தமிழ் நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் : தென்பெருங்கடல் ஆய்வுகள் சோவியத் அறிஞர் அலெக்சாந்தர் காந்திரதாவ் தமிழாக்கம் பி. இராமநாதன் க.மு; ச . இ . தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு அணிந்துரை வெளிநாட்டிலேயே பிறந்து வாழ்ந்துவரும் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு என்றாவது வரநேர்ந்தால் தங்கள் முன்னோர்கள் . வாழ்ந்துவந்த ஊரைக்காண விழைவார்கள். இது அவர்களின் வரலாற்று நாட்டத்தைக் காட்டுகிறது. அதேபோல் நாம் நம் இனத்தவர்களின் வரலாற்றையும் அவர்கள் வாழ்ந்த இடம் வாழ்ந்த முறை பெற்றிருந்த அறிவு பயன் படுத்திய கருவிகள், அவர்களின் நாகரிகம், பண்பாடு இவற்றைத் தெரிந்து கொள்வது என்பது இயல்பான மாந்த இனத்தின் உந்துதலான உணர்வு. இப்போதைய இந்திய நாடு பல்வேறு நாட்டினரால் படையெடுக்கப்பட்டு மக்களின் வரலாறு குலைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இனங்களின், மொழியினரின் கூட்டமைப்பாக இந்நாடு விளங்குகிறது. இந்நாடு எந்த இனத்தவரின் மூலப் பிறப்பிடம் என்பது மறைக்கப்பட்டுள்ளது. இன்றுவரை அதற்கான ஆய்வு முயற்சிகளும் முடக்கப்பட்டுள்ளன. எனினும் உலகெங்கணும் நிலவியல், மாந்தவியல் பற்றிய இயங்குமுறை பொது ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வில் கிடைக்கும் சான்றுகளையெல்லாம் இந்தியாவின் பெரு இனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு உரிமை கொண்டாடு கின்றன. அறிவியல் சான்றுகளைத் தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள முயல்கின்றன. குறிப்பாக ஆரிய இனம் அனைத்தையும் தமதாக்கி விழுங்கிவிட முயல்கிறது. இதற்கிடையில் 1974இல் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்த நூல்தான் அலெக்சாந்தர் கோத்திரதாவின் முப்பெருங் கடற் புதிர்கள்'. பசுபிக்குப் பெருங்கடல், தென் பெருங்கடல், அட்லாண்டிக்குப் பெருங்கடல் ஆக மூன்று பெருங்கடலையும் அதைச் சார்ந்த நாகரிக வரலாற்றையும் அந்நூல் ஆய்ந்திருந்தது. அதில் தென்பெருங்கடலைச் சார்ந்த நாகரிகங்களான தமிழ நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் ஆராயப்பட்டிருக்கின்றன. இதில் சிந்துவெளி நாகரிகம் ஆரியருடையது அல்ல என்று வலுவாக நிறுவி பல சான்றுகள் கூறப்பட்டிருந்தன. அடுத்து அது தமிழ் இலக்கியங்களின் கூற்றுப்படி நாவல் நிறைந்த நாவலந்தீவாக இருந்து மூழ்கிய நிலப்பரப்பின மக்களின் நாகரிகமாக இருக்கலாம் என்பதற்குச் சான்றுகளை நிறுவுவதாக அந்நூல் இருந்தது. அந் நூலும் முதற்பதிப்புடன் 1974க்குப் பிறகு இந்தியாவிற்குள் வராமற் போனது. தமிழ் (திராவிட) இன வரலாற்றை ஆய்ந்து காண்பதில் முகாமையான கூறுகள் குமரிக்கண்ட மூழ்கலைப் பற்றிய தென் பெருங்கடல் ஆய்வும், சிந்துவெளி நாகரிக ஆய்வும், உள்நாட்டின் தொல்லியல் ஆய்வுகளும் தான். ஏனெனில் இலக்கிய ஆய்வு நமக்குக் கிடைத்தவரை சில குறிப்புகளோடு நின்றுவிட்டது. மேலும் இலக்கியங்களில் அனைத்துப் பதிவுகளும் இடம்பெற்றுவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. கிடைத்திருக்கும் இலக்கியங்களும் மிகக் குறைவு. திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழ் நூல்கள் ஏராளம். மொழிவழி அகழ்வாய்வு முயற்சிகள் நடந்து வருகின்றன என்றாலும் அது ஒன்றுமே உறுதி செய்வதற்குப் போதுமானதாக இருக்கமுடியாது. அந்த அளவிற்கு சமற்கிருதத் தாக்கம் அனைத்து மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது. குமரிக்கண்டக் கடல் ஆய்வு பற்றியும் அதில் தமிழின் ஆய்வு பற்றியும் இந்திய அரசு முயற்சி எடுக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான வ.அய். சுப்பிரமணியம் எடுத்த இராமேச்சுவர ஆழ்கடல் ஆய்வு நடுவமே அவருக்குப் பின் மூடப்பட்டது. குமரியைக் கொடுங்கடல் கொண்டதாக சிலம்பில் வந்த குறிப்புக்குப் பின் சிலம்பில் இடம்பெற்ற புகார் நகரையே குணகடல் கொண்டது. தென்பெருங்கடல் பரப்பின் ஒரு பக்கம் தென் தமிழ் நாடு. இப்பெருங்கடலில் ஏற்படும் சிறுசிறு துளும்பலும் தமிழ் நாட்டின் கரையோரத்தில் பெரிய விளைவை ஏற்படுத்திவிடக் கூடியது. வெகினர் கண்டநகர்வுக் கொள்கைப்படி இப்போதுள்ள இந்தியத் திட்டு மடகாசுக்கர் அருகிலிருந்து நகர்ந்து ஆசியக் கண்டத்தில் மோதலினால் பனிமலை உயர்ந்தது. பனிமலை உயர உயர அதன் விளைவாக அதன் எதிர்புறமான குமரிக்கு அப்பாலுள்ள திட்டை படிப்படியாக கடல் கொண்டுவருகிறது. இந்தச் செயல்முறை தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. ஆழிப்பேரலை போன்ற திடீர் விளைவுகளால் பெருமளவு கண்டம் நீருக்குள் செல்கிறது. மேற்குத் தொடர்ச்சிமலை யென்று ஒன்று தென்னாட்டின் நடுநரம்பாக நிற்காமல் இருந்தால் இந்தத் தென்னாடு கடல் கோள்களால் இன்னும் பெரிய விளைவை எப்போதோ சந்தித்திருக்கும். இந்தக் கடல்கோள் செயல்பாடு அன்றிலிருந்து இன்றும் தொடர்ந்த நடைமுறையாகவே உள்ளது. இந்தக் கூற்று அறிவியல் லுக்கு மாறானதோ எதிரானதோ இல்லை. இதை ஆராய இந்திய அரசு எப்போதும் அக்கறை எடுத்துக் கொண்டதில்லை என்பதோடு இயல்பாக வெளிப்படும் உண்மை களையும் கண்டுகொள்வதில்லை. எனினும் முதன்முதலில் கடல் கடந்து வணிகம் செய்தது தமிழினம் என்பதற்குச் சான்றுகளாக, தமிழ்நாட்டிலிருந்து சென்ற அழகு செய்யப்பட்ட மணிகள் அய்ரோப்பா நாடுகளில் அருங் காட்சியகங்களில் உள்ளன. அவை இன்று கொடுமணல் அகழ் வாய்வில் கண்டெடுக்கப்படுகின்றன. வியன்னா அருங்காட்சியகத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன் நடந்த தமிழரொருவரின் கடல்வணிகப் பதிவு ஒன்று இருப்பதைத் தொல்லியல் அறிஞர் ஒருவர் அண்மையில் வெளி யிட்டார். இதெல்லாமும் தென் பெருங்கடல் வரலாற்றில் ஒரு பகுதி. எனவே, இலக்கியப் பதிவை மட்டுமே நாம் சான்றாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குமேல் அறிவியல் ஆய்வுகளிலும் மேற்கொள்ளத்தக்க சான்றுகள் இருப்பதாகவே நாம் கருதுகிறோம். நாற்பது ஆண்டுகட்கு முன் நிகழ்ந்த தனுக்கோடி கடற்கரை ஊர் மூழ்கலும் அதற்குப்பின் அண்மையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையும் கடற்கோள்கள் நிகழ்ந்து வருவதற்குச் சான்று பகர்கின்றன. சிந்துவெளி நாகரிகமும் எழுத்தும் தமிழினத்தைச் சார்ந்தன ) என்பதற்கு நடைமுறையில் அகழ்வாய்வுகள் நடத்தாமலேயே சான்றுகள் தோன்றிய வண்ணம் உள்ளன. சிந்துவெளியில் கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழிகள் தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் மட்டும் அல்லாமல் பரவலாகவே இப்போது கிடைக்கின்றன. சிந்துவெளி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கற்கருவிகள் தமிழ் ) நாட்டில் அண்மையில் கிடைக்கின்றன. இறந்த மக்களைப் புதைக்கும் வழக்கம் ஆரியர்களுடையது அன்று என்பதால் கட்டாயம் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் களுடையது அன்று. அதற்கு மேல் இருக்கு வேதத்தில் சிந்துவெளி அரப்பா மக்களின் நாகரிகத்தை யும் தாக்கி அந்த மக்களை அழிக்கும் எண்ணத்துடன் வரும் குறிப்புகள் இதை இன்னும் உறுதிப் படுத்துகின்றன. இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகளில் 90 விழுக்காட்டுக் கல்வெட்டுகள் தமிழ்நாட்டிலேயே கிடைத்தவை அவையனைத்தும் தமிழ்க் கல்வெட்டுகள். அவை இப்போது கர்நாடக மைசூர் காப்பகத்தில் முடக்கப் பட்டுள்ளன. அறுபதினாயிரம் எண்ணிக்கையில் முடக்கப்பட்ட அந்தக் கல்வெட்டுகள் பெயர்க்கப்பட்டாலே பல அரிய செய்திகளும் குறிப்புகளும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கு நடுவணரசும் மாநில அரசும் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை . இந்த நேரத்தில் முதல் பதிப்புடன் நிறுத்தப்பட்ட முப்பெருங் கடற் புதிர்கள் என்ற நூலைச் சரியான கோணத்தில் மொழிபெயர்ப்பு செய்தளித்த அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் முயற்சி மிகவும் போற்றத்தக்கது. பாவாணர் நூல்களை வெளிக்கொணர்ந்த பெரும் பெருமை சார்ந்தவரும், நெடுநாளைய தென்மொழிக் குடும்பத்தவருமான தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் அன்பு அண்ணார் இளவழகனார் வெளியிட்டு வரும் அரிய நூல் வரிசைக்கு அணிசேர்க்கும் வகையில் இந்தத் தமிழநாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் : தென் பெருங் கடல் ஆய்வுகள்' என்ற நூல் தமிழின வரலாற்று ஆய்வுக்கு மேலும் தூண்டுகோலாக அமையும் என்று நம்புகிறேன். துரை மா. பூங்குன்றன் பதிப்புரை உலகின் மிகத் தொன்மையான மொழி நம் தாய்மொழி தமிழ் ; பண்டை நாகரிகங்களுள் தலை சிறந்தது நம் தமிழ் நாகரிகம். ஆனால் நம் தமிழின் தொன்மையையும் நம் கலை, இலக்கியம், நாகரிகம், பண்பாடு, வரலாறு என்று பலவற்றின் பெருமை களையும் வந்தேறி ஆரியமும் அதன் பின் தோன்றல் களும் சீர்குலைத்து வந்துள்ளன என்பதை நாம் அறிவோம். இனப்பகைகளும் அவற்றின் அடிவருடி களும் காலம் காலமாக நம் மொழி மீதும், நம் இன வரலாற்றின் மீதும், பிறகூறுகளின் மீதும் வாய்ப்பு நேரும் போது மட்டுமின்றி வாய்ப்பை வலிய வர வழைத்தும், அரசியல் சாய்கால் பெற்றும், வெளிப் படையாகவும் கரவாகவும் தொடுத்து வரும் தாக்குதல்கள் அளவிறந்தன. குமரி முனைக்குத் தெற்கே சில நூறு கற்கள் நிலப்பகுதி இருந்து பின், இற்றைக்கு ஏறத்தாழப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகெங்கும் கடல் மட்டம் உயர்ந்த பொழுது கடலுள் மூழ்கியிருக்கலாம் என்று இன்றைய அறிவியல் ஏற்றுக் கொண்ட ஆய்வு முடிவைப் புறந்தள்ளி 'கடல் கொண்ட தென்னாடு ' பற்றி எழுதிய தமிழறிஞர்கள் அனைவரையும் தாக்கி ஏளனம் செய்து நூல் வந்துள்ளது. சிந்துவெளி நாகரிகம் தமிழ் நாகரிகமே என்ற உண்மையை மறைத்து ஆரிய நாகரிகமே என்று பொய்யாகப் புனைந்து நிலைநாட்டும் முயற்சி ஓர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட நடந்தது. இத்தகைய அறக்கேடுகளை எதிர்த்து உண்மையை மீட்டெடுக்கும் முயற்சிகள் பேரளவில் நடைபெற வேண்டியிருப்பினும் சிறிய அளவிலேனும் நடந்து வருவது ஓரளவு ஆறுதலளிப்பதாகும். இயற்கைச் சீற்றத் தால் அழிந்ததைவிட இனப்பகைகளாலும் அதன் பாதம் தாங்கிகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழிலக்கியங்கள் ஏராளமாகும். கிடைத்துள்ள ஓரளவு இலக்கியங்களும் தொல்லியல் ஆய்வுகளும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பிற நாட்டு நல்லறிஞர் ஆய்வுகளும் தமிழின் பெருமையையும் தமிழ் நாகரிகத்தின் சிறப்பையும் நன்கு வெளிப்படுத்தின. இச்சான்றுகள் இன்னும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. காட்டாக சில திங்கள்களுக்கு முன் மயிலாடு துறையில் கிடைத்துள்ள, தமிழ் எழுத்து பொறிக்கப் பட்ட கற்கோடரியைச் சுட்டலாம். கடல் கொண்ட குமரி, மாமல்லை, புகார் என்று பல கடல் அகழ்வாய்வுகளும் தரை அகழ்வாய்வுகளும் முழு அளவில் நடத்தப் படுமானால் உலகம் போற்றும் உண்மைகள் வெளி வரும். கன்னட நாட்டின் எருமையூரில் (மைசூரில்) பல தமிழர்கள் பல்லாண்டுகள் உசாவலின்றி சிறைக் கொட்டிலில் கிடக்கின்றனர். அவ்வாறே ஏராளமான தமிழ்க் கல்வெட்டுகள் அவ்வூரிலுள்ள, மைய அரசின் கல்வெட்டுத்துறை அலுவலகத்தில் அச்சிடப்படாமல் முடக்கப்பட்டுக் கிடக்கின்றன. அவை முழுவதும் வெளியிடப்படும் பொழுது நம் சான்றுகள் கூடும். கிடைத்துள்ள சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு 'குமரிக் கண்டக் கோட்பாடு' அறிஞர் களிடையே எழுந்தது. தமிழில் நாவலர் சோமசுந்தர பாரதியார், மயிலை சீனி வேங்கடசாமி, பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் முதலிய அறிஞர்கள் இது பற்றிய ஆய்வு நூல் படைத்தனர். மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தமிழே ஞால முதன் மொழி; தமிழே உலக மொழிகளுக்குத்தாய் ஆரியத்திற்கு மூலம்; மாந்தன் பிறந்தகம் குமரிக்ண்டமே என்று முப் பெரும் கோட்பாட்டை விளக்கிப் போந்தார். குமரிக்கண்டத்தில் பிறந்து சிறந்த தமிழ நாகரிகம் தெற்கிலிருந்து வடக்காகப் பரவி, சிந்து சமவெளிப் பகுதிக்கும் உலகில் பிற பகுதிகளுக்கும் பரவிய செய்திகள், கோண்டுவானா, இலெமூரியா , குமரிக்கண்ட கடல்கோள், மூன்று தமிழ்க் கழகங்கள் என்று பல செய்திகள் நம் கண்ணுக்குள்ளும் செவிக் குள்ளும் புகுந்து மூளைக்குள் பதிவாகி உட்கார்ந்து கொண்டுள்ளன. இவற்றுக்கு ஆதரவான ஆய்வு நூல்கள் மட்டுமன்றி எதிர்ப்பாக வரும் நூல்களையும் பார்க்கிறோம். இந்த நிலையில் சோவியத்து அறிஞர் அலெக்சாந்தர் காந்திராவ் எழுதியுள்ள ‘முப்பெருங் கடற் புதிர்கள்' (The Riddles of the three Oceans: 1974) என்ற ஆய்வு நூல் நம் கவனத்திற்கு உரியதாகும். அது பசுபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றைச் சார்ந்த நாடுகளின் பண்டைய நாகரிகங்களின் தோற்றம், அவற்றுக்கிடையே இருந்த தொடர்புகள் பற்றியதாகும். அந்நூலின் இரண்டாம் பகுதி இந்தியப் பெருங் கடல் என்று இன்று குறிப்பிடப்பெறும் தென் பெருங்கடல் பற்றியதாகும். அப்பகுதியின் தமிழாக்கமே உங்கள் கைகளில் தவழும் இந்நூல். இப்பகுதி தமிழ நாகரிகம் - சிந்துவெளி நாகரிகம் பற்றி பல அரிய செய்திகள் கொண்டது. இலெமூரியாக் கோட்பாட்டின் வன்மை - மென்மைகளையும் அது ஆய்வு செய்கிறது. தென் னாட்டைக் கடல் கொண்ட செய்திகள், சிந்துவெளி நாகரிகமும் அந்நாகரிகத்தின் முத்திரை எழுத்துகளும் தமிழர் (திராவிடர்) படைப்பே என்பதை நிறுவுவதற் கான வலுவான சான்றுகள், முதலியவற்றை இந்நூலில் ஆசிரியர் காட்டியுள்ளார். இவ்வறிஞர் ஆசியவியலாளர்; பண்டை நாகரிகங்களின் எழுத்துக்களைப் படித்தறியும் முயற்சி களில் ஈடுபட்டவர்; அறிவியல் செய்திகளைப் பொது மக்களுக்குப் புரியும் வகையில் எழுதியவர்; சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக்களை தமிழ் (திராவிடம்) எனக் கண்டுணர்ந்த சோவியத்து அறிஞர் குழுவினருள் ஒருவர். 17 நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரை களையும் படைத்தவர். அவருடைய உருசிய மொழி மூலப்படைப்பின் ஆங்கிலப் பெயர்ப்பு நூலை மிகச் சிறப்பாக தமிழாக்கம் செய்து தந்துள்ளார் நம் அறிஞர் பி. இராமநாதன். தனி வெளியீடாகவே வரும் அளவுக்கு விளக்கமான மிக நீண்ட முன்னுரையையும் எழுதியுள்ளார். அது ஒரு தனி ஆய்வாக விளங்கித் தோன்றுகிறது. (ஏற்கெனவே அவர் A New Account of the History and Culture of the Tamils, 1998; சிந்துவெளித் தொல்தமிழ நாகரிகம், 1999; ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். இந்தோ - ஐரோப்பியம் உட்பட பல்வேறு மொழிக் குடும்பங்களுக்குச் சென்றுள்ளனவும், தமிழின் தலைமையை நிலைநாட்டு வனவுமான, 22 +2 சொற்களைப்பற்றி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் 1977-81 இல் வெளியிட்ட கட்டுரைகளைத் தொகுத்து தலைமைத் தமிழ் என்ற பெயரில், பாவாணர் நூல் தொகுப்பில் ஒன்றாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அக்கட்டுரை களின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை விரிவான ஆங்கில LOGOT T/MIJUL60 Nostratics : The Light from Tamil - According to Devaneyan என்ற பெயரில் 2004இல் பி. இராம நாதன் வெளியிட்டுள்ளார்). அவருடைய அரிய முயற்சியையும் தளரத் தயங்காக் கடமை யுணர்வையும் போற்றி நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தமிழரின் நாடி நரம்புகளில் தமிழுணர்வைக் கொப்பளிக்க வைத்தவர் நம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள். அவர்தம் புதல்வர் மா. பூங்குன்றன் அவர்கள் தமிழியத் துறைகளில் தடம் பதித்து வருபவர். அவர் இந்நூலுக்குச் சிறப்பான அணிந்துரை அளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். இந்த நூலை உலகத் தமிழர் பேரமைப்பின் நான்காம் ஆண்டு நிறைவு விழா மாநாட்டில் வெளி யிட்டுப் பெருமைப்படுத்தும் தமிழர் தேசிய இயக்கத் தின் தலைவரும், ஓய்வறியாத் தமிழியக் கடமை ஆற்றும் அருமைத் தலைவரும் ஆன பழ. நெடுமாறனார் அவர் கட்கு எம் மனம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம். தமிழியப் புத்தகங்களின் பதிப்பில் தனியொரு முத்திரையைச் சிறப்பாகப் பதித்து வரும் தமிழ்மண் பதிப்பகம் இந்நூலை வெளியிடுவதில் பெருமைப்படு கிறது. தமிழுணர்வுள்ள தமிழர் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூலிது. பதிப்பாளர் பொருளடக்கம் முன்னுரை சோவியத் அறிஞர் அலெக்சாந்தர் காந்திரதாவ் (Alexander Kondradov) ரசிய மொழியில் எழுதிய முப்பெருங்கடற் புதிர்கள் (THE RIDDLES OF THE THREE OCEANS; Progress Publishers; Moscow) என்னும் நூலின் ஆங்கிலவாக்கம் 1974இல் வெளிவந்தது. அவர் ஆசியவியலாளர், பண்டை நாகரிக எழுத்துக்களைப் படித்தறியும் முயற்சிகளில் ஈடுபட்டவர்; அறிவியல் செய்திகளைப் பொது மக்களுக்குப் புரியும் வகையில் எழுதியவர் (17 நூல்கள்; நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள்). சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக் களை 1965 இல் திராவிட மொழி எனக் கண்டுணர்ந்த சோவியத் அறிஞர் குழுவினருள் ஒருவர். 2. 'முப்பெருங்கடற் புதிர்கள்' நூலில் அவர் உலகெங்கிலும் உள்ள பண்டைய நாகரிகங்களின் தோற்றம், அவற்றிற்கிடையில் லிருந்த தொடர்பு ஆகியவை பற்றி 1960 - 74 கால அளவில் கடலடிப் பரப்புத் தொல்லியல் (Underwater Archaeology) வெளிக்கொணர்ந்த புதிய செய்திகளோடு இணைத்து எழுதியுள்ளார். அந்நூலின் முதற் பகுதி (பக்.25 - 118 பசிபிக் கடல் சார்ந்த நாட்டு நாகரிகங்களாகிய ஈஸ்டர் தீவு நாகரிகம், தென் அமெரிக்கா பெரு நாட்டு நாகரிகம் முதலியவற்றைப் பற்றியது. பசிபிக் கடலில் இருந்து மறைந்து விட்டனவாக 19 ஆம் நூற்றாண்டில் கருதப்பட்ட கற்பனைக் கண்டங்கள் ஹவாய், பாலினீசியா, மைக்ரோனீசியா போன்ற வற்றையும் குறிப்பிடுகிறது. இரண்டாவது பகுதி இந்துமாக்கடல் பற்றியது : கீழே பத்தி 5ஐக் காண்க. மூன்றாவது பகுதி (பக்.203 - 253) அட்லாண்டிக் பெருங்கடலில் பழங்காலத்தில் இருந்து மறைந்ததாக எகிப்திய, கிரேக்க (பிளேடோ எழுதிய திமேயஸ் : Timaeus) புராணக் கதை கூறும் அட்லாண்டிஸ் கண்டம் பற்றியது. 3. நூலின் இறுதியில், பின்னுரையில் (Epilogue பக்254 - 267) காந்திரதாவ் தனது இறுதி முடிவாகக் கூறுவதைக் கருத்திற் கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். 1970களிலேயே அறிவியல் உலகம் ஏறத்தாழ முழுமையாக ஏற்றுக் கொண்டுவிட்ட கண்ட நகர்வுக் கொள்கைTheory of Continental Drift யின்படி, கண்டம் அளவுக்குப் பெருநிலப்பரப்பு எதுவும் கடலடியில் என்றும் மூழ்கிப் போகவில்லை என்ற முடிவை அவரும் ஏற்றுக் கொண்டு புத்தக இறுதியில் கூறுவது வருமாறு: ''தொன்மை நாகரிகங்களைப் படைத்த மாந்த இனங்களைக் கொண்டிருந்த (கண்டம் போன்ற பெருநிலப்பரப்புகள் எவையும் எந்தக் காலத்திலும் இந்தியா, பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்கள் எவற்றிலும் இருந்திருப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை எனலாம்" “It is highly improbable that big land masses, inhabited by large numbers of people who created ancient civilisations ever existed in the Indian, Pacific or Atlantic Oceans". (p. 267). 4. ஆனால் அதே நேரத்தில் இன்றுள்ள நிலப்பகுதியை ஒட்டிய கண்ட த்திட்டுப் (Continental Shelf) (கடற்கரையிலிருந்து சில நூறு கல்தொலைவு கடலுக்குள் செல்வது; கடல் மட்டத்திலிந்து ஆழம் ஏறத்தாழ 200 - 300 அடி மட்டுமே) பகுதிகளில் பண்டைய நாகரிகத் தொட்டிலாக இருந்த பகுதிகள் இருந்து, பின்னர் இன்றைக்கு ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் (பனியூழி முடிவில்) கடல் மட்டம் உயர்ந்த பொழுது கடலுள் மூழ்கியிருக்க லாம் என்ற செய்தியை இன்றும் அறிவியல் ஏற்றுக் கொள்கிறது என்பதையும் காந்திராவ் தமது முடிவுரையில் சுட்டியுள்ளார். 5. காந்திராதாவ் நூலின் இரண்டாம் பகுதி (இந்தியப் பெருங்கடல்: பக். 121 - 200) தமிழா திராவிட நாகரிகம் பற்றியும் சிந்துவெளி நாகரிகம் பற்றியும் பல அரிய செய்திகளைத் தருகிறது. சிந்துவெளி, சுமேரியா, எலாம், எகிப்து நாகரிகங்களைப் பற்றி 1970இல் பல்வேறு அறிவியல் துறைகளின் அன்றைய வளர்ச்சி நிலையில் (அதுவரை நிகழ்ந்த கடலடிப்பரப்பு அகழ்வாய்வு கள் உட்பட) தெரிந்திருந்த செய்திகள் அவை. இலெமூரியாக் கோட்பாட்டின் வன்மை - மென்மைகளையும் அவற்றின் அடிப் படையில் ஆய்வு செய்கிறது. குறிப்பாக காந்திரதாவ், (கழக இலக் கியங்கள், இறையனார் அகப்பொருள் உரை, அடியார்க்கு நல்லா ருடைய சிலப்பதிகார உரை ஆகியவற்றில் வரும்) கடல் கொண்ட தென்னாடு பற்றிய செய்திகள் ; சிந்துவெளி நாகரிகமும் அந்நாகரிக முத்திரை எழுத்துக்களும் திராவிடர் படைப்பே என்பதை நிறுவுவதற்கான (1974 வரை கிட்டியிருந்த) வலுவான சான்றுகள் ; ஆகியவற்றையெல்லாம் திறம்படப் பயன்படுத்தி யுள்ளார். காந்திரதாவ் (1974) நூலிற் கண்டதும் முன்பத்தியிற் குறித்துள்ளது மான முடிவானது, கடந்த முப்பதாண்டுகளில் வளர்ச்சியடைந் துள்ள பல்வேறு அறிவியற்புல ஆய்வுகளின் ஒளியில் வலுப் பட்டுள்ளதே யன்றி வலுவிழக்கவில்லை. இலெமூரியாக்கண்டம் என பெருநிலப்பரப்பு ஒன்று இல்லை என்பதே அறிவியற் புலங்களின் இன்றைய நிலை ; எனினும் குமரிக்குத் தெற்கே சிலநாறு மைல்கள் நிலப்பகுதி இருந்து பின்னர் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலுள் மூழ்கியிருக்கலாம் என்பதை இன்றைய அறிவியல் ஏற்றுக் கொள்கிறது என்பதைப் பத்தி 4இல் கண்டோம். 6. தமிழ் திராவிட நாகரிகம் பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தென்னாட்டில் (அல்லது குமரிக்குத் தெற்கே சில நூறுகல் தெற்குவரை - இன்று கண்டத்திட்டு , Continental Shelf ஆக கடலுக்குள் இருக்கும் பகுதி - பரவியிருந்த நிலப் பகுதியில்) உருவாகியது; அது வடக்கு நோக்கிப் பரவி சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியது. அந்நாகரிகத் தாக்கமே எலாம் , ஒபெய்து, சுமேரிய, எகிப்து பண்டை நாகரிகங்களையும் உருவாக்கி யிருக்கலாம்; என்பனவற்றைப் பல்வேறு ஆய்வுப் புலங்களின் இன்றைய நிலையும் ஆதரிப்பதை இம்முன்னுரையில் இனிக் காண்போம். அதாவது, காந்திரதாவ் 1974இல் தம் நூலின் இரண்டாம் பகுதியில் குறித்துள்ள கருதுகோள்களின் பலவும் மேலும் உறுதிப்பட்டுள்ளன என்பதைக் காண்போம். 7. காந்தி தாவ்போன்ற மேனாட்டு அறிஞர் சிலர் தமிழ(திராவிட நாகரிகத்தின் தொன்மை, தென்மை பற்றியெல்லாம் பல ஆதாரங்களை முன்வைத்துள்ள போதிலும் இன்றும் இந்தியாவிலும் சரி, பிறநாடு களிலும் சரி அக்கருத்துகள் அறிவுலகத்தால் பொதுவாக ஏற்கப்பட வில்லை என்பது வருந்துதற் குரியது. இன்றைய நிலையிலும் பல நாடுகளிலுள்ள பல்துறை அறிஞர்களும் பொதுவாக ஏற்றுக் கைக்கொண்டுள்ள (தவறான) கருது கோளின்படி தொல் திராவிட மொழி பேசுநர் தாயகம் வடகிழக்கு ஈரான் பகுதியாகும். அங்கிருந்து ஏறத்தாழ கி.மு. 3000ஐ ஒட்டி அவர்கள் இந்தியா, தென்னிந்தியா, இலங்கையை நோக்கி அதாவது தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து சென்றனர். செல்லும் வழியில், பேருந்து வரும்பொழுது ஆங்காங்கு சிலர் இறக்கி விடப்படுவது போல், திராவிட மொழி பேசும் குழுக்கள் சில ஆங்காங்கு விட்டு வரப்பட்டன. [கே. வி. சுவலெபில் 1972) : "திராவிடர்கள் இறக்கம்" - (The descent of the Dravidians); திராவிட மொழியல் பற்றிய பன்னாட்டு ஆய்விதழ் (IDL) தொகுதி 2; பக். 57-63] பிரித்தானியக் கலைக் களஞ்சியத்தில் திராவிட மொழிகள் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையிலும் இக்கருத்தையே கூறுகிறார். தமது தென்னிந்திய வரலாறு (IV ம் பதிப்பு, 1976) நூலில் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியும் இது நடந்திருக்கக் கூடாதது அல்ல" (not unlikely) என்கிறார். திராவிடர் இறக்கம் அல்லது ஏற்றம் என்ற இரண்டு கோட்பாடுகளிலும் எதை ஏற்பது என்பது பற்றி இப்பொழுது முடிவுகூற இயலாது என்பவர்கள் சுவிரா ஜெய்ஸ்வால் (1974) ஜே. ஆர். மார் (1975); பர்டன் ஸ்டெய்ன் (1998) ஆகியோராவர். 8 திராவிட மொழிபேசுநர் வடக்கு நோக்கிப் பரவினர் என்னும் "திராவிடர் ஏற்றம் (Dravidian ascent from south) கொள்கையை ஏற்று வலியுறுத்தியுள்ள அறிஞர்கள் ஹெச். ஆர். ஹால்; ஹீராஸ் பாதிரியார், பி. தி. சீநிவாச ஐயங்கார், வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், கா. சுப்பிரமணிய பிள்ளை , மறைமலையடிகள், யு. ஆர்.எஹ்ரென் பெல்ஸ், சேவியர். தனிநாயகம் அடிகளார், ஞா. தேவநேயப் பாவாணர், கே.கே.பிள்ளை போன்றோர் ஆவர். இந்தத் "திராவிடர் ஏற்றம்" (Dravidian Ascent) கொள்கையை (1) மாந்தனின் தோற்றமும் பரவலும் பற்றிய இன்றைய அறிவியல் முடிவுகள் (2) மொழியின் தோற்றமும் பரவலும் பற்றிய நம் கால அறிவியல் முடிவுகள் (3) அகழ் வாய்வுகள் (சிந்துவெளி மற்றும் கொற்கை, கொடுமணல், ஆதிச்ச நல்லூர் போன்ற இடங்களில் அண்மையில் நடந்த அகழ்வாய்வுகள்) (4) சிந்து வெளி நாகரிக முத்திரை எழுத்துகள் தொல்தமிழே என்ற நம் காலத்திய வல்லுநர் முடிவுகள் ஆகியவையும் ஆதரிப்பதை நிரலே காண்போம். க. மாந்த இனத்தோற்றமும் பரவலும் 9. புடவியின் (பிரபஞ்சத்தின்) அகவை சுமார் 1200 கோடியில் லிருந்து 1500 கோடி ஆண்டுவரை இருக்கலாம். உலகம் உட்பட ஞாயிற்றுக் குடும்பத்தின் வயது ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகள் ஆகும். உலகில் முதன் முதலில் உயிர்கள் தோன்றியது ஏறத்தாழ 300 கோடி ஆண்டுகட்கு முன்னர்த்தான். முதலில் தோன்றியவை பாக்டீரியா போன்ற ஓரணு உயிரிகளே. இன்றுள்ள அனைத்துச் செடிகொடிகளும் விலங்கு - பறவைகளும் ஒரே மூலத்தில் தோன்றிய வையே ஆகும். இவ்வுயிரின வகைகளில் 15 இலக்கம் தனி இனங்கள் (Species) கண்டுபிடிக்கப்பட்டுப் பெயர் சூட்டப் பட்டுள்ளன. இன்னும் இனம் கண்டு பிடிக்கப்படாதவையும், பெயர் சூட்டப் படாதவையும் (குறிப்பாக நிலைத்திணை, நுண்ணுயிர்கள், சிற்றுயிர்கள்) மும்மடங்கு இருக்கும் என்று அறிவியலார்கள் கருதுகின்றனர். இன்றைக்கு 24 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தடவையும், ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு தடவையும் பேரழிவுகள் ஏற்பட்டு அந்தந்தக் காலக்கட்டத்தில் இருந்த உயிரினங்களுள் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. (மிகப் பெரிய விண் கொள்ளிகள் (Meteors) உலகில் விழுந்ததால் அப் பேரழிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர்). இப்பொழுது உள்ள பாலூட்டிகள் (Mammals) அனைத்துமே 16 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஒரு சிறிய (எலி போன்ற பருமனுடைய) விலங்கி லிருந்து படிமலர்ச்சி அடைந்தவையே. குரங்குகளுக்கும் மாந்த னுக்கும் மூதாதையான இலெமூர் (Lemur) விலங்கு (ஏறத்தாழ 250 கிராம் எடை) உருவான காலம் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். பூச்சிகள் தோன்றி 50 கோடி ஆண்டும் எறும்புகள், தேனீக்கள் தோன்றி 10 கோடி ஆண்டும், கரையான் தோன்றி 28 கோடி ஆண்டும் ஆகின்றன.) 10. மாந்தன் எப்படித் தோன்றினான்? மாந்தக் குரங்கினத் துக்கும் (சிம்பன்சி, கொரில்லா) மாந்தனுக்கும் பொதுவான வேறு ஓர் உயிரினம் இன்றைக்கு ஏறத்தாழ 50 இலக்கம் ஆண்டுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்திருக்க வேண்டும் என்பது அறிவியல் முடிவு. அந்தப் பொது உயிரினத்தின் பாசில் படிவுகள் எவையும் இன்னும் கிடைக்கவில்லை . (Time :17.1.2000) இன்று உலகெங்கும் உள்ள 650 கோடி மாந்தர்களுமே (அதாவது திராவிடர், இந்தோ ஐரோப்பியர், மங்கோலியர், செமித்தியர், அமெரிக்க இந்தியர் ஆகிய அனைவருமே) ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் (Home Sapiens Sapiens or Anatomically Modern Humans) என்னும் ஒரே இனத்தைச் சார்ந்த வர்கள். இவ்வினம் ஆப்பிரிக்காவில் இன்றைக்கு ஒன்றரை இலக்கம் அல்லது ஓர் இலக்கம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரே தாயிடம் இருந்து தோன்றியது என்பது இன்றைய அறிவியலார் அனைவரும் ஏற்ற முடிவு. எனினும் ஏறத்தாழ மாந்தனையொத்த "முன்மாந்த (Hominid)) இனங்கள் கடந்த 48 இலக்கம் ஆண்டுகளில் தோன்றிச் சில பல இலக்கம் ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் முற்றிலும் அழிந்தொழிந்து விட்டன. (அவற்றுள் ஹோமோ எரக்டஸ் என்ற இனமும் அடங்கும். அது மட்டுமே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிப் பிற கண்டங்களிலும் பரவியிருந்தது. குரோமக்னான் மனிதன், பீகிங் மாந்தன், ஹீடல்பர்க் மாந்தன், சாவக மாந்தன், அத்திரம்பாக்கம் பாசில் மாந்தன் ஆகியவர்கள் (ஏறத்தாழ 3 இலட்சம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவர்கள்) இந்த ஹோமோ எரக்ட்ஸ் வகையைச் சார்ந்தவர்களே, ஐரோப்பாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்து பின்னர் அடியோடு அழிக்கப்பட்டுவிட்ட நியான்டர்தல் (Neandarthal) இனமும் முன்மாந்த இனமே). 11. இப்பொழுதுள்ள மாந்தர்களாகிய AMH வகையைச் சார்ந்த நம் மாந்த இனம், கடந்த ஒன்று அல்லது ஒன்றரை இலக்கம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பின்வருமாறு பரவியது - அதாவது, சைபீரியாவுக்கு இன்றைக்கு 30,000 ஆண்டுகளுக்கு முன்னரும் ஐரோப்பாவுக்கு 40,000 வட/தென் அமெரிக்காவுக்கு 30,000 - 12,000 ஆஸ்திரேலியாவுக்கு 50,000 ஜப்பானுக்கு 30,000 நியூகினி தீவுக்கு 32,000 பசிபிக் தீவுகளுக்கு 4000 – 1000 (மைக்ரோனிசியா, பாலினீசியா) பரவினர் என்பது வல்லுநர் கருத்து ஆகும். கண்டங்கள் நகர்வுக் கொள்கையின் படி (Continental drift) கண்டங்கள் கடந்த 25 கோடி ஆண்டுகளாகப் பிரிந்து நகர்ந்துள்ளன. எனினும் உலகில் இன்று உள்ள கண்டங்கள் எல்லாம் ஏறத்தாழ இப்போதுள்ள உருவை ஏறத்தாழ ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்து விட்டன. அதற்குப் பின்னர், கண்ட ம் அளவுக்கு (Continental proportions) பெரு நிலப்பகுதி எதுவும் கடலுக்குள் மூழ்கவில்லை . ஆயினும் பனியூழி முடிவில் கி.மு. 8000 வாக்கில் (பனிக்கட்டி உருகி கடல் மட்டம் சுமார் 300 அடி உயர்ந்ததால் உலகெங்கும் கடலோரப் பகுதி (Continental shelf) ஏழத்தாழ - இருநூறு கல் அளவுக்கு கடலுள் மூழ்கியது. அவ்வாறு அக்காலக் கட்டத்தில் தமிழகத்தைச் சுற்றியும் (தென் திசை உட்பட) சில நூறு கல் (மைல்) தொலைவு கடலுள் மூழ்கியிருக்கலாம். அவ்வாறு மூழ்கிய நிலப்பகுதியையே கழக இலக்கியங்களும் களவியல் உரையும் சுட்டு கின்றன என்பதே இன்றைய அறிவியலுக்குப் பொருந்துவதாகும். ஆப்பிரிக்காவிலிருந்து மாந்தன் ஏறத்தாழ 50,000 ஆண்டுகட்கு முன்னர் ஆத்திரேலியா, மேற்கு ஆசியா போன்ற பகுதிகளுக்குச் சென்றது தென்னிந்தியா வழியாக இருக்கலாம்; அக்காலக் கட்டத்தில் இப்பொழுது உள்ளது போலவே எல்லாக் கண்டங்களும் இருந்தன வெனினும் நிலப்பகுதி சில நூறுகல் விரிவாக இருந்திருக்கும். இந்தியக் கரை சார்ந்த கண்டத்திட்டுப் பகுதியில் அதாவது கடலோர நிலப்பகுதியில் (Continental Shelf). ஆழ்கடல் அகழாய்வு செய்தால் இது பற்றிய சான்றுகள் கிடைக்கலாம் என்று கூறுகிறார் பிளெமிங் (2004). இன்றைய மாந்தனிடம் உள்ளவை 23 x 2 குரோமோசோம்கள். அவற்றில் அடங்கிய மரபணுக்கள் (Genomes) எண்ணிக்கை 30,000. நமது மரபணுக்களுக்கும் சிம்பன்சி மரபணுக்களுக்கும் 9850 விழுக்காடு ஒற்றுமை உண்டு. (ஒன்றரை விழுக்காடே மரபணு நிலையில் சிம்பன்சியிலிருந்து மாந்தன் வேறுபட்டவன் என்றாலும் மாந்தன் எவ்வளவு மாபெரும் கொடுமையான உயிரியாக மாறி விட்டான்!). 12. கண்டங்கள் நகர்வுக் கொள்கை, மற்றும் கண்டங்களின் கடலோரப் பகுதிகள் கடலுள் மூழ்கிய செய்தி ஆகியவற்றின் அடிப் படையில் கழக நூற்களிற் காணும் கடல்கோள் செய்திகளை இக்கால அறிவியலுக்கேற்ப விளக்க வேண்டியுள்ளது. குமரி முனைக்குத் தெற்கில் நிலப்பகுதிகள் கடல்கோளில் மூழ்கிய செய்தியைக் கலித்தொகை 104ம் சிலப்பதிகாரம் காடுகாண் காதையும் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியத்தின் முதல் உரைகாரர் ஆகிய (கி. பி. 