பதினெண்கீழ்க்கணக்கு 1 1. நாலடியார் 2 .நாண்மணிக்கடிகை 3. கார் நாற்பது 4. களவழி நாற்பது 5. இன்னா நாற்பது 6 . இனியவை நாற்பது 7. ஐந்திணை யைம்பது 8. ஐந்திணை யெழுபது 9. திணைமாலை நூற்றைம்பது 10. திணைமொழி யைம்பது பதினெண்கீழ்க்கணக்கு மாணவர் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பதினெண்கீழ்க்கணக்கு - 1 ஆசிரியர் : பழைய உரையாசிரியர்கள் பதிப்பாளர் : இ. தமிழமுது முதல் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 40 + 384 = 424 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 265/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017 வெளியீடு மாணவர் பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை பதினெண்கீழ்க் கணக்கில் உள்ள பல நூல்கள் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவி தமிழ் வளர்த்த காலத்தில் எழுதியவை என்று தமிழ்ச்சான்றோர் குறிப்பிடுவர். கணக்கு என்ற சொல்லுக்கு நூல் என்று பொருள். கீழ் என்பது பாடலின் குறுகிய அளவைக் குறிப்ப தாகும். நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு என்பது பழம்பாடல். பதினெட்டு நூல்களின் பெயர்கள் 1. நாலடி - நாலடியார் 2. நான்மணிக்கடிகை 3. இனியவை நாற்பது, 4. இன்னா நாற்பது, 5. கார் நாற்பது, 6. களவழி நாற்பது 7. திணைமொழி ஐம்பது 8. ஐந்திணை எழுபது, 9. ஐந்திணை ஐம்பது, 10. திணைமாலை நூற்றைம்பது iஎ பதினெண்கீழ்க்கணக்கு - 1 11. முப்பால் - திருக்குறள் 12. கடுகம் - திரிகடுகம் 13. கோவை - ஆசாரக் கோவை 14. பழமொழி - பழமொழி நானூறு 15. மாமூலம் - சிறுபஞ்ச மூலம் 16. காஞ்சி - முதுமொழிக் காஞ்சி 17. ஏலாதி - ஏலாதி 18. கைந்நிலை - கைந்நிலை ஆகிய பதினெட்டு நூல்களாம். திருக்குறள், நாலடியார் இரண்டும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் கூறும் அறநூல்களாகும். நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியன ஒன்பதும் நீதி நூல்களாகும். கார் நாற்பது, திணைமொழிஐம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலைநூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறும் அகப்பொருள் நூல்களாகும். களவழி நாற்பது ஒன்று மட்டும் போர்க்களக் காட்சியைக் கூறும் புறப்பொருள் நூலாகும். பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மக்கள் வாழ்வை வளப்படுத்துவன. இளமையும் - அழகும், செல்வமும் - செல்வாக்கும் பொன்னும் - பொருளும் நிலையற்றது. கல்வி ஒன்றே நிலையானது என்பது இந்நூல்கள் வலியுறுத்திக் கூறும் அரும்பெரும் செய்திகளாகும். தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுத்து உலகத் தமிழினத்திற்கு வாரி வழங்கும் முதுபெரும் தமிழாசான். சங்கச் சான்றோர்கள் வரிசையில் வைத்து எண்ணத்தக்க சொல்லாக்கச் செல்வர், குறளாய அறிஞர். முதுமுனைவர் வணக்கத்துக்குரிய ஐயா இளங்குமரனார் அவர்கள் இவ்வருந்தமிழ்க் மீட்புப் கருவூலத்திற்கு மிகச் சிறந்த நூலாய்வுரை எழுதி எம் தமிழ் பணிக்கு வலிமைச் சேர்த்துள்ளார். இப்பெருந்தகையின் உதவிக்கு என்றும் நன்றியுடையேன். புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடி யெடுத்து வெளியிட்டுத் தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்பகம் தனி முத்திரைப் பதித்து வருவதை தமிழுலகம் நன்கு அறியும் தமிழர் இல்லந் தொறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க அருந்தமிழ்ப் பெட்டக மாம். பதினெண்கீழ்க் கணக்கு நூல்களைத் தமிழ் உலகிற்கு பிழை யற்ற செம்பதிப்பாக வழங்கி யுள்ளோம். முன்னோர்கள் வைப்பாக விட்டுச் சென்ற செந்தமிழ்ச் செல்வங்களையெல்லாம் தமிழ்க் காப்புப் பணிக்கு மறுபதிப்பாக வெளியிட்டு வருகிறோம். தமிழுலகம் கை கொடுத்து உதவும் என்று நம்புகிறோம். “ கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக்கிறாச்சி செய்க” எனும் பாவேந்தர் வரிகளை நினைவில்கொள்வோம். -பதிப்பாசிரியர் மேற்கணக்கும் கீழ்க்கணக்கும் பாட்டியல் நூல்களில் பழமையானது பன்னிரு பாட்டியல், அப்பாட்டியலில், “ அகவலும் கலிப்பாவும் பரிபாடலும் பதிற்றைந் தாதி பதிற்றைம்ப தீறாக மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக் கெனவும் , வெள்ளைத் தொகையும் அவ்வகை எண்பெறின் எள்ளறு கீழ்க்கணக் கெனவும் கொளலே” என்பதொரு நூற்பா. “ மேற்கணக்கு நூல்களின் யாப்பு, அகவல் கலி பரிபா என்பன” என்றும், “ அப்பாடல்கள் எண்ணிக்கை ஐம்பது தொட்டு ஐந்நூறு வரை யுடையன” என்றும், இந்நூற்பா மேற்கணக்கு நூல்களைப் பற்றி உரைக்கின்றது. மேலும், “ வெண்பாக்கள் ஐம்பது முதல் ஐந்நூறு வரை கொண்டது எனின் அது கீழ்க் கணக்கு ஆகும்” என்கிறது. கீழ்க்கணக்கிற்கு அமையும் மற்றோர் இலக்கணம். “ அடிநிமிர்வு இல்லாச் செய்யுள் தொகுதி” என்கிறது. பஃறொடை வெண்பா, கலிவெண்பா என்பவை அடி நிமிர்வுடையவை. அத்தகைய அடிப்பெருக்கம் இல்லா வெண்பாவே கீழ்க்கணக்குக்கு உரியது என்கிறது. மேலும் ஓர் இலக்கணமாக, “ அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வத் திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்” என்கிறது. பன்னிரு பாட்டியல் சொல்லும் இவ் இலக்கணம் கொண்டு மேற்கணக்கும் கீழ்க்கணக்கும் தொகுக்கப்பட்டவை அல்ல. மேற்கணக்கு கீழ்க்கணக்கு என வகுக்கப்பட்ட பின்னர், அத் தொகைகளைக் கொண்டு நூற்பா ஆக்கப்பட்டதே பாட்டியலாம். என்னை எனின், ”எள்ளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுவது போல இலக்கியத்தில் இருந்து எடுக்கப்படுவது இலக்கணம்” ஆதலால் என்க. ஐம்பது முதல் ஐந்நூறு பாடல்கள் என்னும் வரையறைக்குள் மேற்கணக்கு அடங்குவது இல்லை. ஐம்பது பாடல் நூல் எதுவும் அதில் இல்லை. பத்துப்பாட்டு என்பது பத்துப்பாடல்களே; பத்தும் தனித்தனி நூல்களே. ஆதலால், அத்தொகை நூல் ‘தொகை’யே யாம். ஐந்நூறு பாடல் என்பதற்கு ஐங்குறுநூறு சான்றாகும். கீழ்க்கணக்கில் ஐம்பது பாடல்களுக்குக் குறைந்தவை கார்நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்பனவாம். இனிமேல் எல்லை, கீழ்க்கணக்கில் ஒன்றாக அமைக்கப்பட்ட திருக்குறளொடு பொருந்தாது. ஆயிரமும் தாண்டிய மூன்று நூற்று மூன்று பத்துக் குறள் களையுடையது. ஆதலால், இத்தொகைப் படுத்தினார் கருத்தும் அப்பாட்டியலார் கருத்தும் ஒத்துச் செல்லவில்லை. “பாட்டியலார் கண்ட தொகை நூல் வேறு” எனவும் சான்றில்லை. ஆனால், அகவல், கலி, பரிபா, வெண்பா என்னும் யாப்பிலோ, அடி நிமிர்ந்தது. அடிநிமிர் வல்லது என்னும் அடி அளவிலோ வேறுபாடு இல்லை. தொல்காப்பியம், “சின்மென் மொழியால் தாய பனுவலின் அம்மை தானே அடிநிமிர் பின்றே” என, வனப்புகளுள் ஒன்றாய் ‘அம்மை’ இலக்கணமாகக் கூறுகிறது. அம்மை எனும் வனப்பு (நூலழகு) சில சொற்களால், அச்சொற்களும் மெல்லிய இனிய சொற்களால் நடையிடுவதாய் அடிப்பெருக்கம் இல்லாததாய் அமையும் என்கிறார். பன்னிரு பாட்டியலார், ‘அடிநிமிர் பின்றே’ என்பதை, ‘ அடி நிமிர்பில்லாச் செய்யுள்’ என்று அமைத்துக் கொண்டார். ‘சின்மென் மொழி’ என்பதை எடுத்துக் கொண்டார் அல்லர். ‘கணக்கு’ என்பது ‘நூல்’ என்னும் பொருளது ஆதல், “ கணக்கினை, முற்றப் பகலும் முனியாதினி தோதிக் கற்றலிற் கேட்டலே நன்று” என்னும் பழமொழியால் அறியலாம்(5). “ கணக்காயர் இல்லாத ஊர்” ஊரன்று என்பர். கணக்காயர் நூலாய்வார், நூல் கற்பிப்பார். ‘கணக்காயனார்’ என்பார் மதுரையில் இருந்த ஓர் ஆசிரியர். அவர் மகனார் நக்கீரனார். அதனால், “ கணக்காயனார் மகனார் நக்கீரனார்“ எனப்பட்டார். கணக்கு, நூற்பொருள் தருதலால், காலப் பழமை, காலப் பின்மை, நூலளவு, அடியளவு என்பவை கொண்டு மேற்கணக்கு,கீழ்க் கணக்கு எனப்பகுக்கப்பட்டன. பாட்டு தொகையின் காலப் பழமை “இத்தொகை செய்தான் பூரிக்கோ” (குறுந்.) இத்தொகை செய்தான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை (ஐங்குறு.) என்பவற்றால் புலப்படும். ‘பாட்டு தொகை’ என்று வழங்கப்பட்டு, பின்னர்ப், பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்று சொல்லப்பட்டு, அதன் பின்னர் ‘மேற்கணக்கு’ என்றாயது. அத்தொகை நூல்களில் சிக்கலோ,மயக்கமோ இல்லை. கீழ்க்கணக்கு நூல்களில், “இன்னிலையா, கைந்நிலையா” “எந்த நூல் கீழ்க்கணக்கில் சேர்க்கப்பட்டது,” என்னும் மயக்கமும் தருக்கமும் உண்டாயின. அந்நூல் ‘கைந்நிலை’ என்பதேயாம். கீழ்க்கணக்கு நூல்கள்: “ நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைகுப் பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவும் கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு” எனக் கூறப்பட்டன. நாலடி ஒருவர் ஆக்கிய நூலன்று; பலர் பாடிய பாடல் தொகுதி. மற்றவை, நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது (நானாற்பது), ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது (நாலைந்திணை), திருக்குறள் (முப்பால்), திரிகடுகம் (கடுகம்), ஆசாரக்கோவை (கோவை), பழமொழி, சிறுபஞ்ச மூலம் (மாமூலம்), முதுமொழிக்காஞ்சி (காஞ்சி), ஏலாதி, கைந்நிலை என்பன. கீழ்க்கணக்கு நூல்களின் தொகையாக்க அடிப்படை இரண்டு: ஒன்று, வெண்பா யாப்பு; மற்றொன்று, அடிச்சிறுமை. வெண்பா யாப்பு இல்லாத ஒரு நூல், முதுமொழிக் காஞ்சி. அஃது ஈரடியாய் அமைந்து, ஓரடியாய் நடையிடுவது. “ ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை” என்பது முதற்பாடல். பின்னர் வரும 99 பாடல்களும் அவ்வோரடியை முன்வைத்து நடையிடுகின்றன. ஆதலால் ஓரடியாய் நடையிடுவதைப் பாடல் எனலாமோ எனின், எனலாம் என்பது தொல்காப்பியம். அது, “ அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே” (1293) என்பது. முதுமொழிக் காஞ்சி நீங்கிய மற்றைப் பதினேழு நூல்களும் வெண்பா யாப்பினவேயாம். இரா. இளங்குமரன் நாலடியார் நாலடி வெண்பாக்களால் ஆகிய நூல் நாலடியார் எனப்பட்டது. ஆர் சிறப்பு ஈறு. ஒரு நூலின் பெயர் இவ்வாறு சிறப்பு ஈறு பெறுமோ எனின், திருக்கோவையார், திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், சிவஞான சித்தியார் என்னும் பெயர்களைக் காண்க. இந்நூல் நானூறு பாடல்களை யுடைமையால், ‘நாலடி நானூறு’ என்னும் பெயரும் உடையதாயிற்று. அறங்கூறும் அந்நூல் ‘அறம்’ எனப்பட்ட திருக்குறளைத் தழுவி, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பால் பகுப்புடையதாகவே ஆயிற்று. இப்பாடல்கள் ஒருவரால் பாடப்பட்டவை அல்ல; பலர் பாடிய பாடல்கள் என்பதும், அவரவர் எண்ணம்போல் பாடியவை என்பதும், அவற்றைத் தொகுத்து இயன்ற வகையால் பொருளடைவுற வைக்கப் பட்டதென்பதும் இப்பாடல்களை ஓதிய அளவால் எவர்க்கும் புலப் படும். அறத்துப்பால் 13 அதிகாரங்களையும், பொருட்பால் 26 அதிகாரங் களையும் காமத்துப்பால் ஓர் அதிகாரத்தையும் கொண்டுள்ளமையை நோக்குவார்க்கு மணவாத் துறவோர் பாடிய பாட்டு என்பது விளங்கும். தூய்தன்மை (தூய்து அன்மை) என்னும் அதிகாரத்து முதல் ஏழுபாடல்களும் மகளிர் உடலையே இகழ்வதாக இருத்தலால் பெண்டிரைப் பழிக்கும் பெற்றிமைத்துறவர் பாடியது என்பது கொண்டு காமத்துப்பால் சுருங்கியமையை அறியலாம். அறத்துப்பால் திருக்குறளில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம், மக்கட்பேறு, அன்புடைமை எனத் தொடர, இந்நாலடியார் அறத்துப்பால், செல்வநிலையாமை, இளமை நிலை யாமை, யாக்கைநிலையாமை எனத் தொடர்வதை நோக்கத் தலை மாறாகத் தோன்றும். இவ்வாறாயினும் திருக்குறளை அடுத்து வைக்கும் தமிழற நூல் நாலடியே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. “நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி” “பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்” என்னும் பழமொழிகள் ஒப்பப்போற்றல் எண்ணத்தக்கதாம். “ நாலடியும் இரண்டடியும் படித்தவனிடம் வாயடியும் கையடியும் செல்லாது” என்பதும் அதுவே. அவன் முன்னே நடக்கிறான்; அவன்பின்னே அவள் நடக்கிறாள்; வெப்பு மிக்க காடு; முட்காடு; மணல்வழி; அவன்அவள் மென்மையை நினைக்கிறான்; மான் போன்றவளே உன் சிறிய மெல்லிய அடிகளை, என் அடித்தடங்களின் மேலேயே வைத்துவா! அப்படிவந்தால் நடந்த அடிகள் நான்காகத் தோன்றாமல் ஈரடி களாகவே தோன்றும்; இருவரும் ஒருவராய் விட்ட இல்லறச் சீர்மை விளங்கும்; வெப்பு, உருத்தல் இல்லாமல் நீ நடக்கவும் வாய்க்கும் என்பான் போல், “மானடி, காலடி மேலடி; நாலடி ஈரடி” என்றான். இஃது அரங்கக் கோவையில் வரும் “நாலடி வள்ளுவராமே” என்னும் பாடல் கருத்தாம். திருக்குறள் ஈரடியின் விளக்கமாக நாலடிப் பாடல்கள் பல அமைதல் மிகப் பேரின்பம் தருவதாம்; நல் விளக்கமும் ஆவதாம்1 கொடிய வறுமையால் பல நாடுகளில் வாழ்ந்த சமணப் புலவர் எண்ணாயிரவர் பாண்டி நாட்டை அடுத்துப் பாண்டியன் அரவணைப் பால் வாழ்ந்தனர்; பின்னர் நாட்டில் மழை பொழிந்து வளம் பெருகிய தறிந்து அவரவர் நாடு செல்ல அவாவினர்; புலமை மிக்க அவரைப் பிரிய மனமில்லா வேந்தன் வழியனுப்பாது காலத் தாழ்வு செய்ய, அப்புலவர்கள் ஒவ்வோர் வெண்பா இயற்றித் தத்தம் இருக்கை கிடத்து வைத்து அகன்றனராக, அரசன் அறிந்து அவர்கள் மேல் கொண்ட வெறுப்பால் அப்பாடல்கள் அனைத்தையும் கட்டாகக் கட்டி ஆற்றில் போட்டுவிடச் செய்ய, அக்கட்டு ஏடுகளுள் நானூறு ஏடுகள் நீரை எதிர்த்து நாலடி செல்ல அவற்றை எடுத்து நூலாகத் தொகுத் தமையால் நாலடி நானூறு எனப் பெயர் பெற்றது என ஒரு புனைவும் இதற்கு உண்டு. “மன்னன் வழுதியர்கோன் வையைப் பேராற்றின் எண்ணி இருநான்கோ டாயிரவர் - உன்னி எழுதியிடு மேட்டில் எதிரே நடந்த பழுதிலா நாலடியைப் பார்” என்பதொரு வெண்பாவும் வேறோர் அகவலும் உண்டு. நாலடியாரைத் தொகுத்து அடைவு செய்தார் பதுமனார் ஆவர். இதற்குப் பழைய உரைகள் மூன்றும் புத்துரைகள் சிலவும் உளவாயின. நாலடியார் மூலம், கி.பி.1812-ஆம் ஆண்டில் திருக்குறள் மூலப் பதிப்பொடும் இணைத்து நெல்லை அம்பல வாண கவிராயரால் வெளியிடப்பட்ட பெருமையுடையதாம். நான்மணிக் கடிகை நான்கு மணிகளால் அமைந்த மாலை நான்மணிக்கடிகை. அதேபோல் ஒரு பாடலுக்கு நான்கு கருத்துகளைக் கொண்ட நூல் நான்மணிக்கடிகை என்று வழங்கப்பட்டது. “ பொன்னும் முத்தும் துகிழும் மன்னிய மாமலைப் பயந்த காமரு மணியும் இடம்பச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்கும் காலை ஒருவழித் தோன்றி யாங்கு” என்பது புறநானூறு. அதுவே, “சான்றோர் சான்றோர் பால” என்னும். அவ்வாறு சான்ற கருத்துகள் நான்கை ஒவ்வொரு பாடலுக்கும் கொண்ட 104 பாடல்களை உடையது இந் நான்மணிக் கடிகையாம். இதனை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பார். இவர் ஊர்விளம்பி என்பது. “ மாயன் முக மொக்கும் கதிர்” “ சக்கரம் ஒக்கும் ஞாயிறு” “ தாமரை இணைமலர் அவன் கண் ஒக்கும்” “ காயாமலர் ஒக்கும் அவன் நிறம்” “ அடியினால் முக்கால் கடந்தான்” எனக் கடவுள் வாழ்த்துப் பாடுதலால் இவர் மாலிய நெறியராம். அரிய செய்திகள் பலவற்றை இவர் கூறுகிறார்: “கெட்டறிப கேளிரான் ஆய பயன்”-5 “அறிவார் யார் நல்லாள் பிறக்கும் குடி” - 6 “தெற்றென அல்ல புரிந்தாற்கு அறம் தோன்றா” - 10 “மொய் சிதைக்கும் ஒற்றுமை இன்மை” - 23 “ஒட்டார், உடனுறையும் காலமும் இல்” - 25 “அரிய அரியவற்றாற் கொள்ப பெரிய பெரியாரான் எய்தப்படும்” - 36 மேற்கணக்கும் கீழ்க்கணக்கும் “கெடும் பொழுதில் கண்டனவும் காணாக் கெடும்” - 43 “கூறிய மாற்றம் உரைக்கும் வினைநலம்” - 48 “உள்ளற் பொருள துறுதிச் சொல்” - 53 “ஏலாதான் பார்ப்பான் ஒரு தொடையான் வெல்வது கோழி” - 55 “செற்றாரைச் சேர்ந்தவர் தெற்றென உற்ற துரையாதார் உள்கரந்து” - 58 “நல்லார் விடுகென்ற போழ்தே விடுக” -77 “தொக்கிருந்து எண்ணினான் எண்ணப்படும்” -78 “சொல்லான் அறிப ஒருவனை, யார் கண்ணும் ஒப்புரவினான் அறிப சான்றாண்மை” - 80 “மடிமை கெடுவார்கண் நிற்கும்” -90 “என்றும் வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு” -91 “மக்களைக் கல்லா வளரவிடல் தீது” - 95 “யார் கண்ணும் கண்ணோட்டம் இன்மை முறைமை” -96 “தீய பரப்புச் சொல் சான்றோர்பால் தோன்றா” -98 “எண்ணொக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை” -101 “ ஒருவன் அறிவானும் எல்லாம் யா தொன்றும் ஒருவன் அறியா தவனும் - ஒருவன் குணனடங்கக் குற்றம் உளாலும்; ஒருவன் கணனடங்கக் கற்றானும் இல்” - 104 அரிய சில சொற்களை இவர் ஆள்கிறார். கலவர் (16) கலம் செலுத்துபவர் மம்மர் (22) மயக்கம் புற்கம் (28) புல்லறிவு காலேயம் (66) ஆன் பைத்து (68) சினந்து தாழி (72) காலத்தாழ்வு ஓங்கல் (95) வானம்பாடி எண் (99) அறிவுடைமை என்பவை அவற்றுள் சில. கார் நாற்பது கார் காலமும் மாலைப் பொழுதும் முல்லைத் திணைக்குரிய காலமும் பொழுதுமாம். “காரும் மாலையும் முல்லை” என்பது தொல்காப்பியம். அக்கார் காலம் மாலைப் பொழுது என்பவற்றை உளங்கொள விளக்குவதொடு ‘இல்லிருத்தல்’ என்னும் அக ஒழுக்கத்தையும் அருமையாகப் பாடுவது கார் நாற்பதாம். நாற்பது பாடல்களும் வெண்பாக்களே. பாடியவர் ‘மதுரை கண்ணங் கூத்தனார்’ என்பார். இந்நூலை ஒரு திணைப் பாடல் எனல் தகும். மால் மார்பின் மாலை போல் வானவில் விளங்குதலை முன் வைக்கிறார் கண்ணங் கூத்தனார். தோழியோ தலைவிக்கு “வருதும் என மொழிந்தார்; அவர் வாராதிரார்” என மொழிந்தார். “இன்னே வருவர் நமம்” என மேலும் வலியுறுத்துகிறாள் (2) பட்ட பசலைத் துயர் தீர்க்கும் மருந்தாவான் வருவான் என்பதைப் பருவங் காட்டித் தெளிவிக்கிறாள். (4) சொல்லாதன வெல்லாம் சொல்வன போலச் சொல்லுதல் புலவர் வழக்கு. நெடுவிடைச் சென்றாரை ‘நீடன்மின்’ என்று வானம் முழங்குகிறதாம். (6) கருவிளையும் தோன்றியும் ‘துறந்தார் வரல்’ கூறுமாம் (9) கோடல் பூங்குலை ஈன்ற புறவு ‘வல்வருதல்’ கூறுமாம் (11) காலத்து வாரார் தலைவர் எனக் காத்திருக்கும் தலைவியின் மடமையை உரைக்குமாம் ஊதைக் காற்று (30) மழை பொழிதலால் வறியவர் போல் வாடிக் கிடந்த காடு செல்வச் செழுமையர் போல் கவின் பெற்றதாம். “ செல்வர் மனம்போல் கவினீன்ற நல்கூர்ந்தார் மேனி போல் புல்லென்ற காடு” (18) தோன்றி பூத்துக் குலுங்கும் காட்சி, “ நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கில் தகவுடை” என்று கார்த்திகை விளக்கெடுக்கும் வழக்கைக் காட்டுகிறது. (26) காலத்துக்குத் தக உடை உடுத்தனர் என்பதை, “இளையரும் ஈர்ங்கட் டயர” என்கிறார் (22) ஈர்ங்கட்டு - குளிர்கால உடை. எருமை மறம் என்பது பெருமை மிக்க புறத்துறை. இங்கே எருமை அப் பெருமையைப் பெறுகின்றது. “ கார்ச்சேன் இகந்த கரைமருங்கின் நீர்ச்சேர்ந்து எருமை எழிலேறு எறிபவர் சூடிச் செருமிகு மள்ளரில் செம்மாக்கும் செவ்வி திருநுதற்கு யாம்செய் குறி” (31). தலைவன் எத்தகு பேரறிவாள்? தோழி சொல்கிறாள். “ஐயந்தீர் காட்சி யவர்” (12) தலைவி எத்தகையள்? தலைவன் சொல்கிறான்: “சீர்த்தக்க செல்வ மழைமதர்க்கண் சின்மொழிப் பேதை” “சிறந்த செல்வத்தையுடைய மழைபோற் குளிர்ந்த மதர்த்த கண் களையும் சிலவாகிய சொற்களையுமுடைய மெல்லியள்” (36) மின்னல் ஒளி ‘கண்ணை வெளவு’கிறதாம்! (13) எழிலி கருங்கடல் மேய்கிறதாம் (37) வான் முழக்கம் முருகியம் போல் உள்ளதாம் (27) முருகியம் குறிஞ்சிப்பறை. இடிபாம்பைச் சவட்டுகிறதாம் (17) ஆல் - நீர்; ஆலிநாடு - சோழ நாடு ஆகிய புனல் நாடு. ஆலிக்கும் 91), ஆலல் (16), ஆலி (3,23) எனப் பயலி வழங்கு கிறார். இந்து, ‘ஈந்து’ ஆகிறது. ஈந்து - ஈச்ச மரம் (40) பொச்சாப்பு (7) தருபாக்கு (11) என்னும் அருஞ்சொல்லாட்சி மேற்கொள்கிறார். வேம்பின் பூ, நண்டின் கண்ணுக்கு உவமையாகச் சொல்லப் படும். இவர், நொச்சிப் பூவை நண்டின் கண்ணுக்கு உவமையாக்கு கிறார். (33) சிவந்த அடியையுடைய வெண்கடம்பமரத்தை பலராமனுக்கு உவமைப்படுத்துகிறார். “ நாஞ்சில் வலவன் நிறம்போலப் பூஞ்சினைச் செங்கால் மரா அம்” (19). தலைவன் மீட்சி மகிழ்வில், “ வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன ஆறும் பதமினிய ஆயின” எனப் பாகனுக்கு உரைக்கிறான். (19) களவழி நாற்பது களம் இருவகையே; அவை, ஏர்க்களம், போர்க்களம் என்பன. உழவர் வளமே - களமே, அரசு வளமும் கள வெற்றியும். ஆதலால் ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர் எனக் களம் பாடுநர் ஆயினர். இப் போர்க்களம், சோழவேந்தன் செங்கணானுக்கும் சேர வேந்தன் கணைக்கால் இரும்பொறைக்கும் போர்ப்புறம் என்னும் இடத்து நிகழ்ந்த தாகும். இறைத் தொண்டின் ஏந்தல் செங்கட்சோழன்! மானமாண்புப் பாவலனாகவும் காவலனாகவும் திகழ்ந்தவன் கணைக்கால் இரும்பொறை. போரால் வென்றான் சோழன்! மானப் பேரால் வென்றான் சேரன்! இருவர் போரும் ஈடிலாப் போர்ப் பறைப் பாவிகம் எனத்தக்க களவழி நாற்பதுக் கொடையை வழங்கியது! வழங்கியவர் பொய்கையார்! அழிபாட்டின் இடையேயும் தமிழ் பெற்ற ஆக்கக் கொடை இஃதாம்! அப் போர்ப்புறம் இந்நாள் “திருப்பூர்” என்பர். திருப்போர்ப் புறம் திருப்பூர் ஆயிற்று என்பர். (முனைவர். சென்னியப்பனார்; அலகு மலை அனுபூதி - பதிப்புரை.) பட்டினப்பாலை, “ சோறு வாக்கிய கொழுங்கஞ்சி ஏறு பொரச் சேறாகித் தேரோடத் துகள் கெழுமி” என்று கூறும். களவழி, குருதியைக் களிறுழக்கக் குழம்பாகியது காலையில்; மாலையில் பவழத் தூசியாய்ப் பறக்கிறது என்கிறது. (1) போர்க்களத்தில் ஆளும் ஆளும் எதிர்த்துத் தாக்கிக் குருதி தோய்ந்த படைகள் கார்த்திகை விழாவில் எடுக்கப்பட்ட விளக்கு களைப் போலுள்ளன. (17) கேடகம் பற்றிய கை வெட்டுண்ண அதனைப் பற்றிக் கொண்டு ஓடும் நரி, “கண்ணாடி காண்பாரில் தோன்றும்” (28) இரண்டு சிறகுகளையும் வீசிக் கழுகு பிணங் கொண்டு செல்லுதல், சீர் முழாப் பண்ணமைப் பானைப் போன்றது (20) கரிய யானை, செவ்விய யானையாயிற்றாம்: ‘ அஞ்சனக் குன்றேய்க்கும் யானை அமருழக்கி இங்கு லிகக்குன்றே போல் தோன்றும்” (7) குருதியுண்டு, குருதி படிந்த காகம், செம்போத்து ஆகிவிட்டதாம். சிச்சிலி வாய் கொண்டு விட்டதாம். “ குருதி படிந்துண்ட காகம் - உருவிழந்து குக்கில் புறத்த சிரல்வாய” (5) பொய்கையார்க்கே வியப்பு! ஒப்பிலா உவமை ஒன்று வாய்த்து விட்டதாம்! எத்தகைய உவமை! எத்தகைய உவமை!எமக்கு இயல்பாக வாய்த்து விட்டது என்ற விம்மிதத்தில் பாடுகிறார். “ ஓஓ உவமன் உறழ்வின்றி ஒத்ததே காவிரி நாடன் கழுமலம் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெல்லாம் கீழ் மேலாய் ஆவுதை காளாம்பி போன்ற புனல்நாடன் மேவாரை அட்ட களத்து” (36) குதிரை கொற்றக் குடையை ஏற்றித் தள்ளுவது, பசு காளானை எற்றித் தள்ளுவது போலுள்ளதாம்! கழுமலம் சேரன் ஊர். காம்பற்றுக் கிடக்கும் வெண்கொற்றக் குடையில் குருதி பெருகிக் கிடத்தல் செம்பஞ்சுக் குழம்பு வைக்கப்பட்ட வெள்ளித் தட்டம் போல் உள்ளதாம். (39) களிறுகள் வெள்ளிக் கலப்பையால் நிலத்தை உழுகின்றதாம்: “ வெள்ளிவெண் நாஞ்சிலான் ஞாலம் உழுவனபோல் எல்லாக் களிறும் நிலம் சேர்ந்த” (40) ஓர் இனம்! ஒரு மொழி! கொண்டு கொடுப்பும் உண்டு! ஆயினும் அவ்வினத்தை அவ்வினமே அழித்து வரல் தொடர் வரலாறு! மாறா வரலாறும் ஆக்குகிறது மக்களாட்சியிலும்! தன்னைத் தானே அழிக்கும் இனம் உலகில் தமிழினம் ஒன்றேதான்! ஆம்! ஒன்றேதான்! சுவடு சோடு ஆவதைக் காட்டுகிறது ஒரு பாட்டு (9) தொழிற் கூடத்திற்கு ஓர் அரிய கலைச்சொல் வழங்குகிறது ஒரு பாட்டு (15) ‘வினைபடு பள்ளி’ என்பது அது. ‘இங்க’ என்பது அழுத்த என்னும் பொருளது (21, 41). கொங்கர் - சேரர் (14) கருந்தோற் பையில் இருந்து செம்பவழம் சொரிந்தால் காட்சியழகு மட்டுமா? கருவூலச் சரக்கு அல்லவா! ஆனால், களிற்றுக்கை வெட்டப்பட்டுக் குருதி கொட்டுவது அதுவானால்! நாடு வாழ்வான் காடு வாழ் உயிரையும் காவு வாங்குதல் களவழி என்னும் ஒரு துளிச் சிந்தனை ஏற்பட்டால் அவன் மாந்தப் பிறவியன்! (14) இன்னா நாற்பது கடவுள் வாழ்த்து ஒரு பாட்டொடு, நாற்பது பாடல்களை யுடையது இந்நூல். ஒவ்வொரு பாடலும் நான்கடிப் பாடல் ஆதலால் நான்கு இன்னா வருமாறு பாடப்பட்ட ஓர் ஒழுங்குடையது இந்நூல். இதனைப் பாடியவர் கபிலர் என்பார். சங்கக்காலத்து நல்லிசைப் புலவர் கபிலர். அவர் புலவர் பாடும் புகழாளராய், புரவலர் போற்றும் சீர்மையராய் வாழ்ந்தவர்.அவர் பெயர் தாங்கிச் சங்க மருவிய காலத்திருந்த புலமைச் செல்வராக இக் கபிலர் திகழ்ந்திருக்க வேண்டும். சங்கக் கபிலர் காலம் அகவல் கலி பரி என்பவை மல்கிய காலம். கலிவெண்பா பஃறொடை வெண்பா மல்கிய காலம். சமயக் கூட்டில் சாராத காலம். ஆதலால், இக்கபிலர் அக்கபிலர் பெயர் தாங்கிய பிற்காலத்தவர் ஆகலாம். முக்கட் பகவன், பலராமன், சக்கரத்தான், முருகன் என்னும் நால்வர் முதற்பாடலில் இடம் பெற்றுளர். எளிமையாய் ஆற்றொழுக்காய் இயல்பான நெறிகளாய் கூறப்பட்டவை இப்பாடல்கள். உரையொடு பயில வேண்டிய அடிகள் அரியவை. ஆனால், உரைவிளக்கம், உரைப்பார், தெளிவை நாம் பெற உதவுகின்றதுவாம். “ பெருமை உடையாரைப் பீடழித்தல் இன்னா; கிழமை உடையார்க் களைந்திடுதல் இன்னா; வளமை இலாளர் வனப்பின்னா இன்னா இளமையுள் மூப்புப் புகல்” 28 “பெருமை பெற முயல்க; முடியாவிடினும் பெருமை யுடையார் பெருமை கண்டு மகிழ்க; மகிழா விடினும் அமைக; ஆனால் அவர் பெருமையை அழிக்க எண்ணாமலாவது இரு” “உரிமை உறவு நண்பு அன்பு உடையவரை ஒன்றி வாழ்க; ஒன்றி வாழ இயலாதெனினும் உன்னியல்பில் வாழ்க; அதனை விடுத்து அவரை ஒட்டாமல் ஒதுக்கி விடவாவது இல்லாமல் இரு.” வளமை இன்மை குறைவில்லை; வளத்தைத் தேடுதல் புரிக; வளத்தைத் தேட இயலாது எனினும் உள்ள அளவில் அமைக; ஆனால் பிறர்க்கு விட்டுக் கொடுத்தல் ஆகாது என்னும் போலி எண்ணத்தால் பொலிவு காட்டிக் கொண்டு இராதே! உள்ள அளவையாவது கெடாமல் இரு. இளமைப் பருவம் எழுச்சிக் குரியது; ஓடி ஆடி உழைக்க உரியது; அப்பருவத்தில் தேடுவ எல்லாம் தேடிக் கொள்க; முதுமைக்கு அவ்விளமைத் தேடுதல் பயன் செய்யும். அதனை மேற்கொள்ளாய் எனினும் இருக்க; இளமையிலேயே முதுமைச் சோர்வை - முதுமை உவர்ப்பைக் கொள்ளாமலாவது இரு. “தொட்டனைத் தூறும் மணற்கேணி” கல்வியும் கேள்வியும் அல்லவா! தன்னைத்தான் போற்றா தொழுகுதல் நன்கின்னா; முன்னை உரையார் புறமொழிக் கூற்றின்னா; நன்மை இலாரைத் தொடர்பின்னா; ஆங்கின்னா தொன்மை உடையார் கெடல். தன்னைத்தான் எல்லா வழிகளிலும் பேணிக் கொள்ளல் வேண்டும்; இல்லையேல் வளம் கெடும்; உளம் கெடும்; உயிர் கெடும்; ஒருவரைப் பற்றி அவரிடமே கூறுதல் முறை; கூற முடிய வில்லையா? கூறாமல் அடங்கியிருத்தல் முறை; புறங் கூறுவோன் என்னும் பழி உனக்கு உண்டாகுமாறு, பிறரிடம் போய்ப் பிறரைப் பற்றிக் கூறல் முறையா? நலத்தன்மை இல்லாரை நெருங்காதிருத்தல் நலம்; நெருங்கினும் உளம் ஒன்றாமல் முகத்தளவால் நட்புக் காட்டி அகத்தளவால் நட்புக் கொள்ளாமை நலம்; இவற்றை விடுத்து உன்னையும் நலனில்லானாய் ஆக்கிக் கொள்ள நலனில்லானொடு நட்புக்கொள்ளல் நலமாகுமா? பழமைச் சிறப்பு பல்புகழ்ச் சிறப்பு; பழிப்பிலாச் சிறப்பு; அதனைப் பெருக்க இயலாவிடினும் சுருக்கமாக்கவாவது செய்யாமை வேண்டும். அப் பழமையைக் கெடுப்பது அவனைக் கெடுப்பது மட்டுமோ? அவன் பரம்பரையையே கெடுக்கும் கேடு அல்லவோ? எண்ணுக! எண்ணம் தானே விரியும்! எல்லார்க்கும் பொதுவாம் கல்வியைக் “குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா” என்பதும் (20) தொழிலில் இழிவு உயர்வு காணலும் (35) காலத் தொடு நில்லாதவை. “குழவிகள் உற்றபிணி இன்னா” என்பது குடும்பத்தையே உலுக்கும் துயராம். (36) “கடித்தமைந்த பாக்கினுள் நல்படுதல்” நல்ல பட்டறிவு (40) “பார்ப்பாரில் கோழியும் நாயும் புகாமை” (3) இன்றும் கட்டிக் காக்கப்படுதல் காணலாம். இனியவை நாற்பது இனிது இனிது எனவரும் செய்திகளைக் கூறும் நாற்பது வெண்பாக்களால் ஆகிய நூல் இனியவை நாற்பதாம். முதற் பாடல் கடவுள் வாழ்த்தாக அமைந்தது. ஆதலால் 41 பாடல்களால் நூல் இயல்கின்றது. இதனை இயற்றியவர், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்பார். மதுரையில் தமிழாசிரியராகத் திகழ்ந்தவர் பூதனார்; அவர் மகனார் சேந்தனார். ஆதலால் தந்தை தகவொடும் பெய ரொடும் மகனார் இணைக்கப்பட்டுப் பூதஞ் சேந்தனார் எனப் பட்டார். “கண்மூன் றுடையான்” “துழாய் மாலையான்” “முகநான் குடையான்” என மூவரும் ஒருவராம் மூர்த்தியாக இவர் முதற்பாட்டைத் தொடங்குகிறார். “ மானம் அழிந்தபின் வாழாமை முன்னினிதே தானம் அழியாமல் தானடங்கி வாழ்வினிதே ஊனமொன் றின்றி யுயர்ந்த பொருளுடைமை மானிடர்க் கெல்லாம் இனிது. (14) மானம் - பெருமை; தானம் - நிலை; ஊனம் - குறை. மானிடர்க்கெல்லாம் இனிது, மூன்றற்கும் பொதுவாகக் கொள்ளும் தகவுடைய தொடர். அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே கடன்கொண்டும் செய்வன செய்தல் இனிதே சிறந்தமைந்த கேள்வியர் ஆயினும் ஆராய்ந்து அறிந்துரைத்தல் ஆற்ற இனிது. அடைந்தார் - அடைக்கலமாக அடைந்தவர்; கூர்தல் - அடைதல்; துயருற்று அடைக்கலமாக வந்து அடைந்தவர் அடைந்த இடத்திலேனும் துயரடையாவாறு காக்கப்பட வேண்டும் அல்லவா! குருவிகளுள் ஒன்று அடைக்கலாங் குருவி! அது வீட்டுக் கூரை, மாடம் ஆயவற்றில் கூடி கட்டி வாழும். அதன் கூட்டைப் பிரிக்கச் சிற்றூரார் எவரும் எண்ணார்! ஓர் ஊரின் பெயர் அடைக்கலபுரம்’! ஒரு தெய்வப் பெயர் ‘அடைக்கல அன்னை’! கடன்படா வாழ்வே வாழ்வு தான்! கட்டாயம் செய்ய வேண்டும் கடமைக்கு உள்ளது உரியது இல்லை எனினும், “கடன் கொண்டும் செய்வர் கடன்” என்பதும் போற்ற வேண்டியதாம். கற்றலில் கேட்டலே நன்று என்பது மெய்மையே. எனினும் கேள்வி மிக்கார் எனினும் கேட்டதைத் தம் அறிவு கொண்டு ஆராய்தல் வேண்டும்; தம் அறிவுக்கும் தக்கதே என்பதைத் தெளிந்து அறியவும் வேண்டும். அதற்கு மேலேதான் பிறர்க்கு அதனை எடுத்துக் கூறவேண்டும். ஏனெனில், கேட்ட செய்திகளில் பலப்பல அறிவுக்கு ஒவ்வாததாய், சொல்பவர் தம் நலத்துக்கு உரியதாய், பொய்யும் புனைவும் உடையதால், பிறர்க்குத் தீமை பயப்பதாய் இருத்தல் உண்டு. கேட்டவை எல்லாம் மெய்யன்று; அச்சில் போட்டவை எல்லாம் மெச்சிக் கொள்வன அன்று. தாம் மெய்ப்பொருள் காண்பதும், பிறர்க் குறைப்பதுமே வேண்டும் என்பதாம். பூதஞ்சேந்தனார் குழந்தையர் மேல் பற்றாளர் போலும்! பொது வகையில் எவர்க்கும் உள்ள பற்றினும் மிக்கார் என்பது புலப்படு கின்றது. “குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே” (15) என்கிறார்! அது பட்டவர்க்குத் தான் கட்டாயம் விளங்கும்! வாரா நோயெல்லாம் குழந்தை நிலையில் வரும்! குழந்தை தானே வருவித்துக் கொள்ளவும் செய்யும்; மற்றைக் குழந்தைகள் வழியே தருவித்துக் கொள்ளவும் செய்யும்! மற்றைக் குழந்தைகள் வழியே தருவித்துக் கொள்ளவும் செய்யும்! அந்நிலையில் வீடே அல்லல்படும்! படுத்தும்!” “குழவிகள் உற்ற பிணி இன்னா” என்பது இன்னாநாற்பது (36) “குழவி தளர்நடை காண்டல் இனிதே” என்கிறார். ‘தளர்நடை’ அருமையான ஆட்சி; இங்கும் அங்கும் சரிந்து சாய்ந்து செல்லும் நடை; குறு குறுநடை; புறம் புறம் திரிய வைக்கும் நடை! “அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே” (15) வள்ளுவத்தை அள்ளிக்கொண்ட அடி இஃதாம். சேர்வு - நட்பு (2), குதர் - தவறு (12), சலவர் - வஞ்சர் (21) மயரி - அறிவிலி (22), அச்சு - அச்சம் (38) பிளிறல் - சினத்தல் (40) என்பவற்றை இவராள்கிறார். “தந்தையே ஆயினும் தானடங்கான் ஆகுமேல் கொண்டடையான் ஆதல் இனிது” என்று இவர் கூறுவது (8), திருவள்ளுவர், “நல்லாற்றின் நின்ற துணை” என்றதை நினைவூட்டுகிறது. (41) ஐந்திணை ஐம்பது கீழ்க்கணக்கில் சுட்டப்படும் அகநூல்களுள் இவ் வைந்திணை ஐம்பதும் ஒன்று. இதனை இயற்றியவர் மாறன் பொறையனார் என்பது. மாறன் என்பது பாண்டிய மன்னன் பெயர்; பொறையன் என்பது சேரமன்னன் பெயர். இவர் காலத்து பாண்டியரும் சேரரும் இவர் பேரன்புக்கு ஒத்த வுரிமையராகவோ, அவ்விரு வேந்தரும் ஒப்ப இவரைப் பாராட்டி இப் பெயரைச் சூட்டியவராகவோ இருத்தல் வேண்டும். அகத்திணை ஒழுக்கம் ஐந்தையும், “முல்லை முதலாச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” என்றார் தொல்காப்பியர். இவ்வைந்திணை ஐம்பது, திணைக்குப் பத்துப் பாடலாக ஐந்திணைக்கும் பாடிய ஐம்பது பாடல்களையுடையது. முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்னும் முறை வைப்பில் பொறையனார் இந்நூலைப் பாடியுள்ளார். கார் வரவு கூறும் முதற் பாடலில், மல்லற் கடந்தான் நிறம் போல் கார் எழுந்தது என்றும், கடம்பமம் வேலன் கைவேல் போல் மின்னியது என்றும், எயிலெறிந்த இறைவன் தாராகிய கொன்றை பூக்க என்றும் தமிழர் கண்ட இறைவரைச் சுட்டலால் இவர் தமிழ்ச் சமயத்தர் என்பது புலப்படும். கார் இவண் வந்ததே! அவர் சொல்லிய காலம் இதுதானே! ‘நமர் சென்ற நாட்டுள் இக் கார், இல்லையோ?” என்கிறாள் தலைவி தோழியிடம் (3) தலைவன் தலைவியைக் காணவருகிறான். பாகனிடம், “நூல் நவின்ற பாக தேர் நொவ்விதாச் சென்றீக!” “ கற்புத்தாள் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி நிற்பாள் நிலையுணர்கம் யாம்” என்கிறாள் (10) அறிவர் நட்பு எத்தகையது? “ அறிவ தறியும் அறிவினார் கேண்மை நெறியே உரையாதோ?” என்பது (23) குருகுப் பறவை வாளைமீன் உறவு, “கோலச் சிறுகுருகின் குத்தஞ்சி ஈர்வாளை நீலத்துப் புக்கொளிக்கும்” (24) தென்றல் இன்பமே இன்பம்: “ குளிரும் பருவத்தே யாயினும் தென்றல் வளியெறியின் மெய்யிற் கினிதாம்.” (30) வெப்பு மிகை: களிறு பிடியின் துயர் கண்டு கனிகின்றது. என்ன செய்தது? “ அழற்பட் டசைந்த பிடியை - எழிற்களிறு கற்சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையாற்கொண்டு உச்சி ஒழுக்கும்” (32) காட்டுக் காதலைக் காட்டிய காட்சி: “ சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப் பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும்” எய்தாது - பருகப் போதாது. ஊச்சும் - உறுஞ்சும். சிறுமியர் கட்டும் மணல் வீட்டுக்கு முத்தே விளக்காம். (46) தம்மைச் சார்ந்தவரைத் தாங்காதவர்க்குப் புகழ் உண்டா? “ மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார் ஒற்கம் கடைப்பிடியா தார்” (48) ஒற்கம் - தளர்ச்சி, வறுமை வெண்பாவில் ஐஞ்சீரடியும் அரிதாய் வரும் என்பதற்கு ஒரு பாட்டு இந்நூலில் உண்டு. (31) வெண்பாக்களின் ஒழுகு நடை அருமை மிக்கது. ஐந்திணை யைம்பது ஐந்து திணைகளைப் பற்றிய எழுபது பாடல்களை யுடையது. ஐந்திணை எழுபது. இதனை இயற்றியவர் மூவாதியார். ஆதியார் பிறரும் இருந்திருப்பர். அதனால் அவருள் மூத்தாராகிய இவர் மூவாதியார் எனப் பெயர் பெற்றிருக்கலாம். குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் எனத் திணைகளை வரிசைப்படுத்தி, திணைக்குப் பதினான்கு பாடல்களை இயற்றி யுள்ளார் ஆசிரியர். பிள்ளையாரைப் பற்றிய கடவுள் வாழ்த்து பின்னே ஒருவரால் பாடி இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அதன் நடையாலும் பொருளாலும் நன்கு விளங்கும். முல்லைத் திணையில் இரண்டு பாடல்களும் நெய்தல் திணையில் இரண்டு பாடல்களும் கிடைத்தில. “ மன்றப் பலவின் சுளைவிளை தீம்பழம் உண்டு வந்து மந்தி முலைவருடக் - கன்றமர்ந்து ஆமா சுரக்கும் அணிமலை நாடனை யாமாப் பிரிவ திலம்.” மந்தி வருட ஆமா பால் சுரக்கும் என்றது ஆன்ம நேய அருமையதாம். யாமாப் பிரிவ திலம் என்றது தம் கட்டமை திறம் கூறி அந் நிலையைத் தலைவனும் போற்றுவன் என்பது நயமான வலியுறுத்தலாம்.(4) “ சான்றவர் கேண்மை சிதைவின்றி ஊன்றி வலியாகிப் பின்னும் பயக்கும்” என்பது முன்னதை நன்கு வலியுறுத்துவதாம். (5) “அறிவின்கண் நின்ற மடம், ஒன்றுண்டோ?” என்பது அறிவமைந்தார்க்கு மடமை என்னும் ஒன்று இல்லை எனத் தெளிவிப்பதாம். (8) இவை குறிஞ்சித் தலைவி தேர்ச்சியுரைகளாம். மாலை, “ கொல்லுநர் போல வரும்” என்னும் முல்லைப் பாட்டு (17); “ காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்” என்னும் குறளை நினைவுபடுத்தும். (1224). தேரை இழுக்கும் குதிரையின் மணி ஒலி, தேரை ஒலியாக உள்ளதை நயமுறக் கூறுகிறார் மூவாதியார். (23) பாலை வழியில் பீடும் பெயரும் எழுதிய வீரர் “எழுத்துடைக் கல்” இருப்பதைக் காட்டுகிறார். (27) யானைதான் பிளிறும்; ஆனால் மூவாதியார் காட்டும் அணில் பிளிற்றுகிறது. (33) “ மன்ற முதுமரத் தாந்தை குரலியம்பக் குன்றகம் நண்ணிக் குறும்பிறந்து - சென்றவர் கள்ளிய தன்மையர் போலும் அடுத்தடுத்து ஒள்ளிய தும்மல் வரும்” எனத் தும்மல் குறியையும் (40) “ பூங்கண்இட மாடும் கனவும் திருந்தின ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப வீங்கிய மென்தோள் கவினிப் பிணிதீரப் பாங்கத்துப் பல்லி படும்” (41) எனக் கண் இடம் துடித்தல் பல்லி ஒத்தல் ஆகியவற்றையும் சுட்டுகிறார். கள்ளிய தன்மை - கரவுத்தன்மை; பாங்கத்து - பக்கத்து. கார்ப்பு - மழை; பாண்டில் - வாகை மரம்; (25) உழலை - தொண்டுக்கட்டை (46) ஒமுக்குதல் - அமுக்குதல் (47) அச்சு - எழுத்து (50) என்பவை அரிய சொல்லாட்சிகள். ‘கள்வர்’ என்பதைக் ‘கள்ளர்’ என்பது மக்கள் வழக்கு. (36) வேலையே குறியாகியவரை அவரை அன்றி எவர் விரும்புவார்? அவரை வேலை வாங்கிப் பயன்பெறுவார் விரும்புவார்? ஆனால் அவரை மணந்தவரோ அவரை விரும்புவரோ விரும்புவரோ அவர் ஓயா ஒழியா வேலையை? “ காதலில் தீரக் கழிய முயங்கன்மின் ஓதம் துவன்றும் ஒலிபுனல் ஊரனைப் பேதைபட் டேங்கன்மின் நீயிரும் எண்ணிலா ஆசை ஒழிய உரைத்து” (52) எனத் தலைமகள் வழியாக வெளிப்படுத்துகிறார் மூவாதியார்! வாழ்வில் அளவு, அளவளவு, அளவளாவு என்பவை தேவை என்பது மவாதியார் மூதறிவுக் குறிப்பாம். திணைமாலை நூற்றைம்பது அக ஐந்திணைகளையும் நூற்று ஐம்பது பாடல்களால் பாடும் நுல், திணைமாலை நூற்றைம்பது. குறிஞ்சி நெய்தல் பாலை முல்லை மருதம் என்னும் முறையில் இந்நூல் ஐந்திணைகளையும் வரிசைப்படுத்தியுள்ளது. திணைக்கு முப்பது பாடல்களையுடையதாக இருக்க வேண்டிய இந்நூல், குறிஞ்சி, நெய்தல், முல்லைத் திணைகளில் ஒவ்வொரு பாடலை மிகுதியாகக் கொண்டமையால் மொத்தப் பாடல்கள் நூற்று ஐம்பத்து மூன்று ஆயின. இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார்; கணிமேதையார் என்பாரும் இவரே; இவர் பாடிய இன்னோரு நூல் ஏலாதி. இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர்; சிறுபஞ்ச மூலத்தை இயற்றிய காரியாசான் இவர் உடன் மாணாக்கராவர். மற்றைக் கணக்கு நூல்களில் காண வராத அளவில் சொல்லணி, சொல் விளையாடல், அடுக்கு, பிரிப்பு வகைகளைத் தம் பாடல்களில் இவர் வைத்துள்ளார். இவர் மதுரை சார்ந்தவர் என்பதை, “கோடாப் புகழ்மாறன் கூடல் அனையாள்” (4) எனத் தலைவன் வாயிலாக வெளிப்படுத்தலால் அறியலாம். கண்ணனையும் பலதேவனையும் நீலக்கடலுக்கும் வெண் மணலுக்கும் உவமைப்படுத்துகிறார். “ மாயவனும் தம்முனும் போலே மறிகடலும் கானலும் சேர் வெண்மணலும்” என்பது அது (58) ஆடா அடகு (பண்ணை) (4) தீத்தீண்டு கை - (வேங்கை) (5) கைந் நாகம், கைவாய நாகம், (யானை) (7,13) என மறைபொருளாய் வழங்கு கிறார். கருவிரல் செம்முக வெண்பல் (10) ஒருகை இருமருப்பின் மும்மதலால் (75) வலங் கொண்டாள் கொண்டாள் இடம் (9) என முரண், எண் என நயமுறப் படைக்கிறார். “குருந்தே! கொடிமுல்லாய்! கொன்றாய்! தளவே! முருந்தே!” விளி அடுக்கு இல்லையா? (116) வண்துடுப்பாய்ப் பாம்பாய் விரலாய் வளையாய் வெண்குடையாம் தண்கோடல் வீந்து” உவமையை அடுக்குகிறாரே! (119) கார் தோன்றக் காதலர் தேர்தோன்றா தாகவே பீர் தோன்றி நீர் தோன்றும் கண்” என்பதில் கார், தேர், பீர், நீர் எனச் சொற்கள் வந்துதாமே குவியவில்லையா! (100) வண்டினம் வெளவாத ஆம்பல் (குழல்) வண்டினம் வாய்வீழா மாலை (மாலைப்பொழுது) வண்டினம் ஆராத பூந்தார் (செயற்கை மாலை) என விளையாடுகிறார், சொல்விளையாட்டு! இவ்விளை யாட்டே பிற்காலப் புலவர்களின் வேலையாகிப் போய்த் தமிழ்வளம் கெடத் துணையாயிற்று (101) புலமைச் செருக்காகவும் ஆயிற்று. முதுகண்ணர், கணி, கணியர் எனப்படுவார் நாள்கோள் இயல் ஆய்வுத் திறமுடையவர். இக் கணிமேதையார், “ தந்தாயல் வேண்டா ஓர் நாள் கேட்டுத் தாழாழ வந்தால் நீ எய்துதல் வாய்” (46) “நாளாய்ந்து வரைதல் நலம்” (52) எனக்கூறும் இன்னவற்றால் இவர்தம் கணிநோக்குப் புலப்படும். உடனே என்பதைப் ‘பொங்கென்’ என்றும் (84) ‘சிள்’ வீட்டைச் ‘சிஃ’ என்றும் (92) சிதடி என்றும் (83) காட்டெருமையை இதடி என்றும் (83) பாலிகையைச் ‘சாலிகை’ என்றும் (51) ஏ அடி என்பதை ‘ஏடி’ என்றும் (123) வழங்குகிறார். இயற்கை இயங்கியல் இசை ஆகியவற்றை, “ மேனோக்கி வெங்கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கிக் கானோக்கம் கொண்டழகாக் காண் மடவாய் - மானோக்கி போதாரி வண்டெலாம் நெட்டெழுத்தின் மேற்புரியச் சாதாரி நின்றறையும் சார்ந்து” (95) எனப் பாடுகிறார். பெற்றோர் ஏவும் அம்பும் பிள்ளை ஏவும் அம்பும் நயனுற நவில்கிறார்: “கொல்யானை வெண்மருப்பும் கொல்வல் புலியதளும் நல்யானை நின்னையர் கூட்டுண்டு - செல்வார்தாம் ஓரம்பி னானெய்து போக்குவர் யான் போகாமல் ஈரம்பி னால்எய்தாய் இன்று” என்பது அது (22). சொல்லாட்சிக்காகவும் ஆய வேண்டிய நூல் திணைமாலை நூற்றைம்பது எனல் தகும். திணைமொழி ஐம்பது ஆசிரியர் தொல்காப்பியர் உரிப்பொருளை, “ புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றின் நிமித்தம்” என முறைவைப்புச் செய்தார். அம்முறையே முறையாய்ப் பெரிதும் முறைப்படுத்தி ஐந்திணைகளையும் பப்பத்துப் பாடல்களால் விளக்கும் நூல் திணை மொழி ஐம்பதாகும். இதனை இயற்றியவர் கண்ணஞ்சேந்தனார் என்பார். இவர் தந்தையார் சாத்தந்தையார் என்பர். கார் நாற்பது பாடிய கண்ணங் கூத்தனார் இவர்தம் உடன்பிறந்தார் ஆகலாம் என்பர். மின்னல் வெட்டுதலப் பாம்பின் செலவொடும் இணைக்கிறார். (3) “ வில்லினர் வேலர் விரைந்துசெல் அம்பினர் கல்லிடை வாழ்நர் எமர்” (5) “யாழும் குழலும் முழவும் இயைந்தென வீழும் அருவி” (7) இன்னவை இயல்பான இனிய அடுக்குகள். “ கணமுகை கையெனக் காந்தள் கவின மணமுகை என்றெண்ணி மந்தி கொண்டாடும்” (2) “ஏன லிடத் திட்ட ஈர்மணிகொண் டெல்லிடை கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும்” இன்னவை நல்ல மயக்கணிகள். அன்பு விளியாம் எல்ல, எலா, ஏலா, ஏட, ஏடீ, ஏழ, ஏழா, என்பவற்றினும் சுருங்க ‘எல’ என்று வழங்குகிறார். “ பலவின்பழம் பெற்ற பைங்கண் கடுவன் எல என்று இணைப்பயிரும் ஏகல்சூழ் வெற்பன்” என்பது அது. ஏ கல் என்பது உயர்மலை. பொருளே குறியாம் தலைவனைப் ‘பொருள் நீரார் காதலர்’ எனத் தலைவி கூற்றாகச் சொல்கிறார். ‘பொருள்மாலையவர்’என்பார் வள்ளுவர். செவிலித்தாய் உடன்போகிய தலைவியை நினைந்து உருகுவதை உருக்கமாக உரைத்து உருக வைக்கிறார் கண்ணஞ்சேந்தனார். “ ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ்சுரம் பாற்றினம் சேரப் படுநிழல் கண்டஞ்சிக் கூற்றின வல்வில் விடலையோடு என்மகள் ஆற்றுங் கொல் ஐய நடந்து” என்பது அது. (20) தோழி தலைவியை முல்லை நில முறுவலைக் காண அழைக்கிறார். நம்மையும் உடன் அழைக்கிறார். “ கோடலங் கூர்முகை கோளரா நேர்கருதக் காடெலாம் கார்செய்து முல்லை அரும்பீன ஆறெலாம் நுண்ணறல் வார அணியிழாய்! போதராய் காண்பாம் புறவு” (29) என்பது அது. கோடல் - காந்தள்; புறவு - முல்லை. உறவுகள் இரண்டாம்; விட்டுப் பிரியும் உறவு; விட்டுப் பிரியா உறவு என்பவை அவை. விட்டாலும் விடாமல் தொடரும் உறவு பெற்றோர், மக்கள் மனைவி கணவன் என்பார். உறவால் பிரியலாம்! ஊரால் பிரியலாம்! ஆனால் ஓட்டுப் பிரியா உறவு அஃதாம்! தோழி தலைவனிடம் சொல்கிறாள்: “ செந்தா மரைமலரும் செய்வயல் நல்லூர! நொந்தால்மற் றுன்னைச் செயப்படுவ தென்னுண்டாம்? தந்தாயும் நீயே தரவந்த நன்னலம் கொண்டாயும் நீயாயக் கால்” என்பது அது (36) தலைமகன் தன் தோழனுக்குச் சொல்கின்றான். “ மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள் பயில்வதோர் தெய்வங் கொல் கேளீர்! குயில் பயிரும் கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய கண்ணின் வருந்துமென் நெஞ்சு” என்பது. (49) “ அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு (1081) என்னும் வள்ளுவத்திற்கப் பாவால் விரித்த உரைதானோ கண்ணஞ் சேந்தனார் காட்சிப் பாடல். தோழி தலைவன் கேட்பத் தலைவியிடம் கூறுகிறாள். அவன் மணவாளக் கோலத்தில் வருதற்காக! “ பவளமும் முத்தும் பளிங்கும் விரைஇப் புகழக் கொணர்ந்து புறவடுக்கு முன்றில் தவழ்திரைச் சேர்ப்பன் வருவான்கொல் தோழி திகழும் திருவமர் மார்பு” நிறைவுப் பாடல் இது! களவு கற்பு ஆகி நிறை காக்கும் பாட்டு. (50) இரா. இளங்குமரன் பதினெண்கீழ்க்கணக்கு -1 வித்துவான் எஸ்.