தமிழ் இலக்கணப் பேரகராதி பொருள் அணி = 2 ஆசிரியர் பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் தமிழ்மண் பதிக்கம் TamilÆ Ilakkan|ap Pe#rakara#ti (A Tamil Grammatical Encyclopaedia) Porul@ - An|i - 2 by T.V. Gopal Iyer Pandit of the Pondicherry Centre of the École Française d’Extrême-Orient (French School of Asian Studies) Published by the TamilÆ Man| Pathippakam, Chennai 2005. Pages: 32+320 = 352 Price: 330/- முன்னுரை 1979ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் தமிழ் இலக்கணப் பேரகராதி ஒன்றனைத் தொகுத்து உருவாக்கும் பணியில் புதுச் சேரியில் உள்ள தொலைக் கீழைப் பிரஞ்சு ஆராய்ச்சிப் பள்ளியில் அமர்த்தப்பட்டேன். இடையிடையே பணிக்கப்பட்ட ஏனைய பணி களுக்கு இடையிலும் அகராதிப் பணியைத் தொடர்ந்து 1995இல் ஓரளவு அதனை நிறைவு செய்தேன். இப் பணியில் எனக்கு உதவி செய்ய அமர்த்தப்பட்ட நாராயணசாமி ஐயர், குமாரசாமிப் பிள்ளை, அப்பாசாமி முதலியோர் பணியிலிருந்து இடையிடையே விடுவிக்கப் பட இப்பணியில் எனக்கு இறுதிவரை என் இளவல் கங்காதரனே உதவும் நிலை ஏற்பட்டது. இப்பணிக்குத் தொல்காப்பியத்தின் பழைய உரைகள் முதல் அண்மையில் வெளிவந்த பாவலரேறு பாலசுந்தரனாரின் தென்மொழி இலக்கணம் முடிய உள்ள பல நூல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டினவாக வேங்கடராசுலு ரெட்டியாரின் எழுத்ததிகார ஆராய்ச்சி, இலக்கணக் கட்டுரைகள், சுப்பிரமணிய சாத்திரியாரின் எழுத்ததிகாரச் சொல் லதிகாரச் குறிப்புக்கள், பாலசுந்தரனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி காண்டிகையுரை போன்ற சில நூல்களே மேற்கோள்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டில் வெளிவந்த இலக்கணம் பற்றிய கட்டுரைகள் பல இருப்பினும் அவையெல்லாம் இவ்வகராதி யில் இடம் பெறவில்லை. இவ்வகராதி பல தொகுதிகளாகப் பல தலைப்புப் பற்றிப் பிரித்துக் கூறப்பட்டிருத்தலின், எல்லா இலக்கண வகைகளுக்கும் பொதுவான சொற்கள் எங்கு இடம் பெற்றுள்ளன என்பதனை அறிதலில் சிறு சிக்கல் ஏற்படும். எடுத்துக்காட்டாக ‘வழக்கு’ என்ற சொல் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் முதற்கண் வருவதால் அச்சொல் பாயிரம் பற்றிய பகுதியில் விளக்கப்பட்டிருக்கும். தலைப்புக் களின் அகராதி அமைக்கப்பட்டபின் அத்தகைய சொற்களின் இருப்பிடம் அறிதல் எளிதாகும். இவ்வகராதிப் பணியில் இறுதி மெய்ப்புத் திருத்துதல் முதலிய வற்றில் என் இளவல் கங்காதரனே முழுமையாக ஈடுபட்ட போதி லும், என் தம்பி திருத்துவதற்கு முன்னரே மெய்ப்புக்கள் திருத்தத்தில் ஈடுபட்டுச் செயற்பட்ட சான்றோர் அனைவரையும் நன்றியொடு நோக்குகின்றேன். 17 தொகுதிகளாக அமையும் இந்த நூலினை அமைப்பதற்கு எனக்கு என் தம்பி வலக்கையாக உதவுவது போலவே, இந்நூலைப் பதிப்பிக்கும் இளவழகனாருக்கு உதவிய பதிப்பக உதவியாளர்கள் செல்வன் செ. சரவணன், செல்வன் இ. இனியன், செல்வன் மு. கலையரசன், அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.நா. இராமசுப்பிரமணிய இராசா, நா. வெங்கடேசன், இல. தர்மராசு ஆகியோர் இந்நூல் செம்மையாக வெளிவரப் பெரிதும் முயன்றுள்ள செயலைப் போற்றுகிறேன். இவர்கள் நோய்நொடி இன்றிப் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இந்நூலை வெளியிட உதவிய எங்கள் தொலைக் கீழைப் பிரஞ்சு ஆராய்ச்சிப்பள்ளி நிறுவனத்தாருக்கு நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறேன். தொகுதிகள் 17 : எழுத்து - 2, சொல் - 4 , பொருள் - 11 (அகம் - 4, புறம் - 1, அணி - 2, யாப்பு - 2, பாட்டியல், பாயிரம், மரபியல் - 1, மெய்ப்பாடு, நாடகம், அளவை, நியாயம் ஏனைய - 1) தி.வே. கோபாலையர் முகவுரை எழுத்ததிகார இலக்கணப் பேரகராதியில், தொல்காப்பியம் முதலாக இன்று நம்மிடையே வாழ்ந்து வரும் இலக்கண இலக்கிய மொழியியல் பேரறிஞராம் ச.பாலசுந்தரனார் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றிய ‘தென்னூல்’ முடிய, இன்று நமக்குக் கிட்டுவனவாக நிலவி வரும் சிறந்த இலக்கண நூல் வரிசையில் இடம்பெறும் நூல்களும் உரைகளும் இடம் பெறுகின்றன. இக்காலத்தில் தொல்காப்பியக் கடல் என்று போற்றப்படும் அந்நூல் இயற்றப்பட்ட காலத்தே அது சிறுநூலாகவே யாக்கப் பெற்றது. அதன் எழுத்துப் படலத்தில் உள்ள 9 இயல்களிலும் விதிக் கப்படுவன எல்லாம் கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவற்றுள் கருவி நூல்மரபு முதலிய நான்கு ஓத்தும், செய்கை தொகைமரபு முதலிய எஞ்சிய ஐந்து ஓத்தும் ஆம். கருவிதானும் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. முதல் மூன்று ஓத்தும் பொதுக்கருவி; செய்கை ஒன்றற்கேயுரிய புணரியல் சிறப்புக் கருவி. நூல்மரபு, நூலினது மரபு பற்றிய பெயர்களாகிய எழுத்து - குறில் - நெடில் - உயிர் - மெய் - மெய்யின் வகைகள் - எழுத்துக்களின் மாத்திரை - இன்ன மெய்க்கு இன்னமெய் நட்பெழுத்து, பகை யெழுத்து என்பதனைக் குறிக்கும் மெய்ம்மயக்கம் - மெய்யெழுத் துக்கள், எகர ஒகர உயிர்கள், குற்றியலிகரம், குற்றியலுகரம் என்னு மிவை புள்ளிபெறுதல் - மகரக் குறுக்கம் உட்பெறு புள்ளியும் கோடல் - சுட்டு - வினா - அளபெடை - என்பன பற்றிக் குறிப்பிடுகிறது. அடுத்து, மொழிமரபு கூறும் விதிகள் நூல்மரபின் ஒழிபாக அமைந்துள்ளன. இதன்கண் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், அளபெடை, மொழியாக்கம், ஈரொற்றுடனிலை, மகரக் குறுக்கம், ஐகாரக் குறுக்கம், போலியெழுத்துக்கள், மொழி முதலில் வரும் எழுத்துக்கள், மொழியீற்றில் வரும் எழுத்துக்கள் - என்பன இடம் பெறுகின்றன. பிறப்பியல், உயிர் - மெய் - சார்பெழுத்துக்கள் என்பவற்றின் பிறப்பிடங்களும் முயற்சியும் பற்றி மொழிகிறது. புணரியலில், எல்லாமொழிகளின் இறுதியும் முதலும் மெய் உயிர் என்ற இரண்டனுள் அடங்கும்; பெயரும் தொழிலும் என்றோ தொழிலும் பெயரும் என்றோ பெரும்பான்மையும் சொற்கள் புணருமிடத்து இயல்பாகவும் திரிந்தும் புணரும்; புணர்வன நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் ஆகிய இரண்டுமே; சொற்கள் வேற்றுமைப்பொருள் பற்றியும் அல் வழிப்பொருள் பற்றியும் புணரும்; இடையே சாரியை வரப்பெறும்; சில சாரியைகள் உருத்திரிந்தும் புணரும்; எழுத்துச்சாரியைகள் இவை, உடம்படுமெய் இவை - என இச்செய்திகளைக் காணலாம். தொகைமரபு என்னும் ஐந்தாம் ஓத்தின்கண், உயிரீறும் புள்ளியீறும் உயிர்மயங்கியலுள்ளும் புள்ளி மயங்கியலுள்ளும் ஈறுகள்தோறும் விரித்து முடிப்பனவற்றை ஒரோவொரு சூத்திரத் தால் தொகுத்து முடிபு கூறப்படுவனவும், உயர்திணைப்பெயர்ப் புணர்ச்சியும் விரவுப்பெயர்ப் புணர்ச்சியும் இரண்டாம் மூன்றாம் வேற்றுமையுருபு ஏற்ற பெயர்ப்புணர்ச்சியும், சில இடைச்சொற் களது முடிபும், எண் நிறை அளவுப் பெயருள் சிலவற்றது புணர்ச்சி யும் கூறப்பட்டுள. உருபியல், உருபேற்ற பெயர் சாரியை பெற்றும் பெறாமலும் ஒரோவழி நெடுமுதல் குறுகியும் வருமொழியொடு புணருமாறு கூறுகிறது. உயிர்மயங்கியலிலும் புள்ளிமயங்கியலிலும் அல்வழிப் புணர்ச்சி பெரும்பாலும் எழுவாய்த்தொடர்க்கே கொள்ளப்படு கிறது. வேற்றுமைப்புணர்ச்சி வேற்றுமையுருபுகள் தொக்க வேற் றுமைப் புணர்ச்சிக்கே கொள்ளப்படுகிறது. இப்புணர்ச்சிகள் பொதுவாகக் கூறப்பட்டாலும், ஆசிரியர் உயர்திணைப்பெயர் - விரவுப்பெயர் - கிளைப்பெயர் - நாட்பெயர் - திங்கட் பெயர் - எண் நிறை அளவுப் பெயர் - என்பனவற்றை விதந்தோதியே முடிக்கும் கருத்தினராதலின், இப்புணர்ச்சிகள் அஃறிணையில், கிளை முதலாகச் சொல்லப்பட்ட அப்பெயர்கள் நீங்கலான ஏனையவற் றிற்கே கோடல் ஆசிரியர் கருத்தாம். ஆசிரியர் ஈரெழுத்தொருமொழி என்று கூறியமை ஈரெழுத்துக் குற்றுகரச் சொல்லைத் தம் மனத்துக் கொண்டமையாலாம். குற்றிய லுகரம் புள்ளியீறு போல உயிரேற இடங்கொடுக்கும். உயிரள பெடை என்பது நெடிலை அடுத்து வரும் ஒத்த இனக்குற்றெழுத்தே. புணர்ச்சியில் தொல்காப்பியனார் குறிப்பிடும் எழுத்துப்பேறள பெடை பிற்காலத்தே வழக்கு இறந்தது என்று கோடல் தகும். தொல்காப்பியத்தை அடுத்து நாட்டில் சிறப்பாக வழங்கி வந்ததாகக் கருதப்படும் அவிநயம் இராசபவித்திரப் பல்லவதரையன் உரையொடு 13ஆம் நூற்றாண்டுவரை வழக்கிலிருந்து வந்த செய்தி நன்னூல் மயிலைநாதர் உரையாலேயே பெறப்படுகிறது. அந்நூலும் அதனுரையும் வழக்கிறந்து விட்டன. தொல்காப்பியத்தை அடுத்து இன்று வழக்கில் இருக்கும் ஐந்திலக்கண நூல் பெருந்தேவனார் உரையொடு கூடிய வீர சோழியமே. பல்லவர் காலத்திலே “பாரததேயத்து வழக்கிலிருக்கும் எல்லா மொழிகளுக்கும் தாய் சமற்கிருதமே” என்ற கருத்து மக்க ளிடையே உருவாக, அது 18ஆம் நூற்றாண்டு முடிய உறுதியாகக் கொள்ளப்பட்டு வந்தது. 11 ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய வீர சோழியம் இக்கருத்தையுட்கொண்டு இயற்றப்பட்ட இலக்கணமே. வீரசோழியத்தின்கண், உயிரெழுத்துக்களை அடுத்து மெய் யெழுத்துக்களின் முன்னர் நெடுங்கணக்கில் ஆய்தம் இடம் பெற்ற செய்தி கூறப்படுகிறது. மகரக் குறுக்கம் மேலே பெறும் புள்ளியோடு உள்ளேயும் ஒரு புள்ளி பெறும் என்ற நுட்பமான செய்தி இந்நூலின் உரையின்கண்ணேயே காணப்படுகிறது. வடமொழிப் புணர்ச்சியில் அல்வழி, வேற்றுமை என்ற பொருள் பற்றிய பாகுபாடு இல்லை. ஆகவே, வீரசோழியச் சந்திப் படலத்திலும் அல்வழி வேற்றுமைப் பாகுபாடு குறிப்பிடப்பட்டிலது. வருமொழி முதலில் உயிர்வரின் குற்றியலுகரம் கெடும் என்னும் செய்தி இந்நூலிலேயே முதற்கண் குறிப்பிடப்பட, அச்செய்தி நேமிநாதம் நன்னூல் முதலிய பின் னூல்கள் பலவற்றிலும் இடம்பெறலாயிற்று. வடமொழிச்சொற்கள் தமிழொலிக்கேற்பத் திரித்து வழங்கப்படுமாற்றிற்கு இந்நூல் கூறும் விதிகளே நன்னூல் முதலிய பின்னூல்களிலும் கொள்ளப்படலாயின. வடமொழியிலுள்ள ‘ந’ என்ற எதிர்மறை முன்ஒட்டு வருமொழி யோடு இணையுமிடத்து ஏற்படும் திரிபுகளை இந்நூல் இயம்பிட, அதனை நேமிநாதமும் ஏற்றுக்கொள்ள, நன்னூல் அதனை நெகிழ்த்து விட்டது, ளகரத்திற்குக் கூறும் புணர்ச்சிவிதி ழகரத்திற்கும், இந் நூலாசிரியர்க்கு முற்பட்ட இலக்கியங்களில் பின்பற்றப்படவே, இந் நூலாசிரியர் இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் வரைந்துள்ள செய்தி இந்நூலில் புதிதாக இடம் பெறுகிறது. இச்செய்தியை நேமிநாதம் நன்னூல் போன்ற பின்னூல்கள் குறிப்பிடவில்லை. உடம்படுமெய்யை இந்நூலாசிரியர் ‘இ ஈ ஐ வழி யவ்வும், ஏனை உயிர்வழி வவ்வும், ஏ முன் இவ்விருமையும், என்று முதன்முறையாக வரையறுத்துக் கூறியவராவர். “அளபெடை மூன்று மாத்திரை பெறும்; அது நெடிலும் குறிலும் இணைந் தொலிக்கும் ஓரொலியே” என்ற இவரது கொள்கையே, பெரும்பாலும் பின்னூலார் பலராலும் மேற்கொள்ளப்பட்டது. ஏ யா எ - என்பன சொல் முதலில் வினாவாகும் என்ற இவர் கருத்தைப் பிற்காலத்து நூலார் பலரும் ஏற்றுக்கொண்டவராவர். அடுத்து வந்த நேமிநாதமும், நெடுங்கணக்கு வரிசையை , உயிர் - அடுத்து ஆய்தம் - அடுத்து மெய் - என்றே குறிப்பிடுகிறது. இந் நூலுள் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம் என்னும் இவற்றோடு ஒளகாரக் குறுக்கமும் குறிக்கப்பட்டுள்ளது. “உயிரள பெடை நெடிலொடு கூடிய ஓரொலியாம் இனக் குற்றெழுத்து; அது மூன்று மாத்திரை பெறும்” என்று வீரசோழியத்தை ஒட்டி நேமிநாதம் நுவல்கிறது. வடமொழித் தத்திதாந்த நாமங்களும் எதிர் மறை யுணர்த்தும் நகர முன்னொட்டுப் புணர்ச்சியும் வீரசோழி யத்தைப் பின்பற்றியே கூறப்படுகின்றன. வீரசோழியம் விதிக்கும் வடமொழியாக்கம் நேமிநாதத்தில் இல்லை. தொல்காப்பியத்தை அடுத்து மக்கள் உள்ளத்தே சிறப்பாக இடம்பெறுவது பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலே. முத லெழுத்தும் சார்பெழுத்தும் என்ற பாகுபாடு - சார்பெழுத்துப் பத்து என்பது - அவை ஒவ்வொன்றும் பற்றிய செய்திகள் - மொழிக்கு முதலில், இடையில், ஈற்றில் வரும் எழுத்துக்கள் - போலியெழுத் துக்கள் - என்பன எழுத்தியலில் இடம்பெற்றுள. உயிரளபெடை நெட்டெழுத்தின் நீட்டமாகிய மூன்று மாத்திரை, குறில் அறிகுறி யாக வருவதே என்ற செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது. பதவியலில், பகுபதம் பகுதி - விகுதி முதலிய உறுப்புக் களாகப் பிரித்துக் காட்டப் பட்டுள்ளது. பகுபத உறுப்புக்கள் விளக்கப்பட்டுள்ளன. பதவியல் நன்னூல் குறிப்பிடும் ஒருமொழிப் புணர்ச்சியாகிய புதுச் செய்தியே. இதன் இறுதியில் வடமொழி ஆக்கம் வீரசோழியத்தைப் பின்பற்றி வரையப்பட்டுள்ளது. ‘ந’ என்ற எதிர்மறை முன்னொட்டுப் பற்றிய செய்தி பேசப்பட்டிலது. தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் வரைந்த உரையையும் உட்கொண்டு இயற்றப்பெற்ற நன்னூலில் தொல்காப்பியச் செய்திகள் பலவற்றொடும் அவ்வுரையாசிரியர் குறிப்பிட்ட செய்திகளும் இடம்பெறுகின்றன. தொல்காப்பியம் குறிக்கும் புணரியல் - தொகை மரபு - உயிர்மயங்கியல் - குற்றியலுகரப் புணரியல் - பற்றிய செய்திகள் பலவும் உயிரீற்றுப் புணரியலுள் அடக்கப்பட்டுள்ளன. அல்வழி யாவன இவையென விளக்கப்படுகிறது. உடம்படுமெய், குற்றுகரம் உயிர்வரக் கெடுதல் - போன்றவை வீரசோழியத்தைப் பின்பற்றியனவாம். நன்னூலில் காணப்படும் மாற்றங்கள் ‘மரபு நிலை திரியாது’ அமைந்தன என்ப. தொல்காப்பியத்தினின்று நன்னூல் சற்றே வேறுபட்டுக் கூறுமிடங்கள் பொருள்நிலை திரியாமையால் ‘மரபு நிலை திரியா மாட்சிமை’ யுடையவாய் முதல்நூற்கு மலைவுபடாமல் செல்லும் இயற்கைய ஆதலைச் சிவஞானமுனிவர் தமது பாயிரவிருத்தியுள் விளங்கக் கூறுமாறு ஈண்டுக் கருதல் தகும். இலக்கணவிளக்கம், நன்னூல் தொல்காப்பியத்தொடு மாறு பட்டுக் கூறும் ஒரு சில இடங்களைச் சுட்டி விளக்குகிறது. தனக்கு முற்பட்ட நூல்களில் விளக்கப்படும் வடமொழியாக்கத்தை இவ் விலக்கணநூல் நெகிழ்த்துவிட்டது. இலக்கணக்கொத்து, பிரயோக விவேகம் என்பனவற்றில் சில அரிய புணர்ச்சிவிதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அ - அந் - ந - நி - கு - வி - புணரப் புணர்ப்பது வடமொழியில் எதிர்மறையாகும் என்ற செய்தி இலக்கணக்கொத்தில் விளக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சிறப் பெழுத்து ஐந்தானும் திரிந்து ஆரியச்சொல் வடசொல்லாகித் தமிழில் வழங்கும் செய்தி இவ்விரண்டு நூல்களிலும் விளக்கப்படு கிறது. இச்செய்தி நன்னூலில் இடம் பெற்றிலது. தொன்னூல் விளக்கம் நன்னூலைப் பெரிதும் பின்பற்றியது; வடமொழியாக்கத்திலும் நன்னூலைப் பின்பற்றியுள்ளது. முத்து வீரியத்தில் தீர்க்கசந்தி முதலியவற்றிற்கு விதிகள் தனித்தனியே கூறப் பட்டுள. கோ + இல் = கோயில், மா + இரு = மாயிரு - முதலிய வற்றிற்குத் தனியே விதிகள் வகுக்கப்பட்டுள. சுவாமிநாதத்தில் குறிப்பிடத்தகும் விசேடமாக ஏதும் இன்று. அதன் ஆசிரிய விருத்த யாப்பு நயனுறுமாறு இல்லை. தொல்காப்பிய எழுத்ததிகாரத்து இளம்பூரணர் உரை - நச்சினார்க்கினியர் உரை - சென்ற நூற்றாண்டு மொழியியல் வித்தகராம் வேங்கடராசுலு ரெட்டியார், பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் இவர்கள்தம் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் - சென்ற நூற்றாண்டிறுதியில் வெளிவந்த பாலசுந்தரனார்தம் தொல்காப்பியக் காண்டிகையுரை - சிவஞான முனிவர் அரசஞ்சண்முகனார் வரைந் துள்ள விருத்தியுரைக் குறிப்புக்கள் என்னுமிவையும், வீரசோழியம் பெருந்தேவனார் உரை - நேமிநாதம் வயிரமேகவிருத்தியுரை - நன்னூல் மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர், இராமாநுசக் கவிராயர், சடகோபராமாநுசாச்சாரியார் ஆறுமுகநாவலர் என்றின்னோர்தம் உரைகள் - என்னும் இவையும் ஏனைய மூல நூல்களின் செய்தி களொடு தொகுக்கப்பட்டு இவ்வெழுத்ததிகார இலக்கணப் பேரகராதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்கண் காணப்படும் குற்றம் குறைகளை நல்லறிஞர் பெருமக்கள் உரிய காரணம் சுட்டிக் காட்டுவாராயின், அப்பிழை பாடுகள் அடுத்த பதிப்பில் களையப்படும். அன்ன திருத்தங்கள் நன்றி யறிதலோடு ஏற்கப்படும். தி.வே. கோபாலையர் Eva Wilden École Française d’Extrême-Orient 16&19 Dumas Street, Pondicherry centre Pondicherry. Aug. 2005 Introduction Tamil grammar and poetics are old and venerable disciplines interwoven into a complex system the beginnings of which are lost in legend. What is fact, however, is that we are looking back on a textual tradition representing the thought of almost two millennia: a continuous discourse on Tamil language and literature, but also a dispute with other systems of knowledge, most notably the Sanskrit grammatical and poetological traditions. To give a rough chronology, for the first millennium, we have one great treatise encompassing the whole field and developing the basic structure that is taken up, with some modifications and extensions, by the whole later tradition. This is the famous Tolka#ppiyam, consisting of three parts, two of them devoted to two different aspects of grammar, which has been ever since split into two sections, namely ElÈuttu (phonology) and Col (morphology and syntax), while the third part treats of Porul@ (poetics). It is followed by a small work specialising in a particular field of poetics, namely that of Akam (love poetry), called the IrÈaiyan_a#r Akapporul@. The second millennium, probably a time of socio-cultural upheaval, sets in with a voluminous commentary tradition not only for the treatises that had been written so far, but also for wide parts of the older literature. In fact our understanding of the meaning of the older texts is basically indebted to these commentaries. Nevertheless, there is a parallel development of new treatises in all sub-disciplines, mirroring the confrontation with the change of language, the arising of new literary forms and the massive impact of North-Indian, i.e. Sanskritic modes of thinking and writing in the Tamilian South. To mention just a few of the most important titles, among the inclusive texts – comprising, just as the Tolka#ppiyam, the whole range of the field – there are the heavily Sanskritised Vi#raco#lÈiyam of the 11th century, and the Tamil-conservative Ilakkan|a Vil@akkam of the 17th century. Both of them extend the original structure of three sections, dealing with ElÈuttu (phonology), Col (morphology and syntax), and Porul@ (poetics), by another two subsumed under Porul@, namely Ya#ppu (metrics) and An|i (figures of speech). Among the influential treatises devoted exclusively to grammar we may list the Nan_n_u#l (12th century), the standard book on Tamil grammar after the Tolka#ppiyam, and the Pirayo#ka Vive#kam (17th century), again very Sanskritic. Poetics, for its part, seems to have been an even more fruitful domain, creating a number of branches with various specia-lisations. The first independent text on metrics is the Ya#pparun)-kalakka#rikai (10th century); the most notable exponent of systematic Akam poetics is the Nampi Akapporul@ (12th century), while the Pur_am genre (heroic poetry) is represented by the Pur_apporul@ven|pa#-ma#lai (9th century). The encyclopaedia presented here is an attempt to render accessible this wealth of materials to specialists and also to non-specialists. The vast topology and terminology of Tamil grammar and poetics are represented by key terms which are explained with reference to the corresponding su#tras in the treatises and additional explication from the various commentaries. The whole work comprises 17 volumes, structured in the traditional way into the three sections ElÈuttu (phonology), Col (morphology and syntax) and Porul@ (poetics), where 2 volumes fall on ElÈuttu, 4 on Col, and 11 on the various sub-disciplines subsumed under poetics: 2 for Ya#ppu (metrics), 2 for An|i (figures of speech), 4 for Akam (love topics), 1 for Pur_am (heroic topics), 1 for Pa#t@t@iyal (literary genres), Pa#yiram (prefaces) and Marapiyal (word usage), and finally 1 for Meyppa#t@u (physical manifestation), Na#t@akam (drama), Al@avai (valid means of knowledge), A#nantakkur|r|am (collocations to be avoided), Niya#yam (logic) and ValÈuvamaiti (poetic licence). The last of these volumes contains a bibliography. This sort of work of synthesis has long been a desideratum of research: it gives erudite references to a vast range of technical Tamil texts which are, for the most part, not well understood today. Some of the texts are hard to come by – unless in the editions of the author of this encyclopaedia (on whom more below) – most of them are not translated into any other language, general introductions into the field are few, and even fewer are written in languages more easily accessible to the general reader (like English or French). There has been more than one project comparable in range in recent years, most prominently the Encyclopaedia of Tamil literature of the Institute of Asian Studies, Chennai (in English language), but sadly this opus has not yet seen more than 3 volumes, the last one already nine years old and reaching only the letter “ai”. All the more reason for scholars interested in Tamil language and literature to be grateful to the author of the present work, the venerable T.V. Gopal Iyer, with his 80 years one of the last living exponents of a great tradition of exegesis. Space permits here no more than a brief account of the highlights of a long and in many respects exemplary career of a Tamil savant in the 20th century. As well as following a traditional path of education, the worldly marks of which are his two titles Vidvan and Panditam conferred by the University of Madras and the Maturai Tamil Cankam respectively (in 1945 and 1953), Gopal Iyer also acquired the “modern” university degrees of Bachelor of Oriental Language and Bachelor of Oriental Language with Honours at the University of Madras (1951 and 1958). From 1965-1978 he taught in Rajah’s College, Thiruvaiyaru, in which period he already took up his activity of editing works of Classical Tamil, especially theoretical texts. The most important publications from that phase are the Ilakkan|a Vil@akkam in 8 volumes (published in Thanjavur by the Sarasvati Mahal from 1971-1974), the Ilakkan|ak Kottu (Sarasvati Mahal 1973) and the Pirayoka Vivekam (Sarasvati Mahal 1973). Ever since 1978, Mr. Gopal Iyer’s sphere of activity has shifted to Pondicherry, where he has been (and still is) employed as a research scholar by the École Française d’Extrême-Orient (EFEO) – i.e., the French School of Asian Studies –, a research institution financed by the French government which has 17 research centres spread across Asia, the westernmost of which is that in Pondicherry, and which has the mission of studying Asian (and notably Indian) languages, cultures and religions. In this environment, designed as a meeting place for international research, the enormous preparatory work for this encyclopedia has been accomplished. Part of the voluminous editorial output of Mr. Gopal Iyer during the last 27 years has appeared in a series co-published by the EFEO and the IFP (the French Institute of Pondicherry, another research Institution of the French government in whose premises T.V. Gopal Iyer worked for several years), such as a 3-volume edition of the Te#va#ram, his major contribution to devotional Tamil literature (1984f., 1991), and the Ma#ran_ Akapporul@ (2005). A number of further publications deserve mention, since they concern fundamental texts of the Tamil grammatical and poetological tradition upon which the encyclopaedia is based. Last year he published a 14-volume edition of the complete Tolka#ppiyam with all the commentaries (through Thiru. G. Ela-vazhagan of TamizhMann Pathippagam, Chennai - 17) and this year editions of the Vi#raco#l@iyam and the Ma#r_an_ Alan)ka#ram. The EFEO is extremely happy that it has been able to contribute its share to this publication of vital importance for the exploration of Tamil literary history, which will be a monument to a most extraordinary man, who has been teacher and adviser, nay, a living encyclopaedia, to so many students of Tamil language, Indian and Western. A final brief note of thanks to three individuals who were important in bringing this large work to the light of day. The first is Mr. T.V. Gopal Iyer’s younger brother, Mr. T.S. Gangadharan, then of the French Institute of Pondicherry and now of the Pondi-cherry Centre of the EFEO, who wrote the work out in a fair hand. The second is Dr. Jean-Luc Chevillard, who, years later, had the encyclopeadia digitally photographed when in its yet more voluminous hand-written state and so by his timely intervention prevented the loss of some of its parts. The third is the publisher, Mr. Ela-vazhagan, of the Thamizh Mann Pathippagam, who had the vision to see the value of this work and took on the task of setting it in type, a labour which took a year and a half and involved five sets of proofs. ஈவா வில்டன் பிரஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளி 16&19 டுமாஸ் தெரு புதுச்சேரி மையம் பாண்டிச்சேரி, ஆகஸ்டு 2005. அறிமுகவுரை தமிழ் இலக்கணம் மிகு தொன்மை வாய்ந்தது; பெரு மதிப்பிற் குரியது; தன் கூறுபாடுகள் பிணைந்து நுட்பமான பேரமைப்பாக உருவாகியுள்ள இவற்றின் தொடக்கக் காலம் எளிதில் வரையறுக்க முடியாத பழங்காலமாகும். தமிழ் மொழி பற்றியும் இலக்கியம் பற்றியும் 2000 ஆண்டுகளாக இடையறாது தொடர்ந்து வந்துள்ள சிந்தனைகளை நாம் இன்று நமக்குக் கிட்டியுள்ள நூல்களிலிருந்து காண்கிறோம். அச்சிந்தனைகள் பிறமொழிகளின் (குறிப்பாக வட மொழியின்) இலக்கண இலக்கியங்களோடு உறழ்ந்து வந்துள்ளதை யும் காண்கிறோம். தோராயமாகச் சொன்னால் முதல் ஆயிரம் ஆண்டுகளில் தமிழிலக்கியத்திற்கு முழுமையான அடிப்படையாக அமைந்துள்ள ஒரே பெரும் பேரிலக்கணம் தொல்காப்பியம் ஆகும். (அஃது அவ்வப்பொழுது சிற்சில மாற்றங்களுடனும் விரிவாக்கங் களுடனும் அவ்வாயிரம் ஆண்டுக்கால இலக்கியத்துக்குமே அடிப் படையாக அமைந்தது.) அந்த ஒரே இலக்கணம்தான் புகழ்மிகு தொல்காப்பியம். அஃது மூன்று அதிகாரங்கள் கொண்டது: எழுத்து (ஞாடிnடிடடிபல) சொல் (ஆடிசயீhடிடடிபல யனே ளுலவேயஒ) பொருள் (ஞடிநவiஉள). சில காலம் கழித்துப் பொருள்இலக்கணத்தின் ஒரு பகுதியான அகம் பற்றி இறையனார் அகப்பொருள் என்னும் சிறுநூல் ஒன்று தோன்றியது. கி.பி. 1000-க்குப் பின்னர் தமிழகத்தில் சமுதாய - கலாசார மாற்றங்கள் விரைவுபெற்றன. அக்காலகட்டத்தில் தோன்றியதே விரிவாக உரையெழுதும் முறையாகும். இலக்கண நூல்களுக்கு மட்டு மன்றி, பழைய தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலனவற்றுக்கும் இவ்வாறு உரைகள் தோன்றின. அப்பழநூல்களின் பொருளைத் தெரிந்துகொள்ளப் பெருமளவுக்கு அவ்வுரைகளையே நாம் சார்ந் துள்ளோம். எனினும் அக்காலகட்டத்தில் தமிழ் இலக்கணத்தின் உட்பிரிவுகள் பற்றிப் புது நூல்களும் தோன்றலாயின. மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிய செய்யுள் வடிவங்களின் தோற்றம், தமிழின்மீது வடநாட்டு அஃதாவது சமற்கிருதம் சார்ந்த சிந்தனை எழுத்து ஆகியவற்றின் தாக்கம் இவற்றைக் காட்டுவனவாக அப்புது நூல்கள் தோன்றின. முதன்மையான சிலவற்றைக் காண்போம். தொல் காப்பியம் போல் எழுத்து, சொல், பொருள் மூன்றையும் பற்றி எழுதப்பட்டவை வீரசோழியமும் (மிகுந்த சமற்கிருதச் சார்புடையது; 11ஆம் நூற்றாண்டு) இலக்கண விளக்கமும் (தமிழ் இலக்கணத் தொல் மரபுகளைக் கடைப்பிடித்தது; 17ஆம் நூற்றாண்டு) ஆகும். இந்நூல்கள் பொருளை யாப்பு (ஆநவசiஉள) அணி (குபைரசநள டிக ளுயீநநஉh) என்று மேலும் இரு பிரிவுகளாக ஆக்கியுள்ளன. எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் வகுத்தனவற்றுள் மிகுதியும் பயிலப்பட்டவை 12ஆம் நூற்றாண்டு நன்னூலும் (தொல்காப்பியத்துக்குப் பின் தமிழுக்கு இலக்கணம் என்றாலே நன்னூல் தான் என்பதே நிலைமை) 17 ஆம் நூற்றாண்டுப் பிரயோக விவேகமும் (மிகுதியும் சமற்கிருதச் சார்புடையது) ஆகும். பொருளின் பிரிவுகள் பற்றியும் உட் பிரிவுகள் பற்றியும் எழுந்த புது இலக்கணங்கள் மிகப்பல. யாப்பு பற்றித் தனியாக எழுந்த முதல் இலக்கணம் யாப்பருங்கலக் காரிகை (10ஆம் நூற்றாண்டு); அகம் பற்றி விரிவாக எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க நூல் நம்பி அகப்பொருள் (12ஆம் நூற்றாண்டு); புறம் பற்றியது புறப்பொருள் வெண்பாமாலை (9ஆம் நூற்றாண்டு). இந்த தமிழ் இலக்கணப் பேரகராதி மேற்சொன்ன இலக்கணச் செல்வங்களைத் தமிழ் வல்லுநர்களுக்கும் பிறருக்கும் - ஒரு சேரத் தொகுத்துத் தரும் சிறந்த நூல். தமிழ் இலக் கணத்தின் (பொருளியல் உட்பட) மிக விரிந்த பரப்பில் கண்ட அனைத்து முக்கியமான தலைப்பு ஒவ்வொன்றும் அகர வரிசைப்படி, உரிய நூற்பாக்களும், பல்வேறு உரைகாரர்கள் கூற்றுக்களும் தரப்பட்டுத் தெளிவாக விளக்கப்படுகின்றது. எழுத்துக்கு 2, சொல்லுக்கு 4, பொருளுக்கு 11 ஆக 17 தொகுதிகள் கொண்டது இவ் வகராதி. (பொருள் பற்றிய 11 தொகுதிகளின் வகைப்பாடு: அகம் - 4, புறம் - 1, யாப்பு - 2; அணி - 2; பாட்டியல், பாயிரம், மரபியல் - 1; மெய்ப்பாடு, நாடகம், அளவை, ஆனந்தக் குற்றம், நியாயம், வழுவமைதி ஆகியவை - 1, என்பனவாகும்) இறுதித் தொகுதில் கருவி நூற்பட்டியலும் உள்ளது. பொருள்களைத் தெள்ளிதின் உணர்ந்து முறைப்படி விளக்கும் இத்தகைய பேரகராதியின் இன்றியமையாத் தேவை நெடுநாளாக ஆய்வுலகத்தால் உணரப்பட்டுவந்ததாகும். மிக விரிந்த இவ் விலக் கணநூல்களும் உரைகளும் திட்ப நுட்பமான நடையிலமைந்தவை யாகையால் இன்று எளிதில் படித்துணரத்தக்கவை அல்ல. அவற்றில் காணத்தகும் இலக்கணச் செல்வங்களுக் கெல்லாம் புலமை சான்ற விளக்கங்களை இங்குக் காணலாம். இவ்விலக்கண நூல்கள், உரைகளிற் சிலவற்றின் அச்சுப்படிகள் கூட எளிதில் கிட்டுவதில்லை (கிட்டினும் அவையும் இவ்வகராதி யாசிரியர் அச்சிட்டவையாகவே இருக்கும்; அவரைப் பற்றி மேலும் சில பின்னர்). அவ்வரிய இலக்கண நூல்கள் பிறமொழிகளில் பெயர்க்கப்படாதவை; இவற்றைப் பற்றிய பொதுவான விளக்க நூல்களும் சிலவே - அதுவும் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழி களில் வந்துள்ளவை ஒன்றிரண்டேயாகும். அண்மைக் காலங்களில் இவை போன்ற விரிவான நூல்கள் வெளியிடும் திட்டங்கள் சில வற்றுள் சென்னை ஆசியவியல் நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிடத் தொடங்கிய “தமிழ் இலக்கியக் களஞ்சியமும்” ஒன்று. அக்களஞ்சி யத்தில் மூன்று மடலங்களே (ஐ முடிய) வெளிவந்த நிலையில், கடந்த ஒன்பதாண்டுகளாகப் பணி முட்டுப்பட்டு நிற்கிறது என்பது நினைக்கத்தக்கது. இந்நிலையில் தமிழ் இலக்கண நூல்களிலும் உரைகளிலும் ஊறிய பேரறிஞர்களில் இன்று நம்மோடு உள்ள மிகச் சிலரில் ஒருவரான, 80 வயது நிறைந்த வணக்கத்துக்குரிய தி.வே. கோபாலையரின் படைப்பான இப் பேரகராதி தமிழ் இலக்கண, இலக்கிய அறிஞர்கள் அவர்பால் நன்றி பாராட்டுதற்குரிய ஒன்றாகும். இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களில் பல்வகையிலும் போற்றத்தக்கவருள் ஒருவரான இவ்வாசிரியரின் நெடிய தமிழ்ப்பணி குறித்து மிகச் சிறிய அளவிலேயே ஈண்டுக் கூற இயலும். பாரம்-பரியமான தமிழ்ப் புலமை மரபில் அவர் பெற்ற தகுதிகள் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் (1945); மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதம் (1953) ஆகியவை; அத்தோடு “நவீன”ப் பல்கலைக் கழகப் பட்டங் களாகச் சென்னைப் பல்கலை கழகத்தில் 1951இல் பி.ஓ.எல் பட்டமும், 1958இல் பி.ஓ.எல் (ஆனர்சு) பட்டமும் பெற்றுள்ளார். 1965 - 1978இல் அவர் திருவையாறு அரசர் கல்லூரியில் ஆசிரியப்பணி ஆற்றினார். அப்பொழுதே பதிப்புப் பணியை, குறிப்பாக பழந்தமிழ் இலக்கண உரைநூல்களைப் பதிப்பிக்கும் பணியைத் தொடங்கினார். அக்கால கட்டத்தில் அவர் பதிப்பித்தவை இலக்கண விளக்கம் 8 தொகுதிகள் (தஞ்சை சரசுவதி மகால் 1971-74), இலக்கணக் கொத்து (தஞ்சை சரசுவதி மகால் 1973), பிரயோக விவேகம் (தஞ்சை சரசுவதி மகால் 1973) ஆகியவையாம். 1978இலிருந்து திரு கோபாலையர் அவர்களுடைய அறி வாற்றலைப் பிரெஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளி (விஉடிடந குசயnளீயளைந ன’நுஒவசஷீஅந-டீசநைவே ) பயன்படுத்தி வருகிறது. அவர் இன்று ஆய்வுப் பணி செய்யும் அந்நிறுவனம் பிரான்சு நாட்டு அரசு நிதி உதவியுடன் நடைபெறுகிறது. அவ் வமைப்பிற்கு ஆசிய நாடுகளில் மொத்தம் 17 ஆய்வுமையங்கள் உள்ளன. பாண்டிச்சேரி மையம் உட்பட. இவை ஆசிய (குறிப்பாக) இந்திய மொழிகள், பண்பாடுகள், சமயங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்கின்றன. பன்னாட்டு ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்து அறிவுப் பணி செய்யும் இச் சூழல் கொண்ட பாண்டிச்சேரி மையத்தில்தான் இவ்விலக்கணக் களஞ்சியம் தொகுக்கும் மாபெரும் பணி நடந்தது. கடந்த 27 ஆண்டுகளில் திரு கோபாலையர் படைத்த பற்பல நூல்களையும் பாண்டிச்சேரியி லுள்ள பிரெஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளியும், பிரான்சு நாட்டு அரசின் மற்றொரு கீழைக் கலை ஆய்வு நிறுவனமான பிரெஞ்சு நிறுவனமும் (குசநnஉh ஐளேவவைரவந) வெளியிட்டுள்ளன. அவ்வாறு வெளியான அவர் நூல்களில் குறிப்பிடத்தக்கவை தமிழ்ப் பக்தி இலக்கியம் சார்ந்த தேவாரம் (3 தொகுதிகள் 1984 முதல் 1991 வரை), மாறன் அகப் பொருள் (2005) ஆகியவை. இப்பேரகராதிக்கு அடிப்படையாக அமைந்தவையும் கோபாலையர் பதிப்பித்தவையுமான வேறு சில நூல்களையும் குறிப்பிட்டாகவேண்டும்; அவை (திரு. கோ. இளவழகன், தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17 மூலமாக) அவர் 2004இல் பதிப்பித்த தொல்காப்பியமும் (உரைகளுடன் 14 தொகுதிகள்) 2005இல் அவர் பதிப்பித்துள்ள வீரசோழியமும் மாறன் அலங்காரமும் ஆகும். தமிழ் இலக்கிய இலக்கண வரலாற்றை ஆய்வு செய்திட இன்றி யமையாத கருவி இப் பேரகராதி. இந்திய மற்றும் மேல்நாட்டுத் தமிழ் ஆய்வாளர்கள் பலருக்கு ஆசானாகவும் அறிவுரையாள ராகவும், ஏன் நடமாடும் கலைக்களஞ்சியமாகவும் அமைந்த அபூர்வ மான ஓர் அறிஞரின் மாபெருஞ் சாதனையாக அமைவதும் இது. எனவே இந்நூல் வெளியீட்டில் தானும் பங்கு பெற்று உதவிட வாய்ப்புப் பெற்றது குறித்துப் பிரெஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளி மகிழ்கிறது. இறுதியாக இம்மாபெரும் பணி வெற்றிகரமாக நடைபெறப் பெரும்பங்கு ஆற்றிய மூவருக்கு நன்றி கூறியாக வேண்டும். முதலா மவர் திரு கோபாலையரின் இளவல் திரு கங்காதரன் அவர்கள். அவர் முன்னர்ப் பிரெஞ்சு நிறுவனத்தில் பணி செய்தவர். இப்பொழுது பி.இ.ஆ.ப. பாண்டிச்சேரி மையத்தில் அவர் ஆய்வறிஞர், பணியில் உள்ளார். நூல் முழுவதையும் தம் கைப்பட அழகாக எழுதியவர் அவர். இரண்டாமவர் டாக்டர் ழான்-லுக்-செவியர்; கையெழுத்துப் பிரதி முழுவதையும் டிஜிடல் நிழற்படமாக எடுத்து எப்பகுதியும் சிதிலமாகி அழிந்து விடாதபடி பார்த்துக் கொண்டவர். மூன்றாமவர் திரு கோ. இளவழகன். அவர் இந்நூலின் சிறப்பையும் பயனையும் உணர்ந்து அதை வெளியிட முன்வந்தவர். இப் பெருநூலைச் செம்மை யாகக் கணினியில் தட்டச்சு செய்து அச்சுக்கு அணியமாக்கவும், மெய்ப்புக்களை ஐந்து முறை கவனமாகத் திருத்தவும் ஆக ஒன்றரை ஆண்டுகள் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் உழைத்துள்ளனர். தமிழ் வாழ்க! தலைமாமணியெனத் தமிழிலக்கணப் பேரகராதியை வரைந்தருளிய கலைமாமணி, பண்டிதவித்துவான் தி.வே. கோபாலையர் அவர்களை வாழ்த்தி வழங்கும் “பாராட்டுரை” 1 அன்பும் அருளும் அறிவும் திருவும் இன்பமும் எழிலும் மன்னிய உருவாய்ச் சொல்லொடு பொருள்போல் எல்லும் ஒளியும் புல்லிய வடிவென அம்மை யப்பனாய்ச் 5 செந்தமிழ் மயமாய்த் திகழும் சீர்சால் பொன்மலை மேவிய புரிசடைக் கடவுள் நான்மறை நவிலும் நயன்மிகு நாவால் சிந்தை சிலிர்க்கத் தென்றல் உலாவச் சந்தனம் மணக்கும் தண்ணிய அருவிகூர் 10 பொதியத் தமர்ந்து புவியெலாம் போற்ற மதிநலம் வளர்க்கும் மாண்பமை முத்தமிழ் நிதிவளம் நல்கும் நிகரிலா மாதவன் அகத்தியற் கருளிய தகவமை இலக்கண மிகப்பெருங் கலையைச் சகத்தவர் உணர 15 பல்காப் பியந்தெளி தொல்காப் பியன்முதல் ஒல்காப் புலமை ஒண்டமிழ் நூலோர் இயம்பிய இலக்கணப் பனுவல் யாவையும் உளந்தெரிந் துரைசெய் இளம்பூ ரணர்முதல் சேனா வரையர், தெய்வச் சிலையார், 20 ஆனாப் புலமைப் பேரா சிரியர் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க் கினியர் விச்சை மிக்கநக் கீர னாரொடு சிவஞான முனிவர், சுவாமி நாதனார் யாப்ப ருங்கல விருத்தி முதலாய 25 உரைவழி யாவையும் புரையறக் கற்றறிந்து, அரியவை யாவையும் சிந்தையிற் றெளிந்து கற்றதை மறவாப் பெற்றியொடு திகழும் அருந்திறற் புலவன், பெரும்பே ராசான், விருந்தென வடமொழி பயின்றறி திறலோன், 30 ஆங்கிலப் புலமைசீர் தாங்கிடும் ஆசான், சங்க இலக்கியச் சால்பொடு இரட்டைக் காப்பிய நுணுக்கமும் சிந்தா மணியினைத் தேர்ந்தறிந் துவந்துரை விரிக்கும் செம்மல், தேங்கமழ் அமிழ்தென மாணவர் செவிகொளப் 35 பாடம் பயிற்றும் பண்பமை ஆசான் திருமுறை, திவ்வியப் பிரபந்த அருள்வளம் நிறைமொழி யாவும் நெஞ்சம் இனிக்க உருச்செய் துவக்கும் ஒளிர்தமிழ்ப் பாவலன், புராண இதிகாசப் புலமையும் நுட்பம் 40 விராவிய கம்பன் கவிதையும் பிறபிற சிற்றிலக் கியக்கடல் திளைத்தநற் கல்விமான், ஆளுடைப் பிள்ளையும் அரசும் நம்பியும் தாளுறச் சூழ்ந்து தலையுறப் பணிந்து தெய்வத் தமிழாற் புனைந்ததே வாரம் 45 மெய்யணிந் துவக்கும் ஐயா றன்திகழ் காவிரித் தாயின் கரைமிசை யொளிசெய் திருவையா றதனிற் செந்தமிழ்த் தாயின் உள்ளம் உவப்ப உதித்த தனயன், அந்தணர் குலத்தில் வந்தநற் சான்றோன் 50 குணத்தால் உயர்ந்த கோபா லையன், அன்பும், அடக்கமும், நண்பமை செயலும், இன்சொலும், எளிமையும், இயல்போ டமைந்தொளிர் போதகா சிரியன், புதியன புனையும் ஆய்வறி வாளன், அரும்பெறற் கட்டுரை 55 தரும்எழுத் தாளன், மூவர்தே வாரச் சொல்வளம் இசைவளம் மல்கிடும் ஞானம், மலர்ந்திடும் கற்பனை, வண்ணனை உள்ளம் கலந்திடும் பக்திக் கவிநயம் யாவையும் உலகுணர்ந் துய்ய உரைவிரித் தியம்பிய 60 பலகலை யுணர்ந்த பண்டிதன் இலக்கணக் கடல்படிந் தெல்லை நிலைகண் டெழுந்த ஆசான், தன்பே ருழைப்பினால் இலக்கணக் கலைச்சொல் யாவையும் கவினுறத் தொகுத்துப் பொருள்நிலை விளங்க அகர நிரல்பட 65 இலக்கணப் பேரக ராதியை வரைந்து பேரா சிரியர்,ஆய் வாளர், மாணவர் யாவரும் பயன்பெறக் காவியம் போலத் தமிழ்த்தாய்க் கணியாத் தகவுற வழங்கும் பண்டித தி.வே. கோபா லையர் 70 வண்டமிழ் போல வளமெலாம் மேவி மண்டலம் புகழப் பல்லாண்டு பல்லாண்டு வாழ்கெனப் போற்றி வாழ்த்துதும் உவந்தென். தஞ்சாவூர் 22.08.2005 பாவலரேறு ச. பாலசுந்தரனார் “கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரோ” முதுபெரும் புலவர் இலக்கணக் கடல் உயர்திருவாளர் தி.வே. கோபாலனார், தமிழ்வளக் கொடையாக, அரும்பதிப்புப் பெருந்தகை கோ. இளவழகனார் வழங்கும், ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’ மடலங்கள் பதினேழனையும் ஒருங்கே கண்டதும், “காரே! நேரே தான், வாரியுண்டு; வாரிமொண்டு வாரியுண்டு, வானிருண்டு பேரி கொண்டு நீதிரண்டு பெய்” என்னும், வான்மழைப் பாட்டின் ‘தேன்பிழி’வென எனக்கு அவை இன்ப மூட்டின. கோபாலனார் மூளைக் கூர்ப்பும், இளவழகனார் பதிப்பு ஈர்ப்பும், ஒருங்கே வயப்படுத்திய இன்பத்தில், ‘அன்னை வாழ்க’, ‘அயராத் தொண்டர்களும் வாழ்க’ என என்னுள் வாழ்த்தினேன். கோபாலனார் நினைவின் ஏந்தல்; இலக்கணமா இலக்கியமா, நூலோடு உரையும் நெஞ்சக் களனில் வரப்படுத்தி வைப்பாக வைத்துக் காக்கும் கருவூல வாழ்வர். கற்றது ஒன்றையும் கைவிடாக் ‘கருமி’யெனக் கவர்ந்து கொண்ட தமிழ்வளத்தை, என்றும் எங்கும் எவர்க்கும் ‘தருமி’ என வாரி வழங்கும் வள்ளியர். அவர்தம் இவ்வகராதிக் கொடை, தமிழுலகு காலத்தால் பெற்ற கவின் பரிசிலாம்! என்னை யறியாதே எனக்கொரு பெருமிதம்; ஏக்கழுத்தம்; “இத்தகு பாரிய இலக்கணத் தொகுதிகளை இம்மொழி ஒன்றை யன்றி, எம்மொழிதான் பெறக்கூடும்?” என்னும் எண்ணத்தின் விளைவே அஃதாம்! அம்மம்ம! எழுத்து - இரண்டு மடலங்கள் சொல் - நான்கு மடலங்கள் இவ் ஆறு மடலங்களைத் தானே மற்றை மற்றை மொழிகள் பெறக்கூடும்! பொருளிலக்கணம் என்பதொன்று கொள்ளா மொழிகள், எப்படித் தமிழைப் போல் பொருள் இலக்கண மடலங்களைப் பெற வாய்க்கும்? பொருளிலக்கண மடலங்கள், எழுத்து, சொல் மடலங் களைப் போன்ற எண்ணிக்கையினவோ? அகப்பொருள் - நான்கு மடலங்கள். புறப்பொருள் - ஒரு மடலம் யாப்பு - இரண்டு மடலங்கள் அணி - இரண்டு மடலங்கள் மெய்ப்பாடு முதலன - ஒரு மடலம் பாட்டியல் முதலன - ஒரு மடலம் ஆகப் பதினொரு மடலங்கள். மொத்தமாகக் கூடுதல் 17 மடலங்கள். மொழி ஆர்வலர்க்குப் ‘பெருமிதம்’ உண்டாகுமா? உண்டாகாதா? இப்பெருமிதத்தூடேயே ஓர் ‘ஏக்கம்’: அரிய ஆய்வுக் குறிப்புகள் வழங்கித் தெளிவுறுத்த வல்ல ஆசிரியர், அவற்றை அரிதாக மேற்கொண்டதை அன்றிப் பெரிதாக அல்லது முற்றாக மேற்கொண்டிலரே என்பதே அவ்வேக்கம். எ-டு: ‘அகர முதல் னகர இறுவாய்’ என்பன இளம்பூரணருக்கு அன்மொழித் தொகை; நச்சினார்க்கினியருக்கு எழுவாய்த் தொடர்கள் - என்று காட்டும் தொகையாசிரியர், “அகரத்தை முதலாகவும் னகரத்தை இறுதியாகவும் உடைய என்று பொருள் செய்யின் அகரமுதல் - னகர இறுவாய் என்பன இரண்டாம் வேற்றுமைத் தொகை” என்று தம் தெளிவை இயைக்கிறார் (எழுத்து 1:22) நன்னூலார் அளபெடையைச் சார்பெழுத்தாக எண்ணினார். ஆசிரியர் தொல்காப்பியனார் அளபெடையை உயிரெழுத்துள் அடக்கிக் கொண்டார் என்பதைச் சிவஞான முனிவர் சூத்திர விருத்தி கொண்டு தெளிவிக்கிறார் தொகையாசிரியர். (எழுத்து 1:44) “மகரக் குறுக்கம் மேலால் பெறும் புள்ளியொடு உள்ளும் புள்ளி பெறும் என்ற உரையாசிரியர் கருத்து மிகத் தெள்ளிது. ‘உட்பெறு புள்ளி உருவாகும்மே’ (தொ.எ. 14) என்ற நூற்பாவிற்கு உண்மையுரை காண உதவுகிறது” என்று தெளிவிக்கிறார் தொகை யாசிரியர். (எழுத்து 2: 263) ‘வேண்டா கூறி வேண்டியது முடித்தல்’, என்னும் தலைப்பில், “தேவையற்றது போன்ற ஒரு செய்தியைக் கூறி அதனால், நூற்பாக்களில் கூறப்படாத மற்றோர் இன்றியமையாத செய்தியைப் பெறப்பட வைத்தல்” என்று விளக்கும் தொகையாசிரியர், நுண் மாண் நுழைபுலம் கற்பவர் தெளிவுக்கு நல்வழி காட்டுகின்றது. (எழுத்து 2:265) ஆனால், இத்தகையவை பெரிதும் இடம் பெறாமல் ‘தொகை யளவொடு’ நின்று விடுகின்றது என்பதே அவ்வேக்கம். தொகை யாவது, தொகுப்பு. ‘குற்றியலுகரம் ஒற்று ஈறே’ என்பதோர் ஆய்வு என்றால், ‘குற்றியலுகரம் உயிர் ஈறே’ என்பதோர் ஆய்வு ஆதல் காட்டப்படவேண்டும் அல்லவோ! எது செவ்விது என்பதைத் தெளிவித்தல் இன்றேனும், தெளிவிக்கக் கருவிதந்தது ஆகும் அன்றோ! இவ்வாறு, பின்னாய்வாளர் எண்ணற்றோர் ஆய்வுகள் கொள்ளப்படாமை மட்டுமன்று; தள்ளப்படுதல் மிகத் தெளி வாகின்றது. தொகையாசிரியரால் சுட்டப்படும் அரசஞ்சண்முகனார் (பாட்டியல் 15) ஆய்வு எத்தகையது எனின், ‘நடுநிலை பிறழாமல் ஆராய்ந்து எழுதுவதில் வல்லுநர்’ எனத் தொகையாசிரியராலேயே பாராட்டப்படும் தகையதாம். அச்சண்முகனார், ‘பிரமாணம் ஆகாத நூல்கள்’ என்பதையும் பதிவு செய்கிறார் தொகையாசிரியர். அது, “சின்னூல்(நேமிநாதம்), நன்னூல், வீரசோழியம், இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம், சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, இலக்கண விளக்கம் முதலாகப் பல, தொல்காப்பியத்தின் வழிப்படச் செய்யப்படினும் ஆசிரியனது கருத்துணராமல் மரபு நிலை திரியச் செய்யப்பட்டமையான் பிரமாணமாகாத நூல்கள் ஆம். (பிரமாணம் நூல்நெறிக்குச் சான்றாக - எடுத்துக் காட்டாகத் திகழும் வாய்மையாகிய தகுதி; நியாய அளவைகளால் உறுதிப்பாடு) இவ்வாறு குறிப்பர் அரசஞ்சண்முகனார் (பா.வி. பக். 104-105)” என்கிறார் (பாட். 142) என்பது. தொகையாசிரியர், இச் சான்றைப் பொன்னே போலப் போற்றியிருப்பின், அதன் பெருஞ்சிறப்பு எப்படி இருந்திருக்கும்? தன் பெயருக்கு ஏற்பத் ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’ என்பதற்குத் தானே தன்னிகரிலாத் தலைமை கொண்டிருக்கும்! இப்பிரமாணமாகா நூல்களைத் தள்ளியிருப்பின் இப்பாரிய நிலை இருக்குமோ எனின், அவ்வெண்ணம் பிழைபட்ட எண்ண மாம்! ‘தொடர்நிலைச் செய்யுள்வகைப் பெயர்’ என்னும் தலைப்பில் கூறப்படும் அளவுகோல் தானா இன்றும் உள்ளது? சதுரகராதியும் பிரபந்த மரபியலும் கூறுவன 96 மட்டுமே. மற்றை நூல்களால் அறிவன அதற்கும் உட்பட்டனவே. ஆனால், சிற்றிலக்கிய விரிவாக்கப் பரப்பு எத்தனை? 381 வகையென்பதை எம், ‘இலக்கிய வகைமை அகராதி’யில் காணலாம். அவற்றின் மேலும் இதுகால் விரிந் துள்ளன. பொருளதிகார ஆய்வோ, வெள்ளப் பெருக்காகி உள்ளது. கால்டுவெலார், ஞானப் பிரகாச அடிகளார், பாவாணர் அன்னவர்கள் ஆய்வு தமிழிலக்கண ஆய்வுகள் அல்ல எனத் தள்ளப் பட்டுவிடாவே! அவற்றை நோக்கினால், வேண்டாச் சேர்ப்புகளை விலக்கி, வேண்டும் சேர்ப்புகளை இணைத்துக் கொண்டால் இன்னும் பதின் மடலங்கள் மிகும் என்பதை, நினைவின் ஏந்தல் - சோர்வறியாச் சுடர் - கோபாலனார் கொள்வாரே எனின், இத்தமிழ் இலக்கணப்பேரகராதி ஒத்ததோர் அகராதி இன்றாம் என மலைமேல் ஏறி முழக்கமிடலாம் அல்லவோ! இத்தொகையாசிரியப் பெருமகனாரை அல்லார் ஒருவர், இப்பெருங் கடப்பாட்டை மேற்கொண்டு இத்தகு பணி செய்தல் அரிது! அவர்தம் முழுதுறு ஒப்படைப்பின் பேறு அது. அன்றியும், தம்மைப் போலவே தம் உடன்பிறப்புகளையும் அழுந்திப் பயிலவும் ஆர்வக் கடனாற்றவும் பயிற்றி இருக்கும் பயிற்றுதற்பேறு; தமிழ் வாழ்வாகிய அவரைத் தாங்குதலே தம் பிறவிப் பேறு எனக்கொண்டு நயத்தகு துணையாயும் குடும்பமாகியும் நிற்பார் கெழுதகைப் பேறு; இன்னவெல்லாம், இத் தமிழ்ப் பெருங்கொடைக்கு ஊற்றுக் கண்கள் அன்னவாம். இங்குச் சுட்டப்பட்டவை, தமிழ்க் காதலால், தமிழர் பண் பாட்டுக் காதலால் சுட்டப்பட்டவை என்பதைக் கற்பார் உணரின், இத்தொகுதிகளைத் தத்தம் குடிமை வைப்பாகக் கொள்ளக் கடமைப்பட்டவராம். ஆய்வுக்கு இப்படியொரு கருவி எளிதில் வாய்க்குமா? ஆய்வுக்கு எல்லை உண்டா? ‘அறிதோ றறியாமை’ காணும் ஆய்வுக்கு, “மனிதர்காள் இங்கேவம்; கனிதந்தால் கனி உண்ணவும் வல்லிரோ” என்று அப்பரடிகள் தமிழ்க்கோயில் வாயில் முன் நின்று அழைத்து வழிகாட்டுவது போல, அயராத் தொண் டர்கள் தி.வே. கோபாலனாரும், கோ. இளவழகனாரும் இத் தொகையைக் கைகோத்து நின்று கனிவொடு வழங்குகின்றனர்! நாம் பேறெனப் பெற்றுப் பயன் கொள்வோமாக! தமிழ்த்தொண்டன், இரா. இளங்குமரன் ‘குறுந்தட்டாக’ விளங்குபவர் பண்டிதவித்துவான் தி.வே. கோபாலையர் புதுவைக்கு வருகின்றவர்கள் இங்கே இரண்டு கடல்களைப் பார்க்கலாம். ஒன்று உவர்க்கடல்; மற்றொன்று தி.வே. கோபாலையர் என்னும் நூற்கடல். ‘தகடுபடு பசும்பொற் சிகரங்களின் முகடு தொடுத்துப் பொன்கொழித்து, மணிவரன்றி, மாணிக்கத்தொடு வயிரம் உந்தி வந்து, சல சலவென இழிதரும் அணிகிளர் அருவி’ போன்ற இவரது பொழிவினை ஒரு முறை கேட்கும் எவரும் வியந்து, இவர் ஒரு நூற்கடல்தாம்’ என்பதை எளிதினில் ஏற்றுக்கொள்வர். ‘அளக்கலாகா அளவும் பொருளும் துளக்கலாகா நிலையும் தோற்றமும்’ கொண்ட மலையனைய மாண்பின் அறிவினராகிய தி.வே. கோபாலையர் கற்றோர்தமக்கு வரம்பாகிய தகைமையர். தண்டமிழின் மேலாந்தரமான இலக்கிய இலக்கணங்களையும், அவற்றுக்குப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் உரைகளையும் இளமையிலேயே பதிவு செய்துகொண்ட குறுந்தட்டாக விளங்கு பவர் இப் பெருந்தகை. எக்காரணத்தாலாவது இந்நூல்களில் ஒன்றை இழக்க நேரின் கவலைப்பட வேண்டியதில்லை; இவர்தம் உள்ளப் பதிவிலிருந்து அதனை மீண்டும் உருவாக்கிக் கொள்ளலாம். ‘செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகர்க்குப்’ புகழ் சேர்த்த பாரதியார், பாவேந்தர் முதலிய புகழ்மணிகளின் வரிசையில் இன்று கோபாலையர் விண்ணுயர் தோற்றத்துடன் விளங்குகிறார். இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர், பரிமேலழகர், சிவஞான முனிவர், காரிரத்தினக் கவிராயர் முதலிய புலவர் மரபினோர் புகழை யெல்லாம் தம் புகழ் ஆக்கிக்கொண்ட இப்புலவர் பெருந்தகையைப் புதுவைப் புலவருலகம் போற்றி ‘நூற்கடல்’ என்ற சிறப்புப் பட்டமளித்துப் பொன்போற் பொதிந்து கொண்டது. இருபத்தாறாண்டுகளுக்கு மேலாக இவர் புதுவைப் பிரஞ்சுக் கலை நிறுவனத்தில் (விஉடிடந குசயnளீயளைந) தமிழாய்வுப் பிரிவின் தலைமைப் பொறுப்பினை மேற்கொண்டு அரிய நூல்கள் பலவற்றை ஆய்வுச் செம்பதிப்புகளாக வெளியிட்டு வருகிறார். பாரதியாரின் தலைசிறந்த படைப்புகளுக்கு வாய்ப்பாக இருந்த புதுவைமண், கோபாலையரின் புகழை என்றும் நின்று நிலவச் செய்யும் உயர் பதிப்புகள் பல உருவாவதற்கும் வாய்த்த இடமாக இலங்குகிறது. கடந்த பன்னீராண்டுகளாகப் புதுவையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘தெளிதமிழ்’ என்னும் தமிழ் வளர்ச்சித் திங்களி தழில், இவர்தம் படைப்பினை ஏந்தி வாராத இதழே இல்லை. அதில் ‘இலை மறை கனிகள்’ என்னும் தலைப்பில், தமிழிலக்கண இலக்கிய நூல்களிலும் உரைகளிலும் இலை மறை கனிகளாக மறைந் திருக்கும் அரிய செய்திகளைத் திரட்டிக் கட்டுரைகளாகத் தந்து வருகிறார். அலான் தனியேலு (ஹடயனே னுயnநைடடிர) என்னும் மேனாட்டறிஞரின் மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்புப் பணிக்குத் துணை செய்ததும், சேனாவரையத்தின் பிரஞ்சு மொழியாக்கத்திற்குத் துணை நின்றதும் இவர்தம் ஆங்கில அறிவுக்குச் சான்று பகரும். ‘தொல்காப்பியப் பழைய உரைகளின் செம்பதிப்பு’, ‘கல் வெட்டுக்களில் நாயன்மார்கள் பற்றிய அருஞ் செய்திகள்’ ஆகியன இனி வெளிவர இருக்கும் இவர்தம் நூல்களில் குறிப்பிடத்தக்கவை. இவர்தம் பணிகளில் மிகமிகப் பயன் விளைக்கும் அரிய பெரிய பணி இந்த ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’. தமிழிலக்கணம் கற்போருக்கும், இலக்கண ஆய்வாளர்களுக்கும் கை விளக்காகப் பயன்படக்கூடிய இவ் வகரவரிசை இருபத்தைந்து ஆண்டுக் கால பேருழைப்பால் எழுதி முடிக்கப்பெற்றது. எப்போது வெளிவருமோ என்று தமிழறிஞர் உலகம் எதிர்பார்த்திருந்தது. மற்றவர் அரியதென்று கருதும் நல்ல பதிப்புப் பணிகளை எளியதென்று ஏற்று, மடிதற்றுத் தாமே முன்வந்து செய்யும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர், ‘தமிழ்மொழிக் காவலர்’ கோ. இளவழகன் இதனை அழகுறப் பதிப்பித்து வழங்குகிறார். இவ்வரிய செயலால், இன்பத்தமிழ் இருக்குமளவும் இளவழகன் புகழும் இருக்கும் என்பது உறுதி. அன்பன், இரா. திருமுருகன். ‘ஈரத்தமிழில் ஆழங்கால் பட்டவர்’ பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் உலகப் பொதுமறையை அருளிய திருவள்ளுவப் பெருந் தகையார் பெரியார் யார் என்பதற்கு ஓர் இலக்கணம் வகுக்கின்றார். மனிதமேம்பாட்டுக்குரியதான, செய்வதற்கு அரியதான செயலை யார் புரிகின்றார்களோ அவர்களே பெரியவர் என்கின்றார். காலங்கள்தோறும் பல்வேறு துறைகளில் மனிதமேம்பாட்டுக் காகப் பலர் செயற்கரிய செயல்களைச் செய்துள்ளார்கள். அந்த வரிசையில் தமிழ் இலக்கணப் பேரகராதி என்னும் இந்நூலை தி.வே.கோபாலையரும், இந்த நூலை வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் இளவழகனாரும் அடங்குவர். தமிழ் இலக்கிய இலக்கணங்கள் ஒருசமயம் இல்லாமற் போய் விட்டாலும் கோபாலையர் ஒருவர் இருந்தாலே போதும், அவற்றை மீட்டுக் கொண்டுவந்துவிடலாம். அந்த அளவிற்குத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தம் நினைவில் வைத்திருப்பவர். ஒரு தேன்கூட்டில் பல மலர்களின் தேன்கள் கலந்திருப்பது போல் இந்தப் பேரகராதியில் பல தமிழ்இலக்கண நூல்ஆசிரியர்களின் வரையறைகளும் பல உரையாசிரியர்களின் உரை வளங்களும் கலந்துள்ளன. அறிஞர் திலகம் கோபாலையர் எப்படி எளிமையானவ ராகவும், ஆழமான புலமை உடையவராகவும், பழக இனியவராகவும் இருக்கிறாரோ, அப்படியே ‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு’ என்னும் திருக்குறளின் கருத்துக்கேற்ப இந்நூலும் நம்மிடம் பழகுகின்றது. இந்த நூல் பேரகராதியாக உள்ளதால் இலக்கணம் கண்டு அஞ்சும் மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் அகராதிப் பொருளை அறிவது போல் எளிதாகத் தமிழ் இலக்கணத்தை அறிந்து கொள்ள முடியுமாறு உள்ளது. இந்நூல் தொல்காப்பியர் காலத்திலிருந்து இந்த நாள்வரை உள்ள தமிழ் உலகிற்குக் கிடைத்த புதுமையான முதன்மையான முழுமையான நூலாகும். பலர் முயன்று செய்ய வேண்டிய பணியை தி.வே.கோபா லையரே செய்து முடித்துள்ளார். ஒரு பல்கலைகழகமோ ஒரு பெரிய ஆய்வு நிறுவனமோ செய்ய வேண்டிய பணியைத் தமிழ்மண் பதிப்பகம் ஆர்வத்தால் எளிதாகச் செய்துள்ளது. தமிழர்களின் தவப்பயனே இப்படியாய்த் தமிழ் மண்ணில் முகிழ்த்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழ் வழங்கும் அனைத்து இடங்களிலும் திருக்குறளுக்கு அடுத்தபடியாக நூலகங்களில் இடம்பெற வேண்டிய தமிழ்நூல் இந்நூல் என்பதில் ஐயம் இல்லை. இந்த நூலை வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக இளவழக னார்க்கு நமது வெற்றி வாழ்த்துக்கள். இந்த நூலை அளித்தருளிய அறிஞர்திலகம் நம்முடைய இலக்கண மாமணி கோபாலையருக்குத் தலையல்லால் கைம்மாறில்லை என்னும் படியான தமிழ் வணக்கங்கள். வாழ்க தமிழ். வளர்க தமிழ்ப்பண்பாடு. வெல்க மனிதநேயம். அடியேன். முனைவர் ‘வைணவம்’ பார்த்தசாரதி ‘மாந்தக் கணினி’ பண்டிதவித்துவான் தி.வே. கோபாலையர் நாம் சங்கப் புலவர்களைப் பார்த்திலோம்! இடைக் காலப் புலவர்களையும் உரை வல்லுநர்களையும் பார்த்திலோம்! ஆனால் அவர்களை யெல்லாம் நம் காலத்தில் பார்த்திட விரும்புவோமாயின் அவர்களின் உருவாக வாழ்ந்துகொண்டிருக்கும் நூற்கடல் தி. வே. கோபாலையர் அவர்களைக் காணலே சாலும். சாதி, மத, வயது வேறுபாடின்றித் தம்மை அணுகும் யாரே யாயினும் அயர்வுறாது மாற்றம் கொள்ளாது அவர்தம் ஐயங்கட்குத் தெளிவேற்படுத்தலும் வினாக்கட்கு விடையளித்தலுமான சீரிய தமிழ்ப்பணியைத் தொடர்ந்து ஆற்றிவருகிறார். எந்த நூலில், எந்தப் பக்கத்தில், எந்தப் பாகியில், எந்த வரியில் உள்ளது எனத் தெளிந்த உணர்வுடன் எந்தச் சொல்லையும் கருத்தையும் சுட்டிக் காட்டும் வியக்கத்தக்க மாந்தக் கணினியாக விளங்குகிறார். சங்கப் புலவரும் இடைக் காலப் புலவரும் உரை வல்லுநரும் கையாண்ட மொழி முதலெழுத்து, மொழியிறுதி எழுத்து, புணர்ச்சி நெறிகள், பிற மொழிச் சொற்களையும் எழுத்துக்களையும் நீக்கல் ஆகிய தமிழ் இலக்கண மரபுகளைப் பொன்னே போல் போற்றிப் பயன்படுத்தி வரும் பாங்கு எண்ணி எண்ணி மகிழத்தக்கதாகும். அப்பெருமகனார் வாழுங்காலத்தில் வாழ்தலும், அவரிடத்து உரையாடி மகிழ்தலும், ஏற்படும் ஐயங்கட்கு அவரின் சொல்லரிய விளக்கங்களைக் கேட்டுத் தெளிதலுமாகிய அரிய பேற்றினை நான் எனது வாழ்நாளில் பெற்றுள்ளேன். அவரின் பரந்த இலக்கிய நூலறிவும் தெளிந்த இலக்கண அறிவும் தமிழர்க்கும் உலகுக்கும் மேலும் பயன்படுதல் வேண்டும். அவர் மேற்கொண்டுள்ள எளிய வாழ்வு, சம நோக்கு, இனிய பேச்சு, எல்லார்க்கும் பயன்படல் வேண்டும் என்னும் பெரும்பண்பு ஆகியவை கற்றாரை ஈர்க்கும் தன்மையன. நூற்கடலார் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றிடல் வேண்டும் என எனது உள்ளம் நிறைந்த விழைவினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்பன் இறைவிழியன் பதிப்புரை தமிழர் வாழ்வியல் இலக்கணத்தை வரையறுத்துக் கூறும் ஒல்காப்புகழ் தொல்காப்பியத்திற்குப் பழந்தமிழ்ச் சான்றோர்கள் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அனைத்து உரைகளையும் தொகுத்து தொல்காப்பிய நூல் பதிப்பில் இதுவரை எவரும் கண்டிராத வகையில் ஒரேவீச்சில் எம் பதிப்பகம் வெளியிட்டதை தமிழுலகம் நன்கு அறியும். தொல்காப்பிய நூல்பதிப்புப் பணிக்கு அல்லும் பகலும் துணை யிருந்து உழைத்தவர் பண்டிதவித்துவான் தி.வே.கோபாலையர் ஆவார். இந்நூல் பதிப்புகளுக்கு இவரே பதிப்பாசிரியராக இருந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்தவர். கூரறிவும், பெரும் புலமையும், நினைவாற்றலும் மிக்க இப்பெருந்தகை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தம் பேருழைப்பால் தொகுத்த தமிழ் இலக் கணத்திற்கான சொல் மூலங்களை ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’ எனும் பெரும்படைப்பாக 17 தொகுதிகளை உள்ளடக்கி ‘தமிழ் இலக்கண’க் கொடையாக தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளார். தமிழ் இலக்கண நூல் பதிப்பு வரலாற்றில் தமிழ் இலக்கணத் திற்கென ஒரே நேரத்தில் எழுத்து, சொல், பொருள் (அகம், புறம், அணி, யாப்பு, பாட்டியல், பாயிரம், மரபியல், மெய்ப்பாடு, நாடகம், அளவை நியாயம்) எனும் வரிசையில் பேரகராதி வெளிவருவது இதுவே முதல் முறையாகும். அகராதி என்பது ஒரு சொல்லுக்கு விளக்கம் தருவது. பேரகராதி என்பது ஒரு சொல்லுக்கு விளக்கமும், மேற்கோளும் சுட்டுவது. களஞ்சியம் என்பது ஒரு சொல்லுக்குப் பல்பொருள் விளக்கம் காட்டுவது. உங்கள் கைகளில் தவழும் இத் தமிழ் இலக்கணப் பேரகராதித் தொகுதிகள் தமிழுக்குக் கருவூலமாய் அமைவதாகும். தமிழிலக்கணப் பெரும் பரப்பை விரிவு செய்யும் இப் பெட்டகத்தை வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம். தமிழ் ஆய்வை மேற்கொள்வார்க்கு வைரச் சுரங்கமாகவும், தமிழ் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக் காகவும் இந்நூல் தொகுதிகள் வருகிறது. தொன்மையும், முன்மையும், தாய்மையும், தூய்மையும், மென்மையும், மேன்மையும், பழமையும், புதுமையும், இளமையும், முதுமையும் மிக்கமொழி நம் தமிழ்மொழி. திரவிடமொழிகளுக்குத் தாய்மொழி நம் தமிழ்மொழி. இந்தியப் பெருமொழிகளுக்கு மூலமொழி நம் தமிழ்மொழி. உலக மொழிகளுக்கு மூத்த மொழி நம் தமிழ்மொழி. இந்தியப் பேரரசால் செம்மொழி என அறிவிக்கப் பட்டுள்ள இந் நேரத்தில், ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’யை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ் இலக்கணச் சுரங்கத்தைத் தந்துள்ள பண்டித வித்துவான் தி.வே. கோபாலையருடன் உடனிருந்து உழைத்தவர் அவர் இளவல் தி.வே. கங்காதரன் ஆவார். இப் பொற்குவியல் பொலிவோடு வெளி வருவதற்கு தம் முழுப் பொழுதையும் செலவிட்டவர் இவர். இரவென்றும், பகலென்றும் பாராது உழைத்த இப் பெருமக்க ளுக்கும், பேரகராதியின் அருமை பெருமைகளை மதிப்பீடு அளித்து பெருமை சேர்த்த புதுச்சேரி பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத் துக்கும், தமிழ்ச் சான்றோர்க்கும் எம் நன்றி. பதிப்பாளர் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் வடிவமைப்பு : செ. சரவணன் மேலட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சுக்கோர்ப்பு : கீர்த்தி கிராபிக்ஸ் பட்டு, கீதா, சங்கீதா, பிரியா, பத்மநாபன், சே. குப்புசாமி, மு. கலையரசன் மெய்ப்பு : தி.வே. கோபாலையர் தி.வே. கங்காதரனார் ——— உதவி : அ. மதிவாணன் கி. குணத்தொகையன் அரங்க. குமரேசன் வே. தனசேகரன் நா. வெங்கடேசன் மு.ந. இராமசுப்ரமணிய இராசா இல. தர்மராசு ——— அச்சு எதிர்மம் (சூநபயவiஎந) : பிராஸஸ் இந்தியா, சென்னை அச்சு மற்றும் கட்டமைப்பு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை ——— இவர்களுக்கு எம் நன்றி . அணி 2 சொற்பிரமாண அணி (சப்தப் பிரமாணாலங்காரம்) - இஃது ஆறு வகைப்படும். 1. வேதப் பிரமாணம், 2. °மிருதிச் சொற் பிரமாணம், 3. சிஷ்டாநுஷ்டானம், 4. ஆத்ம ஸந்தோஷம், 5. சுருதி, 6. லிங்கம் என்பன அவை. 1. வேதப்பிரமாணம் வேதத்திலுள்ள சொற்களைக்காட்டி ஒரு பொருளைக் கூறுதல். எ-டு : இமவான் மகளான பார்வதிதேவி சிவபெருமா னையே கணவனாகப் பெறவேண்டித் தவமியற்றிய போது, தேவிக்கு அருள்புரியக் கருதிய பெருமான் ஒரு மாணி வடிவத்துடன் அவளிடம் சென்று, அவள் தன் மணாளனாகக் கொண்டுள்ள இறைவன் பல்வேறு குறைகளையுடையவன் எனவும் அவன் அவளுக்கு ஏற்ற கணவன் ஆகான் எனவும் பழிப் பதைப் போலப் புகழும் சிலவற்றைக் கூறுகையில், “சிவபெருமானுக்குத் தந்தையும் இல்லை; தாயு மில்லை; பிறந்த இடம் கூட அறியமுடியாதே” என்ற போது, அதனை மறுத்துக் கூறும் தேவியின் கூற்றுப் பின்வருமாறு : “மாணி! உன் உள்ளத்தையே இழந்து என் மணாளனுடைய குற்றங்களை அடுக்கிக் கூறிய நீ, அவ்விறைவனைப் பற்றிய ஓர் உண்மையைக் கூறிவிட்டாய். அவன் பிறப்பிடமும் தந்தையும் தாயும் அறிதற்கியலாதவன் என்று நீ கூறியது மிகப்பெரிய உண்மை. பிரமனுக்கும் தானே காரணமானவனுக்குப் பிறப்பிடம் வேறொன்று யாண்டையது?” இக்கூற்றில், “முன்னம் பிரமனைப் படைத்தவனும் அவனுக்கு வேதங்களைக் கூறியவனும் எவனோ, அவனே இறைவன்” என்ற வேதத்தின் சொற்களைப் பிரமாணமாகக் கொண்டு கூறிய கருத்து விளக்கம் பெறுவதால், இது வேதத்தைப் பிரமாணமாகக் கொண்டு வந்த அணியாயிற்று. இங்கு வேதம் விழையும் ஒரு கருத்து விழுமிதாகச் சொல்லப்பட்டது. 2. °மிருதிச் சொற் பிரமாண அணி மனு°மிருதி போன்ற அறநூல்களை ஆதாரமாகக் கொண்டு ஒரு கருத்தைக் கூறுதல். எ-டு : “மக்காள்! தீவினைகளை வலிந்து செய்க. அங்ஙனம் செய்தால் அவை நும்முடைய பாவங்கள் ஆக மாட்டா. என்னையெனில் ‘வற்புறுத்தலால் வலிந்து செய்யப்படும் செயல்கள் செயல்களே ஆகமாட்டா’ என்று மனு கூறுகிறார்.” இங்கே காட்டப்பட்டது மனுவின் அறநூலிலிருந்து வந்த ஒரு மேற்கோளாம். ஆகவே, இது °மிருதிச் சொற்பிரமாண அணியாயிற்று. இங்கே வேண்டாத ஒரு கருத்தை - விழுமியது அல்லாத ஒன்றை - எடுத்தாண்டதால், இது நேரிதன்று; நாத்திகரின் கூற்றெனக் கொள்க. 3. சிஷ்டானுஷ்டானப் பிரமாண அணி சிஷ்டானுஷ்டானம் - சான்றோர் கொண்ட வழிவழி வந்த கருத்துக்களைக் கூறும் சம்பிரதாய வசனங்களை ஆதாரம் காட்டுதல். எ-டு : தன்னை மறைத்துக்கொண்டு, தமயந்திக்கு மாத்திரம் தன் வடிவு புலனாம் வகையில் அவளை அந்தப்புரத்- தின்கண் சென்று கண்டான் நளன். அவனை அவள் அவனது பெயரினைக் கூறுமாறு பணித்தபோது அவன் கூறுவது : ‘நல்லவர்கள் தம் பெயரைத் தாமே எல்லாரிடத்தும் கூறுதல் தகாது என்பது சான்றோர் கொள்கையாய் வந்த நன்னெறி யாகும். ஆதலின் நான் அந்நெறி பிறழ்ந்து என் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. நன்னெறி தவறியவர்களை உலகம் இகழுமே!” இதன்கண், நளன் தன் பெயரினைத் தானே கூற இசையாத செயற்குச் சான்றோர் சொல்லை ஆதாரம் காட்டியமையால் இது சிஷ்டானுஷ்டானப் பிரமாணம் ஆயிற்று. 4. ஆத்ம ஸந்தோஷப் பிரமாண அணி சான்றோர் சென்ற நெறியே தம் மனநிறைவொடு கடைப் பிடித்தொழுகும் ஒழுக்கமுடைய தலைவர்கள், தம் மனம் முறையென்று கொள்வதைத் தயங்காமல் ஏற்று மகிழ்வர். இத்தகைய கொள்கையைப் பிரமாணமாகக் கொண்டு கூறுவது இவ்வணி. எ-டு: முனிவரது ஆசிரமத்தில் தான் கண்ட இளமங்கைமீது தன்மனம் காதல் கொண்டமை பற்றித் தனக்குப் பிழை நேர்ந்ததோ என்று ஐயுற்று வருந்திய துஷ்யந்தன், சிந்தித்துப் பார்த்த பின்னர், “ஒழுக்கம் தவறாத என் நெஞ்சம் ஆசை கொண்டமையால் இது தகாத காதலன்று; இவள் என் போன்ற அரசரால் வரைந்து கோடற்கு உரியளாகவே இருத்தல் வேண்டும்” என்று துணிந்தமை பற்றிக் கூறும் கூற்று. “இவள் அரசரால் மணந்து கோடற்கு உரியளே. என்னை யெனில் சிறிதும் நெறி தவறாத என் உயரிய உள்ளம் இவள் பால் காதலுறுகிறது. நல்லவர்க்கு இது போன்ற செய்திகளில் ஐயம் நிகழும்போது அவர்களது மனம் செல்லும் இயல்பே பிரமாணம் ஆகுமன்றோ?” இதன்கண், உயர்ந்ததான தன்னுள்ளம் ஈடுபடுவதையே ஆதாரமாகக் கொண்டு, தன்பால் பிழை நிகழவில்லை யென்று மன்னன் துணிவதால் இஃது ஆத்மஸந்தோஷப் பிரமாண அணி ஆயிற்று. 5. சுருதிப் பிரமாண அணி சுருதி என்பதற்கு ஈண்டு, வேதம் போலவே தொன்று தொட்டு வழங்கும் வார்த்தை என்பது பொருள். அஃதாவது நெடு நாளைய வழக்கு. காஞ்சி வரதரைப் பற்றியது பின்னர் வருகிற எடுத்துக்காட்டு : “திருமாலே! நீ வரதன் - வரங்களைத் தருபவன் - என்னும் பெயரைத்தான் பூண்டுள்ளாயே அன்றி, உன் வடிவத்தில் உனக்கு வரத முத்திரையுள்ள கை இல்லை (வடிவங்களில், அபயம் கொடுக்கும் கை என்றும், வரம் கொடுக்கும் கை என்றும் வெவ்வேறு முத்திரைகள் - அடையாளங்கள் - உள.) ஆயினும் நீ கேட்ட வரத்தைக் கொடுத்து அருளுவாய். அறிந்தவர்கள் வழக்கில் நன்கு தெரியும் பொருளுக்கு வேறு அடையாளங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”. வேதத்தில் வெளிப்படையாய்த் தெரியும் பொருளை ஏற்க, லிங்கம் எனப்படும் வேறு அடையாளமான ஆதாரங்களை ஏற்பதில்லை என்பது மீமாஞ்சையின் நெறியாகும். லிங்கம் - குறிப்பு. சில வேதச் சொற்களுக்குக் கற்பனையால் வேறு பொருள் காட்டிப் பிரமாணமாக்கி உரைப்பதனாலும் செய்யுளுக்கு அழகு கூடுவதன் வாயிலாக இந்த அணியை அமைப்பதும் உண்டு. மக்கள் இறந்துபடுகையில் அவர்கள்தம் புலன்கள் சென்று ஒடுங்கும் இடங்களைச் சொல்லும் வேதம், மனம் சந்திரனின் சேர்வதாகக் கூறும். இதனைக் கற்பனை மாற்றிக் கூறிய சொற்பிரமாண அணிக்கு எடுத்துக்காட்டுப் பின்வருமாறு. நளன்பால் காதல் கொண்டு துயரால் தமயந்தி சந்திரனை இகழ்ந்து புலம்புகிறாள்: ‘சந்திரனே! என் உறுப்புக்களையும் உடம்பையும் நீ வாட்டுவதால் நான் இறந்துபடும்போதாவது எனது மனம் நின்னை வந்து சேரட்டும் என்று எண்ணு கிறாயோ? இது வீண்மை. மன்மதன் என்னும் பண்டிதன், அந்த வேதவாக்கியத்திற்கான பொருளை எனக்குச் சொல்லும் போது நளனுடைய முகம் என்னும் சந்திரனை என்றே உரை கூறியுள்ளான். ஆகவே நான் இறப்பினும் என்மனம் நளனது முகத்தையே சென்றடையும்.” இதன்கண், வேத வார்த்தைக்கு வேறுபொருளைக் கற்பனை யால் கூறியமையின் இது சொற்பிரமாண அணி ஆயிற்று. 6. லிங்கப் பிரமாண அணி லிங்கமாவது குறிப்பு - அடையாளம். சுருதி கூறிய ஒரு பொருளை அதற்குரிய குறிப்பால் காட்டி நிறுவுதல் லிங்கப் பிரமாணம் எனப்படும். தன்னைக் கணவனாகப் பெறல் வேண்டித் தவம் செய்த பார்வதிதேவியை அருளல் வேண்டிச் சிவபெருமான், தனக்குத் தேவியை மணம் பேசுவதற்காக, உலகப் படைப்புக்குக் காரண கருத்தாக்களாக விளங்கும் சப்த இருடிகளையும் தன் மனத் தால் நினைத்த கணத்தேயே அவர்களும் வந்து ஏவல் கேட்டு நின்றபோது சிவபெருமான் கூறுவதாக வரும் எடுத்துக் காட்டு : “முனிவர்காள்! என் முயற்சிகளில் எவையும் எனக்காகச் செய்யப்படுவன அல்ல என்பது அறிவீர். என் வடிவங்களான ஐம்பெரும் பூதங்களும், சந்திர சூரியர்களும், அவியும், அவியளித்து வேட்பானும் ஆகிய எட்டினாலும் நான் இவ்வாறு இருப்பது புலப்படுகிற தன்றோ?” என்று வரும் கூற்றின்கண், உலகம் அனைத்திற்கும் மூலாதாரமாகவுள்ள எட்டு வடிவங்களையும் சிவன் பெற்றுள்ளமை என்னும் சுருதிப் பொருள், “லிங்கமாகத் தோன்றும் அவன் செயல் அனைத்துமே உலகுக்கு அருள் பயப்பனவே” என்று நிறுவப் பட்டமையால், இது லிங்கப் பிரமாண அணி ஆயிற்று. (குவ. 111) சொற்பின் வருநிலை முதலியன மொழிந்தது மொழிதல் ஆகா - சொற்பின் வருநிலை என்பது, மொழிந்த சொல்லே வரினும் பொருள் வேறுபடும். பொருட்பின்வருநிலை என்பது, மொழிந்த பொருளே வரினும் சொல் வேறுபடும். இனிச் சொற்பொருட் பின்வருநிலை என்பது ஒரு சொல்லே வெவ்வேறிடத்தில் ஒரு பொருளையே பயப்பினும், செவிக்கு இன்னோசை தருதலுடையது. இவ்வகையால் இம் மூன்று திறத்த பின்வருநிலை யணியுள்ளும் கூறியது கூறலாம் வழுவின்மை அறியப்படும். (மா. அ. 301 உரை) சொற்பொருள் பின்வருநிலையணி - பின்வருநிலை அணிவகைகளுள் ஒன்று. ஒரு செய்யுளில் முன் வந்த ஒரு சொல் அப்பொருளிலேயே மீண்டும் மீண்டும் வருவது இவ்வணி. (மூன்று முதலாகப் பல இடத்து வருதல் வேண்டும்; இரண்டிடத்து மாத்திரம் வரின் அணி ஆகாது.) எ-டு : ‘வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென்(று) இன்புறுவார் வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார்.’ (நாலடி. 39) நாள்தோறும் பொழுது கழிதலைத் தமது வாழ்நாளின்மேல் தங்குதலாக வைத்து வாழ்நாள் கழிதலை உணராதவர்கள், நாள்தோறும் பொழுது கழிதல் நிகழ்வதைக் கண்டும், அதன் உட்கருத்தை உணராமல், நாள்தோறும் பொழுது கழிதலைப் பொழுதுபோக்காக எண்ணி மகிழ்ச்சி அடைவர் - என்ற பொருளமைந்த இப்பாடற்கண், வைகல் என்ற சொல் நாள்தோறும் என்ற பொருளிலேயே மூன்றிடங்களில் வந்துள்ளமையால் இஃது இவ்வணி ஆயிற்று. (தண்டி. 42-3) சொற்றொடர்நிலைச் செய்யுள் - முதற்பாட்டின் இறுதி அடுத்த பாட்டின் முதலாகச் சொல் லால் தொடரும் நிலையையுடைய செய்யுள். அவ்விறுதி அசையாகவோ சொல்லாகவோ, சீராகவோ, அடியாகவோ அடுத்த பாட்டில் அந்தாதித்து வரும். (தண்டி. 6) ஞ ஞாபக ஏது அணி - காரணத்தை நேராகக் கூறாமல், காரியங்களைக் கொண்டு அறிவால் உணருமாறு கூறுவது இவ்வணி. எ-டு : ‘காதலன்மேல் ஊடல் கரைஇறத்தல் காட்டுமால்; மாதர் நுதல்வியர்ப்ப, வாய்துடிப்ப, - மீது மருங்குவளை வில்முரிய, வாள்இடுக நீண்ட கருங்குவளை சேந்த கருத்து’. தன் நெற்றியில் வியர்வை துளிக்க, புருவம் வளைய, கண்கள் சிவக்க, இவளடையும் மெய்ப்பாடுகள், இவளுக்குத் தன் காதலன் மீது உள்ள ஊடல் எல்லைகடந்து மிகுவதைக் காட்டுகின்றன என்ற கருத்து அமைந்த இப்பாடற்கண், வியர்வும் புருவமுரிவும் கண்சிவத்தலும் ஆகிய காரியங் களால் காரணமான ஊடல் புலப்படுகின்றமையின் இது ஞாபக ஏது அணி ஆயிற்று. (தண்டி. 60) ஞாபக ஏது இன்மையொடு கூடி வருவது - எ-டு : ‘புல்லறி வாளரைப் புல்லார் அறிஞர்;அப் புல்லறிவும் நல்லறி வாளர் தமைக்குறுகா நாளும்....’ புல்லறிவாளர், நல்லறிவாளர் என்பவர்களை அறிவால் அறிந்து விலக்குதலின் இப்பாடலடிகளில் ஞாபக ஏது வந்துள்ளது. (மா.அ. பாடல் 444) ஞாபக ஏது வியதிரேகம் - ஏது விலக்கு என்னும் விலக்கணி வகையில் அறிவான் அறியப்படும் ஏது அமைதல் இது. வியதிரேகம் - விலக்கணி எ-டு : ‘உளதென் தனங்கள் உடலைத் திருகில் வெளியன்றி வேறோர் இடை’. “தனங்கள் தம்பாரத்தால் என் உடலை வருத்தினால் இடை அழிந்து விடுமேயன்றி வேறோர் இடையுண்டோ?” என்பது அறிவால் அறியப்படுதலின், இப்பாடற்கண் இவ்வணி அமைந்தவாறு. (வீ.சோ. 165) ஞான வீரிய மிகுதி உதாத்த அணி - எ-டு : ‘..... .... .... முந்திய பத்துள் முதற்பத் ததனில் வந்ததோர் முதலாம் வனப்புடைப் பாடல் ஓரடி யதனகத் தொடுங்கிய வென்றியின் வரியளி முரல்வகு ளாம்புய மாறா தெரிபவர் தெரிதொறும் தெவிட்டா இனிமை ஓரா யிரத்தின் உரனுடை வென்றி ஆராய் பவரிவ் வகலிடத் தெவரே?’ இதனுள், திருவாய்மொழியின் முதற்பத்தின் முதல் திருவாய் மொழியின் முதலடியில் இறைவனுடைய பரத்துவச் செய்தி முழுதும் கூறப்பட்ட செயல், ஞானவீரிய மிகுதியை உணர்த் திய உதாத்தஅணி வகையாம். (மா. அ. பாடல் 572) த த்ருஷ்டாந்த அலங்காரம் - திட்டாந்த அணியாகிய எடுத்துக்காட்டுவமையணி. அது காண்க. தகுதி அணி - தகுதி வாய்ந்த இரு பொருள்களுக்குரிய தொடர்பைக் கூறுதல் தகுதியணியாம். இது வடநூல்களில் சமாலங்காரம் எனப்படும். இது தகுதிவாய்ந்த இருபொருள்களின் தொடர் பினைக் கூறுதல், காரியத்தை அதன் காரணத்தோடு ஒத்த செய்கையுடையதாகக் குறிப்பிடுதல், விரும்பப்படாததை அடையாமல் விரும்பப்பட்டதனையே அடைதலாகக் கூறுதல் - என மூவகைப்படும். சிலேடையான் வந்த தகுதி யணியும் ஒன்று. அவை வருமாறு: 1. தகுதியுடைய இருபொருள் தொடர்பு கூறும் தகுதியணி எ-டு : ‘இந்தத் தரளவடம் ஏந்திழை! நின் கொங்கைகளில் சந்தமுறச் சேர்தல் தகும். “தலைவியே! இந்த முத்துமாலை உன் கொங்கைகளில் அழகாக அணி செய்வதற்குத் தக்கதாகும்” என்ற கருத் தமைந்த இப்பாடற்கண், கொங்கைகள், முத்துமாலை என்ற தகுதிவாய்ந்த இரு பொருள்களின் தொடர்பு கூறும் தகுதி யணிவகை வந்துள்ளது. 2. காரியத்தைக் காரணத்தோடு ஒத்த செய்கையதாகக் கூறும் தகுதியணி எ-டு : ‘கானம் தனில் உதித்(து)அக் கானம் தனைஅழித்திட்(டு) ஊனம் செய் தீயின் உதித்தபுகை - தானும் எழிலி உருவாகி ஈரப் புனலைப்பெய்(து)அத் தழலை அவித்தல் தகும்’ கானத்தில் எழுந்த தீ அக்கானத்தையே அழிப்பது போலத் தீயினின்று எழுந்த புகை மேகமாகி அத்தீயையே அணைக்கும் என்ற கருத்துடைய இப்பாடற்கண், காரியமாகிய மேகத்தின் செயல் காரணமாகிய தீயின் செயலைப் போல அழித்தல் தொழிலில் ஒத்துள்ளமை கூறப்பட்ட செய்தி இத்தகுதிய ணியின் வகையாம். 3. விரும்பப்பட்டதையே அடையும் தகுதியணி- எ-டு : ‘மாதர்சுவர்க் கத்துநசை வைத்(து)அமர்செய் வேந்து அடைந்தான் மாதர் சுவர்க்கத்தை மாண்டு’. மாதர் சு வர்க்கம் - பெண்களின் இனிய கூட்டம்; மாதர் சுவர்க்கம் - விரும்பத்தக்க மேலுலகம். பெண்கோடல் விருப் பத்தால் போரிட்ட மன்னன் இறந்து மேலுலகம் அடைந் தான் என்று பொருள்படும் இப்பாடற்கண், சிலேடையால் மன்னன் மாதர் சுவர்க்கத்தை விரும்பி மாதர் சுவர்க்கம் அடைந்தான் என விரும்பப்பட்டதை அடைந்ததைக் குறிப் பிடும் தகுதியணிவகை (மடக்காக) அமைந்துள்ளது. 4. சிலேடையான் வந்த தகுதியணி இது தகுதியணி வகைகளுள் விரும்பப்பட்டதை அடையும் வகைக்கண் பொருந்தி வரும். எ-டு : ‘நந்தலுறு தீவினைசெய் யேலென்று நான்மறைதேர் அந்தணன்பல் கால் நன்கு அறைந்தும் அவன் - மைந்தன் நனி நந்தலுறு தீவினையை நாடோறும் செய்துமொரு தந்தை உரைகடவான் தான்’. தந்தையாம் அந்தணன் “தீமை பயக்கும் தீவினையைச் செய்யாதே” என்று மகனுக்குப் பலகாலும் கூறிய உபதேச மொழிகளைப் பின்பற்றி அவன் மகன் தந்தைசொல்லைக் கடவாமல் நாள்தொறும் தீவினை (-அக்கினிகாரியம்) செய்தான் என்ற கருத்துடைய இப்பாடற்கண், விரும்பத் தகாததை அடையாமல் விரும்பப்பட்டதையே அடைத லாகிய தகுதி யணிவகை சிலேடையான் வந்துள்ளது. தீவினை - கொடிய செயல், அங்கி வேட்கும் தொழில். (மு. வீ. பொருளணி 39; ச. 64; குவ. 38) தகுதியின்மையணி - பொருத்தம் இல்லாத ஒருபொருளுக்குப் பொருத்தம் கற்பிப்பது தகுதியின்மை அணியாம். இதனை ‘விஷமாலங் காரம்’ என வடநூல்கள் கூறும். அதன் வகைகள். 1. பொருத்தமில்லாத பொருளுக்குப் பொருத்தம் கற்பித்தல், 2. ஒரு காரணத்தில் பகைக்குணம் உடைய காரியம் பிறத் தலைச் சொல்லுதல், 3. ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கி விரும்பியதை அடையாது விரும்பாததை அடைதல், 4. விரும்பியதையும் விரும்பாததையும் அடைதல், 5. செய்யத் தொடங்கிய காரியத்தில் விரும்பியதை அடையாமை என்பன. அவை முறையே வருமாறு: 1. பொருந்தத் தகாத பொருள்களைப் பொருத்தும் தகுதியின்மையணி எ-டு : ‘பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும் கானலிலே என்பேதை செல்லற்(கு) இசைந்தனளே’ மகட்போக்கிய செவிலித்தாய், “கள்ளியும் தீந்து பொன் நிறத்தையுடைய தீப்பொறி அதனின்றும் தோன்றி வெளி வரும் கொடிய பாலை நிலத்து வழியே, அறிவது அறியாப் பருவத்தாளாகிய என் மென்மையான உடலையுடைய மகள் தன் காதலனுடன் உடன்போதற்கு இசைந்து என்னைப் பிரிந்து சென்றுவிட்டாளே!” என்று வருந்திக் கூறுவதாக அமையும் இப்பாடற்கண், பாலையின் வெம்மை தலைவியின் மென்மை என்ற பொருந்தத் தகாத இருபொருள்கள் பொருத்திக் காணப் பட்டமை இத்தகுதியின்மையணி வகையினைச் சாரும். 