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த) இளம்பூரணரும் இதைக் குறிப்பிடுகிறார். அவருக்குப் பின்னர் வந்த இறையனார் அகப்பொருள் உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் இச் செய்தியை மேலும் விரிவுபடுத்தி, சற்று மிகைப்படுத்திக் கூறுகின் றனர். பண்டைத் தமிழிலக்கியம் கூறும் இக்கடல்கோள் செய்தியைப் பற்றி எழுதப்பட்டுள்ள ஆய்வுரைகள் வருமாறு: i) ச. சோமசுந்தர பாரதி (1913) தமிழ்ப் பண்டை இலக்கியங்களும் தமிழகமும், சித்தாந்த தீபிகா XIV ii) வி. ஜே. தம்பி பிள்ளை (1913) : மாணிக்கவாசகர் தொன்ம வரலாறு தமிழியன் ஆண்டிகுவாரி II - 1 iii) மறைமலையடிகள் (1930) : மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் iv) ஏ. எஸ். வைத்யநாத ஐயர் (1929) : ''கீழைநாடுகளின் பிரளய தொன்மங்கள்'' : பம்பாய் வரலாற்றுக் கழக ஜர்னல் II - 1 v) ஜே. பெரியநாயகம் (1941) மனுவின் பிரளயம் : தி நியூ ரிவியூ XI vi) ஹீராஸ் பாதிரியார் (1954) தொல் இந்தோ நண்ணிலக்கரை நாகரிக ஆய்வுகள் இயல் IV பக். 411-439 சதபத பிராமணம் 1, 8 முதலியவற்றில் கூறப்படும் "மனு பிரளயம்" திராவிடத் தொன்மத்திலிருந்து உருவாகியது என (iii) உம் (iv) உம் கூறுகின்றன. சுமேரியப் பிரளயக் கதைகூடப் பழந்தமிழ்க் கடல்கோள் தொன்மத்திலிருந்து உருப்பெற்றதே என (1) ம் (vi) ம் கருதுகின்றன. 13. இந்திய மாக்கடலில் பழங்காலத்தில் ஒரு கண்டம் இருந்து அது கடலில் மூழ்கி விட்டது என்று 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் ஹேக்கலும் வேறு சிலரும் கருதி அதற்கு "லெமூரியா" என்ற பெயரையும் இட்டனர். ஆனால் இன்றுள்ள அறிவியலறிஞர்களின் ஒருமித்த கருத்து என்ன? கண்டம் அளவுக்குப் பெரிய நிலப் பரப்பு எதுவும் எந்தக் காலத்திலும் கடலுள் மூழ்கிடவில்லை என்பதே அவர்கள் முடிவு எனக் கண்டோம். இப்பொழுது அறிவியல் ஏற்றுள்ளது கண்ட நகர்வு மற்றும் பூமிப்பாளங்கள் கோட்பாடே (Continental drit and Plate techtonics) யாகும். ஆயினும் கி.மு. 8,000ஐ ஒட்டி உரம் (WURM) பனியூழி இறுதியில் கடல் மட்டம் உயர்ந்து உலகெங்கும் ஏறத்தாழ இருநூறு - முந்நூறு கல் அளவுக்கு கடற்கரைப் பகுதி கடலில் மூழ்கிவிட்டது என்பதை இப்புதிய கோட்பாடும் ஏற்றுக் கொள்கிறது. அக்கடல்கோள் காலத்திற்கு முன்னர் இந்துப் பெருங்கடலில் உள்ள தீவுகள் மூலமாக ஆப்பிரிக்காவையும் தென்னிந்தியாவையும் இணைத்த வால் போன்ற நிலப்பகுதிகளும் சில (பின்னர் மூழ்கி விட்டவை) இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. (வால்டர் பேர் சர்வீஸ் ; The Roots of Ancient India, 1971). இலெமூரியாக் கண்டக் கொள்கை நிலவி வந்த காலத்திலும் கூட ச. சோமசுந்தரபாரதி, மயிலை சீனி வேங்கடசாமி போன்ற சிறந்த அறிஞர்கள் குமரிக்குத் தெற்கில் கடலுள் மூழ்கிய பகுதி கண்டம் அளவினதன்று; சிறு நிலப்பகுதியாக இருக்கலாம் என்றே குறிப்பிட்டுள்ளனர். கா. அப்பாத்துரையாரும் 'கடல் கொண்ட தென்னாடு' என்று குறிப்பிட்டதை உணர்க. இப்பொழுது இலெமூரியாக் கண்டக் கொள்கை ஆதாரமற்றது என்று நிறுவப் பட்டு விட்டதைச் சாக்காக வைத்துக் கொண்டு சுமதி இராமசாமி தனது கற்பனைப் புவியியலாளர்களும், பேரழிவு வரலாறுகளும்; மூழ்கிவிட்ட இலெமூரியா : Fabulous geographers, catastrophic Histories : The Lost Lemuria (2004: பெர்மனென்ட் பிளாக், டெல்லி) என்னும் நூலில் "கடல் கொண்ட தென்னாடு" பற்றி எழுதிய தமிழறிஞர்கள் அனைவரையும் தாக்கி ஏளனம் செய்துள்ளார். 1950களுக்குப் பின் "லெமூரியாக் கண்டம் கொள்கையை அறிவியல் அறவே கைவிட்டு விட்டது என்பது உண்மைதான். ஆனால் சுமதி இராமசாமி ஒன்றைக் குறிப்பிட மறுக்கிறார். அது என்ன? கலித்தொகை, சிலப்பதிகாரம், பிற்கால உரையாசிரியர் நூல்கள் சுட்டும் கடல் கொண்ட தென்னாடு சிறிய அளவினதாக இருந்திருக்கலாம் என்று தமிழக அரசு 1972 இல் வெளியிட்ட தமிழ்நாட்டு வரலாறு - தொல் பழங் காலம் போன்ற நூல்கள் குறிப்பிடுவதை அவர் கண்டு கொள்ள வில்லை. அன்றைய 'நாடு' என்பது இந்தியா' 'தமிழ்நாடு' போன்ற பெருநிலப் பகுதியன்று. இன்றைய வட்ட(தாலுகா) அளவிற்குள் கூட இரண்டு - மூன்று நாடுகள் உள்ளனவே. உரையாசிரியர்கள் குறித்த 49 நாடுகளும் சேர்ந்து கண்டம் அளவுக்கு இருந்திருக்க வேண்டி யதேயில்லை . முன் பத்தியில் கூறியது போல கி.மு. 8,000ஐ ஒட்டி கண்டத் திட்டுப்பகுதி கடலில் மூழ்கியதையே கழக நூல்களில் உள்ள கடல்கோள் செய்திகள் கூறுவதாகக் கொண்டால் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு களுக்குக் கழக (சங்க) இலக்கிய கடல்கோள் செய்தி முற்றிலும் இசைவதே யாகும் என்பது தேற்றம். (காண்க பி. இராமநாதன் 1998, 2003, 2004). 14. இவ்வாறு தமிழ், தமிழர் செய்திகளைக் கொச்சைப்படுத்தி எழுதுவது இவ்வாசிரியருக்கு வழக்கமானதே. தி இந்தியன் எகனாமிக் அண்ட் சோசியல் ஹிஸ்டரி ரிவியூ 38 - 2 ஏப்ரல் - சூன் 2007 இதழில் சுமதி ராமசாமி "இனங்களின் எச்சங்கள் : தொல்லியல் (தமிழ்த் தேசிய உணர்வு, சிந்துவெளி நாகரிகத்தின்பால் ஈர்ப்பு என்று ஒரு கட்டுரை எழுதினார். சிந்துவெளி நாகரிகமும் அந்நாகரிக முத்திரை எழுத்துகளும் திராவிடம் (தொல் தமிழ் ) சார்ந்தவையே என்று சிறந்த ஆய்வாளர்கள் கமில் சுவெலபில் (1990: திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம், இயல் 6 : திராவிட மொழிகளும் ஹாரப்பா மொழியும்) அஸ்கோ பர்போலா (ப்ரண்ட் லைன் அக் 24, 2000) கருதுவதை யெல்லாம் அக் கட்டுரையில் சுமதி ராமசாமி கண்டு கொள்ளவில்லை. சிந்துவெளி நாகரிகத்தின் தமிழ்ச் சார்பை வலியுறுத்தும் தமிழறிஞர்களை யெல்லாம் (பர்போலா, பார்சர்வீஸ், சுவலெபில் போன்றவர்கள் ஆய்வுகளின் அடிப்படையில் எழுதுபவர்கள் உட்பட), அவர் எள்ளி நகையாடி யுள்ளார். உ. மொழியின் தோற்றமும் பரவலும் 15. இன்று பின்வரும் விளக்கப்படி ஏறத்தாழ 6000 மொழிகள் உலகில் பேசப்பட்டு வருகின்றன: ஒவ்வொரு மொழிகள் (2)இல் கண்ட மொழியையும் எண்ணிக்கை மொழிகளைப் பேசுநர் பேசுவோர் தொகை எண்ணிக்கை (கோடியில்) (1) (2) (3) (1) 10 கோடிக்கு மேல் 8 மொழிகள் (சீனம், ஸ்பானிஷ், ஆங்கிலம், இந்தி, வங்காளி, போர்ச்சுகீசு, ரசியன், சப்பானியம் 240 கோடி (ii) - 10 கோடி 72 (இந்த 72 மொழிகளையும் (6 கோடி பேர் பேசும் மற்றும் அடுத்த நிலை 239 தமிழ் இப்பிரிவில் மொழிகளில் பேசுவோர் அடங்கும்) எண்ணிக்கை ' அடிப்படையில் முதல் 162 மொழிகளையும் சேர்த்து மொத்தம் 234(72+162) மொழிகள் பேசுவோர் எண்ணிக்கை) 336 கோடி (iii) 10 இலட்சம்.1கோடி 239 (iv)1 இலட்ச ம் 10 இலட்சம் 795 ii) இல் எஞ்சிய 77 10000 -1 இலட்சம் 1605 (239-12) மொழிகளையும் 2400 (IV) (v) இல் குறித்த 5740 மொழிகளையும் பேசுவோர் எண்ணிக்கை 24 கோடி (v) பத்தாயிரம் பேருக்கு குறைவு 1000 - 9999 1782 100 – 999 1075 10 - 99 302 1- 9 181 3340 3340 6059 மொழிகள் - 600 கோடி மக்கள் (இந்தி, மைதிலி, ராஜஸ்தானி முதலியவற்றை ஒரே இந்தி மொழியாகக் கொள்வதா? தனித்தனி மொழிகளாகக் கொள்வதா? இது பற்றி எல்லாம் மொழியிலாளரிடம் கருத்து வேறுபாடு உண்டு. 6000 அல்லது 6059 என்பதெல்லாம் ஒரு குத்துமதிப்பேயாகும்.) இந்த 6059 மொழிகளில் 4 விழுக்காடு ஆகிய 242(8+72+162) மொழிகளைப் பேசுவோர் எண்ணிக்கையான 576 கோடியானது மொத்தம் 600 கோடி மக்களுள் 95 விழுக்காடு ஆகும். மீதி 96 விழுக்காடு ஆகிய 5817 மொழிகளைப் பேசுவோர் வெறும் 24 கோடி மக்களேயாவர் (அறுநூறு கோடியில் அவர்கள் வெறும் நான்கு விழுக்காட்டின ரேயாவர்) 16. இன்று உலகில் உள்ள மொழிகள் அனைத்தும் ஒரே முதன் மொழியிலிருந்து தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்ற கொள்கை 19 ஆம் நூற்றாண்டின் மாக்ஸ்முல்லருக்கும் இசைவானதே. 20 ஆம் நூற்றாண்டில் ஞால முதன் மொழி ஆய்வில் ஈடுபட்ட மேனாட் டறிஞர்கள் பெதர்சன், திராம் பெத்தி, சுவாதெசு, கிரீன்பெர்க், மெரிட் ரூலன், இல்லிச் சுவிதிச், தால் கோபால்ஸ்கி, செவரோஸ்கின், ஸ்தாரோஸ்தின், பாம்ஹார்டு மற்றும் கெர்ன்ஸ் போன்ற பலராவர். பல்வேறு மொழிக் குடும்பங்களையும் பின்வருமாறு ஒரு சில பெருங் குடும்பங்களாக (Super families) வகைப்படுத்தலாம் என்பது அவர்கள் கண்டுள்ள உண்மையாகும். i). நாஸ்திராடிக் (இந்தோ - ஐரோப்பியன், திராவிட மொழிகள், உராலிக், அல் தாய்க், கார்த்வெல்லியன், ஆப்ரோ - ஏசியாடிக் - அதாவது செமித்திய - ஹாமித்தியக் குடும்பம், ஆகிய மொழிக்குடும்பங்கள் இதில் அடங்கும்). கிரீன்பெர்க் வகுத்துள்ள யூரேசியாடிக் பெருங் குடும்பத்துக்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லை. யூரேசியாடிக் - கில் அடங்கியவை எத்ருஸ்கன், இந்தோ - ஐரோப்பியன், உராலிக் - யூகாகீர், அல் தாய்க், கொரியன் - சப்பானியம் - ஐனு, கில்யாக், சுகோதியன், எஸ்கிமோ - அல்யூத் ஆகிய மொழிக்குடும்பங்களாகும். 2000 அக்டோபரில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பத்ரி ராஜு கிருஷ்ணமூர்த்தியை கிரீன்பெர்க் சந்தித்த பொழுது, "திராவிட மொழி யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் சகோதரியாக இருக்கலாம். மகளாக இருக்க முடியாது'' எனத் தெரிவித்துள்ளார். (Bh. Krishnamurthi. The Dravidian Languages; 2003, பக். 46). இதிலிருந்து ஸ்லாவ், இரானியன், வேதமொழி சமஸ்கிருதம், கிரீக், இலத்தீன், கெல்திக், செருமானியம் போன்ற மொழிக் குடும்பங்களுக் கெல்லாம் தாயான இந்தோ ஐரோப்பியத்தை விடத் தொன்மை வாய்ந்தது திராவிட மொழிக்குடும்பம், அதாவது பழந்தமிழ் என்று உணரலாம். ii. சீன - காகேசியன் iii. ஆஸ்திரிக் (முண்டா போன்றவை) iv. அமெரிக்க இந்திய மொழிகள் V. இந்தோ - பசிபிக் vi. கொய்சான் vii. காங்கோ - சகாரா பல்வேறு மொழிக்குடும்பங்களை இணைத்து அவற்றுக்கு மூலமான மொழிப் பெருங்குடும்பங்களைக் காணும் ஆய்வாளர்களுள் சிலர் அதற்கும் மேலே போய் ஞால முதன்மொழி (மாந்தனின் முதல் தாய்மொழி) ஆய்வுக்கும் சென்றுள்ளனர். மெரிட் ரூலன் தனது மொழிகளின் தோற்றம் - மொழிகளின் கொடிவழி ஆய்வு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், 1994) நூலின் பக்கம் 277 இல் கூறுவது வருமாறு: "பெரும்பாலான மொழியிய லறிஞர்கள் ஒத்துக் கொள்ளாவிடினும் அல்லது ஐயப்பாட்டுடன் கருதினும் இன்றுள்ள மொழிகள் அனைத்தும் (இன்று இறந்துவிட்ட ஆனால் முன்னர் நிலவியதற்குச் சான்றுகள் கிட்டியுள்ள மொழிகள் உட்பட) ஒரே ஞாலமுதன் மொழியி லிருந்துதான் தோன்றின என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது" அந்நூலின் பக்கங்கள் 277 - 366இல் 27 முக்கிய மான கருத்துகளுக்கு பல்வேறு மொழிக் குடும்பங்களிலும் உள்ள சொற்கள் "Global Etymologies" தரப்பட்டுள்ளன. அக்கருத்துக்களுக்கு ஞால முதன் மொழியில் என்ன வேர்ச்சொல் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க அது முன்னோடியாகும். அவற்றுள் பலவற்றுக்கு (ஏறத்தாழ 17க்குத் தமிழ்ச் சொற்களே பொருள் பொதிந்தன வாகவும் ஞாலமுதன்மொழியின் வேர்ச்சொல் வடிவை விளக்குவனவாகவும் அமைந்துள்ளன. 17. இராபர்ட் கால்டுவெல் 1856இல் தனது திராவிட அதாவது தென் இந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் மாபெரும் " நூலை வெளியிட்டார். (திருந்திய விரிவான இரண்டாம் பதிப்பு1875) ஒருபுறம் திராவிட மொழிகளுக்கும் மறுபுறம், இந்தோ - ஐரோப்பிய மொழிகள் செமித்திய மொழிகள் எலாமைட் மொழி சித்திய (இப்பொழுது 'உரால் - அல்டாய்க்') மொழிகள் சப்பானிய மொழி ஆஸ்திரேலியப் பழங்குடி மொழிகள் ஆகியவற்றுக்கும் இடையே காணும் இலக்கண ஒப்புமைகள், சொல் ஒப்புமைகள் ஆகியவற்றைப் பற்றி ஏராளமான செய்திகளை அவர் தந்தார். இம்மொழிக் குடும்பங்கள் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன் பிரியுமுன்னர் இருந்த (மாந்தன் தொன்மொழியின்) நிலையை விளக்குவதற்கான ஒளியை ஞால முதன் மொழிக்கு மிக நெருங்கிய திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளின் லிருந்துதான் பெற்றாக வேண்டும் என்பதை அச் செய்திகள் வலுவாக நிறுவின. கால்டுவெல் கோடிட்டுக் காட்டியதை மேலும் நுணுகி ஆராய்ந்து "மாந்த இன முதன் மொழி ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும்; மிகத் தொன்மை வாய்ந்த தொல்தமிழே (தொல் திராவிடம் என அழைக்க விரும்புவார் அவ்வாறே அழைக்கலாம், மறுப்பில்லை) அனைத்து மொழிக்குடும்பங்களுக்கும் (இந்தோ - ஆரிய மொழிகள் உட்பட) மூலமான மொழியாகக் கருதப் படவேண்டும்'' என்ற கோட்பாட்டை மேலும் ஆழமாக விரிவாக நிறுவியவர்கள் நல்லூர் சுவாமி ஞானப் பிரகாசரும் ஞா. தேவநேயப் பாவாணரும் ஆவர். இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்ப மொழிகளின் (ஏன் பிறமொழிக் குடும்ப மொழிகளுக்கும் தான்) அடிப்படைச் சொற்கள் பலவற்றுக்கு ஞானப்பிரகாசரும் பாவாணரும் நூற்றுக்கணக்கான பொருத்தமான தொல் - திராவிட வேர்ச் சொற்களை இனம் காட்டியுள்ளனர். 1953 இல் ஞானப் பிரகாசர் தெரிவித்த கருத்து வருமாறு: "இந்தோ ஐரோப்பிய மொழிகளில் 'வேர்கள்' என உன்னிக்கப் படுபவை பொருள் தொடர்பற்ற வெறும் குறியீடுகள்தாம். திராவிட மொழி வேர்களோ வெனில் ஐயத்திற்கிடமின்றிப் பொருளையும் காரணத்தையும் காட்டுபவை யாக உயிரோட்டமுள்ள முளைக்கரு போலத் தோன்றும்; எந்தக் கருத் தோட்டத்தில் பல்வேறு சொற்கள் உருவாயின என்பதைத் தெற்றென அவை காட்டும் வகையில் அமைந்துள்ளன. இத்தன்மை அவற்றுக்கு இல்லாததால் இந்தோ ஐரோப்பிய "வேர்கள் " இருள் மண்டிய பொருளற்ற வெறும் ஒலிக் குவியல்களாகவே தோன்றும். அவற்றுக்கும் தெளிவு தந்து ஒளி காட்டி உயிரூட்டம் தரக்கூடியவை திராவிட மொழி வேர்கள் தாம்''. பிறமொழி வேர்களுக்கும் இக் கருத்து பெரும் அளவுக்குப் பொருந்துவதாகும். சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் (1929) ஞானப் பிரகாசர் "மொழியின் தோற்றம்" என்ற கட்டுரையில் "இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தந்தையாகிய தொன்மொழியின் தோற்றத்திற்கான ஆதாரங்கள் தமிழில்தான் கிட்டும் என முழங்கி யிருந்தார். (Tamil supplies this long looked for clue to finding the true origin of the proto Indo-European language) 18. திராவிட மொழிகளுக்கும் பிற மொழிகளுக்கும் இடையே யுள்ள உறவுகள் குறித்து இதுவரை பின்வரும் ஆய்வுகள் நிகழ்ந் துள்ளன: நாஸ்திராடிக் / யூரேசியாடிக் பெருங்குடும்பம் 1 திராவிடமும் கால்டுவெல், போப், இந்தோ ஐரோப்பிய ஞானப்பிரகாசர்,தேவநேயன், மொழிகளும் இளங்குமரன், மதிவாணன், இலியிச் - சுவிதிச், அருளி, அரசேந்திரன்; ஸ்டேபான் ஹில்யர்லெவிட். (பாவாணர் தமது ஆய்வு நூல்களில் கண்டு நிறுவியுள்ள தமிழ் - இந்தோ ஐரோப்பிய / ஆரிய ஒப்புமைச் சொற்களில் நூற்றுக் கணக்கானவை ஏற்கத்தக்கவை (reasonable and perceptive) என்று முனைவர் ஸ்டெபான் ஹில்யர் லெவிட் அண்மையில் இந்தோ ஐரோப்பிய மொழியியல்) ஆய்விதழில் (மடலம் 28:3-4; 2000 சூன் - திசம்பர் பக்கம் 407 - 438 இல்) வெளியிட்ட தம் கட்டுரையில் ஏற்றுள்ளார். மேலும் 2000 இல் வெளியான "இந்தோ ஐரோப்பிய மொழிகளும் அவற்றொடு நெருங்கிய உறவுடையனவும் : யூரேசியாடிக் மொழிப் பெருங்குடும்பம்: மடலம் இலக்கணம்" என்னும் நூலில் கிரீன்பெர்க் யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் முக்கியமான இலக்கண ஒப்புமைகள் 72 - ஐக் குறிப்பிட்டுள்ளார். அந்த 72 இனங்களில் 20க்கு மேற்பட்டவற்றுக்குத் திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளும் பொருந்தி வருகின்றன.) 2. திராவிடமும் உரால் - அல் - கால்டுவெல், பரோ, மெங்கெஸ், டாக்ய மொழிக்குடும்பம் டைலர் , அந்திரனாவ், வாசக், ஹெச்.பி.ஏ. ஹகோலா, சாலெக் 3. திராவிடமும் எலாம் மொழியும் (கி.மு. 3000க்கு முன்னர் மெசபொதாமியா விற்குக் கிழக்கே எலாம் நாட்டில் பேசப்பட்டது) மக் - அல்பின், கே. வி. சுவலெபில் 4. திராவிடமும் சப்பானியமும் சுசுமு ஓனோ; பொன். கோதண்டராமன்; ஹெச்பிஏ ஹகோலா, சுவெலபில் 5. திராவிடமும் கொரிய மொழியும் ஹுல்பர்ட்; பவுண்துரை 6. திராவிடமும் எத்ருஸ்கன் ஸ்டென் கோனோ; மொழியும் (கி.மு1000 - 300 இரா. மதிவாணன் அளவில் இத்தாலியில் பேசப்பட்டது) (கமில் சுவெலபில் 1990இல் வெளியிட்ட "திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம் என்னும் நூலின் பக்கங்கள் 99 - 122 இல் மேலே குறித்த 2-4 தொடர்புகள் பற்றி விரிவாக ஆராய்கிறார்; தொல் திராவிட மொழி, எலாமைட், தொல் உரால் - அல்டாய்க் மொழி, சப்பானிய மொழி ஆகியவை சுமார் கி.மு. 10,000க்கு முன்னர் ஒன்றாக இருந்து பிரிந்தவையாக இருக்கலாம் என்று கருதுகிறார்). மொழிப் பெருங்குடும்பங்களில் ஏனையவை 7. திராவிடமும் சுமேரியா ஹீராஸ், ஏ சதாசிவன், மொழியும் (கி.மு. 3000க்கு ஜே. வி. கின்னியர் வில்சன்; முன்னர் பேசப்பட்டது) ஹெச்.பி.ஏ. ஹகோலா 8. திராவிடமும் மின்னியும் ஜி.டபுள்யூ. பிரவுன் (1930) (கி.மு. 1500க்கு முன்னர் வடக்கு சிரியாவில் பேசப்பட்டது) 9. திராவிடமும் பாஸ்கு ஹீராஸ், லாகோவரி ; மொழியும் (ஸ்பெயின்) பெனான்ஸ் பிக்னு சாலெக். 10. திராவிடமும் ஆஸ்தி நாரிஸ், பிரிச்சார்டு, ரேலியப் பழங்குடி மக்கள் ஆர். எம்.டபுள்யூ. டிக்சன், மொழிகளும் (இப்பழங்குடி மக்கள் கடந்த 8000 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் வேறெந்த மக்களுடனும் தொடர்பின்றி வாழ்பவர்கள்) பி. இராமநாதன் (1984) 11. திராவிடமும் கொஷவா டாக்டர் சீனிவாசன்; மொழியும் (தென் அமெரிக்க சாமன்லால், ஹெச்.பி. ஏ. பெருநாடு) ஹகோலா (புத்தக இறுதியிலுள்ள நிலப்படம் இம் மொழிகள் பேசப்படும் இடங்களைக் காட்டும்) திராவிட மொழிகளுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் இடையிலுள்ள மிக நெருங்கிய ஒப்புமையை பி.இராமநாதன் (குப்பம்) திராவிடப் பல்கலைக்கழகத்தின் திராவிடி யன் ஸ்டடீஸ் I-3; ஏப்ரல் - சூன் 2003 இதழில் வெளியிட்டுள்ள கட்டுரை விரிவாக நிறுவுகிறது. தொல் திராவிட மொழி பேசுநர் தென் இந்தியாவில் கண்டிப்பாக 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து இருக்க வேண்டும் என்பதையும் இங்கிருந்து அதற்கு முன்னரே ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் தொல் தமிழ் மக்களிடம் மிருந்து பிரிந்து சென்றிருக்க வேண்டும் என்பதையும் அக்கட்டுரை நிறுவுகிறது. ங. தொல் திராவிட மொழி பேசுநர் பரவியது தெற்கிலிருந்து வடக்கு நோக்கியே யாகும்; தமிழர் இந்தியாவின் தொல்குடிகள். 19. திராவிட மொழி பேசுநர் கி.மு 3000ஐ ஒட்டி இந்தியாவுக் குள் நுழைந்தனர் என்ற சுவெலபில் கோட்பாடு முன்பத்திகளிற் சொன்னவற்றோடு பொருந்தி வருகிறதா? மொழிப் பெருங் குடும்பங் களுக்கிடையேயுள்ள வரலாற்றுக் காலத்துக்கு முந்திய உறவுகளைப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர் பலர் இத்தவறான கோட்பாட்டினை ஒட்பம் இன்றிப் பின்பற்றி வருகின்றனர். எடுத்துக்காட்டாக ஆர். பிளெஞ்ச் எம். ஸ்பிரிக்ஸ் 1997இல் தொகுத்து வெளியிட்ட தொல் லியலும் மொழியும் : (1) கோட்பாட்டு ஆய்வுநெறிக் கருத் தோட்டங்கள் என்னும் நூலில் ரென்புரூ பின்வரும் முடிவைக் கூறுகிறார்: ''(மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்து வேளாண்மைத் தொழில் மக்கள் பண்டு பரவத் தொடங்கியது பற்றிய தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் தொல் இந்தோ ஐரோப்பியன், தொல் ஆப்ரோ - ஏசியாடிக், தொல் எலாமைட், திராவிடம், தொல் அல்டாய்க் மொழிகள் ஆகிய மொழிகளைப் பேசியோர் அனை வரும் மிகச் சுருங்கிய மையக் கிழக்கு நிலப் பகுதியில் (சுமேரியா, எலாம், இன்றைய துருக்கி) உடன் உறைந்து இருக்க வேண்டும். இம் மொழிகள் எல்லாம் (நாஸ்திராடிக் மொழியியலாளர் கூறுவது போல) தொடர்புடையவையாக இருப்பது உண்மையானால் அவர்களெல்லாம் அப்பகுதியை விட்டுப் பிரிந்து விலகிய கி.மு.8000 - 6000 காலக்கட்டத்துக்கு முன்னர் ஒருசில ஆயிரம் ஆண்டுகள் இம்மொழிகள் அனைத்திற்கும் மூலமான நாஸ்திராடிக் மொழி அந் நிலப்பகுதியில் பேசப்பட்டிருக்க வேண்டும் என்பது தொல்லியல் கண்டுபிடிப்புக்களுக்கும் ஒத்து வரும் தருக்கமாகும்." இவ்வாறு தொல் - நாஸ்திராடிக் பேசியவர்கள் அனைவரும் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருங்கே நடுகிழக்குப் பகுதியில் வாழ்ந்திருந்தார்கள் என்ற இந்தக் கோட்பாட்டையும் (அதன் தொடர்பான ''இந்தியாவுக்குள் அங்கிருந்து திராவிடர்கள் இறங்கியது ஏறத்தாழ கி.மு. 3000ஐ ஒட்டித்தான்" என்ற கோட்பாட்டையும்) பொய்ப்பிப்பது திராவிட மொழிகளுக்கும் ஆத்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய பிணைப்பு ஆகும். இதுபற்றி காலின் பி. மாசிகா 1999இல் கூறியது குறிப்பிடத்தக்கது. "தென் ஆசியாவில் கழிபழங்காலத்தில் ஒரு பொதுவான மூதாதை மொழி இருந்திருக்க வேண்டும். தற்போதைய மாந்த இனம் (ஏறத்தாழ ஓர் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்) உலகெங்கும் பரவத் தொடங்கிய கால கட்டமே தொல் திராவிட மொழியின் தொடக்க காலம் ஆகலாம்" (It may be a question of a very ancient common substratum in South Asia, Pre-Dravidian going back even to the original peopling of the world; The Year Book of South Asian Languages and Linguistics, 2001 New Delhi). 20. ஏறத்தாழ ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்த் இக்கால மாந்த இனம் அல்லது Anatomically Modern Humans ஆப்பிரிக்காவில் தோன்றியது என்று கண்டோம். முதல் தாய்மொழி ஏறத்தாழ 50000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது எனக் கருதப்படுகிறது. இன்றைக்கு ஓர் இலட்சம் - 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து தென்னிந்தியா வழியாகவே உலகின் பல பகுதிகளுக்கும் இக்கால மாந்த இனம் பரவியது என்க. இவ்வாறு வடக்கு வடகிழக்கு நோக்கிய மாந்த இனப் பரவலில் திராவிட மொழி பேசுநருக்கு முகாமையான பங்கு இருந்திருக்க வேண்டும். திராவிடர் ஏற்றம் (Dravidian ascent) பற்றிய இந்தக் கோட்பாட்டை "ஞானப்பிரகாசர் - தேவ நேயன் கோட்பாடு" என அழைக்கலாம். (திராவிட மொழி களுக்கு ஆத்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுடன் உள்ள நெருங்கிய தொடர்பையும் (மொழிக்குடும்பங்கள் பிறவற்றுடன் உள்ள நெருங்கிய தொடர்பையும் விளக்க வல்லது இக் கோட்பாடே யாகும். தென்னிந்தியாவிலிருந்து வடக்கே சென்ற திராவிட மொழி பேசுநர் உருவாக்கியதே சிந்துவெளி நாகரிகமாகும். (ஹீராஸ் 1953; மதிவாணன் 1995; இராமநாதன் 1999 ; பூரண சந்திரஜீவா 2004) அவர்களுக்கு எலாம், சுமேரியா, எகிப்து முதலிய நாகரிகங்களை உருவாக்கியதிலும் பங்கு இருந்திருக்க வேண்டும். சுவெலபில் (1990) "ஏறத்தாழ கி.மு. 10000க்கு முன்னர் திராவிடம், உரால் - அல்டாய்க், சப்பானியம் மொழி பேசுநர்களிடையே நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும்" என்று கருதுவதைக் கண்டோம். அத்தகைய தொடர்பையும் "திராவிடர் ஏற்றம் கோட்பாடு" விளக்கவல்லது. ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாட்டின்படி கி.மு. 10,000க்கு முன்னரே தொல் இந்தோ - ஐரோப்பியம் பேசுநர் தொல் - திராவிடம் பேசுநரிடமிருந்து பிரிந்து விட்டனர்; மைய ஆசிய ஸ்டெப்பீஸ் புல்வெளிகளில் சில ஆண்டுகள் வாழ்ந்தனர்; அவர்களில் சில குழுவினர் கி.மு. 4000 - 3000 அளவில் மேற்கு நோக்கி ஐரோப்பாவுக்குச் சென்றனர். (அவர்களிடம் பின்னர் உருவானவையே கிரீக், இலத்தீன், கெல்டிக், ஜெர்மானிக், ஸ்லாவிய மொழிக் குடும்பங்களாகும்); வேறு சில குழுக்கள் கிழக்கு - தென்கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்த காலம் - கி.மு. 2500ஐ ஒட்டி ஆகும்; அவ்வாறு கிழக்கே வந்த குழுவினர் மொழிகளில் அதாவது இந்தோ ஆரிய, இரானிய மொழிகளில் பண்டு (அதாவது கி.மு. 10000க்கு முன்னர் தொல் திராவிட மொழியினரிடமிருந்து பிரிந்த காலத்தில்) உடன் கொண்டு சென்ற தொல் திராவிட மொழிக் கூறுகளோடு சேர்த்து, வடமேற்கு இந்தியாவிலும் அப்பாலும் வாழ்ந்து வந்த திராவிட மொழி பேசுநர்களிடம் இருந்து ( இரண்டாவது கட்டமாக) புதிதாக மேலும் பல திராவிட மொழிக் கூறுகள் சேர்க்கப்படலாயின. திராவிட மொழி பேசுநர் ஏற்றம் (Dravidian ascent) பற்றிய இக் கோட்பாடானது தொல் மாந்தர் மொழியியல் முடிவுகளை மேலும் சீர்மை பெறச் செய்ய வல்லது; நாளடைவில் மாந்த இனத் (Homo sapiens sapiens) தோற்றமும் பரவலும்; மொழிப் பெருங்குடும்பங்கள் உருவாக்கமும் பரவலும்; வரலாற்றுக்கு முந்திய தொல்லியல் ஆகிய மூன்று துறைகளிலும் அனைத்தையும் விளக்கத்தக்க ஒருங் கிணைந்த ஒரு பெருங் கோட்பாடு (Grand synthesis) உருவாக்க வழி வகுக்கவும் வல்லது. ச. திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவிய பொழுது (Dravidian Ascent) குடியேறிய பகுதியே சிந்துவெளி நாகரிகப் பகுதி 21. மாந்தர் இன (A M H ) பரவல், மொழியின் தோற்றமும் பரவலும் ஆகியவற்றின் அடிப்படையில் திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவிய பொழுது (Dravidian Ascent) குடியேறிய பகுதியே சிந்துவெளி நாகரிகப்பகுதி என்று கொள்வதற் கான ஆதாரங்களை இதுவரை கண்டோம். அந்நாகரிகம் திராவிடச் சார்புடையது என்பதற்கு உள்ள மேலும் பல வலுவான ஆதாரங் களில் சில வருமாறு: i) மொகஞ்சோதாரோ - ஹரப்பா இடிபாடுகளில் திராவிடக் கட்டுமானக் கலையைக் காணலாம். வீடுகளில் பயன்பட்ட பொருள்கள், நகை (ஆபரணங்கள், பருத்தி ஆடைகள் அனைத்தும் திரா விடச் சார்புடையவை. ii) தமிழரின் சிற்றிலக்க முறையையே சிந்துவெளி நாகரிக எடை அளவுகளில் காண்கிறோம் என்பதைச் செங்கம் கு. வேங்கடா சலம் நிறுவியுள்ளார். iii) இன்றைய இந்து மதத்தின் முதன்மைக் கூறுகள் அனைத்தும் திராவிட - தமிழ் - சிந்துவெளி நாகரிகக் கூறுகளே ஆகும். சமண, பெளத்த மதங்களின் தோற்றத்திற்கும் சிந்துவெளி மற்றும் வட நாட்டில் பண்டு இருந்த திராவிட - தமிழ் ஞானிகளே காரணமாவர். iv) இன்றைய இசைக்கலை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றதே (ஓ கோஸ்வாமி "இந்திய இசை வரலாறு", 1957). இவற்றின் விரிவை பி. இராமநாதன் : சிந்து வெளித் தொல் தமிழ நாகரிகம் 1999 இயல்கள் 3-6 மற்றும் 8 இல் காண்க). 22. ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த திராவிடர்' என்று தன்னை அழைத்துக் கொண்ட எஸ். ஹீராஸ் பாதிரியார் (11.9.1888 - 14.12. 1955) தொன்மை இந்தோ - நண்ணிலக்கரை நாகரிக ஆய்வு (Studies in Proto - Indo Mediterranean Culture 1953) என்னும் நூலில் சிந்து வெளி நாகரிகம் திராவிடருடையது; அவர்கள் மொழி திராவிட மொழி என்பதை நிறுவியுள்ளார். மிகப் பழங்காலத்தில் (கி.மு. 5000க்கும் நெடுங்காலத்துக்கு முன்னர்) முதற்கண் காவிரிக் கரையில் உருவாகிய அரப்பா நாகரிகம் இந்திய மேற்குக்கரை வழியாகத் தமிழர்களால் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து, நண்ணிலக்கரை நாடுகள் வரை கொண்டு செல்லப்பட்டது என்பது ஹீராஸ் கொள்கை (அவர் வாதத்துக்கு ஆதாரமாகக் கொண்ட செய்திகள் சில இப்பொழுது தவறாகத் தோன்றலாம்; சிந்துவெளி முத்திரைகளை அவர் திராவிட மொழி சார்ந்தவை என்று கொண்ட முடிவு சரியென்றாலும் அவர் முத்திரைகளில் படித்துக் கண்ட வாசகங்கள் இன்று ஏற்கத்தக்கன வாக இல்லை. இருந்தாலும் அவர் கண்ட அடிப்படை உண்மை இன்றும் வலுவுடையதாகவே உள்ளது.) 23. என் லாகோவரி 1963இல் வெளியிட்ட திராவிடர் தோற்ற மும் மேலை நாடுகளும் (Dravidian Origins and the West) என்னும் நூல் சிறந்த மொழியியல் மெய்மைகளை உணர்த்துவதாகும். "திராவிடர் நண்ணிலக்கரை நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து இந்தியாவில் சிந்துவெளியில் முதற்கண் குடியேறிப் பின்னர் குமரி வரைப் பரவினர்" என்ற அபத்தக் கொள்கையை அவர் விவரம் புரியாமல் பின்பற்றியிருந்த போதிலும் அவர் நிறுவிய பின்வரும் மெய்மைகள் முக்கியமானவை : i) 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அட் லாண்டிக் கடல் வரை ஒரே மாதிரியான "பல சொல் பிணிப்பு ஒட்டு நிலை" (Polysynthetic Suffixal) மொழிகள் இடையீடு இன்றிப் பரவி யிருந்தன. அவற்றின் சொற் களஞ்சியங்கள் ஓரளவுக்கு ஒன்றுபோல் இருந்தன. பொதுச் சொல் விழுக்காடு மொழிக்கு மொழி மாறுபட்டு இருந்திருக்கலாம். திராவிட மொழிகள், எலாமைட், சுமேரியன், ஹர்ரி, காகேசியன், ஹல்டி , ஹட்டி போன்றவை ஒரே மொழி யமைப்புக் கொண்டு ஒன்றுக்கொண்று உறவுடையவையாகச் சங்கிலித் தொடர்போல அமைந்திருந்தன. ii) இந்தோ ஐரோப்பிய மொழி பேசுவோர் (கி.மு. 2000ஐ ஒட்டி) ஐரோப்பாவுக்குள் கிழக்கிலிருந்து நுழையுமுன்னர் அங்கு பேசப்பட்டு வந்த மொழிகளில் ஒன்றான பாஸ்கு (யூஸ்கரா) இன்றும் பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரெனீஸ் மலைப் பகுதியில் பேசப்பட்டு வருகிறது. தொல் திராவிட மொழி இந்த பாஸ்கு மொழியுடன் மட்டுமின்றி இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் பேசப்பட்ட தொன்மொழி களுடனும் உறவுடையது. iii) இம்மொழிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புள்ளவை; ஒரே பொதுவான தாய்மொழியின் வட்டார வழக்குகள் என்றே கூறலாம். 24. சிந்துவெளி நாகரிகம் இந்தோ ஆரிய மொழி பேசுநர் உருவாக்கியதாக இருக்கலாம் என இன்றைய இந்திய அறிஞர் (குறிப்பாக வடநாட்டறிஞர்) சிலர் கூறுகின்றனர். இது தவறு என்பதைச் சற்றே விளக்குவோம். வேதமொழியாகிய இந்தோ ஐரோப்பிய மொழி இந்தியாவில் உருவாகியிருக்கலாம். என்று வேத சமஷ்கிருதப்பற்றாளர் கூறுவது அபத்தம் (இது வேறு; கி.மு. 10000க்கு முன்னர் தொல் திராவிட மொழியிலிருந்து கிளைத்த மொழிக் குடும்பங்களுள் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பமும் ஒன்று என்ற ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாடு வேறு!) கிமு.1700 - 1500 காலகட்டத்தில் இந்தியாவிற்குள் வடமேற்கிலிருந்து நுழைந்த வர்கள் வேதமொழி (Vedic Language) ஆகிய இந்தோ ஆரிய மொழி பேசுநர் ஆவர். இவர்கள் சிந்துவெளி நாகரிக மக்களோடு ஒப்பிடும் போது சிறு எண்ணிக்கையினராகவே இருந்திருக்க வேண்டும். இந்தோ ஐரோப்பிய மொழிப் பெருங்குடும்பத்தில் அடங்கியவை இந்தோ ஆரிய மொழியாகிய வேதமொழி தவிர இரானியன் (அவெஸ்தன்), அனடோலியன் (ஹிட்டைட்), அர்மீனியன், டோக் காரியன், அல்பேனியன், கிரீக்கு , இத்தாலிக் (இலத்தீன் முதலியவை) கெல்டிக் (ஐரிஷ், வெல்ஷ் உட்பட), ஜெர்மானிக் (ஆங்கிலம் உட்பட) பால்டிக் (லட்வியன், லித்துவேனியன்), ஸ்லாவ் (ரஷ்யன் முதலியவை) ஆகியவையாகும். இந்தப் பல்வேறு இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநரும் ஒருங்கு சேர்ந்து கி.மு. 4000 - 3000 கால அளவில் கருங்கடல் - காஸ்பியன் கடல் பகுதிக்கு வடக்கில் மத்திய ஆசிய - ஐரோப்பிய ஸ்டெப்பி புல்வெளிகளில் வசித்து வந்த நாடோடிகள் (nomads) ஆவர். அக்காலக் கட்டத்தில் அவர்கள் இந்தோ ஐரோப்பியத் தொன் மொழியைப் பேசிவந்தனர். கி.மு. 3000 - 2000 கால அளவில் அவர்களின் சில குழுக்கள் மேற்காகவும், சில குழுக்கள் கிழக்கு - தென் கிழக்காகவும் நகரலாயினர். மேற்கில் சென்ற நாடோடிக் குழுவினருள் ஒன்றான கிரீக்கு மொழி பேசுநர் நுழைந்த பகுதியில் (திராவிடச் சார்பான) அப்பகுதிப் பழங்குடி மக்களுடன் கலந்து கிரீக்கு மொழி பேசுநர் உடனடியாக நாகரிகம் பெற்றனர். கிழக்கு தென்கிழக்காகப் பெயர்ந்த நாடோடிக் குழுவினருள் இந்தோ ஆரிய மொழி பேசும் குழுவும் ஒன்று. கி.மு. 1700 - 1500இல் அவர்கள் இந்தியாவுக்குள் இரானிலிருந்து நுழைந்த பொழுது அவர்களும் சிந்துவெளித் தொல் தமிழ நாகரிகத்தினரிடமிருந்து விரைவில் நாகரிகம் பெற்றனர். சிந்துவெளித் திராவிட அறிஞர்கள் (அவர்களில் சிலர் ரிஷிகளாகவும் ஏற்கப்பட்டனர்) படைப்புகளும் நேரடியாகவோ மொழி பெயர்க்கப்பட்டோ ரிக் வேதத்திலேயே ஏறியுள்ளன என்பது மறைமலை யடிகள், வால்பர்ட் போன்றோர் கருத்தாகும். முதற்கண் இந்தோ ஆரிய மொழி பேசுநருக்கும் சிந்து வெளி நாகரிகத் தமிழருக்கும் (திராவிடருக்கும் இடையே வன்முறை ஏற்பட்ட போதிலும் விரைவில் இருவகையாரும் கலந்துவிட்டனர். ஆரியரால் நகரங்கள் தாக்கப்பட்டிருக்கலாம். இந்திரனின் பெயரே புரந்தரன் (நகரங்களை அழிப்பவன்) தானே! நகரங்களின் வீழ்ச்சிக்கு கி.