நடராஜன் நன்றி - தமிழ்ப்பொழில் (1960 - 61, துணர் -36) இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன் நம்முன்னோர் தேடிவைத்த கருவூலங்கள் பலப்பல. அவை சங்கங்கள் என்ற பெயராலே தேடித்தரப்பட்டன. அவற்றுள் முதற்சங்கம் பெயரளவிலே காணப்படுகிறது. இடைச்சங்கம் இருந்ததை அறிவிக்க ஒல்காப்புகழ் தொல்காப்பியம் உளது. இஃது இலக்கண இலக்கிய நூலாக அமைந்து நிற்கின்றது. இந்த இரண்டு சங்கங்களிலே தோன்றிய நூல்கள் என்னவாயின என்ற வினாவிற்கு அழிந்தொழிந்தன என்று விடை கூறி அமைதியுறுகின்றோம். கடைச் சங்கப் பாக்களைத் தொகுத்துப் ‘பாட்டுந் தொகையும்’ என வகைப்படுத்தி வழங்கி வருகின்றனர். கடைச்சங்க நூலால் நாம் கண் திறந்தோம். முன்னோர் வழி அறிந்தோம்; பெருமையுற்றோம்; ஊக்கமுற்றோம்; உணர்ச்சி யுற்றோம்; ஓடி ஓடித் தேடினோம். கிடைத்தவற்றை யாவரும் உண்ண விரும்பினர். உரையெனும் விருந்திட்டு ஊக்கமூட்டினர். கடைச்சங்கத்திற்குப் பின்னர் எழுந்த நூல்களை ஒருவாறு சங்க மருவிய நூல்களென்பர். இதனில் பதினெண் கீழ்க்கணக்கு சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவைகளைப் கூறுவர். இதனால் நாம் அறிவது யாதெனின், சங்கத்தோடு தொடர்புடையது சங்கக் கருத்தைத் தழுவியது என்னும் தொடர்புடையதற்கே நம் முன்னோர் ‘சங்கமருவிய நூல்கள்’ என்றனர் என்பது விளங்கும். மேலே கூறப் பட்ட நூல்களன்றி, வேறு ஒன்றும் இதுகாறும் கிடைக்கவும் இல்லை. ஆகவே, நம் முன்னோர் இலக்கியங்களை, சங்க நூல்கள் சங்க மருவிய நூல்கள் என இரு பிரிவாகப் பிரித்து அமைத்துள்ளனர். எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் சங்க நூல்களென்றும், பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியன சங்க மருவிய நூல்களென்றும் கூறியுள்ளனர். இச்சங்கமருவிய நூல்களில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றி ஒருவாறு இக்கட்டுரையில் குறிப்பிட விரும்பு கின்றேன். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவைதான் என்று ஒரு பட்டியல் தந்துள்ளனர். அது பழம் பாடல்தான், ஆயினும் பல்வேறு பாட வேறு பாடு. இருப்பினும் அமைதிப்படுத்தி, ஆய்வுகொண்டு அளித்துள்ளனர். “ நாலடி, நான்மணி, நானாற்ப(து) ஐந்திணை, முப் பால், கடுகம், கோவை, பழமொழி மாமூலம் இந்நிலைய காஞ்சியோடு, ஏலாதி, என்பவே கைந்நிலையு வாம், கீழ்க் கணக்கு” எனும் வெண்பாவால் அறியப்படுகிறது. இதன் கண், நானாற்பதில் உள்ள நால் என்பதனை ஐந்திணைக்கு முன் இணைத்து, நாலைந் திணை என உரைத்துப் பொருள் கொள்ள வேண்டும். இப்பாடலில் நானாற்பதும், ஐந்திணையுமே தொகைப் பொருளாகக் கொண்டு எட்டு நூல்களைத் தன்னுள்ளே கொண்டு நிற்கின்றன. மற்றவையாவும் தனி நூல்களே, முப்பால் என்பது தொகைபோல் காணப்படினும் அது திருக்குறளைக் குறிக்கின்றது என வறிக. நானாற்பது என்பது முறையே இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பதையும், நாலைந்திணை என்பது ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பதையும் குறிக்கும். இதனைப் பாட வேறுபாடு கொண்டு பலவாறு உரைப்பர். ஐந்திணை என்பதை ஐந்து நூலெனக் கொண்டு, முற் கூறிய நான்குடன் திணைப்பெயருடைய வேறு நூல் ஒன்று உண்டென்றும் கூறுவர். அதற்கேற்ப அவர்கள் இன்னிலை, கைந்நிலை இரண்டையும் நீக்கிக் கணக்கிடுவர். சிலர் இன்னிலையை மட்டும் நீக்கி, கைந்நிலையைக் கொள்வார். இன்னும் சிலர் ‘இன்னிலைய சொல்’ என்று பாடங்கொண்டு, இன்னிலை, இன்சொல் என இரண்டு நூலாக்க முற்பட்டனர். இவ்வித இடர்ப்பாடுகளுக் கெல்லாம் பாட வேறுபாடு வளைந்து கொடுத்து வந்தது. இனி இதனைச் சிறிது ஆராய்வோம்;- திணைப் பெயருடைய ஐந்து நூல் உண்டென்பார்க்கு, வேறு நூல் இன்மையாலும், ஆசிரியர் பலரும் நாலைந்திணையே கூறிச் சென்றமையாலும் அக்கருத்துப் பொருந்தாதென விடுக்க. அடுத்துக் காண்பது, ‘இன்னிலை, இன்சொல், கைந்நிலை’ என்ற மூன்றும் பாட வேறுபாட்டால் பதினெண் கீழ்க்கணக்கில் காணப்படுகின்றன. இவைகளை ஆய்வாளர் ஆராய்ந்தனர். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முடிவு கண்டனர். இருப்பினும் ஒருவாறு ஒரு முடிவு ஏற்புடைத்தானது. அதனையே எல்லோரும் வழங்கி வருகின்றனர். அஃதாவது, ‘இன்னிலை’ என்ற நூல் வ.உ. சிதம்பரம் பிள்ளையால் வெளியிடப்பட்டது. இதனை உள்ளே நோக்கின், கருத்தோ, நடையோ முன்னோர் இயற்றியதாகத் தெரியவில்லை யென்பது ஒன்று, மற்றொன்று இந்நூலினை எந்த உரையாசிரியரும் எடுத்தாளவும் இல்லை. ஆதலின் இதனை ஒதுக்கினர். ‘இன்சொல்’ என்ற நூலோ பெயரளவே தவிர, கிடைத்தில, ஆதலின், இன்னிலை, இன்சொல் என்ற இரண்டும் ஏற்கமுடியாமற் போயின. எஞ்சிய கைந்நிலையைக் கீழ்க்கணக்கு நூல் எனலாமோ எனின், ‘ஆம்’ என விடை கூறலாம். இதனை இளம்பூரணர் முதலிய உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ளனர். பாட வேறுபாட்டால் மயங்கித் திரிந்த மக்களுக்கு ஒருவாறு விழிப்படையச் செய்தது கைந்நிலை ஒன்றே என்று அறிக. இதனால் நாம் அடியிற்கண்டவாறு கீழ்க்கணக்கு நூல்களை இவைவென அறியலானோம். அவை யாவன - 1. நாலடியார், 2. நான்மாணிக்கடிகை, 3. இன்னா நாற்பது, 4. இனியவை நாற்பது, 5. கார் நாற்பது, 6. களவழி நாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. ஐந்திணை எழுபது, 9. திணைமொழி ஐம்பது, 10. திணைமாலை நூற்றைம்பது, 11. திருக்குறள், 12. திரிகடுகம், 13. ஆசாரக்கோவை, 14. பழமொழி, 15. சிறுபஞ்சமூலம், 16. முதுமொழிக் காஞ்சி, 17. ஏலாதி, 18. கைந்நிலை. இவை கீழ்க்கணக்கு நூலென அமையும் வகையைச் சிறிது நோக்குவோம்; ‘ வனப்பியல் தானே வகுக்கங் காலை சின் மென் மொழியால் தாய பனுவலோடு அம்மை தானே அடிநிமிர்பு இன்றே’- எனும் தொல்காப்பியச் செய்யுளியல் 235 - ஆம் சூத்திரத்தில் உள்ள அம்மை என்ற வனப்பினுள் கீழ்க்கணக்கு நூல்களை உரையாசிரியர் களான பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் அடக்குவர். தாய பனுவல் என்பது அறம் பொருள் இன்பம் எனும் முக்கூற்றைக் கொண்டது என்பர். இதனுள் அடி நிமிர்பு இன்றே என்பதால் ஒருவாறு யாப்பு நிலையையும் உரைப்ப, இவைகளால் கீழ்க்கணக்கு எனும் பெயரை அறிய முடியாவிட்டாலும், கீழ்க்கணக்கின் பொருளமைதியையும் யாப்பமைதியையும் அறியலாம். இனி, பிற்கால நூலெனக் கருதப்படும் பன்னிரு பாட்டியலில், ‘ அகவலும் கலிப்பா வும்பரி பாடலும் பதிற்றைந் தாதி பதிற்றைம்ப தீரு மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக் கெனவும் வெள்ளைத் தொகையும் அவ்வகை யெண்பெறின் எள்ளறு கீழ்க்கணக் கெனவும் கொளலே’- என்னும் பன்னிரு பாட்டியல் 222 - ஆம் சூத்திரத்தாலும், ‘ அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வத் திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்’ - என்னும் பன்னிரு பாட்டியல் கணக்கெனும் தலைப்பின் கீழ் மேற்கோட் சூத்திரம் 133 - ஆலும் ஒருவாறு மேற்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்களை அறிய முடிகிறது. இதனால் கீழ்க்கணக்கு வெள்ளைத் தொகை பெற்றும், எண்பெற்றும், அடிநிமிர்பு இன்றியும் அறம் பொருள் இன்பக் கருத்துங் கொண்டு வருவது எனத் தெரிகிறது. மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்ற பெயர்களைப் பன்னிரு பாட்டியல் கூறுகிறதேயன்றி வேறுநூல்கள் இதற்கு இலக்கணம் கூற வில்லை. அதனில் மேற்கணக்கு என்ற பெயரை இந்நூலிலே யன்றி வேறு எங்கும் காணப்படவில்லை. உரையாசிரியர் ஒருவரும் இப்பெயரை எடுத்து ஆளவும் இல்லை. ஒருகால் மேற்கணக்கு என்ற பெயர் மறைய கீழ்க்கணக்கு மட்டும் வழங்கலாயிற்றோ, அன்றி, கீழ்க்கணக்கைக் குறிப்பிட மேற்கணக்கையும் உடன் உரைத்தனரோ அறியோம். மேலைச் சூத்திரத்து ‘எண்பெறின்’ என்பதால் கீழ்க்கணக்கு நூல்கள் எண்பற்றி வருமெனத் தெரிகிறது. கார் நாற்பதும், களவழி நாற்பதும், காலம் பற்றியும் இடம் பற்றியும் வருதலின் இஃது அச் சூத்திரப்படி பொருந்தா தெனினும், ‘எள்ளறு’ என்ற மிகையானே இதனை அமைத்திடுக. ‘வெள்ளைத் தொகையும்’ என்றதால் இவை யாவும் வெண்பா யாப்பில் வரும் எனப் பெறப்படும். ஆனால், முதுமொழிக் காஞ்சி குறட்டாழிசையில் வந்துளது. தனை வெள்ளைத் தொகையும் என்ற உம்மையை எச்ச வும்மை யாக்கிப் பொருத்திக் கொள்க. இதுவரை கீழ்க்கணக்கு நூல்கள் யாவை, அவை எவ்விதம் கீழ்க்கணக்கு நூல்களாயின என்பதைக் கூறினோம். இனி, இக்கீழ்க்கணக்கு என்ற பெயர் எப்பொழுதுதான் வழங்கப்பட்டது என்பதைப் பார்ப்போம். (1) இறையனார் களவியலுக்கு உரைகண்ட நக்கீரர், கடைச்சங்கத்தையும் அதனில் தோன்றிய நூல்களையும் கூறுமிடத்து ‘பாட்டும் தொகையும்’ எனக் குறிப்பிட்டாரே யன்றிக் கீழ்க் கணக்கைப்பற்றி யாதொன்றும் கூறாமல் விடுத்தார். நக்கீரர் என்ற பெயரினர் பலர் உள்ளனர். அவர்களில் இறையனார் அகப்பொருளுக்கு உரைகண்ட நக்கீரர் காலம் கி.பி.ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர். இதனை யாரும் மறுக்கார். இவர் காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு என்ற பெயர் வழங்கியதாகத் தெரியவில்லை. கிழ்க்கணக்கு நூல்களில் பல இருந்தன. ஆயின் அவை தொகுக்கப் படவில்லை என்பதை ஒருவாறு அறியலாம். (2) ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிந்தாமணி கி.பி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இதனை இதற்கு எண்ணுறு ஆண்டுக்கு முன் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரம், மணிமேகலையோடு இணைத்து, ஐம்பெருங்காப்பியம் என்றனர் இப்பெயர் சிந்தாமணி உலவி ஓரிரு நூற்றாண்டுக்குப் பின்னரே ஏற்பட்டிருக்க வேண்டும். இதனை யாரும் மறுக்கார். (3) கீழ்க்கணக் கென்ற பெயரைப் பேராசிரியரும், நச்சினார்க் கினியரும், யாப்பருங்கல உரையாசிரியர் குணசாகரரும், வீரசோழிய உரையாசிரியரும் கூறியுள்ளனர். இவ்வாசிரியர்களின் காலம் கி.பி. 14, 15 - ஆம் நூற்றாண்டென்பர். இவர்கள் காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கெனும் பெயர் வழங்கியிருத்தலினால், இவர்கள் எடுத் தாண்டுள்ளனர். (4) ஒல்காப்புகழ் தொல்காப்பியத்திற்கு முதன் முதல் உரை கண்டவர் இளம்பூரணர் ஆவார். அதனால் அவர் உரையாசிரியர் எனப்பட்டார். இவர்தம் உரையில் ஓரிடத்திலாவது பதினெண் கீழ்க்கணக்கைப்பற்றிக் குறித்தாரல்லர். இவருடைய காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டென்பர். ஆதலால் பதினெண்கீழ்க்கணக்கு என்ற பெயர் உரையாசிரியர் காலத்தில் தொகுக்கப் பெறவில்லை என்பது உறுதியாகிறது. ஆகவே, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம் முதலிய தொகைப்பெயர்கள் யாவும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தொகுக்கப்படவில்லை என்பதையும் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு, அதன் பின்னர் வழங்கி, உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்டன எனவும் கொள்ளுதலே ஏற்புடைத்தாகும். இனி, இந்நூல்கள் யாவும் ஒரே காலத்தில் தோன்றியவை அல்ல என்பதை மறுப்போர் இலர். இப்பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முதன் முதல் இயற்றப்பட்டது திருக்குறள். இதன் கால ஆராய்ச்சியில் பல்வேறு கருத்துக்கள் இருப்பினும் ஒருவாறு கி.மு. முதல் நூற்றாண்டு என்னும் முடிவைப் பெரும்பாலார் ஏற்றுள்ளனர். ஆசாரக் கோவை, முதுமொழிக்காஞ்சி முதலியவை கி.பி. ஒன்றபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இயற்றப்பட்டதாக அறிஞர்கள் கருது வதால், கீழ்க்கணக்கு நூல்கள் யாவும் கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை சுமார் பத்து நூற்றாண்டுகளில் அடுத்தடுத்துத் தோன்றி, கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தொகுத்து வழங்கப்பட்டு, அதன் பின்னர் 14 - 15 ஆம் நூற்றாண்டு முதல் எடுத்தாளப்பட்டு வருகின்றன எனக்கூறி இக்கட்டுரையை முடிக்கின்றேன். நூலாசிரியர்கள் 1. திருக்குறள் - திருவள்ளுவர் 2. நாலடியார் - சமணமுனிவர்கள் 3. நாண்மணிக்கடிகை - விளம்பிநாகனார் 4. இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார் 5. இன்னா நாற்பது - கபிலர் 6. கார் நாற்பது - மதுரை கண்ணங்கூத்தனார் 7. களவழி நாற்பது - பொய்கையார் 8. திரிகடுகம் - நல்லாதனார் 9. ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார் 10. பழமொழிநானூறு - முன்றுறையரையனார் 11. சிறுபஞ்சமூலம் - காரியாசான் 12. முதுமொழிக்காஞ்சி - கூடலூர் கிழார் 13. ஏலாதி - கணிமேதையார் 14. திணைமொழி ஐம்பது - கண்ணஞ்சேந்தனார் 15. ஐந்தினை ஐம்பது - பொறையனார் 16. ஐந்திணை எழுபது - மூவாதியார் 17. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதையார் 18. கைந்நிலை - புல்லங்காடனார் பொருளடக்கம் 1. பதிப்புரை ------------------------------------------------------ 2. மேற்கணக்கும் கீழ்க்கணக்கும் --------------------------- 3. பதினெண்கீழ்க்கணக்கு ------------------------------------- 4. நூலாசிரியர்கள் ----------------------------------------------- நூல் 1. நாலடியார் ----------------------------------------------------- 2. நாண்மணிக்கடிகை ----------------------------------------- 3. கார் நாற்பது--------------------------------------------------- 4. களவழி நாற்பது --------------------------------------------- 5. இன்னா நாற்பது --------------------------------------------- 6. இனியவை நாற்பது ----------------------------------------- 7. ஐந்திணை யைம்பது --------------------------------------- 8. ஐந்திணை யெழுபது ---------------------------------------- 9. திணைமாலை நூற்றைம்பது ------------------------------ 10. திணைமொழி யைம்பது ----------------------------------- நாலடியார் ஆசிரியர் : சமணமுனிவர் உரையாசிரியர் : இரா. இளங்குமரன் நாலடியார் தெளிவுரை கடவுள் வாழ்த்து ------------ நேரிசை வெண்பா வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால் கால்நிலம் தோயாக் கடவுளை--யாம்நிலம் சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து முன்னி யவைமுடிக என்று. வானில் தோன்றும் திருவில் போல வரும் இயல்புடைய பிறப்பு இறப்பு என்பவற்றைத் தம் மெய்யுணர்வால் தெளிந் தறிந்த, தம் திருவடி நிலத்தில் படிதல் இல்லாத அருகக் கடவுளை “எம் உள்ளத்து நினைத்த இந்த நூற்பணி இனிது முடியுமாக” என்று எம்தலை நிலத்தில் படியுமாறு வீழ்ந்து வணங்கிச் சேர்வேமாக. 1. அறத்துப்பால் 1. செல்வம் நிலையாமை அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கிஉண் டாரும்--வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின் செல்வம் ஒன்று உண்டாக வைக்கற்பாற் றன்று. 1 அறுசுவை உணவை அருமை மனைவி அருகே இருந்து விரும்பி உண்பிக்கவும், தம் வளமைப் பெருக்கால் மற்றொரு கவளம் வேண்டா என்று விலக்கி உண்பவரும், ஒரு காலத்தில் வறுமையடைந்து மற்றொருவரிடத்து இரந்து உண்பார் என் றால் செல்வம் என்னும் ஒன்று நிலைக்கத் தக்கது என்று கருதக் கூடியது அன்றாம். துகள் நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்த கூழ் பல்லாரோ டுண்க அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும். 2 செல்வம் எவரிடத்தும் உறுதியாக நிலைத்துத் தங்காது; வண்டியின் உருளையைப்போல் அஃது உருண்டோடும் இயல்பி னது. ஆதலால் குற்றமற்ற பெருஞ்செல்வம் ஒருவன் தன்னிடத்து வரப்பெற்ற அப்பொழுது முதலே, ஏர் உழுதலால் வரும் உணவு வகைகளை விருந்தினர் சுற்றத்தார் ஆகியவர் களுடன் கூடி இனி துற உண்பானாக. யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும்--ஏனை வினை உலப்ப வேறாகி வீழ்வார்தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள. 3 யானையின் பிடர் பொலிவுறுமாறு குடை நிழலின் கீழே அமர்ந்து படைத் தலைவராகச் செல்லும் ஆட்சிச் செல்வம் படைத்தவர்களும், அந் நல்வினை கெட்டுத் தீவினை வந்து சூழ்தலால், அவ் வுயர் நிலையிலிருந்து மாறுபட்டுத் தாங்கள் வாழ்க்கைத் துணையெனக் கொண்ட மனையாளையும் மாற் றார் கவர்ந்து கொள்ளும்படி தாழ்வடைவர். நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று. 4 வாழும்நாள் ஒவ்வொன்றும் போய் ஒழிந்து கொண்டே இருக்கின்றன; சீற்றம் மிகக் கொண்டு கூற்றுவன் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றான்; ஆதலால், நிலையானவை என்று எண்ணும் பொருள்களெல்லாம் நிலைப்பவை அல்ல; இவற்றை உணர்ந்து செய்யத்தக்க நற்செயல்களை நாளை என்று தள்ளிப்போடாமல் உடனே செய்வாயாக. என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால் பின்னாவ தென்று பிடித்திரா--முன்னே கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம் தொடுத்தாறு செல்லும் சுரம். 5 யாதாகினும் ஒருபொருள் தம் கையில் வரப்பெற்றால் அதனால் தமக்குப் பிற்பயன் பெரிதாம் என்று இறுக்கி வைத்துக் கொள்ளாமல் முற்பட அறவழியில் செலவிட்டவர் நடுவுநிலை தவறாத கொடிய கூற்றுவன் தன் பற்றுங் கயிற்றுடன் வந்து கட்டி இழுத்துச் செல்லும் கடுவழியிலிருந்து தப்பிப் பிழைக்கும் பேறு எய்துவர். இழைத்தநாள் எல்லை இகவா பிழைத்தொரீஇக் கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை--ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத் தழீஇம்தழீஇம் தண்ணம் படும். 6 பெரும்பொருள் தேடி வைத்துள்ள செல்வர்களே! இவ்வளவு என்று வரையறுக்கப்பட்ட வாழ்நாளின் எல்லையை எவரும் கடப்பது இல்லை; கூற்றுவனுக்குத் தப்பி யோடிப் பிழைத்தவர்களும் இவ்வுலகில் இல்லை; நாளையே ‘தழீஇம்’ ‘தழீஇம்’ என்று பிணப்பறை ஒலிக்கவும் படும். ஆதலால் பொருளை உடனே பிறர்க்கு வழங்கிப் பேறடைவீர்களாக. தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்--ஆற்ற அறஞ்செய் தருளுடையீ ராகுமின் யாரும் பிறந்தும் பிறவாதா ரில். 7 பொலிவுடன் வெளிப்படும் ஞாயிற்றை அளக்கும் நாழியாகக் கொண்டு, நாள்தோறும் நும் வாழ் நாளாகிய தானியத்தை அளந்து போட்டுக் கூற்றுவன் உண்பான். ஆதலால் நல்லறங் களை நாளுஞ்செய்து அருள் உடையவர் ஆவீராக. அவ்வாறு ஆகாத யாவரும் மனிதராகப் பிறந்தாலும் பிறவாதவ ராகவே வைக்கப்படுவர். செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம்--எல்லிற் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போற் றோன்றி மருங்கறக் கெட்டு விடும். 8 ‘யாம் செல்வர்’ என்று மகிழ்ந்து தாம் செல்லும் இடமாகிய வீட்டுலகைப் பற்றி எண்ணி நடக்காத சிற்றறிவினர் சேர்த்து வைத்த பெருஞ்செல்வம், காரிருட் போதில் கருமுகில் இடையே தோன்றிய மின்னலைப் போல் ‘முன்னே இருந்த இடம் இஃது’ என்னும் அடையாளம் தானும் இல்லாமல் சிறுபோதில் அழிந்தொழியும். உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான்--கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ இழந்தான்என் றெண்ணப் படும். 9 செல்வம் மிகப் பெற்றிருந்தும் தான் உண்ணாதவனாகவும், தன்மதிப்பை நிலைபெறச் செய்யாதவனாகவும், பெரும் புகழை ஈட்டாதவனாகவும், அடைதற்கு அரிய உறவினர் துயரை நீக்காதவனாகவும், பயன் கருதாமல் கொடுக்காதவனாகவும் பொருளைக் காத்துக்கொண்டிருப்பவன் அந்தோ! பொருள் இல்லாத வறியன் என்றே எண்ணப்படுவான். உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் கெடாஅத நல்லறமும் செய்யார்--கொடாஅது வைத்தீட்டி னார்இழப்பர் வான்தோய் மலைநாட உய்த்தீட்டும் தேனீக் கரி. 10 வானைத்தொடும் உயர்ந்த மலைநாடனே, தாம் நல்லுடை உடுத்தாமலும், நல்லுணவு உண்ணாமலும், தம் உடலை வருத்தியும், அழியாத அறச் செயலைச் செய்யாதும், வறியவர்க்கு எதுவும் வழங்காதும் பொருளைச் சேர்த்து வைத்தவர் அதனை இழப்பர். தேனை ஆய்ந்து தேடிச் சேர்த்து வைத்து இழக்கும் தேனீ இதற்குச் சான்றாகும். 2. இளமை நிலையாமை நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார்--புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி இன்னாங் கெழுந்திருப் பார். 11 நல்லறிவாளர் ‘முதுமை வந்தே தீரும்’என்று எண்ணிக் குழந்தைப் பருவத்திலேயே பற்றுள்ளம் விடுத்தனர். குற்றத்தினின்று அகலாததும் நிலைபெறாததும் ஆகிய இளமையை விரும்பி நல்வழியில் செல்லாமல் மகிழ்ச்சியில் ஊன்றி நின்றவரே, முதுமையில் தடியூன்றித் துன்பமிக்குத் தள்ளாடி நிற்பவர். நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன--உட்காணாய் வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் வந்ததே ஆழ்கலத் தன்ன கலுழ். 12 நண்பர் என்னும் நாரும் அறுந்தது; நல்ல காதலரும் நேயம் குறைந்தனர்; அன்பு என்னும் கட்டும் அவிழ்ந்தது; கடலுள் ஆழ்ந்துபோகும் மரக்கலத்தில் உண்டாகும் அழுகை ஒலிபோல உறவினர் அழுகையும் எழுந்தது; இத்தகைய வாழ்வினால் உண் டாகும் ஊதியம்தான் என்ன? உள்நோக்கி ஆராய்ந்து பார்ப்பா யாக. சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப் பல்கழன்று பண்டம் பழிகாறும்--இல்செறிந்து காம நெறிபடரும் கண்ணினார்க் கில்லையே ஏம நெறிபடரு மாறு. 13 சொல்லும் மொழி தளர்ந்து, கையில் தண்டூன்றித் தள்ளா டிய நடையினராகிப் பல்லும் உதிர்ந்து, உடலாகிய பொருள் பழிக்கப்படும் காலம் வரை மனைவாழ்வை விடாமல் பற்று வழியில் செல்லும் கருத்துடையவர்க்கு, உயிர்க்கு நன்மை யாம் மெய்யுணர்வு வழியில் செல்லும் வகை உண்டாகாது. தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும்--காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோல் அம்மனைக்கோ லாகிய ஞான்று. 14 மனத்தில் உறுதிப்பாடு இல்லாமல் இவளிடத்தே மயக்கம் கொண்டிருப்பவர்க்கு, இவள் தாயின் கையில் இருந்த ஊன்று கோல் இவள்கையில் வந்து சேர்ந்து, குனிந்து தளர்ந்து தலை நடுக்கங்கொண்டு தள்ளாடிப் பின்னே இறந்தொழியும் காலம் வரும்போது தான் தம் தவற்றை நினைத்து வருந்தும் துன்பம் வரும் போலும். எனக்குத்தா யாகியாள் என்னைஈங் கிட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்றாள்--தனக்குத்தாய் ஆகியவளும் அதுவானால் தாய்த்தாய்க் கொண்(டு) ஏகும் அளித்திவ் வுலகு. 15 என்னைப் பெற்றெடுத்த அன்னையாகியவள் என்னை இவ்வுலகில் விடுத்துத் தனக்கொரு தாயை விரும்பிச் சென்றாள்; அவள் தாயாக இருந்த வளும் அவ்வாறே தனக்குத் தாயை விரும்பிச் சென்றாள்; அவ்வாறானால் தாயைத் தாவித் தாவித் தேடிச் செல்லும் இவ்வுலகின் இயல்பை எண்ணிப்பார்க்க இரங்கத்தக்கதே. வெறிஅயர் வெங்களத்து வேல்மகன் பாணி முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க மறிகுளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி அறிவுடை யாளர்கண் இல். 16 உயிர்ப் பலியிட்டு வெறியாட்டு நடத்துகின்ற இடத்தில், வெறியாடுவான் கையில் கட்டியுள்ள தளிரும் பூவும் பொருந்திய மாலை, தன்முன்னே தோன்ற, அதனைக் கண்ட ஆட்டுக்குட்டி தனக்கு நேர இருப்பதை உணராமல் தளிரைத் தின்பது போன்ற நிலைபெறாத மகிழ்ச்சி நல்லறிவுடையாரிடத்து இல்லை. பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம் கனிஉதிர்ந்து வீழ்ந்தற் றளிமை--நனிபெரிதும் வேற்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும் கோற்கண்ண ளாகும் குனிந்து 17 தண்மையமைந்த சோலையில் உள்ள பயன்மரங்கள் பலவற்றில் இருந்தும், பழங்கள் உதிர்ந்து வீழ்ந்து வறிதாக நிற்பது போன்றது இளமைப் பருவம். ஆதலால், ‘இவள் வேல் போன்ற கண்ணையுடையவள்’ என்று இவளை மிகப்பெரிதும் விரும்பா திருப்பீராக. இவளும் ஒருநாள் கூனிக் குறுகிக் கோல் பிடித்து நடப்பவள் ஆவள். பருவம் எளைத்துள பல்லின்பால் ஏனை இருசிகையும் உண்டீரோ என்று--வரிசையால் உள்நாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள் எண்ணார் அறிவுடை யார். 18 “நுமக்கு அகவை எத்தனை ஆகியுள்ளன? பற்களின் நிலைமை எவ்வாறு உள்ளன? இரு கைப்பிடி அளவிலாயினும் உண்கின்றீரோ?” என்று முறையாக உலகோரால் உடலியல்பு உள்ளாக ஆராய்ச்சி செய்யப்படுவதால் அவ்வுடலின் இளமைத் தன்மையை அறிவுடையார் ஒரு பொருளாகக் கருதார். மற்றறிவாம் நல்வினை யாம் இளையம் என்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின் முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால் நற்காய் உதிர்தலும் உண்டு. 19 “நல்ல செயல்களைப் பின்னே ஆராய்ந்து செய்து கொள்வோம்; யாம் இப்பொழுது அகவையால் இளையராயுள்ளோம்” என்று எண்ணாமல் கையிற் பொருள் இருக்கும் போதே ஒளித்து வைக்காமல் அறஞ்செய்க. ஏனெனில் கோடைக் காற்றால் முற்றிய கனி அன்றிக் காம்பு வலிய காய்களும் உதிர்ந்து விடுவது உண்டு. ஆள்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால் தோள்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின்--பீள்பிதுக்கிப் பிள்ளையைத் தாய் அலறக் கோடலால் மற்றதன் கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. 20 தான் பற்றிக் கொண்டு போக வேண்டிய ஆளைப் பார்த்துத் திரியும் அருள் இல்லாத கூற்றுவன் உள்ளான். ஆதலால், நல்வினை என்னும் கட்டுச் சோற்றை இளமையிலேயே தேடிக் கொண்டு உய்வீராக. கருவிலேயே வெளியேற்றி அதன் அன்னை அலறி அழுமாறு பிள்ளையைக் கொள்ளும் கூற்றின் வஞ்சம் உணர்ந்து கடனாற்றல் நன்று. 3. யாக்கை நிலையாமை மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர்--நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத் தில். 21 மலையின்மேல் விளங்கும் முழுமதியம்போல் யானையின் தலையின் மேல் கொண்ட குடையின் நிழற்கண்ணே இருந்து உலாவந்த அரசர்களும், இந் நிலவுலகில் ‘இறந்தார்’ என்று பலராலும் இழித்துரைக்கப் பட்டனரே அல்லாமல், “என்றும் இறவாமல் இருந்தார்”என்று புகழுமாறு இருந்தார் இலர். வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅ தெழுதலால்--வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின் யாரும் நிலவார் நிலமிசை மேல். 22 வாழும் நாள்களுக்கு அளவையாக விளங்கும் கதிர்களை யுடைய ஞாயிறு ஒரு நாளேனும் ஒழிந்துபோகாமல் என்றும் தவறாது தோன்றுதலால், அதனைக் கொண்டு கணக்கிடப்படும் வாழும் நாள் அற்றுப்போகு முன்னே அறஞ்செய்க. குறிப்பிட்ட வாழ்நாளுக்கு மேல் உலகில் எவரும் வாழ்வது இலர். மன்றம் கறங்க மணப்பறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப்--பின்றை ஒலித்தலும் உண்டாம்என் றுய்ந்துபோம் ஆறே வலிக்குமாம் மாண்டார் மனம். 23 கூடியிருந்தோர் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளுமாறு மணப்பறையாக ஒலித்தவை, அதே நாளில் அந்த இடத்திலேயே மணவாளர் தமக்கே பிணப்பறையாக ஒலித்தலும் காணக் கூடியதே. இதனை உணர்ந்த உயர்ந்தோர் உள்ளம் உய்வதற்கு வழியாகும் நன்னெறியில் செல்லுதற்கே துணிந்து நிற்கும். சென்றே எறிப ஒருகால் சிறுவரை நின்றே எறிப பறையினை--நன்றேகாண் முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து. 24 ஒருவர் இறந்தால் அவ் விடத்திற்குப் பறையறைவார் போய் ஒருமுறை அறைவர்; சிறிதுபொழுது நிறுத்திப் பின்னே இரண்டா முறை அறைவர்; மூன்றாமுறை அறையும் அளவில் பிணத்தைத் துணியால் மூடித் தீச்சட்டி கொண்டு இறந்தவரை இறப்பார் தோளிற் சுமந்து செல்வர். இத்தகைய உலகியல் மிக நன்றாம். கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும்--மணங்கொண்டீண் டுண்டுண்டுண் டென்னும் உணர்வினான் சாற்றுமே டொண்டொண்டொண் என்னும் பறை. 25 சுற்றத்தார் கூட்டமாகத் திரண்டு கல்லென்னும் ஒலியுண்டாக அலறி அழுது, பிணத்தை இடுகாட்டுக்கு எடுத்துக் கொண்டு போய்ச் சேர்ப்பதை நேரில் கண்டும், மணஞ்செய்து கொண்டு, “இங்கு இன்பம் உண்டு உண்டு உண்டு”என்று மயங்கு வார்க்கு அப்பறை “டொண் டொண் டொண்” என ஒலித்து “இன்பம் இல்லை” என்று கூறும். நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக் கால். 26 தோலாகிய பையின் உள்ளே இருந்து இருவினைகளை முழுமையாகச் செய்து உண்பிக்கும் உயிராகிய கூத்தன் வெளி யே புறப்பட்டபோது, அவ்வுடலை நாரால் கட்டி இழுத்தால் என்ன? நன்றாகத் தூய்மை செய்து அடக்கினால் என்ன? கண்ட இடத்தில் எறிந்தால் என்ன? பலர்கூடிப் பழித்தால் என்ன? அவ்வுடற்கு ஒன்றும் இல்லை. படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக் கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித்--தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை நேர்ப்பார்யார் நீள்நிலத்தின் மேல். 27 “மழை நீரில் தோன்றி அழியும் நீர்க்குமிழி போலப் பல் காலும் தோன்றித் தோன்றி விரைவில் அழிந்து போகும் உடல் இஃது” என்று உடலிழிவை நினைத்துப், பிறவித்துயர் தொட ராதவாறு ஒழிப்போம் என்று உறுதியாக உணர்ந்து கடைப் பிடிக்கும் மெய்யறிவாளர்க்கு ஒப்பானவர் இவ்வுலகில் எவரும் இலர். யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கையா லாயபயன்கொள்க--யாக்கை மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே நிலையாது நீத்து விடும். 28 உடலை வலுவுடையதாகக் கொண்டவர் அவ்வலுவுள்ள போதே தம் உடலால் செய்துகொள்ளும் நல்வினைகளைச் செய்து கொள்வாராக. ஏனெனில், மலையின்மேல் தாவிச் செல்கின்ற மேகம் போலக் காணப்பட்டுப் பின்பு அக் காணப் பட்ட படியே நிலையாமல் விரைவில் உடல் அழிந்து போகும். புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை-இன்னினியே நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள் அலறச் சென்றான் எனப்படுத லால். 29 “இப்பொழுது தான் அவன் இங்கே நின்றான்; உட்கார்ந் திருந்தான்; படுத்திருந்தான்; தம் உறவினர் அலறி அழுமாறு இறந்தான்” என்று உலகத்தில் சொல்லப்படுவதால் புல்லின் நுனியில் தேங்கிநிற்கும் பனி நீர்போல் உடல் நிலையாது அழியும் தன்மையினது என்று நினைத்து இப்பொழுதே நற் செயல்களைச் செய்க. கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி வாளாதே போவரால் மாந்தர்கள்--வாளாதே சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து 30 மனிதர்கள் கேட்காமலே வந்து, உறவினர்களாக மனை வாழ்க்கையில் பிறந்து, மரத்தில் கூட்டை வைத்துவிட்டு நெடுந் தொலைவுக்கு நீங்கிச் செல்லும் பறவையைப் போலத் தம் கூடாகிய உடலைத் தம் உறவினரிடத்துக் கிடக்கச் செய்துவிட்டு யாதொன்றும் சொல்லாமல் இறந்து போவர். இத்தகைத்து உடலின் வாழ்வு. 4. அறன்வலியுறுத்தல் அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப் புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத் தவத்தால் தவஞ்செய்யா தார். 31 முன்னைப் பிறப்பில் செய்த தவத்தால் வாய்த்த செல்வத் தினால் பின்னைப் பிறப்புக்கு நன்மையாகும் தவத்தைச் செய்து கொள்ளாதவர் ‘இவ் வில்லத்து வாழ்வாரே வாழ்வார்’ என்று நிமிர்ந்து பார்த்து அவ் வீட்டுள் நுழையப் பெறாதவராய் அதன் வாயிலைப் பற்றிக் கொண்டு வருந்தி நிற்பவர் ஆவர். ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே--ஓவாது நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாள்கள் சென்றன செய்வ துரை. 32 புல்லிய நெஞ்சமே! அழியா அறத்தை அறவே மறந்து, அழியும் செல்வத்தையே விரும்பி ‘இச் செல்வத்தை அடை வோம்; இதனால் மேல் நிலைக்குப் போவேம்’ என்று தொடர்ந்து பொருள் சேர்க்க முயல்கின்றாய். நீ இவ்வாறு செலவிட்ட வாழ்நாட்கள் வறிதே சென்றன; இனிச் செய்யக் கூடிய தென்ன என்று உரைப்பாயாக! வினைப்பயன் வந்தக்கால்வெய்ய உயிரா மனத்தின் அழியுமாம் பேதை--நினைத்ததனைத் தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத் தெல்லை இகந்தொருவு வார். 33 முன்னைத் தீவினையின் பயன் வந்தபோது வெதும்பிப் பெரு மூச்சு விட்டுத் தன் மனம் நைவான் அறிவிலி. அத்தீவினைப்பயனை நன்கு ஆராய்ந்து கொள்ளத் தக்கவர், ‘முன்னை வினையின் பயன்’ என்று உணர்வர். அத்தகையவர்களே பிறவி என்னும் தடுமாற்றத்தின் எல்லையை எளிதில் கடந்து இனிது தப்பிச் செல்வர். அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால் பெரும்பயனும் ஆற்றவே கொள்க--கரும்பூர்ந்த சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன் கோதுபோல் போகும் உடம்பு. 34 பெறுதற்கு அரிய மனித உடலைப் பெற்ற நற்பயனால் பெருமைமிக்கதாம் அறப்பயனை மிகக் கொள்வீராக. கரும்பை ஆட்டி எடுத்த சாற்றைப்போல் அறப்பயன் பிற்காலத்துக்கு மிகவும் உதவியாகும்; பின்னர் அக் கரும்புச் சக்கையைப் போல் இவ்வுடலும் பயனின்றி வறிதே கழிந்துபோகும்! இஃதுணர்க. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவ திலர். 35 கரும்பை ஆலையில் இட்டு ஆட்டி அதன் சாற்றில் இருந்து சருக்கரைக் கட்டியை முன்னே எடுத்துக் கொண்டவர், பின்னே அக்கரும்புச் சக்கையில் தீப்பற்றி எரியும்போது அவ்விடத்துத் துன்பம் எய்தார். அதுபோல் உடலால் ஆகிய அறப்பயனை முயன்று கைக்கொண்டவர் கூற்றுவன் வரும்போது வருந்தார். இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான் மருவுமின் மாண்டார் அறம். 36 ‘இன்றைக்கோ’ ‘நாளைக்கோ’ ‘அன்றி என்றைக்கோ’ என்று கருதிக்கொண்டு இருக்காமல் தன் பின்னையே நிற்கின் றது கூற்று என்று கருதித் தீச்செயல்களைச் செய்யாது ஒழிக. தன்னால் இயலும் வகை களிலெல்லாம் பெரியவர்களால் பேணிச் செய்யப்பெறும் அறச் செயல்களை மேற்கொண்டு செய்க. மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால் எத்துணையும் ஆற்றப் பலவானால்--தொக்க உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க் கிடந்துண்ணப் பண்ணப் படும். 37 ஆராயும்போது, மக்கட் பிறப்பால் ஆகிய மிகுந்த பயன் எவ்வளவும் மிகப் பலவாகும். ஆதலால், பலவகை உறுப்புக் களின் கூட்டாக அமைந்த உடம்பிற்கே பயனாம் நன்மைகளைச் செய்து கொண்டு இருக்காமல், அவ்வுடம்பால் வானுலகிற் போய் இன்பம் நுகர்தற்காம் அறச் செயல்களை ஆய்ந்து செய்தல் வேண்டும். உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி இறப்ப நிழல்பயந் தாஅங்--கறப்பயனுந் தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும். 38 நகத்தால் கிள்ளி எடுக்கும் அவ்வளவு மிகச்சிறிய ஆலம் வித்து முளைத்துப் பெரிதாய் வளர்ந்து மிகுந்த நிழலைத் தந்தாற் போல், நல்லறத்தால் உண்டாகும் பயனும் அதன் அளவாற் சிறிதாக இருந்தாலும் தகுதி உடையவரிடத்துப் படுதலால் வானும் சிறிதாகுமாறு விரிந்து அதனை மூடிக்கொள்ளும் அளவு பெரிதாகி விடும். வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார். 39 நாள்தோறும் நாள் புதிது புதிதாக வருவதைக் கண்டும், அதனை உணராதவராய் நாள்தோறும் நாளை நிலைத்திருக்கும் என்று எண்ணி இன்ப நுகர்ச்சிகளில் ஈடுபடுபவர் நாள்தோறும் நாள் கழிதலைத் தம்முடைய வாழ்நாளின் மேல்வரும் செலவு நாளாக வைத்து அந்த நாட்களைக் கழித்து அறியாதவர் ஆவர். மான அருங்கலம் நீக்கி இரவென்னும் ஈன இளிவினால் வாழ்வேன்மன்--ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு நீட்டித்து நிற்கும் எனின். 40 இழிந்த செயல்களில் ஈடுபட்டு உணவு கொண்டு உண்பித்த போதும், உறுதியமைந்து இவ்வுடல் நெடிது நாள் நிற்கு மென்றால் மானம் எனப்படும் பெறுவதற்கு அரிய அணி கலத்தைக் கழற்றி எறிந்து, இரத்தல் என்னும் இழிந்த செய்கை யால் கூட உயிர் வாழ்வேன்; ஆனால் உடல் அவ்வாறு நிலைப் பது அன்றே! 5. தூய்தன்மை மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை--யாக்கைக்கோர் ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல். 41 உடலில் ஓர் ஈயின் சிறகளவான தோல் அறுபட்டாலும் அப்புண்ணைக் குத்த வரும் காக்கையை வெருட்டுவதற்கு ஒரு தடி வேண்டும். ஆதலால், ‘மாந்தளிர்போலும் நிறத்தைக் கொண்ட நங்கையே’ என்று கூவி அவளை விரும்பி அரற்றித் திரியும் பெரியோர் மிக இழிந்ததாம் உடலியல்பை எண்ணிப்பா ரார் போலும். தோற்போர்வை மேலுந் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கு மீப்போர்வை மாட்சித் துடம்பானான்--மீப்போர்வை பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப் பைம்மறியாப் பார்க்கப் படும். 42 தோலாகிய போர்வையின்மேலும் துளைகள் பலவாகி, ஆங்குள்ள களங்கத்தை மறைக்கும் மேற் போர்வையால் பெருமைப்படுவது இவ்வுடல். ஆயின், மேற்போர்வையைக் கொண்டு உடலைப் பொய்யாக மறைத்து விரும்பிப் பாராட் டாது, ஒரு பையை உட்புறம் வெளிப்புறம் ஆகுமாறு திருப்பிப் பார்ப்பது போல் பார்த்து உண்மை உணர்க. தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப் பொய்க்கோலம் செய்ய ஒழியுமே--எக்காலும் உண்டி வினையுளுறைக்கும் எனப்பெரியோர் கண்டுகை விட்ட மயல். 43 ‘எப்பொழுதும் இடைவிடாது உண்ணுந் தொழிலால் உண்டாகும் விளைவினை வெளிப்படக் காட்டும்’என்று பெரிய வர்கள் உண்மை உணர்ந்து கைவிட்ட உடலின் அழுக்கு, மணங் கூட்டிய வெற்றிலையைத் தின்று தலைநிறைய நறுமணப்பூச் சூடிப் பொய்யாகப் புனைவதால் ஒழிந்து போகுமோ? போகாது. தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன கண்ணீர்மை கண்டொழுகு வேன். 44 உள்ளிருக்கும் நீரை எடுத்துவிட்டால், நுங்கைத் தோண்டியதை ஒத்த அவள் கண்ணின் தன்மையைக் கண்டு துறவு நெறியில் வாழ்வேனாகிய யான், ‘தெளிந்த நீரில் மலரும் குவளைப்பூவும், ஒன்றையொன்று எதிரிடும் கயலும், வேலும்’ என்று பாராட்டும் அறிவிலார் என் மனத்தை வருத்துவதை எண்ணித் துறவு நெறியை விடேன். முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும் கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ எல்லாருங் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க பல்லென்பு கண்டொழுகு வேன். 45 எவரும் காணுமாறு சுடுகாட்டில் உதிர்ந்துகிடக்கும் பல்லையும் எலும்பையும் கண்டு தவநெறியில் செல்லும் யான் “பல் முல்லை அரும்பு போன்றது; முத்துப் போன்றது” என்று உவமைப்படுத்தி உளறும் அறிவிலார் வந்து என்னை வருத்து வதைக் கருதி யான் கொண்ட தவநெறியை விடேன். குடரும் கொழுவும் குருதியும் என்புந் தொடரும் நரம்பொடு தோலும்--இடையிடையே வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்றுள் எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள். 46 “குளிர்ந்த மாலையை அணிந்தவள்” என்று புனைந்துரைப் பவர்களே, குடலும் மூளையும் இரத்தமும் எலும்பும் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து பரவிய நரம்புடன் தோலும் இவற்றுக்கு இடையிடையே வைக்கப் பெற்ற தசையும் கொழுப்பும் ஆகிய இப்பொருள்களுள் எப்பகுதியைச் சேர்ந்தவள் அம்மாலையை அணிந்தாள்? ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும் கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தை--பேதை பெருந்தோளி பெய்வளாய் என்னுமீப் போர்த்த கருந்தோலால் கண்விளக்கப் பட்டு. 47 உடல் என்பது அழுக்கு ஊறி வெறுக்கத்தக்க ஒன்பான் துளை வழியேயும் கழிவு பெருக்கெடுத்து ஒழுகும் ஓட்டைக் குடம்; அதனை மேலே மூடிய அழகிய தோலால் தன் கண்கள் கவரப்பெற்று அறிவிலி, “பெரிய தோள்களை உடையவளே; அழகிய வளையல்களை அணிந்தவளே” என்று கூறுவான். பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும் கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல்--மண்டிப் பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தன் முடைச்சாகா டச்சிற் றுழி. 48 உடலாகிய பொருளின் இழிவை அறியாராய் அதன்மேற் பூசப் பெற்ற சந்தனத்தையும், சூடப்பெற்ற மாலையையும் கண்டு மயங்கிப் பாராட்டுபவர், நாறும் உடலாகிய வண்டியின் உயிரா கிய அச்சு முறிந்தபோது ஆண் கழுகும் பெண் கழுகும் கூடிச் சேர்ந்து புரட்டிக் குத்தித் தின்பதைக் கண்டது இலரோ? கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக் குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி--ஒழிந்தாரைப் போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று சாற்றுங்கொல் சாலச் சிரித்து. 49 இறந்தவர்களின் சிதறிக் கிடக்கும் தலைகள், குழியாக ஆழ்ந்த கண்களை உடையனவாகக் காண்பவர் நெஞ்சம் நடுங்கு மாறு தோன்றி, இறவாமல் இருப்பாரைப் பார்த்து “பற்றற்ற நன் னெறியைப் போற்றி வாழுங்கள்; உடலின் தன்மை இத்தகைத் தேயாம்” என்று எள்ளி நகையாடிச் சொல்லும் போலும். உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச் செயிர்தீர்க்கும் செம்மாப் பவரைச்--செயிர்தீர்ந்தார் கண்டிற் றிதன்வண்ணம் என்பதனால் தம்மையோர் பண்டத்துள் வைப்ப திலர். 50 இறந்தவரது மண்டையோடு, கண்டோர் அஞ்சும்படி நகைத்து, மனம் மயங்கித் திரிவாரின் குற்றத்தைத் தீர்க்கக்கூடும். அக்குற்றம் இயல்பாகத் தீர்ந்தவர் “இவ்வுடம்பின் தன்மை இருந்தவாறு இஃது” என்று தாமே தெளிந்தமையால், தம் உடம்பை ஒரு பொருளாக மதித்தல் இலர். 6. துறவு விளக்குப் புகவிருள் மாய்ந்தாங் கொருவன் தவத்தின்முன் நில்லாதாம் பாவம்--விளக்குநெய் தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை தீர்விடத்து நிற்குமாம் தீது. 51 விளக்கின் ஒளிபுகுதலால் ஓரிடத்து நிரம்பிக்கிடந்த இருள் மறைதல் போல் ஒருவரது தவத்தின்முன்னே அவர் செய்த தீவினை மறைந்து ஒழியும். விளக்கில் இருந்த நெய் தீர்ந்தபின் இருள் மீண்டும் பரவிச் சேர்வது போல் ஒருவர் செய்த நல்வினை தீர்ந்த பொழுதில் தீவினைப் போய்ச் சூழ்ந்து எங்கும் பரவி நிற்கும். நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித் தலையாயார் தங்கருமஞ் செய்வார்--தொலைவில்லாச் சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும் பித்தரிற் பேதையா ரில். 52 சிறந்தோர், நிலையாமைத் தன்மை, பல்வேறு பிணிகள், முதுமைத் துயர், இறப்பென்னும் துன்பம் ஆகியவற்றை எண்ணித் தாம் செய்யத்தக்க கடமையாகிய தவநெறியை மேற் கொள்வர். இவ்வாறின்றி வரம்பில்லாத இலக்கண நூல் கணி நூல் என்னும் இவை போன்றவற்றை உளறிக் கொண்டிருக்கும் பித்தரினும் அறிவிலார் பிறர் இலர். இல்லம்இளமை எழில்வனப்பு மீக்கூற்றம் செல்வம் வலிஎன் றிவையெல்லாம்--மெல்ல நிலையாமை கண்டு நெடியார் துறப்பர் தலையாயர் தாமுய்யக் கொண்டு. 53 இல்வாழ்வு, இளமைப்பருவம், வளர்ச்சி, அழகு, உயர்ந்த சொல், செல்வம், வலிமை என்று கூறப்பெறும் இப்பேறுகள் எல்லாமும் நிலையாது ஒழிதலை அமைதியாகக் கண்டறிந்த பெரியோர் தாம் கடைத்தேறும் வழியைக் கைக்கொண்டு வறிதே பொழுதைப் போக்காமல் விரைந்து துறவு மேற் கொள்வர். துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை இன்பமே காமுறுவ ரேழையார்--இன்பம் இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா றடைவொழிந்தா ரான்றமைந் தார். 