பதினெண்கீழ்க்கணக்கு 3 14. பழமொழி நானூறு 15. சிறுபஞ்சமூலம் 16. கைந்நிலை 17. முதுமொழிக்காஞ்சி 18. ஏலாதி மாணவர் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பதினெண்கீழ்க்கணக்கு - 3 ஆசிரியர் : பழைய உரையாசிரியர்கள் பதிப்பாளர் : இ. தமிழமுது முதல் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 328 = 352 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 220/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017 வெளியீடு மாணவர் பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை பதினெண்கீழ்க் கணக்கில் உள்ள பல நூல்கள் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவி தமிழ் வளர்த்த காலத்தில் எழுதியவை என்று தமிழ்ச்சான்றோர் குறிப்பிடுவர். கணக்கு என்ற சொல்லுக்கு நூல் என்று பொருள். கீழ் என்பது பாடலின் குறுகிய அளவைக் குறிப்ப தாகும். நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு என்பது பழம்பாடல். பதினெட்டு நூல்களின் பெயர்கள் 1. நாலடி - நாலடியார் 2. நான்மணிக்கடிகை 3. இனியவை நாற்பது, 4. இன்னா நாற்பது, 5. கார் நாற்பது, 6. களவழி நாற்பது 7. திணைமொழி ஐம்பது 8. ஐந்திணை எழுபது, 9. ஐந்திணை ஐம்பது, 10. திணைமாலை நூற்றைம்பது iஎ பதினெண்கீழ்க்கணக்கு - 1 11. முப்பால் - திருக்குறள் 12. கடுகம் - திரிகடுகம் 13. கோவை - ஆசாரக் கோவை 14. பழமொழி - பழமொழி நானூறு 15. மாமூலம் - சிறுபஞ்ச மூலம் 16. காஞ்சி - முதுமொழிக் காஞ்சி 17. ஏலாதி - ஏலாதி 18. கைந்நிலை - கைந்நிலை ஆகிய பதினெட்டு நூல்களாம். திருக்குறள், நாலடியார் இரண்டும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் கூறும் அறநூல்களாகும். நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியன ஒன்பதும் நீதி நூல்களாகும். கார் நாற்பது, திணைமொழிஐம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலைநூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறும் அகப்பொருள் நூல்களாகும். களவழி நாற்பது ஒன்று மட்டும் போர்க்களக் காட்சியைக் கூறும் புறப்பொருள் நூலாகும். பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மக்கள் வாழ்வை வளப்படுத்துவன. இளமையும் - அழகும், செல்வமும் - செல்வாக்கும் பொன்னும் - பொருளும் நிலையற்றது. கல்வி ஒன்றே நிலையானது என்பது இந்நூல்கள் வலியுறுத்திக் கூறும் அரும்பெரும் செய்திகளாகும். தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுத்து உலகத் தமிழினத்திற்கு வாரி வழங்கும் முதுபெரும் தமிழாசான். சங்கச் சான்றோர்கள் வரிசையில் வைத்து எண்ணத்தக்க சொல்லாக்கச் செல்வர், குறளாய அறிஞர். முதுமுனைவர் வணக்கத்துக்குரிய ஐயா இளங்குமரனார் அவர்கள் இவ்வருந்தமிழ்க் மீட்புப் கருவூலத்திற்கு மிகச் சிறந்த நூலாய்வுரை எழுதி எம் தமிழ் பணிக்கு வலிமைச் சேர்த்துள்ளார். இப்பெருந்தகையின் உதவிக்கு என்றும் நன்றியுடையேன். புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடி யெடுத்து வெளியிட்டுத் தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்பகம் தனி முத்திரைப் பதித்து வருவதை தமிழுலகம் நன்கு அறியும் தமிழர் இல்லந் தொறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க அருந்தமிழ்ப் பெட்டக மாம். பதினெண்கீழ்க் கணக்கு நூல்களைத் தமிழ் உலகிற்கு பிழை யற்ற செம்பதிப்பாக வழங்கி யுள்ளோம். முன்னோர்கள் வைப்பாக விட்டுச் சென்ற செந்தமிழ்ச் செல்வங்களையெல்லாம் தமிழ்க் காப்புப் பணிக்கு மறுபதிப்பாக வெளியிட்டு வருகிறோம். தமிழுலகம் கை கொடுத்து உதவும் என்று நம்புகிறோம். “ கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக்கிறாச்சி செய்க” எனும் பாவேந்தர் வரிகளை நினைவில்கொள்வோம். -பதிப்பாசிரியர் மேற்கணக்கும் கீழ்க்கணக்கும் பாட்டியல் நூல்களில் பழமையானது பன்னிரு பாட்டியல், அப்பாட்டியலில், “ அகவலும் கலிப்பாவும் பரிபாடலும் பதிற்றைந் தாதி பதிற்றைம்ப தீறாக மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக் கெனவும் , வெள்ளைத் தொகையும் அவ்வகை எண்பெறின் எள்ளறு கீழ்க்கணக் கெனவும் கொளலே” என்பதொரு நூற்பா. “ மேற்கணக்கு நூல்களின் யாப்பு, அகவல் கலி பரிபா என்பன” என்றும், “ அப்பாடல்கள் எண்ணிக்கை ஐம்பது தொட்டு ஐந்நூறு வரை யுடையன” என்றும், இந்நூற்பா மேற்கணக்கு நூல்களைப் பற்றி உரைக்கின்றது. மேலும், “ வெண்பாக்கள் ஐம்பது முதல் ஐந்நூறு வரை கொண்டது எனின் அது கீழ்க் கணக்கு ஆகும்” என்கிறது. கீழ்க்கணக்கிற்கு அமையும் மற்றோர் இலக்கணம். “ அடிநிமிர்வு இல்லாச் செய்யுள் தொகுதி” என்கிறது. பஃறொடை வெண்பா, கலிவெண்பா என்பவை அடி நிமிர்வுடையவை. அத்தகைய அடிப்பெருக்கம் இல்லா வெண்பாவே கீழ்க்கணக்குக்கு உரியது என்கிறது. மேலும் ஓர் இலக்கணமாக, “ அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வத் திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்” என்கிறது. பன்னிரு பாட்டியல் சொல்லும் இவ் இலக்கணம் கொண்டு மேற்கணக்கும் கீழ்க்கணக்கும் தொகுக்கப்பட்டவை அல்ல. மேற்கணக்கு கீழ்க்கணக்கு என வகுக்கப்பட்ட பின்னர், அத் தொகைகளைக் கொண்டு நூற்பா ஆக்கப்பட்டதே பாட்டியலாம். என்னை எனின், ”எள்ளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுவது போல இலக்கியத்தில் இருந்து எடுக்கப்படுவது இலக்கணம்” ஆதலால் என்க. ஐம்பது முதல் ஐந்நூறு பாடல்கள் என்னும் வரையறைக்குள் மேற்கணக்கு அடங்குவது இல்லை. ஐம்பது பாடல் நூல் எதுவும் அதில் இல்லை. பத்துப்பாட்டு என்பது பத்துப்பாடல்களே; பத்தும் தனித்தனி நூல்களே. ஆதலால், அத்தொகை நூல் ‘தொகை’யே யாம். ஐந்நூறு பாடல் என்பதற்கு ஐங்குறுநூறு சான்றாகும். கீழ்க்கணக்கில் ஐம்பது பாடல்களுக்குக் குறைந்தவை கார்நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்பனவாம். இனிமேல் எல்லை, கீழ்க்கணக்கில் ஒன்றாக அமைக்கப்பட்ட திருக்குறளொடு பொருந்தாது. ஆயிரமும் தாண்டிய மூன்று நூற்று மூன்று பத்துக் குறள் களையுடையது. ஆதலால், இத்தொகைப் படுத்தினார் கருத்தும் அப்பாட்டியலார் கருத்தும் ஒத்துச் செல்லவில்லை. “பாட்டியலார் கண்ட தொகை நூல் வேறு” எனவும் சான்றில்லை. ஆனால், அகவல், கலி, பரிபா, வெண்பா என்னும் யாப்பிலோ, அடி நிமிர்ந்தது. அடிநிமிர் வல்லது என்னும் அடி அளவிலோ வேறுபாடு இல்லை. தொல்காப்பியம், “சின்மென் மொழியால் தாய பனுவலின் அம்மை தானே அடிநிமிர் பின்றே” என, வனப்புகளுள் ஒன்றாய் ‘அம்மை’ இலக்கணமாகக் கூறுகிறது. அம்மை எனும் வனப்பு (நூலழகு) சில சொற்களால், அச்சொற்களும் மெல்லிய இனிய சொற்களால் நடையிடுவதாய் அடிப்பெருக்கம் இல்லாததாய் அமையும் என்கிறார். பன்னிரு பாட்டியலார், ‘அடிநிமிர் பின்றே’ என்பதை, ‘ அடி நிமிர்பில்லாச் செய்யுள்’ என்று அமைத்துக் கொண்டார். ‘சின்மென் மொழி’ என்பதை எடுத்துக் கொண்டார் அல்லர். ‘கணக்கு’ என்பது ‘நூல்’ என்னும் பொருளது ஆதல், “ கணக்கினை, முற்றப் பகலும் முனியாதினி தோதிக் கற்றலிற் கேட்டலே நன்று” என்னும் பழமொழியால் அறியலாம்(5). “ கணக்காயர் இல்லாத ஊர்” ஊரன்று என்பர். கணக்காயர் நூலாய்வார், நூல் கற்பிப்பார். ‘கணக்காயனார்’ என்பார் மதுரையில் இருந்த ஓர் ஆசிரியர். அவர் மகனார் நக்கீரனார். அதனால், “ கணக்காயனார் மகனார் நக்கீரனார்“ எனப்பட்டார். கணக்கு, நூற்பொருள் தருதலால், காலப் பழமை, காலப் பின்மை, நூலளவு, அடியளவு என்பவை கொண்டு மேற்கணக்கு,கீழ்க் கணக்கு எனப்பகுக்கப்பட்டன. பாட்டு தொகையின் காலப் பழமை “இத்தொகை செய்தான் பூரிக்கோ” (குறுந்.) இத்தொகை செய்தான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை (ஐங்குறு.) என்பவற்றால் புலப்படும். ‘பாட்டு தொகை’ என்று வழங்கப்பட்டு, பின்னர்ப், பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்று சொல்லப்பட்டு, அதன் பின்னர் ‘மேற்கணக்கு’ என்றாயது. அத்தொகை நூல்களில் சிக்கலோ,மயக்கமோ இல்லை. கீழ்க்கணக்கு நூல்களில், “இன்னிலையா, கைந்நிலையா” “எந்த நூல் கீழ்க்கணக்கில் சேர்க்கப்பட்டது,” என்னும் மயக்கமும் தருக்கமும் உண்டாயின. அந்நூல் ‘கைந்நிலை’ என்பதேயாம். கீழ்க்கணக்கு நூல்கள்: “ நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைகுப் பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவும் கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு” எனக் கூறப்பட்டன. நாலடி ஒருவர் ஆக்கிய நூலன்று; பலர் பாடிய பாடல் தொகுதி. மற்றவை, நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது (நானாற்பது), ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது (நாலைந்திணை), திருக்குறள் (முப்பால்), திரிகடுகம் (கடுகம்), ஆசாரக்கோவை (கோவை), பழமொழி, சிறுபஞ்ச மூலம் (மாமூலம்), முதுமொழிக்காஞ்சி (காஞ்சி), ஏலாதி, கைந்நிலை என்பன. கீழ்க்கணக்கு நூல்களின் தொகையாக்க அடிப்படை இரண்டு: ஒன்று, வெண்பா யாப்பு; மற்றொன்று, அடிச்சிறுமை. வெண்பா யாப்பு இல்லாத ஒரு நூல், முதுமொழிக் காஞ்சி. அஃது ஈரடியாய் அமைந்து, ஓரடியாய் நடையிடுவது. “ ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை” என்பது முதற்பாடல். பின்னர் வரும 99 பாடல்களும் அவ்வோரடியை முன்வைத்து நடையிடுகின்றன. ஆதலால் ஓரடியாய் நடையிடுவதைப் பாடல் எனலாமோ எனின், எனலாம் என்பது தொல்காப்பியம். அது, “ அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே” (1293) என்பது. முதுமொழிக் காஞ்சி நீங்கிய மற்றைப் பதினேழு நூல்களும் வெண்பா யாப்பினவேயாம். இரா. இளங்குமரன் பழமொழி நானூறு வழிவழியாக மக்கள் வாய்மொழி இலக்கியமாக விளங்குவது பழமொழியாகும். வாய்மொழி வழக்காம் பழமொழிகள் நானூற்றைத் திரட்டி, வெண்பா யாப்பால் பாடி எடுத்துக் கொடையாக வழங்கிய பெருமையர் முன்றுறையனார் ஆவர். திருமருதமுன்றுறை, கொற்கை முன்றுறை என முன்றுறைகள் உண்டு. அம் முன்றுறை ஒன்றை ஆட்சி புரிந்த மன்னர் இதனை என்பது எண்ணத்தக்கது. இவர் சமயம் சமணம் என்பது, “பிண்டியின் நீழல் பெருமான்’ என வரும். பாயிரத்தாலும், “அரிதவித்து ஆசின்றுணர்ந்தவன்’ எனவரும் வணக்கத்தாலும், ‘பெரியதன் ஆவி பெரிது’ என்பது முதலாம் கொள்கைகளாலும் புலப்படும். பழமொழியின் பழம் பெயர் ‘முதுமொழி’ என்பதாம். முதுமொழியின் இலக்கணத்தை ஆசிரியர் தொல்காப்பியனார், ‘ நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும் ஒண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப.” என்கிறார். ‘என்ப’ என்றதால் அவர்க்கு முந்தைக் காலந்தொட்டே வழங்கிய வழக்கு என்பதை உரைத்தார் வாய்மொழியைத் தம் எழுத்தால் வாய்மை மொழியாக்கி விட்டாரே அரையனார்! அதனால் மன்னா உலகத்து மன்னுதலாகி விட்டார் அல்லவோ! சில அரிய பழமொழிகள் அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு அயிரை யிட்டு வரால் வாங்குபவர் அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது ஆயிரம் காக்கைக்கு ஒரு கல் இல்லையே தாம்தர வாரா நோய் இணைதென்று பாம்பிகழ்வார் இல் உண்டஇல் தீயிடுமாறு உலகினுள் இல்லதற் கில்லை பெயர் கடையடைத்து வைத்துப் புடைத் தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும் கெட்டார்க்கு நட்டாரோ இல் சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு திரையவித்து ஆடார் கடல். பூசை எலி இல்வழிப் பெறாபால் மாக்காய்த்துத் தன்மேல் ருணில் கொள்ளுமாறு மூக்கற்றதற்கில் பழி விளக்கெலி கொண்டு தனக்கு நோய் செய்துவிடல் வேண்டாமை வேண்டிய தெல்லாம் தரும். புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே பாம்பறியும் பாம்பின கால் இப் பொதுமக்கள், கல்லார் மட்டுமல்லர்; பொதுமை அறிவு இல்லாக் கற்றோரும் தாம்! “அறிவினால் மாட்சியொன் றில்லா ஒருவன் பிறிதினால் மாண்ட தெவனாம்! பொறியின் மணிபொன்னும் சாந்தமும் மாலையுமற றின்ன அணியெல்லாம் ஆடையின் பின்” ஒன்பான் மணி பூண்டாரும் ஒரு முழத்துணி இன்றிப் போக முடியுமா? “ தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார் மாற்றத்தால் செற்றார் எனவலியார் - ஆட்டியக்கால் ஆற்றா தவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்து விடும்” வெறிப் பிறவியர் உணர்வரா? “ தந்தீமை இல்லாதார் நட்டவர் தீமையையும் எந்தீமை என்றே உணர்பதாம் - அந்தண் பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப ஒருவர் பொறையிருவர் நட்பு” இத்தன்மை இருப்பின் நட்புக்கு இணை நட்புத்தானே! “ தம்மால் முடிவதனைத் தாமாற்றிச் செய்கல்லார் பின்னை ஒருவரால் செய்வித்தும் என்றிருத்தல் சென்னீர் அருவி மலைநாட! பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் நீ” தமக்கு வேண்டுவதாமே செய்வார், மருத்துவர் கட்டளையால் நடக்க, உடற்பயிற்சி செய்ய வேண்டி வருமா? பழமொழிகள் பட்டறிவு மொழிகள்! பட்டழியாமல் காக்க வாய்த்த பட்டொளி மொழிகள்! சிறுபஞ்ச மூலம் மூலமாவது வேர்; சிறிய ஐந்து வேர்கள் எனப்படுவன, கண்டங்கத்தரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சி வேர், பெருமல்லிவேர் என்பன. இவை உடல்நோய் தீர்க்கும் மருந்துகள். இவற்றைப் போல் கற்பார் உயிர்க்கு நலமாம் கருத்துகள் ஐந்து ஐந்தனைக் கொண்ட பாடல்களையுடைய நூலுக்குப் பெயராயிற்று. இதனை இயற்றியவர், மாக்காயன் மாணவராகிய காரியாசான் என்பார். மாக்காயனார், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் எனப் படுவார். இவர்தம் மாணவருள் மற்றொருவர், ஏலாதி, திணை மாலை நூற்றைம்பது என்னும் நூல்களை இயற்றிய கணிமேதையார் என்பார். ஆதலால் காரியாசானும் கணிமேதையாரும் ஒருசாலை மாணவராம். காரியாசான் அருக சமயம் சார்ந்தவர் என்பது கடவுள் வாழ்த்துப் பாடலால் புலப்படும். 102 பாடல்களையுடைய இந்நூலில் ஐந்து பாடல்கள் கிடைத்தில. நூல் முதற் பாடலில், “உறுபஞ்சமூலம் நிர் மாரி போன்றது, சிறுபஞ்சமூலம்” என நூற் பெயரைச் சுட்டுகிறார். விரும்புவவெல்லாம் உண்ணாமல் நாவடக்கமுடையவனாய் நலம் பேணி உண்பவனாய் ஒருவன் இருந்தால் அவனுக்கு நோய் வாராது என்பதைக், “காத்துண்பான் காணான் பிணி” என்கிறார் (8) பிறர் செய்த பிழையைப் பொறுத்தல், பிறர் செய்த தீமையை மறத்தல், பகையை மறத்தல், நற்செல்வரும் நற்பண்பரும் நகையாதிருக்க வாழ்தல் நலம் என்பதை, “ பிழைத்தல் பொறுத்தல் பெருமை; சிறுமை இழைத்ததீங் கெண்ணி யிருத்தல் - இழைத்த பகைகெட வாழ்வதும் பல்பொருளார் நல்லார் நகை கெட வாழ்வதும் நன்று” என்கிறார் (16) நூலறிவோடு கூடிய சொல்லின் வனப்பே வனப்பு என்கிறார். “ மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும் உகிர்வனப்பும் காதின்வனப்பும் - செயிர் தீர்ந்த பல்லின் வனப்பும் வனப்பல்ல; நூற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு” (37) என்பது அது. மயிர் வனப்பு முதலாகச் சொல்வன எல்லாம் மகளிரை நோக்கியவை அல்லவோ! ஆதலால் பெண்கல்வி கட்டாயம் என்பதை இவர் வலியுறுத்துகிறார் எனலாம் அல்லவா! இவர் ஒரு சாலை மாணவராம் கணிமேதையார் பாடிய “இடை வனப்பும்” என்னும் பாடலும் இத்தகைத் தாதல் ஒப்பு நோக்கத் தக்கதாம் (ஏலாதி. 74) மகளிர் சிறப்பு என்பதை, “ வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம் வெருவாமை வீழ்ந்துவிருந் தோம்பித் - திருவாக்கும் தெய்வதையும் எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு செய்வதே பெண்டிர் சிறப்பு” என்கிறார் (43) “ மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வனத்தக்காள் வாழ்க்கைத் துணை” என்னும் குறளை (51) நினைவூட்டுகிறது. “ வார்சான்ற கூந்தல் வரம்புயர வைகலும் நீர்சான் றுயரவே நெல்லுயரும் - சீர்சான்ற தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் கோவுயரும் ஓவா துரைக்கும் உலகு” என்னும் மூலப் பாடல் (46) ஒளவையாரின் “வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோலுயரும்” என்றதை நினைவூட்டுகிறது. ஒப்புரவுக் கடனாற்றலே வீடுபேறு என்பதை, “ குளந் தொட்டுக் கோடு பதித்து வழிசீந்து உளந் தொட் டுழுவய லாக்கி - வளந்தொட்டுப் பாகு படுங்கிணற்றோ டென்றிவ்வைம் பாற்படுத்தான் ஏகும் சுவர்க்கத் தினிது” என்பது அது (66) இன்று சாவப் பால்கறக்கும் கொடுமையரும் உளராதல் கண்டு, “கன்றுசா வப்பால் கறவாமை” யைச் சுட்டுகிறார் (47) “பூவாது காய்க்கு மரம்” “பூத்தாலும் காயா மரம்” இரண்டையும் அடுத்தடுத்து வைத்து (22,23) அருமையுறக் காட்டுகிறார். நான்மணிக்கடிகையின் 102ஆம் பாடலும், சிறுபஞ்சமூலத்தின் 31ஆம் பாடலும் “ஒருவன் அறிவானும்” என்பதாகவே உள. அமிழ்து என்பதை ‘அமிர்து’ என்றும் (4) சிலந்தி என்பதைச் ‘சிலம்பி’ என்றும் (11) முழுத்தம் என்பதை ‘மூர்த்தம்’ என்றும் (44) இவர் வழங்குகிறார். கலந்து கொள்ளுதலைக் ‘கழுமல்’ என்கிறார் (21) முதுமொழிக் காஞ்சி முதுமொழிக் காஞ்சியை இயற்றியவர் கூடலூர் கிழார் என்பார். அவர் மதுரையில் வாழ்ந்தவர் ஆதலால், மதுரைக் கூடலூர் கிழார் எனப்பட்டார். சங்கப் புலவருள் ஒருவர் கூடலூர் கிழார்; ஐங்குறுநூற்றைத் தொகுத்தாரும் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையார் காலத்தாரும் ஆகிய கூடலூர் கிழாரின் இவர் வேறானவர். அவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் எனப்படுவார். காஞ்சி என்பது புறத்திணை ஏழனுள் ஒன்று. “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” என்பது காஞ்சியின் இலக்கணம். “ நில்லா தவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை” என்பது திருக்குறள். நிலையாமை கூறும் இது, “ஒப்பாரிப் பாட்டா?” இல்லை! உலகியல் இது; ஆனால் நீ நிலைபெறலாம்; நீ நிலைபெற வேண்டின் நிலைத்தவை நிலையாதவை எவை என உணர்ந்து நிலைபெறச் செய்வன செய்து அழிவிலா வாழ்வு பெறுக என்பதாம். “ ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்” என்று கூறவில்லையா வள்ளுவம். வள்ளலார் சொல்ல வில்லையா சாவாக்கலை! மாங்குடி மருதனார் பாடினார் மதுரைக் காஞ்சி; காஞ்சி என்றே மெய்ப்பொருள் விளக்கப் பேறமைந்த ஊருண்டு! காஞ்சி மகளிர் அணிகளுள் ஒன்று. “ மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி” என்னும் புறப்பொருள் வெண்பாமாலை. “ பலர்புகழ் புலவர் பன்னின தெரியும் உலகியல் பொருள்முடி புணரக் கூறின்று” என்பது அதன் இலக்கணம். கீழ்க்கணக்கு எனப்பட்ட நூல்களுள் ஈரடியுடையதாய் ஓரடியில் நடக்கின்ற நூல் இஃதொன்றேயாம். எடுத்த எடுப்பிலேயே, ‘ ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை” என்கிறார். “கற்ற துடைமை காட்சியின் அறிப” (14) காட்சியாவது அறிவு. “தானோர் இன்புறல் தனிமையில் துவ்வாது” (40) தானோர் - தான் ஒருவன் மட்டுமே; துவ்வாது - அகலா வறுமை; “இசையிற் பெரியதோர் எச்சம் இல்லை” (58) இசை - புகழ்; எச்சம் - ஆக்கம். “பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய்” (69) நசை - விருப்பம்; முறை செயல் - அறமுறை செயல் “உண்டி வெய்யோர்க் குறுபிணி எளிது” (77) வெய்யோர் - விரும்பினோர் “சொற்செல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று” (87) சொல்வு - சொல்லுதல்; நல்கூர்ந்தன்று - பயனற்றது. அன்று - ஆம் என்னும் பொருளது. “இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்” (97) தண்டான் - தவிரான். ஆசிரியர் தொல்காப்பியர் கூறிய, ‘ நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும் ஒண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப” என்ற அருமைகள் அனைத்தும் இம் முதுமொழிக் காஞ்சிக்கும் உண்டு என்பது விளக்கமாமே. ஏலாதி ‘ஏலம்’ நறுமணம் மட்டுமா? அருமருந்தும் அல்லவா! ‘ஏலப்’ பெயரால் ஒரு நூல். ஏலம் இலவங்கம், சிறுநாவல் பூ, மிளகு, திப்பிலி, சுக்கு என்றும் ஆறன் கூட்டே ஏலாதி. ஏலாதி ஆறு பொருளாதலால் பாடல் தொறும் ஆறு பொருளைக் கொண்டு ஏலாதியின் நறுமணமும் அருமருந்துமாய் அமைந்து உடல்நலம் செய்யும்; உயிர் நலமும் ஆக்கும் என்பது நூலாசிரியர் நோக்காம். இதனை இயற்றினார் கணிமேதையார்; இவர்க்குக் கணிமேதாவியார் என்பது பெயருமாம். இவர் “தமிழாசிரியர் மகனார் மாக்காயனார் மாணாக்கர்” என்பதால் இவர் பிறப்பு வகையாலும் படிப்பு வகையாலும் மேம்பட்டார் என்பது விளங்கும். மற்றும் சிறு பஞ்ச மூலத்தின் ஆசிரியர் காரியாசான் என்பவர் இம்மாக்காயனார் மாணவர் ” என்பதால் இவர் பிறப்பு வகையாலும் படிப்பு வகை யாலும் மேம்பட்டார் என்பது விளங்கும். மற்றும் சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான் என்பவர் இம் மாக்காயனார் மாணவர் ஆதலால், கணிமேதையார் ஒரு சாலை மாணவராலும் சிறப் புற்றாராவர். ஏலாதி கடவுள் வாழ்த்து ஒன்றும், பாடல் என்பதும் கொண்ட அறநூலாம். அதன் சிறப்புப் பாயிரம், “இல்லறம் துறவறம் வீட்டு நெறி காட்டு நூல் ஏலாதி” என்கிறது. “ சாவ தெளிதரிது சான்றாண்மை; நல்லது மேவ லெனிதரிது மெய்போற்றல்; ஆவதன்கண் சேறல் எளிது நிலையரிது; தெள்ளியராய் வேறல் எளிதரிது சொல்” (39) ஆறை எட்டாக்கினார்; முரணை நான்காக்கினார்! ஏலாதி என்பவை ஆறு பொருள்கள் தாமே! முரண்கள் நான்கும் நயமிக்கவை அல்லவா! 15 சீர்களில் இவற்றை அடக்கிவிடுகிறார். சொற்பொருள் பின்வருநிலையணியை எளிது, அரிது என இரட்டையாக்குகிறார். உலையாமை உற்றதற் கோடி; உயிரை அலையாமை; ஐயப் படாமை;- நிலையாமை தீர்க்கும்வாய் தேர்ந்து, பசியுண்டி நீக்குவான்; நோக்கும்வாய் விண்ணின் உயர்வு (40) தலையாகு எதுகையில் பாடுகிறார். உலையாமை, அலையாமை, நிலையாமை, தீர்க்கும் வாய், நோக்கும் வாய். கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தம்கால் முடம்பட்டார் மூத்தார்காப் பில்லார்க் - குடம்பட்டு உடையராய் இல்லுள் ஊண் ஈத்துண்பார் மண்மேல் படையராய் வாழ்வார் பயின்று. (53) தலையாகு எதுகை அருமையாகத் தவழ்கிறது. இவர் வேறு படை திரட்டி வாழ வேண்டுமா? இவர் உதவி பெற்றாரே தம்மையே படையலாக்குவரே, நன்றியுடையர் என்றால். கடம் - கடன்; கைத்து - கைப்பொருள். எவர், வரலாறு எழுதத் தேடித் தேடி வருவாரைப் பெற்ற வாழ்வு? கல்விக் கொள்ளையரா? கல்வி வள்ளியரா? ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம் பேணொடும் எண்ணும் எழுந்திவை - மாணொடு கேட்டெழுதி ஓதிவாழ் வார்க் கீய்ந்தார் இம்மையான் வேட்டெழுத வாழ்வார் இயைந்து (63) கூறை - உடை; வேட்டெழுத - விரும்பி எழுத. இயற்கை தந்த உடற்கும் உயிர்க்கும் ஊதியமாம் கொடைகள் எவை? அவை உடற்பயிற்சியாய் உறு தொழிலாய் அமைந்த திறம் என்ன? எடுத்தல் முடக்கல் நிமிர்தல் நிலையே படுத்தலோ டோடல் பகரின் - அடுத்துயிர் ஆறு தொழிலென் வரைத்தார் உயர்ந்தோர் வேறு தொழிலாய் விரித்து. (69) பெண்ணின் வனப்பு எதில் உள்ளது? இடை, தோள், கட்டுடல், நடை, நாண், கழுத்து ஆகியவற்றிலா? இல்லை இல்லை! கல்வியின் வனப்பிலேதான் பெண்ணின் வனப்புள்ளது! கணிமேதை யார் நல்ல கணிமேதையார் மட்டுமல்லர்! நல்ல அணி மேதையார்! இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும் நடை வனப்பும் நாணின் வனப்பும் - புடைசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு (74) ஈடு - செல்வம், தோற்றம், புடைசால் - பக்கம் திரண்ட சுற்றுலாத் துறை, போக்குவரவுத் துறை, நால்வழிச் சாலை, வழியகத்து ஊணகம், உண்டுறை விடுதி என்பனவெல்லாம் பெருகிய காலம் இக்காலம்! கணிமேதையார் காலம் நோட்கோப்பு (கட்டுசோறு)க் காலம்! விருந்தோம்பல் காலம்! ஆயினும், வழிச் செல்வார் ‘வழிப்புரை’ கூறுகிறார். (51) வளம் என்பது செல்வம். ‘வள்’ என்பது வளம் என்கிறார். மேதையார் (50) வெயிற்பட்டு வியர்வை சொட்டப் பாடுபடுதலை ‘எல் உழந்து’ என்கிறார் (52). பிறரால் வெறுக்கப்பட்டவரைக் ‘கார்ப்பார்’ என ஆள்கிறார் (54) நல்ல சொற்செல்வர் மேதையார். கைந்நிலை கை - ஒழுக்கம். ‘கை கோள்’ என்பது ஒழுக்கத்தைக் கடைப் பிடித்தல். ‘கைக்கிளை’ என்பது களவின் தொடக்கநிலை. ஒழுக்கம் அரும்பும் நிலை. முதற்கண் ஒருவரிடைத் தோன்றி உடன் மற்ற வரிடமும் தோன்றி வளரும் இயற்கைக் காண்பு நிலை. இந்நூல் பற்றி இதனைப் பதிப்பித்த பேராசிரியர் அனந்த ராமையர் கூறும் செய்தியே இது பற்றி அறியும் வரலாறாம். (1931) இந்நூல் பிரதி ஒன்று எனக்குச் சிறிது காலத்திற்கு முன் கிடைத்தது. அது முதலிலும் சில பகுதியின்றியும், இருக்கும் செய்யுள் களிலும் சில பகுதி சிதைந்து பிழை விரவியும் இருந்தது. முன்பு வேறு சிலரிடத்தில் இருந்த இந்நூல் ஏட்டுப் பிரதிகளைப் பார்த்திருக்கிறேன். அவையும் இதனைப் போலவே முதலிலும் இடையிலும் சில ஏடின்றியும் சிதைந்து பிழைபட்டுமே இருந்தன. அதனைப் பதித்து முற்றுப் பெறுங் காலத்து, இராமநாதபுரம் சேதுசமஸ்தான வித்துவான் உ.வே.ரா. இராகவையங்கார் அவர்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் இந்நூற் பிரதி இருப்பதை அறிந்து கேட்டு வாங்கிப் பார்த்து அவ்வேட்டிலுள்ள படி பதிப்பித்தேன். என்கிறார். மேலும், பதிப்புரையில் இந்நூல் சங்க மருவிய பதினெண் கீழ்க் கணக்கிலுள்ள ஒன்று. அகப்பொருளையே விஷயமாகக் கொண்டுள்ளது. மாறோகத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங் காடனாரால் ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டாக ஐந்திணைக்கும் இயற்றப்பட்ட அறுபது வெண்பாக் களையுடையது. பண்டை உரையாசிரியர்களால் சிற்சில இடத்து மேற்கோளாகக் காட்டப் பெற்ற பெருமை வாய்ந்தது. என்றும் எழுதியுள்ளார். அப்பதிப்பின் பின் பண்டித வித்துவான் சங்குப் புலவர் எழுதிய விளக்கவுரையுடன் சைவ சித்தாந்த கழகப் பதிப்பாக 1961இல் வெளிவந்தது. மூலப்பதிப்பாக ‘மர்ரே’ பதிப்பும், பின்னே ‘நியூசெஞ்சுரி’ பதிப்பும் வந்தன. (1957; 1981) குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் திணை வரிசையில் பாடல்கள் அமைந்துள. “ பொன்னம் பசலையும் தீர்ந்தது பூங்கொடி தென்னவன் கொற்கைக் குருகிரிய - மன்னரை ஓடு புறங்கண்ட ஒண்தாரான் தேரிதோ கூட லணைய வரவு” என்பது இறுதிப்பாடல். இதில் புல்லங்காடரின் நாடு, ஊர்ச் சார்புகள் வெளிப்படுகின்றன. தலைவன் கேட்குமாறும் தக்கவகையில் செயல்படுமாறும் தோழி தலைவியினிடம் கூறுகிறாள். “ தாழை குருகீனும் தண்ணந் துறைவனை மாழை மா நோக்கின் மடமொழி - நூழை நுழையு மடமகன் யார்கொல் என் றன்னை புழையும் அடைத்தாள் கதவு” என்கிறாள். தாழையின் பூ, குருகுக் குஞ்செனத் தோற்றம் தரும். அது பொய்த் தோற்றம், அப்பொய்த் தோற்றம் வேண்டா; அன்னை புறக்கடை வாயிலையும் அடைத்துவிட்டாள்; இனிக் காண்டல் இயலாது; மணஞ் செய்தலே முறை என்கிறாள். நூழை - புறவாயில்; புழை - துளை. கதவுக்குள்ள திறவுத் துளையையும் அடைத்து விட்டாள் என்பதால் வலிய செறிப்பை உரைத்தாள். “ கழனி உழவர் கலியஞ்சி ஓடித் ‘தழெ’ன மதஎருமை தண்கயம் பாயும் பழன வயலூரன் பாண எம் முன்னர்ப் ‘பொழெ’னப் பொய் கூறா தொழி” இப்பாடலில் வரும் ‘தழ’ என, ‘பொழ’ என, எனவரும் ஒலிக்குறிப்புகள் ஆசிரியரின் கூர்ஞ் செவித்திறத்தைப் புலப்படுத்த வல்லன. ‘தழதழ’ ; ‘பொழ பொழ’ என வரும் ஒலிக் குறிப்பு இரட்டை ஒற்றையாய் நின்று சொல்வடிவுற்றன. நரகம் - நிரையம் என நல்வடிவு பெறுகிறது. (5) பொரு - பொருந்துப் பொருள் தருகிறது. (10) ‘குறுங்கலி’ குறிய ஓசைப் பொருள் தருகிறது. (21) அசதி, நகைப்புப் பொருள் தருகிறது.(55) பல்லி ஒலி (18) நெற்றிச் சுட்டி (39) என்பவை சுட்டப்படுகின்றன. பெற்றவளுக்குப் பிள்ளைப் பேறு நற்றுணையாதலை நவில்கின்றது. (41) நூலாசிரியர்கள் 1. திருக்குறள் - திருவள்ளுவர் 2. நாலடியார் - சமணமுனிவர்கள் 3. நாண்மணிக்கடிகை - விளம்பிநாகனார் 4. இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார் 5. இன்னா நாற்பது - கபிலர் 6. கார் நாற்பது - மதுரை - கண்ணங்கூத்தனார் 7. களவழி நாற்பது - பொய்கையார் 8. திரிகடுகம் - நல்லாதனார் 9. ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார் 10. பழமொழிநானூறு - முன்றுறையரையனார் 11. சிறுபஞ்சமூலம் - காரியாசான் 12. முதுமொழிக்காஞ்சி - கூடலூர் கிழார் 13. ஏலாதி - கணிமேதையார் 14. திணைமொழி ஐம்பது - கண்ணஞ்சேந்தனார் 15. ஐந்தினை ஐம்பது - பொறையனார் 16. ஐந்திணை எழுபது - மூவாதியார் 17. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதையார் 18. கைந்நிலை – புல்லங்காடனார் பொருளடக்கம் 1. பதிப்புரை ------------------------------------------------------ 2. மேற்கணக்கும் கீழ்க்கணக்கும் --------------------------- 3. நூலாசிரியர்கள் ----------------------------------------------- நூல் 11. பழமொழி நானூறு ----------------------------------------- 12. சிறுபஞ்ச மூலம் ---------------------------------------------- 13. இன்னிலை ----------------------------------------------------- 14. முதுமொழிக்காஞ்சி ---------------------------------------- 15. ஏலாதி ----------------------------------------------------------- பதினெண்கீழ்க்கணக்கு - 3 பழமொழி நானூறு ஆசிரியர் : மூன்றுறையரையனார் உரையாசிரியர் : புலியூர்க்கேசிகன் பழமொழி நானூறு தெளிவான உரையுடன் ------------ தற்சிறப்புப் பாயிரம் அசோக மரத்தின் நிழலிலே அமர்ந்து, அந்நாளிலே அறம் உரைத்த பெருமான் அருகதேவன். அவன் திருவடிகளைப் பணிந்து, தொன்மையான பழமொழிகளுள் நானூறு மட்டும் எடுத்துக் கொண்டு, நான்கு அடிகளையும் இனிமையாகச் செய்து; முன்றுறை அரையன், உலகிற்கு உபகாரமாக இந்த நூலை அமைத்தனன். இனிய பொருள் துறைகள் செறிந்த வெண்பாக்கள் இவை நானூறு ஆகும். பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப் பண்டைப் பழமொழி நானூறும்--கொண்டினிதா முன்றுறை மன்னவன், நான்கடியும் செய்தமைத்தான் இன்றுறை வெண்பா இவை. (பிண்டி-அசோகு, பண்டைப் பழமொழி - தொன்றுபடு பழமொழி எனச் சான்றோரால் சொல்லப்படுவது; நூலாசிரி யரே இதனைப் பாடினார்; அதனால், இது தற்சிறப்புப் பாயிரம் ஆயிற்று. ‘இவற்றை அனைவரும் “கற்று மனங் கொண்டு சிறந்து விளங்குக” என்பது’ ஆசிரியர் குறிப்பாகக் கூறுவது ஆகும். அருகதேவன் வணக்கம் 1. அருகன் அடி போற்றுவோம்! அவித்து அடக்குவதற்கு அருமையானவை ஆசைகள். அந்த ஆசைகளை அவித்து, மெய்ஞ்ஞானத்தைக் குற்றமற உணர்ந்தவன் அருகதேவன். பரந்தகடல் சூழ்ந்த அகன்ற இடத்தையுடைய இப் பெரிய உலகத்திலே அவன் திருவடிகளைத் தமக்கு உரிமையாகும் படியாகத் தம் உள்ளத்திலே தெளிந்து உணர்ந்தவர்கள் எவரோ, அவர்களே பெரியவர்கள். பெரிய செயல் செய்த உடம்பினுள் இருக்கும் உயிரும் பெருமை உடையதாயிருக்கும் அல்லவா! அது போலவே, பெரிய செயல் செய்த அவர்களின் உயர்வும் பெரிய தாகும். அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம் விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்து, உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே, போலப் பெரியதன் ஆவி பெரிது. உடலின் சிறந்த செயல்கள் உயிருக்கும் சிறப்பைத் தரும். ‘பெரிய தன் ஆவி பெரிது’ என்பது பழமொழி. ஆசு-குற்றம். செயற்கரிய செய்வாரே பெரியர்; இவ்வுலகில் ஐம்புல இச்சைகளை அவித்தலே செயற்கரிய பெருஞ்செயல்; அச் செயலைச் செய்து உயர்ந்த பெரியோனின் திருவடிகளை உளங் கொள்வோம். இப்படி உளம் கொள்பவரும் ஆசைகளை அவித்துப் பெரியவராக விளங்கிப் பெருமையடைவர் என்பதும் இதன் கருத்தாகும். நூல் 2. மேல்நிலை அடைதல் மணல் மேடுகளிலே விளங்கும் அடும்பின் கொடிகளிலே, பூக்கள் மலிந்திருக்கும் கடற்கரை நாட்டிற்கு உரியவனே! மிகுதியான பழிச் செயல்களை ஒருவன் அதிகமாகச் செய்து விட்டால், மீண்டும் அந்தப் பழியைப் போக்கிக் கொள்ளத்தக்க வழிகளையும் அவன் அறிந்திருக்க வேண்டும். அப்படி அறியாதவன் மேல்நிலையடைதல் என்பது ஒரு போதும் நடவாததாகும். ‘அகலினுள் உள்ள நீரிலே நீர் துளும்பக் குளித்துத் தூய்மை யாவேன்’ என்பது போல, அது ஒரு போதும் நடக்க முடியாததேயாகும். மிக்க பழிபெரிதும் செய்தக்கால், மீட்டதற்குத் தக்கது அறியார், தலைசிறத்தல்--எக்கர் அடும்பு அலரும் சேர்ப்ப! ‘அகலுள்நீ ராலே துடும்பல் எறிந்து விடல்.’ பழியொடுபட்ட வாழ்வு பயனற்ற வாழ்வு. ‘அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்’ என்பது பழமொழி. துடும்பல் எறிதல் - நீர் துளும்பிவிழக் குதித்து நீராடல். 3. அறநெறியாளனுக்கு உபதேசம் மாறுபாடில்லாத செயல்களின் மூலமாகவே ஒருவன் பெரும் பொருள் பெற்றனன். அந்தப் பொருள் வந்து சேர்ந்த வகையும் அதற்கான முதலீடும் அப்படியே அறநெறிக்கு மாறுபாடில்லாதது. அங்ஙனமானால், ‘பலதிறப்பட்ட வகை களால் எல்லாம் அறம் செய்வாயாக’ என அவனிடம் சான் றோர் சினந்து கூறவேண்டாம். அப்படி அவர் கூறினாலும், அது சர்க்கரையிற் பாலின் சுவை மயக்கமடையும் நிலைமை யினைப் போன்றதே யாகும். தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால், அப்பொருள் தொக்க வகையும் முதலும் அதுவானால், ‘மிக்க வகையால் அறஞ்செய்க!’ என வெகுடல் அக்காரம் பால்செருக்கும் ஆறு. பாலிலே சர்க்கரை சேர்த்ததும் இனிப்புச் சுவை கூடி, அது மேலும் விரும்பப்படுவது போல, அத்தகையோனைத் தரும காரியங்களிலே ஈடுபடத் தூண்டுவதனால், அவன் மேலும் சிறப்பே அடைவான். ‘அக்காரம் பால் செருக்கும் ஆறு’ என் பது பழமொழி. 4. தளராதவன் செல்வனாவான் ஒருவனிடம் உள்ளது அவனுடைய உள்ளூர்க்காரர்கள் மிகச்சிறிய அளவினதே என்று உணர்ந்ததான சிறு முதலே என்றாலும், அதனையும் இகழ்ந்து ஒதுக்காமல் பேணி அவன் தன் தொழிலை முயற்சியுடன் வளர்க்க வேண்டும். விளங்கும் அணிகலன்களை அணிந்தவளே! பழைய ஊரிலேயுள்ள ஆரவாரமிகுந்த கடைத்தெருவிலே மேய்ந்த பழைய கன்றே என்றாலும், அதுவும், பின் ஒரு காலத்திலே வளர்ந்து எருதாகிச் சிறப்படைதலும் உண்டல்லவோ? உள்ளூ ரவரால் உணர்ந்தாம் முதலெனினும் எள்ளாமை வேண்டும்; இலங்கிழாய்!--தள்ளாது அழுங்கல் முதுபதி அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு. கைமுதல் சிறிதேயானாலும், விடாமுயற்சியினால் அதனைப் பெரிதாக்கித், தன்னை இகழ்ந்த ஊரும் மெச்ச வாழலாம்; முயற்சிதான் வேண்டும். ‘அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு’ என்பது பழமொழி. 5. கொடியவன் பார்க்கமாட்டான் பெரிய புன்னை மரத்திலுள்ள பூக்களின் நறுமணமானது, புன்மையான புலால் நாற்றத்தினைப் போக்கி விடுகின்ற கடற்றுறைகளை உடையவனே! சிறு பிராணிகளை அடித்துத் தின்னும்போது அவை வருந்தும். அதுகண்டு, தின்னும் பெரிய விலங்குகள் அஞ்சி அவற்றைத் தின்னாது போவதில்லை. அதுபோலவே, எப்போதும் கொடிய செயல்களையே செய்பவ ரான கீழ்த்தரமானவர்கள், தம்மேல் பெரும் பழிச்சொற்கள் ஏறிக்கொண்டே போவதைக் கண்டாலுங்கூட, அதனைப் பொருட்படுத்தாது, அவற்றிலேயே மீண்டும் மீண்டும் ஈடுபடு வார்கள். கருந்தொழிலர் ஆய கடையாயார் தம்மேல் பெரும்பழி யேறுவ பேணார்--இரும்புன்னை புன்புலால் தீர்க்கும் துறைவ! மற்று அஞ்சாதே தின்பது அழுவதன் கண். கீழ்மக்கள் கீழ்த்தரமான செயல்களைப் பழிக்கு அஞ்சியும் கூடக் கைவிட மாட்டார். ‘அஞ்சாதே தின்பது அழுவதன் கண்’ என்பது பழமொழி. 6. தருமம் செய்யுங்கள் தோன்றுவதற்கு அருமை உடையதாகிய மக்கட் பிறப்பினைப் பெற்றுள்ளோம். அதனால், முடிந்த வகைகளிலே எல்லாம் தரும காரியங்களைச் செய்துவருக. கொஞ்சமும் மாற்றுவதற்கு இயலாதவண்ணம் அஞ்சப்படும் நோய், முதுமை, அருங்கூற்று ஆகியவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இறக்கும்படியான நிலையிலே தருமஞ் செய்யலாமென்று ஒதுக்கி வைத்தால், அந்த வேளையிலே, தருமம் செய்ய இயலாதபடி அறிவு மயக்கமும் வந்து சேர்ந்துவிடலாம். தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால் ஆற்றும் துணையும் அறஞ்செய்க!--மாற்றின்றி அஞ்சும் பிணிமூப்பு அருங்கூற் றுடனியைந்து துஞ்ச வருமே துயக்கு. யாக்கையின் நிலையாமை கூறினார். தருமத்தை இளமையிலேயே செய்க; பின்னர் பார்த்துக்கொள்ளலாமென்றால். அது முடியாதும் போகலாம். ‘அஞ்சும் பிணி, மூப்பு அருங்கூற்று உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு’ என்பது பழ மொழி. 7. கோழைக்குப் பாதுகாப்பே கிடையாது! வலிமை உடையவர்களின் துணையுடையவர்கள் என்றா லும், தம் அளவிலே வலிமையில்லாதவருக்கு, வலிமையைப் பெய்து, அவரைப் புகழிலே நிலைபெறுத்துதல் எவராலும் ஆகு மோ? ஆகவே ஆகாது வெண் மேகங்கள் தங்கும் சோலைகளையு டைய மலை நாடனே! எப்படிப்பட்ட துணைகளை உடையவர் களானாலும், உள்ளத்திலே அஞ்சி நடுங்கும் கோழைகளாக இருப்பவர்களுக்குப், பாதுகாக்கும் அரண் என்பது எதுவுமே கிடையாது என்று அறிவாயாக. வன்சார்பு உடையர் எனினும் வலிபெய்து தஞ்சார்பு இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும், அஞ்சவார்க் கில்லை அரண். ‘வலிமை’ என்பது ஒருவர்க்குத் தம்பால் அமைவதே யல்லாமல், பிறர் ஊட்டலாலும், அரண் முதலிய பாதுகாப்பா லும், துணையாலும் அமைவதன்று ‘அஞ்சுவார்க்கு இல்லை அரண்’ என்பது பழமொழி. 8. குடிப் பெருமையின் சிறப்பு தாயினாலே யானாலும், தந்தையினாலே யானாலும், யாதாயினும் ஒரு சிறப்புக் கூறப்படுதல் இல்லாமலே, தம் வாயினாலேயே தம்மைப் பெருமை யாகக் கூறும் தற்புகழ்ச்சி யாளர்களைப் பிறரும் புகழ்தல், புகழ்பவருக்கு ஒரு துன்பமும் தருவதன்று, என்றாலும், அது அடுப்பின் ஓரத்திலே முடங்கிக் கிடக்கும் நாயினைப் புலியாகும் என்று சொல்வது போலப் பொருத்தமில்லாத பொய்ப் புகழ்ச்சியே யாகும். தாயானும் தந்தையா லானும் மிகவின்றி வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல், நோயின்று எனினும், அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல். குடிப்பெருமை இல்லாதவர் உயர்ந்த பண்பினர் ஆதல் இல்லை. அவருடைய போலித் தோற்றங்கண்டு புகழ்வதெல்லாம், பொய்யான புகழ்ச்சியே அல்லாமல் உண்மைப் புகழ்ச்சி யாகாது. ‘அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல்’ என்பது பழமொழி. 9. மகனுக்குச் செய்யவேண்டியது ஒரு தகப்பன் எந்த வகையிலே யானாலும், தன் மக்களைச் செம்மையான நெறியிலேயே மேம்பட்டு நிற்குமாறு அதற்குத் தகுதியானவற்றையே செய்தல் வேண்டும். தான் செய்த பாவையே ஒரு சிற்பிக்குப் பின்னர் தெய்வமாவது போல, அப்படிச் செந்நெறியிலே மக்களை நிலையாக நிற்கச் செய்தால், அம்மக்கள் பிற்காலத்தில் தந்தையாலும் போற்றப்படும் உயர்ந்த பெருநிலையினை அடைவார்கள். எந்நெறி யானும் இறைவன்றன் மக்களைச் செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும்--அந்நெறி மான்சேர்ந்த நோக்கினாய்! ஆங்க, அணங்காகும் தான்செய்த பாவை தனக்கு. மக்களைச் செந்நெறிமேற் செல்லுதலில் தகுதியுடைய வராக்குதல்தான் ஒரு தந்தையின் கடமை. அணங்கு - தெய்வம். பாவை - செதுக்கிய சிலை ‘அணங்காகும் தான்செய்த பாவை தனக்கு’ என்பது இதிலுள்ள பழமொழி. ‘இறைவன்’ என்றதால், ஓர் அரசன் தன் குடிமக்களைச் செந்நெறிமேல் நிற்கச் செய்ய வேண்டும் என்பதும் இதனால் அறியப்படும். 10. முகஸ்துதிக்கு மகிழ வேண்டாம் மூங்கில்கள் அடர்ந்திருக்கும் மலைகளுக்கு உரியவனே! தம்மவரே யானாலும், ஒருவர் தம்மைப் புகழ்ந்து பேசுகின்ற சமயத்திலே, அந்த முகஸ்துதிக்கு மனமகிழலாகாது. அப்படிப் பேசுதலை உடனேயே தடுத்துவிடவேண்டும். தம்முடையனவே என்றாலும், பொருத்தமில்லாத ஆபரணங்களை எவரும் அணிவ தில்லை அல்லவா? தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில் அமராது அதனை அகற்றலே வேண்டும். அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம். முகஸ்தியை விரும்பினால், உள்ளத்து அகந்தையே நிறையும். அதனால், அது தம்மவராலே சொல்லப்பட்டாலும் தம் நல்ல ஒழுக்கத்திற்கு ஊறு செய்வதினால் ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று என்பதாம். ‘அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்’ என்பது பழமொழி. கொள்ளாக் கலம் - பொருந்தாத நகைகள். 11. அறிவு ஆடை போன்றது! அறிவினாலே வந்த பெருமைகளே பெருமைகளாகும். அவை ஒன்றும் இல்லாத ஒருவன், பிற செல்வங்களினாலே பெருமை உடையவனாதல் எங்ஙனமாகும்; பொலிவுபெறச் செய்தலையுடைய இரத்தினாபரணமும், பொன்னாபரணமும், சந்தனமும், மாலையும் ஆகிய இவைபோன்ற அணி வகைகள் எல்லாம், உடுத்தும், ஆடைக்குப் பின்னரே கருதி மதிக்கப்படுவன அல்லவா? அறிவினால் மாட்சியொன்று இல்லா ஒருவன் பிறிதினால் மாண்ட தெவனாம்?--பொறியி;ன் மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன, அணியெல்லாம் ஆடையின் பின். ஆடையின் மேல் அவ்வணிகளையும் அணியின் அழகு தரும். அதுபோல, அறிவுடைமையின்மேல் பிற செல்வங்களும் சேரின் பயன்தரும். இன்றேல் தருவதில்லை. ‘அணியெல்லாம் ஆடையின் பின்’ என்பது பழமொழி. ஆடையே முதன்மையானது என்பது கருத்து. 12. வம்புக்காரனின் வாய் நன்மை, தீமைகளை அறிந்து நடக்கத் தெரியாதவர்களு டைய திறமை யில்லாத சொற்களைக் கேட்க நேர்ந்தால், அதற் காக வருத்தப்படாதவர் போல, அதனைப் பொருட்படுத்தாமல் இருந்து விடுங்கள், பிறர்மீது இரக்கம் இல்லாது பழி தூற்றும் இயல்புடைய வம்பலர்களின் வாயை அடக்குவதற்காகக் கருதிச் செல்பவர்களே, ஊர்ப் பொதுவிடத்தைத் தாழிட்டு வைக்க முயன்றவர்கள் போன்ற அறியாமை உடையவராவார்கள். தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால், பரியாதார் போல இருக்க!--பரிவுஇல்லா வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே, அம்பலம் தாழ்கூட்டு வார். பழிகூறித் திரிபவரின் கீழ்மையை அறிந்து, அவர் சொற் களைப் பாராட்டாமல் பொறுக்கும் அறிவுடைமை வேண்டும். அன்றி, அவர் வாயை அடக்க முயல்பவர், ஊர்ப் பொதுவிடத் தைத் தாழிட முயன்றவர் போலத் தாமே மிகுதியான அவமானம் அடைவார்கள். பரிவு-இரக்கம்; துன்பம்; ‘அம்பலம் தாழ்கூட்டு வார்’ என்பது பழமொழி. 13. அன்பால் சாதிக்க வேண்டும். அன்பினால் ஒருவனுடைய உள்ளம் நெகிழ்ச்சி அடையு மாறு செய்து, அவன் வழியே நடந்து, அவனால் காரியத்தை முடித்துக் கொள்ளுதலே சிறந்தது. அங்ஙனமில்லாமல் நின்ற இடத்திலேயே அவனை வற்புறுத்திக் காரியத்தை முடித்துக் கொள்ள முயல்வது தவறானதாகும். அது, கன்றைக் குடிக்க விட்டுப் பசுவிலே பால்சுரந்து வரும்பொழுது கறந்து கொள் ளாமல் அம்பு எய்து பசுவைக் கொன்று பால் கறக்க முயல்வது போன்ற பேதைமை யான செயலும் ஆகும். அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது, நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வதே கன்றுவிட்டு ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய், அம்புவிட்டு ஆக்கறக்கு மாறு. செயலை முடிக்கும் முறைமை இதன்கண் கூறப்பட்டது, பிறரை மனம் நோகச் செய்து காரியம் சாதிக்க நினைப்பவரின் பேதைமையும் சொல்லப்பட்டது. ‘அம்புவிட்டு ஆக்கறக்கு மாறு’ என்பது பழமொழி. 14. இனத்தைக் கொண்டே மதிப்பிடலாம் கயல் மீன்களையும் தம் நீட்சியால் மாறுபாடு கொள்ளச் செய்யும் மை தீட்டிய கண்களை உடையவளே! பக்கத்து வீட்டார்கள் அறியாதவாறு சமைத்து உண்பதென்பது ஒரு போதுமே இயலாது. அதனால் ஒருவருடைய தன்மையை அறியப் பெரிய முயற்சிகள் எதுவுமே தேவையில்லை. காட்டில் வாழும் முனிவர்களே என்றாலும், அவர்கள் நல்ல இயல்பினர் களா அல்லது தீய இயல்பினர்களா என்பதை, அவருடன் சேர்ந் திருப்பவர்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். அவரியல் பை மெய்ப்பிக்க வேறு சாட்சிகள் எதுவுமே வேண்டாம். முயறலே வேண்டா; முனிவரை யானும் இயல்பன்னர் என்பது இனத்தால் அறிக! கயலிகல் உண் கண்ணாய்! கரியரோ வேண்டா; அயலறியா அட்டூணோ இல். ‘இனத்தைக் கொண்டு தன்மையை அறிக’ என்று சொல்லி நல்லினம் சேர்தலின் இன்றியமையாமை வற்புறுத்தப் பட்டது. ‘அயலறியா அட்டூணா இல்’ என்பது பழமொழி. 15. பயன்நோக்கிச் செய்வது உதவியாகாது இதழ் விரிந்த பூக்கள் பலவும் ஆற்றிலே ஒன்றாகக் கலந்து செல்லும் புதுப்புனல் வளத்தையுடைய ஊரானே! சிறிய பொருளினை ஒருவர்க்குக் கொடுத்து உதவித் தாம் செய்த அந்தக் காரியத்தால், பின்னர் அதனால் பெரும் பொருளை அடைய நினைப்பவர்கள் தர்மவான்களே அல்லர். அவர்கள் விரும்பப் படும் அயிரையாகிய சிறு மீனைத் தூண்டிலிலே கோதுவிட்டுப், பெரிய மீனாகிய வரா அலைப் பிடிக்கின்றவர்களைப் போன்ற வரே யாவர். சிறிய பொருள் கொடுததுச் செய்த வினையால், பெரிய பொருள்கருது வாரே;--விரிபூ விராஅம் புனலூர! வேண்டு, அயிரை விட்டு வராஅல் வாங்கு பவர். ‘வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; பிறவெல்லாம் குறியெ திர்ப்பை நீரது உடைத்து’ என்ற குறளின் கருத்தினைக் கொண் டது இச்செய்யுள். ஈகையால் இம்மையிற் கைம்மாறையோ, மறு மையில் இன்பத்தையோ பெறலாம் எனக் கருதாது, அதனைக் கடமையாகக் கருதிச் செய்க என்பது கருத்து. ‘அயிரை விட்டு வராஅல் வாங்கு பவர்’ என்பது பழமொழி. 16. நல்லதை உணரத் தீயவரால் முடியாது காட்சிக்கு இனியதாகத் தோன்றுகின்ற மயில்கள் ஆடிக் கொண்டிருக் கின்ற, பெரிய மலைகளையுடைய வெற்பனே! எஃகினை எப்பொழுதுமே எஃகினைக் கொண்டேதான் பிளக் கலாம். அதைப்போலவே, நல்லவர்களின் நல்ல தன்மை யை உணர வேண்டுமானால் அவர்களைவிட நல்லவர்களே அதனை முறையாக உணரக்கூடியவர்கள். தீயவர்கள் ஒரு போதும் அதனை உணரவே மாட்டார்கள். நல்லார் நலத்தை உணரின், அவரினும் நல்லார் உணர்ப; பிறர்உணரார்;--நல்ல மயிலாடு மாமலை வெற்ப! மற்று என்றும், அயிலாலே போழ்ப அயில். ‘வயிரத்தைக் கொண்டு தான் வயிரத்தை அறுக்க வேண்டும’ என்று வழங்கும் பழமொழியையும் நினைக்க. நல்ல தன்மை இல்லாதவர் கண்ணுக்கு நல்லவரும் தீயவராகவே தோன்றுவர் என்பது கூறி; நல்ல தன்மை உடையவராவதன் சிறப்பு வற்புறுத் தப்பட்டது. ‘அயிலாலே போழ்ப அயில்’ என்பது பழமொழி. 17. செய்பவனுக்குத்தான் வருத்தம் தெரியும்! மக்கள் வரிசையாக இருந்து, அதனால் மாட்சி மைப்பட்டு விளங்கும் ஒரு வட்டாடும் அரங்கம், அந்த அரங்கினுள்ளே, தாம் வட்டாடாமல் ஒதுங்கிப் பக்கத்திலே இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் சிலர்; அவர்களுக்கு வட்டாடும் போர் மிகவும் எளிதாகவே தோன்றும். அதன் நுட்பத்தினை அறிந்தவர்க்கே, அதன் உண்மையான நிலைமைகள் தோன்றும். அது போலவே, அருகே இருந்து நுண்மையான கருத்துக்களைச் சொன்னாலும் ஈடுபடும் செயலானது குறைபாடுடையதாக இருப்பதான அதன் தன்மையை அறியாதவன். அதனைச் செய்யப்புகுந்தால், செயல் முற்றுப்பெறாது அழிவடைதலும் உண்மை யாகும். உழைஇருந்து, நுண்ணிய கூறிக், கருமம் புரையிருந்த வாறறியான், புக்கான் விளிதல், நிரையிருந்து மாண்ட அரங்கினுள் வட்டு, கரையிருந் தார்க்கெளிய போர். செயலின் உண்மையான நிலையறியாமல் ஈடுபடுவது அழிவைத் தரும். ‘அரங்கினுள் வட்டு கரையிருந்தார்க்கு எளிய போர்’ என்பது பழமொழி. 18. பகையை அறவே ஒழிக்க வேண்டும் தம்முடன் மனம் ஒத்துப்போகாதவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற இடத்தும், அதனாலும் மனம் அமைதி யடைந்து இருந்துவிடக்கூடாது. அப்படி இருக்காதவர்களாக, அவர்கள் இறந்து போக வேண்டும் என்னும் அளவிற்குச் சினங் கொள்ளு தலே மன்னரின் இயல்பு. அருவிகள் பரந்து வீழ்கின்ற மலைகளுக் குரிய வெற்பனே! அதுதான், கதிர் அரிந்து வைத்த அரிதாளையும் விடாமல் உழுது, நீருள் அமிழ்த்தி அழுகச் செய்வது போன்ற அறிவுடைய செயலாகும். பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும் இருந்தமையா ராகி, இறப்ப வெகுடல் விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே அரிந்தரிகால் நீர்படுக்கு மாறு. தாளை விட்டுவைத்தால் பின்னர் அதனடியினின்றும் வளமற்ற பயிர் கிளைக்குமாதலால், உழவர் அதனை அழித்து அழுகச் செய்வார்கள். அதுபோலப் பகையையும் வேரறக் களைவது ஒரு நாட்டுத் தலைவனின் பொறுப்பு. அரைகுறையாக விட்டு வைத்தால் மீண்டும் ஆபத்துதான். ‘அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு’ என்பது பழமொழி. 19. மூடர்களின் உறவு கூடவே கூடாது பரந்து ஒலிக்கும் அலைகளின் மிகுதியையுடைய கடற்கரைகளுக்கு உரிய சேர்ப்பனே! நெல் அரிபவர்களுக்கு அவ்வேலையானது கெடும்படியாக எவரும் நரியைக் காட்ட மாட்டார்கள். அதுபோலவே, அனைத்தையும் ஆராய்ந்து அறிந்து உணர்ந்து அதன்பால் நிலைபெற்றிருப்பவர்கள், நுண் ணறிவு இல்லாதவர்களின் இடையிலே செல்லவே மாட்டார்கள். ஆராய்ந்து அறிந்த அறிவு உடையவர்களுடன் கலந்து நல்ல பண்புகளை மேலும் அறிவதிலேயே ஈடுபடு வார்கள். தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார் பாரியார் இடைப்புகார், பண்பறிவார், மன்ற; விரியா இமிழ்திரை வீங்குநீர் சேர்ப்ப! அரிவாரைக் காட்டார், நரி. பயனுள்ள நெல்லரிவார்க்குப் பயனற்ற நரியைக் காட்டிப் பொழுதை வீணே கழியச் செய்தல் கூடாது. அறிவுடையோரும், அறிவுடையோருடன் கலந்து பழக வேண்டுமே தவிரப், பயனற்ற அறிவற்றோர் கூட்டத்தில் சேர்தலே கூடாது. ‘அரிவாரைக் காட்டார் நரி’ என்பது, அவரை வேறு ஒன்றில் மனம் திருப்புதல் ஆகும். 20. ஈகையே செல்வத்திற்கு அழகு முழவுகளின் ஒலிபோல அலைகள் முழங்கும், கடல் சூழ்ந்த உலகம் முழுவதையுமே ஒன்றாக ஒரு குடைக்கீழ் ஆண்டவர் பெருமன்னர்கள்; அவர்களுங்கூடத் திருவிழா நடந்த ஊரிலே நிகழ்ந்த கூத்தைப்போல மறுநாள் வீழ்ச்சியுற்று அழிதலைப் பார்த்திருக்கிறோம். ‘இருப்பது பிறருக்கு உதவியாகப் போகட் டும்’ என்று ஒரு பொருளையேனும் மனதாரக் கொடுத்து மகிழா தவனுடைய செல்வமானது, அழகும் வடிவும் உடையவளான ஒரு பெண் கண்ணிழந்த குருடியாக விளங்குவதைப் போன்ற தாகும். முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார் விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும், இழவென் றொருபொருள் ஈயாதான் செல்வம், அழகொடு கண்ணின் இழவு. அவள் அழகும் வடிவும், அவள் கண்ணிழந்த ஒரு காரணத்தால் தம் பெருமையற்றுப் போவதுபோல, அவன் செல்வமும் அவனது ஈயாத் தன்மையால் பயனற்ற செல்வ மாகும் என்பது கருத்து. ‘அழகொடு கண்ணின் இழவு’ என்பது பழமொழி. 21. உயர்ந்தவரை உயர்ந்தவர் அறிவார் அடுக்கடுக்காக விளங்கும் மலைத்தொடர்களையுடைய நாட்டிற்கு உரியவனே! மணிகளின் இயல்புகளை உணர்பவர் களுக்கு, அவை சேறாடி இருந்த காலத்திலும் மணிகளாகவே காணப்படும். அதுபோலவே, தொடர்ச்சி அறாது உயர்ந்து விளங்கும் நல்ல குடியிற் பிறந்தவர்களை, அவர்களுக்கு என்ன விதமான தாழ்ச்சிகள் வந்த காலத்தினும், அறிவுடையவர், உயர்வாகவே எண்ணி மதிப்பார்கள். இணரோங்கி வந்தாரை என்னுற்றக் கண்ணும், உணர்பவர் அஃதே உணர்ப;--உணர்வார்க்கு அணிமலை நாட! அளறாடிக் கண்ணும் மணிமணி யாகி விடும். வறுமை முதலியவற்றால் தாழ்ச்சியடைந்த காலத்தினும், குடிப்பிறப்பின் உயர்வு ஒருவரை விட்டு என்றும் மாறாது. சான் றோர் அவரை மதித்துப் போற்றுவர் என்பதாம். ‘அளறாடிக் கண்ணும் மணிமணி யாகி விடும்’ என்பது பழமொழி. 22. உறவாடும் பகைவரை ஒதுக்கி விடவேண்டும். பறவைகளின் ஆரவாரத்தைக் கொண்ட பொய்கை களையுடைய நீர்வளமிகுந்த ஊரனே! பகைவர்கள் வெள்ளம் போற் பெரும்படையினை உடையவர்கள் என்றாலும், அவர் வேற்றிடத்தினராயிருந்தால் அவர்களால் என்ன தீங்கைச் செய்துவிடமுடியும்? ஆனால், உள்ளத்திலே கள்ளம் உடைய வராக நம்முடன் நெருங்கிப் பழகுபவரின் பெரிய போலி நட்பு இருக்கிறதே, அது மிகவும் கேட்டைத் தரும், அதுதான் ஒரே வீட்டிற்குள்ளேயே கடன் பட்டதுபோல இடையறாத பெரிய வேதனையைத் தருவதுமாகும். வெள்ளம் பகையெனினும், வேறிடத்தார் செய்வதென்? கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு புள்ளொலிப் பொய்கைப் புனலூர! அஃதன்றோ, அள்ளில்லத் துண்ட தனிசு. உட்பகையின் பெருங்கேடு கூறி, அதனை ஒறுத்து நடத்தும் நெறி வற்புறுத்தப்பட்டது. தனிசு-கடன் ‘அள்ளில்லத் துண்ட தனிசு’ என்பது பழமொழி. 23. தருமம் செய்யப் பாவம் போகும் செல்வத்தைத் தேடுவதற்கு வேண்டிய புறச்செயல்களைச் செய்ய, வறுமை நீங்கிச் செல்வமானது பெருகும். அதுபோல, நல்ல தருமங்களைச் செய்யப் பழைய பாவங்கள் எல்லாம் நீங்கிப் போய்விடும். ஆதலால், தருமஞ்செய்யும் இடத்தின் தகுதிகளை அறிந்து செய்த காலத்திலே, தருமம் செய்பவர் களுக்கும் அவர்கள் செல்லும் மறுமை உலகத்தின் கண் அதனால் நன்மை உண் டாகும். அறஞ்செய் பவர்க்கும், அறவுழி நோக்கித் திறந்தெரிந்து செய்தக்கால், செல்வுழி நன்றாம்; புறஞ்செய்யச், செல்வம் பெருகும்; அறஞ்செய்ய அல்லவை நீங்கி விடும். அறம் செய்பவரும், தகுதி உடையவர்க்கே அதனைச் செய்வதனால்தான் அறத்தின் பயனை உண்மையாக அடைவார்கள். ‘அறம் செய்ய அல்லவை நீங்கி விடும்’ என்பது பழ மொழி. ‘அறம் செய்யப் பாவம் நீங்கும்’ என்பது கருத்து. 24. அவன் மயக்கம் தெளியவில்லை! தொடியணிந்த தோள்களையும், மடப்பத்தையும் உடைய வரான பரத்தையர்களின் மார்பினைத் தன் மார்பிலே சேர்த்துக் கொண்டவனாக, அவர்களுடைய மார்பிலே நம் தலைவன் மயங்கிக் கிடக்கின்ற அச் செயலானது முறைமை உடைய தன்று. அதனை, நீ அவன்பாற் சொல்லா திருப்பாயாக. பாணனே! ‘பொய்தூக்கம் தூங்குபவரை எழுப்பி விடுதல்’ என்பது எவருக்குமே முடியாத செயலாகும். தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம் மடுத்து, அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப, நெறியல்ல சொல்லல்நீ, பாண! - அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது. தலைவனுக்காகத் தலைவியிடம் சமரசம் பேச வந்த பாணனிடம் தலைவனின் பரத்தையர் மோகம் இன்னும் தெளியவில்லை என்று கூறித் தலைவி மறுத்துச் சொல்லு கிறாள். அறிதுயில்-யோக நித்திரையுமாம்; இங்கே அது பொய்த்துயில் ஆகும். ‘அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது’ என்பது பழ மொழி. 25. அறிந்து செய்யும் அறியாமைச் செயல் செறிந்த மடல்களையுடைய, அழகிய தாழை மரங்கள் பொருந்தி யிருக்கும் கடற்கரைக்கு உரிய தலைவனே! முல்லைக் கொடிக்குத் தேரினையும், மயிலுக்குப் போர்வையினையும் முன்காலத்திலே கொடுத்தவர் களைக் கேள்வி வாயிலாக நாமும் அறிந்துள்ளோம். ஆகவே, சொல்லப் போவோமா னால், சான் றோர்களுக்கு, அவர்கள் அறிந்தே செய்யும் அறியாமைச் செயல்க ளுங்கூடச் சிறப்பையே தருவதாயிருக்கும் என்று அறிவாயாக. முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் தொல்லை, அளித்தாரைக் கேட்டறிதும்;--சொல்லின், நெறிமடற் பூந்தழை நீடுநீர்ச் சேர்ப்ப! அறிமடமும் சான்றோர்க்கு அணி. ‘பாரியும் பேகனும், முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் அளித்தனர்’ என்று புலவர்கள் போற்றுவர். அவை கொடுத்தற்கு உரியன அன்றென அறிந்தும் அறியாதார் போல அவர்கள் கொடுத்தலால் அவர்கள் சிறப்படைந்தனர், சான்றோர் பெருமை இதனால் கூறப்பட்டது. ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ என்பது பழமொழி அறிந்தே செய்யும் மடமைச் செயலும் சான்றோர்க்குச் சிறப்பே தருவதும் சொல்லப்பெற்றது. 26. பெரியவர் பெரியவற்றை அறிவார்கள் நல்லனவற்றையும் பொல்லாதனவற்றையும், அருகே நெருங்கி யிருப்பவர் தம் சொற்களைப் பெய்து அறிவுடையோ ருக்கு அறியச் செய்தலும் வேண்டுமோ? வில் போன்ற புருவத்தின் கீழே செவ்வரி படர்ந் திருக்கின்றன. பரந்து அகன்ற கண்களை உடையவளே! பெரிய செயல்களை முதன்மையுடையவனாக இருந்து ஆட்சி செய்து நடத்தும் ஒருவனே, பெருமையுடைய சிறந்த செயல்களின் தன்மையையும் அறிபவனாயிருப்பான் என்று அறிவாயாக. பொற்பவும் பொல்லாதனவும், புணர்ந்திருந்தார் சொற்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ?--விற்கீழ் அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! அறியும். பெரிதாள் பவனே பெரிது. அறிவுடையோர் சிறந்த செயல்களையே செய்ய விரும்புவர்; அதனால், அவரே அதனை அறிந்து செய்பவராவர்; அவர்க்கு எவரும் அதனைச் சொல்லுதல் வேண்டாம், ‘அறியும், பெரி தாள்பவனே பெரிது’ என்பது பழமொழி. 27. பேதை எதையும் செய்ய மாட்டான் தனக்கு வந்து நேருகின்ற துன்பங்கள் பலவற்றையும் இன்ன வகையால் அவை வந்தனவென அறியாதிருக்கின்ற அறியாமை யையே தன் வாழ்விற்குப் பற்றுக்கோடாகக் கொண்டிருப்பவன் பேதையாவான். அவன், என்றும் அதனை வெல்லும் வெற்றியு டையவன் ஆகவே மாட்டான். ‘வெற்றி பெறல்’ என்பது, ஊழ் வினைப் பயனால் வந்து வாய்த்த வழியேயல்லாமல், ஒருவனின் தன் முயற்சினாலே மட்டும் அடையக்கூடியதன்று என்று நினைத்து, அந்த அறிவினால் உண்டாகும் அச்சமே, அந்தப் பேதைக்கு அதிகமாயிருக்கும். உறுகண் பலவும் உணராமை கந்தாத், தறுகண்மை ஆகாதாம் பேதை,--‘தறுகண் பொறிப்பட்ட வாறல்லால், பூணாது’என் றெண்ணி, அறிவச்சம் ஆற்றப் பெரிது. ‘ஊழையும் உப்பக்கங் காண்பர் தாழாது உஞற்றுபவர்’ ஆனால் பேதையோ அனைத்தையும் ஊழின் பயன் என்று கருதி அஞ்சி, முயற்சியின்றித் துன்பங்களில் உழன்று அழிவான். ‘அறிவச்சம் ஆற்றப் பெரிது’ என்பது பழமொழி. 28. ஊழ்வினையால் அமைவதே செயல் மதித்துச் சொல்லப்படுகின்ற பேரறிவு உடையவர்களிடத் தும் உளவான குறைபாடுகள் பலவாயிருந்தால், அதற்குக் கார ணம், அவர்களின் முன்வினைப் பயன் வந்து பொருந்தியதன் வகையாகவே செயல்கள் நிகழ்வ தனால் என்க. அதனால், அவரு டைய நல்ல அறிவினையும்கூட ஊழ்வினை கெடுத்துவிடும் என் றும் அறிதல் வேண்டும். சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும் பட்ட இழுக்கம் பலவானால்--பட்ட பொறியின்வகைய, கருமம்; அதனால், அறிவினை ஊழே அடும். மிக்க அறிவோரும், தவறான காரியங்களைச் செய்ய நேர்தல், ஊழ்வசத்தின் காரணமாகவே என்பது சொல்லப் பட்டது. பொறி-தலை எழுத்து எனவும் சொல்வர். ‘இழுக்கம்’ - விருத்தம் என்றும் பாட பேதம், ‘அறிவினை ஊழே அடும்’ என்பது பழ மொழி. ‘பொறியின் வகை கருமம்’ என்பதையும் ஒரு பழமொழி யாகக் கருதலாம். 29. வல்லவன் காரியம் கெடாது நெடுங்காலமாக நீர் வற்றாது நிறைந்திருக்கின்ற ஒரு குளமானது ஒருவர் சற்றே நீர் எடுத்துச் சென்றதனால், நீரற்றுப் போய்விடாது. அதுபோலவே, பல ஆண்டுகளாக வந்து சேர்ந்த தாகிப், பயனில்லாமல் சேர்ந்துகிடந்த செல்வத்தையும், கொடுத்த லிலே வல்லமை உடையவனான ஒருவன், கொடுக்கும் தகுதியினைத் தெரிந்து, தகுதியுடையவருக்கு வழங்கும் காலத்திலே, அத னால் வரும் ஆக்கமும் விரைவிலே நீங்காது நீடித்து நிற்கும்; அச் செல்வமும் என்றும் குறைந்து அழிந்து போய்விடாது; மென் மேலும் பெருகவே செய்யும். பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது வல்லான் தெரிந்து வழங்குங்கால்,--வல்லே வலிநெடிது கொண்ட தறாஅது; அறுமோ குளநெடிது கொண்டது நீர்? ‘செல்வத்தின் பயனே தக்கவர்க்கு ஈதல்’. அதனால், அவர் செல்வமும் குறையாது ‘அறுமோ குளநெடிது கொண்டது நீர்’ என்பது பழமொழி. 30. வருவாய் உடைய செல்வம் விளைந்த நெற்பயிரை அறுக்கும் பொருட்டாக, வயல்களில் தேங்கி நிற்கும் நீர் வடியுமாறு, உழவர்கள் அணைகளைத் திறந்து விடும் நீர் வளமுடைய ஊரனே! நரி நக்கிவிட்டது என்பதனால் கடல்நீர் முழுவதும் வற்றிவிடுமோ? வற்றாதே! அது போலவே, தமக்கு ஏவல் செய்பவர் பலராலும் களவு செய்யப்பட்டாலும் வருவாய் மிகுந்தவர்களுடைய பெருஞ்செல்வமும் குறைந்து போவதில்லை. களமர் பலரானும் கள்ளம் படினும், வளமிக்கார் செல்வம் வருந்தா;--விளைநெல் அரிநீர் அணைதிறக்கும் ஊர! அறுமோ, நரிநக்கிற் றென்று கடல். ஏவலர் சிறு களவுகள் செய்தனர் என்றாலும், அதனைப் பெரிதாகப் பொருட்படுத்தாதிருக்க வேண்டும்; அதனால் செல்வம் குறைந்து விடாது என்பது கருத்து. ‘அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்’ என்பது பழமொழி. 31. ஊழ்வினைதான் காரணம் ஓங்கி உயர்ந்த மலைமுடிகளையுடைய மலைநாடனே! செல்வம் வந்து ஆகிவருகின்ற நல்லூழ் உள்ளவர்க்குச் செய்வ தொரு முயற்சியுங்கூட வேண்டியதில்லை. செல்வம் போகின்ற போகூழ் வந்தவர்க்கு, அதனைப் போகாமல் நிலை நிறுத்தச் செய்யும் முயற்சிகளாலும் பயனில்லை. எத்தகைய முயற்சிகளைச் செய்து எத்தகைய செல்வத்தைப் பெற்றாலும், ஆகாத தலை யெழுத்து உள்ளவர்களுக்கு ஆகிவருவதும் ஒன்றும் இல்லை என்பதை அறிவாயாக. ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம் போகும் பொறியார் புரிவும் பயனின்றே; ஏகல் மலைநாட! என்செய்தாங்கு என்பெறினும் ஆகாதார்க்கு ஆகுவது இல். செல்வமும், வறுமையும் ஊழ்வினைப் பயனால் வந்து வாய்ப்பன என்பது கருத்து. ‘ஆகாதார்க்கு ஆகுவது இல்’ என் பது பழமொழி. ஆள்வினை - முயற்சி. 32. மூர்க்கனின் புத்தி மாறுவதில்லை தான் ஆராய்ந்து உணர்ந்த கருத்துக்களையும், உலக ஒழுக்கத்தினையும் உணராத மூர்க்கனுக்கு யாதொன்றும் உறுதிப் பொருள்களைச் சொல்ல வேண்டாம். மூர்க்கன், தான் கொண்டதையே மீண்டும் மீண்டும் பற்றிக் கொண்டு விடாதிருப் பவன். நீல நிறத்தினை உண்டதான ஒரு பொருள், என்றும் தன் நிறம் மாறுபட்டுப் பிறிதொன்றாக ஆகமாட்டா தல்லவா? ஓர்த்த கருத்தும் உலகும் உணராத மூர்க்கற்கு யாதும் மொழியற்க!--மூர்க்கன்றான் கொண்டதே கொண்டு விடானாகும்; ஆகாதே உண்டது நீலம் பிறிது. நீலநிறம் பற்றியபின், அது என்றும் அந்தப் பொருளை விட்டு மறைவதில்லை. அதுபோலவே, மூர்க்கனும் தன்புத்தியி னின்றும் எதனாலும் மாற மாட்டான். ‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’ என்பதை நினைக்க. ‘ஆகாதே உண்டது நீலம் பிறிது’ என்பது பழமொழி. பாடபேதம் உலகும் உணர்வும்; யாதும், உறுதி. 33. கொடியவன் செய்வது செயலாகாது வலிமையானது நிலையாகத் தங்கியிருத்தலையுடைய மலைபோன்ற மார்பினை உடையவனே! நத்தையானது உழுது வரைந்தவெல்லாம் பொருள் கொண்ட ஒரு கணக்கு ஆகுமோ! அதுபோலவே, தம்முடைய தொழில்களைச் செய்து முடிக்கின்ற திறமையுடையவர்கள் செய்யும் காரியங்களைச் செய்வது, கொடுந்தொழிலாளர்களாகிய வெகுளிகட்கு எப்போதாவது கைகூடி வருமோ? வரவே வராது; தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன, வெந்தொழிலர் அய வெகுளிகட்குக் கூடுமோ? மைந்திறை கொண்ட மலைமார்ப! ஆகுமோ, நந்துழுத எல்லாம் கணக்கு? நத்தை கீறிச் செல்லலை உழவு என்று கூறினாலும் அது உழவாகிப் பயன் தராதது என்பது போல செய்வினைத் திறம் இல்லாதவர் செய்யும் காரியங்களும் பயனற்றுக் கைகூடாமற் போம். ‘ஆகுமோ, நந்து உழுவதெல்லாம் கணக்கு’ என்பது பழமொழி. 34. பொய்யைப் போக்கும் வழி ஒரு பொருளாக மதித்துக் கொள்ளப்படத் தகுதி இல்லாதவர்கள் சொல்லிய பொய்யாகிய குறளையை, வேந்தன் பொய்யென்று தெளியுமாறு செய்யும் வகையினைத் தெரிந்து செய்பவரே அறிவுடையவர்கள், அப்படிச் செய்வதல்லாமல், உணர்வது உணரும் அறிவினை உடைய அவர்கள், குறளை யைச் சொல்லப்பட்டவர் அஞ்சும்படியாகத் தாமும் அவரோடு எதிர்த்து எழுந்து, மூங்கிலாற் செய்த பொய்க்காலைப்போலத், தாமும் குறளைபேசி ஆடவே மாட்டார்கள். பொருளல்லார் கூறிய பொய்க்குறளை வேந்தன் தெருளுந் திறந்தெரிதல் அல்லால்--வெருளவெழுந்து, ஆடு பவரோடே ஆடார், உணர்வுடையார், ஆடுபணைப் பொய்க்காலே போன்று. ‘மணைக்கால்’ என்பதும் பாடம். அமைச்சர்கள், பொய் கூறி வேந்தன் மனத்தை எவராவது மாற்றினால், வேந்தனைத் தெளிவிக்கும் வகைகளை நாடுவாரே அல்லாமல், தாமும் அந்தப் பொய்யர்களோடு சேர்ந்து ஆடமாட்டார்கள் என்பது கருத்து. ‘ஆடுபணைப் பொய்க்காலே போன்று’ என்பது பழமொழி. உணர்வுடையார் - அறிவுடையார். 35. மக்களிடம் அன்பு குற்றங் குறைகளுடைய மனத்தினன் அல்லாத, பெரிய நலங்களை எல்லாம் உடைய வேந்தனானவன், தன் குடி மக்களி டத்தே அன்புள்ள உள்ளத்தானாக நடந்துவரல் வேண்டும். அப்படி நடந்து வந்தான் என்றால், அவனைக் கொல்ல எண்ணும் பகைவர்கள், வேண்டிய அளவு முன்னுரைகள் எல்லாம் கூறிப் படை திரட்டினாலும், அவ்வரசனை என்ன செய்துவிட முடி யும்? ஆயிரம் காக்கையை ஓட்டுவதற்கு ஒரு சிறு கல்லே போது மானது போல, அவ்வேந்தன் ஒருவனே, அப் பகைவர்கள் அனை வரையும் தோற்று ஓடச் செய்து விடுபவனாவான். மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன் உறுமனத்த னாகி ஒழுகின் செறுமனத்தார் பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப? ஆயிரம் காக்கைக்கோர் கல். ‘தெறுமனத்தார்’ என்பதும் பாடம். இதனால் ஆட்சியில் இருப்பவர்க்குக் குடிமக்களின் அன்புக்குப் பாத்திரமாவதே சிறந்த வலிமையாகும் என்று சொல்லப்பட்டது. ‘ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்’ என்பது பழமொழி. இப்படியே அவனு டைய பகையும் அஞ்சி கலைந்து போம். 36. ஆராய்ந்த பின் நம்புங்கள் தமக்கு அன்பு உடையவர்களாக விளங்குபவர்களிடத்தி னும், அவர்களை முழுவதும் ஆராயாதவனாகி நம்பிக்கை கொண்டவன், உறுதி யாகக் கெட்டே போவான். அப்படியிருக்க, ‘எப்பொழுதும் வெகுண்டவர்களைப் போல மனம் வேறு பட்டவர்களாகி நிற்கும் ஈரமற்றவர்களை நம்ப வேண்டாம்’ என்று, கொஞ்சம் சொல்ல வேண்டாம் அல்லவோ? விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும் முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா; அளிந்தார்கண் ஆயினும், ஆராயா னாகித் தெளிந்தான் விளிந்து விடும். ‘விளிந்து விடும்’- விரைந்து கெடும் என்பதும் பாடம் முளிதல் - காய்தல், தஞ்சம் - எளிமை. அன்புடையவர்களாகவோ அன்பற்றவர்களாகவோ விளங்கினாலும், எவரையும் ஆராய்ந்தே நண்பராகக் கொள்ளல் வேண்டும். ‘ஆராயா னாகித் தெளிந்தான் விளிந்து விடும்’ என்பது பழமொழி. 37. ஏவியது செய்யாத ஊழியர் ‘எம்மவராதலாலே நீவிர் இக்காரியத்தை எமக்குச் செய்து தருவீராக’ என்று, வேந்தன், தன்னுடைய சுற்றத்தார்களை நம்பி நியமித்த இடத்து, அக் காரியத்தைச் செய்வதற்கு ஏற்றுக் கொண்ட அச்சுற்றத்தினர், அம்மன்னனுக்காக வேல் முனையி லேயாயினும் வீழ்ந்து அதனை எப்படி யாயினும் நிறைவேற்ற வேண்டும். அப்படி அல்லாமல் அந்தக் காரியத்தை வேண்டா மென மறுத்துச் சொல்வார்களானால், ‘ஆல்’ என்று சொல்லப் ‘பூல்’ என்று மறுத்துச் சொல்வது போன்றதே அதுவாகும். எமரிது செய்க எமக்கென்று வேந்தன் தமரைத் தலைவைத்த காலைத்--தமரவற்கு வேலின்வா யாயினும் வீழார் மறுத்துரைப்பின் ஆல்என்னிற் பூல்என்னு மாறு. ‘ஆல்’ பெரிது; ‘பூல்’ பெரிது பெரியதைச் சொல்ல அதனை மறுத்துச் சிறியதை உரைப்பவர் தகுதியற்றவர். அரசச் சுற்றத்தார் தம் உயிர் கொடுத்தாயினும் அரசனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும். அன்றி, மறுப்பவர் ஊழியத்திற்கு உதவார் என்பது கருத்து. ஆல் என்னிற் பூலென்னு மாறு என்பது பழமொழி. 38. பனைபோலச் செய்யும் உதவி பெரிய மூங்கில் வில்லினையும் தன் வடிவினாலே வெற்றி கொண்ட அழகிய புருவத்தையும் உடையவளே! தம்மை விரும்பி வந்து சேர்ந்திருப்பவர்களுக்கும், தம்முடைய சுற்றத்தினர்களுக் கும் அவர்களை வருத்துகின்ற பசித்துன்பத்தினைப் போக்காத வர்கள், யாரோ புதியவர்களுக்கு உதவுதலானது, தன்னை மிகவும் பாதுகாத்து வளர்த்தார்க்கு உதவாது, நெடுங் காலஞ் சென்று, பின்வரும் புதியவர்களுக்கு உதவுகின்ற இயல்பினையுடைய, கரிய பனைபோலும் தன்மையை உடையதாகும். விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும் வருந்தும் பசிகளையார் வம்பர்க்கு உதவல், இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! ஆற்றக், கரும்பனை அன்ன துடைத்து. செல்வம் உடையவர்களாயிருந்தும், வந்த விருந்து உறவுமான பசித்தவர்க்கு உதவாமற் போனால், அது பயனற்ற செல்வமே. ‘ஆற்றக் கரும்பனை அன்னது உடைத்து’ என்பது பழமொழி. 39. எளியவன் கண்ணீர் வலியவனை அழிக்கும் தம்முடைய குடிப்பிறப்பினாலே பொல்லாத தன்மையை உடையவர்கள்; எத்தகைய துணைவலிமையும் இல்லாத வர்கள்; மிகவும் வறுமைப்பட்டிருப்பவர்கள்; பதில் கூறும் சொற்களினா லே நம் பகைவரைப் போன்றிருக்கிறார்கள் என்று. வலியவர் ஒரு வர் அவரை அலைக்கழித்த காலத்திலே, அந்தத் துயரத்தைப் பொ றுக்க மாட்டாது, வலியற்றவரான அவர்கள் அழுத கண்ணீர் ஆகிய அவையே அப்படி ஆட்டுவித்தவர்களுக்கு எமனாகி, அவர்களை அழித்துவிடும். தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார் மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால் ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்த்து விடும். எளியாரை வலியார் வருத்தினால், அவரால் அவரை எதிர்த்து அழிக்க முடியாவிட்டாலும் அவர்கள் பெருக்கிய கண்ணீரே அவ்வலியாரை அழித்துவிடும். ‘ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்து விடும்’ என்பது பழமொழி. 40. கற்றவர் எந்நாட்டினும் சிறப்படைவர் கற்க வேண்டிய நூல்களை மிகுதியும் கற்று அறிந்தவர் களே அறிவுடையவர் ஆவார்கள். அத்தகைய அறிவினை உடையவர் களது புகழானது நாற்றிசைகளினும் சென்று பரவாத நாடே இல்லையாகும். அந்நாடுகள் அவர்களுக்கு வேற்று நாடுகளும் ஆவதில்லை. அவர்களின் சொந்த நாடுகளாகவே அவை விளங் கும். அங்ஙனமானால், அத்தகையோர் செல்லும் வழிக்குக் கட்டுச் சோறு கொண்டுபோக வேண்டியதும் இல்லை அல்லவா! ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை--அந்நாடு; வேறுநா டாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில். கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் தம்நாடு போலவே மதித்துச் சிறப்பளிக்கும் நாடுகளாகும். ‘ஆற்றுணா வேண்டுவதில்’ என்பது பழமொழி. ஆற்றுணா - வழிக்கு உதவும் கட்டுச் சோறு; அது வேண்டாம் எனவே எங்கும் உபசரிக்கப் பெறுவர் என்பதாம். 