத் தெரிவிக்க வேண்டியவர்களுக்கு அங்ஙனந் தெரிவியாமல் திடீரென அவர்களிடஞ் செல்லுதலும் தெரிவித்த காலந்தவறி வேறு காலத்திற் செல்லுதலும் போன்றவை யெல்லாம் பார்ப்பவர் நகைத்தற்கு இடமாவதோடு, தமது மன அமைதி கெட்டுத் தாம் துன்புறுவதற்கும் பிறரைத் துன்புறுத்துவதற்குமே காரணமாய் முடியும் என்க. இனித் தமக்கு அன்பராயுள்ளவர் ஒருவர் நோயாய் இருக்கக் கேட்டவிடத்து, அதற்காக மனம் வருந்துவது பொருத்தமே யாயினும், அவ்வருத்தத்திலேயே தமது சிந்தையை முழுதும் அழியவிடாமல், அவர் கொண்ட நோயை நீக்குதற்குரிய முறைகளை நாடி அவற்றைச் செய்விக்க வேண்டும். இனி அவர்க்குள்ள நோய் எவ்வகையான முறைகளினும் நீங்காதாய் அவருயிரைக் கொள்ளை கொண்டு போயவிடத்து, அதனான் மிக ஆரவாரஞ்செய்து கலங்காமல், அவ்வருத்தத்தைத் தம் உள்ளத்திலே அமைதியோடும் வைத்து வருந்தி, அவ்வருத்தம் பின் ஆறுதற்குரிய காலவெல்லை யடையுமாறு பிரிந்தவர் உயிரை நுண்ணுடம்பிற் பார்ப்பதற்கும், அவர் நுண்ணுடம்பில் நலம் பெற்றுச் செல்லுதற்கும் அன்போடு திருவருளை இறைஞ்சி வேண்டிவருக; இதனால், ஆற்றுதற்கரிய அவ்வருத்தம் நீங்கப்பெறுதலோடு இறந்தவரை நுண்ணுடம்பிற் காண்டலுங் கைகூடும். இனித் தமக்கு இலாபமான ஒரு நிகழ்ச்சி நேர்ந்தவிடத்து அதனைப் பார்த்துத் தம்மை மறந்த மனமகிழ்ச்சி அடைதலை ஒழித்து விடுக; இங்ஙனம் அளவு கடந்த மகிழ்ச்சி அடையப் பெற்றவர்க்கு உயிர் உடம்பை விட்டுப் பிரிந்து போய்விடுமாதலின், அதற்கு இடந்தராமல் ஒருவாறு மகிழ்ந்து அமைதியோடிருக்க வேண்டும்; இவ்வளவு இலாபமும் எம்பெருமான் அருள் செய்ததாகும் என்றுட்கொண்டால் மன அமைதி உண்டாகும். இதுபோலவே எதிர்பாராத பெரும் பொருள் இழப்பு வந்தால் அதனால் துயரமெய்தி ஏங்குதலை விடுதல் வேண்டும்: ஏனென்றால் திடீரென ஏக்கம் அடைந்தவர் களுக்கு உயிர் உடம்பைவிட்டு நீங்கிப்போகும்; இப்பேரிழப்பு ஏதோ ஒரு பெரு நன்மைக்காக எம் ஆண்டவன் அருளால் வந்ததாகு மெனக் கருதுதலே உள்ளம் அமைதி பெறுதற்கு எளிய வழியாகும். இங்ஙனமே கலக்கத்திற்கு ஏதுவாக வரும் நிகழ்ச்சிகளையும், அக்காலங்களினெல்லாம் மனவமைதி பெறவேண்டும் முறைகளையும் உரைக்கப் புகுந்தால் இது மிக விரியுமாதலின் இங்கே கூறியவற்றைக்கொண்டு கூறாதவற்றையும் உணர்ந்து கொள்க. இனி, இம்மனவமைதியின் வழித் தோன்றுவனவாகிய சொல்லமைதி செயலமைதிகளுள் சொல்லமைதியைப் பற்றிச் சிறிது கூறுகின்றோம். மக்கட் பிறவியில் வந்த உயிர்கள் சொற்களின் உதவி ஒன்றான் மட்டுமே ஒருவரோடொருவர் கலந்துறவாடி உயிர்வாழவேண்டியிருத்தலின் சொல்லமைதி யானது ஏனை எல்லாவற்றினும் மேலதாகக் கைக்கொண்டு ஒழுகற்பாலதாம். சொல்லால் உலகம் நிற்பினும் நிற்கும், அழியினும் அழியும். சொல்லமைதி இங்ஙனம் மிகச் சிறந்ததாயிருத்தல் பற்றியே தெய்வப் புலவர், யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்று திருவாய் மலர்ந்தருளினார். ஏனென்றால் தீயினாற் சுட்டபுண் நாட் சென்றாலும் உள்ளாறிவிடும்; நாவினாற் சுடுவதுபோற் சொல்லிய சொல்லால் உண்டான மனப் புண்ணோ நுண்மையாதலின் எத்தனைகாலஞ் சென்றாலும் ஆறாது நிலைபெற்றிருக்குமாதலின் என்க. இத்துணை வலிதாகிய சொல்லின் தன்மையுணர்ந்து, அதனை அமைதி பெறச் செய்தலில் கருத்தை நாட்டவேண்டுவது எல்லார்க்கும் இன்றியமையாத கடமையாம்; அவருள்ளும் அறிதுயிலைப் பழக விரும்புவார்க்கு அதன் இன்றியமையாமை இவ்வள வென்று வரையறுத்துச் சொல்லற்பாலதன்று. ஒருவரிடத்தே பேசப்புகுங்காலத்துத்தான் பேசப்போவது இன்ன செய்தியென்று தெளியவுணர்ந்து, அதனைத் தெளியப் பேசுவதற்கு எவ்வளவு சொற்கள் வேண்டுமோ அவ்வளவு சொற்களை மட்டும் நிறுத்து அளந்துபார்த்துச் செவ்வையாகப் பேசவேண்டும். தான் பேசுவதில் பயனற்ற ஒன்றாயினும் இருத்தல் ஆகாது. உண்மையல்லாதது ஒன்றைப் பேசப் புகுந்தால் அதனை மெய்யென நாட்டுதற்குப் பயனற்ற பற்பல சொற்களைப் பேசவேண்டி வருமாதலால், பொய்யான செய்தியை என்றும் பேசலாகாது. பயனற்ற செய்திகளையும் பேசிக்கொண்டிருத்த லாகாது. நம்முடைய உயிராற்றலானது ஓசையை நிலைக்களனாகக் கொண்டு நடைபெறுகின்றது. உரத்த ஓசையோடு பேசுமவனைக் கண்டு இவன் மிகுந்த வலிவுடையவன் என்றும், மிகமெலிந்த குரலோடு பேசுமவனைக் கண்டு இவன் வலியிழந்தவன் என்றும்சொல்கின்றோம் அல்லேமோ? மேலும், நெடுநேரம் பேசியிருந்தவன் அதனால் இளைப்புங் களைப்பும் அடைதலைக் காண்கின்றோம் அல்லேமோ? ஆகையால் பேச்சுகளை ஒடுக்க ஒடுக்க உயிராற்றல் வீணே செலவு செய்யப்படாமல் உள்ளடங்கி நிறைந்து மிக்க ஆற்றலை உடம்புக்கும் உயிருக்கும் தரும். இன்னுஞ் சிந்தையை அழுந்த வைத்துப் பேசாமல் மெலிதாக வைத்து வேறு நாட்டத்தோடு பேசும் போது சொற்களின் வழியே உயிராற்றல் மிகக் கழிந்து களைப்பினை விளைவிக்குமாதலால், பேசுஞ் சொற்கள் ஒவ்வொன்றினும் மனம்பற்றி நிற்குமாறு நின்று உரை நிகழ்த்தல் வேண்டும் இனி மனக் கிளர்ச்சிக்கு உரியவற்றைப் பேசுகையில் மிக்க மனக்கிளர்ச்சியையும், வருத்தம் பயப்பனவற்றைப் பேசுகையில் மிக்க வருத்தத்தையும், சினம் மிகுதற்குரியவற்றைச் சொல்லுகையில் மிகுந்த சினத்தையும், இகழ்வானவற்றைப் பேசும்போது மிக்க இகழ்ச்சியினையும், துயரந்தருதற் குரியவற்றைக் குறித்துச் சொல்லுகையில் மிக்க துயரத்தினையும், அன்பிற்குரியவற்றைப் பேசுங்கால் மிகுந்த மனஉருக்கத்தினையுந் தோற்றுவிக்கும் வலிய சொற்களைத் தெரிந்தெடுத்துப் பேசுதல் வேண்டும்; இங்ஙனம் பேசுவது இயற்கையாகவே எல்லா மக்களிடத்துங் காணப்படினும், அவ்வியற்கை வழுவாமற் பேசுவது கற்றவரிடத்தே அரிதினும் அரிதாய்ப் போகின்றது. பல திறப்பட்ட உணர்வுகளையும் அவ்வுணர்வுகளைத் தோற்றுவிக்குஞ் சொற்களையும் இனிதறிந்து அச்சொற்களை எடுத்து வழங்குந் திறத்தினால் அவற்றைக் கேட்பவர்களுக்கும் அவ்வுணர்வுகள் தோன்றுமாறு செய்யவல்ல திறமை நூல்கள் எழுதும் புலவர்களுக்கும், அவையில் நின்று கோவைப்படப் பேசுகிறவர்களுக்கும் மனக்கவர்ச்சி அறிதுயில் முதலிய முறைகளைக் கற்று வல்லுநராக வேண்டுகிறவர்களுக்கும் இன்றியமையாது வேண்டப்படுவதாம். ஆகையால் எந்தச் செய்தியைப்பற்றிப் பேசத் துவங்கினாலும் அச்செய்திக்குரிய உணர்வு பிறக்குமாறு பேசுதலைப் பலகாலுங் கவனித்துப் பழகிவருக. இனிச் செயலமைதியைப் பற்றிய சில இன்றியமையாத குறிப்புகளையும் இங்கே எடுத்துப் பேசுகின்றோம். எத்தொழிலைச் செய்தாலும் அத்தொழில் மனத்தோடு கூடியே நடைபெறுமாறு செய்தல் வேண்டும். மனம் ஒன்றனை நாடக் கை முதலிய உறுப்புகள் வேறொன்றனைச் செய்யுமாறு ஒழுகுதல் உயிராற்றல் வீண்கழிந்து போவதற்கே ஏதுவாம். அங்ஙனமாயின் மனத்தின் சேர்க்கையின்றி உடம்பில் உள்ள உறுப்புகள் தாமாகவே அசையப் பெறுமோவெனின்; அவ்வியல்பினை ஒருசிறிது விளக்கிக் காட்டுவாம். குழந்தையாயிருந்த பருவத்தில் உயிர்கள் தம் உடம்புகளில் உள்ள உறுப்புகளை அசைக்கத் துவங்கியபோது மனத்தை அவற்றிற் பதிய வைத்தே அவற்றைத் தமது கருத்துப்போல் கையாளத் தெரிந்துகொண்டன; அவ்வாறு அடுத்தடுத்து அவற்றைக் கையாண்டுவந்த பழக்கத்தால் பின்னர் அவற்றை அசைக்குங் காலங்களிலெல்லாம் கருத்து ஊன்றாமலே அங்ஙனஞ்செய்து வரலாயின. முதன்முதல் ஒரு சிறுபிள்ளை கலத்திலிட்ட சோற்றைக் கையில் அள்ளி வாயிற்கொண்டுபோய் வைப்பதற்குள் எத்தனைமுறை தவறுகிறது! எத்தனைமுறை திரும்பத்திரும்ப அதனிற் கருத்தூன்றி முயல்கின்றது! சிலநாட்களில் அதனைக் கற்றுத் தேறிய பிறகு, அப்புறம் அதிற் கருத்து வையாமலே அதனை எளிதிலே செய்து முடித்தலையும் பாருங்கள். சிறு பிள்ளைகளினிடத்துக் காணப்படும் இச் செயல், வேறு பல திறப்பட்ட முயற்சிகளிற் பெரியவர்களிடத்துங் காணப்படுகின்றது. திருமுருகாற்றுப்படை போன்ற பெரிய பாட்டை நெட்டுரு பண்ணுகிறவர்கள் எவராயிருப்பினும், அது நினைவில் ஏறும்வரையில் எவ்வளவு கருத்தூன்றிப் படிக்கிறார்கள்! பின்னர் அது நன்றாக நினைவில் அழுந்தியவுடன் மனஞ் செலுத்தாமலே அவர்கள் வாய்ப்பாடமாகத் தங்குதடையின்றி ஓதுவதையும் பார்த்திருக்கின்றோம் அன்றோ? இன்னும் வீணை முழவு முதலான இசைக்கருவிகளிற் பழகுகின்றவர்களைப் பார்த்தாலும் இம்முறை நன்கு விளங்கும்; தொடங்கும்போது மிகவும் வருத்தப்பட்டுப் பயிலுதலையும், பயின்றானபின் பார்ப்பவர்கள் வியக்கும்படியாக அவற்றை வாசித்தலையும், நாம் நம் கண் எதிரே காண்கின்றோம்; பயிலத் துவங்கியபோது அவர்களுடைய மனம் அப் பயிற்சியில் அதன்கண் அது முனைத்து நில்லாமை நாம் விளக்கமாக அறிந்த உண்மையேயாம். இங்ஙனமே தொடக்கத்தில் அறிதற்கும் செய்தற்கும் மிக அருமையாகத் தோன்றிய பெரும்பெருங் காரியங்களெல்லாம் பின்னர்ச் சிலநாள் அவற்றிற் பழகியதும் அறிதற்கும் செய்தற்கும் மிகவும் எளிதாதலை நமது பழக்கத்திற் செவ்வையாகத் தெரிந்திருக்கின்றோம். எனவே, மனமானது ஒன்றை முதன்முதல் அறியத்துவங்கி முயல்கையில் அறிவோடு முனைத்துநின்று வலிவுற்று விளங்குகின்ற தென்றும், அதனை யறிந்து தேறியபின் அறிவுகுறைந்து முனைப்பின்றி அதனைச் செய்துபோகின்ற தென்றும் தெளிந்து கொள்ளல்வேண்டும். அங்ஙனந் தெளியவே, அறிந்து பழகியவற்றில் முனைப் பில்லாத நிலையிலும், புதிதாக அறிய வேண்டுவனவற்றில் முனைப்போடுகூடிய நிலையிலும் ஆக இருதிறப்பட்ட நிலையில் இயங்கி எல்லா உறுப்புகளையும் இயக்கும் இயல்பினது மனம் என்பது பெறப்பட்டது. முனைப்பின்றி இயங்கும் மனத்தின் நிகழ்ச்சியையே `பழக்கம் என்றும், முனைப்புற்று இயங்கும் மனத்தின் றொழிலையே `அறிவு நிகழ்ச்சி என்றும் வழங்கி வருகின்றோம். பழக்கத்தால் அறிவு மழுங்கிய மனத்தின் சேர்க்கைஉடம்பிலுள்ள எல்லா உறுப்புகளிலும் இருத்தலால், புதிதாக ஒன்றிலே மனத்தின் ஓட்டத்தைத் திருப்பும்போதும், முன்னமே பழகிய இடங்களிற் சேர்ந்து அவற்றையும் அஃது அசைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், மனம் என்னும் நுண்ணிய கருவி சூக்கும சரீரமாகிய நுண்ணுடம்பிற் பொருந்தி யிருக்கின்றது; அது தூலசரீரமாகிய பருவுடம்பில் மூளையைப் பற்றிக்கொண்டு இயங்கிப் புறப் பொருள்களை அறிந்த பிறகுதான் விளக்க முடையதாகின்றது. அங்ஙனம் பருவுடம்பின் வழியே இயங்காமல் நுண்ணுடம்பில் மட்டும் நிற்குமாயின் அது மழுக்கமடைந்து மலினமுற்றுப் போகுமென்பது உயிர்களின் அறிவு நிகழ்ச்சியைப் பகுத்து ஆராயுங்கால் இனிது புலப் படுகின்றது. பிறந்த மகவின்பால் உள்ள மன உணர்ச்சியானது கண்முதலான ஐம்பொறிகளின் வழியாகப் புறப்பொருள்களை அறியாமலே கிடந்துவிடுமாயின் அதற்கு அறிவு சிறிதும் உண்டாகாதென்பதை யாம் சொல்லவும் வேண்டுமோ? சாணையில் வைத்துத் தேயாவிட்டால் விலை யுயர்ந்த வைரக் கல்லிற்கும் கூழாங்கல்லிற்கும், ஏதேனும் வேற்றுமை தோன்றுமா? அதுபோலவே, உயிர்களின் அறிவு துலங்குதற்குக் கருவியான மனம் பருவுடம்பிலே முனைத்துநின்று வெளிப் பொருள்களை அறிய அறிய அறிவொளி மிகப்பெறுகின்றது. இஃது இங்ஙனம் அறிவொளி கொள்ளக் கொள்ள இஃது இயற்கையாகவே பொருந்தியிருக்கும் நுண்ணுடம்பில் அவ்வொளி பரவுகின்றது. நுண்ணுடம்பு அறிவொளி மிகப் பெறுதலும் அது, மனத்தின் முனைப்பான சேர்க்கையில்லாத பருவுடம்பு உறுப்புகளை அசைத்துவருகின்றது. இதனை ஓர் எடுத்துக்காட்டால் இனிது விளக்கிக் காட்டுகின்றாம்: அன்பிற்சிறந்த நண்பர் இருவர் பல உயர்ந்த செய்திகளைப் பற்றிப்பேசிக்கொண்டு ஓரிடத்திலிருந்து உணவு அருந்துகையில், அவர்தம் மனமானது அச்செய்திகளிலேயே அழுந்தி நிற்க, அவர்களின் கையும் வாயும் சிறிதுந் தவறாமல் உணவெடுத் துண்ணும் தொழிலைச் செய்து கொண்டிருக்கின்றன; ஆண்டிற்பெரிய இவர்கள் இங்ஙனஞ் செய்வதைப்போல ஆண்டிற் சிறிய இளங்குழவிகள் ஒரே காலத்தில் அங்ஙனம் இருவகைப்பட்ட தொழில்களைச் செய்ய மாட்டாதனவாகும்; அஃதேனென்றால், மழுங்கிக் கிடந்த குழந்தை களின் மனவுணர்வு அப்போதுதான் முதன்முதல் வெளிப்பொருள்களையும் பருவுடம்பின் உறுப்புக்களையும் கையாளத் துவங்குகின்றமை யாலும், அதனோடு இயைந்து நிற்கும் நுண்ணுடம்பும் அவ்வாறே மழுங்கிக் கிடத்தலாலும் அவை ஒருகாலத்து ஒருதொழிலையன்றி வேறொன்றனைச் செய்தற்குரிய விரிவும் வலிவும் துலக்கமும் இல்லாதனவா யிருக்கின்றன. இனி இங்கே உணவருந்தும் ஆண்டிற்பெரிய நண்பர் களுக்கோ குழந்தைப் பருவ முதல் அடுத்தடுத்து நிகழ்ந்த பழக்கத்தால், அவர்தம் மனவுணர்வானது விரிவும் வலிவும் துலக்கமும் உடையதாகித் தன்னோடு இயைபுடைய நுண்ணுடம்பையும் விளக்கமுடையதாகச் செய்தமையால், அது வேறுபொருள்களில் அழுந்தி நிற்கும் போதும், அவர் கையும் வாயும் நுண்ணுடம்பால் இயக்கப்பட்டு அடிசில் உண்ணுந் தொழிலைச் செய்துகொண்டிருப்பவாயின. பருவுடம்பில் முனைத்து நின்றறியும் அறிவை இழந்த மனம் அவ்வறிவை நுண்ணுடம்பில் நடைபெற வைத்து, அதனாற் பழக்கப்பட்ட தொழில்களை நாம் அறியாமலே செய்துகொண்டு, நாம் பழகவேண்டுவனவற்றில் மாறிமாறி ஓடுகின்றது. அவ்வாறாயின், முனைப்பின்றி நுண்ணுடம்பில் நின்று பழகியவற்றை இயக்குவதும், பழகாதவற்றைப் பருவுடம்பில் நின்று முனைப் புடன் இயக்குவதுமாகிய மனம் ஒன்றோ அல்லது இரண்டோவெனின்; ஈரிடத்தும் இயங்குவதும் இயக்குவதும் ஒருமனமேதான்; மனத்தினுடைய வேகம் கணக்கிடுவதற்கு அரிதாயிருத்தலின் அது நுண்ணுடம்பில் நின்று பழக்கமாய்ச் செய்வனவற்றையும் பருவுடம்பில் நின்றுமுனைந்து செய்வன வற்றையும் மிகு விரைவாய் மாறி மாறி ஓடிச்செய்கின்றது. ஆகவே, மனத்தின் சேர்க்கையினாலேதான், நாம் வேறொன்றை நினைந்திருக்கையிலும், நம் கை வாய் முதலிய உறுப்புகள் அசைகின்றன வென்னும் உண்மை தெளிந்துகொள்ளப்படும். அங்ஙனமாயின், பழக்கமாய்ச்செய்துவருவனவற்றை நாம் உற்று நோக்காமலே நம்மனமானது நுண்ணுடம்பில் நின்று செய்துவருதலும், நாம் அச்சமயங்களில் கவனிக்க வேண்டிய வேறு பொருள்களைக் கவனித்து வருதலும் நமக்கு வருத்த மில்லாத எளிய நிகழ்ச்சியாயிருத்தலோடு அதனால் இருவகைப் பயன்களும் விளையக் காண்டலின் அவ்விருவகைப் பட்ட நிகழ்ச்சி ஆகாதென்று சொல்லுவது என்னையென்றால், ஒன்றில் உள்ளத்தைப் பதியவைக்கும்போது, அதே சமயத்தில் வேறொன்றையும் நாம் செய்குவமானால் அவ்விரண்டினையும் செய்யும்பொருட்டு நம் உள்ளமானது மிகு விரைவோடும் நுண்ணுடம்பிலும் பருவுடம்பிலும் மாறி மாறி ஓடும்; அங்ஙனம் ஓடுவதனால் நமது உயிராற்றல் மிகுதியாக வீண்கழிந்து போதலோடு உள்ளத்தை ஓடாமல் நிறுத்த வேண்டிய காரியத்திலும் அது பதிந்து நில்லாமல் ஒழியும். மனத்தின் சேர்க்கையின்றி எந்த உறுப்பும் அசைய மாட்டாமை மேலே காட்டப் பட்டமையால், அது முனைத்து நின்றாலும் முனையாது நின்றாலும் உறுப்பின் அசைவு உள்ள வித்தெல்லாம் அதுவும் உண்டென்பது தெளிபொருளேயாம். ஆகவே ஒன்றைப் பற்றி நிற்கும்படி அதனை ஏவுகையில், நமதுடம்பில் எந்தவகையான தொழிலேனும் அதே சமயத்தில் நிகழும்படி விடுவோமாயின் மனமானது அவ்விரண்டினையும் செய்தற்கு அதிவேகமாய் மாறி மாறி ஓடுவதல்லாமல், ஒன்றிலேயே நெடுநேரம் குவிந்து நிற்கமாட்டாது. குவிந்து நில்லாமையின் அவ்விருவகை நிகழ்ச்சியால் இருவகைப் பயன்கள் விளைவது யாங்ஙனம்? அல்லது, அங்ஙனம் வியுமென்றே கொள்வோ மாயினும் நிலைபெறாத சிறுபயன்களை ஒருகாற் பெறலாமன்றி நிலையாயுள்ள பெருநலன்களைப் பெறுதல் சிறிதும் கூடாது. அல்லாமலும், பருவுடம்பில் முனைத்து நின்று அறிவோடு விளங்கும் மனம் பழக்கத்தால் நுண்ணுடம்புகளில் முனைப்பும் அறிவும் இல்லாமல் இயங்கும்படி விட்டு வருவோமானால் நமதுயிர் நுண்ணுடம்புகள் நான்கிலும் அறியாமையிற் கிடந்து, தன்னையும் அளவிடப்படாத அறிவும் ஆற்றலும் கொண்டு தன்னுள் இருக்கும் கடவுளையும் தெரிந்து கொள்ளாமற் பிறப்பு இறப்பு வட்டங்களிற் சுழன்று எவ்வகைப் பயனும் அடையாமல் துன்பத்திற்கு ஆளாய்க் கழியும். ஆகையால், இப்பிறப்பில் அளவிறந்த நலன்களைப் பெறுதற்கும், இனிவரும் பிறவிகளை இதனினுஞ் சிறந்ததாகச் செய்தற்கும், முற்பிறப்பில் நிகழ்ந்தவற்றை இப்பிறப்பிலும் இப்பிறப்பில் நிகழ்வனவற்றை இனிவரும் பிறவியிலும் அறிந்து உயிரினறிவைத் தொடர்புறச் செய்தற்கும், இங்ஙனம் வரும் பேரறிவால் இறைவனது நிலையை யுணர்ந்து இன்புறுதற்கும் இன்றியமையாத முயற்சியாவது இப்பருவுடம் பிலும் இதனுள்ளிருக்கும் நுண்ணுடம்புகள் நான்கிலும் ஒரே தன்மையாக நமதறிவு முனைத்து விளங்கச் செய்தலேயாம். நனவில் இப்பருவுடம்பில் நின்று அறிந்தவற்றை கனவில் நுண்ணுடம்பிற் சென்றவுடன் முற்றும் மறத்தலும், கனவுடம்பில் அறிந்தவற்றை நனவுடம்பில் வந்தவுடன் பெரும்பான்மையும் மறந்துபோதலும், நனவுடம்பில் `யான் நனவுநிலையில் இருக்கின்றேன் என்று அறிதல் போலக் கனவுடம்பிலும் அங்ஙனம் `நான் கனவுநிலையில் இருக்கின்றேன் என்று அறியக்கூடாமல் இருத்தலும் நமதுணர்வின் சிறுமை யினையும் அஃது அறியாமையாற் சூழப்பட்டிருத்தலையும் இனிது விளக்குகின்றனவல்லவோ? இவ்வாறு நமதுயிரினறிவைப் பொதிந்துகிடக்கும் இருளைத் தொலைத்தாலல்லாமல் நாம் இறைவன் அருளே விளங்கும் ஒளியுலகத்திற் செல்வதற்கு வழியில்லையே! இனி இத்துணை வலிவுடன் நமதறிவைப் பற்றியிருக்கும் அறியாமை யிருளைப் போக்குதற்கு மிக எளிதான வழி என்னென்றால், எவ்விடத்தும் எந்நேரத்தும் நம்மனவறிவு முனைத்து நின்று விளங்குமாறு இடைவிடாது முயலலேயாகும். ஒன்றில் நமதறிவு முனைத்து நிற்கையில், கை கால் முதலான உறுப்புகளில் ஒன்றும் சிறிதேனும் அசைய விடுதலாகாது; அன்றி அசைய விட்டால் ஒன்றில் முனைத்துநின்ற மனம் அதனை விட்டு அவ்வுறுப்புகளை அசைத்தற்பொருட்டு மிகுதியும் விரைவாக ஓடிப் பின்னர் மீளும். இங்ஙனம் ஓடி மீள்வதனால் உயிராற்றல் வீணே அழிவதோடு மனமும் அடங்காத ஓட்ட முடையதாய்ப் பழகி விடும். இப்போது மக்களிற் பெரும்பாலார் தாம் செய்துவரும் தொழில்களை யெல்லாம் பழக்கமாய்த் தம்மை மறந்தே செய்துவருகின்றனர். அவற்றிற்குச் சிற்சில உதாரணங்கள் எடுத்துக்காட்டி அவற்றைத் திருத்தி உணர்வுடன் நடைபெறச் செய்விக்குமாறுங் காட்டுவாம். நமதுடம்பைப் பாதுகாத்தற்கு இன்றியமையாததான உணவருந்துந் தொழிலைப்பற்றி முதலிற் பேசுவாம். ஒருவர் பலரோடியிருந்து உண்ணுங்கால் பலதிறப்பட்ட பொருள்களைப் பேசிக்கொண்டே அவர் தமது மனத்தைச் செல்லவிட அவர் தம் கையும் வாயும் உணவுகொள்ளுந் தொழிலைச் செய்கின்றன; அவ்வாறன்றி அவர் தனியேயிருந்துண்ணுங்கால் அங்ஙனமே தம் மனம் பல பொருள்களை நாடி நிற்ப அவர் கையும் வாயும் அத்தொழிலைப் புரிகின்றன. இங்ஙனம் பிளவுபட்ட இருவகை நிலையில் தமதுள்ளத்தை நடைபெற விடுதலினாற்றான் மக்களிற் பெரும்பாலார் உண்டது செரியாமல் பலவகை நோய்களால் வருந்துகின்றனர்; நினைவு உணவருந்துந் தொழிலைவிட்டு வேறொன்றைப் பற்றுதலால் உயிராற்றலும் வீணே கழிந்து போகின்றது. நமது அறிவு ஒன்றை முனைத்து நின்று அறியும்போது மிகவும் வலிவுடையதாகி விளங்குகின்றது என்பதனை மேலே காட்டினாம்; அதனோடு அறியப்பட்ட பொருளினியற்கையும் தெளிவாகப் புலப்படுகின்றது; நுகரப் பட்ட பொருளும் நமதுடம்பினும் உயிரினும் ஒன்றுபட்டு மகிழ்ச்சியைத் தருகின்றது ஆதலால், உணவருவந்தும்போது சிந்தையை வேறிடங்களிற் செல்லவிடாமல், சுவைக்கப்படுகின்ற உணவினிடத்தே நிறுத்திச் செவ்வையாகமென்று தின்போ மானால் மிகச் சிறந்த பயன்களை அடையலாம். தித்திப்பு துவர்ப்பு முதலான சுவைகளையுடைய பண்டங்களைத் தெரிந்தெடுத்து நாவிலிட்டு அறிவோடு சுவைத்து மென்று பாருங்கள்! அவை நிரம்பச் சுவையுடையனவாய் இன்பந் தருதலைக் கண்டு கொள்வீர்கள்; அங்ஙனஞ் சுவைத்து மெதுவாக உண்ணும்போது அளவுக்கு மிஞ்சித் தின்ன இடமுண்டாகாது; தின்னப்பட்ட பண்டங்களும் வாயினுள் நன்றாய் அரைக்கப்பட்டுக் குழம்பாய் இறங்குமாதலின், அதனை ஏற்றுக்கொள்ளுந் தீனிப்பையும் அதனை விரைவிலே சீரணஞ் செய்துவிடும். அறிவோடு சேர்த்துத் தின்னப்பட்ட அவ்வுணவால் இன்பம் மிகுதலோடு, அறிவின் வசப்பட்டு உள்ளிறங்கின அப்பண்டமும் வலிவு நிறைந்து இரத்தத்தில் கலந்து உடம்பைப் பெரிதும சுத்தமான நிலையில் உறுதிப்பட வைக்கும். அறிவின்றி உண்ணப்படும் உணவுப் பொருள்கள் மெல்லப்படாமல் விரைவில் விழுங்கப் படுதலால் அவை அளவுக்குமேல் உட்கொள்ளப்படுவதோடு நன்றாக அரைக்கப் படாமையால் தீனிப்பையில் நிறைந்து அதற்குக் கடுமையான வேலையையும் தருகின்றன. முன்னுண்டது செரிப்பதற்குள் பின்னும் பின்னும் உணவையுட்கொண்டு தீனிப்பையைக் கெடுத்து விடுகிறார்கள்; அது கெடவே, உண்ட உணவு அழுகி நஞ்சாகி இரத்தத்திற்கலந்து பலதிறப்பட்டநோய்களை வருவிக்கின்றது. இவ்வளவுக்குங் காரணம் என்னை யெனில், மனவறிவோடு சேர்ந்து நின்று உணவருந்தாமையேதான். உணவு கொள்ளும்போது `எவரோடும் பேசுதலாகாது; அன்றிக் கட்டாயமாகப் பேசவேண்டியிருந்தால் பேச்சு முடியும் வரையில் உணவெடுத்து அருந்தாமல் சும்மா இருந்து பேசுதல் வேண்டும்; இன்னும் அப்போது கை கால் முதலான உறுப்புக்களை வேறுவகையில் அசைத்தலும் ஆகாது. மனத்தால் வேறொன்றனை நினைத்தலும் ஆகாது. இந்த வகையான பழக்கத்தை உணர்வோடு தேடிக்கொள்வார் களாயின், மக்கள் இப்போது உண்ணும் உணவிற் பாதிதான் உண்பார்களென்பது திண்ணம். அங்ஙனம் பாதி உண்பாராயினும் அது முன்னுண்ட பேருணவினுஞ் சிறந்ததாய் உடம்புக்கு நன்மையையும் வலிவையும் தூய்மையையும் தந்து உயிர்க்கும் உயர்ந்த இன்பத்தினையும் விளைவிக்கும். இனி நடத்தற்றொழிலைப் பற்றிச் சிறிது சிந்திப்போம். பெரும்பாலார் நடந்து செல்லும்போது தாம் நடப்பதாகவே உணர்வதில்லை. தம் உள்ளமானது பலவகைப்பட்ட பொருள் களைச் சிந்தித்தவண்ணமாயிருக்கத் தாம் அசைந்தசைந்து தளர்ந்த நடையிற் செல்கின்றார்கள். இவ்வாறு நினைவொரு பக்கமும் நடக்கும் முயற்சி மற்றொரு பக்கமுமாய்ப் பிளவுபடப் போவதனால் உயிராற்றல் பெரிதும் வீண்கழிந்து விடுகின்றது. நடக்குந் தொழில் உடம்புக்கு மிக்கவலிவினையும் உயிர்க்கு மிகுந்த கிளர்ச்சியினையுந் தருதற்கு உரியதாயிருக்கவும், அதனிடத்தே மனத்தைப் பொருந்தவையாமல் பலவழியே ஓடவிட்டுச் செல்வதும், அதனால் நோய் வந்தபின் நோயின் காரணம் இங்ஙனம் மிக எளிதாயிருத்தலை உணராமல் அளவில்லாமல் மருந்துண்டு துன்புறுதலும் எவ்வளவு பேதைமை! நமதுடம்பை நோயணுகாமல் வைத்து வளர்க்கும் பலவகை முயற்சிகளுள் நடக்கும் முயற்சியைவிடச் சிறந்தது வேறில்லையென்று உடற்கூறுபாட்டு நூலை யுணர்ந்த புலவர்களும் மருத்துவ நூல் அறிஞர்களும் வற்புறுத்திச் சொல்கின்றார்கள். உடம்பை வலிவுறச் செய்வதற்கு மல்லர்கள் செய்யும் பழக்கங்களைவிட நடப்பதாகிய பழக்கமே மிகமேலான தென்றும், மல்லர் செய்யும் பழக்கங்கள் இயற்கைக்கு மாறு பட்டனவாயிருத்தலால் அவற்றால் தீமையே உண்டாகின்றன வென்றும், நடைப்பழக்கமானது இயற்கையிலுள்ள தாயிருத்தலின் அஃதொன்று மட்டுமே உடம்பை இனிதுவளர்த்தற்குரிய நற்பழக்கமாகுமென்றும் பிராஞ்சு நாட்டுப் பேரறிஞர்களும் பகருகின்றார்கள். இவ்வளவு சிறந்ததாகிய நடைப்பழக்கமும் நினைவோடுகூடி நிகழாதாயின் அது சிறிதும் பயன்படாது போவதேயன்றி உடம்பின் வலிவையும் குறைப்பதாகின்றது. ஆகையால், எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் நினைவு அழுந்துமாறு விருப்பத்தோடு செய்தல்வேண்டும்; வேண்டா வெறுப்பாய்ச் செய்தலும் ஆகாது. நினைவோடும் விருப்பத்தோடுங் கூடிச் செய்யும் காரியங்கள் செய்வார்க்குங் காண்பார்க்கும் எவ்வளவு உயர்ந்தனவாயும் மகிழ்ச்சி தருவனவாயுமிருக்கின்றன! மனவுருக்கத்தோடும் மனக்கிளர்ச்சியோடும் ஒருவன் செய்து முடித்த ஒரு காரியத்தினையும், அவையிரண்டு மில்லாதவன் ஒருவன் வேண்டா வெறுப்பாய்ச் செய்து முடித்த மற்றொரு காரியத்தினையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் சொல்வதன் உண்மை தெளிவாய் விளங்கும். முன்னவன் செய்தது திருத்தமாயும் அழகாயும் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி தருவதாயும் இருக்கும். பின்னவன் செய்தது பிழையுள்ளதாயும் அழகின்றி அருவருப்புத் தோற்றுவிப்பதாயும் இருக்கும். இங்ஙனமே, நினைவோடும் விருப்பத்தோடும் நடந்து செல்வோன் நடையின் அழகையும், அவையின்றித் தளர்ந்து செல்வோன் நடையின் இழிவையும் கண்டுகொள்க. அதனால் நினைவும் விருப்பமும் வைத்து நடக்கும் நடையின் மேன்மை நன்கு புலப்படும். இனிக் கையாற் செய்யுந் தொழிலைப்பற்றிச் சிறிது பேசுவோம். கையாற் செய்யப்படுந் தொழில்கள் பெரும்பாலும் மனத்தின் சேர்க்கையின்றி நடை பெறுவதில்லை. காலின் றொழிலாகிய நடத்தல் குழவிப்பருவம் முதற் கொண்டே பழகியதாகலின், தம் உணர்வை மிகுதியுஞ் செலுத்தாமல் அனைவரும் அதனைச் செய்து வருகின்றார். மேலும், காலினாற் செய்யப்படுந் தொழில்கள் நடத்தல், ஓடல், இருத்தல் முதலான சிலவேயன்றிப் பலவில்லை கையினாற் செய்யப்படுந் தொழில்களோ ஒருவனது அறிவின் வளர்ச்சிக்கு ஏற்ப நாடோறும் புதியன புதியனவாய்த் தோன்றும் இயல்பை உடையன. புதிது புதிதாய்த் தோன்றும் செய்கை ஒவ்வொன்றும் மனவுணர்வோடு கூடியே நடைபெற வேண்டியிருத்தலிற் பெரும்பாலும் கைகளின் றொழிலெல்லாம் மனவுணர்வோடு ஒருங்கியைந்தே நடைபெற்று வருகின்றன. யாழ், முழவு, புல்லாங்குழல் முதலான இசைக்கருவிகளை வாசிப்பதில் எவ்வளவுதான் பழக்கம் ஏறப்பெற்றவர்களாய் இருந்தாலும், அவற்றினிடத்தே பலவகை இசைகளை எழுப்பிப் பாடுங்காலங் களிலெல்லாம் அவர்கள் தமது கருத்தைத் தம் கையிலும் கை விரல்களிலும் பொருந்த வைத்தே அவற்றை இயக்கி வருகின்றார். பலவகை உணவுப்பொருள்களைச் சமைப்பதில் எவ்வளவு தான் திறமை வாய்ந்தவர்களாய் இருந்தாலும் சமையல் செய்யுங் காலங்களிலெல்லாம் சமையற்காரர் தம் கைகளில் தமது நாட்டத்தை முழுதும் வைத்தே அத்தொழிலைச் செய்து போதருகின்றார். படம் எழுதுவதிற் கைதேர்ந்த, ஓவியக்காரர் நிலத்தின் பலவகைத் தோற்றங்களையும் உயிர்களின் உருவங்களையுந் தீட்டுகையில் அவர்கள் எவ்வளவு உன்னிப்போடு தமது கையை இயக்குகின்றாரென்பதை அருகிருந்து நோக்கும் எவரும் எளிதிற்றெரிந்து கொள்ளலாம். சிலம்ப வித்தையிற் பழகினவர்களும் கோல்களைக் கையிலெடுத்துச் சுழற்றுஞ் சமயங்களில் அவர்களின் கையுங் கருத்தும் ஒன்றுபட்டு நடத்தலைக் கண்டு வியவாதவர் யாருமிலர். இவைபோன்ற நிகழ்ச்சிகள் இன்னும் பலவற்றாற் கையின் றொழிலெல்லாம் மிகுதியாய்க் கருத்தின் றொழிலை ஒட்டியே இயங்கும் முறை நன்கு தெளியப்படும். இங்ஙனம் ஒருவனது அறிவை ஒருமுகப்படுத்தி அதனை நுட்பமாக வளர்த்து வருதற்கண் கையின்றொழில் நிரம்பவுஞ் சிறந்து நிற்கக் காண்கின்றோமாதலால், இத்துணைச் சிறந்த தாகிய இக்கையின் றொழிலைக் கருத்தின்றி வீண்செயல்கள் செய்யும்படி ஏவிப் பழகுதல் சிறிதும் ஆகாது. ஒருவர் எதிரி லிருக்கும்போதாவது, தனியேயிருக்கும் போதாவது கையில் துரும்பு, வெற்றிலைக் காம்பு முதலியவற்றை எடுத்துக் கிள்ளுதலும், கையாற் றலையைச் சொரிதலும், மற்ற உறுப்புகளைத் தடவுதலும், புத்தகங்களை எடுத்து மடக்குதலும் பலரிடத்தில் வழக்கமாய்க் காணப்படுகின்றன. இன்னோரன்ன வீண்செயல்களாற் கருத்தின் வழியே நடக்குங் கையானது அதனை விட்டு முக்கால்வாசி பிரிந்து இயங்குதலால், அறிவாற்றலானது வறிதே கழிந்து போகின்றது; அறிவின் வளர்ச்சியையும் இவை சிறிது சிறிதாத் தடைசெய்து நிற்கின்றன. இதுபோலவே, வேறு சிலர் பிறர் முன்னிலையிற் காலையும் தொடையையும் ஆட்டுகின்றனர். மற்றுஞ் சிலர் தனியே யிருக்கும்போதுந் தம்மை மறந்து இதழைக் குவித்து ஊதுகின்றனர். பின்னுஞ் சிலர் நிற்கும்போதும் இருக்கும் போதும் ஆடிக்கொண்டும், அசைந்துகொண்டும் இருக்கின்றனர். இன்னுஞ் சிலர் விரல்களை ஒன்றோ டொன்று சேர்த்துத் தேய்க்கின்றனர். மேலுஞ் சிலர், பிறர் எதிரே செய்யத்தகாத சில சிறு செயல்களைப் புரிகின்றனர். இன்னோரன்ன வீண் சிறு செயல்கள் மன அமைதியைப் பெறவேண்டுவார்க்கு இடையிடையே தடைகளாய் இருத்தலின் இவற்றை ஊன்றிப் பார்த்து இவை தங்கண்ணே நிகழாமல் நீக்கிக்கொள்ளுதல் அவர் தமக்கு இன்றியமையாத கடமையாம். இனிக் கை கால் முதலான உறுப்புகள் தொழில் இயற்றுங் கருவிகளேயல்லாமல், பொருள்களை அறியும் கருவிகள் அல்ல. ஆகையால், உயிரின் மன உணர்ச்சியானது கண், செவி முதலான அறிவுப்பொறிகளில் விளங்கித் தோன்றுதல்போலத், தொழிற் பொறிகளான கைகால் முதலானவற்றில் விளங்கித் தோன்றுதல் இல்லை. ஆகவே, கைகால் முதலான உறுப்புகளை எவ்வகையான தொழில் செய்யும்போதும் மனவுணர்வோடு கூட்டி நடத்துதலே நலமுடைத்தாம். அவை தொழில் புரியாத காலங்களிலெல்லாம் மனவுணர்வு தானாகவே அவற்றின்கண் முனையாது வேறு பிரிந்து நிற்க வல்லதாம். ஆனால், கண் செவி முதலான அறிவுப்பொறிகளிலோ மனவுணர்வு விளங்கித் தோன்றுந் தன்மைத் தாயிருத்தலின் அவை ஒரு பொருளைச் சிறிது நோக்கினாலும் ஓர் ஓசையைச் சிறிது கேட்டாலும் உடனே அவற்றின்கண் மனவுணர்வு வந்து நின்று விளங்கித் தோன்றும். ஆனதுபற்றிக் கண்ணுஞ் செவியும் புறப்பொருள் களையும் புறத்து ஓசைகளையும் எந்நேரமும் உற்றறியும்படி பழக்குதல் ஆகாது; அன்றி அங்ஙனம் பழக்கினால் அஃது எப்போதும் பருப் பொருளுணர்ச்சி மிகுந்து புறப்பொருள்களையே நாடிச் செல்லும் அல்லாமல், இந்த ஞானேந்திரியங்களை விட்டு வேறு பிரிந்து நிற்கவும், அங்ஙனம் பிரிந்து உண்முகமாய்த் திரும்பி உயிரின் நிலையும் உயிர்க்குயிராம் இறைவன் அருள் நிலையும் ஆராய்ந்துணரவும் மாட்டாதாகும். ஆதலால், உற்று நோக்குதற்கும் உற்றுக்கேட்டற்கும் உரிய காலங்களிலன்றி, மற்றக் காலங்களிலெல்லாம் மனவுணர்ச்சி யானது கண்ணிலுஞ் செவியிலுங் கலந்து நிற்கும்படி விடலகாது; எந்த நேரமும் அகத்தே நின்று பொருளினியல்புகளையும் உயிரினியல்புகளையும் முதல்வனியல்புகளையும் ஆராய்ந் தறியுமாறு அதனைத் தன் நிலையில் நிறுத்திப் பழக்குதல் வேண்டும். மேலும், உற்றுப் பார்த்தற்குங் கேட்டற்கும் உரிய நேரங்களில் மட்டும் மனனுணர்வு கண்செவிகளில் நின்றால், அக்கருவிகள் வலிமையுந் துலக்கமும் அடையும்; அவ்வாறன்றி அஃது எப்பொழுதும் அவைகளில் நின்று அவற்றை இயக்குமாயின் அவை ஓய்வில்லாத இயக்கத்தாற் பழுதுபட்டுக் கெட்டுவிடும். அவை கெடவே, மனவுணர்ச்சியும் குறைவுபடும். ஆதலால், மனனுணர்வு தன்னிலையில் நிற்கும்படி பயிற்றிக் கண்செவி முதலாயின புறப்பொருள்களை முனைப்பின்றிப் பொதுநோக்காற் பார்க்கும்படி விடுதலே செயற்பாலதாம். கைகால்கள் எந்நேரமும் மனதொடுகூடியே நடத்தல் வேண்டும் என்று நாம் சொன்னதுகொண்டு, கண் செவிகளும் அங்ஙனமே அதனோடுகூடி நடைபெறல் வேண்டும் போலும் என எண்ணி மாணாக்கர் மயங்காதிருத்தற் பொருட்டுக் கால்கைகளின் றொழில் நிலைகளைப்பற்றி ஓதவந்த இவ்விடத்திற் கண் செவிகளின் இயக்க முறைகளையும் சிறிதெடுத்துக் காட்டினேம் என்க. அங்ஙனமாயின், பிறிதொன்றை நினைக்குமிடத்தும் பிறர் ஒருவரோடு பேசுமிடத்தும் மனவுணர்வை அந்நினைப்பிலும் பேச்சிலும் ஒருமுகப்படுத்தி நிறுத்துதலே முறையாயினும் இவற்றிற்காகக் கால்களைச் சிறிதும் ஆட்டாமல் அசையாமல் கட்டைபோலவுங் கற்போலவுங் கிடக்கவிடுதல் மிகவும் வருத்தமான பழக்கமாய் முடியுமேயெனின்; நமது கருத்து அஃது அன்று. ஒன்றை நினைக்குமிடத்தும் ஒருவரோடு பேசுமிடத்தும் நினைவு கலையாதிருக்கும் பொருட்டு அந்நேரங்களில் உடம்பின் உறுப்புகளை ஆட்டாமலும் அசையாமலும் வைத்துக் கொள்ள வேண்டுமென்றதே யன்றி, வறிதேயிருக்கும் மற்றச் சமயங்களில் அங்ஙனம் அவற்றை வைத்திருக்க வேண்டுமென்று கூறினோ மில்லை. ஆடாமலும் அசையாமலும் உறுப்புகளை எப்பொழுதும் வைத்திருத்தல், அவ்வுறுப்புகளின் வலிவைக் குறைக்குமாதலால், சும்மா இருக்குஞ் சமயங்களில் அவற்றிற்கு நலம் உண்டாகும் பொருட்டு அவற்றை நினைவோடு கூடி ஆட்டுதலும் அசைத்தலும் வேண்டும். அதுநிற்க. 5. நரம்பு இளக்கம் இன்னும் மன அமைதியை மிகுதிப் படுத்திக்கொள்ளு தற்கு நமதுடம்பிலுள்ள நரம்புகளை எளிதாக இளக்கிக் கொள்ளும் முறையினை நாம் நன்கு தெரிந்து பழகல் வேண்டும் உடம்பிலுள்ள பல்லாயிரம் நரம்புகளும் அவ்வுடம்பிற் பொருந்திய பலவகை உறுப்புகளையும் இயக்குதற் பொருட் டாகவே அமைக்கப் பட்டிருக்கின்றன. அவை அவ்வுறுப்புகளை இயக்கும்போது மட்டும் இறுக்கமாய் நிற்கும்; அவை இறுக்கமாய் நிற்கையில் அவற்றின் வழியே உயிரின் உயிராற்றலானது செலவழிந்து கொண்டே போம். உயிராற்றலானது உறுப்புகளை அசைத்துத் தொழில் இயற்றுங் காலங்களில் மட்டும் செலவாதல் நன்று; அஃது ஏதொரு தொழிலுஞ் செய்யாதிருக்கையிலும், அஃது அங்ஙனம் செலவுற்றுக் கழியும்படி விடுதல் நன்றாகாது. ஒருவன் ஒரு கடிதம் எழுதும் முயற்சியில் இருக்கும்போது, அவன் செவ்வனே ஓரிடத்தில் அமர்ந்து எழுதுகோலைக் கையிற் பற்றிக்கொண்டு கண்ணுங் கருத்தும் எழுதும் எழுத்திலும் பொருளிலும் ஊன்றி நிற்க அத்தொழிலைப் புரிகின்றான்; இத்தொழிலைச் செய்து முடித்தற்குக் கருவியாவன; அவன் தனது உடம்பை நிமிர்த்தி யிருத்தலும், எழுதுகோலைக் கையிற் பற்றியிருத்தலும், பற்றிய அதனால் கண்ணுங்கருத்தும் ஊன்றி எழுதுதலுமே யாகும்; இம்மூன்று தொழிலும் செய்தற்குக் கருவிகளான உடம்பும், கையும், கண்ணும் மட்டுமே நரம்புகளினால் இயக்கப்பட வேண்டியிருத்தலின் இவ்வுறுப்புக ளோடு தொடர்பு பட்டிருக்கும் நரம்புகளே இறுகிய நிலையில் நிற்றல் வேண்டும். மற்றைக் கால், காது, மூக்கு, வாய் முதலான உறுப்புகளுக்கு அச்சமயத்தில் வேறு தொழில் இல்லாமையால் அவற்றோடு தொடர்புற்று நிற்கும் நரம்புகள் இறுக்கமாய் நில்லாமல் தளர்ந்து நிற்றல் வேண்டும். அது மட்டுமோ! எழுதுதற்குக் கருவிகளான உறுப்புகளின் நரம்புகளும் எழுது முயற்சிக்குத் தக்க அளவு இறுகி நிற்றல் வேண்டுமே யல்லாமல் அவ்வளவிற்கு மேலும் இறுக்கமாயிருத்தல் பழுதுடைத்தாம். எழுதுங் காலத்திற் சிலர் இலகுவாய் அமர்ந்திருத்தலை விடுத்து உடம்பை மிக நிமிர்த்தி முதுகை வளைத்து வீறாப்புடன் உட்காருதலால், நரம்புகள் அளவுக்குமிஞ்சி இறுதி உயிராற்றலை மிகுதியாய்க் கழிய விடுகின்றன. வேறு சிலர் எழுதுகோலை விரல்களில் இலகுவாய் இடுக்கிக்கொள்ளுதலை விடுத்து மிகவும் நெருக்கமாகப் பிடிக்கின்றனர்; இங்ஙனம் அளவுக்குமேல் இறுக்கிப் பிடிப்பதனால் விரைந்து எழுத இயலாமற் போவதுடன் விரல்களைத் தொடர்ந்துள்ள நரம்புகளிலும் உயிராற்றல் மிகுதியாய்க் கழிந்து போகின்றது.