மு. 1700ஐ ஒட்டி நிகழ்ந்த இயற்கை, சுற்றுப்புறச் சூழ்நிலைக் காரணங்களும் ஓரளவு காரணமாயிருந்திருக்கலாம் என்று ஆல்சின் (1995) கூறுகிறார். ஆனால் சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த சிற்றூர்ப்புறப் பெருநிலப்பரப்பில் (சிறு எண்ணிக்கையில் நுழைந்த) ஆரியரால் பெருந் தாக்கம் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆகவேதான் சுநீதிகுமார் சாட்டர்ஜி, வால்டர் பேர் சர்வீஸ், எஸ்.ஏ. டைலர் போன்றோர் கூறுவது போல இன்றைய இந்திய நாகரிகம், பண்பாடு, இந்துமதம் ஆகியவற்றின் அடித்தளம் (ரூபாய்க்கு 12 அணா அளவுக்கு என்பார் சாட்டர்ஜி) திராவிட (தமிழ் மொழி, பண்பாடு ஆகியவையே. இந்தோ ஆரிய மொழி பேசுநர் பரவல் பற்றிய வரலாற்றிலிருந்தே அவர்கள் கி.மு. 1700க்கு முந்திய சிந்து வெளி நாகரிகத்தை உருவாக்கியிருக்க இயலாது என்பது தெரியும். சிந்து வெளி நாகரிகச் சின்னங்களில் ஆரியருக்கு நெருக்கமான குதிரை கிடையாது என்பதும் முக்கியமானது. 25. இந்தோ ஆரிய மொழியின் ரிக்வேத நிலையிலேயே நுழைந் துள்ள திராவிடச் சொற்களாக சுமார் நாற்பது - ஐம்பது சொற்களை பரோ, எமனோ போன்றவர்கள் ஏற்கெனவே அடையாளம் கண்டுள்ளனர். திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம் (1990) நூலில் இதைக் குறிப்பிடும் சுவெலபில், ரிக்வேதக் காலத்திலிருந்தே இந்தோ ஆரிய மொழி கடன் பெற்றுள்ள ஏறத்தாழ 10 மொழியியற் கூறு களையும் பட்டியலிட்டுள்ளார். (இவை யெல்லாம் வேத சமற்கிருத மொழியில் திராவிட மொழியின் தாக்கம் என்ற அளவில்தான் இவர்கள் ஆய்வுகள் உள்ளன. ஆனால் ஞானப் பிரகாசரும் பாவாணரும் கண்ட முடிவுகள் இவற்றைவிட மிக விஞ்சியவை. அவ்விருவரும் "இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் அடிப்படை வேர்ச் சொற்கள் பலவும் தொல் - திராவிட மொழியிலிருந்து பெற்றவையே" என்ற கருத்துடையவர். 26. சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்றும் அந் நாகரிக முத்திரை எழுத்துக்கள் தொல் தமிழே என்றும் தகுதி வாய்ந்த அறிஞர் அனைவரும் ஏற்கின்றனர். தமது Indus Script Dravidian (1995) நூலில் இரா. மதிவாணன், சிந்து வெளியில் முந்து தமிழ் (2004) நூலில் பூர்ண சந்திர ஜீவா ஆகியோர் அவ்வெழுத்துக்களைத் தொல்தமிழாகப் படிக்கும் பொழுது தொல்காப்பியத்திலிருந்து கிட்டும் மொழியியல் தரவுகளையும் பயன்படுத்தி யுள்ளனர். புற நானூறு 201 202 இல் குறிப்பிடப்படும் இருங்கோவேளின் முன்னோர் சிந்துவெளி நாகரிகத்தோடு தொடர்புடையவர்களாகக் கபிலரால் கருதப்பட்டனர். புறநானூறு 202 குறிப்பிடும் அரையம் ரிக்வேதம் 6. 27. 5இல் சுட்டப்படும் ஹரியூபியா தான் என்பது பி. எல். சாமி கருத்து (செந்தமிழ்ச் செல்வி சனவரி 1994). அரையம் = அரசமரம். அரைய + அகப்பா = அரையகப்பா - ஹரப்பா என்று பெயர் மாறியது என்கிறார் அவர். இருங்கோவேளின் முன்னோர் 49 தலைமுறைகளுக்கு முன்னர் (அதாவது தொல் பழங்காலத்தில்) புகழ்பெற்ற துவரை என்னும் கோட்டை நகரை ஆண்டு வந்தனர் என்று புறம் 20 கூறுகிறது. தமது தொல்காப்பியப் பாயிரவுரையில் நச்சினார்க்கினியர் வேளிர் துவாரபதி (துவாரகையிலிருந்து வந்தவர்கள் என்கிறார். அரையம் ஹரப்பாவைத் தான் குறிப்பதாகக் கொண்டால் ஹரப்பா பற்றியும் துவாரகை பற்றியும் கபிலர் காலத்தில் வழங்கிய (ஒரு நகருக்குரியதை மற்றதற்குரியதாக மாற்றி வழங்கிய) தொன்மக் கருத்தை புறம் 20, 202 பாடல்கள் கூறுகின்றன என்க. இதனை ஜீவா மேலும் ஆய்வு செய்கிறார். வேள் - வேட் - பேட்(Bet) - பேட் துவாரகா என்று துவாரகையின் பெயர் வரலாற்றை அவர் தருகிறார். 27. சுமேரிய நாகரிக முத்திரைகளில் சிங்கங்கள் இரண்டைக் கொல்லும் கில்காமெஷ் உருவம் காணப்படுகிறது. கில்காமெஷ் பற்றிய தொன்மக் கதையும் சுமேரியப் பொறிப்புகளில் தரப்படும் கிறது. சிந்துவெளி முத்திரைகள் இரண்டில் (கில்காமேஷ் சிங்கங் களைத் தாக்குவது போலவே இந்திய வீரன் ஒருவன் புலிகள் இரண்டை கைக்கு ஒன்றாகக் கொல்வது போல் சித்திரிக்கப் பட்டுள் ளான். புறம் 201 இருங்கோவேளைப் 'புலி கடிமால்' என்று அழைக் கிறது. இருங்கோவேளின் முன்னோர் காலம் சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்து தொடங்கியிருக்கலாம் என ஐ. மகாதேவன் Journal of Tamil Studies மே 1970 இதழில் உன்னித்திருந்தார். ஆயினும் 2002 சனவரியில் அவர் கருத்து அந்த உன்னிப்பிற்கு வலுவான ஆதாரம் இல்லை என்பதாகும். 28. ரிக்வேதம் ஐ . 133, 1&3இன் ஆங்கில வடிவம் வருமாறு: "ஒ மகவான்! அழிந்துபட்ட வைலஸ்தானக நகரத்திலும், அழிந்துபட்ட மகாவைலஸ்த நகரத்திலும் உள்ள சூனியக் காரிகள் கும்பல்களை அழித்து ஒழிப்பாயாக" "நான் மேலுலகத்தையும் பூமியையும் சத்தியத்தினால் தூய்மைப் படுத்துகிறேன். வைலஸ்தான நகரில் இந்திரனால் தோற்கடிக்கப்பட்டு கொலையுண்டு கிடக்கும் இந்திரனை எதிர்த்த ஆற்றல் மிக்க துஷ்ட பிசாசுகளை நான் எரித்து ஒழிக்கிறேன்" ஆரியர்களால் நாசமாக்கப்பட்ட நகரத்தின் பெயரான 'வைலஸ்தானம்' என்பது ஆரியமொழியல்லாத பிறமொழிச் சொல்லாக இருக்க வேண்டும் என்பது டாக்டர் பரோ கருத்து ஆகும். (ஜர்னல் ஆப் இந்தியன் ஹிஸ்டரி XII -1 ஏப்ரல் 1963, ஒருக்கால் 'வைலஸ்தானம்' என்பது வேளிருடைய ஊர்நகரைக் குறித்திருக்கலாம். 29. சிந்து முதலிய ஆறுகளில் சிந்துவெளித் திராவிடர்கள் கட்டியிருந்த அணைகளை ஆரியர் உடைத்து நாட்டை வெள்ளக் காடாக்கி அழித்திருக்கலாம் என்பர் தாமோதர் தர்மானந்த் கோசாம்பி (The Culture and Civilisation of Ancient India in historical outline 1974). மதுரைக் காஞ்சி 725 ஆம் அடியிலும் அகநானூறு 346 ஆம் பாடலிலும் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைகளைக் குறிக்க 'கற்சிறை' என்னும் சொல் பயன் படுத்தப்படுகிறது. ரிக் வேதத்தில் அணையைக் குறிப்பிடும் சிரா (Sira) என்னும் சொல் 'கற்சிறையின் ' சிதைவே என்பர் பி. எல். சாமி (செந்தமிழ்ச் செல்வி : 1994 நவம்பர்) ரு. சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக்கள் திராவிட மொழியாகப் படிக்கத்தக்கவையே என்பதும் தமிழ் வரி வடிவம் சிந்துவெளி வரிவடித்திலிருந்தே உருவாயிருக்கலாம் என்பதும் 30. சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக்கள் என்பவை மூவாயிரத்துக்கு மேற்பட்ட "ஸ்டீயட்டைட்' (சவர்க்காரக்கல், அதாவது மாக்கல்) முத்திரைகளிலும் சில செப்புத் தகடுகள் போன்ற வற்றிலும் உள்ளவை. ஒவ்வொரு முத்திரையும் சுமார் 20 மிமீ x 30 மிமீ. அளவுள்ளது. சில சதுரமானவை. பெரும்பாலானவற்றில் ஒரு விலங்கின் உருவமும் அதன் மேல் பக்கத்தில் ஒன்றிலிருந்து பத்துப் பன்னிரெண்டு (சராசரி 5) குறியீடுகளும் உள்ளன. மிக நீண்ட தொடர் 26 குறியீடுகள் கொண்டது. சிந்து வெளியிலிருந்து பருத்தித் துணி போன்றவற்றை சுமேரியா போன்ற மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது சிப்பங்கள் கட்டி அவற்றின் மேல் பொருளுக்குரியவர் பெயரை களிமண்ணில் முத்திரையிட இம் முத்திரைகளுள் பெரும்பாலானவை பயன்பட்டிருக்கலாம் என்பதே சிறந்த ஆய்வறிஞர்கள் கருத்து. வீலர், ஹண்டர், காட் (Gadd), கோசம்பி, கோ (Coe) ஆகியோர் இந்த அடிப்படையில்தான் முத்திரைக் குறியீடுகளில் உள்ளவை தனி ஆட்களின் பெயர்களாகத் தான் (சில நேர்வுகளில் பட்டங்களுடன்) இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். சிப்பத்தைக் கட்டிய கயிறு, பாய் இவற்றின் சுவடுகள் சில களிமண் கட்டிகளில் காணப்படுகின்றன. (சில கட்டிகள் ஒரோவழி நெருப்பின் வாய்ப்பட்டு சுடப்பட்டதால் அவை மட்டுமே இன்று கிடைக்கின்றன. அவற்றில்தான் இவ்வடை யாளங்கள் தெரிகின்றன) ஆக, ஆல்சின் (1988) கூறுவது போல் "இம் முத்திரைகளின் பயன்பாடு (அல்லது பயன்பாடுகளில் ஒன்று) வாணிக நடவடிக்கைகள் சார்ந்ததாக இருந்திருக்க வேண்டும் என்ப தில் ஐயமில்லை " (There can be little doubt that the Harappan seals were - atleast as one of their functions - necessary elements in the mechanism of trade. p. 185) சில முத்திரைகள் தாயத்துக்களாகவும் நேர்த்திக் கடன் வில்லைகளாகவும் அடையாள இலச்சினைகளாகவும் பயன் படுத்தப்பட்டு இருக்கலாம். 31. பல முத்திரைகளில் ஒற்றைக் கொம்பு தெரியும் எருது ஒன்றின் முன்னர் என்ற வடிவம் உள்ளது. மகாதேவன் கருத்து (1985, 1984) 1 இவ்வடிவம் சோமச்சாறு வடிக்கப்பட்ட ஏனம்; பின்னர் சோமச்சாறு ஆரியர்களாலும் முக்கியமானதாக ஏற்கப்பட்டது என்பதாகும். பிற்காலத்தில் இவ்வடிவம் இந்திரத் வஜம் ஆனது; அளக்குடி சீத்தாராமன் கரூரில் கண்டெடுத்த செப்பு முத்திரையிலும் இந்த வடிவம் உள்ளது என்பது மகாதேவன் கருத்து ஆகும். 32. சிந்துவெளி எழுத்து குறியீடுகள் ஏறத்தாழ 400 அளவில் உள்ளன (பர்போலா 385, மகாதேவன் 417). 2906முத்திரை வாசகங்களில் கண்ட குறியீடுகளை மகாதேவன் பின்வருமாறு வகைப்படுத்துகிறார்: குறியீடு ஒவ்வொன்றும் . மொத்தம் மொத்தத்தில் எத்தனை அவை விழுக்காடு தடவை எத்தனை வருகிறது தடவை வருகின்றன 1 100மும் மேலும் 1935 10. 43 1 67 999 – 500 649 4.85 31 499 – 100 6,344 47.44 34 99 – 50 2,381 17. 81 86 49 – 10 1, 833 13. 71 152 9 – 2 658 4.92 112 ஒரே தடவை 112 0.84 417 13, 372 100.00 80 விழுக்காடு தடவைக்கு மேல் வரும் குறியீடுகள் 67 மட்டுமேயாகும் (பாதிக்கு மேற்பட்ட குறியீடுகள் ஒவ்வொன்றும் பத்து தடவைக்கும் குறைவாகவே வருகின்றன. அவற்றுள்ளும் 12 ஒவ்வொன்றும் ஒரு தடவையே வருகிறது. ஆக, இந்த 67 குறியீடு களுக்கும் முதன்மை தந்து வாசிக்க முற்படுவது நல்லது என்கிறார் மகாதேவன். மொத்தம் சுமார் 400 குறியீடுகளில் அடிப்படைக் குறியீடுகள் 200 என்பது பர்போலா கருத்து. 33. சிந்து வெளி முத்திரை எழுத்துக்கள் பழந்தமிழே (பழந் திராவிடமே) என்பதை இத்துறை வல்லுநர் அனைவரும் ஏற்கின்ற னர். இவற்றைப் படித்துள்ள அறிஞர்கள் ஒவ்வொருவரும் (பர்போ லா, மகாதேவன், மதிவாணன், பூர்ண சந்திர ஜீவா, பேர் சர்வீஸ் முதலி யோர்) ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக வாசித்துள்ளனர். முத்திரையைக் குத்தியபின் கிடைக்கும் முத்திரைப் பதிவில் உள்ள வாசகங்களை (Impressions) வலமிருந்து இடமாகவே பெரும்பாலோர் படிக்கின்றனர். (மதிவாணன் மட்டும் இடமிருந்து வலமாகப் படித் துள்ளார். எனினும் இம் முத்திரை எழுத்துக்கள், திராவிட மொழியைச் சார்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்பது பற்றி மட்டும் அறிஞர்களிடம் ஒருமித்த கருத்து உள்ளது; பின்வருவன வற்றைக் காண்க : ஸ்டான்லி வார்பர்ட் : இந்தியாவுக்கு ஓர் அறிமுகம் 'பல வகையான ஆதாரங்களிலிருந்தும் நாம் கருதுவது அவர்கள் தொல் திராவிடர்கள் என்பதும், தமிழுக்குப் பாட்டன் முறையாகக் கூடிய ஒரு மொழி அவர்கள் மொழியாக இருந்திருக்கலாம் என்பதும் ஆகும்.'' “We assume from various shreds of evidence that they were proto Dravidian, possibly using a language that was a grandfather of modern Tamil” (Stanley Wolpert: An Introduction to India, University of California Press 1991) ஜே. எம். ராபர்ட்ஸ் : பெங்குயின் உலக வரலாறு "தென் னிந்தியாவில் இன்றும் வழங்கிவரும் திராவிட மொழிகளோடு இயைபுடைய ஒரு மொழியைச் சார்ந்தவையாக (சிந்துவெளி முத்திரைச் சொற்கள்) இருக்கலாமெனத் தோன்றுகிறது.'' It now seems at least likely that they are part of a language akin to the Dravidian tongues still used in southern India (J. M. Roberts History of the World Pelican 1992) கமில் சுவெலபில் : திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம் "சிந்து வெளி எழுத்துக்களின் மொழி என்ன என்று இறுதியாக நிறுவப்படும் பொழுது அது திராவிட மொழி சார்ந்ததாக அமை வதற்கே வாய்ப்பு மிக அதிகம்.'' The most probable candidate is and remains some form of Dravidian” (Dravidian Liguistics - An Introduction. Pondicherry 1990; Chap VI : Dravidian and Harapan) 34. சிந்து வெளி முத்திரை எழுத்துக்களிலிருந்தே சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் உருவாயின என்பது மதிவாணன் கருத்து. ஏறத்தாழ கி.மு. 700க்கு முன்னமே தமிழுக்கு ஓர் எழுத்து வரிவடிவம் இருந்தது; அதைப் பின்பற்றியே அசோக பிராமி எழுத்து உருவாக்கப் பட்டது; எனக் கொள்வதற்கான ஆதாரங்கள் அண்மையில் கிட்டியுள்ளன. 2006 பிப்ரவரி மாதத்தில் மயிலாடுதுறை - செம்பியன் கண்டியூரில் வி. சண்முகநாதன் கண்டெடுத்த புதுக்கற்காலக் கருவி ஒன்றில் சிந்துவெளி எழுத்துக்கள் நான்கு உள்ளன. அவற்றை ஐ. மகாதேவன் "முருகு அன்" (முருகன்) என்று படித்துள்ளார். அக் கருவியின் காலம் கி.மு. 2000-1500 ஆக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். புதுக்கற்காலத் தமிழ் மக்களும் அக்காலத்தில் வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்களும் ஒரே மொழியையே பேசினார் என்றும் அம்மொழி திராவிட மொழியே என்றும் இக் கண்டுபிடிப்பு நிறுவுகிறது என்ப தும் அவர் கருத்து . ("The Neolithic people of Tamilnadu and the Indus Valley people shared the same language which can only be Dravidian and not Indo-Aryan") 152006 நாளிட்ட இந்து நாளிதழில் வெளிவந்த இச்செய்தி நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளது. 35. பொதுவாகக் கழக இலக்கியங்களாக ஏற்கப்படும் நூல் களும் அவற்றின் காலவரம்பும் பெரும்பாலான பன்னாட்டு அறிஞர்களும் ஏற்பது) வருமாறு: நூல்கள் - அளவு காலம் தொல்காப்பியம் 1610 நூற்பா கி.மு. 300 அல்லது (4018 அடி) அதற்கு முன்னர் எட்டுத்தொகையும் 2381 பாடல்கள் இவற்றுள் அடங்கிய பத்துப்பாட்டும் (473 புலவர்கள் தனித்தனிப் பாடல்கள் (இவை தொகுக்கப் இயற்றியவை) எழுதப்பட்ட காலம் பட்ட காலம் கி.பி. 3ஆம் கி.மு. 300 - கி.பி.300 நூற்றாண்டு அல்லது (கலித்தொகையும், அதையொட்டி ) பரிபாடலும் கி.பி. 300 அளவில் எழுதப்பட்டவை) திருக்குறள் 1330 குறள் வெண்பா கி.மு. முதல் நூற்றாண்டு சிலப்பதிகாரம் ஒவ்வொன்றும் 30 கி.பி. 300ஐ ஒட்டி (கமில் மணிமேகலை காதைகள் சுவவெலபில் தமது 1995 நூலில் இவற்றின் காலம் கி.பி. 350-450 என்கிறார். சேவியர் எஸ் தனிநாயகம் தனது "இயற்கையும் தமிழ்ச் செய்யுளும்" (1966) என்னும் நூலில் வெளியிட்டுள்ள பின்வரும் கருத்து மிக முகாமையானது: "தமிழ்ச் (சங்க) செய்யுள் தமிழகத்திலேயே கருக்கொண்டு வளர்ந்தது என்பதற்கான அனைத்துச் சான்றுகளையும் கொண் டுள்ளது. தமிழ் பேசுநர் வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு குடி யேறியவர்கள் என்றோ, வரும்பொழுதே வளர்ச்சியடைந்த தமிழ் மொழி, இலக்கியத்தை உடன் கொண்டு வந்தனர் என்றோ கூறுவ தற்குக் கழக இலக்கியம் இடம் தரவில்லை என்பதே இதன் பொருள் " 36. மிகப் பழைய கழக நூல்களிலேயே (தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களில் அடங்கிய பாடல்களில் தொன்மை சான்றவை) தமிழ் வரிவடிவம், எழுத்துமுறை குறித்தும் பண்பட்ட இலக்கியம் குறித்தும் தெளிவாக, விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஐ. மகாதேவன் (2003) கருத்து , அசோகனுடைய தமிழ் - பிராமி எழுத்துக் களிலிருந்து தமிழ் வரிவடிவம் உருவாக்கப்பட்டது என்பதாகும். இக்கருத்து ஏற்கத்தக்கதாக இல்லை. காரணம் மேற்சொன்ன கி.மு. 300 சார்ந்த தமிழ் நூல்கள், பாடல்கள் உருப்பெறுவதற்கு சில பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் வரிவடிவமும் இலக்கியங் களும் தோன்றத் தொடங்கியிருக்க வேண்டும். கொற்கையில் 1970 இல் அகழ்ந்தெடுக்கப்பட்ட பானை ஓட்டில் உள்ள தமிழ் எழுத்தின் காலம் கி.மு. 700 என அப்பொழுதே உறுதியாக்கப் பட்டது. கொடுமணலில் அண்மையில் அகழ்ந்த பானை ஓட்டு எழுத்துக்களின் காலமும் கி.மு. 500க்கு முந்தியதாக இருக்கவேண்டும் என இராஜன் (2004) நிறுவியுள்ளார். ஆதிச்சநல்லூரில் 2004இல் நடந்த அகழ் வாய்வில் கண்ட பானை ஓட்டுப் பொறிப்பின் காலமும் காரிமக் கணிப்பின்படி கி.மு. 700ஐ ஒட்டியதாக அமையலாம் எனச் செய்தி வந்துள்ளது. இவற்றையும் பிற ஆதாரங்களையும் சுட்டி இராஜன் (2004) நடன காசிநாதன் (2004) ஆகியோர் "தமிழுக்கு கி.மு. 800ஐ ஒட்டியே ஒரு தனி வரிவடிவம் இருந்திருக்கவேண்டும். அதனைப் பின்பற்றியே அசோக தமிழ் - பிராமி வரிவடிவம் (லிபி) கி.மு. 300இல் உருவாக்கப்பட்டிருக்கும்" என்பதற்கான வலுவான தருக்கங்களை முன் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்த கி.மு. 1000 - கி.மு. 300 சார்ந்த பெருங்கற்கால நாகரிகத்தின் தொடர்ச்சியே கழக இலக்கிய காலம், அந்நாகரிகக் கூறுகளில் பெரும்பாலானவை கழக இலக்கியத்தில் காணப்படுகின்றன என்பதும் இவர்களுடைய அடுத்த முடிவாகும். ஆக இவ்வாராய்ச்சிகள் மேலும் முன்னேறும் பொழுது தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 300க்கும் சில நூற்றாண்டுகள் முற்பட்டது என அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது. 37. இத்தருணத்தில் இன்னொன்றையும் கூற வேண்டும். கி.மு. 300க்கு முற்பட்ட கழக இலக்கியங்கள் எவையுமே நமக்குக் கிடைக்கவில்லை . கி.மு. 300 - கிபி 300 காலகட்டத்தைச் சார்ந்த சங்க இலக்கியங்களும் முழுமையாக நமக்கு கிடைக்கவில்லை. கிபி. 300ஐ ஒட்டிச் கழக இலக்கியங்களைத் தொகுத்தவர்கள் எவ்வெவற்றையும் விட்டு வைக்கலாம் என்று கருதினார்களோ அவற்றை மட்டும் தொகுத்து விட்டு மற்றவற்றை நீக்கி விட்டனர். தொகுத்தவற்றிலும் மாற்றங்கள் செய்திருக்கலாம். நுண்ணறி வுடையவர்கள் இதுபற்றி 1871 - லிருந்து தெரிவித்துள்ளவற்றைக் காண்போம். சார்லஸ் ஈ கோவர்: தென்னிந்திய நாட்டார் பாடல்கள் (The Folk songs of Southern India) 1871: திட்ட மிட்டுச் சிதைக்கப்படாத அல்லது மாற்றியெழுதப்படாத தொல்பழங்காலத் தமிழ் நூல் எதையும் இன்று காண்பது அரிது. தமிழ் மக்கள் - திராவிட (பழந்தமிழ்) இலக்கியத்தைக் கைவிட்டு புராணக்கதைகளை நம்பினால்தான் தங்களுக்குப் பிழைப்பு உண்டு என்று உணர்ந்தவர்களே இவ்வாறு பழந்தமிழ் இலக்கியத்தைச் சிதைத்தவர்கள் ஆவர். (தனித் தமிழ்ச் செய்யுள் நூல்கள் பல மதிப்பிழந்து ஒழியும்படி அவர்கள் செய்தனர். அறவே ஒழிக்கமுடியாத நேர்வுகளில் அந்நூல்களை அயோக்கியத் தனமாகச் சிதைத்து உருமாற்றி உலவவிட்டு மூலநூலின் கருத்தை உணர முடியாதவாறு செய்துவிட்டனர். ஹயூநெவில் : தி தப்ரொபேனியன் (The Taprobanian) சூன் 1896: "மதுரைத் தமிழ்ச் சங்கமும் அதன் நூலகமும் அழிக்கப்பட்ட பொழுது பழந்தமிழ் நூல்கள் சகட்டுமேனிக்கு அழிக்கப்பட்டன. அவற்றுள் சமணக் கொள்கை வாடை இருக்கலாம் என்ற கருத்தில்). ஈழத்தில் மகாவம்சம் இருந்ததுபோல் பாண்டியர்கள் வரலாற்றைக் கூறும் ஒரு நூல் மதுரைச் சங்க நூல்களில் ஒன்றாக இருந்து அழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக திருவிளையாடற் புராணம் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். அழிக்கப்பட்ட வரலாற்று நூலின் சிதைவுகளுடன், ஐங்கமர்கள் (பார்ப்பனிய சிவ மதத்தவர்கள் ) எண்ணம், சமயம் ஆகியவற்றுக்குப் பொருத்தமான புனை கதைகளுடன் பின்னிப் பிணைந்து அப்புராணம் உருவாக்கப் பட்டது. ஜான் ஸ்பியர்ஸ் "ஞானம் தோன்றிய இடத்திலிருந்து" வால் யூஸ் Values II - 10 சூலை 1957 : "சிந்துவெளி நாகரிக முத்திரைகளில் நூற்றுக்கணக்கான (தொல் தமிழ் ) வாசகங்கள் உள்ளன. கடல் கொண்ட (அழிந்துபோன) பண்டை நூல்களைப் பற்றித் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. எனினும் புத்தர் காலமாகிய கி.மு. 500க்கு முந்திய நூல்களுள் ஒன்றுகூட கிடைக்காததற்கான காரணத்தை நாம் உணர முடிகிறது. (தொல்தமிழருடைய) பண்டைய ஆவணங் களை ஆரியர்கள் ஒன்றுவிடாமல் அழித்துவிட்டனர் என்பதே அது''. தெ.பொ. மீனாட்சி சுந்தரன் : தொல்காப்பியம் - சொல்லதிகாரம்: கல்லாடர் உரை (1971) : ''தொல்காப்பியத்தை அதன் ஆசிரியர் எந்த உருவத்தில் விட்டுச் சென்றாரோ அந்த வடிவத்தில் அது நமக்கு வந்து சேரவில்லை'' (தொல்காப்பியம் : சொல்லதிகாரம் மரபியலில் பல இடைச்செருகல்கள் உள்ளன என்பது தொல்காப்பிய அறிஞர்கள் சோமசுந்தர பாரதி, வெள்ளை வாரணன், இலக்குவனார், கமில் சுவெலபில், இரா. இளங்குமரன், செ. வை. சண்முகம் போன்றவர்கள் ஏற்றுள்ளதாகும்.) 38. சோவியத் அறிஞர் காந்திராவ் தமது முப்பெருங் கடற்புதிர்கள் (1974) நூலின் இந்துமாக்கடல் பற்றிய இரண்டாம் பாகத்தில் தமிழ நாகரிகம்; அதனின்றும் உருவாகிய சிந்துவெளி நாகரிகம்; இவ்விரண்டின் தாக்கத்தால் உருவாகிய வேறுபல பண்டைய நாகரிகங்கள் ஆகியவைப் பற்றித் தரும் சிறந்த செய்திகளை படிக்கும்பொழுது இம்முன்னுரையில் குறித்துள்ள வற்றையும் ஆங்காங்கு நாம் கருத்தில் கொள்வது நல்லது. அவை காந்திரதாவ் முடிவுகள் பலவற்றுக்கு மேலும் வலிமை சேர்ப்பனவாகவே உள்ளன என்பதை உணரலாம். 39. சோவியத் அறிஞர் காந்திராவ் எழுதிய இவ்வரிய ஆய்வு நூலின் புதிய தமிழாக்கத்தை வெளியிட்டுத் தமிழியலுக்கு ஆக்கம் சேர்த்துள்ள தமிழ்மண் பதிப்பகத்தார் நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவராவர். - பி. இராமநாதன் தமிழநாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் : தென்பெருங்கடல் ஆய்வுகள் நண்ணிலக்கடல் மாந்தவினத்தின் புதிர்கள் மெலானிசியாவிலுள்ள சாலமன் தீவுகளுக்கும், ஆப்பிரிக்கா கண்டத்திற்கும் பல்லாயிரம் மைல்கள் இடைவெளி இருந்த போதிலும், இவ்விரு இடங்களில் வாழும் மக்களின் தோற்றம் ஒன்றுபோலவே உள்ளது. மாந்தவியல் ஆய்வாளர்களில் வல்லு நர்கள் கூட அவர்களைப் பிரித்து அடையாளம் காண இடர்ப்படும் அளவுக்கு அவர்கள் தோற்ற ஒற்றுமை உள்ளது. ஆப்பிரிக்காவின் வெப்பப் பகுதியில் வாழும் மக்கள் நீக்ரோ அல்லது நிலநடுக்கோட்டு இனத்தினர் ஆவர். இதே இனத்தவர்களை இந்தியப் பெருங்கடலுக்கு கிழக்கே உள்ள ஆஸ்திரேலியா, நியூகினி நாடுகளிலும், மலாயாத் தீபகற்ப காடுகளிலும் காணலாம். அவர்கள் அவ்வளவு தொலைவு பிரிந்து சென்றது எப்படி? மடகாஸ்கர் தீவின் தொல்குடிகள் ஆப்பிரிக்க கிழக்குக் கடற்கரையில் வாழும் நீக்ரோக்களைப் போன்று இருப்பதைவிட மெலானிசியர்களைப் போன்று இருப்பது ஏன்? மடகாஸ்கர் மக்கள் மொழியான மலகாசி ஆப்பிரிக்க நீக்ரோவர் மொழிகளைவிட ஈஸ்டர் தீவு மக்கள் மொழியோடு நெருங்கிய உறவு கொண்டிருப்பது ஏன்? மடகாஸ்கர் உயிரினங்களும், தாவரவினங்களும், ஆப்பிரிக்க இனங்களைவிட இந்தியவினங்களுடன் நெருங்கிய உறவு கொண் டிருப்பது ஏன்? நிலநடுக்கோட்டு இனத்தின் ஒவ்வொரு உட்பிரிவிலும் ''குள்ளர்களைக் கொண்ட கிளை ஒன்று இருப்பது ஏன்? அந்தமான் தீவுகளில் இன்றும் கற்கால நாகரிகத்தில் வாழும் குள்ளமான நெகிரிடோ இனம் உள்ளது; அதுபோலவே ஆப்பிரிக்கா, மலாயாத் தீபகற்பம், பிலிப்பைன்ஸ் தீபகற்பம், நியூகினி ஆகியவற்றிலும் அத்தகைய குள்ளவினம் காணப்படுகிறது. ஆப்பிரிக்கா, தென் ஆசியா, கிழக்கிந்தியத் தீவுகள் ஆகிய அனைத்தையும் ஒரு காலத்தில் இணைத்த நிலப்பகுதியில் அன்று வாழ்ந்த குள்ளவினத்தில் இன்று எஞ்சியுள்ள வர்கள்தாம் இவர்கள் என்று கருதலாமல்லவா? பரந்த இந்தியப் பெருங்கடல் ஆப்பிரிக்க நீக்ரோக்களைக் கிழக்கிந்தியத் தீவுகளின் நீக்ரோக்களிடமிருந்து பிரித்து வைத் துள்ளது. ஆப்பிரிக்காவுக்கும் அத்தீவுகளுக்கும் இடைப்பட்ட ஆசியாக் கண்டத்தில், இந்தோ - ஐரோப்பியர், மங்கோலியர் ஆகிய இனத்தார் வாழ்கின்றனர். நிலநடுக்கோட்டுப் பகுதி இனமக்கள் வேறு சில இடங்களிலும் காணப்படுவது உண்மைதான்: மத்திய இந்தியாவில், பழைய இனங்களான முண்டா இனமும், நீக்ரோ இனமும் உள்ளன. தென்னிந்தியாவில் கருநிறத்தவரான திராவிடர் உள்ளனர். இவர்கள் தோற்றம் புதிராக உள்ளது. திராவிட இன மக்களில் தனிச்சிறப்புப் பண்பாடு உள்ளவர் தமிழராவார். அவர்களின் ஆதித் தாயகம் குறித்து விவாதம் உண்டு. அத்தாயகமாக பல நாடுகளையும், கண்டங்களையும் அறிஞர் சுட்டுவர். ஆனால் தமிழர்கள் (குறிப்பாகத் தமிழக வரலாற்றாளர்கள்) நிலநடுக் கோட்டையொட்டி முதல் முதலில் தோன்றிய நிலப் பரப்பான நாவலந்தீவின் தென்பகுதியில் பண்டு தமிழரின் தாயகம் இருந்தது என்று நம்புகின்றனர்; நாகரிகத் தொட்டில் என்று கருதப்படும் மறைந்த இலெமூரியாவும் அப்பகுதியைச் சேர்ந்தது தான். இன்று இந்தியப் பெருங்கடலில் மூழ்கியுள்ள கோண்டு வானா என்னும் மாபெரும் தாய்க்கண்டத்தின் வடமுனையே லெமூரியா என்றும் தமிழறிஞர் நம்பினர். வேறு சில இந்தியத் தொல்கதைகள் அவ்வாறு கடலில் மூழ்கிய ரூதம், தைத்தியம் போன்ற நாடுகளையும் குறிப்பிடுகின்றன. ஒருகாலத்தில் இந்தியாவையும், ஆப்பிரிக்காவையும் வால் போன்ற நீண்ட நிலப்பகுதிகள் இணைத்தன் என்ற கொள்கையை நிலநூலார் உருவாக்கியுள்ளனர். தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் முறையே அரபிக்கடல், வங்காள விரிகுடாவையொட்டி உயர்ந்து நீண்டு அமைந்திருப்பதை நோக்குமிடத்து ஒரு காலத்தில் இப்பகுதியில் பெருமளவுக்கு நிலம் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று கருத இடமுண்டு. கடற்கரையையொட்டி கடலின் அடியிலும் ஓர் ஆயிரமாத்திரி (கிலோமீட்டர்) ஆழத்திற்கு எரிமலைக் குழம்பின் படிவம் காணப்படுகிறது. ஒருகாலத்தில் நிலமாக இருந்த பகுதி கடலுள் மூழ்கி அதற்குக் கிழக்கில் மேற்குமலைத் தொடர் உருவாகியிருக்கலாம். இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே மேலைக்கடலில் மூழ்கிவிட்ட பெருங் கண்டத்தின் எச்சம் என்றும், இலங்கை அக்கண்டத்தின் ஒரு பகுதியாகலாம் என்றும் நிலநூலார் சிலர் கருதுகின்றனர். பம்பாய்ப் பகுதியில் கடலுள் மூழ்கிய காடு ஒன்று உள்ளது. மேலும் அக்கடற்கரையின் தோற்றமே கடலில் நிலப்பகுதி மூழ்கிக் கிடப்பதைக் காட்டும் சான்று என்று நிலநூலார் கருதுகின்றனர். கடற்கரையையொட்டி நிலப்பரப்பு கடலுள் மூழ்கியிருப்பதற்கான தடயங்கள் மேற்குக்கரையில் மட்டுமின்றி கிழக்குக் கரையிலும் உள்ளன. பண்டைய புவியியல் வல்லுநர்கள், தாலமி உட்பட, இந்துமாக்கடலானது நாற்புறமும் நிலம் சூழ்ந்தது என்று நம்பினர். பண்டைய நிலப்படங்களில் நிலப்பகுதியாகக் காட்டப் பட்டுள்ளவை இன்று கடலடியில் மூழ்கியுள்ளனவோ? மாந்த இனம் உலகம் முழுவதும் பரவிக் குடியேறியது பல்லாயிரம், ஏன் பல இலட்சம், ஆண்டுகளாக நிகழ்ந்திருக்கலாம். எனவே இந்த நீண்ட கால அளவில் சில நிலப்பகுதிகள் கடலுள் மூழ்கியும், வேறு சில புதிதாகத் தோன்றியும் இருக்கலாம். இந்தியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் இடையே (ஆப்பிரிக் காவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கூட) நிலப்பரப்புகள் இணைப்புப் பாலமாக இருந்திருக்கலாம் எனக் கொண்டால் நிலநடுக்கோட்டு இனத்தினர் எவ்வாறு மேற்சொன்ன பலவிடங் களுக்கும் பரவினர் என்பதை விளக்க இயலும். தென்கிழக்கு ஆசியக் கடற்கரை இப்பொழுது கூட சிறிது சிறிதாக கடலுள் மூழ்கிவருகிறது என்று அண்மைக்கால ஆய்வுகள் காட்டுகின்றன. இவ்வாறு ஆழ்வ தானது முற்காலத்தில் விரைந்தும், பெருமளவிலும் நிகழ்ந்திருக் கலாம். கோண்டுவானா தாய்க்கண்டமும் இலெமூரியாவும் பல கோடி ஆண்டுகளுக்கு முன் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய இப்போதைய கண்டங்களைத் தன் பகுதிகளாகக் கொண்ட கோண்டுவானா என்னும் தாய்க்கண்டம் ஒன்று தென்கோளத்தில் இருந்ததாக நிலநூலார் கருதுகின்றனர். கோண்டுவானா நிலத்தின் பல பகுதிகளில் உள்ள விலங்கு, நிலைத்திணை வகைகளின் கற்படிவங்களை (பாசில்) ஒப்பிடும் பொழுது பல ஒற்றுமைகள் உள்ளன. கற்படிவ ஒற்றுமை மட்டு மல்ல. ஒரே இனத்தைச் சார்ந்த வெப்பத்தை நாடும் மண்புழு இனங்கள் தென்மேற்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை மூன்று இடங்களிலும் காணப்படுகின்றன. இப்புழு கடலைத் தாண்டிச் சென்றிருக்க முடியாது; எனவே இம் மூன்று பகுதிகளும் ஒரு காலத்தில் வால் போன்ற நிலப்பகுதிகளால் இணைக்கப்பட்டிருந் திருக்கலாம்; அல்லது முதலில் இப்பகுதிகள் நெருங்கியிருந்து பின்னர் கடல் இடையிட்டதால் பிரிக்கப்பட்டிருக்கலாம். குட்டி போட்ட பின் வயிற்றோடு இணைந்த பை போன்ற உறுப்புக்குள் வைத்துக் குட்டிகளைச் சுமந்து செல்லுவனவான, கங்காரு போன்ற மார்சுபியல் இன விலங்குகள் ஆஸ்திரேலியாவிலும் உள்ளன ; தென் அமெரிக்காவிலும் உள்ளன. மண்புழு குறித்து மேலே கூறிய காரணம் இதற்கும் பொருந்துவதாகும். இவைபோன்ற பல சான்றுகளிலிருந்து, நிலநூல், விலங்குநூல், நிலைத்திணை நூல் அறிஞர்கள் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்பிரிக்கா, அன்டார்டிகா ஆகியவை ஒரு காலத்தில் கோண்டுவானா தாய்க்கண்டத்தின் பகுதிகளாக இருந்தன என்று கருதுகின்றனர். அப்படி ஒரே கண்டமாக பல கோடி ஆண்டுகள் இருந்த பிறகு இற்றைக்கு முன்னர், 18-15 கோடி ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஒரு கால அளவில் கோண்டுவானா பிளவுண்டது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இதுபோன்ற செய்திகளில் இன்னும் தெளிவில்லை. எனவே இந்தியப் பெருங்கடலோ அதன் பகுதியோ கோண்டுவானாவின் பகுதியாக இருந்ததா அல்லது தனித்து இருந்ததா என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை. உலகக்கோளத்தின் மேல், முதலில் உருவானது இப்பொழுது தரையாக இருக்கும் கண்டப்பகுதிகளா அல்லது இப்பொழுது கடலின் அடித்தளத்தில் இருக்கும் பகுதியா, என்னும் கேள்விக்கு மீண்டும் செல்லவேண்டும். நிலநூல், கடல் நூல் சார்ந்த அறிஞர் களிடையே பசிபிக் பெருங்கடலின் தோற்றம் பற்றிய கருத்து வேறுபாட்டைவிட கோண்டுவானா - இந்தியப் பெருங்கடல் தோற்றம் பற்றிய கருத்துவேறுபாடு கடுமையாக உள்ளது. கண்ட நகர்வுக் கொள்கையை (Continental Drift) நடுவமாகக் கொண்டு இரண்டு வகைக் கருத்துக்கள் எழுந்துள்ளன. ஆல்பிரட் வெஜினார் என்னும் செர்மன் அறிவியலாளர், நிலநூலாளர், வானிலை அறிஞர், வடதுருவப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தவர், தட்பவெப்ப நிலை ஆய்வாளர், இவை அனைத் துக்கும் மேலாக கண்டநகர்வுக் கொள்கையை உருவாக்கியவர். அவருக்கு 50 ஆண்டு முன்னர் வாழ்ந்த ஒய். பைகனாவ் என்னும் உருசிய அறிஞரும் இக்கொள்கை பற்றிக் கூறியிருந்த பொழுதிலும் வெஜினரே சிறந்த அறிவாற்றலுடனும் தக்க காரணங்களுடனும் இக்கொள்கையை உருவாக்கினார். வெஜினர் இயற்றிய கண்டங்கள், கடல்களின் தோற்றம் என்னும் நூல் விவாதப்புயலைக் கிளப்பியது; அப்புயல் இன்றும் தொடர்கிறது. உலகின் நிலப்பகுதி முழுவதும் ஒரு காலத்தில் ஒரே தாய்க்கண்டமாக இருந்தது. பிறகு ஞாயிறு, திங்கள் ஆகியவற்றின் ஈர்ப்பாற்றல், பூமியின் ஆழ்ந்த உட்பகுதியாகிய நெருப்புக்குழம்புப் பகுதியில் உண்டான மாற்றங்கள் ஆகியவற்றால் அக்கண்டம் இரண்டு பகுதியாகப் பிளந்தது. ஐரோப்பா, வட மெரிக்கா, ஆசியாவின் பெரும்பகுதி ஆகியவை அடங்கிய லாரேசியா வட கோளத்தில் அமைந்தன. ஏனைய பகுதிகள் கோண்டுவானா என தென்கோளத்தில் அமைந்தது. இன்று கண்டங்கள் கடலால் பிரிக்கப் பட்டிருந்தாலும் அவற்றின் கடற்கரைகளைச் சேர்த்தால் ஒன்றோடு ஒன்று அப்படியே பொருந்தும் என்பது உலகப் படத்தைப் பார்த்தாலே தெரியும். ஒரு கண்டத்தின் கடற்கரையை யொட்டிய மலை, நிலம், ஆறு போன்ற அமைப்புகள், இன்னொரு கண்டத்தில் உள்ளவற்றோடு பொருந்துவதையும் காணலாம். எடுத்துக்காட்டு: ஆப்பிரிக்க மேலைக்கரையில் உள்ள கேப் மலைகளும், தென் அமெரிக்காவின் கீழைக்கரையிலுள்ள மலை களும் இரட்டைப் பிறவிகள் போல் உள்ளன : அதே பாறை வகைகள்; அதே கனிமங்கள் ; தரைக்கடியில் அதே நில அமைப்பு. இப்பொழுது உள்ள பல நுண்ணிய அளவைக்கருவிகள் அன்று இல்லை; எனவே வெஜினர் கருத்துக்கள் பலவற்றை தவறெனக் கருதினர். மேலும் மாக்கடல்களின் அடித்தளப்பரப்பின் அமைப்புப் பற்றி அக்காலத்தில் ஒன்றும் தெரியாது. வெஜினர் தம் கொள்கையை உருவாக்கியது முதல் உலகப்போருக்கு முன்னர் ஆகும். பூமியின் உட்பகுதியைச் சுற்றி மூடியுள்ளது மேலுறை (Man - tle). அதை ஆதாரமாகக் கொண்டே கண்டங்கள் உயர்வது, தாழ்வது மட்டுமன்றி, பக்கவாட்டு நகர்வும் அமைகின்றன. அந்த மேலுறை மீது கண்டங்களாகிய