41. பகைவரைச் சூழ்ச்சியால் அழித்தல் ‘மன வேறுபாடு’ என்பது, எத்திறத்தார்களுக்கும் உள்ளதே. அவ் வேறுபாட்டால் கூறும் மாறுபட்ட சொற்களைஅதற்கு எதிராக அவர்கூறும் எதிர்மாற்றங்களே உடைக்க வல்லன. தம் பகைவர்களை அவரிடம் மிகுந்த பகைமை கொண்டுள்ளவரைக் கொண்டே எளிதாகக் களைதல் வேண்டும். ஆதலால், அங்ஙனம் தம் பகைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அழிக்க வல்ல வனே, தான் ஒருவனாகவே நூறு பேர்களைக் கொல்லும் பேராற்றல் உடையவனாவான். மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்றவர்க்கு ஆற்றும் பகையால் அவர்க்களைய--வேண்டுமே வேற்றுமை யார்க்குமுண் டாகலான் ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும். பகைவரிடத்து ஒட்டி நண்பரைப்போல நடந்து, அவரை அழிக்க வல்லவர்களைப் பெற்றால். எத்தகைய பெரும் பகை யையும் எளிதில் வென்று விடலாம். ‘ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்’ என்பது பழமொழி. 42. அறத்தைப் பாதியிலே நிறுத்தக்கூடாது நல்லறம் செய்வதற்குப் பொருந்திய வகையினாலே, செய்யக் கருதிய நல்லறத்தைப் பலரும் வருத்தமடையாமல் ஒரு கட்டுக் கோப்பு உடைய தாகவே செய்து வருவானாக. இடையில், அது இடையூறு உடையதாகி, அதனால் இடையிலே நிறுத்தி ஒழிதலைவிடப், பயிரை நட்டுவிட்டுக் காத்து விளையவைத்து அறுத்துப் பயன்பெறாமற் போயின வனாதலைவிட நடாமலிருப்பவனா யிருத்தலே நல்லதாகும். பட்ட வகையால் பலரும் வருந்தாமல் கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம் முட்டுடைத் தாகி இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று. அறம் செய்பவர், குறுக்கிடும் இடர்ப்பாடுகளைக் கருதி, இடையிலே அதனை நிறுத்தி விடுதல் கூடாது. தொடங்கியதை முற்றவும் செய்து பயன்பெறுதல் வேண்டும். ‘இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று’ என்பது பழமொழி. 43. பகைவரின் துணைவரை நட்பாக்கிக் கொள்க “யானும், இவ்விடத்திலே துணையாகப் பகைவருடன் இருந்த என் தமையனும்; ஒன்று சேர்ந்துவிட்ட காலத்திலே, பகைவருடைய வீரம் எல்லாம் செல்வதற்கு இடம் எதுவும் இல்லை” இப்படிச் சொல்லி அவரும் தம்முடனே கூடிப் படைத் துணையாகி நின்று பகைவருடன் மாறுகொள்ளு மாறு, பகை வரிடமிருந்து அவரைப் பிரிந்து விடத் தூண்டுதல் சிறந்ததாகும். அதுதான், இடையரின் நாய்க்கு ஆடு திருடும் கள்ளர்கள் எலும்பி னை இடுதலோடு ஒக்கும். யானுமற் றிவ்விருந்த எம்முனும் ஆயக்கால் வீரஞ் செயக்கிடந்த தில்லென்று--கூடப் படைமாறு கொள்ளப் பகைதூண்டல் அஃதே இடைநாயிற் கென்பிடு மாறு. பகைவர் இருவராகிய இடத்து, அவருள் ஒருவரை உற வாடிப் பிரித்துத் தம்மவராக்கிக் கொள்ளல் சிறப்புடையது. ‘இடை நாயிற்கு’- கிடை நாயிற்கு என்றும் பாடம். ‘இடை நாயிற்கு என்பு இடுமாறு’ என்பது பழமொழி. என்பு பெற்ற நாய் கள்ளற்குச் சாதகமாவது போலப் பகைவர்க்குத் துணை யாக வந்தாரும் மாறிவிடுவர் என்பதாம். 44. இல்லாததைத் தருவதாகச் சொல்லவேண்டா வேலினது தன்மையைப் பெற்று, முற்றவும் அமர்த்த கண்களை யுடைய, பசிய வளையல்களை அணிந்தவளே! மிகவும் நெருங்கிப் பழகிய வர்கள் தமக்கொன்று வேண்டும் என்று கூறும் சொற்களைக் கேட்டால், தன்னிடத்திலே இல்லாத அப்பொரு ளைத் தன்னிடத்தே உடைய தொன்றாகவும் அதனைத் தாம் தருபவராகவும் உறுதியாகக் கூறினால், அங்ஙனம் வீணே கூறுதல், இடையனால் வெட்டப் பட்ட மரத்தினைப் போன்ற தாகும். அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால் உடையதொன் றில்லாமை யொட்டின்--படைபெற்று அடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால் இடையன் எறிந்த மரம். இடையன் கொஞ்சங் கொஞ்சமாகத் தழையை ஒடித்தே ஒரு மரத்தை அழித்து விடுகிறான். அது போலவே இல்லாததைத் தருவதாக வாக்களிப்பவனின் புகழும் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து அழிந்து போம். ‘இடையன் எறிந்த மரம்’ என்பது இக்கருத்தை விளக்கும் பழமொழி. 45. கொடுப்பவனும் கொடுக்க மாட்டான் தன்னிடம் வந்து கேட்பவர்களுக்கு எதனையும் மறுக்கும் இயல்பில்லாதவனும், பலரும் தன்னிடத்தேயுள்ள ஒரு பொருளை வந்து யாசித்தால், அதனை அனைவருக்கும் தன்னால் கொடுக்க முடியாததனால், அவர்களுள் பெறாதவன் மயக்கம் அடைதலை நினைத்து மனம் பொறாத வனாகித், தன்னிடத்தேயுள்ள அப் பொருளை ஒளித்துவைத்து இல்லை யென்று மறைப்பான். அதனால் யாசித்து உண்பதற்குப் பலராகச் செல்லுதல் எப்போதும் தீமையையே தருவதாகும். மறாஅ தவனும் பலரொன் றிரந்தால் பெறாஅ அன்பேதுறுதல் எண்ணிப்--பொறாஅன் கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால் இரந்தூட்குப் பன்மையோ தீது. இரந்து உண்ணுதலுக்குப் பலராகச் செல்லுதல் கூடாது. ‘இரந்தூட்குப் பன்மையோ தீது’என்பது பழமொழி. கொடுக்க நினைப்பவனையும் கொடுக்க விடாது செய்து விடும் என்பது இதன் கருத்தாகும். 46. வாழ்விலே உறுதி வேண்டும். இல்லற வாழ்க்கையானாலும் அஃதில்லாத துறவற வாழ்க்கை யானாலும் தாம் உறுதியாக இரண்டிலொன்றை மேற்கொண்டு ஒருவர் ஒழுகலாம். அப்படி ஒழுகாதவராகிச் சிறந்த வாழ்நாள் வீணாகக் கழிந்துபோக நடுவே எதனிலும் செல்லாமல் தடைப்பட்டு நின்று, எல்லாவற்றையும் ஆழ்ந்து, உறுதியாகத் துணிந்து ஒரு வழியாலே நடக்காதவர்கள் வாழ்வைப் பயனின்றிக் கழித்தவர்கள் அவர்களே காவின் இருபக்கத்திலுள்ள பொருள் களையும் நீக்கிவிட்டுத் தண்டினை மட்டுமே சுமந்து செல்பவர் களுக்குச் சமானமாவார்கள். இல்வாழ்க்கை யானும் இலதானும் மேற்கொள்ளார் நல்வாழ்க்கை போக நடுநின்று--எல்லாம் ஒருதலையாச் சென்று துணியா தவரே இருதலையும் காக்கழித் தார். இரு வகை வாழ்க்கையினும் எதன்பாலும் முறையே ஈடுபட்டு நிலைத்து வாழாது வாழ்நாட்களைக் கழிப்பவர், பயனற்று வாழ்ந்தவராவார். ‘இருதலையும் காக்கழித் தார்’ என்பது பழமொழி. இருபக்கமும் சுமையைத் தொங்கவிட்டு எடுத்துச் செல்ல உதவுவது காவடித்தண்டு. சுமைகளை அகற்றி விட்டு வெறுந்தண்டைச் சுமந்து போவது நகைப்பிற்கே இடமாகும். 47. போலி நண்பர்கள் கேடு செய்வார்கள் தம்மிடத்திலே மிகுதியாக நட்புப் பூண்டவர்களுக்கும், அவர்களுடைய பகைவர்களுக்கும் இடையே சென்று, இருவரி டத்தும் மன வேறுபாடு இல்லாமல் மிகவும் நட்புடையவர்கள் போலவே பேசிப் பழகி, அவர்களுள் ஒருவருடனும் மனம் ஒருமைப்பட்டு விளங்காதவர் மிகவும் கெட்டவர்கள். அவர்களே இருதலைக் கொள்ளி என்று சொல்லப்படுபவராவர். பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள் ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே இருதலைக் கொள்ளியென் பார். இருவரது பகைமையும் வளர, இருவராலும் இவருக்கும் கேடே விளைதலால், ‘இருதலைக் கொள்ளி’ போன்றவராயினர் அவர் என்க. ‘இருதலைக் கொள்ளி என்பார்’ என்பது பழ மொழி. சமாதானம் செய்யமுயல்பவர் இருவருக்கும் பகையாத லும் கூடும் என்பது கருத்து. 48. அச்சம் உள்ளவனுக்குப் பாதுகாப்பே இல்லை கோட்டைவாயிலை அடைத்துவைத்துப் பாதுகாவல் பெற்றுக் கோட்டையினுள்ளே இருந்தாலும், போருக்கு ஆற் றாது அச்சங்கொண்டு உள்ளே புகுந்திருப்பவர், அந்த அச்சத்தின் காரணமாகவே பகைவர்களிடம் எளிதாக அகப்பட்டு விடுவார் கள். பயந்து, இருளினிடத்தே போய் இருந் தாலும், பறவை யானது, அது உண்மையாகவே இருளினையுடைய இரவா யிருந் தாலுங்கூட, அதனைப் பகலென நினைத்தே அஞ்சும். இஞ்சி அடைத்துவைத் தேமாந் திருப்பினும் அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார்--அஞ்சி இருள்புக் கிருப்பினும் வெய்யே வெரூஉம்புள் இருளின் இருந்தும் வெளி. உள்ளத்திலே, அச்சம் உடையவர்கள் வீரராவது இல்லை; அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதும் எளிதன்று. ‘இருளின் இருந்தும் வெளி’ என்பது பழமொழி. இருளில் மறைந்து இருந்தாலும், பகை தன்னைக் கண்டு அழித்து விடுமோ என அஞ்சும் என்பதாம். 49. வாய்ப் பேச்சு வீரர்கள் நல்ல கல்வியறிவு உடையவர்கள் கூடியிருக்கிற அவை யினைக் கண்டால் தம் நாவைச் சுழட்டி வைத்துக் கொண்டு, நன்மையானவைகளை உணராத புல்லர்களின் கூட்டத்திலே, தம்மைப் புகழ்ந்து பேசிக் கொள்ளுதல், பகைவரிடத்திலே உள்ள வீரத் தன்மைக்குப் பயந்த ஒருவன், தன் வீட்டின் உள்ளேயே இருந்துகொண்டு, தன் வில்லை வளைத்து நாணேற்றி எதிர்ப் பட்ட பானைசட்டிகளிலே எய்து, தன் போர்த் திறமையைக் காட்டுவது போன்றதாகும். நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப் புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல்--புல்லார் புடைத்தறுகண் அஞ்சுவான் இல்லுள்வில் லேற்றி இடைக்கலத்து எய்து விடல். இடைக்கலம்-கருங்கலம்; பானை சட்டிகள். புல்லார்-பகைவர் ‘இல்லுள் வில்லேற்றி இடைக்கலத்து எய்து விடல்’என்பது பழமொழி. இப்படிச் செய்வது புல்லறி வாண்மை என்பது கருத்து. 50. நல்ல விதி இருப்பவன் சிறப்பு அடைவான் பகைவர் இட்ட நெருப்பினாலே காலிற் சுடப்பட்டு உயிர் பிழைத்துச் சென்ற பராந்தகச் சோழனின் மகனாகிய கரிகால் வளவனும், இரும்பிடர்த் தலையார் என்னும் பெயரையுடைய வரைத் தனக்குத் துணையாகப் பெற்று, பின் காலத்திலே தன் பகைவர்களை எல்லாம் வென்று, குற்றமற்ற செங்கோல் செலுத் தினான். அதனால், உயிருடையவர் முயன்றால் அடையாத தொழில் எதுவுமில்லை என்றறிக. சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும் பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக்--கடைக்கால் செயிரறு செங்கோல் செலீஇயினான்; இல்லை உயிருடையார் எய்தா வினை. முயற்சியுடையார் தம் உயிரைக் காத்துக் கொண்டால் என்றேனும் நல்வாழ்வு பெற்றே தீர்வர் என்பதாம். ‘இல்லை உயிருடையார் எய்தா வினை’ என்பது பழமொழி. எனவே உயிரைக் காத்துக் கொண்டு ஆகும் காலத்தை எதிர்நோக்கி செயலாற்ற வேண்டும் என்பது கருத்து. 51. நாணயம் இல்லாதவனிடம் ஒப்பிக்க வேண்டாம் கையினாலே தொட்டவர்களை ஒட்டிக் கொள்ளாத பொருள் உலகில் ஒன்றுமே இல்லை. சமையல் செய்தவரை ஒட்டிக் கொள்ளாத பாத்திரமும் கிடையாது. அதனால், கட்டுப்பாடு உடையதாக ஒருவனைத் தொடர்ந்து ஒரு செயலைச் செய்யுமாறு ஏற்படுத்துவதானால், அச் செயலி னோடு கலந்து, அதன் பயன் அனைத்தையும் உட்கொண்டு ஓடிவிடுகின்ற அன்பில்லாதவர் களை, ஒருபோதும் அதன்பால் வைக்கவே வேண்டாம். கட்டுடைத் தாகக் கருமம் செயவைப்பின் பட்டுண்டாங் கோடும் பரியாரை வையற்க தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை; இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம். ஒன்றைச் செய்ய ஒருவனை ஏவும்பொழுது அவனே அந்தச் செயலின் பயனை எடுத்துக் கொண்டு போய்விடும் இயல்புடைய வனானால் அவனை அதன்பால் ஈடுபடுத்த வேண்டாம்; வேறு தக்கவனையே ஏற்படுத்துக. ‘இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்’ என்பது பழமொழி. 52. பிழைக்கும் பொறி இருப்பவனுக்கு ஆபத்தே இல்லை ஆரவாரமாகப் பேசுகின்றாரே என்று துணைவராகக் கொள்ளப் பட்டவர்கள் அந்த எண்ணமானது பழுதுபட்டுப் போக, அந்தப் பிணிப்பினின்று தப்பி எழுந்துபோனாலும் போய் விடுவார்கள். ஆனால், அரக்கு மாளிகையினுள் இடப் பட்ட ஐவராகிய பாண்டவர்களும் இறந்துவிடாமல் தப்பிப் போய் விட்டார்கள் அல்லவோ! அதனால் பிழைக்கும் பொறி உள்ள உயிருக்குப் பிழைக்க முடியாத ஆபத்தான இடம் என்பது எதுவும் இல்லை என்று அறிக. குரைத்துக் கொளப்பட்டார் கோளிழுக்குப் பட்டுப் புரைத்தெழுந்து போகினும் போவார்--அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் போயினார் இல்லையே உய்வதற்கு உய்யா இடம். நண்பர்கள் கைவிட்டாலும், நல்ல ஊழ் இருந்தால் அவருக்கு எவ்விதமான ஆபத்தும் வராது. ‘இல்லையே உய்வதற்கு உய்யா இடம்’ என்பது பழமொழி. 53. உதவாதது எதுவுமே இல்லை வானகத்திலே தோய்ந்திருப்பனபோல விளங்கும் உயரமான குன்றுகள் பரந்து கிடக்கும் நாட்டுக்கு உரியவனே! ஒருவர் மற்றொருவரைத் தமக்குத் துணையாகக் கொள்ளுதல் நன்மையேயாகும். பாம்பினால் வரவிருந்த ஒரு துன்பத்தைப் பார்ப்பான் பக்கத்திலே இருந்த நண்டுங்கூட நீக்கியது. அதனால், சொல்லப்போகுமிடத்து, ஒன்றுக்கும் உதவாத பொருள் என, இவ்வுலகில் ஒன்றுமே இல்லை. நன்றே ஒருவர்த் துணையுடைமை பாப்பிடுக்கண் நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான்--விண்டோயும் குன்றகல நன்னாட! கூறுங்கால் இல்லையே ஒன்றுக் குதவாத ஒன்று. பார்ப்பான் ஒருவன் தன் தாயின் ஆணைப்படி நண்டைத் துணையாகக் கொண்டு செல்ல, அது அவனைக் கடிக்க வந்த பாம்பினைத் தன் கொடுக்கால் இறுக்கிப் பிடித்துக் காத்தது என்பது கதை. இதனால் எத்தகைய நண்பராலும் சமயத்திற்கு அவராலும் உதவி கிடைக்கும் என்பது கூறப்பட்டது. ‘இல்லையே ஒன்றுக் குதவாத ஒன்று’ என்பது பழமொழி. ‘சிறு துரும்பும் பற்குத்த உதவும்’ என்பதும் இதே கருத்தைக் கூறுவது. 54. தற்பெருமை அழிவையே தரும் உலகம் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்டவன் மாவலி. அவனும்பின் வந்து சம்பவிக்கப் போகின்ற தன் நிலையை ஆராய்ந்து அறியாதவனாயினான். ‘எனக்கு எல்லாம் முடியும்! எனக்கு எல்லாம் எளிதே’ என்று, தன் குருவான சுக்கிரர் தடுத்தும் கேளாமல், செருக்கினால் மிகுந்து இரந்து வந்த வாமனனுக்கு மூன்றடி மண், நீர் வார்த்துக் கொடுத்தான். அதன் பயன், அனைத்தையுமே இழந்து விட்டான். ஆதலால், குற்றமுடைய ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவர்களுக்குத் தாமே தமக்குக் கொண்டுதர வராத துன்பங்களே இல்லை யாகும். ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன் மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான் தோஒ முடைய தொடங்குவார்க்கு, இல்லையே தாஅம் தரவாரா நோய். குற்றமுள்ள செயலிலே ஈடுபட்டவர் தமக்குத் தாமே துன்பத்தைத் தேடிகொள்ளும் அறியாமை உடையவர்கள் தோஒம்-குற்றம். ‘இல்லையே தாம் தர வாரா நோய்’ என்பது பழமொழி. 55. அரசனே முறை தவறினால் செய்வது என்ன? அலைகள் மிகுதியாகப் பொங்கி வருகின்ற கடற்கரைக்கு உரியவனே! தன்னுடைய வெண்குடையின் கீழாக வாழ்கின்ற குடிமக்களுக்கு அரசனும், செங்கோன்மை உடையவனாகவே விளங்கவேண்டும. அப்படி இல்லாமற் போனால், அந்த மக்கள் தாம் செய்வதற்கு என்ன இருக்கிறது? யானையானது தொட்டு உண்ணத் தொடங்கி விட்டால், அதற்கு மூடி மறைத்து வைக்கத் தகுதியான பாத்திரம் என்பது எதுவுமே கிடையாதல்லவா? வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும் செங்கோலன் அல்லாக்கால் செய்வதென்--பொங்கு படுதிரைச் சேர்ப்ப! மற்று, இல்லையே, யானை தொடுவுண்ணின் மூடுங் கலம். அரசன் எப்பொழுதும் செங்கோன்மை உடையவனாக இருக்க வேண்டும். ‘கொடுங்கோன் மன்னன் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று’ என்பதையும் நினைக்க. ‘இல்லையே, யானை தொடுவுண்ணின் மூடுங் கலம்’ என்பது பழமொழி. அரசனே முறைதவறினால் தடுப்பவர் யாரும் இல்லை என்பதாம். 56. படித்தவனிடமே பொறுப்பை ஒப்புவிக்கவும் ஒரு செயலைச் செய்வதற்குரிய ஆளினை ஆராயுங் காலத்திலே, இவன் நம் உறவினன் என்றோ, உறவினன் அல்லாத வன் என்றோ கருத வேண்டாம். ஒள்ளிய பொருளை கற்றறிந்த ஒருவனை ஆராய்ந்து பார்த்து அவனிடமே அதை ஒப்புவிக்கவும். படித்தவன், தன் உரிமையாளனின் பேச்சைக் கேட்பான். அவன் கேளாமற்போனாலும் அது எருது உண்டுவிட்ட உப்பைப் போன்று நன்மை தருவதாக முடியுமே அல்லாமல், உடைமைக் காரனுக்கு நட்டமாகாது. உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக் கற்றானை நோக்கியே கைவிடுக்க--கற்றான் கிழவனுரை கேட்கும் கேளான் எனினும் இழவன்று எருதுண்ட உப்பு. கற்றவனிடமே காரியத்தை ஒப்புவிக்க வேண்டும் என்பது கருத்து. எருது உப்பைத் தின்றாலும், அதிக உரமுடையதாக உரியவனுக்கு நன்றாக உழைப்பது போலக் கற்றவனும் உழைப்பான் என்பதாம். ‘இழவன்று எருதுண்ட உப்பு’ என்பது பழமொழி. 57. கல்லாதவனுக்கு உபதேசிப்பதும் தீங்கே நல்ல பெண்மைப் பண்புகளை உடையவளே! தாம் ஒழுக்கக் குறைபாட்டினாலே இழிவுடையவராவதைக் காட்டினும் ஒருவர்க்கு இழிவு தருவது யாதும் இல்லை. அதே போல ஒழுக்கத்தின் சிறப்பினாலே வரும் உயர்வைவிடச் சிறந்த உயர்வும் ஒருவர்க்கு யாதுமில்லை. இவை போலக் கல்லாதவர்களிடையிலே சென்று உறுதிப்பொருள் பற்றிக் கட்டு உரைப்பதினும், மிகுதியான ஒரு பொல்லாங்கும் இல்லை என்று அறிவாயாக. கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை ஒருவற்கு--நல்லாய்! இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. கல்லாதவன், அதனைக் கேட்டதும் சொன்னவரையே அவமதிக்க முற்படுவான்; அதனால் பொல்லாங்கே மிகுதி யாகும் என்பது கருத்து. ‘இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு’ என்பன இரண்டும் பழ மொழிகள். 58. தொழுவதால் வினை மாறாது இவ்வுலகத்து நம் வாழ்வு முழுவதையும், நாம் பிறவி எடுப்பதற்கு முன்பாகவே வகுத்துவிட்டவன் என்று கருதி, கடவுளைத் தொழுது கொண்டே இருந்தால், வந்த துன்பங்கள் எல்லாம் தாமே ஒழிந்து போய் விடுமோ? காவலைக் கை விட்ட வன் பசுநிரையைக் காப்பாற்றுவதில்லை; அவ்வாறே முதலில் ஓலையைப் பழுதுபட எழுதினவன், தானே குற்றம் செய்தவனாக, அவனே மீண்டும் அதனை நேராது காப்ப வனாதல் என்பதும் ஒருபோதும் இல்லையாகும். முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல் இழுகினா னாகாப்ப தில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுது. ஊழ்வினையால் துன்பம் வருவதாயினும், அதனை முயற்சியால் மாற்றிக் கொள்ளலாமே தவிரத் தெய்வங்களைத் தொழுது மட்டும் மாற்றிக் கொள்ள முடியாது. ‘இழுகினான் ஆ காப்பதில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுது’ என்பது பழமொழி. இழுகினான் ஆகாப்பது இல்லை; முன்னம் ஓலை பழுதாக எழுதினான், அவனைக் காப்பதுமில்லை என்க. 59. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சிறப்பினையுடைய தன்னுடைய இனமெல்லாம் தன் உடனே இல்லாமற் போய்த் தனித்துக் காணப்பட்ட இடத்தும், இளையது என்று கருதியும், எவரும் பாம்பினை இகழ்ச்சியாகக் கருத மாட்டார்கள். அது போலவே, சிறந்த தகுதிகளை உடைய மன்னர்கள் தம்முடைய சிறந்த நிலைமையனைத்தும் கெட்டுப் போய் விளங்கிய காலத்தும் அந்த நிலைமையைப் பார்த்து, அதற்குத் தக்கபடி அவரை இழிவாகக் கூறி யாரும் இகழ்ந்து பேசவே மாட்டார்கள். சீர்த்தகு மன்னர் சிறந்ததனைத்தும் கெட்டாலும் நேர்த்துரைத் தெள்ளார் நிலைநோக்கிச்--சீர்த்த கிளையின்றிப் போஒய்த் தனித்தாயக் கண்ணும் இளைதென்று பாம்பிகழ்வார் இல். அரச குடிப்பிறப்பின் உயர்வு பிற கேடுகள் வந்த காலத்திலும் ஒருவரை விட்டு மாறாது; அவரை எள்ளற்கு யாரும் துணியார் என்பது கருத்து. ‘இளைதென்று பாம்பி கழ்வார் இல்’ என்பது பழமொழி. 60. கிடைத்ததைக் கொண்டு முயல்க வாய்ப்பதற்கு அரியதான ஓர் இடத்தினுள்ளே, முதலிலே ஒருவன் இருப்பதற்கு இடம் பெற்று விட்டானென்றால், அடுத்து, அவன் படுப்பதற்கான இடத்தையும் அங்கேயே பெற்று விடு வான். அதுபோலவே, முதலில் சிறிதளவான ஊதியம் பெற்றுச் செல்வரைச் சேர்ந்தவர்கள், விரைவிலே பெரிதளவான ஊதியத் தையும் அவரிடமிருந்து பெறுவார்கள். சிறிதாய கூழ்பெற்றுச் செல்வரைச் சேர்ந்தார் பெரிதாய கூழும் பெறுவர்--அரிதாம் இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும். செய்யும் முயற்சியிலே, முதலில் சிறிதான பலன் கிடைத்தாலும், இகழாது நிலைத்து நிற்பவர், விரைவிற் பெரிய பலனையும் அடைவர். ‘இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும்’ என்பது பழமொழி. 61. தளராத முயற்சியே உயர்வு தரும் வெள்ளமானது அலையெழுந்து கரையிலே மோதி ஆரவாரிக்கும் கடல்நீர்ப் பெருக்கினையுடைய சேர்ப்பனே; தான் படித்து அறிந்தது என ஒரு தகுதி இல்லாது போனாலும், தான் எடுத்த செயலை இறுதிவரையும் முடித்து விடுகின்றவன் அறிவு டையவனே யாவான். அங்ஙனம் செயலைச் செய்து முடிப்பவன், வயதில் இளையவனே யானாலும், அவனை அறிவினால் முதிர்ந் தவன் என்றே கொள்ளல் வேண்டும். கற்றதொன்று இன்றி விடினும் கருமத்தை அற்ற முடிப்பான் அறிவுடையான்--உற்றியம்பும் நீத்தநீர்ச்சேர்ப்ப! இளையோனே யாயினும் மூத்தானே யாடு மகன். இறுதிவரையும் ஏற்றத்தை முடித்துக் காணும் தளராத முயற்சி உடைமையே அறிவுடைமையாகும். ‘இளையோனே யாயினும் மூத்தானே ஆடு மகன்’ என்பது பழமொழி. 62. தகுதியற்றவரை விலக்குவதற்கு காதிற் குழைகளை அலைத்து விளங்கும் அகன்ற கண்களை உடையவளே! சாகப்போகின்ற காராட்டை உடன்பாடு கொள் ளச் செய்து அதன்பின்னரே அதன் குருதியை உண்டவர் உலகத் திலே எவருமில்லை. அதேபோல, ஒரு காரியத்தைச் செய்வதற் கென்று ஏற்படுத்த்திக் கொள்ளப் பட்டவர்கள், அந்தக் காரியத் தளவிலே நன்மை செய்யும் தகுதியற்றவ ரானால், அதனை அவருக்கு எடுத்துக்காட்டி, அவர் சம்மதத்தைப் பெற்று நீக்கி விடுவோம் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின் காட்டிக் களைதும் எனவேண்டா--ஓட்டி இடம்பட்ட கண்ணாய்! இறக்குமை யாட்டை உடம்படுத்து வெளவுண்டார் இல். காரியம் முடிக்கத் தகுதியற்றவரை அவருடைய தகுதியின்மையை உணர்த்திக் காட்டி விலக்க முயல வேண் டாம்; உடனேயே நீக்கி விட வேண்டும். ‘இறக்கும் மை யாட்டை உடம்படுத்து வெளவுண்டார் இல்’ என்பது பழமொழி. 63. இழந்ததை அடையவே முடியாது ஒலி முழங்கும் நீரினை உடைய உப்பங்கழிகள் அலை வீசிக் கொண்டிருக்கின்ற கானற் சோலைகளுக்கு உரிய அழகிய சேர்ப்பனே! கழிந்து போயின ஒன்றினை மீட்டுத் தருவதற்கான வழியினை அறிபவர்கள் எவருமே இல்லை. அதனால், தம்மிடத்திலே உள்ள பொருள்களைத் தாமே போற்றிப் பேணுவதல்லாது, சிறந்தவராகிய சுற்றத்தார் எனக் கருதி, நம்பக் கூடாதவரிடத் திலே, பொருளைப் போற்றுபவர் மறந்துங்கூட விட்டுவைக்க மாட்டார்கள். மறந்தானும் தாமுடைய தாம்போற்றின் அல்லால் சிறந்தார் தமரென்று தேற்றார்கை வையார்; கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப! இறந்தது பேர்த்தறிவார் இல். தம்முடைய உடைமைகளைத் தாமே காத்துப் பேண வேண்டுமே யல்லாமல், நம்பிக்கையற்ற பிறர் பேணுவார் என விடுதல், அதனை இழத்தற்கே காரணமாகும். ‘இறந்தது பேர்த்தறி வார் இல்’ என்பது பழமொழி. 64. கொடுக்கக் கொடுக்கப் பெருகும் கடற்பரப்பிலே, துறையினின்றும் செல்வனவும் துறை நோக்கி வருவனவுமான தோணிகள் நிலையாக உலவிக் கொண் டிருக்கிற, அசைகின்ற நீர்ப் பெருக்கினையுடைய கடல் நாடனே! ‘தம்மிடத்தே வந்து யாசித்தவர்களுக்கு ஒன்றைக் கொடுப்ப தனால் தம் செல்வம் குறைந்துபோய் விடும்’ என்று நினைத்துத், தம் செல்வத்தை மறைத்து வைப்பவர்கள், இறைக்குந்தோறும் ஊறிப்பெருகும் கிணற்றினைப் பார்த்தேனும், பொருளின் உண்மைத் தன்மையை அறிய மாட்டார்களோ? இரப்பவர்க்கு ஈயக்குறைபடும்என் றெண்ணிக் கரப்பவர் கண்டறியார் கொல்லோ--பரப்பில் துறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப! இறைத்தொறும் ஊறும் கிணறு. கொடையால் பொருள் மிகுதியாகும் நல்லூழ் ஒருவனுக்கு வந்து வாய்க்கும். ‘இறைத்தொறும் ஊறும் கிணறு’ என்பது பழமொழி. ‘இறைத்த கிணறு ஊறும்: இறையாத கிணறு நாறும்’ என்று இந்நாளில் வழங்குகிறதையும் நினைக்கவும். 65. மக்கள் விரும்புவன செய்க ஒன்றைச் செய்ய வேண்டுமென மனங்கொண்ட இடத்தும் பொருந்தி வராத ஒன்றினை அறிவுடையோர் செய்ய மாட்டார் கள். சான்றோர்கள் சொன்ன அறிவுரைகளை உள்ளத்திலே பெரிதாகக் கொண்டு பேணிக்காத்து வருதல் வேண்டும். மக்கள் விரும்புவனவான செயல்களைச் செய்யக் கூடாதனவாகவே இருந்தாலும் செய்தலே வேண்டும். செய்யக் கூடாதன விரும்பின தற்காக மக்களினத்தையே கழுவேற்றினவர் எவரும் இல்லை. மனங்கொண்டக் கண்ணும் மருவில செய்யார் கனங்கொண்டு உரைத்தவை காக்கவே வேண்டும் சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க இனங்கழு வேற்றினார் இல். மக்களிற் பெரும்பாலோரின் விருப்பத்திற்கு ஆட்சியாளர் கள் மதிப்புக் கொடுக்க வேண்டுமே தவிர, சட்டம் இப்படிக் கூறுகிறதென அவர்களுக்கு மாறுபட்டு நிற்றல் வேண்டாம்; அவர்களை ஒடுக்கவும் முயல வேண்டாம். ‘இனங்கழு வேற்றினார் இல்’ என்பது பழமொழி. 66. இனிமையாகவே பேசுக ஒருவனைப் புன்மையான சொற்கள் துன்பத்திற் கொண்டு விடுமே யல்லாமல், இனிமையான சொற்கள் ஒருபோதும் துன்பத்திற் கொண்டு விடுவதில்லை, புன்மையான சொற்களும் நன்மையான சொற்களும் தருகின்ற பயனை உண்மையாக உணர்வதற்கு வல்லவர்கள், வன்மையான பேச்சுப் பேசுகிறவர் களாக வாழ்ந்திருத்தலும் உண்டோ? புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின் றுணர்கிற்பார் வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ? புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை இன்சொல் இடர்ப்படுப்ப தில். இனிமையாகவும் நன்மைதரும் சொற்களாலும் பேசுவதே சிறப்புடையது. ‘இன்சொல் இனிதீன்றல்’ என்ற குறளையும் நினைக்க, ‘இன்சொல் இடர்ப்படுப்ப தில்’ என்பது பழமொழி. 67. ஒருவனை எதிர்க்க இருவர் பெரிய மலைகளையுடைய நாட்டிற்கு உரியவனே! வேட்டையாடுதல் என்பது சிறிது பொழுதளவே என்றாலும் ஒரு நாயைக் கொண்டே இருவர் வேட்டையாடினால், அது துன்பந் தருவதேயாகும். அதுபோல, ஒருவன் சொல்பவை களைச் சொன்னால், அதனைக் காரணமாகக் கொண்டு, அவனுக்கு மாறுபட்ட இருவர் ஒரே சமயத்தில் அதற்கு எதிர்வாதமிடத் தொடங்குதலும் தகுதி உடையதாகாது. ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா பெருவரை நாட! சிறிதேனும் இன்னாது இருவர் உடனாடல் நாய். அவையிலே, ஒருவர் சொன்ன கருத்தினை ஒரே சமயத்திலே ஒருவர் தாம் மறுத்துப் பேசலாமே தவிரப் பலரும் எழுந்து மறுத் துப் பேசுதல் அவைப் பண்பு ஆகாது. பாலா - பண்பாகுமோ? ‘இன்னாது இருவர் உடனாடல் நாய்’ என்பது பழமொழி. 68. பேயையும் பிரிய முடியாது விளங்கும் அருவிகள் பாய்ந்து வீழ்கின்ற வளமுடைய மலைநாட்டிற்கு உரியவனே! விலங்கேயானாலும், தம்மோடு உடன் வாழ்தலைக் கொண்டிருக்கும் பழகியவர்களைக் கைவிட் டுப் போவதற்கு இசையாது; ஆதலால் பேயோடென்றாலும் முதலிலே பழகி விட்டால் பின்னர் பிரிவதென்பது துன்பம் உடையதாகவே இருக்கும். விலங்கேயும் தம்மோடு உடனுறைதல் மேவும் கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா--இலங்கருவி தாஅய் இழியும் மலைநாட! இன்னாதே பேஎயோ டானும் பிரிவு. நட்புச் செய்வதற்கு முன்னர், தகுதி உடையவரை நாடியே நட்புச் செய்தல் வேண்டும். ‘இன்னாதே பேஎயோ டானும் பிரிவு’ என்பது பழமொழி. இதை நினைக்க வேண்டும். 69. கெட்டாலும் பெரியோர் பெரியோரே மேல்மாடங்களையுடைய பெரிய வீடானது அழிந்தவிடத் தும், அதிலுள்ள மரங்கள் மீண்டும் கட்டுவதற்கான ஒரு கூடத்திற் காவது பயன்படும்; அதுபோலவே பெரியோர்கள், செல்வம் இல்லாத இடத்தும், தம்முடைய பெருந்தன்மையினின்றும் குறை பாடுறவே மாட்டார்கள். அதனால், இணையில்லாத சிறப்புடைய ஒன்றுக்கு என்றுமே அழிவில்லை என்று அறிதல் வேண்டும். மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர் கூடம் மரத்திற்குத் துப்பாகும்--அஃதேபோல் பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர் ஈடில் லதற்கில்லை பாடு. பெரியோர், தம் வலிமையாலும் செழுமையாலும் குறைந்த காலத்தினும் பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவுவார்கள். சிறி யோர் அங்ஙனம் உதவார். ஆதலின் அவர் தொடர்பைக் கைவிடுக. ‘ஈடில்லதற் கில்லை பாடு’ என்பது பழமொழி. 70. எப்போதும் பொறுக்க முடியாது இனிதாக இசைத்தல் பொருந்திய யாழின் இனிய ஒலியைப்போல, வண்டினம் ஆரவாரிக்கும் நீர்வளமுடைய ஊரனே! வாழை மரங்கள் இருமுறை எப்போதாவது குலை ஈனுமோ? ஈனாது. அது போலவே முன்னம் ஒருமுறை பிழை செய்தவனையே, அவனே பின்னரும் மிகுதியாகப் பிழை செய்த காலத்தில் எவராவது பொறுப்பார்களோ? முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும் பின்னும் பிழைப்பப் பொறுப்பவே?--இன்னிசை யாழின்வண் டார்க்கும் புனலூர! ஈனுமோ வாழை இருகால் குலை? சான்றோர், பிறர் செய்த குற்றங்களைப் பொறுப்பார்கள் என்றாலும், அவர் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. இதனால், சான்றோர் பொறுப்பார்கள் எனக் கீழ்த்தரமானவர் அவர் களுக்குத் தொடர்ந்து தீமை செய்ய முனைதல் கூடா தென்பதும் பெறப்படும். ‘ஈனுமோ வாழை இருகால் குலை’ என்பது பழமொழி. 71. உடை மதிப்புத் தரும் படுத்து உறங்குவதற்கு ஓர் இடம் என்பதும் இல்லாத வறியராக இருந்தபோதும், நன்றாக உடுத்து வருபவர்களைப் பார்த்துப் ‘பசிக்கு உணவு உண்கிறீர்களோ?’ என்று கேட்பவர் யாரும் இல்லை அதனால், வீட்டினிடத்தே அழிவு மிகுதியா யிருந்த காலத்தும், ஒருவர் எப்படியாயினும் தம் புறத்தோற்றத் தினால் பொலிவுற்று விளங்குதலே நன்றாகும். அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும் புறத்தாற் பொலிவுறல் வேண்டும--எனைத்தும் படுக்கை இலராயக் கண்ணும் உடுத்தாரை உண்டி வினவுவார் இல். உயர்குடிப் பிறந்தவர் எத்துணை வறுமைக் கண்ணும், பிறர் அதனைக் கண்டு தம்மீது கருணை கொள்ளுமாறு தம்மை தாழ்த்திக் கொள்ள மாட்டார்கள் என்பது கருத்து. ‘உடுத்தாரை உண்டி வினவுவார் இல்’ என்பது பழமொழி. 72. உண்ட வீட்டிற்குத் தீவினை ‘பழைய உறவினர்’ என்று, தம் சுற்றத்தாரையும் தம்மையும் ஏற்றுக் கொண்ட வகையாலேயே, தம் குறை அனைத்தும் தீர்ந்து போகுமாறு ஒருவர் கருணையுடன் நோக்கிய காலத்திலே, அப்படிச் சொன்னவரோடு சேர்ந்திருந்து பயன்பெற்றுப், பின் அவரைப்பற்றி ஒருவன் புறங்கூறித் திரிந்தானென்றால், உண்ட வீட்டிற்குத் தீயிடுவது போன்றதே அவன் செய்யும் செயலாகும். பண்டினர் என்று தமரையும் தம்மையும் கொண்ட வகையால் குறைசீர நோக்கியக்கால் விண்டவரோ டொன்றிப் புறனுரைப்பின் அஃதாலவ் உண்டவில் தீயிடு மாறு. உதவின நன்றியை மறந்து புறங்கூறுவாரின் இழிதகைமை மிகவும் கொடியது. வெறுக்கத்தக்கது என்பது கருத்து. ‘உண்டவில் தீயிடு மாறு’ என்பது பழமொழி. 73. வீரன் துரோகம் செய்ய மாட்டான் தெளிவாக நிறைந்த வலிமையைப் பெற்றனவும், தம்முள் மாறுபட்டனவுமான இரண்டு காளை மாடுகள், ஒரு துறையுள் நின்று நீர் குடிக்குமோ? குடிக்கா, அதுபோலவே, தன் அரசனுக்கு ஒரு துன்பம் வந்துற்றால் தன் உடம்பையும் கொடுக்கக்கூடிய ராஜபக்தி உடையவன் அரசனுக்குப் பகையானவர்களோடு சேர்பவனாவானோ? சேரமாட்டான் என்க. உற்றால் இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான் மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ!--தெற்ற முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? உண்ணா இரண்டேறு ஒருதுறையுள் நீர். ‘தன் மன்னனிடம் பாசமுள்ள ஒரு வீரன், என்றும் துரோகக் கும்பலிலே சேரமாட்டான்’ என்பது கருத்து. இதனால், வீரர்களின் இயல்பு சொல்லப்பட்டது. ‘உண்ணா இரண்டேறு ஒருதுறையுள் நீர்’ என்பது பழமொழி. 74. கூற்றமும் உட்பகையும் கூற்றமானவன், விதித்த ஆயுள்நாளை எண்ணிக் கொண்டே காத்திருந்து, உயிர்களைப் பற்றிச் செல்வதனை விரும்பித் திரிந்துகொண்டே இருப்பவன். என்றாலும், அப்படி ஓர் உயிரை யும், தான் உண்ணும் காலம் வரும் வரையும் அவனும் காத்தே நிற்பான். அதுபோலவே கண்ணினுள் இருக்கும் கருமணியைப் போல அன்புடன் நண்பு காட்டிப் பழகிய போலி நண்பாளர்களும், தமக்கு ஆகவேண்டிய பயன் நம்மால் முடிந்தன என்று எண்ணும் அந்தப் பொழுதிலேயே, நம்முடைய பகைவராகி நிற்பார்கள். கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும் எண்ணும் துணையிற் பிறராகி நிற்பரால் எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும் உண்ணுந் துணைகாக்கும் கூற்று. போலி நண்பர்களை ஆராய்ந்து ஒதுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்த, அவர் இயல்பு கூறப்பட்டது. ‘உண்ணுந் துணைகாக்கும் கூற்று’ என்பது பழமொழி. 75. பணியாளரை அன்புடன் நடத்துக தம் காரியங்களைத் தாமே திறமையுடன் முடித்துக் கொள்ளுவதற்கு ஆற்றல் இல்லாதவர்கள், தம்மால் அதற்கென அடையப் பெற்றவர்களையும், தீமையான பதில்களாலே தமக்குப் பகையாக்கி விட்டு; அவர்கள் பகைமைக்குப் பயந்து, அவர்கள் அறியாததன் முன்பே தமக்குப் பாதுகாவலாக ஓடுதலை மேற்கொண்டு போய்விடுவார்கள். இவர்கள் செயல் தான், இரந்து உண்ணும் ஓடாகிய உண்கலத்தையே உடைப்ப வனின் செயலைப் போன்றதாகும். தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத் தீமாற்றத் தாலே பகைப்படுத்திட்டு--ஏமாப்ப முன்னோட்டுக் கொண்டு முரணஞ்சிப் போவாரே உண்ஓட் டகலுடைப் பார். தன் திறமையில்லாத ஒருவன், பிறர் துணையாலும் ஒரு காரியத்தை முடிக்கச் சக்தியற்றவனாகவே இருப்பான். ‘உண் ஓட்டு அகல் உடைப் பார்’ என்பது பழமொழி. 76. பயனற்றவனின் உறவே வேண்டாம் அருவிகள், விட்டுவிட்டு ஒளிசெய்து பொன்னைக் கொழித்து வீழ்ந்து கொண்டிருக்கின்ற, தன்மையான மலை நாட்டிற்கு உரியவனே! தம்மை வந்து புகலாக அடைந்தவர் களுக்கு உற்ற ஒரு துயரத்தைத், தமக்கு வந்து சேர்ந்ததாகவே கொண்டு, ‘எமக்குத் துன்பம் வந்துற்றது’ என்று உணராது அவரைக் கைவிட்டால், அதனை என்னென்று சொல்வது? ‘உமியைக் குற்றுதலாலே கை வருந்துவது போன்ற செயல்’ என்றுதான் கூறவேண்டும். தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க்கு உற்றது எமக்குற்ற தென்றுணரா விட்டக்கால் என்னாம் இமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட! உமிக்குற்றுக் கை வருந்து மாறு. சுற்றத்தாருள் யாருக்காவது துன்பம் வந்த காலத்திலே உதவாத ஒருவன் பயனற்றவன்; அவனைச் சுற்றத்தான் எனக் கருதி நாடிச் செல்லுதல், உமிக்குற்றி கை நோகிறதே என்பது போன்ற வீண் செயலே யாகும். ‘உமிக்குற்றுக் கை வருந்து மாறு’ என்பது பழமொழி. 77. இரண்டறக் கலப்பதே நட்பு உளம் பொருந்திய காதலுடைய உமையவளைத் தன்னிலே ஒரு கூறாக அமையுமாறு தண்டினையும் வெல்லுகின்ற ஏற்றுக் கொடியைத் தனக்கு உரியதாகக் கொண்டவனும் கொண்டிருக் கிறான். தம்மை நட்புச் செய்தவர்களைச் சேர்ந்த பொழுதிலே, அவரை விட்டு அவ்விடத்தே கொஞ்சமேனும் அகலாமல், முழு உடம்பும் பொருந்தக் கலந்து விடுபவர்களே சிறந்த நண்பர்கள் ஆவர். ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக் கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே விட்டாங்கு அகலா முழுமெய்யும் கொள்பவே நட்டாரை ஒட்டி யுழி. சிறந்த நண்பர்கள், நண்பரே தாம் என்று கருதும் கலந்த ஈடுபாடு உடையவர்கள் என்பது கருத்து. ‘உமையாள் ஒரு பாலாக் கட்டங்கம் வெல் கொடி கொண்டானும் கொண்டான்’ என்பது பழமொழி. தண்டு என்றது பகைவரின் பெரும் படையை. 78. உள்ளம் தெரிந்தபின் உறவாடுக கொல்லுகிற முறைப்படியே கொன்ற பின்னர் அல்லாது, மானின் தசையைத் தின்ன நினைப்பவன், அதனைத் தப்பிப் போக விட்டுவிட்டு, அந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதில்லை. அதுபோலவே, ஒருவர் உள்ளத்திலே நிலவும் அன்பின் தகுதியை அறிந்த பின்னர் அல்லாமல், யாரும், யார்க்கும் தம்முடைய இரகசியத்தை முன்னதாகவே ஓடிச் சென்று சொல்லாதிருப்பாராக. அன்பறிந்த பின்னல்லால் யார்யார்க்கும் தம்மறையே முன்பிறர்க் கோடி மொழியற்க--தின்குறுவான் கொல்வாங்குக் கொன்றபின் அல்லது உயக்கொண்டு, புல்வாய் வழிப்படுவார் இல். அன்பின் தகுதியை அறிந்த பின்னரே தம் இரகசியத்தை ஒருவரிடம் சொல்லலாம் என்பது கருத்து. ‘உயக்கொண்டு, புல்வாய் வழிப்படுவார் இல்’ என்பது பழமொழி. 79. தகுந்தவரையே சேர்ந்து வாழ்க ஆற்றினுள்ளே புரள்கின்ற கயல்மீன்களைப் போல விளங் கும் மையுண்ட கண்களையும், பொற்குழையினையும் உடைய வளே! பெரிதாகத் தோன்றுதல் வேண்டும் என்ற விருப்பமுள்ள வர்கள், அந்த விருப்பத்தை நிறைவேற்ற ஆற்றலில்லாதவர்களை அடைந்து அவரைப் பின்பற்றி நடத்தல், வண்டிக்கு இடுகின்ற மையினுள்ளே குளிக்கின்ற செயலைப் போன்றதாகும். தோற்றம் பெரிய நசையினார் அந்நசை ஆற்றா தவரை அடைந்தொழுகல்--ஆற்றுள் கயல்புரை உண்கண் கனங்குழாய்! அஃதால் உயவுநெய் யுட்குளிக்கும் ஆறு. ‘குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்டது போல’ என்ற பழமொழியையும் இங்கே நினைக்க. குளிக்க நினனத்து வண்டி மையினைப் பூசிக் கொண்டால் விகாரமே மிகுதி யாகும்; அதுபோலவே ஆற்றலற்றவரை அடைபவரும் அவ மானமே அடைவார்கள் என்பது கருத்து. ‘உயவு, நெய்யுட் குளிக்கும் ஆறு’ என்பதும் அதைப்போன்று தான். 80. உருவின் உயர்வு அந்த நாளிலே, வாளாற்றல் உடையவனாகிய திருமாலைக் கொல்லும் பொருட்டு மது கைடவர் என்போர் வளைத்துக் கொண்டார்கள். அப்போது, திருமால், தன்னுடைய திருமேனி யின் விளங்குதல் பொருந்திய பேரொளியைக் காட்டவும், ஒப்பற்ற அந்த வடிவழகின் தன்மையைக் கண்டு, அவர்கள் தம் நினைவைக் கைவிட்டார்கள். உருவப் பொலிவு ஒருவனுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்பதும் அதனைப் போன்றது தான். வாட்டிற லானை வளைந்தார்கள் அஞ்ஞான்று வீட்டிய சென்றார் விளங்கொளி--காட்டப் பொருவறு தன்மைகண்டு அஃதொழிந்தார்; அஃதால் உருவு திருவூட்டு மாறு. உருவத் தோற்றத்தின் சிறப்பு இதன்கண் சொல்லப்பட்டது. இதனை, ஆங்கிலத்தில் ‘பெர்சனாலிடி’ என்பார்கள். ‘உருவு திருவூட்டுமாறு’ என்பது பழமொழி. திருமால் மோகினிப் பெண் வடிவிலே தோன்ற அவர்கள் மயங்கித் தமக்குள்ளேயே அடித்துக் கொண்டு இறந்தனர் என்பர். 81. இகழ்வான் இகழப்படுவான் பலவாகிய பசுக்கூட்டங்களை மேய்ச்சற் புறங்களிலே காத்துநின்ற நெடியோனாகிய திருமாலேயானாலும், அவையில் ஒருவனை இகழ்ந்து பேசினால், தானும் அவனால் இகழ்ந்து பேசப்படுதலை அடைதலே உளதாகும். ஆகையால், பலரும் கூடியிருக்கின்ற அவையின் நடுவிலே நன்னெறியின் பால் ஒழுகிவரும் சான்றோர்கள், ஒருவரையும் அவர்கள் மனம் வருந்தும்படியான சொற்களைச் சொல்லி இகழவே மாட்டார்கள். பல்லார் அவைநடுவண் பாற்பட்ட சான்றவர் சொல்லார் ஒருவரையும் உள்ளூன்றப்--பல்லா நிரைப்புறங் காத்த நெடியோனே யாயினும் உரைத்தால் உரைபெறுதல் உண்டு. ‘உரைத்தால் உரைபெறுதல் உண்டு’ என்பது பழமொழி. எவரையும் இகழ்ந்து பேசுதல் கூடாது என்பது கருத்து. அப்படிச் செருக்குற்றுப் பேசினால் அவரும் இகழத், தலைக்குனிவே ஏற்ப டும் என்பது முடிவு. 82. நண்பரைப் பழித்தல் கூடாது கண்கள் விழித்திருப்பனபோன்று மலர்கின்ற நெய்தற் பூக்களையுடைய கடற்றுறைகட்கு உரியவனே! ஆராய்ந்து தெளிந்து கொள்ளப்பட்ட நண்பர்களைப் பழித்து, அறிவுடை யோர் பலர் நடுவிலே சொல்லாட மாட்டார்கள்; என்ன காரணம் என்றால், தமக்கு இழிவைத் தருவனபற்றிக் கனவு கண்டவர், அதனை யாருக்கும் சொல்ல மாட்டார்கள் என்பதனால். கொழித்துக் கொளப்ட்ட நண்பி னவரைப் பழித்துப் பலர் நடுவண் சொல்லாடார்--என்கொல்? விழித்தலரும் நெய்தல் துறைவா! உரையார் இழித்தக்க காணிற் கனா. நண்பரைப் பழிகூறித் தூற்றினால் அந்த இழிவு நம்மையும் வந்தடையும் என்பது கருத்து ‘உரையார் இழித்தக்க காணிற் கனா’ என்பது பழமொழி. 83. முறையாகவே எதனையும் ஆராய்ந்து செய்க இந்த உலகத்தினுள்ளே இல்லாத ஒரு பொருளுக்குப் பெயரும் இல்லையாகவே இருக்கும். அதுபோலவே முடிந்து போன ஒரு செயலுக்கு முயற்சியும் வேண்டுவதில்லை. முடிவுறாது இடையிலே முறிந்த செயலுக்குப் பெருக்கமும் இல்லை. குற்றமறச் செய்யவல்லதான ஒன்றைச் செய்வதிலே வருத்தமும் கிடையாது. முடிந்ததற்கு இல்லை முயற்சி; முடியாது ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம்; வடிந்தற வல்லதற்கு இல்லை வருத்தம்; உலகினுள் இல்லதற்கு இல்லை பெயர். எந்தச் செயலையும் குறைபாடில்லாமல் முற்றவும் செய்து முடிக்க வேண்டும் என்பது கருத்து! ‘உலகினுள் இல்லதற்கு இல்லை பெயர்’ என்பது பழமொழி. 84. அளவற்ற ஆசைப் படுபவர் இந்த உலகத்திலே, அளவுக்கு அதிகமான பெருஞ் செல்வத்தை விரும்புகிறவர்கள் சிலர், அவர்கள், நலத்தின் தகுதிகளால் மேம்பட்ட அரசர் களுள், நல்லவர்களைச் சார்ந்து அதனை ஈட்ட நினைப்பர். எனினும், அவர் களைச் சென்று சார்ந்ததும் நிலைகொள்ளாத காலினவராகத் தருக்கி, ஏதும் அடையாதே கெடுவர். ஆராய்ந்து பார்த்தால், இத்தகையவரே உலக்கையின் மேலே இருக்க முயலும் காக்கை என்று சொல்லப் படுபவராவர். நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம் வேண்டி நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து நிலத்து நிலை கொள்ளாக் காலரே, காணின் ‘உலக்கை மேல் காக்கை’ என்பர் உலக்கையை உயர்த்துக் குத்துகின்ற காலத்து, அதன் மேல் காக்கை அமர்வதும் இயலாது. உரலின்கண் இருப்பதை அதனால் உண்ணவும் முடியாது. அதுபோல, மனத்திலே அறியாமையுடைய வர்களின் முயற்சியும் பயனற்றுப் போகும். ‘உலக்கை மேல் காக்கை’ என்பது பழமொழி. 85. பகைவனை அன்பால் வசமாக்க முடியாது நிலத்தைச் சுற்றிலும் சுவர் எடுத்துப், பொருத்தமாக நீர் பெருக்கி வெப்பத்தைத் தணிக்க முயன்ற போதிலும், உவர்நிலம் உள்ளேயுள்ள தன் கொதிப்பு மாறாமல், என்றும் உடைய தாகவே இருக்கும். அதேபோலச் சுற்றத்தார் அல்லாத பகை வர்களை எவ்வளவுதான் தலையளி செய்து போற்றினாலும், அது அவருக்கு நன்மையாகத் தோன்றுவதேயில்லை. விருப்பமற்ற குறிப்பினை உடையதாகவே தோன்றும். தமர் அல்லவரைத் தலையளித்தக் கண்ணும் அமராக் குறிப்பவர்க்கு ஆகாதே தோன்றும் சுவர்நிலம் செய்தமையக் கூட்டிய கண்ணும் உவர்நிலம் உட்கொதிக்கு மாறு. பகைவரை, அவர்க்கு அருள் செய்வதன்மூலம் நமக்கு வேண்டியவராக்கிவிட முடியாது. நம் செயலை அவர்கள் ஐயுற்று அதிகமான உட்கொதிப்பே அடைவார்கள். ஆகவே, அதனைச் செய்பவர் முயற்சி பயனற்றது. ‘உவர்நிலம் உட்கொதிக்கு மாறு’ என்பது பழமொழி. 86. கீழ்மக்களுக்குச் செய்த உதவி பரந்து வரும் கடலலைகள் வெள்ளத்தைப்போல விளங்கும்; கடற்கரைகள் தன்மையுடன் விளங்கும்; அவற்றிற்கு உரியவனான சேர்ப்பனே! ஒருவருக்கு ஒரு துன்பமானது வந்த காலத்திலே, சுற்றத்தாராலும் தம் முயற்சியினாலும் அதற்குத் தகுதியான ஒரு செயலைச் செய்து, அவர் மனம் ஒத்தவராக நடந்தவர் என்பவர் எவரும் கிடையாது. செய்த உதவிகளை நினைத்து உவப்படை யாத கீழ் மக்களுக்குக் கொடுத்த கொடையெல்லாம், இகழ்ந்து போன பொருள்களாகவே கருதப்படும். தமராலும் தம்மாலும் உற்றால்ஒன்று ஆற்றி நிகராகிச் சென்றாரும் அல்லர்--இவர்திரை நீத்தம்நீர்த் தண்சேர்ப்ப! செய்தது, ‘உவவாதார்க்கு ஈத்ததை எல்லாம் இழவு.’ உதவியின் பயனை அநுபவித்தும், அதனை உதவியவரின் செயலுக்கு நன்றி காட்டாத பயனற்ற மக்களுக்கு உதவுதல் கூடாதென்பது கருத்து. உவவாதார்க்கு ஈத்ததை எல்லாம் இழவு’ என்பது பழமொழி. 87. கள்ளத்தை முகத்திலே காணலாம் ஒளிபொருந்திய அமர்த்த கண்களை உடையவளே! ஒருவர், எவ்வளவுதான் பிறர் அறியாத வகையாகத் தம் கள்ளத் தனத்தை மறைத்தாலும், அவருடைய உள்ளத்திலே நிலவுவதை அவர் முகமானது பிறருக்கு எடுத்துச் சொல்லி விடும். அதனால், வெள்ளம் வருகின்ற காலத்திலே அது வருமிடம் எங்கும் ஈரம் பட்டு விளங்குவதைப் போலக் கள்ளமான எண்ணம் உடையவர் களையும், அவர்களைப் பார்த்த அளவாலேயே அறிந்து கொள்ளலாம். வெள்ளம் வருங்காலை ஈரம்பட்ட டஃதேபோல் கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம் ஒன்அமர் கண்ணாய்! ஒளிப்பினும், உள்ளம் படர்ந்ததே கூறும் முகம். உள்ளத்தில் உள்ளதை முகம் காட்டிவிடும். ஆதலால் எவரும் உள்ளத்தில் தூய்மை உடையவராகவே வாழ்தல் வேண்டும் என்பது கருத்து. ‘உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்’ என்பது பழமொழி. ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதும் நினைக்க. 88. கீழோர்க்கு உபதேசிப்பதும் ஆபத்து தேரின் உள்ளே தானே இருந்து கொண்டு, ஒருவன் தானே அதனுடைய அச்சாணியைக் கழற்றி எறிந்து விடுதல், தேருடன் அவனுக்கும் அவனே அழிவைத் தேடிக் கொள்வதாகும். தாம் கூறுகின்ற சொற்களை ஏற்றுக் கொண்டு தம்மைப் போற்றி நடக்காதவர்களாகக், கல்லால் எறிந்தாற் போலக் கடுஞ்சொற் களைப் பேசி பகைமையை மேற்கொள்ளும் கீழ்மக்களை, அவர் களுடைய வீட்டிலேயே இருந்து கொண்டு, அவர் செயலுக்காக அவர்மீது இரங்கிப் பேசி, அவருக்குக் கோபம் வருமாறு செய்தலும், அப்படிப்பட்ட அறியாமையான செயலேயாகும். சொல்லெதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய் கல்லெறிந்தாற் போலக் கலாந்தலைக் கொள்வாரை இல்லிருந் தாற்ற முனிவித்தல், உள்ளிருந்து அச்சாணி தாம் கழிக்கு மாறு. தீயோரால் ஒரு செயலைச் செய்துகொள்ளக் கருதும் அறிவுடையோர், தம் செயல் நிறைவேறும் வரைக்கும், அவர் களை கோபமூட்டும் வகையாக எதுவுமே பேசக்கூடாது என்பது கருத்து. ‘உள்ளிருந்து அச்சாணி தாம் கழிக்கு மாறு’ என்பது பழமொழி. 89. வரும் சிறப்பு தவறாது வரும் ‘கழுமலம்’ என்னும் இடத்திலே கட்டப்பட்டிருந்த களிற்று யானையும், கருவூரிலே இருந்த சிறப்புடையோனாகிய கரிகால் வளவனிடத்தே சென்றது. அவனைக் கொண்டுவந்து சோழ நாட்டிற்கு அரசனாகவும் ஆக்கிற்று. அதனால், சிறந்த பொருள் கள், தம்மை ஒருவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், அடைதற்குரியதான முன் வினைப்பயன் உள்ளவனைத் தாமே வலிய சென்று அடையாமற் போவது அருமையாகும். கழுமலத்தில் யாத்த களிறும், கருவூர் விழுமியோன் மேற்சென் றதனால்--விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது. ‘நல்ல சிறப்பு வரும் ஊழ்வினை இருந்தால், அது எப்படியும் வந்தே தீரும்’ என்பது கருத்து. ‘உறற்பால தீண்டா விடுதல் அரிது’ என்பது பழமொழி. ‘வருவது வந்தே தீரும்’ என்பதும் இது. 90. வரவேண்டிய துன்பம் தவறாமல் வரும் பொங்கிப் பெருகி வந்து கற்பாறையினிடத்தே பாய்கின்ற, அருவிகள் அழகு செய்யும் மலைநாட்டிற்கு உரியவனே! அழகிய இடமான வானத்தி லிருந்து பரந்த நிலவுக் கதிர்களைப் பொழிந்து உதவும் திங்களும் இராகு கேதுக்களால் தீமை அடைவதைப் பார்க்கின்றோம்! அதனால், வரக்கடவதான துன்பங்கள் எவ்வளவு சிறந்தோர்க்கும் தவறாமல் வந்தே சேரும் என்று அறிவாயாக. அங்கண்விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களும் தீங்குறுதல் காண்டுமால்--பொங்கி அறைப்பாய் அருவி அணிமலை நாட! உறற்பால யார்க்கும் உறும். உயர்வுடைய சான்றோரும் ஒவ்வோர் சமயத்தே துன்பத் திற்காளாவது அவருடைய ஊழ்வினைப் பயன் என்பது கருத்து. அறை-பாறை. ‘உறற்பால யார்க்கும் உறும்’ என்பது பழமொழி. ‘வினை வீயாது பின்சென்று அடும்’ என்பதும் நினைக்க. 91. தீயவனை ஊரே அறியும் ஊரிலே அறியப்படாத பொலிகாளை என்பது எங்குமே கிடையாது. அதுபோலக், கூர்மையான அறிவுடையவர்களிடத் திலே சென்று நல்ல பண்பு உடைய அவர் அறிவுரைகளைக் கேட்டுப் பயன் பெறாது, தம்மிடமுள்ள இருண்ட அறிவான புல்லறிவினையே தம்வாழ்விற்குப் பற்றுக் கோடாகக் கொண்டு கடிதான செயல்களையே செய்தொழுகும் முரடர்களின் பெயரை அறியாத அறிவிலிகளும், நாட்டிலே யாருள்ளனர்? கூரறிவினார் வாய்க் குணமுடைச்சொல் கொள்ளாது காரறிவு கந்தாக் கடியன செய்வாரைப் பேரறியார் ஆயின பேதைகள் யாருளரோ? ஊரறியா மூரியோ இல். மூரி-கட்டுக்கு அடங்காது அலையும் கொழுத்த எருது. அது போலப் புல்லறிவாளரும் கட்டுக்கடங்காது தலை நிமிர்ந்து செருக்கித் திரிவார்கள் என்பது கருத்து. அவர் தொடர்பைக் கைவிடல் வேண்டும் என்பது முடிவு. ‘ஊரறியா மூரியோ இல்’ என்பது பழமொழி. இவரை ஊரே அறியும் என்பதும் கூறப் பெற்றது. 92. சாவை நினைத்து, தருமத்தை உடனே செய்க அவர்கள் இல்லாமல், தாம் அமைவதே இயலாத சிறப்புடையவரான, இருமுது குரவராகிய தாய் தந்தையர் களும்கூடத் தம்மை விட்டுப் போய் விட்டதனைக் கண்டும் இவ்வுலகத்து வாழ்வை நிலையான ஒரு பொருளாக அறிவுடை யோர் கொள்வார்களோ? அதனால், பொருத்தமான வகையி னால் எல்லாம் காலத்தால் தருமங்களைச் செய்வீர்களாக. குன்றமானது ஊர்ந்து உருண்டு செல்லத் தொடங்கினால் அதன் வழியைத் தடுப்பது எதுவுமில்லை. அதுபோலவே, சாவு வருங்காலத்தும் அதனை வராது தடுப்பது எதுவும் இல்லை. இன்றி யமையா இருமுது மக்களைப் பொன்றினமை கண்டும் பொருளாக் கொள்பவோ ஒன்றும் வகையான் அறஞ்செய்க, ஊர்ந்துருளின் குன்று வழியடுப்ப தில். உடலின் நிலைமையான தன்மை கூறி, அறம் செய்தல் வற்புறுத்தப்பட்டது. ‘ஊர்ந்துருளின் குன்று வழியடுப்ப தில்’ என்பது பழமொழி. சாவும் அவ்வாறு தடுக்கவியலாதது என்பது கருத்து. 93. போர்வீரரின் முனைப்பு ஆராய்ந்து பார்க்குமிடத்திலே, காட்டிலிருந்து தவம் செய்யும் அமணர்க்கும், ஓட்டால் வரும் பயன் எல்லாம் பலர் உறையும் ஊரினிடத்த தாகவே விளங்கும். “மாலை பொருந்திய பெரிய மார்பினையுடைய அரசன் குறித்து நோக்கியபோதே, போரை ஏற்றுச் செல்வோம்” எனத் தறுகண்மை பேசுபவர்கள், ‘அவன் பொதுவாகவே நோக்கினான்; நம்மைக் குறிப்பிட்டு நோக்கவில்லையே’ என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். யாவர் மேற்றாக அவன் பார்த்தாலும், அதனைத் தம்மேலே யாக நோக்கினான் என்று கருதி, அச்செயலை முடிக்கச் சொல்வதே சிறப்பு. தாரேற்ற நீண்மார்பின் தம்மிறைவன் நோக்கியக்கால் போரேற்றும் என்பார் பொதுவாக்கல் வேண்டுமோ? யார்மேற்றாக் கொள்ளினும் கொண்டீக் காணுங்கால் ஊர்மேற்றதாம் அமணர்க்கு ஓடு. ஓடேந்தி அமணர் சென்றால் ஈகைப்பயன் உணர்ந்தவர் தாமே வந்து மனதார இட்டுச் செல்வது போல, வீரர்கள் போரிலே தம் கடனாகவே எண்ணித் தம் கடமையைச் செய்ய, அதனால் அரசனும் வெற்றி பெறுவான் என்பது கருத்து. ‘ஊர் மேற்றதாம் அமணர்க்கு ஓடு’ என்பது பழமொழி. 94. துன்பத்திற்கு அஞ்ச வேண்டாம் ஆண் யானையானது பனியால்வரும் துயருக்கு அஞ்சித் தன் பிடியினைத் தழுவிக்கிடக்கும் மூங்கில்கள் சூழ்ந்த மலைநாடனே! தன் ஊழ்வினைப் பயனால் தன்னை நோக்கி வரும் அம்பு ஒருபோதும் குறிதவறி நிலத்திலே வீழ்வதில்லை. அது போலவே, ‘செய்யத் தக்கது இது’ வென உணரும் அறிவுடையவர்கள், தம்மால் மிகவும் பயப்படத் தக்கதான துன்பங்கள் வந்தாலும், தம்மிடத்தே உண்டாகும் துன்பத்துக்கு ஒருபோதும் அஞ்சமாட் டார்கள். நனியஞ்சத் தக்கஅவை வந்தால் தங்கண் துனியஞ்சார் செய்வது உணர்வார்--பனியஞ்சி வேழம் பிடிழுஉம் மலைநாட! ஊழம்பு வீழா நிலத்து. அதனை ஊழ்வினைப் பயன் எனக் கருதி அமைந்து தாம் தளராமல் நல்வினைகளிலேயே ஈடுபட்டு வருவார்கள் என்பது கருத்து. ‘ஊழம்பு வீழா நிலத்து’ என்பது பழமொழி 95. அறமே சிறந்த பெருஞ்செல்வம் தாம் தேடிப் பாதுகாவலாக வைத்த செல்வத்தைத் தமக்கு ஆபத்துக் காலத்திலே உதவும் பெருநிதி யென்று எவரும் நினைக்க வேண்டாம். அதனைத் தாமும் அனுபவித்துப், பிறருக் கும் கொடுத்து, இருமைக்கும் அழகி தாகத் தக்க இடம் பார்த்து, முறையாக அறம் செய்து வந்தால், அது வல்லவோ, தாம் தளர்ந்த காலத்து உதவும் பெருநிதி என்று சொல்லப்படுவ தாகும். வைத்ததனை வைப்பென்று உணரற்க தாமதனைத் துய்த்து வழங்கி இருபாலும்--அத்தகத் தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ எய்ப்பினில் வைப்பென் பது. ‘தருமநெறியே இருமையிலும் நன்மை தருவது’. இதனை உணர்ந்து பொருளைப் பதுக்கி வைக்காமல் தருமத்தில் ஈடு படுத்த வேண்டும் என்பது கருத்து. ‘எய்ப்பினில் வைப்பென் பது’ என்பது பழமொழி. 96. தீவினை செய்தால் தப்ப முடியாது. எல்லா வகையினாலும் மிகவும் பெரியவர்களாக விளங்கும் சான்றோர் களைக், கல்வியறிவில்லாத அறியாமை உடைய வர்கள் பல சமயங்களில் வெறுக்குமாறு செய்து விடுகின்றனர். தகுதி நிறைந்து, ஒலி முழங்குகின்ற வளைகளை அணிந்தவளே! சொல்லப்போனால், அதுவே, எருக்கந் தூற்றிலே மறைந்து இருந்து கொண்டு, ஒருவன் யானையை மதம்பாய்ச்சி விடுகின்ற செயலினைப் போன்றதாகும். எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக் கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல்--சொல்லின் நிறைந்தார் வளையினாய்! அஃதால், எருக்கு மறைந்துயானை பாய்ச்சி விடல். அவன் உயிரிழப்பது உறுதியாவதுபோல, பெரியோர் வெறுத்துப் பேசும் அறிவிலிகளும் அழிவது திண்ணம் என்பது கருத்து. ‘எருக்கு மறைந்து யானை பாய்ச்சி விடல்’ என்பது பழமொழி. எருக்கந்தூரில் இருப்பவனை யானை எளிதாக மிதித்து விடுவதுபோல அறியாமையாளரும் அழிக்கப்படுவர் என்பது கருத்தாகும். 97. பகை மன்னரிடை உறவு போர்ச் செருக்கினையுடைய மன்னர்கள் இருவரிடையே ஒருவன் புகுந்து அவருள் ஒருவருக்கு உதவாத செய்தியைச் சொன்னான் என்றால், அதனைக் கேட்டு அவர்கள் சீறி எழுவர். அதனைத் திருத்துவதற்குத் தனக்கும் முடியாமற் போக, அது முடிவில் சொன்னவனுக்கே தீமையாய் முடியும். இரண்டு எருதுகளின் நடுவே இட்டிருக்கும் வைக்கோலைத் தின்னப்புகும் மோழை மாடு, அவை இரண்டாலும் குத்தப் பட்டுத் துன்பம் அடைவதின்றி வைக்கோலைத் தின்ன முடியாத வாறு போலவே, அவன் கதியும் பயனற்றுத் துன்பமாக முடியும். செருக்கு உடைய மன்னர் இடைப்புக்கு அவருள் ஒருத்தற்கு உதவாத சொல்லின் தனக்குத் திருத்தலு மாகாது தீதாம்; அதுவே எருத்திடை வைக்கோல் தினல். பேரரசர்கள் இடையே புகுந்து இருவருக்கிடையிலும் இலாபம் பெற ஏதாவது சொல்பவன் மிகவும் விழிப்பாயிருக்க வேண்டும் என்பது கருத்து. இருவராலும் அவனுக்குக் கேடு விளையக்கூடும் என்பதாம். ‘எருத்திடை வைக்கோல் தினல்’ என்பது பழமொழி. 98. இன்சொல்லின் சிறப்பு உடுக்க உடையும், நோய்க்கு மருந்தும், தங்குவதற்கு இருப்பிடமும், உண்ண உணவும் இவற்றோடு இன்ன பிறவும் பிறருக்குக் கொடுத்து, அவர் குறைகளைத் தீர்த்தலான செயல் களைச் செய்து, அவரை அனுப்பி வைத்து, அவர்பால் இனிமை யான சொற்களை மட்டும் சொல்லாமல் இருப்பது மிகவும் தவறாகும். அது, எருமையைக் கொன்று சமைத்து விருந்து வைக்கத் தொடங்கும் ஒருவர், அதற்குரிய மசாலைப் பொருள் களுக்குக் கஞ்சத்தனம் செய்வது போன்றதாகும். உடுக்கை மருந்து உறையுள் உண்டியோடு இன்ன கொடுத்துக் குறைதீர்த்தல் ஆற்றி--விடுத்தின்சொல் ஈயாமை என்ப, எருமை எறிந்தொருவர் காய்க்கு லோபிக்கும் ஆறு. எல்லாக் கொடையிலும், இன்சொல் வழங்குதலே சிறப்பு டையது என்பது கருத்து. ‘எருமை எறிந்தொருவர் காய்க்கு லோபிக்குமாறு’ என்பது பழமொழி இன்சொல் வழங்காத கொடை மதிப்பிழக்கும் என்பதும் கருத்தாகும். 99. அடைந்தவர் வறுமையைப் போக்க வேண்டும் தம்மைச் சேர்ந்தவர் ஒருவரை, அவரால், சேர்ந்து ஒழுகப் பட்டவர் முடிந்த உறவினராகக் கொண்டு நடந்தாலும், ஆராய்ந்து அவரை விட்டுப் போகாத வறுமையினைக் கண்டு, அது போவதற்கு வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாதவிடத்து, அவர் செல்லும் நெறி வேறு என்ன உண்டாகு மோ? யாவரும் சமைத்து உண்ணும் உணவிற்கு ஆவன செய்வதே உண்மையான முயற்சியாகும் பிறவெல்லாம் பொய்யான செயலே. சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர் தீர்ந்தாராக் கொண்டு தெளியினும்--தேர்ந்தவர்க்குச் செல்லாமை காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம் எல்லாம்பொய் அட்டூணே வாய். உதவுவார் என அடைந்த ஒருவர் உதவாவிட்டால் அப்படி அடைந்தவர் அவரைவிட்டுத் தாமே தம் முயற்சியில் ஈடுபட வேண்டுமேயல்லாமல், அவரையே தொங்கிக் கொண்டு இருப் பது கூடாது என்பது கருத்து. ‘எல்லாம் பொய் அட்டூணே வாய்’ என்பது பழமொழி. 100. அரசனுக்குக் கோபம் வரும் செயல் வெம்மையான சினத்தையுடைய அரசனானவன், தான் விரும்பாத ஒன்றையே தனக்குச் செய்தாலுங்கூட, அவனை யடுத்து வாழ்பவர், அதனைத் தம் நெஞ்சத்துட் கொண்டு பகைகொள்ளும் செயலைச் சிறிதுகூடச் செய்தலே வேண்டாம். என்ன தீவினை களைச் செய்து அகப்பட்டுக் கொண்ட போதும், எவரேனும் தூங்கும் புலியைத் துயில் எழுப்பு வார்களோ? வெஞ்சின மன்னவன் வேண்டாத வேசெயினும் நெஞ்சத்துட் கொள்வ சிறிதும் செயல்வேண்டா என்செய்து அகப்பட்டக் கண்ணும், எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில்? புலியைத் துயில் எழுப்பினால், அவர்களே அழிவார்கள். அதுபோல, அரசன் மீது அவர்களும் பகைத்து அவன் கோபத் தைக் கிளறிவிட்டால், அவர்களே அழிய நேரும் என்பது கருத்து. ‘எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில்’ என்பது பழமொழி. 101. எளியாரை இகழாதவர் இல்லை புகழ் பொருந்திய பிற மன்னர்களை வென்று அவர்களுக்கு மேற்பட்டவர்களாக நடந்துவருவது அல்லாமல், மதயானை களைக் கொண்ட மன்னவர்களுக்கு, அவர்களைக் கைகடந்து தம்மேற் செல்லுமாறு விடுதல், தமக்கே இறுதியில் துன்பமாக முடியும். மழைத்துளியை உண்ணும் பறவையான வானம்பாடி யைப் போல, செவ்வையானவற்றையே உணர் பவர்களினும், எளியவர்களை இகழாதவர் உலகில் இல்லை யாகும். ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால் களியானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம் துளியுண் பறவைபோல் செவ்வனோர்ப் பாரும் எளியாரை எள்ளாதார் இல். போர் வலியற்ற அரசன் மிக நல்லவனானாலும் மதிக்கப்பட மாட்டான் என்பது கருத்து. ‘எளியாரை எள்ளா தார் இல்’ என்பது பழமொழி. நல்லவனாக இருப்பது போதாது; வல்லவனாகவும் இருந்தால்தான் பிறர் மதிப்பார் என் பது கருத்தாகும். 102. மன நலமே நலம்! ஆறுகள் மிகுதியான வெள்ளப் பெருக்குடன் வந்து மிகுதியான நல்ல தண்ணீரே பாய்ந்த காலத்தினும், ஒலிக்கும் கடலானது உப்புத் தன்மை யினின்றும் நீங்குதலைப் பெற மாட்டாது. அதுபோலவே, மிகுதியான இனத்தின் நன்மைகள் நன்றாக உடையவர்களானாலும், எக்காலத்துங் கீழ்மையான புத்தியுடையவர்கள், நல்ல மனம் உடையவர் ஆகவே மாட் டார்கள். மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும் உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல்--மிக்க இனநலம் நன்குடைய ராயினும், என்றும் மனநலம் ஆகாவாம் கீழ். ‘நல்லவர் தொடர்பினாலும் கீழோர் திருந்த மாட்டார் கள்’ என்பது கருத்து. ‘என்றும் மனநலம் ஆகாவாம் கீழ்’ என்பது பழமொழி. அவர்கள் மனம் கீழ்மைப் போக்கிலேயே செல்லும் என்பதாம். 103. கெடுக்க முயன்றவன் நண்பனானால்...? நீலோற்பல மலர்கள் என்று கருதிய வண்டினம், உண்மை யான பூக்களைக் கைவிட்டுப் பக்கத்திலே மொய்த்துக் கொண்டி ருக்கின்ற கண் களை உடையவளே! ஒருவன் ஒருவனை நலிந்து கெடுப்பதற்கு நாள்தோறும் சென்றான்: அதனால், அந்த ஒருவன் தளர்ச்சியுற்று வீழ்ந்து விடாமல் இருப்பதைப் பார்த்தான்; பின்பு அவனோடு மிகவும் நட்புடையவனாகச் சென்று சேர்ந்தான்; இப்படிச் சேர்வது அம்பினால் எய்து ஒருவனைக் கொல்ல முயன்றவன், எய்யப்பட்டவன் அதற்குத் தப்பிவிட, அவனைப் பின்னர் தனக்குக் காவலாகக் கொள்வது போன்றதாகும். நலிந்து ஒருவர் நாளும் அடுபாக்குப் புக்கால் மெலிந்து ஒருவர் வீழாமை கண்டு--மலிந்தடைதல் பூப்பிழைத்து வண்டு புடையாடும் கண்ணினாய்! ஏப் பிழைத்துக் காக்கொள்ளு மாறு. ஒருவனைக் கெடுக்க முயன்று முடியாமல் போக; அவனுடன் நண்பராக முயல்பவர், என்றும் அந்தக் கெட்ட எண்ணத்துடனேயே இருப்பார்கள். அவர்கள் தொடர்பு அறவே கூடாதென்பது கருத்து. ‘ஏப் பிழைத்துக் காக்கொள்ளு மாறு’ என்பது பழமொழி. தன்னால் வெல்ல முடியாத ஒருவனைத் தனக்குக் காவலாகக் கொள்வது இயல்பு என்பதும் ஆகும். 104. ஆட்சித் தலைவனைக் கோபித்தல் காட்டுப் பசுக்கள் திரிந்து கொண்டிருக்கும் அழகிய மலைகளுக்கு உரிய வெற்பனே! கேட்பாயாக: தாமாகவும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள், தாவிப் பாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேரினை உடைய மன்னரைக் கோபித்துக் கொள்வது எதற்காகவோ? கோங்க மரத்திலே ஏறினவர், என்றும் பாதுகாப்புடன் இருக்க முயன் றாலும், எக்காலத்தும் தம் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாதவர் களே யாவர் தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாதார் வாமான்தேர் மன்னரைக் காய்வது எவன்கொலோ? ஆமா உகளும் அணிவரை வெற்ப! கேள் ஏமரார் கோங்கு ஏறினார். கோங்க மரத்தில் ஏறினால் கிளை முறிந்து வீழக்கூடும்; அவர் செயல்போலவே, வலியுடைய மன்னருக்குச் சினம் உண் டாக எப்போதாவது பேசிய வலியற்றவர்களும், அவரால் அழிக் கப்படுவார்கள். ஆதலின் அப்படிச் செய்வது தவறு என்பது கருத்து. ‘ஏமரார் கோங்கு ஏறினார்’ என்பது பழமொழி. 105. ஏவலாளனுக்குப் பொறுப்புக் கிடையாது மின்னலைப்போல விளங்கும், நுண்மையான இடை யினை உடையவளே! ஒருவனால் ஏவி விடப்பட்ட ஏவலாளன் ஒரு ஊரையும்கூட அவன் ஏவினால் சுட்டுப் பொசுக்கி விடுவான். அதற்கு, அவனை ஏவினவனை நோக வேண்டுமே அல்லாமல் அவனை நோவதனால் ஒரு பயனும் இல்லை. அதுபோலவே, “முன் பிறவியிலேயே யாம் ஆத்திரங் கொண்டு செய்த பழைய வினைகள் தொடர்ந்து வந்து இன்று எம்மை வருத்துகின்றன” என்ற உண்மையைச் சிந்தித்து அறியாதவர்கள், தம்மை துன்பப்படுத்தும் பகைவர்களை, அது அவர்கள் செயலாகக் கொண்டு நொந்து கொள்வது எதற்காகவோ? பண்டுஉகுத்துச் செய்த பழவினை வந்ததெம்மை இன்றுஒறுக் கின்ற தெனவறியார்--துன்புறுக்கும் மேவலரை நோவதென்? மின்னேர் மருங்குளாய்! ஏவலாள் ஊருஞ் சுடும். பகைவரால் நேரும் துன்பம் எல்லாம் நம் பழவினைப் பயனால் வந்தனவென்றே கருத வேண்டும். அவர்கள் ஊழ் வினையின் ஏவலைச் செய்பவர்களேதான் என்பது கருத்து. ‘ஏவலாள் ஊருஞ் சுடும்’ என்பது பழமொழி. எய்தவன் இருக்க அம்பை நோவதேன் என்பதும் இது. 106. குடிப்பிறப்பின் பண்பு குறையாது நல்ல எருதுக்குப் பிறந்த ஒரு கன்றானது, வளர்ப்போனால் மிகுதியும் பேணப் படாததாகித் தின்னும் புல்லும் சரிவரக் கிடைக்கப் பெறாமல். எதை எதையோ மேய்ந்து கொண்டிருந் தாலும், பின்னர், உறுதியாக நல்லதொரு எருதாகி விடும்; அதுபோலவே, நல்ல குடியிலே பிறந்த சான்றாண்மை உடையவன், தான் தேடித் தொகுத்த சிறந்த பொருள்கள் யாதும் தன்னிடத்தே இல்லை என்றாலும், தன் குடிப்பண்பின் காரணமாக உபகாரம் செய்பவனாகவே இருப்பான். ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புரவு ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன்--ஆற்றவும் போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும் ஏற்றுக்கன்று ஏறாய் விடும். ஒப்புரவு - உயர்ந்தோர் மேற்கொண்ட நெறிப்படி நடத் தலும் ஆகும். குடிப்பிறப்பின் சிறப்பு ஒருபோதும் ஒருவனை விட்டு மாறாது என்பது கருத்து. ‘ஏற்றுக்கன்று ஏறாய் விடும்’ என்பது பழமொழி. 107. பகைவரை வீட்டிற்கு அழைத்தல் போவதற்குத் தகுந்த வழியிடையிலும், பெற்றோர் பின் னாகச் செல்ல முடியாது, ஒக்கலிலேயே செல்லும் குழந்தைகள், பெரிய காட்டினிடத்தே செல்லும் பெற்றோர் தம்மை இடுப்பிலே எடுத்துச் செல்லவேண்டும் என விரும்பி அழுதனர் என்றால், பெற்றோர் அதற்கு ஒருபோதும் இசைவ தில்லை. ஏனென்றால், அது பெரிதும் துன்பம் தருவது என்பதனை அவரே அறிவார். அதுபோலவே, தம்முகத்தை வெளியிலே கண்டாலும் பொறுக்காத பகையுடையார் ஒருவரை ‘வீட்டிற்குப் போகலாம்’ என்று அழைத்து வேண்டும் ஆசையும் பொருத்தமற்ற ஆசையேயாகும். முகம்புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை அகம்புகுதும் என்றிரக்கும் ஆசை, இருங்கடத்துத் தக்க நெறியிடைப் பின்னும் செலப்பெறார் ஒக்கலை வேண்டி அழல். தம்மை மதியாத ஒருவரைத் தாம் ஒதுக்கி விடுதலே சிறப்பு. அவரோடு நாம் உறவாடினால் நமக்குத் தான் கேடு வரும் என்பது கருத்து. ‘ஒக்கலை வேண்டி அழல்’என்பது பழமொழி. நடக்கும் சக்தியிருந்தும் ஒக்கலை வேண்டி அழும் பிடிவாதத்திற்கு இசைவது கூடாது என்பதாம். 108. பாதி அழிந்தால் பகை தீராது உள்ளத்துள் கபடமில்லாமல் இனிதாகப் பேசுதல்; மாண்பு டைய பொருள்களைக் கொடுத்தல்; சூழ்ச்சி பொருந்திய வஞ்சக மான முறைகளால் தமக்கு எளியராக ஆக்கித் தம் வசப்படுத்திக் கொள்ளுதல்; முறைமையாலே முன்னர் அவரைப் பகைத்துக் கெட்டவர்க்கு நடுநிலையாகச் சென்று அவரை நன்றாக அழித்தல்; ஆகியவற்றால் அல்லாமல், ஒடித்து எறிவதனால் மட்டுமே, பகைமை முற்றவும் தீர்ந்துவிடாது. மறையாது இனிதுஉரைத்தல் மாண்பொருள் ஈதல் அறையான் அகப்படுத்துக் கோடல்--முறையால் நடுவணாச் சென்றவரை நன்கறிதல் அல்லால் ஒடியெறியத் தீராப் பகை. ஒடி எறிதல்-பாதி வெட்டியும் வெட்டாமலும் வைத்தல். சாம, தான, பேத, தண்டம் என்னும் நான்கு வகை உபாயங்களாலும் பகைவரைப் போக்குவது பற்றிக் கூறியது இது. ‘ஒடியெறியத் தீராப் பகை’ என்பது பழமொழி. முற்றவும் அழியச் செய்ய வேண்டும் என்பது கருத்து. 109. தாயும் அரச நீதியும் செல்லவர்களுக்கும் வறுமையாளர்களுக்கும், அவரவர்க்குச் செய்யும் முறைமைகளைத் தெரிந்து, அதனின்றும் வழுவாமல் இருவருக்கும் நேர் சமமாகவே அரசன் பாரபட்ச மில்லாமல் நீதி செலுத்த வேண்டும். அரச முறையிலே மாறுபட்டு, நேராக அவன் நடக்கவில்லையென்றால், ஒரு பக்கம் ஒரு பிள்ளைக்கு நீரும், அடுத்த பக்கம் அடுத்த பிள்ளைக்குப் பாலும் ஒரு பெண்ணுக்குச் சுரப்பது போன்றதாகும். முறைதெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும் இறைதிரியான் நேரொக்க வேண்டும்--முறைதிரிந்து நேரொழுகா னாயின் அதுவாம், ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு. தன் குடிகளிடையே பாரபட்சம் கற்பித்து நீதி தவறுதல், அரசனுக்கு மிகவும் பழிதரும் செயலாகும். நீதியின் முன் ஏழை யையும், பணக்காரனையும் சமமாகவே பாவிக்க வேண்டும். ‘ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு’ என்பது பழ மொழி. இப்படி நடப்பது தவறு என்பது கருத்து. 110. நண்பர் தீங்கினைப் பொறுத்தல் கரையோடு பொருதலான அலைகள் வந்து உலவுகின்ற பொங்கும் நீர்வளத்தினையுடைய சேர்ப்பனே! ஒருவர் பொறுக் கும் பொறுமை யானது இருவரின் நட்புக்கும் உதவியாகும். நட்புச் செய்தவர்களுக்குத் தம்மால் செய்யப் பட்டதொரு தீமை எதுவும் இல்லாதவர்கள், தமக்கு நண்பர்கள் செய்யும் தீமையையும், ‘எம் தீவினைப் பயனால் வந்துற்றதே இது’ என்று நினைத்து அதனைப் பாராட்டாது பொறுத்துக் கொள்ளவே செய்வார்கள். தம்தீமை இல்லாதார் நட்டவர் தீமையும் எம்தீமை என்றே உணர்வதாம்-அந்தண் பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப! ஒருவர் பொறைஇருவர் நட்பு. நட்பில் பிழை பொறுத்தல் இல்லாதபோது இது நிலையாது என்பது கருத்து. ‘ஒருவர் பொறைஇருவர் நட்பு’ என்பது பழமொழி. 111. வஞ்சிக்கவும் செய்யலாம் நெருக்கமாகக் கட்டப்பெற்றுள்ள மாலையினை அணிந்தி ருக்கின்ற வேந்தனானவன், செவ்வையில்லாத ஒரு செயலிலே ஈடுபடமாட்டான் என்றால், அறிவுடையவரான அவன் அமைச்சர்கள், பொய்யுரைத்து அவனை வஞ்சித்தாயினும், அவனை அதனின்றும் நீக்கவே முயலுவார்கள். சந்திரனைக் காட்டி, அதன்மேல் இல்லாததெல்லாம் பழி சொல்லிப் பிள்ளை களை மருட்டும் தாய்மார்களைப்போல என்க. ஒள்ளியவனான நெறிகளை இன்னபடியென்று காட்டாத, அவன் விருப்பப்படியே சார்ந்து நடப்பவர்களுக்கு, அப்படிச் செய்தல் என்பது அரிதாகும். செறிவுடைத் தார்வேந்தன் செவ்வியல பெற்றால் அறிவுடையார் அவ்வியமும் செய்வர்--வறிதுரைத்துப் பிள்ளை களைமருட்டும் தாய்போல் அம்புலிமேல் ஒள்ளியகாட் டாளர்க்கு அரிது. ஆட்சியிலுள்ளார் தவறான செயல்களில் ஈடுபட்டால், அறிவுடையார் பொய்யுரைத்து மருட்டியாயினும், அவரைத் திருந்தும்படி செய்தல் வேண்டுமென்பது கருத்து. ‘ஒள்ளிய காட் டாளர்க்கு அரிது’ என்பது பழமொழி. 112. தம்மவராயினும் தண்டித்தல் தம்முடைய கண் போன்றவர்களானாலும், அவர்கள் தகுதியில்லாத செயல்களைச் செய்தலைக் கண்டால், ‘இவர் எம் கண் போன்றவர்’ எனக் கருதி அதனைப் பாராட்டாது விட்டு விடுதல் அரசநெறிக்குக் குற்றம் தருவ தாகும்; அதனால் வன்கண் மை உடையவனாகத் தன்னைச் செய்து கொண்டு, அரசன், அத்தகையவர்களையும் அரசநெறிப்படி முறையே தண்டிப்பா னாக; அப்படித் தண்டிக்க மாட்டாத கண்ணோட்டம் உடையவனான ஒருவன், தன் அரசாட்சியினைச் செவ்வையாக ஒருபோதும் நடத்தவே மாட்டான். எங்ஙண் இணையர் எனக்கருதின் ஏதமால்; தங்கண்ணார் ஆயினும் தகவில கண்டக்கால், வன்கண்ண னாகிஒறுக்க, ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான் அரசு. தமக்கு வேண்டியவர்கள் குற்றம் செய்தாலும், அவரை வேண்டியவர் எனக்கருதி விட்டுவிடாமல், முறையாகத் தண்டிப்பதே ஒரு சிறந்த அரசியல் தலைவனுக்கு அழகாகும். அல்லாமல், அவனிடம் தாட்சணியம் காட்டினால், அவன் நெடுங்காலம் ஆளமாட்டான் என்க. ‘ஒறுக்கல்லா மென் கண்ணன் ஆளான் அரசு’ என்பது பழமொழி. 113. எங்கும் பிச்சை கிடைக்கும் ‘மாரி என்ற ஒன்று இல்லாமற் போய், உலகமே வறண்டு போயிருந்த காலத்தினும்கூடப், பாரி வள்ளலின் மடப்பத்தை உடைய மகளானவள், பாணனுக்கு, நீர் உலையுள் பெய்து அழகாகச் சமைத்து வைத்திருந்த சோற்றுப் பானையைத் திறந்து, பொன்மனங் கொண்டு சோற்றைக் கொடுத்து உதவினாள். ஆதலால், சென்று இரந்தால் ஒன்றுங் கிடையாது போகிற வீட்டு முற்றம் என்பது உலகில் எதுவுமே இல்லை யாகும். மாரியோன் றின்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு--நீருலையுள் பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள் ஒன்றுரு முன்றிலோ இல். வீட்டினர், தம் வாயில் தேடி வந்தவர்க்கு எதையேனும் தவறாது உதவுவர்; உதவ வேண்டும் என்பது கருத்து. ‘பொன் கொண்டு திறந்து புகாவாக நல்கினாள்’- பொன்னைப் பெய்து கொண்டு வந்து சோறிடுவது போலச் சொரிந்து உதவினாள் எனலுமாம். ‘ஒன்றுரு முன்றிலோ இல்’ என்பது பழமொழி. 114. சொல்லும் பொருளும் உணர்தல் வளைவான உப்பங்கழிகள் நிறைந்துள்ள குளிர்ச்சி பொருந் திய கடற்கரை நாட்டுக்கு உரியவனே! உள்ளத்திலே கள்ளமில் லாமல் நட்புச் செய்தவர்களுக்கு நண்பர்கள் சொன்ன சொல் லும், அவற்றின் பொருள் முடிவும் ஒன்றாகவே தோன்றும். சொன்ன சொற்களை வேறுபட்ட பொருளாக எடுத்துக் கொண்டு பழி கூறுதல், ஒருவனுடைய பாவினை ஏற்றி மற்றொரு வனுடைய பாவாகக் கட்டுதலோடு பொருத்தம் உடையதாகும். புரையின்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த உரையும் பொருள் முடிவும் ஒன்றால்--உரைபிறிது கொண்டெடுத்துக் கூறல் கொடுங்கழித் தண்சேர்ப்ப! ஒன்றேற்றி வெண்படைக்கோள் ஒன்று. நண்பர்கள் திறந்த உள்ளமுடையவர்களாகப் பழகுவார் களேயல்லாமல், சொல்வேறு பொருள் வேறாகப் பேசிப் பழகு பவர்கள் அல்லர். அப்படிச் சொல் வேறு பொருள் வேறாகப் பேசுவார் நட்பினை நட்பாகக் கொள்ளுதல் வேண்டாம்; ஒதுக்கிவிடுக என்பது கருத்து. ‘ஒன்றேற்றி வெண் படைக்கோள் ஒன்று’ என்பது பழமொழி. 