அன்றி எழுதும் முயற்சியை இலகுவாய்ச் செய்தாலும், சிலர் இடையே சிறிதும் ஓய்வின்றி நெடுநேரம் ஒரே மூச்சாயிருந்து எழுதுகின்றனர். இடையொழிவு சிறிதும் இன்றி நரம்பை ஒரே தொடர்பாக இழுத்துப் பிடித்துக் கொண்டு கண்ணையுங் கருத்தையும் புறப்பொருள்களில் அழுந்த வைப்பதனால் உயிராற்றல் அளவுக்குமேற் கழிந்துபோதலின், அங்ஙனம் உழைப்பெடுப்பவர் நீண்டநாள் உயிர்வாழார்; பலவகைப் பட்ட நோய்களுக்கு இரையாக இறப்பர். அரிய பெரிய பொருள்களை நீளத் தொடர்ந்து எழுதும்போது, இடையிடையே சிறிது இளைப்பாறிக்கொண்டு எழுதுதல் வேண்டும். இளைப்பாறுதல் என்பது எடுத்த முயற்சியை விடுத்து இலகுவான வேறொன்றைச் செய்வதன்று; நரம்புகளை முற்றுந் தளரவிட்டு ஒன்றையும் நினையாமல் அயர்ந்து கிடத்தலேயாகும். இளைப்பாறுவது இன்னதென்றே தெரியாதார்சிலர் மெல்லிய பஞ்சணைகள்மேற் படுத்துக்கொண்டு காலையாட்டுவதும் கையையாட்டுவதும் புரளுவதும் வீண் எண்ணங்களைக் கோடி கோடியாக நினைவதும் செய்கின்றனர். படுத்தாலும் இருந்தாலும் நரம்புகளை இறுக வலித்துக் கொண்டு எண்ணங்களைப் பலதலையாக ஓட விடுவது சிறிதும் இளைப்பாறுதல் ஆகமாட்டாது. உண்மையான இளைப்பாறுதல் இன்னதென்று உணர வேண்டின், வேனிற்காலத்துக் கடு வெயிலில் நெடுந்தூரம் ஒரு பெருஞ் சுமை தூக்கிச் சென்றவன் ஒரு நறுமணப் பூஞ்சோலையை அடைந்து அதன்கண் உள்ள குளத்தில் இனிய தண்ணீரை விடாய்தீரப் பருகிக் கரைமருங்கின் அடர்ந்து நிற்கும் மரத்தின் குளிர்நிழற்கீழ்ப் புன்மேல் அயர்ந்து கிடக்கும் நிலையை எண்ணிப் பாருங்கள்! அவ்வாறு கிடக்குமவனை அணுகி அவன் கையை மெல்லெனத் தூக்கிக் கீழ் விடுவீர்களாயின் அது துவண்டு நிலத்தே விழும்; அவன் காலையும் அங்ஙனமே சிறிது தூக்கி விடுவார்களாயின் அதுவும் அவ்வாறே துவண்டு அப்புன்மேல் விழும்; இவ்வாறெல்லாம் அவனது உடம்பின்கண் உள்ள உறுப்புகள் அவன்வசம் இன்றிக் கிடப்ப, அவன் நிரம்பவும் அமைதியாய் இருக்கும் நிலையே உண்மையான இளைப்பாறு தலாகும். இளைப்பாறுதற்கெல்லாம் தூக்கம் இன்றியமையாது வேண்டப்படுவதன்று; தூக்கம் இன்றியும் இளைப்பாறலாம், தூக்கத்தோடும் இளைப்பாறலாம்; ஆனால், தூங்கி எழுவ தானது மிகுந்த இளைப்பாறுதலைத் தரும்; நிரம்ப அயர்ந்து தூங்கி எழுந்தவனுக்கு மிக்க சுறுசுறுப்பும் மனக்கிளர்ச்சியும் உண்டாகும். நரம்புகளை முழுதும் இளக்கி ஒன்றும் நினையாமல் அமைதியோடிருக்கக் கற்றுக் கொண்டவனுக்கு இனிய தூக்கமானது அவன் நினைத்தபோதெல்லாம் வரும். மேல்நாட்டில் நிகரற்ற போர்வீரனென்று பலரானும் பெரிதும் பாராட்டப்பட்டு வந்த நெப்போலியன் என்னும் மன்னர் மன்னன் தன் படைவீரர் பீரங்கி வெடிதீர்ந்துக் கத்தியும் வல்லையமுங்கொண்டு பெருமுழக்கத்தோடும் தம் பகை வரோ டெதிர்த்து நிரம்ப மும்முரமாய்ப் போர் இயற்றுங் காலங்களில், அவர்களின் இடையே தான் நினைத்த போதெல்லாம் பத்து நிமிடமேனும் கால்மணிநேரமேனும் அமைதியோடும் நன்றாகத் தூங்கி விழித்து எழுவனாம். இங்ஙனமே தமக்கு அல்லும் பகலும் இடைவிடாதிருந்த பவ அலுவல்களின் நடு நடுவே தாம் நினைத்தபோதெல்லாம் நன்றாகச் சிறிதுநேரம் அயர்வுதீரத் தூங்கியெழுந்து, பின்னர் அவ்வலுவல்களை நுண்ணறிவோடும் மனக்கிளர்ச்சியோடும் செய்து முடித்துப் புகழோடு நீண்டநாள் உயிர்வாழ்ந்திருந்த அரசர்பலர் வரலாறு களையும் அமைச்சர் பலர் வரலாறு களையும் படித்தறிந்திருக்கின்றோம். அது கிடக்க. இனித் தாம் நினைத்தபோது நல்ல இனிய தூக்கத்திற் செல்லும்வகை உயர்ந்த செல்வநிலையிலிருக்கும் மக்களிற் பெரும்பாலார் உணரவேமாட்டார்; அவரெல்லாம் படுக்கையிற் சென்றால் தூக்கம் வரப்பெறாமல் மெத்தைமேல் அப்புறமும் இப்புறமுமாய்ப் புரண்டுகொண்டே `தூக்கம் பிடிக்க வில்லையே! ö¡f« ão¡fÉšiyna! என்று எண்ணியெண்ணி ஏக்கமுறுகின்றனர்; தூக்கம் இன்மையால் வரவர உடம்பு மெலிந்து பருவம் முதிரா முன்னே உயிர் துறக்கின்றனர். அவர்களுக்குத் தூக்கம் வராமை எதனால் என்றால், தம் உடம்பிலுள்ள நரம்புகளை இளக்கி அமைதியாயிருக்கும் முறை அவர் தெரியாமையினாலேதான். மேலும், அவர்கள் உடம்பு வருந்த உழையாமல் இருப்பவர்களாதலால், உடம்பின் உட்கருவிகள் செவ்வனே அசையாமற் கெட்டுப்போகின்றனர்; அசையாமலிருக்கும் ஓர் இருப்புப்பொறி துருவேறிப் பழுதாய்ப் போதல்போல, அசைவில்லாத உடம்பின் உறுப்புகளும் கொழுப்படைந்து பழுதாகிவிடும்; இரத்தக் குழாய்களில் இரத்தம் செவ்வையாய் ஓடாது, தீனிப்பை உண்ட உணவைச் செரிக்கச்செய்யாது; உண்டவுணவு செரியாவிட்டால் உடம்பிற் பலதிறப்பட்ட நோய்களும் வந்து கிளைக்கும். செல்வம் உடையவர்கள் நரம்பிளக்கம் செய்யும் முறை தெரியாமையாலும், உழைப்பில்லா திருத்தலாலும் தூக்கமின்றி வருந்து கின்றனரென்றால், அங்ஙனமே நரம்பிளக்கஞ் செய்யும்வகை இன்னதென்றறியாத ஏழை எளியவர்கள் மட்டும் படுத்தவுடன் உறங்குதல் என்னையெனின், அவ்வேழை மக்கள் தம் வயிற்றின் கொடுமையால் நாள் முழுதும் நெற்றித்தண்ணீர் நிலத்தில் விழப் பாடுபட்டுவருதலால், அவர்களுடம்பின் உறுப்புகள் மிகவும் அலுப்படைந்து படுத்தவுடன் அயர்ந்த தூக்கத்தை அவர்கள் பால் வருவிக்கின்றது. அங்ஙனமாயின், நரம்பிளக்கத்தால் மனவமைதி யோடிருந்து இனிய தூக்கத்தை வருவித்துக் கொள்ளல் வேண்டு மென்று இங்கே கூறிய தென்னை? நன்றாய் உழைப்பவர்களுக்கு நல்ல தூக்கம் தானாகவே வருதல் கண்டோமேயெனின், மிகுந்த உழைப்பினால் வரும் தூக்கம் உயிரைப் பெரியதோர் இருளிற் கொண்டுபோய் அழுத்தி விடுமாதலால், அது விரும்பற்பால தன்று. மேன்மேலும் அறிவு விளங்கப் பெறுதலே இம் மனிதப்பிறவி யெடுத்ததற்குப் பயனாம். நனவின்கண் விளங்கிய அறிவு தன்னை மறந்த தூக்கத்தில் வலிவுகுறைந்து மழுங்கிப் போவதால், அலுப்பால் அயர்ந்த தூக்கம் உள்ளவனுக்கு மறதி மிகுதியாய்க் காணப்படுகின்றது. ஆதலால், மறதி வராமைப் பொருட்டுத் தன்னை மறந்த தூக்கத்தை நீக்கல்வேண்டும், தன்னை மறந்த தூக்கம் வராமைப்பொருட்டு அலுப்பினை நீக்கல் வேண்டும், இனி அலுப்பு வராமைப்பொருட்டுக் கடுக உழைத்தலை நீக்கல் வேண்டும். அங்ஙனமாயின், கடுகிய உழைப்பினால் ஆகவேண்டும் முயற்சிகள் பின்னை எவ்வாறு நடைபெறுவதெனின்; இந்நூலின் கட் சொல்லப்படுவன அறிவால் மேன்மை அடைய விரும்புவாரை நோக்கினவேயல்லாமல், அறிவுகுறைந்து மாடுபோல் உழைப் பவரை நோக்கின் அல்லாமையால் அதனை இங்கே ஆராய வேண்டுவதில்லை. மேலும், மக்களிற் பலரும் பலதிறப்பட்ட இயற்கையுடையவர்களாய்ப் பிறவிகடோறும் சிறிது சிறிதாக அறிவுவிரியப் பெற்று வருவதனாலும், எல்லாரும் ஒரேகாலத்தில் ஒரேவகையான அறிவு பெறுதல் காணப் படாமையாலும், அவரவர் தமது இயற்கைக்கு இசையவே பொருள்களையும் அவற்றை உணர்த்தும் நூல்களையும் விரும்பி வருவதலாலும், உழைப்பு ஒன்றிலே மட்டும் கருத்து வைத்தவர்கள் அதனைக் கடந்து அறிவு நிலைக்குவர இன்னும் பலபிறவிகளை யெடுக்கவேண்டுமாதலாலும் இங்கே சொல்லப்படுவன அறிவுநிலையில் உள்ளார்க்கே இணக்கமா வனவாம் என்க. இன்னும் உழைப்பு நிலையில் உள்ளவர்கள் அறிவு முதிர முதிரப் பலவகை இயந்திரங்களை அமைத்து அவற்றின் உதவியாற் கடு முயற்சிகளைச் செய்து முடிக்க மாட்டுவார்கள்; அப்போது அவர்கட்கு அலுப்பு உண்டாகாமற்போம். மிகுந்த உழைப்புள்ள தொழில்களைச் செய்தற்கு யானை குதிரை எருமை எருது கழுதை முதலான விலங்குகளிருந்தும், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளாமல் ஏழைமக்களிற் பலர் வண்டியிழுத்தல் பெருஞ்சுமை சுமத்தல் முதலான கடுந்தொழில் களைத் தாமாகவே செய்து தம்மை விலங்கினங்களினுந் தாழ்ந்தவராகச் செய்து கொள்கின்றனர்! யானை குதிரை எருது முதலியவை வாங்கவும் அவற்றிற்குத் தீனி கொடுத்துப் பாதுகாக்கவுங் கையிற் பொருள்இல்லாமையால், அவர்கள் அங்ஙனந் தாமாகவே கடுந்தொழில் செய்கின்றன ராதலால் அதுபற்றி அவர் குற்றஞ்சொல்லப்படாரெனின்; அது பொருந்தாது, சிற்சில திங்கள் முயன்று தாம் தேடும்பொருளில் ஒரு கூறு மிகுத்து வந்தாலும் அவர்கள் குதிரை மாடு முதலிய விலங்குகளை எளிதாக விலைக்குப்பெறலாம்; அது தானும் செய்துகொள்ள மாட்டாது சோம்பல் மிகுந்து அன்றன்று கிடைத்த பொருளைக் கள்ளுக்குஞ் சூதுக்கும் வேறு பல தீயவழிகட்கும் செலவழித்து விலங்குகளினுங் கடைப்பட்டவர் களாய் வாணாளை வீணாய்க் கழிக்கின்றனர்; ஆதலால், அவர்கள் தமது வாழ்நாளை அங்ஙனம் பாழாக்கும்படி இடங்கொடுத்தலாகாது. இத்தகைய சோம்பேறிகள் இழுக்கும் வண்டிகளில் ஏறுவதும், அவற்றிற் பொதிகளை ஏற்றுவதும், அவர்களின் தலைகளிலும் முதுகிலும் தாங்குதற்கு வருத்தமான பெருஞ்சுமைகளைத் தூக்கிவைப்பதும் அறிவுடையோருக்குச் சிறிதும் ஆகாதனவாம். இத்தகைய கடுந்தொழில்களிலேயே அவர்கள் தமது காலத்தைக் கழிக்கும்படி பழக்கப்படுத்தி வந்தால் அதனால் அவர்கள் மிகுந்த அலுப்பும் உறக்கமும் அடைய பெற்றவராகி அறிவு வளராது விலங்கினங்களைப் போலவே யிருப்பர். அதுவல்லாமலும் கடுகிய உழைப்பால் அவரது உடம்பும் இறுகிக் கருங்கற்போல் வலிவுடையதாகும். அறிவின் வளர்ச்சிக்கு உடம்பிலுள்ள கருவிகள் மெல்லிய இயல்பும் துவளுந்தன்மையும் உடையனவாயிருத்தல் வேண்டும்; கருங்கற் போல் இறுகிய உடம்பு வலிவுடையதாயிருந்தாலும், மெல்லிய இயல்புடைய உடம்புபோல் மேன்மை உடையதாகாது; இறுகிய உடம்புதான் வலிவு மிக்கதென்றும், மெல்லிய உடம்பு அஃது இல்லாததென்றும் நினைத்தலும் பழுதாகும். கருங்கல் வலிவுடையதாயினும் அதனையும் அப்பாற் பெயர்த்தெறியும் மெல்லிய காற்றின் ஆற்றலை நினைத்துப் பாருங்கள்! கருங்கல் சிலகாலத்தில் தூளாக நுறுங்கி அழியினும் அழியும், காற்று அங்ஙனம் அழியுமோ? இதுபோலவே, இறுகிய வுடம்பு பருவம் முதிராமுன்னரே பழுதுபட்டொழியினும் ஒழியும், மெல்லியவுடம்போ அங்ஙனம் இறந்தொழிவதில்லை. இறுகிய வுடம்பு நுண்ணிய தொழில்களைச் செய்யமாட்டாது, மெல்லிய வுடம்போ அவற்றையும் வேறு பலவற்றையும் எளிதிற் செய்யவல்லதாகும். இறுகிய வுடம்புக்கு நோய் வந்தால் அது கரைந்து தேறாது, மெல்லியவுடம்புக்குப் பிணிவந்தால் அஃது அதனினின்றும் எளிதிற் றேறும். கல்யானை பருத்த வல்லுடம்பு உடையதாயினும், மெல்லுடம்பு வாய்ந்த மானின் ஓட்டத்தைப் பிடிக்குமோ? மேலும் திண்ணிய வுடம்புடைய நாட்டுப் புறத்தவர்களிற் பெரும்பாலார் அறிவிற்றாழ்ந்தவராய் இருக்க, நகரத்தில் வாழும் மெல்லிய வுடம்புடையார் அறிவுந் திருத்தமும் வாய்ந்தவராய்க் காணப்படுகின்றனர். இவற்றையெல்லாங் கூர்மையாக நினைந்து பாக்குங்கால் இறுகிய வுடம்பும், அதனை உண்டாக்கும் கடுகிய உழைப்பும் அறிவு வளர்ச்சியினை விரும்புவார்க்கு வேண்டப்படுவன அல்ல என்று அறிகின்றோம். இன்னும் மனிதன் தான் உடம்பால் வருந்தி உழைத்தலைக் குறைத்து அறிவின் முயற்சியால் அரிய பெரிய தொழில்களை யெல்லாம் செய்துமுடித்தற்கு முந்தவேண்டும் பாருங்கள்! வெள்ளைக்காரர் தமது நுண்ணறிவு முயற்சியால் எவ்வளவு அருமையான பொறிகளையெல்லாம் அமைத்து, அவற்றி னுதவியால் எத்துணை அருமையான தொழில்களை யெல்லாம் விரைவிற் செய்து முடிக்கிறார்கள்! எத்தனை மனிதர் வருந்தி உழைத்து இழுத்தாலும் இழுத்துச்செல்ல இயலாத வண்டித்தொடர்களை யெல்லாம் நீராவிப் பொறியால் விரைவில் ஓடச்செய்து அளவிடக்கூடாத நன்மைகளை யெல்லாம் அவர்கள் எளிதில் விளைவித்து வருகின்றார்கள். எத்தனையோ ஆயிரம் மைல் அகலமுள்ள கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளுக்கெல்லாம் பண்டங்களும் மக்களும் எளிதிற்போய் வரும்படி காற்றுக்குஞ் சுழலுக்கும் அலைக்கும் அஞ்சாத கப்பல்களை அந்நீராவிப் பொறிகளால் ஓட்டி அவர்கள் உலகத்திற்குச் செய்துவரும் நன்மைகளைக் கணக்கிட்டுச் சொல்ல இயலுமா? இவைகள் எல்லாம் மக்கள் தமது உடம்பினுழைப்பால் மட்டும் செய்துமுடிக்கக் கூடியன ஆகுமா? பல்லாயிரம் மைல்தூரம் விரிந்த கடலின் இரண்டு பக்கத்தும் உயிர்வாழும் மக்கள் தாம் ஓரிடத்தில் இருப்பது போல் அரும்பெருங் காரியங்களை எளிதிற் பேசிக் கொள்ள உதவி செய்யும் தந்தி தபால் தந்தியில்லாத் தபாலென்னும் இவற்றின் நன்மையை என்னென்று கூறுவோம்! இவையெல்லாம் மக்கள் அறிவின் நுட்பத்தால் உண்டாயினவே யல்லாமல், அவர்தம் உடம்பின் உழைப்பால் உண்டாயின அல்லவே! இப்பொறி இயக்கங்களால் மக்களுக்கு எவ்வளவு உழைப்புக் குறைந்தது! எவ்வளவு பொருட் செலவும் துன்பமும் காலக்கழிவுங் குறைந்தன! எவ்வளவு நலங்கள், எவ்வளவு இன்ப நுகர்ச்சிகள் மேலோங்கின! இவற்றையெல்லாம் எண்ணிப் பார்ப்பவர்க்கு உடலுழைப்பினும் அறிவு முயற்சியே பல்லாயிரம் மடங்கு சிறந்ததென்பதும் அறிவு முயற்சி யொன்றே உடலுழைப்பினையும் அதனால் வரும் இளைப்பினையுந் துன்பத்தினையுங் குறைத்து உயிர்களுக்கு அமைதியின்பத்தைத் தருமென்பதும் தெற்றென விளங்கும். ஆகவே, நல்ல தூக்கத்தை வருவித்தற் பொருட்டு உடல்வருந்தி யுழைக்கும் முறையைக் கைக்கொள்ளுதல் ஆகாது. நரம்புகளை இழுத்துப் பிடியாமல் தளரவிட்டு அமைதியோடு ஏதொன்றும் நினையாமற் படுத்திருந்தால் இனிய தூக்கந் தானாகவே வரும். இனி, அசைவில்லாத கருவிகள் பழுதுபட்டுப் போகு மென்பது மேலே சொல்லப்பட்டமையால், மிகுந்த உழைப்பில்லாமல் தத்தம் உடம்பின் அளவுக்கு ஏற்பச் சிறுசிறு முயற்சிகள் செய்து வருவது அறிவு முயற்சியுடையார்க்கு இன்றியமையாததாகும். அறிவு முயற்சியும் உடம்புமுயற்சியும் உடையார்க்கு வாழ்நாள் நீளும், நோய் அணுகாது மன வலிமை மிகும். அறிவுமுயற்சியுடையார்க்கு நாடோறும் சிறிது தூரம் நடந்துபோய் வரும்பழக்கம் மிகச் சிறந்ததாம் என்பதை மேலே குறித்திருக்கின்றோம். அதனோடு, விடியற்காலையில் தோட்ட வேலையும் செய்யப் பழகுதல் அவர்க்கு மேலான நன்மையைத் தரத்தக்கதொன்றாம். கதிரவன் புலரிக் காலையிற் பொன்னொளி பரப்பிக்கொண்டு தளதளவெனக் கீழ்த்திசையில் எழும்போது, பறவைகள் மரம்நிறைந்த தோட்டங்களிலுந் தோப்புகளிலும் மிகுந்த சுறுசுறுப்போடு கூச்சலிட்டுக்கொண்டு கிளைக்குக் கிளை பாய்வதும் தோட்டக்காரர்கள் ஏற்றப்பாட்டுப் பாடியபடியே ஏற்றம்பிடித்துக் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்க அந்நீர் பசும்புல் படர்ந்த கால்களின் வழியே சென்று வாழை தென்னை பாக்கு மா பலா முதலியவற்றிற்கும் பூஞ்செடிகளுக்கும் பாய்வதும், தோட்டங்களிலுள்ள அலரி ரோசா கருவிளை மல்லிகை முல்லை சம்பங்கி பிச்சி முதலிய பலவகைப் பூஞ்செடி கொடிகளும் சிவப்பு வெள்ளை நீலம் மஞ்சள் முதலான பலதிறப்பட்ட நிறங்களோடுங் கண்ணைக் கவரத்தக்க வகையாக மலர்ந்து மணங்கமழ்வதும் மரஞ்செடி கொடிகளெல்லாம் பச்சைப் பசேல் என்ற இலைகளால் தழைத்து மெல்லென்ற காற்றால் மகிழ்வுடன் அசைவதும் ஆன இயற்கைப் பொருள்களின் பொலிவையுந் தோற்றத்தையும் தோட்டங் களிலுஞ் சோலைகளிலும் அல்லாமல் வேறெங்கே காணக் கூடும்? கவலையுந் துன்பமும் இன்றிக் கடவுளின் அருள் அமைப்பைப் பெற்று அழகோடும் மகிழ்வோடும் விளங்கும் உயிர்களின் தோற்றப்பொலிவை இளமரக்காவின்கண் உள்ள மரஞ்செடி கொடிகளிலன்றி வேறெங்கே காணமுடியும்? நோயாலும் வறுமையாலும் மனக்கவற்சியாலும் மாழ்கும் இம்மக்கட் பரப்பினிடையே கிடந்து துன்பத்தில் உழன்றவர்கள் அத்துன்பம் நீங்கி ஆறுதல் பெறவிரும்பினால் அதனைத் தருதற்குரிய உண்மையன்பர்களை மரஞ் செடி கொடிகளிலன்றி வேறெங்கே காண இயலும்? குற்றமற்றவராய்த் தம்மாலியன்ற இலை பூ காய் கனி கிழங்கு முதலிய பரிசுகளைச் சிறிதுங் கைம்மாறு கருதாது மகிழ்ந்து ஈயும் இவ்வோரறிவுயிர்களினுஞ் சிறந்த அன்பர்களை மக்களினும் மற்றை உயிர்களினும் பெற்றுக் கொள்ள இசையுமோ? ஆதலாற், களங்கம் அற்று இன்ப வடிவாய்த் திகழும் இவ்வினிய உயிர்களினிடம் பழகும் வகையைப் பின்பற்றுதல் அறிவும் இன்பமும் ஆற்றலும் மிகவேண்டுவார்க்கு முதன்மையான கடமையாம். விடியற் காலையிலெழுந்தவுடனே தோட்டங்களுக்குஞ் சோலை களுக்குஞ் சென்று இவ்வுயிர்களின் பச்சிலைத் தோற்றப் பொலிவைக் கண்டால் கண்கள் குளிரும், உள்ளம் கிளர்ச்சி அடையும், கவலையுந் துன்பமுமான நினைவுகள் இருந்தவிடமுந் தெரியாமல் மறைந்தொழியும். அம் மரஞ்செடி கொடிகளுக்கு நீர் பாய்ச்சுவதும், அவற்றைச் சுற்றியுள்ள மண்ணைக் கிளறி அவற்றிற்கு எரு ஊட்டுவதும், பயன்படாது முளைத்து அவற்றின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் பூண்டுகளைக் களைந் தெறிவதும் எவ்வளவு இனிப்பான வேலைகள்! இவ்வேலைகளைச் செய்யும் அறிஞர்க்கு அறிவும் உடம்புஞ் செழிக்குமாதலால் இஃது அவர்களால் உறுதியாகச் செயற்பால தொன்றாம். கவலையற்ற பயிர்த்தொழிலிற் பழகுங் குடியானவர்கள் நீண்டநாள் நோயின்றி உயிர்வாழக் காண்கின்றோ மாகையால், அறிவோடு இனிய வாழ்நாளும் பெற விழைபவர்கள் பயிர்த்தொழில் பார்ப்பதை இழிவாக நினைத்தலாகாது. இனித், தாம் இருக்கும் இல்லங்களில் உள்ள தளவாடங் களைச் செவ்வையாகவும் அழகாகவுந் தாமே ஒழுங்குசெய்து வைத்தலாலும், தாம் கற்கும் ஏட்டுச் சுவடிகளையும் அச்சுப் புத்தகங்களையும் அடிக்கடி யெடுத்துத் தூசிபடியாமல் தட்டி ஒழுங்காக அடுக்கி வைத்தலாலும், தாம் வழிபடுங் கடவுளின் திருவுருவத்திற்குப் பூச்சாத்திச் சாந்தம் அப்பி இன்னிசை யோடும் வாழ்த்துச் செய்யுங் பாடி வழிபாடு ஆற்றுதலாலும் தமதுடம் பிற்கு வேண்டுமளவான நன்முயற்சியை அறிவுடையோர் வருவித்துக் கொள்ளலாம். எத்துணைதான் கல்வியறிவில் மேம்பட்டோராயினும் தம் இல்லங்களிலுள்ள தட்டு முட்டுகளை அழகுபெற வையாமல் தாறுமாறாகக் கிடக்கவிட்டிருப்பதும், தாம் கற்கும் நூல்களைப் பாதுகாவாமல் அவையெல்லாம் புழுதிபடிந்தும் செல்லரிக்கப்பட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாயும் குப்பை கூளங்களாயும் கீழது மேலதாயும் அலங்கோலப்பட்டுங் கிடக்கப் பார்த்திருப்பதும், தமது தெய்வத்தை மெய்வணங்கிக் கைகுவித்து வாயிசைத்து வழுத்தாமல் உடம்பால் வணங்கிப் பயனென்னை? மனத்தால் நினைத்தலே அமையாதோ? வெனச் சோம்பற் பேச்சுக்களைப் பேசிக்கொண்டு உடல் வளையாமற் காலங் கழிப்பதும் அவர்க்குச் சிறிதும் ஆகாவாம்; இங்ஙனமெல்லாம் நடப்பது அவரது இழிபினையும் அழுக்குத் தன்மையினையும் சோம்பேறித் தனத்தினையும் ஒளிப்பின்றிக் காட்டும் அடையாளமாகும். அறிவொளியும் சுறுசுறுப்பும் அழகிய உயர்ந்த நோக்கமும் நிரம்பிய கல்வியும் ஐயனிடத்துண்மையான அன்பும் வாய்ந்த நல்லோரைக் கண்டவுடனே அவரது உடம்பின் றோற்றத்தினாலும், அவரிருக்கும் இடங்களின் புனிதத்தன்மையினாலும் அவரது அறிவின் மேன்மையையும் அவர் தம் உள்ளத்தூய்மையினையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இவ்வியல்புடையோர் விலையுயர்ந்த ஆடை அணிகலன் களைப் பகட்டாக அணிந்துகொள்வதில் விருப்பம் இலராயினும், விலைகுறைந்ததானாலும் நறுவியவான உடைகளையும் சில மணிக்கலன்களையும் தமக்கு ஏற்ற வகையாகத் திருத்தமாகவும் துப்புரவாகவும் மேற்கொண்டிருப்பர்; குளித்து முழுகி நேர்த்தியான உடம்பின் றோற்றமும் முகவெட்டும் உடைய ராயிருப்பர். இத்தகைய புனிதத்தன்மையில்லாத பிறர் செல்வத்தி லுயர்ந்தோராயினும், பகட்டான ஆடை யணிகலன்கள் பூண்டிருந்தாராயினும், அவர்தம் தோற்றத்தையும் அவரிருக்கும் இடத்தையும் சிறிது உற்று நோக்கினால் அவர்தம் அருவருப்புத் தன்மையை எளிதிற் கண்டுணரலாம். உயர்ந்த அறிவோடு உடம்பின் பயிற்சியும் அடையவேண்டுகின்றவர் நாம் மேற்கூறிய முறைகளை எவ்வளவு கருத்தாய்ப் பின்பற்றக் கடமைப்பட்டிருக் கின்றார்கள்! இத்தனை எளிய இன்றியமையாத முறைகளையுங் கைப்பற்றுகின்றவர்க்கு உடம்பிலுள்ள கருவிகள் முற்றும் வேண்டுமளவுக்கு அசைந்து தத்தம் நிலைமையிற் செவ்வையாய் இருக்குமாகையால், அவை பருவம் வரும்முன்னே பழுதுற மாட்டா. இந்நிலையில் நிற்பவர் தமது நரம்பை இறுகப் பிடியாமல் இளக்கி அமைதியாய்க் கிடந்தவளவானே, அறிவு மழுங்காமல் இன்பமும் ஆறுதலும் பயக்கும் அமைதியான தூக்கம் உண்டாகும் என்க. இனி நரம்பிளக்கத்தால் அமைதித்தன்மை உண்டாதல் போலவே, அமைதித் தன்மையால் நரம்பிளக்கம் உண்டா மென்பதும் உணரல்வேண்டும். அமைதியோடிருக்கும்போது நமதுடம்பிலுள்ள் கருவிகளும் அவற்றை ஒன்றோ டொன்று இணைக்கும் நரம்புகளும் இறுகிய நிலையில் இல்லாமல் இளகிய நிலையிலிருக்கின்றன. ஆனால், சினம் பகைமை முதலான கொடுங்குணங்கள் தோன்றியவுடனே அவை இறுகிய நிலையை யடைகின்றன. சினங்கொண்டவன் கையை நிலத்தில் அறைவதும், மார்பில் தட்டுவதும், பல்லைக் கடிப்பதும், உதட்டை மடிப்பதும், கண்ணைப் பரக்கத் திறப்பதுங், குதிப்பதும் பாருங்கள்! அப்போதவன் உடம்பிலுள்ள நரம்புகளெல்லாம் எவ்வளவு வலுவாய் இறுகி யெழுந்து நிற்கின்றன! பின் இக்கொடுங் குணங்கள் அவிந்து இளைப்புங் களைப்பும் வந்தால் இந்நரம்புகள் பெரிதுந் தளர்ந்து வலிகுன்றிப் போகின்றன. இங்ஙனங் கொடுங்குணத் தோற்றத்தால் மிக இறுகுதலும், இளைப்புக் குணத் தோற்றத்தால் மிகத் தளர்தலும் நரம்புகளினிடத்தே காணப்படுதலால் இவையிரண்டிற்கும் நடுத்தரமான அமைதிக் குணம் உள்ள காலங்களிலேதாம் அவை இயற்கையான ஓர் இளக்க நிலைமையில் இருக்குமென்பது உணரப்படும். எல்லாக் குழந்தைகளும் பெரும்பாலும் மூன்று வயது வரையில் மிகவும் அமைதியான குணத்தை யன்றி வேறு எவ்வகையான கொடுங் குணங்களும், அக்கொடுங் குணங்களின் பிற்றோன்றும் இளைப்புக் குணங்களும் அறியாதனவா யிருத்தலால், அவற்றின் உடம்பிலுள்ள நரம்புகள் வெல்லப் பாகு போற் றுவளுந் தன்மை மிகுந்து காணப்படுகின்றன; அதனால், அவற்றினுடம்பு தொடுதற்குங் காண்டற்கும் இனிய குழைவுடையனவாய்த் திகழ்கின்றன. குழந்தைகள் கீழே நிலத்தில் வழுக்கி வீழ்ந்தால் மிகுதியாய்க் காயம்படாமைக்கும் அடிபடாமைக்குங் காரணம் இதுவே; நெகிழ்ந்த பிசின் உருண்டையை (India rubber ball) நிலத்தில் எறிந்தால் அஃது அதனின்றும் அதைத்து விழுதல் போலக் குழந்தைகள் கீழ்வீழ்ந்தால் அவை பெரும்பான்மையுங் காயம் அடைவதில்லை. மற்று வயதில் முதிர்ந்தவர் உடம்பு வன்குணப் பழக்கத்தால் நரம்புகள் இறுகியிருத்தலின், அழுத்தமான கண்ணாடி உருண்டை (Glass ball) கீழ்விழுந்தால் நுறுங்கி உடைந்துபோதல் போல அவையுங் கீழ் விழுந்தாற் பெரிதும் புண்படுகின்றன, பழுதுபட்டும் போகின்றன. ஆகவே, அமைதிக் குணமுடையார்க்கு அவருடம்பும் அதிலமைந்த கருவிகளும் மென்பதமுற்று நிற்குமாகலின்அவர் அதனாற் பல சிறந்த நன்மைகளைப் பெறுவர் என்பது நன்கு பெறப்படும் என்க. ஆகவே, நரம்பு இளக்கத்தால் அமை தியையும், அமைதியால் நரம்பிளக்கத்தையும் வருவித்துக் கொள்ளும் முறைகளை நன்றாய்க் கூர்ந்து பார்த்துப் பழகிக்கொள்ளுதல் வேண்டும். 6. நினைவை முனைக்க நிறுத்தல் இங்ஙனம் அமைதியாயிருக்கப் பழகிய பின்னர், நினைவை முனைத்து நிற்கும்படி பழக்கத் துவங்கல் வேண்டும். ஒன்றனைச் செய்தற்குரிய முயற்சியோடு நினைவு முன்வந்து நிற்றலையே `நினைவு முனைத்து நிற்றல் என்று கூறுகின்றோம். கல்வியில் வல்லார் ஒருவர் அவை ஏறிப் பேசுகையில் அவர்தம் அறிவு எவ்வளவு முயற்சியோடு முன்வந்து நிற்கின்றதென்பதனை அவருடைய பார்வையிலும் சொல்லிலும் கை மெய் முகம் முதலிய உறுப்புகளின் அசைவுகளிலும் நன்கு கண்டறியலாம். இவ்வாறு முனைத்து நின்றாலல்லாமல் அவர் தாம் சொல்ல நினைத்தவைகளை ஒருவழிக் கொணர்ந்து திறம்படப் பேசுதல் ஏலாது. தாம் கூறவெடுத்த பொருளில் அவரது அறிவு எவ்வளவுக்கு முனைத்து நின்று விளங்குகின்றதோ, அவ்வளவுக்கு அவர் கூறும் பொருள் விளக்கமுடையதாகிக் கேட்பார்க்கு அறிவையும் இன்பத்தையுந் தரும். இன்னும் இந்நினைவு முனைப்பின் அருமையையும் ஆற்றலையும் புலங்கொளக் காணல் வேண்டின், உயர்ந்த வெள்ளிய சலவைக் கல்லில் அழகின்மிக்க ஒரு பெண்மகள் உருவத்தைச் செதுக்குங் கற்றச்சனும், மலையடுத்த பள்ளத்தாக்கின்கண் உள்ள ஒரு கானகத்தின் இடையிலே இளைய ஓர் அரசனும் அரசியும் ஒரு மான்கன்றிற்குப் புல் ஊட்டும் கவர்ச்சி மிக்க தோற்றத்தை ஓர் இரட்டுத் துணியின்மேல் வரையும் ஓவியக்காரனும், வீணையின் நரம்புகளைத் தெறித்துத் தேனினுங் கரும்பினும் இனிக்கும் இசைகளை மிழற்றுங் கைவல் பாடினியும் தங்கண்ணுங் கருத்துங் கையும் ஒருமுகமாய் நிற்க நினைவு முனைத்து முயலுந் திறத்தின்கண் வைத்துத் தெளியக் கண்டுணரலாம். ஆ! நினைவு முனைத்து நிற்கப் பெறுவார்க்கு இம்மையினும் மறுமையினும் ஆகாத தொன்றில்லை. உலக வாழ்க்கையிற் பல பகுப்பாய் நின்ற துறைகளிலும் மேம்பட்டு விளங்கிய மேலோரெல்லாம் தமதறிவை முனைக்க நிறுத்தும் ஆற்றலிற் சிறந்தவர்களேயா மென்பது அவருடைய வரலாறுகளை யுணர்வார்க்கு நன்கு விளங்கும். அங்ஙனமாயின் நினைவை முனைக்க நிறுத்துதலுக்கும் நினைவை ஒருவழி நிறுத்துதலுக்கும் வேற்றுமை யாதென்றால்; உள்ளம் பல நினைவுகளால் இழுக்கப்பட்டு அங்கும் இங்குமாய்ச் சிதர்ந்து போகவிடாமல், அஃது ஒரு நினைவோடு நிற்குமாறு செய்தலே நினைவை ஒருவழி நிறுத்துதலாகும்; அங்ஙனம் நின்ற நினைவு ஒருமுயற்சியுடையதாய் ஒரு பயனைத் தருமாறு முன் நிற்கச் செய்தலே நினைவை முனைக்க நிறுத்துதலாகும். ஒருவன் தொலைவிலுள்ள தன் நண்பன் ஒருவனை நினைத்துக் கொண்டிருந்தது நினைவை ஒருவழி நிறுத்துதலாகும்; பிறகு, அந்நண்பன் தனக்கு உடனே ஒரு கடிதம் எழுதியனுப்பக் கடவன் என்று முயலும் நினைவோடிருந்த நிலையே நினைவைமுனைக்க நிறுத்துதலாகும். ஒருவழி நின்ற நினைவு அவன் தான் கருதிய பயன்களை விளைவியாது, முனைத்து நின்ற நினைவோ அவன் விரும்பிய பயன்களை யெல்லாம் விளைவிக்கும் இயல்பினதாம். தொலைவிடத்திலுள்ள நண்பன் தனக்குக் கடிதம் எழுதல் வேண்டுமென்னும் முனைத்த நினைவோடும் ஒருவன் பலகாலும் விரும்பி வருகுவனாயின் அவன் நினைத்தபடியே கடிதம் வரக்காணாம். அஃதுண்மையாயின், ஒருவர் நினைத்தபடியெல்லாம் நடைபெறல் வேண்டும்; அவ்வாறு நடப்பக் காணாமையானும், ஒன்று நினைக்க மற்றொன்று முடிதலானும், நினையாத தொன்று வந்து எதிர்நிற்பதும் உண்டாகலானும் அஃதுண்மை யாவது யாங்ஙனமெனின்; நினைவு முனைத்து நின்றாலும் அது மேலும் மேலும் விருப்பத்தானும் அன்பானுங் காதலானும் உந்தப்பட்டு உரம்பெற்று நின்றாலல்லாமல், சினம், வருத்தங், கவலை, அச்சம், பொறாமை முதலாக மேலெடுத்து விளக்கிய இழிகுணங்களால் அது சிறிதும் பழுதுபடாமல் நின்றாலல்லாமல் தான் நினைத்த பயன்களைத் தான் நினைத்தபடியே தரமாட்டா தாகும். எரிவது விறகே யானாலும் அது மிகுந்த ஈரங்கலந்த வழி எரியுமோ? ஞாயிற்றினொளி எல்லையற்ற விளக்கமுடைய தாயினும் முழுதும் அடைப்பான ஓர் இருட்டறையினுட் புகுந்து விளங்குமோ? இங்ஙனமே நினைவின் வலிமையைக் குறைத்து அதற்குப் பெருந் தடைகளாய்க் கிடக்கும் மாறுபட்ட குணங்களால் உள்ளம் பற்றப்பட்டிருக்குங் காறும் நினைந்தவை நினைந்தபடி நிறைவேறா. இனி, இம் மாறுபாடுகள் ஒழிய, நல்விருப்பமும் இனிய அன்பும் உண்மைப் பெருங்காதலுமாகிய உயர் குணங்கள் கிளர்ந்து விளங்குங்கால் நினைத்தவை நினைத்தபடியே நிறைவேறுமென்பது திண்ணம். அவ்வாறாயின், விருப்பமும் அன்புங் காதலும் உயர்ந்தனவாய் நல்லனவாய்த் திகழல் எதனாலெனின்; தன்னோடு தொடர்புடையார்க்கு வரும் நன்மையை முன்வைத்துத் தனது நன்மையைப் பின்வைத்து உயர்ந்த நோக்கத்தோடும் உயர்ந்த எண்ணத்தோடும் ஒழுகுந் தன்மை யினாலேயே அவையும் உயர்ந்து நல்லவாய் விளங்குகின்றன என்று கடைப்பிடித்தல் வேண்டும். இதனை ஓர் எடுத்துக் காட்டால் விளக்குவாம். தனக்கு நண்பராயினார் ஒருவர் வறுமையால் மிக நைந்து மனைவி மக்களோடு வாடுவதைக் கண்டு வருந்தும் நல்லோன் ஒருவன், அவர் வறுமை தீர உதவி செய்தற்குப் போதுமான பொருள் தன்கையில் இல்லாமையால், தனியே அமைதியாக ஓரிடத்திற் சென்றிருந்து `என் நண்பர் வறுமை தீர்ந்து வாழல் வேண்டும்; அவர்க்கு நான் ஏராளமான உதவிகளைச் செய்யுமாறு எனக்கு மிகுந்த பொருள் கிடைக்க வேண்டும் என்று விரும்பித் தனது நினைவை அடுத்தடுத்து முனைக்க நிறுத்தி வருகுவனாயின் அவன் நினைத்தவாறே சிலநாட்களில் அவனுக்கு மிகுந்த பொருள் வருதற்கான வழிகள்திறக்கும்; அவ்வழிகளில் அப்போது அவன் சிறிது முயல்குவனாயின் பெரும் பொருள் பெறுவன்; பெற்ற அப்பொருள் தன் நண்பர் வறுமை தீர்த்தற்கும் தனக்கும் பயன்படும். இவ்வாறு தன் நினைவை முனைக்க நிறுத்துதலே நல்விருப்பமும் உயர்ந்த அன்புமாகும். இவ்வாறன்றி `யான் ஒருவனுமே நன்கு வாழல் வேண்டும், எனக்கே எல்லாப் பொருளும் வேண்டும், பிறர் எங்ஙனங் கெட்டாலும் யான்வருந்தித் தேடிய பொருளில் எள்ளளவும் பிறர்க்கு ஈயேன் என்னும் வன்நெஞ்சத்தோடு ஒருவன் எண்ணும் எண்ணம் ஈடேறாது; அவ்வெண்ணம் எல்லாராலும் அருவருக்கத் தக்கதேயாம். ஆகவே, நினைக்கும் நினைவு உரம்பெற்று நினைந்த பயன்களைத் தருதற் பொருட்டு, அந்நினைவினை உந்தும் விருப்பம் தூயதாயும் தன்னோடு தொடர்புடையார் நலத்தை முதலிற் கருதுவதாயும் இருத்தல் வேண்டும். அங்ஙனமானால், ஒருவன் தனக்குத் தொடர்புடைய நண்பர் பலருள் ஒருவர்க்கு நன்மை செய்ய விரும்பினால் அது மற்றொருவர்க்குத் தீமையாகவும் முடியக் காண்கின்றோமாதலால், பிறர் எல்லார்க்கும் நன்மையே செய்ய வேண்டுமென்றல் யாங்ஙனங் கூடுமெனின்; ஒருவர்க்கு நன்மை செய்யுங்கால் மற்றவர்க்கு அதனால் தீமை வருவதுபோற் றோன்றுமாயினும் அவரவர் நிலைமைகளைச் செவ்வனே ஆராய்ந்து பார்த்து நடுவுநிலைமைக்கு ஏற்றபடி செய்தால் அதனால் ஒருவர்க்கு நன்மையும் மற்றொருவர்க்குத் தீமையும் வருமாயினும் அதுபற்றி அவர் இகழப்படார். பத்தாயிரம் பொன் பெறுதற்குரிய ஒருவர் வறுமையால் நலிய, அதற்கு உண்மையில் உரியரல்லாத மற்றொருவர் அப்பொன் முழுமையும் தாமே கவர்ந்துகொண்டு அதனை மற்றவர்க்குக் கொடாது வன்கண்மை செய்தால், நடுவு தீர்க்குமொருவர் அப்பொன்னை அவரிடத்தினின்றும் பிடுங்கி மற்றவர்க்குக் கொடுக்குங்கால் அஃது ஒருவர்க்கு நன்மையும் மற்றொருவர்க்குத் தீமையுஞ் செய்வதுபோற் றோன்றுமாயினும், அதனை உண்மையால் ஆராய்ந்து பார்ப்பவர்க்கு அஃது அங்ஙனம் ஆகாமை நன்கு விளங்கும். ஆகவே, ஒருவர்க்குண்மையி லுரியதன்றாய்ப் பயன்படாத தொன்றைப் பயன்பெறுதற்குரிய பிறரொருவர்க்குச் சேர்ப்பித்தல் நடுவு நிலைமைக்குப் பழுதாமாறில்லை. இம்முறையால் நோக்குமிடத்து நடுவுநிலைமை வழுவாது பிறர் நிலைமைகளை ஆராய்ந்து அவ்வவர்க்கு ஏற்றபடியாக நன்மை செய்தற்கு நினைவை முனைக்க நிறுத்துதல் சிறந்த நெறியேயா மென்க. அங்ஙனமாயினும், நினைவை வலிவேற்றுவதற்கும் பிறரது நன்மையைக் கருதுவதற்கும் உள்ள இயைபு என்னையோ வெனின்; பிறரது நன்மையைக் கருதுவதற்கும் உள்ள இயைபு என்னையோ வெனின்; பிறரது நன்மையைக் கருதுவோரிடத் தெல்லாம் இறைவனருள் முனைத்து விளங்கும். முழுமுதற் பொருளான கடவுள் எக்காலும் உயிர்களின் நன்மையையே கருதிப் பல வேறுலகங்களையும் அவ்வுலகத்துப் பொருள் களையும் பலதிறப்பட்ட உயிர்களுக்கும் பலதிறப்பட்ட உடம்பு களையும் எங்கும் நிறைந்து நின்று ஓயாது ஆக்குபவரா யிருக்கின்றார். அவருடைய அன்பிற்கும் அவருடைய அருளுக்கும் ஓர் அளவேயில்லை. அவருடைய அறிவும் வல்லமையும் எல்லையற்ற பெருமையுடையனவாய் இருக்கின்றன. அவர்க்கு ஒப்பானதும் அவர்க்கு மேற்பட்டதும் இல்லை. இத்தகைய முழுமுதற் பொருளின் வல்லமையில் ஒரு சிறிதாயினும் தான் அடையப்பெற்றா லல்லாமல் எவனும் வலிமையிற் சிறந்து விளங்கல் முடியாது. கடவுளின் அருளைப்பெற வேண்டு கிறவர்கள் அக்கடவுளின் செயலை ஒத்த செய்கை சிறிதாயினும் உடையராய் இருக்க வேண்டுமன்றோ? எல்லாம் வல்ல முதல்வன் பிறரது நன்மையையே கருதி எல்லாஞ் செய்தல்போல இவர்களும் பிறரது நன்மையையே கருதி உழைப்பார்களாயின் எங்குமுள்ள இறைவன் இவர்கள் உள்ளத்தில் விளங்கித் தோன்றுவான் அல்லனோ? அங்ஙனம், எல்லாம் வல்ல பொருளின் அருள் சிறிதாயினும் விளங்கப்பெற்றால், அதனைப் பெற்றவர் நினைவு மிக்க வலிவுடையதாய்த் தான் நினைந்ததை நினைந்தபடியே நிறைவேற்றுமென்பது திண்ணம். ஆகவே, பிறரது நன்மையைக் கருதுதல் கடவுளருளைப் பெறுவிக்குமாதலால், நினைவை வலிவேற்றுதற்கும் பிறர் நலங் கருதுதற்கும் இயைபு மிகுதியும் உண்டென்பது பெறப்படும் என்க. இங்ஙனமெல்லாம் பிறர் நலங் கருதி நினைவை முனைக்க நிறுத்துங்கால், மேலும் மேலும் வளரும் அவாவினால் அதனை உந்துதல் வேண்டும். தான் பெறுதற்கு நினைந்த பயனைப் பிழையாது விரைந்து பெறல் வேண்டுமென்னும் அவாமுறுகி வளருந்தோறும் அதனால் உந்தப்படும் நினைவு நிறைந்த வலிவுடைத்தாய்த் தான் வேண்டிய பயனை உறுதியாகத் தந்தேவிடும். விருப்பத்தின் மிக்கது அவா; அன்பின் மிக்கது காதல். காதல் வயப்பட்டவர் நினைவின் வலிவைச் சிறிது நோக்கினாலும் இவ்வுண்மை தெளிவாய் விளங்கும். அமெரிக்கா நாட்டிலிருந்த அழகிய பெண்மகள் ஒருத்தி தற்செயலாய் அழகிய ஓர் ஆண் மகன் படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதனைப்பார்த்த அந்நேரம் முதல் அப்பெண்ணின் எண்ணமெல்லாம் அவ்வாண்மக னுருவத்திலேயே பதிந்து நின்றது. வேறெதனையேனும் வேறெந்த ஆடவரையேனும் அவள் நினைக்கமாட்டாதவளானாள். அப்படத்திலுள்ள ஆண் மகனையே தான் மணந்துகொள்ள வேண்டுமென விழைந்தாள். ஆனால், அவனிருக்கும் ஊர், பேர் முதலானவற்றைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு அவள் பலரைக் கேட்டுப் பார்த்தும் அஃதொன்றுமே புலப்பட்டிலது, படத்திற் கண்ட அவ்வாண்மகனையன்றி வேறெவரையும் அவள் மணக்க இசையாமை கண்டு, அவளுக்கு நெருங்கிய உறவினராய் உள்ளோர் `படத்திற் கண்ட அவ்வாண்மகன் ஒருவன் உண்மையில் இருக்கின்றான் என்பதைத் தெரிதற்கு ஏதொரு வழியும் இல்லாதிருக்கையில், நீ இங்ஙனங் காதல் கொண்டு வருந்துதல் ஆகாது அதனை விட்டு உண்மையில் உயிர்வாழும் வேறோர் ஆண்மகனை மணக்க இசை என்று எவ்வளவோ சொல்லியும் அவள் மனந் திரும்பாமல், தான் கண்ட உருவத்தையே அல்லும் பகலுங் காதலித்து வந்தாள். இஃதிப்படியிருக்க, இவள் படத்திற் கண்ட உருவத்திற்கு உரியவனான ஆண்மகன் தென்னாப்பிரிக்காவில் உண்மை யாகவே உயிரோடிருந்தான். அவனுக்கோ கனவின்கண் ஓர் அழகிய பெண்மகளின் உருவம் அடிக்கடி தோன்றியது. அவ்வுருவத்தையே அவனுங் காதலிப்பானானான். கனவிற் றோன்றும் அப்பெண்மணி யாராயிருக்கலாம் என்று கண்டறியத் தனக்கு நெருங்கிய உறவினரிலும் நண்பர்களிலும் அறிமுகமானவர்களிலும் தேடித்தேடிப் பார்த்தான்; அத்தகையாள் ஒருத்தியை அவன் அவர்களுள் எவரிடத்துங் காணவில்லை. அதன்பின் தொலைவான தேயங்களிலுள்ள பெண்மக்கள் பலப்பலரின் உருவப்படங்களை வரவழைத்துப் பார்த்தான்; அவை களுள்ளும் அவள் உருவத்தைக் கண்டிலன். மிகவுஞ் சேய இடங்களில் இருந்துவருவோர் பலரிடமுந் தான் கனவிற் கண்ட பெண்ணின் அடையாளங்களைத் தெளிவாய் எடுத்துச் சொல்லி அத்தகையளான ஒரு மடந்தையைக் கண்ட துண்டோவென இடைவிடாது உசாவி வந்தான்; அதுவும் பயன்படவில்லை. கடைசியாகத் தன் உருவப்படத்தைப் பல நாட்டுச் செய்தித்தாள்களிலும் பதிப்பித்து, அதன் கீழ்த் தன்பெயர் ஊர் இருப்பிடம் முதலியவற்றையுங் கண்டு, தான் கனவிற் கண்ட மாதின் உருவ அடையாளங்களையுங் குறிப்பிட்டு வந்தான். இவனது படமும் அதன்கீழ் எழுதப்பட்ட குறிப்புகளும் அமெரிக்காவில் உள்ள ஒரு சிறந்த செய்தித் தாளிலும் பதிப்பிடப்பட்டு வெளியாயின. இவனைப்போலவே அமெரிக்கா நாட்டிற் காதல் கொண்டு வருந்தும் அப்பெண்ணின் உறவினருள் ஒருவர் அச்செய்தித் தாள் ஒன்றை அப்பெண்ணின் கையிற் கொண்டுவந்து கொடுக்க, அதில் உள்ள அவ்வாண்மகனுருவம் தான் முன்படத்திற் கண்ட ஆண்மகனுருவத்தை ஒத்திருக்கவும், அவன் கனவிற் கண்ட பெண்ணின் உருவ அடையாளங்கள் தனதுருவ அடையாளங்களை ஒத்திருக்கவுங் கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தவளாய், உடனே ஒரு கடிதம் எழுதி அதனோடு தன் படத்தையும் வைத்துத் தென்னாப்பிரிக்காவில் உள்ள அத்துரைமகனுக்கு அனுப்பினாள். அவனும் அவள் படத்தைக் கண்டு அதிலுள்ள உருவமும் தான் கனவிற் கண்ட மடந்தையின் உருவமும் ஒத்திருக்கப் பார்த்து அளவுக்கடங்காக் களிப்புடைய னாய்ப் பின்னர்ச் சில நாளில் அவளை மணந்து கொண்டான். இருவரும் உயிரும் உடலும்போற் பூவும் மணமும்போற் காதலன்பிற் பிணைந்து இனிது வாழ்ந்தார்கள். உண்மையாக நடந்தேறிய இந்நிகழ்ச்சியை உற்றாராயுங்கால், உலகத்தின்கண் எல்லாவற்றினுஞ் சிறந்த காதலன்பால் உந்தப்பட்ட நினைவு அளவுக்கடங்கா வலிவுடையதாய்த் தான் நினைந்த பயனைத் தான் நினைந்தபடியே பயக்கவல்லதாதல் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்குகின்றதன்றோ? இனி, உண்மைக் காதலன்பிற்கு அடுத்த நிலையில் வைத்தற் குரியஅன்பும் விருப்பமும் ஆவலும் அங்ஙனமே நினைவை வலிவேற்றுவனவாய் இருத்தலால், ஒன்றை நிறைவேற்றுதற் பொருட்டு முனைக்க நிறுத்தும் நினைவை இவ்வுள்ள நிகழ்ச்சிகளால் நிரம்பவும் உரப்படுத்தல் வேண்டும். ஒன்றனை ஆவலோடு செய்யுங்கால் அது செய்வோனுக்கு இன்பத்தைத் தருதலுடன், அவன் செய்யும் அலுவலையும் செவ்வையாய் எளிதில் இனிது முடிப்பிற்கும். தான் எடுத்த ஒரு செயலை ஆவலோடு செய்யாதவனுக்கு அது பெருந்துன்பத்தை விளைப்பதும் அவன் செய்யும் அலுவலைப் பழுதுபடுத்துவதும் எங்கும் எளிதிற் காணலாம். வந்த விருந்தினர்க்கு உணவு சமைத்து இடும் வீட்டார் இருவரில், ஒருவர் அகமும் முகமும் மலர்ந்து ஆவலோடும் விருந்துசெய்ய, மற்றவர் வெறுங்கடமைக்காக அன்பின்றிச் செய்ய, இங்ஙனம் இருதிறமாய் அமைந்த அவ்விருந்து உணவை அருந்துவோர் ஒன்றிலுள்ள மேன்மையையும் மற்றொன்றிலுள்ள தாழ்மையையும் நன்கு உணரப்பெறுவர். இன்னுங், கல்விகற்குஞ் சிறார் இருவரில் ஒருவன் தான் உணர வேண்டிய நூல்களை அக்கரையோடு பயில, மற்றவன் ஆசிரியனிடத்துள்ள அச்சத்தானும் தாய் தந்தையர் ஓவாது செய்யுந் தூண்டுதலானும் தன் பாடங்களை வேண்டா வெறுப்பாய்ப் பயில, இவ்வாறு நடைபெறும் இருவகைப் பயிற்சியின் இயல்புகளையும் உற்று நோக்குவேமாயின் முன்னையது பெரும்பயன் தருவதாயும் பின்னையது சிறுபயனுந் தராததாயும் இருப்பதை எளிதிற் கண்டறியலாம். ஆதலால், நினைவை முனைக்க நிறுத்தி அதனை உரமேற்றுதற்கு அதனை ஆவல் அன்பு முதலியவற்றோடு செய்தல் இன்றியமையாததாகும் என்க. இனி, இங்ஙனமெல்லாம் அறிவை முனைக்க நிறுத்தும் வகை தெரிந்தாலன்றித் தன்னை மேன்மைப்படுத்தவும், பிறரை அவரது நன்மையின்பொருட்டு அடக்கியாளவும் எவனாலும் சிறிதும் ஏலாது. அறிவை முனைக்க நிறுத்தத் தெரியாதவர் மக்களினுந் தாழ்ந்த விலங்கினங்களைப் போற்காலங்கழிக்க நேரும். விலங்குகளுங்கூடத் தமக்குப் பசியெழுந்த நேரங்களில் தமதறிவை முனைக்க நிறுத்தித் தாம் வேண்டிய இரையைப் பெறுகின்றன. சுவரிலிருக்கும் பல்லியின் செயலைச் சிறிது உற்றுப்பாருங்கள்; தனக்கு இரைவேண்டித் தேடித் திரிவதும், இரையாதற்குரிய ஒரு பூச்சியைத் தொலைவிற் கண்ட அளவிலே தன் ஐம்புலன்களையும் ஒடுக்கிக்கொண்டு நினைவைக் கண்ணிலே முனைக்க நிறுத்தி, எவ்வளவு அமைதியாகவும் உன்னிப்போடும் மெல்ல மெல்ல நகர்ந்து சென்று, அதனைப் பிடித்தற்குரிய தொலைவில் வந்தவுடன் நெடுநேரம் அசையாமலிருந்து, பிறகு குறிதவறாமல் ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அதனைத் தன் வாயிற் கௌவிக் கொள்கின்றது! அவ்விரையைப் பிடிக்கும் மட்டும் அப்பல்லியினிடத்துக் காணப்படும் ஒடுக்கமும் உன்னிப்பும் நினைவுமுனைப்பும் அமைதியும் என்னும் அரியசெயல்களில் ஆயிரத்தில் ஒரு கூறேனும் நம் மக்களிடத்தில் உண்டாகுமாயின் அவர்கள் எவ்வளவோ மேலான நிலைமையை அடைவார்கள்! உணவின் பொருட்டுத் தாம் செய்யும் முயற்சிகளிலேனும் அவர்கள் கருத்து ஒன்றுபட்டு நிற்கின்றார்களா வென்று ஆராய்ந்து பார்த்தால் அவற்றை அவர்கள் மூக்கால் அழுதுகொண்டே வேண்டா வெறுப்பாய்ச் செய்யக் காண்கின்றோம்! மக்களினும் மிகவுந் தாழ்ந்தனவாகக் கருதப்படும் பல்லி முதலான சிற்றுயிர் களிற் காணப்படும் நினைவொருமைதாகும் மக்களிடத்திற் காணப்படுவது அரிதாயிற் பின்னை இவர்கள் தம்மை அவற்றினும் உயர்ந்தவராக எண்ணி இறுமாந்திருத்தல் எவ்வளவு பேதைமையாகத் தோன்றுகின்றது! பசியெடுத்த வேளைகளிற் செய்யும் முயற்சியிற் கருத்தை நிறுத்துதலன்றி, வேறுபல நன்முயற்சிகளைச் செய்யவேனும் அவற்றிற் கருத்தை நிறுத்தவேனும் அறியாத விலங்கினங்களைக் காட்டினும் மக்கள் உயர்ந்தவராகல் வேண்டின், அவ்வுயர்வு பல நன்முயற்சிகளிற் கருத்தை முனைக்க நிறுத்தி ஆவலோடு அவற்றைச்செய்யும் வழியாலல்லலாமல் வேறெவ்வழியாலும் பெறுதல் இயலாது. மற்று எத்தகைய முயற்சி செய்தாலும் அதன்கண் நினைவை முனைக்க நிறுத்தி அதனை ஆவலோடு செய்யக் கற்றுக் கொண்டவன் கல்வியில் வல்லவனாகலாம், கைத்தொழிலிற் றிறமைமிகலாம், அரசியலில் முதன்மைபெறலாம், அரும் பெருஞ் செல்வத்தை அடையலாம், நோயின்றி உயிர்வாழலாம், நூறாண்டு உயிர் பிழைக்கலாம், இன்னுந் தனக்குந் தன்னைச் சார்ந்தார்க்கும் எவ்வளவோ நன்மைகளையெல்லாம் வருவித்துக்கொள்ளலாம். இன்னுங் கருத்தை முனைக்க நிறுத்தப் பழகினவர்கட்கு, அவர்தம் நினைவின் நன்மைக்கு ஏற்ப அவர் தம் உடம்பும் உடம்பிலுள்ள உறுப்புகளும் சீர்திருத்தம் அடைந்து பொலிவுடன் விளங்குமாதலால், எங்கே சென்றாலும் அவர்கட்குச் சீருஞ் சிறப்பும் உண்டாம். அவரைக் கண்டவளவே எத்தகையினரும் அவர்பால் வணக்கவொடுக்க முடையராய் அன்புடன் ஒழுகுவர்; அவர் நினைத்தபடியெல்லாஞ் செய்குவர். நினைவின் வல்லமை வாய்ந்தோர்க்கு அவர் தம் உடம்பும் உடம்பினுறுப்புகளும் பொலிவு பெற்றிருத்தலையும், அவர் நினைந்தபடியும் சொல்லுகிறபடியும் எல்லாம் நடைபெறுதலையும் நாம் சிறிது ஆராய்ந்து பார்த்தாலும் செவ்வனே தெரிந்து கொள்ளலாம். உள்ளத்திலே மகிழ்ச்சி தோன்றுங்கால், அது தோன்றப் பெற்றவர் முகமும் உடம்பும் எவ்வளவு கிளர்ச்சி யுடையவாகின்றன! அங்ஙன மல்லாமல் ஒரு கொடுந்துயரம் உண்டாகுங்கால் அவரது முகம் எவ்வளவு வாடி உடம்பு மெலிந்து போகின்றது! இடையிடையே தோன்றும் இவ்வுள்ள நிகழ்ச்சிகளே தத்தம் இயல்புகளைத் தாஞ் சார்ந்த உடம்பினும் உடம்பினுறுப்புகளினும் பதியவைக்கின்றன வென்றால், என்றும் நிலையாக நடைபெறும் உள்ள நிகழ்ச்சிகள் தம் பயனைத் தவறாமல் விளைக்கு மென்பதை நாம் சொல்லுதலும் வேண்டுமோ! ஆதலால், உள்ளத்தின்கண் தீய நிகழ்ச்சிகள் உண்டாகாமல் விலக்கித் தூய நிகழ்ச்சிகளே நிகழுமாறு கடைப்படியாகச் செய்து நினைவையும் அவ்வழியிலே வைத்து முனைக்க நிறுத்திவந்தால், இப்பழக்கம் நிலையான பயனைத் தருமென்பது திண்ணம். இன்னும், நினைவின்வன்மை வாய்ந்தவர்கள் அடுத்தடுத்து ஒரு செய்தியைச் சொல்லிவருவார் களானால், கேட்பவர் அதனைத் துவக்கத்தில் நம்பாராயினும் பின்னர் அதனை நம்பத் தலைப்படுவார்களென்பதும் அறிதல் வேண்டும். அடுத்தடுத்து உரைக்கும் உரை கேட்பார்க்கு நம்பிக்கையினை வருவித்துத் தன் பயனைத் தந்தே விடும் என்னும் உண்மையினை ஒருகால் நான்கு பெயர் ஒன்றுகூடித் தம் நண்பர் ஒருவரிடத்தே செய்து பார்க்கலானார்கள். ஏதொரு குற்றமும் இன்றி உடம்பும் உள்ளமும் மிகவுஞ் செவ்வையான நிலைமை யிலிருந்த அந் நண்பரிடத்தில் முதலில் ஒருவர் பார்க்க வந்தார்; வந்தவர் முதலிற் சிறிது நேரம் அவரை உற்றுப் பார்த்தார்; அதுகண்டு அந்நண்பர் `ஏன் என்னை உற்றுப் பார்க்கிறீர்?’ என்று கேட்க, வந்தவர் `வேறொன்றுமில்லை; இத்தனை நாளாக யான் பாராத ஒரு முகவாட்டமும் உடம்பின் மெலிவும் உம்மிடத்தே காணப்படுகின்றன; அதற்குக் காரணம் யாது? என்றார். உடனே அவர் `என்னிடத்தில் அப்படிப்பட்ட மாறுதல் சிறிதும் இல்லையே: யான் நன்றாகத்தானே யிருக்கின்றேன் என்று விடை கூறினார். வந்தவர் அச்சொற்களைக் கேட்டுப் பின்னும் `அப்படி யானால் மிகவும் நல்லதே; ஆனாலும், என் கண்களுக்கு உங்களிடத்தில் ஏதோ ஒரு வாட்டம் இருப்பது போற் றோன்றுகின்றது; ஆனாலும் உடம்பைக் கருத்தாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவ்வளவோடு அப்பேச்சை நிறுத்திக் கொண்டு, வேறுபல நல்லவற்றைப் பேசிப் போனார். பின்னர்ச் சிலநாட் கழித்து மற்றொருவர் இவரைப் பார்க்க வந்தார்; வந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்து `யான் தங்களை நாலைந்து வாரங்களுக்கு முன் பார்த்தபோது நீங்கள் மிகவுஞ் செவ்வையான நிலைமையிற் காணப்பட்டீர்கள்; இப்போதோ தங்கள் முகம் ஒடுங்கி வருவதோடு உடம்பு மெலிந்து தோன்றுகின்றது, குரலொலியும் வேறுபட்டிருக்கின்றது. ஏதோ பொல்லாத நோய் உங்களுடம்பில் மறைவாயிருந்து உருக்கி வருகின்றது. உடம்பைச் செம்மையாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். சில நாட்களுக்குமுன் முதலிற் காணவந்தவர் சொல்லிய சொற்களால் ஏற்கெனவே மனக்கவற்சி யடைந்திருந்த அந்நண்பர் இப்போது வந்தவர் சொல்லியவற்றையுங் கேட்ட அளவானே அக்கவற்சி மிகப் பெற்றவராய்த் தம் முடம்பில் ஏதோ ஒரு நோய் மறைவாக இருக்கத்தான் வேண்டுமென்று நம்பத்தலைப்பட்டு `ஆம் சில நாட்களாக என்னுடம்பில் இன்னதென்றறியப்படாத ஒரு நோய் இருப்பதாகத்தான் தெரிகின்றது. அதனாலேதான் இந்த வாட்டமும் மெலிவும், இதற்குத் தக்க மருந்து உண்டு இதனைத் தீர்த்துக்கொள்ளல் வேண்டும். என அவர் சொற்களுக்கு உடன்பட்டு விடை கூறினார். பார்க்க வந்தவரும் உடம்பைச் செவ்வையாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுப் போயினார். இதற்குப் பின் இந் நண்பருடம்பு உண்மையாகவே மெலிந்து வரலாயிற்று. உயர்ந்த பல அரிய மருந்துகளைத் தக்க மருத்துவர் சொற்கொண்டு வாங்கி உண்டும், அந்நோய் தீராமல் நாளுக்கு நாள் மிகுந்து வரலாயிற்று. இங்ஙனமாகி வருகையில் மூன்றாம் முறை மற்றொருவர் இவரைப் பார்க்கவந்தார். வந்தவர் இவரைப் பார்த்தவளவானே வியப்புந் துயரமும் அடைந்தவராய் `ஆ ஈதென்ன! யான் இரண்டு மூன்று திங்களுக்குமுன் தங்களைப் பார்த்தபோது தாங்கள் மிகவுஞ் செவ்வையான நிலைமையில் இருந்தீர்களே! ï¥nghJ ï›tsî bkȪj Ãiyia milj‰F¡ fhuz« ahJ? என்று வினவினார். இச்சொற்களைக்கேட்ட அந் நண்பர் மிகமெலிந்த குரலில், `ஆம் எத்தனையோ மருத்துவர்களைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தும், அவர்கள் சொல்லிய எத்தனையோ வகையான உயர்ந்த மருந்துகளை வாங்கி உண்டுபார்த்தும் இந்நோய் தீரவில்லை. இந்நோயின் தன்மையும் மருத்துவர் எவர்க்கும் புலப்படவில்லை. என்று விடை கூறினார். அதன்மேல், வந்தவர் கூறுவார் `ஈது ஏது! மருந்திற்றீராத பொல்லாத நோயாய் இருக்கின்றதே! அன்பிற் சிறந்த உங்களை இந்த நிலையிற் பார்க்க என் மனம் நீராய் உருகுகின்றதே! இனித் தங்களை உயிரோடு பார்ப்பேனோ, இல்லையோ! v‹brŒnt‹! என்று மிக மிக நைந்தார்போற் கூறிவிட்டுப் போனார். இவர் சென்றபின் இவர் பேசிய சொற்கள் நோயாய்க் கிடக்கும் அந்நண்பர் உள்ளத்தில் ஆழப்பதிந்து அவரைப் பெரிதுங் கலங்கச்செய்து, அவர்க்கு அந்நோயைப் பின்னும் மிகுதிப்படுத்திவிட்டன. பின்னுஞ் சில நாட்களில் இவர் எழுந்து நடக்கவும் மாட்டாதவரானார். அதன்பின் நாலாந் தரமாக மற்றொருவர் அவரைக் காணவந்தார்; வந்தவர் அந்நண்பரைக் கண்டு அவர் பேசவும் வலியற்றவராயிருத்தலாற் சிறிதுநேரம் ஆறுதல் மொழிகளைப் பேசிவிட்டுப் போய் மற்ற மூவரையும் அழைத்து `இனி நம் நண்பரிடத்தில் இவ்வாராய்ச்சியை நிறுத்திக்கொள்ளல் வேண்டும். உருக்கத்தோடும் நினைவு முனைப்போடும் நாம் பலமுறையிற் றனித்தனியே சென்று சொல்லிய சொற்கள் அவரை மிகவுங் கடுமையான நோயில் அமிழ்த்திவிட்டன. இனி நாம் முன் முறைகளிற்போலவே `தனித்தனியே சென்று அவர் அந்நோயினின்றும் மீண்டு முன்னிருந்த நன்னிலைமைக்கு வரும்படி செய்தல் வேண்டும் என்று வற்புறுத்திக் கூறினார் எல்லாரும் அதற்கு இசையவே, நாலாவதாகச் சென்ற இவரே திரும்பவும் மறுநாட் காலையில் அந்நண்பரிடஞ் சென்று அவரைக் கண்டவுடன் முகமலர்ச்சியுடையவராய், `நண்பரே, நேற்று இருந்ததை விடத் தாங்கள் இன்றைக்குச் செவ்வையாகக் காணப்படுகின்றீர்களே. மருந்துகளிற் றீராத இந்நோய் ஏதோ இறைவனருளால் தீர்வது போற் றோன்றுகின்றது. தாங்கள் மிக நல்லவர்களாயும் ஐயனிடத்தில் அன்புடையவர்களாயும் இருத்தலால், ஆண்டவனே தங்களுக்கு வந்த நோயைத் தனது பேரருளால் நீக்கி வருகின்றார் என்று நம்புகின்றேன். இன்னுஞ் சில நாட்களில் தாங்கள் முற்றிலும் இந்நோய் தீர்ந்து நலமடைவீர்களென்பது திண்ணம். என்றுரைத்தார். இவ்வினிய சொற்களைக் கேட்டதும் அந்நண்பருள்ளம் கிளர்ச்சி அடைந்தது; தமக்கிருந்த நோய் ஏதோ ஆண்டவன் றிருவருளால் தீர்ந்து வரத் துவங்கியிருப்பதாகவே நம்பத் தலைப்பட்டார். அன்று முதல் அவர்கிருந்த நோயும் உண்மையாகவே நீங்கிப் போகலாயிற்று. அவரைப்போலவே மற்றை மூவரும் இடையிடையே சிற்சில நாட்கள் கழித்துத் தனித்தனியே சென்று அவர் முற்றிலும் நலம் அடைதற்குரிய சொற்களைக் கூறிவர, அந் நண்பரும் முழுதும் அதனால் நோய் நீங்கப்பெற்றாராய் முன்னிருந்த நிலைமையை அடைந்தனர். இங்ஙனங் கற்றோர் நால்வர் உண்மையாக ஆராய்ந்து பார்த்த இவ்வுண்மை நிகழ்ச்சியிலிருந்து பெறப்படுவது யாது? மனவுருக்கத்தாலும் அன்பினாலும் உந்தப்படும நினைவு முனைப்போடு கூறுஞ்சொற்கள் தூயனவாயின் அவை தீய பயனைத் தருதலும் நல்லனவாயின் அவை நல்ல பயனைத் தருதலும் வழுவாமல் நடைபெறுமென்பதன்றோ! இவ்வுண்மையை நன்கு ஆராய்ந்து பார்ப்பவர்கள் நினைவு முனைப்பிற் சிறந்த கற்றவர்க்கும், நினைவு முனைப்பிலும் கருத்தொருமைப் பாட்டிலும் மன அடக்கத்திலும் உறைத்திருக்குந் தவவொழுக்கம் உடையார்க்கும் உள்ளம் வருந்தத் தக்கதேதும் செய்யார். தம்மை மனம் வருந்தச்செய்த செல்வர்கள் செல்வங் கெட்டுக் கிளைஞரோடு அழியுமாறு அறம்பாடிய புலவர்களைப் பற்றியும், தமக்குத் தீதுசெய்த அரசரும் பிறரும் தமதுமேனிலை இழந்து துயர்உழக்குமாறு வசைகூறிய அருந்தவத்தோரைப் பற்றியும் நாம் கற்றுங்கேட்டும் அறிந்திருக்கின்றனம் அல்லமோ? இதுபற்றியன்றோ? ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணிற் றவத்தான் வரும் (குறள் . 264) என்று தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனாரும் அருளிச் செய்தனர். அகலிகை கல்லைப்போல் மெய்ம்மறந்து கிடக்கச் சபித்துப் பின்னர் அவட்கு இரங்கிஇராமபிரான்றிருவடிகள் தீண்டினவுடனே அதுநீங்கி அவள் உணர்வுபெற்று எழ அருளிய கௌதம முனிவராம் அருந்தவத்தோர் ஆற்றலை அறியாரும் உளரோ! மான்வடிவு கொண்டு தம்காதலியைப் புணர்ந்து கொண்டிருந்த முனிவரரை அறியாமல் எய்த பாண்டுமன்னன் தன்மனைவியைப் புணர்ந்தால் தலை வெடித்திறக்கவென்று அம்முனிவரர் சபித்ததும், அங்ஙனமே அச்சாபம் நிறை வேறினதும் அறியாதார் எவர்! ஒருமரத்தின் கீழ்த் தவம் புரிந்த ஒரு முனிவரர்மேல் மரத்தில் இவர்ந்து மண்ணைச்சொரிந்த துரியோதன மன்னனை அவர் சினந்து பார்த்து அவன் உண்ண வெடுக்குஞ் சோறு புழுவாகக் கடவதென்று சபித்தமையும், பின்னர் அவன் தான்செய்த பிழையைப் பொறுக்கும்படி அவர் காலில் வீழ்ந்து வணங்கிக் குறையிரக்க அவரும் அவனுக்கிரங்கிக் கண்ணனால் அது தீருமென்றருளிச் செய்தமையும் எவரும் உணர்வர். இந்நிகழ்ச்சிகளால் நினைவு முனைப்பு உடை யோர்க்குள்ள மனவலிமையின் மாட்சி நன்கு விளங்கும். அது நிற்க. இனி, நினைவை முனைக்க நிறுத்துதற்குச் சில எளிய வழிகள் காட்டுதும் முதலில் நினைவை ஒன்றில் நிலைத்து நிற்கும் படி செய்து சிலநாட் பழகிக்கொள்ளல்வேண்டும். அப்பழக்கம் ஏறிய பிறகுதான் நினைவை முனைக்க நிறுத்துதற்கு முயலல்வேண்டும். காலைப்பொழுதிலேனும் மாலைப் பொழுதிலேனும் ஒரு கடற்கரையிலாயினும், அல்லதோர் ஏரிக்கரையிலாயினும், அல்லதோர் ஆற்றங்கரையிலாயினும் தனியே போயிருந்து அங்கங்குள்ள காட்சியைக் கண்ணாற் கருத்தோடு கண்டு, பிறகு கண்ணை மூடிக்கொண்டு மனத்தால் அக்காட்சியைக் கண்டபடியே நினைவுக்குக் கொண்டுவந்து தெளிவு பெறக் காண்க. கண்ணாற் கண்டதற்கும் பிறகு நினைவாற் பார்ப்பதற்கும் சிறிதும் வேறுபாடு இல்லாதபடி அவ்வளவு பொருத்தமாக அவையிரண்டும் இருத்தல்வேண்டும். இவ்வாறு உயிரில்லாத பருப்பொருட் டோற்றங்களை முதலிற் றெளிவாய் நினைவில் அமைத்துக்கொள்ளப் பழகியபின், இடம்பெயர்ந்து செல்லாத ஓரறிவுயிர்களான புற்பூண்டுகள் மரஞ் செடி கொடிகள் சிலவற்றின் வடிவங்களையும் அமைப்புகளையும் உற்றுநோக்கி, நோக்கியபடியே நினைவிற் பதித்துக் கொள்க. இங்ஙனம் பழகியபின், இடம்பெயர்ந்து செல்லும் உயிர்களைக் கருத்தாய்ப் பார்த்து நினைத்ததொன்றை அவை செய்யுமாறு நினைவை முனைக்க நிறுத்தி முயலத் தொடங்கல் வேண்டும். ஏனென்றால் உயிர்அற்ற பருப்பொருள்களையும், உயிர் உடையவேனும் இருந்த இடத்தைவிட்டு அசையாத ஓரறிவுயிர்களையும் நினைவில் அமைத்துக் கொள்ளலாமே யொழிய, அவை ஒன்று செய்யுமாறு நினைவால் ஏவி முடித்தலாகாது. நினைவை முனைக்க நிறுத்தலென்பது நினைக்கப்பட்ட உயிர் நினைந்தபடி ஒன்றைச் செய்யுமாறு ஏவும் முயற்சியேயாதலால், அஃது அங்குமிங்குமாய் உலவும் உயிர்களிடத்து மட்டுமே தான் நிறைவேறுவதாகுமென்று கடைப்பிடிக்க யாடு மாடு குதிரை பூனை நாய் முதலான சிற்றுயிர்கள் ஒருவர் தாம் நினைந்தபடி ஒன்றைச் செய்யுமாறு; நினைவினாலே தாவுதல் வேண்டும். முதலில் அவற்றுள் ஒன்றை நன்றாக நினைவினெதிரே கொண்டுவந்தபின், அஃது ஏதேனும் ஒன்றைச் செய்யும்படி நன்றாக உறுத்து முனைப்போடு நினைத்து ஏவுக. முதலிற் சிலநாட்கள் வரையில் நினைத்தபடி ஆகாவிடினும், இம்முறையை ஊக்கங் குன்றாமல் இடைவிடாது பழகப்பழகச் சிலநாட்கழித்து நினைத்தபடி அவ்வுயிர்கள் செய்வதைக் காணலாம். குதிரையேறித் தனியனாய்ச் சென்ற ஒருவன் கள்வர் களாலாவது பகைவர்களாலாவது வளைத்துக் கொள்ளப்பட்ட இடரான நேரத்தில் வெள்ளம் பெருகிவரும் யாற்றையோ தாண்டுதற்கு அரிதாய்க் குறுக்கிட்ட வேலியையோ கடக்க வேண்டுமென்ற முறுகிய எண்ணத்தோடு தனது குதிரையைச் செலுத்த, மற்றைக் காலங்களில் அவற்றைக் கடக்கமாட்டாத அக்குதிரை அப்போது அவனது நினைவின் ஆற்றலால் உந்தப்பட்டுக் காற்றினுங் கடுகி அவ்வாற்றையும் வேலியையும் கடந்துபோய்த் தன்றலைவன் உயிரைத் தப்புவித்த அரிய செயல்களைக் கற்றுங் கேட்டும் அறிந்திருக்கின்றோம். தன்றலைவனது நினைவின் குறிப்பை அறிவதில் நாய் மிகச் சிறந்ததென்பதற்கு உண்மையாய் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகள் உண்டு. ஆகையால், தன்னோடு பழகும் சிற்றுயிர்களிடத்து ஒருவன் தனது நினைவை முனைக்க நிறுத்தக் கற்றுக் கொள்ளுதல் மிகவும் நலமுடையதாகும் என்க. இவ்வாறு சிற்றுயிர்களிடத்துப் பழகிக்கொண்ட பின்னர், தம்போல் ஆறறிவுடைய மக்களிடத்து ஒருவர் இம்முறையைப் பயன்படுத்தத் துவங்கல் வேண்டும். முதலில், தம்மோடு உடன்வாழும் மனைவிமக்கள் உடன் பிறந்தார் உறவினர் முதலாயினாரிடத்து இதனைச் செய்து பார்த்தல் நலம். ஏனெனில், உடம்பின் தொடர்புடைய இவர் தமக்குள் இயற்கையாய் அன்பு தோன்றி, இவர்களின் உயிரையும் உயிரின் நினைவையும் ஒரு தொடர்புபட இணைத்தலால், இவர் தமக்குள் ஒருவர் மற்றொருவரைத் தம் நினைவின்படி செய்யுமாறு நினைவால் ஏவுதல் எளிது. ஒவ்வொன்றுக்கும் சொல்லைச் சொல்லி ஒருவரை ஏவிக்கொண்டிருப்பது ஏவுவோர்க்குப் பெருவருத்தந் தருவதோடு, கேட்போர்க்கும் நுண்ணறிவு உண்டாகாமற் செய்யும். ஆதலால், முதன்மை யானவைகளை மட்டும் சிற்சில நேரங்களிற் சொல்லால் ஏவி, மற்றவைகளைக் கண் கை கால் முதலிய உறுப்புகளின் அசைவாலும், நினைவு முனைப்பாலும் குறிப்பாலும் ஏவுதல் வேண்டும். இங்ஙனஞ் செய்தலால் ஏவுகின்றவர்க்கு வருத்தங் குறைந்து நினைவின் ஆற்றல் மிகுதிப்படுவதோடு, ஏவல் கேட்பார்க்கும் மன ஒருமையும் நுண்ணுணர்வும் மேன்மேல் வளரும். ஒரு வீட்டின் தலைவர் விடாய் கொண்டு பருகுதற்குத் தண்ணீர் வேண்டிய போது, உடனே அங்குள்ள மற்றொருவரைக் கூவியழைத்து அது கொண்டு வரும்படி சொல்லுதல் ஆகாது. எவரை அது கொண்டு வருமாறு விரும்புகின்றனரோ அவரைத் தமது நினைவினெதிரே வருவித்து அதனை எடுத்துவருமாறு நினைவினாலேயே ஏவுக. முதலிற் சிலநாளிலேயே இங்ஙனம் நினைத்தபடி நடவாமைபற்றி மனந்தளரல் ஆகாது. விடாப்பிடியாய் இங்ஙனமே பழக பழகச் சிலபல நாட்களில் நினைவினாலேயே தாம் வேண்டுவன வெல்லாம் ஏவி முடிக்கலாம். அது பொருந்துமானாலும், விடாய் கொண்டு பருகுதற்கு நீர்கொண்டு வரும்படி நினைந்தவர் நினைந்தபடி அந்நேரத்தில் நடவாவிட்டால் என்செய்வ தெனின்; துவக்கத்திற் சில நொடிநேரம் நினைந்தபின், கைதட்டிக் குறிப்பிக்க, அதனாலும் நடவாதாயின், பிற்சொற் சொல்லி ஏவுக. இவ்வாறெல்லாம் முறையாகச் செய்து பழகுவோர்க்குத் தாம் நினைந்தபடியெல்லாம் பிறரை ஏவி நடத்துவது எளிதிலே நிறைவேறும் என்க. 7. கண்ணுங் கருத்தும் இனி, ஒருவர் உள்ளத்தில் நிகழும் நினைவுகள் அவ்வளவும் அவர் கண்களிற் குறிப்பாய்ப் புலப்பட்டு நிற்குமென்பது எல்லார்க்கும் உடன்பாடாம். இயற்கையாகவே கண்ணோடு சேர்ந்து நிற்குங் கருத்தை, ஒன்றில் முயலுங்கால் அதனோடு பிரிவறச் சேர்த்துவைத்து முயலுதலே நன்றாகும். கண்ணுங் கருத்தும் ஒன்றுபட்டு நிற்கப்பெறுவார்க்குப் பிறரைத் தம்வழியில் நிற்கச் செய்து கொள்ளல் எளிது. கருத்தோடு கூடாத பார்வை எவ்வகைப் பயனையுந் தராது. பிறரைத் தம்வழியில் திருப்புதற்கு முயல்வோர், நினைவைப் பலபடியாய்ச் சிதற விடாது அது கண்ணோடு ஒன்றுகூடி நிற்குமாறு பழக்குதல் வேண்டும். இதற்குச் சில முறைகளை இங்கெடுத்துக் காட்டுகின்றாம். ஒரு கண்ணாடியை எதிரே வைத்து அதிற்றோன்றும் தமது முகத்தில் தம்முடைய கண்களையே ஒருவர் சில நேரம் இமைகொட்டாமற் பார்க்கத் துவங்குக. முதற்பழக்கத்திலேயே நெடுநேரம் இமைகொட்டாமல் நோக்கினால் கண்களுக்கு நோயுண்டாம். ஆதலால், அது வராமைப்பொருட்டு, வருத்தத்திற்கு இடமின்றி இமையாற் பார்க்கக் கூடுமட்டும் பார்க்க. அங்ஙனம் பார்க்குங்கால் கருத்து வேறொன்றிலுஞ் செல்லாமல் தமக்கெதிரே கண்ணாடியிற் றோன்றும் தம்முடைய கண்களைப் பார்ப்பதிலேயே ஊன்றி நிற்றல் வேண்டும். அதனோடுகூட, இயலுமாயின் வெற்றித் திறத்தைப்பற்றி நினைதல் நன்று. இவ்வாறு கண்ணுங் கருத்தும் ஒருவழிப்பட நோக்கியபின், இரண்டு கைகளையும் நீட்டி விரல்களை இறுக்கமாய் மூடிப் பின் சடுதியிலே அவ்விரல்களை விரித்துக் கையை உதறிவிட்டு இப்புறம் வருக. இங்ஙனஞ் செய்தலால் மூளையில் வந்துகூடிய உயிரின் நுட்ப ஆற்றல் கையிற் பரவிப், பிறகு வேண்டும் போது கையின் வழியாகப் பயன்படுத்துதற்கு முன்வந்து நிற்கும். கண்ணாடியிற் றோன்றும் தனது வடிவத்திற் கண்களை உற்றுநோக்க நோக்க மூளையில் அறிவாற்றல் மிகுதியாய்க் கிளைக்கும். இந்த வகையாக, முதலில் கால் நாழிகையும் பிறகு காலேயரைக்கால் நாழிகையும், அதன் பின் அவரை நாழிகையும், கடைசியாய் ஒருநாழிகையுமாக நாளுக்குநாள் இங்ஙனம் உற்றுப்பார்க்குங்கால் அளவையினை ஏற்றிக்கொண்டே போதல் வேண்டும். ஒருநாழிகை நேரம் கண் இமையாமற் பார்க்கக் கூடிய ஆற்றல் வந்தால், கண்ணின் நரம்புகளும் மூளையும் வலிவேறி நுட்ப ஆற்றல் நிறைந்தன வாயிருக்கும். இவ்வாற்றல் வந்து கூடியபின் கண்ணாடியிற் பார்த்தலை விடுத்துத், தமக்கு எதிரே வருபவர்களின் கண்களை அவர் ஐயங்கொள்ளாதபடி உற்றுப் பார்த்தற்குச்சிறிதுசிறிதாய்ப் பழக்கஞ்செய்து வரல்வேண்டும். பிறர் கண்களை உற்றுப் பார்க்கும்போது, ஏன் இங்ஙனம் இவர் பார்க்கின்றார் என்று அவர் உன்னிக்கும்படி வந்தால் உடனே பார்வையை அப்புறந் திருப்பிக் கொள்ளல்வேண்டும். பிறர்க்கு ஐயமும் அருவருப்பும் வருத்தமும் வராதபடி உற்றுப்பார்க்குந் திறத்தைப் பழகிக் கொண்டால், பிறர்தம் நினைவுகளின் தன்மையை அறியும் அறிவு வாய்ப்பதோடு, அவரை அடக்கியாளும் வன்மையும் வரவரமிகும். தம்மையொத்த மக்களைத் தாம் உற்றுப்பார்க்கையில் அவர்க்கு நன்மை வரவேண்டுமென்றும், தாம் அவர்க்கு நன்மைசெய்யும் ஆற்றலையுடையராக வேண்டும் என்றும் நினைத்தல் அல்லாமல், அவர்க்குத் தீமைசெய்ய நினைத்தலாகாது. நன்மையான ஓர் அரும்பொருள் அவரால் ஆகவேண்டியிருந்தால் அதனை அவர் முடித்துத் தருவாராகவென்று உன்னிப்பாய் நினைக்க இங்ஙனம் முயன்றுவருதற்கு இடையிடையே நினைந்தபடி ஆகாமல் தவறுகள் நேருமானாலும், அடுத்தடுத்து விடாமுயற்சியாய்ப் பழகப்பழகப் பின் நினைத்தபடியெல்லாம் ஆம் என்பது திண்ணம். ஒருவிதையை நிலத்தில் ஊன்றினால் அது தன்றன்மைக்கு ஏற்பச் சில நாளிலோ அன்றிப் பல நாளிலோ முளைத்தலைக் காண்கின்றோம். ஊன்றியவிதை ஊன்றிய வுடனே பயன்தர வில்லையேயென்று வருந்துவார் உளரோ. அதுபோலவே, ஓர் அரிய முயற்சியைத் தொடங்கினவர் தொடங்கின அப்பொழுதே அதன் பயனை எதிர் பார்த்தல் ஆகாது; அது தன்பயனைத் தருதற்குரிய காலம் வருமென்றும், தானெடுத்த முயற்சி தவறாதென்றும் உறுதியாய் நினைந்திருத்தலே செயற்பாலது. இனிப் பிறர் கண்களை உற்றுநோக்கத் தெரிந்து பழகியபின், கண்களுக்குமேற் புருவங்களுக்கு நடுவிலே அவ்வாறு நோக்கப் பழகுதல் இன்றியமையாது செயற்பாலதாம். ஏனென்றால், புருவங்களுக்கு நடுவே உட்செல்லும் இடைவெளியிலே உயிரின் அறிவு எல்லார்க்கும் முனைத்து விளங்குகின்றது. அவ்விடத்தை உற்றுநோக்குதலால் நோக்குவார் உயிரும் நோக்கப்படுவார் உயிரும் ஒன்றுபட்டு இணங்குகின்றன. இவ்விருவரில் எவருடைய உயிர் புனிதமாய் அறிவும் ஆற்றலும் மிக்கதாயிருக்கின்றதோ, அவ்வுயிர் மற்றை உயிரைத் தம் நினைவின்வழி நிறுத்தும் ஆற்றலுடையதாகும். கண்களில் உள்ளும் புருவத்திடையிலும் நினைவுமுனைப்போடு நோக்கப் பழகினவனது பார்வைக்குக் கொடிய விலங்குகளும் கொடிய மாந்தரும் மிக அஞ்சுவர். முரட்டுக் குதிரைகளையும், புலி கரடி சிங்கம் நச்சுப்பாம்பு முதலியவைகளையும் பழக்குவோர் இந்தக் கல்வியில் தேர்ச்சிபெற்றவர்களா யிருக்கிறார்கள். எவர்க்கும் அடங்காத அவற்றை அடக்கச் செல்கையில் அவர்கள் அவற்றின் கண்களிலாயினும் புருவங்களின் இடையிலாயினும் இமையாமற் பார்த்துக் கொண்டு அவற்றின் அருகிற் செல்லுதலையும், அவை அவர்க்கு ஏதுந்தீங்கு செய்யமாட்டாமல் அவர் முன்னிலையில் அடங்கி ஒடுங்கி நிற்றலையும் கண்டறிவார்க்கு யாம் கூறும் இவ்வுண்மை நன்கு விளங்கும். வலிய விலங்குகளை அடக்கச் செல்பவன் உற்றுநோக்குதலுடன் நினைவைச் சிறிதும் சிதறவிடலாகாது. நினைவு சிதறி அச்சங்கொள்வனாயின் உடனே அவன் அவற்றிற்கு இரையாதல் திண்ணம். ஆதலால், புருவத் திடை வெளியில் உற்று நோக்குகையில் அஞ்சாவுள்ளத்தை அந்நோக்கத்தில் முனைக்க நிறுத்தும் பழக்கம் மிகவுஞ் செவ்வையாய்ப் பழகிக்கொள்ளற் பாலதொன்றாம் என்க. இனி, ஒருவர் தமக்கு எதிர்முகமாகவன்றிப் பின் முதுகு காட்டியிருந்தாலும் சென்றாலும், அவரை உற்றுப் பார்த்துத் தம் நினைவின்வழி நிறுத்தல் யாங்ஙனங் கூடுமென்றால், அவரது பிடரிக்குமேல் தலையின் அடியின் நடுவை உற்றுநோக்குதல் வேண்டுமென்று உணர்ந்துகொள்க. எதனாலெனின், புருவங் களுக்கு இடையிலிருந்து நேரே ஊடுருவிச்செல்லும் உயிர்நிலை தலையின் பின்புறத்தே பிடரிக்குச் சிறிதுமேலே சென்று முடிகின்றது. முன்னே புருவங்களின் இடையே நோக்கும் நோக்கம் நோக்கப்பட்ட உயிரைச் சென்று பற்றுதல்போலவே, பின்னே பிடரிக்கு மேற் றலையினடியை உற்றுநோக்கும் நோக்கமும் அவ்வுயிரைச் சென்றுபற்றும். இவ்வுண்மையைப் பின்வருமாறு ஆராய்ந்து கண்டுகொள்க. ஓர் அவைக்களத்திலேனும், அல்லதொரு திருவிழாக் கூட்டத்திலேனும் தமக்குமுன்னே முதுகு திரும்பியிருக்கும் பலரில் ஒருவரைக் குறிப்பிட்டுக் கொண்டு அவரது பின்றலையின் அடியைச் சிறிதுநேரம் உற்றுநோக்கி, அங்ஙனம் நோக்குகையில் அவர் தம்மைத் திரும்பிப் பார்க்கக் கடவரென்று முனைப்புடன் நினைக்க அவ்வாறு நினைத்த சில நொடிப்பொழுதிலெல்லாம் அவர் தம்மை அறியாமலே உடன்திரும்பிப் பார்ப்பர். இது கொண்டு உயிரின் இருப்பிடம் பின்றலையின் அடிப்புறத்தும் உண்டென்பது தெளியப்படும். அங்ஙனமாயினும், அதன் அறிவு முன்நின்று விளங்கும் வாயில்கள் முகத்தின்கண்ணே அமைக்கப் படிருத்தலால் பின்றலையின்அடியை உற்று நோக்கி அதனை அறிவிக்க லுற்றாலும் அது திரும்பி முகத்தின் வழியாகவே ஏதும் செய்யக் கூடியதாகும். இதனாலன்றோ பின்றலைப்புறத்தை நோக்கியதற்கு அங்கிருந்தே அஃது ஏதும் செய்யமாட்டாமல் முகத்தைத் திருப்பிப் பார்க்கின்றது. இன்னும் ஒருவரை யோகநித்திரை என்னும் அறிதுயிலிற் பழக்கவேண்டுகிற மற்றொருவர், அவர்க்கு அஃது எளிதில் வருமா என்பதை ஆராய்ந்து பார்க்கும்பொருட்டு, அவர்தம் பின்றலைப்புறத்தே தம் கைகளை மெல்லவைத்துச் சிறிதுநேரம் அவ்விடத்தை உற்றுநோக்கியபடியாயிருந்து, பின் யான் இக்கைகளை நும் தலையினின்றும் இப்புறம் எடுக்கையில் என் கைகளோடுகூடவே நுமது தலை பின்வர, நீரும் பின்சாய்வீர் என்று இரண்டு மூன்றுமுறை சொல்லிப், பிறகு மெல்லத் தம் கைகளை இப்புறம் எடுக்கையில், அவர்தலை பின்சாய்ந்து அம்மற்றவர் கைகளோடு வர அவருடம்பும் பின்சாய்வதைப் பார்க்கலாம். இவ்வாறெல்லாம் ஒருவருயிர் அவருடம்பில் முனைத்து நிற்கும் இடங்களை அறிந்து, அவ்விடங்களை உற்றுப்பார்க்கும் முகத்தால் அவரது உயிரோடு ஒன்றுபட்டு அவரைத் தம் நினைவின்வழி நிறுத்தக் கற்றுக்கொண்டவர், பின்னர் அவருடம்பின் எந்த இடத்தையும் எந்த உறுப்பையும் உற்றுநோக்கி அங்கே உள்ளே ஒருநோயை நீக்கவும் அல்லது அங்கில்லாத தொருநோயை வருவிக்கவும் செய்யலாம். யாங்ஙனமெனிற் காட்டுவாம்; ஒருவர்க்குக்கையில் ஒருநரம்பு வலி யிருந்தால், அதனை நீக்குதற்குப் புகுந்தவர் முதலில் அவர்தம் கண்களை உற்றுநோக்கி அவரது உயிர் தம் நினைவின் வழிப்படுகவென்று உறுத்துநினைந்து, அதன்பின் நோயுள்ள அவ்விடத்தை உற்றுநோக்கி `இவ்விடத்தில் உமக்கு நோய் சிறிதும் இல்லை. இவ்விடம் மிகவும் செம்மையாய் இருக்கின்றது என்று சொல்லி அவ்விடத்தைத் தமது கையாற்றடவவே அங்குள்ள நோய் விலகிப்போகும் இனி, அவரை முன்போலவே கண்ணிலாயினும், புருவங்களின் நடுவிலாயினும் உற்று நோக்கியபின், அவர்தம் கையின்புறத்தே ஒரு செப்புச்சல்லியை வைத்து `இது நெருப்பிலிட்டு நன்றாய்ப் பழுக்கக் காய்ச்சிய காசு; இஃது இந்த இடத்திற்பட்டு நும்கையின் இந்த இடத்தை நன்றாய்த் தீய்த்துவிடும் என்று சொல்லியவுடனே அது நெருப்பில் பழுக்கக் காயாத வெறுஞ் சல்லியாயிருந்தும், அவர் கையின் அவ்விடத்தைத் தீய்த்துக் காயமாக்கக் காணலாம். இவ்வாராய்ச்சிகளை நாமே நம்மாணாக்கர் சிலரிடத்துச் செய்து பார்த்திருக்கின்றேம். இக்கல்வியில் தேர்ந்த நம் நண்பர் சிலரும் மற்றையர் சிலர்மேல் இங்ஙனம் செய்து காட்டியதனை நாம் நேரிலிருந்து கண்டிருக்கின்றேம். ஒருகால் நம் மாணவர் ஒருவர் இதன் உண்மையைத் தாம் தெரிந்துகொள்ளும்பொருட்டு நம்மிடம் வந்தனர். அவரை எமக்கு நேரே நிறுத்தி அவர் கண்களை இமையாமற் சிறிதுநேரம் உற்றுநோக்கியபின் அவரதுஇடது கையைப் பிடித்துத் திருப்பி அவரது புறங்கையின் ஓரிடத்தைத் தொட்டு `இந்த இடத்தில் உனக்கு இரத்த ஓட்டம் இல்லை, இங்கே ஓர் ஊசியை ஏற்றுவேன், உனக்கு நோய் உண்டாகாது, வலியிராது என்று சொல்லிக் கொண்டே அவ்விடத்தைத் தொட்டுத் தடவிப் பிறகு ஒரு குண்டூசியை அவ்விடத்தில் குத்திச் செருகிவிட்டேம். யாம் சொல்லியபடியே அவர்க்கு அங்கே சிறிதும்நோய் உண்டாக வில்லை. அங்கே அவ்வூசி தமது தசையில் நுழைக்கப்பட்டதைப் பார்த்தும் அது நுழைக்கப்படாதனவைபோலவே யிருந்தார். அதன்பிற் சிறிதுநேரஞ் சென்று அவ்வூசியைப் பிடுங்கிவிட்டு அங்கு ஏதொருநோயும் தழும்பும் இரா என்றேன். யாம் சொல்லியபடியே அவர்க்குஅங்கே நோயும் இல்லை தழும்பும் இல்லை. சிறு தெய்வங்களை வணங்குவோர் சிலர் நாவில் நெடிய ஊசி ஏற்றியும், உடம்பெங்கும் கூரிய அலகுகள் ஏற்றியும் செல்வதைப் பார்த்திருக்கின்றோம். இஃது அத்தெய்வங்களின் உதவியால் நடக்கிறதென்று எண்ணுவாரே பலர். ஆனால், உண்மையால் ஆராய்ந்து பார்க்கு மிடத்து, அலகு தைத்துக் கொள்ளும் அவர்கள் ஒருவகையான அறிதுயிலிற் செலுத்தப்பட்டவர்களாய் அப்போதிருத்தலால் நாவிலும் உடம்பெங்கும் ஊசி கோக்கப்பெற்றும் அவற்றாற் சிறிதும் நோயுறாதவர்களா யிருக்கின்றனர். அறிதுயிலின் இயல்பு இன்னதென்றே அறியாத அவர்கள் அதிற் செலுத்தப்பட்டாரென்று கூறுதல் எவ்வா றெனின்; அவர்க்கு முதலிலிருந்தே தெய்வத்தின் வலிவால் அலகு தைத்துக் கொள்வதாகிய எண்ணம் உண்டாகின்றது. தெய்வத்தின்பொருட்டு அலகு தைத்துக் கொள்ளப் போவதால் தமக்கு அதனால் நோய் உண்டாகாதென்ற எண்ணமும் அதனோடு உடன் நிகழ்கின்றது. இவற்றோடு, அவர்க்கு அலகு தைக்கிறதற்குமுன் பூசாரி அவர் பக்கத்திலிருந்து உடுக்கு அடித்துக் கொண்டு ஒரேவகையான பாட்டை ஒரே குரலில் ஓயாமற் பாடுகின்றார். அந்நேரத்திற் பலர் அவரைச் சூழ்ந்து கொண்டு அவரை நீராட்டி நிறுத்தி அலகுகளையெடுத்து ஒவ்வொன்றாக அவருடம்பில் ஏற்றுகின்றனர். அப்பொழுது அவர் தம்மை மறந்து ஒருவகையான அறிதுயிலில் இருக்கின்றார் என்பதனை இவ்வாராய்ச்சியுடையோர் அவர் பக்கத்தி லிருந்தார் செவ்வையாகக் கண்டு தெளியலாம். அங்ஙனம் அவர் அறிதுயிலில் இருக்கும் நிலையினையே கற்றறிவில்லாதார் `அவர்மேல் `அது ஏறியிருக்கின்றது எனவும், `அவர் ஆவேசம் கொண்டிருக்கின்றார் எனவும், `அவர் இப்போது மருளாளியா யிருக்கின்றார் எனவும் கூறுகின்றனர். இவ்வறிதுயிலின் உண்மையை நன்கறிந்த ஆங்கிலநூற் புலவர் சிலரும் ஆங்கில மருத்துவர் சிலரும் இதனை நோய் நீக்குதற்குச் சிறந்த ஒரு கருவியாகக் கையாளுகின்றனர். பல்வலியால் மிக வருந்துகிறவர்கட்குப் பற்பிடுங்கும் மருத்துவர் முதலில் அவர் கண்களை உற்றுநோக்கும் முகத்தால் அவரை அறிதுயிலில் இருக்கவைத்துப் பிறகு அவர்க்குச் சிறிதும் நோவாமலே பயன்படாத பற்களைப் பிடுங்கிவிடுகின்றனர். இன்னும் பிளவை கழலை முதலான கொடுநோய்க் கட்டிகளை அறுத்தெடுக்க வேண்டினால்,அப்போதும் அவர்களை அங்ஙனமே அறிதுயிலிற் போகச்செய்து அவர்க்குச் சிறிதும் நோய் தெரியாமலே அவற்றை அறுத்தெடுத்து அக் கொடுநோயைத் தீர்க்கின்றனர். இவ்வாறெல்லாம் நோய் கொண்டார் அந்நோயின் துன்பந் தெரியாமலே அதனினின்றும் விடுவிக்கப்படுதற்கு இது பேருதவி புரிதலால் இதனை மருத்துவர் ஆவார் ஒவ்வொருவருந் தெரிந்து பழகி இதனைக் கையாண்டு வருவரானால் இதனாற் பல நலங்களும் உலகத்தில் உண்டாம் என்று திண்ணமாய்ச் சொல்லலாம். கண்ணுங்கருத்தும் ஒன்று கூடி முனைத்து நின்றாலன்றிப் பிறரிடத்து அறிதுயில் வருவித்தல் இயலாதாகையால், இவை யிரண்டனையும் ஒன்று சேர்த்து நிறுத்தும் பழக்கத்தினைச் செவ்வையாய்ப் பழகிக் கொள்ளுதல் வேண்டும். 8. தடவுதல் இனி, மேற்கூறிய முறைக்கு உதவியாகச் செய்யவேண்டும் மற்றொரு முறையினை இங்கெடுத்துக் காட்டுவாம். மேற்சொல்லிய முறைகளைப் பழகும்போதெல்லாம் கையும் இடையிடையே அவற்றிற்கு உதவியாயிருந்து தடவுதலை உன்னித்திருக்கலாம். நினைக்கும் நினைவின் வகைகளை வெளியே கட்புலனுக்குத் தெரியும்படி தெளிவாய் விளக்கிக் காட்டுங் கருவியாவது கையேயாகும். நினைவுகளைச் சொல்லினால் அறிவித்துக் காட்டும் வாயைவிட, எழுத்தினால் அறிவிக்குங் கையே சிறந்ததாக இருக்கின்றது. எங்ஙன மென்றால், வாயாற் பேசப்படும் சொற்கள் பேசியவுடனே அழிந்துபோவனவாகும். கையால் எழுதப்படும் எழுத்துக்களோ அங்ஙனம் அழிந்து போகாமல் நிலைபேறாய் நின்று ஒருவர் நினைவின் நிறங்களை எக்காலும் அறிவிக்க வல்லனவாய் இருக்கின்றன எவ்வளவுதான் முயன்றாலும் நினைவை ஒருவழிப்படுத்த முடியாதவர்களும் கையில் எழுதுகோலை எடுத்து எழுதத் துவங்கினால் உடனே அவர்களின் நினைவு ஒருமுகப்பட்டு நின்று கையை இயக்கி எழுத்துக்களின் வாயிலாய்த் தன்னைப் புலப்படுக்கின்றது. ஆகவே, ஒருவனது நினைவின் இயல்பைப் புலப்படுத்துதற்கட் கைக்கு உள்ள ஆற்றல் பிறிது எதற்கும் இல்லையென்பது தோன்றுகின்றது. ஓவியக்காரன் ஓவியம் வரையுமிடத்தும், கொற்றச்சன் சந்தனக்கட்டையிலோ, யானைமருப்பிலோ, சலவைக் கல்லிலோ ஓர் உருவினை இயற்கைவழாமல் செதுக்கித் திறம்பட அமைக்குமிடத்தும், இசைவல்லான் ஓர் யாழினையோ அல்லதொரு புல்லாங்குழலினையோ இயக்கிக் கல்லும் உருகப் பட்டமரமுந் தளிர்க்க இனிய இசைகளை எழுப்புமிடத்தும், ஒரு நல்லிசைப் புலவன் ஓர் அரும்பெரும் பாட்டினை அமைத்து எழுதுமிடத்தும் அவரவர் கையுங் கருத்தும் எவ்வளவு பிணைந்து எவ்வளவு ஒற்றுமைப்பட்டு நிற்கின்றன! என்பதை எவரும் அறிந்துகொள்ளலாம். இங்ஙனமெல்லாம் நினைவின் ஆற்றலை வெளியே புலப்படச் செய்யும் வன்மை கையின்கண் இயல்பாக அமைந்திருத்தலைக் கண்டுகொள்க. இஃது எதனாலென்றால், நினைவுகள் பிறத்தற்கு இடமுங் கருவியு மாயிருக்கும் மூளையைக் கையோடு தொடர்பு படுத்துதற்குச் சிறந்த பல நரம்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந் நரம்புகளின் தொடர்ச்சியால் மூளையிற் பிறந்த நினைவுகள் தம்மை வெளியே புலனாக்கு தற்குரிய அசைவுகளைக் கையிற் றோற்றுவிக்கின்றன. எனவே, ஒருவரை அவரது நன்மையின் பொருட்டு அறிதுயிலிற் போகச் செய்யவேண்டும் மற்றொருவர் தமது நினைவைக் கண்களின் வழியே செலுத்துதலோடு கையின் வழியும் செலுத்தி அவர்தம் உயிர் முனைத்து நிற்கும் இடங்களைத் தடவுவதற்கும் பழகிக்கொள்ளல் வேண்டும். இனி, இத்தடவுதல்தான் முதன்மையான இடங்களைத் தடவுதலும், உடம்பை முன்னும் பின்னும் நீளத் தடவுதலும், கீழ்நோக்கித் தடவுதலும், மேல்நோக்கித் தடவுதலும், என நால்வகைப்படும். இவற்றுள் முதன்மையான இடங்களைத் தடவுதலாவது உயிர் முனைத்து நிற்கும் நெற்றி தலையினுச்சி, பின்றலை, மார்பு, முதுகு முதலியவற்றை மெல்ல இனிதாய்த் தடவுதலாகும். அறிதுயிலிற் செலுத்தப்படுவோர்க்கு இவ்விடங்கள் அல்லாமல் வேறிடங்களில் நோயிருக்குமாயின் அவைகளையும் அங்ஙனமே தடவுதல் வேண்டும்; இவை யெல்லாம் இடங்களைத் தடவுதல் என்ற வகுப்பில் அடங்கும். இனி, நீளத்தடவுதலாவது உச்சந்தலையிலிருந்து துவங்கிக் கீழ் இறங்கிக் கால் விரல்களின் முடிவுவரையில் முன்னாவது பின்னாவது தடவுதல். இஃது ஆழமான அறிதுயில் வருவிப்ப தற்கும், நோய் நீக்குவதற்கும் பெரிதும் பயன்படுவது. இனி, கீழ்நோக்கித் தடவுதலாவது அறிதுயில் வருவித்தற் பொருட்டு உள்ளங்கைகளைக் கீழ்நோக்கியபடியாய்த் தடவுவது. இனி, மேல்நோக்கித் தடவுதலாவது உள்ளங்கைகளை மேன்முகமாய்த் திருப்பி உடம்பின் கீழிருந்து மேலேறிச் செலுத்துவது. இஃது அறிதுயிலிற் சென்றோரை அதனினின்றும் எழுப்பி இயற்கை நினைவு நிகழும் விழிப்பு நிலைக்குக் கொண்டு வருதற்பொருட்டுச் செய்யப்படுவதாகும். இங்ஙனம் நான்குவகையாகத் தடவுதலையும் ஒருவரைத் தொட்டாயினும் தொடாமலாயினும் செய்யலாம். சிலரைத் தொட்டால் அவர்க்குக் கூச்சமும் அருவருப்பும் இயற்கையாய் உண்டாகுமாதலால், அத்தகையோரைத் தொட்டுத் தடவுதல் கூடாது; தொட்டுத் தடவினால் அவர்க்கு அறிதுயிலும் வராமற் போம். ஆகையால், அவ்வியல்பினரைத் தொடாமலே அவருடம்பிற்கு ஒருவிரற்கடை அல்லது இரண்டு விரற்கடை எட்டிய நிலையில் கைகளை நிறுத்தித் தொடாமல் தடவுதலே நலம் பயப்பதாகும். வேறுசிலர், தடவுதலாற் கூச்சமும் அருவருப்புங்கொள்ளாமல் ஊற்றுணர்விற் பிறக்கும் இன்பத்தில் விருப்புடையராய் இருப்பராதலின், அவ்வியல்பினரைத் தொட்டு இனிதாய் மெல்லெனத் தடவுதலே நலமுடைத்து இவ்விரு வேறு வகையான தடவுதல்களையும் அவரவர் இயல்பறிந்து செய்தல் பெரிதும் நினைவு கூரற்பாலதாகும். இனித் தொட்டேனுந் தொடாமலேனும் கீழ்நோக்கித் தடவுங்கால் இரண்டு கைகளையும் நீட்டி உள்ளங்கை கீழ் நோக்கத் திருப்பி விரல்கள் ஒன்றோடு ஒன்றுபடாமல் சிறிது அகன்று நிற்க நேராக நிறுத்தித் தடவுதல்வேண்டும். விரல்கள் ஒன்றோடொன்று சேர்ந்து நெருங்கி நிற்குமானால், விரல்களிற் பாயும் நினைவின் மின்ஆற்றல் தடைப்பட்டு நின்று நன்கு செல்லாது. விரல்களைத் தனித்தனியே சிறிது அகல நிறுத்தினால் ஒவ்வொன்றன் வழியாகவும் அவ்வாற்றல் செவ்வனே ஓடிக் கருதிய பயனை விரவிற் பயப்பிக்கும். இங்ஙனம் கையின் விரல்களை நிறுத்துகையிற் கையின் கடைவிரலாகிய சிறுவிரலை ஏனை மூன்று விரல்களைவிட மிகவிலகி நிற்றல் வேண்டும் என்றும், அச்சிறுவிரல் நஞ்சுடையதென்றும், அதனால் அது பிறர் மேற்படுவது லாகாதென்றும் இக்கலைப் புலமையிற் றேர்ந்த ஒருசாரார் கூறுகின்றனர். ஆனால், இவர் கூற்றின் உண்மையை ஆராய்ந்து உறுதிகட்டுதற்குரிய வழி காணாமையின் அதனைப் பற்றி முடிவு சொல்லல் இயலாது. ஆயினும், அதனுண்மை தீரப்புலனாகும் வரையில், அதிற் பழகியோர் கூறுமாறு சிறுவிரலை அகல நிறுத்தித் தடவுதலே நன்று. இனித், தலையிலிருந்து தடவிக்கொண்டு கீழ் இறங்கின வுடன் விரல்களை உதறிவிட்டுத் திரும்பவுங் கைகளை மேல் உயர்த்துங்காற், கவிழ்த்த கைகளைக் கவிழ்த்தபடியாக வேனும் உள்ளங்கைகளை மேலே திருப்பியபடியாகவேனும் உயர்த்தாமல், பக்கச் சாய்வாய் மேல் உயர்த்தி, மறுபடியுந் தலையிலிருந்து கீழ்நோக்கித் தடவுதல்வேண்டும். தடவிக் கொண்டு கீழ் இறங்கியவுடன் விரல்களை உதறுவது எதற்காக வென்றால், விரன்முனைகளிலிருந்து பாயும் மின் ஆற்றலைத் தொடர் பறுத்துப், பெயர்த்தும் தலையிலிருந்து தடவுங்கால் அது புதிதாய்ப் பாயும்பொருட்டும், அறிதுயிலிற் செலுத்தப்படு வோர்க்குள்ள மின் ஆற்றல் தம்முடைய விரல்களில் ஓட்டா திருத்தற் பொருட்டுமே யாம். மேலும், ஒரு நோய் கொண்டோர்க்கு அந்நோய் தீர்க்கும்பொருட்டு இங்ஙனந் தடவுமிடத்தும் கீழ் இறங்கியவுடன் விரல்களை உதறிவிட்டு மறுபடியும் மேலிருந்து தடவுவதால் அவர்க்குள்ள நோய் இவர்க்கு ஒட்டாது. ஆகையால், ஒவ்வொரு முறையும் விரல்களை உதறும் முறையைத் தவறாமற்செய்து பழக்கமாக்கிக்கொள்க. ஈது அல்லாமலும், கவிழ்த்த கைகளை மேலே திருப்பி உயர்த்தினால் அறிதுயிலிற் சென்றவர் உடனே விழித்துக்கொள்வராதலால், அவைகளைப் பக்கச் சாய்வாய் அவர்தம் இரண்டு விலாப் புறங்களினோரமாய் மேலுயர்த்துதல் வேண்டும். கைகள் கவிழ்ந்தபடியாய் இருக்குங்கால் மின்ஆற்றல் விரல் நுனிகளிலிருந்து கீழ் நோக்கிப் பாயும்; அவ்வாறன்றி அவை மேன் முகமாய்த் திரும்பியிருக்குங் கால் அது மேல்நோக்கிப் பாயும். ஆதலால், அவையிரண்டும் உன்னிப்பாய்ச் செய்யவேண்டும். இவ்வாறெல்லாம் செய்து ஒருவரை அறிதுயிலிற் போக்கிப் பின் அவரை எழுப்பிவிட்டுப் போம்போதும் தம் கைகளை நல்ல தண்ணீர் கொண்டு செவ்வையாய்க் கழுவிடல்வேண்டும். இனி, மேற்சொல்லியவாறாய்க் கீழ்நோக்கித் தடவுதலும் மேல்நோக்கித் தடவுதலும் முறையே ஒருவர்க்கு அறிதுயிலை விளைவித்தலும், பின்னர் அதனினின்று அவரை எழுப்புதலும் யாங்ஙனம் செய்கின்றனவெனின்; அவ்வியல்பினையும் ஒரு சிறிது விளக்குவாம்.