54 அறிவிலார் பலநாள் துன்பம் அடைந்தாலும் ஒரோ ஒருநாள் அடையும் இன்பத்தையே பெரிதும் விரும்புவர். அறிய வேண்டி யவற்றை அறிந்து அமைந்த பெரியோர், இடையே இன்பம் சிறிதளவு இருப்பதை அறிந்தும் துன்ப மிகுதியைக் கண்டு இல்வாழ்வின் வழிச் செல்லுதலை நீங்கினர். கொன்னே கழிந்தன் றிளமையும் இன்னே பிணியொடு மூப்பும் வருமால்--துணிவொன்றி என்னொடு சூழா தெழுநெஞ்சே போதியோ நன்னெறி சேர நமக்கு. 55 துணிவொடு பொருந்தி, என்னொடும் ஆராயவேண்டியதை ஆராயாமல் மதர்த்தெழும் மனமே, இளமைப் பருவம் பயனற்று அழிந்துபோயிற்று; இப்பொழுதே நோயொடு கூடிய முதுமையும் வந்து சேரும்; ஆதலால் நமக்கு நன்னெறி கிடைக்குமாறு என்னுடன் சேர்ந்து வருவாயாக. நீ என்னொடு வாராக்கால் வாழ்வே பயனற்றதாம். மாண்ட குணத்தொடு மக்கட்பே றில்லெனினும் பூண்டான் கழித்தற் கருமையால்--பூண்ட மிடி என்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே கடிஎன்றார் கற்றறிந் தார். 56 பெருமை பொருந்திய குணத்தொடு, மக்கட்பேறும் வாய்க்கா விட்டாலும் கணவன் தன் மனைவியை விலக்கிச் செல்வது அரிது; ஆதலால், மனைவாழ்வில் வறுமை வந்து வாட்டுதல் உறுதி என்னும் காரணம் பற்றியேனும் உயர்ந்த துறவறத்தை மேற்கொள்ளுதற்கு இல்லறத்தை விடுக என்று அறிந்தோர் கூறுவர். ஊக்கித்தாங் கொண்ட விரதங்கள் உள்ளுடையத் தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால் நீக்கி நி றூஉம் உரவோரே நல்லொழுக்கம் காக்கும் திருவத் தவர். 57 தாம் முயன்று மேற்கொண்ட தவநெறிகள் எல்லாமும் கெட்டு ஒழியுமாறு, தடுத்தற்கு அரிய துன்பங்கள் தம்மிடத்து வந்தபோதும், அத் துன்பத்தைப் பொருட்டாக எண்ணாது நீக்கித் தம் தவநெறியை நிலைநிறுத்தும் வலிமையாளரே, துறவொழுக்கத்தைத் தவறின்றிக் காக்கும் பேறுடையவர். தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை இகழ்ந்த வினைப்பயத்தால்--உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன். 58 தம்மைப் பிறர் எத்தகைய காரணமும் இன்றி இகழ்ந்தாலும் அதைத் தாம் பொறுத்துக் கொள்வதை அல்லாமல், ‘எம்மை இகழ்ந்த தீவினையின் பயனால் தீக் கக்கும் நரகத்தில் இவர் வீழ்வரே’ என்று வருந்தி அவன்மேல் இரக்கம் கொள்வதும் தவ நெறி மேற்கொண்ட சான்றோர்கள் கைக் கொள்ளும் உயர்ந்த கடமையாகும். மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை அவாவினைக்--கைவாய்க் கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான் விலங்காது வீடு பெறும். 59 மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என்னும் பெயர்களைக் கொண்டு ஐந்து வாயில்களாலும் உண்டாகும் விருப்பத்தையும் விரும்பியவற்றை அடையக் கருதும் ஆவலையும் தீயவழியில் செல்லாவண்ணம் கலங்காமல் காத்துத் தவநெறியில் செலுத்த வல்ல ஆற்றலுடையவன், தவறாமல் வீடுபேற்றைப் பெறுவான். துன்பமே மீ தூரக் கண்டுந் துறவுள்ளார் இன்பமே காமுறுவ ரேழையார்--இன்பம் இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப் பசைதல் பரியாதாம் மேல். 60 அறிவிலார் தம் வாழ்வில் துன்பமே பெருகி வருவதைக் கண்டும், துறவு நெறியை விரும்பாதவராய் இன்பத்தையே விரும்பி வாழ்வர். அறிவுடைய மேலோர், இன்பம் வருந்தோறும் வருந்தோறும் அதனால் உண்டாகும் துன்பத்தைப் பார்த்துப் பார்த்து அவ் வின்பத்தை விரும்புதல் இலர். 7. சினமின்மை மதித்திறப் பாரும் இறக்க மதியா மிதித்திறப் பாரும் இறக்க--மிதித்தேறி ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார் காயுங் கதமின்மை நன்று. 61 தம்மை மதித்துச் செல்வாரும் செல்க; அவ்வாறு மதிக்கா மல் செல்வாரும் செல்க; ஈயும் தூய்மை இல்லாத இழிந்த காலால் மிதித்து ஏறித் தலையின்மேல் இருக்கும்; இதனைக் கண்முன்னே காண்பவர் சேர்ந்த இடத்தை எல்லாம் சுட்டெ ரிக்கும் சினத்தைக் கொள்ளாதிருத்தல் நல்லது. தண்டாச் சிறப்பிற்றம் இன்னுயிரைத் தாங்காது கண்டுழி யெல்லாந் துறப்பவோ--மண்டி அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின் முடிகிற்கும் உள்ளத் தவர். 62 நெருங்கிச் சிறிதும் பின்னிடாமல் அளவிறந்த இழிவு வந்து சேர்ந்த பொழுதிலும், தாம் மேற்கொண்ட செயலை இடைய றாது முடிக்கும் ஊக்கமுடையவர், எளிமையாய்க் கருதத்தக்க பொழுதிலும் பொறுத்துக் கொள்ளாமல், மிகச் சினங்கொண்டு ஒழியாத சிறப்புடைய தம் இனிய உயிரை விடுவரோ? காவா தொருவன்றன் வாய்திறந்து சொல்லும்சொல் ஓவாதே தன்னைச் சுடுதலால்--ஓவாதே ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. 63 ஒருவன் அடக்கமில்லாமல் தன் வாயைத் திறந்து பிறரை இகழ்ந்து சொல்லும் கொடுஞ்சொல் ஒழியாமல் தன்னைத் துன்புறுத்துதலால், இடைவிடாமல் ஆராய்ந்து நிரம்பிய கேள் வியும் கல்வி அறிவும் உடைய பெரியோர், எப்பொழுதிலா யினும் தம் மனம் வெதும்பிச் சுடு சொற்களைச் சொல்லார். நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர்--ஓர்த்ததனை உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத் துள்ளித் தூண் முட்டுமாம் கீழ். 64 தமக்கு இணையில்லாத தாழ்ந்தவரும் தம்மைத் தாக்கிப் பண்பற்ற சொற்களைச் சொல்லியபோதும் சிறந்தோர் மனம் புழுங்கிச் சினங்கொள்ளார். ஆனால், கீழ்மக்கள் அத்தகைய சொற்களை ஆய்ந்து பலபொழுதும் நினைந்து பலர்க்கும் உரைத்துத் திரிந்து ஊரார் அறியக் குதித்துத் தூணிலும் முட்டிக் கொள்வர். இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள் இல்லான் கொடையே கொடைப்பயன்--எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன் பொறுக்கும் பொறையே பொறை. 65 இளமைப் பருவம் உடையவன் கொள்ளும் புலனடக்கமே உயர்ந்த அடக்கம் ஆகும். பெருகி வளரும் செல்வ வாய்ப்பு இல்லாதவன் கொடையே கொடையின் முழுப்பயனும் தருவ தாம். இவற்றைப்போல் எவற்றையும் அழிக்கவல்ல வலிமையும் அறிவும் உடையவன் பொறுத்துக் கொள்ளும் பொறுமையே சிறந்த பொறுமையாம். கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல் எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர்--ஒல்லை இடுநீற்றாற் பையவிந்த நாகம்போல் தத்தம் குடிமையான் வாதிக்கப் பட்டு. 66 மறைமொழி ஓதி இடும் திருநீற்றால் விரித்த படத்தை விரைந்து சுருக்கிக் கொள்ளும் பாம்புபோல், பெரியோர் தங்கள் தங்கள் உயர்குடிப் பிறப்பின் பெருமையால் வருத்தமுற்றுக் கீழ் மக்களின் வாயிலிருந்து வரும் கல்லெறிந்தாற்போன்ற கொடுஞ் சொற்களை எவரும் அறியுமாறு பொறுத்துத் தம் பெருமை யைக் காப்பர். மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை ஆற்றாமை என்னா ரறிவுடையார்--ஆற்றாமை நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று. 67 பகைவராக இருந்து தம் பகையை எதிர்கொள்பவரிடத்துத் தாமும் பகைமை பாராட்டாதிருக்கும் தன்மையை இயலாமைத் தன்மை என்று அறிவுடையோர் பழிக்க மாட்டார். பகைமையுடையவர் எதிர்த்துத் தாங்காத் துயர்களைச் செய்தாலும், அப் பொழுதும் தாம் அவர்க்கு மீண்டும் துன்பம் செய்யாதிருத்தல் நல்லது. நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி கெடுங்காலம் இன்றிப் பரக்கும்--அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம். 68 கீழ்மக்களின் சினம் மிக நெடிய காலம் சென்றால்கூட தணியுங் காலம் இல்லாமல் பெருகி வளர்ந்து கொண்டே நிற்கும். சிறப்பியல்புகள் எல்லாம் ஒருங்கே அமைந்த பெரியோர் சினம், காய்ச்சுகின்ற பொழுதில் நீர் கொண்ட வெப்பம், தானே விரைந்து தணிந்து தண்ணிது ஆவதுபோல் விரைந்து தணிந்து தண்ணிதாகிவிடும். உபகாரஞ் செய்ததனை ஓராதே தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும்--உபகாரம் தாஞ்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல் வான்தோய் குடிப்பிறந்தார்க் கில். 69 தாம் முன்பு செய்த நல்லுதவிகளைச் சிறிதும் நினைக்காமல் தமக்குப் பிறர் தீமைகளை அளவின்றிச் செய்தாலும், மீண்டும் அவர்க்கு உதவிகளையே செய்வதை அல்லாமல் அவர் செய்த தீமைகளைப் பல்கால் எண்ணித் தாமும் தீயவற்றைச் செய்தல் மிக வுயர்ந்த நற்குடியில் பிறந்த பெரியோர்களிடத்தில் இல்லை. கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயால் பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை--நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. 70 சினங்கொண்ட நாய் தம்மைக் கடித்துத் தசையைப் பற்றிக் கொள்ளக் கண்டபோதும், கடித்த நாயைத் தம் வாயால் கடிப்பவர் உலகில் இலர். அதுபோல் தகுதியான சொற்கள் அல்லாமல் இழிந்தவர்கள் இழிந்த சொற்களைச் சொன்னாலும் உயர்ந்தோர் தங்கள் வாயால் அத்தகைய சொற்களைத் திருப்பிச் சொல்லார். 8. பொறையுடைமை கோதை யருவிக் குளிர்வரை நன்னாட பேதையோ டியாதும் உரையற்க--பேதை உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று. 71 மாலைபோல் ஒழுகும் அருவிகள் பாயும் குளிர்ந்த நல்ல மலைநாட்டின் தலைவனே! அறிவிலியுடன் எந்த ஒன்றையும் உரையாடாது இருப்பாயாக. ஏனெனில், அறிவிலியிடம் எதையேனும் உரைத்தால் அவன் தன் தகுதிக்குரிய வரம்பு கடந்து உரைப்பான்; ஆதலால், பொருந்திய வகையால் அவனை விலக்கிச் செல்லுதல் நல்லது. நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது தாரித் திருத்தல்தகுதிமற்--றோரும் புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம் சமழ்மையாக் கொண்டு விடும். 72 தகுதியில்லாத கீழ்மக்கள் தகுதியற்ற சொற்களைச் சொல்லிய போது, அச்சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதல் தகுதியாகும். அதற்கு மாறுபட்ட பொறுக்காத தன்மையை அலை பொங்கி ஆர்க்கும் கடல் சூழ்ந்த உலகிலுள்ளோர், புகழ்ச்சிக்குரிய பொரு ளாகக் கொள்ளாமல் இகழ்ச்சிக்குரிய பொருளாகக் கொள்வர். காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும் ஏதிலார் இன்சொலின் தீதாமோ--போதெலாம் மாதர்வண் டார்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப! ஆவ தறிவார்ப் பெறின். 73 பூக்களிலெல்லாம் விருப்பமிக்க வண்டு ஒலிக்கும் வளம் பொருந்திய குளிர்ந்த கடல் துறையின் தலைவனே! விளையப் போவதை ஆராய்ந்தறிந்து கொள்பவர்களை நட்பாகப் பெற்றால், அவர்கள் அன்பினால் சொல்லும் கடியசொல் தம் பகை வர் விரும்பிச் சொல்லும் இனிய சொல்லினும் தீயது ஆகுமோ? ஆகாது. அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி உறுவ துலகுவப்பச் செய்து--பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றுந் துன்புற்று வாழ்தல் அரிது. 74 அறிய வேண்டியதைத் தெளிவாக அறிந்து, பொறுமை யைச் சிக்கெனக் கடைப்பிடித்து, அஞ்ச வேண்டி யதற்கு அஞ்சி, செய்யத்தக்க செயலை உலகோர் விரும்புமாறு செய்து, அதனால் பெறும் பயனால் மகிழ்ந்து வாழும் இயல்புடைய பெருமக்கள் எக்காலத்திலாயினும் துன்பத்துடன் உயிர் வாழ்வது இல்லை. வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால் தேற்றா வொழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் ஆற்றுந் துணையும் பொறுக்க; பொறானாயின் தூற்றாதே தூர விடல். 75 வேறுபாடு சிறிதேனும் இல்லாமல் இருவர் மனங்கலந்து நட்புச்செய்த போதில், தெளிவில்லாத நடத்தை ஒருவனிடத்து உண்டாகுதல் கூடுமாயின், முடிந்த அளவு மற்றொருவன் அதனைப் பொறுத்துக் கொள்வானாக; அவ்வாறு பொறுக்க இயலாதாயின் பழிக்காமல் அவனைத் தொலைவில் விடுத்து விலகிச் செல்வானாக. இன்னா செயினும் இனிய ஒழிகென்று தன்னையே தான்நோவின் அல்லது--துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல்! கானக நாட! விலங்கிற்கும் விள்ளல் அரிது. 76 காட்டு நாட்டின் தலைவனே, நண்பரெனத் தெளிந்த ஒருவர் துன்பம் செய்தாலும் இன்பம் செய்ததுபோல் போவதாக என்று கருதித் தன்னைத்தானே நொந்துகொள்வது அல்லாமல், தன்னொடு நெருங்கி நட்புக் கொண்டவரைக் கைவிடுதல் கூடாது. ஏனெனில், விலங்கிற்கும் நட்பில் பிரிதல் அரிதாகும். பெரியார் பெருநட்புக் கோடல்தாஞ் செய்த அரிய பொறுப்பவென் றன்றோ--அரியரோ ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட! நல்லசெய் வார்க்குத் தமர். 77 ‘ஒல்’லென ஒலி செய்யும் அருவிகளையுடைய உயர்ந்த மலைநாட்டின் நல்ல தலைவனே, பெரியவர்களின் உயர்ந்த நட்பை ஒருவர் கொள்வது, தாம் செய்பவற்றுள் பொறுத்தற்கு அரியவற்றையும் பொறுத்துக்கொள்வர் என்று கருதியல்லவோ! நன்மைகளைத் தேர்ந்து செய்பவர்க்கு நண்பராவார் அரியரோ? மிகப்பலர். வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க் கற்றம் அறிய உரையற்க--அற்றம் மறைக்குந் துணையார்க் குரைப்பவே தம்மைத் துறக்குந் துணிவிலா தார். 78 உடல் வாட்ட மடைந்து தாங்காப் பசிநோய்க்கு ஆட்பட்டாலும் நல்லியல்பு இல்லாதவரிடத்துத் தன் வறுமை வெளிப்படுமாறு உரையாது இருப்பாயாக. பற்றறுத்துத் தம்மைத் துறவு நெறியில் புகுத்தும் துணிவு இல்லாதவரே, தம் வறுமையைப் போக்கவல்ல வளமையும் வன்மையும் உடைய வர்க்கு உரைப்பர். இன்பம் பயந்தாங் கிழிவு தலைவரினும் இன்பத்தின் பக்கம் இருந்தைக்க--இன்பம் ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட! பழியாகா ஆறே தலை. 79 பொங்கித் ததும்பும் அருவிகளையுடைய மலைநாட்டின் தலைவனே, இன்பத்தைத் தந்த அதே இடத்தில் இழிவு மிகுதியாக வந்தாலும் அவ்வின்பத்தைச் சார்ந்திருக்காமல் அகல்வாயாக; இடையீடு இல்லாமல் இன்பம் தொடர்ந்து வரக் கண்டாலும், உயர்ந்தோர் பழிக்கு இடமாகாத வழியே சிறந்தது. தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின் ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க--வான்கவிந்த வையகம் எல்லாம் பெறினும் உரையற்க பொய்யோ டிடைமிடைந்த சொல். 80 ஒருவன் தான் கெடும் நிலைமை உண்டாயினும் தகுதி வாய்ந்த பெரியோர்க்குக் கேடு நினையாது இருப்பானாக; பசியால் தன் உடலின் தசை வற்றிப் போனாலும் உண்ணத் தகாதவர் கையில் உண்ணாது இருப்பாயாக; வானத்தால் வளையப் பெற்றிருக்கும் உலகமுழுதும் பெறுவதாயினும் பொய் யொடு கலந்த சொல் சொல்லா திருப்பாயாக. 9. பிறர்மனை நயவாமை அச்சம் பெரிதால், அதற்கின்பம் சிற்றளவால், நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால்.--நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால், பிறன்தாரம் நம்பற்க நாணுடை யார். 81 பிறர்மனை விரும்புதலால் அச்சம் மிகுதியாகும்; அதனால் அடையும் இன்பம் சிறிதே ஆகும்; நாள்தோறும் ஆராய்ந்து பார்த்தால் அரசன் விதிக்கும் கொலைத் தண்டனையும் வரும்; என்றும் கொதிக்கும் நரகத்திற்கும் இடமாக்கும்; ஆதலால் பழி பாவங்களுக்கு நாணும் இயல்பினர் பிறர்மனை விரும்பாது இருப்பாராக. அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும் பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா--பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என் றச்சத்தோ டிந்நாற் பொருள். 82 பிறர்மனை விரும்பிச் சேர்பவர்க்கு நல்லறமும், உயர் புகழும், கெழுதகைமை நட்பும், தலையெடுத்து நடக்கும் பெருமிதமும் சேராமல் ஒழியும்; பிறர்மனை விரும்பிச் சேர் பவரைத் தீராப்பகையும், அழியாப் பழியும், கொடும்பாவமும், அச்சமும் என்னும் இந் நான்கு பொருளும் சேரும். புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமற் காப்பச்சம் எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறன்இல் புகல். 83 பிறர்மனை விரும்புபவர்க்கு அவ்வாறு விரும்பிப் புகும்போதும் அச்சம்; திரும்பி வரும்போதும் அச்சம்; நுகரும் போதும் அச்சம்; அதனை வெளிப்படாமல் காத்தலிலும் அச்சம்; எப்பொழுதும் அச்சம் தரும்; அவ்வாறாகவும் அஞ்சா மல் பிறர் மனையை விரும்பிச் செல்லுதல் எதற்காகவோ? காணிற் குடிப்பழியாம் கையுறிற் கால்குறையும் மாணின்மை செய்யுங்கால் அச்சமாம்--நீள்நிரயந் துன்பம் பயக்குமால்; துச்சாரி! நீகண்ட இன்பம் எனக்கெனைத்தால் கூறு. 84 பிறர்மனை நயத்தலைக் கண்டால் குடிக்குப் பழியாகும்; கையின்கண் அகப்பட்டால் கால் முதலிய உறுப்புக் கேடு உண் டாகும்; ஆண் தகைமை இல்லாமையைக் கொடுக்கும்; அச்சத் தை ஆக்கும்; நெடிய நரகத்துயர் ஊட்டும்; அவ்வாறாக, பொல் லாதவனே, நீ பிறர்மனை நயத்தலால் கொண்ட இன்பம் யாதாம்? எனக்குக் கூறு. செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க் கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ--உம்மை வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே இம்மை அலியாகி ஆடிஉண் பார். 85 முற்பிறப்பில் தமக்கு இருந்த பொருள் முதலிய வாய்ப்புக் களால், நேர்மை சிறிதும் இல்லாமல் கீழ்மக்கள் கூட்டத்தைச் சேர்ந்து பிறர்மனையைப் பெரிதும் விரும்பிப் பித்தேறி ஆடித் திரிந்தவரே, இப் பிறப்பில் ஆண்மைத் தன்மை இழந்து அலிப் பிறப்படைந்து கூத்தாடி வயிறு வளர்ப்பவர் ஆவர். பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக் கல்யாணம் செய்து கடிப்புக்க--மெல்லியற் காதல் மனையாளும் இல்லாளா என்னொருவன் ஏதில் மனையாளை நோக்கு. 86 ‘மங்கல நாள் இஃது’ என்று கேட்டறிந்து ஊரும் உறவும் ஆகிய அனைவரும் அறியுமாறு முரசறைந்து மணஞ்செய்து கொண்டு தன் காவலில் உள்ள மெல்லிய இயல்புடைய விருப்பமான மனைவி தன்இல்லத்தில் இருப்பாளாக, அயலார் மனைவியை ஒருவன் விரும்பிப் பார்த்தல் எதற்காகவோ? அறியேம். அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று--நம்பும் நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு பாம்பின் தலைநக்கி யன்ன துடைத்து. 87 அயலார் பழித்துக் கூற யாது நேருமோ என அச்சம் கொண்டு தம்மவர் வருந்த அயலான் மனைவியைத் தழுவி இன்புற்று, எவராலும் நம்புதற்கு இல்லாத மனத்தையுடை யவனது இத்தீய இன்ப நுகர்ச்சி, பாம்பினது தலையை ஒருவன் தன் நாவால் விரும்பித் தடவி இன்பம் அடைவதற்கு ஒப்பான தாகும். பரவா வெளிப்படாப் பல்லோர்கண் தங்கா உரவோர்கண் காமநோய் ஓஓ கொடிதே விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும் உரையாதுள் ஆறி விடும். 88 மன உறுதியுடைய பெரியோரிடத்துக் காமம் பரவாது; வெளிப்படாது; ஒருகால் வெளிப்படினும் உரிமை மகளிர் அன்றிப் பலரிடத்தும் பொருந்தாது; அவ்வுணர்வு இல்லாதவர் இடத்து நாணப்படுதற்கு அஞ்சி எதனையும் உரையாது; தம் உள்ளத்தின் உள்ளேயே அமைந்து அடங்கிப் போய்விடும்! இத்தகைய காமநோய் மிகக் கொடிதேயாம். அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும் வெம்பிச் சுடினும் புறம்சுடும்--வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலாற் காமம் அவற்றினும் அஞ்சப் படும். 89 அம்பு, தீ விரிந்த அனற் கதிர்களையுடைய ஞாயிறு ஆகியவை கொதித்துத் தாக்கிச் சுட்டாலும் உள்ளாற் சுட்டுத் துயரூட்டாமல் புறத்தே தான் சுடும். ஆனால், காமம் வெதும்பி கவலைக்கு ஆட்படுத்தி உள்ளத்தைச் சுடும். ஆதலால் புறத்தாற் சுடுபவற்றினும் அகத்தால் சுடும் காமமே அஞ்சத் தக்கது. ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு நீருட் குளித்தும் உயலாகும்--நீருட் குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி ஒளிப்பினுங் காமம் சுடும். 90 ஊரைச் சுற்றி வளைத்துக் கொண்டு மேலோங்கிய அஞ்சத் தக்க பெரு நெருப்பிற்கு நீருள் மூழ்கியேனும் தப்பிப் பிழைக்க முடியும். ஆனால், காமத்தீ ஒருவனைப் பற்றினால் அவ்வாறு நீரில் மூழ்சிப் போக்கிவிடக் கூடியதன்று. நீரில் மூழ்கினாலும் சுடும்; மலைமேல் ஏறிப்போய் ஒளிந்து கொண்டாலும் சுடும். 10. ஈகை இல்லா இடத்தும் இயைந்த அளவினால் உள்ள இடம்போல் பெரிதுவந்து--மெல்லக் கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்(கு) அடையாவாம் ஆண்டைக் கதவு. 91 பொருள் தம்மிடம் இல்லாத காலத்திலும் பொருள் உள்ள காலம்போல் தம்மால் இயன்ற அளவில் மிகவுவந்து ஆரவாரம் சிறிதும் இல்லாமல் கொடுக்கும் இயல்பமைந்த ஈகையாளர்க்கு, எய்துதற்கு அரிய துறக்க உலகத்தின் வாயிற் கதவுகள் அடைக் கப்படுவது இல்லை; வரவேற்கத் திறந்தே இருக்கும். முன்னரே சாநாள் முனிதக்க மூப்புள பின்னரும் பீடழிக்கும் நோயுள--கொன்னே பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதுங் கரவன்மின் கைத்துண்டாம் போழ்து. 92 வெறுக்கத் தக்க முதுமைப் பருவமும், நம் கண் முன்னரே சாவும் நாளும் உள; மேலும் தம்பெருமை வலிமை முதலிய வற்றை அழிக்க வல்ல நோய்களும் உள; ஆதலால், கையில் உள்ளபோது வீணே அதனைப் பெருக்க அலையாதீர்; இறுக்கிப் பிடிக்காதீர்; பகுத்துத் தந்து உண்பீர்; எதனையும் ஈயாது மறைத்து வைக்காதீர். நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார் கொடுத்துத்தாம் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால். 93 பிறருக்குத் தந்து தானும் நுகர்ந்தாலும் செல்வம் பெருகும் காலத்தில் பெருக்கமுற்றே தீரும். ஈயாது எவ்வளவு இறுக்கிப் பிடித்துக் கொண்டாலும் நல்வினை தீர்ந்தபோது செல்வம் தன்னைவிட்டு நீங்கியே போகும். இவ்வாறாக, வறுமையால் நடுங்கித் தன்னை இரந்தவர் துயரை நீக்காதவனாக இருப்பது ஏன்? இம்மி அரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்துண்மின்--உம்மைக் கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்(து) அடாஅ அடுப்பி னவர். 94 மிகச் சிறிய புல்லரிசி அளவே ஆயினும் நாள்தோறும் உங்களுக்குக் கூடுவதைப் பிறர்க்குக் கொடுத்து அதன்பின் உண்பீராக. ஆழ்ந்த நீர் நிரம்பிய கடல் சூழ்ந்த உலகில் உள்ள சமைத்தலை அறியாத அடுப்பை உடைய வறியவர், முற்பிறப்பில் பிறர்க்குக் கொடுத்துண்ணாதவர் என்று அறிந்தோர் கூறுவர். மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்(கு) உறுமா றியைவ கொடுத்தல்--வறுமையால் ஈதல் இசையா தெனினும் இரவாமை ஈதல் இரட்டி யுறும். 95 இப் பிறப்பில் வரும் புகழையும் மறுமையில் உண்டாகும் வீடு பேற்றையும் நோக்கி ஒருவர்க்குத் தம்மால் இயலுவதைத் தரவேண்டும். தம் வறுமையால் அவ்வாறு தர இயலாது என்றாலும், தாம் பிறரிடம் சென்று ஒன்றை இரந்து வாங்காமல் இருப்பது ஈவதைக் காட்டிலும் இருமடங்கு பெருமை தரும். நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க படுபனை அன்னர் பலர்நச்ச வாழ்வார் குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள் இடுகாட்டுள் ஏற்றைப் பனை. 96 பலரும் விரும்புமாறு ஈகைத் தன்மையுடன் வாழ்பவர் ஊர் நடுவே அமைந்த பொது மன்றத்தினால் சூழப்பெற்ற பயன்தரும் பெண் பனையைப் போல்வர். தம் குடும்பம் செல்வத்தால் செழிப்புற்ற போதும் பிறருக்குக் கொடுத்துண்ணாதவர், இடுகாட்டில் உள்ள காய்க்காத ஆண் பனைக்கு ஒப்பானவர். பெயற்பான் மழைபெய்யாக் கண்ணும் உலகம் செயற்பால செய்யா விடினும்--கயற்புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப! என்னை உலகுய்யும் ஆறு. 97 மீனின் புலால் நாற்றத்தைப் புன்னைப் பூவின் நறுமணம் நீக்கும் அலைமோதும் குளிர்ந்த கடற்கரைத் தலைவனே, பெய்ய வேண்டிய பருவ காலத்தில் மழைபெய்யத் தவறினாலும், உயர்ந்த பெரியவர்கள் தாம் செய்ய வேண்டியதைச் செய்யத் தவறினாலும் இவ்வுலகம் எவ்வாறு பிழைக்கும்? ஏற்றகை மாற்றாமை என்னானும் தாம்வரையா(து) ஆற்றாதார்க் கீவதாம் ஆண்கடன்--ஆற்றின் மலிகடல் தண்சேர்ப்ப! மாறீவார்க் கீதல் பொலிகடன் என்னும் பெயர்த்து. 98 வளம் மலிந்த குளிர்ந்த கடற்கரைத் தலைவனே, தாம் ஒரு வரையறை செய்யாதவராகத் திருப்பித் தரும் ஆற்றல் இல்லாத வர்க்கு அவர்கள் இரந்த கையில் மறுக்காமல் எவ்வளவேனும் வழங்குதல் முயற்சியாளர் கடமை; அவ்வாறு கொடுக்குங்கால் திருப்பித் தருவார்க்குக் கொடுத்தல் ‘வளர்கடன்’ என்னும் பெயர் பெறும். இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும் அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க--முறைப்புதவீன் ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோற் பைய நிறைத்து விடும். 99 தம் பொருளை மிகச் சிறியது என்று கருதாதும் ‘இல்லை’ என்று சொல்லாதும் எந்நாளும் பயன்படும் ஈகையை எவரிடத் தும் செய்க. அவ்வாறு செய்யின், முறை முறையே மனையின் வாயில்தோறும் பிச்சை எடுக்கும் துறவியின் உண்கலம் மெதுவாக நிரம்புவதுபோல் அறத்தின் பயனை அச் செயல் மெதுவாக நிரப்பிவிடும். கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர் இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர் கொடுத்தா ரெனப்படும் சொல். 100 குறுந்தடியால் அறையப்படும் கண்ணையுடைய முரசின் ஒலியைக் ‘காத’ தொலைவில் உள்ளோரே கேட்பர்; முகில் இடித்து முழங்கிய ஒலியை ‘யோசனை’ என்னும் தொலைவில் உள்ளோரே கேட்பர்; “இவர் கொடுத்தார்” என்று உயர்ந்தோரால் சொல்லப்படும் சொல், அடுக்காக அமைந்த மூவுலகிலுள் ளோர்க்கும் கேட்கும். 11. பழவினை பல்லாவுள் உய்த்துவிடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்--தொல்லை பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு. 101 பல பசுக்கள் கூடிய கூட்டத்தின் இடையே ஓர் இளங் கன்றைச் செலுத்தி விட்டாலும் அக்கன்று தன் தாய்ப் பசுவைத் தேடிக் கொள்ளுவதில் மிகத் தேர்ச்சி யுடையதாம். தொன்று தொட்டுவரும் வினையும், தன்னைச் செய்த உரிமையாளனைத் தேர்ந்து தொடர்வதில் அக்கன்றுக்கு ஒப்பானதே யாம். உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும் ஒருவழி நில்லாமை கண்டும்--ஒருவழி ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு நின்றுவீழ்ந் தக்க துடைத்து. 102 அழகும், இளமையும், சிறந்த பொருளும், நன்மதிப்பும் உலகில் ஒரே தன்மையாக எல்லாரிடத்தும் நில்லாமையைக் கண்டறிந்தும், எவ்வழி யிலாயினும் முயன்று ஒரு நல்வினையை யாவது தேடி வைத்துக் கொள்ளாதவன் வாழ்வு உடலைத் தாங்கி நின்று வீழும் தன்மையை உடையது; அவ்வளவே. வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை அளந்தன போகம் அவரவர் ஆற்றால் விளங்காய் திரட்டினார் இல்லை களங்கனியைக் கார்எனச் செய்தாரும் இல். 103 விளங்காயை உருண்டையாகத் திரட்டி வைத்தவர் எவர்? களாம் பழத்தைக் கருநிறமாகச் செய்து வைத்தவர் எவர்? ஒருவரும் இலர்; அதுபோல் பலவகை வளங்களையும் வேண்டா என்று கூறுவார் எவரும் இலர். ஆயினும், அவரவர் செய்த வினையின் அளவால் அவரவர் நுகர்வு அளவிடப்பட்டுள்ளது. உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா பெறற்பா லனையவும் அன்னவாம் மாரி வறப்பின் தருவாரும் இல்லை அதனைச் சிறப்பின் தணிப்பாரும் இல். 104 மழை பெய்யாமல் பொய்த்துப் போனால் அதனைப் பெய்ய வைப்பாரும் இலர்; அம்மழை மிகுத்துப் பெய்யின் அதனைக் குறையப் பெய்யச் செய்வாரும் இலர்; அதுபோல் தீவினைப் பயனால் தம்மைப் பொருந்தும் துன்பத்தை நீக்க எத்தகைய வலியவர்க்கும் ஆகாது; பெறுதற்குரிய நன்மையைக் குறைத்தற்கும் ஆகாது. தினைத்துணைய ராகித்தம் தேசுள் ளடக்கிப் பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர் நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலை வினைப்பய னல்லாற் பிற. 105 ‘பனை’ என்னும் அளவுடைய பெரியவரும் நாள்தோறும் தம் பெருமை அழிந்து ‘தினை’ என்னும் அளவினை உடையவ ராகப் புகழ் உள்ளே அடங்கி வாழ்வர். இது முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனே அல்லாமல் ஆராய்ந்து பார்த்துத் தெளிவு காணுதற்குரிய ஒன்றன்று. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவுங் கல்லாதார் வாழ்வ தறிதிரேற்--கல்லாதார் சேதன மென்னுமச் சேறகத் தின்மையால் கோதென்று கொள்ளாதாங் கூற்று. 106 பல துறைகளாக விரிந்த நூற்கேள்வியாற் சிறந்த அறிவுப் பயனுணர்ந்தவர் விரைவில் இறக்கவும், கல்வி அறிவில்லாதார் நெடுநாள் உலகில் உயிர் வாழவும் ஆகியதை அறிய விரும்பு வீராயின் கல்லாரிடத்து அறிவு என்னும் இனிய சாறு உள்ளே இல்லாமையால் இது வெறுஞ் சக்கை எனக் கூற்றுவன் கொள்வதில்லையாம். இடும்பைகூர் நெஞ்சத்தா ரெல்லாருங் காண நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம்--அடம்பப்பூ அன்னம் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப! முன்னை வினையாய் விடும். 107 அடும்பின் பூவை அன்னங் கிழித்து மகிழும் அலை மோதும் தண்ணிய கடற்கரைத் தலைவனே! வறுமைத் துயர் நிரம்பிய மனத்தராய் அனைவரும் பார்த்து இகழச் சிலர் பிறருடைய பெரிய வீட்டு வாயிலில் நின்று இரந்து அலைக்கழிவது முற்பிறப்பிற் செய்த தீவினையால் அமைந்த தாகும். அறியாரு மல்லர் அறிவ தறிந்தும் பழியோடு பட்டவை செய்தல்--வளியோடி நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப! செய்த வினையான் வரும். 108 காற்று அலைத்தலால் நெய்தல் மலரின் தேன் ஒழுகும் பெரிய குளிர்ந்த கடற்கரைத் தலைவனே, அறியாதவராக இல்லாமல் அறிய வேண்டியவற்றையெல்லாம் அறிந்திருந்தும் பெரும் பழியொடு பொருந்திய செயல்களை ஒருவர் செய்வது அவர் பிறப்பிற் செய்த தீவினைப் பயனாய் வருவதாகும். ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும் வேண்டார்மன் தீய விழைபயன் நல்லவை வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது. 109 நீர் நிறைந்த கடலால் சூழப்பட்ட உலகத்தில் எவரே ஆயினும் சிறிதளவும் துன்பந் தரும் தீயவற்றை விரும்பார். விரும்பத்தக்க நற்பயன் தரும் நல்லவற்றையே விரும்புவர். எனினும், விரும்பினாலும் விரும்பா விட்டாலும் வந்தடையக் கூடிய இன்ப துன்பங்களை அவரவர் அடையாமல் தப்புவது இல்லை. சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே ஆகும் சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால் இறுகாலத் தென்னை பரிவு. 110 பிறப்பின் தொடக்கத்திலேயே அமைந்த வினை விளையுங் காலத்துச் சிறுத்தும் போகமாட்டா; பெருத்தும் போக மாட்டா; முறைமை மாறியும் வரமாட்டா; இன்றியமையாப் பொழுதில் ஊன்றுகோல் போல் உதவவும் மாட்டா; துணை யாகும் காலத்திலேயே துணையாகும்; ஆதலால், அழியுங் காலத்து வருந்தி ஆவதென்ன? 12. மெய்ம்மை இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும் வசையன்று வையத் தியற்கை--நசைஅழுங்க நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி கொன்றாரின் குற்ற முடைத்து. 111 வரிசையாக அமைந்த வளையலையுடையாய், தம்மால் தருதற்கு இயலாத ஒரு பொருளை இரப்பவர்க்கு ‘இல்லை’ என்று கூறுவது எவருக்கும் இழிவன்று; அஃது உலகத்து இயற்கையே; ஆனால், இரப்பவர் ஆவல் அழிய நெடுநாட்கள் கடத்தி இல்லை என்று மறுப்பது நன்றி கொன்ற குற்றத்தினும் கொடிய குற்றமாம். தக்காரும் தக்கவர் அல்லாரும் தம்நீர்மை எக்காலும் குன்றல் இலராவர்--அக்காரம் யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு. 112 பண்பு நலங்கள் பொருந்திய தகுதியான பெரியவர்களும், அத் தகுதி இல்லாத சிறியவர்களும் தம் இயல்பில் என்றும் மாற்றம் அடையார். ஏனெனில், கருப்பஞ் சாற்றுக் கட்டி எவர் தின்றாலும் கசப்பது இல்லை. வேப்பங் காயைத் தேவர்களே தின்றாலும் கசக்காமல் இருப்பதும் இல்லை; ஆதலால், காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனின் பலராவர்--ஏலா இடர்ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட! தொடர்புடையேம் என்பார் சிலர். 113 குளிர்ந்த மலை நாட்டின் தலைவனே, செல்வாக்குள்ள பொழுதில் நெருங்கிய உறவினர் என்று மகிழ்ந்து வருபவர் விண்ணின் மேலே விளங்கும் மீனுக்கும் மிகப் பலராவர். எவராலும் தாங்குதற்கரிய வறுமை முதலிய துன்பத்தை அடையும்போது ‘நட்பு உடையேம்’ என்று உரிமை பாராட்டுபவர் ஒரு சிலரே. வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவண தெய்த இருதலையும் எய்தும்! நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்(து) அடுவது போலும் துயர். 114 குற்றமில்லாத இவ்வுலகத்தில் நிலைபெற்ற அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றனுள் நடுவேயுள்ள பொருள் ஒருவனி டம் எய்தினால் அறம் இன்பம் ஆகிய இரண்டும் தாமே வந்து சேரும். நடுவேயுள்ள பொருள் இல்லாதவன் உலையிலே போட்டுக் காய்ச்சுவது போன்ற துன்பத்தை எப்பொழுதும் அடைவான். நல்ஆவின் கன்றாயின் நாகும் விலைபெறுஉம் கல்லாரே ஆயினும் செல்வர்வாய்ச் சொல்செல்லும் புல்ஈரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச் செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். 115 உயர்ந்த இனத்துப் பசுவின் கன்றானால் அவன் இளங்கன்று கூட மிகுந்த விலைபெறும். அதுபோல் கல்வி அறிவில்லாதவர் ஆயினும் செல்வராக இருப்பின் அவர்கள் சொல்லும் சொல் பிறரால் மதிக்கப்படும். ஆனால், கற்றவரா யினும் வறியவர் சொல் சிறிது ஈரப் பொழுதில் உழப்படும் உழவு போல் மேலோடிச் சென்று உட்புகாதாம். இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் அடங்காதார் என்றும் அடங்கார்--தடங்கண்ணாய் உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய். 116 அகன்ற கண்ணையுடையாய், உப்புடன் நெய்யும் பாலும் தயிரும் பெருங்காயமும் இட்டுச் சமைத்தாலும் பேய்ச் சுரைக் காய் தன் கசப்புத் தன்மையில் நீங்காது. அதுபோல் விரிவாக மெய்யுணர்வு நூல்களைக் கற்றாலும் இயல்பான அடக்கம் இல்லாதவர் எந்நாளும் அடக்கம் இல்லாதவரே ஆவர். தம்மை இகழ்வாரைத் தாம்அவரின் முன்இகழ்க என்னை அவரொடு பட்டது?--புன்னை விறல்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப! உறற்பால யார்க்கும் உறும். 117 புன்னையின் வலிய பூவின் மணம் பரவும் சோலையினை யுடைய கடற்கரைத் தலைவனே, தம்மை ஒரு காரணமும் இன்றி இகழும் சிறியவர்களை, அவர்கள் தம்மை இகழு முன்னரே அவர்முன் சென்று இகழ்க; அவர்களோடு ஆகும் தொடர்பு தான் என்ன? வரக்கூடிய நன்மை தீமை எவர்க்கும் வந்தே தீரும்; அதனை மாற்றக் கூடுமோ? ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த பால்வே றுருவின அல்லவாம்--பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு 118 பசுக்கள் பல்வேறு வண்ணங்களை உடையனவாக இருந்தாலும் அப் பசுக்கள் சுரந்த பால் வெண்ணிறமே அன்றிப் பல்வேறு நிறங்களையுடையன அல்ல. பசுவின் பால்போல் அறப்பயன் ஒரு தன்மையானதேயாகும்; ஆனால், அறச் செயல் கள் பசுக்களின் வண்ணங்களைப் போல் பல்வேறு பட்டன வாம். யாஅர் உலகத்தோர் சொல்இல்லார் தேருங்கால் யாஅர் உபாயத்தின் வாழாதார்--யாஅர் இடையாக இன்னாத தெய்தாதார் யாஅர் கடைபோகச் செல்வம்உய்த் தார். 119 தெளிவாக ஆராய்ந்து பார்த்தால் உலகில் ஒரு பழிச் சொல்லும் அடையாதவர் எவர்? சூழ்ச்சித் திறத்தால் உலகில் வாழாதவர் எவர்? பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட நாளில் துன்பத்தை அறவே எய்தாதவர் எவர்? வாழ்வின் கடைசி வரை செல்வச் செழிப்பிலேயே வாழ்ந்தவர் எவர்? எவரும் இலர். தாம்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்(று) யாங்கணும் தேரின் பிறிதில்லை--ஆங்குத்தாம் போற்றிப் புனைத்த உடம்பும் பயம்இன்றே கூற்றம்கொண் டோடும் பொழுது. 120 எவ்வகையால் ஆராய்ந்து பார்த்தாலும் தாம் செய்த வினையை அல்லாமல் தாம் இறக்கும்போது தம்மோடு வருவது வேறொன்றும் இல்லை. கூற்றுவன் உயிரைக் கொண்டு செல்லும் பொழுதிலும், நாளும் பேணிப் பல வகையாலும் அழகூட்டிக் காத்த உடல் கூடத் தன் உயிரைத் தொடர்ந்து வருவது இல்லையே! 13. தீவினையச்சம் துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா மக்கட் பிணத்த சுடுகாடு--தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலங்கெட்ட புல்லறி வாளர் வயிறு. 121 துன்பத்திலே மயங்கித் துறவு நெறியில் செல்லாத மக்க ளாகிய பிணங்களைத் தன்னிடத்துக் கொண்டது சுடுகாடு ஆகும். ஆனால், அருள் உணர்வு சிறிதும் இல்லாத தாழ்ந்த அறிவினர் வயிறும் ஒருவகை இடுகாடே ஆகும். அது பல்வேறு விலங்குகளையும் பறவைகளையும் புதைக்கும் இடுகாடு என்க. இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க் காளாய்க் கரும்பார் கழனியுட் சேர்வர்--சுரும்பார்க்கும் காட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழும் கூட்டுளாய்க் கொண்டுவைப் பார். 122 வண்டுகள் ஒலிக்கும் செறிந்த காட்டில் வாழும் சிவல் குறும்பூழ் என்னும் பறவைகளைத் தம் உடலாகிய கூட்டில் உணவாகக் கொண்டு வைப்பவர், இரும்பால் ஆகிய வலிய விலங்கு பூட்டப்பெற்ற காலுடையவராகவும், அயலார்க்கு அடிமை ஆளாகிக் கரும்புத் தோட்டத்தில் கடும்பணி செய்ப வராகவும் ஆவர். அக்கேபோல் அங்கை ஒழிய, விரலழுகித் துக்கத் தொழுநோய் எழுபவே--அக்கால் அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக் கால். 123 முற்பிறப்பில், நண்டின் சாற்றை விரும்பி அதன் காலை முரித்துத் தின்ற தீவினை என்றும் விடாது தொடர்ந்து வருத லால், அக் கொடியவர், சங்குமணி போல் உள்ளங்கை மட்டும் ஒழிய விரல்கள் எல்லாம் அழுகித் தேய்ந்து நீங்காத் துன்பந்தரும் தொழு நோய் உடையவராகத் திரிவர். நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம் எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும்--பரப்பக் கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக் கடுவினையர் ஆகியார்ச் சார்ந்து. 124 சுவையும் நலமும் தரும் நெய் போன்ற பொருளும் தீயிடைப்பட்டு அதன் வெப்பத்தைத் தானும் கொண்டால் அதனைத் தொட்டவர்க்கும் சுவைத் தவர்க்கும் கொடுந்துயர் ஆக்கும். அதுபோல் செம்மையானவர்களும் கொடு வினை யாளர் கூட்டுறவைக் கொள்ளுதலால் தாமும் கொடியராய்க் கேடு புரிவர். பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும்--வரிசையால் வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே தானே சிறியார் தொடர்பு. 125 அறிவாலும் பண்பாலும் உயர்ந்த சான்றோர் நட்பு, நாளும் வளரும் பிறைமதிபோல் தொடர்ந்து பெருகி விளங்கும். சான்றாண்மை இல்லாத சிறியவர் நட்பு, நாள் தோறும் தேய்ந்து கொண்டே வந்து அறவே ஒளி இல்லாமல் ஒழியும் தேய் பிறை போல் தானே தேய்ந்து ஒழிந்து போய்விடும். சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின்--சார்ந்தாய்கேள் சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன் பாம்பகத்துக் கண்ட துடைத்து. 126 ‘பண்பால் உயர்ந்தவர் இவர்’ என்று மதித்து அவரைச் சார்ந்தவனே, பண்பால் உயர்ந்தவர் என்று நீ கருதி அடைந்த வரிடத்து அப் பண்பு இல்லை என்றால், அந்நிலை உள்ளே சந்தனம் உண்டு என்று கருதிச் செப்பினைத் திறந்த ஒருவன் அதனுள் பாம்பைக் கண்டது போன்ற இரக்கத்திற்கு உரியதாம். யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேருந் துணைமை உடையவர்--சாரல் கனமணி நின்றிமைக்கும் நாட! கேள், மக்கள் மனம்வேறு செய்கையும் வேறு. 127 மலைச் சரிவில் பெரிய மணிகள் கிடந்து ஒளி செய்யும் நாட்டின் தலைவனே, கேட்பாயாக! ஒருவர் தம் உள்ளத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் திறமை படைத்தவர் எவரே? எவரும் இலர். ஏனெனில், மாந்தர் ஒவ்வொருவர் மனமும் வேறுபட்டதாம். அவர்தம் செய்கையும் வேறு பட்டதாம். உள்ளத்தான் நள்ளா துறுதித் தொழிலராய்க் கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை--தெள்ளிப் புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட! மனத்துக்கண் மாசாய் விடும். 128 சேற்றினை ஒதுக்கித் தள்ளித் தெளிந்தோடும் ஆற்று வளமிக்க அழகிய மலைநாட்டின் தலைவனே, தம் உள்ளத்தால் நட்புக் கொள்ளாது தன்னலமே கடைப்பிடியாகக் கொண்டு உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்பவரின் நெருங்கிய நட்பு மனத்தின்கண் என்றும் நீங்காத குற்றமாக அமைந்து விடும். ஒக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால் ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும்--ஆக்கம் இருமையும் சென்று சுடுதலால் நல்ல கருமமே கல்லார்கண் தீர்வு. 129 உறையில் இருந்து எடுத்து ஓங்கப்பெற்ற ஒளியுடைய தன் கூரிய வாளே, தன் பகைவன் கையில் அகப்படும் போது தன்னை அழித்தல் உறுதியாகும். அதுபோல் தீயவர் கையில் அகப்பட்ட செல்வமும் இம்மை மறுமை ஆகிய இரண்டையும் அழித்தலால் அவர்களை நெருங்காது இருப்பதே நன்மையாம். மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே--எனைத்தும் சிறுவரையே ஆயினும் செய்தநன் றல்லால் உறுபயனோ இல்லை உயிர்க்கு. 130 என் மனமே, நீ குடும்பப் பற்றை விட்டொழியாய். ‘என் மக்களுக்கு’ ‘என் மக்களுக்கு’ என்றே எண்ணியும் வருந்தியும் எவ்வளவு காலம் வாழ்வாய்? எவ்வளவு சிறிதே எனினும் நீ செய்த அறம் ஒன்றுமே அல்லாமல் உன் உயிர்க்கு அழியாத் தொடர்பாக இருப்பது வேறு ஒன்றும் உண்டோ? இல்லையே! அறத்துப்பால் முற்றும்! 2. பொருட்பால் 14. கல்வி குஞ்சி யழகும் கொடுத்தாளைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல--நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி யழகே அழகு. 131 கறுத்துச் செறிந்த முடியின் அழகும், கொய்சக மடிப்பும் கோடும் அமைந்த ஆடையின் அழகும், பொன் போலும் நிறத்திற்கு மேலும் பொலிவூட்டும் மஞ்சள் அழகும் உயர்ந்தோரால் அழகெனப்படா. நடுவு நிலையுடன், ‘யாம் நெஞ்சத்தினால் நல்லேம்’ என்னும் நிறைவை உண்டாக்கும் கல்வி அழகே ஒருவற்கு அழகாம். இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை யுலகத்தும் யாம்காணேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. 132 கல்வி இப்பிறப்பிற்கு வேண்டுமவற்றையெல்லாம் தரும்; பிறர்க்கு வாரி வழங்கினாலும் குறைவது இல்லை; தம்மை ஒளியுடையவர் ஆக்கும்; கற்றவர் தம்மையும் நிலைக்கச் செய்து தானும் நிலைக்கும்; ஆதலால் எவ்விடத்தாயினும் கல்வியைப் போல் மாந்தர் மயக்க நோயை நீக்கும் மருந்தொன்றைக் கண்டது இல்லை. களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் கடைநிலத்தோ ராயினும் கற்றறிந் தோரைத் தலைநிலத்து வைக்கப் படும். 133 உவர் நிலத்தில் தோன்றிய உப்பே எனினும் அதன் பயனை உணர்ந்த பெரியோர் நன்செய் நிலத்தில் தோன்றிய நெல்லினும் சிறந்ததாகக் கொள்வர். அதுபோல் தாழ்ந்த குடியிற் பிறந்தவரே எனினும் கற்றறிந்த பெரியவர்கள் உயர்குடியிற் பிறந்தவர்களாகக் கொண்டு சிறப்புச் செய்யப் பெறுவர். வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார் எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற் றல்ல பிற. 134 கல்வி, வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து பிறரால் திருடிக் கொள்ளப் பெறாது; அள்ளி அள்ளி வழங்கினாலும் குறைந்து போகாது; பேரரசரே சினங் கொண்டார் எனினும் அவராலும் கவர்ந்து கொள்ளப் பெறாது; ஆதலால், ஒருவன் தன் மக்கட்குச் செல்வம் என்று தரத் தக்கது கல்வி யன்றிப் பிறிதன்றாம். கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கின் பிணிபல--தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து. 135 கல்வியின் பரப்புக்கு எல்லை இல்லை; அதைக் கற்பவர் வாழ்நாள் எல்லையோ சிறிதாகும். அச் சிறு வாழ் நாளிலும் நன்றாக எண்ணிப் பார்த்தால் வரும் நோய்கள் பலவாகும்; ஆதலால், நீரை விலக்கிப் பாலைப் பருகும் அன்னம் போலச் சாரமிக்க நூல்களையே சான்றோர் தெளிவாக ஆராய்ந்து கற்பர். தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்றிகழார்--காணாய் அவள்துணையா ஆறுபோய் அற்றேநூல் கற்ற மகன்துணையா நல்ல கொளல். 136 தோணி செலுத்தும் தேர்ச்சியுடைய ஒருவன் கடைப்பட்ட குடியில் பிறந்தவன் எனினும் அவன் குடியைப்பற்றி எவரும் இகழ்ந்து கூறார். அவன் துணையால் வெள்ளப் பெருக்குடைய ஆற்றைக் கடப்பர். அதுபோல் கடைப்பட்ட குடியில் பிறந்தவன் எனினும் கற்றறிந்தவன் துணையால் நல்லறிவைக் கொள்ளுதல் வேண்டும். தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார் இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத் தும்பர் உறைவார் பதி. 