2. ஒரு காரணத்தில் பகைக்குணக் காரியம் பிறத்தலைக் கூறும் தகுதியின்மையணி எ-டு : ‘மரு(வு) எறுழ்நம் கோன்கரிய வாள்வெண் புகழைத் தருமால் உலகந் தனில்’ “மிக்க வலிமையுடைய நம் அரசனுடைய குருதிக்கறை படிந்த கறுத்த வாள் அவனுக்கு வெள்ளிய புகழைத் தருகிறது” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், கரிய பொருள் வெள்ளிய பொருளையுண்டாக்குதல், ஒரு காரணத்தின் பகைக்குணக் காரியம் பிறத்தலைக் கூறும் தகுதியின்மை அணிவகை யினைச் சாரும். 3. விரும்பியதை அடையாது விரும்பாததை அடையும் தகுதியின்மை அணி எ-டு : ‘எலிஉணவிற்(று) என்(று)உரகப் பெட்டிகறித்து ஆயிற்(று) ஒலி அரவிற் குத்தான் உணா’. பாம்பு இருக்கும் பெட்டியை உணவுப் பொருளுடையது என்று கருதிக் கடித்த எலி, தான் விரும்பிய உணவினைப் பெறாது தான் விரும்பாததாகிய பாம்பிற்கு உணவாகும் நிலையை அடைந்தது என்ற கருத்துடைய இப்பாடற்கண், விருப்பம் ஈடேறாது விரும்பாததை அடையும் தகுதியின்மை அணிவகை அமைந்துள்ளது. 4. ஒருகாரியம் தொடங்கி விரும்பியதையும் விரும்பாததையும் அடைதலைக் கூறும் தகுதியின்மை அணி எ-டு : ‘பாவை! அலர்க்குடைநீ பற்றுதற்கு வாரிசத்தை வாவியில்வைத் தன்றோ வளர்க்கின்றாய்! - மேவுகலி இவ்வுலகு செய்நன்றி எண்ணாது நின்வதனச் செவ்விஅது வெளவல் செயும்’. தலைவி ஒருத்தி தான் குளத்தில் வளர்த்த தாமரை மலரைக் குடையாகப் பிடித்தால் தனக்கு அஃது அழகுக்கு அழகு செய்யும் என்ற எண்ணத்தில் குடையாகப் பிடித்துக் கொள்ள, அஃது அவள் முகத்தழகைத்தான் கைப்பற்றுகிறது என்ற கருத்துடைய இப்பாடற்கண், மலர்க்குடை பிடித்த லாகிய விரும்பிய செயலும் அது முகத்தொளியைக் கவர்த லாகிய விரும்பாத செயலும் ஒருங்கு அடையும் தகுதி யின்மையணி வகை அமைந்துள்ளது. 5. செய்யத் தொடங்கிய காரியத்தில் விரும்பியதை அடையாமை கூறும் தகுதியின்மையணி எ-டு : ‘இலகு மதிகளங்கம் ஏந்திழையாய்! நீத்தற்(கு) உலகில் உன(து) ஆனனம்ஆம் மற்றும் - திலகம் என்பேர் சேர்களங்க மேபெற்றான், பேதையரைச் சேர்ந்தக்கால் ஆர்களங்கம் ஆகார்? அறை’. சந்திரன் தன் களங்கம் நீங்குதற்குப் பெண்ணின் முகமாகத் தோன்றியும் திலகம் என்ற களங்கத்தைப் பெற்றான் என்ற இப்பாடற் கருத்தில், களங்கம் நீக்கிக் கொள்ளும் விரும்பம் சந்திரனுக்கு ஈடேறாமை கூறியது இத்தகுதியின்மையணி வகையைச் சாரும்.(மு. வீ. அ. பொருளணி. 39; ச. 64; குவ. 38) தகைய என்னும் உவம உருபு - ‘பொருகளிற்று எருத்தின் புலித்தகைப் பாய்த்துள்’ போரிடும் யானையின் கழுத்தின் மீது ஏறும் புலியை ஒத்த பாய்ச்சல் என்று பொருள்படும் இத்தொடரில் தகைய என்பது வினையுவமத்தின்கண் வந்தது. இது வினையு வமத்திற்கே சிறந்தது. (தொ. பொ. 287 பேரா.) தடுமாறு உத்தி அணி - ஒரு காரணத்தினானதொரு காரியமே, அக் காரியத்தின் தோற்றத்திற்குக் காரணமான அதற்கு அடிப்படை என உரை தடுமாறக் கூறுவது. இதனை அன்னியோந்நியம் என வடநூல்கள் கூறும். எ-டு : ‘வையம் திருநா ரணன்தோற்றம் வண்டமிழோ(து) ஐயன் மகிழ்மாற னால்என்னும் - துய்யமகிழ்த் தாமத்தான் தோற்றமும்பொற் றாமரையாள் கேள்வனருள் சேமத்தால் என்னும் தினம்.’ இவ்வுலகில் நாரணனுடைய தோற்றம் நம்மாழ்வாரால் ஏற்பட்டது; நம்மாழ்வாருடைய அவதாரம் திருமாலுடைய கருணையால் ஏற்பட்டது எனக் காரணகாரிய மயக்கம் தடுமாறு உத்தி அணியாம். (மா. அ. 205) தடுமாறு உவமம் - 1) ‘ஐயவணி’ காண்க. (தொ. பொ. 310 பேரா.) 2) எதிர்நிலையணி (தொ. பொ. 310 பேரா.) தடுமாறுவமம் ஆமாறு - ‘இஃது இப்பொருளை ஒக்கும்’ என வரையறுத்தற்கு இயலாமல் சிலவும் பலவுமாகத் தடுமாறி வரும் உவமம் தடுமாறுவமம் ஆம். எ-டு : ‘கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து’ (குறள். 1085) ஈண்டுக் கண்ணுக்கு மூன்று உவமங்கள் கூறப்பட்டன. (தொ. உவம. 37 ச. பால) தடுமாறு உவமை- இஃது அந்நியோந்நிய உவமை எனவும், புகழ்பொருள் உவமை எனவும், இதர விதர உவமை எனவும் கூறப்பெறும். இதனை ஐயநிலை அணி எனச் சந்திரா லோகம் கூறும். அது காண்க. தடை உவமை - இது விலக்குவமை எனவும்படும்; அது காண்க. (வீ. சோ. 156) தடைமொழி அணி - இது விலக்கணி எனவும், முன்னவிலக்கணி எனவும் படும். ‘விலக்கு அணி’ காண்க. (வீ. சோ. 164) தடைமொழி உருவகம் - இது விலக்கு உருவகம் எனவும்படும்; அது காண்க. (வீ. சோ. 161) தண்டியலங்காரம் சாற்றும் பொருளணிகள் 35 - தன்மை, உவமை, உருவகம், தீவகம், பினவருநிலை, முன்ன விலக்கு, வேற்றுப் பொருள் வைப்பு, வேற்றுமை, விபாவனை, ஒட்டு, அதிசயம், தற்குறிப்பேற்றம், ஏது, நுட்பம், இலேசம், நிரல்நிறை, ஆர்வமொழி, சுவை, தன்மேம்பாட்டுரை, பரி யாயம், சமாயிதம், உதாத்தம், அவநுதி, சிலேடை, விசேடம், ஒப்புமைக் கூட்டம், விரோதம், மாறுபடு புகழ்நிலை, புகழாப் புகழ்ச்சி, நிதரிசனம், புணர்நிலை, பரிவருத்தனை, வாழ்த்து, சங்கீரணம், பாவிகம் என இவை. (தண்டி. 28) தத்குணாலங்காரம் - பிறிதின் குணம் பெறல் அணி; அது காண்க. தத்துவாபன உருவகம் - இஃது ‘அவநுதி உருவகம்’ எனவும் படும்; அது காண்க. (வீ. சோ. 160) தத்வாக்யாநோபமா - உண்மை உவமை அணி; அது காண்க. தர்மாnக்ஷபாலங்காரம் - முன்ன விலக்கணி வகைகளுள் ஒன்றாகிய ‘குணவிலக்கணி’; அது காண்க. தர்மீயாnக்ஷபாலங்காரம் - முன்ன விலக்கணி வகைகளுள் ஒன்றாகிய ‘பொருள் விலக்கணி’; அது காண்க. தர்மோபமா - பண்புவமை; அது காண்க. தருமத்தடைமொழி அணி - இது வீரசோழியம் சிறப்பாகக் குறிப்பிடும் முன்னவிலக்கணி வகைகளுள் ஒன்று. ஆதேயமாக இருக்கும் பொருளுக்கு ஆதாரமாய் உள்ள பொருளை விலக்குதல் தருமத் தடைமொழியாம். எ-டு : ‘பைங்குழலும் பாரப் பணைமுலையும் உண்மையால் இங்கிவளுக்(கு) உண்டோ இடை’ “கனமுடைய தழைத்த கூந்தலையும், கனமுடைய பருத்த முலைகளையும் இத்தலைவி உடையாளாதலின், இவளுக்கு இவற்றைத் தாங்கித் தரித்திருக்கக் கூடிய நுட்பமான இடை உண்டா என்பது ஐயமே” என்ற இப்பாடற்கண், ஆதேய மாகிய (-தாங்கப்படுவனவாகிய) குழலையும் கொங்கைகளை யும் தாங்கும் ஆதாரமாகிய (-தாங்குவதாகிய) இடையை விலக்கியது தருமத் தடைமொழியாம். தருமமாவது - ஆதாரம். (வீ. சோ. 164 உரை) தலைதடுமாற்ற உவமை - தொன்று தொட்டு உபமானம் உவமையுருபு பொதுத் தன்மை உபமேயம் என்று வரும் முறையினை மாற்றி உபமேயம் முதலிலும் உபமானம் இடையிலும் உவமையுருபு ஈற்றிலும் பொருந்த அமைக்கும் இது தடுமாறுவமை எனப்படும்; இதரவிதர உவமையின் வேறாவது. எ-டு : மையமருண் கண்காவி வாய்பவளம் தோளிணைவேய் ஐயஇடை நுண்ணூல் அகலல்குல் - பையரவம் கஞ்சத் திருமாது காதலிக்கும் மார்பகத்தான் தஞ்சைத் திருமான் தனக்கு. திருமாலுக்குரிய தஞ்சையிலுள்ள இத்தலைவிக்குக் கண்காவி போலும், வாய் பவளம் போலும், தோளிணை வேய் போலும், இடை நூல் போலும், அல்குல் பாம்பின் படம் போலும் - என உபமேயம் முன்னும், உபமானம் பின்னும், உவமை உருபு. ஈற்றிலும் அமைய வருவது தலைதடுமாற்ற உவமையாம். இப்பாடலில் உவமையுருபு தொக்குள்ளது.(மா. அ.பாடல்.176) தலைப்பெயல் உவமை - ‘எதிர்நிலை அணி’ காண்க. (புறநா. 60 உரை) ‘தலைப்பெயல் மரபின் சார்ந்துவரல் உவமை’ - இரண்டு உபமானங்கள் ஒன்றோடொன்று கூடியே உபமேயத் திற்கு இயைய வரும் உவமை வகை இது. எ-டு : ‘காமருபூந் தாதுதிர்க்கும் காரெருமை - தாமருகே பொன்னுரைகல் போல் தோன்றும்’ இத்தொடரில், பூந்தாது மேலே உதிரப்பெற்ற எருமை என்ற இரண்டன் இணக்கத்திற்கு, பொன்னை உரைத்த கல் என்ற இரண்டன் இணைப்புத் தலைப்பெயல் மரபின் சார்ந்து வந்து உவமையாயிற்று. (வீ. சோ. 159) இதனை ‘இரட்டைக் கிளவி இரட்டை வழித்தே’ (தொ. பொ. 297 பேரா.) என்று தொல்காப்பியம் கூறும். தலைப்பெயல் - ஒன்றோடொன்று சேர்தல். ‘செம்மீன் இமைக்கும் மாசு விசும்பின், உச்சி நின்ற உவவுமதி’யை வெண்குடைக்கு உவமித்தமை தலைப்பெயல் உவமை என்று புறநானூற்றுப் பழைய உரை கூறும். மணிகள் தொங்கவிடப்பட்ட வெண்குடை - உபமானம் விண்மீன்கள் சூழ்ந்த மதி - உபமேயம் (புறநா. 60) தலைமைத் தடைமொழி - தலைமை விலக்கணி, வீரசோழியத்தில் தலைமைத் தடை மொழி எனப்படுகிறது. ‘தலைமை விலக்கு அணி’ காண்க. (வீ. சோ. 163) தலைமை விலக்கு அணி - தலைமை இல்லாத நிலையிலும், தலைமையை அஃதாவது பிறரைப் பணிக்கும் நிலையை மேற்கொண்டு விலக்குதல். எ-டு : ‘பொய்ம்மை நெறிதீர் பொருளும் மிகப்பயக்கும்; எம்முயிர்க்கும் யாதும் இடர்இல்லை; - வெம்மை தீர்ந்(து) ஏக இனிய நெறிஅணிய என்றாலும் போகல் ஒழிவாய் பொருட்கு’ “நல்வாழ்வுதரும் பொருளும் நிறையவே கிடைக்கும்; எங்கள் உயிர்க்கும் நீ பிரிவதால் துன்பம் எதுவும் நேராது. நீ செல்லும் வழியும் இனியதும் அருகிலுள்ளதும் ஆகும். ஆயினும் நீ பொருளுக்காகப் பிரிந்து போதல் வேண்டா” என்று பொருள் படும் தோழி கூற்றாகிய இப்பாடற்கண், தலைவிக்குத் தாழ்ந்த வள் ஆன தோழி தலைமையை மேற்கொண்டு தலைவன் செல்வதைத் தடுத்து விலக்கியதால் இது தலைமை விலக்கு அணி ஆயிற்று. (தண்டி. 45 - 3) தற்குண அணி - இது பிறிதின் குணம் பெறலணி எனவும் வழங்கப் பெறும். இது குண அதிசய அணி போல்வது. குணஅதிசயம் சிறுமையை மிகுத்துக்கூறும். தற்குண அணி மிகுந்ததை மீண்டும் மிகுத்துச் சொல்லும். ‘தத்குணம்’ தமிழில் ‘தற்குணம்’ எனத் தற்பவம் ஆயிற்று. ‘பிறிதின் குணம் பெறலணி’ காண்க. (மா. அ. 134 உரை) தற்குண உவமை - சேர்ந்தாரைத் தன்பண்பினர் ஆக்குதலை உபமானத்துக்குரிய செயலாகக் கூறி, அச்செயலை உபமேயத்தின் மீதும் ஏற்றிச் சொல்லுதல் இவ்வணியாம். அறிவுடையாரைச் சேர்ந்த அறிவிலரும் அறிவு பெற்றுத் திகழ்வது போலச் சந்தனப் பொதும்பரைச் சார்ந்த ஏனைய மரங்களும் மணம் வீசும்- என்ற வாக்கியத்தில், உபமானம் - அறிவுடையார்; அவர் செயல், அறிவற்றவரையும் தம் பண்பாகிய அறிவுடையராக்குதல். உபமேயம் - சந்தனமரம்; அதன் செயல், மணமற்ற மரங்களை யும் தன்மணம் உடையவாக்குதல். இத்தொடரில், தற்குண உவமை என்ற உவமைவகை வந்தமை காண்க. (மா. அ. பாடல் 215) தற்குணம் - இஃது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணி இயலில் வருவதோர் (92) அணி; தன் இயல்பான பண்பினை விடுத்து மற்றொரு பொருளின் பண்பினைப் பெறுவது. ‘தற்குண அணி’ காண்க. (மா. அ. 134) தற்குறிப்பு அணி- இது தண்டியலங்காரம், மாறனலங்காரம், முத்துவீரியம், என்னும் நூல்களில் தற்குறிப்பேற்ற அணி எனவும், வீரசோழி யத்தில் நோக்கு அணி எனவும், தொன்னூல் விளக்கத்தில் ஊகாஞ்சிதம் எனவும் கூறப்படும். இதனை உத்ப்ரேக்ஷhலங் காரம் என வடநூல்கள் கூறும். (வீ. சோ. 167; தண்டி. 56, 57; மா. அ. 140-142 தொ.வி. 346; மு. வீ. பொருளணி. 83) இயங்குதிணைப் பொருள் நிலைத்திணைப் பொருள் என்ற இருவகைப் பொருளின்கண்ணும் இயல்பால் நிகழும் தன்மை விடுத்துக் கவி தான் கற்பனையால் கருதிய ஒன்றை அவற்றின் மேல் ஏற்றிச் சொல்லுதலைக் கூறும் அணி இது. இவ்வணி அன்ன, போல் முதலிய உவமைச் சொற்களும், நினைக்கின் றேன் நிச்சயம் உண்மை துணிவு முதலிய ஏனைய சொற்களும் தனக்கு உருவாகத் தொக்கும் விரிந்தும் வரப்பெறும். சந்திராலோகமும் குவலயானந்தமும் இவ்வணியினை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன:- (1) விரிபுலப் பொருள் தற்குறிப்பு (2) தொகுபுலப் பொருள் தற்குறிப்பு (3) உளபுல ஏதுத் தற்குறிப்பு (4) இல்புல ஏதுத் தற்குறிப்பு (5) உளபுலப் பயன் தற்குறிப்பு (6) இல்புலப் பயன் தற்குறிப்பு என்பன. இவ்வாறும் முறையே பின் வருமாறு: 1. விரிபுலப் பொருள் தற்குறிப்பு அணி கவி தான் ஒருபொருளை மற்றொரு பொருளாகக் கற்பனை செய்யும்போது, கற்பனை செய்யக் கருதும் பொருளை வெளிப்படையாக எடுத்துக் கூறி மற்றொரு பொருளாகக் கற்பனை செய்தலின் இது விரிபுலப் பொருள் தற்குறிப்பு எனப்பட்டது. எ-டு: ‘நேமிப் பெடைத்திரளின் நெஞ்சங் களில்தோன்றும் காமத் தழலில் கதித்தோங்கும்- தூமத்தின் கூட்டம் எனவே குறிக்கின்றேன் மேதினிமேல் நாட்டம் மறைஇருளை நான்.’ இரவில் எங்கும் பரவிய இருளின் கருமை கண்களை மறைக் கும் தன்மையை உட்கொண்டு, அப்பொழுது தத்தம் சேவல் களைப் பிரிந்த சக்கிரவாகப் பெடைகளின் உள்ளத்தில் மூண்ட காமத்தீயினின்றும் தோன்றும் புகைக் கூட்டமாக அதனைக் கற்பனை செய்து கூறுதற்கண், விரிபுலப் பொருள் தற்குறிப்பணி வந்துள்ளது. கற்பனை செய்ய எடுத்துக் கொண்ட பொருள் இருள். அது பாடலில் அதன் தன்மை தோன்ற வெளிப்படையாகக் கூறப்பட்டமை விரிபுலப் பொருளாம். 2. தொகுபுலப் பொருள் தற்குறிப்பு அணி கவி தான் கற்பனை செய்யக்கருதும் பொருளின் தன்மையை விரித்துக் கூறாமல் கற்பனை செய்து அதனை வேறொன் றாகக் கூறுவது. எ-டு: ‘மைம்மா ரியைவானம் பெய்வதுமா னத்தோன்றும் இம்மா நிலத்தின் இருள்.’ இவ்வுலகிலுள்ள இருள், கரிய மைமழையை மேகம் உலகம் முழுதும் பரவுமாறு பெய்வது போலத் தோன்றுகிறது - என்ற கருத்து அமைந்த இப்பாடற்கண், இருளைக் கரிய மைமழை யாகக் கற்பனை செய்தது தற்குறிப்பாம். இருள் என்று வாளா கூறியதன்றி, உலகு எங்கும் பரவி யிருத்தலாகிய அதன் தன்மை கூறப்படாமையின் இது தொகுபுலப் பொருளாம். 3. உளபுல ஏதுத் தற்குறிப்பு அணி கவி தான் செய்யும் கற்பனைக்கு நிகழ்கின்ற காரணம் ஒன்றனை இணைத்துக் கூறுவது. எ-டு: ‘ஏந்திழை! நின்தாள் அவனியின்மேல் மிதித்தலினால் சேந்தனஎன்(று) உள்ளும்என் நெஞ்சு’ “தலைவியே! நின்பாதங்கள் தரையில் தோய்தலால் சிவந்து விட்டன என்று என் உள்ளம் கருதுகிறது” என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், தலைவியின் பாதங்களின் இயற்கையாகிய செந்நிறத்திற்குத் தரையின்மேல் நடத்தலால் சிவந்தன என்ற காரணம் கற்பிக்கப்பட்டுள்ளது. தரையின்மேல் நடத்தலாகிய செயல் தலைவியிடம் நிகழ்வதால் இஃது உளபுல ஏதுத் தற்குறிப்பாயிற்று. 4. இல்புல ஏதுத் தற்குறிப்பு அணி இல்லாத ஒரு காரணத்தைக் கற்பனை செய்து கூறுவது- எ-டு: ‘முகவொளியைப் பாவாய்! பெறற்குமுண்ட கத்தோ(டு) இகலுமதி ஐயம் இலை.’ தலைவியின் முகத்தொளியைத் தாம் பெறுவதற்குத் தாமரை யும் சந்திரனும் தத்தமக்குள் போட்டியிட்டுக் கொண்டு பகைமை பாராட்டுகின்றன என்ற கருத்தமைந்த இப்பாடற் கண், தாமரையும் சந்திரனும் தலைவியின் முகத் தொளியைப் பெற முயலுதலாகிய கற்பனைக் காரணத்தை, தலைவியின் முகத்தொளியைப் பெறத் தாமரைக்கோ மதிக்கோ விருப்பம் இல்லை என்பதை அறிந்துவைத்தும், அஃது உள்ளது போலப் புனைந்துரைத்தலின் இப்பாடலிலுள்ள அணி இல்புல ஏதுத் தற்குறிப்பு ஆயிற்று. 5. உளபுலப் பயன் தற்குறிப்பு அணி இருக்கும் பொருளைக் கொண்டு ஒரு பயனைக் கற்பனை செய்து கூறுவது- எ-டு: ‘குயில்திரளை ஓட்டுமொழிக் கோமளமின் னே! நின் வயிற்றுமடிப் பாகியநல் வண்பொற் - கயிற்றினால் மொட்டுண்ட பார முலையைச் சுமந்திடற்குக் கட்டுண்ட தோநின் இடை?’ “தலைவியே! நின்இடை விட்டுவிலகாமல் கொங்கைகளைச் சுமப்பதற்காக வயிற்று மடிப்பாகிய கயிறுகளால் ஒரே இடத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது” என்ற கருத்தமைந்த இப்பாடலில், இடம் பெயராமல் கொங்கைகளைச் சுமக்கும் இயல்புடைய இடை, வயிற்று மடிப்பாகிய வடங்களால் இடம் பெயராமல் கட்டிவைக்கப்பட்டுள்ளது என்ற கற்பனை யில், வயிற்றுமடிப்பு உள்ள பொருளாதலின், இஃது உளபுலப் பயன் தற்குறிப்பாயிற்று. ஈண்டுப் பயன் - ஆதாரம் இடம் பெயராமல் கொங்கைகளைச் சுமத்தல். 6. இல்புலப் பயன் தற்குறிப்பு அணி இஃது இல்லாத ஒன்றனைப் பயனாகக் கற்பனை செய்வது. எ-டு: ‘ஒண்டொடி!கேள் உன்பதசா யுச்சியத்தை உள்ளிடற்கே முண்டகமென் போது முதுநிலத்தில் - தண்துறைநீர் நின்றொரு தாளின் நெடிது தவம்புரியும் என்றறைதற் (கு) ஐயம் இலை! “தலைவியே! உன் பாதங்களின் தன்மையை முழுமையாகப் பெறுதற்குத் தாமரை தண்ணீரில் ஒற்றைக்காலில் நின்று நெடுங்காலம் தவம் புரிகிறது” என்ற கருத்தமைந்த இப்பாட லில், தாமரை ஒரே தண்டினொடு நீரில் உறையும் இயற்கை நிகழ்ச்சிக்கு, அதற்கு இல்லாத செயலாகிய தவம்செய்தலைக் கற்பனை செய்து அது தலைவியின் பாதங்களின் தன்மையை முழுமையாகப் பெற ஒற்றைக் காலூன்றித் தவம் செய்வதாகக் கூறுதற்கண், இல்புலப்பயன் தற்குறிப்பணி வந்துள்ளது. தற்குறிப் பேற்ற அணி - இயங்குதிணையும் நிலைத்திணையும் ஆகிய இருவகைப் பொருள்களிலும், இயல்பாக நிகழும் தன்மையை ஒழிய நீக்கிக் கவி தான் கருதிய குறிப்பை ஏற்றிச் சொல்வது. (குறிப்பு - கற்பனை.) இந்த அணியில் அன்ன, போல் என்பன போன்ற உவமச் சொல்லையிட்டுக் குறிப்பு ஏற்றிக் கூறுதலும் அமையும். இஃது இயங்குதிணைத் தற்குறிப்பேற்றம், நிலைத்திணைத் தற்குறிப்பேற்றம் என இருவகைத்து. அவ்வத் தலைப்புக் காண்க. (தண்டி. 56) தற்குறிப்பேற்ற அணிக்குப் புறனடை - உலகில் ஒரு பொருளின்கண் இயற்கையின் நிகழும் செய் திக்குக் கவி தான் ஒரு கற்பனையை ஏற்றி உரைக்கும் தற்குறிப் பேற்ற அணி, போல- மான - முதலிய உவமஉருபுகளொடு புணர்ந்து வருதலும் உரித்து என்பது. எ-டு:‘மாயன் குருகூர் வளர்மறையோர் விண்புரப்பான் துய அழல்வளர்ப்பத் தோன்றுபுகை - நேய வகைத்தோட்டு வார்குழலாய்! வாசவனை விண்போய்ப் புகைத்தோட்டு கின்றதுபோன்ம் போன்ம்.’ “தலைவி! குருகூரில் மறையோர் தேவர்களைப் பாதுகாத் தற்கு அக்கினியில் ஆகுதிகளை வழங்க, அத்தீயினின்று எழுந்த புகை வானளாவி இந்திரனை ஓட்ட முயல்வது போலக் காணப்படுகிறது” என இத்தற்குறிப்பேற்றத்தின்கண், போலும் (-போன்ம்) என்ற உவம உருபு வந்துள்ளது. இங்ஙனம் உவம உருபு புணர்தல் இவ்வணிக்குப் புறனடை யாக அமைவதாம். (மா. அ. 142) தற்குறிப்பேற்ற அணியின் மறுபெயர்கள் - 1. நோக்கு - வீ.சோ. 167; 2. ஊகாஞ்சிதம் - தொ. வி. 346; 3. தற்குறிப்பு அணி - ச.26; குவ.12 தற்குறிப்பேற்ற அணியின் வகைகள் - பெயர் பொருள் (இயங்குதிணைத்) தற்குறிப்பேற்றம், பெய ராப் பொருள் (நிலைப்பொருள்) தற்குறிப்பேற்றம் உவமச் சொல் புணரும் தற்குறிப்பேற்றம் என்பன. (தண்டி. 56, 57) தற்குறிப்பேற்ற உவமை அணி - உவம வகையுள் ஒன்று; ஒரு பொருளினது இயற்கை நிகழ்ச்சி களைக் கவி தன் கற்பனையால் பிறிதொன்றன் இயற்கை நிகழ்ச்சிகளோடு ஒப்பிடுவது. எ-டு: ‘உண்ணீர்மை தாங்கி உயர்ந்த நெறியொழுகி வெண்ணீர்மை நீங்கி விளங்குமால் - தண்ணீர்த் தரம்போலும் எண்ணத் தகுங்கடம்பை மாறன் கரம்போல் கொடைபொழிவான் கார்.’ நீர் போன்ற இனிய சாயலையுடைய கடம்பைநகர் மன்ன னாகிய மாறனுடைய கைகளைப் போலக் கொடை பொழியும் கார்மேகம், தானம் கொடுத்தலால் நீரின் ஈரம் புலராமலிருக்கும் அவன் கைபோலவே தானும் ஈரம் புலராமலிருக்கும்; அவன் கை கொடுக்கும் கையாதலால் எப்பொழுதும் மேலாகவே இருப்பது போலத் தானும் உயர வானத்தில் இருக்கும்; மாறன் கைகள் இயற்கைநிறம் மாறிக் கொடையால் செந்நிறம் பெற்றிருப்பது போலத் தானும் வெண்மை மாறிக் கருமை நிறம் கொண்டு காணப்படும் - என்ற இப்பாடலில், சிலேடை யால் மாறன் கைகளுடன் கார்மேகத்திற்கு ஒப்புமை கூறப்படுவ துடன், உணர்ச்சியாதும் இல்லா மேகத்திற்கு உண்ணீர்மை தாங்குதல் - உயர்ந்த நெறி ஒழுகுதல் - வெண்ணீர்மை இன்றி விளங்குதல் - என்பன தற்குறிப்பேற்ற மாகவும் அமைந்து உள்ளமையால் இது தற்குறிப்பேற்ற உவமையாயிற்று. (தண்டி. 33-6) தற்பவஅணி - யாதொரு காரணத்தால் யாதொன்று இறக்கப்பட்டது அது மீட்டும் அப்பொருள் காரணமாகப் பிறந்ததெனக் கூறும் அணி. (மா. அ. 202) எ-டு : போர்பட்டவேற்கண் - “தலைவியின் பொதுநோக்கால் நீங்கிய என் நிறை அவர் சிறப்புநோக்கால் என்னிடம் மீண்டு வந்தது” என்ற தலைவன் கூற்றில் இவ்வணி வந்தவாறு. தன்குணம் மிகை அணி - ஒரு பொருளின் இயற்கைப் பண்பு மற்றொன்றின் சார்பி னால் மேம்பட்டுத் தோன்றுவதாகக் கூறும் அணி. இதனை வடநூலார் அநுகுணாலங்காரம் என்ப. எ-டு: ‘வார்செவிசேர் காவிமலர் மான்அனையாய்! நின்கடைக்கண் பார்வையினால் மிக்ககரும் பண்பு’ “தலைவியின் கடைக்கண்கள் காதளவும் நீண்டுள; அவள் காதில் அணிந்துள்ள கருநிறக் காவிமலர் அவள் கடைக்கண் பார்வையினால் கருநிறம் பண்டை நிலையினும் மிகுந்து காணப்படுகிறது” என்று பொருள்படும் இப்பாடற்கண் இவ்வணி அமைந்துள்ளது. (ச. 104, குவ. 78) தன் மேம்பாட்டுரை அணி - ஒருவன் தன்னைத் தானே மேம்படுத்தி உரைப்பது. இஃது அகத்திணைப் பொருள் பற்றி வருமிடத்தே தலைவன் தன்னைத் தானே புகழ்தல் என்றும், புறத்திணைப்பொருள் பற்றி வருமிடத்தே ‘நெடுமொழி கூறல்’ என்றும் பெயர் பெறும். இவ்வணி அமையுமிடத்தே இது தற்புகழ்ச்சி என்ற குற்றம் ஆகாது. எ-டு: “எஞ்சினார் இல்லை எனக்கெதிரா; இன்னுயிர்கொண்(டு) அஞ்சினார் அஞ்சாது போயகல்க - வெஞ்சமத்துப் பேரா தவர் ஆகத்(து) அன்றிப் பிறர்முதுகில் சாராஎன் கையில் சரம்’ “எனக்கெதிராகப் போரிட்டு உயிர்பிழைத்து மீண்டவர் யாரும் இல்லை. என்னைக் கண்டு அஞ்சுபவர்கள் தமது இனிய உயிரைப் பாதுகாத்துக்கொண்டு, நான் தாக்கு வேனோ என்று அஞ்சாது அகன்று செல்க. கொடிய போரில் இடம் பெயராது எதிர்த்து நிற்பவர்தம் மார்பில் அன்றிப் புறங்காட்டி ஓடுகிறவர்கள்தம் மார்பில் என் அம்புகள் பாயமாட்டா” என்று வீரனொருவன் போர்க்களத்தில் கூறிய இவ்வீரவுரை, புறப்பொருள் பற்றி வந்தவாறு- (தண்டி. 71) இது நெடுமொழி அணி எனவும் பெயர் பெறும். (மா. அ. 212) தன் மேம்பாட்டுரையின் மறுபெயர்கள் - ஊக்கம் - வீ. சோ. 154; நெடுமொழி - மா. அ. 212 தன்மை அணி - ஒன்றன் இயல்பு உள்ளது உள்ளவாறே விளங்கும் வகையில் சொற்களை அமைத்துச் செய்யுள் இயற்றுதல். அது பொருள் தன்மையணி, குணத்தன்மையணி, சாதித்தன்மையணி, தொழில் தன்மை அணி என நான்கு வகைப்படும். தன்மை நவிற்சி என்பதும் அது. (தண்டி. 29, 30) பொருள் தன்மையை மாறனலங்காரம் பலவகையாகப் பகுக்கும். (89) தன்மை அணியின் மறுபெயர் - தன்மை நவிற்சி அணி - ச.119 தன்மை அணியின் வகைகள் - 1. பொருள் தன்மை அணி, 2. குணத்தன்மை அணி, 3. சாதித்தன்மை அணி, 4. தொழில் தன்மை அணி, 5. சினைத் தன்மை அணி என்பன. (மா. அ. 88-91) இனி, பொருள் தன்மை அணி, உயர்திணைப் பொருள் - அஃறிணையில் உயிருடைய பொருள் - உயிரிலாப் பொருள் என்றும் பகுக்கப்படும். மக்கட்டன்மையணி ஆண் தன்மை எனவும், பெண் தன்மை எனவும் பகுக்கப்படும். அவற்றைத் தனித்தனித் தலைப்புக்களுள் காண்க. தன்மை அணியின் ஆறுவகை - பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என்பன. (சாமி. 180) தன்மை நவிற்சி அணி - ஒரு பொருளின் பண்பு தொழில் முதலியவற்றைக் கற்பனை கலவாது உள்ளவாறு கூறும் அணி தன்மை நவிற்சியாம். இதனைச் ‘சுபாவோக்தி’ அலங்காரம் என வடநூலார் கூறுப. எ-டு: ‘நீல மணிமிடற்றன், நீண்ட சடைமுடியன், நூலணிந்த மார்பன், நுதல்விழியன் - தோல்உடையன், கைம்மான் மறியன், கனல் மழுவன், கச்சாலை எம்மான், இமையோர்க்(கு) இறை.’ (தண்டி. மேற்.) திருக்கச்சாலை என்ற பதியில் உவந்தெழுந்தருளியிருக்கும் சிவ பெருமான் தேவர்களுக்குத் தலைவன்;நீலகண்டன்;நீள் சடையன்;மார்பில் பூணூல் அணிந்தவன்;நெற்றிக் கண்ணன்; புலித்தோலை யுடுத்து யானைத்தோலைப் போர்த்திக் கொண்டவன்; மான்குட்டியையும் தீயையும் மழுவையும் கைகளில் ஏந்தியவன் என்று பொருள்படும் இப்பாடற்கண், சிவபெருமானுடைய பண்பும் தொழிலும் உள்ளவாறு கூறப்படுதற்கண் இவ்வணி வந்துள்ளது. இவ்வணி தண்டியலங்காரம் முதலியவற்றில் பலவகைக ளாகப் பகுக்கப்பட்டுள்ளது. (தண்டி. 30; ச. 119; குவ. 93) தன்னியல் தருமத்துதி - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் வருவது (101); ஒருபொருளின் பண்பினைப் பாராட்டுவது. எ-டு : சீதையைச் சிறைவைத்த இராவணனை முதல் நாட் போரில் நிராயுத பாணியாக்கி, “இன்று போய் நாளைவா” (கம்பரா. 7271) என்று இராமன் விடுத்த கருணையை அறநிலையோ மறநிலையோ என்றாற் போலப் புகழ்தல் போல்வன. தனிநிலைச் செய்யுள் - செய்யுளின் மூவகையுள் ஒன்று. (ஏனையன தொடர்நிலைச் செய்யுளும் தனிப்பாதச் செய்யுளும் ஆம்). இரண்டு முதலா கிய பல அடிகளால் நடந்து தன்னகத்தேயே வினைமுடிபு கொள்ளும் தனிச்செய்யுள்; சொல்லாலும் பொருளாலும் தொடர்ந்து பல பாடல்களாக நடத்தலையுடைய தொடர் நிலைச் செய்யுட்கு மறுதலையாவது; முத்தகம் எனவும்படும். (வீ. சோ. 181 உரை) திட்டாந்த அணி - ஒரு பொருளுக்குள்ள நன்மை தீமைக் கூறுபாடுகளைச் செய்யுளில் முதற்கண் குறிப்பிட்டு, அச்செய்தியை நன்கு தெளிதற்கு எடுத்துக்காட்டாக, அது போன்ற பொருள் மற்றொன்றனை அடுத்து அழகு பெறக் கூறுவது. ‘திட்டாந்த வலங்காரம்’- என்று மா. அ. பெயர் சுட்டும். (இஃது எடுத்துக் காட்டுவமையுள் அடங்கும்) எ-டு : ‘ஆதித் திருமால் அடியார் நிரப்பிடும்பை வாதிக் கினும்வளர்ப்பார் வண்மையே - பாதிப் பிறையா கியும்மதியம் பேரிருள்சீத் தற்குக் குறையா குறையா குணம்’ திருமாலடியார் வறுமை வந்தவிடத்தும் பிறருக்கு உதவுவர் என்ற கருத்தை விளக்க, முழுமதியம் பிறையாகிய நிலையிலும் இருளைப் போக்குகிறது என்ற எடுத்துக்காட்டினைத் தந்தது இவ்வணியாம். (மா. அ. பாடல் 312) இதன்கண் இடையே உவமஉருபு மறைந்து இருத்தலின், இதனை எடுத்துக்காட்டுவமை என்ற உவமை வகை என்னலாம். திட்டாந்த அணிக்கும் நிதரிசன அணிக்கும் இடையே வேறுபாடு - திட்டாந்தமாவது கவி ஒரு பொருளுக்குரிய நன்மை தீமைக் கூறுபாடுகளை முதலில் குறிப்பிட்டு, அச்செய்தியை நன்கு தெளிவதற்கு எடுத்துக்காட்டாக மற்றொரு பொருளை உவமைவாய்பாடு தோன்றாது மறைந்திருக்குமாறு கூறுதல்.. நிதரிசனமாவது ஒரு பொருளின் பண்பு தொழில் பயன் முதலிய கூறுபாடுகளை மற்றொரு பொருள் காட்டுவதாகப் புலப்படுத்திப் பிறவினையால் கூறுதலாம். இது தம்முள் வேற்றுமையாம். (மா. அ. 139 உரை) திரிபு அணி (1) - உபமானமாகிய பொருள் அப்பொழுது நிகழ்கின்ற செயலுக்குப் பயன்படுதற்காக உபமேயத்தின் உருவத்தைக் கொண்டு திரிதலாகக் குறிப்பிடுவது திரிபு அணியாம். இதனைப் பரிணாமாலங்காரம் என்று வடநூலார் கூறுப. எ-டு : செய்ய அடிக்கமலத் தால்அத் திருந்திழையாள் பைய நடந்தனள் பார். சிவந்த பாதத் தாமரைகளால் அப்பெண் தரையில் மெல்ல நடந்தாள் என்று பொருள்படும் இப்பாடலில், தாமரை யாகிய உபமானப்பொருள் நடத்தலாகிய செயலுக்குப் பயன் படுதற்காக உபமேயமாகிய பாதத்தின் உருவத்தைக் கொண்டு திரிபுற்றதாகக் கூறுவதன்கண் இவ்வணி அமைந்துள்ளது. (ச. 14; குவ. 6) திரிபு அதிசய அணி - ஒரு பொருளை அதனோடு ஒத்த வேறு பொருளோ எனத் திரித்துக் காணும் அளவுக்கு உயர்த்திக் கூறும் அதிசய அணிவகை. எ-டு : ‘திங்கள் சொரிநிலவு சேர்வெள்ளி வள்ளத்துப் பைங்கிள்ளை பாலென்று வாய்மடுக்கும் - ஆங்(கு)அயலே காந்தர் முயக்கொழிவார் கைவறிதே நீட்டுவரால் ஏந்திழையார் பூந்துகிலாம் என்று.’ சந்திரன் சொரிந்த நிலவு வெள்ளிக்கிண்ணத்தே வீச, பைங்கிளி அதனைப் பால்என நினைத்துப் பருக முயல்கிறது. காதலரின் தழுவுதலினின்று நீங்கிய பெண்டிர் அந்த வெண் ணிலவை மெல்லிய பட்டு என நினைத்து எடுத்து உடுக்கக் கையை நீட்டுவர் - என்ற பொருளமைந்த இப்பாடற்கண், நிலவைக் கிளியும் மாதரும் வேறாகத் திரிபு உணர்வுடன் முறையே பருகவும் உடுக்கவும் முயன்றதாக நிலவின் உயர்வு கூறப்படுவதால், இது திரிபு அதிசய அணி ஆயிற்று. (தண்டி. 55 - 5) தின்மையைக் காட்டி நன்மையை நீக்கல் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (90) வருவதோர் அணி. ஒரு பொருளின் பல நற்பண்புகளும் ஒரு தீக்குணத்தினால் நீக்கப்படும் என்பது. எ-டு : ‘உளப்பரும் பிணிப்பறா உலோபம் ஒன்றுமே அளப்பருங் குணங்களை அழிக்கும்’ (கம்பரா. 363) என்றாற் போல்வன. தீபக அணியின் மறுபெயர் - விளக்கு அணி. (ச. 37; குவ. 15) தீபக வகையால் சிறப்புக் கூறல் - தீபக வகையால் சிறப்புக் கூறல் என்பது குணம் தொழில் சாதி பொருள் என்னும் நான்கனுள் ஒன்றைக் குறித்த ஒரு சொல் செய்யுளிடத்து முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தினுள் ஓரிடத்தாகி, ஆதியில் நின்றது முன்னும் பின்னும் ஓடவும், இறுதி நின்றது இடையும் முதலும் ஓடவும் கவின் பெறக் கூறுதலாம். (மா. அ. 25 உரை) இதனைத் தந்திரஉத்தியுள் ஒன்றாக மாறனலங்காரம் கூறும். தீபகாலங்காரம் - தமிழில் தீவகஅணி எனவும், விளக்கணி எனவும் வழங்கப் பெறும். ‘தீவகஅணி’ காண்க. தீமை பற்றிய நிதரிசன அணி - ஓரிடத்து நிகழும் ஒரு செய்தி உலகத்தாருக்குப் பொதுவான நன்மைச்செய்தியையோ தீமைச்செய்தியையோ விளக்கும் நிதரிசன அணியில் தீமையினைப் புலப்படுத்தும் பகுதி. எ-டு : ‘பெரியோ ருழையும் பிழைசிறி துண்டாயின் இருநிலத்துள் யாரும் அறிதல் - தெரிவிக்கும் தேக்கும் கடல்உலகில் யாவர்க்கும் தெள்ளமுதம் வாக்கும் மதிமேல் மறு.’ கடல்சூழ்ந்த உலகத்திலுள்ள அனைவர்க்கும் தெளிவான அமுதினைப் பொழியும் சந்திரனிடத்துள்ள களங்கம், பெரியோரிடத்தும் ஏதோ குற்றம் இருக்குமாயின் அஃது உலகினர் எல்லாராலும் அறியப்படும் என்பதை விளக்கிக் காட்டுகிறது என்று பொருள்படும் இப்பாடற்கண், மதியி லுள்ள மறு என்பதன்கண் சிறுபிழையினையும் உலகறிய வெளிப்படுத்தலாகிய தீமை பற்றிய நிதரிசன அணி வந்துள் ளமை தெளியப்படும். (தண்டி. 85 - 2) தீவக அணி - வடிவும் நிறமும் போன்ற குணங்களைக் குறிக்கும் சொல்லும், தொழிலைக் குறிக்கும் சொல்லும், பொதுத்தன்மை பற்றி வந்த சொல்லும், ஒரு பொருளைக் குறிக்கும் சொல்லும் என்னும் இவை செய்யுளில் ஓரிடத்தில் நின்று, பல இடங்களி லும் இணைந்து பொருள் தருமாறு அமைத்தல் இந்த அணியின் இலக்கணம். அவ்வாறு அச்சொற்கள் செய்யுளின் முதல் இடை கடை என்னும் மூன்றிடங்களிலும் நிற்கும். ஆகவே அந்நால்வகைச் சொற்களும் இம்மூவிடத்திலும் நின்று பொருள்பயக்கும் வகையால் பன்னிரண்டு வகைத் தீவக அணிகள் உள. அவற்றின் இலக்கணத்தையும் எடுத்துக்காட் டையும் தனித்தனித் தலைப்பிற் காண்க. ஓரிடத்தில் வைக்கப்பட்ட விளக்குப் பல இடங்களுக்கும் ஒளி வீசி அவ்விடங்களின் இருள் அகற்றுமாறு போல, செய்யுளுள் ஓரிடத்து நிற்கும் சொல் முதல் இடை கடை எனப் பல இடங்களிலும் சென்று இயைந்து பொருள் பயக்கும் காரணம் பற்றி இவ்வணி இப்பெயர்த் தாயிற்று. தீவகம், தீபகம், விளக்கு என இவை ஒரு பொருளவாம். (தண்டி. 40) தீவக அணியின் வகைகள் - தொழில் முதல் நிலைத் தீவகம், குண முதல்நிலைத் தீவகம், சாதி முதல்நிலைத் தீவகம், பொருள் முதல்நிலைத் தீவகம், தொழில் இடை நிலைத் தீவகம், குண இடை நிலைத் தீவகம், சாதி இடை நிலைத் தீவகம், பொருள் இடை நிலைத் தீவகம், தொழில் கடை நிலைத் தீவகம், குணக் கடை நிலைத் தீவகம், சாதிக் கடை நிலைத் தீவகம், பொருள் கடை நிலைத் தீவகம், (தண்டி. 40) மாலா தீபகம், விருத்த தீபகம், ஒருபொருள் தீபகம், சிலேடா தீபகம், உபமான தீபகம் உருவக தீபகம் என்பன. (தண்டி. 41; மா. அ. 161) தீவக அணி வேற்று அணிகளுடன் வருமாறு - இது தீவக அணிக்குக் கூறப்பட்ட ஓர் ஒழிபு. தீவக அணி (1) மாலைபோல் தொடுக்கும் வகையாகவும், (2) விருத்தமான அஃதாவது முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டும், (3) ஒரு பொருள் குறிக்கும் சொற்களைப் பெற்றும் வரும்; மேலும் (4) சிலேடை அணியுடனும், (5) உவமை அணியுடனும், (6) உருவக அணியுடனும் சேர்ந்தும் வரும். (தண்டி. 41 உரை) துணிவு அதிசய அணி - இஃது அதிசய அணிவகைகளுள் ஒன்று; ஐயமுற்றுப் பின் துணிவதாக ஒரு பொருளின் உயர்வை உலகமரபு கடவாமல் உரைப்பது. எ-டு : ‘பொங்கிச் செறிந்து புடைதிரண்டு மீதிரண்டு செங்கலசக் கொங்கை திகழுமால் - எம் கோமான் தில்லையே அன்னாள் திகழ்அல்குல் தேரின்மேல் இல்லையோ உண்டே இடை.’ “பருத்துச் செறிந்து இருபுறமும் திரண்டு சிவந்து இரண்டு கலசங்களைப் போன்ற கொங்கைகள் மேலே திகழ்வதாலும், அல்குலாகிய தேர் கீழே இருத்தலானும், இவளுக்கு இடை உண்டோ இல்லையோ என்று ஐயப்படல் வேண்டா; இருக்கவே செய்கிறது” என்ற பொருளுடைய இப்பாடற்கண், நுண்மையால் ‘இடை இல்லையோ’ என ஐயம் வேண்டா, மேலே கலசங்களும் கீழே தேரும் இருப்பதால் இடை உண்டு எனத் துணிந்தமை கூறப்படுவதால். இது துணிவு அதிசய அணி ஆயிற்று. (உண்டே : ஏகாரம் தேற்றம்.)(தண்டி. 55 - 5) துணிவு உவமை - இது தேற்ற உவமை எனவும் கூறப்பெறும். ‘தேற்ற உவமை அணி’ காண்க. (வீ. சோ. 156) துணை - ஒப்பு. ‘துணையற அறுத்துத் தூங்க நாற்றி’ (முருகு. 237) தொ. பொ. 286ஆம் நூற்பாவில், ‘பிறவும்’ என்றதனாற் கொள்ளப் பட்ட ஓர் உவமஉருபு. (பேரா.) துணை செயல் விலக்கு - இது முன்னவிலக்கணி வகைகளுள் ஒன்று; துணைநின்று ஆலோசனை கூறுவது போலத் தடுத்து விலக்கல். எ-டு : ‘விளைபொருள்மேல் அண்ணல் விரும்பினையேல் ஈண்(டு)எம் கிளைஅழுகை கேட்பதற்கு முன்னம் - விளைதேன். புடையூறு பூந்தார்ப் புனைகழலோய்! போக்கிற்(கு) இடையூறு வாராமல் ஏகு.’ “தலைவனே! பொருள் தேடத் தலைவியைப் பிரிந்து போக நினைத்தால், எங்கள் உறவினருடைய அழுகைக் குரல் வெளியே கேட்பதற்குள், நீ போவதற்கு அஃது இடையூறு ஆகாமல் விரைந்து செல்வாய்!” என்று பொருள்படும் தோழி கூற்றாக அமைந்த இப்பாடற்கண், “விரைந்து ஏகு” என்று தலைவனுக்குத் துணைசெய்யும் வகையில் பேசும் தோழி, “நின் பிரிவால் தலைவி இறந்துபடுவாள்” என்ற செய்தி தோன்றவும் கூறி அவள் செலவைத் தடுத்து விலக்கியமை யால், இது துணைசெயல் விலக்கு ஆயிற்று. (தண்டி. 45 - 5) துணைப்பேறு அணி - இஃது எளிதின் முடியும் அணி எனவும், சமாகித அணி எனவும் கூறப்பெறும். ‘சமாகித அணி’ காண்க. (வீ. சோ. 154) துதிநிந்தை - புகழ்வதின் இகழ்தல் அணியை மா. அ. துதிநிந்தை என்னும். (229) துல்லிய யோக்கியதை - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலுள் (34 - 39) வருவதோர் அணி. 1. இருவகைப் பொருளில் ஒரு காலத்தில் செயல் ஒத்து வருவது. 2. இரு பொருள்களின் குணங்களை ஒப்பிட்டு அவற்றுள் ஒன்றன் குணத்தை உயர்த்திக் கூறுவது. 3. பகையிடத்தும் உறவிடத்தும் சமமான எண்ணம் கொள்வது. 4. உலகில் வழங்கும் மேம்பட்ட பொருள் தான் ஒன்றே உளது என்று கூறுவது. 5. உபமானத்தில் ஒரு குறை காட்டி அதனை இல்லாத உபமேயம் உயர்ந்தது என்று காரணம் காட்டிக் கூறுவது. இவை ஐந்தும் முறையே 1. ஒப்புமைக் கூட்ட அணி, 2. விலக்கியல் வேற்றுமை, 3. நிந்தையுவமை, 4. விரூபகம், 5. தேற்ற உவமை என இவற்றுள் அடங்கும். அவற்றைத் தனித்தனியே காண்க. துல்லிய யோகிதை - ஒப்புமைக் கூட்டம். - காண்க. (தண்டி. 78) (டு) துன்ப அணி - ஒரு பொருளைப் பெறுவதற்காகச் செய்யும் முயற்சியின் பயனாக அதன் பகைப்பொருள் கிட்டுதல் இவ்வணி. இதனை வடநூலார் ‘விஷாதநாலங்காரம்’ என்ப. எ-டு : ‘சோரும் சுடர்விளக்கைத் தூண்டு கையில்அவிந்த(து) ஆரும்இடர் கூர அகத்து’. அணைய இருந்த விளக்கின் திரியினை ஒளிவிடச் செய்வ தற்காகத் தூண்டிய அளவில், அறையிலுள்ளார்க்கு இரு ளால் தடுமாற்றம் உண்டாகுமாறு அஃது அணைந்தது என்ற பொருளமைந்த இப்பாடற்கண், ஒளியை மிகச் செய்த முயற்சியில் ஒளியே அவிந்துபோனது என்ற செய்தியில் இவ்வணி வந்துள்ளது. (மு. வீ. பொரு. 52; ச. 94; குவ. 68) துன்பத்தைத் திரட்டிக் கூறிய சமுச்சயம் - துன்பம் செய்வதை ஒன்றாகக் கூறாது துன்பம் செய்வன பலவற்றையும் ஒருசேர ஒருபாடற்கண் திரட்டிக் கூறும் அணி. எ-டு : ‘கடிது மலர்ப்பாணம்; கடிததனின் தென்றல்; கொடிதுமதி; வேயும் கொடிதால்; - படிதழைக்கத் தோற்றியபா மாறன் துடரியில்மான் இன்னுயிரைப் போற்றுவதார்? மன்னா! புகல்.’ (மா. அ. பா. 563) ‘இப்பாடற்கண், “மன்மதன் அம்புகளாகிய பூக்கள் கொடி யன; அவற்றினும் தென்றல் கொடிது; அதனினும் மதியம் கொடிது; அதனினும் ஆயனுடைய வேய்ங்குழலோசை கொடிது” என்று கணவனைப் பிரிந்து தனித்திருக்கும் மனைவி வருந்திக் கூறுதற்கண், கொடியது ஒன்றனை மாத் திரம் கூறாமல் பலவற்றையும் அடுக்கிக் கூறுவது சமுச்சய அணி வகையாம். (மா. அ. 237) தூரகாரிய ஏது அணி - காரணம் நிகழ்ந்த இடத்தைவிட்டு நெடுந்தூரத்தே வேறு எங்கோ காரியம் நிகழ்வதாகக் கூறுதல் இதன் இலக்கணம். எ-டு: ‘வேறொரு மாதர்மேல் வேந்தன் நகநுதியால் ஊறுதர இம்மா(து) உயிர்வாடும் - வேறே இருவரே, மெய்வடிவின் ஏந்திழை நல்லார்; ஒருவரே தம்மில் உயிர்.’ “தலைவன் வேறு ஒரு நங்கையின் நகில்களில் கலவி விசேடத்தால் நகக்குறியைப் பதிக்க, இத்தலைவி அதனைப் பொறுக்காமல் வருந்தி உயிர்விடுகிறாள். இப்பெண்கள் இருவரும் வடிவில் வெவ்வேறாக இருந்தாலும் இருவர்க்கும் உயிர் ஒன்றாய் இருக்கிறது போலும்!” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், நகக்குறி நிகழுமிடம் வேறு, அதனால் துயரு றும் இடம் வேறு என்று கூறுவதால் இவ்வணி பயின்றமை காண்க. (தண்டி. 63 - 1) இவ்வணி மாறன் அலங்காரத்தில் அசங்கதி அணி (மா. அ. 203, 204) எனத் தனித்ததோர் அணியாகக் கூறப்பட்டுள்ளது. முத்துவீரியம், சந்திராலோகம், குவலயானந்தம் என்பன இதனைத் தொடர்பின்மை அணி எனத் தனி அணியாகக் கூறும். (மு. வீ. பொருளணி. 38; ச. 63; குவ. 37) தெரிதரு தேற்ற உவமை - ‘இவ்வியல் அதனால் இதுவன்று இதுஎனச், செவ்விதின் தெரிந்து’ரைக்கும் உவமை வகை; தேற்ற உவமை எனவும், துணிவுவமை எனவும் கூறப்படும். ‘தேற்ற உவமை’ காண்க. (தண்டி. 32 - 12) தெரிவில் புகழ்ச்சி அணி - இது மாறுபடு புகழ்நிலை எனவும், புரிவில் புகழ்ச்சி எனவும், தெளிவில் புகழ்ச்சி எனவும் கூறப்படும். ‘மாறுபடு புகழ்நிலை’ காண்க. (வீ. சோ. 174) தெளிவு இருவகைத்தாதல் - கவியாற் கருதப்பட்ட பொருள் கேட்போர்க்கு உளம் கொள விளங்கித் தோன்றுவதாகிய குணம். வடநூலார் ‘பிரசாதம்’ என்ப. எ-டு : ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்’. (குறள். 319) இவ்வாறு திரிசொல் பயிலாது கருத்து வெளிப்படப் புலப்படும் தெளிவினை வைதருப்ப நெறியார் விரும்புவர். விசேடமான பொருளைப் புலப்படுத்தும் சொல்லாற்றலை உடையதாக இருத்தலே தெளிவு எனக் கௌட நெறியார் சொல்லுமாறு: எ-டு : ‘பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.’ (குறள். 297) இக் குறள் இயற்சொல் பயில வரினும் அடுக்குத் தொடர் இரண்டனுள் முன்னையது இடைவிடாமைப் பொருட்டு, பின்னது துணிவுப் பொருட்டு என்று பொருள் கொள்ள நயம்பட வருமாறு காண்க. (தண்டி. 17) பொருள் தெளிவாவது தெளிவுபட்ட சொற்களிடையே தெரியாத சொல்லுக்குப் பொருள் தெளிவு தோன்ற வருவது. எ-டு : ‘குளம்பின் மடிநாகர் புண்ணீரின் செம்மை வளம்திகழும் மால்கடல்வாய் நின்று - விளங்கொளிசேர் மாலால் முனிந்தெடுக்கப் பட்டாள்இம் மண்மகளாம் சேலாரும் கண்மயிலே சென்று.’ இதனுள் குளம்பு என்றபொழுது திருமால் அவதாரம் கொண்ட வராகத்தின் குளம்பு என்பது தெளிவுபட்டமை காணப்படும். நிலமகளாகிய சேல்மீன் போன்ற கண்களையுடைய மயில், விளங்கொளி மிக்க வராகமாய் அவதாரங்கொண்ட திருமா லால், இரணியாட்சன் சினக்கப்பட்டானாக, முகந்து எடுக்கப்பட்டாள்; எங்கிருந்து? பெரிய கடலிடத்தினின்று. எத்தகைய கடல்? குருதியால் செம்மைநிறம் மிகுதியாக் கொண்ட கடல். குருதி யாருடையது? வராகத்தின் குளம்புகள் ஆழப் பதிதலாலே மடிந்த நாகவுலகத்தினர்தம் குருதி - என்று இப்பாடற் பொருள் கூறுக. பொருள் புலப்பாடு இயற்சொல் லால் விளங்கவருவது இந்நூலுள் ‘புலன்’ எனப்பட்டது. இஃது அன்னதன்றிப் பொருளால் தெளிதலின் ‘பொருட் டெளிவு’ எனப்பட்டது. (வீ. சோ. 151 உரை) தெளிவு என்னும் குண அணி - பொருள் எளிதிற் புலனாம் வகையில் தெளிவான சொற்க ளால் செய்யுள் அமைத்தல். இது பொருள் தெளிவு எனவும் படும். ‘தெளிவு இருவகைத்தாதல்’ காண்க. (தண்டி. 17) தெளிவு என்னும் பொதுவணியின் மறு பெயர் - பொருள் தெளிவு என்பது. (வீ. சோ. 148) தெற்றுருவகம் - தெற்றுதல் - மாற்றுதல். உபமானப் பொருளின் தன்மையை அதனோடு இரண்டற இணைப்பித்த உபமேயத்தின்கண் மாற்றிக் கூறல் இவ்வணியாம். எ-டு : ‘தாமரையைக் குவியாது தாட்குமுதம் மலர்த்தாது தீமைசெயும் என்னுயிர்க்குன் திருமுகமாம் திங்களே’. இதன்கண், தாமரையைக் குவியச் செய்தலும், குமுதத்தை மலரச் செய்தலும், காண்பவர்க்கு நன்மை செய்தலும் ஆகிய சந்திரனுடைய குணங்கள் சந்திரனாக உருவகம் செய்யப் பட்ட முகத்தின்கண் மாற்றிக் கூறப்பட்டுள்ளமை, தெற்றுரு வகம் எனப்படும் விரோத உருவகமாம். (வீ. சோ. 160) தெற்றுவமை - தெற்றுதல் - மாற்றுதல். இஃது உபமானத்தை உபமேயமாக வும், உபமேயத்தை உபமானம் ஆகவும் மாற்றிக் கூறும் விபரீத உவமையாம். அது காண்க. (வீ. சோ. 156) தேற்ற உவமையணி - உவமை வகைகளுள் ஒன்று; இதுவோ அதுவோ என்ற தடுமாற்றம் அகன்று, இன்ன காரணத்தால் இஃது இதுவே தான் என்று துணிவது. ‘தெரிதரு தேற்ற உவமை’ என்பதும் இதுவே. எ-டு : தாமரை நாள்மலரும் தண்மதியால் வீ(று) அழியும் காமர் மதியும் கறைவிரவும் - ஆமிதனால். பொன்னை மயக்கும் பொறிசுணங்கி னாள்முகமே என்னை மயக்கு மிது. “தாமரைமலர் சந்திரனைக் கண்டால் பொலிவிழந்து கூம்பும். சந்திரனும் களங்கம் உடையது. இதுவோ, சந்திரனால் பொலிவு இழக்காமலும் மறு இன்றியும் விளங்குவதால், என்னை மயங்க வைக்கும் இது தலைவியின் முகமே” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், உபமானமாகிய தாமரையை யும் சந்திரனையும் தடுமாற்றமின்றிக் காரணம் காட்டி விலக்கி, உபமேயமாகிய முகத்தையே தெளிந்த காரணம் பற்றி இது தேற்ற உவமை யணியாயிற்று. (தண்டி. 32-12)8 தொன்னூல் விளக்கம் கூறும் சொல்லணிகள் - மறிநிலை அணி ஐந்தும், பொருள்கோள் எட்டும், சொல் எஞ்சு அணி பத்தும், சொல் மிக்கணி மூன்றும், சொல் ஒப்பணி நான்கும் ஆக முப்பதும் தொன்னூல் விளக்கச் சொல்லணிகள். (தொ.வி. 325) தொகுத்தல் உவமை - இது மாணிக்கவாசகதன் குவலயானந்தத்துள் அணியியலில் வருவதோர் அணி (8). உவமஉருபு ஒன்றுமே தொக, ஏனைய உபமானம் உபமேயம் பொதுத்தன்மை என்பன விரிந்து வருவது. எ-டு. பவளச் செவ்வாய். தொகை உருவக அணி - உருவக வகைகளுள் ஒன்று. உபமானமும் உபமேயமும் ஒன்றே என மாட்டும் சொல்லான ‘ஆகிய’, ‘என்னும்’ என்பன போன்ற சொற்கள் மறைய உருவகம் செய்வது. எ-டு : ‘அங்கை மலரும் அடித்தளிரும் கண்வண்டும் கொங்கை முகிழும் குழற்காரும் - தங்கியதோர் மாதர்க் கொடிஉளதால்; நண்பா! அதற்கெழுந்த காதற் குளதோ, கரை?’ “நண்ப! கையாகிய மலரும், கண்ணெனும் வண்டும், கொங்கை யாகிய மொட்டும், கூந்தல் எனும் கார்மேகமும் கொண்ட ஆசை விளைவிக்கும் மாதராகிய ஒரு கொடியின்மாட்டு எனக்கு விளைந்த காதல் கரையற்றது” என்று, ‘தலைவன் தன்பாங்கற்கு உற்றது உரைத்தல்’ எனும் துறைக்கண் அமைந்த இப்பாடற்கண், உருவகஉருபாகிய ‘ஆகிய’ ‘என்னும்’ என்ற இம்மாட்டேற்றுச் சொல் மறைந்துள்ளமையால், இது தொகை உருவகஅணி ஆயிற்று. (தண்டி. 37-1). தொகை உவமை - உபமானத்திற்கும் உபமேயத்திற்கும் உரிய பொதுத்தன்மை யாகிய வினை பயன் மெய் உரு என்பன தொக்கு. நிற்றல் தொகையுவமை என்று தண்டியலங்காரம், இலக்கண விளக்கம் முதலியன கூறும். தாமரை போலும் முகம், தரளம் போலும் பற்கள், வேய் போலும் தோள்கள் எனப் பொதுத்தன்மை மறைந்திருப்பது தொகை உவமம் என அந்நூல்கள் கூறும். உவம உருபு மறைதலையும் தொகை என்று மாறனலங்காரம், முத்து வீரியம், சந்திராலோகம், குவலயானந்தம் என்பன கூறும். எ-டு : ‘அன்னநடை மானோக்(கு) அணியிழாய்’ (மா. அ. பாடல் 159) இத்தொடரில், அன்னம் போன்ற கவர்ச்சியான நடை, மான் போன்ற மருண்ட பார்வை எனப் பொதுத்தன்மையோடு உவமஉருபு தொக்கு வருதலும் தொகை என்று இந்நூல்கள் கூறும். தொகை உவமையின் ஒழிபு - உபமேயப் பொருட்குள்ள சினை வினை சார்பு முதலியன உபமானப் பொருட்கண் இல்லையாயினும், அவற்றை உபமானத்தொடு பொருத்திக் கூறிய அளவில் உபமேயமும் ஏதுவும் உவமஉருபும் புலப்படச் செய்வது இவ்வுவமை வகையாம். ‘குன்று போன்று பெரிய யானை’ என்று கூறாது, யானை யினது நடத்தல் தொழிலைக் குன்றாகிய உபமானத்தின்மேல் ஏற்றி ‘வரும் குன்று’ என்று கூறிய அளவில், நடந்து வரும் குன்று போலப் பெரிய யானை என்பதும், ‘குன்று போன்ற கம்பீரமுடைய தலைவன்’ என்று கூறாது, தலைவனுக்குரிய கங்கணம் அணிதலை உபமானமாகிய குன்றின்மேல் ஏற்றி, ‘இருங்கங்கணக் குன்று’ என்று கூறிய அளவில், குன்று போன்ற கம்பீரமுடைய தலைவன்’ என்பதும் பெறப்படுதலின் தொகையுவமையின் பாற்படும் என்பது. (மா. அ.108). தொகை உவமை வகைகள் - 1. உவமானத்திற்கும் உபமேயத்திற்கும் இடையே வரும் உவமைஉருபு தொகுதல் (பவளச் செவ்வாய்); 2. உபமானத்திற்கும் உபமேயத்திற்கும் இடையே உவமை யுருபு வரப் பொதுத்தன்மை மாத்திரம் தொகுதல் (பவளம் போலும் வாய்); 3. உபமானத்திற்கும் உபமேயத்திற்கும் இடையே உவமை யுருபும் பொதுத்தன்மையும் ஒருங்கே தொகுதல் (பவளவாய்); 4. இடைப்படத் தொகாது, உபமானமும் உவமையுருபும் விரிந்து, பொதுத்தன்மையும் உபமேயமும் ஈற்றில் தொகுதல் (கொடி போல், வடவரை போல், கொவ்வை போல், தலைவிக்கு வடிவமைந்தது என்றால் கொடி போல் நுடங்கும் இடை யும், வடமலை போல் பருத்த கொங்கைகளும், கொவ்வை போல் செவ்வாயும் தலைவிக்கு அமைந்தன எனப் பொதுத் தன்மையும் உபமேயமும் ஈற்றில் தொக்கன); 5. உவமை மாத்திரம் வர ஏனைய தொகுதல் (‘அன்ன நடை மானோக்கு அணியிழாய்’ என்பதன்கண், அன்ன நடை போன்ற மென்னடை, மானோக்குப் போன்ற மருண்ட பார்வை என உபமானம் ஒன்றும் தவிர எஞ்சியன தொக்கு நின்றன) எனத் தொகைஉவமம் ஐந்து வகைப்படும் (மா. அ. 97) தொகைநிலைச் செய்யுள் - ஒரு செய்யுட்கும் அடுத்த செய்யுட்கும் இடையே எவ்விதப் பொருள் தொடர்பும் இன்றித் தனித்தனியே அமைந்த பல செய்யுளின் தொகுப்பு. அது முழுவதும் ஒருவர் பாடிய செய்யுளாகவோ, பலர் பாடியனவாகவோ இருத்தல் கூடும்; பொருள் முதலியவற்றின் அடிப்படையில் இவை தொகுக்கப் படுதல் கூடும். தமிழிலக்கியத்துள்ள பலவேறு தொகுப்புக் களுள் சில வருமாறு : 1. திருவள்ளுவப்பயன் (-திருக்குறள்). இஃது ஒருவர் உரைத்தது. 2. நெடுந்தொகை - 13 முதல் 32 அடி வரை அமைந்த அகத் துறைப் பாடல்களது தொகுப்பு. இது பலருடைய பாடல் களான் தொகுக்கப்பட்டது. 3. புறநானூறு (புறப்பொருள் பற்றிப்) பொருளான் தொகுத் தது. 4. களவழிநாற்பது - (போர்க்களமாகிய) இடத்தான் தொகுத் தது. 5. கார் நாற்பது (கார்ப்பருவமாகிய) காலத்தான் தொகுத்தது. 6. பதிற்றுப்பத்து (-பத்துப்பாடல் ஒரு தொகுப்பாக அத்த கைய பத்துத் தொகுப்புக்களை உடைய) எண்ணான் தொகுத்தது. 7. நயனப்பத்து - சினையான் தொகுத்தது (நயனம் - கண்). 8. கலித்தொகை - (கலிப்பாவாகிய) பாட்டு வகையான் தொகுத்தது. (தண்டி. 5; மா. அ. 69.) தொகை நூல் - தொகைநிலைச் செய்யுள்; அது காண்க. தொகைமொழி - கவி தான் கருதிய பொருளைக் குறிப்பாக அறியுமாறு நிறுத்தி அது போன்ற பிறிதொரு செய்தியை வெளிப்படையாகக் கூறுவதாகிய ஒட்டணி ‘சுருக்கு’ எனவும், ‘தொகைமொழி’ எனவும் கூறப்படும். (வீ. சோ. 153 உரை.) தொகைவிரி உருவக அணி - ஒரு பாடலுள்ளேயே, சில உருவகங்களில் ‘ஆகிய’, ‘என்னும்’ முதலிய உருவகஉருபுகள் மறைந்தும், சிலவற்றில் அவை விரிந்தும் வரும் உருவகஅணி வகை. எ-டு : ‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய சுடராழி யான்அடிக்கே, சூட்டுவன் சொன்மாலை இடராழி நீங்குகவே என்று’. “உலகினையே அகலாகவும், கடல்நீரையே நெய்யாகவும், கதிரவனையே ஒளிப்பிழம்பாகவும் கொண்டு, ‘இடர்க்கடல் நீங்குக’ என்று வேண்டிச் சொல்மாலையை ஆழியான் பாதத்தில் சூட்டுவேன்” என்ற பொருளமைந்த இப்பாடற்- கண், வையம் தகளியா(க), கடலே நெய்யா(க), சுடரோன் விளக்கா(க) என உருவக மாட்டேற்றுச் சொற்களாகிய உருபுகள் இம் மூன்று உருவகத்துள் வெளிப்பட்டு நிற்க, சொல்மாலை இடராழி என இவ்விரண்டு உருவகத்துள் மறைந்து நின்றமையான், இது தொகைவிரி உருவகஅணி யாயிற்று (தண்டி 37-3). தொகைவிரி உவமை - உபமானம், உவமைஉருபு பொதுத்தன்மை, உபமேயம் - என்ற நான்கனுள் சில எஞ்சி வரும் தொகைஉவமையும், நான்கும் வெளிப்பட நிகழும் விரிஉவமையும் ஒரு பாடற்கண்ணேயே வருவது. எ-டு : ‘மொழியமுதம்; முற்றா முலைமுகுளம்; வைவேல் விழிமகிழ்மா றன்துடரி வெற்பில் - எழில்மயிற்கு நன்போ(து) அவிழ்குழல்கார்; நண்பனே! செம்மேனி பொன்போன்ம்; பல் வெண்முத்தம் போன்ம்’ இதன்கண், மொழி அமுதம் (போலும்), முலை முகுளம் (போலும்), விழி வேல் (போலும்), குழல் கார் (போலும்) என்பன தொகையுவமை. செம்மேனி பொன் போலும், பல் வெண்முத்தம் போலும் - விரியுவமை. ஆதலின், இப்பாடல் தொகைவிரி உவமைஅணியின் பாற்படும். (மா. அ. 98). தொடர்நிலைச் செய்யுள் (1) - இது சொல்லினால் தொடர்தலும், பொருளினால் தொடர் தலும் ஆம். செய்யுள், சொல்லினால் தொடர்தலும் பொருளினால் தொடர்தலும் என இருவகைப்படும். (தண்டி. 6) சொல்லும் பொருளும் தொடர்தல் அமைந்த செய்யுள் வகையும் உள. அவை திருவாய்மொழி போல்வன. பெருங்கதையுள் காதை தொடர்தலும் அது. தொடர்நிலைச் செய்யுள் (2) - வித்தாரகவியின் இரு கூறுகளாவன தொடர்நிலை தனிநிலை என்னும் இரண்டனுள், முதலாவதான தொடர்நிலைச் செய்யுள்களின் வேறுபாடுகள் முடிவுடையன அல்ல என்பது. (அவை காலந்தோறும் பலவாகப் படைக்கப்படும்.) (இ. வி. பாட். 8) தொடர்நிலைச் செய்யுட் குறிப்பு அணி - கவி தான் உணர்த்தக் கருதிய கருத்தைச் சொற்றொடரின் உட்பொருளானாவது சொற்களானாவது இரண்டானு மாவது பெறப்பட வைப்பது. இதனைக் காவியலிங்காலங் காரம் என வடநூலார் கூறுப. இதன் வகைகள் மூன்றாவன : 1. வாக்கியப்பொருட் செய்யுட் குறிப்பு அணி, 2. பதப்பொருட் செய்யுட் குறிப்பு அணி, 3. வாக்கியம் பதம் இருமைப்பொருட் செய்யுட் குறிப்பு அணி. இவ்வணியின் இலக்கணத்தை மாறனலங்காரம் வேறொரு வகையாகக் கூறும். ஒரு செயல் வெளிப்படையாகக் குறிக்கப் பட, அதன் விளைவுகளால் ஏற்படும் நிகழ்ச்சிகளை மறைத் துக் காரியங்களின் விளைவுகளைக் கேட்போர் உணருமாற் றாற் செய்வது காவியலிங்க அணியாம். (மா. அ. 232) ‘காவி யலிங்க அலங்காரம்’ காண்க. 1. வாக்கியப்பொருட் செய்யுட் குறிப்பு அணி கவி தான் உணர்த்தக் கருதிய கருத்தினைத் தான் குறிப்பிடும் வாக்கியத்தின் உட்பொருளால் பெறப்பட வைத்தலைத் தெரிவிக்கும் தொடர்நிலைச் செய்யுட் குறிப்பு அணிவகை. எ-டு : ‘காம! நினைவென்றேன்; கண்ணுதலோன் என் மனத்தின், மீமருவு கின்றான் விடாது.’ “கண்ணுதலோனாகிய சிவபெருமான் என் மனத்தில் பொருந்தியுள்ளான் ஆதலின், மன்மதனே! யான் நின்னை வென்றுவிட்டேன்” என்பது இப்பாடலின் வெளிப்படைப் பொருள். “கண்ணுதலோன் என் மனத்தில் உள்ளான் ஆதலின் மன் மதன் என்னை அணுகின் என் உள்ளத்திருக்கும் நெற்றிக்கண் ணன் அக்கண் தழலால் அவனைச் சுட்டெரித்துவிடும்” என்பது குறிப்பால் உணரும் கருத்துப் பொருள். இக்குறிப்புப் பொருள் ஒரு வாக்கியம் பற்றி வருவதால், இது வாக்கியப் பொருள் செய்யுட் குறிப்பாம். 2. பதப்பொருள் செய்யுட் குறிப்பு அணி கவி தான் உணர்த்தக் கருதிய கருத்தைத் தான் குறிப்பிடும் சொற்களின் உட்பொருளால் பெறப்பட வைத்தலைத் தெரிவிக்கும் தொடர்நிலைச் செய்யுட் குறிப்பணி வகை. எ-டு : ‘மிளிர்நீறே! ஈசன் விழிமணியே! வாழி! தெளி, உமையான் மீதணியும் சீரால் - உளதாய இன்பஒளி யைக்கவர வீ(டு)எனுமோ கத்(து)அழுந்தற்(கு) அன்பினேன் செய்வேன் அமர்ந்து’. “திருநீறே! உருத்திராக்கமே! உம்மை யான் அணிவதனால் வீடாகிய பற்றில் அழுந்துவேன்” என்ற கருத்தமைந்தது இப் பாடல். பற்றினை அறுத்து இன்பம் அடைதற்கு அணியப் படும் திருநீறு உருத்திராக்கங்கள் என்பன பற்றில் அழுந்தச் செய்கின்றன என்பது நேர் பொருள். வீட்டினைப் பற்று என வும் இன்புறுதலை அழுந்துதல் எனவும் கூறி, வீடுபேறாகிய பேரின்பம் எய்துதலைப் ‘பற்றில் அழுந்துதல்’ என்ற சொற் றொடரைக் கொண்டு பெறப்பட வைத்தற்கண், பதப்பொருள் செய்யுட் குறிப்பணி வந்துள்ளது. 3. வாக்கியப் பதப்பொருள் செய்யுட் குறிப்பு அணி கவி தான் உணர்த்தக் கருதும் கருத்தைத் தான் குறிப்பிடும் சொற்றொடர்கள் சொற்கள் ஆகியவற்றின் வாயிலாகப் பெறப்பட வைக்கும் தொடர்நிலைச் செய்யுட் குறிப்பு அணி வகை. எ-டு : ‘கலைதேர் புலமைநிறை காரிகைபால் ஓர்தன் தலைமேல்கோள் பட்டதெக்கே சம்சீர் - நிலையதற்குப் பேசுவிலங் காம்கவரி பின்புறம்கொள் சாமரையை, ஏசுறயார் சொல்வார் இணை?’ “கற்றுவல்ல காரிகை தன்தலைமேல் கொண்டு பாதுகாப்பது மயிர்முடி. கவரி தன்வாலில் அலட்சியமாகக் கொண்டிருப் பது அதன் வால்மயிர். இவ்வாறாகக் கவரிமயிரை அவள் முடிமயிருக்கு ஒப்புக் கூறுவது எப்படி?” என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண், முடிமயிரது உயர்வும் கவரிமயிரது இழிவும் கூறுமுகத்தான், கவரி காரிகை கூந்தற்கு நேராகாது என்பது பெறப்பட்டது. இதனுள், கேசம் கவரி என்ற சொற்களோடு, அவை இருக்குமிடம் தெரிவிக்கும் தொடர் களும் இவ்வணிக்குப் பயன்பட்டவாறு உணரப்படும். (ச. 86; குவ. 60). தொடர்நிலைச் செய்யுட் பொருட்பேறு அணி - ஒரு பொருளைக் கூறிய அளவில் ‘தண்டாபூபிகா நியாய’த் தால் அதனொடு தொடர்புடைய மற்றொரு பொருளும் புலனாவது. இவ்வணியை வடநூலார் ‘காவ்யார்த்தாபத்தி அலங்காரம்’ என்ப. தண்டம் - கோல்; அபூபம் - அப்பம். கோலின் நுனியில் அப்பம் மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருக்க, அக் கோலை அபகரித்தால் அதனுடன் அப்பமூட்டையும் அப கரிக்கப்பட்ட செயல் போல்வது ‘தண்டாபூபிகா நியாயம்’ என்பது. எ-டு : ‘மங்கைமுகம் திங்களையே வாட்டிற்(று); அறைகுவதென், பங்கயமென் போதுபடும் பாடு?’ சந்திரன் தாமரையைக் கூம்பச் செய்யும் ஆற்றலுடையது. சந்திரனே தலைவியது முகம் கண்டு வாடுமெனவே, சந்திரனைக் கண்ட அளவில் வாடும் தாமரை இவள் முகம் கண்ட அளவில் வாடிவிடும் என்பது கூறாமலேயே பெறப் படும் செய்தியாகும். இவ்வாறு புலப்படுத்தலின் இவ்வணி இப்பாடற்கண் பயின்றது. (ச. 85, குவ. 59). தொடர்பின்மை அணி - யாதானும் ஒரு காரணத்திற்கு ஏற்ற காரியம் அயலே தோன்றி மறைவது. இவ்வணியை வடநூலார் ‘அசங்கதி அலங்காரம்’ என்ப. தண்டியலங்காரம் இதனைத் ‘தூர காரிய ஏது’ எனப் பெயரிட்டுச் சித்திரஏது அணியில் அடக்கும் (63). இவ்வணி அசங்கதி அலங்காரம் என மாறனலங்காரத்தில் தனி அணியாகி உள்ளது. இவ்வணியின் மூவகைகளாவன : 1. காரணம் ஓரிடத்து இருப்பக் காரியத்தை மற்றோரிடத்தில் பிறக்கச் செய்தல், 2. ஓரிடத்தில் செய்தற்குரியதனை மற்றோரிடத்தே செய்தல், 3. ஒன்றனைச் செய்யத் தொடங்கி, அதற்குப் பகையாகிய மற்றொன்றனைச் செய்தல் என்பன. இவ்வணி சிலேடையணியோடும் கூடி வரும். (மா. அ. 203, 204; மு.வீ.அ. 33; ச. 63; குவ.37) 1. காரணம் அயலதாகக் காரியம் தோற்றும் தொடர்பின்மை அணி காரணம் ஓரிடத்து இருப்பக் காரியம் பிறிதோரிடத்தில் நிகழ்வதாகக் கூறும் தொடர்பின்மை அணிவகை. எ-டு : ‘வேறொரு மாதர்மேல் வேந்தன் நகநுதியால் ஊறுதர இம்மா(து) உயிர்வாடும் ...’ (தண்டி.) தலைவன் பரத்தையொருத்தியை முயங்குமிடத்தே தன் நகநுனியினால் புண்விளைக்க, அதனைத் தாங்காமல் தலைவியாகிய மற்றொரு நங்கை உயிர்வாடுகிறாள் என்ற பொருளமைந்த இப்பாட்டடிகளில், தலைவன் பரத்தையைத் தீண்டியதாகிய காரணத்திற்குத் தலைவி உயிர்வாடுதலாகிய காரியம் நிகழ்ந்தது என்று கூறுதற்கண் இவ்வணிவகை வந்துள்ளது. 2. (அ) ஓரிடத்துச் செய்தற் குரியதை மற்றோரிடத்துச் செய்யும் தொடர்பின்மை அணி எ-டு: தீயனெனும் பாம்பு செவியிலொரு வற்கௌவ, மாயுமே மற்றொரு வன்’. தீயவன் கூறிய பாம்பின்விடம் போன்ற சொற்கள் கொடியவ னொருவனது செவியைத் தீண்டவே, அதன் காரியமாக வேறொருவனுக்கு ஆபத்து நேரிடும் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், விடமானது தீண்டியவனைத் தாக்காமல் அயலானைத் தாக்குவதாகச் சொல்லுவதன்கண் இவ்வணி வகை வந்துள்ளது. 2.(ஆ) மேலை அணிவகை சிலேடையொடு வருதல் எ-டு : ‘கங்கணம்கண் ணில், திலகம் கையில், தரித்தனர்சீர் தங்(கு)இறைஒன் னார்மடவார் தாம்.’ அரசனுடைய பகைவர்தம் தேவிமார்கள் கண்ணில் கங்கணமும், கையில் திலகமும் தரித்தனர் என்பது இப்பாடற் கருத்து. இது சிலேடையின் முடிந்தது. கங்கணம் - கடகம், நீர்த்துளி; திலகம் - பொட்டு, எள்ளொடு கூடிய நீர். பகைவர் இறந்ததனால், அவர்தம் மனைவியர், கண்ணீர் விட்டு, இறந்தவர்க்கு எள்ளொடு நீர்க்கடன் செய்தனர் என்று பொருள்படும் இப்பாடற்கண், மேல்நோக்கிய கருத்தான் கண்ணில் கடகமும், கையில் பொட்டும் தரித்தனர் என ஓரிடத்துச் செய்தற்குரியதை மற்றோரிடத்துச் செய்யும் இவ்வணிவகை சிலேடையாக வந்துள்ளது. 3. ஒன்றைச் செய்யத் தொடங்கி அதன் பகைப்பொருளைச் செய்யும் தொடர்பின்மை அணி எ-டு : ‘கண்ணன் மயல்அகற்றக் காமருருக் கொண்டதனால் பண்ணுமயல் மாதர் பலர்க்கு’ மயக்கத்தைப் போக்கத் திருஅவதாரம் செய்த கண்ணன் தன் அழகிய மேனியினால் மகளிர்க்கு மயக்கத்தைத் தருவான் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், ஒன்றைச் செய்யத் தொடங்கி அதன் பகைப்பொருளைச் செய்யும் இவ்வணி வகை வந்துள்ளது. (ச. 63; குவ. 37). தொடர்பு உயர்வு நவிற்சி - உயர்வு நவிற்சி அணியுள் ஒருவகை; ‘உயர்வு நவிற்சி அணி’ காண்க. தொடர்முழுது உவமை அணி - இது வாக்கியப் பொருளுவமை என வழங்கப்படும்; தொடர் முற்றுவமையணி எனவும் வழங்குப. இதனை வடநூலார் ‘பிரதி வஸ்தூபமாலங்காரம்’ என்று கூறுவர். இவ்வணிக்கண் உபமான உபமேயங்கள் ஓரோர் சொல்லாக இராமல் ஓரோர் வாக்கியமாக இருக்கும். இஃது இருவகைத்து. 1. நிகர் தொடர் முழுதுவமை அணி 2. முரண் தொடர் முழுதுவமை அணி 1. நிகர் தொடர் முழுதுவமை அணி எ-டு: ‘தாபத்தி னால்விளங்கும் வெய்யோன்; தராபதிநீள் சாபத்தி னால்விளங்கும் தான்’ சூரியன் வெப்பத்தினால் விளங்குவான்; அரசன் வில் ஆற்ற லால் விளங்குவான் என ஒப்புமையான் இரு பொருள்கள் பண்பு பற்றிச் சுட்டப்பட்டதன்கண், இவ்வணிவகை வந்துள்ளது. 2. முரண் தொடர் முழுதுவமை அணி எ-டு: ‘கற்றோன் அருமைகற் றோனறியும்; வந்திமகப் பெற்றோள் அருமைஅறி யாள்’. கற்றவனுடைய சிறப்பைக் கற்றவனே அறிதல் கூடும்; மலடி மகப்பெற்றவளுடைய அருமையை அறியாள் என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண், அறிபவருடைய பண்பிற்கு அறியாதவருடைய பண்பைப் பொருத்திக் கூறுதல், முரண் பட்ட இரு பண்புகள் சுட்டப்படும் முரண் தொடர்முழு துவமை யணியின் பாற்படும். (ச. 39; குவ. 17). தொல்லுருப்பெறல் அணி - ஒருபொருள் தற்காலிகமாக வேறுபாடுற்றபோதும், மீண்டும் தன் பழைய நிலையையே அடைதலைக் கூறுவது. இதனைப் பூர்வ ரூபாலங்காரம் என வடநூல்கள் கூறும். ஒரு பொருள் தற்காலிகமாகப் பிறிதொன்றன் குணத்தைப் பெற்றிருந்தும் தன் பழைய பண்பையே பெறுதலைச் சொல்லு தலும், ஒரு பொருள் வேறுபாடு அடைந்த காலத்தும் தன் பழைய பண்பினை மாறாமல் பெற்றிருத்தலைச் சொல்லு தலும் என இவ்வணி இருவகைப்படும். இது சிலேடையின் வருதலும் உண்டு. 1. ஒருபொருள், மற்றதன் குணமடைந்து மீண்டும் பழைய நிலையைப் பெறுதலைக் கூறும் தொல்லுருப்பெறல் அணி எ-டு : ‘நித்தன் களக்கறையான் நீல்உருக்கொள் சேடன்உன்சீர் உற்றடைந்தான் தன்முன் உரு.’ சிவபெருமானுடைய நீலகண்டத்தினால் பழைய வெண்மை நிறம் மாறி நீலநிறம் கொண்ட ஆதிசேடன், உன்புகழை எடுத்துக் கூறியதனால், புகழுக்குரிய வெள்ளைநிறம் படரத் தன் பழைய நிறம் பெற்றுவிட்டான் - என்னுமிப்பாடற்கண், அவ்வணி வகை வந்தது. 2. ஒரு பொருள், குணம் மாறியும் மீண்டும் தன் குணம் பெறுதலைக் கூறும் தொல்லுருப்பெறல் அணி எ-டு : ‘வளியான் விளக்(கு)அவிந்தும் மா(து)உளத்தில் நாணம் ஒளிமே கலைசெயலால் உண்டு’. விளக்கொளியில் கணவனைக் கூடுதற்கு நாணிய தலைவி, காற்றால் அவ்விளக்கு அணைந்த பின்னரும், தன் மேகலை யின் ஒளியைக் கண்டு அவ்வொளியில் கணவனைக் கூடுதற்கு நாணினாள் என்ற இப்பாடற்கண், ஒளி நீங்கிய பின்னும் தலைவி தன் நாணம் மாறாமல் இருத்தலைச் சொல்லு மிடத்தே இவ்வணி வகை வந்துள்ளது. 3. சிலேடையின் அமையும் தொல்லுருப்பெறல் அணி ஒரு பொருள் தற்காலிகமாகப் பிறிதொன்றன் குணத்தைப் பெற்றிருந்தும் மீண்டும் தன் பழைய பண்பையே பெறுதலைச் சொல்லுதலும், ஒரு பொருள் வேறுபாடு அடைந்த காலத்தும் தன் பழைய பண்பு மாறாமல் பெற்றிருத்தலைச் சொல்லுதலும் சிலேடையின் வருதல் இவ்வணிவகையாம். எ-டு : ‘நின்னொடு முரணிய நிருபர்நா(டு) அழிந்தும் அரசுகள் உறையிடத்(து) அரசுகள் உறையும்; மாவினம் பொருந்திடம் மாவினம் பொருந்தும் அத்திகள் வாழிடத்(து) அத்திகள் வாழும்’. உன்னொடு பகைத்த மன்னர்களுடைய நாடுகள் அழிந்த பின்னரும், அரசுகள் (-மன்னர்கள்) உறையுமிடத்தில் அரசுகள் (-அரசமரங்கள்) உறைகின்றன. மாஇனம் (குதிரைக் கூட்டம்) பொருந்திய இடத்தில் மாவினம் (-மாமரக் கூட்டம்) பொருந்தி உள்ளன. அத்திகள் (- யானைகள்) வாழுமிடத்தில் அத்திகள் (-அத்திமரங்கள்) வாழ்கின்றன - என நாடு அழிந்த பின்னரும் பழைய பண்பின் மாறாமலிருத்தல், சிலேடை வகையால் பெறப்படுத்தப்பட்ட இவ்வணி வகையாம். (ச. 102; குவ. 76). தொழில் அதிசய அணி - இஃது அதிசயஅணி வகைகளுள் ஒன்று; ஒரு தொழிலை, உயர்வு தோன்றவும் உலகஇயற்கை கடவாமலும் மிகுத்துக் கூறுவது. எ-டு : ‘ஆளும் கரியும் பரியும் சொரிகுருதி தோளும் தலையும் சுழித்தெறிந்து - நீள்குடையும் வள்வார் முரசும் மறிதிரைமேல் கொண்டொழுக வெள்வாள் உறைகழித்தான் வேந்து.’ வெட்டப்பட்ட காலாட்களும் யானைகளும் குதிரைகளும் சொரிந்த குருதிப்பெருக்கு, தோள்களையும் தலைகளையும் சுழித்து வீழ்த்திக் குடைகளையும் முரசுகளையும் இழுத்துக் கொண்டு ஓடும்படி, அரசன் தன் வாளை அதன் உறையி லிருந்து வெளியே எடுத்தான் - என்று பொருள்படும் இப்பாடற்கண், அரசனுடைய போர்த்தொழில் மிக உயர்த்து அதிசயம் தோன்றக் கூறப்பட்டவாறு. (தண்டி. 55-3). தொழில் இடைநிலைத் தீவகம் - இது தீவகஅணிவகைகளுள் ஒன்று; ஒரு தொழிலைக் குறிக்கும் சொல் செய்யுளின் இடையில் நின்று, பின் பல இடங்கட்கும் சென்று இணைந்து பொருள் பயப்பது. எ-டு : ‘எடுக்கும் சிலைநின்(று) எதிர்ந்தவரும் கேளும் வடுக்கொண்(டு) உரம்துணிய வாளி - தொடுக்கும் குடையும் திருவருளும் கோடாத செங்கோல் நடையும் பெரும்புலவர் நா.’ அரசன் தான் எடுக்கும் வில்லிலே, பகைவர்களும் அவர்தம் சுற்றமும் புண்பட்டு மார்பு பிளப்ப அம்பு தொடுப்பான்; பெரும்புலவர்கள் நாவு அவனுடைய குடை, அருள், செங்கோல் ஆகியவற்றைத் தம்முடைய பாட்டுக்களில் தொடுக்கும் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், இடை யில் நின்ற ‘தொடுக்கும்’ என்ற தொழில் குறித்த வினைச் சொல், பல இடத்தும் இணைந்து பொருள் பயந்தவாறு. (தண்டி 40 - 6) தொழில் உவமை - ஒரு பொருளின் தொழிலுக்கு மற்றொரு பொருளின் தொழிலைக் காரணம் காட்டி உவமை கூறுதல். எ-டு: ‘அறைபறை அன்னர் கயவர்,தாம் கேட்ட மறைபிறர்க்(கு) உய்த்துரைக்க லான்’. (குறள். 1076) பறை - உபமானம்; கயவர் - உபமேயம்; அன்னர் - உவமச்சொல். ‘தாம் ... உரைக்கலான்’ என்ற தொழில் பற்றிய ஒப்புமை, உவமை கூறற்குக் காரணமாயிற்று. பறை மற்றவர்களை அழைத்துத் தான் கூற விரும்பும் செய்தியை வெளிப்படையாகக் கூறுதல் போல (பறை அறிவிப்போன் செயல் பறைமேல் ஏற்றப்பட்டது), கயவர் தாம் கேட்ட இரகசியச் செய்தியை மற்றவர்களைத் தாமே வலிய அழைத்து வெளிப்படுத்திவிடுதல் ஒப்புமையால், அவர்கள் அதனை ஒப்பர் என்ற பொருளமைந்த இப் பாடற்கண், தொழிலுவமை வந்துள்ளது. உபமானத்தைக்கொண்டு உபமேயத்தைப் பழித்தலின் இது ‘பழித்தல் உவமை’யும் ஆம். (வீ. சோ. 158 உரை). தொழில் கடைநிலைத் தீவகம் - தீவக அணிவகைகளுள் ஒன்று; ஒரு தொழில் குறிக்கும் சொல் பாடலின் இறுதியில் நின்று பல இடத்தும் சென்று இணைந்து பொருள் தருவது. எ-டு : ‘துற(வு)உளவாச் சான்றோர் இளிவரவும், தூய பிறஉளவா ஊன்அளாம் ஊணும், - பறைகறங்கக் கொண்டான் இருப்பக் கொடுங்குழையாள் தெய்வமும், ஒன்(று) உண்டாக வைக்கற்பாற்(று) அன்று’ துறவு மேற்கொண்டவர்களிடம் அவர்க்குத் தகாத கூடா ஒழுக்கமும், தூய உணவுப்பொருள் பல இருப்பவும் அவற்றை நீக்கிவிட்டுப் புலால் கலந்து உண்ணுதலும், உலகறியப் பறை முழங்கக் கொண்ட கணவன் இருப்ப மகளிர் வேற்றுத் தெய்வத்தை வழிபடுதலும் என இவற்றுள் ஒவ்வொன்றும் ஏற்புடைய செயலாகக் கொள்ளப்படுவதன்று - என்ற பொருள் அமைந்த இப்பாடலின் ஈற்றடியாகிய சொற்றொடர், ‘இளிவரவு’ என்னும் முதலிலுள்ள சொல்லோடும், ‘ஊண்’, ‘தெய்வம்’ என்னும் இடையிலுள்ள வெவ்வேறு சொற்க ளொடும், சென்று இணைந்து பொருள் பயந்தமை இவ்வணி வகை யாயிற்று. (தண்டி. 40-10) தொழில் தன்மைஅணி - பொருளின் தொழில்களை இயல்பு கெடாது உள்ளது உள்ள வாறே நயம்படக் கூறுதல் இதன் இலக்கணம். எ-டு : ‘சூழ்ந்து முரன்(று)அணவி வாசம் துதைந்(து)ஆடித் தாழ்ந்து மதுநுகர்ந்து தா(து)அருந்தும் - வீழ்ந்தபெரும் பாசத்தார் நீங்காப் பரஞ்சுடரின் பைங்கொன்றை வாசத்தார் நீங்காத வண்டு’. சிவபெருமானுடைய கொன்றைமாலையை விட்டு அகலாத வண்டு, அதன்கண்ணேயே சூழ்ந்தும் ஒலி செய்துகொண்டும் அணுகியும் பூவில் விழுந்து தேனையுண்டும் மகரந்தத்தை அருந்தும் - என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், வண்டின் செயல்கள் இயல்பான நயத்துடன் பாடப்பட்டுள்ளமை இவ்வணியாயிற்று. (தண்டி. 30-4). தொழில் முதல்நிலைத் தீவகம் - தீவகஅணி வகைகளுள் ஒன்று; ஒரு தொழிலைக் குறிக்கும் சொல் செய்யுளின் முதற்கண் நின்று பல இடத்தும் சென் றிணைந்து பொருள் தருவது. எ-டு : ‘சரியும் புனைசங்கும், தண்தளிர்போல் மேனி வரியும், தனதடம்சூழ் வம்பும், - திருமான ஆரம் தழுவும் தடந்தோள் அகளங்கன் கோரம் தொழுத கொடிக்கு’. சோழன் வீதியுலா வந்தபோது அவனது குதிரையைத் தொழுத தலைவிக்கு (உடனே அவன்பால் காமம் தோன்றி வருத்தியமையான்), அவள் கைகளில் அணிந்திருந்த சங்க வளை சரிந்தன; அவளது மேனியழகு சரிந்தது; நகில்களில் அணிந்திருந்த கச்சும் சரிந்தது - என்று பொருள்படும் இப் பாடற்கண், முதலில் நின்ற ‘சரியும்’ என்ற தொழிலைக் குறிக்கும் வினைச்சொல், முதலில் நின்ற சங்கும் என்பதோடு அன்றிப் பிற இடங்களில் நின்ற மேனிவரி, வம்பு என்பவற் றோடும் இணைந்து பொருள் பயந்தமையால், இவ்வணி வகை அமைந்தவாறு. (தண்டி. 40-2). தொழில் வேற்றுமை அணி - வேற்றுமையணி வகைகளுள் ஒன்று; தொழிலான், இருபொருள்களுக்கிடையே வேற்றுமையைக் காட்டுவது. எ-டு : ‘புனல் நாடர் கோமானும் பூந்துழாய் மாலும் வினைவகையால் வேறு படுப;- புனல் நாடன் ஏற்(று)எறிந்து மாற்றலர்பால் எய்தியபார், மாயவன் ஏற்(று)இரந்து கொண்டமையால் இன்று’. (உலகினைக் காக்கும் வகையால் மன்னனைத் திருமால் என்றல் மரபு) இன்று மன்னனும் மாயோனும் ஆகிய இருவரும் செய்தொழில் வகையால் வேற்றுமையுடையார்; எங்ஙனம் எனில், சோழமன்னன் போரினை ஏற்றுப் பகை வரை அழித்து அவர்தம் பூமியைக் கைக்கொண்டான்; ஆயின் மாயவனோ, மாவலியிடம் இரந்து அவன் தானமாக நீர் வார்த்துத் தரப் பூமியைக் கொண்டான் - என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண், சோழன் போரில் எறிந்து பூமியைக் கொள்ள, திருமால் இரந்து தானமாக அதனைக் கொண் டான் என இருவர்க்குமிடையே தொழில் வகையால் வேற்றுமை கூறப்பட்டமையின் இவ்வணிவகை ஆயிற்று. (தண்டி. 50-3). தொழிலினால் வரும் நுட்பஅணி - நுட்பஅணிவகைகளுள் ஒன்று; ஒரு தொழிலினால் உட் கருத்தை நுட்பமாக ஆராய்ந்தறியும் வகையில் செயற்படுத்து வதைக் கூறுவது. எ-டு : ‘பாடல் பயிலும் பணிமொழி தன்பணைத்தோள் கூடல் அவாவால் குறிப்புணர்த்தும் - ஆடவற்கு மென்தீந் தொடையாழில் மெல்லவே தைவந்தாள் இன்தீங் குறிஞ்சி இசை.’ யாழ்மீட்டி இசை பாடிக்கொண்டிருந்த தலைவி, பகற்குறிக்கு வந்து நின்ற தலைவனை நோக்கி, அவன் மகிழத் தான் பகற்குறிக்கண் வர இயலாமையை உணர்த்தி, இரவுக்குறிக்கு அவன் வருமாறு நுட்பமாக அறிவிக்கும் வகையால், இரவுக் குரிய குறிஞ்சிப்பண்ணை யாழில் இசைத்தாள் - என்ற பொருளமைந்த இப்பாடற்கண், குறிஞ்சிஇசை பாடிய தொழில், நுட்பமாக உணர்த்தும் வகையான் “இல்வரை இகவா இரவுக்குறி வருக!” என்று தனது உளக்கிடையை அவள் அவனுக்குத் தெரிவித்தமையான், இவ்வணிவகை ஆயிற்று. (தண்டி. 64-2) தொழிலும் வடிவும் வண்ணமும் உவமை - எ-டு : ‘காந்தள், அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி கைஆடு வட்டின் தோன்றும்’ (அகநா. 108) காந்தட்பூவினை ஊதும் வண்டிற்கு, மகளிர் கைகளால் உயர எறிந்து பிடித்து விளையாடும் கருவியாகிய வட்டுக்காய் நிகராவது, தொழில் வடிவு நிறம் என்னும் மூன்றும் பற்றியாம். (இ. வி. 639) தொழிற்குறை விசேட அணி - விசேடஅணி வகைகளுள் ஒன்று; தொழில் வகையால் குறைவு நேர்ந்திருந்தும் செயல் நிகழ்ந்தது எனக் கூறுவது. எ-டு : ‘ஏங்கா முகில்பொழியா நாளும் புனல்தேங்கும் பூங்கா விரிநாடன் போர்மதமா - நீங்கா வளைப்பட்ட காலணிகள் மாறெதிர்ந்தார்க்(கு) அந்நாள் தளைப்பட்ட தாள்தா மரை’. இடியோசை கேட்காமலும் மேகம் மழைபொழியாமலும் எந்நாளும் நீர் குறைவின்றித் தேங்கி நிற்கும் காவிரி நாட்டுச் சோழமன்னனுடைய போர்யானைகள் தம் காலில் கட்டப் பட்டிருந்த சங்கிலிகள் அகற்றப்படுவதற்குள், பகை மன்னர் களுடைய கால்கள் விலங்கிடப்பட்டுவிட்டன - என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண், யானைகள் தளை நீங்கிப் போர்க்குப் புறப்படு முன்னரே, எதிர்ந்து வந்த பகைவருடைய கால்கள் தளை பூண்டன எனவும், இடித்து மழை பெய்யா மலேயே காவிரி நாட்டில் குறைவின்றித் தண்ணீர் என்றும் நிறைந் துளது எனவும் (காரணமாகிய) தொழிலிற் குறையிருந்தும் (காரியமாகிய) செயல் நிறைவேறிவிட்டமை கூறப்படுவதால் இவ்வணிவகை வந்துள்ளது. (தண்டி. 79-2) தொன்றுதொட்டுவமை - அடிப்பட வந்த உவமை. ‘மரீஇய மரபின் வழக்கொடுபட்ட உவமை’ என்பர் ஆசிரியர். உபமானங்கள் பண்டைக்காலம் தொட்டுச் சான்றோர்கள் வழங்கிவந்த மரபு பற்றியே கூறப்படுமேயன்றி அவரவர் தாம்தாம் புதியன புதியனவாகப் படைத்துக் கூறத்தக்கன அல்ல. கூந்தல் கருநிறத்தது ஆதல் பற்றித் தொன்றுதொட்டு வருமுறையால், ‘மயில்தோகை போலும் கூந்தல்’ என்று கூறலாமேயன்றிக் ‘காக்கைச் சிறகு அன்ன கருமயிர்’ என்று கூறலாகாது என்பது. (தொ. பொ. 296, 283 பேரா.) இனி, மாறனலங்காரம் 92ஆம் நூற்பா உரை வருமாறு: புலிபோலும் மறவன், ‘மாரி அன்ன வண்கை,’ துடி அன்ன இடை, பவளம் போன்ற செவ்வாய், ‘குறைபடு மதியம் தேயக் குறுமுயல் தேய்வதே போல்,’ நஞ்சும் அமிர்தமுமே போல் குணத்த,’ ‘கருமணி அம் பாலகத்துப் பதித்தன்ன’ ‘பொரு கயற்கண்’ முதலியன தொன்றுதொட்டு வரும் உவமையாம். தொன்னூல்விளக்கம் குறிப்பிடும் பொருளணிகள் - 1. தன்மை, 2. உவமை, 3. உருவகம், 4. வேற்றுப்பொருள்வைப்பு, 5. வேற்றுமை, 6. ஒட்டு, 7. அவநுதி, 8. ஊகாஞ்சிதம், 9. நுட்பம், 10. புகழ்மாற்று, 11. தன்மேம்பாட்டுரை, 12.பின்வருநிலை, 13. முன்னவிலக்கு, 14. சொல்விலக்கு, 15. இலேசம், 16. சுவையணி , 17.உதாத்தம், 18. ஒப்புமைக்கூட்டம், 19. ஒப்புமை ஏற்றம், 20. விபாவனை, 21. விசேடம், 22.விரோதம், 23. பிறிதுரையணி, 24. விடையில் வினா, 25. வினாவில் விடை, 26.ஒழிபணி, 27. அமை வணி, 28. சிலேடை, 29. சங்கீரணம், 30. சித்திரஅணி என்னும் முப்பதாம். (326.) ந நகை என்னும் சுவை அணி - சுவைஅணிவகை எட்டனுள் ஒன்று; உள்ளத்தில் நிகழும் நகைப்பு என்னும் மெய்ப்பாடு புறத்தே புலப்படும் வகையால் கூறுவது. எ-டு : ‘நாண்போலும் தன் மனைக்குத் தான்சேறல்; இந்நின்ற பாண்போலும் வெவ்வழலில் பாய்வதூஉம்; - காண், தோழி! கைத்தலம் கண்ணாக் களவுகாண் பான்ஒருவன் பொய்த் தலைமுன் நீட்டியது போன்று.’ பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், தலைவியின் ஊடலைத் தீர்க்கப் பாணனை வாயிலாக விடுத்தவிடத்து, தலைவி பாணன் வாயிலை மறுத்துத் தோழிக்குக் கூறுவதாக அமைந்தது இப்பாடல். “தலைவன் தன் இல்லத்துக்குத் தானே நேரிதின் வருதல் நாணத் தக்கதா, என்ன! ‘தலைவன் பிழை செய்திலன்’ என்று இப்பாணன் தீப்பாய்ந்து மெய்ப்பிப்பான் போலும்! தன் கைகளையே கண்ணாகக் கொண்டு இருளில் களவு செய்யு மவன், மனையிலுள்ளோர் உறங்குகின்றார்களா என்று அறியப் பொய்த் தலையை நீட்டியது போலிருக்கிறது, தலைவன் இப்பாணனை இவ்வில்லத்திற்கு அனுப்பிய செய்தி!” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், தலைவனை யும் பாணனையும் எள்ளி நகையாடிய நகைச்சுவை பயின்றவாறு. (தண்டி. 70-8) நகை பற்றிய உவமம் - தலைவியின் மகனைத் தூக்கிக்கொண்டிருந்த நிலையில் பரத்தை தலைவியின் பார்வைக்கு இலக்காக, திருடிய பொரு ளோடு அகப்பட்ட கள்வரைப் போல அவள் நாணி நின்றாள் என்ற கருத்தமைந்த களவுடம் படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா நாணி நின்றோள் (அக நா. 16) என்னும் அடிக்கண், கண்டவர்க்கெல்லாம் எள்ளற் பொருட் டாக நகை உண்டாகப் பரத்தை நிலை இருந்தது என்பது ‘களவுடம் படுநரின்’ என்ற உவமையான் பெறப்படுதலின், நகை பற்றிய உவமம் வந்தவாறு. (தொ.பொ. 294. பேரா.) நட்புத் தடைமொழி - வீரசோழியம் சிறப்பாகக் குறிப்பிடும் முன்னவிலக்கு வகை ஏழனுள் ஒன்று. இது தண்டிஅலங்காரத்துள் வரும் துணை செயல் விலக்கினுள் அடக்கப்படலாம். எடுத்த செயல் இனிது முடிய உறுதி பயக்கும் காரியத்தை எடுத்துக் கூறுதல், நட்பினர்செயல் போன்று வெளிப்படை யாகத் தோன்றி, குறிப்பாக அச்செயலை விலக்குதலின், இது நட்புத் தடைமொழி எனப்பட்டது. எ-டு : ‘ஏகுக; ஏகுதியேல், ஏலா உரை பிறக்கும் காலத்தின் முன்னே கடிது.’ “தலைவ! நீ பொருட்பிரிவிற்குப் புறப்படு. அதுவும் உன் புறப்பாட்டிற்குச் சகுனத் தடையாகும்படியான அழுகுரல் முதலிய பொருந்தா ஒலிகள் செவிப்படுமுன் விரைவில் புறப்படு” என்று தோழி, தலைவன்செலவுக்கு உறுதி கூறு வாள் போல அவன்செலவால் தலைவியது இறந்துபாட்டைக் குறிப்பாக அறிவித்தல் நட்புத்தடைமொழியாம். (வீ.சோ. 163) நட்புருவகம் - இது ‘சமாதான உருவகம்’ எனவும்படும். அது காண்க. (மா. அ. 120) நடுங்க என்ற உவமஉருபு - ‘படங்கெழு நாகம் நடுங்கும் அல்குல்’ படமெடுத்த நாகத்தினை ஒத்த அல்குல் என்று பொருள்படும் இத்தொடரில், ‘நடுங்க’ என்பது மெய்யுவமத்தின்கண் வந்தது. (தொ. பொ. 286 பேரா.) நலன் நிலைக்களன் பற்றிய உவமம் - நலன் என்பது மற்றவரை விட உயர்த்திக் கூறுதற்குக் காரண மான அழகு. எ-டு : ‘ஓவத் தன்ன இடனுடை வரைப்பு’ (புறநா. 251) ஓவியத்தில் எழுதப்பட்டாற்போலச் செயற்கை அழகான் மேம்பட்ட கட்டடம் எனப் பொருள்படும் இப்பாட்டடியில், ‘ஓவியம்’ நலன் என்னும் நிலைக்களன் அடியாகப் பிறந்த உவமமாம். (தொ. பொ. 279 பேரா.) நன்மை பற்றிய நிதரிசன அணி - ஓரிடத்து நிகழும் செய்தி உலகத்தாருக்குப் பொதுவான நன்மையையோ தீமையையோ விளக்குவதாகக் கூறும் நிதரிசன அணியின் முதல்வகை. எ-டு : பிறர்செல்வம் கண்டால் பெரியோர் மகிழ்வும் சிறியோர் பொறாத திறமும்-அறிவுறீஇச் செங்கமலம் மெய்ம்மலர்ந்த; தேங்குமுதம் மெய்அயர்ந்த; பொங்(கு)ஒளியோன் வீ(று)எய்தும் போது. பிறர் செல்வம் பெற்றுயர்வதைக் கண்டால் பெரியோர் மகிழ்ச்சியடைவதையும், சிறியோர் அதனைப் பொறுக்காத தன்மையையும் அறிவுறுத்தி, மிக்க ஒளியையுடைய சூரியன் உதித்து மேலும் ஒளியுடையவனாகும் காலைநேரத்தில் தாமரைமலர்கள் நெகிழ்ந்து மெய்ம்மலர்ந்தன; தேன் துளிக்கும் குமுதமலர்கள் உடல்வாடிக் குவிந்தன என்ற பொருளமைந்த இப்பாடலுள், பிறர் செல்வம் கண்டு பெரியோர் மகிழ்தல் என்ற நற்செய்தியைக் கதிரவன் உதயத் தில் தாமரை மலர்தல் என்ற செய்தி புலப்படுத்திற்று என்பதன் கண் இவ்வணி அமைந்துள்ளது. (தண்டி. 85-1) நன்மையைக் காட்டித் தின்மையை நீக்குதல் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (91) வருவதோர் அணி. எ-டு : கொடைப்பண்பு பல தீக்குணங்களையும் மறையச் செய்யும் என்ற பொருள்பட நிகழும் ‘இருள்பொழியும் குற்றம் பலவரினும் யார்க்கும் பொருள்பொழிவார் மேற்றே புகழ்’ (தண்டி. 48-3) என்றல் போல்வன. நாட என்ற உவமஉருபு - எ-டு : ‘வேயொடு நாடிய தோள்’ மூங்கிலை ஒத்த தோள்கள் என்று பொருள்படும் இத் தொடரில், நாட என்பது மெய்உவமத்தின்கண் வந்தது. (தொ. பொ. 286 பேரா.) நாலசைச்சீர் முழுதொன்று இணையெதுகை அணி - இணையெதுகை செவிக்கு இன்பம் பயக்கும் ஓசைத்தாய் இருத்தலின் அதனை ‘இணைஎதுகையணி’ என்னும் பெயரிய ஓரலங்காரமாகக் குறிப்பிடும் மாறனலங்காரத்தில் ஓரடியில் நாலசைச்சீர் நான்கும் முழுதும் பெரும்பாலும் எழுத்து ஒன்றிவரும் இணை எதுகை அணிவகை உரையில் கூறப் பட்டுள்ளது. எ-டு : ‘குயில்போல்மொழியும் அயில்போல்விழியும் கொடிபோலிடையும் பிடிபோனடையும்’ என்ற அடியில் இணையெதுகை நாலசைச்சீர் நான்கன் கண்ணும் வந்து செவிக்கு இன்பம் செய்வது இவ்வணி வகையாகக் காட்டப்பட்டுள்ளது. (மா. அ. 180) நாலிரண்டாகும் பால் (1) - வினை பயன் மெய் உரு என்ற நால்வகை உவமங்களும் தொகையாக நான்கும் விரியாக நான்கும் என எட்டாகும் தன்மை. புலிப் பாய்த்துள், மழைவண்கை, துடியிடை, பொன்மேனி என்பன தொகை; புலி அன்ன பாய்த்துள், மழை அன்ன வண்கை, துடி அன்ன இடை, பொன் அன்ன மேனி என்பன விரி. இனி, வினையுவமம் முதலிய நான்கனுடைய எவ்வெட்டு உருபுகளும் பொருளமைப்பு நோக்கி இரண்டிரண்டாகப் பிரிக்கப்பட, வினையுவம உருபுகளின் வகை 2, பயன்உவம உருபுகளின் வகை 2, மெய்யுவம உருபுகளின் வகை 2, உருஉவம உருபுகளின் வகை 2 என எட்டாதலும் உண்டு. (தொ. பொ. 293 பேரா.) ‘நாலிரண்டாகும் பால்’ (2) - வினை பயன் மெய் உரு என்ற பகுப்புடைய உவமத் தொகைகள் நான்கு, உவமவிரிகள் நான்கு ஆக உவமம் எட்டு வகைத்து ஆதல். வினைஉவம உருபுகளுள், அன்ன-ஆங்க - மான - என்ன - என்பனவற்றை ஓரினமாகவும், விறப்ப - உறழ - தகைய - நோக்க - என்பனவற்றைப் பொருள் வேறுபாடுபற்றி மற்றோரினமாகவும் கொண்டும்; பயன் உவம உருபுகளுள், எள்ள - பொருவ-கள்ள-வெல்ல-என்ற நான்கும் உவமத்தை இழித்தற் பொருளவாய் வருதலின் ஒன்றாகவும், விழைய -புல்ல- மதிப்ப-வீழ என்ற நான்கும் உவமத்தை உயர்த்துக் கூறலின் ஒன்றாகவும், ஆக அவற்றை இரண்டினங்களாகக் கொண்டும்; மெய்யுவம உருபுகளுள், கடுப்ப- மருள- புரைய-ஓட- என்ற நான்கும் ஐயப்பொருளவாகி ஒன்றாகவும், ஏய்ப்ப- ஒட்ட-ஒடுங்க-நிகர்ப்ப-என்ற நான்கும் ஐயம் நீங்கிய பொருள வாகி ஒன்றாகவும், ஆக அவற்றை இரண்டு இனங்களாகக் கொண்டும்; உருஉவம உருபுகளுள், போல-ஒப்ப-நேர - நளிய - என்ற நான்கும் மறுதலையின்றிச் சேர்ந்தன என்று குறிப்பிடும் வாய்பாடாதலின் ஒன்றாகவும், மறுப்ப-காய்த்த - வியப்ப - நந்த-என்ற நான்கும் மறுதலை தோன்றி நிற்கும் பொருளவாதலின் ஒன்றாகவும், ஆக அவற்றை இரண்டினங் களாகக் கொண்டும், வினை பயன் மெய் உரு என்பன பற்றி வந்த 32 உவம உருபுகளையும் எட்டாகப் பகுத்துக்கோடலும் உண்டு என்பது. (293 பேரா.) நாவின் ஒப்பு - கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, இனிப்பு என்னும் ஆறும் நாவான் நோக்கி ஒப்புமை கோடற்கு உரியன. (வீ.