115. அமைச்சரின்றி மக்கள் நலமில்லை தாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றினும், மனத்தாலும். வாயாலும், உடலாலும், அறிந்து அடங்கியவர்களாக விளங்கி, தம் நாட்டின் நன்மை ஒன்றையே எண்ணியவராக இருந்து ஒன்றுக்கும் வருத்தங் கொள்ளாதவ ராகக் காத்து வருபவரே நாட்டின் சிறந்த அமைச்சர்களாவர். அத்தகையவர் இல்லை யென்றால், அந்த நாட்டில் உள்ள உயிர்கள் எல்லாம் அந்த நாட்டை விட்டுக் குடிபெயர்ந்து வேறு நாட்டுக்குச் சென்று அல்லற் படுவன ஆகி விடும். கனதினும் வாயினும் மெய்யினும் சய்கை அனைத்தினும் ஆன்றவிந்தா ராகி--நினைத்திருந்து ஒன்றும் பரியலராய் ஓம்புவார் இல்லெனின் சென்று படுமாம் உயிர். அமைச்சர்கள் திரிகரண சுத்தியாக நாட்டின் நலம் ஒன்றையே கருதிச் செயற்படவேண்டும் என்பது கருத்து. ‘ஓம்புவார் இல்லெனின் சென்று படுமாம் உயிர்’ என்பது பழமொழி. ‘சென்றுபடும்’ என்பது ‘செத்து ஒழியும்’ என்றும் பொருள்படும். 116. ஊரைத் தழுவி நடக்கவும் தம்மை வந்து அடைக்கலமாகச் சேர்ந்தவர்கள் வருத்தம் அடையுமாறு ஒருபோதுமே நடக்கவேண்டாம். துறவியர்களின் ஒழுக்கநெறியினைப் பேணி நடவாமல் ஒதுங்கி நிற்பதும் கூடாது. தான் ஆராய்ந்து கண்ட பொருள் நுட்பத்தைப் பலகாலும் சிந்தித்துச் சிந்தித்து, தான் மேற்கொள்க. ஊரினர் நடக்கும் பாதையிலே, அது சரியா, இது முறையா என்றெல்லாம் கேளாமலே தானும் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க. இவையே சிறந்த நெறிகளாகும். செல்லற்க சேர்ந்தாற் புலம்பறச்; செல்லாது நில்லற்க நீத்தார் நெறியொரீப்--பல்காலும் நாடுக தான்கண்ட நுட்பத்தைக் கேளாதே ஓடுக ஊரோடு மாறு. ‘ஊருடன் ஒத்து வாழ்தல் வேண்டும்’ என்பது கருத்து. அடைந்தவர்க்கும், துறவியர்க்கும் உதவுதலும், கற்று நன்மை யென நுட்பமாகத் தெளிந்த ஒன்றைக் கைவிடாமையும் வேண்டும் என்பதும் சொல்லப்பட்டது. ‘ஓடுக ஊரோடு மாறு’ என்பது பழமொழி. 117. தலைமை கருதுபவரை அழிக்க வேண்டும் மலைமேலே வளர்ந்திருக்கும் மூங்கிலையும், தம் அழகி னாலே தோற்று அழியச் செய்யும் மென்மையான தோள்களை உடையவளே! ‘தமக்குத் தலைமையான ஒரு நிலைமை இருக்க வேண்டும்’ என்று கருது கின்ற ஆணவத் தன்மை உடையவர் களை அரசனானவன், தன்னுiடைய பிற சூழ்நிலைகளின் காரணமாகச் சமாதானப்படுத்தி வைத்துக் கொள்வதானது, ஒரே அறையினுள் பாம்புடன் கூடி வாழும் பரிதாப நிலைமை போன்றதாகும். தலைமை கருதும் தகையாரை வேந்தன் நிலைமையால் நேர்செய் திருத்தல்--மலைமிசைக் காம்பனுக்கும் மென்தோளாய்! அஃதன்றோ ஓரறையுள் பாம்போடு உடனுறையும் ஆறு. அத்தகையோரைப் பகையாகக் கருதி அழித்துவிடுதலே அரசன் தன்னைப் பேணிக்கொள்வதற்குச் செய்ய வேண்டிய செயலாகும் என்பது கருத்து. ‘ஓர் அறையுள் பாம்போடு உடனுறையுமாறு’ என்பது பழமொழி. ‘குடத்துள் பாம்போடு உடனுறைந்தற்று’ எனவும் இப்பழமொழி வழங்கும். 118. மாற்ற அரிது மனம் நேர்மையான வழியல்லாமல், குணமற்ற ஒன்றை ஒருவர் தம் உள்ளத்திலே கொண்டிருந்தால், அத்தகையவரை மீண்டும் அந்தத் தவறான எண்ணத்தினின்றும் தெளிவித்தல், பெரியார்க் குங்கூட இயலாத ஒன்றாகும். கூர்மையான நுண்பொருளின் கேள்வி யினால் அறிவு உடையவர்களுக்கே என்றாலும், அவர் எண்ணியதையே பறையானது ஒலிக்கும் என்பதை அறிக. நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால், பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே, கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும் ஓர்த்து இசைக்கும் பறை. பறை, அவரவர் கருத்தை ஒட்டியே ஒலிப்பது போல, மனமும் அவரவர் கொண்ட கருத்துப்படியே போய்க் கொண்டிருக்கும், அதனைப் பிறர் தம் கருத்துப் போல மாற்றுதல் எளிதன்று என்பது கருத்து. ‘ஓர்த்தது இசைக்கும் பறை’ என்பது பழ மொழி. 119. கடன் கொடுத்தல் வேண்டாம் மடமான தன்மையினையுடைய மானின் நோக்கினை யுடையவளே! சிறந்த மயலினைப் போன்ற சாயலையும் உடையவளே! தம் கையை விட்டுக் கடந்துபோன ஒரு சிறந்த பொருளானது மீண்டும் தம் கைக்கு வந்து சேர்வது என்பதே இவ்வுலகிற் கிடையாது. இப்படிச் சொல்பவர்கள், பொருளின் இயல்பை உண்மையாகவே உணர்ந்தவர் களாவார்கள். உண்மையாகக், கீழ்மக்களாகிய பிறர்க்குக் கடன் கொடுத்தவன் பெறுவதெல்லாம் வாங்கியவன் அதனை மறுத்துப் பாம்பு குடத்தினுள்ளேயும் கைவிடத் துணிதலாகிய பொய்ப் பிரமாணம் ஒன்றே யாகும். கைவிட்ட ஒண்பொருள் கைவரவு இல்லென்பார் மெய்ப்பட வாறே உணர்ந்தாரால்--மெய்யா மடம்பட்ட மானோக்கின் மாமயில் அன்னாய்! கடன்பெற்றான் பெற்றான் குடம். கடன் வாங்கியவர்களுக்கு மீண்டும் அதனைத் திருப்பித் தருவதற்கு மனம் வருவதே கடினம். அதனால், பொருளைப் பேணுபவன் தீயோருக்குக் கடன் கொடாமல் இருக்க வேண்டும் என்பது கருத்து. ‘கடன் பெற்றான் பெற்றான் குடம்’ என்பது பழமொழி. 120. மூடனுக்குச் செய்த உபதேசம் மனத்தினுள்ளே நன்மை தீமைகளைப் பற்றிய கவலை யில்லாதவர் களாகி, நல்லது எது என்பதையும் உணராதவர்கள் ஆகி, மனவலிமையுள்ள மூடர்கள் கூடி மொய்த்துக் கொண்டி ருக்கிற ஒரு சபையினுள்ளே சென்று, உடலளவானே மனிதருள் ஒருவனாக விளங்கும் ஒரு மூடனுக்கு உறுதிதரும் பொருள் பற்றிச் சொல்லுதல் வீணானதாகும், அது கடலினுள் மாம் பழத்தைக் கொட்டுவது போன்ற பயனற்ற செயலுமாகும். நடலை இலராகி நன்றுணரார் ஆய முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள் உடலா ஒருவற்கு உறுதி யுரைத்தல் கடலுளால் மாவடித் தற்று. அறிவுடையோர் புல்லறிவு உடையோருக்கு உபதேசம் செய்வதற்கு முயலுதல் கூடாது; அவர்க்கு உரைப்பது எல்லாம் வீணே என்பது கருத்து. ‘கடலுளால் மாவடித் தற்று’ என்பது பழமொழி. 121. பணம் உடையவர்க்கு ஆகாதது இல்லை விளங்கும் நீர்ப்பெருக்கினையுடைய கடற்கரைக்குரிய நாட்டினனே! பொருள் உடையவர்களின் செயல்கள் எல்லாம், இடையிலே முடிதல் இல்லாமற் போகாமல், நல்லதாகவே முறை யாக முற்றவும் நடந்து முடியும்; பொருள் வசதி இல்லாதவர் களுக்கோ, அவர்கள் செயல்கள் எல்லாம் மிகவும் வருத்தத்துட னேயே நடந்து வரும். அதனால், பொருள் வளம் உடையவர், கடலினுள்ளே செல்பவரானுலுங்கூட, அங்கும், தமக்கு நன்மை யான தக்க வசதிகளைச் செய்து கொள்ளக் கூடியவர்கள் என்று அறிவாயாக. ஒல்லாத இன்றி உடையார் கருமங்கள் நல்லவாய் நாடி நடக்குமாம்--இல்லார்க்கு இடரா வியலும்; இலங்குநீர்ச் சேர்ப்ப! கடலுள்ளும் காண்பவே நன்கு. பொருள், வாழ்வுக்கு மிகவும் தேவை என்பதைச் சொல்வது இது. பொருள் உடையவர் காரியங்கள் நிறை வேறுவதும், பொருள் இல்லாதவர் காரியங்கள் தடைப்படுவதும் உலக இயல்பு. ‘கடலுள்ளும் காண்பவே நன்கு’ என்பது பழமொழி. 122. சான்றோர் என்றும் யாசியார் பனை மடல்களின் இடையிலேயுள்ள தம் கூடுகளோடு கடற் பறவைகளும் சேர்ந்து ஆராவாரிக்கின்ற, பெரிய கடற்கரை களுக்கு உரியவனே! கடலோடு துரும்பு ஒரு போதுமே சேர்ந்து இருப்பதில்லை. அது போலவே, தம்முடைய உடலானது ஒடுங் கும்படியான அளவுக்குப் பசித்தாலும், மாண்பு உடையவர்கள், பிறருடைய பொருள்களை அடைய விரும்பி, அவர்பாற் சென்று நின்று யாசிக்கவே மாட்டார்கள். மடங்கிப் பசிப்பினும் மாண்புடை யாளர் தொடங்கிப் பிறருடைமை மேவார்--குடம்பை மடலொடு புட்கலாம் மால்கடற் சேர்ப்ப! கடலொடு காட்டொட்டல் இல். கடலொடு, துரும்பு ஒட்டாதது போல, சான்றோர்பால் இரந்து நிற்றலாகிய குணமும் ஒருபோதும் சேராது என்பது கருத்து. ‘கடலொடு காட்டு ஒட்டல் இல்’ என்பது பழமொழி. காட்டு-துரும்பு; மடலின் அசைவுடன் புள்ளும் சேர்ந்து ஆரவாரிக்கும் என்பதாம். 123. துறவிகள் புலால் விரும்புதல் விடுவதற்கு அரியவான வலிமையுடைய ஆசைகளை யெல்லாம் மிகவும் மனவுறுதியுடனே தம்மிடத்தே நின்றும் நீக்கி விட்டவர்கள்; ஒழுகுவதற்கு அரியதான நல்லொழுக்க நெறியினி டத்தையே நிலைபெற்ற சான்றோர்கள். அவர்கள், தமக்குத் துன்பம் வந்த காரணத்தினாலே, கிடைத்த புலாலினை உண்ணு தல், கடலினின்றும் நீந்திக் கரை சேர்ந்த ஒருவன், கன்றின் குளம் படி அளவான நீரிலே வீழ்ந்து அமிழ்ந்து விட்டது போன்ற தாகும். விடலரிய துப்புடைய வேட்கையை நீக்கிப் படர்வரிய நன்னெறிக்கண் நின்றார்--இடருடைத்தாய்ப் பெற்ற விடக்கு நுகர்தல், கடல்நீந்திக் கற்றடியுள் ஆழ்ந்து விடல். புலால் உண்ணுதல், பிற எல்லாத் தீய ஆசைகளினும் கொடியதாகும்; அதனை விட்டவரே சான்றோர் என்பது கருத்து. ‘கடல்நீந்திக் கற்றடியுள் ஆழ்ந்து விடல்’ என்பது பழமொழி. கற்றடி-கன்றின் அடி; அந்த ஆழமுடைய நீர் என்பது பொருள். பழங்கால முனிவர்களிற் பலர் புலாலுண்டு வந்ததைக் கண்டிக் கும் வகையில் கூறியது இது. 124. மன்னர் கருத்துக்கு இசைய நடக்க மடல்கள் நிரம்பியிருக்கிற பனைமரங்கள், மிகுதியாக விளங் கும் கடற்கரைக்கு உரியவனே! மன்னரைச் சேர்ந்து வாழ்ந்து வருகிறவர்கள், அம் மன்னர், தம்மை விலக்கி விடுதற்குரிய செயல் களைச் செய்து, அதனால் அவர்கள் தம்மை என்ன செய்வார் களோ என்று பயந்துகொண்டே வாழாமல், அரிய தான உடலினைப் பெற்ற அம்மன்னர்கள் மகிழ்வடையத் தக்க வாறே நடந்துவர வேண்டும். அப்படி அவர்கள் நடந்து கொண்டார்கள் என்றால், கடலினும் கிடையாத அளவு பெருஞ்செல்வ வளம் எல்லாம் அவர்களுக்கு வந்து வாய்க்கும். விடலமை செய்து வெருண்டகன்று நில்லாது உடலரும் மன்னர் உவப்ப வொழுகின், மடலணி பெண்ணை மலிதிரைச் சேர்ப்ப! கடல்படா எல்லாம் படும். மன்னர் உவக்க நடந்தால், பெருஞ் செல்வமெல்லாம் அவராற் பெற்று இன்புறலாம் என்பது கருத்து. ‘கடல் படா எல்லாம் படும்’ என்பது பழமொழி. 125. நண்பர்க்கு உதவ வேண்டும் பரந்த அலைகள் கரையாகிய பாரிலே வந்து மோதுகின்ற, கடற்கரைக்கு உரிய தலைவனே! தம்மால் விரும்பிப் பாதுகாக் கப்படுபவர் பண்பற்றவர் களாக இருந்தாலும், சான்றோர்கள் அதனால் தங்கள் தன்மையினின்றும் சற்றும் மாறுபாடு அடைவார்களோ? மாட்டார்கள். ஆகையால், ஊர் அறிய நம்முடன் நட்புச் செய்தவர்க்கு உணவளிப்பதும் நம் கடமை அல்லவோ? பரியப் படுபவர் பண்பிலார் ஏனும் திரியப் பெறுபவோ சான்றோர்--விரிதிரைப் பாரெறியும் முந்நீர்த் துறைவ! கடனன்றோ ஊரறிய நட்டார்க்கு உணா. நட்டார் குணக்கேடரானாலும், சான்றோர் அவர்க்கும் உதவுவதையே தம் கடனாகக் கொள்வார்கள் என்பது கருத்து. ‘கடனன்றோ ஊரறிய நட்டார்க்கு உணா’ என்பது பழமொழி. ஊரறிய நட்டார்க்கு உதவாவிடின் ஊர்ப்பழிக்கு உள்ளாகல் நேரும் என்பதாம். 126. சிறந்தவர் கொடுத்தல் புனத்து இடங்களிலே, கோட்டான் கூப்பிட்டுக் கொண்டி ருக்கும் குளிர்ந்த மலைகளையுடைய நாடனே! ஒருவன் பிச்சை எடுத்து உண்ணும் ஓட்டிலே போய்க் கல்லைப் போடுபவர்கள் இந்த உலகில் எவருமே இல்லை; ஆனால் அறிவினாலே மாட்சிமையுடைய சான்றோர்களோ, தம்மிடத்தே இரந்து வருபவர்; தம் உள்ளத்திலே எண்ணியது இது என்று அவருடைய தன்மையையே ஆராய்ந்து பார்த்து, அவர் மனத்திலுள்ளதை அறிந்து அதற்கேற்பக் கொடுத்து உதவுபவராகவே இருப்பார்கள். நினைத்த இதுவென்றந் நீர்மையே நோக்கி மனத்தது அறிந்தீவார் மாண்டார்--புனத்த குடிஞை இரட்டும் குளிர்வரை நாட! கடிஞையில் கல்லிடுவார் இல். கொடுப்பவர் பலராயினும், வருபவர் குறிப்பறிந்து, அவர் கேளாததன் முன்பே அவர் கருதி வந்ததைக் கொடுத்து உதவுவதே சிறந்த கொடையாகும் என்பது கருத்து. ‘கடிஞையில் கல்லிடு வார் இல்’ என்பது பழமொழி. கடிஞையில் கல் இடுவார் மிகவும் கொடியவர் என்பதாம். 127. உடனே பகையை ஒழிக்க வேண்டும் மின்னலின் ஒளியைப்போல ஒளி நிலைப்பெற்றதாகி, மூங்கில் போல அமைவுடன் விளங்கும் அழகிய தோள்களை உடையவளே! ஒரு பாத்திரத்தின் உள்ளேயிருந்து கடித்து விட்டு ஓடும் பாம்பின் பல்லைப் பிடுங்க நினைப்பவர் எவருமே இல்லை. அதனை அது செய்வதற்கு முன் அவர்களே அதன் விஷத்தால் செத்து விடுவார்கள். அதனால், மிகவும் பகைமை கொண்டு முற்படத் தம்மை நலிந்து எழுந்தவர்களை, அப்போ தே அடக் காது, பின்னர் அடக்குவோம் என்று சோம்பி இருத்தல் அறிவற்ற தன்மையேயாகும். முன்நலிந்து ஆற்ற முரண்கொண்டு எழுந்தோரைப் பின்நலிதும் என்றிருத்தல் பேதைமையே--மின்னின்று காம்பன்ன தோளி! கலத்தில், கடித்தோடும் பாம்பின்பல் கொள்வாரோ இல். பகையை அடியோடு முதலிலேயே அழித்து விடுவது தான் அறிவுடைமை. பின்னர் பார்த்துக்கொள்வோம் எனக் காலங் கடத்துவது அறிவற்ற தன்மை என்பது கருத்து. ‘கடித்தோடும் பாம்பின்பல் கொள்வாரோ இல்’ என்பது பழமொழி. கலத்தில் கடித்துவிட்டு ஓடும் பாம்பை அடித்துக் கொல்வதே நல்லது; அதுபோலக் குறும்பு செய்யும் பகைவரையும் அழித்திடுக என்பதும் ஆகும். 128. மன்னன் விரும்புவதை விரும்பாமை இடப்படும் தவளக் குடையினைக் கொண்ட தேரினை உடையவர்கள் மன்னர்கள். அவர்கள் ‘எமக்கு இது பொருந்தும்’ என்று எண்ணி மிகவும் விரும்புகின்ற ஒரு பொருளை, அவரைச் சேர்ந்து வாழ்பவர்கள் எவரும் விரும்புதல் கூடாது. அவர்கள், தாமும் விருப்பங்கொண்டு கொஞ்சமும் ஆராயாமல் தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் முயலுதல் மிகவும் ஆபத்தானதாகும். அது கடிய விலங்குகளைத் தாமே கூவித் தம்மிடத்தே வரவிடுவதைப் போன்றதாகும். இடுகுடைத்தேர் மன்னர் எமக்கமையும் என்று கடிதவர்தாம் காதலிப்ப தாம்காதல் கொண்டு முடிய எனைத்தும் உணரா முயறல் கடியன கனைத்து விடல். ‘மன்னன் விரும்புவதை அவனைச் சார்ந்து வாழ்பவர் விரும்புவது கூடாது’ என்பது கருத்து. ‘கடியன கனைத்து விடல்’ என்பது பழமொழி. 129. அதிகமாகத் துன்புறுத்தக் கூடாது ஒரு நாயை வளர்ப்பவன், அதனை அன்புடன் பேணாமல், கடை வாயிலை அடைத்து வைத்துக் கொண்டு அதனை அடித்தானென்றால், அந்த நாயும் தன் சொந்தக்காரனான அவனைக் கடித்துவிடும். ஆகவே. தாம் வறுமையுற்று வந்து தம்மைப் புகலாக அடைந்த உறவினரையும், ‘இவர் நம்மை எதிர்க்க வலியில்லாதவர்’ என்று கருதிப் பிறருக்கு வெளிப்பட இகழ்ந்து பேசி எவரும் அவரை வருத்தாமல் இருக்க வேண்டும். ஆற்றார் இவர்என்று அடைந்த தமரையும் தோற்றத்தாம் எள்ளி நலியற்க--போற்றான் கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும். பலரறிய இகழ்ந்தால் அவரும் எதிர்த்து நிற்பர் என்பது கருத்து. ‘கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும்’ என்பது பழமொழி. 130. கண்ணே காட்டிக் கொடுக்கும் மலர்ந்திருக்கும் ஆம்பற் பூக்கள் கலியாண வீட்டைப் போல மணம் கமழ்ந்து கொண்டிருக்கின்ற, அலைகள் மிகுந்த கடற்கரைப் பகுதிகளுக்கு உரியவனே! ‘யாம் செய்த தீய செயல்கள் வெளிப் படாமல் மலையே மறைத்துக் கொண்டிருக்கிறது’ என்று நினைத்துக் கொள்வார்கள். தீயவர்கள். தாம் செய்த தீமையால் வரும் பழிபாவங்களை அவர்கள் தெளிந்து உணர்வதில்லை. கண் பார்வை அம்பினும் கூர்மையாகச் சென்று ஊடுருவ வல்லது என்பதை அவர்கள் அறியார்கள். யாம்தீய செய்த மலைமறைத்தது என்றெண்ணித் தாம்தீயார் தந்தீமை தோற்றாரால்--ஆம்பல் மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப! கணையினும் கூரியவாம் கண். தீமை எவ்வளவுதான் மறைக்கப் பட்டாலும், வெளிப் பட்டுத் தோன்றி அதனைச் செய்தவர்க்குப் பழி பாவங்களைக் கொண்டு வந்து விடும். அதனால், அனைவரும் தீயன செய்யாது வாழ வேண்டும் என்பது கருத்து. ஆம்பல்-அல்லி ‘கணையினும் கூரியவாம் கண்’ என்பது பழமொழி. கண் பார்வையானது அம்பினும் கூர்மையாக ஊடுருவிச் செல்வது என்பது கருத்து. 131. இன்ப துன்பம் இல்லை என்பவர் ‘மறுமை இன்பம் துன்பம் என்பதொன்று இருக்கிறதோ? மனத்திலே தோன்றியவற்றை எல்லாம் பெற்று இன்புறுகின்ற வழியையே செய்து வாழுங்கள்’ இப்படிச் சொல்வார் சிலர். இவர்கள் நறுமணமுள்ள நெய்யிலே இட்டுச் செய்த சுவையான அடையினை எடுத்து எறிந்துவிட்டுக் கண்ணை மூடிக் கொண்டு செங்கல்லை உண்ணும் தீயவர்களுக்குச் சமானமானவர்கள். மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம் பெறுமாறு செய்ம்மின் என்பாரே--நறுநெய்யுள் கட்டி அடையக் களைவித்துக் கண்சொரீஇ இட்டிகை தீற்று பவர். மக்களுக்குத் தீய உபதேசங்கள் செய்பவர்கள் மிகவும் கொடியவர்கள் என்பது கருத்து. கட்டு அடை - பாகு பெய்த அடையுமாம், இட்டிகை - செங்கல்; ‘கண் சொரீஇ இட்டிகை தீற்றுபவர்’ என்பது பழமொழி. 132. குறிப்பால் குணம் அறியலாம் எவரிடத்தும் கண்டவான கூறுபாடுகளே அவர்களைப் பற்றிய முடிவினை நாம் செய்து கொள்வதற்கு உரிய காரணங்க ளாக அமையும். பெரிய உலைப்பாத்திரத்தினுள்ளே பெய்த அரிசியை அந்த அரிசி வெந்தமை அறிவதற்கு, ஓர் அகப்பையாலே எடுத்துக் கண்டு உணரலாம். அதுபோலவே, எவரிடத்தும் அவரவர் செயல்களாகக் கண்டவற்றைக் கொண் டே அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். பேருலையுள் பெய்த அரிசியை வெந்தமை ஓர்மூழை யாலே உணர்ந்தாங்கு--யார்கண்ணும் கண்டதனால் காண்டலே வேண்டுமாம், யார்கண்ணும், கண்டது காரணமா மாறு. செயலைக் கொண்டே மனிதர் மதிப்பிடப்படுவதனால், யாவரும் மறந்தும் பிழைபட்ட செயல்களிலே மனஞ் செலுத்தக் கூடாதென்பது கருத்து. மூழை - அகப்பை. ‘கண்டது காரணமா மாறு’ என்பது பழமொழி. 133. பிறர் தவறு கூறலாகாது அழகிய குளிர்ந்த நீர்வளத்தினையுடைய புகார் நாட்டிலே, விளை நிலங்கள் இன்னின்னார்க்கு இவ்வளவு உளவென்று குறித் துக் காண்பதற்கு விரும்பிய அரசன், மக்களை அழைத்து அதுபற்றி விசாரித்தான். அப்போது, சான்றோன் ஒருவன், பிற னொருவன் தன் வலிமையால் அபகரித்துக் கொண்டு அநுப வித்து வருகிற ஒரு நிலத்தைப் பற்றித் தான் அறிந்திருந்தும், அத னைச் சொல்வதற்கு நாணங் கொண்டு மறைத்து நின்றான். ஆக வே, தன் கண்ணினாற் கண்டதேயானாலும் அதனால் வரும் பின் விளைவுகளை ஆராய்ந்து பார்த்தே சொல்ல வேண்டும். பூந்தண் புனற்புகார்ப் பூமிகுறி காண்டற்கு வேந்தன் வினாயினான் மாந்தரைச்--சான்றவன் கொண்டதனை நாணி மறைத்தலால், தன் கண்ணிற் கண்டதூஉம் எண்ணிச் சொலல். காண்பவற்றினை நன்கு ஆராயாமல் வெளிப்படச் சொல்வது கூடாது என்பது கருத்து. ‘கண்ணிற் கண்டதூஉம் எண்ணிச் சொலல்’ என்பது பழமொழி. 134. கயவரிடம் இரகசியம் சொல்லக் கூடாது மழை மேகத்தினைப் போலக் கருமையாக விளங்கும் கூந்தலை யுடைய, பொன்வளை அணிந்தவளே! அன்புபடத் தம்முடன் நட்புக் கொண்டு நடப்பவர்களுள்ளும், தாம் கேட்ட ஒரு செய்தி யைப் பிறருக்குச் சொல்லி ஆராயாது போகின்ற வர்களாக ஒருவ ருமே இல்லாதிருக்கின்றனர். அதனால் சான்றோர்கள் இரகசிய மான செய்திகளைக் கயமைக் குணம் உடையவர்களுக்கு ஒரு போதும் சொல்லவே மாட்டார்கள். நயவர நட்டொழுகு வாரும் தாம்கேட்டது உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை; புயல்அமை கூந்தற் பொலந்தொடி! சான்றோர் கயவர்க்கு உரையார் மறை. நண்பர்களே இரகசியங்களை வெளிப்படுத்தும்போது, கயவர் கள் எவ்வளவுதூரம் அதனைப் பகிங்கரப்படுத்தி விடு வார்கள்! அதனால், அவரிடத்து ஒருபோதும் இரகசியங்களைச் சொல்ல வேண்டாம் என்பது கருத்து. ‘கயவர்க்கு உரையார் மறை’ என்பது பழமொழி. 135. சொல்வீரர் பயனற்றவர் வெகுண்டு எழுந்த போரினுள்ளே, பகைவர்கள் எல்லாரும் அழியும்படியாகத் தம்முடைய படைச் செருக்கினாலே போர் செய்து வெற்றிக் கொள்ள முயலாத கோழைகள், தாமும் போர் செய்பவர்கள்போல வீறாப்பாகப் பேசிக் கொண்டு தம் அரசனின் சோற்றைச் சாப்பிட்டுத் திரிவார்கள். அத்தகை யோர் நிலை உடலால் வலுவற்ற ஒருவர், ஆடைகளாற் புனைந்து தம்மைப் பகட்டித் திரிவது போன்றதாகும். உருத்தெழு ஞாட்பினுள் ஒன்னார் தொலையச் செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போலத் தருக்கினால் தம்மிறைவன் கூழுண்பவரே கருக்கினால் கூறைகொள் வார். வீரம் செயலிலேதான் திகழ வேண்டும்; வெறும் ஆடம்பரக்காரர்களும், பேச்சு வீரர்களும் வீரர்களாக மாட்டார் என்பது கருத்து. கூறை-ஆடை; கூறுபடுத்தியது. ‘கருக்கினால் கூறைகொள்வார்’ என்பது பழமொழி. 136. பழியில்லாத செயலே செய்ய வேண்டும் பெரிய சக்கரவாளம் ஆகிய மலை சூழ்ந்த வட்டமாகிய எல்லை யிடத்தே சேர்ந்திருக்கும் மகாமேரு முதலாகிய மலை களுங்கூட, ஒரு காலத்துத் தேய்ந்தாலும் தேயலாம்; வடுப்பட்ட சொற்களோ என்றுமே மறையாது. ஆதலால், தான் கெட்டுப் போவோம் என்று சொல்லப்படும் இக்கட்டான நிலைமை யிலுங்கூடத் தனக்கு ஒரு வடுவும் ஏற்படாத செயல்களையே ஒருவன் செய்து வருதல் வேண்டும். கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர் வடுவல்ல செய்தலே வேண்டும்--நடுவரை முற்றுநீ ராழி வரையகத் தீண்டிய கற்றேயும் தேயாது சொல். பழி மறையாது; வழி வழி தொடர்ந்து, தன் குடிக்கும் வந்து கொண்டேயிருக்கும். அதனால் அத்தகைய பழிவரும் செயல் களைச் செய்வதினும் ஒருவன் சாதலே நல்லது. ‘கற்றேயும் தேயாது சொல்’ என்பது பழமொழி. 137. வலிமை அறிந்து எழுதல் வேறு ஓர் ஒப்புமையுமில்லாமல், வில்லொடு மட்டுமே சரியாக ஒப்புமையுடையதாக விளங்கும் புருவத்தை உடை யவளே! போர் இல்லாத சமயத்திலே வீரமாகப் பேசுபவர்கள் என்றாலும், அவர்கள் பேச்சை நம்பி, அவர்கள் பகைவருக்கு ஏற்ற வலிமையுடையவராக இல்லாவிட்டால், அவரைப் ‘பகைவர் மேல் சென்று போரிடுக’ என விடுத்தல் அப்படி விடுத்த மன்ன னுக்கே முடிவில் துன்பந்தருவதாகும். அப்படிச் செய்வது, கல்லு டன் தன் கையைத் தானே மோதிக் கொள்வது போன்றதாகும். அமர்நின்ற போழ்தின்கண் ஆற்றுவா ரேனும் நிகரின்றி மேல் விடுதல் ஏதம்--நிகரின்றி வில்லொடு நேரொத்த புருவத்தாய்! அஃதன் கல்லொடு கையெறியு மாறு. எதிர்த்த வலியற்றாரைப் பகைவர் அழிப்பதுடன் ஏவிய மன்னனையும் அழித்து விடுவார்கள் என்பது கருத்து. ‘கல்லொடு கையெறியுமாறு’ என்பது பழமொழி. கல்லைக் கையில் அடித்தால் கைதான் நோவு கொள்ளும் என்பது தெரிந்ததே. 138. நம்மால் உயர்த்தப்பட்டவர் மென்மையானதும், மேன்மையான மாலை தரித்ததுமான மூங்கில் போன்ற தோள்களை உடையவளே! கன்னத்திலே அடக்கிக் கொண்ட நீரைக் குடிக்கவும் செய்யலாம்: அல்லது துப்பிவிடவும் செய்யலாம். அது போலவே, தம்மிடம் ஏவல் செய்பவரை வலிமையுடையவராகச் செய்தவர்கள் அவர்களை அழித்தாலும் அழிக்கலாம். உயர்த்தினாலும் உயர்த்தலாம். அது அவர்களாலே முடியும். இதற்கு,மெல்ல ஆராய்கின்ற ஓர் அறிவுத் திறமை எதுவுமே வேண்டுவதில்லை. வழிபட்டவரை வலியராச் செய்தார் அழிப்பினும ஆக்கினும் ஆகும்--விழுத்தக்க பையமர் மாலைப் பணைத்தோளாய்! பாத்தறிவென் மெல்லக் கவுட்கொண்ட நீர்? தம்மால் உயர்த்தப்பட்டவரானாலும், அவர் தமக்கு மாறுபட்ட விடத்து ஆராயாமல் அழித்து விடுவதே அரசநெறி என்பது கருத்து. ‘கவுட்கொண்ட நீர்’ என்பது பழமொழி. 139. குடியைக் கண்டதும் மகிழ்வான் தம்முடன் ஒத்த தகுதியற்ற பகைவரைத் தாமே எதிர்த்து அழிக்க முடியாதவராயிருக்கலாம். அத்தகையவரும், அவர்க ளோடு பகைகொண்ட பிறர் சொல்லும் இகழ்ச்சியான சொற் களைக் கேட்டு மகிழ்ச்சி அடைவார்கள். அது போலவே, உண வாக நிரம்பி உதவும் ஒரு தகுதி இல்லை என்றாலும், கள்ளினைக் கண்டவுடனேயே குடிகாரனின் உள்ளமும் களிப்படையும். மாணாப் பகைவரை மாறொறுக் கல்லாதார் பேணா துரைக்கும் உரைகேட்டு உவந்ததுபோல் ஊணார்ந்து உதவுவதொன்று இல்லெனினும் கள்ளினைக் காணாக் களிக்கும் களி. குடிகாரன், கள் தனக்கு உணவாகாது என்பது அறிந்தும், கள்ளைக் கண்டதும் தன் அறியாமை காரணமாக அதை உண்டு மகிழ்வான். ‘கள்ளினைக் காணாக் களிக்கும் களி’ என்பது பழமொழி. 140. கள்ளும் சோம்பேறித்தனமும் மாட்சி மைப்பட்ட அணிகலன்களை அணிந்தவளே! கள்ளைக் குடித்துவிட்டுக், குடித்துவிட்டோமென்று வருந்து பவர்கள் யாருமே இல்லை. கொடிகட்டிய வலிமையான தேர் களையுடைய மன்னர்களால் பகுதிப்பணம் கொள்ளப்பட்டு உயிர் வாழ்கின்ற சிற்றரசர்கள், அந்த மன்னர்கள் ஒரு காரியத் தை மனத்திற் கொண்டு ஏவிய செயலைத் தம் சோர்வு காரண மாகச் செய்யாது விடுதல் என்ன பயனைத் தரும்? அவர்க்கு அழிவையே தரும். கொடித்திண்டேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார் எடுத்துமேற் கொண்டவ ரேய வினையை மடித்தொழிதல் என்னுண்டாம்? மாணிழாய்! கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல். குடிகாரன் குடித்ததற்கு வருந்தாமலிருக்கலாம்; அதன் விளைவு களுக்குத் தப்ப முடியாது. அடிமையரசர்களும் தம் சோம்பேறித்தனத்திற்கு வருந்தாமலிருக்கலாம். ஆனால், அதனால் வரும் விளைவுகளுக்குத் தப்ப முடியாது. ‘கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல்’ என்பது பழமொழி. 141. ஆபத்தில் உதவாத நண்பர்கள் பாம்புக் கொடியை உடையவன் துரியோதனன். அவனுக்கு நண்பன் வெண்மேனியினனான பலராமன். பாரதப் போரி னுள், அவன், தன் நண்பனுக்கு உதவியாக எதிரிகளைத் தாக்கிப் போரிலே ஈடுபடவில்லை. அவனைப் போலத் தம் நண்பர்களுக்கு ஆபத் துக் காலத்தில் உதவாமல், அவரை அழிய விட்டு விட்டுப் பின், அவர் ஆன்மா சாந்தியடைக என்று பெருந்தவம் செய்பவர். உண்மை நண்பர்கள் ஆக மாட்டார்கள். அவர் செயல், திருவிழாப் பார்க்க வந்த குழந்தையை விழா முடியும்வரை தோளிலேற்றிக் காட்டாதிருந்த ஒரு தகப்பன், விழா முடிந்தபிறகு தோளில் ஏற்றிச் சுமந்து செல்வதைப் போன்றதாகும். பாப்புக் கொடியாற்குப் பான்மேனி யான்போலத் தாக்கி யமருள் தலைப்பெய்யார்--போக்கி வழியராய் நட்டார்க்கு மாதவம் செய்வாரே கழிவிழாத் தோளேற்று வார். ஆபத்தில் உதவாத நண்பர் நண்பராகார். ‘கழிவிழாத் தோளேற்று வார்’ என்பது பழமொழி. 142. பெரியவரைத் தாழ்த்த நினைத்தல் மிகவும் சிறிதாகவும் எளிமையுடையதாகவுமே தோன்றினாலும், குளிர்ச்சியான மலையின் மேலுள்ள கல்லினைக் கிள்ளிக், கைவலியில்லாமல் தப்பியவர் எவருமே இலர். ஆதலால், முதன்மையாய் மிகுந்த பொருள் உடையவராகி, மிகவும் மதிக்கப் பட்ட செல்வாக்கும் உள்ளவர்களை, ‘வறுமை யாக்கிவிட முயல் வோம்’ என்று ஒருவன் சொல்லுதல், அவனுக்கே கேடாக வந்து முடியும். மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும் நற்கெளி தாகிவிடினும், நளிர்வரைமேல் கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல். பிறருடைய செல்வமும், செல்வாக்கும் கண்டு, பொறாமை யினாலே ‘அவரை அழிப்பேன்’ எனக் கறுவுதல் தவறு. அது அப்படி நினைத்தவர்க்கே தீங்காக முடியும். ‘கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்’ என்பது பழமொழி. 143. பாடங் கேட்டுப் படித்தல் ‘உண்ணுதற்கு இனிமையாயிருக்கும் இனிதான தண்ணீர் இந்தக் கிணற்றைத் தவிர வேறு எங்குமே கிடையாது’ என்று கருதும் கிணற்றி னுள்ளேயிருக்கும் தவளை; அதனைப் போல, அறிவுடையோர் என்றும் ஆகமாட்டார்கள். நூல்களை முழுவ துமாகப் பகல் எல்லாம் வெறுப்பில்லாமல் இனிதாகப் படித்து அறிதலைக் காட்டினும், அவற்றைத் தக்க ஆசிரியன் மாரிடம் முறையோடு பாடங்கேட்டு அறிந்து கொள்ளுதலே நன்மை யானதாகும். உணற்கினிய இன்னீர் பிறிதுழி இல்லென்னும் கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார்--கணக்கினை முற்றப் பகலும் முனியா தினிதோதிக் கற்றலின் கேட்டலே நன்று. தானே கற்று வரும்போது எழும் ஐயங்கள் தீர்வின்றிப் போகும்; ஆகவே பொருள் அறிந்து கற்றுப் பயனடைய வேண்டு மானால், ஆசிரியன் ஒருவனை அண்டிக் கேட்டுத் தெளிவதே சிறப்பு. ‘கற்றலின் கேட்டலே நன்று’ என்பது பழமொழி. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பதும் இதுவே. 144. முட்டாள் கற்றும் பயனில்லை மலைச்சாரல்களிலே, பாறைகளின் மேல் வீழ்கின்ற அருவி கள் பலவாக விளங்கும் நல்ல நாட்டை யுடையவனே! சொல்லப் போகும் சொற்களைக் கவனத்திலே கொண்டு, துடியிலே பண் உண்டாக்கலாம். அதுபோல, நல்ல அறிவு இயல்பாக இல்லாத வர்களைக் கல்வி போதிப்பதால் அறிவுடையவராக நிலை பெறுத்தவே முடியாது. ஆகையினாலே, நூல்களைக் கற்பதனால் வரும் அறிவு மட்டுமே உலகத்தில் முற்றிலும் செல்லுபடியா வதில்லை என்று அறிவாயாக. நற்கறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவபோல் வெற்பறைமேல் தாழும் இலங்கருவி நன்னாட! கற்றறிவு போகாக் கடை. தட்டுவார் இல்வழித் துடியினின்றும் பண் எழுவதில்லை. அதுபோல, அறிவுறுத்துவார் இல்லாதபோது கடையரின் அறிவும் செயற்படாது. அவர் கற்றும் பயனில்லை. அவர்க்குக் கற்பிப்பது வீண் என்பது கருத்து. ‘கற்றறிவு போகாக் கடை’ என்பது பழமொழி. 145. கல்வியை நாளும் கற்க தம்மினும் கல்வியுடையார் முன்னர்ச் சென்று சொல்லும் பொழுதி லெல்லாம் சொல்வதிலே தளர்ச்சியானது தோன்றலாம். அதனால், சோர்வு அடையவே கூடாது. புதிதாக ஒன்றைக் கற்குந்தொறும், தான் கல்லாதவன் என்று கருதி, அதனைக் கற்கும், வழியினை நினைத்து இரங்கி மனம் ஒருமைப்பட அது ஒன்றையே சிந்தித்து, வருந்தியாயினும் அந்த ஒன்றை அறிய முற்பட வேண்டும். இப்படியாவதனால், புதிதாக ஒவ்வொன் றையும் கற்குந்தொறும் தான் அதனை முன்னர் கல்லாத தன்மையே தோன்றும் என்க. சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக் கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி உற்றொன்று சிந்தித்து உழன்றொன்று அறியுமேல் கற்றொறுந்தான் கல்லாத வாறு. ‘கல்வி கரையில’ என்பதை உணர்ந்து, செருக்கின்றி நாளும் கற்றலிலே மனஞ் செலுத்த வேண்டும் என்பது கருத்து ‘கற்றொ றுந்தான் கல்லாத வாறு’ என்பது பழமொழி. ‘அறிதோறு அறியாமை கண்டற்றால்’ என்பதும் இது. 146. படியாதவனின் அறிவாலும் பயனில்லை நற்குணம் உடையவளே! முதலிலே கேள்வி என ஒன்று எழாதிருந்தால் அதற்கான ஒரு விடையும் எழுதுவதில்லை. முதலில் உள்ளத்திலே ஒரு கனவு தோன்றாமற் போனால் எந்தவொரு செயலும் பின் நிகழ்வதுமில்லை. அதனால், படித்தவர்கள் முன்னிலையிலே விளக்கிச் சொல்லும்போது சொற்சோர்வு பட்டுப் போவதனால், நூற்களைக் கல்லாத ஒருவன் தன் இயற்கையறிவால் கண்ட சிறந்த நுட்பங்களும் நுட்பங்களாக மதிக்கப் படுவதுமில்லை. கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன் சொல்லுங்கால் சோர்வு படுதலால்--நல்லாய்! வினாமுந் துறாத உரையில்லை; இல்லை கனாமுந் துறாத வினை. இயற்கையறிவு இருந்தாலும் கல்வியறிவு இருந்தாலன்றி அது சிறப்பதில்லை என்பது கருத்து. ‘வினாமுந் துறாத உரையில்லை’ ‘கனா முந்துறாத வினையில்லை’ இவை இரண்டும் பழமொழிகள். 147. கீழோர்பால் பொருளை ஒப்பித்தல் தனக்கு ஒரு போக்கிடம் இல்லாத கடலானது, நீர்த் துளிகளைத் தூவிக் கொண்டிருக்கும். அலைகள் கரையைப் பொருதுகின்ற கழிகளையுடைய குளிர்ந்த கடற்கரைப் பகுதி களுக்கு உரியவனே! ஒருவர், தாம் வருந்தி முயன்று தேடிய சிறந்த பொருளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கீழ் மக்க ளிடத்தே ஒப்புவித்தல், காக்கையைக் காவலாக வைத்த சோற்றைப் போல, விரைவிலே இல்லாமல் அழிந்து போய் விடும். ஊக்கிய உழந்தொருவர் ஈட்டிய ஒண்பொருளை நோக்குமின் என்றிகழ்ந்து நொவ்வியார் கைவிடுதல் போக்கில்நீர் தூஉம் பொருகழித் தண்சேர்ப்ப! காக்கையைக் காப்பிட்ட சோறு. காக்கை தன் இனத்தையும் அழைத்து அந்தச் சோற்றை யெல்லாம் உண்டுவிடுவது போல, அத் தீயவர்களும் தம் இனத்துடன் கூடி அதனைப் போக்கடித்து விடுவார்கள். ‘காக்கையைக் காப்பிட்ட சோறு’ என்பது பழமொழி. 148. தமக்குத் தாமே தண்டித்தல் சான்றோர்கள், பிறர் காணமாட்டார்கள் என்று இருந் தாலுங்கூட, மாட்சியற்ற ஒரு செயலைச் செய்யவேமாட்டார் கள். ‘எனக்குத் தகுதி அல்லவா?’ என்ற ஒன்றையே கருதினான்; தனக்குத்தானே சான்றாகவும் ஆயினான்; தன் பிழையை நினைத் துத் தன் கையையே குறைத்துக் கொண்டான்; பாண்டியனான பொற்கைப் பாண்டியனும். இதுவே, சான்றோர் இயல்பு ஆகும். எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித் தனக்குக் கரியாவான் தானாய்த்--தவற்றை நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும், காணார் எனச்செய்யார் மாணா வினை. கீரந்தை மனைவிக்காகக் கதவைத் தட்டிய பாண்டியன் தான் செய்தது நன்மை கருதியானாலும், தகுதியன்று என்று தன்கையை குறைத்துப் பின் பொற்கையன் ஆயினான். இதுவே சான்றோர் பண்பு. ‘காணார் எனச்செய்யார் மாணா வினை’ என்பது பழமொழி. 149. சூதினால் சாவும் வரும் பாரதக் கதையினுள்ளும், தம் தாயப் பொருளினையே பந்தயப் பொருளாகக் கொண்டு, நூற்றுவரும் பாண்டவரோடு சூதுப்போர் செய்தனர். அது காரணமாக, அவர்க்குப் பகைவராகிப் போர்க்களத்தின் இடையே உயிரும் இழந்தனர். அதனால், படித்தவர் எவரும் விருப்பமுடன் சூதாடவே மாட்டார்கள். பாரதத் துள்ளும் பணையம்தம் தாயமா ஈரைம் பதின்மரும் போரெதிர்ந் தைவரோடு ஏதிலராகி இடைவிண்டார் ஆதலால் காதலோ டாடார் கவறு. பாரதக்கதை நாடறிந்த வொன்று, அதனைக் காட்டிச் சூதின் விளைவை விளக்குவது செய்யுள். ‘காதலோ டாடார் கவறு’ என்பது பழமொழி. 150. காப்பாரும் பார்ப்பாரும் வெயிலின்கண் காயவைத்த வற்றலைப் பார்த்துக் கொண்டிருப்பவர் இமைகொட்டும் அளவு நேரத்தினுள்ளும், தம் பார்வையிலே பட்டதென்றால் அதனைப் பறவைகள் திருடிச் சென்றுவிடும். அதுபோலப் போற்றிப் புறந்தந்து சேர்த்துவைத்த சிறந்த பொருள்களுக்கும், அதனைக் காப்பவரைவிடத், திருடப் பார்ப்பவர்களே அதிகமாகும். நோக்கி யிருந்தார் இமைக்கும் அளவின்கண் நோக்கப் படினும் உணங்கலைப் புட்கவரும் போற்றிப் புறந்தந் தகப்பட்ட ஒண்பொருட்கும் காப்பாரிற் பார்ப்பார் மிகும். பொருளை, அதனால் பூட்டிவைக்காது நல்ல காரியங்களிலே செலவிட்டு வாழவேண்டும் என்பது கருத்து. ‘காப்பாரிற் பார்ப்பார் மிகும்’ என்பது பழமொழி. பார்ப்பார் - தாம் கைக்கொள்ளப் பார்ப்பவர். 151. நல்லபடி நடவாத நண்பர் மான்போன்ற மருட்சியான கண்களை உடையவளே! உள்ளத்தாலே ஒருவரைச் சிநேகித்து, நண்பர் என்று நாம் நடந்துவருங்காலத்து, அவர் தம்முடைய உள்ளத்திலே நாணம் என்பது கொஞ்சமேனும் இல்லாமல், நல்ல முறையிலே நம்மிடத்து நடவாமலிருந்தார் என்றால், அதனால் என்ன? காட்டினிடத்தே எரித்த (ஒளி வீசிய) நிலவைப்போன்று பயனற்ற அந்த நட்புக்காகச் சான்றோர் மறந்தும் வருத்தப்படவே மாட்டார்கள். அதனை உடனேயே கைவிட்டுவிடுவார்கள். தாமகத்தால் நட்டுத் தமரென்று ஒழுகியக்கால் நாணகத்துத் தாமின்றி நன்றொழுகார் ஆயினென்? மான்மானும் கண்ணாய்! மறந்தும் பரியலரால் கானகத்து உக்க நிலா. தான் அன்பு காட்டியும் அதனை உணரவில்லை என்றால், அது காட்டிடத்தே பெய்த நிலவுபோலப் பயன் அற்றதாகும் என்பது கருத்து, ‘கானகத்து உக்க நிலா’ என்பது பழமொழி. 152, பொருளால் தருமம் செய்க அடுத்துத் தொடர்ந்து வருகின்ற பிறவிகளுக்கு உதவும் நல்வினைப் பயனாக விளங்கும்படி, ஒரு தர்மத்தையும் செய்யாத செல்வர்கள் சிலர். அவர்கள், தம் பொருளையே தொடர்ந்து செல்லும் பற்றின் காரணமாக, அதனைத் தொகுத்து வைத்துவிட்டு அதன் பயனை அநுபவியாமல் சாவார்கள். போர்க்களத்திலே பகைவரோடு போர் புரியும் பொழுது, பகைவரின் ஆயுதத்தால் தாக்குண்டு தம் குடர் சரிய, அதனை உள்ளே மீண்டும் எடுத்து இட்டு மேலே கட்டுக்கட்டி வைத்துத், தாம் பிழைத்து விட்டதாக மகிழ்பவர் போன்றவர் அவர்கள். படரும் பிறப்பிற்கொன் றீயார் பொருளைத் தொடருந்தம் பற்றினால் வைத்திறப்பாரே, அடரும் பொழுதின்கண் இட்டுக், குடரொழிய மீவேலி போக்கு பவர். குடர் சரிந்தபின் அவன் வாழ்வும் விரைவிலே முடிந்து போகும். அதனை அறியாமல் அவன் மகிழ்வது போன்றதே பொருளை வழங்காது வைத்துச் சாகின்றவனின் அற்பமான மகிழ்வும், மீவேலி - மேற்கட்டு ‘குடரொலிய மீவேலி போக்குபவர்’ என்பது பழமொழி. 153. வேரொடு அறுத்துவிட வேண்டும் மார்பிலே முத்துவடங்கள் விளங்கும் மன்னனே! எல்லையற்ற நற்குணங்களுடைய பெரியவனாக விளங்கியவன், பாண்டவருள் மூத்தோனாகிய தருமபுத்திரன். அவனும், தன் பகையை ஒழித்துக் குடியை நிலைபெறுத்தும் பொருட்டுப் பொய் கூறினான். மிகுதியான நரகத்தை அடைவது தெரிந்தும், தன் குடிக்காகப் பொய்கூறி அந்த நரகத்திற்கும் சென்றான். ஆதலால், தம்முடைய குடி கெடுமாறு பகைவர் எதிர்த்து வந்தால் அவருக்கு இரங்கமாட்டார் அறிவுடையோர்; தம் குடியின் வாழ்வு நோக்கி அப்பகையை என்ன செய்தும் அடியோடு அழித்து விடவே முயல்வர். நிரம்ப நிரையத்தைக் கண்டந் நிரயம் வரம்பில் பெரியானும் புக்கான் -- இரங்கார் கொடியார மார்ப! குடிகெட வந்தால் அடிகெட மன்றி விடல். தருமன் பாரதப் போரில், ‘அசுவத்தாம ஹத’ என்று சொன்னதாக வரும் சம்பவம் இங்குக் காட்டப்பெற்றது. பகையை யாது செய்தும் அழிப்பது ராஜ தருமம் என்பது கருத்து. ‘குடிகெட வந்தால் அடிகெட மன்றி விடல்’ என்பது பழ மொழி. 154. தீயவனுக்கு வழங்க வேண்டாம் அடக்கம் இல்லாத உள்ளத்தை உடையவன் ஆகிய ஒருவன், அவனுடைய நடத்தையிலும் தூய்மையுடையவன் அல்லாத வனாக இருப்பான். உடைமையாகிய பெரிய செல்வத்தால் வரும் உயர்ந்த சிறப்புக்களை எல்லாம் அத்தகைய ஒருவன்பால் வைப்பது தகாது. அது குரங்கின் கையிலே கொள்ளியைக் கொடுத்து அனுப்புவது போன்ற அறியாமையான செயலேயாகும். உடைப்பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை அடக்கமில் உள்ளத்தன் ஆகி -- நடக்கையின் ஒள்ளியன் அல்லானமேல் வைத்தல், குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல். குரங்கின் கையிலே கொள்ளியைக் கொடுத்து அனுப்பினால், அது ஊர் முழுவதையும் சுட்டுப் பொசுக்கி விடும். அதுபோலத் தீயவனுக்கு அரசன் பொருள்களை வழங்கினால், பலர் அதனால் துன்பம் அடைவார்கள். ‘குரங்கின் கைக் கொள்ளி கொடுத்து விடல்’ என்பது பழமொழி. 155. நீசருள் பண்புடையார் தோன்றார் மிகவும் மரங்கள் செறிந்திருக்கிற சோலைகளையுடைய மலை நாடனே! குரங்கு இனங்களினுள்ளே எந்தக் காலத்திலும் அழகான முகத்தை உடையது இருந்ததே இல்லை. அது போலவே, வழிவழியாகத் தீய குணங்கள் பெருக வந்து கொண்டிருக்கும் கீழ்த்தரமான குடிகளுக்குள்ளே, விரிவாக ஒருவர் ஆராய்ந்த காலத்தும், பண்புடையவராக எவருமே காணப்படுவ தில்லை. நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம் பரந்தொருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார் மரம்பயில சோலை மலைநாட! என்றும் குரங்கினுள் நன்முகத்த தில். பண்புடைமை, சிறந்த உயர்குடிப் பிறத்தலாலேயே அமைவது கீழ்மைக் குணமுடைய குடியினரிலே பண்புடைமை உடையவரைக் காணவே முடியாது. ‘குரங்கினுள் நன்முகத்த இல்’ என்பது பழமொழி. 156. இரப்பார்க்கு உதவாத பொருள் கண் குருடானால், அவர் தூங்கினாலும் விழித்திருந் தாலும் பயன் ஒன்று தான். அவர் எதையும் காணமாட்டார். அதுபோலவே தம் நாவினாலே ஒரு பொருளைத் தருக என்று கேட்டவர் களது குறையினைக் கேட்டு அறிந்தும், தம்முடைய செல்வத் தினை மாட்சிமைப்படப் பூட்டிக் காப்பவர்கள், பிற தீவினை களுக்கு அஞ்சினாலென்ன, அஞ்சாவிட்டால்தான் என்ன? அந்த ஒரு தீவினையே அவர்களுக்குக் கேடாக முடிந்துவிடும்! நாவின் இரந்தார் குறையறிந்து தாமுடைய மாவினை மாணப் பொதிகிற்பார் -- தீவினை அஞ்சிலென் அஞ்சா விடிலென், குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்கால் என்? ஈயாதவனிடம் பொருளிருப்பது குருடனருகே அழகிய பொருள்கள் இருப்பதுபோலப் பயனற்றது என்பது கருத்து. ‘குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்கால் என்?’ என்பது பழமொழி. 157. பணக்காரனுக்கு விருந்து குருவியானது தொடையை அறுத்த அளவிலே, குடர் சரிந்து விழுந்து விடும் என்பது நடைமுறையாகும். அதனால், மிகவும் பெரிய செல்வம் உடையவர்கள் வறுமையாளர் களிடத்திலே செல்லும் விருந்தினர்களாகப் போகவேண்டாம். தம் தகுதிக்கு மீறி அவர்கள் இவர்களுக்கு விருந்து செய்வதற்குப் படுகின்ற வருத்தம் மிகவும் அதிகமாயிருக்கும். இருந்தாலும், செல்பவர் நிறைவு அடையவும் முடியாது. நல்கூர்ந் தவர்க்கு நனிபெரியர் ஆயினார் செல் விருந்தாகிச் செலவேண்டா -- ஒல்வது இறந்தவர் செய்யும் வருத்தம், குருவி குறங்கறுப்பச் சோரும் குடர். வறியவர், செல்வர் விருந்தாக வந்தபோது என்னதான் கஷ்டப்பட்டு விருந்து செய்தாலும், அதனால் செல்வர்கள் திருப்தி அடைந்து மனநிறைவு கொள்ளப்போவதில்லை. ஆகவே, அது செய்ய வேண்டாம் என்பது கருத்து. ‘குருவி குறங்கறுப்பச் சோரும் குடர்’ என்பது பழமொழி. 158. படியாமலே வரும் அறிவு கரிகாற் பெருவளத்தானிடம் இரு முதியவர்கள் ஒரு வழக்கினைத் தீர்த்துக் கொள்ள வந்தனர். அவனுடைய இளமை யைக் கண்டதும், ‘இவன் இளமைப் பருவத்தான்; சொல்லும் வழக்கிலே முடிவினைக் காண முடியாதவன்’ என்று கருதினர். அதனையறிந்த அவன், நரைமயிரை முடித்தவனாகத் தன்னை முதியவன் போல ஒப்பனை செய்து கொண்டு வந்தமர்ந்து, அப்படிச் சொன்னவர்கள் மகிழுமாறு, அவர்கள் வாக்குமூலங் களைக் கேட்டு நியாயம் வழங்கினான். இதனால், குலத்துக்கு உரிய அறிவுச் செழுமை கற்று அறியாமலேயே, இயல்பாக ஒருவனுக்கு வந்து படியும் என்று அறிதல் வேண்டும். உரைமுடிவு காணான் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப -- நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன்; குலவிச்சை கல்லாமற் பாகம் படும். ‘குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ என்பது பழமொழி. விச்சை - கல்வி; வித்தை. 159. திருடரின் காணிக்கை பல நாட்களும் அரசனுக்குரிய தொழில்களைச் செய்து, அவனுடைய செல்வத்தைக் களவுசெய்து உண்டு களித்தவர்கள், அரசன் தமக்குத் துன்பஞ் செய்யாமல் இருக்க வேண்டும் என்று விரும்பியவர்களாக, அவனுக்குப் பொன் அணிகளைக் காணிக் கையாகக் கொண்டு கொடுத்துச் சென்றடைதல், குவளை மலரை அதன் தண்டிலே உரித்த நாரினாலேயே சுட்டுவதைப் போன்ற தாகும். பன்னாள் தொழில்செய்து உடைய கவர்ந்துண்டார் இன்னாமை செய்யாமை வேண்டி இறைவர்க்குப் பொன்யாத்துக் கொண்டு புகுதல், குவளையைத் தன்னாரால் யாத்து விடல். அவனிடம் திருடியவற்றுள் சிறிதையே அவனுக்குக் காணிக்கையாகத் தந்து, அவன் அன்பைப்பெற முயல்வதனால், இப்படிக் கூறினார். ‘குவளையைத் தன்னாரால் யாத்து விடல்’ என்பது பழமொழி. 160. தீவினையின் பயன் எத்துணையோ பல்வகையான பிறப்புக்களிலும் தாம் தேடித் தொகுத்துக் கொண்ட வினைப்பயன்கள், தம்மேல் வந்து இப்பிறப்பிலே, பொருத்துதலுக்கு அஞ்சி, எவ்வளவு சிறிய தீவி னையும் தமக்குத் துன்பம் விளைவித்துக் கழிந்து போகும்போது அதனைப் பொறுக்க முடியாமற் போவதைக் காண்கின்றோம். அதுதான், ஒரு குழியினிடத்திலே தோண்டிய புழுதியானது மீண்டும் அதனுட் கொள்ளாது அதிகமாகவே இருப்பதைப் போன்றதாகும். எனைப்பல் பிறப்பினும் ஈண்டித்தாம் கொண்ட வினைப்பயன் மெய்யுறுதல் அஞ்சி -- எனைத்தும் கழிப்புழி ஆற்றாமை காண்டும் அதுவே குழிப்பூமி ஆற்றா குழிக்கு. செய்த தீவினையைவிட, அதன் பயனாக அநுபவிக்கும் தீவினைப் பயன் மிக அதிகமாயிருக்கும் என்பது கருத்து. தீவினை செய்தற்கு அஞ்ச வேண்டும் என்பது முடிவு. ‘குழிப்பூமி ஆற்றா குழிக்கு’ என்பது பழமொழி. 161. அவையை ஊடறுக்க எண்ணக் கூடாது காற்றினாலே மோதி எறியப்படும் அலைகள் கரைமேற் சென்று உலவிக் கொண்டிருக்கும் கடற்கரைகளுக்கு உரிய தலைவனே! சூரியனையே ஊடறுத்துச் சென்றாலும் செல்ல லாம். அறிஞர்கள் கூடியிருக்கிற அவையினை ஊடறுத்துப் போகவே கூடாது. அப்படிப் போவது அறிவுடைமையும் அன்று: பிறந்த குடிக்கு அழகிய செயலும் அன்று: அறிவதாகிய அறநெறி யின்பாற் பட்டதும் அன்று. கீழ்மக்கள் என்று சொல்லப்படு கின்ற பழிச்சொல்லையே அது கொண்டு தரும். அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்று சிறியர் எனப்பாடும் செய்யும் -- எறிதிரை சென்றுலாம் சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த என்றூடு அறுப்பினும் மன்று. சான்றோர் அவையிலே அவர்களை மறுத்துப் பேசுவது கூடாது; அது அவமானமே தரும் என்பது கருத்து, ‘குழுவத் தார் மேயிருந்த என்றூடு அறுப்பினும் மன்று’ என்பது பழ மொழி. 162. பணக்காரரிடம் பலர் வருவார்கள் எருமையின்மேலே நாரையானது இருந்து உறங்கி வழிந்து கொண்டிருக்கும் நீர்வளமுடைய ஊரனே! குளத்தினைத் தோண்டியவர் எவரும், அதன்பால் இருப்பதற்காகத் தவளை களை அழைத்துவரத் தேடிச் செல்வது இல்லை. அவை தாமே வந்து சேர்ந்து விடும். அதுபோலவே, பெறுவதற்கு அருமையுடை யதான பொருளை உடையவர்களும், தங்களிடம் காரியம் இருக்கின்றவர்களைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை; தாமாகவே பலர் அவரிடம் வந்து சேர்ந்து விடுவார்கள். அருமை யுடைய பொருளுடையார் தங்கண் கருமம் உடையார் நாடார் -- எருமைமேல் நாரை துயில்வதியும் ஊர! குளந்தொட்டுத் தேரை வழிச்சென்றார் இல். ‘பணக்காரர் பின் பத்துப் பேர்’ என்ற பழமொழியையும் இதனுடன் கருதுக. ‘குளந்தொட்டுத் தேரை வழிச் சென்றார் இல்’ என்பது பழமொழி. 163. கீழோர் தாமே அழிவர் முத்துமாலைகள் விளங்குகின்ற மார்பினை உடையவனே குற்றமற நல்லொழுக்கத்தைப் பேணி நடந்துவராத கீழ்மக்கள் செய்த பிழைகளை, மேன்மக்கள், தம்முடைய உள்ளத்திலே பெரிதாகக்கொண்டு, அவருக்கு எதிராக எதனையும் செய்ய முயலுதல் வேண்டாம். அப்படி முயல்வது, சிறிய நரியை அழிப்பது கருதி நல்ல ‘நாராயணம்’ என்னும் அம்பினைத் தொடுக்க நினைப்பது போன்றதாகும். காழார மார்பரீ கசடறக் கைகாவாக் கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர் உள்ளத்துக் கொண்டுநேர்ந்து ஊக்கல், குறுநரிக்கு நல்லநா ராயங் கொளல். ‘கீழோரை அழிக்கச் சான்றோர் முயலவேண்டாம்; அவர் தாமே அழிந்து விடுவர் என்பது கருத்து. நாராயம் - நாராயண அத்திரம். ‘குறுநரிக்கு நல்ல நாராயம் கொளல்’ என்பது பழமொழி. 164. வேலையை விட்டு நீக்குதல் ஒரு வேலையைச் செய்வதற்குத் தகுதி உடையவர் என்று ஒருவரை நியமித்துவிட்டு, அவர் பேரில் சந்தேகித்து, அவரிடம் எவ்விதமான விளக்கமும் கேளாமலேயே அவரை அந்தப் பொறுப்பினின்றும் நீக்கி விடுதல், மிகவும் கீழான பண்பிற்குப் பொருந்தியதொரு செயலாகும். ‘அது’ சிறு பிள்ளைகள் சோலை நட்டு விளையாடுதலைப் போன்றது எனலாம். உறுமக்க ளாக ஒருவரை நாட்டிப் பெறுமாற்றம் இன்றிப் பெயர்த்தே யொழிதல் சிறுமைக்கு அமைந்ததோர் செய்கை; அதுவே, குறுமக்கள் காவு நடல். குழந்தைகள் சோலை நடுவதாகச் சொல்லிச் செடிகளைப் பெயர்த்துப் பெயர்த்து நட்டு விளையாடுவார்கள். எதுவும் ஓரிடத்திலே நிலைத்து இருக்கவிடுவது அவர்கள் இயல்பன்று. அதுபோன்ற அறியாமைச் செயல் என்பது கருத்து. ‘குறுமக்கள் காவு நடல்’ என்பது பழமொழி. 165. போகூழானால் முயற்சியும் பயன் தராது பூக்களிடையே புகுந்து வண்டுகள் மொய்த்துக் கொண்டு ஆரவாரிக்கும் ஊரனே! எங்கும் வெற்றி கொண்டவனாக வந்து கொண்டிருக்கும் ஒரு பேரரசன் தன் நாட்டினுள் புகுந்த விடத்து, அதனை ஆளும் குறுநில மன்னன் பணிந்து போவ தல்லது எதிர்த்துச் செய்யக்கூடியது யாதுமில்லை. அது போலவே, பொருளை நிறைவு செய்யும் முயற்சியும் துன்பமே துணை யாகத் தெய்வமானது முடிவுசெய்த காலத்தே. எந்த விதமான பயனையும் செய்வதில்லை. எவ்வம் துணையாய்ப் பொருள்முடிக்கும் தாளாண்மை தெய்வம் முடிப்புழி என்செய்யும்?--மொய்கொண்டு பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! குறும்பியங்கும் கோப்புக் குழிச்செய்வது இல். நல்ல ஊழ்வினை இல்லாது போனால், செல்வம் முயற்சி யாலும் வந்து வாயாது என்பது கருத்து. ‘குறும்பு இயங்கும், கோ புக்குழிச் செய்வது இல்’ என்பது பழமொழி. 166. கொடியவர் மனம் மாறுவதில்லை நாள்தோறும், கையின்கண் இருப்பதாகவே வளர்ந்து வந்தாலும், காடைக்கு மனமெல்லாம் வயற்புறங்களிலேயே ஈடுபட்டிருக்கும், அது போலவே, காட்டின்கண் வாழும் வாழ்க்கை முறைமையினை உடையவர் களான கொடுந் தொழில் செய்யும் மக்களை, நாட்டின்கண்ணே வாழுமாறு வேண்டியன செய்து உதவினாலும், அவர்கள் நல்ல முறையிலே நடக்க மாட்டார்கள். காடுறை வாழ்க்கைக் கருவினை மாக்களை நாடுறைய நல்கினும் நன்கொழுகார்--நாடொறும் கையுள தாகி விடினும், குறும்பூழ்க்குச் செய்யுள தாகு மனம். மக்கள் தொடர்ந்து பழகிவிட்ட வாழ்வுமுறைகளை மாற்றுவது அவ்வளவு எளிதன்று. என்ன செய்தாலும் அவர்களின் இயல்பான குணம் போகாது என்பது கருத்து. ‘குறும்பூழ்க்குச் செய்யுளது ஆகும் மனம்’ என்பது பழமொழி. 167. நம்பிக்கைத் துரோகிகள் உண்மையான வழிகளிலேயே நிலைபெற்று அதனால், அரசனால் மிகவும் மதிப்புடனும் கருதப்பட்டவர்கள்; கை கடந்து நின்று, அந்த அரசன் சினங் கொள்ளும் செயல்களைச் செய்து நடப்பவர்களாகி; வஞ்சனையையும் மேற் கொண்டவர் களாக; அந்த அரசனையே கொன்றார்களானால்; அவர்கள், பனையைத் தன்மேலேயே விழுமாறு வெட்டியவர்கள் போன்ற வர்களாவர். மெய்ம்மையே நின்று மிகநோக்கப் பட்டவர் கைமேலே நின்று கறுப்பன செய்தொழுகிப் பொய்ம்மேலே கொண்டவ் விறைவற்கொன்றார்--குறைப்பர் தம்மேலே வீழப் பனை. அந்த அரசன் அழிய, நம்பிக்கைத் துரோகிகளான அவர்கள் அழிவிற்கும் அதுவே காரணமாகிவிடும் என்பது கருத்து. ‘குறைப்பர் தம் மேலே வீழப் பனை’ என்பது பழமொழி. 168. உயர்ந்தோரின் சிறு குற்றம் அளவுகடந்த தீய செயல்களையே வெகுண்டு பலநாட்கள் செய்து வந்த போதும், கீழ்மக்களிடத்திலே, அவற்றைப் பற்றிய ஒருவிதமான பழியும் தோன்றுவதில்லை. அது அவர் இயல்பு எனச் சான்றோர் ஒதுக்கிவிடுவர். ஆனால், உயர்ந்த நிலையிலே உள்ளவர்களிடத்தே தோன்றிய குற்றமானது ஒன்றாகவே இருந் தாலுங்கூட, அது குன்றின் மேலே இட்டுவைத்த விளக்கைப் போல நெடுந்தொலைவுக்கும் தெரிந்து பழிக்கப் படுவதாக ஆகிவிடும். கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள்செயினும் ஒன்றும் சிறியார்கண் என்றானும்--தோன்றாதாம் ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம் குன்றின்மேல் இட்ட விளக்கு. உயர்ந்தார் - உயர்குடியினரும், உயர் நிலையினரும் ஆம். உயர்ந்தோர் தம்பால் எவ்விதச் சிறு குற்றமும் ஏற்படாதவாறு விழிப்புடன் நடத்தல் வேண்டுமென்பது கருத்து. ‘குன்றின்மேல் இட்ட விளக்கு’ என்பது பழமொழி. 169. நல்ல குடியினர் எவர்? தம்மை அண்டி வந்தவர்களின் துன்பங்கள் முழுவது நீங்கு மாறு தாராளமாகவே உதவிகளைச் செய்தும், எப்போதும் குற்ற மற்றவைகளைச் செய்யாதவர்களாக விளங்குபவர்கள் மிகவும் வளமுடையவர்களாகவே இருந்தாலுங்கூடச் சிறப்புடையவர் ஆக மாட்டார்கள். குற்றம் அறுமாறு மாட்சி உடையதாக விளங்கும் மனம் உடையவர்கள் ஆவதே சிறப்பாகும். அப்படி ஆகாத கூளங்கள் ஒருபோதும் நல்ல குடியினராக ஆகவே மாட்டார்கள். பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து ஆசறு செய்யாராய் ஆற்றப் பெருகினும் மாசற மாண்ட மனமுடையர் ஆகாத கூதறைகள் ஆகார் குடி. தடபுடலாக எவ்வளவு தருமங்கள் செய்தாலும், எவ்வளவு செல்வம் உடையவரானாலும், குற்றமில்லாத நல்லொழுக்கம் இல்லாதவர்களானால், அவர்கள் நல்ல குடும்பத்தினர் ஆக மாட்டார்கள் என்பது கருத்து. ‘கூதறைகள் ஆகார் குடி’ என் பது பழமொழி - கூதறை - கூளம். 170. செயலை வெற்றியுடன் முடித்தல் பருத்த தோள்களை உடையவனான செம்பியனது சீற்றம், பரந்த வானத்தின்கண்ணே அசைந்து சென்று கொண்டிருந்த அசுரர்களின் கோட்டையையும் அழித்தது. அதனால், எந்தக் காரியத்தையும் அது வெற்றியுடன் முடியும் வழியினை ஆராய்ந்து அவ்வாறு முயன்று முடிக்க வேண்டும். கூர்மையான அம்பு அடிபொருந்த இழுத்துச் செலுத்தப்படும் போது, அதனை வந்து பாயாது தடுப்பதற்குரிய பாதுகாவல் எதுவுமே இல்லையாகும். வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில் தூங்கும் எயிலும் தொலைத்தலால்--ஆங்கு முடியும் திறத்தால் முயல்க; தாம், கூரம்பு அடியிழுப்பின் இல்லை அரண்! எதனையும் முடிக்கும் வகையினை ஆராய்ந்து வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்பது கருத்து. செம்பியன் - சோழன்; தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன். ‘கூரம்பு அடியிழுப்பின் இல்லை அரண்’ என்பது பழமொழி. 171. வலியவர் துணையால் வலிமை வரும் அழகுடனே தோன்றுகிற தேமற் புள்ளிகளையும், ஒளி வீசும் ஆபரணங்களையும் உடையவளே! எருதானது வலிய தாயிருந்த தானால் அதனுடைய கொம்பும் கூர்மையானதாகவே இருக்கும். அதனால், போர்த் தன்மை பொருந்திய ஆற்றலுடைய மன்னரைத் துணையாகச் சேர்ந்தவர்கள், மற்றவர்களுக்குப் பயந்து, தாம் மனம் தளர்தலும் உண்டோ? தளர வேண்டியதில்லை. செருக்கெழு மன்னர் திறனுடையார் சேர்ந்தார் ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ? உருத்த சுணங்கின் ஒளியிழாய்! கூரிது எருத்து வலியதன் கொம்பு. எருது வலியதானால், அதனைச் சேர்ந்த கொம்பும் கூர்மையுடையதாகப் பகையை அழிக்கும் ஆற்றலைப் பெறுவது போலத் தாம் வலியற்றவரும் வலியுடைய மன்னரைச் சேர்ந்தால் வலிமையாளர் ஆவர் என்பது கருத்து. ‘கூரிது எருத்து வலியதன் கொம்பு’ என்பது பழமொழி. 172. கொடையும் கூலிவேலையும் வெற்றித் தன்மையுடைய குதிரையைப் போல அலைகள் ஆரவாரத்துடன் பாய்ந்துவருகின்ற, கடலின் குளிர்ச்சியான கரைகளையுடைய தலைவனே! வந்து சேர்கின்ற பயனைப் பற்றியும் கருதாது மிகுதியாகப் பகுத்தறிவு என்பது ஒன்றும் இல்லாமல், புகழ் ஒன்றையே கருத்தாகக் கொண்டு ஈகின்றவர்களின் கொடை யானது பயனற்றதாகும். அது, கூலிக்கு வேலை செய்து உண்ணு வது போல்வதாகும். பயன்நோக்காது ஆற்றவும் பாத்தறிவொன் றின்றி இசைநோக்கி ஈகின்றார் ஈகை--வயமாப்போல் ஆலித்துப் பாயும் அலைகடல் தண்சேர்ப்ப! கூலிக்குச் செய்துண்ணு மாறு. கூலிக்கு வேலை செய்பவன், கூலியைக் கருத்தாகக் கொண்டவனே அல்லாமல், செய்யும் வேலையின் தராதரங் களையோ, அல்லது அதனால் வரும் பயனையோ நினைக்க மாட்டான். அது போன்றதே இவர் கொடையும் என்க. ‘கூலிக்குச் செய்துண்ணுமாறு’ என்பது பழமொழி. 173. நிலையாமை அறிந்து நன்னெறி நாடுக செல்வத்தால் வரும் வளமையும், புகழும், வலிமையும், வனப் பும், இளமையும், குடிப்பிறப்பும் இவை எல்லாம் உள்ளன வாக மதித்து, அதற்கு அஞ்சித் தன் செயலைக் கைவிட்டுப் போகும் தன்மை, கூற்றத்திற்குக் கிடையாது. அதன் பிடியினின்றும் தப்பிப் பிழைத்துப் போனவர்களாக அறியப்படுபவர்கள் ஒருவருமே இலர். வளமையும் தேசும் வலியும் வனப்பும் இளமையும் இற்பிறப்பும் எல்லாம்--உளவாய் மதித்தஞ்சி மாறுமஃ தின்மையால், கூற்றம் குதித்துய்ந்து அறிவாரோ இல். இந்த மதிப்புக்கள் எல்லாம் சாவினை வெல்லும் சக்தி உடையன அன்று. அதனால், நல்ல நெறியிலே சென்று சிறப்பு டையவராக முயல்க என்பது கருத்து. ‘கூற்றம் குதித்து உய்ந்து அறிவாரோ இல்’ என்பது பழமொழி. 174. பெரியார் பகை கூடாது நோன்புகள் பலவற்றையும் மேற்கொண்ட பெருமையினை உடைய வர்களும், கூற்றத்தை அதன்பின்னே நின்று கைகொட்டி வலிய அழைப்ப வர்கள் அல்லர். இந்த உண்மையைப் போற்றாது, சீதையைக் கவர்ந்ததால் கூற்றத்தை வலிய அழைத்துக் கொண்டு, அரக்கனான இராவணனும் போரிலே இறந்து போனான். அதனால், மிகவும் பெரியவர்களுடைய பகைமையை எவருமே விரும்பி மேற்கொள்ளாமலிருப்பார் களாக. ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்க போற்றாது கொண்டரக்கன் போரில் அகப்பட்டான் நோற்ற பெருமை உடையாரும், கூற்றம் புறங்கொம்மை கொட்டினார் இல். “பகைமையை வேண்டிக் கொள்வதுதான் தவறு. அதுவாக நேர்ந்தால், போரிட்டு அறிவது சிறப்பே அன்றி இழிவு ஆகாது” என்பது கருத்து. ‘கூற்றம் புறங்கொம்மை கொட்டினார் இல்’ என்பது பழமொழி. 175. பொறாது பொறுத்தல் செய்யத்தகாத காரியம் ஒன்றைச் செய்தவரை, அவர் தனக்கு மிகவும் வேண்டியவரேயானாலும், அரசன் அதற்கேற்பத் தண்டித்து விடவேண்டும், அப்படியில்லாமல், வெளியே பொறாதவன் போலக் காட்டிக்கொண்டு கடிந்து பேசிவிட்டுப், பின், பொறுத்து மன்னிப்பது தவறாகும். அது மனம் பொறாத செய்கைகளை மேலும் செய்து கொள்ளுதலைப் போல, வேதனை தருவதாகவே முடியும். அதுதான், முதுகின் மேல் எழுந்த கட்டி போலச் சதா துன்பந்தருவதென்று சொல்லப்படும். உறாஅ வகையது செய்தாரை வேந்தன் பொறாஅன் போலப் பொறுத்தால்--பொறா அமை மேன்மேலும் செய்துவிடுதல் அதுவன்றோ கூன்மேல் எழுந்த குரு. ‘அரசன் தனக்கு வேண்டியவர் கருதி நீதி கோணுதல், அவனுக்கு வேதனையாகவே முடியும்’ என்பது கருத்து. ‘கூன் மேல் எழுந்த குரு’ என்பது பழமொழி. கூன் - முதுகு; கூன் விழுந்த முதுகுமாம்; குரு - கட்டி. 176. பெரியார் வருந்தக் கேடு வரும் அடும்பின் கொடிகளும் பூக்களும் நிறைந்து அழகு செய்து கொண்டிருக்கும் கடற்கரைச் சோலைகளுக்கு உரியவனே! நெடுங்காலமாகவே தம்மோடு தொடர்பு கொண்டு வந்தவர்கள், தீய தன்மையிலே இருப்பக் கண்டு, பெரியோர்கள் தம் உள்ளம் நடுக்கமுற்றுப் பெரிதும் வருந்துவார்கள். அவர்கள் வருந்தியதும் கொடுஞ்செயலை உடைய அவனுடைய குடும்பமே அழிந்து போகும். நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டு நடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியர் அடும்பார் அணிகானற் சேர்ப்ப! கெடுமே கொடும்பாடு உடையான் குடி. சான்றோர்களின் மனம் வருந்துமாறு செய்வது ஒருவனு டைய குடும்பத்தை வேருடன் அழித்துவிடும் என்பது கருத்து. ‘கெடுமே கொடும்பாடு உடையான் குடி’ என்பது பழமொழி. 177. உளம் கலவாத நண்பர்கள் மொட்டுக்கள் தம் பிணிப்பவிழ்ந்து மலர்ந்து கொண்டி ருக்கின்ற மாலையானது, விளங்கிக் கொண்டிருக்கும் மார்பினை உடையவனே! முட்டுப் பாடு ஏதும் இல்லாமல் ஒருவர் வள முடையவராயிருக்கின்ற சமயத்திலே, அவர் வீட்டிலே சமைத் ததைத் தின்பவர்கள் ஆயிரம் பேர்களாக இருப்பார்கள். அவர்கள், துன்பம் வந்து அழிவெய்தப்போகும் நிலையடைந்த காலத்திலோ, கேடுற்ற அவர்களுக்கு உதவும் நண்பர்கள் எவருமே இலராவர். முட்டின்று ஒருவர் உடைய பொழுதின்கண் அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே கட்டலர்தார் மார்ப! கலியூழிக் காலத்துக் கெட்டார்க்கு நட்டாரோ இல். ‘இருந்தால் வருபவர் ஆயிரம் பேர்; இழந்தால் வருபவரோ எவரும் இலர்’ என்பது கருத்து. ‘கெட்டார்க்கு நட்டாரோ இல்’ என்பது பழமொழி. 178. பொல்லாங்கு பேசுவார் நட்பு நாம் சிறந்தவரென்று நண்பராகக் கொண்டிருக்கும் ஒருவரைப் பற்றி, மற்றொருவர் பொல்லாங்குபடப் பேசு கின்றதை அறிந்தால், ‘இவர் நம்மையும் பற்றிப் பிறரிடம் இப்படித்தானே பேசுவார்’ என்று கருதி, அவரை நண்பராகக் கொள்ளாது விடுக. வேம்பு, தேவர்களே தின்றாலுங்கூடக் கசக் கவே செய்யும். அதுபோல, அவர்களும் எவரிடத்தேயானாலும் நல்லமுறையில் நடக்கவே மாட்டார்கள். தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால் இற்றே அவரைத் தெளியற்க--மற்றவர் யாவரே யாயினும் நன்கொழுகார் கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு. ‘பிறர் பொல்லாங்கு பேசுபவரோடு நண்பராயிருத்தல் கூடாது’ என்பது கருத்து. கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு’ என்பது பழமொழி. 179. கொடுப்பவன் கெடுவதில்லை நெருங்கி வளர்ந்திருக்கின்ற, இருள்போன்ற, கரிய, ஐவகையாக முடிக்கும் கூந்தலை உடையவளே! தம்மை வந்து அடைந்து ஒன்றை யாசித்து நின்றவர்களுக்கு அந்த ஒரு பொருளைக் கொடுத்தவர் களை; அப்படிக் கொண்டவர்களே பிற்காலத்து ‘இவர் ஏழையாவர்,’ என்று சொல்லிப் போனாலும் போகட்டும்; எத்தகையவர்களுக்கே யானாலும் கொடுத்து அதனால் ஏழையாயினவர் எவரும் இல்லை. அடுத்தொன் றிரந்தார்க்கொன் றீந்தாரைக் கொண்டார் படுத்தேழை யாமென்று போகினும் போக அடுத்தேறல் ஐம்பாலாய்! யாவர்க்கே யாயினும் கொடுத்தேழை யாயினார் இல். வாங்கிச் செல்பவரே நன்றியில்லாமல் பழித்துச் செல்லும் காலத்தினும், கொடுத்தவர் ஏழைமை அடைவதில்லை என்பது கருத்து, ‘கொடுத்தேழை யாயினார் இல்’ என்பது பழமொழி. 180. கொடையின் அளவு தன்னுடைய புகழைப் பாக்களாகத் தொடுத்துப் பாடிய பெரும் புலவனான கோதமனின் சொல்லிலே வெளிப்பட்ட, அவனுடைய குறை யானது தீரும்படியாக, துறக்கத்தை யானும் என்னவரும் அடையத் தருவாயாக என்றவனுக்கு, அதற்குரிய வேள்வியியற்றி அவனை அனுப்பி வைத்து, வாழ்வீராக என வாழ்த்தியும் விடை கொடுத்தான் சேரமான். அதனால், இரப்ப வர்களை, இன்ன தன்மையர் என்று கருதவே வேண்டாம், கொடுக்கின்றவர் தம்முடைய சிறப்பின் அளவை யறிந்து அதற்கேற்பவே கொடுப்பார்கள். தொடுத்த பெரும்புலவன் சொற்குறை தீர அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான்; தொடுத்தின்னர் என்னலோ வேண்டா, கொடுப்பவர் தாமறிவார் தம்சீர் அளவு. கொடை, கொடுப்பவர் தகுதியை ஒட்டியதே; வாங்குபவர் தகுதியை ஒட்டியதன்றென்பது கருத்து. ‘கொடுப்பவர் தாமறி வார் தம் சீர் அளவு’ என்பது பழமொழி. இங்கே குறித்தது பாலைக்கோதமனாரை. 181. மனக்கசப்புத் தரும் கடன் கடனாகக் கொண்ட ஒரு சிறந்த பொருளைக் கடனாளி யின் கையிலே விட்டு வைத்திருப்பவர்கள், அவரிடத்திலே சென்று, எம் பொருளை இன்றே எமக்குத் தருவீராக என்றால், அவர் தருவதே முறை. அஃதன்றிப், பகையினை மேற்கொண்டவர் போலப் பேசத்தொடங்கி, அந்தப் பொருளைக் கடனாகப் பெற்றுக் கொண்டவர் வெகுண்டால், அது விளையாட்டாகச் சொன்னதே யானாலும், மனக் கசப்பைத் தருவதாய் விடும். கடங்கொண்ட பொருளைக் கைவிட் டிருப்பார் இடங் கொண்டு தம்மினே என்றால்--தொடங்கிப் பகைமேற்கொண் டார்போலக், கொண்டார் வெகுடல் நகைமேலும் கைப்பாய் விடும். வாங்கிய பொருளைத் தந்தவர் கேட்டதும் கொடாமல் இருப்பது மிகவும் தவறு. ‘கொண்டார் வெகுடல் நகை மேலும் கைப்பாய் விடும்’ என்பது பழமொழி. 182. வித்தைப் பொரிக்கும் மூடர் தம் உள்ளத்திலே ஆசைகள் அற்றவனாக அடங்கியிருந்து, ஐம்புலன் களையும் தம் ஆணைக்குள் அகப்படுமாறு செய்து, அவை மேற் செல்லாதபடி காத்துத், தாம் ஏற்றுத் தொடங்கிய துறவு நெறியின்கண், மனம் வாக்குக் காயம் என்ற மூன்றினாலும் மாட்சிமையுடையவராக விளங்கி, இவ்வுலகத்தே உடம்பானது ஒழிந்துபோகுமாறு கைவிட்டுச் செல்லும் மறுமை நெறிக்குப் பாதுகாவலான உறுதியை, இளமையிலேயே செய்யாதவர்களே, தீயின் மீது விதை நெல்லைப் பெய்து பொரித்து உண்ணும் மூடர்களாவார். அடங்கி அகப்பட ஐந்தினைக் காத்துத் தொடங்கிய மூன்றினால் மாண்டீண்டு--உடம்பொழியச் செல்லும்வாய்க் கேமம் சிறுகாலைச் செய்யாரே கொள்ளிமேல் கொட்டு வைத்தார். விதை நெல்லால் பின்வரும் பயன் கருதாமல், வாய்ச் சுவைக்கு அடிமையாகிப் பொரித்துத் தின்பவர் அறிவிலிகளே; உடலெடுத் ததன் பயனாக உயிர்க்கு உறுதிதரும் காரியங்கள் செய்வதை மறுத்து உடலின்பங்களிலே ஈடுபடுபவர் ஆவர். ‘கொள்ளி மேல் கொட்டு வைத்தார்’ என்பது பழமொழி. ‘வித்துக் குற்றி உண்டாங்கு’ என்பதும் இந்த மடமை குறித்ததே. 183. சொல்லால் வளைக்கவும் ‘யாம் உலகனைத்தையும் ஆள்வோம்’ என்று சொல்லும் அரசர்கள், வரையறை என்பதொன்று இல்லாமல், தீமை செய்த வர்களையுங்கூட அவசரப்பட்டுக் கோபித்துக் கொள்ள மாட் டார்கள். வீட்டுத் தோட்டத்திலே ஒருவன் தனக்குப் பயன் தருமாறு வளர்த்துவரும் மரத்தைப் போலச், சொற்களால் அவனை வளைத்துத் தமது அடி நிழலின்கீழ் இருக்கச் செய்து அடக்கியே கொள்வார்கள். எல்லையொன்று இன்றியே இன்னாசெய் தாரையும் ஒல்லை வெகுளார் உலகாள்தும் என்பவர் சொல்லின் வளா அய்த்தம் தாள்நிழல் கொள்பவே கொல்லையுள் கூழ்மரமே போன்று. மன்னர்கள், தம் பகைவரையும் தமக்கு அடிப்பட்ட வராக்கி ஆள்தலையே செய்யவேண்டும் என்பது கருத்து. ‘கொல்லையுள் கூழ் மரமே போன்று’ என்பது பழமொழி கூழ். மரம்-கூழைப் பலாமரமும் ஆம்; பயன்தரும் பழமரமும் ஆம். 184. குடிப்பிறப்பும் பண்பும் தாம் கற்றது ஒரு நூலேயாயினும், இல்லாதுபோயின காலத்தினும் கூட, நல்ல குடியிலே பிறந்தவர்கள், கல்வி ஒன்றை மட்டுமே அறிந்த வரினுங் காட்டில், மாட்சிமைப்பட, மிகவும் நல்லவர்களாகவே விளங்கு வார்கள். கற்றோர் நல்ல பண்பு களைப் பற்றி அழகுடனே சொல்வதற்காக அவரிடம் செல்ல வேண்டாம், கொல்லர்களுடைய குடியிருப்பிலே சென்று தைக்கும் ஊசியை விலைகூறுவோர் இல்லையல்லவா! கற்றதொன் றின்றி விடினும் குடிப்பிறந்தார் மற்றொன் றறிவாரின் மாணமிக நல்லரால் பொற்ப உரைப்பான் புகவேண்டா, கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல். நல்ல குடியிற் பிறந்தவர்களிடம் படிந்திருக்கும் பண்பு நலம் சொல்லப்பட்டது. ‘கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்’ என்பது பழமொழி. 185. சிறந்ததைச் சிறந்ததே வெல்லும் விரும்பப்படும் அணிகலன்கள் அணிந்த பெண்களின், வெருண்ட மானின்பிணை போன்ற மடமையான பார்வையா னது, ஆடவரிடம் நிறைந் திருக்கும் நாணத்தினையும் வெளிப் படாமல் மறைக்கும் வல்லமை உடைய தாகும். யமுனை நதியி னிடத்தே திருமாலையுங்கூடப் பின்னை என்பவள் தன்னழகி னால் முன்னம் நாணிழந்து மயங்கச் செய்தனள், அதுவே ஒரு சிறந்த பண்பினை, மற்றொரு சிறந்த பண்பே அழிக்கின்ற தன்மை ஆகும். விழுமிழை நல்லார் வெருள்பிணைபோல் நோக்கம் கெழுமிய நாணை மறைக்கும்--தொழுநையுள் மாலையும் மாலை மயக்குறுத்தாள்; அஃதால் சால்பினைச் சால்பறுக்கு மாறு. மகளிரின் வெருண்ட நோக்கம் ஆடவரின் தகுதியை மறைத்து அவர்க்கு அவரை அடிமைப்படச் செய்வதென்பது கருத்து, ‘சால்பினைச் சால்பு அறுக்குமாறு’ என்பது பழ மொழி. 186. பகையைக் காலமறிந்து வெல்லுதல் போரின்கண் வலிய படைத்துணை உடைய பகைவர்களை இகழ்ந்து, அந்த வலிமையில்லாதவர்கள் எதிர்த்து நிற்பது அவருக்கே துன்பந் தருவதாகும். அதனால், அப்பகைவரை விட்டு நெடுந்தொலைவிற்கு ஓடிப் போய், என்ன சூழ்ச்சிகளைச் செய்தா லும் உயிர் பிழைத்துக் கொள்க. சாவாதிருப்பவன், படைத் துணை பெற்று என்றாவது அந்தப் பகைவனை; வென்று, தன் முன்கையிலே கடகமும் அணிந்து கொள்ளக்கூடும். இகலின் வலியாரை எள்ளி எளியார் இகலின் எதிர்நிற்றல் ஏதல்--அகலப்போய் என்செய்தே யாயினும் உய்ந்தீக, சாவாதான் முன்கை வனையுந் தொடும். பகை பெரிதானால் அதனை எதிர்த்து மோதி அழியாது, தப்பிச் சென்று தக்க துணையுடன் வந்து வெல்வதே சிறப்பு என்பது கருத்து. ‘சாவாதான் முன்கை வனையுந் தொடும்’ என்பது பழமொழி. வனை - வீரர்கள் அணியும் கடகம். தொடுதல் - அணிதல். 187. தேசத்துரோகி என்ன ஆவானோ? மை தீற்றப்பெற்று அமர்த்திருக்கும் கண்களையும், மாட்சி மையுடைய அணிகளையும் உடையவளே! அடர்ந்து எழுந்த போர்க்களத்தினிடத்தே பகைவர்களின் வாயினின்றும் போந்த பொய்யான உரைகளைக்கேட்டு அதனால் கீழறுக்கப் பட்டுத் திரிபவர்களுக்கு என்னதான் வீரமோ? அறிவு நிறைந்தவர்கள், பிறர் கைப்பொருளை உண்டவரானாலும் கூட, எப்போதும் உண்மையையே பேசுவார்கள். மொய்கொண் டெழுந்த அமரகத்து மாற்றார்வாய்ப் பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க்கு என்கொலோ? மையுண் டமர்ந்தகண் மாணிழாய்! சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய். அறை போதல் - இலஞ்சம் வாங்கிப் பகைவரோடு சேர்ந்து கொள்ளுதல். அறிவுடையார் அப்படித் துரோகம் செய்ய மாட்டார் என்பது கருத்து. தேசத் துரோகிகளின் இழிந்த பண்பு கூறப்பட்டது. ‘சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய்’ என்பது பழமொழி. 188. பகைவர்க்கும் அருளுதல் பாம்பு, தெளிவாக அடித்துக் கொல்லப்படும் கொடிய தன்மை உடையதே என்றாலும், சான்றோர் கூட்டத்திலே சென்றால், அதுவும்கூடச் சாகாமல் தப்பிவிடும். பகைவர்கள் படும் துன்பத்தைத் தெளிவாக உண்மையெனக் கண்ட போது, மேன் மக்கள், அவர்கள்பாலும் கண்ணோட்டஞ் செலுத்தி உதவவே செய்வார்கள். தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள்--தெற்ற நவைக்கப் படுத்தன்மைத் தாயினும் சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு. பகைவர்க்கும் துன்பத்தில் உதவுவது சான்றோர் பண்பு என்பது கருத்து. ‘சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு’ என்பது பழமொழி. அவர், இரக்கத்தால் அதனைக் கொல்லாது போக விடுவர் என்பதாம். 189. கடனும் கடமையும் மடமாகிய பண்பினைக் கொண்டவளும், சாயலிலே மயிலைப் போன்ற வளுமான பெண்ணே! அறிவாற் சிறந்த சான்றோர்கள், கடன் வாங்கியாவது செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாது செய்வார்கள். அப்படிப்பட்ட வர்கள், தொடர்ந்து வறுமையுடையவர்களாக இருத்தலால் ஒன்றைச் செய்யவியலாத காலத்தும் ‘செய்யுங்காலம் வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று கருதி இருக்க மாட்டார்கள்; அதனை எப்படியும் செய்யவே முற்படுவார்கள். அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும் இடங்கண் டறிவாமென் றெண்ணி யிராஅர் மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! சான்றோர் கடங்கொண்டும் செய்வார் கடன். சான்றோர் கடன்பெற்றும் கடமையைச் செய்பவர் என்பது கருத்து. கடமையில் தவறாத அவர் பண்பு சொல்லப் பட்டது. சான்றோர் ‘கடங் கொண்டும் செய்வார் கடன்’ என்பது பழமொழி. கடம்-பாலை நிலமும் ஆகும். அதனைக் கடந்து போயும் கடமையைச் செய்வர் என்பதும் பொருந்தும். 190. பகையை முதலில் நலியச்செய்தல் இயல்பாகத் தன்னுடைய பகையினை வெல்ல நினைப் பவன், தனக்குப் பாதுகாப்பாக, முன்னர் அயலாக அவருக்குள்ள பகைவர்களைத் தந்திரமாகத் தூண்டிவிட்டு, ஒரு நயமான தன்மையிலே அதற்கேற்ற சினத்தையும் அவர்களுக்குக் கொடுத்து, அவர்களை முதலிலே பகைவனுடன் மோதச் செய்து, அவனைத் தன் கைக்கு எளிதாக வீழுமாறு செய்து கொள்க. அப்படிச் செய்வதே, பெரிய குரங்கு, முதலிலேயே சிறிய குரங்கின் கையை விட்டுத் துழாவிச் சூடறிந்து கொள்ளுதலைப் போன்ற அறிவுள்ள செயல் ஆகும். இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே அயற்பகை தூண்டி விடுத்தோர்--நயத்தால் கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே சிறுகுரங்கின் கையாற் றுழா. பகைவரை முதலில் தான் வெல்ல நினையாது, பிறபிற பகைகளைத் தூண்டிவிட்டு நலியச் செய்து பின் எளிதாக வெல்வதே அறிவுடைமை என்பது கருத்து. ‘சிறுகுரங்கின் கையாற் றுழா’ என்பது பழமொழி. 191. இலாபமான செயல் செய்பவரே அனைவரும் வெற்றியுடைய பறவையான கருடன்மீது ஊர்ந்து வருபவ னும், உலகம் முழுவதையும் தாவி அளந்தவனுமான, அண்ண லான திருமாலே யானாலும், தனக்கு ஊதியமுடைய தான ஒன்றைச் செய்யாதவர்கள் இல்லை. ஆகையால், சுற்றத்தார் நட்பினர் என்னவெல்லாம் கருதிச் சென்று வரும் காலத்தினும் கூட, அவர் மறைத்துச் செய்யுங் காரியங்களைப் பற்றித் தெரிவதற்கு, அறிவுடையோர் முற்பட மாட்டார்கள். சுற்றத்தார் நட்டார் எனச்சென்று ஒருவரை அற்றத்தால் தேறார் அறிவுடையார்--கொற்றப்புள் ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும் சீர்ந்தது செய்யாதார் இல். பிறர் இரகசியங்களை அறிந்து கொள்வதிலே அறிவுடை யோர் முயல்வதில்லை என்பது கருத்து. ‘சீர்ந்தது செய்யாதார் இல்’ என்பது பழமொழி. சீர்ந்தது - சிறப்பாக அமைவது. 