நிலப்பகுதிகள் சவாரி செய்து வருகின்றன என்பதுதான் கண்டநகர்வுக் கொள்கை. அது அறிவியலாளர் பலருக்கும் இன்று உடன்பாடானது. (எனினும் ஏற்காத சிலரும் உண்டு. அவ்வாறு ஏற்காதவர்கள் பூமியின் மேலுறைமீது கண்டங்கள் நெடுந்தொலைவு பயணம் செய்வது இயலாது என்கின்றனர்.) கண்டங்களின் எல்லைக்கோடுகள் வெஜினர் சொன்னபடி ஒன்றுக் கொன்று பொருந்துவது போல் இருந்தபோதிலும் அவ் வொற்றுமை தற்செயலாக ஏற்பட்டிருக்கலாம் என்பர் மறுப்பாளர். இப்பொழுது கண்டத் திட்டாக கடலுக்கடியில் உள்ள நிலம் கடைசிப் பனி ஊழியில் கடலுக்கு மேல் நிலமாகத்தான் இருந்தது . (பின்னர் கடல் மட்டம் உயர்ந்தபின் கண்டத்திட்டு கடலுள் மூழ்கி யது). எனவே அந்தக் காலக்கட்டத்தில் எல்லைக்கோடுகள் ஒன்றொடு ஒன்று பொருந்துவனவாக இருந்திருக்காது என்று அவர்கள் கூறுவர். ஆஸ்திரேலியா, அன்டார்டிகா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா இவற்றின் உயிர் வகைகள், நிலத்திணை வகைகள் ஒற்றுமைக்குக் காரணமென்ன? பழங்காலத்தில் இக் கண்டங்களை இணைத்திருந்த நிலப்பகுதிகள் பின்னர் கடலுள் மூழ்கியிருக்கக் கூடாதா? என்றும் அவர்கள் கேட்பர். வெஜினர் கொள்கைக்கு ஆதரவானவர்கள் தென்கோளக் கண்டங்கள் சேர்ந்ததே கோண்டுவானா என்றும் கண்டங்கள் உடைந்து விலகிய பின் அது முடிவுற்றது என்றும் கூறுகின்றனர். எதிர்ப்பாளர்களோ, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், இலங்கை மட்டுமின்றி தென் அட்லாண்டிக்கின் ஒரு பகுதியையும், இந்துமாக்கடல் முழுவதையும் ஏன், தென் பசிபிக்கின் ஒரு பகுதியையும் அடக்கிய மாபெரும் நிலப்பரப்பாக பண்டைய கோண்டுவானா இருந்தது என்பர். பல மில்லியன் ஆண்டுகள் மாற்றங்களில் கோண்டுவானாவும் உடைந்தது. நிலம் நீருக்குள் ஆழ்ந்து கடலில் அடித்தரையாக ஆயிற்று. குறைந்த ஆழமுள்ள கடற்பகுதிகளில் பவளப்பூச்சிகள் வளரத்தொடங்கி, இன்று பசிபிக் கடலில் உள்ளதுபோல, இந்துமாக் கடலிலும், மாலத்தீவு, இலட்சத்தீவு, கோகோஸ், சாகோஸ் ஆகிய பவளப்பாறைத் தீவுகள் உண்டாயின. இந்துமாக்கடலில் செவிலிஸ், கொமாரா போன்ற (பவளப் பாறைத் தீவுகள் அல்லாத) கருங்கற் பாறைத் தீவுகளும் உள்ளன. அத்தீவுகளிலும் மட்டும் இந்தியா, இலங்கை, மடகாஸ்கர் நாடு களிலும் காணப்படும் உயிரின, நிலைத்திணை இனவகைகளுக் கிடையே உள்ள ஒற்றுமையை முன்பத்தியில் சொன்ன அடிப்படை யில் விளக்க இயலாது. கோண்டுவானா சிதைந்த பலமில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும், இந்துமாக்கடலில் வடமேற்குப்பகுதியில் (இலெமூரியா என்று இப்பொழுது அழைக்கப்படும்) ஒரு பெருநிலம் இருந்து வந்திருக்கலாம் என்ற ஊகத்தை கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், விலங்கியல் அறிஞர் பிலிப் ஸ்லேட்டர் என்னும் ஆங்கிலேயர் முன்வைத்ததற்கு இந்த உயிரின - நிலைத்திணையின ஒற்றுமைதான் அடிப்படையாகும். பண்டைய உயிர்களும், நிலைத் திணைகளும் தென்கண்டங்களில் பரவிட இலெமூரியா பாலமாக இருந்தது. நாளடைவில் ஸ்லேட்டர் கருத்தை நிலநூல், விலங்கியல், தாவர நூல், கடல் நூல், தொல்லுயிரியல் ஆகிய துறைகள் சார்ந்த அறிஞர்களும் ஆதரித் தனர். தொல்பழங்கால மாந்தவியல் (Palaeo Anthropology) என்னும் புதிய அறிவியல் துறை வல்லுநர் ஆதிமாந்தன் தோற்றத்தில் லெமூரியாவுக்கு முதலிடம் தந்து, அங்குதான் மாந்தக்குரங்கு ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) என்னும் இக்கால மாந்தனாக உருவாயிற்று என்று (19 ஆம் நூற்றாண்டு இறுதியையொட்டி) கருதலாயினர். இக்கால மாந்தன் ஹோமோ சேபியன்ஸ் பிறப்பிடம் மாந்தக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பங்கு என்ற தனது நூலில் எங்கல்ஸ் கூறுவது: ''மூன்றாம் பேருழிக்காலத்தில் (Tertiary) பெரும்பாலும் அதன் கடைசிப் பகுதியில், (குறிப்பாக இன்னகாலக்கட்டம் என்று அறுதியிட்டு கூறமுடியாத ஒரு காலக்கட்டத்தில்) பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வெப்பமண்டல நிலப்பகுதியில் ஓர் இடத்தில் ஏறத்தாழ மாந்தனின் நிலைக்கு வளர்ச்சி யடைந்த மனிதக்குரங்கு இனம் ஒன்று வாழ்ந்தது. இப் பொழுது இந்துமாக் கடலின் அடியில் மூழ்கியுள்ள ஒரு பெருங் கண்டத்தில் அது வாழ்ந்திருக்க வேண்டும்". இயற்கை வரலாற்றியல், மாந்தவின அறிவியல் ஆகியவற்றிற்கு அடித்தளம் நாட்டிய டார்வின், ஹக்ஸ்லி போன்ற அறிவிய லாளரைப் பின்பற்றி மேற்கண்டவாறு எங்கல்ஸ் கூறினார். டார்வி னுடைய நண்பர் ஹக்ஸ்லி "கடல் கொண்ட லெமூரியாவில் தான் மாந்தன் என பிரித்துக் காணத்தக்க ஆதிமாந்தவினம் தோன்றியது" என்று ஏற்கெனவே கூறி யிருந்தார். கணிதம் முதல் தொல்மாந்தவியல் வரை அனைத்து அறிவியல் துறைக் கண்டுபிடிப்புகளையும் பயின்று பயன்படுத்தியவர் எங்கல்ஸ் ஆவார். ஹக்ஸ்லியின் இக்கொள்கையை வலியுறுத்தியவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உயிரியல் வல்லுநர் எர்னஸ்ட் ஹேக்கல் (Ernst Hackel) என்பவர். மனித வினப் பிறப்பு பற்றி அதுவரை வந்திருந்த அனைத்துச் செய்திகளையும் பயின்ற ஹேக்கல் மாந்தக்குரங்கு நிலைக்கும், ஹோமோ சேப்பியன் நிலைக்கும் இடைப்பட்டதான ஓர் உயிரினம் இருந்திருக்க வேண்டும் என்று ஊகித்து அவ்வினத்துக்கு குரங்குமாந்தன் (Primates Pithecanthropus) என்று பெயரிட்டார். அவ்வினம் லெமூரியாவில் தோன்றி பின்னர் வடகிழக்கை நோக்கி இந்தியாவிற்கும், தென்கிழக்கு ஆசியாவிற்கும் பரவியதுடன், மேற்கு நோக்கி ஆப்பிரிக்காவுக்கும் பரவியிருக்க வேண்டு மென்பது அவருடைய ஊகமாகும். டச்சு உடற்கூற்றியல் வல்லுநர் யூஜின் துபாய் (Eugene Dubois) என்பவர் அந்த குரங்குமாந்தன் இன எலும்புக்கூட்டை ஜாவாத் தீவில் கண்டெடுத்தது ஹேக்கல் ஊகத்தை உறுதிப்படுத்துவதாகக் கருதப்பட்டது. பின்னர் ஆப்பிரிக்கா, இந்தியாவிலும் முன்மாந்த வின் (Apeman) எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. மேற்சொன்ன அறிவியலாளர் அனைவரும் வல்லுநர்கள்தாம் என்றாலும், 19 ஆம் நூற்றாண்டில் அவர்களுக்குக் கிடைத்த செய்தி களை மட்டுமே அவர்கள் ஆதாரமாகக் கொள்ள முடிந்தது. அதற்குப் பின் நிலவியல், தொல்மாந்தவியல், கடலாய்வியல், விலங்கியல் துறைகளில் எல்லாம் பெருவளர்ச்சி ஏற்பட்டு புதுப்புது செய்திகள் - வந்துள்ளன. அந்நூற்றாண்டில் கனவுகூடக் காண வியலாத நுணுக்கமான கருவிகள், பொறிகள் இன்று (1974) உருவாகியுள்ளன. இன்றைய நிலையில் இலெமூரியா பற்றியும், மாந்தன் பிறப்புப் பற்றியும் இக்கால அறிவியல் என்ன கருதுகிறது? பல்வேறு அறிவுத்துறைகளின் புதிய கண்டுபிடிப்புக்கள் அடிப்படையில் ஒய். ரெஷதாவ் என்னும் சோவியத் அறிஞர் புவியின் இயல்பும் மாந்தனின் தோற்றமும் என்னும் நூலில் கோண்டுவானாவின் கிழக்குப்பகுதிக்கும், மாந்தவினப் பிறப்பிற்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார். ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் லெமூரியா என்ற நிலப் பகுதியானது மடகாஸ்கர், இலங்கை, இந்தியத் துணைக்கண்டம், அரேபியக் கடற்கரைப் பகுதிகளையொட்டி இன்று கடலடியிலுள்ள நிலப் பகுதி அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கலாம்; தென் கிழக்கு ஆசியாவையும் இந்த லெமூரியாவையும் அவ்வப் பொழுது இணைத்து வந்த வால் போன்ற நிலப்பகுதிகளும் இருந்திருக்கலாம் என்கிறார் அவர். அடர்ந்த வெப்பக்காடுகள், அவற்றையொட்டி தென்கிழக்கு, தெற்கு, வடக்குப் பக்கங்களில் எரிமலைகள் இவ்வாறு லெமூரியா அமைந்திருக்க லாம். குட்டி போட்டுப் பால் கொடுக்கும் பாலூட்டி (Mammal) இன விலங்குகளில் ஒன்றாக (புழுப்பூச்சிகளை உண்டு, மரங்களில் வாழ்ந்துவந்த) இலெமூர் (Lemur) என்னும் சிறு மாமல் இன விலங்கு உருவாகி வளர்வதற்கு அச்சூழ்நிலை ஏற்புடையதாயிற்று. நாளடைவில் இந்த இலெமூர்கள் பருமனாயின; கூர்மையான பார்வையடைந்தன; கூரான வலுவான நகங்கள் உள்ள முன்னங் கால்களைப் பெற்றன. இம்முன்னங்கால்களே பொருள் களைப் பற்றக்கூடிய, மரமேறக்கூடிய கைகள் ஆக உருவாயின. குரங்குகளுக்கு மூதாதையாகிய, இந்த இலெமூர் என்னும் சிறிய பாலூட்டி விலங்கு இன்றைக்கு 10-7 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. மூன்றரைக்கோடி ஆண்டுகளுக்கு முன்னர் லெமூரியாவின் தெற்கு, தென்கிழக்குப் பகுதிகள் கடலுள் மூழ்கத்தொடங்கின. மடகாஸ்கர் ஏற்கெனவே பிரிந்து விட்டது. லெமூர் விலங்குகளும் தொடர்ந்து மாற்றம் பெற்றன; மரத்தைவிட்டுக் கீழே இறங்கி உணவு தேடித் தரைக்கு வந்தன. மடகாஸ்கரில் மெகலாடாபிஸ் (Megaladapis) என்னும் மிகப்பெறும் இலெமூர் எழும்புக்கூடு கிடைத் துள்ளது. அது நீண்ட வால், இரண்டு பெரிய குண்டுக் கண்கள் ஆகியவற்றுடன் ஆறடி உயரத்தில் அரைக்குரங்கு போல பின்னங் கால்களில் நடைபோட்டு வந்திருக்கும்! இக்கால மாந்தவினம் உருவானது (குரங்கினத்துக்கும் மூதாதையான) இலெமூர் இனத்திலிருந்து அல்ல. இலெமூர்களில் லிருந்து நான்கு கால் முழுக்குரங்குகள் உருவான பின்னர் அவற்றி லிருந்து மாந்தக்குரங்கினம் பிறந்தது. மாந்தக்குரங்கினங்களுள் ஒன்றிலிருந்து மாந்தவினம் பிறந்தது. கொரில்லா, சிம்பன்சி என்னும் மாந்தக்குரங்கினங்கள் ஆப்பிரிக்க வெப்பக் காடுகளில் தோன்றின. ( எந்த மாந்தக்குரங்கினத்திலிருந்து மாந்தன் உருவானானோ அந்த மாந்தக்குரங்கினத்திற்கும் ஏனைய மாந்தக் குரங்கினங் களுக்கும் பொதுவான ஒரு மூதாதைக்கு டிரையோபிதகஸ் (Dryopithecus) என்று பெயரிடப்பட்டுள்ளது). சிவபிதகஸ்(Sivapithecus) என்னும் இனம் திரையோ பிதகஸ்-க்கும் முந்தியதாகக் கருதப்படுகிறது. காரணம் அவ்வினத்தில் கொரில்லா, சிம்பன்சி, ஓராங்குடான் போன்ற அனைத்து மாந்தக்குரங்குகளின் அடிப்படை உடற்கூறுகளும் உள்ளன. இலெமூர்களும் அவற்றிலிருந்து பிறந்த குரங்கினங்களும் இலெமூரியாக் கண்டம் ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன் உடைந்தபின்னர், அக்கண்டத்தைவிட்டு இடம்பெயர்ந்தன என்பார் ரெஷதாவ். மேற்கே ஆப்பிரிக்காவை நோக்கியும், வடக்கே இந்தியாவை நோக்கியும் அக்குரங்கினங்கள் பெயர்ந்து சென்றன. 4540 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவிற்குச் சென்ற குரங்கு வகைகளில் சில மரவாழ்க்கையை விட்டுத் தரைவாழ்வை முற்றாக மேற்கொண்டு (இயற்கைப் பொருள்களைக் கருவிகளாக பயன் படுத்தும் அளவிற்கு வளர்ந்து) மாந்தவின மூதாதையர்க ளாகிய மாந்தக்குரங்குகள் ஆகின. மாந்தக்குரங்கினங்கள் உருவான மூன்றாம் பேரூழிக் (Tertiary) காலத்துடன் இலெமூரியா முடிந்துவிட்டதா? அல்லது அதன் சில பகுதிகள் நான்காம் பேரூழிக் (Quaternary) காலத்திலும் மூழ்காமல் இருந்தனவா? அதாவது இன்றுள்ள தென்கண்டங்களுக்கு இலெமூர்கள், குரங்கினங்கள் ஆகியவற்றை மட்டுமே இலெமூரியா அளித்ததா அல்லது இப்போதைய மாந்தவினம் (ஹோமோ சேப்பியன்ஸ்) பிறந்த தொட்டிலும் இலெமூரியா தானா? இதற்கு விடை இந்துமாக்கடல் அடிப்பரப்பாய்வில்தான் கிட்ட வேண்டும். பண்டைய நாகரிகங்களின் பிறப்பு, அவற்றிடையேயுள்ள உறவு பற்றி ஆய்வு செய்யும் பொழுது எழும் பல சிக்கல்களைத் தீர்க்க இந்துமாக் கடலில் இலெமூரியா என்னும் நிலப்பகுதி, இலெமூர்கள், குரங்குகள், மாந்தக் குரங்குகள், தொல்மாந்தவினங்கள் ஆகியவை வாழ்ந்த கழிபழங்காலத்தில் மட்டுமன்றி, இக்கால மாந்தவினம் பிறந்து நாகரிகம் பெற்ற அண்மைக்காலம் வரையில் இருந்தது, என்னும் கருதுகோள் உதவுவதாகும். தமிழகம் - நாவலம் - தென்மதுரை பண்டைத் தமிழக நூலாசிரியர் சிலர் தமிழரின் பிறப்பிடம் நிலநடுக்கோட்டின் அருகில் தோன்றிய பழைய நிலங்களில் ஒன்றாகிய நாவலந்தீவு என்று நம்பினர். இடைக்கால இலக்கிய யங்கள் (இறையனார் அகப்பொருளுரை ; சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் உரை ) புலவர்கள், அறிஞர்களைக் கொண்ட மூன்று தமிழ்க் கழகங்கள் பண்டு இருந்தனவாகக் கூறுகின்றன. முதலிரு கழகங்கள் தமிழர் வரலாற்றின் தொடக்கக் காலத்தில் 10000 ஆண்டுகளுக்கு முன்பாகவே "கடல் கொண்ட தென்னாட்டில் '' (நம் காலத்தில் இலெமூரியா என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலப் பரப்பா?) இருந்தனவென்றும், கடல்கோள்களால் அத்தென்னாடும் அதன் தலைநகரான தென்மதுரையும் கடலுள் மூழ்கவே அவ்விரு கழகங்களும் அழிந்தன என்றும் கூறுகின்றன. தமிழர் நாகரிகம் தொன்மையானது. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தியாவின் மிகத் தொன்மையான இனத்தைச் சார்ந்தவர்களான திராவிட மொழிபேசுநர் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகமாகும் (1974). இந்துக்களின் புனித நூலான ரிக்வேதத்தில் வரும் முரட்டு நாடோடிகளான ஆரியர் இந்தியா வுக்குள் நுழையுமுன்னரே இங்கு வாழ்ந்திருந்தவர் திராவிடராவார். இன்று தென்னிந்தியாவில் பெரும்பாலும் திராவிட மொழிகளே பேசப்பட்டுவருகின்றன. ஆனால் பழங்காலத்தில் மத்திய, வட இந்தியப் பகுதிகளிலும் திராவிட மொழி பேசுநரே வாழ்ந்திருந்தனர். பல்லாயிரமாண்டு முன்னர் பலுச்சிஸ்தான், தெற்கு ஈரான் பகுதிகளிலும் திராவிட மொழிகள் பேசப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. மிகப்பழைய நாகரிகம் படைத்தவர்களாக இன்று கருதப் படும் சுமேரியர்கள் டைகிரிஸ் - யூப்ரடிஸ் ஆற்றுப்பகுதியில் குடியேறுவதற்கு முன்னரே அப் பகுதியில் திராவிடர் வாழ்ந்து வந்திருக்கலாம். மேற்சொன்ன இலக்கியங்கள் தமிழர்களின் (அதாவது திராவிடர்களின் தாயகம் குமரிமுனைக்குத் தெற்கே பண்டு இருந்து பின்னர் கடல்கோளால் இந்திய மாக்கடலுள் மூழ்கிவிட்ட நிலப் பகுதியே என்று கூறுகின்றன. கடலுள் மூழ்கிய அப்பகுதியே உலக நாகரிகத் தொட்டில் என்றும் தமிழறிஞர் கூறுகின்றனர். உலகின் மிகப்பழைய நாகரிகங்கள் மூன்றில், இரண்டு நாகரிகங்கள் திராவிட மொழி பேசிய இனங்களோடு தொடர்புடையன என்பது வியத்தகு செய்தியாகும். சிந்துசமவெளியில் 1920 - 30இல் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லிந்திய நாகரிகம் (Proto - Indian Civilisation) இருபதாம் நூற்றாண்டின் அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகள் அனைத்திலும் மிக முகாமையானது என்பர் அறிவியலறிஞர். [இந்நூல் முழுவதும் தொல்லிந்திய நாகரிகம் என்ற பெயரில் காந்திரதாவ் சுட்டுவது சிந்துவெளி நாகரிகத்தைத்தான். பின்னர் நடந்த அகழ்வாய்வுகளில், அந்நாகரிகம் சிந்துவெளி மட்டுமன்றி அதற்குக் கிழக்கு, தெற்குப் பகுதிகளிலும் : அதாவது கத்தியவார் தீவக்குறை முதல் – டெல்லி வரை யுள்ள பகுதிகள் போன்றவற்றிலும், பரவியிருந்தது தெரிய வந்துள்ளது. எகிப்து, மெசொபொதாமிய நாகரிகங்கள் அளவுக்குத் தொன்மை இல்லாமல் இருந்திருக்கக்கூடும் எனினும், சிந்துவெளி நாகரிகப் பரப்பு, எகிப்து நாகரிகப்பரப்பைவிட பன்மடங்கு பெரியது; மெசொபொதாமியப்பரப்பை விடவும் பன்மடங்கு பெரியது. தொல்லிந்திய நாகரிகத்தை உருவாக்கியவர் யார்? அகழ்ந் தெடுக்கப் பட்ட சிந்துவெளி முத்திரைகள், அணிகளில் உள்ள சித்திர எழுத்துக்கள் இதற்கு விடைதர உதவுகின்றன. (1974 இல் இருந்த நிலைமையில்) எவரும் இந்த எழுத்துக்களை வாசித்துக் கூறவில்லை யென்றாலும் சோவியத் ஆய்வுக்குழு ஒன்று கணினி துணைகொண்டு ஆய்வு செய்து இவ் வெழுத்துக்கள் எந்த மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது என்று நிறுவியுள்ளது. தொல்லிந்திய முத்திரை யெழுத்துக்கள் பற்றிய தொடக்கநிலை அறிக்கை என்னும் அவர்கள் ஆய்வறிக்கை 1965இல் வெளிவந்தது. குழு உறுப்பினர்கள் : எம், புரோபஸ்ட், கணினி மென்பொருளாளர் ; ஜி. அலெக்ஸியேவ், பண்டைய எழுத்தியல் வல்லுநர்; பி. வோல்கோவ், இந்தியவிய லாளர்; ஐ. பியோதரோவா, மொழியியலாளர் ; நாரசாவ் (Knorozov), பண்டைய எழுத்தியல் வல்லுநர்; இந்நூலாசியர் அலெக்சாண்டர் காந்திரதாவ்; ஆகியோர் ஆவார். அனைத் தொன்றிய அறிவியல் தொழிநுட்ப நிறுவனமும், சோவியத் அறிவியல் பேரவையின் மாந்தநூல் பிரிவும் சேர்ந்து இவ்வறிக்கையை உருவாக்கின. சிந்துவெளி மொழியை அக்குழுவினர் X என்று குறித்துக் கொண்டு அதன் இலக்கண அமைப்பைக் கண்டுபிடிக்க, முத்திரை எழுத்துக்கள் அனைத்தையும் பட்டியலிட்டு, புள்ளிவிவரவியலின் படி ஆய்ந்தனர். சொற்களை உருவாக்க அம்மொழி பயன்படுத்தியது முன்னொட்டுகளா, பின்னொட்டுகளா, இடையொட்டுகளா (Prefix, Suffix, Infix) என்பதையும், அம்மொழியின் இலக்கண அமைப்புக் கூறுகள் எவை என்றும் அவர்கள் கண்டனர். (காகசஸ் பகுதியில் உள்ள மொழிகள் சிலவும் இடையொட்டுகளை பயன்படுத்து கின்றன). அடுத்த நிலையில் அக்குழுவினர் X மொழியின் இலக்கணக் கூறுகளை பிறமொழிகளின் இலக்கணக் கூறுகளோடு ஒப்பு நோக்கினர். சிந்துவெளி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பல்வேறு அறிஞர்களும் அவ் வெழுத்துகளின் மொழியோடு தொடர் புடையதாக உன்னித்த மொழிகளின் பட்டியல் ஏராளம். இந்தியா, ஆசியாமைனர், காகசஸ், இமயமலைப்பகுதிகள் இங்கெல்லாம் வழங்கிய பல்வேறு மொழிகள்; சைபீரியாவில் எனிசி ஆற்றின் வடபால் வாழ்ந்த கெட்(Ket) மக்களது மொழி; பசிபிக் கடலிலுள்ள ஈஸ்டர் தீவுப் பழங்குடி மக்கள் மொழி; ஆகிய எத்தனையோ மொழிகள் சிந்துவெளி எழுத்து மொழியோடு ஒப்பிட்டு ஆராயப் பட்டன. (ஈஸ்டர்தீவின் மொழியின் கொஹா - ரொங்கோ ரொங்கோ லிபியானது சிந்துவெளி எழுத்து போன்று இருந்தது). சிந்துவெளி நாகரிக மொழியின் இனமொழி என்று உரிமை கொண்டாடிய சமஸ்கிருதம், ஹிட்டைட், ஹரியன், ரபானூய் போன்ற மொழிகள் எவையும் சிந்துவெளி மொழியோடு தொடர் பற்றவை என்பதை சோவியத் வல்லுநர் ஆய்வு நிறுவியது. எஞ்சி யிருந்தவை திராவிட மொழிகளே! அவற்றின் அமைப்புதான் X மொழியின் அமைப்பு போன்று இருந்தது. ஏற்கெனவே அறிஞர் பலர் சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழிகளைப் (அல்லது மொழியைப்) பேசும் மக்கள் உருவாக்கியதே என்று தெரிவித்திருந்த முடிவை சோவியத் ஆய்வாளர் முடிவு அரண் செய்வதாக அமைந்தது. வட மேற்கு இந்தியாவில் பலுசிஸ்தான் பகுதியில் (பல்வேறு இந்தோ - ஆரிய மொழிகளிடையே) திராவிட மொழியாகிய பிராஹய் இன்றும் வழங்கிவருகிறது; இந்தியா முழுவதுமே ஒருகாலத்தில் திராவிட மொழி பேசுநர் வாழ்ந்து வந்த நாடுதான் என்பது இயல்வதேயாகும். சுமேரியர்களும் உபெய்துகளும் டைகிரீஸ் - யூப்ரட்டீஸ் பகுதியில் சுமேரியர்களுக்கும் முன்னதாக வாழ்ந்த தொல்பழங்குடிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கலாம் என்பது அண்மைக்காலக் கண்டுபிடிப்புகளிலிருந்து தெரிய வருகிறது. மிகப் பழைய சுமேரிய எழுத்துகளையும், சொற்களையும் ஆராய்ந்தவர்கள் அவற்றுள் பலவற்றுக்குச் சுமேரிய மொழியிலக்கண அடிப்படையில் விளக்கம் கூற இயலாது என்பதையும் பல சொற்கள் சுமேரியா மொழியல்லாத பிற மொழி சார்ந்தவை என்பதையும் உணர்ந்தனர். அத்தகைய சொற்கள் மிக முகாமையான பொருள்கள், தொழில் களைக் குறிப்பனவாகவும் அமைந்தன. எடுத்துக்காட்டு : பனை, ஈந்து, ஏர், நெசவாளி, கற்றச்சன், மீனவன், கருமான், செம்மான், தட்டான், உழவன், தச்சன், இடையன், வணிகன். இச்சொற்களையெல்லாம் X மொழியும் பெற்றிருத்தலால் சுமேரிய நாகரித்திற்கு அடித்தளம் அமைத்தவர் X மொழிபேசுநரே என்பது தெளிவாயிற்று. சுமேரியர்கள் வருமுன்னர் டைகிரீஸ் - யூப்ரட்டீஸ் ஆற்றுப் பகுதியில் அந்த X மொழிமக்கள் வாழ்ந்து வந்ததை இடப்பெயர் களும் காட்டுகின்றன. டைகிரீஸ் - யூப்ரட்டீஸ் ஆறுகளுக்கு ஆப்பெழுத்துகளில் வழங்கும் பெயர் இதிகிளாத், புரனுன் என்பதாகும். உரூக், லகாஷ், கிஷ், எரிது போன்ற பழைய நகரங்களின் பெயர்களும் சுமேரிய மொழியல்ல. சுமேரியர்களது முழுமுதற் கடவுளின் பெயராகிய என் - கி En-ki (அதாவது "பூமிதேவன்' என்பதே சுமேரியர்களுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் வழிபட்ட கடவுள்களுள் ஒன்றைக் குறித்த X மொழிச் சொல்லேயாகும். மெசொபதாமியாவின் ஆதிக்குடிகள் சுமேரியர் அல்லர் எனக் கண்டோம். சுமேரியர் எங்கிருந்து வந்தனர்? இந்தோ - சீனாவின் மேற்குப்பகுதியிலிருந்து என்பர் சிலர். காகசஸ் மலையிலிருந்து என்பர் வேறுசிலர். ருமேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில தொல் ஆவண எழுத்துக்கள் சுமேரிய மொழி யோடு ஒத்தவையாக இருப்பதோடு, சுமேரிய எழுத்துமுறைக்கும் முந்திய பழைமையைக் காட்டுபவை என்று அறிஞர்கள் நிறுவியுள்ளனர். இதிலிருந்து பால்கன் பகுதியிலிருந்தான் சுமேரியர் சுமேரியாவுக்கு சென்றனரோ என்றும் வினவலாம். சுமேரியர் எங்கிருந்து (தென்கிழக்கு ஆசியா/தென்கிழக்கு ஐரோப்பா) வந்தவர்களாக இருந்தாலும் சுமேரியாவுக்குள் நுழையும் பொழுது அவர்களுக்குக் கடற்பயணம் தெரியாதிருந்தது. டைகிரீஸ் - யூப்ரட்டீஸ் பகுதிகளில் அவர்கள் குடியேறிய பின்னரே அவர்கள் கடற்செலவு பற்றி அறிந்தனர்; அவர்களது ஆதித்தாயகம் மலைப் பகுதியாக இருக்கவேண்டும். காரணம் சுமேரியர் தமது கடவுள் படிமங்களை உயர்ந்த இடங்களில் அமைத்தனர். மெசொபதாமியா வில் அவர்கள் வடக்கிலிருந்து தெற்காகப் பரவினர். தெற்கிலிருந்து வடக்காக அல்ல. கி.மு. 3000ஐ ஒட்டி திடுமெனப் பண்பாட்டு எழுச்சி ஒன்று தென் மெசொபதாமியாவில் தோன்றியது. அப் பகுதிக்கு உயர் நாகரிமுடைய மக்களினம் ஒன்று வந்து சேர்ந்ததுதான் இதற்கு காரணம் என்பர் அறிஞர். அம்மக்கள் சுமேரியர்களாக இருக்கமுடியாது. அல்உ பெய்து (AI Ubeid) என்று உள்ளூர் மக்கள் இன்று அழைக்கும் மலையொன்றில் நடந்த அகழ்வாய்வில் தான் கழிபழந் தொன்மைவாய்ந்த நாகரிகம் ஒன்று வெளிக்கொணரப் பட்டுள்ளது. சுமேரியர் அல்லாத இந்நாகரிகத்தினருக்கு உபெய்துகள் என்று பெயரிட்டுள்ளனர். மெசொபொதாமிய தொல் நகரங்களில் தெற்குக்கோடியில் இருந்தது எரிது நகரம். அல் உபெய்து இதற்கு அருகில் இருந்தது. 6000 ஆண்டுகளுக்கு முன் பாரசீக வளைகுடாவில் துறைமுகமாக இருந்த எரிது பேராறுகளின் வண்டல் படிந்து மண்மேடிடவே எரிதுவைவிட்டு கடல் விலகிவிட்டது. டைகிரிஸ் - யூப்ரட்டீஸ் பேராறுகள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கின்றன; நாகரிகமோ எதிரான திசையில், தெற்கிலிருந்து வடக்காக, அதாவது எரித்துவிட லிருந்து உரூக் ஊர், லகாஷ் போன்ற பிற நகரங்களுக்குப் பரவியது. பாரசீக வளைகுடாவை மரக்கலத்தில் கடந்து வந்த ஓயன் னெஸ் (Oannes) தலையில் அரை - மீன், அரைமாந்தன் உருக் கொண்ட மக்கள்தாம் நாகரிகத்தை மெசொபதாமியாவிற்குக் கொணர்ந்தனர் என்னும் மெசொபதாமிய தொண்மைக்கதையினை அகழ்வாய்வு மெய்ப்பிக்கிறது. சுமேரியாவில் நெடுங்கணக்கு, கலைகள், அறிவியல் துறைகள் இவற்றை யெல்லாம் மாந்தர்களுக்கு ஒயன்னெஸ்தான் அளித்தான். நகரங்கள், கோயில்களைக் கட்டுதல்; நிலம் உழுதல்; கருவிகள் வடித்தல் போன்றவற்றையெல்லாம் அவன்தான் கற்றுத்தந்தான். மேற்சொன்ன ஓயன்னெஸ் கதையை, பெரோசஸ் (Beroses) என்னும் பாபிலோனிய குரு கி.மு. 3ஆம் நூற்றாண்டில் எழுதிய வரலாற்றிலிருந்து அறிகிறோம். சுமேரிய தொன்மங்கள் இயா (Ea) என்னும் கடவுளை , சுமேரிய நீர்க்கடவுள் மற்றும் கலைகள், தொழில்கள், கட்டிடங்கள், நெடுங்கணக்கு இவற்றைக் கற்பித்த அறிவுக்கடவுள் என்று குறிப்பிடுகின்றன. உபெய்துகளின் என்கி கடவுளே உருமாற்றம் பெற்று பின்னர் இயாவாக மாறியது என்று அறிஞர் உறுதி செய்துள்ளனர். மாந்தவினத்திற்கு நாகரிகத்தை ஓயன்னெஸ் நல்கியது பற்றிய கதையின் மூலமானது பாபிலோனியர் களுடையதுமல்ல சுமேரியர்களுடையது மல்ல; உபெய்துக ளுடையது தான் என்று அறியலாம். மெசொபதாமிய நாகரிகம் தொடங்கியது எரிதுவில்தான் என்று அகழ்வாய்வு நிலைநாட்டு கிறது. அங்குதான் மனிதன் கற்காலத்திலிருந்து மாழைக் (உலோகக்) கால நாகரிகத்திற்கு (நீர்ப்பாசனம், மாளிகைகள், கட்டிடங்கள் ஆகியவற்றைக் கொண்டது) வளர்ச்சியடைந்தான். உபெய்து என்பவர்கள் யார்? மொழியியல் ஆய்வில் (சுமேரியத் தில் உள்ள உபெய்து சொற்கள் ; இடப்பெயராய்வு) உபெய்து சொற்கள் 20 - ம் அம்மொழி இடப்பெயர்கள் 20 - ம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. உபெய்து சொற்களில் பல திராவிட மொழிச் சொற்கள் / வேர்கள் போன்றே உள்ளன. தென்னிந்தியாவில் ஊர் விகுதி பெற்ற இடப்பெயர்கள் எண்ணற்றவை. திராவிட மொழிகளில் அச்சொல் குடியிருப்பு, நகரம், வாழ்விடம் ஆகியவற்றைச் சுட்டும். மெசொப் தாமியாவிலும் பண்டைய நகரங்களின் பெயர்கள் ஊர் என்னும் வேர்ச்சொல்லைப் பெற்று உருக், நிப்பூர், ஊர் என்றவாறு வழங்கப்பட்டன. உபெய்துகள் டைகிரிஸ் ஆற்றை இதிகிளாத் என்று குறித்தனர். (இத் = ஆறு / நீர்). இந்து / இன்டஸ் எனும் ஆற்றுப் பெயர் இதனோடு தொடர்புடையதாக இருக்கலாம். திராவிட மொழிகளில் நந்த் அடிக்கடி ஒன்றுக்கொன்று மயங்கித்திரியும். முதலில் ந் என்பதற்குப் பொருள் ஆறு அல்லது நீர் ஆகும். (கங்கை ஆற்றின் பெயருக்கும் முண்டா மொழியில் நீர் என்றே பொருள்). உபெய்து மொழியில் தொழிற்பெயர்களுக்கு கர் (Ger) என்ற விகுதி உள்ளது. (எ . கா : எங்கர் = உழவன்; நங்கர் = தச்சன்; தங்கர் = வணிகன்) திராவிட மொழிகளில் கர் கையைக் குறித்தது; விகுதியாக வரும் பொழுது "செய்வோனைக் குறித்தது. உபெய்து மொழிச் சொற்களில் வரும் கர் என்பதும், இதுபோன்று, மரம் செய்வோன் "தச்சன் " என்றவாறு வழங்கியுள்ளது. தீர்மானமான முடிவைச் சொல்வதற்குப் போதுமான செய்திகள் கிடைத்திலவெனினும், சிந்துவெளி - மெசொபதாமிய நாகரிகங்களுக்கு இடையே உள்ள பல ஒற்றுமைகளோடு இணைத்துப் பார்க்கும்பொழுது திராவிட, உபெய்துச் சொற்க ளிடையே உள்ள ஒற்றுமையானது பொருள் பொதிந்ததாக உள்ளது. மெசபொதாமியா - பஹ்ரைன் (Bahrein) - இந்தியா மெசபொதாமிய மக்கள் புழங்கிய பல நூற்றுக்கணக்கான உருளை (சிலிண்டர்) வடிவ முத்திரைகளுடே சிந்துவெளி சார்ந்த சதுர வடிவ முத்திரைகளும் கிடைத்துள்ளன. இவ்விரு நாகரிகங்களுக்கும் இடையே இருந்த தொடர்பைக் காட்டுவதாகும். இவ்விரு நாகரிகங்களுக்கும் இடையே பரிமாற்ற மையமாக பாரசீக வளைகுடாவிலுள்ள பஹ்ரைன் தீவு செயல்பட்டிருக்கலாம் என்பது 1960களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பல்லாயிரமாண்டு கட்கு முன்னர் இருந்த நாகரிகம் சிந்துவெளி - சுமேரிய நாகரிகங் களின் கலவையாகும். பழங்காலத்திலிருந்து நடந்து வந்த பண்பாடு - வாணிக பரிமாற்றங்களின் மூலம் சுமேரியப்பண்பாடு சிந்து வெளிப்பண்பாட்டின் மீதும் பின்னது முன்னதன் மீது தாக்கம் விளைவித்தன. சுமேரியாவில் ஊர் நகரில் அகழ்வாய்வில் கண்ட சில சுவர்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருந்ததானது. பொதுவாக அங்கு சுடாத செங்கற்களே பயன்படுத்தப்பட்டு வந்ததற்கு விதிவிலக்காக உள்ளது என்பர் சர் ஜான் மார்ஷல். மொகஞ்சொதரோ நாகரிக இறுதிக்காலத்தில் சுட்ட செங்கற்களால் கவனமின்றி தாறுமாறாக, கட்டப்பட்ட சிறு வீடுகளை இவை ஒத்திருப்பதினால் மேற் சொன்ன ஊர் நகர சுவர் அமைப்பில் சிந்துவெளிப் பண்பாட்டுத் தாக்கம் இருப்பதாக மார்ஷல் கருதினார். சமயத்துறையிலும் இவ்விரு நாகரிகங்களிடையே தொடர்பு காணப்படுகிறது; மொகெஞ்சதரோவில் காணப்படும் "பின்னங்கால்களில் அமர்ந்துள்ள குரங்குப் படிமம் போன்றது ஒன்று ஊர் கல்லறையொன்றிலும் கிட்டியுள்ளது. இராமாயணத்தில் வரும் வானரக்கடவுள் அனுமானின் முன்னோடி யாக இக்குரங்குப் படிமம் இருக்கலாம். பண்டைய நாகரிக மக்களுக்கு, குரங்கு இந்திய விலங்காகவே அறிமுகமானது; குரங்கு 'புனித விலங்கு' என்று கருதப் பட்டிருந்தாலொழிய சிற்பங்களில் இடம் பெற்றிராது; இவற்றால், மேலை ஆசிய வெண்கலக்கால நாகரிகம் இந்திய சமயக் கோட்பாடுகள் சிலவற்றை ஏற்றுக் கொண்டதாகக் கருதலாம் என்பர் கே. என். தீட்சித் என்னும் இந்தியத் தொல்லியலாளர். எனினும், மெசொபதாமியாவில் அன்று வாழ்ந்து வந்த சிந்து வெளிசார் வணிகன் ஒருவனுக்குச் சொந்தமானதாகவும் அக்குரங்குப் படிமம் இருந்திருக்கலாம். மெசொபதாமியாவில் கண்டெடுக்கப் பட்டுள்ள முத்திரைகளில் காணப்படும் விலங்குகளும், சிந்து வெளிசார் அனுமானும் முறையே அவ்விரு நாட்டினருக்கும் புனிதமாகக் கருதப் பட்டு வந்ததோடு, சட்டவழி ஒப்பந்தங்களுக்கான சாட்சிக் கடவுள் களாகவும் இவை மெசொபதாமிய வணிகரால் ஏற்கப்பட்டிருக் கலாம் என்பர் தீட்சித் சுமேரிய நகரம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட வாஸ் (Vase) ஒன்றை உருவாக்கியமுறை சுமேரியம் சார்ந்ததாக இருப்பினும் அதன்மேல் தீட்டியுள்ள ஓவியம் இந்தியச்சார்பாக உள்ளது: சிந்து வெளி முத்திரைகள் பலவற்றில் நாம் காணும் பெரிய திமிலுடைய ஜெபு காளைமாடு (உணவுத் தொட்டிக்கு முன் நிற்பது போன்ற) உருவம் தீட்டப்பட்டுள்ளது. இந்திய வணிகர் மெசொபதாமியாவில் செய்த சமயச் சடங்குகளைக் கண்ட சுமேரியர் இதைத் தீட்டியிருக்கலாம் என்று தொல்லியலறிஞர் கார்டன் சைல்டு கருதுகிறார். இதில் வியப்பில்லை : இந்திய வணிகர் சாத்துகளாக தரைவழி யாகவும், தோணிகள் மூலம் கடல்வழியாகவும் மெசொபதாமியாவுடன் வாணிகம் செய்திருக்கவேண்டும். சுமேரியாவில், குறிப்பாகச் சந்தைகள் நடைபெற்ற காலங்களில், இங்கிருந்து கொண்டு சென்ற இந்தியச் சரக்குகளை விற்பதற்கும், இந்தியாவில் விற்பதற்கான சுமேரியப் பொருள்களைக் கொள்முதல் செய்யவும் அவர்கள் பல மாதங்கள் தங்கியிருக்க வேண்டும். கி.மு. 