எல்லாப் பிறவிகளிலும் உயிர் உடம்போடு கூடியிருக்குங்கால், அஃது அவ்வுடம்பில் இளைப்பாறத் துயில்கொள்ளும் இடமும், துயின்று இளைப்புத் தீர்ந்தபின் அறிவோடிருந்து முயற்சிசெய்யும் இடமும் என உயிர்க்கு இருவகையிடங்கள் இருக்கின்றன. கழுத்தின் கீழிருந்து குறிவரையிற் செல்லும் நாடியின் பகுதியே உயிர் துயின்று இளைப்பாறும் இடமாம்; கழுத்திற்குமேல் தலைவரையில் அமைந்திருக்கும் அந்நாடியின் மேற்பகுதியான மூளையே அஃது அறிவோடிருந்து முயற்சிசெய்யும் இடமாம். அது தலையைப் பற்றிக்கொண்டு அறிவும் முயற்சியும் உடையதாய் நிற்குங்கால், தலையும் உடலும் நிமிர்ந்த படியாயிருக்கும். அறிவும் முயற்சியும் விட்டு அது கீழ் இறங்கித் துயில்கொள்ளப் போகுங்கால் தலையும் உடலும் நிமிர்ந்திருக்கமாட்டாமல் நிலத்தே கிடையாய்க் கிடந்து விடுகின்றன. உடம்பின் இவ்விருவகை நிலைகளும் நம்மனோர் கண்கட்கெதிரே நாடோறும் நிகழக் காண்டலால், உயிர் தலையைவிட்டு இறங்கித் துயிலுமிடம் கழுத்தின்கீழ் நெஞ்சிலிருந்து குறியின் அடிவரையில் ஆம் என்று நாம் உணரப் பெறுகின்றேம். ஒருவரை அறிதுயிலிற் செலுத்த வேண்டும் மற்றொருவர் அவரது தலையிலிருந்து தம்கைகளாற் கீழ்நோக்கித் தடவிய அளவிலே செலுத்துவோர் நினைவின் வழியே விரல்களி லிருந்து பாயும் மின் ஆற்றல் அவர்தம் உயிரை மூளையி னின்று பிரித்துக் கீழே நெஞ்சத்தின்கட் டுயில் கொள்ளுமாறு ஏவுகின்றது. செலுத்துவோர் அதன்பின் தம் கைகளை மேன்முகமாய்த் திருப்பி அவரை எழுப்பிவிடுங் குறிப்போடு மேல்நோக்கித் தடவவே அறிதுயிலிற் சென்றோர் உயிர் நெஞ்சத்தை விட்டு மேலேறி மூளையைப் பற்றிக்கொண்டு விழித்து அறிவும் முயற்சியும் உடையதாகின்றது. இக்காலத்து உடம்பு நூல்வல்லாரும் உயிர்க்கு இருப்பிடம் கழுத்தின்கீழ்க் குறிவரையிற் செல்லும் நாடியின் அகமேயென்று ஆராய்ந் துரைக்கின்றார். உண்மையிவ்வாறாகலின், தடவுதலுக்கும் அறிதுயிலுக்கும் உள்ள இயைபு இதுகொண்டு நன்கு தெளியற் பாலதாம் என்க. இனி, இடங்களைத் தடவுதல் என்றவகையில் மற்றொரு முறையும் பழகிக்கொள்ளற் பாலதாயிருத்தலின் அதனையும் சிறிது விளக்குவாம். உடம்பின்கண் ஏதேனும் ஓர் இடத்திற்கு மின்ஆற்றல் ஏறறல்வேண்டுமேனும், அல்லது அங்குள்ள நஞ்சினை இழுத்து நோய் அகற்ற வேண்டுமேனும் அவ்விடத்திற்கு நேரே விரல்களை ஒன்றோடொன்று படாமல் நேராகப்பிடித்து, அவ்விடத்தின்மேற் படாமல் அவற்றை ஒருவிரற்கடை அகல நிறுத்தி, நினைவை ஒருமுகப்படுத்தி, அதனால் உந்தப்படும் மின் ஆற்றலை அவ்விரல் நுனிகளின் வழியே பாயச்செய்க. அங்ஙனம் செய்யும்போது அவ்விரல் களை நடுங்குமாறு அசைத்தல்வேண்டும். அப்படிச் செய்தலால் அந்த மின்ஆற்றல் அவ்விரல் நுனிகளில் இறங்கிச் செவ்வனே பாயும். இதனோடு அவ்விரல் நுனிகளின் முகமாய் மேலிருந்து கீழ் நோக்கியபடியாய் வாயால் காற்றை ஊதுதலும் செய்தால் அம் மின்ஆற்றல் மிகவுஞ் செவ்வனே பாயும். அது நிற்க. மேற்சொல்லியவாறாய் நேணாயுற்ற இடத்திற் கைவிரல்களை நேரே பிடித்து அங்கு மின்னாற்றலைப் பாய்ச்சியபின், தூய மெல்லிய துணியை நான்காய் மடித்து அவ்விடத்தின் மேல் வைத்து, அதன்மேல் வாயைவைத்து வெதுவெதுப்பு உண்டாகும் படி ஊதுதல் வேண்டும். இங்ஙனம் செய்தலால், அவ்விடத்திற் பாய்ந்த மின்னாற்றல் அதில் நன்றாய்ப் பரவி அங்குள்ள பிணியை விரைவில் அகற்றும் என்க. 9. கட்டுரைத்தல் இனி, மேலேகாட்டிய முறைகள் எல்லாம் கருதிய பயனைத் தருதற்கு உதவியாக அவற்றோடு சேர்த்துச் செயற்பாலதாகிய மற்றோர் இன்றியமையாத முறையும் இருக்கின்றது. அறிதுயிலை வருவிப்போர் அதனை வருவித்தற்கேற்ற சொற்களைத் திறமை யாய் வற்புறுத்திச் சொல்லப்பழகுதல் பெரிதும் வேண்டற் பாலதொன்றாம். அறிதுயிலிற் செல்வார்க்கு அதனை வருவிப்போர் இங்ஙனம் வற்புறுத்திக் கூறுதலையே கட்டுரைத்தல் (Suggestion) என்று அறிதல் வேண்டும். ஒரு சொல்லைப் பலகால் நினைவு முனைப்போடு திருப்பித் திருப்பிச் சொன்னால் அதனை உற்றுக் கேட்போர் அச்சொல்லின்படியே நடப்பர். இவ்வுண்மையை மனநூல் ஆராய்ச்சியில் தேர்ச்சி பெற்ற அறிஞர்கள் செவ்வையாய் ஆய்ந்து பார்த்து நிலைநாட்டி யிருக்கின்றார்கள். தலை நோயால் வருந்தும் ஒருவர்க்கு அந்நோய் நீக்கல் வேண்டின், அவரை வசதியாக ஒரு சாய்மானக்குறிச்சியில் அமர வைத்து, நோய் நீக்கும் தம்முடைய கண்களை அவர் உற்றுப் பார்த்த படியாய்த் தாம் சொல்லும் சொற்களைக் கருத்தாய்க் கேட்கும்படி கற்பித்து `உமக்குத் தலைவலி இல்லை, அது நும்மை விட்டு அகன்றது, இப்போது நீர் செம்மையாய் இருக்கின்றீர், உமது மண்டை நல்ல நிலைமையிலிருக்கின்றது. என்று இச்சொற்றொடர் களைத் திருப்பித் திருப்பிச் சொல்லிச் சிறிதுநேரஞ் சென்றபின் அவரது தலையைத் தொட்டுத் தடவி எழுப்பி விட்டால், அவர்க்கிருந்த அம்மண்டை வலி உடனே விலகிப்போதலைப் பார்க்கலாம். நினைவின் வன்மையோடு ஒருவர் அல்லது பலர் அடுத்தடுத்துச் சொல்லுஞ்சொற்கள் பொய்யாய் இருப்பினும் அவை பிறரால் நம்பப்படுதலை முன்னேயும் விளக்கி யிருக்கின்றோம். உலகத்திற் பெரும்பாலும் நடைபெறுஞ் செயல்களெல்லாம் பிறர் சொல்லுவனவற்றை நம்புதலாலேயே நிகழ்கின்றன. பிறர்பால் நம்பிக்கையை வருவித்தற்கேற்ற வல்லமை சிலரிடத்து - அவர் கற்றவரா யிருப்பினும் கல்லாதவராயிருப்பினும் அறிவுடையோராயினும் அதிற் குறைந்தவராயினும், அமைந்திருந்தமையால் அவர் சொல்லிய சொற்களே சட்டமாக நம்பப்பட்டு அவற்றின் பயனான செயல்களே எங்குங் காணப் படுகின்றன. பயன்றரும் சொற்களை நம்பி நடத்தல் பழுதன்று. பயன்றராதவற்றையும் தீங்கு பயப்பனவற்றையும் நம்பிநடத்தலே குற்றமாம். கட்டுரைத்துச் சொல்லவல்ல சிலராற் பரவிய ஒரு தீதான நம்பிக்கையைத் தொலைப்பதென்றால் அஃது எளிதில் முடிவதில்லை. ஒருகால் ஒரு பெண்பிள்ளையின் பற்களில் ஒன்று ஆட்டம் எடுத்து அவட்கு மிகுந்த நோயை உண்டுபண்ணிற்று. பல் மருத்துவத்தில் தேர்ந்த ஒருவரிடத்தில் அவள் அதனைச் சென்றுகாட்ட, அவர் அந்தப் பல்லைப் பிடுங்கிவிடத் தீர்மானித்து, அதனைத் தெரிவித்தால் அவள் அதற்கு இசையாள் என்பதைத் தெரிந்துகொண்டு, அவளை அறிதுயிலிற் போகச் செய்து நோய் தெரியாமல் அதனைப் பிடுங்கி எடுத்துவிட்டார். பிறகு அவளையும் எழுப்விவிட்டு உண்மையைச் சொல்லாமல் `இனி உங்கட்குப் பல்வலி இராது என்று மட்டும் சொல்லி அவளை அனுப்பினார். அவளும் வீடுசென்று இரண்டு மூன்று நாட்கழிந்தபின் கண்ணாடியில் தன்வாயைத் திறந்து பார்க்க அங்கே வலி உண்டான பக்கத்தில் ஒரு பல்லைக் காணாள் ஆயினாள். அதன்மேல் அருகிலிருந்த ஒருவர்க்கு அதனைத் தெரிவிக்க அவர் உண்மை தெரிந்து கொள்ளாமல் `ஆட்டங்கண்ட பல்லை நீ உணவெடுக்கும்போது உணவோடு சேர்த்து விழுங்கி யிருக்க வேண்டும். அப்படி விழுங்கியிருந்தால் அது வயிற்று வலியை உண்டுபண்ணுமே! என்று கூறினார். அவ்வாறு சொல்லிய சொற்களை அவள் உண்மை யென்று நம்பிய சிறிது நேரத்திலெல்லாம், அவள் தன் வயிற்றில் நோய் உண்டாகக் கண்டாள். அவள் பின்னும் பின்னும் அந் நம்பிக்கையால் துயரப்படவே அவளுக்கு வயிற்றுவலி மிகுதிப்பட்டு எந்த மருந்திலும் தீராததாய் அவளைத் துன்புறுத்தலாயிற்று. கடைசியாய்ப் பல்வலி தீர்த்த மருத்துவரையே வருவித்து அவர்க்கு அந்நோயின் காரணத்தைத் தெரிவிப்ப, அவர் நகைத்து `அம்மா பல் பிடுங்குவதைப்பற்றி சொன்னால் நீங்கள் உடன்படமாட்டீர்கள் என்று கண்டு, உங்களை ஒருவகையான தூக்கத்திற் போகச் செய்து, உங்களுக்கு நோய் தெரியாமல் அந்தப்பல்லை நானே பிடுங்கி வெளியே எறிந்துவிட்டேன் என்றார். அதற்கு அந்த அம்மை `என் பல்லை நீங்கள் பிடுங்கியிருந்தால் எனக்கு அது தெரிந்திருக்குமே! எவ்வளவு தூக்கமாயிருந்தாலும், கொசுகு அல்லது மூட்டுப்பூச்சி கடித்தால் உடனே விழித்துக் கொள்கின்றோமே. அப்படியிருக்கப் பல்லைப் பிடுங்கி யெறியும்வரையில் நான் வலி தெரியாமல் தூங்கியிருப்பேனா! நீங்கள் சொல்வதை நான் நம்பக் கூடவில்லை. நான் உணவோடு சேர்த்துத்தான் அதனை விழுங்கியிருக்கவேண்டும் என்று மறுத்து உரைத்தாள். `இல்லை அம்மா நான் வருவித்த தூக்கம் எப்போதும் நீங்கள் தூங்கும் தூக்கம் அன்று. அது வேறுவகையிற் சேர்ந்தது. அதில் உங்களுக்கு நோயே தெரியாது என்று பின்னுங்கூறினார். கூறியும் அவர் சொற்களில் அவட்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அதுகண்டு அந்த மருத்துவர் `அப்படியானால் நாளை வந்து உங்கள் வயிற்றை நன்றாய் ஆராய்ந்து பார்த்துச் சொல்லுகிறேன் என்ற சொல்லிப்போய் மற்றை நாட்காலையில் அவர் திரும்பி வந்து, அவள் வயிற்றை ஆராய்வது போல் மாயஞ்செய்து பிறகு `ஆம், வயிற்றில் அந்தப் பல் இருக்கிறதுபோலத்தான் அறிகின்றேன் என்று சொல்லிக் கக்குதற்கு மருந்து கொடுத்தார். அம்மருந்தை உட்கொண்ட சிறிது நேரத்தில் அவள் வாயால் கக்கினாள். உடனே அவர் தமது கையில் மறைத்து வைத்திருந்த ஒரு பல்லை அவள் கக்கின மலத்தில் அவளுக்குத் தெரியாமல் இட்டுவைத்தார். பின்னர் அவளுக்குக் கக்கின களைப்புத் தீர்ந்தவுடனே, அவள் கக்கின மலத்தைக் காட்டி அதை ஆராய்ந்து பார்க்கச் செய்ததில் அதில் ஒரு பல் அகப்பட்டது. அதனைக் கண்டபின் அம்மாது தான் விழுங்கின தனது பல் வெளிவந்துவிட்டமையால் இனித் தனக்கு வயிற்றுநோய் இராது என்று நம்பி மகிழ்ந்தாள். அவள் நம்பியபடியே அவட்கு அந்நோயும் அன்றுமுதல் இல்லாதாயிற்று. இவ்வுண்மை நிகழ்ச்சியிலிருந்து பிறர் சொற்களில் வைக்கும் நம்பிக்கையின் ஆற்றல் இனிது விளங்கா நிற்கும். இங்ஙனமே வலியுறுத்திச்சொல்லும் கட்டுரையால் நல்லோரைத் தீயோர் ஆக்குதலும் தீயோரை நல்லோர் ஆக்குதலுங் கூடும். ஆனதுபற்றித்தான் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார், மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநலம் ஏமாப் புடைத்து என்று அருளிச் செய்தார். பட்டினத்தடிகளும், நல்லோர் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ. என்று அருளினார். ஆதலால், தாஞ் சேர்ந்து நின்றவர் சொற்கள் தம்மை எவ்வழியுந் திருப்புமாதலால் தீமையை விளைவிப்பார் கூட்டுறவு பெரிதும் அஞ்சி விடற்பாலதாம் என்க. அது நிற்க. அறிதுயிலைப் பிறர்பால் வருவிப்பவர்கள் தாம் சொல்லும் சொற்கள் அவர்க்கு எவ்வகையாலுந் தீங்கு பயவாமல் பாதுகாத்துச் சொல்லுதற்கு நிரம்பவுங் கருத்தாய்ப் பழகல் வேண்டும். ஏனென்றால், அறிதுயிலில் ஒருவர் அமர்ந்திருக்கும்போது அவருக்கு எதனைச் சொன்னாலும் உடனே அவர் அதன்படி செய்வர். ஒரோவொருகால் தப்பித் தவறித் தீதான ஒரு சொல்லை அப்போது சொல்லிவிட்டால், உடனே அதனை மாற்றி நல்லதொன்றை அவர்க்குச் சொல்லல் வேண்டும். இனி, ஒன்றைக் கட்டுரைத்துச் சொல்லுங்கால் தாம் சொல்லும் சொல் ஒவ்வொன்றிலுங் கருத்தைப் பதியவைத்து ஆழ்ந்த குரலில் அவற்றை நீட்டி மெல்லச் சொல்லல் வேண்டும். தூக்கத்தை ஒருவர்க்கு வருவித்தற் பொருட்டுத் `தூக்கம் என்னுஞ் சொல்லச் சொல்லுங்கால் அச்சொல்லின்கண் உள்ள ஒவ்வோர் எழுத்தோசையையும் நீட்டித் `தூ-க்-க-ம் என்று ஆழ்ந்த குரலில் விரையாமற் சொல்லப் பழகிக்கொள்க. முதலில் தூக்கத்தை வருவிக்கும்போது இங்ஙனம் ஆழமாய் நீட்டி மெல்லச் சொல்லவேண்டுவது கட்டாயமாகும்; ஆனால், அதனை நன்றாய் வருவித்தபின் இவ்வாறு சொல்லவேண்டுவதில்லை. எழுத் தோசைகளை ஒன்று சேர்த்துச் சிறிது அழுத்தமாய்ப் பேசுவதே போதும். என்றாலும், எந்தச் சொல்லைச் சொன்னாலும் நினைவைச் சிதறவிடாது முனைக்க நிறுத்திப்பேசுதலே கருதிய பயனைத் தருவதாகும் என்று கடைப்பிடிக்க. 10. அறிதுயிலுக்கு ஏற்றகாலம் இனி, அறிதுயில் வருவித்தற்கேற்ற பெரும்பொழுது, சிறுபொழுதுகளைப் பற்றியும் சிறிது தெரிந்துகொள்ளல் வேண்டும். கடுவெயில் காயும் வேனிற்காலத்தின் உச்சிப் பகற்பொழுது அறிதுயிலை ஒருவர்பால் வருவித்தற்கு ஏற்றகாலம் அன்று. ஏனென்றால், அப்போது புழுக்கமும் வியர்வையும் களைப்பும் எவர்க்கும் உண்டாதல் இயற்கை யாதலால், அறிதுயிலிற் செல்வோர்க்கும் அதில் அவரைச் செலுத்துவோர்க்கும் அயர்வு மிகுதியும் உண்டாம். அயர்வு வந்தபோது நினைவின் வலிமையும் உடம்பின் வலிமையும் சுருங்குவதால் அப்போது அதில் முயலுதல் ஒருகால் இருவர்க்கும் தீங்கினையும் பயக்கும். ஆதலால், அக்காலத்தில் அது செய்யற்க. ஆயினும், குளிர்ந்த சோலைகளின் இடையே வெயில் வெப்பம் தெரியாமல் சில்லென்றிருக்கும் உயர்ந்த மாளிகை வீடுகளிலானால், நண்பகற்காலத்தும் அதனைச் செய்து பார்த்தல் பழுதாகாது. மிகவும் இடரான நோய்களை விரைந்து நீக்கவேண்டி வந்தக்கால், அப்போது உச்சிப் பொழுதாயிருந்தாலும் அதனைச் செய்தல் குற்றமாகாது எனினும், அத்தகைய நேரங்களிலுங்கூட அறிதுயில் வருவிப் போர் தமக்குக் களைப்பு உண்டாகாதபடி ஒழுங்கு செய்து கொள்ளல் நன்று. மற்று, வேனிற்காலத்தின் காலை மாலைப் பொழுதுகளும், மழைகால பனிக்காலங்களின் எல்லாப் பொழுதுகளும் அறிதுயில் வருவித்தற்கு இசைவான காலங்களென்று அறிதல் வேண்டும். மேலும், உணவெடுத்த பின்னும், பசியான நேரமும் அறிதுயிலுக்கு ஏற்ற காலங்கள் அல்ல. அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட காலமே அதற்குப் பொருத்தமானதென்று அறிதல் வேண்டும். அதுவன்றியும், களைப்புங் கவலையும் துன்பமும் கொண்டிருக்குங்காலம் இருவர்க்கும் ஆகா தாகையால், அவை தீர்ந்து மனம் அமைதி பெற்று முயற்சிசெய்தற்கு ஏற்ற சுறுசுறுப்புள்ள நேரமே இருவரும் அதில் முனைத்து முயலுதற்குத் தக்கதென்றும் அறிதல் வேண்டும். 11. அறிதுயிலுக்கு ஏற்றவர் அறிதுயிலிற் செல்லுதற்குரிய இசைவு எல்லா உயிர்களிடத்தும் அமைந்திருப்பினும், மக்கள் சிலரிடத்து அதனை வருவிப்பது எளிதாகவும், வேறு சிலரிடத்து அதனை வருவிப்பது அரிதாகவுங் காணப்படுகின்றன ஆதலால், பிறர்பால் இதனை வருவித்தற்கு முதன்முதற் பழகுவோர் எளிதாக அதனை வருவித்தற்கு ஏற்றவரைத் தெரிந்தெடுத்து அதனை அவர்பாற் செய்து பார்த்துப் பழகுதல் வேண்டும். அதனை இங்ஙனம் பலகாற் பழகிப் பழகிவரப் பிறகு எத்தகையோரையும் அறிதுயிலிற் செலுத்தும் ஆற்றல் மிகுந்துவரும். ஓரிடத்திற் கூடியிருக்கும் ஓர் ஆயிரம் பேரை ஒருநொடிப் பொழுதில் அறிதுயிலிற் செலுத்தத் தக்க வலிமை வாய்ந்தவர்கள் அமெரிக்கா தேயத்தில் இருக்கின்றனர். கூன், குருடு, சப்பாணி முதலானவர்க் கெல்லாம் இவ்வறிதுயிலை வருவித்து அதன் உதவியால் அவர்க்குள்ள குறைபாடுகளை நீக்கும் ஆற்றல்மிக்கவர்களும் அந்நாட்டிலிருக்கிறார்கள். ஆகையால், இதில் நன்றாய்ப் பழகி ஆற்றல் மிக்கவர்கள் வியக்கத்தக்க அரும் பெருஞ் செயல் களெல்லாம் எளிதிற் செய்யமாட்டுவார்கள் என்று அறிந்து கொள்க. அங்ஙனமாயின் முதலில் எளிதாக அறிதுயிலிற் செல்லத் தக்கவர்களைத் தெரிந்து எடுக்குமாறு யாங்ஙனமென்றால் அதனையுஞ் சிறிது காட்டுதும். ஏழெட்டுப் பெயரை ஓரிடத்தில் வருவித்து முதலில் ஒருவரைத் தமக்கு எதிரே நிறுத்தி, அவரது நெற்றிக்கு நேரே தம் கைகளை நீட்டி விரல்களைக் கவிழ்த்தபடியாய் நேராகப் படித்து அவர்தம் கண்களைச் சிறிதுநேரம் உற்று யான் என் கைகளை முன்னே இழுக்கும்போது என் கையோடுகூடவே நீர் வருவீர். அங்ஙனம் வரக்கூடாதென்று நீர் முயன்றாலும் உம்மால் முடியாது, நான் விரும்புகிறபடியே நான் சொல்லுகிறபடியே நீர் எனது கையோடு கூட முன்வரக்கடவீர் என்று நாலைந்து முறை திருப்பித் திருப்பிச் சொல்லி, அறிதுயில் வருவிப்போர் நீட்டிய தமது கையை மெல்லமெல்ல முன்னே இழுத்துக் கொண்டு பின்னே செல்லச்செல்ல அறிதுயிலிற் செல்வோரும் அவர் கையோடுகூடவே வருவர். அங்ஙனம் வரலாகாதென்று அவர் எண்ணினாலும் அவரால் முடியாமல் அக்கையோடு கூடவே வரக் காணலாம். இவ்வாறு முன்நின்று அவரைத் தொடாமல் இழுப்பதுபோலவே, அவர்க்குப் பின் நின்று பின்றலைக்குநேரே கையைப்பிடித்து பின்னுக்கு இழுப்பதுஞ் செய்யலாம். இவ்விரண்டுஞ் செய்து பார்த்தபிறகு அவர்கையை விறைக்கச் செய்வதாகிய மற்றொன்றும் செய்துபார்த்தல் வேண்டும். அஃதெங்ஙன மென்றால்; அவரை நேரே நிறுத்தி அவரது வலதுகையைத் தூக்கி நீட்டி, அவர் தம் கண்களைச் சிறிது நேரம் உற்றுநோக்கியபின் தமது வலக்கையால் அவரது வலக்கையைத் தோளிலிருந்து முன்கைவரையிற் றடவிக் கொண்டே பின்வருமாறு சொல்லுக: உமது கை இப்போது மிகவும் விறைத்துப் போகின்றது. இதனை முடக்க உம்மால் ஆகாது. இது மரம்போல் விறைத்துநிற்கும். நீ எவ்வளவு முயன்றாலும் இதனை முடக்க உம்மால் ஆகாது என்று திருப்பித்திருப்பிச் சொல்லிப் பின் அதனை அவர் மடக்குதற்கு முயலும்படி கேட்க. அங்ஙனமே அதனை அவர்தாமாகவே மடக்குதற்கு முயன்றாலும் அது செய்ய முடியாமல் நிற்பர். அதன்பிறகு இப்போது நீர் உமது கையை மடக்கக்கூடியவர் ஆவீர் என்று சொல்லி அக்கையின்மேல் நோக்கித் தடவுக. இங்ஙனஞ்சொல்லியபின் அவர் தமது கை முன்போல் நீட்டவும் முடக்கவும் வல்லவர் ஆவார். இதுபோலவே, முன்னிழுக்கவும் பின்னிழுக்கவுஞ் செய்தபின் இனி நீர் உமது விருப்பம்போல் நடப்பீர் என்று சொல்லி மேல்நோக்கித் தடவுக. இங்ஙனஞ் செய்யா தொழியின், அவர் தமது நிலை மறந்தவராயிருத்தலுங் கூடும். இனிக் கையை மரக்கச்செய்தது போலவே காலையும் மரக்கச் செய்து பார்க்கலாம். இனி, மேற்சொல்லிய முறையோடு அவரது கண்ணை மூடச் செய்து பிறகு அவர்தாமே அவற்றைத் திறக்கமுடியாமல் இருக்குமாறும் செய்யலாம். எங்ஙனமென்றால், அவரை ஒரு நாற்காலியில் அமரச்செய்து அவர் கண்களைச் சிறிது நேரம் உற்றுநோக்கியபின், அவர் கண்களைத் தமது கையால் மூடி, அவற்றின் இரைப்பைமேல் நாலைந்து முறை தடவிப் பின்வருமாறு சொல்லுக: இப்போது உம்முடைய கண்கள் இறுக்கமாய் மூடிக்கொள்கின்றன. இவற்றைத் திறக்க உம்மால் சிறிதும் ஏலாது. நீர் திறக்கப்பாரும், ஆனால், உம்மால் அது முடியாது. என்று சொல்லியபின் அவர் அவற்றைத் திறக்கமுயன்றாலும் அது முடியாமலிருப்பர். பின்னர் இனி நுமது விருப்பம்போல் நும்கண்களைத் திறக்கவும் மூடவும் வல்லவராவீர் என்று சொல்லி மேல் நோக்கிக் கைகளை வீசுக. இங்ஙனஞ் செய்தவுடனே அவர் எப்போதும் உள்ள நிலையினை அடைவர். இங்ஙனம் எடுத்துக்காட்டிய இந்த நான்கு முறையாலும் அறிதுயிலில் எளிதாகச் செல்லுதற்கு ஏற்றவர்களைத் தெரிந்தெடுக்கலாம். இந்த முறைகளிற் சொன்னபடி நடக்கமாட்டா தவர்களுக்கு அதனை வருவித்தல் இடர்ப்படுமாதலால், துவக்கத்தில் அவர்பால் அறிதுயிலை வருவித்தற்கு முயலலாகாது. அறிதுயிலிற் செல்லுதற்கேற்ற தகுதியுடையவர்பால் அதனை வருவித்தற்கு நன்றாய்ப் பழகித் தேர்ந்தபின், எளிதில் அறிதுயிலிற் செல்லமாட்டாத வர்களையும் அதில் விரைவிற் செல்லுமாறு தூண்டலாம். 12. அறிதுயிலிற் செலுத்தும் முறைகள் இனி, மேற்சொல்லிய முறைகளின்படி ஆராய்ந்து தெரிந்தெடுத்த ஒருவரை அறிதுயிலிற் செல்லுமாறு செய்தற்குரிய பலவகைப்பட்ட முறைகளையும் அடையவே எடுத்துக்காட்டி விளக்குவாம். அறிதுயிலிற் செல்வோரைத் துயில்வோர் என்றும், அதில் அவரைச் செலுத்துவோரைத் துயிற்றுவோர் என்றும் கூறுவோம். தெரிந்தெடுத்த ஒருவரை ஒரு நாற்காலியில் இருக்கச்செய்து, அவர் தமது மடிமேல் தமது இடதுகையை வைத்து அவ்விடது கைம்மேல் வலதுகையை விரித்து வைத்து அதன் உள்ளங்கையில் சிறிய ஒரு வெள்ளிக் காசை வைத்து அதனை அவர் இமைகொட்டாமல் உற்றுப்பார்க்கும்படி செய்தல் வேண்டும். இவ்வாறு அவர் ஏழெட்டு நிமிடங்கள் உற்றுநோக்கியபின், அவரது உச்சந் தலையிலிருந்து முழங்கால் வரையில் தொட்டாயினும் தொடாமலாயினும் கைகளாற் கீழ்நோக்கியபடியாய்ப் பலமுறை தடவித் துயிற்றுவோர் தமது இடது கையின் பெருவிரலால் துயில்வோரின் நெற்றியிற் புருவத்தின் நடுவிடத்தையும் தமது வலக்கையின் பெருவிரலால் அவரது வலக்கையின் பெருவிரலையும் மெல்ல அழுத்துக. இங்ஙனம் செய்கையில், அவர்தம் கண்களை மூடிக்கொள்ளும் படி கற்பித்து ஆழ்ந்து நீண்ட குரலில் தூக்-கம், அயர்ந்-த தூக்க-ம், நல்-ல-தூக்-கம் என்று திருப்பித் திருப்பிச்சொல்லி, நினைவை ஒருமுகப்படுத்தி அவர் தூங்கவேண்டும் என்பதில் நிறுத்துக. இனி மற்றொருமுறை துயில்வோரை ஒரு நாற்காலியில் வசதியாக அமரச்செய்து, துயிற்றுவோர் அவரெதிரில் நின்றுகொண்டு தம் கண்களை அவர் உற்று நோக்கும்படி செய்து, தாமும் அவரது புருவத்தின் நடுவில் தமது பார்வையை நிறுத்துதல் வேண்டும். இங்ஙனம் இருவரும் ஐந்து நிமிடங்கள் உற்றுநோக்கியபின், துயிற்றுவோர் துயில்வோர் பக்கத்தில் நின்றுகொண்டு தமது இடது கையால் அவரது பின்றலையைத் தாங்க வலது கையை அவர் தம் நெற்றிமேல் வைத்துக் கண்களை மூடிக்கொள்ளும்படி அவருக்குக் கற்பித்து, நெற்றியைக் கீழ்நோக்கி மெல்லத் தடவிக்கொண்டே தூக்கம், நல்-ல-தூக்-கம், அயர்ந்த-தூக்கம், இனி-ய-தூக்கம் என்று திருப்பித் திருப்பிச் சொல்லுக. இங்ஙனஞ் சிறிதுநேரஞ் சொல்லிய அளவிலே அவர் தூங்கத் துவங்குவர். இன்னும் ஒருமுறை: துயில்வோரை வசதியானதோர் இருக்கையில் அமரச்செய்து, காம்பிற்கோத்த ஒருசிறு பளிங் குருண்டையைத் துயிற்றுவோர் தமது கையிற் பிடித்துக் கொண்டு, அதனைத் துயில்வோருடைய கண்களுக்கு நேரே காட்டி அவர் அதனை உற்றுப்பார்க்கும்படி கற்பிக்க. பின்னர் அவ்வுருண்டையை முதலில் மெல்ல வட்டமாய்ச் சுற்றுக. அங்ஙனஞ் சுழற்றுங்கால் துயில்வோர் கண்கள் அவ் வுருண்டையைப் பார்த்தபடியாகவே தாமுஞ் சுழலுதல் வேண்டும். துவக்கத்தில் மெதுவாகச் சுழற்றிய அதனை வரவர விசையாகச் சுழற்றுக. இவ்வாறு இரண்டு மூன்று நிமிடங்கள் சுழற்றியபின், தாழ்ந்த ஒரே வகையான குரலில் உன் கண் இறைப்பைகள் அலுப்படைகின்றன - உன் கண்கள் அயர்வடை கின்றன - அவை இமைக்கத் துவங்குகின்றன - இப்போது நீ தெளிவாய்ப் பார்க்க முடியாது - உன் கண்ணிறைப்பைகள் மூடிக்கொள்கின்றன. என்று உறுத்தி மெல்லச் சொல்லுக. இவ்வாறு பலமுறை திருப்பிச் சொன்னால் அவர் அயர்ந்து உறங்குவர். இங்ஙனந் திருப்பித் திருப்பிச் சொல்லியும் அவர் உறங்காவிட்டால், உன் கண்களை இறுக மூடிக் கொண்டு, இப்போது நன்றாய் உறங்கு என்று வற்புறுத்திச் சொல்லுக. இன்னும் ஒருமுறை: துயில்வோர் ஒருவரைத் தக்கதோர் இருக்கையில் அமரச்செய்தாயினும், நீளப் படுக்க வைத்தாயினும், அவர்தம் இரண்டு கைகளும் உள்ளவிரல்களில் நடுவிரலையும் மோதிர விரலையும் துயிற்றுவோர் தம்முடைய, கைகளின்மேல் ஏற்றிக்கொண்டு தம்முடைய பெருவிரல்களால் அவருடைய அவ்விரல் நகத்தின் வேர்களை அழுத்துக. அங்ஙனம் அழுத்துவது செவ்வையாயும் ஒரே தன்மையாயும் இருத்தல் வேண்டும். இவ்வாறழுத்துவதும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையாய் இருத்தல் வேண்டும். எவ்வெவர்க்கு எவ்வெவ்வகையாய் அழுத்தல் வேண்டுமென்பதை நன்கு தெரிய விரும்பினால், இப்பழக்கத்திற்கு மிக இசைந்த பலரை முன்னே காட்டியபடி தெரிந்தெடுத்து அவருள் ஒவ்வொருவரையும் மெல்லவேனும் சிறிது கடுகவேனும் பலபடியாய் அழுத்திப் பார்த்து, எவர்க்கு எது நல்லதாயிருக்கின்றதென்று அவரவர் வாய் மொழியைக் கேட்டே அறிந்து கொள்க. இப்படியாகத் தெரிந்துகொண்ட பின் எவரை எங்ஙனம் அழுத்துதல் வேண்டுமோ அவரை அங்ஙனம் அழுத்துக; இங்ஙனம் அவர்தம் நடுவிரல் நான்காம் விரல் நகவேர்களை அழுத்தின அளவிலே அவர்க்குத் தூக்கம் வரும்; இதிற்றூக்கம் வருவது துவக்கப்படுமானால், அவர்தங் கண்களை மூடித் தூக்-கம், தூ-க்-கம், அயர்ந்-த-தூக்-கம், நல்-ல-தூ-க்கம், இ-னி-ய-தூ-க்-கம் என்று ஆழ்ந்த குரலில் தொடர்பாய் ஒரே வகையாய் மெல்லத் திருப்பித் திருப்பிச் சொல்லுக இப்படிச் சொல்லிய சிறிது நேரத்திலெல்லாம் அவர் அயர்ந்து தூங்குவர். மற்றும் ஒருமுறை: துயில்வோரை இருக்கையில் அமரச் செய்தபின் அவரது முகத்தைச் சிறிது முன் இழுத்துக் கவிழச் செய்க. அவர் தம் கைகளைத் தம் முழங்கால்கள்மேல் வைத்துக் கொள்ளுமாறும், தம் அடிகளை ஒருங்கு சேர்த்துக் கொள்ளு மாறும் செய்க. பிறகு துயிற்றுவோர் அவர்க்கெதிரே யுள்ள இருக்கையில் இருக்கும்போது, இவர் தம்முடைய முழங்காலில் ஒன்று துயில்வோரின் முழங்கால்களுக்கு இடையிலே இருக்குமாறு அமர்தல் வேண்டும். இங்ஙனம் அமர்தல் முறையாகாத விடத்து, அவரைத் தொடாமலே சிறிது அகன்றும் இருக்கலாம். துயில்வோர் தொடத்தக்க வராயிருந்தால், அவரது நெற்றிமேல் வலதுகையை வைத்து, இடதுகையை அவரது வலது தோள்மேல் வைக்கலாம்; தொடக்கூடாதவராயிருந்தால், அங்ஙனங் கைகளை அவர்மேல் வையாமலே நேர் இருந்து, அவருடைய கண்களை ஒரு சிறிது நேரம் உற்று நோக்குக. அங்ஙனம் நோக்கியபின் இருவர் உள்ளமும் ஒருமித்தமை தெரிந்து கொண்டு, அவர்தம் கண்களை மூடிக் கொள்ளுமாறு கற்பிக்க. இவ்வாறு ஒருமைப்பாடு உண்டானவுடனே, துயிற்றுவோர் சொல்லுமாறெல்லாம் துயில்வோர் செய்யத் தலைப்படுவர். இருவர்க்கும் இவ் வொருமைப்பாடு உண்டானதை உறுதியாய்த் தெரிந்துகொள்ள வேண்டுமானால், உள்ளத்தை ஓடாமல் நன்கு நிறுத்தி, மூடிக் கொண்ட அவர்தம் கண்களைத் தொட்டேனுந் தொடாமலேனுங் கீழ் நோக்கி நாலைந்து முறை தடவிப் பிறகு அவரை நோக்கி நீர் எவ்வளவு முயன்றாலும் இப்போது உம்முடைய கண்களை உம்மால் திறக்க முடியாது; திறக்க முயன்றுபாரும், உம்மால் அது முடியாது என்று மூன்று நான்கு முறை திருப்பித் திருப்பிச் சொல்லுக. அவரும் கண்களைத் திறக்க முயல்வார்; ஆனால், அவர் துயிற்றுவோர் வயப்பட்டு நின்றால் அவரால் அவற்றைத் திறத்தல் முடியாது; அவர் வயப்பட்டு நில்லாவிட்டால் உடனே கண்களைத் திறந்து விடுவார். இதுகொண்டு, அவ துயிற்றுவோருடன் ஒருமித்து நிற்பதும் நில்லாததும் திட்டமாய் உணரப்படும். மூடிய கண்களைத் திறவாமலிருக்கச் செய்தல் போலவே, தூக்கிய கையைக் கீழ்விழாமல் விறைத்து நிற்கவும், மூடிய வாயைத் திறந்து பேசாமலிருக்கவும், இருந்த இடத்தை விட்டு எழாமல் இருக்கவும், நீட்டிய காலை மடக்கமாட்டாமல் வைக்கவும், இன்னும் இவைபோல்வன பிறவுஞ் செய்து துயில்வோர் துயிற்று வோருடன் ஒருமித்து நிற்பதும் நில்லாததும் எளிதில் உணரலாம். இவ்வாறு இம்முறைகளுட் பலவேனும் ஒன்றேனும் செய்து பார்த்து அவர் ஒருமித்து நிற்றலை யறிந்தபின், இரண்டு கைவிரல்களையும் விரித்து நீட்டி, அவரது உச்சந்தலையிலிருந்து காற்கீழ்ப்பெருவிரல் முடியத் தொட்டேனுந் தொடாமலேனுங் கீழ் நோக்கித் தடவுக. இங்ஙனம் பத்துப் பன்னிரண்டு முறை தடவியவுடன், துயிற்றுவோர் இளைப்படைந்தால் இடை யிடையே நீளத் தடவாமல், முழங்கால் இடுப்பு மார்பு கண் நெற்றி முதலான உறுப்புக்கள் வரையிலாதல் தடவலாம். இங்ஙனங் கீழ்நோக்கித் தடவும் ஒவ்வொரு முறையுங் கைகளை உதறிவிடுவதோடு, மறுபடியுங் கைகளை உயர்த்துங்கால் அவற்றைப் பக்கச் சாய்வாய்த் திருப்பித் துயில்வோரின் விலாப்புறமாக மேல் உயர்த்துதல் வேண்டும். தடவுதலை முடிக்கும்போது காலின் பெருவிரல் நுனிவரையில் நீளத் தடவி முடிக்க; அஃது எதன் பொருட்டென்றால், இடையிடையே முழங்கால் இடுப்பு மார்பு முதலான உறுப்புகள் வரையில் தடவியிருந்தால் அவ்வுறுப்பிடங்கள் வரையில் வந்து தங்கி நின்ற மின்சத்தை நீளக் காற்பெருவிரல் முடிய ஓடச்செய்தற் பொருட்டேயாமென்க. இவ்வாறு தடவி முடித்த நேரத்தில் துயில்வோரின் தலை மெல்ல மெல்லக் கீழ்நோக்கித் தொங்கத் துவங்கும். இதுவும் தூக்கத்திற்குரிய மற்ற அடையாளங்களும் கண்டபின், அவர் யோகநித்திரை என்னும் அறிதுயிலிற் செல்கின்றார் என்பதனைத் தெரிந்துகொள்க. அதனைத் தெரிந்ததுந் துயிற்றுவோர் இன்னும் மிகுதியான நம்பிக்கையோடுங் கிளர்ச்சியோடும் அவரைத் துயிற்றுதற்குச் செல்வாராக. சென்று பின்னர் அவரது முகம் அவர்தம் முழங்காலில் வந்து கவிழ்ந்துகிடக்குமளவும் அவரைத் துயிற்றுதற்குரிய முறைகளை விடாது செய்க. அவரது தலை அவர்தம் முழங்காலில் வந்து பொருந்துமளவும் அவரைத் துயிற்றியபின், அவர் அயர்ந்த துயிலில் இருக்கின்றார் என்பதைத் தெரிந்து கொள்க. இந்நிலையில் அவர் இன்னும் ஆழ்ந்த துயிலிற் செல்லும் பொருட்டு, அவரது பிடரியின்மேல் வாயினால் ஊதி, அவர்தம் பின்தலைமேல் துயிற்றுவோர் தமது பார்வையை நிறுத்திப் பிறகு அங்கிருந்து அவரது முதுகின் நடுவைப் பலகாற் கீழ்நோக்கித் தடவுக. அங்ஙனஞ் செய்தபின், அவர் ஆழ்ந்த துயிலில் இருக்கின்றாரா இல்லையா என்று தெரிதற்குத் துயிலினின்றும் எழுப்புவதுபோல் அவரை அப்புறமும் இப்புறமுமாக அசைத்துப் பார்க்கலாம். அவ்வாறு அசைத்தும் அவர் விழியாமல் அயர்ந்த தூக்கத்திலேயே இருப்பாராயின், அவர் ஆழ்ந்த யோகநித்திரை அல்லது அறிதுயிலில் இருக்கின்றாரென்பதை உணர்ந்து கொள்ளலாம். இங்ஙனமாக ஒருவர் ஆழ்ந்த அறிதுயிலிற் செலுத்தப் படுங்காலம் அவரது உணர்வின் சுறுசுறுப்பைப் பொறுத் திருக்கின்றது. எனினும் பெரும்பாலும் ஒரு நாழிகை நேரம் ஒருவரைத் துயிற்றுதற்குப் போதுமானதாகும். ஒருநாழிகை முயன்றும் ஒருவரைத் துயிற்றுதல் முடியாதாயின், அன்றைக்கு அதனை விடுத்து, அடுத்தநாளில் அவரைத் துயிற்றுதற்கு முயல்க. அடுத்த நாளிலும் அது முடியாதாயின் அதற்கடுத்த நாளிலும், அதிலும் இயலாவிட்டால் அதற்கடுத்த நாளினுமாகத் தொடர்ந்து முயல்க. இங்ஙனம் இரண்டு மூன்று நாட்கள் தொடர்பாக முயன்றால் எத்திறத்தவரையுந் துயிலச்செய்தல் கைகூடும். மேலும், ஒருமுறை ஒருவரை அறிதுயில் கொள்ளச் செய்துவிட்டாற், பிறகு அவரை அதன்கட் செலுத்துதல் மிக எளிது; அவர் துயில் கொள்ளல்வேண்டுமென எண்ணிய அளவானும், அவர்மேற் சிலமுறை தடவிய அளவானும் அவர் எளிதிலே ஆழ்ந்த அறிதுயிலிற் சேர்வர். மேலே காட்டிய தெரிந்தெடுக்கும் முறையால் துயில்வோர் ஒருவரைத் தெரிந்தெடுத்து, அவரை எதிரே நிறுத்திக்கொள்க. இதனைப் பழகும் இடத்தில் ஏதோர் அரவமும், துயில்வோர் கருத்தைக் கவரத்தக்க ஏதொரு பொருளும் இல்லாமல் எல்லாம் அமைதியாக இருத்தல் வேண்டும். மேற்சொல்லிய முறையிற் போலவே அவருடைய முகத்தையும் தோள்களையும் முன்னே சிறிது இழுத்துக் குனியச் செய்து, அவர்தம் கைகள் விலாப்புறங்களுக்குச் சிறிது முன்னே துவண்டு தொங்குமாறு விடுக. இங்ஙனஞ் செய்தலால் துயில்வோருக்கு நரம்பிளக்கம் உண்டாம். அஃது உண்டாகவே, அவர் துயிற்றுவோரின் வழிப்பட்டு நிற்கும் நிலை உண்டாம். உடனே, துயிற்றுவோர் தமது வலது கையைத் துயீல்வோரின் முதுகு நடுவில் தோட்பட்டைகளுக்கு இடையிலே வைத்து, இடது கையை அவரது நெற்றி மேற் புருவத்தின் நடுவிலே மெல்ல வைக்கக்கடவர். அதன் பிறகு, துயிற்றுவோர் தமது இடதுகாலை அவருக்கு முன்னே அவர்தம் இணையடிகளை அடுக்கவைத்துத் தமது முழங்காலும் அவர்தம் முழங்கால்களைத் தொடும்படியாகக் கிட்டச் சேர்த்தல் வேண்டும். இவ்வாற்றல் அவ்விருவர்க்கும் மன இசைவு உண்டாம். இந்நிலையிற் சிறிதுநேரம் இருந்தபின், துயிற்றுவோர் தமது வலது கையால் அவரது பிடரியிலிருந்து முதுகின் அடிகாறும் தடவுதலோடு, இடது கையால் இடையிடையே அவர்தம் நெற்றியையுங் கண்களையுங் கீழ்நோக்கிக் கன்னங்கள்வரையில் தடவுக; அதன்பின் அவருக்குப் பின்னேசென்று அவரது தலையின் பின்புறத்தே யிருந்து நடுமுதுகின் நெடுக வெதுவெதுப்பு உண்டாக வாயினாற் கீழ் நோக்கி ஊதுக. துயில்வோரின் கண்ணிறைப்பைகள் கீழ் இறங்கி அரைவாசி மூடுதலும், அவருடம்பில் அசைவுங் காணப்படும் வரையில் மேற்கூறியவாறு செய்க; அவ்விரண்டுங் காணப்பட்டவுடனே, துயிற்றுவோர் தமது வலது கையை மேற்சொல்லியவாறே அவரது முதுகின் நடுவைத்து, அவர் தம் கண்களை மூடிக்கொள்ளுமாறு கற்பித்துத் `தூங்கும் என்று கூறுக. மறுபடியும் மேற்காட்டியவாறே முன்னும் பின்னும் தடவுதலைச் செய்யப் புகுந்து, அவர் நிற்கமாட்டாது தள்ளாடும் வரையில் அங்ஙனஞ் செய்க. அதன்மேல், அவர் நிற்கலாற்றாது பின்னேவிழத் துவங்குவராதலின், அவர் கீழே விழுந்துவிடாமற் பின்னே தாங்கிக்கொண்டு, அவரை நிலத்திலாயினும் அல்லதொரு கட்டிலின் மேலாயினும் படுக்க வைத்தல் வேண்டும். அங்ஙனம் அவரை மல்லாக்கப் படுக்கவைத்த பின் `தூங்கும் `செவ்வையாய்த் தூங்கும் என்று இடையிடையே சொல்லிக்கொண்டே அவரது புருவநடுவில் மெல்லென இடது கையை வைத்து, வலதுகையால் நீளத்தடவுக. இவ்வாறு செய்த சிறிதுநேரத்தி லெல்லாம் அவர் அயர்ந்த அறிதுயிலிற் செல்வர். இனி ஒரேகாலத்திற் பலரைத் துயிற்றுதற்கு ஒருவர் கைக்கொள்ள வேண்டிய முறை யாதெனிற் கூறுவாம். மாந்தர்களிற் பலர் பலவேறுவகையான இயல்புகள் உடையவராயிருத்தலின் அவர்களைத் துயிற்றுதற்குச் செய்யும் முறைகளும் பலவேறு வகைப் பட்டனவாய் இருக்குமென்பது உணரப்படும். என்றாலும், ஒருவர் பலவகையான முறைகளையும் அடுத்தடுத்துச் செய்து பழகிவருவராயின், அவர் அப்பழக்கத்தால் ஆற்றல் மிகப்பெற்று ஒரே ஒரு முறையாற் பலரையுந் துயிற்றவல்லுநர் ஆவர். ஆயினும், சிலநேரங்களில் அவருங்கூடப் பலரைத் துயிலச்செய்யும் பொருட்டுப் பலவேறு முறைகளைக் கையாள வேண்டி வருமாதலால், அவர் பெரும்பாலும் அம்முறைகளெல்லா வற்றையுந் தெரிந்து பழகிக் கொள்ளுதல் இன்றியமையாததாகும். இனிப், பலரைத் துயிற்றுதற்கு இசைந்த ஓர் அரிய முறையினை இங்கெடுத்துக் காட்டுகின்றாம். அறிதுயிலில் துயிற்றப்படுதற்கு இசைந்துவந்த பலரையும் ஒரு வரிசையாக இருக்கைகளின்மேற் செவ்வனே அமரச் செய்க. முன்னும் பின்னுஞ் சென்று அவர்களைத் தடவித் துயிற்றுதற்கு இசைவாக அவர்கள் எதிரிலும் பின் புறத்திலும் வேண்டுமளவுக்கு இடம் தாராளமாய் இருக்க வேண்டும். அப்பலரின் முழங்கால்களும் பக்கங்களில் ஒன்றையொன்று தொடுமாறு இருக்கவைத்தால், அவ்வெல்லாரிடத்தும் பாயும் மின்ஆற்றல் அவரிடத்தெல்லாம் ஒரே தன்மையாகப் பரவி ஒரு முழுதாய் நிற்கும். அவர்களுடைய முகங்களையெல்லாம் சிறிது முன்னே இழுத்துக் குனியச் செய்வதுடன், அவர் தம் கைகளையும் தம் முழங்கால்களின்மேல் வைத்துக் கொள்ளுமாறு செய்க. அவர்களைச் சூழ உள்ள எல்லாம் அமைதியாயிருக்க, இவையெல்லாம் செய்தானபின், அவர்கள் எல்லாருந் தமது கட்பார்வையை ஒரு முனையில் நிறுத்துமாறு கற்பிக்க. இஃது அவர்கள் தமது மூக்கு முனையை நோக்குதலால் எளிதிற் செய்யப்படும். கண்விழித் திருக்கமாட்டாமல் அவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டு தூங்க மனம் வந்தால் அதனைத் தடைசெய்யாமல் அவ்வாறே செய்யும்படி கூறுக. அதன்பின் அவர் ஒவ்வொருவரையும் எதிரே முடிமுதற் றுவங்கி முழங்கால் வரையும் நாலைந்து முறை இரண்டு கைகளாலுங் கீழ்நோக்கித் தடவுக. பிறகு அவர்க்குப் பின்புறத்தே போய் அவர் ஒவ்வொருவரின் பின்றலை யடியிலிருந்து முதுகு நெடுக அங்ஙனமே தடவுக அவற்றோடு, இரண்டொரு முறை அவர் ஒவ்வொருவரின் புருவநடுவில் வலது கையை வைத்துச் சிறிது மெல்லெனத் தடவுக. இங்ஙனஞ் செய்கையில், அவர்களின் தலைகளில் ஆட்டங் காண்கின்றதா என உற்று நோக்குக. அவர்களில் எவர்க்கேனும் ஆட்டங்கண்டால், துயிற்றுவோர் தம் கைவிரல்களை அவர் தலையுச்சியின் மேல் வைத்துத் தமது பெருவிரலாற் கீழ்நோக்கி அழுத்திக்கொண்டே, அவர் தம் கண்களை மூடிக்கொள்ளுமாறு கற்பித்துத் `தூங்கும் என்று சொல்லி, அவரது தலையை நிமிர்த்தி அஃது அவர் நாற்காலியின் முதுகுமேற் சாய்ந்திருக்குமாறு வைக்க. பிறகு அவர்தம் முடிமேல் வைத்த விரல்களால் மெல்லமெல்லக் கீழ்நோக்கி நெற்றி, கண்கள் முகம்முடியத் தடவுக. இங்ஙனம் எல்லாம் செய்யவே அவர்களில் உணர்வு நுட்பம் இயற்கை யிலே வாய்ந்தவர்கள் தூக்கமயக்கம் உடையவர்களாய்க் காணப்படுவர்; அவர்களை மட்டும் மேலும் பல ஆராய்ச்சிகளைச் செய்து பார்த்தற்குத் தக்கவர்களாக இருத்திக் கொள்க; அத்தூக்க மயக்கம் இல்லாதவர்களை அவ்வரிசையினின்றும் அகற்றிவிடுக. பின்னர் அறிதுயிலுக்கு ஏற்றவராக இருத்தப்பட்டவர்கட்கு மேலும் மேலும் தூக்கம் உண்டாகும்படி இப்போது முயலத் தொடங்குக. இப்போது தீர்மானத்தோடும் விரைவாய் அவர்களின்மேல் தடவுதலைச் செய்து, அவர்கள் ஒவ்வொரு வராய் ஆழ்ந்த துயிலிற் செல்லுமாறு கற்பிக்க. அவர்கள் ஆழ்ந்த அறிதுயிலிற் சென்ற அளவானே, அவர்களின் உடம்பு துவண்டிருக்கும், அவர்கள் ஒரே ஒத்தநிலையிலிருத்தல் இயலாது, தம்மைச்சூழ நடப்பது இன்னதென்றும் அறியார். இவ்வடை யாளங்களைக் கொண்டும், அயர்ந்த துயிலுக்குரிய மற்றக் குறிகளைக் கொண்டும் அவர்களது துயிலின் நிலைமை நன்குணரப்படும் என்க. இனி, நாடக அரங்கிற் கண்காட்சி காணவரும் பலருட் சிலரைத் தெரிந்தெடுத்து, அவர்களையெல்லாம் இன் சொல்லோடும் இன்முகத்தோடும் நாடக அரங்கின்மேல் வருவித்து வைத்து, அவர்களை அறிதுயிலிற் போகச்செய்து, அவர்கள் பாற் பலவியப்பான காட்சிகளையெல்லாங் காட்டலாம். ஆனால், நாடக அரங்கில் இவ்வறிதுயிலைப் பலர்பால் வருவித்துப் பல வியப்பான நிகழ்ச்சிகளைக் காட்டுதல் எளிதன்று. அறையில் ஆடி அம்பலத்தில் ஆடு என்னும் பழமொழிக்கு இணங்க, முதலில் வீட்டின்கண்ணே இக்கல்விமுறையைச் செவ்வனே பழகித் தேர்ச்சிபெற்றபின் நாடக அரங்கில் இதனைக் காட்டுதற்கு வெளிவரல் வேண்டும். நாடக அரங்கில் வந்தேறுதற்கு இசைந்த ஆற்றல்பெற்று அதன்கண் வந்தவர் முதலில் `யோகநித்திரை என்னும் இதன் மேன்மையையும் இதனால் விளையும் பயன்களையுங் கேட்போர் உள்ளத்தில் நன்றாய்த் தைக்கும்படி சிறிது நேரம் எடுத்துப்பேசுக. அங்ஙனம் பேசி முடித்தபின், எதிரே அவைக்களத்தி லிருப்போர்க்குத் தாம் செய்து காட்டப்போகும் முறைகளிற் சிலவற்றைச் சொல்லிக்காட்டி, அவற்றிற்கு அவர்களும் உதவியாய் நிற்கவேண்டுமென்பதனை வற்புறுத்துக. பின்னர் அவையில் உள்ளாரில் எவரெவர் அறிதுயிலிற் செல்ல விருப்பம் உள்ளாரோ அவரெல்லாம் நாடக மேடைமேல் வருகவென்று அன்பாகக் கேட்டுக்கொள்ளல் வேண்டும். அதற்கிசைந்த பலர் நாடக மேடைமேல் வருவர். நாடக அரங்கின் ஒருபுறத்தே இன்னிசைக் கருவிகளுடன் இனிய இசைப்பாட்டுகள் சிலர் பாடிக் கொண்டிருத்தல் வேண்டும். மேடைமேல் வந்தோரை யெல்லாம் அரைவட்டமாக இட்ட நாற்காலி வரிசைமேல் அவையி