192. பொன்மேல் மணி போன்றது! மலைப்புறங்களிலே மூங்கிலோடு மூங்கில்கள் உரசிக் கொண்டிருக் கின்ற மலைநாடனே! சிறந்தனவாகிய இன்பங் களை அனுபவித்து வாழும் செல்வச் செழுமை உடையவர்கள், அறஞ் செய்து பிற உயிர்களினிடத்து அருள் உடையவராகவும் ஆதல், பொற்சுமையோடு அதன்மேல் மணி களையும் வைத்துக் கொண்டு செல்வது போன்றதாகும். சிறந்த நுகர்ந்தொழுகும் செல்வம் உடையார் அறஞ்செய்து அருளுடையர் ஆதல்--பிறங்கல் அமையொடு வேய்கலம் வெற்ப! அதுவே சுமையொடு மேல்வைப்பா மாறு. செல்வர்கள், தாம் இன்புறுவதுடன், அறமும் அருளும் உடைய வராகவும் விளங்குதல் சிறப்புடையதாகும். ‘சுமையொடு மேல்வைப்பா மாறு’ என்பது பழமொழி. 193. புதைத்து வைக்கும் செல்வம் பொருள்களை ஈயாது மறைத்து வைக்கும் இயல்பு உடைய வர்கள், சேர்த்து வைத்த செல்வம், பகைவரைக் கடிதலையுடைய மன்னர்களுக்கே பயன்படுவதாகும். அல்லாமல், அப்படி வைத்த வர்களுக்கு இறுதிக் காலத் திற்கும் பயன்படாதேதான் போகும். அங்ஙனமில்லாமல், மிகவும் துன்பம் மிகுந்தவர்களுக்கு உதவும் படியாக அவன் ஒரு பொருளைக் கொடுத்தால், பாலை நிலத்தி டையிலே பெய்த மழைபோல, ஒருபோதும் நடைபெறாத தேயாகும். கரப்புடையார் வைத்த கடையும் உதவா துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால் நிரப்பிடும்பை மிக்கார்க்கு உதவஒன் றீதல் சுரத்திடைப் பெய்த பெயல். புதைத்து வைத்த பணம் அவனுடைய வழியினர்க்கும் உதவாமல், இறுதியில் எவரோ எப்போதோ தேடி எடுக்க அரசுக்குச் சொந்தமாய்விடும் என்று கொள்க. ‘சுரத்திடைப் பெய்த பெயல்’ என்பது பழமொழி. கரப்பு - ஒளித்து வைத்தல். 194. இளமையிலேயே கற்க வேண்டும வழியை மிகவும் கடந்துபோக விட்டுவிட்டுப் பின், பின் தொடர்ந்து சென்று வரிப்பணம் வாங்கியவர் எவரும் இல்லை. ஓடத்தைச் செலுத்திக் கரையிலே கொண்டு விட்டபின் முறை யான கூலி பெற்றவரும் எவரு மில்லை. அவைபோலக் கற்கத் தகுதியான இளமைப் பருவத்திலே கற்காத ஒருவன், முதுமைக் கண் கல்வியைப் போற்றுபவனாவான் என்பதும் பொருந்தாத தேயாகும். ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண் போற்றும் எனவும் புணருமோ?--ஆற்றச் சுரம்போக்கி உலகுகொண்டார் இல்லையே; இல்லை மரம்போக்கிக் கூலிகொண் டார். உரிய காலத்திலே செய்யாமல், பின்னர் செய்வோமென ஒதுக்கி வைப்பது எதுவும் உருப்படுவதில்லை என்பது கருத்து. ‘சுரம்போக்கி உலகுகொண்டார் இல்; மரம்போக்கிக் கூலி கொண் டார் இல்லை’ என்பன பழமொழிகள். 195. நடவாத செயல்கள் மலையினின்றும் வீழ்கின்ற அருவிகள் விளங்கும் மலை நாடனே! புகழ் நிறைந்தவரான சான்றோர்கள் வறுமையினா லேயே ஒடுங்கி வாழ்கின்றபோது, நல்ல குடிமரபினர் கூட்டத் தினை இல்லாதவரான கயவர், செல்வத்தால் தலை நிமிர்ந்து பெருமை பெறுதல் ஆகிய இதுவே, சுரை நீரில் அமிழ்வதையும் அம்மி மிதப்பதையும் போன்றதாகும். உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய நிரையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல் வரைதாழ் இலங்கருவி வெற்ப! அதுவே சுரையாழ அம்மி மிதப்ப. சுரை தாழ்வதில்லை; அம்மி மிதப்பதும் இல்லை. அதுபோலச் சான்றோர் பெருமை குறைவதுமில்லை; கீழோர் செல்வராய் நிமிர்ந்தாலும் சிறப்பதுமில்லை என்பது கொள்க. ‘சுரையாழ அம்மி மிதப்ப’ என்பது பழமொழி. 196. அறிவில்லாதவனின் முடிவு பெண்மான்கள் தம்முடைய துணைகளை அழைத்துக் கொண்டிருக்கும் சிறந்த மலைநாடனே! கற்க வேண்டிய நூல் களைக் கற்ற அறிவுடையவர் பலரைத் தனக்குக் கண்ணாகப் பெற்றி ராத ஓர் அரசன், யாதாயினும் துன்பம் வந்து இடப்பட்ட பொழுதிலே தானே கொள்ளும் முடிவானது, சுரை பொருந்திய யாழின் நரம்பை அறுத்து விட்டு, இசைக்க முயல்வது போன்ற தாகும். கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான் உற்றிடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம் மரையா துணைபயிரும் மாமலை நாட! சுரையாழ் நரம்பறுத் தற்று. நரம்பறுத்தபின் யாழிலே இசை எழாது; அவ்வளவு மூடத்தனமாக இருக்கும் அவன் முடிவு என்பது கருத்து. அமைச்சர்கள் கல்வியில் வல்லவராக இருத்தல்வேண்டும் என்பதும் சொல்லப்பட்டது. ‘சுரையாழ் நரம்பறுத் தற்று’ என்பது பழமொழி. 197. அதிக வரியும்! அதன்பின் உதவியும்! தன்னை முற்றவும் பாதுகாவலாக எண்ணி அடைந்தி ருக்கின்ற குடிகளைத், தீயவைகளைச் செய்து துன்புறுத்திக் கொடுக்கும் இயல்பு உடையவனாக இருக்க வேண்டிய அரசன் கொடுங்கோலனாக மாறிக் குடிகள் மேல் கொள்ளும் இறைப் பொருளை அளவுக்கு அதிகமாகப் பெற்றுக் கொண்டு பின்னர் அவருக்கு உதவுதல், மயிலினது உச்சிக் கொண்டையை அறுத்து, அதற்கு உணவாக அதன் வாயிலே இடுவது போன்ற தாகும். அடைய அடைந்தாரை அல்லவை செய்து கொடைவேந்தன் கோல்கொடிய னாகிக் குடிகள்மேல் கூட்டிறப்பக் கொண்டு தலையளிப்பின் அஃதன்றோ சூட்டறுத்து வாயில் இடல். ‘துன்புறுத்தி அதிக வரி வாங்கியவன், பின் என்ன நன்மை செய்தாலும் மக்கள் அவனைப் போற்ற மாட்டார்கள்’ என்பது கருத்து. ‘சூட்டறுத்து வாயில் இடல்’ என்பது பழமொழி. 198. அரசாணையை நிறைவேற்றல் வெற்றிச் சிறப்புடைய வேலினனான வேந்தன் ஏவல் கொண்டால், யாம் ஒன்றும் அதனால் பெற்றிலேம் என்று சொல்வது அறியாமையேயாகும். அவன் ஏவலை எவ்விதக் குறைபாடும் இல்லாதவராகச் செய்து முடிக்க. அதுவல்லவோ, செய்க என்றவன், பின் உண்க என்று உபசரிக்கச் செய்யும் வழியாகும். வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும் பெற்றிலே மென்பது பேதமையே--மற்றதனை எவ்வ மிலராகிச் செய்க அதுவன்றோ செய்கென்றான் உண்கென்னு மாறு. செயலுக்கு ஏவியவன், அது முடிந்ததும், பாராட்டிப் பரிசு தராமற் போவதில்லை என்பது கருத்து. ‘செய்கென்றான் உண்கென்னு மாறு’ என்பது பழமொழி. 199. அரசன் செயலுக்குப் பொறுப்பு எவர்? பவளத்தைப் போன்ற சிவந்த வாயிதழ்களையும், புன்முறு வலையும், நன்மைதரும் சிலவாகிய பேச்சையும் உடையவளே! குற்றமற்ற செங்கோலனான சினமுடைய வேந்தனது தீமையைக் குற்றமற்ற பக்கத்தி லுள்ள உள்படு கருமத் தலைவர்களே ஏற்றுக் கொள்வார்கள். செய்தவனை ஒத்திராத பாவை என்பதோ உலகத்தில் எதுவும் இல்லை. செயிரறு செங்கோல் சினவேந்தன் தீமை பயிரறு பக்கத்தார் கொள்வர்--துகிர்புரையும் செவ்வாய் முறுவல்நற் சின்மொழியாய் செய்தானை ஒவ்வாத பாலையோ இல். செய்பவன் தன் கருத்திற்கு ஒத்திராத சித்திரம் எழுது வதில்லை. அரசனைச் சூழ்ந்திருப்பவரின் தொடர்பின்றி அவன் தீமை செய்வதும் இயலாது. அதனால், பழி அவரையே சாரும் என்பது கருத்து. ‘செய்தானை ஒவ்வாத பாலையோ இல்’ என் பது பழமொழி. 200. துரோகிகள் பேச்சுக்கு வருந்த வேண்டாம் மையினை மிகுதியாக உண்ட கண்களையும் மாட்சிமைப் பட்ட கலன்களையும் உடையவளே! பகைவர் கொடுத்தவற்றைக் கையார வாங்கி உண்டதனால், அவர் ஏவியதைச் செய்யாத விடத்துக் காய்வார்களே என்பதன் காரணமாகப், பொருளற்ற அற்பர்கள், தம்மைப் பொய்மை யாகக் கூறிப் பழித்தால், செய்யாத பழி வந்து அடைவதில்லை; என்றால், அதற்காக ஏன் வருத்தப் பட வேண்டும்? கையார உண்டமையால் காய்வார் பொருட்டாகப் பொய்யாகத் தம்மைப் பொருளல்லார் கூறுபவேல் மையார உடைகண் மாணிழாய்! என்பரிவ செய்யாத எய்தா எனில்? பகைவர் தூண்டுதலால் இவர் பேசித் திரிவதனால் அதனையொரு பொருட்டாகக் கருதுதல் வேண்டாமென்பது கருத்து. ‘செய்யாத எய்தா எனில்’ என்பது பழமொழி. 201. கொடுங்கோலோனும் கூற்றமும் முல்லை அரும்புகளைப் போல விளங்கும் பல்வரிசை யினை உடையவளே! கூற்றமானது வந்து உயிரினைக் கொள்ளு கின்றபொழுது, கொள்ளப்படுபவரின் குறிப்பினை அறிந்து, அவர் தனக்குச் சொல்லப்போகும் மாற்றங்களைக் கேட்டுத் தான் கொள்வதா விடுவதா என்று ஆராய்வதில்லை. அது போல அரசனானவன் குடிகளை விரைந்து துன்புறுத்தி அடிமையாகக் கொண்டால் செய்வதற்கு என்ன இருக்கிறது? கூற்றம் உயிர்கொள்ளும் போழ்து குறிப்பறிந்து மாற்றத் உடையாரை ஆராயாது--ஆற்றவும் முல்லை புரையும் முறுவலாய்! செய்வதென் வல்லை அரசாட் கொளின்? குடிகளைப் பேணாது துன்புறுத்துபவன் எமனைப் போன்றவன் என்பது கருத்து. ‘செய்வதென் வல்லை அரசாட் கொளின்’ என்பது பழமொழி. 202. செருப்பிற் புகுந்த கல் செருக்குடன் நடந்து தகுதியற்ற செயல்களைச் செய்தும், பிறர் தன்னைப் பெரிதாக மதித்தபின் அவர் விரும்பத்தகாத செயல்களைச் செய்தும், கரவுடைய உள்ளத்தை உடையவர் களாகப் பிறரை வருத்து பவர்களே, செருப்பி டையிலே புகுந்து கொண்டு வருத்தும் பருக்கைக் கற்கள் போன்றவராவர். தருக்கி ஒழுகித் தகவல்ல செய்தும் பெருக்க மதித்தபின் பேணாத செய்தும் கரப்புடை யுள்ளம் கனற்று பவரே செருப்பிடைப் பட்ட பரல். கரந்த உள்ளமுடைய கொடியவர்கள், எப்போதும் தம்மைச் சேர்ந்தவர் களுக்கு வருத்தம் தருவதையே தொழி லாகக் கொண்டிருப்பார்கள் என்பது கருத்து. ‘செருப்பிடைப் பட்ட பரல்’ என்பது பழமொழி. 203. வேங்கைப் பூவும் செல்வமும் பல நாட்களும் நின்றிருந்தபோதும். தான் பூத்ததற்கு உரியதான நல்ல நாளினை அறிந்தே, கணியாகிய வேங்கை பூக்கும். அதனால், மன்னர்கள் மகிழுமாறு அவரை வழிபட்டு நடந்துவந்தாலும் செல்வமானது வந்து சேரும் ஆகூழ் வரும் போதே வந்து சேரும் பன்னாளும் நின்ற விடத்தும் கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்--மன்னர் உவப்ப வழிபட் டொழுகினும், செல்வம் தொகற்பால போழ்தே தொகும். வேங்கை மணக்கும் காலம் மணம் வாய்க்குங் காலம். அது பற்றி அதனை மணநாள் குறிக்கும் கணி என்றார். எல்லாம் ஆகிற காலத்தில் தானே ஆகும் என்பது கருத்து. ‘தொகற்பால போழ்தே தொகும்’ என்பது பழமொழி. 204. நத்தை போலச் சேமிக்க அழகாகக் குளிர்ந்த அருவிகள் பல வீழ்ந்து கொண்டிருக் கின்ற மலைநாடனே! எதிர்காலத்தின் நெடுமையை நோக்கி, நத்தையானது நீரைத் தன்னிடத்தே சேமித்து வைத்துக் கொள் வதைப்போலத் தத்தமது பொருள்களையும், தம் சுற்றத்தாரின் வலிமையையும், முற்படவே ஆராய்ந்து, பிற்காலத்தில் உதவியா யிருக்கும் பொருட்டாகச் சேமித்துப் பாதுகாத்து வைத்துக் கொள்க. தந்தம் பொருளும் தமர்கண் வளமையும் முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக அந்தண் அருவி மலைநாட! சேணோக்கி நந்துநீர் கொண்டதே போன்று. சுற்றம் வலிமை குறைந்த காலத்துத் தமக்கே சுமையாகு மாதலால், அவர் வளமையையும் காக்க வேண்டும் என்றார். ‘சேணோக்கி நந்துநீர் கொண்டதே போன்று’ என்பது பழமொழி. தொலைநோக்கோடு பொருளாதார வலிமையைக் காப்பதே அரசின் கடமை என்பது இது. 205. சொல்லும் அறிவும் நூல்களைக் கற்று அறிந்திராத ஒருவன், வினைப்பயனால் தான் கண்டறிந்த மிகவும் நுட்பமான பொருளையும் பிறருக்கு விளக்கிக் காட்டு வதற்கு இயலாதவனாகியிருப்பான். அவன், நாம், ‘நல்ல அறிவுடையேம்’ என்று தன்னைத் தானே பெருமை பாராட்டிக் கொள்ளல் எதற்காகவோ? சொல்லாற்றலி னாலேயே தம் பகைவரைத் தமக்குப் பணியச் செய்து வெற்றி கொள்ளக்கூடிய தகுதியும் வல்லமையும் உடையவர்களுக்கும் தாம் கருதியதைச் சொல்லாற்றலுடன் சொல்ல முடியாமற் போன இடத்துச், சொல்லப்பட்ட அந்த ஆற்றலும் அவர்பால் இல்லையாகும். கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால் நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென் சொல்லால் வணக்கி வெகுண்டு அருகிற்பார்க்கும் சொல்லாக்கால் சொல்வது இல். அறிவு வேறு; கல்வி வேறு. அறிவைக் கல்வியால் செப்பம் உடைய தாக்கிச் சொல்லாற்றலுடன் விளங்கவேண்டும் என்பது கருத்து. ‘சொல்லாக்கால் சொல்வது இல்’ என்பது பழமொழி 206. தற்புகழ்ச்சி வேண்டாம் செருக்குடன் செல்லும் பகைவரை வென்றவர்கள் தம்மீது பிறர் எல்லாம் வந்து பெருமைப்படுத்திப் பாராட்ட. அதனால் தம் உள்ளம் சுளித் தாலும், தம்மிடத்தே உள்ளதாகும் வீரத்தைப் பற்றிச் செம்மாப்புடன் சொல்லா திருத்தலையே விரும்புக. அப்படியிருப்பதுதான், தன் குறைபாடுகளைத் தானே மிகுத்துக் கூறாதவாறு ஆகும். செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர் தம்மேற் புகழ்பிறர் பாராட்டத்--தம்மேற்றாம் வீரஞ்சொல் லாமையே வீழ்க களிப்பினும் சோரம் பொதியாத வாறு. வீரர்கள், பிறர் பாராட்டுதலை உச்சிகுளிர்ந்து போனவர் களாகத் தம்முடைய ஆற்றல்களை மிகுத்துப் பேசுவது கூடாது. அப்படிப் பேசுவது அவரின் தளர்ச்சியை அவரே வெளியே காட்டுவதாக முடியும்! ‘சோரம் பொதியாத வாறு’ என்பது பழமொழி 207. ஊதியம் இல்லாத வேலை தம்முடைய சொந்த வண்டியேயானாலும் உயவுநெய் இல்லாமற் செல்லமாட்டாது. அதுபோலத் தாம் அச்சாணி யாகக் கருதிக் கொண்ட செயலை முடிக்குமாறு பிறர் ஒருவரை ஒன்றும் ஊதியம் தராமலே ஏவினால், பத்தாண்டுகளாயினும் மிகவும் மெதுவாகவே அவர்கள் அதனைச் செய்வார்கள். காணியளவு பொருளாயினும் தமக்குப் பயனாகப் பெறாமல் ஒரு காரியத்தைச் செய்பவர்கள் எவருமே இல்லையாவர். ஆணியாக் கொண்ட கருமம் பதிற்றாண்டும் பாணித்தே செய்ப வியங்கொள்ளின்--காணி பயவாமல் செய்வாரார் தஞ்சாகா டேனும் உயவாமல் சேறலோ இல். ஊதியம் தராமல் வேலை ஏவினால், அந்த வேலை ஒரு போதும் முடியாதென்பது கருத்து. ‘தஞ்சாகா டேனும் உயவா மல் சேறலோ இல்’ என்பது பழமொழி. 208. குலப் பண்பு மாறாது தீயினது புகையைப்போல மேகங்கள் பரவி உலாவுகின்ற மலை நாடனே! மந்தையைக் காக்கும் இடையனுக்கு மகளாகப் பிறந்தவள், நாடு காக்கும் அரசனுக்கு வாழ்க்கைப் பட்டிருந்தும், ஒருநாள் பாலுண்ணக் கொடுத்தபொழுது அது பசுப்பாலி னின்று மேய்ப்பு ஆட்டின்பால் என்று சொல்லி உண்ணாதவளா யிருந்தாள். ஒருவர் தம் குலத்திற்குரிய குணத்தை எவ்வளவுதான் மறைக்கமுயன்றாலும் முடியாது; தம் குலத்தின் குணமே எப்பொழுதும் முற்படத் தோன்றி விடும். காப்பான் மடமகள் காப்பான்கைப் பட்டிருந்தும் மேய்ப்பாட்ட தென்றுண்ணா ளாயினாள்--தீப்புகைபோல் மஞ்சாடு வெற்ப! மறைப்பினும் ஆகாதே தஞ்சாதி மிக்கு விடும். ‘ஒருவரது குலப்பண்பு தம்மையறியாதே தோன்றி அவரைக் காட்டிவிடும்’ என்பது கருத்து. ‘தம்சாதி மறைப்பினும் ஆகாதே மிக்கு விடும்’ என்பது பழமொழி. சாதி-குலம். மேய்ப்பாடு-மேய்ச்ச லுக்குச் சென்றுவரும் ஆடு. 209. ஏவிப் பணி கொள்க கையினாலே தொட்ட அளவாலேயே வாடிப்போய் விடுகின்ற தன்மையுடைய மெல்லிய தளிரின் மேலாக நிற்பதா னாலுங்கூடப், பிறர் ஒருவர் தட்டிச் செலுத்தினால் அன்றி, உளி அதன்பால் இறங்கமாட்டாது. அதுபோலவே ஒருவரைத் தகுதியுடைய வராகத் தெரிந்து, அவர்பால் பொறுப்பை ஒப்பித்துச் செயலைச் செய்யவைத்தாலும் அதன் பின்னரும் இடையறாமல் அவரை ஏவிச் செலுத்திக் கொண்டேயிருத்தல் வேண் டும். விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும் முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால் தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லாது உளி. எவ்வளவு பொறுப்புடைய பணியாளராயினும், எவ்வளவு எளிதான தொழிலிலே அவரைச் செலுத்துவதாயினும் அவரை யும் ஏவிக் கொண்டே இருக்க வேண்டும். ‘தட்டாமல் செல் லாது உளி’ என்பது பழமொழி. 210. அரசர்களின் செங்கோன்மை அழகிதாகக் கோற்றொழில் அமைந்துள்ள, ஒளியுடைய வளையல்களை அணிந்துள்ளவளே! சக்கரப் படையினையு டைய திருமாலேயானாலும். அவனும் செங்கோன்மையாள னாக அல்லாத இடத்து, அவனைச் சேர்ந்தவர் களும் அவனை மதியார்கள்; இகழ்ச்சியாகவே பேசுவார்கள். கொடுங் கோன்மை யுடைய தன்மையும் சிறிதள வேயாயினும் வேந்தர்கள் பால் இருக்கத்தான் வேண்டும். ஆயினும், அருளோடு செலுத்தும் தன்மையான பண்பே உண்மையாக அவர் களை உயர்த்தும் என்பதை அவர்கள் மறந்து விடவும் கூடாது. அங்கோல் அவிர்தொடி! ஆழியான் ஆயினும் செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவரால் வெங்கோன்மை வேந்தர்க்கண் வேண்டும் சிறிதெனினும் தண்கோல் எடுக்குமாம் மெய். ‘பகைவரிடத்துக் கொடியவனாக நடக்கும் வேந்தனும் தன் குடிமக்களிடத்தே மிகவும் அருளாளனாக நடக்க வேண்டும்’ என்பது கருத்து. ‘தண்கோல் எடுக்குமாம் மெய்’ என்பது பழமொழி. தண்கோல் - அருளாட்சி. 211. தத்தம் தன்மை மாறாது உண்மையான சிறந்த தன்மைகளை உடையவராகி அந்தத் தம்முடைய பண்புகள் விரிந்து விளங்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவர்கள் சிலர்; பொய்மையான இழிந்த தன்மை உடையவராகித் தாம் கருதிய பொருளினை வெற்றிகரமாக முடிப்பவர்கள் சிலர்; இப்படிச் செயலிலே ஈடுபடுபவர்கள் எத்தன்மைகளை உடையவராயினும் ஆகட்டும்; அவரவர், தத்தம் தன்மை உடையவராக விளங்குதலே முதன்மையாகும். மெய்ந்நீர ராகி விரியப் புகுவார்க்கும் பொய்ந்நீர ராகிப் பொருளை முடிப்பார்க்கும் எந்நீர ராயினும் ஆக; அவரவர் தந்நீர ராதல் தலை. செயலை முடிப்பதற்காக ஒருவர் உண்மையாளராகவோ பொய்ம்மை யாளராகவோ விளங்கினாலுங்கூட, அவர்களின் இயல்பான தன்மைகளே முனைப்பாக அங்கும் தலைநிற்கும் என்பது கருத்து. ‘தந்நீர ராதல் தலை’ என்பது பழமொழி. தலை - முதன்மை. 212. தமக்குத் தாமே துணை ‘எந்தக் காரியத்தைச் செய்வதற்கும் எமக்குத் துணையாக விளங்குபவர்கள் சிலர் இருக்க வேண்டும்’ என்று எண்ணித் தமக்குத் துணையாக விளங்குபவர்களைக் கருதித் தாம் ஆராய்ந்து தேடிக்கொண்டே இருக்க வேண்டாம். பிறருக்குப் பிறர் செய்வது என்பது ஒன்று இருக்கிறதோ? அப்படி ஏதும் இருப்ப தில்லை. தமக்கு வரும் நோயைத் தடுக்கும் மருத்துவர் தாமே என்பதை, ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும். எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித் தமக்குத் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோ, மற்றில்லை தமக்கு மருத்துவர் தாம். தமக்கு வரும் நோயைத் தாமே முயன்று தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிரப், பிறர் தீர்ப்பாரென நினைத்து வாளாவி ருந்தால் நோய் தீராது; அதுபோலவே, தன் காரியத்தைத் தானே செய்து முடிக்க வேண்டும் என்பது கருத்து. ‘தமக்கு மருத்துவர் தாம்’ என்பது பழமொழி. 213. கற்றவரோடேயே தொடர்பு கொள்க தம்முடைய சொந்தக்காரர்கள் என்பவர் எவருமே இல்லாத ஒருவர்க்கு, நகரத்து வாழ்வுங்கூடக் காட்டின் வாழ்வு போலத் தனிமையுடையதாகவே இருக்கும். ஏனென்றால், அவருடன் அவருடைய ஆசாபாசங்களைக் கூடி அநுபவிப்பவர் யாரும் இல்லையாதலினால், எல்லாப் பொருள்களும் விரும்பிச் சேர்ந் திருக்கின்ற மலைநாடனே! அதுபோலவே, கல்வியறிவினால் உண்டான சிறந்த நுட்பங்களும், கற்றறிவற்ற வர்கள்முன் நல்ல முறையிலே எடுத்துச் சொல்லப்பட்டாலுங் கூடத் தீயவைக ளாகவே கொள்ளப்படும். கல்வியான் ஆக கழிநுட்பம் கல்லார்முன் சொல்லிய நல்லவும் தீயவாம்--எல்லாம் இவர்வரை நாட! தமரையில் லார்க்கு நகரமும் காடுபோன் றாங்கு. கற்றவர், கற்றவரிடத்திலேயே நுட்பமான பொருள்களைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் மதிக்கப்படுவார் என்பது கருத்து. ‘தமரை யில்லார்க்கு நகரமும் காடு போன்றாங்கு’ என் பது பழமொழி. நகரம் - பலர் கூடி வாழ்வது; காடு - தனித்து வாழ்வது 214. வஞ்சகமான வெளி வேடம் இம்மையிலே செய்யப்படுவதான தவமுயற்சிகளும் அறச் செயல்களும் என்று சொல்லப்பட்ட இரண்டு நெறிகளும் தம்பால் உடையன என்று சொல் பவர்கள், அவற்றை நெறி பிறழாது செய்தல் வேண்டும். அப்படியில்லாமல், அவற்றிலே மன ஈடுபாடில்லாமல் ஒழுகி வந்தனரானால், அதனால் இம்மை யிலேயே பழியேற்படுவதும் அல்லாமல், மறுமை வாழ்வினும் தம்மைத் தாமே பிணித்து நரகிற் கொண்டு செலுத்தும் கயிறாகவும் அதுவே ஆகிவிடும். இம்மைத் தவழும் அறமும் எனவிரண்டும் தம்மை யுடையார் அவற்றைச் சலமொழுகல் இம்மை பழியேயும் அன்றி மறுமையும் தம்மைத்தாம் ஆர்க்குங் கயிறு. வஞ்சகமான எண்ணமுடன் தவமும் அறமும் புரிபவர்கள் இம்மையிற் பழியையும், மறுமையில் நரகையும் அடைவார்கள். ‘தம்மைத்தாம் ஆர்க்குங் கயிறு சலமொழுகல்’ என்பது பழமொழி. 215. தம்மை உடையவராதல் எண்ண எண்ணக் குறைவுபடாத பெருஞ்செல்வம் உடைய வராதல்; சிறந்த குடிப்பிறப்பினரா யிருத்தல்; மன்னர் களையும் தமக்கு வேண்டிய வராகப் பெற்றிருக்கும் செல்வாக்கு; மன்னரால் இவர் இன்னவர் என்று கூறிப் போற்றப்படும் புகழ்; என்றெல்லாம் சொல்லவேண்டாம். இம்மைப் புகழுக்கும் உம்மையின் நற்கதிக்கும் அவை யெல்லாம் முதன்மையானவை அன்று. தம்மைத் தாமாக உடைய புலனடக்கம் இருக்கிறதே, அதுதான் மிக முதன்மை யானதாகும் எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும் மன்னர் உடைய உடைமையும்--மன்னரால் இன்னர் எனல்வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும் தம்மை உடைமை தலை. தம்மைக் கட்டுப்படுத்தி வாழும் ஒழுக்க நெறியே இம்மை மறுமைகளுக்கு நற்பயனாவது என்பது கருத்து. ‘இம்மைக்கும் உம்மைக்கும் தம்மை உடைமை தலை’ என்பது பழமொழி. 216. கொலையர்க்கு இன்பம் இல்லை உடலின் நன்மை கருதுபவர் தயிரைத் தயிராகவே கொள்ளலாம். ஆனால், அதனைக் கருதாதவர், சுவை யொன்றையே பெரிதாகக் கருதித் தயிரின் தன்மையை அழித்து மற்றொரு உணவுப் பொருளாக அதனை மட்டும் உண்பார்கள். அது போலவே, உள்ளத்திலே அறியாமை நிறைந்து மயக்குவதனாலே கொலை புரிந்து, மறுமை இன்பத்தை விரும்புவர் சிலர். அவர், அறிவோடே அனைத்து உயிருக்கும் அருள்புரிந்து ஒழுக மாட் டார்கள். பிறவற்றின் உயிரைச் சிதைத்து ஊனைத் துய்த்து உண்டு வருவார்கள். அவர்களுடைய நிலை மிகவும் பழியுடையதேயாகும். செறலிற் கொலைபுரிந்து சேணுவப்பார் ஆகி அறிவின் அருள்புரிந்து செல்லார்--பிறிதின் உயிர்செகுத்து ஊன்றுய்த் தொழுகுதல்; ஓம்பார் தயிர்சிதைத்து மற்றொன் றடல். உயிர்கள்பால் அருளுடையவராக நடந்து வருபவர் தாம் மறுமையிலே இன்பமடைவர். ஊன் விரும்பி உயிர்களைக் கொல்பவரும், மறுமை இன்பம் விரும்பி யாகபலி தேவபலி இடுவோரும் அதனை அடையமாட்டார். ‘தயிர்சிதைத்து மற்றொன் றடல்’ என்பது பழமொழி. 217. போரிடைப் புகும் நண்பன் ஒருவன் உண்மையுணராது சினங்கொண்டு பிறனொரு வன் மீது போரிட எழுந்தால், அப்படி எழுந்த போரினுள் இருவரிடை யினும் நண்புடையவனான ஒருவன் புகுந்து அவரைச் சமா தானம் செய்யவும் முயலலாம். அவர்கள் அவனுடைய சொல் லைக் கேட்டால் நன்றாயிற்று. அஃதன்றிப் பெரிதான வெறுப்பி னாலே மீண்டும் போரிடத் தொடங்குவாரானால், அது சமா தானம் செய்யப் புகுந்தவன் தலையினுள் புகுந்த குறுக்கண்ணி யாகி அவனுக்கே ஆபத்தாகி விடும். ஒருவன் உணராது உடன்றெழுந்த போருள் இருவரிடை நட்பான் புக்கால்--பெரிய வெறுப்பினால் பேர்த்துச் செறுப்பின் தலையுள், குறுக்கண்ணி யாகி விடும். தன் நண்பரான இருவரின் பகைமையை நீக்க இடையிலே புகும் நண்பனின் சொற்களை அவர்கள் கேளாவிட்டால், அந்த நண்பனின் முயற்சி பாழாவது மட்டுமன்று, அவன் இருவருக்குமே பகையாகவும் நேரலாம். ‘தலையுள் குறுக்கண்ணி யாகி விடும்’ என்பது பழமொழி. குறுக்கண்ணி - சுருக்காங்கண்ணி. 218. பிறருக்குத் துன்பம் செய்தல் புனங்களிலே விளங்கும் பொன்போன்ற மகரந்தங்களைச் சொரிந்து கொண்டிருக்கும் பூங்கொம்பைப் போன்ற அழகுத் தேமல்களை உடையவளே! நினக்குத் துன்பந் தருவதாக இருப்பது பிறருக்கும் துன்பந்தருவதே என்பதை அறிவாயாக. அதனால், செயலின் பயன் ஒன்றேனும் இல்லாமல், மன வேற்றுமை ஒன்றையே உள்ளத்திலே கொண்டு, அதனையே நினைத்து நினைத்துப் பிறர் துயரம், கொள்ளும் செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும். வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு நினைத்துப் பிறர்பணிப்பச் செய்யாமை வேண்டும் புனப்பொன் அவிர்சுணங்கின் பூங்கொம்பர் அன்னாய்! தனக்கின்னா இன்னா பிறர்க்கு. ‘தனக்குத் துன்பமாயிருக்கும் ஒன்று பிறருக்கும் துன்பமாகவே யிருக்கும்’ என்பதை உணரவேண்டும்; உணர்ந்து பிறர்க்குத் துன்பந்தரும் செயல்களைச் செய்தலைக் கைவிட வேண்டும் என்பது கருத்து. ‘தனக்கின்னா இன்னா பிறர்க்கு’ என்பது பழமொழி. 219. பகையை நீக்குதல் தனக்கு எதிராகத் தோன்றிய பகையினை, அது உண்டாகி இளைய தாயிருக்கும் காலத்திலேயே விரைந்து களைந்துவிட வேண்டும். அப்படிக் களைந்தால் அது முதிராது. மேலும், அந்தப் பகைவரின் நண்பர்களை யெல்லாம், அவர்கள் மிகவும் விரும்பத்தக்க காரியங்களைச் செய்து, முழுக்கவும் பிரித்து விடுதலும் நல்லது. அப்படிப் பிரித்து அவரைத் தனியாக்கி விட்டால், அந்தப் பகை எதனையும் செய்யச் சக்தியற்றதாய் விடும். தனிமரம் காடாவது இல்லை யல்லவா? எதிர்த்த பகையை இளைதாய போழ்தே கதித்துக் களையின் முதிராதே; தீர்த்து நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாம் தீரத் தனிமரம் காடாதல் இல். பகைவரை ஆரம்பத்திலேயே முடித்துவிடுவதுடன், அவரைச் சேர்ந்தவர்களையும் பிரித்துவிட்டால், அந்தப் பகை யால் எந்தத் தீமையும் நேராது. ‘தனிமரம் காடாதல் இல்’ என்பது பழமொழி. ‘தனிமரம் தோப்பாகாது’ என்பதும் இது போல்வதே. 220. ஆசையும் அழிவும் அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும் விருந் தெதிர் கோடலும் என்பவை இல்லறத்தாருக்கு உரிய மூன்று கடமைகள். அந்த மூன்றுக்கும் உதவ முடியாதபடி வறுமை யுற்று, பசியின் தோற்றமும் உடையவராவர் சிலர். அது, அவர் முன்பிறப்பிலே ஒழுகிவந்த செல்வ வளத்தை ஒட்டி வந்ததாகும். அப்பிறப்பிலே, பிறருக்கு உதவாது, தாம் மட்டுமே உடைதான அச்செயல் அவர்களைக் கும்பி என்னும் நரகத்திலும் கொண்டு தள்ளிவிடும். அதனால், தன் இச்சை என்று சொல்லப்படும் ஆசையானது, அம்பு போலத் தன் உள்ளத்தினுள்ளே புகுந்து தன்னை அழித்துவிடும் என்பதை ஒவ்வொருவரும் தெளிவாக உணர்வாராக. கொண்டொழுகும் மூன்றற்கு உதவாப் பசித்தோற்றம் பண்டொழுகி வந்த வளமைத்தங்--குண்டது கும்பியிலுந் திச்சென் றெறிதலால் தன்னாசை அம்பாயுள் புக்கு விடும். ‘தன்னாசை அம்பாய் உள்புக்கு விடும்’ என்பது பழமொழி. அதனை நீக்குவது சிறப்பு என்பது கருத்து. 221. உபகாரத்துக்கு அபகாரம் தாமாகவே நாடிவந்து, நம்மவர் என்று உரிமை பாராட்டி, நல்லமுறையிலே உதவிசெய்து காப்பாற்றினவருக்கு, அவர்க்கு வேண்டாத பிறரோடு சேர்ந்து ஒருவர் கேடு செய்ய நினைப்பது மிகவும் தவறாகும். ஒளியுடைய மணிகள் விளங்கும் நெடிய மலைத்தொடர்களுக்கு உரிய வெற்பனே! அதுதான், தான் ஏறியிருந்த கிளையினையே தனக்கு வரும் ஆபத்தைப்பற்றி நினையாமல், ஒருவன் வெட்டிவிடுவது போன்றதாகும். நாடி நமரென்று நன்குபுறந் தந்தாரைக் கேடு பிறரோடு சூழ்தல்--கிளர்மணி நீடுகல் வெற்ப! நினைப்பின்றித் தாமிருந்த கோடு குறைத்து விடல். இருக்க உதவிய கிளையை வெட்டும் மூடன், அதன் அழிவோடு தானும் வீழ்ந்து சாவது போல, உபகாரம் செய்த வர்க்கு அபகாரம் செய்பவர் தாமும் அழிவர் என்பது கருத்து. ‘தாமிருந்த கோடு குறைத்து விடல்’ என்பது பழமொழி. கோடு-மரக்கொம்பு, மரக்கிளை 222. தீயவரைத் தண்டித்தல் முடிவில்லாத உலகத்தின்கண் விளங்கவேண்டிய உறுதிப் பாடுகளான நல்லநெறிகளை மனத்திற் கொண்டு, நல்ல அற நெறிகளை மேற்கொள்ளாத வரையும், சான்றோர்கள், அவர்களு டைய வன்மையைச் சிதைத்து அடங்கச் செய்து, நல்லற நெறியை அறிவுறுத்துதல் முறையாகும். மனம் மாறு பட்டு அழுது பாலுண்ண மறுக்கும் குழந்தையைத் தாய் மார்கள் வருத்திப் பாலூட்டுவது போன்ற சிறந்த செயலாகும் அது. உலப்பில் உலகத்து உறுதியை நோக்கிக் குலைத்தடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல், மலைத்தழுது உண்ணாக் குழவியைத் தாயர் அலைத்துப்பால் பெய்து விடல். குழந்தையின் நலங்கருதிய தாய், அதனை வருத்தியும் அதற்கு பாலூட்டுவதுபோல, நல்லோரும், தீயோரை வருத்தியேனும் நன் னெறிப் படுத்துதல் வேண்டும் என்பது கருத்து. ‘தாயர் அலைத் துப்பால் பெய்து விடல்’ என்பது பழமொழி. அலைத்தல்-வருத்துதல்;அடித்தல். 223. சிலரிடம் அன்பு இருவரும் தம்முள் ஒத்த தகுதியுடையவராக அமைந்து, தம்முள பொருதலான சூதினிடத்தே, பக்கத்திலே இருப்பவன் ஒருவன், அவர்களுள் ஒருவன் பக்கமாகப் பொருந்தி ஆதரித்துக் கொண்டிருப்பான், அதுவே உலக இயல்பு. இது போலவே, பிள்ளைகள் மிகுந்த சிறப்புடையவர்களாயினும் தாய்மார்க்கு அவர்கள்பால் விளங்கும் பாசம் வேறு வகையின தாகவே இருக்கும். ஒக்கும் வகையான் உடன்பொரும் சூதின்கண் பக்கத் தொருவன் ஒருவன்பாற் பட்டிருக்கும் மிக்க சிறப்பின ராயினும் தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு. தாய்ப்பாசம் என்பது பிள்ளைகளின் சிறப்பு. செல்வம் முதலிய தகுதிகளைப் பொறுத்து அமைவதன்று; அது தாயுள் ளத்தின் தனித்த இயல்பால் அமைவது என்பது கருத்து. ‘தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு’ என்பது பழமொழி. பக்கம்-பட்சம் என்பதன் தமிழாக்கம்; பட்சம்-பாசம். 224. உறவினர்பாற் செல்க தானியங்கள் விளைகின்ற வயல்களினுள்ளே விளங்கும் நீர்ப்பூக்களை மிதித்தவாறு, நீர்ப்பறவைகள் ஆரவாரித்துக் கொண்டிருக்கும் பொய்கைகள் மிக்க நீர்வளமுடைய ஊரனே! தாய் மிதித்ததனால் குஞ்சுகள் ஒருபோதும் முடமாகிப் போய் விடுவதில்லை; ஆதலால், தம் மனம் வருந்துமாறு உரைத்து விட்டனர் என்றாலும், தமக்கு உறுதியானவைகளைத் தம் உறவினர் களிடத்திலே சென்று கேட்பதே நன்மையானதாகும். உளைய உரைத்து விடினும் உறுதி கிளைகள் வாய்க் கேட்பதே நன்றாம்--விளைவயலுள் பூமிதித்துப் புட்கலாம் பொய்கைப் புனலூர! தாய்மிதித்து ஆகா முடம். உறவினர் கடிந்தாலும் அதனால் பாதகமில்லை என்பது கருத்து. ‘தாய்மிதித்து ஆகா முடம்’ என்பது பழமொழி. ‘கோழி மிதித்துக் குஞ்சுக்குச் சேதமில்லை’ என இந் நாளிலே வழங்குவர். 225. சிறியவரிடமும் உறவு குடிப்பிறப்பினாலே மிகுதியும் சிறந்தவர்களான சிலர் தம் வறுமை காரணமாகக் குடிப்பிறப்பிலே மிகவும் தாழ்ந்தவர் களைச் சென்றடைந்து வாழ்கின்றார்கள். எமக்கு இச் செயல் மிகவும் இழிவைத் தருவதாகுமே! என்றும் எண்ணாதிருக்கி றார்கள். அவர்கள் நிலைமை அடைமானம் வைத்த நிலம்போல ஒளி மழுங்கியதாகவே இருக்கும். இறப்ப எமக்கீ திழிவரவென்று எண்ணார், பிறப்பிற் சிறியாரைச் சென்று--பிறப்பினால் சாலவும் மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே தால வடைக்கலமே போன்று. உடையவனிடம் இருந்த நிலமே, அவன் அடைமானம் வைத்த காலத்து, அடைமானம் பெற்றவனிடம் சென்றதும், ஒளி குன்றிக் காணப் படுவது போலச் சான்றோரும் கீழோரை அடுத்து வாழத் தொடங்கியதும், தம் ஒளி கெடுவர் என்பது கருத்து. ‘தால வடைக்கலமே போன்று’ என்பது பழமொழி. தாலம்-நிலம்; அடைக்கலம்-அடைமானம். 226. தலைமகனின் சிறப்பு தன் இயல்பான ஒளியினின்றும் மாறுபட்டு வேறென்றே போலத் தோன்றும் ஒரு விளக்கத்தை உடையதாக விளங்கி னாலும், நீரிலே படிந்து காணப்படும் மணியானது, அதனோடு ஒட்டாது, தான் என்றும் தன் சிறப்புடன் ஒப்பற்றதாகவே விளங்கும். அதுபோலத் தலைமகனுடைய பண்பினாலே விளங்கும் அவன் ஒளியானது தாற்றிப் போகப்பட்டதாயினுங் கூட நூறாயிரவருடைய பெருமைக்கு ஒப்பாகவே விளங்கும். நீறூர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல் வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகிப் தாறாப் படினும் தலைமகன் தன்னொளி நூறா யிரவர்க்கு நேர். தாற்றுதல் - புடைத்தாற்றிக் கழித்தல், நீறுபடிந்த மாணிக்கம் தன் ஒளி குறைவதில்லை. அதுபோலச் சான்றோர், சிறியவர் கூட்டத்தில் கலந்திருந்தாலும் தம் சான்றாண்மை குறையார் என்பது கருத்து. ‘தாறப் படினும் தலைமகன் தன்னொளி நூறா யிரவர்க்கு நேர்’ என்பது பழமொழி. 227. பொறுமை புகழ் தரும்! வானளாவ உயர்ந்து விளங்கும் பெரிய மூங்கில்களையு டைய மலைநாடனே! தம்முடன் கோபங் கொண்டவர்களாக, தமக்கு மிகவும் கொடுமையான செயல்களைச் செய்தவரையும் பொறுத்து, அவர்க்கும் நன்மையே செய்து ஒழுகுதலே புகழ் தருவதாகும். தாமும் பதிலுக்குக் கோபித்துத் தீமை செய்வதால் பயனில்லை. தாம் பொறுத்துக் கொள்ளுதலினாலே வருவது தான் சால்பு என்னும் சிறந்த பண்பாகும். கறுத்தாற்றித் தம்மைக் கடிய செய்தாரைப் பொறுத்தாற்றிச் சேறல் புகழால்--ஒறுத்தாற்றின், வானோங்கு மால்வரை வெற்ப! பயனின்றே தானோன் றிடவரும் சால்பு. கொடுமையைப் பொறுப்பதே சால்பு; அது புகழ் தரும் என்பது கருத்து. ‘தான் தோன்றிடவரும் சால்பு’ என்பது பழ மொழி. 228. பெரியோரைப் பழிக்கும் சிறியோர் சிறியவர்கள் பெரியவர்களை அவர்களுடைய ஒழுக்கத் தாலும் உணர்ந்து கொள்ளாமல், தம்மிடத்தே ஒரு தகுதி என்பதும் இல்லாமல், இவர்களும் எளியவரானவரே என்று தங்களுக்குச் சமானமாகக் கொண்டு, தகுதி அல்லாத சொற்க ளைக் கூறுதல் அறியாமைச் செருக்கின் பாற்பட்ட தாகும். அது, திங்களை நாய் குரைத்து நிற்பது போன்றதே! நெறியால் உணராது நீர்மையும் இன்றிச் சிறியார், எளியரால் என்று--பெரியாரைத் தங்கள்நேர் வைத்துத் தகவல்ல கூறுதல், திங்களை நாய்குரைத் தற்று. நாயின் குரைப்பால் திங்களின் பெருமை குன்றாது; நாயின் அறியாமையே உணரப்படும். அதுபோலவே, பெரியாரைப் பழிக்கும் சிறியவரே அவமானமடைவர் என்பது கருத்து. ‘திங்களை நாய்குரைத் தற்று’ என்பது பழமொழி. 229. செல்வமும் திட்பமும் பெரிய மலைநாடனே! ஒருவர் புண்ணியம் உடையவரா னால், அரிய விலைமதிப்புள்ள மாட்சியுடைய ஆபரணங்களும் நிரம்பிய பொருளும், இடம் மாறுபட்டாலுங் கூட வந்து வாய்த்துவிடும். அதற்குத் தகுதியில்லை என்ற காரணத்தாலும் அது அவரைவிட்டுப் பிரிவதில்லை. இத் தன்மையுடையதான செல்வத்தைக் காட்டிலும், உள்ளத்து உறுதியான நன்னெறி நிற்றலே சிறப்பு உடையதாகும். அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும் திருவுடைய ராயின் திரிந்தும் வருமால் பெருவரை நாட! பிரிவின் றதனால் திருவினும் திட்பம் பெறும். செல்வம் தீயோரிடத்தும் சேர்வதால், அதனை விரும்பாது, உறுதியுடன் ஒழுக்க நெறியிலே நிற்க வேண்டும் என்பது கருத்து. ‘திருவினும் திட்பம் பெறும்’ என்பது பழமொழி. 230. புண்ணியவான் பொருள் உடையான் பொருதலுக்கு உரிய படைக்கலனான வேல்போன்ற கண்களை உடையவளே! அருள் உடையவரான நல்லவரும், மற்றும் அருள் அற்றவரான பொல்லாதவரும் யாவராயினும், பொருள் உடையவர்களாயிருந்தனராயின், அவரைப் புகழ்ந்து பேசாதவர்கள் எவரும் இல்லையாவர். அதுதான், நல்ல ஊழ் உடையவர்களின் பொருளை, இருவர் தம்முள் போட்டி போட்டுக் கொண்டு மதித்து வாங்கிக்கொள்ள முயலுவது போன்றதாகும். அருள் உடையாரும் மற்று அல்லாதவரும் பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை; பொருபடைக் கண்ணாய்! அதுவே திருவுடையார் பண்டம் இருவர் கொளல். பொருளுடைமை நல்லூழால் வந்து அமையும்; அதனை உடையவர் பலர் புகழ்ச்சிக்கும் உரியராவர்; அவர் தன்மைபற்றி எவரும் கருத மாட்டார் என்பது கருத்து. ‘திருவுடையார் பண்டம் இருவர் கொளல்’ என்பது பழமொழி. இருவர் என்றது நல்லவரையும் கெட்டவரையும் ஆகும். 231. நீண்டநாள் தொடர்பு கரையோடு அலையெறிந்து பொருதும் கடலினையுடைய குளிர்ந்த நாட்டிற்கு உரியவனே! அழகிய தாமரைமேல் வாழ்பவ ளான திருமகளோடா யினுங்கூட நெடுநாள் கூடி இருப்பது துன்பமேயாகும். அதனால், தாயின் கருவினிடத்தே முதற் கொண்டு சேர்ந்திருந்தவரான சகோதரர்களேயானாலும், அவர்களும் தமக்குள் ஓரிடத்திலேயே நெடுநாள் கூடி வாழ்தலானது துன்பமாகவே முடியும். கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள் ஒருவழி நீடும் உறைதலோ துன்பம்; பொருகடல் தண்சேர்ப்ப! பூந்தா மரைமேல் திருவோடும் இன்னாது துச்சு. மிகவும் நெருங்கி நெடுநாள் இருந்தால் மனவேறுபாடு மிகுதல் கூடும்; அதனால், கொஞ்சம் தள்ளியிருந்தே உறவாடியி ருப்பது நல்லதென்பது கருத்து. ‘திருவோடும் இன்னாது துச்சு’ என்பது பழமொழி. துச்சு - நெடுநாள் கூடி வாழ்தல். 232. வலியப் பகையை வெல்லுதல் அலையைப் பொங்காது அடக்கியபின் கடலிலே நீராடுவோம் என்று காத்திருப்பவர் எவருமே இலர்; அது போலவே, புகழுடைய மன்னரிடத்தே பணி செய்பவராகப் புகுந்து, அவ்விடத்து அவையினுள், ‘பகைவரை வெல்வோம்’ எனத், தம் தகுதி தோன்ற உரைத்தார் ஒருவர்; பின்னர், ‘மலைபோலும் வேழங்களையுடைய வலிமையான தாயுள்ளதே பகை’ என்று கருதியும் அதற்கு அஞ்சாமல் போர் முனைக்குப் போகாதேயே, யாதாயினும் ஒன்றைச் செய்தாயினும் அதனை வெற்றி பெறவே துணிதல் வேண்டும். வரைபுரை வேழத்த வன்பகையென் றஞ்சா உரையுடை மன்னருள் புக்காங்கு அவையுள் நிரையுரைத்துப் போகாதொன் றாற்றத் துணிக திரையவித்து ஆடார் கடல். பகைவர் வலியடங்கியபின் வெல்வோமென்று இராது தந்திரத்தால் அவரை வெல்லும் வகையினை நாடுதலாவது செய்க என்பது கருத்து. ‘திரையவித்து ஆடார் கடல்’ என்பது பழமொழி. 233. பெரியாரும் சிறியாரும் கொக்கினம் இரையுண்டு ஆரவாரிக்கும் நீர்வளம் உடைய வயல்கள் செறிந்த ஊரனே “தகுதியுடையவர்களோடு ஒன்று பட்டிருந்து, அவருக்கு வேண்டியவராக நடந்து வந்தவர்; அதனால் இவரும் தகுதியால் மிக்க வரேயாவர்” என்று, சிறுமை யாளர்களை எவரும் தெளிந்து உறவாட மாட்டார்கள்; சர்க்கரை சோந்திருந்த தானாலும் மணலை எவராது தின்னலா மோ? தக்காரோடு ஒன்றித் தமராய் ஒழுகினார் மிக்காரா லென்று சிறியாரைத் தாம்தேறார் கொக்கார் வளவய லூர! தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல். ‘பெரியோர் தொடர்புடையவராயினும், சிறியோர் சிறுமை உடையவராகவே இருப்பவராதலால் அவர் உறவைக் கொள்வது கூடாது’ என்பது கருத்து. ‘தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல்’ என்பது பழமொழி. 234. பழிக்கும் குணம் பசுக்கூட்டங்களுக்கு மிகுந்த துன்பம் வந்த காலத்திலே, கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்துக் காத்தவன் திருமாலாகிய கண்ணன். அதனால், அவனையும் மாடுகளுக்குத் தக்க இடையனாவான் என்று உலகத்தார் சொல்லுவார்கள். ஆகவே, தேவர்களுக்கு உரைக்கும் வார்த்தை மக்களுக்கு உரைக்கும் வார்த்தை என்று எதனையும் சொல்ல வேண்டாம்; ஒருவரைத் தீங்காகப் பேசுகின்ற நாவிற்குச் சொல் முட்டுப்பாடே கிடையாது. ஆவிற்கு அரும்பனி தாங்கிய மாலையும் கோவிற்குக் கோவலன் என்றுலகம் கூறுமால்; தேவர்க்கு மக்கட்கு எனல்வேண்டா; தீங்குரைக்கும் நாவிற்கு நல்குரவு இல். அது தேவராயினும் மனிதராயினும் வரைதுறையின்றிப் பழிக்கும்; ஆவைக் காத்தற் கடவுளான மாலையே ‘மாடு மேய்க்கும் இடையன்’ என்றது. பிறரை விட்டுவிடுமோ என்பது கருத்து. ‘தீங்குரைக்கும் நாவிற்கு நல்குரவு இல்’ என்பது பழமொழி. நல்குரவு-வறுமை. 235. பெரியாரைச் சார்ந்தவரிடம் மலைநாட்டவர் செய்யும் வெறியாட்டுக்களின் ஆரவாரங் களைக் கேட்டு, ஓநாயினங்கள் அஞ்சி ஒதுங்கும் வெற்புக்கு உரியவனே! தம்முடைய பேதைமையே பற்றுக் கோடாகப் பெரியாரைச் சார்ந்திருப்பவர்கள் மேலாகச், சிறியவர்கள் பகைமைகொண்டு நடத்தல், காட்டினிடத்தே சென்றால் தீயநாய் கரடியையும் எழுப்புவதைப் போன்றதாகும். பெரியாரைச் சார்ந்தார்மேல் பேதைமை கந்தாச் சிறியார் முரண்கொண்டு ஒழுகல்--வெறியொலி கோனாய் இனம்வெரூஉம் வெற்ப! புலம்புகின் தீநாய் எழுப்புமாம் எண்கு. ‘கரடியை எழுப்பும் தீயநாய் அழிவதுபோல, பெரியாரைச் சார்ந்தவரிடமும் முரண்கொண்டாரும் அழிவர்’ என்பது கருத்து. ‘தீநாய் எழுப்புமாம் எண்கு’ என்பது பழமொழி. எண்கு - கரடி; தீநாய் - செந்நாய்; கோனாய் - ஓநாய். 236. திருவுடையார்க்கு நன்மைதான் தேனையுடைய பூக்கள் நறுமணம் வீசிக் கொண்டிருக் கின்ற கடற்சோலைகளையுடைய, விரிந்த அலைகள் வீசும் குளிர்ந்த கடற்கரை நாட்டிற்கு உரியவனே! இது மிகவும் தீமை தருவதாகும் எனப் பிறர் கருதும் வகையிலே பொருந்திய தொன்றும், செல்வம் ஆகிவரும் நல்வினை உடையவர்களுக்கு மிகவும் நல்லதாகவே முடியும். அதனால், நல்ல அதிர்ஷ்டம் உடையவர் களுக்குத் தீமைதரும் நாட்கள் என்பது எதுவுமே இல்லை என்றறிவாயாக. இதுமன்னும் தீதென்று இசைந்ததூஉம் ஆவார்க்கு அதுமன்னும் நல்லதே யாகும்--மதுமன்னும் வீநாறு கானல் விரிதிரைத் தண்சேர்ப்ப! தீநாள் திருவுடையார்க்கு இல். நல்ல வினைப்பயன் உள்ளவர்களுக்குத் தீநாளும் நன்னாளாகவே முடியும் என்பது கருத்து. ‘தீநாள் திருவுடை யார்க்கு இல்’ என்பது பழமொழி. ‘நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்’ என்பதையும் இங்கே நினைக்கலாம். 237. பாவிகளின் பொருள்! ஒல்லென்று ஒலிக்கின்ற கடல் நீரானது பார்மேல் ஏறிப் பாய்வது போலத் தோன்றும் துறைகளுக்கு உரியவனே; கேளாய்:-தீமையானவை எல்லாம், ஆகிவருவது போன்று முதலிலே காணப்பட்டாலும் உறுதியாகக் கெட்டே போகும். ஆதலால், பாவத்தைச் செய்பவர்களுடைய அரிய பொருளால் வரும் ஆக்கத்தை, நல்லவைகளைச் செய்து வாழ்பவர் என்றாவது விரும்புவார்களோ? விரும்பார். அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை நல்லது செய்வார் நயப்பவோ?--ஒல்லொலிநீர்ஷ பாய்வதே போலும் துறைவ! கேள்; தீயன ஆவதே போன்று கெடும். பாவிகளின் பொருளை ஒருபோதும் நல்லவர் விரும்ப மாட்டார் என்பது கருத்து. ‘தீயன ஆவதே போன்று கெடும்’ என்பது பழமொழி. அவர் பொருளாக்கமும் விரைவிற் கெடும் என்பது முடிவு. ‘ஆவதே போன்று தோன்றினாலும் முடிவிற் கெடும்’ என்பது கருத்து. 238. ஏசுவதன் கேடு தாமரை மலரினும் அழகுடையதாக விளங்கும் அகன்ற கண்களையுடையவளே! தம் மனம் நோவுமாறு தம்மை வைதவர் களைத் தாம் பொறுக்க மாட்டாது கோபித்தெழுகின்ற தன்மை உடையவர்கள், தம் நாவால் ஒருவரை வைதனர் என்றால், அந்த ஏச்சானது தன் வீட்டிற்குத் தானே தீ வைக்கும் தன்மை யோடு பொருந்துவதாகும். நோவ உரைத்தாரை தாம் பொறுக்க லாகாதார் நாவின் ஒருவரை வைதால், வயவுரை பூவிற் பொலிந்தகன்ற கண்ணாய்! அதுவன்றோ தீயில்லை ஊட்டும் திறம். தம்மை வைதவரைப் பொறுத்தலே பெருந்தன்மையும் புகழுமாம்; அன்றி, இகழ்தலோ அவை தராது இழிவே தருவதால் தன் வீட்டுக்குத் தானே கொள்ளி வைத்தது போன்றதாகும் என்பது கருத்து. ‘தீயில்லை ஊட்டும் திறம்’ என்பது பழமொழி. 239. எந்த நட்பும் பயன் தரும் காட்டினையும் வெற்றி கொண்டு நறுமணங் கமழுகின்ற கூந்தலை யுடையவளே! தன்னோடு நட்புடையதாயிருந்தால், நாயும் நல்லமுயலைக் கொணர்ந்து உண்பியாதோ? அதனால், தாம் நட்புச் செய்து வாழ்வதற்குத் தகுதியுடையவர் தாமா என்று ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டிய தில்லை. யாருடைய நட்பேயா னாலும், அந்த நட்பை விடாது கொள்ளுதலே வேண்டும். தாம்நட்டு ஒழுகுதற்குத் தக்கார் எனல் வேண்டா; யார்நட்பே யாயினும் நட்புக் கொளல்வேண்டும் கானட்டு நாறும் கதுப்பினாய்! தீற்றாதோ நாய் நட்டல் நல்ல முயல்? நாயும், தனக்கு வேண்டியவர்க்கு முயலை வேட்டையாடி வந்து உண்பிப்பது போல, யாவர் நட்பாயினும் அந்த அளவிலே பயன் தருவதாகவே இருக்கும். ஆகவே, யாவரையும் நட்பினராகக் கொள்ளுதலே சிறந்தது என்பது கருத்து. ‘தீற்றாதோ நாய் நட்டால் நல்ல முயல்’ என்பது பழமொழி. 240. பல துளி பெருவெள்ளம்! ஒருவருடைய பொருள் வருவாயானது சிறிதாகவே இருந் தாலும், நாள்தோறும் வந்து சேருமானால், நாளடைவிலே பெரும் அளவினதாகத் தொகுப்புண்டு பெருஞ் செல்வமாக ஆகி விளங்கும். ஒருபடியே பல நட்சத்திரங்களும் சேர்ந்து ஒளிசெய்து நின்றால், உலகமெல்லாம் இருள் போக்கி விளக்கமுறச் செய்யும். மழைத்துளிகளும் நெருங்கி நின்று தொடர்ந்து வீழ்ந்தால் வெள்ளம் போல் நீர்ப்பெருக்கையும் தரும். அது போலவே, வருமானமும் என்க. வருவாய் சிறிதெனினும் வைகலும் ஈண்டின் பெருவாய்த்தாய் நிற்கும் பெரிதும்--ஒருவாறு ஒளியீண்டி நின்றால் உலகம் விளக்கும் துளியீண்டில் வெள்ளந் தரும். ‘பலதுளி பெருவெள்ளமாவது போல சிறுசிறு வருவாயும் முறையே சேர்த்துவைக்கப் பெற்றால் பெருஞ்செல்வமாகும்’ எனச் சேமிப்பின் சிறப்புக் கூறப் பெற்றது. ‘துளியீண்டில் வெள்ளந் தரும்’ என்பது பழமொழி. ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதும் நினைக்க. 241. துறவும் உடம்பும் தன்னுடனே நட்புச் செய்தவரை வளமுடையவராக ஆக்கியும், தன்னுடனே பகை கொண்டவரை அழித்தும், கூர்மையான பற்களையும், பட்டாடை சூழ்ந்திருக்கும் துடி போலும் இடையினையும் உடைய மகளிர்பாற் காதல் கொண்டும், உலகி யலை ஒட்டி வாழத் தொடங்கினவர்கள், இல்லற வாழ்விலே திளைத்தபின்னும், அதன் துன்பங்களை உணர்ந்து துறவாமலி ருந்தால், அவர்கள் உடல் எடுத்ததனால் தான் பெற்ற பயன்தான் என்னவோ? நட்டாரை யாக்கிப் பகைதணித்து வையெயிற்றுப் பட்டார் துடியிடை யார்ப்படர்ந்து--ஒட்டித் தொடங்கினார் இல்லத்த தன்பின் துறவா உடம்பினான் என்ன பயன்? இளமையில் துறவே சிறந்தது. அது இயலாது போயினும், இல்வாழ்விலே எல்லாம் அநுபவித்தபின்பாவது துறவு பூண்க என்று கூறுவது இது. ‘துறவா உடம்பினான் என்ன பயன்’ என்பது பழமொழி. 242. உறவும் உதவியும் நீர்வளத்தினையுடைய ஊரனே! ஒரே குடியிலே தோன்றி யவர்கள் முன்பு ஒரு காரணத்தினாலே இன்னாதவராகிப் பிரிந்து இருந்தனர் என்றாலும், குடும்பத்தையே முழுக்கக் கவிந்து கொள்ளும் தன்மையுடைய பெருந்துன்பமானது வந்தால், அதன் பின்னரும் இன்னாதவராகிப் பிரிந்து இருக்கவே மாட்டார்கள். ஆனால், மற்றையவரோ பொன்னாகப் போற்றி உறவுகொண் டாடிய காலத்திலுங்கூடத் துன்பத்திலே வந்து உதவமாட்டார்கள், அவர்கள் அவ்வளவு நெருக்க முடையவர் அல்லர் ஆதலி னால். முன்னின்னார் ஆயினும் மூடும் இடர்வந்தால் பின்னின்னார் ஆகிப் பிரியார் ஒருகுடியார் பொன்னாச் செயினும் புகாஅர் புனலூர! துன்னினார் அல்லார் பிறர். ‘தானாடா விட்டாலும் தன் சதையாடும்’ என்பது போல ஒரே குடியிலே பிறந்தவர் தவறாமல் ஆபத்துக்காலத்திலே ஒன்று சேர்வார்கள் என்பது கருத்து. ‘துன்னின்னார் அல்லார் பிறர்’ என்பது பழமொழி. ‘பிறர் அவ்வாறு ஒன்று சேரார்’ என்பது கருத்து. 243. ஊசியும் நூலும் இனிய ஒலியுடைய வெற்புக்கு உரியவனே! தைக்கும் ஊசி போகும் வழியே தான் நூலிழையும் போகும்; அதுபோலத் தன்னை ஒருவர் மதித்துத் தம்மவர் என்று உறவு கொண்ட காலத்திலே, என்னவோர் ஆபத்தானாலும், அவர் செய்வதைத் தானும் செய்வதே முறையாகும். அதனால், வரும் இடர்கள் என்னவோ? தன்னை மதித்துத் தமரென்று கொண்டக்கால் என்ன படினும் அவர்செய்வ செய்வதே; இன்னொலி வெற்ப! இடரென்ன? துன்னூசி போம்வழி போகும் இழை. உறவாடிப் பழகியவரின் துன்பத்தில் தாமும் உடன் இருந்து உதவவேண்டும் என்பது கருத்து. ‘துன்னூசி போம்வழி போகும் இழை’ என்பது பழமொழி. 244. அடங்காத சினம் உடையவன்! காற்றினாலே, அலைகள் கரையின் மீதும் ஏறி உலாவுகின்ற, மிக்க நீர்வளமுடைய கடற்கரைக்கு உரியவனே! ஆறாத சினத்தை உடையவனாக விளங்கும் ஒருவனை அறிவில்லாதவன் என்றே ஒதுக்குக. அவனை விட்டு விலகி நடப்பதே சிறப்பு என்பார்கள். மனத்திலே தெளிவற்ற ஒருவனைத் தெளிவுடை யவனாகக் கொண்டு பழகுதல் மிகவும் அரிதாகும். ஆறாச் சினத்தன் அறிவிலன்; மற்றவனை மாறி யொழுகல் தலையென்ப--ஏறி வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப! தெளியானைத் தேறல் அரிது. அடங்காத சினம் உடையவனிடத்தேயும் அறிவற்றானிடத் தேயும் எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டா மென்பது கருத்து. ‘தெளியானைத் தேறல் அரிது’ என்பது பழமொழி. 245. தீயவர் நட்பின் கேடு யாழினின்று எழும் இன்னிசைபோன்ற இனிதான பேச்சி னையுடைய, மழலைச்சொற்களை உடையவளே! முறைப்படத் தமக்கு உறவாய் அமைந்தவர்களின் தொடர்பைக் கைவிட்டு விட்டு, ஒன்றுக்கும் உதவாத கீழ்மக்களின் தொடர்பைப் பெருக்கிக் கொள்ளுதல் கேடு தருவதாகும். இருக்கும் இனிமை நிரம்பிய பலாமரத்தினை வெட்டிவிட்டு எட்டி மரத்தை நட்டு வைத்து வளர்ப்பது போன்ற பேதைமையான செயலாகும். ஊழா யினாரைக் களைந்திட்டு உதவாத கீழாயி னாரைப் பெருக்குதல்--யாழ்போலும் தீஞ்சொல் மழலையாய்! தேனார் பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டு விடல். உறவினரை விட்டுவிட்டு அயலாருள் கீழ்மக்களா னோ ருடன் கொள்ளும் உறவின் தீமை கூறப்பட்டது. அவரால் கேடே விளையும் என்பதும், அவர் உறவு வெறுக்கத்தக்கது என்பதும் கருத்து. ‘தேனார் பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டு விடல்’ என்பது பழமொழி. இருக்கிற பலாவை வெட்டி விட்டுக் காஞ்சிரையை நட்டு வளர்ப்பது என்பது மிகவும் அறிவீனமான செயல் என்பதும் ஆம். 246. நன்மையே கருத வேண்டும் சுருண்டு தழைத்ததும், ஐம்பகுதியாக முடிப்பதுமான கூந்தலையுடையவளே! அப்பம் தின்பவர்கள், அதனைத் தம் கையிலே வாங்கி உட்கார்ந்துகொண்டு அதிலுள்ள தொளை கள் எவ்வள வென்று எண்ணிக் கொண்டிருக்க மாட்டார்கள். அதுபோல, ‘உறுதியாக நிலைபெற்ற பண்பில்லாத வர்கள் எல்லாம் நேர்மை யுடையவர் அல்லர்’ என்று, அவர்கள் மனம் புண் படும்படியாக ஒரு சொல்லைச் சொல்லாது, அவரிடமும் பெற்றுக் கொள்ளக் கூடிய உறுதியான பயன்களை மட்டுமே பெற்றுக் கொண்டு இன்புறுக. நிலைஇய பண்பிலார் நேரல்லர் என்றொன்று உளைய உரையார் உறுதியே கொள்க; வளையொலி ஐம்பாலாய்! வாங்கி இருந்து தொளையெண்ணார் அப்பந்தின் பார். ‘வடையைத் தின்னச் சொன்னார்களா, தொளையை எண்ணச் சொன்னார்களா?’ எனவும் இது வழங்கும். எவரிட மும் உள்ள பயனுடைய பண்பைப் போற்றிக் கொள்ள வேண்டுமே யல்லாமல் குறைகளை எடுத்துக் கூறுவது முறையன்று என்பது கருத்து. ‘தொளையெண்ணார் அப்பந்தின் பார்’ என்பது பழமொழி. 247. வெற்றியே சிறப்பாகும் தம்முடைய தேனுண்ணும் விருப்பத்தினாலே வண்டுகள் பின் தொடர்கின்ற, ஒளியுடைய மலர்போன்ற கண்களை உடையவளே! தம் உரையைக் கேட்கும் தகுதி உடையவர்களை ஆராய்ந்து, சொல்லப்படும் பொருளினிடத்தே அவர்களுக்கு உள்ள விருப்பத்தையும் தெரிந்து கொண்ட பின்னரே, அறிஞர், தாம் அவரிடத்தே சொல்லக்கருதியதைச் சொல்லத் தொடங்கு வார்கள். தாம் தோல்வியுற்றுப் போகக் கூடிய எதனையும் மேற் கொண்டு, அவையினிடத்தே சென்று, அறிவுடையோர் ஒரு போதும் பேச மாட்டார்கள். கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண் வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர்--வேட்கையால் வண்டு வழிபடரும் வாட்கண்ணாய்! தோற்பன கொண்டு புகாஅர் அவை. அவையில் தன் சொற்களை ஆதரிக்குமாறு பேசுவதே சொல்லாற்றல் ஆகும். அவையிடத்துத் தோல்வியே நேரும் என்றால், அத்தகைய ஒன்றைச் சென்று உரைப்பதே தவறு. ‘தோற்பன கொண்டு புகாஅர் அவை’ என்பது பழமொழி. 248. முட்டாளின் கேள்வி! தம்முடைய மானமும் நாணமும் இன்னவென்றே அறியாத வரான தன்மையுடையோர், தம்முடைய மதியானது மயங்கியவர் களாக, அறிவான செய்திகளை ஆராய்ந்து அறிந்து கொண்டிருப் பவர் கூடியிருக்கும் சபையிலே சென்று, தாமும் இருந்து கொண்டு, ஞான விஷயங்களைப் பற்றி வினாவி உரைத்தல் கேலிக்கு இட மாகும். பகல் நேரத்திலேயே யானையின் பல்லைப் பிடித்துக் காண முயல்பவன் செயல் போல அதுவும் நகைப்பிற்கே இடமாகும். மானமும் நாணும் அறியார் மதிமயங்கி ஞானம் அறிவார் இடைப்புக்குத் தாமிருந்து ஞானம் வினாஅய் உரைத்தல், நகையாகும் யானைப்பல் காண்பான் பகல். கேள்வியாலும் விடையாலும், அறிவுடையவனே ஒரு பொருளை ஆராய்ந்து நுட்பம் காணலாம்; அறிவிலிக்கு அது இயலாது. அவன் முயன்றால், மானமும் நாணமும் கெட நேரும் என்பது கருத்து. ‘நகையாகும் யானைப்பல் காண்பான் பகல்’என்பது பழமொழி. 249. பகுத்து உண்டு வாழ்க! கொடுப்பதற்கு முடிந்த ஒன்றைக் கொடுக்கலாம். கொடுக்க முடியாததை இல்லை என்றும் சொல்லலாம். அதனால் பழியில்லை. அதுவே உலகத்து இயற்கையும் ஆகும். அப்படி யில்லாமல், ‘இவன் எனக்கு உணவு தருவான்’ என்று நம்பி ஆசைகொண்டு வந்தவன் ஒருவன் பசியோடு காத்து நிற்க, அவனோடு, உள்ளதை ஒருவன் பகுத்து உண்ணாமல் இருந்தான் என்றால், அது மிகவும் பழியானதாகும். பசித்து வந்தவனின் ஆர்வத்தைக் கொன்ற அவன், சென்று பெறுவதான மோட்ச உலகம் என்பதும் யாது மில்லை. இசைவ கொடுப்பதூஉம் இல்லென் பதூஉம் வசையன்று வையத்து இயற்கை;--அஃதன்றிப் பசைகொண் டவனிற்கப் பாத்துண்ணா னாயின் நசைகொன்றான் செல்லுலகம் இல். பொருள் உதவினாலும் உதவாவிட்டாலும், பசியென்று வந்தவனுடன் பகுத்து உண்ணுதலை மட்டும் தவறாது செய்ய வேண்டுமென்பது கருத்து. ‘நசைகொன்றான் செல்லுலகம் இல்’ என்பது பழமொழி. நசை-பசி தீரும் என்னும் ஆர்வம். 250. பாவிகள் ஒழிக! பழிபாவங்களின் பயன்களை ஆராய்ந்து எவரிடத்தும் கண்ணோட்டம் உடையவராக விளங்காதவராகவும், எத்தகைய தீய செயல்களையும் செய் வதற்கு அஞ்சாதவர்களாகவும், தம்மைச் சேர்ந்தவர்களையெல்லாம் சிறுமை யாகப் பேசுபவர்களாகவும், மிகவும் நெருங்கிய உறவினர்கட்கும் அவர் வெறுப் பவைகளையே எப்போதும் செய்பவர்களாகவும் வாழ்கின்றபாவி களுக்கு, நஞ்சுகூட இல்லாமற் போயிற்றோ? தேர்ந்துகண் ணோடாது தீவினையும் அஞ்சலராய்ச் சேர்ந்தாரை யெல்லாம் சிறிதுரைத்துத்--தீர்ந்த விரகர்கட் கெல்லாம் வெறுப்பனவே செய்யும் நரகர்கட்கு இல்லையோ நஞ்சு? அத்தகைய தீயவர் இருப்பதைவிட இறப்பதே நல்லது என்பது கருத்து. ‘நரகர்கட்கு இல்லையோ நஞ்சு’ என்பது பழமொழி. 251. பேச்சினால் அடங்கார்! பல்லியின் முட்டைகளைத் தெரித்துப் போட்டதுபோல உயர்ந்த பெரிய புன்னைமரத்தின் பொறி நிறத்தையுடைய பூக்களின் இதழ்கள் வீழ்ந்து கிடக்கும். பொங்கும் நீரினையுடைய கடற்கரைக்கு உரியவனே! நம்மை அவமதித்துப் பேசுபவர்களைச் செயலாலேயே அடக்க வேண்டும். வாயால், அவர்க்கு மேலாகப் பேசும் கடுஞ்சொற்களால் மட்டும் பயனில்லை. நரியின் ஊளைச் சத்தம் கடல் ஒலியைத் தாழ்விக்காதது போல, நாம் அடர்த்துச் சொல்லும் சொற்களும் அவர்கள் பாற் செல்லுபடியாகாதுதான் போகும். உரைத்தாரை மீதூரா மீக் கூற்றம்; பல்லி நெரித்த சினைபோலும் நீளிரும் புன்னைப் பொறிப்பூ இதழுறைக்கும் பொங்குநீர்ச் சேர்ப்ப! நரிக்கூக் கடற்கெய்தா வாறு. தீயவகையில் பேசுபவர்களை அடக்கி ஒடுக்குவதன் இன்றியமையாமை சொல்லப்பட்டது. ‘நரிக்கூக் கடற்கெய்தா வாறு’ என்பது பழமொழி. 252. தீமையே செய்வார் வறுமை அடைந்தவர்களானால் தீய செயல்களையே செய்து வாழ்வார்கள். வறுமை இல்லாது செல்வம் உடையவரான காலத்தும், மறுமைக்குச் செல்லும் நன்னெறியை அறியாதவர்களாக, அப்படிப்பட்ட நற்செயல்களைக் கெடுத்தே நடந்து வருவார்கள். கல்வி அறிவு இல்லாத கயமைக் குணம் உடையவர்களின் இந்த இயல்பினைப் போலவே, நரிக்கும், உணவு கிடைத்தற்கு நல்ல காலம் என்பதும் கெட்ட காலம் என்பதும் என்றும் கிடையாதாகும். அல்லவை செய்வ அலப்பின்; அலவாக்கால் செல்வது அறிகலராய்ச் சிதைத் தெழுப; கல்லாக் கயவர் இயல்போல் நரியிற்கு ஊண் நல்யாண்டும் தீயாண்டும் இல். எக்காலத்தும் பிணம் முதலியவற்றைத் தின்று வாழ்வது நரி. அதற்கு நல்லகாலம் கெட்டகாலம் என்று யாது இருக்க முடியும்? அதுபோலவே கீழான கயவரும் எப்போதும் கீழ்மை யிலேயே நடப்பவராதலால், அவர்க்கு வறுமையும் வளமையும் ஒன்று தான் என்பது கருத்து. ‘நரியிற்கு ஊண் நல்யாண்டும் தீயாண்டும் இல்’ என்பது பழமொழி. இழிந்த செயல்களையே நாடுபவர் எப்போதும் கவலையற்றவராகத் திரிவர் என்பதாம். 253. வெந்நீரும் சான்றோரும்! விறகின் இயல்புகளை எல்லாம் விசாரித்து, மிகவும் நல்ல விறகினையே கொண்டுவந்து காய்ச்சினாலும், மிகவும் கொதித்த அந்த வெந்நீர் வீட்டைச் சுட்டுப் பொசுக்குவதில்லை. அதுபோலவே, மிகவும் சிறுமையான பண்புடையவர்கள் தமக்கு அளவற்ற துன்பத்தையே செய்து உள்ளம் கொதிக்குமாறு செய்தாலும், குடிப்பிறப்பினாலே மாண்பு உடைய வர்கள், அவர்கள்மேற் கோபங்கொண்டு அவர்களை வருத்த மாட்டார்கள். இறப்பச் சிறியவர் இன்னா செயினும் பிறப்பினால் மாண்டார் வெகுளார்--திறத்துள்ளி நல்ல விறகின் அடினும், நனிவெந்நீர் இல்லம் சுடுகலா வாறு. ‘வெந்நீரால் வீடு வேகாது’; ‘கீழோர் கொடுமையால் பெரியோர் சினங் கொள்ளார்’ என்பது கருத்து. ‘நல்ல விறகின் அடினும், நனிவெந்நீர் இல்லம் சுடுகலா வாறு’ என்பது பழமொழி. 254. நல்லறம் நன்மை தரும் மேகலையைச் சுமப்பதனாலே இற்று விடுவது போல விளங்கும் நுண்மையான இடையினை உடையவளே! தான் செய்த நல்ல தருமங்கள் ஒருவனுக்குச் செய்யும் நன்மையைத் தன்னுடைய சுற்றத்தாருங்கூடச் செய்ய மாட்டார்கள். அதனால், அறம் செய்வதைப் பல நாளும் தொடர்ந்து செய்ய முடியாதவரே யானாலும், சில நாட்களாயினும் சிறந்த வழிகளாலே ஒவ்வொரு வரும் செய்வார்களாக. பலநாளும் ஆற்றார் எனினும், அறத்தைச் சிலநாள் சிறந்தவற்றாற் செய்--கலைதாங்கி நைவது போலும் நுசுப்பினாய்! நல்லறம் செய்வது செய்யாது கேள். தருமத்தை நெடுகத் தொடர்ந்து செய்ய முடியாமற் போனாலும், முடிந்த வரையிலும் சிலகாலமாவது செய்க; அது அந்த அளவுக்கு நன்மை தரும் என்பது கருத்து. ‘நல்லறம் செய்வது செய்யாது கேள்’ என்பது பழமொழி. ‘கலை’ என்றது மேகலையை. 255. பொருளைப் பாதுகாத்தல்! வானவர்கள், அந்தக் காலத்திலே அமுதத்தை மிகவும் விழிப்போடுதான் பாதுகாத்தார்கள், என்றாலும், தன் தாயான விநதையை சிறைமீட்பதற்காக அது கருடனால் எடுத்துச் செல்லப்பட்டது. ஆகவே, நல்ல காவலைவிட ஒரு பொருளைப் பாதுகாப்பதற்குக் கொடிய அரணே நன்மையானதாகும். பாது காப்பற்ற பொருந்தா இடத்திலே ஓர் அருமையான பொருளை வைக்கவே கூடாது. வைத்தால் கண்ணிமையாது காவல் செய் தாலும் அதனால் பயனில்லை; அப்பொருள் கள்வரால் திருடப் பட்டு விடுதலும் நேரலாம். அமையா இடத்தோர் அரும்பொருள் வைத்தால் இமையாது காப்பினும் ஆகாது--இமையோரும் அக்காலத்து ஓம்பி அமிழ்துகோட் பட்டமையால் நற்காப்பின் தீச்சிறையே நன்று. பொருளைக் கடுமையான அரணிடை வைத்துக் காக்கும் காவல் முறைமை கூறப்பட்டது. ‘நற்காப்பின் தீச்சிறையே நன்று’ என்பது பழமொழி. 256. வலியவரைப் பகைத்தல் குன்றுகளும் தேன் பொதிகளும் தம்முள் விரவிக் கலந்தனவாகத் தோன்றும் வெற்புக்கு உரியவனே! பகைத்தால் தம்மை வென்று அழிக்கக் கூடிய வலிமை உடையவர்களை மனங்கொதிக்குமாறு செய்தல் கூடாது. அவர் சினங் கொள்வ தற்கான ஒரு காரியத்தோடு நிலைபெற்றுச் சிறியோர் பலப்பல செயல்களையும் செய்தனரானால், அது மிகவும் நன்மையோடு சேர்ந்த ஒரு தன்மை உடையதே அன்று. வென்றடு கிற்பாரை வெப்பித் தவர்காய்வது ஒன்றொடு நின்று சிறியார் பலசெய்தல் குன்றொடு தேன்கலாம் வெற்ப! அதுபெரிதும் நன்றொடு வந்ததொன் றன்று. தம்மை அழிக்கும் வலிமையுடையவரெனத் தெரிந்தும் அறியாமையால், அவர்க்குச் சினமுண்டாகத் தக்கவற்றையே செய்பவர் கெடுவர் என்பது கருத்து. ‘நன்றொடு வந்ததொன் றன்று’ என்பது பழமொழி. அச்செயல் அவருக்கு நன்மை தராது என்பதும் கேட்டையே தந்துவிடும் என்பதும் கருத்து. 257. தருமத்தை எப்போதும் செய்க தாம் சாவதற்கு முன்பாகவே, பலவகைப்பட்ட நல்ல செயல்களை எவ்விதமானதொரு ஆராய்ச்சியும் செய்து காலங் கடத்தாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்யாதவர்கள், தமக்குச் சாவு நெருங்கியதெனக் காட்டும் நோய்வந்த காலத்திலே, பின்னைச் செல்லும் வழிக்கு உறுதியானவற்றைச் செய்ய நினைந்தாலும், அவர் கருத்துப் படி அறம் செய்பவரைக் காண இயலாமற் போவார்கள். ‘நாயைக் கண்டால் கல்லைக் காணாதவாறு’ போன்றதே அவர் நிலையும் எனலாம். மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து நோய்காண் பொழுதின் அறஞ்செய்வார்க் காணாமை, நாய்காணின் கற்காணா வாறு. இன்புற்று வாழ்ந்த பொழுது தருமஞ் செய்யாதவர் நோயுற்றுச் சாகப்போகும் காலத்திலே தம் பொருளைத் தருமம் செய்யச் சொன்னாலும், அதனைத் தமக்கு என எண்ணியிருக்கும் உரிமை யுடையார் செய்யமாட்டார் என்பதும், அவராலும் செய்யவியலாது என்பதும் கருத்தாகும். ‘நாய் காணின் கற்காணா வாறு’ என்பது பழமொழி. 258. சொல்பவர் சொல்லையே கொள்க அருவிகள் தெளிவான ஒலியோடு வீழ்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் மலைநாடனே! பார்ப்பார்களும், நாயானது கௌவிக் கொண்டுவந்து கொடுத்தால் உடும்பினையும் தின் பார்கள். அதுபோலவே, கள்ளியிடத்தே பிறக்கும் அகிலையும், கருமையான காக்கை கரைவதனையும் நன்மை யெனவே கொள் வார்கள். அவைபோல, எவர் வாயிடத்துப் பிறந்த நல்லுரை களையும் தள்ளாது ஏற்றுக் கொள்க. அவற்றை ஒருபோதும் இகழ வேண்டாம். கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல் எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத்--தெள்ளிதின் ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு. அகில் கள்ளியிற் பிறப்பினும் மணமுடையது! காக்கை கரைவது விருந்து வருமென்பதன் அறிகுறி; அந்தப் பயன் கருதியே அவற்றை அனைவரும் வரவேற்பர். கீழான நாய் கௌவிக் கொணர்ந்ததாயினும் மேலான பார்ப்பாரும் உடும்பின் பயன் கருதி, அதனை வெறுக்காது தின்பர். ஆகவே, கீழோர் சொல்வன வற்றுள்ளும் நல்லனவற்றை இகழாது கொள்க என்பது கருத்து. ‘நாய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு’ என்பது பழமொழி. அக்காலத்தில் பார்ப்பாரும் ஊன்தின்பாராய் இருந்தனர் என்பது இதனால் அறியப்படு கின்றது. ஊனுண்ணா மையை வலியுறுத்தியது சமணமே யாகும். 259. தீயோரையும் மன்னித்தல் ஒருவரைப் பார்த்ததும், அவரருகே ஓடிச்சொன்று, சினங் கொண்டதாகி, நாய் ஒன்று அவரைக் கவ்வினாலும், அதன் மேற் சினங்கொண்டு மீண்டும் அந்த நாயைக் கடித்தவர்கள் எனச் சொல்லப்படுபவர் யாருமே இல்லை. அவ்வாறே, நற்குணமாகிய தகுதிகள் ஏதும் இல்லாதவர்கள், தம்முடைய அறிவு நிரம்பாமை காரணமாகத் தம்மைத் துன்புறுத்தி னாலும், அதனால் சினமிக்கவராகத், தாமும் அவரை மீண்டும் வருத்துதல் சான்றோர்களுக்குக் கோட்பாடே அன்று. நீர்த்தகவு இல்லார் நிரம்பாமைத் தந்நலியின், கூர்த்தவரைத் தாநலிதல் கோளன்றால்--சான்றவர்க்குப் பார்த்தோடிச் சென்று கதம்பட்டு நாய்கவ்வின் பேர்த்துநாய் கவ்வினார் இல். தமக்குத் தீமைசெய்த அறிவிலிகளின் செயலைப் பொறுப் பதே சான்றோர்களின் கொள்கையாகும் என்பது கருத்து; அவருக்கு மீண்டும் தீமை செய்ய நினையாதிருப்பதும் அவர் பண்பாகும் என்பதும் கூறப் பெற்றது. ‘நாய் கவ்வின் பேர்த்து நாய் கவ்வினார் இல்’ என்பது பழமொழி. 260. கருமியின் செல்வம் முழக்கமிட்டு வீழும் அருவிகளும், மூங்கில்கள் முற்ற அவற்றினின்றும் உதிரும் முத்துக்களும் ஆகிய வளமுடைய மலைநாடனே! தான் பெற்ற செல்வத்தை வறுமையாளர்க்கு வழங்கித் தருமஞ் செய்தலும், தான் அநுபவித்து வாழ்தலும் என்ற பயனுள்ள செயல்களைச் செய்யும் தெளிவற்றவன் பெற்றுள்ள முழங்கும் முரசுகளை உடைய அரசரோடு ஒத்த செல்வமானது, நாய் பெற்ற முழுத் தேங்காயோடு ஒப்புடை யுடையதே யாகும். வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற முழங்கும் முரசுடைச் செல்வம்--தழங்கருவி வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ நாய்பெற்ற தெங்கம் பழம். நாய்க்குக் கிடைத்த முழுத் தேங்காயை அதனாலும் தின்ன முடியாது; பிறர் எடுத்துச் சென்று அநுபவிக்கவும் அது விடாது. அதனைப் போன்றே கருமியின் செல்வமும் அவனுக்கும் பிறர்க்கும் பயன்படாமல் அழியும் என்பது கருத்து. ‘நாய் பெற்ற தெங்கம்பழம்’ என்பது பழமொழி. தெங்கம் பழம் - தென்னை நெற்று; முற்றிய தேங்காய். 261. சிறியோர் தகுதியுடையவர் ஆகார் புள்ளிகளையுடைய வண்டினம், பூக்களின் மேலே மொய்த்துக் கொண்டு இசைபாடிக் கொண்டிருக்கின்ற ஊரனே! பெரியாருக்குச் செய்கின்ற சிறப்பினை, அப்படியே சிறியவர் களுக்கும் விருப்பமுடன் செய்து விடுத லானது மிகவும் முறை யற்றதாகும். அது குதிரையின் மேலே இடுவதற்குரிய சேணத்தை, நாயின்மேலும் இடுவதுபோன்ற பயனற்றதும் அறிவற்றதுமான செயலுமாகும். பெரியார் செய்யும் சிறப்பினைப் பேணிச் சிறியார்க்குச் செய்து விடுதல்,--பொறிவண்டு பூமேல் இசைமுரலும் ஊர! அதுவன்றோ நாய்மேல் தவிசிடு மாறு. சிறுமதியாளரைக் கௌரவித்தாலும், அவர் அந்தக் கௌரவத்திற்குத் தகுதி உடையவராக விளங்குவதில்லை. அவர் சிறுமைக் குணமே அவரிடம் மிகுந்திருக்கும் என்பது கருத்து. ‘நாய் மேல் தவிசு இடுமாறு’ என்பது பழமொழி. அதனால் பயனில்லை என்பதும் சொல்லப்பெற்றது. 262. கோணல் புத்தி உடையவன் நமக்கு வருத்தம் உண்டாகுமாறு, சிரமப்பட்டு முயன்று வன்மையாகக் கட்டிவைத்த போதும், நாயின் வால் தன் கோணலிலிருந்து திருந்தி நேராதல் என்பது என்றுமே இல்லை யாகும். அதுபோலவே, தம்பால் நிறையுடைமை என்னும் பண்பினாலே மேன்மையுடையவராயிராத பெண்களைச், சிறை யிட்டுக் காவல் காத்து வருவதனால் வசப்படுத்தி விடலாம் என்பதும், ஒருபோதும் நடக்க முடியாததே. நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச் சிறையான் அகப்படுத்தல் ஆகா;-- அறையோ! வருந்த வலிதினின் யாப்பினும், நாய்வால் திருந்துதல் என்றுமோ இல். நாய் வாலை நிமிர்த்த முடியாதது போலவே, பண்பற்ற பெண்களைச் சிறையிட்டுக் காத்தாலும் திருத்தவும் முடியாது என்பது கருத்து. ‘நாய்வால் திருத்துதல் என்றுமோ இல்’ என்பது பழமொழி. 263. குறிப்பறியும் மனைவி தாம் சொல்லாமலே, தம் முகத்தை நோக்கித், தம்முடைய உள்ளக் குறிப்பினை அறிந்து, வேண்டியன செய்யும் பண்பினை உடைய தம்முடைய மனையாளே, தம் வீடு தேடி வந்த விருந்தின ருக்கு உணவளித்துப் பேணச், செல்வ நிலையிலே யாதொரு குறைபாடும் இல்லாமல், அரண் பெற்றவராக வாழ்ந்து வருபவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். நாள்தோறும் இறைத்துக் கொள்வதற்குக் கடலினிடத்தே ஏற்றமிட்டவர்கள் போன்றவர் அவர்களே யாவர். சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம் இல்லாளே வந்த விருந்தோம்பிச்--செல்வத்து இடரின்றி ஏமாந் திருந்தாரே, நாளும் கடலுள் துலாம்பண்ணி னார். கடலுள் துலாம் பண்ணினவர் என்றும் நீரினைத் தட்டாது பெறுவதுபோல, அவர்களுடைய வாழ்விலும் தட்டாது செல்வம் பெருகிக் கொண்டிருக்கும் என்பது கருத்து. ‘நாளும் கடலுள் துலாம் பண்ணினார்’ என்பது பழமொழி. ஏமம்-அரண்; பாதுகாப்பு துலாம் - நீர் இறைக்கும் அமைப்பு. 264. கல்லாதவன் கண்ட உண்மை தாமே கற்றாயினும், அல்லது கற்றவர்களின் வாயிலாகக் கேட்டாயினும் உண்மையுணரும் தகுதி இல்லாதவர்கள், மெய்ப்பொருள்களை ஒருபோதும் தெளிவாக அறியவே மாட் டார்கள். அறிவில்லாத ஒருவன், மெய்ப்பொருள் ஒன்றைப் பெற்றுவிடுதல் நாவல் மரத்தினடியிலே வீழ்ந்து கிடக்கும் பழத்தை ஒருவன் பெற்றாற் போலன்றி, வேறொரு தனிச் சிறப்பும் உடையதாகாது. கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார் தெற்ற உணரார் பொருள்களை-எற்றேல் அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை; நாவற்கீழ்ப் பெற்ற கனி. தானே கனிந்து வீழ்ந்த நாவற்கனி அவன் எதிர்பாராமல் அவன் முயற்சியின்றியே பெற்றது; அதனை அவன் பெற்ற தனால் அவன் திறமை குறித்தது யாதுமில்லை: அதுபோலவே அவன் கண்ட உண்மைகளையும் கருதி அவனை எவரும் பாராட்டார் என்பது கருத்து. ‘நாவற் கீழ்ப் பெற்ற கனி’ என்பது பழமொழி. 265. சேம்பு கொய்த வாள் தம்மைக் காத்துப் போரிடும் ஆற்றல் உடையவர்களைக் கண்டால், அவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பேச்சுப் பேசாமல் பணிந்து விடுவார்கள்; தம்முடன் போர் செய்வதற்கு வலியற்றவரைப் பார்த்து இரக்கங் கொள்ளாமல், அவர்கள் மீது போர் தொடுப்பார்கள்; இப்படி விளங்கும் தம்மிடத்தே புகழ் இல்லா ஒருவரது படையாண்மையானது, கேலிக்கே உரியதாகும், நாவிதனின் கத்தி, மயிர் களைதற்கு உரிய கூர்மையுடனில்லாது சேப்பிலையை அறுக்கும் கூர்மையுடன் விளங்கினது போன்றதே, அத்தகைய வரின் போராண்மையும் என்று கொள்க. காத்தாற்று கிற்பாரைக் கண்டால் எதிருரையார் பார்த்தாற்றா தாரைப் பரியாது மீதூர்தல் யாத்ததே சில்லார் படையாண்மை, நாவிதன்வாள் சேப்பிலைக்குக் கூர்த்து விடல். அவர்கள் ஆண்மையற்றவர் என்பது கருத்து. ‘நாவிதன் வாள் சேப்பிலைக்குக் கூர்த்து விடல்’ என்பது பழமொழி, அது அதற்குரிய வினைக்குப் பயன்படாது என்பதும் சொல்லப் பெற்றது. இப்படியே அவன் வீரமும் ஆகும். 266. பலரிடையே ஒருவனைப் பழித்தல் பல உறவினர்களும் கூடியிருக்குமிடத்தே ஒருவன் ஆராயா தவனாகி பின் விளைவுகளை நன்கு உணராதவனுமாகி அவருள் ஒருவனைப் பற்றி அவனுடைய வறுமை காரணமாக வேறுபட்ட முறையிலே குறிப்பிட்டுச் சொல்வது கூடாது. அப்படிச் சொன்னால் அது சொற்களுள்ளே வளமை யுடைய நல்ல பயனுள்ள சொல்லினைச் சொல்லாதது போலவே பிறரால் கருதப்படும். மேலும் அது நிரையினுள் புகுந்தான் ஒருவன், தனக்குத் தானே துன்பத்தை வேண்டிப் பெற்றது போன்ற அறியாமையான செயலுமாகும். பல்கிளையுள் பார்த்துறான் ஆகி ஒருவனை நல்குரவான் வேறாக நன்குணரான்--சொல்லின் உரையுள் வளவியசொல் சொல்லா ததுபோல் நிரையுள்ளே இன்னா வரைவு. பலரிடையே ஒருவனைப் பழித்தால், பழித்த அவனை அனைவரும் ஒன்றுசேர்ந்து பழித்து அவமானப் படுத்துவர் என்பது கருத்து. ‘நிரையுள்ளே இன்னா வரைவு’ என்பது பழமொழி. தனிமையில் எத்துணை திட்டினாலும் கேட்பவன் கூடப் பலர் நடுவே திட்டப்படும்போது சினந்து எதிர்ப்ப தையும் நினைக்க. 267. கற்றவரின் அடக்கம் பாறைக் கல்லிலே அருவிகள் வீழ்ந்து ஒலி முழங்கிக் கொண்டிருக் கின்ற அழகிய மலைநாடனே! கற்கவேண்டிய நூல்களைக் கற்று அறிவுடைய வரானவர்கள் கண்ட அடக்கமே உண்மையான அடக்கமாகும். கற்று அறியாதவர்களோ, தங்களு டைய அறியாமையான தன்மையை மறந்து விட்டுத் தம்மைப் புகழ்ந்து தெளிவாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். நீர் நிறைந்த குடம் தளும்புவதில்லை; குறை குடமே என்றும் தளும்பும் அல்லவா! கற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார் பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்--தெற்ற அறைகல் அருவி அணிமலை நாட! நிறைகுடம் நீர்தளும்பல் இல். ‘குறை குடம் கூத்தாடுவதுபோலக் குறைமதியினரும் தற்பெருமை பேசித் தருக்கித் திரிவார்கள் என்பது கருத்து. ‘நிறை குடம் நீர் தளும்பல் இல்’ என்பது பழமொழி. குறை குடம் கூத்தாடும்’ என்பதையும் நினைக்க. 268. கொண்டும் கொடுத்தும் வாழ்தல் ‘இருப்பது ஒன்றுதானே’ என்றும்; ‘சிறிதளவுதானே’ என்றும்; ‘நமக்கு உதவுவதான ஒன்று எதுவும் இல்லையே’ என்றும்; ஒருவன் சொல்லிக்கொண்டே முயற்சி எதுவும் செய்யா தவனாகிச் சோம்பலாக இருந்தால், அதனால் அவனுக்குவரும் தாழ்ச்சியே பெரிதாயிருக்கும், தம்மிடத்திலே நிலைபெற்றிருந்த பொருளில் செலவானதை மீளவும் முயன்று தேடும் முயற்சியில் லாதவர்கள், அன்றைப் பகல் முழுவதும் கூட வளமுடன் வாழ மாட்டார்கள். ஒன்றால் சிறிதால் உதவுவதொன்று இல்லையால் என்றாங்கு இருப்பின் இழுக்கம் பெரிதாகும் அன்றைப் பகலேயும் வாழ்கலார், நின்றது சென்றது பேராதவர். ‘இருப்பதைக் கொண்டு முயற்சியுடன் பாடுபட்டுப் பொருளை ஈட்டியும் செலவழித்தும் வாழ்வதே சிறந்த வாழ்வு’ என்பது கருத்து. ‘நின்றது சென்றது பேராதவர்’ என்பது பழமொழி. 