2000 - ஐயொட்டிய வாணிகம் பற்றி நமக்குத் தெரிந்துள்ள செய்திகளின் அடிப்படையில் காண்போமானால் சுமேரியா நகரங்கள் சிலவற்றில் இந்திய வணிகர்களின் நிரந்தரக் குடியிருப்புகளும் இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. மேற்சொன்ன கண்டுபிடிப்புகளெல்லாம் வளர்ந்தோங்கிய இரண்டு தனித்தனி நாகரிகங்களின் பண்பாட்டுப் பரிமாற்றத்தால் ஏற்பட்ட விளைவுகள். இருப்பினும் பண்பாட்டுப் பரிமாற்றத்தினாலும் பண்பாட்டுக் கடனாலும் மட்டுமே உருவாயின என்று எளிதாக விளக்கிவிடமுடியாதவையான (இரு நாகரிகங்களுக்கும் பொதுவான பண்புகளும் உள்ளன என்பது மிக முக்கியமான செய்தியாகும். இரு பண்பாடுகளுக்கும் அவற்றை உருவாக்கிய இரு இனமக்களுக்கும் இடையே மிகப்பழங்காலத்தில் தொப்புள் உறவு இருந்தது என்பதைக் காட்டக்கூடியவை அப்பொதுப்பண்புகள் ஆகும். சுமேரியர்களுக்கு முந்திய உபெய்து மொழியும், சிந்துவெளி நாகரிகத் திராவிட மொழியும் மிக நெருங்கியவை என்று கண்டோம். சிந்துவெளித் தாயத்துக்களின் மேலுள்ள அணிகளும் குறியீடு களும் மெசொபதாமியா, எலாம் நாட்டு தொன் மக்களுடைய அணிகள், குறியீடுகளுக்கு நெருங்கிய ஒற்றுமை யுடையவை. மெசொபதாமியாவில் காணப்படும் சதுர முத்திரைகளை அங்கு கொண்டுசென்றவர்கள் சிந்துவெளி வணிகர்களே. சிந்து வெளிச் சதுர முத்திரைகளிலும், மெசொபதாமியப் பழங்கதை, சமயம் சார்ந்த பொருள்களையும், பெண் கடவுள்களையும் காணலாம். (முத்திரைகளின் வடிவமும், மேலுள்ள பொறிப்புகளும் அவை இந்தியாவில் செய்தவை; மெசொபதாமியாவிருந்து வந்தவை அல்ல என்பதைக் காட்டுகின்றன). சிந்துவெளி சார்ந்த மூன்று தாயத்து முத்திரைகளில் ஒரு வீரன் இரண்டு புலிகளோடு மற்போர் செய்வதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. சுமேரிய கில்காமேஷ் காப்பியத்தில் காட்டுவிலங்குகளை அழித்து வெற்றிகாணும் வீரன் கில்காமேஷ் - இன் துணைவனான எங்கிடுவின் உருவம் போன்றது அவ்வுருவம். கொம்புள்ள புலி ஒன்றை, கொம்புகளையுடையவனும், காளையின் கால்கள், வால் ஆகியவற்றை உடையவனுமான மனிதன் ஒருவன் வீழ்த்துவதை இன்னொரு சிந்துவெளித் தாயத்து காட்டுகிறது. சிந்துவெளி நாகரிகங்களின் தொடக்கம் என்னும் நூலின் எர்னஸ்டு மெக்கே கொம்புப் புலியானது எதிரிகளோடு போராடும் ஒரு தீய கடவுளாக இருக்கலாம் என்று கூறுகிறார். இத்தாயத்தில் காணப்படும் பாதி - எருது, பாதி - மாந்தன் உருவம் சுமேரிய பாதி - கடவுள், பாதி வீரன் போன்று இருப்பது வியப்பானது என்றும், இரு பண்பாடுகளிடையே நம்பிக்கைகளிலிருந்த ஒற்றுமையை இது காட்டுகிறது என்றும் கூறுவர் மெக்கே. சுமேரியர்களிடம் ஒருபாலும், சிந்துவெளி மக்களிடம் மற்றொரு பாலும் தொடர்பு கொண்டிருந்த மூன்றாவது நாடு ஒன்று இத்தகைய ஒற்றுமைகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாமோ என்றும் அவர் ஐயுறுகிறார். பண்டைய மெசொபதாமிய - சிந்துவெளி மக்களிடையே இருந்த உறவு பற்றி மாந்தவியல், மொழியியல், அகழ்வாய்வு ஆகிய துறைசார் நூல்களும், சமய நூல்களும் சான்று தருகின்றன. கண்டெடுத்த மண்டையோடுகள் சிந்துவெளி மற்றும் உபெய்து நாகரிகங்களில் ஒன்றுபோலவே உள்ளன. சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 'பூசாரி உருவச் சிலையின் முகம் மெசொபதாமிய தொடக்க கால மாந்தன் முகம் போன்றே உள்ளது. சுமேரியர்கள் உபெய்துகளை மெசொபதாமியாவிலிருந்து துரத்தி அடித்தபின், அவர்கள் சிந்துவெளிக்குச் சென்று அங்கு நாகரிகத்தை உருவாக்கினர் என்பர் சிலர் (சுமேரிய மொழி வல்லுநர் சாமுவேல் கிராமர் உட்பட). மெசொபதாமியாவையோ இந்தியா வையோ தாயகமாகக் கொள்ளாத வேறு ஒரு பொதுவான ஆதி மூலத்திலிருந்து உபெய்து, சிந்துவெளி நாகரிகங்கள் இரண்டுமே பிறந்ததால்தான் இவ்வொற்றுமைகள் ஏற்பட்டன என்றும் கருதலாம் (அந்தப் பொதுவான தாயகம் இந்தியாவிலும் இல்லாமல் மெசொபதாமியாவிலும் இல்லாமல் வேறு எங்காவது இருந் திருக்கவும் வாய்ப்புண்டு) சிந்துசமவெளியில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் தொல்லிந்திய நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் எனப்பட்டது. ஆனாலும், பின்னர் அகழ்வாய்வாளர் கங்கை - யமுனை ஆறு களுக்கு இடைப்பட்ட பகுதிகள், பஞ்சாபில் சிவாலிக் மலைகள், பம்பாய்க்கு வடக்கே லோத்தல் போன்ற இடங்களிலெல்லாம் சிந்துவெளி நாகரிகக் குடியிருப்புகளை அகழ்ந்து கண்டுபிடித்துள்ளனர். அவையும் தொன்மையானவையே. இதிலிருந்து தொல்லிந்திய நாகரிகம் பிறந்ததே சிந்துவெளியில் தான் என்று கொள்ள முடியாது என்றும் வாதிடலாம், அந்நாகரிகம் எங்கு பிறந்தது என்று அறிவதற்கான தடயங்கள் இந்தியாவில் கிட்ட வில்லை. பாகிஸ்தான் தொல்லியலாளர் சிந்துவெளி நாகரிகம் சார்ந்த இடங்கள் மேலும் சிலவற்றை அண்மையில் அகழ்ந்துள்ள போதிலும் அவற்றுள் எதையும் மொகெஞ்சதாரோ - ஹரப்பாவுக்கு முன்னோடியாக கருதவியலாது. எனவே சிந்துவெளி நாகரிக அடிவேர் எது என்பது புதிராகவே உள்ளது எனச் சிலர் கருது கின்றனர். எலாம் (Elam) எனப்படும் நாடு சிந்துவெளி நாகரிகத்தையும், டைகிரீஸ் - யூப்ரட்டீஸ் ஆற்றங்கரை நாகரிகத்தையும் உருவாக்கிய மக்கள் திராவிட மொழி களைப் பேசிய ஒன்றுக்கொன்று உறவுள்ள இனம் என்பதனை ஏற்றுக்கொண்டால் சிந்துவெளிப் பண்பாட்டுக்கும், மெசொப் தாமியாப் பண்பாட்டுக்கும் இடை யிலுள்ள பொதுமைக் கூறுகளை விளக்க இயலும். ஒருவேளை அவர்கள் ஒரே இன மக்களாகவும் இருந்திருக்கலாம். உபெய்துகள், சிந்துவெளியினர் தவிர வேறுசில மக்களுக்கும் திராவிட மொழிகள் பொதுவாக இருந்திருக்கலாம். ஈரான் நாட்டில் டைகிரீஸ் ஆற்றுக்கு கிழக்கில் உள்ள இன்றைய குசிஸ்தான், 5000 ஆண்டுகளுக்கு முன் எலாம் என்று அழைக்கப்பட்டது. இங்கு நகர நாகரிகமும் தனிப்பண்பாடும் எழுத்து மொழியும் இருந்தன. அப்பண்பாடு மெசொபதாமியப் பண்பாட்டுக்கும் அதைவிட அதிகமாகச் சிந்துவெளிப் பண்பாட் டிற்கும் நெருங்கியது என்பது அறிஞர் கருத்து. எலாம் மக்கள் மொழியை வேறு எந்த மொழிக் குடும்பத் துடனும் தொடர்புபடுத்த இயலவில்லை. அம்மொழியைத் துரானிய மொழிக் குடும்பத்துடனும் (உரால் - அல்டாய்க், துருக்கம், மங்கொலியம்), பல காகசஸ் மொழிகளுடனும், ஆசியாமைனரில் பண்டு இருந்து இறந்துபட்ட (ஹரியன், காசைட்) போன்ற மொழிகளுடனும் தொடர்புபடுத்திய முயற்சிகள் ஏற்கப்பட வில்லை. வரலாற்று மொழிநூல் வல்லுநர் ஐ. டயகொனோவ் பண்டைய ஆசியமைனரின் தொன்மொழிகள் என்னும் தமது நூலில், "சில சான்றுகளைக் கொண்டு நோக்குமிடத்து எலாம் மொழியும், திராவிட மொழிக்குடும்பமும் உறவுடையன என்ற கோட்பாடே சரியாக இருக்கலாம்" என்று கூறுகிறார். சொல் ஒற்றுமைக்குச் சில எடுத்துக்காட்டுகள் தருகிறார்: திராவிட மொழிகளில், கெடு = அழி , இல்லாமற் செய்தல்; எலாம் மொழியில் கெடு = இல்லாமற் செய்தல்; திராவிட மொழியில் நாள் = காலை, வைகறை, நாள்; எலாம் மொழியில் நாள் = நாள் ; திராவிட மொழியில் பரி = தோற்றோடு ; எலாம் மொழியில் பரி = சேர்தல். சொற்களைக் கடன் வாங்குதல் எல்லா மொழிக்கும் இயற்கைதான். சில நேரங்களில் ஒலியும் பொருளும் தற்செயலாக ஒன்றுபோல் அமைவதும் உண்டு. (ஆங்கிலத்திலும், காகசஸ் மலைப்பகுதி மொழியான கபர்தினியன் மொழியிலும் 2 என்னும் எண்ணுப்பெயர் ஒரே ஒலியுடையது; எனினும் இவ்விரு மொழி களுக்கும் எந்த உறவும் இல்லை ). எலாம் மொழிக்கும், திராவிட மொழிகளுக்கும் இலக்கண அமைப்பில் பல ஒற்றுமைகள் உள்ளன. இலக்கண அமைப்புகள் கடன் வாங்கப் பெறுவதில்லை. எனவே இரு மொழிகளும் பண்டு நெருங்கிய உறவுடையவனவாக இருந்திருக்க வேண்டும்; அல்லது அவற்றிற்கிடையே நீண்டகாலம் தொடர்பிருந்திருக்க வேண்டும். ஒலியியல், சொல்லியல் ஆகிய வற்றில் எலாம் மொழி திராவிட மொழி போன்றே உள்ளது. மறு பெயர்கள் (Pronouns) ஏறத்தாழ ஒன்றே . "சில, நூற்றுக்கு நூறு ஒத்துள்ளன'' என்பர் டயகொனோவ். எலாம் மொழிக்கும், திராவிட மொழிக்கும் இடையே ஒற்றுமைகளின் அடிப்படையில் டயகொனோவ் எடுத்துள்ள முடிவு வருமாறு: கி.மு. 4000 - 3000 அளவில் (அல்லது அதற்குப்பின்னர் சில காலமும் ) ஈரான் நாடு முழுவதும் அல்லது தெற்கு ஈரானில் எலாம் திராவிட மொழி சார்ந்த மொழிகளைப் பேசிய இனக்குழுக்கள் (Tribes) பல பரவலாக வாழ்ந்திருக்கலாம். திராவிட இடப்பெயர்கள் அரேபிய தீவக்குறையில் வழங்கியதற்கான தடயங்கள் உள்ளன ; ஆயினும் எக்காலம் சார்ந்தவை எனத் தெரியவில்லை. சில ஆய்வாளர்கள் தென்னிந்தியத் திராவிட (Dravidoid) இனக்கலப்பின் தடயங்கள் தெற்கு ஈரானில் பல பகுதிகளில் காணப்படுகிறது எனக் கூறுகின்றனர். மிகப் பிற்காலத்தில் கருநிறத் திராவிடர்கள் (அல்லது அவர்களோடு மொழி, இனத்தால் உறவுடையவர்) ஈரானிலிருந்து விரட்டப்பட்டிருக்கலாம்; அல்லது புதிதாக ஈரானில் வந்திறங்கிய வேறு இன மக்களோடு கலந்து விட்டிருக்கலாம். இதனால்தான் போலும் கி.மு. 6ஆம் நூற்றாண்டு ஹெரோ டோடஸ் இந்தியாவுக்கும் எலாம் பகுதிக்கும் இடைப்பட்ட பலுசிஸ்தானில் வாழ்ந்த வர்களை ஆசிய எத்தியோப்பியர் (ஆசிய நீக்ரோ) என்று அழைக்கிறார். ஆகவே 2500 ஆண்டுக்கு முன்னர் ஈரான் - இந்தியா இடைப் பட்ட பகுதியில் கருநிற மக்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு. தொல் திராவிட மொழிக்குடும்பத்திலிருந்து கழிபழங் காலத்திலேயே எலாம், உபெய்து மொழிகள் பிரிந்து போனதுதான் இவற்றிடையே இன்று நிலவும் ஒற்றுமை வேற்றுமைகளுக்குக் காரணமாக இருக்கலாம். வேறொரு விளக்கமும் தரலாம் : திராவிட மொழிகள், எலாம் மொழி, சுமேரிய மொழி மூன்றுமே ஒரு பொது மொழியிலிருந்து கிளைத்திருக்கலாம். எலாம் மொழியின் பழைய நூல்களெல்லாம் அப்பகுதிக்கு மேற்கே வாழ்ந்திருந்த அக்காதியர், சுமேரியர் ஆகியோரிடமிருந்து கி. மு. 2500ஐ ஒட்டி கடன் பெற்ற ஆப்பெழுத்து லிபியில் எழுதப் பட்டவை. அதற்கு முன்னர் எலாம் மக்கள் சித்திர எழுத்துக்களைப் (Hieroglyphics) பயன்படுத்தினர். அதற்கு முன்னர் தொல் எலாமியம் என்னும் சித்திரவடிவ (Pictorial Graphic) முறையைப் பயன்படுத்தினர். தொல் எலாமிய எழுத்து இன்னும் படித்தறியப்படவில்லை: அவ்வெழுத்துப் பொறிப்புகளும், சித்திரங்களும் மிகப்பழைய சுமேரிய மொழி போன்று உள்ளன. சுமேரிய ஆவணங்களைப் போலவே தொல் எலாமிய ஆவணங்களும் குடும்பக்கணக்குக ளாகவும், வாணிகம் சார்ந்தவைகளாகவும் தான் இருக்கும். ஹரப்பா, மொகெஞ்சதரோ போன்ற சிந்துவெளி முத்திரை களில் (தொல் எலாமியம், தொல்சுமெரியம் இவற்றைப் போன்றுள்ள) மூன்றாவது தொல்லெழுத்து முறையின் சில எழுத்து களும் கிடைத்துள்ளன. டைகிரீஸ் - யூப்ரடீஸ் பகுதியில் ஆதியில் வாழ்ந்தவர்கள் சுமேரியர் அல்லர்; (திராவிட இன மொழி பேசிய) உபெய்துகள் என்ற பொழுதிலும் மெசொபதாமியாவில் காணப் படும் மிகப்பழைய எழுத்துக்கள் சுமெரிய மொழி சார்ந்தவைதாம் என்று ஏ. வைமன் ஆய்வுகள் காட்டுகின்றன. தொல் சுமேரிய எழுத்துப் பொறிப்புகளின் மொழியிலிருந்து தொல் எலாமியப் பொறிப்புகளின் மொழி வேறுபட்டது. சிந்துவெளிப் பொறிப்புகள் திராவிட மொழி சார்ந்தவை; சுமேரிய எலாம் மொழி சார்ந்தவையல்ல. சுமேரிய மொழியின் அமைப்பை ஒட்டி சிந்துவெளி, எலாம் எழுத்துக்களைப் படிக்க இயலாது. சுமேரிய மொழி எழுத்துக்கள் முழுமையாக படித்தறியப்பட வில்லை ; ஏறத்தாழ 800 வரிவடிவங்களில் 250 மட்டுமே பதிக்கப் பட்டுள்ளன. இம்மூன்று பழைய லிபிகளின் இயல்பைப் பார்த்தால் அவையனைத்தும் ஒரு பொது மொழியிலிருந்து கிளைத்தனவாகத் தோன்றுகின்றன. சுமேரியர் உருவாக்கிய ஆப்பெழுத்துமுறையை சுமேரிய மொழியோடு தொடர்பே யில்லாத எலாம், அகாதியன், உரார்த்தியன், ஹிட்டைட் போன்ற மொழிகளும் பயன்படுத்தின. தொன்மையான சுமேரிய / எலாமிய / சிந்துவெளி லிபிகளின் வரிவடிவங்கள் பொதுவான தோற்றமுடையவை. மொழி நூலாரும், இடப்பெயர் ஆய்வாளரும் தாங்கள் பயிலும் மொழி களையும் இடப்பெயர்களையும் ஆய்வு செய்யும் பொழுது அம்மொழி களுக்கும், இடப்பெயர்களுக்கும் முற்பட்ட காலத்தில் வழங்கியவற்றைக் குறிக்க புதைநிலை (Substratum) என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இதுபோலவே தொல்சுமெரியம் எலாம் / சிந்துவெளி லிபிகளுக்கு பொதுவாக முன்னர் வழங்கி யிருக்கக்கூடிய லிபி வடிவங்களை புதைநிலை வடிவங்கள் என்று கூறலாம். தொல்சுமெரிய எழுத்துகளே மிகப்பழையவை; சுமேரியர் களுக்கு முன்பு அங்கு வாழ்ந்தவர் உபெய்துகள்; எனவே மிகத் தொன்மை யான அந்த வரிவடிவ முறையை உபெய்துமுறை என்றே குறிப்பிடலாம். (இன்று எழுத்து என்று நாம் கூறுவது வளர்ச்சி பெறாத இம்முறைக்கு முழுமையாகப் பொருந்தாது). சுமேரியர் வருமுன்னர் அப்பகுதியில் வழங்கிய அந்த லிபியை சுமேரியர் ஏற்று செழுமைப்படுத்தித் தமது தொல் சுமேரிய லிபியை உருவாக்கிக் கொண்டனர் (உபெய்துகளின் பண்பாட்டு, அறிவியல் கூறுகள் அனைத்தையும் சுமேரியர் தமதாக்கிக் கொண்டதுபோல). இந்தியத் துணைக்கண்டத்திலும், எலாமில் நடந்தது போன்றே நடந்திருக்கலாம். சிந்துவெளி / தொல் எலாமிய / தொல் சுமேரிய லிபிகள் ஒன்றுபோல் இருப்பதற்குக் காரணம் அவற்றின் திராவிட மொழி அடிப்படையேயாகும். உபெய்தும் அவைபோன்ற திராவிட மொழியாக இருக்கலாம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மூல தொல் திராவிட மொழியைப்போல மூலத் தொல் திராவிட லிபியும் இருந்திருக்கலாம். எப்படி மூல தொல் திராவிட மொழியில் லிருந்து உபெய்து, எலாம், சிந்துவெளி மொழிகள் பிறந்து பிரிந் தனவோ அதுபோல உபெய்து எலாம் சிந்துவெளி எழுத்து முறை களும் தொல் திராவிட எழுத்துமுறையிலிருந்து உருவாகியிருக்கலாம். மூலதிராவிட மொழியின் தோற்றம் பற்றியக் கருத்துகள் திராவிட மூலமொழி எப்பொழுது எங்கு பிறந்தது? எப்பொழுது அது பிரியத்தொடங்கி அதன் பருத்த அடிமரத்திலிருந்து தனித்தனி மொழிகள் கிளைக்கத் தொடங்கின? (அந்த தனித்தனி மொழிகளிலிருந்து பிற்காலத்தில் மேலும் பல புது மொழிகள் தோன்றின்). மூலதிராவிட மொழி (மூல தொல் திராவிட மொழி என்பதே மேலும் பொருத்தம்). யிலிருந்து தனித்தனி மொழிகள் எப்பொழுது பிரியத்தொடங்கின என்பதை இக்கால மொழியிய லாளர் பொதுச்சொல் விழுக்காட்டைக் கணக்கிட்டு கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். வடமேற்கு இந்தியாவில் இன்று பேசப்பட்டு வரும் ஒரே திராவிட மொழியாகிய பிராஹய் 6000 ஆண்டுக்கு முன்னர் தொல் திராவிடத்திலிருந்து பிரிந்தது என்பர். ஆனால் தொல் திராவிடம் இந்தியாவில் தோன்றியதா வெளியிலிருந்து வந்ததா என்பது இன்னும் முடிவாக வில்லை. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் பேசப்பட்டு வரும் 500க்கு மேற்பட்ட மொழிகளும், கிளைமொழிகளும், இந்தோ - ஐரோப்பியன், முண்டா - திராவிடம் என்னும் முப்பெருங் மொழிக் குடும்பங்களில் ஒன்றைச் சார்ந்தவை. இந்தோ - ஐரோப்பிய மொழி பேசிய பண்டை ஆரியர் கி.மு. 2000க்குப்பின் வடஇந்தியாவிற்குள் வந்தனர். (எங்கிருந்து வந்தார்கள் என்பது இன்னும் திட்டவட்டமாக முடிவாகவில்லை ; மத்திய ஆசியா, கருங்கடல் பகுதி, ஆசியாமைனர் ஆகிய மூன்று பகுதிகளில் ஒன்று ஆரியர்களின் பண்டைய வாழிட மாக இருந்திருக்கப் பெருவாய்ப்பு உள்ளது). முண்டா மொழி பேசும் கருநிற மக்கள்தாம் இந்திய மக்களிலேயே தொன்மை மிக்கவர் என்று ஒருகாலத்தில் கருதப்பட்டுவந்தது. ஆனால் அண்மை மொழியாராய்ச்சி யின் படி அவர்கள் 6000 ஆண்டு முன்னர்த்தான் இந்தியாவிற்குள் வந்ததாக தெரிகிறது. முண்டா மொழிகள், கிளைமொழிகளுடன் இயைபுடைய மொழிகள் இன்றும் கிழக்கே இந்தோ - சீனப் பகுதிகளில் பேசப்பட்டு வருகின்றன. எனவே அவர்கள் கிழக்கிலிருந்து வந்திருக்கவேண்டும். இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னதாகவே, ஏன் முண்டா மொழிகளுக்கும் முன்னதாகவே, திராவிட மொழிகள் இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றியிருப்பினும் அவையும் வெளிநாட்டிலிருந்து வந்தவை என்பது வியத்தகு செய்தியாகும். உபெய்து, சுமேரிய மொழிகளுக்கும், திராவிட மொழி களுக்கும் உள்ள உறவு பற்றி மேலே பார்த்தோம், மெசொபதாமியா, ஈரான், ஆப்கானிஸ்தான், காகசஸ் பகுதிகளில் உள்ள இடப் பெயர்களை விளங்கிக் கொள்ள திராவிட மொழிகளின் உதவி தேவை என்று கூறுகிறார் டி. பாலகிருஷ்ண நாயர் என்பவர். அறிஞர் என். லாகோவரி தனது திராவிடர்தோற்றமும் மேற்கும் என்னும் நூலில் காகசஸ் மொழிகளும், திராவிட மொழிகளும் ஒற்றுமை உடையவை என்கிறார். இவ்விரு அறிஞரும் திராவிட இனக் குழுக்கள் (Tribes) கி.மு. 4000ஐ ஒட்டி இந்தியாவிற்கு வந்திருக்கலாமென கருதுகின்றனர். அத்தகைய தொல்பழங்காலத்தில் இருந்த திராவிட மூல மொழியை தொல் திராவிடம் என்று குறிப்பது பொருத்தம்; அதுபோல் அக்காலத்திய அவ்வினத்தையும் தொல் திராவிட இனம் என்று குறிப்பதே பொருத்தமாகும். தொல் திராவிடர் இன்றைய திராவிடரைவிட வெளுப்பாகவும், உயரமாகவும் இருந்திருக்கலாம் மென மாந்தவியல் அறிஞர் சிலர் கருதுகின்றனர். எடுத்துக்காட்டாக நீலமலைவாழ் தொதவர்கள் பல நூறு ஆண்டுகளாக பிறருடன் தொடர்பின்றி வாழ்கின்ற காரணத்தால் அவர்கள் தோற்றம் தொல் திராவிடர் தோற்றம் போலவேயுள்ளது என்பர் சிலர். தொதவர் மொழி திராவிட மொழி. தொதவ பூசாரிகள் பயன் படுத்தும் க்வோர்ஷம் (Kworsham / Kworjam) என்னும் மொழியில் உள்ள தெய்வப்பெயர்கள் மெசொபதாமியப் பழந் தெய்வப் பெயர்கள் போன்று உள்ளனவாம். திராவிடர்களின் தாயகம் சுமேரிய, எலாம், ஈரான், காகசஸ் இவற்றில் ஒன்றாக இருக்கலாமென்பர் வல்லுநர். சுமேரியா, ஈரான், காகசஸ், மத்திய ஆசியப்பகுதிகள் ஆகிய பகுதிகளிலெல்லாம் பண்டைக்காலத்தில் திராவிட மொழியைப் பேசிய இனக்குழுக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று பொதுவாக உன்னிக்கவும் இடமுண்டு. எனினும் திராவிடர் தாயகம் இந்த நிலப்பரப்புதானா? சுமேரியா எலாம் எல்லைகளிலிருந்து ஆமு தாரியா ஆறு சிரதாரியா ஆறு, காகசஸ் எல்லை வரை உள்ள பகுதிகளில் நாடோடிகளாகத் திரிந்த திராவிடர், வடமேற்கு இந்தியக் கணவாய்கள் வழியாக 6000 ஆண்டுக்கு முன்னர் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்றும்; அவர்கள் இந்தியா வின் மிகப் பழங்குடிகளேயானாலும் வெளியிலிருந்து வந்தவர்கள் தாம் என்றும் சில அறிஞர் கூறுவர். சுமேரியா, எலாம், காகசஸ் பகுதி மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையில் உள்ள ஒப்புமை அடிப்படையில் இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். ஆனால் அப்பகுதிகளி லிருந்துதான் திராவிடர்கள் இந்தியாவிற்குள் வந்தேறினர் என்ற கருத்து மெய்ப்பிக்கப்பட்டு விட்டதாக பொருளல்ல. மாறாக தொல் திராவிட மொழிகள் வடக்கிலிருந்து தெற்கே பரவாமல் தெற்கிலிருந்து வடக்காகத்தான் பரவின என்று மொழியியல் ஆய்வுகள் நிறுவுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாள மொழிகளை ஆராய்ந்த சோவியத் அறிஞர் ஜி. ஜொகிராப் (Zograf) திராவிட மக்கள் வடக்கிலிருந்து தெற்காக அல்லாமல் தெற்கிலிருந்து வடக்காகத்தான் பரவினர் என்ற கொள்கை இன்று வலுப்பெற்று வருகிறது என்கிறார். (எடுத்துக்காட்டாக மத்திய இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் குருக் என்னும் திராவிட மொழி பேசும் இனக்குழுவினரிடையே, தங்கள் முன்னோர் தெற்கிலிருந்து வந்தார்கள் என்ற தொன்மக்கதை வழங்கி வருகிறது. திராவிடர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குத் தெற்கே இந்திய மாக் கடலில் இருந்த நிலப்பகுதியில் முதற்கண் தோன்றி வளர்ந்து, பின்னர் வடக்கு நோக்கி இந்தியா, மெசொபதாமியா, எலாம்வரைப் பரவி யிருக்க இயலும் எனக் கருதுவதற்கு ஆதாரமாக நில நூலாரும், ஆழ்கடல் ஆய்வாளரும் இந்திய மாக்கடலில் முன்னர் (இந்தியா வுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் நடுவில்) இருந்து மூழ்கிப் போன இலெமூரியா பற்றி குறிப்பிடுவதும் நினைவிற்கொள்ளத்தக்கது. திராவிடர் தாயகம் இந்தியத் துணைக்கண்டத்திற்குத் தெற்கேயிருந்து பின்னர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடல் கொள்ளப் பட்டது என்று கூறும் பழந்தமிழிலக்கியக் கூற்றுகளும் அதை வலியுறுத்துகின்றன. மெலுகாவிலிருந்து மரக்கலம் செலுத்துதல் பழங்கற்காலம் முதலிலிருந்தே இந்தியாவில் மாந்தன் வாழ்ந்தான். திராவிடர், முண்டர், ஆரியர் என்னும் மூன்று இன மொழிகளைப் பேசிய மக்களுமே இந்திய நாட்டுக்குள் வந்த அன்னியர்கள்தாம். முதலில் வந்தவர் திராவிடர்கள். (அவர்கள் வந்தது தெற்கிலிருந்தா?) அவர்களுக்குப் பின்னர் முண்டர்களும் அதன் பின் மேலும் 2000 அல்லது 3000 ஆண்டுகளுக்குப் பிறகு வடமேற்கிலிருந்து நாடோடிகளாக ஆரியர்களும் வந்தனர். ஆரியர் இந்தோ - ஐரோப்பிய மொழி ஒன்றை அல்லது பல கிளை மொழிகளைக் கொண்ட இந்தோ - ஐரோப்பிய மொழி ஒன்றைத் தம்முடன் இந்தியாவிற்குள் கொண்டுவந்தனர். தங்கள் முக்கியமான செல்வம் ஆகிய மாடுகளை ஓட்டிக்கொண்டு தரைவழியாக ஆரியர் இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்பதில் ஐயமில்லை. இந்தியாவிற்குள் வந்தபின்னர் அவர்கள் தொகுத்த ரிக் வேதத்தில் பல சிறந்த பாடல்கள் கால்நடைச் செல்வத்தை புகழ்பவைகளே யாகும். முண்டாமொழி பேசுநர் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து தரைவழியாக இந்தியாவிற்குள் வந்தனர். அவர்களுக்கு மரக்கலம் செலுத்தும் திறன் இருந்ததில்லை . ஆனால் திராவிடர்கள் அப்படியல்ல. தொல் திராவிடரின் பிறங்கடையினம் வாரிசுகள் என்று ஆராய்ச்சி யாளர் பலர் கருதும் தொதவர்களும் (Todas) மாடு வளர்ப்பவர்களே. அவர்களது முன்னோர் கடல் வழியாக இந்தியா வந்திருக்கலாம் என்று கருத இடம் தரும் வகையில் அவர்களிடையே மரக்கலம் பற்றிய பழம்பாடல் புழங்குகிறது. தென்னிந்தியத் திராவிடரிட மிருந்து இறக்குமதி செய்த வாணிகப்பொருள்களை மெசபொ தாமிய நகரங்களில் அகழ்வாய்வாளர் தோண்டி எடுத்துள்ளனர். சாலமன் மன்னனுக்காக கொணரப்பட்ட விலை யுயர்ந்த பொருள்களுள் தென்னிந்தியப் பொருள்களும் உள்ளன. சந்தனம் தென்னிந்திய மேற்குக் கடற்கரையில் மட்டுமே கிட்டுகிறது; வேறெங்கும் விளைவதில்லை. சாலமன் பெற்ற பொருள்களில் சந்தனமும் ஒன்று. தென்னிந்தியாவிலிருந்து வாணிகப் பொருள்களை சுமேரிய வணிகர்கள் மட்டுமே கொணர்ந்தனர் என்றும் அவர் களிடமே பாரசீகக்குடா - அரபிக்கடல் - இந்திய மாக்கடல் வாணிகம் இருந்தது என்றும் முன்னர் நம்பப்பட்டு வந்தது. இது உண்மையல்ல என்பதை அண்மைக்கால ஆய்வுகள் நிறுவியுள்ளன. தென்னிந்திய திராவிடத் தொல்குடியினரே முதன்முதலில் இந்தியமாக் கடலில் கலம் செலுத்தியவர்கள் ஆவர். மொகஞ்சொதரோ மற்றும் பிற சிந்து வெளி அகழ்வாய்வு முத்திரைகள் போன்றவற்றில் பாய்மரம் உள்ள மரக்கலங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. சிந்து வெளி அகழ்வாய்வாளர் எர்னஸ்டு மக்கே, சிந்து வெளி மக்கள் தாம் சுமேரியாவுடன் கடல் வாணிபம் மேற்கொண்டனர் என்று கருதுகிறார். இக்கடல்வாணிக வழியை முதலில் கண்டவர்கள் மெசபொ தாமியரா, சிந்துவெளியினரா, அராபியர்களா? என்பதை மக்கே தீர்க்கமாக முடிவு செய்யவில்லை. ஆனால் அண்மைக்கால அகழ் வாய்வு இதற்கு விடை தருகிறது. சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியாக கத்தியவார் தீவக் குறையில் லோதல் என்னும் இடத்தில் 213 மீட்டர் நீளம் ; 37 மீட்டர் அகலமுடையதும், செங்கற் களால் கட்டப் பட்டதுமான, நீள்சதுர வடிவில் அமைந்த கப்பல் துறை அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. லோதல் தான் உலகின் மிகப்பழைய துறைமுகமாகும். அக் கப்பல் துறையை 7 மீட்டர் அகல கால்வாய் ஒன்று அரபிக்கடலில் கலக்கும் ஒரு ஆற்றோடு இணைத் திருந்தது. மொகஞ்சொதரோ, ஹரப்பா போன்ற சிந்துவெளி நாகரிக நகரங்களைப்போன்றே லோதல் நகரமும் 4000 ஆண்டுக்கு முந்தைய தொன்மை வாய்ந்தது ஆகும். மெசபொதாமிய அகழ்வாய்வில் கிடைத்த ஆப்பெழுத்து முத்திரைகளில் மகன், மெலுகா (Magan, Meluka) என்ற இரு நாடுகளிலிருந்தும், கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்தும் கருங்காலி (Ebony) போன்ற விலையுயர்ந்த பொருள்கள் சுமேரியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது. இன்றைக்கு 4500 - 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமேரிய முத்திரை எழுத்துக்கள் மகன் நாட்டிலிருந்து விலையுயர்ந்த மரக் கட்டைகள் வந்ததாக குறிப்பிடுகின்றன. மகன் நாட்டைத் தாண்டி இந்துமாக்கடலை ஒட்டியிருந்த மெலுகாவிலிருந்து பொன், முத்து, விலையுயர்ந்த Lapis Lazuli கற்கள் வந்தனவாம். மெலுகா மக்கள் கருநிறத்தவர் ஆகையால் அவர்கள் நாடு கருப்பு நாடு, அதாவது மெலுகா என்று அழைக்கப்பட்டது. மெலுகாவிற்கு சென்று வாணிகம் செய்தவர்கள் சுமேரியர்கள் அல்லர்; மெலுகர்களே என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 'மெலுகா கப்பல்களில் வந்த மாலுமிகள்" என்று முத்திரைகள் கூறுகின்றன. மெலுகா மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்குச் சொந்தமான சுமேரிய முத்திரை ஒன்று அகழ்வாய்வில் கிடைத்துள்ளது. மெலுகா நாட்டுப் பாய்மரக்கப்பல்கள் பெரியவை. அவற்றைச் சுமேரியர் "மகுலிம்" என்று குறிப்பிட்டனர். அறிஞர் சிலர் மகுலிம் என்பது "மஞ்சி" என்னும் திராவிடச் சொல் தான் என்கின்றனர். 10 முதல் 40 டன் சரக்கை ஏற்றிச் செல்லும் கப்பலுக்கு மஞ்சி என்னும் பெயர் தென்னிந்திய மேற்குக்கரை மொழிகளான கன்னடம், துளு, மலையாளம், தமிழ் ஆகியவற்றில் பயிலுகிறது. எனவே மெலுகா என குறிப்பிடப்பட்டது தென்னாடே எனலாம். மெலுகா நாட்டுக் கப்பல்கள் பாரசீக வளைகுடாவுக்கு மட்டு மன்றி அரேபியா, எகிப்து போன்ற நாடுகளுக்கும் சென்றன எனலாம். செங்கடலை ஒட்டிய வடக்கு எகிப்தில் எகிப்திய நைல் ஆற்று மரக்கலங்களிருந்து மாறுபட்ட அமைப்புள்ள மரக்கலங் களின் சித்திரங்கள் பல பாறைகளில் தீட்டப்பட்டுள்ளன. செங்கடற் பகுதியில் நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கை இணைத்ததும் இப்பொழுது தூர்ந்து போய் விட்டதுமான வாடி ஹமாமத் கால்வாய்ப் பகுதியில் ஜெபல் - எல் - அரக்(Djebel-el-Araq) என்னும் இடத்தில் கண்டெடுத்த கத்தி ஒன்றின் கைப்பிடியில் எகிப்தியப் படகு களுக்கும் (பாபிரஸ் நாணற்கட்டுகளைக் கொண்டு உருவாக்கியவை) வேறுசில கப்பல் களுக்கும் (மரத்தாலானவை; உயர்ந்த முனைகளை முன்னரும், பின்னரும் கொண்டவை.) நடந்த கடற்போர் சித்தரிக்கப் பட்டுள்ளது. அந்த அயல் நாட்டுக் கப்பல்களை சுமேரிய கப்பல்கள் என்று முன்னர் அறிஞர் பலர் கருதினர். ஆனால் அண்மையில் இந்திய தொல்பொருள் ஆய்வறிஞர் எஸ்.ஆர். ராவ் அம்மரக்கலங்கள் திராவிட இந்தியாவைச் சார்ந்தவையே என்று கூறியுள்ளார். பாரசீக வளைகுடாவிலும் அரபிக்கடல், செங்கடல் துறைமுகங்களுடனும் வாணிகம் செய்த இக்கலங்கள் வேறு நாடுகளிலிருந்து வந்தவை யாகவும் இருக்கலாம். வடமேற்கு இந்தியப் பகுதியில் இருந்த மகன் நாடு அல்லது அதற்கும் தெற்கில் (இன்று இந்துமாக்கடலில் மூழ்கி கிடக்கக்கூடிய) மெலுகா பகுதி ஆகியவற்றிலிருந்தும் இவை வந்திருக்கலாம். சுமேரிய முத்திரைகள் "தில்மன்" (Dilmun) என்னும் மூன்றாவது நாடு ஒன்றையும் குறிப்பிடுகின்றன அது எது என்பது பெரும் புதிராக உள்ளது. சுமேரியத் துறக்கம் எங்கு இருந்தது? தில்மன் எது என ஆய்வு செய்யும் முன்னர் இதுகாறும் கூறியவற்றைச் சுருங்கக் காண்போம். திராவிட மொழிகளை இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய (சிந்துவெளி முதலிய பகுதி) மக்கள் பேசிய மொழித் தடயங்களுடனும், சுமேரியா, எலாம் போன்ற நாடுகளின் பண்டை மொழிகளுடனும் (ஏன் ஈரானின் பிற பகுதிகள், மைய ஆசியா, காகசஸ் பகுதிகளின் பண்டை மொழிகள் ஆகியவற்றுடனும்) மொழியியல் அறிஞர்கள் ஒப்பாய்வு செய்துள்ளனர். அராபிய மொழிகள் அராபிய இடப்பெயர்கள் ஆகியவற்றுடனும் ஒப்பிட்டுள்ளனர். இத்தகைய ஒப்பாய்வு களுக்குப் பின்னர் அறிஞர் பலரும் இன்று கருதுவது என்ன? ஒருகாலத்தில் மத்திய ஆசியா (காகசஸ் பகுதி உட்பட) அராபியா, இந்தியா இந்நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அனைவருமே திராவிட மொழிகளைப் பேசினார் என்பது அவ்வறிஞர் கருத்தாகும். இந்த மொழிகளின் பிறப்பிடமாய் வட இந்தியா இருந்திருக்க முடியாது. தென்னிந்தியாவில்தான் திராவிட மொழி பேசும் மக்கள் அதிகமாக இருப்பதினால் திராவிட மொழிபேசுநர் தெற்கிலிருந்து வடக்காகப் பரவினர் என்றும், அவர்கள் வடக்கு/வடமேற்கிலிருந்து இந்தியாவிற்குள் வந்தேறிய வர்கள் அல்லர் என்றும் தெரிகிறது. தொல்லிந்திய (அதாவது சிந்து வெளி நாகரிக) மக்களும், சுமேரியர்களுக்கும் முந்திய உபெய்து நாகரிக மக்களும் திராவிட மொழி யொன்றையோ அதற்கு நெருங்கிய ஒரு மொழியையோ பேசியிருக்க வேண்டும். தென் மெசொபொதாமியாவிற்குள் சுமேரியர் நுழைந்தவுடன் உபெய்துகள் தெற்கே துரத்தப்பட்டு அவர்களே தொல்லிந்திய சிந்து வெளி நாகரிகத்தை உருவாக்கினர் என்று கிராமர் (Kramar) போன்ற அறிஞர் கருதுகின்றனர். மெசொபொ தாமிய முத்திரைகளில் காணும் கதைகள் அந்நாட்டின் தென் கோடியில் உள்ள எரிது (Eridu) நகரை நிறுவிய என் - கி (En-ki) என்ப வனே அப்பகுதிக்கு நாகரிகத்தைக் கொண்டுவந்தான் என்கின்றன. இவற்றை யெல்லாம் பார்க்கும் போது இந்தியாவிற்கும் மெசொபொ தாமியாவிற்கும் மட்டுமின்றி, எலாம், எகிப்து நாடுகளுக்கும் எங்கிருந்தோ ஒரு குழு வந்து நாகரிகத்தைப் பரப்பியது என்று கருதலாமோ? அந் நாகரிகத்தைப் பரப்பியவர்கள் கருநிறத்தவர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மொழிகளின் எச்சங்களும் (முத்திரைகளில் காண்பவை) திராவிட மொழி போன்றே உள்ளன. திராடர்களின் பழைய தொன்மங்களின்படி அவர்களது தாயகம் இன்று இந்திய மாக்கடலில் மூழ்கிக் கிடக்கும் நிலப் பகுதியாகும். இந்தியமாக்கடலில் மூழ்கிக் கிடப்பதாகக் கருதப்படுவதும் லெமூரியா என நம் காலத்தவர் பெயர் சூட்டியுள்ளதுமான நிலப் பகுதியே அதுவாகலாம். இப்பொதுவான நாகரிகம் எந்தப் பகுதியிலிருந்து பரவியது என்பது பற்றித் தெரிவதற்கு இந்திய, சுமேரியப் பழங்கதைகளன்றி வேறு ஆதாரங்கள் உண்டா? அந்நாகரிகம் பிறந்த இடத்தை லெமூரியா, நாவலம், தமிழகம், தென்கண்டம் போன்ற சொற்களுள் ஒன்றால்தான் சுமேரியர் குறிப்பிட்டிருக்க வேண்டுமென்பதில்லை. அந்நிலப்பெயரை சுமேரியர் மாற்றிக் குறிப் பிட்டிருக்கலாம். உபெய்து கடவுளான என்கி பெயரையே இயா (Ea) ஆக மாற்றி விட்டனரே! குமரிக்குத் தெற்கே கடலில் மூழ்கிய நிலப்பகுதியின் தமிழ்ப் (திராவிடப் பெயர்கள் மத்தியக் காலத்தில், ஏறத்தாழ கி. பி. 1000 அளவில் வழங்கியவாறுதான் நமக்குத் தெரியும். அதற்கு முன்னரே அப்பெயர்கள் திரிந்திருக்கலாம். மெசொபொதாமிய எரிது நகருக்கு நாகரிகத்தை வழங்கிய என்கி (யா) என்னும் கடல் தெய்வம், நோயும் சாக்காடும் அற்றது என்றும்; அக்கடவுளின் பூர்வீக நாடான தில்மன் நாட்டில் குளிர் நீர் ஊற்றுகள் நிறைய இருந்தன; மாந்தர் களிப்புடன் கவலையின்றி வாழ்ந்தனர் என்றெல்லாம் சுமேரிய முத்திரை வாசகங்கள் கூறுகின்றன. கிரேக்கருக்கு பொசிதோன் (Poseidon) போல என்கி சுமேரியருக்குக் கடல் தெய்வமாகும். தில்மன் நாடுதான் சுமேரியரின் துறக்கம் (Paradise) ஆகும். அதைப் பின்பற்றித்தான் விவிலியம் கூறும் துறக்கமும் கற்பனை செய்யப்பட்டது. தில்மன் - ஐ கற்பனைத் துறக்கம் என்று ஒதுக்கி விடுவதற்கு இல்லை. காரணம் மெசொபொதாமிய முத்திரைகளில் உள்ள வாணிகக் குறிப்பு வாசகங்களில் தில்மன் நாட்டு மரக்கலங்கள் குறிக்கப்பட்டுள்ளன. தில்மன் அரசன் உபேரி (Uperi) என்பவன் அசிரிய மன்னன் இரண்டாவது சர்கனுக்கு (Sargon) திறை செலுத்திய தாக அசிரிய முத்திரைகள் கூறுகின்றன. வேறொரு அசிரிய மன்னன் தில்மன் நாட்டிலிருந்து செம்பு, வெண்கலம், விலையுயர்ந்த மரங்கள் ஆகியவற்றைக் கொள்ளை யடித்தான். அசிரிய கொடுங்கோலன் சென்னகெரிபு 'நகரங்களின் தாய்' ஆகிய பாபிலோனைத் தரை மட்டமாக இடித்து அழிக்க தில்மன் படைவீரர்கள் உதவி செய்தனர். என்கி (யா) கடவுளின் ஆட்சியின் கீழ் இருந்த நாட்டை 'துறக்கம்' என்று தொன்மக் கதைகள் கற்பித்திருந்த போதிலும் தில்மன் என்பது அக்காலத்தில் இருந்த ஒரு நாட்டின் பெயர்தான் என்பது மட்டும் தெளிவு. எங்கு இருந்தது தில்மன்? 'கதிரவன் எழும் நாடு' என அது சுட்டப் பட்டது. ஆகவே அது டைகிரிஸ் - யூப்ரட்டிஸ் ஆறுகளின் நிலப்பகுதிக்குக் கிழக்கே இருந்திருக்க வேண்டும். பாரசீக வளைகுடாவில் பக்ரைன் (Bahrein ) தீவில் மெசொபொதாமிய நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் ஆகிய இரண்டின் கூறும் அமைந்த நாகரிகச் சின்னங்களை அகழ்வாய்வில் கண்டுபிடித்த பின் சில அறிஞர்கள் பக்ரின் தான் தில்மன் என்று கூறினர். ஆனால் பக்ரைன் நாகரிகம் தில்மன் நாகரிகம் அல்ல என்பதற்கு சில காரணங்களைக் கிராமர் கூறியுள்ளார். ஒன்று தில்மன் நாட்டிலிருந்து யானைத் தந்தங்கள் சுமேரியாவுக்கு வந்தன என்று கூறப்பட்டு இருந்த போதிலும் பக்ரைனில் யானைகளே இல்லை; மேலும் அங்கு கடல் தெய்வத்திற்குக் கோயில்கள் இல்லை. ஆகவே மரக்கலம் செலுத்துதல், கடல் தெய்வம் (நீர்க்கடவுள்), பழக்கப்பட்ட யானைகள் ஆகிய நாகரிகக் கூறுகளை உடைய தொல் இந்திய (சிந்துவெளி) நாகரிகத்தையே தில்மன் என சுமேரியர் குறிப் பிட்டனர் என்பது கிராமர் கருத்தாகும். வருங்கால ஆய்வுகளில் தில்மன் எங்கிருந்தது என்பது பற்றி புது முடிவுகள் வரலாம். ஒரு வேளை டைகிரிஸ் - யூப்ரட்டிஸ் ஆறுகளின் கழிமுகத்துக்குக் கிழக்கு / தென்கிழக்கு திசையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தில்மன் இருந்ததாக முடிவு செய்யப்படலாம். இந்தியப் பெருங் கடலின் அடித்தளம் முழுமை யாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரும், சிந்துவெளி முத்திரை யெழுத்துகள் முழுமையாக படிக்கப்பட்ட பின்னரும்தான் இப் சிக்கலுக்கு இறுதி விடைகிடைக்கும். கிராமர் கருத்துப்படி தில்மன் என்பது சுமேரியச் சொல் அல்ல; உபெய்துச் சொல் ஆகும். சிந்து வெளி இந்தியர் தம் நாட்டை தில்மன் என்று வழங்கி இருப்பராயின் அவர்கள் முத்திரைகளிலும் அணிகளிலும் அப்பெயர் கண்டு பிடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எகிப்து : 'ஸ்பிங்ஸ்' க்கும் முந்திய பழமையான புதிர்கள் உலகத்தின் மிகப்பழைய நாகரிகங்களில் ஒன்றான எகிப்திய நாகரிகத் தோற்றத்தை அறியவும் ஆழ்கடல் ஆராய்ச்சி உதவும். பண்டைய எகிப்திய ஓவிய எழுத்துக்கள் படித்தறியப்பட்ட பின்னர் எகிப்து பற்றி மறைந்துகிடந்த பல செய்திகள் வெளிவந்துள்ளன ; பண்டைய எகிப்திய மன்னர் (பாரோவா) ஒருவரின் தலை பொருத்தப்பட்ட பெண்சிங்க சிற்பமான ஸ்பிங்ஸ் பற்றியும் செய்திகள் வந்துள்ளன. எனினும் எகிப்து நாகரிக வேர்கள் ; அந்நாட்டு ஓவிய எழுத்துக்களின் பிறப்பு; 6000 ஆண்டுகளுக்கு முன் அந்நாடு எப்படி அநாகரிக நிலையிலிருந்து திடுமென உயர் நாகரிகம் அடைந்தது; என்பன போன்றவையெல்லாம் இன்னும் புதிராகவே உள்ளன. ஸ்பிங்ஸ் புதிர் விளங்கி விட்ட போதிலும், ஸ்பிங்ஸ் / பிரமிடுகள் ஆகியவற்றின் காலத்திற்கு முன்னர் எகிப்து நாடு எப்படியிருந்தது என்பது இன்னும் நமக்குத் தெரியவில்லை. கி. மு. 8000 முதல் கி.மு. 6000 வரை எகிப்து நாடானது கற்கால நாகரிகம் வழங்கிய வடஆப்பிரிக்க பெருநிலப் பகுதியின் ஒரு உட்பிரிவே என்பதும், அக்காலக் கட்டத்தில் எகிப்து நாகரிகம் அடையவில்லை என்பதும், சகாரா பாலைவனத்தில் நடந்த ஆகழ்வாய்வுகளிலிந்து தெரிகிறது. கி.மு. 