லுள்ளார்க்கு எதிர்முகமாக இருக்கும்படி அமரச்செய்க. இனி, எதிர்முகமாக வன்றி, மேடையின் இருபக்கங்களிலும் இருக்குமாறும் செய்யலாம். அவர்களை அவ்வாறு இருத்தியபின், ஒவ்வொருவரையும் ஆராய்ந்து பார்த்துத், துயிற்றுதற்குத் தகுதியில்லாதவரென்று காணப்படுவோரை யெல்லாம் பணிவோடும் இனிதாகச் சொல்லித் திரும்பவும் கீழே அனுப்பிவிடுக. மேடைமேல் வந்ததும் நாற்காலிகளின்மேல் இருத்தப்பட்டோரில் எவர் தமது ஒரு கால்மேல் மற்றொரு காலைத் தூக்கிவைத்துக் கொண்டு நிமிர்ந்தபடியாய்ப் பின்னே சாய்ந்து இருக்கின்றனரோ அவர் இறுமாப்பு உடையவரெனத் தெரிந்து, அவர் அறிதுயிலுக்குத் தகுதியில்லாதவராதலால் அவரை உடனே கீழே போகச்செய்க. அங்ஙனமே, புகையிலை தின்போரையும், புகைச்சுருட்டுப் பிடிப்போரையும், மூக்குப் பொடியிடுவோரையும், சாராய நாற்றம் உடையோரையும் இதற்குத் தகுதியில்லாதவரென உணர்ந்து அவரையும் அகற்றிக் கீழே போகச்செய்க. துயிற்றுவோர் இதற்குமுன் அறிதுயிலிற் பலகாற் செல்லும்படி பழக்கப்படுத்திய சிலரையும் தம்மோடு உடன்கொண்டுவந்து முற்கூறிய புதியோர் பக்கத்தில் இருக்கும்படி செய்தலும் நன்று. அதன் பிறகு, துயிற்றுவோர் தாம் சொல்லுகிறபடி யெல்லாம் அவர்கள் உண்மையுடன் நடந்துகொள்ளும்படி கற்பிக்க. அவர்களை நோக்கிச் சொல்லுவன எல்லாம் இயற்கையான குரலில் தீர்மானத்தோடும் தெளிவாகச் சொல்லப்படுதல் வேண்டும். அதன்பின் ஒவ்வொருவரும் மடிமேல் வைத்த தமது இடது உள்ளங்கையின்மேல் தமது வலதுகையை மேல்நோக்கி விரித்துவைத்துக்கொள்ளும்படி செய்க. பின்னர்ச் சிறிய வெள்ளிக் காசுகளையேனும், அல்லது அவற்றைப்போல பளிச்சென்றிருக்கும் வேறுசிறு பொருள் களையேனும் வருவித்து அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் கையினும் இட்டு, அவரெல்லாரும் தம் கையிலுள்ள அச் சிறுபொருளை இமை கொட்டாமற் குனிந்த படியாய் உற்றுநோக்கும்படி சொல்லுக. அவர் எல்லாரும் அங்ஙனம் உற்றுநோக்கிக்கொண் டிருக்கையில், துயிற்றுவோர் முன்னமே இதில் பழக்கித் தம்முடன் கொண்டு வந்தோரில் ஒருவரையும் அங்ஙனமே உற்றுநோக்கும்படி செய்து அவரைத் துயிற்றுதற்குப் புகுக. இதில் முன்னரே பழக்கப்படுத்தப் பட்டவர்க்கு இந்த முறையில் அன்றி, வெறுஞ்சொல்லளவிலே துயிலை எளிதில் வருவிக்கலாமென்றாலும், மற்ற எல்லார்க்குஞ் செய்வதுபோற் செய்தலாற், புதியராய் வந்து அமர்ந்தோர் அதனைக் கண்டு துயிற்றுவோர்வழியில் எளிதில் அடங்கி நின்று துயில்வர். பழையவரை நோக்கித் `தூங்கும் என்று சிலமுறை திருப்பித் திருப்பிச் சொன்னவுடன் அவர் நன்றாய்த் தூங்குவர். அவரைத் துயிற்றியபின்பு, மற்றைப் புதியோரிடஞ் சென்று அவருட் கண் இறைப்பைகள் ஆடப்பெற்றாரைப் பார்த்து `நீர் நும் கண்களை இறுகமூடிக்கொண்டு தூங்கும், என்று சொல்லிவிட்டு விரைந்து அவர்களின் கண் இறைப்பைகளின் மேல் தொட்டேனும் தொடாமலேனும் கீழ்நோக்கித் தடவுக. இதுசெய்தபின் வலதுகைப்பெருவிரலை அவர் ஒவ்வொருவரின் புருவநடுவில் வைத்துச் சிறிது கீழ்நோக்கி அழுத்திக்கொண்டே அவர்களின் வலதுகையைத் துயிற்றுவோர் இடதுகையால் ஒன்றன்பின் ஒன்றாய் மெல்லெனப் பற்றுக இங்ஙனஞ் செய்கையிலேயே தீர்மானமான குரலில் இப்போது - உங்கள் - கண்களை - நீங்கள் - திறக்க - முடியாது என்று அழுத்தமாய்ச் சொல்லுக. இவ்வாறு சொல்லியவுடனே அவர்களிற் பலர் தூக்கத்திலிருந்தாலும் இல்லாவிட்டாலும் தம்கண்களைத் திறக்கமாட்டாமலிருப்பர்; சிலர் அவ்வாறன்றி உடனே கண்களைத் திறந்துவிடுவர்; அத்தகையோர் அறிதுயிலில் எளிதிலே போதற்குத் தகுதி யில்லாதவர் ஆகையால், அவர்களையுங் கீழே அனுப்பிவிடுக பிறகு, உறங்குதற்குத் தக்கவராக மேடைமேல் இருத்திக் கொள்ளப்பட்டவர்கட்கு எதிரிலே சிறிது எட்டநின்று கொண்டு எல்லாரையும் உச்சந்தலைமுதற் றுவங்கி அடிமுடிய ஒவ்வொருவராய் இடதுகைப்பக்கத் துள்ளவரிலிருந்து தடவிக்கொண்டு செல்க. முன்னமே இதிற் பழக்கப்படுத்தப் பட்டவர்களும் இடை யிடையே இருத்தலால் அவர்கள் எளிதிலே இவ்அறிதுயிலிற் செல்வர். மற்றுப் புதியோர் விரைவில் தூங்காவிட்டால், ஒவ்வொருவரையும் கண்களின் மேலும் கன்னப் பொட்டுகளின் மேலும் விரைந்து கீழ் நோக்கிப் பலகால் தடவுக. இங்ஙனங் கால்மணிநேரம் விடாதுசெய்தால் அவரும் அயர்ந்த உறக்கத்திற்கு ஏகுவர், தொடக்கத்தில் ஒவ்வொருவர் கையினும் வைத்த வெள்ளிக் காசுகளை எடுத்துக்கொள்க. துவக்கத்தில் வெள்ளிக்காசு முதலான பளிச்சென்ற பொருள்களை வைத்து அவற்றை உற்றுநோக்கச் செய்தலைவிட, ஒவ்வொருவரும் தமது இடது கைப்பெருவிரலை வலது உள்ளங்கையில் வைத்து இறுகப் பற்றிய படியாய்க் கண்களை நன்றாய் மூடிக் கொள்ளுமாறும் செய்தல் நன்று. இங்ஙன மெல்லாஞ் செய்து சிலரையேனும் பலரையேனும் அன்றி ஒருவரையேனும் துயிற்றுதற்கு முயலுங்கால் துயிற்றுவோர் தமது நினைவைப் பலமுகமாய்ச் சிதற விடாது, எல்லார்க்குந் தூக்கத்தை வருவித்தலின்கண்ணும், அதனை வருவித்த பின்னர்ச் செய்ய வேண்டுவனவற்றிலும் முனைத்து ஒரு முகமாய்க் குவிந்து நிற்குமாறு செய்தல் இன்றியமையாததாகும் ஏனென்றால், எத்தகைய அரியசெயலும் நினைவை ஒருமுகமாய் நிறுத்தி வலிவேற்றுதலினாலேயே முடிக்கப்படுகின்றது துயிற்றுவோர் இடை யிடையே இளைப்படைந்தாற் சிறிது ஒதுங்கி நின்று தூயகாற்றைப் பலமுறை மூக்கால் உள்ளிழுத்த லானும், பாலேனும் பானகமேனும் பருகுதலானும் அவ் விளைப்பைத் தீர்த்துக்கொள்ளலாம். இளைப்புத் தீர்த்துக் கொண்டபின் திரும்பவும் அவர்கள் பாற்சென்று, அவர்களில் உறங்குவோர்க்குப் பின்னும் அவ்வுறக்கத்தை மிகுதிப்படுத்தல் வேண்டி மேற்சொல்லிய முறையாகவே பின்னுஞ் சிறிதுநேரம் முயல்க. இப்போது அவர்களெல்லாரும் நன்றாய் அயர்ந்துறங்கத் தலைப்படுவர். அவர்கள் உறக்கத்திற்குச் செல்கையிலேயே துயிற்றுவோர் பின்வருமாறு, `நீங்கள் - என் - சொற்களை யல்லாமல் - வேறு - எதனையும் - கேட்க மாட்டீர்கள். நீங்கள் - அயர்ந்த உறக்கத்தில் - இருந்தாலும் - யான் - சொல்லுவன வற்றைக் - கேட்டு அவற்றின்படியெல்லாம் - செய்வீர்கள். யான் - உங்களை - எழுப்புகின்ற வரையில் - நீங்கள் - நன்றாய் - அயர்ந்து - உறங்குவீர்கள். யான் - திரும்ப - உங்களை - எழுப்புகின்ற போது - நீங்கள் - நன்றாய் உறக்கம் நீங்கி - எழுந்து விடுவீர்கள் என்று அழுத்தமானகுரலில் மெல்ல மெல்லச் சொல்லுக. இவ்வாறு சொல்லித் துயிற்றிய அளவிலே, துயிற்றுவோர் சொல்லுகிறபடியெல்லாம் செய்தற்கு இசைந்த அறிதுயிலில் அவரெல்லாம் செல்லாநிற்பர். 13. மூவகைத்துயில் இனி, ஒருவர்க்கோ அல்லது பலர்க்கோ இங்ஙனம் வருவிக்கப்படும் அறிதுயிலானது மூவகைப்பட்ட நிலைகளை உடையதாகின்றது. அவை: நினைவுத்துயிலும், நினைவற்ற துயிலும், நடைத்துயிலும் என மூன்று வகைப்படும். அவற்றுள் நினைவுத் துயிலில் இருப்போர்க்கு நினைவுமாறாது; அத்தூக்கத்தில் நடப்பனவெல்லாம் அது நீங்கியபின் நினைவுக்குவரும். இந்நிலையில் இருப்போர்க்குக் கண்கள் திறந்தனாயினும் மூடியாயினும் அரைவாசி திறந்தாயினும் இருக்கும். இவர்களைத் தாம் ஏவியபடியெல்லாம் நடக்குமாறுசெய்தல் துயிற்றுவோர்க்கு முடியாது; என்றாலும் இவர்களுடைய முகம் கைகால் முதலான உறுப்புகளைத் தாம் விரும்பிய நிலைகளிற் சிறிதுநேரம் நிற்குமாறு துயிற்றுவோர் செய்துவைக்கலாம். இத்துயிலில் இருக்கையில் உடம்பில் நோய் உணர்ச்சி இராது, ஊசியாற் குத்தினாலும், கத்தியாற் சிறுக அறுத்தாலும் நோய்தோன்றாது. இதனைக் கண்டறிந்த நுண்ணறிவு மிக்க வெள்ளைக்கார மருத்துவர் சிலர் புண்கள் கழலைகளாற் பொறுத்தற்கரிய துன்பத்தையடையும் நோயாளிகளை அந்நோய் தெரியாமல் அவற்றை அறுத்துத் தீர்க்கும் பொருட்டு இத்துயிலிற் போகச் செய்து, அவற்றை அவர்க்கு நோய் தெரியாமலே அறுத்துத் தீர்க்கின்றனர். முருகக்கடவுளுக்கு நேர்ந்துகொண்டு உடம்பில் அலகேற்றிக் காவடி எடுத்துச்செல்வோர் இத்தகையதொரு நினைவுத் துயிலின் கண்ணேதான் இருக்கின்றனர். இத்துயிலின் பயனை உண்மையாய் உணர்பவர்கள் இதனாற் பலநலங்களை யடையலாம். இரவும் பகலும் உறக்கம் இன்றி நோயால் துன்புறுவார்களை இத் தூக்கத்திற் போகச் செய்தால் அவர்கள் தமக்குள்ள நோயின் துன்பத்தை அறியாராய் இனிது உறங்குதலோடு உறக்கம்நீக்கி எழுந்தபின்னும் அந்நோயின் கொடுமை தணியப் பெறுகின்றனர். என்றாலும் இத்துயிலில் நினைவு மாறாம லிருத்தலால் துயிற்றுவோர் சொல்வனவுஞ் செய்வனவும் எல்லாம் துயில்நீங்கி எழுந்தபின் ஏறக்குறைய நினைவுக்கு வரும் என்க. இனி, மேற்சொல்லிய நினைவுத் துயிலினும் ஆழ்ந்து செல்லும் துயிலில் உயிருக்கு நினைவு சிறிதும் நிகழாமையால் அதற்குப்பின் உண்டாம் இது நினைவற்ற துயில் எனப் பெயர் பெற்றது. இத்துயிலின்கண் இருப்போர்க்குச் சுற்றியுள்ள பொருள்களின் உணர்ச்சி சிறிதும் இராது; புறத்தே தோன்றும் ஓசை எவ்வளவு பெரியதாய் எவ்வளவு கொடுமையானதாய் இருப்பினும் அதனை அவர் சிறிதுங்கேளார். துயிற்றுவோருடைய சொற்களையுங் குரலொலி யையுந் தவிர வேறொன்றனையும் அவர் உணரார் விழிகள் சுழலாமல் அமைதியுற்றிருக்கும். முன்னே காட்டிய நினைவுத் துயிலிற் சென்றவரோ திடுக்கிடத்தக்கது எதனையேனுங் கேட்டபின் அதனினின்றும் உடனே விழித்தெழுவர். ஆனால், இந்நினைவற்ற துயிலிற் சென்றவரோ எத்தகைய ஓசையானும் திடுக்கிட்டு எழார். அவருடைய முகங் கை கால் முதலான உறுப்புகளை எந்த நிலையில் துயிற்றுவோர் வைக்கின்றனரோ அந்த நிலையிலேயே அவை நிற்கும். அவரை நோக்கித் துயிற்றுவோர் ஏதேனும் அடுத்தடுத்து வினவினால் மட்டும் அவர் அதனை அரைவாசி யுணர்வோடு கட்டாயத்தினால் விடை கூறுவர்; அங்ஙனம் விடை கூறியபின் மறுபடியும் அவ்வாழ்ந்த தூக்கத்தின் கண்ணேயே அமைதியாய்ச் சென்றிருப்பர். இந்நிலையில் உடம்பினிடத்தே உணர்வு சிறிதும் இல்லாமையால், உடம்பில் ஆழமாக அறுத்துச் செய்யவேண்டிய முறைகளைச் செய்தற்கு இதுவே மிகவும் ஏற்றதொரு நிலையாகும் இதற்குமுன் நிகழும் துயிலில் நினைவு பழுதுபடாமலிருத்தலால் அதன்கண் உடம்பின் எவ்விடத்தையேனும் ஆழ அறுத்தலால் உடனே ஒருவர் திடுக்கிட்டு எழுந்திருத்தலுங் கூடும். மற்று இதன்கண் எவ்வளவு ஆழமாக உடம்பை அறுத்தாலும், அல்லது கை கால் முதலிய உறுப்புகளை வெட்டி யெடுத்தாலும் இத்துயிலின்கட் சென்றோர் அவற்றைச் சிறிதும் உணரார். இக்கல்விப் பழக்கத்தால் நோயாளிகள் பலர்க்குப் பொறுத்தற் கரிய நோய்கள் பலவற்றை நோயின்றித் தீர்த்த வெள்ளைக்கார மருத்துவர் ஒருவர் (Dr. James Esdaile, M.D.) நோயாளி ஒருவனுக்கு மிக வீங்கிப்பெருத்த விதைகள் இரண்டை நோயின்றி அறுத்தெடுத்து நலப்படுத்தின வரலாற்றினை இங்கே மொழி பெயர்த்துக் காட்டுகின்றாம். பன்றி விற்பனை செய்த ஒருவன் மற்றொருவனை அடித்துப் படுகாயப்படுத்தின குற்றத்திற்காக ஏழு ஆண்டு களுக்குக் கடுங்காவலில் வைக்கப்பட்டான். அவ்வாறு வைக்கப்பட்டபின் சில காலத்தில் அவனுக்கு இரண்டு விதைகளும் மிக வீங்கிப் பெருத்து அவன் நடத்தல் இருத்தல் எழுதல் முதலான எவ்வகை நடமாட்டமும் செய்தற்கு இயலாதபடி அவனுக்குப் பெருந்துன்பத்தை விளைவித்தன. அதுகண்டு சிறைக்கோட்டத் தலைவர் அவனை அறமருத்துவக் கழகத்திற்கு அனுப்பினர். அங்கிருந்த வெள்ளைக்கார மருத்துவர் அவனை ஒரு நாற்காலியில் இருத்தி, அவனுடைய விதைகளில் ஒன்றைக் குத்தி நீரை வெளியே எடுத்துவிட்டு, அதனுள்ளுக்கு ஏற்றவேண்டிய கார மருந்தை ஏற்றிவிட்டார். அக்காரமருந்து உட்சென்றதும் அதனால் உண்டான எரிவு பொறுக்கமாட்டாமல் கண்களை இறுக மூடிக்கொண்டு, கறை நரம்பை இரண்டு கைகளாலும் பிடித்து நெருக்கினபடியாய் மிகவுந் துன்புறுவானானான். அதனைக் கண்டு அவன்பால் இரக்கமுற்ற அவ்வெள்ளைக்காரர் தங்கீழ் அலுவல் பார்க்கும் வங்காளி மருத்துவரை நோக்கி யோகநித்திரையில் செலுத்தப் படுவோரைப் பார்த்திருக்கின்றீரா? என்று கேட்க அவர் மருத்துவக்கல்விக் கழகத்தில் அஃது ஆராயப்பட்டதைப் பார்த்தேன்; என்றாலும், அஃது அப்போது பலிக்கவில்லை. என்றார். அதன்மேல் அவ்வெள்ளைக்கார மருத்துவர் அக்கலைப் பயிற்சியைப் பற்றி யான் நூல்களிற் கற்றறிந்திருக்கின்றேன்; ஆனால் எவரும் அதைப் பழகப் பார்த்திலேன். இப்போது அதனை இவன்மேற் செய்து பார்க்க மிகவும் விரும்புகின்றேன். இஃது எனக்குப் பலியாமற் போனாலும் போகலாம். என்று சொல்லிக் கொண்டே அந்நோயாளி நாற்காலியில் இருந்த படியாகவேயிருக்க, அவனுடைய இரண்டு முழங்கால்களையும் தம் இரண்டு முழங்கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு, தம் கைகளைக் கீழ்நோக்கிய படியாய் விரித்துநீட்டி அவன் முகத்திலிருந்து வயிற்றின் கொப்பூழ் வரையில் அவனைத் தொடாமலே தடவுவாரானார். இவ்வாறு அரைமணி நேரம் வரையிற் செய்தபின், அவனோடுபேசிப் பார்த்ததில் அவன் எப்போதும் போலவே அறிவோடு பொருத்தமாய்ப் பேசினான். அதன்மேல் அவனைத் திரும்பவும் அமைதியாய் இருக்கக் கற்பித்து, இன்னும் கால்மணி நேரம்வரையில் முன்தடவிய படியாகவே தடவிப் பார்த்தார்; பின்னும் அவன் முன்னிருந்த படியே இருந்தமையால் அவர் அது பலிக்க வில்லையென்று விட்டுவிட்டுத் தாம் இதில் மிகவுங் களைத்துப் போனமையால் ஓர் இருக்கையில் அமர்ந்து இளைப்பாறுவாரானார். அப்பொழுது அந் நோயாளியோ அசைவற்று அமைதியோ டிருந்தான்; துன்பத்தின் அடை யாளங்களான முகச்சுளிவுகள் இப்போது அவனிடம் காணப்படவில்லை; கண்ணைத் திறக்கும் படி கற்பிக்கப்பட்டபோது அவன் `எங்கும் புகைசூழ்ந்தாற்போல் இருக்கின்றது என்றான். அச்சொற்களைக் கேட்டதும், அவ்வெள்ளைக்கார மருத்துவர் பின்னும் அவனை முயன்று பார்க்குங் கருத்துடையவராய், அவனது தலைமேல் வாயினால் ஊதி, அவனது பின்றலையிலிருந்து முகத்தின் மேலாகக் கையினால் தடவிக்கொடு மேல்வயிறு வரையில் வந்து அதனை அழுத்தினார். இங்ஙனம் அவர் செய்தவுடனே அவன் தன் அரையில் அழுத்திக் கொண்டிருந்த கைகளை அப்புறம் எடுத்து, அம்மருத்துவர் கைகளைப் பிடித்து அழுத்தி `நீங்களே என் தாயும் தந்தையும், எனக்கு நீங்கள் திரும்பவும் உயிரைக் கொடுத்தீர்கள். என்று சொல்லிப் பெருமூச்செறிந்தான். அதனைக் கண்டு அம்மருத்துவர் பின்னும் மனவெழுச்சி உடையவராய், அறிதுயிலிற் செலுத்தும் முறைகளை மேற்கூறியவாறே பின்னும் விடாமற் செய்வாராயினர். பிறகு ஒருமணி நேரத்திலெல்லாம், தான் தூங்கவேண்டுமென்றும் தன் உணர்வுகள் கலைந்து போயினவென்றும் சொல்லி வாயைத் திறந்து கொண்டு தூங்கலானான். அவன் தொடர்பாக விடை சொல்ல இயலவில்லை. கண்களைத் திறக்கும்படி கற்பிக்கப் பட்டபோது திறந்து, எங்கும் புகையாய் இருக்கிறதென்றும், எவரையும் தெரிந்துகொள்ளக் கூடவில்லை யென்றும் கூறினான்; அவன் கண்கள் அப்போது ஒளியின்றி இருந்தன; அவன் கண்ணிறைப்பைகள் மிகவும் வருத்தத்தோடு திறந்தன. துன்பத்தின் அடையாளங்கள் அவனைவிட்டு இப்போது முழுதும் அகன்றன; அவன் கைகள் அரையை அழுத்துவதைவிட்டு அவனது மார்பின்மேற் குறுக்கிட்டுக் கிடந்தன. அவன் இப்போது அமைதியான நல்ல உறக்கத்தில் இருக்கின்றான் என்பதை அவனது முகம் விளங்கக் காட்டிற்று. அம்மருத்துவர் பலவற்றைப்பற்றி வினவியும், அவன் பெயரைச் சொல்லி உரக்கக்கூவியும் அவன் ஏதொன்றும் அறியவில்லை. அதன்மேல் அவ்வெள்ளைக்கார மருத்துவர் அவனைக் கிள்ளிப் பார்த்தும் அவன் அசையவில்லை; அதன்பின் ஒரு குண்டூசியை வருவித்துத், தமக்கு உதவியாய் நிற்கும் வங்காளி மருத்துவரை உற்றுநோக்கும்படி கற்பித்து, அவ்வூசியை அந்நோயாளியின் இடுப்பின் பின்புறத்தே குத்தி நுழைத்தார். அப்போதும் அவன் சிறிதும் அசையவில்லை. பின்னர் அவ்வுதவி மருத்துவர் அவ்வூசியைப் பிடுங்கி அவனுடம்பின் பலவிடங் களினுங் குத்திக்குத்திப் பார்த்தார். அப்படிச் செய்தும் அவனுக்குச் சிறிதும் நோய் உண்டானதாகத் தெரியவில்லை. அவன் இவற்றை எள்ளளவும் உணராமல் நாற்காலி முதுகின் கூரான மேலோரத்தின்மேல் தன் கழுத்தை வைத்துக்கொண்டு நன்றாய் உறங்குவானானான். அதைப் பார்த்ததும், தம்மால் அறிதுயிலிற் செலுத்தப்பட்டு நினைவற்றுத் தூங்கும் அவனது துயிலின் இயல்பைக் கற்றார் சிலர்க்கு மெய்ப்பித்துக் காட்டும் பொருட்டு அத்துரைமகனார் தமது தொழிற்சாலைக்குப் போய் அறங்கூறுவோர் இருவரை அழைத்துவந்தார். அவர் திரும்பி வந்தபோதும், அவனை அவர் முன் விட்டுப் போன நிலைமையிலேயே அவன் இருந்தான். அவன் காதண்டை போய் எவ்வளவோ உரக்கக் கத்தியும் அவன் விழித்து எழுந்திலன். பின்பு நெருப்பைக் கொண்டுவந்து அவன் முழங்காலின்மேல் வைத்தார்கள், அதனையும் அவன் உணர்ந்திலன். அதன்பின், எடுக்கையிலேயே தங்கள் கண்களில் நீரை வருவித்த நவச்சாரத்தை அவர்கள் சிறிது நேரம் அவன் மூக்கிற் பிடித்தார்கள்; அதிலும் அவன் கண்ணிறைப்பைகூட அசையவில்லை. ஆனாற் சிறிதுநேரத்திற்குப்பின் அவன் சிறிது உணர்வுவரப் பெற்றுத் தலை அசைத்ததைக் கண்டவுடன், அம்மருத்துவர் `உனக்கு ஏதேனும் பருகுதற்கு வேண்டுமா? எனக் கேட்டனர். அதற்கவன் வாயைத் திறந்ததனால், நவச்சாரத்தை மிகவுங் காரமாகக் கலந்ததொரு நீரினை அவனுக்குப் பருகக்கொடுத்தார். அங்கிருந்த மற்றவர்களாற் சிறிது சுவைத்துப் பார்த்தற்கும் ஆகாத காரம் உடைய அந்நீரினை அவன் பால் குடிப்பது போற் குடித்துவிட்டு, இன்னும் வேண்டுமென்று வாயைப் பிளந்தான். அதற்குப் பின்னர், மேற்கூரையை நோக்கிய படியாய் இருந்த அவனது தலையை அவர் நிமிர்த்தி நல்லதொரு விளக்கின் ஒளிக்கு நேரேவைத்து, அவன்றன் கண்களை ஒன்றன்பின் ஒன்றாகத் திறந்துவிட்டார். ஆனால், அங்குள்ள அவ்விளக்கின் ஒளி குருடன் கண்களிற் படுவது போலிருந்ததேயல்லாமல், வேறேது பயனையும் அவன் கண்களுக்குத் தந்திலது. இவ்வாறெல்லாம் அம்மருத்துவரும் அவருடன் இருந்தோரும் ஆராய்ந்து பார்க்கவே, அவனுடைய ஐம்பொறிகளும் முழுதும் உணர்வற்ற நிலையில் இருக்கின்றனவென்பதை அவர்கள் எல்லாரும் நன்கு தெளிந்து கொண்டார்கள். அதன்மேல், அவனை ஒரு படுக்கைமேல் நீளப் படுக்க வைத்தார்கள். காலை பதினொரு மணிக்குத் துயிற்றப்பட்ட அந்நோயாளி பிற்பகல் மூன்று மணிக்கு முகத்திலே தண்ணீர் தெளித்தவுடன் அத்துயில் நீங்கி எழுந்தான். அவன் தெளிந்த முகத்தோடு செம்மையாய் இருந்ததைக் கண்டு அம்மருத்துவர், தம்முடன் இருந்த கற்றோர் முன்னிலையில் அவனைப் பின்வருமாறு வினவி விடைபெற்றார். `இப்போது எப்படி இருக்கிறாய்? `மிகவுஞ் செம்மையாய் இருக்கின்றேன். `தொண்டையிலாவது வேறெங்காவது நோவிருக்கின்றதா? `தொண்டையில்மட்டுஞ் சிறிது வருத்தம் இருக்கின்றது, மற்ற இடங்களில் நோய் இல்லை. `இன்றைக்கு உனக்கு யாது நேர்ந்தது? `எனது வீங்கிய விதையில் உள்ளநீரை வெளி எடுக்கும் பொருட்டு இம்பரா மருத்துவக் கழகத்திற்கு இன்று காலையிற் சென்றேன். `அங்ஙனமே நீர் வெளியே எடுக்கப்பட்டதா? `ஆம். `விதையை அறுத்த பிறகு நேர்ந்தது நினைவில் இருக்கின்றதா? `உடனே யான் நல்லதூக்கத்திற்குப் போனேன், வேறொன்றும் எனக்கு நினைவில் இல்லை. `அறுத்த பின்பு ஏதாவது உண்டனையா அல்லது பருகினையா? `நான் விடாய் கொண்டிருந்தேன்; ஆனால், நாட்டு மருத்துவர் என்னை எழுப்புகிற வரையில் நான் பகருகுவதற்கு ஏதும் கிடைக்கவில்லை. `யாராவது உன்னை ஊசியாற் குத்தினார்களா?’ `அல்லது நெருப்பாற் சுட்டார்களா? `இல்லை, இல்லை. `உனக்கு வெறுப்பான எதனையேனும் முகந்தனையா? `இல்லை. `நீ தூங்கும்போது இன்பமாய்த் தூங்கினையா? `மிகவும் இன்பமாய்த் தூங்கினேன். `நீ தூங்கியபோது ஏதேனும் ஓசை கேட்டனையா? `குரல் ஒலிகள் கேட்டன, ஆனால், அவைகளை நான் திட்டமாய்த் தெரிந்து கொள்ளக்கூடவில்லை. `மருத்துவக் கழகத்தில் என்னைத் தவிர வேறு எவரையேனும் பார்த்தனையா? `இல்லை. `நீ தூக்கத்திற்குப் போனபிறகு உன் வீங்கிய விதையில் ஏதேனும் நோவிருந்ததா? `நான் எழுந்திருக்கும் வரையில் நோவேயில்லை. `அந்த இடத்தில் இப்போது ஏதேனும் நோவிருக்கிறதா? `மிகச் சிறியநோவுதான் இருக்கிறது. `இன்றைக்கு உனக்கு எத்தனைமுறை வயிறு போயிற்று? `மருத்துவக் கழகத்திற்கு வரும்முன் நான்கு முறை போயிற்று, அதன்பிறகு ஒன்றுமில்லை. முன்னே இருந்ததைவிட இப்போது என்வயிறு இலேசாய் இருக்கின்றது.இங்ஙனம் அவ்வெள்ளைக்கார மருத்துவர் விதை வீங்கின நோயாளி ஒருவனை நினைவற்ற ஆழ்ந்த துயிலிற் போகச் செய்து அவன் விதைகளை அறுத்து நலப்படுத்தியபின் அவனைத் தக்கோர் பலர்முன்னிலையில் வைத்து மேற்காட்டியவாறு கேட்டுப் பெற்ற விடைகளிலிருந்து, இத்தகைய தூக்கத்திற் சென்றோர்க்கு எவ்வகையான துன்பமும் தெரிவதில்லை யென்றும், அத்தூக்கத்திற் சென்று எழுந்தபின் நோய் நீங்கி நலம் உண்டாமென்றும் அவருடனிருந்தோரெல்லாரும் தம் கண்ணெதிரே கண்டு தெளியப் பெற்றார்கள். இதனைப் போலவே நிகழ்ந்த இன்னும்பல உண்மை நிகழ்ச்சிகளெல்லாம் நினைவற்ற அறிதுயிலிற் சென்றோர்க்கு உண்டாம். அளவிறந்த நலங்களை ஐயந்திரிபுக் கிடனின்றி நன்கெடுத்துக் காட்டுகின்றன. இனி, மேற்காட்டிய நினைவற்ற துயிலினும் ஆழ்ந்து செல்லும் மூன்றாவதான நடைத்துயிலினைப் பற்றிச் சிறிது ஆராய்ந்து பார்ப்பாம். நினைவற்ற துயிலினும் ஆழ்ந்து செல்வதாகிய துயிலில் உயிரின் அறிவைக் கவிந்துநின்ற அறியாமையிருள் விலகிப்போக அவ்வுயிர்க்கு இயற்கை அறிவுவிளக்கம் மிகுந்து தோன்றா நிற்கின்றது. இவ்வாறு தோன்றும் இயற்கை அறிவுக்குக் கண் காது முதலான புறக்கருவிகளின் உதவி சிறிதும் வேண்டப்படுவதில்லை. கண் முதலிய அப்புறக் கருவிகளின் வாயிலாக ஒருவர்க்கு அறிவு நிகழும்போது, அவற்றின் எதிரே நிற்குங் கட்டிடங்கள் காடுகள் முதலிய மறைப்புகளால் அவ்அறிவு தடைப்பட்டுநின்று அவற்றிற்கு அப்பால்உள்ள பொருள்களை அறியமாட்டாதாகும். ஆனால், இவ்இயற்கையறிவு விளக்கத்தையோ புறத்தேயுள்ள எவ்வகைப்பொருளும் சிறிதும் மறைக்கவல்லன அல்ல. இஃது ஆயிரங்காதவழிக்கு அப்பால் உள்ள பொருள்களையும் அங்கே நிகழும் நிகழ்ச்சிகளையும் எளிதிலே அறியவல்லதாகும். நினைவோடிருக்கையிற் செய்யமாட்டாமல் முழுதும் விடப்பட்டவைகளையும், அரைகுறையாய் விடப்பட்டவை களையும் நினைவிழந்த இவ்வறிதுயிலிற் றோன்றி விளங்கும் அறிவு எளிதிலே திறம்படச்செய்து முடித்திருக்கின்றது. இத்துயிலில் இருப்பவர்கட்குக் கண்கள் மூடியிருந்தும் கண்ணாற்கண்டு நடப்பவர்களினுந் திறமையாக அவர்கள் நடந்து செல்கின்றனர். தாண்ட இயலாத பள்ளங்களையெல்லாம் தாண்டிவிடுகின்றனர், ஏறமுடியாத சுவர்கள் கோபுரங்கள் முதலியவற்றிலெல்லாம் உடம்பிற் சிறிதுங் காயம்படாமல் ஏறியிறங்கி விடுகின்றனர். வியப்பான இந்நடைத்துயிலின் இத்தகைய அருஞ்செயல்களுக்கு உண்மையாக நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை இங்கெடுத்துக் காட்டுவாம். இத்தாலியா நாட்டிற் பெயர் பெற்ற இசைப்பாணர் ஒருவர் (Tartini) தூங்கிக்கொண்டிருக்கையிற் `பேய் நிலைப்பாட்டு என்னுஞ் சிறந்ததொரு பதிகத்தை இயற்றினார். செல்வ வாழ்க்கையிற் சிறந்த ஒருவர் (Lord Thurlow) தமது இளந்தைப் பருவத்திற் கல்லூரியிற் கலைபயின்று கொண்டிருந்தபோது ஒருநாள்மாலைக் காலத்தில் இலத்தீன் மொழியிற் பதிகம் ஒன்று இயற்றப்புகுந்து அதனை முடித்தற்கு எவ்வளவோ முயன்றும் முடிக்கமாட்டாமல், அன்றிரவு உறக்கத்திற்குச் சென்றார். உறக்கத்திற் சென்றதும், முடியாதுவிட்ட அப்பதிகத்தைத் திறம்பட முடித்து, விழித்தெழுந்தபின் அதனை நினைவு கூர்ந்தெழுதி வைத்தனர். அப்பதிகத்தைப் பிறகு கண்ட அறிவுடையோரெல்லாம் அதன் சொற்சுவை பொருட்டு சுவைகளையும் அழகிய அமைப்பையும் மிகவியந்து பாராட்டினர். மேலும், இன்னிசைக் கல்வியில் தேர்ச்சிபெறும் பொருட்டுப் பயின்ற மாணாக்கர் பலரில் ஒருவர் இரவிலே தூங்கிக் கொண்டிருக்கையில் இடையில் அத்தூக்க மயக்கத்துடனே எழுந்து இசைப்பெட்டி (Piano) யண்டை சென்று அதனைச் செவ்வையாய் இயக்கி அதிற் பாடுதற்குக் குறித்துவைக்கப்பட்ட பாட்டைப் பிழைபடாமல் இனிதாய்ப் பாடுவது வழக்கம். தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவன்பாற் காணப்பட்ட இந்நுண்ணறிவு விளக்கத்தைப் பார்த்து வியந்த அவன்றன் உடன்மாணாக்கர் சிலர் ஒருநாளிரவு அவ்விசைப் பெட்டிமேற் குறித்துவைக்கப்பட்ட பாட்டைக் கீழதுமேலதாய்ப் புரட்டி வைத்துக்கொண்டு அவன் யாதுசெய்யப் போகின்றான் என்று விழித்துப் பார்த்தபடியாய் இருந்தனர். ஆனால், தூக்கத்தின் இடையே நடக்கும் அம்மாணாக்கனோ வழக்கம்போல் இசைப்பெட்டியினிடம் சென்றவுடன், இசைப்பாட்டுக் கடிதம் புரட்டிவைக்கப் பட்டிருத்தலை எப்படியோதெரிந்து, அதனை யெடுத்து, வைக்கவேண்டிய முறைப்படி வைத்துக்கொண்டு பெட்டியை இயக்கிச் செவ்வையாய்ப் பாடினான். இன்னும், ஓர் இளைய பெண்பிள்ளை நள்ளிரவில் தூக்கத்தின் நடுவே எழுந்து, முழு இருளில் மூடியகண் மூடியபடியாய் இருக்க, அழகாகவும் அறிவாகவுங் கடிதங்கள் எழுதி வைப்பாள். இவ்விடத்தில் வியக்கத்தக்கது மற்றொன்று உண்டு. நள்ளிரவின் இருளில் கண்மூடியவாறே அவள் எழுதிக்கொண்டு போகையில் ஏதேனும் சிறிது வெளிச்சம் அவளிருக்கும் அறைக்குள் நுழைந்தாலும் அவள் உடனே எழுத முடியாமல் நின்றுவிடுவாள். முழு இருளில் இருந்தால் மட்டும் அவள் தொடர்ந்து எழுதிக்கொண்டு போவாள். அதுநிற்க. தமது வீடு நோக்கி வழிச்சென்ற ஒருவர் தாம் செல்லும் வழியின் ஓரமாய் உள்ள வேலிக்குச் சிறிது அப்பால் ஒரு கொடி முந்திரிப் பந்தரின்மேல் உச்சியிற் புதுமை யானதொன்று அமர்ந்திருக்கக் கண்டார். அப்போது நள்ளிருட் காலம். உடனே அவர் அங்கேயே நின்றுகொண்டு அதனை உற்று நோக்கினார். அஃது அப்பந்தரின்மேல் இயங்குவதுபோற் காணப்பட்டது. அவர் அதனோடு பேசிப் பார்த்தார்; ஆனால் அஃது ஏதுமே விடைசொல்லவில்லை. அந்நேரத்தில் ஊர்காவற் சேவகர் ஒருவர் அவ்வழியே வந்தார். உடனே அவர் அச்சேவகரை அருகழைத்து அவ்வுருவத்தைக் காட்டினார். அதனைக் கண்டதும் அச்சேவகர் `ஓ! அஃதொரு பெண்பிள்ளை என்றார். mj‰F k‰wt® `m¥goahdhš mtŸ ö¡f¤âš ïU¡fnt©L«? என்று சேர்ந்து சொன்னார். இங்ஙனம் அவ்வுருவத்தைக் குறித்து ஒரு முடிவுக்கு வந்த பின், அவர்கள் அத்தோட்டத்தினது கதவைத் திறந்து கொண்டு உள்நுழைந்து அக்கொடி முந்திரிப் பந்தரண்டை போய் அப்பெண்ணைக் கூப்பிட்டுப் பார்த்தார்கள்; ஆனால், விடை கிடைக்கவில்லை. அதன்மேல் அவ்வூர் காவற்சேவகர் அப்பந்தரின்மேல் ஏறலானார். அதனால் அப்பெண் அவ்விடத்தைவிட்டு மிகவுங் கிளர்ச்சியோடும் அதன்மேல் நீள ஓடி அப்பந்தரின் ஓரத்திற் சென்று, அங்கிருந்து எட்டடி விலகியிருந்த வேறொரு மரப்பந்தரின்மேல் ஒரே குதியில் தாவி ஏறினாள். இவ் அருஞ்செயல் அவர்களைப் பெரிதும் வியப்புறுத்தினமையால், அவர்கள் அத்தோட்டத்தின்கண் உள்ள வீட்டாரைப்போய் எழுப்பிவிட்டு, அவர்களது மரப்பந்தலின்மேல் தூக்கத்தில் நடப்பவள் ஒருத்தி இருக்கின்றாள் எனத் தெரிவித்தனர். அவர்களெல்லாரும் வீட்டை விட்டு வெளியே வந்து, எல்லாருமாய் அவளைப் பின்றொடர்ந்து ஓடினார்கள். இவர்கள் இங்ஙனம் பின்றொடர்ந்து வருதலும் அப்பெண் பின்னும் விரைவாய் அம் மரப் பந்தலின்மேல் ஓடி, அத்தோட்டத்து மாளிகையின் தாழ்வாரத்து உச்சிமேல் தாவினாள். பிறகு அவள் அங்கிருந்து ஓடி அவ்வீட்டின் நடுமேலுச்சியிற் சென்று, அவ்விடத்திருந்த (Chimney) புகைப்போக்கியின்மேற் சாய்ந்து கொண்டு நின்றாள். கடைசியாக, ஓர் ஏணியைக் கொணர்ந்து சார்த்தி அவ்வீட்டுக்குரியவர்களில் ஓர் இளைஞன் அக்கூரையின் ஒரு பக்கமாய் ஏறி அதன்மேற் செல்ல, அங்கெல்லாம் பனிக்கட்டி மிகுதியாய் மூடியிருந்தமையின் அவன் அப்பெண்ணண்டை போகக்கூடாதவனானான். அதனால் அவன் கீழிறங்கி வந்து, ஏணியை அவ்வீட்டின் முகப்பிற் கொண்டு போய்ச் சார்த்த, இப்போது அச்சேவகர் அதன்மேல் ஏறி அப்பெண்ணண்டை யிற் போக, அவர் கிட்டவரும் வரையில் சும்மா இருந்த அப்பெண் அவர் தன்பால் அணுகக் கண்டதும் மறுபடியும் அப்பக்கத் தாழ்வாரத்து உச்சியின்மேலும், அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாய் அவ்வீட்டுக் கூரையின் மேலும் ஓடி, அங்கிருந்து திரும்பவுங் கொடி முந்திரிப்பந்தரின்மேல் தாவி ஏறிப், பிறகு அவ்வாண்மக்கள் தன்கிட்ட வருதற்குமுன் நிலத்தே குதித்து அத்தோட்டத்தின் பின் வாயில்வழியே நுழைந்து வெளியே புறப்பட்டு ஒரு பெருந் தெருவின் வழியே ஓடலானாள். உடனே அவர்களெல்லாரும் அவள் பின்னே மிக விரைந்தோடி ஓரிடத்தே அவளைப் பிடித்தார்கள். பிடித்த பின் அவளை இன்னாளென்று தெரிந்து அவளுறவினரை வருவித்து அவர்களிடம் அவளை ஒப்பு வித்தனர். அப்பெண் தூக்கத்தில் இங்ஙனம் வெளிநடந்து திரிந்தது இரண்டாம் முறையாகு மென்று அவளுறவினர் தெரிவித்தனர். இவ்வாறெல்லாம் உயரமான இடங்களில் ஏறித் திரிந்தும் அவளுடம்பில் ஒருசிறு காயங்கூட இல்லாமையைக் கண்டு எல்லாரும் நிரம்ப வியப்படைந்தனர். இனி, இந்நடைத்துயிலின்கண் ஒருவர்க்கு விளங்கும் அறிவானது நெடுந்தொலைவில் நிகழும் நிகழ்ச்சிகளையும் ஏதொரு கருவியின் உதவியையும் வேண்டாது எளிதில் அறியவல்லதா யிருக்கின்றதென்பதற்கு உண்மையாய் நிகழ்ந்த மற்றொரு நிகழ்ச்சியினை இங்கெடுத்துக் காட்டுகின்றாம். 1995ஆம் ஆண்டில், பம்பாய் நகரத்திற்கு இரண்டுகல் தொலைவில் உள்ள கொலாபா என்னும் இடத்தில் ஓர் ஆங்கிலப்படைத் தலைவரும் அவர்தம் மனைவியாரும் தங்கியிருந்தனர். அவ்வம்மையார் யோகநித்திரையைப் பற்றிய பல நூல்களைக் கற்றுவந்தமையி லிருந்து, அம் முறையை ஆராய்ந்து பார்ப்பதில் அளவிறந்த வேட்கையுடையராய், அதற்குத் தக்கதோர் ஆளைத்தேடத், தம் குழந்தைகளுக்குக் கைத்தாயாக வைக்கப்பட்டவள் அறிதுயிலுக்கு மிகவும் பொருத்தமுடையவளாகக் கண்டெடுக்கப்பட்டாள். அங்ஙனம் கண்டு எடுக்கப்பட்ட அவளை அவ்வம்மையார் அறிதுயிலிற் போகச் செய்து, தண்ணீர் நிரப்பிய ஒரு கண்ணாடிக் குவளையை ஒரு மேசைமேல் வைத்து, அதில் உள்ள நீரை உற்றுநோக்கி அங்கே தோன்றுகின்ற தோற்றங்களைத் தெரிவிக்கும்படி செய்வர். இவ்வாறு செய்து, தொலைவிலுள்ள தம் உற்றார் உறவினர் நண்பர்பால் நிகழ்வனவற்றையெல்லாந் தெளிவாக அறிந்து வந்தார். இதிற் பழக்கப்படுத்திய அப் பெண்பிள்ளை அறிவில்லாதவள் அல்லள்; ஆங்கிலம் நன்றாய்ப் பேசவும் எழுதவும் படிக்கவும் செவ்வையாய்க் கற்பிக்கப் பட்டவள். இவள் இங்ஙனம் பார்த்துச் சொல்லிய தொலை நிகழ்ச்சிகளெல்லாம் நாள்வழியே முற்றும் உண்மைகளாய் முடியக் கண்டு அவ்வாங்கில மாதரார்க்கு அவளது தெளிவுக் காட்சியில் முழுநம்பிக்கை உண்டாயிருந்தது. இஃதிப்படியிருக்க, ஒருநாட் காலையில் பெரும்படைத் தலைவர் ஒருவரை வரவேற்றற் பொருட்டு அவ்வம்மையாரின் கணவர் நேரத்தோடு உண வெடுக்கையில், தம் ஏவலாளைக் கூப்பிட்டுத் தன்னுடுப்புகளை விரைந்தெடுத்து ஒழுங்குபடுத்தி வைக்கச் சொன்னார். அங்ஙனமே செய்யச் சென்ற அவன் சிறிது நேரங்கழிந்தபின் வந்து திகைப்பும் அச்சமும் உடையவனாய்ப் `பெருமானே! பணப்பை உள்ள அரைப்பட்டி கையைமட்டுங் காணோம் என்று வாய்குழறிக் கூறினான். mj‰ft® `kl¤jdkhŒ¥ ngrhnj, Ú btsthiy¥ ngh‰ f© FUlhÆU¡f nt©L«! என்று கூவிச் சொல்லிக் கொண்டே தம் இருக்கையினின்றும் எழுந்து உடுப்பறைக்குட் சென்றார். அவர் அதனுட் சென்று தேடிப் பார்த்தும் அதனைக் காணாமையின் மிகவுஞ் சினங்கொண்டு தம் ஏவலாட்களை யெல்லாம் வைய, அவர்கள் தாம் அதனை எடுக்கவில்லை யென்று மிக்க அச்சத்தோடும் கெஞ்சிக் கூறினர். அதன்பின் அவர் உணவுகொள்ளும் அறைக்குத் திரும்பி வந்து, தம் மனைவியைப் பார்த்து `இப்போது உன் தோழிக்குள்ள தெளிவுக் காட்சியின் உண்மையை நான் தெரிந்து கொள்வதற்குத் தக்க அமயம் கிடைத்திருக்கின்றது. அவளை இங்கே வருவித்துக் காணாமற் போன எனது அரைப்பட்டிகையைக் கண்டெடுக்கும் படி செய் என்றார். அதன் மேல், அவ்வம்மையார் அத்தோழியை அங்கே வருவிக்க, அவள் எங்கே தன்மேற் குற்றஞ்சாட்டப் போகின்றார்களோ வென்று நடுக்கத்தோடும் வந்தாள். ஆனால், அந்த மாதரார், செய்யவேண்டுவது இன்னதென்று தெரிவித்துத், திருடன் இன்னானென்று கண்ட பின்னும் அவளை எவர்க்குங் காட்டிக் கொடாமல் தாமே எல்லாவற்றையும் அமைதியுற முடிப்பதாக உறுதி சொன்னார். அதன்பின், ஒரு கண்ணாடிக் குவளையில் தண்ணீரை நிரப்பி அதனைத் தமது இடது கைம்மேல் வைத்துக்கொண்டு, வலது கையால் அதன்மேல் பலமுறை தடவி அதில் உள்ள நீருக்குத் தனது உயிர்ப்பினை ஏற்றியபின், அதனை ஒரு மேசைமேல் வைத்து அத்தோழி அதனை உற்றுப் பார்த்து அங்கே தோன்றுவது இன்னதென்று சொல்லும்படி கற்பித்தார். அவள் அங்ஙனமே முகத்தைக் குனிந்து அதனை உற்றுநோக்குவாளானாள். சிறிது நேரம் ஆனதும் அம்மாதரார் அவளை நோக்கிப் `பெண்ணே! ஏதாவது காண்கின்றனையா? என்று கேட்க, `ஒன்றும் இல்லை என்று விடை கூறினாள். அதன்மேல் அவ்வம்மையார் அவள் தலையின்மேலும் கழுத்தின் பின்புறத்தும் புதிதாகத் தடவி அவளை இன்னும் ஆழ்ந்த துயிலிற் போகச்செய்து கேட்டும், அவள் `ஒன்றுமே தோன்றவில்லை என்றாள். அதனால், அவள் இத்தனை காலமாகத் தம்மை ஏமாற்றித் தான் வந்தனளோ என்று அவ்வம்மையார் முதலில் ஐயுறவு கொண்டார். திரும்பவும் அம்மாதரார்க்கு மற்றொன்று மனத்தில் தென்பட்டது. படவே, வேறொரு முறையால் அவளை முயன்று பார்க்கத் துவங்கினார். `பெண்ணே, கடைசியாக நம் தலைவர் அரைப்பட்டிகை அணிந்திருந்த நாளை உற்றுப் பார் என்று கற்பித்தார். அவள் சிறிது நேரம் சும்மா இருந்து, `நான் இப்போது நம் தலைவரைக் காண்கின்றேன் என்று கனவு மயக்கத்தோடு கூறினாள். திரும்பவும் `அவர் இப்போது உடை உடுத்துகிறார்; இப்போது படைக்கோலம் பூண்கின்றார்! இப்போது அரைப்பட்டிகை அணிகின்றார். ஆ! இப்போது அவர் அறையை விட்டுப் போகின்றார் என்றாள். உடனே அம்மாதரார் `விடாதே அவரைப் பின்றொடர்ந்து செல் என்று உறுதியாய்ச் சொன்னார். `நம்தலைவர் குதிரைமேல் ஏறுகின்றார்; இதோ அதனை ஊர்ந்து செல்கின்றார்! என்று கூவினாள். பின்னும் அவ்வம்மையார் `ஓர் இமைப்பொழுதும் அவரைவிடாதே என்று கூவினார். `ஐயோ! அவர் மிகவும் விரைவாய்ச் செல்கின்றாரே! எனக்கோ களைப்பாய் இருக்கின்றது! என்று அப்பெண் பெருமூச்செறிந்தாள். `விடாதேசெல் என்று பின்னும் அத்தலைவியார் கட்டளையிட்டார். `நம் தலைவர் இப்போது இன்னும் மற்றத் தலைவர்களோடு இருக்கிறார். எத்தனையோ படையாட்களும் குடிமக்களும் நிறைந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு பெரிய வேடிக்கை நடக்கின்றது. யாரோ ஒரு பெரிய தலைவர் பயணமாய்ப் போகிறார்.அவர்கள் எல்லாரும் தண்ணிருக்கு அருகே நிற்கிறார்கள். என்று அப்பெண் கூறினாள். `அப்படியானாற் சிறிதுநேரம் ஓய்வாய் இரு. ஆனால், நின் கண்கள் நம் தலைவரைவிட்டு இப்புறம் திரும்பாதிருக்கட்டும் என்று அத்தலைவியார் சொல்லினர். அவ்வாறே அவள் சிறிது நேரம் பேசாதிருந்து பின்னர்த் `தண்ணீர்க்கு அருகிலுள்ள ஒரு பெரிய வீட்டினுள்ளே நம் தலைவர் நுழைகின்றார். அவர் இப்போது ஓர் உடுப்பு அறைக்குட் செல்கின்றார். தம்முடைய உடைகளை மாற்றுகின்றார். அவர்தம் படைக்கோல உடைகளெல்லாம் ஒரு தகரப் பெட்டி யினுள்ளே வைக்கப்படுகின்றன; ஆனால், பணப்பையுள்ள அவரது அரைப்பட்டிகை மட்டும் வெளியே விடப்பட்டிருக்கின்றது; கடலுக்கு அணித்தாயுள்ள அவ்வீட்டின் உடுக்கும் அறையின்கண் உள்ள ஒரு முளையிலே அது தொங்குகின்றது, என்று மொழிந்தாள். அதனைக் கேட்டதும் அவ்வம்மையின் கணவர் `ஓ! அது தான் யாட் விடுதி என்றுரைத்துத் தம் ஏவலாளை யழைத்து `உடனே ஓர் ஆளையனுப்பி, அவ் அரைப்பட்டிகை அங்கே விடப்பட்டிருக்கின்றதாவென்று பார்த்து வரச்செய் என்று கட்டளையிட்டார். அவனும் மற்றுஞ் சிலரோடு அவ்விடத்திற்குப் போயினாள். அப்படைத்தலைவர் `உண்மையாகவே யான் அதனை யாட்விடுதியில் விட்டு விட்டேனோ வென்று வியப்புறு கின்றேன். யான் கடைசியாக அதனை அணிந்திருந்தது ரிப்பன்பெருமான் இங்கிலாந்திற்குப் புறப்பட்டுப்போன அன்றைக்கேயாம், என்று முனகினார். அதற்கந்த அம்மையார் `நாம் விரைவில்அதன் உண்மையைக் காண்போம். அவ்வரைப்பட்டிகை அங்கே கண்டெடுக்கப்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை என்றார். சிறிது நேரத்திலெல்லாம் போன ஏவலாளும் அவனுடன் சென்றோருந் திரும்பிவரும் அரவம் கேட்டது. அவர்கள் வரும் ஓசையிலிருந்து அப்பொருள் கண்டெடுக்கப்பட்டதென்னும் உண்மை அவ்வம்மையார்க்குத் திண்ணமாயிற்று. அவ்வேவலன் அந்த அரைப் பட்டிகையைத் தலைக்குமேற் பிடித்துக்கொண்டு, அவர்கள் இருந்த மேன்மாளிகைக்கு இரைக்க இரைக்க ஓடிவந்து, அத்தோழிப் பெண் சொன்னவாறே அது கண்டெடுக்கப் பட்டதெனத் தெரிவித்தான். இன்னோரன்ன உண்மை நிகழ்ச்சிகளால், நடைத்துயிலின் கண் ஒருவர்க்குள்ள அறிவு விளக்கமானது ஏதொரு கருவி யினுதவியையும் வேண்டாது தானாகவே எவ்விடத்தினும் எக்காலத்தினும் நிகழும் நிகழ்ச்சிகளையெல்லாம் அறியவல்ல தாம் உண்மை நன்கு விளங்காநிற்கும். இனி, இம்மூவகைத் துயிலையும் பயன்படுத்திக்கொள்ளும் முறைகளிற் சிலவற்றை இங்கெடுத்துக் காட்டுவாம். 