சோ. 96 உரை) நிகர் எடுத்துக்காட்டுவமை அணி எடுத்துக் காட்டுவமை அணி வகையுள் முதலாவது. அது காண்க. நிகர்ப்ப என்னும் உவமஉருபு - எ-டு : ‘கண்ணொடு நிகர்க்கும் கழிப்பூங் குவளை’ கண்களை ஒத்த குவளைப் பூக்கள் என்று பொருள்படும் இத்தொடரில், ‘நிகர்ப்ப’ மெய்யுவமத்தின்கண் வந்தது. இது மெய்யுவமத்திற்கே சிறந்த உருபு. (தொ. பொ. 290 பேரா.) நிகழ்காலத் தடைமொழி அணி - இது ‘நிகழ்வினை விலக்கு’ எனவும்படும். அது காண்க. (வீ. சோ. 164 உரை) நிகழ்வின் நவிற்சி அணி - முன்பு நடந்த நிகழ்ச்சியையாவது இனிமேல் நடக்கப்போ கின்ற நிகழ்ச்சியையாவது அப்பொழுது நடப்பதைப் போலக் கூறுவதோர் அணி. இதனைப் பாவிகாலங்காரம் என்ப வடநூலார். எ-டு : பிரிவுணர்ந்த அக்காலப் பேதைவிழிக் கஞ்சம் சொரிதரளம் யான்தூர நாட்டில் - மருவல்உறும் இப்போதும் காண்கின்றேன் என்செய்கோ இங்(கு)இதற்குத் துப்(பு) ஓது தோழ! நீ கூறு. பிரிந்த காலத்துத் தலைவி கண்ணும் கண்ணீருமாக விடை கொடுத்த காட்சி தலைவன் அவளைப் பிரிந்து சேய்மைக்கண் சென்று தங்கியிருந்த காலத்தும் உருவெளியாகக் காட்சி வழங்கிக் கொண்டிருந்த நிகழ்ச்சியைத் தன் தோழனுக்கு அவன் கூறியதன்கண் இவ்வணி காணப்படுகிறது. (ச. 120; குவ. 94) நிகழ்வினை விலக்கணி - முன்ன விலக்கணி வகைகளுள் ஒன்று; நிகழ்கின்ற வினையை விலக்கிக் கூறுதல். எ-டு : மாதர் நுழைமருங்குல் நோவ மணிக்குழைசேர் காதின் மிகைநீலம் கைபுனைவீர்! - மீதுலவும் நீள்நீல வாட்கண் நிமிர்கடையே செய்யாவோ, நாள்நீலம் செய்யும் நலம்? “இப்பெண்ணின் மெல்லிய இடைநோவ மணிகளால் ஆன குழைகளை அணிந்திருக்கும் காதுகளில், மேலும் மிகையாக அலங்காரம் செய்வதற்காக நீலமலர்களைச் செருகி அணி செய்கின்றீர்களே! முன்னரே குழையின் பாரத்தால் நோகும் இவள்இடை மேலும் நோமே! நாற்புறமும் உலவுகின்ற கண்கள், காதளவு நீண்டிருத்தலாலேயே, அன்றலர்ந்த நீலமலர் செய்யும் அழகைத் தாமே செய்யமாட்டாவோ!” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், நீண்ட நீல விழியா ளுக்குக் காதுகளில் நீலமலர்கள் கொண்டு அலங்காரம் செய்வது மிகை என்று, நிகழ்கால வினை விலக்கப்பட்டமை காண்க. (தண்டி. 43-3) நிகாசம் - உவமை. நிச்சயகர்ப்பம் - ஐய அணி எனப்படும் சந்தய அலங்காரத்தின் மூவகைகளுள் ஒன்று இது; ஐயுற்றவழித் துணிதல் முடிந்த முடிவாகாது, உள்ளே அடங்கியிருத்தலைக் கூறுவது. எ-டு : முண்டகத்தான் என்னின் முகம்ஒன்றே, நான்குமுகம் கண்டமைமற் றில்லையால்; கண்ணனெனில் - தண்துளபத் தாமத்தான் அன்று; மகிழ்த் தாமத்தா னைத்துதித்(து)எந் நாமத்தான் என்றுரைப்பேம் நாம். “இவனைப் பிரமன் எனக்கொள்வோமெனில், இவன்பால் நான்முகங்கள் இல்லை, முகமொன்றே உளது; திருமால் எனக் கொள்வோமெனில், இவன் துழாய்மாலையை அணிந்திலன். மகிழமாலையைத் தரித்துள்ள சடகோபனைத் துதித்து இவன் பெயர் யாது என்று விரைவிற் சொல்வேன்” என்ற இக்கைக்கிளைத் தலைவி கூற்றில் ‘இவன் மகிழமாலையைத் தரித்தோனே’ என்ற தெளிவினை, இவ் ஐயஅணி வெளிப் படக் கூறாமல் அகப்படுத்தி வந்தவாறு காண்க. (மா. அ. 137). ஐயுற்றவழித் தெளிந்து முடிவுசெய்வது என்ற சந்தய அணிவகை வரும் தலைப்பிற் காண்க. நிச்சயாந்தம் - எ-டு : பாடற் சுரும்பெனிலோ பண்மிழற்றும்; காவியெனில் ஓடைக்குள் அன்றி உதியாதால்; - ஏடவிழ்தார் வள்ளல் அருள்மாறன் மால்வரைமான் கண்ணேஎன் உள்ளம் திறைகொண் டது. சுரும்பு போல் இசை பயிற்றாமையாலும், குவளைமலர் போல் ஓடையுள் தோன்றாமையாலும், என்னுள்ளத்தைக் கவர்ந்தன தலைவியின் கண்களே என்று முடிவு செய்தமை இவ்வணி யாம். (மா. அ. 137) நிதர்சநாலங்காரம் - ‘நிதரிசன அணி’ காண்க. நிதர்சன அணி - நிதரிசனம் - கண்கூடான காட்சி. ஒருவகையால் ஒரு பொருளுக்கு நிகழ்கின்ற செயலுக்கு ஒத்த பயனைப் பிறி தொன்றற்குப் புகழோ நன்மையோ, பழியோ தீமையோ செய்வதாகக் காட்டும் அணி இது. இது நன்மை பற்றிய நிதரிசன அணி, தீமை பற்றிய நிதரிசன அணி என இரு வகைத்து. அவற்றைத் தனித்தலைப்புள் காண்க. (தண்டி. 85) நிதர்சன அணியின் வேறு பெயர்கள் - 1. சுட்டு அணி (வீ.சோ. 174) 2. காட்சி அணி. (ச.41; குவ. 19) நிந்தாத்துதி அணி - நிந்தாஸ்துதி; இகழ்வது போல வெளிப்படையாக உரைக்கும் சொல் குறிப்பாகப் புகழ்வதாக அமைவது. இது புகழாப் புகழ்ச்சியணி எனவும்படும். இது நுவலாச்சொல் என வீர சோழியத்துள் கூறப்படும். இது ‘தொன்னூல் விளக்கம் கூறும் புகழ்மாற்றணியின் ஒரு கூறாம். இது சந்திரலோகம் குறிக்கும் வஞ்சப்புகழ்ச்சி வகையைச் சார்ந்தது. எ-டு : மாயன் அயோத்திவரு மாயவன் தூதாய் மேய கவிக்கரசன் மேனாளில் - தாயதெலாம் முள்ளடக்கும் தாள்தா மரைக்கையான் முண்டமுனி உள்ளடக்கிக் கொள்ளும் உவர். அநுமன் கடந்த கடல் அகத்தியன் கைக்குள் ஆசமனிய நீராக அடங்கியது என்று பழிப்பது போலக் கூறி, அத்தகைய பெருமுனிவன் தன் தவ வலிமையால் அடக்கிய கடலை அநுமன் தன் உடல்வலிமையால் முழுமையாக எளிதில் தாண்டினான் எனக் குறிப்பால் புகழ்ந்தார். (மா. அ. 228) நிந்தை உவமை - உபமானத்தைப் பழித்துக் கூறி உபமேயத்திற்குச் சிறப்புக் கூறுகிற உவமையணி வகை. எ-டு: மறுப்பயின்ற வாண்மதியும் அம்மதிக்குத் தோற்கும் நிறத்(து) அலரும் நேர்ஒக்கு மேனும் - சிறப்புடைத்து தில்லைப் பெருமான் அருள்போல் திருமேனி முல்லைப்பூங் கோதை முகம். முல்லைப்பூச் சூடிய இவ்வழகியாளது முகம், மறுவுடைய சந்திரனையும் சந்திரனுக்குத் தோற்கும் நிறமுடைய தாமரை யையும் போல்வதே எனினும், மறுவும் தோல்வியுமான குறை பாடுடைய அச்சந்திரனையும் தாமரைப்பூவையும்விடச் சிறப்புடைத்து என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், உவமைப் பொருள்களான மதியையும் தாமரையையும் பழித்துரைத்து உபமேயப்பொருளான மடந்தைமுகத்திற்குச் சிறப்புக் கூறப் படுவதால் இவ்வணி வந்தவாறு. (தண்டி. 32-8) நிந்தோபமா - நிந்தையுவமை, பழிப்புவமை. ‘நிந்தை உவமை’ காண்க. நிபம் - 1. உவமை 2. காரணம் (டு) நிரல் நிறுத்து அமைத்தல் - ஒரு பொருளுக்கே அதன் பல்வேறு நிலைகளைச் சுட்டி யுணர்த்தல் வேண்டியவழிப் பல உவமங்களை நிரல்பட அடுக்கி நிறுத்தல். எ-டு : ‘நிலம்நீர் வளிவிசும்பு என்ற நான்கின் அளப்பரி யையே’ (பதிற். 14) ஈண்டு ஆற்றல் மிக்க மன்னற்கு நான்கு பூதங்கள் உவமங்களாக முறையே அடுக்கிக் கூறப்பட்டன. (தொ. உவம. 38 ச .பால.) நியம உவமை - இவ்வுபமேயத்திற்கு இவ்வுபமானமே உரியது என்று வரை யறுத்துக் கூறும் உவமை வகை. எ-டு : ‘தா(து)ஒன்று தாமரையே நின்முகம் ஒப்பது; மற்று யாதொன்றும் ஒவ்வா(து); இளங்கொடியே!’ முகத்திற்குத் தாமரையே ஒப்பாகும்; மற்ற எதுவும் ஒப்பாகாது என்று உவமையை வரையறுத்துக் கூறலின், இது நியம உவமை யாயிற்று. (தண்டி. 32-9) நியமச்சிலேடை அணி - நியமம்-வரையறை. சில இயல்புகளைச் சிலேடையால் சில பொருள்களுக்கே வரையறுத்துக் கூறும் நியமச்சிலேடை, சிலேடையணிவகை ஏழனுள் ஒன்று. எ-டு : வெண்ணீர்மை தாங்குவன முத்தே; வெறியவாய்க் கண்ணீர்மை சோர்வ கடிபொழிலே; - பண்ணீர்மை மென்கோல யாழ இரங்குவ; வேல்வேந்தே! நின்கோல் உலாவும் நிலத்து. வெண்ணீர்மை - வெண்மை நிறம், அறியாமை வெறி-வாசனை, பித்துற்ற தன்மை கண்ணீர்மை - கண்ணீர் விடுதல், தேன் மிக உடைமை (கள் + நீர்மை) இரங்குதல்-ஒலித்தல், வருந்திப் புலம்புதல். “மன்னவ! நீ ஆளும் நாட்டில் வெண்ணீர்மை உடையன முத்துக்களே, அஃது உடையவர் மக்கள் அல்லர்; வெறியுடை யனவாய்க் கள் சோர்வன சோலைகளே, வெறிகொண்ட மக்களோ கண்ணீர் விட்டழும் மக்களோ இலர்; இரங்குவன யாழே அன்றி மக்களுள் இரங்குவார் யாருமிலர்” என்று பொருள்படும் இப்பாடற்கண், வெண்ணீர்மை முதலிய நான் கனையும் ஒவ்வொரு பொருட்கே வரையறை செய்து சிலேடை வகையால் பொருள் கொள்ள வைத்தவாறு. (தண்டி. 78-4) நியம விலக்குச் சிலேடை அணி - சிலேடை அணிவகை ஏழனுள் ஒன்று; சில இயல்புகளைச் சிலேடையால், சிலபொருள்களுக்கே உள என்று வரையறை செய்யாமல் கூறுவது. எ-டு : ‘சிறைபயில்வ புட்குலமே, தீம்புனலும் அன்ன; இறைவ! நீ காத்தளிக்கும் எல்லை - முறையின் கொடியன மாளிகையின் குன்றமே, அன்றிக் கடிஅவிழ்பூங் காவும் உள.’ சிறை-சிறகு, கரை எனும் சிறை; கொடியன-மேலே பறக்கும் கொடிகளையுடையன, முல்லை போன்ற கொடிகளையுடையன. “மன்னவ! நீ ஆளுகின்ற நாட்டில், சிறகைப் பெற்றவை பறவைகள் மாத்திரம் அல்ல; ஆற்று நீரும் கரைகளாகிய சிறைக்குள் அடங்கி ஓடும். உன் நகரங்களில் உள்ள குன்றம் போன்ற மாளிகைகள் மாத்திரம் கொடியை உடையன அல்ல; நறுமணம் கமழும் சோலைகளும் முல்லை போன்ற கொடி களை யுடையனவே” என்று பொருள்படும் இப்பாடற்கண், சிறைபயில்வ கொடியன எனும் இரண்டுசொற்களும் சிலேடை வகையால், வரையறை செய்யப்படாமல் கூறப்பட் டமை நியமவிலக்குச் சிலேடையாம். மேலும், சிறைப்படு தலும், கொடியன (-கொடுமை உடையன) ஆதலும் இழி வுடையன. சிலேடையால் அவற்றை உயர்வுடையவாகக் காட்டிய சிறப்பும் காண்க;அவை யிரண்டும் மக்கட்கு இல்லை என விலக்கியமையும் காண்க. வரையறையை விலக்கிச் சிலேடை வந்தமையின் இப்பெயர்த்தாயிற்று என்க. இஃது அநியமச் சிலேடை எனவும் படும். (தண்டி. 78-5) நியமோபமா அலங்காரம் - நியம உவமை; அது காண்க நிர்ணயோபமா அலங்காரம் - தேற்ற உவமை, துணிவுவமை; தேற்ற உவமை காண்க. நிரல் நிறை அணி - பெயரும் வினையுமாம் சொற்களையும் பொருள்களையும் வரிசையாக முன் கூறிப் பின் அம்முறையே இணைப்பதும், எதிர் நிரலாக இணைப்பதும் ஆம். முறையே இணைப்பது முறை நிரல்நிறை, எதிர் நிரலாக இணைப்பது எதிர் நிரல் நிறை எனப்படும். எ-டு : காரிகையார் மென்மொழியால், நோக்கால், கதிர்முலையால், வார்புருவத் தால்,இடையால், வாய்த்தளிரால் - நேர்தொலைந்த கொல்லி, நெடுவேல், கோங்குஅரும்பு, வாங்குசிலை, வல்லி, கவிர்மென் மலர். மகளிருடைய மென்மொழியால் கொல்லிப்பண்ணும், நோக்கால் நெடிய வேலும், முலையால் கோங்கமொட்டும் புருவத்தால் வில்லும், இடையால் கொடியும், வாய்த்தளிரால் முள்முருங்கைப்பூவும் ஒப்பு அழிந்து தோற்றன - என்ற இப்பாடற்கண் மென்மொழி முதலாக வாய்த்தளிர் ஈறாக உள்ள ஆறு பொருள்களுக்கும் முறையே கொல்லிப்பண் முதலாக கவிர்மலர் ஈறாக உள்ள ஆறு உவமைகளும் நிகர் அழிந்தன என்று காட்டியமை முறை நிரல்நிறையாம். இனி, எதிர்நிரலாக முடிக்கும் எதிர் நிரல்நிறை வருமாறு: எ-டு : ஆடவர்கள் எவ்வா(று) அகன்றொழிவார்? வெஃகாவும் பாடகமும் ஊரகமும் பஞ்சரமா-நீடியமால் நின்றான் இருந்தான் கிடந்தான்; இதுவன்றோ மன்றார் மதிற்கச்சி மாண்பு? “நெடிய திருக்கோலம் கொண்ட திருமால் வெஃகாவும் பாடகமும் ஊரகமும் (இவை மூன்றும் இடங்கள்) தனக்கு இருப்பிடங்களாக, (எதிர்நிரலாக முடிக்க,) ஊரகத்தில் நின்றான், பாடகத்தில் இருந்தான், வெஃகாவில் கிடந்த கோலம் கொண்டான். ஈதன்றோ மதிற்காஞ்சிப்பதியின் சிறப்பு?” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், வினைகளை எதிர்நிரலாக மாற்றிப் பெயர்களொடு முடித்துப் பொருள் கொண்டமையால், இஃது எதிர் நிரல்நிறை யாயிற்று. (தண்டி. 67) நிரல்நிறைஅணி பூட்டுவில்லொடு வருவது - பெயரொடு பெயர் எதிர்நிரல்நிறை அணிக்கண் செய்யுள் ஈற்றுப் பெயர் முதல் நின்ற பெயர்எழுவாயுடன் பூட்டுவில் லாக இணைதல். பூட்டுவில் பொருள்கோளையும் மாற னலங்கார ஆசிரியர் ஓரணியாகக் குறிப்பிடுவர். எ-டு : காவி கமலம் கமழ்தளவம் செங்காந்தள் ஆவி அனையாய்! அரங்கத்தான் - பூவின் பிரமனைமுன் பெற்ற பெருமான் வரைமான் கரம்முறுவல் ஆனனம்உண் கண். இப்பாடற்கண், உண்கண் காவி, ஆனனம் கமலம், முறுவல் கமழ்தளவம், கரம் செங்காந்தள்- என எதிர் நிரல்நிறையாக உபமான உபமேயங்களை இணைக்கும்போது, ஈற்றுச்சொல் லும் முதற்சொல்லும் இணைந்து பொருள் தருவதாகிய பூட்டுவில் அணியும் உடன் அமைந்தவாறு. (மா.அ.பாடல் 399) நிரல்நிறை அணியின் மறுபெயர் - அடைவு (வீ.சோ. 154); ‘யதா சங்க்யாலங்காரம்’ என வட நூல்கள் கூறும். நிரல்நிறை அணிவகைகள் - பெயர் முறைநிரல்நிறை, பெயர் எதிர்நிரல்நிறை, பெயர் வினை முறைநிரல்நிறை, பெயர்வினை எதிர்நிரல்நிறை, வினை முறை நிரல்நிறை, வினை எதிர்நிரல்நிறை, வினை பெயர் முறை நிரல்நிறை, வினை பெயர் எதிர்நிரல்நிறை, எழுத்து முறை நிரல்நிறை, முறைநிரல்நிறை, இடையிணை நிரல்நிறை, பூட்டு வில் நிரல்நிறை என்பன. (தனியே சொல்லப்பட்ட நிரல்நிறை என்பது வேறு.) (மா. அ. 162-174) நிரல்நிறை உவமை - உபமானத்தையும் உபமேயத்தையும் முறைநிரல்நிறையாக அமைக்கும் உவமையணிவகை. எ-டு : மலைமதிதேன் மாறன் வரைவேல் விழியாள் முலைவதனம் நண்பா மொழி. இதன்கண், மலை முலை, மதி வதனம், தேன் மொழி என உபமான உபமேயங்கள் முறையே வரிசையாக அமைந்தமை காணப்படும். (மா. அ. 111) நிருத்தி அலங்காரம் - பிரிநிலை நவிற்சி; அது காண்க. நிருடி இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (99) வருவதோர் அணி. ஒரு பொருளுக்குத் தரும் பெயரைக் காரணப்பெயரால் அன்றி இடுகுறிப்பெயரால் காரணம் காட்டி அந்தப் பொரு ளுக்கு ஆகும் என்று கூறுவது. எ-டு : பெண்களின் குளிர்ந்த பார்வையையுடைய கண் களை ‘மழைக் கண்’ என்றல் மரபு. “சீதை இராமனை நினைந்து எப்பொழுதும் கண்ணீர் வடித்தவாறே இருந்தமையின் அவள் கண்கள் மழைக்கண்களாகவே இருந்தன” எனக் கண்ணீர் விடும் காரணத்தால் அவள் கண்களுக்கு ‘மழைக்கண்’ என்ற பெயர் அமைந்தது என்றல் போல்வன. நிலைத்திணைத் தற்குறிப்பேற்ற அணி - நிலைத்திணைப் பொருள் ஒன்றன் இயல்பான தன்மையை ஒழித்துக் கவி தன் கற்பனையால் வேறு ஒரு குறிப்பினை ஏற்றியுரைத்தல் என்ற தற்குறிப்பேற்ற அணிவகை இது. எ-டு : வேனில் வெயிற்குலந்த மெய்வறுமை கண்டிரங்கி வானின் வளம்சுரந்த வண்புயற்குத் - தானுடைய தாதும்மே தக்க மதுவும் தடஞ்சினையால் போதும்மீ தேந்தும் பொழில். முதுவேனிற் காலத்தில் வெயில் தாங்காமல் உலர்ந்துபோன தன் மேனியின் வாட்டத்தை அறிந்து, அதைப் போக்கும் வகையில் மழை பொழிந்த கொடையாளியான மேகத்திற்குக் கைம்மாறாகச் சோலை தன் பெரிய கிளைகளாம் கரங்களால் மகரந்தமும் தேனும் பூவும் ஏந்துகிறது என்ற பொருளமைந்த இப்பாடற்கண், உயர்ந் தோங்கிய மரங்களில் பூக்களும் மகரந்தமும் தேனும் மிகுதல் இயல்பு; இவ்வியல்பு நிகழ்ச்சி யில் கவி தனது கற்பனையால், மரங்கள் மழைக்கு மகிழ்ந்து மேகத்திற்குக் கைம்மாறு செய்வதாகப் புனைந்தமை தற்குறிப் பேற்ற அணியாம். பொழில் நிலைத்திணையாம். (தண்டி. 26-2) நிறம் அல்லாத உரு உவமப்போலி - ‘நிறம் அல்லாத பண்பு உவமப்போலி’- காண்க. நிறம் அல்லாத பண்பு உவமப்போலி எ-டு : ‘பன்மலர் கஞலிய பழுமரச் சோலையுள் தன்நிழல் துணையாத் தளிர்த்தமௌ வலின்மலர் விரிகதிர் தெறுதலின் வெம்மையுற் றுணங்க முட்புறக் குடக்கனி முடப்பல வதன்அயல் செங்கிடை மலர்கவின் சிறப்பவும் நிழற்றும் ஒண்புனல் ஊரன்’ சோலையுள் தன் நிழலே துணையாகத் தளிர்த்த முல்லைக் கொடியின் மலர் சூரியன் வெப்பத்தால் வாட, வளைந்த பலாமரம் அம்முல்லைக் கொடிக்கு நிழல் தாராது அயலில் தோன்றிய நெட்டியின் மலருக்கு அழகு மிகுமாறு அதற்கு நிழலைச் செய்யும் ஊரன் என்று கூறவே, “தலைவனையே துணையாகக் கருதி ஆவி தளிர்க்கும் தலைவி காமத்தீயால் கருகி உடல் வாடவும், தனக்கு அயலாகிய பரத்தையர்க்கு உயிரும் உடலும் தளிர்ப்பத் தலைவன் தண்ணளி செய் கிறான்” எனப் பண்பு பற்றிய உள்ளுறை உவமம் வந்தது. இது நிறம் பற்றி வந்தது அன்று எனவே, இதனை நிறம் அல்லாத பண்புவமப்போலி எனவும், நிறம் அல்லாத உரு உவமப் போலி எனவும் கூறுப. (மா. அ. பாடல். 278) நிறம் பற்றிய உவமம் - எ-டு : செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை செல்சுடர்ப் பசுவெயில் தோன்றி யன்ன செய்யர் (................... மயிலியலோரும்) (மதுரைக். 410-413) என்ற அடிகளில், மாலைநேரத்து வெயிலில் வைக்கப்பட்ட கிளிச்சிறை என்ற பொன்னால் செய்யப்பட்ட பாவை போன்று ஒளிவீசும் செந்நிறத்தினர் அம்மகளிர் - என்று கூறுதற்கண், நிறம் பற்றிய உவமம் வந்தவாறு. இஃது இச்சூத்திரத்துள் ‘ஆதி’ என்றதனால் கொள்ளப்பட்ட வற்றுள் ஒன்று. (வீ. சோ. 158 உரை) நிறை உவமம் - உபமேயத்தினுடைய வினை பயன் மெய் உரு என்ற நான்கு கூறுபாடுகளும் உபமானத்தின்கண்ணும் முற்றும் அமைந்து காணுமாறிருப்பது. எ-டு : ஆரா அமுதம் அளித்ததிருப் பாற்கடலுள் நாரா யணன்நா கணைமீது - நேரிழாய் எப்படியே கண்வளரா நின்றான் எனும்அரங்கத்(து) அப்படியே கண்வளர்வான் ஆம். இப்பாடலில், திருப்பாற்கடல் நாதன் - உபமானம்; அரங்க நாதன் - உபமேயம். அவனைப்போல இவனும் கண்வளர்கிறான் - வினைஉவமை. அவன் திருமேனி போல்வது இவன் திருமேனி - வடிவுஉவமை. அவன் திருமேனி ஒளி போல்வது இவன் திருமேனி ஒளி - நிறஉவமை. அவன் அடியார்க்கு முத்தி அளிப்பதுபோல இவனும் முத்தி அளிக்கிறான் - பயனுவமை. இது பூரணஉவமை எனவும்படும். (மா. அ. 94 உரை) நிறைவுப் புனைதல் - இது மணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (113) வருவதோர் அணி. எ-டு : கடலை ஒப்புமை கூறுவது. ‘சாரல் நாடன் நட்பு, (கடல்)நீரினும் ஆரளவின்று’ (குறுந். 3.) என்றல் போல்வன. நினைப்பு அணி - ஒரு பொருளைக் கண்டதும் அதனோடு ஒப்புமையுடைய மற்றொரு பொருளை நினைப்பது. இதனை வடநூலார் ஸ்மிருதி மதாலங்காரம் என்ப. எ-டு : காதலுறு கஞ்சமலர் கண்ட எனதுமனம் கோதைமுகம் தன்னைநினைக் கும். இப்பாடற்கண், தாமரையைக் கண்டு மனம் அதனோடு ஒப்புமை யுடைத்தாகிய தலைவிமுகத்தை நினைக்கும் என்று கூறுவது நினைப்பணியாம். (ச. 16, குவ. 8.) நினைவு - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (21) வருவதோர் அணி. ஒரு பொருளைக் கண்டதும், இதற்கு இணை அது வென்று மற்றொன்றை நினைப்பது. இது நினைப்பு அணி எனவும்படும்; அது காண்க. எ-டு : ‘நின் கண்போல் பிறழும் திறத்தால் கயல் புகழ்வல்’ (தண்டி. 32-18) நுகர்ச்சியின்மை அணி - ஒருபொருள் ஐம்பொறி நுகர்ச்சிக்குப் புலப்படுவது அன்றாய் இருப்பதால் அப்பொருளே இல்லை என்று கூறுவது. இதனை வடநூலார் அநுபலப்தி அலங்காரம் என்ப. “பெண்ணின் இடை கண்ணுக்கோ ஊற்றின்பத்திற்கோ புலனாவதில்லை. மேலேயுள்ள இருகொங்கைகளையும் தாங்குதற்கு ஆதாரமான இடை துணிவாக இருத்தல் வேண் டும் என்று நிச்சயிக்க வேண்டா; அவை மன்மதனுடைய இந்திரசால வித்தையினால் ஆதார மில்லாமலும் இருத்தல் கூடும். ஆகவே, பொறிகளுக்குப் புலனாகாத காரணத்தால் இடை என்ற உறுப்புப் பெண்ணிற்கு இல்லை” என்று முடிவு செய்வது நுகர்ச்சியின்மை அணிக்கு எடுத்துக்காட்டாம். (குவ. 113) நுட்ப அணி - பிறர் கருத்தை அறிந்துகொண்டு அதற்கு வெளிப்படையாக எதிர்மொழி கொடுக்காமல் மறைமுகமாகத் தன் குறிப்பி னாலாவது செய்கையினாலாவது எதிர்மொழி கொடுப்பது. இதனை வடநூலார் சூட்சுமாலங்காரம் என்ப. இது குறிப்பி னால் வரும் நுட்பம் எனவும், தொழிலினால் வரும் நுட்பம் எனவும் இருவகைப்படும். இவ்வணி நுணுக்கம் எனவும் , பரிகரம் எனவும் வேறு பெயர் பெறும். எடுத்த பொருளை வெளிப்படக் கூறாது, அது தோன்ற உவமையாக ஆயினும், முன்பின் வருவது கொண்டாயினும் அதனைக் காட்டும் குறிப்பினை உரைப்பது நுட்ப அணியாம். (தண்டி. 64; வீ.சோ. 169; மா. அ. 233, 234; தொ.வி. 347; மு.வீ.பொருளணி. 85; ச.110; குவ.84) நுட்ப வளர்ச்சி - இது மாணிக்க வாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (75) வருவதோர் அணி. சிறிய பொருளைப் பெரியதாக்கிக் கூறுவது: எ-டு : வண்டு இசைக்கும் கோதை மதர்விழிகள் சென்றுலவ, எண்திசைக்கும் போதா(து) இடம், (தண்டி.23-2) நுணுக்க அணி - இது ‘நுட்ப அணி’ எனவும் பெறும். அது காண்க. (வீ.சோ. 153) நுதலிய மரபின் உவமம் - மரபு பற்றி அமைந்த உவமம் என்பது. எனவே, உவமம் கூறுவதற்கு அடிப்படை மரபே என்பது. மரபு பற்றி முதலுக்கு முதலும், முதலுக்குச் சினையும், சினைக்கு முதலும், சினைக்குச் சினையும், ஆண்பாலுக்குப் பெண்பாலும், பெண்பாலுக்கு ஆண்பாலும், ஒருமைப்பா லுக்குப் பன்மைப் பாலும், பன்மைப்பாலுக்கு ஒருமைப்பா லும் உயர்திணைக்கு அஃறிணையும் அஃறிணைக்கு உயர் திணையும் உவமமாக வரலாம் என்பது. திணைவழு, பால்வழு, முதல்சினைவழு என்பனவற்றைத் தொன்று தொட்டு வழக்காற்றில் வரும் உவமத்தில் கருதுதல் கூடாது என்பது. (தொ. பொ. 281 பேரா.) நுவலாச் சொல் அணி - இது நிந்தாத்துதி எனவும், புகழ் மாற்றணி எனவும், புகழாப் புகழ்ச்சி அணி எனவும், வஞ்சப் புகழ்ச்சி அணி எனவும் கூறப்பெறும். ‘புகழாப் புகழ்ச்சி’ அணி காண்க. நுவலா நுவற்சி அணி - இஃது ஒட்டணி எனவும், குறிப்பு நவிற்சி அணி எனவும், சுருக்கணி எனவும், பிறிது மொழிதல் அணி எனவும் கூறப் படும். ‘ஒட்டணி’ காண்க. நெடுமொழி அணி - இது தன்மேம்பாட்டுரை அணி எனவும்படும். ஊக்க அணி என்பதும் அது. ‘தன்மேம்பாட்டுரைஅணி’ காண்க. (மா. அ. 212) நெடுமொழி அலங்காரம் - போரில் வீரனொருவன் தனக்கு நிகரில்லையென்று மேம்படுத் துரைக்கும் அணி. (மா. அ. 212) நெறி - செய்யுள் நடை. வைதருப்பம், கௌடம் என இரண்டாக இதனைப் பகுப்பர் (தண்டி.13); பாஞ்சாலம் என ஒன்றனையும் கூட்டி மூன்றென்பர். (மா. அ. 77) நேர என்னும் உவம உருபு - எ-டு : ‘கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர் ’ (அகநா. 1) கார்காலத்து மலரும் கொன்றையினுடைய பொன்னை ஒத்த புதுமலர் என்று பொருள்படும் இத்தொடரில், நேர என்பது உருஉவமப் பொருட்கண் வந்தது. இஃது உரு உவமத்திற்கே சிறந்த உருபு. (தொ. பொ. 291 பேரா.) நோக்க என்னும் உவம உருபு எ-டு : ‘மான்நோக்கு நோக்கும் மடநடை ஆயத்தார்’ மானை ஒத்துத் தம் பார்வையைச் செலுத்தும் இளைய மகளிர் திரள் என்று பொருள்படும் இவ்வடிக்கண், நோக்க என்பது வினைஉவமப் பொருட்கண் வந்தது. இது வினையுவ மத்திற்கே சிறந்த உருபு. (தொ. பொ.287 பேரா.) நோக்கு அணி - இஃது ஊகாஞ்சிதம் எனவும், தற்குறிப்பேற்ற அணி எனவும், கூறப்பெறும். ‘தற்குறிப்பேற்ற அணி’ காண்க. (வீ. சோ. 153) நோக்கு உவமை - இது தற்குறிப்பேற்ற உவமை எனவும்பெறும்; அது காண்க. (வீ. சோ. 156) ப ப்ரசம்ஸோபமா அலங்காரம் - புகழுவமை அணி; அது காண்க. ப்ரத்யட்ச ப்ரமாணாலங்காரம் - இது ‘காட்சிப் பிரமாண அணி’ என்று வழங்கப்பெறும்; அது காண்க. (குவ. 108) ப்ரத்யநீகாலங்காரம் - விறல்கோள் அணி; அது காண்க. (குவ. 58) ப்ரதிவஸ்தூபமாலங்காரம் - மறுபொருளுவமை அணி; அது காண்க. (குவ. 17) ப்ரதிஷேதாலங்காரம் - முன்னவிலக்கணி; அது காண்க. (குவ. 98) ப்ரதிஷேதோபமாலங்காரம் - விலக்கியல் உவமை அணி; ‘விலக்குவமை’ காண்க. ப்ரதீபாலங்காரம் - எதிர்நிலை அணி; அது காண்க. (குவ. 4) ப்ரஸ்துதாங்குராலங்காரம் - புனைவுளி விளைவு அணி; அது காண்க. (குவ. 28) ப்ரஸாதம் - தெளிவு; பொதுவணிவகை பத்தனுள் ஒன்று. அது காண்க. ப்ரஹர்ஷணாலங்காரம் - இன்ப அணி; அது காண்க. (குவ. 67) ப்ராந்திமத அலங்காரம் - மயக்க அணி; அது காண்க. (குவ. 9) ப்ரியாயோக்தாலங்காரம் - பிறிதின் நவிற்சி அணி; அது காண்க. (குவ. 29) ப்ரேயோலங்காரம் - கருத்தணி; அது காண்க. (குவ.102) ப்ரௌடோக்திஅலங்காரம் - கற்றோர் நவிற்சி அணி; அது காண்க. (குவ. 63) பகாடனம் - இது மாணிக்க வாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (88) வருவதோர் அணி. இது பொருளைத் தான் கிட்ட வேண்டிய காலத்தின் முன்னரே ஒருவன் எய்தப் பெறுவது. எ-டு : இறந்த பின் பெறவேண்டிய வீடுபேற்றைத் தில்லை நடராசனை ஒருகால் வழிபட்ட அளவிலேயே பெறப்பெற்றேம் என்று, ‘கூற்றம் குமைத்த குரைகழற்கால் கும்பிட்டுத் தோற்றம் துடைத்தேம் துடைத்தேமால்’ (சி.செ. கோ.8) என்னுதல் போல்வன. பட்டாங்கு உரைத்த உவமை - மிகுதிகுறைவு எதுவுமின்றி, உள்ளதனை உள்ளபடியே ஒன்றனோடு உவமிப்பது. எ-டு: ஆப் போலும் ஆமா (ஆமா-காட்டுப்பசு) (வீ. சோ. 158) பண்பில் துதி - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (68) வருவதோர் அணி. பண்புஒப்புஉவமையால் புகழ்வது. எ-டு: ‘பால்போலும் இன்சொல்’ (தண்டி. 32-1) பண்பிற்கேற்ற உவமை - நிறமும் வடிவமும் பண்புகளாம் ஆதலின், புலியின் நாவினை ஒத்த நிறமும் வடிவும் உடைய இதழ்களையுடைய தாமரை என்று பொருள்படும் ‘புலிநா அன்ன புல்லிதழ்த் தாமரை’ என்ற உவமை பண்பிற்கேற்ற உவமையாம். (இ. வி. 639) (புன்மை - செம்மை) பண்பு உருவகம் - ஒரு பொருளை அதன் பண்புகளால் உருவகம் செய்துணர்த் துவது. பண்பாவது ஒரு பொருளிடத்தில் என்றும் நிலைத்திருப்ப தாம். கங்கையைச் சடையிலேற்றல், திருமாலைத் தான் திரி புரங்களை அழிக்கப் புக்கபோது அம்பாகக் கோடல், திரு மாலை வலப்பக்கத்தில் கொள்ளுதல், திருமாலை வாகன மாகக் கொள்ளுதல், திரிபுரங்களை அழித்தல் போல்வன சிவபெருமானுடைய பண்புகளாகக் கூறப்பட்டுள. எ-டு : ‘தலையிலமர் கங்கைத் துகிலுடையன் தன்கைச் சிலையிலமர் செங்கண்மால் பாகன் சிவபெருமான்’ தலையில் பொருந்திய கங்கையாகிய வெள்ளிய தலைப்பாகை யுடையவன்; தன் வில்லில் அம்பாக அமர்ந்த, திருமாலைத் தன்னுடம்பில் ஒரு பாகமாகக் கொண்டவன் அல்லது வாகன மாக்கிக் கொண்டவன் எனச் சிவபெருமானுடைய பண்பு களை அடிப்படையாகக் கொண்டு, கங்கைத்துகிலுடை யவன் - செங்கண்மால்பாகன் - என்று குறிப்பிடுவது பண்புரு வகம் ஆம். (வீ. சோ. 160 உரை) பண்புஉவமை - இது குணஉவமையின் மறுபெயர். வடிவு பற்றியும் நிறம் முதலிய குணம் பற்றியும் அமையும் உவமை இது. ‘குண உவமை’ காண்க. (வீ. சோ. 158 உரை) பண்பு ஞாபக ஏது அணி - பண்பினைக் காரணமாகக் கொண்டு செய்தியொன்றை அறிவால் அறிந்தமை கூறுமாறு அமையும் ஏது அணிவகை. எ-டு : ஆய்ந்த தமிழ்மாறன் அணிவரைமேல் இன்றொருவர் பூந்தழைகொண்(டு) ஒன்று புகலாமுன்-வாய்ந்த புதுமலர்ச்சி கொண்டதிந்தப் பொன்வதனம் என்றால் நொதுமலர்மேல் ஆனதிவள் நோக்கு. “தலைவன் தழையாடையைக் கையுறையாக ஏந்தி என்னிடம் ஒருசில சொற்கள் பேசுவதற்குமுன், இவள் பொதுவாக அவனைப் பார்த்தபோதும் இவள் முகத்தின் புதுமலர்ச்சி யாகிய பண்பு பண்டைய தொடர்பை அறிவினால் அறிய ஏதுவாகின்றது” என்னும் தோழி கூற்றில், பண்பு ஞாபக ஏது அணிவகை வந்தவாறு. (மா. அ. பாடல். 443) பண்பு நிலைக்களனாகத் தோன்றிய ஒட்டுஅணி - கவி தான் குறிப்பிடக் கருதிய பண்பினை மறைத்துப் பிறிதொரு பண்பினை வெளிப்படையாகக் கூறித் தான் கூறக் கருதிய பண்பினைக் குறிப்பாகக் கொள்ள வைக்கும் ஒட்டணிவகை. எ-டு : வாழ்ந்த மதிப்புலவீர்! மால்வழங்கும் தூயநீர் வீழ்ந்த நிலத்தியல்பான் மெய்திரிந்தால்-சூழ்ந்ததனைத் தேற்றில் தெளிப்பதல்லால், சேற்றில் செறிகளங்கம் மாற்றப் படும்நெறித்தோ மற்று? மழைநீர் நிலத்தில் விழுந்த இயல்பால் நிறம் வேறுபட்டால், அதனைத் தேற்றாங்கொட்டையால் தெளியச் செய்யலாமே யன்றி, வேறு ஒருவாற்றானும் அச்சேற்றுநீரைத் தெளிவிக்க முடியாது என்பது வெளிப்படைப் பொருள். “இறைவன் அருளிய நற்குணம் உலகியல்பொருள் நுகர்ச்சி யால் வேறுபட்டால், ஞானநூற் கல்வியால் பண்டைய தெளிவினை அடைய முடியுமேயன்றி, சேறுபோல் களங்க முடைய சிற்றினத்தார் உரையாடலால் நற்குணம் தெளி வடையாது” என்பது குறிப்புப்பொருள். இக்குறிப்புப் பொருளைக் கருதிக் கவி மேற்கூறிய வெளிப் படைப் பொருளைக் கூறியது பண்பு நிலைக்களனாகிய ஒட்டு. நீருக்கும் ஞானத்துக்கும் தெளிவுடைமை பண்பாம். (மா. அ. பா.287) பண்புப் புணர்நிலை அணி - புணர்நிலை அணிவகைகளுள் ஒன்று; ஒரு பண்பினை இரு பொருளுக்குப் பொருந்துவதாகப் புணர்த்துக் கூறுவது. எ-டு : பூங்காவில் புள்ஒடுங்கும் புன்மாலைப் போழ்துடனே நீங்காத வெம்மையவாய் நீண்டனவால்-தாம்காதல் வைக்கும் துணைவர் வரும்அவதி பார்த்(து)ஆவி உய்க்கும் தமியார் உயிர். தாம் காதலிக்கும் துணைவர் வரும் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பெண்களின் உயிர்கள், பொழிலில் பறவை யெல்லாம் போய் ஒடுங்கும் மாலைப்போதுடன் கூடவே, தாமும் துயரம் தருவனவாய் நீண்டுகொண்டேயிருந்தன என்ற பொருளமைந்த இப்பாடற்கண், துயர் செய்யும் மாலைப் பொழுதின் நீட்சியும் உயிரின் (-வாழ்நாள்) நீட்சியும் புணர்த்துக் கூறப்பட்டன. நீண்டன-பண்படியாக வந்த வினையாதலின், இது பண்புப் புணர்நிலையணி ஆயிற்று. (தண்டி. 86-2) பண்பு முதலிய மூன்றும் விரவும் உவமை - எ-டு : கான யானை கைவிடு பசுங்கழை மீன்எறி தூண்டிலின் நிவக்கும் (குறுக். 54) யானையால் பற்றி யிழுத்துவிடப்பட்ட பச்சைமூங்கில் வளைவு நீங்கி மீண்டும் நிமிர்வதற்கு, மீன் பிடிக்கும் தூண்டில் உயரத் தூக்கப்படுவதனை உவமையாகக் கூறுமிடத்து, வடிவும் தொழிலும் பொதுத்தன்மைகளாக அமைந்துள்ளன. எ-டு : காந்தள், அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி கை ஆடு வட்டின் தோன்றும் (அகநா. 108) காந்தட் பூவின் மகரந்தத்தை அதன்கண் ஊதும் வண்டு, கையால் மேல் எறிந்து விளையாடப்படும் வட்டுக்காயைப் போலக் காணப்படும் என்று பொருள்படும் இவ்வடிகளில், காந்தட் பூவின் நிறத்தினையும் வடிவினையும் ஒப்பது கை; வண்டு மேல்நோக்கிச் சென்று காந்தட் பூவில் அமரும் தொழிலை ஒப்பது, வட்டு மேற்சென்று கையை வந்தடை வது. இவ்வாற்றால் இவ்வுவமைக்கண் நிறம் வடிவு தொழில் என்ற மூன்றும் காணப்படுகின்றன. (இ. வி. 639 உரை) பண்பு விரவி உவமிக்கும் உவமை - எ-டு : தேன் போன்ற மொழி தேன்-உபமானம்; மொழி-உபமேயம். மொழியின்கண் உளதாகிய செவியினிமைக்குத் தேனின்கண் உளதாகிய நா இனிமை உவமையாகிறது. எ-டு : ‘கூழின் மலிமனம் போன்றிரு ளாநின்ற கோகிலமே’ (கோவை. 322) குயிலின் கருநிறத்திற்கு, நற்செயல்களில் ஈடுபாடின்றி உணவு உண்பதிலேயே கருத்தைச் செலவிட்டு வாழ்நாளைக் கடத்தச் செய்யும் இருண்ட மனம் உவமையாகிறது. (குறள். 277 பரிமே.) இவை பண்பு விரவி உவமிக்கும் உவமைகளாம். (இ. வி. 639 உரை) பதமீட்சி அணி - இது சொல் பின்வருநிலை அணி எனவும் கூறப்பெறும்; அது காண்க. (வீ. சோ. 152 உரை) பயன்உவம உருபுகள் - எள்ள, விழைய, புல்ல, பொருவ, கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ - என்ற எட்டும் பெருவரவினவாக வரும் பயனுவம உருபு களாம். இவையே யன்றி, போல, புரைய ஏய்ப்ப, அற்று, கொண்ட, என, செத்து, உறழ, கடுப்ப என்பனவும் சிறுபான்மை பயனுவம உருபுகளாக வரும். (தொ. பொ. 289 பேரா.) பயன்உவம உருபுகளின் இருவகை - பயனுவம உருபுகளாகிய எள்ள, விழைய, புல்ல, பொருவ, கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ - என்ற எட்டனுள் எள்ள, பொருவ, கள்ள, வெல்ல - என்ற நான்கும் உவமத்தினை எள்ளி நகையாடுதல், உவமத்தொடு தன்னை இணையாகக் கருதிப் பொருத்திப் பார்த்தல், உவமத்தின் பண்பினைக் கள்ளுதல், உவமத்தினை வெல்லுதல் என்ற பொருளுடையனவாய் உவமத்தினை இழித்துக் கூறும் வகையைச் சேர்ந்து ஒன்றாய் அடங்கும். விழைய, புல்ல, மதிப்ப, வீழ - என்ற நான்கும் உவமத்தினை விரும்புதல், அன்பால் தழுவுதல், சிறப்பாக மதித்தல், உவமத்தொடு தொடர்பு கொள்ள ஆசைப்படுதல் என்ற பொருளனவாய் உவமத்தினைக் குறைத்துக் கூறாது உபமேயத்தை உயர்த்திக் கூறாது அமையும் வகையைச் சேர்ந்து ஒன்றாய் அடங்கும். இவ்வாற்றான் இவ்வெட்டும் இருவகைய ஆயின. (தொ. பொ. 293 பேரா.) பயன்உவமப் போலி - எ-டு : நீருறை கோழி நீலச் சேவல் கூருகிர்ப் பேடை வயாஅம் ஊர’ (ஐங். 51) நீரில் உறைகின்ற கோழியினத்துள் தனக்குரிய நீலச்சேவலை நினைக்கும் நினைப்பினால் அதன் பேடை தன் முதற் சூலின் கண் ஏற்பட்ட வயவுநோய் நீங்குவது போல, “தலைவியும் தலைவனுடைய மார்பினை நினைக்கும் நினைப்பினாலேயே தன் முதற்சூலின் வயவுநோய் தீரப் பெறுகிறாள்; தலைவன் மார்பு தன்னை விரும்பாவிடினும் அதனை நினைப்பத னாலேயே அவள் அதனைச் சார்ந்தாள் போலப் பயன் பெறு கிறாள்” என்று உள்ளுறைஉவமம் கொள்வது பயனுவமப் போலியாம். (தொ. பொ. 300 பேரா.) பயன்உவமம் - பயன்பற்றி வரும் ஒப்புமை. (தொ. பொ. 276 பேரா.) பயன் உவம வகை - பொன்மரம் போலக் கொடுக்கும் என்பது பயன்உவமவகை. ‘மாரி அன்ன வண்கை’ (புற நா. 133) என்றவழி, மழையான் தோன்றிய விளைச்சலொடு பொருந்த வண்கையான் பெறும் பொருள் உவமம் கொள்ளப்படுகிறது. இங்ஙனம், நேராக உவமம் கொள்ளாமல் இடையிட்டுப் போய் உவமம் கொள் ளுதலே பயனுவமத்தின் இலக்கணம் என்பது பேராசிரியர் கருத்து. அங்ஙனமன்றி, பொன்மரமாகிய கற்பகமரம் வேண்டியார்க்கு வேண்டியன கொடுப்பது போல, வள்ளலும் கொடுக்கிறான் என நேராக உவமம் அமைவதனைப் பயனுவமத்தின் வகை என்று கோடலே அவர் கருத்து. (தொ. பொ. 276 பேரா.) பயன்உவமை - எ-டு : ‘மாரி அன்ன வண்கைத், தேர்வேள் ஆஅய்’ (புறநா. 133) மழையைப் போலக் கொடைத்தன்மையை உடைய, தேரைச் செலுத்தலில் வல்ல ஆஅய் என்ற வேளிர் தலைவன். மழையான் விளையும் பயனும், ஆய்வள்ளலின் கொடையான் விளையும் பயனும் ஒத்தலின் இது பயன்உவமை. (இ.வி. 639) பயன், பண்பு எனப்படாமை - ‘மாரி அன்ன வண்கை’ (புற நா. 133) மாரியான் விளையும் விளைவும், ஆய் வள்ளலுடைய கைகளின் கொடையினான் பெறும் பொருளும் பயனால் ஒத்தலின் இது பயனுவமம் ஆம். இதனைப் பண்பு உவமம் என்று கொள்ளின், மேகத்தி னுடைய கருநிறம் முதலிய பண்பு ஆய்வள்ளலின் கொடைத் தொழிலுக்கோ அதனைச் செய்யும் அவன் கைகளுக்கோ கொள்ளல் வேண்டும். அது முடியாமையின் பயனுவமம் பண்பாகாது, பண்பின் வேறு எனவே படும். (தொ. பொ. 276 பேரா.) பயனந்து - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (88) வருவதோர் அணி. மேம்பட்ட பெரியோர்க்கு ஒன்றும் அருமையில்லை என்பது. எ-டு : “அகத்தியன் கடலைப் பருகினான். ஐயனது அருளைப் பெற்றார்க்கு அதிசயம் இதுவென் கொல்? ஏழு வையமும் முத்தொழில் செய்ய வல்லவர் அவரே யன்றோ?” என்றாற் போல்வது. பர்யாயாலங்காரம் - முறையின் படர்ச்சி அணி; அது காண்க. பரவச விலக்கு - முன்னவிலக்கு என்ற அணிவகைகளுள் ஒன்று; தன் ஆற்ற லுக்கு அப்பாற்பட்டுப் பிறரால் செய்யக்கூடிய ஒன்றனைக் கூறி விலக்குதல். எ-டு : ‘செல்கை திருவுளமேல் யானறியேன் தேன்கமழ்தார் மல்அகலம் தங்கும் மதர்விழியின் - மெல் இமைகள் நோக்கு விலக்குமென நோம்இவள் தன்காதல் போக்கி அகல்வாய் பொருட்கு.’ “தலைவ! நின் மார்பில் பதிந்து இன்புறுத்தும் தனது பார்வையை இடையறாமல் செலுத்த முடியாமல் இமைகள் இமைத்துத் தடுத்துவிடுகின்றனவே என்று வருந்தும் இயல்புடையவள் தலைவி. இவள் உன்னிடம் கொண்டுள்ள ஆழமான இத்தகைய காதலை நீங்கச் செய்துவிட்டு நீ உன் விருப்பப்படியே பிரிந்து செல்லலாம். இவளை என்னால் ஆற்றுவித்தல் இயலாது” என்ற இத்தோழி கூற்றில், தலைவி யை ஆற்றுவித்தல் தன்வசத்தில் இல்லை, அது பிறரால் ஆகும் ஒன்றே எனத் தன் பரவசநிலை கூறி விலக்கியதால், இது பரவச விலக்கு ஆயிற்று. (தண்டி. 45-7) பரிகர அணி - காவியலிங்க அணி போல அருமையான உட்பொருளை யுடைய பல அடிகள் தொடர்ந்தும் தொடராமலும் நுட்ப மாய் அமைந்து, நோக்கு என்னும் செய்யுளுறுப்பு அமையக் கருத்தையுட்கொண்டு, செய்யுளில் நிலைமொழியிலுண் டாகிய ஐயத்தை காரியத்தொடு கூடிய வருமொழி போக்கு வதாய்ச் செய்யுட் சுவையைப் பாதுகாக்கும் உறுதியுடையது பரிகர அணி. பரி-பாதுகாத்தல்; கரம்-உறுதி. பாதுகாக்கும் உறுதியுடை யது பரிகரம். அன்றியும் ஐயத்தைப் பரிகரிப்பதால், பரிகாரம் என்பது விகாரவகையால் பரிகரம் என்றாயிற்று என்பதுமாம். காவியலிங்க அணியில் காரணகாரியம் இரண்டும் மறைந் திருப்ப, அவற்றாலாய தொழில்கள் அவற்றை அறிவிக்கும். இப்பரிகரம் குறிப்பினாலும் தொழிலினாலும் பிறர் உணரு மாறு அமையும். ஆகவே இது தண்டியலங்காரம் குறிப்பிடும் நுட்ப அணியைச் சாரும். ‘நுட்ப அணி’காண்க. (மா. அ. 233, 234) பரிகரம் (2) - இது மாணிக்கவாசகம் குவலயானந்தத்துள் அணியியலில் (49) வருவதோர் அணி. இது கருத்துடை அடைமொழி அணி; அது காண்க. பரிகராங்குர அலங்காரம் - கருத்துடை அடைகொளி அணி; அது காண்க பரிகராங்குரம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலுள் (50) வருவதோர் அணி. கருத்துடை அடை கொளி அணி; அது காண்க. பரிகராலங்காரம் - கருத்துடை அடைமொழி அணி; அது காண்க. பரிஸங்க்யாலங்காரம் - ஒழித்துக்காட்டு அணி; அது காண்க. பரிசங்கை (1) - ஓரினத்திலிருந்து ஒரு பொருளைப் பிரித்து அதனை உயர்த்திச் சொல்லும் அணிவகை. (மா. அ. 231) ‘ஒழிப்பணி’ காண்க. பரிசங்கை (2) - உயர்திணை அஃறிணை என்ற இரண்டன்கண்ணும் ஒரு திணைக்கண் ஒரு கூட்டத்தின்கண் ஒரு பொருளைப் பிரித்து உயர்த்திக் கூறுவது. வட நூலார் கூறும் பரிசங்கியாலங்காரம் என்னும் ஒழித்துக் காட்டணியின் இது வேறாக மாறன்அலங்காரத்தில் கூறப்படு கிறது. எ-டு : பதிகளின் அதிபதி அரங்கநன் பதியே நதிகளின் அதிபதி பகீரதி நதியே நிதிகளின் அதிபதி சங்க நிதியே எதிகளின் அதிபதி பூதூர் எதியே. பதி, நதி, நிதி எதி (-துறவி) என்ற இந்நான்கு செய்தியின்கண் ணும் மேம்பட்ட பொருளைப் பிரிந்து உயர்த்திக் கூறுவதால் இப்பாடற்கண் பயிலும் அணி பரிசங்கையாம். (பூதூர் எதி இராமாநுசர்) (மா. அ. 231). பரிசங்கை தொனியொடும் வருதல் - உயர்திணை அஃறிணை என்ற இரண்டன்கண்ணும் ஒரு திணைக்கண் ஒரு கூட்டத்து ஒரு பொருளைப் பிரித்து உயர்த்துக் கூறும் பரிசங்கையணி குறிப்பெச்சமாக ஒரு கருத்தை உள்ளடக்கியும் வரும். எ-டு : முதியநான் மறைமொழி முதல்மா தவனே புனிதமா முனிவரன் புகழ்பராங் குசனே பதமெனப் படுவதும் பரந்தா மமதே. வேதமுதல்வன் திருமால், முனிகளுள் மிக்கவர் சடகோபர், பதங்களுள் சிறந்தது வைகுந்தம் - என்று கருத்தமைந்த இப்பாடற்கண், “யாமும் திருவாய்மொழி ஓதித் திருமாலை உணர்ந்து வழிபட்டு வீடுபேறாகிய வைகுந்தம் அடைய முயல்வதே மனிதப்பிறப்பெடுத்தன் பயன்” என்பது தொனிப் பொருள். (மா. அ. பாடல் 552) பரிணாமம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (18) வருவதோர் அணி. உபமானம் உபமேயமாகி உபமேயத்துக்குரிய ஒரு காரியத்தை நிகழ்த்துவது. இது திரிபுஅணி எனவும்படும். அது காண்க. பரிணாமாலங்காரம் - தமிழ்நூலார் இதனைத் திரிபு அணி என்ப. அது காண்க. உவமானப்பொருள் அப்பொழுது நிகழும் செய்கையில் பயன்படுதற்பொருட்டு உபமேயத்தின் உருவத்தைக் கொண்டு பரிணமித்தலாகிய அலங்காரம். பரிமாற்ற அணி - ஒரு பொருளைக் கொடுத்து மாற்றாகப் பிறிதொரு பொருளைப் பெறுதலை யுணர்த்தும் அணி. இது பரிவருத் தனம், பரிவருத்தனை, மாற்றுநிலை அணி, மாறாட்டு அணி எனவும் பெயர்பெறும். இழிந்த பொருளைக் கொடுத்து உயர்ந்த பொருளைப் பெறும் மாற்றுநிலை அணி இதனின் சிறிது வேறுபட் டுள்ளது. அது பரிவிருத்தி அலங்காரம் எனப்படும். இது பரிவருத்தனை அலங்காரம் எனப்படும். எ-டு: சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. (குறள். 1183) சாயலுக்கும் நாணுக்கும் மாற்றாக நோயும் பசலையும் பெற்றமை பரிமாற்றம் என்ற மாறாட்டணியாம். இதற்கு இழிந்த பொருளைக் கொடுத்து உயர்ந்த பொருளைப் பெறல் வேண்டும் என்ற நியதி இன்று. (வீ.சோ. 175). பரியாயம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (53) வருவதோர் அணி. 1. ஓர் இடுகுறிப்பெயரால் உணர்த்தப்படும் பொருட்குக் காரணப் பெயர்கள் பலவும் பெயர்களாவது. எ-டு : மலை என்ற சொல்லால் உணர்த்தப்படும் பொருட்கு விலங்கல் (-குறுக்கே நிற்பது), பிறங்கல் (-விளங்கித் தோன்றுவது) முதலியன பலவும் பெயராதல். 2. ஒரு தொழில் நிகழ்தற்குள்ள நினைவால் வேறொரு தொழிலை நிகழ்த்துதல். அது ‘கருதியது கிளவாது அப்பொருள் தோன்றப் பிறி தொன்று உரைப்பது’ போல்வது. ‘பரியாய அணி’ காண்க. பரியாய அணி (1) - பரியாயம் - பிறிதுமொழியாக அப்பொருளையே தருவது. கவி தான் கூறக் கருதியதை வெளிப்படக் கூறாமல் குறிப்பால் அது தோன்ற வேறு சொற்களால் கூறும் அணி. எ-டு : ‘மின்நிகராம் மாதே! விரைச்சாந் துடன்புணர்ந்து நின்நிகராம் மாதவிக்கண் நின்றருள்நீ - தன்நிகராம் செந்தீ வரமலரும் செங்காந்தள் போதுடனே இந்தீ வரம்கொணர்வல் யான்’ “மின்னைப் போன்ற தலைவி! மணமுடைய சந்தனமரத்துடன் சேர்ந்து இணைந்து உன்னைப்போலவே அழகாயிருக்கும் குருக்கத்தியின் நிழலிலே நீ தங்கியிரு. நான் சென்று, செந்தீயைப் போல மலர்ந்து தமக்குத் தாமே நிகரான காந்தள்மலர்களையும் குவளைமலர்களையும் உனக்காகப் பறித்து வருகிறேன்” என்ற பொருளமைந்த இப்பாடல், தலைவியைக் குறியிடத்து உய்த்து நீங்கும் தோழி கூற்று. இதன்கண், “தலைவன் வருவான்; குருக்கத்திக்கொடி சந்தனமரத்தைத் தழுவியிருப்பது போல, நீயும் அவனைத் தழுவும் வாய்ப்புக்காக உன்னை விடுத்துப் பிரிகிறேன்” என்ற செய்தி குறிப்பால் பெறப்பட்டமையால் இது பரியாய அணியாம். (தண்டி. 72.) பரியாய அணி (2) - பரியாய அணி மாறன்அலங்காரத்தில் மூவகைத்தாக விளக்கப்பட்டுள்ளது. 1. ஒரு பழம்பொருள் பல இடங்களிலும் பலமுறையே பல பிறப்புக்களில் தோன்றுகின்றது என்பதும், 2. கவி தான் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாது அப்பொருள் குறிப்பால் தோன்ற வேறொன்று கூறி விளங்க வைப்பதும், 3. ஒரே பொருள் பற்றிப் பல சொற்கள் அடுத்தடுத்து வருவதும் - என இவை மூன்றும் பரியாய அணியின் இலக்கணங்களாம். “தலைவியைக் கண்ட தலைவன் அவளைத் திருமகளாகக் கருதிப் பண்டு முறையே தாமரைமலரிலும், அமுதத்திலும், கொழுமுனையிலும், திருத்துழாய்க் காட்டிலும் தோன்றிய வளே இன்று குறவர்மகளாகத் தோன்றியுள்ளாள்” என்று கூறுதல் முதல் வகைக்கு எடுத்துக்காட்டு. (பாடல் 482) 2, 3ஆம் வகைகளைத் தனித் தலைப்புக்களிற் காண்க. (மா. அ. 199) பரியாய அணியின் மறுபெயர் - பிறிதின் நவிற்சியணி - ச.54, குவ. 29. பரியாய மொழி அணி - ஒரு பொருளினைக் குறிக்கும் ஒரு மொழியினை அடுத்து அதே பொருளினைக் குறிக்கும் பிறிதொரு மொழியினைக் குறித்தல். எ-டு: ‘தயங்கிணர்க் கோதை தன்னொடும் தருக்கி வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்.’ (சிலப். 2: 82, 83). இவ்வடிகளில், தயங்குதல் வயங்குதல் என்பன இரண்டும் விளங்குதல் என்னும் ஒரு பொருளிலேயே வரும் பரியாய மொழியாம். இப்பரியாயமொழிஅணி பொருட்பின்வரு நிலை அணியுள் அடங்கும். மாறன்அலங்காரம் கூறும் வகைகளைப் ‘பரியாய அணி’ என்பதனுள் காண்க. பரியாயோக்தம் - பரியாய அணி, பிறிதின் நவிற்சி அணி. ‘பரியாய அணி’ காண்க. பரிவ்ருத்தி அலங்காரம் - மாற்றுநிலை அணி; அது காண்க. பரிவர்த்தநா அலங்காரம் - பரிவருத்தனை அணி, மாற்றுநிலை அணி; ‘பரிவருத்தனை அணி’ காண்க. பரிவருத்தன அணி - இது பரிமாற்ற அணி எனவும், மாற்று நிலை அணி எனவும், மாறாட்டு அணி எனவும், பரிவருத்தனை அணி எனவும் கூறப்படும். ‘பரிவருத்தனை அணி’ காண்க. (மு. வீ. பொருளணி 103) பரிவருத்தனை அணி - பரிவருத்தனை - மாற்றிக் கொள்ளுதல். பொருள்களுள் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றைத் தாம் கொண்டதாகக் கூறும் அணி. எ-டு : காமனை வென்றோன் சடைமதியும் கங்கையும் தாம நிழல்ஒன்று தாம்கொடுத்து - நாமப் பருவாள் அரவின் பணமணிகள் தோறும் உருஆ யிரம்பெற் றுள. சிவபெருமானுடைய சடையிலிருக்கும் பிறைச்சந்திரனும் கங்கையாறும் அதே சடையிலுள்ள பாம்புகளின் படங்களில் இருக்கும் ஒவ்வொரு மணியிலும் தம் உருவத்தைத் தந்து ஆயிரம் உருவங்களைப் பெற்றன என்ற பொருளையுடைய இப்பாடற்கண், பலமணிகளிலும் அவற்றின் பிரதிபிம்பம் தோன்றியதால் பிறைமதியும் கங்கையும் பல உருவங்களைப் பெற்றன என்பது கருத்து. (தண்டி. 87). பரிவருத்தனை அணியின் மறுபெயர்கள் - பரிமாற்றம், மாறாட்டு - வீ.சோ. 175, 155 உரை. பரிவருத்தனம் - மு.வீ. பொருளணி 103. மாற்றுநிலைஅணி - ச. 78; குவ. 52. பருஷாnக்ஷப அலங்காரம் - வன்சொல் விலக்கு அணி; அது காண்க. பலதிறப்பாட்டு - இருவகைக் காப்பியங்களான சிறு காப்பியமும் பெருங்காப்பிய மும் அமையும் வகைகள் மூன்று. அவை ஒரு திறப்பாட்டு, பல திறப்பாட்டு, பாட்டும் உரையும் விரவின - என்பன. 1. ஒரே வகையான பாட்டால் நூல் முழுதும் அமைதல் ஒருவகைப்பாட்டு. எ-டு: நளவெண்பா. 2. பலவகை விருத்தங்களும் நூல்முழுதும் பயிலுதல் பலவகைப் பாட்டு. எ-டு: சீவகசிந்தாமணி, கம்பராமாயணம். 3. பாட்டும் உரையுமாகக் கலந்து வந்த நூல்கள் இக்காலத்தே வழக்கில் இல்லை. தகடூர் யாத்திரை, பாரத வெண்பா முதலியன இவ்வகையான் அமைந்தன என்ப. சிலப்பதிகார மும் எடுத்துக்காட்டாதல் தகும். (தண்டி. 11) பலபடப்புனைவு அணி - ஒரே பொருளுக்கு ஒருவரே பல உவமங்களையோ, தனித் தனியே பலர் பல உவமங்களையோ உவமஉருபை நீக்கிக் கூறுவது இவ்வணி. இதனை வடநூலார் உல்லேகாலங்காரம் என்ப. இவ்வணி ஒரே பொருளை ஒருவரே பலவாறு கூறும் பல படப் புனைவணி என்றும், ஒரே பொருளைப் பலரும் பல வாறு கூறும் பலபடப் புனைவணி என்றும் இருவகைப்படும். (மா.அ. 126, 127; மூ.வீ. பொருளணி 33; ச. 15; குவ.7) (1) ஒரே பொருளை ஒருவரே பலவாறு கூறும் பலபடப் புனைவணி பலபடப்புனைவணியின் இருவகைகளுள் ஒன்று. எ-டு : தருமன் தண்ணளி யால், தனது ஈகையால் வருணன், கூற்றுஉயிர் மாற்றலின், வாமனே அருமை யால், அழ கின்கணை ஐந்துடைத் திரும கன்திரு மாநில மன்னனே. (சீவக. 160) “சச்சந்தன் என்ற மன்னன் கருணையால் தருமன், ஈகையால் வருணன், பகைவரை அழிக்கும் திறத்தால் கூற்றுவன், ஐம்பொறி அடக்கலால் அருகன், அழகால் காமன்” என்று திருத்தக்கதேவர் ஒருவரே சச்சந்தனைப் பலபடப் புனைந்து பாடுவது இவ்வணி வகையைச் சார்ந்தது. (2) ஒரே பொருளைப் பலரும் பலவாறு கூறும் பலபடப் புனைவணி பலபடப்புனைவணியின் இருவகைகளுள் ஒன்று. எ-டு : ஆரணம் காண்என்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின் காரணம் காண்என்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்; ஏரணம் காண்என்பர் எண்ணர்; எழுத்தென்பர் இன்புலவோர்; சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே. இப்பாடலில், திருக்கோவையார் என்ற நூலினை அந்தணர் வேதம் எனவும், யோகியர் ஆகமம் எனவும், காமுகர் காமநூல் எனவும், எண்ணர் ஏரணநூல் எனவும், புலவர் இலக்கணநூல் எனவும் கூறுவது, ஒன்றனையே பலரும் பலபடப் புனையும் இவ்வணி வகையைச் சார்ந்தது. பலபொருள் உருவகம் உயர்திணை அஃறிணை என்று சொல்லப்பட்ட காட்சிப் பொருளும் கருத்துப் பொருளும் ஒரு செய்யுளகத்து உருவகம் செய்யப்படுதல். எ-டு: தீதற்ற மெய்ஞ்ஞானத் தெப்பமுடன் மேதகுநால் வேதக் கடல்கடந்த வித்தகத்தால்-கோதற்ற அந்தாமத் தீவினுள்புக்(கு) ஆழியான் ஆம்மணியைத் தந்தான்நம் பூதூர்வந் தான். ஞானமாகிய தெப்பத்தால் வேதக்கடல் கடந்து வைகுந்தம் என்ற தீவினை அடைந்து திருமாலாகிய இரத்தினத்தை ஸ்ரீ இராமாநுசர் தந்தார் என்பதன்கண், அஃறிணை உயர் திணைப் பொருள்கள் பலவும் உருவகம் செய்யப்பட்ட மையின் இது பல பொருள் உருவகம். (மா.அ. பாடல். 238) பல பொருள்கோளும் செறியும் பொருட்செறிவு எ-டு : மறைமுரசம் தாமம் மகிழ்வழுதி நாடர் துறைபொருநை வெற்(பு)ஊர் துடரி-உறைகுருகை அஞ்சம்ப ராங்குசம்வெள் ளானைகொடி ஆணைமா பஞ்சகல் யாணன் பரி. ‘வழுதி வள நாடர்’ என்பது மத்திம தீபகம். வெற்பு ஊர் துடரி குருகை: நிரல்நிறை. ‘பரி, மா, ஆணை, கொடி : விதலை யாப்புப் பொருள்கோள். தாமம் மகிழ், முரசம் மறை: மொழி மாற்றுப் பொருள்கோள். நாடு-வழுதிநாடு; நதி-பொருநை; மலை-துடரி; ஊர்-குருகை;மாலை-மகிழ்; முரசு-வேதம்; பரி-பஞ்ச கல்யாணன்; மா-வெள்ளானை;ஆணை-பராங்குசம்; கொடி-அஞ்சம் (-அன்னம்). இப்பாடல் ‘தசாங்கம்’ என்னும் சின்னங்களாகிய பல பொருள் செறிவும், பல பொருள் கோளும் விரவிய பொருட்செறிவு. இச்செறிவு வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம் என்ற மூன்று நெறியார்க்கும் ஒக்கும். (மா. அ. பாடல். 91 உரை) பலபொருள் சொற்றொடர் அணி - இது சிலேடை அணி எனவும் கூறப்பெறும். ஒரு சொல்லோ சொற்றொடரோ, செம்மொழியாய் இயல் பாகவோ பிரிமொழியாய்த் திரிந்தோ, பெயராகவோ வினையாகவோ இரண்டுமாகவோ அமைந்து ஒன்றற்கு மேற்பட்ட பொருள்களைத் தருவதனைக் குறிப்பிடும் அணி இது. இது பொதுவாகச் செம்மொழி, பிரிமொழி என இரு பெருந் தலைப்புக்களை யுடையது. ஒரு வினை, பலவினை, முரண் வினை, நியமம், நியமவிலக்கு, விரோதம், அவிரோதம் என இஃது எழுவகைப்படும் என்று தண்டியலங்காரம் - வீரசோழி யம் - மாறன்அலங்காரம் - என்பன கூறும். (தண்டி 76, 77; மா.அ. 146-156; வீ.சோ. 172; தொ.வி. 367; மு.வீ.பொருளணி 94) இதனைச் சந்திராலோகமும் குவலயானந்தமும் புனைவுளிப் பல பொருள் சொற்றொடர், புனைவிலிப் பல பொருள் சொற்றொடர், இருமைப் பல பொருள் சொற்றொடர் என மூவகைகளாகக் கூறும். (ச. 51; குவ. 26) இதனைச் சிலேஷாலங்காரம் என வடநூல்கள் கூறும். 1. புனைவுளிப் பலபொருள் சொற்றொடர் அணி இது பலபொருள் சொற்றொடராகச் சந்திராலோகத்தில் கூறப்படும் மூன்று வகைகளுள் ஒன்று. எ-டு: மணிமுடிமேற் கொண்டுலகை மாட்சிபெறத் தாங்கி அணிநற் பொறிநிறம்சேர்ந்(து) ஆரும்-பணியிறைமை மிக்கபுகழ் நீளரியே மேவுகூ வத்திறைக்குத் தக்கவில்லிற் சேர்நாரி தான். ஒன்றற்கு ஒன்று உபமேயமாக அமையும் திருமாலுக்கும் ஆதிசேடனுக்கும் இப்பாடல் சிலேடையாக அமைந்துள்ளது. புனைவுளி-உபமேயம். திருமால் தலையில் கிரீடம் அணிந்துள்ளான்; உலகைச் சிறப்பாகக் காக்கிறான்; திருமகளை மார்பில் கொண்டுள் ளான்; எத்தொழிற்கும் தலைமை தாங்குகிறான்; சிவபெரு மானுக்குத் தேவியாக அமைந்துள்ளான். ஆதிசேடன் தலையில் வைத்து உலகைத் தாங்குகிறான்; படப் புள்ளிகளின் ஒளி பெற்றுள்ளான்; பாம்புகளுக்குத் தலைவன்; சிவபெருமான் வில்லில் நாணா இருக்கிறான். முடி-கிரீடம், தலை; தாங்குதல்-காத்தல், சுமத்தல்; பொறி-திருமகள், படப்புள்ளி; நிறம்-மார்பு, வன்னம்; பணி-தொழில், பாம்பு; அரி-திருமால், பாம்பு; கூவத்து இறை-திருக்கூவ நகரிலுள்ள சிவபெருமான்; இல்லில் சேர் நாரி-மனைவியாக அமைந்த பெண்; வில்லில் சேர் நாரி-வில்லிற் பொருந்திய நாண் 2. புனைவிலிப் பலபொருள் சொற்றொடர் அணி இது பலபொருள் சொற்றொடர் அணி பற்றிச் சந்திரா லோகம் குறிப்பிடும் மூன்று வகைகளுள் ஒன்று. உபமானமாகிய புனைவிலி ஒன்றற்கு மேற்பட்ட பொருளைத் தருமாறு அமைந்த சிலேடைவகை இது. எ-டு: தெருட்டும் கலைபலவும் சேர்ந்த மதியை மருட்டும் முகத்தினளம் மான். பல அமுதக்கலைகள் சேர்ந்த சந்திரனையும், பலவகைக் கலை ஞானங்களில் திளைத்த புத்தியையும் இப்பெண்ணின் முகம் மயங்கச் செய்கிறது என்ற கருத்தமைந்த இப்பாடலில், உபமானமாகிய மதி சந்திரனையும் புத்தியையும், கலை சந்திர கலைகளையும் கலைஞானத்தையும் குறித்தல் இச் சிலேடை அணி வகையாம். 3. இருமைப் பல பொருள் சொற்றொடர் அணி இது பல பொருள் சொற்றொடர் அணி பற்றிச் சந்திரா லோகம் குறிப்பிடும் மூன்றுவகைகளுள் ஒன்று. உபமானம் உபமேயம் என்னும் இரண்டற்கும் பொதுவாகச் சிலேடை அமையும் வகை இது. எ-டு : ஏர்க்கதிர் வாள்கொடே ஈர்வர்; வீக்கிமெய் வேர்க்கவும் கெடுத்துராய் வீழ்த்தி ஏற்றுவர்; சூர்க்கரும் பகட்டினால் துவைப்பித்(து) ஆர்ப்பரால்; போர்க்களம் புகுந்துபோர் புரிந்த மள்ளரே. இப்பாடல் நெற்போர் படுத்தலுக்கும் அமர்செய்தலுக்கும் சிலேடை. உழவர் கதிர்களை வாளால் அறுத்துப் பொலியிட்டு மெய் வேர்க்கக் கதிர்ப்போர்களைக் கீழே உதறி எருமைக் கடாக் களைக் கொண்டு கடாவடித்து மகிழ்ச்சியால் ஆரவாரிப்பர். போர்க்களம் புக்குப் போரிட்ட வீரர்கள் ஒளி பொருந்திய வாளினால் பகைவரை வெட்டி, உடலில் கவசம் முதலியன அணிந்து பகைவரை வீழ்த்தித் தள்ளி அவர் உடல்களை யானைகளைக் கொண்டு துவைக்கச்செய்து ஆரவாரிப்பர். உழவர் செயல் உபமானம்; வீரர்செயல் உபமேயம். உபமானம் உபமேயம் இரண்டும் சிலேடையான் அமைந்துள்ளன. கதிர்-நெற்கதிர், ஒளி; கரும்பகடு-எருமை, யானை. பலபொருள்களில் உளவாகிய உறுப்புக்களைத் தெரிந்து எடுத்துக் கொண்டு சேர்த்தின் இதற்கு உவமம் எனல் - உவமையைப் போன்று வருவனவாகிய உவமப்போலி ஐந்து எனப்பட்டவற்றுள் இதுவும் ஒன்று என்பர் இளம்பூரணர். மகளிருள் பேரழகியார் பலரிடமும் அமைந்த தனித்தனிச் சிறப்புடைய உறுப்புக்கள் யாவும், ஒருத்தியிடமே தாம் எல்லாம் சேர்ந்து அமைதல் வேண்டும் என்று திட்டமிட்டு இத் தலைவியிடத்து இவள் உருவினை உண்டாக்கின என்ற கருத்தமைந்த நல்லார்கள் நல்ல உறுப்பாயின தாங்கள் நாங்கள் எல்லாம் உடனாதும் என்றன்ன இயைந்த ஈட்டால் சொல், வாய், முகம், கண், முலை, தோள், இடை, அல்குல், கை, கால், பல், வார் குழல் என் றிவற்றால்படிச் சந்தம் ஆனாள். இப்பாடல் உவமப்போலி ஐந்தனுள் ‘பலபொருள்களில் . . . . . உவமம் எனல்’ என்பதற்கு எடுத்துக்காட்டாம். (தொ. பொ. 295 இள.) பலபொருள் விரவிய உவமை - ஒன்றனொடு சேர்ந்த ஓர் உபமேயத்துக்கு ஒன்றனொடு சேர்ந்த ஓர் உபமானம் கூறப்படுதல். எ-டு : ‘அடைமறை ஆயிதழ்ப் போதுபோல் கொண்ட குடைநிழல் தோன்றும் செம்மல்’ (கலி. 84) குடையின் நிழலில் வரும் சிறுவனுக்கு, இலையின் நிழலில் மலர்ந்த தாமரைப்பூ உவமை ஆதல் பலபொருள் விரவிய உவமையாம். (இ. வி. 639 உரை) பல பொருளினும் உளதாய கவின் ஓரிடத்து வரின் அதற்கு உவமம் எனல் - உவமப் போலி என்ற பெயரான் உவமம் போல வருவன ஐந்து உள எனவும், அவற்றுள் இதுவும் ஒன்று எனவும் இளம் பூரணர் சுட்டுவர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் விண்மீன்கள், கோள்கள், சந்திரன், சூரியன், அக்கினி என்ற யாவும் ஒன்று சேர்ந்தால் எத்தகைய விளக்கம் உண்டாகுமோ, அத்தகைய விளக்கத்தை உடையவன் என்று குறிப்பிடும். ‘நாள்கோள் திங்கள் ஞாயிறு கனைஅழல் ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை’ (பதிற்.14) என்ற அடிகள், பல பொருளினும் உளதாய கவின் ஓரிடத்துவரின் இதற்கு உவமம் ஆகும் என்ற உவமப்போலிக்கு எடுத்துக் காட்டாக அமைகின்றன. (தொ. பொ. 295 இள.) பலபொருளுவமை - இது வீரசோழியத்துள் ‘பலவியல் உவமை’ (கா.157) என்று கூறப்பெறுகிறது. ஒரே உபமேயத்திற்குப் பல உபமானங் களை உம்மையால் இணைத்துக் கூறும் உவமை வகை. எ-டு : வேலும் கருவிளையும் மென்மானும் காவியும் சேலும் வடுவகிரும் செஞ்சரமும்-போலுமால் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . காமருவு பூங்கோதை கண். கண் என்ற உபமேயத்திற்கு வேல், கருவிளம்பூ, மான்விழி, குவளைப்பூ, சேல்மீன், மாவடுவின்வகிர், செந்நிறம் தோய்ந்த கூரிய அம்பு ஆகியவை உவமையாகக் கூறப்பட்டமை பல பொருளுவமை அணி. (தண்டி. 32-16) பலபொருளோடு ஒரு பொருள் உவமம் - உபமேயம் ஒன்றாக அதற்குப் பலவான தொகுதியுடைய உபமானத்தைக் கூறுதல். எ-டு : பெரும்பெயர்க் கரிகால் முன்னிலை செல்லாப் பீடில் மன்னர் போல ஓடுவை மன்னால் வாடைநீ எமக்கே (அகநா.125) வாடைக்காற்று அஞ்சியோடற்குக் கரிகாலனுக்குத் தோற் றோடிய பல மன்னர்களை உபமானமாகக் கூறியது, பலவா கிய உபமானத்திற்கு ஒன்றாகிய உபமேயம் வந்தவாறாம். (இ. வி. 639 உரை) பலபொருளொடு பல பொருள் உவமம் - ‘சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப’ (புறநா. 13) வாள் ஏந்திய வீரர்களாகிய உபமேயத்திற்குச் சுறா மீன்க ளாகிய உபமானம் கூறப்பட்டிருப்பது, பல பொருளோடு பல பொருள் உவமமாம். (இ. வி. 639 உரை) பலவயின்போலி உவமை அணி - உவமைஅணி வகைகளில் ஒன்று; பல உபமானங்களைச் சொல்லும்போது, உபமானம்தோறும் உவமையுருபைச் சேர்த்துக் கூறுவது. எ-டு : மலர்வாவி போல்வரால் மாதர்; கமல மலர்போலும் மாதர் வதனம் - மலர்சூழ் அளிக்குலங்கள் போலும் அளகம்; அதனுள் களிக்கும் கயல்போலும் கண். மகளிர் தாமரைக்குளம் போன்றவர்; அவர்களுடைய முகங்கள் தாமரைமலர்கள் போல்வன; அம்மலர்களைச் சூழ்ந்துள்ள வண்டுகள் போல்வன, சுருண்டிருண்ட கூந்தல்; அம்மலர்களிடையே களித்துத் துள்ளும் மீன்கள் போல்வன கண்கள் - என்று பொருள்படும் இப்பாடலில், உபமானம் ஒவ்வொன்றுடனும் போல்வர் போலும் என்ற உவம உருபுகள் புணர்த்துக் கூறியமையால், இது பலவயின்போலி உவமை ஆயிற்று. (தண்டி. 32-30) பலவயின்போலியின்பாற் படுவது - உபமானம்தோறும் உவமையுருபு வெளிப்படப் புணர்த்துக் கூறுவது போலவே உவமையுருபு தொக்கு வர அமைப்பதும் பலவயின்போலிஅணியின்பாற்படும். எ-டு : அடிநோக்கின் ஆழ்கடல் வண்ணன்; அவன்தன் படிநோக்கின் பைங்கொன்றைத் தாரான்; - முடிநோக்கித் தேர்வளவன் ஆகல் தெளிந்தேன்; தன், சென்னிமேல் ஆர்அலங்கல் தோன்றிற்றுக் கண்டு. (தண்டி. 39 உரை) “அடியைப் பார்த்த அளவில் திருமால் போலும் எனவும், மேனிநிறத்தைப் பார்த்துச் சிவபெருமான் போலும் எனவும் நினைத்துப் பின் முடியைப் பார்க்கையில் அவன் சூடியிருந்த ஆத்திமாலையைக் கண்டு அவன் சோழனே எனத் தெளிந்தேன்” என்று பொருளமைந்த இப்பாடற்கண், முன் இரண்டடிகளிலும் வண்ணன்போலும், தாரான் போலும் என்று உவமஉருபு விரிக்காது தொக்குவர அமைந்தமையால், இஃது இவ்வணியின்பாற்படுவது ஆயிற்று. (இ.வி. 645 உரை) பலோத்ப்ரேக்ஷhலங்காரம் - இது தமிழில் பயன் தற்குறிப்பணி எனப்படும். அஃது உளபுலப் பயன் தற்குறிப்பு, இல்புலப் பயன் தற்குறிப்பு என இரு வகைப்படும். ‘தற்குறிப்பணி’ நோக்குக. (குவ. 12) பலவியல் உவமை - இது பலபொருள் உவமை எனவும் கூறப்பெறும்; அது காண்க. (வீ. சோ. 157) பலவினைச் சிலேடை அணி - சிலேடையணியின் ஏழ்வகைகளுள் ஒன்று; பலவினையால் வருவது. எ-டு: தவிர்வில் மதுஉண் களிதளிர்ப்ப நீண்டு செவிமருவிச் செந்நீர்மை தாங்கிக்-குயிலிசையும் மின்உயிரா நுண்ணிடையார் மென்னோக்கும் மேவலார் இன்னுயிரை ஈர்கின் றன. இது குயிலின் குரலுக்கும் மகளிர் கண்களுக்கும் சிலேடை. குயிலிசை தவிர்வு இல் மது உண்களி தளிர்ப்ப நீண்டு செவி மருவிச் செந்நீர்மை தாங்கி-குறைவில்லாத தேனை உண்ட களிப்பு மிகுதலால் நீளமாய் எங்கும் ஒலித்து, நம் காதுகளில் புகுந்து, இசை நலம் தவறாத தன்மை பெற்றுக் குயிலிசை பிரிந்தவர் உயிரைத் தாக்குகிறது. மகளிர் கண்கள், குறைவற்ற மதுவைக் குடித்த களிப்பு மயக்கம் தருவதால் செந்நிறம் பெற்று, செவியளவும் நீண்டு, தம்மைக் கூடுவதற்கு வல்லமை பெற்ற ஆடவரின் உயிரைக் காமத்தால் கவர்கின்றன. இது செம்மொழிச்சிலேடை. தளிர்ப்ப, நீண்டு, மருவி, தாங்கி என இடையே பலவினைகள் வந்தவாறு காண்க. குயிலிசைமேல் சொல்லுங்கால்: மது-தேன்; செவிமருவி-காதில் புகுந்து;செந்நீர்மை-இசைநலம் வாய்ந்த தன்மை; மேவலார்-பிரிந்தவர். கண்மேல் சொல்லுங்கால்:- மது-கள்; செவி மருவி-காது வரை நீண்டு; செந்நீர்மை-செந்நிறம்; மேவலார்-புணரும் ஆடவர். (தண்டி. 78-2) பழித்த உறுப்பு - இழிந்த மக்கள் பேசும் வழக்குச்சொற்களைக் கொண்டு பாடுதல், கற்பார்க்கு இன்பம் தாராத வகையில் குழப்பம் உண்டாகச் சொற்களைச் சேர்த்துப் பாடுதல், வடஎழுத்துக் களைக் கலந்து பாடுதல், பிறரால் மறுக்கப்படும் செய்தியை எடுத்துப் பாடுதல், இப்பாடற்குப் பொருள் இதுவோ அதுவோ என மயக்க முண்டாகப் பாடுதல் முதலியன கவிக ளிடத்து நிகழ்தல் கூடாது. இக் கூறியன யாவும் செய்யுளுக்கு ஆகாதன எனப் பழிக்கப்பட்ட உறுப்புக்களாம். (வீ.சோ. 145) பழித்தது போலப் புகழ்தல் அணி - இஃது இலேசத்தின் பாற்படும் என்ற பிறர்தம் மதம் பற்றிக் கொண்டது; ஒன்றைப் பழித்துக் கூறுவது போலக் குறிப்பால் புகழ்வது. வடநூலார் இதனை ‘நிந்தாஸ்துதி’ என்ப. எ-டு : ஆடல் மயில்இயலி! அன்பன் அணிஆகம் கூடுங்கால் மெல்லென் குறிப்பறியான் - ஊடல் இளிவந்த செய்கை இரவாளன் யார்க்கும் விளிவந்த வேட்கை யிலன். “தோழி! தலைவன் தனது அழகிய மார்பினை நாம் தழுவிக் கூடும்போது நமது மென்மையைக் கருதும் இயல்பிலன்; ஊடலில் தன் தகுதிக்குத் தகாத சொற்களைக் கூறி இரக்கி றான். அவன்வேட்கையை யாராலும் தணித்தல் இயலாது” என்று தலைவி கூற்றாக அமைந்த இப்பாடற்கண், தலைவன் காம நுகர்ச்சியில் தன்வயம் இழக்கும் சுவையறிந்தவன்; அவனால் தான் பெறும் இன்பமும் மிக இனியது என்ற புகழ்ச்சி, தலைவனுக்கு இழுக்குத் தோன்றும் பழிப்பு வகை யால் புலப்படுத்தப்பட்டமையால், இது பழித்தது போலப் புகழ்தல் ஆயிற்று. (தண்டி. 66-2) பழித்தல் உவமை - உபமேயத்தைப் பழிப்பதற்கு ஏற்றாற்போல உபமானத்தின் பண்பினை விளக்குதல். ‘நிந்தை உவமை’ எனவும் படும்; அது காண்க. எ-டு : ‘அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்(கு) உய்த்துரைக்க லான்.’ (குறள். 1076) கயவர் தொழிலுக்குப் பறை ஒலித்துப் பிறர்க்குச் செய்திகளை விளித்துரைக்கும் செயலை உவமை கூறியது. பழித்தலுவமை யாம். (வீ. சோ. 158) பழிப்பது போலப் புகழ்தலும், புகழாப் புகழ்ச்சியும் - பழிப்பது போலப் புகழ்தலாவது ஒன்றனையே வெளிப்படை யாகப் பழிப்பது போலக் கூறிக் குறிப்பால் அதன் புகழினைத் தெரிவித்தல். புகழாப் புகழ்ச்சியாவது ஒன்றனைக் குறிப்பால் புகழ்வதற்கு அதனொடு தொடர்புடைய பிறிதொன்றனை வெளிப்படை யாகவே பழித்தல். அஃதாவது ஒன்றனைப் பழிக்க, அஃது வேறொன்றற்குப் புகழாகத் தோன்றுதல். (இ. வி. 677 உரை) பழிப்பு உவமை - நிந்தை உவமை எனவும் படும்; அது காண்க. (வீ. சோ. 158) பழிப்புஉடனிலை அணி - பழிப்பு ஒப்புமைக் கூட்ட அணி வீரசோழியத்தில் பழிப்பு உடனிலைஅணி என வழங்கப்பெறுகிறது. ‘பழிப்பு ஒப்புமைக் கூட்ட அணி’ காண்க. (வீ. சோ. 173) பழிப்பு ஒப்புமைக் கூட்ட அணி - ஒப்புமைக் கூட்ட அணியின் வகைகளுள் ஒன்று; பழிக்கத்தக்க செய்திகள் பலவற்றையும் ஒருவழித் தொகுத்துக் கூறுவது. எ-டு : கொள்பொருள் வெஃகிக் குடிஅலைக்கும் வேந்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்லிருந்(து) எல்லை இறப்பாளும் இம்மூவர் வல்லே மழைஅறுக்கும் கோள். கொடுங்கோல் மன்னன், வஞ்சனையாகப் பேசும் மாந்தர், நெறிமுறை தவறிய மனைவி என்ற மூவரும் பருவமழை நாட்டில் பெய்வதைத் தடுப்பவராவர் என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், பழித்தொழிலர் மூவர் ஒருங்கு இணைத்துக் கூறப்பட்டிருத்தல் பழிப்பொப்புமைக் கூட்ட அணியாம். (தண்டி. 81-2) பன்னுதி - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (24) வருவதோர் அணி. ஒரு பொருளுக்கு அதன் இயற்பெயரை விடுத்து மற்றொரு பொருளின் பெயரை இடுவது. எ-டு : தலைவியை மயில், குயில், கிளி, அன்னம் என்றாற் போலப் பெயரிட்டு அழைத்தல் போல்வன. பஹூபமா - பலபொருள் உவமை; அவ்வணி காண்க. பாஞ்சால உதாரம் - கௌட உதாரத்தைவிடக் குறிப்புச்செய்தி குறைவாகவும், வைதருப்ப உதாரத்தைவிடக் குறிப்புச்செய்தி மிகுதியாகவும் கொண்டு வருவது. எ-டு : ‘சினம்என்பதை அறியாதவர் தினமும்புகழ் மாறன் செஞ்சொற்றமிழ் மறைபாடிய செல்வன்குரு கையுளார் முனம்அன்பின(து) அளவொன்றிய முறையான்மலர் அணைமேல் முடுகும்பரி சமொ(டு)இங்கித மொழிஎன்பது பெறவே தனம்இன்றெனின் உலகத்தெவர் தனியின்பம துறுவார் தாமென்றபின் அளகத்துறு தனிவண்டொடு நின்பால் மனமொன்றிய பெடையே வலி உளதென்றன ரன்றே மறையென்றதை உணராதஎன் மனமேகொடி யதுவே’. “கோபமறியாச் சான்றோர் போற்றும் சடகோபரின் குருகை நகரிடத்து நம் தலைவர் பொருள்மேல் பிரியும் முன்னர் என்னைக் கூடிய நிலையில், ‘உலகில் தனமில்லையேல் ஆடவர் மகளிர்மாட்டுத் தனிஇன்பம் உறுதல் இயலாது’ என்றனர். அதன் பின், மாலையிலுள்ள வண்டிடம், ‘உன் னிடம் ஒருமனப்பட்ட பெடையே மனவலிமை உடையது’ என்றார். அவை இரண்டனையும் தொனிப் பொருளுடையன என்று கருதாத என்மனமே கொடியது” என்று தலைவன் பிரிவிடைத் தலைவி தோழிக்குரைத்தது இப்பாடல். ‘தனம்’ என்பது கொங்கை என்ற பொருளோடு, இல்லறம் நிகழ்த்துதற்குரிய செல்வத்தையும் குறிக்கும்; ஆண்வண்டு பிரிந்தகாலைப் பெண்வண்டு தான் பிரிவாற்றாமல் இறந்தால் ஆண்வண்டும் தன் பிரிவால் இறந்துவிடுமே என்று கருதித் தானும் இறவாது ஆண்வண்டினை உயிர்வாழச் செய்வது போல, தலைவி தானும் பிரிவாற்றாது இறந்துபடாமல் உயிர் வாழ்ந்து தலைவனது உயிரையும் போற்றி இல்லறம் பேணிக்கொண்டிருத்தல் வேண்டும். இவ்விரண்டு செய்தியை யும் குறிப்பால் பெற வைத்தலின், இது பாஞ்சால உதாரம் ஆம். (மா. அ. பாடல் 105) பாஞ்சாலத் தெளிவு - வைதருப்பத்தைப்போல வெளிப்படையு மன்றி, கௌடத் தெளிவு போல நுண்ணிதாய்க் குறிப்பினால் கொள்வது மன்றி இடைப்பட்ட நீர்மைத்தாய் வருவது. (மா. அ. 79, 82) எ-டு : ‘பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. (குறள். 297) ஒருவன் பொய்யாமையாகிய அறத்தைப் பிழையாமல் செய்வானாயின், அவனே பிற அறம் செய்தற்கு உரியவ னாவான் என்று பொருள் கொள்ளின், பாஞ்சாலத் தெளிவாம். பாஞ்சால நெறி - வைதருப்ப நெறியைப் போன்று மிக்க எளிமையையும் கொள்ளாது, கௌட நெறியைப் போன்று அளவுக்கு மீறிய கடுமையையும் கொள்ளாது இடை நிகர்த்ததாகி வரும் நெறி. இது ‘பாஞ்சால பாகம்’ எனவும்படும். (மா. அ. 79) பால் மாறுவமை - ஆண்பாலுக்குப் பெண்பாலும், பெண்பாலுக்கு ஆண்பாலும், ஒருமைப்பாலுக்குப் பன்மைப்பாலும், பன்மைப்பாலுக்கு ஒருமைப்பாலும் உபமான உபமேயங்களாகி வருதல். எ-டு: மக்களுக்கு அரசன் தாய் போன்றுள்ளான்; தலைவனைப் பிரிந்த தலைவி, மரக்கலம் கவிழத் தான் மாத்திரம் உயிர்தப்பிய வணிகனைப் போல வருந்தினாள்; பிறைச்சந்திரனைப் போன்ற வளைந்த பற்கள் (அகநா. 1 ). களவும் கையுமாகப் பிடிபட்டாரைப் போல நாணித் தலைகவிழ்ந்து நிலத்தைக் கிளைத்தவாறு நின்ற பரத்தை (அகநா. 16) என முறையே காண்க. இங்ஙனம் பால் மாறு படுதல் வழுவாகக் கொள்ளப்படாது. (இ. வி. 641) பாவகக் கலவை அணி - பாவ சபளிதாலங்காரம் என்று இதனை வடநூல்கள் கூறும். பல்வேறு மெய்ப்பாடுகளின் கலப்பு இது. பாவக்கலவை எனினும் அமையும். ஒரு சுவைக்கு அங்கமாகப் பல மெய்ப் பாடுகளும் கலந்து தோன்றிச் செய்யுட்கு அழகூட்டும் அணி இது. எ-டு : யயாதி என்னும் சந்திர குலத்தரசன், அரசன் ஒருவன் மகளான சர்மிஷ்டை என்பாளைக் கண்டு காதல் கொள்கிறான். அவள் சினத்துடன் அவன் எதிரி னின்று அகன்ற பின்னர், அவளை நினைந்து யயாதி கூறுகின்றான்: “நான் இவளைக் கண்டு காமுற்றது தகாத செயலா? இருக்காது. சந்திரகுலத்திற் பிறந்த நான் தகாத செயலில் ஈடுபடுமாறு இல்லை. மீண்டும் அவளைக் காணலாம். நாம் கற்ற கல்வி நம்மைக் குற்றங்களினின்று காக்கும். அவள் சினத்தோடு அகன்றபோதும், அவள்முகம் மிக்க அழகுடன் பொலிந்ததே! இந்த என் செயல்பற்றி, பிழை தீர்ந்த சான் றோர் யாது கூறுவர்? கனவிலும் அவள் எனக்குக் கிடைத்தல் அரிதே. மனமே! தெளிந்து சுயநிலை எய்துவாயாக! கொடுத்து வைத்த எவ்வாலிபனோ அவள் இதழைப் பருக வல்லான்!” இப்பொருள்படும் கவிதையில், காதல் நிறைவேறாத நிலையில் நேர்ந்த ஆற்றாமையான காமச்சுவைக்கு அங்கமாக, ஐயம், தெளிவு, ஆர்வம், முன் நடந்ததை நினைதல், கிடைத்தற்கு அரியள் என்னும் நினைவால் நேரும் தாழ்மை, கவலை, ஏக்கம் முதலிய பல்வேறு உணர்வுகளும் கலந்து தோன்றி அழகு ஊட்டுவதால், இது பாவகக் கலவை அணி ஆயிற்று. (குவ. 107) பாவகச் சேர்க்கை அணி - இதனை வடநூலார் ‘பாவ சந்தி அலங்காரம்’ என்ப. பாவங்கள் எனப்படும் மெய்ப்பாடுகளின் சேர்க்கை இது. ‘பாவச்சேர்க்கை’ எனினும் அமையும். முரண்பட்டவையான ஒன்றற்கு மேற்பட்ட மெய்ப்பாடுகள் ஒரு கருத்துக்கு அங்கமாக ஒன்றை ஒன்று மீதூர்ந்து தோன்றுவது இது. வீரமிக்க தலைவன் ஒருவன், போருக்குப் போகுமுன், தலைவியுடன் இருக்கிறான். போர்ப்பறை முழக்கம் கேட்கி றது. அப்போதிருந்த அத்தலைவனுடைய மெய்ப்பாடுகளின் சேர்க்கையைக் கவி பின் வருமாறு கூறுகிறான்: “தலைவ! ஒருகணம்கூட உன்பிரிவைத் தாங்காதவளான தலைவியைப் பார்க்கிறாய். உனது கன்னம் புளகித்து நின்று மன்மதனுடைய தூணி போல் மிளிர்கிறது. அதே நேரத்தில் போரில் ஒலிக்கின்ற போர்ப்பறையைக் கேட்கிறாய். போருக் குச் செல்வதில் ஒரு கணமும் காலம் தாழ்த்த விரும்பாத உன் வீர உணர்வால் உனது மற்றொரு கன்னம் நீ போரிற் பெற விருக்கும் வெற்றிவிழாவின் பாலிகை முளைத்தெழுவது போல் புல்லரித்து நிற்கிறது.” இப்பொருள்படும் கவிதைக்கண், தலைவியுடன் மகிழும் காமச் சுவைக்குரிய பெரிய விருப்பஉணர்வும், போருக்குப் பாய்ந்து செல்லத் தூண்டும் வீரத்திற்குரிய ஊக்கஉணர்வும் சேர்ந்து செய்யுட்கு அணி செய்வதால், இது ‘பாவச் சேர்க்கை அணி’ ஆயிற்று. ‘பாவகம்’ என்புழி, ககரம் சுவார்த்தப் பிரத்தியயம். (குவ. 106) பாவகத் தோற்ற அணி - இதனை வடநூலார் ‘பாவோதயாலங்காரம்’ என்ப. பாவம்-உணர்வு; உதயம்-தோற்றம். ‘பாவத் தோற்றம்’ எனினும் அமையும். நிலையிலா மெய்ப்பாடுகளில் ஒன்று, காமம் போன்ற சுவைக்கு அங்கமாகத் தோன்றிச் செய்யுட்கு அணி செய்வது. சுயம்வரத்திற்கு முதல்நாள் தன்னை மறைத்துக்கொண்டு தமயந்தியிடம் சென்ற நளனைத் தான் மாத்திரம் காணுமவள், தேவர்களை மாலை சூட்டி வரிக்குமாறு கூறி வற்புறுத்திய அவனிடம் கூறுவதாக நைஷத மகாகாவியம் பாடுவது பின்வருமாறு: “மணவாள! முன்பும் அன்னம் தன் கால்நகங்களால் எழுதிக் காட்டிய என் காதலன் உன்னைப் போலவே இருந்தான். (உன்னைத் தவிரப் பிறரை மணக்குமுன் என்னுயிர் நீங்கும் நாளைக்குள்) இடையில் உள்ள இந்த ஒரு நாளை உன்னைப் பார்த்துக்கொண்டே கழித்துவிட விரும்புகிறேன். அருள் கூர்ந்து நீ இங்கேயே இருக்க இசைய வேண்டும். அருள் மிக்காய் நீ, இதற்கு உடன்பட்டு இங்கேயே என்னுடன் இருப்பாயாக.” இப்பொருள்படும் கவிதையுள், நளனைப் பற்றிய காதல் அவனை நேரில் கண்டு உரையாடியதால் தூண்டப்பட்டு வளர்ந்து சுவையூட்டும் நிலையில், தமயந்தியின் மனவிளக்க மும் ஆர்வமும் அச்சுவைக்கு அங்கமாகத் தோன்றி அணி செய்தமையால், இது ‘பாவகத் தோற்றம்’ என்னும் அணி ஆயிற்று. (குவ. 105) பாவ சந்தி அலங்காரம் - ‘பாவகச் சேர்க்கை அணி’ காண்க. பாவ சபளிதாலங்காரம் - ‘பாவகக் கலவை அணி’ காண்க. பாவிக அணி - பாவம் என்பது கவியின் கருத்து. அஃது அமைவதே பாவிகம் என்னும் அணி. இது பொருள் தொடர்நிலைச்செய்யுள் என்று கூறப்படும் காப்பியம் முழுதுமாகப் பரந்து நின்று அழகு செய்யும் இயல்பிற்று ஆம். இது பிற அணிகள் போன்று தனித்து ஒரு பாடலில் நோக்கி அறிந்து கொள்ளும் இயல்பிற்றன்று. ஒரு சிறுகாப்பியத் திலோ பெருங்காப்பியத்திலோ உள்ள தலைமையான கதையும், அக்கதைக்குத் துணையாக வரும் கிளைக்கதைகளும் ஒன்றற் கொன்று உதவியாக அமைந்து ‘பாவிகம்’ என்னும் இக் காப்பியப் பண்பை உணர்த்தும். எடுத்துக்காட்டாக, முறையே இராமாயணம், பாரதம், அரிச்சந்திர புராணம் என்பவற்றின் பாவிகமாகப் பின்வரும் மூன்றடி களைக் கூறுப : ‘பிறனில் விழைவோர் கிளையொடும் கெடுப; பொறையிற் சிறந்த கவச மில்லை; வாய்மையிற் கடியதோர் வாளி யில்லை!’ இவை போல, வெவ்வேறு காப்பியங்களிலும் வெவ்வேறான கருத்துக்கள் பாவிகமாய் அமைவன. (தண்டி. 91) பாவிகாலங்காரம் - நிகழ்வின் நவிற்சியணி என்பர் தமிழ்நூலார். முன் நடந்ததை யேனும் பின் நடப்பதையேனும் அப்போது நடக்கின்றதாகச் சொல்லும் அணி இது. எ-டு : ‘பிரிவுணர்ந்த அந்நாள்அப் பேதைவிழிக் கஞ்சம் சொரிதரளம் யான்தூர நாட்டில் - மருவலுறும் இப்போதும் காண்கின்றேன்; என்செய்கோ, இங்கிதற்கு? துப்(பு)ஓது தோழ! நீ சூழ்ந்து.’ “நான் பிரியலுறுவதை அறிந்த அன்று தலைவியின் தாமரைக் கண்கள் வீழ்த்த முத்தினை (-முத்துப் போன்ற கண்ணீர்த் துளிகளை) நான் தூரநாடு எய்துகிற இப்போதும் காண் கிறேன்” என்று தலைவன் தோழற்குக் கூறும் இக்கூற்றின்கண், முன் நடந்தது நிகழ்வில் நடப்பதாகக் கூறும் பாவிகாலங் காரம் வந்தவாறு. தலைவியது உருவெளித்தோற்றம் அக்காட்சி. (குவ. 94) பாவோதயாலங்காரம் - ‘பாவகத் தோற்ற அணி’ காண்க. பிம்ப(ப்) பிரதிபிம்ப பாவம் - பிம்பப் பிரதிபிம்ப பாவமாவது இயற்கையிலேயே பிம்பங் களாயிருந்தாலும் ஒன்றற்கொன்றுண்டாகிய ஒப்புமை யினால் பிம்பமல்லாதனவாகிய உபமான உபமேயங்களை இரண்டு வாக்கியங்களில் தனித்தனியே சொல்லுதலாம். பிம்பப் பிரதிபிம்ப பாவத்தைக் காட்டும் இவ்வணியை வடநூலார் ‘திருஷ்டாந்தாலங்காரம்’ என்ப; தமிழ்நூலார் ‘எடுத்துக்காட்டுவமையணி’ என்ப. இவ்வெடுத்துக்காட் டுவமையணி நிகர் எடுத்துக் காட்டுவமை, முரண் எடுத்துக் காட்டுவமை என இருவகைப்படும். அவற்றை அவ்வத்தலைப் பில் காண்க. (அணி. 18) பிரத்யநீக அலங்காரம் - ஓர் உபமேயத்திடம் ஒரு காரணம் பற்றித் தோற்ற உபமானம் அதே காரணத்தால் அவ்வுபமேயத்தை ஒத்த மற்றொரு பொருளிடம் போர் தொடுக்கிறது என்று கூறுவதாகிய அணி; இது விறல்கோள்அணி எனவும் வழங்கப்படும். அது காண்க. இவ்விறல்கோள்அணி தற்குறிப்பேற்ற அணியைப் பின்பற்றிய தொரு வகையாம். (மா. அ. 135) பிரதிவஸ்தூபமா அலங்காரம் - தொடர் முற்று உவமையணி; தொடர் முழுதுவமை அணி எனவும் படும். அது காண்க. (குவ. 17 ) பிரதீப அணி - உபமானத்தை மதிக்காமல் உபமேயத்தை மேம்படுத்திக் கூறும் அணி. தமிழ் நூல் இதனை ‘எதிர்நிலை அணி’ என்னும். அது காண்க. (மா. அ. 217 உரை) பிரதீபகம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (11-14) வருவதோர் அணி. 1. உபமானம் உயர்ந்ததன்று, உபமானமும் உபமேயமும் சமம் என்பதும், 2. இவ்வுபமேயத்திற்கு இவ்வுபமானம் சமமாகாது என்பதும், 3. உபமேயத்தை உபமானமாக்கி, உபமானத்திற்கு உரிய சிறப்பு உபமேயமாகிய உபமானத்திற்கு இல்லை என்பதும், 4. உபமேயப்பொருள் உபமானப்பொருள் ஆகும் தன்மை யுடையது என்பதும் இவ்வணியாகும். 1. ஒப்புமைக் கூட்ட உவமை, 2. விரோத உவமை, 3. தேற்ற உவமை, 4. நிந்தை உவமை என்பனவற்றுள் இவ்வணி அடங்குமாறு காண்க. அவை காண்க. பிரபுத்வாnக்ஷபம் - இது முன்னவிலக்கணி வகைகளுள் ஒன்றான தலைமை விலக்கு என்னும் அணி. அது காண்க. பிராந்திமதாலங்காரம் - ஒப்புமை பற்றிய மயக்கவணி. (அணி. 6 ); அது காண்க. (டு) பிரிசொல் சிலேடை - பிரிமொழிச் சிலேடை; அது காண்க. (சாமி. 190) பிரிநிலை நவிற்சி அணி - ஒரு பெயர்ச்சொல்லுக்கு இயற்கையாக உள்ள பொருளை விடுத்து அதன் உறுப்புக்களைப் பிரித்துப் பிறிதொரு பொருளும் சுட்டும் அணி. இது வடநூலுள் ‘நிருக்தி அலங்காரம்’ எனக் கூறப்படும். எ-டு : ‘ நலரைஇலர் ஆக்குபழி நண்ணுதலால் வேத அலரவனென் றுன்னை அறை வார்.’ திருமாலின் உந்தித்தாமரையில் உதித்த காரணத்தால், பூவிலிருந்து தோன்றியவன் என்ற பொருளில் பிரமன் ‘அலரவன்’ எனப்படுகிறான். அவன் நற்பண்பினராம் சான் றோரைச் செல்வமிலராகச் செய்யும் பழியை அடைந் திருப்பதால், பழிச்சொற்கு உரியவன் என்ற பொருளில் அவனுக்கு ‘அலரவன்’ (அலர்-பழி) என்று பெயர் இடப் பட்டுள்ளது என்று குறிப்பிடுவதன்கண், பிரிநிலை நவிற்சி அணி அமைந்துள்ளது. (ச. 123; குவ. 97) பிரிமொழிச்சிலேடை அணி - சொற்களையும் தொடர்களையும் பிரித்தும் தொகை வேறு படச்செய்தும் இருபொருள்கொள்ளுமாறு அமைந்த அணி. எ-டு : ‘தள்ளா விடத்தேர் தடந்தா மரைஅடைய எள்ளா அரிமா னிடர்மிகுப்ப - உள்வாழ்தேம் சிந்தும் தகைமைத்தே எங்கோன் திருவுள்ளம் நந்தும் தொழில்புரிந்தார் நாடு’ நண்பர்நாட்டிற்கு உரைக்குங்கால்: எங்கோன் ........ நாடு - எம் சோழமன்னனுடைய திருவுள்ளம் மகிழும் வகை நடந்துகொண்ட நட்பரசர் நாடு; தள்ளா இடத்து ஏர் - நல்ல விளைநிலங்களில் உழுகின்ற கலப்பை; தடம் தாமரை அடைய - பெரிய தாமரைகளைச் சேரவும் (உழுது அகற்றவும்); எள்ளா அரி மானிடர் மிகுப்ப - உயர்ந்த மிகுதியான நெல்லரிகளை உழவர் திரட்டவும்; உள்வாழ்தேம் சிந்தும் தகைமைத்து - உள்ளேயிருக்கும் தேன் சிந்தும் பெருமையுடையது - இனி, பகைவர்நாட்டிற்கு உரைக்குங்கால் : எங்கோன் ... நாடு - எம்சோழ மன்னனுடைய திருவுள்ளம் மாறுபடும் செயல் புரிந்த பகைமன்னவர்தம் நாடு; தள்ளா விடத்தேர் - திண்ணிய அசையாத விடத்தேர் என்ற முள் மரமுடைத்தாய்; தடம் தா மரை அடைய - குன்றுகளைத் தாவி ஏறும் மான்கள் வந்து குடியேற; எள்ளா அரிமான் இடர் மிகுப்ப - அஞ்சத்தக்க சிங்கப் போத்துக்கள் துன்பம் தர; உள்வாழ்தேம் சிந்தும் தகைமைத்து - மனம் விரும்பி வாழு மாறு அமைந்த வளம் இழக்கும் தன்மையுடையது. (நந்தும் -மகிழும், மாறுபடும்). (தண்டி. 77-2.) பிரிமொழிச்சிலேடை உருவகம் - உருவக அணி பிரிமொழிச் சிலேடையொடு கூடிவரும் அணிவகை. எ-டு : ‘பூங்குமிழ் மீதேறிப் புணர்க்குமத னன்கலைதோய்ந்(து) ஓங்குவனத் தாமரையின் உட்பயிலும் - தேங்குபுனல் வெள்ளக் குளத்துறைமால் வெற்பினில்வாழ் மெல்லியலார் வள்ளைக் குழையார்கண் மான்’. கண்மான் உருவகம்; கண்ணாகிய மான் என்பது. கண் மூக்கின்மீது ஏறிக் காமக்கலை கற்றுத் தண்ணீரகத்துத் தாமரை போன்ற முகத்தில் தங்கும். அக்கண்கள், வள்ளைக் கொடி போன்ற காதுகளில் காதணிகளை அணிந்த மகளி ருடையன. வள்ளைக்கொடியின் தளிரை உண்ணும் குறிப்பினையுடைய மான், பூவினையுடைய குமிழமரத்தினைப் பாய்ந்து, தனக்குக் காமம் தரும் ஆன்மானைப் புணர்ந்து, காட்டிலுள்ள மரையைக் கண்டு பழகும் இயல்புடையது. குமிழ் - மூக்கு, குமிழ மரம்; மதனன் கலை - காமநூல், (மதன் நன்கலை) காமத்தைத் தரும் நல்ல ஆண்மான்; வனம் - நீர், காடு; வனத்தாமரை - (வனம் ஆம் மரை) காட்டிலுள்ள மரையா என்ற விலங்கு, (வனத்து தாமரை) நீரில் பூக்கும் தாமரை; குழை - காதணி, தளிர்; குழையார் - குழையினை அணிந்த மகளிர், (குழை ஆர்) தளிரை உண்ணும். (மா. அ. பாடல். 254.) பிரிமொழிச் சிலேடை உவமை - உவமையைப் பிரிமொழிச்சிலேடை வாய்பாட்டாற் கூறுவது. எ-டு : ‘மான்மதங்கூர் வெங்களபம் மட்டிக் கமைந்துளவாய்க் கானிலவா வாரநிழல் கைக்கொண்ட - ஞானமுனி செஞ்சொற் றமிழ்மலைய மேபோலும் சீதரன்வாழ் தஞ்சைத் திருமான் தனம்’. தஞ்சைத் திருமான் தனம் மலையமே போலும் - உவமை. மால் மதம் கூர் வெம்களபம் மட்டு இக்கு அமைந்துளவாய்க் கான் இலவு ஆ ஆரம் நிழல் கொண்ட(து) மலையம் - மயக்கம் தரும் மதம் மிக்குக் கொடுமை செய்யும் யானைகள் - பூவின்தேன் - வைத்ததேன் - இவற்றைக் கொண்டு, காடுகளி லுள்ள இலவு ஆச்சா சந்தனம் முதலிய மரங்களால் நிழல் செய்யும் பொதியமலை. மான்மதம் கூர் வெங்களபம் அட்டிக்க மைந்து உளவாய், கான் நிலவா ஆர நிழல் கைக்கொண்ட - தலைவியின் தனங்கள் கத்தூரி மிகுந்த விரும்பத்தகும் சந்தனச்சேற்றைப் பூசவே (புளகித்து இறுகிய) வலிமையுடையவாய் நறுமணம் நிலை பெற்று முத்துமாலை அணிந்தன. இவ்வாறு சிலேடையால் தலைவியின் தனங்கள் பொதிய மலையோடு உவமிக்கப் பட்டவாறு. (மா. அ. பாடல் 212) பிறப்பு உவமப்போலி - ‘பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய், வாளை நாளிரை பெறூஉம் ஊர’ பொய்கையாகிய இருப்பிடத்தில் பிறந்த நீர்நாய் முதல்நாள் தின்ற வாளைமீனின் புலால்நாற்றத்தொடு மறுநாளும் அதனையே வேண்டும் ஊரன் - என்றது, தான் உண்ண வேண்டிய நல்ல பொருளை விடுத்து நீர்நாய் வாளைமீனை நுகர்வது போல, தலைவன் நல்ல குலத்தில் பிறந்தும், இழிந்த குலத்தில் பிறந்த பரத்தையரைத் தோய்ந்து அவர்தம் நாற்றமே நாற வந்தவனை நோக்கித் தலைவி, “அவரையே தோய்ந்து கொண்டிரு; மேற்குலத்தில் பிறந்த எம்மைத் தீண்டாதே” என்பதனை இவ்வுள்ளுறையால் கூறிப் பரத்தையர் பிறப்பு இழிந்தமையும், (தலைவி தலைவன் ஆகிய) தம் பிறப்பு உயர்ந்தமையும் கூறலின், இது பிறப்பு உவமப்போலி ஆயிற்று. (தொ. பொ. 