4000க்கு முற்பட்ட நைல் பள்ளத்தாக்கு ஓவியங்களையும், சகாராவில் காணப்படும் டாசிலி, பெசான் (Tassili, Fezzan) போன்ற இடங்களில் உள்ள பாறை ஓவியங்களையும் ஒப்பிடும் பொழுது வண்ணத்திலும் வேலைப் பாட்டிலும் அவை ஒன்றுபோலவே காணப்படுகின்றன. அந்த ஓவியங்களின் தரமும் குறைவாகவே (Provincial) இருந்தது. அன்று வளமுடையதாக இருந்த சகாரா பின்னர் பாலைவனமாக திரிந்தது. நைல் ஆற்றுப் படுகையோ திடுமெனக் கற்கால நாகரிகத்தி லிருந்து மாழைக்கால நாகரிகமாக வளர்ச்சி பெற்றது ; எழுத்துமுறை, அரசாங்கம், குருமார்கள், அதிகாரிகள், நீர்ப் பாசன அமைப்பு, நகரங்கள் போன்ற பல சிறந்த நாகரிகக் கூறுகளை உடையதாக எகிப்து நாகரிகம் உருப்பெற்றது. இத்தகைய திடீர் வளர்ச்சியை நைல் ஆற்றுப்படுகை மக்கள் எப்படிப் பெற்றனர்? அவ்வளர்ச்சி அங்கு தொன்று தொட்டு வாழ்ந்திருந்த மண்ணின் மைந்தர் உருவாக்கியதா, அல்லது புதிதாக வந்தவர்கள் உருவாக்கியதா? அகழ்வாய்வாளர், நிலைத்திணை இயலாளர் உட்பட பல்துறை அறிவியலாளர் திரட்டிய செய்திகளில் லிருந்து எகிப்திய நாகரிகம் அந்நாட்டு மண்ணின் மைந்தர்கள் தாமே வளர்த்துக்கொண்டதுதான் என்பதைக் காட்டுகின்றன. ஆனாலும் சில ஐயங்களும் உள்ளன. எகிப்தின் புதுக்கற்கால (Neolithic) நாகரிகத்திலிருந்து பிற்கால உயர் நாகரிகக் கூறுகள் பலவும் எவ்வாறு படிப்படியாக உருவாயின என்பதைக் காட்டும் விளக்கங்கள் கிடைக்கவில்லை. எகிப்திய ஓவிய எழுத்துக்களை எடுத்துக்கொள்வோம். ஒரு மொழியின் வரிவடிவம் நாகரிகத்தின் சிறந்த அடையாளங்களில் ஒன்று. கற்கால மக்களுக்கு வரிவடிவம் தேவையில்லை; சித்திரங் களே போதும். அரசமைப்புகள் தோன்றிய பின்னர் நினைவுக் குறிப்புகள், பழங்கதைகள், மரபுகள் ஆகியவற்றையும் முக்கியமாக வாணிகக் கணக்குகளையும் எழுதி வைக்க வரி வடிவம் தேவைப் பட்டது. மெசொபொதாமியாவிலும் பண்டைய சீனாவிலும் படவெழுத்தானது எழுத்து வடிவமாக மாறியதைக் காட்டும் சான்றுகளைக் காணலாம். ஆனால் எகிப்தில் இத்தகைய சான்றுகள் கிட்டவில்லை. நைல் படுகையில் உள்ள பல பாறை ஓவியங்களின் லிருந்து பண்டை எகிப்தியர்கள் படவெழுத்துக்களை அறிந்திருந்தனர் என்று தெரிகிறது. எகிப்திய நாகரிக எழுத்துப் பொறிப்புகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன வெனினும் எப்படி படவெழுத் துக்கள் அசையெழுத்து, தனி எழுத்து வரி வடிவங்களாக வளர்ச்சி பெற்றன என்பதைக் காட்டும் இடைநிலை வடிவங்கள் எவையும் கிட்டவில்லை. எகிப்து நாட்டின் மிகப்பழைய நகரங்களில் கிடைத்துள்ள கரும்பலகைப் (ஸ்லேட்) பாளங்களில் பல்வேறு வடிவங்களும் படவெழுத்துகளும் காணப்படுகின்றன. எனினும் அவை சித்திரங் களே. ஆனால் பிற்காலத்துப் பொறிப்புகள் வளர்ச்சியடைந்த எழுத்துமுறையைக் கொண்டவையாகும்; எகிப்து மக்கள் தொடர்ந்து 3000 ஆண்டுகள் எந்த வகை மாற்றமுமின்றி பின்பற்றி வரத்தக்க அளவுக்கு அந்த எழுத்துமுறை வளர்ச்சியடைந்ததாக இருந்தது. பாரோவாக்களின் ஐந்தாவது, ஆறாவது மரபினர் கட்டிய பிரமிடுகளின் உட்சுவர்களில் உள்ள குறிப்புகள் தாம் எகிப்து நாட்டின் மிக பழைய இலக்கியங்கள். அவை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. ரசிய நாட்டு ஆய்வாளர் துரயேல் கருத்துப்படி அவற்றை 'மாந்தனின் மிகப்பழைய சமய இலக்கியம்' என்றும் 'மாந்த இனத்தின் மிக முகாமையான பாரம்பரியம்' என்றும் கூறலாம். பழைய லிபியில் எழுதப்பட்டிருப்பினும் அம்மொழியை வழக்கொழிந்தது என்று கருதலாகாது. அந்த பிரமிடு பொறிப்புகளின் நடையும் பொருளடக்கமும் எகிப்து நாகரிக காலமாகிய சிலவாயிரம் ஆண்டுகள் முழுவதும் தொடர்ந்து இடையறாது வழங்கிய செம்மொழித் (Classical) தன்மை வாய்ந்தவை. அவற்றில் எதிலும் கற்றுக்குட்டித் தன்மையோ, புதிய வடிவத்தை உருவாக்கும் (நிறைவு பெறாத முயற்சியோ , பிழைகளோ காணப்படவே யில்லை. எகிப்து மொழிக்கு ஏற்ற லிபி அது. மிக அழகிய மொழிநடையில் சிக்கலான சமய, மெய்ப்பொருளியல் கருத்துக்களை கூறும் ஆற்றல் வாய்ந்தது. இதனுடன் ஒப்பிடும் பொழுது மெசொபொதாமிய மொழியிலுள்ள பழைய பொறிப்புகள் வெறும் வீட்டுக்கணக்குகளே. பல நூற்றாண்டுகளுக்குப் பின், பற்பல இலக்கிய எழுத்து முயற்சிகளுக்குப் பின்னர்தான் சமய, மெய்ப் பொருளியல் கருத்துகளை கூறத்தக்கவையாக சுமேரிய மொழியும் எழுத்தும் மாறின. பிறநாட்டு / நாகரிக மக்களிடமிருந்து எழுத்து வரிவடிவத்தை ஒரு நாடு கடன் வாங்கி தன் மொழிக்கு ஏற்றவாறு திருத்திப் பயன்படுத்திக் கொண்டதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. மையகிழக்கு நாடுகள் பலவற்றின் மக்கள் மெசொபொதாமிய ஆப்பெழுத்துக்களைப் பயன்படுத்தினர். காப்டிக், ஸ்லாவிக், எட்ருஸ்கன் மொழிகளின் வரிவடிவங்கள் கிரேக்க மொழி வரிவடிவத்திலிருந்து உருவாக்கப்பட்டவை. சப்பானியர் முன்னர் சீன எழுத்தையே பயன்படுத்தினர். இதுபோல எகிப்தியர்களும் வேறு மொழியினரிடமிருந்து வரிவடிவத்தைக் கடன் பெற்றனரா? எகிப்திய ஒவிய எழுத்துகள் பல, கிரீட் தீவில் வழங்கிய ஓவிய எழுத்துகளை ஒத்துள்ளன. ஆனால் கிரீட் நாகரிகம் எகிப்திய நாகரிகத்திற்கு பிந்தியதே எகிப்திய எழுத்து முறையை கிரீட் பின்பற்றியது என்று கூறலாமேயொழிய, மாற்றிக் கூறமுடியாது. எகிப்தில் எழுத்துமுறை தோன்றும் முன்னரே டைகிரிஸ் - யூப்ரட்டீஸ் படுகையில் எழுத்துமுறை தோன்றிவிட்டது. எகிப்திய ஓவிய வெழுத்துகள் அந்நாட்டு உயிரினங்கள், நிலைதிணை, கடவுள்கள், பண்பாடுகள் ஆகியவற்றை அழகுபடச் சித்தரிப்பவை யாகும். மெசொபொதாமிய எழுத்துகள் அப்படியல்ல. எகிப்திய ஓவிய எழுத்துகளுக்கும் அந்நாட்டு இலக்கியம், நுண்கலை களுக்கும் இடையே நெருங்கிய உறவினைக் காணலாம். எழுத்துக்கும் நுண்கலைகளுக்கும் இடையே நடை, நோக்கு, உலகை நோக்கும் பார்வை (Model of the World) ஆகியவற்றில் பொதுமை உள்ளது. எகிப்திய ஓவிய எழுத்துமுறை அந்நாட்டு நாகரிகத்தின் ஒரு கூறாக அமைந்தது. பிரமிடுகள் உருவாவதற்கு முன்னரே வளர்ச்சி யுற்றிருந்த எகிப்திய எழுத்துமுறை பிரமிடுகள் காலத்திற்குப் பின் பாடல், கவின்கலை, இலக்கியம், அறிவியல், சட்டம் ஆகியவற்றைச் செவ்வனே தரும் அளவுக்கு உயர்நிலையை அடைந்தது என்றாலும் அவ்வளர்ச்சியின் படி நிலைகளைக் காட்டும் தடயங்களே ஏன் இல்லை? என்று துரயேவ் வினவுகிறார். இக்கேள்விக்கு நேரான விடை தர இயலவில்லை . எகிப்திய எழுத்து வரிவடிவத்தின் தோற்றத்தைப் போலவே எகிப்தியப் பண்பாட்டுக் கூறுகள் வேறுசில பற்றியும் கருத்து வேறுபாடுகள் உண்டு. சில வேறுபாடுகளைப் பற்றி உன்னிக்கத்தான் வேண்டும். சிலவற்றைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. புதுக்கற்கால அடித்தளத்தின் மேல் எழுந்ததுதான் எகிப்து நாகரிகம் என்று கண்டோம். அந்தப் புதுக்கற்கால நிலைமைகளைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியவில்லை . சோவியத் அறிஞர் எச். கிங் (H.King) அம்மையார் தனது பாரோவாக்களுக்கு முந்தைய எகிப்து என்னும் நூலில் எகிப்தின் புதுக்கற்கால நிலைமைகளைப் பற்றித் தெளிவாக ஒன்றும் தெரியவில்லை என்கிறார். அண்மைக்காலக் கண்டு பிடிப்புகளை ஆய்வு செய்தால் பல புதிய உண்மைகள் தெரியவரலாம். புதுக்கற்காலத்தில் எகிப்தியப் பண்பாடும் பண்டைய சகாரா பண்பாடும் ஒன்று போலவே இருந்தன. நைல் பள்ளத்தாக்கில் மட்டும் பண்பாடானது கற்காலத்திலிருந்து திடுமென வெண்கல நாகரிகக் காலத்திற்கு உயர்ந்ததற்குத் தக்க காரணங்கள் இருந்திருக்க வேண்டும். அப்பள்ளத்தாக்கின் சூழ்நிலை மட்டுமின்றி, வெளியில் லிருந்து வந்த உந்து ஆற்றல்களும் காரணமாக இருந்திருக்குமோ? எகிப்து, உபைது, எலாம், சிந்துவெளி ஆகிய நான்கு நாகரிகங் களுமே ஒரே இடத்தில் (இலெமூரியாவில் தோன்றி யிருக்கலாமோ? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அந்நிலப்பகுதி கடலுள் மூழ்கியதைக் கடலடியில் செய்யும் ஆய்வுகள் வருங்காலத்தில் நிறுவுமாயின் மாந்த இனத்தின் தொல் வரலாற்றின் பெரும்பகுதியை மாற்றி எழுத வேண்டிய நிலை ஏற்படும். ஷ்லீமன், இவான்ஸ் ஆகியோர் செய்த அகழாய்வுகளுக்குப் பிறகு கிரேக்கத் தொல் வரலாறும், மொகஞ்சொதரோ - ஹரப்பா அகழ்வுக்குப்பின் சிந்து வெளித் தொல்லிந்திய வரலாறும் திருத்தி எழுதப்பட நேரிட்டதை நினைவிற் கொள்க. துருக்மெனிஸ்தான் - சுமேர் - லெமூரியா சிந்துவெளி, எலாம் நாகரிகங்களை ஒத்த தொன்மை வாய்ந்த ஒரு நாகரிகத்தை சோவியத் அகழ்வாய்வாளர் தென்துருக்மெனிஸ் தானில் கண்டுபிடித்துள்ளனர். இந்நாகரிகமும் லெமூரியாவில் தோன்றியிருக்கலாம். நகரங்கள், கோயில்கள், கோட்டை கொத் தளங்கள் ஆகியவை 5000 ஆண்டுகளுக்கு முன் துருக்மெனிஸ் தானில் கட்டப்பட்டிருந்தன. உபெய்து நாகரிகக் களிமண் உருவங்கள் போன்றவை தென்துருக்மெனிஸ்தானிலும் (கி.மு. 3000 - 2000 கால அளவை சார்ந்தவை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன மேற்சொன்ன தென்துருக்மெனிஸ்தான் உருவங்களில் உள்ள பொறிப்புகள் சுமேரியா, எலாம், சிந்துவெளி எழுத்துமுறைகளை ஒத்திருக்கின்றன. அத்தகைய பொறிப்புகள் 20க்கு மேல் துருக் மெனிஸ்தானில் கிட்டியுள்ளன. அவற்றிற்கும் மேற்சொன்ன பிற எழுத்துமுறைகளுக்கும் உள்ள ஒப்புமை தற்செயலாக அமைந்து விட்டது என்று கூறி ஒதுக்கிவிட முடியாது. துருக்மெனிஸ்தான் பொறிப்புகளிலும் சுமேரிய வாசகங்களிலும் ஒன்றுபோல் காணப் படும் ஒரு வடிவம் எட்டு முனை விண்மீன் ஆகும். சுமேரியாவில் அது தெய்வம் விண்ணைக் குறித்தது. பொதுவாக ஐந்து அல்லது ஆறுமுனை விண்மீன்களே சித்தரிக்கப்படும் நிலையில், இவ்விரண்டு நாகரிகங்களில் மட்டும் எட்டு முனை விண்மீன் சித்தரிக்கப்பட்டது தற்செயலாக அமைந்திருக்காது. துருக்மெனியப் பொறிப்பு எழுத்துகளுக்கும் வேறு சில சுமேரிய / சிந்துவெளி / குறிப்பாக எலாம் எழுத்துகளுக்கும் தெளிவான ஒப்புமை உள்ளது. அவ் வெழுத்துக்கள் பொதுமைப் பண்புகள் உடையவை; பொதுவான வேரிலிருந்து உருவானவை என்பது வெளிப்படை சுமேரியா / எலாம் / சிந்துவெளி எழுத்துமுறைகளின் கால மாகிய கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே துருக்மெனிய எழுத்தும் இருந்தது என்று இன்றைய நிலையில் கூற இயலவில்லை. காரணம் துருக்மெனிய எழுத்துகளைக் கொண்ட சொல்லோ சொற் றொடரோ, ஒன்றுகூடக் கிடைக்கவில்லை; கிடைத்தவையெல்லாம் தனி எழுத்துக்களும் சில குறியீடுகளுமே. பொதுவான ஒரு சித்திர எழுத்துமுறையின் அடிப்படையில் (சம காலத்தில்) மெசொபொதாமியா, எலாம், சிந்துவெளி ஆகிய இடங்களிற்போல துருக்மெனியாவிலும் எழுத்துவடிவங்கள் உருவாயின எனக் கருதுவதே பொருத்தமாகும். மெசொபொதாமிய எலாம் பகுதிகளிலிருந்து வளர்ச்சி பெற்ற நிலையில் எழுத்து முறையை துருக்மெனியா கடன் வாங்கியிருந்தால் ''எழுத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மட்டும் காட்டும் பொறிப்புகள் கிட்டியிருக்காது; முழுமையான வாசகங்களே கிடைத்திருக்கும். துருக்மெனியாவில் மிகப்பழைய நகர அகழ்வாய்வு ஒன்றில் மூன்று எழுத்துக்களைக் கொண்ட களிமண் பாளம் ஒன்று அண்மையில் கிட்டியது. அதில் ஓர் எழுத்து நான்கு முறை எழுதப் பட்டுள்ளது. எழுதப்பயிலும் ஒரு குழந்தையின் பயிற்சியைத்தான் இது காட்டுகிறது என்கிறார் அறிஞர் வி. மேசன். வருங்கால அகழ்வாய்வுகளில் மேலும் தெளிவு கிட்டலாம். துருக்மெனியப் பழங்குடிகள் தாமாகவே ஒரு தனி எழுத்துமுறையை உண்டாக்கினார்களா? (அப்படி உண்டாக்கிய எழுத்துக்களைக் கொண்டு உருவான களிமண் பலகைப் புத்தகங்கள் துருக் மெனியாவில் கிடைக்கு மாயின் அது 20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் அகழ்வாய்வு அருஞ்செயலாக அமையும்!). அல்லது எழுத்தின் தொடக்கநிலை வளர்ச்சியோடு நின்று விட்டார்களா? கி. மு. 1500ஐ ஒட்டி துருக்மெனிய நகரங்களின் குடிமக்கள் வெளியேறி அந்நகர்கள் பாழடைந்தன. காரணம் இதுவரைத் தெரியவில்லை. சிந்துவெளி நாகரிகம் அழிந்த காலமும் இதுதான். தென்துருக்மெனிய பண்டை நகரமான ஆல்தின் தெபே (Altyn Depe) இல் 1960இல் நடந்த அகழ்வாய்வில் ஒரு வீட்டுச் சுவரில் யானைத் தந்தத் துண்டுகள் மூன்று கிடைத்தன. அத்துண்டுகளில் வட்டங்கள் செதுக்கப் பெற்றிருந்தன. இதே போன்ற தந்தங்கள் சிந்துவெளி நகரங்களிலும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இந்தியா வில் பிற்கால நூல்களிலிருந்து இத்தகைய தந்தத் துண்டுகள் குறி சொல்லப் பயன்பட்டதை அறிகிறோம். அத்துண்டுகளைக் குலுக்கிப்போட்டு தரையில் விழுந்தபின் மேலே தெரிகின்ற வட்டங்களின் எண்ணிக்கையிலிருந்து குறிசொல்லப்பட்டது. இந்தியாவுடன் வாணிக உறவுகள் இருந்தனவோ? அக்காலத் துருக்மெனிய மக்களும், சிந்துவெளி மக்களும் ஒரே சமய உணர்வு உடையவர்களா அல்லது இரு இனத்தவரும் ஒரே மூல குமுதாயத்தி லிருந்து பிரிந்தவர்களா? துருக்மெனிய தொல் மக்களது மண்டையோடு, எலும்புக்கூடு ஆய்வுகளி லிருந்து அவர்கள் இனம் சிந்துவெளி மக்கள் இனத்திற்கு நெருங்கியது என்று தெரிகிறது. (சிந்துவெளி மக்களும், உபெய்து மக்களும் ஒரே இனத்தவர்) சிந்துவெளியிலிருந்து தொல் இந்தியர்கள் துருக்மெனியாவிற்குப் பெரும் எண்ணிக்கையில் குடியேறினர் என்றோ, உபெய்துகள் இந்தியாவிற்குள் குடியேறினார்கள் என்றோ கூறிவிட முடியாது. என்ன நடந்திருக்கலாம்? கி.மு. 4000 - 3000 காலக்கட்டத்தில் மொழி, பண்பாடு, உடலமைப்பு ஆகியவற்றில் ஒப்புமையுடைய ஓரின மக்கள் வடக்கு நோக்கிச் சென்று சிந்து சமவெளி, டைகிரிஸ் - யூப்ரட்டீஸ் படுகை, எலாம், பாரசீக வளைகுடாக்கரை, ஈரானில் ஜாக்ரோ மலைப்பகுதி ஆகிய பல பகுதிகளிலும் ஆங்காங்கு குடியேறியதோடு அமையாது தென்துருக் மெனியா வரைப் பரவினர் எனக் கொள்வதே பொருத்தமாகும். அவ்வாறு பரவும் பொழுது ஆங்காங்கு வாழ்ந்த உள்ளூர் மக்களோடு அவர்கள் கலந்து உறவாடியதன் விளைவாக சுமேரிய, எலாம், சிந்துவெளி நாகரிகங்கள் உருவாயின என்க. (இப்பண்டைய நாகரிகங்கள் ஒவ்வொன்றுக்கும் சிற்சில வேறுபாடுகள் கொண்ட, தனித் தன்மை வாய்ந்த பண் பாடுகள் ஏன் உருவாயின என்பதை இக்கருத்து விளக்க வல்லது). இவ்வாறு தெற்கிலிருந்து சென்ற மக்களினத்தின் ஒரு பிரிவினர் செங்கடல், நைல் பள்ளத்தாக்கு வரை சென்று எகிப்து நாட்டிலும் குடியேறி அங்குள்ள தொல் குடியின ரோடு கலந்து பண்டைய எகிப்திய நாகரிகத்தை உருவாக்கியிருக் கலாம். எகிப்தில் அந்நாட்டுத் தொல்குடியினருடன் கலப்பு பெரு மளவிற்கு இருந்தமையால் சிந்துவெளி / சுமேரிய / எலாம் / துருக் மெனிய நாகரிகங்களிலிருந்து எகிப்திய நாகரிகம் வேறுபட்டதாக அமைந்தது. மேற்கண்ட பண்டை நாகரிகங்கள் அனைத்துக்கும் தொட்டில் இலெமூரியாவா, இலெமூரியா திடீரென்று அழிந்ததா, என்பது பற்றி யெல்லாம் பண்டை ஆதாரங்களிலிருந்து அறிய முடியுமா? இந்தியப் பெருங்கடல் (தென்பெருங்கடல்) தீவுகள் சிந்துவெளி நாகரிகக் கடலோடிகள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய மாக்கடலில் நெஞ்சுரத்துடன் மரக்கலம் செலுத்தி வந்தனர். அரேபியர் கடல் வாணிகமும் அப்பொழுதே தொடங் கியது. எகிப்தியர்களும் இந்துமாக் கடலிலும் செங் கடலிலும் மரக்கலம் செலுத்தினர். பிறகு கிரேக்கரும் அக்கடலில் கலம் செலுத்தி வாணிகத்தடங்கள் கண்டனர். அரேபிய, எகிப்திய, கிரேக்க, உரோமானியப் பண்டை இலக்கியங்களில் இந்தியமாக் கடலை ஒட்டியும் அக்கடலிலும் இருந்த 'செல்வம் கொழிக்கும் ' நாடுகளையும், தீவுகளையும் பற்றிய குறிப்புகள் உள்ளன. எகிப்திய பாப்பிரஸ் தொல்லிலக்கியங்கள் பல லெனின்கிராடு ஹெர்மிட்டேஜ் தொல்பொருள் நிலையத்தில் உள்ளன. பாப்பிரஸ் 1115 என்பது கடலில் மரக்கலம் உடைந்து வழிதவறிய மாலுமி ஒருவனுடைய கதையைக் கூறுகிறது. எகிப்தியவியல் அறிஞரான வி. கோலனி ஷேவ் 1881இல் அக்கதையை மொழிபெயர்த்தார். அதனை அவர் ஹோமருடைய காவியம் ஆடிசி (Odyssey), அரேபிய இரவுகளில் வரும் 'கப்பலோட்டி சிந்துபாது கதை' விவிலியக் கதைகள் ஆகியவற்றோடு ஒப்பிட்டுள்ளார். பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இக்கதை மொழியியல், வரலாறு, இலக்கியம் போன்ற நோக்கங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எகிப்தியவியல் அறிஞர் பலரும் இதைப் பயின்றுள்ளனர். இருந்த போதிலும் இக்கதையில் இன்றும் தெளிவில்லாதவையும், விவாதத் திற்குரியவையுமான பல செய்திகள் உண்டு. நூற்றிருபது முழ நீளமும், நாற்பது முழ அகலமும் உடைய கப்பல் ஒன்றில் திறமை வாய்ந்த எகிப்திய மீகான்கள் செங்கடலிலும், இந்தியமாக்கடலிலும் பயணம் செய்தனர். நடுக்கடலில் புயலில் சிக்கி அக்கப்பல் கடலுள் மூழ்கியது. அப்பொழுது உயிர் தப்பி தீவு ஒன்றை அடைந்து பிழைத்த ஒரு கலவலவன் சொன்னது இக்கதை. அவன் அத்தீவில் முதல் மூன்று நாள்களைத் தனியே கழித்தான். பின்னர் சுற்றித்திரிந்து அத்தி, கொடிமுந்திரி, வெங்காயம், பழவகைகள், காய்கறிகள், மீன் இனங்கள், பறவைகள் ஆகியவற்றைக் கண்டான். அதற்குப் பின் செல்வம் கொழிக்கும் அத்தீவின் அரசனான ஒரு பாம்பைக் கண்டான். நீண்ட தாடி, தங்கமய உடம்பு, நீலக்கல் புருவங்கள் ஆகியவற்றை உடையவன் அப்பாம்பரசன். கப்பலோட்டியின் வரலாற்றைக் கேட்ட அரசன் அவனைப் பணிவுடன் வரவேற்று விருந்தோம்பி, ஒட்டைச்சிவிங்கி, தந்தங்கள், சாதிக்காய், வாசனைத்திரவியங்கள் போன்ற விலையுயர்ந்த பரிசுப்பொருள்களை நல்கி அவனைக் கப்பலில் எகிப்துக்கு அனுப்பிவைத்தான். வழியனுப்பும் பொழுது " இங்கிருந்து நீங்கிய பின் இத்தீவு உன் கண்களுக்கு தோற்றமளிக்காது; அது அலைகளாக மாறிவிடும்" என்று கூறினான். உயிர்தப்பிய கப்பலோட்டியின் கதை மாயவித்தைக் கதை போன்று இருப்பினும் அதில் ஓரளவு அடிப்படை இருக்கவேண்டும். தாடிவைத்த பாம்பரசன் ஆண்ட தீவு செங்கடலில் அல்லது இந்திய மாக்கடலில் உள்ள எந்தத் தீவாக இருக்கலாம்? கோலநிஷெவ் கருத்துப்படி அத்தீவு ஏடன் வளைகுடா நுழைவாயில் உள்ள சோகோத்ரா தீவு ஆகும். வேறு சிலர் அது செங்கடலில் உள்ள செயின்ட் ஜான் தீவு என்கின்றனர்; பண்டைக்காலத்தில் அத்தீவில் பாம்புகள் வாழ்ந்தனவாம். வேறு சிலர் அத்தீவு ஏடன் அருகில் உள்ளதும் அரேபியர்கள் அபுஹாபன் (பாம்புகளின் தந்தை என்று அழைப்பதுமான சிறுதீவு என்று கருதுகின்றனர். அண்மையில் இக்கதையை உருசிய மொழியில் பெயர்த்த ஒய். மாக்சிமோவ் " இத்தீவு எது என்று அறுதியிட்டுக் கூறவே முடியாது. காரணம் பண்டுதொட்டு மாந்தர் கனவு கண்டு வருவதும் எய்த முயல்வதுமான கற்பனைத் துறக்க உலகின் தன்மைகளை அத்தீவுக்கு இக்கதை ஏற்றியுள்ளது" என்கிறார். மெசொபொதாமியர் கண்டதில்மன் நாடு கற்பனைத் துறக்க நாடுதான் என்றாலும் அதையும் கற்பனை என்று கூறி ஒதுக்கிவிட முடியாது. அதுபோல "தீவு அலையாக மாறிவிடும்" என்ற கூற்றை எகிப்திய வியலாளரும் நாட்டார் தொன்ம ஆய்வாளர்களும் பார்க்கும் பார்வையில் காணாமல் நாம் வேறுவகையில் கருதலாம். இந்திய மாக் கடலில் மூழ்கிவிட்டதீவு அல்லது நிலப்பகுதி பற்றிய செய்தியை உயிர் தப்பிய மாலுமி' கதை சுட்டுவதாக கொள்ளலாமோ? இந்தியமாக்கடலில் மாறுபட்ட குமுகாய அமைப்புகளைக் கொண்டவையும் செல்வம் கொழிப்பவையுமான தீவுக்கூட்டங்கள் இருந்தன எனப் பல தொன்மங்கள் கூறுகின்றன. அவற்றுள் சூரியத் தீவும் பன்ஹ ய (Panhaia) தீவுகளும் அடங்கும். வரலாற்று நூல் நிலையம் என்னும் தனது நூலின் இரண்டாம் பகுதியில் டயடோரஸ், நான்கு மாதங்கள் கடலில் புயலால் அலைப்புண்ட ஜம்புல் என்பவனை எத்தியோப்பியர் ஞாயிறு தீவுக்கு அழைத்து வந்தனர் என்று கூறுகிறார். அத்தீவு 1000 கி. மீ (5000 ஸ்டேடியம்) சுற்றளவு உள்ளது. அது நிலநடுக்கோட்டில் இருந்திருக்க வேண்டும்: காரணம் அத்தீவில் பகலும் இரவும் ஒரே அளவாக இருந்தது என்றும், நண்பகலில் சூரியன் உச்சியில் காய்ந்த பொழுது நிழல் தரையில் விழாது என்றும் கூறப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவை யான எல்லாப் பொருள்களும் அங்கு தட்டுப்பாடின்றிக் கிடைத்தன. மக்கள் நெடுநாள் வாழ்ந்தனர்; சிலர் 150 வயது வரை கூட வாழ்ந்தனர்; நோய் நொடி இல்லை; போட்டி இல்லை; பூசல் இல்லை. சட்டமும் ஒழுங்கும் அமைதியைக் காத்தன. அந்த ஞாயிற்றுத் தீவு மக்கள் வானவியல் அறிவு பெற்றிருந்தனர். அவர்கள் எழுதியது மேலிலிருந்து கீழாக . சப்பானிய, சீன எழுத்துகளைப்போலவே மடகாஸ்கர் எழுத்துகளும் மேலிலிருந்து கீழாக எழுதப்படுவதால் மடகாஸ்கர் தீவே ஞாயிற்றுத் தீவு என்ற கருத்து உருவாகியது. கிறிஸ்டியன் லாஸன் என்னும் செர்மானியர் இந்தோனிசிய பாலித் (Bali) தீவுதான் இது என்கிறார். ஜார்ஜ் தாம்சன் என்னும் ஆங்கிலேயரோ இது கற்பனைக் கதை; இலங்கையிலிருந்து பண்டைய கிரேக்க நாட்டிற்கு வந்து சேர்ந்த வதந்திகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார். சமத்துவமும், நயன்மையும் நிலவிய செங்கோல் ஆட்சிப் பொற் காலத்தைப்பற்றிய மாயக்கதைபோல ஞாயிற்றுத்தீவுக் கதை உள்ளது எனினும் அக்கதைச் செய்திகள் சிலவற்றைப் பார்க்கும் பொழுது அது கற்பனையில் முகிழ்த்த தீர்வாக இருக்கமுடியாது என்றும் எண்ணத் தோன்றுகிறது. "மேலிருந்து கீழான எழுத்து முறை" சிந்தித்தற்குரியது. பண்டை உலகில் அத்தகைய முறை அரியது. ஜம்புல் சொன்ன கதையில் வரும் சூரியத்தீவு நிலநடுக் கோட்டில் இருந்தபோதிலும் அங்கு தட்பவெப்பநிலை மிதமாக விருந்தது வியக்கத்தக்கது என்கிறார் டயடோரஸ். கடும் வெயில் காயும் நிலநடுக்கோட்டுப் பகுதியில் மாந்தர் வசிக்கமுடியாது என்ற அக்கால அறிஞர் கருத்துக்கு மாறாக, ஞாயிற்றுத்தீவின் தட்பவெப்ப நிலை மிதமாக இருந்தது என்று எவ்வாறு கூறப்பட்டது? கட்டுக்கதை புனை வோரும் பொதுவான நம்பிக்கைக்கு ஏற்றவாறு தான் கதை கட்டுவார்கள். கடல் நடுவில் இருந்தமையால் (நிலநடுக்கோட்டில் இருந்த போதிலும்) ஞாயிற்றுத் தீவில் உண்மையி லேயே தட்பமான நிலை இருந்ததனால் தான் (பொதுவான நம்பிக்கைகு மாறாக இருப்பினும்) அச்செய்தி கூறப்பட்டது. இந்தியமாக்கடலில் இயுமரஸ் (Euhemerus) என்னும் மாலுமி கண்டுபிடித்த பன்ஹயத் தீவுகள் மூன்றைப் பற்றியும் டயடோரஸ் விளக்குகிறார். பல நகரங்கள், வளமான நிலம், வேட்டையாடத்தக்க விலங்குகள் எல்லாம் அங்கு இருந்ததாக அவர் கூறுகிறார். ''மக்கள் போர்வீரர்கள்; அவர்கள் பழைய முறையில் தேர் செலுத்துகின்றனர். மக்கள் மூன்று பெரும் பிரிவினராக - அதாவது குருமார் - கை வினைஞர், உழவர் - போர்வீரர், ஆயர்கள் என்று வகுக்கப்பட்டிருந்தனர். குருமார்கள் எல்லா மேலாண்மையையும் செலுத்து கின்றனர்; பூசல்களைத் தீர்க்கின்றனர்; பொது விவகாரங்களை நடத்து கின்றனர். வீடும் தோட்டமும் தவிர எவருக்கும் அதிகப்படி சொத்து இல்லை . வருவாய் முழுவதும் குருமார்களிடம் தரப் படுகிறது; அவர்கள் அதை அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கின்றனர். ஆனால் குருமாருக்கு மட்டும் இரட்டைப் பங்கு உண்டு" என்று டயடோரஸ் கூறுகிறார். தீவுகளையும் அங்கு வாழும் மக்களையும் பற்றி இவ்வாறு விரிவான செய்திகள் தரப்படுவதால் பன்ஹயத் தீவுகள் உண்மையில் இருந்திருக்கலா மோ? என்று தோன்றக்கூடும். ஆனால் இலங்கை உட்பட பல தீவுகள், நாடுகளைப் பற்றி தான் கேட்ட செய்திகளி லிருந்தும் கதைகளிலிருந்தும் இயுமரஸ் உருவாக்கிய கற்பனையே இது என்பர் பேராசியர் தாம்சன். தொன்றுதொட்டு கிரேக்கர்களும் உரோமானியரும் தப்ரபேன் என்னும் பெயரால் அழைத்த நிலப்பகுதி இலங்கைத் தீவுதான் என்று வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். ஆனால் தப்ரபேன் பற்றித் தரப்படும் செய்திகளில் பல இலங்கைக்குப் பொருந்தாதவையாகும். தப்ரபேன் பழைய மூலநூல்களில் குறிப்பிடப்படுகிறது. ஹிப்பார்க்கஸ் என்பவர் "தப்ரபேனைச் சுற்றி மரக்கலம் செலுத்தியவர் எவரும் இலர்; எனவே அது தீவாக இருக்க முடியாது; ஒரு பெருநிலப்பகுதியின் (மற்றொரு கண்டத்தின் தொடக்கப் பகுதியாக, வடமுனையாக இருக்க வேண்டும்" என்கிறார். இலங்கை, இந்தியாவையொட்டித் தெற்கே இருந்த போதிலும் இந்தியாவின் தென்முனையிலிருந்து தப்ரபேன் சென்றடைய ஏழு நாள்கள் பிடித்தன என்று ஸ்டிராபோ கூறு கிறார். இந்தியாவுக்கும், தப்ரபேனுக்கும் இடையே பல தீவுக் கூட்டங்கள் இருந்ததினால் 20 நாட்கள் பிடித்தன என்று வேறொருவர் கூறுகிறார். (இந்தியாவுக்கும் தப்ரபேனுக்கும் நடுவில் ஞாயிற்றுத்தீவு இருந்ததினால் நான்கு நாள்கள் ஆயின என்பார் பிலினி ; உண்மையில் இந்தியாவில் இருந்து இலங்கை சேர நான்கு நாள்கள் கூட அதிகம்தான்) பண்டைய புவியியல் வல்லுநர்கள் தப்ரபேனில் 500 நகரங்கள் இருந்தன; அதன் பரப்பு இலங்கையைப் போல் பன்மடங்கு என்று கூறுகிறார்கள். இலங்கையில் அத்தனை நகரங்கள் இருந்ததில்லை. தப்ரபேனில் நிழல் தெற்கில் விழுந்தது; வடக்கில் அல்ல. கதிரவன் இடப்பக்கம் தோன்றி வலப் பக்கம் மறைந்தது என்பார் பிலினி. ஆகவே தப்ரபேன் தென்கோளத்தில் இருந்திருக்கவேண்டும். ஆனால் இலங்கையோ நிலநடுக்கோட்டிற்கு வடக்கில் 50 முதல் 90 வரைப் பரவியுள்ளது. கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அன்னியஸ் புலோகம் என்பவர் தந்த செய்திகளிலிருந்து இச்செய்தியை பிலினி கூறியுள்ளார். அன்னியஸ் புலோகம் விடுதலை பெற்ற அடிமை யாவார். அவர் செதுக்கிய, கி.பி. முதல் நூற்றாண்டு சார்ந்த கிரேக்க லத்தீன் கல்வெட்டை அண்மையில் செங் கடற்கரையில் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளனர். புலோகம் பார்த்தது ஒருவேளை இலங்கைத் தீவு அல்ல; இந்திய மாக்கடலின் தென்பகுதியில் (இப்பொழுது கடலடியில் உள்ள) வேறொரு தீவே; அதைச் சென்றடைய பலநாள் பிடித்திருக்கும் என்று கருதவும் இடம் உண்டு. பண்டைய கிரேக்க, உரோமானிய ஆசிரியர்கள் கூறியவற்றை அடி யொற்றி இடைக்கால அரேபிய புவியியலறிஞரும் குபேரத் தீவுகள் பலவற்றைக் குறிப்பிடுகின்றனர். வீரமிக்க அரேபிய கப்பலோட்டிகள் இந்திய மாக்கடலில் கலம் செலுத்தி அறிந்த உண்மைகளையும் அவர்கள் தொகுத்துக் கூறுகின்றனர். 6000 ஆண்டுகளுக்கு முன்னரே ஏமன், தென் அரேபிய மாலுமிகள் மரக்கலம் செலுத்துவதில் சிறந்து விளங்கின ராகையால், அவர்கள் மூலமாக அறிந்த செவிவழிச் செய்திகளும் அரேபியர் நூல்களில் கலந்திருக்கலாம் . அரேபியப் புவியியல் அறிஞர், இந்திய மாக்கடலில் 1370 தீவுகள் இருந்தன; செரந்திப் என்று அரேபியர் அழைத்த தப்ரபேன் தீவைச் சூழ்ந்து 59 தீவுகள் இருந்தன; அத்தீவுகளில் மக்கள் வாழ்ந் தனர்; இந்திய மாக்கடலின் கோடியில் இருந்த செரந்திப் 5000 கிலோ மீட்டர் சுற்றளவும் உயர்ந்த மலைகளும் பல ஆறுகளும் உடையது; என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர். அங்கு இரத்தினக் கற்களும், வைரமும் தோண்டியொடுக்கப்பட்டனவாம். அரேபியர் தந்துள்ள இச்செய்திகளுக்கு அடிப்படை எது? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவையும், செவிவழியாக வந்த செய்திகளா? அல்லது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரேக்க உரோமானியப் புவியலாளர் நூல்களில் கண்ட செய்திகளா? என்று தெரியவில்லை . சுமேரிய தில்மன், எகிப்திய பாம்பரசன் தீவு, ஞாயிற்றுத்தீவு, பன்ஹயத்தீவுகள், கிரேக்க ரோமனியர் குறிப்பிடும் தப்ரபேன் அரேபியர் குறிப்பிடும் சேரன்தீவு ஆகியவை பற்றிய வண்ணணைகள் மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது கட்டுக் கதை போலவும், கற்பனைபோலவும் தோன்றிய போதிலும், அவற்றில் நம்பத் தகுந்த அடிப்படைச் செய்திக் கூறுகளும் உள்ளன. சிந்து வெளித்திராவிட மொழியோடு இயைந்த தமிழ் பேசிய தமிழர், உபெய்துகள், எலாமியர், எகிப்து நாகரிக பதரியர்கள் ஆகிய அனைவரும் எந்தப் பழம்பெரும் நிலப் பகுதியிலிருந்து தாங்கள் தோன்றிய தாகக் கூறினரோ அந்த நிலப்பகுதியின் நினைவின் அடிப்படையில் பொதுமக்கள் கற்பனையில் உருவானவையே மேற்கண்ட கற்பனைக் கதைகள் என்று கூறலாம். பற்பல நாடுகளின் பல தொன்மங்களிலும், வரலாறுகளிலும் இந்துமாக்கடலில் பண்டு இருந்து, கடலுள் மூழ்கிப்போன நிலப்பகுதியைப் பற்றி அடிக்கடி கூறப்படுகிறது. அச்செய்தி வெறும் கட்டுக் கதையா (அதாவது கற்பனைத் துறக்க உலகமா?) அல்லது உண்மையா? இதற்கு விடை காண்பதற்கு இந்திய மாக்கடலில் அடிப் பரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது இன்றியமையாதது. அத்தகைய ஆய்வுகள் இன்னும் முறையாக தொடங்கப்படக்கூட இல்லை. ஆழ்கடல் ஆய்வே செய்யப்படாத பெருங்கடல் இந்திய மாக்கடலின் பரப்பளவு 75 மில்லியன் சதுர கிலோ மீட்டர். அது உலகக் கடற்பகுதியில் ஐந்தில் ஒரு பங்கு. நூறாண்டுகளுக்கு முன் சேலஞ்சர் என்னும் கப்பலிலிருந்து கடலியலாளர் இக்கடலையும் அதன் அடிப் பரப்பையும் ஆராய்ந்தனர். 1886 இல் இக்கடலின் தென்பகுதியில் ஜெர்மன் கப்பல் பேசல்-ம், வடபகுதியில் ரஷ்ய கப்பல் விடயஸ் (மாலுமி மக்கரோவ் தலைமையிலும்) விரிவான ஆய்வுகள் செய்தன. அதற்குப்பின் உருசிய, பிரிட்டன், அமெரிக்க ஆராய்ச்சிகள் பல இக்கடலில் நடந்தன. ஆனால் 1960இல் தான் அமெரிக்க, பிரஞ்சு, சோவியத் கப்பல்கள் இந்திய மாக்கடலின் அடிப்பரப்பைப் பற்றி முறையான ஆராய்ச்சியைப் பல கோணங் களிலும் நடத்தி இந்திய மாக்கடல் அடிப்பரப்பின் படத்தை (Map) உருவாக்கின. இந்தியமாக்கடலின் அடித்தளப்படத்தைப் பார்த்தால் நம்மை வியக்கச் செய்வது அக்கடலின் நடுவில் 2/2 கிலோமீட்டர் உயரம் உள்ள நீண்ட மலைத்தொடர் ஒன்று உள்ளதுதான். அத் தொடர் அரேபிய தீவக்குறையி லிருந்து ஆம்ஸ்டர்டாம் தீவுவரைச் செல்கிறது. அந்த (ஆழ்கடல்) மலைத் தொடரானது, அட்லாண்டிக் மாக்கடலின் நடுவிலும், தென் பசிபிக்மாக் கடலிலும் உள்ள (ஆழ்கடல்) மலைத்தொடர்களோடு இணைந்துள்ளது. அட்லாண்டிக் கடலின் நடுவில் உள்ள (ஆழ்கடல்) மலைத் தொடர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டிருந்த போதிலும், இந்திய மாக்கடலின் நடுவில் உள்ள அத்தகைய மலைத்தொடர் 1964இல் தான் (பன்னாட்டு நிலவியல்சார் கடல் ஆய்வுகளில்) கண்டுபிடிக்கப் பட்டது. இந்தியமாக்கடலின் அடியில், அதன் நடுவில் உள்ள அந்தப் பெரிய (ஆழ்கடல்) மலைத்தொடர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே கண்டுபிடிக்கப் பட்டது மாலத்தீவு (ஆழ்கடல்) மலைத் தொடராகும். (அம்மலைத்தொடரில் கடல் மட்டத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் பகுதிகளே இலட்சத்தீவுகள், மாலத்தீவுகள், சாகோஸ் தீவுகள் போன்றவையாகும். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இது ஒன்று மட்டுமே இந்தியமாக் கடலில் உள்ள (ஆழ்கடல்) மலைத்தொடர் என்று கருதினர். ஆனால் மேற்சொன்னவாறு அக்கடலின் மையப்பகுதியில் உள்ள மாபெரும் (ஆழ்கடல்) மலைத்தொடர் (Mid-ocean Ridge) அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அத்தொடரின் கிளைகளே 'மாலத்தீவு ஆழ்கடல் மலைத் தொடர்', மற்றும் கடலில் மூழ்கியுள்ள கெர்கூலன் மேட்டு நிலம் (பீடபூமி) ஆகியவை என்று சில காலம் கருதப்பட்டு வந்தது. (கெர்கூலன் மேட்டு நிலத்திலிருந்து உயர்ந்து கடல் மட்டத்திற்கு மேல் தெரியும் திட்டுகளே கெர்கூலன் தீவும், ஹேர்டு தீவும் ஆகும்) ஆனால் அண்மையில் நடந்த ஆய்வுகளின் விளைவாக அவ் விரண்டும் தனித்தனி என்றும் நடுக்கடற் பெருந்தொடரோடு சேர்ந்தவையல்ல என்பதும் தெரிய வந்துள்ளது. வங்காளாகுடாக்கடலில் தொடங்கி ஆஸ்திரேலியாவரைக் கடலடியில் நீண்டு செல்லும் (ஆழ்கடல்) மலைத்தொடர் வேறு ஒன்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதன் பெயர் கிழக்கிந்தியத் தொடர். இன்னொரு மலைத்தொடர் விட்யஸ் கப்பல் சோவியத் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்து பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த உருசியப் 'பயணி' அபனாசி நிகிதின் என்பவர் பெயரைச் சூட்டியுள்ள மலைத்தொடராகும். அந்த அபனாசி நிகிதின் மலைத்தொடர் இலங்கையோடு ஒட்டிய ஆழ்கடலில் 1000 கி.