14. பயன்படுத்தும் முறைகள் நினைவுத்துயிலின்கண் நினைவுமாறாமல் இருத்தலால் இதனாற்சில எளிய பயன்களைத்தாம் பெறுதல்கூடும். இத்துயிலில் இருப்போர் துயிற்றுவோர் பால் நினைவு ஒன்று பொருந்தி நிற்பர்; அவர் சொல்லுகிறபடியே செய்வாரல்லாமல் அவர்க்கு எதிரிடையானது ஒன்றுஞ்செய்யார். துயிற்றுவோர் அவர் கண்களைமூடி `இவைகளை நும்மால் திறக்க முடியாது என்று சொன்னால் அவர் அங்ஙனமே அவற்றைத் திறக்க மாட்டாமல் இருப்பார். அவரது வாயைமூடி `நுமது பெயரைக் கேட்டால், அதனைச் சொல்லமாட்டாமல் வறிதே இருப்பீர் என்று சொன்னால் அவர் அப்படியே இருப்பர். வெங்காயத்தைக் கையிற்கொடுத்து `இது நல்ல மணம் உள்ளதொரு முல்லைப்பூ, இதனை முகந்துபாரும் என்றால் அவ்வாறே அதனை முகந்து மகிழ்வர். இனிய மணங் கமழுஞ் செங்கழுநீர்ப்பூ வொன்றைக் கையிற்றந்து, `இது மணம் இல்லாத எருக்கம்பூ என்று மொழிந்தால், உடனே அவர் அதனை முகந்துபார்த்து அது மணமில்லாததென்று அருவருப்புறுவர். அவரது கையைப் பிடித்து அதில் ஓரிடத்தைக் குறித்துக் காட்டி `இவ்விடத்தில் இரத்த ஓட்டம் இராது, இங்கே உணர்ச்சி இராது, நோவும் இராது என்று உறுத்திச்சொல்லியபின் ஒரு குண்டூசியை எடுத்து அவ்விடத்தே மேற்சதையிற் செருகினால் அவர் அதனைச் சிறிதும் உணரார்; பிறகு அதனைப் பிடுங்கிவிட்டு அவ்விடத்தை விரலால் தேய்த்து விட்டால் அங்கே ஓர் அடையாளமுங் காணப்படாது. இங்ஙனமே, இத்துயிலில் இன்னும் பல வேடிக்கைகளை யெல்லாம் செய்துகாட்டலாம். இத்துயிலில் இருப்போர்க்குக் கண்கள் மூடியும் இருக்கலாம். திறந்தும் இருக்கலாம். திறந்திருக்குமாயின் துயிற்றுவோர் கட்பார்வையும் இவரது கட்பார்வையும் ஒன்றையொன்று உற்றுநோக்கிய படியாய் இருத்தல் வேண்டும். மூடியிருக்குமாயின் துயிற்றுவோர் தம்முடைய சொற்களைக் கொண்டு அவரது நினைவைத் தம்வழிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். இனி, இத்துயில் சிறு நோய்களைத் தீர்த்தற்கு ஏற்றதொன்றாய் இருத்தலால் தலைவலி செவிக்குத்தல் கண்ணோய் பல்வலி உடம்புநோய் காய்ச்சல் தேள்கொட்டின வலி முதலியவற்றை இதனுதவியாற் போக்கலாம். ஆனால், இதனுதவியால் நோய்களை நீக்க விரும்புகிறவர் உண்மையாகவே அன்பும் அருளும் நல்லெண்ணமுஞ் செவ்வையான உடம்பும் உடையவராக இருத்தல் வேண்டும். இவ்வினிய இயல்புகள் உடையவர் ஒருவரை அறிதுயிலிற் போகச்செய்து அவரைத் தொட்டு `இந்நோய் நீங்குக என்று சொன்ன அளவிலே, அஃது அவரை விட்டு நீங்குதல் திண்ணம். இதற்குத் தாயானவள் குழந்தையைப் போற்றும் முறையே தக்க சான்றாம். கீழே தவறிவிழுந்து காயம்பட்ட சிறுமகவைத் தாய் பதறிஎடுத்து, அக்காயத்தைத் துடைத்துக் கையால் மெல்லத்தடவி ஆறுதல் மொழிகளால் அதற்கு அத்துன்பத்தைப் போக்கித் தன்மடிமேல் அதனைத் தூங்கவைத்தலை நாம் உற்றுநோக்கும்போது, அவள் இவ்வறிதுயிலுக்குரிய முறைகளைத் தன்னையறியாமலே இனிது செய்கின்றாள் என உணரப் பெறுகின்றோம் அல்லமோ? அன்புமிகுதியும் உடையார்க்கு இனிய சொல்லும் மெல்லென்ற செயலுந் தாமாகவே வருதல் இயற்கை. ஆதலாற், பிறர்க்குள்ள நோய் தீர்த்தற் பொருட்டு அவர்பால் அறிதுயிலினை வருவித்தற்குப் பழகுவோர் மலர்ந்த முகமும் இனிய சொல்லும் இனிய செயலும் நோயற்ற உடம்பும் உடையவராயிருக்க முதலிற் பழகிக்கொள்ளல் வேண்டும். அதனோடு, நோய் கொண்டவர்க்கு அவ்வந்நோய் நீங்குதற்கு ஏற்ற தூய உணவுகளை மாற்றி மாற்றிக் கொடுக்கும் வகைகளையும், அவர் அழுக்கான ஆடைகளை அணியாமலும் நல்ல காற்றும் வெளிச்சமும் இல்லாமற் குப்பை கூளங்கள் மலிந்த அழுக்கான இடங்களில் இராமலும் தம்மைத் துப்புரவாய் வைத்துக் கொள்ளும் முறைகளையும் எடுத்துச் சொல்லுதல் வேண்டும். இக்காலத்து மருத்துவர்கள் காப்பி தேயிலை கோக்கோ இறைச்சி முதலிய நஞ்சான பண்டங்களை அவித்து இறுத்த சாற்றையும், முட்டை ஒயின் முதலான பொருள் களையும், நச்சுக் காற்று அடங்கிய சோடாத் தண்ணீரையும் நோயாளிகளுக்கு ஏராளமாய்க் கொடுத்து வருகிறார்கள். இவை அத்தனையும் நோயை மிகுதிப் படுத்துவனவே யல்லாமல் அதனைத் தணிப்பன அல்ல என்று இப்பண்டங்களிற் கலந்துள்ள நஞ்சை நன்கு ஆராய்ந்தறிந்த புகழ்பெற்ற ஆங்கில மருத்துவர்களே (see for instance Dr. A. Haig’ Uric Acid) கூறிவருதலால், இவ்வுண்மையை அறியாமல் இவற்றை நோயாளிகட்குக் கொடுத்தல் பெருந்தீமைக்கே வழியாம். ஆகையால், அறிதுயில் முறையால் நோய் நீக்கப் புகுவோர் அந்நோயை நீக்குகையில் அந்நோய்க்கு மேலுமேலும் இடஞ்செய்யும் இத்தகைய பொருள்களை உணவாகக் கொடாமல் தடை செய்தல் வேண்டும். அது நிற்க. இனி, நோயாளியை இந்நினைவுத் துயிலிற் போகச் செய்தவுடன், நோயுள்ள இடங்களைக் கையால் தொட்டேனும் தொடாமலேனும் கீழ்நோக்கிப் பலகால் தடவுதல் வேண்டும். இங்ஙனந் தடவுங்கால் ஐந்தாவதான கடைச் சிறுவிரலைச் சிறிது அகற்றி, மற்றை நான்கு விரல்களையும் ஒருங்கு சேர்த்து இரண்டு கைகளாலுங் கீழ்நோக்கித் தடவுக. மேலிருந்து தடவிக் கீழ் இறக்கின கைவிரல்களை உதறிவிட்டுத், திரும்பவும் பக்கச் சாய்வாய்க் கைவிரல்களை மேல் உயர்த்தி முன்போலவே கீழ்நோக்கித் தடவி விரல்களை உதறுக. விரல்களை இங்ஙனம் உதறுதல் ஏன் என்றால், நோயாளியின் நோயைக் கீழ் இறக்கியவுடன் அந்நோய் இதனை நீக்குவோர் கைவிரல் நுனிகளின் வழியே பற்றிக் கொண்டு அவரது உடம்பில் ஏறாதிருத்தற் பொருட்டேயாம். இங்ஙனம் பலகாற் றடவியபின் நோயுள்ள இடங்களின்மேல் வாயினால் கீழ்நோக்கி மெல்ல ஊதி மெல்லிய வாய்க்காற்று அவற்றிற் படும்படி செய்க. வாயினால் இவ்வாறு நேரே ஊதுவதோடு, மெல்லிய தூயதுணியை எட்டு மடிப்புகளாக மடித்து நோயுற்ற இடத்தின்மேல் வைத்துப், பிறகு இத்துணியின்மேல் வாயை வைத்துக் கதகதப்பு உண்டாகுமாறும் ஊதுதல் சில நோய்களுக்குக் கட்டாயம் செய்யப்படுதல் வேண்டும். கழலைகள், கட்டிகள், வீக்கங்கள், நரம்புச் சுளுக்குகள், எரிவுகள் உள்ள இடங்களில் இப்படிச் செய்தல் இன்றியமை யாததாகும். ஒருகால் வாயை வைத்து ஊதியபின், மறுபடியுங் காற்றை உள்ளிழுத்தே ஊதவேண்டுமாதலால், வாயை அந்நோயுள்ள இடங்களில் வைத்தபடியாகவே மூச்சை உள்ளிழுத்தல் சிறிதும் ஆகாது. முகத்தைத் தூயகாற்றுவரும் அப்பக்கமாய்த் திருப்பி மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு மறுபடியும் ஊதுக. `இந்நோய் தீர்தல்வேண்டும் என்னும் எண்ணம் முனைத்து நிற்க இங்ஙனம் ஊதுவதால் நோய் தீர்ப்போரது எண்ணத்தால் உந்தப்படும் மின் ஆற்றல் அவரது மூச்சின் வழியோடி நோயாளிக்குள்ள அந்நோய்களை விலகச் செய்யும். இவற்றோடு `இந்நோய் உம்மைவிட்டு - அகன்றது. உமது உடம்பினுள்ளே - தூய இரத்தம் - பரவுகின்றது. உம்முடைய நரம்புகள் - வலிவடைகின்றன. நீர் - உள்ளக் கிளர்ச்சி - உடையவராகின்றீர். நீர் - இத்துயிலில் - நன்றாய்த் - தூங்கி - எழுந்ததும் - உமது உடம்பு - செவ்வையாகவும் - உமது உள்ளம் - கிளர்ச்சியாகவும் - இருக்கக் காண்பீர், என்று பலகால் ஆழ்ந்த மெல்லிய குரலில் திருப்பித் திருப்பிச் சொல்லுக. இவ்வாறெல்லாம் செய்து, அவரை நன்றாய்த் தூங்கி எழும்படி கற்பித்து விட்டுப் போனால், அவர் அவ்வாறே அயர்ந்துறங்கி எழுந்து, தமக்கிருந்த நோய் நீங்கிப்போகக் கண்டு வியந்து மகிழ்வர். மேலெடுத்துக் காட்டிய சிறு நோய்களெல்லாம், மேற்கூறிய முறைப்படி ஒரு பொழுது அல்லது இரண்டு மூன்றுபொழுது செய்த அளவானே நீங்கும். நாட்பட்ட குளிர் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல், சளிக்காய்ச்சல், வயிற்று வலி, குண்டிக்காய் வலி, ஈரல் வலி, நெஞ்சடைப்பு, படை, புண், தொழுநோய், பொருத்துப் பிடிப்பு, என்புருக்கி, மண்டைக்குடைச்சல், பிளவை, இருமல் முதலான கடுநோய்களுக்கோ சிலகால் மேற்கூறிய முறைகளைச் செய்தல் போதாது. பலநாளும் பலகாலும் மேற்கூறிய முறைகளைத் தொடர்பாகச் செய்துவரல் வேண்டும். நோய் நீக்குவோர்க்கு அந்நோய்கள் தொற்றிக்கொள்ளாதபடி அவர் தம்மைத் தூய்மை செய்து கொண்டு மூச்சுப் பயிற்சி செய்துவரல் வேண்டும். இக்கடு நோய்கொண்ட நோயாளிகட்குத் தீனிக்குடல், மலக்குடல், வியர்வைத் துளைகள் முதலியவற்றை அடிக்கடி கழுவித் துப்புரவு செய்தலோடு, தூயவுணவும் தூயநீருங் காற்றும் உட்கொள்ளும்படியும் செய்தல் வேண்டும். இன்னும் நல்ல மருந்துகள் உட்கொடுத்தற்கும் பின் வாங்கலாகாது. அது நிற்க. இனி, நினைவற்ற ஆழ்ந்த துயிலில் இருப்போர்க்குப் புறத்தே சுற்றிலும் நடப்பது ஒன்றுந் தெரியாதென்பதை முன்னரே காட்டினாம். இத்தூக்கத்திலிருப்போர்க்கு இது கலையாமலே, இவர்களை விழித்து உணர்வுபெறுமாறு செய்து பல புதுமைகளை விளைவித்துக் காட்டுவதுடன், தீர்த்தற்கரிய கொடு நோய்களையும் தீர்த்துவிடலாம். இயற்கையான விழிப்புக்கு வராமலே கண்களைத் திறந்து, துயிற்றுவோர் சொல்வனவற்றை உணர்ந்து செய்யும்படி இத்தூக்கத்தில் ஒருவரைச் செலுத்துகை யிலேயே கற்பித்து ஒழுங்கு செய்து கொள்ளல் வேண்டும். மேற்கூறிய நினைவுத் துயிலில் இருப்போரைப் பின்வருமாறு செய்து இந்நினைவற்ற துயிலிற் செலுத்துக. கடைச் சிறுவிரல் தவிர ஏனை விரல்களைச் சேர்த்தபடியாய் இரண்டு கைகளையும் நீட்டி அவரது உச்சந் தலைக்குமேற் கீழ்நோக்கிப் பிடிக்க. அங்ஙனம் பிடித்திருக் கையில் அவ்விரல்களின் நுனிவழியே தமது மின்னாற்றல் அவரது உச்சந் தலையினுள் இறங்கி அவரை நினைவற்ற ஆழ்ந்த துயிலின்கட் கொண்டு செல்வதாகத் துயிற்றுவோர் நன்றாய் உறுத்து நினைத்தல்வேண்டும். இப்படிச் சிறிது நேரம் நினைத்தபின், படித்த அவ்விரல் களால் அவ்வுச்சந் தலையிலிருந்த அவரது முழங்கால் வரையில் தடவிப், பிறகு பக்கச் சாய்வாய் அக்கைகளைப் புரட்டி அவர்தம் விலாப்பக்கமாக மேலுயர்த்தி மறுபடியும் தடவுக. இங்ஙனம் பலகாற் செய்தபின் `இப்போது - நீர் - ஆழ்ந்த - தூக்கத்திற் - செல்லுகிறீர். உம்மைச் சுற்றிலும் நடப்பது - இன்னதென்று - உமக்குத் தெரியாது. யான் - சொல்வனவற்றைத் தவிர - வேறொன்றும் - உமக்குத் - தெரியாது. என் சொற்களைத் தவிர - வேறொன்றும் - உமக்குக் கேளாது. நீர் - ஆழ்ந்த - தூக்கத்தில் - இருக்கும்போது, யான் - சொல்லுகிறபடியே - செய்வீர் - இப்போது - நல்ல - ஆழ்ந்த - தூக்கத்தில் - இருக்கின்றீர் -தூக்கம் - அயர்ந்த தூக்கம் - ஆழ்ந்த தூக்கம் - ஆழ்ந்த தூக்கம், என்று திருப்பித்திருப்பி ஆழ்ந்த தீர்மானமான குரலிற் பலகாற் சொல்லி, இடையிடையே மேற்சொல்லியபடி உச்சந்தலை யிலிருந்து தடவுதலுஞ் செய்க. இவ்வாறு கால்மணி நேரம் வரையிற், செய்தவுடனே அவர் ஆழ்ந்த துயிலிற் சென்று தூங்குவர். இத்தூக்கத்திற்கு அறிகுறியாக ஒரே அளவாக நெட்டுயிர்ப் பெறிவர்; காதண்டை எவ்வளவு பெரிய ஓசையை எழுப்பினாலும் அவர் அதனை உணரார்; துயிற்றுவோர் குரலொலியைத் தவிரப் பிறிதொன்றும் அவருக்குக் கேளாது. இவ்வடையாளங்களைக் கண்டவுடன், துயிற்றுவோர் பின்வருமாறு அவருக்குச் சொல்லுக: `இப்போது - நீர் - நிரம்ப - ஆழ்ந்த துயிலில் - இருப்பினும் - யான் சொல்வனவற்றை மட்டும் - என் கட்டளைப்படி - கேட்கின்றீர்’ என்றபின் `என் சொற்களைக் கேட்கின்றீரா? என்று வினவுக. முதலிற் சிறிது சும்மா இருப்பர்; பின்னும் பின்னும் விடாமற் கேட்டால் அவர் `ஆம், இப்போது கேட்கின்றேன் என்று தூக்க மயக்கத்தால் மெல்ல மெல்லச் சொல்வர். பிறகு `உமது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபடியே கண்களைத் திறந்துபாரும் என்றுஇரண்டு மூன்றுமுறை சொல்லுக. அங்ஙனமே அவர் கண்களைச் சிறிது உழைப்போடு அரைவாசி திறந்து பார்ப்பர். அப்போது அவர்தம் கண்கள் சிவந்திருக்கும். இதனால், அவர் ஆழ்ந்த துயிலிலேதான் இருக்கின்றார் என்பதனைத் திண்ணமாகத் தெரிந்து கொள்ளலாம். நினைவற்ற இத்துயிலில் இருப்போர்க்கு ஐம்பொறி யுணர்வுகளும் தம் இயற்கைக்கு மாறுபட்டு நடக்குமாறும் செய்யலாம். யாங்ஙனமெனின், ஒரு தாம்புக் கயிற்றைக் கையிற்கொடுத்து `இது மெல்லிய ஒரு பூமாலை, இதனை நீர் கழுத்தில் அணிந்து கொள்ளலாம் என்று சொன்னால், அவர் அதனைத் தடவிப் பார்த்துப் புன்சிரிப்போடு அதனைக் கழுத்தில் அணிந்துகொண்டு இருப்பர். பிறகு `நீர் இப்போது கழுத்தில் அணிந்திருக்கும் இந்த மாலையில் தொடுக்கப் பட்டுள்ள முல்லைமலர்கள் எவ்வளவு நறுமணம் உள்ளன வாயிருக்கின்றன! நீர் இந்த மாலையை முகந்து பாரும் அதன் மணம் உமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும், என்று சொன்னவுடன், அவர் தமது கழுத்திற் பூண்டிருக்கும் அந்தத் தாம்புக்கயிற்றைப் பிடித்துத் தூக்கி முகந்து பார்த்துப் புன்சிரிப்புக்கொண்டு மகிழ்வர். `அதன் மணம் எப்படி யிருக்கிறது?’ என்று வினவினால் `மிகவும் நன்றாயிருக்கிறது! என்று சொல்லிச் சொல்லி அதனை முகந்து முகந்து பார்ப்பர். அதன்பிற் சிறிது கற்கண்டை அவர் கையிற் கொடுத்து `இவை கசப்பான பாகற்காய்விதை, இவற்றை நாவில் இட்டுச் சுவைத்துப் பாரும். என்று சொன்னால், அவர் அவற்றை வாயினுட்பெய்து சுவைத்து இவை கசக்கின்றன என்று முகஞ்சுளித்துச் சொல்லி அவற்றைக் கீழே உமிழ்வர். பின்பு, சில கொம்புப் பாகற்காயை அவரிடந் தந்து `இவைகள் குளிர்ந்த நல்ல சுவையுள்ள வெள்ளரிக்காய், இவைகளைத் தின்று பாரும் என்று கூறினால், அவர் அவற்றை வாயிலிட்டு மென்று நன்றாய்ச் சுவைத்து மகிழ்ச்சியோடு உண்பர். `இந்த வெள்ளரிக்காய்கள் எப்படியிருக்கின்றன? என்று கேட்டாற், `குளிர்ச்சியாய் நல்ல சுவையுள்ளனவாய் இருக்கின்றன என்று மகிழ்ந்து விடையளிப்பர். இன்னும், மெல்லிய ஒரு சிறு கோலை அவரது கையிற்கொடுத்து, `இப்போது நீர் முழங்கால்வரையிற் சேறாய் உள்ள இடத்தில் நடந்து செல்ல வேண்டியிருக்கின்றது; இந்தக் கோலை ஊன்றிக்கொண்டு என்பின்னே கருத்தாய் நடந்துவாரும் என்று சொல்லி, அவரை யிருக்கையினின்றும் எழச்செய்து நடக்கவிட்டால், அவர் உள்ளபடியே அக்கோலை ஊன்றிக் கொண்டு, தாம் இப்போது நடக்குமிடம் கருங் கற்றரையா யிருப்பினும், அதனைச் சேற்று நிலமாகவே கருதிச், சேற்றினின்றும் வருத்தத்தோடு காலைப் பிடுங்கிப் பிடுங்கி வைத்து நடப்பது போல் நடப்பர். அதன்பின், அவருக்கு அந்நினைவை மாற்றி வேறொரு நினைவினை எழுப்புக. `நீர் இப்போது அச்சேற்று நிலத்தை விட்டு நல்லதோர் இடத்தில் வந்து அமைதியா யிருக்கின்றீர் என்று சொல்லி அவரது நெற்றியைத் தொட்டுத் தடவினவுடனே அவர் அங்ஙனஞ் சொன்னபடியே அமைதியாயிருப்பராகலான் அப்போது அவரை நோக்கி `இதோ உமக்கெதிரே அழகியதோர் ஏரி தோன்றுகின்றது; அதில் தெளிவான குளிர்ந்த நீர் நிரம்பியிருக்கின்றது; அதிலிருந்து வீசுங் காற்று இந்தக் கடுவெயிற் காலத்தில் எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கின்றது! நீர் இந்தக் கடுங் கோடையில் நீண்டவழி நடந்து களைத்துப் போயிருக்கின்றீர்! இந்த ஏரியில் இறங்கிக் குளித்துத் தலைமுழுகி, இதன் பக்கத்தில் உள்ள அந்தப் பூஞ்சோலையிற் சிறிது நேரம் இளைப்பாறி இரும்! என்று தீர்மானமான குரலில் தெளிவாய்ச் சொல்லுக. அங்ஙனம் சொல்லிய அளவிலே அவர் குறிப்பிட்டமுகமாய் மகிழ்ச்சியோடு உற்றுநோக்குவர். அப்போது பின்னும் `இந்த ஏரியைப் பார்க்கின்றீரா? என்று வினவினால் `ஆம், பார்க்கின்றேன், என்பர். `அந்த ஏரிக்காற்று எப்படியிருக்கின்றது? எனக் கேட்டால், `ஆ! அஃது எவ்வளவு குளிர்ச்சியாயிருக்கின்றது! என்பர். அதன்மேல், அவரை இருக்கையினின்றும் எழச்செய்து `இப்போது இதிற்சென்று நீராடும் என்றுவிட, அவருள்ளபடியே நீரில் இறங்கித் தலைமுழுகுவதுபோற் செய்வர். அதன்பிறகு `இப்போது நீர் ஈரந் துவர்த்திக்கொண்டு இந்தப் பூங்காவிலிருந்து இளைப்பாறும் என்று கூற, உடனே அவர் அங்ஙனமே செய்வர். பின்னர் `இந்தப் பூங்காவில் உமக்கெதிரே ஓர் இளமாமரம் ஆ! எவ்வளவு அழகாய்ச் செழித்திருக்கின்றது! பார்த்தீரா?’ என்று கேட்பின் `ஆம், இந்த இளமாமரம் மிகவுஞ் செழுமையாகத்தான் இருக்கின்றது! என்று விடை கூறுவர். உடனே `இப்போது அம் மாமரத்திலிருந்து ஒரு குயில் எவ்வளவு இனிதாகக் கூவுகின்றது! அதனை உற்றுக் கேளும்! என்று சொல்லுக. அவர் அக்குயிலோசையைக் கேட்பார்போல் காது கொடுத்து உற்றுக் கேட்பர். அப்போது `இக் குயிலோசை எப்படி இருக்கின்றது? என்று வினவுக. அதற்கவர் `ஓ! இந்தக் குயிலிசையின் இனிமையை என்னென்று சொல்லுவேன்! இஃது எனக்கு அளவிறந்த மகிழ்ச்சியைத் தருகின்றது! என்று விடையளிப்பர். `அப்படியானால் நீரும் உமக்குத் தெரிந்த ஓர் இனிய பாட்டைப் பாடுகிறதுதானே. அவ்வாறு பாடினால் அஃது உமக்கு இன்னும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். ஏதோ சிறிது பாடும் என்று சொல்லி அவரைத் தொட்டு அசைத்து விட்டால், உடனே அவர் தமக்குத் தெரிந்த தொரு பாட்டைப் பாடாநிற்பர். சிறிதுநேரம் பாடியபின் `பாட்டு மிக நன்றாயிருக்கின்றது. போதும், என்று சொல்லி நிறுத்திவிடுக. இன்னும் இவை போன்ற எத்தனையோ வகையான உருவெளித் தோற்றங்களை யெல்லாம் அவர்பால் விளைவிக்கலாம். இங்ஙனமெல்லாஞ் செய்து பார்த்தபின், இரண்டு உள்ளங்கைகளையும் மேன்முகமாக விரித்து நீட்டி, அவரைத் தொட்டோ தொடாமலோ முழங்காலிலிருந்து, தலைவரையில் மேல்நோக்கித் தடவி `நீர் இப்போது விழித்துக் கொள்ளுகிறீர்; கண்ணைத் திறந்து விழித்துக் கொள்ளும் என்று சொல்லும்போதே கைகளைத் தட்டி அவரை எழுப்பிவிடுக. இனி, ஒன்றைவிட்டொருநாளோ, கிழமைக் கொரு காலோ, அன்றித் திங்களுக்கொருகாலோ அடுத்தடுத்து வரும் நாட்பட்ட நோய் உடையார்க்கு, நினைவற்ற இத்துயிலை வருவித்து, அந்நோய் வருதற்குரிய காலமுறையை மாற்றி விட்டால் அந்நோய் நீங்கிவிடுதல் திண்ணம். எண்ணத்தையும் நரம்பையும் பற்றிவரும் நோய்களைத் தீர்த்தற்கு இவ்வறிதுயில் மிகவும் ஏற்றதொன்றாகும். அத்தகைய நோய் கொண்டாரை இத்துயிலில் நெடுநேரம் இருக்கச்செய்தல் நன்று; ஒருநாள் முழுதும், அல்லது ஒருகிழமை முழுதுங் கூட அவரை இத்தூக்கத்தில் இருக்கச் செய்யலாம். நரம்பின் தளர்ச்சியும் வலிவின்மையும் மிகுதியாயிருக்குங்கால், முடிமுதல் அடிகாறும் இரண்டு கைகளாலும் கீழ்நோக்கி முன்னும் பின்னும் தடவுக; அதன்பின் நோயுள்ள இடங்களில்மட்டும் தடவுக. நெஞ்சப் பையின் அசைவு வலிகுறைந்து காணப்படுமானால், அல்லது அஃது ஒழுங்கின்றி நடைபெறுமானால் அவ்விடத்தைத் தடவியபின் வாயினால் ஊதுக. அதனால் நோயாளியின் உறுப்புகளுக்குக் கதகதப்பும் இனியதோர் உணர்ச்சியுந் தோன்றக் காணலாம். மிகக் கொடிய இரைப்பிருமலையும், தோட்பட்டைகட்கு நடுவே பிடரியிலிருந்து முதுகுநெடுகக் கீழ்நோக்கி மெல்ல ஒரே ஒழுங்காய் ஊதுதலால் தணியச் செய்யலாம். ஆனால் ஒன்று; நோயாளி தமது உடம்பின்மேற் பட்டுத்துணி அணிந்திருப்பாரானால் அதன்மேல் வாயினால் ஊதிற் பயன் உண்டாகாது; ஆனதுபற்றி அவர் பஞ்சுநூற்றுணி அணியுமாறு செய்வித்து இம்முறையைச் செய்க. அல்லது துணியை விலக்கிச் செய்யத்தக்கவராயிருந்தால் அவ்வாறு செய்தலும் ஆம். இங்ஙனம் வாயினால் ஊதுங்கால் மற்றொன்றும் உன்னித்தல் வேண்டும். நெஞ்சினுள் மூச்சுப்பை நன்கு நிறையக் காற்றை உள்ளிழுத்து, வாயை நோய்கொண்ட இடத்தின்மேல் நெருங்க வைத்து, உரமாகவும் ஒரே ஒழுங்காகவும் ஊதித், திரும்பவும் மூச்சு இழுக்கும் பொருட்டு, முகத்தை அப்புறமாகத் திருப்புகையில், ஊதின இடத்தினின்றும் வெதுவெதுப்பு நீங்காமைப் பொருட்டு வலது கையை அதன்மேல் வைத்து அதனைப் பொத்திக் கொள்க. மூச்சிழுக்குங்கால் அதனைப் பொத்தியும், திரும்ப ஊதுங்காற் கையை அப்பால் எடுத்தும் இங்ஙனமே பலகாற்செய்க. இனிப், பல்வலியால் வருந்துவோரை நினைவற்ற துயிலிற் போகச்செய்து, பின்வருமாறு செய்தால் அந்த நோயை உடனே தணியச் செய்யலாம். பல்வலி முகத்தில் எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ அந்த இடத்தின்மேல் வலது கையைச் சிறிதுநேரம் வைத்தல் வேண்டும். அதன் பிறகு, வலியிருக்கும் பக்கமாய்க் காதின்மேல் மெல்லியதொரு துண்டுக் கம்பளியை மடித்துப் போட்டு, அதன் மேல் மறுபடியுங் கையை வைக்க வேண்டும்; மற்றக்கையைத் தலைமேல் வைத்து அக்கம்பளியின் மேன் முனையைப் பிடித்துக்கொண்டு, அதன் ஊடே காதுக்குள் வலுவாய் ஊதுக. அந்நோய் உடனே நீங்கவேண்டுமென்னும் முனைப்போடு இவ்வாறு மூன்று, நான்கு முறை செய்க. வெதுவெதுப்பான ஓர் உணர்ச்சி வலியுள்ள பல்லின்கண் உண்டாக, உடனே அவ்வலி தணியும். கடைசியாக ஊதியபின், காதின்மேலிட்ட கம்பளியை அகற்றிவிடுக. இம்முறையால் இந்நோயை உடனே போக்கலாமேனும், இதனை வேரோடு களைதல் இஃதொன்றால் மட்டும் முடியாது. மலக்குடரில் அழுக்குச் சேராமல் நாடோறுங் கழுவிவிடுதலாலும், காலைமாலை இரண்டுவேளை நீரை நன்றாய்க் கொதிக்க வைத்துப், பல்வலியுள்ள பக்கத்தின் உள்ளும் புறம்பும் அவ் ஆவியிற் படும்படி செய்து செவ்வையாய் அதனை வியர்க்க வைத்தலாலும் அந்நோயை அடியோடு தொலைக்கலாம். இனிக் கொடுமையான தலைவலி கொண்டவர்களுக்கும் அதனை உடனே நீங்கச் செய்யலாம். நோயாளிக்குப் பின்னே நின்றுகொண்டு, இரண்டு கைகளையும் நோயாளியின் நெற்றி மேற் சிறிதுநேரம் வைத்து, அங்கிருந்து கன்னப்பொட்டுகளைச் சிறிது அழுத்தியபடியாய் மெல்லப் பின்னுக்குத் தடவிப், பிறகு கைகளை உச்சந்தலைக்குக் கொண்டுபோய், அங்கிருந்து அவற்றை எடுத்து உதறுக. திரும்பவும் இங்ஙனமே செய்க. இப்படியாக ஐந்துமுதற் பதினைந்து நிமிடங்கள் செய்தால், தலைவலியின் கொடுமை தணியும். பின்னும் அது சிறிதிருந்தால், வலிநீக்குந் தைலம் இட்டுச் சிறிது தேய்த்தால் அது முற்றும் நீங்கும். மறுபடியுந் தலைநோய் வராதபடி மலக்குடரைத் துப்புரவு செய்து, தீனிப்பை செவ்வையாகும் பொருட்டுச் சூடான நல்ல வெந்நீர் அருந்துக. இனிப் பொருத்துப் பிடிப்பு முதலான நோயால் மிக வருந்துவோக்கும் இம்முறையில் அத்துன்பம் எளிதில் நீங்கும். நோய் கொண்ட பொருத்தின்மேற், கடைவிரலை அகற்றி மற்றை விரல்களைச் சேர்த்து நேரொக்கப்பிடித்து, அங்கிருந்து கீழ்நோக்கித் தடவிக் கீழே அவ்வுறுப்பின் முனைக்கு வந்ததும் இரண்டு கைகளையும் உதறிவிட்டுக் கைகளைப் பக்கச்சாய்வாய் மேலுயர்த்தி, மறுபடியும் அங்கிருந்து அவ்வாறே தடவி உதறுக. இங்ஙனம் பலமுறை செய்தால் அவ்வலி இருந்த இடத்தை விட்டுக் கீழ் இறங்கும்; அப்புறம் அதனை அறவே நீக்குதல் எளிது. இம்முறையோடு, பொருத்துக்களில் உள்ள பிடிப்பை இளகச் செய்தற்குரிய தைலங்கள் இட்டுத் தேய்த்தலும், அங்ஙனந் தேய்த்தற்குமுன் பிடிப்புள்ள இடத்தை நீராவியிற் காட்டுதலும் பெரிதும் நன்மை பயக்கும். இங்ஙனமே வெப்புநோய், காதுவலி, கண்வலி, நீர்க்கோவை, நரம்புவலி முதலானவைகளையும் நினைவற்ற துயிலின் உதவியால் மேற்கூறிய முறைப்படி செய்து எளிதிற் போக்கலாம். இம்முறைகளை ஒருவர் எவ்வளவுக்குச் செய்து செய்து பழகுகின்றாரோ, அவ்வளவுக்கு அவர் அந்நோய்களை யெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நீக்கவல்லுநர் ஆவர். இம்முறைகளை வழுவாமற் பழகும் பழக்கமே இந்நோய்களைத் தீர்த்தற்குச் சிறந்த மருந்தாகும். இம்முறைகளை நன்கு பழகித் தேர்ச்சி பெற்ற ஒருவர் (Dr. Herbert. A. Parkin, M.D. See New Thought Dec No. 1903.) மருந்துகளிற் றீராத சுவாசகாசம் என்னும் ஈளை நோயால் வருந்தின ஒருமாதரார்க்கு அதனைத் தீர்த்த உண்மை வரலாற்றினை இங்கே மொழிபெயர்த் தெழுதுகின்றாம்:- ஒருநாள் மாலைக் காலத்தில், முப்பத்திரண்டு ஆண்டுள்ள ஒரு மாதரைச் சென்றுபார்க்கும்படி அழைக்கப்பட்டேன். அம்மாதர் பதினைந்து ஆண்டுகளாக நிரம்பவுங் கொடுமையான சுவாசகாசத்தால் நிரம்பத் துன்புற்று வந்தனர். முதன்முதல் அவ்வம்மையார்க்கு அந்நோய் வந்தபோது அதனை ஆராய்ந்து பார்த்தவர் அஃது எலும்புருக்கி நோய் என்றனர். பின்னர்ப் பெருக்கக் கண்ணாடி (Microscope) வழக்கத்துக்கு வந்த சில ஆண்டுகளில் அந்நோயை ஆராய்ந்து காண அது சுவாசகாசம் என்னும் ஈளை நோயாமென்று உறுதிப்படுத்தினர். யான் அந்த அம்மையைப் பார்க்கச் சென்றபோது, அவர் தெற்கேயுள்ள ஓர் ஊரிலிருந்து அப்போதுதான் அங்கே வந்துசேர்ந்தனர்; அவ்வூரிற் பல்லாண்டுகள் சென்று தங்கியும் அவர்க்கு ஏதும் நன்மை விளைந்திலது. படுக்கையிற் பல தலையணைகளை அடுக்கி அவற்றின்மேற் சாய்ந்த படியாய் இளைப்பினால் துன்புற்றுக் கொண்டு அவர் உட்கார்ந்திருக்கக் கண்டேன். அவர்தம் வாயிதழ்கள் நீலநிறமாயும் கைகால்கள் சில்லென்றும் இருந்தன. பலமணி நேரங்களாய் நோய் நிரம்ப மும்முரமாக இருந்தது; அன்றைக் காலைமுதல் அவ்வம்மை ஏதோர் உணவும் எடுக்கவில்லை. என்னிடம் அவர் குசுகுசுவென்று பேசுதற்குமேற் பேச இயலவில்லை; அப்படிப் பேசுவதும் மிக்க வருத்தமாகவே இருந்தது; ஏனெனில் அவர் முற்றுங் களைப்படைந்திருந்தார். `யான் அப்படுக்கையின் பக்கத்தே அமர்ந்து, அவ்வம்மையார் கைகளில் ஒன்றை என் கையிற் றூக்கி வைத்துக் கொண்டு `இப்போது நீங்கள் படுந்துன்பத்தை நீக்கும் பொருட்டு யான் இங்கு வருவிக்கப்பட்டேன்; சிறிது நேரத்தில் நீங்கள் மூச்சுத் தடையின்றி விடுவீர்களென்று எதிர்பார்க்கின்றேன். இப்போது உங்களிடம் யான் ஏதொன்றுங் கேளேன்; நான் உங்களை நோக்கிச் சொல்வனவற்றில் உங்கள் கருத்தைச் சிறிது நேரம் பதியவைக்க வேண்டுவதுதான் எனக்கு வேண்டும். உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள், சிறிது நேரத்தில் எல்லாம் ஓய்வாயிருக்கும் ஓர் உணர்ச்சி உங்கள் உடம்பெங்கும் வரக் காண்பீர்கள்; மூச்சு ஓட்டமும் வரவர நீண்டு ஆழ்ந்து செல்லும். உங்கள் மார்புக் கூட்டின் மேலெல்லாம் யான் கையால் தேய்க்கப் போகின்றேன்; அப்படிச் செய்கையில் மூச்சின் ஓட்டம் வரவரத் தடையின்றிச் செல்லும், என்று சொல்லியபடியே மார்பையும் நுரையீரலுக்கு நேரேயுள்ள முதுகையும் வலுவாய்த் தேய்க்கத் துவங்கினேன்; அதே நேரத்தில், நுரையீரல் வரவரத் தடை தீர்கின்றதெனவும், மூச்சோட்டம் ஆழமாய் நீண்டு செல்கின்ற தெனவும், நரம்பு வலியும் அச்சமுங் கவலையும் அகலுகின்றன வெனவும், வரவரத் தூக்க மயக்கமும் உண்டாகின்றதெனவும், அவருக்கு வேண்டுவன நல்ல உணவுந் தூக்கமுமே யெனவும் இன்னுஞ் சிறிது நேரத்தில் சிறிது சாறு பருகத் தக்கவளவு மூச்சோட்டம் தடையின்றி நிகழும் எனவும், அதன் பிற்றூக்கம் வருமெனவும் கட்டுரை கூறிக்கொண்டே வந்தேன். குறிப்பிட்ட இந்த முறையாகப் பத்து நிமிடங்கள் வரையில் தேய்த்த பிறகுங், கட்டுரை கூறிய பிறகும் நோய் கொண்ட அவ்வம்மையார் மிக எளிதாய் மூச்சு விடுதலையும் இரத்த ஓட்டம் சீர்ப்பட்டுச் செல்லுதலையுங் கண்டு உவப்புற்றேன். அதன்பின், மூச்சோட்டம் எளிதாய் நடைபெற நடைபெறச் சாய்ந்து கொள்ள வைத்திருக்குந் தலையணைகளை ஒன்றன்பின் ஒன்றாய் எடுத்துக்கொண்டே வந்து கடைசியாக அவரைப் படுக்கை மட்டத்திற் கிடத்துவோம் என்றுங் கட்டுரைத்தேன். முதல் தலையணையை எடுத்துவிட்டவுடன் அவ்வம்மை படிப்படியாய் அதற்கு அடுத்த தலையணையிற் சாயலானார். அந்நேரமெல்லாம், `தடையில்லா மூச்சோட்டத் தைப் பற்றியும், `தூக்கத்தைப் பற்றியும், `பசியைப் பற்றியுங் கட்டுரைகளைத் தொடர்பாகச் சொல்லி வந்தேன். அவ்வம்மையார் இரண்டாந் தலையணைமேற் செவ்வையாய்ச் சாய்ந்து கொண்டிருக்கையில் நன்றாய்த் தாளித்த சூடான சாறு சிறிது அவர் அருந்தக் கொடுத்தோம். பின்னுஞ் சிறுதுநேரஞ் சென்றபின், மற்றத் தலையணைகளையும் எடுக்கலானேன்; இங்ஙனமாக இருபது நிமிடங்களில் எல்லாத் தலையணைகளையும் எடுத்துவிட்டு, அயர்ந்து உறங்கும் அவ்வம்மையைப் படுக்கை மட்டத்தில் கிடக்கவிட்டோம். அவர் இரண்டுமணிநேரந் தூங்கினார். அதன்பின் இன்னுஞ் சிறிது உணவு கொடுக்கப் பட்டது. திரும்பவும் அவர் தூக்கங்கொண்டு படுத்தார். அடுத்த இருபதுமணிநேரத்தில் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு முறையாக அவருக்கு உணவு தரப்பட்டது. மலச்சிக்கல், செரியாமை, தூக்கமின்மை, பசியின்மை முதலானவை நீங்கும் பொருட்டுக் கட்டுரை மொழிகள் கூறிய படியாய், ஒவ்வொரு நாளுங் காலை மாலை இரண்டு பொழுதுகளாக இரண்டு கிழமைகள் வரையில் அவ்வம்மை யாருக்கு இம்முறையைச் செய்து வந்தேன். உடனே அவர் நலம்பெறலானார். முதற்றரம் இம்முறையைச் செய்த வளவானே அவ்வீளை நோய் திரும்ப வரும் அடையாளங்கள் காணப் படவில்லை. அவருடம்பின் ஒவ்வொரு நிகழ்ச்சியுந் திருத்தப்பட்டது. இரண்டு திங்களில் சிறிதேறக்குறைய ஏழுவீசை எடை மிகுதியாகப் பெற்றார். அவ்வீளை நோய் அவரை விட்டகன்று மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அவர்தம் வாழ்நாளெல்லாம் வருந்திக் கொண்டிருந்த பல வேறு இடங்களிலுள்ள நோய்களை அகலச் செய்தமையே அவ்வம்மையார் அந்நோய் முற்றுந்தீரப் பெறுதற்குக் காரணம் என்று யான் கருதுகின்றேன். மிகக் கொடிய காசநோயைத் தீர்த்த அமெரிக்க மருத்துவரின் இவ்வுண்மை வரலாறு கொண்டு, மருந்துகளின் உதவி வேண்டாமலே எத்தகைய நோயையும் இவ்வறிதுயின் முறையால் தீர்த்து விடலாமென்பது இனிது விளங்கு கின்றதன்றோ? 15. தண்ணீர் மந்திரித்துக் கொடுத்தல் இனி, உள்ளே பருகுதற்காவது, வெளியே உடம்பிற் றெளித்துக் கொள்ளுதற்காவது, அல்லது தலைமுழுகுதற்காவது தண்ணீர் மந்திரித்துக் கொடுக்கும் வழக்கம் நம்மனோருள்ளுங் காணப்படுகின்றது. அயல்நாடுகளிலுள்ள வெண்மக்கள் இம்முறை நோய் நீக்குதற்குப் பெரிதும் உதவுதலை நன்கு ஆராய்ந்து பார்த்து இதனையுங் கைக்கொண்டு வருகின்றார்கள். அறிதுயில் முறைகளிற் பழகித் தேர்ச்சி பெற்ற ஒருவர்க்கு நினைவாற்றல் நிரம்ப வலிவேறி நிற்குமாதலால், அந் நினைவாற்றலால் உந்தப்படும் அவரதுடம்பிலுள்ள மின்சத்து அவர்தங் கண்களின் வழியாகவும் சொற்களின் வழியாகவும் விரல்நுனிகளின் வழியாகவும் புறத்தே ஓடிப் புறத்துள்ள பொருள்களையும் உயிர்களையும் இயங்குமாறும் இயங்காமல் வறிதே இருக்குமாறும் செய்து விடுகின்றது. இந்நாவலந்தீவிலும் நினைவாற்றல் மிகுந்துள்ளோர் பலருளர். அவர் தம்மை வழிபட்டாரை வாழவும், தம்மைப் புறம்பழித்தாரைச் சாவவுஞ் செய்த உண்மை வரலாறுகள் ஆங்காங்குள்ளார்க்குத் தெரியாமல் இரா. தொழு நோய் கொண்டும், ஈளை முதலிய கொடுநோய்களால் வருந்தியும் வந்த சிலர் அத்தகைய பெரியாரை எதிர்ப்பட்டு அவர் தந் திருநோக்கந் தம்மேற் பட்ட அளவானே அந்நோய் தீரப்பெற்றிருக்கின்றனர். வேறுசிலர் அவரைப் பழித்துத் தீது செய்தமையானே அவரால் வையப்பட்டுத் தாமும் தங்குடும்பமும் வேரோடு அழிந்து போயினர். நீராவி வண்டியிற் சென்ற அத்தகைய பெரியாரை அறியாமல் அவரைக் கீழ்இறக்கி விட்டமையானே, அவர் அவ்வண்டி ஓடாமையில் நிற்கச்செய்த நிகழ்ச்சிகளும் பின்னர் அவரை வேண்டி இரந்தமையானே அவர் இரங்கி அவற்றை ஓடச்செய்த நிகழ்ச்சிகளும் இந்நாட்டின் கணுள்ளார் பலர் நேரே கண்டுமிருப்பர். வெறிகொண்டு எவர்க்கும் எதற்கும் அடங்காமல் ஓடித் திரிந்து உழக்கிய களிற்றியானைகளையுங் குதிரைகள் ஆனேறுகள் நச்சுப்பாம்புகள் வரிப்புலிகள் முதலியவற்றையும் தமது கட்பார்வையாலும் ஒரு சொல்லாலும் அடக்கிய பெரியோரையும் பலர் பார்த்திருப்பர். அமெரிக்காவில் இம்முறைகளில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒருவர் ஒரு மணிக்கு நூற்றிருபது மைல் வழியோடும் ஒரு நீராவி வண்டியை ஒரு நொடியில் ஓடாமல் நிறுத்தி விட்டனரென்று அங்கிருந்துவரும் வெளியீடுகளிற் படித்துணர்ந் திருக்கின்றோம். இங்ஙனமெல்லாங் கண்கூடாக அறியப்படும் உண்மை நிகழ்ச்சிகளிலிருந்து, நினைவாற்றல் மிகப் பெற்றோரால் உந்தப்படும் மின்னாற்றல் அவர்தங் கண்கள் சொற்கள் விரல் நுனிகள் என்னும் இவற்றின் வழிச்சென்று அரும்பெரும் புதுமைகளை விளைக்க வல்லதாதலை இனிதுணர்கின்றேம் அல்லமோ? இவ்வாறு உந்தப்படும் மின் ஆற்றலை நோயாளியின் உடம்பிற் செலுத்தினால் அஃது எத்துணை நன்மையை எவ்வளவு விரைவிற் செய்யுமென்பதை நாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ? நோய் தீர்க்கும் நினைவின் முனைப்பினால் உந்தப்படும் மின்சத்தைத் தன்னிடத்து வாங்கி அதனை நோயாளியின் உடம்பிற் செலுத்துதற்கு இடைநின்று உதவும் பொருள்களுள் தண்ணீரே மிகச் சிறந்ததாயிருக்கின்றது. ஏனென்றால், நமதுடம்பில் முக்காற்பங்கு நீர்ப்பொருளான இரத்தத்தால் நிறைக்கப்பட்டிருக்கின்றது; அவ்விரத்தமே மின்சத்தைத் தன்கண் ஏற்று உடம்பினுள் எங்கும் ஓடி அதனை வளர்த்து வருகின்றது; நுண்ணிய மின் சத்தோடு கலந்து உலாவுதற்கு அதுபோல் ஓடவல்ல நெகிழ்ச்சிப்பொருள் ஒன்றே பயன்படுவதல்லது, ஏனைக் கட்டிப் பொருள்கள் அத்துணைப் பயன்படா. ஆதலால், தூயதண்ணீரில் மின்சத்தை ஏற்றி அதனை நோயாளி பருகுதற்குக் கொடுத்தலே நன்று. தூய குளிர்ந்த ஊற்றுத் தண்ணீர் கிணற்றுத் தண்ணீர் கிடையாதபோது, பனைவெல்லத்தை மந்திரித்துச் சிறு மாத்திரைகளாக்கி ஒரு சிறு புட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு, அவற்றையும் நோயாளிக்குக் கொடுத்துநோய் தீர்க்கலாம். அல்லது, உண்ணும் உணவையும், உடுக்கும் உடையையுங்கூட மந்திரித்துக் கொடுக்கலாம். இனித், தண்ணீரில் நோய் தீர்க்கும் மின்சத்தை ஏற்றுமாறு யாங்ஙனமெனிற் காட்டுதும்; நல்லதோர் ஊற்றிலேனுங் கிணற்றிலேனும் தூய மட்பாண்டத்தில் முகந்தெடுத்துவந்த தூய குளிர்ந்த நீரை ஒரு மட்குடுவையிற் பெய்து, அதனை இடது கையில் வைத்துக்கொள்க. பின்பு, ஒளிவடிவாகிய இறைவனுருவை நினைந்து உள்ளத்தை அவ்வொளிவடிவிற் பொருத்தி, அவ்வொளி நுமது உள்ளத்திற் பாய்ந்து உடம்பெங்கும் நிறைந்து நிற்பதாக நன்றாய் உறுத்தி நினைக்க. அங்ஙனஞ் சிறிது நேரம் நினைந்தபின், வலது கையின் கடைச் சிறுவிரல் ஒழிய ஏனைவிரல்களை ஒன்றன்மேலொன்று படாமற் குவித்து, இடது கையில் உள்ள குடுவைத் தண்ணீர்க்குமேற் பிடிக்க; கண்களையும் இமையாமல் நிறுத்தி, அவ்வாறு குவித்த விரல் நுனிகளில் அவற்றின் பார்வையையும் நிறுத்துக; அதன்பின்,உடம்பில் நிறைந்த அவ்வொளி நும்முடைய கண்களின் வழியாயுங் குவித்த விரல் நுனிகளின் வழியாயும் ஓடி அக்குடுவைத் தண்ணீரிற் பாய்வதாக உறுத்தி நினைக்க; அங்ஙனம் நினைக்கையிலேயே அவ்விரல்களை நடுங்குவது போல் அசைக்க; அதன்பின் `நோய் நீக்கும் மின்சத்தால் நிறைந்த இத்தண்ணீர் இந்நோயாளியின் இந்நோயை உடனே நீக்குக! என்றும் அடுத்தடுத்து உள்ளே சொல்லிக் கொள்க. இவ்வாறு செய்தானபின், அக்குடுவைத் தண்ணீரை ஒருமணி நேரத்திற்கு ஒருகால் ஒரு வாய்கொண்ட வளவு பருகக் கொடுத்து வருக. அக்குடுவைத் தண்ணீரை மேன்மூடிகொண்டு இறுக மூடிவைக்க வேண்டும். உள்ளுக்குப் பருகக் கொடுத்தலேயன்றி, ஒருகுடந் தண்ணீரை இங்ஙனமே மந்திரித்துக் கொடுத்து நோயாளி அதனைத் தலையில் விட்டு முழுகவுஞ் செய்யலாம். மட்பாண்டங்களுங் கண்ணாடி ஏனங்களுங் களிம்பு துரு முதலிய நச்சுப்பொருள் இல்லாதன வாகையால், இவைகளே இம்முறைக்குப் பயன்படுத்தத் தக்கவை. செல்வமுள்ளவர்கள் பொன் வெள்ளிகளாற் செய்த ஏனங்களைப் பயன்படுத்தலாம். இவ்வாறு நினைவு முனைப்பால் மின்சத்து ஏற்றப்பட்ட தண்ணீர் பொதுவான தண்ணீரினும் வேறுபாடுடைய தென்பதற்கு, மின்சத்து ஏற்றிய தண்ணீரையும் அஃதேற்றாத தண்ணீரையும் வேற்றுமை தெரிவியாமலே நுண்ணுணர்வு மிக்க ஒரு சிறுமி கையிற் கொடுத்துச் சுவைத்துப் பார்க்கும்படி செய்தால், அவள் அவ்விரண்டற்குமுள்ள சுவை வேறுபாட்டை நன்கறிந்து உரைப்பள். இன்னும், இடது கையால் மின் சத்து ஏற்றப்பெற்ற தண்ணீர்க்கும், வலது கையால் மின்சத்து ஏற்றப்பெற்ற தண்ணீர்க்குங்கூட வேறுபாடு பெரிது காணப்படுகின்றது. இம் முறைகளில் நன்றாய்ப் பழகித் தேர்ச்சிபெற்ற ஒருவர் தம் இடது கையை ஒரு கிண்ணந் தண்ணீரின்மேற் கவிழ்த்துப் பிடித்த படியாய்த் தமது மின்னாற்றல் அதிற் பாய்வதாக ஓர் ஐந்து நிமிட நேரம் நினைத்திருக்க; பின்னர் வேறொரு கிண்ணந் தண்ணீரின் மேல் அங்ஙனமே தமது வலது கையைப் பிடித்தபடியாய் அவ்வளவு நேரமே நினைத்திருக்க. பிறகு, நுண்ணுணர்வு மிக்க ஒரு சிறுமி கையிற் கொடுத்து அவ்விரண்டையும் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சுவைத்து அவற்றிற்குள்ள சுவை வேறுபாட்டைத் தெரிவிக்கும்படி கற்பித்தால், இடது கைவழியே மின்சத்தேறிய தண்ணீர் வெதுவெதுப்பாகவும் வெறுப்பான சுவையுடைய தாகவும் இருக்கின்றதெனவும், வலதுகை வழியே அஃதேறிய தண்ணீர் இனிதாகவும் பளபளப்பாகவும் இருக்கின்றதெனவும் அவள் கூறுவள். இன்னும் பல கிண்ணந் தண்ணீர்களுக்கு இடையே இங்ஙனம் மின்சத்தேற்றிய கிண்ணம் ஒன்றனையுங் கலந்து வைத்து, அவை தம்மை ஒவ்வொன்றாய்ச் சுவைத்துப் பார்த்து, அவற்றின் சுவை வேறுபாடு தெரிவிக்கும்படி நோயாளி ஒருவர்க்கு மொழிந்தால், அவர் மின்சத்தேறிய நீரின்சுவை மற்றையவற்றின் வேறாயிருத்தலை நன்குணர்ந்து அதனைத் தெரிந்து சுட்டுவர். இனி, நீரில் மின்சத்து ஏற்றிக்கொடுத்து நோய்தீர்க்கும் முறையைப் பழகவேண்டுபவர் நோயற்ற தூய வுடம்பும் எல்லார்க்கும் நன்மை செய்ய விரும்புந் தூய வுள்ளமுங் கடவுளிடத்துக் கனிந்த அன்பும் உடையவராய் இருத்தல் இன்றியமையாத தாகும். அத்தகையோர் இளைப்புக் களைப்பின்றிக் கிளர்ச்சி யோடு இருக்குங்காலங் காலைப்பொழுதே யாகையால், அந்நேரமே இம் முறையால் நோய் தீர்த்தற்கு ஏற்ற காலமாம். மிகவும் அயர்ச்சி யடையத்தக்க உழைப்பினை நாள் முழுதுஞ் செய்யாமலிருந்தால், எல்லாம் அமைதியுற்றிருக்கும் மாலைக் காலமும் இதனைச் செய்தற்கு ஏற்றதேயாகும். நோயாளி அமைதி கொண்டிருக்குங் காலமும் இதற்கு இசைந்ததென்றுணர்தல் வேண்டும். அது நிற்க. 16. தீயபழக்கங்களை ஒழிக்கும்முறை இனி, மேற்பிறவிகளில் இடையறாது பழகிய பழக்கத்தாற் பலர் பிறக்கும்போதே அப்பழக்கத்தின் பயனாகச் சில தீய தன்மைகளை யுடையராய்ப் பிறந்து, வளர்ந்து, நாளேற நாளேற, அத்தன்மைகளுக்கு ஒத்த தீய செயல்களைச் செய்து, தம்மையுந் துன்புறுத்திப் பிறரையுந் துன்புறுத்திப் பிறவிப்பயனை வீணாக்கி மாய்ந்து போகின்றனர். இவர் பிறக்கும்போதே இத்தகைய தீய இயற்கைகளை உடன் கொண்டுவந்து, பின்னர் அவை வேரூன்றி வளர்தற்கேற்ற தீயோர் சேர்க்கையால் உரங்கொண்டு முற்ற, அதன்பின் எவரானும் மாற்றுதற்கு ஏலாத கொடியோராய் உலகிற்குப் பல பெருந் தீங்குகளை இழைத்து மாள்கின்றனர். இத்தன்மையோரைத் திருத்துதற்கு அரசனும் அவனால் ஏற்படுத்தப்பட்ட சிறைக்களம் முதலான கருவிகளும் பண்டு தொட்டு