137 அழியாத தொன்மை வாய்ந்த நூற்கேள்வியால் நிரம்பிய பண்பினர் தம்முள் பகைமை இல்லாதவராகவும் கூர்மையான அறிவுடையவராகவும் கூடி அளவளாவி மகிழ்வதினும், தேவர் கள் வாழ்வதும், அகன்ற வானத் துள்ளதும் ஆகிய ‘விண்ணகர்’ இன்பம் தரும் எனின் அதுவும் காணத்தக்கதாம். கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்புதின் றற்றே--நுனிநீக்கித் தூரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா ஈர மிலாளர் தொடர்பு. 138 ஒலியுடைய தண்ணிய கடற்கரைத் தலைவனே! கற்றறிந்த பெரியோர் நட்பு நுனியில் இருந்து தின்னும் கரும்பின் சுவை போல் வரவரப் பெருகும்; பண்பாடும் இரக்கமும் இல்லாத சிறியோர் நட்பு நுனிப்பக்கம் நீக்கி, அடிப்புறத்தில் இருந்து கரும்பைத் தின்பதுபோல் வரவரக் குறையும். கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும் தலைப்படுவர்--தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. 139 பழமையான சிறப்பும் விளக்கமான நிறமும் கொண்ட பாதிரிப் பூ வைக்கப் பெற்றமையால், புதுப்பானை பெற்றுக் கொண்ட நறுமணத்தைத் தன்னிடம் ஊற்றப்பெற்ற தண்ணீர்க் குத் தந்ததுபோல், கல்வியறிவில்லாதவர் எனினும் கற்றவர் களைச் சேர்ந்து இருப்பராயின் நாள்தோறும் நல்லறிவு பெற்றுச் சிறப்படைவர். அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா துலகநூல் ஓதுவதெல்லாம்--கலகல கூஉம் துணையல்லால் கொண்டு தடுமாற்றம் போஒம் துணையறிவார் இல். 140 அளவால் பெருகியுள்ள நூல்களைக் கற்கும்போது, வீடு பேற்றுக்குரிய அற நூல்களைக் கற்காமல், உலக வாழ்வுக்கு மட்டுமே பயன்படும் நூல்களைக் கற்றால் அவை பலரிடத்தும் கலகலப்பாகப் பேசுதற்குப் பயன்படும் அவ்வளவுக்கு அல்லாமல், பிறவித் துன்பம் ஒழிக்கும் வகைக்குப் பயன்படுவதை அறிவார் இலர். 15. குடிப்பிறப்பு உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும் குடிப்பிறப் பாளர்தம் கொள்கையிற் குன்றார் இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா கொடிப்புல் கறிக்குமோ மற்று. 141 வேட்டைக்குச் செல்ல முடியாத நலிவு உண்டாகிய பொழுதிலும் அரிமா படர்ந்து கிடக்கும் புல்லைத் தின்பது இல்லை. அதுபோல் நற்குடியிற் பிறந்தவர்கள் கொடிய வறு மைக்கு ஆளாகி உடை கிழிந்து உடல்நலம் கெட்டுப் போயின ராயினும் தம் கடைப்பிடியிற் சிறிதும் குறைய மாட்டார். சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும் வான்தோய் குடிப்பிறந்தார்க் கல்லது--வான்தோயும் மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம் எய்தியக் கண்ணும் பிறர்க்கு. 142 வானளாவ உயர்ந்து முகில் தவழும் மலை நாட்டின் தலைவனே, பெருந்தன்மை, மென்மை, ஒழுக்கம் என்னும் இம்மூன்று தன்மைகளும் மிக உயர்ந்த நற்குடியிற் பிறந்த பெரியவர்களுக்கு அல்லாமல், பெருஞ் செல்வம் அடையப் பெறுவராயினும் தாழ்ந்த குடியிற் பிறந்தவர்க்கு உண்டாக மாட்டா. இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோ டின்ன--குடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கமாக் கொண்டார்; கயவரோ டொன்றா உணரற்பாற் றன்று. 143 பெரியவர்களைக் காணின், தம் இருக்கையில் இருந்து எழுதலும் எதிர்சென்று வரவேற்றலும் வழியனுப்புங்கால் உடன்சென்று அனுப்புதலும் ஆகிய இத் தன்மைகளை நற் குடியிற் பிறந்தவர்கள் குறையாத நல்லொழுக்கமாகக் கொண் டனர். ஆதலால் அவர்களைக் கீழ்மக்களோடு ஒப்பிட்டு நோக்கல் தகவன்று. நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும்--எல்லாம் உணருங் குடிப்பிறப்பின் ஊதியம் என்னோ புணரும் ஒருவர்க் கெனின். 144 உயர்ந்த குடியிற் பிறந்தவர் நல்லவற்றைத் தேர்ந்து செய்தால் அஃது அக் குடிக்கு இயல்பாகும்; தீயவற்றைச் செய்தால் பலரும் பரப்பும் பழிக்கு இடமாகும்; நன்மை தீமைகளை ஆராய்ந்து செய்யும் நற்குடிப் பிறப்பு ஒருவர்க்கு வாய்க்குமாயின் அதனால் அடையும் ஊதியம் தான் என்ன? கல்லாமை அச்சம் கயவர் தொழில்அச்சம் சொல்லாமை யுள்ளும் ஓர் சோர்வச்சம்--எல்லாம் இரப்பார்க்கொன் றீயாமை அச்சம் மரத்தார்இம் மாணாக் குடிப்பிறந் தார். 145 உயர்குடியிற் பிறந்தவர் கல்லாதிருத்தல் அச்சம்; கீழ்மக்கள் செய்யும் தொழில் செய்தல் அச்சம்; சொல்லத் தகாதவற்றைச் சொல்லுதலும் அச்சம்; இரந்து வேண்டுவோர்க்கு வழங்காது இருப்பதும் அச்சம்; இவ்வாறாக மாண்பில்லாத உயர்குடிப் பிறப்பு மரக்கலத்தில் செல்வார் போல் எப்பொழுதும் அச்ச முடையதேயாம். இனநன்மை இன்சொலொன் றீதல்மற் றேனை மனநன்மை என்றிவை யெல்லாம்--கனமணி முத்தோ டிமைக்கும் முழங்குஉவரித் தண்சேர்ப்ப இற்பிறந்தார் கண்ணே யுள. 146 பருத்த மணிகள் முத்தினொடும் ஒளி செய்யும், ஒலிக்கும் குளிர்ந்த கடற்கரைத் தலைவனே, நல்லினத்தார் நட்பும், இனியவை கூறலும், இரந்து வந்தார்க்கு ஈதலும், மற்றும் மனத்தில் மாசின்மையும் ஆகிய நல்ல பண்புகள் எல்லாம் உயர்குடியில் பிறந்தோர் இடத்தில் மட்டுமே அமைந்தவை யாகும். செய்கை யறந்து சிதல்மண்டிற் றாயினும் பெய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்; எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிப்பிறந்தார் செய்வர் செயற்பா லவை. 147 வளமனையாக இருந்த வீடுகள், செய்யப் பெற்ற வேலைப் பாடு அழிந்து கறையான் நிறைந்து அரிக்கும் நிலைபெற்றன ஆயினும், மழைக்கு ஒழுக்கல் இல்லாத ஒரு பகுதியையேனும் உடையனவாக இருக்கும். அதுபோல் வறுமைத் துன்பத்தில் உழன்றாலும் நற்குடியிற் பிறந்தவர்கள் தாம் செய்யத்தக்க நற்செயல்களைச் செய்யத் தவறார். ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை அங்கண்மா ஞாலம் விளக்குறூஉம்--திங்கள்போல் செல்லாமை செவ்வன்நேர் நிற்பினும் ஒப்புரவிற் கொல்கார் குடிப்பிறந் தார். 148 திங்கள், தன் ஒரு பக்கத்தை இருட்கறை பற்றிக் கொண்டா லும் மற்றொரு பக்கத்தால் அழகிய இடமகன்ற உலகை ஒளியால் விளங்கச் செய்யும். அதுபோல் வறுமை வலுவாக ஊன்றி நின்றாலும் உயர்குடியிற் பிறந்தோர் தாம் பிறருக்குச் செய்யத்தக்க உதவிகளைச் செய்யத் தளரார். செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன செல்லிடத்தும் செய்யார் சிறியவர்--புல்வாய் பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல் பொருமுரண் ஆற்றுதல் இன்று. 149 மான், கடிவாளம் வார் சேணம் முதலியவற்றைத் தாங்கினாலும் பாய்ந்தோடும் குதிரையைப்போல் போர்க் களத் தில் போர்த் திறமை காட்டுவது இல்லை; அதுபோல் வறுமை யால் எதனையும் செய்ய முடியாநிலை உண்டாயினும் மேற் குடியாளர் செய்யும் நற்செயல்களை, வளமையிலும் கீழ் மக்கள் செய்தல் இலர். எற்றொன்றும் இல்லா விடத்தும் குடிப்பிறந்தார் அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத்து--ஊற்றாவர் அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால் தெற்றெனத் தெண்ணீர் படும். 150 நீர்ப் பெருக்கும் ஓட்டமும் அற்று வறண்ட பொழுதிலும் அகன்ற ஆற்றைத் தோண்டினால் ஆங்குத் தெளிந்த நீர் சுரக்கும். அதுபோல் எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத பொழுதும் நற்குடியிற் பிறந்தோர் ‘இல்லை’ என்று வந்தவர்க்கு ‘இல்லை’ என்னாமல் உதவி, அவர்கள் தளர்ச்சிக்கு ஊன்று கோல் போல் உதவுவர். 16. மேன்மக்கள் அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்குந் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்--திங்கள் மறுவாற்றும் சான்றோர்அஃ தாற்றார் தெருமந்து தேய்வர் ஒருமா சுறின். 151 அழகிய இடமகன்ற வானில் இருந்து விரிந்த ஒளி பரப்பும் மதியமும் பெரியவர்களும் தம் தன்மையால் தம்முள் பெரிதும் ஒப்பானவர். எனினும், தன்னிடத்து அமைந்த கறையை மதியம் பொறுத்துக் கொள்ளும்; பெரியோர் பொறுத்துக் கொள்ளார். ஒரு சிறு குற்றம் உண்டாயினும் அதனை எண்ணி மனம் வருந்தி மெலிவர். இசையும் எனினும் இசையா தெனினும் வசைதீர எண்ணுவர் சான்றோர்--விசையின் நரிமா வுளங்கிழித்த அம்பினில் தீதோ அரிமாப் பிழைப்பெய்த கோல். 152 பெரியவர், தாம் செய்து முடித்தற்கு இயலுவது ஆயினும், இயலாதது ஆயினும் பழிப்புக்கு இடமில்லாததாக ஆராய்ந்து செய்வர். ஏனெனில், விரைந்து சென்று நரியின் மார்பைப் பிளக்கும் அம்பைப் பார்க்கிலும் அரிமாவின்மேல் குறி வைத்து அக்குறி தப்பிய அம்பை ஏந்துவது பெருமையிற் குறைந்தது ஆகுமோ? ஆகாது. நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினும் சான்றோர் குரம்பெழுந்து குற்றங்கொண் டேறார்--உரம்கவறா உள்ளமெனும் நாரினாற் கட்டி உளவரையால் செய்வர் செயற்பா லவை. 153 நரம்பு வெளிப்படத் தோன்றுமாறு மெலிவிக்கும் வறுமை அடைந்தார் ஆயினும் உயர்ந்தவர் நல்லொழுக்கம் என்னும் எல்லையைக் கடந்து குற்றமான வழியில் நடவார். அறிவைப் பற்றுக் கோடாகக் கொண்டு அரிய முயற்சி என்னும் நாரால் மனத்தைப் பிணித்து வாழும் நாள்வரை செய்யத்தக்கவற்றைச் செய்வர். செல்வுழிக் கண்ஒருநாள் காணினும் சான்றவர் தொல்வழிக் கேண்மையின் தோன்றப் புரிந்தியாப்பர் நல்வரை நாட! சிலநாள் அடிப்படின் கல்வரையும் உண்டாம் நெறி. 154 நல்ல மலை நாட்டின் தலைவனே, மேன்மக்கள் தாம் செல்லும் வழியில் ஒருவரை ஒருநாள் கண்டு பழகினாலும் அவரைப் பழமையான நட்புடையவர் போல் நட்புச்செய்து தம்முடன் பிணித்துக் கொள்வர்; சில நாட்கள் தொடர்ந்து நடந்தால் கல் மலையிலும் வழி உண்டாகிவிடுமே! அத்தகைய தன்று மேலோர் நட்பு. புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி கல்லா ஒருவன் உரைப்பவும், கண்ணோடி நல்லார் வருந்தியுங் கேட்பரே; மற்றவன் பல்லாருள் நாணல் பரிந்து. 155 நூல்களைக் கல்லாதவரும், பொருளறிவு இல்லாதவரும் கூடிய கூட்டத்தின் இடையே கற்றறிந்த ஒருவன் எழுந்து பொருந்தாமல் உரைப் பதைக் கேட்டு மேன்மக்கள் வருந்தின ராயினும், அக்கூட்டத்திலுள்ள பலருக்கு முன்னரும் அவன் நாணநேரும் என்பதற்காக இரங்கிப் பெருமனத்தால் கேட்டுக் கொண்டிருப்பர். கடித்துக் கரும்பினை கண்தகர நூறி இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே ஆகும்; வடுப்பட வைதுஇறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார் கூறார்தம் வாயிற் சிதைந்து. 156 கரும்பைப் பல்லால் கடித்தும். கணு நெறியுமாறு அரைத் தும் உரலில் இட்டு இடித்தும் சாற்றைக் கொண்டாலும் அஃது இனிய சுவையுடையதே ஆகும்; அதுபோல் மாறாவடு உண்டா குமாறு பழித்துச் செய்யத் தகாத கொடுமைகளைச் செய்தாலும் உயர்ந்தோர் தம் இயல்பு கெட்டுத் தமது வாயால் தீச் சொற்களைச் சொல்லார். கள்ளார்கள் உண்ணார் கடிவ கடிந்தொரீஇ எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார்--தள்ளியும் வாயின்பொய் கூறார்வடுவறு காட்சியார் சாயின் பரிவ திலர். 157 குற்றமற்ற அறிவினையுடைய பெரியோர், பிறர் பொரு ளைக் களவு செய்யார்; கள் பருகார்; உயர்ந்தோரால் விலக்கப் பட்டவற்றை விலக்கி நடப்பார்; பிறரை இகழ்ந்து பழித்துக் கூறார்; வாய் தவறியும் பொய்யுரை புகலார்; தீவினை வயத்தால் தமக்குத் தாழ்வு வருமாயினும் அதற்காக வருந்தார். பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறன் அறிந்து ஏதிலார் இல்கண் குருடனாய் த்தீய புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல்யாதும் அறம்கூற வேண்டா அவற்கு. 158 பிறருடைய மறைவான செய்தியைக் கேட்டலில் செவிட னாகவும், அயலார் மனையாளைக் காணுதலில் குருடனாகவும் தீமை பயக்கும் புறங் கூறுதலில் ஊமன் ஆகவும், இருப்பதுடன் திறமாக ஆராய்ந்து செவ்விதாகக் கடைப்பிடிப்பவனுக்கு எந்த ஒரு நன்னெறியையும் எவரும் கூற வேண்டியது இல்லை. பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்உழை என்னானும் வேண்டுப என்றிகழ்ப--என்னானும் வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர் காண்டொறும் செய்வர் சிறப்பு. 159 பண்பில்லாதவர்கள், தம்மிடத்தில் ஒருவர் பல நாட்கள் தொடர்ந்து வந்தனர் என்றால், ‘இவர் ஏதாவது நம்மிடம் பெறுதற்கு விரும்புவர்’ என்று எண்ணி அவரை விலக்குவர். ஆனால், சிறந்தோர், ‘இவர் எப்பொருளாவது விரும்பிக் கேட்டால் நல்லது’ என்று எண்ணிக் காணும் தோறும் மகிழ்ந்து சிறப்புச் செய்வர். உடையார் இவர்என் றொருதலையாப் பற்றிக் கடையாயார் பின்சென்று வாழ்வர்--உடைய பிலம்தலைப் பட்டது போலாதே நல்ல குலம்தலைப் பட்ட இடத்து. 160 கீழ்மக்கள், ‘இவர் பொருள் உடையவர்’ என்று ஒருவரைக் கருதி, விடாமல் தொடர்ந்து அவர் பின்னே திரிந்து உயிர் வாழ்வர். ஆனால், உயர்குடிப் பிறப்பாளர் உறவு வாய்த்தவர் நிலைமை அத்தகையது அன்று; கிடைத்தற்கரிய பொன்னும் மணியும் நிரம்பிய சுரங்கத்தை அடைந்ததைப் போன்ற களிப்படைவர். 17. பெரியாரைப் பிழையாமை பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும்--வெறுத்தபின் ஆர்க்கும் அருவி அணிமலை நல்நாட பேர்க்குதல் யார்க்கும் அரிது. 161 முழக்கத்துடன் அருவி வீழும் அழகிய நல்ல மலை நாட் டின் தலைவனே, நாம் செய்வதை இவர் பொறுத்துக் கொள்வார் என நினைத்துக் குற்றமற்ற பெரியோர்களிடத்தும் வெறுக்கத் தக்க செயல்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். அப் பெரியர் வெறுத்து வெகுண்டார் என்றால் அதனால் வரும் தீமையை மாற்றும் ஆற்றல் எவர்க்கும் இல்லை. பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக் கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும்-அன்னோ பயனில் பொழுதாக் கழிப்பரே நல்ல நயமில் அறிவி னவர். 162 நல்லதும் விரும்பத்தக்கதுமாகிய அறிவில்லாத கீழோர் பொன்னைக் கொடுத்தாலும் கிடைத்தற்கரிய பெரியோர் நட்பினை எப்பொருளும் கொடுக்காமல் எளிதாக வாய்க்கப் பெற்றிருந்தும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் பொழுதை வறிதே கழிப்பர். அந்தோ! அவர்கள் அறியாமை இருந்தவாறு என்னே! அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும் மிகைமக்க ளான்மதிக்கற் பால--நயமுணராக் கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் வையார் வடித்தநூ லார். 163 தாழ்வாக மதித்தலும் மிக உயர்வாக மதித்தலும் ஆகிய இரண்டும் பெரியோர்களால் மதிக்கப்படும் தன்மைகளாம். நல்லவற்றை உணர்ந்தறியாத ஒழுக்கமற்ற கீழ் மக்கள் இழிவாகக் கூறுவதையும் புகழ்ந்து கூறுவதையும் நுண்ணிய நூல்களை ஆராய்ந்தவர்கள் ஒரு பொருளாகக் கொள்ளமாட்டார். விரிநிற நாகம் விடருள தேனும் உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும் அருமை உடைய அரண்சேர்ந்தும் உய்யார் பெருமை உடையார் செறின். 164 படம் விரிந்த மின்னற்கொடி போன்ற பாம்பு புற்றுள் ஒடுங்கிக் கிடந்தாலும், விண்ணில் இருந்து எழும் இடியின் பேரொலி கேட்டு நடுக்கங் கொள்ளும். அது போல் பெரியோர் வெகுண்டு எழுவராயின் அதற்கு ஆளானவர் அழித்தற்கரிய பாதுகாப்பான இடத்தை அடைவராயினும் தப்பிப் பிழைக்க மாட்டார். எம்மை அறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று தம்மைத்தாம் கொள்வது கோளன்று--தம்மை அரியரா நோக்கி அறன் அறியுஞ் சான்றோர் பெரியராக் கொள்வது கோள். 165 “எம்மைப் பற்றி நீவீர் அறிந்திலீர்; எம்மைப் போன்றவர் உலகில் எவரும் இலர்” என்று தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வது கொள்ளத் தக்க பண்பன்றாம். தம்மை அருமையு டையவராக உள்நோக்கி அறிந்து, அறமுணர்ந்த பெரியோர் களைப் பெரியோர்கள் என்று கொள்வதே கொள்ளத் தக்க பண்பாம். நளிகடல் தண்சேர்ப்ப! நாள்நிழல்போல விளியும் சிறியவர் கேண்மை--விளிவின்றி அல்கு நிழல்போல் அகன்றகன் றோடுமே தொல்புக ழாளர் தொடர்பு. 166 பெரிய கடலின் குளிர்ந்த துறைக்குத் தலைவனே, கீழ்மக்கள் நட்பு காலைப் பொழுதில் தோன்றும் நிழலைப் போல் வரவரக் குறைந்து கொண்டே வரும். பழம் புகழ் அமைந்த பெரியவர்கள் நட்புக் குறைவில்லாமல் மாலைப் பொழுதில் தோன்றும் நிழலைப்போல் வரவர விரிந்து கொண்டே செல்லும். மன்னர் திருவும் மகளிர் எழில்நலமும் துன்னியர் துய்ப்பர் தகல்வேண்டா--துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம் உழைதங்கட் சென்றார்க் கொருங்கு. 167 கிளையும் கவடுமாகச் செறிந்து, நிறைந்த குழைகளைக் கொண்டு கவிந்து நிற்கும் மரங்களெல்லாம் தங்கள் இடத்தை விரும்பி வந்தவர்க்கெல்லாம் நிழலை ஒரு தன்மையாக உதவும். அதுபோல் அரசர் செல்வமும் மகளிர் தம் அழகுடன் கூடிய இன்பமும் அன்புடன் நெருங்கியவர் நுகர்வர்; அன்புத் தகுதி யன்றி வேறு தகுதி வேண்டா. தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும் பிரியப் பெரும்படர்நோய் செய்யும்--பெரிய உலவா இருங்கழிச் சேர்ப்பயார் மாட்டுங் கலவாமை கோடி உறும். 168 நீர் வற்றுதல் இல்லாத பெரிய கழிவாய்க் கரைத் தலைவனே, நூலறிவைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் தெளிவு இல்லார் இடத்திலும் நட்பு செய்தபின் பிரிவது பெருந்துயர் உண்டாக் கும். ஆதலால் இவர் அவர் என்று பார்க்காமல் எவரிடத்து ஆயினும் கலந்து உறவாடா திருத்தல் அளவு கடந்த நன்மை யாம். கல்லாது போகிய நாளும் பெரியவர்கட் செல்லாது வைகிய வைகலும்--ஒல்வ கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பிற் படாஅவாம் பண்புடையார் கண். 169 கற்க வேண்டிய நூல்களைக் கற்காமல் ஒழிந்த நாளும், பெரியவர்களிடத்துச் சென்று உறவாடுதல் இல்லாமல் வறிதே தங்கிக் கழித்த நாளும், தம்மால் இயன்றதைக் கொடுக்காமல் ஒழிந்து போய நாளும், ஆராய்ந்து உரைப்பதாயின் பண்பமைந்த பெரியவர்களிடத்தில் உண்டாவது இல்லை. பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற் குரியார் உரிமை அடக்கம்--தெரியுங்கால் செல்வ முடையாரும் செல்வரே தற்சேர்ந்தார் அல்லல் களைப வெனின். 170 ஆராய்ந்து பார்த்தால் பெரியவர்களது பெருமைக் குணம், சிறுமைத் தன்மைகளை ஒழிந்திருத்தல்; பிறருக்கு அரியதாம். ஒன்றை உடையவர்க்கு உரிமையாவது, மன மொழி மெய் அடங்கியிருத்தல்; தம்மை அடுத்து வந்தவர் தம் அல்லலை அகற்றினார் எனிற் பொருட் செல்வம் உடையவரும் அருட் செல்வம் உடையவரே. 18. நல்லினஞ் சேர்தல் அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி நெறியல்ல செய்தொழுகி யவ்வும்--நெறியறிந்த நற்சார்வு சாரக் கெடுமே வெயில்முறுகப் புற்பனிப் பற்றுவிட் டாங்கு. 171 வெயில் கடுமையாக அடிக்கத் தொடங்கியதும் புல்லில் படிந்திருந்த பனிநீர் உலர்ந்து போகும். அதுபோல் அறிந்து கொள்ளத் தக்கவற்றை அறியாத பருவத்தில் அடக்கமில்லாத வர்களுடன் கூடி முறையற்றவற்றைச் செய்தமை நன்னெறியுணர்ந்த பெரியோர்களின் உயர்ந்த தொடர்பு ஏற்படுதலால் கெடும். அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொல் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மையெஞ் ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல். 172 அற நெறியை அறிந்து கடைப்பிடியுங்கள்; கூற்றுவன் வருவான் என்பதை உணர்ந்து அஞ்சுங்கள்; பிறர் கூறும் கடுமையான சொற்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள்; சூழ்ச்சி வழியை அடக்கிக் காத்துக் கொள்ளுங்கள்; தீவினையாளர் உறவை ஒதுக்குங்கள்; பெரியவர் கூறும் மெய்யுரையை ஏற்று ஒழுகுங்கள். அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும் உடங்குடம்பு கொண்டார்க் குறலால்--தொடங்கிப் பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு. 173 உடலோடு கூடியவர்க்கு, கூடிச் சேர்ந்து உறவாடியவர் களுடன் பிரிவுத் துயரும், தீர்த்தற்கரிய நோயும், இறப்பும் ஒன்று சேர வருதலால் நன்றாக ஆராய்ந்து, ‘பிறப்பால் பெருந்துயரே உண்டாம்’ என்னும் தெளிவுடைய முதிர்ந்த அறிவினரை என் மனமே, நீ பொருந்திச் சேர்வாயாக. இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும் பிறப்பினை யாரும் முனியார்--பிறப்பினுட் பண்பாற்று நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும் நண்பாற்றி நட்கப் பெறின். 174 நீள நினைத்துப் பார்க்கும்போது, பிறப்பு மிகக் கொடியதாக இருந்தாலும், அப்பிறவியால் பண்புடைய செயல்களைச் செய்யும் மனத்தைக் கொண்ட நல்லவர்களோடு எந்நாளும் நெருக்கமாக நட்புச் செய்யும் நல்வாய்ப்புக் கிடைக்கு மானால் ‘இப் பிறப்புக் கொடுமையானது’ என்று எவரும் வெறுத்துக் கூறார். ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்--ஓருங் குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து. 175 ஊர்க் கழிவுநீர் ஆற்றிலோ கடலிலோ சேர்ந்து விடுமா னால் கழிவுநீர் என்னும் பெயர் நீங்கி ஆற்றுநீர், கடல்நீர் என்னும் பெயர் பெறுவதுடன் ‘தெய்வ நன்னீர்’ என்னும் சிறப் பும் பெறும். அதுபோல் பெருமையான குலச் சிறப்பு இல்லாத வரும் நல்லினத்துப் பெரியோரைச் சார்ந்தால் மலை போன்று நிலைத்த மாண்படைவர். ஒண்கதிர் வாள்மதியம் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம் குன்றிய சீர்மையராயினும் சீர்பெறுவர் குன்றன்னார் கேண்மை கொளின். 176 அழகிய இடமகன்ற வானத்தில் மிகுந்த ஒளியுடைய கதிர்களைக் கொண்ட நிலவினைச் சேர்வதால் முயல்போல் தோன்றும் இருட்கறையும் மக்களால் வணங்கும் பெருமையை அடையும். அதுபோல் மலைபோலும் மாண்புடைய பெரியவர் களைச் சேர்வதால் சிறப்பிற் குறைந்தவர்களும் நிறைந்த சிறப்புப் பெறுவர். பாலோ டளாயநீர் பாலாகும் அல்லது நீராய் நிறன்தெரிந்து தோன்றாதாம்--தேரின் சிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல பெரியார் பெருமையைச் சார்ந்து. 177 பாலோடு கலக்கப் பெற்ற நீரும் பாலாகி விடுமே அல்லாமல் நீருக்கு உரிய தன் நிறம் வெளிப்படத் தோன்றாது; அதுபோல் ஆராய்ந்து பார்த்தால் சிறந்த நல்லியல்புகளைக் கொண்ட பெரியவர்களைச் சார்ந்து இருத்தலால் தகுதியற்ற சிறியவர் குறைபாடுகளும் தோன்றாமல் மறையும். கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல் ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேல் செல்லாவாம் செற்றார் சினம். 178 கொல்லையாகிய பெரிய நிலத்தில் ஊன்றப் பெற்ற எல்லைக் கல்லை அடுத்து நிற்கும் புல் உழுபவர்களது கலப்பைக் குட்பட்டு அழிதல் இல்லை. அதுபோல் வலிமை இல்லாதவர்களே ஆயினும் நல்லினத்தார் உறவை அடைந்தார் எனின் அவர் மேல் பகைவர் கொண்ட சினம் ஒன்றும் செய்யமாட்டா தாம். நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம் குலநலத்தால் ஆகுவர் சான்றோர்--கலநலத்தைத் தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை தீயினம் சேரக் கெடும். 179 விளை நிலத்தின் நல்ல தன்மையால் விளைவு பெருகும் நெல்லைப் போல் தத்தம் இனத்தின் சிறப்பால் சான்றோர் ஆகுவர். கடலில் செல்லும் மரக்கலத்தின் வலிமையைக் கொடிய சுழற் காற்றுச் சிதைத்து விடுவதுபோல், சான்றான்மையாளர் தீயவர் கூட்டத்தைச் சேர அச் சான்றாண்மை அழியும். மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த இனத்தால் இகழப் படுவர்-புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனந் தீப்பட்டக் கால். 180 வெட்டி அழிக்கப்பட்ட காட்டில் தீப்பற்றிக் கொண்ட போது அக்காட்டில் உள்ள மணங்கமழும் சந்தன மரத்துடன் வலிய வேங்கை மரம் முதலியனவும் எரிந்து போகும். அது போல் மனத்துக்கண் மாசில்லாதவர் ஆயினும் தாம் சேர்ந் திருக்கும் இழிந்த இனத்தைப் பொறுத்து இகழ்ச்சி எய்துவர். 19. பெருமை ஈத லிசையா திளமைசேண் நீங்குதலால் காத லவருங் கருத்தல்லர்--காதலித்து ஆதும்நாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப் போவதே போலும் பொருள். 181 வறுமையால் வந்தவர்க்குக் கொடுக்க; இயலாமையும் இளமைப் பருவம் அகன்று விலகுதலும் ஏற்படுதலால் அன்பு டையவர்களும் பொருட்டாகக் கருதுவார் அல்லர். ஆதலால் வாழ்வை விரும்பி ‘யாம் நலங்களெல்லாம் அடைவேம்’ என்னும் ஆவலை ஒழித்துத் துறவில் நாட்டங்கொள்வதே நற்செயலாம். இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப் பொச்சாந் தொழுகுவர் பேதையார்--அச்சார்வு நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார் என்றும் பரிவ திலர். 182 ‘இல்வாழ்வால் நாம் இன்புற்றேம்; வேண்டுவவெல்லாம் இவ் வாழ்வில் பெற்றேம்’ என்று நினைத்துப் பின்னர் வர இருப் பதை மறந்து வாழ்பவர் அறிவிலரே ஆவர். அத் தொடர்புகள் எல்லாம் நிலைப்பன போன்று நிலையாது போய் ஒழிவன என்பதை உணர்ந்தவர் எந்நாளும் அதனை விரும்பார். மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து சிறுமைப் படாதேநீர் வாழ்மின்--அறிஞராய் நின்றுழி நின்றே நிறம்வேறாங் காரணம் இன்றிப் பலவும் உள. 183 மறுமை இன்பத்துக்கு விதை போன்ற நல்ல செயல்களைச் சிறிதும் மயக்கம் இல்லாமல் செய்து பழிப்புக்கு ஆளாகாமல் நீங்கள் அறிவுடையவராக வாழ்வீர்களாக. ஏனெனில் இருந்தாற் போல் இருந்தே ஒரு காரணமும் இல்லாமல் உடலின் தன்மை வேறுபடும். பிணியும் துயரும் பிறவும் தொடர்வன உள. உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி இறைத்துணினும் ஊராற்றும் என்பர் கொடைக்கடனுஞ் சாஅயக் கண்ணும் பெரியார்போன் மற்றையார் ஆஅயக் கண்ணும் அரிது. 184 மழை அற்றதாகிய கோடைக் காலத்திலும் ஊற்று நீருடைய சிறு கிணற்றில் இறைத்துப் பருகினாலும் ஊரிலுள்ளார் அனைவருக்கும் போதும் என்று கூறுவர். அதுபோல் பெரி யோர் தாம் வறுமையுற்ற போதிலும் கொடுக்கும் கொடையைச் சிறியவர் தாம் வளமையராய் இருக்கும் போதும் மேற் கொள்ளுதல் அரிது. உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும் கல்லூற் றுழியூறும் ஆறேபோற்--செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணுஞ் சிலர்க்காற்றிச் செய்வர் செயற்பா லவை. 185 மிக்க நீர் தந்து உலகத்தை உண்பித்து, நீரற்ற கோடைக் காலத்தும் தோண்டப் பெறும் ஊற்றிடத்தில் நீர் சுரக்கும் ஆறு போல் பெரியோர் தம் செல்வத்தைப் பலர்க்கும் உதவிப் பின்னர்த் தாம் வறுமையுற்று வாடிப் போன பொழுதிலும் சிலர்க்கு வழங்கிச் செய்யத்தக்க நற்செயல்களைச் செய்வர். பெருவரை நாட பெரியோர்கண் தீமை கருநரைமேற் சூடேபோல் தோன்றும்--கருநரையைக் கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல் ஒன்றானுந் தோன்றாக் கெடும். 186 பெரிய மலைநாட்டின் தலைவனே, பெரியவர்களிடத்து உண்டாகும் குற்றம் பெரிய வெண்ணிற மாட்டின் மேற் போடப் பட்ட சூடு போல் விளங்கித் தோன்றும். அப்பெரிய மாட்டைக் கொன்றது போன்ற குற்றத்தைச் செய்தாலும் சிறியவர் மேல் ஒரு குற்றமேனும் விளக்கமாகத் தோன்றாமல் மறைந்து விடும். இசைந்த சிறுமை இயல்பிலா தார்கட் பசைந்த துணையும் பரிவாம்--அசைந்த நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கட் பகையேயும் பாடு பெறும். 187 சிறுகுணம் அமைந்த நல்லியல்பில்லாத சிறியவரிடத்து அன்புடன் நட்புச் செய்த அளவும் துன்பமே யாகும். ஆனால் நடுக்கந் தரக்கூடிய செயல்களை விளையாட்டாக ஆயினும் செய்ய விரும்பாத நல்ல அறிவினர்களிடத்துக் கொண்ட பகைமையும் பெருமை அடையும். மெல்லிய நல்லாருள் மென்மை அதுவிறந்து ஒன்னாருட் கூற்றுட்கும் உட்குடைமை எல்லாஞ் சலவருட் சாலச் சலமே நலவருள் நன்மை வரம்பாய் விடல். 188 மெல்லியல்பு வாய்ந்த மகளிர் இடத்தில் மென்மையும், பகைவரிடத்து அம் மென்மைத் தன்மை கடந்து கூற்றுவனை நடுக்கும் வன்மையும், முழுப் பொய்யருக்கு அவரினும் மிக்கு யர்ந்த பொய்ம்மையும், நல்லவரிடத்து அவரினும் நன்மையும் ஆகியவற்றை எல்லையாகக் கொண்டு ஒழுகுக. கடுக்கி ஒருவன் கடுங்குறளை பேசி மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித் துளக்க மிலாதவர் தூய மனத்தார் விளக்கினுள் ஒண்சுடரே போன்று. 189 முகத்தைச் சுளித்து ஒருவன் கொடிய கோளுரையைக் கூறித் தம்மை மயங்கச் செய்தாலும் கோள் கூறப் பெற்றவன் மேல் மனத்தில் சிறிதும் பிளவு கொள்ளாமல் உறுதிப்பாட்டுடன் இருப்பவர் விளக்கினில் விளங்கும் ஒளிச்சுடர் போன்ற கறை யில்லாத மனத்தினர் ஆவர். முற்றுற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர்--அத்துற்று முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம் துக்கத்துள் நீக்கி விடும். 190 பெருங்குணமுடையோர் முதற்கண் எடுத்தபிடி உணவை நாள்தோறும் இரந்து வருவார்க்கு உதவிப் பின் எடுத்த பிடியை உண்ணுவர். அவ்வாறு பிறருக்கு உதவித் தாம் உண்பது காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் நீக்கி இறக்கும் நாள்வரை துன்பஞ் சேராமல் விலக்கி விடும். 20. தாளாண்மை கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போல் கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும் தாளாளர்க் குண்டோ தவறு. 191 கொள்ளுதற்குரிய நீரை நிரம்பக் கொள்ளமாட்டாத குளத்துப் பாய்ச்சலில் உள்ள பசுமைப் பயிரைப் போல், தம் சுற்றத்தார் தந்த உணவை உண்டு பிழைப்பவர் அவர் வறுமை யால் வாட்டமுற்றபோது தாமும் வாட்டமுறுவர். ஆனால் வாளை வீசிக் கூத்தாடும் மகளிர் கண்போல் விரைந்த முயற்சி யாளர்க்கு இத் தவறு நேர்வதில்லை. ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம் காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்; வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான் தாழ்வின்றித் தன்னைச் செயின். 192 சிறிய காற்றாலும் துவளும் கொம்பாக வழியில் நின்ற ஒரு மரமும் முதிர்ந்து வைரம் கொண்ட போது வலிய யானை யையும் கட்டும் தறியாகும். ஒருவன் குறைவற்ற முயற்சியில் நாள்தோறும் தன்னை மேலாக்கிக் கொள்வானாயின் அவன் வளமாக வாழ்தலும் அத்தன்மையுடையதேயாம். உறுபுலி ஊனிரை இன்றி ஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும்--அறிவினால் கால்தொழில் என்று கருதற்க கையினால் மேல்தொழிலும் ஆங்கே மிகும். 193 வலிமையான புலியும் ஒருநாள் நல்ல ஊனுணவு கிடைக் காமல் சிறிய தவளையைப் பற்றித் தின்னும் நிலைக்கும் ஆட்படலாம். ஆதலால் தமக்குள்ள அறிவாற்றல் பெருமை கருதி ‘இது கீழான தொழில்’ என்று ஒன்றையும் கருத வேண்டா. அத் தொழிலில் ஈடுபடும் முயற்சியால் உயர்ந்த தொழில் வருதலும் கூடும். இசையா தெனினும் இயற்றியோர் ஆற்றால் அசையாது நிற்பதாம் ஆண்மை--இசையுங்கால் கண்டல் திரையலைக்கும் கானலம் தண்சேர்ப்ப பெண்டிரும் வாழாரோ மற்று. 194 தாழையை அலைக்கும் அலைகளையும் சோலையையும் உடைய குளிர்ந்த கடற்கரைத் தலைவனே, எடுத்துக் கொண்ட செயல் நிறைவேறாது என்றாலும் அதனை அரிதின் முயன்று செய்து ஒருவகையாலும் தளராது நிற்பதே பாராட்டத்தக்க ஆண்மையாம். எளிதாகச் செய்யும் செயலை மெல்லியல் புடையாரும் செய்து சிறப்புற மாட்டாரோ? நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல்லள வல்லால் பொருளில்லை--தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை என்றிவற்றான் ஆகுங் குலம். 195 ‘நல்ல குலம் இஃது’என்றும் ‘தீய குலம் இஃது’என்றும் சொல்லுவதில் சொல்லும் அளவை அல்லாமல் வேறொரு பொருட் சிறப்பும் இல்லை. குலம் என்பது பழமையும் வளமையுமான புகழ் வாய்ந்த செல்வத்தால் மட்டுமல்லாமல் தவம் கல்வி முயற்சி என்னும் இவற்றாலும் வருவதாம். ஆதலால் இவற்றை எல்லாம் கருத்தில் இருத்திக் குலத்தை அறிக. ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி ஊக்கம் உரையார் உணர்வுடையார்--ஊக்கம் உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார் குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு. 196 அறிவுடையார், தாம் எடுத்துக் கொண்ட செயலை முடிக்கும் அளவும் தாம் அதனைப் பற்றி அறிந்தவற்றைத் தம் உள்ளத்தே அடக்கி எடுக்கும் முயற்சியையும் பிறர்க்கு உரையார். அன்றியும், பிறர் குறிப்பை அவர்தம் மெய்ப்பாட்டால் உணரும் ஒள்ளிய அறிவும் உடையர்; இத்தகையர் எண்ணத்தின்கீழ் அமைந்ததே இவ்வுலகம். சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக் குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும். 197 கறையானால் அரிக்கப் பெற்று அடிப்பகுதி சிதைந்த ஆலமரத்தை அதன் விழுதே தூண்போல் நின்று தாங்கிக் கொள்வது போலத் தந்தையினிடத்துத் தளர்ச்சி தோன்றிய போது, அவன் பெற்ற மைந்தன் அக் குடும்பப் பெருஞ் சுமை யைத் தாங்கிக் காத்தலால் தந்தையின் தளர்ச்சி ஒழிந்துபோம். ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும் மானந் தலைவருவ செய்பவோ--யானை வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள் அரிமா மதுகை யவர். 198 யானையின் ஓடையும் புள்ளியும் அமைந்த முகத்தைத் தன் வளமான நகத்தாலும் வலிய முயற்சியாலும் புண்படுத்தும் அரிமாப் போன்ற வலிமையாளர், முதுமை, பிணி, முதலிய வற்றால் தாழ்ந்த நிலையினராய் இல்லத்தில் இருந்து கைப்பொ ருள் இன்றி இறக்க நேரிட்டாலும் தமக்கு இழிவு தரும் செயலைச் செய்யார். தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு--ஓங்கும் உயர்குடி யுட்பிறப்பி னென்னாம் பெயர்பொறிக்கும் பேராண்மை யில்லாக் கடை. 199 இனிய கரும்பு தந்த, திரண்ட அடி உடையதும் கற்றை யானதும் ஆகிய பூ, தேனொடு கூடிய மணத்தைக் கொள்ளா தது போல ஒருவர் மிக உயர்ந்த குடியிற் பிறந்ததனால் ஆவதென்ன? தம் பெயரை நிலைநிறுத்தும் பெருமுயற்சியைக் கொள்ளாத வர்க்குக் குடிப் பெருமை என ஒன்றும் இல்லையாம். பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங் கருனைச்சோ றார்வர் கயவர்--கருனையைப் பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை நீரும் அமிழ்தாய் விடும். 200 பெருமுத்தரையர் என்னும் வள்ளல் மிக மகிழ்வுடன் விரும்பித் தரும் பொரிக் கறியுடன்கூடிய சோற்றை முயற்சி இல்லாக் கயவரே உண்பர். ஆனால் பொறிக்கறியின் பெயரையும் அறியாத விரும்பத்தக்க முயற்சியாளரும் உளர். அவர்க்குத் தம் முயற்சியால் கிடைக்கும் தண்ணீரும் அமிழ்துக்கு ஒப்பான தாம். 21. சுற்றந்தழால் வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகன்கண்டு தாய்மறந் தாஅங்கு அசா அத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும். 201 கருவுற்ற காலத்துக் கொண்ட வேட்கைத் துயரும், மகவைச் சுமக்குங்கால் கொண்ட துன்பமும், மகப்பேற்றின் போது உண்டாகிய நோவும், மகவைத் தன் மடியிற் கண்ட போது தாய் மறந்து விட்டாற்போல்; அயரா முயற்சியாளன் அடைந்த துன்ப மும், தன் நன்மையைச் செவிசாய்த்துக் கேட்பவரைக் காணுங் கால் நீங்கும். அழல்மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கெல்லாம் நிழல்மரம்போல் நேரொப்பத் தாங்கிப்--பழுமரம்போல் பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன். 202 வெப்பம் கடுமையாக உள்ள பொழுதில் தன்னை அடைந்த வர்க்கு எல்லாம் தழை நிரம்பிய மரம் நிழல் தரும். அதுபோல் வறுமையால் தம்மை அடைந்தவர்களையெல்லாம் தாங்கிப், பழுத்த மரத்தைப் போல் பலரும் பயன் நுகருமாறு முயற்சியா ளராக வாழ்வது, சிறந்த ஆண்மையாளர்க்குக் கடமையாம். அடுக்கல் மலைநாட தற்சேர்ந் தவரை எடுக்கலாம் என்னார் பெரியோர்--அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே தன்காய் பெறுக்கலாக் கொம்பு. 203 அடுக்கடுக்காக அமைந்த மலைநாட்டின் தலைவனே, மீண்டும் மீண்டும் திரண்ட காய்களை நிரம்பக் காய்த்தாலும் தன்னிடத்துத் தோன்றிய காய்களைத் தாங்க மாட்டாத கொப்பு இல்லை. அதுபோல் தன்னைச் சார்ந்தவர் எண்ணற்றவராக இருந்தாலும் அவரைத் தாங்கமாட்டோம் என்று பெரியோர் மறுத்துரையார். உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா சிலபகலாஞ் சிற்றினத்தார் கேண்மை--நிலைதிரியா நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால் ஒற்க மிலாளர் தொடர்பு. 204 உலகோர் அறியுமாறு இரண்டறக் கலந்து உறவாடினாலும் சிறியவர்கள் நட்பு, சில நாட்களே நிற்கும்; நிலைத்து நிற்காது. சுற்றத்தைத் தழுவுதலில் தளர்ச்சியில்லாத பெரியவர் தொடர்பு, நிலைகுலையாமல் அறநெறியில் நிற்கும் பெரியோர் வீடுபேற்றை அடைவதற்காக அழுந்தி நிற்பது போன்றதாம். இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல் என்னும் இலராம் இயல்பினால்--துன்னித் தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும் தலைமக்க ளாகற்பா லார். 205 ‘இவர் இத்தகையர்; இவர் இவ்வளவினர்; இவர் எம்மவர்; இவர் அயலார்’ என்னும் சொல் ஒன்றும் தம்மிடத்தில் இல்லாத தன்மையராய், வறுமையால் தம்மையடைந்த மாந்தர் துன்பத்தை அகற்றுபவரே எவராலும் தலைமை யானவராகக் கருதப்பெறும் பெருமைக்குரியவர் ஆவர். பொற்கலத்துப் பெய்த புனியுகிர் வான்புழுக்கல் அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின் உப்பிலிப் புற்கை உயிர்போற் கிளைஞர்மாட்டு எக்கலத் தானும் இனிது. 206 பொன்னாற் செய்யப் பெற்ற உண்கலத்தில் போடப்பெற்ற புலி நகம் போன்ற தூய வெண்ணெற் சோற்றைச் சருக்கரை பால் முதலியவற்றுடன் அன்பிலார் இல்லத்தில் இருந்து உண்பதினும், உப்பில்லாத புல்லரிசி உணவாயினும் உயிர் போன்ற அன்பான உறவினரிடத்தில் எத்தகைய உண்கலத்திலாயினும் உண்பது இனிதாம். நாள்வாய்ப் பெறினுந்தந் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்--கேளாய் அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனுந் தமராயார் மாட்டே இனிது. 207 உள்ளத்தில் பொருந்தாதார் இல்லத்தில் பொரியலோடு வழங்கிய சுவையான உணவைக் காலைப் பொழுதில் பெறினும் அது வேம்பு போல் கசக்கும். அக் காலைப்பொழுதிலறிணவாக, மாலையுணவு கொள்ளும் பொழுதில் கீரைக் கறியையே ஆக்கிப் படைப்பாராயினும் அன்புடைய சுற்றத் தாரிடத்து உண்பதே இனிதாம். இஃதறிவாயாக. முட்டிகை போல முனியாது வைகலும் கொட்டியுண் பாருங் குறடுபோற் கைவிடுவர் சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே நட்டா ரெனப்படு வார். 208 கொல்லரது உலைச் சம்மட்டி போல் வெறுப்பின்றி ஓயாமல் வருத்தி உண்டு கொண்டு இருப்பவரும், பற்றுக்குறடு போல் விலகிச் செல்வர்; ஆனால் சிறந்த உறவினர் என்று சொல்லப்படுபவர் உலையாணிக்கோல் போல் எரிபுகும் பொழு தும் விலகாராய்த் தாமும் உடன்புகுந்து துன்புறுவர். நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார் மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ--இறுமளவும் இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு துன்புறுவ துன்புறாக் கால். 209 மணம் பரப்பும் மலரால் தொடுக்கப் பெற்ற குளிர்ந்த மாலையை அணிந்தவளே, உறவினர்க்கு உறவினராவார், ஒரு வர்க்கு ஒருவர் இறக்கும் வரையும் இன்புறுவனவற்றில் தாமும் இன்புற்று எழுச்சி கொண்டும், துன்புறுவனவற்றில் தாமும் துன்புற்றும் அமையாத போது அன்னார் மறுமையிலும் செய்யத்தக்க உதவி உண்டோ? விருப்பிலா ரில்லத்து வேறிருந் துண்ணும் வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம்--விருப்புடைத் தன்போல்வா ரில்லுள் தயங்குநீர்த் தண்புற்கை என்போ டியைந்த அமிழ்து. 210 அன்பிலார் இல்லத்தில் தனியே இருந்து, பூனைக்கண் போலும் சுவையான பொரிக் கறியுடன் உண்ணும் உணவும் வேம்புபோல் கைப்பதேயாம். அன்பானவரையும் தனக்கு ஒப்பானவரையும் உள்ளவர் வீட்டுள் தெளிந்த நீரோடு கூடிய புல்லரிசிக் கஞ்சியைக் குடிப்பதும் உடலொடு பொருந்திய இனிய அமிழ்தாகும். 22. நட்பாராய்தல் கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றும் குருத்திற் கரும்புதின் றற்றே--குருத்திற்கு எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ என்றும் மதுர மிலாளர் தொடர்பு. 211 சான்றோர் கருத்தறிந்து கற்றுத் தெளிந்தவர் நட்பு எந்நாளும் குருத்தில் இருந்து தின்னும் கரும்பின் சுவை போல் வளர்ந்து செல்லும் தன்மையினது. இனிய சொல்லும் செயலும் இல்லாதவர் நட்பு அக்கரும்பை நுனிப் புறம் நீக்கி அடிப் புறத் தில் இருந்து தின்பதுபோல் குறைந்து செல்லும் தன்மை யினது. இற்பிறப் பெண்ணி இடைதிரியார் என்பதோர் நற்புடை கொண்டமை யல்லது--பொற்கேழ் புனலொழுகப் புள்ளரியும் பூங்குன்ற நாட மனமறியப் பட்டதொன் றன்று. 212 பொன்போலும் நிறத்தையுடைய அருவி முழங்கி ஒழுகுதலால் பறவை அஞ்சி நீங்கும் அழகிய மலைநாட்டின் தலைவனே, ஒருவர் பிறந்த குடிச் சிறப்பினை எண்ணி, ‘இடையில் மாறுபட்டார்’ என்னும் நல்லெண்ணம் கொண்டு நட்புச் செய்வது அல்லாமல், மனத்தின் இயல்பு தெற்றென அறியப்பட்டது ஒன்று அன்று. யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்--யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய். 213 யானையைப் போன்றவர் நட்பினை விலக்கி நாயைப் போன்றவர் நட்பினைத் தழுவிக் கொள்ளுதல் வேண்டும். என்னையோ எனின், பல காலம் பழகிய போதிலும் ஒரு சிறு தவறுக்காகத் தன்னைப் பேணிய பாகனையே யானை கொன்று விடும். ஆனால் தன்னை வளர்த்தவன் எறிந்த வேல் தன் உடலில் பட்டு நிற்கும் போதும் நாய் வால் குழைத்து நிற்கும். பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சிற் சிலநாளும் ஒட்டாரோ டொட்டார் பலநாளும் நீத்தா ரெனக்கைவிடலுண்டோ தந்நெஞ்சத்(து) யாத்தாரோ டியாத்த தொடர்பு. 214 பல நாளும் தமக்கு அருகில் இருப்பாரானாலும் நெஞ்சத் தால் சில நாள் அளவேனும் நட்பு கொள்ளாதவரோடு அறிவு டையோர் சேரார். ஆனால், மனத்தைப் பிணித்த அன்பினரோடு பொருந்திய நட்பைப் பலநாள் பிரிந்து அயலே சென்று விட் டார் என்பதால் கைவிடுதல் உண்டோ? இல்லை. கோட்டுப்பூப் போல மலர்ந்துபின் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி--தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்துபின் கூம்புவாரை யப்பாரும் நட்பாரும் இல். 215 மரக்கிளையில் மலர்ந்த பூவைப் போல் மலர்ந்து பின் சுருங்குதல் இல்லாமல், விரும்பி நட்புச் செய்த நாள் முதல் இறுதி வரை ஒரே நிலையில் நட்புக் கொள்வதே நட்பாகும். ஆனால் நிரம்பிய இதழ்களைக் கொண்ட நீர்ப்பூப்போல் முன்னே மலர்ந்து பின்னே சுருங்கும் இயல்பினரை விரும்பு பவரும் இலர்; நட்புக் கொள்பவரும் இலர். கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை இடையாயார் தெங்கின் அனையர்--தலையாயார் எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே தொன்மை உடையார் தொடர்பு. 216 நட்புத் தன்மையில், கீழ்ப்பட்டவர் பாக்கு மரத்திற்கு ஒப்பாவர்; மற்றை இடைப்பட்டவர் தென்னை மரத்திற்கு ஒப்பாவர்; தலைமைப்பட்டவராகிய பழமையான நல்ல குடியினர் நட்பு நினைத்தற்கரிய பயனுடைய பனை மரத்தின் இயல்பு போன்று நட்பு ஊன்றியபோது ஊன்றியதே ஆகும். பின்னைப் பேணி வளர்க்க வேண்டா. கழுநீருட் காரட கேனும் ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்--விழுமிய குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார் கைத்துண்டல் காஞ்சிரங் காய். 217 அரிசி கழுவப் பெற்ற நீரில் வெந்த பச்சை இலைக்கறி உணவு எனினும், ஒருவன் நட்பின் சிறப்பொடு கொள்வதாயின் அஃது அமிழ்தாகும். சிறந்த தாளிப்பு அமைந்த கறிகளுடன் கூடிய வெண்ணெற் சோறே ஆயினும், நண்பிலார் கையில் உண்பது எட்டிக்காய் போன்ற கைப்புடையதாகும். நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம் சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு. 218 நாயின் காலில் அமைந்த சிறுவிரல் போல் நெருக்கமுடையவர் ஆயினும், ஈயின் கால் அளவு போன்ற சிறிதளவு உதவி கூடச் செய்யாதார் நட்பால் ஆகும் பயனென்ன? வயலில் உள்ள பயிரை நீரால் ஊட்டி வளர்க்கும் வாய்க்காலைப் போன்றவர் நெடுந்தொலைவில் இருப்பினும், அவர் நட்பைத் தேடிக்கொள்ளுதல் வேண்டும். தெளிவிலார் நட்பிற் பகைநன்று சாதல் விளியா அருநோயின் நன்றால்--அளிய இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல புகழ்தலின் வைதலே நன்று. 219 தெளிந்த அறிவில்லாதவர் நட்பினும் அவர் பகை நல்லது; நீங்காமல் தொடர்ந்துவரும் நோய்த் துயரினும் சாதல் நல்லது; இரங்கத்தக்க வகையில் ஒருவரைப் பழித்துக் கூறுவதினும் அவரைக் கொன்று விடுதல் நல்லது; மற்றும் ஒருவனுக்கு இல்லாத தன்மையை எடுத்துப் புகழ்வதினும் அவனைத் திட்டுதல் நல்லது. மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப் பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்; பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா மரீஇஇப் பின்னைப் பிரிவு. 