மீ. தொலைவு செல்கிறது. இன்னொரு முக்கியமான கண்டுபிடிப்பு அடியிலுள்ளதும் சிறு கண்டம் என்று கூறத்தக்கது மான (கடலடி ) மேட்டுநிலமாகும். ஒரு கண்டத்திலிருந்து கடலால் பிரிக்கப்பட்டிருப்பினும் அக் கண்டத்தைப் போன்ற நிலவியல் அமைப்புள்ள பகுதியை கடலியலாளர் சிறுகண்டம் (Micro - continent) என்று அழைப்பர். நியூசிலாந்தை உள்ளடக்கிப் பசிபிக் மாக்கடல் அடியில் பரவியிருக்கும் நிலப்பரப்பு இத்தகைய சிறு கண்டத்திற்கு எடுத்துக் காட்டாகும். அதுபோன்ற ஒரு சிறுகண்டம் இந்திய மாக்கடலில் அண்டார்டிக் பகுதியில் கடலடியில் உள்ள கெர்கூலன் மேட்டு நிலமாகும் (அதன் நடுவில் கடல் மட்டத்திற்கு மேல் தெரிவது கெர்கூலன் தீவு ). இந்திய மாக்கடலின் வடமேற்குப் பகுதியில் ஷெசிலஸ் தீவுகளையும் மாஸ்கிரின் வளைவுத் தீவுகளையும் உள்ளடக்கிய ஷெசிலஸ் ஆழ்கடல் மேட்டுநிலமும் ஒரு சிறு கண்டம் போன்றதே யாகும். அச்சிறு கண்டத்தில் இருந்து கடல் மட்டத்திற்கு மேல் வட கோடியில் நீட்டிக்கொண்டிருப்பவை ஷெசிலஸ் தீவுகள்; தென் கோடியில் நீட்டிக்கொண்டிருப்பவை மாஸ்கிரின் தீவுகள். அறுபத்தைந்து கோடி ஆண்டுகள் பழைமையுள்ள கிரானைட் கற் பாறைகளால் ஆனவை ஷெசிலிஸ் தீவுகள். இத்தீவுகளின் பாறையும், அவற்றையொட்டி கடலடிப்பரப்பில் உள்ள பாறையும் இரண்டுமே ஆப்பிரிக்க கண்டம் சார்ந்த ஆழ்கடல் பாறைகளைப்போல் இல்லாமல் மாறுபட்டுள்ளன. ஷெசிலிஸ் சிறுகண்டம் ஆப்பிரிக்காவுடன் தொடர்புடையதல்ல; வேறுபட்டது என்பதை இது காட்டும். அச்சிறுகண்டம் கோண்டுவானாவின் எஞ்சிய பகுதியா அல்லது இலெமூரியாவின் சிதைந்த பகுதியா? அப்படியாயின் பண்டைய நாகரிகத்தின் தடயங்கள் எவையும் ஷெசிலிஸ் தீவுகளில் கிடைக்க வில்லையே? ஆனால் கடலியல் வல்லுநர் சொல்வது வேறு: செஷலிஸ் ஆழ்கடல் "சிறுகண்டம்" நிலப்பகுதியாக இருந்து கடலில் மூழ்கியது அல்ல; மாறாக கடலில் இருந்து புடைத்தெழுந்து உருவாகி இன்னும் கண்டத்தன்மை அடையாத ஒரு பகுதி என்று அவர்கள் கருதுகின்றனர். ஆழ்கடலில் வருங்காலத்தில் நடக்கும் ஆய்வுகள் தான் இறுதி முடிவு தரவேண்டும். கடலியலாளர், நிலவியலாளர், நில இயற்பியல் வல்லுநர் ஆகியோர் இந்திய மாக்கடலின் வடமேற்குப்பகுதியை ஆய்வதில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியின் அடிப்பரப்பு மேடு பள்ளங்கள் நிறைந்தது; எரிமலைகள் நிலநடுக்கங்கள் ஆகியவற்றால் அப் பகுதியில் இன்றும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்தியமாக் கடலின் பிறபகுதியிலிருந்து இப்பகுதி மாறு பட்டது. கிழக்கு ஆப்பிரிக்க கிரானைட் பாறைப்பகுதி, அரேபிய தீவக்குறை, இந்தியத் துணைக் கண்டம் ஆகியவற்றின் விரிவுப்பகுதிகள் கடல் மட்டத்திற்கு கீழே இந்திய மாக்கடலில் பரவியுள்ளன. மடகாஸ்கரிலும் இந்திய துணைக்கண்டத்திலும் ஒரே வகையான விலங்குகள் வாழ்கின்றன என்று விலங்குநூலார் ஏற்கெனவே கூறியுள்ளனர். வெஜினர் மற்றும் அவருடைய 'கண்ட நகர்வுக் கொள்கை' ஆதரவாளர்கள், மறைந்த கோண்டு வான மாக்கண்டத்தில் அந்தக் காலத்தில் இந்தியா, மடகாஸ்கர் ஆகியவை அடுத்தடுத்து இருந்தன என்பர். பிறர் இவ்விரு நாடுகளும் தரைப் பகுதியால் இணைப்புண்டிருந்தன என்றும் அப்பகுதியே இலெமூரியா என்றும் கூறுகின்றனர். இக்கால ஹோமோசேப்பியன்ஸ் இனம் தோன்றுவதற்கு வெகு முன்னரே இலெமூரியா நிலப்பகுதி கடலுள் மூழ்க தொடங்கி யிருக்கலாம் எனப்படுகிறது. அந்நிலப்பகுதிகள் பையப் பைய மூழ்கியிருக்கலாம்; மடகாஸ்கரையும், இந்தியாவையும் இணைத்த நிலப்பகுதி (அது வளைந்து arc போன்று நீண்டிருந்திருக்கலாம்) முதலில் உடைபட்டு சில பகுதிகள் கடலில் மூழ்கின. பின்னர் எஞ்சிய சில பகுதிகள், தீவுகள், தீவுக்கூட்டங்கள் ஆகிய வற்றிலும் பல, படிப்படியாக மூழ்கியிருக்கலாம். இவ்வாறு மூழ்கிய நிகழ்வுகள் மாந்தன் நினைவுக்குட்பட்ட அண்மைக்காலம் வரை (சுமார் 20000 அல்லது 10000 ஆண்டுகளுக்கு முன்வரை) தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கலாம். பண்டைய நாகரிகங்களில் சிந்துவெளி நாகரிகமும், மெசொபதாமிய நாகரிகமும் மூழ்கிய இலெமூரியப் பகுதியோடு தொடர்புடையவனவா? ஆயின் எவ்வாறு? இடைக்காலத் தமிழ் (சிலப்பதிகாரம், இறையனார் அகப்பொருள்) உரையாசிரியர்கள் குறிப்பிடும் கடல் கொண்ட தென்னாடும், இந்தியா - மடகாஸ்கரை இணைத்த லெமூரியாவும் ஒன்றா? பண்டைய நிலவியல் ஆசிரியர்கள் இந்தியாவையும், ஆப்பிரிக்காவையும் வால் போன்ற நிலப்பகுதி இணைத்தது என்றனர். அத்தகைய இணைப்பு இருந்திருக்கக் கூடியதே என இன்று, நிலவியலும், கடலாய்வியலும் முன்னேறியுள்ள நிலையில் நாம் உன்னிக்க முடிகிறது. இத்தகைய அறிவியல் வளர்ச்சி இல்லாத அக்காலத்தில் கிரேக்கரும், உரோமரும் எவ்வாறு இது பற்றிக் கூறமுடிந்தது? கிரேக்க, ரோமப் புவியியலாளரும் அரேபியப் புவியிய லாளரும் இந்திய மாக்கடலில் இருந்தனவாக பெயர்களுடன் குறிப்பிடும் தீவுகள் பல இன்று இல்லை. அவைதாம் இலெமூரியாவின் எச்சப்பகுதிகளாக இருந்து கடலில் மூழ்கியவையோ? மடகாஸ்கர் தீவின் வடக்கில் டீகோ சுவாரிஸ் என்னும் துறைமுக நகரில் வாழும் மக்கள் கடலுக்கடியில் ஒரு கோட்டை இருப்பதாகக் கூறுகிறார்களே அதற்கு ஆதாரம் இருக்குமா? திராவிட மொழிகளுக்கும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் லுள்ள பல மொழிகளுக்கும் மொழியியலாளர் பலர் கண்டுள்ள ஒற்றுமைகளை எப்படி விளக்குவது? மேற்சொன்ன தமிழ் உரையாசிரியர்கள் கூறுவது போல தமிழரின் தாயகம் கடல்கோளால் அழிந்ததா? அதன்பின்னர் திராவிடர், ஆப்பிரிக்கக் கரை, பாரசீக வளைகுடா ஆகியவற்றுக்கும் இந்தியாவின் பகுதிகளுக்கும் குடியேறினரா? இப்படி நடந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. காரணம் தொல்லியலாய்வாளர், வரலாற்றாசிரியர் ஆகியோருக்கு கிழக்கு ஆப்பிரிக்காவில் பண்டு இருந்த (நகரங்களும், துறைமுகங்களும் கொண்ட்) நாகரிகங்களின் தோற்றம் புதிராகவே உள்ளது. மொகெஞ்சொதரோவின் வீழ்ச்சி ஆழ்கடல் அடியில் இனி மேற்கொள்ளும் ஆராய்ச்சியே மேற்குறித்த வினாக்களுக்கு விடைதர வல்லது. இலங்கையில் திரிகோணமலை நகர் அருகில் கடலுக்கடியில் தொன்மைநாகரிக எச்சங்கள் பல கிடப்பதை கடல் மூழ்கிகள் கண்டுள்ளனர். அதுபோல சிந்துவெளி நாகரிகத்தின் தலை நகரைக்கூட தொல்லிய லாய்வுக்கு உதவும் கடல் மூழ்கிகள் வருங்காலத்தில் கண்டுபிடிக்க வாய்ப்பு உண்டு. அந்நாகரிகம் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட நகரங்களும் குடியிருப்புகளும் இருந்த இடங்களை தொல்லியல் ஆய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது. மொகெஞ்சொதரோவின் பரப்பும் ஹரப்பா வின் பரப்பும் ஏறத்தாழ சமம். பிற பண்புகளிலும் அவ்விரு நகரங்களும் ஒப்புமை யுடையவை. இவ்விரண்டு நகரங்களும் அல்லாத வேறு ஒரு நகரம்தான் சிந்துவெளி நாகரிக அரசின் தலை நகரமோ? ஒருவேளை அத்தலைநகரம் இன்றுள்ள நிலப்பகுதியில் அல்லாமல் இன்று கடலாக இருக்கும் பகுதியின் அடியில் உள்ளதோ? சிந்து ஆற்றின் கழிமுகத்துக்கு அருகில் இப்பொழுது கடலடியிலுள்ள கண்டத்திட்டு (Coastal shelf) 100 மீட்டர் ஆழத்தில் உள்ளது. இப்பொழுதைய சிந்து கழிமுகத்தின் பரப்புக்கு சமமான அளவுள்ள பரந்த நிலப்பகுதி அவ்வாறு கண்டத்திட்டு ஆக உள்ளது. அக்கண்டத்திட்டின் நடுவில், பண்டு சிந்து ஆறு ஓடியதைக்காட்டும் ஆறு போன்ற பிளவும் உள்ளது. அக்காலத்தில் சிந்து ஆறு இன்றுள்ளதை விட மேலும் நீண்டு இருந்திருக்க வேண்டும். இன்று கடலின் கீழுள்ள இப்பகுதி அண்மைக்காலத்தில் நிலநடுக்கத்தினால் கடலுள் மூழ்கியிருக்கலாம். அப்பகுதியில் இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி ஏற்பட்டுள்ளன. பண்டை நூலாசிரியர் சிந்து சமவெளி இயற்கைச் சீற்றங் களைப் பற்றி எழுதியுள்ளனர். சிந்து ஆற்றின் தடம் சற்றே இடப் பக்கமாக மாறி அந்த ஆறு ஆழக்கால் வழியாக விரைந்து பாயத் ஆரம்பித்தால், அப்பகுதி மக்கள் (1000க்கு மேற்பட்ட நகரங்களையும், குடியிருப்புகளையும் கொண்ட நிலப் பகுதியை விட்டு வெளியேறினர் என்றும், தானே அப்பகுதியைப் பார்த்தாகவும் அரிஸ்டோபுளெஸ் எழுதியுள்ளதாக ஸ்ட்ராபோ தனது நில நூலில் கூறியுள்ளார். நம் காலத்து அறிவியலாளர் இது உண்மை என்கின்றனர். அவ்வாறு அச்செய்தி உண்மை என்று கூறுபவர் தொல்லிய லாய்வாளர் அல்லர்; டி ரெய்க்ஸ் (D. Raikes) என்னும் அமெரிக்கர் தலைமையில் இயங்கிய நீரியல் - புவியியல் வல்லுநர் குழுவே அவ்வாறு கூறியுள்ளது. மொகெஞ்சதரோவுக்கு 140 கிலோமீட்டர் தெற்கில் அக்காலத்தில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கம் ஒன்று மையம் கொண்டு இருந்தது என்றும் அந்நிலநடுக்கம் சிந்து சமவெளியின் புவியியலைப் பெருமளவிற்கு மாற்றியது என்றும் அக்குழு கூறியுள்ளது. அந்த நிலநடுக்கத்தால் பெரும்பாறைகள் மேலெழுந்து வழி மறைத்ததினால் சிந்து ஆற்றின் போக்கு மாறிற்று. புகையோடு வாரியிறைக்கப்பட்ட மண் கலந்து ஆற்று நீர் சதுப்புநில ஏரிபோல் பரந்து சமவெளியைப் பாழாக்கியது. அதனால் மொகெஞ் சொதரோ பகுதி மக்களின் குடியிருப்புகள், மணல் - வண்டல் சேற்றில் புதையுண்டு பல மீட்டர் அடியில் மறைந்தன. ஐந்து முறைக்கு மேல் இவ்வாறு வெள்ளத்தால் தாக்குண்ட போதிலும் மொகெஞ்சொதரோ மீண்டும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தது. ஒவ்வொரு தடவையும் சேற்றில் புதையுண்ட காலம் 100 ஆண்டுகளாக இருக்கலாம் என்பர் அறிவியலாளர். அப்பகுதியில் 10 மீட்டர் உயரம் 20 மீட்டர் அகலம் உள்ள கல் அணை ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிந்து வெளி மக்கள் எவ்வாறு இயற்கை இன்னலை எதிர்கொண்டனர் என்பதை அவ்வணை காட்டுகிறது. தொல்லியல் ஆய்வாளரும் (அமெரிக்க) பென்சில்வேனியா பல்கலைக்கழக அறிவியலாளரும் இத்தகைய இயற்கைச் சீற்றங்களே சிந்து வெளி நாகரிகம் அழியக் காரணம் . என்று கருதுகின்றனர். இயற்கைச் சீற்றங்களை எதிர்க்கவே தமது முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டியிருந்த சிந்து வெளி மக்கள், தம் நாட்டுக்குள் அக்காலத்தில் புகுந்த நாடோடி வன்கவர்வாளர் தொல்லையைத் தாங்கமுடியாமல் செயல் இழந்ததால் அவர்கள் நாகரிகம் மங்கி மறைந்தது. பம்பாய் நகருக்கு வடக்கே கத்தியவார் தீவக்குறையில் அகழ் வாய்வாளர் கண்டுபிடித்துள்ள லோதல் உலகின் மிகப்பழைய துறைமுகம் ஆகும். மொகஞ் சொதரோவைவிடச் சிறிது எனினும் அமைப்பில் அது போன்றதே; குட்டி மொகஞ்சொதரோ என்றும் அதை அழைப்பர். சிந்துவெளித் தொல்லிந்திய நாகரிகத்தின் அன்றைய தலைநகரானது இன்று கடலாக மாறிவிட்ட பகுதியில் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுவதால் அத் தலைநகரானது கடலடி ஆய்வின் மூலம் வருங்காலத்தில் வெளிப்படலாம். திட்டமிட்ட அகன்ற வீதிகள், கழிவுநீர் அமைப்பு போன்றவற்றுடன் அத் தலைநகரம் 'பெரிய' மொகஞ்சொதரோவாக இருந்திருக்கும். எப்பொழுது எங்கு சிந்துவெளி நாகரிகம் தொடங்கியது எனக் கூறவியலாதென்று ஏற்கெனவே கண்டோம். அதனோடு தொடர்புடைய , அதற்கும் முந்திய நாகரிகம் எது என்றும் தெரிய வில்லை. சிந்து வெளி நாகரிக அழிவுக்கான காரணங்களைப் பற்றிக் கருத்துவேறுபாடுகள் உண்டு. எப்பொழுது ஏன் அது சிதைந்தது? ரெய்க்ஸ் மற்றும் அவருடைய குழுவினர் மாபெரும் இயற்கைச் சீற்றத்தால்தான் அது அழிந்தது என்று நம்புகின்றனர். நீர்ப்பாசன முறைச் சீரழிவும் மண்வள இழப்பும்தான் காரணம் என்பர் சிலர். புறக்காரணங்களை கூறும் வேறுசிலர் ஆரிய நாடோடிகள் படை யெடுப்பால்தான் சிந்து வெளி நாகரிகம் அழிந்தது என்று கருது கின்றனர். அகக்காரணங்களை வலியுறுத்தும் சிலர், அடிமை களைக் கொண்ட குமுதாய அமைப்பால் தான் மொகஞ் சொதரோ சிதைந்தது என்று கருதுகின்றனர். கடலின் அடிப்பரப்பு ஆய்வு உள்ளிட்ட எதிர்கால ஆராய்ச்சி களால்தான் உண்மையான காரணம் தெரியவரும். கடலுள் மூழ்கிய நகரங்கள், கோயில்கள் பற்றிய இந்தியப் பழங்கதைகள் உண்மையா - பொய்யா என்பதைக் கடலடியில் (உயிர்வளி ஏந்து கொண்ட) மூழ்கும் கருவியில் சென்று ஆய்வு செய்தே நிறுவ இயலும். விஷ்ணுவின் தோற்றரவான கிருஷ்ணன் இறந்த ஏழு நாள்களுக்குப் பிறகு இன்றைய மும்பை நகருக்கு வடக்கில் இருந்ததும், இந்தியாவின் பழைய ஏழு புனித நகர்களுள் ஒன்றானது மான துவாரகை கடலுள் மூழ்கியது என்பது தொண்மைக்கதை . வங்காள விரிகுடாவில் சென்னைக்குத் தெற்கே, 2000 ஆண்டுகளுக்கு முன் பாகவே புகழ் பெற்றிருந்த பெரிய துறைமுகம் ஆன மாமல்லபுரம் உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து மரக்கலங்கள் அங்கு வந்தன. ஒரே கல்லால் ஆன சிற்பங்கள், குகைகள், கருங்கற்கோயில்கள், பாறைச் சிற்பங்கள் இவற்றால் புகழ்பெற்றது அந்நகரம். அங்குள்ள கடற்கரைக் கோயிற் சுவரில் வங்காள விரிகுடா அலைகள் பல நூற்றாண்டுகளாக மோதி வருவதுடன் அருகிலுள்ள கட்டடங் களைச் சிதைத்து மணலால் மூடியுள்ளன. அக்கோயிலுக்கும் கிழக்கே 6 கோயில்கள் இருந்து அவையனைத்தும் அலைகளால் அழிக்கப்பட்டு மூழ்கிவிட்டன என ஒரு பழங்கதை வழங்குகிறது. இப்பழங்கதைகள் உண்மையென மெய்ப்பிக்கப்படுமா? தொல்லிந்திய நாகரிகச் சின்னங்கள் மேலும் பலவற்றை கடலாய்வு புதியதாக வெளிக்கொணருமா? வருங்கால அகழ்வாய்வுகள் சிந்துவெளி நாகரிகத்துக்கும் முந்திய அதன் தாய்' நாகரிகத்தை வெளிக்கொணரலாம்; அல்லது அந்த தாய் நாகரிகத்துக்கும் முந்திய பழைய நாகரிகத் தடயங்கள் கூட இந்திய மாக்கடலின் அடியில் இருக்கலாம். சிந்துவெளித் தொல்லிந்தியரின் தெய்வங்கள் சிந்துவெளி நாகரிகச் சிதைவுக்குக் காரணம் எதுவாக இருப்பினும் ஆகும். கி.மு. 1500ஐ ஒட்டி இந்தியாவிற்குள் நுழைந்த ஆரிய நாடோடிகள் சிந்துவெளி நாகரிகத்தின் சிறந்த கூறுகள் பலவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டனர் என்பதை வரலாற் றாசிரியர்கள் தெளிவாக்கியுள்ளனர். கோதுமை, பார்லி, பட்டாணி, பிளாக்ஸ், பருத்தி, பேரீந்து ஆகியவற்றைப் பயிரிடுதல், பானை வனைதல், கழிவுநீர்த் திட்டம், நகரமைப்பு, திமில் உள்ள ஜெபு வகைக் காளை, யானை, முதலியவற்றைப் பழக்குதல், வேளாண்மை , கப்பல் கட்டுதல் போன்றனவெல்லாம் ஆரியர், சிந்துவெளியினரிடம் மிருந்து பெற்ற கொடைகளாம். சிந்துவெளியினரிடமிருந்து ஆரியர் அறிவுத்துறையில் பெரிதும் கடன் பெற்றனர் என்பது இயற்கை. இந்தியாவில் உருவான பத்துப் பத்தாக எண்ணும் முறையைக் கண்டுபிடித்தது ஆரியர் அல்ல; சிந்துவெளியினரே. ஆரியர் நுழைவுக்குப் பல நூற்றாண்டு முன்னர் இருந்தே சிந்துவெளி வணிகரும், கணிதவியலாளரும் அம்முறையைப் பின்பற்றி வந்தனர். சிந்துவெளி மக்கள் சமயமும், தொண்மைக்கதைகளும் ஆரியரின் சமயத்தைப் பாதித்தன என்பதிலும் ஐயமில்லை . ஆரியரின்மீதான சிந்துவெளி நாகரிகத் தாக்கம் சிக்கலான நிகழ்ச்சிதான். இந்தியாவிற்குள் ஆரியர் நுழைந்த முதற்கால கட்டத்தில் தங்களைப் பூசுரர், வாழுந்தெய்வங்கள் என்று அழைத்துக்கொண்ட பிராமணர் கை ஓங்கி யிருந்தது; ஆற்றல் வாய்ந்த பேரரசர்கள் உட்பட, அனைத்து அரசர்களுக்கும் தாங்கள் மேலானவர் என்று கூறிக்கொண்டனர். ஆரியருக்குக் கீழ்பட்ட சிந்துவெளி மக்கள், தங்கள் பழைய சமய நம்பிக்கைப்படி கமுக்கமாக ஒழுகி வந்தனர். ஆனால் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் நடந்த சமயப்புரட்சியில் சிந்து வெளிப்பழைய சமயங்கள் வெடித்துக் கிளம்பி, அவற்றை அடித்தளமாகக் கொண்டு உருவான பெளத்தம், சமணம், இந்துமதம் ஆகிய முப்பெரும் சமயங்கள் தோன்றி, ஆரிய பிராமணிய மதத்திற்குப் பகரமாக இந்தியாவில் நிலைபெற்றன. ஆரியரின் மிகப்பழைய இலக்கிய ஆவணம் ரிக்வேதம். அது வளி, நீர், முகில், வறட்சி போன்ற ஆற்றல்களின் உருவாக்கங்கள் ளாகிய ஏராளமான கடவுள்களைப் பற்றிக் கூறுகிறது. பின்னர் பிராமண சிந்தனையாளர்கள் எல்லாவுயிர்களையும் படைத்த பிரமனை முழுமுதற்கடவுள் என அறிவித்தனர். இந்து மதத்தில் பிரமன் தெளிவான உருவமோ, குணமோ அற்ற கடவுள் விஷ்ணுவும், சிவனுமே முன்னணிக்கடவுளர் ஆவர். தென்னிந்திய திராவிடர்கள் போற்றி வணங்கும் சிவன் புடவியைத் தன்னுள் அடக்கிய முதல்வன் ; பிரமனும், விஷ்ணுவும் கண்டறிய முடியாதவன்; கடவுளர்க்கு முதற் கடவுள்; வேதமுதல்வன்; அமரர்க்குக் கடவுள் என்றெல்லாம் புகழப்பெறுகிறான். எண்ணற்ற வேதக் கடவுளரின் பட்டியலில் சிவனுக்கு மட்டும் முதன்மை தரப்பட்டு 'தானே கடவுளாய் நிற்கும் தனி முதல்வன்' என்று வணங்கப்படுகிறான். வேதப்பாடல்களிலும் அவற்றில் வரும் கடவுளரையும் உருவாக்கிய ஆரியர் இந்தியாவிற்குள் நுழையுமுன்னரே சிந்து வெளியினர் தொன்று தொட்டு வணங்கி வந்த தெய்வங்கள் பலவற்றையும் சிவவழிபாடு தன்னுள் அடக்கிக்கொண்டது என்பர் அறிஞர். சிவனின் முன்னோடி எனக் கருதத்தக்க கடவுள் ஒன்றைச் சிந்துவெளியினர் வழிபட்டது அகழ்வாய்வில் தெளிவாகி உள்ளதால் "வேதங்களுக்கும் முந்தியவன் சிவன்" என்று சிவநெறியர் உரிமை பாராட்டுவது சரிதான். சிந்துவெளி முத்திரைகளில் ஒன்றில் விலங்குகள் சூழ்ந்த பன்முகக் கடவுள் உருவத்தைக் காண்கிறோம். கால்களை ஓக (யோக) நிலையில் பரப்பி, அக்கடவுள் அரியணையில் அமர்ந்துள்ளது. சிந்துவெளிக் காலத்தி லேயே, அதாவது ஓக முறையை உருவாக்கிய தாக கூறப்படும் பதஞ்சலிக்கும் முன்னரே, இந்தியாவில் ஓக முறைகள் இருந்ததை இது காட்டுகிறது. சிவவழிபாட்டினர் ஓகி களின் தலைவனாகிய யோகேஸ்வரன் என்று சிவனைக் குறிப் பிடுவது சரிதான். அக்கடவுளின் கைகளில் காப்புகள் பல பூட்டியுள்ளன. அதன் தலையில் உள்ள விசிறி போன்ற தலைப்பாகையின் மேல் எருமைக் கொம்புகள் இரண்டு உள்ளன. யானை, பெண்புலி, மான்கள் இரண்டு, எருமை ஆகியவை அம்முத்திரையில் அக்கடவுளைச் சூழ்ந்துள்ளன. மொகஞ்சொதரோ அகழ்வாய்வுத் தலைவர் ஜான் மார்சல் அம்முத்திரைக்கடவுள் சிவனின் ஒரு வடிவமான பசுபதிதான் என்று நிறுவியுள்ளார். இந்தியச் சமயங்களில் மிகப்பழையது சிவ வழிபாடு. அது வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே உருவானது என்பது இதனால் வலுவடைகிறது. ஹரப்பா மக்களாகிய தொல் லிந்தியர் இக்கடவுளைச் சிவன் என்றுதான் அழைத்தனர் என்று கூறமுடியாது. நம் காலத்தில் இக் கடவுளுக்கு வழங்கிவரும் பெயர் களில் சிவன் என்பதும் ஒன்று. சிவனுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டு; அவற்றுள் பல அவனது பல்வேறு செயல்களைச் சுட்டுபவை. எங்கும் பரவியுள்ள கடவுளான சிவனுடைய பெண்வடிவம் அவனது மனைவி என்று கருதப்படுகிறது அவளுக்கும் ஆயிரம் பெயர்கள் உண்டு. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல பெயர் களில் , எழில்மிக்க உமையிலிருந்து மண்டையோட்டு மாலை யணிந்த கோரமான காளிவரை, பலவடிங்களில் அவள் வணங்கப் படுகிறாள். மிகமிகப் பழங்காலத்தில் தாய்வழிக் குமுகமுறை ஓங்கிய காலத்திலிருந்து மகாதேவி வழிபாடு நடைபெற்று வந்தது. சிந்துவெளி முத்திரைகளிலிருந்து இந்தப் பெண் தெய்வ வழிபாடும் அம்மக்களிடம் இருந்தது தெரியவருகிறது. அவர்கள் கடவுள்களுள் 'தொல் சிவனும் ' 'தாய்த்தெய்வமும் ' இறைவனும் இறைவியுமாக முதல் நிலை பெற்றிருந்தனர் என்பதை அம்முத்திரை யெழுத்துக்கள் காட்டுகின்றன. ராஜ் மோகன் நாத் என்ற இந்திய அறிஞர் 1965 இல் வெளி யிட்ட நூலொன்றில் சிந்துவெளி முத்திரை எழுத்துக்களையும் பிற வரலாற்றுச் சான்றுகளையும் ஆய்வு செய்து, அம்முத்திரைகளில் ஐந்துமுனைச் சூலமும், மீன் வடிவமும் சேர்ந்து தலைமைக்கடவுள் சிவனின் பெயர்களில் ஒன்றான 'மகாமச்சிலி' அதாவது பெருமீன் என்பதைக் குறிப்பதாகக் கூறியுள்ளார். சிந்துவெளி எழுத்துக்களை எண்ணிக்கைப் புள்ளிவிவர அடிப்படையில் ஆய்ந்த சோவியத் ஆய்வாளரும் தாமாகவே (அதாவது நாத் கருத்தைப்பற்றி அறியாமலே) அதே ஆண்டில் அதே முடிவுக்கு வந்தனர். நிகழ்தகவுப் (Probability) படி இவ்விரு குறியீடுகளும் அம்முத்திரை களில் 2 முறை அல்லது 3 முறை வரக்கூடும்; ஆனால் அவை 58 முறை சேர்ந்து வந்துள்ளன! எனவே அவ்விரு குறியீடுகளும் சேர்ந்து ஒரு சொல்லைக் (பெயர் அல்லது பெயரடை) குறித்தன என்று முடிவு செய்தனர். ஐந்துமுனைச் சூலமானது ஒரு பெண்ணுருவத்துடனும் காணப்படுகிறது. அவ்வாறு சேர்ந்து வருவதும் இருமுறை மும்முறை அல்ல; இருபது முப்பது தடவை வந்துள்ளன. எனவே அவை 'மகாதேவி', 'பெருந்தேவி' என்னும் பெண் கடவுளைக் குறிப்பிட்ட தென்க. ஐந்துமுனைச் சூலம் பெரியதைக் குறித்தது. அத்துடன் மீன் சேரும்போது மகாமச்சிலியையும் பெண் சேரும்போது பெரும் பெண்ணையும், அதாவது பெருந்தேவியையும் சுட்டியிருக்கலாம். சோவியத் அறிஞர்கள் ஏற்கெனவே தாமாக ஆய்ந்து கண்ட முடிவுகளை யொப்பவே பின்லாந்து அறிஞர்கள் கணிப்பொறி உதவியுடன் சிந்துவெளி முத்திரை எழுத்துகளை ஆய்ந்து 1966இல் வெளியிட்ட முடிவுகளும் அமைந்தன. பின்லாந்து அறிஞர்களுக்கு நாத் எழுதியதோ, சோவியத் அறிஞர்கள் முடிவுகளோ ஒன்றும் தெரியாது; என்றாலும் மூன்று ஆய்வுகளுமே மகாமச்சிலி பெருந்தேவி என்ற சொற்கள் சிந்துவெளி முத்திரைகளில் உள்ளன என்ற முடிவுக்கு வந்துள்ளன. மகாமச்சிலி , போன்ற சொற்கள் சிந்துவெளி நாகரிக மொழியில் வழங்கிய பெயர்களிலிருந்து சமஸ்கிருதம் கடனாகப் பெற்றுக்கொண்டவை. (Loan translations) சிந்துவெளி மொழியில் அக்கடவுளர்க்கு வேறு பெயர்கள் இருந்திருக்கும். கரவட் (தந்திர) நூல்களின் கமுக்கம் நமக்குக் கிடைத்துள்ள சில ஆயிரம் சிந்துவெளி முத்திரை யெழுத்து வாசகங்கள் வருங்காலத்தில் படிக்கப்பட்டாலும் கூட அவற்றிலிருந்து மட்டுமே அவர்கள் நாகரிகத் தோற்றத்தைப்பற்றி அறிந்துகொள்ள முடியாது. ஆயினும் அந்நாகரிகப் புதிர்களுக்கு வேறுபல நூல்களிலிருந்து, குறிப்பாக கரவட (தந்திர நூல்களிலிருந்து விளக்கம் கிடைக்கலாம். தந்திரம் என்ற சொல்லுக்கு அடிப் படையில் 'நெய்த ஆடை', 'பின்னிய பொருள்', 'நெசவில் ஊடு' என்றுதான் பொருள். தந்திரக் கலைக் குறியீடுகளும், சித்திரங்களும் பழங்கற்காலத்திலேயே உருவானவை. தந்திர நூல்களைச் சிந்துவெளி குருமார்கள் உருவாக்கி முறைப்படுத்திருக்கலாம்; காரணம் தந்திரக் குறியீடுகள் பல சிந்துவெளி முத்திரைகளில் உள்ளன. சிந்துவெளிக் கடவுளருள் சிறந்த சிவனும், அவன் தேவியும் தந்திர வாதிகளுக்கும் முக்கிய தெய்வங்களாகும். தந்திரக்கலையறிவு நூல்கள் வேதங்களைவிடப் பழமை யானவை என்று கருதப்படுகின்றன; சிவன் திருவாயினால் மொழிந்தவை தந்திரங்கள் என்றும், எனவே அவை ஐந்தாம் வேதம் என்றும் தந்திர நூல்கள் கூறுகின்றன. நான்கு வேதங்கள் ஆரிய குருமார்கள் ஆகிய பிராமணர்படைப்பு; ஆனால் ஐந்தாம் வேதமோ சிந்துவெளித் தொல்லிந்தியர் படைப்பு. தந்திர இலக்கியங்கள் முழுமையாக இப்பொழுது நமக்கு கிடைக்க வில்லை என்பது வருந்தத்தக்கது. அவற்றுள் பல அழிந்தன; கிடைத்துள்ள சிலவும் உருவமும் பொருளும் சிதைந்த நிலையில் உள்ளன. முகமதியர் படையெடுத்து வட இந்தியாவிலும், மத்திய இந்தியாவிலும் தங்கள் ஆட்சியை நிறுவிய பின்னர் தந்திர நூல்கள் பெருமளவு ஒழிக்கப்பட்டன. இந்தியாவுக்கு அப்பால் உள்ள திபெத், இமாலயப் பகுதி, மைய ஆசியா ஆகிய இடங்களிலிருந்து தான் தந்திர நூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன என்பது வியப்பான நிலையாகும். அங்கு அவை 'பெளத்த உருவத்தில் ' திபெத்திய மொழியாக்கத்தில் உள்ளன. சமஸ்கிருதத்தில் எழுதிய தந்திர நூல்கள் 100க்குள் தான் இன்று உள்ளன. சமஸ்கிருதத்தில் முதலில் எழுதப்பட்ட கங்கூர் (Kangur) என்னும் புத்த சமயப் புனித நூலின் திபெத்திய மொழி பெயர்ப்பு கிடைத்துள்ளது. புத்தர் அருளியது என்று கருதப்படும் 1000 தந்திரங்கள் கங்கூர் திபெத்திய மொழி பெயர்ப்பில் உள்ளன. கங்கூரின் விரிவுரையான தங்கூர் என்னும் படைப்பில் 3000 நூல்கள் உள்ளன. தங்கூரின் ஆசிரியர் களில் மிகப்பலர் இந்திய தாந்திரிகர்களே. சாக்கிய முனியான கவுதம புத்தரின் ஆதிமூல போதனைகள் எவை என்று இதுவரை பெளத்தர்கள் இடையேயும் அறிஞர்கள் இடையேயும் ஒருமித்த கருத்து இல்லை . அவர் போதனைகள் சமயச் சார்பானவையா? அல்லது நல்லொழுக்கம் மற்றம் அறவழிப் பட்டவையா? முகமதிய மதத்தை நிறுவிய முகமது நபி போன்று புத்தர் வரலாற்று மாந்தரா, அல்லது ஓசிரிஸ் என்னும் எகிப்திய கடவுள் போன்ற கற்பனை மாந்தரா? புத்தர் மறைவுக்குப் பல நூற்றாண்டு பின்னர் பௌத்தம் முப்பெரும் ஊர்திகள் (3 Vehicles) என்னும் தனிவழிகளாகப் பிரிந்து போயிற்று. துன்பத்தைக் கடந்து நிருவாணம்' என்னும் மோட்சத்தை இம்மூன்று வழிகளில் ஒன்றைக் கடைப்பிடிக்க வேண்டும். ஹீனயானம் என்னும் சிறுவர் முதலில் தோன்றியது. அது தென்கிழக்கு நோக்கி அதாவது பர்மா, லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து, இலங்கை, வியட்நாம் நாடுகளில் பரவியது. மகாயானம் என்னும் பெருவழி மத்திய ஆசியா முதல் சீனம், சப்பான், கொரியா, திபெத், நேபாளம், மங்கோலியா நாடுகளிலும், புர்யாத், கால்மிக் பகுதிகளிலும் பரவியது. (சோவியத் அகழ்வாய்வாளர் பௌத்தக் கோயில்களின் இடிபாடுகளை மத்திய ஆசியாவில் கண்டுபிடித்துள்ளனர்) பின்னர் மகாயானத்திலிருந்து தந்திர வழி பிரிந்து வளர்ந்தது. அவ்வழியைப் பின்பற்றுவோர்களைச் சித்தர்கள் (நிறைவு அடைந்தவர்கள்) என்றும் அவ்வழிதான் நிருவாணம் அடைவதற்கு மிகச் சுருக்கமான விரைவு வழி என்றும் வழங்கினர். முகமதியர் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றி ஆளத் தொடங்கிய பின்னர் புத்த சமயத்தின் மூன்று வழிகளுமே தாயகமான இந்தியாவில் ஒழிந்துவிட்டன. இந்தியாவில் புத்த மதச் சின்னங்களை இன்று நாம் அகழாய்வு மூலம் தான் அறியமுடிகிறது இமயமலை சார்ந்த நாடுகளுக்கு இந்தியத் துறவி பத்மசாம்பவர் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தந்திர நூல்களைக் கொண்டு சென்றதனால் சிக்கிம், பூடான் ஆகியவற்றில் மட்டும் தாந்திரிக புத்த மதத்தை அதன் இயற்கைச் சூழலில் அறிஞர்கள் இன்றும் பயில வாய்ப்புள்ளது. இருபதாம் நூற்றாண்டின் 60களுக்கு முன்னர் தாந்திரிக பௌத்தக் கலைப்பொருட்கள் - சிந்தனைகள் பற்றி அவ்வளவாகத் தெரியாது. பன்னாட்டுக் கல்வி, அறிவியல் பண்பாட்டுப் பேரவையின் (யுனெஸ்கோ ) சார்பாக இந்திய ஓவியம் - நுண்கலை அறிஞர் எம் சிங் இமயமலை ஓவியங்கள் பற்றி எழுதிய நூல் அண்மையில்தான் வெளிவந்தது. நேபாளம் - இந்திய அரசுகளின் உதவி, தலாய்லாமா உதவியினாலும், மகாயானத் துறவிகள் மற்றும் பூட்டான் தலைவர்கள் ஒத்துழைப்பினாலும், ஒதுக்குப் புறங்களிலிருந்த 'விகாரைகளுக்கெல்லாம் சென்று அதுவரை யாரும் வெளியிடக் கூடாது என்று வைத்திருந்த புத்த ஓவியங்களின் படிகளை எடுத்து அச்சிட்டு உலகுக்குத் தெரிவித்தார். மொழிநூலார், வரலாற்றாசிரியர், தத்துவ அறிஞர் ஆகியோருக்கு இதனால் புதிய வேலை பிறந்துள்ளது. இலெமூரியாவில் தோன்றியிருக்கலாமென்று கருதக் கூடிய தந்திரப் பயிற்சி சிந்துவெளியினரால் வளர்க்கப்பட்டு, பின்னர் முகில் தவழும் இமயமலைப் பகுதியைச் சென்றடைந்த தந்திரங்களை அவர்கள் ஆய்வு செய்தால் இலெமூரியா பற்றி மேலும் தெளிவு கிடைக்கலாம். சோவியத் அறிஞர்கள் இமயமலைக்குச் சென்று தந்திரங் களைத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை சோவியத் நாட்டில் புர்யாத் (Buryad) பகுதியில் இருந்த பௌத்த விகாரைகளில் தந்திரம் கற்பிக்கப்பட்டு வந்தது. மத்திய கால ஐரோப்பியக் கிறித்தவ மடாலயங்கள் - பல்கலைக் கழகங்கள் போன்றவைதாம் அந்த விகாரைகள். லெனின்கிராடு, உலன் உடே (Ulan Ude) நகரங்களில் உள்ள நூல் நிலையங்களில் தந்திர நூல்கள் பல உள்ளன. அவற்றை ஆய்ந்ததில் வியக்கத்தக்க செய்திகள் கிடைத்துள்ளன. மத்திய ஆசியாவின் வரலாறு, மொழியியல் பற்றிய மூன்றாவது கட்டுரைத் தொகுப்பை சோவியத் அறிவியல் பேரவை - சைபீரியத் துறையின் புர்யாத் பிரிவு 1968இல் வெளியிட்டது. பெளத்த சமயப் பிரபஞ்சக்கொள்கை பற்றி ஆர் புபயேவ் (R.Bubayev) எழுதிய கட்டுரையில் "மூன்று யானைகளின் மேல் பூமி உள்ளது' என்னும் பெளத்தமத மரபுவழிக் கொள்கையை மட்டுமன்றி தாந்திரிக பௌத்தக் கொள்கையான "பூமி தன் அச்சில் தானே சுழல்கிறது'' என்பதையும் குறிப்பிட்டுள்ளது. அறிவியல் நோக்கில் இது சிறப்புடையது என்பதில் ஐயமில்லை . இந்தியப் பெருங்கடல் அடித்தள ஆராய்ச்சி மட்டுமன்றி அதனின்றும் முற்றிலும் வேறுபட்ட , தந்திர நூல்கள் ஆய்வும், இலெமூரியப் புதிரைத் தீர்க்க உதவலாம். (மாந்தக் குரங்கிலிருந்து மாந்தன் தோன்றினான் என்று கூறும் புத்த மதம், அம்மாந்தன் பின்னர் அறிவுமாந்தனாக (Homo sapiens) மாறியது இந்தியாவில்தான் என்றும் கூறுகிறது. புர்யாத் நிலப்பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவரை இலெமூரியப் பிரச்சினையானது, பல அறிவியல் துறைகளையும் (கடலியல் முதல் தொல்லெழுத்துக்களைப் படித்தறிதல் முடிய) தழுவி நிற்பது போல, இந்திய மாக்கடலிலிருந்து இமயமலை, புர்யாத், ஸ்டெப்பி புல்வெளி ஆகிய பகுதிகள் மட்டுமன்றி, ஆஸ்திரேலியா வரை உள்ள நிலப்பகுதிகளின் வரலாற் றோடும் தொடர்புள்ளதாகும். ஆஸ்திரேலிய இயலின் முதல் ஆய்வாளர்கள் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களுக்கும், திராவிடர்களுக்கும் உள்ள உடலமைப்பு - தோற்ற ஒப்புமைகளைக் கண்டு வியந்தனர். இதை எவ்வாறு விளக்குவது? ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் முன்னோர் படகு களிலும், ஓடங்களிலும் இந்துமாக்கடலைக் கடந்து சென்றிருக்க முடியாது. பைபிள் கூறும் நோவாவின் வழிமுறையினர் பட்டியலில் ஆஸ்திரேலியரும், செவ் விந்தியர்களும் காணப்படவில்லையாகையால் ஆஸ்திரேலியர்களை அந்நாட்டுக்காகவே கர்த்தர் தனியே படைத்தார் என்றும் அவ்வாறே வட - தென் அமெரிக்கா கண்டங் களுக்காக செவ்விந்தியரை கர்த்தர் தனியே படைத்தார் என்றும் சிலர் கூறினர். ஆனால் அறிவியலாளர் இதை ஏற்கவில்லை . வி. கபோ என்னும் சோவியத் வல்லுநர் இதுபற்றி "ஆதாமி லிருந்து உருவாகாத வேறு தனித்தனி மாந்தவினங்களும் இருந்தன என்ற இந்தக் கொள்கையானது மக்கள் அனைவரும் சமம் என்பதை மறுக்கவும், காலனி ஆளுமைக் கொடுமையை நியாயப் படுத்துவதற்கும் உருவாக்கப் பட்டது'' என்று விளக்கியுள்ளார். மாந்தவியல் வல்லுநரும், மாந்த இன நூல் வல்லுநரும் (Anthropologists and Ethnograpers) திராவிடருக்கும், ஆஸ்திரேலியருக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பற்றி இன்னும் விவாதம் நடத்திய வாறுள்ளனர். சிலர் இவ்வொற்றுமைகள் மேம்போக்கானவை என்பர்; சிலர் ஆஸ்திரேலியப் பழங்குடியினரே மூல இனம் என்பர்; வேறு சிலரோ ஆஸ்திரேலியரின் மூதாதையர் தோன்றியது இந்தியாவில்தான் என்பர். திராவிட, ஆஸ்திரேலியப் பழங்குடி மொழிகளின் ஒற்றுமை குறித்த விவாதம் முடியவில்லை . 1847இல் ஜெசி. பிரிச்சார்டு என்னும் அறிஞர் ஆஸ்திரேலிய மொழிகளுக்கும், தமிழுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமைகளைக் கண்டார். வில்லியம் பிளிக் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இருமொழிகளின் அமைப்பும் ஒன்றே என்று கருதினார். கடந்த நூறு ஆண்டுகளில் மேலும் பல ஆய்வுகள் நடந்துள்ளன. சுவீடன் நாட்டில் லண்டு என்னும் நகரைச் சேர்ந்த என். எம். ஹெல்மர் 1963இல் வெளியிட்ட "ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் மொழிகளின் வரலாறும், இலக்கண அமைப்பும்" என்னும் நூலில் திராவிட , ஆஸ்திரேலிய மொழிகளின் இலக்கண அமைப்புகளும், ஒலியன் அமைப்புகளும் ஒன்றுபோலவே உள்ளன என்று நிறுவியுள்ளார். இவ்விரு மொழிக்குடும்பங்களும் ஒன்றுதான் என்று நிறுவிடப் போதுமான ஆதாரங்கள் இல்லை. கூறப்பட்டுள்ள ஒற்றுமைகள் தற்செயலாக அமைந்திருக்கலாம். ஆஸ்திரேலியர் களும், திராவிடர் களும் உறவுள்ளவர்கள் என்று திட்டவட்டமாக ஏற்கவோ, மறுக்கவோ போதுமான மொழியியல், மாந்தவியல் தரவுகள் இல்லை. அகழ்வாய்வாளர் சொல்வது என்ன? ஆஸ்தி ரேலியாவிலும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் அறிவிய லாளர் கற்கால நாகரிகங்களை ஆய்வு செய்தபோது ஆஸ்திரேலியா விலும், இந்தியாவிலும் ஒரே மாதிரியான கற்கருவிகள் இருக்கக் கண்டனர். இவ்வொற்றுமை உண்மை யானதா தற்செயலானதா? இதற்கு விடைகூற அகழ்வாய்வு போன்ற இன்னொரு அறிவியல் துறை யாகிய இனநூல் துணை செய்கிறது. ஆஸ்திரேலியப் பழங்குடிநாகரிகச் சின்னமாகிய பூமராங் பற்றி பள்ளிச் சிறுவர்களுக்குக் கூடத் தெரியும். இதே போன்ற பூமராங், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கூட தென்னிந்தியச் சாதியினர் சிலரிடம் (புதுக்கோட்டைக் கள்ளர் பயன்படுத்திய வளைதடி இருந்ததும், அவர்களும் திராவிட (தமிழ்) மொழி பேசியவர்கள் என்பதும் இன நூல் வல்லுநர்களன்றி வேறு சிலருக்கு மட்டுமே தெரியும். எனவே திராவிடர் - ஆஸ்திரேலியரின் மூலத் தாயகம் எது? அறிவியல் துறைகளை தனித்தனியாக எடுத்துப்பார்த்தால் இதற்கு விடை கூற இயலாது. ஆனால் மாந்தன் சார்ந்த அனைத்து அறிவியல் துறைகளும் - இன நூல், அகழ்வாய்வு, மொழியியல், மாந்த நூல் - ஆகிய அனைத்தும் தரும் செய்திகளை ஒருசேர நோக்கினால் அவ்விரு இனங்களும் ஒரே நிலப் பகுதியில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று அறியலாம். இந்திய மாக்கடலால் அவர்கள் இன்று பிரிந்திருந் தாலும், ஒரு காலத்தில் இவர்கள் உறவுடையவர்களே என்பதை மேற்சொன்ன அறிவியல் துறைச் செய்திகள் காட்டுகின்றன. தென்னிந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை மக்களது பொது நாகரிகத் தொட்டில் எங்கிருந்தது என்று கருத முயலுவது இயற்கையே! இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாந்த நூல் வல்லுநர் சிலர் திராவிடரின், ஏன் மாந்தகுலம் அனைத்தின் பிறப் பிடம் ஆஸ்திரேலியாதான் என்று கருதினர். இன்று இக்கருத்தை ஏற்பார் இலர். பழைய உலகத்தில்தான், குறிப்பாக ஆசியாவில் இமய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியில்தான் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பது இன்று பல அறிஞர் கருத்து. மேற்சொன்ன ஆசிய மையத்திற்கு இவ்விரு இனத்தவரும் (திராவிடரும், ஆஸ்திரேலியரும்) வரும் முன்னர் இவர்களுடைய மூதாதையர் இந்திய மாக்கடலில் மூழ்கிக்கிடக்கும் ஒரு நிலப்பகுதி யில் வாழ்ந்திருக்கலாமோ? இந்த ஆஸ்திரேலியப் புதிரை விடுவிக்க சோவியத் அறிஞர் ஏ. ஜொலாதார்யாவ் கடலியல் நூல், நிலநூல் செய்திகளைப் பயன்படுத் தினார். இந்தியத் துணைக்கண்டமும், ஆஸ்திரேலியாவும் முதலில் நெருங்கி யிருந்தன; பின்னர் அவை பிரிந்து இந்தியமாக்கடல் இடையிட்டபோதிலும் ஆஸ்திரேலியருக்கும், திராவிடருக்கும் முன்னர் இருந்த பழந்தொடர்பு காரணமாக இன்றும் ஒப்புமை காணப்படுகிறது என்கிறார் அவர். 