269. தாமே தம்மை அறிவர் அப்பனே! நின்னுடைய நடத்தையின் இயல்பினை நின்னை யல்லாமல் முற்றவும் அறியக்கூடியவர்கள் எவருமே இல்லை. அதனால் தம்முடைய ஒழுக்கத்தைக் கருதாதவர்கள்; தம் சுற்றத் தார் ஒழுகிவந்த தன்மையையும் அறியாதவர்கள்; செவ்விய ஒழுக் கத்திலே சேர்ந்திராத சிறியவர்கள் ஆகியவர் களைப்போல நீ நடத்தலாகாது. நின்னுடைய நல்லொழுக்க நடையிலேயே தளராது நீ எப்போதும் நடந்து வருவாயாக. தந்நடை நோக்கார், தமர்வந்த வாறறியார் செந்நடை சேராச் சிறியார்போல் ஆகாது, நின்னடை யானே நடஅத்தா! நின்னடை நின்னின் றறிகிற்பார் இல். சிறியவர்களின் தவறான நடத்தைகளைத் தமக்கு உதாரண மாகக் கொள்ளாமல் பெரியோர் நடக்கின்ற செந் நெறிப்படியே அனைவரும் ஒழுகி வாழ வேண்டும் என்பது கருத்து. ‘நின்னடை நின்னின்று அறிகிற்பார் இல்’ என்பது பழ மொழி. ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்பதும் இதே கருத் தைக் கூறும். 270. மழை வளமும் மன்னன் அவையும் எங்கும் நிறைந்து குன்றிடமெங்கணும் பாய்ந்து ஓடி வருகின்ற குளிர்ந்த வெள்ளத்தினது பெருமை எல்லாம், மலையினிடத்தே பெய்த மழையின் சிறப்பினைக் காட்டும் அந்த அளவினதேயாகும். அதுபோலவே பகைவரைக் கொன்று அழிக்கும் சினமுடைய வேந்தனது கல்வியின் பரப்பும் அவன் கட்டுரைத்துப் பேசுகின்ற சிறந்த பேச்சு முறைமையும் எல்லாம் அவனுக்கு அமைந்திருக்கும் அறங் கூறும் அவையின் சிறப்பினையே விளங்கக் காட்டுவதாகும். கல்வி யகலமும் கட்டுரை வாய்பாடும் கொல்சின வேந்தன் அவைகாட்டும்--மல்கி தலைப்பாய் இழிதரு தண்புனல் நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை. அறங்கூறும் அவையினரால் அமைச்சர்கள் அறிவிற் சிறந்த வராயிருந்தனரென்றால் மன்னனும் சிறந்தவனாகவே புகழ் பெறு வான் என்பது கருத்து. ஆற்றின் வெள்ள வரத்தானது மலையிற் பெய்த மழையைக் காட்டுவது போல என்று இதைக் கொள்ள வேண்டும். ‘நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை’ என்பது பழமொழி. 271. பிறப்பு அறுக்கும் தன்மை நின்ற நீரானது வற்றிப் போனதானால், அதனைச் சார்ந்து வாழ்ந்தன வெல்லாம் வாழ வகையற்று அழிந்து கெடும்; திரியும், இடிஞ்சிலும், நெய்யும் சார்வாகவே சுடரும் அழகாக எரியும்: அவை இன்றேல் அழிந்துபோம். அது போலவே ஆராயுமி டத்துப் பிறப்புக்குச் சார்வாயுள்ள மற்றையன வெல்லாம் அற்றுப் போகவே, அந்த அற்றுப் போன தன்மை யானது, விரைந்து அவனுடைய பிறப்பினையும் அறுக்கும் சக்தியாகிவிடும் என்று அறிவாயாக. திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக எரியும் சுடரேர் அனைத்தாய்த்--தெரியுங்கால் சார்வற ஓடிப் பிறப்பறுக்கும்; அஃதேபோல் நீரற நீர்ச்சார்வு அறும். பிறப்பறுத்துப் பேரின்பம் பெற வேண்டுமானால், முதலிலே, பிறப்புக்குக் காரணமான பந்தபாசங்களின் தொடர்பு களை எல்லாம் முற்றவும் அறுத்துவிடுக என்பது கருத்து. ‘நீரற நீர்ச்சார்வு அறும்’ என்பது பழமொழி. வினைப் பயனால் தொடர்வது பிறவி; வினைகளின் நீங்கப் பிறவியும் அற்றுப்போம் என்பது சொல்லப்பெற்றது. 272. நன்றியின் இலாபம் கரைப் பகுதியிலே எறியும் அலைகள் சென்று உலாவிக் கொண்டிருக்கும் கடற்கரை நாட்டிற்கு உரியவனே! தமக்கு நன்மை தருவதாகிய ஒன்று உளதென்று அறிபவர்கள், தமக்கு நாழி அரிசியானாலும் கொடுப்பவர்க்கும் என்றும் உறுதி தருவனவற்றையே நினைப்பார்களாக. அப்படி நினைக்கும் செய்ந்நன்றி அறிதலைப்போலக் கடலிடையே சென்றாலும், ஒன்றுக்கு இரண்டாகப் பயன்தருகின்ற சிறந்த வாணிகம் எதுவுமே இல்லை. நன்கொன்று அறிபவர் நாழி கொடுப்பவர்க்கு என்றும் உறுதியே சூழ்க; எறிதிரை சென்றுலாம் சேர்ப்ப! அதுபோல, நீர்போயும் ஒன்றிரண்டாம் வாணிகம் இல். செய்ந்நன்றி மறவாமையே ஒருவனுக்கு வாழ்விலே மிகுந்த நன்மையைத் தருவதான சிறந்த பண்பாகும் என்பது கருத்து. ‘நீர்போயும், ஒன்றிரண்டாம் வாணிகம் இல்’ என்பது பழ மொழி. 273. தனியாகப் பிறர் வீட்டினுள் செல்லுதல்! ஒருவன் தீமையாளன் என்று ஊரெல்லாம் பழிமிகுந்து விட்டால், அதனைப் போக்கிக்கொள்ளத் தகுந்த சாட்சி எது வுமே அவனுக்குக் கிடைப்பதற்கு வழியில்லை. வெள்ளம் ஆரவாரத்துடன் மிகுதியாகப் பெருகி வருமானால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒரு சிறையும் உலகிலே கிடையாது. இப்படியே ஊரிற் பெருகும் பழியையும் தடுக்க முடியாது. அதனால், தூய்மையான மனத்தை உடையவர்கள், தம் தோழரு டைய வீட்டினுள்ளுங்கூடத் தாமே தனியராக ஒரு போதும் செல்லுதல் வேண்டாம். தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்தும் தாமே தமியர் புகல்வேண்டா--தீமையோன் ஊர்மிகின் இல்லை கரியோ ஒலித்துடன் நீர்மிகின் இல்லை சிறை. பழிச்சொல் எழுந்தால் அதனை எளிதாக மாற்றமுடியாது. ஆகவே, தோழனின் வீட்டினுள்ளானாலும் தனியாகச் செல்வது பிறர் பழிக்க இடந்தருமாதலால் அது கூடாது என்பது கருத்து. ‘நீரிமிகின் இல்லை சிறை’ என்பது பழமொழி. தாமே தனியராக என்றது அவ்வீட்டுக்கு உரியவன் இல்லாத போது என்பதாம். 274. கொடையின் அளவு ‘கொடுக்கும் கொடையின் அளவு இரந்து வந்து நிற்பவர்க ளுடைய தகுதியளவாகவே இருக்கும்’ என்பவர்கள், கொடை யின் இயல்பையே அறியாத மூடர்கள். அது அங்ஙனம் அமைவது அன்று. இரவலர்க்கு எதனையும் இல்லையென்று ஒளியாதவர் களாய்க், கைவண்மையினை மேற்கொண்ட புரவலர்களின் சீர்மை யினுடைய அளவை ஒட்டியதாகவே அது எப்போதும் விளங்கும். நீரின்கண் உள்ள மலர் நீரளவாக இருப்பது போலவே, சிறந்த செயல்கள் எல்லாம் அவற்றைச் செய்பவரின் சிறந்த பண்பினள வாகவே இருக்கும் என்று அறிதல் வேண்டும். இரவலர் தம் வரிசை என்பார் மடவார்; காவலராய்க் கைவண்மை பூண்ட--புரவலர் சீர்வரைய வாகுமாம், செய்கை சிறந்தெனைத்தும் நீர்வரைய வாநீர் மலர். கொடையின் அளவு கொடுப்பவரின் சீர்மை அளவாகவே இருக்கும் என்பது கருத்து. ‘நீர் வரையவாம் நீர் மலர்’ என்பது பழமொழி. ‘நீரளவே யாகுமாம் நீராம்பல்’ என்பதும் இதே கருத்தைக் கூறும். 275. வஞ்சகனும் வேலையும் உள்ளத்திலே தூய்மை இல்லாதவர்களை மிகவும் பெரியவர் களாகச் செய்து, தனக்குத் தொலைவான இடத்திலே விட்டிருந்தால், அவர்கள் உறுதியாக இவனுக்கு உதவியான ஒரு செயலையுமே செய்ய மாட்டார்கள். அப்படி விடுவது, ஆமையைப் பிடித்த ஒருவன், அதனை ‘நீண்ட குளத்தினுள்ளே போய்க் குளித்து விட்டு வா’ என்று அதன் தன்மையறியாமற் போகவிட்ட செயலொடு ஒக்கும். அகந்தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி இகந்துழி விட்டிருப்பின் அஃதால்--இகந்து நினைந்து தெரியானாய் நீள்கயத்துள் ஆமை நனைந்துவா என்று விடல். தொலைவிலுள்ள ஒரு செயலை முடிப்பதற்கு வஞ்சகனை நம்பி அனுப்பினால், அதன் பயனை எல்லாம் அவனே கவர்ந்து கொள்வான்; அனுப்பியவனுக்கு இழப்பே ஏற்படும் என்பது கருத்து. ‘நீள் கயத்துள் ஆமை நனைந்து வா என்று விடல்’ என்பது பழமொழி. 276. தவம் எது? ‘தவம்’ என்று சொல்லப்படுவது, பற்பல சமயத்தார்களும் தத்தமக்கு என்று வேறுவேறாகக் கொண்டுள்ள புற வேடங்கள் அன்று; தன்னை ஒருவன் சிதைத்துத் துன்புறுத்தினாலும், மற்றொருவன் சந்தனம் பூசி மகிழ்வித்தாலும், அந்த இருவர் பாலும் ஒத்த மனம் உடையவனாக, நுகத்தின் நடுவிலே நிற்கும் பகலாணியைப்போல, அவ்விரு திறத்தாருக்கும் நடுவணாக நின்று ஒழுகும் சால்பு இருக்கிறதே அதுவே சிறந்த தவமாகும். தத்தமக்குக் கொண்ட குறியோ தவமல்ல செத்துக, சாந்து படுக்க, மனன்--ஒத்துச் சகத்தனாய் நின்றொழுகும் சால்பு, தவமே, நுகத்துப் பகலாணி போன்று. தவமானது நன்மை தீமைகளை ஒன்றாகக் கருதி, அனைவரி டமும் அருளுடன் இருத்தல் என்பது கருத்து. ‘நுகத்துப் பகலாணி போன்று’ என்பது பழமொழி. 277. தன் வாயால் கெடுதல் நல்லவளே! மணலினுன்ளே முழுகி மறைந்து கிடக்கின்ற தான ஒரு தவளையும், தன் குரலைக் காட்டிக் கத்திக் கொண்டி ருக்கிற தன்னுடைய வாயின் செயலாலேயே அழிவு எய்தும். அதுபோலவே பிறரைப் பற்றிய பொல்லாங்கான பேச்சுக்களைப் பேசிவிட்டு மறைந்து திரியும் பேதையும், தன்னுடைய சொல்லி னாலேயே தன்னைத் துயரத்தினுள் அகப்படச்செய்து கொள் பவன் ஆவான். பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்--நல்லாய்! மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலுந்தன் வாயால் கெடும். ‘மூடன், வாளா கிடவாமல் தன் வாயைத் திறந்து பிறரைப் பொல்லாங்கு படப் பேச, அவனுடைய உண்மையான தன்மை யைப் பிறர் அறிந்து, அவனை ஒறுப்பார்கள் என்பது கருத்து. ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது பழமொழி. 278. தானே தனக்கு உதவி! நெற்பயிர் செய்ய, அதற்குமுன் அவ்விடத்தே நிரம்பி இருந்த புல் முழுவதும் அழிந்துபோகும். அதுபோலவே, ஒருவன் தன்னை வலிமை யுடையவனாகச் செய்து கொண்டா னென்றால் அவனுடைய நெடுங்காலத்துப் பகைமையும் தானே மறைந்து விடும். ஆதலால், வருவதற்கு எல்லாம் தனித்தனியாகத் தன்னை ஒருவன் வலிமை உடையவனாகச் செய்துகொள்ள வேண்டுமோ எனில், வேண்டாம். கற்று அறிந்த சான்றோர்கள் தன்னை வெகு ளாமல், நன்னெறியில் ஒழுகித் தன்னைக் காத்துக் கொள்வதே போது மானதாகும். உற்றதற் கெல்லாம் உரஞ்செய்ய வேண்டுமோ? கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும் நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை தற்செய்யத் தானே கெடும். ‘அறிவுடையோருக்குச் சினம் உண்டாகாதவாறு ஒழுக்கம் காப்பதே ஒருவனுக்கு எல்லா வலிமையும் தரும்’ என்பது கருத்து. ‘நெடும்பகை தற்செய்யத் தானே கெடும்’ என்பது பழமொழி. தற்செய்ய - தன்னை வலுவாகச் செய்ய புறப்பகையும் கெடும். உட்பகையும் கெடும் என்பது இது. 279. இழந்தவன் மனம்! ‘கொல்லிப் பாவையென்றே’ பிறர் கருத்திலே படுமாறு, மிகுதியான அழகுடன் தோன்றும் நல்லவளே! நீண்ட வேலினைத் தொலைத்தவன், அது மறைந்திருக்க இயலாத குடத்தினுள்ளேயுங் கூட அதனைத் தேடிப் பார்ப்பான். அதனால், தம்மிடமிருந்து தொலைந்துபோன ஒரு பொருளுக்கு உரியவர்கள், அங்கு இருந்தால் எத்தகைய சிறப்புடையவர்களேயானாலும், ஏன்? தேவர்களேயானாலுங் கூட, அவர்களையும் தம் பொருளைக் கவர்ந்து தமக்குத் தீமை செய்தவராகவே கருதிச் சந்தேகப் படுவார்கள். யாவரே யாயினும் இழந்த பொருளுடையார் தேவரே யாயினும் தீங்கோர்ப்பர்--பாவை படத்தோன்று நல்லாய்! நெடுவேல் கெடுத்தான் குடத்துளும் நாடி விடும். ‘பொருளைத் தொலைத்தவன் ஒருவன், நம்மீதும் சந்தேகப் படுகிறானே யென்று அவன்மீது எவரும் ஆத்திரம் கொள்ளக் கூடாது’ என்பது கருத்து. ‘நெடுவேல் கெடுத்தான் குடத்துளும் நாடிவிடும்’ என்பது பழமொழி. தொலைத்தவன் மனநிலை இதுதான். 280. உயர்குடியினரின் ஒழுக்கம்! முற்றிய தென்னையின் காய்கள், வயலினிடத்தே உதிர்ந்து விழுகின்ற நீர்வளமுடைய ஊரனே! சிறந்த தொடர்ச்சியினை உடையவர்களாக விளங்கித் தொன்மையான குடியிலேயும் தோன்றியவர்கள், நல்ல ஒழுக்கம் உடையவர்கள் ஆகவும் ஒழுகிவருதல், அவருக்கு மேலும் சிறப்புத் தருவதாகும். அது, நெய்யினிடத்தே பாலைக் கொட்டிவிடுதல் போன்றதாகும். விழுத்தொடையர் ஆகி விளங்கித்தொல் வந்தார் ஒழுக்குடையர் ஆகி ஒழுகல்--பழத்தெங்கு செய்தலை வீழும் புனலூர! அஃதன்றோ நெய்த்தலைப்பால் புக்கு விடல். ‘உயர்குடியினரும், ஒழுக்கம் உடையவராக இருந்தால் அவர் சிறப்பு மேலும் உயரும்’ என்பது கருத்து. ‘நெய்த்தலைப் பால் உக்குவிடல்’ என்பது பழமொழி. உக்குதல் - சிந்துதல். 281. அரசாங்க மதிப்பு ஆராய்ந்த நல்ல மென்மையான கூந்தலை உடையவளே! விசாரித்துப் பார்ப்போமானால், முதலில் நெய்யிட்டு வந்த பாத்திரமே பின்னரும் நெய்யிடப்பட்டதாக வந்து சேரும். அது போலவே, அரசனாற் சிறந்தோர் என மதித்து விரும்பப்பட்டவர்களை, ஏனைய மக்களும், தாமும் அவ்விடத்தே விருப்பங் கொண்டு, நன்கு மதித்துப் போற்றி உணர்வார்கள் என்று அறிவாயாக. வேந்தன் மதித்துவப்பப் பட்டாரைக் கொண்டேனை மாந்தரும் ஆங்கே மதித்துணர்வர்-- ஆய்ந்த நலமென் கதுப்பினாய்! நாடின் நெய்பெய்த கலனேநெய் பெய்து விடும். அரசினால் மதிக்கப்பட்டவரை அனைவரும் போற்றி மதிப்பார்கள் என்பது கருத்து. அரசால் மதித்துப் பாராட்டப் பெறுதலை அனைவரும் அடைவது சிறப்பு என்பதுமாம். ‘நெய் பெய்த கலனே நெய்பெய்து விடும்’ என்பது பழமொழி. 282. துன்பம் செய்யாமை தாமரைப் பூவும் ‘தான் ஒப்பாக அமையவில்லையே’ என உள்ளம் வருந்தும், அழகிய கண்களை உடையவளே! தேவர் களுக்கும் கைகூடி வராத திண்மையான அன்பினை உடையவர் களுக்கானாலும், நோவச் செய்த காலத்து, அவர் தம் உள்ளத் துத் துன்பமுறாமல் இருப்பதென்பது இல்லையாகும். அதனால், ‘அவர் நாம் செய்பவற்றைப் பொறுப்பார்கள்’ என்று கருதி, எத்தகைய எளிமை உடையவர்களுக்கும், எவ்விதமான பொல்லாத செயலையும் செய்ய வேண்டாம். பூவுட்கும் கண்ணாய்! பொறுப்பர் எனக் கருதி யாவர்க்கே யாயினும் இன்னா செயல்வேண்டா தேவர்க்கும் கைகூடாத் திண்ணன் பினார்க்கேயும் நோவச்செய் நோயின்மை இல். மிக்க அன்புடையவரே மனம் நொந்து பொறுமை இழந்து விடும்போது, பிறர் பொறுப்பார்கள் என நினைப்பது மதியீனம்; ஆதலின் எவர்க்கும் தீமை செய்தல் கூடாதென்பது கருத்து. ‘நோவச்செயல் நோயின்மை இல்’ என்பது பழமொழி. 283. விதியாலே வருவன முன்செய்த புண்ணியப் பயன் உள்ளவர்களுக்குச் சோற்றி னுள்ளும் கறியானது தானாகவே வந்துவிழும். ஆதலால், எல்லாச் செல்வங்களையும் தருவதற்கு வல்ல அரசினையே அடைந்து வாழ்பவர்க்கானாலும், புண்ணியப் பயன் வந்து சேரும் வழி என்பதொன்று இல்லாமல் போனால், அவர் விரும்பினாலுங்கூட, அவர் விருப்பம் கைகூடாமலே போகும். இந்த உண்மையைத் தெரியாதவர்களாக எவரையும் ‘இவர் எளியர்’ என்று ஒருபோதும் இகழ்தல் வேண்டாம். ஆற்றுந் தகைய அரசடைந்தார்க் காயினும் வீற்று வழியல்லால் வேண்டினும் கைகூடா தேற்றா சிறியர் எனல்வேண்டா; நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி. இகழப்பட்டவரும் ஊழ்வினை வயத்தால் செல்வராதலும் கூடும்; செல்வமுடைமையும் இல்லாமையும் எல்லாம் ஊழ் வினைப் பயனே என்பது கருத்து. ‘நோற்றார்க்குச் சோற்றுள் ளும் வீழும்கறி’ என்பது பழமொழி. 284. உயர்ந்தவர் வழுவார் பஞ்சத்தினாலே தன்மேல் வந்துற்று வருந்தும் பசி பெரி தாகிப் போயின காலத்தும், புலியானது சென்று புல்லினை ஒரு போதும் மேய்வதில்லை. அதுபோலத் தாம் வறுமையுற்ற காலத் தினும், உயர்ந்த பண்புடையவர்கள், தாம் நிலைபெற்ற அந்த உயர்ந்த நிலையினிடத்திலேயே சற்றும் தளராமல் நிற்பவரா வார்கள். ஒற்கத்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர் நிற்பவே நின்ற நிலையின்மேல்--வற்பத்தால் தன்மேல் நலியும் பசிபெரி தாயினும் புல்மேயா தாகும் புலி. ‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாததுபோல உயர்ந் தோர் வறுமையடைந்தாலும் இழிந்த செயல்களைச் செய்ய மாட் டார்கள்’ என்பது கருத்து. ‘பசி பெரிதாயினும் புல் மேயா தாகும் புலி’ என்பது பழமொழி. 285. புல்லுரைக்கு எதிர் உரை இனிய தேன்கூட்டிலுள்ள தேனை, மந்திகள் தம் விரலினாற் குத்தி உண்கின்ற வளமுடைய மலைநாடனே! தம்மைப் பசு குத்தினதென்று அதனைத் தாமுங் குத்துபவர் எவருமே இலர். ஆதலால், ஆராய்ந்த அறிவினை உடையவர்களாக அல்லாத கீழோர்களின் புன்மையான பேச்சுக்குத் தாமுஞ் சினங்கொண்டு, கற்றறிந்த சான்றோர் எதிர்ப்பேச்சுப் பேசமாட்டார்கள் என்று அறிவாயாக. ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக் காய்ந்தெதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்? தீந்தேன் முசுக்குத்தி நக்கு மலைநாட! தம்மைப் பசுக்குத்தின் குத்துவார் இல். அறிவற்றோர் பேசும் புன்சொற்களைக் கேட்ட சான்றோர், அதனைப் பொறுப்பரேயல்லாமல், எதிர்ப்பேச்சுப் பேசமாட்டார்கள் என்பது கருத்து. ‘பசுக் குத்தின் குத்துவார் இல்’ என்பது பழமொழி. 286. வீரமற்ற வேந்தன் “கொடைப் பண்பும் செங்கோன் முறைமையும், படை குடி கூழ் முதலியவற்றால் கோட்பாடு உள்ள உணர்வும் இவர் உடையவர்” என்று சொல்லப்பட்டுத் தாம் ஒழுகி வந்தாலும், பகைவர்கள் வலியிழந்து சிதறி யோடும்படி அவரை மேற் சென்று வெற்றிகொள்ளும் போராண்மை இல்லாதவர்களுடைய படை யெழுச்சியைவிட, அவர்களுடைய படைக்கலன்களைப் பொலி வுடையனவாக வைத்து அழகு பார்ப்பதே நல்லதாகும். கொடையும் ஒழுக்கமும் கோளுள் உணர்வும் உடையர் எனப்பட்டு ஒழுகிப், பகைவர் உடையமேற் செல்கிற்கும் ஊற்றம் இலாதார் படையின் படைத்தகைமை நன்று. பிறவாற்றால் நல்லவனாயினும், பேராண்மை இல்லாத வேந்தன் நாடு காவலுக்குத் தகுதி உடையவனல்லன் என்பது கருத்து. ‘படையின் படைத்தகைமை நன்று’ என்பது பழ மொழி. 287. உலகம் விரும்பும் ஒழுக்கம் கானகங்களை உடைய நாடனே! தாம் மேற்கொள்ளும் அந்த ஒழுக்கத் தினை, ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகத்திலே உள்ளவரெல்லாம் விரும்பு வார்கள் என்பதை அறிந்தல்லாமல், எவரும் எந்த ஒரு ஒழுக்கத்தையும் மேற்கொள்ளவே மாட் டார்கள். அப்படி, உலகத்தவர் எல்லாரும் விரும்புவது அறிந்து பயின்றதான ஒழுக்கம், இம்மைக்கு மட்டுமின்றி மறுமைக்கும் (மேலுலகத்திற்கு) உதவியாக விளங்கும். ஓதநீர் வேலி உலகத்தார் அந்நெறி காதலர் என்பது அறிந்தல்லால்--யாதொன்றும் கானக நாட! பயிலார் பயின்றது வானகம் ஆகி விடும். உலகோர் விரும்பும் நல்லொழுக்க நெறியிலே நிலைத்து நிற்பவர், இம்மையிலும் மறுமையிலும் இன்புறுவர் என்பது கருத்து. ‘பயின்றது வானகம் ஆகிவிடும்’ என்பது பழமொழி. 288. தேவரும் அஞ்சுவர் விளங்கும் அருவிகள் பாய்கின்ற மலைநாடனே! பண்பு கெட்ட கயவர்களுடனே தேவர்களுங்கூட ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்கள். ஆதலால், கற்று வல்லவர்கள் கூடி யிருக்கின்ற அவையின் நடுவிலே வந்திருந்து, கல்லாமலும் கற்பவர் சொல்வதைக் கேளாமலும் சொல்லாடுகின்ற தன்மை உடையவர் களைக் கண்டாலும் அவருக்கு அஞ்சி ஒதுங்குதலே வேண்டும். கல்லாதும் கேளாதும் கற்றார் அவைநடுவண் சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்று--எல்லருவி பாய்வரை நாட! பரிசழிந் தாரோடு தேவரும் மாற்றல் இலர். கற்றார் அவை நடுவிலிருந்து புல்லறிவாற் பேசும் கயவ ரிடத்தே எதுவும் எதிர்மாற்றம் பேசக்கூடாது; அவர்கள் பண்பற்றவர்கள் என்றே ஒதுக்க வேண்டும் என்பது கருத்து. ‘பரிசழிந்தாரோடு தேவரும் மாற்றல் இலர்’ என்பது பழ மொழி. 289. இகழ்பவர் அழிவார் ‘எம்மை இவ்வாறு பழித்துச் சொன்னவர்களின் கொடிய நாவினை அவர் செத்த பிறகு, பருந்துகூடக் கொத்தித் தின்னாது’ என்று, எல்லோருடனும் கோபித்து எழுந்து, செருக்கு உடைய வராக இருப்பவர்கள் அழிவார்கள். தம்முடன் மாறுபட்டால் அப்படி மாறுபட்டவரைத் தாம் செய்ய நினைத்ததை எல்லாம் தப்பாது செய்து முடிக்க வல்லவர் களையும், மனம் கொதிக்கச் செய்து, அவரால் அழிக்கப்பட்டுப் பலியிடும் கல்லின் புறத்தே இட்ட புலியுணவை உண்பவரும் அவர்களே ஆவார்கள். உரைத்தவர் நாவோ பருந்தெறியா தென்று சிலைத்தெழுந்து செம்மாப் பவரே--மலைத்தால் இழைத் திகவா தவரைக் கனற்றிப் புலிப்புறத் துண்பார் உணா. இகழ்ந்து பேசுவதையே தொழிலாகக் கொண்டவர், என்றாவது வலியவர் ஒருவரைச் சினமூட்டி, அதன் காரணமாக அழிவர் என்பது கருத்து. ‘புலிப்புறத்து உண்பார் உணா’ என்பது பழமொழி. 290. துறவு கொள்க என்னுடைய நெஞ்சமே! வன்மையான நெஞ்சம் உடைய வர்களின் பின்னாக, அவர் செல்லும் வழியையே மனத்துட் கொண்டு செல்வாயானால், இன்றே நீயும் அழிவாய் ஆயினாய். மனை வாழ்க்கையைச் சுட்டி, நீயும் இனிமையாகப் பேசி வீணாகச் செய்து ஒழியாதே இருப்பாயாக. அவ்விடத்தேயுள்ள பெண்களும் மக்களும், நின்னை நின்னுடைய நற்கதிக்குப் போகவிடாது தடுக்கின்ற பல தளைகளாவர் என்றறிந்து, அதனைக் கைவிடுவா யாக. வன்னெஞ்சி னார்பின் வழிநினைந்து செல்குவை என்னெஞ்சே! இன்றிழிவை யாயினாய்--சென்னெஞ்சே! இல்சுட்டி நீயும் இனி துரைத்துச் சாவாதே பல்கட்டப் பெண்டீர் மகார். குடும்பம், துறவு வாழ்வுக்குப் பலவகையினும்செல்ல விடாது ஒருவனைத் தடுக்கும் தளையாகும் என்பது கருத்து. ‘பல்கட்டப் பெண்டீர் மகார்’ என்பது பழமொழி. ‘பெண்டாட்டி கால் விலங்கு; பிள்ளையோ சுள்ளாணி’ எனவும் இப்பழமொழி வழங்கும். 291. பூர்வ புண்ணியம் எவருக்கும் வழங்காதவர்கள்; தாம் எவ்விதமான ஒரு வலிமையும் இல்லாதவர்கள்; பொல்லாங்கே மிகுதியாகப் பேசுகிறவர்கள்; ஒருவருக்குத் துன்பம் வந்தால் தாம் வருந்தி யாகிலும் உதவாதவர்கள்; இப்படிப் பட்டவர்களும் கேடில் லாத செல்வத்தைப் பெற்றிருக்கிறார்களே? என்றால், அது, பழையதாக உரம் பெற்றிருப்பதான வயலானது பிற்காலத்தில் ஓருரமும் போடாவிட்டாலும்கூடப் போரிட்டுக் கட்டும்படி செழுமையாக விளைவ தனைப் போன்றதாகும். வழங்கார், வலியிலார், வாய்ச்சொல்லும் பொல்லார் உழந்தொருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார் இழந்ததில் செல்வம் பெறுதலும் இன்னார் பழஞ்செய்போர் பின்று விடல். முன் போட்ட உரம் பிற்காலத்துப் பயன் தருவனபோல அவருடைய முன்சென்மத்துப் புண்ணியப் பயனே அவரிடம் செல்வம் சேர்ந்திருப்பது என்க. ‘பழஞ் செய் போர் பின்று விடல்’ என்பது பழமொழி. (பின்பு - பிற்காலம்.) 292. பள்ளியில் பிச்சை கேட்டல் வள்ளிக் கொடியிலே குரங்குகள் அமர்ந்து ஊசலாடிக் கொண்டிருக்கின்ற மலைநாடனே! மரத்தைப்போல உணர்ச்சி யற்றவராக விளங்கும் வன்மையான உள்ளம் உடையவர்கள், முன்னே நின்று யாசித்தவர் பெறுவது எதுவுமே இல்லை. அப்படி யாசிப்பது, இரந்து உண்ணும் சமண முனிவர்கள் வாழும் பள்ளியிலே சென்று ஒருவன் பிச்சை கேட்டு நிற்பதைப் போன்றதாகும். மரம்போல் வலிய மனத்தாரை முன்னின்று இரந்தார் பெறுவதொன் றில்லை--குரங்கூசல் வள்ளியி னாடும் மலைநாட! அஃதன்றோ பள்ளியுள் ஐயம் புகல். தாமே ஊரிற் பிச்சையேற்று உண்பவர் சமண முனிவர்கள். அவர்கள் மடத்திலே சென்று கேட்டால் பிச்சை கிடைக்குமோ? அதுபோலவே வன்னெஞ்சனிடம் சென்று இரப்பவனுக்கும் எதுவும் கிடையாது என்பது கருத்து. ‘பள்ளியுள் ஐயம் புகழ்’ என்பது பழமொழி. சமணப் பள்ளி போன்றே பௌத்தப் பள்ளியும், ‘பள்ளி’யின் பொருளாகக் கொள்ளலாம். 293. பழம்பகை மாறாது முழங்கும் இடிக்குரலினையுடைய மேகத்துக் குளிர்ந்த பெயலாகிய மழையினைப் பெற்றால், கிழங்கு உடைய புல் பூண்டுகள் எல்லாம் ஒரு வகையே அனைத்தும் முளைத்து விடும். பழையதான பகைவர் ஒருபோதும் நட்பினராதல் என்பதே இல்லையாகும். அதனால், அவரை விரும்பிச் சென்று, வேரூன் றும்படியாக நட்புச்செய்து ஒழுகுதல் என்பது எப்போதுமே வேண்டாம். தழங்கு குரல் வானத்துத் தண்பெயல் பெற்றால் கிழங்குடைய வெல்லாம் முளைக்குமோ ராற்றால் விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டொழுகல் வேண்டா பழம்பகை நட்பாதல் இல். நட்பு நன்றாக வேரூன்றியதும், அவர் தம் பழைய பகைமையைத் தீர்த்துக் கொள்ளவே முற்படுவர் என்பது கருத்து. ‘பழம் பகை நட்பாதல் இல்’ என்பது பழமொழி. 294. உள்ளத்து மாண்பற்றார் வெள்ளம்போல அளவிடற்கு அரிய மாண்புகள் எல்லாம் உடைய உறவினர்கள் கூடியிருப்ப, அவ்விடத்திலே மனத்தின் கண் மாண்பில்லாத ஒருவர் இருந்தால், அவரை அறிந்து ஆராய்ந்து அவ்விடத்தை விட்டுப் பிரிந்து விலக்கிவிட்டே, இரகசியமான செய்திகளைப் பேச வேண்டும். அப்படி விலக்கா திருந்தால், அங்குப் பேசப்பட்டதெல்லாம் பறையினிடத்தே குறுந் தடியிட்டு அடித்து ஊர்முழுவதும் கேட்கச் செய்தது போல, எங்கும் பரவியதாக ஆகிவிடும். வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப உள்ளமாண் பில்லா ஒருவரைத் தெள்ளி மறைக்கண் பிரித்தவரை மாற்றா தொழிதல் பறைக்கண் கடிப்பிடு மாறு. உறவினர் கூடக் குடும்பத்து ரகசியம் ஒன்றை ஆராயுமிடத்திலே, உள்ளத்துச் செப்பமில்லாத ஒருவர் இருந்தால், அவரை முதலிலே தந்திரமாக அவ்விடத்தேயிருந்து நீக்கிவிட வேண்டும் என்பது கருத்து. ‘பறைக் கண் கடிப்பிடு மாறு’ என்பது பழமொழி. கடிப்பு - குறுந்தடி. பறையடித் தலாவது ஊருக்கெல்லாம் அறிவித்தல். 295. வாய்ப்பேச்சு உதவியாகுமா? அலைகள் கடுமையாக வந்து மோதிச் செல்லும் கடற்கரையினை யுடைய தலைவனே! மழை பெய்தாலல்லாமல் பனி பெய்தலால் குளம் ஒருபோதும் நிறைவதில்லை. அது போலத் தமக்கு இனியவரான ஒருவருக்கு நேர்ந்த துன்பம் தீர்வதற்கான உபாயத்தைக் கொஞ்சமும் வெறுப்பில்லாமல் செய்பவர் ஆனாலும், வெறும் வார்த்தைகளால் மட்டுமே அதனைத் தீர்க்க முடியாது. இனியாரை உற்ற இடர்தீர உபாயம் முனியார் செயினும் மொழியால் முடியா துளியால் திரையுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப! பனியால் குளநிறைதல் இல். ‘வாயுபசாரத்தால் மட்டும் பயனில்லை; பொருளாலும் செயலாலும் உதவ வேண்டும் என்பது கருத்து. ‘பனியால் குளம் நிறைதல் இல்’ என்பது பழமொழி. 296. காலத்தால் பெறுவது இனமாகிய கலைகள் தேனடைகளைக் கிழித்துத் தேன் குடிக்கின்ற ஓங்கிய மலைகள் சூழ்ந்திருக்கும் மலைநாடனே! எத்துணைப் பலவே யானாலும் நெடுங்காலத்துக்குப் பின்னர் பெறுவதைக் காட்டிலும், தினையள வேயானாலும் குறுகிய காலத்திற் பெற்றுக்கொள்ளுதலே நன்மையாகும். பனங் கொட்டையைப் பதித்து அது பனையாக வளர்ந்து அளிக்கும் அதன் பழத்தை எவரும் உண்டவர் இல்லை. எனைப்பலவே யாயினும் சேய்த்தாற் பெறலின் தினைத்துணையே யாயினும் அணிக்கோடல் நன்றே இனக்கலை தேன்கிழிக்கும் மேகம்சூழ் வெற்ப! பனைப்பதித்து உண்ணார் பழம். காலங்கடந்து வரும் பெரும்பயனைவிடக் காலத்தோடு வரும் சிறு உதவியே சிறந்தது என்பது கருத்து. ‘பனைப் பதித்து உண்ணார் பழம்’ என்பது பழமொழி. கலை - குரங்கினத்துள் ஒன்று; முசுக்கலை எனவும் கூறுவர். 297. செய்தவன் புகழ் பனையினது பழமானது முற்றிவிட்டால், அது தாய்ப் பனையின் தாளின்மேலேயே விழுந்துவிடும். அங்ஙனமே, தான் மகிழ்வடையுமாறு செய்து முடிப்பதற்கு ஏவிய செயல் கள், அந்தந்தக் காரியங்களின் தகுதியளவேயாகிய பயனோடும் கூடி, அந்தக் காரியங்கள் செவ்வையாக முடிவுறுமானால், அவற் றைச் செய்து முடித்தவன் மேலேயே ஏறி நிற்பதாகும். உவப்ப உடன்படுத்தற் கேய கருமம் அவற்றவற் றாந்துணைய வாகிப் பயத்தால் வினைமுதிரின் செய்தான் மேல் ஏறும்; பனைமுதிரின் தாய்தாண்மேல் வீழ்ந்து விடும். ஏவலாற் சென்று செயலைச் செய்தாலும், செயல் வெற்றி பெற்றால், அதனால் அதனைச் செய்தவனுடைய புகழே மிகுதி யாகும். ஆகவே, செயலைத் திறமையாக முடிப்பதிலே ஈடுபடு தல் வேண்டும் என்பது கருத்து. ‘பனை முதிரின் தாய் தாள்மேல் வீழ்ந்து விடும்’ என்பது பழமொழி. 298. இரகசியம் காத்தல் பெரிய மலைகளை உடைய நாட்டிற்கு உரியவனே! பிறர் அறியக் கூடாத அரியதான ஒர் இரகசியத்தை, அமைந்த அறிவுடையர்களான ஆன்றோர்களே வெளியிடாமல் காப் பார்கள். அத்தகைய அரிய இரகசியத்தை, உள்ளத்தால் சிறுமை யாளரான கீழோர்க்கு உரைத்தல் ஒருபோதுமே கூடாது. அவர்க்கு உரைத்தலானது, உயரமான பனையின் மேலே பஞ்சைக்கொண்டு வைத்துக்கொண்டு, ஒருவன் பஞ்சு கொட்டுவதைப் போன்றதாகும். பெருமலை நாடா! பிறரறிய லாகா அருமறையை ஆன்றாரே காப்பர்--அருமறையை நெஞ்சிற் சிறியார்க்கு உரைத்தல், பனையின்மேல் பஞ்சிவைத் தெஃகிவிட் டற்று. பனைமேல் வைத்துக் கொட்டும் பஞ்சு காற்றாலே எடுத்துச் செல்லப்பெற்று ஊர்முழுவதும் பரந்துவிடுவது போலச் சிறுமையாளர்க்கு உரைத்த இரகசியமும் எங்கும் பரந்துவிடும் என்பது கருத்து. ‘பனையின்மேல் பஞ்சிவைத் தெஃகி விட்டற்று’ என்பது பழமொழி. 299. படைமுனையில் தன்னை வியத்தல் பகைவர் படையெடுத்து வந்து எதிர்நிற்கின்ற அந்தப் பொழுதிலே, ஒப்பற்றவனாகிய ஒரு வீரமகனானவன், தன்னை எவ்வாறாயினும் வியந்து பேசாதிருப்பானாக, தன் மேற் போர் செய்யவந்த பகைவர்கள் தன்னைப்போல வீரத்தளவிலே நன்மை இல்லாதவரே யாயினும், மிகவும் பலராயிருக் கின்றனர் என்று அறிவானாக. ‘பன்மையிலும் பெருமை உடையது எதுவு மில்லை’ என்பதே உண்மையாகும். ஒன்னார் அடநின்ற போழ்தின் ஒருமகன் தன்னை எனைத்தும் வியவற்க--துன்னினார் நன்மை யிலராய் விடினும், நனிபலராம் பன்மையிற் பாடுடைய தில். பலர் கூடி எதிர்த்து வந்தபோது, எத்தகைய பெரு வீரனும் அனைவரையும் எதிர்த்து நிற்க முடியாமல் விழுந்து விடுவான்; ஆதலால், அரசன் ஒருவன், தன் படைத்துணையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பது கருத்து. ‘பன்மையிற் பாடுடையது இல்’ என்பது பழமொழி. 300. அவையிலே புன்சொல் விரிந்து அகன்ற அறிவினை உடையவர்களிடையிலே புகத்தகுதி யற்றவரான மூடர்கள் புகுந்து, தாரமாகவே கொண்ட பகைமை காரணமாக வீணத் தனத்தோடு சேர்ந்த இழிவான சொற்களைச் சொல்லுதல், அவருக்கே மிகவும் அவமானத்தைத் தருவதாகும். அது பாணர் சேரியிலே புகுந்து, ஒருவன் தானும் பாடுவான்போல வாய் திறந்து பல்லைக் காட்டி நிற்பது போன்ற தாகும். அகலம் உடைய அறிவுடையார் நாப்பண் புகலியார் புக்கவர் தாமே--இகலினால் வீண்சேர்ந்த புன்சொல் விளம்பல் அதுவன்றோ பாண்சேரிப் பற்கிளக்கு மாறு! பாணர் குடியினர் இசைவல்லார்; அவரிடையே சென்று இசையறியான் ஒருவன் வாய்திறந்தால் அவனே அவமானம் அடைவான்; அதுபோலவே, அறவோர் அவையிற் புகுந்து புன்சொல் பேசியவனும் அவமானமடைவான் என்பது கருத்து. ‘பாண்சேரிப் பற்கிளக்கு மாறு’ என்பது பழமொழி. பற்கிளத் தல் - வாய்திறந்து பாட முயலுதல். 301. அறிஞரே அறிவார் நன்மைகள் மிகுதியாக உடைய, அழகிய நீர்வளம் மிகுந்த ஊருக்கு உரியவனே! பாம்பின் கால்களை அதற்கு இனமான பாம்புகளே நன்றாக அறியும் திறம் உடையன. அதுபோலவே, அறிவுத்திறத்தால் மிக்கவர் களுடைய அறிவின் செழுமையை அறிந்து கொள்ளுதல், அவரைப் போன்ற அறிவால் மிகுந்தவர் களுக்கே முடிவதாகும், அறிவுச் சிறப்பில்லாத சாதாரண மக்களுக்கு அவர் சிறப்பை அறிந்து கொள்ளவே முடியாது. புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம்--நலமிக்க பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே பாம்பறியும் பாம்பின் கால். அறிஞரின் சிறப்பை அறிஞர்களே அறிந்து உணர்ந்து பாராட்டுவர்; அல்லாத பிறர் அறிவுச் செழுமையை உணர மாட்டாதார்; ஆகவே, அவர் அறிஞரை மதிப்பதற்கும் போற்று வதற்கும் அறியார் என்பது கருத்து. ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பது பழமொழி. 302. பிறரால் முடியுமா? பரந்து செல்லும் ஆறுகள் அருவிகளாக வீழ்ந்து சென்று கொண்டிருக் கின்ற வளமுடைய மலைநாடனே! தம்மாலே செய்து முடிக்கக்கூடிய ஒரு செயலினைத் தாமே முயன்று செய்தலே முறைமையாகும். அஃதன்றி, தாம் செய்யாது சோம்பியிருப் பவர்கள், ‘அதனை வேறொருவராலே தாம் செய்வித்துக் கொள்வோம்’ என்று கருதியிருத்தல் அவர் அதனைச் செய்யாது போவதையே காட்டும். வெந்நீரில்கூட குளிக்கத் துணியாதவர்கள், என்றாவது தீப்பாய்ந்து வருவார் களோ? தம்மால் முடிவதனைத் தாமாற்றிச் செய்கலார், ‘பின்னை ஒருவரால் செய்வித்தும்’ என்றிருத்தல், சென்னீர் அருவி மலைநாட! பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ. தன்னால் செய்ய முடிந்ததைத் தானே செய்யாமல், பிறரால் செய்வித்துக் கொள்வோம் என்றிருப்பவனின் காரியம் ஒரு போதும் நிறைவேறாது என்பது கருத்து. ‘பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ’ என்பது பழமொழி. 303. தரவேண்டிய வரியை வசூலித்தல் தன்னுடைய ஆணைக்கு உட்பட்டு அடங்கி வாழ்பவரான குடிமக்கள் என்றாலும், அவர்கள் மீதும் அதிகமான வரிப்பணம் வசூலிக்கப்படாமல் மிகுதியாக நிலுவையாக நிற்பது விரும்பத் தக்கதன்று. அறுவடையில் அன்றிச் சூடடிக்கும் அந்தக் காலத்திலேயானாலும் கூடக் கிடைக்கும் பகுதிப் பொருளை வசூலித்துவிட வேண்டும். ஆராயுங் காலத்தே பசுவிலே நேரத்தில் தவறாமல் பாலைக் கறக்காமல், சேரக் கரக்கலாமென்று விட்டுவைத்தால் பால் மடியில் பால் ஊறுவதுங்கூட இல்லாமற் போய்விடும் என்பதே உண்மை ஆகும். பாற்பட்டு வாழ்ப எனினும் குடிகள்மேல் மேற்பட்ட கூட்டு மிகநிற்றல் வேண்டாவாம்; கோற்றலையே யாயினும் கொண்டீக; காணுங்கால் பாற்றலைப் பாலூறல் இல். அரசனானவன், வரிவசூல் காலங்கடத்தாமல் இருக்க வேண்டும் என்ற நீதியைக் கூறுவது இது. ‘பாற்றலைப் பாலூறல் இல்’ என்பது பழமொழி. 304. பழிக்கு மருந்து தண்மையான கடல்நாட்டுத் தலைவனே! மருந்தினாலே தணித்துக் கொள்ளாமல் வாளாது விட்டுவிட்டால் ஒருவனுக்கு வந்த நோயானது அவனுடைய உயிரையே அழித்துவிடும். ஆதலால், தம்முடைய தகுதிக்குப் பொருந்தாத பழியென்று சொல்லப்படுகின்ற பொல்லாத நோய்க்கு மருந்து போல நடப்பதே மாட்சிமையான பண்புகள் உடையவராயிருத்தல் என்பதை அறிய வேண்டும். பொருந்தாப் பழியென்னும் பொல்லாப் பிணிக்கு மருந்தாகி நிற்பதாம் மாட்சி--மருந்தின் தணியாது விட்டக்கால், தண்கடல் சேர்ப்ப! பிணியீ டழித்து விடும். நோய் தீர்ப்பது மருந்து; அதுபோலப் பழியைப் போக்குவன மாட்சி யுடைய ஒழுக்கங்கள் என்பது கருத்து. ‘பிணியீ டழித்துவிடும்’ என்பது பழமொழி, அதனை உடனுக்குடனே களையவேண்டு மென்பது தெளிவு. இப்படியே பழியையும் போக்கவேண்டும் என்பதும் கூறப் பெற்றது. 305. ஒன்றிலே உறுதிகொள்ளல் பலவாறாகப் பரந்து விளங்கும் சமயத்தார்களுடைய வேறு வேறான கொள்கைகளின்மேல் எல்லாம் மனஞ் செலுத்திப் பல்வேறு வழிகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டாம். அக்கொள்கைகளுள் எல்லாம் நன்மை நிரம்பிய உண்மையை ஆராய்ந்து அறிந்து அஃது ஒன்றையே மேற் கொள்க. அதுவே எல்லையில்லாத பெருமையைத் தருவதாகும். பிரம்பூரி என்னும் நெல்லைப் பதத்தாலே விதைத்தால் அது ஒன்றுக்கு ஏழாக விளைவதுபோலவே, அவர் பெருமையும் மிகுதியாகப் பெருகும் எனலாம். பரந்தவர் கொள்கைமேல் பல்லாறும் ஓடார் நிரம்பிய காட்சி நினைந்தறிந்து கொள்க வரம்பில் பெருமை தருமே; பிரம்பூரி என்றும் பதக்கேழ் வரும். மதவெறியில்லாமல், எல்லா மதங்களும் சொல்வன வற்றுள் நன்மையானவற்றை மேற்கொண்டு சிறப்புப் பெறுக என்பது கருத்து. ‘பிரம்பூரி என்றும் பதக்கேழ் வரும்’ என்பது பழமொழி. எல்லா மதக் கோட்பாடுகளினும் சிறந்தவற்றை ஆராய்ந்து மேற்கொள்வதே சிறப்பு என்பதாம். 306. தீயவனுக்கு நல்லவனும் தீயவனே நன்மை தீமைகளின் கூறுபாட்டை அறியாதவர்கள் சொல்லுகின்ற, உறுதிபயவாத சொற்களை, அவை தீது தருவ தாகும் என்று கருதாதவர் களாக, அதன் வழியே நின்று பயனற்ற காரியங்களையே செய்துவருபவர் கீழ்மக்களாவர். அவர்கள், பெரியோர்கள் சொல்லும் உறுதிப் பொருள்களையும் ஏற்றுக் கொள்ளாமல், தாம் தம்மைக் காத்துக் கொள்ளும் வாய்ப்பையும் இழந்துவிட்டவர்கள், அத்தகையவர்களே, தம் குற்றங்களை உணராது, பிறரைக் கள்ளர்களாகச் சுட்டிப் பழித்துப் பேசுபவர்கள். தெரியாதார் சொல்லும் திறனின்மை தீதாப் பரியார், பயனின்மை செய்து பெரியார்சொல் கொள்ளாது, தாம்தம்மைக் காவா தவர், பிறரைக் கள்ளராச் செய்குறு வார். ‘காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்’ என்றாற் போல, அவன் தீயவனாகவே, அவன் நல்லவரையும் கள்ளர்களாகப் பேசிப் பழிப்பான் என்பது கருத்து. ‘பிறரைக் கள்ளராச் செய்குறு வார்’ என்பது பழமொழி. ‘தான் திருடி பிறரை நம்பாள்’ என்பது கிராமத்துப் பழமொழி. 307. பேதையர் நட்பு தம்முடைய நண்பர் ஒருவர்மீது சிலர் பழியான செய்தி களைச் சொன்னால், மேன்மக்கள், ‘இவர் அவரோடு விரோதம் உடையவர் போலும்’ என்று கருதுவார்களே அல்லாமல், அப்படிச் சொன்னவற்றை ஆராய்ந்து பார்க்கக் கூட நினைக்க மாட்டார்கள். கீழ்மக்களோ, தமக்கு முன்னே நின்று கூறுகின்ற கோளையே உண்மையென நம்பி விடுவார்கள். அதனால் பேதை மக்களுடைய நட்பு முடிவிலே துன்ப மாகவே முடியும் என்றறிக. இடையீடு உடையார் இவரவரோடு என்று தலையாயர் ஆராய்ந்து காணார்--கடையாயார் முன்னின்று கூறும் குறளை தெரிதலால் பின்னின்னா பேதையார் நட்பு. சிநேகிதனின் மீது எவரோ சொல்லும் பழிச் சொல்லைக் கேட்டு அவற்றை உண்மையென உணரும் பேதைமாக்களின் நட்பு என்றும் துன்பமே தரும் என்பது கருத்து. ‘பின்னின்னா பேதையார் நட்பு’ என்பது பழமொழி. 308. பொருளும் காவலும் புலி வந்து தங்கியிருந்தால் அதனால் அந்தப் புதருக்கும் வலிமை யாகவே இருக்கும். அப்படியே, அந்தப் புதரின் காரணமாகப் புலிக்கும் வலிமை அதிகமாயிருக்கும். ஒன்றுக்கு ஒன்று பாதுகாப்பாக இரண்டும் விளங்கும். அதுபோல, தன்னிடத்தே உள்ள பொருளைப் பேணிக் காப்பவன் அதற்கு உடையவனாகச் சிறப்படைவான்; அந்தப் பொருளோ தன்னை உடையவனான அவனை வறுமையினின்று காப்பதாகவும் விளங்கும். உடையதனைக் காப்பான் உடையான்; அதுவே உடையானைக் காப்பதூஉம் ஆகும்--அடையின் புதர்க்குப் புலியும் வலியே; புலிக்குப் புதரும் வலியாய் விடும். பொருளை ஒருவன் சிதறாது பேணிக் காத்தால், அப்படிக் காத்த பொருள், அவன் வாழ்வைச் சிதறவிடாமல் காத்து உதவும் என்பது கருத்து. ‘புதர்க்குப் புலியும் வலியே; புலிக்குப் புதரும் வலியாய் விடும்’ என்பது பழமொழி. பொருளுக்கு அவன் காப்பு; அவனுக்குப் பொருள் காப்பு என்பதாம். 309. பொய்யான தற்புகழ்ச்சி தாம் செய்த செய்கைகள் சிறிதாயினும், அவை கைகூடி வந்ததென்ற தகுதியும் இல்லாதவர்கள்; அப்படி முடிக்க முடியாதவர் என்ற உண்மையைப் பிறர் உணர்ந்து உதவவும் செய்யாதவர்களாக, அதனால் பயன் அடைந்த நன்மை உடையவர் என்ற தகுதி தோன்ற தம்மைத் தாமே பொய்யாகப் புகழ்ந்து கொள்ளுதல், நகைப்பிற்கே இடமாகும் அது, தன்னால் பிடிக்கப் படாமல் காட்டினிடத்திலேயே இருக்கும் பறவையை, அரைக்கால் பொன்னுக்கு விற்பேன் என்று ஒருவன் பெருமை பேசிக்கொள்வது போன்ற தாகும். செய்த கருமம் சிறிதானும் கைகூடா; மெய்யா உணரவும் தாம்படார்--எய்த நலத்தக்கத் தம்மைப் புகழ்தல், புலத்தகத்துப் புள்ளரைக்கால் விற்பேம் எனல். முடியாததை முடியாதென்று சொல்லாமல், முடிப்பவர் போலக் காட்டி முடிக்க முடியாதுபோய்த் தோல்வியுற்ற பின்னும் தாம் முடித்தவரே போலப் பொய்யாகப் பெருமை பேசிக் கொள்ளுதல் கூடாது என்பது கருத்து. ‘புலத்தகத்துப் புள்ளரைக்கால் விற்பேம் எனல்’ என்பது பழமொழி. 310. குலத்தளவே குணம் இனிமையாகப் பேசுபவளே! ஒருவருடைய உள்ளத்தின் தன்மை இன்னபடியென்று அறிய விரும்பும் ஒருவரால், அப்படி அறிந்து தெளியும் திறம் உடைமை உடையதாவது என்றும் அரிதாகும். பறவைகள் தாம் வாழும் புலத்துக்குத் தக்கதான தன்மை உடையனவாயிருக்கும்; அப்படியே எவரும் அவருடைய குலத்துக்குத் தக்கதான தன்மை உடையவராக வேயிருப்பர். ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் திறமரிதால்; தேமொழி!--யாரும் குலக்குல வண்ணத்த ராகுப; ஆங்கே புலப்புல வண்ணத்த புள். ‘குலத்தளவே ஆகும் குணம்’ என்ற ஒளவையின் பொன் மொழியே இங்கும் விளக்கமாகின்றது. சூழ்நிலைக்குத் தக்கவாறு மனிதன் உருவா கின்றான் என்பதை வற்புறுத்துவார். பறவைகள் தாம் வாழும் புலத்திற்கு ஏற்ற தன்மை உடையனவாயிருப்பதைக் கூறினார். ‘புலப்புல வண்ணத்த புள்’ என்பது பழமொழி. அவரவர் செய்யும் செயல்களுக்குத் தகுந்த குணத்தினராக மாறுவதும் இதனையே வலியுறுத்தும். 311. பெரியவர் பெருமை நாடெங்கும் அறியப்பட்ட புகழினையுடைய பெரிய செல்வராக விளங்கிய ஒருவர், அந்தச் செல்வமெல்லாம் இழந்து போனவர்களாகத் தளர்ச்சியுற்ற காலத்தினும் பிறர் ஒருவருக்குத் தாழ்வார்களோ? வாடிப்போய் நரம்புகள் வலித்துச் சுருங்கிக் கிடந்து இருக்கின்றதாயினும் புலியினுடைய தலையை நாயானது அஞ்சாமற் சென்று மோந்து பார்ப்பது என்பது இல்லையல்லவா? நாடறியப் பட்ட பெருஞ்செல்வர் நல்கூர்ந்து வாடிய காலத்தும் வட்குபவோ!--வாடி வலித்துத் திரங்கிக் கிடந்தே விடினும் புலித்தலையை நாய்மோத்தல் இல். புலி எவ்வளவுதான் வாடித் தளர்ந்து கிடந்தாலும், நாய்க்கு அதனருகே சென்று மோந்து பார்க்கும் தகுதி ஒருபோதும் உண்டாவதில்லை. அதுபோலவே பெரியோர் வாடி வறுமை யுற்றாலும் சிறியோர்க்கு அவரை அணுகும் தகுதி ஒருபோதும் உண்டாகாது என்பது கருத்து. ‘புலித்தலையை நாய்மோத்தல் இல்’ என்பது பழமொழி. அதற்குத் துணிவு வராது என்பது கூறப்பெற்றது. 312. கயவருக்குச் செய்த நன்மை கண்ணோட்டம் ஏதுமற்ற கயவர்களின் கருத்தை உணர்ந்து அளவு கடந்து அவரோடு நெருங்கிப் பழகி ‘இதனால் துன்பம் வரும்’ என்று கருதாதவர்களாக அவருக்கு ‘நன்மை தருமே’ என்ற நல்லெண்ணத்தால் ஒன்றைச் செய்தாலும், செய்தவர்க்குத் துன்பமே ஏற்படும். அது புலியின் மீது அருள்கொண்டு ஒருவன் அதன் முகத்திலே அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் உண்ணியைப் பறித்துவிட முயல்வதைப் போன்றதே யாகும். கண்ணில் கயவர் கருத்துணர்ந்து கைமிக நண்ணி யவர்க்கு நலனுடைய செய்பவேல், எண்ணி, இடர்வரும் என்னாம், புலிமுகத்து உண்ணி பறித்து விடல். கயவர்க்கு இரக்கப்பட்டு நன்மை செய்வதுகூடத் தீமை யாகவே முடியுமென்பது கருத்து. ‘புலிமுகத்து உண்ணி பறித்து விடல்’ என்பது பழமொழி. ‘பாம்புக்குப் பால் வார்த்தல்’ என்பதும் இதைப்போன்ற கருத்து உடையது தான். 313. அரசனைப் பகையார் தன்மேலே பாய்கின்ற புலியின் எதிராக மானுக்கு ஒரு புகலிடமும் இல்லை. அதுபோலவே, பெருங்காற்றின் எதிராக வைக்கோல் சுமையும் நிலைத்து நிற்றல் இல்லை. ஆகவே, ஆற்றலுடைய வேந்தன் தீமையான கொடிய செயல்களையே செய்தகாலத்திலும் கற்றறிந்தவர்கள், அதற்காக அந்த அரசனை எதிர்த்து, அவன் சினங்கொள்வனவற்றைச் செய்வதைப்பற்றி ஒருபோதும் நினைக்கவே மாட்டார்கள். தீயன வல்ல செயினும், திறல்வேந்தன் காய்வன சிந்தியார் கற்றறிந்தார்--பாயும் புலிமுன்னர் புல்வாய்க்குப் போக்கில்; அதுவே வளிமுன்னர் வைப்பாராம் இல். ‘அரசன் தீயனவே செய்தாலும், வலியுடைய அவனுக்கு எதிராக எழுந்து அவனுக்குச் சினமுண்டாகுமாறு அறிவுடை யோர் நடந்து கொள்ள மாட்டார்கள்’என்பது கருத்து. ‘புலி முன்னர் புல்வாய்க்குப் போக்கில்; அதுவே வளிமுன்னர் வைப்பாராம் இல்’ என்பன பழமொழிகள். 314. தந்ததைத் தந்துவிடல் தமக்கு உள்ள பொருளை ஒருவர் ஒருவரிடத்திலே கொடுத்து வைத்திருந்தால் அப்படிக் கொடுத்துவைக்கப் பெற்றிருப்பவர் அது தம்மிடமே நிலைத்திருக்கும பொருள் என்று கருதிக் காலங்கடத்தல் வேண்டாம். அவர் அதனை மீட்டுக்கொள்ளவந்த பொழுதிலேயே கொடுத்து விடுக. ‘கீழான வழியிலே சேர்ந்த பொருள் தங்கி நிலைத் திருப்பதில்லை; விரைவிலே வெளியேறிப் போய்விடும்’ என்பதையும் அறிக. உள்ள தொருவர் ஒருவர்கை வைத்தக்கால் கொள்ளும் பொழுதே கொடுக்கத்தாம்--கொள்ளார் நிலைப்பொருள் என்றதனை நீட்டித்தல் வேண்டா புலைப்பொருள் தங்காவெளி. வைத்திருக்கவென்று பிறர் கொடுத்த பொருளைத்தானே எடுத்துக்கொள்ள நினைப்பவனின் செல்வம் ஒருபோதும் நிலையாது என்பது கருத்து. ‘புலைப்பொருள் தங்காவெளி’ என்பது பழமொழி. 315. அறிவுடையார் தொடர்பு இவை நல்லன என்றும், இவை தீயன என்றும் தாமே ஆராய்ந்தும், பிறர் எடுத்துக்கூறும் நல்லனவாகிய பிறவற்றை உணர்ந்தும் கொள்ளுதலான அறிவுடையவரை, ஒருவன், தன்னுடைய பேச்சாற்றலால் விரைந்து சென்று தன்வயமாகச் செய்து கொள்ளுதல் என்பது மிகவும் சிறந்ததாகும். அது, பழகிய ஓர் எருதைக் கொண்டு பழகாத மற்றோர் எருதையும் பழக்கித் தன்பால் பணிசெய்யச் சேர்த்துக் கொள்வது போன்றதாகும். நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும் நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின் வல்லிதின் நாடி வலிப்பதே, புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு. ‘அறிவுடையவன் ஒருவன் சிறந்த அறிவுடைய பிறரையும் தன் பக்கமாகச் சேர்த்துக் கொள்வது சிறந்தது’ என்பது கருத்து. ‘புல்லத்தைப் புல்லம் புறம் புல்லு மாறு’ என்பது பழமொழி. புல்லம்-எருது; புல்லுமாறு - சேர்த்துக்கொள்ளும் வழி. 316. கீழோரோடு வாழ்தல் பழிபாவங்களைச் செய்வதற்கு நாணமற்றவர்கள்; பிறர் மேல் சற்றும் இரக்கம் என்பதே இல்லாதவர்கள்; எப்போதும் நன்மை அல்லாத செயல் களையே செய்து ஒழுகுகின்றவர்கள்; இவர்கள் சான்றோரால் விரும்பப் படாத அறிவற்ற மாக்களுக்குச் சமமா வார்கள். இத்தகையவர்களை விருப்பமுடன் நடத்தி, இவர்க ளோடு கூடி வாழ்தலையும் ஒருவன் செய்தல், புழுவை உள்ளே பெய்துவைத்துத் தன் புண்ணைப் பொதிந்து கட்டிவைப்பது போன்ற அறிவற்ற செயலாகும். நாணார் பரியார் நயனில செய்தொழுகும் பேணா அறிவிலா மாக்களைப் பேணி ஒழுக்கி அவரோடு உடனுறை செய்தல், புழுப்பெய்து புண்பொதியு மாறு. புழுவை உள்ளேவைத்துப் புண்ணை மூடினால், சீழ் பெருகி நோய் மிகுதியாகித் துன்புறுத்தும். அதுபோல, நொடிக்கு நொடி துன்பமாக அமைவது கீழோர் உறவென்பது கருத்து. ‘புழுப் பெய்து புண் பொதியுமாறு’ என்பது பழமொழி. பிள்ளைப் பூச்சியை மடியிற்கட்டிக் கொள்வது போன்றது என்பதும் இதே கருத்தினதுதான். 317. காலத்தால் பயன் பெறுக சிறப்பு உடைய மன்னர்களை, அவர்க்குச் செவ்விதான காலத்தை நோக்கித் திறமையுடன் ஒன்றை எடுத்துச் சொல்பவர்களுக்கு, ஆகாத காரியம் எதுவுமே இல்லை. வெற்றிச் சிறப்புடைய அத்தகைய மன்னர்களுக்கு உயிர் போன்ற நிலைமையினராயிருந்தாலும், புறமாக இருக்கும் அமைச்சரை விட, அருகே இருக்கும் கூனரே நன்மை அடை வார்கள் என்றும் அறிக. சிறப்புடைய மன்னவரைச் செவ்விதின் நோக்கித் திறத்தின் உரைப்பார்க்கொன் றாகாத தில்லை விறற்புகழ் மன்னர்க்கு உயிரன்ன ரேனும் புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன். ‘அருகே இருந்து சமயந் தெரிந்து தக்கபடி சொல்பவரே அரசரிடம் தம் காரியத்தை எளிதாக முடித்துக் கொள்பவர்கள்’ என்பது கருத்து. ‘புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன்’ என்பது பழமொழி. 318. பகையின்றித் துணை வேண்டாம் புலியைக் காட்டிலும் பெரும் வலிமை உடையனவே யானாலும், வீட்டிலே எலிகளின் தொந்தரவு இல்லாதபோது, அந்தப் பூனைகளும் பாலைப் பெறுவதில்லை. அதுபோலத் தன்னினுங் காட்டில் வலிமையாளன் ஒருவனைத் தனக்குப் பகையாக உடையனல்லாத ஓர் அரசன், இளையரா யுள்ள படை வீரர்களால் என்ன காரியம் உடையவனாகப் போகின்றான்? தன்னின் வலியானைத் தானுடையன் அல்லாதான் என்ன குறையன் இளையரால்? மன்னும் புலியிற் பெருந்திறல வாயினும் பூசை எலியில் வழிப்பெறா பால். எலியற்ற வீட்டிலே பூனைக்குப் பால் கிடைக்காது; அது போலவே வலிய பகையரசன் இல்லாத மன்னனிடத்திலே படைவீரர்க்கு வேலை கிடையாது என்பது கருத்து. ‘பூசை எலியில்வழிப் பெறா பால்’ என்பது பழமொழி. ஒருவருடைய பணி தேவையானபோது தான் மக்கள் அவரைக் கவனிப்பார்கள் என்பதும் இதனால் அறியப்படும். 319. கயவர் மேல் வைத்த செயல் மான் பிணையின் நோக்கினைப் போன்ற மருண்ட நோக்கினையும், மயில்போன்ற சாயலையும் உடையவளே! தம் தொழிலைக் கயவர்களிடத்தே காட்டி, அதனைச் செய்து முடிக்கும் பொறுப்பையும் அவர்கள்மேல் வைத்து, அவர் எமக்கு எல்லாம் சிறப்பாகச் செய்வார்கள்’ என்று கருதி ஒருவர் அமர்ந்திருத்தல், அது அறிவற்ற செயலாகும் அது. நாறல் மீனைக் காயவைத்த இடத்திலே பூனையைக் காவல் வைத்தது போன்ற செயலாகும். காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்தவர் ஆக்குவர் ஆற்ற எமக்கென்றே அமர்ந்திருத்தல், மாப்பிணை நோக்கின் மயிலன்னாய்! பூசையைக் காப்பிடுதல் புன்மீன் தலை. பூனை, மீன் அனைத்தையும் தானே தின்று அழித்து விடுவதைப் போலவே, அக் கயவரும் எல்லாவற்றையும் தாமே தின்று ஏப்பமிட்டுவிடுவர் என்பது கருத்து. ‘பூசையைக் காப்பிடுதல் புன்மீன் தலை’ என்பது பழமொழி. 320. அடைந்தவர்மீது ஐயம் பூண் அணிந்த இளைய மார்பகங்களையுடைய, பொன் வளை அணிந்தவளே! தாம் பூண்ட பறையிலே அறைந்து ஒலி யெழுப்பாது வாளாது இருந்தவர் எவருமே இல்லை. ஆதலால், தம்மிடத்தே செயல் செய்பவராக அடைந்த பணியாளரை அங்கே இங்கே என்று சொல்லி ஏவி அலைக்கழித்தல் வேண்டாம். ‘அவர் மாண்பற்றவர்’ என்ற செய்தி ஏதும் இரகசிய மாகக் கிடந்ததொன்று அல்லவே? ஆண்டீண்டு எனவொன்றோ வேண்டா அடைந்தாரை மாண்டிலா ரென்றே மறைப்பக் கிடந்ததோ? பூண்தாங்கு இளமுலைப் பொற்றொடி! பூண்ட பறையறையார் ஆயினார் இல். பூண்ட பறையினை அடித்துப் பார்ப்பதே உலகத்தோரின் இயல்பு; அதுபோலப் பணிசெய்பவன் சிறுபிழைகள் செய்வதும் கூடும்; அவற்றைப் பணிகொள்வார் பாராட்ட லாகாது என்பது கருத்து. ‘பூண்ட பறையறைபார் ஆயினார் இல்’ என்பது பழமொழி. 321. பூவும் பெரியாரும்! ஒளிவீசும் இலைபோன்ற கூர்மையான முனையை உடைய வேலினோடு, நேராகப் பொருந்துகின்ற கண்களை உடையவளே! உயர்ந்த குடியிலே பிறந்தவர்களும் தமக்குத் தாழ்ந்த கீழ்மக்க ளோடு சேர்ந்தவர்களாக நடப்பார்களானால், அதனால் அந்தக் கீழ்மக்களும் உயர்பண்பு பெறமாட்டார்களா என்று கருதியே யாகும். அதுதான் மணமுள்ள பூவுடனே மணமற்ற நாரையுஞ் சேர்த்துக் கட்டுவது போன்றது. பெரிய குடிப்பிறந் தாரும் தமக்குச் சிறியார் இனமாய் ஒழுகுதல்--எறியிலை வேலொடு நேரொக்கும் கண்ணாய்! அஃதன்றோ பூவொடு நாரியைக்கு மாறு. பூவோடு சேர்ந்த நாரே மணம் பெறும்; அன்றிப் பூவின் மணங் குறைவதில்லை. அதுபோலவே, பெரியர் சிறியாரோடு சேர்வதனாலும் தம் இயல்பிலே குறைய மாட்டார் என்பது கருத்து. ‘பூவோடு நாரியைக்கு மாறு’ என்பது பழமொழி. 322. அரசர்க்கு எளிது தம்முடைய புகழானது உலகத்திலே நிலைத்து நிற்கும் படியாகத் தம்மை வந்து இரந்தவர்கட்கு எல்லாம் தாம் பெற் றுள்ள பொருள்களை இல்லை என்னாது கொடுத்துக் கொண்டி ருப்பதே வள்ளன்மை எனப்படும், தம் பகைவரை அவராண்ட நாட்டினின்றும் அகற்றி அதனையும் தம் நாட்டோடு சேர்த்துக் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு எதுதான் அரிதான செயலாகும்? ஒரு பெண்ணை மகளாகவோ, மனைவியாகவோ பெற்றவன் ஒருவன், அவளுக்காகச் செய்வதற்கான பொருட் செலவுக்குப் பயப்படு வானோ? ஏற்றார்கட் கெல்லாம் இசைநிற்பத் தாமுடைய மாற்றார் கொடுத்திருப்ப வள்ளன்மை--மாற்றாரை மண்ணகற்றிக் கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என்னரிதாம் பெண்பெற்றான் அஞ்சான் இழவு. புகழுக்காக, இரப்பார் உவப்ப எந்தப் பொருளையும் வழங்குவதே பேரரசர்களின் இயல்பு என்பது கருத்து. பெண் பெற்றான் அஞ்சான் இழவு’ என்பது பழமொழி. இழவு-பொருட்செலவு. 323. தமரே உதவுபவர். கருமை மிகுந்த அடர்த்தியான கூந்தலையும், பசிய தொடி யினையும் உடையவளே! உண்மையாக ஆராய்ந்து பார்த்தோ மானால், அயலார் ஒருவர் மற்றொரு அயலாருக்குச் செய்வது என்ன இருக்கிறது? மழையானது ஒருகாலத்தே பெய்யவில்லை என்றாலும், அடுத்துப் பருவம் வந்ததும் தவறாது பெய்யும். அது போலவே, உறவினர் ஒருகாலத்து உதவாவிட்டாலும் ஆபத்துக் காலத்தில் தாமாகவே வந்து உதவுவார்கள் என்று அறிவாயாக. மெய்யா உணரின் பிறர்பிறர்க்குச் செய்வதென்? மையார் இருங்கூந்தல் பைந்தொடி! எக்காலும் செய்யார் எனினும் தமர்செய்வர்; பெய்யுமாம், பெய்யா தெனினும் மழை. ஓர் உதவியும் செய்யாதவர்போலத் தோன்றினாராலுங் கூட, உறவினர், ஆபத்துக்காலத்தில் தவறாமல் வந்து உதவுவார்கள்’ என்பது கருத்து. ‘பெய்யுமாம் பெய்யா தெனினும் மழை’ என்பது பழமொழி. மலைபோலக் கைம்மாறு கருதாது உறவினரும் சமயத்தில் உதவுவர் என்பதாம். 324. பெற்றதனால் மகிழ்க! தம்மோடு உரிமையோடும் பிரிவின்றிப் பழகியதனைக் கண்டு போற்றப்படுபவர்கள், உள்ளத்திலே மாறுபாடில்லாமல், தாம் அந்த நட்பினாற் பெற்றதனைக் கொண்டு மகிழ்ச்சி அடை யாதவர்களாகப் பின்னும் பெற வேண்டும் என்று பேராசை கொள்வார்களானால், அது தீமை தருவதாகும். ஆழமாக மிகவும் தோண்டினால், நிலத்தினுள்ளே பாம்பு இருக்கக் காண்கின்ற வர்களையும் உடையது இவ்வுலகம். உரிதனிற் றம்மோடு உழந்தமை கண்டு பிரிவன்றிப் போற்றப் படுவார்--திரிவின்றித் தாம்பெற் றதனால் உவவார்; பெரிதகழின் பாம்புகாண் பாரும் உடைத்து. நண்பர்களின் உதவியைப் பெற்றவர்கள், பெற்றதனால் மட்டும் திருப்தியடையாமல் மேலும் மிகுதியாகப் பெறு வதற்குப் பேராசை கொண்டனரானால் அத்தகைய நட்பினால் தொல்லையே விளையும் என்பது கருத்து. ‘பெரிதகழின் பாம்பு காண்பாரும் உடைத்து’ என்பது பழமொழி. 325. பொறுப்பில்லாத செயல் அழியும் தாம் மேற்கொண்ட தம்முடைய செயலைத் தாமே செய் யாமல், சோம்பல்கொண்டு முடிக்கும் துணிவு இல்லாதவர் களிடத்திலே செய்யுமாறு விட்டு வைத்தால், அதுவே தவறு. அஃதன்றியும், அப்படிப் பொறுப்பை ஒப்பித்ததனால் செருக் குற்று அதனை மறந்துவிட்டுச் சுற்றிக் கொண்டும் இருந்தால், அச்செயல் மிகவும் சிதைவுற்று விரைவிலேயே அழிந்து விடும். தலைக்கொண்ட தங்கருமம் தாமடி கொண்டு கடைப்பிடி யில்லாதார் பால்வைத்துக்--கடைப்பிடி மிக்கோடி விட்டுத் திரியின், அதுபெரிது உக்கோடிக் காட்டி விடும். தன் வேலையைத் தானே செய்யாமல், சோம்பலாக இருப்பவனுடைய பொறுப்பிலே விட்டால் அது விரைவிலே கெட்டு அழியும் என்பது கருத்து. ‘பெரிது உக்கு ஓடிக் காட்டி விடும்.’ என்பது பழமொழி. 326. மனத் தளர்ச்சி கூடாது ‘எம்மிடத்திலோ யாதொரு பொருளும் இல்லை. எமக்கு உதவுவதற்கோ யாரொரு உறவினரும் இல்லை’ என்றெல்லாம் எண்ணிக் கொண்டு, ஒருவர் தம்மிடத்தே மனத்தளர்ச்சியென் னும் அழிவுக்குக் காரணமாகக் கூடியதாக வரும் செயல்களைச் செய்யாமல் இருப்பாராக. அப்படிச் செய்யா மலிருந் தால், அவர்க்கு ஒருபோதும் துன்பமே இல்லை. எவ்வி டத்தும், முன் கை நீட்சியாயிருப்பவர்களுக்குத் தோள்களும் நன்றாகத் திரண்டு பெருத்தே விளங்கும் அல்லவோ? எங்கண்ஒன் றில்லை எமர்இல்லை’ என்றொருவர் தங்கண் அழிவுதாம் செய்யற்க--எங்கானும் நன்கு திரண்டு பெரியவாம், ஆற்றவும் முன்கை நெடியார்க்குத் தோள். உள்ளத்திலே தளர்ச்சியை ஏற்படுத்தும் செயல்களை எவரும் செய்ய வேண்டாம் என்பது கருத்து. ‘பெரியவாம், ஆற்றவும் முன் கை நெடியார்க்குத் தோள்’ என்பது பழமொழி. மனத் துணிவு கொண்டவர்களுக்கு எதையும் செய்ய முடியும் என்பதும் ஆம். 327. பெரியவரைச் சார்ந்து பயன் அடைதல் அழகிய மாலையினை அணிந்த இராமனைத் தனக்குப் படைத் துணையாகக் கொண்டுசென்று; இலங்கைக்கு உரிய இராவணேசுவரனுக்கு இளையவனான விபீஷணன், இலங் கைக்கே மீளவும் சென்று; அதற்கு அரசனாகும் பதவியையும் பெற்றனன். ஆதலால், வலிமையில் பெரியவரைச் சார்ந்திருந்து, அதன் சார்பினாலே, பயன் பெறாதவர் என்று எவரும் இல்லை எனலாம். பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து இலங்கைக் கிறைவற்கு இளையான்--இலங்கைக்கே போந்திறை யாவதூஉம் பெற்றான், பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல். வலிமை உடையவரைச் சார்ந்து நின்றால், பகையை ஒழித்துத் தம் செயலையும் முடித்துப் பயன் பெறலாம் என்பது கருத்து. ‘பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல்’ என்பது பழமொழி. ‘பெரியாரைச் சார்ந்து பயனடையாதவர் இலர்’ என்று கூறிப் பெரியார் உறவைப் பெறக் கூறுவது இது. 328. பழிகாரன் பழிக்கு அஞ்சான்! பெரிய உப்பங் கழிகளிலே செருந்தி மரங்கள் தாழ்ந்து விளங்கிக் கொண்டிருக்கும், அலையெறியும் கடலையுடைய குளிர்ந்த நாட்டின் தலைவனே! தம் காலால் உராய்ந்து நடப்பவர் களை, உள்ளடி நோவும்படியாக நெருஞ்சியுங்கூடச் செய்வது ஒன்றுமில்லை. அதுபோலப் பெரும்பழியும் அதற்கு அஞ்சி ஒழுக்கம் பேணாதவர்களுக்கு எவ்வித அவமானத்தையும் தருவ தில்லை. உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவ நெருஞ்சியும் செய்வதொன் றில்லை--செருந்தி இருங்கழித் தாழும் எறிகடல் தண்சேர்ப்ப! பெரும்பழியும் பேணாதார்க்கு இல். முள்ளுக்கு அஞ்சாமல் காலை உராய்ந்து நடப்பவர் களுக்கு முள் தைத்தாலும் ஏதும் வருத்தம் செய்வதில்லை. அதுபோலவே பழிக்கு அஞ்சாத பாதகனுக்குப் பழியெழு வதைப் பற்றியும் கவலையில்லை என்பது கருத்து. ‘பெரும் பழியும் பேணா தார்க்கு இல்’ என்பது பழமொழி. உரிஞ்சி நடத்தல் - காலைத் தேய்த்து நடத்தல். நெருஞ்சி - நெருஞ்சி முள் 329. பேதைக்கு உணர்வு வராது பூத்த காலத்திலும் காய்விடாத பாதிரி முதலாகிய பல மரங்கள் உலகில் உள்ளன. அதுபோலவே வயதால் முதுமை பெற்றாலும் நன்மை தீமைகளைப் பற்றி நன்கு அறியாதவர்களும் உலகில் ஏராளமாக இருக் கிறார்கள். பதர் முதலியனவெல்லாம் போக்கி, பகுதிபண்ணி விதைத்தாலும் முளையாத வித்துக்களும் இருக்கின்றன. அவ்வாறே பேதைக்கு எவ்வளவு தான் எடுத்தெடுத்துச் சொன்னாலும் உணர்வு ஒருபோதும் உண்டாகாது. பூத்தாலும் காயா மரமுள; மூத்தாலும் நன்கறியார் தாமும் நனியுளர்; பாத்தி விதைத்தாலும் நாறாத வித்துள; பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு. எவ்வளவு முயற்சியும் கருத்தும் எடுத்துக் கொண்டாலும் பேதைக்கு உணர்வு கொளுத்த எவராலுமே முடியாது என்பது கருத்து. ‘பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு’ என்பது பழமொழி. 330. தருமத்தால் மோட்சம் மென்மையான இயல்பினையும், தேய்ந்து துவண்டு நுண்ணிதாக விளங்கும் இடையினையும் உடையவளே! அறிவாலே மாட்சியுடையவர், வளமான பெருஞ்செல்வத்தைப் பெற்றவிடத்து, அதனால் தாம் மறுமையிலும் இன்புறும் படி யாகத் தமக்குப் பாதுகாப்பான அறம் முதலியவற்றைச் செய்து வருவார்கள். அதுவே, பசுமையான கரும்பைத் தின்று அப்போ தைக்கு இன்புற்றும். பின்னர்ப் பயன்படுமாறு பாகு காய்ச்சி வெல்லக் கட்டியாக்கி வைத்தும் பயன்படுத்து வதனோடு பொருந்துவதாகும். மல்லற் பெருஞ்செல்வம் மாண்டவர் பெற்றக்கால் செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம்--மெல்லியல் சென்றொசிந் தொல்கு நுசுப்பினாய்! பைங்கரும்பு மென்றிருந்து பாகு செயல். செல்வம் பெற்றவர் இம்மைக்கும் மறுமைக்கும் இலாப கரமான வழிகளிலே அதனைச் செலவிட்டுத் தமக்கு நிலையான உறுதி தேடிக் கொள்ளல் வேண்டுமென்பது கருத்து. ‘பைங் கரும்பு மென்றிருந்து பாகு செயல்’ என்பது பழமொழி. 331. தீயவர் நட்பாகி உதவார் நெஞ்சமே! நீ அவர்மேற் கொண்டுள்ள ஆசையைக் கை விட்டுத் திருந்துவாயாக. சுவர் எடுக்கின்றபோதே ஒட்டி ஒன்று சேராத மண், அரிதாளை அரிந்து கலந்து சேரவமையக் கூட்டிப் பிசைந்தாலுங்கூடப் பொருந்தி சுவர்வைக்க ஆவதே இல்லை. அதுபோலவே, தீமையான எண்ணத்தை உடைய வர்கள் ‘இவர் வருத்தம் அடைந்தாரே’ என்று கருதி, என்றாவது நமக்கு ஆதரவாக நின்று உதவுவதும் உண்டோ? ஒருபோதும் அவர் உதவார் என்று அறிவாயாக. திருந்தாய்நீ ஆர்வத்தைத் தீமை உடையார் வருந்தினார் என்றே வயப்படுவ துண்டோ? அரிந்தரிகால் பெய்தமையைக் கூட்டியக் கண்ணும் பொருந்தாமண் ஆகா சுவர். தீயவர் ஒருபோதும் பிறருக்கு இரக்கப்பட்டு உதவும் மனப்பான்மை உடையவராகார் என்பது கருத்து. ‘பொருந் தாமன் ஆகா சுவர்’ என்பது பழமொழி. 332. பயன் உள்ளன கற்றல் மலைநாடனே! விளக்கு ஒளியற்றிருக்கிறதென்று கருதியே, அதற்குரிய நெய் முதலியவற்றை ஒருவர் பொருள் கொடுத்து வாங்கி இட்டு, அதனை விளக்கம் உடையதாக்கிக் கொள்கி றார்கள். அப்படி ஏற்றிய விளக்கு துளக்கமின்றி மங்கலாக எரிவதாயின் அதனால் பயன் என்ன? யாரும் பொருளைக் கொடுத்து இருளை விலைக்கு வாங்குவார்களோ? விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத் துளக்கமின் றென்றனைத்தும் தூக்கி;--விளக்கு மிருள்படுவ தாயின், மலைநாட! என்னை? பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள். விளக்கின் ஒளியால் அனைத்தையும் தெளிவாகக் காணலா மென்று அதற்குப் பொருட்செலவு செய்கின்றோம். அது போலவே, கல்வி முனையும்போது நல்லறிவு தருவனவான நூல் களையே முயற்சியுடன் கற்க வேண்டுமென்பது கருத்து. ‘பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்’ என்பது பழமொழி. 333. செல்வம் ஊழால் அமைவதுதான் உண்டாகி வளர்ந்த அழகிய உயர்ந்த பனைமரத்தை, அதன் பழத்தைப் பெறுவதற்கு விரும்பி அடைந்து இரவெல்லாம் அதனடியிலே காத்துக் கிடந்தாலும், தம் வாயினிடத்தே படுதற் குரிய நல்ல ஊழ் உள்ள வரிடத்திலேயே அந்தப் பனம் பழம் கிடைக்கும். அதுபோலவே, இலக்குமியும் சென்று தீண்டுதற்கு உரியவரிடத் திலேயே சென்று தீண்டுவாள் என்று அறிக. ஆஅய்வளர்ந்த அணிநெடும் பெண்ணையை ஏஎய் இரவெல்லாம் காத்தாலும்--வாஅய்ப் படற்பாலார் கண்ணே படுமே; பொறியும் தொடற்பாலார் கண்ணே தொடும். செல்வம் முயற்சியால் மட்டும் வராது; அதற்கு உரிய முன்வினைப் பயனாக நல்ல ஊழும் வேண்டும் என்பது கருத்து. ‘பொறியும் தொடற்பாலார் கண்ணே தொடும்’என்பது பழமொழி. ‘பொறி’ என்றது நல்லூழை.இதனை ‘ஆகலூழ்’ என்பர். 334. பகைவனிலும் வலிய துணை வாய் முன்னதாகும்படி ஒருவன் ஆட்டைக் கட்டி இழுத் தாலும், அதன்பின்னே நாய் வருமானால், என்ன இழுத்தாலும் அது இழுப்பவன் பின் போகவே போகாது. ஆகையால், தன்னை வருத்தக்கூடிய ஒருவன் தன்மேல் எதிர்த்து வந்தால், தனக்குப் பின்னே பக்கபலமாக நின்று அவனை வருத்தும் வலிமையுள்ள வனைத், தானும் துணையாகப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். தன்னலி கிற்பான் தலைவரின் தானவற்குப் பின்னலி வானைப் பெறல்வேண்டும்--என்னதூஉம் வாய்முன்ன தாக வலிப்பினும் போகாதே நாய்ப்பின்ன தாகத் தகர். ஆட்டுக்கிடை நாயைப்போல நின்று உதவும் தக்க துணையைக் கொண்டவர்க்குப் பகைவராலே துன்பமில்லை என்பது கருத்து. ‘போகாதே நாய்ப்பின்ன தாகத் தகர்’என்பது பழமொழி. பின்னே வரும் நாய்க்கு அஞ்சி ஆடு முன்னே செல்லாததுபோலப் பகையும் தன் பின்னேயுள்ள பகைக்கு அஞ்சி நம்மேல் வராது என்பது இதன் விளக்கமாகும். 335. தமக்குத் தாமே துன்பம் தேடார் தம் தலை மிகவும் கிழிந்து, தம் காலும் இழந்து அக்கால்கள் நடையைத் தாரா என்றவோர் நிலைமைக்கும் உட்பட்டு, முடத் துடனே, முடவன் என்ற அளவிலே பேரும் பிறிதாகப் பெறுத லான காரணத்தால், ஒருவர் கேணியிலே நீர் குறைவாயிருப்ப தைக் கண்டால், அதன்பின்னும் அதனுள்ளே பாய்ந்து தமக்குக் கேடு தேடிக்கொள்ள எவரும் துணிய மாட்டார்கள் அல்லவோ? கடுப்பத் தலைக்கீறிக் காலும் இழந்து நடைத்தாரா என்பதூஉம் பட்டு--முடத்தோடு பேர்பிறி தாகப் பெறுதலால், போகாரே நீர்குறி தாகப் புகல். தமக்குத் துன்பம் வருமென்று தெளிவாகத் தெரியும் ஒன்றிலே எவரும் தலையிடவே மாட்டார்கள் என்பது கருத்து. ‘போகாரே நீர்குறி தாகப் புகல்’என்பது பழமொழி. நீராழம் இல்லாக் கிணற்றில் குதித்தால் மண்டை உடையும், காலும் முடமாகும் என்று அறிந்து விலக்குவதுபோலத் துன்பத்தையும் தெரிந்து விலக்க வேண்டும். 336. தவறான வழியில் நடத்தல் நமக்கு இவரோடு மாறுபடுதல் ஆகுமோ என்பதைக் கருதாதவராகத், தாமாகவே பெரியார்முன் வலிய எதிரிட்டுச் சென்று, சிறுமையுடையோர், அவரைத் தறுகண்மை செய்து நடத்தல் அப்படி நடந்த சிறுமையாளர்க்கே அழிவைத் தரும். அது, தாம் போகும் வழியறியாத மாக்கள், புலத்தை மயங்க உணர்ந்து, ஊரினுள்ளே பிறர் கண்காணாதவாறு புகுந்து திருட முயன்று, அம்முயற்சியிலே செத்து அழிவதைப் போன்றதாகும். ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல், போமாறு அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச் சாமாகண் காணாத வாறு. பெரியாருடன் பணிவாக நடப்பதைவிட்டு மாறுகொண்டு திமிராக நடப்பவர் அழிவெய்துவார்கள் என்பது கருத்து. ‘போமாறு அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச் சாமாகண் காணாத வாறு’ என்பது பழமொழி. 337. குறிப்பாக அறிதல் தம்முடைய கண்ணினாலே பார்த்து அறியமுடியாத தம்முடைய உறுப்புக்களைக் கண்ணாடியிலே பார்த்து அறிவார்கள்; அதுபோலவே, ஒருவனுடைய முகத்தை நோக்கி அவனுடைய கருத்தை அறிபவர்கள், அவன் வந்த காரியத்தை அவன் சொல்லும் முன்பாகவே அறிந்து கொள்வார்கள். அப்படி அறிவதே, மகனறிவை அறியத் தந்தையின் அறிவுத் திறத்தை அறிந்தது போன்றதாகும். நோக்கி அறிகல்லாத் தம்முறுப்புக் கண்ணாடி நோக்கி அறிப; அதுவேபோல்--நோக்கி முகனறிவார் முன்னம் அறிப; அதுவே மகனறிவு தந்தை அறிவு. குறிப்பினாலே ஒருவனுடைய தன்மையை உணர வல்லவர் களாதல் வேண்டும் என்பது கருத்து. ‘மகனறிவு தந்தை அறிவு’ என்பது பழமொழி. நாலடியாரிலும் ‘செந்நெல்லால் ஆய’ எனத் தொடங்கும் பாடலுள், இந்தப் பழமொழி வந்துள்ளது. 338. பழம் பெருமையால் வாழ்தல் போரிலே ஈடுபடும் துணிவில்லாமல் ஓடிவந்துவிட்டு, பழித்தற்குரிய அந்தச் செயல் மிகுதியாகப் பலராலும் அறியவும் பட்டவரான கோழைகள், ‘எம் முன்னோர் முன் காலத்திலே இன்ன பெருமையுடையவராயிற்றே? அதனை இனி எவரிடத் திலே சென்று சொல்லுவோம்’ என்று கூறித் தம் முன்னோரின் புகழிலே மறைந்து கொண்டு சோறு பெற்று உயிர்வாழ்தல் வெறுக்கத் தக்கதாகும். அது, கணவன் மீது பற்றில்லாது அவனால் வெறுக்கப்பட்ட ஒருத்தி, தன் மகனின் மறைவிலே கணவனிடம் சோறுபெற்று உண்டு வாழ்ந்து வருவது போன்ற தாகும். அமர்விலக்கி ஆற்ற அறியவும் பட்டார் எமர்மேலை இன்னரால் யார்க்குரைத்தும், என்று தமர்மறையால் கூழுண்டு சேறல் அதுவே மகன்மறையத் தாய்வாழு மாறு. மகனுக்கு என்று கணவனிடம் பொருள்பெற்று அவனால் வெறுக்கப் பட்ட மனைவி வாழ்வது போன்றதே, பேராண்மை யற்றவன் பழம்பெருமை பேசி வாழ்வதும் என்பது கருத்து. ‘மகன்மறையத் தாய்வாழு மாறு’ என்பது பழமொழி. 339. நம்பிக்கைத் துரோகம் பசுமையான தொடியினை அணிந்திருப்பவளே! ‘நமக்கு ஒரு தளர்ச்சி வந்த காலத்திலே சேமநிதியாவார் இவர்’என்று கருதிப் போற்றப்பட்டவரான ஒருவர், அப்படி ஓர் இடர் வந்த காலத் திலே ஒன்றிற்கும் உதவாதவராக, ஏதாவதொரு அச்சத்தை மேலிட்டுக் காட்டி மனம் மாறினார் என்றால் அதுவே, மச்சின் மேல் ஒருவரை ஏற்றிவிட்டு ஏணியை வாங்கி விடும் செயலோடு ஒத்ததாகும். எய்ப்புழி வைப்பாம் எனப்போற்றப் பட்டவர் உற்றுழி ஒன்றுக்கு உதவலார், பைந்தொடீஇ! அச்சிடை இட்டுத் திரியின், அதுவன்றோ மச்சேற்றி ஏணி களைவு. உதவுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு ஆபத்தில் உதவாதவர் நம்பிக்கை துரோகிகள் என்பது கருத்து. ‘ஏறவிட்டு ஏணியை வாங்கினாற்போல்’எனவும் இப்பழமொழி வழங்கும். ‘மச்சேற்றி ஏணி களைவு’ என்பது பழமொழி. 340. கற்றவர் பழியான செயலைச் செய்தல் கற்கவேண்டியதென விதிக்கப்பட்ட அறநூற்களைக் கற்று உணர்ந்து, அவற்றிலே கூறப்பட்ட நெறிகளுக்கு மாறுபாடு இல்லாதவராகவும் விளங்குபவர். அந்நூலுக்கு மாறாக எழுந்த வர்களின் நூல்களை எல்லாம் பொருந்தாதெனக் கைவிட்ட வருமாகி ஒரு நிலைமைப்பட்டு வாழ்ந்து வருபவர், தாமே பழியான செயல்களைச் செய்தால் சந்திரனிடத்துப் பட்ட களங்கத்தைப் போல, அது எங்கும் விளங்கித் தோன்றி அவருக்கு இழிவைத் தரும். விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை இல்லார் கதிப்பவந் நூலினைக் கையிகந்தா ராகிப் பதிப்படவாழ்வார் பழியாய செய்தல் மதிப்புறத்துப் பட்ட மறு. கற்றவர் செய்யும் பழிச்செயல், அவருக்கு மிகவும் பெரிய அவமானந் தரும் என்பது கருத்து. ‘மதிப்புறத்துப் பட்ட மறு’ என்பது பழமொழி. 341. மாண்புடையார் சிறப்பு பலவான விண்மீன்களும் ஒருசேர வானத்திலே விளங்கி னாலும், பரந்த இருளைப் போக்குகின்ற மதியத்தைப்போல அவை நிலவைக் காய்தல் இயலாதனவாகும். அதுபோலவே, மிகவும் பெரியதான இந்த உலகத்திலே, அறிவில்லாத மூடர்கள் ஆயிரம்பேர் திரண்டனரானாலும், அறிவினாலே மாட்சி மைப்பட்ட ஒருவனைப்போல உலகுக்கு உபகாரமாக விளங்க மாட்டார்கள். ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால் மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கலார்; பாயிருள் நீக்கும் மதியம்போல் பன்மீனும் காய்கலா வாகும் நிலா. ஆயிரம் மூடரினும் ஓர் அறிவுடையவனே சிறந்த செயல்களைச் செய்பவனாவான் என்பது கருத்து. ‘மதியம் போல் பன்மீனும் காய்கலா வாகும் நிலா’ என்பது பழமொழி. 342. மயில்போன்ற கள்வர் வேல்போன்ற கண்களை உடையவளே! அனைவரும் துயில்கின்ற இரவு வேளையிலே, களவுசெய்து வாழும் வாழ்க்கையை மேற்கொண்டு, வெயில் விரிந்த பகற் காலத்திலே எல்லாருக்கும் நல்லவர்போலக் காட்டி வெளிப்பட்டு வருபவரான, மயில் போன்ற கள்வரையும் உடையதுதான் இந்த உலகம். துயிலும் பொழுதத்து உடைவூண்மேற் கொண்டு வெயில்விரி போழ்தின் வெளிப்பட்டா ராகி அயில்போலுங் கண்ணாய்! அடைந்தார்போல் காட்டி மயில்போலும் கள்வர் உடைத்து. கொடிய பாம்பைப்பற்றி விழுங்கிவிட்டுச் சாதுவாகத் தோன்றும் மயிலைப்போல, கொடிய செயலைச் செய்து விட்டு நல்லவராக நடித்தலால், ‘மயில்போலும் கள்வர்’ என்றார். அத்தகையவர் உறவை வெறுத்து ஒதுக்கவேண்டுமென்பது கருத்து. ‘மயில்போலும் கள்வர் உடைத்து’ என்பது பழமொழி. 343. பணத்தாசை கொண்ட படித்தவர் கன்றினையுடைய பசுவானது வரப்புகளிலே மலர்ந்துள்ள பூக்களை மேய்கின்ற வளவிய நீர்வளம் உடைய ஊரனே! மரத்தை வெட்ட உதவுகின்ற கருவிகள் மயிரைக் கழிக்க உதவுவன அல்ல. அதுபோலவே, செல்வத்தைப் பெற்றாலும், பிறர்க்குக் கொடுத்து உதவாமலும், தாமும் அனுபவியாமலும், படித்தவர்களுங்கூடப் பற்று உடையவர்களாக இறுகப் பற்றிக் கொண்டிருப்பார்கள். பெற்றாலும் செல்வம் பிறர்க்கீயார் தாந்துவ்வார் கற்றாரும் பற்றி இறுகுபவால்--கற்றா வரம்பிடைப் பூமேயும் வண்புனல் ஊர! மரங்குறைப்ப மண்ணா மயிர். கருவி என்ற அளவிலே ஒன்றாயினும் மரம்வெட்டும் கருவி மயிர் சிரைக்க உதவாது. அதுபோலப் படிப்பு என்ற அளவிலே ஒன்றாயினும், பொருளின் பயனை உணர்ந்து அறம் செய்யாத வரின் படிப்பு நல்ல படிப்பாகாது என்பது கருத்து. ‘மரங் குறைப்ப மண்ணா மயிர்’ என்பது பழமொழி. 344. அரசாணையும் பிறர் ஆணையும் புன்னை மரங்களையுடைய கானற் சோலை யினிடத்தேயும் நீர் வந்து பரவுதலான, மிக்க அலைகடலின் தண் சேர்ப்பனே! ஒரு பெரிய மரத்தின் அடியிலே மற்றொரு மரத்தை நட்டால் அது வளரமாட்டாது அழியும். அதனாலே மன்னவன் ஆணை செலுத்தும் இடத்திலே, மற்றவர்கள் அதற்கு மேம்பட்டு இடும் கட்டளைகள் என்னவகையால் செய்யப் பெறுவனவாகும்? மன்னவன் ஆணைக்கீழ் மற்றையார் மீக்கூற்றம் என்னவகையால் செயப் பெறுப?