220 விரும்பி உயிரை அழிக்கும் பாம்புடன் ஆயினும் நட்புச் செய்து பின்னர்ப் பிரிவது துன்பந் தருவதாம். ஆதலால் பலரொடும் பல்கால் தழுவிப் பழகி யிருந்து, அவ்வியல்பைத் தன் இயல்புடன் ஒப்பிட்டு ஆராய்ந்து பொன்னே போல் போற்றத் தக்கார் நட்பினைக் கொள்ளுவதே விரும்பத் தக்கதாம். 23. நட்பிற் பிழைபொறுத்தல் நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும் நெல்லுக் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கு முண்டு. 221 சிறந்த உணவாகும் நெல்லுக்கும் உமி உண்டு; பருகுதற்கு ஆகும் நீருக்கும் நுரை உண்டு; மணந்தரும் பூவிற்கும் புறவிதழ் கள் உண்டு; ஆதலால் நல்லார் என்று தாம் பெரிதும் விரும்பி நட்புச் செய்தவர் நல்லவர் அல்லாதவராக இருந்தார் எனினும் அவர் தம் மற்றைச் சிறப்புக்களை எண்ணி நண்பராகக் கொளல் வேண்டும். செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார் மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர் வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு. 222 நீரின் பயனை விரும்பி வாழும் உழவர், தாம் அணை யிட்டுக் காக்குந் தோறும் உடைத்துச் சென்றாலும் புதுநீர்ப் பெருக்குடன் வெறுப்புக் கொள்ளாதவராக மீண்டும் அணை யிட்டுக் காப்பர். அதுபோல் பல்காலும் வெறுக்கத் தக்க செயல்களைச் செய்தாலும் தாம் விரும்பி நட்புக் கொண்டவர் தொடர்பை நல்லோர் பொறுத்துக் கொள்வர். இறப்பவே தீய செயினுந்தம் நட்டார் பொறுத்தல் தகுவதொன் றன்றோ--நிறக்கோங்கு உருவவண் டார்க்கும் உயர்வரை நாட ஒருவர் பொறையிருவர் நட்பு. 223 பொன்போலும் நிறமுடைய கோங்கம் பூவில் அழகிய வண்டுகள் ஒலிக்கும் உயர்ந்த மலைநாட்டின் தலைவனே, தமக்கு நண்பராயினார் அளவுகடந்து தீச் செயல்களைச் செய்தா ராயினும், அவர் தம் செயலைப் பொறுத்துக் கொள்வதே நட்பின் சிறப்பான தன்மையாகும். ஏனெனில் ஒருவரேனும் பொறுத்துக் கொண்டால்தான் இருவர் நட்புக்கு அஃதிடமாகும். மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம் கடுவிசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப! விடுதற் கரியார் இயல்பிலரேல் நெஞ்சம் சுடுதற்கு மூட்டிய தீ. 224 எழுந்து தாமும் அலைகள் கொழித்த ஒளி பொருந்திய முத்துக்களும், கடுவிரைவுடைய கப்பல்களும் கரைக்கண் வந்து அலைக்கும் கடற்கரைத் தலைவனே, விளக்குதற்கு அரிய நண்பராயினார் நல்லியல்பு இல்லாதவராக இருப்பாரானால், அவர் நெஞ்சத்தைச் சுடுதற்கு மூட்டப் பெற்ற தீயைப் போன்றவர் ஆவர். இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப் பொன்னாகப் போற்றிக் கொளல் வேண்டும்--பொன்னொடு நல்லிற் சிதைத்ததீ நாடொறும் நாடித்தம் இல்லத்தில் ஆக்குத லால். 225 அரிதில் தேடி வைத்த பொருள்களுடன் நன்மையமைந்த வீட்டையும் தீ அழித்ததாயினும் அதன்மேல் வெறுப்புக் கொள் ளாமல், நாள்தோறும் விரும்பித் தம் இல்லத்துக் கொண்டு சோறாக்குவர். ஆதலால், தம்மால் விடுதற்குக் கூடாதவராகிய நண்பர், இன்னாதவற்றைச் செய்தாலும் அவரைப் பொன்னைப் போல் போற்றி நட்புக் கொள வேண்டும். இன்னா செயினும் விடுதற் கரியாரைத் துன்னாத் துறத்தல் தகுவதோ--துன்னருஞ்சீர் விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ கண்குத்திற் றென்றுதங் கை. 226 நெருங்குதற்கரிய சிறந்த விண்ணையும் முட்டும் உயர்ந்த மூங்கில் களையுடைய மலைநாட்டின் தலைவனே, தன் கண் ணைக் குத்தியது என்று கையை எவரும் வெட்டி எறிவரோ? எறி யார். அதுபோல் தமக்குத் துன்பம் செய்தாலும் விடுதற்குக் கூடாத நண்பரை நெருங்காமல் விலக்குதல் தகுந்த செயலன்று. இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும் கலந்து பழிகாணார் சான்றோர்--கலந்தபின் தீமை யெடுத்துரைக்குந் திண்ணறி வில்லாதார் தாமும் அவரிற் கடை. 227 விளங்குகின்ற குளிர்ந்த நீரையுடைய கடற்கரைத் தலைவனே, தம்மொடு நட்புச் செய்தபின் ஒருவர் தீமை செய்தாலும் பெரியோர் அவர் மேல் குற்றங் காணமாட்டார். நட்புக் கொண்டபின் அவர் தீமையைப் பலர்க்கும் எடுத்து ரைக்கும் வலிய அறிவு இல்லாதவர், அத் தீயவரினும் கடைப் பட்டவரே. ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும் நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால்--காதல் கழுமியார் செய்த கறங்கருவி நாட! விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று. 228 அருவி முழங்கும் மலைநாட்டின் தலைவனே, தொடர் பில்லாத அயலார் அளவு கடந்த தீமைகளைச் செய்தாலும் ‘நம் தீவினை’ எனக் கொள்ளாமல் அவரை நோவத் தக்கது யாதுண்டு? ஒன்றுமில்லை, அன்புடைய நண்பர் செய்த குற்றங்கள் நெஞ்சில் நிலைத்து நின்று நட்பின் சிறப்பு வழிப்பட்டதாக மதிக்கப் பெறும். தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத் தமரன்மை தாமறிந்தா ராயின் அவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக் கொளல். 229 தம் நண்பர் என்று தம்மால் கொள்ளப்பட்டவர் தம்மைத் தம் நண்பர் அல்லர் என்று எண்ணி நடப்பதைத் தாம் அறிந்தார் என்றால், அவரைத் தம் நண்பர் பலரினும் நன்றாக மதித்து நட்புச் செய்து அவர், ‘தம் நண்பர் அல்லர்’ என நினைந்து நடப்பதைப் புறத்தே விடாமல் தம்முள் அடக்கிக் கொள்ளுக; அதுவே சிறந்த நட்பு. குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை நட்டபின் நாடித் திரிவேனேல்--நட்டான் மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க அறைகடல்சூழ் வையம் நக. 230 ஒருவரொடு நட்புக் கொண்டபின் அவரது தீய குற்றத் தையும் மற்றை நல்ல குணத்தையும் ஆராய்ந்து திரியேன்; அவ் வாறு திரிந்தால் ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகத்தார் எள்ளி நகை யாட, நண்பனது மறைவான செய்தியைக் காத்துக்கொள்ளா மல் பலருக்கும் தெரியச் செய்தவன் செல்லும் தீக்க திக்கு யானும் செல்வேனாக. 24. கூடாநட்பு செறிப்பில் பழங்கூரை சேறணை யாக இறைத்துநீர் ஏற்றுங் கிடப்பர்--கறைக்குன்றம் பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட! தங்கரும முற்றுந் துணை. 231 கரிய மலையில் பெருக்கெடுத்து அருவி ஒழுகும் நீர் எல்லையுடைய நல்ல நாட்டின் தலைவனே! கம்பும் கூரையும் சிதைந்து போன பழைய கூரை வீட்டில் சேற்றை அணையாகக் கொண்டு நீரை இறைத்தும் தம் மேல் ஏற்றும், தாம் எடுத்த செயலை முடிக்குமளவு வருந்தியும் இருப்பர். அதுபோல் காலம் வரும் வரை கூடாரிடத்தும் கூடியிருக்க. சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய் மாரிபோல் மாண்ட பயத்ததாம்--மாரி வறந்தக்கால் போலுமே வாலருவி நாட! சிறந்தக்காற் சீரிலார் நட்பு. 232 தூய அருவி ஒழுகும் மலைநாட்டின் தலைவனே! சிறந்த பெரியோர் நட்பு மிகுந்த சிறப்புடையதாய் வேண்டுங் காலத்துப் பெய்யும் மழையைப் போல் பெருகும் பயனுடையதாகும். தகுதி இல்லாத கீழோர் நட்பு மிகுமானால் அது, வேண்டும் பருவத்தில் மழைபெய்யாமல் ஒழிந்தது போன்ற நலிவூட்டுவதாம். நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை விண்ணுலகே யொக்கும் விழைவிற்றாம்--நுண்ணூல் உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப் புணர்தல் நிரயத்துள் ஒன்று. 233 நுண்ணிய அறிவினரொடு கூடி நட்புக் கொண்டு இன்புறுதல் விண்ணுலகில் பெறும் விரும்பத்தக்க இன்பத்தை ஒத்த தாகும். அத்தகைய நுண்ணிய நூல் அறிவில்லாராகிய பயனற்றவருடன் கூடிப் பழகுதல் நரகத்து யருள் அழுந்துதலை ஒக்கும். ஆதலால் கூடா நட்பு இம்மையும் மறுமையும் கெடுக்கும் என்க. பெருகு வதுபோலத் தோன்றிவைத் தீப்போல் ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும்--அருகெல்லாஞ் சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட! பந்த மிலாளர் தொடர்பு. 234 பக்கமெல்லாம் வளமான சந்தனச் சோலைச் சாரலை யுடைய மலைநாட்டின் தலைவனே! உள்ளன்பு ஆகிய தொடர்பு இல்லாதவர் நட்பு, பெருக்கமுற்று விளங்குவதுபோல் தோற்ற மளித்து, வைக்கோலில் பற்றிய தீயைப் போல் சிறிது பொழுது தானும் சுடர்விடாமல் விரைந்து அழிந்து போகும். செய்யாத செய்தும்நாம் என்றலும் செய்வதனைச் செய்யாது தாழ்த்துக்கொண் டோட்டலும்--மெய்யாக இன்புறூஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே துன்புறூஉம் பெற்றி தரும். 235 பிறர் செய்ய முடியாதவற்றை, ‘யாம் செய்து முடிப்போம்’ என்று கூறுதலும், செய்ய இயன்றவற்றைச் செய்யாமல் தாழ்த்துக் காலத்தைக் கடத்தலும், உண்மையாகவே இன்பந் தரும் இல்லற வாழ்வைத் துறந்த துறவியரும் அப்பொழுதே துன்புற்றுச் சினங்கொள்ளும் தன்மையைத் தரும். ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையை ஆம்பலொக் கல்லா பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார் கருமங்கள் வேறு படும். 236 ஒரே நிலையில் தோன்றி ஒரு தன்மையாய் வளர்ந்த பொழுதும் விரியும் இயல்புடைய குவளைப் பூவை, அல்லிப்பூ மணம் நிறம் விரிதல் ஆகியவற்றால் ஒத்திருப்பதில்லை. அதுபோல் பெருந்தன்மையாளருடன் நட்புக் கொண்டாலும் அத்தன்மை இல்லாதவர் செயல்கள் வேறுபட்டுத் தோன்றவே செய்யும். முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை நெற்றுக்கண் டன்னவிரலால் ஞெமிர்த்திட்டுக் குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே ஒற்றுமை கொள்ளாதார் நட்பு. 237 அகவையால் முதிராத இளைய மந்தி பயற்று நெற்றினைக் கண்டதை ஒத்த தன் விரல்களால், தன் முன்னே இரைகொண்டு வந்த தந்தையின் கையை நெரித்துக் குற்றிப் பறிக்கும் மலை நாட்டின் தலைவனே! உள்ளத்துடன் பொருந்தாதவர் நட்பு, துன்பந் தருவதேயாம். முட்டுற்ற போழ்தின் முடுகிஎன் ஆருயிரை நட்டான் ஒருவன்கை நீட்டேனேல்--நட்டான் கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க நெடுமொழி வையம் நக. 238 “என் நண்பனுக்குத் துன்பம் உண்டாகியபோது என் உயிரையும் அவன் கையில் கொண்டு நீட்டத் தவறுவேனானால், காவலில் உள்ள நண்பனுடைய மனையாளின் கற்பைக் கெடுத்தவன் செல்லும் தீய நிரயத்தில் - புகழ் மொழி போற்றும் உலகம் நகைத்துப் பழிக்குமாறு செல்வேனாக”. ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து வேம்படு நெய்பெய் தனைத்தரோ--தேம்படு நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப் புல்லறவி னாரொடு நட்பு. 239 தேன் உண்டாகும் நல்ல மலைநாட்டின் தலைவனே! நட்பின் மேன்மையை அறியாதவர் நட்பை விலக்கிப் புல்லிய அறிவினருடன் நட்புக் கொள்வது, நல்ல ஆவின் நெய்பெய்து வைக்கப் பெற்ற கலத்தில் அந்நெய்யை மாற்றி விட்டு வேம்பின் கொட்டையைக் காய்ச்சி எடுத்த நெய்யை ஊற்றினாற் போன்றதாம். உருவிற் கமைந்தான் கண் ஊராண்மை இன்மை பருகற் கமைந்தபால் நீரளா யற்றே தெரிவுடையார் தீயினத்தா ராகுதல் நாகம் விரிபெடையோ டாடிவிட் டற்று. 240 காண்பவரைக் கவரும் தோற்றப் பொலிவு அமைந்த ஒருவனிடத்துப் பிறர்க்கு உதவியாம் தன்மை இல்லாமை, பருகுதற்கு அமைந்த நல்ல பாலில் நீரைப் பெருக்கமாக விட்டது போன்றதாம். தெளிந்த அறிவினர் தீயவர்களுடன் நட்புக் கொள்ளுதல் விரியன் பாம்புப் பெட்டையுடன் நல்ல பாம்பு கூடிக் கலந்தது போன்றதாம். 25. அறிவுடைமை பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார் தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய் இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேரா தணங்கருந் துப்பின் அரா. 241 கவ்விப் பற்றும் செறிந்த நிழற்கறையும், நிலவு இளம் பிறையாக இருக்கும்போது அதனைப் பற்றுவது இல்லை. அது போல், தகுதியுடைய சான்றோர் தம் பகைவர் தாழ்ந்தி ருக்கும் பொழுதைப் பார்த்து அப்பொழுதில் அவரைத் தொலைப் பதற்கு நாணமுற்று அவரின் மேற்செல்லார். இதனை அறிக. நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட் கணிகல மாவ தடக்கம்;--பணிவில்சீர் மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர் கோத்திரங் கூறப் படும். 242 பெரிய குளிர்ச்சியான கடற்கரைத் தலைவனே, வறுமை யுற்ற மக்களுக்குச் சிறந்த அணிகலமாக அமைந்தது அடக்க மாகும். பணிவு இல்லாத தன்மையில் அளவு கடந்து நடப்பா ரானால் அவர் வாழும் ஊரினரால் அவர் குடிப்பிறப்பு முதலிய வற்றைச் சொல்லி இகழப் பெறுவர். எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா தெந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால் தன்னாற்றான் ஆகும் மறுமை வடதிசையும் கொன்னாளர் சாலப் பலர். 243 எட்டிக்காய் விதையை எத்தகைய வளமான நிலத்தில் நட்டாலும் அது தென்னை மரம் போல் ஆகமாட்டாது. இயமனுக்குரிய தென் திசையில் உள்ளாருள்ளும் வீடுபேறு எய்துவார் உளர். நல்வினைக்குரிய வடதிசையில் உள்ளாருள் தீவினையாளரும் மிகப் பலர். ஆதலால் தன் தன்மையே மறுமைப் பயனாவதன்றி இடமன்றாம். வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன் தீஞ்சுவை யாதுந் திரியாதாம் ஆங்கே இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை மனந்தீதாம் பக்கம் அரிது. 244 வேம்பின் இலைக்குள் பொதிந்து வைக்கப் பெற்றுப் பழுத்தாலும் வாழைப் பழம் தன் இனிய சுவையில் சிறிதும் மாறாது அமையும். அதுபோல் தான் சேர்ந்துறையும் இனம் தீயதாக அமைந்திருந்தாற்கூட, நல்லியல் புடையார் உறவு, மனம் கொடிதாக மாறும் வகை அரிதாகும். கடல்சார்ந்தும் இன்னீர்பிறக்கும், மலைசார்ந்தும் உப்பீண் டுவரி பிறத்தலால் தத்தம் இனத்தiயா ரல்லர் எறிகடல்தண் சேர்ப்ப மனத்தனையர் மக்களென் பார். 245 அலைவீசும் தண்ணிய கடற்கரைத் தலைவனே! கடலைச் சார்ந்த இடத்தில் தோண்டிய ஊற்றிலும் இனிய சுவையான நீர் கிடைக்கும். மலையைச் சார்ந்த இடத்தில் தோண்டிய கேணி யிலும் கடிய உப்பான உவர் நீர் கிடைக்கும். ஆதலால் மக்கள் தம் இனத் தன்மையர் அல்லர்; மனத் தன்மையர் என்க. பராஅரைப் புன்னை படுகடல்தண் சேர்ப்ப! ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ நல்ல மரூஉச்செய் தியார்மாட்டுந் தங்கு மனத்தார் விராஅய்ச் செய்யாமை நன்று. 246 பருத்த அடியையுடைய புன்னைமரம் செறிந்த ஒலியுடைய குளிர்ந்த கடற்கரைத் தலைவனே! சிறப்பாக நட்புச் செய்து எவரிடத்தும் நிலைபெற்று இருக்கும் மனத்தினையுடையவர், நட்பிற் பிரிதலும் பின்னர் ஒட்டிக் கொள்ளுதலும் ஆகிய தன்மையைக் கொள்வரோ? கூடிப் பிரிதலினும் நட்புச் செய்யாமையே நன்று. உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரிற் புணருமாம் இன்பம்--புணரின் தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப் பிரியப் பிரியுமாம் நோய். 247 நாம் உணர்வதொன்றைக் குறிப்பாலே தாமும் உணரும் அறிவுடை யாரைச் சேர்ந்து நட்புக் கொள்வதால் இன்பம் சேரும். நட்புச் செய்து தெளிவாகத் தெரிவித்தவற்றையும் தெரிந்து கொள்ளும் அறிவில்லாதவரைக் கூடாது பிரிதலால் துன்பமும் நம்மைக் கூடாது பிரியும். நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும்--நிலையினும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத் தலையாகச் செய்வானும் தான். 248 உயர்ந்த நிலையிலே தன்னை நிறுத்தி வைப்பவனும், தன்னை அவ்வுயர்ந்த நிலையில் இருந்து கீழே தள்ளி விடுப வனும், அவ்வுயர்ந்த நிலையினும் மேலும் மேலும் உயர்த்திச் சென்று நிலைப்பவனும், தன்னை அனைவரினும் தலைசிறந்த வனாகச் செய்பவனும் தானே அன்றிப் பிறர் எவரும் அல்லர். கரும வரிசையாற் கல்லாதார் பின்னும் பெருமை யுடையாருஞ் சேறல்--அருமரபின் ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப பேதைமை யன்ற தறிவு. 249 அரிய தன்மையில் அலைகள் முழங்கி ஒலிக்கும் குளிர்ந்த கடற்கரைத் தலைவனே! கடமை ஆற்றும் வரிசை முறையால் கல்லாதவர் பின்னிலையிலும், கல்வியால் சிறந்த பெரியோரும் செல்லுதல் அறிவின்மை ஆகாது. முறைமையைப் பேணிக் கொள்ளுதலும் எடுத்த செயலை இனிது முடித்தலுமாகிய அறிவின் திறமேயாம். கருமமும் உட்படாப் போகமும் துவ்வாத் தருமமும் தக்கார்க்கே செய்யா--ஒருநிலையே முட்டின்றி மூன்று முடியுமேல் அஃதென்ப பட்டினம் பெற்ற கலம். 250 பொருள் தேடுதற்குரிய செயலையும் உடன்பட்டுச் செய்து, அப்பொருளால் அடையும் இன்பத்தையும் நுகர்ந்து, தகுதி வாய்ந்தவர்க்கு இயன்றதை வழங்கி ஒருநிலையாகத் தடையின்றி இம்மூன்றும் நிறைவேறு மானால் அது, வேற்று நாடு சென்ற வணிகக் கலம் தம் பட்டினத்திற்குத் திரும்பி வந்ததைப் போன்றது என்பர். 26. அறிவின்மை நுண்ணுணர் வின்மை வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்--எண்ணுங்கால் பெண் அவாய் ஆண்இழந்த பேடி அணியாளோ கண் அவாத் தக்க கலம். 251 ஆண் தன்மை இழந்து பெண் தன்மை விரும்பும் பேடியும் பிறர் கண் களைக் கவரத்தக்க அணிகலங்களை அணிவாளல் லவா! ஆகையால், ஆராயும்போது வறுமை எனப்படுவது நுண்ணிய அறிவு இல்லாமையே. அந் நுண்ணிய அறிவுடை மையே நல்லறங்களை நாள்தோறும் செய்தற்கு அமைந்த பெருஞ்செல்வம். பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து அல்லல் உழப்ப தறிதிரேல்--தொல்சிறப்பின் நாவின் கிழத்தி உறைதலாற் சேராளே பூவின் கிழத்தி புலந்து. 252 பல பகுதிகளாக விரிந்த நூற்கேள்விப் பயனைப் பட்டறிவினால் உணர்ந்த சான்றோர், தம் பெருமை அழிந்து வறுமையால் அல்லற்படுவதை ஆராய்ந்து அறிவீரேயானால், பழஞ் சிறப்புடைய கலைமகள் என்னும் ஒரு மங்கை அவரிடத்து வாழ்ந்து வருதலால் திருமகள் என்னும் மங்கை ஊடலால் அவரிடம் சேர்ந்திலள் என்க. கல்லென்று தந்தை கழற அதனையோர் சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன்--மெல்ல எழுத்தோலை பல்லார்முன் நீட்டவிளியா வழுக்கோலைக் கொண்டு விடும். 253 இளமைப் பருவத்திலே, ‘கற்க’ என்று தந்தை வற்புறுத்திச் சொல்லிய சொல்லைப் பொருளமைந்த சொல்லாகக் கொள்ளாமல் இகழ்ந்தவன், பின்னாளில் பல பேரின் முன்னர் ஒருவன் எழுதிய ஓலை ஒன்றை மெதுவாகத் தர அதனைக் கண்டு தனக்குண்டாகிய இழிவுக்கு நாணி ‘ஓ’ வென்று அழுது புலம்பிக் கொண்டு ஓடித் தப்புவான். கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து நல்லறி வாள ரிடைப்புக்கு--மெல்ல இருப்பினும் நாய்இருந் தற்றே இரா துரைப்பினும் நாய்குரைத் தற்று. 254 உலகத்தில் கற்க வேண்டுபவற்றை உரிய பருவத்தில் கற்காமல் அகவையாலும் உருவாலும் நீண்ட ஒருவன் சிறந்த அறிவாளர் கூட்டத்தின் இடையே புகுந்து மெதுவாக இருப்பது நாய் இருப்பது போன்றதே. ஆங்கு அமைந்து இருக்காமல் ஏதேனும் உரைப்பினும் அது நாய் குரைப்பது போன்றதே. புல்லாப்புன் கோட்டிப் புலவ ரிடைப்புக்குக் கல்லாத சொல்லும் கடையெல்லாம்--கற்ற கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேற் படாஅ விடுபாக் கறிந்து. 255 பொருந்தாத் தன்மை அமைந்த புல்லிய அறிவினர் தம் கூட்டத்தின் இடையே, கடைப்பட்ட ஒருவன் தான் கல்லாத வற்றையெல்லாம் விரித்துச் சொல்வான், ஆனால், கற்றறிந்த பெரியோர் தம்மிடம் ஒருவர் வந்து வினா வினாலும், அவர்தாம் கூறும் உரைமேற் கூர்மையாக ஈடுபடாது விடுவதை அறிந்து கூறார். கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி மற்றைய ராவார் பகர்வர் பனையின் மேல் வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும் பச்சோலைக் கில்லை ஒலி. 256 பனைமரத்தின் மேல் உள்ள நீர்வற்றிக் காய்ந்த ஓலை கலகல என ஒலி செய்யும். ஆனால், எப்பொழுது ஆயினும் அம்மரத்தில் உள்ள பச்சை ஓலை ஒலிப்பது இல்லை. அதுபோல், கற்றறிந்த நாவன்மையாளர் தம் தவறுக்கு அஞ்சி மிகுதியாகச் சொல்லார். கல்லாதவரோ மிகுதியாகச் சொல்வர். பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால் நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால் குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து சென்றிசையா வாகும் செவிக்கு. 257 நல்லனவற்றை அறியாதவர்க்கு அறநெறிகளை விரித்துக் கூறுதல், பன்றிக்கு உணவு வைக்கும் தொட்டியில் தேமாவின் சாற்றை வடித்தது போன்றதாம். அன்றியும், அவ்வாறு கூறுவது மலையின்மேல் அடிக்கப்படும் முளை தலை சிதறுண்டு உள்ளே செல்லாததுபோல் அவர் செவிக்கண் செல்லாது வறிதே ஒழியும். பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும் வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா நோலா உடம்பிற் கறிவு. 258 பல நாட்கள் தூய பாலால் கழுவிக் காய வைத்தாலும் கரித்துண்டுக்குக் கருமை நீங்கி வெளுப்பாகும் திறம் உண்டாவது இல்லை. அதுபோல், தடியால் அறைந்து செவிக்குள் இடித்துச் சேர்த்தாலும் கற்க வேண்டும் என்னும் உறுதிப்பாடு இல்லாத வனுக்கு அறிவு நூற் செய்தி செவியுள் புகமாட்டா. பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லா திழிந்தவை காமுறூஉம் ஈப்போல்--இழிந்தவை தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு. 259 தேனைப் பொழிந்து இனிய மணம் பரப்பினாலும் பூவிலுள்ள தேனை உண்ணச் செல்லாமல் இழிந்த பொருள் களையே விரும்பும் ஈயைப் போல், இழிந்த தன்மையே பொருந் திய உள்ளத்தினர்க்குத் தகுதி வாய்ந்தவர் கூறும் தேன்கலந்தாற் போன்ற இனிய தெளிவுடைய சொற்களின் துணிவு என்ன பயனைத் தரும்? கற்றார் உரைக்குங் கசடறு நுண்கேள்வி பற்றாது தன்நெஞ் சுதைத்தலால்--மற்றுமோர் தன்போல் ஒருவன் முகநோக்கித் தானுமோர் புன்கோட்டி கொள்ளுமாம் கீழ். 260 கீழ்மகன் கற்றவர் சொல்லும் குற்றமில்லாத நுண்ணிய நூற் கேள்வியைத் தன் மனத்துப் பற்றிக் கொள்ளாமல் புறத்தே எறிந்து விடுதலால், மற்றுத் தன்போற் கீழ்மகன் முகத்தைப் பார்த்துத் தானும் உரையாடுதற்கு என்று, புல்லியர் கூட்ட மொன்றை அமைத்துக் கொள்வான். 27. நன்றியில் செல்வம் அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும் பொரிதாள் விளவினை வாவல் குறுகா பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம் கருதும் கடப்பாட்ட தன்று. 261 பக்கத்தில் உள்ளதாய் எண்ணற்ற பழங்களைப் பழுத்த போதிலும் பொருக்குள்ள அடியைக் கொண்ட விளா மரத்தை வெளவால் நெருங்குவது இல்லை. அதுபோல், மிக நெருக்க மான இடத்தில் இருப்பவராயினும் பெருமை இல்லாதவரது செல்வம் பிறரால் மதிக்கப்படும் தன்மையுடையதன்று. அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும் கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால் செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை நள்ளார் அறிவுடை யார். 262 கையால் பொறுக்கி எடுக்க வேண்டாமல் அள்ளிக் கொள்ளும் படியாக அத்துணைச் செறிவான சிறிய பூக்களைக் கொண்டு இருந்தாலும், சூடுதற்கு ஆகாமையால் அதனைக் கொள்ள எவரும் கள்ளியின் மேல் கைநீட்டார். அதுபோல், மிகுந்த செல்வம் உடையராயினும் பயனிலாக் கீழ்மக்களை அறிவுடையோர் நெருங்கார். மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும் வல்லூற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர் செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும் நல்குவார் கட்டே நசை. 263 நிரம்பிய அலைகளையுடைய கடலின் கரைக் கண்ணே இருந்தாலும், அதற்குத் தொலைவான இடத்தில் மிகுந்த சுரப்புடைய உவர்ப்பில்லாத கிணற்றைத் தேடிச் சென்றே நீர் பருகுவர். அதுபோல் அருகில் செல்வம் உடையவர் உளராயி னும் தொலைவிலுள்ள கொடையாளரிடத்தேதான் ஒருவர்க்கு விருப்பம் உண்டாம். புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே உணர்வ துடையார் இருப்ப--உணர்விலா வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே பட்டும் துகிலும் உடுத்து. 264 நல்லுணர்வு உடையவர் வறியராய் இருப்ப, நல்லுணர்வு இல்லாத கறிமுள்ளியும் கண்டங் கத்திரியும் போன்றவர் பட்டாடையும் மெல்லிய நூலாடையும் உடுத்துச் செழிப்புடன் வாழ்வர். ஆதலால் நாற்புறமும் கடல் சூழப் பொருந்திய உலகில் பொருளை அடைவதற்குரிய நல்வினைப் பயன் வேறு போலும்! நல்லார் நயவ ரிருப்ப நயமிலாக் கல்லார்க்கொன் றாகிய காரணம்--தொல்லை வினைப்பய னல்லலது வேல்நெடுங் கண்ணாய் நினைப்ப வருவதொன் றில். 265 வேல் போன்ற நீண்ட கண்ணையுடையாய், நல்லவரும் விரும்பத் தக்கவரும் ஆகியவர் வறியராய் இருக்க, நல்ல தன்மை இல்லாத அறிவில்லாதவர்களுக்குச் செல்வம் உளதாகிய காரணம் பழவினைப் பயன் என்பதை அல்லாமல் ஆராய்ந்து கூறக் கூடியதாக யாதொன்றும் உண்டோ? இல்லை. நாறாத் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய் நீறாய் நிலத்து விளியரோ--வேறாய புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும் நன்மக்கள் பக்கம் துறந்து. 266 மணம் இல்லாத புறஇதழ் போன்றவளாய், நல்ல தாமரை மலரின் மேல் இருக்கும் திருமகளே! நீ பொன்னைப் போன்ற நல்லோர் பக்கத்தைச் சேராமல் விலகி, அவர்க்கு நேர்மாறாய கீழ்மக்கள் பக்கத்துச் சென்று சேர்வை! ஆதலால், இவ்வுலகில் நீற்றப்பட்ட சாம்பராக நீ அழிந்து படுவையாக. நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ பயவார்கட் செல்வம் பரம்பப் பயின்கொல் வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே நயவாது நிற்கும் நிலை. 267 வேல்போலும் கண்ணையுடையாய், விரும்பத்தக்க நல்ல குணம் உள்ளவரிடத்திலுள்ள வறுமைக்கு நாணுதல் இல்லை யோ? பிறர்க்கு வழங்காதவரிடத்திலுள்ள செல்வம் பரவுதற்குப் பிசினோ? வறுமை செல்வம் என்னும் இரண்டும் அவை உள்ள இடத்தில் நன்மை தராமல் நிற்கும் நிலைமையை நீ வியந்து காண்பாயாக. வலவைக ளல்லார் காலாறு சென்று கலவைகள் உண்டு கழிப்பர்--வலவைகள் காலாறும் செல்லார் கருனையால் துய்ப்பவே மேலாறு பாய விருந்து. 268 நாணிலிகள் அல்லாதவராகிய நல்லோர், வறுமைத் துயரால் தம் காலால் நடந்து சென்று ஆங்காங்குக் கிடைக்கும் பல்வேறு உணவுகளை உண்டு நாளைக் கழிப்பர். ஆனால் நாணிலிகள் ஆகிய கீழ்மக்களோ, காலால் நடந்து செல்லாராய்த் தம் இல்லத்தில் இருந்து நெய், பால், தயிர், ஆறாகப் பெருகப் பல்வகைக் கறிகளுடன் உண்பர். பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்றுகுக்கும் வெண்மை யுடையார் விழுச் செல்வ மெய்தியக்கால் வண்மையு மன்ன தகைத்து. 269 பொன் போன்ற நிறத்தைக் கொண்ட செந்நெற் பயிரின் தோகையும் உட்கருவும் வாட்டமுற்றுக் கிடக்கவும் மின்னலொடு விளங்கும் வானம் கடலுள்ளே நீரைக் கவித்துக் கொட்டும். அதுபோல், அறிவில்லார் சிறந்த செல்வத்தை உடையராயின் அவர் வழங்கும் கொடையும் அத்தகையதாகவே அமை யும். ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும் ஓதி யனையார் உணர்வுடையார்--தூய்தாக நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும் நல்கூர்ந்தார் ஈயா ரெனின். 270 நல்லுணர்வு இல்லாதார் பல நூல்களைக் கற்றிருந்தாலும் கல்லாதவரே, நல்லுணர்வு உடையார். எந்தவொரு நூலையும் கல்லாதவர் ஆயினும் கற்றுணர்ந்தவரே; வறுமையுற்றாலும் தூய உள்ளம் உடையவராய்ப் பிறரை ஒன்று இரவாதவரே செல்வர்; செல்வம் உடையவர் ஆயினும் பிறர்க்கு ஈயாதவரே வறியர். 28. ஈயாமை நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால் அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்--அட்ட தடைத்திருந் துண்டொழுகும் ஆவதில் மாக்கட் கடைக்குமாம் ஆண்டைக் கதவு. 271 சமைத்து உண்பது என்பது, தம்மொடு நட்புக் கொண்ட வர்க்கும், நட்பின்றிப் புதியராக வந்தவர்க்கும் இருக்கும் அளவால் சமைத்ததைப் பகுத்துத் தந்து பின்னர் உண்பதே ஆகும். அவ்வாறு சமைத்ததைக் கதவை அடைத்துக் கொண்டு தாமே உண்டு வாழும் பயனில்லா மக்கட்கு வீட்டுலகக் கதவும் அடைக்கப்படும். எத்துணை யானும் இயைந்த அளவினால் சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர்--மற்றைப் பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்அறிதும் என்பார் அழிந்தார் பழிகடலத் துள். 272 எவ்வளவு குறைந்தது ஆயினும் தம்மால் இயன்ற அளவில் செய்யுங் காலத்தே அறஞ்செய்தவர், மேம்பட்ட நிலை அடை வர். அவ்வாறன்றிப், “பெருஞ்செல்வத்தை யாம் அடையும் காலத்தே எம் முதுமைப் பருவத்தில் வேண்டும் வகையால் அறம் செய்வேம்” என்பவர் பழி என்னும் கடலுக்குள் பட்டு அழிந்தவர் ஆவர். துய்த்துக் கழியான் துறவோர்க்கொன் றீகலான் வைத்துக் கழியும் மடவோனை--வைத்த பொருளும் அவளை நகுமே உலகத் தருளும் அவனை நகும். 273 தான் அடைந்த செல்வத்தைத் தான் நுகர்ந்து கழிக்காதவ னாகவும், துறவு நெறி பேணும் பெரியவர்க்குச் சிறிதும் வழங்காதவனாகவும், சேர்த்து வைத்து இறந்தொழியும் அறிவிலானை அவன் செலவிடாது வைத்துள்ள பொருளும் எள்ளி நகையாடும்; அன்றியும் உயர்ந்தோரால் மதிக்கப்படும் அருள் என்னும் தன்மையும் அவனை எள்ளி நகையாடும். கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத் துருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால் ஏதிலான் துய்க்கப் படும். 274 தேடி வைத்த செல்வத்தைத் தக்கவர்க்குக் கொடுத்தலும் உரிய முறையில் தான் நுகர்தலும் தெளியாத சுருங்கிய உள்ளத்தினன் கொண்ட பெருஞ்செல்வம் தம் இல்லத்தில் உள்ள அழகிய கன்னியர் உரிய பருவத்தில் அயலாரால் துய்க்கப் பெறுவது போல், ஒரு காலத்தில் அயலாரால் அடைந்து நுகரப்பெறும். எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும் அறுநீர்ச் சிறுகிணற் றூறல்பார்த் துண்பர் மறுமை யறியாதா ராக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை. 275 அலைமோதும் பெரிய கடலை அடைந்திருந்தாலும், நீர் அற்றுப் போய்க் குறைந்த அளவாக ஊறும் சிறிய கிணற்றின் ஊற்றைத் தேடிச் சென்றே நீர் பருகுவர்; ஆதலால் மறுமைப் பயனை அறியாதவர்களிடத்துள்ள செல்வத் தினும் அஃதறிந்த பெரியோரிடத்துள்ள மிகுந்த வறுமையும் மேன்மையுடைய தாகும். எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை எனதென தென்றிருப்பன் யானும்--தனதாயின் தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான் யானும் அதனை அது. 276 ‘என்னுடையது என்னுடையது’ என்று பார்த்துக் கொண்டு நுகராமல் இருக்கும் அறிவிலியின் பொருளை, யானும், ‘என்னுடையதுஎன்னுடையது’ என்று எண்ணிக் கொண்டு இருப்பேன். அப்பொருள் அவனுடையதாக இருந்தும் அதனைப் பிறர்க்கு வழங்கான்; தானும் நுகரான்; அவ்வித மேயானும் அதனை வழங்கவும் நுகரவும் உரிமை இல்லாதவ னாக இருக்கிறேன். வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார் இழந்தார் எனப்படுதல் உய்ந்தார்--உழந்ததனைக் காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தம் கைந்நோவ யாப்புய்ந்தார் உய்ந்த பல. 277 கேட்டு வந்தவர்க்குக் கொடுக்காத செல்வரினும் அச் செல்வம் இல்லாத வறியவர் தப்பினர். ஏன் எனின், பிறரால் கவரப்பட்டு இழந்தார் என்னும் பழியில் தப்பினர்; வருந்தி அப் பொருளைக் காத்தலில் தப்பினர்; அதனைப் புதைத்து வைக்கத் தோண்டுதலும் தப்பினர்; பொருள் கவர்வோரால் கை வலிக்கக் கட்டப்படுதலும் தப்பினர்; இன்னும் பல வகையாலும் தப்பினர். தனதாகத் தான் கொடான் தாயத் தவரும் தமதாய போழ்தே கொடாஅர்--தனதாக முன்னே கொடுப்பின் அவர்கடியார் தான்கடியான் பின்னை அவர்கொடுக்கும் போழ்து. 278 பொருள் தன்னுடையதாக இருந்த போது, தான்கொடான் அவன் இறந்தபின் அதனை அடைந்தவர் தம்பொருள் ஆகிய பொழுதிலும் கொடார்; தன்னுடைய பொருளைத் தான் இறக்கு முன்னே கொடுத்திருப்பின் அதனைப் பின் உரிமை யாளர் தடுத்திரார்; அவன் இறந்த பின்னே உரிமையாளர் கொடுப்பின் இறந்தவனும் தடுத்திரான், ஆயினும் அவர் கொடாமை என்னே! இரவலர் கன்றாக ஈவார்ஆ வாக விரகின் சுரப்பதாம் வண்மை--விரகின்றி வல்லவர் ஊன்ற வடியாபோல் வாய்வைத்துக் கொல்லச் சுரப்பதாம் கீழ். 279 இரந்து பொருள் பெறுபவர் கன்றாகவும் இரவலர்க்கு வழங்குபவர் பசுவாகவும் விரும்பத் தக்க வகையில் பொழிவதே கொடையாகும். விரும்பத் தக்க வகை இன்றிக் கைகடுக்க அழுத் திக் கறக்கப் பால் சுரக்கும் பசுவைப் போல், வன்கண்மையான வழிகளைக் கொண்டு வருத்த வழங்குவது கீழ் மக்கள் இயல் பாகும். ஈட்டலும் துன்பமற் றீட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்--காத்தல் குறைபடின் துன்பம் கெடின்துன்பம் துன்பக் குறைபதி மற்றைப் பொருள். 280 பொருளைத் தேடித் தொகுப்பதும் துன்பம்; மேலும் தேடிய அச்சிறந்த பொருளைக் காப்பதும் அதனினும் மிகுந்த துன்பம்; அக் காவலில் பொருள் சிறிது குறைவு பட்டாலும் துன்பம்; அப்பொருள் அறவே கவரப்பட்டுப் போயினும் துன் பம்; ஆதலால் பொருளே துன்பங்களுக்கெல்லாம் இருப்பிட மாகும். 29. இன்மை அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும் பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும் ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார் செத்த பிணத்திற் கடை. 281 கிழிந்து தைக்கப் பெற்ற ஆடையை இடுப்பில் சுற்றிக் கொண்டு வந்தாலும், கையில் பத்தென்றோ எட்டென்றோ பொருள்களைக் கொண்டிருந் தால் பலபேருள்ளும் பெருமை உண்டாகும். ஒரே குடியிற் பிறந் திருந்தாலும் பொருள் இல்லாதவர் வாழ்வு செத்த பிணத்தினும் கடைப்பட்டதாகவே கருதப் படும். நீரினும் நுண்ணிது நெய்என்பர் நெய்யினும் யாரும் அறிவர் புகைநுட்பம்--தேரின் நிரப்பிடும்பை யாளன் புகுமே புகையும் புகற்கரிய பூழை நுழைந்து. 282 நீரைப் பார்க்கிலும் மெல்லியது நெய் என்று அறிந்தோர் கூறுவர்; அந்நெய்யைப் பார்க்கிலும் புகை மெல்லியது என்பதை எவரும் அறிவர்; செவ்வையாக ஆராய்ந்தால் தீராத வறுமையாளர், புகையும் புகுதற்கு மாட்டாத நுண்ணிய துளைக்குள் ளும் நுழைந்து விடுவர்; ஆதலால் வறுமையாளரே மிக மெல்லியர். கல்லோங் குயர்வரைமேற் காந்தள் மலராக்கால் செல்லாவாம் செம்பொறி வண்டினம்--கொல்லைக் கலாஅல் கிளிகடியும் கானக நாட! இலாஅஅர்க் கில்லை தமர். 283 தினைக் கொல்லையைக் காக்கும் இளமகளிர் கல்லால் கிளியை ஓட்டும் காட்டு நாட்டுத் தலைவனே! கற்களால் உயர்ந் தோங்கிய மலையின் மேல் காந்தள் பூ மலராது போனால், சிவந்த புள்ளிகளையுடைய வண்டின் தொகுதி அம் மலையின் மேல் செல்லாவாம். அதுபோல் பொருள் இல்லார்க்கு உறவின ராவார் எவரும் இலர். உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல் தொண்டா யிரவர் தொகுபவே--வண்டாய்த் திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார் ஒருவரும் இவ்வுலகத் தில். 284 உயிர் நீங்கி உடல் சிதைவடைந்த பொழுதில் காக்கை திரண்டு வருவதுபோல், ஒருவர்க்குச் செல்வம் உண்டாகி இருக்கும் பொழுதில் ஒன்பதினாயிரவர் கூடிச் சேர்வர். ஆனால் ஒருவர் வண்டு பறப்பது போலாக வறுமையில் அலைந்து திரியும் காலத்தில் “தீது இல்லாமல் உள்ளீரோ” என்று வினவு வாரும் உலகில் இலர். பிறந்த குலம்மாயும் பேராண்மை மாயும் சிறந்ததங் கல்வியும் மாயும்--கறங்கருவி கல்மேற் கழூஉம் கணமலை நன்னாட! இன்மை தழுவப்பட் டார்க்கு. 285 முழங்கும் அருவி கல்லின் மேல் பாய்ந்து கழுவிச் செல்லும் கூட்டமான மலைகளையுடைய நல்ல நாட்டின் தலைவனே! வறுமையால் பற்றிக் கொள்ளப்பட்டவர்க்கு அவர் பிறந்த குலப் பெருமை அழியும்; அவர்தம் சிறந்த ஆற்றலும் அழியும்; பல வகையாலும் சிறந்த கல்வித் திறமும் அழியும். உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட் குள்ளூ ரிருந்துமொன் றாற்றாதான்--உள்ளூர் இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய் விருந்தின னாதலே நன்று. 286 வயிற்றின் உள்ளே உண்டாகிய பசித்துயரால் தன்னிடம் விரும்பி வந்தவர்க்கு உள்ளூரில் இருந்து கொண்டும் ஒன்றும் உதவ முடியாதவன், அவ்வுள்ளூரின்கண் இருந்து பொழுதை வறிதே கழிக்காமல் தான் வேற்றூர்க்குச் சென்று அயலார் இல்லத்தில் விருந்துண்டு இருத்தல் நல்லது. நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங் கூர்மையு மெல்லாம் ஒருங்கிழப்பர்--கூர்மையின் முல்லை அலைக்கும் எயிற்றாய் நிரப்பென்னும் அல்லல் அடையப்பட் டார். 287 கூர்மைத் தன்மையாலும் - தோற்றத்தாலும் - முல்லை அரும்பையும் வெல்லும் பல்லையுடையவளே! வறுமை என் னும் கொடுந்துயரை அடையப்பட்டவர், தமக்கு இயல்பான தன்மையை அல்லாமல் கல்வி கேள்வி முதலியவற்றால் வளர்ந்த தம் கூரிய அறிவையும் பிற நலங்களையும் ஒருங்கே இழந்து படுவர். இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின் நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைந்நீட்டுங் கெட்டாற்று வாழ்க்கையே நன்று. 288 இடுக்கமான வழியாகிய வறுமையில் அகப்பட்டு, ஒரு பொருளை இரந்து வந்தவர்க்குத் தர இயலாத முட்டுப்பாடான வழிக்கு ஆட்பட்டு வருந்தி, உள்ளூரில் வாழ்வதினும், நெடுந் தொலைவழி சென்று வரிசையாய் அமைந்த வீடுகளில் கைகளை ஏந்தி வாழும் கெடுவழிப்பட்ட வாழ்க்கையே நல்லதாம். கடகம் செறிந்ததங் கைகளால் வாங்கி அடகு பறித்துக்கொண் டட்டுக்--குடைகலனா உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே துப்புரவு சென்றுலந்தக் கால். 289 நுகர்ச்சிப் பொருள்கள் அற்று வறுமையுற்ற பொழுது வளையல்கள் செறிந்த கையால் தூறுகளை வளைத்துக் கீரையைப் பறித்துக் கொண்டு வந்து, உப்பில்லாமல் வேக வைத்த தைப் பனையோலைப் பட்டையையே உண்கலமாகக் கொண்டு தின்று உள்ளத்தில் அமைதியற்று வாழ்வர். ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம் பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவாம்--நீர்த்தருவி தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட வாழாதார்க் கில்லை தமர். 290 வற்றாமல் அருவி தாழ்ந்து ஒழுகும் உயர்ந்த சிறப்புடைய குளிர்ந்த நல்ல மலைநாட்டின் தலைவனே! நிரம்பிய புள்ளி களையுடைய அழகு விளங்கும் வண்டின் தொகுதி, பூத்து ஓய்ந்து போன கிளையைத் தேடிச் செல்லுதல் இல்லை. அதுபோல், செல்வச் செழிப்புடன் வாழார்க்கு உறவினர் ஆவாரும் இலர். 30. மானம் திருமதுகை யாகத் திறனிலார் செய்யும் பெருமிதங் கண்டக் கடைத்தும்--எரிமண்டிக் கானந் தலைப்பட்ட தீப்போற் கனலுமே மான முடையார் மனம். 291 தாம் வைத்திருக்கும் செல்வத்தின் வலிமையே வலிமை யாகக் கொண்டு நல்லியல்பு இல்லாதவர் செய்யும் செருக்கு மிக்க செயலைக் கண்ட இடத்தும், மானம் உடைய பெரியோர் மனம், வெப்பம் மிகுந்து காட்டில் பற்றிக் கொழுந்து விட்டு எரியும் தீயைப்போல் தாழ்வு இன்றிக் கொதிப்படையும். என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று தம்பா டுரைப்பரோ தம்முடையார்--தம்பா டுரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க் குரையாரோ தாமுற்ற நோய். 292 உடல் எலும்பாகத் தோன்றுமாறு மெலிவடைந்து போயி னும், நல்லியல்பு இல்லாரிடம் சென்று தாம் கொண்ட வறு மைத் துயரை மானமுடையவர் உரைப்பரோ? உரையார். தம் வறிய நிலைமையைத் தாம் சொல்லு முன்னே குறிப்பால் உணரும், விளங்கும் அறிவினர்க்குத் தாம் அடைந்த வறுமைத் துயரை உரையாரோ? உரைப்பர். யாமாயின் எம்இல்லம் காட்டுதும் தாமாயின் காணவே கற்பழியும் என்பார்போல்--நாணிப் புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால் மறந்திடுக செல்வர் தொடர்பு. 293 “வறியேம் ஆகிய நாங்கள் என்றால் எம்மைத் தேடிவந்த செல்வர்க்கு எம்வீடு முழுவதையும் காட்டுவேம்; ஆனால் அச்செல்வராயின் வீட்டினுள் காணவே தம் மகளிர் கற்பு அழியும் என்பவர் போல் நாணமுற்று வாயிற்புறத்தே வைத்துச் சோறிடுவர்; ஆதலால் பண்பிலாச் செல்வரின் தொடர்பை எவரும் மறப்பாராக.” இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடா தும்மையும் நல்ல பயத்தலால்--செம்மையின் நானம் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண் மான முடையார் மதிப்பு. 294 கத்தூரி மணங்கமழும் கூந்தலையுடையாய், மானமுள்ள வர்களின் மதிப்பான தன்மை இப்பிறப்பிலும் நன்மையாவதாய், தம் பெருமைக்கு இயல்பான வழியையும் கைவிடாமல் மறு மைக்கும் நன்மையைத் தருவதாய் நடுவுநிலைமையாக நின்று ஆராய்ந்து பார்க்குங்கால் நல்லதே என்பதை நீ காண். பாவமும் ஏனைப் பழியும் படவருவ சாயினும் சான்றவர் செய்கலார்--சாதல் ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல் அருநவை யாற்றுதல் இன்று. 295 மானத்தால் சிறந்த பெரியோர் பாவமும் மற்றும் பழியும் தொடருமாறு வரும் செயல்களைத் தம் உயிர் போவதாயினும் செய்யமாட்டார். சாவது என்பது ஒரு நாளில் ஒரு சிறு பொழுதில் வரும் துன்பமாம். அத்துன்பமும் பாவம் பழிகளைப் போல் நீக்குதற்கு அரிய குற்றங்களை ஆக்குவது இல்லை. மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம் செல்வ ரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார் நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவா தார். 296 வளமையான பெரிய உலகில் வாழ்பவர்களுள் எல்லாம் பெரிய செல்வரே ஆயினும் ஈயாதவர் செல்வர் அல்லர்; வறியரே. கொடிய வறுமையுற்ற போதும் அவ்வறுமை காரணமாகத் தன்மை இல்லாச் செல்வரிடம் சென்று இரத்தல் இல்லாத உறுதி உடையவர், வறியரே ஆயினும் பெருமுத்தரையர் போன்ற செல்வரே. கடையெலாம் காய்பசி அஞ்சுமற் றேனை இடையெலாம் இன்னாமை அஞ்சும்--புடைபரந்த விற்புருவ வேல்நெடுங் கண்ணாய்! தலையெல்லாம் சொற்பழி அஞ்சி விடும். 297 பக்கங்களில் பரவிய விற்போலும் புருவத்தையும் வேல் போலும் நீண்ட கண்ணையும் உடையவளே, மக்களிற் கடைப் பட்டவர்கள் எல்லாரும், வாட்டும் பசிக்கு அஞ்சுவர். ஒழிந்த இடைப்பட்டார் எல்லாரும் ஒறுக்கும் துன்பத்திற்கு அஞ்சுவர்; தலைப்பட்டவர்கள் எல்லாரும், பிறர் சொல்லும் பழிச் சொல் லுக்கே அஞ்சி விடுவர். நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச் செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்--கொல்லன் உலையூதுந் தீயேபோல் உள்கனலுங் கொல்லோ தலையாய சான்றோர் மனம். 298 ‘நன்னிலையில் இருந்தார்’, ‘பெரிதும் இரங்கத் தக்கார்’, ‘இதுகால் வறுமையுற்றார்’ என்று இகழ்ந்து செல்வமுடையவர் சிறுமையான பார்வை பார்க்கும் போது, உயர்ந்த பண்புகள் அமைந்த சான்றோர் உள்ளம், கொல்லர் உலைக்கண் ஊதி எழுப்பப் பெறும் தீயே போல் வெளிப்படாமல் உள்ளே கனன்று கொண்டே இருக்கும். நச்சியார்க் கீயாமை நாண் அன்று நாள் நாளும் அச்சத்தால் நாணுதல் நாண் அன்றாம்--எச்சத்தில் மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது சொல்லா திருப்பது நாண். 299 தம்மைத் தேடி வந்தவர்க்கு ஒன்றும் தர முடியாத வறுமை, நாணுதற்கு உரியதன்று. நாள்தோறும் உண்டான அச்சத்தால் நாணுதலும், நாணம் அன்றாம், பொருட் குறைவால் தாம் மெலிந்து இருக்குங்கால் தம் முன்னோர் செல்வம் செயல் ஆகியவற்றைச் சொல்லிப் பாராட்டாமல் இருப்பதே உயர்ந்த நாணமாம். கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும்--இடமுடைய வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் மழுங்க வரின். 300 மதங்கொண்ட பெரிய யானையின் வலிமையை அழித்த புலி, அவ் யானை இடப்புறத்தே வீழ்வதாயின், தான் பசியால் சாவும் நிலையில் இருப்பினும், அதனை உண்ணாமல் செல்லும்; அதுபோல், அகன்ற வானமே தன் கையில் கிடைப்பதாக இருப்பினும் அது மானக்குறைவுபட வருவதாக இருப்பின் சிறந்தோர் அதனைக் கொள்ளார். 31. இரவச்சம் நம்மாலே யாவர்இந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந் தம்மால்ஆம் ஆக்கம் இலர்என்று--தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமும் தெருண்ட அறிவி னவர். 301 “இவ் வறியவர் நம்மாலே தான் வாழ்வு பெறுகின்றனர்; எந்நாளில் ஆயினும் தம் முயற்சியால் ஆகிய செல்வம் எதுவும் இல்லாதவர்” என்று எண்ணித் தம்மைப் பெருமிதமாக நினைத் துக் கொள்ளும் மயங்கிய உணர்வுடையவர்க்குப் பின்னே, தெளிந்த அறிவினையுடைய எவரேனும் இரந்து செல்வரோ? செல்லார் என்றறிக. இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின் பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு. 