1930களில் புகழ்பெற்றிருந்த வெஜினர் கொள்கையை ஒட்டியது இம்முடிவு. வெஜினர் கொள்கைக்கு மாறான கொள்கையினரும் கடலியல், மாந்த யினவியல் செய்திகளையே பயன்படுத்துகின்றனர். பனி ஊழி முடிவுவரை இந்தியாவையும், ஆஸ்திரேலியாவையும் நிலப்பாலம் போல இணைத்த வால் போன்ற நிலப்பகுதிகள் இருந்ததால் இரு இனங்களுக்கும் தொடர்பிருந்தது; இரு இன மொழிகளின் ஒப்புமைக்கும் இதுவே காரணம் என்பர் அவர். மாந்தவியல், இனநூல், தொல்லியல் துறையினர் இதுகாறும் ஆஸ்திரேலியப் பழங்குடி யினருக்கும், திராவிடருக்கும் இடையில் கண்டுபிடித்துள்ள ஒப்புமை களை அத்தகைய இணைப்புகள் விளக்கவல்லவை. இந்துமாக்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ள கடலியல், கடல்தரை நிலவியல் துறைகள் (Oceanography and Marine Geology) இதுபற்றி வருங்காலத்தில் நமக்கு ஒளிதரலாம். ஆஸ்திரேலியப் பாறை ஓவியங்களிலிருந்து உன்னிக்கத்தக்க தொல் வரலாறு ஆஸ்திரேலியப் புதிரை விளக்கப் பல்வேறு அறிவியல் துறை ஆய்வுகளும் பயன்படுத்தப்படுகின்றன. அந்நாட்டின் பண்டை வரலாற்றைப் பொருத்தவரை, எந்த நாட்டின் வரலாற்றுக்கும் முக்கியமான, எழுத்துச் சான்றுகள் இல்லாதது ஒரு குறை. கி. பி. 1800க்கு பிறகு வெள்ளையர் ஆஸ்திரேலியாவில் குடியேறிய பின்னரே அங்கு எழுத்தறிவு உண்டாயிற்று. எனினும் ஆஸ்திரேலியாக் கண்டத் தில் (இன்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே வாழ்ந்து வரும்) பழங்குடிமக்கள் அக்கண்டத்தில் பல இடங்களிலும் பாறைகளில் தீட்டியுள்ள ஆயிரக்கணக்கான பாறை ஓவியங்கள் அக்கண்டத்தின் தொல் வரலாற்றை அறிய உதவலாம். அவ்வோவியங்கள் எதைக் குறிக்கின்றன என அறிவது மிகக் கடினம். ஆனால் அறியும் முயற்சியோ ஆர்வத்தைத் தூண்டுவதாகும். ஆஸ்திரேலியத் தொல் வரலாற்றைப் பொருத்தவரை ஏனைய சான்றுகளைப் போல இந்த ஓவியங்களும் குழப்பமாகவும் , ஐயத்திற்கு உரியனவாகவுமே உள்ளன. முதற்கண் இப்பாறை ஓவியங்கள் தீட்டப்பட்ட காலம் எது? அறிஞர் சிலர் இவையெல்லாம் இன்றைக்கு 150 - 200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை யல்ல என்பர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து அழிந்துவிட்ட மாபெரும் ஊர்வனவற்றின் (ரெப்டைல்) படங்களும்; கங்காரு போன்ற மார்சுபியல் இனத்தைச் சார்ந்ததும், பெரும் உருவம் படைத்ததுமான டிப்ரோடோடன் (Diprodoton) என்னும் முயல் போன்ற தோற்றமுள்ள விலங்கின் படங்களும் இவ்வோவியங்களில் காணப்படுவதால் அவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தீட்டப்பட்டிருக்கவேண்டும் என்பர் வேறுசிலர். இரண்டாவதாக இப்பாறையோவியங்கள் எதைக் குறிக் கின்றன? ஆஸ்திரேலியப் பழங்குடிப் பாறை ஓவியர் வரைந்துள்ள தெல்லாம் பெரும் பாலும் பாதிமாந்த - பாதி விலங்கு வடிவங்கள், நேர்த்தியற்ற கோட்டுருவங்கள், 'ஜீயோமிதி' போன்ற குறியீடுகள் ஆகியவையே. அவை எதைக் குறித்தன என்று நாம் அறிய உதவக்கூடியச் செவிவழிச் செய்திகளும் தொன்மக்கதைகளும் ஒன்றுமே இல்லை. மூன்றாவதாக இப்பாறை ஓவியங்களும் உலகில் வேறு கண்ட நாட்டு மக்கள் விட்டுச் சென்றுள்ள அத்தகைய படைப்புகளைப் போலவேதான் இருக்கின்றன. தென்னாப்பிரிக்க புஷ்மென் இனத்தவர் ஓவியம், பாரோவாக்கள் காலத்திற்கு முற்பட்ட எகிப்து பாறை ஓவியங்கள், கற்கால ஸ்பானிய குகை ஓவியங்கள் இவை ஒவ்வொன்றையும் ஒத்த பாறை ஓவியங்கள் ஆஸ்திரேலியாவிலும் கிடைத்துள்ளன. இவ்வொற்றுமைகள் தற்செயலானவையா அல்லது வேறு அடிப்படைக் காரணம் உண்டா என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்தொற்றுமை இல்லை. ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற ஒண்ட் ஜினா பாறை ஓவியங்களைப் பற்றிய கடுமையான விவாதம் குறிப்பிடத்தக்கது. அந்நாட்டில் கிம்பர்லி குகைகளில் உள்ள இவற்றை 1838இல் ஜார்ஜ் கிரே கண்டுபிடித்தார். தலைக்கு மேல் கருமேகம் (Nimbus); வெண்முகங்கள் ; வாயில்லை; மேனி முழுவதும் நீண்ட வெண் கோடுகள் ; இப்படித் தீட்டப்பட்டுள்ள வியத்தகு உயிரினங்களின் ஓவியங்கள் இவை. பழங்குடி மக்கள் இவற்றை ஒண்ட்ஜினா என்று அழைத்தனர். இத்தகைய சித்திரங்கள் பல அந்நாட்டின் வேறு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சித்திரங்கள் அயலவருடைய, குறிப்பாக இந்தோனிசிய தீவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குச் சென்று தங்கியவர்களுடைய வேலைதான் என்று கிரே நம்பினார். வேறு சிலரோ இவை சுமேரிய, எகிப்திய, ஆப்பிரிக்க, கிரேக்கப் பாறை ஓவியங்களுக்கு இன மானவை என்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய வல்லுநர் எல்கின் இந்த ஓவியங்கள் பழங்குடி மக்கள் வரைந்தவைதான் என்று சான்றுகளுடன் நிறுவியுள்ளார். இவ்வடிவங்களை அம்மக்கள் இன்றும் வழிபட்டு வருகின்றனர்; பஞ்சம், வறட்சிக் காலங்களில் அப்படங்களின் கோடுகளை மீண்டும் தெளிவாக வரைகின்றனர்; ஒண்ட்ஜினா வீரர்கள் நீருக்கும், மழைக்கும் அதிபதிகள் என்று நம்புகின்றனர். இக்காரணங்களால் பழங்குடி மக்களே இவற்றை வரைந்தவர்கள் என்கிறார் என்கின். பூமிக்கு அப்பால் வானிலிருந்து இங்கு வந்த விண்வெளி வீரர்களின் ஹெல்மெட்டை குறிப்பனவே இவ்வோவிய உருவங் களின் தலைமேல் காணப்படும் முகில் வடிவங்கள் என்று 20 ஆம் நூற்றாண்டில் சிலர் கற்பனை செய்தனர். இத்தகைய கற்பனை யாளர் சகாரா பாலைவனத்தில் தாசிலி சுதை ஓவியங்களிலும் இத்தகைய விண்வெளி மாந்தரைக் காண்பர்! இக்கற்பனையை நம்பமுடியாது. எல்கின் முடிவு வலுவானது எனினும், முற்றிலும் மெய்பிக்கப்பட்டதாகக் கொள்ள முடியாது. பழங்குடிகள் புதிதாக வந்து புகும் மக்களையெல்லாம் வணக்கத்திற் குரியவர்களாக கருதி வழிபட்டு வந்ததற்கு தொன்மக்கதைகள் பல உள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு வந்த வெள்ளையர்களே பழங்குடி மக்களின் இறந்த மூதாதையரின் ஆன்மாக்கள் / கடவுள்கள் என்று பழங்குடிகள் கருதியதுண்டு! ஒண்ட்ஜினா ஓவியங்களை நீருடன் பழங்குடிகள் தொடர்புபடுத்துவது இந்திய மாக்கடலையும் அதன் அடியில் புதைந்து கிடக்கலாமெனச் சிலர் கருதும் லெமூரியாவை யும் நினைவூட்டுகிறது. ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் புராணங்களும், கதைகளும் தமது பண்பாட்டை ஆதிகாலத்தில் தங்களுக்கு வழங்கிய முன்னோர் களைப் பற்றிக் கூறுகின்றன. வடக்கிலிருந்தும், வடமேற்கிலிருந்தும், அதாவது இந்திய மாக்கடல் உள்ள திசையிலிருந்து வந்த இம் முன்னோர்கள் தாம் தமக்கு படைக்கலங்களையும், கருவிகளையும் அளித்தார்கள் என்கின்றனர். அப்பழங்குடி மக்களிடையே அங்கு முன்னர் வாழ்ந்திருந்த வேறு இன மக்களைப்பற்றிய தொன்மக்கதைகளும் உள்ளன. அந்த வேற்றின் மக்கள் குள்ளர்களாம்! அந்நாட்டிலுள்ள சில பாறை ஓவியங்களை அக்குள்ளர்கள் தாம் வரைந்தனராம். சோவியத் அறிஞர் காபோ இக்கால ஆஸ்திரேலியப் பழங்குடிமக்கள் மட்டுமன்றி பாலினீசிய தீவுப் பழங்குடி மக்கள் போன்ற பிறரும் பண்டைய பண்பாட்டுச் சின்னங்களைப் (ஓவியங்கள், கட்டுமானங்கள், கலைப் பொருள்கள் போன்றவை பற்றி தமக்கு ஒன்றும் தெரியாவிட்டால் கட்டிவிடும் புனைகதைகள்தாம் இவை என்கிறார். கடந்த 150 ஆண்டுக் காலமாக எவரும் இன்னதென்று அறிய முடியாத இந்தப்பாறை ஓவியங்களை உருவாக்கியவர் யார்? ஆஸ்திரேலியரா வந்தேறிகளா? நெடுநாள் முன்னரே இவ்வோவியங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சி இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது. அவற்றுள் மிகப் புகழ் பெற்றவை கூட ஆழமாக ஆய்வு செய்யப்படவில்லை. எடுத்துக் காட்டாக 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆர்ன்ஹெம் தீவக்குறை யில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள வர்கள் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் தோற்றத்திலிருந்து மாறுபட்டவர்கள். இதுகூட இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. பண்டைய எகிப்து கோயில்களில் காணப்படும் ஓவியங்களை நினைவூட்டுகின்றன இவை என்கிறார் இவற்றைக் கண்டுபிடித்த ஜார்ஜ் பிராட்ஷா. தனித்தன்மை வாய்ந்த ஓவியங்கள் இவை என்றாலும் அவற்றைக் கண்டு ஆய்வு செய்ய ஆளில்லை. அவை பண்டைய ஓவிய ஆய்வாளர் பார்வைக்கு வராதவையாக உள்ளன. எப்படி இந்திய மாக்கடலின் அடித்தளம் கடலாய்வியல் பார்வைக்கு இன்னும் நன்கு வரவில்லையோ அது போல. (இந்த ஓவியங்களை வரைந்தோர் இந்தியமாக்கடலில் வேறு பகுதியிலிருந்து வந்தவர்க ளாயின், இந்தியமாக்கடல் அடித்தள ஆய்வு இதற்கு உதவும் என்பதால் இதைக் குறிப்பிடலாயிற்று) ஒண்ட்ஜினாக்கள் மேற்கு அல்லது வடமேற்கிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு கடல் வழியாக வந்ததாக தொன்மக்கதை உள்ளது. அவ்வோவியங்கள் உள்ள பகுதிகளில் கற்பாறைச் சின்னங்களை உருவாக்கியவர்களும் ஒண்ட்ஜினாக்கள் தான் என்று பழங்குடிகள் கூறுகின்றனர். வடமேற்கு ஆஸ்திரேலியப் பழங்குடிமக்களையும், அவர்கள் பண்பாட்டையும் விளக்கி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிய அறிஞர் ஜி. வித்னல் அப் பழங்குடிகள் கூறுவதாக ஒரு செய்தியைத் தருகிறார்: ஒண்ட்ஜினா வீரர்களின் பாறை ஓவியங்களைப்போல இப்பெருங்கற் சின்னங் களும் குழந்தை குட்டி பறவை, விலங்கு, பூச்சி, ஊர்வன, மீன், நிலைத் திணை அனைத்தும் செழித்துப் பெருகுவதற்காகவே உருவாயின. என்று அவர்கள் கூறினராம். வடக்கு அல்லது வடமேற்கிலிருந்து வந்து இப்பெருங்கற்சின்னங்களை அமைத்த மாந்தர்களைக் கடவுளாக்கி ஒண்ட்ஜினா என்று அழைத்திருக்கலாம். (பின்னர் எல்லா இடங்களிலும் அடிக்கடி நடப்பதுபோல) இந்த ஒண்ட்ஜினா கடவுள்கள் செழிப்பு, இனப் பெருக்கச் சடங்குகளுக்கு உரியவை யாகப் தொன்மக்கதைகள் புனையப் பட்டிருக்கும். தண்ணீர்தானே வாழ்வுக்கும் நிலைத்திணைக்கும் ஆதாரம். பெருங்கற் சின்னங்கள் கிம்பர்லியில் மட்டுமன்றி வேறு பல இடங்களிலும் காணப்படு கின்றன; பெரும்பாலும் கடற்கரைக்கு அருகில். இவற்றைப் போலவே பசிபிக் கடலில் உள்ள பல மெலானீசியத் தீவுகளில் காணப்படும் பெருங்கற்சின்னங்களையும் யார் உருவாக்கினர் என்பது பற்றித் தெரியாது. பசிபிக் கடல் தீவுகளில் காணப்பெறும் பண்டை கற்கட்ட டங்கள், கற்சின்னங்கள் கிழக்கிலிருந்து மேற்காகப் பரவின என்ற கொள்கையை உடையவர். தோர் ஹெயர்தால் அவர் கருத்துப்படி இவையெல்லாம் தென் அமெரிக்காவில் உருவாகி, மேற்கு நோக்கிச் சென்று முதலில் ஈஸ்டர் தீவு, மார்கூவெசாஸ் தீவுகளுக்கும்; பின்னர் அங்கிருந்து ஏனைய பாலினீசியத் தீவுகளுக்கும் பரவின. (தென் அமெரிக்காவிலுள்ள பெரு, பொலிவியா நாடுகளின் கற்சின்னங் களைவிட வயதில் பிந்தியவை ஈஸ்டர் தீவுக் கரையில் காணும் தலைச்சிற்பங்கள். பிற பாலினீசியத் தீவுகளில் காணும் கற்சிலைகள் ஈஸ்டர் தீவுச் சிற்பங்களைவிடப் பிந்தியவை). ஆனால் பசிபிக் பெருங்கடலின் மேற்குப்பகுதியிலிருந்து நோக்கினால் நிலைமை வேறாகத் தெரிகிறது: ஏதோ ஓரின மக்கள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பரவியதாகவே தெரிகிறது. அவ்வாறு பரவும்போது ஆஸ்திரேலியக் கடற்கரைப்பகுதிப் பெருங்கற்சின்னங் களையும், நியூகினியில் காணப்படும் வியத்தகு கற்சிலைகள் கற்பொருள்கள் போன்றவற்றையும், மெலானீசிய தீவுகளின் கற்சின்னங்களையும் உருவாக்கினர். (நியூகினிப் பழங்குடி மக்களுக்கு அங்குள்ள கற்சின்னங்களைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை.) இவ்வாறு கிழக்கு நோக்கிப் பரவியவர்கள் பாலினீசிய மக்களின் முன்னோரா? அல்லது இந்தியா, மெசொபொதாமியா, எகிப்தி லிருந்து வந்தவர்களா? அப்படி வந்திருந்தால் தடயமே இல்லாது மறைந்துவிட்டார்களா? இவற்றுக்கெல்லாம் இன்று வரை விடை கிட்டவில்லை. எனவே அம்முன்னோர் ஒருவேளை இந்தியமாக் கடலில் மூழ்கிவிட்ட இலெமூரியாவில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதவும் இடமுள்ளது (இதற்கு மறுப்புகள் பல உள்ள போதிலும்). பசிபிக் கடல் தீவுகளின் கற்சின்னங்கள் தோற்றம் பற்றியும் வேறு பல ஊகங்கள் உள்ளன. எந்தக் கருதுகோள் சரியென்று திட்ட வட்டமாகக் கூறமுடியாது. பெருங்கற்சின்னங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட மாந்தன் சார்ந்த புதிராகும். அது மிகச் சிக்கலானது; எனினும் ஆய்வு செய்ய ஆர்வத்தைத் தூண்டுவது. அச்சின்னங்கள் இங்கிலாந்து, தென் னிந்தியா, ஸ்பெயின், நியூஹெபிரிடிஸ், ஆஸ்திரேலியா, (மைய ஆசியாவில்) காகசஸ் போன்ற பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. எல்லா இடங்களிலும் அவை கடற்கரைப் பகுதியிலேயே அமைந் துள்ளன; மிகப்பெரிய கற்சிலைகள் கடற்கரையிலேயே உள்ளன. ஒருவேளை இச்சின்னங்கள் கடலோடிகளால் - மரக்கலப் பயணிகளால் உருவாக்கப்பட்டவையோ? ஒரே இனம்தான் இவை அனைத்தையும் உருவாக்கியதா? இச்சின்னங்கள் அனைத்துமே ஒரே மாதிரி இருப்பதால், அவற்றின் கட்டுமான - உருவ அமைப்பு முறை ஒன்றுபோல் இருந்திருக்கவேண்டும். அட்லாண்டிக் கடலிலிருந்து காகசஸ், தென்னிந்தியா, ஆஸ்திரேலியா பசிபிக் தீவுகளுக்கு, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பெருங்கற்சின்னங்கள் பரவின என்பர் சில ஆய்வாளர். பிறர் (சிறுபான்மையர்) இச்சின்னங்கள் பசிபிக் தீவுகளில் பிறந்து மேற்கு நோக்கிப் பரவின என்பர். மூன்றாவது குழுவினரான வேறுசிலரோ ஐரோப்பா, இந்தியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் இவை அனைத்திலும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி இச்சின்னங் கள் ஆங்காங்கே தோன்றியிருக்கலாம் என்பர். எவர்கூற்று சரியெனத் தெரியவில்லை. சில கருதுகோள்கள் பிறவற்றைவிடச் சிறந்தவையாகத் தோன்றுகின்றன. அகழ்வாய்வு, மாந்த நூல், இன நூல் போன்ற அறிவுப்புலங்களில் இன்றுள்ள (1974வளர்ச்சி நிலையில் எந்தக் கருதுகோளையும் அதுதான் சரி என்று நிருபிக்க இயலவில்லை. இந்திய மாக்கடலின் அடித்தள ஆராய்ச்சி விரிவாக, முழுமையாக முற்றுபெற்றால்தான் கடலுள் முழ்கிய இலெமூரியா பற்றித் திட்டவட்டமாகக் கூற இயலும். அதன்பின்னரே ஆஸ்திரேலியாவில் முதலில் குடியேறிவர்கள் யார் ; சிந்துவெளித் தொல்லிந்திய நாகரிகம் முதலில் எங்கே உருவானது; மனிதன் முதலில் எங்கே தோன்றினான் ; என்பன போன்ற பல வினாக்களுக்கு உறுதியான விடை பகரமுடியும். அன்டார்டிகா கண்டம் தெற்கு நோக்கி விலகிச் சென்றதா? இந்திய மாக்கடல் மற்றும் அதனோடு இணைந்த முறையான, முழுமை யான அடித்தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் அது மாந்தன் தோற்றம், பண்டைய நாகரிகங்களின் தோற்றம் போன்ற பலவற்றின் மறு ஆய்வுக்கு வழிவகுக்கலாம். ஒருக்கால் இலெமூரியா கண்டம் என ஒன்று இருந்ததே இல்லை என்றும், இந்திய மாக்கடலில் கோண்டுவானாவின் எச்சம், மற்றும் கடலில் மூழ்கிய தீவுகள் இவையெல்லாம் உண்மையில் இருக்கவேயில்லை என்றும் அவ் வாய்வுகள் மெய்பிக்கவும் கூடும். (அதாவது பண்டு ஒன்றாக விருந்த பெருநிலப்பகுதி பிரிந்து படிப்படியாக விலகியதனால் இன்றைய இந்தியத் துணைக்கண்டம், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்டிக்கா உருவாகின என்று நிறுவப்படலாம்). இன்றைய (1974) கண்டநகர்வுக் கொள்கை (Continental Drift)யாளர் கூறுவது என்ன: அனைத்துக்கண்டங்களும் ஒரு பெரு நிலப்பரப்பாக இருந்த காலம் முடிந்து (இன்றைக்கு 25 கோடி ஆண்டு முன்னர்) அனைத்துக்கண்டங்களும் விலகிச் செல்லத் தொடங்கி அவற்றுக்கிடையே மாக்கடல் உருவாகிய பொழுது அக் கடல்களின் மையக்கோட்டையொட்டி பூமியின் மேலோட்டில் (Crust) வெடிப்பு ஏற்பட்டு, கடலடியில் புது நிலப்பகுதி இடை விடாது ஏற்பட்டு வந்ததனால் கடல்கள் பரப்பளவில் தொடர்ந்து பெருகின ; கண்டங்கள் ஒன்றை விட்டு ஒன்று தொடர்ந்து விலகிச் சென்றன என்று கூறுகிறது அக்கொள்கை . நில இயற்பியல் (Geophysics) இயலார் கண்டங்கள் இன்றும் தொடர்ந்து விலகுகின்றனவா? புதிய கடல்கள் கருக்கொண்டு வளருமிடங்கள் எவை? என்றெல்லாம் ஆராய்ந்து வருகின்றனர். இந்துமாக்கடல் அடித் தளத்தின் நடுவில் தென்வடலாக உள்ள நீண்ட மலைத் தொடரைச் சார்ந்த பள்ள வெடிப்புகள் அரேபியா, பாலஸ்தீனம், சோமாலியா, கென்யா ஆகிய நாடுகளிலும் காணப் படுவதால் இதுபற்றி அவர்கள் குறிப்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்திய மாக்கடலடிப் பிளவு ஒன்று வடக்கு நோக்கிச் (தக்காண பீடபூமியை நோக்கிச் செல்கிறது. இன்னொருபிளவு செங்கடல் வரை வட மேற்கு நோக்கிச் சென்று, ஏடன் நீர்ச்சந்தியில் இரண்டாகப் பிரிந்து, ஒரு பிரிவு செங்கடல் அடித்தளத்தில் ஓடி பின்னர் தரையில் ஜோர்தான் பள்ளத் தாக்காக நீள்கிறது; மற்றொரு பிரிவு சோமாலியா பக்கம் திரும்பி கிழக்கு ஆப்பிரிக்கப் பள்ளத்தாக்காக மாறுகிறது. இந்த இடத்தில்தான் எதிர்காலத்தில் இரண்டு பெருங்கடல்கள் தோன்றலாம் என்று கண்டநகர்வுக் கொள்கையாளர் நம்புகின்றனர். இன்னும் சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்காக் கண்டத்தில் தென்வடலாக ஒரு கடல்தோன்றுமாம்; செங்கடல் விரிந்து அரேபியாவையும், ஆப்பிரிக்காவையும் பிரிக்கும் பெருங்கடலாக மாறி விடுமாம். கண்டநகர்வுக் கொள்கையின்படி, செங்கடல் ஒன்று அல்லது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம்; அப் பொழுது ஆப்பிரிக்காவின் வடகிழக்கிலிருந்து அரேபியா பிரிந்தது. இன்றும் செங்கடலின் அகலம் ஆண்டுக்கு ஒன்றரை சென்டிமீட்டர் அதிகரித்து வருகிறது. பூமியின் மேலோட்டில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களைத் துல்லியமாக அளந்தறியும் கருவிகள் விரைவில் உருவாகலாம். பூமியின் மான்டிலின் மீது (Mantle) மிதக்கும் திட்டுகள் தாம் கண்டங்கள் என்று கூறும் கண்டநகர்வுக் கொள்கை உண்மை யென்றால் கண்டங்கள் நகரும் வேகம் எவ்வளவு? சில அறிவியலாளர் அவை மிக மெதுவாக இயங்குகின்றன; பண்டைய கோன்டுவானா பெருங்கண்டத்திலிருந்து விலகிச் சென்ற பல்வேறு கண்டங்களும் இன்றுள்ள நிலையை 20 கோடி - 15 கோடி ஆண்டுகால நகர்வுக்குப் பின்னர்தான் அடைந்தன என்கின்றனர். இன்னொரு கருத்தை வேறு சிலர் கூறுகின்றனர். அதாவது பூமி விரிவடைவதால் கண்டங்கள் விலகுகின்றன; அவ்வாறு விலகுதல் விரைவாகவும் நடந்திருக்கலாம்; மாந்தன் தோன்றிய காலத்திற்குப் பின்னர் கூட கோன்டுவானா பகுதிகள் இன்றுள்ள நிலையைவிட நெருக்கமாக இருந்திருக்கலாம் என்பது அவர்கள் கருத்து. பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்தனவாகக் கருதப்படும் நிலப்படங்கள் இரண்டில் அண்டார்டிக் கண்டம் குறிக்கப் பட்டுள்ளதாகவும் அவ்வாறு அப்படங்களில் குறிக்கப்பட்டுள்ள அக்கண்ட எல்லைகளை அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன என்றும் அமெரிக்கர் சிலர் கூறுகின்றனர். முழுவதும் பனிக்கட்டியால் இன்று மூடப்பட்டிருக்கும் அன்டார்டிகா கண்டம், ஒருகாலத்தில் பனி மூடப்படாமல் வெப்ப மாக இருந்தது என்பதை அக்கண்டத்தில் உள்ள நிலக்கரிப்பாளங் களும் வேறு பல சான்றுகளும் காட்டுகின்றன. வெப்பமாயிருந்த காலம் 25-20 கோடி ஆண்டுகளுக்கு முன் ஆக இருக்கலாம். பனிக் கட்டி அக்கண்டத்தை மூடியது எப்பொழுது என்று சொல்ல வியலாது; சிலர் 10000 ஆண்களுக்கு முன்னர் என்பர். மேற்சொன்ன 16 ஆம் நூற்றாண்டு நிலப்படங்கள் காட்டும் அன்டார்டிக் கடற் கரையானது பனிக்கட்டி மூடாமலேயே உள்ளது. மேற்சொன்ன நிலப்படங்கள் இரண்டில் ஒன்று, துருக்கியக் கடற்படைத் தலைவர் பிரீஸ் என்பவர், கி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு படத்தைப் பார்த்துத் தான் வரைந்ததாக கூறும் ஒரு படமாகும். உலகப்படத்தில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா உள்ள வடகோளத்திற்குச் சமமாக தென்கோளத்திலும் ஒரு பெரிய நிலப்பரப்பு இருப்பதாகப் பண்டைய அறிஞர்கள் நம்பினர். அது ஆதாரமுள்ள செய்தி அடிப்படையிலா, அல்லது தெரியவராத தென்கண்ட ம் (Tera Incognita Australis) என்னும் கற்பனையிலிருந்தா? பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மாலுமி குக் கண்டு பிடிப்புகளுக்கு முன்னர் நிலப்படங்கள் வரைந்தவர்கள் தென்கோளத்தில் 18கோடி சதுர கிமீ. பரப்புள்ள மாபெருங்கண்டம் (உண்மையில் அன்டார்டிகா 130கோடி. சதுரகி.மீ. தான்; ஆஸ்திரேலியா 77 இலட்சம் சதுர கிமீ தான்!) இருந்ததாக கற்பனை செய்து வந்தனர். ஆசியாக் கண்டத்தின் தென் பகுதியைவிட அது பெரியது; 5 கோடி மக்கள் உள்ளது என்றெல்லாம் ஓடியது அவர்கள் கற்பனை. அமெரிக்கர்கள் சொன்ன இரண்டாவது நிலப்படம் ஓரோன் டியஸ் பினிலஸ் வரைந்தது. அதில் அன்டார்டிகாவில் மலைகள், ஆறுகளைக் குறித்துள்ளார். அவற்றைப்பற்றி நாம் இக்காலத்தில் தான் தெரிந்துள்ளோம். பதினாறாம் நூற்றாண்டிலேயே அவர் சரியாகக் கற்பனை செய்யமுடிந்தது தற்செயலாக அமைந்தது தானா? பிரிஸ், பினிலஸ் ஆகியோர் ஒரே பழைய ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டனரோ? எகிப்து, அரேபிய, இந்திய மாலுமிகள் கடற்செலவில் கண்டுபிடித்த மிகப் பழைய ஆதாரங் களின் ஒன்றின் அடிப்படையில் அவ்விருவர் பயன்படுத்திய பழைய ஆதாரம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பர் சிலர். அன்டார்டிகாவை மையமாகக் கொண்டு தொல் நாகரிகம் ஒன்று இருந்ததா? அல்லது வேறு கோளிலிருந்து பூமிக்கு பல்லாயிரமாண்டுகளுக்கு முன் வந்தவர்கள் வரைந்த படங்களின் அடிப்படையில் அவ்விருவர் படங்களும் அமைந்தனவா? அவ்விருவர் படங்களில் காணும் அன்டார்டிகா எல்லைகளை ஒன்றுபோல் இருப்பதாக விவரிப்பது தவறாகவும் இருக்கலாம் என்று சோவியத் நிலவியலாளர் கருதுகின்றனர். அது சரியா? அந்த இரண்டு பழைய நிலப்படங்களின் புதிர் விடுவிக்கப்பட வேண்டும்; அதுபோலவே ஞாலத்தின் அமைப்பு, மனிதன் தோற்றம் பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் வளரும் பொழுதுதான் வேறு பல புதிர்களும் விடுபட இயலும். அவற்றுள் இன்னொன்று, ஐரோப்பிய இடைக்கால நிலப்படங்களில் அட்லாண்டிக் கடலில் இன்று இல்லாத தீவுகள் பல இருப்பது போல காட்டப்பட்டுள்ளது ஆகும். (காந்திரதாவ் நூலின் மூன்றாம் பகுதி (பக்கங்கள் 203 - 267) முழுவதும் அட்லான்டிக் மாக்கடற் புதிர்கள் பற்றியதாகும். அப் பகுதி தமிழாக்கப்படவில்லை ). முன்னுரைக்கான ஆதார நூற்பட்டியல் Allchin, Bridget and Raymond (1988) THE BIRTH OF CIVILISATION IN INDIA AND PAKISTAN: Cambridge Uty Press Arasendiran, K. (19971 2000) Ulagam Paraviya Tamilin Var - Kal (Fourvolumes) Onriya Tamilar Tholamail; Australiya Aruli, P (1985) Moliyiyal Uraikal (5 Vols) Arivan Pathipagam, Tamilur, Puducheri. Caldwell, Rev Robert (1875). A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN OR SOUTH INDIAN FAMILY OF LANGUAGES;II Edn London (I Edn 1856) Carstairs - McCarthy, Andrews (2001) The origins of language at pp 1- 18 of Mark Aronoff and another THE HANDBOOK OF LINGUISTICS Blachwell; London. Cavalli - sforza, L.Lucas, Paolo Menozzi and Alberto Piazzo (1994). THE HISTORY AND GEOGRPHY OF HUMAN GENES; Princeton University Press; New Jersey Cirrampalam, Ci.Ka (1999 Revised) : Pandaya Tamilagam; Kumaran ; Chennai – 26 Crystal, David (1997) The Cambridge Encyclo paedia of Linguistics; see section 49: The origins of language (pp 290-3) Dani, A.H; M. Hohen and others (Eds) (1996) HISTORY OF HUMANITY: vol II : FROM THE III MILLENNIUM TO THE 7th c. B.C; Routledge / UNESCO (see pp. 246 - 265 : The Indus Valley (3000 - 1000 BC) by B. K. Thapar and M. Rafiq Mugal) De Laet, S. J and Others (Eds) (1994) HISTORY OF HUMANITY: vol I:Prehistory;Routledge / UNESCO Devaneyan, G (1966) THE PRIMARY CLASSICAL LANGUAGE OF THE WORLD; Katpadi (For complete list of his works see Ramanathan, 2003) Dixon, R.M.W (1980) THE LANGUAGES OF AUSTRALIA; Cambridge Uty Press Dixon, R.M.W (1997) THE RISE AND FALL OF LANGUAGES Cambridge Uty Press Ehrenfels, U. R.(1952). ‘Ancient South India and her cultural contacts.'JOURNAL OF ANNAMALAI UNIVERSITY, 17 (1952) Fairservis, Walter .A (1971) THE ROOTS OF ANCIENT, INDIA Flemming, N.C. (2004). Submarine prehistoric archaeology of the Indian Continental shelf: A potential resource. CURRENT SCIENCE 86 - 9 PP 1225 - 1230 101h May 2004. Gnanaprakasar, S. (1929) The origin of language, a new theory THE MADRAS CHRISTIAN COLLEGE MAGAZINE - IX-4. Gnanaprakasar, S (1938-48) AN ETYMOLOGICAL AND COMPARATIVE LEXICAN OF THE TAMIL LANGUAGE ;Jaffna. Gnanaprakasar, S (1953) Linguistic evidence for the common origin of the Dravidians and Indo - Europeans ; TAMIL CULTURE II-1. Greenberg, Joseph H: INDO - EUROPEAN AND ITS CLOSEST RELATIVES - THE EURASIATIC LANGUAGE FAMILY : Vol I - Grammer and II- Lexicon Stanford University Press;Califomia. Hakola, H.P.A (2000): 1000 DURALJAN ETYMA - AN EXTENDED STUDY IN LEXICAL SIMILARITIES IN THE MAJOR AGGLUTINA. TIVE LANGUAGES; Kuopio, Finland. Hakola, H.P.A and Hodijat Assadian (2003) SUMERIAN AND PROTODURALJAN: Kuopio, Finland Hegdcus, Iren;; etal (1997):Indo - European, Nostratic and beyond (Fest schrift for Vitaly V. Shvoroshkin) Washington; Institute for the study of man Heras, Rev H. (1953): Studies in Proto - Indo -Mediterranean culture: Bombay Jaiswal, Suvira (1974) Studies in the social structure of the early Tamils. in INDIAN SOCIETY: HISTORICAL PROBINGS IN MEMORY OF D.D.KOSAMBI;PPH, New Delhi Jeeva, Purna Chandra (2004) CINTU VELIYIL MUNTU TAMIL, Taiyal Patippakam, Ponneri Krishnamurti, Bhadriraju (2003):THE DRAVIDIAN LANGUAGES ;Cambridge University Press;pp xxvii; 545 Lahovary, N(1963) :Dravidian origins and the West; Madras; Orient Longmans Levitt, Stephan Hillyer (1998): Is there a genctic relationship between IndoEuropean and Dravidian? THE JOURNAL OF INDO-EUROPEAN STUDIES 26;pp 131 - 159 Levitt, (2000) Some more possible relationships between Indo-European and Dravidian; THE JOURNAL OF INDO - EUROPEAN STUDIES ;28pp 407-438 Madhivanan, R. (1995) Indus script - Dravidian; Madras; Tamil CanrorPeravai (1995) Indus script among Dravidian Speakers;Madras Mahadevan, (1977). THE INDUS SCRIPT, TEXTS, CONCORDANCE AND TABLES;; ASI, New Delhi Mallory, J. P. (1996); The Indo - European Phenomenon: Linguistics and Archaelogy (at pp 80-91 of Dani. A.H and others :HISTORY OF HUMANITY: vol II : FROM THE III MILLENNIUM TO THE 7th c. B.C; Marr, J.R. (1975) 'The early Dravidians' in A CULTURAL HISTORY OF INDIA; Ed. A.L. Basham Masica, Colin P (2000) article in THE YEAR BOOK OF SOUTH ASIAN LANGUAGES AND LINGUISTICS, 2001;; New Delhi: Sage Publications Natana Kasinathan (2004): Date of early Tamil epigraphs, in JOURNAL OF TAMIL STUDIES;IITS; June 2004. Nichols, Johanna (1998) paper in THE ORIGIN AND DIVERSIFICATION OF LANGUAGE Ed by Nina G Jablonski, California Academy of Sciences Nilakanta Sastri, K, A. (1972) SANGAM LITERATURE - ITS CULTS AND CULTURE; Madras Nilakanta Sastri, K.A. (1974) LIFE AND CULTURE OF THE INDIAN PEOPLE - AHISTORICAL SURVEY; II Edn; Allied publisher : New Delhi Nilakanta Sastri, K.A. (1976 IV Edn): A HISTORY OF SOUTH INDIA Oxford Uty press Parpola, Asko (1994) DECIPHERING THE INDUS SCRIPT; Cambridge Uty Press Possehl, Gregory (2002). THE INDUS CIVILISATION - A CONTEMPORARY PERSPECTIVE;; Altamira Press; Maryland USA (2003 reprint by Dn of sage Publications; New Delhi-17) Prichard, James Cowles (1847); Researches into physical history of mankind, world civilisation, races, tribes and cultures; - Vol V Oceania and America;Londen; Sherwood, Gilbert and Piper Rajan, K. (2004) TOLLIYAL NOKKIL TAMILAKAM; Intruational Institute of Tamil Studies Chennai Ramachandran, K. (2004) ULAGA MOLIKALIL TAMIL C-CORKAL;; Chennai; SISSW Publishing Society Ramachandra Dikshitar, V.R.(1947) THE ORIGIN AND SPREAD OF THE TAMILS Ramanathan, P. (1984) : Astraliappalankudimakkal molikalum Tamilum; CENTAMIL CELVI, Madras, May 1984. (1991):Diravidar Uravumurai ; Tamil Polil; Thanjavur; May - June 1991 (1998) A new Account of the History and culture of the Tamils;Sissw (1999):Cintu velittol Tamila Nagarikam; Sissw; Chennai (2003) Direction of movement of Dravidian speakers in prehistoric times; DRAVIDIAN STUDIES 1-3 April-June 2003 (2004) Nostratics, the light from Tamil aecording to Devanayan Sissw Stein, Burton (1998) A HISTORY OF INDIA;Blackwell Oxford (2001 reprint by OUP India) Subrahmanian, N (1997) TAMIL SOCIAL HISTORY ; Vol I Institute of Asian Studies; Chennai 119 Swisher III. Carl C and two others (2000) JAVA MAN - how two geologists' dramatic discoveries changed our understanding of the evolutionarypath of Modern Humans; Scribner USA Sykes, Bryan. (1999) THE HUMAN INHERITANCE: Genes, Language and Evolution; O.U.P see pp 1-32; Colin Renfrew; Reflections on the Archaelogy of Linguistic diversity. Thaninayagam, Xavier. S (1953) NATURE IN ANCIENT TAMIL POETRY Thirunavukkarasu, Ka. Tha (1975) 'Inamarapu' at pp 51-136 of TAMIL NATTU VARALARU - TOLPALANKALAM;Govt of TamilNadu Trautmann, Thomas R. (1981) DRAVIDIAN. KINSHIP ;Cambridge Uty Press Zvelebil, Kamil V (1972) The descent of Dravidians. INTERNATIONAL JOURNAL OF DRAVIDIAN LINGUSTICS; Thiruvananthapuram;Kerala vol 2 pp 57-63 (1990) DRAVIDIAN LANGUAGES - AN INTRODUCTION Pondicherry Institute of Linguistics and Culture. இந்நூலின் முன்னுரையில் குறித்தவற்றுள் முதன்மையான செய்தி களை விளக்கும் படங்கள் நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.