--புன்னைப் பரப்புநீர் தாவும் படுகடல் தண்சேர்ப்ப! மரத்தின்கீழ் ஆகா மரம். ‘மன்னனின் ஆணையின்கீழ்ப் பிறவாணை ஓங்காது’ என்று அரசாணையின் சிறப்புச் சொல்லப்பட்டது. ‘மரத்தின் கீழ் ஆகா மரம்’ என்பது பழமொழி. 345. பரிபவரிடம் மறையார் அறுத்துச் செய்யப்பட்ட அழகிய சங்கு வளையல்களை உடையவளே! நோய் தீரவேண்டுமென விரும்புகிறவர்கள் அதனைத் தீர்க்கும் மருத்துவர்க்கு அந்நோயினை மறைக்க மாட்டார்கள். அதுபோலவே, மிகவும் தமக்காகப் பரிந்து தம் வருத்தத்தைத் தீர்ப்பார்கள் என எண்ணப்பட்ட ஒருவருக்கு, தாம் உற்ற குறைபாட்டைச் சென்று உரைப்பார்கள், அது நீங்க வேண்டுவார். தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பர்எனப் பட்டார்க்கு உற்ற குறையை உரைப்பதாம்--தெற்ற அறையார் அணிவளையாய்! தீர்தல் உறுவார் மறையார் மருத்துவர்க்கு நோய். உற்ற குறையைத் தீர்க்கும் இரக்கசிந்தை உடையவரிடம் சென்று சொல்லுவதில் தவறில்லை என்பது கருத்து. பிறரிடம் சென்று உரைப்பது தவறு என்பதும் குறிப்பு. ‘மறையார் மருத்துவர்க்கு நோய்’ என்பது பழமொழி. தெற்ற - தெளிவாக. பரிந்து - இரக்கப்பட்டு. 346. தெளிவும் செயலும் தெளிவான அறிவினை உடையவரை அல்லாமல், திறமையில்லாத முற்றல் ஒருவனைத் தேடிப்பிடித்து, ஒரு செயலைச் செய்வதற்கு யாரும் நியமிக்கமாட்டார்கள். ஒன்றைக் கற்று அறிந்து, அதன்கண் குற்றமற்று ஒருவன் விளங்கிய காலத்தும்கூட, அந்தக் கல்வியை மேலும் அதிகமாக்கிக் கொள்ள வேண்டுமென்ற நினைவுடன், அதன்பால் மெலிவுடையவனாக இருத்தலே அவனுக்கு நன்மையாகும். தெற்ற அறிவுடையார்க்கு அல்லால் திறனில்லா முற்றலை நாடிக் கருமஞ் செயவையார்; கற்றொன் றறிந்து கசடற்ற காலையும் மற்றதன் பாற்றேம்பல் நன்று. கற்றாலும், தெளிவான அறிவு இல்லாதவனிடம் விட்ட செயல் உருப்படாது என்பது கருத்து. ‘மற்றதன் பால் தேம்பல் நன்று’ என்பது பழமொழி. 347. மன்று அஞ்சுவான் அழிவான் பிறன் தனக்குச் செய்த கொடுமை ஒன்றை உடையவன், தன்னைச் சேர்ந்தவர்களிடத்தும்கூட அதனைப்பற்றிய உண்மை யைச் சொல்ல மாட்டான், சொன்னால், தனக்கு மேலும் துன்ப முண்டாகும் என்றே அஞ்சுவான். பலரும் திரண்டிருந்த நியாய சபையிலே சென்றும், தன் குறையை எடுத்துச்சொல்ல அஞ்சுபவர்களுக்குப் பரிகாரமே எதுவும் இல்லை. செய்த கொடுமை உடையான் அதன்பயம் எய்த உரையான் இடரினால்--எய்தி மரிசாதி யாயிருந்த மன்றஞ்சு வார்க்குப் பரிகாரம் யாதொன்றும் இல். தனக்குக் கொடுமை செய்தவனை நீதிமன்றத்திலே நிறுத்திப் பரிகாரம் தேடுவதற்கு அஞ்சி இருக்கும் ஒருவனுக்கு ஒருபோதும் பரிகாரம் கிடையாது என்பது கருத்து. மரிசாதி - மரியாதை; நீதி வழி நிற்றல்; ‘மன்றஞ்சு வார்க்குப் பரிகாரம் யாதொன்றும் இல்’ என்பது பழமொழி. 348. கீழோனைக் கண்டால் பயம் நிலைபெற்ற குன்றுகளினின்றும் வீழுகின்ற, மின்னுக் கொடி போன்று விளங்கும் அருவிகளையுடைய நல்ல நாடனே! அறிவினாலே நிரம்பிய சான்றோர் களல்லாமல், வெறுக்கத்தக்க வராகிய பொதுமக்களது பொல்லாத ஒழுக்கமாகிய அது, மன்றத்திலே நின்றபோது பித்தேறியது போன்றதாகும். முதுமக்கள் அன்றி முனிதக்கா ராய பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம்--அதுமன்னும் குறைத்து வீழும் கொடியருவி நன்னாட! மன்றத்து மையல்சேர்ந் தற்று. பித்தேறியவனைக் கண்டு மன்றத்தார் யாவரும் அஞ்சி ஒதுங்குவதுபோலச் சான்றோரும் கீழோரின் பொல்லாங் குகளைக் கண்டு அவரைவிட்டு அஞ்சி ஒதுங்குவர் என்பது கருத்து. ‘மன்றத்து மையல்சேர்ந் தற்று’ என்பது பழமொழி. 349. உதவும் உறவினர் ஒருவருக்குத் துன்பம் வந்தடைந்த காலத்திலே, அவருக்கு நல்ல உறவினர் என்று சொல்லப்படுபவர்கள். நல்ல செயல் களைச் செய்கின்ற மரபினை மேற்கொண்டு, அந்தத் துன்பத்தை நீக்குவார்கள். அப்படி நீக்கும் தன்மை வீட்டிலேயே இருக்கும் மருந்து மரத்தைப் போன்றதாகும். அல்லல் ஒருவர் அடைந்தக்கால் மற்றவர்க்கு நல்ல கிளைகள் எனப்படுவார்--நல்ல வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே மனைமர மாய விருந்து. தன்னைக் குறைத்தாலும் மருந்தாகி உதவும் மருந்து மரம் போன்றவர், உறவினர்களுக்கு ஆபத்திலே உதவுபவர் என்பது கருத்து. ‘மனைமர மாய விருந்து’ என்பது பழமொழி. 350. அறிவற்றார் செல்வம் இனிய ஒலியினையுடைய அருவிகள் கற்பாறைகளின் மேலே வந்து வீழ்கின்ற மலை நாட்டிற்கு உரியவனே! பழமையாக வருகின்ற அறிவினாலே, மாட்சிமையான துணிவுகள் யாதொன்றும் இல்லாத அறி வற்றவர்கள். நன்மையால் மாட்சி மைப்பட்ட செல்வத்தைப் பெறுதல், மாமரமானது மிகவும் காய்த்துத் தன்மேற் பிறர் எறியும் கல்லை ஏற்றுக் கொள்ளு மாறுபோலத் துன்பம் அடைதற்கே ஏதுவாகும். தொன்மையின் மாண்டதுணிவொன்றும் இல்லாதார் நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்--இன்னொலிநீர் கன்மேல் இலங்கும் மலைநாட! மாக்காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு. அறிவற்றார் செல்வம் பெற்றால், பலரும் அவரை வருத்தி அதனைப் பறித்து உண்பார்கள். அது நல்ல வகையிலே பயன் படாது என்பது கருத்து. ‘மாக்காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு’ என்பது பழமொழி. ‘காய்த்த மரம் கல்லெறி படும்’ என்பதும் நினைக்க. 351. உயர்ந்தோர் குற்றம் மானானது தன் கன்றுக்குப் பாலூட்டிக் கொண்டு இருக்கும் மலை நாடனே! வரிசையாகக் கடகத்தைத் தாங்கி இருக்கும் நீண்ட தோள்களை யுடைய திருமாலுக்கே யானாலும், குற்றம் செய்தான் என்னும் பழிச் சொல்லானது என்றும் நீங்காததே யாகும். ஆதலால், உயர்ந்தோர்களின் பால் தோன்றும குற்றமானது வெள்ளை மாட்டின் முதுகிலே இட்ட சூட்டைப் போல என்றும் ஒழியாது நிலைத்திருக்கும் என்று அறிவாயாக. நிரைதொடி தாங்கிய நீடோள்மாற் கேயும் உரையொழியா வாகும் உயர்ந்தோர்கட்குற்றம் மரையா கன்றூட்டும் மலைநாட! மாயா, நரையான் புறத்திட்ட சூடு. காக்குங் கடவுளையே, குற்றம் இன்னின்ன காலத்து இன்னின்ன செய்தான் என்று எடுத்துப் பேசும் இயல்புடையது உலகம். பெரியோர் செய்த குற்றம் என்றும் நிலைபெறும் என்பதையே அது காட்டுமாதலால், அவர் குற்றமே இல்லாத வராக விளங்க வேண்டும் என்பது கருத்து. ‘மாயா நரையான் புறத்திட்ட சூடு’ என்பது பழமொழி. நரையான் - வெள்ளை நிறமாடு. 352. மீந்துள்ள செல்வம் தான் காக்கும் காவலையும் கடந்து, விரைந்து சென்று தான் மிகுத்துத் தொகுத்து வைத்திருக்கும் மிகுதியான செல்வத்தை அரசனானவன் வந்து கைப்பற்றினால், வைத்திருப்பவர் கொடுத்து உயிர் பிழையாமல் வேறு என்ன செய்வார்கள்? உலகப் பற்றுக்களையெல்லாம் துறந்த பெரியவர்களுக்கேயா னாலும், அளவுகடந்த செல்வம் சேர்ந்திருந்தால், அதனால் வரும் துன்பத்திற்கு ஒரு பரிகாரமுமே இல்லையாகும். காப்பிகந்து ஓடிக் கழிபெருஞ் செல்வத்தைக் கோப்பெரியான் கொள்ளக் கொடுத்திரா தென்செய்வர்? நீத்த பெரியார்க்கே யாயினும் மிக்கவை மேவிற் பரிகாரம் இல். செல்வத்தை ஈந்தும் அநுபவித்தும் வாழாமல் காத்து வைத்தால், முடிவில் அதனால் துன்பமே வரும் என்பது கருத்து. ‘மிக்கவை மேவிற் பரிகாரம் இல்’ என்பது பழமொழி. 353. தீயோன் இகழ்தல் நல்லதல்லாத சபையினுள்ளே புகுந்து நாணங்கெட்டு வாழ்பவர்கள், நல்ல சபையிலே புகுந்திருந்து, பிறர் நா அடங்குமாறு, கல்வியால் அளவிறந்து மிக்கராக விளங்கும் ஒருவரின் அறிவை இகழ்ந்து கூறுதல், மிளகின் உளுவை உண்ணப் புகுவதனோடு ஒக்கும். அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர் நல்லவையுள் புக்கிருந்து நாவடங்கக் கல்வி அளவிறந்து மிக்கார் அறிவெள்ளக் கூறல் மிளகுளு வுண்பான் புகல். மிளகின் புழுவை உண்பவன் சாவான் என்பர். அதுபோல, அங்ஙனம் பழித்தவனும் அழிவான் என்பது குறிப்பு. ‘மிளகுளு வுண்பான் புகல்.’ என்பது பழமொழி. 354. யானையும் முடவனும் கற்று வல்லவர்களான பெரியோரைச் சினங்கொள்ளச் செய்து கல்லாதவர்கள் சொற்களைக் கொழித்துக்கொண்டு மனவெழுச்சியுடன் எழுதல் எது போல்வ தென்றால் தானும் நடக்காத முடவன் ஒருவன், தன்னுடைய பிடிப்பை ஊணிக் கொண்டு சென்று, யானையோடு உறவாடுதலைப் போன்ற தாகும். கற்றாற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார் சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல்--எற்றெனின் தானும் நடவான் முடவன் பிடிப்பூணி யானையோ டாடல் உறவு. முடவன் சென்று யானையோடு உறவாடினால், அதனால் கொல்லப்படுவான். அதுபோலக், கயவரும் அவமானம் அடைவார்கள் என்பது கருத்து. ‘முடவன் பிடிப்பூணி யானை யோ டாடல் உறவு’ என்பது பழமொழி. 355. நல்வினையும் செல்வமும் முன் பிறவிகளிலே பெரிதான நல்வினைக்கு உரிய செயல்களைத் தடையின்றிச் செய்யாதவர்கள், பின்வரும் பிறப்பிலே பெரிய செல்வம் பெறுதல் என்பது ஆகக் கூடியதோ? பிறருடைய முதலோடு மாறுபட்டு முயன்று பொருள் ஈட்டு தலைச் செய்ய எண்ணியபோது, அவன் முயற்சிகள் என்ன வாகும்? தன் சொந்தமுதல் இல்லாத ஒருவனுக்கு அதனால் வரும் ஊதியமும் இல்லை. முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார், பிற்பெரிய செல்வம் பெறலாமோ?--வைப்போடு இகலிப் பொருள் செய்ய எண்ணியக்கால் என்னாம்? முதலிலார்க்கு ஊதியம் இல். முற்பிறப்பிலே நல்வினை செய்தவர்க்கே பிற்பிறப்பிலே செல்வம் வந்து வாய்க்குமென்பது கருத்து. முன்செய் நல்வினை முதலாகவும் பின்வரும் செல்வம் அதற்கான ஊதியமாகவும் கொள்க. ‘முதலிலார்க்கு ஊதியம் இல்’ என்பது பழமொழி. 356. அருளற்றவர் அறவாழ்வு அறநெறிக்கு அடிப்படையான பண்பு பிற உயிர்களின் மீது அருள் உடையவராய் இருப்பதேயாகும். இதனையே, தாம் நடப்பதற்கு உரிய ஒழுக்கமாகக் கண்டு, முழுவதும் நல்லொழுக் கத்தின் சிறப்பை அறிந்தவர்கள் எவரோ, அவரே வாழ்வுப் பயனுக்குரிய முதலினை நன்றாக அறிந்தவர்களா வார்கள். மிகத்தெளிவாக விளங்கும் அந்த முதலைக் கைவிட்டுவிட்டு, அஃது ஒழிந்தவராக வாழ்பவர்களின் பாதுகாப்பற்ற ஒழுக்க மானது பயனற்றது. அது, கையிற் கிடைத்த முயலைப் போக விட்டுவிட்டுக் காக்கையைத் தின்பது போன்றதாகும். அற்றாக நோக்கி அறத்திற்கு அருளுடைமை முற்ற அறிந்தார் முதலறிந்தார்--தெற்ற முதல்விட் டஃதொழித்தோர் ஓம்பா ஒழுக்கம், முயல்விட்டுக் காக்கை தினல். முயல் காக்கையினும் சிறந்தது; அதுபோல நல்லொழுக்கம் தவறொழுக்கத்தினும் சிறந்த பயன் தருவது; அதனையே மேற்கொள்ளல் சிறப்புத் தரும் என்பது கருத்து. ‘முயல்விட்டுக் காக்கை தினல்’ என்பது பழமொழி. 357. ஏவலரும் காவலரும் அரசனே தனக்கு வேண்டியவனாக, அவனுக்கு இசைய நடந்து வருபவர்கள், மற்று அவனுடைய ஏவிய செயலைச் செய்திருந்தவர்களிடத்தே தமக்கு ஓர் உதவியைச் செய்யுமாறு சென்று அணுகுதல் மதியீனமாகும். அது, பசுவின் அரவணைப் பிலே நின்ற அதன் கன்றானது, தன் பசிதீரப் பாலுண்ணும்மடி அத் தாயிடத்தே இருப்பவும், அதனைச் சுவைத்து உண்ணாது, தன் தாயின் அணலைச் சுவைத்து நிற்பது போன்றதாகும். காவலனை ஆக வழிபட்டார் மற்றவன் ஏவல் வினைசெய் திருந்தார்க்கு உதவடுத்தல் ஆவணைய நின்றதன் கன்று முலையிருப்பத் தாயணல் தான்சுவைத் தற்று. அணல்-பசுவின் கழுத்துக் கீழ்ப்புறத்திலே தொங்கும் சதை. பெரியோரை அடுத்தவர் அவராலேயே வினைமுடித்துக் கொள் ளுதல் அறிவுடைமை யாகும் என்பது கருத்து. ‘முலையிருப்பத் தாயணல் தான்சுவைத் தற்று’ என்பது பழமொழி. 358. தீயவனின் குணம் ஒலி எழுப்பும் கண்ணினையுடைய முழவினைப் போல ஒலி செய்து ஆரவாரிக்கும் குளிர்ந்த கடலுக்கு உரிய நாட்டினனே! முன் செய்த தீவினையால் பிறர் வருந்தியதையும் பாராட்டாது, அறவோர் அதன் காரணமாகத் தம்மைத் தண்டித்தமை கண்டும் திருந்தாது, ஒருவர் அவற்றின் பின்னரும் தாம் மிகவும் விருப்ப முடையவர்போலத் தீய செயல்களையே செய்தல், சாண் அளவா யிருந்ததைக் குறைக்க, அது முழம் அளவிலே வளர்ந்ததைப் போன்றதாகும். உழந்ததூஉம் பேணாது ஒறுத்தமை கண்டும் விழைந்தார்போல தீயவை பின்னரும் செய்தல், தழங்கண் முழவிரங்கும் தண்கடற் சேர்ப்ப! முழங்குறைப்பச் சாண்நீளு மாறு. தீயோர் பிறருடைய வருத்தத்திற்கும் இரங்கார்; தண்டித் தாலும் திருந்தார்: பின்னும் மிக்க தீமையையே செய்வார்; அவர் உறவு கூடாது என்பது கருத்து, ‘முழங் குறைப்பச் சாண்நீளு மாறு’ என்பது பழமொழி. ‘சாண் ஏற முழம் வழுக்கல்’ என்றும் இது வழங்கும். 359. பழமையும் புதுமையுமான நட்பு இவர் நமக்கு மிகவும் சிறந்த நட்பினர் என்று கருதி ஒருவருடன் முதலிலே அவருடைய தன்மையைத் தெளிவாக அறியாமல் நட்புக் கொண்டு, தாம் அவர் மேற்கொண்ட அன்பும் அவர் தம்மீது கொள்பவர் இலராகிய நட்பினரைச் சேர்ந்தவர்கள், பழமை என்பதே பற்றாகக் கொண்டு அவரைத் தழுவியிருந்து, புதிய நட்பினைச் சந்தேகித்து நீக்கிவிட மாட்டார்கள். முழநீளமான போலி நட்பைக் காட்டினும், சாண் நீளமான உள்ளத்து உட்குதலே நன்மை தருவதாகும். தீர்ந்தேம் எனக்கருதி தேற்றாது ஒழுகித்தாம் ஊர்ந்த பரிவும் இலராகிச்--சேர்ந்தார் பழமை கந்தாகப் பரியார் புதுமை முழநட்பிற் சாணுட்கு நன்று. நெடு நாளைய நண்பராயிருந்தும் அன்பில்லாதவரின் உறவைப் பழமையொன்றே கொண்டு பேணாது கைவிடுதலே நல்லது; புதியவரானாலும் அன்பிருந்தால் அவரை நட்பாகக் கொள்க என்பது கருத்து. ‘முழநட்பிற் சாணுட்கு நன்று’ என்பது பழமொழி. 360. தவறான பதில் வினாவுவானும், அதற்கு விடை கொடுப்போனுமாக இருவர் தம்முள் சேர்ந்து தொடங்கிய சொற்போரினுள்ளே, பின்னாலே விடைகூற வேண்டியவன், தானே முற்பட ஏதாவது சொன்னால், அது எதிராளி சொல்வதை அறியாமலே சொன்ன பிழையான விடையாகும். முழங்காலில் அடி பட்டிருந்த புண் பட்ட ஒருவனுக்கு அவ்விடத்தே கட்டுப் போடாமல், மூக்கிலே கட்டுப்போட முயல்பவனின் அறியாமை போன்றதே அது. துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்திற் பின்னை உரைக்கப் படற்பாலான்--முன்னி மொழிந்தால், மொழியறியான் கூறல், முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு. ‘பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குப் பணத்துக்குப் பத்து என்று சொல்பவன்’ என இந்நாளிலே வழங்கும் பழமொழி இதன் கருத்தை விளக்கும். ‘முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு’ என்பது பழமொழி. 361. துறவார் நிலைமை தம்மிடத்திலே செல்வச் செழிப்பு இருக்கும் வரையிலும், தம்முடைய வாழ்நாள் நீடித்திருக்கும் வரையிலும் சிறந்த நெறி எதுவென்பதைப்பற்றி ஆராய்ந்து தெளிவுகொள்ள மாட்டார் கள். சிற்றின்பங்களிலே செருக்குற்று அவற்றிலேயே நிலைத்து, மனையிலிருந்து மகிழ்வுடனே மனைவிமக்களுடன் வாழ்வார் கள். அறவோர் பள்ளியிடத்திலே சென்று, துறவு நெறி பூண்டு வாழமாட்டார்கள். இத்தகையோர், முள்ளிச் செடியிலே சென்று தேனுண்ணுபவர் போன்ற அறியாமை உடையவர்கள் ஆவர். செல்வத் துணையுந்தம் வாழ்நாட் டுணையுந்தாம் தெள்ளி உணரார், சிறிதினால் செம்மாந்து பள்ளிப்பால் வாழார், பதிமகிழ்ந்து வாழ்வாரே முள்ளித்தேன் உண்ணு மவர். உடலிலே வளமும், பொருள் வளமும் இருக்கும்வரை அதன் காரணமாகச் சிற்றின்பத்திலே மூழ்கி இருத்தலன்றிப் பேரின்பத்தை நாடாத அறிவற்றாரைப் பற்றிக் கூறியது இது. ‘முள்ளித் தேன் உண்ணு மவர்’ என்பது பழமொழி. முள்ளி - முட்செடி. 362. பகையால் பகை களைதல் ஆராய்ந்து அறியும் அறிவுத்திறன் உடையவர், தம்முடைய பகைவருக்கு எதிராக அவருடனிருந்து அவரை அழிக்கும் உட்பகையா யினாரை எளிதிலே பெறுவார்கள் என்பது உறுதியேயாகும். கள்வெறியினால் பிதற்றுவான் ஒருவனை, மீண்டும் அந்தக் கள்ளைக் குடிப்பிப்பதனாலே மயங்கிப் பேச்சி ழக்கச் செய்வதனையும் காணலாம். அப்படிச் செய்வதுதான், காலிலே வைத்த முள்ளினை மற்றொரு முள்ளின் உதவியினாலே எடுத்துவிடுவது போன்றதாகும். தெள்ளி யுணரும் திறனுடையார் தம்பகைக் குள்வாழ் பகையைப் பெறுதல் உறுதியே கள்ளினால் கள்ளறுத்தல் காண்டும்; அதுவன்றோ, முள்ளினால் முட்களையு மாறு. தீயவர் ஒருவரை அழித்தற்கு மற்றொரு தீயவரை மிகவும் தந்திரமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது கருத்து. ‘முள்ளினால் முட்களையு மாறு’ என்பது பழமொழி. 363. முறைமையும் காலமும்! முன்னாளிலே பசுவின் கன்றின்மேல் தேரைச் செலுத்திக் கொன்ற தன் மகனை, அவன் தந்தையான மனுநீதிச் சோழனே தேரைச் செலுத்திக் கொன்று நீதி செலுத்தினான். அச்செயலை மிகவும் இரகசியமாகப் பாதுகாத்து அறமுரைக்கும் சான் றோர்களே கடமையை மறந்த போதும், பல நாட்கள் கழிந்து போனதன் பின்னாலும் அவன் முறைமையைப் பேணினான். இதனால் நீதிக்கு இளமை மூப்பு என்பது எதுவும் இல்லை என்று அறிதல் வேண்டும். சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக் காலை கழிந்ததன் பின்றையும்--மேலைக் கறவைக்கண் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் முறைமைக்கு மூப்பிளமை இல். இளமை, மூப்பு என்பது குற்றம் நடந்த உடனே என்பதையும், காலம் கடந்தபின் என்பதையும் குறிக்கும். நீதிக்குக் கால எல்லை ஒரு தடையாகாது; என்றும் அதனை நிறைவேற்றவே வேண்டும் என்பதும் கருத்து. ‘முறைமைக்கு மூப்பிளமை இல்’ என்பது பழமொழி. 364. வெறாது முயல்க வாழ்விலே துயரம்வந்து சூழ்ந்த காலத்திலே, ‘இனி எவரும் துணையாக இல்லாதவர் எம்மினும் வேறு எவர் இருக்கிறார்கள்? யாம் தனியராயினோம்? என்று சொல்லி ஒருவர், தாம் சோர்ந்துபோய் முயற்சியின்றி இருத்தல் வேண்டாம். செயலிலே எவ்வகை வெறுப்புமில்லாமல் நம்பிக்கையுடன் தொடர்ந்து முயன்று வருக. வெறுப்பின்றித் தொடர்ந்து முயல்பவர் தாம் எண்ணியதை அடையாமல் ஒருபோதுமே இருப்பது இல்லை. இனியாரும் இல்லாதார் எம்மிற் பிறர்யார் தனியேம் யாம் என்றொருவர் தாமடியல் வேண்டா; முனிவிலராகி முயல்க முனிவில்லார் முன்னிய தெய்தாமை இல். தோல்வியால் மனந்தளராது நம்பிக்கையுடன் தொடர்ந்து முயல்பவரே, வாழ்விலே வெற்றியடைவர் என்பது கருத்து, ‘முனிவில்லார் முன்னிய தெய்தாமை இல்’ என்பது பழமொழி. 365. கேடு தவறாது வரும் நெஞ்சமே! எதனையும் நெடிதாக ஆராய்ந்து உண்மை உணராமல், நீ எளியை ஆயினாய், பிறரைக் குறித்துக் கொடியது செய்வோம் எனவும் கூறினாய், முற்பகல் வேளையிலே தன் பாதத்தருகே பிறன் தன்னால் கேட்டுக்கு உள்ளானதைக் கண்டு இறுமாந்தவன், தானே கெடுதலையும் பிற்பகல் வேளைக்குள்ளே கண்டுவிடுவான் என்பதையும் மறவாதே. நெடியது காண்கிலாய் நீயெளியை நெஞ்சே! கொடியது கூறினாய்; மன்ற--அடியுளே முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் கண்டு விடும். பிறனுக்குக் கேடானவற்றைச் செய்தலால், தனக்கும் கேடுவந்து சம்பவிக்கும் என்பது கருத்து. ‘முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் கண்டு விடும்’ என்பது பழமொழி. 366. மூத்தார் வாய்ச் சொற்கள் மூத்தோரான பெரியோர்களுடைய அறிவுரைகள், ஒருவன் தானாகவே செய்ய விரும்பாத நல்ல காரியங்களைச் செய்யுமாறு செய்யும். அவன் தீய செயல்களைச் செய்ய விரும்பினவனாக நின்றால், அவனை அதனின்றும் விலக்கும். வலிமைபொருந்திய அரசனையும் வருந்துமாறு செய்து, அவனுக்கு உறுதியான நல்ல அறிவுரைகளையே சொல்லு வதனால், அவர்களுடைய சொற்கள் முதலிலே துன்பமாகவே இருக்கும். செயல்வேண்டா நல்லன செய்விக்கும்; தீய செயல்வேண்டி நிற்பின் விலக்கும்; இகல்வேந்தன் தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால் முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல். மூத்தார் வாய்ச்சொல் முதலிலே துன்பந் தருவதாயினும் இறுதியில் இன்பமாகவே முடியும் என்பது கருத்து. ‘முன்னின் னா மூத்தார்வாய்ச் சொல்’ என்பது பழமொழி. 367. புறங்கூறுவார் இயல்பு எவ்வாறானாலும், உலகத்திலே, மூக்கற்றதான ஒன்றுக்கு வேறு எவ்விதப் பழியுமே கிடையாது. அதுவே பழியாக அமையும். அதுபோலவே, பிறரால் தாம் தாக்கப்படுகின்ற பொழுதிலே, அவருடைய சொந்தக்காரரைப் போல அவரை நன்றாகப் புகழ்ந்து பேசிவிட்டு, அவர் அவ்விடம்விட்டு அகன்ற வுடனே அவரைப் பற்றிப் புறங்கூறிப் பழித்துத் திரிபவர் சிலர். மேன்மைக் குணத்தின்கண் கருத்தற்ற அத்தகையவர்களைப் பழித்தலால் என்ன பயன்? அவர்கள் இயல்பே அது தானே! தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்குரைத்துப் போக்குற்ற போழ்தில் புறனழீஇ மேன்மைக்கண் நோக்கற்ற வரைப் பழித்தலென்? என்னானும் மூக்கற்ற தற்கில் பழி. இழிந்த இயல்பினரான புறங்கூறும் பாவிகளைப் பழித் தாலும், அவர் அதனைக் கேட்டு நாணித் திருந்த மாட்டார் என்பது கருத்து. ‘மூக்கற்றதற்கு இல்லை பழி’ என்பது பழமொழி. 368. சோம்பனை ஏவிய காரியம் முடியாது கொடிபோன்று துவண்டு வருபவளே! சோம்பேறியாக இருக்கின்ற ஒருவனை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவினால், அவன் அந்தச் செயல் முடியாத விதமாகவே நடந்து கொள்வான். ஒரு தொழிலைச் செய்வதற்காக ஏவிய உடல் பெருத்த ஒருவனை எப்பொழுதுமே வருத்தி வருத்தித் தொழில் கொள்ளுதல் மிகவும் கடினமான செயலாகும். அது, கிழட்டெருது கொண்டு உழுவதனோடு பொருந்துவதாகும். மடியை வியங்கொள்ளின் மற்றைக் கருமம் முடியாத வாறே முயலும்--கொடியன்னாய்! பாரித் தவனை நலிந்து தொழில்கோடல், மூரி உழுது விடல். உள்ளத்திலே ஊக்கமில்லாத ஒருவனை வேலைக்கு அமர்த்துவது மிகவும் தொந்தரவையே கொடுக்குமென்பது கருத்து. ‘மூரி உழுது விடல்’ என்பது பழமொழி. பாரித்த உடலினனிடம் ஊக்கம் குன்றி விளங்கும் என்பதுமாம். 369. கீழோரிடம் வைத்த பொருள் புதிய நெய்தற் பூக்கள் மணம் வீசும் விரிந்த அலைகளை உடைய கடற் சேர்ப்பளே! தொடி பொருந்திய முன்கையினையுடைய நல்ல பெண்ணைப் போன்று திரண்டிருக்கும், சிறந்த பொருளைக் குடிச்சிறப்பில்லாதவனிடத்திலே கொடுத்து வைத்தல், கிழ வெருதை உண்பித்த புல்லைப்போல அப்பொருள் அழிவதுடன் பயனற்றதுமாகும். தொடிமுன்கை நல்லாய்! அத் தொக்க பொருளைக் குடிமகன் அல்லான்கை வைத்தல்--கடிநெய்தல் வேரி கமழும் விரிதிரைத் தண்சேர்ப்ப! மூரியைத் தீற்றிய புல். கிழவெருது புல்லைத் தின்னாது குதப்பிக் குதப்பிக் கழித்து விடும். அதனால் பயன் யாதுமில்லை; புல்லின் சிறப்பும் கெடும். அதுபோலவே பொருளைக் கீழோனிடம் பாதுகாவலாக வைப்பது கெடுமென்பது கருத்து. ‘மூரியைத் தீற்றிய புல்’என் பது பழமொழி. பொருளைத் திரண்ட பெண்ணுக்கு உவமித்தது அதன் சிறப்பைக் கருதியாகும். 370. அந்தரங்க விரோதிகள் இம்மையிலே ஏற்படுவதான பழிச் சொல்லையும், மறுமை யிலே அநுபவிக்க வேண்டியதான பாவத்தையும் நினைத்ததும், தம்மைவிட்டு நீங்காதவராக, உட்பகை கொண்டு உறவினர்போல வாழ்ந்தவரின் பால், அதனை உணர்ந்தவர், தாமும் செம்மை யாகப் பகையினை மேற்கொண்டு அவர்பாற் சேராது ஒதுங்கி இருப்பவர்கள் கெட்டவர்களோ? அன்று: அவர்களே அறிவு டையவர்கள். மாய்மாலக் கண்ணனாக இருப்பதைவிட குருட் டுக் கண்ணே பெரிதும் நன்மை ஆகும். இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும் தம்மைப் பரியார் தமரா யடைந்தவரின் செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ? மைம்மைப்பின் நன்று குருடு. உறவினர்போலக் காட்டி உட்பகை கொண்டு அடுத்துக் கெடுப்பவர் களைக் காட்டினும், பகைவரே எவ்வளவோ மேலானவர் என்பது கருத்து. ‘மைம்மைப்பின் நன்று குருடு’ என்பது பழமொழி. 371. சிறியவர் செல்வம் தேன் மிகுந்த பூ மாலையினையும், மாட்சிமையுடைய அணிகலன் களையும் அணிந்தவளே! ஆராய்வோமானால் மோரினைக் காட்டினும் பழைய நெய் தீமை செய்வதில்லை. அது போலவே, சிறியவர்கள் அடைந்த செல்வத்தினைக் காட்டினும், மாட்சியுடைய பெரியவர்கள் அடைந்த வறுமையே நன்றாக விருக்கும். சிறியவர் எய்திய செல்வத்தின் மாணப் பெரியவர் நல்குரவு நன்றே--தெரியின் மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின் முதுநெய் தீதாகலோ இல். மோர் பழையதானால் உதவாது; நெய் பழையதாயினும் கெடாது; அதுபோலச் சிறியவர் செல்வரானாலும் குணம் கெட்டவர் ஆவர்; பெரியவர் அஃதற்றாலும் சிறந்த குணம் உடைந்தவராகவே இருப்பர் என்பது கருத்து. ‘மோரின் முது நெய் தீதாகலோ இல்’ என்பது பழமொழி. முதுநெய் - பழைய நெய். 372. செயலைத் திறமுடன் செய்தல் தான் செய்வதற்குத் தனக்குள்ள திறமைகளையும் வசதி களையும் ஆராய்ந்து, தனக்கு அந்த வேலையிலே துணையாக அமைப்பவர்களையும் அப்படியே ஆராய்ந்து, அப்படிச் செய்வதனால் அதனின்றும் வருகிற பயனையும் ஆராய்ந்து கொண்ட பின்னரே, தாம் செய்வதற்கான செயல் களைச் செய்வார்கள் அறிவுடையோர். அப்படி அல்லாமல், யாதானும் ஒன்றைக் கருதிக் கொண்டு, யாதானும் ஒரு காரியத்தைச் செய்தவிடத்து, அந்தச் செயலும் ஏதோவொன்றாக முடிந்து போமே அல்லாமல், முறையாக முடிந்து பயன் தருவதில்லை. தற்றூக்கித் தன்துணையும் தூக்கிப் பயன்தூக்கி மற்றவை கொள்வ மதிவல்லார்--அற்றன்றி யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகி விடும். அறிவுடையோர் ஒன்றைச் செய்வதற்குமுன் அதன் பற்பல கூறுபாடுகளையும் தெளிவாக ஆராய்ந்த பின்பே செய்வார்கள் என்பது கருத்து. ‘யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகி விடும்’ என்பது பழமொழி. 373. எதிர் நிற்பவரே வீரர் கொடிய போர்க்களத்தினுள் வெல்பவர் தாமாயினும் தம் எதிராவாராயினும் அது பற்றிக் கருதாது. எதிர்த்தாரை அடர்த்துத் தள்ளி முனைப்பாக நின்று போர் புரிவார்கள் வீரத்தகுதியை உடையவர்கள். அத்தகைய தன்மையில்லாமல் பாது காப்பினையுடைய கோட்டையினுள்ளே இருந்து கொண்டு பகைவர்மீது சினங்கொண்டவராக மிகவும் வீரம் பேசுதல், வீரத்தின் தன்மையன்று. அது பகைப்பயிர் வளர அதன்கண் வார்த்த நீராகவே முடியும். நூக்கி அவர்வெலினும் தாம்வெலினும் வெஞ்சமத்துள் தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர்; அஃதன்றிக் காப்பின் அகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல் யாப்பினுள் அட்டிய நீர். எதிர்த்துப் போரிடாது கோட்டையினுள் அடைந்து கிடப்பவர் பகைவரின் வலிமையை அதிகமாக்குபவரே என்பது கருத்து. அவர் வீரருமாகார் என்பது முடிவு. ‘யாப்பினுள் அட்டிய நீர்’ என்பது பழமொழி. 374. சொற் சோர்வு இயல்பாகும் மலையினிடத்தே விளங்கும் அருவிகளையுடைய நாடனே! நல்ல அறநூல்களைக் கற்றவரும் ஆராயாது சில சமயம் சில சொற்களைச் சொல்லுவார்கள். அப்படி யிருப்பவும், நல்ல குடியிற் பிறந்தவர் அல்லாதவரின் இயல்பற்ற தன்மையைக் குறித்து நொந்து கொள்வது எதற்காகவோ? யாவரேயானாலும், சொல்லின்கண் சோர்வுபடாதவரே இல்லை என்று அறிவாயாக. நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர் இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவதென்? கற்பால் இலங்கருவி நாட! மற்றியாரானும் சொற்சோரா தாரோ இல். சொற்சோர்வு படுதல் என்பது பொதுவாக எவருக்கும் இயல்பே. அதனால், இழிகுடியினர் பேச்சுச் சோர்வுபடுதலுக்கு வருந்த வேண்டாம் என்பது கருத்து. ‘மற்றியாரானும் சொற்சோரா தாரோ இல்’ என்பது பழமொழி. இற்பாலார் அல்லார் - இழிந்த குடியினர்; இவர் சொற்சோர்வுபடல் இயல்பே என்பதுமாம். 375. இன்பமும் சினமும் இறையுருவத்திற்குப் பக்தியுடன் நெய்முழுக்கு செய்வார் சிலர். அப்படிச் செய்தவர், பின் ஒரு துன்பம் வந்தால், இறைவனையே அவன், இவன் என்று சொல்லி இகழ்ந்து பேசித் தாம் முழுக்காட்டிய நெய்யை நக்கி எடுப்பார்களோ? மாட் டார்கள். அது தம் முன்னை வினையின் துன்பம் என்றே கருதி அமைவார்கள். அதுபோலவே, உறவினன் என்று இருநாழி நெல் கொடுத்தவன், பின்னர் சென்றபொழுது ‘எமனாக வந்து உயிரை வாங்கு கிறாயே?’ என்று கோபித்துக் கொண்டாலும் பெறக் கருதிச் சென்றவன் அவனைக் கோபிக்கமாட்டான். தமனென்று இருநாழி ஈத்தவன் அல்லால் நமனென்று காயினும் தான்காயான் மன்னே! அவனிவன் என்றுரைத்து எள்ளி, மற்றியாரே நமநெய்யை நக்கு பவர்! ஒருமுறை உதவினவன் தொடர்ந்து உதவுகிறவனாக இல்லையே எனக் கோபிப்பது தவறு என்பது கருத்து. ‘யாரே நம நெய்யை நக்குபவர்’ என்பது பழமொழி. ‘நம நெய்’ என்பது கோயிலில் தேவவுருவுக்கு முழுக்காட்டிய நெய். 376. வளர்த்தவரை அழிக்காமை பெண்ணின் இனிமையைத் தன்பால் கொண்டு விளங்கு கின்ற இனிய பேச்சினையுடையவளே! மூங்கில் போன்று வனப்புடன் அமைந்த தோள்களையும் உடையவளே! தம்மு டைய கன்று குற்றஞ் செய்ததென்று, அது பாலின்றிச் செத்துப் போகுமாறு பசுவின் மடியை ஒட்டக்கறந்து விடுபவர் யாராவது இருக்கிறார்களோ? இல்லை என்பதுபோலவே, சிநேகத்தால் ஒன்று பட்டுத் தம்முடைய உதவியாலே நிலை நிறுத்தப் பட்டவர்களை, அவர்கள்மீது கண்கண்ட குற்றம் ஒன்று உளதா னாலும், அதற்காக அவர் களைக் கோபித்து யாரும் ஒழிக்க மாட் டார்கள். நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக் கண்கண்ட குற்றம் உளவெனினும் காய்ந்தீயார்; பண்கொண்ட தீஞ்சொல் பணைத்தோளாய்! யாருளரோ தங்கன்று சாக் கறப்பார். தம் கன்று சாவதனால் தமக்கே வரும் நட்டம் பெரிதாகும்; அதுபோலத் தம்மால் நாட்டப்பட்டவரை ஒழித்தால் தமக்கே பழி அதிகமாகும் என்பது கருத்து. ‘யாருளரோ தங்கன்று சாக் கறப்பார்’ என்பது பழமொழி. இந்நாளில் தங்கன்று சாகுமாறு தாய்மடியை சுறக்கறந்து விடுவாரும் காணப் பெறுகின்றனர். 377. துறவியரும் உலக பாசமும் முழங்கும் அருவிகள் தினைப் புனங்களினிடத்தே வீழ்ந்து கொண்டிருக்கும் மலை நாடனே! தம்முடைய சிறப்புடைய தான சுற்றத் தினரையும், தாம் ஈட்டிய பொருள் களையும் கை விட்டுத் துறந்தவர்கள், பின்னும் உலகியலில் பற்று உடையவர்களா யிருப்பது என்ன காரணமோ? அப்படியிருப்பதுதான் யானை போய் வால் போகாதவாறு என்று சொல்லப்படும். சிறந்ததம் சுற்றமும் செய்பொருளும் நீக்கித் துறந்தார் தொடர்ப்பாடு எவன்கொல்--கறங்கருவி ஏனல்வாய் வீழும் மலைநாட! அஃதன்றோ யானைபோய் வால்போகா வாறு. ‘யானை போயும் வால்போகாதவாறு’ என்பது பழமொழி. பெரிய பற்றுக்கள் சுற்றமும், பொருளும்; அவற்றையும் விட்டவர் உடலிச்சையான சில பற்றுக்களைக் கொண்டிருப்பதன் நிலைமையை நினைத்துக் கூறப்பட்டது. 378. அறிவால் அறிஞரைக் கொள்ளுதல் மானின் கண்களைப் போன்ற கண்களை உடையவளே! வீரங் கெழுமிய பெருவேந்தர்கள் யானையைக் கொண்டே யானைகளைக் கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். அதுபோலவே தம் உள்ளத்திலே நன்மை உடையவர்களான அறிவுடை யோர்கள், தமது நலத்தை ஒத்த அறிவாளிகளையே தம்முடன் சேர்த்துக் கொள்வதுமாகும். ஆணம் உடைய அறிவினார் தந்நலம் மானும் அறிவி னவரைத் தலைப்படுத்தல், மானமர் கண்ணாய்! மறங்கெழு மாமன்னர் யானையால் யானையாத் தற்று. அறிவால் அறிவாளரை வசப்படுத்த முடியுமேயன்றி அறிவற்றோரால் அறிவாளரை வசப்படுத்த முடியாது என்பது கருத்து. ‘யானையால் யானையாத் தற்று’என்பது பழமொழி. 379. வரி வசூலிக்கும் முறை செங்கோல் முறைமையினின்றும் கெடுதல் இல்லாத அழகிய குளிர்ந்த தாரினை அணிபவரான மன்னர்கள், தம் அடி நிழலிலே வாழும் குடிமக்களை வருத்தாது, வரி வசூலித்தலும் போலாகாமல், காலமறிந்து பக்குவமாக வசூலித்துக் கொள்க. அதுதான், வண்டினம் பூவைச் சிதைக்காமல் அதன் பாலுள்ள தேனைக் குடிப்பதனோடு பொருந்துவதாகும். பொருத்தம் அழியாத பூந்தண்டார் மன்னர் அருத்தம் அடிநிழ லாரை--வருத்தாது கொண்டாரும் போலாதே கோடல் அதுவன்றோ வண்டூதா துண்டு விடல். குடிமக்களை வருத்தாமல் வரி வாங்கவேண்டிய அரசியல் நெறி கூறப்பட்டது. ‘வருத்தாது கொண்டாரும் போலாதே கோடல்’ என்பது வருத்தம் உண்டாக்காமலும், அதிக வரி கொண்டதாக அவருக்குத் தோன்றாமலும், தந்திரமாகக் கொள்ளல் வேண்டும் என்பது கருத்து. ‘வண்டூ தாதுண்டு விடல்’ என்பது பழமொழி. வண்டு மலரைச் சிதைக்காது தேனுண்பது இங்கே நல்ல உவமையாகும். 380. வருத்தம் வாழ்க்கைக்கு உறுதி பிறருக்கு உபகாரம் செய்து, வரும் விருந்தினரையும் பாது காத்து, வெம்மையான போரினிடத்தே வாளாண்மையிலும் வலிமையுடையவர்களாக விளங்கி, தாளாண்மை என்னும் முயற்சியைக் குறைவிக்கும் சோம்பலும் இல்லாதவர்களாக, இந்த வாழ்விலேயே வருந்தியும் ஈடுபடுதல் சிறந்தது. அப்படி வருந்தா தார் வாழ்க்கை என்றும் திருந்துதல் இல்லை என்பது உண்மை யாகும். வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து வாளாண்மை யாலும் வலியராய்த்--தாளாண்மை தாழ்க்கு மடிகோள் இலராய் வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று. சோம்பலின்றி, வாழ்க்கை முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது கருத்து. ‘வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று’ என்பது பழமொழி. தாழ்க்கும் மடி - தாழ்விக்கும் சோம்பல். கோள் - ஆட்கொள்ளுதல். 381. வலிமையின் வயணம் புலியுடனே பகை கொண்டு போரிடும் யானைகளையுடைய பூங் குன்ற நாடனே! தம்மினும் வலிமை யுடையவர்களைக் கண்டால் வாயால் ஒன்றும் பேசாது ஊமையாகி விடுவர்; தம்மினும் வலிமையால் மெலியவரைக் கண்டால், அடர்த்துச் செல்லும் மேம்பாடு காட்டுவர். இந்தப் பண்பு உடைமையானது தேவையில்லாத காலத்திலே, வலிமையுடைதாயிருப்பது போன்றதாகும். வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி மெலியாரை மீதூரும் மேன்மை யுடைமை, புலிகலாம் கொள்யானைப் பூங்குன்ற நாட! வலியலாந் தாய்க்கு வலித்து. அரசன் தன்னிடத்தே வலிமையில்லாத காலத்திலே பகைவரிடம் அநுசரிக்க வேண்டிய முறைமை கூறப்பட்டது. ‘வலியலாந் தாய்க்கு வலித்து’ என்பது பழமொழி. தாயம் - சமயம் வாய்ப்புக் காலம். வலியலாத்தாயம் - வலிமையற்ற உறவும் ஆகும். 382. வீண் பேச்சாளர்கள் கள்ளுண்டு தள்ளாடி வருகின்ற குடியர்களைப் போல, மரக்கலங்கள் ஆடி அசைந்து வந்துகொண்டிருக்கும் கடல் நாட்டவனே! காற்றைப் பிடித்துத் தோளிலே போட்டுக் கொள்ளக்கூடியவர்கள் யாருமே இல்லை. அதுபோலவே பொருந்தாதவைகளைப் பேசித் திரிகின்ற குணங்கெட்ட மாக்களை, நாவினிடத்து அடக்கிப் பேசாதிருக்கச்செய்வதும் மிகவும் அருமை யாகும். கோவாத சொல்லும் குணனிலா மாக்களை நாவா யடக்கல் அரிதாகும்--நாவாய் களிகள்போல் தூங்கும் கடல்சேர்ப்ப! வாங்கி வளித்தோட் கிடுவாரோ இல். வீண்பேச்சுப் பேசுவதே இயல்பாக உடையவரின் நாவை அடக்குவதே மிகவும் கடினமான செயலென்பது கருத்து. ‘வாங்கி வளித்தோட் கிடுவாரே இல்’ என்பது பழமொழி. 383. செய்யாததற்குப் பரிசு போரிலே மிகவும் சிறந்த செயலைச் செய்தவர்கள் பொறுமையுடன் நிற்கவும், ஏதும் செய்தற்கு இயலாதிருந்த வர்கள் பலப்பல சொல்லி வேந்தனை நொந்து கொள்வது பயனற்றதாகும். அது, சேற்றிலே தவறாமல் வண்டியை இழுத்துச் செல்லும் ஆற்றலுடையதாகக் கருதிய எருதானது, படுத்துக் கொண்டு எழாமற்போய்ச் சாவது போன்றதாகும். ஆற்ற வினைசெய்தார்நிற்பப் பலவுரைத்து ஆற்றாதார் வேந்தனை நோவது; சேற்றுள் வழா அமைக் காத்தோம்பி வாங்கும் எருதாங்கு எழா அமைச் சாக்கா டெழல். போரிலே வீரஞ்செய்தவர்க்குப் பரிசு வழங்குவது முறை. அவரே பேசாது நிற்க ஏதுஞ் செய்யாதவன் அரசன் பரிசு தராததற்கு நொந்து கொள்வது தவறு என்பது கருத்து. ‘வாங்கும் எருதாங்கு எழா அமைச் சாக்கா டெழல்’ என்பது பழமொழி. 384. குதிரையும் வள்ளலும் பெரிதான சிறந்த குதிரையானது தான் மிகவும் வாடி இருந்த காலத்திலும் சேணமிட்டவுடன், அந்த வாட்டத்தை விட்டு விரைந்து செல்வதாகிவிடும். அதுபோலவே அறைகூவி அழைத் துக் கொடுப்பதற்கு ஏற்ற அளவிற் பெருஞ்செல்வம் இல்லை யென்றாலும், தம்மைச் சேர்ந்தவர் களுக்குக் கொடுத்துப் பழகிய கொடையாளரே என்றும் முன்வந்து அவருடைய துன்பத்தைத் துடைப்பார்கள். கூஉய் கொடுப்பதொன் றில்லெனினும் சார்ந்தார்க்குத் தூஉய்ப் பயின்றாரே துன்பந் துடைக்கிற்பார்; வாய்ப்பத்தான் வாடியக் கண்ணும் பெருங்குதிரை யாப்புள் வேறாகி விடும். குடிப்பிறப்பின் தகுதி வறுமைக் காலத்தும் உயர்வுடை யாரிடத் தினின்றும் மாறாது என்பது கருத்து. ‘வாடியக் கண்ணும் பெருங்குதிரை யாப்புள் வேறாகி விடும்’ என்பது பழமொழி. 385. இரப்பவரை வருத்துதல் மிகவும் வறுமைப்பட்டு, அதன் துன்பத்தைப் பொறுக்க முடியாது போயின் ஒருவர், அவருடைய நிலைமையை உணரு மாறு சொன்னதற்குப் பின்னரும், அவருக்கு நல்ல செய்கை செய்பவர்போலக் காட்டி, முடிவிலே அவருடைய ஆர்வமெல் லாம் கெட்டு அழிய வலிமையான செயலைச் செய்தல் மிகவும் கொடுமையாகும். அதுவே, பசுவின் வாயிலே புல்லைக் கொடுத்து அதனை உண்ணவிடாது எடுத்து அதன் கழுத்திலே கட்டி விடுவதாகும. ஒற்கப்பட் டாற்றார் உணர உரைத்தபின், நற்செய்கை செய்வார்போல் காட்டி, நசையழுங்க வற்கென்ற செய்கை யதுவால், அவ்வாயுறைப் புற்கழுத்தில் யாத்து விடல். பசுவுக்குப் புல்லைக் காட்டி, அதன் கழுத்தில் அதனைக் கட்டுவது போன்றதே, இரந்து நிற்பவர்களுக்கு ஆசைகாட்டிக் கழுத்தறுத்தல் என்பது கருத்து. ‘வாயுறைப் புற்கழுத்தில் யாத்து விடல்’என்பது பழமொழி. 386. மறவர் மாண்பு ‘கயல்மீன் போன்று புரண்டு கொண்டிருக்கின்ற மையுண்ட இரண்டு கண்களை உடையவளான இவளின் இளமைப் பருவத்தினை எனக்குத் தருக’ என்று வேந்தன் சொன்னால், அவளுடைய அண்ணன்மாரும் ஒப்புக்கொள்ள மாட்டா ராயினர். போர்ப்பறையினை அறைந்து பணைத்த தம் தோள் களைத் தட்டி ஆர்ப்பரித்தனர். இதனால் வரும் விளைவுகளைக் காண்போம் என்றனர். வாழைக்காய் என்றும் இனிதாயிருப்ப தல்லாது உப்பு உறைத்தல் என்பதில்லை. இருகயல் உண்கண் இளையவளை வேந்தன் தருகென்றால் றன்னையரு நேரார்--செருவறைந்து பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால், வாழைக்காய் உப்புறைத்தல் இல். மன்னனே தம் தங்கையைக் கேட்டாலும், அவள் இசையா விட்டால், அவளுடைய அண்ணன்மார் போரிட்டு இறக்கவும் துணிவார்களே அல்லாமல், பணிந்து தரமாட்டார் என்பது கருத்து. ‘வாழைக்காய் உப்புறைத்தல் இல்’ என்பது பழமொழி. 387. நட்பை மறந்தவர் நம்மை நன்கு அறிந்தவராக இருந்தும், அறியாதவரைப் போல நட்புக்குப் பொருந்தாத செயல்களைச் செய்வார்கள் சிலர். அவரை, நாமும் முன்னே அறிந்தவரைப் போலாது, அவரைப் போலவே உள்ளத்தாற் பிரிந்து அவரை ஒதுக்கிவிட வேண்டும். அப்படிச் செய்வதே, ஒருவன் கைவிட்ட காலத்து, அவனைப் போற்றாது தானும் கைவிடுதலே அவன் செயலுக்கு நல்ல மருந்து என்று சொல்லப்படுவதாகும். கண்டறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப் பண்டறிவார் போலாது தாமும் அவரேபோல் விண்டொரீஇ மாற்றி விடுதல், அதுவன்றோ விண்டற்கு விண்டல மருந்து. நண்பராகப் பலநாட் பழகியும்கூட, ஆபத்துக் காலத்திலே உதவாமல், அறியாதவர்போல நடந்துகொள்ளும் நட்புத் திண்மையற்றவர்களின் நட்பைக் கைவிட்டு விடுதலே சிறப்பு என்பது கருத்து. ‘விண்டற்கு விண்டல மருந்து’ என்பது பழமொழி. 388. புகழுடையவரைப் பழித்தல் தசை நிரந்து எழுச்சியுடையதாக அமைந்து மூங்கில் போலத் திரட்சியும் பெற்று விளங்கும் தோள்களையும், வேல் போன்ற கண்களையும் உடையவளே! வானத்திலே செல்லுகின்ற சூரியனைக் கையினாலே மறைத்துவிடக் கூடியவர் எவருமே இல்லை. அதுபோலவே எங்கும் பரவிய பெரும் ஆற்றலுடைய வரை, அவர்மேற் சில பல பழிச் சொற்களைச் சுமத்தி, அவர் புகழ் வெளிப்படாது மறைத்துவைத்தல் என்பதும் எவராலும் முடியக்கூடிய செயலாகுமோ? பரந்த திறலாரைப் பாசிமேல் இட்டுக் கரந்து மறைக்கலும் ஆமோ?--நிரந்தெழுந்து வேயிற் றிரண்டதோள் வேற்கண்ணாய்! விண்ணியங்கும் ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல். பொறாமையால் புகழுடையவரைப் பழித்துப் பேசுபவர் சில சிறு மதியாளர்கள். அவர்கள் செயல் தவறு என்பது கருத்து. ‘ விண்ணியங்கும் ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்’ என்பது பழமொழி. 389. முதல் இன்றி வினையில்லை அழகு உடையவளே! நாணம் என்ற குணம் அமையாது போனால் அவளிடம் பெண்மை என்ற பண்பும் உளதாகாது. சுவை மிகுந்த உணவு இல்லாமற்போனால் உயிர் வாழ்க்கை என்பது உளதாகாது. அவைபோல, ஆராயுங்காலத்தே கைப் பொருள் யாதும் இல்லாமல் செயல்களும் முடிவதில்லை. வித்து என ஒன்று இல்லாத காலத்தில் அதனால் வரும் விளைச்சலும் ஏதும் இல்லை. நாணின்றி ஆகாது பெண்மை; நயமிகு ஊணின்றி ஆகாது உயிர்வாழ்க்கை;--பேணுங்கால் கைத்தின்றி ஆகாக் கருமங்கள்; காரிகையாய்! வித்தின்றிச் சமபிரதம் இல்! கைம் முதலில்லாது எந்தத் தொழிலும் சிறப்புறுவதில்லை என்பது கருத்து. ‘வித்தின்றிச் சமபிரதம் இல்’ என்பது பழ மொழி. 390. அவசரம் கூடாது மலையகங்கள் பலவற்றையுடைய நாடனே! மனத்து ஒருமைப் பாட்டுடனே கலந்து பழகியவரிடத்தும், ஒரு செயலைப்பற்றிச் சொல்வ தானால், எடுத்துச் சொல்லும் சொல் மரபினின்றும் சற்றும் வழுவாமல், அவர் அதனால் உவப்பு உடையவராக அதனை ஏற்றுக் கொள்ளுமாறு சொல்வதையே மேற்கொள்க. அவசரப்பட்டால், காரியம் கெட்டுவிடும்; அதனால் துன்பமும் வரும். புரையக் கலந்தவர் கண்ணும் கருமம் உரையின் வழுவா துவப்பவே கொள்க; வரையக நாட! விரையிற் கருமம் சிதையும்; இடராய் விடும். நண்பரிடம் செய்துகொள்ளும் காரியத்தைக்கூட ஆர அமர முறையாகச் செய்து கொள்ளவேண்டும் என்பது கருத்து. ‘விரையிற் கருமம் சிதையும்; இடராய் விடும்’ என்பது பழ மொழி. 391. பசப்பு வார்த்தைகள் தீய தன்மையுடைய செயல்களைச் செய்வதற்குக் கொஞ்ச மேனும் அஞ்சாதவர்களாக, தம்மைக் காத்துப் பேணுபவரைப் போல ஒருவர் சொன்ன பொய்களையும், கோள் பேச்சுக் களையும் நம்பாமல், அப்படித் தம்மை ஏய்ப்பவர்களின் முன்னி லையிலேயே அவர் சொல்லோடு மனம் ஒன்றாதவர்களாகக் கொஞ்சமும் மனத்தளர்ச்சியின்றி, விட்டு ஒழித்து விடுபவரே அறிவுடையவர். அதுவே, வில்லில் இருக்காமல் ஓடிப்போகும் காக்கையின் அறிவுள்ள செயல் போன்றதாகும். தீப்பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க் காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை--ஏய்ப்பார்முன் சொல்லோ டொருப்படார் சோர்வின்றி மாறுபவே வில்லோடு காக்கையே போன்று. தீயவர்களின் பசப்பு வார்த்தைகளுக்குச் செவி சாய்க் காமல், அவர் தொடர்பை உடனே அறுத்துவிடுக என்பது கருத்து. ‘வில்லோடு காக்கையே போன்று’ என்பது பழமொழி. 392. சிரித்து மறக்கவும் நீர்வளம் நிறைந்த பொய்கைகள் மிகுதியாயிருக்கும் ஊரனே! பொருத்த மற்ற வேடிக்கைப் பேச்சினை ஒருவரால் எடுத்துச் சொல்லப்பட்டவர்கள், அவர் தம்மை வைதனர் என்றே கொண்டு, அவர் தொடர்பைக் கைவிட்டு விடுவது தவறு. அப்படிச் செய்வது, எலி, விளக்கினைக் கொண்டு ஏறி அதன் காரணமாக வீடே தீப்பற்றித் தனக்கே ஆபத்தைச் செய்து கொண்டுவிடுவது போன்றதாகும். எய்தா நகைச்சொல் எடுத்துரைக்கப் பட்டவர் வைதாரக் கொண்டு விடுவர்மன்; அஃதால் புனற்பொய்கை ஊர! விளக்கெலி கொண்டு தனக்கு நோய் செய்து விடல். கேலியாகப் பேசும் பேச்சுக்களை வைததாகக் கொண்டு, சொன்னவர் மேல் சினமும், பகைமையும் கொள்வது பேதைமை யான செயல் என்பது கருத்து. ‘விளக்கெலி கொண்டு தனக்கு நோய் செய்து விடல்’ என்பது பழமொழி. 393. பொருள் பேணாதவன் இனிய இயல்பினையும், மையிட்டமதர்த்த கண்களை முடையவளே! முன்னமே தன்னிடம் உளதாயிருந்த செல்வத் தைக் காத்துப் பேணாமல் கைசோரவிட்டு இருந்து, பின்னர் அதனைப் பற்றி மிகவும் ஆராய்ந்து, மீண்டும் அதனைத் தேடிக்கொள்ளு தலாகிய தன்மை மிகவும் அறிவற்ற தன்மை யாகும். அது, ‘மயிலின் தலைமேல் வெண்ணெயை வைத்து, அது உருகி அதன் கண்களை மறைக்கும்போது அதனைப் பிடித்துக் கொள்ளலாம்’ என்று நினைப்பது போன்றதாகும். முன்னை யுடையது காவாது இகந்திருந்து பின்னையஃதாராய்ந்து கொள்குறுதல்--இன்னியல் மைத்தடங்கண் மாதராய்; அஃதாதல் வெண்ணெய்மேல் வைத்து மயில் கொள்ளுமாறு. ‘கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது’ எனவும் வழங்குவர். உள்ளதை இழந்துவிட்டுப் பின் அதற்காக வாடி வருந்தி வீணாக முயல்வது கூடாது என்பது கருத்து. ‘வெண்ணெய் மேல் வைத்து மயில் கொள்ளுமாறு’ என்பது பழமொழி. 394. வலிய பகையே நல்லது கண்களின் தன்மையினைக் கொண்டே நெய்தற்பூக்கள் மலர்ந்திருக்கும். அழகிய கழிகளையுடைய கானற்சோலைகள் விளங்கும், குளிர்ந்த கடல்நாட்டுத் தலைவனே! பருவ மழையே யன்றி வெண்பாட்டமானாலும், அதனால் வெள்ளம் பெருகிவரத் தவறுவதில்லை. ஆதலால், வலிமை உடையவரின் பகையினைக் கொண்டாலும் கொள்ளலாமே அல்லாமல், மேலானவர், வலிமையற்ற கோழைகளின் பகையைக் கொள்ளுதலால் ஒரு பயனும் இல்லை. வன்பாட் டவர்பகை கொள்ளினும் மேலாயார் புன்பாட் டவர்பகை கோடல் பயமின்றே கண்பாட்ட பூங்கழிக் கானலந் தண்சேர்ப்ப! வெண்பாட்டம் வெள்ளந் தரும். தகுதியிற் குறைந்தவரிடத்துக் கொள்ளும் பகையும், நம்மை அவருடைய தகுதி அளவுக்குக் குறைத்துவிடுமாதலால், கூடாது என்பது கருத்து. ‘வெண்பாட்டம் வெள்ளந் தரும்’ என்பது பழமொழி. 395. கீழ்மக்களின் தன்மை பிறரோடு தாம் கொண்ட கலகத்தைத் தணிப்பதற்கான நல்ல கருத்துடனே இடையிலே புகுந்தவர் மேலும், குலத்தாற் சிறுமை யுடைய வர்கள் வெகுண்டு எழுவார்கள். குதிரையேறி நடத்தும் பழக்க மில்லாதவர்கள், நிலத்திலே ஓடாமல் நிற்கும் குதிரையின் நிலைமையை மாற்ற விரும்பி அதனை அடித்த காலத்து, அது அவனைத் தலைகீழாகக் குப்புறத் தள்ளிவிடும் செயல் போன்றதே அதுவும். குலத்துச் சிறியார் கலாந்தணிப் பான்புக்கு விலக்குவார் மேலும் எழுதல்--நிலத்து நிலையழுங்க வேண்டிப் புடைத்தக்கால் வெண்மாத் தலைக்கீழாக் காதி விடல். குதிரை ஏற்றம் அறியாதவன், குதிரையைப் பிறர் அடித்து ஓட்டினபோது தலைக்குப்புற வீழ்வதுபோலவே, கீழ்மகன் தன் கீழ்மைக் குணத்தால், தனக்கு நன்மை செய்பவனையும் பகைத்துக் கொள்வான் என்பது கருத்து. ‘வெண்மாத் தலைக்கீழாக் காதி விடல்’ என்பது பழமொழி. 396. தக்கபடி நடக்க வேண்டும் தம் காரியம் கெடும்படியாகச் செய்ய நினைப்பவரிடத்திலே, அவரிடத்து நல்ல தன்மை உடையவர்போல நடந்து அவரை ஒதுக்க வேண்டும். பொருளைப் பேணிச் செயலை முடிப்பவரிடத்து அதனை அறியாதார்போலக் காட்டி அவரை விரைந்து செய்வதற்குத் தூண்டுதல் வேண்டும். இப்படி, அவரவர்க்குத் தக்கபடி நடந்து காரியத்தைச் சாதித்துக் கொள்வதே அறிவுடை மையாகும். அது, வெந்நீரிலே, வேண்டும் வெம்மைக்குத் தக்கபடி தண்ணீர் வளாவிக் கொள்வது போன்றதாகும். செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும், பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும், அந்நீரவரர்க்குத் தக்காங்கு ஒழுகுபவே வெந்நீரில் தண்ணீர் தெளித்து. பணியாளருள், அவரவர்கட்குத் தக்கபடி நடந்து காரியத்தை முடித்துக் கொள்வதே சிறப்பு என்பது கருத்து. ‘வெந்நீரில் தண்ணீர் தெளித்து ஒழுகுபவே’ என்பது பழமொழி. 397. தன்குற்றம் தீர்த்தல்! தம்பால் அமைந்திருக்கும் குறைபாடுகளை நீக்காத வராகிய ஒருவர், பிறருடைய குற்றங்களைத் தீர்ப்பதற்கு முனைந்து எங்கேனும் இடையிலே புகுதல் பொருந்தாததாகும். பெரிய உலகத்தினுள்ளே, வெள்ளாடானது எங்கும் தன்னுடைய வாதநோயைத் தீர்த்துக் கொள்ள மாட்டாது; ஆனால், பிறருக்கு வந்த வாதநோயைத் தீர்க்க உதவும். இதனைப் போன்றதே அவருடைய செயலும். தங்குற்றம் நீக்கல ராகிப் பிறர்குற்றம் எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல்--எங்கும் வியனுலகின், வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்து விடல். தன் குற்றத்தைப் போக்காத ஒருவர், பிறருடைய குற்றத்தை நீக்குவதற்கு முயலுதல் பொருந்தாது என்பது கருத்து. ‘வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்து விடல்’ என்பது பழமொழி. வளி - வாதநோய். 398. மதிப்பும் தேவையும் பூண்கள் பொருந்திய மார்பினை உடையவனே! தலைமை யினை யுடைய மன்னரைச் சார்ந்து வாழ்பவர்கள், தாம் வறுமை யால் துன்புற்றாலும், அவரிடத்தே ஒன்றினை வேண்டுவோம் என்பதைப் பற்றிச் சொல்லவேண்டாம். பிறரால் மதிக்கப்படுவர், எதனையும் வேண்டாதவ ர்போலக் காட்டி நடத்தலே, அவர்க்கு வேண்டியனவெல்லாம் கொண்டு தருவ தான சிறந்த வழியாகும். ஆண்டகை மன்னரைச் சார்ந்தார்தாம் அல்லுறினும் ஆண்bட்hன்று வேண்டுதும் என்பது உரையற்க பூண்தாங்கு மார்ப! பொருடக்கார், வேண்டாமை வேண்டிய தெல்லாம் தரும். மதிப்புடையவர், தமக்கு வேண்டியதைத் தாமே வாய் திறந்து கேட்பது கூடாது; அவர் கேளாமலே இருந்தால் எல்லாம் வரும் என்பது கருத்து. ‘வேண்டாமை வேண்டிய தெல்லாம் தரும்’ என்பது பழமொழி. 399. எங்கும் இன்பம்! நல்ல தருமங்கள் செய்யும் ஒருவன், இந்த உலகத்திலானால் நல்ல புகழைப் பெறுவான், இந்த உலகத்தைவிட்டு மேலுலகம் சென்றால், அங்கும் அவனுக்கு அது இனிதாகவே விளங்கும். இதனால், நாள்தோறும் நல்ல தருமங்களைச் செய்பவர்களுக்கு, இரண்டு உலகங்களுமே, கவட்டை நெறியிலே உளவாகிய விருந்துச் சாப்பாடுகள் போன்றனவாகும். ஈனுலகத் தாயின் இசைபெறூஉம்; அஃதறிந்து ஏனுலகத் தாயின் இனிததூஉம்:--தானொருவன் நாள்வாயும் நல்லறம் செய்வாற்கு இரண்டுலகும் வேள்வாய்க் கவட்டை நெறி. இருந்தால் புகழ் இவ்வுலகில்; இறந்தால் இன்பம் மேலுலகில்; ஆகவே, நல்லறம் செய்க என்பது கருத்து. வேள்-வேட்டம்; விருந்துணவு; எந்த வழியிலும் கிடைக்கும் என்க. ‘வேள்வாய்க் கவட்டை நெறி இரண்டுலகம்’ என்பது பழ மொழி. 400. பொருளே வலிமையுடையது தம் தகுதியைத் தெளிவாக அறியும் அறிவின்றி ஒழுகி வரும் அறிவுத்திறன் அற்றவர்களின் பகைமையைப் பொருளின் துணை கொண்டு போக்குதலே சிறந்ததாகும். பொருளைக் கொடுத்தால் அதனைக் கண்டு மயங்காது தாமதித்து நிற்பவர் எவரிருக் கிறார்கள்? வேலினாற் குத்துதலை விடக், காணிப் பொன்னினால் குத்துவதே வலிமையுடன் எதிரியின் உள்ளத்திலே பாயும் என்று அறிக. தெருளா தொழுகும் திறனிலா தாரைப் பொருளால் அறுத்தல் பொருளே--பொருள்கொடுப்பின் பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேற்குத்தின் காணியின் குத்தே வலிது. ‘ஈட்டி’ எட்டின மட்டும் பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும் என்ற கருத்தை விளக்குவது இது. ‘வேற்குத்தின் காணியின் குத்தே வலிது’ என்பது பழமொழி. காணி-காணிப் பொன். பழமொழி அகரவரிசை (எண் - செய்யுள் எண்) 1. பெரியதன் ஆவி பெரிது 2. அகலுள் நீராலே துடும்பல் எறிந்துவிடல் 3. அக்காரம் பால்செருக்கும் ஆறு 4. அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு 5. அஞ்சாதே தின்பது அழுவதன் கண் 6. அஞ்சும் பிணிமூப்பு அருங்கூற் றுடனியைந்து துஞ்சவருமே துயக்கு 7. அஞ்சுவார்க் கில்லை அரண் 8. அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியா மெனல் 9. அணங்காகும் தான்செய்த பாவை தனக்கு 10. அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம் 11. அணியெல்லாம் ஆடையின் பின் 12. அம்பலம் தாழ் கூட்டுவார் 13. அம்புவிட்டு ஆக்கறக்கு மாறு 14. அயலறியா அட்டூணோ இல் 15. அயிரை யிட்டு வரால் வாங்குபவர் 16. அயிலாலே போழ்ப அயில் 17. அரங்கினுள் வட்டு கரையிருந்தார்க்கு எளிய போர் 18. அரிந்தரிகால் நீர்ப்படுக்குமாறு 19. அரிவாரைக் காட்டார் நரி 20. அழகொடு கண்ணின் இழவு 21. அளறாடிக் கண்ணும் மணி மணியாகி விடும் 22. அள்ளில்லத்து உண்ட தனிசு 23. அறஞ்செய்ய அல்லவை நீங்கிவிடும் 24. அறிதுயில் யார்க்கும் எழுப்பலரிது 25. அறிமடமும் சான்றோர்க் கணி 26. அறியும் பெரிதாள்பவனே பெரிது 27. அறிவச்சம் ஆற்றப் பெரிது 28. அறிவினை ஊழே அடும் 29. அறுமோ குளநெடிது கொண்டது நீர் 30. அறுமோ நரி நக்கிற்றென்று கடல் 31. ஆகாதார்க்கு ஆகுவ தில் 32. ஆகாதே உண்டது நீலம் பிறிது 33. ஆகுமோ நந்துழுத வெல்லாம் கணக்கு 34. ஆடு பணைப் பொய்க்காலே போன்று 35. ஆயிரம் காக்கைக்கோர் கல் 36. ஆராயானாகித் தெளிந்தான் விளிந்துவிடும் 37. ஆலென்னிற் பூலென்னு மாறு 38. ஆற்றக் கரும்பனை யன்ன துடைத்து 39. ஆற்றா தவரழுத கண்ணீரவை அவையர்க்குக் கூற்றமாய் வீழ்த்துவிடும் 40. ஆற்றுணா வேண்டுவ தில் 41. ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்றுவிடும் 42. இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறானாதலே நன்று 43. இடை நாயிற் கென்பிடுமாறு 44. இடையன் எறிந்த மரம் 45. இரந்தூட்குப் பன்மையோ தீது 46. இருதலையும் காக்கழித்தார் 47. இருதலைக் கொள்ளி யென்பார் 48. இருளி னிருந்தும் வெளி 49. இல்லுள் வில்லேற்றி இடைக்கலத் தெய்துவிடல் 50. இல்லை உயிருடையார் எய்தா வினை 51. இல்லையே அட்டாரை ஒட்டாக்கலம் 52. இல்லையே உய்வதற்கு உய்யாவிடம் 53. இல்லையே ஒன்றுக்குதவாத வொன்று 54. இல்லையே தாஅம்தர வாராநோய் 55. இல்லையே யானைதொடு வுண்ணின் மூடுங் கலம் 56. இழவன்று எருது உண்ட உப்பு 57. இல்லை இழுக்கத்தின் மிக்க உயர்வு 58. இழுகினா னாகாப்பதில்லையே முன்னம் எழுதினான் ஓலைபழுது 59. இளைதென்று பாம்பிகழ்வா ர்இல் 60. இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்றுவிடும் 61. இளையோனே ஆயினும் மூத்தானே யாடுமகன் 62. இறக்கு மையாட்டை உடம்படுத்து வெளவுண்டா ரில் 63. இறந்தது பேர்த்தறிவா ர்இல் 64. இறைத்தோறும் ஊறும் கிணறு 65. இனங் கழுவேற்றினா ர்இல் 66. இன்சொல் இடர்ப்படுப்ப தில் 67. இன்னாது இருவர் உடனாடல் நாய் 68. இன்னதே பேஎயோடானும் பிரிவு 69. ஈடில்லதர்க் கில்லை பாடு 70. ஈனுமோ வாழை இருகால் குலை 71. உடுத்தாரை உண்டி வினவுவா ர்இல் 72. உண்டஇல் தீயிடு மாறு 73. உண்ணா இரண்டேறு ஒரு துறையுள் நீர் 74. உண்ணுந் துணை காக்கும் கூற்று 75. உண்ஓட் டகலுடைப் பார் 76. உமிக்குற்றுக் கைவருந்து மாறு 77. உமையாள் ஒரு பாலாக் கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே 78. உயக்கொண்டு புல்வாய் வழிப்படுவா ர்இல் 79. உயவு நெய்யுட் குளிக்கும் ஆறு 80. உருவு திருவூட்டு மாறு 81. உரைத்தால் உரைபெறுதல் உண்டு 82. உரையார் இழித்தக்க காணிற் கனா 83. உலகினுள் இல்லதற் கில்லை பெயர் 84. உலக்கைமேல் காக்கை என்பார் 85. உவர்நிலம் உட்கொதிக்குமாறு 86. உவவாதார்க்கு ஈத்ததையெல்லாம் இழவு 87. உள்ளம் படர்ந்ததே கூறும் முகம் 88. உள்ளிருந்து அச்சாணி தாங்கழிக்கு மாறு 89. உறற்பால தீண்டாவிடுதல் அரிது 90. உறற்பால யார்க்கும் உறும் 91. ஊரறியா மூரியோ இல் 92. ஊர்ந்துருளின் குன்று வழி அடுப்ப தில் 93. ஊர் மேற்றதாம் அமணர்க்கு ஓடு 94. ஊழம்பு வீழா நிலத்து 95. எய்ப்பினில் வைப்பென் பது 96. எருக்கு மறைந்து யானை பாய்ச்சி விடல் 97. எருத்திடை வைக்கோல் தினல் 98. எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்கும் ஆறு 99. எல்லாம் பொய் அட்டூணே வாய் 100. எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில் 101. எளியாரை எள்ளாதா ர்இல்லை 102. என்றும் மனநல மாகாவாம்கீழ் 103. ஏப் பிழைத்துக் காக்கொள்ளு மாறு 104. ஏமரார் கோங் குஏறினார் 105. ஏவலாள் ஊருஞ் சுடும் 106. ஏற்றுக்கன் றுஏறாய் விடும் 107. ஒக்கலை வேண்டி அழல் 108. ஒடியெறியத் தீராப் பகை 109. ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு 110. ஒருவர் பொறை இருவர் நட்பு 111. ஒள்ளியக் காட்டாளர்க்கு அரிது 112. ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான் அரசு 113. ஒன்றுரு முன்றிலோ இல் 114. ஒன்றேற்றி வெண்படைக்கோ ள்ஒன்று 115. ஓம்புவார் இல்லெனின் சென்றுபடுமாம் உயிர் 116. ஓடுக ஊரோடு மாறு 117. ஓரறையுள் பாம்போ டுஉடன் உறையும் ஆறு 118. ஓர்த்த துஇசைக்கும் பறை 119. கடன்பெற்றான் பெற்றான் குடம் 120. கடலுளால் மாவடித்தற்று 121. கடலுள்ளும் காண்பவே நன்கு 122. கடலோடு காட்டொட்ட ல்இல் 123. கடல் நீந்திக் கற்றடியு ளாழ்ந்துவிடல் 124. கடல்படா எல்லாம் படும் 125. கடனன்றோ ஊரறிய நாட்டார்க்கு உணா 126. கடிஞையில் கல்லிடுவார் இல் 127. கடித்தோடும் பாம்பின்பல் கொள்வாரோ இல் 128. கடிய கனைத்து விடல் 129. கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்விவிடும் 130. கணையிலும் கூரியவாம் கண் 131. கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர் 132. கண்டது காரணமா மாறு 133. கண்ணிற் கண்டதூஉம் எண்ணிச் சொலல் 134. கயவர்க் குரையார் மறை 135. கருக்கினால் கூரை கொள்வார் 136. கற்றேயும் தேயாது சொல் 137. கல்லொடு கை யெறியுமாறு 138. கவுட்கொண்ட நீர் 139. கள்ளினைக் காணாக் களிக்கும் களி 140. கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல் 141. கழிவிழாத் தோளேற்றுவார் 142. கற்கிள்ளிக் கையுய்ந்தா ர்இல் 143. கற்றலில் கேட்டலே நன்று 144. கற்றறிவு போகாக் கடை 145. கற்றொறுந் தான் கல்லாத வாறு 146. கனா முந்துறாத வினை யில்லை, வினா முந்துறாத உரையில்லை 147. காக்கையைக் காப்பிட்ட சோறு 148. காணார் எனச் செய்யார் மாணா வினை 149. காதலோ டாடார் கவறு 150. காப்பாரிற் பார்ப்பார் மிகும் 151. கானகத் துஉக்க நிலா 152. குடர் ஒழிய மீவேலி போக்குபவர் 153. குடிகெட வந்தால் அடிகெட மன்றிவிடல் 154. குரங்கின்கைக் கொள்ளி கொடுத்துவிடல் 155. குரங்கினுள் நன்முகத்த வில் 156. குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்காலென் 157. குருவி குறங்கறுப்பச் சோருங் குடர் 158. குலவிச்சை கல்லாமற் பாகம்படும் 159. குவளையைத் தன்னாரால் யாத்துவிடல் 160. குழிப்பூமி ஆற்றா குழிக்கு 161. குழுவத்தார் மேயிருந்த என்றூடுஅறுப்பினுமன்று 162. குளந்தொட்டுத் தேரை வழிச் சென்றா ர்இல் 163. குறுநரிக்கு நல்ல நாராயங் கொளல் 164. குறுமக்கள் காவு நடல் 165. குறும்பியங்கும் கோப்புக்குழிச் செய்வ துஇல் 166. குறும்பூழ்க்குச் செய்யுளதாகு மனம் 167. குறைப்பர் தம்மேலே வீழப் பனை 168. குன்றின்மேல் இட்ட விளக்கு 169. கூதறைகள் ஆகார் குடி 170. கூரம்பு அடியிழுப்பின் இல்லை அரண் 171. கூரிதுஎருத்து வலியதன் கொம்பு 172. கூலிக்குச் செய்துண்ணு மாறு 173. கூற்றங் குதித்துய்ந் தறிவாரோ இல் 174. கூற்றம் புறங்கொம்மை கொட்டினா ரில் 175. கூன்மேல் எழுந்த குரு 176. கெடுமே கொடும்பாடுடையான் குடி 177. கெட்டார்க்கு நட்டாரோ இல் 178. கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு 179. கொடுத் தேழையாயினா ர்இல் 180. கொடுப்பவர் தாமறிவார் தம்சீர் அளவு 181. கொண்டார் வெகுடல் நகைமேலும் கைப்பாய்விடும் 182. கொல்லிமேல் கொட்டு வைத்தார் 183. கொல்லையுள் கூழ் மரமே போன்று 184. கொற்சேரி துன்னூசி விற்பவர்இல் 185. சால்பினைச் சால்பறுக்கு மாறு 186. சாவாதான் முன்கை வளையுந் தொடும் 187. சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய் 188. சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு 189. சான்றோர் கடங்கொண்டும் செய்வார் கடன் 190. சிறுகுரங்கின் கையாற் றுழா 191. சீர்ந்தது செய்யாதா ர்இல் 192. சுமையொடு மேல்வைப்பா மாறு 193. சுரத்திடைப் பெய்த பெயல் 194. சுரம்போக்கி உல்குகொண்டா ரில் 195. சுரையாழ அம்மி மிதப்ப 196. சுரையாழ் நரம்பறுத்தற்று 197. சூட்டறுத்து வாயி லிடல் 198. செய்கென்றான் உண்கென்னு மாறு 199. செய்தானை ஒவ்வாத பாவையோ இல் 200. செய்யாத எய்தா எனில் 201. செய்வதென் வல்லை அரசாட் கொளின் 202. செருப்பிடைப் பட்ட பரல் 203. செல்வம் தொகற்பால போழ்தே தொகும் 204. சேணோக்கி நந்து நீர் கொண்டதே போன்று 205. சொல்லாக்கால் சொல்லுவ துஇல் 206. சோரம் பொதியாத வாறு 207. தஞ்சாகா டேனும் உயவாமல் சேறலே வில் 208. தஞ்சாதி மிக்கு விடும் 209. தட்டாமல் செல்லாது உளி 210. தண்கோல் எடுக்குமாம் மெய் 211. தந்நீர ராதல் தலை 212. தமக்கு மருத்துவர் தாம் 213. தமரை இல்லார்க்கு நகரமும் காடுபோன்றாங்கு 214. தம்மைத் தாம் ஆர்க்கும் கயிறு 215. தம்மை உடைமை தலை 216. தயிர் சிதைத்து மற்றொன் றடல் 217. தலையுள் குறுங்கண்ணி யாகி விடும் 218. தனக்கின்னா இன்னா பிறர்க்கு 219. தனிமரம் காடாதல் இல் 220. தன்னாசை அம்பாயுள் புக்குவிடும் 221. தாமிருந்த கோடு குறைத்துவிடல் 222. தாயர் அலைத்துப் பால் பெய்துவிடல் 223. தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு 224. தாய் மிதித்து ஆகா முடம் 225. தால வடைக்கலமே போன்று 226. தாறாப்படினும் தலைமகன் தன்னொளி நூறாயிரவர்க்கு நேர் 227. தானோன்றிட வரும் சால்பு 228. திங்களை நாய் குரைத்தற்று 229. திருவினும் திட்பம் பெறும் 230. திருவுடையார் பண்டம் இருவர் கொளல் 231. திருவோடும் இன்னாது துச்சு 232. திரையவித் தாடார் கடல் 233. தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல் 234. தீங்குரைக்கும் நாவிற்கு நல்குரவில் 235. தீநாய் எழுப்புமாம் எண்கு 236. தீநாள் திருவுடையார்க் கில் 237. தீயன ஆவதே போன்று கெடும் 238. தீ யில்லை ஊட்டும் திறம் 239. தீற்றாதோ நாய்நட்டால் நல்ல முயல் 240. துளியீண்டில் வெள்ளந் தரும் 241. துறவா உடம்பினான் என்ன பயன் 242. துன்னினா ரல்லார் பிறர் 243. துன்னூசி போம்வழி போகு மிழை 244. தெளியானைத் தேற லரிது 245. தேனார் பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டுவிடல் 246. தொளை யெண்ணார் அப்பந் தின்பார் 247. தோற்பன கொண்டு புகார் அவை 248. நகையாகும் யானைப்பல் காண்பான் பகல் 249. நசைகொன்றான் செல் உலக மில் 250. நரகர்கட் குஇல்லையோ நஞ்சு 251. நரிக்கூ உக் கடற் கெய்தாவாறு 252. நரியிற்குஊண் நல்யாண்டும் தீயாண்டு ம்இல் 253. நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர் இல்லம் சுடுகலாவாறு 254. நல்லறம் செய்வது செய்யாது கேள் 255. நற்காப்பின் தீச்சிறையே நன்று 256. நன்றோடு வந்ததொன் றன்று 257. நாய் காணின் கற்காணா வாறு 258. நாய்கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு 259. நாய் கவ்வின் பேர்த்து நாய் கௌவினா ர்இல் 260. நாய் பெற்ற தெங்கம் பழம் 261. நாய்மேல் தவிசிடு மாறு 262. நாய்வால் திருந்துதல் என்றுமோ இல் 263. நாளும் கடலுள் துலாம் பண்ணினார் 264. நாவற்கீழ்ப் பெற்ற கனி 265. நாவிதன் வாள் சேப்பிலைக்குக் கூர்த்துவிடல் 266. நிரையுள்ளே இன்னா வரைவு 267. நிறைகுடம் நீர்தளும்ப ல்இல் 268. நின்றது சென்றது பேராதவர் 269. நின்நடை நின்னின் றறிகிற்பா ர்இல் 270. நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை 271. நீரற நீர்ச்சாவு அறும் 272. நீர்போயும் ஒன்றிரண்டாம் வாணிகம் இல் 273. நீர் மிகின் இல்லை சிறை 274. நீர்வரைய வாம் நீர்மலர் 275. நீள் கயத்துள் ஆமை நனைந்துவா என்று விடல் 276. நுகத்துப் பகலாணி போன்று 277. நுணலுந் தன் வாயால் கெடும் 278. நடும்பகை தற்செய்யத் தானே கெடும் 279. நெடுவேல் கொடுத்தான் குடத்துளும் நாடி விடும் 280. நெய்தலைப் பால் புக்கு விடல் 281. நெய்பெய்த கலனே நெய் பெய்துவிடும் 282. நோவச் செய் நோயின்மை இல் 283. நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி 284. பசிபெரி தாயினும் புல்மேயா தாகும் புலி 285. பசுக் குத்தின் குத்துவா ர்இல் 286. படையின் படைத் தகைமை நன்று 287. பயின்றது வானக மாகிவிடும் 288. பரிசழிந்தாரோடு தேவரு மாற்ற ல்இலர் 289. பலிப்புறத் துண்பார் உணா 290. பல்கட்டப் பெண்டீர் மகார் 291. பழஞ்செய் போர் பின்றுவிடல் 292. பள்ளியுள் ஐயம் புகல் 293. பழம் பகை நட்பாத லில் 294. பாறைக்கண் கடிப்பிடு மாறு 295. பனியால் குளநிறைத லில் 296. பனைப் பதித் துண்ணார் பழம் 297. பனை முதிரின் தாய்தாண்மேல் வீழ்ந்துவிடும் 298. பனையின் மேல் பஞ்சிவைத் தெஃகிவிட்டற்று 299. பன்மையின் பாடுடைய துஇல் 300. பாண்சேரிப் பற்கிளக்குமாறு 301. பாம்பறியும் பாம்பின் கால் 302. பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ 303. பாற்றலைப் பாலூற ல்இல் 304. பிணியீ டழிந்து விடும் 305. பிரம்பூரி என்றும் பதக்கேழ் வரும் 306. பிறரைக் கள்ளராச் செய்குறுவார் 307. பின்னின்னா பேதையார் நட்பு 308. புதற்குப் புலியும் வலியே புலிக்குப் புதரும் வலியாய் விடும் 309. புலத்தகத்துப் புள் ளரைக்கால் விற்பே மெனல் 310. புலப்புல வண்ணத்த புள் 311. புலித்தலையை நாய் மோத்த ல்இல் 312. புலிமுகத் துண்ணி பறித்துவிடல் 313. புலிமுன்னர்ப் புல்வாய்க்குப் போக்கில் 314. புலைப்பொருள் தங்கா வெளி 315. புல்லத்தைப் புல்லும் புறம்புல்லு மாறு 316. புழுப்பெய்து புண் பொதியு மாறு 317. புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன் 318. பூசை எலியில்வழிப் பெறா பால் 319. பூசையைக் காப்பிடுதல் புன்மீன்றலை 320. பூண்ட பறை யறையார் போயினா ர்இல் 321. பூவோடு நாரியைக்கு மாறு 322. பெண் பெற்றான் அஞ்சான் இழவு 323. பெய்யுமாம் பெய்யாதெனினும் மழை 324. பெரிதகழின் பாம்புகாண்பாரும் உடைத்து 325. பெரிது உக்கு ஓடிக் காட்டிவிடும் 326. பெரியவாம் ஆற்றவும் முன்கை நெடியார்க்குத் தோள் 327. பெரியாரைச் சார்ந்து கெழீ இயிலா ர்இல் 328. பெரும் பழியும் பேணாதார்க் குஇல் 329. பேதைக் குஉரைத்தாலும் தோன்றா துஉணர்வு 330. பைங்கரும்பு மென்றிருந்து பாகுசெயல் 331. பொருந்தா மண் ஆகா சுவர் 332. பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள் 333. பொறியும் தொடர்பாலார் கண்ணே தொடும் 334. போகாதே நாய் பின்னதாகத் தகர் 335. போகாரே நீர் குறிதாகப் புகல் 336. போமாறுஅறியா புலன்மயங்கி ஊர்புக்குச் சாமா கண்காணாதவாறு 337. மகனறிவு தந்தை யறிவு 338. மகன் மறையத் தாய் வாழுமாறு 339. மச்சேற்றி ஏணி களைவு 340. மதிப்புறத்துப் பட்ட மறு 341. மதியம்போல் பன்மீனும் காய்கலா வாகுநிலா 342. மயில்போலும் கள்வர் உடைத்து 343. மரங்குறைப்ப மண்ணா மயிர் 344. மரத்தின்கீழ் ஆகா மரம் 345. மறையார் மருத்துவர்க்கு நோய் 346. மற்றதன்பாற் றேம்பல் நன்று 347. மன்றஞ்சுவர்க்குப் பரிகாரம் யாதொன்று ம்இல் 348. மன்றத்து மையல் சேர்ந்தற்று 349. மனை மரமாய மருந்து 350. மாக் காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு 351. மாயா நரையான் புறத்திட்ட சூடு 352. மிக்கவை மேவிற் பரிகார ம்இல் 353. மிளகுளு வண்பான் புகல் 354. முடவன் பிடிப்பூணி யானையோடாடல் உறவு 355. முதலிலார்க்கு ஊதிய ம்இல் 356. முயல் விட்டுக் காக்கை தினல் 357. முலையிருப்பத் தாயணல் தான்சுவைத் தற்று 358. முழங்குறைப்பச் சாணீளு மாறு 359. முழநட்பிற் சாணுட்கு நன்று 360. முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு 361. முள்ளித்தேன் உண்ணுமவர் 362. முள்ளினால் முட்களையு மாறு 363. முறைமைக்கு மூப்பிளமை யில் 364. முனிவில்லார் முன்னியது எய்தாமை யில் 365. முன்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு பின்பகல் கண்டுவிடும் 366. முன்னின்னா மூத்தார் வாய்ச் சொல் 367. மூக்கற்றதற் கில் பழி 368. மூரி உழுது விடல் 369. மூரியைத் தீற்றிய புல் 370. மைமைப்பின் நன்று குருடு 371. மோரின் முதுநெய் தீதாகலோ வில் 372. யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகிவிடும் 373. யாப்பினுன் அட்டிய நீர் 374. யாரானும் சொற் சோராதாரோ இலர் 375. யாரே நமநெய்யை நக்குபவர் 376. யாருளரோ தங்கன்று சாக்கறப்பர் 377. யானைபோய் வால் போகா வாறு 378. யானையால் யானை யாத்தற்று 379. வண்டு தாதுண்டு விடல் 380. வருந்தாதார் வாழ்க்கை திருந்துத லின்று 381. வலியலாந் தாய்க்கு வலித்து 382. வளிதோட் கிடுவாரோ இல் 383. வாங்கும் எருதாங் கெழாஅமைச் சாக்காடெழில் 384. வாடியக்கண்ணும் பெருங்குதிரை யாப்புள் வேறாகி விடும் 385. வாயுறைப் புற் கழுத்தில் யாத்துவிடல் (வேறாகி விடும்) 386. வாழைக்காய் உப்புறைத்த ல்இல் 387. விண்டற்கு விண்டல் மருந்து 388. விண்ணியங்கும் ஞாயிற்றைக் கைம்மறைப்பா ர்இல் 389. வித்தின்றிச் சம்பிரத ம்இல் 390. விரையிற் கருமம் சிதையும் 391. வில்லோடு காக்கையே போன்று 392. விளக் கெலி கொண்டு தனக்கு நோய் செய்து விடல் 393. வெண்ணெய் மேல்வைத்து மயில் கொள்ளுமாறு 394. வெண்பாட்டம் வெள்ளம் தரும் 395. வெண்மாத் தலைகீழாக் காதிவிடல் 396. வெந்நீரில் தண்ணீர் தெளித்து 397. வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்துவிடல் 398. வேண்டாமை வேண்டிய தெல்லாம் தரும் 399. வேள்வாய்க் கவட்டை நெறி இரண்டுலகும் 400. வேற்குத்தின் காணியின் குத்தே வலிது செய்யுள் முதற் குறிப்பு அகரவரிசை (எண் - செய்யுள் எண்) அகத்தால் 71 அகந் தூய்மை 275 அகலம் உடைய 300 அங்கண் 90 அங்கோல் 210 அடங்கியகப்பட 182 அடர்ந்து 189 அடுத்தொன்று 179 அடையப் பயின் 44 அடைய அடைந் 197 அமர் நின்ற 37 அமர்விலங்கி 338 அமையாவிடத் 255 அரிதவித்து க.