300 பேரா.) பிறப்புப் பிரமாண அணி - சம்பவாலங்காரம் என்ப வடநூலார். முக்காலத்திலும் நிகழக் கூடிய பொருளை எடுத்துக் கூறுவது. எ-டு : “இறைவனே! அடியேனுக்கு இதுவரை உண்டாகாத துயரமா இனி வரப்போகிறது?” என்ற கூற்றில், தனக்குத் துயரம் உண்டாவது இயல்பு என்று நிகழக் கூடிய பொருள் விளக்கப்பட்டுள்ளது. “என் கவியை இகழ்பவர்கள், அவர்கள்பொருட்டு இக்கவிகள் இயற்றப்பட்டவில்லை என்பதை ஓர்ந்தறிக. எதிர்காலத்தில் என்போல் கவி இயற்ற வல்லான் தோன்றும்போது அவற்கு இவை முன்னோடியாக இருக்கும்” என்ற கூற்றில், இக்கவிக்கு ஒப்பான கவிஒருவனின் தோற்றம் நிகழக்கூடும் என்ற பொருள் விளக்கப்பட்டுள்ளது. “அண்ணா! எங்கிருந்து வருகிறாய்?” “நகரத்தினின்று.” “ஏதேனும் செய்தி உண்டா?” “புதிய செய்தி உண்டு.” “அதனைச் சொல்.” “மனைவியை நீங்கிக் கார்காலத்தும் உயிரோடிருக்கும் கணவன் உளன்,” “உண்மையாகவா?” “ஆம்; உண்மையாகவே.” “பரந்த உலகில் பல திறப்பட்ட மனநிலையுடைய மக்கள் உளர் ஆதலின் எதுதான் நிகழக்கூடாது?” இவ்வுரையாடலில், உலகில் எதுவும் நிகழும் என்பது விளக்கப்பட்டது. இவ்வாறு நிகழக்கூடியவற்றைச் சொல்லுவது பிறப்புப் பிரமாண அணி. (குவ. 114) பிறப்பொடு நோக்குதல் - உள்ளுறைஉவமத்தில் உபமானம் உபமேயம் என்ற இரண்டும் கூறப்பட மாட்டா; உபமானம் ஒன்றுமே கூறப்பட்டிருக்கும். உபமானமும் தெய்வம் நீங்கலான பிற கருப்பொருளாகவே இருக்கும். அக்கருப்பொருள்களைப் புலவன் உவமமாக அமைத்திருக்கும் கூறுபாடுகளை நன்கு நுனித்துப் பார்த்து அவற்றிற்கேற்ற உபமேயத்தை மனங்கொள்ளுதல் வேண்டும் என்பது. (தொ. பொ. 298 பேரா.) “பொருள் தோன்றிய இடத்தொடு நோக்குதல்” என்று பொருள்கொண்டு, ‘நிலவுக்காண் பதுபோல அணிமதி ஏர்தர’ (கலி. 119) என்ற தொடருக்கு, “காணும் இயல்பில்லாத மதிக்குக் காண்டல் தொழிலைக் கொடுத்தது, அது வெளிப் பட்டது” என்ற கருத்தேயாம் என்று விளக்கம் கூறுவர் இளம்பூரணர். (294 இள.) பிற பொருள் வைப்பு அணி - வேற்றுப்பொருள்வைப்புஅணி எனவும்படும். அது காண்க. (வீ. சோ. 162) பிறபொருள் வைப்புத் தடைமொழி - வேற்றுப்பொருள் விலக்கணி வீரசோழியத்தில் பிறபொருள் வைப்புத் தடைமொழி என வழங்கப்பெறுகிறது. (வீ. சோ. 163, 164) ‘வேற்றுப்பொருள் விலக்கு’ நோக்குக. பிறவணி அலங்காரம் - பொன்னாலும் மணியாலும் செய்யப்படும் அணிகளை இகழ்ந்து அணிக்கு அணிசெய்யும் வேற்றுஅணிகளைக் கூறும் அலங்காரம். எ-டு : ‘கைக்(கு)அணி ஒன்(று) ஈகை; கருத்திற்(கு) அணி ஞானம்; மெய்ச்செவிகட்(கு) ஏற்றஅணி மேதகுநூல் - உய்த்தறிதல்; சென்னிக்(கு) அணிமாறன் சேவடிமேற் கொண்டிறைஞ்சல் என்னுக்(கு) அணிவே(று) இனி?’ பிற பொன்னினும் மணியினும் இயன்ற அணிவேண்டா; கைகளுக்கு ஈகையும், மனத்துக்கு ஞானமும், செவிகளுக்கு நற்செய்தி கேட்டலும், தலைக்கு இறைவன் திருவடிகளை வணங்குதலுமே அணி ஆவன என்ற பொருளுடைய இப் பாடற்கண் இவ்வணி வந்துள்ளது. (மா. அ. 218) பிறிதாராய்ச்சி அணி - இது விபாவனை அணி எனவும்படும். ஒரு பொருளின் செயலைப் பற்றி உரைக்குங்கால், அச் செயலுக்குப் பலரும் அறியவரும் காரணத்தை விடுத்து, வேறொரு காரணத்தைக் கவி கற்பனையால் எண்ணி, அக்காரணம் இயல்பாகவோ குறிப்பாகவோ வெளிப்படு மாறு உரைப்பது இவ்வணியாம். இது வேறொரு காரண விபாவனை, இயல்பு விபாவனை, குறிப்பு விபாவனை, வினை எதிர்மறுத்துப் பொருள் புலப்படுக்கும் விபாவனை, காரணம் விலக்கிக் காரியம் புலப்படுக்கும் விபாவனை என ஐவகை யாகத் தண்டியலங்காரம் முதலிய நூல்களில் பகுக்கப்பட் டுள்ளது. சந்திராலோகத்தும் குவலயானந்தத்தும் 1. உலகறி காரண மின்றிக் காரியம் பிறத்தல், 2. காரணச் செயல் குறையக் காரியம் பிறத்தல், 3. தடை யேற்பட்டவழியும் காரியம் பிறத்தல், 4. காரணம் அல்லாத மற்றொன்றால் காரியம் பிறத்தல், 5. பகைக் காரணத்தால் காரியம் பிறத்தல், 6. காரியத்தினின்று காரணம் பிறத்தல் என ஆறுவகையாகப் பகுக்கப்பட்டுள்ளது. 1. உலகறிந்த காரணம் இன்றிக் காரியம் பிறந்ததனைச் சொல்லும் பிறிதாராய்ச்சி அணி இது பிறிதாராய்ச்சி அணிவகையுள் ஒன்று. எ-டு : ‘கடையாமே கூர்த்த கருநெடுங்கண் தேடிப் படையாமே ஏய்ந்தனம் பாவாய்’ (தண்டி. 51-2) “தலைவியே! சாணை பிடிக்காமலேயே நினக்குக் கருநெடுங் கண்கள் கூர்மையவாகியுள்ளன. அரிதின் முயன்று தேடிச் சேர்த்து வைக்காமலேயே உனக்குத் தனங்கள் கிட்டியுள் ளன” என்ற பொருளமைந்த இப்பாடற் பகுதிக்கண், கூர்மை யாவதற்குச் சாணைபிடித்தலும் தனம் கிட்டுதற்கு முயன்று தேடுதலும் ஆகிய காரணங்கள் வேண்டும்; இவையின்றிக் கண்கள் கூர்மை பெற்றுள, தனங்கள் கிட்டியுள என்று கூறுதற்கண், உலகு அறிந்த காரணமின்றிக் காரியம் பிறத்தல் கூறப்பட்டுள்ளமையால் இஃது இவ்வணிவகையாம். 2. காரணச்செயல் குறையக் காரியம் பிறப்பிக்கும் பிறிதாராய்ச்சி அணி இது பிறிதாராய்ச்சி அணிவகை ஆறனுள் ஒன்று. எ-டு : ‘திண்மையும் கூர்மையும் இல்லாக் கணைகளைச் சிந்துபவன் கண்மையின் மூவுல கங்களும் வென்றனன் காமனென்பான்’ வெல்லுவதற்கு ஏதுவாகிய அம்பிலே திண்மையும் கூர்மையும் வேண்டும். காமனுடைய மலராகிய அம்புகளிலே திண்மை யும் இல்லை; கூர்மையும் இல்லை. ஆயினும் அக்கணை களைத் தூவியே மன்மதன் தனது ஆற்றலால் மூவுலகங்களை யும் வென்றனன் என்ற பொருளமைந்த இப்பாட்டடிகளில், திண்மையும் கூர்மையுமாகிய காரணச்செயல் குறைவாக இருக்கவும், அவ்வம்புகளால் மூவுலகையும் வெல்லுதலாகிய காரியம் பிறந்ததனைக் கூறுவது, இவ்வணிவகையாகும். 3. தடையிடையும் காரியம் பிறந்ததனைச் சொல்லும் பிறிதாராய்ச்சி அணி இது பிறிதாராய்ச்சி அணிவகை ஆறனுள் ஒன்று. எ-டு : ‘அடுத்த நின்பிர தாபஅ ருக்கன்நீர் உடுத்த பார்மிசை மன்னவ! ஒண்குடை விடுத்த வேந்தரை விட்டுவி டாதுமேல் எடுத்த வேந்தர் இனத்தைக் கனற்றுமே.’ “உலக மன்னவ! நின் பேராற்றலாகிய சூரியன், தம் வெண்குடையை விடுத்து நின்னைச் சரணடைந்த வேந்தர் களுக்கு வெப்பம் தாராது, வெண்குடை பிடித்துத் தருக்கி நிற்கும் வேந்தர்களுக்கே வெப்பம் தரும்” என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், வெப்பத்தைத் தடுக்கும் குடையாகிய தடை இருந்தபோதும், அரசன் ஆற்றலாகிய சூரியன் பகைமன் னரைச் சாடுதலாகிய தன் காரியத்தைச் செய்யும் என்னு மிடத்தே. இவ்வணிவகை வந்துள்ளது. 4. காரணமல்லாத மற்றொன்றால் காரியம் பிறத்தலைச் சொல்லும் பிறிதாராய்ச்சி அணி இது பிறிதாராய்ச்சி அணிவகை ஆறனுள் ஒன்று. எ-டு : ‘வழுவாத மான்இவள்பால் வண்சங்கி னின்றும் எழுமே நல் யாழின் இசை.’ “உறுப்பிலக்கணம் தவறாத அழகுடைய மான் போன்ற இவளிடத்தில் அழகிய சங்கிலிருந்து (-கழுத்திலிருந்து) யாழின் இசை (- யாழிசை போன்ற குரல்) வெளிப்படுகிறது” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், யாழின் இசை சங்கிலிருந்து பிறக்கிறது என்னுமிடத்தே இவ்வணிவகை வந்துள்ளது. யாழிசைக்குக் காரணம் - யாழ்; காரணமல்லாத மற்றொன்று - சங்கு; காரியம் - யாழிசை. 5. பகைக் காரணத்தால் காரியம் பிறந்ததனைச் சொல்லும் பிறிதாராய்ச்சி அணி இது பிறிதாராய்ச்சி அணிவகை ஆறனுள் ஒன்று. எ-டு : ‘சீர்தரு சோமன் பொழிசீ தளக்கதிர்கள் சோர்தரஎம் மாதைச் சுடும்.’ அழகிய சந்திரன் பொழியும் குளிர்ந்த கிரணங்கள் தலைவி வாடுமாறு அவளைச் சுடுகின்றன என்ற பொருளமைந்த இப்பாடற்கண், சூட்டிற்குப் பகையாகிய சந்திரனிடமிருந்து சுடுகிரணங்களாகிய காரியம் பிறந்ததாகக் கூறுமிடத்தே இவ்வணிவகை வந்துள்ளது. 6. காரியத்தினின்று காரணம் பிறந்ததனைச் சொல்லும் பிறிதாராய்ச்சி அணி இது பிறிதாராய்ச்சி அணிவகை ஆறனுள் ஒன்று எ-டு : ‘மற்பெருவள் ளால்! உதித்த(து), எற்பெறுநின் வண்கைஎனும் கற்பகத்தின் சீர்ப்பாற் கடல்’ “வலிமையும் கொடைத்தொழிலும் பொருந்திய தலைவ! உன் கொடைத்தொழில் பொருந்திய கை என்னும் கற்பக மரத்தி லிருந்து உன் புகழாகிய பாற்கடல் தோன்றிற்று” என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண், பாற்கடலிலிருந்து கற்பகம் உதித்தது என்றலே மரபாகவும், கற்பக மரத்தினின்று பாற்கடல் தோன்றிற்று எனக் காரியத்தினின்று காரணம் பிறந்தது என்ற வாய்பாட்டாற் கூறுமிடத்தே இவ்வணிவகை வந்துள்ளது. பாற்கடல் - காரணம்; கற்பக மரம் - பாற்கடலினின்று தோன்றி யமைபற்றி, அதன் காரியம். காரணம் அன்றிக் காரியம் செப்புதல், ஓரிடத்து உதிப்பது வேறோர் இடத்தில் உதிக்கப் பெறுதல்; ஒரு காலத்தில் ஆகும் பயனை மற்றொரு காலம் வழங்குதல், ஒரு சினை தரித்த காரியம்அதனில் காரணம் ஒன்று தோன்றுதல், ஒரு குணம் கொண்டது மற்றொரு குணத்தின் தொழிலைப் புரிதல் - என மாணிக்கவாசகர் குவலயானந்தம் ஐவகையாகக் குறிப்பிடும். (சூ. 60-64) வீ.சோ. 166; மா.அ. 209, 210; தொ.வி. 358; மு.வீ. பொருளணி 76; ச. 60 குவ. 34; மா.கு.வ. 60 - 64.) பிறிதின் குணம் பெறல் அணி - ஒரு பொருள் தன் குணத்தை இழந்து பிறிதொன்றன் குணத்தைக் கவர்ந்து கொள்ளுதல் இவ்வணியாம். இதனை வடநூலார் தத்குணாலங்காரம் என்ப. எ-டு : ‘இவள்மூக்(கு) அணிமுத்(து) இதழொளியால் பெற்றது, ஒண்பதும ராகத் தொளி.’ இவள் மூக்கில் அணிந்துள்ள முத்து, தன் இயல்பான வெண் ணிறத்தை விடுத்து, இவளது செந்நிற இதழொளி தன்மீது பாய்தலால் செந்நிறப் பதுமராகத்தின் ஒளியைப் பெற்றது என்ற பொருளமைந்த இப்பாடற்கண் இவ்வணி வந்துள்ளது. (ச. 101; குவ. 75) பிறிதின் குணம் பெறாமை அணி - ஒரு பொருள் பிறிதொரு பொருளொடு தொடர்பு கொண்டிருப்பினும், அத்தொடர்புடைய அப்பிறிதொன்றன் குணத்தை அடையாமை இவ்வணியாம். இதனை வடநூலார் அதத்குணாலங்காரம் என்ப. எ-டு : ‘புனைகழற்கால் நங்கோன் புகழ்திசைவே ழங்கள் நனைமதத்தில் தோய்ந்தும் நயவார் - மனைவியர்வாள் கண்மை அறத்துடைத்தும் காமர் மதிபோல வெண்மையுடைத் தாய்விளங்கு மே.’ இப்பாடற்கண், பகைவர்களை அற வென்று எண்திசையும் கைப்பற்றிய மன்னனுடைய புகழ், திசையானைகளின் மதநீரில் தோய்ந்தபோதிலும், பகைமன்னருடைய தேவிமார் களின் கண்களில் தீட்டிய மையினைத் துடைத்தபோதிலும், மதநீரின் நிறத்தையோ மைந்நிறத்தையோ தான் ஏலாமல், தனக்கு இயல்பாயுள்ள வெண்மை நிறத்துடனேயே விளங்கும் என்று கூறப்படுதற்கண், இவ்வணி வந்துள்ளது. (ச.103; குவ. 77) பிறிதின் நவிற்சி அணி - இது பரியாய அணி எனவும்படும்; கருதிய பொருளை அதற்குரிய விதத்தால் கூறாது மற்றொரு விதத்தால் கூறுத லும், நேர்வழியானன்றி மறைவான வழியான் தான் விரும்பி யதை நிறைவேற்றுதலும் ஆகிய இருவகையாக, மற்றொரு வாய்பாட்டால், கருதியதனைக் குறிப்பிடும் இவ் வணி வழங்கப்படுகிறது. இதனை வடநூலார் பரியாயோக் தாலங் காரம் என்ப; தண்டியலங்காரம் முதலிய நூல்கள் பரியாய அணி என்னும். மாறனலங்காரம் பரியாய அணிக்கு வேறு விளக்கம் தரும் (199). 1. கருதிய பொருளை மற்றொரு வாய்பாட்டால் கூறும் பிறிதின் நவிற்சி அணி எ-டு : “இராகு மனைவிமுலைக்(கு) இல்பயனைச் செய்தோற் பராவுதும் நெஞ்சே பணிந்து.” “நெஞ்சே! தன் மனைவியின் தனங்கள் தன்னால் தழுவப் படாத வகையில் இராகுவை அழித்த திருமாலை நீ பணிந்து துதிப்பாயாக” என்று பொருள்படும் இப்பாடற்கண், “திருமாலை வழிபடுக” என்று நேரே கூறாமல், அப்பொருளை மற்றொரு வாய்பாட்டால் சுட்டியமையின் இது பிறிதின் நவிற்சியணியின் வகையாயிற்று. 2. மறைவான வழியால் தான் விரும்பியதை நிறைவேற்றும் பிறிதின் நவிற்சி அணி இது பிறிதின் நவிற்சி அணிவகை இரண்டனுள் ஒன்று. எ-டு : ‘மின்நிகராம் மாதே! விரைச்சாந் துடன்புணர்ந்த நின்நிகராம் மாதவிக்கண் நின்றருள் நீ - தன் நிகராம் செந்தீ வரமலரும் செங்காந்தள் போதுடனே இந்தீ வரம்கொணர்வல் யான்.’ தலைவியைத் தோழி குறியிடத்துக் கொண்டு சென்று, சந்தன மரத்தில் படர்ந்த குருக்கத்திக் கொடியின் நிழலிலே நிறுத்தித் தான் செங்காந்தப் பூக்களையும் குவளைப்பூக்களையும் பறித்து வருவதாகக் கூறி நீங்கியதாகக் குறிப்பிடும் இப்பாடற் கண், சந்தனமரத்தில் படரும் குருக்கத்தி போலத் தலைவி தலைவனைத் தழுவுதற்குரிய வாய்ப்பினை அவட்கு நல்கித் தான் பிரிந்துபோய் அவள் ஒப்பனைக்கு ஏற்ற மலர்களைப் பறித்து வருவதாகத் தோழி கொண்ட கருத்துக் குறிப்பால் பெறப்பட வைத்தமை பிறிதின் நவிற்சியின் வகையாம். (குவ. 29, வீ.சோ. 170; தண்டி. 72) பிறிதுமொழிதல் அணி - இஃது ஒட்டணி, குறிப்பு நவிற்சி அணி, சுருக்கு அணி, நுவலா நுவற்சி அணி எனப் பல பெயராற் கூறப்படும். ‘ஒட்டணி’ காண்க. பிறிதுரை அணி - ஒருவரை முன்னிலையாகப் பேச வேண்டிய இடத்து அவரை நீக்கிப் புறத்தே இருப்பவரையோ, கூறியது கேட்கும் அறிவில்லா விலங்கு பறவை மலை மரம் முதலியவற்றையோ முன்னிலை யாக்கிப் பேசுவது. தலைவன் பிரிவை ஆற்றிக் காமத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய தோழி முன்னிலைக்கண் இருப்பவும், தலைவி அவளை விளித்துக் கூறாது படர்க்கையாரைப் பற்றிக் கூறுவாள் போலக் ‘காமம் தாங்குமதி என்போர் தாம்அஃ(து) அறிகிலர் கொல்லோ அனைமது கையர்கொல்’ (குறுந். 290) எனக் “காமத்தைப் பொறுத்துக்கொள்ளச் சொல்பவர்கள் ஒன்று காமத்தின் தன்மை அறியாதவராதல் வேண்டும்; ஒன் று காமத்தைத் தாங்கும் மனவுறுதி உடையராதல் வேண்டும்” எனப் படர்க்கை யாரைப் பற்றிப் பேசுவது போலவே கூறும் இவ்வடிகளில் இவ்வணி வந்தது. (தொ. வி. 361) பின் வருநிலை அணி - ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லே பின்னரும் பல இடத்து வரினும், முன்னர் வந்த பொருளே பின்னரும் பல இடத்து வரினும் அஃது இவ்வணியின்பாற்படும். இவ்வகை யிரண்டோடு ஒருசொல் ஒரு பொருளிலேயே பல இடத்தும் வருதலாகிய சொற்பொருள் பின் வருநிலை என்னும் வகை யும் கொள்க. இனி உபமானப் பொருட்பின் வருநிலையும் உண்டு. சொற்பின் வருநிலை, பொருட்பின் வருநிலை முதலிய நான்கினையும் தனித்தனித் தலைப்புள் காண்க. (தண்டி. 42) பின்வருநிலை அணியின் மறுபெயர்கள் - 1. மீட்சி அணி (வீ. சோ. 152) 2. பின்வருவிளக்கு அணி. (ச. 38 குவ. 16) பின்வரு விளக்கணி - இது மீட்சி அணி எனவும், பின் வருநிலை அணி எனவும் கூறப்பெறும். இதனை வடநூலார் ஆவர்த்தி தீபகாலங்காரம் என்ப. இது சொல் பின் வருவிளக்கு, பொருள் பின் வரு விளக்கு, சொற்பொருட் பின்வரு விளக்கு என மூவகைப்படும். ‘பின்வருநிலை அணி’ காண்க. (வீ.சோ. 152; தண்டி. 42; மா.அ. 157, 159; தொ.வி. 350; மு.வீ. பொருளணி 62; ச. 38; குவ. 16) பின்னிலை அணி - ‘பின் வருநிலை அணி’ யின் மறுபெயர்; அது காண்க. (சாமி. 179) பிஹிதாலங்காரம் - கரவு வெளிப்பாட்டு அணி; அது காண்க. பீபத்ஸ உபமா - இளிவரல் உவமை; அது காண்க. பீபத்ஸரஸாலங்காரம் - இழிப்புச்சுவை அணி; அது காண்க. புகழ் உவமை அணி- உபமானத்தைப் புகழ்ந்து கூறி உபமேயத்தோடு உவமிப்பது. எ-டு : ‘இறையோன் சடைமுடிமேல் எந்நாளும் தங்கும் பிறைஏர் திருநுதலும் பெற்றது’ நெற்றிக்குச் சிவபெருமான் சடைமுடிமேல் தங்கும் பிறையை உவமையாகக் கூறுதலின், புகழுவமை ஆயிற்று. (தண்டி. 32-7) மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று. (குறள் 1112) “மனமே! யானே காணப்பெறும் இவள் கண்களைப் பல ரானும் காணப்பெறும் பூக்கள் ஒக்கும் என்று கருதித் தாமரை முதலிய பூக்களைக் கண்டால் மயங்கும் நின் அறிவுதான் என்னே!” என்று பொருள்படும் இப்பாடற்கண், தானே காணப்பெறும் தலைவி கண்களுக்கு ஏற்றம் சொன்னது புகழுவமை என்று வீரசோழியம் குறிப்பாகக் கூறும். (கா. 158) புகழ் ஒப்புமைக் கூட்ட அணி - புகழுக்குரிய செய்திகளை ஒருவழித் தொகுத்துக் கூறும் ஒப்புமைக்கூட்டஅணி வகை. எ-டு : ‘பூண்தாங்கு கொங்கை பொரவே குழைபொருப்பும் தூண்டாத தெய்வச் சுடர்விளக்கும் - நாண்தாங்கு வண்மைசால் சான்றவரும் காஞ்சி வளம்பதியில் உண்மையால் உண்டிவ் வுலகு.’ உமாதேவி தழுவக் குழைந்த சிவபெருமானும், தெய்வச் சுடர்விளக்காம் திருமாலும், வள்ளன்மை மிக்க சான்றோரும் காஞ்சி நகரில் இருப்பதனாலேயே உலகியல் நடைபெற்று வருகிறது என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், புகழுக்குரிய மூவர் இணைத்துக் கூறப்பட்டிருத்தல் இவ்வணியாம். (தண்டி. 81) புகழ்ச்சி - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (26 - 28) வருவதோர் அணி. கண்டவை, காணாதவை, காரியம், பயன் என்னுமிவற்றைப் பொய்யாகவும் மெய்யாகவும் புனைந்து பாராட்டுவது. இது தற்குறிப்பேற்றம் ஆகும். அது காண்க. புகழ்ச்சி உவமை - இது புகழுவமை எனவும்படும். அது காண்க. (வீ. சோ. 156) புகழ்ச்சித் துணிவு - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (118) வருவதோர் அணி. காரணம் காட்டி ஒரு பொருளை உபமானமாக நிச்சயம் செய்வது. எ-டு : ‘உறுதோ(று) உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்(கு) அமிழ்தின் இயன்றன தோள்’ (கு. 1106) என்றல் போல்வன. புகழ்தல் உவமை - ‘புகழ் உவமை’ யுள் காண்க. (வீ.சோ. 158) புகழ்ந்தாற் போலப் பழித்த இலேச அணி - மாறனலங்காரத்தில் ‘துதி நிந்தை’ என்ற பெயரில் புகழ்வதின் இகழ்தல் என்ற தனி அணியாகக் கூறப்பட்ட அணியின் வேறானது இது. வீரசோழியம், தண்டியலங்காரம், இலக்கண விளக்கம் என்பன இதனை இலேசஅணியின் பிறர்மதமாகக் கூறும்; முத்துவீரியமும் அது. (வீ.சோ.169, தண்டி. 66 இ.வி.66) (மு. வீ. பொருளணி 87) ‘மேய கலவி விளைபொழுதும் நம்மெல்லென் சாயல் தளராமல் தாங்குமால்’ என்று பெருந்திணைத் தலைவி தன் தோழியிடம் தன் தலைவன் கலவி நிகழ்த்தும்போதும் தன் மென்மை தளராமல் கூடுகிறான் என்று கூறும் கூற்றின்கண், தலைவி தன்வசம் இழக்கும் வகை கலவி நிகழ்த்தாமையின் தன் கணவன் சிறந்த சுவைஞன் அல்லன் என்ற அவன்குறையைப் புகழ்வது போலப் பழித்துக் கூறியவாறு. (தண்டி. 66) ‘துதி நிந்தை’ ஒன்றனைப் புகழ்வது போல மற்றொன்றனை இகழ்தல்; இஃது அன்னதன்றி, ஒன்றனையே புகழ்ந்தாற் போலப் பழித்ததாம். (இ. வி. 677 உரை) புகழ்பொருள் - உபமேயம் (அணியி. 3); உவமிக்கப்படும் (- ஒப்புமை சொல்லப் படும்) பொருள். எ-டு : ‘கயல் போன்ற கண்.’ புகழ்பொருள் உவமை அணி - இஃது இதர விதர உவமை எனவும், அந்நியோன்னிய உவமை எனவும், தடுமாற்ற உவமை எனவும், தடுமாறுவமம் எனவும் கூறப்படும். இதனை ‘உபமேயோபமாலங்காரம்’ என வடநூல்கள் கூறும். இதனை ‘உபமேயோ உவமை’ என்று மாணிக்கவாசகர் குவலயானந்தம் அணியியல் 10 ஆம் நூற்பாவில் விளக்கும். ‘இதரவிதர உவமை’ காண்க. (ச. 9; குவ. 3) புகழ்மாற்றணி - இது நிந்தாத்துதி அணி எனவும், நுவலாச் சொல் அணி எனவும், புகழாப் புகழ்ச்சி அணி எனவும் வஞ்சப் புகழ்ச்சி அணி எனவும் கூறப்பெறும். புகழ்வது போல இகழ்வதும், இகழ்வது போலப் புகழ்தலும் ஆகிய இரண்டும் புகழ் மாற்றணி என்று தொன்னூல் விளக்கம் கூறும். ‘புகழாப் புகழ்ச்சி அணி’ காண்க. (தொ. வி. 348) புகழ்வதின் இகழ்தல் அணி - ஒருபொருளை வெளிப்படையாக நோக்க மதித்துப் புகழ்வது போலத் தோற்றுவித்து, உள்ளே இகழ்ச்சியைக் கற்று வல்லோர் அறியுமாறு குறிப்பாக அமைத்துச் செய்யுள் இயற்றுதற்கண் உள்ள அணி. எ-டு : ‘............... தலைவ மகவைப்பயந்த முகுத்தம் புகலும் படிக்(கு)எளிதோ என் முதன்மைக்(கு) ஒப்ப வகுத்(து) எங்கை என்(று)ஒரு மங்கையைக் காட்டியும் வாழ்வித்ததே’ “எனக்கு மகன் பிறந்த நல்ல நேரம், எனக்கு ஒரு தங்கையையும் உண்டாக்கிக் கொடுத்தது” என்று வெளிப்படையாகப் புகழ்வது போன்று, தான் மகப் பயந்த காலத்தில் தலைவன் பரத்தை ஒருத்தியின் தொடர்பு கொண்டு தன் நலனை இகழ்ந்த பரத்தன் ஆயினான் என்று குறிப்பாகத் தலைவனை இகழ்ந்ததனைச் சுட்டும் இப்பாடற்கண் புகழ்வதின் இகழ்தல் வந்துள்ளது. (மா. அ. 229) இது புதல்வனைப் புகழ்வது தலைவனுக்குப் பழிப்பாய்த் தோன்றுதலின், ஒன்றனையே புகழ்ந்தாற்போலப் பழிக்கும் இலேச அணி வகையுள் அடங்காது. இதனைப் புகழாப் புகழ்ச்சி என்ற பெயரில் தண்டியலங்காரம் முதலியன வழங்கும். (இ.வி. 677 உரை) புகழ்வது போலப் பழித்தல் அணி - ‘புகழ்ந்தாற் போலப் பழித்த இலேச அணி வகை’ - காண்க. புகழ்வது போலப் பழித்தலும், மாறுபடு புகழ் நிலையும் - புகழ்வது போலப் பழித்தலாவது ஒன்றனையே வெளிப் படையாகப் புகழ்வது போலக் குறிப்பினால் பழிப்பது. மாறுபாடு புகழ்நிலையாவது ஒன்றனைப் பழிப்பதற்கு அதனொடு தொடர்பேதும் இல்லாத மற்றொன்றனைப் புகழ்வது. (இ. வி. 677 உரை) புகழாப்புகழ்ச்சி அணி - பழிப்பது போன்ற பாங்கில் ஒரு பொருளின் மேம்பாடு தோன்றக் கூறும் அணி. எ-டு : போர் வேலின் வென்றதூஉம் பல்புகழால் போர்த்ததூஉம், தார்மேவு திண்புயத்தால் தாங்குவதூஉம், - நீர்நாடன் தேரடிக்கூர் வெம்படையால் காப்பதூஉம், செங்கண்மால் ஓரடிக்கீழ் வைத்த உலகு.’ சோழன் போரான் வென்றதும், தன் புகழை நிறைத்ததும், தன் தோள்வலிமையால் காப்பதும், தன் ஆணைச்சக்கரம் நடாத்துவதும் திருமால் தன் ஓரடியால் அளந்த நிலவுலகமே எனப்பொருள்படும் இப்பாடற்கண், திருமால் ஒரே யடியால் அளந்த உலகினைத்தான் சோழன் போர் செய்து வென்றான், புகழ்பரப்பி ஆட்சியும் செய்தான் - என்று திருமாலை உயர்த்திச் சோழனைத் தாழ்த்துவது போன்ற பாங்கில் அவனுடைய புகழே கூறப்பட்டமையின், இது புகழாப் புகழ்ச்சி யாயிற்று. (தண்டி. 84-1) புகழாப்புகழ்ச்சி அணியின் மறுபெயர்கள் - 1. நுவலாச் சொல் அணி (வீ.சோ.174), 2. நிந்தாந்துதி அணி (மா.அ. 228), 3. புகழ் மாற்று அணி (தொ.வி. 348), 4. வஞ்சப் புகழ்ச்சி அணி (ச. 55, குவ. 50) என்பன. புகழாப்புகழ்ச்சி இலேச அணி - இதனை மாறனலங்காரம் நிந்தாத்துதி என வேறு அணியாகக் கூறும். வீரசோழியம், தண்டி, இலக்கண விளக்கம், முத்து வீரியம் முதலியன இலேச அணியின் பிறர் மதமாகக் கூறும். எ-டு : ‘ஆடல் மயிலியலி! அன்பன் அணியாகம் கூடுங்கால் மெல்லென் குறிப்பறியான்’ என்று பெருந்திணைத் தலைவி தன் தோழியிடம் தன் கணவன் கலவி நிகழ்த்தும் செயலைப்பற்றிக் கூறுமிடத்து, மெல்லென்ற தன் நலத்தைப் பாராட்டாது தன் உடலை அவசமாக்குவதாகக் கூறும் கூற்றில், தலைவன் காமநுகர்ச்சி யில் தன் வசம் இழந்த சுவைஞனாக இருப்பதனைக் குறிப் பால் பெறப்பட வைத்தல் பழிப்பது போலப் புகழ்தலாம். (தண்டி. 66-2) புணர்க்கருத்து - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (46) வருவதோர் அணி. இருவகைப் பொருளில் ஒரே தொழில் நிகழ்வதாகக் கூறுவது. இது புணர்நிலைஅணியின் தொழில்புணர்நிலை என்ற வகையாகும். அது காண்க. புணர்நிலை அணி - ஒரு வினையையோ ஒரு பண்பையோ இரண்டு பொருள் களுக்குப் பொருந்தும் வகை இணைத்துச் சொல்லும் அணி. மூன்றாம் வேற்றுமையின் பொருளான உடன்நிகழ்வினைக் காட்டும் ஒடு ஓடு உடன் என்னும் இடைச்சொற்கள் புணர்த்து உரைப்பதே இவ்வணிக்கு இயல்பு. இது வினைப் புணர்நிலை அணி, பண்புப் புணர்நிலை அணி என இரு வகைப்படும். அவற்றைத் தனித்தனித் தலைப்புள் காண்க. (தண்டி. 86) புணர்நிலை அணியின் மறுபெயர்கள் - 1. ஒருங்கியல் அணி (வீ.சோ. 175), 2. உடன்நிகழ்ச்சி அணி (ச. 46), 3. உடன் நவிற்சி அணி (குவ. 21) என்பன. புரிவில் புகழ்ச்சி அணி - இது மாறுபாடு புகழ்நிலை எனவும், தெரிவில் புகழ்ச்சி எனவும், தெளிவில் புகழ்ச்சி எனவும் கூறப்படும். ‘மாறுபடு புகழ்நிலை’ காண்க. (வீ. சோ. 174) புரைய என்னும் உவம உருபு (3) - ‘உரல் புரை பாவடி யானை’ (கலி. 21) உரலை ஒத்த பரவிய அடிகளையுடைய யானை என்ற பொருள்படும் இத்தொட ரில், புரைய என்பது மெய்யுவமப் பொருட்கண் வந்தது. இது மெய்யுவமத்திற்கே சிறந்த உருபு. (தொ.பொ. 290 பேரா.) ‘மகன்தாய் ஆதல் (பரத்தைக்குப்) புரைவதாங்(கு) எனவே’ (அகநா. 16) என்று, புரைய என்பது பயனுவமம் பற்றி வந்தது. பொ. 289) ‘குவளை, மாஇதழ் புரையும் மலிர்கொள் ஈரிமை’ (அகநா. 19) எனப் புரைய என்பது உருஉவமம் பற்றி வந்தது. (தொ.பொ.291) புல்ல என்னும் உவம உருபு - ‘புத்தேள் உலகில் பொன்மரம் புல்ல............ வழங்கும் வள்ளல்’ - தேவருலகத்துக் கற்பக மரத்தை ஒப்பக் கொடை நல்கும் வள்ளல் என்று பொருள்படும் இத்தொடரில், புல்ல என்பது பயனுவமப் பொருட்கண் வந்தது. இது பயனுவமத்திற்கே சிறந்த உருபாம். (தொ. பொ. 289 பேரா.) புலன் என்னும் பொதுவணி - இஃது ‘உய்த்தலில் பொருண்மை’ எனவும் படும்; அது காண்க. (வீ. சோ. 148) புற்புதம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (51) வருவதோர் அணி. ஒரு காரணத்தால் பலகாரியங்கள் தோன்றுதலைக் குறிப்பது. எ-டு : பரகாலன் பனுவல்கள் தோன்றிய காரணத்தால் நெஞ்சுக்கு இருள் கடி தீபமும், அடங்கா நெடும்பிறவி நஞ்சுக்கு நல்ல அமுதமும், தமிழ நன்னூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியமும், ஆரணத்துக்குச் சாரமும், பரசமயங்களாகிய பஞ்சுக்குக் கனலும் ஆகிய பல காரியங்கள் தோன்றின. (பெரியதிருமொழி - தனியன்) என்றாற் போல்வன. புனைந்துரையின் இருவகை - பெரியதனைச் சுருக்கிச் சொல்லுதலும், சிறியதனைப் பெருக்கிச் சொல்லுதலும் ஆம். எ-டு : ‘அயிர்ப்பாகல் நோக்குவேன் கண்டேன் மயிர்ப்பாகின் பாகத்திற் பாகம் நுசுப்பு’ இடை மெல்லிது என்று கூற வேண்டுவதனைச் சுவை கருதி, அதன் நுணுக்கத்திற்கு மயிரை எட்டாகப் பிளந்த கூற்றின் நுணுக்கத்தை ஒப்புமை கூறியது பெரியதனைச் சுருக்குதல். (யா. வி.பக். 429) எ-டு : ‘வண்டுலவு கோதை மதர்விழிகள் சென்றுலவ எண்டிசைக்கும் போதா திடம்.’ (தண்டி. 23.) கண்பார்வையின் கூர்மையை “இவ்விழிகள் சென்றுலவ எட்டுத்திசையும்கூட இடம்கொள்ளா” என இங்ஙனம் கூறுதல் சுவைபடுதலின், இது சிறியதனைப் பெருக்குதலாம். (யா. க. 95 உரை) புனைவிலி - உபமானப் பொருள். புனைவிலி புகழ்ச்சி அணி - உபமானத்தை வருணித்த அளவில் அதன் தொடர்பால் உப மேயச் செய்தி புலப்படச் செய்வது. புனைவிலி - உபமானம்; புனைவுளி - உபமேயம். இதனை வடநூலார் ‘அப்ரஸ்துத ப்ரஸம்ஸாலங்காரம்’ என்ப. இதன்வகைகள் : 1. ஒப்புமைப் புனைவிலி புகழ்ச்சி, 2. பொதுப் புனைவிலி புகழ்ச்சி, 3. சிறப்புப் புனைவிலி புகழ்ச்சி, 4. காரணப் புனைவிலி புகழ்ச்சி, 5. காரியப் புனைவிலி புகழ்ச்சி என்பனவாம். இவ்வணியின் முதல் மூன்று வகையும் ஒட்டணியுள் அடங்கும். (ச. 52; குவ. 27) 1. ஒப்புமைப் புனைவிலி புகழ்ச்சி அணி இது புனைவிலி புகழ்ச்சி அணியின் ஐவகைகளுள் ஒன்று. உபமானத்தின் ஒப்புமையால் ஒத்ததோர் உபமேயம் குறிப் பால் கொள்ளப்படுதல் இவ்வணிவகையாம். எ-டு : ‘மேதகுசீர்க் காரைஅன்றி வேறொன் றையும்இரவாச் சாதகமே புள்ளின் தலை’ சாதகப்புள் மேகமொன்றனையே நோக்கியிருப்பது போல, மன்னன் ஒருவனையன்றிப் பிறர்யாவரிடத்தும் சென்று இரவாத இரவலனது இயல்பு கொள்ளப்பட்டது இவ்வணி வகையாம். இஃது ஒட்டணியுள் அடங்கும். (ச.52; குவ. 27) 2. பொதுப் புனைவிலி புகழ்ச்சி அணி இது புனைவிலி புகழ்ச்சி அணியின் ஐவகைகளுள் ஒன்று. உபமானமாகிய பொதுப்பொருளால் உபமேயமாகிய சிறப்புப்பொருள் புலனாவது இவ்வணி வகை. எ-டு : ‘மைந்தகேள் கல்வி வளம்உணரா மாந்தரெலாம் அந்தகரே ஆவர்; அவர்வடிவின் - சந்தம் தவழ்திரைகள் ஆர்த்தெழூஉம் தண்கடல்சூழ் வையகத்(து) அவிழ்முருக்கம் பூவின்நிறம் ஆம். கல்வியிலார் குருடர்; அவர் வடிவு மணமில்லா முருக்கம் பூவின் சிறப்பில்லா அழகே என்று தந்தை மகனுக்கு உபதேசம் செய்வதாக அமையும் இப்பாடற்கண், உபமானப் பொருள் களால் கல்விநலனே கண்ணுடையவராக்கும், கல்விவனப்பே சிறப்பான வனப்பைத் தரும் என்ற உபமேயப் பொருள்கள் புலனாக்கப்பட்டமை இவ்வணி வகையாம். இஃது ஒட்டணி யுள் அடங்கும். 3. சிறப்புப் புனைவிலி புகழ்ச்சி அணி இது புனைவிலி புகழ்ச்சி அணியின் ஐவகைகளுள் ஒன்று. உபமானமாகிய சிறப்புப்பொருளால், உபமேயமாகிய பொதுப்பொருள் தோன்றுவது இவ்வணிவகை. எ-டு : ‘மன்னும் மிருகமதைத் தாங்கும் மதிகளங்கன் என்னும் பெயர்கொண் டிழிவுற்றான் - பன்மிருகக் கூட்டங்கொள் சீயமிடல் கொள்மிருக ராசனெனப் பீட்டினொடு கொண்டதொரு பேர்.’ மானாகிய மிருகமொன்றனைத் தாங்கிய மதி ‘களங்கன்’ எனப் பழி பெற்றான்; ஆனால் பல மிருகங்களின் கூட் டத்தைக் கொண்ட வலிய சிங்கம் ‘மிருகராசன்’ எனப் புகழப் பட்டது என்ற உபமானத்தால், கொடியவனும் வலியவனு மாக இருப்பவனே புகழடைவான் என்ற உபமேயமாகிய பொதுப்பொருள் புலனாகியமை இவ்வணி வகையாம். இஃது ஒட்டணியுள் அடங்கும். (சந்திரன், சிங்கம் - சிறப்புப் பொருள்கள்; கொடியவர் - பொதுப்பொருள்.) 4. காரணப் புனைவிலி புகழ்ச்சி அணி இது புனைவிலி புகழ்ச்சி அணியின் ஐவகைகளுள் ஒன்று. உபமானமாகிய காரணத்தால் உபமேயமாகிய காரியம் தோன்றுவது இவ்வணிவகை. எ-டு : ‘ஒழுகொளி விரிந்த கதிர்மணி வண்ணன் உந்தியந் தாமரை வந்தோன் முழுமதிக் கலையுள் நிறைந்தபே ரழகை மொண்டு கொண்(டு) அரிபரந் தகன்ற மழைமதர் நெடுங்கண் தமயந்தி வதனம் வகுத்தனன்’ திருமாலின் உந்தித்தாமரையில் தோன்றிய பிரமன் சந்திர னுடைய கலைகளின் பேரழகாகிய காரணத்தைக் கொண்டு தமயந்திமுகத்தைப் படைத்தலாகிய காரியத்தை நிகழ்த்தி னான் என உபமானமாகிய காரணத்தால் உபமேயமாகிய காரியம் நிகழ்த்தப்பட்டமை இவ்வணி வகையாகும். 5. காரியப் புனைவிலி புகழ்ச்சி அணி இது புனைவிலி புகழ்ச்சி அணியின் ஐவகையுள் ஒன்று. உபமானமாகிய காரியத்தால் உபமேயமாகிய காரணம் தோன்றுமாறு செய்வது இவ்வணிவகை. எ-டு : ‘மருக்கமழ்பூங் கோதை மடநடையைக் காணில் செருக்கடையா(து) அன்னத் திரள்.’ இப்பெண்ணின் நடையழகைக் காணின் நடைக்கு உபமான மாகும் அன்னக் கூட்டம் செருக்கடையாது என்ற கருத் தமைந்த இப்பாடலில், உபமானமாகிய அன்னக் கூட்டம் செருக்கடையாமையாகிய காரியத்தினால் பெண்ணின் நடையழகாகிய காரணமாகும் உபமேயம் புலப்பட்டமை இவ்வணிவகையாகும். புனைவுளி - உபமேயப் பொருள். புனைவுளி விளைவு அணி - வருணிக்கப்பட்ட ஒரு பொருளால் அதனை ஒத்த மற்றொரு பொருள் குறிப்பால் அறியப்படுமாறு வருணித்தல். இஃது ஒட்டணியுள் அடங்கும். இதனை வடநூலார் ‘ப்ரஸ்து தாங்குராலங்காரம்’ என்ப. எ-டு : ‘அம்புயநற் போ(து) இருக்க அஞ்சிறைவண் டே! கொடுமுள் பம்புகைதை யால்என் பயன்?’ “வண்டே! நல்ல தாமரைப்பூ இருப்பவும், அதனை விடுத்து முள் நிரம்பிய தாழையை நுகர்தற்கு சுற்றித் திரிவதால் என்ன பயன்?” என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், “தாமரையை ஒத்துப் பல்லாற்றானும் சிறந்த தலைவி இருக்கவும், அவளை நீத்துப் புறம்பே முள் செறிந்தாற்போலப் பாணர் கூட்டம் முதலியன சுற்றியிருக்கும் பரத்தையின் தொடர்பை நாடிச் செல்வதால் தலைவனுக்குச் சிறந்த இன்பம் ஏது?” என்ற கருத்துக் குறிப்பால் புலனாவதால் இப்பாடலில் புனைவுளி விளைவணி வந்துள்ளது. (ச. 53; குவ. 28) பூட்டுவில் அணி - ஒரு செய்யுளின் முதற் சொல்லும் ஈற்றுச் சொல்லும் இயைந்து பொருள் தருமாறு அமையும் பொருள் மாறனலங் காரத்தில் ஓர் அணியாகக் கூறப்படுகிறது. வில்லில் தலையும் நுனியும் நாணால் இணைக்கப்பட்டபின் வில் பயன்படுமாறு போல, ஒரு செய்யுளின் ஈறும் முதலும் பொருள் பொருத்த முற இணைந்து பொருள் தருதலின் இப்பெயர்த்தாயிற்று. எ-டு : ‘வருமதற்கு முன்னே மதிள்குருகூர் உட்புக்குத் திருமகிழ்மா றற்கடிமை என்னும் - கருமமிது மற்றொப்பில் லாத மதிப்புலவீர்! பாசமுடன் கொற்றப் பகடேறிக் கூற்று?’ “கூற்றுக் கொற்றப் பகடேறி வருமதற்கு முன்னே குருகூரின் உள் புகுந்து மாறனுக்கு அடிமை செய்வதே கருமம்” என்று பொருள் கோடற்கண், இறுதிச் சொல்லும் முதற்சொல்லும் கூடிப் பொருள் கொள்ள வந்தமை இவ்வணியாம்.(மா.அ. 175) பூர்ணோபமா - நிறை உவமை எனவும் பூரண உவமை எனவும் கூறப்படும்; ‘நிறை உவமை’ காண்க. பூர்வ ரூபாலங்காரம் - தொல்லுருப் பெறல் அணி; அது காண்க. பெயர் எதிர்நிரல்நிறை அணி - ‘பெயரொடு பெயர் எதிர்நிரல்நிறை அணி’ காண்க. பெயர் நிரல்நிறை (2) - இது மாணிக்க வாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (112) வருவதோர் அணி. உபமானப் பெயர்கள் ஒருபுறமும், உபமேயப் பெயர்கள் ஒருபுறமுமாகப் பொருந்தப் பெறுவது. எ-டு : ‘கொடி குவளை கொட்டை நுசுப்(பு) உண்கண் மேனி’ கொடி போன்ற இடை, குவளை போன்ற கண், கொட்டை போன்ற மேனி என்க. பெயர் நிரல்நிறை அணி - ‘பெயரொடு பெயர் நிரல்நிறை அணி’ காண்க. பெயரொடு பெயர் எதிர் நிரல்நிறை அணி - முடிக்கப்படும் பெயரையும் முடிக்கும் பெயரையும் முறை மாற்றி வரிசையாக அமைப்பது. எ-டு : ‘ஏடு அவிழ்தார், ஏதி, எழில்வாகனம், தளிமம் ஆடு அரவம், அஞ்சிறைப்புள், ஆழி, துழாய்’ இவ்வெண்பா அடிகளில், ஏடவிழ்தார்- துழாய்; ஏதி - ஆழி; எழில் வாகனம் - அஞ்சிறைப்புள், தளிமம், ஆடரவம் என முறை மாற்றி, முடிக்கப்படும் சொல்லொடு முடிக்கும் சொல் இணைந்து பொருள் தருவது இவ்வணியாம். (ஏதி - படைக்கலம்; தளிமம் - படுக்கை; அரவம் - ஆதிசேடன்.) (மா. அ. பாடல். 388) பெயரொடு பெயர் (முறை) நிரல்நிறை அணி - முடிக்கப்படும் பெயரொடு முடிக்கும் பெயரை வரிசையாக அமைத்துப் பொருள் கொள்ள வருவது. எ-டு : ‘தாதிவர்பூந் தாமம், திருநாமம், தந்தைதாய் மேதினி ஏ ழும்புகழ்நா வீறற்கு - மாதராய்! வேரியார் வண்டிரைக்கும் வெய்ய மகிழ், மாறன், காரியார் நங்கையார் காண்.’ நம்மாழ்வாருக்குப் பூந்தாமம் (- மாலை) - மகிழ்; திருநாமம் - மாறன்; தந்தை - காரி, தாய் - (உடைய) நங்கை; - என முடிக்கப் படும் சொற்களும் முடிக்கும் சொற்களும் வரிசையாக அமைந்த பெயரொடு பெயர் முறை நிரல்நிறை வந்தவாறு. (மா. அ. பாடல். 387) பெயரொடு வினை எதிர் நிரல்நிறை அணி - முடிக்கப்படும் வினையையும் முடிக்கும் பெயரையும் முறை மாற்றிக் கொள்ளவரும் நிரல் நிறை அணிவகை. எ-டு : ‘வேதியனை ஈன்றளித்த மேன்மைத் திருவுருவே, வாதியர்தம் வாய்மதமே, வண்டமிழே, - ஒதிமமே, ஏறியதும் கூறியதும் சீறியதும் ஈசனெனத் தேறியதும் காரிதரும் சேய்.’ காரிதரும் சேய் எனப்படும் சடகோபர் ஈசன் எனத் தேறியது பிரமனை ஈன்ற திருவுருவாம் திருமால், அவர் சீறியது பரசமயவாதியருடைய மதம், அவர் கூறியது வண்தமிழ், அவர் வாகனமாக ஏறியது ஓதிமம் (- அன்னம்)- என முடிக்கப்படும் சொல்லாகிய வினையும், முடிக்கும் சொல்லாகிய பெயரும் முறை மாற்றிக் கொள்ளப்பட்டன. (தேறியது முதலிய வினைப்பெயர்களும் வினையினுள் அடக்கப் பட்டன. இ. கொ. 69) (மா. அ. பாடல். 391) பெயரொடு வினை (முறை) நிரல் நிறை அணி - முடிக்கும் பெயரையும் முடிக்கப்படும் வினையையும் முறையே அமைப்பது. எ-டு : ‘மல், துளபம், போர்வேழம், வாராழி, முல்லை, நிலம், கொற்ற மகிழ் மாறனை ஆட் கொண்டருளும் - விற்றுவமால் ஆடினதும் சூடினதும் அட்டதுவும் தட்டதுவும் பாடினதும் நேடினதும் பண்டு.’ பண்டு மால் ஆடினது மல்; சூடினது துளபம்; அட்டது போர் வேழம்; தட்டது (- தடுத்தது) வார் ஆழி; பாடினது முல்லை (ப்பண்); நேடினது (- தேடியது) நிலம் - எனப் பெயரும் வினையும் முறையே அமைந்துள்ளன. (வினைப்பெயரும் வினையுள் அடக்கிக் கொள்ளப்பட்டது. இ.கொ. 69) (மா. அ. பாடல். 389) பெருக்கு அணி - இஃது அதிசய அணி எனவும், உயர்வு நவிற்சி அணி எனவும், மிகைமொழி அணி எனவும் கூறப்படும். (வீ. சோ.153 உரை) பெருக்கு என்னும் அணிக்கும் காந்தம் என்ற பொதுவணிக்குமிடையே வேறுபாடு - பெருக்கு என்ற அதிசய அணியாவது உலகத்தார்க்கு ஏற்றிரா வண்ணம் மிகச் சொல்லுதல். காந்தி என்னும் பொதுவணி புகழ்ச்சிக்கண்ணும் பலவார்த்தையின்கண்ணும் அல்லால் வாராது; பெருக்கு எல்லாவிடத்தும் வரப்பெறும். (வீ. சோ. 153 உரை) பெருங்கவி - 1. வித்தாரக் கவி 2. அக்கவி பாட வல்லோன். (சிலப். உரைப்பாயிரம்) பெருங்காப்பிய இலக்கணம் - 1. வாழ்த்து, வணக்கம், வரு பொருள் என்னும் பலவும். பொருந்துவனவாக முன்வர இது நடக்கும். 2. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் கூறும். 3. இது தன்னிகரில்லாத் தலைவனை யுடையது. 4. இதன்கண், மலை கடல் நாடு கோநகரம் ஆறு பருவங்கள் சிறுபொழுதுகள் வனம் நதி சூரியசந்திரர்தம் தோற்றம் மறைவு - என்பன வருணிக்கப்படும். 5. திருமணம், இல்வாழ்க்கை, கலவி, முடிசூட்டு, பொழில் நுகர்ச்சி, புனல் விளையாடல், உண்டாட்டு, புதல்வர்ப் பேறு, புலவியில் புலத்தல், கலவியில் களித்தல் என்பன புனைந்துரைக்கப்பட்டு இடம் பெறும். 6. மந்திராலோசனை, தூது, ஒற்றரை ஆளுதல், நிரை கோடல், மேற்சேறல், மதிற்புறத்திறுத்தல், களம் வகுத்துப் பொருதல், வெற்றி, நிலையாமையை மிகுத்துக் கூறுதல், கைக்கிளைச் செய்தி என்பன கதையை யொட்டி அமையும். 7. சருக்கம், படலம், இலம்பகம், பரிச்சேதம், காண்டம் என்ற பிரிவுகளைக் கொண்டு சந்தி என்ற நாடக உறுப்புத் தழுவி இடைவிடாத எண்வகைச் சுவையும் மெய்ப்பாடும் கேட் போர் மதிக்குமாறு புலவரால் புனையப்படும் தன்மை பெறும். இப்பெற்றியொடு நடப்பது பெருங்காப்பியம். இவ்விலக் கணங்களுள் நாற்பொருள் பயப்பதில் தவறாது, ஏனைய வருணைனைகள் சில குறைந்தும் இது வரலாம். பெருங்காப் பியம் பாக்களாலும் பாவினங்களாலும் பாடப்படுதலோடு உரையிடையிடையே விரவியும் பாடப்பெறும். (தண்டி. 8, 9 மா. அ. 72- 75) பெருமித உவமம் - ‘வீரம் பற்றிய உவமம்’ காண்க. பெருமை அணி - ஒன்றன் ஆதாரத்தையோ ஆதேயத்தையோ பெரியதாகச் சொல்லுவது பெருமை அணியாம். இதனை அதிகாலங்காரம் என்று வடநூல் கூறும். இதன் வகைகள் இரண்டாவன : 1) பெரிய அடிப்படையை விட, அவ்வடிப்படையினைச் சார்ந்திருக்கும் பொருளைப் பெரியதாகக் கூறுதல். 2) பெரியதாகிய சார்ந்திருக்கும் பொருளை விட, அதன் அடிப்படையைப் பெரியதாகக் கூறுதல் என்பன. இவ்வணி, பெரிய பொருள்கள் இரண்டனை ஒப்பிட்டு ஒன்றனைவிட மற்றது பெரியது என்று கூறலின், உயர்வு நவிற்சியணியின் வேறுபட்டது. (ச. 67; குவ. 41) 1. ஆதாரத்தினும் ஆதேயத்தைப் பெரிதாகச் சொல்லும் பெருமை அணி இது பெருமை யணியின் இருவகையுள் ஒன்று. எ-டு : ‘உலகம் முழுதடங்கும் மாவிசும்பில்; உன்தன் அலகில் குணம்அடங்கா வாம்.’ “வானத்துள் கடலும் நிலமுமாகிய உலகம் முழுதும் அடங்கும். உன் எல்லையற்ற குணங்களான் வரும் புகழ்கள் பெரும்பரப்புடையன ஆதலின், அவை ஆகாயப் பரப்புள் அடங்கமாட்டா” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், ஆதாரமாகிய ஆகாயத்தை விட, அந்த ஆதாரத்தில் இருக்க வேண்டிய புகழாகிய ஆதேயம் பெரிது என்று சொல்லும் இப் பெருமையணியின் வகை வந்துள்ளது. ‘மண் தேய்த்த புகழினான்’ (சிலப். 1 : 36) என்னும் தொடரும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. 2. ஆதேயத்தினும் ஆதாரத்தைப் பெருமையாகச் சொல்லும் பெருமை அணி இது பெருமையணியின் இருவகையுள் ஒன்று. எ-டு : ‘மன்சீர் உலகுஎவ் அளவுபெரு மைத்துஅளவில் உன்சீர் அடங்கி உள.’ சிறப்புற்ற உலகின் பெரும்பரப்பு அடங்கலும் தலைவனுடைய புகழ்ச் செய்திகள் அடங்கியுள்ளன என்ற பொருளமைந்த இப்பாடற்கண், பெரியனவாகிய புகழ்ச் செய்திகளைவிட அவை பரவியிருக்கும் நிலஉலகப்பரப்பு அளவிற் குறைந்த தன்று என்றும் சற்றுப் பெரியது என்றும் கருத்து அமைந் துள்ளமை இப்பெருமை அணி வகையாம். (ச. 67 ; குவ. 41) பெருமை பற்றி வந்த உவமம் - நெற்றிக்குக் கடலின் நடுவில் எழுந்த எட்டாம் பிறை மதியை உவமம் கூறுதலும், (குறுந். 129) ‘விண்முகடு குடை போன்றுள்ளது; மேரு மால்வரை குடையின் காம்பு போன்று உள்ளது; விண்மீன் கணம் குடையில் பதிக்கப்பட்ட முத்துப் போன்று உள்ளன’ என்று உவமம் கூறுதலும், (பு. வெ. மா. 8 : 28) ‘சோற்றை வடித்த கஞ்சி ஆறுபோலப் பரவி ஓடிற்று’ என்று உவமம் கூறுதலும் (பட்டினப். 44, 45), கேட்பார்க்கு இன்பம் செய்தலின், இவை போல்வன பெருமை பற்றி வந்த உவமங்களாம். (தொ. பொ. 285 பேரா.) பேதத்தை அபேதமாக்கிய உருவகம் - உபமேயத்தை முன்னர்க் குறிப்பிட்டுப் பின் உபமானத்தையும் குறித்து இரண்டனையும் ஒன்றாக்கிக் கூறாமல் உபமானத் திற்கே உபமேயத்தின் செயல்களை ஏற்றியுரைக்கும் உருவக வகை. எ-டு : ‘காம ரதத்தோகை களிவண் டினமுலவும் தாமரைசார் ஆம்பல் தனி நறவுண்(டு) - ஏமுறுபேர் இன்பத் தினும்பெரிதே! எவ்வுள்மா லைப்பணிந்து துன்புற் றவர்சேர் சுகம்.’ (பாடல். 261) காமச்சுவை மிக்க இம்மயிலின் வண்டுகள் உலவும் தாமரையைச் சார்ந்த ஆம்பலிலுள்ள தேனை நுகரும் இன்பத்தினும், வீடு பேற்றின்பம் மேம்பட்டதன்று என்ற கருத்துடைய இப் பாடற்கண், மயில் வண்டுகள் தாமரை ஆம்பல் தேன் என்ற உவமைகளே கூறப்பட, உபமேயமும் உருவகஉரும் தொகுக்கப்பட்டுள்ளன. தலைவியாகிய மயில், கண்களாகிய வண்டுகள், முகமாகிய தாமரை, வாயாகிய ஆம்பல், உமிழ் நீராகிய தேன் என்று கூறப்பட வேண்டியன இங்ஙனம் தொகுத்துரைக்கப்பட்டமை இவ்வகை உருவகம். (மா. அ. 122 உரை) பொதுத்தன்மை - உவமான உவமேயங்களினிடையே அமைந்துள்ள சாதாரண தருமம். (தருமம் - இயல்பு) எ-டு : ‘பவளவாய்’ என்புழி, செம்மை நிறம் பொதுத்தன்மையாம். பொது நீங்குவமை அணி - உவமை அணிவகைகளுள் ஒன்று. உவமையை உட்கொண்டு, உபமேயம் அதனை விட உயர்ந்தது என்பதால் உவமையை நீக்கி, உபமேயத்திற்கு அதனையே உபமானமாகக் கூறுவது. எ-டு : ‘திருமருவும் தண்மதிக்கும் செந்தா மரையின் விரைமலர்க்கும் மேலாம் தகைத்தால் - கருநெடுங்கண் மானே! இருள்அளகம் சூழ்ந்தநின் வாள்முகம் தானே உவமை தனக்கு.’ மானே! உனது முகம் சந்திரனையும் தாமரைமலரையும் விட உயர்ந்தது ஆதலின், தனக்குத் தானே உவமை ஆகும் என்ற கருத்தமைந்தது இப்பாடல். (தண்டி. 32 - 33) பொது நீங்குதல் - பொதுவான இயல்பு இல்லாமை, இது சந்திராலோகத்தில் இயைபின்மை அணி என ஒரு தனி அணி யாகக் கூறப்படும். வடநூல்கள் இதனை அநந்வயம் (-பொருத்த மின்மை) என்று கூறும். வீரசோழியம் இதனை ‘ஒப்பில் உவமை, எனக் குறிக்கும். (கா. 159) உபமானம் உபமேயம் என இருபொருள் இன்மையின் உவமையே ஆகாது என்பதுடன், ஒப்புமை கூறுதல் வழுவும் ஆகுமேயெனின் ஆகாது; உவமையை உட்கொண்டே அதனினும் உபமேயம் மேம்பட்டது என்று சிறப்பித்துக் கூறுதல் நோக்கமாதலன்றி, ஒப்புமை வேண்டாமை இல்லை ஆதலின். (தண்டி. 90 உரை) பொதுமை அணி - ஒப்புமையால் இரண்டு பொருள்களிடையே சிறப்பு உணரப் படாதிருப்பதனைக் குறிக்கும் அணி. இதனை வடநூலார் ‘சாமானியாலங்காரம்’ என்ப. (மு. வீ. பொருளணி. 57; ச. 106; குவ. 80) பொதுவகையான் காரணம் விலக்கிக் காரியம் புலப்படுத்தும் விபாவனை அணி - ஒரு செயலுக்கான காரணத்தைப் பொதுவாக விலக்கிக் குறிப்பாகப் பெறும் வகையில் காரியங்களைக் கூறும் அணி. எ-டு : ‘காரணம் இன்றி மலையா நிலம் கனலும்; ஈர மதிவெதும்பற்(கு) என் நிமித்தம்? - காரிகையார்க்கு யாமே தளர இயல்பாக நீண்டனகண் தாமே திரண்ட தனம்.’ “காரணம் யாது மின்றியே தென்றல் வெதும்புகிறது; குளிர்ச்சியுடைய சந்திரன் வெப்பம் தருதற்கும் என்ன காரணம்? எம் மனம் உடைந்து தளரும் வண்ணம் இப்பெண் ணுக்கு இயல்பாகவே கண்கள் நீண்டுள; தனங்களும் தாமாகவே பருத்துத் திரண்டுள” என்று பொருள்படும் இப்பாடற்கண், தென்றலது வெப்பம், மதியின் சூடு, கண்களது நீளம், தனங்களது திரட்சி என்னும் காரியங்கள், காரண மின்றியே கூறப்பட்டன. (தண்டி. 51) பொய்த்தற் குறிப்பு அணி - ஒரு பொருளைப் பொய்யென்று விளக்குதற்கு உலகறிந்த மற்றொரு பொய்ப்பொருளைப் புணர்த்துக் கூறும் அணி. இதனை வடநூலார் ‘மித்யாத்திய வஸிதி’ அலங்காரம் என்ப. எ-டு : ‘விண்மலர்த்தார் வேய்ந்தோனே வேசையரைத் தன்வசமாப் பண்ணுதற்கு வல்லான்என் பார்.’ பரத்தையரை ஒருவரும் தம்மிடமே மாறாத அன்பு கொள்ளு மாறு தன்வசப்படுத்துதல் இயலாது என்ற கருத்தை, “ஆகாயத்தில் மலரும் பூக்களை மாலையாகத் தொடுத்து அணிபவனே பரத்தையரைத் தன்வசப்படுத்த வல்லவன்” என்று குறிப்பிடும் இப்பாடலின்கண், பொய்ப்பொருளாகிய ஆகாயப் பூவைத் தொடுத்தணிதல் இயலாதது போலவே, பரத்தையரையும் வசப்படுத்தல் இயலாது என்று கருத்து வெளிப்படுத்தப்பட்டமை இவ்வணியாம். (ச. 91; குவ. 65) பொருட்குப் பொருளொடு விரோதச் சிலேடை - ‘விரோதச் சிலேடை’ காண்க. பொருட்குறை விசேட அணி- விசேட அணிவகை நான்கனுள் ஒன்று; பொருளில் குறை பாடு இருந்துவைத்தும் , செயல் நிகழ்ந்த சிறப்பினைக் கூறுவது. எ-டு : ‘தொல்லை மறைதேர் துணைவன்பால் யாண்டுவரை எல்லை இருநாழி நெற்கொண்(டு) ஓர் - மெல்லியலாள் ஓங்குலகில் வாழும் உயிரனைத்தும் ஊட்டுமால் ஏங்கொலிநீர்க் காஞ்சி யிடை.’ சிவபெருமானிடத்தில் தான் ஓராண்டளவும் தவம் செய்து, குறைந்த அளவுடையதான இரண்டுநாழி (நாழி - ஒரு முகத்தலளவை) நெல்லையே பெற்று, பின் அதனைக் கொண்டே காஞ்சி மாநகரில் பார்வதிதேவி முப்பத்திரண்டு அறங்களையும் செய்து உலகத்து உயிர்கள்அனைத்தையும் உணவூட்டிக் காக்கிறாள் என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், பார்வதிதேவி பெற்ற நெல் அளவில் மிகக் குறைவுடைய தாயினும், அக்குறைபாடு செயலுக்குச் சிறப்பளிக்கத் தடையாகவில்லை என்ற விசேடம் உரைக்கப்பட்டதால், இது பொருட்குறை விசேடம் ஆயிற்று. (தண்டி. 79-4) பொருட் சிறப்பணி - அர்த்தாலங்காரம் (யாழ். அக.) எனப்படும் பொருளணிகளின் பரியாயப் பெயர். பொருட்செல்வ மிகுதி உதாத்தம் - பொருள் மிக்கிருத்தலை உயர்த்துப் புகழும் உதாத்த அணிவகை. எ-டு : ‘திருப்பூர நாள்வந்த புத்தூர் மடந்தை திருமுலைப்பொற் பொருப்(பு) ஊர் புயல்வட வேங்கடத் தான்மெய்ப் புழுகில் பொத்தும் கருப்பூரத் தூள்விலைக்(கு) ஓர் நாள்சிற் றுண்டி கருணைஉண்டி விருப்பூரத் துய்ப்பதற்(கு) ஒப்போ பிறர் வைக்கும் மெய்ப்பொருளே!’ ஆண்டாளாக அவதரித்த பெருமாட்டியை மணந்த திருமால் வேங்கடத்தானாக எழுந்தருளியிருக்கும்போது, திருமேனியில் பூசும் புழுகு, திருமஞ்சனத்தில் கரையும் கற்பூரத்தூள், திருப்பணியார வகை, பொரிக்கறி அமுதுவகை, திருப்போனக வகை இவற்றிற்கு ஒருநாள் செலவிடப்படும் தொகைக்குப் பிறர் வாழ்நாள் முழுதும் சேமித்து வைத்த செல்வம் இணை யாகாது என்ற இப்பாடற்கண், பொருட்செல்வமிகுதி புகழப்பட்ட உதாத்த வகை வந்துள்ளது. (மா.அ. பாடல். 575) பொருட்டெளிவு என்னும் பொதுவணி - இது ‘தெளிவு’ எனவும்படும்; அது காண்க. (வீ. சோ. 148) பொருட்பேற்றுப் பிரமாண அணி - ‘அருத்தாபத்திப் பிரமாண அலங்காரம்’ என்ப, இதனை வட நூலார். (அர்த்தம் - பொருள்; ஆபத்தி - பெறுதல்) ஒரு பொருளின் இருப்பினால் வேறொரு பொருளும் இருக்கத் தான் வேண்டும் என்று உய்த்துணர்ந்தறிதல். எ-டு : ‘கொங்கைகளாகிய சுமையைக்கொண்டு அச்சுமையைத் தாங்க வேண்டிய இடை என்ற உறுப்பு வெளிப்படையாகக் கண்ணுக்குப் புலனாகாவிடினும், உண்மையில் இருக்க வேண்டும் என்று ஊகித்து அறிவது.’ கங்கைநீர் வெண்ணிறத்தது. கடல்நீர் சிவபெருமான் கழுத்தைப் போலக் கறுத்தது. கடல்நீர் கரு நிறத்ததாக இருப்ப தால், வெண்ணிறத்தாகிய கங்கைநீர் அதில் கலந்திருக்கிறது என்று சொல்ல வாய்ப்பில்லை என்று உய்த்தறிவது. இது போல்வன பொருட்பேற்றுப் பிரமாண அணியாம். (குவ. 112) பொருவ என்னும் உவம உருபு - ‘விண்பொருபுகழ் விறல்வஞ்சி’ (புறநா. 11) தேவருலகத்தை ஒத்த புகழுடைய மேம்பட்ட வஞ்சி மாநகர் என்று பொருள்படும் இத்தொடரில், பொருவ என்பது பயனுவமப் பொருட்கண் வந்தது. இது பயனுவமத்திற்கே சிறந்த உருபு. (தொ. பொ. 289 பேரா.) பொருள் அதிசயஅணி - அதிசயஅணிவகை ஆறனுள் ஒன்று. எ-டு : ‘பண்டு புரம்எரிப்ப மேன்மேல் படர்ந்(து)இன்றும் அண்ட முகடு நெருப்(பு)அறா(து) - ஒண்தளிர்க்கை வல்லி தழுவக் குழைந்த வடமேரு வில்லி நுதல்மேல் விழி.’ பார்வதி தேவி தழுவுகையாலே குழைந்தவனும், நெற்றியில் நெருப்புக்கண் உடையவனும், மேருமலையை வில்லாகப் பிடித்தவனுமாகிய சிவபெருமான் பண்டு முப்புரங்களையும் சிரிப்பால் எரிக்க, அத்தீ, மேன்மேலும் படர்ந்து ஓடுதலால், இன்றும் அண்டத்துச்சியில் அஃது அறாமல் எரிகிறது என்ற பொருளமைந்த இப்பாடற்கண், சிவபெருமான் முப்புரம் எரித்த நெருப்பு இன்னும் அண்டத்துச்சியில் நீங்காதுளது என ஒரு பொருளின் அதிசயம் கூறப்பட்டமையால், இஃது இவ் வணிவகையின் பாற்பட்டது. (தண்டி. 55-1) பொருள் அவநுதி அணி - அவநுதி அணிவகை நான்கனுள் ஒன்று; ஒரு பொருளுடைய தன்மையை மறுத்து, அதற்கு மேலும் சிறப்பைக் கூறுவது. எ-டு : சிவபெருமான் தானே நிலமாகவும், ஆகாயமாகவும், காற்றாகவும், நீராகவும், தீயாகவும், சூரியனாகவும், சந்திர னாகவும் ஆகியுள்ளதோடு இயமானன் ஆகவும் பிற எண்ணி லடங்காத பொருள்களாகவும் உள்ளான் என்ற பொருள்படும் ‘நிலனாம் விசும்பாம்’ என்னும் பாடற்கண், தனியொரு கடவுளான சிவபெருமானது ஒன்றேயான தன்மையை மறுத்து அவன் அனைத்துப் பொருளாகவும், அவற்றின் உள்ளும் புறமுமாகவும் உள்ளான் என அவனது இறைமை யைச் சிறப்பித்தமையின், இது பொருள் அவநுதி ஆயிற்று. (தண்டி. 75 - 2) பொருள் இடைநிலைத் தீவகம் - தீவக அணிவகைகளுள் ஒன்று; பொருள் குறிக்கும் சொல் பாடலின் இடையில் நின்று, பல இடங்களிலும் சென்று இயைந்து பொருள் பயப்பது. எ-டு : ‘மான்அமரும் கண்ணான் மணிவயிற்றில் வந்துதித்தான்; தானவரை என்றும் தலைஅழித்தான்; - யானைமுகன் ஓட்டினான் வெங்கலியை; உள்ளத்(து) இனிதமர்ந்து வீட்டினான் நம்மேல் வினை.’ யானைமுகனாம் விநாயகக் கடவுள், பார்வதிதேவியின் மணிவயிற்றில் தோன்றினான்; அசுரர்களது தலைமையை எக்காலத்தும் போக்கினான்; கொடிய துயரத்தை நீக்கினான்; நம் உள்ளத்தில் இனிது மேவி நம் தீவினைகளை அகற்றினான் என்று பொருளமைந்த இப்பாடற்கண், இடையில் நின்ற ‘யானைமுகன்’ என்னும் பொருட்பெயர், பாட்டின் பல விடங்களிலும் சென்று இயைந்து பொருள் பயந்தமையால், இஃது இவ்வணிவகைத்து ஆயிற்று. (தண்டி. 40 -8) பொருள்இன்பம் என்னும் குணவணி - செய்யுள் தரும் அகப்பொருள் புறப்பொருள் பற்றிய செய்தியைக் கேட்குங்கால், கேட்போர்க்கு வருவதொரு மகிழ்ச்சி; இம்மகிழ்ச்சி தருதற்கு இன்றியமையாத இயல்பு இது; அஃதாவது கொச்சையான சொல்லும் பொருளும் கலவாத உயரிய நிலை. (பொருளின்ப மாவது மலரின் மதுக்காரணமாக மதுகரங் களுக்கு வரும் இன்பம் போலக் கவிப்பொருள் உட்கொண் டோர்க்கு வரும் இன்பமாம். ஆகவே பொருளணியுள்ளும் இன்றியமையாதனவாகிய அணி யுடைத்தாய்ப் பாடுவதே பொருளின்பம். (மா. அ. 81 உரை) எ-டு : ‘மான்நேர் நோக்கின் வளைக்கை ஆய்ச்சியர் கான முல்லை சூடார், கதுப்பில் பூவைப் புதுமலர் சூடித் தாம்தம் அடங்காப் பணைமுலை இழைவளர் முற்றத்துச் சுணங்கின் செவ்வி மறைப்பினும் மலர்ந்த பூவைப் புதுமலர் பரப்புவர்; பூவயின் ஆநிரை வருத்தம் வீட, மலையெடுத்து மாரி காத்த காளை நீல மேனி நிகர்க்குமா லெனவே’ “ஆய்ச்சியர், தம் முல்லைநிலத்து மிகுந்து காணப்படும் நறுமணம் கொண்ட முல்லைமலர்களைத் தாம் அணிந்து - கொள்ளாமல், மலையைக் குடையாகப் பிடித்து ஆநிரை களைக் காத்தருளிய கண்ணபிரானுடைய நிறத்தை நிகர்த்து இன்புறுத்தும் பூவைப் புதுமலர்களையே சூடுவர்” என்ற கருத்தமைந்த கற்பனை நயமிக்க இப்பாடற்கண் பொரு ளின்பம் காணப்படுகிறது. (தண்டி. 19 உரை) இக்குணஅணி வைதருப்பம் கௌடம் எனும் இருநெறி யார்க்கும் பொது. (பாஞ்சாலமும் உட்பட மூன்று நெறி யார்க்கும் பொது என்னும் மா.அ.) பொருள் உவமை - உபமேயத்துக்கு உபமானம் கூறுமிடத்துப் பொதுத்தன்மை யாகிய காரணத்தை எடுத்துக்கூறாமல் வாளா உபமானம் உவமையுருபு உபமேயம் இவற்றைமாத்திரம் எடுத்துக் கூறுவது. எ-டு : ‘தாமரை போலும்நின் வாண்முகம் கண்ணிணைகள் நீலோற் பலத்துக்கு நேர்.’ இப்பாடற்கண் பொதுத்தன்மை நீங்கலாக, ஏனைய உபமானம் உவமையுருபு உபமேயம் என்ற மூன்றுமே வந்தவாறு. பொருள் கடைநிலைத் தீவக அணி - தீவக அணிவகைகளுள் ஒன்று; செய்யுளின் கடையில் நிற்கும் பொருள் ஒன்றனைக் குறிக்கும் சொல் பல இடங்களிலும் சென்று இயைந்து பொருள் பயப்பது. எ-டு : ‘புறத்தன, ஊரன, நீரன, மாவின் திறத்தன, கொற்சேரி யவ்வே; - அறத்தின் மகனை முறைசெய்தான் மாவஞ்சி யாட்டி முகனை முறைசெய்த கண்.’ சோழ மன்னனது வஞ்சி நாட்டில் வாழும் தலைவியின் முகத்திற்கு அழகு செய்யும் கண்கள், புறத்தில் மான்களாகவும், ஊரில் உள்ள அம்புகளாகவும், நீர்நிலையிலுள்ள குவளைப் பூக்களாகவும், மாமரத்திலுள்ள வடுக்களாகவும், கொல்லர் சேரியிலுள்ள வேல் வாள்களாகவும் உள்ளன என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண், இறுதியிலுள்ள ‘கண்’ எனும் பொருட் பெயர் (சினைப் பெயரும் ஈண்டுப் பொருட் பெயரே என்க.) பிற இடங்களிலும் சென்று இணைந்து பொருள் பயத்தலால் இஃது இவ்வணி வகைத்தாயிற்று. (தண்டி. 40-12) பொருள் காரக ஏது - பொருள் ஒன்றன் செயலைக் காரணமாகக் கூறும் அணி. எ-டு : ‘நந்திபுர மாலே! நன்மா ருதிகொளுத்தும் வெந்தழலால் வெந்து விளிந்ததே - முந்தைப் பெருவா னவர்வரமும் பேரறமும் பொன்றப் பொருவான் இலங்கா புரம்.’ மாருதி கொளுத்திய அழலால் இலங்கை வெந்தது என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், தழல் என்ற பொருளின் செயலால் விளைந்த நிகழ்ச்சியாகிய வேதல் குறிப்பிடப் பட்டமை பொருட்காரக ஏது. (மா. அ. பாடல் 435) பொருள் ஞாபக ஏது - ஒரு பொருளின் செயலை அறிவினால் அறிந்து ஒரு முடிவிற்கு வருதலைக் குறிப்பது. எ-டு : ‘தேக்குகதிர் வெய்யோன் தினமும் பகல்நாடிப் போக்கு வரவு புரிதலால் - காக்கும் திருநா ரணனுளனாம் செம்மை உணர்வித்தான் குருநாத னாகியஎங் கோன்’ சூரியனுடைய செயல் ஒழுங்கு முறையை மாறாது நாடோ றும் அமைந்திருப்பதனால், இத்தகைய அமைப்பைச் செய்த பரம்பொருள் ஒருவன் உளன் என்று அறிவால் அறிதலின், இது பொருளின் செயலை அடிப்படையாகக்கொண்டு அறிவான் அறியும் ஞாபக ஏதுவாம். (மா. அ. பாடல். 440) பொருள் தடைமொழி அணி - பொருள் விலக்கணி வீரசோழியத்தில் பொருள் தடைமொழி அணி எனக் கூறப்படுகிறது. ‘பொருள் விலக்கு’க் காண்க. (வீ. சோ. 164) பொருள் தன்மை அணி - தன்மை அணிவகைகளுள் ஒன்று; ஒரு பொருள்தன்மையினை மிகைபடப் புனைந்துரையாது பட்டாங்கு மொழிவது. எ-டு : ‘நீல மணிமிடற்றன், நீண்ட சடைமுடியன், நூலணிந்த மார்பன், நுதல்விழியன், - தோலுடையன், கைம்மான் மறியன், கனல் மழுவன், கச்சாலை எம்மான், இமையோர்க்(கு) இறை.’ திருக்கச்சாலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் நீலநிற முடைய கழுத்தையுடையவன்; பூணூல் அணிந்த மார்பினன்; நெற்றிக் கண்ணினன்; புலித்தோலுடுத்து யானைத்தோல் போர்த்தவன்; கையில் மானையும் மழுவினையும் ஏந்தியவன்; அவனே கடவுளர்க்கெல்லாம் கடவுள் ஆவான் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், சிவபெருமானுடைய தோற்றம் புனைந்துரையாக அன்றி இயற்கையாக உள்ள படியே பாடப்பட்டிருத்தலின் இஃது இவ்வணியாயிற்று. (தண்டி. 30-1) பொருள் தன்மையின் பகுதி - பொருள்தன்மை அணி என்ற தன்மையணியின் வகை. உயர்திணையிடத்து ஆடூஉப் பொருட்டன்மை, உயர்திணை யிடத்து மகடூஉப் பொதுத்தன்மை, மக்கள் தன்மைக்கண் பெண்தன்மை, அஃறிணையிடத்து உயிருடைய அஃறிணைத் தன்மை, அஃறிணையிடத்து உயிரில்லாத அஃறிணைத் தன்மை என்பன. (மா. அ. 89-91) பொருள் தொடர்நிலை வகை - பொருளால் தொடர்ச்சியுற நடக்கும் பெருங்காப்பியமும், சிறுகாப்பியமும் என இரண்டும் ஆம். முத்தகம், குளகம், தொகைநிலை என்னும் செய்யுள் வகை மூன்றும் இவற்றுக்கு உறுப்பாய் வரும். (தண்டி. 7) பொருள் நிலைக்களனாகத் தோன்றிய ஒட்டு - ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்டு கூறிய செய்தியால் வெளிப்படையாகக் கூறாது, கவி கருதிய மற்றொரு செய்தியைப் பெறப்படவைக்கும் ஒட்டணி வகை. எ-டு : ‘கற்றுணர்ந்த வாய்மைக் கவிப்புலவீர்! கண்ணனருள் பெற்றியன்ற செம்பொருளைப் பேணியே - சுற்றம் வளைத்தருந்த வாழாது வந்தயலார் உண்டு திளைத்தருந்த வாழ்வார் சிலர்.’ தந்தை தாய் முதலிய உறவினர்க்குத் தம் செல்வம் பயன்பட வாழாது ஒரு தொடர்புமில்லாத அயலார் நுகருமாறு வாழ்வார் சிலர் என்று ஒரு பொருளைப் பற்றிக் கூறிய வெளிப்படைச் செய்தியால், “தந்தையாகிய இறைவனும் தாயாகிய இறைவியும் மேம்பட்ட உறவாகிய குருநாதனும் மகிழ்வெய்த இம்மை மறுமைப் பயனெய்தி வாழாது, உலகில் பொதுமக்களொடு மறுமைப்பயன் எய்தாது வாழும் வாழ்வு பயனற்றது” என்ற பிறிதொரு செய்தி பெறப்பட வைத்தமை இப்பாடலுள் காணப்படும். (மா. அ. பாடல். 283) பொருள் பின்வருநிலை அணி - ஒரு செய்யுளில் ஒரு பொருளையே கொண்ட வெவ்வேறு சொற்கள் மூன்று முதலாகப் பல இடத்தும் வருவது. எ-டு : ‘அவிழ்ந்தன தோன்றி; அலர்ந்தன காயா; நெகிழ்ந்தன நேர்முகை முல்லை; - மகிழ்ந்துடன் விண்டன கொன்றை; விரிந்த கருவிளை; கொண்டன காந்தள் குலை.’ தோன்றிப் பூக்கள் மலர்ந்தன; காயாம்பூக்கள் அலர்ந்தன; முல்லைப் போதுகள் பூத்தன; கொன்றைகள் மகிழ்ந்து இதழ்விரிந்தன; கருவிளைகள் இதழ் விண்டன; காந்தட் பூக்கள் குலையெடுத்தன - என்ற பொருளமைந்த இப்பாடற்- கண், ‘பூத்தன’ என்ற ஒரு பொருளிலேயே, அவிழ்ந்தன - அலர்ந்தன - நெகிழ்ந்தன - விண்டன - விரிந்தன - குலை கொண்டன - எனப் பல சொற்கள் வந்தமையால், இஃது இவ்வணி ஆயிற்று. (தண்டி. 42-2) பொருள் புலப்பாடு - கேட்போர்க்குக் கவியாற் கருதப்பட்ட பொருள் உளங் கொண்டு விளங்கத் தோன்றுதல். இது ‘தெளிவு’ என்னும் பொது அணியாம். (தண்டி. 17) அது காண்க. இது மாறன லங்காரம் சுட்டும் அழகு பத்தனுள் ஒன்று (24) பொருள் மீட்சி அணி - இது ‘பொருள் பின்வருநிலை அணி’ எனவும் படும். அது காண்க. (வீ. சோ. 152) பொருள் முதல்நிலைத் தீவக அணி - தீவக அணிவகைகளில் ஒன்று. பொருள் பற்றிய ஒரு சொல் செய்யுளின் முதற்கண் நின்று, பல இடங்களிலும் சென்று இயைந்து பொருள் பயப்பது. எ-டு : ‘முருகவேள் சூர்மா முதல்தடிந்தான்; வள்ளி புரிகுழல்மேல் மாலை புனைந்தான்; - சரண் அளித்து மேலாய வானோர் வியன்சேனை தாங்கினான்; வேலான் இடைகிழித்தான் வெற்பு.’ முருகக் கடவுள், மாமரமாய் நின்ற சூரபன்மனை வேரோடு அழித்தான்; வள்ளிகூந்தலில் மாலை அணிவித்தான்; தேவர் களுக்கு அடைக்கலம் தந்து அவர்களை எதிர்த்து வந்த அசுரர்சேனையைத் தடுத்தான்; தனது வேலால் குருகு என்னும் பெயருடைய மலையைப் பிளந்தான் என்று பொருள்படும் இப்பாடற்கண், ‘முருகவேள்’ எனும் பொருட் பெயர் முதற்கண் நின்று பின் பல இடங்களிலும் சென்று இயைந்து பொருள் தந்தமையால் இஃது இவ்வணி வகைத்து ஆயிற்று. (தண்டி. 40-4) பொருள் முரண் அணி - ‘பொருள் விரோத அணி’ வீரசோழியத்தில், (கா. 173) இப் பெயர் பெறும். அது காண்க. பொருள்மொழி அணி - வாழ்க்கைக்குப் பேரூதியமான பொருளை எடுத்து மொழியும் செய்தி. எ-டு : ‘வெறிகொள் அறைஅருவி வேங்கடத்துச் செல்லின், நெறிகொள் படிவத்தோய்! நீயும் - பொறிகட்(கு) இருளீயும் ஞாலத்(து) இடரெல்லாம் நீங்க, அருளீயும் ஆழி யவன்’ (பு.வெ.மா. 9-42) என்றும், ‘இந்த உடல்பெற் றிருக்கப் பெறுபொழுதே நந்திபுர விண்ணகர மாலைச் - சிந்திப்பார் அன்றறிவாம் என்னா(து) அறஞ்செய்வார், பேரின்பம் சென்றறிவார் நெஞ்சே திடன்’ என்றும், இறைவனைச் சிந்தித்து அறம் செய்வதை இளமையிலேயே கொள்வோர் இம்மை மறுமைப் பயன்களைத் தடையின்றி எய்துவர் என்றும் (மா. அ. பாடல் 177) கூறுதல் போல்வன. பொருள் விரோத அணி - முரண்பட்ட பொருள்களை அமைத்துப் பாடுவது. எ-டு : சோலை பயிலும் குயில் மழலை சோர்ந்(து) அடங்க, ஆலும் மயிலினங்கள் ஆர்த்தெழுந்த; - ஞாலம் குளிர்ந்த முகில் கறுத்த; கோபம் சிவந்த; விளர்த்த துணைபிரிந்தார் மெய். சோலைகளில் பயிலும் குயில்களுடைய மழலைச் சொற்கள் சோர்வுற்றடங்க, ஆடும் மயில் கூட்டங்கள் ஆரவாரித் தெழுந்தன. பூமியெல்லாம் குளிர்தற்குக் காரணமான மேகங்கள் கறுத்தன; இந்திரகோபப் பூச்சிகள் சிவந்தன; தம் காதலரைப் பிரிந்த மகளிர் உடம்புகள் வெளுத்தன என்ற கார்கால வன்னனையாம் இப்பாடற்கண், முன்னடிகளில் சோர்ந்தடங்க என்பதும் ஆர்த்தெழுந்த என்பதும் பொருள் பற்றிய மறுதலையாய்ப் பொருள் விரோத அணி பயின்ற வாறு. பின்னடிகளில், கறுத்த, சிவந்த, விளர்த்த என்பனவும் அது. (தண்டி. 82-2) பொருள் விலக்கு அணி - இது முன்னவிலக்கு அணிவகைகளுள் ஒன்று; கற்பனை நயத்தால் ஒரு பொருளையே இல்லை என விலக்குதல். ‘கண்ணும் மனனும் கவர்ந்தவள் ஆடிட மென்(று) அண்ணல் அருளும் அடையாளம் - தண்ணிழலின் சுற்றெல்லை கொண்டுலவும் சோதித் திரளல்லால் மற்றில்லை காணும் வடிவு!’ தன் கண்ணையும் மனத்தையும் கவர்ந்த தலைவி விளையாடு மிடம் என்று தலைவன் குறிப்பிட்ட அடையாளப்படி பார்த்தபோது, “குளிர்ந்த நிழற்சூழல் மிகுந்த இவ்விடத்தைக் கைக்கொண்டு உலாவும் ஒரு பேரொளியின் வடிவம் காணப்படுகின்றதேயன்றி, உறுப்புக்கள் கொண்ட வடிவம் காணப்படவில்லை!” என்ற பொருளமைந்த இப்பாடல், தலைவன் கூறிய இடத்தே வந்து தலைவியைக் கண்ட பாங்கன் கூற்று. இதன்கண், ஒளியே தவிர உருவம் காணப்பட்டிலது என்று பொருள் விலக்கப்பட்டமையின், பொருள் விலக்கு அணி வந்தவாறு. (தண்டி. 44-1) பொருள் வேற்றுமை அணி - வேற்றுமை அணிவகைகளுள் ஒன்று; பொருள் வகையால் இருபொருள்களிடையே வேற்றுமை தோன்ற அமைப்பது. எ-டு : ‘ஓங்கல் இடைவந்(து) உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலி நீர் ஞாலத்(து) இருள்கடியும் - ஆங்கவற்றுள் மின்நேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்(று); ஏனையது தன்நேர் இலாத தமிழ். மலையில் தோன்றி, மேன்மக்கள் தொழுமாறு ஒளிசெய்து, உலகில் இருளைக் கடிந்து அகற்றுவன இருபொருள்கள்; அவற்றுள் ஒன்று, சுடர்மிகுந்த ஒற்றைத் தேர்ச்சக்கரத்தை யுடைய சூரியன்; ஏனையது, தனக்கு ஒப்பு இலாத தமிழ் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், மலையில் பிறத்தல், மேன்மக்கள் தொழுதல், இருளைக் கடிதல் என்னும் மூன்றும் சூரியன் தமிழ் ஆகிய இரண்டு பொருள்களுக்கும் ஒப்புமை யான பண்புகள்; ஆயின் இரண்டும் வெவ்வேறான பொருள்கள் எனக் காட்டியமையால், இது பொருள் வேற்றுமை ஆயிற்று. (தண்டி. 50 - 2) பொருளணி (1) - அலங்காரம் என்பது அணி. அவ்வணிதான், பொருளணி, சொல்லணி என இருவகைப்படும். (சொல்லை அடிப்படை யாகக் கொண்டு செய்யுட்கு அழகு செய்வது சொல்லணி.) சொற்களுக்கு உரிய பொருளையே அடிப்படையாகக் கொண்டு பெயரிடப் பெறும் அணிகள் பொருளணியாம். அவை தன்மையணி முதலாகப் பாவிகம் ஈறாக முப்பத்தைந்து என்று தண்டியலங்காரம் கூறும். (தண்டி. 28) பொருளணி (2) - செய்யுளிலுள்ள சொற்கள் பரியாயச் சொற்களாக மாற்றப் படினும் அணி கெடாது நிலைத்திருப்பின் அது பொருளணி எனப்படும். ‘பவளவாய்’ என்பதற்குத் ‘துகிர்ச்செவ்வாய்’ எனச் சொல் மாறினும், பொருளும் அணியும் மாறாமை பொருளணி இயல்பாம். (தொ. வி. 302 உரை) பொருளணி பற்றிய தொகை - தண்டியலங்காரம் கூறும் பொருளணித் தொகை - 35 இலக்கண விளக்கம் கூறும் பொருளணித் தொகை - 35 வீரசோழியம் கூறும் பொருளணித் தொகை 35 மாறனலங்காரம் கூறும் பொருளணித் தொகை 64 தொன்னூல் விளக்கம் கூறும் பொருளணித் தொகை 30 முத்துவீரியம் கூறும் பொருளணித் தொகை 56 சந்திராலோகம் கூறும் பொருளணித் தொகை 100 குவலயானந்தம் கூறும் பொருளணித் தொகை 120 மாணிக்கவாசகர் குவலயானந்தம் கூறும் பொருளணித் தொகை 87 இவற்றையெல்லாம் சேர்த்து நோக்கத் தக்காங்கு அமைந்த பொருளணிகள் 118 கொள்ளத்தக்கன. 202 அணிகளைக் கணக்கிடுவாரும் உளர். (இ. வி. 637 விளக்கவுரை) பொருளின்பம் - இது வைதருப்பர், கௌடர், பாஞ்சாலர் என்ற மூன்று நெறியாருக்கும் பொதுவான கு™அணி வகையாம். ‘பொருள் இன்பம் என்னும் குணஅணி’ காண்க. பொருளுக்கு ஏற்ற உவமை - மேம்பட்ட உபமேயத்திற்கு மேம்பட்ட உபமானத்தைக் கூறுதல். திருமாலுடைய கரிய நிறத்திற்குக் கடலையும் மலையையும் ‘கடலும் மலையும் போலக் கரியோய்’ என உவமை கூறும் தொடரில், பொருளுக்கு ஏற்ற உவமை வந்தவாறு. (இ. வி. 639 உரை) பொருளும் சொல்லும் பொருளொடு முரணிய விரோத அணி - எ-டு : ‘கண்கால் அருவிகொடுங் கைமேல் விழுந்தொழுகும் பெண்காதல் நீக்கலார் பேதைமீர்.........’ “தோழியர்காள்! என் கண்களினின்று ஒழுகும் அருவி போன்ற கண்ணீர் அவரைத் தொழுதற்கு வளைத்த கைகள் மேல் ஒழுகுமாறு பெண்ணாகிய யான் தம்மிடத்துக் கொண்ட காதலை அவர் நீக்குவாரல்லர்" என்று பொருள் படும் இப்பாடலடிகளில், கண் கால் கை என்பன முரண்பட்ட சொற்கள்; கண் கை என்பன உறுப்புக்களாகிய பொருள்கள்; கால் என்பது உறுப்பைக் குறியாது காலுதல் (-கக்குதல்) என்னும் வினைப் பகுதி ஆதலின், சொல். ஆகவே ‘கண்’ என்ற பொருளும் ‘கால்’ என்ற சொல்லும் ‘கை’ என்ற பொருளொடு முரணிய விரோத அணி இவ்வடி களில் வந்தவாறு. (மா. அ. பாடல். 415) பொருளும் பொருளும் முரணிய விரோத அணி - எ-டு : ‘செம்மையோர்வெண்மையோர் ஆகித் திடனழிந்தோர் தம்மையோர் நட்பாகச் சேர்வரோ......’ செம்மையோர் - அறிவுடையோர்; வெண்மையோர் - அறிவில்லாதோர். அறிவுடையோர், அறிவில்லாதாராய் மனவலிமை அழிந்த வர்களை நண்பராகக் கொண்டு சாரார் என்ற பொருளமைந்த இவ்வடிகளில், செம்மையோர், வெண்மையோர் என இரண்டு உயர்திணைப் பொருள்களும் தம்முள் மாறு பட்டன. (மா. அ. பாடல். 413) பொருளொடு கிரியைக்கு விரோதமாக வந்த சிலேடை வேறுபாடு - எ-டு : ‘திருமகிழ் மாலைய னாம்என்பர்; மெய்யைச் சிறைப்படுத்திப் பொருதளை கட்டுண் டறியான்; அளியுறும் போதனென்பார்; உருவளர் பாரி படைத்தறி யான்ஒண் புனிதனென்பார்; அருள்புரி வாய்வைத் தருந்தான்மின் சொர்க்கத் தமிர்தினையே.’ மாறனைத் திருமால் என்று சொல்லுவர். திருமால் திரு மேனியை மறைத்து இடையனாகி உறியோடு எதிர்ந்து தயிரைக் களவு செய்தலை அறிவான்; ஆனால் மாறன் ஞானத்தை அரணாக்கித் தன்னோடு எதிர்க்கும் பாசத்தளை யில் கட்டுண்ணலை அறியான். கருணையுடைய பிரமனை நிகர்ப்பான் மாறன் என்பர். பிரமன் வடிவகன்ற பூமியைப் படைத்தறிவான்; ஞான மயமான மாறன் இல்லக்கிழத்தியைக் கொண்டறியான். மாறனை ஒளியுடைய இந்திரன் அனையான் என்பர். புனிதனாகிய இந்திரன் சொர்க்கத்தில் அமிர்தம் உண்பான்; புனிதனான மாறன் மாதர்சுவர்க்கத்து முலைப்பால் உண்டறியான். இவ்வாறு மாறனைத் திருமாலொடும் பிரமனொடும் இந்திரனோடும் சிலேடைப் பொருளால் ஒன்றாக்கிக் கூறிப் பின் செயலால் அவர்களுக்கும் மாறனுக்கும் இடையே வேற்றுமை கற்பித்துக் கூறுதல் இச்சிலேடைவகையாம். இது விரோதச் சிலேடை வகையுள் அடங்கும். (மா.அ.பாடல் 358) பொற்ப என்ற உவம உருபு - ‘மதியம் பொற்ப மலர்ந்த வாண்முகம்’ சந்திரனை ஒப்ப மலர்ந்த ஒளி பொருந்திய முகம் என்று பொருள்படும் இத்தொடரில், பொற்ப என்பது மெய்உவமப் பொருட்கண் வந்தது. ‘இலவம், அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி’ (அகநா. 11) என்பதன்கண்ணும், பொற்ப என்பது மெய் உவமம் பற்றி வந்தது. (தொ. பொ. 286, 290 பேரா.) போல என்ற உவம உருபின் சிறப்பு - போல என்ற உவம உருபும், அன்ன, ஒன்ற என்னுமிவை போல, வினை பயன் மெய் உரு என்னும் நான்கு உவமத்தின் கண்ணும் வரும். எ-டு : புலி போலப் பாய்ந்தான் - வினை உவமம் மழைபோலக் கொடுத்தான் - பயன் உவமம் துடிபோல அமைந்த இடை - மெய்உவமம் பொன் போல ஒளிவீசும் மேனி - உரு உவமம். (தொ. பொ. 292 பேரா. போல என்னும் உவம உருபு - ‘மேனி, பொன்போல் செய்யும் ஊர் கிழவோனே’ (ஐங். 41) தலைவியின் உடலைப் பொன்னைப் போல மஞ்சள்நிறம் பெறுமாறு பசலை பாயச் செய்யும் தலைவன் என்று பொருள்படும் இத்தொடரில், போல என்பது உருஉவமப் பொருட்கண் வந்தது. இதுவே இதற்குச் சிறப்பு. (தொ. பொ. 291 பேரா.) ம மகடூஉப் பொருள் தன்மை அணி - பெண்மகளாகிய பொருளின் தன்மையை உள்ளவாறு கூறுதல். எ-டு : ‘பூங்கமலக் கோயிலாள், புத்தமித்தி னுட்பிறந்தாள், வீங்கு துணைமுலையாள், வெண்ணகையாள், - ஓங்குபுனல் பொன்னி நடுவண் பொருள்மார் பகத்தாள்என் சென்னி பிரியாத் திரு.’ (பாடல். 120) “நம்மால் வணங்கத்தக்க திருமகளாகிய பெண், செந்தாமரைப் பூவிலிருப்பவள்; பாற்கடலில் அமுதத்தொடு பிறந்தவள்; பருத்த தனங்களையுடையவள்; வெள்ளிய பற்களை யுடையவள்; திருவரங்கத்தில் திருமாலின் மார்பிலிருப்பவள்” என, திருமகளாகிய மகடூஉப்பொருள் தன்மை உள்ளவாறு கூறப்பட்டிருத்தலின், இப்பாட்டில் இவ்வணி பயின்றது. (மா. அ. 91) மகடூஉ மக்கட்டன்மை அணி - மக்களுள் பெண்பாலார் இயல்பை உள்ளவாறு கூறல். எ-டு : ‘கூரெயிற்றார், உண்கண்ணார், கொம்மை இணைமுலையார், வார்புருவத் தார், திலக வாணுதலார், - காரகத் (து) எம் மால் வரையார் எண்ணிறந்த மாதருள்.......’ (பா. 122) காரகத்தை ஒட்டிய மலைப்பகுதியில் பெண்கள் கூரிய பற்களையும், மையுடை கண்களையும், திரண்ட இளநகில் களையும், நேரிய புருவங்களையும், திலகமிட்ட நெற்றியையும் உடையவர்கள் என இதன்கண், மகளிர் இயல்பு கூறப்பட்ட வாறு. (மா. அ. 91) மகிழ்ச்சி அணி - இஃது ஆர்வமொழி அணி எனவும்படும். அது காண்க. (வீ. சோ. 154) மடங்குதல் நவிற்சி அணி - ஒருவன் ஒருபொருளை அறிவுறுத்தற்குச் சொல்லிய சொற்கோ சொற்றொடர்க்கோ மற்றவன் சிலேடையி னாலோ ஒலிவேற்றுமையினாலோ மற்றொரு பொருள் கற்பித்தல் மடங்குதல் நவிற்சி அணியாம். இதனை வக்ரோக்தி அலங்காரம் என்று வடநூல்கள் கூறும். எ-டு : ‘யாரினும் காதலம் என்றேனா, ஊடினாள் யாரினும் யாரினும் என்று’ (குறள். 1314) “உலகிலுள்ள கணவன்மனைவியருள் நாமே மிக்க அன்பினேம்” என்ற பொருள்படத் தலைவன், “யாரினும் காதலம்” என்ற கூறவே, தலைவி, அத்தொடர்க்குப் “பெண்டிர் பலருள்ளும் நின்னிடத்திலேயே மிக்க அன்புடையேன்” என்று தலைவன் கூறினானாகக் கொண்டு, “எவ்வெப் பெண்டிரைவிட என்னிடம் மிக்க அன்புடையீர்?” என்று வினவுதலின், ‘யாரினும் காதலம்’ என்றதன்கண் இவ்வணி வந்துள்ளது. (ச. 118 குவ. 92) மத்திம விளக்கு - ‘இடைநிலைத் தீவக அணி’ - காண்க. மதிப்ப எனும் உவம உருபு - ‘இருநிதி மதிக்கும் பெருவள் ளீகை’ சங்கநிதி பதுமநிதிகளை ஒத்த மேம்பட்ட கொடை என்று பொருள்படும் இத்தொடரில், மதிப்ப என்பது பயன்உவமப் பொருட்கண் வந்தது. இது பயனுவமத்திற்கே சிறந்த உருபாகும். (தொ. பொ. 289 பேரா.) மயக்க அணி - ஒப்புமையால் ஒருபொருளை மற்றொரு பொருளாகக் கருதிப் பயன்கொள்ள முயல்வது பற்றிக் கூறுவது. இதனை வடநூலார் பிராந்திமதாலங்காரம் என்ப. எ-டு : ‘மழைக்கண் மங்கையர் பயில்தர மரகத மணியின் இழைத்த செய்குன்றின் பைங்கதிர் பொன்னிலத்து எய்தக் குழைத்த பைந்தரு நீழலில் குலவும் ஆன் இனங்கள் தழைத்த புல்லென விரைவொடு தனித்தனி கறிக்கும்’ செய்குன்றின் மரகதமணியாம் பசுமைநிறம் படர்ந்த நிலத்தைப் புல்வெளி யாகக் கருதி ஆனினங்கள் புல்மேயத் தொடங்கின என்ற கருத்தமைந்த இப்பாடலில், மயக்க அணி அமைந் துள்ளது. (ச. 17, குவ. 9, மு. வீ. பொருளணி. 34) மயக்கம் (2) - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (22) வருவதோர் அணி. ஒரு பொருளை மற்றொன்றாக மயங்குவது. எ-டு : ‘தோள்எனச் சென்று துளங்(கு) ஒளி வேய்தொடும்’ தலைவியினுடைய தோளாகக் கருதித் தலைவன் மூங்கிலைத் தொடுவான் என்பது இவ்வணி. மயக்கு உவமை - இது ‘மோக உவமை’ எனவும்படும்; அது காண்க. (வீ. சோ. 157) மரபு உவமை - ஒரு பொருளின் பல உறுப்புக்களுக்கு உவமை கூறுங்கால், மரபு பற்றி ஒரே இனத்தனவாகக் கூறுதல். எ-டு : ‘செந்தா மரைவதனம், சேதாம்பல் வாய், நயனம் நந்தாத செங்குவளை, நாடுங்கால் - கொந்தார் வகுளம் புனைவார் வரை மயிற்குக் கஞ்ச முகுளம் புணர்மா முலை.’ மகிழம்பூ மாலையை அணிந்த சடகோபனுடைய மலையில் காணப்படும் மயில் போன்ற சாயலையுடைய இப்பெண் ணிற்குத் தாமரை போன்ற முகம், ஆம்பல் போன்ற வாய், குவளை போன்ற கண்கள், தாமரைமொட்டுப் போன்ற நகில்கள் எனப் பூக்கள்இனமே உறுப்புக்களுக்கு உவமைக ளாகக் கூறப்பட்டமை இவ்வுவமையாம். (மா. அ. பாடல். 201) மரபு பற்றிய உவமை - தொன்றுதொட்டு வரும் வரலாற்று முறையை ஒட்டியே உவமை கூறல் வேண்டும். ‘மயில்தோகை போலும் கூந்தல்’ என்பது மரபு பற்றிய உவமை. ‘காக்கைச் சிறகன்ன கருமயிர்’ மரபு பற்றிய உவமை அன்றாதலின் வழு. ‘பவழம் போலும் செவ்வாய்’ என்பது மரபு பற்றிய உவமை. ‘செம்பருத்தி போன்ற செவ்வாய்’ மரபு பற்றிய உவமை யன்றாதலின் வழு. ஆகவே, உவமைகள் தொன்றுதொட்ட வழக்காற்று மரபு பற்றியே அமைதல் வேண்டும் என்பது. (இவி. 639) மருட்கை உவமம் - மருட்கையாவது வியப்பு. அது நிகழாநிகழ்ச்சி கண்டவழி நிகழ்வது. தலைவனுடைய அருளிடத்தே கொடுமை தோன்றுதல், நிழலையுடைய குளத்துநீரிலுள்ள குவளை வெந்து போயிற்று என்று கூறுவதனை ஒக்கும் என்ற கருத்தமைந்த ‘ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழற்கயத்து நீருள் குவளைவெந் தற்று’ (கலி. 41; 30, 31) என்ற அடிகளில் மருட்கை உவமம் வந்துள்ளது. நீருள் குவளை வேவன இன்மையின் குவளை வேவதனைக் கூறுதல் மருட்கை உவமமாய் வியப்புச்சுவை தருவதாயிற்று. (தொ. பொ. 294 பேரா.) இது மருட்கை உவமை எனவும் கூறப்பெறும் (மா.அ. 101) தண்டியலங்காரம் ‘கூடாஉவமை’ என்னும் (32 - 22). மருள் என்னும் உவமஉருபு - ‘வேய்மருள் பணைத்தோள் நெகிழ’ - மூங்கிலை ஒத்த பணைத்த தோள்கள் மெலியுமாறு என்று பொருள் படும் இத்தொடரில், ‘மருள்’ என்பது மெய்யுவமப் பொருட்கண் வந்தது. இது மெய்யுவமத்திற்கே சிறந்த உருபு. (தொ. பொ. 290 பேரா.) ‘பால் மருள் மருப்பின் யானை’ - என மருள் என்பது உருஉவமம் பற்றி வந்தது. (291 பேரா.) மலர்ச்சி அணி - ஒரு சிறப்புப்பொருளை உறுதிசெய்ய ஒரு பொதுப் பொருளையும், மீண்டும் அப் பொதுப்பொருளை உறுதி செய்ய மற்றொரு சிறப்புப்பொருளையும் கூறுவது. இதனை வட நூல்கள் விகஸ்வராலங்காரம் என்று கூறும். எ-டு : ‘தேடும் மணிபலவும் சேர்இமய மால்வரைக்குக் கூடுபனி யாலோர் குறைவுண்டோ? - நீடுபல இன்குணத்தில் குற்றமொன்(று) இந்து பலகதிரின் புன்களங்கம் போலடங்கிப் போம்.’ “பல மாணிக்கங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இமய மலைக்குப் பனியினால் ஒரு குறையும் இல்லை” என்ற சிறப்புப் பொருளை, “பல இனிய குணங்களிடையே ஒரு சிறு குறை அடங்கி மறைந்து விடும் ” என்ற பொதுப்பொருளைக் கூறி விளக்கி, மீண்டும் அப்பொதுப்பொருளை விளக்கப் “பல இனிய கிரணங்களை வெளிப்படுத்தும் சந்திரனுக்குக் களங் கத்தால் ஒரு குறைவும் இல்லை” என்ற சிறப்புப்பொருளைக் குறிப்பிடும் இப்பாடற்கண், மலர்ச்சி அணி வந்துள்ளது. (ச. 88; குவ. 62) மற்றதற்காக்கல் அணி - ஒரு செயல் தோன்றுவதற்குரிய காரணம் என்று உலகு அறியப்பட்ட காரணத்தை மற்றொன்றற்குப் பயன்படுத் துதலைக் கூறுவது. இது வியாகாதாலங்காரம் என வட மொழி நூல்களில் கூறப்படும். இதன் வகைகள் மூன்றாவன : 1. ஒரு செயல் தோன்றுவதற்குரிய காரணத்தை அச்செய லின் பகைச்செயலுக்குரிய காரணம் ஆக்குதல், 2. ஒருவன் ஒரு செயலுக்குக் கருவியாகக் கொண்ட ஒன்ற னையே மற்றவன் அதற்கு மறுதலைப்பட்ட செயலுக்குக் கருவியாகக் கோடல், 3. ஒரு செயல் நிகழ்த்த ஒருவன் கருதிய பொருளைக் கொண்டே மற்றவன் அச்செயலின் மறுதலையான செய லுக்கு ஆயத்தம் செய்தல் என்பன. (ச. 71; குவ. 45) 1. காரணத்தைக் கொண்டு பகைக்காரியம் செய்யும் மற்றதற் காக்கல் அணி இது மற்றதற்காக்கல் அணியின் மூவகையுள் ஒன்று. எ-டு : ‘உலகைமகிழ் விக்கும் உயர்மலர்கொண் டேவேள் உலகை வருத்தும் உடன்று.’ உலகினை மகிழச் செய்யும் தாமரை அசோகு குவளை முதலிய மலர்களையே அம்புகளாகக் கொண்டு மன்மதன் உலகத்தைக் கோபித்து வருத்துகிறான் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், உலகினை மகிழ்வித்தற்குக் காரணமாகிய மலர்களே மன்மதனால் துன்புறுத்தப்படுதற்கும் காரண மாகக் கொள்ளப்பட்டமை இவ்வணி வகையாம். 2. ஒருவர் செயற்கருவியான் மற்றவர் பகைச்செயலைச் செய்து முடிக்கும் மற்றதற்காக்கல் அணி இதுவும் அது. எ-டு : ‘கண்ணால் கொலப்பட்ட காமனைஇக் காரிகையார் கண்ணால்உய் விக்கின்றார் காண்.’ சிவபெருமான் தன் கண்ணாலேயே மன்மதனை எரித்தான்; மகளிரின் கண்ணழகு ஆடவர் மனத்தில் காமக்கனலை எழுப்புதலால், இம்மகளிர் தம்கண்களாலேயே மன்மதனைப் புத்துயிர் பெறச் செய்து உய்விக்கின்றனர் என்ற பொருள மைந்த இப்பாடற்கண், சிவபெருமான் காமனை அழித்தற்குப் பயன்படுத்திய கண்ணைக்கொண்டே மகளிர் அவனை உய்வித்தலைச் செய்வதில், ஒருவன் ஒரு செயற்குக் கருவியாகக் கொண்ட ஒன்றனையே மற்றவன் அதற்கு மறுதலைப்பட்ட செயற்குக் கருவியாகக் கொள்ளும் இவ்வணிவகை வந்துள் ளது. 3. ஒருவன் கொண்ட காரணம் மற்றொருவன் பகைக் காரியத்திற்குச் சாதனமாகக் கொள்ளும் மற்றதற் காக்கல் அணி - இதுவும் அது. எ-டு : ‘உலுத்தன் மிடிவரும்என்(று) உள்வெருவி நல்கான் நிலத்தென் றொருவன் நிகழ்த்த - நலத்திசைகூர் வள்ளலும்அவ் வச்சம் மருவியே நல்குமென விள்ளலுற்றான் மற்றொருவன் மெய்.’ உலோபி எதிர்காலத்தில் வறுமை வரக்கூடும் என்று அஞ்சி வழங்கான்; அது போலவே, வள்ளலும் எதிர் காலத்தில் வறுமை வருமே, வந்தால் பிறர்க்கு அளிக்கும் வாய்ப்பினை இழக்க நேருமே என்று அஞ்சிச் செல்வக் காலத்தில் பிறர்க்கு வாரி வழங்குகிறான் என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், ‘வறுமை வரும்’ என்ற காரணமே உலோபத்தன்மை வள்ளல் தன்மை என்ற மாறுபட்ட செயல்கள் இரண்டற்கும் காரணம் ஆயினமை இவ்வணி வகையாம். மறிநிலை அணி - இது தொன்னூல் விளக்கம் குறிப்பிடும் சொல்லணி வகை நான்கனுள் ஒன்று: ஒரு சொல் வர வேண்டிய விடத்து வேற்றுச்சொல் வந்து அப்பொருளையே தருவது. இஃது ஐவகைப்படும். 1. பண்பு மறிநிலை - ஒன்றன் குணத்தை மற்றொன்றற்கு உரைப்பது. எ-டு : சினத்தில் காய்ந்தான் - இது சூரியன் பண்பை மனிதற்கு ஏற்றியது. 2. முதல் மறிநிலை - சினைப்பெயர் முதற்கும், முதற்பெயர் சினைக்கும் செல்ல உரைப்பது. எ-டு : நறும்பொழில் - இது பூவின் நறுமணம் பொழில் மேல் ஏற்றியது; சினைப்பண்பு முதற்கு ஆயிற்று. 3. காரண மறிநிலை - காரணமும் காரியமும் தம்முள் மாறி வர உரைப்பது. எ-டு : ‘ஏரினும் நன்றால் எருவிடுதல்’ (குறள் 1038) இது உழவுத் தொழிலாகிய காரியம் கருவியாகிய ஏரினால் உரைக்கப்பட்டது. 4. குறிப்பு மறிநிலை - சொல் வேறொரு கருத்தை உணர்த்தக் குறிப்பு வேறொரு கருத்தை உணர்த்துவதாக அமைவது. எ-டு : ஆறுமாதம் என்பதனை ‘ஆறு திங்கள்’ என உரைத் தல்; திங்கள் என்ற சந்திரனது பெயர் இடம் நோக்கி மாதத்தைக் குறித்தது. 