உலகின்கண் மிகுந்திருந்தும், இவரைத் திருத்தி நல்வழிப்படுத்துவது முடிந்தபாடாயில்லை. சட்டத்துக்கு மாறாகவே துணிந்து நடப்போர் பலராகச், சட்டத்தின் பிடிக்கு அகப்படாத தீநெறிகளில் ஒளிந்தும் ஒளியாமலும் நடப்போர் பலப்பலர். உள்ளடங்கி எரியுந் தீயை ஒரு பக்கத்தில் மூடினால், அது மற்றொரு பக்கத்தில் எரிந்து வெளிப்படுதல் போலவும், நிலத்தினுள்ளே வேரின் உரம் நிரம்ப உள்ள ஒரு முண்மரத்தை மேலே எவ்வளவுதான் வெட்டினாலும் அது மேலும் மேலும் தளிர்த்தல் போலவும், மக்கள் உள்ளத்தே படிந்து மேன்மேல் வலுவாய் வளரும் பொல்லாங்கைச் சுவடறத் துடைத்தற்கு இசைந்த வழித் துறைகளைத் தேடாமற், புறத்தே எவ்வளவு கொடுமையான சட்டதிட்டங்களைச் செய்து வைத்தாலும், அவற்றால், தீய இயல்புள்ளோர் திருந்துவர் என்று கனவிலும் நினைத்தல் வேண்டாம். அகத்தே ஊறிய நஞ்சை, அகத்தே சென்று உரிஞ்சும் மருந்தே மிக்கவல்லதாகும். அதுபோற், புறத்துச் செல்லும் உணர்வுகளை மடக்கி, அகத்துச்சென்று புதையும் `அறிதுயிற் கட்டுரைகள் மட்டுமே, ஒருவர் பிறவியிலேயே தம்முடன் கொண்டுவந்த தீய இயற்கைகளை மாற்ற வல்லதாகுமல்லாமல், வேறுபுறத்து முறைகள் எவையும் அவற்றை மாற்ற மாட்டாவென்று திண்ணமாய் உணர்ந்துகொள்க. சிறுபிள்ளைகளா யிருக்கையிலேயே இவ்வறிதுயின் முறைகளால் மக்களைச் சீர்திருத்துதல் எளிது. அவர்கள் வளர்ந்து பெரியரானபின் அவர்களைத் திருத்துதல் அரிது. ஏனென்றால், அவர்கள் தம்மை அறிதுயிலிற் செலுத்துவோர்பால் அணுகவும் மாட்டார், அவர் சொற்களுக்கு இணங்கவும் மாட்டார், ஆனதுபற்றிப், பெரியோர்க்கு அடங்கி நடத்தற்குரிய பிள்ளைமைப் பருவத்திலேயே இம் முறைகளினுதவியால் அவர்களை நல்வழிப்படுத்துதற்கு. பெற்றோர்கள் அனைவரும் முயல்வார்களாயின் உலகத்தில் தீமைகள் அற்றுப்போம். எல்லாரும் நல்லவர்களாய்த் தத்தம் ஆற்றலுக்கேற்ற புகழ் புண்ணியங்களைச் செய்து நீண்ட காலம் இம்மையிலும் இன்பவாழ்க்கையில் வாழ்ந்து, மறுமையிலும் அழியா வீட்டின்பத்தைப் பெறுவர். தாய் தந்தையர்க்கும் உவாத்தியாயர்க்குங் கீழ்ப்படியாமல் நடந்து கல்வி பயிலாமற் குறும்பனாய்த் திரியும் ஒரு பையனைத் திருத்துவது யாங்ஙனமெனிற் காட்டுதும்: மேலே காட்டிய `அறிதுயிலிற் செலுத்தும் முறைகளில் ஒன்றால் அவனைத் தூங்கச் செய்து, அவனை நோக்கிப் பின்வருமாறு சொல்லுக: இப்போது யான் சொல்லுகீறபடி யெல்லாம் நீ கீழ்ப்படிந்து நடக்கக்கடவாய். உன்னை நான் இத்தூக்கத்தினின்றும் எழுப்பிய பிறகு நீ உன் பெற்றோர்க்கும் உவாத்தியாயர்க்குங் கீழ்ப்படிந்து நடக்கக்கடவாய். உனக்குக் கொடுக்கப்படும் பாடங்களை நீ கருத்தாய்ப் படித்து அவற்றில் தேர்ச்சியடையக் கடவாய். சுறுசுறுப்பாய் விளையாட வேண்டும் நேரத்தில் விளையாடிக் கருத்தாய்ப் படிக்க வேண்டும் நேரத்திற் படித்து ஒழுங்காக நடக்கக் கடவாய். நீ கற்பவைகளை யெல்லாஞ் செவ்வையாக நினைவில் வைக்கக்கடவாய். எல்லார்க்கும் இனிய நல்ல பையனாய்நடந்து மேன்மேற் செழிப்புடன் வளரக் கடவாய். கெட்ட பிள்ளைகளோடுங் கெட்ட பெண்களோடும் நீ கலந்து பழகலாகாது. யான் உன்னை எழுப்பியபின், யான் கூறிய இவைகளை யெல்லாம் நினைவுகூர மாட்டாய்; ஆயினும்; இப்போது யான் சொல்லியபடியே நீ எப்போதும நடக்கக் கடவாய். என்று இக்கட்டுரைகளைத் திருப்பித் திருப்பி மெல்ல அழுத்தமாய்த் தீர்மானமான குரலிற் பலகாற் சொல்லுக; ஒருகாற் சொல்லியபின் சிறிது நேரம் சும்மா இருந்து பிறகு மற்றொருகாற் சொல்லுக. ஏனென்றால், அறிதுயிலில் நுண்ணிய வுடம்பின்கண் நிற்கும் அப்பையனுடைய அறிவில் அங்ஙனஞ் சொல்லியவை நன்றாய்ச் சென்று பதிதற்குச் சிறிது நேரம் வேண்டும். இம்முறை வழுவாமற் காலை மாலை இரண்டு வேளையும் ஒரு கிழமை வரையில் அவனை அறிதுயிலிற் செலுத்திக் கட்டுரை கூறி எழுப்பி வந்தால், அவன் தீய தன்மைகளெல்லாம் மாறி முற்றும் நல்ல பையனாய்க் கல்வியிலும் நடக்கையிலும் மற்ற எல்லா நல்வகைகளிலும் மேம்படுவான். இங்ஙனமே, புகையிலைச் சுருட்டுப் பிடிப்போனையும், கள், சாராயங் குடிப்போனையும், மூக்குப்பொடி யிடுவோனையும், இன்னும் பொய் சூது களவு உயிர்க்கொலை முதலாக ஆகாதன பல செய்வோனையும் மேற்சொல்லிய படியாகவே அறிதுயிலிற் போகச் செய்து, அத் தீய பழக்கங்களை விடும் படியாகக் கட்டுரை கூறித், திருத்தி, நல்வழிப்படுத்தலாம். இனி, நோய்களிற் சேராத ஒரு குறைபாடு சிலரிடங் காணப்படுகின்றது. அது `தெற்றுவாய் என்பதேயாம். ஒரு சொல்லைச் சொன்னபின் அதற்கடுத்த சொல்லைத் தொடர்ந்து சொல்லுதற்கு இடங்கொடாமல் வாய் மிகத் தெற்றுதலின், அக்குறைபாடுடையோர் அதனால் மிகத் துன்புறுகின்றனர். ஆகையால், அதனை நீக்குதற்குரிய ஒரு முறையை மட்டும் இங்கே விளக்கிக் காட்டுகின்றோம். தெற்றித் தெற்றிப் பேசுந் திக்குவாய் உடைய ஒருவரை வருவித்து, அவரை ஆழ்ந்த தூக்கத்திற் போகச்செய்க. அதன்பின் அவரைநோக்கி `நீர் எல்லாரும் பேசுவதைப் போற் செவ்வையாய்ப் பேசுவீர்; உமக்கு அதில் ஏதோர் இடைஞ்சலும் இராது; தங்குதடை இல்லாமல் உமக்குப் பேசவரும்; எப்போதும் நன்றாய்ப் பேசுவீர், நன்றாய்ப் படிப்பீர்; சொற்களைத் தொடர்பாக எளிதாகச் சொல்லுவீர், படிக்கும் போதும் ஒவ்வொன்றையுந் தொடர்பாக நன்றாய்ப் படிப்பீர் என்று பலமுறை திருப்பித் திருப்பி ஆழ்ந்த அழுத்தமான குரலில் விரையாமல் மெதுவாய்ச் சொல்லுக. இங்ஙனங் கட்டுரை கூறியபின், அவரை அவ்வறிதுயிலில் வைத்துக்கொண்டே, அவர்தங் கண்களைமட்டுந் திறக்கும் படி கற்பிக்க; உடனே அவர்தங் கண்களைத் திறப்பர்; அவர் படிக்கத்தக்க ஒரு புத்தகத்தை அவரது கையிற் கொடுத்து அதில் ஒரு பகுதியைப் படிக்கும்படி கற்பிக்க; அறிதுயிலில் இருந்தபடியாகவே அவர் அதனைப் படிக்கையில் வாய்திக்காமற் படிப்பர். எவ்வளவு திக்கிப் பேசுகிறவரும் அறிதுயிலில் இருக்கையில் தெற்றுப் படாமற் படிப்பதை அப்போது காணலாம். பிறகு அவர் தம் கண்களை மூடிக்கொள்ளும்படி செய்து, இங்ஙனமே அவர் எப்போதுந் திக்காமற் செவ்வையாய்ப் படிப்பரென நாலைந்து முறை திருப்பித் திருப்பிச் சொல்லிப், பின்னும் ஓர் ஐந்து அல்லது பத்து நிமிடம் வரையில் அவரை அமைதியாய்த் தூங்க விட்டு, அப்புறம் அவரை எழுப்பி விடுக. இனிச், சிறுவர்களையே யன்றி ஆண்டில் முதிர்ந்த ஆடவரையும் மகளிரையுங்கூட, மேற்காட்டியவாறே அறிதுயிலிற் போகச் செய்து நாம் வேண்டியபடியெல்லாம் நடக்கும்படி கற்பிக்கலாம். இவ்வாறெல்லாஞ் செய்து பயன்பெறுதற்கு நினைவோடு கூடிய அறிதுயில் ஆகாது; நினைவு அற்ற ஆழ்ந்த அறிதுயிலே இவைகளைச் செய்தற்கு ஏற்றதொன்றாதலால், அதனை வருவித்த பிறகே இக்கட்டுரைகளைச் சொல்லுதற்கு முயலல் வேண்டும். இத் துயிலினின்று எழுப்பப்பட்டபின், துயிற்றுவோர் சொல்லியவைகளை விழிப்பு நிலையில் தெரியாமலிருக்கும்படிக்கும், ஆனாலும் அவர் அப்போது சொல்லியபடியே எப்போதும் நடக்கும்படிக்கும் வற்புறுத்தும் உரைத்தல் இன்றியமை யாததாகும். அங்ஙனமாயின், அறிதுயிலுக்குச் செல்லமாட்டாத அல்லது அறிதுயிலிற்செல்ல விருப்பமில்லாத நோயாளிகளை அல்லது மற்றவர்களை அதன்கட் செலுத்துமாறு யாங்ஙனமெனின்; ஒருவர்க்கு நாலைந்து முறை முயன்றும் அறிதுயிலை வருவித்தல் கூடாதாயின், ஒருகிழமை அன்றி இரண்டுகிழமை வரையில் விடாமல் நாடோறும் முயன்றுவரின் அவர்க்கு அதனை வருவித்து விடலாம். அறிதுயிலிற் செல்ல மாட்டாதவர் ஒருவரும் இல்லையாகையால், எல்லார்க்கும் அதனை வருவிக்கலாம் என்பது திண்ணம். ஆனால், ஒரு சிலர்க்கு உடனேயும், வேறு சிலர்க்கு இரண்டு நாளினும், மற்றுஞ் சிலர்க்கு ஒரு கிழமையிலும் பின்னுஞ் சிலர்க்கு இரண்டு கிழமையிலும் அதனைத் தொடர்பாக முயன்று வருவிக்கலாம் மேலும், துயிற்றுவோர் அறிதுயில் வருவிக்கும் முறைகளில் நன்கு பழகிப் பழகித் தேர்ந்திருப்பாராயின், அவர்க்கு அப்பழக்கத்தால் அவ்வாற்றல் மிக முறுகி நிற்கும். அத்தகையவர் ஒருவரையோ அன்றி ஓர் ஆயிரவரையோ ஓரிடத்தில் ஒரு நொடிப்பொழுதில் அறிதுயிலிற் செலுத்தமாட்டுவர். அங்ஙனம் அது கூடுமாயினும், அறிதுயிலிற் செல்லச் சிறிதும் விருப்பமில்லாதவர்க்கு அதனை வருவித்து அவரைத் தம்வழிப்படுத்துமாறு எங்ஙனமெனின்; ஒவ்வொருவர்க்கும் நாடோறும் இயற்கையான தூக்கம் வருவது உண்டாகையால், அவர் அறியாமலேயே அவரிடஞ் சென்று, அதிலிருந்து அவரை அறிதுயிலுக்குப் போகச் செய்யலாம். அதற்குரிய முறை யாதெனின்; அதனையுங் காட்டுவாம்; அறிதுயிலிற் செல்ல விருப்பமில்லாத ஒருவர் இயற்கையான தூக்கத்தில் நன்றாய் அயர்ந்துறங்கும்போது, துயிற்றுவோர் ஏதோர் அரவமுஞ் செய்யாமல் அவர் பக்கத்தில் அமைதியாய்ச் செல்லல் வேண்டும். சென்று மிகவுந் தாழ்ந்த குரலிலே அவரை நோக்கித் தூங்கும், நன்றாய் அயர்ந்து தூங்கும், அஞ்சவேண்டாம், நீர் விழிக்கக்கூடாது, ஆழ்ந்த அயர்ந்த தூக்கத்திற் செல்லும், தூக்கம், தூக்கம், அயர்ந்த தூக்கம், ஆழ்ந்த தூக்கம் எனத் திருப்பித் திருப்பிப் பலகால் உறுத்தி அழுத்தமாய் மெதுவாகச் சொல்லுக. இங்ஙனஞ் சொல்லுகையில், அவர் விழித்தெழும் அடையாளங் கள் காணப்படுமாயின், அப்போது அதனை நிறுத்திவிடுக. அப்படி யல்லாவிட்டால், உமது வலது கையால் அவரது தலையைத் தொட்டு `எனது குரல் ஒலியைத் தவிர வேறு எந்த ஒலியையும் நீர் கேட்கமாட்டீர்; நீர் மிகவும் அயர்ந்து ஆழ்ந்து உறங்குகின்றீர் என்று சொல்லுக. அதன் பிறகு அவரை நோக்கி ஏதேனுங் கேள்வி கேட்கலாம். `ï¥nghJ k v‹d? என்றாயினும், `இப்போது நீர் ஒரு முல்லைப்பூவை முகருகின்றீர், அதன் மணம் எப்படியிருக்கின்றது? என்றாயினும், வினவுக. அவற்றிற்கு அவர் விடை சொல்லாம லிருப்பராயின், விடை கூறும்படி வற்புறுத்து உரைக்க. பின்னர் விடைகூறுவர். மணி இன்னதென்றாவது, முல்லைப்பூ நன்றாய் மணக்கின்ற தென்றாவது அவர் மொழிகுவராயின், அவர் விழித்துக் கொள்ளாமல் நினைவற்ற அறிதுயிலிலேதான் இருக்கின்றனர் என்று உறுதிப்படுத்திக்கொள்க. அதன் பின்னும் ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்லும்படியாகச் சிறிது நேரங்கட்டுரை கூறி, அப்புறம் அவரை நும்வழிப்படுத்திக் கொள்வதற்கு எவ்வெவற்றைச் சொல்லல் வேண்டுமோ, அவைகளை எல்லாம் அவரை நோக்கிக் கட்டுரைத்துக் கூறுக. அதன் பிறகு, அவரை எழுப்புதற்குமுன் `நீர் விழித்துக் கொண்டபின் யான் இப்போது சொல்லியவைகளை அறியமாட்டீர்; ஆயினும், இப்போது யான் சொல்லியபடியே நீர் எப்போதும் நடப்பீர் என்று உறுத்திச் சொல்லிவிட்டு, இனி, நீர் இயற்கையான தூக்கத்தில் தூங்கி விழிக்க வேண்டும் நேரத்தில் விழித்துக் கொள்வீர் என்று முடித்துக் கூறி அப்புறம் அகல்க. இவ்வாறன்றி மற்றொரு முறையாலும், இயற்கைத் தூக்கத்திலிருப்போரை, அறிதுயிலிற் செலுத்தலாம். அஃதாவது: மேற்காட்டியபடி அவர் அருகிற் சென்றவுடன் வாயாற் கட்டுரை கூறுவதை நிறுத்திக் கைகளால் அவரைத் தொடாமலே முக்கால் விரற்கடை அகலநிறுத்தித் தடவுதலாலேயாம். இரு கைகளின் கடைச் சிறுவிரல்களையும் அகல நிறுத்தி, மற்ற விரல்களைச் சிறிது நெருங்க வளைத்துக் கீழ்நோக்கிப் பிடித்து, உச்சந்தலையி லிருந்து முகத்தின் மேலாகக் கீழ்இறங்கி நெஞ்சுவரையிற் கீழ்நோக்கித் தடவிப், பின்னருந் தடவுதற்குக் கைகளை உயர்த்துங்கால் அப்படியே உயர்த்தாமற் பக்கச் சாய்வாய்த் திருப்பி உயர்த்தி, மறுபடியும் உச்சந் தலையிலிருந்து நெஞ்சு வரையில் தொடாமல் முக்கால் விரற்கடை கைகளை எட்ட வைத்துத் தடவுக; இங்ஙனம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வரையில் தடவியபின், மிக மெல்லிய குரலில் `தூக்கம், தூக்கம், ஆழ்ந்த தூக்கம், அயர்ந்த தூக்கம், நீர் மிகவும் அயர்ந்து தூங்குகின்றீர் என்று கட்டுரைகளைப் பலகால் மெதுவாகச் சொல்லுக. இது முடிந்தபின், மெதுவாக அவரது நெற்றியைத் தொட்டு அவரை நும்வழிப்படுத்துதற்குச் சொல்ல வேண்டுவனவற்றையும் பிறவற்றையும் மேற்காட்டியபடியே செய்து அப்பாற்செல்க. இவ்வாறு செய்தலால், தம்மோடு இணங்காமல் தமக்கு எவ்வளவு மாறுபட்டு நிற்போரையுந், தம் விருப்பப்படி நடக்கச் செய்யலாம். இம்முறைகளால், நாட்பட்ட கொடிய நோய்களையுந் தீர்க்கலாம்; பிளவைக் கட்டிகளாலும் ஆறாத புண்களாலும் அல்லும் பகலுந் துன்புறுவோர்க்கு, அத்துன்பஞ் சிறிதுந் தெரியாதபடி அவைகளை அறுத்து ஆற்றியும் விடலாம். இவற்றிற்கு உண்மையாக நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை இங்கெடுத்துக் காட்டுவாம். அறிதுயிலை வருவித்து, அதனால் ஒருவரைத் தம் விருப்பப்படி நடக்கச் செய்யலாம் என்பதை, இம் முறைகளிற் பெரிதுந் தேர்ச்சிபெற்று, இவற்றைக் காளிகட்டத்தில் (Calcutta) உள்ள ஆங்கில மருத்துவக் கழகத்தில் நோயாளிகள்பாற் செய்து பார்த்து, உலகிற் பரவச்செய்த ஆங்கில மருத்துவர் ஒருவர் (Dr. James Esdaile, M.D.) தாம் நேரே கண்டு எழுதிய ஒரு நிகழ்ச்சியிலிருந்து நன்கு அறியலாமாதலால், அவரெழுதிய அப்பகுதியை இங்கே மொழி பெயர்த்து வரைகின்றாம்:- இரண்டு கிழமைகளுக்குமுன் ஊகுளிக் கடைத் தெருவினூடே (Hooghly bazaar) வண்டியிற் செல்கையில், அங்குள்ள ஊர் காவற் சாவடிக்கு (Police Office) எதிரே ஒரு திரண்ட கூட்டமான ஆட்கள் நிற்கக் கண்டேன். அங்கே நடப்பது என்னவென்று யான் கேட்க, ஒரு பெரிய ஆள் ஒரு சிறுவனைத் திருடிக்கொண்டு போகையிற் கண்டுபிடிக்கப் பட்டானென்றும், காவற்கூடத்தினுள்ளே அவ்விருவரும் இருக்கின்றனர் என்றும் சிலர் சொன்னார்கள். இதைக் கேட்டதும், யான் அக்கூடத்தினுட் சென்று, பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுள்ள ஒரு சிறுவன் தன்னை மீட்டவனாகச் சொல்லப் பட்ட ஓர் ஆண்மகன் மடிமீது அமர்ந்திருக்கக் கண்டேன். அந்தப் பையன் அரைவாசி மயக்க முடையவனாயும், அவன் கண்களில் ஒன்று வீக்கமுடையதாயும் இருந்தமையால் அவனை மருத்துவக் கழகத்திற்கு எடுத்துச் செல்லும்படி ஏவினேன். அதன் பிறகு அவனைத் திருடிச்சென்ற கள்வனை என்னிடங் காட்டினர். அவன் தான் ஓர் அம்பட்டன் என்றான்; அவன் தொழிலுக்குரிய கருவிகள் அடங்கிய அடைப்பும் ஒன்று என் எதிரே கொணர்ந்து வைக்கப்பட்டது. இதனை நான் கருத்தாய் ஆராய்ந்து பார்த்தேன்; ஆனால், அவை அம்பட்டர்க்குரிய வழக்கமான கருவிகளாகவே இருந்தன. அந்தப் பையனோ விரைவில் தன் உணர்வு தனக்கு வரப்பெற்றவனாகிப் பின்வருங் கதையை என்னிடஞ் சொன்னதும் அல்லாமல், திரும்ப நடுநிலை மன்றத்திலும் நடுவர்க்கு எதிரிலும் அங்ஙனமே சிறிதும் பிசகாமற் சொன்னான். அச்சிறுவன், தான் அன்று விடியற்காலையில் ஒரு வீட்டிற்கு அருகிலுள்ள வயலண்டை சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு, பாட்டையிற் சென்ற ஒரு புதுமையான ஆண்மகன் அதிலிருந்து தன்கிட்ட வந்தனரென்றும், கிட்டவந்ததும் சிலர் மந்திர மொழிகளைச் சொல்லத் தொடங்கின னென்றும், அதன்பின் அவன் தன் கைகளைப் பிடித்துக்கொண்டு தன் கண்களின் மேற் குறுக்காகக் கையைத் தடவத் தான் உணர்வு மயங்கி விட அவன் தன்னை வழிநடத்திச் சென்றதுமட்டும் நினைவிலிருக்கின்ற தென்றும், அவனது வலுக்கட்டாயம் இன்றியேதான் அவனைப் பின்பற்றிச் செல்லவேண்டியதாயிற் றென்றும் புகன்றான். மறுபடியும் தன் உணர்வு தனக்கு வரப்பெற்றது, தான் அவ்வாண்மகனை எதிர்ப்பட்ட இடத்திற்கு இரண்டு மைல் தொலைவிலுள்ள சந்திரநாகூர்க் கோட்டை வாயிலண்டையேயாம் என்றுங் கூறினான். இவ்வளவுதான் அவன் சொல்லியது. அந்த ஆளோடுகூட வருகையில் அச்சிறுவன் ஏதொன்றும் உண்ணவுமில்லை, பருகவுமில்லை; அந்தப் பையனுக்கு உடையவனும் நேசர்களும் அச்சிறுவன் ஒழுங்கான நடக்கையுந் திறமையும் உள்ளவனெனவும், இசிப்பாவது தூக்கத்தில் நடக்கும் வழக்கமாவது அவனுக்கு ஒருகாலும் இல்லையெனவும் மொழிந்தார்கள். அந்தப் பையனை மீட்டவனென்று சொல்லப்பட்ட மற்றோர் ஆடவனை ஆராய்ந்தேன்; அவன் அச்சிறுவனை அன்று காலையில் தான் பார்க்கையில் அவன் ஒரு புதுமையான ஆளைப் பின் றொடர்ந்து செல்ல, அதற்கு முன்னமே தான் அப் பையனை நன்றாய்த் தெரிந்தவனாதலால், அவனை வழியில் நிறுத்தி `நீ என்ன செய்கிறாய்? என்று கேட்டும் அச்சிறுவன் ஏதொரு விடையும் பகராமல் மயங்கியிருக்கக் கண்டு, தான் வெருண்டு, தண்ணீரைக் கொண்டுவந்து அவனது முகத்தின் மேற் றெளித்தும், வேறுசில மாற்றுகளைச் செய்தும் அவனுக்கு அம்மயக்கந் தெளிய வைத்ததாகவும், மறுபடியுந் தான் அப்பொடியனை வினாவ, அவன் தான் அங்குவந்தது ஏன் என்று தனக்குத் தெரியவில்லை. தான் முன்னறியாத அப்புதியவனை எப்படியோ பின்றொடர்ந்து செல்லலாயிற்று என்று கூறியவுடன் நிலத்தின்மேல் விழுந்து கண்ணைக் காயப்படுத்திக் கொண்ட தாகவும் எடுத்துரைத்தான். இதற்கிடையில், அப்புதியன் அவ்விடத்தைவிட்டு ஓடுகையிற் கண்டுபிடிக்கப்பட்டு ஊகுளிக்குக் கொணரப்பட்டான். அதன் பிறகு அவ்வம்பட்டனை உள்ளே கூப்பிட்டேன்; அவன் சொன்னதாவது; அந்தப் பையன் அழுதுகொண்டு மயக்கத்தோ டிருக்கையில் அவனைத் தான் பாட்டையில் எதிர்ப்பட்டதாகவும், அவனுக்கு யாது துன்பம் நேர்ந்ததென்று தான் வினவ அவன்தான் வழிதப்பி வந்து விட்டதைச் சொன்னதாகவும், அது கேட்டு ஊர்க்காவற் சாவடிக்குத் தன்னோடு கூடவந்தால் அங்கிருந்து ஒரு காவற்காரன் அவனை வீட்டிற் கொண்டுபோய்ச் சேர்ப்பனென மொழிந்ததாகவும் புகன்றான். எந்தப் பக்கம் உண்மையோ அஃதிருக்கட்டும்; வியப்பான இச்செய்தி என்கருத்தைக் கவர்ந்தது; அவ் ஆளினது தொழிலும் எனக்கு ஐயத்தை எழுப்பி விட்டது. இந்த நாட்டின்கண் உள்ள அம்பட்டர்கள் தமது தொழிலை மெதுவாகச் செய்கையில் ஆட்களைத் தூங்கச்செய்வ துண்டென்று யான் கேள்விப் பட்டிருந்தேன். தம்மை மயக்கிவிட்ட ஆண்பாலாரின் பின்னே மயக்குண்ட மக்கள் தொடர்ந்துசென்ற செய்திகள் இந்நாடெங்கும் பரவியிருக்கின்றன; அங்ஙனம் மயங்கிச் சென்றவர்கள் பெரும்பாலும் பெண்மக்களேயாம். உலக மெங்குமுள்ள அம்பட்டர்கள் கூர்த்த அறிவும் எதனையும் உற்றுநோக்கும் இயல்பும் உள்ளவர்கள். அவர்களது தொழிலானது அறிதுயில் வருவித்தற்கு ஏற்ற உணர்ச்சியுடைய உடம்பின் மேற்புறத்தை அவர்கள் தொடுதற்கு இடஞ் செய்கின்றது. ஆதலின் மிகப் பழைய காலத்திலேயே அவர்கள் அறிதுயிலாகிய மறை பொருளைத் தெரிந்திருத்தல் வேண்டும்; அவர்களின் கைத்தொழிலுக்குரிய புதைபொருளாய் அஃது அவர்கட்கு வந்திருக்கவேண்டும். இப்போது நேர்ந்த இம் முட்டுப் பாட்டினின்று வெளிப்படுதற்கு இரண்டு வழிகள்தாம் எனக்குத் தென்படுகின்றன; அப்பையனிடத்துக் காணப்பட்ட மயக்கம் அவனுக்கு இயற்கையாக வரும் நடைத்துயி (Somnambulism) லாகவாதல், அன்றிச் செயற்கையாக வருவிக்கப்பட்ட நடைத் துயிலாகவாதல் இருத்தல் வேண்டும். அது, பிற்கூறியதாக இருந்தால் அறிதுயிலின் முறைகளால் அன்றி வேறெங்ஙனம் அது வருவிக்கப்படும்? தற்செயலாக யான் இந்நிகழ்ச்சியைக் காண நேர்ந்தமையால், இங்ஙனம் ஓர் ஆளைக் கவர்ந்து கொண்டு செல்லும் முறை இருக்கக்கூடுமென்பதைப் பற்றிச் சான்றுபகர யான் அழைக்கப்படுவேனென முன்னதாகவே அறிந்துகொண்டேன்; நடைத்துயிலைப் பற்றியதொன்றும் யான் அறிந்ததில்லாமையால், முதலில் எனக்குள்ள குறையைத் தீர்த்துக்கொள்ளும்பொருட்டு யான் அதனை ஆராய வேண்டினேன். இஃது அறிதுயின் முறைகளால் வருவிக்கக் கூடியதாயிற் பெரியதோர் ஆற்றல் சிறியதனைத் தன்னுள் அடக்கி நிற்றல்பற்றி, அதனைப் போற் செயற்கையான நடைத்துயிலை யான் வருவிக்க வல்லனாவேன் என எண்ணினேன். இம்முறையால் அடையக்கூடுமாயின், இயற்கை நடைத்துயிலைப்போற் செயற்கையான தொன்றை வருவித்தற்பொருட்டு, உணர்வற்ற நிலையில் ஒருவரைக் கொண்டு செல்லுதற்கு இடையே யான் நின்றுவிடல் வேண்டும். ஆகவே, யான் சிறைக்கோட்டத்தின்கண் உள்ள மருத்துவக் கழகத்திற்குச் சென்று அங்குள்ள ஒருவனை அறிதுயிலிற் போகச் செய்தேன். இவனுக்குக் கண்ணெரிவு தீர்த்தல் வேண்டி இவனை இதற்குமுற் பலகால் நினைவற்ற அறிதுயிலிற் செலுத்தியிருக்கின்றேன்; அக்காலங்களினெல்லாம் உணர்வற்ற நிலையினளவுக்கு அவனை அறிதுயிலிற் கொண்டு சென்று, மிகக் குறைவாய்க் காதுகேட்கவும் உடம்பசையவும் மட்டும் அவனுக்கு வல்லமை சிறிது விட்டுக் கொடுத்தேன். இப்போது அவனுக்கு நினைவற்ற அறிதுயிலை வருவிக்கையிற், சிறிதுணர்வுக்கு இடம் விட்ட இந்நிலையில் வந்து அவனை விடலாயினேன். அவனும் அந்நடைத்துயிலில் நடக்கத் துவங்கி,அக்கழகத்தின் மற்றொரு முனைவரையிற் சென்று சுவரண்டைபோய் நின்றான்; பிறகு அங்கிருந்து திரும்பி ஒரே நேராகச் சென்று மறுபடியும் மற்றொரு தடையண்டை வந்து முட்டுப்பட்டு நின்றான். சிறிது நேரம் யான் அவனை அசைவின்றி நிற்கச் செய்யவே, அவனுக்கு அத்துயில் இன்னும் மிகுதியாயிற்று; அவன் ஓசைகளை உணரமாட்டாவனாயினான். அவனுடைய கண்களின் மேல் ஊதினமையினாலும், நெடுக அவனுடன் பேசினமையினாலும் அவன் அத்துயிலினின்றும் எழுந்து ஆங்கிலம் இந்துத்தானம் என்னும் இருமொழிகளையும் யான் கூறியவாறே திருத்தமாகத் திருப்பிச் சொன்னான். அவனை நான் எழுப்பியபிறகு, தூக்கத்தில்தான் செய்தவைகளைச் சிறிதும் அறியவில்லை யென்றும், அவ்விடத்தைவிட்டுத் தான் அப்புறம் பெயரவில்லை யென்றுங் கூறினான்; ஆனால், அக்கழகத்தில் யான் அவனை அறிதுயிலிற் செலுத்தத் தொடங்கிய இடத்திற்கு நேர்எதிரே இப்போதிருந்தான். பிறகு, நான் நடுநிலை மன்றத்திற்குச் சான்று பகருமாறு அழைக்கப்பட்டேன். “அங்கே சென்றதும், நடுவர் என்னை நோக்கிச் `சான்று கூறினோர் பகர்ந்தபடி ஒருவரைக் கவர்ந்து கொண்டு போதல் நடக்கக்கூடியதுதான் என்று தாங்கள் எண்ணுகின்றீர்களா? என்று கேட்டார்.`அது நடக்கக்கூடியதுதான் என்று எண்ணுகின்றேன்; ஏனென்றால், அதைப்போன்ற தொன்றை இப்போது தான் செய்து வந்தேன்; தன்னையறியாமலே ஒரு சிறையாளி என்னைப் பின்றொடாந்து மருத்துவக் கழகத்தைச் சுற்றிவரச் செய்தேன். என்று விடை பகர்ந்தேன். அது கேட்டு நடுவர் அவ்வழக்கில் அகப்பட்டவனைச் சிறைக்கு அனுப்பினார். பின்னர் அவ்வழக்கு மேல்நடுமன்றத்தில் திரும்பவும் ஆராய்ச்சிக்குவர, அப்போது அதனை ஆராய்ந்த சட்டநூல் வல்லார்க்கு யான் கருதிய பொருளைத் தினையளவுகூட விளங்கப்படுத்தல் இயலவில்லை. அதனால், அம் மேல் நடுநிலையர், யான் மொழிந்தபடி, ஒருவர் தம்மை யறியாமலே மற்றொருவரைப் பின்றொடர்ந்து செல்லுமாறு செய்யக்கூடுமென்பதை அச் சட்டநூல் வல்லார்க்கு நேரே செய்து காட்டுவதில் ஏதேனுந் தடையுண்டோவெனக் கேட்டார். அதனை ஆராய்ந்து காட்ட விருப்பம் உடையேன் என்றாலும், அதனை முடித்துச் செய்வேனென்று உறுதி புகல மாட்டேனென்று விடை கூறினேன். நம்முடைய நோக்கங்கள் இன்னவென்று தெரிவியாமல், யான் பெயர் கூறிய மூவர் ஆண்பாலாரை அம்மன்றத்திற்கு வருவிக்க அம் மேல்நடுவர் கட்டளை தந்தால், எது செய்யக்கூடியதோ அதனை யான் செய்து பார்ப்பேன் என்றேன். இரண்டொரு நாளில் அம் மேல்நடுவரின் மன்றத்திற்கு வருமாறு வேண்டிக்கொள்ளப் பட்டேன்; அப்போது அஃது ஐரோப்பியராலும் உள்நாட்டவராலும் நிறைந்திருந்தது. நாசிர் மகமது என்பவன் உள்ளே கொண்டுவந்து அடைப்பினுள்ளே நிறுத்தப்பட்டான்; சிறிது நேரத்தில் யான் அவனுக்கு அறிதுயிலை வருவித்து விறைக்கச்செய்த கைகளோடு அவனை அம்மன்றத்திற்கு வெளியே நடத்திச் சென்று, சிறிது தொலைவாகப் பாட்டையின்மேல் அவனை நடக்கவுஞ் செய்தேன்; மேலும், யான்வேண்டிய நேரம் வரையில் அவனுடைய கைகளைப் பல வகையான நிலைகளில் விறைத்து நிற்கவுஞ் செய்தேன். மறுபடியும் அவனைக் கொண்டுவந்து அம்மன்றத்தின் அடைப்பின்கண் நிறுத்தினேன்; அப்போது, மேல்நடுவரும் சட்டநூல் வல்லுநரும் அவனோடு எவ்வளவோ பேசிப்பார்த்தும் அவன் அவர்களை எள்ளளவும் உன்னிக்கவே யில்லை; அதனால் அவனை எழுப்பி விடும்படி அவர்கள் என்னைக் கேட்கவேண்டியவரானார்கள். யானும் அங்ஙனமே செய்தேன். `m›Él¤ijÉ£L btËna br‹widah? என்று அங்கிருந்த சட்டநூலார் வினவ, `இல்லை என்று உறுதியாகச் சொன்னான். அவர்கள் அவனோடு உரையாடிக் கொண்டு இருக்கையில், அவன் காணாதபடி யான் அவனுக்குப்பின்னே சென்று, அவன் பேசிக்கொண்டு செல்லும் நிலையிலேயே அவனுக்கு அறிதுயிலை வருவித்தேன். அப்புறம் அவன் பேசமாட்டாத வனாயினான்; எவருடைய குரலும் அவனுக்குக் கேட்கவில்லை; மறுபடியும் யான் அவன் கண்களின்மேல் ஊதி அவனை விழிக்கச்செய்தேன். அதன்பின் மாதூப் என்பவனைக் கொணர்ந்து அடைப்பின்கண் நிறுத்தினர். நான் உள்நுழைந்ததை அவன் பார்க்கவில்லை. மேல் நடுவருஞ் சட்டநூலாரும் அவனைத் தம்முகப்படுத்திப் பேசிக்கொண்டிருந்தனர்; அவன் அறிவோடு கிளர்ச்சியாகப் பேசுகையில் யான் அவனுக்குப் பின்னே சென்று அவனை விறைக்கச் செய்தேன்; கடவுளை நோக்கி ஆணையிட்டுச் சொல்லும் சிறையாளிகளின் வழக்கப்படி, அவன் சொல்லிக் கொண்டு வருகையில் ஒரு நொடிப் பொழுதில் பேசவும் சொல்வதைக் காதாற் கேட்கவும் மாட்டாதவனாய் இடையே நின்று போனான். காது கேட்க மாட்டாதவனாய் நின்ற பிறகும், அவன் வாயிதழ்கள் பேசுதற்கு அசைவனபோற் காணப்பட்டன வென்று அவனுக்கு எதிரிலிருந்தோர் எனக்குச் சொல்லினர். அசையும் ஆற்றல் முழுதும் அற்றுப்போக அவன் அவ்வளவு விறைத்துப் போனமையால், அவனை நடக்கும்படி செய்தற்காகப் பின்னேயிருந்து என் விரல்களால் யான் அவனைத் தள்ள வேண்டுவதாயிற்று; இடர்ப்பாட்டோடு அவன் சிறிது வழி நடந்தான்; திரும்பவும் அவன் முடியிலிருந்து அடிவரையில் சடுதியில் விறைத்தமையால் யான் அவனை மெல்ல முன்னுக்கு உந்த, மிகவுந் திடுக்கிடத்தக்க வகையாய் அவன் நிலத்தின்மீது தலைகீழாய் விழுந்துவிட்டான்; மிகவிரைவில் அவன் விறைத்ததை யான் அறியாமற் போனேன். சிறிது வருத்தப்பட்டு யான் அவனை எழுப்ப வேண்டுவ தாயிற்று; நல்லகாலமாய் அவன் காயம் அடையவில்லை. அதன்பிறகு சொரூபசந்தன் என்பவன் கொணரப் பட்டான். யான் அவனை ஒரு திங்களாகப் பாராமையால், அவனது நலத்தைப் பற்றியும் பிறவற்றைப்பற்றியும் உசாவினேன்; அவ்வாறு உசாவுகையிலேயே அவனுக்கு அறிதுயில் வருவிக்கும் முறையைச் செய்தேன். சிறிது நேரத்திலெல்லாம் அவன் விடைகூற இயலாதவனானான். உடனே அவனை அடைப்பி னின்றும் வெளிப்படுத்தி, விறைத்த கைகளோடு பம்பரம்போல் அவன் சுழன்றுவரச்செய்து, முழுதும் உணர்வற்ற நிலையிலேயே அவனை முன்னிருந்த இடத்தில் வந்திருக்கப்பண்ணினேன். அவன் காதிற் கேட்கும்படியாகவாவது, உயிரோடிருக்கும் அடையாளங்களை அவன் காட்டும்படியாகவாவது, செய்ய எவராலும் இயலவில்லை. ஆயினும், யான் அவனுடைய கண்களின்மேல் ஊதிய வுடனே, அவன் தன் ஐம்பொறியுணர்வு களும் வரப்பெற்றுத் தான் அவ்விடத்தை விட்டு அகன்ற தில்லையெனக் கூறினான். அந்த அம்பட்டன் அறிதுயில் முறையால் அச்சிறுவனைக் கவர்ந்துகொண்டு போயினனோ அல்லதப்படியில்லையோ யான் அதனைத் தீர்மானிக்கப் புகவில்லை; ஆயினும், அவ்வாறு செய்யக்கூடும் என்பதனைப் பலரும் நன்கு அறியுமாறு மெய்ப்படுத்திக் காட்டுதற்கு எனக்கு அஃது ஓர் அமயந்தந்தது; யான் மூன்று பெயரைப் பல முன்னிலையிற் கவர்ந்து சென்றதனை எவரும் மறுக்கத் துணியவில்லை. நாட்டுப்பரிகாரி ஒருவன் எவ்வளவு எளிதாய் அதனைச் செய்தல்கூடுமோ, அவ்வளவுக்கு யானும் ஓர் ஆடவனையாவது அல்லதொரு பெண்மகளை யாவது அல்லது ஒரு சிறுபிள்ளையையாவது கவர்ந்து செல்லக்கூடும். அறிதுயிலின் ஆழத்தை யான் நேரே கண்டறிந்த காலம் முதல் அதன் வல்லமையால் தீமையும் விளையும் நன்மையும் விளையுமென்று திட்டமாய் உணரப்பெற்றேன். அதனால் உண்டாம் நன்மை தீமைகளின் உணர்ச்சியை எல்லார் மனத்திலும் படும்படி செய்யும் நோக்கத்தினாலேயே அதனை அவ்வளவு ஆழமாகச் சென்று ஆராய்ந்து பார்த்தேன். அறிவு விளக்கத்தின் பொருட்டாகவும் நோய்தீர்க்கும் பொருட்டாகவும் அல்லாமல், இம்முறையை வேறு தீயவகைகளிற் பயன் படுத்துவாரை எல்லாருங் கடிந்து சொல்லும் நாளின்வரவு தொலைவில் இல்லையென்று நான் நம்புகின்றேன். இங்ஙனம் உண்மையாக நிகழ்ந்த இந்நிகழ்ச்சியைக் கொண்டு அறிதுயின் முறைகளிற் பழகித் தேர்ச்சிபெற்ற ஒருவர் தாம் வேண்டியவாறெல்லாம் பிறரை நடக்கச் செய்ய வல்லுநர் ஆவர் என்பது தெற்றென விளங்குகின்றதன்றோ? மேலே காட்டிய துரைமகனார் தெரிவித்தபடி, கொடியோரைத் திருத்தித் தாம் விரும்பிய நன்மைகளுக்குத் திருப்பிக் கொள்ளவும், பலவேறு பிழைபாடான வழிகளிற் சென்று அறிவிலராய் ஒழுகித் துன்புறுவார்க்கு அறிவுதெருட்டி அவரை அத்துன்பத்தினின்று விடுவித்துக் கொள்ளவும், மருந்துகளினுந் தீராக் கடுநோய்களைத் தீர்த்துக் கொள்ளவும் இவ்வறிதுயின் முறையினைப் பயன்படுத்துவது மிக நன்று. இந் நன்னெறி யல்லாத பிறவற்றில் இதனைப் பயன்படுத்தற்கு ஒரு சிறிதும் நினைத்தல் ஆகாது. மற்றோர் ஐரோப்பிய துரைமகனார் (Carl Sextus, see his admirable book on hypnotism, p. 241) இவ்வறிதுயின் முறைகளில் மிகவுந் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் வட அமெரிக்காவிலுள்ள சிக்காகோ நகரத்திற் சென்று பலரை அறிதுயிலிற் போகச் செய்து வியப்பான பலகாட்சிகளைக் காட்டினார். அந்நகரத்தில் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியரான பண்டி என்பவர் தம் ஏவற்காரன் ஒருவன் பொருத்துப் பிடிப்பாலும் காய்ச்சலாலும் வருந் தினமையின், அந்நோய்களைத் தீர்க்கும்பொருட்டு அக் கலைஞரைத் தமது இல்லத்திற்கு வருவித்தார். அவரும் அதற்கிசைந்து ஒருநாள் முற்பகலிற் பத்துமணிக்கு அங்கே சென்றார். பிறகு தாம் அங்கே செய்ததனைத் தாமே எழுதுகின்றார்; அது வருமாறு: நான் அவனது படுக்கையறைக்குட் புகுந்ததும் அவன் படுக்கையின் தலைமாட்டின்கட் சென்று நின்று, என் கண்களை உற்றுநோக்கும்படி அவனுக்குக் கற்பித்தேன். நான்கு நிமிடங்கள் கழிந்ததும், அவன் என்னுடைய நினைவாற்றலுள் முழுதும் அகப்பட்டு நின்றான். பிறகு அவனுடைய உறுப்புகளைப் பல நிலைகளில் நிறுத்தினேன்; அந்நிலைகளை அவன் மாற்ற முடியாதவனானான். இஃது, அவன் விறைப்பு நிலையிலிருக் கின்றான் என்பதைத் தெளிவுறக் காட்டிற்கு. இரண்டுமணி நேரத்திற்குள் அவன் மிகவும் நலமடையப் பெறுவானென்றும், படுக்கையினின்றும் எழ விரும்புவா னென்றும், அதன்பின் நல்லவுணவை உட்கொள்வானென்றும், வழக்கம்போல அவன் தன் வேலையைச் செய்யப் புகுவானென்றுங் கட்டுரை மொழிகள் கூறப்பட்டன. பிற்பகல் இரண்டு மணிக்கு அவன் கிளர்ச்சியாய்த் தன் படுக்கையை விட்டெழுந்து, நலத்தோடும் விரைவிற் பசியெடுத்துத் தனது பகலுணவை உண்டான். பின்னர் நான்கு மணிக்கெல்லாம் அவன் முற்றிலும் நலமடைந்தமையின் பாடிக்கொண்டுஞ் சீழ்க்கை அடித்துக்கொண்டும் தனக்கு வழக்கமாயுள்ள வேலையைச் செய்யவல்லன் ஆனான். இனி, இதற்கு முற்காட்டிய எடேல், என்னும் ஆங்கில மருத்துவர், கொடிய பிளவைக் கட்டிகளாலும் ஆறாப் புண்களாலும் நெடுநாள் துன்புற்ற நோயாளிகள் பலர்க்கு அறிதுயிலை வருவித்து அவர்கட்கு நோய் சிறிதுந் தெரியாமலே அவற்றை யறுத்து நலப்படுத்தின வரலாறுகள் பல இருக்கின்றன; அவற்றுள் ஒன்றை இங்ஙனே மொழிபெயர்த்து வரைகின்றாம்: - ஐம்பது ஆண்டுள்ள முரலிதா என்னும் ஒரு குடியானவன் சென்ற ஓர் ஆண்டாகக் குருத்தெலும்பைப் பற்றிய ஒரு கொடும்புண்ணால் துன்புற்றுக்கொண்டிருந்தான்; அப்புண் அவனது இடது காலின் கெண்டைச் சதையில் தோலுக்குமேல் அரைவிரற்கடை உயரமாகவும் ஆறுவிரல் நீளமாகவும் இருந்ததோடு, அவனது அந்தக் காலையும் தொடைக்கு நேர்கோணமாய் நிற்கும்படி முடக்கிவிட்டது. முதன்முதலாக அவன் இன்றைக்குத்தான் அறிதுயிலிற் செலுத்தப்பட்டான்; அவனை அத்துயிலினின்றும் எழுப்பாமல் வைத்துக் கொண்டே, பழுக்கக் காய்ச்சியதோர் இரும்பை அப்புண்ணினுள் ஆழ நுழைத்து அதனைத் தீய்த்தேன். மறுநாள் அதனைப்பார்க்க அதன் மேற்புடைப்பு நிரம்பத் தடிப்பாயும் அழுத்தமாயும் இருந்தமையால், அதனை அக்கெண்டைச் சதையினின்றும் அறுத்தெடுக்க வேண்டுவதாயிற்று; ஆகவே, அவனுக்குத் திரும்பவும் அறிதுயில் வருவிக்கப்பட்டது. அவன் உணராதபடி சுற்றிலும் உள்ள தோலின் மட்டத்திற்கு அப்புண்ணின் புடைப்பு சீவித் தள்ளப்பட்டது. இதற்கடுத்தநாள் திரும்பவும் அவனை அறிதுயிலிற் கிடத்தியபோது, முடங்கிய அவனது காலை முற்றிலும் நிமிர்த்துச் சிராய் வைத்துக் கட்டினேன்; அவன் விழிக்கவில்லை; பின்னர் விழித்ததும் அவனுக்கு நோவில்லை; என் முழுவலியும் நிறையுங்கொண்டு அம் முடக்கினை நிமிர்த்து கையில் என் கையின்கீழ் நரம்பின் சுருட்டு நெறுநெறு வென்று பிடிப்பு விடுவதை யுணர்ந்தேன். இங்ஙனம் நோய்தீர்த்த ஆங்கில மருத்துவர் தமக்கு உதவியான மற்றொரு மருத்துவரை ஏவி மற்றுமொரு நாட்பட்ட நோயைப் போக்கின வரலாறும் இங்கு மொழிபெயர்த் தெழுதுவாம்: - இந்தியாவில் இருபது ஆண்டுகளாக இருக்கும் கால்டர் என்னுந் துரை இன்றைக்கு என்னிடம் வந்து தாம் பொருத்துப் பிடிப்பினாலும் கைகால் நடுக்கத்தினாலும் தளர்ச்சியினாலுந் துன்புறுவதாக முறையிட்டுககொண்டார். மிகுந்த வருத்தத்தோடு ஒரு தடியை ஊன்றிக்கொண்டு நடக்கின்றார்; மெத்தைப்படியின்மேல் அவரால் ஏற இயலாது. அவருடைய நரம்புகள் நுறுங்கி விட்டன, அவரது கட்பார்வை மங்கிப்போய் விட்டது, எழுதுகையில் அவரது கை நடுங்குகின்றது. மட்டமான தரையின்மேல் நடக்குங்கால் கீழே வழுக்குவதாக அவருக்கு ஓர் எண்ணந் தோன்றுகின்றது; அதனால் அவர் தம்மைக் காத்துக்கொள்ளும்படி செய்யும் முயற்சியே அவரைக் கீழே தள்ளிவிடுகின்றது. சிலகாலமாக அவர் தமது வண்டிமேலிருந்தும் அதனைச் செலுத்த முடிவதில்லை; அஃதேன் என்றால், தமக்கெதிரேவரும் வண்டியோடு தமது குதிரைபோய்முட்டிக்கொள்ளாதபடி செய்யத் தம்மால் ஆகாதென்று எண்ணினார். அவர் இந்த நிலைமையிற் சென்ற இரண்டரை ஆண்டுகளாக இருந்து வருகிறார்; அக்கால மெல்லாம் அவர் எத்தனையோ மருத்துவரிடஞ் சென்று, ஏறக்குறைய ஒரு மருத்துவக் கழகத்தில் உள்ள மருந்தவ்வளவுஞ் சாப்பிட்டார்; ஏதொரு பயனும் உண்டாகவில்லை. என் மனச்சான்றுக்கு மாறாக இனி அவருக்கு மருந்து கொடுக்க முடியாதென்று கூறி, அவருக்கு நன்மையை உண்டாக்க நீண்ட நாளும் பொறுமையும் வேண்டுமேனும், அவரது நிலைமை அறிதுயின் முறையால் நோய்தீர்த்தற்கு ஏற்ற தொன்றாகுமென எண்ணி, இயற்கை நிகழ்ச்சி அவர்க்கு யாது செய்யக்கூடு மென்பதை ஆண்டு பார்க்கும்படி அவர்க்கு எடுத்துச் சொன்னேன். நோய்தீர்த்தற்கு இதற்கு முற்செய்து பாராததொன்றைப் பிடித்துப் பார்ப்பதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று; ஒவ்வோர் இரவும் படுக்கையி லிருந்தபடியாகவே வருக்கு ஒருமணி நேரம் வரையில் அறிதுயில் வருவிக்கும்படி என் துணையாட்களில் ஒருவர்க்குக் கற்பித்தேன். கால்டர் என்னும் அத்துரைமகனார் அறிதுயிலிற் கிடந்தபோது யான் அவர்கிட்ட ஒருகாலும் இருந்த தில்லாமையால், அவர் தமது நிலைமையைப் பற்றிப் பின்வருமாறு எனக்கு எழுதியனுப்பிய குறிப்புக்காக அவருக்கு நான் கடமைப் பட்டிருக்கின்றேன். சென்ற செப்டம்பர்த் திங்கள் கி.பி. 1845ஆம் ஆண்டைக் குறிப்பிடுகின்றார் 25-ஆம் நாள், தங்கட்கு உதவியாயுள்ள நாட்டு மருத்துவர், தாங்கள்கற்பித்த படியாகவே, எனக்கு முதன்முதல் அறிதுயிலை வருவிக்க முயன்றார்; ஆனால், அன்றைக்கு அது கைகூடவில்லை; அம்முயற்சி ஒன்றரைமணி நேரம் நடைபெற்றது. 