வா. அருமையுடைய 162 அருவிலை மாண் 229 அருள் உடை 230 அல்லது செய்வார் 237 அல்லல் ஒருவர் 349 அல்லவை செய்ய 252 அல்லவையுள் 353 அறஞ் செய்பவர்க்கும் 23 அறிவன்று 161 அறிவினால் 11 அற்றாக நோக்கி 356 அன்பறிந்த 78 அன்பின் நெகிழ 13 ஆஅம் எனக்கெளி 54 ஆஅய் வளர்ந்த 333 ஆகும் சமயத்தார்க்கு 31 ஆணம் உடைய 378 ஆணியாக் கொண்ட 207 ஆண்டகை மன்னரைச் 398 ஆண்டீண் டென 320 ஆமாலோ என்று 336 ஆயிரவ ரானும் 341 ஆய்ந்த அறிவினர் 285 ஆவிற்கு அரும்பனி 234 ஆறாச் சினத்தன் 244 ஆற்றப் பெரியார் 174 ஆற்ற வினை செய்தார் 383 ஆற்றவும் கற்றார் 40 ஆற்றா ரிவரென்று 129 ஆற்றும் தகைய 283 ஆற்றும் இளமைக்கண் 194 இகலின் வலியாரை 186 இசைவ கொடுப்பதூஉம் 249 இஞ்சி அடைந்து 48 இடுகுடைத்தேர் 128 இடையீ டுடையார் 307 இணரோங்கி வந்தாரை 21 இதுமன்னுந் தீதென் 236 இம்மைத் தவமும் 214 இம்மைப் பழியும் 370 இயற்பகை வெல் 190 இரப்பவர்க் கீயக் 64 இரவலர் தம்வரிசை 274 இருகயல் உண்கண் 386 இல்வாழ்க்கை யானும் 46 இறப்பச் சிறியவர் 253 இறப்ப எமக்கீது 225 இனியாரும் இல்லாதார் 364 இனியாரை உற்ற 296 இன்றியமையா 92 ஈட்டிய ஒண்பொருள் 106 ஈனுலகத் தாயின் 399 உடுக்கை மருந்துறை 98 உடைப்பெருஞ் 154 உடையதனைக் 308 உணற்கு இனிய 143 உரிஞ்சி நடப்பாரை 328 உரிதனில் தம்மொடு 324 உருத்தெழு 135 உரைசான்ற சான்றோர் 195 உரைத்தவர் நாவோ 289 உரைத்தாரை மீதூரர் 251 உரைமுடிவு காணான் 258 உலப்பில் உலகத்து 222 உவப்ப உடன்படுத்தற் 297 உழந்ததூஉம் பேணாது 358 உழையிருந்து 17 உளைய உரைத்து 224 உள்ளது ஒருவர் 314 உள்ளூரவரால் 4 உறாஅ வகையது 175 உறுகண் பலவும் 27 உறுமக்களாக 164 உற்றதற்கு எல்லாம் 278 உற்றால் இறைவற்கு 73 உற்றான் உறாஅன் 56 ஊக்கி உழந்தொருவர் 147 ஊழாயி னாரைக் 245 எங்கண் ஒன்றில்லை 329 எங்களை இனையர் 112 எண்ணக் குறைபடாச் 215 எதிர்த்த பகையை 219 எந்நெறி யானும் 9 எமக்குத் துணையாவார் 212 எமரிது செய்க 37 எய்தா நகைச்சொல் 392 எய்ப்புழி 339 எல்லாத் திறத்தும் 96 எல்லையொன்று 183 எவ்வந் துணையால் 165 எனக்குத் தகவன் 148 எனைப் பலவே 296 எனைப்பல் 160 ஏற்றார்கட் 322 ஒக்கும் வகை 223 ஒட்டிய காதல் 77 ஒருவர் உரைப்ப 67 ஒருவன் உணரா 217 ஒல்லாத வின்றி 121 ஒளியாரை 101 ஒற்கப்பட்டாற்றார் 385 ஒற்கந்தாம் 284 ஒன்றால் சிறிதால் 268 ஒன்னார் 299 ஓதநீர் வேலி 287 ஓரும் ஒருவர் 310 ஓர்த்த கருத்தும் 32 கடங்கொண்ட 181 கடுப்பத் தலைக் 335 கட்டுடைத்தாக 51 கண்டறிவார் 387 கண்ணில் கயவர் 312 கண்ணுள் மணி 74 கரப்புடையார் 193 கருந்தொழிலர் 5 கருவினுட் கொண்டு 231 கல்லாதவரிடைக் 57 கல்லாதான்-காட்டரிது 205 கல்லாதும் 87 கல்வி யகலமும் 270 கல்வியான் 213 கழுமலத்தில் 89 களமர் 30 கள்ளி யகிலும் 258 கறுத்து ஆற்றி 227 கற்றதொன்-கரும 61 கற்றதொன்-குடிப் 184 கற்று அறிந்தார் 267 கற்றார் பலரைத் 196 கற்றாற்று 354 கற்றானும் 264 கன்றி முதிர்ந்த 168 காடுறை 169 காட்டிக் கருமம் 319 காத்தாற்று 265 காப்பான் மடமகன் 208 காப்பிகந்து 352 காவலனை ஆக 357 காழார மார்ப் 163 குரைத்துக் 52 குலத்துச் சிறியார் 395 கூஉய்க் கொடு 384 கூரறிவினார்வாய்க் 91 கூற்றம் 201 கெடுவல் 136 கேட்பாரை நாடிக் 247 கையார 200 கைவிட்ட 119 கொடித்திண்டேர் 140 கொடையும் 286 கொண்டொழுகும் 200 கொழித்துக் 82 கோவாத சொல்லும் 382 சால மறைத்தோம்பிச் 363 சிறப்புடை 317 சிறந்த தம் சுற்றமும் 377 சிறந்த நுகர் 192 சிறிதாய கூழ்பெற்றுச் 60 சிறிய பொருள் 15 சிறியவர் எய்திய 371 சீர்த்தகு மன்னர் 59 சுடப்பட்டு 50 சுட்டிச் சொல்லப்படும் 28 சுற்றத்தார் நட்டார் 191 செந்நீரார் போன்று 396 செம்மாந்து செல்லும் 206 செயல்வேண்டா 366 செயிர் அறு செங்கோல் 199 செய்த கருமம் 309 செய்த கொடுமை 347 செருக்குடைய மன்னர் 97 செருக்கெழு மன்னர் 191 செல்லற்க சேர்ந்தார் 116 செல்வத் துணையுந்தம் 361 செறலிற் கொலைபுரிந்து 216 செறிவுடைத் தார்வேந்த 111 சேர்ந்தா ரொருவரை 99 சொல்லாமை நோக்கிக் 263 சொல்லெதிர்த்து 88 சொற்றொறும் சோர்வு 145 தக்கமில் செய்கைப் 3 தக்காரோ டொன்றித் 233 தங்குற்றம் நீக்கலர் 397 தத்தமக்குக் கொண்ட 276 தந்தம் பொருளும் 204 தந்தொழில் ஆற்றும் 33 தந்நடை நோக்கார் 269 தமக்குற்ற தேயாகத் 76 தமர் அல்லவரை 85 தமராலும் தம்மாலும் 86 தமரேயும் தம்மைப் 10 தமனென்று இருநாழி 375 தம் தீமை யில்லாதார் 110 தம்மால் முடிவதனைத் 302 தருக்கி ஒழுகித் 202 தலைக்கொண்ட தங்கரு 323 தலைமை கருதும் 117 தழங்குரல் வானத்து 298 தற்றூக்கித் தன்துணை 372 தன்னலி கிற்பான் 334 தன்னின் வலியானைத் 318 தன்னை மதித்து 243 தாக்குற்ற போழ்தில் 367 தாமகத்தால் நட்டுத் 151 தாமாற்ற கில்லாதார் 75 தாமேயும் தம்மைப் 104 தாம் நட் டொழுகுதற்கு 239 தாயானும் தந்தையா 8 தாரேற்ற நீண்மார்பில் 93 திரியும் இடிஞ்சிலும் 271 திருந்தாய் நீ ஆர்வத்தை 331 தீப்பால் வினையினைத் 391 தீர்ந்தோம் எனக்கருதித் 359 தீயனவல்ல செயினும் 313 துயிலும் பொழுதத்து 342 துன்னி இருவர் 360 தூய்மை மனத்தவர் 273 தெரியா தவர்தம் 12 தெரியாதார் சொல்லும் 306 தெரிவுடையா ரோடு 19 தெருளா தொழுகும் 400 தெள்ளி உணரும் 362 தெற்றப் பகைவர் 188 தெற்றப் பரிந்தொருவர் 345 தெற்ற அறிவுடையார் 346 தெற்ற ஒருவரைத் 178 தேர்ந்து கண்ணோடாது 250 தொடித் தோள் மடவார் 24 தொடிமுன்கை நல்லாய் 369 தொடுத்த பெரும் 180 தொன்மையின் மாண்ட 350 தோற்றத்தால் பொல்லா 39 தோற்றம் அரிதாய 6 தோற்றம் பெரிய 79 நடலை இலராகி 120 நட்டாரை யாக்கிப் 241 நண்பொன்றித் தம்மா 376 நயவர நட்டொழுகு 134 நலிந்தொருவர் நாளும் 103 நல்கூர்ந் தவர்க்கு 157 நல்லவும் தீயவும் 315 நல்லவை கண்டக்கால் 49 நல்லார் நலத்தை 16 நற்கு அறிவு இல்லாரை 144 நற்பால கற்றாரும் 374 நனியஞ்சத் தக்க 94 நன்கொன்று அறிபவர் 272 நன்றே ஒருவர்த் 53 நாடறியப்பட்ட 311 நாடி நமரென்று 221 நாட்டிக் கொள 62 நாணார் பரியார் 316 நாணின்றி ஆகாது 389 நாவின் இரந்தார் 156 நிரந்து வழிவந்த 155 நிரம்ப நிரையத்தைக் 153 நிரைதொடி 351 நிலத்தின் மிகையாம் 84 நிலைஇய பண்பிலார் 246 நிறையான் மிகு 262 நினைத்த திது 126 நீர்த்தகவு இல்லார் 259 நீர்த்தன்று ஒருவர் 118 நீறூர்ந்தும் ஓட்டா 226 நூக்கி அவர் 373 நெடியது காண் 365 நெடுங்காலம் 176 நெறியால் உணராது 228 நோக்கி அறிகல்லாத் 337 நோக்கி யிருந்தார் 150 நோவ உரைத்தாரைத் 238 படரும் பிறப்பிற்கு 152 பட்டவகையால் 42 பண்டின ரென்று 72 பண்டுருத்துச் 105 பயன் நோக்கா 172 பரந்த திறலாரைப் 338 பரந்தவர் 305 பரியப்படுபவர் 125 பல நாளும் ஆற்றார் 254 பல்கிளையுள் 226 பல்லாண்டும் 2929 பல்லார் அவை 81 பன்னாளும் நின்ற 203 பன்னாள் தொழில் 159 பாப்புக் கொடியார்க்குப் 14 பாரதத் துள்ளும் 149 பாற்பட்டு வாழ்ப 303 பிண்டியின் த.சி.பா புரையக் கலந்தவர் 390 புரையின்றி நட்டார் 114 புலமிக் கவரைப் 301 புன் சொல்லும் 66 பூத்தாலும் காயா 329 பூந்தண் புனற்புகார்ப் 133 பூவுட்கும் கண்ணாய் 281 பெரிய குடிப்பிறந் 327 பெரிய நட்டார்க்கும் 46 பெரியாரைச் சார்ந் 232 பெரியார்க்குச் செய் 261 பெருமலை நாட 298 பெற்றாலும் செல்வம் 343 பேதுறவு தீரப் 169 பேருலையுள் பெய்த 132 பொருத்தம் அழியாத 379 பொருந்தா தவரைப் 18 பொருந்தாப் பழியென் 304 பொருளல்லார் கூறிய 34 பொலந்தார் இராமன் 326 பொல்லாத சொல்லி 277 பொற்பவும் பொல்லா 26 மடங்கிப் பசிப்பினும் 122 மடியை வியங்கொள் 368 மரம்போல் வலிய 282 மல்லற் பெருஞ் 330 மறந்தானும் தாமுடைய 63 மறா அ தவனும் 45 மறுமணத்தன் அல்லாத 35 மறுமை யொன்றுண் 131 மறையா தினித்துரைத் 108 மனங்கொண்டக் 65 மனத்தினும் வாயினும் 115 மன்னவன் ஆணைக்கீழ் 344 மாடம் அழிந்தக்கால் 69 மாணாப் பகைவரை 139 மாயவதன் முன்னே 257 மாரியொன் றின்றி 113 மாற்றத்தை மாற்றம் 41 மானமும் நாணும் 248 மிக்க பழிபெரிதும் 2 மிக்குடையர் ஆகி 142 மிக்குப் பெருகி 102 முகம்புறத்துக் 107 முடிந்ததற் கில்லை 83 முட்டின்று ஒருவர் 177 முதுமக்கள் அன்றி 348 முயறலே வேண்டா 14 முல்லைக்குத் தேரும் 25 முழவொலி முந்நீர் 20 முழுதுடன் முன்னே 58 முறை தெரிந்து 109 முற்பெரிய நல்வினை 355 முன்நலிந்து ஆற்ற 127 முன்னின்னார் ஆயினும் 242 முன்னும் ஒருகால் 70 முன்னை உடையது 339 மெய்ந்நீர ராகி 211 மெய்ம்மையே நின்று 167 மெய்யா உணரின் 323 மொய்கொண் டெழுந்த 187 யாம் துய செய்த 130 யாவரே யானும் 279 யானுமற் றிவ்விருந்த 43 வருவாய் சிறிதெனினும் 240 வரைபுரை வேழத்த 232 வரைபுரை கண்டக்கால் 381 வழங்கலும் துய்த்தலும் 260 வழங்கார் வலியிலார் 291 வழிபட் டவரை 138 வளமையும் தேசும் 173 வன்சார்பு உடையர் 7 வன்பாட்டவர் வகை 394 வன்னெஞ்சி னார்பின் 290 வாட்டிற லானை 30 விடலரிய துப்புடை 123 விடலமை செய்து 124 விருடுக் கருமம் 209 விதிப்பட்ட நூலண 340 விடம்பி அடைந் 38 விலங்கேயும் தம்மோ 68 விழுத்தொடையர் ஆகி 280 விழுமிழை நல்லார் 185 விளக்கு விலைகொடு 332 விளிந்தாரே போலப் 36 வினைப்பயன் ஒன்றி 218 வீங்குதோட் செம்பி 170 வெஞ்சின மன்னவன் 100 வெண்குடைக் கீழ் 55 வெள்ளமாண் 294 வெள்ளம் பகை 22 வெள்ளம் வருங்காலை 87 வெற்றிவேல் வேந்தன் 198 வென்றடு கிற்பாரை 256 வேந்தன் மதித்துவப்ப 281 வேளாண்மை செய்து 380 வைத்ததனை வைப்பென்று 95 சிறுபஞ்சமூலம் ஆசிரியர் : காரியாசான் உரை : பழைய பொழிப்புரை சிறுபஞ்சமூலம் மூலமும் விளக்கவுரையும் ------------ கடவுள் வாழ்த்து முமுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம் பழுதின்றி யாற்றப் பணிந்து--முழுதேத்தி மண்பாய ஞாலத்து மாந்தர்க் குறுதியா வெண்பா வுரைப்பன் சில. (1) (பழைய பொழிப்புரை) காமாதி மூன்றையு மொழித்து முற்றுணர்ந்து, மூப்பில்லாதான் பாதம் மனக்குற்ற நீக்கி மிகவும் வணங்கிப் பல குணங்களைப் புகழ்ந்து மண்பரந்த வுலகில் மக்கட் கெல்லாம் உறுதியாகிய பொருள் மேற்றொடுத்து வெண்பாவா கிய சில செய்யுட்களை யுரைப்பேன். ஒத்த வொழுக்கங் கொலைபொய் புலால்களவோ டொத்த விவையல வோர்நாலிட்--டொத்த உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோற் கூறீர் சிறுபஞ்ச மூலஞ் சிறந்து. (2) (ப.பொ.ரை.) பொருந்திய வொழுக்கங் கொலை பொய் புலால் களவோ டொத்த விவையன்றி யிவற்றுக்கு மறுதலை யாகிய நான்கு மென்று சொல்லப்பட்ட இவ்வைந்து மகப் பட்ட மிக்க பஞ்சத்தின் மூலத்தைத் தீர்க்கும் மாரிபோலச் சிறு பஞ்சமூல மென்று மருந்தாகக் கூறீர் மிக்கு. பொருளுடையான் கண்ணதே போக மறனு மருளுடையான் கண்ணதே யாகு -- மருளுடையான் செய்யான் பழிபாவஞ் சேரான் புறமொழியு முய்யான் பிறர்செவிக் குய்த்து. (3) (ப.பொ.ரை.) பொருளுடையான் கண்ணதே யாகும் இன்பம்; அறவினையும் உயிர்கள் மேல் அருளுடையான் மாட்டேயாகும்; அவ்வருளுடையான் பழியைச் செய்யான், பாவத்தை யடையான், பிறர் செவியின் கட்செலுத்திப் பிறரைப் பழிபடக் கூறும் புறமொழிகளையும் நடத்தான். கற்புடைய பெண்ணமிர்து கற்றடங்கி னானமிர்து நற்புடைய நாடமிர்தந் நாட்டுக்கு--நற்புடைய மேகமே சேர்கொடி வேந்தமிர்து சேவகனு மாகவே செய்யி னமிர்து. (4) (ப.பொ.ரை.) கற்புடைய பெண் தனது கொழுநற்கு அமிர்தோ டொக்கும் கற்றுவைத்துப் பொறிகளைந்தையும் அடக்கினான் உலகத்தார்க்கு அமிர்தோ டொக்கும், நற் செய்கைகளையுடைய நாடுகள் அந்நாடாளும் அரசர்க்கு அமிர்தோடொக்கும், அந்நாட் டிற்கு மழை போல் நன்மையைச் செய்யும் மேகத்தைச் சேர்ந்த கொடி வேந்தனமிர்தோ டொக்கும், அவன் சேவகனும் அவ்வர சர்க்கு நன்மையாகவே செய்யின் அமிர்தோ டொக்கும். கல்லாதான் றான்காணு நுட்பமுங் காதிரண்டு மில்லாதா ளேக்கழுத்தஞ் செய்தலு--மில்லாதா னொல்லாப் பொருளில்லார்க் கீத்தளியா னென்றலு நல்லார்கள் கேட்பி னகை. (5) (ப.பொ.ரை.) கல்லாதா னொருவன் தான் ஆராய்ந்து காணும் நுண்மைப் பொருளும், காதிரண்டும் இல்லாதாள் அழகுடை யேன் என்றெடுத்த முகத்தினளா யொழுகலும், பொருளில்லாதவன் இல்லாதார்க்கீய்த்தறியா னென்றலும், ஒருவன் தான் தனக்கியன்ற பொருளன்றியியலாத பொருளை ஈயாதானென் றலும் அறிவுடைய நல்லோர் கேட்பின் நகையாம். உடம்பொழிய வேண்டி னுயர்தவ மாற்றீண் டிடம்பொழிய வேண்டுமே லீகை--மடம்பொழிய வேண்டி னறிமடம் வேண்டேல் பிறர்மனை யீண்டி னியையுந் திரு. (6) (ப.பொ.ரை.) பிறப்பான் வரும் உடம்பை நீக்க வேண்டினா னாயின் உயர்தவத்தைச் செய்க, இவ்வுலகத்தி னிடமெல்லாந் தன் புகழால் நிறைய வேண்டினானாயின் ஈகையைச் செய்க, மெல்லிய வீரம் தனக்கு நிறைய வேண்டி னானாயின் அறிவின்கண் அடங்கி யொழுகுக, பிறர் மனையாளை விரும்பா தொழிக, சிறிதாயினும் வருவாய் நாடோறும் ஈண்டிற் செல்வம் ஒருவற்கே கூடும். படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணி னிடைதனக்கு நுண்மை வனப்பா--நடைதனக்குக் கோடா மொழிவனப்புக் கோற்கதுவே சேவகர்க்கு வாடாத வன்கண் வனப்பு. (7) (ப.பொ.ரை.) படைக்கு வனப்பாவது யானை, பெண்ணி டைக்கு வனப்பாவது நுண்மை, ஒழுக்கத்துக்கு வனப்பாவது ஒருவர்க்காகப் பாங்குரையாமை, செங்கோலுக்கு வனப்பாவது ஒருவர்க்குப் பாங்குரையாமை, சேவகர்க்கு வனப்பாவது கெடாத வண்கண்மை. பற்றினான் பற்றற்றா னூறவசி யெப்பொருளு முற்றினா னாகு முதல்வனூற்--பற்றினாற் பாத்துண்பான் பார்ப்பான் பழியுணர்வான் சான்றவன் காத்துண்பான் காணான் பிணி. (8) (ப.பொ.ரை.) பற்றற்றானாற் சொல்லப்பட்ட நூலைப் பற்றி னான் தவசியாவான், எப்பொருளையுமுற்ற வறிந்தான் முதல்வ னாவான், நூலின்கட் சொன்னபடியே பகுத்துண்பான் பார்ப்பா னாவான், பழியை யுணர்வான் சான்றோனாவான், தனக்கு நுகர் கலாகாதென்று சொல்லிய வற்றை நுகராதே காத்து நுகர்வான் பிணிகா™hன். கண்வனப்புக் கண்ணோட்டங் கால்வனப்புச் செல்லாமை எண்வனப் பித்துணையா மென்றுரைத்தல்--பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் றன்னாடு வாட்டானன் றென்றல் வனப்பு. (9) (ப.பொ.ரை.) கண்ணிற்கு வனப்பாவது பிறர்மேற் கண்ணோ டுதல், காலிற்கு வனப்பாவது பிறர் மாட்டிரந்து செல்லாமை. ஆராய்ந்து சூழுஞ் சூழ்ச்சிக்கு வனப்பாவது இவ்வளவு இன்ன தென்று துணிந் துரைத்தல், பாடும் பண்ணிற்கு வனப்பாவது கேட் டார் நன்றென்றல், படை கிளர்ந்தெழும் வேந்தற்கு வனப்பாவது தானாளும் நாட்டினை வருத்தான் மிகவும் நன்றென்றல். கொன்றுண்பா னாச்சாங் கொடுங்கரிப்போ வானாச்சா நன்றுணர்வார் முன்கல்லா னாவுஞ்சா--மொன்றானுங் கண்டுழி நாச்சாங் கடவான் குடிப்பிறந்தா னுண்டுழி நாச்சா முணர்ந்து. (10) (ப.பொ.ரை.) உயிர்களைக் கொன்றுண்பானுடைய நாச்சாம், ஒருவர் பாங்கிலே நின்று பொய்ச்சான்று போவானுடைய நாவுஞ்சாம், மிகக் கற்றுணர்தோர்முன் பொருமறுமாற்றஞ் சொல்லமாட்டாது கல்லாதானுடைய நாவுஞ்சாம், தனிசு வேண் டிவந்தா னொருவனைக் கண்டால் தனிசு கொண்டவனுடைய நாவுஞ்சாம், குடிப்பிறந்தா னொருவனுடைய நா ஒருவனுதவி பெற்ற விடத்து அவ்வுதவி செய்தான் திறத்து ஒரு தீமை சொல்ல மாட்டாது மற்றவன் செய்த நன்றியை நினைத்துச் சாம். சிலம்பிக்குத் தன்சினை கூற்றநீள் கோடு விலங்கிற்குக் கூற்ற மயிர்தான்--வலம்படா மாவிற்குக் கூற்றமா ஞெண்டிற்குத் தன்பார்ப்பு நாவிற்கு நன்றல வசை. (11) (ப.பொ.ரை.) சிலம்பிக்குத் தன் முட்டை சாக்காட்டைக் கொடுக்கு மாதலாற் கூற்றமாம், நீண்டதங் கொம்புகள் துன்பங் கொடுக்குமாதலால் விலங்கிற்கும் அவையே கூற்றமாம், வென்றி யில்லாத கவரிமாவிற்குச் சாக்காட்டைக் கொடுக்குமாதலால் அதற்குத் தன் மயிரே கூற்றமாம். ஞெண்டிற்குச் சாக்காட்டைக் கொடுக்குமாதலால் அதற்குத் தன்பார்ப்பே கூற்றமாம், ஒருவனது நாவிற்குப் பழியைக் கொடுக்குமாதலாற் பிறரை நன்றல்லாத வசை சொல்லுதல் கூற்றமாம். நாணிலான் சால்பு நடையிலா னன்னோன்பு மூணிலான் செய்யு முதாரதையு--மேணிலான் சேவகமுஞ் செந்தமிழ் தேற்றான் கவிசெயலு நாவகமே நாடி னகை. (12) (ப.பொ.ரை.) நாணில்லாதவன் அமைதியும், சீலங்களைச் செய்யாதான் கொள்ளும் நல்ல நோன்பும், தனக் குண்ணும் பொரு ளில்லாதவன் செய்யும் வண்மையும், வலியில்லாதான் சொல்லும் வீரமும், செந்தமிழறியாதான் கவியைச் செய்தலு மென இவ்வைந்தும் நாவகத்தாலே மேவியாராயின் நகையாம். கோறலு நஞ்சூனைத் துய்த்தல் கொடுநஞ்சு வேறலு நஞ்சுமா றல்லானைத்--தேறினா னீடாங்கு செய்தலு நஞ்சா மிளங்கிளையை நாடாதே தீதுரையு நஞ்சு. (13) (ப.பொ.ரை.) ஓருயிரை அருளின்றிக்கோறலும் தனக்கு நஞ்சு போலும், பிறிதொன்றினுடைய ஊனைத் தின்றலும் தனக்குக் கொடிய நஞ்சு போலும், தனக்கு எதிராகாதானை அடர்த்து வெல் லுதலும் தனக்கு நஞ்சு போலும், ஒருவனை ஒரு கருமத்துக்கு ஆமென்றாராய்ந்து தேறினால் அக்கருமத்தில் விடாதே நீட்டித் துக் கொண்டு செலுத்தலும் தனக்கு நஞ்சு போலும், தன்னிளைய சுற்றத்தாரை ஆராயாதே தீதுரைத்தலும் தனக்கு நஞ்சு போலும். இடரின்னா நட்டார்க ணீயாமை யின்னா தொடர்பின்னா நள்ளார்கட் டூயார்ப்--படர்பின்னா கண்ட லவிர்பூங் கதுப்பினா யின்னாதே கொண்ட விரதங் குறைவு. (14) (ப.பொ.ரை.) நட்டார்மாட்டுக் கண்ட இடரின்னா, அவர் மாட்டு ஈயாமையின்னா, வஞ்சனையுடையார் மாட்டு நடக்கும் நட் பின்னா, மனந்தூயாரை நீங்குதலின்னா, கண்டல் விளங்குங் குழலாய்! தாங்கொண்ட விரதங்கள் நிரம்ப முடியாதே குறையாக ஒழுகு தல் இன்னா. கொண்டான் வழியொழுகல் பெண்மகன் றந்தைக்குத் தண்டான் வழியொழுகல் தன்கிளையஃ--தண்டாதே வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு கோல்வழி வாழ்தல் குணம். (15) (ப.பொ.ரை.) கொழுநன்வழி யொழுகுதல் பெண் குணம், தந்தைக்கிடைவிடாதே நிரந்தரமா யொழுகல் மகன் குணம், அவனைப்போல் வழியொழுகுதல் கிளையின் குணம், பகைவ ரோடு செறியாதே வேல்வழியினிடை விடாது வாழ்தல் அரசன் வெம்முனையிற் போயிருந்தார் குணம், அவ்வரசன் கோல்வழியே வாழ்தல் நாட்டின் குணம். பிழைத்தல் பொறுத்தல் பெருமை சிறுமை யிழைத்ததீங் கெண்ணி யிருத்த--லிழைத்த பகைகெட வாழ்வதும் பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வது நன்று. (16) (ப.பொ.ரை.) தனக்குப் பிறனொருவன் செய்த பிழையைப் பொறுத்தல் பெருமையாவது, பிற ரிழைத்த தீங்குகளை மறவா திருத்தல் சிறுமையாவது, தான் செய்த பிழைகளைப் பின்பு கெட வாழ்தலும், பல பொருள்களையு முதவியோரும் நல்லோரு மிகழ்ந்து நகுநடையினைக் கெட வாழ்தலும் நன்று. கதநன்று சான்றாண்மை தீது கழிய மதநன்று மாண்பில்லார் முன்னர்--விதநன்றாற் கோய்வாயிற் கீழுயிர்க்கீ துற்றுக் குரைத்தெழுந்த நால்வாயு ணல்ல தசை. (17) (ப.பொ.ரை.) நன்மைக் குணமில்லாதார் முன்பு கோபம் நன்று, சான்றாண்மை தீது, மிக்கவலி செய்தல் நன்று; கள்ளினை முகக்குங் கோய்போலும் வாயையுடைய கீழ் மக்கட் கீயும் உணவும் குரைத்தெழுந்த நாய்வாய்க்கீயும் தசையின் திறப்பாட்டி னன்று. நட்டாரை யாக்கிப் பகைபணித்து வையெயிற்றுப் பட்டா ரகலல்கு லார்படிந்--தொட்டித் தொடங்கினா ரில்லகத் தன்பிற் றுறவா வுடம்பினா னாய பயன். (18) (ப.பொ.ரை.) தம்மோடு நட்புக் கொண்டாரைச் செல்வத்தின் கண்ணே யாக்கி, பகையைக் குறைத்து, கூரிய எயிற்றுப்பட்டார கலல்குலாரைச் சேர்ந்து முயங்கிப் பொருந்தி, அச்சுற்றமாய்த் தொடர்பு பட்டு முறையாயினார் மாட்டும், தாம் பிறந்த குடியிற் பிறந்தார் மாட்டும் அன்பினானீங்காது இப்பெற்றிப்பட்ட ஐந்தும் உடம்பு பெற்றதனானாய பயன். பொய்யாமை பொன்பெறினுங் கள்ளாமை மெல்லியலார் வையாமை வார்குழலார் நச்சினு--நையாமை யோர்த் துடம்பு பேருமென் றூனவா யுண்ணானேற் பேர்த்துடம்பு கோட லரிது. (19) (ப.பொ.ரை.) பொன் பெற்றானாயினும், பொய் சொல்லாதும், பிறர் பொருளைக் களவு கொள்ளாதும், எளியாரைவையாதும், வார்குழலார் தம்மைக் காதலிப்பினும் தன் மனந்தளராதும், தன்னுடம்பு தளருமென் றோர்ந்து பிறிதொன்றனூனைக் காதலித் தொருவ னுண்ணானாயின் மறித்துப் பிறிதுடம்பு கோடல் அரிது. தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்காற் பூதரே முன்பொருள் செய்யாதா--ராதரே துன்ப மிலேம்பண் டியாமே வனப்புடையே மென்பா ரிருகா லெருது. (20) (ப.பொ.ரை.) நூலைக்கற்றார் தேவரோ டொப்பர், கல்லா தவர் ஆராயுங்காற் பூதபசாசுகளோடொப்பர், தமக்கு மூப்பு வரு தற்கு முன்பே பொருளைத் தேடித் தமக்கு வைப்பாக வையாதார் ஒன்று மறியாது ஒரு பற்றின்றித் திரியுமாந்தரோ டொப்பர், பண்டு செல்வமுடையே மாதலால் ஒரு துன்பமும் இலோ மென் பாரும், பண்டியாமே யழகியோம் என்பாரும் இருகாலுடைய எருதுகளோ டொப்பர். கள்ளான்சூ தென்றுங் கழுமான் கரியாரை நள்ளா னுயிரிரங்க நாவாடான்--நள்ளானா யூன்மறுத்துக் கொள்ளானே லூனுடம் பெஞ்ஞான்றுந் தான்மறுத்துக் கொள்ளான் றளர்ந்து, (21) (ப.பொ.ரை.) பிறர் பொருளைக் களவு காணாது, சூதினைப் பற்றிக் காதலியாது, கீழ்மக்களுடன் நட்புக் கொள்ளாது, பிறர் மனந் துன்புறும்படி வன்சொற் சொல்லாது கடைப்பிடியுடை யனாய் ஊனுணவை மறுத்து விரும்பானாயின் எஞ்ஞான்று மொழுக்கத்திற் றளர்ந்து மாறிப் பிறந்து ஊனுடம்பினைக் கொள்ளான். பூவாது காய்க்கு மரமுள நன்றறிவார் மூவாது மூத்தவர் நூல்வல்லார்--தாவா விதையாமை நாறுவ வித்துள மேதைக் குரையாமை செல்லு முணர்வு. (22) (ப.பொ.ரை.) பூவாதே காய்க்கும் பலா முதலாயின மரமுள. நன்மையே அறிவார் ஆண்டுகளால் மூத்திலராயினும் மூத்தாரோ டொப்பர், நூல்கற்று வல்லவரும் அப்பெற்றியர், நிலத்தில் விளையாது முளைக்கும் வித்து முள, மதியுடைய வர்க்குப் பிறர் அறிவியாமலே செல்லும் உணர்வு. பூத்தாலுங் காயா மரமுமுள நன்றறியார் மூத்தாலு மூவார்நூ றேற்றாதார்--பாத்திப் புதைத்தாலு நாறாத வித்துள பேதைக் குரைத்தாலுஞ் செல்லா துணர்வு. (23) (ப.பொ.ரை.) பூத்தாலுங் காயாத பாதிரி முதலாயின மரங் களுள, நன்மையை யறியாதார் ஆண்டுகளால் மூத்தாராயினும் மூவாதாரோ டொப்பர், நூறேற்றாதாருமப் பெற்றியர், பாத்தி யின்கட் புதைத்தாலு முளையாதவித்துள பேதை யாயினார்க்குப் பிறருரைத்தாலு முணர்வு புகாது. வடிவிளமை வாய்த்த வனப்பு வணங்காக் குடிகுலமென் றைந்துங் குறித்து--முடியா துளங்கா நிலைகாணார் தொக்கீர் பசுவால் இளங்காற் றுறவா தவர். (24) (ப.பொ.ரை.) வடிவும் இளமையும் வாய்த்த வனப்பும், தாழ்வில்லாத குடிப்பிறப்பும், நற்குலமும் என்று சொல்லப்பட்ட இவ்வைந்தும் தாங்குறித்த நுகர்ச்சி நுகர்ந்து முடியுமளவு நிற்கு நிலைமை யாவருங் காணமாட்டார். ஆதலாற் கூடியொரு பாரத்தை இழுக்கு மெருதோ டொப்பர்; இளங்காலத்திலே துறவாதார். கள்ளுண்டல் காணிற் கணவற் பிரிந்துறைதல் வெள்கில ளாய்ப்பிற ரிற்சேற--லுள்ளிப் பிறர்கரும மாராய்த றீப்பெண் கிளைமைத் திறமதுதீப் பெண்ணின் தொழில். (25) (ப.பொ.ரை.) கள்ளுண்டலும், ஆராயுங்காற்றங் கணவனைப் புணர்ச்சி வேண்டாதே பிரிந்துறைதலும், நாணிலளாய்ப் பிறரு டைய மனைக்கட் சேறலும், பிறர் கருமத்தை நினைத்துப் பிறருட னாராய்தலும், தீப்பெண்ணி னோடிணங்குதலுமென இவ்வைந் துந் தனக்கே கூறாகத் தீப்பெண்ணின் தொழில். பெருங்குணத்தார்ச் சேர்மின் பிறன்பொருள் வெளவன்மின் கருங்குணத்தார் கேண்மை கழிமி--னொருங்குணர்ந்து தீச்சொல்லே காமின் வருங்காலன் றிண்ணிதே வாய்ச்சொல்லே யன்று வழக்கு. (26) (ப.பொ.ரை.) பெருங்குணத்தாரைச் சென்றடைமின், பிறன் பொருளைக் கொள்ளன்மின், தீக்குணத்தாரோடு நட்பை விடு மின், எல்லாமுணர்ந்து பிறரைச் சொல்லுந் தீச்சொற்களைச் சொல்லாது காமின், காலன் வருகை யுண்மையே, யாஞ் சொல்லு கின்ற எம்முடைய சொல் மாத்திரையேயன்று உலகின் கண் வழங்கி வருகின்ற வழக்காகக் கொள்க. வான்குருவிக் கூடரக்கு வாலுலண்டு கோற்றருதல் தேன்புரிந் தியார்க்குஞ் செயலாகா--தாம்புரீஇ வல்லவர் வாய்ப்பன வென்னாரொ ரோவொருவர்க் கொல்காதோ ரொன்று படும். (27) (ப.பொ.ரை.) வாலிய தூக்கணங்குருவி செய்யுங் கூடும், பேரெ றும்புகளால் செய்யப்படுமரக்கும், வாலியவுலண்டென்னும் புழுக்களால் நூற்ற நூலும், வேறொரு புழுவாற் செய்யப்பட்ட கோற்கூடும், தேனீயாற்றிரட்டப் பட்ட தேன்பொதியும் என இவ் வைந்தும் விரும்பியவர்க்குச் செய்யமுடியா வாதலால் எல்லாங் கற்று வல்லவர் நமக்கிவை வாய்ப்புச் செய்யலாமென்று கருதார்; ஒரோவொருவற்குச் செயலாற் குறைபடாதேயொரோ வொரு செய்கையருமைகள் படுமாதலால். அறனட்டா னன்னெறிக்க ணிற்க வடங்காப் புறனட்டான் புன்னெறிப்போ காது--புறனட்டான் கண்டெடுத்துக் கட்களவு சூது கருத்தினாற் பண்டெடுத்துக் காட்டும் பயின்று. (28) (ப.பொ.ரை.) அறத்திற்குப் புறமாகிய பாவவினைகளை யுலகத்தின் கண்ணே நட்டான் சொல்லியடங்காத புல்லிய நெறி யிற் போகாதே குற்ற மில்லாத அறத்தினைச் சொல்லு நூலினை யுலகத்துள்ளே நட்ட முழு துணர்ந்த அறிவினாற் சொல்லப் பட்ட நன்னெறியின் கண்ணே நின்றொழுகுக; பாவநெறியினை நட்ட வன் ஆராய்ந்-தெடுத்துக் கள்ளினையும், களவினையும் சூதினையும் தன் கருத்தினாலே பயின்று பண்டு செய்தாரை எடுத்துக் காட்டுமாதலால். ஆணாக்கம் வேண்டாதா னாசா னவற்கியைந்த மாணாக்க னன்பான் வழிபடுவான்--மாணாக்கன் கற்பனைத்து மூன்றுங் கடிந்தான் கடியாதா னிற்பனைத்து நெஞ்சிற்கோர் நோய். (29) (ப.பொ.ரை.) ஒருவகை யாசிரியனாவான் பிரமசரியங் காப்பான், அவனுக்கு இயைந்த மாணாக்கன் அன்பு படுவோனும் வழிபட்டேவியது செய்வானும் என இவ்விரு வரன்றியும், மாணாக்கனாவான் கற்குமளவும் காமம் வெகுளி மயக்கங்களைக் கடிவான், இவையிவற்றைக் கடியா தான் நிற்குமளவுந் தன்னாசிரி யன் நெஞ்சிற்கு ஒரு நோயாம். நெய்தன் முகிழ்த்துணை யாங்குடுமி நேர்மயிரு முய்த லொருதிங்கள் நாளாகுஞ்--செய்த னுணங்குநூ லோதுதல் கேட்டல்மா ணாக்கர் வணங்கி வலங்கொண்டு வந்து. (30) (ப.பொ.ரை.) நெய்தல்மொட்டி னளவினதாம் மாணாக் கர்க்குக் குடுமி, தலையின்கண் நீண்டமயிரு மண்ணா தொழிவது ஒருதிங்கணாளாகும், இனி அவர்கள் செய்கை ஆசானை வலங் கொண்டு வந்து வணங்குதலும், நூல்களைப் பாடமோதலும், ஓதியவற்றின் பொருள் கேட்டலுமாக மூன்று. ஒருவ னறிவானு மெல்லாம்யா தொன்று மொருவ னறியா தவனு--மொருவன் குணனடங்கக் குற்றமில் லானா மொருவன் கணனடங்கக் கற்றானு மில். (31) (ப.பொ.ரை.) எல்லாவற்றையும் அறிவானொருவனும், யாதொன்று மறியாதானொருவனும், குணனடங்க வில்லாதா னொருவனும், குற்றமில்லா தானொருவனும், எல்லா நூற்றொ கைகளும் ஒழியாமற் கற்றானொருவனும் உலகத்தின் கண் இல்லை. உயிர்நோய்செய் யாமை யுறுநோய் மறத்தல் செயிர்நோய் பிறர்கட்செய் யாமை--செயிர்நோய் விழைவு வெகுளி யிவைவிடுவா னாயி னிழிவன் றினிது தவம். (32) (ப.பொ.ரை.) பிறிதோருயிர்க்கொரு நோயுஞ் செய்யாமை, தனக்குப் பிறரால் வந்துற்ற நோயை மறத்தல், கோபத்தால் தான் பிறர்மாட்டு இன்னாதன செய்யாமை, குற்றத்தைச் செய்யும் நோயைப்பண்ணுங் காதலையும் மனத்தின் கட் பிறர்மேலுள்ள செற்றத்தையும் விடுவானாயின் அவன் செய்யுந்தவம் இழிவன்றி இன்பத்தைத் தரும். வேட்பவன் பார்ப்பான் விளங்கிழைக்குக் கற்புடைமை கேட்பவன் கேடில் பெரும்புலவன்--பாட்டவன் சிந்தையா னாகுஞ் சிறந்த துலகினுட் டந்தையா னாகுங் குலம். (33) (ப.பொ.ரை.) வேள்வியைச் செய்தவன் பார்ப்பானாவான். கற்புடையாள் விளங்கிழையாவாள், கேடில்லாத பெரும் புலவ னாவான் பல நூல்களையும் பொருளுணரக் கேட்பவன், அப்புல வன் சிந்தையினழகாலே பாடும் பாட்டுச் சிறப்பது உலகின்கண் ஒருவர்க்குக் குலமுடைமை தந்தையழகாலேயாம். வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிக னுய்ப்பானே யாசா னுயர்கதிக்--குய்ப்பா னுடம்பினார் வேலி யொருப்படுத்தூ னாரத் தொடங்கானேற் சேறற் றுணிவு. (34) (ப.பொ.ரை.) ஈட்டி வைப்பானை வள்ளலாகக் கொள்ளப்படும், தான் பயனது கொள்ளாது பிறர்க்குப் பொருள்களைக் கொடுப்பவன் வாணிகனோ டொக்கும், அக்கொடையினாய பயன்விளைவு மறுமைக்குத் தனக்கு விளைத்துக் கோடலால் ஒருவர்க்கு ஆசிரியனாவான், அவனை யுயர்ந்த பிறப்பின் கண்ணே செலுத்த வல்லானடாத்தும் ஒழுக்கத்தால் உடம்பாகிய வேலியையுடைய உயிர்களைக் கொன்று ஒருப்படுத்துப்போக்கி, அவற்றினூனை யுண்ணத் தொடங்கானாயின் உயர்கதிக்குச் சேறல் உண்மையாம். வைததனா னாகும் வசைவணக்க நன்றாகச் செய்ததனா னாகுஞ் செழுங்குலமுற்--செய்த பொருளினா னாகுமாம் போக நெகிழ்ந்த வருளினா னாகு மறம். (35) (ப.பொ.ரை.) பிறனையொருவன் வைததனால் வசையாகும்; பிறர்க்கு வணக்கத்தையும், நன்மையையும் உளவாகச் செய்தத னால் வளமையுடைய குடிப்பிறப்பாம்; காலத்திலே முந்துறச் செய்த பொருளானின்பமாகும்; பிறர்க்குத் தன்மனம் நெகிழ்ந்த அருளினான் அறமாகும். இல்லியலார் நல்லறமு மேனைத் துறவறமு நல்லியலி னாடி யுரைக்குங்கா--னல்லியற் றானத்தாற் போகந் தவத்தாற் சுவர்க்கமா ஞானத்தால் வீடாக நாட்டு. (36) (ப.பொ.ரை.) மனைவாழ்க்கை யியற்கையையுடையார் செய்த நல்லறமும், மற்றைத் துறந்தார் செய்யு நல்லறமும், நல்லவியலி னாலே யாராய்ந் துரைக்குங்கால் நல்ல இயல்பு டைய கொடை யாற் செல்வ நுகர்ச்சியும், தவத்தாற் சுவர்க்க நுகர்ச்சியைப் பெறுவதும், மெய்யுணர்ச்சியால் வீடும் என்று நாட்டுக. மயிர்வனப்புங் கண்கவரு மார்பின் வனப்பு முகிர்வனப்புங் காதின் வனப்புஞ்--செயிர்தீர்ந்த பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு. (37) (ப.பொ.ரை.) தலைமயிரான் வருமழகும், கண்டார் கண் ணைக் கவரு மார்பினால் வருமழகும், உகிரான் வருமழகும், காதி னான் வருமழகும், குற்றந்தீர்ந்த பல்லினான் வருமழகும் என இவ் வைந்தழகும் ஒருவற்கு அழகல்ல; நூல் கட்குப் பொருந்திய சொல் வன்மையால் வரும் அழகே அழகாவது. தொழீஇ யடவுண்ணார் தோழரிற் றுஞ்சார் வழீஇப் பிறர்பொருளை வெளவார்--கெழீஇக் கலந்தபிற் கீழ்காணார் காணாய் மடவாய் புலந்தபிற் போற்றார் புலை. (38) (ப.பொ.ரை.) தொழுத்தை யடவுண்ணார், தோழரில்லிற் றனியே புக்குறங்கார், பிறர்பொருளை மறந்தாகிலும், வெளவிக் கொள்ளார், மருவிச் சிலரோடு நட்டபின்பு கீழ்மைக் குணத்தை யாராயார், மடவாய்! ஆராய்ந்து பாராய்! சிலரோடு பகைத்த பின்பு கீழ்மைக் குணத்தைப் போற்றாது எதிர்த்துக் கெடுப்பார். பொய்யாமை நன்று பொருணன் றுயிர்நோவக் கொல்லாமை நன்று கொழிக்குங்காற்--பல்லார்முற் பேணாமை பேணுந் தகைய சிறிதெனினு மாணாமை மாண்டார் மனம். (39) (ப.பொ.ரை.) பிறர்க்குப் பொய் சொல்லாமை நன்று பொரு ளுண்டாக்குத னன்று, பிறிதோ ருயிரையுந் துன்புறக் கொல் லாமை நன்று, ஆராயுங்கால் தாம் விரும்புவன பலரறிய விரும் பாமை நன்று, மாட்சிமைப்பட்ட தவசிகள் சிறிதாயினும் மனை வாழ்க்கையின்கண் மீள்கைக்கு மாணா தொழிகை நன்று. பண்டாரம் பல்கணக்குக் கண்காணி பாத்தில்லா ருண்டா ரடிசிலே தோழரிற்--கொண்டாரா யாக்கைக்குத் தக்கவறி வில்லார்க் காப்படுப்பிற் காக்கைக்குக் காப்படுத்த சோறு. (40) (ப.பொ.ரை.) பண்டாரத்தினையும், பல் கணக்கினையும், கண் காணியையும், தன் கோயிலு ளுறையும் மங்கையரையும், தனக் காக்கு முணவினையும் பகுத்து மக்கள் யாக்கைக்குத்தக்க அறிவில்லாதா ரையும் தன் தோழரைப் போலக் கொண்டு தேறிக் காக்க விடின் அக்காவல் காக்கையைச் சோறு காக்கவிட்டதனோ டொக்கும். உடையிட்டார் புன்மேய்வா ரோடுநீர் புக்கார் படையிட்டார் பற்றேது மின்றி--நடையிட்டா ரிவ்வகை யைவரையு மென்றுமணுகாரே செவ்வகைச் சேவகர் சென்று. (41) (ப.பொ.ரை.) தமக்கஞ்சி யுடுத்த புடவையைப் போக விட் டார், புல்லினைப் பறித்து வாயிலிட்டார், ஓடு நீரின்கட்புக்கார், கைப்படை துறந்தார், மற்றோரரணின்றி ஓடமாட்டாது நிலை தளர்ந்திருந்தார். இப்பெற்றிப்பட்ட ஐவரையுமொருநாளுந் தீங்கு செய்யச்சென்றணுகார் அறம்பொருள் செய்யுஞ் சேவகர். பூவாதாள் பூப்புப் புறங்கொடுத் தாளிலிங்கி ஓவாதாள் கோல மொருபொழுதுங்--காவாதாள் யார்யார் பிறர்மனை யாளுள்ளிட்டிவ் வைவரையுஞ் சாரார் பகைபோற் சலித்து. (42) (ப.பொ.ரை.) பூப்பில்லாத கன்னியும், பூப்புத் தவிர்ந்தாளும், தவத்திற்புக்க விலங்கியும், கோலஞ் செய்கையொருபொழுது மோ வாளாகிக் கற்புக் காளாகாத கணிகையும், பிறர்யாவர்க்குமுரிய மனையாளு முள்ளிட்டிவ்வை வரையுஞ் சாரார் பகைபோல வேறுபட்டு. வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம் வெருவாமை வீழ்ந்துவிருந் தோம்பித்--திருவாக்குந் தெய்வதையு மெஞ்ஞான்றுந் தேற்ற வழிபாடு செய்வதே பெண்டிர் சிறப்பு. (43) (ப.பொ.ரை.) தமக்குள்ள பகுதியினளவறிந்து அதற்குத்தக்க போக்கறிந்து, சுற்றத்தை வெருவாமைத் தழுவிவிருந்து புரந்து, திருவினையாக்குந் தெய்வத்தை வழிபாடு செய்க. இவ்வைந்து தொழிலும் பெண்டிர்க்குச் சிறப்பாவன. நாள்கூட்ட மூர்த்த மவற்றோடு நன்றாமக் கோள்கூட்டம் யோகங் குணனுணர்ந்து--தோள்கூட்ட லுற்றானு மல்லானு மைந்து முணர்வானாற் பெற்றானாட் கொள்க பெரிது. (44) (ப.பொ.ரை.) நாள் பொருந்துதலும், மூர்த்தமும், நன்றாய்க் கோள் கூடுதலும், அமிர்தயோக முதலாயின யோகமும், இவற்றி னான் வருநன்மையு மாராய்ந்துணர் வானாட் பெற்றாலந்நாளை நன்றென்று கொள்க; ஒருவனோ டொருத்தியைக் கூட்டலுற் றவனு மற்றுஞ் சில நன்மைக் காரியஞ் செய்யலுற்றவனும். பேணடக்கம் பேணாப் பெருந்தகைமை பீடுடைமை நாணொடுக்க மென்றைந்து நன்றாகப்--பூணொடுக்கம் பொன்வரைக்கோங் கேர்முலைப் பூந்திருவே யாயினும் தன்வரைத் தாழ்த்த லரிது. (45) (ப.பொ.ரை.) சுற்றத்தாரைப் பேணலும், அடக்கமுடை மையும், பிறனொருவனைப் பேணாத பெருந்தகைமையும், ஒப் புரவு முதலாயுள்ள பீடுடைமையும் நாணால் வரும் ஒடுக்க மென்று சொல்லப்பட்ட ஐந்தனையும் பொருந்தாது தன் கொழு நனைத் தன்வரைத் தாழ்த்தலரிது, பொன்வரைக் கோங்கேர் முலைப் பூந்திருவேயாயினும். வார்சான்ற கூந்தல்! வரம்புயர வைகலு நீர்சான் றுயரவே நெல்லுயருஞ்--சீர்சான்ற தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் கோவுயரு மோவா துரைக்கு முலகு. (46) (ப.பொ.ரை.) வார்சான்ற கூந்தலையுடையாய்! வயலினது வரம்புயரவே, வைகலு நீருயர்ந்து நாடோறு நெல்லுயரும், சீர மைந்த கெடாத குடியுயரவே, பகைவராற்றாங்குதற்கரிய சீர்மை யையுடைய மன்னுயரு மென்றொழியாதே சொல்லா நிற்கு மிவ் வுலகம். அழியாமை யெத்தவமுஞ் சார்ந்தாரை யாக்கல் பழியாமை பாத்தல்யார் மாட்டு--மொளியாமை கன்றுசா வப்பால் கறவாமை செய்யாமை மன்றுசார் வாக மனை. (47) (ப.பொ.ரை.) யாதானுமொரு தவத்தை யழியாமையும், தம்மையடைந் தாரை யாக்குதலும், பிறர்தம்மைப் பழியாமை, யாவர் மாட்டு மொளியாமைப் பகுத்துண்டலும், கன்று சாவப் பால்கறவாமையும், மன்றருகு மனையெடாமையுஞ் செய்க. நசைகொல்லார் நச்சியார்க் கென்றுங் கிளைஞர் மிசைகொல்லார் வேளாண்மை கொல்லா--ரிசைகொல்லார் பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய்! நன்குணர்ந்தார் என்பெறினுங் கொல்லா ரியைந்து (48) (ப.பொ.ரை.) தம்மை நச்சியாருடைய நசையை யெஞ்ஞான் றுங் கொல்லார், தங்கிளைஞர் மிசையும் மிசை யைக் கொல்லார், உபகாரத்தைக் கொல்லார், புகழைக் கொல் லார், பொன்போலும் பூஞ்சுணங்கின் மென் முலையாய்! மிகவு முணர்ந்தா ரெல்லாவின் பமும் பெற்றராயினும் பிறிதோரு யிரை மேவிக் கொல்லார். நீண்டநீர் காடு களர்நிவந்து விண்டோயு மாண்ட மலைமக்க ளுள்ளிட்டு--மாண்டவ ராய்ந்தன வைந்து மரணா வுடையானை வேந்தனா நாட்டல் விதி. (49) (ப.பொ.ரை.) மிக்க நீரும் காடும் சேறும் கிளர்ந்து விண்டோயு மாண்டமலையும் மக்களுமகப்பட வாய்ந்து சொல்லப்பட்ட வைந்தானுந் தனக்கரணாக வுடையானை வேந்தனா நாட்டத் தகும். பொச்சாப்புக் கேடு பொருட்செருக்குத் தான்கேடு முற்றாமை கேடுமுரண்கேடு--தெற்றத் தொழின்மகன் றன்னோடு மாறாயி னென்று முழுமகற்குக் கேடி னுரை. (50) (ப.பொ.ரை.) கடைப்பிடி யில்லாமை கேடு, பொருள் மிகவுடைமையாற் களிக்குங் களிப்புக் கேடு, தானறிவு முதிராமை கேடு, பிறரொடு பகைகோடல் கேடு, தெளியத் தனக்குத் தொழில் செய்யு மகனோடு மாறுபட்டுச் சீறுவனாயின் உழவினால் வாழுமகற்குக் கேடாய்விடும். கொல்லாமை நன்று கொலை தீதெழுத்தினைக் கல்லாமை தீது கதந்தீது--நல்லார் மொழியாமை முன்னே முழுதுங் கிளைஞர் பழியாமை பல்லார் பதி. (51) (ப.பொ.ரை.) ஓருயிரைக் கொல்லாமை நன்று, கொலை தீது, எழுத்தினைக் கல்லாமை தீது, பிறரை வெகுளல் தீது, அறிவுடை யார் தமக்கு மொழிவதற்கு முன்னேயும் பழியாத வழியொழுகு வான் பலர்க்கு மிறைவனாவான். உண்ணாமை நன்றவா நீக்கி விருந்துகண்மா றெண்ணாமை நன்றிகழ றீதெளியா--ரெண்ணி னரியரா வார்பிறரிற் செல்லாரே யுண்ணார் பெரியரா வார்பிறர் கைத்து. (52) (ப.பொ.ரை.) துறந்தவா நீக்கி யுண்ணாமை நோற்றனன்று, மனை வாழ்க்கையின்கண் அறிவாராயின் விருந்தினரைக் கண் மாறுத னினையாமை நன்று, தமக்கெளியாரை யிகழ்ந்துரைப்பா ராயிற் றீதாம், ஆராயிற் பெறுதற் கரியராவார் பிறர்மனையாளை விரும்பி யொழுகாதார், பெரியராவார் பிறரை யிரந்துண்ணாதார். மக்கட் பெறுதன் மடனுடைமை மாதுடைமை யொக்க வுடனுறைத லூணமைபு--தொக்க வலவலை யல்லாமை பெண்மகளிர்க் கைந்து தலைமகனைத் தாழ்க்கு மருந்து. (53) (ப.பொ.ரை.) தான் மக்களைப் பெறுதல், அடக்கமுடைமை, அழகுடைமை, அவனினைவிற் கொக்க உடனொழுகுதல், அவனுண்ணும் உணவுக்கு விரும்புதலென இத்தொக்க ஐந்து குணனும் பிறரையொத்தலே தனக்கொழுக்க மாகவுடையளல்ல ளாயிற் றங்கொழுநனைத் தம்பாற் பெண்டீர் வணக்கும் மருந்தா வாள். கொண்டான் கொழுந னுடன்பிறந்தான் றன்மாமன் வண்டார்பூந் தொங்கன் மகன்றந்தை--வண்டாராய்! யாப்பார்பூங் கோதை யணியிழையை நன்கியையக் காப்பார் கருது மிடத்து. (54) (ப.பொ.ரை.) தன்னைக் கொண்ட கொழுநனும், உடன் பிறந்தானும், மாமனும், வண்டார் பூந்தொங்கல் மகனும், தந்தையு மென இவ்வைவரும் யாப்பார் பூங்கோதை யணி யிழையை மிகவுஞ் செறியக் காப்பார்கள்; வண்டாராய். ஆம்பல்வாய் கண்மனம் வார்புருவ மென்றைந்து தாம்பல்வா யோடி நிறைகாத்த--லோம்பார் நெடுங்கழைநீண் மூங்கி லெனவிகழ்ந்ந்தா ராட்டுங் கொடுங்குழை போலக் கொளின். (55) (ப.பொ.ரை.) பல்லும் வாயும் கண்ணும் மனமும் புருவமு மாகிய உறுப்பைந்தையுங் கண்டு அரிவையர்க் கன்பாய்த் தாம் பல இடங்களினாடித் தங்கள் நிறையைக் காக்க மாட்டாதார் குவளை யையுந் தாமரையையு மசைவிக்கின்ற காதிற் கொடுங் குழையை யுடைய அரிவையை; நெடிதாய்த் திரண்ட நீள்மூங்கிலைப் போலக் கருதி யிகழ்வராயின் அவர்க்கு நிறைகாக்கலாம். பொன்பெறுங் கற்றான் பொருள்பெறு நற்கவி யென்பெறும் வாதி யிசைபெறு--முன்பெறக் கல்லார்கற் றாரினத்த ரல்லார் பெறுபவே நல்லா ரினத்து நகை. (56) (ப.பொ.ரை.) கற்றுவல்லவன் பொன்னைப் பெறும், நற்கவி செய்ய வல்லவன் அரசனாலே யெல்லாப் பொருளும் பெறும், வாதம் பண்ணி வெல்ல வல்லவன் யாது பெறுமெனின் வென்றா னென்னும் புகழைப்பெறும், முன்னே இளமைக் காலத்திலே கல்லாதாரும், கற்று வல்லாரினத் தல்லாதாரும் நல்லாரினத்தின டுவே இகழ்ச்சி பெறுவர். நல்ல வெளிப்படுத்துத் தீய மறந்தொழிந் தொல்லை யுயிர்க்கூற்றங் கோலாகி--ஒல்லுமெனின் மாயம் பிறர்பொருட்கண் மாற்றுக மானத்தா னாயி னழித லறிவு. (57) (ப.பொ.ரை.) பிறர் செய்த நன்மைகளை வெளிப்படப் பண்ணி, பிறர் செய்த தீமைகளை நினையாது மறந்தொழிந்து, பிறவுயிர்கட் கிடையூறு வந்தால் அவ்வுயிர்கட்கு விரைந்து ஊற்றங்கோலாகி, தனக்கியலுமாகிற் பிறர் பொருட்கண் வஞ்சiiயைத் தவிர்ந்து, பெரிய மானங் காத்தற் பொருட் டாகத் தான் சாதல் தனக்கு அறிவாவது ஆராயின். தன்னிலையுந் தாழாத் தொழினிலையுந் துப்பெதிர்ந்தா ரின்னிலையு மீடி லியனிலையுந்--துன்னி யளந்தறிந்து செய்வா னரசமைச்சன் யாதும் பிளந்தறியும் பேராற்ற லான். (58) (ப.பொ.ரை.) தன்னுடைய நிலைமையினையும், தாழ்வின்றித் தான் செய்யும் வினையது நிலைமையினையும், வலியினாற்றன் னுடனெதிர்ந்த தாற்றார்மாட் டுள்ள இனிய நிலைமையினையும், கேடில்லாத வுலக வழக்கு நிலைமையினையும், முன்புக் காராய்ந் தறிந்து செலுத்துவான் அரசனாவான், அந்நான்குமன்றி மற்று மெல்லாம் வேறு பகுத்தறியும் பெரிய வாற்றலையுடையான் அமைச்சனாவான். பொருள்போக மஞ்சாமை பொன்றுங்காற் போந்த அருள்போகா வாரறமென் றைந்து--மிருடீரக் கூறப் படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனாற் றேறப் படுங்குணத்தி னான். (59) (ப.பொ.ரை.) பொருளும், இன்பமும், இடுக்கண் வந்தாலஞ் சாமையும், பிறிதோருயிர் பொன்றவந்தவிடத்து மிக்கவருளும், நீங்காத வரிய வறமுமென்று சொல்லப்பட்ட இவ்வைந்துங் குற்றந் தீரச் சொல்லப்படுங் குணத்தான் கூர்வேலை வல்ல வேந்தனா லொரு கருமத்தினின் றுய்த்துத் தேறப்படுங் குணத்தினான். நன்புலத்து வையடக்கி நாளுமா டோபோற்றிப் புன்புலத்தைச் செய்தெருப் போற்றியபி--னின்புலத்தின் பண்கலப்பை யென்றிவை பாற்படுப் பானுழவோன் நுண்கலப்பை நூலோது வார். (60) (ப.பொ.ரை.) விளைபுலத்திலுள்ள வைக்கோலினைத் தன் பாலுள்ளதாகத் திரட்டி, நாடோறும் உழும் பகடுகளைப் பாது காத்து, புன்புலத்தை நன்புலமாகத் திருத்தி எருவினால தனைப் போற்றிய பின்பு, பண்ணுங் கலப்பைகளை இன்புலத் தின்கட் பகுதிப்படுப்பா னுழவானென்று சொல்லுவார் நுண்ணிய உழவுநூ லோதிய அறிவார். ஏலாமை நன்றீத றீதுபண் பில்லார்க்குச் சாலாமை நன்றுநூல் சாயினுஞ்--சாலாமை நன்று தவநனி செய்தறீ தென்பாரை யின்றுகா றியாங்கண் டிலம். (61) (ப.பொ.ரை.) ஒருவர் மாட்டுச் சென்றிரந் தேலாமையு நன்று, குணமில்லாதார்க்கு ஒன்றையீதலுந் தீது, குணமில்லா தார்க்கு நூல் நிரம்ப அறிவியாமையும் நன்று, ஒருவன் சால்புடையனல் லாமை நன்று, மிகத்தவஞ் செய்தல் நன்றன்றென்று தாஞ்சாயி னுஞ் சொல்லுவாரை இன்றளவும் யாங் கண்டிலேம். அரம்போற் கிளையடங்காப் பெண்வியக்கத் தொண்டு மரம்போன் மகன்மாறாய் நின்று--கரம்போலக் கள்ளநோய் காணு மயலைந்து மாகுமே லுள்ளநோய் வேண்டா வுயிர்க்கு. (62) (ப.பொ.ரை.) அரம்போலத் தன்னைத் தேய்க்குங்கிளையும், தனக் கடங்காத மனைவியும், அடங்காதனவே செய்யுந் தொழும்பும், அறிவில்லாத தன்புதல்வனும், மாறாய்த் தமக்கிடமாய் நோயைச் செய்யுமயலிருப்பு மென இவ்வைந்தும் உளவாயினுயி ருடையா ருள்ளத்திற்கு மற்றுநோய் வேண்டா. நீரறம் நன்று நிழனன்று தன்னில்லுட் பாரறம் நன்றுபாத் துண்பானேற்--பேரறம் நன்று தளிசாலை நாட்டற் பெரும்போக மொன் றுமாஞ் சால வுடன். (63) (ப.பொ.ரை.) நீரறஞ் செய்தனன்று, நிழலறஞ் செய்தனன்று, தன்மனையுட் பிறருறைய விடங்கொடுத் தனன்று. பகுத்துண்பா னாயிற் பேரற நன்று, தளியுஞ்சாலையும் நிலை பெறச் செய்தல் நன்று இவ்வைந்தும் செய்தார்க்குப் பெரும்போகம் பொருந்தும். பிடிப்பிச்சைப் பின்னிறை யையங்கூழ் கூற்றோ டெடுத்திரந்த வுப்பித் துணையோ--டடுத்துச் சிறுபய மென்னார் சிதவலிப் பீவார் பெறுபயன்பின் சாலப் பெரிது. (64) (ப.பொ.ரை.) ஒரு பிடியுளடங்கும் பிச்சை, விரலிறையுள டங்கும் பிச்சை, உண்டோ இல்லையோ என்றையப்படும் பிச்சை, கூழ்வார்த்தல், ஒருவன் சொல்லோடடுத் திரந்த உப்பு இத்துணையும் பொருந்திய பயன் சிறியவென்று கருதாராய்ச் சிதவலிப்பினை யீவார் பின்பு பெறும்பயன் மிகப் பெரிது. வெந்தீக்காண் வெண்ணெய் மெழுகுநீர் சேர்மண்ணுப் பந்தன் மகற்சார்ந்த தந்தையென்--றைந்தினு ளொன்றுபோ லுண்ணெகிழ்ந் தீயிற் சிறிதெனினுங் குன்றுபோற் கூடும் பயன். (65) (ப.பொ.ரை.) வெவ்விய தீயைக்கண்ட வெண்ணெயும் மெழுகும். நீர்சேர்ந்த மண்ணும், உப்பும், தன்னழகிய குளிர்ந்த மகனைத் தழுவிய தந்தையுமென்று சொல்லப்பட்ட ஐந்தினு ளொன்றுபோலே இரவலரைக் கண்டால் உள் நெகிழ்ந்து ஈதலி யைந்த பொருள் சிறிதாயினு மதனால் வரும் பயன் குன்று போலப் பெரிதாய்க் கூடும். குளந்தொட்டுக் கோடு பதித்து வழிசீத் துளந்தொட் டுழுவய லாக்கி--வளந்தொட்டுப் பாகு படுங்கிணற்றோ டென்றிவ்வைம் பாற்படுத்தா னேகுஞ் சுவர்க்கத் தினிது. (66) (ப.பொ.ரை.) குளத்தைக் கல்லி, மரக்காவை நட்டு, வழி சீத்துத் திருத்தி, மேடாயின நிலங்களை யுட்டோண்டி, யுழு வயலாக்கி வளம்படத் தோண்டி, வகுப்புப் படக் கிணற்றோடு சொல்லப் பட்ட இவ்வைந்தும் மிகுதிபடச் செய்தான் சுவர்க்கத்திற்குச் செல்லு மோரிடையூறின்றி. போர்த்து முரிந்திட்டும் பூசியு நீட்டியு மோர்த்தொரு பான்மறைத் துண்பான்மே--யோர்த்த வறமாமேற் சொற்பொறுக்க வன்றேற் கலிக்கட் டுறவறம்பொய் யில்லறமே வாய். (67) (ப.பொ.ரை.) முழுமெய்யுந் தோன்றாமற் போர்த்தும், உடம்ப டைய நீறு பூசியும், சடையை நீட்டியும், உடம்பிலொரு கூற்றினை மறைத்தும், உண்டற்கு மேவியாராய்ந்து கொண்டன இவ்வேடங் களைந்தும் பண்டுள்ள நல்லார் சொல்லிய துறவறமே. துறவற மாயிற் பிறர் சொல்லிய கடுஞ் சொற்களைப் பொறுக்கப் பொறா ராயிற் கலிகாலத்தின்கண் நிகழும் துறவறம் பொய்யாம், இல்லறம் மெய்யாவது. தான் பிறந்த வின்னினைந்து தன்னைக் கடைப்பிடித்துத் தான்பிற ராற்கருதற் பாடுணர்ந்து--தான்பிறராற் சாவ வெனவாழான் சான்றோராற் பல்யாண்டும் வாழ்க வெனவாழ்த னன்று. (68) (ப.பொ.ரை.) தான்பிறந்த குடியை நினைத்து, தன்னை யொழுக்கத்தின் வழுவாதவகைக் கடைப்பிடித்து, தான் பிறரால் மதிக்கப்படுஞ் செய்கையை யுணர்ந்து, தான் பிறராற் சாகவென்று சொல்லும்படி யொழுகாது சான்றோராலே பல்யாண்டும் வாழ்வானாக என்று சொல்லும்படி யொழுகுத னன்று. நெடுக்கல் குறுக்கல் துறைநீர்நீ டாடல் வடுத்தீர் பகல்வா யுறையே--வடுத்தீரா வாகுமந் நான்கொழித் தைந்தடக்கு வானாகின் வேகும்பம் பேண்டான் விடும். (69) (ப.பொ.ரை.) மயிரைச் சடையாக நீட்டுதலும், மயிரைக் குறைத்தலும், தீர்த்தங்கள் நெடிதாகப் போயாடுதலும், வடுத் தீர்ந்த பகலின்கண் உண்ணுதலென் கின்றகுற்ற முந் தீராவாகின்ற அந்நான்கினையு மொழித்தலும், ஐந்து புலன்களையும் மடக்கு வானாகிற் கூடலைத் தீயுள் வேகக்கடவ கும்பமாகிய உடம்பினை வேண்டான் விடும். கொன்றான் கொலையை யுடன்பட்டான் கோடாது கொன்றதனைக் கொண்டான் கொழிக்குங்காற்--கொன்றதனை அட்டா னிடவுண்டா னைவரினு மாகுமெனக் கட்டெறிந்த பாவங் கருது. (70) (ப.பொ.ரை.) உயிரைக் கொன்றவன், கொலைக்குக் கோடாதேயுடன் பட்டவன், கொல்லப்பட்டதனுடைய ஊனைக் கொண்ட வன், ஆராயுங்காற் கொல்லப்பட்ட தனுடைய ஊனை அட்டான், அதனையிடவுண்டான் என இவ்வைவர் மாட்டு முளவாய் நிகழுமென்று வரம்பழித்துச் செய்த பாவத்தைக் கருது. சிறைக்கிடந்தார் செத்தார்க்கு நோற்பார் பலநாள் உறைக்கிடந்தா ரொன்றிடையிட் டுண்பர்--பிறைக்கிடந்து முற்றனைத்து முண்ணா தவர்க்கீந்தார் மன்னவராய்க் கற்றனைத்தும் வாழ்வார் கலந்து. (71) (ப.பொ.ரை.) சிறையின்கட் கிடந்தார், செத்தவர்க்கு நன்மை வேண்டி யுண்ணாது நோற்பார், பலநாளுந் தான் கொண்ட பிணிக்கு மருந்தாயுண்ணாது கிடந்தார், ஒருநாளி டையிட்டுண் பார், பிறைக்கிடந்து நிரம்புமளவும் உண்ணாத தவசிகளென இவ்வைவர்க்கும் உணவு கொடுத்தவர்கள் அனைத்து நூல்களுங் கலந்து கற்ற மன்னராய் வாழ்வார். ஈன்றெடுத்தல் சூல்புறஞ் செய்தல் குழவியை யேன்றெடுத்தல் சூலேற்ற கன்னியை--யான்ற வழிந்தாளை யில்வைத்தல் பேர றமா வற்ற மொழிந்தார் முதுநூலார் முன்பு. (72) (ப.பொ.ரை.) ஈன்றதாய் குழவியைத் துறவாதோம்பி வளர்த் தல், தான் கொண்ட சூலைத் தானழியாது புறஞ் செய்தல், வளர்ப் பாரில்லாத குழவியைக் கண்டாலேன்று வளர்த்தல், சூலேற் கன்னியையும் அழிந்த மனையாளையும் நீக்காது தன்னில் வைத்துப் புறந்தருதல் என இவ்வைந்தும் பெரிய அறமாக மிகவு மொழிந்தார் முதிய நூலையுடையவர் பண்டு. வலியழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால் நலிபழிந்தார் நாட்டறைபோய் நைந்தார்--மெலிவொழிய வின்னவரா மென்னாரா யீந்த வொருதுற்று மன்னவராச் செய்யு மதித்து. (73) (ப.பொ.ரை.) வலிகெட்டவர், மூத்தவர், வழிபாட்டுண்ணாது வடக்கிருந்தார், பிணியானலியப் பட்டழிந்தார், தமது நாடு விட்டுப் போய்த் தளர்ந்தாரென இவ்வைவரும் தளர் வொழியும் படி உற்றாரயலாரென் றாராயாதே ஈயப்பட்டதோ ருணவு மன்னவராகச் செய்யு மதித்து. கலங்காமை காத்தல் கருப்பஞ் சிதைந்தா லிலங்காமை பேரறத்தா லீற்றம்--விலங்காமைக் கோடல் குழவி மருந்து வெருட்டாமை நாடி னறம்பெருமை நாட்டு. (74) (ப.பொ.ரை.) வயிற்றுட் கருவழியாமை காத்தலும், கருப்பஞ் சிதைந்தாற் பிறர்க்கு வெளிப்படாமை மறையப் பெயர்த்து வாங்கு தலும், குழவியை இடைவிலங்காதபடி இயற்றிக் கோடலும், குழவி பிறந்து பிணிகொண்டால் அதற்கு மருந்தும், அக்குழவியை அச்சுறுத்தாமையும் என்னுமிவ்வைந் தினையும் பெரிதாய அறமாக நாட்டுவாயாக. சூலாமை சூலிற் படுந்துன்ப மீன்றபி னேலாமை யேற்றால் வளர்ப்பருமை--சால்பவை வல்லாமை வாய்ப்ப வறிபவ ருண்ணாமை கொல்லாமை நன்றாற் கொழித்து. (75) (ப.பொ.ரை.) சூற் கொள்ளாமையால் வருந்துன்பம், சூற் கொண்டால் வருவதொரு மெய் வருத்தம், பிள்ளை பெற்று வைத்தும் பிள்ளையைக் கொள்ளாமை, பிள்ளையைப் பெற்றுக் கொண்டால் வளர்க்குமருமை, வளர்ந்த பிள்ளை சால்பு குணங் கள் மாட்டாமை, இவ்வைந்தினையும் வாய்ப்ப அறிந்தவர் ஆராய்ந்து ஓருயிரைக் கொல்லாமையும் அவ்வூனை யுண்ணா மையும் நன்று. சிக்கர் சிதடர் சிதலைப்போல் வாயுடையார் துக்கர் துருநாமர் தூக்குங்காற்--றொக்க வருநோய்கள் முன்னாளிற் றீhத்தாரே யிந்நா ளொருநோயு மின்றிவாழ் வார். (76) (ப.பொ.ரை.) தலைநோயுடையாரையும், பித்துற்றாரையும், வாய்ப்புற்றுடையாரையும், கயநோய் கொண்டாரையும், மூல நோய் கொண்டாரையும், அடைந்து வருந்துன்பங் களை முற் பிறப்பிற் றீர்த்தவர் களிப்பிறப்பின்கண் ஒரு நோயுமின்றி வாழ்வார். பக்கம் படாமை யொருவர்க்குப் பாடேற்றல் தக்கம் படாமை தவமல்லாத்--தக்கா ரிழியினர்க்கே யானும் பசித்தார்க ணீதல் கழிசினங் காத்தல் கடன். (77) (ப.பொ.ரை.) எல்லா வுயிர்க்கும் ஒத்தலும், படுந்துன்பம் ஆற்றுதலும், ஒரு பொருளின் கண்ணும் பற்றுப் படாமையும், இம் மூன்றும் தவஞ்செய்வார் குணமாவன. அவர்களல்லா இல்வாழ் வார்க்குக் குணமாவன: கீழ்க்குலத்தார்க்கே யாயினும் பசித்த வர்க்கு உண்டி கொடுத்தலும் மிக்க வெகுளிகாத்தலும். புண்பட்டோர் போற்றுவா ரில்லாதார் போகுயிரார் கண்கெட்டார் காலிரண்டு மில்லாதார்--கண்கண்பட் டாழ்ந்து நெகிழ்ந்தவர்க் கீந்தார் கடைபோக வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து. (78) (ப.பொ.ரை.) போரின்கண் புகுந்து புண்பட்டார், பாது காக்குங் களைகணில்லாதார், உயிர்போந் தன்மையை யடைந்தோர், குருடர், முடவர் என்று சொல்லப்பட்டாருடைய கண்ணிலே தங்கள் கண்கள் பட்டிரங்கி மன நெகிழ்ந்து வேண்டுவன கொடுத்தார் இடையூறு பட்டொழியாதே கடைபோக மகிழ்ந்து வாழ்ந்து போவார். பஞ்சப் பொழுதகத்தே பாத்துண்பான் காவாதான் அஞ்சா துடைபடையுட் போந்தெறிவான்--எஞ்சாதே உண்பதுமு னீவான் குழவி பலிகொடுப்பான் எண்பதின் மேலும்வாழ் வான். (79) (ப.பொ.ரை.) சிறுவிலைக் காலத்து, பலர்க்கும் பகுத்துண் பான், தன் மாட்டுள்ள பொருள் காவாது பிறருக்கே ஈவான், படை யுடைந்த விடத்துத் தானஞ்சாதே வருகின்ற படையை யெறிந்து மீட்டுப் பலரையு முய்யக் கொள்வான், ஒருநாளு மொழியாதே தானுண்பதனை முன்னே பிறர்க்கீத் துண்பான், பசித்த குழவி கட்குப் பலிகொடுப்பான் எண்பதிற்றாண்டின் மேலுந் துன்புறா வாழ்வான். வரைவில்லாப் பெண்வையார் மன்னைப்புற் றேறார் பிரையில்லார் நள்ளார்போர் வேந்தன்--வரைபோற் கடுங்களிறு விட்டுழிச் செல்லார் வழங்கார் கொடும்புலி கொட்கும் வழி. (80) (ப.பொ.ரை.) பொது மகளைத் தமக்கு மனையாளாக மனை யின்கண் வையார், பழையதாய்த் தலைமழுங்கியிருந்த புற்றினமே லேறார், தம்மோடு நிகரில்லாதாரோடு நட்புக் கொள்ளார், போர் வேந்தனுடைய வரைபோலுங் கடுங்களிறு விட்டுழிச் செல்லார், கொடும்புலி சுழலும் வழியின் கண் நடவார். தக்கார் வழிகெடா தாகுந் தகாதவ ருக்க வழியரா யொல்குவர்--தக்க வினத்தினா னாகும் பழியும் புகழு மனத்தினா னாகு மதி. (81) (ப.பொ.ரை.) தகுதியுடையார் வழி மரபுகெடாதாகும் தகுதி யில்லாதார் கெட்டவழி மரபையுடையராயே தளர்வார், பழிக்கத் தக்க இனத்தினா னாகும் பழியும், புகழுக்குத் தக்க இனத்தினா னாகும் புகழும், தனது மனத்தினளவே யுண்டாகும் அறிவும். கழிந்தவை தானிரங்கான் கைவாரா நச்சா னிழிந்தவை யின்புறா னில்லார்--மொழிந்தவை மென்மொழியா லுண்ணெகிழ்ந் தீவானேல் விண்ணேரா லின்மொழியா லேத்தப் படும். (82) (ப.பொ.ரை.) இறந்த பொருட்குத் தானிரங்கான், தனக்குக் கைவாராதன வற்றை நச்சி வருந்தான், நல்லாரானிகழப்பட்ட வற்றை யின்புற்றான், வறியாரிரந்து வேண்டியவற்றை மென் மொழி சொல்லி யுண்ணெகிழ்ந்தீ வானாயிற் றேவர் களானினிய மொழிகளாலே புகழப்படும். காடுபோற் கட்கினிய வில்லம் பிறர்பொரு ளோடுபோற் றாரம் பிறந்ததா--யூடுபோய்க் கோத்தின்னா சொல்லானாய்க் கொல்லானேற் பல்லவ ரோத்தினா லென்ன குறை. (83) (ப.பொ.ரை.) பிறருடைய கண்ணுக்கினிய வில்லத்தைக் காடு போலக் கொண்டு விரும்பாது, பிறருடைய பொருளை ஓடு போலக் கொண்டு விரும்பாது, பிறர் மனையாளைத் தான் பிறந்த தாயாகக் கொண்டு விரும்பாது, பிறரூடு போய்க் கோத்தின் னாதவற்றைச் சொல்லாது, ஓருயிரையுங் கொல்லா னாயினல் லார் பலருஞ் சொல்லிய நூல்களாற் காரிய மென்னை யவற்கு? தோற்கன்று காட்டிக் கறவார் கறந்தபால் பாற்பட்டா ருண்ணார் பழிபாவம்--பாற்பட்டா ரேற்றவா தின்புற்று வாழ்வன வீடழியக் கூற்றுவப்பச் செய்யார் கொணர்ந்து. (84) (ப.பொ.ரை.) தோற்கன்று காட்டிப் பசுவைக் கறவார், அப்பெற்றியாற் கறந்த பாலை நெறிப்பட்டா ருண்ணார், பழியையும் பாவத்தையும் தம்மே லேற்றுக் கொண்டு விரும்பாதே தன் கிளையோடின்புற்று வாழுமுயிர்களைக் கூற்று விரும்பக் கொணர்ந்து கொலை செய்யார். நகையொடு மந்திரம் நட்டார்க்கு வாரம் பகையொடு பாட்டுரையென் றைந்துந்--தொகையொடு மூத்தோ ரிருந்துழி வேண்டார் முதுநூலுள் யாத்தா ரறிந்தவ ராய்ந்து. (85) (ப.பொ.ரை.) சிரித்தலும், ஒருவனோடு செவிச்சொல்லும், தம்முற்றார்க் காக வாரம் சொல்லுதலும், பகையாடுதலும், பாட்டுக்குப் பொருட் சொல்லுதலும் இவ்வைந்துங் கூட்டத்தோ டறிவுடையரா யிருந்துழி வேண்டாராய்ப் பழைய நூல்களிலே யாத்து வைத்தார் அறிவுடையார் ஆய்ந்து. சத்தமெய்ஞ் ஞானந் தருக்கஞ் சமயமே வித்தகர் கண்டவீ டுள்ளிட்டாங்--கத்தகத் தந்தவிவ் வைந்து மறிவான் றலையாய சிந்திப்பிற் சிட்டன் சிறந்து. (86) (ப.பொ.ரை.) வழக்கு நூலும், சொன்முடிபு நூலும், தருக்க நூலும், சமய நூலும், அறிவின் மிக்கார் கண்ட வீட்டு நெறியும் இவ்வைந்தும் அழகாக அறிவான் தலை யாய சிட்டனாவான் சிறந்து. கண்ணுங்காற் கண்ணுங் கணிதமே யாழினோ டெண்ணுங்காற் சாந்தே யிலைநறுக்கிட்--டெண்ணுத லிட்டவிவ் வைந்து மறிவா னிடையாய சிட்டனென் றெண்ணப் படும். (87) (ப.பொ.ரை.) கருதுங்காற் கருதப்படு மெண்ணும், யாழ்வல்லனாதலும், சந்தனமரைத்தலும், எண்ணலும், தொழில் பட இலை நறுக்கலும் என இவ்வைந்து காரியமும் அறிந்து வல்லனாவான் இடையாய சிட்டனென் றெண்ணப்படும். நாணில னாய்நன்கு நள்ளாதா னாய்ப்பெரியார்ப் பேணில னாய்பிறர் சேவகனா--யேணில் பொருந்திய பூண்முலையார் சேரிகைத் தில்லான் பருத்தி பகர்வுழி நாய். (88) (ப.பொ.ரை.) நாணமில்லாதானு நாயோடொக்கும், பிற ரொடு நண்பு கொள்ளாதானு நாயோடொக்கும், பெரியாரைப் பேணாதானு நாயோடொக்கும், பிறர்க்குச் சேவகனாய்த் திரிவானு நாயோடொக்கும், மனத்தின் கணிலை யில்லாத பூணையுடைய முலையார் சேரியின்கட் கைப்பொருளின்றிக் காதலாற் சென்று திரிவானும் பருத்தி விற்குமிடத்துச் சென்று நிற்கும் நாயோடொக்கும். நாணெளிது பெண்மை நகையெளிது நட்டானே லேணெளிது சேவக னேற்பெரியார்--பேணெளிது கொம்பு மறைக்கு மிடையா யளியன்மீ தம்பு பறத்த லரிது. (89) (ப.பொ.ரை.) ஒருத்தி பெண்குணத்தையுடையளாயின் அவளுக்கு நாணெளிது, ஒருவனோடொருவன் நட்டானாயின் அவற்கு மகிழ்ந்து நகுதல் எளிது, ஒருவன் சேவகனாயின் அவனுக்கு வலிசெய்தல் எளிது, குணத்தாற் பெரியராயின் அவர்க்குப் பிறரைப் பேணுதல் எளிது, வஞ்சிக் கொம்பை மறைக்கும் இடையினையுடையாய்! பலர்க்குஞ் சோறிடு வார் மேற் பிறர் அம்பு பறந்து சேறல் அரிது. இன்சொலா னாகுங் கிளைமை யியல்பில்லா வன்சொல்லி னாகும் பகைமைமன்--மென்சொல்லி னோய்வில்லா வாரருளா மவ்வரு ணன்மனத்தான் வீவில்லா வீடாய் விடும். (90) (ப.பொ.ரை.) ஒருவன் சொல்லும் உறுதியாகிய சொல்லினாற் சுற்ற முள்ளதாகும், குணமில்லாத கடுஞ்சொற் களாற் பகைகளுள வாம், பிறர்க்குச் சொல்லும் மெல்லிய சொல்லினாற் றளர்வில்லாத அருள் உளதாம், அவ்வருளாவ தொருவன் மன நன்மையால் கேடில்லாத வீடாய் விடும். தக்க திளையான் றவஞ்செல்வ னூண்மறுத்த றக்கது கற்புடை யாள்வனப்புத்--தக்க தழற்றண்ணென் றோளா ளறிவில ளாயி னிழற்கண் முயிறாய் விடும். (91) (ப.பொ.ரை.) இளையான் துறந்து தவஞ் செய்தல் தக்கது, செல்வத்தையுடையான் இல்லறத்தின்கணின்று இடையீட்டை யூண் மறுத்து நோன்பு புரிதல் தக்கது, கற்புடையாள் வனப்பு தக் கது, ஒருவன் மனையாள் அறிவிலளாயொழுகின் நிழலின் கண் முயிறோடழலை யொக்கும். பொய்யாற் சுவர்க்கம்வா யானிர யம்பொருள் மையார் மடந்தையால் வாழ்வினிது--மெய்யன்றான் மைத்தக நீண்ட மலர்க்கண்ணாய் தீதன்றா லெத்தவ மானும் படல். (92) (ப.பொ.ரை.) பொய்ந்நெறி ஒழுகினால் அவர்க்குச் சுவர்க்க முளதாம், மெய்ந்நெறியி லொழுகினால் அவர்க்கு நிரயமுளதாம், பொருள் தேடுதலினி தாம், குற்ற மிக்க மடந்தையரோடு கூடி இல் வாழும் இல்வாழ்க்கையினிதா மென்றல் மெய்ம்மையுமன்றால், மைத்தக நீண்ட மலர்க் கண்ணாய்! யாதேனு மொரு தவம் படுதல் தீதன்று நன்மை யேயாம். புல்லறத்தி னன்று மனை வாழ்க்கை போற்றுடைத்தே னல்லறத்தா ரோடு நடக்கலா--நல்லறத்தார்க் கட்டிட்டுண் டாற்றவாழ்ந் தார்களே யிம்மையி லட்டிட்டுண் டாற்றவாழ் வார். (93) (ப.பொ.ரை.) புல்லிய துறவறத்தி னன்று மனை வாழ்க்கை, மனையறத்திற்குச் சொன்னபடியே யொழுகிற் றுறவறத்தாரோடு நடக்கலாம், ஆதலால் நல்ல துறவறத்தார்க்குத் தாம் ஆக்கியிட்டு, தாமும் இடப்படா துண்டவர்கள் இப்பிறப்பின்கண் மிக விட்டுண் டில்வாழ்க்கை வாழ்வார். ஈவது நன்றுதீ தீயாமை நல்லவர் மேவது நன்றுமே வாதாரோ--டோவாது கேட்டுத் தலைநிற்க கேடி லுயர்கதிக்கே யோட்டுத் தவநிற்கு மூர்ந்து. (94) (ப.பொ.ரை.) பிறர்க்கொன்றை ஈவது நன்று, பிறர்க்கீயாமை தீது, மேவாதாரோடு நல்லராயிருப்பார் மேவி யொழுகுவதுவே நன்று, நன்னெறிக்கு வழியாகிய நூலினையே கேட்டதன் கண்ணே நிற்க: கேடிலாத உயர்கதியாகிய வீட்டு நெறியின் கண்ணே செல்லும் செலவின் கண்ணே நிற்க மேற்கொண்டு. உண்ணிடத்து மொன்னார் மெலிவிடத்து மந்திரங்கொண் டெண்ணிடத்துஞ் செல்லாமை தான்றலையே--யெண்ணி யுரைப்பூசல் கோற லுயர்தவமேற் கங்கைக் கரைப்பூசை போற்றக் கடை. (95) (ப.பொ.ரை.) பிறருண்ணுமிடத்தும் பகைவராயினார் தளர்ந்தவிடத்தும், பிறர் சூழ்ச்சிகொள்ளுமிடத்துஞ் செல்லா மையும், தாமொருவர்க்குத் தலைமையாகிய குணம் ஆராய்ந்து பிறரொடு மாறுபட்டுச் சொல்லுஞ் சொல்லின்றித் தமக்குள தாகப் பாதுகாத்தலைச் செய்தலும், மிக்கவறத்தை மேற் கொண்ட காலத்துப் பிறவுயிரைக் கொன்று தின்கையும், காரண மாய்ந்தாற் றவவேடங் கொண்ட பூசை யொத்தலாகிய கீழ்மையாம். பத்தினி சேவகன் பொத்தில் கடுந்தவசி பொத்தில் பொருட்டிறத்துச் செவ்வியான்--பொத்தின்றி வைத்தா ரதுவழக்குஞ் சான்றவர் தஞ்செம்மை செத்தா லறிக சிறந்து. (96) (ப.பொ.ரை.) பத்தினியும், சேவகனும், குற்ற மில்லாத கடுந் தவசியும், பொருட்டிறத்தின்கட் பொத்தின்றிச் செவ்வி யனாய்த் தேறப்படுவானும், முதன்மையாக அரசனாலே வைக்கப்பட்டார் பொத்தின்றி வழக்கும் சான்றவனுமென இவ்வைவர் செம்மையும் இவர் செத்தாலறிக மிகவும். வழிப்படரல் வாயல் வருந்தாமை வாய்மை குழிப்படரல் தீச்சொற்க ளோடு--மொழிப்பட்ட காய்ந்து விடுதல் களைந்துயக் கற்றவர் ஆய்ந்து விடுதல் அறம். (97) (ப.பொ.ரை.) பிறர்வழிச் செலவும், வாய்க்குங் காரியங்களை முயன்று வருந்தாமை, மெய்ம்மையல்லா நெறியின்கட்சேறல், பிறரைப் பழிகூறுஞ் சொற்கள், நல்லாராற் சொல்லப்பட்ட குணங் களைந்து நீக்குதலென இவ்வைந் தையுங் கற்றறிவார் களைந்து நீக்குதலறமாவது. பாயிரம் மல்லிவர்தோண் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப் பல்லவர் நோய்நீக்கும் பாங்கினாற் - கல்லா மறுபஞ்சந் தீர்மழைக்கை மாக்காரி யாசான் சிறுபஞ்ச மூலஞ்செய் தான். (ப-ரை) மல் இவர் தோள் - மற்போர் விரும்பும் தோள் வலிமையையுடைய, மாக்காயன் மாணாக்கன் - மாக்காயன் என்பவர் மாணாக்கராகிய, பஞ்சம் தீர் - வற்கடத்தைத் தீர்க்கின்ற, மழைக்கை - மழையைப்போலும் ஈகையொழுக்கமுடைய, மா - சிறந்த, காரியாசான் - காரியாசான் என்பவர், மாநிலத்து - இப்பேருலகத்தில், பல்லவர் நோய் நீக்கும் பாங்கினால் - மக்கள் பலருடைய அறியாமை நோயை நீக்குந் தகைமையால், கல்லா - அறிவு நூல்களை (அவர்கள்) கல்லாத, மறுதீர் - குற்றந்தீரும்படி, சிறுபஞ்சமூலம் - சிறு பஞ்சமூலம் என்னும் இந்நூலை, செய்தான் - இயற்றினாரென்க; (எ-று.) (க-ரை) மாக்காயனார் மாணாக்கராகிய காரியாசான் என்னுஞ் சான்றோர் மக்கள் அறியாமையுங் குற்றமும் நீங்கும் படி ‘சிறுபஞ்ச மூலம்’ என்னும் இந்நூலை யியற்றினார் என்பது. மாக்காயன் என்ற பெயரால் இவர் சிறந்த உடற் கூறமைந்தவர் என்பது விளங்கும். மழைக்கை என்றதனால் கொடை வள்ளலுமாவர் என்க. தீர் என்பது தீபகமாகப் பஞ்சந்தீர் எனவும், மறுதீர் எனவும் இரண்டிடங்களினுங் கூட்டப்பட்டது. இவர்தல் - விரும்புதல். இப்பாயிரச் செய்யுள், ஆக்கியோர்காலத் தறிஞரால் செய்யப்பட்டதாகும். செய்யுள் முதற் குறிப்பு அகரவரிசை (எண் - பக்க எண்) அரம் போல் கிளை 251 அழியாமை எத்தவமும் 247 அறம் நாட்டான் 241 ஆணாடக்கம் வேண்டா 241 ஆம்பல்வாய் கண்மனம் 249 இடரின்னா 237 இல்லியலார் நல்லறமும் 243 இன்சொலான் ஆகுங் 259 ஈவது நன்று தீ 260 ஈன்றெடுத்தல் சூல் 254 உடம்பொழிய வேண்டின் 234 நடையிட்டார் 245 உண்ணாமை 248 உண்ணிடத்தும் 260 உயிர் நோய் செய் 242 ஏலாமை நன்றீதல் 250 ஒத்த ஒழுக்கம் 233 ஒருவன் அறிவானும் 242 கண்ணுங்கால் கண் 258 கண்வனப்புக்கண் 235 கதநன்று சான்றாண்மை 238 கலங்காமைக் காத்தல் 254 கல்லாதான் தான் 234 கழிந்தவை தா 251 கள்ளான்சூ தென் 238 கள்ளுண்டல் காணில் 240 கற்புடைய பெண் 234 காடுபோற் கட் 257 குளந்தொட்டுக்கோடு 252 கொண்டான் கொழு 248 கொண்டான் வழி 237 கொல்லாமை நன்று 248 கொன்றான் கொலையை 253 கொன்றுண்பான் நாச் 236 கோறலும்நஞ் சூணைத 237 சத்தமெய்ஞ் ஞானந் 258 சிக்கர் சிதடர் 255 சிலம்பிக்குத் தன் 236 சிறைக்கிடந்தார் 253 சூலாமை சூலிற 255 தக்க திளையான் 259 தக்கார் வழிகெடாது 256 தன்னிலையுந் தாழாத் 250 தான்பிறந்த 252 தேவரே கற்றவர் 239 தொழீஇ அடவுண்ணார் 244 தோற்கன்று காட்டிக 257 நகையொடு மந்திரம் 257 நசைகொல்லார் 247 நட்டாரை யாக்கிப் 238 நல்ல வெளிப்படுத்துத் 249 நன்புலத்து வையடக்கி 250 நாணிலன் நாய்நன்கு 258 நாணிலான் சால்பும் 236 நாணெனிது பெண்மை 259 நாள்கூட்டம் மூர்த்தம் 246 நீண்டநீர் காடு 247 நீரறம் நன்று 251 நெடுக்கல் குறுக்கல் 253 நெய்தன் முகிழ்துணை 242 பக்கம் படாமை 255 பஞ்சப் பொழு 256 படைதனக்கு யாணை 235 பண்டாரம் பல் கணக்கு 245 பத்தினி சேவகன் 261 பற்றினான் பற்றற் 235 பிடிப்பிச்சைப் பின் 251 பிழைத்தல் பொறுத்தல் 238 புண்பட்டார் போற் 255 புல்லறத்தினன்றுமனை 260 பூத்தாலுங் காயா 238 பூவாதாள் பூப்புப் 245 பூவாது காய்க்கும் 238 பெருங்குணத்தார் 240 பேணடக்கம் பேணாப் 246 பொச்சாப்புக் கேடு 247 பொய்யாமை நன்று 244 பொய்யாமை பொன் 238 பொய்யால் சுவர்க்கம் 259 பொருளுடையான் கண் 233 பொருள் போகம் 250 பொன்பெறுங் கற்றான் 249 போர்த்தும் உரிந் 252 மக்கட்பெறுதல் 248 மயிர்வனப்பும் 244 மல்லிவர்தோண் 262 முழுதுணர்ந்து 233 வடிவிளமை வாய்ந்த 240 வருவாய்க்குத் தக்க 245 வரைவில்லாப் பெண் 256 வலியழிந்தார் மூத் 254 வழிப்படரல் வாயல் 261 வார்ச்சான்ற கூந்தல் 246 வான்குருவிக் 241 வெந்தீக்காண் வெண் 252 வேட்பவன் பார்ப்பான் 243 வைததனால் ஆகும் 243 வைப்பானே வள்ளல் 243 அருஞ்சொல் அகரவரிசை அடங்க - முழுவதும் அடரல் - பொருந்துதல் அட்டான் - சமைத்தவன் அமிர்து - மரணத்தினின்றுந் தவிர்ப்பது. அலவலை - அற்பகாரியம் அவாய் - விருப்பம் அவிர்தல் - விளங்குதல் அழல் - நெருப்பு அளியன் - அருளுடையவன் அறிமடம் - தான் கூறுவதறியும் அறிவில்லார் மாட்டு அவரறியமாட்டாமையைத் தானறிந்தும் அறியாதான் போன்றிருத்தல் அறை - அறுதல் ஆட்டும் - அசைவிக்கும் ஆதர் - அறிவிலார் ஆர - உண்ண ஆற்ற - மிகுதியாக ஆற்று - செய் ஆன்ற - மிகவும் இலிங்கி - தவமுடையவன் இல் - குடி இன்னா - தீது ஈடு - பெருமை ஈடு இல் - கேடில்லாத ஈர்இல் - கேடில்லாத ஈர் - இழுக்கின்ற உகிர் - நகம் உக்க - அழிந்த உதாரதை - ஈகை உய்தல் - ஒழிதல் உய்த்து - செலுத்தி உய்யான் - பிழைக்கமாட்டான் உறு - மிகுதி உறுதியா - நன்மையுண்டாகுமாறு உறை - உணவு, மருந்து எண்வனப்பு - ஆராய்ச்சிக்கு அழகு ஏக்கழுத்தம் - இறுமாப்பு ஏண் - வலிமை உயர்வு ஏத்த - துதிக்க ஏத்தி - போற்றி ஏர் - அழகு ஏலாமை - ஏற்றுக்கொள்ளாமை ஒத்த - பொருந்திய ஒருப்படுத்து - நீக்கி ஒல்லா - பொருந்தாத ஒன்னார் - பகைவர் ஒத்த - நூல் ஓய்வு - ஓய்தல் ஓர்த்து - அறிந்து ஆராய்ந்து ஓவாது - இடையறாமல் கடிந்தான் - ஒழித்தவன் கடுமை - கொலைத் தொழில்வன்மை கடைபோக வாழ்தல் - முடிவுபோக வாழ்தல் கடைப்பிடித்தல் தெளிவாயறிதல் கட்டு - வரம்பு கண்ட - செய்த கண்டல் - தாழைமலர் கண்ணல் - நினைத்தல் கண்படல் - கண்பார்வை செலல் கண்பட்டு - கண்ணோடி கண்மாறெண்ணாமை - கண்ணோட்டஞ்செய்தல் கதம் - கோபம் கருதும் - நினைக்கும் கருமை - மனவிருள் கலிக்கண் - கலிகாலத்தில் கழிய - மிக்க கழிமின் - விடுங்கள் கழுமல் - பற்றல், கலத்தல் கழை - மூங்கில் களர் - சேற்று நிலம் களைந்து - நீக்கி கள்ளாமை - களவு செய்யாமை கற்பு - கற்றல் கிளர் - விளங்குகின்ற கிளை - உறவு கிளைமை - நேயமுடையமை கும்பம் - குடம் குழிப்பு - தாழ்வு குன்று - மலை கூழ் - மாவினாலாக்கப்படும உணவு கூற்றம் - எமன் கெழீஇ - தழுவி கைத்து - பொருள்;கைப்பொருள் கொடுங்கரி - பொய்ச்சான்று கொட்கும் - சுழன்று திரிகின்ற கொல்லல் - கெடுத்தல் கொழித்தல் - தெள்ளுதல், ஆராய்தல் கோடல் - கொள்ளுதல் கோடாது - நாணாமல் கோடாமொழி - நடுநிலை தவறாத சொல் கோடு - கொம்பு; மரக்கிளை கோதை - மாலை கோய்கள் முகக்கும் கலம் கோன் கூட்டம் -கோளின் பொருத்தம் கோறல் - கொல்லுதல் சலித்தல் - வெறுத்தல் சார்ந்த - தழுவிய சாலாமை - நிரம்பாதிருத்தல் சால்பு - அமைதி சான்றவன் - அறிவான் நிறைந்த பெரியோன் சிக்கர் - தலை நோயுடையார் சிட்டன் - மேலானவன் சிதடர் - பித்துடையார் சிதல் - கறையான் சிதவலிப்பு - குறைவுபட்ட பிச்சை சிந்தை - ஆராய்ச்சி சிலம்பி - சிலந்திப்பூச்சி சினை - கருவாகிய முட்டை சீத்து - செதுக்கு சுணங்கு - தேமல் சுவர்க்கம் - மேலுலகம் செயிர்நோய் - கோபத் தாலுண்டாகுந் துன்பம் செருக்கு - களிப்பு சேரான் - நினையான் சேரி - தெருவு சேவகம் - வீரத்தொழில் ஞெண்டு - நண்டு தமைமை - தன்மை தக்கம் - பத்து தருக்கம் - அளவைநூல் தவ - மிகுதி தாவா - கெடாதிருக்க தாழ்தல் - தாமதித்தல் தானம் - கொடை திரு - திருமகள் துக்கர் - சயநோயுடையார் துணை - அளவு துப்பு - வலி துருநாமர் - மூலநோய் கொண்டார் துளங்கா - அழியாத துற்று - உணவு துள்ளி - நெருங்கி தெற்ற - தெளிவாக தேறப்படும் - தெளியப்படும் தேற்றாதார் - தெளியாதார் தொக்க - கூடிய தொங்கல் - மாலை தொட்டு - தோண்டி தொழீஇ - தொழுத்தை, அடிமைப்பெண் நசை - விருப்பம் மச்சான் - விரும்பாதவன் நச்சினும் - விரும்பினும் நடை - ஒழுக்கம் நட்டான் - விரும்பியவன் நள்ளார் - நட்புக்கொள்ளார் நற்பு - நன்மை நன்புலம் - விளைநிலம் நன்று - நன்மை நாடாது - ஆராயாது நாண் - நாணம் நாறா - முளைக்காத நாறுவ - முனைப்பன நிரயம் - நரகம் நீடாங்கு - காலநீடிப்பு துணங்கு - நுட்பம் நெடுக்கல் - நீட்டுதல் நைந்தார் - தளர்ந்தார் நையாமை - உளந்தளராமை பகர்வுழி - கூறுமிடத்து பக்கம் படுதல் - ஒருபாற்கோடல் பஞ்சமூலம் - சிறிய ஐந்துவேர்கள், அவை : - கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லிவேர், நெருஞ்சிவேர் படர் - துன்பம் படர்பு - விட்டு நீங்குதல் படல் - உண்டாதல் படிந்து - சேர்ந்து படுத்தல் - உண்டாக்குதல் பண் - இசை பண்டாரம் - கருவூலம் பதி - தலைவன் பலி - சோறு பற்று - சார்பு பழுது - குற்றம் பாடு - பெருமை பார்த்தல் - பகுத்துண்டல் பாய் - பரவி பார்ப்பு - குஞ்சு பால் - பகுப்பு பிறர் இல் - பிறர் இல்லாள் பீடுடைமை - பெருமை புரிந்து - விரும்பி புரை - நிகர் புலத்தல் - பகைத்தல் புலம் - அறிவு புலை - கீழ்மைக்குணம் பூசல் - போர் பூசை - பூனை பூதர் - பிசாசுகள் பேணா - விரும்பாத பேணிலன் - காவாதவன் பொச்சாப்பு - மறதி டொத்து - குற்றம் பொன்றுங்கால் - அழிய வந்த விடத்து போகம் - உலக வின்பம், இன்பம் மடம் - மெல்லிய வீரம் மடன் உடைமை - அடக்கமுடையமை மதம் - வலி மந்திரம் - இரகசியச் சொல், சூழ்ச்சியுரை மல்இவர் - மற்போர் விரும்பும் (பாயிரம்) மறு - குற்றம் மணை செய்தல் - வீடெடுத்தல் மன் - நிலைபெற்ற, பெருமை மன்று - நீதித்தலம், சபை மா - சிறந்த (பாயிரம்) மாண்ட - மாட்சிமைப் பட்ட மாதுடைமை - அழகுடைமை மாயம் - வஞ்சனைச் செயல் மாரி - மழை மாறுஅல்லாள் - எதிர் அல்லாதவன் மிசைதல் - உண்ணுதல் முகிழ் - மொட்டு முயிறு - செவ்வெறும்பு முரண் - மாறுபாடு முவாதான் - முப்பில்லா தவனாகியகடவுள் மூர்த்தம் - மழுத்தம் (மூன்றேழுக்கால் நாழிகை கொண்ட வேளை) மூன்று ஒழித்து - காமம் வெகுளி மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் நீக்கி மெலிவு - தளிர்ச்சி மேதை - அறிவுடையவன் மேவாதார் - பொருந்தாதவர் மை - குற்றம் யாத்தல் - தொடுத்தல், சொல்லுதல் வஞ்சீ - ஒருவகைக்கொடி வசை - பழமொழி வடக்கிருத்தல் - வடக்கு நோக்கியிருந்து நோற்றல் வடு - குற்றம் வண்தார் - வளவிய மாலை வரைவு - மணஞ்செய்தல் வலம் - வெற்றி வனப்பு - அழகு வன்கண் - வீரம் வாரம் - அன்பு வார்சான்ற - நீட்சி மிகுந்த வால்உலண்டு - தூயஉலண்டு என்னும்புழு விதி - முறை வெகுளி - கோபம் வெருட்டாமை - அச்சுறுத்தாமை வென்கு - நாணு வேட்பவன் - வேள்வி செய்வன் வேளாண்மை - உபகாரம் வேறல் - எதிர்த்து வெல்லுதல் வை - வைக்கோல் வெளவில் மின் - கவராததேயுங்கள். கைந்நிலை ஆசிரியர் : புல்லங்காடனார் உரை : பழைய பொழிப்புரை கைந்நிலை 1. குறிஞ்சி வரைவு நீட்டித்தவழி யாற்றளாய தலைவி தோழிக்குக் கூறுதல். 1. நுகர்த லிவருங் கிளிகடி யேன னிகரின் மடமா னெரியு - மம...சாரற் கானக நாடன் கலந்தா னிலனென்று மேனி சிதையும் பசத்து. இதுவுமது 2. வெந்த புனத்துக்கு வாசமுடைத்தாகச் சந்தன மேந்தி யருவி கொணர்ந்திடூஉம் வஞ்ச மலைநாடன் வாரான்கொ றோழியென் னெஞ்ச நடுங்கி வரும். இதுவுமது 3. பாசிப் பசுஞ்சுனைப் பாங்க ரழிமுது நீர் காய்சின மந்தி பயின்று கனிசுவைக்கும் பாசம்பட் டோடும் படுகன் மலைநாடற் காசையிற் றேம்புமென் னெஞ்சு. இதுவுமது 4. ஓங்கல் விழுப்பலவி னின்பங் கொளீஇய தீங்கனி மாவின் முசுப்பாய் மலைநாடன் றான்கலத் துள்ளாத் தகையனோ நேரிழாய் தேங்கலந்த சொல்லிற் றெளித்து. இதுவுமது 5. இரசங்கொண் டின்றே னிரைக்குங் குரலைப் பிரசை யிரும்பிடி பேணி வரூஉ முரசருவி யார்க்கு மலைநாடற் கென்றோள் நிரைய மெனக் கிடந்த வாறு. இதுவுமது 6. மரையா யுகளு மரம்பயில் சோலை யுரைசான் மடமந்தி யோடி யுகளும் புரை தீர் மலைநாடன் பூணேந் தகலம் உரையா வழங்குமென் னெஞ்சு. இதுவுமது 7. கல்வரை யேறிக் கடுவன் கனிவாழை யெல்லுறு போழ்தி னினிய பழங்கவுட்கொண் டொல்லென வோடு மலைநாடன் றன்கேண்மை சொல்லச் சொரியும் வளை. தலைவி வேறுபாடு கண்டு வினவியசெவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல். 8. கருங்கைக் கதவேழங் கார்ப்பாம்புக் குப்பங் கி.....க்.....கொண்...............