5. ஒழுக்க மறிநிலை - உலகின் நடைமுறை கடந்து கற்பனை யாக உரைப்பது. எ-டு : முகிற்கை, அயிற்கண் - இவை மிகையாகக் கார்மேகத் தின் மழை பொழியும் தன்மை கையின் கொடைத் தன்மைக்கு ஏற்றப்பட்டதும், வேலின் கூர்மையும் கொலைத் தொழிலும் கண்ணின் கூர்மைக்கும் துன்புறுத்தலுக்கும் ஏற்றப்பட்டதும் முறையே ஆம். இவையன்றி ஆற்றுநீர், மொழிமாற்று, நிரல் நிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டு கூட்டு, அடிமறி மாற்று என்ற எட்டுப் பொருள்கோளும் மறிநிலை அணியின் பாற்பட்டன. (தொ. வி. 304, 305) மறுத்து மொழி நிலை - தேற்ற உவமையின் பரியாயப் பெயர் இது. அது காண்க. மறுபொருளுவமையும் எடுத்துக்காட்டுவமையும் - முன்னர் ஒரு பொருளை ஒரு தொடரால் குறிப்பிட்டு இடையே உவமையுருபு கொடுத்துப் பின்னர் ஒப்பான மற்றொரு பொருளை ஒரு தொடரால் குறிப்பிடுவது மறு பொருளுவமை. எ-டு : ‘அன்னைபோல் எவ்வுயிரும் தாங்கும் அநபாயா! நின்னையார் ஒப்பார் நிலவேந்தர்? - அன்னதே வாரி புடைசூழ்ந்த வையகத்துக்கு இல்லையால், சூரியனே போலும் சுடர்.’ உபமானம் தனிவாக்கியம், உபமேயம் தனிவாக்கியம், இடையே உவமையுருபு இல்லை; எவ்வாக்கியத்தையும் உபமானமாகவும் உபமேயமாகவும் கொள்ளலாம் என்ற நிலையில் அமைந்திருப்பது எடுத்துக்காட்டுவமையணி. எ-டு : ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.’ உவமையுருபு மறுபொருளுவமையில் உண்டு; எடுத்துக் காட்டுவமையில் அஃது இல்லை என்பதே சிறப்பான வேறுபாடு. (இ. வி. 640 உரை) மறைத்துக் காட்டல் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (52) வருவதோர் அணி. ஒரு பொருளின் பயனை வேறொரு பொருளின் வழியால் தோன்றி வரப் பெறுவது. எ-டு : வீமனைக் கண்டவுடன் அவனை மணக்க விரும்பிய இடும்பி, பின் தன் தமையன் இடும்பன் வீமனால் கொல்லப்பட்டானாக, தன் ஆதரவற்ற தன்மையைக் காரணமாகக் காட்டி அவனை மணந்துகொண்டமை போல்வன. மறைபொருள் நவிற்சி அணி - இது மறைவுஅணி எனவும் படும்; அது காண்க. மறையாமை அணி பொதுக் குணத்தால் ஒற்றுமையுடைய பொருள்களிடையே காரணங்களால் வேற்றுமை தோன்றுவது. இதனை வடநூல்கள் ‘உந்மீலிதாலங்காரம்’ என்று கூறும். எ-டு : ‘ஒழுகுறும் அருவி யீட்டம் ஒலியினால், நகுவெண் திங்கள் பழகுறும் உடற்க ளங்கால், பாகசா தனன்கூர்ங் கோட்டு மழகளிறு உமிழ்ம தத்தால், மலர்மிசைக் கடவுள் ஊர்தி அழகுறும் நடையா லன்றி அறிதரப் படாஅக் குன்றில்’(பிரபு. 27) கயிலை மலையில் வெள்ளிய நிறத்தால் அருவி, சந்திரன், அயிராவதம், அன்னம் என்பன தம் வெள்ளொளி மலை யொளியோடு ஒன்றுதலால் நிறம் பகுத்து அறியப்படா; ஆனால் அருவியை ஒலியாலும், சந்திரனைக் களங்கத்தாலும், அயிராவதத்தை மதத்தாலும், அன்னத்தை நடையாலும் அறியலாம் - என்ற கருத்துடைய இப்பாடற்கண், பொதுக் குணத்தால் ஒப்புமையுடைய பொருள்களைக் காரணம் காட்டி வேறுபடுத்தற்கண் இவ்வணி அமைந்துள்ளது. (மு. வீ. பொருளனி. 58; ச. 107; குவ. 81) மறைவு அணி - பொதுக் குணம் அமைந்திருக்கும் காரணத்தால் இரு பொருள்களுக்கிடையே வேற்றுமை தோன்றாதிருப்பது. இதனை ‘மீலிதாலங்காரம்’ என வடநூல்கள் கூறும். எ-டு : ‘பேதம்உறத் தோன்றாதிப் பேதைஇயற் கைச்சிவப்பால் பாதம்உற ஊட்டியசெம் பஞ்சு.’ இயற்கையில் செந்நிறமுடைய இப்பெண்ணின் பாதங்களில் செம்பஞ்சி யூட்டியமை புலப்படவில்லை என்ற கருத்துடைய இப்பாடலில் இவ்வணி அமைந்துள்ளது. (மு. வீ. பொ. 56; ச. 105; குவ. 79) மனத்தான் அறியும் ஒப்பு - வினை, பயன், குலன், குணன், அளவு, நிறன், எண் என்ற ஏழனையும் பொறியுணர்வுகளொடு பொருந்த வைத்து ஒப்பிட்டுப் பொருத்தம் அறிந்துரைப்பது. (வீ. சோ. 96 உரை மேற்) மாணிக்கவாசகர் குவலயானந்தம் கூறும் பொருளணிகளாக இவ்வகராதியில் இடம் பெறுவன - அசம்பவம், அதிகம், அதிசய உருவகம், அதிசயபலம், அதிசய பேதகம், அதிசயம், அயம், அரூபகம், அன்னியோன்னியம், அனன்னுவயம், உபமேய உவமை, உருவக மயக்கம், உருவகமாற்றம், எழில் பொருள் உவமை, ஏகவல்லி, ஒன்று கருமம், கற்பம், கற்பிசைப் புனைவு, காட்சி, காரியம் கொளல், காரியப் பொருள் ஒழிபு, குறைவுப் புனைதல், கூட்டம், கைதவம், சமுச்சயம், சாரம், சிலேடை மாற்றம், சீர்பெறச் சமைத்தல், சுகுணம், சுபாவக்கரு, தற்குணம், தன்னியல் தருமத்துதி, தின்மையைக் காட்டி நன்மையை நீக்கல், துல்லிய யோக்கியதை, தொகுத்தல் உவமை, நன்மையைக் காட்டித் தின்மையை நீக்குதல், நிருடி, நினைவு, நுட்பம், பகாடனம், பண்பில்துதி, பயனந்து, பரிகரம், பரிகராங்குரம், பரிணாமம், பரியாயம், பன்னுதி பிரதீபகம், புகழ்ச்சி, புகழ்ச்சித் துணிவு, புணர்க் கருத்து, புற்புதம், மயக்கம், மறைத்துக் காட்டல், மிஞ்சுகரு, மிளிதம், வளர்ச்சி நுட்பம், வளர்ச்சிப் புனைவு, விசேடக்கரு, விடம், விதி சிறப்பு, விநோதப் புகழ்ச்சி, வியாச துதி, வியாசநிந்தை, வியோகக் கருத்து - என்பனவாம். மாதுர்யம் - இன்பம்; பொதுவணி பத்தனுள் ஒன்று. இது சொல்லின்பம் பொருளின்பம் என இருவகைப்பட்டு, வைதருப்ப நெறி கௌட நெறி பாஞ்சால நெறி என்ற மூன்று நெறியார்க்கும், சொல்லின்பத்தில் சில வேறுபாடுகள் கொண்டும், பொரு ளின்பத்தில் பெரும்பாலும் வேறுபாடின்றியும் ஒத்து வரும். ‘இன்பம்’ காண்க. (மா. அ. 82) மாணிக்கவாசகர் குறுலயானந்தம் கூறும் பொருளணிகள். மாலா தீபகஅணி - தீபக அணியின் ஒழிபாக வந்த அணிவகை ஆறனுள் ஒன்று. மாலையிலுள்ள மலர்கள் ஒன்றோடொன்று தொடர்புறு வது போலப் பாட்டிலுள்ள சொற்களும் செய்திகளும் தொடர்பு பெற்று வர அமைப்பது. எ-டு : ‘மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள் தனக்குத் தகைசால் புதல்வர் - மனக்கினிய காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும் ஓதில் புகழ்சால் உணர்வு.’ (நான்மணிக். 101) இல்லத்திற்கு மனைவி விளக்கம் ஆவாள்; அவளுக்குத் தகைமை சான்ற புதல்வர் விளக்கம் ஆவர்; அப்புதல்வர்க்குக் கல்வியே விளக்கம் ஆகும்; கல்விக்குப் புகழமையுமாறு அதனை உணர்ந்து கடைப்பிடித்து வாழ்வது விளக்கமாகும் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், விளக்கம் என்ற சொல், உரிய தொடர்புடன், மடவாள் - புதல்வர் - கல்வி - உணர்வு என்பவற்றுடன் இணைந்து பொருள் பயந்தமையால் இவ்வணி ஆயிற்று. (தண்டி. 41) மாலை அணி - இது மாலைஉவமையின் பரியாயப்பெயர், ‘மாலை உவமை’ காண்க. மாலை உவமை அணி - உவமை அணிவகை; ஒரு பொருளுக்கு வரும் உவமைகள் ஒன்றோடொன்று தொடர்புடைமை தோன்ற அமைப்பது. எ-டு : ‘மலையத்து மாதவனே போன்றும், அவன்பால் அலைகடலே போன்றும், அதனுள் - குலவு நிலவலயம் போன்றும் , நேரியன்பால் நிற்கும் சிலைகெழுதோள் வேந்தர் திரு.’ “பகைமன்னருடைய செல்வங்கள் பலவும்சோழ மன்னனிடம், பொதியமலையிலுள்ள அகத்தியனைப் போன்றும், அவனி டத்தில் அவனுண்ட கடலினைப் போன்றும், அதனுள் உண்டாகிய நிலவுலகம் போன்றும் நீங்காது நிற்கு ம்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், அகத்தியன் - அவனுண்ட கடல் - அக்கடலில் தோன்றிய உலகம் - என மூன்று உவமைகள் ஒன்றற்கொன்று தொடர்புடையனவாய் அமைந் திருத்தலின் இவ்வணியாயிற்று. (தண்டி. 32 : 24) மாலைஉவமையின் பாற்படுவது - ஒன்றோடொன்று தொடர்புடைய பல பொருள்களை வெவ் வேறு பொருள்களுக்கு உவமையாகக் கூறும் இலக்கண முடைய சந்தான உவமை என்பது, தொடர்புடைய பல பொருள்களை (ஒரே பொருளுக்கு) உவமை கூறும் ஒற்றுமை பற்றி மாலைஉவமையின் பாற்படும் என்ப. (இ. வி. 645) மாலைத் தீவகம் - ‘மாலா தீபகம்’ காண்க. மாலை விளக்கு அணி - விளக்குஅணியோடு ஒற்றை மணிமாலை அணியையும் இணைத்துச் சொல்லும் அணி; இதனை ‘மாலா தீபகம்’ என்று வடநூல்கள் கூறும். ‘மாலா தீபகம்’ காண்க. (தண்டி. 41; மா. அ. 161; ச. 74; குவ. 4) மாற்ற என்னும் உவம உருபு - ‘மணி நிறம் மாற்றிய மாமேனி’. நீலமணியின் நிறத்தை ஒத்த கரிய உடல் என்று பொருள்படும் இத்தொடரில், மாற்ற என்பது உருஉவமத்தின்கண் வந்தது. (தொ. பொ. 286 பேரா.) மாற்றுநிலை அணி - இது பரிமாற்ற அணி, பரிவருத்தன அணி, பரிவருத்தனை அணி எனவும் கூறப்படும். இதனைப் பரிவிருத்தியலங்காரம் என்று வடநூல்கள் கூறும். ‘பரிவருத்தனை அணி’ காண்க. (வீ. சோ. 175, தண்டி. 87, மா. அ. 213, மு. வீ. பொருளனி 103, ச. 78, குவ. 52) இழிந்த பொருளைக் கொடுத்து அதற்கு மாறாக உயர்ந்த பொருளைப் பெறுதலையே மாற்றுநிலை அணி என்று முத்து வீரியமும் சந்திராலோகமும் கூறும். பொதுவாக, ஒரு பொருள் கொடுத்து மறுபொருள் பெறுதலே பரிவருத்தனை என்று ஏனைய நூல்கள் கூறும். மாறனலங்காரம் கூறும் கௌடச் சொல்லின்பம் - தண்டியலங்காரம் கௌடநெறிக்குக் கூறுவனவற்றைப் பாஞ்சால நெறிக்குக் கொண்டு, அவற்றினும் விஞ்சிய தகுதியுடையனவற்றைக் கௌடப் பொதுவணிகளாக மாறனலங்காரம் கூறும். கௌடச் சொல்லின்பமாக இந்நூல் காட்டுவது வருமாறு . எ-டு : ‘கடுவே கயலெனக் கரந்தடுங் கண்ணிணை, காமனும் காமுறும் காட்சிய காண்முகம், கிள்ளையின் கிளையும் கிளைத்தகைக் கிளையுடைக் கீரமும் கீர்த்தி, கீரமும் கீரே, குவடுடைக் குவிபொற் குன்றே குவிமுலை, கூர்புதற் கூன்சிலை கூற்றுயிர் கூட்டுணும், கெடலரும் கெழுதகை கெழுமுபு கெழீஇய கேகயம் கேளொடும் கேடுறும் கேழியல், கைபுனை கைக்கிசை கைக்கிணை கைத்துணை, கொண்டலுட் கொண்டன்ன கொண்டையும், கொடியிடை, கோடாக் கோவலர் கோற்றொடிக் கோமான் கௌரவ கௌசிகன் கௌசிகம் கௌத்துவ மணியெனக் கொண்டு மனவீ டளித்தோன் கண்ணன் குறுங்குடிக் கனவரை மண்ணகத் துறையுளாய் வளர்நில மகட்கே.’ இவ்வாறே வருக்கமோனை அடிகளிலும், முற்றுமோனை சீர்களிலும் வருவது கௌடச் சொல்லின்பமாம். (மா. அ. பாடல் 80) மாறனலங்காரம் கூறும் பொருளணிகள் - தன்மை, உவமை, உருவகம், உள்ளுறை, ஒட்டு, உல்லேகம், ஒப்புமைக் கூட்டம், வேற்றுமை, திட்டாந்தம், தற்குணம், பிரத்தியநீகம், சந்தயம், அற்புதம், நிதரிசனம், தற்குறிப்பேற்றம், அதிசயம், சிலேடை, பின்வருநிலை, தீபகம், நிரல்நிறை, பூட்டுவில், இறைச்சிப் பொருள், பொருண்மொழி, அதிகம், வகை முதல் அடுக்கு, இணைஎதுகை, விரோதம், உபாயம், விசேடம், சமாயிதம், ஏது, சுவை, பரியாயம், இலேசம், தற்பவம், அசங்கதி, தடுமாறுத்தி, புணர்நிலை, வேற்றுப் பொருள் வைப்பு, விபாவனை, ஆர்வமொழி, நெடுமொழி, பரிவருத்தனை, காரண மாலை, காரிய மாலை, ஏகாவலி, பிரதீபம், பிறவணி, முன்னவிலக்கு, அபநுதி, நிந்தாத்துதி, புகழ்வதின் இகழ்தல், மாறுபடு புகழ்நிலை, பரிசங்கை, காவியலிங்கம், பரிகரம், உறுசுவை, விநோத்தி, சமுச்சயம், உதாத்தம், ஆசி, சங்கரம், சங்கீரணம், பாவிகம் என அறுபத்து நான்கு. (மா. அ. 87) மாறாட்டு அணி - ‘பொருள் மாறிடல்’ எனப்படும். இது பரிமாற்று அணி எனவும், மாற்றுநிலை அணி எனவும், பரிவருத்தனை அணி எனவும் கூறப்படும் ‘பரிவருத்தனை’ காண்க. (வீ. சோ. 155 உரை) மாறுபடுபுகழ்நிலை அணி - ஒரு பொருளை பழிக்கக் கருதியவிடத்தே அதனை வெளிப் படையாக்காமல் மறைத்து, வேறு ஒன்றைப் புகழ்வதன் வாயிலாக அப்பழிப்பினைப் பெறுவிப்பது. எ-டு : ‘இரவறியா; யாவரையும் பின்செல்லா; நல்ல தருநிழலும் தண்ணீரும் புல்லும் - ஒருவர் படைத்தனவும் கொள்ளாஇப் புள்ளிமான் பார்மேல் துடைத்தனவே அன்றோ, துயர்!’ “இந்தப் புள்ளிமான் யாரிடமும் சென்று யாசித்தலை அறியாது; யாரையும் எதற்காகவாயினும் அண்டிச் செல்வது இல்லை; மரத்தின் நிழலும் நல்ல தண்ணீரும் புல்லும் பிறர் கொடுக்காமலேயே இயற்கையில் நாடிப் பெற்றுப் பிற ருடைய உடைமை எதனையும் கொள்ளாமல் துயரமேயின்றி வாழ்கிறது” என்று பொருளமைந்த இப்பாடல், பிறரை அண்டி வாழ்வதும் உறையுளுக்கும் தண்ணீருக்கும் உணவுக் கும் பிறரை யாசித்துப்பெறும் இழிதகவும் உடைய இரவ லனைக் குறிப்பாகப் பழிக்கிறது. புள்ளிமானைப் புகழ்வது வாயிலாக இரவலனைப் பழித்தவாறு. இவ்வாறு ஒன்றனைப் புகழ அதன் வாயிலாக மற்றொன்றனைப் பழித்தலால் இஃது இவ்வணி யாயிற்று. (தண்டி. 83) மாறுபடு புகழ்நிலைஅணியின் மறுபெயர்கள் - புரிவில் புகழ்ச்சி, தெரிவில் புகழ்ச்சி, தெளிவில் புகழ்ச்சி என்பன. (வீ. சோ. 154 உரை) மான என்னும் உவமஉருபு - ‘நெய்தல் ---- ஓதம் மல்குதொறும், கயம்மூழ்கு மகளிர் கண்ணின் மானும்’ (குறுந். 9) உப்பங்கழிகளில் பூத்துள்ள நெய்தல்பூக்கள், தம்மீது வெள்ளநீர் பாயும் தோறும், குளத்தில் மூழ்கும் மகளிர்தம் கண்களை ஒக்கும்’ என்று பொருள்படும் இத்தொடரில், ‘மான’ வினையுவமத்தில் வந்தது. இது வினையுவமத்திற்கே சிறந்த உருபு. (தொ. பொ. 287 பேரா.) மிகுதிகுறைவான கூற்றான் வேற்றுமை செய்வது - சமனின்றி மிகுதி குறைவான் வெளிப்படையாக வேற்றுமை செய்தல். இதனையும், சமனின்றி மிகுதி குறைவான் குறிப்பி னால் வேற்றுமை செய்தலையும் ‘உயர்ச்சி வேற்றுமை அணி’ என்பதன்கண் காண்க. (இ. வி. 652 - 2,5; தண்டி. 49-3,5) மிகுதிநவிற்சி அணி - வியப்பும் பொய்ம்மையும் கலக்க, ஒருவனுடைய வீரம் கொடை முதலியவற்றைப் புகழ்வது. இதனை அத்யுக்தி அலங்காரம் என வடநூல்கள் கூறும். வீரம் பற்றிய மிகுதிநவிற்சி - எ-டு : ‘உன்பிரதா பத்தழலின் வற்றுகடல் ஒன்னலர்மான் அன்னவர்கண் ணீரின்நிறைந் தன்று.’ “தலைவனுடைய வீரமாகிய அழலால் வற்றிய கடல், அவன் பகைவர்கள் அவனால் கொல்லப்பட்டாராக, அன்னாருடைய உரிமைமகளிர் வடித்த கண்ணீரால் நிறைந்தது” என வீரம் அளவுகடப்ப மிகுதிநவிற்சி யாயிற்று. கொடை பற்றிய மிகுதிநவிற்சி - எ-டு : ‘ஓதுபுகழ்த் தாதாவாய் நீஉறஇப் போதுலகில் ஆதுலர்கள் கற்பகமா னார்.’ “நீ வள்ளலாய் இவ்வுலகிலிருப்பதால், உன்னிடம் இரந்து பொருள் பெற்றவர்கள் நீ தந்த பெருஞ்செல்வத்தைக் கொண்டு தாமும் வருவார்க்கு வேண்டியன ஈயும் கற்பகமரம் போன்ற கொடையாளராகிவிட்டனர்” எனக் கொடை அளவு கடப்ப மிகுதி நவிற்சியாயிற்று. இவ்வணி அதிசய அணியுள் அடங்கும். (ச. 122. குவ. 96) மிகை உவமை - இஃது அதிசய உவமை எனவும் கூறப்பெறும். அது காண்க. (வீ. சோ. 156) மிகை மொழி அணி - இஃது அதிசய அணி எனவும், உயர்வு நவிற்சி அணி எனவும், பெருக்கணி எனவும் கூறப்பெறும். (வீ. சோ. 153 உரை) மிஞ்சு கரு - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (98) வருவதோர் அணி. செயல், வீரம். இவற்றை மிகுத்துக் கூறும் உதாத்த அணி. அது காண்க. மித்தியா(அ)த்யவஸிதி அலங்காரம் - பொய்த்தற் குறிப்பணி; ஒரு பொருளைப் பொய்யாக்குதற் பொருட்டாக மற்றொரு பொய்ப்பொருளைக் கற்பிப்பது. அவ்வணித் தலைப்பிற் காண்க. மிருடாவாதம் - ம்ருஷா வாதம்; இகழா இகழ்ச்சி. அது காண்க. மிருதிமதாலங்காரம் - ஸ்மிருதிமதாலங்காரம்; ‘நினைப்பணி’ காண்க. மிளிதம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (94) வருவதோர் அணி. இரண்டுவகைப் பொருள்கள் வேறுபாடின்றி ஒன்றாகக் கூடிப் பயன்தருவது. இது மறைவு அணி எனவும் படும். அது காண்க. எ-டு : ‘பாலோ(டு) அளாயநீர் பாலாகும் அல்லது நீராய் நிறம்தெரிந்து தோன்றாதாம்.’ (நாலடி. 177) மீட்சி அணி - இது பின்வருநிலை அணி எனவும், பின்வருவிளக்கு அணி எனவும் கூறப்பெறும். ‘பின்வருநிலை அணி’ காண்க. (வீ. சோ. 152) மீலிதம் - ஒப்புமைச் சிறப்பால் இருபொருள்கட்குத் தம்மிலுள்ள வேற்றுமை காணப்படாமையைக் கூறும் ஓர்அலங்காரம். ‘மறைவு அணி’ காண்க. (அணியி.) மீலிதாலங்காரம் - மறைவு அணி; அது காண்க. முத்தகம் - தனிச்செய்யுள்; செய்யுள்வகை நான்கனுள் ஒன்று. ஒரு செய்யுள் தனியே நின்று தன் அளவில் பொருள் பயந்து முற்றுப் பெறுவது. எ-டு : ‘என்னேய் சிலமடவார் எய்தற்கு எளியவோ, பொன்னே! அநபாயன் பொன்நெடுந்தோள் - முன்னே தனவேஎன்(று) ஆளும் சயமடந்தை தோளாம் புனவேய் மிடைந்த பொருப்பு?’ “தோழி! மலை போன்ற அநபாயனுடைய தோள்கள் சயமடந்தைக்கு உரியன; அவற்றை என்போலும் வேறு சில மகளிர் எய்துதல் எளிதோ?” என்று கைக்கிளைத்தலைவி தோழிக்குக் கூறுவதாக அமைந்த இப்பாடல், தன்னளவில் பொருள் முற்றுப்பெறக் கிடத்தலின் முத்தகச் செய்யுளா யிற்று. ‘பொருப்பு எய்தற்கு எளியவோ’ என முற்றி நின்றவாறு. (தண்டி. 3) முத்திராலங்காரம் - குறிநிலை அணி ; அது காண்க. முத்துவீரியம் குறிப்பிடும் பொருளணிகள் - தன்மைஅணி, உவமைஅணி, உருவகஅணி, பலபடப் புனைவுஅணி, மயக்கஅணி, ஐயஅணி, எடுத்துக்காட்டுவமை அணி, கூடாமை அணி, தொடர்பின்மை அணி, தகுதியின்மை அணி, தகுதி அணி, வியப்புஅணி, பெருமை அணி, சிறுமை அணி, ஒன்றற்கொன்று உதவி அணி, சிறப்புநிலை அணி, முறையிற் படர்ச்சி அணி, மாற்றுநிலை அணி, ஒழித்துக்காட் டணி, கூட்டஅணி, எளிதின் முடிபு அணி, இன்ப அணி, துன்ப அணி, அகமலர்ச்சி அணி, இகழ்ச்சி அணி, வேண்டல் அணி, மறை அணி, பொதுமை அணி, மறையாமை அணி, உலகவழக்கு நவிற்சி அணி, வல்லோர் நவிற்சி அணி, தீபக அணி, பின்வருநிலை அணி, முன்னவிலக்கு அணி, வேற்றுப் பொருள் வைப்பு அணி, வேற்றுமை அணி, விபாவனை அணி, ஒட்டுஅணி, அதிசய அணி, தற்குறிப்பேற்ற அணி, சுவை அணி, தன்மேம்பாட்டுரை, பரியாய அணி, உதாத்தம், அவநுதி அணி, சிலேடை அணி, விசேட அணி, ஒப்புமைக் கூட்ட அணி, விரோத அணி, மாறுபடு புகழ்நிலை, புகழாப் புகழ்ச்சி, நிதரிசன அணி, புணர்நிலை அணி, பரிவர்த்தன அணி, வாழ்த்து அணி என இவை. இவை 58 ஆம். முத்து வீரியம் குறிப்பிடும் வைதருப்ப நெறிவகை - சமாதி - ஒரு பொருளின் குணத்தைப் பிறிதொரு பொருள் மேல் ஏற்றல். எ-டு ‘காலை அரும்பி.....’ (குறள் 1227) சிலிட்டம் - சொற்செறிவு உடைத்தாதல். ‘பற்றுக......’ (குறள் 350) ஆலேசம் - தொகை மிக வருதல். ‘சுவை ஒளி ஊறு ஓசை.....’ (குறள் 27) சமதை - நான்கடியும் எழுத்து ஒத்து வருதல். ‘வருங்குன்ற மொன்றுரித் தோன்தில்லை’ (கோவை. 15) பொருட்டெளிவு - பொருள் எளிதில் விளங்கல். ‘காம முழந்தும்............’ (குறள் 1131) இன்பம் - முற்றுமோனை அமைத்துப் பாடுதல். ‘துப்பார்க்கு......’ (குறள் 12) உதாரம் - கொடையைப் புகழ்தல் ‘இலனென்னும்’ (குறள் 223) புலன் - பொருள் வெளிப்படத் தோன்றல். ‘நன்றி மறப்பது.....’ (குறள் 108) சுகுமாரதை - வல்லெழுத்து இன்றிப் பாடுதல். ‘யானையால் யானையை மேவுவரால் மேவும், வினையால் வினைமையு மாம். காந்தி - பொருளின் சிறப்பால் அதை மிகப் புகழ்ந்துரைத்தல். ‘தாம்வீழ்வார்’ (குறள் 1103) (மு. வீ. செய்யுளணி 11-21) முதல் சினை ஒப்புவமை - ஓர் உவமேயத்துக்குக் கூறப்படும் உபமானங்களுள் ஒன்று முதலாகவும் ஒன்று சினையாகவும் அமைந்து வருதல். எ-டு : ‘அன்னமே அன்ன அணிமான் பிணை என்ன மன்னும் இளவஞ்சி யாள்.’ வஞ்சிக்கொடி போன்ற தலைவி நடையால் அன்னத்தைப் போலவும், விழியால் மானைப் போலவும் உள்ளாள். வஞ்சிக்கொடி என்ற முதலும், அன்னத்தின் நடையும் மானின் விழிகளும் என்ற சினையும், உபமேயமாகிய தலைவிக்கு உபமானங்களாகக் கொள்ளப்பட்டமை இவ்வுவமையாம். (வீ. சோ. 159) முதல்நிலை விளக்கு - இஃது ஆதி தீபகம் எனவும் வழங்கப்பெறும். அது நோக்குக. ‘முதல் நிலை தீவகம்’ என்பதும் அது. முதலுக்குச் சினை உவமம் - எ-டு : ‘அடைமறை ஆயிதழ்ப் போதுபோல் கொண்ட குடைநிழல் தோன்றும்நின் செம்மலைக் காணூஉ’ (கலி. 84) குடையின் நிழலில் தோன்றும் சிறுவன் என உபமேயம் முதற் பொருளாக உள்ளது. அதற்கு, இலையால் மறைக்கப்பட்ட அழகிய இதழ்களையுடைய தாமரைமலர் என்ற உபமானம் சினைப்பொருளாக வந்துள்ளது. இப்பாடலடிகளில், அடை, போது என்ற உபமானங்கள் சினைப்பொருள்கள்; குடை, செம்மல் என்ற உபமேயங்கள் முதற்பொருள்கள். (தொ. பொ. 281 பேரா.) முதலுக்கு முதல் உவமம் - எ-டு : ‘வரைபுரையும் மழகளிறு’ (புறநா. 38) மலையை ஒக்கும் இளைய ஆண்யானை என்ற தொடரில், மலை என்ற முதற்பொருள் களிறு என்ற முதற்பொருளுக்கு உவமமாக வந்தது. (தொ. பொ. 281 பேரா.) முதலும் சினையும் மாறி யுவமித்தல் - எ-டு : ‘நெருப்பின் அன்ன சிறுகண் பன்றி’ (அகநா. 84) நெருப்பைப் போன்ற சிறிய கண்களையுடைய காட்டுப்பன்றி என்று பொருள்படும் இவ்வடியில், நெருப்பு உபமானம் - முதல்; கண் - உபமேயம் - சினை. ‘அடைமறை ஆயிதழ்ப் போதுபோல் கொண்ட குடைநிழல் தோன்றும்நின் செம்மல்’ (கலி. 84) இலையால் மறைக்கப்பட்ட தாமரைப்பூ - உபமானம் - சினை; குடை நிழலில் தோன்றும் சிறுவன் - உபமேயம் - முதல். இவ்வாறு உபமானஉபமேயங்கள் முதல்சினை மாறியும் உவமிக்கப்படும். (இ. வி. 641) முதனிலை விளக்கு - முதல்நிலை விளக்கு; ‘ஆதி தீபகம்’ காண்க. முயற்சி விலக்கு - இது முன்ன விலக்கு அணிவகைகளுள் ஒன்று; தடைசெய்யா மல் இருக்க முயலும் வகையில் தடுத்து விலக்குதல். எ-டு : ‘மல்அணிந்த தோளாய்ஈ(து) என்கொலோ! வான்பொருள்மேல் செல்க விரைந்(து)என்(று) உளம்தெளிந்து - சொல்லுதற்கே ஏன்று முயல்வல்யான்; ஏகல் நீ என்றிடையே தோன்றுகிற(து) என்வாயிற் சொல்.’ “தலைவ! ‘பொருளின் உயர்வு கருதி நீ அதைத் தேட விரைந்து செல்வாயாக; பிரிவைத் தாங்கிக் கோடலே தக்கது’ என்று மனம் தெளிவுற்றுச் சொல்லவே முயல்கிறேன். ஆயின், என்னையும் அறியாமல் என் வாயினின்று ‘நீ செல்லாதே!’ என்ற சொல்லே வெளிப்படுகிறது. ஈதென்ன வியப்பு!” என்ற தலைவி கூற்றாக வரும் இப்பாடற்கண், ‘செல்க’ என்று கூற முயன்றும், ‘செல்லற்க’ என்ற சொல் தன் வாயினின்று வெளிப்படுதலைக் கூறி விலக்கியமையால், இது முயற்சி விலக்கு ஆயிற்று. (தண்டி. 45-6) முரண் (1) - விரோத அணி. (வீ. சோ. 173.) முரண் அணி - சொல்லேனும் பொருளேனும் முரண அமையும் ஓர் அலங்காரம் . (வீ. சோ. 154) முரண் எடுத்துக் காட்டுவமை அணி - எடுத்துக்காட்டுவமை அணி வகையுள் ஒன்று. அவ்வணி காண்க. முரண் விளைந்து அழிவு அணி - சந்திராலோகம் கூறும் இது முரண் மேல் விளைவு அணி எனக் குவலயானந்தத்தில் கூறப்படும். இதனை வடநூலார் விரோதாபாஸாலங்காரம் என்ப. ஓரிடத்து உள்ளனவும் காரணகாரியங்கள் ஆகாதனவுமாகிய இரண்டு பொருண்மைகளுக்கு மேலும்மேலும் தோன்றி அழியும் பகைமையைச் சொல்வது இவ்வணி. எ-டு : “சந்தம்இல வாய்உறினும் சந்தம் உடையனவே கொந்துஅணிதார்ப் பாவை குயம்.“ தலைவியின் தனங்கள் சந்தம் இல (- சந்தனம் பூசப்பெற வில்லை) ஆயினும்,’சந்தம் உடைய’ (- அழகுடையன) என்று குறிப்பிடும் இப்பாடற்கண், ’சந்தம் இலவற்றைச் சந்தம் உடையன’ என்று கூறும் சொல்முரண், “சந்தனம் பூசாவிடி னும் அழகுடையன” என்னும் பொருளால் நீங்கி அணி செய்தமை இவ்வணி யாயிற்று.” முரண் மேல் விளைவு அணி - மாறுபாடு பிறகு அழகாக அமையும் அலங்காரம் என்னும் பொருளது. (ச. 59, குவ. 33) முரண்வினைச் சிலேடை அணி - முரண்பட்ட வினைச்சொற்கள் முடிக்கும் சொற்களாய் அமைய வந்த சிலேடை அணிவகை. எ-டு : ’மாலை மருவி, மதிதிரிய, மாமணம்செய் காலைத் துணைமேவ லார்கடிய, - வேலைமேல் மிக்(கு)ஆர் கலிஅடங்கா(து) ஆர்க்கும்; வியன்பொழில்கள் புக்(கு)ஆர் கலிஅடங்கும் புள்.’ இது பிரிந்தார்க்கும் கூடினார்க்கும் சிலேடை. பிரிந்தார்க்குச் சொல்லுங்கால்:- துணை மேவலார் - துணைவரைப் பிரிந்தவர்கள்; மாலை மருவி - மயக்கம் கொண்டு, மதி திரிய - உள்ளம் திரிந்து கலங்க; மா மணம் செய் காலை - (மலர்கள்) மிகுந்த மணத்தைப் பரப்பும் மாலைப்போதில்; கடிய - அஞ்சும்படியாக; வேலை - கடலானது; மேல்மிக்கு - கரை மேல் வேகத்தோடு அலைவீசி; ஆர் கலி அடங்காது - தன் பேரொலி அடங்காமல் இருக்கும்; புள் - பறவைகள்; வியன் பொழில்கள் புக்கு - அகன்ற சோலைகளில் புகுந்து; ஆர்கலி அடங்கும் - தாம் கூவும் ஒலி அடங்கும். இனி, கூடினார்க்குச் சொல்லுங்கால்:- துணை மேவலார் - தம் துணைவரைக் கூடும் வாய்ப்புடையவர்கள்; மாலை மருவி - அந்திப்போது வரவே; மதி திரிய - சந்திரன் நிலவுடன் உலாவ; மா மணம் செய்காலை - (துணைவருடன்)கூடி இன்புற்று மகிழும் போதில்; கடிய - மனம் களிக்கும் வண்ணம்; வேலை, மேல் மிக்கு, ஆர்கலி அடங்காது - கடல் கரைமேல் வேகத் துடன் அலை வீசித் தன் பேரொலி அடங்காமல் இருக்கும்; புள் வியன் பொழில்கள் புக்கு அடங்கும் - பறவைகள் அகன்ற சோலைகளில் புகுந்து தாம் கூவும் ஒலி அடங்கும். பாடலில் முதலிரண்டடிகளில் சிலேடை வந்துள்ளமையும், பின்னடிகளில் ‘வேலை ஆர்கலி அடங்காது ஆர்க்கும்’, ‘புள் ஆர் கலி அடங்கும்’ என வினைகள் முரண்பட்ட தன்மையும் காணப்படும். (தண்டி. 78-3) முரணித்தோன்றல் என்னும் வேற்றுப்பொருள் வைப்பணி - பொதுவான உலகக் கருத்துக்கு முரண்பட்ட வகையில் ஒரு பொதுச்செய்தியால் சிறப்புச்செய்தியை விளக்குதல். எ-டு : ‘வெய்ய குரல்தோன்றி, வெஞ்சினஏறு உட்கொளினும் பெய்யும் மழைமுகிலைப் பேணுவரால்; - வையத்(து) இருள்பொழியும் குற்றம் பலவரினும், யார்க்கும் பொருள் பொழிவார் மேற்றே புகழ்.’ கொடிய இடியோசையை எழுப்புவதும் இடியின் கொடிய வெப்பத்தை உள்ளே கொண்டு தீமை விளைய மண்ணுல கத்தைத் தாக்குவதும் போன்ற கொடிய இயல்பு பெற்றதாயி னும், கார்மேகம் மழைபொழிவதால் அதனை அனைவரும் விரும்பிப் போற்றுவர்; உலகில் தாம் பழிதரும் குற்றமுடைய வராயினும், அன்னார், எல்லார்க்கும் பொருள் கொடுக்கும் வள்ளல்களாய் இருப்பின், அவர்களுக்கே புகழ் சேர்கிறது. மழை பேணப்படுதல் சிறப்புச்செய்தி; குற்றமுடையோரும், கொடைக் குணமுடையராயின் புகழப்பெறுதல் பொதுச் செய்தி. வன்சொல்லும் முகவேறுபாடுமான குற்றங்கள் இல்லாத கொடையே சிறப்புடையது என்ற கருத்துப்பட அமைந்த ‘அகன் அமர்ந்து........... பெறின்’ (குறள் 92) என்னும் வள்ளுவர் பெருமான் வாக்குக்கும் இன்னும் பல சான்றோர் கருத்துக்கும் முரணாக, “வள்ளன்மையால் குற்றமும் மறையும்” எனக் கூறியதே ஈண்டு முரணித் தோன்றியமை (என்று கூறின் சிறக் கும்). ஆகவே முரணித் தோன்றல் வந்த வேற்றுப்பொருள் வைப்பணி வகை ஆயிற்று, இப்பாடல். (தண்டி. 48-3) முழுதும் அபாவம் - அபாவம் ஐந்தனுள் ஒன்று, முழுதும் இன்மை (தருக்கசங்.) ‘என்றும் அபாவம்’ என்று தண்டியலங்காரம் கூறும். எ-டு : ‘யாண்டும் மொழிதிறம்பார் சான்றவர்’ (தண்டி. 62) சான்றோர் சொன்ன சொல் தவறுதல் என்பது எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத செய்தியாம் என்றவாறு. முழுவதும் சேறல் - வேற்றுப் பொருள்வைப்பு அணியுள் ஒருவகை; உலகம் முழுவதற்கும் பொருந்தும் வகையில் பொதுப் பண்புடைய செய்தியால் சிறப்புச் செய்தியை விளக்குதல். எ-டு : ‘புறந்தந்(து) இருளிரியப் பொன்நேமி உய்த்துச் சிறந்த ஒளிவளர்க்கும் தேரோன் - மறைந்தான்; புறஆழி சூழ்ந்த புவனத்தே தோன்றி இறவாது வாழ்கின்றார் யார்?’ இருளை அழித்துப் பொன்னாலான சக்கரத்தைச் செலுத்தி ஒளியைப் பரப்பும் கதிரவனும் மறைந்தான்! இந்த உலகில் தோன்றிப் பின் இறவாமல் நிலைத்திருப்பார் யார்? என்ற பொருளமைந்த இப்பாடற்கண், கதிரவன் மறைந்த சிறப்புச் செய்தியை, உலகில் தோன்றிய எதுவும், யாவரும் நிலைப்ப தில்லை என்ற பொதுச்செய்தியால் விளக்கியுள்ளதாலும், தோன்றியவை அழிதல் என்பது உலகம் முழுவதற்கும் பொருந்தும் செய்தியாதலாலும் இது ‘முழுவதும் சேறல்’ வந்த வேற்றுப்பொருள் வைப்பணியாயிற்று. இதனை, முழுவதும் செறிதல் என்றும், அனைத்தினும் செறிதல் என்றும் கூறுப. (மா. அ. (207) பொதுப் பிறபொருள்வைப்பு என்னும் வீரசோழியம்(கா. 162) முற்று உருவக அணி - உருவக அணிவகைகளுள் ஒன்று; உறுப்பி உறுப்புக்கள் யாவற்றையும் எஞ்சாது உருவகம் செய்தல். எ-டு : ‘விழியே களிவண்டு; மென்நகையே தாது; மொழியே முரு(கு)உலாம் தேறல்; - பொழிகின்ற தேமருவு கோதைத் தெரிவை திருமுகமே தாமரைஎன் உள்ளத் தடத்து.’ அவளுடைய விழியே வண்டு; புன்முறுவலே மகரந்தம். மொழியே தேன்; முகமே என் உள்ளமெனும் குளத்தில் மலர்ந்துள்ள தாமரை” - என்று பொருள்படும் இப்பாடற்கண், விழி, நகை, மொழி, முகம், தலைவன்உள்ளம் ஆகிய அனைத்தும் (முகம் - உறுப்பி; விழி முதலியன உறுப்பு) உருவகம் செய்யப்பட்டுள்ளமையால் இது முற்றுருவம் ஆயிற்று (தண்டி. 37 - 13) முற்று உவமை - அவயவங்களையும் அவயவியையும் முழுமையாக உவமை செய்து கூறும் உவமை வகை. எ-டு : ‘மின்எனலாம் நுணுகுஇடைய வேய்புரையும் தடமென்தோள் குளிர்மதிபோல் மிளிர்வதனக் கோமளப்பூங் கொம்பன்னாள்’ இவ்வடிகளில் மின்னலைப் போன்ற இடை, மூங்கிலைப் போன்ற தோள்கள், மதி போன்ற முகம் எனும் உறுப்புக்களும், பூங்கொடி போன்ற தலைவி என உறுப்பியாகிய முதலும் ஒருசேர உவமிக்கப்பட்டிருத்தலின், முற்றுவமை வந்துள்ளது. (மா. அ. பாடல் 190) முறை நிரல்நிறை அணி - முடிக்கப்படும் சொற்களையும் முடிக்கும் சொற்களையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே பொருள்கொள் ளும் அணி. எ-டு : ‘காரிகை மென்மொழியால், நோக்கால், கதிர்முலையால், வார்புருவத் தால், இடையால், வாய்த்தளிரால், - நேர்தொலைந்த கொல்லி, வடிநெடுவேல், கோங்(கு)அரும்பு, வில்கரும்பு, வல்லி, கவிர்மென் மலர்.’ அழகினையுடைய இம்மாதினுடைய மென்மையான சொற் களால் கொல்லிப் பண்ணும், பார்வையால் நெடிய கூர் வேலும், ஒளியுடைய நகில்களால் கோங்க மொட்டுக்களும், நீண்ட புருவத்தால் மன்மதனது வில்லாகிய கரும்பும், இடையினால் பூங்கொடியும், தளிர்போன்ற மென்மையான வாயினால் மெல்லிய முருக்கமலரும் தம் அழகிழந்தன என்று பொருள்படும் இப்பாடற்கண், மொழியால் கொல்லி நேர் தொலைந்தது, நோக்கால் நெடுவேல் நேர் தொலைந்தது, முதலாக முறையே அமைந்தவாறு. (தண்டி. 67 - 1) முறையின் படர்ச்சி அணி - முறையாக ஒரு பொருள் பல இடங்களில் சென்று அடைவதையாவது ஓரிடத்தில் பலபொருள்கள் முறையாகச் சென்று அடைவதையாவது சொல்லுவது. இதனை வட நூலார் ‘பரியாய அலங்காரம்’ என்ப. வீரசோழியம், தண்டி யலங்காரம், மாறனலங்காரம் (199) முத்துவீரியம் முதலிய வற்றில் கூறப்பட்டுள்ள பரியாய அணி, வடநூல்களுள் ‘பரியாயோக்தாலங்காரம்’ எனவும், குவலயானந்தம் சந்திராலோகம் என்பனவற்றுள் ‘பிறிதின் நவிற்சியணி’ எனவும் கூறப்படும் வேறுபாடு குறித்துணரத்தக்கது. எ-டு : ‘நஞ்சமே! நீபண்டை நாளில் நதிபதிதன் நெஞ்சிலிருந்(து) ஆங்கதன்பின் நீங்கியே - செஞ்சடிலச் சங்கரனார் கந்தரத்தில் சார்ந்(து)இக் கொடியோர்வாய்த் தங்குதிஇக் காலம் தனில்.’ விடம் பண்டு பாற்கடலில் தங்கிப் பின் சிவபெருமான் கழுத்தில் தங்கி இப்பொழுது கொடியோர் வாயில் வருகிறது என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், முறையாக ஒரு பொருள் பல இடங்களில் சென்று அடைவதைக் கூறும் முறையிற் படர்ச்சியணி வகை வந்துள்ளது. எ-டு : ‘முன்னாள் இருவர்க்கும் யாக்கைஒன் றாக முயங்கினம், யாம்; பின்னாள் பிரியன் பிரியைஎன்(று) ஆயினம்; பேசலுறும் இந்நாள் கணவன் மனைவிஎன்(று) ஆயினம்; என்னின், இனிச் சின்னாளில் எப்படி யோ?மன்ன! நீ இங்குச் செப்புகவே!’ “திருமணத்தின்முன் களவொழுக்கத்தில் ஓருயிர் ஈருடலாய் இருந்து, திருமணம் நடந்த அணிமையில் காதலன் காதலி என்ற பெயரிலிருந்து, திருமணம் நடந்த சில ஆண்டுகள் கழிய மகப்பெற்ற இப்பொழுது கணவன் மனைவி என்ற பெயரில் இருவரும் உள்ளோம். இன்னும் சிலகாலம் கழியின், நம் உறவு எப்பெயரால் இயங்குமோ?” - என்று தலைவி தலைவற்குக் கூறும் இதன்கண், தம்பதிகள் என்ற ஓரிடத்தில், காதலன் காதலி - கணவன் மனைவி - என்ற பொருள்கள் முறையாகச் சென்றடைதற்கண், ஓரிடத்தில் பல பொருள்கள் முறையாகச் சென்றடையும் முறையிற் படர்ச்சி அணிவகை வந்துள்ளது. மாறன் அலங்காரம் சற்றுவேறாக இதன் இலக்கணம் கூறு கிறது. (199). (மு. வீ. பொருளணி 46 ; குவ 51) முன்ன விலக்கு அணியின் மறுபெயர்கள் - 1. தடைமொழி அணி (வீ.சோ. 153, 164) 2. விலக்கு அணி (ச. 124; குவ. 98) முன்னபாவம் - அபாவம் நான்கனுள், முன்பு இல்லாமை; குடம் உண்டா வதன் முன் குடம் இல்லை என்பது. இது பிராகபாவம் எனப்படும்; முன் உள்ளதன் அபாவமும் அது. பிராகபாவம் - முன் இன்மை; முன் உள்ளதன் அபாவம்; பிரத்துவம்சாபாவம் - அழிவுபாட்டு அபாவம்; அந்யோன்யாபாவம் - ஒன்றினொன்று அபாவம்; அத்யந்தாபாவம் - என்றும் அபாவம். (தருக்க சங். 96) (டு) முன்ன விலக்கணியின் வகைகள் - இறந்த வினை விலக்கு, நிகழ்வினை விலக்கு, எதிர்வினை விலக்கு, பொருள் விலக்கு, குணவிலக்கு, காரணவிலக்கு, காரிய விலக்கு, வன்சொல் விலக்கு, வாழ்த்து விலக்கு, தலைமை விலக்கு, இகழ்ச்சி விலக்கு, துணை செயல் விலக்கு, முயற்சி விலக்கு, பரவச விலக்கு, உபாய விலக்கு, கையறல் விலக்கு, உடன்படல் விலக்கு, வெகுளி விலக்கு, இரங்கல் விலக்கு, ஐய விலக்கு, வேற்றுப் பொருள்வைப்பு விலக்கு, சிலேடை விலக்கு, ஏது விலக்கு என்பன. இவற்றிடை ஆசி, அனாதரம், கருணை, நட்பு, கருமம், வெப்பம், தருமம் என்ற சில வகைகளை வீரசோழியம் மிகுதியாகக் கூறும். (கா. 163, 164) (தண்டி. 43 - 46) முன்னவிலக்கின்கண் கூற்றினும் குறிப்பே சிறந்தது - முன்னவிலக்கு குறிப்பினால் விலக்குவது. நூற்பாவில் ‘மறுப்பது’ என்னாமல் மறுப்பின் என்ற இலேசானே, அதன் மறுதலையாகிய வெளிப்படையான மறுப்பாகும் விலக்கும் கொள்க என்றார், இலக்கணவிளக்க நூலார். ஆயினும் ஒரு செய்தியை வெளிப்படையாக மறுப்பதில் நயம் இல்லை என்பதனையும், குறிப்பால் மறுப்பதிலேயே நயம் இருப்ப தனையும் உலக வழக்கினுள்ளேயே அறியலாகும். மேலும் கற்ற நாகரிகரும் சான்றோரும் குறிப்பால் மறுப்பதனையே விரும்புவர். (தண்டி. 43) முன்ன விலக்கணி - முன்னம் - குறிப்பு. ஒன்றனைக் குறிப்பால் விலக்குதல் என்னும் அணி. வெளிப்படை விலக்கும் இதன்கண் கொள்ளப்படும். இது முக்கால வினைகளை விலக்குவதும், பொருள் குணம், காரணம் காரியம் இவற்றை விலக்குவதும் எனப் பொதுவாக ஏழு வகைப்படும். அவற்றைத் தனித்தனித் தலைப்பிற் காண்க. முன்ன விலக்கு அணியின் மறுபெயர்கள் - 1. தடைமொழி அணி (வீசோ. 153, 164) 2. விலக்கு அணி (ச. 124; குவ. 98) முன்னின்மை - ‘முன்னபாவம் காண்க. (அபாவம் நான்கனுள், முன்பு இல்லாமை (தருக். சங். 96) (டு) மூக்கினின் தோன்றும் ஒப்பு - இனிய நாற்றமும் இன்னா நாற்றமும் மூக்கான் மோந்து ஒப்புமை கோடற்குரியன. (வீ. சோ. 96 உரைமேற்.) மூவகை நெறி - செய்யுள் அமைப்புமுறை சான்றோர்களால் மூவகைத்தாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவையாவன வைதருப்பநெறி, கௌடநெறி, பாஞ்சால நெறி என்பனவாம். மெல்லென்ற விழுமிய இனிய மொழியும், மெல்லென்ற விழுமிய இனிய அறம் முதலிய நாற்பொருளும் பொருந்து வன வைதருப்ப பாகமாம். விழுமிய சொற்கடினமும் தோய்ந்து அரிய நடைத்தாய்ப் புலவனால் யாக்கப்படுவது கௌடபாகமாம். மென்மையும் கடினமுமாகிய வைதருப்ப கௌடங்களொடு கூடாதே, இடை நிலைப்பட்டனவாம் இனிய சொல்லானும் பொருளானும் தடையின்றி நடை பெற்றொழுகுவது பாஞ்சால பாகமாம். (மா. அ. 77, 78, 79) மூவகை நெறிக்கும் எடுத்துக்காட்டுக்கள் - வைதருப்ப பாகம் - ‘உந்தியங் கமலமேல் உதிப்ப தால், உரம் சிந்துதெள் ளருவிவெண் ணூலின் செம்மைத்தாய், பந்திசேர் திசைமுகம் பயிலும் பான்மையால், சந்தமால் வரைமறைத் தலைவன் ஒத்ததே’. (மா.அ. பாடல். 69) கௌடபாகம் - முப்பு ரத்தி னைச்செ குத்த முக்க ணக்க னிற்சி ரித்து முத்த லைக்க ணிச்சி யுக்கதால், தப்ப றப்பொ ருப்பி னைக்கு லுக்கி டக்கை யைச்செருத்த லத்து றப்பு டைத்து ருத்தெழா நெய்ப்பு றத்தி னிற்கு ளித்த வச்சி ரத்தி னைப்பிடித்து நெட்டு யிர்ப்பு யிர்த்தி யக்கவே குப்பு றப்பு ழைக்கை வெற்பின் மத்த கத்தி னைத்து ளைத்த கொப்பு ளித்த பச்சி ரத்தமே’. (மா.அ. பாடல். 71) பாஞ்சால பாகம் - ‘விரைக்கமலம் முறுக்குடைந்த தகட்டகட்டின் நடுப்பொகுட்டு வெண்தோட் டும்பர் நிரைக்கமலத் தினிதிருந்து சூட்டெகினம் பார்ப்பருத்த நினைத்து நீர்வாய் இரைக்கெழவே செங்கால்வெள் ளுகிருறுமுன் இதழுறிஞ்சி இழிந்த தீந்தேன் நரைக்குடுமி மறைக்கிழவன் நெருப்பிடைநெ யுகுப்பனபோல் நான்ற மாதோ’ (மா.அ.பாடல். 74) இனிக் கௌட பாகத்தைப் பதம் பிரித்துரைக்குமாறு : முப்புரத்தினைச் செகுத்த முக்கண் நக்கனின் சிரித்து முத்தலைக் கணிச்சி உக்கதால், தப்பு அறப் பொருப்பினைக் குலுக்கிடக் கையைச் செருத்தலத்து உறப் புடைத்து உருத்து எழா, நெய்ப் புறத்தினில் குறித்த வச்சிரத்தினைப் பிடித்து, நெட்டு (உ)யிர்ப்பு உயிர்த்து இயக்கவே, குப்புறப் புகைக்கை வெற்பின் மத்தகத்தினைத் துளைத்த; கொப்புளித்த பச்சிரத்தமே. பாஞ்சால பாகத்தைப் பதம் பிரித்துச் சொல்லுமாறு: விரைக் கமலம் முறுக்கு உடைந்த தகட்டு அகட்டின் நடுப்பொகுட்டு வெண் தோட்டு உம்பர் நிரைக் கமலத்து இனிது இருந்து சூட்டு எகினம் பார்ப்பு அருத்த நினைத்து, நீர்வாய் இரைக்கு எழவே, செங்கால் உள்உகிர் உறுமுன் இதழ் உறிஞ்சி இழிந்த தீந்தேன், நரைக்குடுமி மறைக்கிழவன் நெருப்பிடைநெய் உகுப்பன போல் நான்ற மாதோ. இம்மூன்று நடையின்கண்ணும், எளிமை கடுமை இடை நிகர்த்த தன்மை எனும் இவை நடையிலும் பொருளிலும் காணப்படுதல் உணரப்படும். மூன்று நெறியாருக்கும் ஒக்கும் முடுகுவண்ணம் - எ-டு : ‘மயர்வற மதிநலன் அருளிய நறைகமழ் மலர்மகள் புணர்பவன் மேல் உயர்வற உயர்நலன் எனமுதிர் தமிழ்மறை உரைமகிழ் முனிவரை வாழ் புயல்புரை குழல்மதி புரைநுதல் வடவரை புரைபுணர் இளமுலை சேர் கயல்புரை விழிஎன துயிரெவண் நினதுயிர் கவல்வகை எவன் மயிலே’. “திருவாய்மொழி அருளிய சடகோபன் மலையகத்து வாழும், உறுப்புக்கள் அழகிய பெண்ணே! என் உயிர் நின்னிடமே உள்ளது. ஆதலின் நீ ‘யான் உன்னைப் பிரிந்து விடுவேனோ?’ என்று கவலைப்படுதலே வேண்டா,” என்ற தலைவன் கூற்றாக அமைந்த இப்பாடற்கண், உருட்டு வண்ணமாகிய அராகம் தொடுத்தமைக்கும் முகுகு வண்ணம் வந்தது. இது வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம் என்ற மூன்று நெறியார்க்கும் ஒக்கும். (மா. அ. பாடல் 117) மூன்று பெற்று ஒன்று குறைந்த உவமை - வினை, பயன், மெய், உரு - என்ற நான்கனுள் எந்த ஒன்று குறையினும் குறை உவமையாம். (‘குறைவு உவமை’ காண்க.) எ-டு : ‘காந்தள், அணிமலர் நறுந்தா தூதும் தும்பி கையாடு வட்டின் தோன்றும்’ (அகநா. 108.) காந்தள் மலரை ஊதும் வண்டு கையால் ஆடப்படும் வட்டுக் காய்களைப் போலத் தோன்றும் என்று பொருள்படும். இவ்வடிகளில், காந்தளைக் கை வடிவாலும் நிறத்தாலும் தொழிலாலும் ஒத்தது. தும்பியை வட்டுக்காய்கள் வடி வாலும் நிறத்தாலும் தொழி லாலும் ஒத்தன. (தண்டி. 31 உரை; இ. வி. 639 உரை) ஆகவே இவை மூன்று ஒத்த ஒன்று குறை உவமையாம். ‘குறைவு உவமை’ என இதனை மா. அ. குறிக்கும்; வடநூலார் உலுத்தஉவமை என்பர். (மா. அ. 95). மூன்று பொருள் பயந்த சிலேடை உவமை - சிலேடைப் பொருளை அடிப்படையாகக் கொண்டு, ஓருப மேயத்திற்கு இரண்டு உபமானங்கள் கூறி உபமேயம், இரண்டு உபமானம் இவற்றிற்குப் பொருந்துமாறு அடை மொழிகளைச் சிலேடையான் அமைக்கும் உவமையணி வகை. எ-டு : ‘நடுக்கற்(று) அறைவனத்தின் நன்பொருள்கள் எல்லாம் இடுக்கற்(று) உதவும் இயல்சான்(று) - ஒடுக்கமற ஏய்ந்த மலையம் எனவளர்கின் றான்பரன்சீர் ஆய்ந்த தமிழ்மகிழ்மா றன்.’ இது பொதியமலை, கடல், சடகோபன் என மூன்றற்கும் சிலேடை. பொதியமலை : அசைவற்றுப் பக்கமலையின் விளை பொருள்களை யெல்லாம் குறைவின்றி அளிக்கும் இயல்பு அமைந்து அழிவின்றிப் பொருந்தியது. கடல் : நடுவே தரைவளத்தொடு கூடி, நல்ல பொருள்களை யெல்லாம் குறைவற அளிக்கும் இயல்பு அமைந்து, அழி வின்றித் தகுதி அடைந்து, அழகிய அலைகளையுடையது; ‘நடுக் கற்றறை(ரை) வளத்தின் ...... ஒடுக்கம் அற ஏய்ந்து அம் அலை’ என்க. மாறன் : உண்மை நூல்களை ஓதாமல் உணர்ந்து, அவற்றின் வாய்மைகளை எல்லாம் உணர்த்தவல்ல உள்ளத்தோடு உறுதிப்பொருள்களை எடுத்தியம்பும் இயல்பமைந்து அழிவற விளங்குகிறான்- இவ்வாறு முப்பொருள் பயந்து சிலேடை உவமை வந்தவாறு. (மா. அ. பாடல் 213) மெய் உரு வேறுபாடு - மெய் என்பது கட்புலனாம் வடிவு; இவ்வடிவினை ஒளியில் கண்ணால் காணலாம்; இருளில் தொட்டு அறியலாம். உரு என்பது நிறமும் நிறமல்லாத ஏனைய பண்புகளும்; நிறத்தை ஒளியில்தான் காணலாம்; இருளில் காண முடியாது. அதனையும் தனியே பிரித்துக் காண்டல் இயலாது; ஓர் உருவில் அமைத்தே காண்டல் இயலும். நிறமில்லாப் பிற பண்பினையும் தனித்துணர இயலாது; ஓர் உருவில் வைத்தே உணர்தல் வேண்டும். ஆகவே, வடிவை யுணர்த்தும் மெய்யும், நிறம் நிறமில்லாப் பண்பு எனும் இவற்றை யுணர்த்தும் உருவும் தம்மில் வேறெனவேபடும் என்பது. ‘வடிவு’ உற்றுணரும் பண்பு எனவும், ‘உரு’ கட்புலனாகும் பண்பு எனவும் பேராசிரியர் விளக்குவர். (தொ. பொ. 276 பேரா.) மெய் உவம உருபுகள் - கடுப்ப, ஏய்ப்ப, மருள, புரைய, ஒட்ட, ஒடுங்க, ஓட, நிகர்ப்ப என்ற எட்டு உருபுகளும் மெய்யுவமத்தின்கண் பயின்று வரும். இவையே யன்றி, போல, பொற்ப, செத்து, அனைய, வென்ற, ஒப்ப, உறழ - என்பனவும் பயிலாது உவமஉருபுகளாக வரும். (தொ. பொ. 290 பேரா.) மெய்உவமஉருபுகளின் இருவகை - கடுப்ப, ஏய்ப்ப, மருள, புரைய, ஒட்ட, ஒடுங்க, ஓட, நிகர்ப்ப என்ற மெய்உவமஉருபுகள் எட்டனுள்ளும், கடுப்ப, மருள, புரைய, ஓட என்ற நான்கும் ஐயப்பொருளனவாய் ஓர் இனமாகும்; ஏய்ப்ப, ஒட்ட, ஒடுங்க, நிகர்ப்ப என்ற நான்கும் ஐயமின்றி உவமமும் பொருளும் ஒன்று என்னும் உணர்வு தோன்றத் துணிபொருட்கண் வரும் வாய்பாடுகளாகி ஓர் இனமாகும். இவ்வாறு மெய்யுவம உருபுகள் இருவகைப்படும். (தொ. பொ. 293 பேரா.) மெய்உவமப்போலி - வடிவு பற்றி வரும் உள்ளுறை உவமம் மெய்யுவமப் போலி எனப்படும். எ-டு : ‘பொருகளிறு மிதித்த நெறிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்மார் நின்றுகொய மலரும் நாடன்’ (குறுந். 208) போரிடும் களிறுகளால் மிதிக்கப்பட்ட வேங்கை சாய்ந்து மகளிர் பூக்களை எட்டிப் பிடித்துப் பறிக்குமாறு குற்றுயி ரொடு மலரும் நாடன் எனவே, மிதியுண்டு வீழ்ந்த வேங்கை குறையுயிரொடு மலர்ந்தாற்போல, பகற்குறி இரவுக்குறி யிடையீடுகளான் துன்புறுத்தப்பட்ட தலைவி ஊரவர் எளிதின் அலர் தூற்றுமாறு பொலிவின்றி இருந்தாள் என்று உள்ளுறைஉவமம் கொள்வது மெய்யுவமப் போலியாம். (தொ. பொ. 300 பேரா.) மெய்உவம வகை - எ-டு : ‘தெம்முனை இடத்திற் சேயகொல் அம்மா அரிவை அவர்சென்ற நாடே’ “தலைவர் பொருள் தேடப் பிரிந்து சென்ற இடம் முன்பு அவர் போரிடற்குச் சென்ற இடத்தைப் போலச் சேய்மைக்- கண் உள்ள இடமோ?” என்று தலைவி தோழியை வினவும் இப்பகுதியில், தம் இடத்திற்கும் பொருள் தேடச் சென்ற இடத்திற்கும் இடைப்பட்ட தூரத்துக்கு உவமம் கூறுதல், நேரே மெய்யுவமம் ஆகாமல் மெய்உவமத்தின் வகையாகும். இவ்வெல்லைப் பொருண்மை மெய்யுவமத்தின் வகை எனப்படும். மெய் பண்பு எனப்படாமை - எ-டு : ‘கடல்மீன் துஞ்சம் நள்ளென் யாமத்து உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை இயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்து’ (அகநா. 142) கடல் மீன்கள் துயிலும் நள்ளென்று ஒலிக்கும் இடையாமத் தில் அழகு கிளர்ந்த பொலிவினையுடைய செய்தல் தொழி லான் சிறந்த பாவை நடை கற்றாற்போன்ற நடையினளாய்த் தலைவி வந்தாள் என்ற பொருளமைந்த இவ்வடிகளில், பாவையைத் தலைவிக்கு வடிவு பற்றி உவமம் கொள்ளவே உயிரில்லாதாள் போன்று அச்சமின்றி இரவில் வந்தாள் என்ற கருத்துத் தோன்றும். இவ்வடிவுஉவமத்தை தலைவிக் குப் பண்புவமையாகக் கொள்ளின், ஏதோ ஒரு நாள் இரவுக் குறிக்கண் வந்த அவளது செயல் என்றைக்கும் அவளுக்கு உரித்தாதல் வேண்டும். பண்பு என்பது ஒரு பொருள் தோன்றுங்கால் தோன்றி, அப்பொருள் கெடும் துணையும் தான் கெடாது அப்பொருளுடனே நிற்பது. ஆதலின் இது பண்புவமம் ஆகாது. பண்பு தனியே இருத்தல் இயலாது; ஒரு பொருளைப் பற்றியே இருத்தல் வேண்டும் ஆதலின் பண் புக்கு இருப்பிடமாகும் வடிவு (-மெய்) பண்பு எனப்படாது; பண்பையுடைய பண்பியாகவே இருக்கும் என்பது. (தொ. பொ. 276 பேரா.) மேன்மேல் உயர்ச்சி அணி - ஒரு பொருளைவிட மற்றொரு பொருளும், அதனைவிட வேறொரு பொருளும், இவ்வாறு மேலும்மேலும் உயர்குணத் தாலேனும் இழிகுணத்தாலேனும் உயர்வாதலைச் சொல்லும் அணி. சாராலங்காரம் என்று இதனை வடநூலார் கூறுப. உயர்வு : எ-டு : ‘தேன்மதுரம் ஆம்; அதனின் தெள்ளமுத மேமதுரம்; மான்சொல்அதி னும்மதுரம் ஆம்.’ தேனைவிட அமுதமும், அமுதத்தைவிடத் தலைவி சொல்லும் இனிமையுடையன என்னும் இதன்கண், இவ்வணி உயர்வு பற்றி வந்துள்ளது. இழிவு: எ-டு : ‘நீரினும் நுண்ணிது நெய்என்பர்; நெய்யினும் யாரும் அறிவர், புகைநுட்பம் - தேரின், நிரப்(பு)இடும்பை யாளன் புகுமே, புகையும் புகற்(கு)அரிய பூழை நுழைந்து’. நீரினும் நெய் நுண்ணிது; நெய்யினும் புகை நுண்ணிது; புகை நுழையாத இடத்தும் வறியவன் நுழைந்துவிடுவான் என்னும் இதன்கண், மேல்மேலுயர்ச்சி அணி இழிவு பற்றி வந்தது. நெய், புகை, வறுமை - இவை ஒன்றினொன்று நுண்ணிதாதல் சொல்லப்பட்டவாறு. நுண்மை - உள்ளேபுகும் இழிவு; வரவேற்பின்றிப் புகுதலின் இழிவாயிற்று. இவ்வணியின் உயர்வு வகை மாறன்அலங்காரத்தில் ‘உறுசுவை அணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. (ச. 75, குவ. 49; மா. அ. 235) மோக உவமை - ஒரு பொருள்மீது எழுந்த வேட்கையால் தடுமாற்றம் ஏற்படும் மயக்கம் மிகுதலைக் காட்டுவது இவ்வுவமை. இது வீரசோழியத்துள் மயக்க உவமை என்று கூறப்படும். எ-டு : ‘மதியும் மடந்தை முகனும் அறியா பதியிற் கலங்கின மீன்’ (குறள் 116) “விண்மீன்கள் சந்திரனுக்கும் இத்தலைவியின் முகத்திற்கும் வேறுபாடு அறிய மாட்டாமல் தம் இருப்பிடத்தில் தடு மாறின என்ற பொருளமைந்த இப்பாடற்கண், மயக்க உவமை வந்துள்ளது. (வீ. சோ. 157) எ-டு : ‘கயல்போலும் என்றுநின் கண்பழிப்பல்; கண்ணின் செயல்போல் பிறழும் திறத்தால் - கயல்புகழ்வல்; ஆரத்தான் நோமருங்குல் அம்தரள வாள்முறுவல்! ஈரத்தான் உள்வெதும்பும் யான்’ “மார்பிற் பூண்டுள்ள முத்துமாலைகளது பாரமிகுதியால் வருந்தும் இடையையும், அழகிய முத்துப் போன்ற ஒளி யுடைய பற்களையுமுடைய நல்லாய்! நின் உள்ளக் குறிப்பினை எனக்குப் புலப்படுத்திவிட்ட உனது அவ்அன்பினை நாடி மனம் வெதும்பி நிற்கும் நான், உன் கண்களை ‘இவை கயல்கள் போல் உள’ என்று இகழ்வேன்! அக்கயல்களை, உன்கண்கள் போன்று அவை பிறழ்தல் பற்றிப் புகழ்வேன்!” என்று பொருள்படும் இப்பாடற்கண், பொருளாகிய கண்ணைப் பழித்தலும் உவமையாகிய கயலைப் புகழ்தலும் என்னுமிவை தடுமாற்றமுறத் தோன்றும் மயக்கத்தின் மிகுதலைப் புலப்படுத்துவதால், இது மோக உவமை ஆயிற்று. (தண்டி. 32 - 18) ய யத்நாnக்ஷபம் - முயற்சி விலக்கு; விலக்கணி வகைகளுள் ஒன்று. அது காண்க. யதாஸங்க்யாலங்காரம் - நிரல்நிறை அணி; அது காண்க. யுக்தரூபகம் - இயைபு உருவகம்; அது காண்க. யுக்த ஹேது - யுத்த ஏது - பொருந்து காரணஅணி; ஏது அணி வகைகளுள் ஒன்றாகிய சித்திரஏதுவின் ஐங்கூறுகளுள் ஒன்று. ‘உயுத்த ஏது அணி’ காண்க. யுக்தாதமா - கூடும் இயற்கை; வேற்றுப்பொருள்வைப்பணி வகைகளுள் ஒன்று. அது காண்க. யுக்தி அலங்காரம் - யுத்தி அணி; அது காண்க. யுத்தி அணி- தன் உள்ளத்துக் கொண்ட செய்தியைப் பிறர் அறியாமல் செய்வதற்குத் தன் செயலில் ஒரு மாற்றம் செய்து பிறரை வஞ்சிப்பது. இதனை வடநூலார் ‘யுக்தி அலங்காரம்’ என்ப. எ-டு : ‘மாணிழையாள் அன்பன் வடிவைப் படத்தெழுதும் பாணியில் அங் (கு) ஓர்சிலர் தன் பாங்கர்உற - நாணிமுகம் கோட்டினாள்; சித்தரித்த கோலஉரு வின்கரத்தில், தீட்டினாள் கன்னற் சிலை.’ தன் கணவன் உருவை எழுதியவள், பிறர் அதனைக் காண அருகில் வர, நாணத்தினால், அதனை அப் பிறர் அறியாமல் மறைத்தற்கு, அவ்வுருவின் கையில் கருப்புவில்லை வரைந்து மன்மதன் உருவமாக மாற்றிக்காட்டித் தன் செயலை மற்றவர் உள்ளவாறு அறியாதபடி செய்தற் கண், இவ்வணி வந்துள்ளது. (ச. 115; குவ. 89) ர ரத்நாவளி அலங்காரம் - அரதனமாலை அணி; அது காண்க. ரஸவத் அலங்காரம் - சுவை அணி, அது காண்க. ரூபகம் - உருவகம். அவ்வணி காண்க. ரூபகரூபகம் - உருவக உருவகம் காண்க. ரோஷாnக்ஷபம் - வெகுளி விலக்கு; அவ்வணி காண்க. ல லலிதாலங்காரம் - வனப்பு நிலை அணி; அது காண்க. லுப்தோபமாலங்காரம் - தொகையுவமை; அவ்வணி காண்க. லேசம் - இலேசம்; வஞ்ச நவிற்சி எனப்படும். ‘இலேசம்’ காண்க. லோகோக்தி அலங்காரம் - உலகவழக்கு நவிற்சி அணி; அது காண்க. வ வ்யதிரேகாலங்காரம் - வேற்றுமை அணி; அது காண்க. வ்யதிரேக ரூபகம் - வேற்றுமை உருவகம்; அது காண்க. வ்யஸ்த ரூபகாலங்காரம் - விரிஉருவக அணி; அது காண்க. வ்யாஜ நிந்தை - நிந்திப்பது போலப் புகழ்வதான அணி. (யாழ். அக.) ‘வஞ்சப் பழிப்பு அணி’ காண்க. வ்யாஜ ஸ்துதி - புகழாப் புகழ்ச்சி; அது காண்க. வக்கிரவுத்தி அணி - வெளிப்படையாக விளிக்குமிடத்தும் வினாவுமிடத்தும் முன் குறிப்பிட்ட தன் உண்மைக் கருத்து நன்குணரப்பட்ட போதிலும் அதனை மறைத்து வேறொன்றைக் கருதியது போல நடித்து மறுமொழி கூறி, மீண்டும் தன் கருத்தைத் தெளிவிக்கச் சொல்லும் தொடர்மொழிகளுக்கும் அவ் வாறே பொருள்மாற்றி உரைப்பது. இதற்குப் பல பொருள் ஒரு சொற்களே பயன்படுவனவாம். (மா. அ. 279) எ-டு : ‘இம்பர்வான் எல்லை இராமனையே பாடி என்கொணர்ந்தாய், பாணா, நீ?” என்றாள் பாணி; வம்பதாம் களபம்என்றேன்; “பூசும்” என்றாள்; “மாதங்கம்” என்றேன்; “யாம் வாழ்ந்தேம்” என்றாள்; “பம்புசீர் வேழம்” என்றேன்; “தின்னும்” என்றாள்; “பகடு” என்றேன்; “உழும்” என்றாள், பழனம் தன்னை; “கம்பமா” என்றேன்; “நற் களியாம்” என்றாள்; “கைம்மா” என்றேன்; சும்மா கலங்கினாளே.’ (தனிப்பாடல்.) யானையின் பரியாயப் பெயர்களாகிய களபம் மாதங்கம் வேழம் பகடு கம்பமா கைம்மா என்பனவற்றுள், ‘கைம்மா’ நீங்கலான பெயர்கள் முறையே கலவைச் சந்தனம், சிறந்த பொன், கரும்பு, காளை, கம்பு என்ற தானியத்தின் மாவு என்னும் பொருள் தருவதையொட்டிச் சமற்காரமாக விடைமொழி கூறுதற்கண் இவ்வணி வந்துள்ளது. வக்ரோக்தி அலங்காரம் (மடங்குதல் நவிற்சி அணி) - சொன்ன சொற்களுக்கு வெவ்வேறு பொருள் கொண்டு மறுமொழி யுரைப்பதாகிய அணி. ‘வக்கிர வுத்தியணி’ காண்க. ‘மடங்குதல் நவிற்சி அணி’ என்பதும் அது. வகைமுதல் அடுக்கு அணி - ஓர் இனத்தைச் சேர்ந்த பல பொருள்களை அடைமொழி யின்றி ஒரு பாடலில் வரிசையாக அடுக்கிக் கூறுவது. எ-டு : ‘மரவமும் கடம்பும் பனசமும் மருதும் வடமும் மாதவியும் மாதுளமும் குரவமும் இலவும் திலகமும் விளவும் கொன்றையும் செருந்திலும் குமிழும் அரசும் நாவலும் தான்றியும் அரீதகியும் ஆமலகமும் நரந்தமும் ஆம் பிரமமும் ஏலமும் சண்பகமும் வேழமும் சம்பீரமும் தழைந்துள ஒருசார். இது மரமெனப் பொதுப்படக் கிடந்த வகை முதல்களை அடைசினை புணராது எண்ணும்மைப்பட அடுக்கியமை யால் இவ்வணியாயிற்று. (மா. அ. 179) வஞ்சநவிற்சி அணி - இஃது இலேச அணி எனவும் கூறப்பெறும். ‘இலேச அணி’ காண்க. இதனை ‘வியாஜோக்தி அலங்காரம்’ என வட நூல்கள் கூறும். (ச. 112, குவ. 86) வஞ்சப்பழிப்பு அணி - ஒருவரைப் பழிப்பதற்காக அவரை விடுத்து மற்றொருவரைப் பழிப்பது. இது வியாஜநிந்தாலங்காரம் என வடநூல்களில் குறிக்கப்படும். எ-டு : ‘நீயும் தவறிலை; நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமரும் தவறிலர்..... இறையே தவறுடை யான்’ (கலி. 56) காமஞ்சாலா இளமையோள் ஒருத்தியிடம் கழிகாதல் கொண்ட மூத்தவ னொருவன் தானாகவே கூறிக்கொண்டு அதனால் மகிழ்ச்சியுறும் கூற்றில், அவளை மனத்தால் நோக்கி, “நீயும் தவறுடையை அல்லை; உன்னை வெளியே புறப்பட விட்ட உன் உறவினரும் தவறுடையர் அல்லர். உன் வருகையை எனக்கு முன்கூட்டியே அறிவித்து உன்னைக் காணும் வாய்ப்பினை யான் பெறாதவாறு தடுக்காத அரசனே தவறுடையான்” என்று கூறிய இப்பாடற்பகுதிக்கண், தலைவியைப் பழிப்பதற்காக அரசனைப் பழித்தது இவ் வணியாம். (ச. 56; குவ. 31) வஞ்சப்புகழ்ச்சி அணி - இது நிந்தாத்துதி அணி எனவும் நுவலாச்சொல் எனவும், புகழ்மாற்றணி (தொ. வி. 348) எனவும், புகழாப் புகழ்ச்சி அணி எனவும் கூறப்பெறும். இதனை வியாஜஸ்துதி அலங்காரம் என வடநூல்கள் கூறும். இது. 1. பழிப்பினால் புகழ்ச்சி தோன்றல், 2. புகழ்ச்சியால் பழிப்புத் தோன்றல். 3. புகழ்ச்சி யால் புகழ்ச்சி தோன்றல் என மூவகைப்படும். (ச. 55 குவ. 30) ‘புகழாப் புகழ்ச்சி அணி’ காண்க. பழிப்பதனால் புகழும், புகழ்வதனால் பழிப்பும் பொருந்து மாறு அமைவது வஞ்சப்புகழ்ச்சியணி என்று தொன்னூல் விளக்கம் (348), சந்திராலோகம், குவலயானந்தம் என்பன கூறும். பழிப்பது போலப் புகழ்தல் ஒன்றனையே புகழாப் புகழ்ச்சி என வீரசோழியமும் (கா. 174), தண்டியலங்காரம் (84), முத்து வீரியமும் (பொருளணி. 100) கூறும். பழிப்பது போலப் புகழ்தல் ‘நிந்தாத் துதி’ எனவும், புகழ்வது போலப் பழித்தல் ‘துதி நிந்தை’ எனவும் மாறனங்காரம் கூறும் (228, 229) 1. பழிப்பினால் புகழ்ச்சி தோன்றும் வஞ்சப் புகழ்ச்சி அணி இதுசந்திராலோகம் குறிப்பிடம் வஞ்சப் புகழ்ச்சி அணியின் மூவகையுள் ஒன்று. ஒன்றனை, வெளிப்படையாகப் பழிப்பது போலக் குறிப்பினால் புகழ்வது. எ-டு : ‘பேசு கொலைஆதிப் பெரும்பா தகர்தமையும் தேசுமிகு வானுலகில் சேர்க்கின்றாய் - வீசுதிரை பின்னியெழும் ஓதை பெரிதுறுபா கீரதியே! நின்னறி(வு) என்என்பேன் யான்’ கொலை முதலிய பாதகம் செய்வோருடைய பாவங்களையும் போக்கிச் சுவர்க்கம் பெறச் செய்யும் பாகீரதி நதி ‘தக்கது இன்னது தகாதது இன்னது’ என்று பகுத்துணரும் அறிவற் றது என்று பழிப்பது போலக் கூறி, அந்நதி மாபாதகங் களையும் போக்கவல்லது என்பதனைக் குறிப்பினால் பெறப்படவைத்தமை இவ்வணிவகையாம். ஒருவரைப் பழிப்பதனால் மற்றவர்க்குப் புகழ்ச்சி தோன்றலும் இவ்வணிவகையின் பாற்படும். “அனுமன் இந்திரசித்தால் கட்டப்பட்டமை கேட்டு மற்ற வானரர்கள் அவனை இகழ்ந்து வெருட்டினர்” என்ற கூற்றில், அனுமனைஇகழ்தல் வாயிலாக மற்ற வானரர்களின் வீரப்புகழ் வெளிப்படுத்தப்பட்டது. 2. புகழ்ச்சியால் பழிப்புத் தோன்றும் வஞ்சப் புகழ்ச்சி அணி இது சந்திராலோகம் குறிப்பிடும் வஞ்சப்புகழ்ச்சியணியின் மூவகைகளுள் ஒன்று. ஒன்றனை வெளிப்படையாகப் புகழ்வது போல மற்றொன் றனைக் குறிப்பால் பழிப்பதும் இவ்வணி வகையாம். எ-டு : ‘எற்காகத் தூ(து)அர சன்புடை யேகி, இளங்கொடி! நீ அல்கார் அளகம் குலைய, மெய் வேர்வை அரும்ப, அந்தோ! பல்காய மும் நகத்(து) ஊறும் நனியுறப் பட்டுநொந்தாய் நிற்(கு) ஆம் முறைசெய்கைம் மாறும்உண் டோஇந்த நீணிலத்தே’ தனக்காகத் தலைவனிடம் தூது சென்ற தோழி தலைமயிர் முடி குலைய, முகத்தில் வியர்வை துளிக்க, பற்களும் நகங் களும் பட்ட வடுக்கள் தோன்ற, உடல் நொந்து வந்துள்ளாள் என்று தலைவி தன் பொருட்டாக அவள் அரும்பாடு பட்டதாக வெளிப்படையாகப் புகழ்ந்து, அவள் தலைவனைக் கூடி வந்திருக்கிறாள் என்று குறிப்பால் பழித்தமையால், இஃது ஒருவரையே புகழ்வது போலப் பழித்தலாம். ஒருவரைப் புகழ்வது போல மற்றவரைப் பழித்தல் தண்டி யலங்காரத்தில் மாறுபடு புகழ்நிலை என்று கூறப்பட்டுள் ளது; ‘மாறுபடு புகழ் நிலை அணி’ காண்க. 3. புகழ்ச்சியால் புகழ்ச்சி தோன்றும் வஞ்சப் புகழ்ச்சி அணி இது சந்திராலோகம் குறிப்பிடும் வஞ்சப் புகழ்ச்சி அணியின் மூவகைகளுள் ஒன்று. ஒன்றனைப் புகழ மற்றொன்றற்குப் புகழ்ச்சி குறிப்பால் அமைவது இவ்வணிவகையாம். எ-டு : ‘சீரார்ந்(து) இலகுசிறைச் செந்தார்ப் பசுங்கிள்ளை வாரார் முலையாய்! நின் வாயிதழ்க்கு - நேராகும் கொவ்வைக் கனிநுகர்தற் குத்தவம்என் செய்ததோ, செவ்வைத் திறத்தில் தெரிந்து?’ பச்சைக்கிளி, தலைவியின் வாயிதழ்களுக்கு ஒப்பாகும் சிவந்த கொவ்வைக் கனியை நுகர்தற்கு யாது தவம் செய்ததோ என்று கிளியைப் புகழ்வதன் வாயிலாகத் தலைவி சிவந்த வாயி தழ்களை உடையவள் என்று அவளைக் குறிப்பால் புகழ் தற்கண் வஞ்சப் புகழ்ச்சியணியின் இவ்வகை வந்துள்ளது. (ச. 55; குவ. 30) வடநூலார் கூறும் தொனி - இனமும் இடமும் சார்பும் என இவற்றை மேவி, எதிர்மறைப் பொருள் பயக்கும் சிறப்புடைத்தாய், சூழ்நிலை வயத்தால் பொருளுணர்த்தும் ஆற்றல் கொண்டு, எள்ளல் பொருட் டாய்ப் பொருள்படுவதோடு, இறைச்சியும் சுட்டும் ஆகிய உள்ளுறை நயங்களை உணர்த்தவல்லதாய், ஆகுபெயர்ப் பொருளாலும் உணர்த்துவதாய், புணர்மொழிகள் பிரிக்கப் படும் வகையால் பொருளுணர்த்தி, மெய்ப்பாட்டினையும் சுவையுணர்வினையும் ஊட்டுவதாய், பலவகை அணிகட்கு இடனாக, எடுத்தல் படுத்தல் நலிதல் என்னும் ஓசைவேறு பாட்டால் ஒன்றனை உணர்த்தி, கேட்போர் உணருமாறு உரைக்குமிடத்தே, (சொல்லுவான்) கருதிய நயத்தை அகத்தே அடக்கி, வெளிப்படையான் அன்றிக் குறிப்பாற் பொருள் புலப்பட இவ்வாறு பாட்டினுள் ஒலிக்கும் உட்குரலை வடநூற்புலவர் தொனி என்பர். (தென். அணி. 45) வடிவு உவமை - இது மெய்யுவமை எனவும் வழங்கப்படும். எ-டு : ‘உரல்போல் பாவடி யானை’ ‘மலரன்ன கண்ணாள்’ (கு. 1142) என்புழி, யானை அடிக்கு உரலையும் தலைவியின் கண்ணுக்கு மலரையும் உவமை கூறியது வடிவு பற்றிய உவமையாம். (வீ. சோ. 158) வண்ணமும் வடிவும் உவமம் ஆதல் - ‘இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிற்று’ (அகநா. கடவுள்) - வானின் இலங்கும் வெள்ளிய பிறை வளைந்த வெண்பற் களுக்கு வடிவு பற்றியும் வண்ணம் பற்றியும் உவமமாக வந்தது. (தொ. பொ. 277 பேரா.) வல்லோர் நவிற்சி அணி - உலகவழக்குச் சொல்லே தன் நேரிய பொருளொடு மற்றொரு பொருளையும் உட்கொண்டிருத்தல். இதனைச் ‘சேதோக்தி அலங்காரம்’ என வடநூல்கள் கூறும். எ-டு : ‘பறிமலர்பூங் குஞ்சியாய்! பாம்பேபாம் பின்கால் அறியுமுல கத்தென்(று) அறி.’ ஒருவன் தன் நண்பனிடம் மூன்றாமவன் செய்தியைப் பற்றி வினவ, நண்பன் பக்கத்திலிருக்கும் நான்காமவன் மூன்றாமவ னொடு குணத்தாலும் செயலாலும் ஒத்திருத்தலின், அச் செய்தி நான்காமவனுக்கே நன்கு புலனாயிருக்கும் என்பதை நேர்முகமாகக் கூறாமல், ‘பாம்பறியும் பாம்பின்கால்’ என்ற தொடர் வாயிலாகக் குறிப்பாக வெளிப்படுத்தியுள்ளதனைக் கூறும் இப்பாடற்கண் இவ்வணி பயின்றுள்ளது (மு. வீ. பொருளணி. 60, ச.117; குவ.91) வலி என்னும் குணஅணி - வலி என்பது தொகைச்சொற்களை மிகுதியாக அமைத்துப் பாடுவது. வினைத்தொகை முதலிய தொகைகளும், உருபு மாத்திரம் தொக்க வேற்றுமைத்தொகையும் வைதருப்ப வலியாம். உருபும் பயனும் உடன்தொக்க தொகை மிக வருதல் கௌட வலியாம். இடைப்பட்டது பாஞ்சால வலியாம். அறுவகைத் தொகைகளும் வருவது கௌடவலி எனவும், சிறிது குறைய வருவது பாஞ்சால வலி எனவும், சில தொகை களே வருவது வைதருப்ப வலி எனவும் மாறனலங்காரம் கூறும் (பாடல் 107-109). அவற்றைத் தனித்தனியே காண்க. வலி என்னும் குணஅணியின் மறுபெயர் - ஓசம் (வீ.சோ.148), ஆலேசம் (மு.வீ. செய்யுளணி 14) என்பன. வலிநிலைக்களன் பற்றிய உவமம் - வலியாவது ஒருவனிடத்துச் சிறப்பாக அமைந்த ஆற்றல். எ-டு : ‘அரிமா அன்ன அணங்குடைத் துப்பின் திருமா வளவன்’ சிங்கத்தைப் போன்ற, பகைவருக்கு வருத்தம் செய்யும் வலிமையை யுடைய திருமாவளவன் என்று பொருள்படும் இத்தொடரில், திருமாவளவனுக்குச் சிங்கத்தை உவமம் கூறியது வலிமை நிலைக்களனாக அமைந்த உவமம் ஆகும். (தொ. பொ. 279 பேரா.) வழிநிலை - எழுத்தாவது சொல்லாவது ஒவ்வோரடியிலும் பலமுறை வருமாறு தொடுக்கும் ஓர் அணி. எ-டு: ‘தவளை உகளும் தடம்புனனீர் நாடன் இவளை வளைகரந்தான் என்றால் - தவளத் தனிக்காவல் வெண்குடையான் தண்ணளியும் அஃதே; இனிக்காவல் ஆகுமோ எமக்கு?’ முன்னிரண்டடிகளிலும் அகரஉயிர் மெய்யொடு கூடிப் பலகாலும் நிகழ்தலின், ‘எழுத்து வழிநிலை’ ஆயிற்று. எ-டு: “மாதராள் மாதர்நோக் குண்ட மடநெஞ்சம் காதலார் காதன்மை காணாதே - ஏதிலார் வன்சொல்லான் வன்பொறை சொல்லிலெழில் மானோக்கி இன்சொல்லால் இன்புறுமோ ஈங்கு.” முதலடியில் ‘மாதர்’ என்ற சொல்லும், இரண்டாமடியில் ‘காதல்’ என்ற சொல்லும், மூன்றாமடியில் ‘வன்’ என்ற சொல்லும், ஈற்றடியில் ‘இன்’ என்ற சொல்லும் இருமுறை நிகழ்தலின் ‘மொழி வழிநிலை’ ஆயிற்று. (வீ. சோ. 159 உரை) வழிமுரண் (2) - இது விரோத அணி வகைகளுள் ஒன்று. எ-டு : ‘செய்யவாய்ப் பசும்பொன் ஓலைச் சீறடிப் பரவை அல்குல், ஐயநுண் மருங்குல் நோவ அடிக்கொண்ட குவவுக் கொங்கை’ (சூளா. 673) இவ்வடிகளில் முறையே செம்மை - பசுமை, சிறுமை - பரவை எனவும், நுண்மை - குவவு எனவும் முரண்தொடை இடை யிட்டு வந்த அழகால் இவ்வணி வந்தவாறு. வழிமொழி (1) - பின்வருநிலை அணியின் பரியாயப் பெயர். அவ்வணி காண்க. (யா. வி. பக். 550) வழிமோனை - பாடலடிகளில் மோனை சீர்இடையிட்டும் இடையிடாதும் வரத் தொடுப்பது. அதனால் இப்பாடல் சொல்லின்பம் பயிலும். எ-டு : ‘முன்னைத்தம் சிற்றில் முழங்கு கடலோதம் மூழ்கிப் போக அன்னைக் குரைப்பன் அறிவாய் கடலேயென் (று) அலறிப் பேரும் தன்மை மடவார் தளர்ந்துகுத்த வெண்முத்தம் தயங்கு கானல் புன்னையரும் பேய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே எம்மூர்!’ இப்பாடல் மோனை இடையிட்டு வரத் தொடுக்கப்பட்டது. (தண்டி. மேற். 19 உரை) வழிமோனை, வழியெதுகை - அளவடிக்கண்ணேயே (நாற்சீரடிக்கண்ணேயே) இணை, பொழிப்பு முதலாய தொடை விகற்பம் சொல்லப்படும். நாற்சீர் இகந்த பலசீரான் நிகழும் அடிக்கண் பயிலும் மோனை எதுகைகள் வழிமோனை வழியெதுகையெனப் படும். முரண் முதலான பிறதொடையும் கொள்க. ‘துனிவருநீர் துடைப்பவளாத் துவள்கின்றேன் துணைவிழிசேர் துயிலை நீக்கி’ (தண்டி.பக். 17) ‘மண்டலம் பண்டுண்ட திண்டேரன் வரகுணன் தொண்டி யின்வாய்’ (யா. வி. பக். 207) வளர்ச்சி நுட்பம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (76) வருவதோர் அணி. பெரியதைச் சிறிதாக்கிப் பேசுவது. எ-டு : ‘நூலின் நுண்இடை சிறிது’ வளர்ச்சிப் புனைவு - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (115) வருவதோர் அணி. மலையை ஒப்புமை கூறுவது எ-டு : ‘சாரல் நாடன் நட்பு மலையினும் பெரிது’ என்றல் வன்சொல் தடைமொழி - ‘வன்சொல்விலக்கு’ வீரசோழியத்தில் ‘வன்சொல் தடை மொழி’ என வழங்கப்படுகிறது. ‘வன்சொல் விலக்கு’ நோக்குக. (வீ. சோ. 163) வன்சொல் விலக்கு அணி - இது முன்னவிலக்கு அணி வகைகளுள் ஒன்று; வன்சொல் கூறி ஒரு காரியம் நிகழாதவாறு விலக்குதல். எ-டு : ‘மெய்யே பொருள்மேல் பிரிதியேல் வேறொரு தையலை நாடத் தகும்நினக்கு;- நெய் இலைவேல் வள்ளல்! பிரிவற்றம் பார்த்தெங்கள் வாழ்நாளைக் கொள்ள உழலுமாம் கூற்று.’ “தலைவ! இவளைப் பிரிந்து நீ பொருள் கருதிச் செல்வா யாயின், மற்றொருத்தியை நீ மணந்து கொள்ள நேரும். நீ பிரியும் நேரத்தை எதிர்பார்த்து, எங்கள் உயிரைக் கவர்ந்து கொள்ளக் கூற்றம் சுற்றிக்கொண்டிருக்கிறது” என்று தோழி கூற்றாக அமைந்த இப்பாடற்கண், தோழி தலைவனிடம் “தலைவி இறந்து விடுவாள்” என்று வன்சொற்கூறி, அவன் பொருட்பிரிவை விலக்கலுற்றமையால்’ இது வன்சொல் விலக்காயிற்று. (தண்டி. 45-1) வன்மை அணி - தம்மை விரும்பாதார்மேல் தோன்றும் காமமும், தகாத இடத்துத் தோன்றும் நகை போன்றவையும் செய்யுளின் கருத்துக்குத் துணையாய்த் தோன்றுவது. இதனை வட நூலார் ஊர்ஜஸ்வி (-வன்மையுடையது) அலங்காரம் என இத்தகைய சுவையுணர்வுகளை ‘ரஸாபாஸம்’ (-சுவைப் போலி) என்ப. எ-டு : “மன்னவ! உன் பகைவர்களின் மனைவியர் காட்டில் ஓடுங்கால், அவர்களை வலிதில் தழுவ விரும்பிச் சென்ற வேடர்கள், அந்த மகளிருடைய துடித் தெழுந்த துயரத்தால் விம்மும் தனங்களையும் அச்சத் தால் மருண்டு நாற்புறமும் பாய்ந்தோடும் கண்களை யும் கண்டு, தாம் சென்ற செயலையும் மறந்து, மயிர்க் கூச்செறிய உணர்வழிந்து தம்பித்து நிற்கின்றனர்” என்ற இப்பாடற்கண், பாடிய புலவருக்கு மன்னன்பால் உள்ள பெருவிருப்பம் என்ற மெய்ப்பாட்டிற்கு வேடர் களின் காமச்சுவை துணையாய்த் தோன்றியமையின் (-தலைமையின்றி அங்கமாகவே தோன்றியமையின்), இவ்வன்மை யணி பயின்றவாறு. (கு. வ. 103) வனப்பு நிலை அணி - விளக்கிக் கூற வேண்டிய கருத்துக்கு அடைமொழியாகக் கூற வேண்டிய செய்தியை மறைத்து, அது போல்வதாகிய பிறிதொரு செய்தியை அடைமொழி ஆக்குதல். இதனை லலிதாலங்காரம் என வடநூல்கள் கூறும். எ-டு: ‘பெரு(கு)அறல்முற் றும் போன பின்கரைகோ லற்(கு)இத் திருஅனையாள் வேட்டல் செயும்.’ பரத்தையிற் பிரிந்த தலைவன் சிறிது அன்பொடு தலைவியை அணுகினான். அவனைக் கூடாது தலைவி ஊடலால் நீக்கினாள். அவனும் ஊடல் கொண்டு அவளை விடுத்து வேறொருத்தியின் தொடர்பு கொண்டான். அவன் மனத்தை மாற்றி அவனை மீண்டும் தன்னிடம் அழைத்து வருமாறு தலைவி தோழியை வேண்டினாள். அப்பொழுது தோழி கூறிய செய்தி இது. ‘‘திரு அனையாள் வேட்டல் செயும்’ என்பது கூற வேண்டிய செய்தி. அதற்கு அடை, ‘உரிய காலத்தில் கணவனை அடைய மறுத்து அவன் கோபம் கொண்டு தன்னை நீத்த பின்னர்’ என்பது. அதனை விடுத்து, ‘வெள்ளமெல்லாம் போன பின்னர்க் கரை கோலுவாரைப் போல’ என, அது போல்வதா கிய பிறிதொரு தொடரை அடைமொழி ஆக்கியது இவ் வணியாம். இஃது ஒட்டணியின் பாற்படும். (ச. 92, குவ. 66) வஸ்தூத்ப்ரேக்ஷhலங்காரம் - இது தமிழில் பொருள் தற்குறிப்பேற்ற அணி எனப்படும். அது விரிபுலப் பொருள் தற்குறிப்பு, தொகுபுலப் பொருள் தற் குறிப்பு என இருவகைப்படும். ‘தற்குறிப்பணி’ நோக்குக. (குவ. 12) வஸ்தூபமா - தொகை உவமை; அது காண்க. வாக்கியப் பொருள் உவமை - பலசொற்கள் சேர்ந்த சொற்றொடர் உபமானமாகக் கூறப்படுவது. எ-டு : ‘வெண்ணிலவும் தண்ணளியும் மென்மையும் சேருமால் அண்ண லதுவெண் குடை’ வெண்குடைக்கு வெண்ணிலவு, தண்ணளி, மென்மை என்ற இவற்றது தொகுதியை உவமையாகக் கூறுதலின் இவ்வுவமை யாம். (வீ. சோ. 157 உரை.) வாழ்த்து அணி - இன்னார்க்கு இன்னது நிகழ்க என வாழ்த்தும் வகையில் தாம் கருதியதைக் கூறுதல். எ-டு : ‘மூவாத் தமிழ்பயந்த முன்னூல் முனிவாழி! ஆவாழி! வாழி, அருமறையோர்! - காவிரிநாட்(டு) அண்ணல் அநபாயன் வாழி! அவன் குடைக்கீழ் மண்ணுலகில் வாழி, மழை!’ அகத்தியன், பசுக்கள், மறையோர், அநபாய சோழன், மழை எனப் பலரையும் வாழ்த்தும் வாழ்த்துக்கள் வந்துள்ளமை யால் இது ‘வாழ்த்து அணி’ ஆயிற்று. ‘ஆசி அணி’ எனவும் இது வழங்கும். இஃது ‘அமரர்கண் முடியும் அறுவகை வாழ்த்து’ (தொ.பொ. 81 நச்) என்பதன்பாற்படும். (தண்டி. 88-1) வாழ்த்து அணியின் மறுபெயர் - ஆசி அணி. (வீ. சோ. 175) வாழ்த்துத் தடைமொழி அணி - வாழ்த்து விலக்கணியின் மறுபெயர் இது. அவ்வணி நோக்குக. (வீ. சோ. 163) வாழ்த்து விலக்கு அணி - இது முன்ன விலக்கு அணிவகைகளுள் ஒன்று; வாழ்த்துக் கூறி விலக்குதல். எ-டு : ‘செல்லும் நெறிஅனைத்தும் சேம நெறியாக! மல்க நிதியம்! வளம்சுரக்க! - வெல்லும் அடல்தேர் விடலை! அகன்றுறைவ(து) யாங்கவ் இடத்தே பிறக்கவே யாம்’ “தலைவ! நீ போகும் வழிகளனைத்தும் நினக்குச் சேமம் தருவனவே ஆகுக! நின் செல்வமும் பெருகுக! வளம் சுரந்திடுக! நீ எங்களைப் பிரிந்து சென்று எங்கு உறைவாயோ, அங்கேயே யாம் மீண்டும் பிறக்கக் கடவேமாக!” என்ற இத்தோழி கூற்றில், அவள் தலைவனை வாழ்த்தும் சொற்க ளால் தலைவியது இறந்துபாடு நேரும் என்று கூறித் தலைவ னது போக்கினை விலக்கியதால் இது வாழ்த்து விலக்கணி ஆயிற்று. (தண்டி. 45-2) வாளாது தன்மை கூறுதல் - உவமம் ஏதும் கூறாது தனியே ஓரிடத்தின் தன்மையை உள்ளவாறு வன்னனை செய்தல். எ-டு : ‘மான்தோற் பள்ளி மகவொடு முடங்கி ஈன்பிண (வு) ஒழியப் போகி நோன்காழ் இரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோல் உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி இருநிலக் கரம்பைப் படுநீறு ஆடி நுண்புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர் பார்வை யாத்த பறைத்தாள் விளவின் நீழல் முன்றில் நிலவுரற் பெய்து’ (பெரும்பாண். 89 - 96) பிள்ளையைப் பெற்ற எயிற்றி மான்தோலாகிய படுக்கையில் அப்பிள்ளையொடு முடங்கிக் கிடக்கிறாள். ஏனைய மகளிர், பூண் தலையிற் கொண்ட கூரிய வலிய பாரைகளாலே கரம்பை நிலத்தைப் பெயர்த்துத் தள்ளி உள்ளே (எறும்பு களால்) சேமித்து வைக்கப்பட்ட மெல்லிய புல்லரிசியை அக்கரம்பை நிலத்து வெண்புழுதி மேலே படியாநிற்க, வாரிக் கொடு வந்து, பார்வைமான் கட்டியிருந்த விளமரத்தின் நிழ லில் அமைந்த நிலஉரலிலே அவ் அரிசியை இட்டுக் குற்று கின்றனர் - என உவமம் ஏதுமின்றி வருணனை செய்தவாறு காண்க. (தொ. பொ. 309 பேரா.) விக்கிரிய உவமை - இது விகார உவமை எனவும்படும்; அதுகாண்க. (வீ. சோ. 157) விக்கிரியோபமா - விகார உவமை. விகல்பாலங்காரம் - உறழ்ச்சி அணி; அது காண்க. விகஸ்வராலங்காரம் - மலர்ச்சி அணி: அதுகாண்க. விகார உவமை அணி - உவமை அணிவகைகளுள் ஒன்று; உவமைப் பொருளை நேராகக் கூறாமல் அதன் சிறந்த கூறு ஒன்றனைக் கொண்டு, அதற்கு மேல் கற்பனை செய்து உவமிப்பது. எ-டு : ‘சீத மதியின் ஒளியும் செழுங்கமலப் போதின் புதுமலர்ச்சி யும் கொண்டு - வேதாதன் கைம்மலரான் அன்றிக் கருத்தான் வகுத்தமைத்தான் மொய்ம்மலர்ப்பூங் கோதை முகம்.’ “இப்பூங்கோதையாளது முகத்தைப் பிரமன் தன்கைகளால் படைக்காமல், சந்திரனது ஒளியையும் தாமரைப் பூவின் புதுமலர்ச்சியையும் கொண்டு, தன் மனத்தால் படைத்தான்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், சந்திரனையும் தாமரையையும் நேராக உவமை கூறாமல், சந்திரனது ஒளியை யும் தாமரையினது மலர்ச்சியையும் கொண்டு கற்பனையால் படைத்த விகாரம் தோன்ற உவமை கூறியமையால், விகார உவமை வந்தது. (தண்டி. 32-17) விகார உவமைக்கும் அபூத உவமைக்குமிடையே வேறுபாடு - உவமைப்பொருளை நேராகக் கூறாது அதன் சிறந்த கூறு ஒன்றனைக் கொண்டு அதன்மேல் கற்பனை செய்து உவ மிப்பது விகார உவமை. எ-டு : மதியின் ஒளியும் தாமரையின் புதுமலர்ச்சியும் கொண்டு தலைவி முகம் நான்முகன் கருத்தால் அமைக்கப்பட்டது என்பது. எனவே, விகார உவமை உள்ளன வாகிய பொருள்களைக் கொண்டு கற்பனை செய்வது. உலகில் இல்லாத ஒரு பொருளை உவமை செய்துரைப்பது இல்பொருள் உவமை என்னும் அபூத உவமையாம். எ-டு: கூடா ஒழுக்க முடைய போலித் துறவியின் செயற்குப் பெற்றம் புலியின் தோலைப் போர்த்து வயலில் பசும்பயிர் களை மேய்தலை உவமை கூறுதல் (குறள்- 273) பெற்றம்புலித் தோலை போர்த்தல் என்பது இல்பொருளாதலின் அவ் வுவமை அபூத உவமையாம். ஆகவே, உலகியலில் உள்ள பொருள்களைக் கொண்டு செயற்கையாகக் கற்பனை செய்து கூறும் விகார உவமையி னின்று, இல்லாத பொருளை உவமை கூறும் அபூத உவமை வேறுபாடுடையது. (இ. வி. 640 உரை) விகார உவமையின் பாற்படுவது - உவமப் பொருளை நேராகக் கூறாமல் அதன் சிறந்த கூறு ஒன்றனைக் கொண்டு அதற்குமேல் கற்பனை செய்து உவமிப்பது விகார உவமை எனப்படும். அதனொடு, முதலில் உபமேயமாகக் கூறிய ஒன்றையே பின்னர் வேறொரு காரணம் பற்றி உபமானமாகக் கூறும் வேறுபாடு காரணத்தால் பின் வரும் பாடற்கண் காண்பதுபோன்ற அமைப்பையும் விகார உவமையின் பாற்படுத்துவர். எ-டு : ‘முத்துக்கோத் தன்ன முறுவல், முறுவலே ஒத்தரும்பு முல்லைக் கொடி மருங்குல் - மற்றதன் மேல் விண் அளிக்கும் கார்போல் விரைக்கூந்தல் மெல்லியலார் தண்ணளிக்கும் உண்டோ தரம்.’ “முத்துக் கோத்தாற் போன்ற பற்கள்; பற்களைப் போன்ற அரும்புகளையுடைய முல்லைக்கொடி போன்ற இடை; இடைமேல் கார்மேகம் போன்ற மணம் கமழும் கூந்தல்; இவற்றையுடைய இப்பெண்பாலார் செய்யும் கருணைக்கு ஈடு உண்டோ?” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், முதலில் முறுவலை (முத்துக் கோத்தாற் போன்ற பற்கள் என்று) உபமேயமாக்கி, பின் அதனையே உபமானமாக்கிச் செய் துள்ள புதுமை காரணத்தால் இது விகார உவமையின் பாற்பட்டதாகக் கொள்ளப்பட்டது. (தண்டி. 32-17) (இ. வி. 645) விச்வ வ்யாபி - ‘முழுவதும் சேறல்’; வேற்றுப் பொருள் வைப்பணிவகை களுள் ஒன்று.; அது காண்க. விசித்திராலங்காரம் - வியப்பு அணி; அது காண்க. விசேட அணி - விசேடம் - சிறப்பு. குணமும் தொழிலும் பொருளும் சாதியும் உறுப்பும் முதலாயின குறைபடுதல் காரணமாக, ஒரு பொருட்குச் சிறப்புத் தோன்ற உரைப்பது. இது வடமொழி யில் ‘விசேஷோக்தி’ என வழங்கப்படுகிறது. (தண்டி. 79) விசேட அணியின் மறுபெயர்கள் - 1 சிறப்பு அணி (வீ. சோ. 173), 2. சிறப்பு (நிலை) அணி என்பன. விசேட அணியின் வகைகள் - சாதிக்குறை விசேடம், குணக்குறைவிசேடம், தொழிற்குறை விசேடம், பொருட்குறை விசேடம், இடக்குறை விசேடம், உறுப்புக் குறை விசேடம் என்பன. தனித்தனியே காண்க. (மா. அ. 184) விசேடக்கரு - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (68) வருவதோர் அணி. காரணம் இருப்பவும் காரியம் முடியவில்லை என்று கூறுவது. இது காரண ஆராய்ச்சி அணி எனப்படும். அது காண்க. விசேஷணரூபகம் - சிறப்புருவகம்; அது காண்க. விசேஷஸ்தம் - ஒருவழிச்சேறல்; வேற்றுப் பொருள்வைப்பணி வகைகளுள் ஒன்று. அது காண்க. விசேஷாலங்காரம் - விசேட அணி, சிறப்பு அணி, சிறப்பு நிலை அணி என்பனவும் அது. விசேஷோக்தி அலங்காரம் - காரண ஆராய்ச்சி அணி; அது காண்க. விடம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (71, 72) வருவதோர் அணி. 1. மற்றொரு பொருளொடு கூடாது பிரிந்து இருப்பதனை அப்பொருளொடும் கூட்டுவது. எ-டு : சிவபெருமான் சடையிலிருக்கும் பிறை அவரை விரும்பும் மகளிர்க்கு நோய்தருவது. அவர் சடை யில் அணிந்துள்ள கொன்றை நோய்மருந்தாக உள்ளது. (சி. செ. கோ 44) இங்ஙனம் நோய் தருவதும் மருந்தாவதும் ஒரு வழியே கிட்டின என்று கூறுவது இவ்வணி. 2. விருப்பமாக எண்ணிச் செய்த காரியம் துன்பமாக முடிவது. எ-டு : பாம்பை அடக்கிய பெட்டிக்குள் உணவிருக்கும் என்று அதனைத் தொளையிட்ட எலி, உள்ளிருந்த பாம்புக்கு இரையாயினமை போல்வது. இது தகுதியின்மை அணி எனப்படும்; அது காண்க. விடைஇல் வினா அணி - பிறர் விடை கூறுவதை எதிர்பாராமல் முன்னிலையல்லாரை யும் அஃறிணைப் பொருள்களையும் ‘கேட்குந போலவும் கிளக்குந போலவும், இயங்குந போலவும் இயற்றுந போலவும்’ விளித்துத் தன் மனக்கருத்தை உரைத்து வினவுதல். எ-டு : ‘துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய்! பணையார வாரத்தான் பாட்டோவாப் பழனத்தான் கணையார இருவிசும்பில் கடியரணம் பொடிசெய்த இணையார மார்பன்னென் எழில்நலனுண் டிகழ்வானோ?’ (தேவா. 4 : 12-7) எனத் தலைவி நாரையைத் தன் தலைவனைப் பற்றி வினவுதல் போல்வன. இவ்வணி அதிசயமும் ஐயமும் மகிழ்ச்சியும் சினமும் முதலியவற்றைக் காட்டவும், ஒன்றனை மறுப்பவும், நொந்து புலம்பவும் உதவும். இது தொன்னூல் விளக்கத்திலேயே காணப்படுகிறது. (தொ. வி. 362) விடை இல் வினா அணி வகைகள் - அதிசய விடையில் வினா, ஐய விடையில் வினா, மகிழ்ச்சி விடையில் வினா, மறுப்பு விடையில் வினா, நொந்துபுலம்பும் விடையில் வினா - என ஐந்து. (விடை இல்- விடையை எதிர் நோக்குதல் இல்லாத) (தொ. வி. 362) 1. அதிசய விடைஇல் வினா அணி - இதுவிடை இல் வினா அணிவகை ஐந்தனுள் ஒன்று. எ-டு : ‘மின்னோ பொழிலின் விளையாடும் இவ்வுருவம் பொன்னோ எனும்சுணங்கின் பூங்கொடியோ’ (தண்டி 45-13) இவ்வாறு தலைவன் தலைவியின் உடலுடைய ஒளியும் வனப்பும் கண்டு வியப்புற்றுத் தன்னுள் வினாவியது, தலைவி யிடமோ வேறுயாரிடமோ என விடை தெரிந்துகொள்ளும் நோக்கம் பற்றி அன்று ஆதலின், இஃது இவ்வகை விடைஇல் வினாஅணி ஆயிற்று. 2. ஐய விடைஇல் வினா அணி - இது விடை இல் வினாஅணிவகை ஐந்தனுள் ஒன்று, எ-டு : ‘சென்றது கொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும் நின்றதுகொல் நேர்மருங்கிற் கையூன்றி - முன்றில் முழங்கும் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்கு உழந்துபின் சென்றஎன் நெஞ்சு’ (முத்தொள்) நெஞ்சினைப் பாண்டியன்பால் தூதுவிடுத்த தலைவி அது சென்றதோ, போந்ததோ, நின்றதோ என்று நெஞ்சின் இயக்கம் பற்றி ஐயுற்று வினவியது, ஐய விடைஇல் வினா அணியாயிற்று. 3. மகிழ்ச்சி விடைஇல் வினா அணி - இது விடை இல் வினா அணிவகை ஐந்தனுள் ஒன்று. எ-டு : ‘ஏறனை, பூவனை, பூமகள் தன்னை, வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து மேல்தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட மால்தனின் மிக்குமோர் தேவும் உளதோ?’ (திருவாய். 2-2-3.) திருமாலுடைய சிறப்புக்களைக் கண்டு மகிழ்ந்து. அப்பெரு மானை விட மேற்பட்ட தெய்வமுண்டோ என்று பிறரிடம் விடையை வேண்டாது மகிழ்ச்சியால் வினாவிய இதன்கண் இவ்வணிவகை வந்தது. 4. மறுப்பு விடைஇல் வினா அணி - இது விடைஇல் வினா அணி வகை ஐந்தனுள் ஒன்று. எ-டு : ‘மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை, பண்பொருந்தி இசைபாடும் பழனம்சேர் அப்பனை, என் கண்பொருந்து போதத்தும் கைவிடநான் கடவேனோ’ (தேவா. 4. 12-5) யாவர்க்கும் வீடுபேறு அருளும் பழனத்துப் பெருமானை என்னுயிர் போகும் காலத்திலும் நான் கை விடுவேனோ என்று வினவுமிடத்தே, (கைவிடமாட்டேன் என்னும் எதிர் மறைப் பொருட்டு, ஓகாரவினா இடைச்சொல்) இவ்வணி வகை வந்தவாறு. 5. நொந்து புலம்பும் விடை இல் வினா அணி- இதுவிடை இல் வினா அணிவகை ஐந்தனுள் இறுதியாவது. எ-டு : ‘முன்னொருகால் என்மகனைக் கண்டேன் களிகூரப் பின்னொருகால் காணப்பெறாத(து)என் தேவிர்காள்’ (சீவக. 1807) தன்மகன் சீவகன் இறந்துவிட்டதாகக் கருதி மயங்கிப் புலம்பும் விசயமாதேவியின் இக்கூற்றில், இவ்வணி வகை பயின்றுள்ளது. (தொ.வி. 362) வித்தாரகவி - விரிவாகப் பாடப்படுவதால் வித்தாரம் எனப்பெறும் இக்கவி தொடர்நிலைப்பாட்டு எனவும், பல அடியான் நடக்கும் தனிப்பாட்டு எனவும் இரண்டு கூறாம். இதற்கு விருத்தக் கவிதை, அகலப்பா என வேறு பெயர்களும் வழங்குவன. (இ. வி. பாட். 7) விதர்ப்பர் கூறும் பத்து ஆவிகள் - 1. சிலிட்டம் - நெகிழிசை யில்லாத செறிவு, 2. உதாரதை - குறிப்பினால் ஒரு பொருள் தோற்றும் உதாரம், 3. காந்தி - உலகநடையைக் கடவாத காந்தம், 4. பொருள் விளங்கி யிருப்பதாகிய தெளிவு, 5. சமதை - விரவத்தொடுக்கும் சமநிலை, 6. சமாதி - உபமானத்தின் வினையை உபமேயத்திற்கு உரைப்பது, 7. ஓசம் - தொகைகள் மிகுதியாக வரும் வலி, 8. பொருட்டெளிவு - பொருள் புலப்படுக்கும் தெளிவு, 9. சுகுமாரதை - தடையில்லாத ஒழுகிசை என்னும் இன்னிசை, 10. இன்பம் - சொல்லின்பமும் பொருளின்பமும் என்பன. (வீ. சோ. 