26, 27 ஆம் நாட்களிலும் அங்ஙனமே; ஆனால், 28ஆம் நாள் அதே நேரம் வரையில் விடாப்பிடியாய்முயன்றதில், யான் ஆழ்ந்தறி துயிலிற் செலுத்தப்பட்டிருந்து, ஐந்துமணி நேரத்திற்கு மேற்றான் விழித்தெழுந்தேன். என் கண்ணிறைப்பைகளை மேல் நிமிர்த்துவதிலும், என் கண்களைத் திறந்து வைப்பதிலும் யான் பெரிதும் இடர்ப்பட்டேன். யான் எனது சாய்மணைக்கட்டிலை விட்டிறங்கி, என் படுக்கைக்குப் போனேன்; மறுநாட் காலை ஆறுமணி வரையில் யான் இயற்கையான துயிலிற் கிடந்தேன். ஒரு கிழமைக்குப்பின், என்னை அறிதுயிலிற் செலுத்தும் முயற்சி நாடோறும் ஒரு மணி நேரம் வரையில் நடைபெற்றது; ஆனாற் சில நிமிடம் வரையிற் றூங்கச் செய்தற்கு மேற் பிறிதொன்றும் விளையவில்லை. என்றாலும், இரவின்கண் இயற்கையான தூக்கத்தில் இனிதாகத் துயின்று வரலானேன்; எனது நோயின் துன்பம் நாளேற நாளேறக் குறைந்து வரலாயிற்று; என்னுடைய நரம்புகள் நிரம்பவும் இறுக்கமுற்றன; இப்போது நான் உதவி வேண்டாமலே மெத்தைப் படிக்கட்டின்மேல் மேலுங் கீழுமாய் நடக்கக் கூடியவனானேன்; வண்டியையும் யான் மனத் திட்பத்தோடு செலுத்தக் கூடும்; ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்குமுன் யான் இங்ஙனஞ் செய்ய முயன்றிருக்க முடியாது. அக்டோபர், 17ஆம் நாள் வரையில், ஒவ்வொரு மூன்றல்லது நான்காம்நாள் இரவும் யான் இரண்டுமணி நேரம் வரையில் அறிதுயிலிற் செலுத்தப் பட்டுக் கிடந்தேன்; அதனால் விளைந்த நன்மையை, நேற்றுக் காலையில் யான் நான்கு மைலுக்கு மேலும், இன்றைக் காலையில் ஆறு மைலுக்கு மேலும் நடக்க வல்லனாயிருப்பது கொண்டு தாங்களே தெரிந்து கொள்ளலாம். இதுகாறும் எடுத்துக் காட்டிய உண்மை நிகழ்ச்சிகளைக் கொண்டு ஒருவரைத் தம் வழிப்படுத்தலும், அவர்க்குள்ள நாட்பட்ட கொடிய நோய்களை நீக்குதலும், பிளவைக்கட்டிகள் புண்கள் முதலியவற்றை அவர் அறியாமலே அறுத்துத் தீர்த்தலும் நினைவற்ற ஆழ்ந்த அறிதுயிலின்கண் அவரைச் செலுத்துதலால் எளிதில் முடிக்கப்படும் என்பதை நன்குணர்ந்து கொள்க. 17. தெளிவுக்காட்சி இனி நடைத்துயிலின் பயன்களைப்பற்றிச் சிறிது பேசுவாம். நடைத்துயிலின்கட் செலுத்தப்பட்ட ஒரு தூய உயிர் இறந்தகால நிகழ்கால எதிர்கால நிகழ்ச்சிகளைத் தெரிந்துரைக்க வல்ல தாதலை மேலே விளக்கிப் போந்தாம். இந்நடைத் துயிலானது நினைவற்ற ஆழ்ந்த அறிதுயிலினும் ஆழமாய்ச் சென்றபின் வருவதாகும். இத்துயிலில் இருப்போர் அதிலிருக்கும் வரையில், இயற்கையாக விழித்திருப்போரைப் போற் பேசுதலும் நடத்தலுஞ் செய்வராயினும், அவரது நினைவு அப்போது மிக நுண்ணிய அறிவுடம்பைப் பற்றிக்கொண்டு இயங்குதலால், அவர் இயற்கையாக விழித்திருக்கும் நிலையிற் காணமாட்டாத, மறைந்த அரும்பெருங் காட்சிகளை யெல்லாங் காணமாட்டுவர். இது தவவொழுக்கத்தில் நிற்போர்க்குத் தானாகவே வருவ தொன்றாகையால், தவக்காட்சி யென்றும் வழங்கப்படும். அங்ஙனமாயின் அருந்தவத்தோர்க்கும், இவ்வறிதுயிலில் இருப்போர்க்கும் வேறுபாடென்னை யெனின்; அருந்தவத்தோர் தாமாகவே இடையறாது செய்து போதருந் தவமுயற்சியால், தமதுணர்வினை அறியாமையினின்றும் பிரித்து விளங்கச்செய்து, தாம் வேண்டியபோது இவ்வுணவுடம்பு, உயிர்ப்புடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு, இன்பவுடம்பு (வடநூலார் இவற்றை முறையே அனனமயகோசம், பிராணமயகோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என வழங்குவர்) என்னும் ஐவகை யுடம்புகளினும் நடைபெறச்செய்து ஆண்டாண்டு நிகழும் மறைபொருணிகழ்ச்சிகளை யெல்லாந் தாமாகவே எளிதிலுணரப் பெறுவர்; அவர்கட்கு மறதியும் அறியாமையும் உளவாகா. மற்றுப் பிறர் ஒருவரது உதவியால் நடைத்துயிலின்கட் செலுத்தப்படுவாரோ தாமாகவே அறிவுடம்பிற் செல்லமாட்டாமையோடு, ஆண்டு நிகழ்ச்சி களையுந் தாமாகவே அறிந்துரைக்க மாட்டுவார் அல்லர்; அது வல்லாமலும், தாம் விழித்திருக்கும் நிலையில் உணர்ந்தவற்றை நடைத்துயிலின்கட் சென்றவுடனே மறந்தும், நடைத்துயிலின்கண் உணர்ந்தவற்றை விழிப்பு நிலைக்கு வந்தவுடன் மறந்தும் அறியாமையிற் பற்றப்பட்டவராயிருப்பர்; ஒவ்வோருடம்பிலும் வெவ்வேறு உயிர்போல் நடப்பர்; அருந்தவத்தினரோ அவ்வெல்லா வுடம்புகளிலும் ஓருயிராகவே ஒரு தொடர்புபட்ட வுணர்வுடையராயிருப்பர். இதுவே நடைத்துயிலின்கட் செலுத்தப் படுவோர்க்கும், அருந்தவத் தோர்க்கும் உளதாகிய வேற்றுமையாம். ஆதலால், அருந்தவத்தோர்க்கு நிகழ்வதைத் தவக்காட்சி யெனவும், நடைத்துயிலில் இருப்போர்க்கு நிகழ்வதைத் தெளிவுக் காட்சி யெனவும் அவ்வேற்றுமை தோன்றக் கூறினாம். இனி, இந்நடைத்துயிலில் இருப்போர்க்குக் கண்கள் மூடியிருப்பினுந் திறந்திருப்பினும் அவர் காண்பன நம் ஊன விழிகளுக்கு நேரே புலப்படும் பொருள்கள் அல்ல; மற்று நங் கண்களுக்கு நேரேயில்லாமல் தொலைவிலும் அணிமையிலும் மறைந்திருப்பவைகளேயாம். மனத்தூய்மையும் நுண்ணறிவு முடைய நம் மாணவர் ஒருவரை ஒருகால் நாம் ஆழ்ந்த அறிதுயிலிற் செலுத்த அவருடனே நடைத்துயிலிற் சென்று தெளிவுக்காட்சி யுடையரானார். அப்போதவர் கண்கள் மூடியே இருந்தன. அந்நிலையில் அவர் மறைந்த பொருள்களைக் காண வல்லுநராய் இருப்பரா எனத் தெரிதல் வேண்டி, எமது கைக்கடிகாரத்தை எடுத்து அவரது பின்றலைப்புறத்தே பிடித்து இப்போது நீர் இக்கடிகாரத்தைக் காண்கின்றீர்; இதன் முகத்தட்டின்மேல் மணி முள்ளும் நிமிடமுள்ளும் இயங்குவதையுந் தெளிவாய்க் காண்கின்றீர். ஆம், இவற்றைக் காண்கின்றீரல்லவா? என்று யாம் வினாவ, அவர்தம் கண்கள் நன்றாய் மூடியிருந்தும் ஆம், ஒரு கைக் கடிகாரத்தைக் காண்கின்றேன்; அதன் முகத்தட்டின்மேல் முட்கள் அசைகின்றன. என்று அவர் அந்நடைத்துயிலிருந்தபடியே விடை கூறினார். அதன்பின் அப்படியானால் இப்போது மணி என்? சொல்லும் என்றேம். அதற்கவர் இப்போது ஆறடிக்க ஐந்து நிமிடம் என்று பிசகாமற் கூறினார். அன்று மாலைக்காலம், அவர் சொல்லியபடியே ஒரு நிமிடமும் பிசகவில்லை; ஆறடிக்க ஐந்து நிமிடங்களே இருந்தன. இதுகண்டு வியப்புற்றேம். ஒருகால் யாம் திருநெல்வேலிக்குச் சென்றிருக்கையில், இவ் வறிதுயின்முறைகளில் தேர்ச்சிபெற்ற ஓர் அன்பர் தம்மால் அறிதுயிலிற் பலகாற் செலுத்தப்பட்ட ஒரு பார்ப்பன இளைஞரை எம்மிடம் அழைத்து வந்தார். அது மாலைக் காலம், அப்போதுதான் விளக்கேற்றப்பட்டது. அவர் அவ்விளைஞரை ஒரு சாய்மானக் குறிச்சியில் அமர்த்திச் சிறிது நேரத்தில் ஆழ்ந்த நடைத்துயிலிற் போகச்செய்து, இப்போது இவர் தெளிவுக்காட்சி யுடையவராயிருக்கின்றார். தாங்கள் ஏதேனும் ஒரு பொருளைக் கையில் மறைத்து வைத்துக் கொண்டால், அதனை இவர் உடனே அறிந்து சொல்வர் என்றார். யாம் அச்சமயத்திற் கிடைத்த ஒரு சாவியை அது கோக்கப்பட்ட கயிற்றோடும் எடுத்து அங்கிருந்தார் எவர்க்குந் தெரியாமல் எமது வலது கையினுள் மறைத்து வைத்துக் கொண்டேம். பிறகு அவர் அறிதுயிலிலிருக்கும் அவ்விளைஞரை நோக்கி இப்போது நீர் விளக்குகளைக் காண்கின்றீர், எல்லாம் ஒரே வெளிச்சமாய் இருக்கின்றன. உமக்குப் பக்கத்தே நிற்கும் இவர்களையுங் காண்கின்றீர் என்று கூறினார். அவ்விளைஞரும் அதற்கிணங்கி ஆம், ஒரே ஒளியா யிருக்கின்றது. நீங்கள் குறிப்பிட்டவர்களையும் பார்க்கின்றேன். என்றால். அப்படியானால், இவர்களின் வலது கையினுள்ளே என்ன இருக்கின்றது? என்று அவ் அன்பர் வினவினார். அதற்கவர் முதலில் அவர் கை மூடியிருக்கின்றது, யான் உள்ளே யிருப்பதைப் பார்க்கக்கூடவில்லை. என்று விடைகூறினார். மறுபடியும் அவர், இப்போது நன்றாய் உற்றுப்பாரும், கையினுள்ளே யிருப்பது நன்றாய்த் தெரியும், வெளிச்சம் நன்றாயிருக்கின்றது. என்றார். அவ்விளைஞர் ஆம், அவர் கையினுள்ளே நீளமாய் ஒன்றிருக்கின்றது; ஓ, அஃது ஒரு சிறு கயிறு. என்றார். திரும்பவும் அவர் பின்னும் என்ன இருக்கின்றது? நன்றாய் உற்றுப்பாரும். என்று வற்புறுத்துச் சொன்னார். அதில் ஏதோ ஒன்று சிறிதாயிருக்கின்றது; ஆனால் அஃது இன்னதென்று தெரியவில்லை. என மொழிந்தார். அவர் இல்லை. இப்போது அது நன்றாய்த் தெரியும். வெளிச்சம் இன்னும் நன்றாயிருக்கின்றது; நன்றாய்ப் பாரும் என்றார். ஆம், இப்போது மிகுந்த ஒளி வீசுகின்றது; ஓ, அஃது ஒரு சாவி என்று கடைசியாக உண்மையைச் சொல்லிவிட்டார். அதன்பின்னும் எமது பக்கத்திலிருந்த இரண்டொருவர் வேறு சிலவற்றை மறைத்து வைத்துக்கொள்ள அவைகளையும் அவர் பிசகாமற் சொல்லிவிட்டார். அறிதுயின் முறையில் மிகவுந் தேர்ந்த ஒரு துரைமகன் (Carl Sextus) ஒரு சிறு பெண்ணைக்கொண்டு நெடுந்தொலையில் நிகழ்ந்ததொரு நிகழ்ச்சியைச் சொல்லுவித்தனர். அதனை அவர் சொல்லுகிறபடியே இங்கு மொழிபெயர்த் தெழுகின்றாம்: ஏழு ஆண்டுகளுக்குமுன் சுவீடனில் உள்ள காதன்பர்க்கில் யான் இருந்தபோது, புகழ்பெற்ற செல்வர் ஒருவர் இல்லத்தில் அறிதுயிலுண்மையைப்பற்றி ஒரு விரிவுரை நிகழ்த்தி, அத்துயிலைச் சிலர்க்கு வருவித்துங் காட்டினேன். இங்ஙனஞ் செய்கையில், மந்திரக்கண்ணாடி (Magic mirror)Æš நோக்குதலைக் குறித்து யான் பேச, அச்செல்வர் அதனையுஞ் செய்துகாட்டும்படி என்னைக் கேட்டார். அப்போது அவரது குடும்பத்திற்கு அறிமுகமானவர்களும் நண்பர்களுமாக அங்கே கூடியிருந்த இருபத்தைந்து முப்பது பெயரில், அம்முறையைச் செய்து பார்த்தற்குத் தக்கவர் ஒருவரும் இல்லையென ஒரு நொடிப்பொழுதிற் கண்டு கொண்டேன் அன்றுமாலை பத்துமணி நேரம் இருக்கும். இதற்குத் தக்கவர் இவ்விவ்று இருக்கவேண்டுமென்று யான் குறித்துக் காட்டியபடி, மிகவும் பொருத்தமாகப் பத்துப் பதினோராண்டுள்ள ஒருமகள் தம்மிடம் அலுவல் பார்க்கும் ஒருவருக்கு இருப்பதாக அக்கூட்டத்தில் இருந்த தரகர் ஒருவர் கூறினார். அச்சிறுமியின் பெயரும் இருப்பிடமும் அவர் சொல்லவே, அவள் அருகாமையிலிருந்தமையால் அவளை அழைத்துவரும்படி விரைவாக ஓர் ஆள் அனுப்பப்பட்டனர். அவள் பெற்றோர்கள் அம்முறையைத் தேர்ந்து பார்த்தற்காக ஏதொரு தடையுஞ் சொல்லாமையால், போனவர் அச்சிறுமியை அழைத்து வந்தார். அச்சிறுமியை அறிதுயிலிற் செலுத்தி, அங்கு வைக்கப்பட்ட மந்திரக் கண்ணாடியை உற்றுநோக்கும்படி செய்தோம்; அப்பெண் வியக்கத்தக்க இயற்கை நுண்உணர்வும் சிறந்த தெளிவுக் காட்சியும் உடையளாயிருந்தாள். டோக் கோமில் உள்ள சிற்றரசி ஒருத்தியைக் காணும்படி யான் அவளுக்குச் சொன்னேன். அவளும் சிறிதும் மலைப்படையாமல் `அப்படியே என்று உடம்பட்டுச் சொல்லி, அச்சிற்றரசியின் வடிவத்தையும் அவள் அன்று மாலையில் அமர்ந்திருக்கும் அறையையும் நிரம்ப நன்றாய் விரித்துரைத்தாள். (சுவீடனுக்குத் தலைநகரான டாக்கோம் என்பது இப்போது யாங்களிருக்குங் காதன்பர்க் என்னும் நகருக்கு முந்நூற்றைம்பது மைல் தொலைவில் உள்ளது; இச்சிறுமி அச்சிற்றரசியை ஒரு காலும் பார்த்தவளும் அல்லள்.) அதன் பிறகு, அச்சிறுமி, அவ்வறையில் அவ்வரசியோடு உடனிருக்கும் ஓர் இளைஞனையுங் கண்ட அவன்றன் உருவத்தின் தன்மை களையும் நுட்பமாக விரித்துரைக்கப் புகுந்தாள். அதைக் கேட்டு அக்கூட்டத்தில் இருந்தவர்களெல்லாம் நகையாடினர். சென்ற ஆறு திங்களாக அவ்வரசியின்பால் மிகுந்த காதலன்பு உடையனாய் அவளைப் பாராட்டிக் கொண்டு ஒழுகும் அவ் வரசிளைஞனைப்பற்றி அச்சிறுமி படம் எழுதிக் காட்டினாற்போற் சொல்லிய விளக்கவுரை அவ்வளவும் ஒத்திருந்தன. ஆனாலும் அவளது விளக்கவுரை வரவர அளவுக்கு மிஞ்சிச் சென்றமையாலும், புல்லிய தன்மையுடைய தாயிருந்தமையாலும் யான் அத்தனையோடு அதனை நிறுத்த வேண்டுவதாயிற்று. அச்சிற்றரசியையும் அவள் காதலனையும் பற்றிய ஒரு குறிப்பு அங்கிருந்தவர் கேட்கத் தக்கதாயில்லை; மேலும். அவ்வில்லத்திற்குரிய செல்வர்க்கும் அது துன்பந் தருவதாயிருந்தது. தானும் தன் நடக்கையும் இப்போது பலருங் காணத்தக்க நிலையிலிருப்பதைச் சிறிதும் உணராது, கதவுகள் தாழிட்டுச் சாத்தப்பட்ட அறைக்குள் தான் பத்திரமாயிருப்ப தனால், தான் ஊரார் பழிச்சொல்லுக்குத் தப்பிக் கொண்டதாக அச்சிற்றரசி எண்ணியிருந்தாள். அறிதுயிலைப்பற்றி ஆங்காங்கு விரிவுரை நிகழ்த்தும் பொருட்டு நார்வே முழுதும் நான்கு திங்கள் வரையிற் சுற்றிவருதற்காக அடுத்த இரவிற் கிறித்தியானியா நகரத்திற்குச் சென்றேன். காதன்பர்க் நகரத்திற்கு யான் மறுபடியும் திரும்பிவந்த பொழுது முன்னே எனக்கு விருந்தாற்றிய அச் செல்வரைக் கண்டேன். நடைத்துயிலிற் சென்ற சிறுமி அச் சிற்றரசியைப் பற்றித் தெளிவுக் காட்சியிற் கண்டு கூறியவைகளைக் குறித்துத் தாம் இடையே ஆராய்ந்து பார்க்க அவை யவ்வளவும் உண்மையா யிருக்கத் தெளிந்ததாக எனக்கு எடுத்துரைத்தார். அதனோடு, அன்று மாலையில் அச் சிற்றரசியின் நடக்கையைப் பற்றி எல்லாரும் நடையாடத் தக்கதாக அவள் முன்னறிந்து சொல்லிய நிகழ்ச்சி ஒன்றும் நிரம்ப உண்மையாயிருந்ததென்றும் அவர் எனக்கறிவித்தார். இவ்வாறு அறிதுயிலிற் சென்ற சிற்சிலர் தெளிவுக் காட்சியுடையராய்த் தொலைவில் நிகழும் நிகழ்ச்சி களையும் நேரே காண்பதுபோல் தெள்ளத் தெளியக் கண்டுரைக்கும் வியப்பினை இதிற் சிறிது முயற்சியெடுப்பா ரெவருந் தாமேயும் நேரிலுணர்ந்து வியக்கலாம். இங்ஙனம் நிலப்பரப்பின்மேல் அண்மையிலுஞ் சேய்மையிலும் மறைவிலிருப்பனவற்றையும் நடப்பனவற்றையுந் தெளிவுக் காட்சியுடையார் காணவல்லராதல் போலவே, இந்நிலத்தினுள்ளே மிகவும் ஆழமான இடங்களில் உள்ள பொருள்களையும் அவர்கள் தெளியக் கண்டுரைக்க வல்லவர்களா யிருக்கின்றார்கள். இதனையும் உண்மையா நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியினால் விளக்கிக் காட்டுவாம். இஃது அமெரிக்காவில்மெய்யாக நடந்து, கல்வியிற் பெரும்புகழ் பெற்ற ஈடன் (See the article by Dr. Samuel Eadonï M.A., M.D., LL.D. Ph. D., in “The Phrenological Annual” 1892) என்பவரால் ஓர் இதழில் வரையப்பட்டது. அதனை அங்கிருந்தபடியே யெடுத்து இங்கு மொழிபெயர்த் தெழுதுகின்றாம்: - சிக்காகோ நகரமானது, உலகத்தில் நாடோறும் விரைந்து முன்னேற்றம் அடையும் நகரங்களுள் ஒன்றென்பது யாவரும் நன்கறிந்ததேயாம். யோனா என்பவரின் சுரைக்கொடி ஒரே இரவில் முளைத்துப் படர்ந்தது போல, அதுவும் ஓர் இரவில் வளர்கின்றது. அதன் குடிமக்கள் விரைவிற் பெருகிவிட்டமையால், உயிர்வாழ்க்கைக்குஞ் செல்வவாழ்க்கைக்குந் தண்ணீர் இன்றியமையாது வேண்டப்படுவ தாயிற்று. இயற்கைப் பொருணூல் (Science) பிசகிப் போயிற்று; நிலநூல்வல்லார் (Geologists) அத்தகைய நிலப்படையின் கீழ்த் தண்ணீர் இருத்தல் கூடாதென்று சொல்லிவிட்டார்கள். மேற்பரப்பிலேதான் தண்ணீர்க்காகப் பார்க்கவேண்டு வதாயிற்று; அழுக்கான தண்ணீரையே பயன்படுத்தக் கொடுத்தற்கு ஒரு கூட்டுச் சேர்ந்தது. இந்த நாளில் அச் சிக்காகோ நகரத்தில் ஆபிரகாம் ஜேம் என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான்; அவன் களங்கம் அற்றவன், கிறித்துமதத்திற்குப் புறம்பானவர் குடியிற் பிறந்தவன், கல்வியறிவில்லாதவன், உண்மையில் ஒன்றுமேயறியாத ஓர் ஆள். அந்த ஜேம் என்பவன் இயற்கையாகவே தெளிவுக்காட்சி வாய்ந்த ஓர் உண்மையான கருவியென்றும், அவன் நடைத் துயிலின்கட் செலுத்தப்பட்டபோது அந்நகரத்திற்கு அண்டையிற் கீழே குறிப்பான ஒரு நிலப்பாங்கில் ஏராளமான தண்ணீரும் மண்ணெண்ணெயும் இருக்கின்றனவாக அறிவித்தனனென்றும் காரொலின் ஜார்டன் என்னும் மாதர் ஒருவர் வெளியறி வித்தனர். நீண்டகாலம் வரையில் அவன் கூறியதை எவருமே உன்னித்துப் பார்க்கவில்லை. கடைசியாகச் சிக்காகோ நகரத்திற்கு மெயின் என்னும் ஊரிலிருந்து அலுவல்மேல்வந்த உவைட்ஹெட், காட் என்னும் இருவர், ஆபிரகாம் ஜேம் என்பவன் கூறிய செய்தியைக் கேட்டுத் தோண்டினால் ஏராளமான தண்ணீர் கிடைக்கும் இடமாக அவனாற் சொல்லப்பட்ட நிலத்தண்டை அவனை அழைத்துக் கொண்டு சென்றார்கள். நடைத்துயிலிற் சென்றதும், ஜேம் அவ்விடத்தை உடனே சுட்டிக்காட்டினான். தான் அத்தண்ணீரைப் பார்ப்பதோடு, அஃது, அவர்கள் அப்போது நிற்கும் இடத்திற்கு இரண்டாயிரம் மைல்தொலை வில் உள்ள மலைப்பாறை களிலிருந்து தோன்றிப் பல நில அடுக்குகளினூடும் நிலவறை களினூடும் ஓடிவருவதையுந் தான் ஒருபடத்திலெழுதிக் காட்ட க்கூடுமென்றும் அவர்கட்குச் சொன்னான். உடனே அந்நிலத்தை விலைகொடுத்து வாங்கும் ஏற்பாடுகள் செய்து, அதனைத் தோண்டுதற்குத் துவங்கினர். இங்ஙனந் துவங்கியது கி.பி 1864ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களிலேயாகும்; நவம்பர்த் திங்கள் வரையில் நாடோறும் நிலத்தைத் தோண்டிக்கொண்டே போக, எழுநூற்றுப் பதினோரடி ஆழத்திற் சென்றதுந் தண்ணீர் வந்து தட்டியது; உடனே இருபத்துநான்கு மணி நேரத்திற்கு முந்நூறாயிரம் மரக்கால் தண்ணிர் வெளிக்கிளம்பி ஓடலாயிற்று. தமரூசி துளைத்துச் சென்ற பொத்தலானது கீழுள்ள நிலப்படைகளின் வகைகளைக் காட்டியது; இப்படைகள் அத்தனையும் முன்னமே தெளிவுக்காட்சியுடைய அவன் கண்டு சொன்னமையால், நேரே காணும் மற்றவர் கண்களுக்கு அவை அதன் உண்மையை மெய்பெறக் காட்டின . முதல் நூறு அடிவரையில் தமரூசி துளைத்துச் சென்றது அடைமண் படையாயிருந்தது; அதற்குக் கீழே முப்பத்தைந்து அடிவரையில் எண்ணெயோடு ஊறிய சுக்கான்கற் படையாயிருந்தது, அந்தச் சுக்கான்கல் எவ்வகையான நிலக்கரியையும்போல் நன்றாய் எரியும்; அதற்குங் கீழே நூறு அடிவரையில் சலவைக்கற்படை; அதற்குங்கீழே நூற்றிருபத்தைந்து அடிவரையிற் செம்புப் பொடியும் இரும்புப் பொடியுங் கலந்து சக்கிமுக்கிக் கல்லும் மணலும் ஒருங்கு திரண்ட படை; அதற்குங் கீழே நூற்றைம் பத்தாறு அடிகாறும் மண்ணெண்ணெய் கலந்து கொழுப்புப் போல் தடிப்பாயும் நுண்ணிய சுண்ணாம்பு போல் மெல்லிய தாயுமுள்ள வண்டல் மேலே வரப்பெற்ற கற்பாறைப்படை; அதனையடுத்து ஐந்நூற்று முப்பது அடிகாறும் ஈயங்கலந்த சுக்கான்கற்படை; பிறகு அறுநூற்று முப்பத்தொன்பதடி வரையில் கந்தகத்தோடு கலந்த இரும்பும் சக்கிமுக்கிக் கல்லும் உள்ள சுக்கான்கற்படை மிகவும் அழுத்தமாயிருந்தமையால் அதனைத் துருவிக்கொண்டு செல்லும் வேலை மெதுவாய் நடைபெற்றது. இந்தநேரத்தில் நிலத்தின் அடியிலுள்ள ஆவிகள் மேலெழும்பு தலினால் ஒரு கொந்தளிப்பு அடிக்கடி உண்டாயிற்று; தண்ணீர் சடுதியில் முப்பது அடியிலிருந்து அறுபது அடி கீழேபோய்த் தமரூசியின் சிறுதுண்டுகளையும் பிறவற்றையும் எடுத்துக் கொண்டு மறுபடியுஞ் சடுதியில் மேலேவந்தது. இன்னுந், துளைக்கும் வேலை நடந்து கொண்டே போயிற்று; பின்னர் எழுநூற்றுப் பதினோரடி ஆழமுள்ள ஒரு மலைப்பாறையின் வளைவு முழுதுந் துளைக்கப் பட்டவுடனே, அடியில் நாலரை விரற்கடை அகலமுள்ள ஓர் உருவுதுளையி லிருந்து மிகக் குளிர்ந்த தண்ணீரானது பளிங்குபோற் றெளிவுடையதாய், வைரம்போற் றூயதாய், ஊன்கழிவு புற்பூண்டுகளின் கழிவு எதுவும் ஒருசிறிதுங் கலவாததாய்ப், பருகுதற்கும் உடம்பின் நலம் பேணுதற்கும் இதுவரையிற் கிடைத்த எந்தத் தண்ணீரினும் மிகச் சிறந்ததாய், இனி வருங்காலமெல்லாம் ஏழை மக்களுக்கு உற்றதொரு நட்பெனப் பயன்படுவதாய்ச் சடுதியில் மேற் கிளம்பிற்று. இதோ நம்பிக்கையற்றவர்களுக்குப் பென்னம் பெரிய தோர் உண்மையான செய்தி! கட்புலனாகாத ஒரு வினைமுதலால் வெளிக் கொணரப்பெற்று, எத்தகையோரானும் எதிர்மறுக்கக் கூடாத ஓர் உண்மை நிகழ்ச்சி! இயற்கைப்பொருணூல் Natural Science. தண்ணீர் கண்டெடுக்க முடியாதென்று கூறிற்று; ஆனால் மனநூலோ `நீ மொழிந்தது பொய், ஏனென்றால், இந்த மண்ணுலகமானது சுழன்றுசெல்லுங் காலம்வரையும் சிறந்த வெள்ளமாய்ப் புரண்டோடுஞ் செழும்புனல் உள்ள இடம் இதுவென்று நான் குறித்துக் காட்டுகின்றேன் எனக் கூறிற்று. கி.பி. 1864ஆம் ஆண்டுமுதல்; சிக்காகோ நகரத்தில் எடுக்கப்பட்ட இந்தத் துளைக்கிணற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு ஏழரை இலக்கம் மரக்கால் தண்ணீர் விழுக்காடு மேலோடி வருகின்றது. மேலும், இத்தண்ணீரைக் குளங்களினும் மிகப் பெரிய தொட்டிகளினுங் கொண்டு போய் நிரப்பிக் கட்டிவைத்து, மழை காலத்தில் சிறிதேறக் குறைய நானூற்றெழுபத்தாறு மணங்கு பனிக்கட்டி செய்து விற்றுச் செட்டுப் பிடிக்கின்றார்கள். இன்னும் இப்பனிக்கட்டியை வேண்டும்போது நான்கு மடங்காக்கியும் விற்கலாம். எவரும் மறுத்தற்கு இயலாது, அமெரிக்க மக்களின் கண்ணெதிரே நிகழ்ந்த இவ்வுண்மை நிகழ்ச்சியினால், மக்களின் முகத்தேயுள்ள புறக்கண்களுக்குப் புலனாகாமல் இந் நிலப்பரப்பின் மேலுங் கீழும் நெடுந்தொலைவில் மறைந்து கிடக்கும் எவ்வகைப் பொருள்களும் அவர் தம் அகக்கண்ணின் எதிரே இனிது விளங்கித் தோன்றுதலும், அத் தோற்றத் தினுதவியால் முயன்று அவற்றைப் புறக்கண்களுங் காணும்படி செய்து அக்காட்சியின் உண்மையைத் தெளிந்து பயன் பெறுதலும் உண்டென்பது நன்கு துணியப்படு கின்றதன்றோ? இனி, இத் தெளிவுக்காட்சியின் உதவியாற் காணாமற் போன பண்டங்களையும் கண்டெடுக்கலாம் என்பதற்கு உண்மையாய் நிகழ்ந்த மற்றொரு நிகழ்ச்சியை, இத்துறையில் மிகவல்லரான மற்றோர் ஆசிரியரது நூலிலிருந்து (How to thought - read by Dr. James Coates, Ph.D., F.A.S.) எடுத்து ஈண்டு மொழிபெயர்த்து வரைகின்றாம்: - தியடோர் என்னும் ஒரு நீராவிக் கப்பல் பிளாண்டு என்னும் மற்றொரு கப்பல் இலிவர்பூல் என்னுங் கடற்றுறை பட்டினத்தைச் சேர்ந்த அன்றைக்கே வந்து சேர்ந்தது. அஃது எங்களுடைய கப்பலைப் பார்க்கிலும் பெரியது; என்றாலும் அதன் கண் உள்ள சரக்கும் எங்கள் கப்பலில் உள்ளதைப் போன்றதே. `எல்லாம் செவ்வையாக இருக்கின்றன என்று தெரிவிக்கும் பொருட்டாக நான் உடையவர்களிடம் சென்ற அன்றைக்கு, மீகான் மார்ட்டன் என்பவரை மிகவுங் கலவரமான நிலைமையில் எதிர்ப்பட்டேன்; ஏனென்றால், தமது சம்பளமும் தம்மோடு வேலைபார்ப்பவர் சம்பளமுஞ் சேர்ந்த தொகைக்கு ஈடான விலையுள்ள முப்பது பஞ்சுப் பொதிகளை அவர் இழந்து விட்டார். அவர் அதன்பொருட்டு மிகவுங் கலங்கினமையால், அவர்தம் மனைவியும் ஆற்றாமை மிக்கவளாகித், தெளிவுக்காட்சியில் திறமைவாய்ந்த ஓர் இளம் பெண்ணை யுடையரான ஹட்சன் என்னுங் கப்பற்றலைவனிடஞ் சென்று உசாவும்படி அவரைத் தூண்டினாள். நாங்கள் இருவேமும் தெளிவுக்காட்சியைப் பற்றிய செய்தியில் ஐயுறவு கொண்டவர்களாக இருந்தோம். `இக்காலத்திய மந்திர மூட்டையைப் போன்றவற்றில் தாம் தலையிட்டுக்கொள்ள விருப்பம் இல்லையென்று மார்ட்டன் முதலில் தெரிவித்தார்; ஆனால், முடிவாகத் தம் மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்கிப்போக உடன்பட்டார். முதலில் மாலுமி ஹட்சனுக்கு ஒன்றேகால் ரூபா கட்டணஞ் செலுத்தியபின், தெளிவுக் காட்சியுடைய அவ்விளம் பெண்ணைக் கண்டுபேச இடம்பெற்றோம். தெளிவுக் காட்சியுடைய அறிதுயிலுக்கு அவ் விளம்பெண் செலுத்தப் பட்டபின், மார்ட்டன் அப் பெண்ணின் வலது கையைத் தமது வலக்கையிற் பிடித்துக் கொடு, தாம் கேட்க விரும்பியவைகளைக் கேட்கலாம் என்று கற்பிக்கப்பட்டார். அவள் கூறிய விடைகள் பின்வருமாறு இருந்தன: - தியடோர் என்னுங் கப்பல் முதலிற் புறப்பட்ட துறைமுகத்திற்குத் திரும்ப நினைவினாற் சென்றாள். அக் கப்பலானது இலிவர்ப்பூலை விட்டு அட்லாண்டிக் கடலைக் குறுக்கே கடந்து, மேலிந்திய தீவுகளின் ஊடே மறுபடியும் புது ஆர்லியன் என்னும் பட்டினத்திற்குப் போனவழியைத் திரும்பச் சொல்லிக் காட்டியதோடு, தன்கைகளாலுந் தொடர்ந்து சுட்டிக்கொண்டு வந்தாள். கடைசியாக, `ஆம், பஞ்சுப் பொதி காணாமற்போனது இவ்விடத்திலேதான். சுற்றிலுஞ் சிவப்புக் குறியுள்ள ஒரு பெரிய கறுப்புக் கப்பலின் மேற்றட்டிலே அவைகள் வைக்கப் பட்டிருக்கின்றன. என்று அவள் மொழிந்தாள், அதன் பிறகு, அக் கப்பல் தன் இருப்பிடத்திற்குத் திரும்பி வந்த வழியைத் தன் சொற்களாலேயன்றிக் கையினாலுங் குறிப்பிட்டுக் காட்டுவா ளானாள்; ஆனால், அட்லாண்டிக் கடலைத் திரும்பக் குறுக்கிட்டு வந்தபின், இலிவர்ப்பூலை நோக்கி ஐரிஷ் கால்வாயில் வருவதைவிட்டுப் பிரஞ்சுக் கரையை நோக்கிச் செல்வது போல் இங்கிலிஷ் கால்வாயின் பக்கமாய்த் திரும்பினாள். அதன்பின், தன் கையை நீட்டி `ஓ, இதோ பஞ்சுப் பொதிகள்; அங்குள்ளவர்கள் ஆ, எவ்வளவு பகடியான மக்களாயிருக்கின்றார்கள்; அவர்கள் இங்கிலீஷ் பேசவில்லை. உடனே, மார்ட்டன் மீகாமன் `நல்லது, அதுதான் தாம மீகாமனின் பிரன்விக், என்றார். நியூஆர்லியன் என்னும் பட்டினத்தின் துறைமுகத்தில் தமது கப்பலோடு நின்று கொண்டிருந்த அவ்வமெரிக்கர் கப்பல் தனக்குரிய பஞ்சுச் சரக்கை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது தியடோர் தானுஞ் சரக்கேற்றிக்கொண்டு பிரஞ்சுத் துறைமுகப்பட்டினமாகிய ஹாவருக்குப் போவதாயிருந்தது. இங்ஙனம் அப் பெண்மகள் தனது தெளிவுக் காட்சியால், அறிந்து சொன்னவற்றைக் கேட்டு மன நிறைவு உடையவராய், மார்ட்டன் மீகாமன் தமது இல்லத்திற்குச் சென்று, உடனே தாம மீகாமனுக்கு எழுதிக் காணாமற்போன தமது சரக்கைப் பற்றிக் கேட்டார். சிறிது காலங்கழித்துப், பஞ்சுப்பொதி, உண்மையாகவே அங்கே உளவென்றும், அவை துறைமுகத்தினின்றும் பிசகாக எடுக்கப்பட்டன வென்றும், அவை எவர்க்கு உரியனவாய் இருந்தாலும் விற்பனை செய்தற்கு ஆயத்தமாயிருந்தன வென்றும் அவர்க்கு விடைவந்தது. ஆனால், மார்ட்டன் மீகாமன், அவை திரும்ப அனுப்பப்படுதற்கு ஆம் செலவு தொகை யனுப்பினால், அப்பஞ்சுப்பொதிகள் உடனே அவர்க்கு அனுப்பப்படுமென்பதுந் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்ஙனமே செய்ய பிரஞ்சு நாட்டு ஹாவர் துறைமுகத்திலிருந்து இங்கிலாந்திலிருக்கும் இலிவர்ப்பூல் துறைமுகத்திற்கு வருதற்குரிய செலவு மட்டும் உடையனவாய் அப்பஞ்சுப் பொதிகள் உரிய காலத்தே அவரிடம் வந்து சேர்ந்தன. இவை தாம் உண்மையாக நிகழ்ந்தவை; ஆனால், அந்நிகழ்ச்சி யினியல்பை விளக்குதற்கு யான் புகவில்லை. என்னும் இம்மெய்ச் செய்தியால், பன்னாட்களுக்குமுன் நெடுந்தொலைவிற் றவறிப் போன பொருள்களும் தெளிவுக்காட்சி யுடையாரால் எளிதிற் கண்டறியப்படும் உண்மை நன்கு நிலைபெறுகின்றதன்றோ? இனி, நோயால் வருந்துவோரின் நோயின் இயல்பை அறியமாட்டாமல் தவிக்கும் மருத்துவர் அதனைத் திட்டமாய் அறிந்து கொள்ளுதற்குந் தெளிவுக்காட்சி பெரிதும் உதவி புரிவதாகும். உடம்பின் உள்ளே அமைந்த கருவிகளிற்றோன்றிய நோய்களைப் புறக்கண்கள் மட்டும் உடைய மருத்துவர் யாங்ஙனம் உணரவல்லார்? அகத்துள்ள நோயைத் திட்டமாக அறிய மாட்டாமையால், அந்த நோய்க்குத்தக்க மருந்தைக் கொடுக்க ஏலாமல், தகாத மருந்தைக்கொடுத்துப் பிழைபடுகின்றார்கள். நோயாளிகளும் பொருட்செலவு செய்தும் மருந்துண்டும் பயன் பெறாமல் நெடுகத் துன்புற்று உயிரையுந் துறக்கின்றனர். ஆங்கில மருத்துவரிற் பலர் நோயாளிகளின் அகத்தே நோயிருக்கு மிடந்தெரியாமல் நோயில்லா வேறிடங்களை அறுத்துப் பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர். அவர்தம் அறியாமையால், அந்நோயாளிகளும் ஆற்றுதற்கரிய துன்பமெய்திச் சாகின்றனர். ஆதலால், மருத்துவப் பயிற்சியோடு, தெளிவுக் காட்சியால் நோயின் தன்மையைக் கண்டறியும் முறைகளிலும் பழகித் தேர்வராயின் அத்தகைய மருத்துவரால் உலகிற்கு விளையும் நன்மைகள் அளவிடப்படா. நோயின் இயல்பு தெளியப்படாமையால் ஒரு நோயாளியும் அவருக்கு மருத்துவஞ் செய்த ஆங்கில மருத்துவருந் தெளிவுக் காட்சியின் உதவியால் அத்துன்பங்கள் நீங்கப்பெற்றமைக்கு உண்மையாய் நிகழ்ந்த மற்றொரு வரலாற்றினை மேற்குறிப்பிட்ட அறிதுயிற் புலமை ஆசிரியர் (Dr. James Coates How to thought - Read) நூலிலிருந்தெடுத்து மொழிபெயர்த் தெழுதுகின்றாம்: - `இயற்கையாகவே தெளிவுக்காட்சி என்னும் ஒரு பெரும் பேற்றினை அடைந்து தன் மட்டில் உயிர் வாழும் ஒரு பெருமாட்டிக்கு அறிமுகமாகும் நல்வினையை ஆசிரியர் உவில்ட் என்பவர் பெற்றார். தமக்கு நண்பனாயுள்ளவன் ஒருவன் பல ஆண்டுகளாக ஒவ்வோர் இரவும் பல நாழிகை நேரம் வரையில் முதுகிலும் மார்பிலும் கொடியதொரு நோயுற்று வந்தனனென்றும், நாட்செல்லச் செல்லப் பிறகு அவன் இரவுழுழுதும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்க வேண்டியவன் ஆயினா னென்றும், அதனால் அவன் கால்கள் வீங்கத் துவங்கின வென்றும் அவ்வாசிரியர் அப்பெருமாட்டிக்குச் சொல்லினர். இந்த நோயாளி சென்ற மூன்று ஆண்டுகளாக இலண்டன்மா நகரத்திலுள்ள பலரால் முறையாக மருத்துவஞ் செய்யப்பட்டு வந்தனர். நெஞ்சப்பையில் இன்னதென்று விளங்காத ஏதோ ஒரு பிசகு இருக்கவேண்டுமென்று சிலர் சொன்னார்கள்; வேறுசிலர் அது நரம்புநோய் என்று கூறினர்; ஒருவர் அதனைப் பொருத்துப் பிடிப்பு என்றார்; கடைசியாக ஒருவர் முதுகெலும்பு மிகவும் அழுகிப் போயிற்று என்றார். உவில்ட் என்பவரின் நேயர், முன்னதாகச் செய்து கொண்ட ஏற்பாட்டின்படி அவரை வந்து கண்டு, மேற்சொல்லிய பெருமாட்டியாரையும் பார்த்தார். இந்த அம்மையார் சும்மா அவரை உற்று நோக்கினார். அதன் பின், அவர் அவ்வறையை விட்டுச் சென்றபின், அந்த அம்மையார் அம் மருத்துவரை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: அஃது எத்தகைய நோய் என்பதை யான் கண்டுகொண்டேன். அவருடம்பு பளிங்குபோற் றெளிவாய் இருந்ததென்ன யான் அதனை அவ்வளவு விளக்கமாய்க் கண்டேன். அவரது நெஞ்சப்பைக்குப்பின்னே கடுக்காய் அளவினதாகிய ஒரு கட்டி புறப்பட்டிருக்கின்றது; அஃது அழுக்கு நிறமுடையதா யிருக்கின்றது; அது உடைந்து போகும்போல் ஆடுகின்றது. முற்றிலும் ஓய்வாயிருப்பதைத் தவிர வேறெதுவும் அவர்க்கு நன்மை செய்யாது. அதன்மேல் உவில்ட் என்பவர் கூறியதாவது: `அவ்வம்மையார் கருதிச் சொன்னது இதுவென யான் உடனே கண்டேன். ஆகவே அதனைப் பின்வருமாறு என் நண்பரின் மருத்துவருக்கு எழுத உட்கார்ந்தேன்: என் நண்பருக்குள்ள நோயின் தன்மை இன்னதென்று கண்டு கொண்டேனென நம்புகின்றேன் இறக்கத்தில் உள்ள செந்நீர்ப்பையில் அவர்க்கு ஒரு வீக்கம் ஒரு கடுக்காயளவு இருக்கின்றது. இதுதான் நெஞ்சப்பையிற் காணப்பட்ட சிறிது இடப்பெயர்ச்சியை உண்டாக்கியதாகும்; இக்கட்டியானது விலாவெலும்பு களின் இடையிலுள்ள நரம்புகளை நெருக்குதலால் முதுகிற் பெருநோயும் மார்பின் முன்புறத்துள்ள தோலின்கண் நோயும் உண்டாகின்றன. நாளைக்கு நீங்கள் பார்க்கச்செல்லும் மருத்துவருக்கு, யாமறிந்த இந்நோயின் நிலையைத் தெரிவித்து, அவர் சொல்வது இன்னதென்று எனக்கு அறிவியுங்கள். அங்ஙனமே அந்நோயாளி அந்த மருத்துவரிடந் தெரிவித்ததில் அப்பெருமாட்டி அந்நோயைப்பற்றிக் கூறியது தான் உண்மையென உறுதிப் படுத்தப்பட்டது. அதனோடு அந்நோயை நீக்குதற்குச் செய்ய வேண்டுவதும் முற்றும் ஓய்ந்திருத்தலேயா மென்பதும் மருத்துவர் எல்லாரானும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அவ்வாறே அந்நோயாளி ஓய்ந்திருக்க அஃது அவரைவிட்டு அகன்றது. இவ்வுண்மை வரலாற்றினால், நோயின் இயல்பை உள்ளவாறு உணர்ந்து, அதனை நீக்குதற்குச் செய்யும் முறையுந் திட்டமாகத் தெளிந்து கொள்ளுதற்குத் தெளிவுக்காட்சி எத்துணை யுதவி செய்கின்ற தென்பது நன்கு விளங்குகின்றதன்றோ? 18. சில எச்சரிப்புகள் மேலெடுத்துக் காட்டியவாறு அறிதுயிலைப் பிறர்பால் வருவித்து, அதனுதவியாற் பல உயர்ந்த நன்மைகளை விளைவிக்க வேண்டுபவர்கள், இதனைப் பயிற்சி செய்கின்ற போது கட்டாயமாய்க் கருத்திற்பதித்து நடக்கவேண்டிய குறிப்புகள் சில உள. அவற்றுள், முதலாவது, ஒருவரை அறிதுயிலிற் செலுத்துகின்றபோது துவக்கத்திலேயே பின்வருமாறு சொல்லி அவரைத் தமது கட்டளைக்கு உடன்படுத்திக் கொள்ளக்கடவர்: இப்போது உம்மை அறிதுயிலுக்குச் செலுத்தப் போகின்றேன். உம்மை அறிதுயிலிற் செலுத்துவது உமக்கும் எனக்கும் உலகத்திற்கும் நன்மையை உண்டாக்குதற் பொருட்டேயாம். ஆதலால், என் கட்டளைப்படி நீர் அறிதுயிலிற் சென்று, அத்துயிலில் இருக்கையில், யான் சொல்லுகிறபடியே செய்து, திரும்ப யான் அதனினின்றும் உம்மை விழிக்கச் சொல்லுகையில் என் கட்டளைப்படியே உடனே விழித்து எழக்கடவீர். என் கட்டளைப்படி யெல்லாம் உள்ளடங்கி நடக்கக்கடவீர். என்று வலியுறுத்திச் சொல்லி, அதன்பிறகு அவர் அறிதுயிலிற் செல்கையிலும் இடையிடையே மேற்கூறியவாறு கட்டுறுத்திச் சொல்லுக. இரண்டாவது: அவர் அறிதுயிலில் இருக்கையில், நன்மையான சொற்களையே தெளிவாய் வலியுறுத்திச் சொல்லுக. மறந்துந் தீமையான சொற்களைச் சொல்லற்க. உமது உடம்பு மிகவும் நன்றாய் இருக்கின்றது. உமது அறிவு மிகவும் தெளிவாயிருக்கின்றது. உமது மூளையும் நுரையீரல் நெஞ்சப்பை தீனிப்பை மலக்குடர் முதலான அகக்கருவிகளும் மிகவுஞ் செவ்வையான நிலையில் இருக்கின்றன. நீர் எப்போதும் நல்ல நினைவும் நல்ல எண்ணமும் உடையவராயிருப்பீர். நீர் என்றும் நல்ல செய்கைகளையே செய்வீர் என்று வற்புறுத்திச் சொல்லுக. அவர் அத்தூக்கத்திலிருக்கையில் நோயைப்பற்றிய சொற்கள் ஏதேனுந் தப்பித்தவறிக் கூடவராமல் விழிப்பாய்ப் பேசுக. மூன்றாவது: அறிதுயிலிற் சென்றவர் அதனினின்றும் எழுந்தபின் இன்னின்ன நாளில் இன்னின்ன நேரத்தில் இன்னின்னவற்றைச் செய்தல் வேண்டுமென்று அவர் அத்துயிலில் இருக்கையில் வலியுறுத்திச் சொன்னால், அவர் அங்ஙனமே தாம் விழித்திருந்தாலுங் குறிப்பிட்ட காலத்திற் குறிப்பிட்ட இடத்திற் குறிப்பிட்டபடியேசெய்வர்.ஆகையாற், பின் நடக்க வேண்டியவற்றைச் சொல்லி அவருக்குக் கற்பிக்கும்போது, செவ்வையாய் ஆராய்ந்து சொல்லத் தக்கவற்றைத் திருத்தமாகச் சொல்லல் வேண்டும். ஒருவரைத் துயிற்றுகின்ற மற்றொருவர் தம்மைத்தவிர வேறெவரும் அவரைத் துயிற்றுதல் ஆகாது என்னும் எண்ணம் உடைய வராயிருந்தால், அவ் எண்ணத்தை அறிதுயிலில் இருப்பவர்க்குத் திட்டமாய்க் கூறுக. ஏனென்றாற், சிலமுறை அறிதுயிலிற் செலுத்தப்பட்ட ஒருவர் பிறகு எவரானும் எளிதிலே அறிதுயிலிற் செலுத்தப்படுதற்கு இசைந்தவர் ஆவர். இந்த உளவைத் தெரிந்த தீயோர் எவரேனும் இவ்வறிதுயின் முறையைத் தெரிந்துகொண்டு அவருக்கு எளிதிலே அறிதுயிலை வருவித்து அவரைத் தம் வழிப்படுத்திக்கொண்டு அவரைப் பலவகையிலும் ஏமாற்றவுங்கூடும். ஆதலால், நல்லோரான துயிற்றுவோர் தம்மால் துயிற்றப்படுவோர் பிறர் எவரானும் இங்ஙனந் துயிற்றப்படுதல் ஆகாது என்று கட்டுரைத்துச் சொல்லிவிட்டாற், பின்பு இம்முறையிற் பழகிய மற்றெவரும் அவரைத் துயிலச்செய்தல் இயலாது. இன்னும் அவர் அறிதுயிலில் இருக்கையில் அவருக்குத் தாம் கட்டுறுத்திச் சொல்லியவைகளை அவர் அத்துயிலினின்றும் எழுந்தபின் நினைத்தலாகாது என்று சொல்லவேண்டினால், அங்ஙனமே சொல்லுக; அவர் விழித்தபின் அத்தூக்கத்தில் நிகழ்ந்தவை களை ஒரு சிறிதும் உணரார். நான்காவது: மூவகைப்பட்ட அறிதுயிலிற் செலுத்தப் பட்டவர்களும் அந்நிலையிலிருக்குங்கால், அவர்களுக்குத் தோன்றுமாறு விளைவித்த உருவெளித் தோற்றங்களை மறையுமாறுசெய்து, அவரது உணர்வு எப்போதும்போல ஒழுங்கான நிலையில் இருக்கின்றன தெனவுங் கற்பித்து, அவரை விழிக்கச் செய்வதற்கு மறந்துவிடலாகாது. ஐந்தாவது: துயிற்றப்பட்டவர் அறிதுயிலில் இருக்கும் போது அவரிடம் ஏதேனுங் கேட்கவிரும்பினால் `நீர் இப்போது செவ்வையாக இருக்கின்றீரா? நீர் ஏதாவது இம்முறைக்கு எனக்கு அறிவிக்கக்கூடுமா? என்று கேட்க வேண்டுமே யல்லால் `நீர் செவ்வையா யிருக்கின்றீர் என்று நினைக்கின்றேன், யான் செய்யவேண்டியமுறை இன்னதென்று அறிவியும் என்று கட்டளையிட்டுக் கேட்டலாகாது. ஏனெனில், அறிதுயிலில் இருக்கையில் துயிற்றுவோர் ஏது கட்டளை யிடுகின்றாரோ அக்கட்டளைப்படியே துயில்வோர் செய்வர்; கட்டளை யிடாமற் கேட்டால் அவரது உள்ளத்தில் அப்போது இயற்கையாகத் தோன்றுவனவற்றை உரைப்பர். அவற்றைக் கேட்டு உண்மை யின்ன தென்று உணர்ந்து அதற்கேற்பச் செய்வனவற்றைச் செய்யலாம். ஆறாவது: மூவகையான அறிதுயிலிற் செலுத்தப்பட் டோரையும் அத்துயிலினின்றும் எழுப்ப வேண்டுங் காலத்தில் எழுப்பிவிடுதற்குச் சிறிதும் மறந்து போகலாகாது. ஒருவருக்கு வரும் அறிதுயிலானது இறைவனது திருவருளின்பத்தில் நிகழ்வதாதலால், அவர் அவ்வின்பத் துயிலினின்றுஞ் சடுதியில் விழித்தெழ விருப்பம் இல்லாதவராய் இருப்பர். அதுபற்றி மனந்தடுமாறி உள்ளங் கலங்கல் வேண்டாம். நீவிர் வேண்டும் போது விழித்தெழ அவருக்கு விருப்பம் இல்லையானால் `எவ்வளவு நேரந் துயில விரும்புகின்றீர்? என்று அவரையே வினாவுக. இரண்டுமணி நேரம் மூன்றுமணி நேரந் தூங்கல் வேண்டுமென விரும்புவராயின் அங்ஙனமே அவரைத் தூங்கவிடுக. இன்னும் பல மணிநேரந் தூங்கல் வேண்டும் என்பராயின், அதற்கு இசைய இயலாவிட்டால் `அவ்வளவு நேரங் கூடாது, இன்னுங் குறையச் சொல்லும், இன்னுங் குறையச் சொல்லும் என்று சொல்லி அவரை வரவர இணக்கிக் கொண்டுவந்து அரை, அல்லது ஒன்று, அல்லது ஒன்றரை, அல்லது இரண்டு மணி நேரம் வரையில் ஏற்குமாறு தூங்கவிட்டு, அதன்பின் இரண்டு கைகளையும் நீட்டி, உள்ளங்கைகளையும் விரல்களையும் மேல் நோக்கித் திரும்பிக், கடைச் சிறுவிரல் தவிர, ஏனைவிரல்களைச் சேர்த்தபடியாய் அவரது அடியிலிருந் தாயினும் முழங்காலிலிருந்தாயினும் மேல்நோக்கி முடிவரையில் தொட்டேனுந் தொடாமலேனும் பலகால் தடவி, அவர்தம் நெற்றிமேலுங் கண்ணிறைப்பைகளின் மேலும் வாயினால் மென்காற்றுண்டாக ஊதி `விழித்துக் கொள்க என்றால் விழித்துக்கொள்வர். அங்ஙனம் விழிக்கையிற் கண்ணிறைப்பை களைத் திறக்க மாட்டாமற் சிறிது வருந்து வராயின், அவரை இரண்டொரு நிமிடம் சும்மா இருக்கவிட்டு அதன்பின் `கண்ணைத் திறந்துபாரும் என்று கட்டளையிட்டால் அவர் விழித்துக்கொள்வர். அல்லது, யான் இருபது எண்ணியவுடன் விழித்துக்கொள்வீர் என்று சொல்லிக் கைகளை மேனோக்கித் தடவுகையில் `ஒன்று - இரண்டு - மூன்று என்று ஆழ்ந்த குரலிற் சொற்லிக் கொண்டே சென்று இருபது முடிந்ததும் `இப்போது நீர் விழித்துக்கொள்ளக் கடவீர் என்று கட்டளையிட்டுக் கையைத் தட்டினால் உடனே விழித்துக் கொள்வர்.என்று இதுகாறும் யோகநித்திரை என்னும் அறிதுயிலாகிய அருங்கலைத்திறம் இனிது விளக்கப்பட்டது. இவ்வருமருந்தினும் உயர்ந்த கலையைப் பழகி உலகத்தவர் நலம் பெறுக! யோகநித்திரை என்னும் அறிதுயில் - முற்றும் - வாழ்க்கைக் குறிப்புகள் 15-7-1876 : மறைமலையடிகளார் தோற்றம் தந்தை : சொக்கநாதர் தாய் : சின்னம்மை 1893 : சவுந்தரவல்லியை மணம் முடித்தல். 1895 நவம்பர் : பேரா. சுந்தரம்பிள்ளை அறிமுகம் 1897 : சோமசுந்தர நாயகர் விருப்புக்கிணங்கித் துகளறு போதம் நூற் செய்யுள்கட்கு உரை எழுதுதல். 9-3-1898 : சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் ஆதல். 19-4-1900 : அடிகள் இல்லத்திற்கு ஆறுமுக நாவலர் வருகை. 1903 : அறிவுக்கடல் முதல் மலர் வெளியிடுதல், முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரைஉருவாதல். 18-05-1905 : திருப்பாதிரிப்புலியூரில் ஞானியாரைக் காணல். 29-5-1905 : வ.உ.சி. சந்திப்பு 7-7-1905 : சைவ சித்தாந்த மகா சமாசம் நிறுவுதல் திசம்பர் 1906 : சிதம்பரம் சமாசம் முதலாண்டு விழா. 10-4-1911 : கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியர் வேலையை விடுதல். 1-5-1911 : பல்லாவரம் மாளிகையில் குடியேறல். 27-8-1911 : துறவியாதல் 7-1-1913 : தமிழர் நாகரிகம் உரை நிகழ்த்துதல். 10-1-1914 : கொழும்பு நகரில் முதல் பொழிவு 1916 : தனித்தமிழ் உணர்வு மலர்தல், பல்லாவர மாளிகையில் பதிப்பகம் நிறுவுதல். 23-5-1917 : கொழும்பில் வரவேற்பு 14-1-1922 : யாழ்ப்பாணத்தில் பழந்தமிழர் நாகரிகம் பற்றிய பொழிவு. 31-12-1925 : சைவ சித்தாந்த மகா சமாசத்தின் 20-ஆம் ஆண்டு விழா. 1925 : பலி விலக்கு இயக்கம் சிறு தேவைகட்கு உயிர்ப் பலியிடலாமா? 1930 : மறைமலையடிகள் கல்விக்கழகம் நிறுவியது. ஆலந்தூர் - இளவழகனார். 4-10-1937 : சென்னை கோகலே மண்டபம் இந்தி எதிர்ப்பு மாநாடு - தலைமை. 19-10-1940 : சென்னை பச்சையப்பன் மண்டபம் அனைத்து இந்தியத்தமிழர் மத மாநாடு தமிழர் மதம். 15-9-1950 : வெள்ளி, பிற்பகல் 3.30 அடிகளார் மறைவு. 24-8-1958 : மறைமலையடிகளார் நூலகம் அமைதல். 1976 : அடிகளார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள்.