கரும் பெருங்கடன் மலை நாடன் பேணி வரினே சுருங்கு மிவளுற்ற நோய். வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல் 9. காந்த ளரும்புகை யென்று கதவேழம் ஏந்தன் மருப்பிடைக் கைவைத் தினனோக்கிப் பாய்ந்தெழுந் தோடும் பயமலை நன்னாடன் காய்ந்தான்கொ னங்கட் கலப்பு. தலைமகள் இரவுக்குறி ஏத முடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல் 10. பொன்னிணர் வேங்கைப் புனஞ்சூழ் மலைநாடன் மின்னி னனயவே லேந்தி யிரவினுள் இன்னே வருங்கண்டாய் தோழி யிடையாமத் தென்னை யிமைபொரு மாறு. இதுவுமது 11. எறிகிளர் கேழல் கிளைத்திட்ட பூமி பொறிகிளர் மஞ்ஞை புகன்று குடையு முறிகிளர் நன்மலை நாடன் வருமே யரிதுரைத்திவ் வில்லி னமக்கு. இதுவுமது 12. நாக நறுமலர் நாள்வேங்கைப் பூவிரவிக் கேச மணிந்த கிளரெழிலோ ளாக முடியுங்கொ லென்று முனிவா னொருவன் வடிவேல்கை யேந்தி வரும். 2. பாலை வரைபொருட் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல். 13. கடுகி யதரலைக்குங் கல்சூழ் பதுக்கை விடுவி லெயினர்தம் விளையோர்த் தோடும் நெடுவிடை யத்தஞ் செலவிரைப்பக் கேட்டே வடுவிடை மெல்கின கண். 14. கதநாய் துரப்ப ...... ...... ...... ..... ...... ...... ...... யவிழும் புதன் மாறு வெங்கானம் போக்குரைப்ப நில்லா முதன் ...... ...... ...... 15. . ..... ...... ...... ...... ..... ...... ...... ...... கடுங்கதிர் வெங்கானம் பல்பொருட்கட் சென்றார் கொடுங்கன் மலை ...... ...... 16. ...... ...... வுறையு மெல்லென் கடத்துக் கடுஞ்சின வேங்கை கதழ்வேழஞ் சாய்க்கு ...... ...... ...... ..... ...... ...... ...... நமர் 17. கடமா விரிந்தோடுங் கல்லத ரத்த மடமா விரும்படி வேழ மரு ...... ...... ...... ...... ண்ட வுண்கண் ணுணீர் ..... ...... ...... ...... பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது 18. ஆமா சிலைக்கு மணிவரை யாரிடை யேமாண் சிலையார்க் கினமா விரிந்தோடுந் தரமாண்பில் வெஞ்சுரஞ் சென்றார் வரக்கண்டு வாய்மாண்ட பல்லி படும். இதுவுமது 19. அரக்கார்ந்த வோமை யரிபடு நீழற் செருக்கில் கடுங்களிறு சென்றுறங்கி நிற்கும் பரற்கானம் பல்பொருட்குச் சென்றார் வருவர் நுதற்கிவர்ந் தேறு மொளி. 20. ...... ...... ...... ...... ....... ...... ...... ...... வீழ்க்கு மோவாத வெங்கானஞ் சென்றார் ........ .......வார் வருவார் நமர். பிரிவாற்றாத தலைவி தன் தோழிக்குக் கூறியது 21. ஆந்தை குறுங்கலி கொள்ளநம் மாடவர் காய்ந்து கதிர்தெறூஉங் கானங் கடந்தார்பின் னேந்த லிளமுலை யீரெயிற்றா யென்னெஞ்சு நீத்து நெடுவிடைச் சென்று. பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தியது. 22. கள்வர் திரிதரூஉங் கானங் கடந்தவர் உள்ளம் பிரிந்தமை நீயறிதி-ஒள்ளிழாய் தொல்லை விடரக நீந்திப் பெயர்ந்தவர் வல்லைநாங் காணும் வரவு. ஆற்றாமை யறிந்து வருந்திய தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது. 23. சிலையொலி வெங்கணையர் சிந்தியா நெஞ்சிற் கொலைபுரி வில்லொடு கூற்றுப்போ லோடும் இலையொலி வெங்கானத் திப்பருவஞ் சென்றார் தொலைவிலர்கொ றோழி நமர். இதுவும் அது 24. வெஞ்சுரம் தேரோட வெஃகிநின் றத்தமாச் சிந்தையா னீரென்று செத்துத் தவாவோடும் பண்பி லருஞ்சுர மென்பவா லாய்தொடி நண்பிலார் சென்ற நெறி. 3. முல்லை பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவங் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது 25. கார்செய் புறவிற் கவினிக் கொடிமுல்லை கூரெயி றீனக் குருந்தரும்ப - வோரும் வருவர்நங் காதலர் வாட்டடங் கண்ணாய் பருவரல் பைதனோய் கொண்டு. இதுவும் அது 26. குருதி மலர்த்தோன்றி கூர்முகை யீன ........சேவ லெனப்பிடவ மேறி பொருதீ யெனவெருளும் பொன்னேர் நிறத்தாய் அரிதவர் வாரா விடல். 27. ...... ...... ...... ...... ...... ...... யொல்கப் புகுதரு கார்தரு மாலை கலந்தார் வரவுள்ளி யூர்தரு மேனி பசப்பு. 28. ...... ...... ...... ...... ...... பெய்த புறவிற் சுடுமான்றே ரொல்லைக் கடாவா ரிவர்காணின் காதலர் சில் ...... ...... ...... 29. ...... ...... ...... குருத்தலரப் பீடா ரிரலை பிணை தழுவக் - காடாரக் கார்வானம் வந்து முழங் .... .... .... ...... ...... ...... ...... 30. ...... ...... ...... ...... . ..... ...... ...... ...... கொன்றை கொடுகுழ லூதிய கோவலர் மன்றம் புகுதரும் போழ்து. 31. ...... ...... ...... ...... ...... ...... ...... ...... ...... ...... ...... வானம் வந்து துளிவழங்கக் கண்டு. 32. காரெதிர் வானங் கதழெரி சி .... ...... ...... ...... ...... ...... ...லக மெழு நெஞ்சே செல்லாயாற் கூரெரி மாலைக் குறி. 33. தளையவிழ் தே ...... ...... ...... ...... ...... ...... ...... உளையார் கலிநன் மாப் பூட்டி வருவார் களையாரோ நீயுற்ற நோய். 34. முல்லை யெயிறீன ...... ...... ...... ..... ......ன மல்கிக் கடன்முகந்து கார்பொழியக் காதலர் வந்தா ருடனியைந்த கெ...... ....... 35. ...... ...... ...... ...... ...... ......ரடைப் பால்வா யிடையர் தெரிவிலர் தீங்குழ லூதும் பொழுதா லரித. தோழி பருவங்காட்டித் தலைவர் வருவர் என வற்புறுத்தி யாற்று வித்தல் 36. பிடவங் குருந்தொடு பிண்டி மலர மடவ மயில் கூவ மந்திமா கூரத் தடமலர்க் கோதையாய் தங்கார் வருவ ரிடப மெனக் கொண்டு தாம் 4. மருதம் பரத்தையிற் பிரிந்த தலைவன் பாணனை வாயிலாக விடுக்கத் தலைவி பாணனை நோக்கிக் கூறியது. 37. கழனி யுழவர் கலியஞ்சி யோடித் தழென மதவெருமை தண்கயம் பாயும் பழன வயலூரன் பாணவெம் முன்னர்ப் பொழெனப்பொய் கூறா தொழி. பரத்தையர் சேரியிற் பயின்று வந்த தலைவனைப் புலந்து தலைவி கூறியது. 38. கயலினம் பாயுங் கழனி நல்லூர நயமிலே மெமனை யின்றொடு வாரல் துயிலி னிளமுலையார் தோணயத்து வாழ்கின் குறி ...... ....... கொண்டு. தலைவன் மகற்கொண்டு வருஞ் சிறப்பினைத் தோழி கண்டு மகிழ்ந்து கூறியது. 39. முட்ட முதுநீ ரடைகரை மேய்ந்தெழுந்து தொட்ட வரிவரால் பாயும் புனலூரன் கட்டலர் கண்ணிப் புதல்வனைக் கொண்டெம்மில் சுட்டி யலைய வரும். வாயிலாக வந்த பாணனுக்குத் தோழி தலைவியின் பண்பு கூறி வாயில் மறுத்தது. 40. தாரா விரியுந் தகைவய லூரனை வாரா னெனினும் வருமென்று - சேரி புலப்படுஞ் சொல்லுமிப் பூங்கொடியன்னார் கலப்படுங் கூடுங்கொன் மற்று. வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது. 41. பொய்கைநல் லூரன் றிறங்கிளப்ப வென்னுடையை அஃதன் றெனினு மறிந்தேம்யாஞ் - செய்தி நெறியி னினியசொன் னீர்வாய் மழலைச் சிறுவ னெமக்குடைமை யால். இதுவும் அது 42. நீத்தநீ ரூர நிலைமையும் வண்ணமும் யார்க்குரைத்தி பாண வதனால்யா மென்செய்தும் கூத்தனாக் கொண்டு குறைநீ யுடையையேல் ஆட்டுவித் துண்ணினு முண். இதுவும் அது 43. போதவிழ் தாமரைப் பூந்துறை யூரனைத் தாதவிழ் கோதைத் தகையியலார் தாம்புலப்பர் ஏதின்மை சொல்லி யிருப்பர் பிறர் மகளிர் பேதைமை தம்மேலே கொண்டு. வாயில் வேண்டிய தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது 44. தண்டுறை யூரன் றடமென் பணைத்தோளாய் வண்டூது கோதை வகைநாடிக் - கொண்டிருந்து கோல வனமுலையும் புல்லினா னென் றெடுத்துச் சாலவும் தூற்று மலர். வாயிலாக வந்த பாணற்குத் தலைவி வாயில் மறுத்தது. 45. மூத்தே மினிப்பாண முன்னாயி னாமிளையேம் கார்த்தண் கலிவய லூரன் கடிதெமக்குப் பாத்தில் பயமொழி பண்பு பலகூறி நீத்த லறிந்திலே மின்று. இதுவும் அது 46. சுயநீர்பாய்ந் தோடுங் காஞ்சிநல் லூரன் நயமே பலசொல்லி நாணினன் போன்றான் பயமில்யாழ்ப் பாண பழுதாய கூறா தெழுநீபோ நீடாது மற்று. இதுவும் அது 47. அரக்காம்ப றாமரை யஞ்செங் கழுநீர் ஒருக்கார்ந்த வல்லி யொலித்தாரக் குத்துஞ் செருக்கார் வளவய லூரன்பொய்ப் பாண விருக்க வெம்மில்லுள் வரல். இதுவும் அது 48. கொக்கார் வளவய லூரன் குளிர்சாந்த மிக்கவனமுலை புல்லான் பொலிவுடைத்தா தக்கயாழ்ப் பாண தளர்முலையாய் மூத்தமைந்தார் உத்தரம் வேண்டா வரல். 49. நாவாய் வழங்கு நளிதிரைத் தண்கடலுள் ஓவா கலந்தார்க்கு மொல்லெ னிறாக்குப்பைப் பாவாரஞ் சேர்ப்பற் குரையாய் பரியாது நோயா னுணுகிய வாறு. 50. நெடுங் கடற் சேர்ப்ப நின்னோ டுரையேன் ஒடுங்கு மடற் பெண்ணை யன்றிற்குஞ் சொல்லேன் கடுஞ்சூளிற் றான்கண்டு கானலுண் மேயுந் நடந்தாண் மட நாராய் கேள். இதுவும் அது 51. மணிநிற நெய்தன் மலர்புரையுங் கண்ணாய் அணிநல முண்டிறந்து ....ம் மருளா விட்ட துணிமுந்நீர்ச் சேர்ப்பதற்குத் தூதோடு வந்த பணிமொழிப் புள்ளே பற. இதுவும் அது 52. அன்னையு மில்கடிந்தாள் யாங்கினியா மென்செய்கம் புன்னையங் கானலுட் புக்கருந்தும் - நின்னை நினையான் றுறந்த நெடுங்கழிச் சேர்ப்பற் குரையேனோ பட்ட பழி. வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித்தலைவி தோழிக்குக் கூறியது 53. அலவன் வழங்கு மடும்பிமி ரெக்கர் நிலவு நெடுங்கான னீடார் துறந்தார் புலவுமீன் குப்பை கவருந் துறைவன் கலவான்கொ றோழி நமக்கு. இதுவும் அது 54. என்னையர் தந்த விறவுணங்கல் யாங்கடிந்து புன்னையங் கான லிருந்தேமாப் பொய்த்தெம்மைச் சொன்னலங் கூறி நலனுண்ட சேர்ப்பனை யென்னைகொல் யாங்காணு மாறு. பாங்கி தலைவன் இயற்பழித்துழித் தலைவி இயற்பட மொழிந்தது. 55. கொக்கார் கொடுங்கழிக் கூடுநீர்த் தண்சேர்ப்பன் தக்காங் கசதி தனியாடித் - தக்க பொருகயற் கண்ணினாய் புல்லான் விடினே இருகையும் நில்லா வளை. வரைபொருட் பிரிவு நீட்டித்தவழித் தலைவி தோழிக்குக் கூறியது 56. நுரைதரு மோதங் கடந்தெமர் தந்த கருங்கரை வன்மீன் கவரும்புள் ளோப்பிற் புகரில்லேம் யாமிருப்பப் பூங்கழிச் சேர்ப்பன் நுகர்வன னுண்டா னலம். தோழி இரவுக் குறியிடம் தலைவிக்குணர்த்தியது. 57. கொடுவாய்ப் புணரன்றில் கொய்மடற் பெண்ணைத் தடவுக் கிளைபயிருந் தண்கடற் சேர்ப்பன் நிலவுக் கொடுங்கழி நீந்திநம் முன்றிற் புலவுத் திரைபொருத பேரழ்து. தலைவி தோழியிடம் பிரிவாற்றாமை கூறி வருந்துதல் 58. சுறாவெறி குப்பை சுழலுங் கழியுள் இறாவெறி யோத மலற விரைக்கும் உறாநீர்ச் சேர்ப்பனை யுள்ளி யிருப்பிற் பொறாஅவென் முன்கை வளை. இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக நிற்க தோழி தலைவிக்குக் கூறுவாளாய்ப் படைத்து மொழிந்தது. 59. தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை மாழை மானோக்கின் மடமொழி - நூழை நுழையு மடமகன் யார்கொலென் றன்னை புழையு மடைந்தாள் கதவு. வினைமுற்றி மீண்ட தலைமகன் வரவுகண்ட தோழி தலைவிக்குக் கூறியது 60. பொன்னம் பசலையுந் தீர்ந்தது பூங்கொடி தென்னவன் கொற்கைக் குருகிரிய - மன்னரை யோடு புறங்கண்ட வொண்டாரான் றேரிதோ கூடலணைய வரவு. முதுமொழிக் காஞ்சி ஆசிரியர் : கூடலூர் கிழார் உரை : பழைய பொழிப்புரை முதுமொழிக் காஞ்சி மூலமும் விருத்தியுரையும் ------ 1. சிறந்த பத்து 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை. (பழைய பொழிப்புரை.) கடல் சூழ்ந்த உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்து ஆசாரமுடைமை. 2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல். (ப-பொ.) பிறர் தன்மேற் செய்யுங் காதலினும் சிறந்தது கற்றவரால் கண்ணஞ்சப்படுதல். 3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை. (ப-பொ.) தானாகப் புதிது ஒன்றையும் மதியுடைமையான் அறியும் அறிவினும் மிக்க சிறப்புடைத்து, தான் கற்றதனைக் கடைப்பிடித்திருத்தல். 4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை யுடைமை. (ப-பொ.) செல்வத்தினும் மிக்க சிறப்புடைத்து மெய்யுடைமை. 5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணியின்மை. (ப-பொ.) இளமையினும் மிக்க சிறப்புடைத்து உடம்பு நோயின்மை. 6. நலனுடை மையி னா ணுச் சிறந்தன்று. (ப-பொ.) அழகுடைமையினும் மிக்க சிறப்புடைத்து நாணுடைமை. 7. குலனுடை மையிற் கற்புச் சிறந்தன்று. (ப-பொ.) நல்ல குலமுடைமையினும் கல்வியுடைமை சிறப்புடைத்து. 8. கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று. (ப-பொ.) தான் ஒன்றைக் கற்கு மதனினும் சிறப்புடைத்துக் கற்றாரை வழிபடுதல். 9. செற்றாரைச் செறுத்தலிற் றற்செய்கை சிறந்தன்று. (ப-பொ.) பகைவரைச் செறுத்தலினும் மிக்க சிறப்பு டைத்துத் தன்னைப் பெருகச் செய்தல். 10. முற்பெரு கலிற்பின் சிறுகாமை சிறந்தன்று. (ப-பொ.) செல்வம் முற்காலத்துப் பெருகிப் பின் அழிதலின் நின்ற நிலைமையிற் சிறுகாமை சிறப்புடைத்து. 2. அறிவுப்பத்து 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரிற் பிறந்தமை ஈரத்தின் அறிப. (ப-பொ.) கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடியிற் பிறந்தமையை அவன் ஈரமுடைமை யானே அறிவர். 2. ஈர முடைமை ஈகையி னறிப. (ப-பொ.) ஒருவன் நெஞ்சின்கண் ஈரமுடையான் என்ப தனை அவன் பிறர்க்குக் கொடுக்கும் கொடையினானே அறிவர். 3. சோரா நன்னட் புதவியி னறிப. (ப-பொ.) ஒருவன் தப்பாத கடைப்பிடியுடைய நல்ல நட்பினையுடையவன் என்பது அவன் நட்டார்க்குச் செய்யும் உதவியினாலே அறிவர். 4. கற்ற துடைமை காட்சியி னறிப. (ப-பொ.) சொற் சோர்வுபடச் சொல்லுதலான் அவனுடைய எல்லாச் சோர்வையும் அறிவர். 5. ஏற்ற முடைமை எதிர்கோளி னறிப. (ப-பொ.) ஒருவன் ஆராய்ந்து துணியவல்லவன் என்பதனை அவன் முற்கொண்டு பாதுகாக்கும் காப்பானே அறிவர். 6. சிற்றிற் பிறந்தமை பெருமிதத்தி னறிப. (ப-பொ.) சிறுமையுடைய குடியின்கண் பிறந்தான் என்ப தனை அவன் செருக்கினாலே அறிவர். 7. குத்திரஞ் செய்தலிற் கள்வனாத லறிப. (ப-பொ.) ஒருவனை யொருவன் படிறு செய்யும் படிற்றால் அவன் கள்வனாதல் அறிவர். 8. சொற்சோர் வுடைமையின் எச்சோர்வு மறிப. (ப-பொ.) சொற் சோர்வுபடச் சொல்லுதலான் அவனு டைய எல்லாச் சோர்வையும் அறிவர். 9. அறிவுசோர் வுடைமையிற் பிறிது சோர்வு மறிப. (ப-பொ.) ஒருவன் தன்னறிவின்கண் சோர்வுடைமையின் எல்லாச் சோர்வுமுடையன் என்பதறிவர். 10. சீருடை யாண்மை செய்கையி னறிப. (ப-பொ.) ஒருவன் புகழுடைய ஆள்வினைத் தன்மையை அவன் செய்கையான் அறிவர். 3. பழியாப்பத்து 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் யாப்பி லோரை இயல்புகுணம் பழியார். (ப-பொ.) கடல்சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒரு செய்கையின் கண்ணும் நிலையில்லாதார் இயற்கையாகிய குணத்தை யாவரும் பழியார். 2. மீப்பி லோரை மீக்குணம் பழியார். (ப-பொ.) மேன்மைக்குணம் இல்லாரை மேன்மை செய்யாமையை யாவரும் பழியார். 3. பெருமை யுடையதன் அருமை பழியார். (ப-பொ.) பெருமையுடைய தொன்றை முடித்துக் கொள்கை அரிதென்று அதனைப் பழித்து முயற்சி தவிரார். 4. அருமை யுடையதன் பெருமை பழியார். (ப-பொ.) அருமையுடைய தொன்றினை முடித்துக் கொள்ளும்பொழுது அரிதென்று பழித்து அதன்கண் உள்ள முயற்சிப் பெருமையைத் தவிரார். 5. நிறையச் செய்யாக் குறைவினை பழியார். (ப-பொ.) ஒரு வினையை நிரம்பச் செய்யாதவர்க்கு முன் போய் அக்குறை வினையை யாவரும் பழியார். 6. முறையி லரசர்நாட் டிருந்து பழியார். (ப-பொ.) நடுவு செய்யாத அரசர் நாட்டின்கண் இருந்து அவ்வரசர் நடுவு செய்யாமையை யாவரும் பழியார். 7. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார். (ப-பொ.) தமக்கு உதவி செய்தற்குத் தக்க நல்ல கேளிர் உதவி செய்திலரென்று பிறர்க்குச் சொல்லிப் பழியார். 8. அறியாத் தேசத் தாசாரம் பழியார். (ப-பொ.) தான் அறியாத தேசத்தின்கண் சென்று அங்குள்ளார் ஒழுகும் ஒழுக்கத்தைப் பழியார். 9. வறியோன் வள்ளிய னன்மை பழியார். (ப-பொ.) வறுமை யுடையானை வண்மையுடையானல்ல னென்று பழியார். 10. சிறியா ரொழுக்கம் சிறந்தோரும் பழியார். (ப-பொ.) சிறுமைக் குணம் உடையாருடைய கீழ்மைக் குணத்தை ஒழுக்கத்தான் மிக்காரும் கண்டால் பழியார். 4. துவ்வாப் பத்து 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பழியோர் செல்வம் வறுமையிற் றுவ்வாது. (ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும் பழியுடையோர் செல்வம் வறுமையின் நீங்கி யொழியாது. 2. கழிதறு கண்மை பேடியிற் றுவ்வாது. (ப-பொ.) இடமுங் காலமு மறியாது மிக்க தறுகண்மை பேடித் தன்மையின் நீங்கியொழியாது. 3. நாணில் வாழ்க்கை பசித்தலிற் றுவ்வாது. (ப-பொ.) நாணழிந்துண்டு வாழும் வாழ்க்கை பசித்தலின் நீங்கி யொழியாது. 4. பேணி லீகை மாற்றலிற் றுவ்வாது. (ப-பொ.) விருப்பமில்லாத கொடை கொடையை நீக்குதலின் ஒழியாது. 5. செய்யாமை மேற்கோள் சிதடியிற் றுவ்வாது. (ப-பொ.) செய்யத் தகாதனவற்றை மேற்கொண்டு செய்யத் தொடங்குவது மையற்றன்மையின் நீங்கி யொழியாது. 6. பொய் வேளாண்மை புலைமையிற் றுவ்வாது. (ப-பொ.) பொய்பட்ட உபகாரம் புலைமையின் நீங்கி யொழியாது. 7. கொண்டுகண் மாறல் கொடுமையிற் றுவ்வாது. (ப-பொ.) ஒருவனை யொருவன் நட்பாகக் கொண்டு வைத்துக் கண்ணோட்டத்தை மாறுதல் கொடுமையின் நீங்கி யொழியாது. 8. அறிவிலி துணைப்பாடு தனிமையிற் றுவ்வாது. (ப-பொ.) அறிவில்லாதானொருவனோடு துணைப்பாடு தனிமையின் நீங்கியொழியாது. 9. இழிவுடை மூப்புக் கதத்திற் றுவ்வாது. (ப-பொ.) இழிவினையுடைய மூப்பு பிறர் வெறுத்து வெகுளும் வெகுட்சியின் நீங்கி யொழியாது. 10. தானோ ரின்புறல் தனிமையிற் றுவ்வாது. (ப-பொ.) தானே ஒருவன் இன்புறுதல் வறுமையின் நீங்கி யொழியாது. 5. அல்ல பத்து 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் நீரறிந் தொழுகாதாள் தாரமல்லள். (ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்கட்கெல்லாம் கொழுநனது குணமறிந் தொழுகாதாள் மனையாளல்லள். 2. தாரமா ணாதது வாழ்க்கை யன்று. (ப-பொ.) மனையாள் மாட்சிமைப்படாத மனை வாழ்க்கை மனைவாழ்க்கை யன்று. 3. ஈரமில் லாதது கிளைநட் பன்று. (ப-பொ.) மனத்தின்கண் ஈரமில்லாதது கிளையுமன்று நட்புமன்று. 4. சோராக் கையன் சொன்மலை யல்லன். (ப-பொ.) பிறர்க்கு ஒன்றை யுதவாத கையுடையோன் புகழைத் தாங்கமாட்டான். 5. நேரா நெஞ்சத்தோன் நட்டோ னல்லன். (ப-பொ.) வேறாய் உடன்படாத நெஞ்சத்தோன் நட்டோனல்லன். 6. தேராமற் கற்றது கல்வி யன்று. (ப-பொ.) கற்பிக்கும் ஆசிரியனுக்கு ஒன்றைக் கொடாது கற்குமது கல்வியன்று. 7. வாழாமல் வருந்தியது வருத்த மன்று. (ப-பொ.) தன்னுயிர் வாழாமை வருந்தியது வருத்தமன்று. 8. அறத்தாற்றி னீயாத தீகை யன்று. (ப-பொ.) அறத்தின் நெறியின் ஈயாதது ஈகையன்று. 9. திறத்தாற்றி னோலா ததுநோன் பன்று. (ப-பொ.) தன் குலத்துக்கும் நிலைமைக்கும் நோவாதது தவமன்று. 10. மறுபிறப் பறியா ததுமூப் பன்று. (ப-பொ.) மறுபிறப்பை யறிந்து அறத்தின்வழி யொழுகாதே மூத்த மூப்பு மூப்பன்று. 6. இல்லைப் பத்து 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் மக்கட் பேற்றிற் பெறும்பே றில்லை. (ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்கட் கெல்லாம் புதல்வரைப் பெறும் பேற்றிற் பெறும் பேறில்லை. 2. ஒப்புர வறிதலிற் றகுவர வில்லை. (ப-பொ.) செயக்கடவன செய்கையோடொக்கும் தகுதி யில்லை. 3. வாய்ப்புடை விழைச்சி னல்விழைச்சு இல்லை. (ப-பொ.) மக்கட்பேறு வாய்த்த கலவி போலும் கலவியின் நல்லதில்லை. 4. வாயா விழைச்சிற் றீவிழைச் சில்லை. (ப-பொ.) மக்கட்பேற்றின் பொருட்டன்றிக் கலக்கும் கலவிபோலத் தீயதில்லை. 5. இயைவது கரத்தலிற் கொடுமை இல்லை. (ப-பொ.) தான் பிறர்க்குக் கொடுக்க இயலும் பொருளை இல்லையென்று கரக்கும் கரப்பிற் கொடுமையில்லை. 6. உணர்வில னாதலிற் சாக்கா டில்லை. (ப-பொ.) ஒருவற்கு அறிவின்மையோ டொக்கும் சாக்காடில்லை 7. நசையிற் பெரியதோர் நல்குர வில்லை. (ப-பொ.) ஆசையின் மிக்கதொரு வறுமையில்லை. 8. இசையிற் பெரியதோ ரெச்ச மில்லை. (ப-பொ.) புகழுடைமையின் மிக்குப் பிறர் பயப்பதோர் ஆக்கம் ஒருவர்க் கில்லை. 9. இரத்தலி னூஉங் கிளிவர வில்லை. (ப-பொ.) இரந்து உயிர் வாழ்தலின்மேல் கீழ்மை இல்லை. 10. இரப்போர்க் கீதலின் எய்துஞ் சிறப்பில்லை. (ப-பொ.) இரப்போர்க்குக் கொடுப்பதின் மிக்கதாய் எய்தும் மேன்மை இல்லை. 7. பொய்ப் பத்து. 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரறிவி னோனினிது வாழாமை பொய். (ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும் ஒருவன் பேரறிவுடையனாயின், அவன் மனத்தால் இன்புற் றொழுகாமை பொய். 2. பெருஞ்சீ ரோன்றன் வெகுளியின்மை பொய். (ப-பொ.) பெருஞ் செல்வத்தைப் பெற்றா னொருவன் வெகுளாமை பொய். 3. கள்ளுண் போன்சோர் வின்மை பொய். (ப-பொ.) கள்ளையுண்போன் ஒழுக்கஞ் சோர்வின்மை பொய். 4. கால மறியாதோன் கையுறல் பொய். (ப-பொ.) காலமறிந்து முயலாதோன் கருமமுடிதல் பொய். 5. மேல்வர வறியாதோன் தற்காத்தல் பொய். (ப-பொ.) எதிர்காலத்து வரும் இடையூறு அறியாதான் தனக்கு அரண் செய்து காத்தல் பொய். 6. உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய். (ப-பொ.) மிக்க கருமம் செய்கைக்கு மடிந்திருப்போன் தனக்கு ஆக்கம் வேண்டுதல் பொய். 7. சிறுமைநோ னாதோன் பெருமை வேண்டல் பொய். (ப-பொ.) பிறர்க்குத் தான் செய்யும் பணிவினைப் பெறாதோன் தனக்குப் பெருமை வேண்டுதல் பொய். 8. பெருமைநோ னாதோன் சிறுமை வேண்டல் பொய். (ப-பொ.) பிறர்க்குத் தான் அரியனாகும் பெருமை வேண்டாதான் தனக்குச் சிறுமைக் குணம் வேண்டுதல் பொய். 9. பொருணசை வேட்கையோன் முறைசெயல் பொய். (ப-பொ.) பொருள் நசையால் வரும் வேட்கையை யுடையான் முறைசெய்தல் பொய். 10. வாலிய னல்லாதோன் தவஞ்செய்தல் பொய். (ப-பொ.) மனத்தின்கண் தூயனல்லாதோன் தவஞ் செய்தல் பொய். 8. எளிய பத்து 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் புகழ்வெய் யோர்க்குப் புத்தேணா டெளிது. (ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்க ளெல்லாருள்ளும் ஒருவர்க்குப் புகழ் விரும்பின் கடவுளர் வாழு நாடு பெறுதல் எளிது. 2. உறழ்வெய் யோருக் குறுசெரு வெளிது. (ப-பொ.) பிறரோடு கலகம் விரும்புவார்க்கு மிக்க செரு எளிது. 3. ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது. (ப-பொ.) மனத்துள் ஈரத்தை விரும்பி யிருப்பார்க்குப் பிறனொருவன் கேட்கக் கொடுத்தல் எளிது. 4. குறளைவெய் யோர்க்கு மறைவிரி யெளிது. (ப-பொ.) குறளைச் சொல்லை விரும்புவார்க்கு ஒருவன் மறையச்செய்த தொன்றனை வெளிப்படுத்திப் பிறரை யறிவித்தல் எளிது. 5. துன்பம் வெய்யோர்க் கின்பம் எளிது. (ப-பொ.) ஒன்றனை முயன்று வருந் துன்பத்தை வெறாதார்க்கு இன்பம் எய்தல் எளிது. 6. இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது. (ப-பொ.) முயன்றுவரும் தன்மையால் வரும் இன்பத்தை விரும்புவார்க்குப் பொரு ளில்லாமையால் வரும் துன்பம் எளிது. 7. உண்டி வெய்யோர்க் குறுபிணி யெளிது. (ப-பொ.) உண்டி மிக விரும்பினார்க்கு மிக்க பிணி எளிது. 8. பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி யெளிது. (ப-பொ.) பெண்டிரை மிக விரும்பினார்க்கு உண்டாகும் பழி எளிது. 9. பாரம் வெய்யோர்க்குப் பாத்தூ ணெளிது. (ப-பொ.) பிறர் பாரத்தைத் தாங்குதலை விரும்புவார்க்குப் பகுத்துண்டல் எளிது. 10. சார்பி லோருக் குறுகொலை யெளிது. (ப-பொ.) நன்னட்பைச் சாராதோருக்குப் பொருந்திய கொலைத்தொழில் செய்தல் எளிது. 9. நல்கூர்ந்த பத்து. 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் முறையி லரசனாடு நல்கூர்ந் தன்று. (ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்துள் எல்லா மக்கட்கும் முறைமை செய்யா அரச னாடு வறுமையுறும். 2. மிகமூத் தோன்காம நல்கூர்ந் தன்று. (ப-பொ.) இளமை கடந்தவன் நுகருங் காமநுகர்ச்சி இன்பம் வற்றும். 3. செற்றுட னுறைவோனைச் சேர்தனல் கூர்ந்தன்று. (ப-பொ.) தன்னைச் செறுத்தொழுகுவானைச் சென்ற டைதல் வறுமையுறும். 4. பிணிகிடந் தோன்பெற்ற வின்பநல் கூர்ந்தன்று. (ப-பொ.) பிணிபட்ட உடம்பை யுடையான் நுகரும் காமவின்பம் வறுமையுறும். 5. தற்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று (ப-பொ.) தன்மே லன்பாற் போற்றாதார் திறத்துப் புலக்கும் புலவி வறுமையுறும். 6. முதிர்வுடை யோன்மேனியணிநல் கூர்ந்தன்று. (ப-பொ.) மூத்த உடம்பினையுடையான் அணியுமணி வறுமையுறும். 7. சொற்செல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று. (ப-பொ.) தன் சொல் செல்லாவிடத்துச் சொல்லிய சொல் வறுமையுறும். 8. அகம்வறி யோனண்ண னல்கூர்ந் தன்று. (ப-பொ.) மனத்தில் நன்மையின்றி வறியோ னொரு வனைச் சென்று நண்ணுதல் வறுமையுறும். 9. உட்கில் வழிச்சின நல்கூர்ந் தன்று. (ப-பொ.) மதியாதார்முன் வெகுளும் வெகுட்சி வறுமையுறும். 10. நட்பில் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று. (ப-பொ.) தன்னோடு நட்பில்லாதார் மாட்டு ஒன்றனை நச்சிய நசை வறுமையுறும். 10. தண்டாப் பத்து 1. அர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான். (ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும் உயர்வு வேண்டுவோன்; பிறரை யுயர்த்துச் சொல்லும் மொழிகளை மாறான். 2. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான். (ப-பொ.) ஆக்கத்தை வேண்டுவோனொருவன் தனக்குப் பல புகழ்வரும் செய்கை களையான். 3. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான். (ப-பொ.) ஒன்றனைக் கற்றல் விரும்புவான் தன்னைக் கற்பிக்கும் ஆசிரியர்க்குச் செய்யும் வழிபாடு ஒழியான். 4. நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான். (ப-பொ.) பிறப்புக் கெடுத்துத் தன்னை நிலைப்பிக்க வேண்டுவோன் தவஞ்செய்தல் ஒழியான். 5. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான். (ப-பொ.) வாழ்தலை மேன்மேலும் விரும்பிய ஒருவன் தான் எடுத்த தொழிலை ஆராய்தல் ஒழியான். 6. மிகுதி வேண்டுவோன் வருத்தந் தண்டான். (ப-பொ.) அளவு மிக்க பொருள் வேண்டுவோன் முயற்சி வருத்தமென நீக்கான். 7. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான். (ப-பொ.) இன்பத்தை விரும்பிய ஒருவன் துன்பத்தைத் துன்பமென்று களையான்; 8. துன்பம் வேண்டுவோன் இன்பந் தண்டான். (ப-பொ.) துன்பத்தை விரும்பிய ஒருவன் இன்பத்தை இன்பமென்று களையான். 9. ஏமம்வேண்டுவோன் முறைசெயல் தண்டான். (ப-பொ.) குடிகளைக் காக்க விரும்பிய அரசன் முறைமைப்படி நடத்த லொழியான். 10. காமம் வேண்டுவோன் குறிப்புச்செயல் தண்டான். (ப-பொ.) காமத்தை விரும்பிய ஒருவன் குறிப்பறிதல் ஒழியான். ஏலாதி ஆசிரியர் : கணிமேதையார் உரை : பழைய பொழிப்புரை ஏலாதி மூலமும் விருத்தியுரையும் ------ சிறப்புப் பாயிரம் இல்லறநூ லேற்ற துறவறநூ லேயுங்கால் சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து - நல்ல அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியுங் கணிமேதை செய்தான் கலந்து. (பழைய பொழிப்புரை.) சிறந்த அழகாகிய அறிவை யுடையாளே! கணிமேதை என்னும் புலவர் இல்லற நூலும் ஞான மடைதற்குரிய துறவற நூலும் ஆகிய கடவுளாற் சொல் லப்பட்ட அற நூல்களின் பொருள்களையும் தளர்ச்சி யின்றித் தொகுத்துக் கூறி ஏற்றவிடத்தில் வீடடைதற்குரிய ஞான வழியையும் உடன் கூட்டி இந்நூலை யியற்றி யருளினார். தற்சிறப்புப் பாயிரம் கடவுள் வணக்கம் அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப் பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால் மறைபுரிந்து வாழுமேன் மண்ணொழிந்துவிண்ணோர்க் கிறைபுரிந்து வாழ்த லியல்பு. (ப-பொ-ரை.) மந்திரி முதலிய இருபத்து நால்வரும் குற்றமற்ற புகழமைந்த தனது சிவந்த பாதங்களாலிட்ட பணியைச் செய்யா நிற்க, ஒழுக்கத்தின் பயனைப் பெறுகின்ற பிரமச்சாரி முதலிய நால்வர் விரும்பிய பொருளைக் கொடுத்துக் கற்றுணர்ந்தடைந்த நான்மறை யொழுக்கத்தை விரும்பி நடந்து ஒருவன் வாழ்வானானால், பூமியினின்று நீங்கித் தேவர்க்கு அரசனாகிய இந்திரனால் விரும்பப்பட்டு வாழ்தல் உண்மையாம். நூல் சென்ற புகழ்செல்வ மீக் கூற்றஞ் சேவகம் நின்ற நிலைகல்வி வள்ளன்மை - என்றும் வழிவந்தார் பூங்கோதா யாறு மறையின் வழிவந்தார் கண்ணே வனப்பு. (ப-பொ-ரை.) நிறைந்த பூவையணிந்த கூந்தலை யுடையாய்! திசையெங்கும் பரந்த புகழ், செல்வம், மேன்மை யாகக் கொள்ளுஞ் சொல், வீரத்தில் அசையாது நின்ற நிலை, கல்வி, வரையாது கொடுத்தல் ஆகிய இவ்வாறும் தொன்மை யுடைய குடிப்பிறந்து திருநான்மறை நெறியி லொழுகுவோரது இலக்கணம். (1) கொலைபுரியான் கொல்லான் புலான்மயங்கான் கூர்த்த அலைபுரியான் வஞ்சியான் யாதும் - நிலை திரியான் மண்ணவர்க்கு மன்றி மதுமலிபூங் கோதாய் விண்ணவர்க்கு மேலாய் விடும். (ப-பொ-ரை.) தேன் பொழியும் பூவை யணிந்த கூந்தலை யுடையாய்! பிறர் புரியும் கொலைத் தொழிலை விரும்பாதவனும், கொல்லாதவனும், தசையை அறிவு மயக்கித் தின்னா தவனும், மிகுந்த வருத்துந் தொழிலைச் செய்யாதவனும், பொய்யொழுக்க மில்லாதவனும், யாது காரணம் பற்றியும் தன்னிலைமையினின்று விலகாதவனும், பூவுலகத்தாரது வணக்கத்துக்குரிய வனாவதுடன் வானுலகத்தார் வணக்கத்துக்கும் உரியனா வது திண்ணம். (2) தவமெளிது தான மரிதுதக் கார்க்கேல் அவமரி தாத லெளிதால் - அவமிலா இன்பம் பிறழி னியைவெளிது மற்றதன் துன்பந் துடைத்த லரிது. (ப-பொ-ரை.) யாவர்க்குந் தவஞ் செய்தல் எளிது. கைப் பொருள் வழங்கல் அரிது, பெரியோர்க்குக் குற்றத்துக்குள் ளாதல் அரிது: நன்னெறியி லொழுகுதல் எளிது, கெடுதலில்லாத இன்ப நெறி தடுமாறிச் சென்றால் பிறப்பிற் பொருந்துதல் எளிது, அவ்வாறு பிறந்ததின்கணுண்டாகுந் துன்பத்தை நீக்கிக் கொள்ளுதல் அரிது. (3) இடர்தீர்த்த லெள்ளாமை கீழினஞ் சேராமை படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - நடைதீர்த்தல் கண்டவர் காமுறுஞ்சொற் காணிற் கலவியின் கண் விண்டவர்நூல் வேண்டா விடும். (ப-பொ-ரை.) பிறர்க்கு நேரிட்ட துன்பம் துடைத்தலும், பிறரை இகழாமையும், கீழ் மக்களோடு பழகாமையும், யாவர்க்கும் பசித்துன்பம் போக்குதலும், உலகம் பழிக்கும் நடையினின்று நீங்குதலும், தன்னை யெதிர்ப்பட்டவர் விரும்பும் இன்சொல்லும் ஒருவன் தானே கண்டுகொண்டா னெனில் சுற்றறிந்தோராற் சொல்லப்பட்ட நூல்களைப் பார்த்து அறிய வேண்டிய பொருள் ஒன்றுமில்லாதவன் ஆவன். (4) தனக்கென்று மோர்பாங்கற் பொய்யான் மெய்யாக்கும் எனக்கென் றியையான் யாதொன்றும் - புனக்கொன்றை போலு மிழையார்சொற் றேறான் களியானேல் சாலும் பிறநூலின் சார்ப. (ப-பொ-ரை.) தனக்கென்றும் தன்னைச் சார்ந்தவனுக் கென்றும் பொய்யுரையாதவனாய், உண்மையையே யுரைப்ப வனாய், யாதொரு பொருளையும் எனக்குரியதென அன்பு வையாதவனாய், முல்லை நிலத்திலுள்ள கொன்றை மலரை ஒக்கும் அணிகளை யணியும் மாதர் சொல்லைப் பேணாத வனாய், செல்வச் செருக்கில்லாதவனாய் ஒருவன் வாழ்வா னாயின்; அவனிடத்து அறநூல்களிற் கூறப்பட்ட மேன்மை யான பொருள்களெல்லாம் வந்து நிரம்பும். (5) நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையே பொறையுடைமை பொய்மை புலாற்கண்-மறையுடைமை வேயன்ன தோளா யிவையுடையான் பல்லுயிர்க்கும் தாயன்ன னென்னத் தகும். (ப-பொ-ரை.) மூங்கிலை யொத்த தோளை யுடையவனே! புலன்வழி போகாது தன் மனதை நிறுத்தலுடைமையும், நற்குணமுடையனாதலும், ஈதலும், பொறுமையோடிருத் தலும், பொய் கூற விடாது தன்னை யடக்குதலும், ஊன் தின்ன விடாது தன்னை யடக்குதலும் ஆகிய இவ்வாறும் பொருந்திய ஒருவன், பல உயிர்கட்கும் தாயினது அன்பு போலும் அன்பினையுடைய வன் என்று யாவருஞ் சொல்லத் தகுந்தவன் ஆவன். (6) இன்சொ லளாவ லிடமினிதூண் யாவர்க்கும் வன்சொற் களைந்து வகுப்பானேல் - மென்சொல் முருந்தேய்க்கு முட்போ லெயிற்றினாய் நாளும் லிருந்தேற்பர் விண்ணோர் விரைந்து. (ப-பொ-ரை.) மிருதுவாகிய சொல்லையும் மயிற்பீலி யினது அடியை யொத்து விளங்கும் கூரிய பல்லையுமுடை யாய்! தன் மனை நோக்கி வரும் விருந்தினர் யாவரிடத்தும் இன் சொற் கூறலும், கலந்துறவாடலும், இருக்கை யுதவுதலும், அறு சுவை யுண்டியளித்தலும் செய்து, கடுஞ்சொல் லொழித்து மென் சொல் வழங்கிச் சிறப்பிப்பானாயின் எக்காலமும் அவனை வானோர் விருந்தினனாய் ஏற்றுக் கொள்வர். (7) உடன்படான் கொல்லா னுடன்றார்நோய் தீர்த்து மடம்படான் மாண்டார்நூன் மாண்ட - இடம்பட நோக்குவாய் நோக்கி நுழைவானேன் மற்றவனை யாக்குமவர் யாக்கு மணைந்து. (ப-பொ-ரை.) ஒன்றினைப் பிறர்கொல்ல உடன்படாது, தானுங்கொல்லாது, பிணியால் வருந்தினால் நோயைத் தீர்த்து, பேதைமையின்கட் படாதே: மாட்சிமைப்பட்டார் நூல்களின் மாட்சிமைப்பட்ட குணங்க டனக்குப் பெருகும்படி யாராயு மாயின், தானாராய்ந்தவற்றின் கணுள்புக்கொழுகு வனாயின், அவனை யணைந்தார்க்கு நெறியெல்லாங் கூடியாக்கும். (8) கற்றாரைக் கற்ற துணரா ரெனமதியா ருற்றாரை யன்னண மோராமல் - அற்றார்கட் குண்டி யுறையு ளுடுக்கை யிவை யீந்தார் பண்டிதராய் வாழ்வார் பயின்று. (ப-பொ-ரை.) கற்றாரை கற்றிலரென்று மனத்திற் கொள்ளாதே, உற்றாரையு முற்றாரென்று கொள்ளாதே, பொருளற்றார்க்குணவும் மருந்தும், உறைவிடமும், உடுக்கை யும் பயின்று கொடுத்தாரறிவுடையாரென்று பிறரான் மதிக்கப் படுவார். (9) செங்கோலான் கீழ்க்குடிகள் செல்வமுஞ் சீரிலா வெங்கோலான் கீழ்க்குடிகள் வீந்துகவும் - வெங்கோல் அமைச்சர் தொழிலு மறியலமொன் றாற்ற எனைத்து மறியாமை யான். (ப-பொ-ரை.) செங்கோலானது செல்வமும், அவன் கீழ் வாழுங் குடிகளது செல்வமும், வெங்கோலானது கேடும், அவன் கீழ் வாழுங் குடிகளது கேடும், வெங்கோலமைச்சரது கேடும், அவர் தொடங்கிய வினை முடியாது கெடுதலும், இவ்வாறி னையுமோர் திறனறிய மாட்டோம், யாது மெமக் கறியப் பொருந்தாமையின். (10) அவாவறுக்க லுற்றான் றளரானவ் வைந்தின் அவாவறுப்பி னாற்ற வமையும் - அவாவறான் ஆகு மவனாயி னைங்களிற்றி னாட்டுண்டு போகும் புழையுட் புலந்து. (ப-பொ-ரை.) மனத்தின்கண் ணவாவினை யறுப்பான் றொடங்கியவன் றன்னவா வின்றியே நிற்கும். பொறி புலனாகிய நிலங்களாலே மெய்ப்பொருள் மேம்படலென ஐவகைப்பட்ட பொருட்கட் செல்லு மவாவினை மிகவு மறுப்பவ னெல்லாக் குணங்களாலு மிக வமைவுடை யனாமன்றி யவாவறா தொழி யுமாயி னைம்பொறி யென்னுங் களிற்றா லலைப்புண்டு நரக வாயிலுட் டுன்பமுற்றுச் செல்லும். (11) கொலைக்களம் வார்குத்துச் சூதாடு மெல்லை அலைக்களம் போர்யானை யாக்கு - நிலைக்களம் முச்சா ரிகையொதுங்கு மோரிடத்து மின்னவை நச்சாமை நோக்காமை நன்று. (ப-பொ-ரை.) பொருது கொல்லுங்கொலைக்களமும், வார்க்குத்துமிடமும், சூதாடுமிடமும், தண்ட முதலாயின வற்றாலலைக்குஞ் சிறைக்களமும், போர் யானைகளைக் கொலை கற்பிப்பானாக்கு நிலையிடங்களும், யானை, தேர், குதிரையான மூன்று திறமுஞ் சாரியை யாக வோடு மோரிடத் துஞ் செல்லுதற்குடன்படாமையும், அவை சென்று நோக்கா மையும் நல்வினை யாம். (12) விளையாமை யுண்ணாமை யாடாமை யாற்ற உளையாமை யுட்குடைத்தா வென்று - களையாமை நூற்பட்டார் பூங்கோதாய் நோக்கி னிவையாறும் பாற்பட்டார் கொண்டொழுகும் பண்பு. (ப-பொ-ரை.) உழவாற் பயிர் விளைக்காமையும், ஐம்பொறிகள் களிப்புற உண்ணாமையும், நீடாடாமையும், பிறர் சொன்ன கடுஞ் சொற்களுக்கு மிக உளையாமையும், உட்குடைய வருத்தங்களை வேறலும், மேற்கொண்ட சீலங்களை யரிதென்று களையாமையுமாகிய இவ்வாறும் துறவின் பாற் பட்டார் கொண்டொழுகு மொழுக்கங்கள் நூற்பட்டார் பூங்கோதாய்! (13) பொய்யான் புலாலொடு கட்போக்கித் தீயன செய்யான் சிறியா ரினஞ்சேரான் - வையான் கயலியலுண் கண்ணாய் கருதுங்கா லென்றும் அயல வயலவா நூல். (ப-பொ-ரை.) பொய்யுரையாது, புலாலையுங், கள்ளை யுமுண்டல் களைந்து, தீவினைகளைச் செய்யாது, சிறியாரினத் தைச் சேராது, பிறர்க்கின்னாதன ஒருவன் சொல்லானாயி னென்று மாராயுங்காலவற்குப் பிறராய்ந்த நூலின றிவால் பயனில்லை கயலுண் கண்ணாய்! (14) கண்போல்வார்க் காயாமை கற்றா ரினஞ்சேர்தல் பண்போல் கிளவியார்ப் பற்றாமை - பண்போலும் சொல்லார்க் கருமறை சோராமை சிறிதெனினும் இல்லார்க் கிடர்தீர்த்த னன்று. (ப-பொ-ரை.) ஒருவன் தனக்குக் கண்போலு நட்டாரைக் காயாமையும், கற்றாரினஞ் சேர்தலும், அரிவையரை மிக அன்பு செய்யாமையும், அவர்க்கு மறை யுரையாமையும், வறியார்க்குச் சிறிதிடராயினுந் தீர்த்தலுமாகியவாறும் நல்ல குணம். (15) துறந்தார்கட் டுன்னித் துறவார்க் கிடுதல் இறந்தார்க் கினிய விசைத்தல் - இறந்தார் மறுதலை சுற்ற மதித்தோம்பு வானேல் இறுதலில் வாழ்வே யினிது. (ப-பொ-ரை.) மனைத் துறந்த வருந்தவரைச் சேர்ந்து, துறவார்க் கீதலைச்செய்து, கல்வியில் மிக்கார்க்கினியவற்றை மருவிச் செய்து, தான் குடிப்பிறந்த வருந்தவரைச் சேர்ந்து, குடியு ளிறந் தாரையும், தனக்கின்னா தாரையு மதித்தவர்க்கு வேண்டுவன செய்வானாயி னிறுதலில் வாழ்வே துறவறத்தினு மினிது. (16) குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம் மடியோம்பு மாற்ற லுடைமை-முடியோம்பி நாற்றஞ் சுவைகேள்வி நல்லா ரினஞ்சேர்தல் தேற்றானேற் றேறு மமைச்சு. (ப-பொ-ரை.) குடிகளைப் பாதுகாத்தலும், வன்கண்மை யுடையனாதலும், பல நூலுங் கற்ற வன்மையும், வஞ்சனை யுடையனாதலும், சோம்பு தன்மாட்டு வாராமையும், பாது காக்கு மாற்றலுடைமையு மென்கின்ற வைந்துமுடையனாய் முடியுடை யரசனா லோம்பி விரும்பப்படு நாற்றமுஞ் சுவையுங் கேள்வியும் விரும்பி நல்லாரினத்தைச் சேர்தல் செய்யானாயி னவன் அரசர்க்கமைச்சனாகத் தேறப்படுவான். (17) போகம் பொருள்கேடு மான்வேட்டம் பொல்லாக்கள் சோகம் படுஞ்சூதே சொல்வன்மை - சோகக் கடுங்கதத்துத் தண்ட மடங்காமை காப்பின் அடுங்கதமி லேனை யரசு. (ப-பொ-ரை.) மகளிரோடு நுகரும் போகமும், தான் தேடிய பொருளைப் பாதுகாவா தழித்துக் கெடுத்தலும், மான் வேட்டையாடுதலும், பொல்லாக் கள்ளினை நுகர்தலும், துன்பம் விளையப்படும் சூதாடுதலும், வன்சொற் சொல்லு தலும், துன்பத்தைச் செய்யும் மிக்க கோபத்தாற் பிறந்த தண்டஞ் செய்தலுமென்கிற இவ்வேழு மாறா வின்ப வாசன் பகையரச ரடுங்கோப முளலாகான். (18) கொல்லான் கொலைபுரியான் பொய்யான் பிறர்மனைமேல் செல்லான் சிறியா ரினஞ்சேரான் -சொல்லும் மறையிற் செவியிலன் றீச்சொற்கண் மூங்கை இறையிற் பெரியாற் கிவை. (ப-பொ-ரை.) தானொன்றனைக் கொல்லான், பிறர் கொன்ற கொலை யினை விரும்பான், பொய் சொல்லான், பிறர் மனையாண்மேற் செல்லான், கீழ்மக்க ளினஞ் சேர்தலை மாட்டான், பிறர் மறை கூறுமிடத்தில் செவி கொள்ளானாய், பிறரைத் தீச்சொற் சொல்லுமிடத்து மூங்கைபோலொழுகு முதன்மையிற் பெரியார்க் கிவ்வேழ் திறமுமாம். (19) மின்னே ரிடையார்சொற் றேறான் விழைவோரான் கொன்னே வெகுளான் கொலைபுரியான் - பொன்னே உறுப்பறுத் தன்ன கொடையுவப்பான் றன்னின் வெறுப்பறுத்தான் விண்ணகத்து மில். (ப-பொ-ரை.) பொன்னேயனையாய்! மின்போலு நேரிடை யார் சொல்லைத் தேறாது, காமநுகர்ச்சியை நினையாது, பயனன்றியே மிக வெகுளாது, ஓருயிரைக் கொலைமேவாது, தன்னுறுப்பறுத்துக் கொடுப்பது போலுங் கொடையுவந்து, தன்மனத்திலுள்ள செருக்கையுமறுத்தான் விண்ணகத்துமிலன். (20) இளமை கழியும் பிணிமூப் பியையும் வளமை வலியிலை வாடும் - உளநாளால் பாடே புரியாது பால்போலுஞ் சொல்லினாய்! வீடே புரிதல் விதி. (ப-பொ-ரை.) பால்போலுஞ் சொல்லினாய்! இளமை நில்லாது கழியும், பிணியும் மூப்பும் வந்தடையும், செல்வமும் வலியும் வாடும், தானுள்ள நாளின்க ணிவ்வைந்தானும் வருந்துன்பத்தையே நுகரவிரும்பாது, வீடுபெறு தலையே விரும்புத லொருவர்க்கு நெறியாவது. (21) வாளஞ்சான் வன்கண்மை யஞ்சான் வனப்பஞ்சான் ஆளஞ்சா னாம்பொருடா னஞ்சான் - நாளெஞ்சாக் காலன் வரவொழிதல் காணின்வீ டெய்திய பாலினூ லெய்தப் படும். (ப-பொ-ரை.) வாள் வென்றியை யஞ்சான், தறுகண்மையை யஞ்சான், தோற்றப்பொலிவினை யஞ்சான், படையாளனென் றஞ்சான், செல்வமுடைய னென்றஞ்சான், நாளினை மறந் தொழியாத காலன் தன்மேல் வரும் வரவினை யொழித லொருவன் காண்பனாயின், வீட்டு நெறியைப் பொருந்திய தன்மையையுடைய நூல்களைச் சாரத்தகும். (22) குணநோக்கான் கூழ்நோக்கான் கோலமு நோக்கான் மணநோக்கான் மங்கலமு நோக்கான் - கணநோக்கான் கால்காப்பு வேண்டான் பெரியார்நூல் காலற்கு வாய்காப்புக் கோடல் வனப்பு. (ப-பொ-ரை.) குணமுடையானென்று பாரான், செல்வ முடையானென்று பாரான், தோற்றப் பொலிவுடையா னென்று பாரான், கலியாணஞ் செய்ய நின்றானென்று பாரான், புண்ணியஞ் செய்ய நின்றானென்று பாரான், சுற்றமுடையானென்று பாரான், ஆதலால் தன்னகர்க்குத் துணையாகிய மனை வாழ்க்கையை வேண்டானாய்ப் பெரியோராற் செய்யப் பட்ட ஆகமத்தைக் காலற்கு வாய்ப்பாகக் கோடல் ஒருவற் கழகாவது. (23) பிணிபிறப்பு மூப்பொடு சாக்காடு துன்பம் தணிவி னிரப்பிவை தாழா - அணியின் அரங்கின்மே லாடுநர்போ லாகாம னன்றாம் நிரம்புமேல் வீட்டு நெறி. (ப-பொ-ரை.) பிணியும், பிறப்பும், மூப்பு, சாக்காடும் இழவினான் வருந் துன்பமும், தேடுதலானே வருங் குறையாத விடும் பையுமென் றிவையாறு மதிட்டியாது வருமாயிற் சொல்வேறு பாட்டினா னரங்கின்கண் வந்தாடும் கூத்தரைப் போலப் பிறந்திறந்துழவலாதே வீட்டுநெறியே யொருவற்கு வந்து நிரம்புமாயினன்றாம். (24) பாடகஞ் சாராமை பாத்திலார் தாம்விழையும் நாடகஞ் சாராமை நாடுங்கால் - நாடகம் சேர்ந்தாற் பகைபழி தீச்சொல்லே சாக்காடே தீர்ந்தாற்போற் றீரா வரும். (ப-பொ-ரை.) (ஓருறுதி படாத போது) மகளிர் விரும்புகின்ற பாடுமிடஞ் சாராதொழிக, அவர்களாடு நாடகஞ் சேர்ந்து காணாதொழிக, அவர்களாடுமிடஞ் சார்ந்து காணு மாயிற் பகையும், பழியும், பிறர் சொல்லுந் தீச்சொல்லும், சாக்காடு மென்று சொல்லப்பட்ட நான்கு மவர்க்கு நீங்கின போல நீங்கா வாய் வரும். (25) மாண்டமைந்தா ராய்ந்த மதிவனப்பே வன்கண்மை ஆண்டமைந்த கல்வியே சொல்லாற்றல் - பூண்டமைந்த கால மறிதல் கருதுங்காற் றூதுவர்க்கு ஞால மறிந்த புகழ். (ப-பொ-ரை.) மாட்சிமைப் பட்டமைந்தாராய்ந்த மதியுடைமையும், தோற்றப் பொலிவுண்டதாலும், தறுகண்மையும், தன்னாலாளப்பட் டமைந்த கல்வியுடைமையும், சொல்வன் மையும், பொருந்தியமைந்த காலமறிதலு மெனவிவை யாரா யுங்கால் தூதுவர்க்குலகறிந்த புகழாவது. (26) அஃகுநீ செய்ய லெனவறிந் தாராய்ந்தும் வெஃகல் வெகுடலே தீக்காட்சி - வெஃகுமான் கள்ளத்த வல்ல கருதி னிவைமூன்றும் உள்ளத்த வாக வுரை. (ப-பொ-ரை.) வெஃகுதலை யஃகு, வெகுடலைநீக்கு, தீக் காட்சியைக் கருதிச் செய்ய லென்றறிந்தா னொருவன் சொல்லி, நீடுநின் மனத்தின் கருதற்றொழிலாக வேண்டின் நினையாக் கள்ளத்தனவல்ல. (27) மையேர் தடங்கண் மயிலன்னாய் சாயலே மெய்யே யுணர்ந்தார் மிகவுரைப்பர் - பொய்யே குறளை கடுஞ்சொற் பயனிலசொ னான்கும் மறலையின் வாயினவா மற்று. (ப-பொ-ரை.) மையேர் தடங்கண் மயிலன்ன சாயலாய்! அறிவுடையார்தா மெய்யுரையே யுரைப்பார், பொய்யும், வடுச்சொல்லும், குறளையும், கடுஞ் சொல்லும், பயனில சொல்லுமென்று சொல்லப்பட்ட வைந்து மறலையின் வாயின் கண்ணே பிறக்கும். (28) நிலையளவி னின்ற நெடியவர்தா நேரா கொலைகளவு காமத்தீ வாழ்க்கை - அலையளவி மையெனநீள் கண்ணாய்! மறுதலைய விம்மூன்றும் மெய்யள வாக விதி. (ப-பொ-ரை.) தங்கட்குச் சொன்ன நிலையளவின் கண்ணே நின்ற நெடியவர்களுடன் படாத கொலையும், களவும், காமத்தீ வாழ்க்கையுமென்னு மூன்றும், இவற்றுக்கு மறுதலையாகிய கொல்லாமையும், களவு காணாமையும், காமவாழ்க்கைப் படா மையுமென்னுமிம் மூன்று முடம்பின் றொழிலாக அலைத்தலை மேவி மையென நீண்ட கண்ணாய் விதிப்பாயாக. (29) மாண்டவர் மாண்ட வறிவினான் மக்களைப் பூண்டவர்ப் போற்றிப் புரக்குங்கால்-பூண்ட ஒளரதனே கேத்திரசன் கானீனன் கூடன் கிரிதன்பௌ நற்பவன் பேர். (ப-பொ-ரை.) மாட்சிமைப்பட்ட வறிவுடையார், மாட்சி மைப்பட்ட தம் மறிவினாற் புதல்வரைப் பொருந்தியவகை யுரைக்கு மிடத்து, தனக்குப் பிறந்தவ னுரதனென்றும், தன்னே வலாலாதல், தானிறந்த தற்பின்பு குருக் களாலாதல் தன் மனை யாள் வயிற்றே பிறனொருவர்க்குப் பிறந்தவனைக் கேத்தின னென்றும், தீவேட்டு மணம்புரியுமுன் தாய் வீட்டிற் பெற்ற பிள்ளையைக் காநீனனென்றும், மணம் புரிந்தபின் கணவன் வீட்டில் அவனுக்கொளித்துப் பிறனொருவனிடத்துப் பெற்ற பிள்ளையைக் கூடனென்றும், கணவனிறந்த பின்னர் வேறொரு வனுக்குத் தான் மனையாளா யவனொடு பெற்ற பிள்ளையைப் புநர்ப்பவனென்றும் கூறுப. (30) மத்த மயிலன்ன சாயலாய் மன்னியசீர்த் தத்தன் சகோடன் கிருத்திரமன் - புத்திரி புத்ரனப வித்தனொடு பொய்யி லுபகிருதன் இத்திறத்த வெஞ்சினார் பேர். (ப-பொ-ரை.) களிப்பு மிக்க மயிலையொத்த சாயலை யுடையவளே! கூறாது மீந்தவர்களுடைய பெயர்களும் தத்தன், சகோடன், கிருத்திரமன், தௌத்திரன், அபவித்தன், உபகிருதன் என்னும் இவ்வகையே யுள்ளனவாம். (31) உரையான் குலன்குடிமை யூனம் பிறரை உரையான் பொருளொடுவாழ் வாயு - உரையானாய்ப் பூவாதி வண்டுதேர்ந் துண்குழலா யீத்துண்பான் தேவாதி தேவனாத் தேறு. (ப-பொ-ரை.) மலர் முதலியவற்றை வண்டுகள் மொய்த் துண்கின்ற கூந்தலையுடையாளே! தன் குலத்தினுயர் வையும் குடிப் பிறப்பினுயர்வையும் சொல்லாமல், அவ்விரண்டு மில்லாத மற்றவர் மேல் குற்றங் கூறாமல், தன் பொருளி னளவோடு அநுபவிக்குஞ் செல்வத்தையும் ஆயுளையும் வெளிப்படுத்தா னாகி, இரப்பவர்க்குக் கொடுத்துத் தானும் அநுபவிப்பவனைத் தேவர்களிற் சிறந்த தேவனாகத் தெளிவாய். (32) பொய்யுரையான் வையான் புறங்கூறான் யாவரையும் மெய்யுரையா னுள்ளனவும் விட்டுரையான் - எய்யுரையான் கூந்தன்மயி லன்னாய்! குழீஇயவான் விண்ணோர்க்கு வேந்தனா மிவ்வுலகம் விட்டு. (ப-பொ-ரை.) விரி தோகையன்ன கூந்தலையுடையாளே! பிறர் தீங்கு கருதி யுண்மையும் பேசானாகியும் இகழானாகியும், தனக்குத் தீமை செய்தாரையும் புறத்தில் அவமதித்துப் பேசா னாகியும், ஒருவருக்கு நேர்ந்த இடுக்கண்களை யொழிக்கும் பொருட்டு நடந்த உண்மையைச் சொல்லா னாகியும், தன்னிடத் திலுள்ள பொருள்களை வாய்விட்டுச் சொல்லானாகியும் நண்பனிடத்தும் தன் வறுமைத் துன்பத்தைச் சொல்லானா கியும் உள்ள ஒருவன் இந்த உலகத்தை விட்டு வானுலகிற் கூடியுள்ள தேவர்கட்குத் தலைவனாகிய இந்திரனாவான். (33) சிதையுரையான் செற்ற முரையான் சீறில்லான் இயல்புரையா னீன முரையான் - கசையவர்க்குக் கூடுவ தீவானைக் கொவ்வைபோல் செவ்வாயாய் நாடுவர் விண்ணோர் நயந்து. (ப-பொ-ரை.) கோவப்பழம் போன்ற சிவந்த வாயினையு டையாய்! கீழ்மையான சொற்களைப் பேசாமலும், சினமூட்டுஞ் சொற்களைக் கூறாமலும், சீறுதலில்லாமலும், தன்னாலியங்கக் கூடிய மேம்பாட்டை எடுத்துப் பாராட்டா மலும், பிறர் குற்றங்களைச் சொல்லாமலும், தன்னிடத்து வந்து ஏற்றோர்க்கு இல்லையென்னாது இசைந்தமட்டு முதவுவோ னைத் தேவர்கள் தங்களுடனிருந்து மகிழ விரும்புவர். (34) துறந்தார் துறவாதார் துப்பிலார் தோன்றா திறந்தாரீ டற்றா ரிளையர் - சிறந்தவர்க்கும் பண்ணாளுஞ் சொல்லாய்! பழியிலூண் பாற்படுத்தான் மண்ணாளு மன்னனாய் மற்று. (ப-பொ-ரை.) பண்ணின் இனிமையை வென்ற சொல்லை யுடைவளே! துறந்தவர்க்கும், துறவாதவராகிய பிரம்மச்சாரி வானப்பிரத்த னிவர்க்கும், வறியார்க்கும், தென்புலத்தார்க்கும், பலமற்றவர்க்கும், இவர்போல்வராகிய மற்றுஞ்சிறந்த தக்கார்க் கும் நல் வழியிலீட்டிய உணவை யளித்தன்பு செய்தவன் மறு பிறப்பில் பூ மண்டலத்தை யாளுமன்னனாவான். (35) காலில்லார் கண்ணில்லார் நாவில்லார் யாரையும் பாலில் லார் பற்றிய நூலில்லார் - சாலவும் ஆழப் படுமூ ணமைந்தா ரிமையவரால் வீழப் படுவார் விரைந்து. (ப-பொ-ரை.) நொண்டிகளுக்கும், குருடர்களுக்கும், ஊமைகளுக்கும் எவரையும் நம்பக்கம் துணையாக இல்லாத வர்களுக்கும், பதிந்த நூலறி வில்லாதவர்க்கும் நீரினாற் சமைக் கப்பட் டாழ்ந்த உணவை விரும்பி யளித்தவர்; தேவர்களால் விரைவாக விரும்பப் படுவார். (36) அழப்போகா னஞ்சா னலறினாற் கேளான் எழப்போகா னீடற்றா ரென்றும் - தொழப்போகான் என்னேயிக் காலனீ டோரான் தவமுயலான் கொன்னே யிருத்தல் குறை. (ப-பொ-ரை.) காலனானவன் ஒருவனுக்கு இறுதிக்காலம் வந்து விட்டால், அழுதாலும் விட்டுப் போகின்றவனல்லன், ஓ என அலறிக் கூவினுங் கேட்டிரங்குகின்றவனல்லன், எழுந்தெங் கேனுஞ் செல்வதற்கும் விடாதவன், இழந்து வலியற்றிருப்போர் நின்னையே குல தெய்வமாக வழிபடுவோம் என்று வணங்கவும் விட்டுச் செல்கின்றவனல்லன், இக்காலன் என்ன தன்மையனாயிருக்கின்றான், ஆதலின், காலனது வரவுக்கோர் உபாயஞ் சூழாது, தவம் புரியாது வீணாட் கழித்துக் கொண்டிருப்பது தகாத செய்கை. (37) எழுத்தினா னீங்காதெண் ணாலொழியா தேத்தி வழுத்தினான் மாறாது மாண்ட - ஒழுக்கினால் நேராமை சால வுணர்வார் பெருந்தவம் போகாமை சாலப் புலை. (ப-பொ-ரை.) இறப்பும் பிறப்புமாகிய துன்பம் கல்வியறி வினளவே நீங்காது, தியான அளவிலே நீங்காது, துதிக்குந் தோத்திரத்தினாலும் நீங்காது, இவை முதலாகிய மாட்சிமைப் பட்ட ஒழுக்கங்களினாலேயும் அவை தீர்த்துப் பேரின்பம் வாயாமை முற்றுங் கண்ட துறந்தோரது மாதவத்தை அடையா திருத்தல் மிக்க அறியாமையாம். (38) சாவ தெளிதரிது சான்றாண்மை நல்லது மேவ லெளிதரிது மெய்போற்றல் - ஆவதன்கண் சேற லெளிது நிலையரிது தெள்ளியராய் வேற லெளிதரிது சொல். (ப-பொ-ரை.) இறத்தல் எளியது, அதற்கு முன் நல்லோன் எனப் பெயர் படைத்தல் அரியது, நல்ல பொருளை விரும்பி யதனையடைதல் எளியது, வாய்மையைத் தனக்குக் காப்பாகக் கொண்டொழுகுவது அரியது, தனக்குத் துணையாவதாகிய பெருந்தவத்திற்குச் செல்வது எளியது, நிட்டை கைகூடும் வரை நிலைத்தல் அரியது, தெளிந்த ஞானியரான விடத்தும் ஐம்புலன் களையும் வென்று அவித்தலை எளிய காரியமாகச் செய்தல் அரியதாகு மெனச் சொல். (39) உலையாமை யுற்றதற் கோடி யுயிரை அலையாமை யையப் படாமை - நிலையாமை தீர்க்கும்வாய் தேர்ந்து பசியுண்டி நீக்குவான் நோக்கும்வாய் விண்ணி னுயர்வு. (ப-பொ-ரை.) தனக்குற்ற துன்பத்துக் கோடித் தளராது, பிறருயிரை வருந்த அலையாது, மறுமையை ஐயப்படாது, நிலையாத பிறப்பைத் தீர்க்கும் வா யாராய்ந்து, பசியினையு முண்டியினையு நீக்கித் தவஞ் செய்தா னுறைதற்கே யாராயு மிடம் விண்ணினுச்சி. (40) குறுகான் சிறியாரைக் கொள்ளான் புலால்பொய் மறுகான் பிறர்பொருள் வெளவான் - இறுகானாய் ஈடற் றவர்க்கீவா னாயி னெறிநூல்கள் பாடிறப்ப பன்னு மிடத்து. (ப-பொ-ரை.) சிற்றினத்தைக் குறுகாது, புலாலை விரும்பாது, பொய்யுரையைக் கொண்டொழுகாது, பிறர் பொருளை விரும்பாது, பற்றுள்ளத்தா லிறுகாது தளர்ந்தார்க் கொன் றீவானாயினறஞ்சொல்லு நூல்கள் சொல்லுமிடத்துப் பயனற்றன. (41) கொல்லா னுடன்படான் கொல்வா ரினஞ்சேரான் புல்லான் பிறர்பாற் புலான்மயங்கல் - செல்லான் குடிப்படுத்துக் கூழீந்தான் கொல்யானை யேறி அடிப்படுப்பான் மண்ணாண் டரசு. (ப-பொ-ரை.) பிறிதோருயிரைக் கொல்லாது, கொல்லு தற்குடன்படாது, கொல்லா ரினத்தைச் சேராது, பிறர்மனை யாளை விரும்பாது, ஊனுண்ட லோடு கலவாது, பிறருடைய குடிகளை நிறுத்திக் கூழையீந்தவன் கொல்யானை யேறி மண்ணை யாண்டிடப் படுவன். (42) சூதுவவான் பேரான் சுலாவுரையான் யார்திறத்தும் வாதுவவான் மாதரார் சொற்றேறான் - காதுதாழ் வான்மகர வார்குழையாய் மாதவர்க் கூணீந்தான் தான்மகர வாய்மாடத் தான். (ப-பொ-ரை.) சூதினைக் காதலியாது, ஒன்றினான் மறைந்து வஞ்சியாது, பயனில்லவற்றைப் பரக்கவுரையாது, ஒருவர் திறந்து மாறுபட்டுரைத்தலைக் காதலியாது, மாதரார் சொல்லு மின் சொல்லைத் தேறாது, காது தாழச் செய்யாநின்ற வாபரணங் களார் குழையாய்! மாதவர்க் கூணீந்தவன்றான் மகரத்தொழி லையுடைய வாயின் மாடத்து வாழ்வான். (43) பொய்யான்பொய் மேவான் புலாலுண்ணான் யாவரையும் வையான் வழிசீத்து வாலடிசில் - நையாதே ஈத்துண்பா னாகு மிருங்கடல்சூழ் மண்ணரசாய்ப் பாத்துண்பா னேத்துண்பான் பாடு. (ப-பொ-ரை.) தான் பொய்யுரையாது, பிறர் சொல்லும் பொய்க் குடன் படாது, புலாலுண்ணாது, யாவரையும் வையாது, பலர் போம் வழிகளையுந் திருத்தி, நல்ல வடிசிலை யொழியாதே யீத்துண்பானாகு மிருங்கடல்சூழ் மண்ணர சராய்ப் பகுத்துண் பான் பிறராற் றன்பெருமையேத் துண்பா னும். (44) இழுக்கா னியனெறி யின்னாத வெஃகான் வழுக்கான் மனைபொருள் வெளவான் - ஒழுக்கத்தால் செல்வான் செயிரிலூ ணீவா னரசாண்டு வெல்வான் விடுப்பான் விரைந்து. (ப-பொ-ரை.) தானொழுகு நெறியைத் தப்பாது, பிறர்க் கின்னாதன வற்றைச் செய்ய விரும்பாது, பிறன் மனை பிழையாது, பிறர் பொருள் வெளவாது, தானொழுகுங்கா லொழுகி, குற்றமில்லாத வுணவினையீவான், அரசாண்டு பகைவரை விரைந்து நீக்கி வெல்வான். (45) களியான்கள் ளுண்ணான் களிப்பாரைக் காணான் ஒளியான் விருந்திற் குலையான் - எளியாரை எள்ளானீத் துண்பானே லேதமின் மண்ணாண்டு கொள்வான் குடிவாழ்வான் கூர்ந்து. (ப-பொ-ரை.) கள்ளையுண்டு களியாமலும், கள்ளையுண் ணாமலும், களிப்பாரைக் காணாமலும், வந்த விருந்தினரை ஓம்புதற்குப் பயந்து ஒளியாமலும், விருந்தினரை ஓம்பி மனநோ காமலும், ஏற்றோர்க்குக் கொடுத்துத் தானும் உண்பானாயின், தானே மண் அனைத்தும் ஆண்டு கொள்வது மன்றித் தன் இல்லற வாழ்க்கையினும் ஓங்கி வாழ்வான். (46) பெரியார்சொற் பேணிப் பிறழாது நின்று பரியா வடியார்ப் பறியான் - கரியார்சொல் தேறா னியையான் தெளிந்தடிசி லீத்துண்பான் மாறான்மண் ணாளுமா மற்று. (ப-பொ-ரை.) ஓழுக்கத்திற் பெரியோரது உறுதிமொழி யைப் போற்றி, அவ்வொழுக்குக்குத் தக வழுவாது நிலைத்து, அன்பு நிறைந்த அடியவரை விட்டு நீங்காது, மருள் நீங்காரது சொல்லைக் கொள்ளாது, அவரோடு பொருந்தாது, வேள் வியின் பயனறிந்து பகுத்துண்பவன், நீங்காதவனாய்ப் பூமி முழுதும் ஆளும் அரசன் ஆவான். (47) வேற்றரவஞ் சேரான் விருந்தொளியான் தன்னில்லுள் சோற்றரவஞ் சொல்லியுண் பானாயின் - மாற்றரவங் கேளான் கிளையோம்பிற் கேடி லரசனாய் வாளான்மண் ணாண்டு வரும். (ப-பொ-ரை.) பழிதருஞ் செயலை விரும்பானாகி. வந்த விருந்தினர்க் கஞ்சி ஒளியாமல் தன் இல்லத்தில் பிறர் வந்துண்ணும் படியாகத் தான் உண்ணுஞ் செய்தியை யறிவித்துப் பின் ஒருவன் உண்பானாயின், பகையரசர் சொல்லுங் கேட்க வேண்டானாய்த் தன் குடும்பத்தைப் பேணி அழிவில்லாத அரசு ரிமையுடையவனாய் வாளால் வெல்லும் பூமியினை ஆண்டு கொண்டிருப்பான். (48) யானை குதிரைபொன் கன்னியே யானிரையோ டேனை யொழிந்த விவையெல்லாம் - ஆனெய்யால் எண்ணனாய் மாதவர்க் கூணீந்தான் வைசிர வண்ணனாய் வாழ்வான் வகுத்து. (ப-பொ-ரை.) யானையும் குதிரையும் பொன்னும் கன்னிகையும் பசுவின் கூட்டமும், மற்றப்பொருள்களும் வேண் டிய அவரவர்க்கு வகையறிந்து ஈந்தவனும், மாதர்க்குப் பசுவி னெய்யுடன் உணவளித்து அன்பு செய்தவனும் ஆகிய ஒருவன்; குபேரப் பட்டம் பெற்று வாழ்வான். (49) எள்ளே பருத்தியே யெண்ணெ யுடுத்தாடை வள்ளே துணியே யிவற்றோடு - கொள்ளென அன்புற் றசனங் கொடுத்தான் றுணையினோ டின்புற்று வாழ்வா னியைந்து. (ப-பொ-ரை.) அன்புடன் உணவினையும் எள்ளினாகிய எண்ணெயையும் பருத்தியினாகிய உடுக்கையையும் கொடுத்து, கணக்கு நூலையும் இலக்கண நூலையும் பயன்படும் நுட்பத் தோடும் தெளிந்த அறிவோடும் கொள்வோர்க்கு உளமார உதவி யவன்; தன் மனைவியுட னின்புற்று அளாவி வாழ்வான். (50) உண்ணீர் வளங்குளங் கூவல் வழிப்புரை தண்ணீரே யம்பலந்தான் பாற்படுத்தான்- பண்ணீர பாடலொ டாடல் பயின்றுயர் செல்வனாய்க் கூடலொ டூடலுளான் கூர்ந்து. (ப-பொ-ரை.) நாட்டினுள் நீர்வளத்தையும் குளத்தையும் கிணற்றையும் பலருஞ் செல்லும் வழியிற் றங்குதற்குரிய சிறுவீடுகளையும், தண்ணீர்ப் பந்தல்களையும் மண்டபங்களை யும் வகையினால் அமைப்பித்தவன்; சிறந்த செல்வமுடைய வாய், இசையோடு பொருந்தின இயல்புடைய பாடலையும் ஆடலையும் பன்முறை கேட்டுங் கண்டும் அநுபவித்து உள்ளன் புடைய மாதர்களின் ஊடலோடு கூடுதலை மிகுந்துள்ளவன் ஆவான். (51) இல்லிழந்தார் கண்ணிழந்தா ரீண்டியசெல் வம்மிழந்தார் நெல்லிழந்தா ரானிசை தானிழந்தார்க் - கெல்லுழந்து பண்ணியூ ணீய்ந்தவர் பல்யானை மன்னராய் எண்ணியூ ணார்வா ரியைந்து. (ப-பொ-ரை.) வீட்டை இழந்தவர்களுக்கும், கண்ணி ழந்தவர்களுக்கும், சேர்ந்திருந்த செல்வத்தை இழந்தவர் களுக்கும் விளைந்த நெல்லை யிழந்தவர்கட்கும், பசுமந்தையை இழந்தவர்களுக்கும், இரவிலும் வருந்தி முயன்று பொருளை யீட்டி உணவுகளைச் சமைத்துக் கொடுத்தவர்; பலவாகிய யானைப்படையையுடைய அரசர்களாய் மதிக்கப்பட்டு, மனைவி மக்கள் முதலியவர்களுடன் கூடி நுகர் பொருளை நுகர்ந் திருப்பர். (52) கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கான் முடம்பட்டார் மூத்தார் மூப்பில்லார்க் - குடம்பட் டுடையரா யில்லுளூ ணீத்துண்பார் மண்மேல் படையராய் வாழ்வார் பயின்று. (ப-பொ-ரை.) கடன்பட்டவர்களுக்கும், தம்மைக் காப்பவர் ஒருவரும் இல்லாதவர்களுக்கும், பொருளில்லா தவர்கட்கும், தன் கால் முடம் பட்டவர்க்கும், முதிர்ந்தவர் களுக்கும், பெற்றோர் முதலிய பெரியார்க ளில்லாதவர்க்கும் மனமியைந்து அன்புடையவர்களாய்த் தம் வீட்டில் உணவு கொடுப்பித்து உண்பவர்; பூமியின்மீது நால்வகைப் படை களையுமுடைய மன்னர்களாய் மனைவி மக்களுடன் கூடி இன்பமுடன் வாழ்வார்கள். (53) பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள் கார்ப்பார் தமையாதுங் காப்பிலார் - தூப்பால நிண்டாரா லெண்ணாது நீத்தவர் மண்ணாண்டு பண்டாரம் பற்றவாழ் வார். (ப-பொ-ரை.) பார்ப்பாரும், பசித்தவர்களும், தவஞ்செய் கின்றவர்களும், பாலர்களும், உடம்பை வெறுக்கின்றவர்களும், தங்களைக் காத்தற்குரிய ஆதரவு ஒன்று மில்லாதவர்களும், தூய்மையாகிய தன்மையை யுடையன வாகிய அறநெறிகளில் மிக்கவர்களும் ஆகிய இவர்களுடைய துன்பங்களை யாதொரு பயனையும் விரும்பாமல் போக்கினவர்கள்; பூமியை ஆண்டு செல்வம் தம்மைச் சூழ்ந்திருக்க இன்புடன் வாழ்வார்கள். (54) ஈன்றாரீன் காற்றளர்வார் சூலார் குழவிகள் மான்றார் வளியான் மயங்கினார்க் - கானாரென் றூணீய்த் துறுநோய் களைந்தார் பெருஞ்செல்வம் காணீய்த்து வாழ்வார் கலந்து. (ப-பொ-ரை.) ஈன்றவர்கட்கும், ஈனுங்காலத்து நோயாற்ற ளர்வார், சூலையுடையார், பிள்ளைகள், பித்தேறினார், வாத நோயாலறிவு கெட்டார், ஓம்புதற் கமைந்தாரென் றூணுதவி யுறுநோயைக் களைந்தார்; பிறர்க்குத் தனங்களை யீய்ந்து பெருஞ் செல்வங்களை நுகர்ந்து வாழ்வார். (55) தளையாளர் தாப்பாளர் தாழ்ந்தவர் பெண்டீ ருளையாள ரூணொன்று மில்லார் - கிளைஞராய் மாவலந்த நோக்கினா யூணீய்ந்தார் மாக்கடல்சூழ் காவலந்தீ வாள்வாரே நன்கு. (ப-பொ-ரை.) தளையீடுண்டார், தாப்பாளர், புலையர், பெண்டுகள், பிணியாலுழன்றார், வறியர் என்றிப் பெற்றிப்பட் டார்க்குக் கிளைஞரா யூணீய்ந்தார்; மானைப் பிணித்த நோக்கை யுடையாய்! பெரிய கடல் சூழ்ந்த மண்ணையாள்வார். (56) கருஞ்சிரங்கு வெண்டொழுநோய் கல்வளி காயும் பெருஞ்சிரங்கு வேர்வயிற்றுத் தீயார்க் - கருஞ்சீரம் மாற்றியூ ணீத்தவை தீர்த்தா ரரசராய்ப் போற்றியூ ணுண்பார் புரந்து. (ப-பொ-ரை.) கருஞ்சிரங்கும், வெள்ளிய தொழுநோயும், கல்லெரிப்பும், வாதமும், காய்ந்திடர் செய்யுங் கழலையும், பெருவயிற்றுப் பெருந்தீயு மென இவ் ஆறு திறத்தாராகிய பிணியுடையார்க்கு மரிய வருத்தத்தைத் தவிர்த் தூணீய்ந் தந்நோய்களைத் தீர்த்தாரே; பின் பரசராய்ப் பிறந் துலகினைக் காத்து விரும்பிய நுகர்ச்சியை நுகர்வார். (57) காமாடார் காமியார் கல்லா ரினஞ்சேரா ராமாடா ராய்ந்தார் நெறிநின்று - தாமாடா தேற்றாரை யின்புற வீய்ந்தார்முன் னிம்மையான் மாற்றாரை மாற்றி வாழ்வார். (ப-பொ-ரை.) காமநுகராது, பொருளின்மேற் காதலி யாது, கல்லாரினஞ் சேராது, நீரில் விளையாடாது, கற்றார் நிற்குநெறியின்க ணின்று, தாம் வழுவா திரந் தேற்றாரையின்பு றும் வகை முற் பிறப்பின்க ணீய்ந்தார் இப்பிறப்பின்கண் பகை வரை வென்றரசராய் வாழ்வார். (58) வணங்கி வழியொழுகி மாண்டார் சொற்கொண்டு நுணங்கிய நூனோக்கி நுழையா - விணங்கிய பானோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய் நூனோக்கி வாழ்வா னுனித்து. (ப-பொ-ரை.) பிறர்க்குப் பணிந்து, நெறியே யொழுகி, மாட்சிமைப்பட்டார் சொற்களை யுகந்துகொண்டு, நுண்ணிய நூல்களை யோதி, நுண்ணிதாக வறிந்து பொருந்திய பான்மை யை நோக்கி யொழுகுவான், குற்றமில்லா வரசனாய் நுண்ணிய நூல்களை யறிந்து மறுமையின்கண் வாழ்வான். (59) பெருமை புகழறம் பேணாமை சீற்றம் அருமைநூல் சால்பில்ல ர் சாரி - னிருமைக்கும் பாவம் பழிபகை சாக்காடே கேடச்சம் சாபம்போற் சாருஞ் சலித்து. (ப-பொ-ரை.) பெருமையும், புகழும், அறம் பேணாத சினமும், அருமை நூலும், சால்புக் குணமுமில்லார் சாரின், இம் மை மறுமையென்னு மிரண்டிற்கும் பாவமும், பழியும், பகையும், சாக்காடும், கேடும், அச்சமு மென்னு மிவ் ஆறு திறமு முனிவராற் சாபமிட்டாற்போலச் சென்று சாரும் வெகுண்டு. (60) ஆர்வமே செற்றங் கதமே யறையுங்கால் ஓர்வமே செய்யு முலோபமே - சீர்சாலா மானமே மாய வுயிர்க்கூன மென்னுமே ஊனமே தீர்ந்தவ ரோத்து. (ப-பொ-ரை.) சுற்றத்தார்மே லன்பும், செற்றமும் கோபமும் சொல்லுங்காற் பாங்கோடுதலும், உள்ளத்தாற் செய்யப்படு முலோபமும், சீர் நிரம்பாத மானமு மென்று சொல்லப்பட்ட ஆறு திறமு மாயத்தையுடைய வுயிர்கட்குக் குற்றமென்று சொல்லும் குற்றந்தீர்த்தார் சொல்லிய நூல்கள். (61) கூத்தும் விழவு மணமுங் கொலைக்களமு மார்த்த முனையுள்ளும் வேறிடத்தும் - ஓத்தும் ஓழுக்கு முடையவர் செல்லாரே செல்லின் இழுக்கு மிழவுந் தரும். (ப-பொ-ரை.) கூத்தாடு மிடத்தும், விழா செய்யுமிடத்தும், மணஞ் செய்யுமிடத்தும் ஆர்த்த போர்க்களத்தும், பகைவரிடத்தும், இதுபோலும் வேறிடத்தும் ஒழுக்கமுடையவர் செல்லார். செல்வராயின் உயிர்க்கிடையூறும் பொருளிழவுந் தரும். (62) ஊணொடு கூறை யெழுத்தாணி புத்தகம் பேணொடு மெண்ணு மெழுத்திவை - மாணொடு கேட்டெழுதி யோதிவாழ் வார்க்கீய்ந்தா ரிம்மையான் வேட்டெழுத வாழ்வார் விரிந்து. (ப-பொ-ரை.) ஊணும், ஆடையும், எழுத்தாணியும், பொத்தகமும் என்கின்ற நான்கினையும், விருப்பத்துடனே யெண்ணும், எழுத்து மென்னு மவற்றையு மாணாக்கர் தொழிலி னாற் கேட்டெழுதி யோதி வாழ்வார், முற்பிறப்பின் கட் கொடுத்தா ரிப்பிறப் பின்க ணுலகத்தார் விரும்பித் தம தாணை விரிந்தெழுத மன்னராய் வாழ்கின்றார். (63) உயர்ந்தான் றலைவனென் றொப்புடைத் தானோக்கி உயர்ந்தா னூலோதி யொடுங்கி - உயர்ந்தான் அருந்தவ மாற்றச் செயின்வீடா மென்றார் பெருந்தவஞ் செய்தார் பெரிது. (ப-பொ-ரை.) எல்லாரினுமுயர்ந்தவன் றலைவனாவா னென்றுள்ளங் கொண்டு, மாற்றவர்க்குச் சொன்ன நன்மை யானே யொக்க வாராய்ந்து, உயர்ந்தவனாற் சொல்லப்பட்ட வாகமத்தை யோதி, அவ்வாகமத்திற் சொன்ன வகையானே யடக்க முடையனாய், அவ்வுயர்ந்தவன் சொல்லிய வரிய தவத்தை மிகவுஞ் செய்தால், பிறப்பில்லாத வீடாமென்று சொல்லினார், மிகவும் பெருந் தவஞ்செய்தார். (64) காலனா ரீடறுத்தல் காண்குறின் முற்றுணர்ந்த பாலனார் நூலமர்ந்து பாராது - வாலிதா ஊறுபா டில்லா வுயர்தவந் தான்புரியின் ஏறுமோ மேலுலக மோர்ந்து. (ப-பொ-ரை.) காலனாரது வலியை யறுத்துப் பிறப்பறுக்கலுறின் முற்றுணர்ந்த தன்மையாரையு மவராற் சொல்லப்பட்ட வாகமத்தையும் விரும்பி யரிதென்று பாரா தூறு பாடில்லாத வுயர்ந்த தவத்தை யொருவன் செய்வானா யின் வீட்டுலகத்தின்க ணேறு மேனோக்கி. (65) பொய்திர் புலவர் பொருள்புரிந் தாராய்ந்த மைதீ ருயர்கதியின் மாண்புரைப்பின் - மைதீர் சுடரின்று சொல்லின்று மாறின்று சோர்வின் றிடரின் றினிதுயிலு மின்று. (ப-பொ-ரை.) பொய்தீர்ந்த வறிவுடையார் பொருளாக விரும்பி யாராய்ந்த குற்றந்தீர்ந்த வீட்டுலகின் மாட்சிமையை யுரைப்போமாயின், ஒளியில்லை, உரையில்லை, மாறுபாடில் லை, கேடில்லை, துன்பமில்லை, இனிய துயிலு மில்லை. (66) கூரம்பு வெம்மண் லீர்மணி தூய்கலும் ஈரும் புகையிரு ளோடிருணூல் - ஆராய்ந் தழி கதி யிம்முறையா னான்றா ரறைந்தார் இழிகதி யிம்முறையா னேழு. (ப-பொ-ரை.) கூரிய வம்பும், வெம்மணலும் குளிர்ந்த மணியு, மொழுகியவன்று மீரத்தக்க புகையு, மிருளிலிருளு மென நூலால் நிரம்பினார் ஆயி னழியுங் கதிகளிம் முறையி னின்று மொழிந்த வருந்தவர் சொல்லினா ரிழிகதியாகிய நரகங்க ளிம் முறை யானேழாக. (67) சாதல் பொருள்கொடுத்த லின்சொற் புணர்வுவத்தல் நோதற் பிரிவிற் கவறலே - ஓதலின் அன்புடையார்க் குள்ளன வாறு குணமாக மென்புடையார் வைத்தார் விரித்து. (ப-பொ-ரை.)சாவிற்சாதலும், பொருள் கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், புணர்ச்சி விரும்புதலும், நோவில் நோதலும், பிரிவின் கலங்குதலுமெனு மிவ்வாறு குணமும் நீங்காத வன்புடையார்க் குள்ளனவாக மெல்லிய திறப்பாட் டை யுடையார் விரித்துரைத்துவைத்தார். (68) எடுத்தன் முடக்க னிமிர்த்த னிலையே படுத்தலோ டாடல் பகரின் - அடுத்துயிர் ஆறு தொழிலென் றறைந்தா ருயர்ந்தவர் வேறு தொழிலாய் விரித்து. (ப-பொ-ரை.) உறுப்பினை யெடுத்து முடக்கலும், நிமிர்த்தலும், நிற்றலும், கிடத்தலும், ஆடுதலுமெனத்தொழி லாறுவகைப்படும். பகர்வேமாயி னித்தொழில்களை யடுத் துயிர் தனது வருத்தமுறுந் தொழிலென்றவற்றை யறிந்தார் சொன்னாரொன்றொன்றனோடு வேறுபட்ட தொழிலாக விரித்து. (69) ஐயமே பிச்சை யருந்தவர்க் கூணாடை ஐயமே யின்றி யறிந்தீந்தான் - வையமும் வானும் வரிசையாற் றானாளு நாளுமே யீனமே யின்றி யினிது. (ப-பொ-ரை.) இரந்தவர்க் கையமும், பிச்சையும், அருந்தவர்க்கூணு, முடையில்லாதார்க் குடையு மென்றிந் நான்கினையுங் கொடைப்பயன்களை யறிந் தையமின்றித் துணிந்து கொடுத்தான்; வையத்தையும் வானத்தையு முறைமை யானே நாடோறுமாளுங் குறைவின்றி யினிதாக. (70) நடப்பார்க்கூ ணல்ல பொறைதாங்கி னார்க்கூண் கிடப்பார்க்கூண் கேளிர்க்கூண் கேடின் - றுடற்சார்ந்த வானகத்தார்க் கூணே மறுதலையார்க் கூணமைத்தான் தானகத்தே வாழ்வான் றக. (ப-பொ-ரை.) வழிபோய் வருந்தினார்க் கூணும், சுமை யெடுத்து வருந்தினார் கூணும், நோய் கொண்டு கிடப் பார்க்கூணும், கேளாயினார்க் கூணும், இறந்து போய வானகத் தார்க்கூணு மமைத் தவன்றா னின்பத்தோடு வாழ்வான் றகுதி பட்டு. (71) உணராமை யாற்குற்ற மோத்தான் வினையாம் உணரான் வினைப்பிறப்புச் செய்யும் - உணராத தொண்டிருந் துன்பந் தொடரும் பிறப்பினான் மண்டிலமு மாகு மதி. (ப-பொ-ரை.) பேதைமையாற் காமம் வெகுளி மயக்க மாகிய முக்குற்றமுளவாம். கல்வியாற் சீலமுளவாம், அறிவிலா தான் செய்யும் வினைகள் பிறப்பினையாக்கும். பிறப்பினானு ணராத தொண்டான் வரும் பெருந்துன்பந் தொடர்ந்து வரும், பின்னையும் பிறப்பாலே பஞ்ச பரிவத் தானமாமென்றவாறு. இதனுட் டுன்ப மென்ப தொன்பது அவ்வொன்பதாவன: உயிரும் உயிரில் லாதனவும், புண்ணியமும் பாவமுற்றுச் செறிப்புங் கட்டு முதிர்ப் பும் வீடுமென விவை. (72) மனைவாழ்க்கை மாதவ மென்றிரண்டு மாண்ட வினைவாழ்க்கை யாக விழைப - மனைவாழ்க்கை பற்றுத லின்றி விடுதல்முற் சொல்லுமேல் பற்றுதல் பாத்திற வம். (ப-பொ-ரை.) மனை வாழ்க்கையு மாதவமென்று சொல்லப்பட்ட விரண்டு மாட்சிமைப்பட்ட நல்வினை வாழ்க் கையாக விரும்புவார்கள். அவற்றில் மனை வாழ்க்கையாவது பொருளின்மேற் பற்றுடையனா யொழுகுதலாம். இதன்கண் முற்சொல்லிய மாதவ மாவது பொருள்கண்மேற் பற்றுதலின்றி நீங்குதல். இனி யோகமாகிய பாத்திறவமாவ துலகி னுச்சிமேற் பற்றுதலாகிய வீட்டைத் தரும். (73) இடைவனப்புந் தோள்வனப்பு மீடின் வனப்பும் நடைவனப்பு நாணின் வனப்பும் - புடைசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல வெண்ணோ டெழுத்தின் வனப்பே வனப்பு. (ப-பொ-ரை.) இடையினழகும், தோளினழகும், பெருமை யினழகும், கடையினழகும், நாணுடைமையினான் வருமழகும், புடையமைந்த கழுத்தினழகும் அழகல்ல, ஒருவர்க்கெண் ணுமெழுத்து மறிதலாகிய வழகே யழகு. (74) அறுவர் தந் நூலு மறிந்துணர்வு பற்றி மறுவரவு மாறான நீக்கி - மறுவரவின் மாசா ரியனா மறுதலைச் சொல் மாற்றுதலே ஆசா ரியன தமைவு. (ப-பொ-ரை.) அறுசமயத்தார் நூலையு மறிந்ததனாலே கூரியவுணர் வுடையனாயவற்றுட் குற்றமுடைய பொருள் களையு மறுதலைப் பட்ட பொருள்களையு நீக்கி மறித்துப் பிறத்த லில்லாத பெரிய சரிதையை யுடையனா யதன்மாட்டு மறுதலைச் சொல் வராமற் சொல்லுதலா சாரியனுக்கியல்பு. (75) ஒல்லுவ நல்ல வருவவேற் கண்ணினாய் வல்லுவ நாடி வகையினால் - சொல்லின் கொடையினாற் போகஞ் சுவர்க்கந் தவத்தால் அடையாத் தவத்தினால் வீடு. (ப-பொ-ரை.) தம்மோடொத்தவாய்த் திருத்தக்க வேல் போன்ற கண்ணை யுடையாய்! வல்ல நூல்களை யாராய்ந்து திறம்படச் சொல்லுவேனாயிற் கொடையாற் போகமும் தவத்தினாற் றுறக்கமும், வேறுபடா தறிவோடு கூடியமிக்க தவத்தினால் வீடும்பெறும். (76) நாற்க தியுந் துன்ப நவைதீர்த்தல் வேண்டுவான் பாற் கதியின் பாற்பட வாராய்ந்து - நூற்க தியின் எல்லை யுயர்ந்தார் தவமுயலின் மூன்றைந்தேழ் வல்லைவீ டாகும் வகு. (ப-பொ-ரை.) தேவர் கதி, நரகர் கதி, விலங்கு கதி, மக்கள் கதி யென்று நான்கு கதியினுமுள்ள துன்பமே, யத்துன்பந் தீர்த்தல் வேண்டுவான் பகுதிப்பட்ட கதிகளின்கூறு பிறழாம லாராய்ந்து நூல்வழியா னெல்லை காண்கின்ற முனிவரது தவத்தை முயல்வனாயின் மூன்றாம் பிறப்பின்கணாத லேழாம் பிறப்பின்கணாதல் விரைந்து வீடாகுமென்று வகுத்துச் சொல்லுக. (77) தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி வாயிழந்த வாழ்வினார் வாணிகம் - போயிழந்தார் கைத்தூண் பொருளிழந்தார் கண்ணிலவர்க் கீய்ந்தார் வைத்து வழங்கி வாழ்வார். (ப-பொ-ரை.) தாயை யிழந்த குழவியும் தலைவனை யிழந்த பெண்டாட்டியும், வாயில்லாத மூங்கைகளும், வாணிகப் பொய்ப் பொருளிழந் தாரும் உண்ணுதற் காதாரமாய பொரு ளையிழந் தாரும் கண்ணில்லா தாருமென்னு மிவர்கட்குப் பொருள் கொடுத்தார் மேலைக்கு வைத்து வழங்கி வாழ்வார். (78) சாக்காடு கேடு பகைதுன்ப மின்பமே நாக்காடு நாட்டறை போக்குமென - நாக்காட்ட நட்டார்க் கியையிற் றமக்கியைந்த கூறுடம் பட்டார்வாய்ப் பட்டது பண்பு. (ப-பொ-ரை.) சாக்காடும் கேடும் பகையும் துன்பமுமின்பமுஞ் சொல்லப்படுகின்ற நாட்டறை போக்கு மென்று சொல்லப்பட்ட விவை நட்டோர்க்கு வருமாயின் மற்றொன்று நாவாடாது தமக்கியைந்த கூறுவுடம்பட்டார் கண்ணேயுள்ள குணம். (79) புலையாளர் புண்பட்டார் கண்கெட்டார் போக்கில் நிலையாளர் நீர்மை யிழந்தார் - தலையாளர்க் கூண்கொடுத் தூற்றா யுதவினார் மன்னராய்க் காண்கொடுத்து வாழ்வார் கலந்து. (ப-பொ-ரை.) தாழ்வையுடைவர்களுக்கும் உடலிற் புண்பட்டவர்களுக்கும், நாடு சுற்றி வருவதில் நிலை கொண்டி ருப்பவர்களுக்கும், மேன்மைத்தன்மை யிழந்தவர் களுக்கும், ஆதரவாய் உணவைக் கொடுத்துதவி செய்தவர்கள்; அரசர் களாய் அடுத்து ஏற்போர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து நண்பர் முதலியவருடன் கூடி இன்புற்று வாழ்வார். (80)