148) விதி அணி - உலகறிந்த ஒரு பொருளின் நியதி ஒரு கருத்தை அடிப்படை யாகக் கொண்டு வருவது, இதனை இப்பெயராலேயே விதியலங்காரம் என வடநூல்களும் விளம்பும். எ-டு : ‘குயில்குயிலே ஆகும் குவலயத்தில் சீர்மிக்(கு) உயர்வசந்த காலம் உறின்’ பார்ப்பதற்குக் காகம் போன்ற பிற பறவைகளும் குயில் போலத் தோற்றமளித்தாலும், குயில்முட்டை காக்கை கூட்டில் அடைகாக்கப்பட்டுப் பார்ப்பாகிய நிலையில் காக்கை போலவே தோன்றினும், குயில் இளவேனிற் காலத் தில் கூவும் குரலான் அறுதியிட்டு உறுதியாக உணரப்படும். வடிவான் அறிய முடியாத நிலையிலும் குரலால் குயில் அறியப்படும். ‘குயில் குயிலே ஆகும்’ என்பது உலகு அறிந்த நியதி (-விதி); வேனில் அதனை வெளிப்படுத்தும் என்பது உடன் உணரவேண்டிய கருத்தாம் என்பது. வசந்த காலத்தில் குயில் குயிலே ஆகும் என்பது உறுதிப்படும் என்பதன்கண் விதி அணி வந்துள்ளது. (ச. 125; குவ. 99) விதி சிறப்பு - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (74) வருவதோர் அணி. ஒரு காலத்தில் ஒரு செயலால் விருப்பும் வெறுப்பும் கலந்து வருவது. எ-டு : அரசர்கள் சீதையை மணத்தலில் விருப்பும், வில்லை வளைத்தலில் வெறுப்பும் ஒரே காலத்துப் பெற்றாற் போல்வன. (‘வல்வில்லுக்(கு) ஆற்றார்கள் மாரவேள் வளைகரும்பின், மெல்வில்லுக்(கு) ஆற்றாராய்’ (கம்பரா. 686) அரசர் நின்றமை.) விதிரேக அணி - இது வேற்றுமை அணி எனவும் படும்; அது காண்க. (வீ. சோ. 165) விதிரேக உருவகம் - இது வேற்றுமை உருவகம் எனவும்படும்; அது காண்க. (வீ. சோ. 161) விநோத்தி - இஃது ‘இன்மை நவிற்சியணி’ எனப்படும். யாதேனும் ஒரு பொருள் இணையாமையால் தான் சிறப்பிக்க எடுத்துக்கொண்ட பொருள் உயர்வு அடைவதாகவோ, தாழ்வு அடைவதாகவோ கூறுவது இவ்வணி என்று சந்திரா லோகம் கூறும். (சு. 47, குவ. 22) ஒரு முக்கியமான பொருள் பிறிதொரு முக்கியமான பொரு ளொடு சேரவில்லையெனின், அது முக்கியப் பொருளன்று என்று விநோத்தி அணியை மாறனலங்காரம் விளக்குகிறது. எவ்வளவு அணிநலமுடைய பாடலாயினும் இறைவனுடைய தொடர்பற்ற பாடலாயின், அதனைச் சான்றோர் கொள் ளார் என்பது போல்வன இதற்கு எடுத்துக்காட்டாம். (மா. அ. 236) விநோதப் புகழ்ச்சி - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (117) வருவதோர் அணி. உபமானமாகக் கூறப்படும் பொருள்களில் சிலவற்றினைப் பழித்து ஒன்றனை உவமை கூறுவது. எ-டு : தலைவியது முகம், தண்மதிக்குத் தோற்றுத் தாழ் தடத்துள் வைகி முள் மருவும் தாளின்மேல் முகிழ்க்கும் தாமரையினை ஒவ்வாது சந்திரனையே ஒக்கும் (தண்டி. 37-8) என்றல் போல்வன. ‘விரூபக உருவகம்’ காண்க. விபர்யயம் - விபரீதப்படுத்தல்: வேற்றுப்பொருள் வைப்பணி வகைகளுள் ஒன்று. அதுகாண்க. விபர்யாஸோபமா - தெற்றுவமை, விபரீத உவமை எனப்படும் ‘விபரீத உவமை’ காண்க. விபரீத உவமை அணி - உவமையணி வகைகளுள் ஒன்று. விபரீதம் மாறுபட்டநிலை. உலகறிந்த உபமானத்தை உபமேயமாகவும், உபமேயத்தை உபமானமாகவும் அமைப்பது இதன் இலக்கணம். உபமேயத் திற்குச் சிறப்புக் கூறல் நோக்கமே யன்றி உவமை வேண்டா என்பதில்லையாதலின், இது வழுவாகாது என்பது. எ-டு : ’திருமுகம் போல்மலரும் செய்ய கமலம்; கருநெடுங்கண் போலும் கயல்கள்; - அரிவை இயல்போலும் மஞ்ஞை; இடைபோலும் கொம்பர் மயல்போலும் யாம்போம் வழி.’ “பெண்ணின் முகம் போலத் தாமரை மலரும்; கயல், அவளுடைய கண்களைப் போல பிறழும்; மயில், அவளுடைய இயலை ஒத்த சாயலுடையது; அவளது இடைபோல நுடங்குவது, கொடி, நாம்போம் வழி மயக்கம் தருவது போலும்” என்ற பொருளையுடைய இப்பாடற்கண், உபமானமாக மேற் றொட்டுச் சொல்லப்படுவன யாவும் உபமேயமாக மாறு படச் சொல்லப்பட்டமையால் விபரீத உவமையாயிற்று. இஃது எதிர்நிலை அணி எனத் தனியணியாகச் சந்திரா லோகத்தில் கூறப்படும். (ச. 10. குவ. 4) தண்டி. 32 - 14 விபரீத உவமையும், புகழ்பொருள் உவமையும் - விபரீத உவமையாவது உபமேயத்தை உபமானமாகவும், உபமானத்தை உபமேயமாகவும் மாற்றிக் கூறுவது. எ-டு : முகம் போன்ற தாமரை. (தண்டி. 32 - 14) புகழ்பொருள் உவமையாவது உபமானத்தை மாத்திரம் அடைகொடுத்துச் சிறப்பிப்பது. ‘இறையோன் சடைமுடிமேல் எந்நாளும் தங்கும் பிறைஞர் திருதுதலும் பெற்றது’ உபமானத்திற்கு ‘இறையோன்...... பிறை’ என்று அடைகொடுத்து உபமயமாகிய நுதலுக்கு அத்தகைய அடைவழங்காது விடுதல் புகழ்பொருள் உவமையாம். (தண்டி. 32-7) விபரீதத்து இசைத்தல் - இது விபரீதப்படுத்தல் என்னும் வேற்றுப்பொருள் வைப்பணி வகை. அது காண்க. (மா. அ. 207, 208) விபரீதப்படுத்தல் வேற்றுப்பொருள் வைப்பு அணி - ஒரு பொதுப்பொருளை விபரீதப்படுத்தி ( - மாறுபட)க்கூறி, ஒரு சிறப்புப் பொருளைக் காட்டுதல் இதன் இலக்கணம். வேற்றுப் பொருள் வைப்பணியின் வகையெட்டனுள் ஒன்று. எ-டு : தலை இழந்தான் எவ்வுயிரும் தந்தான்; - பிதாவைக் கொலைபுரிந்தான் குற்றம் கடிந்தான்; - உலகில் தனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேல், தப்பாம் வினையும் விபரீதம் ஆம்.’ எல்லா உயிர்களையும் படைத்த பிரமன் சிவபெருமானால் தன் தலையை இழந்தான்; தந்தையாகிய எச்சதத்தன் காலை வெட்டிய விசாரசருமன் குற்றம் நீங்கி உயர்ந்த பதவியையும் பெற்றான். உலகில் மிக மேம்பட்டவர்கள் நினைத்தால், தவறான செயலும் உயர்ந்த செயலாக மாறுபடும்,” என்று பொருள்படும் இப்பாடற்கண், விசாரசருமன் செய்த தீவினை நல்வினையாகி அவனுக்கு உயர்வே தந்த சிறப்புப் பொருளை “உயர்ந்தோர் விரும்பினால் தீயதும் நல்லதாய் விபரீதப் படும்” எனப் பொதுப்பொருளைக் காட்டி அதனால் விளக்கியதால், இது விபரீதப்படுத்தல் வேற்றுப்பொருள் வைப்பணி யாயிற்று. இவ்வணிவகையை ’விபரீதத்து இயம்பல்’ (மா. அ. 208) எனவும், ’விபரீதப் பிறபொருள் வைப்பு’ (வீ. சோ. 162 உரை) எனவும் கூறுப. (தண்டி. 48 - 8) விபாவனை அணி - ஒரு செயலுக்கு உலகம் அறிந்த காரணத்தை மறுத்து ஒழித்துப் பிறிதொரு காரணத்தை இயல்பினாலோ குறிப்பி னாலோ வெளிப்படும் வகையில் காட்டுதல். கவி, தன் கற்பனையால் காரணமொன்றை விசேடமாகப் பாவித்து (-கருதி) உரைத் தமையின் இது விபாவனை எனப்பட்டது. 1. அயற்காரண விபாவனை, 2. இயல்பு விபாவனை. 3. குறிப்பு விபாவனை, 4. வினை எதிர்மறுத்துப் பொருள் புலப்படுத்தல் விபாவனை, 5. காரணம் விலக்கிக் காரியம் புலப்படுத்தல் விபாவனை என இஃது ஐந்து வகைப்படும். இவற்றைத் தனித்தனித் தலைப்புக்களில் காண்க. (தண்டி. 51; மா. அ. 209, 210) விபாவனை அணியின் மறுபெயர்கள் - பிறிது ஆராய்ச்சி அணி (ச. 60, குவ. 34), வெளிப்படை அணி (வீ. சோ. 153 உரை) என்பன. வியத்த ரூபகம் - வியஸ்த ரூபகம்; ‘விரிஉருவகம்’ காண்க. வியப்ப என்னும் உவம உருபு - ‘தண்தளிர் வியப்பத் தகைபெறு மேனி’ குளிர்ந்த தளிரை ஒப்ப அழகுடைய உடல் என்று பொருள் படும் இத்தொடரில், வியப்ப என்பது உருஉவமப் பொருட் கண் வந்தது. இஃது உருஉவமத்திற்கே சிறந்த உருபாம். (தொ. பொ. 291 பேரா.) வியப்பு அணி - ஒரு பயனைக் கருதி அதற்குப் பகையாகிய முயற்சியைச் செய்வது. இது விசித்ராலங்காரம் என வட நூலிற் கூறப்படும். எ-டு : ‘ஓதும் திறத்தில் உயர்ந்தோர்கள் தாழ்குவர்எப் போதும் உயர்வெய்தற் பொருட்டு.’ உயர்ந்தவர் தம் கல்விச் செருக்கால் பெருமித முற்றிராமல், கல்வி மேன்மேல் வளர்வதற்குத் தாம் அடக்கமாகத் தாழ்ந் திருப்பர் என்ற கருத்தின்கண், உயர்ந்தோர் மேன்மேல் உயர் தற்கு அடக்கமாக இருத்தலைக் கூறுதற்கண் வியப்பணி வந்துள்ளது. (மு. வீ. பொருளணி. 41, ச. 66 குவ. 40) வியப்புச்சுவை அணி - இது சுவையணியின் எண்வகைகளுள் ஒன்று. புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்ற நான்கு நிலைக்களன்கள் பற்றியும் வியப்புச் சுவை தோன்றும். இது மருட்கைச் சுவை எனவும் வழங்கப் பெறும். எ-டு : ‘முத்தரும்பிச் செம்பொன் முறிததைந்து பைந்துகிரின் தொத்தலர்ந்து பல்கலனும் சூழ்ந்தொளிரும் - கொத்தினதாம் பொன்ஏர் மணிகொழிக்கும் பூங்கா விரிநாடன் தன்நேர் பொழியும் தரு.’ சோழமன்னனுக்கு நிகராகக் கொடுக்கும் கற்பகமரம் முத்துக்களை அரும்பி, பொன் மயமான தளிர்கள் செறிந்து, பவளத்தின் கொத்து மலர்ந்து, பல அணிகலன்களும் சூழ்ந்து ஒளிவீசும் கிளைகளை யுடையது என்ற கருத்துடைய இப் பாடற்கண், முத்து பொன் பவளம் முதலியவற்றை மரம் தன் உறுப்புக்களாகக் கொண்டிருக்கும் வியப்புச் சுவை புலப்படு கிறது. (தண்டி. 70 - 4) வியனிலை உருவக அணி - உருவக அணிவகைகளுள் ஒன்று; பொருளின் பல உறுப்புக் களில் சிலவற்றை மாத்திரமே உருவகம் செய்து, உறுப்பியை யும் உருவகம் செய்தல். எ-டு : ‘செவ்வாய் நகை அரும்பச் செங்கைத் தளிர்விளங்க மைவாள் நெடுங்கண் மதர்த்துலவச் - செவ்வி நற(வு)அலரும் சோலைவாய் நின்றதே நண்பா! குறவர் மடமகளாம் கொம்பு.’ இதன்கண், உறுப்பியை மடமகளாகிய கொடி என உருவ கித்து, செவ்வாய் செங்கை என்பனவற்றையும் முறையே நகை தளிர் என உருவகித்து, கண் என்ற உறுப்பினை உருவகிக்காது விடுத்தமை இவ்வணியாயிற்று. (தண்டி. 37-4) வியஸ்த ரூபகம் - விரி உருவகம்; அது காண்க. வியாகாத அலங்காரம் - மற்றதற்கு ஆக்கல் அணி; அது காண்க. வியாசத் துதி - (வியாஜஸ்துதி) இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (66) வருவதோர் அணி. பொய்க்காரணம் காட்டிப் புகழ்வது. எ-டு : தலைவன் தலைவியை நலம் பாராட்டும்வழிக் கூறுவது போல்வன. ‘மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞைநின் சாயற்(கு) இடைந்து தண்கான் அடையவும்’ (சிலப். 2 -53,54) எனக் கோவலன் கண்ணகியிடம் கூறியது போல்வன. வியாச(ஜ) நிந்தை - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (65) வருவதோர் அணி. ஒரு பொருளின் கோட்பொருளையோ புனைபொருளை யோ ஒரு காரணம் காட்டிப் பழிப்பது. எ-டு : ஓடும் திமில்கொண்(டு) உயிர்கொள்வர் நின்ஐயர் கோடும் புருவத்(து) உயிர்கொள்வை மன்நீயும்’ (சிலப். 7 : 19) என்று தலைவன் பொய்க்காரணம் காட்டித் தலைவியை பழிப்பது போல்வன. வியோகக் கருத்து - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (47, 48) வருவதோர் அணி. 1. ஒரு பொருள் இல்லாததனால் மற்றொன்று சிறப்புற்றது எனக் கூறுவது. எ-டு : கதிரவன் இன்மையின் மதி இரவில் ஒளிசெய்கிறது என்பது. 2. ஒரு குணம் இல்லாததனால் ஒருபொருள் சிறவாது எனக் கூறுவது. எ-டு : ‘புறத்துறுப்(பு) எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்(பு) அன்பி லவர்க்கு.’ (கு. 79) விரவத்தொடுத்தல் ஒட்டு அணி - ஒட்டுஅணியின் நான்கு வகைகளில் ஒன்று. இஃது ‘அடை விரவிப் பொருள் வேறுபட வந்த ஒட்டணி, என்று வகைப் படுத்தப்பட்டது. அத்தலைப்பில் காண்க. (தண்டி. 53 - 3) விரவியல் - சங்கீரணம். (வீ.சோ. 176 உரை). ‘விரவு’ என்பதும் அவ் வணியே. ‘சங்கீரன அணி’ காண்க. விரவியல் மறுபொருள் வைப்பு அணி - இஃது ‘இருமை இயற்கை வேற்றுமைப்பொருள் வைப்பணி’ யின் மறுபெயர். அது நோக்குக. (வீ. சோ. 162) விரவு உவமம் - வினை பயன் மெய் உரு என்ற உவமை வகை நான்கனுள் ஏதேனும் ஒன்று பற்றி உவமம் கொள்ளாது இரண்டு மூன்று பற்றி உவமம் கொள்வது. எ-டு : ‘செவ்வான் அன்ன மேனி’ (அகநா. கடவுள்.) - உரு (-நிறம்) உவமம். இஃது ஒன்று பற்றியே கொண்டது. ‘இலங்குபிறை அன்ன விலங்குவால் வையெயிற்று’ (அகநா. கடவுள்.) வடிவமும் நிறமும் பற்றிய உவமம். ‘........................... காந்தள் அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி கையாடு வட்டின் தோன்றும்’ (அகநா. 108) வினையும் வடிவும் நிறமும் பற்றி உவமங்கள் வந்தன. இவ்வாறு வருவன விரவு உவமங்களாம். விரா - ‘விராவு எனினும் ஆம்; விராவலங்காரம்; சங்கீரண அணி எனப்படுவதும் அது.’ ‘சங்கீரண அணி’ காண்க. (வீ. சோ. 176) விராவலங்காரம் - ‘சங்கீரணம்’ காண்க. விரிஉருவக அணி - உருவக அணி வகைகளில் ஒன்று. உபமானத்தையும் உப மேயத்தையும் ஒன்றாகக் கூறச் சேர்க்கும் ஆக, ஆகிய, எனும் - முதலான மாட்டேற்றுச் சொற்கள் தொகாமல் விரிந்து வர அமைந்த உருவகம். எ-டு : ‘கொங்கை முகையாக மென்மருங்குல் கொம்பாக அங்கை மலரா அடிதளிராத் - திங்கள் அளிநின்ற மூரல் அணங்காம் எனக்கு வெளிநின்ற வேனில் திரு’ நான் கண்ட நங்கை கொங்கையே மொட்டாகவும், இடையே கொடியாகவும், கைகளே மலராகவும், கால்களே தளிராகவும் கொண்டவள் என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், உருவகங்கள் அனைத்திலும் மாட்டேற்றுச் சொற்கள் விரிந்து நின்றமை யால் இது விரி உருவகம் ஆயிற்று. (தண்டி. 37-2) விரி உவமை - உவமைக்கு இன்றியமையாத உறுப்புக்களான உபமானம் உபமேயம் உவமையுருபு பொதுத்தன்மை என்னும் நான்கும் வெளிப்பட அமைவது. எ-டு : ‘பால்போலும் இன்சொல் பவளம்போல் செந்துவர்வாய் சேல்போல் பிறழும் திருநெடுங்கண் - மேலாம் புயல்போல் கொடைக்கைப் புனல்நாடன் கொல்லி அயல்போலும் வாழ்வ(து) அவர்.’ கார்மேகம் போன்ற கொடைக்கைகளையுடைய சோழனது கொல்லிமலைச் சாரலில் வாழும் தலைவி, பால் போன்ற இனிய சொல்லும், பவளம் போன்ற சிவந்த வாயும், மீன் போலப் பிறழும் கண்ணும் உடையவள் என்று கூறும் இப்பாடற்கண், உபமானம் உவமஉருபு பொதுத்தன்மை உபமேயம் என்ற முறையே இந்நான்குறுப்புக்களும் வெளிப் பட அமைந்துள்ளமையால் இது விரிஉவமை ஆயிற்று. (தண்டி. 32-1) விருத்த உருவக அணி - இது தெற்று உருவகம் எனவும், விரூபக உருவகம் எனவும், விரோத உருவகம் எனவும் கூறப்பெறும். ‘விரூபக உருவகம்’ காண்க. (மா. அ. 120) விருத்த தீவக அணி - தீவக அணியின் ஒழிபாய் வந்தவற்றுள் ஒன்று. விருத்தம் முரண்பட்டது. ஒரு பொருள் செய்யுளின் இரண்டிடங்களில் இணைந்து மாறுபாடான செயல்களைச் செய்வதாக அமைத்தல் இதன் இலக்கணம். எ-டு : ‘வரிவண்டு நாணா மதுமலர் அம்பாப் பொருவெஞ் சிலைக்குப் பொலிவும் - பிரிவின் விளர்க்கும் நிறமுடையார் தம்மேல் மெலிவும் வளர்க்கும் மலையா நிலம்.’ “தென்றற் காற்று, வண்டினையே நாண்கயிறாகவும் மலரையே அம்பாகவும் கொண்டு மன்மதன் போரிடும் கரும்பு வில்லுக்குப் பொலிவைத் தந்து வளர்க்கும்; பிரிவினால் பசலை பாய்ந்து வருந்தும் பெண்களிடம் துயரத்தால் விளையும் மெலிவை வளர்க்கும்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், மலையாநிலம் வில்லுக்குப் பொலிவை வளர்த்து, மகளிர்க்கு மெலிவை வளர்க்கும் என்று, இரண் டிடத்தும் இணைந்து மாறுபட்ட செயலைச் செய்கின்றமை கூறப்படுவதால் இது விருத்த தீவகம் ஆயிற்று. (தண்டி. 41 -2) விருத்த ரூபக அணி - விரூபகம் எனவும், தெற்றுருவகம் எனவும்படும். ‘விரூபக உருவகம்’ காண்க. விருத்தி அநுப்ராஸம் - ஓரெழுத்தாவது பல எழுத்தாவது இடையிட்டுப் பலகாலும் வரும் எதுகைத்தொடை வகை. இஃது ‘இணைஎதுகை அலங்காரம்’ எனவும்படும். (மா. அ. 180) அது காண்க. விரூபக உருவகம் - உருவகஅணி வகைகளுள் ஒன்று; உருவகம் செய்த பின் அது செய்ய இயலாத் தன்மையைக் கூறுதல். எ-டு : “தண்மதிக்குத் தோலாது தாழ்தடத்துள் வைகாது முள்மருவும் தாள்மேல் முகிழாது - நண்ணி இருபொழுதும் செவ்வி இயல்பாய் மலரும் அரிவை வதனாம் புயம்.” “இவளுடைய முகமாகிய தாமரை சந்திரனைக் கண்டு கூம்பாது; குளத்தில் தங்கியிராது; முள்ளுடைய தண்டின் மேல் மலராது; பகல் இரவு இருபோதிலும் மலர்ச்சியுடன் காணப்படும். (ஆதலின் அரிவை வதனத்தை ‘அம்புயம்’ என்று உருவகித்தது ஏற்புடைத்தன்று” என்பது கருத்து.) முகத்தைத் தாமரையாக உருவகித்துப் பின் அவ்வாறு உரு வகிக்க ஏலாமையும் காட்டியதால் இது விரூபக அணி ஆயிற்று. விரூபகம் - ரூபகத்தன்மை அற்றது. இதனை ‘விருத்த ரூபகம்’ என்று மாறனலங்காரம் (சூ. 120) குறிப்பிடும். (தண்டி. 37 - 8) விரோத அணி - முரண்பட்ட சொற்களையும் பொருள்களையும் அமைப்பது. விரோதம் - முரண். சொல்விரோத அணி, பொருள் விரோத அணி என்ற இதன் இருவகைகளையும் தனித்தனி தலைப்புள் காண்க. (இது தொடைவகையுள் முரண்தொடை எனப்படும்.) (தண்டி. 82) விரோத அணியின் மறுபெயர் - முரண் அணி. வீ.சோ. 173 விரோத அணியின் வகைகள் - 1. சொல்லும் சொல்லும் முரணிய விரோதம் 2. பொருளும் பொருளும் முரணிய விரோதம், 3. சொல்லும் பொருளும் சொற்களொடு முரணிய விரோதம், 4. பொருளும் சொல்லும் பொருளொடு முரணிய விரோதம், 5. சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணிய விரோதம் என்பன. இவற்றை அவ்வத் தலைப்புள் காண்க. (மா. அ. 182) விரோத உருவகம் - இது தெற்று உருவகம் எனவும், விருத்த உருவகம் எனவும், விரூபக உருவகம் எனவும் கூறப்பெறும். ‘விரூபக உருவகம்’ காண்க. (வீ. சோ. 160 உரை) விரோத உவமை அணி - உபமானமும் உபமேயமும் தம்முள் பகைமையுடையன எனக் கூறிப் பின் அவற்றை ஒப்புமையுடையனவாகக் கூறுவது. எ-டு : ‘செம்மை மரைமலரும் திங்களும் நும்முகமும் தம்முள் பகைவிளைக்கும் தன்மையவே; - எம்முடைய வைப்பாகும் சென்னி வளம்புகார் போல்இனியீர்! ஒப்பாகும் என்பார் உளர்.’ “இனிய பெண்களே! நும்முகம் போன்ற அழகு பெறாமையின் செந்தாமரையும் சந்திரனும் நும்முகமும் தம்முள் பகைமை யுடையனவாயினும் ஒப்பாகும் என்பாரும் உளர்” என்ற பொருள்படும் இப்பாடற்கண், உபமேயமான முகத்திற்கும் உபமானங்களான செந்தாமரை சந்திரன் என்னுமிவற்றிற்கும் விரோதம் உண்மை கூறிப் பின் ஒப்புமையையும் கூறுவதால் இது விரோத உவமையணி ஆயிற்று. (தண்டி. 33 - 4) விரோதச் சிலேடை அணி - சிலேடை அணிவகை ஏழனுள் ஒன்று; சிலேடையால் இருபொருள்களுக்கிடையே மாறுபாடு காட்டுவது. எ-டு : ‘விச்சா தரன்எனினும் அந்தரத்து மேவானால்; அச்சுத னேனும்அம் மாயன்அலன்; - நிச்சம் நிறைவான் கலையான் அகளங்கன்; நீதி இறையான் அனகன்எம் கோ.’ சிலேடை அமைந்த சொற்கள்: விச்சாதரன் - வித்தியாதரன் என்ற தேவசாதியவனும், விஞ்சை நிறைந்த சோழனும் அந்தரம் - ஆகாயமும், அழிவும் அச்சுதன் - மாயனான திருமாலும், கேடு இல்லாத சோழனும் (மாயம் - கறுப்பு, வஞ்சனை) கலையான் - கலைகளையுடைய சந்திரனும், கலைவல்ல சோழனும் களங்கம் - மறுவும், பாவமாகிய மாசும் இறையான் - சிவபெருமானும், சோழமன்னனும் நகன், அநகன் மலையையுடைய சிவபெருமானும், அகம் என்ற பாவம் இல்லாத சோழனும் இப்பாடல் விச்சாதரன் முதலியோர்க்கும் சோழனுக்கும் சிலேடை. “சோழன், விச்சாதரனே எனினும் அவனைப் போல அந்தரத் தில் (-கேட்டில்) உழலமாட்டான்; அச்சுதனே (-கேடில்லாத வனே) ஆயினும் மாயன் (-கறுப்பும் வஞ்சனையும் உடையன்) அல்லன்; நாடோறும் வளரும் கலையையுடைய சந்திரனைப் போல இவனும் கலைகளில் வல்லவனே ஆயினும், களங்கம் (-மாசு, மறு) இல்லாதவன்; சிவபெருமானைப் போல இறையோனே (- அரசனே) ஆயினும், சிவபெருமான் நகன் (-கைலாய மலையையுடையவன்) ஆதல் போலன்றி, அநகன் (- பாவமில்லாதவன்)” என்று சிலேடைப் பொருள்படும் இப்பாடற்கண், சோழ மன்னவன், விச்சாதரன் - அச்சுதன் - சந்திரன் (கலையான்) - சிவபெருமான் (இறையான்) - ஆகிய வர்க்கு மாறுபட்டவன் என விரோதம் தோன்ற அமைத்த மையால், இது விரோதச் சிலேடை ஆயிற்று. (தண்டி. 78 - 6) விரோதச் சிலேடை அணியின் வகைகள் - சிலேடைப் பொருளில் உலகியற்கு மாறுபட்ட கருத்து அமையப் பாடும் இவ்வணி பத்து வகைப்படும். அவையாவன, 1. சாதியொடு நான்கும், 2. செயலொடு மூன்றும், 3. குணத் தொடு இரண்டும், 4. பொருளொடு ஒன்றுமாகப் பத்தாம் அவை முறையே, 1. சாதிக்குச் சாதியொடு விரோதச் சிலேடை, 2. சாதிக்குச் செயலொடு (கிரியையொடு) விரோதச் சிலேடை, 3. சாதிக்குக் குணத்தொடு விரோதச் சிலேடை, 4. சாதிக்குப் பொருளொடு விரோதச் சிலேடை, 5. கிரியைக்குக் கிரியை யொடு விரோதச் சிலேடை, 6. கிரியைக்குக் குணத்தொடு விரோதச் சிலேடை, 7. கிரியைக்குப் பொரு ளொடு விரோதச் சிலேடை, 8. குணத்திற்குக் குணத்தொடு விரோதச் சிலேடை, 9. குணத்திற்குப் பொருளொடு விரோதச் சிலேடை, 10 பொருளொடு செயலுக்கு விரோதமாய் அமைந்த சிலேடை என்ப. (மா. அ. 155 உரை) விரோதம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (59) வருவதோர் அணி. ஒரு பொருளை புனைந்துரைக்காதபோதும் புனைந் துரைத்தாற்போன்று சிறப்புத் தருவது. எ-டு : ‘கறைமிட(று) அணியலும் அணிந்தன்(று); அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் பெறுமே’ (புறநா. 1) கறை : இதனைப் பாற்கடல் கடைந்தபொழுது எழுந்தமை யால் சிவபெருமான் கழுத்தில் கறையாகத் தங்கிய விடம் என்று புனைந்து கூறாதவழியும், அது தேவர் முதலியோரைக் காத்ததால் அந்தணரால் புகழ்ப்படுகிறது என்று கூறுவது இவ்வணி. விரோதாபாஸாலங்காரம் - முரண் விளைந்து அழிவு அணி; அது காண்க. விரோதாலங்காரம் - விரோத அணி, முரணணி என்பர் தமிழ் நூலார். ‘விரோத அணி’ காண்க. விரோதி - ‘முரணித்தோன்றல்’ என்னும் வேற்றுப்பொருள் வைப்பணி வகை; அது காண்க. விலக்கியல் வேற்றுமை அணி - இருவேறுபட்ட பொருள்களைச் சமமாக ஒப்பிட்டுக் கூறிப் பின்னர் ஒன்றனைக் காரணம் காட்டி விலக்கிவிடும் அணி. இது விலக்கு வேற்றுமை எனவும்படும். எ-டு : ‘தம்மால் பயன்தூக்காது யாவரையும் தாங்கினும் கைம்மாறும் காலமும் உடைத்தன்றே; - எம் ஆவி அன்னவனை, ஆழி அநபா யனை, அலராள் மன்னவனை, மானுமோ வான்?’ பயன் தூக்காது யாவரையும் காக்கும் திறத்தில் மேகம் சோழனை ஒக்கும் என்று கூறிப் பின் காலவரையறையின்றி எஞ்ஞான்றும் உதவும் சோழற்குக் காலவரையறையோடு உதவும் மேகம் ஒப்பாகாது என்று விலக்கியமையால், இது விலக்கியல் வேற்றுமை அணியாயிற்று. (தண்டி. 50-5) விலக்கு அணி - இது தடைமொழி எனவும், முன்னவிலக்கு அணி எனவும் கூறப்பெறும். இதனைப் பிரதிஷேதாலங்காரம் என வட நூல்கள் கூறும். ‘முன்னவிலக்கு அணி’ காண்க. (ச. 124; குவ. 98) விலக்குஉருவக அணி - உருவகஅணி வகைகளுள் ஒன்று; ஒன்றை உருவகம் செய்து பின்னர் உருவகிப்பதற்கான தன்மை அதில் இல்லை என்று விலக்குவது. எ-டு : ‘வல்லி வதன மதிக்கு மதித்தன்மை இல்லை; உளதேல் இரவன்றி - எல்லை விளக்கும் ஒளிவளர்த்து வெம்மையால் எம்மைத் துளக்கும் இயல்புடைத்தோ? சொல்’ “இப்பெண்ணின் முகமாகிய மதிக்கு மதித்தன்மை இல்லை; ஏனெனில், மதி இரவில்தான் ஒளிவிடும்; பகலில் ஒளி மழுங்கிக் காணப்படும். குளிர்ச்சி தந்து எம்மை மகிழ்விக்கும். இப்பெண்ணின் முகமதியோ எனின், பகலிலும் ஒளி வீசி வெப்பம் தந்து எங்களை வருத்தும்” என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், ‘வதனமதி’ என்று உருவகம் செய்து, பின் வதனத்திற்கு மதித்தன்மை இல்லை என்று விலக்கியும் கூறுவதால் இது விலக்கு உருவகம் ஆயிற்று. (தண்டி. 38 - 4) விலக்கு உவமை அணி - உபமானப் பொருளுக்கு உபமேயத்துக்குரிய தன்மை இல்லை என்று குறிப்பாக விலக்குவது. (தண்டி. 33-7) இது ‘தடை மொழி உவமை’ எனவும், ‘தடை உவமை’ எனவும் வீரசோழி யத்துள் கூறப்படும் (156 உரை) வீரசோழிய உரையுள் வருமாறு; எ-டு : ‘ஏடலர் தார்ச்சந்தி ரன்தன் இருங்கொடைக்கு நீடு மழையே நிகரென்னின் - கோடை மறுக்கையினும் வக்கிரக்கோ ளுள்ளும்தாம் பெய்யா ஒறுக்கையினும் மாட்டாவே ஒப்பு.’ சந்திரன் என்ற வள்ளலுடைய கொடைக்கு மேகத்தை ஒப்புக் கூறலாம் எனின், கோடைக் காற்று அடிக்காத போதும், வெள்ளி என்ற கோள் தென்புலம் படரும்போதும், மழை பெய்யாது பொய்த்து உயிரினங்களைத் துன்புறுத்துவதால், எப்பொழுதும் கொடைத் தொழிலையுடைய சந்திரனுக்கு மழையை எங்ஙனம் ஒப்புக் கூறுவது? என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், உபமானமான மழைக்கு ஒரு குறை காட்டி அஃது உபமானமாகாது என்று விலக்குதல் விலக்குவமை யாம். விலக்கு வேற்றுமை அணி - இது விலக்கியல் வேற்றுமை அணி (தண்டி. 50) எனவும்படும்; அது காண்க. (மா. அ. 132 - 6) விவ்ருதோத்தி அலங்காரம் - வெளிப்படை நவிற்சியணி. அது காண்க. விழுமிதாய குறிப்புவமை - வினை பயன் மெய் உரு என்ற நான்கும் குறிப்பால் பெறப் படுமாறு உவமை அமைப்பது. “பாற்கடல்வெய் யோனிலொளி பாரித்த சோதிவட நூற்கடலைத் தென்னுரைநன் னூற்கடலாய் - மாற்கடிமை வாய்ந்தார் ஈ டேற வகுத்தளித்தான் தண்ணளிதாம் தாம்தாம் எனும்வகுளத் தான்.“ கடலில் தோன்றும் காலைக்கதிரோன் தன் செய்ய மேனியில் ஆயிரம் கிரணங்களைப் பரப்பி உலகத்திருளை ஓட்டி ஒளி யூட்டி இன்பம் தந்தாற் போலத் திருக்குருகூரில் சிவந்த மேனியனாய்த் தோன்றித் திருவாய்மொழியாகிய ஆயிரம் பாடல்களையும் விரித்து அடியார்களுடைய அகஇருளைப் போக்கிப் பரபிரம்மத்தைக் காட்டி இன்பமூட்டுவான், சடகோபன் - என்ற பொருளுடைய இப்பாடற்கண், இருள் போக்கும் வினை, இன்பம் தரும் பயன், ஆயிரம் கிரணம் போல ஆயிரம் பாடல்களாகிய மெய், செம்மையாகிய நிறம் என்ற நான்கும் குறிப்பால் உணரப்படுதலின். இது விழுமிதாய குறிப்புவமை. (மா. அ. பாடல். 161) விழைய என்னும் உவமஉருபு - ‘மழைவிழை தடக்கை வாய்வாள் எவ்வி’ கார்மேகத்தை ஒத்த நீண்ட கைகளையும் குறி தப்பாத வாளினையுமுடைய எவ்வி என்ற வள்ளல் என்று பொருள் படும் இச் சொற்றொடரில், விழைய என்பது பயன்உவமைப் பொருட்கண் வந்தது. இது பயனுவமத்திற்கே சிறந்த உருபாகும். (தொ. பொ. 289 பேரா.) விளக்கு அணி - இது தீவக அணி எனவும் கூறப்பெறும். உபமானமும் உபமேயமும் ஒரே இயல்பினான் முடிதல் இவ்வணி என்று சந்திராலோகம் கூறும். எ-டு : ‘ஆதபத்தால் சூரி யனும்பிரதா பத்தினால் மேதகுவேந் தும்விளங்கு மே.’ இப்பாடற்கண், சூரியனும் வேந்தும் ‘விளங்கும்’ என்ற ஒரே இயல்புடையனவாக அமைந்தமை விளக்கணியாம். ‘தீபக அணி’ காண்க. (ச. 31, குவ. 15) விளி அணி - மனத்தின்கண் உண்டாகும் வெறுப்பு, விருப்பு, கோபம், வியப்பு, துயரம், உவகை முதலியவற்றைப் பிறர் அறியுமாறு வருணித்துரைப்பது. இஃது ஒருவரை விளித்துக் கூறப்படலின் விளி அணியாயிற்று. இதனை வடநூலார் உத்தண்டாலங் காரம் என்ப. எ-டு : ‘வாரடா உனக்குயாது தானர்தம் மகளடுக்குமோ வானமாதர் தோள் சேரடா......................’ (வில்லி. ஆதி. வேத்திர. 11) இடிம்பன் வீமனிடம் கூறிய இக்கூற்றில், வெறுப்பும் கோபமும் புலப்படுத்தப்பட்டவாறு. விறப்ப என்னும் உவம உருபு - ‘மாக் கடல், புலிவிறப்ப ஒலிதோற்றலின்’ கடலின் ஒலி புலி முழங்கும் ஒலியை ஒப்ப ஒலித்தலால் என்று பொருள்படும் இத்தொடரில், விறப்ப என்பது வினைஉவமப் பொருட்கண் வந்தது. இது வினைஉவமத்திற்கே சிறந்த உருபாகும். (தொ. பொ. 287 பேரா.) விறல்கோள் அணி - இதனைப் பிரத்தியநீகாலங்காரம் என வட நூல்கள் கூறும். ‘பிரத்தியநீக அலங்காரம்’ காண்க. தன் பகையையோ, தன் பகையின் துணையையோ எதிர்த்து வெற்றி கொண்டதாகக் கூறுவது இவ்வணி. (ச. 84, குவ. 58) வினாவில் விடை அணி - பிறர் வினவாத முன்னும் அவர் மனக்கருத்தை அறிந்து விடை கூறுதல். எ-டு : ‘.......... தாழாது, செறுத்த செய்யுள் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் இன்றுள னாயின் நன்றுமன் என்றநின் ஆடுகொள் வரிசைக் கொப்பப் பாடுவன் மன்னால் பகைவரைக் கடப்பே’ (புறநா. 53) என்று சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறை தன்னைப் பாட வந்த புலவர், கபிலரை ஒப்பப் பாட வல்லரோ என்று கருதிய கருத்தினை உட்கொண்டு, பொருந் தில் இளங்கீரனார் பாடிய இப்பாடலடிகளில் இவ்வணி வகை வந்துள்ளது. ‘வினாஇல் விடை அணி’ என்க. (தொ. வி. 363) வினை உவம உருபுகள் - அன்ன, ஆங்க, மான, விறப்ப, என்ன, உறழ, தகைய, நோக்க என்ற எட்டும் வினைஉவமத்துக்கண் பயின்று வரும் உருபுகள். இவையே யன்றி, கடுப்ப, கெழுவ, போல, ஒப்ப, ஏய்ப்ப என்ற ஏனைய உருபுகளும் வினைஉவமத்துக்கண் பயிலாது வரும். (தொ. பொ. 287 பேரா.) வினைஉவம உருபுகளின் இருவகை - அன்ன, ஆங்க, மான, விறப்ப, என்ன, உறழ, தகைய நோக்க என்ற வினைஉவம உருபு எட்டனுள், அன்ன, ஆங்க, மான, என்ன என்ற நான்கும், உபமானமும் உபமேயமும் வேறல்ல ஒன்றே என்னும் ஒரே பொருளை உணர்த்துதலின் ஓரின மாயின. விறப்ப, உறழ, தகைய, நோக்க என்ற நான்கும் முறையே இனமாகச் செறிதல், தன் இனமாகச் சேர்த்துக் கொள்ளுதல், இனமாதற்குத் தகுதியுடையது எனக் கருதுதல், இனமாக்கி நோக்குதல் என மற்றொரு வகைப்பட்ட பொருளை உணர்த்துதலின் ஓரினமாயின. இவ்வாறு வினைஉவம உருபுகள் இருவகைப்பட்டன. (தொ. பொ. 293 பேரா.) வினை உவமப்போலி - இஃது உள்ளுறைஉவமம் ஐந்தனுள் ஒன்று. வினைபற்றி வந்த உள்ளுறைஉவமம் வினை உவமப்போலி எனப்படும். பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனிடம் புலந்துரைக்கும் தலைவி தன் மனத்தில் உள்ளனவற்றை வெளிப்படையாகக் கூறாமல் உள்ளுறைஉவமம் அமைய, “கரும்பை நடுதற்கென்று அமைத்த பாத்திகளின் இடையே தவறி முளைத்த தாமரைக் கொடிகள் மலர்களால் வண்டுகளின் பசியைப் போக்கும் ஊரனே!” என்ற கருத்துப்பட, ‘கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர’ (ஐங். 65) என்ற கூற்றில், “தாமரையை விளைப்பதற்கு அல்லாமல் கரும்பை நடுதற்குச் செய்த பாத்தியுள் தானே தோன்றிய தாமரையின் மலர் சுரும்பின் பசியைத் தீர்ப்பது போலத் தலைவனுடைய பரத்தையர்க்கென்றே அமைக்கப்பட்ட பெரிய இல்லத்தில் தலைவியும் ஒரு பக்கத்தே இருந்து இல்லறம் பூண்டு விருந்தோம்புகின்றாள்” என்ற உள்ளுறைச் செய்தி அமைந்துள்ளமை வினை உவமப்போலியாம். (தொ. பொ. 300 பேரா.) வினை உவமம் - ஒரு பொருளின் செயலை மற்றொரு பொருளின் செயலுக்கு உவமமாக்கிக் கூறுவது. ‘புலி அன்ன மறவன்’ என்றவழிப் புலி பாயுமாறு பாய்ந்து போரிடும் வீரன் என வினை பற்றிப் புலி மறவனுக்கு உவமம் ஆயிற்று. வினையை விடுத்துத் தோலும் வாலும் காலும் முதலாகிய வடிவு பற்றியும், ஏனைய வண்ணம் பற்றியும், பயன் பற்றியும் புலி மறவனுக்கு உவமமாகாது என்பது. (தொ. பொ. 276 பேரா.) வினை உவம வகை - ‘பறைக்குரல் எழிலி’ (அகநா. 23) ‘கடைக்கண்ணால், கொல்வான்போல் நோக்கி’ (கலி. 51) மேகத்தின் ஒலிக்குப் பறையின் ஒலியை உவமமாகக் கூறலின், பறைக்குரல் போன்ற குரலையுடைய மேகம் என்ற கருத்தில், ‘பறைக்குரற் குரல் எழிலி’ என்று கூறுதல் வேண்டும்; அங்ஙனம் கூறாது, பறையின் குரலை மேகத்துக்கு உவமமாகக் கூறியது போலப் ‘பறைக்குரல் எழிலி’ என்று கூறினும், மேகத் தின் குரலுக்கே பறைக்குரல் ஒப்பாகு மாதலின், இதனை நேரே வினையுவமமாகக் கொள்ளாமல் வினை உவமத்தின் வகையாகக் கொள்ளல் வேண்டும். ‘கொல்வான் நோக்குதல் போலத் தலைவியைத் தலைவன் நோக்கினான்’ என்று கூறாது, ‘கொல்வான் போல் நோக்கி’ என நோக்குதல் தொழிலை உபமானமாகிய கொல்வானுக்கு வெளிப்படையாகக் கூறாது அமைப்பதும் வினை உவம வகை யாகும். (தொ. பொ. 276 பேரா.) வினை எதிர்மறுத்துப் பொருள் புலப்படுத்தும் விபாவனை அணி - வினைகளை நிகழாதனவாக எதிர்மறுத்துக் குறிப்பால் தான் கருதிய பொருளைப் புலப்படவைப்பது. எ-டு : ‘பூட்டாத வில்குனித்துப் பொங்கும் முகிலெங்கும் தீட்டாத அம்பு சிதறுமால் - ஈட்டமாய்க் காணாத கண்பரப்பும் தோகை; கடும்பழிக்கு நாணா(து) அயர்ந்தார் நமர்.’ “மேகக் கூட்டம், நாண் பூட்டாத வில்லை (-வானவில்லை) வளைத்து, தீட்டிக் கூர்மை செய்யப்படாத அம்பை (-நீரை) எங்கும் சொரிகிறது. மயில்கள் கூட்டமாய்க் கூடிப் பார்க்காத கண்கள் (-தோகைப் புள்ளிகளை) விரித்து ஆடுகின்றன; ‘இக்கார்காலம் தலைவியின் உயிருக்குத் துன்பம் விளைத்துக் கொல்லுமே!’ என்ற கடும்பழிக்கும் நாணாமல், நம் தலைவர் தாம் சென்ற வேற்றுநாட்டிலே தங்கிவிட்டார்” என்று தோழி கூற்றாக வரும் இப்பாடற்கண், வில் - அம்பு - கண் - என்பவற் றின் இயல்பான நாண்பூட்டுதல் - தீட்டுதல் - பார்த்தல் - எனும் வினைகளை எதிர்மறுத்து, வானவில், மழைநீர் - பீலிக்கண் - என்பவற்றைக் கவி குறிப்பால் தோன்றச் செய்து தான் கருதிய பொருளை உரைத்ததால், இஃது இவ்வணி யாயிற்று. (தண்டி. 51-3) வினை ஞாபக ஏது - ஒருவன் நிகழ்த்திய ஒரு செயலைக்கொண்டு அவன் கருத்து இன்ன தென்பதனை அறிவினால் அறியும் ஏதுவகை. எ-டு : ‘முன்னொருகைக் குஞ்சரமாய், மூரிப் பிணையாகி, மின்னிடை எங்கென்று வினவியதால், - தென் அனந்தை மால்வரைமேல் இன்(று)இவர்தம் வாய்மையெலாம் வஞ்சமெனச் சால்புடைய நெஞ்சே! தரி’ தலைவியும் தோழியும் சேர்ந்திருந்த விடத்து வந்து வினவிய தலைவன், முதலில் தன் அம்பு பட்ட யானை வந்ததா என்று வினவி, பின் தன் அம்பு பட்ட மான்பிணை வந்ததா என்று வினவி, பின் அவர்கள் இடையைப் பற்றி வினவிய செயலால், “தலைவன் வினவியன யாவும் பொய்யான செய்திகளே” என்று தோழி முடிவு செய்தவாறு. தலைவன் பின்னர் இடை வினவியது கெடுத்த பொருள் அன்மையின், முன்னரும் அவன் வேட்டையாடிக் கெடுத்த பொருள் இல்லை என்று அறிவாலே அறிதற்கு அவன் வினாயது காரணமாதல் வினைஞாபக ஏதுவாம். (மா. அ. பாடல் 442) வினை நிரல்நிறை (1) - முடிக்கப்படும் சொல்லாகிய வினையும் முடிக்கும் சொல் லாகிய வினையும் முறையே அமைதல். எ-டு : ‘வானுல(கு)எண் வில்வளைத்து மாநீர் செறுத்(து)அவுணர் கோன்உதகம் பெய்ததுகைக் கொண்டு தான் - சானகிதோள் மேயினான் தென்இலங்கை வென்றான் எழுபுவியும் தாயினான் நீர்மலையத் தான்.’ இப்பாடற்கண், தேவருலகம் புகழும் வில்லைவளைத்துக் சானகிதோள்மேயினான், கடலை அடைத்துத் தென்னிலங் கையை வென்றான், மாவலி தாரை வார்ப்பக் கொண்டு ஏழுலகையும் அளந்தான் - என, வளைத்து மேயினான் - செறுத்து வென்றான் - கைக்கொண்டு தாயினான் - என முறையே வினையெச்சங்களாகிய முடிக்கப்படும் சொற்களும் முற்றுக்களாகிய முடிக்கும் சொற்களும் முறையே வரிசைப் பட நின்று இயைந்து பொருள் தந்தவாறு காண்க. (மா. அ. பாடல். 392) வினைநிரல் நிறை (2) - முடிக்கப்படும் சொற்களாகிய வேற்றுமையுருபு தொக்குநின்ற சொற்களுக்கு முடிக்கும் சொற்களாகிய வினை(முற்றுக்) களை முறையே நிறுத்திப் பொருள் கொள்ளும் நிரல்நிறைப் பொருள்கோள் வகை. எ-டு : ‘காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப! போதுசேர் தார்மார்ப! போர்ச்செழிய! - நீதியால் மண் அமிர்தம் மங்கையர்தோள் மாற்றாரை ஏற்றார்க்கு நுண்ணிய வாய பொருள்.’ இப்பாடற்கண், மண்ணினைக் கா, அமிர்தத்தைத் து (-உண்), மங்கையர்தோளைச் சேர், மாற்றாரைத் தாழ், ஏற்றார்க்குக் குழை, நுண்ணியவாய பொருளை ஆய் என்று முடிக்கும் வினைகளை முறையே நிறுத்திப் பொருள் கொண்டவாறு. (யா. வி. 95 உரை) வினை நிலைக்களனாகத் தோன்றிய ஒட்டு - செய்யுளுள் ஒரு செயலை விளக்கிக் கூற, அது பிறிதொரு செயலைக் குறிப்பாக உணர்த்தும் ஒட்டணி வகை. எ-டு : ‘வளைதவழ்நீர் மண்மேல் மதிப்புலவீர்! அந்தோ! விளைகழனிச் சார்புள் விராய - களைகளைய வாங்கும் களைக்கோலால் மாநிலத்தார்க்(கு) ஏலாத தீங்கு புரிவார் சிலர்.’ கழனியிடத்து விரவும் களைகளைக் களைவதற்குப் பயன் படுத்த வேண்டிய களைக்கொட்டால் களைகளை நீக்குதல் செய்யாது, பிறர்க்கு ஊறு செய்ய அக்கருவியைப் பயன்படுத் துவர் சிலர் என்பது வெளிப்படைப் பொருள். இறைவன் அருளிய மனமொழிமெய்களால் அவனைச் சிந்தித்தும் வாழ்த்தியும் கண்டு வணங்கியும் பொழுது போக்காமல், முத்தியை விரும்புவார்தம் புத்திக்குப் பொருந்தாத தீத் தொழில்களை விரும்பிச் செய்து, வாழ்நாளைச் சிலர் வீழ் நாள் ஆக்குவர் என்பது கவி கருதிய குறிப்புப் பொருள். இது வினை நிலைக்களனாகத் தோன்றிய ஒட்டு. (மா. அ. பாடல் 286) வினைப்புணர்நிலை அணி - ஒரு வினை இரண்டு பொருள்களுக்குப் பொருந்த உடன்நிகழ அமைப்பது. எ-டு : ‘வேண்டுருவம் கொண்டு கருகி வெளிபரந்து நீண்ட முகிலுடனே நீர்பொழிந்த - ஆண்தகையோர் மேவல் விரும்பும் பெருநசையான் மெல்ஆவி காவல் புரிந்திருந்தோர் கண்.’ தம் காதலரைச் சேர விரும்பும் பெரிய ஆசையால் பிரிவில் துயருறும் தமது மெல்லிய உயிர் போகாவண்ணம் அரிதின் முயன்று பாதுகாத்துக்கொண்டிருந்த தலைவியரின் கண் கள், தான் விரும்பிய வடிவத்தைப் பெற்றுக் கறுத்து விண் ணில் பரந்து நீண்ட கார்மேகத்துடன் கூடி நீரைப் பொழிந் தன - என்று பொருள்படும் இப்பாடற்கண், நீர் பொழித லாகிய வினை முகிலுக்கும் கண்ணுக்கும் புணர்த்துக் கூறப் பட்டமையின், இது வினைப் புணர்நிலை அணியாயிற்று. இவ்வினைப் புணர்நிலை முகிலுக்கும் கண்ணுக்கும் சிலேடை வகையால் அமைந்ததும் இப்பாடலது சிறப்பு. கண்ணுக்கு உரைக்குங்கால், வேண்டுருவம் - தலைவர் விரும் பும் வடிவழகு; கருகுதல் - மை தீட்டப்பெறுதல்; வெளி பரத்தல் - வெண்மைப் பரப்புடைமை; நீடல் - காதளவும் நீட்சி. கார்முகிற்கு உரைக்குங்கால், வேண்டுருவம் - காண்பார் மனம் விழைந்து நோக்கும் பல வடிவம்; கருகுதல் - கார்நிறமுடைமை; வெளிபரத்தல் - விண்வெளியிற் பரவுதல்; நீடல் - கண்ணுக்கு எட்டியவரை நீண்டு தோன்றல். (தண்டி. 86-1) வினை பண்பு ஆகாமை - வினையாவது ஒரு பொருளிடத்து ஒரு குறித்த நேரத்தில் தோன்றும் செயல். பண்பாவது ஒரு பொருளோடு உடன் பிறந்து அப்பொருள் உள்ள அளவும் தான் நீங்காது நிற்கும் குணம். தலைவன் இரவுக்குறியிடைத் தவறாது அடைதற்குக் ‘களிற்றிரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல’ (அகநா. 22) வந்தான் என்பது வினை பற்றிய உவமம். களிறாகிய இரையைத் தவறாமல் கொள்ளுதற்குப் பதுங்கிப் பதுங்கி வரும் புலியைப் போலத் தலைவியைத் தவறாமல் அடைவதற்கு இரவிடைக் காவலர்கண்களுக்குப் புலப்படா மல் தலைவன் பதுங்கிப்பதுங்கி வந்தான் என்பது, அந்நேரத் திற்கேற்ப அவன் செய்த செயலாதலின், வினையே ஆகும். இதனைப் பண்பு எனில், தலைவன் எப்பொழுதுமே பதுங்கிப் பதுங்கிச் செயல்களைச் செய்பவன் என்று பொருள்பட்டு அவன் தலைமையொடு மாறுகொள்ளும் ஆதலின் வினை வேறு, பண்பு வேறு என்பது உணரப்படும். (தொ. பொ. 276 பேரா.) வினை பயன் மெய் உரு என்ற முறை - வினையுவமத்துள் மறைந்து நில்லாது விரிந்தே நிற்றற் சிறப்புடையனவும் சில உண்டு. எடுத்துக்காட்டாக, புலி அன்ன மறவன் என்பது வினை உவமம்; அது பாயுமாறு போலப் பாய்வான் என்பது கருத்து. அதனைப் புலி மறவன் எனத் தொகுத்தால், உவமப்பொருள் தாராது. அச்சிறப்பு நோக்கி வினைஉவமம் முதற்கண் கூறப்பட்டது. வினையான் பெறப்படுவது பயனாதலின், அதனை அடுத்துப் பயனுவமம் வைக்கப்பட்டது. மெய் என்பது வடிவு. உரு என்பது நிறம். உரு மெய்யின்கண் பொருத்தி அறியப்படுமாதலின், மெய்யுவ மத்தை அடுத்து உருஉவமம் கூறப்பட்டது. பயனும் ஒரு பொருளாதல் நோக்கிப் பொருளைக் குறிக்கும் மெய் உவமத்தோடு இணையப் பயனுவமம் அமைந்தது. (தொ. பொ. 276 பேரா.) வினை பற்றிய சிலேடை அவநுதி - ஒரு பொருளின் சிறப்பு குணம் முதலிய உண்மையை மறைத்து அவற்றிற்கு எதிராகிய மற்றொன்று கூறி, அதனால் பொருட்கு உயர்வு தோன்றக் கூறும் அவநுதி அணி சிலேடைப் பொரு ளொடு பொருந்தி வினைகொண்டு முடிதலும் உண்டு. எ-டு : ‘யாம்இன் புறக்கிடையா(து) என்றால் எழில்மாறர் தாம மகிழ்மாலை தானன்று - காமவேள் அம்பிற்(கு) இலக்காக்கு மாறன்றி வாழ்நாளை வம்பிற் கிலக்காக்கு மால்.’ நமக்குச் சடகோபனுடைய மாலை கிட்டவில்லை எனின், அச்செயல் நம்மை மன்மதன்அம்புக்கு இலக்காக்கி வாழ் நாளை வீழ்நாள் ஆக்கும்” என்ற கருத்துடைய இப்பாடற்கண், மகிழ்மாலை - மகிழம்பூமாலை, மகிழ்ச்சி தரும் மாலை; வம் பிற்கு - வீணாவதற்கு, ஊரார் பழிதூற்றுவதற்கு - எனச் சிலேடை வந்தவாறு. “மகிழம்பூமாலை மகிழ்மாலை அன்று” என்று மறுத்துக் கூறுதற்கண், தலைவி சடகோபனிடம் கொண்ட காதல் மிகுதி புலப்படுகிறது. (மா. அ. 227) வினை முதல் விளக்கு அணி - ‘வினை நுதல் விளக்கணி’ என்ற திருத்தம் பொருந்தும். ஓர் எழுவாயைச் சேர்ந்த, முறையாக அமைந்த பல செய்கைகளை முறை பிறழாமல் சொல்லுதல். இதனைக் காரக தீபகாலங் காரம் என வடநூல்கள் கூறும். எ-டு : ‘துயில்கின்றான், வாசநீர் தோய்கின்றான், பூசை பயில்கின்றான், பல்சுவைய உண்டி - அயில்கின்றான் காவலன்என்(று) ஓங்குகடை காப்பவரால் தள்ளுணும்இப் பாவலரைப் பொன்னே! கண் பார்.’ செல்வனைக் காணச் சென்ற வறியவனிடம் அச்செல்வ னுடைய வாயில்காவலன் தன் தலைவன் துயில்கிறான், குளிக்கிறான், பூசனை செய்கிறான், உண்கிறான் ஆதலின், அவ்வப்போது தன் தலைவனை வறியவன் காண இயலாது என்று கூறுதற்கண், துயிலுதல் முதலிய முறையாக நிகழும் செய்திகள் முறை மாறாமல் கூறப்பட்டமை இவ்வணியாம். (ச. 82 ; குவ. 56) வினை முதலியன உவமத்துள் விரவியும் வருதல் - ‘வினையும் வண்ணமும் வடிவும் உவம மாதல்’ காண்க. வினையும் வண்ணமும் வடிவும் உவமம் ஆதல் - “காந்தள், அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி கையாடு வட்டின் தோன்றும்” (அகநா. 108) காந்தட்பூவின் மகரந்தத்தை ஊதும் வண்டு, மகளிர் கைகளில் கொண்டு விளையாடும் வட்டாடு காய்களை ஒக்கும் என்ற இப்பகுதியில், காந்தட்பூவிலுள்ள வண்டுக்குக் கைகளால் ஆடப்படும் வட்டுக்காய்கள் உவமம். காந்தள் நிறமும் கைகளின் நிறமும் செம்மை; வண்டின் நிறமும் வட்டுக் காய்களின் நிறமும் கருமை. கையின் வடிவமும் காந்தட் பூவின் வடிவமும் ஒரே நிகர; வட்டுக்காயின் வடிவமும் வண்டின் வடிவமும் ஒரே நிகர. கையில் வட்டுக் காய் அமர்ந்து மேலே செல்லும் தொழிலும், காந்தட்பூவில் வண்டு அமர்ந்து மேலே செல்லும் தொழிலும் ஒன்று போல்வன. ஆதலின், காந்தளை ஊதும் வண்டிற்குக் கையால் ஆடப்படும் வட்டுக்காய் உரு (-நிறம்), மெய் - (-வடிவு), வினை (-செயல்) என்ற மூன்றும் பற்றி உவமமாயிற்று. (தொ. பொ. 277 பேரா.) வினையொடு பெயர் எதிர்நிரல்நிறை - முடிக்கப்படும் பெயரும் முடிக்கும் வினையும் முறையே அமையாது மாற்றி எதிராக அமைதல். எ-டு : ‘நடித்தான் ஒடித்தான் நடந்தான் இடந்தான் பொடித்தான் ஒருதூணில் புள்வாய் - வடித்ததமிழ்ப் பாவலன்பின் கோதண்டம் பையரவில் பல்லுயிர்க்கும் காவலவன் தென்னரங்கன் காண்.’ தென்அரங்கன் ஒரு தூணில் பொடித்தான்; புள் (-பகாசுரன்) வாயை இடந்தான் (-பிளந்தான்) ; பாவலன் பின் (-திருமழிசை ஆழ்வாரைத் தொடர்ந்து) நடந்தான்; கோதண்டம் ( - சனகன் கொடுத்த வில்) ஒடித்தான்; பை அரவில் (- காளியன் தலைமிசை) நடித்தான் - எனப் பெயரும் வினையும் நின்ற முறையினை நேர் எதிராக மாற்றிக் கூட்டிப் பொருள்செய்யப்படுவது இவ்வணியாம். (மா. அ. பாடல் 395) வினையொடு பெயர் முறைநிரல்நிறை - முடிக்கும் வினையும் முடிக்கப்படும் பெயரும் முறையே அமைந்துவரும் நிரல்நிறை வகை இது. எ-டு : ‘ஏந்தினான் வேய்ந்தான் இறுத்தான் இனிதாக மாந்தினான் ஆழிதுழாய் வன்சிலைபார்’ என்ற அடிகளில், ஆழி ஏந்தினான், துழாய் வேய்ந்தான், வன்சிலை இறுத்தான், பார் மாந்தினான் (- உலகினை உண்டான்) என முறையே வினையொடு பெயர் இயைந்த நிரல்நிறை அமைந்தவாறு. (மா. அ. 169) வினையொடு வினை எதிர்நிரல்நிறை - முடிக்கப்படும் வினையும் முடிக்கும் வினையும் முறைமாறி அமைந்திருக்கும் நிரல்நிறை வகை இது. எ-டு : ‘வன்சயிலம் ஏந்தி வளைமுழக்கி, வெண்தயிர்கட்(டு) அன்புறக்கட் டுண்(டு)அமர்வென்(று) ஆஅளித்தான் - நன்புள் கட(வு)எந்தை வானோர் கடிகா இடந்த இடவெந்தை யில்வாழ் இறை.’ இடவெந்தைவாழ் இறை, வெண்தயிர்கட்டு, உரலில் கட்டுண்டு, வன்சயிலம் ஏந்தி, வினைமுழக்கி, அமர்வென்று, ஆ அளித்தான் எனப் பொருள் கொள்க. கட்டு, கட்டுண்டு, ஏந்தி, முழக்கி, வென்று, அளித்தான் - என வினைகள் மாற்றி............ எனவினைகள் மாற்றி இணைக்கப்படுவதனை வினையொடு வினை எதிர்நிறை என ஓர் அணியாக்கினார் மா. அ. ஆசிரியர். (சூ. 168)) வினையொடு வினை முறைநிரல்நிறை - முடிக்கும் சொல்லும் முடிக்கப்படும் சொல்லும் ஆகிய வினைகள் முறையே அமையும் நிரல்நிறை இது. எ-டு : ‘வானுல(கு)எண் வில்வளைத்து மாநீர் செறுத்(து)அவுணர் கோனுதகம் பெய்யக்கைக் கொண்டுதான் - சானகிதோள் மேயினான் தென்னிலங்கை வென்றான் எழுபுவியும் தாயினான் நீர்மலயத் தான்.’ இப்பாடற்கண், திருமால் வில்வளைத்துக் கடலைச் செறுத்து (-அடைத்து) மாவலி நீர் வார்க்க அது கைக்கொண்டு என முடிக்கப்படும் வினையும் முடிக்கும் வினையும் முறையே வந்தன. ‘வினை நிரல்நிறை’ காண்க. (மா. அ. 167) வினோத்தி - ஒரு முக்கியப்பொருள் உண்மையாகிய பிறிதொரு முக்கியப் பொருளொடு பொருந்தாதாயின் முக்கியத்தன்மையைப் பெறாதெனக் கூறும் ஓர் அணிவகை. எ-டு : ‘சொல்லால் பொருளால் சுவைபெற்(று) அலங்காரம் எல்லாம் இழுக்கின்(று) இயன்றாலும் - புல்லாணி மன்இலங்கும் பேரூர் வளம்பரவாப் பாவினையே நன்னிலம்கைக் கொள்ளா நயந்து.’ சொல்லாலும் பொருளாலும் இனிமையுடைத்தாய் அணி நலம் பல இழுக்கில்லாது நடைபெற்ற யாப்பே எனினும், அதுதான் தெய்வச்சிலைப் பெருமாள் வைகும் பரமபதத் தினையே வாழ்த்தும் பாட்டு என்றால் கைக்கொள்வதன்றி, பிறிதொரு பொருளை வாழ்த்திய பாட்டாயின் அதனைப் பெரியோர் கைக்கொள்ளார் என்று பொருள்படும் இப் பாடற்கண், நல்ல செய்யுள் என்ற முக்கியப் பொருள், பரமபத மாகிய உண்மை வாய்ந்த பிறிதொரு முக்கியப் பொருளொடு கூடாவிடில், தன் முக்கியத் தன்மையைப் பெறாமல் போகி றது என்ற கருத்துக் கூறப்படுமிடத்தே, இவ் விநோத்தியணி வந்தவாறு காணப்படும். (மா. அ. 236) விஷம ரூபகம் - வியனிலை உருவகம்; அது காண்க. விஷமாலங்காரம் - தகுதியின்மை அணி; அது காண்க. விஷாதாலங்காரம் - துன்ப அணி; அது காண்க. வீரச்சுவை அணி - கல்வி தறுகண் இசைமை கொடை என்ற நான்கு நிலைக் களன்கள் பற்றி இது தோன்றுவது; சுவையணிவகை எட்டனுள் ஒன்று. எ-டு : ‘சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி ஈர்ந்திட்(டு) உயர்துலைதான் ஏறினான் - நேர்ந்த கொடைவீர மோ, மெய் நிறைகுறையா வன்கண் படைவீர மோ, சென்னி பண்பு?’ தன்னைச் சரணடைந்த புறாவின் உயிரைக் காக்கச் சோழ மன்னனான சிபி வேந்தன், அப்புறாவின் நிறைக்குத் தன் னுடம்பின் தசைகளை அறுத்துத் துலைத்தட்டிலிட்டு இறுதி யில் அந்நிறை நிரம்பத் தானும் துலாப்புகுந்த செய்தி கொடைப் பொருளாகத் தோன்றும் வீரச்சுவையாம். இது பெருமிதச் சுவை எனவும் வழங்கப்பெறும். (தண்டி. 70-1) வீரசோழியம் கூறும் பொருளணிகள். வீரசோழியம் கூறும் பொருளணிகள் - தண்டியலங்காரம் குறிப்பிடும் 35 பொருளணிகளே. வீரம் பற்றிய உவமம் - தன்மீது மறையில் நின்று பாய்ந்த புலியைப் பற்றித் தன் கோடுகளால் குத்திக் கொன்று சினம் தீர்ந்த யானை, மல்லர் களுடைய வலிமையை அழித்த கண்ணனைப் போலக் கம்பீர மாகத் தன் இனத்தை யடைந்தது என்ற கருத்தமைந்த ‘முறம்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று....... நிறம்சாடி முரண்தீர்த்த நீள்மருப்(பு) எழில்யானை மல்லரை மறம்சாய்த்த மால்போல்தன் கிளைநாப்பண் கல்லுயர் நனஞ்சாரல் கலந்தியலும்’ (கலி. 52) என்ற அடிகளில், ‘மல்லரை மறம் சாய்த்த மால்போல்’ என்ற உவமத்தில் வெற்றி பற்றிய பெருமிதச் சுவை அமைந்துள்ளது. (பெருமிதம் - வீரம்). (தொ. பொ. 294 பேரா.) வீழ என்னும் உவமஉருபு - ‘விரிபுனல் பேரியாறு வீழ யாவதும் வரையாது சுரக்கும் உரைசால் தோன்றல்’ இடையறாத நீர்ப்பெருக்கையுடைய பெரிய ஆறு போலத் தன்னிடமுள்ளவற்றைத் தனக்கென வைத்துக் கொள்ளாது கொடுக்கும் கொடைப்புகழினையுடைய தலைவன் என்று பொருள்படும் இத்தொடரில், ‘வீழ’ என்பது பயனுவமப் பொருட்கண் வந்தது. இது பயனுவமத்திற்கே சிறந்த உருபாம். (தொ. பொ. 289 பேரா.) வீறுகோள் அணி - இஃது உதாத்த அணி எனவும், உதாரதை அணி எனவும் கூறப்படும். இதனை வடநூலார் உதாத்தாலங்காரம் என்ப. ‘உதாத்த அணி’ காண்க. (ச. 121, குவ. அ. 95) வெகுளிச் சுவை அணி- உருத்திரச் சுவை அணி எனவும் வழங்கப்படும். அது காண்க. (மா. அ. 1981) வெகுளி பற்றிய உவமம் - கிள்ளிவளவன் கூற்றுவன் வெகுண்டாற் போன்ற ஆற்ற லொடு பகைவராகிய சேரபாண்டியர் நிலத்தைக் கைப்பற்றும் வாய்ப்பினை நோக்கியதை இடைக்காடனார் குறிப்பிடும் ‘நீயே, கூற்றுவெகுண் டன்ன முன்பொடு மாற்றிரு வேந்தர் மண்நோக் கினையே’ (புறநா. 42) என்ற அடிகளில், கிள்ளிவளவனுடைய வெகுளிக்குக் கூற்று வனுடைய வெகுளியை உவமம் கூறியது வெகுளிச்சுவை பற்றிய உவமம். (தொ. பொ. 294 பேரா.) வெகுளிவிலக்கு அணி - இது முன்னவிலக்கணியின் வகைகளுள் ஒன்று; கோபம் தோன்றப் பேசி விலக்குவது. எ-டு : ‘வண்ணம் கரிய வளைசரிய வாய்புலர எண்ணம் தளர்வேம் எதிர்நின்று - கண்இன்றிப் போதல் புரிந்து பொருட்காதல் செய்வீரேல், யாதும் பயம் இலேம் யாம்.’ “தலைவ! உடல் வண்ணம் வேறுபட, வளையல்கள் கழல, வாய் உலர, அது கண்டு செய்வதறியாமல் மனம் தளர்ந்து நிற்கும் எங்கள் நிலையைக் கண்ணால் கண்டுவைத்தும், எங்கள் மீது இரக்கம் சிறிது மின்றிப் பொருள்மீது கொண்ட காதலால் பிரிந்து செல்ல நினைக்கின்றாய். அப்படியானால் எங்களால் உனக்கு ஒரு பயனும் இல்லை என்றாகிறது (யாம் வேண்டா; உனக்குப் பொருளே போதும்!)” என்ற இத்தோழி கூற்றில், அவள் வெகுளியுடன் பேசித் தலைவன் செல் லுதலை விலக்கியமையால் இது வெகுளிவிலக்கு ஆயிற்று. (தண்டி. 45-11) வெதிரேகாலங்காரம் - வ்யதிரேகாலங்காரம் - வேற்றுமையணி. அது காண்க. வெப்பத்தடைமொழி அணி- இது வீரசோழியம் சிறப்பாகக் குறிப்பிடும் முன்னவிலக்கணி வகைகள் ஏழனுள் ஒன்று. தம் செயல் நிறைவேறாதவழித் தமக்கு அச்செயலில் விருப்ப மின்மை புலப்படச் சினத்தொடு மற்றவரிடம் தம் கருத்தைப் புலப்படக் கூறுதல். எ-டு : ‘தேடித் தந்திட மாடிற் போக்குற நாடித் திசைமிசை ஓடுநம் இறையே.’ “நம் தலைவர் பொருளைத் தேடிக்கொண்டு வரவும், தம் செல்வவளனை விரிவடையச் செய்யவும் ஏற்ற இடமிது என வேற்றுநாட்டை ஆராய்ந்து அந்நாடுள்ள திசை நோக்கிப் புறப்படுகிறார்” என்று தலைவனுடைய பிரிவில் தனக்கு விருப்பமின்மையும், தன் விருப்பத்திற்கு இணங்காது தலைவன் செய்யும் செயல் தனக்குச் சினமூட்டும் தன்மையும் தோன்றத் தலைவி அவனது பிரிவு பற்றித் தோழியிடம் கூறிய இக்கூற்றில், சினம் வெளிப்படுவதால், இஃது இவ்வணி யாயிற்று. (வீ. சோ. 164) வெல்ல என்னும் உவம உருபு - ‘வீங்குசுரை நல்லான் வென்ற ஈகை’ மடி பாலினால் நிரம்பிய பெரிய பசுவினை ஒப்பக் கொடுக் கும் கொடை என்று பொருள்படும் இத்தொடரில், வென்ற என்பது பயன்உவமப் பொருட்கண் வந்தது. இது பயனுவமத் திற்கே சிறந்த உருபு. (தொ. பொ. 289 பேரா.) ‘வேய் வென்ற தோளாய்’ (கலி. 20) என வென்ற என்பது மெய்யுவமம் பற்றி வந்தது. (290 பேரா.) வெளிப்படை அணி - விபாவனை அணியின் மறுபெயர்களுள் ஒன்று. ‘விபாவனை அணி’ காண்க. (வீ. சோ. 153 உரை) வெளிப்படை உவமை - உபமானஉபமேயங்களுக்கு உரிய பொதுத்தன்மை வெளிப் படையாகக் கூறப்படும் உவமை. பவளச்செவ்வாய், பானற் கருங்கண் என்புழிப் பொதுத்தன்மையாகிய செம்மையும் கருமையும் வெளிப்படையாகக் கூறப்பட்டமையின், வெளிப் படை உவமையாம். (மா. அ. 99) வெளிப்படை நவிற்சி அணி - சிலேடையான் மறைத்துச் சொல்லிய கருத்து ஒன்றனை இடம் சுட்டிக் கூறும் வாயிலாகப் புலவன் வெளிப்படுத் துவது. இதனை விவ்ருதோக்தி அலங்காரம் என்று வடநூல்கள் கூறும். எ-டு : ‘பிறன்புலத்தில் வாய்நயச்சொல் பெட்புடன்கொள் காளாய்! இறைவன்அடை கின்றனன்விட்(டு) ஏகு - துறையின், எனப் பண்பின் உணரப் பகர்ந்தான் குறிப்பாக நண்பினுயர் பாங்கன் நயந்து.’ “பிறன் வயலகத்து நெல்லை விரும்பி நுகரச் செல்லும் காளையே! வயலுக்கு உடைமையாளன் வருகிறான் ஆதலின் விடுத்துச் செல்” என்று, பிறன்மனையாளை விரும்பிச் சென்ற வனை, அவள்கணவனது வரவு கூறி அக்கருத்தினை விடுத்துச் செல்லுமாறு குறிப்பால் நண்பனொருவன் அறிவித்தான். ‘பாங்கன் பண்பின் உணரப் பகர்ந்தான்’ என்று இடம் சுட்டி விளக்கி, ‘பிறன்............. ஏகு’ என்ற தொடரால் சிலேடைப் பொருள் விளக்கியவாறு. புலம் - வயல், இல்லம்; நயச் சொல் - விரும்பத்தக்க நெல், விரும்பத்தகும் பேச்சு; காளை - இடபம், தலைவன்; இறைவன் - வயற்குடைமையாளன்; பெண்ணின் கணவன். (ச. 114 ; குவ. 88) வெற்றொழிப்பு - அவநுதி யணிவகை (யாழ். அக) வென்றது ஒத்தது என்ற உவமை வகை - உபமேயம் ஓருபமானத்தை வென்று மற்றோர் உபமானத்தை ஒத்தது என்று கூறும் உவமை வகை. எ-டு : ‘தெண்ணறவை வென்றுதிரைத் தெள்ளமுதை ஒத்தமொழிப் பெண்ணரசே!’ தெள்ளிய தேனை வென்று அமுதத்தை ஒத்த இனிய சொற்களையுடைய தலைவி என்ற தொடரில், தலைவியது மொழியாகிய உபமேயம் நறவாகிய உபமானத்தை வென்று அமுதாகிய உபமானத்தை ஒத்தது என்பது இவ்வுவமை வகையாம். (மா. அ. பாடல் 203) வேட்கை உவமை அணி - உவமை வகைகளுள் ஒன்று; “ஒரு பொருளை ஒன்றனோடு ஒப்பிட்டுக் கூற என் உள்ளம் விரும்புகின்றது” என்று கூறுவது. எ-டு : ‘நன்றுதீ(து) என்றுணரா(து) என்னுடைய நன்னெஞ்சம் பொன்துதைந்த பொன்சுணங்கின் பூங்கொடியே! - மன்றல் மடுத்துதைந்த தாமரைநின் வாள்முகத்துக்(கு) ஒப்பென்(று) எடுத்தியம்பல் வேண்டுகின்ற தின்று.’ “பூங்கொடியே! நான் இவ்வாறு கூறுவது நன்றோ தீதோ என்று ஆராயாமல், என் நெஞ்சம் தாமரைமலரை உனது முகத்திற்கு ஒப்பாகக் கூற விரும்புகின்றது” என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், உவமை, கூறுவானது வேட்கையைக் காட்ட லின் இவ்வுவமைஅணிவகையாயிற்று. (தண்டி. 32 - 15) வேண்டல் அணி - ஒரு குற்றத்தினால் நன்மை உண்டாதலைக் குறித்து, அக் குற்றமே தம்மை நீங்காதிருக்குமாறு வேண்டுவது. இதனை வடநூலார் ‘அநுஞ்யாலங்காரம்’ என்ப. எ-டு : ‘வெண்திரு நீறு புனையும் மாதவர்க்கு விருந்துசெய்து உறுபெரு மிடியும், கொண்டநல் விரதத்து இளைக்கும் யாக்கையும், கொடியனேற்கு அருளும்நாள் உளதோ?’ அடியார்க்கு அன்னம் இடுவதால் ஏற்படும் வறுமையும், விரதங்களால் உடல் இளைத்தலும் மறுமைக்குப் பேரூதியம் ஆதலின் விரும்பிக் கொள்ளத்தக்கன. ஆதலின், இத்தகைய வறுமையும் உடல்இளைப்பும் ஆகிய குற்றங்கள், மறுமை யின்பம் தரும் குணம் கருதி வேண்டத்தக்கன என்று கூறும் இப்பாடற்கண் இவ்வணி வந்துள்ளது. (ச. 97; குவ. 71) வேற்றுப்பொருள் விலக்கணி - இது முன்ன விலக்கணி வகையைச் சார்ந்தது. ஒரு பொதுப் பொருளைக் கூறிச் சிறப்புச் செய்தியை விளக்கி, அதனால் விலக்குதல். எ-டு : ‘தண்கவிகை யால்உலகம் தாங்கும் சயதுங்கன் வெண்கவிகைக் குள்அடங்கா வேந்தில்லை; - உண்டோ, மதியத் துடன்இரவி வந்துலவு வானில் பொதியப் படாத பொருள்?’ “தன் குடையின்கீழ் உலகத்தை நன்கு பாதுகாக்கும் சோழ மன்னனுடைய வெண்கொற்றக்குடைக்கீழ்ப் படாத அரசர் யாருமே இல்லை; சந்திரனும் சூரியனும் உலவுகின்ற வானத்தின்கீழ் அடங்காத பொருள் ஏதேனும் உண்டோ?” - என்ற பொருளமைந்த இப்பாடற்கண், பின் இரண்டடியில் கூறிய பொருளால், முன் இரண்டடியில் கூறிய சிறப்பான பொருள் விளக்கப்படுவதுடன், இரண்டிலும் விலக்கு அமைந்திருப்பதால், இதுவேற்றுப்பொருள் விலக்கு ஆயிற்று. (தண்டி. 46 -1) வேற்றுப்பொருள்வைப்பணி - கவி ஒரு செய்தியைக் கூறத் தொடங்கி, அதனைத் தெளிவு பெற விளக்கிக் காட்டுவதற்கு அதனை அடுத்து உலகறிந்த ஒரு பொதுப்பொருளை இணைத்துக் கூறுவது (இஃது எட்டு வகைகளையுடையது.) (தண்டி. 47) பொதுப்பொருளால் சிறப்புப்பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப்பொருளையும் விளங்க வைப்பது வேற்றுப்பொருள் வைப்பணி என்று சந்திராலோகம் கூறும். இது பிறபொருள்வைப்பு எனவும் (வீ. சோ. 153) அர்த்தாந்தர நியாசம் எனவும் கூறப்பெறும். (ச. 87; குவ. 61) வேற்றுப்பொருள் வைப்பணியின் மறுபெயர் - பிறபொருள் வைப்பு அணி. (வீ. சோ. 153) வேற்றுப்பொருள் வைப்பணியின் வகைகள் - 1. முழுவதும் சேறல், 2. ஒருவழிச்சேறல், 3. முரணித் தோன்றல், 4. சிலேடையின் முடித்தல், 5. கூடா இயற்கை 6. கூடும் இயற்கை, 7. இருமை இயற்கை, 8. விபரீதப்படுத்தல் என எட்டு வகையாம். (தண்டி. 48) இவற்றினை மாறன் அலங்காரம் (208) முறையே முழுவதும் செறிதல், ஒருவகை அடைதல், முரணுற மொழிதல், சிலேடை வேற்றுப்பொருள்வைப்பு, கூடாவகையிற் கூறுதல், கூடும் இயற்கை, இருமையின் இயம்பல், விபரீதத்து இசைத்தல் என்னும். வீரசோழியமும் (கா. 162) இவற்றினை முறையே பொதுப் பிறபொருள் வைப்பு, சிறப்புநிலைப் பிறபொருள்வைப்பு, முரண் பிறபொருள்வைப்பு, சிலேடைப் பிறபொருள் வைப்பு, கூடா இயற்கைப் பிறபொருள்வைப்பு, கூடும் இயற்கைப் பிறபொருள்வைப்பு, விரவியற் பிறபொருள்வைப்பு, விபரீதப் பிறபொருள்வைப்பு என்று கூறும். வேற்றுமை அணி - வெளிப்படையான கூற்றினாலோ, வெளிப்படை அல்லாத குறிப்பினாலோ ஒற்றுமையுடைய இருபொருள்களிடையே வேற்றுமையும் உள்ளதெனக் கூறுவது. இவ்வணி 1. குணவேற்றுமை, 2. பொருள் வேற்றுமை, 3. சாதி வேற்றுமை, 4. தொழில் வேற்றுமை என நான்கு வகையாம். மேலும், 1. ஒரு பொருளானே வேற்றுமை செய்தலும், 2. இருபொருளானே வேற்றுமை செய்தலும், 3. சமனின்றி மிகுதி குறைவானே கூற்றினான் வேற்றுமை செய்தல், 4. சமனின்றி மிகுதி குறைவானே குறிப்பினான் வேற்றுமை செய்தல் (உயர்வு) என்பனவும் கூட, வேற்றுமையணி வகைகள் எட்டாம். மேலும், உரையிற் கோடலால் 1. விலக்கியல் வேற்றுமையணி, 2. சிலேடை வேற்றுமையணி என இவ் விரண்டும் கூடப் பத்தாமாறு காண்க. இவை தனித்தலைப் புள் இடம் பெற்றுள. (தண்டி. 49, 50) வேற்றுமை அணியின் மறுபெயர்கள் - 1. விதிரேக அணி (வீ.சோ. 165), 2. வேற்றுமை நிலை (யா.வி.பக். 550), 3. வெதிரேக அணி. வேற்றுமையுருபு உவமவுருபுகளிடையே வேறுபாடு - வேற்றுமையுருபுகள் திணை பால் இடங்கட்குப் பொது- வாய்ப் பெயரின் பின்னர்ப் பெயரோடு இணைந்து வரும்; தனித்து வாரா; தனித்துப் பொருள் பயவா. உவம உருபுகள் பல்வேறு குறிப்பினவாயமைந்து தத்தம் குறிப்பின் பொருள் செய்வனவாக வரும். அதனான் இவற்றைத் தத்தம் குறிப்பின் பொருள் செய்வனவாக வரும் இடைச்சொற்களின் வைத்துச் சொல்லதிகாரத்துள் இடைச்சொல் இயலில் ஓதினார். தத்தம் குறிப்பிற் பொருள் செய்யும் மற்று தஞ்சம் முதலிய இடைச் சொற்கள் பெயர்த் தன்மையுற்றுப் பொருளுணர்த்தி நிற்கு மாறு போல, உவம உருபுகளாகிய இடைச்சொற்கள் வினைத் தன்மையுற்றுப் பொருளுணர்த்தி வரும்.(தொ. உவம. 11 ச.பால.) வேற்றுமை உருவக அணி - உருவகம் செய்த பொருளை உவமையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது. எ-டு : ‘வையம் புரக்குமால் மன்னவ! நின் கைக்காரும் பொய்யின்றி வானில் பொழிகாரும்; - கையாம் இருகார்க்கும் இல்லை பருவம்; இடிக்கும் ஒருகார் பருவம் உடைத்து!’ “அரசே! உன் கைகளாகிய மேகமும் மழைதரும் மேகமும் உலகத்தைக் காக்கின்றன; எனினும் உன்கைகள் எனும் கார் மேகத்திற்குப் பருவ வரையறை இல்லை; ஆயின் மழை தரும் மேகத்திற்குப் பருவ வரையறை உண்டு” என்று பொருள மைந்த இப்பாடற்கண், கைகளை மேகமாக உருவகம் செய்து பின், மேகமெனும் உபமானத்திற்கு வேற்றுமையும் காட்டிய தால் இது வேற்றுமையுருவகம் ஆயிற்று. (தண்டி. 38 - 3) வேற்றுமை நிலை - வேற்றுமை அணியின் மறுபெயர். அது காண்க. வேறுபடவந்த உவமத் தோற்றம் - உவமஇயலில் விதந்து கூறப்பட்ட உவம இலக்கணத்திற்கு அப்பாற்பட்டு வரும் உவமங்கள். அவை : 1. உவமைக்கும் பொருட்கும் ஒப்புமை மாறுபடக் கூறுதல், 2. ஒப்புமை கூறாது பெயர் போல்வனவற்று மாத்திரை யானே மறுத்துக் கூறுதல். 3. ஒப்புமை மறுத்துப் பொருளை நாட்டிக் கூறுதல், 4. ஒப்புமை மறுத்தவழிப் பிறிதோர் உவமை நாட்டுதல், 5. உவமையும் பொருளும் முற்கூறி நீறீஇப் பின் அவை ஒவ்வா என்றல், 6. உவமைக்கு இருகுணம் கொடுத்துப் பொருளினை வாளாது கூறுங்கால், உவமையினை இரண்டாக்கி ஒன்றற்குக் கூறிய அடை ஒன்றற்குக் கூறாது கூறுதல், 7. ஒப்புமை குறைவுபட உவமித்து மற்றொரு குணம் கொடுத்து நிரப்புதல், 8. ஒவ்வாக் கருத்தினான் ஒப்புமை கோடல், 9. உவமத்திற்கன்றி உவமத்திற்கு ஏதுவாய பொருட்குச் சில அடை கூறி அவ்வடையானே உவமிக்கப்படும் பொருளைச் சிறப்பித்தல், 10. உபமானத்தினை உபமேயமாக்கியும் அது விலக்கியும் கூறுதல், 11. இரண்டு பொருளானே வெவ்வேறு கூறியவழி ஒன்று ஒன்றற்கு உவமை என்பது கொள்ள வைத்தல் - இவை முதலியன. (தொ. பொ. 307 பேரா.) வேறு பல குழீஇய பலபொருள் உவமை - ஒரே பொருளுக்கு வெவ்வேறினத்தின் பல பொருள்களை உபமானமாகக் கூறுதல் என்னும் உவமை வகை. எ-டு : ‘கொடியும் ஒருபிடியும் கோளரவும் மின்னும் துடியும் புரைமருங்குல் தோகை....’ தலைவியின் இடைக்குக் கொடி, கைப்பிடி அளவு, பாம்பு, மின்னல், துடி இவற்றைத் தொகுப்பாகக் கொண்டு உவமை கூறியமையால், இவ்வடிகளில் இவ்வணி வந்தது. (மா. அ. பாடல். 165) வேறுபாட் டொழிப்பு - அவநுதியணி வகை (யாழ். அக.) வேறொரு காரண விபாவனை அணி - உலகம் அறிந்த காரணமன்றி வேறொரு காரணத்தால் செயல் நிகழ்ந்ததாகக் கூறுவது. எ-டு : ‘தீயின்றி வேம்தமியோர் சிந்தை; செழுந்தேறல் வாயின்றி மஞ்ஞை மகிழ்தூங்கும்; - வாயிலார் இன்றிச் சிலர்ஊடல் தீர்ந்தார்; அமரின்றிக் கன்றிச் சிலவளைக்கும் கார்.’ நெருப்பு இல்லாமலேயே காதலரைப் பிரிந்து தனித்திருப் போருடைய உள்ளம் வேகும்; கள்ளைக் குடிக்காமலேயே மயில் களித்து ஆடும்; ஊடலைத் தீர்த்துவைக்கும் வாயிலாக யாரும் வாராமலேயே சிலர் ஊடல் தீர்ந்தனர்; போரொன் றும் நேராமலேயே கார்மேகம் வில்லினை (வானவில்) வளைக்கிறது” என்று பொருள்படும் இப்பாடற்கண், சிந்தை வேவதும் மயில் ஆடுவதும் ஊடல் தீர்வதும் மேகம் வில்லை வளைப்பதும் ஆகிய செயல்கள் கார்காலத்து நிகழ்ச்சிகள்; இவற்றிற்கு முறையே நெருப்பும் கள்ளும் வாயிலும் போரும் போன்ற உலகறி காரணங்கள் இல்லையெனக் கூறியதால், இது வேறொரு காரண விபாவனையணி ஆயிற்று. (வேறொரு காரணமாவது ஈண்டுக் கார்ப்பருவத்தினது வரவு.) (தண்டி. 51-1) வைதருப்ப உதாரம் - ஓரளவு குறிப்பால் பொருள் புலப்பட வைப்பது. ‘உதாரம்’ என்ற குண அணி காண்க. வைதருப்ப உய்த்தலில் பொருண்மை என்னும் குணஅணி - ‘உய்த்தலில் பொருண்மை’ என்னும் குண அணி காண்க. வைதருப்ப ஒழுகிசை என்னும் குண அணி - தூங்கிசைச் செப்பலோசைத்தாய் வருவது.(மா.அ. பாடல் 97) வைதருப்பக் காந்தம் என்னும் குண அணி - ‘காந்தம்’ என்னும் குண அணி காண்க. வைதருப்பச் சமநிலை என்னும் குண அணி - செய்யுளில் வல்லினம், மெல்லினம் இடையினம் இவற்றைச் சேர்ந்த எழுத்துக்கள் விரவிவர அமைக்கும் செய்யுளின் நல்லியல்பு. எ-டு : ‘சோக மெவன்கொ லிதழிபொன் தூக்கின; சோர் குழலாய்! மேக முழங்க, விரைசூழ் தளவம் கொடியெடுக்க மாக நெருங்க, வண் டானம் களிவண்டு பாட, எங்கும் தோகை நடம்செய, அன்பர்திண் தேரினித் தோன்றியதே’ “தலைவியே! மேகங்கள் முழங்குகின்றன; முல்லைக் கொடிகள் தழைக்கின்றன; கார்மேகங்கள் கூடுகின்றன; வண் டானம் என்னும் பறவைகளும் வண்டுகளும் பாடுகின்றன; மயில்கள் ஆடுகின்றன; மீண்டு வரும் தலைவனுடைய தேர் கட் புலனா கின்றது. நீ வருந்த வேண்டா” எனப் பருவம் கண்டு வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்த இப்பாடற்கண், மூவின எழுத்துக்களும் விரவி வந்துள்ளமை வைதருப்பச் சமநிலை யாம். (தண்டி. 18 -1) வைதருப்பச் செறிவு என்னும் குண அணி - ஓசை நெகிழாதவாறு செய்யுள் அமைத்தல். எ-டு : ‘சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி முலைவிலங்கிற் றென்று முனிவாள் - மலைவிலங்கு தார்மாலை மார்ப! தனிமை பொறுக்குமோ, கார்மாலை கண்கூடும் போது?’ “தலைவ! இறுகத் தழுவும் புணர்ச்சியில் தனம் சற்றே விலகின என்று புருவம் வளையச் சினம் கொள்ளும் தலைவி, கார்காலத்து மாலை வந்தால் உன்னைப் பிரிந்திருக்கும் தனிமையைப் பொறுப்பாளா?” என்று தலைவனைச் செலவு அழுங்குவிக்கும் தோழி கூற்றில், குறிலிணை, குறில்நெடில், நெட்டொற்று என்னும் அசைகள் அமைப்பு, ஒன்றை ஒன்று அடுத்து ஓசை நெகிழாது செறிந்துள்ள தன்மை இந்நெறி பற்றிய குண அணியாம். (தண்டி. 16 -1) வைதருப்பச் சொல்லின்பம் என்னும் குண அணி - ஒவ்வோர் அடியிலும் சீர்கள் இடையிட்டு வரும் மோனைத் தொடை அமைத்தும், பிறவகையில் செவிக்கு இன்பம் அமைத்தும் செய்யுள் இயற்றுதல். எ-டு : ‘முன்னைத்தம் சிற்றில் முழங்கு கடலோதம் மூழ்கிப் போக அன்னைக் குரைப்பன் அறிவாய் கடலேஎன் றலறிப் பேரும் தன்மை மடவார் தளர்ந்துகுத்த வெண்முத்தம் தகைசூழ் கானல் புன்னையரும் பேய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே எம்மூர்!’ “சிறுமியர் தாம் கட்டி விளையாடிய சிற்றிலாம் மணல் வீட்டைக் கடல்வெள்ளம் அழித்ததனால் வருந்தி, ‘கடலே! உனது இச்செயலை எங்கள் தாயிடம் சொல்வோம்’ என்று சினத்துடன் தாம் அணிந்திருந்த முத்துமாலைகளை அறுத் தெறிய, அம்முத்துக்கள் மணற்பரப்பில் சிதறிப் புன்னை யரும்புகள் போலத் தோன்றி, அவ்வழியே நடந்துசெல்வா ருடைய கால்களில் உறுத்தும் இயல்பையுடையது எமது புகார் நகரம்” என்று பொருளமைந்த இப்பாடற்கண் வரும் வழிமோனைத் தொடையின் இன்பமும், பிற சொல்லின்ப மும் காண்க. இது வைதருப்பநெறியாருடையது. (தண்டி. 19-1) வைதருப்பத் தெளிவு என்னும் குண அணி - எளிதிற் பொருளைப் புலப்படுத்தும் வகையில் தெளிவான பொருள் காட்டும் சொற்களைக் கொண்டு பாடல் அமைப் பது. பொருள் எளிதில் விளங்குதல் இதன் இலக்கணமாம். எ-டு : ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.’ (கு. 319) இக் குறட்பாவின் பொருள் எளிதில் புலப்படுதல் காண்க. இதுவே வைதர்ப்பருக்குரிய தெளிவாம்; பொருள் தெளிவு எனவும் படும். (தண்டி. 17-1) வைதருப்ப நெறி - விதர்ப்பநாட்டார் பின்பற்றும் மரபு. செய்யுளுக்கு அவர்கள் பின்பற்றும் பத்து வகைப்பட்ட நெறிகளும் வைதருப்ப நெறி எனப்படும். அது தெளிவு, அளவு, கற்பனை என்பனவற்றை ஓரெல்லைக்குட் படுத்திக்கொள்ளும். (மா. அ. 80; தண்டி. 14) வைதருப்ப வலி என்னும் குண அணி - தொகைச்சொற்களின் தொடர்பு மிகுதியாய் அமைத்தல். இதனை வடநூலார் ‘ஓசம்’ என்ப. வல்லெழுத்து மிக்கு வரத்தொடுத்தல் இதற்குச் சிறப்பு. எ-டு : ‘செங்கலசக் கொங்கை செறிகுறங்கின் சீறடிப்பேர்ப் பொங்கரவ அல்குல் பொருகயற்கண் - செங்கனிவாய்க் கார்உருவக் கூந்தல் கதிர்வளைக்கைக் காரிகைத்தாம் ஒர்உருஎன் உள்ளத்தே உண்டு.’ “கலசம் போன்ற கொங்கை, செறிந்த துடை, சிறிய பாதம், பாம்பின் படம் போன்ற அல்குல், கயல் போன்ற கண், கொவ்வைக்கனி போன்ற வாய், கார்மேகம் போன்ற கூந்தல், வளையை அணிந்த கை - எனுமிவற்றையுடைய நங்கை யொருத்தியின் உருவம் என் உள்ளத்தில் இருக்கிறது” என்று பொருள்படும் இப்பாடற்கண், கலசக்கொங்கை - உவமைத் தொகை; செறிகுறங்கு - வினைத்தொகை; சீறடி - பண்புத் தொகை; அரவல்குல் - உவமைத் தொகை; பொருகயல் - வினைத்தொகை; கயற்கண் - உவமைத்தொகை; கனிவாய் - உவமைத் தொகை; கார் உருவக் கூந்தல் - உவமைத் தொகை; வளைக்கை - இரண்டன் தொகை; ஓர் உரு - பண்புத்தொகை; என் உளம் - ஆறன் தொகை என்று பல தொகைகளும் அமைந்திருப்பது வைதருப்ப நெறியார்க்குரிய வலி என்னும் குண அணியாம். (இ. வி. 635 ; தண்டி. 24) ஜ ஜீவாரோப அலங்காரம் - உயிரற்ற பொருள்களுக்குக் கற்பனையால் உயிரை ஏற்றி அவை உறுப்பும் உணர்வும் உடையன போல அவற்றுடன் உரையாடுதல். எ-டு : ‘கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத் தின்னும் அவர்க்காண லுற்று.’ (குறள் - 1244) இதன்கண், நெஞ்சு உயிருடையது போலவும், மறுமாற்றம் தருவது போலவும் அதன்மீது உயிர்த்தன்மை ஏற்றி மொழியப்பட்டது இவ்வணியாம். ஸ ஸ்மிருதிமதாலங்காரம் - நினைப்பணி; அது காண்க. ஸ்வபாவோக்தி அலங்காரம் - தன்மை அணி; அது காண்க. ஸகல ரூபகம் - முற்றுருவகம்; அவ்வணி காண்க. ஸங்கதி - இயைபு; முன்னுள்ளதற்கும் பின்னுள்ளதற்கும் இடையே உள்ள தொடர்பு. ஸங்கீர்ணம் - சங்கீரணம்; அவ்வணி காண்க. ஸந்தேகாலங்காரம் - ஐய அணி; அது காண்க. ஸம்சயாnக்ஷபம் - முன்னவிலக்கணி வகைகளுள் ஒன்றாகி ஐயவிலக்கணி; அது காண்க. ஸம்சயோபமாலங்காரம் - ஐய உவமை எனவும், ஐயநிலை உவமை எனவும் கூறப்படும். ‘ஐய உவமை’ காண்க. ஸாமாந்யாலங்காரம் - பொதுமை அணி; அது காண்க. ஸம்பாவநாலங்காரம் - உய்த்துணர்வு அணி; அது காண்க. ஸமஸ்த ரூபகம் - தொகை உருவகம்; அவ்வணி காண்க. ஸமஸ்தவ்யஸ்த ரூபகம் - தொகைவிரி உருவகம்; அவ்வணி காண்க. ஸமாஸாலங்காரம் - ஒட்டு அணி; அது காண்க. ஸமாஸோக்தி அலங்காரம் - சுருங்கச் சொல்லல் அணி; அது காண்க. ஸமாதான ரூபகம் - நட்பு உருவகம்; அவ்வணி காண்க. ஸமாலங்காரம் - தகுதி அணி; அது காண்க. ஸமாஹிதம் - சமாயிதம்; துணைப் பேறணி எனவும்படும். ‘சமாயிதம்’ காண்க. ஸமுச்சயாலங்காரம் - கூட்ட அணி; அது காண்க. ஸஹோக்தி அலங்காரம் - உடனிகழ்ச்சி அணி; ‘புணர்நிலை’ எனப்படும். அது காண்க. ஸாசிவ்யாnக்ஷபாலங்காரம் - துணைசெயல் விலக்கணி; முன்னவிலக்கணி வகைகளில் ஒன்று. அது காண்க. ஸாராலங்காரம் - மேன்மேலுயர்ச்சி அணி; அது காண்க. ஸுகுமாரதா - ஒழுகிசை; இது பொதுவணி வகை பத்தனுள் ஒன்று; அது காண்க. ஸூக்ஷ்மாலங்காரம் - நுட்ப அணி; அது காண்க. ஹ ஹாஸ்யரஸாலங்காரம் - சுவையணி வகைகளுள் ஒன்றாகிய நகை; அது காண்க. ஹேத்வலங்காரம் - ஏது அணி; அது காண்க. ஹேது - ஏது - காரணம். ஹேதூத்பிரேக்ஷhலங்காரம் - ஏதுத்தற்குறிப்பேற்ற அணி; அது காண்க. சொல்லணி, மடக்கு, சித்திரகவி அ அக்கரச்சுதகம் - சித்திரகவியுள் ஒன்று. அக்கரம்-எழுத்து; சுதகம் - நீங்கப் பெறுவது. ஒருபொருளைத் தருவதொரு சொல்லைக் கூறி, அதன் எழுத்துக்களை ஒவ்வொன்றாக நீக்க, வெவ்வேறு சொற்களாய் வெவ்வேறு பொருள் தருவது. அட்சரச் சுதகம் என்பதுமது. எ-டு : ‘பொற்றூணில் வந்தசுடர் (1), பொய்கை பயந்த அண்ணல்(2), சிற்றாயன் முன்வனிதை யாகி அளித்த செம்மல் (3). மற்றியார் கொல்லெனில் மலர்தூவி வணங்கி நாளும் கற்றார் பரவும் கநகாரி நகாரி காரி,’ பொன்மயமான தூணில் தோன்றிய சோதி (1) - கநகாரி; சரவணப் பொய்கையுள் தோன்றிய கடவுள் நகாரி; திருமால் பெண்வடிவங் கொண்டு சிவபெருமானுடன் கூடிப்பெற்ற மைந்தன் (3) - காரி. 1. கநகனுக்கு (இரணியனுக்கு) அரி (பகைவன்) நரசிங்கப் பெருமான். 2. நகத்திற்கு (-கிரவுஞ்சமலைக்கு) அரி முருகன்; 3. காரி என்பது சாத்தனுக்கு ஒரு பெயர். (தண்டி. 98 உரை) அக்கரச்சுதகம் : அதன் ஒரு பேதம் - ஒரு பாடலில் ஓர் இன்றியமையாத சொல்லை முதலெழுத்து நீக்கிய சொல்லாகவும், மற்றொரு சொல்லை இடை யெழுத்து நீக்கிய சொல்லாகவும் கொண்டு கூறக் கருதிய பொருளை விளக்குவது. எ-டு : ‘எந்தை இராமற்(கு) இமையோர் சரண்புகுத முந்த நகரி முதலெழுத்தில் லாநகரி; உந்துதிரட் கிள்ளைஇடை ஒற்றில்லாக் கிள்ளைகள்தேர் சிந்த முழுதும் இழந்தான் தெசமுகனே.’ இராமனுடைய திருவடிகளில் தம்மைக் காக்குமாறு தேவர்கள் சரண் புக்காராக, இராவணனுடைய இலங்கை மாநகரம், நகரி என்ற சொல்லில் முதலெழுத்து நீங்கியதா யிற்று. (கரியாயிற்று; அநுமன் வாலில் வைத்த தீ நகரைக் கரியாக்கிவிட்டது). கிள்ளை என்பதன்கண் இடையொற்றில் லாதவற்றைத் தன் குதிரை தேர்ப்படையோடு இராவணன் முற்றும் இழந்தான். (கிள்ளை, இடையொற்று நீங்கின் கிளை; அஃதாவது உறவினர்.) இராவணன் தன் உறவினர் எல்லோ ரையும் இழந்துவிட்டான் என்ற கருத்திற்று. இவ்வாறு அமைக்கும் அக்கரச்சுதகமும் உண்டு என்பது. அக்கரச்சுதகம் - எழுத்துச் சுருக்கம். (மா. அ. பா. 809) அக்கர வர்த்தனம் - அக்கர வருத்தனை காண்க. இஃது எழுத்துப் பெருக்கம் எனவும் கூறப்படும் மிறைக்கவியாம். (பி. வி. 26 உரை) அக்கர வருத்தனை - அக்கரம் - எழுத்து; வருத்தனை - கூட்டுதல் (-பெருக்கல்). மிறைக்கவியெனும் சித்திரகவியுள் ஒன்று. ‘எழுத்து வருத்தனம்’ என இதனைத் தண்டியலங்காரம் சுட்டும். ஒரு சொல், முதலெழுத்து ஓரெழுத்தொருமொழியாய்ப் பொருள் தந்து, பின்னர், முறையே ஒவ்வோர் எழுத்தாய் அதனுடன் கூட்டுந் தோறும் வேறுவேறு பொருள் தருமாறு அமைவது. எ-டு : ‘ஏந்திய வெண்படையும் (1), முன்னாள் எடுத்ததுவும் (2), பூந்துகிலும்(3), மால் உந்திப் பூத்ததுவும் (4), - வாய்ந்த உலைவில் எழுத்தடைவே ஓரொன்றாச் சேர்க்கத் தலைமலைபொன் தாமரைஎன் றாம்.’ முழுச்சொல்லும் சேர்ந்து ‘கோகநகம்’ என்றாகித் தாமரை எனப் பொருள்படும். 1. திருமால் கையில் ஏந்தும் வெண்படை, கம் (-சங்கு) 2. அவன் முன்பு கண்ணனாய்த் தூக்கியது, நகம் (-கோவர்த் தனமலை) 3. திருமால் உடுத்த ஆடை, கநகம் (-பீதாம்பரம்) 4. அவன் உந்தியில் மலர்ந்தது, கோகநகம் (-தாமரை) சங்கினைக் குறிக்கும் ‘கம்பு’ எனும் சொல் கடைக்குறையாய் நின்றது; மெய்யெழுத்துக் கணக்குப் பெறாத நிலையில் ஓரெழுத் தொருமொழியாயிற்று என அமைவு கொள்க. (தண்டி. 98 உரை) அகரக் குற்றுயிர் மடக்கு - அகரம் என்னும் குற்றெழுத்தொன்றே ஏனைய மெய்களொடு கலந்து உயிர்மெய்யாய்ப் பாடல் முழுதும் வருமாறு அமைக்கும் ஓரெழுத்து மடக்கு. ‘ஓரெழுத்து மடக்கு’க் காண்க. (மா.அ. பாடல். 760) அட்ட நாக பந்தம் - எட்டுப் பாம்புகளின் உருவத்தால் அமையும் மிறைக்கவி இது. ஒரு நான்(கு)அக் கரத்தோடு நாற்பத் தொன்றாம் ஆறுடன்நாற் பத்தைந்தாம் எட்டுடன்ஐந் நான்காம் இருளறுபன் னிரண்டுடனே பதினெட் டாகும் இருபத்தி ரண்டுடனே நாற்பத் தேழாம் பரவுமிரு பத்துநான் குடன்முப் பத்தொன் பானாம்முப் பான்மூன்றோ(டு) ஐம்பத் தொன்றாம் அருமுப்பத் தேழுடன்நாற் பத்தொன் பானாம் அட்டநாக பந்த மாம்செய் யுட்கே. 51 எழுத்துக்களால் அட்டநாகபந்தம் அமையும். பின்வரும் எண்களையுடைய எழுத்துக்கள் எழுத்தொன்றேயாகக் கணக் கிடப்படும். 4ஆம் எண்ணுடைய எழுத்தும் 41ஆம் எண்ணுடைய எழுத்தும் 6ஆம் எண்ணுடைய எழுத்தும் 45ஆம் எண்ணுடைய எழுத்தும் 8ஆம் எண்ணுடைய எழுத்தும் 20ஆம் எண்ணுடைய எழுத்தும் 12ஆம் எண்ணுடைய எழுத்தும் 18ஆம் எண்ணுடைய எழுத்தும் 22ஆம் எண்ணுடைய எழுத்தும் 47ஆம் எண்ணுடைய எழுத்தும் 24ஆம் எண்ணுடைய எழுத்தும் 39ஆம் எண்ணுடைய எழுத்தும் 33ஆம் எண்ணுடைய எழுத்தும் 51ஆம் எண்ணுடைய எழுத்தும் 37ஆம் எண்ணுடைய எழுத்தும் 49ஆம் எண்ணுடைய எழுத்தும் ஓர் எழுத்தாகவே அமையுமாறு 51 எழுத்துக்களால் இம் மிறைக்கவி அமையும். நாகங்கள் ஒன்றோடு ஒன்று இணையும் சந்திகளில் வருபவை 4ஆமெழுத்து முதலியவை. (இ. வி. அணி. 690. உரை) அடிதோறும் ஈரிடத்து வரும் மூவகை மடக்கு - முதலொடு இடைமடக்கு 15, முதலொடு கடை மடக்கு 15, இடையொடு கடைமடக்கு 15 என, அடிதோறும் ஈரிடத்து வரும் மூவகைமடக்கும் 45 வகைப்படும். (மா. அ. 255 பாடல்கள் 670 - 729) அடிமடக்கு - பொருள் வேறுபட்டேனும் வேறுபடாமலேனும் செய்யுளின் அடி மீண்டுமீண்டு வருவது. பொருள் வேறுபட்டு வருவதே சிறப்புடைத்தாகச் சொல்லணிவகையுள் அடங்கும். தண்டி.96 ‘ஒன்றி னம்பர லோகமே ஒன்றி னம்பர லோகமே சென்று மேவருந் தில்லையே சென்று மேவருந் தில்லையே’ (சி. செ. கோ. 80) இதன்கண், முதலடியே இரண்டாமடியாகவும், மூன்றா மடியே நான்காமடியாகவும் மடக்கியவாறு காண்க. பொருள் வேறுபட்டு வந்தவாறு. ‘சென்று தில்லையே மேவரும்; பரலோகமும் ஒன்றினம்; ஒன்று இன்னம் பரலோகமே சென்றுமே வருந்து இல்லையே’ - எனப் பொருள்செய்க. அடிமுதல்மடக்குப் பதினைந்து - முதலடி முதல் மடக்கு இரண்டாமடி முதல் மடக்கு மூன்றாமடி முதல் மடக்கு நான்காமடி முதல் மடக்கு முதல் ஈரடியும் முதல் மடக்கு முதலடியும் மூன்றாமடியும் முதல் மடக்கு முதலடியும் நான்காமடியும் முதல் மடக்கு கடை ஈரடியும் முதல் மடக்கு இடை ஈரடியும் முதல் மடக்கு இரண்டாமடியும் நான்காமடியும் முதல் மடக்கு ஈற்றடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல் மடக்கு ஈற்றயலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல் மடக்கு முதலயலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல் மடக்கு முதலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல் மடக்கு நான்கடியும் முற்றும் முதல்மடக்கு என்பன (மா. அ. 256. பாடல் 624- 639) அடியிடைமடக்குப் பதினைந்து - முதலடி இடை மடக்கு இரண்டாமடி இடை மடக்கு மூன்றாமடி இடை மடக்கு நான்காமடி இடை மடக்கு முதலீரடியும் இடை மடக்கு முதலடியும் மூன்றாமடியும் இடை மடக்கு முதலடியும் நான்காமடியும் இடை மடக்கு கடையீரடியும் இடை மடக்கு இடையீரடியும் இடை மடக்கு இரண்டாமடியும் நான்காமடியும் இடை மடக்கு ஈற்றடி யொழித்து ஏனை மூன்றடியும் இடை மடக்கு ஈற்றயலடி யொழித்து ஏனை மூன்றடியும் இடை மடக்கு முதலயலடி யொழித்து ஏனை மூன்றடியும் இடை மடக்கு முதலடி யொழித்து ஏனை மூன்றடியும் இடை மடக்கு நான்கடியும் முற்றும் இடை மடக்கு என்பன. (மா.அ. 257) (பாடல் 640 - 654) அடியிறுதிமடக்குப் பதினைந்து - முதலடி இறுதி மடக்கு இரண்டாமடி இறுதி மடக்கு மூன்றாமடி இறுதி மடக்கு நான்காமடி இறுதி மடக்கு முதலீரடியும் இறுதி மடக்கு முதலடியும் மூன்றாமடியும் இறுதி மடக்கு முதலடியும் நான்காமடியும் இறுதி மடக்கு கடையீரடியும் இறுதி மடக்கு இடையீரடியும் இறுதி மடக்கு இரண்டாமடியும் நான்காமடியும் இறுதி மடக்கு ஈற்றடி ஒழித்த ஏனை மூவடியும் இறுதி மடக்கு ஈற்றயலடி ஒழித்த ஏனை மூவடியும் இறுதி மடக்கு முதலயலடி ஒழித்த ஏனை மூவடியும் இறுதி மடக்கு முதலடி ஒழித்த ஏனை மூவடியும் இறுதி மடக்கு நான்கடியும் முற்றும் இறுதிமடக்கு என்பன. (மா. அ. 257 பாடல் 655- 669) அடியிறுதி முற்று மடக்கு - அடிதோறும் நான்கடிப் பாடலில் நான்காம் சீரும் எட்டாம் சீரும் இடையிட்டு வந்து மடக்கவே, அடியிறுதி முற்று மடக்கு ஆம் என ஒரு சாராரால் கொள்ளப்பட்டது. (தண்டி : 95) எ-டு : ‘வருமறை பலமுறை வசையறப் பணிந்தே மதியொடு சடைமுடி மருவுமப் பணிந்தே அருநடம் நவில்வதும் அழகுபெற் றமன்றே அருளொடு கடவுவ(து) அணிகொள்பெற் றமன்றே திருவடி மலர்வன திகழொளிச் சிலம்பே தெளிவுடன் உறைவது திருமறைச் சிலம்பே இருவினை கடிபவர் அடைபதத் தனன்றே இமையவர் புகல்அவன் எனநினைத் தனன்றே’ மறை பணிந்தே - வேதம் வணங்கி; மருவும் அப்பு அணிந்தே - (கங்கை) நீரை அணிந்து பொருந்தும். அழகு பெற்ற மன்றே - அழகு பெற்ற சபை; அணிகொள் பெற்றம் அன்றே - அழகிய இடபம் அன்றோ? ஒளிச் சிலம்பு - ஒளியுடைய சிலம்பு ஆகிய அணி; மறைச் சிலம்பு - வேதமயமான கயிலைமலை. அடை பதத்தன் அன்றே - அடையும் திருவடியுடையன் அல்லனோ; நினைத்தல் நன்றே - நினைப்பது சிறந்தது - என்று இவ்வாறு மடக்கிற்குப் பொருள்கொள்க. அந்தாதி மடக்கு (முதல் வகை) - முதலும் ஈறும் ஒருசொல்லாய் இடையிடைப் பலசொல்லாய் நிகழ்ந்த அந்தாதி மடக்கு எனவும், ஒரு சொல்லே முதலும் இறுதியும் ஒவ்வோரடியிலும் நிகழ்ந்த அந்தாதி மடக்கென வும் அந்தாதி மடக்கு இருவகைத்து. எ-டு : ‘தேனே கமழ்நறுந் திருமகிழ் மாறன் மாறன் சேவடி வணங்கிறை! வரைவாய்; வரைவாய் அன்றெனில் வல்லைநீ இறைவா! இறைவால் வளையைநீப் பினும்வருந் தேனே!’ “தேன்கமழும் நறிய மகிழம்பூமாலையை அணிந்த சடகோபன் புகழும் திருமால் அடியை வணங்கும் தலைவ! நீ இவளை மணந்து கொள்வாய். விரைவில் மணக்கவில்லையெனில், நீ இவளை உடன்கொண்டு சென்றாலும் வருந்தேன்; அல்லது நீ சிலநாள் குறியிடை வருதல் தவிர்ந்தாலும் வருந்தேன்” என்பது பொருள். ‘மால் தன் சேவடி வணங்கு இறை! வல்லைநீ வரைவாய். அன்றெனின் இறைவா! வளையலை அணிந்தாளொடு நீப்பினும் வருந்தேன்’ என்று பொருள் கொள்க. முதலும் ஈறும் ‘தேனே’ என்ற சொற்கள் வர, அடிதோறும் வேற்றுச் சொற்கள் அந்தாதியாக வந்தவாறு. இதன் இரண்டாம் வகை ‘சந்தொட்டியமகம்’ எனப்படும் அது காண்க. எ-டு : ‘நாகமுற்றவும்’ (மா. அ. 266, பா. 