302 இழிவான செயல் எதுவாயினும் செய்து, ஒருவன் தன் வயி றார உண்டு வாழ்வதிலும், உயர்ந்தவர் பழித்துக் கூறும் செயல் களைச் செய்யாமல் பசிகொண்டு கிடத்தலும் தவறாகுமோ? ஏனெனில், இப் பிறப்பு ஒழிந்து மாறிப் பிறக்கும் பிறப்பு என்பது கண்ணை மூடித்திறக்கும் நொடியளவுக்குள் நடந்து விடுவதே யன்றோ! இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர் செல்லாரு மல்லர் சிறுநெறி--புல்லா அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லால் முகம்புகுதல் ஆற்றுமோ மேல். 303 வறுமையே பற்றுக் கோடாக எவரிடத்தேனும் இரந்து உண்பதற்குத் துணிந்து, அச்சிறிய வழியில் எளியமக்கள் செல்லாமல் இரார். ஆனால் மேலோர் தம்மைத் தழுவி, ‘எம் இல்லத்தின்கண் வருக; உண்ணுக’ என்று அன்புடன் வேண்டுவார் இடத்தை அல்லாமல் மற்று ஓரிடத்தும் தம் தலையைக் காட்டார். திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும் உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால், அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென் றெருத்திறைஞ்சி நில்லாதாம் மேல். 304 செல்வம் தன்னிடத்திருந்து அறவே நீங்கிச் சென்றாலும் ஊழ்வினையே எதிராக நின்று அழித்தாலும், மேன்மக்கள் ஊக்கமிக்க உள்ளத்துடன் உயர்ந்தவற்றை நினைப்பதை அல்லாமல், செல்வத்தைக் கருமித் தனத்தால் புதைத்து வைக்கும் அறிவில்லாதவர் பின்னே பணிந்து தலை தாழ்ந்து நின்று இரத்தலைச் செய்யார். கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம் வாழ்க்கை--இரவினை உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு. 305 எப்பொருளையும் மறைக்காமல் கொடுக்கும் அன்பினை யும் கண்ணெனத்தக்க பெருமையையும் உடையவரிடத்தும் கூட, இரத்தலைச் செய்யாமல் வாழ்வதே உயர்ந்த வாழ்வாகும். இரத்தலை நினைக்கும் பொழுதிலேயே நெஞ்சம் கரைந்தோடும். அவ்வாறாகவும் கொடுப்பதை வாங்கும் பொழுது அதனை ஏற்பவர் உள்ளம் எத்தகைய வலியதோ? இன்னா இயைக இனிய ஒழிகென்று தன்னையே தான் இரப்பத் தீர்வதற்--கென்னைகொல் காதல் கவற்றும் மனத்தினால் கண்பாழ்பட் டேதி லவரை இரவு. 306 “இல்லாமைத் துன்பம் என்னொடும் பொருந்துவதாக; இனியவெல்லாம் என்னை நீங்கி ஒழிவதாக” என்று தன்னையே தான் இரந்து தன் இன்னாமையைத் தானே ஒழித்தற்குக் கூடா மல், பொருளாவல் வாட்டும் மனத்துடன், கண்ணும் ஒளி இழந்து போக அயலார் இல்லத்தில் இரந்து திரிவது எதற்காக வோ? என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத் தென்றும் அவனே பிறக்கலான்--குன்றின் பரப்பெலாம் பொன்னொழுகும் பாய்அருவி நாட! இரப்பாரை எள்ளா மகன். 307 மலையின் பரப்பெல்லாம் பொன்னொழுகுவதுபோல் பாயும் அருவியை யுடைய மலை நாட்டின் தலைவனே! நாள் தோறும் புதிது புதிதாக மக்கள் பிறக்கின்றனர். ஆயினும் இவ் வுலகத்தில் எந்நாளில் ஆயினும் பிறக்காதவன் ஒருவன் உளன், அவன் யாவனோ எனின், இரந்து திரிவாரை இகழ்ந்து கூறாதவன் ஆகிய ஒப்பற்ற அவ்வொரு மகனே. புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன் நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே மாயானோ மாற்றி விடின். 308 தான் கொண்ட வறுமை புறத்தே நின்று வாட்ட உள்ளே அமைந்த நல்லறிவைப் போக்கித் துணிவைத் தன்னிடத்தில் நிறுத்தி ஒருவனிடம் சென்று, ‘எனக்கு இதனை ஈவாயாக’ என்று இரப்பவனுக்கு ‘இல்லை’ என்று மறுத்துவிடின் அப்பொ ழுது அதனைத் தாங்க மாட்டாமல் தன் உயிரை விட்டு விடானோ? ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி வழிபடுதல் வல்லுத லல்லால்--பரிசழிந்து செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே பையத்தான் செல்லும் நெறி. 309 வறியவர் ஒருவர் செல்வர் ஒருவரைச் சார்ந்து அவர் விரும்பு மாறு நடந்து பணிந் தொழுகுவதில் தேர்ச்சி கொள்ளுவது நன்றாம். தம்பெருமை அழிந்து ‘ஏதாவது எமக்கு உதவுவீரோ?’ என்று இறந்து உரைப்பது துன்பமான தாம், தாம் அடங்கித் தொழுதுண்டு செல்வதாகிய அவ்வழி இரத்தலினும் சிறந்த தாகும். பழமைகந் தாகப் பசைந்த வழியே கிழமைதான் யாதானுஞ் செய்க--கிழமை பொறாஅர் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத் தறாஅச் சுடுவதோர் தீ. 310 பழமையைப் பற்றுக் கோடாகக் கொண்டு ஒருவனை அன்புடன் நெருங்கிய பொழுதில் உரிமையான முறையில் எதனையேனும் செய்க. அவ் வுரிமையை அவர் பொறுக்க மாட்டார் என்றால், அதனால் நெஞ்சத்தில் மூட்டப் பெற்று என்றும் நீங்காமல் சுடுவதாகிய நெருப்பாக அஃது அமையும். 32. அவையறிதல் மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர் அஞ்ஞானந் தந்திட்ட டதுவாங் கறத்துழாய்க் கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன் சொன்ஞானம் சோர விடல். 311 மெய்யறிவாளர் கூட்டத்தைத் தேடி அக் கூட்டத்தொடு கலந்து பயன் பெறுவதை விடுத்து, அக் கூட்டத்திலேயே தம் அறியாமையைக் காட்டும் கருத்துக்களைப் பல்காலும் உரைத்து, வெறுக்கத்தக்க அறிவிலாத் தன்மைகளைக் கொள்ளும் இருண்ட அறிவினர் முன் பெரியோர் தாம் சொல்லும் அறிவுரையைச் சொல்லாது ஒழிக. நாப்பாடம் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும் தீப்புலவற் சேரார் செறிவுடையார்--தீப்புலவன் கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால் தோட்புடைக் கொள்ளா எழும். 312 நெஞ்சிற் கொள்ளாமல் நாவிற்கு வந்த வண்ணம் பாடங் களை எடுத்துச் சொல்லிப் பொருள் நயம் உணர்ந்த புலமை யாளர்போல் அமையும் தீய புலமையாளரை நற்புலமை யாளர் சேரார். ஏனெனில், தீய புலமையாளர், கூட்டத்தில் நற் புலமை யாளர் குடியைப் பழித்துக் கூறுவார்; இல்லையேல் தோளைப் புடைத்துக் கொண்டு தாக்க எழுவார். சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர் கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார்--கற்ற செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார் பலவுரைக்கும் மாந்தர் பலர். 313 சொல் என்னும் முட்கோலைக்கொண்டு சினந்து எழுவதை விரும்புவார்; செம்மையாகக் கற்றறிந்து நடக்கும் திறமையைத் தாம் தெளியார்; தாம் கற்றவற்றையும் பிறர் ஏற்றுக்கொள்ளு மாறு சொல்லும் வகையறியார்; தாம் கூறுவன பிறரால் மறுக் கப்பட்டுத் தோற்பதையும் அறியார்; இவ்வாறு தகவிலராகப் பலவுரைக்கும் மாந்தர் உலகில் பலர். கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால் பெற்றதாம் பேதையோர் சூத்திரம்--மற்றதனை நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன் புல்லறிவு காட்டி விடும். 314 நுண்ணிதின் ஆராய்ந்து கற்றது இல்லாமல், பள்ளியில் ஆசிரியர் கற்பித்த பாடத்தால் பொருளறியாமல் வரப்படுத்திக் கொண்ட நூற்பாவினை, அறிவிலி ஒருவன் கற்றறிந்த சான்றோர் அவையில் புகுந்து தன் அறியாமைக்கு நாணாமல் விரித்துரைத் துத் தான் பெற்றிருக்கும் சிற்றறிவை அனைவரும் அறியச் செய்து விடுவான். வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார் கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ--டொன்றி உரைவித் தகமெழுவார் காண்பவே கையுள் சுரைவித்துப் போலுந்தம் பல். 315 தாம் வெற்றி கொள்வதன் பொருட்டாக விலங்கைப் போல் மதர்த்து எழுந்து உண்மையை ஏற்றுக் கொள்ளாதவராய் வெதும்பிச் சினங்கொண்டு கொதிக்கும் புல்லறிவினரிடத்துத் தம்முடைய கல்விச் சிறப்பைப் புலப்படுத்த விரும்பும் அறிவினர் தம் கையின் கண்ணே சுரைவிதை போன்ற தம்பல்லைக் காண்பர்; அதுவே அவர் பெற்ற பரிசு. பாடமே ஓதிப் பயன் தெரிதல் தேற்றாத மூடர் முனிதக்க சொல்லுங்கால்--கேடருஞ்சீர்ச் சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை ஈன்றாட் கிறப்பப் பரிந்து. 316 மனப்பாடம் ஒன்றுமே செய்துகொண்டு அதன் பொருள் நயம் உட்கருத்து முதலியவற்றைத் தேர்ந் தறிந்து கொள்ளாத அறிவிலார், அவையில் வெறுக்கத் தக்க சொற்களைச் சொல் லும் போது, கெடுதல் இல்லாத சிறப்புடைய பேரறிவாளர் அவ்வறிவிலாரைப் பெற்ற தாயின்மேல் பெரிது இரங்கி எதுவும் உரைக்காமல் பொறுத்திருப்பர். பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக் கற்பவர்க் கெல்லாம் எளியநூல்--மற்றம் முறிபுரை மேனிய ருள்ளம்போன் றியார்க்கும் அறிதற் கரிய பொருள். 317 ஒருவர் தரும் பொருளையே கருத்தில் கொண்டு வாழும் பொதுமகளிர் தோள், பலர்க்கும் எளிதாவது போல், இசைந்து வழிபட்டுக் கற்பவர்க்கெல்லாம் கல்வி எளிதில் அமையும். ஆனால் மாந்தளிர் போலும் நிறத்தையுடைய அப்பொது மகளிர் தம் உள்ளத்தைக் காணல் அரிதாவது போல், நூலின் உட்பொருள் காண்பது அறிஞர்க்கும் அரிதாகும். புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார் உயத்தக மெல்லாம் நிறைப்பினும்--மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே பொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறு. 318 நூல் உரைக்கும் பொருட் சிறப்பினைத் தெளியாதவராக நூல்களை மிகுதியாகத் தேடித் தொகுத்துக் கொணர்ந்து வீடு முழுவதும் இடமற நிறைத்து வைத்தாலும், அந்நூல்களைத் தக்கவாறு பாதுகாக்கும் புலமையாளரும் வேறாவர்; அந்நூல்களின் நுண்பொருள் உணர்ந்து பிறர்க்கு உரைக்கும் புலமை யாளரும் வேறாவர். பொழிப்பகலம் நுட்பநூல் எச்சமிந் நான்கிற் கொழித்தகலங் காட்டாதார் சொற்கள்--பழிப்பில் நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட உரையாமோ நூலிற்கு நன்கு. 319 பழித்தல் இல்லாத காட்டுப் பசுக்களின் கூட்டம் தங்கும் பெரிய மலைநாட்டின் தலைவனே, பொழிப்புரை அகலவுரை நுட்பவுரை எச்சவுரை என்னும் நான்கு வகைகளாலும் ஆராய்ந்து நூற்பரப்பைச் சிறப்பாக விளக்கிக் காட்டாத புலவருடைய உரை, ஒரு நூலுக்குப் பொருந்திய உரை என்று கூறத்தகுமோ? தகாது. இற்பிறப் பில்லார் எனைத்துநூல் கற்பினும் சொற்பிறரைக் காக்குங் கருவியரோ--இற்பிறந்த நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார் புல்லறிவு தாமறிவ தில். 320 உயர்குடிப் பிறப்பு இல்லாதவர் எத்தகைய உயர்ந்த நூல்களை அளவின்றிக் கற்றாலும் பிறர் பழித்துரைக்கும் சொல் லைக் காக்கும் கருவி உடையரோ? நற்குடியிற் பிறந்த நல்லறி வினர் கூறிய சிறந்த நூற்பொருளை நுணுகித் தெளியாத கீழோர் தம்முடைய புல்லிய அறிவினைத் தாம் அறிந்து கொள்வ தில்லை. ஆதலின் அவர் பழிக்குத் தப்பார். 33. புல்லறிவாண்மை அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர் புலவர்--பொருளல்லா ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை மூழை சுவையுணரா தாங்கு. 321 உயிர்களிடத்தில் அருள்கொண்டு அறநெறியை வலியுறுத்தும் அன்புடையவர்களின் மெய்ப்பொருள் உரைகளைப் பெறுதற்கு அரிய பொருளாக நற்புலவர் கொள்வர். ஆனால் அரியபாற் சோற்றின் சுவையை அகப்பை சுவைத்தறியாதது போல, நற்பொருள் உணரத் தெளியாத அறிவிலி அதனை இகழ்ந்து உரைப்பான். அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால் செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார் கவ்வித்தோல் தின்னுங் குணுங்கர்நாய் பாற்சோற்றின் செவ்வி கொளல்தேற்றா தாங்கு. 322 காய்ந்த தோலைக் கவ்வித் தின்னுவதில் விருப்புடைய புலையரது நாய், பாற்சோற்றின் சுவையைச் சுவைத்துணரத் தெளியாது; அதுபோல், பொறாமை முதலிய தீய குணங்கள் இல்லாதவர் அறிவுரை சொல்லும்போது, செவ்விய தன்மை இல்லாத புல்லறிவாளர் தம் காது கொடுத்தும் அதனைக் கேட்க மாட்டார். இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் மார்க்கம் எனைத்தானும் தாம்கண்டிருந்தும்--தினைத்துணையும் நன்றி புரிகல்லா நாணில் மடமாக்கள் பொன்றிலென் பொன்றாக்கா லென். 323 கண்ணை மூடித் திறக்கும் பொழுதுக்குள் தம் இனிய உயிர் போயொழியும் வழியை எல்லா வகைகளிலும் தங்கள் கண் முன்னாகக் கண்டிருந்தும், தினை போன்ற சிறிய அளவிலா யினும் நற்செயல்களைச் செய்யாத நாணமற்ற புல்லிய அறிவினர் இறந்தால் தான் என்ன? அன்றி உயிரோடு இருந்தால்தான் என்ன? உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால் பலர்மன்னுந் தூற்றும் பழியால்--பலருள்ளும் கண்டாரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன் தண்டித் தனிப்பகை கோள். 324 வாழும் நாள்களும் சிலவேயாம்; உயிர்க்கென வாய்த்த உறுதியான காவலும் இல்லையாம்; பலரும் நிலையாகத் தூற்றும் பழியும் உண்டாம்; உயிரின் வாழ்வு இவ்வாறு இருத் தலின் தாம் கண்டு பழகிய பல பேர்களுடனும் கலந்து மகிழா மல் ஒருவன் தனித்திருந்து பகைமை கொள்வது எதனைக் கருதி யோ? அறியேம். எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி வைதா னொருவன் ஒருவனை-வைய வயப்பட்டான் வாளா இருப்பானேல் வைதான் வியத்தக்கான் வாழு மெனின். 325 பலரும் கூடியிருக்கும் ஒரு கூட்டத்தின் நடுவே போய், இகழ்ந்து கூறிய ஒருவனை, வசைமொழிக்கு ஆட்பட்டவன், சினந்து வசைமொழி கூறாமல் அமைந்து இருப்பானேயா னால், அத்தன்மையை அறிந்தும்கூட வசைமொழி கூறியவன் அதன் மேலும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பானே ஆனால், அவன் வியக்கத்தக்கவனேயாம். மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை ஊக்கி அதன்கண் முயாலாதான்--நூக்கிப் புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள் தொழுத்தையாற் கூறப் படும். 326 முதுமைப் பருவம் தன்னை வந்து அடையுமுன்னரே, நல்வினைகளில் ஊக்கமாக ஈடுபட்டு அதனை நிறைவேற்று வதற்கு முழு முயற்சி செய்யாது ஒழிபவன் பின்பு தம் இல்லத்துப் பணியாட்டியாலும் வெறுத்து ‘அப்பால் போய் இரு’ ‘ஒழிந்து போ’ என்று கொடிய சொற்கள் கூறிப் பழிக்கக் கேட்கப் படுபவன் ஆவன். தாமேயும் இன்புறார் தக்கார்க்கும் நன்றாற்றார் ஏமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார்--தாமயங்கி ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவி னார் 327 புன்மையான அறிவுடையவர் தாமாகவும் தக்க வழியில் இன்புற மாட்டார்; தகுதி வாய்ந்த பெரியவர்களுக்கும் நன்மை செய்யார்; தம் உயிர்க்குக் காவலாக அமையும் நல்வழிகளிலும் சேரார்; தாம் அறிவு மயங்கித் தம் செல்வச் செழிப்பிலேயே அழுந்தி வீணாகத் தம் வளங்களைப் போக்கித் தொலைப்பர். சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார்--இறுகிறுகிப் பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும் பொன்னும் புளிவிளங்கா யாம். 328 இளைய பருவத்திலேயே தாம் செல்லுதற்குரிய மறுமைக் குப் பயன் படும் நல்வினையாகிய உணவைச் செறியச் செறியத் தேடிக் கட்டுச் சோறு போல் கொள்ளாதவர், செல்வத்தை இறுக்கி இறுக்கி வைத்து முதுமையில் வாய்பேசா நிலையில், ‘அறம் செய்வோம்’ என்றெண்ணிக் கையால் காட்டும் பொன்னும், பிறரால் ‘புளிவிளங்காய் கேட்கிறார்’ எனப்பட்டு ஒழியும். வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும் மறுமை மனத்தாரே யாகி--மறுமையை ஐந்தை யனைத்தானும் ஆற்றி காலத்துச் சிந்தியார் சிற்றறிவி னார். 329 பொருளில்லாத வறுமைப் பொழுதிலும், கொடிய நோய்க்கு ஆட்பட்ட பொழுதிலும், மறுமையைப் பற்றியே நினைக்கும் நன்மனம் உடையராகி இருந்து, தமக்குச் செல்வம் துணை முதலியவை வாய்த்து நல்வினை செய்யக் கிடைத்த பொழுதில் அம்மறுமைக்காம் நல்வினையைக் கடுகளவு கூடச் சிற்றறிவுடையவர் சிந்திக்க மாட்டார். என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார் கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை--அன்னோ அளவிறந்த காதல்தம் ஆருயி ரன்னார்க் கொள இழைக்குங் கூற்றமுங் கண்டு. 330 அந்தோ! அளவற்ற அன்பினராகிய நம் அரிய உயிர் போன்றவரையும் கவர்ந்து கொண்டு போதற்குச் சூழும் கூற்று வனை உலகில் கண்டு வைத்தும், இவ்வரிய உடம்பைப் பெற்றும் அறநினைவு இல்லாராகத் தம் வாழ்நாளை வறிதே கழித்தல் என்ன கருதியோ? ஐயோ! அவர்தம் புல்லறிவு இருந்தவாறு என்னே! 34. பேதைமை கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு. 331 கொலை வலிய கொடிய கூற்றுவன் தம் உயிரைக் கொல்லப் பார்த்திருக்கவும், இவ்வுலகப் பற்றாம் வலைக்குள் சிக்கி மகிழ்பவர் தன்மை, கொன்று ஊன் தின்ன விரும்புபவர் உலையேற்றி வைத்துத் தீமூட்டி எரிக்க, அவ்வுலையில் விடப் பெற்ற ஆமை தனக்கு நேர இருப்பதை அறியாமல் அகமகிழ்ந்து ஆடித் திரிவது போன்றது. பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன் ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால் இற்செய் குறைவினை நீக்கி அறவினை மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு. 332 இல்லத்தே இருந்து தாம் செய்து முடிக்க வேண்டியுள்ள அரைகுறை வேலைகளையெல்லாம் முடித்த பின்னர் அறவினை செய்யலாம் என்று இருப்பவர் ‘சீரிய தன்மை’, பெரிய கடலில் நீராடுவதற்குச் சென்றவர் “ஒலி சிறிதும் இல்லாமல் அவிந்து அடங்கிய பின்னர் ஆடுவேம்” என்று எண்ணிக் கரையில் இருப்பது போலாம். குலம்தவம் கல்வி குடிமைமூப் பைந்தும் விலங்காமல் எய்தியக் கண்ணும்--நலஞ்சான்ற மையறு தொல்சீர் உலகம் அறியாமை நெய்யிலாப் பாற்சோற்றின் நேர். 333 நல்ல குலமும், சிறந்த தவமும், உயர்ந்த கல்வியும், நயக்கத்தக்க குடிப்பிறப்பும், சீரிய முதுமையும் ஆகிய ஐந்தும் சிறிதும் குறையாமல் பெற்றிருந்த போதும் நன்மை நிறைந்த குற்றமற்ற பழஞ்சிறப்புடைய உலகியல் அறிந்து கொள்ளாமை நெய்யில்லாத பாற் சோற்றுக்கு ஒப்பானதாகும். கல்நனி நல்ல கடையாய மாக்களின் சொல்நனி தாமுணரா வாயினும்--இன்னினியே நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலன் றுற்றவர்க்குத் தாம்உதவ லான். 334 கற்கள், கற்றோர் ஆய்ந்து கூறும் அறிவுரையை உணர்ந்து கொள்ளா என்றாலும் தம்மை வந்து அடுத்தவர்க்கு அப்பொழு துக்கு அப்பொழுது, நிற்பதற்கும் இருப்பதற்கும் படுப்பதற்கும் நடப்பதற்கும் உதவும். ஆதலால் அறவுரை கேட்டும் சிறிதும் பயன்படாக் கடைமக்களினும் கற்கள் மிக நல்லவையாம். பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக் கறுவுகொண் டேலாதார் மாட்டும்--கறுவினால் கோத்தின்னா கூறி உரையாக்காற் பேதைக்கு நாத்தின்னும் நல்ல சுனைத்து. 335 வெகுளுவதற்குரிய காரணம் எதுவும் பெறாமலும், அதற்குக் காரணம் பெற்றதுபோல வெகுளி கொண்டு, தனக்கு ஒப்பாகாத பெரியவர் மாட்டும் தன் வெகுளியால் இல்லாதவற் றையும் இசையாதவற்றையும் இணைத்துக் கோத்து அறிவில் லான் கொடுஞ்சொற்களைக் கூறாக்கால் அவனுக்கு நாக்குத் தினவெடுத்து நன்றாக அரிக்கும் போலும்! தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை எங்கண் வணக்குது மென்பவர்--புன்கேண்மை நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப கற்கிள்ளிக் கையிழந் தற்று. 336 நல்ல தளிர்களையுடைய புன்னை மலரும் கடற்கரைத் தலைவனே! தம்மைப் பெருமையாக நினைக்கும் தன்மை இல்லாதவர்க்குப் பின்னே சென்று தாம் அவரை, “எம்மிடத்துப் பணிந்திருக்கச் செய்வேம்” என்பவரின் புன்மை யான நட்பு, கல்லைக் கிள்ளி எடுக்க முனைந்தவன் தன் கை விரல்களை இழந்தது போன்றதாம். ஆகா தெனினும் அகத்துநெய் உண்டாகின் போகா தெறும்பு புறஞ்சுற்றும்--யாதுங் கொடாஅ ரெனினும் உடையாரைப்பற்றி விடாஅர் உலகத் தவர். 337 நன்றாக மூடியிருத்தலால் தான் நுகரக் கிடைக்காது என்றாலும் உள்ளே நெய் இருக்குமானால் அதனை விட்டுப் போக விருப்பின்றி எறும்பு புறத்தே சுற்றி அலையும். அதுபோல், சிறிய அளவிலாயினும் கொடா விட்டாலும் செல்வம் உடைய வரைப் பேதைமாக்கள் வலுவாகப் பற்றிக் கொண்டு விடாமல் திரிவர். நல்லவை நாடொறும் எய்தார் அறஞ்செய்யார் இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார்--எல்லாம் இனியார்தோள் சேரார் இசைபட வாழார் முனியார்கொல் தாம்வாழும் நாள். 338 கற்றுணர்ந்த நல்லவர் அவையைச் சேரார்; அறச்செயல் களைச் செய்யார்; வறியவர்க்கு எந்த ஒரு பொருளையும் ஈயார்; எல்லா வகைகளாலும் இனியராய் அமைந்த மனைவியின் தோளைச் சேர்ந்து இன்புறார்; புகழுண்டாக வாழார்; இத்த கையர் தாம் வாழும் வறிய நாட்களை வெறுத்தல் இலரோ? விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர் விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை--தழங்குகுரல் பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே ஆய்நலம் இல்லாதார் மாட்டு. 339 நட்புக் கொண்டுள்ள இருவருள் ஒருவர், விருப்பத்துடன் ஒருவர் தன்மையைப் பாராட்டி மகிழ, மற்றொருவர், ‘அவர் மேல் விருப்பில்லேம்’ என்று புறக்கணிப்பாரானால் அவ்வொரு பால் நட்பு, முழக்கும் ஒலியுடன் பாய்ந்து அலைகளையுடைய கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் பெறுவதாயினும் துன்ப மிக்கதேயாம். கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் தானுரைப்பின் மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தனென் றெள்ளப் படும். 340 தாம் கற்றவற்றையும், பக்கமெல்லாம் பரவிய இனிய பண்பையும் குடிப்பிறப்பின் சிறப்பையும், பிறர் பாராட்டிக் கூறுதலால், அவை மேலும் பெருமைப்படும். ஆனால், அவற் றைத் தானே எடுத்துரைப்பின் மைத்துனர் பலர் கூடிச் சேர்ந்து ‘எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிறுக்கன் இவன்’ என்று இகழப்படுவான். 35. கீழ்மை கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும் குப்பை கிளைப்போவாக் கோழிபோல்--மிக்க கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன் மனம்புரிந்த வாறே மிகும். 341 காலைப் பொழுதிலேயே வேண்டுமளவும் தின்னுமாறு தானியத்தை வாயில் போட்டு வைத்தாலும், கோழி குப்பையைக் கிளைத்துத் தின்னுவது ஒழியாது. அதுபோல், மிகுந்த உயர்வான கருத்துக்களைப் பொதிந்துள்ள நூலை விரித்துக் கூறினாலும் கீழ்மகன், தன் மனம் விரும்பிய வழியில் போவானே அல்லாமல் நூல் கருத்துக்களில் ஈடுபடான். காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல் தாழாது போவாம் என உரைப்பின்--கீழ்தான் உறங்குவம் என்றெழுந்து போமாம் அஃதன்றி மறங்குமாம் மற்றொன் றுரைத்து. 342 “ஊக்கங் கொண்டு குற்றமறக் கற்ற பெரியவர் இருக்கும் இடத்தைக் காலம் தாழ்த்தாமல் அடைவோம்” என்று ஒருவன் கூறினால், அறிவிலாக் கீழ்மகன் அதனை ஏற்றுக் கொள்ளாமல் “உறங்குவோம்” என்று எழுந்து போவான். அன்றி, வேறு ஏதாவது ஒன்றைக் கூறி அவன் கூறியதை மறந்து போகச் செய்வான். பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா தொருநடைய ராகுவர் சான்றோர்--பெருநடை பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட வற்றாம் ஒருநடை கீழ். 343 விளங்கும் அருவி ஒழுகும் நல்ல மலைநாட்டின் தலைவனே, உயர்ந்தோர் தாம் எவ்வளவு நிறைந்த செல்வத்தைப் பெற்றாலும் தம் பழைய தன்மை மாறாமல் என்றும் ஒரே தன்மையராய் இருப்பர். ஆனால், கீழ்மகனோ நிறைந்த செல்வத்தைப் பெற்ற அவ்வளவிலேயே செருக்கான ஒரு புது நடை நடத்தலில் தேர்ந்தவனாக விளங்குவான். தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால் பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்--பனையனைத் தென்றுஞ் செயினும் இலங்கருவி நன்னாட நன்றில நன்றறியார் மாட்டு. 344 விளங்கும் அருவி ஒழுகும் நல்ல மலைநாட்டின் தலை வனே! உயர்ந்தவர், தமக்குத் தினை அளவாக ஆயினும் ஒருவர் செய்த நன்மை உண்டாயினால் அதனைப் பனை என்னும் அளவி னதாக நினைத்து மகிழ்வர். ஆனால், நன்றியறிவில்லாத கீழ்களி டத்துப் பனை அளவு நன்மை செய்தாலும் அது நல்லது ஆக மாட்டாது. பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர் எச்சிற் கிமையாது பார்த்திருக்கும்--அச்சீர் பெருமை யுடைத்தாக் கொளினும்கீழ் செய்யுங் கருமங்கள் வேறுபடும். 345 பொன்னால் செய்யப்பட்ட கலத்தில் சுவையான உணவு வகைகளை வைத்து நாயைத் தின்னச் செய்து பேணி வளர்த்தா லும் அது பிறர் எச்சில் உணவைத் தின்ன ஆர்வத்தால் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருக்கும். அத்தன்மைபோல் கீழ்மகனைப் பெருமையாகக் கருதினாலும் அவன் தன்மை அதற்கு வேறுபட்டே இருக்கும். சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர் எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்--எக்காலும் முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை இந்திரனா எண்ணி விடும். 346 நாட்டை ஆளும் அத்துணைப் பெருஞ் செல்வம் வாய்க்கப் பெற்றாலும் பண்பால் உயர்ந்த பெரியோர் எந்நாளிலும் செருக்குமிக்க செயலைச் செய்யார். ஆனால், முந்திரி என்னும் அளவுக்குச் சிறிதுயர்ந்த காணி என்னும் அவ்வளவு செல்வம் மிகுமாயினும், கீழ்மகன் தன்னை விண்ணுலகு ஆளும் இந்திரன் போலவே எண்ணிச் செருக்கித் திரிவான். மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச் செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம் எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும். 347 குற்றமற்ற மாற்றுக் குறையாத பொன்னின்மேல் தேர்ந்தெ டுத்த மணிகளைப் பதித்துச் செய்யப் பெற்றதாயினும், செருப்பு தன் காலுக்கே பயன்படும். அதுபோல், செல்வத்தில் பொருந்தி யவர் ஆயினும் கீழ்மக்களை அவர்கள் செய்யும் தொழிலால் அவர்கள் இத்தகையர் என்பது தெளிவாக அறியப்பட்டுவிடும். கடுக்கெனச் சொல்வற்றாம் கண்ணோட்ட மின்றாம் இடுக்கண் பிறர்மாட் டுவக்கும்--அடுத்தடுத்து வேக முடைத்தாம் விறன்மலை நன்னாட ஏகுமாம் எள்ளுமாம் கீழ். 348 வலிய அரணாக அமைந்த நல்ல மலைநாட்டின் தலைவனே, கீழ்மகன், கடிந்து கூறுதலில் வலியன்; பிற உயிர்கள் மேல் அருள் சிறிதும் இல்லான்; பிறருக்கு உண்டாகும் துன்பம் கண்டு மகிழ்வான்; மேலும் மேலும் சினம் கொள்வான்; தன் மனம் போன போக்கெல்லாம் போவான்; விரும்புமா றெல்லாம் பிறரைப் பழிப்பான். பழைய ரிவரென்று பன்னாட்பின் நிற்பின் உழைஇனிய ராகுவர் சான்றோர்--விழையாதே கள்ளுயிர்க்கும் நெய்தற் கனைகடல் தண்சேர்ப்ப எள்ளுவர் கீழா யவர். 349 தேன் வழியும் நெய்தற் பூக்களையுடைய ஒலிக்கும் குளிர்ந்த கடற்கரைத் தலைவனே! பண்பமைந்த பெரியோர் தம்மிடத்து, நெடுநாளாக வழிபட்டு ஒருவர் நடப்பராயின் அவரைப் பழைய தொடர்பினராகக் கருதி இனியராக நடப்பர். ஆனால், கீழ்களோ அவ்வாறு நடப்பவரை இகழ்ந்து பழி கூறுவர். கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றுந் தீற்றினும் வையம்பூண் கல்லா சிறுகுண்டை--ஐயகேள் எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும். 350 ஐய, கேட்பாயாக! சிறிய எருது நாள்தோறும் பசுமையான புல்லைக் குறைத்து அறுத்து உண்பிக்கப் பெற்றாலும் வண்டி யைப் பூண்டு இழுத்துச் செல்லாது. ஆதலால், அளவிறந்த செல் வம் உடையவர் ஆயினும் கீழ் மக்களின் தன்மையை அவர்கள் செய்யும் இழிந்த தொழிலாலே அறிந்து கொள்ள முடியும். 36. கயமை ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினும் காத்தோம்பித் தம்மை அடக்குப--மூத்தொ றூஉம் தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல் போத்தறார் புல்லறிவி னார். 351 நிரம்பிய அறிவினையுடையவர் அகவையால் இளையராக இருப்பினும் தன் பொறி புலன்களைப் புறஞ்செலாத வழியில் அடக்கிக் காப்பர்; புல்லிய அறிவினையுடையார் அகவையால் முதிர்ந்து வளருந்தோறும் தீய தொழிலிலும் வளர்ந்து பருந்து போல் திரிந்து குற்றங்களில் இருந்து என்றும் நீங்காது ஒழுகுவர். செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும் வழும்பறுக்க கில்லாவாம் தேரை--வழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார் தேர்கிற்கும் பெற்றி அரிது. 352 செழிப்பமைந்த பெரிய நீர் நிலையுள்ளேயே வாழ்ந்தாலும் எந் நாளிலாயினும் தவளை தன்னிடத்துள்ள அழுக்கை அகற் றிக் கொள்ளுதல் இல்லை. அதுபோல் குற்றமில்லாத சிறந்த மெய்ந் நூல்களைக் கற்றபோதும் நுண்ணறிவு சிறிதும் இல்லாதவர் அந்நூலின் உட்பொருளை அறிந்து கொள்ளுதல் அரிது. கணமலை நன்னாட கண்இன் றொருவர் குணனேயுங் கூறற் கரிதால்--குணனழுங்கக் குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட் கெற்றால் இயன்றதோ நா. 353 தொடராக அமைந்த நல்ல மலை நாட்டின் தலைவனே, ஒருவர் இல்லாத இடத்தில் அவர்தம் நற்குண நற்செயல்களைக் கூறுவதும் சான்றோர்க்கு அருஞ் செயலாம். அவ்வாறாக, நற்குண நற்செயல்கள் மறையுமாறு தீக்குணத் தீச்செயல் களையே அவர் பக்கம் நின்று எடுத்துரைக்கும் சிறியார்க்கு நாவு எப்பொருளால் அமைந்ததோ? கோடேந் தகலல்குற் பெண்டிர்தம் பெண்ணீர்மை சேடியர் போலச் செயல்தேற்றார்--கூடிப் புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி மதித்திறப்பர் மற்றை யவர். 354 நற்குடியில் பிறந்த மகளிர் தம் பணிப் பெண்ணைப் போல ஆயினும், தம் பெண்மைத் தன்மை புறத்தே புலப்படும்படி அழகு படுத்திக் கொள்ளார். மற்றைப் புல்லிய மகளிரோ எனின், புதுநீர்ப் பெருக்கைப்போல் தம் பெண்மையை வெளிப் படக் காட்டித் தம்மைத் தாமே புகழ்ந்தெண்ணி வரையறை கடந்து ஒழுகுவர். தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா உளிநீரார் மாதோ கயவர்--அளிநீரார்க் கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவே இன்னாங்கு செய்வார்ப் பெறின். 355 கீழ்மக்கள், மெல்லிய இளந்தளிரின் மேலே நின்றாலும் ஒருவர் தன்னைத் தட்டாவிடின் உள்ளே இறங்கிச் செல்லாத உளியைப் போன்றவர் ஆவர். அவர் இரங்கத் தக்கவர்க்கு எவ் வகையாலும் உதவி செய்யார். ஆனால், தம்மைக் கடுமை யாகத் துன்புறுத்துபவரைக் கண்டால் அவர்க்கு அஞ்சி எதை வேண்டு மாயினும் செய்வர். மலைதலம் உள்ளும் குறவன் பயந்த விளைநிலம் உள்ளும் உழவன் சிறந்தொருவர் செய்தநன் றுள்ளுவர் சான்றோர் கயம்தன்னை வைததை உள்ளி விடும். 356 தனக்கு நல்வாழ்வு தரும் மலையின் தன்மையை மலைவாழ் மகன் நினைந்து பாராட்டுவான்; விளைவால் தன்னையும் உலகையும் வாழ வைக்கும் நிலத்தின் நன்றியை நினைந்து உழவன் பாராட்டுவான்; சிறப்பாக ஒருவர் தமக்குச் செய்த நல்ல வற்றை நினைந்து சான்றோர் பாராட்டுவர்; கீழ்மகனோ தன்னை என்றாயினும் ஒருவர் வைததை மறவாமல் நினைந்திருப் பான். ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த பிழைநூறும் சான்றோர் பொறுப்பர்--கயவர்க் கெழுநூறு நன்றிசெய் தொன்றுதீ தாயின் எழுநூறும் தீதாய் விடும். 357 தமக்கு ஒரே ஒரு நன்றி செய்தவர்க்காக அவர் நெஞ்சாரத் துணிந்து செய்த தவறுகள் நூறே ஆயினும் உயர்ந்தோர் பொறுத் துக் கொள்வர். ஆனால், கீழ்மக்கட்கு எழுநூறு நன்மைகளைச் செய்து ஒரே ஒரு தீமையை அறியாமல் செய்துவிடினும், அவ்வெழு நூறு நன்மையும் தீமையாகப் போய்விடும். ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்--கோட்டை வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி செயிர்வேழ மாகுதல் இன்று. 358 வாள் போலும் ஒளியுடைய கண்களையுடையவளே! நற்குடியிற் பிறந்தவர் தாம் வறுமையாக இருக்கும் காலத்தில் செய்யும் நல்லறச் செயல்களைக் கயவர் பெருஞ் செல்வராக உள்ள காலத்திலும் செய்யார். பன்றியின் கொம்பினை வயிரத்தால் பூண் பிடித்து வைத்தாலும் சினந்து தாக்குதலில் யானையாக அஃது ஆவது இல்லை. இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது நின்றாதும் என்று நினைத்திருந்து--ஒன்றி உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி மரையுலையி;ன் மாய்ந்தார் பலர். 359 “இன்று வளம் பெறுவோம்; இப்பொழுதிலேயே வளம் பெறுவோம்; இனிச் சிறிது காலம் செல்ல வளம் பெறுவோம்” என்று நினைத்துக் கொண்டே ஈடுபட்டு இருந்து, பின்பு அவ் வளத்தைச் சொல்லித் திரியும் அளவிலே மகிழ்ந்து, இறுதியில் மனம் வேறாகி, நீருட்கிடந்து அழுகும் தாமரை இலைபோல் அழிந்தார் எண்ணிலர். நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும் ஈரம் கிடையகத் தில்லாகும்--ஓரும் நிறைபெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும் அறைப்பெருங்கடல் அன்னார் உடைத்து. 360 நீருக்குள்ளே தோன்றி நிறம் பசுமையானதாக இருந்தாலும் நெட்டியின் உள்ளே நீர் புகுவது இல்லை. அதுபோல் பிறரெல் லாம் சிறப்பாகக் கருதக் கூடிய நிறைந்த பெரிய செல்வத்தில் நிலைபெற்றிருக்கும் பொழுதிலும் இரக்கம் சிறிதும் இல்லாமல் பெரிய பாறைக் கல்லைப் போன்ற இயல்பினரை இவ்வுலகம் கொண்டுள்ளது. 37. பன்னெறி மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய் இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம்--விழைதக்க மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம் காண்டற் கரியதோர் காடு. 361 முகில் தவழும் உயர்ந்த மாடமாகவும், உட்புக முடியாத காவல் உடையதாகவும், சிறந்த வேலைப்பாடு அமைந்த அணையா விளக்குகள் எரிவதாகவும் இருப்பினும், விரும்பத் தக்க நற்குண நற்செய்கை அமைந்த இல்லாளை இல்லான் ஆயின் இவற்றால் ஆகும் பயனென்ன? மனைவி இல்லான் வீடு காணப் பொறுக்காத சுடுகாடு போன்றது. வழுக்கெனைத்தும் இல்லாத வான்வாய்க் கிடந்தும் இழுக்கினைத் தாம்பெறுவ ராயின்--இழுக்கெனைத்துஞ் செய்குறாப் பாணி சிறிதேஅச் சின்மொழியார் கையுறாப் பாணி பெரிது. 362 தவறுதல் சிறிதும் இல்லாத வாளேந்திய படை வீரர் காக்கும் காவலில் இருந்தும், சிலவாய மொழிகளைக் கூறும் மகளிர் தவறாய ஒழுக்கத்தை உடையவராயின், அவர்தம் பொழுதில் தவறு செய்யாப் பொழுது சிறிதே ஆகும். ஆனால், செவ்விய ஒழுக்கத்தைப் பேணாத பொழுதே மிகுதியாகும். எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி--அட்டதனை உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை. 363 கணவன் வெகுளும்போது ‘என்னை அடி பார்க்கிறேன்’ என்று எதிர்த்து நிற்பவள் அவனுக்குக் கூற்றுவன் போன்றவள்: வைகறையிலே சமையல் அறையுள் புகாது மடிந்திருப்பவள் நோய் போன்றவள்; ஆக்கிய உணவைப் பிறர்க்குக் காட்டாமல் தானே உண்பவள் இல்லத்தில் வாழும் பேய் போன்றவள்; இம் மூவரும் கணவனைக் கொல்லும் படைகளாவர். கடியெனக் கேட்டுங் கடியான் வெடிபட ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்--பேர்த்தும்ஓர் இல்கொண் டினிதிரூஉம் ஏமுறுதல் என்பவே கல்கொண் டெறியுந் தவறு. 364 இவ்வாழ்வை நீக்குக என்று மெய்யுணர்ந்தோர் கூறியும் நீங்காதவனாகவும், செவி வெடிக்குமாறு சாவுப்பறை முழங்கு வது கேட்டும் அதைத் தெளியாதவனாகவும் இருந்து, ‘மீண்டும் ஒரு மனையாளைக் கொண்டு இன்பமாக இருப்போம்’ என்று ஒருவன் மயங்குதல், தன்னைத் தானே கல்லால் எறிந்து கொள்ளுதல் என்று அறிந்தோர் கூறுவர். தலையே தவம்முயன்று வாழ்தல் ஒருவர்க் கிடையே இனியார்கண் தங்கல்--கடையே புணராதென் றெண்ணிப் பொருள் நசையால் தம்மை உணரார்பின் சென்று நிலை. 365 ஒருவர்க்குத் தவநெறியில் முயற்சி யுடையவராக வாழ்வது தலைப்பட்ட தன்மையாகும்; கருத்தொத்த இனிய மனைவி யொடு கூடி இல்லறம் நடத்துவது இடைப்பட்ட தன்மை யாகும்; இவ்விரண்டும் இசையாது என்று எண்ணிப் பொருளாவலால் தம் தகுதியை அறியாதவர் பின் சென்று வாழ்வது கடைப்பட்ட தன்மையாம். கல்லாக் கழிப்பர் தலையாயார் நல்லவை துவ்வாக் கழிப்பர் இடைகள் கடைகள் இனிதுண்ணேம் ஆரப் பெறேம்யாம் என்னும் முனிவினாற் கண்பா டிலர். 366 மெய்ப்பொருள் நூல்களைக் கற்பதிலேயே காலத்தைக் கழிப்பவர் தலைப்பட்டவர் ஆவர்; நல்லறத்தைத் தேர்ந்து நுகர்ந்து கொண்டே காலத்தைக் கழிப்பவர் இடைப்பட்டவர் ஆவர். ‘இனியவற்றை உண்டிலேம்; சிறந்தவற்றை நுகரப் பெற்றி லேம்’ என்னும் வெறுப்புடையவராக இரவும் பகலும் கண் ணுறங் காதவர் கடைப்பட்டவர் ஆவர். செந்நெல்லா லாய செழுமுளை மற்றும்அச் செந்நெல்லே யாகி விளைதலால்--அந்நெல் வயல்நிறையக் காய்க்கும் வளவய லூர மகனறிவு தந்தை யறிவு. 367 செந்நெல்லை விதைத்தலால் எழுந்த அதன் வளமான முளையும் அச் செந்நெல்லாகவே விளையும். ஆதலால், அந் நெல் நிறைந்து விளையும் வளமான வயல்கள் நிரம்பிய ஊரின் தலைவனே! ஒரு மகன் கொண்ட அறிவு என்பது அவன் தந்தையின் வழி வந்ததேயாம். அஃது அவனுக்குத், தானே அமைந்தது அன்று. உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப் புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக் கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால்போற் கீழ்மேலாய் நிற்கும் உலகு. 368 நல்லியல்பு அமைந்த செல்வரும், பண்பும் அறிவும் அமைந்த சான்றோரும் தம் வளமை சுருங்கி வறியராய் இருக்க, ஒழுக்கமில்லா மக்களும், கீழ்மைத் தன்மையுடையவரும் வளமை பெருகி இருத்தல், அடி முடியாகவும் முடி அடியாகவும் மாறி நிற்கும் குடைக் காம்பு போன்றது! இவ்வுலகியல் இருந்த வாறு என்னே! இனியார்தம் நெஞ்சத்து நோய் உரைப்ப அந்நோய் தணியாத உள்ளம் உடையார்--மணிவரன்றி வீழும் அருவி விறன்மலை நன்னாட வாழ்வின் வரைபாய்தல் நன்று. 369 மணிகளைக் கொழித்துக் கொண்டு வீழும் அருவியை யுடைய வலிய மலையமைந்த நல்ல நாட்டின் தலைவனே, இனிய நண்பர் தம் மனத்தை வருத்தும் துயரை வாய்விட்டுச் சொல்ல வும் அத் துயரைத் தணிக்க இயலாத வன்மனம் உடையவர் உயிரோடு இருத்தலினும், மலையினின்று பாய்ந்து கீழே வீழ்ந்து இறப்பது நல்லதாம். புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும் வீதுப்புற நாடின்வே றல்ல--புதுப்புனலும் மாரி அறவே அறுமே அவரன்பும் வாரி அறவே அறும். 370 மழை பொழிதலால் ஓடிவரும் புதுவெள்ளப் பெருக்கு, அழகிய காதணி அணிந்த பொது மகளிர் நட்பு ஆகிய இரண் டையும், அமைந்து ஆராய்ந்தால் அவை வேறுபட்டன அல்ல. மழை பெய்து ஒழிந்ததும் புதுவெள்ளப் பெருக்கு ஒழியும்; அவ்வாறே பொருள் வருவாய் அற்றதும் அம் மகளிர் அன்பும் அற்றுப் போகும். பொருட்பால் முற்றும் 3. காமத்துப்பால் 38. பொது மகளிர் விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும் துளக்கற நாடின்வே றல்ல--விளக்கொளியும் நெய்யற்ற கண்ணே அறுமே அவரன்பும் கையற்ற கண்ணே அறும். 371 விளக்கின் சுடரொளி பொது மகளிரது அன்பு ஆகிய இரண்டையும் அசைவு இல்லாமல் ஆராய்ந்து பார்த்தால், அவை வெவ்வேறானவை அல்ல. எவ்வாறெனில், விளக்கின் ஒளி விளக்கில் நெய் தீர்ந்த பொழுதில் தீர்ந்து போகும்; பொது மகளிர் அன்பு கைப்பொருள் போன பொழுதில் போய்விடும். ஆதலால். அங்கோட் டகலல்குல் ஆயிழையாள் நம்மோடு செங்கோடு பாய்துமே என்றாள்மன்--செங்கோட்டின் மேற்காண மின்மையான் மேவா தொழிந்தாளே காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து. 372 அழகிய அணிகலங்கள் அணிந்த பொது மகள், நம்மிடம் கைப்பொருள் இருந்த பொழுதில் ‘நும்மைப் பிரிதலினும் நும்முடன் ஓங்கிய மலை முகட்டில் இருந்தும் பாய்ந்து இறப் பேன்’ என அன்புரை கூறினாள். இப்பொழுது பொருள் இல்லா மையால் காலில் உள்ள வாத நோயைக் காட்டி அழுது மலை முகட்டின் மேல் வாராது ஒழிந்தாள். அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும் செங்கண்மா லாயினும் ஆகமன்--தம்கைக் கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார் விடுப்பர்தம் கையால் தொழுது. 373 அழகிய இடமகன்ற வானத்திலுள்ள தேவர்களால் வணங் கப்படும் சிறப்பமை செந்தாமரைக் கண்ணனாகிய திருமாலே ஆயினும் ஆவாராக; கொய்யும் இளந்தளிர் போன்ற பொது மகளிர் தமக்குக் கொடுப்பதொரு பொருள் இல்லாதவ ரைத், தம் கையால் தொழுது வீட்டைவிட்டு வெளியே செல்ல வழி காட்டுவர். ஆணமில் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக் காண மிலாதார் கடுவனையர்--காணவே செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார் அக்காரம் அன்னார் அவர்க்கு. 374 அன்பென்னும் பொருள் அறவே இல்லாத நீலமலர் போலும் கண்களையுடைய பொது மகளிர்க்குப் பொருள் இல் லாத எவரும் நஞ்சு போன்றவரே. அனைவரும் அறியுமாறு செக் கில் எண்ணெய் ஆட்டித் தொழில் செய்பவராயினும் பொருள் தேடி வைத்திருப்பராயின் அவர் சருக்கரைக் கட்டி போன்ற வரே. பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை தேம்படு தெண்கயத்து மீன்காட்டும்--ஆங்கு மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார் விலங்கன்ன வெள்ளறிவி னார். 375 மலங்கு என்னும் மீன், பாம்பிற்குத் தன் ஒரு பக்கத்தைக் காட்டித் தன்னைப் பாம்பாக நம்பச் செய்யும். மற்றொரு பக்கத்தை மீனுக்குக் காட்டித் தன்னை மீனாக நம்பச் செய்யும்; இரண்டற்கும் ஏற்ப நடந்து இனிது பிழைக்கும்; அது போன் றவர் பொது மகளிர்; அவர் தொடர்பை விரும்புபவர் விலங்கின் ஒத்த சிற்றறிவினரே. பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல் நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த பொற்றொடியும் போர்த்தகர்கோ டாயினாள் நன்னெஞ்சே நிற்றியோ போதியோ நீ. 376 நல்ல நெஞ்சமே, துளைக்கப்பட்ட மணியும் அதனுள் அமைந்த நூலும் போலவும் இணைபிரியாத அன்றிற் பறவை களைப் போலவும், நாள்தோறும் ‘நும்மைப் பிரியேன்’ என்று உரைத்த பொது மகள், இப்பொழுது போர் செய்யும் செம்மறிக் கடாவின் முறுக்குள்ள வன்மையான கொம்பு போலாகி விட்டாள். நீ இன்னும் என்னிடம் நிற்கிறாயா? அவளிடம் போகிறாயா? ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள் கொண்டு சேமாபோல் குப்புறூஉம் சில்லைக் கண் அன்பினை ஏமாந் தெமதென் றிருந்தார் பெறுபவே தாமாம் பலரால் நகை. 377 முதற்கண் காட்டுப் பசுப்போல் இனிதாகத் தழுவி, அவர்தம் கைப்பொருளைப் பறித்துக் கொண்டு, பின்பு வலிய காட்டு எருதுபோல் குதித்தோடும் சிறு தன்மை அமைந்த பொது மகளின் புல்லிய அன்பினை ஏமாற்றத்தால் ‘எமக்கே உரிமை யானது’ என்று இருந்தவர், பல பேர்களும் எள்ளி நகைக்கும் இழிவைப் பெறுவர். ஏமாந்த போழ்தின் இனியார்போன் றின்னாராய்ந் தாமார்ந்த போதே தகர்க்கோடாம்--மான்நோக்கின் தந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே செந்நெறிச் சேர்துமென் பார். 378 ஏமாற்றம் கொண்டு காமுகர் தம்மொடு மயங்கிக் கிடந்த காலத்தில் இனியவர் போன்று இருந்து உள்ளத்தே வஞ்சமுடை யராகி, அவர் பொருளை நுகர்ந்த பின்னர்ச் செம்மறிக் கடாவின் முறுக்கேறிய கொம்பு போல் மாறும் மான் போலும் மருண்ட பார்வையும், தாம் போனதே போக்குமாகக் கொண்ட பொது மகளிர் மார்பை நன்னெறியாளர் சேரார். ஊறுசெய் நெஞ்சம்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார் தேறமொழிந்த மொழிகேட்டுத்--தேறி எமரென்று கொள்வாருங் கொள்பவே யார்க்கும் தமரல்லர் தம்உடம்பி னார். 379 ஒளி பொருந்திய நெற்றியையுடைய பொது மகளிர், கேடு செய்யும் உள்ளத்தைத் தம் உள்ளேயே மறைத்து வைத்துப் புறத்தே தம்மை விரும்பியவர் தெளிந்து நம்புமாறு கூறிய உரையைக் கேட்டு அதனை நம்பி, ‘இவர் எமக்கே உரிமை யானவர்’ என்று உறுதி கொள்வாரும் கொள்வர். ஆனால் அவர் எவர்க்கும் உறவின ரல்லர்; தம் உடற்கே உரிமையானவர். உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார் கள்ளத்தால் செய்யுங் கருத்தெல்லாம்--தெள்ளி அறிந்த விடத்தும் அறியாராம் பாவம் செறிந்த உடம்பி னவர். 380 ஒளி பொருந்திய நெற்றியையுடைய பொது மகளிர் தம் உள்ளத்தை ஒருவனிடத்தே வைத்துக் கொண்டு தம்முடன் தங்கியுள்ள ஒருவனிடம் வஞ்சகமாக அன்பு செய்யும் எண்ணத் தையெல்லாம் தெளிவாகத் தெரிந்த போதும், பாவமே திரண்டு ஒரு வடிவாக அமைந்த கீழ்மக்கள் உண்மையை உணர்ந்து கொள்ளார். 39. கற்புடை மகளிர் அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும்--விரும்பிப் பெறுநசையாற் பின்நிற்பா ரின்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத் துணை. 381 பெறுதற்கு அரிய கற்பினையுடைய விண்ணவர் கோப் பெருந்தேவி போன்ற பெரும்புகழ் வாய்த்த மகளிரே ஆயினும், விருப்புடன் பெறுதற்குரிய ஆர்வத்தால் பின்னே இரந்து நிற்பவர் இல்லாதவாறு விருந்து பேணும், நறுமணம் பொருந்திய நெற்றியை உடையவளே, நல்ல வாழ்க்கைத் துணை எனப் படுவாள். குடநீர்அட் டுண்ணும் இடுக்கட் பொழுதும் கடல் நீர் அறவுண்ணும் கேளிர் வரினும் கடன் நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி மாதர் மனைமாட்சி யாள். 