751) அம்மனை மடக்கு - 1) கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிர் இருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு. கலம்பகப் பிரபந்தத்துள் இஃது அம்மானை என்னும் உறுப்பாக ஐந்தடியால் வெண்டளை யாப்பிற்றாக நிகழும். 2) அம்மனையைக் கைக்கொண்டு ஆடும் மகளிர் இருவருள் ஒருத்தி தலைவன்ஒருவனை வஞ்சப்புகழ்ச்சி அணியால் ஒருவாறு வருணித்தலும், மற்றவள் அச்செய்யுள் இடைப் பட்ட அடியை மடக்காய் அந்தாதித்து அவ்வருணனை பற்றி வினவுதலும், அதன்பின் முதலாமவள் தான் கூறியது பிழை யாதபடி சிலேடைவாய்பாடு அமைய விடை கூறுதலும் ஆகிய அம்மனைப் பாடலில் காணப்படும் மடக்கு அம்மனை மடக்காம். (மா. அ. 267) எ-டு : ‘தேன்அமரும் சோலைத் திருவரங்கர் எப்பொருளும் ஆனவர்தாம் ஆண்பெண் அலிஅலர்காண் அம்மானை’ என்றாள் முதலாமவள். இரண்டாமவள் அவ்விரண்டாம் அடியினை அந்தாதித்து ‘ஆனவர்தாம் ஆண்பெண் அலி அலரே ஆமாகில், சானகியைக் கொள்வாரோ தாரமா அம்மானை’ என வினவினாள். உடனே முதலாமவள் அதற்கு விடையாக, ‘தாரமாக் கொண்டதுமோர் சாபத்தால் அம்மானை’ என, சாபம் என்ற சொல் வில் எனவும், சாபமொழி எனவும் இரு பொருள்படச் சிலேடையாய் விடைகூறி முடித்தவாறு. (திருவரங்கக் 26) அம்மானையாடும் மகளிர் மூவராகக் கொண்டு கூற்று நிகழ்த்துவதாகக் கூறலும் உண்டு; முன்றா மவள் சிலேடை யாக விடை கூறுவதாகக் கொள்க. அரவுச் சக்கரம் - நாகபந்தம் எனப்படும் இது சித்திரகவி வகையுள் ஒன்றாகும். (யா. வி. பக். 533) அருங்கவி - சித்திரகவி. அது காண்க. (தொ. பொ. 146 நச்.) அலகிருக்கை வெண்பா - மிறைக்கவி வகைகளுள் ஒன்று. இஃது இக்காலத்து வழக்கின்று. (யா. வி. பக். 548) ஆ ஆதி மடக்கு - முதலடி முதல்மடக்கு, இரண்டாமடி முதல்மடக்கு, மூன்றாமடி முதல்மடக்கு, நான்காமடி முதல்மடக்கு, முதலிரண்டடியும் முதல் மடக்கு, முதலடியும் மூன்றாமடியும் முதல் மடக்கு, முதலடியும் நான்காமடியும் முதல்மடக்கு, கடையிரண்டடியும் முதல்மடக்கு, இடையிரண்டடியும் முதல் மடக்கு, இரண்டாமடியும் நான்காமடியும் முதல் மடக்கு, ஈற்றடியொழித்து ஏனை மூன்றடியும் முதல்மடக்கு, முதலயலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல்மடக்கு, ஈற்றயலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல்மடக்கு, முதலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல் மடக்கு, நாலடியும் முதல் முற்றுமடக்கு என ஆதிமடக்கு பதினைந்து வகைப்படும். (மா. அ. 258 உரை) ஆதியோடு இடைமடக்கு - முதலோடு இடைமடக்குப் பின் வருமாறு பதினைந்தாம். முதலடி ஆதியோடு இடைமடக்கு இரண்டாமடி ஆதியோடு இடைமடக்கு மூன்றாமடி ஆதியோடு இடைமடக்கு நான்காமடி ஆதியோடு இடைமடக்கு முதலிரண்டடியும் ஆதியோடு இடைமடக்கு முதலடியும் மூன்றாமடியும் ஆதியோடு இடைமடக்கு முதலடியும் நான்காமடியும் ஆதியோடு இடைமடக்கு கடையிரண்டடியும் ஆதியோடு இடைமடக்கு இடையிரண்டடியும் ஆதியோடு இடைமடக்கு இரண்டாமடியும் நான்காமடியும் ஆதியோடு இடைமடக்கு முதல் மூன்றடியும் ஆதியோடு இடைமடக்கு முதலடி ஒழிந்த ஏனை மூன்றடியும் ஆதியோடு இடைமடக்கு இரண்டாமடி ஒழிந்த ஏனை மூன்றடியும் ஆதியோடு இடைமடக்கு ஈற்றயலடி ஒழிந்த ஏனை மூன்றடியும் ஆதியோடு இடைமடக்கு நான்கடியும் ஆதியோடு இடைமடக்கு - எனப்பதினைந்து ஆமாறு. (மா. அ. 258 உரை) ஆதியொடு கடைமடக்கு முதலொடு கடைமடக்குப் பின்வருமாறு பதினைந்தாகும். முதலடி ஆதியொடு கடைமடக்கு இரண்டாமடி ஆதியொடு கடைமடக்கு மூன்றாமடி ஆதியொடு கடைமடக்கு நான்காமடி ஆதியொடு கடைமடக்கு முதலிரண்டடியும் ஆதியொடு கடைமடக்கு முதலடியும் மூன்றாமடியும் ஆதியொடு கடைமடக்கு முதலடியும் நான்காமடியும் ஆதியொடு கடைமடக்கு கடையிரண்டடியும் ஆதியொடு கடைமடக்கு இடையிரண்டடியும் ஆதியொடு கடைமடக்கு இரண்டாமடியும் நான்காமடியும் ஆதியொடு கடைமடக்கு முதல் மூன்றடியும் ஆதியொடு கடைமடக்கு முதலடி ஒழிந்த ஏனை மூன்றடியும் ஆதியொடு கடைமடக்கு ஈற்றயலடி ஒழிந்த ஏனை முன்றடியும் ஆதியொடு கடைமடக்கு இரண்டாமடி ஒழிந்த ஏனை மூன்றடியும் ஆதியொடு கடைமடக்கு நான்கடியும் ஆதியொடு கடைமடக்கு - எனப் பதினைந்து ஆமாறு. (மா. அ. 258 உரை) ஆறா(i)ரச் சக்கரம் - இஃது ஆறு ஆராய், இங்குள்ள எடுத்துக்காட்டுப் பாடல் அமைந்த சக்கரவடிவில், நடுவே ரகர ஒற்று நிற்ப, குறட்டைச் சூழத் தா என்னும் எழுத்து நிற்ப, ஆர்மேல் ஏழு எழுத்துக்கள் நிற்ப, சூட்டின்மேல் பன்னிரண்டு எழுத்துக்கள் பெற்று முடிவது; மிறைக்கவி வகைகளுள் ஒன்றான சக்கரத்தின் வகை. எ-டு : ‘பூங்கடம்பி னந்தார்தா நன்று புனைதேனார் கோங்கெழு கொங்கந்தார் தான்பேணு - மோங்குநன் மாக்கோதை மாதவித்தார் தாங்கோட லெண்ணுமாற் பூக்கோதை மாதர்தன் பொற்பு.’ இப்பாடலின் சக்கர பந்த அமைப்பினை அமைத்துக் காண்க. குறடு - ஆர்க்கால்களின் அடியிலமைந்த குடத்தின் வளை வான பகுதி. சூடு - வட்டை ஆர்க்கால், ஆர், ஆரம், ஆரை - என்பன ஒருபொருட்கிளவி. நடுஆரை நெடுக முதலடியும், அதன்மேல் நின்ற இரண்டு ஆரை நெடுக இரண்டாம் மூன்றாம் அடியும், நடு ஆரை இணையும் வட்டை வலமாக முழுதும் சூழ ஈற்றடியும் அமையுமாறு காண்க. நடுவே நின்ற ரகர ஒற்று முதல் மூன்றடிகட்கும் பொதுவாய் நின்றது. ஆறு ஆரைகளும் வட்டையில் இணையும் இடத்து நிற்கும் ஆறெழுத்துக்களும் பொதுவாக நின்று ஈற்றடிக்கு உபகாரப் பட்டமையும் காண்க. (யா. வி. பக். 528) இ இடை ஈரடி ஆதிமடக்கு - குரவார் குழலாள் குவிமென் முலைநாம் விரவா விரவாமென் தென்றல் - உரவா! வரவா வரவாம் எனநினையாய் வையம் புரவாளர்க்(கு) ஈதோ புகழ். (‘விரவா - இரவு ஆம் - மென் தென்றல் வரவு - ஆ / அரவு ஆம்’- என இடையீரடியும் பிரித்துப் பொருள் செய்யப்படும்.) "மனவலியுடைய தலைவ! குரவம்பூச் சூடிய இத்தலைவியின் குவிமென் முலையிடை நீ கலக்காத இராக்காலத்தில் வீசும் தென்றற்காற்றின் வரவு, ஆ! பாம்பு தீண்டியது போலத் துயரம் தரும் என நினையாது பிரியத் துணிந்துள்ளாய். உலகு புரக்கும் சான்றோர்க்கு இதுவோ புகழுக்குரிய செயல்?" எனத் தோழி தலைவனுடைய கற்புக்காலப் பிரிவினை விலக்கிய செய்தி அமைந்த இப்பாடற்கண், இரண்டாம் மூன்றாம் அடிகளில் முதற்சீர் மடக்கி வந்தவாறு. (தண்டி. 95) இடை ஈரடி மடக்கு - ‘கருமாலை தொறுகாதல் கழியாது தொழுதாலும் உருமாய மதனாக மடுமாறு புரிவார்முன் உருமாய மதனாக மடுமாறு புரிவார்முன் வருமாய வினைதீர ஒருநாளும் அருளார்கொல்’ ‘(மதன் ஆகம், மதன் நாகம்’ எனப் பிரித்துப் பொருள் கொள்க.) “உருவமே மறையுமாறு மன்மதன் உடலை அழிக்கும் செயலை மேற்கொள்ள விரும்பிய சிவபெருமானை முன்னர்ப் பிறவித் தொடர்ச்சிதோறும் அன்பு நீங்காது தொழுதாலும், இடி போன்று பிளிறி வரும் மதயானையைக் கொல்லும் தொழிலைப் புரிந்த அப்பெருமான், தொன்று தொட்டு வரும் மாயமான கொடிய வினைகள் தீருமாறு ஒரு காலத்தும் அருள்புரியாரோ?” என்ற இப்பாடலில் இடையீரடியும் மடக்கியவாறு. (தண்டி. 96) இடையிட்டு வந்த இடைமுற்று மடக்கு - ஒரு பாடலின் முதலடி நடுவில் வரும் சீர் நான்கு அடிகளிலும் நடுச்சீராய் வர, ஏனைய சீர்கள் வெவ்வேறு சொற்களால் அமைய இயற்றப்பட்ட பாடல், இடையிட்டு வந்த இடைமுற்று மடக் கினைப் பெற்ற பாடலாகும். அவ்வாறு மடக்கிய சீர் வெவ்வேறு பொருள் தரும். எ-டு : ‘வாச நாள்மலர் வண்டுகள் வாய்விடா வகையுண்டு மூசி ஏழிசை வண்டுகள் களிமுகிற் குழலாளைப் பூசல் மாமதன் வண்டுகள் பொரத்துழாய் புல்லாணி ஈசன் நல்கிலன் வண்டுகள் இறைதுறந் தெழுமன்னோ’ முதலடி : வண்டுகள் - வண் + துகள் - வளவிய மகரந்தப் பொடி 3 ஆமடி - வண்டுகள் - வண்டுகள் மொய்க்கும் மலராகிய அம்புகள் 4 ஆமடி - வண்டுகள் - கைவளைகள் பூக்களில் மகரந்தத்தைத் தெவிட்டாது உண்டு ஏழிசைபாடும் வண்டுகள் மொய்க்கும் மன்மதன் பஞ்சபாணங்கள் தலைவியைத் துன்புறுத்துமாறு திருப்புல்லாணி ஈசன் தன் திருத்துழாய் மாலையை இவளுக்குத் தாராமையால் இவள் முன்கையினின்றும் வளையல்கள் கழன்றுவிட்டன என்பது பொருள். (மா. அ. பாடல். 731) இடையிட்டு வந்த கடைமுற்று மடக்கு - ஏனைய சீர்கள் வெவ்வேறாக வரவும், நான்கடிகளிலும் கடைசி அசையோ சொல்லோ எழுத்துக் கூட்டமோ ஒன்றா கவே அமையப் பாடும்போது இடையிட்டுவந்த கடைமுற்று மடக்கு அமையும். எ-டு : ‘மறைப யின்றவண் தமிழ்முனி குருகையில் மன்காவே இறைவர் பின்னர்நெஞ்(சு) அகன்றது கன்றிடத்(து) இரங்காவே! அறையில் இங்(கு)இணை யாமென உயிர்உண அங்காவே யுறைபு ரந்தகண் மலர்களும் ஒல்லையும் உறங்காவே’ குருகையில் மன் (-நிலைபெற்ற) காவே! (-சோலையே), கன்றிடத்து இரங்கு ஆவே! (-பசுவே), அறையில் இங்கு இணையாம் என் உயிர் உண அங்கா (-வாயைத் திறத்தல்), வேய் (தந்த) உறை புரந்த (-கண்ணீர்த் துளிகளைக் கொண்ட) கண்மலர்களும் ஒல்லையும் உறங்காவே - எனப் பிரித்துப் பொருள் செய்க. இப்பாடலின் நான்கடிகளிலும் ஈற்றில் ‘காவே’ என ஈரெழுத் துக்களே மடங்கி வந்தவாறு. (மா. அ. பாடல். 732) இடையினப் பாடல் - ‘யாழியல் வாய வியலளவா லாயவொலி யேழிய லொவ்வாவா லேழையுரை - வாழி யுழையே லியலா வயில்விழியை யையோ விழையே லொளியா விருள்’ ‘யாழ் இயல் வாய இயல் அளவால் ஆய ஒலியின் ஏழ் இயல் ஏழை உரை ஒவ்வாவால்; உழையேல் அயில்விழியை இயலா; ஐயோ! இழையேல் இருள் ஒளியா, வாழி’ என்று பொருள் செய்யப்படும். "யாழிலிருந்து தோன்றிய தூய்மையான எழுவகை இசை ஒலிகள் இப்பெண்ணின் பேச்சினிமையை ஒவ்வா; மானின் விழியும் இவளுடைய கூரிய விழிகளை ஒவ்வா; வியத்தக்க இவள் அணிகலன்களின் ஒளியும் இவள் மேனி யொளிக்கு முன் தம் ஒளி மழுங்கி இருள்போல ஆகும்" என்று தலைவன் தலைவியைப் புகழும் இப்பாடற்கண், இடையின மெய்களும் இடையின உயிர்மெய்களுமே வந்துள்ளன. (தண்டி. 96 உரை) இடையொடு கடைமடக்கு - இடையொடு கடைமடக்குப் பின் வருமாறு பதினைந்தாம். 1. முதலடி இடையொடு கடைமடக்கு 2. இரண்டாமடி இடையொடு கடைமடக்கு 3. மூன்றாமடி இடையொடு கடைமடக்கு 4. நான்காமடி இடையொடு கடைமடக்கு 5. முதல் ஈரடியும் இடையொடு கடைமடக்கு 6. முதலடியும் மூன்றாமடியும் இடையொடு கடைமடக்கு 7. முதலடியும் நான்காமடியும் இடையொடு கடைமடக்கு 8. கடையீரடியும் இடையொடு கடைமடக்கு 9. இடையீரடியும் இடையொடு கடைமடக்கு 10. இரண்டாமடியும் நான்காமடியும் இடையொடு கடைமடக்கு 11. ஈற்றடிஒழிந்த ஏனை மூன்றடியும் இடையொடு கடைமடக்கு 12. ஈற்றயலடி ஒழிந்த ஏனை மூன்றடியும் இடையொடு கடைமடக்கு 13. முதலயலடி ஒழிந்த ஏனை மூன்றடியும் இடையோடு கடைமடக்கு 14. முதலடி ஒழிந்த ஏனை மூன்றடியும் இடையொடு கடைமடக்கு 15. நான்கடியும் இடையொடு கடைமடக்கு (மா.அ. 258 உரை) இடைவிட்டும் விடாதும் இடையும் இறுதியும் நாலடியும் முற்றும் மடக்கிய மடக்கு - எ-டு : ‘தாமாலமால மருமென்ற மாலமால நாமாலமால நளிநீர்க்கட மாலமால தேமாலமால கரிசேர்மலர் மாலமால மாமாலமால மலதாளுள மாலமால’ ’தாமாலம் ஆல் அமரும் மென்தமாலம் ஆல நாம் ஆலம் மால நளி நீர் கட மாலமால தே(ன்)மால மாலகரி சேர் மலர்மால மால மா மால் அ மால் அமலதாள் உளமால் அமால’ - எனப் பிரித்துப் பொருள் செய்க. தாமாலம் - பிரளயம்; ஆல் அமரும் - ஆலமரத்தில் தங்கும்; மென் தமாலம் ஆல - மெல்லிய இலையில் துயிலுதலை யுடைய; நாம் ஆலம் ஆல - அச்சம் தரும் விடம் போலக் கறுத்த; நளிநீர் கட மாலமால - கடலைக் கடக்கும் பெரிய குரங்கு ஒழுங்கினையுடைய; தே மால - தேன் துளும்ப; மா லகரி சேர் - பெரிய வண்டு உண்டு களிக்கும்; மலர் மால - தாமரைப் பூவினை விருப்பமாக; மால - பெரிய இருப்பிடமாக் கொண்ட; மா - திருமகள்; - மால் - மயங்கும்; அ மால் - அத்திருமால் ; அமல தாள் - மலம் நீக்கும் திருவடிகளை; உளமால் - உள்ளத்திற் கொண்டிருப்பதால்; அமால - அந்தப் புதனுக்கு நிகராவோம்: மாலமால என்ற மடக்கு இடையிலும் இறுதியிலும் இடை யிடையே வேற்றுச்சீர் வரப்பெற்றும் பெறாதும், நான் கடியிலும் மடக்கிய முற்றுமடக்காக இப்பாடல் அமைந் துள்ளது. (மா. அ. பா. 733) இடைவிடா மடக்கு - ஓரடி மடக்கு 4, ஈரடிமடக்கு 6, மூவடிமடக்கு 4, நான்கடி மடக்கு 1, என்னும் இவற்றை, ஆதி, இடை, கடை, ஆதி யோடிடை, ஆதியோடு கடை, இடையொடு கடை, முழுதும் என்னும் ஏழானும் உறழ, 15 ஒ 7 = 105 ஆகும். இவ்வாறு இடைவிடாது வரும் மடக்கு 105 என்பது வரையறுக்கப் பட்டுள்ளது. இவையன்றி, இடைவிட்ட மடக்கு 105, இடை விட்டும் விடாதும் அமைந்த மடக்கு 105 ஆக இம்மடக்குக் களின் கூடுதல் எண்ணிக்கை 415 ஆகிறது. (தண்டி. 95 உரை) இணைமடக்கு - கலம்பகத்துள் வரும் அம்மானை என்னும் உறுப்புப் பற்றிய பாடல்களில் இரண்டாமடி மூன்றாமடியாக மடக்கி வருதலும், சிலேடை வெண்பாக்களில் கடையிரண்டடிகளில் முதல் இரண்டு சீர்கள் மடங்கி வருதலும் இணைமடக்கு என்று வழங்கப்படுகின்றன. எனவே, இவ்விணைமடக்கு மாறனலங்காரத்துள். 1. அம்மனைப் பாடற்கண் இணைமடக்கு 2. இருபொருள் சிலேடை இணைமடக்கு 3. முப்பொருள் சிலேடை இணைமடக்கு 4. நாற்பொருள் சிலேடை இணைமடக்கு 5. ஐம்பொருள் சிலேடை இணைமடக்கு என ஐவகையாகப் பகுத்து விளக்கப்பட்டுள்ளது. தனித்தனித் தலைப்பிற் காண்க. (மா. அ. 267, 268) இதழ் அகல் அந்தாதி - இதழ் - உதடு ; அகலுதல் - நீங்குதல். இதழ் தொடர்பில்லாத எழுத்துக்களாலாகிய பாடல்களை அந்தாதியாகத் தொடுத் தமைக்கும் நூல். உ ஊ ஒ ஓ ஒள ப ம வ என்னும் எட்டு எழுத்தும் இதழின் தொடர்புடையவை. இவை நீங்கிய ஏனைய எழுத்தால் அமைந்த பாடல்கள் அந்தாதியாக அமைந்த தொகுப்பு இதழகலந்தாதியாம். இது நீரோட்டக அந்தாதி என வடமொழியில் வழங்கப்படும். இதழ் இயைந்த ஓட்டியம் - ப் ம் வ் என்னும் மெய்கள் இதழ் இயைதலால் பிறக்கும் ஒலிகள் ஆதலின், இவற்றாலேயே இயைந்த பாடற்கண் ‘இதழியைந்த ஓட்டியம்’ என்னும் சொல்லணி காணப்படும். எ-டு : ‘பம்மும்பம் மும்பம்மு மம்மம்ம மைமாமை பம்முமம்ம மும்மேமம் பாம்’ மை பம்மும்; பம்மும் பம்மும்; அம்மம்ம! மாமை பம்மும் அம்மமும் ; ஏமம் பாம் - எனப் பிரித்து உரை செய்க. (பாகனே! நாம் ஊர் திரும்பிச் செல்வதன் முன்) மேகங்கள் (நம் ஊர்க்குச் சென்று) படியும்; விண்மீன் கணங்களும் மறைவதால் (வழி இருண்டு விட்டது) ஐயோ! ஐயோ! பாலையுடைய தலைவிநகில்களும் மாமை மறைந்து பசலை படிந்துவிடும். (கார்காலத் தொடக்கத்தில் மீண்டுவருவேன்" என்ற என் சொற்கள் என்னாம் என்பது குறிப்பெச்சம்) என்ற இப்பாடற்கண், இதழ் குவிந்த ஓட்டியம் அமைதற்குரிய ப் ம் வ் என்னும் மெய்யெழுத்துக்களே வந்துள்ளன. மை - மேகம்; பம்முதல் - படிதல்; மறைதல்; பம் - விண்மீன்கள்; அம்மம் - நகில்கள்; ஏமம் - பொன் நிறத்த பசலை (மா. அ. பா. 772) இதழ் குவிந்த ஓட்டியம் - மேலுதடும் கீழுதடும் குவிந்து ஒலிக்கும் உயிர்எழுத்துக்க ளாகிய உ ஊ ஒ ஓ ஒள என்னும் உயிரொடு கூடிய மெய் யெழுத்துக்களே அமையப் பாடும் சொல்லணி இதழ் குவிந்த ஓட்டியம். எ-டு : ‘குருகு குருகு குருகொடு கூடு குருகுகுரு கூருளுறு கோ’ ‘குருகு குருகொடு(ம்), குருகு குருகொடு(ம்) கூடும் குருகூருள் கோ உறு’ என்க. ‘சங்கு சங்கோடும், குருகு என்னும் பறவை குருகுகளோடும் திரண்டு இயங்கும் குருகூரின் தலைவன் ஆன சடகோபனை நினைப்பாயாக’ என்ற பொருளமைந்த இப்பாடலின், உ ஊ ஓ என்னும் உயிர்கள் கூடின உயிர்மெய்யெழுத்துக்களே வந் துள்ளமையால், இவையாவும் உதடு குவிந்து ஒலிக்கப்படு தலின் இஃது இதழ் குவிந்த ஓட்டியம் என்னும் சொல்லணி பெற்றுள்ளது. ஓட்டம் - உதடு; ஓட்டியம் - உதட்டொடு தொடர்புடைய எழுத்துக்களாலே அமைந்த பாடல். (மா. அ. பா. 771) இதழ் குவிந்தும் இயைந்தும் வந்த ஓட்டியம் - இதழ் குவிதலால் பிறக்கும் உ ஊ ஒ ஓ ஒள என்னும் உயிர்களும் இதழ் இயைதலால் பிறக்கும் ப் ம் வ் என்னும் மெய்களும் கூடிய சொற்கள் வரப் பாடப்படும் செய்யுள் இவ்வோட்டிய அணிவகை வரப்பெறும். எ-டு : ‘குருகுமடு வூடு குழுமுகுரு கூரு ளொருபெருமா னோவாமை ஊறு - முருகொழுகு பூமாது வாழும் புவிமாது மேவுமொரு கோமா னுவாவோது கோ’ குருகு மடுவூடு குழுமு குருகூருள் ஒருபெருமான்! ஓவாமை ஊறும் முருகு ஒழுகு பூமாது வாழும் கோமான்! புவிமாது மேவும் ஒரு கோமான்! உவா ஓதுகோ எனப் பிரிக்க. சங்குகள் மடுக்களில் கூட்டமாகத் திரியும் குருகூரில் உள்ள தலைவனே! இளமையும் அழகும் மணமும் நீங்காமல் தன்னிடத்தே வெளிப்படும் திருமகள் தங்கப்பெற்ற பெரு மானே! நிலமகள் தன் பக்கலில் தங்கியிருக்கும் ஒப்பற்ற தலை வனே! உன் நிறைவை யான் யாங்கனம் எடுத்துரைப்பேன்?" என்ற கருத்தமைந்த இப்பாடலுள், இதழ் குவியத் தோன்றும் உ ஊ ஒ ஓ என்னும் உயிர்களும், இதழ் இயையத் தோன்றும் ப் ம் வ் என்னும் மெய்களுமே வந்துள்ளமையால் இதன்கண் இதழ் குவிந்தும் இயைந்தும் வந்த ஓட்டியம் வந்துளது. (மா. அ. பா. 773) இயமா வியமகம் - ஒரு சொல்லானே நான்கு அடிகளும் மடக்கி வரும் மடக்கினை இயமா இயமகம் என்ப. இஃது ஒரு சொல் முற்று மடக்கு. ஓரடியே நான்கடியும் மடக்கி வரும் ஏகபாதம் என்னும் சித்திரகவிவகையுள் இஃது அடங்கும். எ-டு : ‘உமாதர னுமாதர னுமாதர னுமாதர னுமாதர னுமாதர னுமாதர னுமாதரன்’ உமாதரனும் மாதரனும் மாதரனும் மாதரனும் மாதரனும் மாதரனும் ஆதரனும் மாது அரன் எனப் பிரித்துப் பொருள் செய்க. உமாதரன் - உமையைத் தரித்தவன்; மா தரன் - மானை ஏந்தியவன்; மாதரன் - அழகினை யுடையவன்; மாதரன் - மாமரத்தின் கீழே இருப்பவன்; மாதரன் - யானையின் தோலை மேலாடையாகத் தரித்தவன்; மாதரன் - காளையால் தாங்கப்படுபவன்; ஆதரன் - விருப்பம் உடையவன், மாது அரன் - பெருமை மிக்க சிவபெருமான். (தண்டி. 95 உரை) இரட்டை நாகபந்தம் - ‘அருளின் திருவுருவே யம்பலத்தா யும்பர் தெருளின்மரு வாருசிர்ச் சீரே - பொருவிலா ஒன்றே யுமையா ளுடனே யுறுதிதரு குன்றே தெருள அருள்.’ ‘மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு பெருகொளியான் தேயபெருஞ் சோதி - திருநிலா வானம் சுருங்க மிகுசுடரே சித்த மயரு மளவை ஒழி.’ இரண்டு நேரிசை வெண்பாக்களையும் இரண்டு நாகங்களின் தலையினின்று தொடங்கி, வாலின் முனைகள் இறுதியாக, இடையிடையே தத்தம் உடலினும் மறுபாம்பின் உடலிலும் மாறாடிச் சந்திகளின் நின்ற எழுத்தே மற்றை இடங்களிலும் உறுப்பாய் நிற்க, ஒவ்வொரு பாம்பிற்கும் மேற்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும், கீழ்ச்சுற்றுச்சந்தி நான்கினும் நான்கெழுத்தும், இரண்டுபாம்பிற்கும் நடுச்சந்தி நான்கினும் இரண்டு பாம்பிற்கும் பொருந்த நான்கு எழுத்துமாகச் சித்திரத்தில் அடைத்து அமைத்தல் இதன் இலக்கணமாம். (தண்டி. 98-5) இரண்டாமடி ஆதிமடக்கு - எ-டு : ‘கனிவாய் இவள்புலம்பக் காவலநீ நீங்கின் இனியார் இனியார் எமக்குப் - பனிநாள் இருவராய்த் தாங்கும் உயிரின்றி எங்குண்(டு) ஒருவராய்த் தாங்கும் உயிர்’ “காவல! கொவ்வைக்கனி போன்ற வாயளாகிய இவள் தனித்திருக்க நீ இவளைப்பிரிந்து சென்றால், எங்களை இனி யார் இன்சொற் பேசி மகிழ்விப்பவர்? பனிக்காலத்தில் கூடியவராகிய தலைவன் தலைவியர் ஆகிய இருவரும் தாங்கும் உயிரே அன்றி, பிரிந்து ஒருவராய் இருந்து தாங்கும் உயிரும் உண்டோ?” என்று கற்புக் காலத்துத் தோழி தலைவன்பிரிவைத் தடுத்த இப்பாடற்கண், “இனி யார் எமக்கு இனியார் ஆவர்?” என்ற பொருளில், இரண்டாமடி ஆதியில் ‘இனியார் இனியார்’ என மடக்கியவாறு. (தண்டி. 95) இரண்டாமடி ஒழிந்த மூவடி மடக்கு - எ-டு : ‘கடிய வாயின காமரு வண்டினம் அடிய வாயகன் றாருழை வாரலர் கடிய வாயின காமரு வண்டினம் கடிய வாயின காமரு வண்டினம்...’ கடிய ஆயின வண்டு இனம் அடியவாய், அகன்றார் உழை வாரலர்; காமரு வண்டு இனம் கடிய ஆயின, காமரு வண் தினம் கடிய ஆயின’ எனப் பொருள் கொள்க. அடிகள் 1, 2 : விளக்கம் உற்றனவாகிய விருப்பம் மருவும் வளைகள் பாதங்களை நோக்கிக் கழன்று விழவும், நம்மை அகன்ற தலைவர் நம் நலிவு கண்டு நம்பக்கல் மீண்டு வரவில்லை. 3. சோலைகளில் மருவும் வண்டினங்கள் அச்சம் தருவன வாயுள்ளன. 4. விரும்பத்தக்க சிறந்த (பழைய) நாள்கள் நமக்கு நீக்கப்பட்டன ஆயின. ‘கடிய வாயின’ - விளக்க முற்றனவாகிய, அச்சம் தருவன வாயுள்ளன, நீக்கப்பட்டன ஆகிவிட்டன - எனப் பொருள் கொள்ளப்படும். காமரு - விருப்பம் மருவின (1, 4), சோலையில் மருவின (3); வண்டினம் - வளையல்கள் (1), வண்டுக் கூட்டம் (3) சிறந்த நாள்கள் (4). இப்பாடலில் இரண்டாமடி ஒழிந்த மூவடியும் மடக்கிய வாறு காண்க. (தண்டி. 96) இரண்டாமடி நான்காம் அடி ஆதிமடக்கு - எ-டு : ‘மழையார் கொடைத்தடக்கை வாளபயன் எங்கோன் விழையார் விழையார்மெல் லாடை - குழையார் தழையாம் உணவும் கனியாம் இனமும் உழையா முழையா முறை.’ விழையார், விழை ஆர் மெல்லாடை எனவும் உழையாம், முழையாம் உறை எனவும் மடக்கடிகளைப் பிரித்துப் பொருள் செய்க. “மழைபோல் வழங்கும் அபயனாகிய எம் அரசனால் விரும்பப்படாத பகைவர்க்கு (தோற்றுக் காட்டில் ஓடுதலால்) அவர்கள் விரும்பத்தக்க மெல்லிய ஆடை காட்டில் தளிர்த் தலையுடைய தழைகளே; உணவும் கனிகளே; அவர்கட்குச் சுற்றமும் மான்களே; அவர்கள் தங்கும் இடமும் குகைகளே” என்று பொருள் செய்யப்படும் இப்பாடற்கண், இரண்டாம் அடியுடன் ஈற்றடி ஆதிமடக்கு வந்தவாறு. (விழையார் - விரும்பப்படாத பகைவர், விருப்பம் பொருந்திய; உழை - மான்; முழை - மலைக்குகை.) (தண்டி. 95) இரண்டாமடி மூன்றாமடி நான்காமடி ஆதிமடக்கு - எ-டு : ‘பாலையாழ் தன்னிற் பதிற்றிரட்டி வெய்தன்றே மாலைவாய் மாலைவாய் இன்னிசை - மேலுரை மேவலர் மேவலர் மெல்லாவி வாட்டாதோ, காவலர் காவலராங் கால்?’ ‘காவலர், காஅலர் ஆங்கால், மாலைவாய், மாலை வாய் இன்னிசை மேல், உரை மேவலர் மேவு அலர்’ என்று பிரித்துப் பொருள் செய்யப்படும். “தலைவர் என்னை மணந்து பாதுகாப்பவர் அல்லாதகாலை, மாலைக்காலத்தில், வரிசையாக ஆயர் வாயினின்று வெளிப் படும் இனிய குழலிசை பாலையாழைவிட இருபது மடங்கு துன்பம் தரவும், புகழை விரும்பாத தீயமக்கள் விரும்பிக் கூறும் அலர் என் உயிரை வாட்டாதோ?” என்று தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி தன் துயரைத் தோழிக்கு உரைத்தது இப்பாடல். மாலைவாய் - மாலைப்பொழுது, வரிசையாக வாயினின்று வரும்; மேவலர் - (உரை) மேவாத தீயமக்கள், சொல்லும் பழிச் சொல்; காவலர் - தலைவர், நம்மைக் காவாதவர் - என முதலடி ஒழிந்த மூவடியிலும் ஆதிமடக்கு வந்தவாறு. (தண்டி. 95 உரை) இரண்டாமடியும் நான்காமடியும் மடக்கு - எ-டு : நலத்தகை பெறஇரு சரணம் ஓதும்நம் குலத்தகை பணிகொளே காம்ப ரத்தனே நலத்தகை மகளொரு பாகம் நண்ணுமேல் குலத்தகை பணிகொளே காம்ப ரத்தனே. மேம்பட்ட நலம் பெற, திருவடிகள் இரண்டனையும் பரவிப் பணியும் அடியார் குலத்தவர் கைகளைத் தன் குற்றேவலுக்கு ஏற்பித்துக்கொள்ளும் ஏகாம்பரநாதன், பார்வதியை ஒருபாக மாக கொண்டு, குலத்தான் மேம்பட்ட பாம்புகளைக் கொண்டு புனையப்பட்ட ஒற்றை ஆடையை உடையவன் என்று பொருள்படும் இப்பாடற்கண், நலத்தகை பெற, இரு சரணம் ஓதும் நம்குலத்த கை பணிகொள் ஏகாம்பரத்தனே, நலத்தகை மகள் ஒரு பாகம் நண்ணவும் குலம் தகை பணி கொள் ஏக அம்பரத்தனாம் - எனப் பிரித்துப் பொருள் கொள்ளப்படும். ஏக + அம்பரத்தன் - ஒற்றை மாமரத்தடியில் இருக்கும் பெருமான். ஏக + அம்பரத்தன் - ஒற்றை ஆடையை உடையவன். பணி - தொண்டு, பாம்பு. (தண்டி. 96 உரை) இரண்டாமடியும் மூன்றாமடியும் நான்காமடியும் மடக்கு - எ-டு : ‘வரிய வாங்குழல் மாத ரிளங்கொடி அரிய வாங்கயத் தானவ னங்களே அரிய வாங்கயத் தானவ னங்களே அரிய வாங்கயத் தானவ னங்களே.’ வரி அவாம் குழல் மாதர் இளங்கொடி! அரிய ஆங்கு அயத்து ஆன வனங்களே, அரி அவாம் கயத்(துத்) தான வனங்களே, அரி அவாம் கயத் தான வனங்களே - எனப் பிரித்துப் பொருள் கொள்க. அரி - வண்டு, சிங்கம்; கய - யானை, பெருமை; வனம் - நீர், காடு. “வண்டுகள் விரும்பும் கூந்தலையுடைய விரும்பத்தக்க இளங்கொடியே! அடைதற்கரிய அவ்வழியிலே பள்ளத்தில் நீர் ஊறியுள்ளது. வண்டுகள் அவாவத்தக்கனவாய்க் களிறு களின் மத வெள்ளங்கள் உள்ளன; காடுகள் சிங்கங்கள் விரும்பும் பெரிய இடங்களை யுடையன (ஆதலின் நீ என் னுடன் வருதல் எளிதன்று)” என்னும் பொருளுடைய இப்பாடலில், இரண்டாமடி மூன்றாமடியாகவும் நான்காமடி யாகவும் மடக்கியதால் இப்பாடல் மூவடி மடக்கில் ஒன்றாம். (தண்டி. 96 உரை) இரண்டெழுத்தான் வந்த மடக்கு - ‘ஈரெழுத்து மடக்கு’க் காண்க. இரதபந்தம் - சதுரங்க அறையுள் தேர்செல்வதெனவும் மந்திரி செல்வ தெனவும் ஒருசெய்யுட்கு உண்டான எழுத்துக்களைத் தேரினது அறைக்கு நடுவே ஒரு திருநாமமோ பழமொழியோ அழகுபெற நிற்க இரதத்திலே பந்திப்பது என்னும் சித்திரகவி வகை எ-டு : ‘நாராரா ராய நயனய ணாவிண்ண ணாராம ணாயனில மாயவா - சீராய நன்கா நமநம நன்கா நமநம மன்காமன் தாதாய் நம’ இவ்விரதபந்தத்துள் நடுவும் இருபக்கமும் ‘நாராயணாயநம’ எனும் திருநாமம் நின்று அழகு செய்வது காண்க. (மா. அ. 286 பாடல் 791) இருபாதம் - சித்திர கவியுள் ஒன்று. எ-டு : பாரினன குடையின கண்டங்கவெ சிரி (நிர) (னிக) (னிர) தறகிருந (த, (த) (தி) மா (லி) (ர) (ர) னெ இஃது இருபாதம்; இதனையே இரண்டாமுறையும் உச்சரித் துப் பொருள் வேறாக்கிக் கண்டுகொள்க. (பாடல் மிக்க வேறுபாட்டிற்கு இடனாக வுள்ளது.) (வீ.சோ. 181 உரை ) முதலீரடியும் முற்றும் மடக்கியும் பின் ஈரடியும் முற்றும் மடக்கியும் அமையும் சித்திரகவி இது. எ-டு : ‘ஒன்றி னம்பர லோகமே ஒன்றி னம்பர லோகமே சென்று மேவருந் தில்லையே சென்ற மேவருந் தில்லையே’ (சி. செ. கோ. 80) ‘சென்று தில்லை மேவரும்; பரலோகமே ஒன்றினம்; ஒன்று இ (ன்) னம் பரலோகமே சென்றுமே வருந்து இல்லையே’ - என்று பொருள் கொள்க. இஃது ஓரடியே நான்குமுறை மடக்கிவரும் ஏகபாதத்தின் வேறாகி இரண்டிரண்டடிகள் மடக்கி வருதலால் இருபாதம் என்னும் பெயர்த்து. இருபொருள் சிலேடை இணை மடக்கு - எ-டு : ‘மூவுலகெண் முத்தரைப்போல் முந்நீர் முகிற்பெயல்போல் காவலர்கள் வீழ்வேங் கடவெற்பே - தேவர் பெருமான் பெருமான்கண் பெண்வளைக்கை யார்மூ - வருமால் வருமாலின் வைப்பு’ இப்பாடலில், முதல் ஈரடியும் சிலேடை; பின் ஈரடியும் இணை மடக்கு. மூவுலகும் புகழும் முத்தரைப் போலக் காவலர்கள் (-அரசர்கள்) விழுந்து வணங்கும் வேங்கடமலை, கடலில் படிந்த மேகம் மழைபொழிவது போலக் கா அலர்களினின்று தேன் சொரியும் வேங்கடமலை என்பது சிலேடை. காவலர் - அரசர்; கா அலர் - சோலைமலர்கள். தேவர்கள் பெருமானாய், பெரிய மான் போன்ற கண்ணி னரும் வளையல் அணிந்த கையினருமான திருமகள் மண்மகள் ஆயர்மடமகள் ஆகிய மூவருள்ளத்தும் வேட்கை யைப் பெருகச் செய்யும் திருமாலின் இருப்பிடம். பெருமான் என்பது பெரு மான்; (மூ)வரு(ம்) மால், வருமால் என்பது மடக்கு. இவ்வாறு இப்பாடல் இருபொருட் சிலேடை இணைமடக்கு ஆதல் காண்க. (மா. 755) இலக்கணவிளக்கம் கூறும் சொல்லணிகள் - தண்டியலங்காரம் குறிப்பிடும் மடக்கும், 12 சித்திரகவிகளும் உரையில் காணப்படும் 8 சித்திரகவிகளும் ஆக 20 சித்திர கவிகளுமே இலக்கண விளக்கம் குறிப்பிடும் சொல்லணிகள் ஆம். ஈ ஈரடி மடக்கு - ஒரு பாடலில் நான்கடிகளுள் 1, 2; 1, 3; 1,4; 2, 3; 2,4; 3, 4 - ஆம் அடிகள் மடக்கி வரும் மடக்கு. இஃது அடிவகையால் ஆறு வகைப்படும். (தண்டி. 96 உரை) ஈரடி வருக்கம் - செய்யுள் வகை. முதலடி எழுத்துக்களே இரண்டாம் அடியினும் பொருள் வேறுபாட்டொடு மடக்கிவரப் பாடப்படும் ஈரடிப் பாடல். (ற) (டு) ஈரெழுத்து மடக்கு - மெய்வருக்கத்துள் இரண்டெழுத்துக்களே ஏனைய உயிர்க ளொடு சேர்ந்தும் தனித்தும் ஒரு பாடல் நிரம்ப வரும் மடக்கு. எ-டு : ‘மன்னுமான் மான்முன்ன மானமு மீனமா மின்னமா னேமுன்னு மானினி - மென்மென மின்னுமா மென்னினா மன்னமுமா மென்மனனே மன்னுமான் மானுமான் மான்,’ ‘மன்னுமால் மால்; முன்னம் மானமும் ஈனமாம், இன்ன முன்னும் மான்சனி மென்மென நாம் மின்னும் ஆம் என்னின், அன்ன மும் ஆம்; மான் மானும் (-ஒக்கும்) மால் மான் என் மனனே மன்னும்’ - எனப் பிரித்துப் பொருள் செய்யப்படும். “எனக்குக் காமமயக்கம் உண்டாகிறது; முன்பிருந்த பெருமை குறைகிறது. இத்தகைய யான் நினைக்கும் தலைவி இப்போது மின்னலைப் போல மெல்ல மறைவாள் எனினும், அன்னம் போன்ற நடை அழகையும் காட்டுகின்றாள். மானினை ஒத்த மருண்ட பார்வையுடையாளாகிய இப்பெண் என்மனத் துள்ளும் தங்கியுள்ளாள்” என்று பொருள் தரும் பாடற்கண், மகரமும் னகரமும் ஆகிய இரு மெய்யெழுத்துக்களே தனித்தும் உயிரொடு கலந்து உயிர்மெய்யாயும் வந்துள்ளன. (தண்டி. 97 உரை) ஈற்றடி ஆதிமடக்கு ‘இவள்அளவு தீஉமிழ்வ(து) என்கொலோ, தோயும் கவள மதமான் கடாமும் - திவளும் மலையார் புனலருவி நீ அணுகா நாளின் மலையா மலையா நிலம்?’ மலையா(ம்) மலைய அநிலம் - பொதியமலையில் தோன்றும் தென்றற்காற்று. “தலைவ! இவளை நீ வந்தடையாத நாள்களில், யானையின் முகத்தினின்று வழியும் மதநீரை ஒத்து அருவி பாயும் பொதிய மலையினின்று தோன்றும் தென்றற்காற்று இவளொருத்திக்கு மாத்திரம் நெருப்பைக் கக்குவதன் காரணம் யாதோ?” என்று தோழி கூறிய இப்பாடல் ஈற்றடியின் ஆதியில் ‘மலையா மலையா’ என மடக்கு வந்தவாறு. (தண்டி. 95 உரை) ஈற்றெழுத்துக் கவி சொல்லல் - ஒருவர் கூறிய பாட்டின் கடையெழுத்தை முதலாகக் கொண்டு பிறர் இயற்றிவைத்த கவி ஒன்றனைக் கூறுதல். (டு) எட்டிதழ்ப் பதும பந்தம் - சித்திர கவியுள் ஒன்று வானிதி சீரிய சாதநி கிழவா வாழகி நிதசார யிபவா ரிபவா வாபரி வாபர மேநிச பதிவா வாதிப சநிசா டுபரா துணைவா வாணிது ராமவெ னாதக மதிவா வாதிம கதமெ னோதவா மிதுவா வாதுமி வதானி யாமண துறவா வாளது னமவே பரிசீ தினிவா. இக்கவியை எட்டிதழ்க் கமலவடிவில் அடைப்பின் இரண் டாம் வட்டத்தில் ‘சீநிவாசராகவன்’ எனவும், மூன்றாம் வட்டத்தில் ‘திகிரிபதுமமிது’ எனவும் அமைந்தமை காண்க. (ஆனால் இதற்குரிய படம் அமைக்குமுறை இதுகாறும் புலப்பட்டிலது.) (மா. அ. 283) இனி மாறனலங்காரம் இச்சித்திர கவியைக் கூறுமாறு : ஒரு தாமரையை எட்டுக் கோணத்திலும் இவ்விரண்டாகப் பதினாறுஇதழ் எழுதி, நடுவே ஒரு பொகுட்டுத் தோன்றுமாறு செய்து, பொருட்டிலேயுள்ள முதலெழுத்தே ஒவ்வோரடியின் ஆறாம் எழுத்தாகவும் முதலெழுத்தாகவும் அமையுமாறு அடைக்கப்படும் கவி பதுமபெந்தம் ஆம். வருமாறு : “மாறா மாலா லேமா றாமா மாறா மாவே ளேமா றாமா மாறா மாகோ வாமா றாமா மாறா மாவா தேமா றாமா.” (முதலடியீற்று) மா மாறா மாலால் ஏமாறா (இரண்டாமடி) மால் தா மா வேள் ஏ மாறு ஆம் (ஆம்); (மூன்றாமடியில் மகர ஒற்றைப் பிரிக்கவே) ஆறு ஆம் ஆ (-ஐயோ) கோ வா மாறா; (மூன்றாமடி ஈற்றில் நின்ற மா எழுத்தை ஈற்றடியில் கூட்டி) மா மாறா! மாவா தேம் ஆல் தாமா - இவ்வாறு பிரித்துப் பொருள் கொள்க. பொழிப்புரை - திரு அன்னவளாகிய தலைவி தனது நீங்காத காம மயக்கத்தால் வருந்தும்படிக்கு, மாயோனால் தரப்பட்ட கரிய மன்மதன் விடுத்த அம்புகள் மாற்றம் ஆகின்றன (ஆம் : அசை); அந்தோ! ஆறு போலப் பெருகும் கண்ணீர் வருதல் தீராது. பெரிய மாறனே! வண்டுகள் (தேனை யுண்ண) வருகின்ற, தேன் துளும்புகின்ற மாலை யணிந்தோனே! எ எழுகூற்றிருக்கை - மிறைக்கவியுள் ஒன்றாக யாப்பருங்கலத்தில் இப்பெயர் இடம் பெற்றுள்ளது; விருத்தியுரை இதனை விளக்குகிறது. சம்பந்தர் தேவாரத்துள் இது காணப்படுகிறது. ஒன்று முதல் ஏழு வரையுள்ள எண்கள் கூடியும் குறைந்தும் பெரும்பான்மையும் இணைக்குறள் ஆசிரிய யாப்பில் இது நிகழும். எழுகூற்றிருக்கையில் சம்பந்தர் தேவாரத்தில் ஒரு பதிகம், திருமங்கை மன்னன் பிரபந்தங்களில் ஒன்று, நக்கீரதேவ நாயனார் இயற்றிய திருஎழுகூற்றிருக்கை என்ற 11 ஆம் திருமுறைப் பதிகம், மாறனலங்காரச் சொல்லணியியலின் மிறைக்கவிகளுள் ஒன்றாக உதாரணம் காட்டப்பெறுவது - என்பன பிரசித்தமானவை. யாப்பருங்கல விருத்தியுரையில் இரண்டு எடுத்துக்காட்டுக்கள் உள. (யா. வி. பக். 534 - 537) எழுத்தலங்காரம் - எழுத்தைக் கூட்டல், குறைத்தல், மாற்றங்களால் தோன்றும் அழகு. எழுத்துப்பெருக்கம், எழுத்துச்சுருக்கம் என்ற மிறைக் கவிகள் இவ்வணியின்பாற்படுவன. (தண்டி. 98) எழுத்தழிவு அணி - மிறைக் கவிகளுள் ஒன்று. ‘அக்கரச் சுதகம்’ காண்க. (மு. வீ. சொல்லணி. 17) எழுத்துச் சுருக்கம் - ‘அக்கரச் சுதகம்’ காண்க. (யா. வி. பக். 547) எழுத்துப் பெருக்கம் - எழுத்து வர்த்தனம் என்னும் மிறைக்கவி ; ‘அக்கர வருத்தனை’ காண்க. எழுத்துமடக்கின் சிறப்பு - அடிமடக்கும் சொல்மடக்கும் எழுத்தின் கூட்டம் என்பதும், ஓர் எழுத்தானும் ஓர்இனத்தானும் வருவனவும் எழுத்து மடக்கின்பாற்படும் என்பதும், கோமூத்திரி முதலிய மிறைக் கவிகளும் ஆராயுங்கால் பெரும்பான்மையும் எழுத்துமடக் கின் பாற்படும் என்பதும் பற்றி எழுத்துமடக்குச் சிறப்பாகக் கொள்ளப்பட்டுள்ளது. (இ. வி. 709 உரை) எழுத்து வர்த்தனம் - ‘அக்கர வருத்தனை’ காண்க. (தண்டி. 98) எழுத்து வருத்தனை - ‘அக்கர வருத்தனை’ காண்க. (வீ. சோ. 181. உரை மேற்.) எழுவகை மடக்கு - ஆதிமடக்கு, இடைமடக்கு, கடைமடக்கு, ஆதியொடு இடை மடக்கு, ஆதியொடு கடைமடக்கு, இடையொடு கடை மடக்கு, முற்று மடக்கு என்பன. (தண்டி. 94) எ எட்டாரைச்சக்கரம் - மிறைக்கவி வகைகளுள் ஒன்று. இஃது எட்டு ஆராய், ஆர் ஒன்றுக்கு அவ்வாறு எழுத்தாய், நடுவே ககரம் நின்று குறட்டின்மேல் ‘அறமே தநமாவது’ என்னும் உறுதிமொழி நின்று சூட்டின்மேல் 32 எழுத்து நின்று, இடக்குறுக்கு ஆரின் முனையினின்று தொடங்கி அதன் எதிர்முனை இறுதி சென்று முதலடி முடித்து, முதல் தொடக்கத்திற்கு வலக்கீழ் ஆரின் முதல் தொடங்கி எதிர் ஏறி இரண்டாம் அடி முடித்து, அதற்கு அடுத்ததும் அப்படியே ஏறி மூன்றாமடியும் அடுத்ததும் அப்படியே ஏறி நான்காம் அடியும் முடித்து, முன் தொடங்கிய நடுக்குறுக்கு ஆரின் முதலெழுத்தினின்று வட்டைமேல் இடம்சுற்றி ஐந்தாவதும் ஆறாவதும் ஆகிய அடிகள் முடியுமாறு. அமைக்கப்படும் கவி. சந்திகளில் நின்ற எழுத்து அடிகட்குப் பொதுவாய் நிற்பது இக்கவியுள் ஓர் அருமைப்பாடு; குறட்டைச் சூழ அதன்மேல் உறுதிமொழி யொன்று அமைவதும் ஒரு பெருவித்தகம். ஆர், ஆரை, ஆர்க்கால், ஆரம் - இவை ஒரு பொருளன. குறடாவது குடத்தின் வளைவுப்பகுதி : சூட்டாவது வட்டை வளைவு. (தண்டி. 98) ஏ ஏகபாதம் - சொல்லணியுள் மடக்கு வகைகளுள் ஒன்றாகிய நான்கடியும் மடக்காய் வருவது. ஓரடியே நான்கடியும் மடக்கி வருவது. எ-டு : ‘வான கந்தரு மிசைய வாயின வான கந்தரு மிசைய வாயின வான கந்தரு மிசைய வாயின வான கந்தரு மிசைய வாயின’ வானம் கம் தரும் இசைய ஆயின; வானகம் தரு மிசைய ஆயின; வானகம் தரும் இசைய ஆயின; தரு மிசைய ஆயின வான் நகம்- எனப் பிரித்து, மேகம் கடலிடத்துக் கொடுக்கும் ஓசையொடு கூடியிருந்தன; அவை ஆகாயத்தை வவ்விக் கொள்ளும் எழுச்சியை உடைய வாயின; விண்உலகத்தை ஒக்கும் புகழையுடையன. மரங்களை உச்சியிலே யுடையன பெரிய மலைகள் என்று பொருள் செய்யப்படும். (தண்டி. 95 உரை) ஞானசம்பந்தர் அருளிய திருப்பிரமாபுரம் ( தே. 1 - 127) பதிகம் 12 பாடலும் ஏகபாதம் பயின்றவை. ஏகாட்சரி (ஏகாக்ஷரீ) - ஓரெழுத்துப்பாடல். பாடல் முழுதும் ஒரே உயிரெழுத்தின் உயிர்மெய் வருக்கத்தால் அமையப் பாடுவது. ‘குற்றெழுத்துப்பாடல்’, ‘நெட்டெழுத்துப்பாடல்’ நோக்குக. ஐ ஐந்துபொருள் சிலேடை இணைமடக்கு - முதலீரடிகளும் ஐந்து பொருள்களுக்குச் சிலேடையாய்ப் பின்னீரடிகளும் மடக்காய் அமையும் பாடல். எ-டு : ‘சூழி மறு(கு)ஆ டவர்தோள் விரல்பொழில்தேன் ஆழி பயிலும் அரங்கமே - ஊழி திரிநாட் டிரிநாட் டினவுயிராய்க் கொண்ட அரிநாட் டரிநாட் டகம்’ ‘ஊழி திரிநாள் த்ரிநாட்டின் உயிர் உயக்கொண்ட அரிநாட்டு ஹரிநாட்டு அகம் அரங்கமே’ - ஊழி முடிவில் மூவுலக உயிர்களையும் வயிற்றில் வைத்துப் பாதுகாத்த பாற்கடல் என்னும் இடத்தையுடைய ஹரி என்னும் திருநாமம் உடையானது பதி அரங்க நகராகும். அதன்கண், சூழி ஆழிபயிலும் - குளங்கள் வட்டமாக அமைந்திருக்கும்; மறுகு ஆழி பயிலும் - தெருக்களில் தேர்வண்டிச் சக்கரங்கள் பொருந்தும்; ஆடவர்தோள் ஆழிபயிலும் - ஆடவர்களின் வலத்தோளில் திரு ஆழி முத்திரை வைக்கப்படும்; விரல் ஆழி பயிலும் - விரலில் மோதிரம் பொருந்தும்; பொழில் தேன் ஆழி பயிலும் - சோலையிலுள்ள தேன் கடலை நோக்கிச் செல்லும் என ஐம்பொருள் சிலேடை மடக்குடன் இணைந்து வந்தவாறு. இறுதியடிகளின் முதல் இரு சீர்கள் மடக்கின. (மா. அ. பா. 758) ஒ ஒருபொருட்பாட்டு - கவி தான் எடுத்துக்கொண்ட ஒரு செய்தியினையே வருணித்துப் பாடும் பாட்டாகிய சித்திரகவி வகை. (யா. வி. பக். 542) ஒன்றனையே துணித்துப் பாடுதல் (வீ. சோ. 181 உரை) துணித்துக் கூறலாவது வேறொன்றனொடு கலவாது தனியாகப் பிரித்து எடுத்துக்கொண்டு கூறுதல் என்னும் கருத்துடையது. ஆகவே வருணித்துக் கூறுதலும், துணித்துப் பாடுதலும் ஆகிய இரண்டும் ஒரே பொருளன. எ-டு : ‘நெடுநல்வாடை 1-72 அடிகள். இவ்வடிகளில் கூதிர்க்கால வருணனை வந்து இவ்வகைப் படுமாறு காண்க. ஒற்றுப் பெயர்த்தல் - மிறைக் கவிகளுள் ஒற்றை மாற்றுதல் - ஒற்றைப் பிரித்தல். ஒரு மொழியும் தொடர்மொழியுமாய்ப் பொருள்படுவனவற்றை வேறு பொருள்பட, ஒற்றைப் பெயர்த்தலால் பாடுவது. இஃது ஓரளவு சிலேடையும் அமையும். எ-டு : ‘வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து மண்குளிரச் சாயல் வளர்க்குமாம் - தண்கவிகைக் கொங்கார் அலங்கல் குலதீபன் கொய்பொழில்சூழ் கங்கா புரமாளி கை.’ கங்காபுரம் ஆளி கை - கங்காபுரத்தை ஆள்கின்ற சோழனின் கைகள். அவன் தரும் பெருங்கொடை காரணமாக அக்கைகள் கார்மேகத்தைத் தோற்பித்துக் கற்பகமரத்துடன் போட்டி யிட்டுப் பொருது உலகினை அருள்செய்து மகிழ்விக்கும். கங்காபுரத்து மாளிகைகள் மேகத்தையும் கடந்து வானரைவி தங்கள் உச்சியில் கற்பக மரங்களைத் தங்கச்செய்து தங்கள் பெரும்பரப்பால் உலகிற்குக் குளிர்ந்த நிழலைத் தருகின்றன. இவ்வாறு ‘கங்காபுரமாளிகை’ என்ற தொடர்மொழி பிரிக்கப் பட் டுள்ளமை ஒற்றுப் பெயர்த்தலாம். (தண்டி. 98 உரை.) ஒரு மொழியைப் பாட்டின் இறுதியில் வைத்துப் பிறிது பொருள் பயக்கப் பாடுவது ஒற்றுப் பெயர்த்தல். (யா. வி. பக். 541) ஒற்றுப் பெயர்த்தல் என்பது ஒருமொழியைப் பாடி நிறுத்தி வைத்துப் பிறிதொரு பொருள்படப் பாடுவதும், பலபெயர் கூட்ட ஒரு பொருள் வரப்பாடுவதும் என இரண்டு வகைப்படும். (வீ. சோ. 181 உரை) இதன் இரண்டாம் வகையை ஏனைய அணிநூல்கள் வினா உத்தரத்துள் அடக்கும் (மா. அ. 280; மு.வீ. சொல்லணி. 15); இது தண்டியலங்காரத்தும் இலக்கணவிளக்க அணியிய லுள்ளும் ஒற்றுப் பெயர்த்தலை அடுத்துக் கூறப்படுவது. ‘வினா உத்தரம்’ காண்க. ஒற்றெழுத்தில்லாப் பாடல் எ-டு : ‘நுமது புனலி லளியி வரிவை யமுத விதழி னிகலு - குமுத மருவி நறவு பருக வளரு முருவ முடைய துரை.’ ‘அளி! நுமது புனலில் இ(வ்)வரிவை அமுத இதழின் இகலு(ம்) குமுதம் மருவி நறவு பருக வளரும் உருவம் உடையது உரை’ என்று பொருள் செய்யப்படும். "வண்டே! நீ பழகும் குளங்களில் இப் பெண்ணின் அமுதம் பொதிந்த இதழ்கள் போலத் தோற்றம் அளிக்கும் குமுத மலர்களில் ஒருமுறை மருவித் தேனை நுகர்ந்த பிறகு மீண்டும் தேன் ஊறும் தன்மையுடைய மலர்கள் உளவாயின் கூறு" என்று தலைவன் தலைவியது நலம் பாராட்டிய இப் பாடற்கண், ஒற்றெழுத்து ஏதுமில்லாது எல்லாம் உயிர் மெய்யெழுத்தாக இருத்தல் காணப்படும். (தண்டி. 97 உரை) ஓ ஓட்டிய நிரோட்டியம் - முதலிரண்டடி இதழ்குவிந்தும் கூடியும் ஒலிக்கப்பெறும் உ ஊ ஒஓஒள என்ற உயிர்களும் - ப் ம் வ் என்ற மெய்களும் - கொண்ட சொற்களாக அமைய, அடுத்த இரண்டடியும் இவை நீங்கலான எழுத்துக்களைக் கொண்ட சொற்களாக அமையும் பாடலில் உள்ள சொல்லணி. எ-டு : ‘வதுவைஒரு போதும் வழுவாது வாழும் புதுவைவரு மாதுருவம் பூணும் - முதுமைபெறு நாதன் அரங்கனையே நன்றறிந்தார்க் கேஅடியேன் தாதனென நெஞ்சே தரி.’ “மனமே! எப்போதும் திருமணங்கள் நிகழும் வளம் சான்ற திருவில்லிபுத்தூரில் தோன்றிய ஆண்டாளைத் தமக்குள் அணிந்துகொண்ட சர்வக்ஞனான அரங்கன் அடியார்க்கே அடியவனாகும் தன்மை மேற்கொள்ளுவாயாக” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், முதலீரடிகளில் உ ஊ ஒ ஓ ஒள, ப்ம்வ் என்ற உயிரும் மெய்யும் அவை சேர்ந்தமைந்த உயிர்மெய் யெழுத்துக்களுமே வந்து ஓட்டியம் ஆயவாறும், இறுதியீரடிகளில் இவ்வுயிரும் மெய்யும் உயிர்மெய்யும் தொடர்புறாத ஏனைய மெய் உயிர் உயிர்மெய்யெழுத் துக்களே வந்து நிரோட்டிய மாயவாறும் காணப்படும். (மா. அ. பா. 775) ஓட்டியம் - இதழ் குவிதலால் பிறக்கும் உ ஊ ஒ ஓ ஒள என்ற உயிரும் இதழ் இயைதலால் பிறக்கும் ப் ம் வ் என்ற மெய்களும் தொடர்புடைய உயிர்மெய் எழுத்துக்களால் இயன்ற பாடல் ஓட்டியம் என்ற சித்திர கவியாம். இவ்வோட்டியம் இதழ்குவிந்த ஓட்டியம், இதழ் இயைந்த ஓட்டியம், இருவகையும் வந்த ஓட்டியம் என மூவகைத்து. மேலும் ஒருபாடலில் முதலீரடிகள் ஓட்டியமாகவும் கடை யீரடிகள் நிரோட்டியமாகவும் வரின், அப்பாடல் ஓட்டிய நீரோட்டியம் எனப் பெறும். முதலீரடிகள் நிரோட்டிய மாகவும் கடையீரடிகள் ஓட்டியமாகவும் வரின், அது நிரோட்டிய ஓட்டியம் எனப்பெறும். அவ்வத் தலைப்பிற் காண்க. நிரோட்டியம் - மேற்கூறிய எட்டு எழுத்துக்களின் தொடர் பின்மையால் இதழ் குவியாமையும் இதழ் இயையாமையும் உடையதாய் ஒலிக்கப்படுவது. (மா. அ. 275, 276) ஓர் உயிரான் வரும் செய்யுள் - சொல்லணியில் மடக்கு வகைகளுள் ஒன்றாகிய குற்றுயிர் மடக்கு அல்லது நெட்டுயிர் மடக்கு. எ-டு : ‘அமல லகல மகல லபய கமல பவன மவள - தமல மடர வளக சலச வதன மடர மதன நட.’ ‘அபய! அல் அகலம் அமலல்; அகல்; மதன! கமல பவனம் அவளது அமல அடர அளக சலச வதனம் அடரல்; நட, எனப் பிரித்துக் கூட்டிப் பொருள் செய்யப்படும். (சலசம் - தாமரை. ‘அடரல்’ என்பது கடைக் குறைந்து நின்றது.) "அபயனே! எங்கள் மார்பினைத் தழுவாதே இரவில் அகலுக. காமனே! தாமரையை இடமாகவுடைய திருவை ஒத்த இத் தலைவியது களங்கமற்ற செறிந்த கூந்தலையுடைய முகத்து அழகினைக் கெடுக்காதே; நீங்குக" என்று, பரத்தையிற் பிரிந்து வந்த தலைவற்குத் தோழி வாயில் மறுக்கும் கூற்றாக வந்த இப்பாடற்கண், அகரமாகிய குற்றுயிரே தனித்தும் மெய்யுடன் கூடியும் வந்தமையின் இஃது ஓருயிரான் வந்த செய்யுள் எனவும், குற்றுயிர் மடக்கு எனவும் கூறப்பெறும். (எடுத்துக்காட்டுப் பாடல் இ.வி. 689 உரை வாயிலாகத் திருத்தியமைக்கப்பட் டுள்ளது.) (தண்டி. 97 உரை) ஓரடி ஒழிந்த மடக்குப் பதினொன்று - ஈரடி மடக்கு ஆறு : நாலடிப் பாடற்கண், முதலடியும் இரண்டாமடியும், முதலடியும் மூன்றாம் அடியும், முதலடியும் நான்காம் அடியும், இரண்டாம் அடியும் மூன்றாமடியும், இரண்டா மடியும் நான்காம் அடியும், மூன்றாமடியும் நான்காமடியும் மடங்கிவரும் ஈரடி மடக்கு ஆறாம். மூவடி மடக்கு நான்கு : நான்கடிப் பாடற்கண், ஈற்றடி நீங்கலான ஏனைய மூன்றடிகள் (1, 2, 3), முதல் அயலடி நீங்கலான ஏனைய மூவடிகள் (1, 3, 4), ஈற்றயலடி நீங்கலான ஏனைய மூவடிகள் (1, 2, 4), முதலடி நீங்கலான ஏனைய மூவடிகள் (2, 3, 4) மடக்கி வரும் மூவடி மடக்கு நான்காகும். நான்கடி மடக்காகிய முற்றுமடக்கு ஒன்று. ஆகவே, ஓரடி ஒழிந்த ஈரடி மூவடி நான்கடி மடக்குக்கள் ஆறும் நான்கும் ஒன்றுமாகப் பதினொன்றாதல் காண்க. (தண்டி. 95 உரை) ஓரடி மடக்கு நான்கு - நான்கடிச் செய்யுளுள் முதலடி மடக்குதல், இரண்டாமடி மடக்குதல், மூன்றாமடி மடக்குதல், நான்காமடி மடக்குதல் என்பன. (தண்டி. 93) ஓரிடத்து வரும் மடக்கு 45 ஆதல் - ஓரடி மடக்கு 4, ஈரடி மடக்கு 6, மூவடி மடக்கு 4, நான்கடி மடக்கு 1 = 15 இப்பதினைந்தனையும் அடிமுதல், அடியிடை, அடியிறுதி என மூன்றாக உறழ்ந்து நோக்க, 15 ஒ 3 என ஓரிடத்து வரும் மடக்கு 45 ஆயின. (மா. அ. 258) ஓரெழுத்தினம் - இன எழுத்துப்பாட்டு மிறைக்கவி வகை. வல்லினப் பாடல், மெல்லினப்பாடல், இடையினப்பாடல், குற்றெழுத்துப் பாடல், நெட்டெழுத்துப்பாடல் என்பன பலவும் ஓரெழுத் தினம் என்ற சித்திரகவியில் அடங்கும். அவ்வத் தலைப்பிற் காண்க. (தண்டி. 97 உரை; யா.வி.பக். 540) ஓரெழுத்து அடிமுதல் முற்றும் மடக்கு - அடி முதற்கண் ஓரெழுத்து மடங்கி மீண்டு வருதல் அடி முதல் மடக்கு. இவ்வாறு ஒவ்வோர் அடியிலும் முதலெழுத்து மடங்கி மீண்டும் வரின் அஃது ஓரெழுத்து அடிமுதல் முற்றும் மடக்காம். எ-டு : ‘நாநா நாதம் கூடிசை நாடும் தொழிலோவா தாதா தார மாக வரைத்தண் மலர்மீதே வாவா வார்தண் சோலையில் வாழும் வரிவண்டே யாயா யாளிற் சேர்த்துவ தன்பற் கிசையாயால்’ ‘நாநா (-பல விதமான) நாதம் கூடும் இசைநாடும் தொழில் ஓவா(மல்) தாது ஆதாரமாக (-மகரந்தம் சேர்க்க) மலர்மீது வாவா (-தாவி) வாழும் வரிவண்டே! யாய் ஆயாள் (-தாயானவள்) இல் சேர்த்துவது (என்னை இற்செறிப்பதை) அன்பற்கு இசையாய்’ என்று பொருள்படும் இப்பாடற்கண், நாநா, தாதா, வாவா, யாயா - என அடிதோறும் ஓரெழுத்து அடிமுதல் மடக்காகப் பாட்டு முழுதும் வந்தமை காணப் படும். (தண்டி. 97) ஓரெழுத்துப்பாடல் - பாடல் முழுதும் ஒரே உயிரெழுத்தினாலாய உயிர்மெய் களைக் கொண்டு அமைவது. இது வடமொழியில் ஏகாக்ஷரி (ஏகாட்சரி) என வழங்கும். ‘குற்றெழுத்துப்பாடல்’, ‘நெட்டுயிர் மடக்கு’ இவற்றை நோக்குக. இஃது ஓர் எழுத்து மடக்கு எனவும்படும். (மா. அ. பா. 760) ஓரெழுத்து மடக்கு - ஓர் உயிரெழுத்தே மெய்யொடு கூடி உயிர்மெய் எழுத்தாய்ப் பாடலின் நான்கடிகளிலும் மடக்கி வருவது. எ-டு : ‘அரவ மகர சலசயன படஅரவ! கரசரண நயன வதன கமலதர! வரத! சரத! மகவர தசரதமக! பரம! பரம மமல! அநக! பரமபத!’ “ஆரவாரத்தையுடைய கடலில் படுக்கையாக ஆதிசேடனை உடையவனே! கைகளும் கால்களும் முகமும் தாமரை போன்றவனே! வரதனே! என்றுமிருப்பவனே! மிக மேம்பட்ட தசரதனின் மைந்தனே! பரமே! களங்கமற்றவனே! பாவ மற்றவனே! பரமபதத்தை உடையவனே! உனக்கே மேம் பாடுகள் உரியன” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், அகரமாகிய ஓரெழுத்தே பாடல் முழுதும் மடக்கி வந்தவாறு. பரமம் + அமல = ‘பரமமமல’ என அகரமாக வருதல் காண்க. (மா. அ. பா. 760) க ககர மெய் வருக்க மடக்கு - ‘கூக்குக்கிக் காக்காகா! கூக்கக்கு கைக்கொக்கோ கூக்கொக்கா கைக்காகா கூக்காக்கைக் கேகாகா’ அடி 1 கூ - பூமியை குக்கிக்கு - வயிற்றிற்கு ஆக்கு ஆகா - இரையாக்கும் திருமேனியுடையவனே! அடி 2 கூ - பூமியை கக்குகைக்கு ஒ - மீளப் புறத்து உமிழ்தற்கு ஒத்த கோ - கோவே! அடி 3 கூ - பூமியில் கொக்கு - குதிரை (-கற்கி) யாக ஆகைக்காகா - அவதரிக்கப் போகின்றவனே! அடி 4 கூ - பூமியை காக்கைக்கு - பாதுகாப்பதற்கு ஏகா - இந்நிலவுலகத்திற்குப் பரமபதத்தினின்று வந்தவனே! கா - என்னைக் காப்பாயாக. இப்பாடல் முழுதும் ககரமெய்யும் ககரமெய்யோடு உயிர் கூடிய உயிர்மெய்யுமாக அமைதலின், இது ககரமெய் வருக்க மடக்காம். (மா. அ. பா. 762.) கடகபந்தம் - ஒருமிறைக்கவி விசேடம் ‘நாகநக ராகநிதி நாகரிக ராகநிறை ஏகநக ராசி யிணையில்லா - தார்கணிகழ் தென்னரங்க னாளாய சீராள ராஞான நன்னரங்கர்க் கேயடியே னான்’ (மா. அ. பா. 812) இது, பூட்டுவாய்நின்று வலப்பக்கம் இரண்டாம் அறை சென்று கீழ்அறையில் இறங்கி அவ்வழியே மேல் அறையில் ஏறி இறங்கி, வலம்சென்று, இடையிடையேயுள்ள குண்டுக ளாகிய நான்கு அறைகளிலும் சென்று மேலேறிக் கீழிறங்கி இவ்வாறாக இறுதிஅறை சென்று முடியுமாறு காண்க. இஃது ஒருவகைக் கடக(b)பந்தம். பிறிதொருவகை மா.அ.பா. 811இல் சொல்லப்பட்டுள்ளது. முகப்பின் பூட்டுவாய் இரண் டிடங்களில் நடுவறையினின்று கீழிறங்கி அவ்வழியே மேலேறிக் கீழிறங்கி வலமாகச் சென்று முடிவதாக இப் (b)பந்த அமைப்பு எழுத்துக்கள் அடையும்; இதன்கண் இடையிடையே குண்டுகள் இல. கடைமடக்கு - ஈற்றடி மடக்கும், ஒவ்வோரடியின் கடைமடக்கும் இம் மடக்கின்கண் அடங்கும். ‘இறுதி மடக்கு’ நோக்குக. கண்டகட்டு - இஃது ஒரு மிறைக்கவி விசேடம் போலும். “பசுக் கொண்டு போது” என்று சொல்லப் போயினான், சென்று கண்டு மீண்டு வந்து, “அவை உள்ளாயின” என்னில், “போதாவாயின” என்று அவிழ்ப்பது ‘கண்டகட்டு’ என்பது யாப்பருங்கல விருத்தியுரை. (இதன்பொருள் தெளிவுறப் புலப் பட்டிலது) (யா. வி. பக். 550) கரந்துறை செய்யுள் - வேறொரு செய்யுளுக்குரிய எழுத்துக்கள் யாவும் தன்னிடைத் தேயே இருக்குமாறு பாடப்படும் பாடல் கரந்துறை செய்யு ளாம். கரந்து உறைதலாவது ஒரு செய்யுட்குரிய எழுத்துக்கள் தன்னிடத்தே இடம் மாறி மறைந்திருத்தல். மிறைக்கவிகளுள் இச்செய்யுளும் ஒன்று. எ-டு : ‘அகலல்குற் றேரே யதர மமுதம் பகர்தற் கரிதிடையும் பார்க்கின் - முகமதியம் முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீல மைத்தடங்கண் வெவ்வேறு வாள்’ இப்பாடற்கண் ‘அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு’ என்னும் குறட்பாவிற்குரிய எழுத்துக்கள் யாவும் இடம் மாறி அமைந்துள்ளமையின் இப்பாடல் கரந்துறை செய்யுள் ஆகும். (தண்டி. 98-8; இ.வி. 690 - 15) மாறனலங்காரம் காதைகரப்பைக் கரந்துறை செய்யுளாகவும், கரந்துறை செய்யுளைக் காதை கரப்பாகவும்கொண்டு இலக்கணம் கூறும். இவ்விலக்கணம் அந்நூலுள் காதை கரப்புக்குக் கொள்ளப்படும். (மா. அ. 288, 289) முத்துவீரியம் இதனைக் கரந்துறை பாட்டு என்னும். (சொல்லணி. 14) கரந்துறை பாட்டு - ஒரு பாட்டைச் செம்மையாக எழுதினால் அதன் ஈற்று மொழிக்கு முதலெழுத்துத் தொடங்கி எதிரேறாக இடை யிடை ஓரெழுத்தாக இடையிட்டு முதன்மொழி முதலெழுத்து வரை வாசிக்கப் பிறிதொரு செய்யுளாக அதனகத்து மறைந் துறைவது கரந்துறை செய்யுளாம் என்று வீரசோழியமும் மாறனலங்காரமும் கூறும். (வீ. சோ. 181 உ ரை. மா. அ. 288) ஒரு செய்யுளை முடிய எழுதி அதன் ஈற்றயல் மொழியுள் முதலெழுத்துத் தொடங்கி ஒரோரெழுத்து இடையிட்டு வாசிக்கப் பிறிதொரு செய்யுளாகப் பாடுவது காதை கரப்பு என்று தண்டியலங்காரமும் இலக்கண விளக்கமும் கூறும். (தண்டி. 98-7; இ.வி. 690-14; மு.வி. சொல்லணி 13) எ.டு - ‘தாயேயா நோவவா வீரு வெமது நீ பின்னை வெருவா வருவதொ ரத்தப வெம்புகல் வேறிருத்தி வைத்திசி னிச்சைகவர் தாவா வருங்கலநீ யே’ “எங்களுக்குத் தாவா அருங்கலம் நீயே, தாயே! யாம் நோவு அவா ஈரு (க); எமது (சார்வாயுள்ள) நீ பின்னை வெருவா வருவது ஒ(ஓ)ர் (க); அது தப எம்புகல் வேறு இருத்தி வைத்தி சின்; இச்சை கவர் (க)” எனப் பிரித்துப் பொருள் செய்க. இப்பாடலுள் முற்கூறிய முறையான் நோக்க, ‘கருவார் கச்சித் திருவே கம்பத் தொருவா வென்னீ மருவா நோயே’ என்னும் வஞ்சித் துறைப்பாடல் அமைந்துள்ளமை காணலாம். ‘வருங்கல நீயே’ என்பதனுள் ஈற்றுமொழி ‘நீயே’. அதற்கு முதலெழுத்து ‘ல’. லகரம் மொழி முதலாகாமையின் அதன் முன் நின்ற ககரம் முதலாகக் கொள்ளப்பட்டது. கல்லவல் - நாடறி சொற்பொருள் பயப்பப் பிழையாமை வாசகம் செய்வது. எ-டு : ‘மனையிற்கு நன்று’, ‘முதுபோக்குத் தீது’, ‘முதுபோக்கே அன்று’ ‘பெருமூர்க்குத் தீது’ என்பனவாம். (யா.வி. பக். 550) (இச் செய்தி விளங்கவில்லை.) காதைகரப்பு - மிறைக்கவிகளுள் ஒன்று. ஒரு செய்யுள் முடிய எழுதி, அதன் ஈற்றயல் மொழியுள் முதலெழுத்துத் தொடங்கி ஓரோர் எழுத்து இடையிட்டு வாசிக்கப் பிறிதொரு செய்யுளாகப் பாடுவது ‘காதை கரப்பு’ என்னும் சித்திரகவி எனத் தண்டியலங்காரமும் முத்துவீரிய மும் கூறும். இதனைக் ‘கரந்துறை பாட்டு’ எனவும் ‘கரந்துறை செய்யுள்’ எனவும் முறையே வீரசோழியமும் மாறனலங்கார மும் கூறும். அவை ‘கரந்துறை செய்யுள்’ என்று தண்டி யலங்காரமும் இலக்கண விளக்கமும் கூறும் சித்திரக் கவியைக் ‘காதை கரப்பு’ என மாற்றிக் கூறும். மாறனலங்காரம் ஈற்று மொழியின் முதலெழுத்தை விட்டு ஈற்று மொழியின் ஈற்று உயிர்மெய்யைத் தொடங்கிக் கணக்கிடும். வீரசோழிய உரையும் மாறலனங்காரமும் கூறும் காதை கரப்புக்கு எடுத்துக்காட்டாகக் ‘கரந்துறை பாட்டு’க் காண்க. (தண்டி. 98; வீ. சோ. 181 உரை; மா. அ. 288; இ. வி. 690.) குற்றுயிர் மடக்கு - ‘அகரக் குற்றுயிர் மடக்கு’ நோக்குக. கூட சதுக்கம் - சித்திரகவி வகைகளுள் ஒன்று; பாட்டின் நாலாவது அடி எழுத்துக்கள் ஏனைய முதல் மூன்றடிக் கண்ணும். மறைந்து கிடக்குமாறு பாடுவது. எ-டு : ‘புகைத்தகைச் சொற்படைக் கைக்கதக் கட்பிறைப் பற்கறுத்த பகைத்திறச் சொற்கெடச் செற்றகச் சிப்பதித் துர்க்கைபொற்புத் தகைத்ததித் தித்ததுத் தத்தசொற் றத்தைப்பத் தித்திறத்தே திகைத்தசித் தத்தைத் துடைத்தபிற் பற்றுக் கெடக்கற்பதே’ இப்பாடற்கண், முதல் மூன்றடியுள் நான்காமடி மறைந் துள்ளது. கூடம் - மறைந்தது; சதுககம் - சதுர்த்தம் - நான்காவது. நெருப்பை ஒத்த கடிய சொற்களையும் படைக்கலன்கள் அணிந்த கைகளையும் வெகுட்சிப் பார்வையையும் பிறை போன்ற பற்களையும் உடைய பகைவரான அவுணர் கூட்டம் அழியக் கொன்றவளும், காஞ்சி மாநகரில் உள்ளவளும், அழகு தங்கிய இனிய யாழொலி போன்ற சொற்களையுடைய வளும், கிளி போன்றவளுமான கொற்றவையிடம் பக்தி செய்யும் திறத்தில் ஈடுபடாத மனத்தை நல்வழிப்படுத்தினால், இருவினையும் நீங்குதற்குக் காரணமான ஞானத்தை அறிதல் ஆம் என்பது இப்பாடற் பொருள். (தண்டி. 98-2) கூட சதுர்த்தம் - நான்கா மடியிலுள்ள எழுத்துக்கள் யாவும் ஏனை மூன்றடி களுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி. ‘கூடசதுக்கம்’ என்பதும் அது. (தண்டி. 95) நாலடியாய ஒரு செய்யுளில் நாலாம் பதம், ஏனைய மூன்று பதத்தையும் மேல் நின்று கீழும் கீழ்நின்று மேலுமாக எழுதி முடித்த வரி மூன்றில் இடைவரியின் மறைந்து நிற்பது. (பதம். அடி) கூடசதுர்த்தமாம். எ-டு : ‘நாதா மானதா தூய தாருளா ணீதா னாவா சீராம னாமனா போதா சீமா னாதர விராமா தாதா தாணீ வாமனா சீதரா!’ (மா. அ. 293) வரையுமாறு : நா ன ய ளா னா ரா ம தா னா வி தா தா தா ணீ வா ம னா சீ த ரா மா தூ ரு தா சீ னா போ மா ர மா பாடலின் நான்காமடி மேலை நடுவரிக்கண் நிகழுமாறு காண்க. கோமூத்திரிகை - சித்திரகவி வகைகளுள் ஒன்று; கோமூத்திரி எனவும்படும். பெற்றம் நடந்துகொண்டே நீர் விடுகையில் அந் நீர்த்தாரை பட்ட நிலம் நெளிந்த வடிவுடைத்தாகக் காணப்படுமாறு போல, இம்மிறைக்கவியின் வரிவடிவு அமைந்திருக்கும்; இரண்டிரண்டு அடியாக ஒரு செய்யுளை எழுதி (மேல் வரி இரண்டடி, கீழ் வரி இரண்டடி) மேலும் கீழுமாக அமைந்த அவ்விரண்டு வரிகளிலும் எழுத்துக்களை ஒன்றிடையிட்டு வாசித்தாலும் அச்செய்யுளே தோன்றுவது இச்சித்திரகவி யாம். ‘பருவ மாகவி தோகன மாலையே பொருவி லாவுழை மேவன கானமே மருவு மாசைவி டாகன மாலையே வெருவ லாயிழை பூவணி காலமே’ என்பது பாடல். ‘ஆயிழை! வெருவல்! கன மாலையில் கனம்மாலை ஆசை விடா(து) மருவும்; பொரு இலா உழை கானம் மேவன; (ஆதலின்) இது பருவம் ஆக, அவர் பூ அணி காலம்’ என்று பிரித்துப் பொருள் செய்யப்படும். ஆயிழாய்! அஞ்சாதே. செறிந்த மாலைப்பொழுதில் மேக வரிசைகள் திக்கெல்லாம் நீங்காது பொருந்தி மழை பெய்தலை மேவும்; ஒப்பற்ற மான்கள் காட்டில் திரிகின்றன. ஆதலின் தலைவர் மீண்டு வந்து நின்னைப் பூஅணியால் ஒப்பனை செய்யும் காலம் இதுவாதல் வேண்டும்” என்று பருவ வரவின்கண் தோழி தலைவன் கடிதின் வருவான் என்று தலைவியை ஆற்றுவித்தவாறு. (தண்டி. 98) ச சக்கரங்களில் பலவகை - பூமி சக்கரம், ஆகாயச் சக்கரம், பூமி ஆகாயச்சக்கரம், வட்டச் சக்கரம், புருடச்சக்கரம், சதுரச் சக்கரம், கூர்மச்சக்கரம், மந்தரச் சக்கரம், காடகச் சக்கரம், கலிபுருடச் சக்கரம், சலாபச் சக்கரம், சக்கரச் சக்கரம், அரவுச் சக்கரம், முதலாக உடையன புணர்ப்பாவை, போக்கியம், கிரணியம், வதுவிச்சை என்ற நூல்களில் காணப்படும். அவையெல்லாம் சாவவும் கெடவும் பாடுதற்கும், மனத்தது பாடுதற்கும் பற்றாகும் எனக் கொள்க. (யா. வி. பக். 532, 533) சதுரங்க பந்தம் - ‘மானவனா மேவலா மாறனித்த மாமாலை யானதவ போதனுமா யாய்ந்தகோ - மானவடி நாதனின்மே னன்கலன்பூ ணென்முனநீ வந்தெவனொன் றாதயமா வன்புலமா ய.’ ‘ஒன்றாத யமா! மானவனா! மேவல் ஆம் மாறன், நித்தம் ஆம் மாலை ஆன தவ போதனுமாய், ஆய்ந்தகோ, மானஅடி, நாதனின் மேல் நன்கலன் பூண் என் முனம் நீ வந்து, எவன்? வன்புலம் ஆய’ எனப் பிரித்துப் பொருள் செய்க. “எவ்வான்மாக்களொடும் பொருந்தாத நமனே! மனுகுலம் காவலன் ஆகுக. நங்கையார்க்கும் காரியார்க்கும் புத்திரனாக மேவிய மாறன் என்னும் பிள்ளைத் திருநாமமுடையவன், நித்தமாக நிலைபெற்ற திருமாலைத் தன்னிடத்து ஆக்கம் பெற்ற மெய்த்தவத்தொடு கூடிய ஞானவான், திருமாலே பரத்துவமென்று தெளிந்த தெரிசனராசன், ஆகிய சடகோப னுடைய பெருமையுடைய திருவடிகளை என் நாவிலும் தலையிலும் நல்ல ஆபரணமாகப் பூண்டுள்ள என் முன்னே வந்து நீ சாதிப்பதுதான் யாது? (ஒன்றுமில்லை) என்னிடம் நீ வருதற்கு எளிய இடம் அன்று; வலிய இடமாகப்பட்டன” என்று பொருள்படும் இந்நேரிசை வெண்பாவினைச் சதுரங்க அரங்கின் நாலு பக்கமும் மையங்களில் நால்நான்கு பதினாறு அறையிலும் நடுவில் நாலு அறையிலும். மாதவன் என்னும் திருநாமம் நிற்குமாறு ஆராய்ந்து அமைத்துக் கொள்ளப் படும். சதுரங்க பெந்த வரைபடம் காண்க. சதுரங்கம் வரையப் பட்டுள்ளது. அறைகள் 64 தோன்றச் சதுரமாக வடிவம் கீறப்பட்டதன்கண், இப்பாடலை அமைக்குமாறு தெரிந் திலது. பலவாறு முயன்றும் உரையுள் காணப்பட்டவாறு ‘மாதவன்’ அமையப் பெற்றிலது. (மா. அ. 299 உரை; பாடல் 810) சந்தட்ட யமகம் - ஸந்தஷ்டயமகம் - ‘முற்றுமடக்கு’க் காண்க. சந்தொட்டியமகம் - அடிதோறும் வரும் இறுதிச் சொல்லை அதன்மேல் வரும் அடிக்கு ஆதியாகத் தொடுப்பது அந்தாதி மடக்கு எனப்படும். இதனைச் சந்தொட்டி யமகம் எனவும் கூறுவர். எ-டு : ‘நாக முற்றவும் களிதர நிருதர் கோனாக நாக மையிரண் டொருங்கறப் பொருத. மைந்நாக நாக மூலமென் றழைத்தகார் துயிலிட நாக நாக மொய்த்தபூம் பொழில்திரு நாகையென் னாகம்’. ‘நாகம் (-தேவருலகத்தார்) முற்றவும் களிதர நிருதர்கோன் (-இராவணன்) ஆகம், நா, கம் (-தலை) ஐஇரண்டு(ம்) ஒருங்கு அறப் பொருத மைந்நாகம் (-நீலமலை) நாகம் மூலம் என்று அழைத்த கார் துயிலிடம் நாகம் (-ஆதிசேடன்); நாகம் (-சுரபுன்னை) மொய்த்த பூம்பொழில் திருநாகை என் ஆகம். (-மனம்)’ எனப் பொருள் செய்க. “தேவர்கள் மகிழ இராவணனுடைய மார்பு, நா பத்து, தலைபத்து இவை ஒருசேர அழியும்படி பொருத நீலமலை போல்வானும், கசேந்திரன் ‘ஆதிமூலமே!’ என்று அழைத்த கார்மேனி வண்ணனும், ஆதிசேடனில் துயில் கொள்வானும், சுரபுன்னை மரங்கள் செறிந்த சோலைகளையுடைய திருநாகை என்ற தலத்தில் உகந்தருளியிருப்பவனும் ஆகிய திருமால் என் நெஞ்சத்துள்ளான்” என்ற இப்பாடற்கண் நாகம் என்ற சொல்லே நான்கடிகளிலும் ஆதி அந்தமாக வந்துள்ளமை ‘சந்தொட்டி யமகம்’ என்ற சந்தட்டய மடக்காம். (மா. அ. 266) சப்தபங்கி - ஒரே பாடல் அதன் அடிகளையும் சீர்களையும் பகுத்துத் தனித்தனியே ஏழு வேறுபாடல்களாக அமைக்கும் வகையில் பாடுவதாகிய சித்திரகவி வகை. சமுற்கம் - இரண்டடிகளோ பல அடிகளோ சொல்லளவில் ஒத்தும் பொருளளவில் வேறுபட்டும் வரும் மிறைக்கவி வகையாகிய மடக்கு. எ-டு : ‘காம ரம்பயி னீரம துகரம் காம ரம்பயி னீரம துகரம் காம ரம்பயி னீரம துகரம் நாம ரந்தை யுறனினை யார்நமர்’ (தண்டி. 95 உரை) ‘கா மரம் பயில் நீர மதுகரம் காமரம் பயில் நீர; மது கரம் காமர் அம்பு அயில் நீர; மது கரம் நாம் அரந்தை உறல் நினையார் நமர்’ எனப் பிரித்துப் பொருள் செய்யப்படும். “சோலையின் மரந்தோறும் நெருங்கின வண்டினம் காமரம் என்னும் இசையைப் பாடுகின்றன; தேன் பொழியும் மதவேள் அம்புகள் வேலின் தன்மையும் உடன் உடையவாயின; வேனில் காலத்து (மது) எதிர்ப்பட்ட (கரம்) நாம் துயருறு வதை நம் காதலர் நினைவாரல்லர்” என்று பொருள்படும் இப்பாடற்கண், முதல் மூன்றடிகளும் சொல்லளவில் ஒத்துப் பொருளளவில் ஒவ்வாது வெவ்வேறு பொருள் பயக்க வந்தமையால் இது சமுற்கம் எனப்படும் மடக்காம். சர்வதோ பத்திரம் - ஸர்வதோபத்ரம்; ‘சருப்பதோபத்திரம்’ காண்க. சருப்பதோ பத்திரம் - மிறைக்கவியுள் ஒன்று. நான்கடிப்பாடல் செவ்வே முதல் நான் கடியும், ஈற்றடியை முதலாகக் கொண்டமைத்த நான்கடியு மாக இருமுறை எழுதப்பட்டு, பாடலின் ஒவ்வோர் அடியை யும் முடிவிலிருந்து முதல் நோக்கி வாசித்தாலும் கீழிருந்து மேல் நோக்கி வாசித்தாலும் நான்கு நிலையிலும் அவ்வடியே வருமாறு அமைப்பது. இது மாறனலங்காரம் கூறும் இலக்கணம். (மா. அ. 292) நாற்புறமும் தலைப்பாக வைத்து வரிசையாகப் படித்தாலும் மடக்கிப் படித்தாலும் நான்கடியும் மேலிருந்து கீழ் இறக்கியும் கீழேயிருந்து மேலே ஏற்றியும் படித்தாலும் உருவம் கெடா மலேயே மாலைமாற்றாய் அமையுமாறு வருவது என்று தண்டி உரைக்கிறது. (தண்டி 98-11 உரை) சாமிநாதம் குறிப்பிடும் சொல்லணிகள் - தண்டியலங்காரம் கூறுவனவற்றொடு சதுரங்கம், கடக பெந்தம், தேர்க்கவி என்ற மூன்றும் சாமிநாதத்தில் இடம் பெறுகின்றன. சித்திரகவி (1) - பொருட்சிறப்பையே பெரிதும் கருதாது, சொல்லமைப் பையே குறிக்கோளாகக் கொண்டு சொல்லழகு காணும் விருப்ப முடையோர் உள்ளம் உவகையுறும் வகையில் பாடப்படும் மடக்கும், மிறைக்கவிகளும் சித்திரகவிகளாம். (இ. வி. பாட். 6) சித்திரகவி (2) - அருங்கவியாகிய மிறைக்கவி, சித்திரகவி பாடும் புலவன் (இ. வி. பாட். 170) (டு) சித்திர கவி (3) - எழுத்துச் சுருக்கம், எழுத்துப் பெருக்கம், வினாவிடை, கரந்துறை செய்யுள், காதைகரப்பு, பிறிதுபடுபாட்டு, நடுவெழுத்தாக்கம், எழுகூற்றிருக்கை, திரிபங்கி, நிரோட்டம், மாலைமாற்று, சக்கரபந்தம், கமலபந்தம், தேர்ப்பந்தம், வேல்பந்தம், நாகபந்தம், தேள்பந்தம், சுழிகுளம், கோமூத்திரி, கூடசதுக்கம், சருப்பதோ பத்திரம் என்பனவும் பிறவும் தென்னூல் அணியியல் (50) சுட்டும் சித்திரகவிகளாம். சித்திரப் பா - சித்திரகவி; நான்கு கூடின எல்லாம் பத்தாகவும், மூன்று கூடினவெல் லாம் பதினைந்தாகவும், பிறவாற்றானும் எண் வழுவாது பாடுவது வருமாறு : எ-டு : அ) ‘ஒருதிரட் பிண்டிப் பொன்னெயில் மூன்றின் ஈரறம் பயந்த நான்முக அண்ணல் 1+3+2+4=10 மூவகை உலகிற்கும் ஒருபெருங் கடவுள் நால்வகை யோனியுள் இருவினை கடிந்து 3+1+4+2=10 முந்நெறி பயந்த செந்நெறி ஒருவன் நால்வகை அளவையும் இருவகைப் பண்பும் 3+1+4+2=10 ஒன்றி யுரைத்த முக்குடைச் செல்வன் ஈரடி பரவினர் என்ப பேரா நால்நெறி பெறுகிற் போரே.’ 1+3+2+4=10 (திருப்பாமாலை.10) இது நான்கு புணர்ந்து கூடியவெல்லாம் பத்தாகிய சித்திரப் பா. இதனை நான்கு வரியும் முறையே எழுதிக் கண்டு கொள்ளலாம். எ-டு : ஆ) ‘இருவரமாம் எழுநாள் ஆறமர்ந்தான் கோயில் 2+7+6=15 ஒருவனையே நாடிய போந்தேம் - ஒருவனும் எண்கையான் முக்கணான் நான்முகத்தான் ஒன்பானோடு 8+3+4=15 ஐந்தலைய நாகத் தவன்’. (திருப்பாமாலை) 1+9+5 = 15 இஃது இணைந்து மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகிய சித்திரப்பா. இதனை ஈசானன் திசைமுதலாக எட்டுத்திசை மேலும் நிறுத்தி நடுவே பின் ஐந்து நிறுத்தி விடுவது. வருமாறு: (செய்தி விளங்கிற்றிலது.) (யா.வி.பக். 543) சிலேடை இணை மடக்குகளில் எழுத்துக்களை எடுத்தல் படுத்தல் என்னும் ஓசைவேறுபட உச்சரித்துப் பொருள் வேறுபடுத்தல் - செய்யுளடியில் வெவ்வேறு பொருள் தந்து முதற்சீரும் இரண் டாம் சீரும் மடக்குதல் இணைமடக்காம். அடி அளவடியாகக் கொள்ளப்படும். அம்மடக்குக்கள் சிலேடைப் பொருளொடு வரும்போது வரிவடிவம் ஒன்றாயிருத்தலின். பொருள் வேறு பாட்டிற்கு ஏற்ப ஒலிவடிவத்தை உச்சரிக் கின்ற இடத்தே, பொருள் சிறந்த பகுதியை எடுத்தும், சிறவாப் பகுதியைப் படுத்தும், ஏனைய பகுதியை இடை நிகர்த்ததாயும், வடசொற் களை உரிய ஒலியோடும் உச்சரிக்க வேண்டும். எ-டு : ‘திரிநாட் டிரிநாட் டினவுயி ருய்க்கொண்ட அரிநாட் டரிநாட் டகம்.’ இவை இணைஎதுகை. “(ஊழி) திரிநாள் த்ரி நாட்டின் உயிர் உய்யக்கொண்ட அரிநாட்டு ஹரி நாட்டு அகம்’ - ஊழி இறுதியில் உகங்கள் மீளவரும் நாளில் மூன்றுலகிலும் உள்ள உயிர்க்கணங்களை வயிற்றில் வைத்துக் காத்த பாற்கடல் என்னும் இடத்தை யுடைய திருமால் நாட்டிய பதி நிலைபெறச் செய்த அரங்கம் ஆகும். இதன்கண், ‘திரிநாள் த்ரிநாடு அரிநாட்டு ஹரிநாட்டு’ என ஒலியைப் பொருளுக்கேற்ப மாற்றி ஒலித்தால் எளிதில் பொருள் புலப்படும். (மா. அ. பாடல் 758) சிறப்புடைய மடக்கு - அடி முழுதும் மடக்கி வருதலே மடக்குக்களுள் சிறப்புடைய மடக்காம். அடி முழுதும் எனவே, இரண்டடி மடக்கி வருவதும், மூன்றடி மடக்கி வருவதும், நான்கடி மடக்குவதும் என்ற மூவகையும் கொள்ளப்படும். (தண்டி. 96) சீர்மடக்கு - இஃது அடிதோறும் நிகழ்தல் ஆம்; அன்றி, முதல் இடை கடையில் நிகழ்தலும் ஆம். ‘முதல் இடைகடை மடக்கு வகைகள்’. நோக்குக. (தண்டி. 95) சுழிகுளம் - மிறைக்கவிகளுள் ஒன்று. ஒரு செய்யுளை எட்டு எட்டு எழுத்துக்களாக நான்கடியும் நான்கு வரியாக எழுதி, மேல் இருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் படிக்கும்போது, அவ்வடி நான்குமாகவே அமைந்து அச்செய்யுளே முற்றுப் பெறுவது. எ-டு : ‘க வி மு தி யா ர் பா வே வி லை ய ரு மா ந ற் பா மு ய ல் வ து று ந ர் தி ரு வ ழி ந் து மா யா.’ கவிகளில் முதிர்ந்தோரின் பாடலே விலைமதித்தற்குரிய நல்ல பாவாகும்; இடைவிடாது முயன்று பாடுபட்டாரது செல்வம் அழிந்தாலும் அப்பா அழியாது என்பது பொருள். (தண்டி. 98 - 10) சேகாநுப்ராஸம் - இரண்டிரண்டு மெய்கள் உயிர் ஏறப்பெற்று இடைவிடாது மறுத்து வருவது. எ-டு : ‘பண்டு பண்டவழ் நாவினொர் பாவைதெம் மண்டு மண்டலத் தோரவை மாழ்கிமன் கொண்ட கொண்டலன் னாய்நின் திருப்பெயர் கொண்டு கண்டனன் கோதைப் புறத்தையே’. இதன்கண் ண், ட் என்பனவற்றுள் டகரத்தின்மேல் உயிரேறி வந்துள்ளது. அநுப்ராசம் - வழி எதுகை (யா. வி. பக். 208). வல்லொற்றை அடுத்துக் கொண்ட மெல்லொற்று வழிஎதுகையை வட நூலார் ‘சேகாநுப்ராஸம்’ என்பர். இஃது இணையெதுகை அலங்காரம் என்று மாறன் அலங்காரத்துள் கூறப்பட்டுள் ளது. (பக். 277) சொல்லும் பொருளும் ஒன்றாகவே தொடர்ந்து குறிப்பினால் பொருள் மாறுபடுதல் ‘லாடாநுப்ராஸம்’ (பிரதாபருத்ரீயம் சப்தாலங்கார ப்ரகரணம் - 1 (5)) (டு) சொல் அந்தாதி மடக்கு - எ-டு : கயலேர் பெறவருங் கடிபுனற் காவிரி காவிரி மலருகக் கரைபொரு மரவ மரவப் பூஞ்சினை வண்டொடு சிலம்பும் சிலம்புசூழ் தளிரடித் திருமனைக் கயலே. ‘கயல் ஏர் பெற வரும் கடிபுனல் காவிரி, காவிரி மலர் உகக் கரை பொரும் அரவம், மரவம் பூஞ்சினை வண்டொடு சிலம்பும், சிலம்புசூழ் தளிரடி (தலைவி) திருமனைக்கு அயலே’ எனப் பிரித்துப் பொருள் செய்யப்படும். “கயல்மீன்கள் எழுச்சி பெறப் பெருக்கெடுத்து வரும் நறுமண மிக்க புனலையுடைய காவிரியாறு, சோலையில் விரிந்த மலர்கள் கீழே உகுமாறு கரையைத் தாக்கும் ஒலி, மரவமரத் தில் பூக்கள் செறிந்த கிளைகளில் உள்ள வண்டொலியோடு ஒலிக்கும். இங்ஙனம் ஒலிக்கும் இடம் சிலம்பு அணிந்த அணிகளால் சூழப்பட்ட தளிர் போன்ற அடிகளையுடைய தலைவியின் மனைக்கு அருகின்கண்ணேயாம்” என்று பொருள்படும் இப்பாடற்கண், கயல் காவிரி. மரவம் சிலம்பு என்னும் சொற்கள் அந்தாதியாக வந்தமை சொல்லந்தாதி மயக்காம். (அந்தாதி மண்டலித்தும் வந்தவாறு.) (தண்டி. 96) சொல் ஒப்பணி - இது தொன்னூல் விளக்கம் குறிப்பிடும் சொல் அணிவகை நான்கனுள் ஒன்று. ஒப்புமைபற்றி வருவனவற்றைக் கூறுதல் இதன் இலக்கணமாம். இது திரிபுஇயைபு, ஒழுகிசை, சமம், இயைபிசை என நால்வகைப்படும். 1. திரிபு இயைபு ஒரு பெயரோ ஒருவினையோ பலவேறு உருபு பெற்றும், பலவினையோ பலபெயரோ ஓர்உருபு பெற்றும் வரத் தொடுப்பது. எ-டு “படை வரவினால் காற்றெனவும், முழக்கத்தால் கடலெனவும். அச்சத்தால் இடியெனவும், செய் கொலையால் கூற்றெனவும், மதகரி வந்து எதிர்த்த படையை அழித்தது” என்றற்கண் கூறிய பெயர் களில் ஆல் உருபும் ‘என’ என்பதும் பலமுறை மீண்டும் வந்தவாறு. 2. ஒழுகிசை இனிய ஓசை; இயற்றமிழிடத்துப் பெயரும் ஈரெச்சமும் உரிச்சொல் முதலியனவும் பலபல ஒப்ப வந்து பொருந்துதல். எ-டு: ‘விடாது நறுநெய் பூசி, நீங்காது ஒளிமணி சேர்த்து, மங்காது மதுமலர் சூடி’ என, இரண்டாம் வேற் றுமைத் தொகைகள் இணைந்து வந்தவாறு. செய்து என்னும் வினையெச்சமும், எதிர்மறை வினையெச்ச மும் ஒப்ப வந்தவாறு. நெய்பூசி, மணிசேர்த்து, மலர் சூடி என்பன இரண்டன் தொகைகள்; இவற்றுள் முன்மொழி பெயராம். நறு, ஒளி, மது என்பன அம்மூன்று பெயர்க்கும் முறையே அடையாக வந்து உரியாக நின்றவாறு. 3. இயைபு இசைஅணி பற்பல வசனத்து இறுதிமொழிகள் தம்முள் உருவின் ஒப்புமையால் இணைந்து வருதல். எ-டு : ‘செங்கதிர் நெடுங்கை நீட்டி, மல்கிருள் கங்குல் ஓட்டி, படரொளி முகத்தைக் காட்டி’ என இதன்கண், நீட்டி. ஓட்டி, காட்டி என்பன ஓசை ஒப்புமையால் இணைந்து வந்தவாறு. 4. சம ஒப்புமை இருமொழி பலமொழிகள் தம்முள் மாத்திரையாலும் ஓரெழுத்தாலும் வேறுபாடுடைய ஆதல் அன்றித் தம்முள் ஒப்ப வருவது. எ-டு : ‘கோடா ராவிப் பாற்குருகே கோடா ராவிப் பாற்குருகே’ - என மடங்கி வருவது. கோடு ஆர் ஆவிப் பால் குருகே - கரை பொருந்திய குளத்தை அடுத்துள்ள, பால் போன்ற நிறத்தையுடைய நாரையே; கோடாரா இப்பால் குருகே - தாம் கவர்ந்த என் வளைகளைத் தலைவர் மீட்டும் தாராரோ? என வருவது. இஃது இரண்டடி மடக்கு. இனிச் சமமாகாது, காந்தாரம் ழூ கந்தாரம் ழூ கந்தரம் என, மாத்திரை குறைந்து வேற்றுச்சொல் ஆயின; இது மாத்திரைச் சுருக்கம் என்னும் சொல்லணி. கமலம் ழூ கலம், மலம் இஃது எழுத்துச் சுருக்கம் என்னும் சொல்லணி. (தொ. வி. 320-324) சொல் மிக்கணி - வந்த சொல்லே மீண்டுமீண்டும் வருவது சொல்மிக்கணி என்று தொன்னூல் விளக்கம் கூறும். இவ்வணி மடக்கு, இசைஅந்தாதி, அடுக்கு என மூவகைப்படும். 1. மடக்கணி தனித் தலைப்பிற் காண்க. 2. இசை அந்தாதி உரைநடையில் ஒருவசனத்துக்கு ஈறாக நின்ற மொழி மற்றொரு வசனத்துக்கு ஆதியாக வருவது. உருபு ஒன்றே ஆயினும் வேறே ஆயினும் ஏற்புடைத்தாம். எ-டு : அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடம் சென்றது; செல்லப் பசிகடுகுதலும்...’ ‘மாந்தர்க்கெல்லாம் கேள்வியால் அறிவும், அறிவினால் கல்வியும், கல்வியால் புகழும், புகழால் பெருமையும் விளையுமன்றே?’ இது மாறனலங்காரம் முதலியவற்றுள் காரணமாலை அணி யாகக் கொள்ளப்படும் (செய்யுட்கண்ணேயே என்பது). இங்குச் சொல்அமைப்பு நோக்கிச் சொல்மிக்கணி ஆயிற்று. 3. அடுக்கணி சிறப்பினைக் காட்டவும், அன்பு துயர் களிப்பு முதலிய வற்றைத் தோற்றவும் ஒருபொருள் தரும் பல திரிசொற்கள் அடுக்கி வருவது. எ-டு : ‘என்னுயிர் காத்துப் புரந்(து)ஆண்ட என்னிறைவன் தன்னுயிர் பட்(டு)இறந்து சாய்ந்தொழிந்தான் - பின்னுயிராய் மீண்டென்னைக் காத்(து)ஓம்பி மேவிப் புரந்(து)அளிப்ப யாண்டையும் யார்யார் எனக்கு?’ காத்துப் புரந்து, பட்டு இறந்து, காத்து ஓம்ப, புரந்து அளிப்ப என ஒரு பொருள் தரும் பலதிரிசொற்களும் அடுக்கி வந்தமை இவ்வணியாம். (தொ. வி. 314 - 317) சொல்லணி (1) - செய்யுளிலுள்ள சொற்கள், பரியாயச் சொற்களாக மாற்றப் படின் அணி கெடுவது சொல்லணி. முல்லை நகைத்தன என்றதற்கு முல்லை பூத்தன என்று கூறின் அணி நில்லாது. (தொ. வி. 302 உரை) இச் சொல்லணி மறிநிலை அணி, சொல் மிக்கணி, சொல் எஞ்சணி, சொல் ஒப்பணி என நான்கு வகையாம். (தொ. வி. 303) மறிநிலை 5, பொருள்கோள் 8, சொல் மிக்கணி 3, சொல் எஞ்சணி 10, சொல் ஒப்பணி 4, ஆகச் சொல்லணி விரி 30 என்னும் தொன்னூல் விளக்கம். (325) சொல்லணியை மடக்கு, சித்திரகவி என இருவகைப்படுத்தும் தண்டியலங்காரம். (92, 98) சொல்லணி (2) - பலவகைத் தொடைகளையும் பாட்டடி சீர்களில் அமைத்தல். அவ்வாறே பலவண்ணங்களையும் பயில அமைத்தல். எழுத்துநிரல்நிறை, சொல்நிரல்நிறை, சொல்லையும் பொருளை யும் முரண்பட நிறுத்துதல், சொல்லும் பொருளும் ஒன்றே பலமுறை தொடர்ந்து வரச்செய்தல் (ஒரு சொல் பலபொருட் படத் தொடர்ந்து வரவேண்டும்; ஒரு பொருளே பலசொல் வடிவத்தில் தொடர்ந்து பின்வரவேண்டும்), ஒரு சொல்லோ சொற்றொடரோ அடியோ மீண்டும் வேறு பொருள் பட மடக்குதல், சித்திரக்கவி, எண்ணுமுறையாகத் தொடுத்தல் - என்பனவும் பிறவும் சொல்லணியின்பாற்படும். (எண்ணு முறையாகத் தொடுத்தல் - எழுகூற்றிருக்கை)(தென். அணி. 47) சொல்லலங்காரம் - சொல்லணி; சொல்லின்கண் தோன்றும் அணி. அதனைத் தண்டியலங்காரம் மடக்கு, சித்திரகவி என இருபாற்படுக்கும். த தகர வருக்க மடக்கு - பாடல் முழுதும் தகர ஒற்றும் தகரத்தை ஊர்ந்த உயிருமே வருவது. எ-டு : ‘தத்தித்தா தூதுதி; தாதூதித் தத்துதி; துத்தித் துதைதி; துதைத்ததா தூதுதி; தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது’ பாய்ந்து மகரந்தத்தை ஊதும் வண்டினை நோக்கி, “தத்தித் தாது ஊதுதி; தாது ஊதித் தத்துதி; துத்தித் துதைதி; துதைத்த தாது ஊதுதி; தித்தித்த தாது எது? எத்தாது தித்தித்த தாது? தித்தித்தது எத்தாது?” என, மகரந்தங்களுள் சுவையுடைய மகரந்தம் யாது என மும்முறை வினவியவாறு. தகர ஒற்றும் தகர உயிர்மெய்வருக்கமுமே வந்தமையால் இப்பாடல் தகர வருக்க மடக்காம். (தண்டி. 97) தண்டியலங்காரம் குறிப்பிடும் சொல்லணிகள் - கோமூத்திரி, கூடசதுக்கம், மாலைமாற்று, எழுத்து வருத்தனம், நாகபந்தம், வினா உத்தரம், காதை கரப்பு, கரந்துறைச் செய்யுள், சக்கரம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம், அக்கரச் சுதகம் என்ற பன்னிரண்டும். பலவகை மடக்கும், உரையில் கொள்ளப்பட்ட நீரோட்டகம், ஒற்றுப் பெயர்த்தல், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனை, முரசபந்தம், திரிபாதி, திரிபங்கி, பிறிதுபடுபாட்டு என்ற எட்டும் தண்டி யலங்காரம் குறிப்பிடுபவை. தண்டி. 92-98. தலைமடக்கு - செய்யுள் அடியில் முதற்சீரே அவ்வடியில் மடங்கி வரும் மடக்கணிவகை. ‘ஆதிமடக்கு வகைகள்’ காண்க. திரிபங்கி - திரிபங்கி - முன்றாகப் பிரிவது; மிறைக் கவிகளுள் ஒன்று. ஒரு செய்யுளின் உறுப்புக்களைப் பெற்று ஒரு வகை யாப்பால் வந்த பாட்டினை மூன்றாகப் பிரித்து எழுதினால், வேறு வேறுதொடையாக அமைந்து பயனிலையும் பெற்று முடியும் வகையில் செய்யுளை அமைத்தல். எ-டு : ‘ஆதரம் தீர்அன்னை போல்இனி யாய்அம்பி காபதியே மாதர்பங் காவன்னி சேர்சடை யாய்வம்பு நீள்முடியாய் ஏதம்உய்ந் தோர்இன்னல் சூழ்வினை தீர்எம் பிரான்இனியாய் ஓதும்ஒன் றேஉன்னு வார்அமு தேஉம்பர் நாயகனே.’ கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்த இப்பாடல் ஒன்றனையே, 1 2 3 ‘ஆத ரம்தீர் ‘அன்னைபோ லினியாய்! ‘அம்பிகா பதியே! மாதர் பங்கா வன்னிசேர் சடையாய்! வம்புநீள் முடியாய்! ஏதம் உய்ந்தோர் இன்னல்சூழ் வினைதீர் எம்பிரான் இனியாய்! ஓதும் ஒன்றே! உன்னுவா ரமுதே! உம்பர்நா யகனே! என்று மூன்று பாடலாகப் பிரிப்பினும், அடியெதுகைத் தொடையொடு பொருளும் அமைய, வஞ்சித்துறை என்னும் யாப்பின்பாற்படுமாறு காணப்படும். (தண்டி. 98 உரை) திரிபதாதி - இது ‘திரிபாகி’ எனவும் வழங்கும் சித்திரகவியாம். அது காண்க. (மா. அ. பாடல். 808) திரிபாகி - மிறைக் கவிகளுள் ஒன்று. திரிபாகி - மூன்று பாகங்களைக் கொண்டது. மூன்றெழுத்தாலான ஒரு சொல்லின் முதலெழுத்தும் இறுதியெழுத்தும் சேர ஒரு சொல்லாய், இடையெழுத்தும் இறுதி எழுத்தும் சேர மற்றுமொரு சொல்லாய், வெவ்வேறு பொருள் தரும் வகையில் பாடல் அமைத்தல். எ-டு : ‘மூன்றெழுத்தும் எம்கோன்; முதல் ஈ(று) ஒருவள்ளல்; ஏன்றுலகம் காப்ப(து) இடைகடையாம்; - ஆன்றுரைப்பின் பூமாரி பெய்துலகம் போற்றிப் புகழ்ந்தேத்தும் காமாரி, காரி, மாரி’ மூன்றெழுத்தும் சேர்ந்தால் எம் இறைவன் - காமாரி (-மன்மதனை அழித்த சிவபெருமான்); முதலும் இறுதியும் சேர்ந்தால் ஒருவள்ளல் - காரி; இடையெழுத்தும் கடையெழுத்தும் சேர்ந்தால் உலகினைக் காப்பது - மாரி. (தண்டி. 98 உரை) ‘திரிபதாதி’ என்பதும் இதுவே. திரிபு அணி (2) - மடக்கணியில் சீரின் முதலெழுத்து நீங்கலான ஏனைய எழுத்துக்கள் ஒத்து மடங்கி வருவதனையும் திரிபணி என்ப. அது திரிபு மடக்காம். ‘திரிபு அந்தாதி’ என்ற சிறு பிரபந்தங்கள் பிற்காலத்தே பலவாகத் தோன்றின. எ-டு : ‘திருவேங் கடத்து நிலைபெற்று நின்றன; சிற்றனையால் தருவேங் கடத்துத் தரைமேல் நடந்தன; தாழ்பிறப்பின் உருவேங் கடத்துக்(கு) உளத்தே இருந்தன; உற்றழைக்க வருவேங் கடத்தும்பி அஞ்சலென்(று) ஓடின மால்கழலே.’ (திருவேங்கடத்.) முதலடி - திருவேங்கடத்து; இரண்டாமடி - தரு வேம் கடத்து; மூன்றாமடி - உருவேங்கள் தத்துக்கு; நாலாமடி - ‘வரு வேம் கட(ம்) தும்பி. திருமாலின் பாதங்கள் திருவேங்கடமலைமீது நிலைபெற்று நின்றன; இராமாவதாரத்தில், தாய் கைகேயியால், மரங்கள் வெப்பத்தில் கரியும் காட்டில் தரைமீது நடந்தன. தாழ்ந்த பிறப்பினால் இம்மானுட உருவங்களையுடைய எம் துன்பங் களுக்காக அவற்றைப் போக்கவேண்டி எம் உள்ளத்தில் இருந்தன; பெருகும் வெப்பமான மதத்தையுடைய கசேந்திர னாம் யானை அபயக் குரல் எழுப்பிப் பொருந்தி அழைக்கவே “அஞ்சற்க!” என்று கூறி ஓடி (அதனைக் காத்த)ன. துவாசி - சுழிகுளம் என்ற சித்திரகவியை எவ்வெட்டு அறைகள் கொண்ட நான்கடிகளாகக் கட்டங்களில் அமைத்து, முதல் வரிசை எட்டாம் வரிசை - இரண்டாம் வரிசை ஏழாம் வரிசை, மூன்றாம் வரிசை ஆறாம் வரிசை, நான்காம் வரிசை ஐந்தாம் வரிசை - என்ற இரண்டிரண்டு பகுப்புக்களையும் இணைத்துக் காண, அப்பாடலே மீண்டும் வருமாற்றைக் காணலாம். இச் சுழிகுளத்தின்கள் 1, 8; 2, 7; 3, 6; 4, 5 - என்ற இரண்டு வேறு பட்ட வரிசைகளையும் இணைத்து நோக்குதல் துவாசி எனப்பட்டது. துவாசி - இரண்டு வேறுபாடு. (வீ. சோ. 181 உரை) தூசம் கொளல் - ஒருவன் ஒரு வெண்பாச் சொன்னால் அதனீறே முதல் எழுத் தாக மற்றொரு வெண்பாப் பாடுவது. (வீ. சோ. 181 உரை) எ-டு : ‘கண்ணவனைக் காண்கஇரு காதவனைக் கேட்கவாய் பண்ணவனைப் பாட பதஞ்சூழ்க - எண்ணிறைந்த நெய்யொத்து நின்றானை நீலமிடற் றானையென் கையொத்து நேர்கூப்பு க’ (பு. வெ. மா. கடவுள். 2) கடிது மலர்ப்பாணம் கடிததனின் தென்றல் கொடிது மதிவேயும் கொடிதால் - படிதழைக்கத் தோற்றியபா மாறன் துடரியில்மான் இன்னுயிரைப் போற்றுவதார் மன்னாசொல் க. (மா. அ. பாடல். 563) என முதல் வெண்பாவின் ஈற்றெழுத்தே முதலெழுத்தாக மற்றொரு வெண்பாப் பாடுவது. (இப்பாடல் ஈற்றடி சிறிது மாற்றப்பட்டுள்ளது.) ஒருவன் ஒரு வெண்பாச் சொன்னால் அதன் ஈற்றெழுத்தே ஈறாக, முதலெழுத்தே முதலாக, மற்றொரு வெண்பா ஈற்றினின்றும் மேற்பாடுவது. (யா. வி. பக். 538) மேலை எடுத்துக்காட்டுள் இவ்வமைதியையும் காண்க. தேர்க்கவி (1) - ‘இரதபந்தம்’ எனப்படும் சித்திரகவி காண்க. (சாமி. 200) தேர்க்கவி (2) - கடக பந்தம். (சாமி. 200) தேர்கை - தேர்கையாவன : குறைத்தலைப் பிணம் கண்டு ‘காவிப்பல் லன்’ என்றான் என்பதும், ‘குதிரை பட்ட நிலம் இது,’ ‘செத்தது பெட்டைக் குதிரை’ என்றான் என்பதும் முதலா உடையன. ‘விரலும் கண்டகமும் கண்டறிந்தான்’ என்பதுவும் பிறவும் அன்ன. சித்திர கவி வகைகளுள் தேர்கையும் ஒன்று. (இப்பொருள் உணரப்படாமையின், உரையில் கண்டவாறே குறிப்பிட்டுள் ளோம்.) (யா. வி. பக். 549) தொன்னூல் விளக்கம் கூறும் சொல்லணிகள் - மறிநிலை அணி ஐந்தும், பொருள்கோள் எட்டும், சொல் எஞ்சு அணி பத்தும், சொல் மிக்கணி மூன்றும், சொல் ஒப்பணி நான்கும் ஆக முப்பதும் தொன்னூல் விளக்கச் சொல்லணிகள். (தொ.வி. 325) ந நடு எழுத்து அலங்காரம் - சித்திரகவி வகைகளுள் ஒன்று. (விளக்கமும் எடுத்துக்காட்டும் புலப்பட்டில). நவபங்கி - ஒரே பாடல் அதன் அடிகளையும் சீர்களையும் பகுத்துத் தனித்தனியே ஒன்பது வேற்றுப் பாடல்களாக அமைக்கப் படும் வகையில் இயற்றப்படுவதாகிய சித்திரகவி. (தனிப் பாடல் திரட்டு) நாகபந்தம் - மிறைக்கவியாம் சித்திரகவிகளுள் ஒன்று. தண்டியலங்காரம் (உரை) இரட்டை நாக பந்தத்தையே சுட்டுகிறது. (மற்றொன்று அட்ட நாக பந்தம்) இரண்டு பாம்புகள் தம்முள் இணைவனவாகப் படம்வரைந்து, ஒரு நேரிசை வெண்பாவும் ஓர் இன்னிசை வெண்பாவும் எழுதி, சந்திகளில் நின்ற எழுத்தே மற்றை யிடங்களினும் உறுப்பாய் நிற்கப் பாடுவது. மேற்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும், கீழ்ச்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும் என்றிவ்வாறு சித்திரத்தில் அடைப்பது. வருமாறு: நேரிசைவெண்பா. அருளின் திருவுருவே யம்பலத்தா யும்பர் தெருளின் மருவாச்சீர்ச் சீரே - பொருவிலா ஒன்றே யுமையா ளுடனே யுறுதிதரு குன்றே தெருள அருள். (அறத்தின் அழகிய மேனியாய்! திருச்சிற்றம்பலத்தினை யுடையாய்! ஒப்பற்ற தேவர்கள் அறிவிற்கும் எட்டாத அழகிய புகழ்ச்சி யுடையாய்! ஒப்பற்ற ஏகரூபத்தினையுடையாய்! உமையொடு கூடி எமக்குச் சிவபதம் அளிக்கும் மலைபோல் வாய்! யாங்கள் தெளிவு பெற மெய்யறிவினை அருள்வாயாக.) இன்னிசைவெண்பா. மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு பெருகொளியான் றேயபெருஞ் சோதி - திருநிலா வானம் சுருங்க மிகுசுடரே சித்த மயரு மளவை ஒழி. (நின்னை அடைந்தவருள்ளத்தின்கண் நிலைபெற்ற ஒளியாக உள்ளாய்! உண்ட நஞ்சினால் விளைந்த பெருகிய நிறம் நிறைந்து பொருந்திய (திருநீலகண்டத்தினையுடைய) பெருஞ் சோதி வடிவனே! அழகிய மதியையுடைய வானம் சிறுகு மாறு பெருகிய ஒளித்திரு மேனியாய்! எனது நெஞ்சம் நின் திருவடிகளை மறக்கும் அளவினைப் போக்கியருள்வாயாக.) முன்னர் ‘இரட்டை நாக பந்தம்’ என்ற தலைப்பினைக் காண்க. (தண்டி. 98) நாலசைச்சீர் முழுதொன்று இணையெதுகை அணி - இணையெதுகை செவிக்கு இன்பம் பயக்கும் ஓசைத்தாய் இருத்தலின், அதனை ‘இணைஎதுகையணி’ என்னும் பெயரிய ஓரலங்காரமாகக் குறிப்பிடும் மாறனலங்காரத்தில், ஓரடியில் நாலசைச்சீர் நான்கும் முழுதும் பெரும்பாலும் எழுத்து ஒன்றிவரும் இணை எதுகை அணிவகை உரையில் கூறப் பட்டுள்ளது. எ-டு : ‘குயில்போல்மொழியும் அயில்போல்விழியும் கொடிபோலிடையும் பிடிபோனடையும்’ என்ற அடியில் இணையெதுகைஅணி நாலசைச்சீர் நான்கன் கண்ணும் வந்து செவிக்கு இன்பம் செய்வது இவ்வணிவகை யாகக் காட்டப்பட்டுள்ளது. (மா. அ. 180) நாலெழுத்தால் வந்த மடக்கு - எ-டு : யானக வென்னே யினையனா வாக்கின கானக யானை யனையானைக்-கோனவனைக் கொன்னயன வேனக்க கோகனகக் கைக்கன்னிக் கன்னிக் கனியனைய வாய். ‘என் ஏய் யான் நக, இனையனா ஆக்கின, கானக யானை அனையானை கோன் அவனைக் கொல் நயனவேல் நக்க கோகனகக் கைக் கன்னிக் கனி அனைய வாய் கன்னி’ என்று பொருள் செய்யப்படும். “எத்துணையும் சிறிய யானே எள்ளி நகைக்குமாறு, இவ்வாறு தன்னுணர்வு அற்றுப் போம்படி ஆக்கிய, காட்டானையை ஒத்த என் தலைவனைத் துன்புறுத்திய கொல்லும் வேல்களை ஒத்த கண்களையும், மலர்ந்த செந்தாமரையை ஒத்த கைகளையும் உடைய இப்பெண்ணின் கொவ்வைக்கனி அனைய வாய் புதுமை அழகு உடைத்தா யுள்ளது!” எனப் பாங்கன் தலைவியைக் கண்டு வியந்து கூறிய இப்பாடற்கண், க ய வ ன என்ற நான்கு மெய் வருக்கங்களே பெயர்த்து மடக்கி வந்துள்ளன. (தண்டி. 97) நான்கடி ஒருசொல் மடக்கு (யமக யமகம்) - ஒரு சொல்லே நான்கடியும் முழுதுமாக மடக்கி வருவது. இஃது இயமா வியமகம் எனவும் வழங்கப்பெறும். எ-டு : உமாதர னுமாதர னுமாதர னுமாதர னுமாதர னுமாதர னுமாதர னுமாதரன். உமா தரன் - உமையைத் தரித்தவன்; ஆதரன் - ஆதரிக்கின்ற வன்; மா தரன் - மானைத் தரித்தவன்; மா தரன் - அழகை யுடையவன், திருவைத் தரித்தவன்; மா தரன் - மாமரத்தடியில் தங்கியிருப்பவன், இடபத்தைச் செலுத்துபவன்; மா தரன் - யானைத்தோலைப் போர்த்தியவன்; ஆதரன் - விருப்ப முடையவன்; மாது அரன் - பெருமை மிக்க சிவன். நான்கடி மடக்கு - முதலடியே நான்கடிகளாகவும் மடங்கி வரும் மடக்காகிய ஏகபாதம். ‘ஏகபாதம்’ காண்க. இவ்வாறு வஞ்சித்துறையாகிய இப்பாடலில் ஒரு சொல்லே நான்கடியும் வெவ்வேறு பொருள் தருமாறு மடக்கியவாறு காணப்படும். (தண்டி. 96 உரை) நான்காரைச் சக்கரம் - மிறைக்கவிகளுள் ஒன்று; சக்கரம் போன்ற அமைப்புடையது. இச்சக்கரம் நான்கு ஆர்க்கால்களையுடையது. வட்டை ‘சூட்டு’ எனப்படும்; சக்கரத்தின் இடையே விட்டமாகச் செல்வது ஆர்க்கால். (ஆர்க்கால்களுக்கு அடியில் உள்ள, குடத்தின் வளைவான பாகமாகிய, குறடு நான்காரைச் சக்கரத் தில் இல்லை; ஆறு எட்டு ஆரைச்சக்கரங்களில் உண்டு.) பாட்டு : ‘மேரு சாபமு மேவுமே மேவு மேயுண வாலமே மேல வாமவ னாயமே மேய னானடி சாருமே.’ மேருவை வில்லாகக் கொள்பவனும், விடத்தை உணவாக விரும்புபவனும், உயர்ந்த உருவினவாகிய கூளிக் கூட்டத்தை மேவியவனும் ஆகிய அத்தகையானுடைய திருவடிகளைச் சார்வீராக - என்பது இதன்பொருள். இது, ‘மே’ எனும் எழுத்து நடுவே நின்று, ஆர்மேல் ஒவ்வோர் எழுத்து நின்று, சூட்டின்மேல் பன்னிரண்டு எழுத்து நின்று, நடுவிலிருந்து கீழ் ஆரின் வழியே இறங்கி இடமாகச் சென்று அடுத்த ஆரின் வழியாக நடுவையடைந்து முதலடி முடியவும்; மீண்டும் நடுவிலிருந்து அந்த ஆரின் வழியாகவே இடமாகத் திரும்பி வலமாகச் சூட்டின் வழியே அடுத்த ஆரில் இறங்கவே இரண்டாம் அடி முடியவும்; மீண்டும் நடுவிலிருநது ஆர் வழியே மேலேறிச் சூட்டில் வலமாகச் சென்று அடுத்த ஆர்ப்பகுதியில் இடமாகச் செல்ல, மூன்றாமடி முடியவும்; மீண்டும் நடுவிலிருந்து ஆரின் வழியே வலமாகச் சென்று சூட்டின்கீழேயிறங்கி அடுத்த ஆர்ப்பகுதியில் மேலேறவே, நான்காமடியும் முடியவும் இப்பாடல் நிகழுமாறு. (தண்டி. 96 உரை) நான்கு பொருள் சிலேடை இணைமடக்கு - முதலீரடிகள் நான்கு பொருள்களுக்குச் சிலேடையாகவும், பின் இரண்டு அடிகள் மடக்காகவும் அமையும் மடக்கு வகை. எ-டு : கொம்பரஞ்சொன் மின்னார் குயம்பொன்னி யன்பருள மம்பரந்தோ யுந்தென் னரங்கமே - தும்பி யுரைத்தா னுரைத்தா னுயர்திரை நீர் தட்டீ னரைத்தா னரைத்தா னகம். ‘தும்பி உரைத்தான் நுரை தான் உயர் திரை நீர் தட்டு ஈனரைத் தான் அரைத்தான் அகம்’- கசேந்திரனால் அழைக் கப்பட்டவனும், நுரையை உயர்த்தும் அலைகளை உடைய கடலை அணைகட்டிக் கடந்து நீசராம் அரக்கரை அழித்த வனும் ஆகிய திருமாலது இருப்பிடம் அழகிய அரங்க நகராகும்; கொம்பர் அம்பரம் தோயும் அரங்கம் - கொடிகள் வான் அளாவியிருக்கும் அரங்கம். மின்னார் குயம் அம்பரம் தோயும் அரங்கம்-மகளிர் தனம் மேலாடையை நீங்காதிருக்கும் அரங்கம். பொன்னி அம்பரம் தோயும் அரங்கம் - காவிரி கடலைப் பொருந்தக் கிழக்குத் திக்கில் ஓடும் அரங்கம். அன்பர் உளம் அம்பரம் தோயும் அரங்கம்-அடியார்உள்ளம் மேம்பட்ட பரம் ஆகிய இறைவனைத் தியானம் செய்யும் அரங்கம். இவ்வாறு ‘அம்பரம் தோயும்’ என்ற சொற்றொடரைச் சிலேடைப் பொருளால் கொம்பர், மகளிர் தனம், காவிரி, அடியவர் உள்ளம் என்ற நான்கும் கொண்டு முடிந்தமை நாற்பொருள் சிலேடை. இச்சிலேடையை அடுத்து, ஈற்றடிகளில் மடக்கு முதற் சீர்களில் இணைய அமைந்ததால், இப்பாடல் நாற்பொருள் சிலேடை இணைமடக்கு ஆயிற்று. (மா. அ. பாடல் 757) நிரோட்டகம் - மிறைக்கவிகளுள் ஒன்று. உதடுகளின் தொடர்பில்லா மலேயே உச்சரிக்கக் கூடிய எழுத்துக்களாலான செய்யுள். உ ஊ ஒ ஓ ஒள ப் ம் வ் என்னும் எழுத்துக்கள் இதழ்களின் துணைகொண்டே உச்சரிக்கப்படுவன. இவ்வெட்டும் நீங்க லான பிற எழுத்துக்களால் அமையும் செய்யுள் இம்மிறைக் கவியின்பாற்படும். எ-டு : சீலத்தான் ஞானத்தான் தேற்றத்தான் சென்றகன்ற காலத்தான் ஆராத காதலான் - ஞாலத்தார் இச்சிக்கச் சாலச் செறிந்தடி யேற்கினிதாங் கச்சிக்கச் சாலைக் கனி. “காஞ்சிமா நகரில் திருக்கச்சாலை எனும் திருத்தலத்தில் உள்ள கனி போன்ற சிவபெருமான் ஒழுக்கத்தாலும் ஞானத் தாலும் மனத் தெளிவாலும் வரையறை இன்றியே பலகால மாக வழிபடுவதாலும், நீங்காத காதலாலும், மிக உயரிய பெரியோர்களால் நினைக்கப்பட வேண்டியவனாயினும், தாழ்ந்தவனாகிய அடியேனுக்கும் இரங்கி என் மனத்தில் வந்து பொருந்தி இன்பம் தருகின்றான்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், உதடுகளின் தொடர்பு எவ்வாற்றானும் அமை யாத எழுத்துக்களே வந்துள்ளமையின் இது நிரோட்டகம் ஆயிற்று. ‘எய்தற் கரிய தியைந்தக்கால்’ என்ற குறளும் (498) அது. (தண்டி. 98 உரை) நிரோட்டக யமக அந்தாதி - நிரோட்டகம் யமகம் என்னும் மிறைக்கவி வகையும் சொல் லணியும் அமைய, அந்தாதித்தொடையால் நிகழும் பிரபந்தம். இது பாடுதல் பெருஞ்சதுரப்பாடுடையது. எ-டு : திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி. நிரோட்டிய ஓட்டியம் - ஒரு நேரிசை வெண்பாவில் முதலீரடியும் இதழியைந்தும் குவிந்தும் வரும் எழுத்துக்களான் இயலாத நிரோட்டியமாய் அமைய, கடையிரண்டடியும் அவ்வெழுத்துக்களைப் பெற்று வரும் ஓட்டியமாய் அமைவது. எ-டு : கற்றைச் சடையார் கயிலைக் கிரியெடுத்தான் செற்றைக் கரங்கள் சிரங்களீரைந் - தற்றழிய ஏஏவும் எவ்வுளுறு ஏமமுறு பூமாது கோவே முழுதுமுறு கோ. சிவபெருமானது கயிலையை எடுத்த இராவணனுடைய வலியற்ற இருபதுகரங்களும் பத்துத்தலைகளும் அற்று விழுமாறு அம்பு தொடுத்த திருஎவ்வுள் என்ற திருப்பதியில் எழுந்தருளி, பூமாது புணரும் திருமாலே பரம்பொருள் - என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், முதலீரடிகளும் உ ஊ ஒ ஓ ஒள ப் ம் வ் - என்னும் எட்டெழுத்துக்களும் இன்றியமைந்த நிரோட்டியமாக, ஈற்றடியிரண்டும் அவ்வெழுத்துக்களைக் கொண்ட ஓட்டியமாக அமைந்துள்ளமை காணப்படும். (மா. அ. பாடல். 776). நிரோட்டியம் - ‘நிரோட்டகம்’ காண்க. ‘இதழ் குவிந்தியையா தியல்வது நிரோட்டியம்.’ (மா. அ. 274) நெட்டுயிர் மடக்கு - யாதானும் ஒரு நெட்டுயிரெழுத்தே மெய்யொடும் கலந்து பாடல் முழுதும் வருவது. வரும் எடுத்துக்காட்டுள் ஆகார நெட்டுயிரே பயின்றுள்ளவாறு காண்க: எ-டு : தாயாயா ளாராயா டாமாறா தாராயா யாமாரா வானாடா மாதாமா - தாவாவா யாவாகா காலாறா காவாகா காணாநா மாலானா மாநாதா வா. ‘தாய் ஆயாள் ஆராயாள் (ஆதலின்) தா (-வருத்தம்) மாறாது. அதனை நீ ஆராயாய். (அங்ஙனம் ஆராயாத நினக்கு) யாம் ஆரா? (-யாவர் ஆகுவோம்?) வான் நாடா! (-தேவருலகை ஒத்த நாட்டை யுடையோனே!) மாது (-இப்பெண்) மா தா ஆம் (-பெரிய வருத்தம் அடைவாள்); வா; வா (வந்தால்) யா ஆகா? (-உனக்கு எப்பொருள் வாய்க்காது?) கால் ஆறா கா (-கால் ஆறி அவசர மின்றி வந்து எங்களைக் காப்பாயாக). ஆகா காண் (-இத்துன்பம் தாங்க ஒண்ணாது என்பதனை நோக்குவாயாக) நா நாம் (-பழி கூறும் அயலார் நா எங்களுக்கு அச்சம் தருகிறது). மால் ஆனா (-மயக்கம் நீங்காத) மா நாதா! (-பெரிய தலைவனே!) வா (-எம்மிடம் அன்பு கொண்டு வருவாயாக) - என்று பொருள்படும் இப்பாடற் கண் ஆகார நெட்டுயிர் மடக்கியவாறு. இது மடக்கு வகைகளுள் ஒன்று. (தண்டி. 97 உரை) ப பாடக மடக்கு - பாடகம் என்பது வளைவாக மடங்கியிருக்கும் ஒரு வகைக் காலணி. இக் காலணியை மடக்குவது போல இரண்டிரண்டு அடிகள் ஒரே அளவினை உடையனவாய் மடங்குவது பாடக மடக்காம். எ-டு : ‘ஓத நின்றுல வாவரும் வேலைவாய் மாத ரங்க மலைக்கு நிகரவே ஓத நின்றுல வாவரும் வேலைவாய் மாத ரங்க மலைக்கு நிகரவே.’ ஓத நின்று உலவா அரு வேலைவாய் மாதர் அங்கம் அலைக்கும் நிகரவே, ஓதம் நின்று உலவாவரும் வேலைவாய் மாதரங்கம் மலைக்கு நிகரவே-நின்று சொல்ல முடியாத அரிய காலத்தின்கண் இப்பெண்ணுடைய உறுப்புக்களைத் துன்புறுத்துமாறு (அக்கால நிகழ்ச்சிகள்) பொருந்தின; வெள்ளம் நிலைபெற்று உலவி வருகின்ற கடலில் பெரிய திரைகள் மலைக்கு ஒப்பாக இருக்கும். முதல் ஈரடியும் மீண்டு பின் ஈரடிகளாக மடக்குதலின், பாடக மடக்காயிற்று, இப்பாடல். (தண்டி. 96) பாதமடக்கு - எழுத்துமடக்கு, அசை மடக்கு, சீர் மடக்கு, அடிமடக்கு என்ற மடக்கு வகைகளில் சிறப்பான மடக்கு அடிமடக்கு எனப்படும். இம்மடக்கு இரண்டடி மடக்குதலும், மூன்றடி மடக்குதலும் நான்கடி மடக்குதலும் என மூவகைப்படும். முதல் ஈரடி மடக்குதல், முதலடியும் மூன்றாமடியும் மடக்கு தல், முதலடியும் ஈற்றடியும் மடக்குதல், கடையிரண்டையும் மடக்குதல், இரண்டாமடியும் ஈற்றடியும் மடக்குதல், இடையீரடி மடக்குதல் என ஈரடி மடக்கு ஆறும்; ஈற்றடி ஒழித்து ஏனை மூன்றடியும் மடக்குதல், இரண்டாமடி ஒழித்து ஏனைய மூன்றடியும் மடக்குதல், மூன்றாமடி ஒழித்து ஏனை மூன்றடி மடக்குதல், முதலடி ஒழித்து ஏனை மூன்றடியும் மடக்குதல் - என மூவடி மடக்கு நான்கும்; நான்கடியும் மடக்குதலாகிய மடக்கு ஒன்றும்; ஒரு சொல்லானே நான்கடி முழுதும் மடக்கும் சொல்மடக்கு ஒன்றும்; இரண்டடியாக மடக்கும் பாதமடக்கு 1, 2 - 3, 4; 1, 3 - 2, 4; 1,4 - 2, 3 என மடக்கும் மூன்றும்; பாடக மடக்கு ஒன்றும்; எனப் பாதமடக்கு 6+4+1+1+3+1 = 16 ஆகும். (தண்டி. 96 உரை) பாதமயக்கு - மூவர் மூன்று ஆசிரிய அடி சொன்னால், தான் ஓரடி பாடிக் கிரியை கொளுத்துவது. எ-டு : ‘ஈயல்புற்றத் தீர்ம்புறத் திறுத்த (அகநா. 8-1) கல்தோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் (முல்லைப். 37) நன்னாள் பூத்த பொன்னிணர் வேங்கை (அகநா. 85 - 20) மலர்கொய லுறுவதென் மனமவள் மாட்டே’ இது பழவடி மூன்றினொடு தாம் ஓரடி பாடிப் பாக்கணார் பாடிய பாத மயக்கு. (யா. வி. பக். 541) பாவில் புணர்ப்பு - ஒரு செய்யுள் நான்கு அடி யுடையதாக நால்வர் நான்கடி களுக்கும் ஈற்றுச் சீர்களைச் சொல்ல ஒருவன் ஏனைய சீர்களைப் பாடிச் செய்யுளை நிரப்பிக் கொடுப்பது என்ற சித்திரகவி வகை. (வீ. சோ. 181 உரை) நால்வர் முறையே பதியே, நதியே, யதியே, விதியே என்ற ஈற்றுச் சீர்களைக் கூற, ஒருவன், ‘பதிகளிற் சிறந்தது அரங்கப் பதியே நதிகளிற் சிறந்தது பொன்னிநன் னதியே யதிகளில் மிக்கோன் பூதூர் யதியே விதிகளில் தக்கது வாய்மைசொல் விதியே’ என்றாற்போலப் பாடி முடிப்பதாம். பாவின் புணர்ப்பாவது நால்வர் நான்கு பாவிற் கட்டுரை சொன்னால் அவையே அடிக்கு முதலாகப் பாடிப் பொருள் முடிப்பது. எ-டு : மலைமிசை எழுந்த மலர்தலை வேங்கை பொத்தகத் திருந்த நெய்த்தலைத் தீந்தேன் கண்டகம் புக்க செங்கண் மறவன் யாழின் இன்னிசை மூழ்க வீடுகெழு பொதியில் நாடுகிழ வோனே.’ தடித்த எழுத்தின, நால்வர் நான்கு பாவில் உரைத்த கட்டுரை யின் தொடக்கச் சொற்கள். அவை முறையே முதல் நான்கடி களிலும் முதற்சீராக அமைய, இந்நேரிசை ஆசிரியப்பாப் பொருள் முற்ற இயற்றப்பட்டமையின் ‘பாவின் புணர்ப்பு’ ஆகும். (யா. வி. பக். 541) பிந்துமதி - சித்திரகவியுள் ஒன்று. எல்லா எழுத்தும் புள்ளியுடையன வாகவே வருவது. எ-டு : ‘நெய்கொண்டெ னெற்கொண்டெ னெட்கொண்டென் செய்கொண்டென் செம்பொன்கொண் டென்.’ (முன்பு எகர ஒகரங்கள் குறில் எனக் காட்டப்புள்ளி பெற்ற னவாய் எழுதப்பட்டன.) (யா. வி. பக். 548) பிரிந்தெதிர் செய்யுள் - முதலில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் ஈற்றெழுத்துத் தொடங்கி மடக்கி எழுதப்பட்டால் பிறிதொரு செய்யுளாக அமையு மாறு பாடப்படும் சித்திர கவி. எ-டு : ‘நீர நாகமா, தார மாகமே, வார மாகமா, ணார ணாககா’. நீரநாக - நற்குணத்தவனே! நீரிலுள்ள பாம்பில் துயில்பவனே! மா தாரமாக - திருமகள் தேவியாக; மேவு ஆரம் ஆக - பொருந்திய மாலையை அணிந்த மார்பனே! மாண் ஆரண ஆக - மேம்பட்ட வேதவடிவினனே! கா - என்னைப் பாதுகாப்பாயாக. எதிரேறு வருமாறு: ‘காக ணாரணா, மாக மாரவா, மேக மாரதா, மாக நார நீ’ மாகமார் அவாம் - மேலுலகத்துள்ளார் விரும்பும்; நார - நற்குணத்தையுடையவனே! மேக மாக - மேக வடிவனே! மா ரதா - பெருவீரனே! நாரணா - நாராயணன் என்னும் திருநாமத்தோனே! நீ கண் - நீயே பற்றுக்கோடாவாய்; கா - காப்பாயாக. (பொருள் கொண்டுகூட்டியுரைக்கப் பட்டது) (மா. அ. பாடல் 796) பிறிது படு பாட்டு - மிறைக்கவிகளுள் ஒன்று; ஒருவகை யாப்பமைதியுடன் அமைந்த பாட்டினை வேறுதொடையும் அடியும் கொண்ட பாட்டாகப் பிரித்தாலும் சொல்லும் பொருளும் வேறுபடா மல் அதுவும் ஓர் யாப்பமைதியுடைய செய்யுளாக அமை யும்படி செய்வது. எ-டு : ‘தெரிவருங் காதலின் சேர்ந்தோர் விழையும் பரிசுகொண்டு வரியளி பாட மருவரு வல்லி இடையுடைத்தாய்த் திரிதரு காமர் மயிலியல் ஆயம் நண் ணாத்தேமொழி அரிவைதன் நேரென லாம்இயற் றையயாம் ஆடிடனே’ இப்பாட்டுக் கட்டளைக் கலித்துறை யாப்பு. தலைவன் தலைவியது ஆடிடம் கண்டு நெஞ்சுடன் கூறியது இது. “தலைவியிடத்தே ஆசையால் இங்கு வந்த நாம் விரும்பத்தக்க தாய், வண்டுகள் பாட, இடை போன்ற கொடிகள் ஆடி அசைய, அழகாக இருக்கும் இந்த இடம், தன் ஆயத்துடன் இங்கே இன்று வாராத நம்தலைவியைப் போலவே தோன்று கிறது” என்று தலைவன் நெஞ்சொடு கிளக்கும் இப்பாடலை ஆறடிகள் கொண்ட நேரிசை யாசிரியப்பாவாகப் பிரிப்பி னும், தொடையழகும் பொருளும் கெடாமலேயே அமையும். பிறிதாக வரும் அப்பாடல் வருமாறு : ‘தெரிவருங் காதலின் சேர்ந்தோர் விழையும் பரிசு கொண்டு வரியளி பாட மருவரு வல்லியிடை யுடைத்தாய்த் திரிதரும் காமர் மயிலியல் ஆயம் நண்ணாத் தேமொழி அரிவைதன் நேரெனல் ஆமியற்(று) ஐய யாம்ஆ(டு) இடனே.’ (தண்டி. 98 உரை) போக்கியம் - சித்திரகவி வகை பற்றிக் கூறும் பண்டைய நூல்; இக்காலத்து வழக்கிறந்தது. (யா. வி. பக். 533) ம மடக்கிற்கு அடிவரையறை - மடக்கு நான்கடிச் செய்யுளுள்ளே நடக்குங்கால் ஓரடிமுத லாக ஈரடிக்கண்ணும் மூவடிக்கண்ணும் நான்கடிக்கண்ணும் நடைபெறும். (மா. அ. 254) மடக்கு - ஓரெழுத்தொருமொழியோ பல எழுத்தொரு மொழியோ செய்யுளில் தொடர்ந்தும் இடையிட்டும், முதலிலோ நடுவிலோ இறுதியிலோ மடங்கி வந்து வேறொரு பொருள் தருமாயின், அவ்வனப்பு மடக்கு என்னும் சொல்லணியாகக் கூறப்படும். (தண்டி. 92) முதலெழுத்தொன்று மாத்திரம் மாற, ஏனைய எழுத்துக்கள் அவையேயாய் மேற்கூறியவாறு மடக்கி வருவது ‘திரிபு மடக்கு’ எனப்படும்; ‘திரிபு’ என்பதுமது. மாத்திரைச் சுருக்கம் - மிறைக் கவிகளுள் ஒன்று; ஒரு சொல்லின் முதல் நெட்டுயிர் மாத்திரையைக் குறைத்தால் வேறொரு சொல்லாகிப் பிறிதொரு பொருள் தர அமைப்பது. (பண்டைக் காலத்தில், எ, ஒ (இன்றைய ஏ, ஓ) என்ற நெடில்களைக் குறிலாக்க ஏடுகளில் எ ஒ - இவற்றின் மேல் புள்ளி யிட்டு (எ) ஒ) என்று) எழுதுவது மரபு.) எ-டு : ‘நேரிழையார் கூந்தலின்ஒர் புள்ளிபெறின் நீள்மரமாம்; நீர்நிலையோர் புள்ளி பெறநெருப்பாம்; - சீரளவு காட்டொன்(று) ஒழிப்ப இசையாம்; கவின் அளவும் மீட்டொன்(று) ஒழிப்ப மிடறு.’ ஓதி (பண்டு ‘ஒதி’ என்று எழுதப்பட்டது) என்பது கூந்தல்; நெட்டுயிரைப் புள்ளியைச் சேர்த்துக் குறிலாக்கினால், ஒதி - மர விசேடம். ஏரி (பண்டு ‘எரி’ என்று எழுதப்பட்டது) என்பது நீர்நிலை; நெட்டுயிரைப் புள்ளியைச் சேர்த்துக் குறிலாக்கினால், எரி - நெருப்பு. காந்தாரம் - காடு; முதல் நெட்டுயிர்மெய் குறிலானால், காந்தாரம் - கந்தாரப்பண். கந்தாரம் என்ற சொல்லின் இடைநின்ற நெட்டுயிர்மெய் குறிலானால், கந்தரம் - கழுத்து மாத்திரை குறைத்து ஒரு மாத்திரைத்தாகிய குறிலாக்கி வெவ்வேறு பொருள் காணும் சித்திரம் அமைதலின், இது மாத்திரைச் சுருக்கம் (சுதகம்) ஆயிற்று. (தண்டி. 98 உரை) மாத்திரைப் பெருக்கம் - மிறைக் கவிகளுள் ஒன்று; ‘மாத்திரை வருத்தனம்’ எனவும் படும். மாத்திரைச் சுருக்கத்தில் கூறிய இலக்கணத்தையும் இலக்கியத்தையும் மறுதலையாகக் கொண்டு பாடல் அமைப்பது. அஃதாவது ஒரு மாத்திரை அளவுடைய குறில் களை இரண்டு மாத்திரை அளவுடைய நெடில்களாக்கிப் பிறிதொரு பொருள் வரப் பாடுவது. எ-டு : ‘தருவொன்றை நீட்டிடத் தருணி கூந்தலாம்; மருவுதீ நீட்டிட மாண்புறும் நீர்நிலை; திருவுறு கழுத்தினை நீட்டத் தீம்பணாம்; உருவமேல் நீட்டிடின் உயர்ந்த காடுமாம்.’ தரு - ஒதி; மங்கை கூந்தல் - ஓதி தீ - எரி; நீர்நிலை - ஏரி கழுத்து - கந்தரம்; தீம்பண் - கந்தாரம் ‘கந்தாரம்’ மேலும் நீளின் காந்தாரம் (- காடு) எ-டு : ‘அளபொன் றேறிய வண்டதின் ஆர்ப்பினால் அளபொன் றேறிய மண்அதிர்ந் துக்குமால்; அளபொன் றேறிய பாடல் அருஞ்சுனை அளபொன் றேறழ (கு) ஊடலைந் தாடுமால்’ (தண்டி. 98 உரை) அளபு (- மாத்திரை) ஒன்று ஏறிய வண்டு : (வண்டு - அளி) ஆளி; அளவு ஒன்று ஏறிய மண் : (மண் - தரை) தாரை; அளபு ஒன்று ஏறிய பாடல் : (பாடல் - கவி) காவி; அளபு ஒன்று ஏறிய அழகு : (அழகு - வனப்பு) வானப்பு. (வான்அப்பு - மழைநீர்) தன் மகள் உடன்போயவழி, தாய் புலம்புவதாக அமைந்தது இது. “காட்டில் ஆளி முழங்குவதால் என் மகளுடைய காவி (நீலோற்பலப்பூப்) போன்ற கண்கள், அச்சத்தால் மனம் நடுக்குறவே, தாரையாகக் கண்ணீர் பெருக்கும். அருஞ்சுனை நீர் மழைநீர்ப் பொழிவினால் அலைவுற்று அசையாநிற்கும்.” ‘உகுமால்’ என்பது ககரம் விரித்தல் விகாரம் பெற்றது. காவி - உவமையாகுபெயரால், கண்.) (இ. வி. 690 - 5 உரை) மாலை மாற்று - மிறைக்கவிகளுள் ஒன்று; ஒரு பாட்டினை ஈற்றெழுத்தை முதலாகக் கொண்டு (-தலைகீழாகப்) படிப்பினும் அப்பாட் டாகவே மீளவருவது. எ-டு : ‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ.’ நீவாத மாதவா - நீங்காத மாதவத்தை உடையவனே! தா மோக ராகமோ - வலிய அறியாமையாகிய ஆசைகள்; தாவா - நீங்க மாட்டா; (ஆதலின்) மாதவா (மாது அவா) - இப் பெண்ணின் ஆசையை; நீ - நீக்குவாயாக. திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய ஒரு பதிகம் பதினொரு பாடல்களுமே (மூன்றாம் திருமுறை 117ஆம் பதிகம்) மாலை மாற்றாக அமைந்தவை. அவையே இச்சித்திர கவிக்கு மூலகவியாம். (தண்டி. 98 - 3) மாறன் அலங்காரம் கூறும் சொல்லணிகள் - மடக்கு அணி வகைகள் (சூ. 252-269) வல்லினப் பாட்டு, மெல்லினப் பாட்டு, இடையினப் பாட்டு, நிரோட்டியம், ஓட்டியம், நிரோட்டிய ஓட்டியம், அக்கரச் சுதகம், அக்கர வருத்தனை, வக்கிர உத்தி, வினா உத்தரம், சக்கரபந்தம், பதும பந்தம், முரசபந்தம், நாகபந்தம், இரத பந்தம், மாலை மாற்று, கரந்துறை செய்யுள், காதை கரப்பு, பிரிந்தெதிர் செய்யுள், பிறிதுபடுபாட்டு, சருப்பதோபத்திரம், கூடசதுர்த்தம், கோமூத்திரி, சுழிகுளம், திரிபங்கி, எழுகூற்றிருக்கை என்பன வும் சதுரங்க பந்தம், கடகபந்தம், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனம், ஒற்றுப் பெயர்த்தல், திரிபதாதி என்பனவும்கூட 32 வகைச் சித்திரகவிகள் மாறன் அலங்காரத்தில் இடம்பெறுவன. மாறனலங்காரம் கூறும் மிறைக்கவிகள் - வல்லினப்பாட்டு, மெல்லினப்பாட்டு, இடையினப்பாட்டு, நிரோட்டியம், ஓட்டியம், ஓட்டிய நிரோட்டியம், அக்கரச் சுதகம், அக்கர வருத்தனை, வக்கிர உத்தி, வினா உத்தரம், சக்கர (நாலாரம், ஆறாரம், எட்டாரம்) பெந்தம், பதும பெந்தம், முரசபெந்தம், மாலை மாற்று, கரந்துறை செய்யுள், காதை கரப்பு, பிரிந்தெதிர் செய்யுள், பிறிதுபடு பாட்டு, சருப்பதோ பத்திரம், கூடசதுர்த்தம், கோமூத்திரி, சுழிகுளம், திரிபங்கி, எழுகூற்றிருக்கை என இருபத்தாறு. (மா. அ. 270) சதுரங்கபந்தம், கடகபந்தம், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனம், ஒற்றுப்பெயர்த்தல், திரிபதாதி - என்பவற்றுடன் 32 ஆகும். மிறைக்கவி இருபது - மிறைக்கவி சித்திரகவி எனவும்படும். இலக்கண விளக்கம் கூறும் மிறைக்கவி இருபதாம். அவையாவன : கோமூத்திரிகை, கூடசதுக்கம், மாலைமாற்று, மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனம், எழுத்து வருத்தனம், ஒற்றுப் பெயர்த்தல், வினாவுத்தரம், நாகபந்தம், முரச பந்தம், திரிபாகி, திரிபங்கி, பிறிதுபடுபாட்டு, காதை கரப்பு, கரந்துறை செய்யுள், சக்கரம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம், அக்கரச்சுதகம், நிரோட்டம் என்பன. (இ. வி. 690) முச்சொல்லலங்காரம் - ஒரு தொடர் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று பொருள் கொண்டு நிற்கும் சொல்லணிவகை; இது சிலேடை அணியின்பாற்படும். ‘மூன்று பொருள் சிலேடை இணை மடக்கு’ எனும் தலைப்பில் இச்சிலேடைவகை காண்க. முத்துவீரியம் கூறும் சொல்லணிகள்: முத்து வீரியம் சொல்லணிகள் - பலவகை மடக்குக்கள், காதை கரப்பு, கரந்துறைபாட்டு, வினா உத்தரம், எழுத்து வருத்தனம், எழுத்தழிவு, மாலை மாற்று, நிரோட்டகம், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனம், திரிபங்கி, திரிபாதி, ஒற்றுப் பெயர்த்தல், பிறிதுபடுபாட்டு என்பன முத்துவீரியச் சொல்லணிகளாம். (மு.வீ. சொல்லணி. 1-25) முதல் ஈரடி ஆதி மடக்கு - முதலடிக்கண் முதற்சீர் மடக்கி வருதல் போலவே, இரண் டாம் அடிக்கண் வந்த முதற்சீரும் மடக்கி வர அமைவது. எ-டு : ‘நினையா நினையா நிறைபோய் அகல வினையா வினையா மிலமால் - அனையாள் குரஆளும் கூந்தல் குமுதவாய்க் கொம்பின் புரவாள்! நீ பிரிந்த போது’ “குரவம்பூச் சூடிய கூந்தலையும், குமுதம் போன்ற வாயையும் உடைய கொம்பனைய தலைவியைப் பாதுகாக்கும் தொழிலைப் பூண்ட தலைவனே! நீ பிரிந்தபோது நின்னை யாம் நினைத்து, எங்களது நிறை என்ற பண்பு எங்களை விட்டு நீங்க வருந்தி எச்செயலும் யாம் செய்யும் ஆற்றல் இலேமாவேம்.” ‘நி(ன்)னை யாம் நினையா, நிறை போய் அகல இனையா வினையாம் இலமால்’ எனப் பிரிக்க நினையா நினையா வினையா வினையா முதலீரடி ஆதிமடக்கு . (தண்டி. 95) முதல் மூவடி மடக்கியது - எ-டு : ‘காம ரம்பயில் நீர மதுகரம் காம ரம்பயில் நீர மதுகரம் காம ரம்பயில் நீர மதுகரம் நாம ரந்தை உறநினை யார்நமர்.’ கா மரம் பயில் நீர மதுகரம், காமரம் பயில் நீர; மது கரம் காமர் அம்பு அயில் நீர; மது கரம் நாம் அரந்தை உற நமர் நினையார் - என்று பிரித்துப் பொருள் செய்யப்படும். “சோலைகளிலுள்ள மரங்களில் நெருங்கிய வண்டுகள், காமரம் என்ற பண்ணினைப் பாடும் நீர்மையுடையன. தேனைக் கொண்ட மன்மதனாருடைய அம்புகள் வேல் போன்று கூரியவாக உள்ளன. வேனிற்காலம் எதிர்ப்படவும் நாம் துன்புறுதலை நம்தலைவர் நினைக்கவில்லையே!” இப்பாடல், பிரிந்த தலைவி வேனிற்காலத்து வருந்துவதாக நிகழ்கிறது. இதன்கண், முதல் மூவடிகளும் மடக்கியவாறு . (மூன்றாமடிக்கண், மது - வேனிற் பருவம்; கரம் - எதிர்ப்படுதல்.) (தண்டி. 96 உரை.) முதலடி ஆதி மடக்கு - நான்கடிச் செய்யுளுள் முதலடி முதல் இருசீர்கள் மடக்கி வரத் தொடுப்பது. எ-டு : ‘துறைவா துறைவார் பொழில்துணைவர் நீங்க உறைவார்க்கும் உண்டாங்கொல், சேவல் - சிறைவாங்கிப் பேடைக் குரு(கு) ஆரப் புல்லும் பிறங்கிருள்வாய் வாடைக்(கு) உருகா மனம்?’ “நெய்தல் நிலத் தலைவ! துறைக்கண் நேரிதாக அமைந்த பொழிலிடத்துத் துணைவர் பிரிதலாலே, சேவல் தன் பெடையைச் சிறகுகளால் ஆரப் புல்லும் இருளிடத்து, வாடைக்கு உருகாத மனம் அப் பிரியப்பட்ட மகளிருக்கும் உண்டோ?” என்று பொருள்படும் இப்பாடற்கண், முதலடி யில் ‘துறைவா’ என்ற முதற்சீர் மடங்கி வந்தவாறு. (தண்டி. 95 உரை.) முதலடி ஒழிந்த மடக்கு - ‘இரண்டாமடி, மூன்றாமடி, நான்காமடி மடக்கு’ நோக்குக. முதலடி, நான்காமடியாக மடக்கியது. எ-டு : ‘மறைநுவல் கங்கை தாங்கினார் நிறைதவ மங்கை காந்தனார் குறைஎன அண்டர் வேண்டவே மறைநுவல் கங்கை தாங்கினார்.’ கங்கை - தேவகங்கையாம் ஆறு; கம் - தலை. நிறைந்த தவத்தையுடைய பார்வதியின் துணைவராம் சிவபெருமான் வேதங்கள் புகழும் கங்கையைச் சடையிலே தாங்கினார்; உதவிவேண்டித் தேவர்கள் வேண்டவே, இரகசி யங்களைப் பிறர்க்கு உபதேசித்த பிரமனுடைய தலையை (-பிரம கபாலத்தை)த் தம் கையின்கண் தாங்கினார் - என்ற பொருளமைந்த இப்பாடற்கண், முதலாம் நான்காம் அடிகள் மடக்கியவாறு. (தண்டி. 96 உரை.) முதலடி மூன்றாமடி நான்காம் அடிகளாக மடக்கியது - ‘இரண்டாமடி ஒழிந்த மூவடி மடக்கு’ நோக்குக. முதலடியும் மூன்றாமடியும் மடக்கியது - எ-டு : ‘கடன்மேவு கழிகாதல் மிகநாளு மகிழ்வார்கள் உடன்மேவு நிறைசோர மெலிவாள்தன் உயிர்சோர்வு கடன்மேவு கழிகாதல் மிகநாளும் மகிழ்வார்கள் உடன்மேவு பெடை கூடும் அறுகாலும் உரையாகொல்!’ அடி 3, 4 கடன் மேவு கழிகாதல் மிக நாளும் மகிழ்வார்கள் உடன் மேவும் பெடை (யொடு) கூடும் அறுகாலும் உரையாகொல் என்று பிரித்துப் பொருள் செய்க. “முறையாகப் பொருந்தும் மிக்க காதல் சிறக்க நாடோறும் மகிழ்வார் பலர்; ஆயின், தலைவி தன்னொடு பொருந்திய நிறை என்ற பண்பு சோர மெலிகிறாள். இவளுடைய உயிர் தளர்வதனை, கடலை அடுத்த உப்பங்கழிகளில் மகிழ்ச்சி மிக நாடோறும் களிப்பு மிக்க பூக்களிலுள்ள தேன்களைப் பெடையொடு கூடி அருந்தும் வண்டுகளும் தலைவற்கு உரையாபோலும்” என்று, தோழி, தலைவன் சிறைப்புறமாகக் கூறிய இப்பாடற்கண், முதலடியும் மூன்றாமடியும் மடக்கிய வாறு. (தண்டி. 96 உரை.) முதலடியோடு இரண்டாமடி நான்காமடி ஆதி மடக்கு - இது மூன்றாமடியொழிந்த மூவடி ஆதிமடக்கு எனவும்படும். எ-டு : ‘மலையு மலையு மகிழ்ந்துறையும் வேயும் கலையும் கலையும் கடவும் - தொலைவில் அமரில் எமக்கரணாம் என்னுமவர் முன்னிற் குமரி குமரிமேற் கொண்டு.’ குமரி, மலையும் அலையும் மகிழ்ந்து உறையும்; கலையும் வேயும்; கலையும் கடவும்; அரணாம் என்னுமவர்க்கு அரிமேல் கொண்டு முன் நிற்கும் என்று பிரித்துப் பொருள் செய்யப்படும். குமரியாகிய கொற்றவை, மலையையும் கடலையும் தனக்கு இருப்பிடமாகக் கொண்டு, பிறைச்சந்திரனை வேய்ந்து, ஆண்மானை வாகனமாகக் கொண்டு விளங்குவாள்; அழிவற்ற போரில் தமக்குப் பாதுகாவலாக வேண்டும் என்று இறைஞ்சுபவர்க்குச் சிங்கத்தின்மேல் ஏறிக்கொண்டு வந்து முன் நிற்பாள் என்று பொருள்படும் இப்பாடற்கண், முதலாம் இரண்டாம் நான்காமடிகள் மடக்கியவாறு.(தண்டி. 95 உரை.) முதலடியோடு இரண்டாமடி மூன்றாமடி ஆதிமடக்கு - இஃது ஈற்றடி ஒழிந்த மூவடி ஆதிமடக்கு எனவும்படும். எ-டு : ‘இறைவா இறைவால் வளைகாத்(து) இருந்துயார் உறைவார் உறைவார் புயலால் - நறைவாய்ந்த வண்டளவு வண்டளவு நாளின் மயிலாலக் கண்டளவில் நீர்பொழியும் கண்.’ இறைவா, இறை வால் வளை; உறைவார் உறை வார் புயலால்; வண்தளவு, வண்டு அளவு - எனப் பிரித்துப் பொருள் செய்க. “தலைவ! நீர்த்துளி மிக்க கார்மேகத்தால் தேன் பொருந்திய வளமான முல்லைகளில் வண்டுகள் மொய்க்கும் கார்ப்பருவ நாள்களில் மயில்கள் ஆடுதலைக் கண்ட அவ்வளவில் கண்கள் கண்ணீரைச் சொரியும். முன்கையிலுள்ள வெள்ளிய வளையல்களைக் கழலாமல் அக்காலத்தில் பாதுகாத்துக் கொண்டிருந்து யாவர் உயிர் வாழ்தல் கூடும்?” என்று தோழி கார்ப்பருவத்தே தலைவி நிலையைக் கூறித் தலைவன் பிரிவு விலக்கிய இப்பாடற்கண், முதல் மூன்றடியும் முதலில் மடக்கியவாறு. (தண்டி. 95 உரை.) முதலடியொடு நான்காமடி ஆதி மடக்கு - எ-டு : ‘மானவா மானவா நோக்கின் மதுகரம் சூழ் கான்அவாம் கூந்தல் என் காரிகைக்குத் - தேனே பொழிஆரத் தார்மேலும் நின்புயத்தின் மேலும் கழியா கழியா தரவு.’ மானவா, மான் அவாம் நோக்கின்; கழியா, கழி, ஆதரவு - என்று பிரித்துப் பொருள் செய்க. “மனுகுலத்தில் தோன்றியவனே! மான் விரும்பும் நோக்கினை யும் வண்டு சூழும் மணம் நாறும் கூந்தலையும் உடைய என் மகளுக்கு, தேனைப் பொழியும் உன் ஆத்திமாலைமேலும் உன் புயங்களின்மேலும் உள்ள மிக்க ஆசை நீங்காது” என்று பொருள்படும் இப்பாடற்கண், முதலடியும் நான்காமடியும் முதலில் மடக்கி வந்தவாறு. (தண்டி. 95) முதலடியொடு மூன்றாமடி ஆதி மடக்கு - எ-டு : “அடையார் அடையார் அரண்அழித்தற்(கு) இன்னல் இடையாடு நெஞ்சமே ஏழை - யுடை ஏர் மயிலா மயிலா மதர்நெடுங்கண் மாற்றம் குயிலாமென் றெண்ணல் குழைந்து.” அடையார் அடை ஆர் அரண்; ஏர் மயிலாம், அயிலாம் கண் என்று பிரித்துப் பொருள் செய்க. “பகைவர் அடையும் அரிய அரணை அழித்தற்கு முயல்வார் படும் இன்னல் போன்ற இன்னலுற்றுத் தடுமாறும் மனமே! நீ இவ்வேழை (-தலைவி) யினுடைய ஏர், மயில் போன்றது; மதர் நெடுங்கண், அயில் (-வேல்) போன்றன; மாற்றம் (-சொல்), குயில் போன்றது என்று உருகி நினைத்தலைத் தவிர்” - எனத் தலைவியது அருமை நினைந்து தலைவன் நெஞ்சிற்குக் கூறிய இப்பாடற்கண், முதலடியும் மூன்றாமடியும் அடிமுத லில் மடக்கியவாறு. (தண்டி. 95 உரை.) முதலடியொடு மூன்றாமடி நான்காமடி ஆதி மடக்கு - இஃது இரண்டாமடி ஒழிந்த மூவடி ஆதி மடக்கு எனவும் படும். எ-டு : ‘கொடியார் கொடியார் மதில்மூன்றும் கொன்ற படியார் பனைத்தடக்கை நால்வாய்க் - கடியார் உரியார் உரியார் எனைஆள ஓதற் கரியார் கரியார் களம்.’ கொடியார், கொடி ஆர் மதில்; (நால்வாய்) உரியார், (எனை ஆள) உரியார்; ஓதற்கு அரியார், களம் கரியார் - என்று பிரித்துப் பொருள் செய்க. கொடியவராகிய முப்புர அசுரரின் கொடிகள் ஆர்ந்த மூன்று மதில்களையும் அழித்த இயல்பினர்; பருத்த பெரிய கையையும், தொங்கும் வாயினையும் உடைய யானையின் அஞ்சத்தக்க தோலைப் போர்த்தவர்; என்னை ஆட்கொள்ளு தற்கு உரியவர்; தம் பெருமை கூறுதற்கு அரியவர்; கழுத்துக் கறுத்தவர் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், முதலாம் மூன்றாம் நாலாம் அடிகள் முதலில் மடக்கியவாறு. (தண்டி. 95 உரை) முதலீரடி மடக்கு - எ-டு : “விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாகம் விரைமேவும் நெறியூடு தனிவாரல் மலைவாண! நிரை மேவும் வளை சோர இவளாவி நிலைசோரும்.“ விரை மேவு மதம் ஆய இடர் கூடு கடு நாகங்களை இரை மேவும் மதம் ஆய விடர் கூடும் கடு நாகம் விரை(தல்) மேவும் நெறி - என்று பிரித்துப் பொருள் செய்யப்படும்.’ “மலைநாட! நறுமணம் கமழும் மதநீரையுடைய துன்பம் உறும் கொடிய யானைகளை இரையாக விரும்பும் வலிய குகைகளில் தங்கும் கடிய பாந்தள்கள் விரைதலுறுகின்ற மலைவழியிலே தனியே வாராதே. வரிசையாக அணிந்த வளையல்கள் சோர இவள் உயிர் வாடுவாள்” எனத் தோழி தலைவனை ஏதம் கூறி இரவு வருதலை விலக்கிய இப்பாட லில், முதல் இரண்டடியும் மடக்கியவாறு. (தண்டி. 96 உரை) முதலீரடியும் கடையீரடியும் மடக்கு - எ-டு : ‘பணிபவ நந்தன தாக மன்னுவார் பணிபவ நந்தன தாக மன்னுவார் அணியென மேயது மன்ப ராகமே அணியென மேயது மன்ப ராகமே.’ பணி பவனம் தனது ஆகம் மன்னுவார், பணி (- கீழான) பவம் (-பிறப்பு) நந்து (-இறப்பு) அந் அது ஆக (-இல்லையாக) மன்னுவார்; அன்பர் ஆகம், மன் பராகம் - எனப் பிரித்துப் பொருள் செய்யப்படும். பாம்புகளுக்கு இருப்பிடமாகத் தமது மார்பைக் கொடுப்பவர்; கீழான பிறப்புஇறப்புக்கள் இன்றி நிலைபெற்றிருப்பவர்; அழகு என்று பொருந்தியதும் அன்பர் இதயமே; அலங்காரம் என்று தரித்துக்கொள்வதும் நிலைபெற்ற திருநீறே (பராகம் - பொடி) என்று பொருள்படும் இப்பாடலில், முதலீரடியும் கடையீரடியும் மடக்கியவாறு. (தண்டி. 96 உரை.) முதலொடு இடை மடக்கு - முதலடி முதலொடு இடை மடக்கு, இரண்டாமடி முத லொடு இடைமடக்கு, மூன்றாமடி முதலொடு இடைமடக்கு, நான்காமடி முதலொடு இடைமடக்கு, முதலிரண்டடியும் முதலொடு இடைமடக்கு, முதலடியும் மூன்றாமடியும் முதலொடு இடைமடக்கு, முதலடியும் நான்காமடியும் முதலொடு இடை மடக்கு, கடையிரண்டடியும் முதலொடு இடை மடக்கு, இடையிரண்டடியும் முதலொடு இடை மடக்கு, இரண்டாமடியும் நான்காமடியும் முதலொடு இடை மடக்கு, முதல் மூன்றடியும் முதலொடு இடை மடக்கு, இரண்டா மடியொழிந்த ஏனை மூன்றடியும் முதலொடு இடை மடக்கு, முதலடி யொழித்த ஏனை மூன்றடியும் முதலொடு இடைமடக்கு, ஈற்றடி ஒழித்த ஏனை மூன்றடியும் முதலொடு இடைமடக்கு, நான்கடியும் முதலொடு இடைமடக்கு என, முதலொடு இடைமடக்குப் பதினைந்து வகைப்படும். (மா.அ. 258, 259 உரை.) முதற்சீர் ஒழித்து நான்கடியும் முற்று மடக்கு - எ-டு : ‘அனைய காவலர் காவலர் காவலர் இனைய மாலைய மாலைய மாலைய எனைய வாவிய வாவிய வாவிய இனைய மாதர மாதர மாதரம்.’ அனைய கா அலர் காவலர் காவலர்; இனைய - (வருந்த) மாலைய (மயக்கம் தரும்) மாலைய (- இயல்பின) மாலைய (மாலைக் காலங்கள்); என்னை அவாவிய ஆவிய (-உயிர் போன்ற) வாவிய (- தாவிய) இனைய மாது அரம்; ஆதரம் (-ஆசை) மா தரம் (- பேரளவிற்று) - என்று பிரித்துப் பொருள் செய்க. “அத்தன்மைத்தாகிய சோலையில் மலர்களாகிய மன்மத பாணங்களை நம் தலைவர் விரும்பவில்லை; நாம் வருந்து வதற்குரிய மயக்கத்தைத் தரும் இயல்பினையுடையன, மாலைப் பொழுதுகள்; என்னை விரும்பிய உயிர் போன்ற, என் விருப்பத்திற்கு மாறாக மனம் தாவிய இந்தத் தோழி, அரத்தை ஒத்தவள்; ஆசையோ எனக்கு மிக்குளது” என்று தலைவி மாலையிற் புலம்பியவாறாக நிகழும் இப்பாடற்கண், நான்கடியும் முதற்சீர் ஒழிய முற்றும் மயக்கியவாறு. (தண்டி. 95) முரச பெந்தம் - மிறைக்கவி வகைகளுள் ஒன்று. பாடல் போ த வா ன து வா த ரா மா த வா த ண வா த நா நா த வா ண த வா ர வா வே த வா ன து வா ர கா முதலடி - நான்கடிகளையும், இம்முறையே நெடுவார் குறுவார்களாகப் போக்கிக் காண்க. பதவுரை - போத - ஞானவானே! வானது ஆதரா - வானவர் ஆதரிக்கப்பட்டவனே! மாதவா - திருமகள் காந்தனே! நா தணவாத நாத - நாவை விட்டு நீங்காத என் நாதனே! தவா அரவா - அழிவில்லாத அராவை யுடையவனே! வான வேத துவார கா (எனச் சொல் மாற்றுக) - பரமபதமிட மாக நின்றும் பூமியில் வருதற்குப் பெருமை யுடைய வேதத்தை வாயிலாக உடையோனே! என்னைக் காப்பாயாக! (மா. அ. 284 உரை) முற்று ஆதி இடை மடக்கு - எ-டு : ‘கொண்டல் கொண்டலர் பொழில்தொறும் பண்ணையாய் பண்ணையா யத்துள்ளார் வண்டல் வண்டலர் தாதுகொண் டியற்றலின் வருமணமணல்முன்றில் கண்டல் கண்டக மகிழ்செய ஓதிமம் கலந்துறை துறைவெள்ளம் மண்டல் மண்டல முழுதுடன் வளைதரு வளைதரு மணிவேலை.’ கொண்டல் கொண்டு அலர், பண்ணினை ஆயும் பண்ணை, வண்டல் வண்டு அலர் தாது, கண்டல் கண்டு, கலந்து உறை துறை, மண்டல் மண்தலம், வளைதரு வளை தரு - எனப் பிரித்துப் பொருள் செய்க. “உலகம் முழுவதையும் சூழ்ந்திருக்கும் சங்குகளைக் கொழிக் கும் அழகிய கடலே! கீழ்க்காற்றைக்கொண்டு பூக்கின்ற சோலைகள்தொறும், இசையை ஆராயும் விளையாடற் சிறுமியர் சிற்றிலை வண்டுகளால் வெளிப்படும் மகரந்தத் தூள்களைக் கொண்டு இயற்றுதலின் மணம் வீசவும், மணற் பகுதியிலே தாழையைக் கண்டு மனம் மகிழ் கூரவும், அன்னங்கள் கூட்டமாகத் தங்கியிருக்கும் நீர்த்துறையில் வெள்ளத்தைக் கொண்டு ஏறாதொழிவாயாக!” எனச் சிறுமியர்விளை யாடல் கண்டு மகிழும் தாயர் கடலைப் பரவிய இப்பாடற் கண், நான்கு அடிகளிலும் முதலிலும் இடையிலும் இடை யிட்டு மடக்கியவாறு. (தண்டி. 95 உரை) முற்று ஆதி இடையிட்ட மடக்கு - எ-டு : ‘தோடு கொண்டளி முரன்றெழக் குடைபவர் குழல்சேர்ந்த தோடு கொண்டதே மலர்சுமந் தகில்கமழ்ந் தவர்தம் தோடு தைந்தசெஞ் சாந்தணி திரண்முலை இடைதோய்ந் தோடு தண்புனல் நித்திலம் துறைதொறும் சொரியும்.’ தோடு கொண்டு - கூட்டம் ; தோடு கொண்ட - பூவின் இதழ்; தோள் துதைந்த, (தோய்ந்து) ஓடு தண்புனல் - எனப் பிரித்துப் பொருள் செய்க. “கூட்டமாக வண்டுகள் ஒலித்தெழ, நீராடுவார் கூந்தலில் பொருந்திய இதழ் கொண்ட இனிய மலரைச் சுமந்து, அகில் மணந்து, அம்மகளிருடைய தோள்களில் பூசிய செஞ்சந்தனம் தம்மிடத்துப் பூசப்பட்ட திரண்ட முலையிடையே தோய்ந்து ஓடும் குளிர்புனல் முத்துக்களை நீர்த்துறைதோறும் குவிக் கும்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், தோடு என்ற சொல், பாடலின் நான்கடிகளிலும் பிறசொற்றொடர்கள் இடையிட்டு வர, அடிமுதற்கண் மடக்கி வந்தமை காணப் படும். (தண்டி. 95 உரை.) முற்று ஆதி இறுதி மடக்கு - எ-டு : ‘நிரையா நிரையா மணிபோல்நிறை கோடல்கோடல் வரையா வரையா மிருள்முன்வரு மாலைமாலை விரையா விரையா எழுமின்ஒளிர் மேகமேகம் உரையா உரையா ரினும்ஒல்லன முல்லைமுல்லை.’ “கோடல்! நிரையா ஆநிரை மணிபோல் நிறை கோடல், வரையா அரை யாம இருள் முன் வரும் மாலை மாலை, விரையா, இரையா மின் ஒளிர் மேகம் எழும், முல்லை முல்லை, ஏகம் உரையா உரையாரினும் ஒல்லன.” - எனப் பிரித்துப் பொருள் செய்யப்படும். யாமிருள்: அகரம் தொகுத்தல். “காந்தளே! வரிசையாக வருகின்ற பசுக்கூட்டங்களின் மணி ஓசையைப் போல எங்கள் நிறையைக் கவராதே. அளவிட முடியாத அரையாம இருளுக்கு முன்வரும் மயக்கம் தரும் மாலைக்காலத்தில், விரைந்து ஒலித்துக்கொண்டு மின்ன லாகிய ஒளியைத் தரும் மேகங்களும் எழும். ஒன்றும் உரை யாத புகழாளராகிய தலைவரினும், முல்லைநிலத்து முல்லைக்கொடிகளும் பகையாயின” எனக் கார்ப்பருவ மாலைக் காலத்துத் தலைவி தலைவன் பிரிவால் வருந்திக் கூறிய இப்பாடற்கண், அடிதோறும் முதலும் இறுதியும் மடக்கியமையால், இது முதலிறுதி முற்று மடக்கு ஆம். (தண்டி. 95) முற்று ஆதி மடக்கு - நான்கடியும் முதலில் மடக்கி வரும் பாடல். எ-டு : ‘வரைய வரைய சுரம்சென்றார் மாற்றம் புரைய புரையஎனப் பொன்னே! - உரையல் நனைய நனைய தொடைநம்மை வேய்வர் வினையர் வினையர் விரைந்து.’ வரைய - களவொழுக்கத்தை நீக்க, மலைகளையுடைய; புரைய - மேம்பட்டவை, குற்றமுடையவை; நனைய - மதுவினையுடைய, குளிர்ச்சியினையுடைய; வினையர் - வினையில் வல்ல தலைவர், வினையை முடிப்பர் - எனப் பொருள் செய்க. “நீக்கத்தக்க களவொழுக்கத்தை நீக்க, (வரைவிற்கு வேண்டும் பொருள் தேடிவர) மலைகளையுடைய சுரம் கடந்து சென்ற தலைவருடைய மேம்பட்ட சொற்கள் குற்றமுடையன என்று இதுபோது சொல்லற்க! பொன் போன்றவளே! மதுவினை யுடைய குளிர்ச்சியையுடைய மாலையை, எடுத்த செயலைச் செய்து முடிக்கவல்ல நம் தலைவர் தம் வினையை முடித்தவ ராய் விரைந்து வந்து, நமக்குச் சூட்டுவார்” என்று கூறித் தோழி தலைவியைப் பிரிவிடை ஆற்றுவித்த இப்பாடற்கண், நான்கடியும் முதற்கண் மடக்கியவாறு. (தண்டி. 95) முற்று இடை மடக்கு - பாடலின் நான்கடிகளிலும் ஒவ்வோரடி இடையிலும் ஒரே சீர் மடக்கி (வெவ்வேறு பொருள்பட) வருதல். எ-டு : ‘பரவி நாடொறும் படியவாம் பல்புகழ் பரப்பும் இரவி சீறிய படியவாம் பரிஎரி கவர விரவி மான்பயில் படியவாம் வேய்தலை பிணங்கும் அருவி வாரணம் படியவாம் புலர்பணை மருதம்!’ படி அவாம், படிய வாம், படிய ஆம், படிய ஆம் என்று பிரித்துப் பொருள் செய்க. (உலகினர் விரும்பும், படியுமாறு தாவிச் செல்லும், தன்மைய ஆகும், படிந்து கலக்க ஆம் (-நீர்) - எனமுறையே பொருள் அமையும்) உலகினர் நாள்தோறும் போற்றி விரும்பும் பல புகழ்களைப் பரப்புகின்ற சூரியகுலத்துச் சோழமன்னனால் கோபிக்கப் பட்ட நாடுகள், படியுமாறு தாவிச் செல்லும் விரைந்த செலவினை யுடைய நெருப்புக் கவரவே, தம்முள் விரவி, மான்கள் பயிலத்தக்க தன்மையுடைய முல்லை நிலங்கள் ஆம்; அருவிநீர் போன்று தெளிந்த குளங்களில் அவன் யானைகள் படிந்து கலக்கவே, முன்பு வயல்களையுடையவாயிருந்த அம் மருதநிலங்கள் இதுபோது நீர் வற்றி மூங்கில்கள் தம்முள் பிணங்கிச் செறிந்திருக்கின்ற வறண்ட பாலைநிலம் ஆம். இவ்வாறு நான்கடியிலும், சொற்றொடர் பல இடையிட்டு வர, இடையே மடக்கு வந்தவாறு. இதில் பிறிதொரு வகை வருமாறு. எ-டு : ‘மனமேங் குழைய குழையவாய் மாந்தர் இனநீங் கரிய கரிய - புனைவதனத் துள்வாவி வாவிக் கயலொக்கும் என் உள்ளம் கள் வாள வாள வாங் கண்.’ ஒவ்வோரடியிலும் இடையே அசையோ சீரோ மடக்கி வருவதும் முற்று இடைமடக்காம். என் உள்ளம் கள்வாளுடைய வாள் அவாம் கண், மனம் ஏங்கு உழைய, குழை அவாய், மாந்தர் இனம் நீங்க அரிய, கரிய, வதனத்துள் வாவி, வாவிக் கயல் ஒக்கும் - என்று பொருள் செய்யப்படும். “என் மனத்தைக் களவு கொண்ட தலைவியின் வாளை யொத்த கண்கள் என் மனத்தை ஏங்க வைக்கும் மான்பார்வை யொடு, காதணி வரை நீண்டு, கண்டவர் நீங்க மனமில்லாமை செய்தலுடையவாய், கரியனவாய், முகத்தில் உலாவி, குளத்தி லுள்ள கயல்மீன்களை ஒத்துள்ளன” என்று தலைவன் தலைவியின் கண்களை நயந்துரைத்த இப்பாட்டின்கண், குழைய, குழைய - கரிய, கரிய - வாவி, வாவி - வாள, வாள - என்பன நான்கடி இடைமடக்காக வந்தவாறு. (தண்டி. 95 உரை) முற்று இடையிறுதி இடையிட்ட மடக்கு - ஒரு பாடலின் நான்கடிகளிலும் ஒரே சொல் இடையிலும் இறுதியிலும் இடையிட்டு மடக்கி வந்து பொருள் தருமாறு அமையும் மடக்கு வகை. எ-டு : ‘வாமான மான மழைபோல்மத மான மான நா மான மான நகமாழக மான மான தீமான மானவர் புகுதாத்திற மான மான காமான மான கவின்கான்கனல் மான மான.’ வாம் மான மான; மழைபோல் மத மானம் (அம் சாரியை) ஆன; நாம் ஆன மான நகம் ஆழ் அகம் மானம் (அம் சாரியை) ஆன; தீம் (ஐகாரம் கெட்டது) ஆன; மானவர் புகுதாத் திறமான ஆன; கா மான மான கவின் கான் கனல் மானம் ஆன - என்று பிரித்துப் பொருள் செய்யப்படும். கவின் கான் : எழுவாய். “கவின் கானங்கள், தாவிச் செல்லும் மான்களினுடைய பெருமையையுடைய; மேகம் போன்ற மதயானைகளை உடையன; அச்சம் தரும் விலங்குகளுடைய நகங்கள் ஆழ்ந்து கிழிக்கும் மார்பினை மான்கள் உடையவாயின (-அத்தகைய மான்கள் பயில்வன) ; தீமையே வடிவமாயின; மக்கள் உள்ளே நுழையாத தன்மையுடையன ஆயின. சோலைகளை ஒப்ப மிக்க அழகுடைய அக்காடுகள் (இதுபோது வேனிலால்) நெருப்பு வடிவினையுடைய ஆயின” என்று பொருள்படும் இப்பாடற்கண், ‘மான்’ என்ற சொல் இடையிடாதும் இடை யிட்டும் பாட்டின் இடையிலும் இறுதியிலும் மடக்கியவாறு. (தண்டி. 95 உரை) இம்மடக்கில் பிறிதொருவகை வருமாறு : ‘நான்கடிகளிலும் இடைச்சீரும் இறுதிச்சீரும் மடக்கிவரும் மடக்கும் சீரின் எழுத்துக்கள் ஒவ்வோரடியிலும் வேறாக இருக்கலாம். எ-டு : ‘மாறர் குருகூர் குருகூர் வடிவேல வேல நாறு மளகத் தளகத் துணைவீகை யீகை யாறி னகலா தகலாத தாமாக மாக நீற னிலவா னிலவா நினைத்தேக லேகல்’ மாறர் குருகு ஊர் குருகூர் வடிவேல! ஏலம் நாறும் அளகத்தள் அகத்துள் நைவு ஈகை ஈகையா(ற்)றின் அகலா. தகலாததாம். ஆகம் மாகம் நீறு அல் நிலவால் நிலவா. நினைத்தே கல் ஏகல் -எனப் பிரித்துப் பொருள் செய்க. கற்பிடைத் தலைவன்பிரிவால் தலைவிக்கு நிகழக்கூடிய ஆற்றாமையைக் கூறித் தோழி தலைவனைச் செலவழுங் குவித்தது இது. “சடகோபருடைய, சங்குகள் தவழப்பெற்ற, குருகூரிலுள்ள கூரிய வேலை ஏந்திய தலைவ! ஏலம் கமழும் கூந்தலையுடைய தலைவியது மனத்துயர், பொன்னைத் தேடித்தரும் நெறியால் நீங்காது. நின் பிரிவு தகுவதாகாது. இவள் மேனி, வானம் நீறாகும்படி இரவில் எழும் நிலவினால், அழகுகள் நிலவமாட்டா (-அழகு கெடும்). இதனை நினைத்தே கற்கள் நிறைந்த கடங்களின் வழியே பொருள் தேடச் செல்லுதலை நீக்குக” என்று பொருள்படும் இப்பாடற்கண், அடிதோறும் வெவ்வேறு சீர்கள் இடையும் இறுதியும் மடக்கி வந்தவாறு. (மா. அ.பாடல். 714) முற்று இறுதி மடக்கு - வெவ்வேறு சொற்கள் நான்கடியிலும் இறுதியில் மடக்கி வருவது. எ-டு : மாலை அருளாது வஞ்சியான் வஞ்சியான் வேலை அமரர் கடைவேலை - வேலை வளையார் திரைமேல் வருமன்ன மன்ன இளையா ளிவளை வளை. வஞ்சியான், வேலை, மன்ன, வளை என்ற சொற்கள் முறையே நான்கடிகளிலும் ஈற்றில் மடக்கியவாறு. அமரர் கடைவேலை, அவ்வேலைத் திரைமேல் வரும் அன்னம் அன்ன இவளை அருளாது, வஞ்சியான், இவள் வளைகளை வஞ்சியான் - எனப் பிரித்துப் பொருள் செய்க. பண்டு தேவர்கள் பாற்கடல் கடைந்தபோது, அக்கடலின் வளைகளைக் கொழித்துவரும் அலைகளின்மேல் தோன்றிய அன்னம் போன்ற திருமகளை ஒத்த இவளை, வஞ்சிநகரை ஆளும் வேந்தன், தன் மாலையைத் தாராது வளைகளைக் கவர்ந்து வஞ்சிக்க மாட்டான்” எனத் தாயர் ஆற்றியவாறு கூறும் இப்பாடற்கண், முற்று இறுதி மடக்கு வந்தவாறு. (தண்டி. 95) முற்றும் முற்றுமடக்கு (இடையிட்டது) - முதல் இடைகடை யென ஒவ்வோரடியிலும் மூவிடத்தும் சொற்கள் மடக்கி வருவது. எ-டு : ‘களைகளைய முளரிவரு கடை கடைய மகளிர்கதிர் மணியுமணியும் வளைவளையக் கரதலமு மடைமடைய மதுமலரு மலையமலைய இளையிளையர் கிளைவிரவி யரியரியின் மிசைகுவளை மலருமலருங் கிளைகிளைகொள் இசை அளிகள் மகிழ்மகிழ்செய் கெழுதகைய மருதமருதம்.’ முளரிக்களை களை(ய) அருகுஅடை கடைய மகளிர் கதிர் மணியும், அணியும் வளை வளைய கரதலமும், அடை அம்மடைய மது மலரும், மலைய மலைய, இளைய இளையர் கிளைவிரவி அரிஅரியின்மிசை குவளைமலரும் அலரும்; கிளைகிளைகொள் இசை அளிகள் மகிழ் கெழுதகைய மருத (மரங்களையுடைய) மருதம் மகிழ்செய்யும் - என்று பிரித்துப் பொருள் கொள்ளப்படும். தாமரையாகிய களைகளைக் களைய அவற்றின் அருகே அடையும் உழத்தியர் அணிந்த ஒளி வீசும் மணிகளும், அணிந்திருந்த வளைகளால் வளைக்கப்பட்ட கைகளும், அடைக்கப் பட்ட மடையிலுள்ள தேனை உடைய பூக்களும், ஒன்றோ டொன்று நலன் அழிப்பதற்கு மாறுபட, மிக்க இளைஞர் குழாம் கூடி அரிகின்ற நெற்கதிர்கள்மீது குவளைப் பூக்களும் மலரும். கிளை என்னும் நரம்பின் ஒலி ஏனை ஒலியினங்களொடு தொடர்பு கொள்ளும் ஓசை போலப் பாடும் வண்டுகள் தேனையுண்டு மகிழுமாறு விளக்கமுடைய மருதமரங்களையுடைய மருத நிலம் மகிழ்ச்சியைத் தரும் - என்ற பொருளமைந்த இப்பாடற்கண், அடிதோறும் முதல் இடை கடை என மூன்றிடங்களிலும் வெவ்வேறு சொற்கள் மடக்கி வந்தன. இடையே பிற சொற்கள் இடையிடுதலின் இதனை ‘இடையிட்ட முற்று மடக்கு’ என்றும் கூறுப. (தண்டி. 95) முற்றும் முற்று மடக்கு (இடையிடாதது) - ஒரே அடி நான்கடியுமாக வரும் மடக்கு; இந்நான்கடி மடக்கினை ஏகபாதம் எனவும் கூறுப. (திருஞானசம்பந்தர் அருளிய முதல்திருமுறைக்கண் (பண்முறைத் தேவாரம்) 127 ஆம் பதிகம் பன்னிரண்டு பாசுரங்களும் இவ்வகையின. எ-டு : ‘வான கந்தரு மிசைய வாயின வான கந்தரு மிசைய வாயின வான கந்தரு மிசைய வாயின வான கந்தரு மிசைய வாயின’ வான் அகம் தரும் இசைய ஆயின, வானகம் தரும் இசை அவாயின; வானகம் தரும் இசைய ஆயின, வான் நகம் தரு மிசைய ஆயின - எனப் பிரித்து பொருள் காண்க. வானகம் - ஆகாயம், விண்ணுலகம், பெரிய மலை; இசை - ஓசை, எழுச்சி, புகழ். மேகங்கள் கடலிடத்தில் கொடுக்கும் ஓசையை உடையன- வாய் ஆகாயத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் எழுச்சியை விரும்பின; விண்ணுலகத்தில் ஓங்கும் புகழுடையனவாகிய பெரிய மலைகள் மேலிடத்தில் மரங்களைக் கொண்டுள்ளன. மிசை - மேலிடம். (தண்டி. 96 உரை) முன் முடுகு வெண்பா - முன்னிரண்டடிகள் முடுகிய சந்தம் கொண்டு வரும் வெண்பாவகை. ‘புளிமா’ ச்சீர் தொகுப்பின் சந்தம் முடுகும். மூவகை மடக்கு - எழுத்து மடக்கு, சொல் மடக்கு, அடிமடக்கு என்பன. அணிநூலார் இம்மூவகை மடக்கினையே இடைவிடாத மடக்கு, இடைவிட்ட மடக்கு, இடைவிட்டு இடைவிடாத மடக்கு என மூவகையாகப் பகுப்பர். (மா. அ. 253) மூவடி மடக்கு - ஈற்றடி ஒழித்த ஏனை மூவடியும் மடக்கியது, ஈற்றயலடி ஒழிந்த ஏனைய மூவடியும் மயக்கியது, முதலடி ஒழித்த ஏனைய மூவடியும் மடக்கியது, முதலயலடி ஒழித்த ஏனைய மூவடியும் மடக்கியது - என நால்வகைத்து. எடுத்துக்காட்டுக் கள் தனித்தனித் தலைப்புள் காண்க. (தண்டி. 96 உரை) மூன்றாமடி ஆதிமடக்கு - நான்கடிச் செய்யுளில் மூன்றாம் அடியின் தொடக்கத்தில் முதற்சீர் மடக்கி (இரண்டாம் சீராகவும்) வருவது. எ-டு : ‘தேங்கானல் முத்(து) அலைக்கும் தில்லைப் பெருந்தகைக்கு ஓங்காரத் துட்பொருளாம் ஒண்சுடர்க்கு - நீங்கா மருளா மருளா தரித்துரைக்கும் மாற்றம் பொருளாம் புனைமாலை ஆம்.’ மருளாம் - ஆசையாகிய; மருள் - பாசம் “கானலில் முத்து அலைக்கும் தில்லையில் பெருந்தகையாய், ஓங்காரத்து உட்பொருளாம் சோதிவடிவாகிய சிவபெரு மானுக்கு, நீங்காத ஆசையாகிய பாசத்தினை மேற்கொண்டு அடியார்கள் கூறும் சொற்கள் மேம்பட்ட பொருள்களும் அணியும் மாலைகளும் ஆம்” என்று பொருள் படும் இப்பாடற்கண், மூன்றாமடி ஆதியில் ‘மருளா’ என்ற சீர் மடக்கி வந்தவாறு. (தண்டி. 95) மூன்றாமடி ஒழிந்த மடக்கு - எ-டு : ‘கோவ ளர்ப்பன கோநக ரங்களே கோவ ளர்ப்பன கோநக ரங்களே மேவ ளக்கர் வியன்திரை வேலைசூழ் கோவ ளர்ப்பன கோநக ரங்களே’. கோ - பெரிய, ஒளி, அரசன், மேம்பாடு, பூமி என்ற பொருள் களிலும், கோநகரங்கள் - மேம்பட்ட ஊர்கள், இறைவனுடைய ஊர்கள் என்ற பொருள்களிலும் வந்துள்ளன. கோந(ன) கரங்கள் - அரசன் கைகள். பெரிய நகரங்கள் ஒளியை மிகுப்பன; அரசன் பெருக்குவன இறைவன் கோயில்களே; கடல் தனது அலையோடும் கரை யோடும் சூழ்ந்திருக்கும் நிலவுலகத்தைக் காப்பன அரசனுடைய கைகளே என்று பொருள்படும் இப்பாடற்கண், முதலாம் அடியே இரண்டாம் நான்காம் அடியாக மடக்கி வந்தவாறு. (தண்டி. 96) மூன்றாமடி நான்காமடியாக மடக்கியது - எ-டு : ‘தளைவிட் டார்மகிழ் மாறன்தன் வெற்பில்வான் முளைவிற் போல்நுத லீர்! உங்கள் முன்றில்வாய் வளைவிற் கோமன் மதனம் படுக்கவோ வளைவிற் கோமன் மதனம் படுக்கவோ’. “பற்றற்றார் பரவும் சடகோபன் மலையில் வானவில் போன்ற நெற்றியுடையீர்! உங்கள் இல்லத்து முகப்பில், (வளை விற்கோ-) சங்குவளையல்களை விற்பேனோ, (மன் மதனம் படுக்க-) என்னிடம் நிலைபெற்ற விருப்பம் என் அறிவை அகப்படுத்த, (வளை வில்கோ-) வளைக்கும் கரும்புவில்லை யுடைய என் பகையாகிய (மன்மதன் அம்பு அடுக்கவோ-) மன்மதன் தொடுக்கும் அம்புகளாகிய பூக்களை உங்கள் குழற்குச் சூட்டுவேனோ?” எனத் தலைவன், தலைவி தோழி இருவரிடமும் குறையுற்று நிற்றலைக் கூறும் இப்பாடற்கண், மூன்றாமடி நான்காமடியாக மடக்கி வந்தவாறு. (மா. அ. பாடல் 739). மூன்றாமடியொடு நான்காமடி ஆதிமடக்கு - எ-டு : ‘ஆயிரம்பெற் றான் ஒருமூன் றைந்துற்றான் ஆதியர்க்கு, மேய முதல்வனெனும் மெய்வேதம் - பாய் திரைப்பால் ஆழியான் ஆழியான் அஞ்சிறைப்புட் பாகனெனும் கோழியான் கோழியான் கோ’. கண் ஆயிரம் பெற்றான் - இந்திரன் கண் மூன்று பெற்றான் - சிவன் கண் மூன்றும் ஐந்தும் உற்றான் - பிரமன். பால் ஆழியான் - பாற்கடலையுடையவன்; ஆழியான் - சக்கராயுதத்தை யுடையவன்; கோழியான் - உறையூரிலிருப் பவன், கோழிக்கொடியை உயர்த்த முருகன். கோ - கண். பாற்கடலை யுடையவனும் சக்கராயுதம் ஏந்தியவனும் கருடனை ஊர்பவனும் உறையூரில் உகந்திருப்பவனும் ஆகிய திருமால், கோழிக்கொடியையுடைய முருகன், ஆயிரங் கண்ணான் ஆகிய இந்திரன், முக்கண்ணனாகிய சிவபெரு மான், எண்கண்ணனாகிய பிரமன் ஆகிய எல்லோருக்கும் முதல்வன் என்ப. ஆழியான், ஆழியான் - கோழியான், கோழியான் - மூன்றாமடி நான்காமடி ஆதி மடக்கு. (மா. அ. பாடல் 632) மூன்றிடத்தும் மடக்குப் பதினைந்து - மூன்றிடத்தும் மடக்காவது, ஓரடியின் முதல் இடை கடை என்ற மூவிடத்தும் எழுத்தோ அசையோ சீரோ மடக்கி வரலாம். இது பதினைந்து வகைப்படும். அவை பின் வருமாறு: முதலடி மூன்றிடத்தும் மடக்கு, இரண்டாமடி மூன்றிடத்தும் மடக்கு, மூன்றாமடி மூன்றிடத்தும் மடக்கு, நான்காமடி மூன்றிடத்தும் மடக்கு, முதலடியும் இரண்டா மடியும் மூன் றிடத்தும் மடக்கு, முதலாமடியும் மூன்றாமடியும் மூன்றிடத் தும் மடக்கு, முதலடியும் நான்காமடியும் மூன்றிடத்தும் மடக்கு, கடையிரண்டடியும் மூன்றிடத்தும் மடக்கு, இடையிரண்டடியும் மூன்றிடத்தும் மடக்கு, இரண்டாமடி யும் நான்காமடியும் மூன்றிடத்தும் மடக்கு, ஈற்றடி ஒழிந்த ஏனை மூவடியும் மூன்றிடத்தும் மடக்கு, ஈற்றயலடி ஒழிந்த ஏனை மூவடியும் மூன்றிடத்தும் மடக்கு, முதலடி ஒழிந்த ஏனை மூன்றிடத்தும் மூவடியும் மடக்கு, முதலயலடி ஒழிந்த ஏனை மூவடியும் மூன்றிடத்தும் மடக்கு, நாலடியும் மூவிடத்தும் முற்று மடக்கு என்பன. (மா. அ. 261) மூன்று பொருள் சிலேடை இணைமடக்கு - எ-டு : ‘மாயன்சேய் வில்லும் மலர்ப்பொழிலும் காஞ்சனமும் காயம் புதைதிறங்கூர் கச்சியே - நேய மகத்தா ரகத்தா ரருவினையாட் செய்யு மகத்தார் மகத்தார்தம் வாழ்வு’. முதலிரண்டியும் சிலேடை : கடையிரண்டடியும் மடக்கு. நேயம் அகம் தாரகத்தார் - கருணையை ஆன்மாவுக்கு உயிர் நாடியாக உடையவர்; அருவினை ஆட்செய்யும் மகத்தார் - நீங்குதற்கு அரிய வினைகள் அடிமைசெய்யும் மகத்துவத்தை உடையவர்; மகத்தார் தம் வாழ்வு - செய்யும் யாகத்தில் யூபத்தம்பமாக இருக்கும் திருமாலின் இருப்பிடம்; மாயன் சேய்வில் - திருமாலின் மகனாகிய மன்மதனுடைய கரும்பு வில்; காய் அம்பு உதை திறம் கூர்கச்சி - பிரிந்தவர்மீது கொடிய அம்பு செலுத்தும் காஞ்சி நகர்; மலர்ப்பொழில் காயம் புதை திறம் கூர் கச்சி - பூஞ்சோலைகள் தம் உயர்ச்சி யாலும் செறிவாலும் ஆகாயத்தை மறைக்கும் நிலை மிக்க காஞ்சிநகர்; காஞ்சனம் - கண்ணாடி; காயம் - தன்னை நோக்கியாரது உடல் பிம்பத்தை; புதை திறம் கூர் கச்சி - தன்னிடம் உட்கொண்டு காட்டும் தன்மை மிக்க காஞ்சி நகர் - என மன்மதனுக்கும் சோலைக்கும் கண்ணாடிக்கும் சிலேடையாக, ‘காயம் புதை திறம் கூர்’ என்னும் தொடர் வந்துள்ளமையால், இப்பாடல் மூன்று பொருள் சிலேடையோடு இணைந்த மடக்காகும், (காயம் புதை திறம் கூர்: முச்சொல்லலங்காரம்) (மா. அ. பாடல் 756). மூன்றெழுத்தால் வரும் மடக்கு - ஒரு செய்யுளில் மூன்றே மெய்களும் அவற்றானாய உயிர் மெய்களும் மாத்திரமே வருவது மூன்றெழுத்து மடக்கு என்ற சொல்லணியின் பாற்படும். எ-டு : ‘மின்னாவான் முன்னு மெனினு மினிவேனின் மன்னா வினைவே னெனைவினவா - முன்னான வானவனை மீனவனை மான வினைவென்வேன் மானவனை மானுமோ வான்?’ மின்னா வான் முன்னும் எனினும், இனி இளவேனிலில் மன்னாது இனைவேனாகிய என்னை வினவாத வானவனை யும் மீனவனையும் வெல்லும் வேலையுடைய முன்னான மானவனை வான் மானுமோ - எனப் பிரித்துப் பொருள் செய்க. (மானவன் - சோழன்). “மின்னி வானம் மழைபெய்யக் கருதும் எனினும், இப்பொ ழுது இளவேனிற் காலத்து மனம் நிலைபேறின்றி வருந்தும் என் நலன் குறித்து வினவாத, யாவர்க்கும் மேம்பட்ட சேரனையும் பாண்டியனையும் போர்வினையால் வென்ற வேலினையுடைய மனுகுலத்துச் சோழனை வானம் ஒக்குமோ? ” எனப் பொருள்படும் இப்பாடற்கண், ம - வ - ன - என்ற மூன்றெழுத்துக்களே வந்தமை காணப்படும். (தண்டி. 97 உரை) மெல்லினப் பாடல் - எ-டு : ‘மானமே நண்ணா மனமென் மனமென்னு மானமான் மன்னா நனிநாணு - மீனமா மானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினு மானா மணிமேனி மான்’ மானமான் மன்னா! மானமே நண்ணா மனம் என்மனம் என்னும், நனி நாணும் ஈனம் ஆம், ஆனா மி(ன்)னல் மின்னி முன்னே நண்ணினும், மானா (-ஒப்பில்லாத) மணிமேனி மான் என்று பிரித்துப் பொருள் கொள்க. “பெருமை பொருந்திய யானைகளையுடைய தலைவனே! அமையாத மின்னல் மின்னி நீ விடுத்த தூதாகத் தலைவி முன்னே வந்து காட்சி வழங்கினாலும், அதனால் நீ விரைந்து வருகையைக் குறித்து ஆறுதல் அடையாமல், ‘என் மனம் மானமில்லாத மனம்’ என்றும்,‘என் நாணும் மிகக் குறைகிறது’ என்றும், அழகிய மேனியளாகிய தலைவி கூறிக் கொண்டிருந்தாள்” என்று வினைமுற்றி மீண்ட தலைவ னிடம் தோழி கூறிய இப்பாடலில், மெல்லின மெய்களும் மெல்லின உயிர்மெய்களுமே வந்துள்ளன. (தண்டி. 97 உரை) மெல்லின மெய் வருக்கத்தால் வரும் செய்யுள் - எ-டு : ‘நின்னைநா னென்னென்னே னின்னைநா னென்னுன்னே நின்னைநா னின்னெனே னின்னானி - னின்னானா நாநாநா நின்னுனா னூனநீ நன்னானே நீநா னெனநீ நினை’ நின்னை நான் என் என்னேன்; நின்னை நான் என் உன்னேன்; நின்னை நான் நின்னானின் இன்னானா நின் என்னேன்; நாநா நாம், ஊனம், நின் உன் நான் நீ (த்துள்ள) நான் என நினை; நீ நன்னானே - எனப் பிரித்துப் பொருள் செய்க. “நின்னை யான் நின் செயல் பற்றி வினவேன்; நின் செயல்களை எக்காரணம் பற்றியும் நினையேன்; உன்னை நான் உன்னைச் சேர்ந்த எனக்கு இன்னா செய்பவனாக நின் தன்னலம் கருதுகின்றாயே என்று கூறமாட்டேன்; நின் னையே விரும்பும் நான் பலவித அச்சங்களையும் குற்றங்களை யும் உறுவேன். என்னை நீத்துவிடும் நீ, நானா இருந்து நினைத்துப்பார். நீ அதனை விடுத்து மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டிருக்கிறாய்” என்ற பொருளுடைய இப்பாடற்கண், நகரமும் னகரமும் ஆகிய இரண்டு மெல்லெழுத்து வருக்கங் களே வந்துள்ளன. (இ. வி. 689 உரை) மொழி வழி நிலை - ஒரு பாடலில் வந்த மொழியே மீண்டும் வர அமைப்பது. இது மடக்கணி வகைகளுள் அடங்கும். எ-டு : ‘மாதராள் மாதர்நோக் குண்ட மடநெஞ்சம் காதலார் காதன்மை காணாதே - ஏதிலார் வன்சொல்லான் வன்பொறை சொல்லிலெழில் மானோக்கி இன்சொல்லா லின்புறுமோ ஈங்கு’. “இப்பெண்ணின் காதல்பார்வையிற் பட்ட என் மடநெஞ்சம், நான் கொண்ட ஆசையை அறியாது, அயலார் போலத் தோழி யான் அரிதின் பொறுக்குமாறு வன்சொற்கூறி என்னை விலக்குவாளாயின், அது பற்றிக் கவலைப்படாமல் தலைவி இனிமையாகப் பார்த்துக் கண்ணால் பேசிய சொற் களை நினைத்து இன்புறுமோ?” என்று, தலைவன், தன்னைத் தோழி சேட்படுத்தியவழி வருந்திக்கூறிய இப்பாடற்கண், மாதராள், மாதர் - காதலார், காதன்மை - வன் சொல், வன் பொறை - இன்சொல், இன்புறுமோ - எனச் சொன்ன சொல்லே ஒவ்வோரடியிலும் மீண்டு வருதல் மொழிவழி நிலையாம். (வேறு பொருள் படாமையின் மடக்கு ஆகாமை அறிக.) (வீ. சோ. 159 உரை) மோனை அந்தாதி - முதலடியின் முதலெழுத்தே அவ்வடியின் ஈற்றெழுத்தாக, அதுவே அடுத்த அடிகளிலும் முதலெழுத்தாகவும் ஈற்றெழுத் தாகவும் வரத் தொடுப்பது. எ-டு : ‘மேனமக் கருளும் வியனருங் கலமே மேவக விசும்பின் விழவொடு வருமே மேருவரை அன்ன விழுக்குணத் தவமே மேவதன் திறநனி மிக்கதென் மனமே’ இப்பாடற்கண், அடிமோனை எழுத்தாகிய ‘மே’ என்பது பாடல் முழுதும் அந்தாதியாக வந்தவாறு. (யா. க. 52 உரை) ய யமகம் - தமிழ்நூலார் மடக்கு என்பதனை வடநூலார் யமகம் என்றனர். ‘மடக்கு’ நோக்குக. யமாயமகம் - ஒரு சொல்லே நான்கடி முற்றும் மடக்கி வருவது. ‘இயமாவியமகம்’ காண்க. எ-டு : ‘உமாதர னுமாதர னுமாதர னுமாதர னுமாதர னுமாதர னுமாதர னுமாதரன்’ யாப்பருங்கலம் குறிப்பிடும் சித்திரகவிகள் - மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழுகூற் றிருக்கை, காதைகரப்பு, கரந்துறை பாட்டு, தூசம்கொளல், வாவல் ஞாற்று, கூட சதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்து இனத்தால் உயர்ந்த பாட்டு, பாதமயக்கு, பாவின்புணர்ப்பு, ஒற்றுப் பெயர்த்தல், ஒருபொருட்பாட்டு, சித்திரப்பா, விசித்திரப்பா, விகற்ப நடை, வினா உத்தரம், சருப்ப தோ பத்திரம், எழுத்துவருத்தனை ஆதியனவும், வடதூற்கடலுள் ஒருங்குடன் வைத்த உதாரணம் நோக்கி விரித்து முடிக்கும் மிறைக்கவிப் பாடல்களுமாம். (யா. வி. சூ. 96) ர ரத பந்தம் - இரத பந்தம்; ‘இரத பெந்தம்’ காண்க. வ வட்டச்சக்கரம் - சித்திரகவி வகைகளுள் ஒன்று; நான்கா(i)ரச் சக்கரம், ஆற(i)ரச் சக்கரம், எட்டா(i)ரச் சக்கரம் எனப் பலவகைப் படும். ‘சக்கரம்’ என அடைமொழியின்றிக் கூறுவதே பெரும்பான்மை. (யா. வி. பக். 527) வல்லினப்பாடல் - வல்லின மெய்களும் உயிர்மெய்களுமே வந்துள்ள பாடல். எ-டு : ‘துடித்தடித்துத் தோற்றத் துடுப்பெடுத்த கோட றொடுத்த தொடைக்கடுக்கை பொற்போற் - பொடித்துத் தொடிபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக் கடிபடைத்துக் காட்டிற்றுக் காடு’ தடித்து - மின்னல்; துடுப்பு - பூக்குலை; கடுக்கை - கொன்றை; துடி - துடித்தல், நடுங்குதல். “நடுங்குதலையுடைய மின்னல் தோன்றவே, காந்தள் பூக் குலைகளை வெளிப்படுத்தின. தொடுத்த மாலைகள் போலக் கொன்றை பொன் போன்ற பூக்களை மலரச் செய்தன. தொடி அணிந்த தோள்களும் இடப்புறம் துடித்தன. மயில்கள் ஆடக் கானகம் புதிய தளிர்களைத் தோற்றுவித்துக் காட்டு கின்றது.” என்று கார்காலம் கண்டு தலைவன் வருகை குறித்துத் தலைவி கூறியது. இப்பாடல். (தண்டி. 97) வழிமடக்கு - மடக்கணியில் சீர்தோறும் தொடர்ந்து வரும் ஒருவகை. எ-டு : ‘அனைய காவலர் காவலர் காவலர் இனைய மாலைய மாலைய மாலைய எனைய வாவிய வாவிய வாவிய வினைய மாதர மாதர மாதரம்’ 1. அனைய கா அலர் காவலர் காஅலர் - அத்தன்மைய வாகிய (காமன் அம்புகளாகிய) சோலையின் மலர்களை நம் தலைவர் காத்தல் இலர்; 2. இனைய மாலைய மாலை அ மாலைய - இத்தன்மைத் தாகிய மயக்கத்தைத் தருகிற மாலைப்பொழுதுகள் அத்தன்மையை யுடையன; 3. எனை அவாவிய ஆவிய - என்னை நீங்காது பற்றிக் கொண்டுள்ள உயிரினைப் போன்ற; வாவிய - என் எண்ணத்தைத் தாண்டிச் செயற்படுகின்ற, 4. வினைய - வருத்தும் தொழிலையுடைய மாது - தோழியானவள் அரம் - அரத்தினைப் போன்றுள்ளாள்; ஆதரம் மா தரம் - (தலைவர் பால் யான் கொண்டுள்ள) ஆசைமிக்க எல்லையுடையதாயுள்ளது. இப்பாடலில் அடிதோறும் முதற்சீர் நீங்கலாகத் தொடர்ந்து சீர் மடக்கியவாறு (தண்டி. 95) வன்மைமிக்கு வருதல் - வல்லெழுத்து மிக்கு வருதல் எ-டு : ‘தெறுக தெறுக தெறுக பகை தெற்றாற் பெறுக பெறுக பிறப்பு’ அகர உகர இகர எகர, ஆகார ஐகாரங்களாக உயிர்களால் ஊரப்பட்ட வல்லின உயிர்மெய்களும் வல்லின மெய்களுமே இப்பாடற்கண் வந்தன. (யா. க. 2 உரை) வாவல் ஞாற்று - முதலிற் கொடுத்த எழுத்துக்கு ஈற்றடி பாடி; பின்னர்க் கொடுத்த எழுத்துக்கு ஈற்றயலடி பாடி, அதன் பின் கொடுத்த எழுத்திற்கு இரண்டாமடி பாடி, இறுதியாகக் கொடுத்த எழுத்துக்கு முதலடி பாடி முடிக்கும் சித்திரகவி. வெளவால் தலைகீழாகத் தொங்குவது போல, ஈற்றினின்று தொடங்கி முதலடி முடியப் பாடும்வகை பாடல் அமைத லின், வாவல்ஞாற்று என்ற பெயர்த்தாயிற்று. வாவல்- வெளவால்; ஞாற்று-தொங்குதல். (வீ. சோ. 181 உரை) இனி யாப்பருங்கல விருத்தியுரையுள்(பக்.539) காணப்படு மாறு: “வாவல் நாற்றி என்பது ஓர் எழுத்துக் கொடுத்தால் அது முதலாக ஈற்றடி பாடி, பின்னு மோரெழுத்துக் கொடுத்தால் எருத்தடி பாடி, மற்றோர் எழுத்துக் கொடுத்தால் இரண்டா மடி பாடி, பின்னுமோர் எழுத்துக் கொடுத்தால் முதலடி பாடிப் பொருள் முடிய எதுகை வழுவாமல் பாடுவது.” விகற்ப நடை (1) - ‘வினாவிற்கு விடையிறுக்கும்போது இருபொருள்படும் வகையில் இருவகையாகப் பிரித்துப் பொருள் கொள்ளுமாறு தொடர்மொழியில் விடையிறுத்தல் முதலியன. வழக்காற்றில் விடையிறுக்கும்போது தெளிவு பட விடையிறுக்காமல், ‘இவ்வாறு இரட்டுற மொழிதலாக அமைத்தல் வேறுபட்ட நடையுடைத்து ஆதலின் விகற்ப நடை எனப்பட்டது. (வீ. சோ. 181 உரை) எ-டு : தன்னையும் உடன் கொண்டு செல்லுமாறு வேண்டிய தாய் கோசலைக்கு மறுமொழி கூறும் இராமன், ‘சித்தம் நீதி கைக்கின்றதென்?’ என்ற கூற்றில், ‘சித்தம் நீ திகைக்கின்றது என்’ (நீ எதற்காக மனம் தடுமாறுவது? எனவும், ‘சித்தம் நீதி கைக்கின்றது என்?’ (நின் உள்ளம் நீதியை வெறுப்பது எதற்கு?) எனவும் இருபொருள்பட விகற்ப நடைவந்தவாறு. (கம்பரா. 1626) விகற்ப நடை (2) - இதனைச் சித்திர கவி வகைகளுள் ஒன்றாகக் கூறுவர். ‘வேறுபட்ட நடையுடைத்தாவது’ என வீரசோழிய உரை கூறும் (181) எ-டு : ‘தமர நூபுர ஆதார சரணீ ஆரணா காரி தருண வாள்நிலா வீசு சடில மோலி மாகாளி அமரர் வாழ்வு வாழ்வாக அவுணர் வாழ்வு பாழாக அருளு மோகினீ யாகி அமுதபானம் ஈவாளே’ (தக்க. 107) இதன்கண், முதலடி பெரும்பாலும் வடமொழிச் சொற்கள் அச்சந்திகளோடு புணர (நூபுராதார’ என்பது பிரித்துக் காட்டப்பட்டுள்ளது), அடுத்தஅடி தமிழ் நடையால் அமைந்தவாறு. இதுவும் வேறுநடைத்து ஆதல் கூடும். யாப்பருங்கல விருத்தியில், விகற்ப நடை என்பது ‘வினாவுத் தரம்’ என்ற மிறைக்கவிக்கு அடையாக ‘விகற்ப நடைய வினாவுத்தரமே’ என்று வினாவியதற்கு ஒரு மொழியும் தொடர்மொழியுமாக விடையிறுப்பது என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது. (பக். 545) விசித்திரப்பா - எங்கும் - ஏழறையாகக் கீறி, மேலை ஒழுங்கினுள் மொழிக்கு முதலாகிய எழுத்து ஒரு பொருள் பயக்க நிறுவி; அவ்வெழுத் துக்களை ஒழுங்கும் கண்ணறையும் படாமே நிறுவி, ஓரெழுத் துக்கு ஓர்அடியாகவாயினும் ஒரு சீர் ஆகவாயினும் முற்றுப் பெறப் பாடுவது. (இதன் பொருள் புலப்பட்டிலது.) (வீ. சோ. 181 உரை) வினாவுத்தரம் - மிறைக்கவிகளுள் ஒன்று; பாட்டின் இறுதியில் நிற்கும் ஒரு சொற்றொடரின் எழுத்துக்களை ஓரெழுத்தோ இரண்டு மூன்றெழுத்துக்களோ கொண்ட சொற்களாகப் பிரித்து அவை விடையாகும் வகையில் தொடக்கத்திலிருந்து வினாக் களை அமைத்துக் கடைசியில் அத்தொடர் முழுதுமே விடையாமாறு இறுதி வினாவை அமைத்துப் பாடும் சித்திரகவி. (உத்தரம் - விடை) எ-டு : ‘பூமகள்யார்? போவானை ஏவுவான் என்னுரைக்கும்? நாமம் பொருசரத்திற்(கு) என் என்ப? - தாம் அழகின் பேர் என்? பிறைசூடும் பெம்மான் உவந்துறையும் சேர்வென்? திருவேகம் பம்’ சொற்றொடர் ‘திருவேகம்பம்’ என்பது. வினாக்களும் விடை யும் ஆமாறு : பூ மகள் யார்? - திரு; போவானை ஏவுகின்றவன் என் உரைக்கும்? - ஏகு; சரத்திற்கு நாமம் என் என்பர்? - அம்பு; அழகின் பேர் என்? - அம்; பெருமான் உவந்துறையும் இருப்பிடம் என்? - திருவேகம்பம். இவ்வாறு முறையே காணப்படும். (தண்டி. 98 உரை) வீரசோழியம் கூறும் சொல்லணிகள்: வீரசோழியம் கூறும் சொல்லணிகள் - மாலைமாற்று, சக்கரம், இனத்தாலும் எழுத்தாலும் கூறிய பாட்டு, வினா உத்தரம், ஏகபாதம், காதை கரப்பு, சுழிகுளம், சித்திரப்பா, கோமூத்திரி, பலவகை மடக்குக்கள், என்பன காரிகையிலும், யாப்பருங்கலம் குறிப்பிடும் சித்திர கவிகள் உரையிலும் இடம் பெற்றுள்ளன. (வீ.சோ. 179, 181) ஸ ஸர்வதோபத்ரம் - சருப்பதோபத்திரம்; அம்மிறைக்கவி காண்க.  பிற்சேர்க்கை 1 1. கோமூத்திரி பருவ மாகவி தோகன மாலையே பொருவி லாவுழை மேவன கானமே மருவு மாசைவி டாகன மாலையே வெருவ லாயிழை பூவணி காலமே. இது, முன்னிரண்டடி மேல்வரியாகவும், பின்னிரண்டடி கீழ்வரியாகவு மெழுதி, அவ்வரி இரண்டையும் மேலுங் கீழும் ஒன்றிடையிட்டுக் கோமூத்திர ரேகைவழிப் படிக்க, ஒன்றுவிட் டொன்று மாறடி அச்செய்யுளே முடியுமாறு காண்க. 2. இரட்டை நாகபந்தம் அருளின் றிருவுருவே யம்பலத்தா யும்பர் தெருளின்மரு வாருசிர்ச் சீரே - பொருவிலா வொன்றே யுமையா ளுடனே யுறுதிதரு குன்றே தெருள வருள். மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு பெருகொளியான் றேயபெருஞ் சோதி - திருநிலா வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த மயரு மளவை யொழி. இவ்விரண்டு பாட்டும் இரண்டு நாகங்களின் தலை நின்று தொடங்கி வால்முனைக ளிறுதியாக இடையிடையே தத்தம் உடலினும், பிறிது பிறிதுடலினும் மாறாச் சந்திகளினின்ற எழுத்தே மற்றை யிடங்களினு முறுப்பாய் நிற்க, ஒவ்வொரு பாம்பிற்கும், மேற்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும், கீழ்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும், இரண்டு பாம்பிற்கும் நடுச்சந்தி நான்கினும் இரண்டு பாட்டிற்கும் பொருந்த நான்கெழுத்துமாகச் சித்திரத்தி லடைபட்டு முடியுமாறு காண்க. 3. நான்காரைச் சக்கரம் மேரு சாபமு மேவுமே மேவு மேயுண வாலமே மேல வாமவ னாயமே மேய னானடி சாருமே. இது, ‘மே’ என்னும் எழுத்து நடுவே நின்று ஆர்மேல் ஒவ்வோரெழுத்து நின்று சூட்டின்மேற் பன்னிரண்டு எழுத்து நின்று, நடுவுநின்று கீழாரின் வழி யிறங்கி யிடஞ்சென்று அடுத்த ஆரின்வழி நடு வடைந்து முதலடி முற்றி, மறித்தும் நடுவுநின்று அவ்வாரின் வழித்திரும்பி யிடஞ்சென்று அடுத்த ஆரின்வழி நடுவுசென்று இரண்டாமடி முற்றி, அவ்வாறே மூன்றாமடி நான்காமடிகளும் வலஞ்சென்று முற்றிய வாறு காண்க. 4. ஆறாரைச் சக்கரம் தண்மலர் வில்லிதன் போரன தஞ்ச நமக்களித்த கண்மலர்க் காவிக் கெதிர்வன வன்று கரமளந்த பண்மலர் யாழ்பயில் வாரன்பு சூழ்பதி நாகைமிக்க தண்மை யகத்துப் பதுமத்த மாதர் தடங்கண்களே. இது, ஆறாய் நடுவே ரகரம் நின்று ஆர் ஒன்றுக்கு ஒன்பதொன்ப தெழுத்தாய், குறட்டின்மேல் ‘போதிவானவன்’ என்னும் பெயர் நின்று, சூட்டின்மேல் இருபத்து நான்கெழுத்து நின்று, இடக்குறுக்காரின் முனை தொடங்கி அதனெதிராரின் முனையிறுதி சென்று முதலடி முற்றி, அடுத்த வலக்கீழாரின் முனைநின்று அதனெதிராரின் முனை யிறுதிசென் றிரண்டாமடி முற்றி, அடுத்த வலக்கீழாரின் முனைநின்று எதிர்த்த மேலாரின் முனையிறுதி சென்று மூன்றாமடிமுற்றி அதற்கடுத்த வலக்கீழாரின் முனைநின்று வட்டைவழி வலஞ்சுற்றி நான்காமடி முடிதல் காண்க. ‘கண்மலர்’ என்ற அடிமுடிவில் வட்டையில் நிற்கும் தகரத்தை இவ்வடிக்கு உயிர்மெய்யாகவும், வட்டைசுற்றி வாசிக்கும் நான்காமடிக்கு மெய் யாகவும் கொள்க. தகர வுயிர்மெய்யில் (த) என் னும் மெய் இருத்தலான் இங்ஙனம் கொள்ளற்கு நியாயம் ஏற்பட்டதென்க. இன்னும் இவ்வடியை வாசிக்கும்போது நடுவே நிற்கும் ரகரவுயிர்மெய்யை மேற்கூறிய நியாயப்படி மெய் (ர்) ஆகக் கூட்டிக் கொள்க. 5. எட்டாரைச் சக்கரம் மலர்மலி சோலை யகநலங் கதிர்க்க மடமயி லியற்றக மாதிரம் புதைத்து வளைந்து புகன்மே வல்லிருண் மூழ்க வரியளி துதைந்த கதுப்பினி தடைச்சி மன்னுமா மடமொழி வடிவாள் வளவன் கன்னித் துறைவன் கனகச் சிலம்பே. இது, எட்டாராய், ஆர் ஒன்றுக்கு அவ்வாறெழுத்தாய், நடுவே ககரம் நின்று குறட்டின்மேல் ‘அறமே தனமாவது’ என்னுஞ் சொல் நின்று, சூட்டின்மேல் முப்பத்திரண்டு எழுத்து நின்று, இடக் குறுக்காரின் முனை நின்று தொடங்கி அதனெதிர் முனையி னிறுதி சென்று முதலடி முற்றி, முதல் தொடக்கத்துக்கு வலக்கீழாரின் முதற் றொடங்கி எதிரேறி இரண்டாமடி முற்றி, அதற்கடுத்தது அவ்வாறே ஏறி மூன்றாமடி முற்றி, அதற்கடுத்தது அவ்விதமே ஏறி நான்காமடி முற்றி, முதல் தொடங்கிய ஆரின் முதலெழுத்திலிருந்து வட்டைமேல் வலஞ்சுற்றி ஐந்தாவது ஆறாவது அடிகள் முடிந்தமை காண்க. 6. சுழிகுளம் கவிமுதி யார் பாவே விலையரு மா நற்பா முயல்வ துறு நர் திருவ ழிந்து மாயா இது, செவ்வே யெழுதிய நாலடி நான்கு வரியுள், முதலடி முதலெழுத்தினின்றும் சுழி ரேகை வழியே மேனின்று கீழிழிந்தும், கீழ்நின்று மேலேறியும், புறநின்று வந்துள் முடிய இடஞ்சுற்றிப் படிக்க நாலடியு முடியுமாறு காண்க. 7. சருப்பதோ பத்திரம் மாவா நீதா தாநீ வாமா வாயா வாமே மேவா யாவா நீவா ராமா மாரா வாநீ தாமே மாரா ராமா மேதா. இது, நாற் புறமும் தலைப்பாக வைத்து வரிசையாகப் படித்தாலும்,மடக்கிப் படித்தாலும், நான் கடிகளையும்மேனின்று கீழிறக்கியும்,கீழ்நின்று மேலேற்றியும் படித் தாலும் சொரூபங் கெடாமல் மாலை மாற்றாய் முடியுமாறு காண்க. 8. முரசபந்தம் கான வாரண மரிய வாயினனே தான வாரண மரிய வாயினனே மான வாரண மரிய வாயினனே கான வாரண மரிய வாயினனே இது, மேலிரண்டடிகளுந் தம்முட் கோமூத்திரியாகவும், கீழிரண்டடிகளுந் தம்முட் கோமூத்திரியாகவும், சிறுவார் போக்கி, மேல்வரி மற்ற மூன்று வரி களிலும் கீழுற்று மீண்டு மேனோக்கவும், கீழ்வரியும் அவ்வாறே மற்ற மூன்று வரி களிலும் மேலுற்று மீண்டு கீழ்நோக்கவும் பெருவார் போக்கி, இந்தவார் நான்கும் நான்கு வரிகளாகவும் முடியுமாறு காண்க. 9. பதுமபந்தம் மாறா மாலாலே மாறாமா மாறா மாவேளே மாறாமா மாறாமா கோவா மாறாமா மாறாமா வாதே மாறாமா. இது, நடுப் பொகுட்டினின்றும் மேல் வலக்கோணத் துள்ள அகவிதழ் புறவிதழ் சென்று வலமே அடுத்த புற விதழகவிதழ்வழியே பொகுட்டினிழிந்து அடுத்த அகவிதழ் வழிபுறவிதழ்சென்று முதலடிமுற்றி, மறித்தும்பொகுட்டி னின்றும் கீழ் வலக் கோணத்துள்ளஅக விதழ் புறவிதழ்வழி அடுத்த கீழ்க் கோணத்துள்ள புறவித ழகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து கீழிடக்கோணத்துள்ள அகவிதழ்வழி யதன்புறவிதழ்சென்று இரண்டாமடிமுற்றி, மறித்தும் பொகுட்டினின்று கீழிடக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்வழி இடக்கோணத்துள்ள புறவிதழகவிதழ் சென்று பொகுட்டினிழிந்து மேலிடக்கோணத்துள்ள அகவிதழ்வழி அதன்புறவிதழ்சென்று மூன்றாமடிமுற்றி, மறித்தும் பொகுட்டினின்று மேலிடக்கோணக் தகவிதழ் புறவிதழ்வழி மேற்கோணத்துள்ள புறவிதழகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து முதலடி தொடங்கிச் சென்ற கோணத்திதழ்களிற் சென்று நான்காமடி முற்றியவாறு காண்க. 10. இரதபந்தம் நாராரா ராய நயன யணாவிண்ண் ணாராம ணாயனில மாயவா - சீராய நன்கா நமநம நன்கா நமநம மன்காமன் றாதாய் நம. மாயவனே! வேத மதியே! வயநாக பாயவனே! தே!நளின பாதா! பராபரா! தூயவனே! காரணா! பூரணா! தோணிலமா னாயகனே! சீராக நாராய ணாய நம. இவற்றுள் முதற்பாட்டு, மேற் பாதியின் சிகரத்தி னின்றும் இருமருங் கிலுமிடையிலும் நாராயணாயநம வென்னும் மந்திரம் நிற்க வலமிடமாக மடங்கியிறங்கி முடியுமாறும், பிற் பாட்டு, கீழ்ப்பாதி யின் மேற்றளத்தின் முதலறை தொடங்கி வலமிடமாக மடங்கி யிறங்கி அடியறையி னின்று நடுப்பத்தி யில் நாராயணாய நமவென் றேழ் தளத்தும் மாறாடியேறி முடியுமாறுங் காண்க. இதனுள் விண்ண் என்னுமொற்றளபெடை யோரெழுத்தாதலால் அறிகுறியொழிய வோரறையுள் நின்றது. 11. கூடசதுர்த்தம் நாதா மானதா தூய தாருளா ணீதா னாவா சீராம னாமனா போதா சீமா னாதர விராமா தாதா தாணீ வாமனா சீதரா. இப்பாட்டின் நான்காமடியானது, முதன்மூன்றடியையும் கீழேகாட்டியவாறு மேனின்று கீழுங் கீழ்நின்று மேலுமாக எழுதத் தோன்றிய பத்தெழுத்துவரி மூன்றினுள் இடைவரியாய் மறைந்து கிடைப்பது காண்க. 12. கடகபந்தம் கோல நிலமேலழகு கூடு நெடு வீடுற மா மூலம்எனச் சென்று உதவு முன்னோனே! - நீலமணி வண்ணா! வடமலையா! மாதவா! கஞ்சமலர்க் கண்ணா! சரணாகதி. இது, முகப் பின் பூட்டுவாய் தொடங்கி வலமே இரண்டாமறை சென்று கீழறையினிறங்கி, மறித்து மவ்வறை யின்வழியே மேலறையிலேறி நடுவறையிலிறங்கி யாறா மறைவரை சென்று, அதன்கீழறை யிறங்கி மறித்தும் முன் போலவேயேறியிறங்கி ஏழாமறைநின்றும் வலமே சுற்றி யிறுதியறைசென்று முடியுமாறு காண்க. 13. கடகபந்தம் (வேறு) நாகநக ராகநிதி நாகரிக ராகநிறை ஏகநக ராசிஇணை யில்லா - தார்கணிகழ் தென்அரங்கன் ஆளாய சீராளரா ஞான நன்னரங்கர்க் கேஅடியேன் நான். இது, பூட்டுவாய் நின்று வலப்பக்கமிரண்டாமறைசென்று கீழறையினிறங்கி அவ்வழியே மேலறையிலேறியிறங்கி வலஞ்சென்று இடையிடையேயுள்ள குண்டுகளாகிய நான்கறைகளிலுஞ்சென்று மீண்டுமிறுதியறைசென்று முடியுமாறு காண்க. (இப் பாட்டிற்கு உரையெழுதப் படாமையாலும் சுத்தபாடந் தோன்றாமையாலும் பந்தத்திற்குப்பொருந்து மாறு இங்குச் சிறிது வேறுபடுத்தியெழுதப்பட்டிருக்கிறது.) 