382 ஒரு குடத்தின் அளவாய நீரை மட்டுமே கொண்டு சமைத் துண்ணும் வறிய பொழுதில் ஆயினும் கடல்நீர் அளவாயினும் வற்றிப் போமாறு உண்ணும் பெரிய உறவினர் கூட்டம் வந்து சேரினும், தான் செய்யும் கடப்பாட்டினை ஒழுக்கமாகக் கொள்ளும் மெல்லிய மொழி பேசும் அழகிய பெண்ணே, மனை மாண்பு உடையவள் ஆவள். நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும் மேலாறு மேல்உறை சோரினும்--மேலாய வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும் மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே இல். 383 நான்கு பக்கங்களிலும் சுவர் சிதைந்து வழியுடையதாய், மிகச் சிறியதாய், எல்லாப் பக்கங்களிலும் கூரை பிரிந்து மேலேயிருந்து ஆறுபோல மழை ஒழுக்குடையதாய் அமைந்த வறுமை நிலையிலும், மேலான கடமைகளில் தேர்ந்தவளாய்த் தான் இருக்கும் ஊரினர் பாராட்டும் சிறந்த கற்பினளாய் அமைந்த இல்லாளைக் கொண்டதே இல்லமாம். கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள்--உட்கி இடன்அறிந் தூடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண். 384 கண்ணுக்கு இனிய தோற்றம் உடையவளாய்க், கணவன் விரும்பும் வகையில் தன்னை அழகு செய்பவளாய்த், தகவில்லாத வற்றைச் செய்ய அஞ்சுபவளாய், ஊரார் கண்டு நாணும் உயர் தன்மை உடையவளாய்க், காதலனிடம் நாணியும் ஊடல் புரிந்தும் இனிதுண்டாக ஊடல் தெளிந்தும் மென் மொழி கூறும் நன் மகளே பெண் எனப்படுவாள். எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேற் சேர்ந்தெழினும் அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்--எஞ்ஞான்றும் என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள் நசையால் பன்மார்பு சேர்ந்தொழுகு வார். 385 எந்த நாளிலும் எம்கணவர் எம் தோள் மேலராய் அமைந்து எழுவார் எனினும், முதல் நாள் கண்டாற் போன்றவராய் யாம் ஒவ்வொரு நாளும் நாணம் கொள்வோம்; அவ்வாறாக எந்த நாளினும் பொருளின் விருப்பே விருப்பாகிப் பலர் மார்பிலும் பல்காலும் தோய்ந்து நாணமில்லாமல் ஒழுகும் பொது மகளிர் என்னதான் உரிமை உடையவரோ? உள்ளத் துணர்வுடையாள் ஓதிய நூலற்றால் வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்--தெள்ளிய ஆண்மகன் கையில் அயில்வா ளனைத்தரோ நாணுடையாள் பெற்ற நலம். 386 உள்ளத்தில் சிறந்த உணர்வுடையவன் ஓதிய நூலறிவைப் போன்றும், கொடைக் கடன் பூண்ட உயர்ந்தவன் தேடிய செல்வச் சீர்மை போன்றும், பலருள்ளும் தேர்ந்த ஆண்மைத் தன்மையாளன் ஒருவன் கையிற்கொண்ட கூரிய வாளைப் போன்றும் அமைந்துள்ளது நாணம் முதலியனவாகிய நற் குணங்களைப் பெற்ற நங்கையின் நலம். கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்(று) ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன்--ஒருங்கொவ்வா நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடா தென்னையும் தோய வரும். 387 ஊரனாகிய எம் தலைவன் தாழ்ந்த கருங் கொள்ளையும், உயர்ந்த செங் கொள்ளையும் ஒரே விலைக்குத் ‘தூணிப்பதக்கு’ என்று ஒரே அளவில் கொண்டானாம். ஒரு வகையிலும் ஒப்பா காத நல்ல நெற்றியையுடைய பரத்தையரைத் தழுவிய அகன்ற மார்பொடும் நீரும் ஆடாமல் என்னைத் தழுவ வருகின்றனன். இஃதிருந்தாவாறு என்னே! கொடியவை கூறாதி பாண நீ கூறின் அடிபைய இட்டொதுங்கிச் சென்று--துடியின் இடக்கண் அனையம்யாம் ஊரற் கதனால் வலக்கண் அனையார்க் குரை. 388 பாணனே, ஊரன் இவண் வருகின்றான் என்னும் கொடுஞ் சொல்லை எம் காதிற்படுமாறு கூறாதிருப்பாயாக. அவனுக்கு நாங்கள் உடுக்கையின் இடப்பக்கம் போன்றோம்; அதனால் நீ கூறுவையாயின் மெல்ல அடியெடுத்து வைத்து உடுக்கையின் வலப்பக்கம் போன்றவராகிய பொது மகளிர் பாற்சென்று நீ கூறுவனவற்றைக் கூறுவாயாக. சாய்ப்பறிக்க நீர்திகழுந் தண்வய லூரன்மீ தீப்பறக்க நொந்தேனும் யானேமன்--தீப்பறக்கத் தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம் நோக்கி யிருந்தேனும் யான். 389 பஞ்சாய்க் கோரையைப் பறிக்கவும் நீர் விளங்கித் தோன்றும், தண்ணிய வயலைக் கொண்ட ஊரனாகிய தலைவன் மீது, ஈப் பறக்குமாயினும் நோவு கொண்டவள் யான், மற்று இப்பொழுது தீப் பறக்குமாறு பொது மகளிர் மார்பில் மோதும் குளிர்ந்த சாந்து பூசப்பெற்ற அவனது மார்பை நோக்கி இருப்பவளும் யானே. அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று பெரும்பொய் உரையாதி பாண--கரும்பின் கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால் இடைக்கண் அனையார்க் குரை. 390 பாணனே, அரும்புகள் கட்டு அவிழும் மலரால் ஆகிய மாலையை அணிந்த தலைவன் எமக்கு அருள் புரிவன் என்னும் பெரிய பொய்யை உரையாமல் இரு. ஊரனுக்குக் கரும்பின் கடைசிக் கணுவைப் போன்று பயன்படாதேம் யாம்; ஆதலால், அவனுக்குக் கரும்பின் இடைக் கணுவைப் போல் சுவையாக அமைந்த பரத்தையர்க்குப் போய் உரை. 40. காம நுதலியல் முயங்காக்கால் பாயும் பசலைமற் றூடி உயங்காக்கால் உப்பின்றாம் காமம்--வயங்கோதம் நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப புல்லாப் புலப்பதோர் ஆறு. 391 விளங்கும் கடலின் அலைகள் ஒயாமல் அலைத்துக் கொண்டிருக்கும் நெடிய உப்பங் கழிகளையுடைய குளிர்ந்த கடற்கரைத் தலைவனே! தலைவியை அன்பால் தழுவாவிடின் பசலை நிறம் பரவும், மற்றும் ஊடல் கொண்டு வருந்தாவிடின் காம நுகர்ச்சி சுவையற்றதாகிவிடும். ஆதலால், தழுவிப் பின்பு ஊடல் கொள்வது ஒப்பற்ற இன்பமாம். தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம் விம்ம முயங்குத் துணையில்லார்க்--கிம்மெனப் பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம் நெய்தல் அறைந்தன்ன நீர்த்து. 392 தம்மை விரும்பும் அன்பரது மாலை சூழ்ந்த அகன்ற மார்பினைப் பருத்த கொங்கைகள் மேலும் விம்மத் தழுவும் ஆதரவு இல்லாத மகளிர்க்கு, மழை பொழிய எழுந்த முகில் ‘இம்’ என்னும் ஒலியுடன் முழக்கமிட்டுத் திசையெல்லாம் பரவுதல், சாப்பறை அறைந்தது போன்ற தன்மையதாம். கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள் கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க் கிம்மாலை என்செய்வ தென்று. 393 கொல்லு வேலை செய்யும் தொழிலாளர் தம் கருவிகளைக் கட்டி வைத்த மயக்கம் கொண்ட மாலைப் பொழுதில், நறுமலர் களைத் தேர்ந்து மாலை தொடுப்பவள் நின் பிரிவினைக் கேட்டுத், ‘துணைவனைப் பிரிந்த மகளிர்க்கு இம்மாலை என்ன பயனைச் செய்யும்’ என்று தன்கையில் இருந்த மாலையைக் கீழே நழுவவிட்டு அழுதனள். செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர் மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன்--மெல்விரலின் நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல் அந்தோதன் தோள் வைத்து அணைமேற் கிடந்து. 394 மறையும் கதிரவனைக் கண்டு சிந்திய செவ்வரி பரந்த கண்ணில் தங்கிய நீரைத் தன் மெல்லிய விரலால் முறையாகத் தெளித்து விம்மித், தன் மெல்லிய விரலால் நம் பிரிவு நாட்களை எண்ணி அந்தோ! தன் கைகளைத் தலையணையாக வைத்துப் படுக்கைமேல் கிடந்து, குறித்த பருவத்தில் வாராத நம் குற்றத்தை நினைப்பாளோ? கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி பின்சென்றது அம்ம சிறுசிரல்--பின்சென்றும் ஊக்கி எழுந்தும் எறிகல்லா ஒண்புருவம் கோட்டிய வில்வாக் கறிந்து 395 சிறிய மீன்குத்திப் பறவை காதலியின் கண்களை மீன்கள் என்னும் கருத்தினால் அவற்றைக் குத்தித் தின்ன விரும்பிப் பின்னே சென்றது. அவ்வாறு தொடர்ந்து சென்றும் முயன்று எழுந்தும், ஏவுதல் அறியாத ஒளி பொருந்திய புருவத்தை, வளைத்து வைக்கப்பட்ட வில்லாக மயங்கிக் குத்தாது அமைந்தது. அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கண்ணோ பரற்கானம் ஆற்றின கொல்லோ--அரக்கார்ந்த பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்(று) அஞ்சிப்பின் வாங்கும் அடி. 396 செவ்வல்லி மலர் போன்ற நறுமணம் கொண்ட வாயையும் அழகிய இடையையும் உடைய மகளின் செம்பஞ்சுக் குழம்பி னைக் கொண்டு தடவினாலும் ‘மெல்ல’ ‘மெல்ல’, என்று அச்சங்கொண்டு பின் வாங்கும் அடி, அவளைக் கவர்ந்த தலைவனுடன் பரற்கற்கள் நிரம்பிய காட்டில் செல்ல எவ்வாறு பொறுத்ததோ? ஒலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர் மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி மாலை பரிந்திட் டழுதாள் வனமுலைமேற் கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து. 397 ஏட்டில் கணக்கு எழுதுபவரது வேலை தொடர்பான ஆரவார ஒலி அடங்கிப் புல்லிய செவ்வானம் தோன்றும் அந்திப் பொழுதில் தன்னை மணந்த தலைவரின் பிரிவை நினைத்துத் தன் மார்பில் அழகுறச் செடிகொடிகளாக எழுதப்பெற்ற சந்தனக் கலவையையெல்லாம் அழித்து, மாலையையும் அறுத்தெறிந்து அழுதாள். கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை நடக்கவும் வல்லையோ என்றி--சுடர்த்தொடீஇ பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே கற்றான் அஃதூரும் ஆறு. 398 ஒளியமைந்த வளையலை யணிந்த தோழியே! கடத்தற்கு அரிய காட்டைக் காளை போன்ற தலைவனுடன் நாளைக்கு நீ நடக்கவும் வலிமை உடையையோ? என்று வினவினை; வலிய குதிரை வாங்கினான் ஒருவன் என்றால் அதனை வாங்கிய பொழுதிலேயே அதில் ஏறி அமர்ந்து செலுத்துமாறும் கற்றுக் கொண்டான் என்பதை அறிவாயாக. முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும் இலக்கணம் யாதும் அறியேன்--கலைக்கணம் வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என் பூம்பாவை செய்த குறி. 399 பூம்பாவை போன்றவளாகிய என் மகள் நேற்று என் மார்பில் முத்தியதற்கும் உடல் முழுவதையும் தழுவியதற்கும் அமைந்த காரணம் எதுவும் அறிந்து கொள்ளாது இருந்தேன். அது, மானின் கூட்டம் கொடிய புலிக்கு அஞ்சித் திரியும் காட்டு வழியில் அவள் தன் தலைவனுடன் செல்வதற்குச் செய்த அடையாளம் போலும்! கண்மூன் றுடையானும் காக்கையும் பையரவும் என்ஈன்ற யாயும் பிழைத்ததென்--பொன்ஈன்ற கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற் பாங்கனார் சென்ற நெறி. 400 பொன் போன்ற தேமல் பரவிய கோங்கு அரும்பு போன்ற மார்பினையுடைய தோழியே! பொருள் தேடும் காரணமாகப் பிரிந்த தலைவன் சென்ற வழியே என் துயருக்குக் காரணமாக இருக்கவும், முக்கண்ணன் ஆகிய சிவபெருமானும் காகமும் படத்தையுடைய பாம்பும், என்னை அன்புடன் வளர்த்த தாயும் செய்த தவறே காரணம் என்பது தகுமோ? தகாது என்க. காமத்துப் பால் முற்றும் நாலடியார் முற்றிற்று நாலடியாரின் பெருமை “ நானூறும் வேதமாம் நானூறும் நானூறாம் நானூறும் கற்றற்கு நற்றுணையாம்--நானூறும் பண்மொழியாள் பாகம் பகிர்ந்து சடைக்கரந்த கண்ணுதலான் பெற்ற களிறு.” “ பாலும் நெய்யும் உடலுக் குறுதி; வேலும் வாளும் அடலுக் குறுதி; ஆலும் வேலும் பல்லுக் குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி.” “ நாலடி வள்ளுவ ராமேஇப் பாலை நடந்தபெருங் காலடி மேலடி மானடி யேகட் டுரலிற்பட்ட பாலடி சில்வெண்ணெய் உண்டோன் அரங்கன் பனிவரையில் வேலடி முள்ளுக் குபாயமிட் டேகும் விரகுநன்றே.” “ பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்” “ நாலடி இரண்டடி கற்றவனிடம் வாயடியும் கையடியும் செல்லா” நான்மணிக்கடிகை (விளம்பி நாகனார்) கடவுள் வாழ்த்து மதிமன்னு மாயவன் வாண்முக மொக்கும் கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கர மொக்கும் முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின் எதிர்மலர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப் புதுமல ரொக்கு நிறம். திருமாலின் முகம் ஒளிமிக்க முழுமதியை ஒத்தது; கதிரொளி யுடைய ஞாயிறு அவன் சக்கரத்தை ஒத்தது; செழித்த பொய்கைத் தாமரைப் புதுமலர் இணையை ஒத்தவை அவன் கண்கள். அவன் அழகிய நிறம் காயா மலரை ஒத்தது. படியை மடியகத் திட்டான் அடியினால் முக்காற் கடந்தான் முழுநிலம்--அக்காலத் ஆன்நிரை தாங்கிய குன்றெடுத்தான் சோவின் அருமை யழித்த மகன். உலகைத் தன் வயிற்றில் வைத்திருந்த திருமால் தன் ஈரடி களால் மூன்று எட்டில் அளந்தான்; பெருமழையால் பசுக்கள் துயரடையாவாறு, கோவர்த்தன மலையை எடுத்தான்; பாணன் என்பானின் ‘சோ’ என்னும் அரிய மதிலையும் அழித்தான். நூல் எள்ளற்க என்று மெளியாரென் றென்பெறினும் கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா--உள்சுடினும் சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க கூறல் லவற்றை விரைந்து. 1 இவர் எளியவர் என்று எவரையும் இகழ்தல் கூடாது; என்ன தான் சிறந்தது வேண்டத்தக்கது என்றாலும் பெறக் கூடாத வரிடத்தும் பெறுதல் கூடாது; மனம் வருந்தச் செய்தாலும் இழிந்த குடியில் பிறந்தவரைச் சீறுதல் கூடாது; எவரிடத்தும் கூறக் கூடாத வற்றைப் பொறுப்பின்றிக் கூறுதல் கூடாது. பறை பட வாழா வசுணமா உள்ளங் குறைபட வாழா ருரவோர்--நிறைவனத்து நெற்பட்ட கண்ணே வெதிர்சாந் தனக்கொவ்வாச் சொற்பட வாழாதஞ் சால்பு. 2 அசுணம் என்னும் விலங்கு பறையொலி கேட்டால் உயிர் வாழாது; மானம் குறைவுறுமாறு உயர்ந்தோர் வாழார்; வளம் நிறைந்த காட்டில் மூங்கில் முதிர்ந்து நெல் உண்டாகி விட்டால் பட்டுப் போகும்; பண்பால் நிறைந்த சான்றோர் தமக்குப் பொருந் தாச் சொல்லைக் கேட்டால் உயிர் வாழார். மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத் தேறிய பின்னறிப மாநல மாசறச் சுட்டறிப பொன்னி னலங்காண்பார் கெட்டறிப கேளிரா னாய பயன். 3 மணி முதலாயவற்றைப் பட்டை தீட்டிக் கழுவி அறிவார்கள்; குதிரையின் சிறப்பை அதன்மேல் இருக்கையிட்டுச் செலுத்தும் போது அறிவர்; பொன்னைக் களங்கம் நீங்கச் சுட்டு மாற்றுக் காண்பர்; உறவினரால் உண்டாம் பயனை உள்ளவை இழந்த வறுமையிலேயே அறிவர். கள்ளி வயிற்றி னகில்பிறக்கு மான்வயிற்றின் ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள் பல்விலைய முத்தம் பிறக்கு மறிவார்யார் நல்லாள் பிறக்குங் குடி. 4 நறுமணமிக்க அகில் கள்ளிச் செடியில் தோன்றும்; ஒளியுடைய அரிதாரம் மானின் வயிற்றில் தோன்றும்; மிகுவிலை யுடைய முத்து பெரிய உவர்க்கடலில் தோன்றும்; நன்மக்கள் பிறக்கும் குடியை எவரே அறிவார். கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி சொல்லிற் பிறக்கு முயர்மதம்--மெல்லென் றருளிற் பிறக்கு மறநெறி யெல்லாம் பொருளிற் பிறந்து விடும். 5 ஒளி மிக்க மணி மலையில் பிறக்கும்; அன்புமிக்க காதலாட்டியின் சொல்லில் பேரின்பமுண்டாம்; மென்மைய மைந்த அருளினால் அறநெறி தோன்றும்; வேண்டிய எல்லாமும் பொருளால் தோன்றி விடும். திருவொக்குந் தீதி லொழுக்கம் பெரிய அறனொக்கு மாற்றி னொழுகல் பிறனைக் கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும் போற்றாதார் முன்னர்ச் செலவு. 6 தீமை இல்லாத நல்லொழுக்கம், பெருஞ் செல்வம் போன்றது; முறை தவறாது வாழ்தல் அறம் போன்றது; ஒருவனை நட்பாகக் கொண்டு பின் அவனைப் பிரிந்து கெடுத்தல் கொலை போன்றது; மதியாரை மதித்து அவர்பால் செல்வது வெறுக்கும் இழிமை போன்றது. கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட் டுள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை யொண்பொருள் செய்வமென் பார்க்குந் துயிலில்லை யப்பொருள் காப்பார்க்கு மில்லை துயில். 7 களவு செய்வோம் என்பார்க்கும் உறக்கம் இல்லை; காதலி மேல் மனம் வைத்தவர்க்கும் உறக்கம் இல்லை; புகழுண்டாகப் பொருள் தேடுவோம் என்பார்க்கும் உறக்கம் இல்லை; உள்ளது போகாமல் காக்க வேண்டும் என்பார்க்கும் உறக்கம் இல்லை. கற்றார்முற் றோன்றா கழிவிரக்கங் காதலித்தொன் றுற்றார்முற் றோன்றா வுறாமுதல்--தெற்றென அல்ல புரிந்தார்க் கறந்தோன்றா வெல்லாம் வெகுண்டார்முற் றோன்றாக் கெடும். 8 இழந்து விட்ட ஒன்றற்கு வருந்துதல் கற்றவர்க்கு இல்லை; ஒன்றைப் பெற்றாக வேண்டும் என்று அயராது முயல்வார்க்கு அது கிட்டவில்லை என்பது தோன்றாது; தெளிவாக அறிந்தே தீமை செய்பவர்க்கு அறம் தோன்றாது; பெருஞ் சினம் கொண்ட வர்க்கு எந்நலமும் இல்லாது கெடும். நிலத்துக் கணியென்ப நெல்லுங் கரும்பும் குளத்துக் கணியென்ப தாமரை பெண்மை நலத்துக் கணியென்ப நாணந் தனக்கணியாம் தான்செல் லுலகத் தறம். 9 நெற்பயிரும் கரும்புப்பயிரும் நீர்வளமிக்க நன்செய்க்கு அழ காகும்; வளமான குளத்திற்குத் தாமரை அழகாகும்; நற்பெண் ணின் அழகுக்கு நாணம் மேலும் அழகாகும்; ஒருவன் செய்யும் அறம் அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் அழகாகும். கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர மந்திரத் தாற்பிணிப்பர் மாநாகம்--கொந்தி கயத்தை இரும்பை பிணிப்பர் சான்றோரை நயத்திற் பிணித்து விடல். 10 வலிய யானையைக் கட்டுத் தூணில் கட்டுவர்; கொடிய பாம்பை மந்திரத்தால் கட்டுவர்; கயமையரை உடலை வதைத்துக் கட்டுப்படுத்துவர்; பெருமக்களை உயர்ந்தவை செய்தலால் வயப்படுத்துவர். கன்றாமை வேண்டுங் கடிய பிறர்செய்த நன்றியை நன்றாக் கொளல்வேண்டு--மென்றும் விடல்வேண்டுந் தங்கண் வெகுளி யடல்வேண்டும் ஆக்கஞ் சிதைக்கும் வினை. 11 பிறர் செய்த கொடியவற்றை எண்ணி வருந்தாது இருத்தல் வேண்டும்; நன்மை செய்தாரின் செயலை நயமிக்கதாகக் கொள்ள வேண்டும், எப்பொழுதும் தம்மிடத்துச் சினம் உண்டாகாதவாறு காத்துக் கொள்ள வேண்டும். நல்லவற்றை அழிக்கும் செயல் உண்டாகாவாறு தடுக்க வேண்டும். பல்லினா னோய்செய்யும் பாம்பெலாங்--கொல்லேறு கோட்டானோய் செய்யுங் குறித்தாரை யூடி முகத்தானோய் செய்வர் மகளிர் முனிவர் தவத்தாற் றருகுவர் நோய். 12 பாம்பு பல்லால் தீமை செய்யும்; வலிய காளை தன் கொம் பால் தீமை செய்யும்; அன்புடையாரோடு சிறு சினம் கொண்டு மகளிர் நோய் செய்வர்; தவமுடையவர் தம் தவத்தால் துன்பம் தருவர். பறைநன்று பண்ணமையா யாழி--னிறைநின்ற பெண்ணன்று பீடிலா மாந்தரின்--பண்ணழிந் தார்தலி னன்று பசித்தல் பசைந்தாரின் தீர்தலிற் றீப்புகுத னன்று. 13 இசைக்கூறு அமையாமல் பாடும் யாழினும் வலிய பறை நல்லதாம்; பெருந்தன்மை இல்லாத ஆடவர்களிலும், கற்புடைய பெண்டிர் சிறந்தவராம்; சுவைநலம் கெட்டு உண்பதினும், பசி யோடு இருத்தல் நல்லது; மிகுந்த அன்புடையாரை நீங்கி வாழ்வ தினும் தீயுள் புகுதல் நன்று. வளப்பாத்தி யுள் வளரும் வண்மை - கிளைக்குழாம் இன்சொற் குழியு ளினிதெழூஉம் - வன்சொல் கரவெழூஉங் கண்ணில் குழியு - ளிரவெழூஉம் இன்மைக் குழியுள் விரைந்து. 14 செல்வம் என்னும் பாத்தியில் கொடை என்னும் பயிர் வளரும்; இனிய சொல் என்னும் நன்செயில் உறவு என்னும் பயிர் வளரும்; இரக்கம் இல்லாமை என்னும் வன்னிலத்தில் வஞ்சம் என்னும் பயிர் வளரும்; வறுமை என்னும் வறண்ட நிலத்தில் இரத்தல் என்னும் பயிர் வளரும். இன்னாமை வேண்டி னிரவெழுக - விந்நிலத்து மன்னுதல் வேண்டி னிசைநடுக - தன்னொடு செல்வது வேண்டி னறஞ்செய்க - வெல்வது வேண்டின் வெகுளி விடல். 15 இழிவை விரும்பினால் இரத்தலைக் கொள்வாராக; அழி யாத நிலைபேற்றை விரும்பினால் புகழை நிலைபெறச் செய்வா ராக; இறப்பின் பின்னரும் தன்னோடு வருவதை விரும்பினால் அறம் செய்வாராக; எடுத்த எண்ணம் வெற்றி பெற வேண்டினால் வெகுளியை விடுவாராக. கடற் குட்டம் போழ்வர் கலவர் - படைக்குட்டம் பாய்மா வுடையா னுடைக்கிற்குந் - தோமில் தவக்குட்டந் தன்னுடையா னீந்து - மவைக்குட்டங் கற்றான் கடந்து விடும். 16 கப்பலை உடையவர் கடலாகிய ஆழ் நீரைப் பிளந்து செல்வர்; வெற்றி மிகப் பாயும் குதிரையை உடையவர் போர் ஆகிய பெரிய கடலைக் கடப்பார்; குற்றமற்ற உறுதிப்பாடான மனம் உடையவர் தவமாகிய கடலைக் கடப்பர்; அறிவராம் அவைக் கடலை தீரக் கற்றவர் கடந்து விடுவர். பொய்த்த லிறுவாய நட்புக்கண் - மெய்த்தாக மூத்த லிலறுவாய்த் திளநலந் - தூக்கில் மிகுதி யிறுவாய செல்வங் கடத்தம் தகுதி யிறுவாய்த் துயிர். 17 ஆராய்ந்தால், பொய்யுரைத்தலே நட்பை ஒழிக்கும்; இளமை எழில் மப்பால் ஒழியும்; செல்வம் அளவு மிகுதல் அதனை ஒழிக்கும்; உயிரின் இறுதி தத்தம் வரம்பின் அளவில் ஒழியும். மனைக்காக்க மாண்ட மகளி ரொருவன் வினைக்காக்கஞ் செவ்விய னாதல் - சினச்செவ்வேல் நாட்டாக்க நல்லனிவ் வேந்தென்றல் - கேட்டாக்கம் கேளி ரொரீஇ விடல். 18 பெருமை மிக்க மனைவியால் குடும்பத்திற்கு நலம்; ஒருவன் செம்மையானவனாக இருத்தல் அவன் செயலுக்கு நலம்; பகை மேல் சென்று வெல்லும் வேலுடைய வேந்தனுக்கு எம் வேந்தன் நல்லன் என நாட்டு மக்கள் கூறுதல்; உறவினரை நீங்கி விடுதல் கெட்டுப் போதலுக்கு நலம். பெற்றா னதிர்ப்பிற் பிணையன்னா டானதிர்க்கும் கற்றா னதிர்ப்பிற் பொருளதிர்க்கும் - பற்றிய மண்ணதிர்ப்பின் மன்னவன் கோலதிர்க்கும் - பண்ணதிர்ப்பின் பாட லதிர்ந்து விடும். 19 கணவன் வருந்தினால் நல்ல மனைவியும் வருந்துவாள்; கல்வி வல்லான் மயங்கினால் அவன் கண்ட பொருளும் மயங்கிப் போம்; நாட்டு மக்கள் அல்லல் உற்றால் அரசும் அல்லல் உறும்; பண்ணலம் கெட்டால் பாடல் நலமும் கெடும். மனைக்குப்பாழ் வாணுத லின்மைதான் செல்லுந் திசைக்குப்பாழ் நட்டோரை யின்மை இருந்த அவைக்குப்பாழ் மூத்தோரை யின்மை தனக்குப்பாழ் கற்றறி வில்லா வுடம்பு. 20 நல்ல மனைவி இல்லாமை குடும்பத்திற்குப் பாழாகும்; நண்பரை இல்லாமை போகும் இடத்திற்குப் பாழாகும்; அறிவான் நிறைந்தவரை இல்லாமை அவைக்குப் பாழாகும்; இல்லாதவ னாக இருத்தல் தனக்குப் பாழாகும். மொய்சிதைக்கு மொற்றுமை யின்மை யொருவனைப் பொய்சிதைக்கும் பொன்போலு மேனியைப் - பெய்த கலஞ்சிதைக்கும் பாலின் சுவையை - குலஞ்சிதைக்குங் கூடார்கட் கூடி விடின். 21 ஒற்றுமை இல்லாமை வலிமையை அழிக்கும்; பொய்யு ரைத்தல் பொன்போலும் உடலை அழிக்கும்; பாலின் நலத்தை அது வைக்கப்பட்ட கலத்தின் தன்மை அழிக்கும்; தகாதவர்க ளோடு உறவு கொள்ளல் குடும்பப் பெருமையை அழிக்கும். புகழ்செய்யும் பொய்யா விளக்க - மிகந்தொருவர்ப் பேணாது செய்வது பேதைமை - காணாக் குருடனாச் செய்வது மம்ம - ரிருடீர்ந்த கண்ணராச் செய்வது கற்பு. 22 பொய் கூறாமை என்னும் விளக்கு புகழ் உண்டாக்கும்; எவரையும் மதியாமை அறிவின்மையை ஆக்கும்; கற்றறியா மயக்கம், குருடாக்கி விடும்; கல்வி, ஒளியுடைய கண்ணராக ஆக்கும். மலைப்பினும் வாரணந் தாங்கு - மலைப்பினும் அன்னேயென் றோடுங் குழவி சிலைப்பினும் நட்டார் நடுங்கும் வினைசெய்யா - ரொட்டார் உடனுறையுங் காலமு மில். 23 பாகன் அடித்தாலும் அவனை யானை தாங்கும்; அன்னை அலைக் கழித்தாலும் குழந்தை அம்மா என்றே அவளோடு ஒட்டும்; பகைத்தாலும் நண்பர் துன்பம் செய்யார்; பகை யாயினார் உளமொத்து வாழும் காலம் எப்போதும் இல்லை. நகைநல நட்டார்க ணந்துஞ் சிறந்த அவைநல மன்பின் விளங்கும் விசைமாண்ட தேர்நலம் பாகனாற் பாடெய்து - மூர்நலம் உள்ளானா லுள்ளப் படும். 24 நண்பரிடத்து முகமலர்ச்சியின் நலம் சிறக்கும்; சிறந்த அவையின் நலம் அன்பால் விளங்கும்; விரைந்து செல்லும் தேரின் நலம் தேர்ப் பாகனால் பெருமையுறும்; தான் வாழும் ஊரின் நலம் அவ்வூர் பாராட்டும் புகழாளனால் நினைக்கப்படும். அஞ்சாமை யஞ்சுதி யொன்றிற் றனக்கொத்த எஞ்சாமை யெஞ்ச லளவெல்லா - நெஞ்சறியக் கோடாமை கோடி பொருள்பெறினு - நாடாகி நட்டார்கண் விட்ட வினை. 25 அஞ்சாத ஒன்றில் அஞ்சாதே; அஞ்சும் ஒன்றில் அஞ்சுக; தன்னால் இயன்ற அளவு உதவிசெய்யத் தவறாதே; பெரும் பொருள் வரும் என்றும் மனமறிய நடுவுநிலை தவறாது வாழ்வாயாக; நண்பரிடத்து ஒப்படைத்த செயலை, நீ ஐயுற்று ஆராயாதே. அலைப்பான் பிறவுயிரை யாக்கலுங் குற்றம் விலைப்பாலிற் கொண்டுன் மிசைதலுங் குற்றம் சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம் கொலைப்பாலுங் குற்றமே யாம். 26 எல்லாவற்றையும் அறிந்தவனும் இல்லை; எவற்றையும் அறியாதவனும் இல்லை; குணமே இல்லாமல் குற்றமே உடை யானும் இல்லை; கற்க வேண்டும் எல்லாமும் முழுதுறக் கற்றா னும் இல்லை. கோனோக்கி வாழுங் குடியெல்லாந் தாய்முலைப் பானோக்கி வாழுங் குழவிகள் - வானத் துளினோக்கி வாழு முலக முலகின் விளிநோக்கி யின்புறூஉங் கூற்று. 27 மக்கள் அனைவரும் ஆட்சியை நோக்கியே வாழ்வர்; தாய் ஊட்டும் அமுதை நோக்கியே குழந்தைகள் வாழும்; உலகத் துயிர்கள் அனைத்தும் வான்மழை நோக்கியே வாழும்; உலகத் துயிர்களின் இறப்பை நோக்கியே இன்புறும் கூற்று. கற்பக் கழிமடஃகு மடமஃகப் புற்கந்தீர்ந் திவ்வுலகின் கோளுணருங் கோளுணர்ந்தால் தத்துவ மான நெறிபடரு மந்நெறி இப்பா லுலகி னிசைநிறீஇ - யுப்பால் உயர்ந்த வுலகம் புகும். 28 ஒருவன் கல்வியால் சிறக்கச் சிறக்க அவன் அறியாமை ஒழியும்; அறியாமை ஒழிய இவ்வுலக இயக்க நிலையை அறி வான்; உலகியக்கம் அறிந்தால் மெய்யியல் உணர்ந்து வாழ்வான்; அம் மெய்யியல் நெறி இவ்வுலகில் புகழ் நிலைபெறச் செய்வ துடன் மேலும் அழியாப் பேற்றையும் தரும். குழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர் பழித்துழி நிற்பது பாவம் - அழித்துச் செறிவுழி நிற்பது காமந் தனக்கொன் றுறுவுழி நிற்ப தறிவு. 29 தோண்டிய பள்ளத்தில் நிற்கும் நீர்; பலரும் பழித்தலால் நிற்கும் பாவம்; புலன் அடக்கத்தை அழித்து நிமிர்ந்து நிற்பது காமம்; தனக்கொரு தீமை உண்டாகிய இடத்து நிற்பது அறிவு. திருவிற் றிறலுடைய தில்லை - யொருவற்குக் கற்றலின் வாய்த்த பிறவில்லை - எற்றுள்ளும் இன்மையி னின்னாத தில்லை யில் லென்னாத வன்மையின் வன்பாட்ட தில். 30 செல்வத்தைப் பார்க்கிலும் வலியது இல்லை; ஒருவனுக்குக் கல்வியிலும் உயர்ந்த தொன்று இல்லை; எதனுள்ளும் வறுமையிற் கொடுமையானது இல்லை; இரந்து கேட்பவர்க்கு இல்லை என்னாத வலிமையில் சிறந்த வலியது இல்லை. புகைவித்தாப் பொங்கழ றோன்றுஞ் சிறந்த நகைவித்தாத் தோன்று முவகை - பகையொருவன் முன்னம்வித் தாக முளைக்கும் முளைத்தபின் இன்னாவித் தாகி விடும். 31 புகை வழியாக அங்குள்ள நெருப்புத் தோன்றும்; சிறந்த முகமலர்ச்சி வழியாக மகிழ்வு தோன்றும்; ஒருவன் தீய எண்ணத் தின் வழியாகப் பகை தோன்றும்; அப்பகை தோன்றின் தீயவைக் கெல்லாம் வழியாகி விடும். பிணியன்னர் பின்னோக்காப் பெண்டி ருலகிற் கணியன்ன ரன்புடைமாக்கள் - பிணிபயிரின் புல்லன்னர் புல்லறிவி னாடவர் - கல்லன்னர் வல்லென்ற நெஞ்சத் தவர். 32 பின்வருவதை அறியாத மடவர் நோய் போன்றவர்; அன்பு மிக்க நன்மக்கள் உலகுக்கு அணிகலம் போன்றவர்; புல்லிய அறிவினை உடையவர் விளைபயிரை வளைத்துக் கெடுக்கும் புல்லைப் போன்றவர்; இரக்கமில்லா நெஞ்சத்தை உடையவர் கல் லைப் போன்றவர். அந்தணரி னல்ல பிறப்பில்லை யென்செயினும் தாயிற் சிறந்த தமரில்லை - யாதும் வளமையோ டொக்கும் வனப்பில்லை யெண்ணின் இளமையோ டொப்பதூஉ மில். 33 அருளாளர்களைப் பார்க்கினும் சிறந்த பிறப்பினர் இல்லை; என்னதான் செய்தாலும் தாயைப் பார்க்கினும் சிறந்த உறவானவர் இல்லை; செல்வ வளத்தைப் போலும் அழகியது எதுவும் இல்லை; ஆராய்ந்தால் இளமைக்கு ஒப்பானது எப்பருவமும் இல்லை. இரும்பி னிரும்பிடை போழ்ப பெருஞ் சிறப்பின் நீருண்டார் நீரான்வாய் பூசுப - தேரின் அரிய வரியவற்றாற் கொள்ப பெரிய பெரியரா னெய்தப் படும். 34 இரும்பை இரும்பைக் கொண்டே பிளப்பர்; சிறந்த வகை நீர் பருகினாலும் நீராலேயே வாய் கழுவுவர்; அரியவற்றை அரியவற் றாலேயே பெறுவர்; பெரியவை பெரியவராலேயே எய்தப் பெறும். மறக்களி மன்னர்முற் றோன்றுஞ் சிறந்த அறக்களி யில்லாதார்க் கீயுமுற் றோன்றும் வியக்களி நல்கூர்ந்தார் மேற்றாங் கயக்களி ஊரிற் பிளிற்றி விடும். 35 வலிமை மிக்காரிடத்து வீரக்களிப்புத் தோன்றும்; இல்லா தார்க்குக் கொடுக்குமுன் உயர்ந்த கொடைக்களிப்புத் தோன்றும்; வறுமையுற்றார்க்கு உயர்ந்ததொன்றைப் பெற்ற போது வியப்பாம் களிப்புத் தோன்றும்; வீழ்மையாம் களிப்பு ஊரெல்லாம் அறியத் தானே தோன்றிவிடும். மையாற் றளிர்க்கு மலர்க்கண்கள் மாலிருள் நெய்யாற் றளிர்க்கு நிமிர்சுடர் - பெய்யல் முழங்கத் தளிர்க்குங் குருகிலை நட்டார் வழங்கத் தளிர்க்குமா மேல். 36 குளுமையான மை தீட்டுதலால் மலர் போலும் கண்கள் பொலிவுறும்; மிகுந்த இருட்போதில் ஒளிச்சுடர் நெய்யால் பொலிவுறும்; மழை சிறப்பப் பெய்தலால் குருக்ககத்தியிலை பொலிவுறும்; நட்பாயினார் வழங்குவதால் மேலோர் மகிழ்ந்து விளங்குவர். நகையினிது நட்டார் நடுவட் பொருளின் தொகையினிது தொட்டு வழங்கின் - வகையுடைப் பெண்ணினிது பேணி வழிபடிற் பண்ணினிது பாட லுணர்வா ரகத்து. 37 நண்பர்கள் இடையே முகமலர்ச்சி இனிதாகும்; பொருளை வேண்டுவார்க்கு வழங்கும்போது அதனைத் தொகுத்த இன்பம் உண்டாம்; குடும்பநலம் பேணிவாழ்தலில் பெண்மை இனிமை யுறும்; பாடலை உணரவல்லார் இடத்து இசை இனிமையுறும். கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும் இரப்பவர்க்குச் செல்சாரொன் றீவார் - பரப்பமைந்த தானைக்குச் செல்சார் தறுகண்மை யூனுண்டல் செய்யாமை செல்சா ருயிர்க்கு. 38 இரப்பவர்க்கு இல்லை என்பார்க்குச் சார்பு ஆவது தலை கவிழ்தல்; எந்நாளும் இரப்பவர்க்குச் சார்பாக இருப்பவர் ஈகையர்; விரிவுடைய வலிய படைக்குச் சார்பாக இருப்பது வீரம்; உயிர்களுக் கெல்லாம் சார்பாக அமைவது ஊன் உண்ணாமை யாம். கண்டதே செய்பவாங் கம்மிய ருண்டெனக் கேட்டதே செய்ப புலனாள்வார் - வேட்ட இனியவே செய்ப வமைந்தார் முனியாதார் முன்னிய செய்யுந் திரு. 39 கம்மத் தொழில் வல்லார் கண்டதையே செய்வர்; பயனுண்டு என்று கேட்டதையே அறிவாளர் செய்வர்; நல்லியல் புடைய பெரியர் பிறர் விரும்புவனவே செய்வர்; சினம் முதலாக வெறுப் பன செய்யாதவர் விரும்புவனவற்றைத் திருமகள் செய்யும். திருவுந் திணைவகையா னில்லா பெருவலிக் கூற்றமுங் கூறுவ செய்துண்ணா - தாற்ற மறைக்க மறையாதாங் காம முறையும் இறைவகையா னின்று விடும். 40 குடும்பத் தேவைக்குத் தக்கவாறு செல்வம் நில்லாது; வலிய கூற்றும் கொல்லப்படுபவன் சொல்வது கேட்டுக் கொல்லான்; என்னதான் மறைத்தாலும் மறைபடாது வெளிப்பட்டு விடும் காமம். ஆள்பவருக்குத் தக்கபடி அரச முறையும் நின்றுவிடும். பிறக்குங்காற் பேரெனவும் பேரா இறக்குங்கால் நில்லெனவு நில்லா வுயிரெனைத்து - நல்லாள் உடம்படிற் றானே பெருகுங் - கெடும்பொழுதில் கண்டனவுங் காணா கெடும். 41 உயிர் பிறக்கும் போது ‘போ’ எனில் போகாது; இறக்கும் போதில் ‘இரு’ எனவும் இராது; நல்ல திருமகள் கூடுங்கால் பொருள்தானே கூடி விடும்; நீங்கும் பொழுதில் இருந்தனவும் இல்லாமல் ஓழியும். போரின்றி வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த வேரின்றி வாடு மரமெல்லா - நீர்பாய் மடையின்றி நீணெய்தல் வாடும்படையின்றி மன்னர்சீர் வாடி விடும். 42 வீரர்களின் வலிமையும் பெருமையும் போர் இல்லை யானால் குறையும்; கீழே நின்று நீரும் உரமும் வழங்கும் வேர் இல்லாமல் மரம் வாடும்; நீர் வரத்து அமைந்த மடையில் நீர் வறந்தால் நீர்ப்பூ வாடி விடும்; படை இல்லாமல் ஆள்பவர் சிறப்பு அகன்று விடும். ஏதிலா ரென்பா ரியல்பில்லார் யார்யார்க்கும் காதலா ரென்பார் தகவுடையார் - மேதக்க தந்தை யெனப்படுவான் றன்னுவாத்தி தாயென்பாள் முந்து தான் செய்த வினை. 43 நல்லியல்பு இல்லாதவர் நெருங்கியவரல்லர்; எவராயினும் அவரிடம் அன்புடையவர் நல்லநேயர்; தந்தை என்று சொல்லத் தக்கவன் நல்லாசிரியன். தாய் என்று சொல்லப்படுபவள் முன்னே செய்த நல்வினைப் பயனால் அமைந்தவள். பொறிகெடும் நாணற்றபோழ்தே நெறிபட்ட ஐவராற் றானே வினைகெடும் பொய்யா நலக்கெடும் நீரற்ற பைங்கூழ் நலமாறின் நண்பினார் நண்பு கெடும். 44 நாணமாம் நற்பண்பை ஒருவன் இழக்கும் போதே புகழ் ஓழிந்து போகும்; முறைமையமைந்து செல்லும் ஐம்பொறிகளால் செய்யும் செயல்கள் சிறப்புறும். நீரற்றுப் போனால் பயிர்களின் விளைவு அற்றுப் போகும். நல்லியல்பு மாறினால் நட்பாளர் நட்புக் கெட்டுப் போகும். நன்றிசாம் நன்றறியா தார்முன்னர்ச் சென்ற விருந்தும் விருப்பிலார் முற்சாம் மரும்புணர்ப்பிற் பாடல்சாம் பண்ணறியா தார்முன்ன ரூடல்சாம் ஊட லுணரா ரகத்து. 45 நல்லவை எவை என அறியாதவரிடத்துச் செய்ந்நன்றி அழியும்; விருப்பம் இல்லாதவர் முன் விருந்தோம்பல் கெட்டொ ழியும்; பண்ணிசை அறியாதவர் முன், அரிதுமுயன்று அமைத்த இசைப்பாடல் சிறப்பழியும்; ஊடல் அறியாதவர் முன் ஊடுதலால் ஊடல் நலம் ஒழிந்து போகும். நாற்றம் முரைக்கு மலருண்மை கூறிய மாற்ற முரைக்கும் வினை நலந் தூக்கின் அகம்பொதிந்த தீமை மனமுரைக்கு முன்னம் முகம் போல முன் னுரைப்ப தில். 46 மலர் இருப்பதை அதன் மணம் அறியச் செய்யும். ஒருவன் செயல் திறத்தை அவன் சொல் அறியச் செய்யும்; ஆராய்ந்து பார்த்தால் மனத்துள்ள தீமையை அவன் மனமே உரைக்கும்; ஒருவன் உள்ளக் குறிப்பை அவன் முகம் காட்டுவது போல் காட்டுவது இல்லை. மழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையும் தவமிலா ரில்வழி யில்லை தவமும் அரசிலா ரில்வழி யில்லை யரசனும் இல்வாழ்வா ரில்வழி யில். 47 மழையில்லாமல் உலகத்தார்க்கு எதுவும் இல்லை; தவத்திறம் உள்ளவர் இல்லையேல் மழை இல்லை. அத்தவமும் செங்கோன்மை இல்லாத இடத்தில் இல்லை; அச்செங்கோன்மையும் நற்குடிமக்கள் இல்லா இடத்தில் இல்லை. பூவினா னந்தும் புனைதண்டார் மற்றதன் தாதினா னந்துஞ் சுரும்பெல்லாந் - தீதில் வினையினா னந்துவர் மக்களுந் தத்தம் நனையினா னந்து நறா. 48 தொடுக்கும் மாலை பூவின் பொலிவினால் விளங்கும்; அப்பூவிலுள்ள தேனால் ஈக்கள் விளங்கும்; தீமையற்ற செயலால் மக்கள் விளங்குவர்; தாம் தாம் இருக்கும் பூவினால் தேன் விளங்கும். சிறந்தார்க் கரியசெ றுதலெஞ் ஞான்றும் பிறந்தார்க் கரிய துணைதுறந்து வாழ்தல் வரைந்தார்க் கரிய வகுத்தூ ணிரந்தார்க்கொன் றில்லென்றல் யார்க்கு மரிது. 49 சிறந்த இயல்பினர்க்குக் கூடிய நண்பரைச் சினந் தொதுக்க முடியாது. உடன் பிறந்தார்க்கு அவரைப் பிரிந்து வாழ்தல் முடியாது. அளவுடன் ஆக்கி உண்பவர்க்குப் பகுத்தளித்து உண்ணுதல் முடியாது; இரந்து கேட்பவர்க்கு இல்லை என்ன இரக்கமுடையவர்க்கு முடியாது. இரைசுடு மின்புறா யாக்கையுட் பட்டால் உரைசுடு மொண்மை யிலாரை - வரைகொள்ளா முன்னை யொருவன் வினைசுடும் வேந்தனையுந் தன்னடைந்த சேனை சுடும். 50 துன்புறும் உடலுள் சேர்ந்த உணவு வருந்தச் செய்யும். நல்லறிவு இல்லாரை அவர் சொல்லும் சொல்லை வருந்தச் செய்யும்; முற்படத் திட்டமிட்டுச் செய்யான் செயல் அவனை வருந்தச் செய்யும்; கட்டுக்கு அடங்காத படை, தன்னை உடைய வேந்தனை வருந்தச் செய்யும். எள்ளற் பொருள திகழ்த லொருவனை யுள்ளற் பொருள துறுதிச்சொ - லுள்ளறிந்து சேர்தற் பொ,ருள தறநெறி பன்னூலுந் தேர்தற் பொருள பொருள் 51 ஒருவனை இகழ்தல் பிறரால் எள்ளப்படும் பொருளாம்; ஒருவனை உயர்வாக நினைக்கத் தக்கது. அவனது உறுதியான சொல்லாகும்; ஆழமாக அறிந்து கொள்ளுவதற்கு உரியது அறநெறி; மெய்ப்பொருள் பலநூல்களையும் ஆய்ந்து தெளிந்து கொள்ள வேண்டுவது. யாறு ளடங்குங் குளமுள வீறுசால் மன்னர் விழையுங் குடியுள - தொன்மரபின் வேத முறுவன பாட்டுள வேளாண்மை வேள்வியோ டொப்ப வுள. 52 ஆற்றைத் தன்னுள் அடக்கிக் கொள்ளும் பெரிய குளமும் உள; வெற்றி மிக்க வேந்தர் விரும்பும் நற்குடி மக்களும் உளர்; பழமையான மறைகளைத் தன்னுள் கொண்ட பாடல்களும் உள; வேள்விக்கு ஒப்பான வேளாண்மைத் தொழிலும் உள. எருதுடையான் வேளாள னேலாதான் பார்ப்பான் ஒருதொடையான் வெல்வது கோழி - யுருவோ டறிவுடையா ளில்வாழ்க்கைப் பெண்ணென்ப சேனை செறிவுடையான் சேனா பதி. 53 நல்ல காளைகளையுடையவன் வேளாளன் ஆவான். ஏற்பதை இகழ்ச்சி எனக் கொண்டவனே பார்ப்பான்; ஒற்றைக் கால் கொண்டே பெடையை இணைத்து வெற்றி கொள்வது சேவற் கோழி; தோற்றப் பொலிவும் அறிவின் ஏற்றமும் உடையவ ளே நல்ல பெண்மணி; படையின் பெருமிதம் உடையவனே படைத்தலைவன். யானை யுடையார் கதனுவர்ப்பர் மன்னர் கடும்பரிமாக் காதலித் தூர்வர் கொடுங்குழை நல்லாரை நல்லவர் நாணுவப்ப ரல்லாரை அல்லா ருவப்பது கேடு. 54 யானைப் படைத் தலைவர் அதன் சீற்றத்தை விரும்புவர்; விரையும் குதிரையை விரும்பி அரசர் செலுத்துவர்; வளைந்த காதணியுடைய நங்கையரின் இயல்பாம் நாணத்தை நல்லோர் விரும்புவர்; நல்லவர் அல்லாரை, நல்லவர் அல்லார் விரும்புவது மேலும் கேடாம். கண்ணிற் சிறந்த வுறுப்பில்லை - கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின் ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்றாளோ டெண்ணக் கடவுளு மில். 55 கண்ணினும் மேம்பட்ட உறுப்பு எதுவும் இல்லை; கொண்ட வனினும் சிறந்த உறவினர் எவரும் இல்லை; தம் மக்களினும் உயர்ந்த தாய்க் கொள்ளத்தக்க பொருள் எதுவும் இல்லை, பெற்றவளைப் பார்க்கிலும் நினைந்து போற்றத்தக்க தெய்வம் எதுவும் இல்லை. கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார் செற்றன்னர் செற்றாரைச் சேர்ந்தவர் - தெற்றென உற்ற துரையாதா ருள்கரந்து பாம்புறையும் புற்றன்னர் புல்லறிவி னார். 56 கல்விவல்லாரை விரும்புவாரும் கல்வி வல்லாரே ஆவர்; இரக்கமில்லாமல் சீறுபவரைச் சேர்ந்தவரும், சீறுபவரே ஆவர்; தெளிவாக உண்மை உரையாது மறைப்பவர் பாம்பு உறையும் புற்று ஒப்பவர்; இவரெல்லாம் கீழான அறிவுடையவர். மாண்டவர் மாண்ட வினை பெறுப - வேண்டாதார் வேண்டா வினையும் பெறுபவே - யாண்டும், பிறப்பால் பிறப்பா ரறனின் புறுவர் துறப்பார் துறக்கத் தவர். 57 மாண்பமைந்தவர் மாண்பான செயலைப் பெறுவர்; அவ்வறிவு மாண்பு விரும்பாதவர் மாண்பிலாச் செயலைப் பெறுவர்; எப்பொழுதும் அறத்தின் வழியால் இன்புறுவார் அறப்பிறப்பராகவே பிறப்பார்; துறக்கத்தக்கவற்றைத் துறந்தவர் வீட்டின்பத்தைப் பெறுபவர் ஆவர். என்று முளவாகு நாளு மிருசுடரும் என்றும் பிணியுந் தொழிலொக்கு - மென்றும் கொடுப்பாருங் கொள்வாரு மன்னர் பிறப்பாருஞ் சாவாரு மென்று முளர். 58 எக்காலமும் விண்மீன்களும் திங்களும் ஞாயிறும் உளவாய் இருக்கும்; எக்காலமும் துயரும் தொழிலும் உள்ளனவாய் இருக்கும்; எக்காலமும் இரந்து கொள்பவரும் கொடுப்பவரும் இருக்கவே செய்வர்; அவ்வாறே பிறப்பவரும் இறப்பவரும் எக்காலமும் உளர். இனிதுண்பா னென்னபா னுயிர்கொல்லா துண்பான் முனிதக்கா னென்பான் முகனொழிந்து வாழ்வான் தானிய னெனப்படுவான் செய்தநன் றில்லான் இனிய னெனப்படுவான் யார்யார்க்கேயானும் முனியா வொழுக்கத் தவன். 59 இனிய உணவு உண்பவன் என்பான், உயிர் கொல்லாமல் உண்பவனே; எல்லாராலும் வெறுக்கத் தக்கவன் என்பவன், முக மலர்ச்சி இல்லாதவன்; எவரும் துணை இல்லான் என்பவன் எந்நலமும் எவர்க்கும் செய்து வாழாதான்; இனிமையானவன் என்பவன் எவரெவரும் வெறுக்காத நல்லியல்பு உடையவன். ஈத்துண்பா னென்பா னிசைநடுவான் மற்றவன் கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் தெற்ற நகையாகு நண்ணார்முற் சேறல் - பகையாகும் பாடறியா தானை யிரவு. 60 பிறர்க்குக் கொடுத்து உண்பவன் என்பான் புகழை நிறுத்துவான்; அவன் கையில் பெற்று உண்பவன் என்பான் வெம்பி வெதும்பி வாழ்பவன் ஆவான்; பகைவர் முன் சென்று எதிர்பார்த்து நிற்றல் நகைப்புக்கு உரியதாம்; முகக் குறிப்பறிந்து ஈயாதான் முன் இரந்து நிற்பது மானத்திற்குக் கேடானதாம். நெய்விதிர்ப்ப நந்து நெருப்பழல் சேர்ந்து வழுத்த வரங்கொடுப்பர் நாகர் - தொழுத்திறந்து கன்றூட்ட நந்துங் கறவை கலம்பரப்பி நன்றூட்ட, நந்தும் விருந்து. 61 நெய்விட்ட அளவில் நெருப்பு சுடர் விட்டு விளங்கும்; கூடிநின்று வாழ்த்தத் தேவர் வரம் கொடுப்பர்; தொழுவத்தைத் திறந்து கன்றைத் தாயினிடம் பாலுண்ணச் செய்தலால் பால் பெருகும்; கலங்களில் நெய் பால் தயிர் மோர் எனப் பரப்பி நல்லுணவு உண்ணச் செய்தலால் விருந்து சிறக்கும். பழியின்மை மக்களாற் காண்க வொருவன் கெழியின்மை கேட்டா லறிக பொருளின் நிகழ்ச்சியா னாக்க மறிக - புகழ்ச்சியாற் போற்றாதார் போற்றப் படும். 62 மக்களின் பண்பைக் கொண்டு ஒருவன் பழியில்லாதவன் என்பதைக் கண்டு கொள்க; ஒருவன் எவரோடும் உள்ளார்ந்த உறவு இல்லாதான் என்பதை அவன் வறுமையுற்ற போதில் அறிக; பொருள் வரவு செலவால் அவன் உயர்வை அறிக; புகழ்ந்து பேசும் நல்லியல்பைப் பகைவராலும் போற்றப்படுதல் கொண்டு அறிக. கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் - பெண்ணுள் உருவின்றி மாண்ட வுளவா - மொருவழி நாட்டுள்ளு நல்ல பதியுள - பாட்டுள்ளும் பாடெய்தும் பாட லுள. 63 கண்களுள்ளும் விரும்பத்தக்க கண்கள் உள; அழகில்லை எனினும் பெண்ணிடத்துப் பெருங்குணங்கள் உள; எந்த நாட்டிலும் அதற்குப் பெருமையாக்கும் ஊர்கள் உள; பாடல் களுள்ளும் பாராட்டப்படும் பாடல்கள் உள. திரியழற் காணிற் றொழுப விறகின் எரியழற் காணி னிகழ்ப - வொருகுடியிற் கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான் இளமைபா ராட்டு முலகு. 64 திரியின் சுடரொளியைக் கண்டால் அதனை வணங்குவர்; விறகு மூண்டு எரிந்தாலும் அதனை மதித்து வணங்கார்; ஒரு குடும்பத்தில் கல்லாது மூத்தவனைக் கருதாமல் கற்ற இளை யானை உயர்ந்தோர் பாராட்டுவர். கைத்துடையான் காமுற்ற துண்டாகும் வித்தின் முளைக்குழாம் நீருண்டே லுண்டாந் திருக்குழாம் ஒண்செய்யாள் பார்த்துறி னுண்டாகு மற்றவள் துன்புறுவா ளாகிக் கெடும். 65 கைப்பொருள் உடையவன் விரும்பியவை எளிதில் கிடைக்கும்; நீர்வளம் உண்டானால் போட்ட விதை குறையாமல் முளைக் கும்; செய்யாள் என்னும் திருமகள் அருள் உண்டானால் செல்வம் குவியும்; அத்திருமகள் வெறுத்து ஒதுக்குவாள் எனின் செல்வம் ஒழியும். ஊனுண் டுழுவைநிறம்பெறூஉ நீர்நிலத்துப் புல்லினா னின்புறூஉங் காலேயம் - நெல்லின் அரிசியா னின்புறூஉங் கீழெல்லாந் தத்தம் வரிசையா னின்புறூஉ மேல். 66 ஊனை உண்ணுதலால் புலி வலிமை பெறும். நீர்வளம் அமைந்த நிலத்தில் முளைத்த புல்லைத் தின்னுதலால், கால் நடைகள் நலம் பெறும்; நெல்லரிசிச் சோறு உண்ண வாய்த்தால் வறுமைக் குடியர் மகிழ்வர்; தங்களுக்குக் கிடைக்க வேண்டிய மதிப்புக் கிடைத்தலால் மேலோர் மகிழ்வர். பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை - யென்பெறினும் முன்னவா முன்ன மறிந்தார்கட் - கென்னும் அவாவா மடைந்தார்கட்குள்ளந் - தவாவாம் அவாவிலார் செய்யும் வினை. 67 ஒரு செயலைச் செய்யத் தொடங்குமுன் ஆராயாதவர் களுக்கு அதன் துயர் செய்யத் தொடங்கிய பின்னர்த் தெரியும்; நன்கு ஆராய்பவர்களுக்கு அச் செயலைச் செய்யத் தொடங்கு முன்னரே புலப்படும். ஒரு பொருளை அடைந்தவர்களுக்கு அப்பொருள் மேல் எப்பொழுதும் பற்றுண்டாம்; பற்றற்றார் செய்யும் செயல் எக் குற்றமும் இல்லாததாக இருக்கும். கைத்தில்லார் நல்லவர் கைத்துண்டாய்க் காப்பாரின் வைத்தாரி னல்லர் வறியவர் - பைத்தெழுந்து வைதாரி னல்லர் பொறுப்பவர் - செய்தாரின் நல்லர் சிதையா தவர். 68 கையில் பொருள் இருக்க அதனைக் செலவிட்டு உண்ணாத கருமியரினும் கையில் பொருள் இல்லார் நலம் பெற்றவராம்; சினந்தெழுந்து வசை கூறுவாரினும், அதனைப் பொறுப்பவர் நலம் பெற்றவர், நன்மை செய்தவர்களினும் அந்நன்மையை மறவாதவர் நலம் பெற்றவர். மகனுரைக்குந் தந்தை நலத்தை யொருவன் முகனுரைக்கு முண்ணின்ற வேட்கை - யகனீர்ப் புலத்தியல்பு புக்கா னுரைக்கும் - நிலத்தியல்பு வான முரைத்து விடும். 69 தந்தை ஒருவனின் நலப்பாட்டை அவன் மக்கள் வெளிப் படுத்தி விடுவர்; உள்ளே உள்ள விருப்பினை அவன் முகம் வெளிப் படுத்தி விடும்; விரிவான நீர்ப்பரப்பமைந்த நிலத்தின் இயல்பு அதனைப் புகுந்து கண்டானுக்கு வெளிப்படுத்தி விடும். ஓரிடத்து வாழும் மக்கள் ஒழுக்கநிலையை வான்மழை ஒழுக்கு வெளிப் படுத்தி விடும். பதிநன்று பல்லா ருறையி னொருவன் மதிநன்று மாசறக் கற்பி - னுதிமருப்பின் ஏற்றான்வீ றெய்து மினநிரை தான்கொடுக்குஞ் சோற்றான்வீ றெய்துங் குடி. 70 பலப்பல குடியினரும் ஒத்து வாழ்ந்தால் அவ்வூர் நல்ல ஊராகும்; குறையறக் கற்பானானால் அக்கல்வி நல்லதாம்; கூரிய கொம்புகளையுடைய காளையால் ஆன் கூட்டம் சிறப்புறும்; தான் குறைவற வழங்கும் ஊண் கொடையால் அவன் குடி பெருமையுறும். ஊர்ந்தான் வகைய கலினமா - நேர்ந்தொருவன் ஆற்றல் வகைய வறஞ்செய்கை தொட்ட குளத்தனைய தூம்பி னகலங்க டத்தம் வளத்தனைய வாழ்வார் வழக்கு. 71 கடிவாளம் பூண்ட குதிரை அதனைச் செலுத்துவான் திறத் துக்கு ஒத்தது; ஒருவன் செய்யும் அறச்சொல் அவன் செயல் திறத் தைப் பொறுத்தது. குளத்து அமைந்த நீர்வழிகால்கள் தோண்டப் பட்ட குளத்தின் அளவின; அவரவர் இல்வாழ்க்கை முறை அவர் வளத்திற்குத் தக்கன. ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும் நாழிகை யானே நடந்தன - தாழியாத் தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார் வெஞ்சொலா லின்புறு வார். 72 ஆண்டுகளை எண்ணிக் கணக்கிடப்பட்டது ஊழி; நாழிகை கொண்டு அளவிடப்பட்டது யாமப் பொழுது; குறைவிலாத் தெளிவு உடையவரிடத்தே அறிவினார் தெளிவு கொண்டனர்; வெள்ளறிவினர் எனப்பட்டார் கொடுஞ்சொற்களால் இன்புறுவர். கற்றான் றளரி னெழுந்திருக்குங் கல்லாத பேதையான் வீழ்வானேற் கான்முரியு மெல்லாம் ஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின் பொய்யாவித் தாகி விடும். 73 கல்வி வல்லான் சற்றே சோர்வுற்றாலும் மீண்டும் எழுச்சி பெறுவான்; கல்வியறியாப் பேதை சோர்ந்து கீழ் வீழ்ந்தால் மீண்டும் எழுந்திருக்க மாட்டான்; ஒருமுகப்பட்டு ஒருவன் செய்த செய்கை பொய்த்துப் போகாமல் மெய்யாய நலத்தை நல்கும். தேவ ரனையர் புலவருந் - தேவர் தமரனைய ரோரூ ருறைவார் - தமருள்ளும் பெற்றன்னர் பேணி வழிபடுவார் - கற்றன்னர் கற்றாரைக் காத லவர். 74 கல்வியால் சிறந்தோர் தெய்வம் எனத் தக்கார்; அவர் வாழும் ஊரில் வாழ்வோர் அத் தெய்வத்தின் உறவினர் போன்றவர்; அவ்வுறவினருள்ளும் அவரை விரும்பி வழிபடுபவர், தெய்வ அருள் பெற்றவர் போன்றவர்; அக்கற்றாரை மிக மிகப் பற்றாக்கி உடன் வாழ்பவர், அக்கற்றாரைப் போன்றவர் ஆவர். தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே மருத்துவன் சொல்கென்ற போழ்தே பிணியுரைக்கும் - நல்லார் விடுகென்ற போழ்தே விடுக வுரியான் தருகெனிற் றாயம் வகுத்து. 75 பொய் உண்டாகிய போதே உற்ற அன்பர் உறவு போய்விடும்; மருத்துவனிடம் உன்நோய் என்ன அளவில் உள்ளது எனத் தெளிவாக உரைத் தல் வேண்டும். நல்லோர்கள் இதனைச் செய்யாதே என்ற அளவில் மேலும் எண்ணாமல் விடுதல் வேண்டும்; உடைமையில் உரிமை உடையவன் என் பங்கைத் தருக என்ற அளவில் தந்து விடுதல் வேண்டும். நாக்கி னறிப வினியதை - மூக்கினான் மோந்தறிப வெல்லா மலர்களு நோக்குள்ளுங் கண்ணினாற் காண்ப வணியவற்றைத் தொக்கிருந் தெண்ணினா னெண்ணப் படும். 76 சுவையை நாவினால் அறிவர்; மலர்களை எல்லாம் மூக்கி னால் மோந்து பார்த்து அறிவர்; அழகுமிக்கவற்றைக் கண்ணி னால் கண்டு அறிவர்; எண்ணி அறிய வேண்டியவற்றை அறிஞர் பலர் கூடியிருந்து ஆராய்வர். சாவாத வில்லை பிறந்த வுயிரெல்லாந் தாவாத வில்லை வலிகளு - மூவா திளமை யியைந்தாரு மில்லை - வளமையிற் கேடின்றிச் சென்றாரு மில். 77 பிறந்த உயிர்களில் எவ்வுயிரும் சாவாது இருப்பது இல்லை, எவ்வளவு வலிமை எனினும் அவ்வலிமை குறையாமல் என்றும் இருப்பது இல்லை; மூப்பு வாராமல் எவரும் என்றும் இளமையராய் இருந்தாரும் இல்லை, பெற்ற செல்வ வாழ்வை இழக்காமல் எவரும் வாழ்ந்தாரும் இல்லை. சொல்லா னறிபவொருவனை - மெல்லென்ற நீரா னறிப மடுவினை - யார்கண்ணும் ஒப்புரவினானறிப சான்றாண்மை - மெய்க்கண் மகிழா னறிப நறா. 78 ஒருவன் தன்மையை அவன் சொல்லால் அறிவர்; நீரின் மென்மையைக் கொண்டு அது நின்ற நிலத்தின் தன்மையை அறிவர்; எவரிடத்தும் ஒப்பாக வாழும் தன்மையைக் கொண்டு அவர்தம் சால்பினை அறிவர்; குடித்தான் என்பதைக் குடித்தவன் உடற்குறியால் அறிவர். நாவன்றோ நட்பறுக்குந் தேற்றமில் பேதை விடுமன்றோ வீங்கிப் பிணிப்பின் அவாஅப் படுமன்றோ பன்னூல் வலையிற் - கெடுமன்றோ மாறு ணிறுக்குந் துணிபு. 79 நாவால் கூறும் சொல்லால் அல்லவோ நட்பு ஒழியும்; வலிய வருந்தின், அறிவிலி நற் செயலையும் விட்டொழிவான்; நல்ல நூல்களைக் கற்றலால் தீய ஆசைகள் அகலும்; மாறுபட்ட செய லில் துணிவோடு நின்றால் கேடுறாமல் தப்ப இயலாது. கொடுப்பி னசனங் கொடுக்க - விடுப்பி னுயிரிடை யீட்டை விடுக்க வெடுப்பிற் கிளையுட் கழிந்தா ரெடுக்க கெடுப்பின் வெகுளி கெடுத்து விடல். 80 ஒருவருக்கு ஒன்றைக் கொடுக்க வேண்டுமெனின் உணவு தருக; ஒன்றை விடுக்க வேண்டுமெனின் உயிர்க்கு இறுதியாம் சாவு பற்றிய அச்சத்தை விடுக்க; ஒருவரை மேலே எடுத்து உயர்த்த வேண்டும் எனின் உறவினருள் மிக வறுமையரைத் தேர்ந்து எடுக்க; ஒன்றை ஒழிக்க வேண்டும் எனின், தன்னிடத்து உண்டாகும் சினத்தை ஒழிக்க. நலனு மிளமையு நல்குரவின் கீழ்ச்சாம் குலனுங் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம் வளமில் குளத்தின்கீழ் நெற்சாம் - பரமல்லாப் பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு. 81 வறுமை வந்தெய்தினால் அழகும் இளமையும் கெடும்; கல்லாமையால் ஒருவர் பிறந்த இனமும் குடிமையும் கெடும்; நீர்வளமற்ற குளத்தைச் சார்ந்த நெல் முதலாம் பயிர் கெடும். அளவிறந்த பண்டத்தின் சுமையால் எருது கெடும். நல்லார்க்குந் தம்மூரென் றூரில்லை நன்னெறிச் செல்வார்க்குந் தம்மூரென் றூரில்லை - யல்லாக் கடைகட்குந் தம்மூரென் றூரில்லை தங்கைத் துடையார்க்கு மெவ்வூரு மூர். 82 நற்குணமுடையவர்க்குத் தம்ஊர் என்று ஓர் ஊரில்லை; எவ்வூரும் தம்மூரே! நன்னெறியில் வாழ்வார்க்கும் எவ்வூரும் தம்மூரே; அவ்வாறே கீழான மக்களுக்கும் தம் ஊர் என்று சொல்லும் ஊர் இல்லை; தம் கையில் பொருள் வளம் உடைய வர்க்கும் எவ்வூரும் தம் ஊரேயாம். கல்லா வொருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம் மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம் அல்லவை செய்வார்க் கறங்கூற்றம் கூற்றமே இல்லத்துத் தீங்கொழுகு வாள். 83 கல்வி அறிவில்லாத மாந்தர்க்குத் தாம் சொல்லும் சொல்லே கேடாம்; மெல்லிய இலையையுடைய வாழைக்குத் தான் பெற்ற காயே கேடாம்; நல்லவை அல்லவை செய்தார்க்கு அறமே கேடாம்; குடும்பத்துக்குத் தீமை செய்யும் பெண், குடும்பத்திற்குக் கேடாம். நீரான்வீ றெய்தும் விளைநிலம் நீர்வழங்கும் பண்டத்தாற் பாடெய்தும் பட்டினம் - கொண்டாளும் நாட்டான்வீ றெய்துவர் மன்னவர் கூத்தொருவன் ஆடலாற் பாடு பெறும். 84 விளை நிலம் நீர்வளத்தால் சிறப்புறும்; கலவழியாக வரும் பண்டங்களால் கடற்கரைப்பட்டினங்கள் சிறப்புறும்; அறம் விளங்க ஆளும் நாட்டால் ஆள்வோர் சிறப்புறுவர்; ஒருவன் ஆடும் திறத்தால் ஆடல் சிறப்புறும். ஒன் றூக்கல் பெண்டிர் தொழினலம் - என்றும் நன் றூக்கல் அந்தண ருள்ளம் பிறனாளும் நாடூக்கல் மன்னர் தொழினலம் - கேடூக்கல் கேளி ரொரீஇ விடல். 85 பெண்களின் தொழிற் சிறப்பு எடுத்த ஒன்றை ஒருமுகப் பட்டுச் செய்து முடித்தலாம்; எந்நாடும் நல்லவற்றையே செய்தல் அருளாளர் உள்ளமாம்; பிறிதொருவன் ஆளும் நாட்டு மக்கள் உயர்வாகப் போற்ற ஆளுதல் ஆட்சிச் சிறப்பாம்; உறவினரை ஒதுக்கி விடுதல் கேட்டுக்கு வழியாக்கலாம். கள்ளாமை வேண்டுங் கடிய வருதலால் தள்ளாமை வேண்டுந் தகுதி யுடையன நள்ளாமை வேண்டுஞ் சிறியரோ டியார்மாட்டும் கொள்ளாமை வேண்டும் பகை. 86 துயரும் பழியும் வருதலால் களவு செய்யாமை வேண்டும்; தகுதியானவற்றைத் தள்ளிவிடாமல் செய்தல் வேண்டும்; சிறுமை யினரோடு நெருங்கியிருத்தல் இல்லாமை வேண்டும். எவரிடத்தும் பகை கொள்ளாமை வேண்டும். இவையெல்லாம் நலப் பாடாம். பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத் தருக்குக வொட்டாரைக் கால மறிந்தாங் கருக்குக யார்மாட்டு முண்டி - சுருக்குக செல்லா விடத்துச் சினம். 87 தம்மோடு நண்புடையவரை நல்லவற்றின் வழியே செலுத்தி உயர்த்துக; கூடியிருக்கக் கூடாதவரைத் தக்க காலம் அறிந்து அகற்றி விடுக; எவரிடத்தும் அடுத்தடுத்துச் சென்று உண்ணுதலைக் குறைத்துக் கொள்க; தன் சினம் செல்லா இடத்தில் செல விடாது சுருக்கிக் கொள்க. மடிமை கெடுவார்க ணிற்கும் - கொடுமைதான் பேணாமை செய்வார்க ணிற்குமாம் பேணிய நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த தூணின்க ணிற்குங் களிறு. 88 கெடப் போவாரிடத்தே சோம்பல் நிற்கும்; பிறர் மதிக்கத்த காதவரிடத்தே கொடுஞ்செயல் நிற்கும்; நன்மகளிர் இயல்பான நாணத்தின் அளவில் நிற்பர்; ஊன்றி நிற்கும் தூணில் யானை கட்டுண்டு நிற்கும். மறையறிப வந்தண் புலவர் - முறையொடு வென்றி யறிப வரசர்கள் - என்றும் வணங்கல் அணிகலஞ் சான்றோர்க்கஃ தன்றி அணங்கல் வணங்கின்று பெண். 89 அருள் தன்மையமைந்த புலமையர் மெய்யியலை ஆய்வர்; ஆள்பவர் செங்கோன்மையொடு வெற்றியையும் அறிவர்; என்றும் சான்றோர் பணிவாம் அணிகலம் பூண்டிருப்பர்; அன்றியும் பெண்டிர் வாட்டி வருத்தும் தன்மையராதல் இல்லை. பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள் காப்பினும் பெட்டாங் கொழுகும் பிணையிலி - முட்டினுஞ் சென்றாங்கே சென்றொழுகும் காமம் காப்பினுங் கொன்றான்மே னிற்குங் கொலை. 90 நல்லியல்புடைய பெண் வாழ்வியல் நடை தவறாது வாழ்வள்; மனக்கட்டு இல்லாள் எத்தகைய காவல் செய்யினும் அவள் விரும் பியவாறே நடப்பாள்; எவ்வளவு தடையெனினும் காமம் மாறாது சென்ற வழியே செல்லும்; எவ்வளவு மறைத்தாலும் கொலைப் பழி கொன்றவன் மேலே நிற்கவே செய்யும். வன்கண் பெருகின் வலிபெருகும் பான்மொழியார் இன்கண் பெருகி னினம்பெருகும் சீர்சான்ற மென்கண் பெருகி னறம்பெருகும் - வன்கட் கயம்பெருகிற் பாவம் பெரிது. 91 அஞ்சாமை மிகுந்தால் வலிமையும் மிகும்; மகளிர் நலச் செயல் மிகுந்தால் இனத்தார் பெருகுவர். சிறப்பமைந்த மெல்லியல்பு பெருகினால் அறம் பெருகும்; கொடிய கீழ்மைத் தன்மை பெருகினால் பாவம் பெருகும். இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம் வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம் கிளைஞரில் போழ்திற் சினங்குற்றம் குற்றந் தமரல்லார் ஈகையகத் தூண். 92 கற்கும் இளமைப் பருவத்தில் கல்லாமை குற்றமாகும்; வாய்ப்பு வகை இல்லாத நிலையில் கொடை புரிதல் குற்றமாகும்; நெருங்கிய சுற்றத்தார் இல்லாத போது சினமுறுதல் குற்றமாகும். தமக்கு உரிமையில்லாதவர் கையில் உண்பதும் குற்றமாகும். எல்லா விடத்துங் கொலைதீது மக்களைக் கல்லா வளர விடறீது - நல்லார் நலந்தீது நாணற்று நிற்பிற் - குலந்தீது கொள்கை யழிந்தக் கடை. 93 எந்நிலையிலும் கொலை தீமையேயாம்; மக்களைக் கல்லாத வராக வளர விடல் தீமையாம். நல்லவர்கள் நாணமின்றி நின்றால் அவர்கள் பெற்ற நலமெல்லாம் தீமையாம்; கொண்ட கொள்கை தவறி நடந்தால் குடிப்பிறப்புக்குத் தீமையாம். ஆசார மென்பது கல்வி யறஞ்சேர்ந்த போக முடைமை பொருளாட்சி யார்கண்ணுங் கண்ணோட்ட மின்மை முறைமை தெரிந்தாள்வான் உண்ணாட்ட மின்மையு மில். 94 ஒழுக்கமாக இருப்பது கல்வியின் பயனாம். அறச் செயல் புரிந்துதாமும் துய்த்தல் பொருட் பயனாம்; எவரிடத்தும் சார்பில் லாதுமுறை செய்தல் செங்கோல் சிறப்பாம்; பிறரை அன்றித் தானேயும் ஆழமாக எண்ணிச் செய்யாமையும் முறைமை அன்றாம். கள்ளி னிடும்பை களியறியும் நீரிடும்பை புள்ளினு ளோங்க லறியும் நிரப்பிடும்பை பல்பெண்டி ராள னறியும் கரப்பிடும்பை கள்வ னறிந்து விடும். 95 மதுக்குடியன் அம்மது துயரத்தை நன்றாக அறிவான்; வானம் பாடிப் பறவை வான்மழை இல்லாத்துயரை நன்றாக அறியும்; பல்மனைவியரை உடையவன் வறுமையை நன்றாக அறிவான். ஒன்றை ஓரிடத்து மறைத்து வைப்பதன் துயரைக் கள்வன் நன்றாக அறிவான். வடுச்சொன் னயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச் சாயினுந் தோன்றா காப்புச்சொல் தீய பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா காப்புச் சொல் கீழ்கள்வாய்த் தோன்றி விடும். 96 நலத்தன்மை இல்லார் வாயில் குற்றமான சொற்கள் உண்டாம்; கற்றவரிடத்து வஞ்சகமான சொல் தம்மை மறந்தும் தோன்றாது; தீமையைப் பரப்பும் சொல், பண்பால் நிறைந்தோர் வாயில் தோன்றாது; கூறக் கூடாமல் அடக்கி வைக்க வேண்டிய சொல் கயவர்களிடத்துத் தோன்றி விடும். வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர் சாலு மவைப்படிற் கல்லா தான் பாடிலன் கற்றா னொருவனும் பாடிலனே கல்லாதார் பேதையார் முன்னர்ப் படின். 97 அழகில்லாத ஆடவர், அழகிய மகளிரிடத்துப் பெருமையுறார்; கற்றோர் நிறைந்த அவையில் கல்லாதவன் சிறப்புறார்; கல்லாதவரும் அறிவிலாரும் கூடிய அவையில் கற்ற ஒருவனும் சிறப்புற மாட்டான். மாசு படினு மணிதன்சீர் குன்றாதாம் பூசிக் கொளினு மிரும்பின்கண் மாசொட்டும் பாசத்து ளிட்டு விளக்கினுங் கீழ்தன்னை மாசுடைமை காட்டி விடும். 98 அழுக்குப் படிந்தாலும் மணியின் சிறப்புக் குறையாது; மேல்வண்ணம் பூசினாலும் இரும்பில் துருப்பிடிக்கவே செய்யும்; கீழான தன்மை உடையவனைச் சிறையில் இட்டுவைத்தாலும், வேண்டும் அறிவுரை கூறித் தெளிவிக்க முயன்றாலும் அவன் கீழ்மையைக் காட்டியே விடுவான். எண்ணொக்குஞ் சான்றோர் மரீஇயாரிற் றீராமை புண்ணொக்கும் போற்றா ருடனுறைவு - பண்ணிய யாழொக்கு நட்டார் கழறுஞ்சொல் பாழொக்கும் பண்புடையா ளில்லா மனை. 99 சான்றோரையும் உளமொத்துக் கலந்து ஒன்றியவரையும் விலகாமை அறிவாகும்; கூடக் கூடாதவனொடு கூடி வாழ்தல் புண்ணொடு நீங்காதிருத்தல் போலாம். நண்பர்கள் இடித்து ரைக்கும் சொல் இசை கூட்டப்பட்ட யாழின் ஒலி போன்றதாம்; பண்புடைய மனையாள் இல்லாத இல்லம் பாழிடமாம். ஏரி சிறிதாயி னீரூரும் இல்லத்து வாரி சிறிதாயிற் பெண்ணூரும் மேலைத் தவஞ்சிறி தாயின் வினையூரும் ஊரும் உரன்சிறி தாயின் பகை. ஏரி சிறிதாக இருந்தால் நீர் விரைவில் ஓடிவிடும்; வருவாய் சுருங்கினால் பெண் மதித்துப் பேசாள்; செய்தவம் சிறிதானால் தீவினை பெருகும்; வலிமை குறைவானால் பகை பெருகும். வைததனா லாகும் வசையே வணக்கமது செய்ததனா லாகுஞ் செழுங்கிளை செய்த பொருளினா லாகுமாம் போகம் நெகிழ்ந்த அருளினா லாகு மறம். 101 பிறரை வைதலால் பழி உண்டாகும்; பணிந்து உதவி வாழ்தலால் சுற்றத்தார் பெருகுவர், தேடி வைத்த பொருளினால் இனிய நுகர்வு வாய்ப்பாம். ஈவிரக்கம் உடைமையால் அறம் உண்டாகும். ஒருவ னறிவானு மெல்லாம் யாதொன்றும் ஒருவ னறியா தவனும் ஒருவன் குணனடங்கக் குற்றமு ளானும் ஒருவன் கணனடங்கக் கற்றானு மில். 102 எல்லாவற்றையும் அறிந்தவனும் இல்லை; எவற்றையும் அறியாதவனும் இல்லை; குணமே இல்லாமல் குற்றமே உடையானு இல்லை; கற்க வேண்டுவ எல்லாமும் முழுதுறக் கற்றானும் இல்லை. மனைக்கு விளக்க மடவாள் மடவார் தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும் ஓதிற் புகழ்சா லுணர்வு. 103 குடும்ப விளக்காக இருப்பவர் மகளிர்; அவர்தம் விளக்காக இருப்பவர் மக்கள்; மக்களுக்குக் கல்வியே விளக்கமாம்; அக்கல்விக்கு விளக்கமாக இருப்பது மெய்யுணர்தலாம். இன்சொலா னாகுங் கிழமை இனிப்பிலா வன்சொலா னாகும் வசைமனம் - மென்சொலின் நாவினா னாகு மருண்மனம் அம்மன த்தான் வீவிலா வீடாய் விடும். 104 இன்சொல் கூறுதலால் நட்பு உண்டாகும்; இனிமை தராத கொடிய சொல்லைக் கூறுதலால் பழியுண்டாகும்; இனியவை கூறும் நாவால் அருள் மனம் உண்டாகும்; அம்மனத்தினால் அழியாப் பேரின்பம் உண்டாகும். விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை மூலமும் புலவர் இளங்குமரன் இயற்றிய தெளிவுரையும் முற்றும் கார் நாற்பது ஆசிரியர் : மதுரை - கண்ணங்கூத்தனார் உரையாசிரியர் : ந.மு.வேங்கடசாமிநாட்டார் முகவுரை கார்நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களியற்றிய பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று. கீழ்க் கணக்கு நூல் பதினெட்டென்பது, ‘வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற்றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே’ என்னும் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர வுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் உரைக்குமாற்றானறியலாவது. அவை அம்மையென்னும் வனப்புடையவாதலும் அவ்வுரையாற் றெளியப்படும். பழைய பனுவல்களை அளவு முதலியன பற்றி மேற்கணக்கெனவும் கீழ்க்கணக்கெனவும் பின்னு ளோர் வகைப்படுத் துரைத்தன ராவர். ‘அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்’ என்பது பன்னிரு பாட்டியல். கீழ்க்கணக்குகள் பதினெட்டாவன : நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, திணைமொழியைம்பது, ஐந்திணை யெழுபது, திணை மாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறு பஞ்சமூலம், இன்னிலை, முது மொழிக்காஞ்சி, ஏலாதி என்பன. இதனை, ‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு’ என்னும் வெண்பாவானறிக. இதில் ‘நால்’ என்பதனை ‘ஐந்திணை’ என்பதன் முன்னுங்கூட்டி நாலைந் திணையெனக் கொள்ள வேண்டும். சிலர் கைந்நிலை யென்பது கூட்டி இன்னிலையை விடுத்திடுவர். வேறு சிலர் ஐந்திணையை ஐந்து நூலெனக் கொண்டு இன்னிலை. கைந்நிலை இரண்டனையும் ஒழித்திடுவர். அவர் ‘திணை மாலை’ என்பதொரு நூல் பழைய வுரைகளாற் கருதப் படுவதுண்டாகலின் அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாகல் வேண்டுமென்பர். முற்குறித்த வெண்பாவில் ‘ஐந்தொகை’ ‘இன்னிலைய’ ‘மெய்ந்நிலைய’ ‘கைந்நிலையோடாம்’ ‘நன்னிலைய வாம்’ என்றிவ்வாறெல்லாம் பாடவேற்றுமையும் காட்டுவர். இனி, கார்நாற்பது என்னும் இந்நூலை யியற்றி னார் மதுரைக் கண்ணங்கூத்தனார் எனப்படும் நல்லிசைப் புலவராவர். கூத்தனார் என்னும் பெயருடைய இவர் கண்ணன் என்பார்க்கு மகனா ராதலிற் கண்ணங் கூத்தனார் என்றும், மதுரையிற் பிறந்தமையாலோ இருந்தமையாலோ மதுரைக் கண்ணங்கூத்தனார் என்றும் வழங்கப்பட்டனரெனக் கொள்ளல் வேண்டும். கண்ணனுக்கு மகனாராகிய கூத்தனார் கண்ணங் கூத்தனார் என வழங்கப்படுதற்கு விதி, ‘அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும் நிற்றலு முரித்தே யம்மென் சாரியை மக்கண முறைதொ கூஉ மருங்கி னான’ என்னும் தொல்காப்பியச் சூத்திரமாகும். இவ்வாசிரியர் கடைச் சங்கப் புலவ ரென்பது ஒருதலையாயின் இவரது காலம் கி. பி. 200 - க்கு முற்பட்டதெனக் கருதலாகும். இவர் இன்ன பிறப்பினர் எனத் துணிதற்கு இடனின்று. இவரது சமயம் சமணமோ பௌத்தமோ அன்றென்பது தெளிவு. இவர் இந்நூலன்றி வேறு செய்யு ளொன்றும் இயற்றியதாகத் தெரியவில்லை. இந்நூற் செய்யுட்களெல்லாம் அகம் புறம் என்னும் பொருட் பாகு பாட்டினுள் இன்பங் கண்ணிய அகத்தின் பகுதியாகிய முல்லைத் திணையின் பாற் பட்டனவாகும். முல்லையாவது ஒரு தலைமகன் தனக்குரியயாதானும் ஒரு நிமித்தத்தாற் பிரிந்து சென்றவழி அவன் வருந்துணையும் தலைமகள் அவன் கூறிய சொற் பிழையாது கற்பால் ஆற்றியிருத்தலாம். வேந்தற்குந் துணையாகப் போர்புரியச் செல்லுதலுற்ற தலைமகன் ‘கார் காலத்து மீண்டு வருவேன்’ எனக் காலங்குறித்துப் பிரிந்தானாக, அதுகாறும் அரிதின் ஆற்றி யிருந்த தலையன்பினளாய தலைவிக்கு அப்பருவம் வந்தும் அவன் வரத் தாழ்த்திடின் ஆற்றாமை விஞ்சுதல் இயற்கை. அங்ஙனம் விஞ்சுத லுற்ற ஆற்றாமையும் ஆற்றுதலும், ஒன்றினொன்றிகலி நிற்கும் அந்நிலைமை தலைமகளது அன்பின் பெருமையும் கற்பின் அருமையும் நனி விளங்குதற் குரியதொன் றாகலின் அதுவே பொருளாக இந்நூல் இயற்றப்பட்டதென்க. இதிலுள்ள செய்யுட் களெல்லாம் தலைவி, தோழி, தலைவன் என் போரின்கூற்றுக்களாக உள்ளன. ஒவ்வொரு செய்யுளிலும் கார் வந்தமை கூறப்படுதலின் இந்நூல் கார் நாற்பது எனப்பட்டது. இதில் முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளும் முதற்பொருளும் அன்றிக் கருப்பொருளிற் பல கூறப்பட்டுள்ளன. இதிலுள்ள உவமைகளெல்லாம் கற்போர்க்கு இன்பம் பயக்குந் தகையன. மாயோனையும் பலராமனையும், வேள்வித் தீயையும், கார்த்திகை விளக்கீட்டையும் இவ் வாசிரியர் குறித்திருப்பது கருதற்பாலது. இந்நூற்குப் பழைய பொழிப்புரையொன் றுளது. அவ்வுரை 23 முதல் 38 வரையுள்ள பாடல்களுக்குக் கிடைத்திலது. சின்னாளின் முன்னரும் சிலர் உரையெழுதி யிருக்கின்றனர். அவற்றுள் காலஞ்சென்ற திருவாளர் பி. எஸ். இரத்தின வேலு முதலியார் அவர்கள் எழுதிய விருத்தியுரை முச்சங்கம், பதினெண் கீழ்க் கணக்கு, அகப்பொருளியல் என்பன முதலிய ஆராய்ச் சிகளையும் கொண்டிருப்பது. இதில் காணப்படும் குற்றங் குறைகளைப் பொறுத்தருளுமாறு அறிஞர்களை வேண்டிக் கொள்கின்றேன். “ஞால நின்புக ழேமிக வேண்டும் தென் னால வாயி லுறையுமெம் மாதியே” இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். கார் நாற்பது மூலமும் உரையும் தோழி தலைமகட்குப் பருவங் காட்டி வற்புறுத்தது. பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல் திருவில் விலங்கூன்றித் தீம்பெய றாழ1 வருது மெனமொழிந்தார் வாரார்கொல் வானங் கருவிருந் தாலிக்கும் போழ்து.2 1 (பதவுரை.) பொருகடல் வண்ணன் - கரையை மோதுங் கடலினது நிறத்தினையுடைய திருமால், மார்பில் புனை தார் போல் - மார்பில் அணிந்த பூமாலைபோல, திருவில் – இந்திர வில்லை, விலங்கு ஊன்றி - குறுக்காக நிறுத்தி, தீம் பெயல் தாழ - இனிய பெயல் வீழாநிற்க, வருதும் என மொழிந்தார் - வருவோம் என்று சொல்லிப்போன தலைவர். வானம் - மேகமானது. கரு இருந்து - கருக்கொண்டிருந்து, ஆலிக்கும் போழ்து - துளிகளைச் சொரியாநிற்கையில், வாரார் கொல் - வாராரோ? (வருவார்) என்றவாறு. பொருகடல் - வினைத்தொகை, புனைதார் என்க. திரு - அழகு, விரும்பப்படும் தன்மை. திருவில் என்பது இந்திரவில் என்னும் பொருட்டு: ‘திருவிற் கோலி’ என ஐங்குறு நூற்றுள் வருவதுங் காண்க. விலங்கு - குறுக்கு; ‘விலங்ககன்ற வியன் மார்ப’ என்பது புறம். ஆக என்னுஞ் சொல் வருவிக்கப்பட்டது. நீலநிறமுடைய வாளின்கண் பன்னிறமுடைத்தாய் வளைந்து தோன்றும் இந்திரவில் நீலநிறமுடைய மாயோனது மார்பிலணிந்த பன்னிற மலர்த்தாரினைப் போலும் என்க. தாழ - நிகழ்கால வினையெச்சம். வருதும் – தனித் தன்மைப் பன்மை. வருவர் என்பது குறிப்பாற் போந்தது. (1) இதுவுமது கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய் 1 இன்னே வருவர் நமரென் றெழில்வான மின்னு மவர்தூ துரைத்து. 2 (ப-ரை.) கொடுங்குழாய் - வளைந்த குழையை யுடையாய், கடுங்கதிர் நல்கூர - ஞாயிற்றின் வெங்கதிர் மெலிவெய்த, கார் செல்வம் எய்த - கார்ப்பருவம் வளப்பத்தைப் பொருந்த, நெடுங்காடு- நெடிய காடெல்லாம், நேர்சினை ஈன - மிக்க அரும்புகளை யீன, எழில் வானம் - எழுச்சியுடைய முகில், நமர் இன்னே வருவர் என்று - நமது தலைவர் இப்பொழுதே வருவரென்று, அவர் தூது உரைத்து- அவரது தூதாய் அறிவித்து, மின்னும் – மின்னா நின்றது எ-று. கடுங்கதிர் - அன்மொழித் தொகையாய் ஞாயிற்றை உணர்த்துவதெனக் கோடலும் ஆம். ஞாயிற்றுக்கு வெங்கதிர் செல்வமெனப் படுதலின் அது குறைதலை நல்கூர்தல் என்றார். கார் - ஆகுபெயர். முதலடியிற் பொருள் முரண் காண்க. நேர் - ஈண்டு மிகுதி என்னும் பொருட்டு. கொடுமை - வளைவு. கொடுங்குழை - காதணி. எழில் - அழகுமாம். செயவெனெச்சம் மூன்றும் மின்னும் என்னும் வினைகொண்டன. (2) பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது. விரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந் தயிர்மணற் றண்புறவி னாலி - புரள உருமிடி வான மிழிய வெழுமே நெருந லொருத்தி திறத்து. 3 (ப-ரை) வரிநிறப் பாதிரி வாட - வரி நிறத்தையுடைய பாதிரிப் பூக்கள் வாட, வளிபோழ்ந்து - காற்றினால் ஊடறுக்கப்பட்டு, அயிர்மணல் - இளமணலையுடைய, தண் புறவின் - குளிர்ந்த காட்டின்கண், ஆலி புரள - ஆலங்கட்டிகள் புரள, உரும் இடிவானம் - இடி இடிக்கும் முகில், நெருநல் - நேற்று முதலாக, ஒருத்தி திறத்து - தமித்திருக்கும் ஒருத்தி மாட்டு (அவளை வருத்துவான் வேண்டி,) இழிய - மழை பெய்ய, எழும் - எழாநின்றது எ- று. பாதிரி - ஆகுபெயர்; அது வேனிற்பூ ஆகலின் வாட என்றார். வாட என்றமையின் அது முல்லைக்கண் மயங்காமையோர்க. ‘புன்காற் பாதிரி வரிநிறத் திரள்வீ’ என அகத்தினும் வரிநிறம் கூறப்பட்டமை காண்க. போழ்தல் - ஊடறுத்தல்; ‘வளியிடை, போழப் படாஅ முயக்கு’ என முப்பலினும் இப்பொட்டாயது இது. நீர்திரண்ட கட்டி. உழிய எனப் பாடங் கொள்ளுதல் சிறப்பு; உழிதர என்க. நெருநல் எழும் என முடிக்க. நேற்றுமுதல் தமிமையால் வருந்துவாள் எனினும் மையும். பாதிரி வாட ஆலி புரள வானம் வளி போழ்ந்து ஒருத்தி திறத்து எழும் என வினை முடிவு செய்க. (3) தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக் காடுங் கடுக்கை கவின்பெறப் 1 பூத்தன பாடுவண் டூதும் பருவம் பணைத்தோளி வாடும் பசலை மருந்து. 4 (ப-ரை.) ஆடும் மகளிரின் - கூத்தாடும் மகளிர் போல, மஞ்ஞை - மயில்கள், அணிகொள - அழகுபெற, காடும் - காடுகளும், கடுக்கை - கொன்றைகள், கவின் பெற - அழகு பெற, பூத்தன - அலர்ந்தன; பாடு வண்டு - பாடுகின்ற வண்டுகளும், ஊதும் - அப்பூக்களை ஊதாநிற்கும்; (ஆதலால்) பணைத்தோளி- மூங்கில் போலும் தோளையுடையாய், பருவம் - இப்பருவ மானது, வாடும் பசலை - வாடுகின்ற நின் பசலைக்கு, மருந்து - மருந்தாகும் எ-று. மகளிரின் என்பதில் இன் உவமப் பொருவு. மஞ்ஞை கார்காலத்திற் களிப்புமிக்கு ஆடுதலின் ஆடுமகளிரை உவமை கூறினார். காடும் - உம்மை எச்சப்பொருளது. பூத்தன என்னும் சினைவினை முதலொடும் பொருந்திற்று; காடு முதலும் கடுக்கை சினையுமாகலின். வாடும் - காரணகாரியப் பொருட்டு. (4) இதுவுமது இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல் பகழிபோ லுண்கண்ணாய் பொய்யன்மை யீண்டைப் பவழஞ் சிதறி யவைபோலக் கோபந் தவழுந் தகைய புறவு. 5 (ப-ரை.) பகழிபோல் - அம்புபோலும், உண் கண்ணாய் - மையுண்ட கண்களையுடையாய், ஈண்டை - இவ்விடத்து, பவழம் சிதறியவைபோல் - பவழம் சிந்தியவை போல, புறவு - காடுகள், கோபம் தவழும் தகைய - இந்திர கோபங்கள் பறக்குந் தகைமையை உடைய வாயின; (ஆதலால்) இகழுநர் சொல் அஞ்சி - இகழ்வார் கூறும் பழிக்கு அஞ்சி, சென்றார் - பொருள் தேடச் சென்ற தலைவர், வருதல் - மீளவருதல், பொய் அன்மை - மெய்யாம் எ -று. தமது தாளாண்மையாற் பொருள்தேடி அறஞ் செய்யாதார்க் குளதாவது பழியாகலின் ‘இகழுநர் சொல் லஞ்சி’ எனப்பட்டது. வடிவானும் தொழி லானும் கண்ணுக்குப் பகழி உவமம். பொய்யன்மை - மெய்ம்மை. ஈண்டைப் பவழஞ் சிதறியவை என்றமை யால் தலைமகள் வருத்த மிகுதியால் தான் அணிந்திருந்த பவழ வடத்தை அறுத்துச் சிந்தினாளென்பது கருதப்படும். ஈண்டை - குற்றுகரம் ஐகாரச் சாரியை யேற்றது. கோபம் - கார்காலத்தில் தோன்றுவதொரு செந்நிறப்பூச்சி; தம்பலப்பூச்சி யென்பர். (5) இதுவுமது தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல் கடிதிடி வான முரறு நெடுவிடைச் 1 சென்றாரை நீடன்மி னென்று. 6 (ப-ரை.) வடு இடை - மாவடுவின் நடுவே, போழ்ந்து - பிளந்தாற்போலும், அகன்ற கண்ணாய் - பரந்த கண்களை யுடையாய், கடிது இடி வானம் - கடுமையாய் இடிக்கும் முகில், நெடு இடை சென்றாரை- நெடிய வழியிற் சென்ற தலைவரை, நீடன்மின் என்று - காலந் தாழ்க்கா தொழிமின் என்று சொல்லி, உரறும் - முழங்காநிற்கும்; (ஆதலால்) தொடிஇட ஆற்றா - வளையிடுதற்கு நிரம்பாவாய், தொலைந்த - மெலிந்த, தோள் நோக்கி - தோள்களைப் பார்த்து, வருந்தல் - வருந்தாதே எ - று. ஆற்றா - எதிர்மறை வினையெச்சமுற்று. தொடியிடவாற்றா தொலைந்த தோள் என்றது உறுப்பு நலனழிதல் கூறியவாறு; ‘தொடியொடு தொல்கவின் வாடிய தோள்’ என்பது முப்பால். போழ்ந்தால் என்பது போழ்ந்து எனத் திரிந்துநின்றது. உவமவுருபு தொக்கது. நெடுவிடை - மருபின்பாற்படும்; நெட்டிடை என்பதே பயின்ற வழக்காகலின். (6) இதுவுமது நச்சியார்க் கீதலு நண்ணார்த் தெறுதலுந் தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளரியலாய் பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீப்போல எச்சாரு மின்னு மழை. 7 (ப-ரை.) தளர் இயலாய் - தளர்ந்த இயல்பினை யுடையாய், நச்சியார்க்கு - தம்மை விரும்பியடைந் தார்க்கு, ஈதலும் - கொடுத்தலும், நண்ணார் - அடையாத பகைவரை, தெறுதலும் - அழித்தலும், தற்செய்வான் - தம்மை நிலைநிறுத்துவனவாக நினைத்து, (அவற்றின் பொருட்டு) சென்றார் - பொருள் தேடச் சென்ற தலைவரை, பொச்சாப்பு இலாத - மறப்பில்லாத, புகழ் - புகழையுடைய, வேள்வித் தீப்போல - வேள்வித் தீயைப் போல, எச்சாரும் - எம்மருங்கும், மின்னும் - மின்னாநிற்கும், மழை - வானமானது, தரூஉம் - கொண்டு வரும் எ-று. அறஞ் செய்தற்கும் பகைதெறுதற்கும் பொருள் காரணமா தலை ‘அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும், பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் . . . தருமெனப், பிரிவெண்ணிப் பொருள் வயிற் சென்ற நங்காதலர்’ என்னும் பாலைக்கலி யானு மறிக. தற் செய்வான் சென்றார் - பன்மை யொருமை மயக்கம்; சில சொற்கள் வருவிக்கப்பட்டன. ‘தளிரியலாய்’ என்பது பாடமாயின் தளிர்போலும் சாயலையுடையாய் என்று பொருள் கூறப்படும். பொச்சாப்பின்றிச் செய்தலாற் புகழுண்டாம் ஆகலின் ‘பொச்சாப்பிலாத என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டு; ‘பொச்சாப்பார்க்கில்லை புகழ்மை’ என்பது திருவள்ளுவப் பயன். வேள்வித்தீ உவமம். அது மழைக்குக் காரணமென்பதற்கு ஞாபகமாகவும் உள்ளது. (7) இதுவுமது மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப் பெண்ணிய னல்லாய் பிரிந்தார் வரல்கூறும் தண்ணிய லஞ்சனந் தோய்ந்தபோற் காயாவும் நுண்ணரும் பூழ்த்த புறவு. 8 (ப-ரை.) பெண் இயல் நல்லாய் - பெண் தகைமையை யுடைய நல்லாய், மண் இயல் ஞாலத்து - மண்ணானியன்ற உலகத்து, மன்னும் புகழ் வேண்டி - நிலைபெறும் புகழை விரும்பி, பிரிந்தார்- பிரிந்து சென்ற தலைவர், வரல் - மீண்டு வருதலை, கண் இயல் அஞ்சனம் - கண்ணிற்கு இயற்றப்பட்டமையை, தோய்ந்தபோல் - தோய்ந்தவை போல, காயாவும் - காயாஞ் செடிகளும், நுண் அரும்பு ஊழ்த்த - நுண்ணிய அரும்புகள் மலரப்பேற்ற, புறவு - காடுகள். கூறும் - சொல்லா நிற்கும் எ-று. பெண் இயல் - நாண் முதலியன; ‘அச்சமு நாணு மடனு முந்துறுத்த நிச்சமும் பெண்பாற் குரியவென்ப’ என்று தொல்காப்பியம் கூறுவதுங் காண்க. காயா மலர் அஞ்சனந் தோய்ந்தாற் போலும் என்பதனை, ‘செறியிலைக் காயா அஞ்சன மலர’ என்னும் முல்லைப் பாட்டானும் அறிக. ஊழ்த்தல் - மலர்தல்; ‘இணரூழ்த்து நாறாமலர்’ என்பது திருக்குறள். புறவு பிரிந்தார்வரல் கூறும் என முடிக்க. (8) இதுவுமது கருவிளை கண்மலர்போற் பூத்தன கார்க்கேற் றெரிவனப் புற்றன தோன்றி - வரிவளை முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும் இன்சொற் பலவு முரைத்து. 9 (ப-ரை.) கண்மலர்போல் பூத்தன - கண்மலர் போலப் பூத்தனவாகிய, கருவிளை - கருவிளம்பூக்களும், கார்க்கு ஏற்று - கார்ப்பருவத்திற் கெதிர்ந்து, எரி வனப்பு உற்றன - தீயினது அழகை யுற்றனவாகிய, தோன்றி - தோன்றிப் பூக்களும், வரிவளை முன் கை இறப்ப - வரியையுடைய வளைகள் முன்னங் கையினின்று கழல, இன்சொல் பலவும் உரைத்து - இனிய சொற்கள் பலவும் மொழிந்து, துறந்தார் - பிரிந்து சென்ற தலைவர், வரல் - வருதலை, கூறும் - கூறாநிற்கும் எ-று. கருவிளை - கருங்காக்கணம்பூ; அது கண் போலும் என்பதனைக் ‘கண்ணெனக் கருபிளை மலர’ என்னும் ஐங்குறு நூற்றானு மறிக. தோன்றிப்பூச் செந்நிற ஒளியுடையது; ‘சுடர்ப் பூந்தோன்றி’ என்பது பெருங்குறிஞ்சி, ‘தோடார் தோன்றி குருதி பூப்ப’ என்றார் பிறரும். உரைத்து இறப்பத் துறந்தார் என்க. கருவிளையும் தோன்றியும் துறந்தார் வரல் கூறும் என முடிக்க, (9) இதுவுமது வானேறு வானத் துரற வயமுரண் ஆனேற் றொருத்த லதனோ டெதிர்செறுப்பக் கான்யாற் றொலியிற் கடுமான்றே ரென்றோழி மேனி தளிர்ப்ப வரும். 10 (ப-ரை.) என் தோழி - எனது தோழியே, வான்ஏறு - இடியேறு, வானத்து உரற - முகிலின்கண் நின்று ஒலிப்ப, வய - வலியினையும், முரண் - மாறு பாட்டினையும் உடைய, ஆன் ஏறு ஒருத்தல் - எருமையின் ஆணாகிய ஒருத்தல், அதனோடு - அவ்விடியேற்றுடன்; எதிர் செறுப்ப - எதிராகி வெகுள, கடுமான்தேர் - விரைந்த செலவினையுடைய குதிரை பூட்டப்பட்ட நம் காதலர் தேர், கான் யாற்று ஒலியின் - காட்டாற்றின் ஒலிபோலும் ஒலியினை உடைத்தாய், மேனி தளிர்ப்ப - நின்மேனி தழைக்க, வரும் - வாரா நிற்கின்றது எ-று. வய - வலி; ‘வயவலியாகும்’ என்பது தொல் காப்பியம். ஆன் என்னும் பெயர் எருமைக் குரித்தாதலும் ஒருத்தல் என்னும் பெயர் அதன் ஆணுக்குரித்தாதலும் தொல்காப்பிய மரபியலானறிக; இடபம் எனினும் ஆம். தேரொலி அருவியொலி போலும் என்பதனை ‘அருவியினொலிக்கும் வரிபுனை நெடுந்தேர்’ என்னும் பதிற்றுப்பத்தானும் அறிக. செயவெனெச்சம் முன்னையவிரண்டும் நிகழ்விலும், பின்னையது எதிர்விலும் வந்தன. (10) இதுவுமது புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார் வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும் அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல் பூங்குலை யீன்ற புறவு 11 (ப-ரை) வணர் - குழற்சியையுடைய, ஒலி - தழைத்த, ஐம்பாலாய் - கூந்தலையுடையாய், அணர்த்து எழு - மேனோக்கியெழும், பாம்பின் தலைபோல் - பாம்பினது படத்தைப் போல, புணர் கோடல் - பொருந்திய வெண்காந்தள்கள், பூங்குலை ஈன்ற - பூங்கொத்துக் களை யீன்ற, புறவு - காடுகள், புணர்தரு - (இம்மை மறுமை யின்பங்கள்) பொருந்துதலையுடைய, செல்வம் - பொருளை, தருபாக்கு - கொண்டுவர, சென்றார் - பிரிந்து சென்ற தலைவர், வல் வருதல் - விரைந்து வருதலை, கூறும் - கூறாநிற்கின்றன எ - று. தருபாக்கு - வினையெச்சம், வணர் - வளைவு; ஈண்டுக்குழற்சி. ஒலி - தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை ‘ஒலி நெடும் பீலி’ என்னும் நெடுநல்வாடையடி உரையானறிக. ஐம்பால் - ஐந்து பகுப்பினையுடையது; கூந்தல். ஐந்து பகுப்பாவன; குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடியென்ப. இங்ஙனம் ஒரொவொரு கால் ஒவ்வொரு வகையாக வன்றி, ஓரொப்பனையிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப்படுவது என்று கோடலும் ஆம். ‘வணரொலி யைம்பாலார்’ என இன்னாநாற்பதிலும் இத்தொடர் வந்துள்ளமை காண்க. (11) இதுவுமது மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய் ஐயந்தீர் காட்சி யவர்வருதல் திண்ணிதாம் 1 நெய்யணி குஞ்சரம் போல விருங்கொண்மூ வைகலு மேரும் வலம். 12 (ப-ரை) மை எழில் - கருமையும் அழகும் பொருந்திய, உண் கண் - மையுண்ட கண்களையுடைய, மயில் அன்ன சாயலாய் - மயில் போலும் சாயலினை யுடையாய்; நெய் அணி குஞ்சரம்போல - எண்ணெய் பூசப்பட்ட யானைகள்போல, இருங்கொண்மூ - கரிய மேகங்கள், வைகலும் - நாடோறும், வலம் வரும் - வலமாக எழாநின்றன; (ஆதலால்) ஐயம் தீர் காட்சி - ஐயந்தீர்ந்த அறிவினையுடைய, அவர் - நம் தலைவர், வருதல் திண்ணிது - மீள வருதல் உண்மை எ - று. சாயல் - மென்மை; உரிச்சொல் ஐயந்தீர்ந்த எனவே திரிபின்மையும் பெற்றாம். காட்சி - அறிவு. காட்டியவர் எனக் குறிப்புவினைப் பெயராக்கலும் ஒன்று பொய் உள்ளீடில்லாததாகலின் உண்மையைத் ‘திண்ணிது’ என்றார். ஆம் - அசை. இருமை - கருமை; பெருமையுமாம். ஏர்தல் - எழுதல்; ‘பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு’ என்பது முல்லைப் பாட்டு. (12) இதுவுமது ஏந்தெழி லல்குலா யேமார்ந்த 1 காதலர் கூந்தர் வனப்பிற் பெயறாழ - வேந்தர் களிறெறி வாளரவம் போலக்கண் வெளவி ஒளிறுபு மின்னு மழை. 13 (ப-ரை) எழில் - அழகினையுடைய, ஏந்து அல்குலாய் - ஏந்திய அல்குலையுடையாய், ஏம் ஆர்ந்த காதலர் - தம் தலைவரொடு கூடி இன்பந் துய்த்த மகளிரின், கூந்தல் - சரிந்த கூந்தலினது, வனப்பின் - அழகு போல, பெயல் தாழ - மழை பெய்ய, மழை - முகில், வேந்தர் களிறு எறி - அரசர்யானையை வெட்டி வீழ்த்துகின்ற, அரவம் - ஒலியினையுடைய, வாள் போல - வாளினைப்போல, கண் வெளவி- கண்களைக் கவர்ந்து, ஒளிறுபு - ஒளிவிட்டு, மின்னும் - மின்னா நின்றது; (ஆதலால் நம் காதலர் வருவர்) எ - று. ஏம் - ஏமம்; சிடைக்குறை காதலர் - ஈண்டு மகளிரை உணர்த்திற்று. ‘அரவம்’ என்றமையால் மழைக்கு முழக்கம் வருவித்துக் கொள்ளப்படும். மழையின் மின்னுக்கு வாள் உவமமாதலை ‘அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்செய லாடவர், கழித்தெறி வாளி னழிப்பன விளங்கு, மின்னுடைக் கருவியை யாகி நாளுங், கொன்னே செய்தியோ அரவம் - மழையே’ என்னும் அகப்பாட்டானும் அறிக. கண் வெளவல் - கண்வழுக்குறச் செய்தல். ஒளிறுபு - செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். காதலர் வருவரென்பது வருவிக்கப்பட்டது. (13) இதுவுமது செல்வந் தரல்வேண்டிச் சென்றநங் காதலர் வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய் முல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார் மெல்ல வினிய நகும். 14 (ப-ரை) வயங்கிழாய் - விளங்காநின்ற அணிகளையுடையாய், முல்லை - முல்லைக்கொடிகள், இலங்கு - விளங்குகின்ற, எயிறுஈன - மகளிரின் பற்களைப் போலும் அரும்புகளை ஈனும் வகை, நறு தண்கார் - நல்ல குளிர்ந்த மேகம், மெல்ல இனிய நகும்- மெல்ல இனியவாக மின்னாநின்றன; (ஆதலால்) செல்வம் தரல்வேண்டி - பொருள் தேடிக்கொள்ளுதலை விரும்பி, சென்ற- பிரிந்து சென்ற, நம் காதலர் - நமது தலைவர், வல்லே வருதல் - விரைந்து வருதலை, தெளிந்தாம் - தெளிய அறிந்தாம் எ - று வல்லே என்பதில் ஏகாரம் அசை; தேற்றமும் ஆம். தெளிந்தாம் - உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. எயிறு போலும் அரும்பினை எயிறென்றார். ‘முல்லையெ யிறீன’ என்பது ஐந்திணையெழுபது. நறு - நல்ல; இஃதிப்பொருட்டாதலைப் ‘பொலனறுந் தெரியல்’ என்பதானும் அறிக. (14) இதுவுமது திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர் குருந்தின் குவியிண ருள்ளுறை யாகத் திருந்தி னிளிவண்டு பாட விருந்தும்பி இன்குழ லூதும் பொழுது. 15 (ப-ரை) திருந்திழாய் - திருந்திய அணிகளை யுடையாய், குருந்தின் - குருந்த மரத்தின், குவி இணர் உள் - குவிந்த பூங் கொத்துக்களின் உள்ளிடமே, உறை ஆக - தமக்கு உறையிடமாக இருந்து, திருந்து இன் இளி - திருந்திய இனிய இளியென்னும் பண்ணை, வண்டுபாட - வண்டுகள் பாட, இரும் தும்பி - கரிய தும்பிகள், இன்குழல் ஊதும்பொழுது - இனிய குழலை ஊதா நிற்கும் இக்காலத்தில், காதலர் - நம் தலைவர், தீர்குவர் அல்லர் - நம்மை நீங்கியிருப்பாரல்லர் எ - று. திருந்து இழை என்னும் இரு சொல்லும் தொக்க வினைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைப் பெயர் விளி யேற்றுத்திருந்திழாய் என்றாயது; வயங்கிழாய் போல்வனவும் இன்ன. உறை என்னும் முதனிலைத் தொழிற்பெயர் உறையும் இடத்திற்காயிற்று; உள்ளுறை என்பதனை உறையுள் என மாறுதலும் ஆம். இளி - பஞ்சம சுரம். ‘குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, மயிலாடரங்கின் மந்திகாண் பன காண்’ என்பது மணிமேகலை. (15) இதுவுமது கருங்குயில் கையற மாமயி லாலப் பெருங்கலி வான முரறும் - பெருந்தோள் 1செயலை யிளந்தளி ரன்னநின் மேனிப் பசலை பழங்கண் கொள. 16 (ப-ரை) பெருந்தோள் - பெரிய தோளினை யுடையாய், செயலை - அசோகினது, இளந்தளிர் அன்ன - இளந்தளிர் போன்ற, நின்மேனி - உன் உடம்பினது, பசலை - பசலையானது, பழங்கண் கொள - மெலிவு கொள்ளவும், கருங்குயில் - கரிய குயில்கள், கையற- செயலற்றுத் துன்பமுறவும், மா மயில் - பெரிய மயில்கள், ஆல - களித்து ஆடவும், பெருங் கலிவானம் - பெரிய ஒலியையுடைய முகில்கள், உரறும் - முழங்காநிற்கும் எ - று. கையறல் - ஈண்டுக் கூவாதொடுங்குதல்; கார் காலத்தில் குயில் துன்புறலும் மயில் இன்புறலும் இயற்கை. ஆல - அகல; ஆட. பசலை - காதலர்ப் பிரிந்தார்க்கு உளதாகும் நிறவேற்றுமை. பழங்கண் - மெலிவு; ‘பழங்கணும் புன்கணும்’ மெலிவின் பால’ என்பது திவாகரம். *பசலை பழங்கண் கொள என்றது தலைவர் வருகையால் தலைவி மகிழ்ச்சியுற என்றபடி. (16) இதுவுமது அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப் பறைக்குர லேறொடு பௌவம் பருகி உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை கொண்டன்று பேதை நுதல். 17 (ப-ரை) பேதை - பேதாய், வானம் - மேகமானது, பௌவம் பருகி - கடல் நீரைக் குடித்து, பறைக்குரல் ஏறொடு - பறையொலி போலும் ஒலியையுடைய இடியேற்றாலே, பாம்புசவட்டி – பாம்பு களை வருத்தி, அறைக்கல் - பாறைக் கற்களையுடைய, இறுவரை மேல் - பக்க மலையின்மேல், உறைத்து - நீரைச்சொரிந்து; இருள் கூர்ந்தன்று - இருள்மிக்கது; (ஆதலால்) நுதல் - உனது நெற்றி, பிறைத்தகை - பிறை மதியின் அழகை, கொண்டன்று - கொண்டதே எ - று. இறுவரை - பக்கமலை சவட்டி - வருத்தி; ‘மன்பதை சவட்டுங் கூற்றம்’ எனப் பதிற்றுப்பத்திலும் இச்சொல் இப்பொருளில் வந்துள்ளமை காண்க; இது ‘கடிசொல்லில்லைக் காலத்துப் படினே’ என்பதனாற் போந்தது. பௌவம் - ஆகுபெயர். உறைத்தல்- துளித்தல்; சொரிதல். கூர்ந்தன்று - கூர் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த உடம்பாட்டு வினை முற்று. இருள் கூர்ந்தன்று - ஒரு சொல்லாய் வானம் என்னும் எழுவாய்க்கு முடிபாயிற்று. (17) இதுவுமது கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே நல்லிசை யேறொடு வான் நடுநிற்பச் செல்வர் மனம்போற் கவினீன்ற நல்கூர்ந்தார் மேனிபோற் புல்லென்ற காடு. 18 (ப-ரை) கல்பயில் - மலைநெருங்கிய, கானம் கடந்தார் - காட்டைக் கடந்து சென்ற தலைவர், வர - வரும்வகை, ஆங்கே - அவர் வருங்காலம் வந்த பொழுதே, வானம் - மேகங்கள், நல்இசை - மிக்க ஒலியையுடைய, ஏறொடு - உருமேற்றுடனே, நடுநிற்ப - நடுவுநின்று எங்கும் பெய்தலால், நல்கூர்ந்தார் மேனிபோல் - வறுமையுற்றார் உடம்புபோல, புல்லென்ற - (முன்பு) பொலி விழந்த, காடு - காடுகள், செல்வர் மனம் போல் - பொருளுடையார் மனம் போல, கவின் ஈன்ற - அழகைத் தந்தன எ - று. நல் - ஈண்டு மிக்க என்னும் பொருளது; ‘நன்று பெரிதாகும்’ என்னும் தொல்காப்பியச் சூத்திரம் இங்கு நோக்கற்பாலது. கடந்தார் வர ஆங்கே வானம் நடுநிற்பக் காடு கவினீன்ற என வினைமுடிவு செய்க; வர நடுநிற்ப ஆங்கே கவினீன்ற என முடிப்பினும் அமையும். (18) வினைமுற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது. நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச் செங்கான் மராஅந் தகைந்தன - பைங்கோற் றொடிபொலி முன்கையாள் தோடுணையாவேண்டி நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு. 19 (ப-ரை) நாஞ்சில் வலவன் - கலப்பைப் படை வென்றியை யுடையவனது, நிறம்போல - வெண்ணிறம் போல, பூஞ்சினை - பூங்கொம்பினையும், செங்கால் - செவ்வியதாளினையு முடைய, மராஅம் - வெண் கடம்புகள், தகைந்தன - மலர்ந்தன; (ஆதலால்) என் நெஞ்சு - என் மனம், பைங்கோல் தொடி - பசுமையாகிய திரண்ட வளைகள், பொலி - விளங்குகின்ற, முன்கையாள் - முன்னங்கையையுடையாளின், தோள் - தோள்கள், துணையா வேண்டி - எனக்குத் துணையாக வேண்டி, நெடு இடைச் சென்றது - நெடிய காட்டுவழியைக் கடந்து சென்றது எ - று. நாஞ்சில் வலவன் - பலராமன்; அவன் வெண்ணிற முடைய னென்பதனையும், கலப்பைப் படையால் வெற்றியுடைய னென்பதனையும் ‘கடல்வளர் புரிவளை புரையுமேனி, அடல்வெந் நாஞ்சிற் பனைக் கொடி யோனும்’ என்னும் புறப்பாட்டானு மறிக. மராஅம் - வெண்கடம்பு; ‘செங்கான் மரா அத்தவாலிணர்’ என்னும் திருமுருகாற்றுப்படையானும் மராஅம் செங்காலும் வாலிணரு முடைத்தாதல் காண்க. ‘ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்’ எனப் பாலைக்கலியிலும் வெண் கடம்பின் பூங்கொத்திற்குப் பலராமன் உவமை கூறப்பட்டிருத்தல் ஓர்க. தகைதல் - மலர்தல்; இஃதிப் பொருட்டாதலைப் ‘பிடவுமுகை தகைய’ (ஐங்குறுநூறு) என்புழிக் காண்க. நெடுவிடைக்கு முன்புரைத்தாங் குரைத்துக் கொள்க. (19) இதுவுமது வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன ஆறும் பதமினிய வாயின - ஏறோ டருமணி நாக மனுங்கச் செருமன்னர் சேனைபோற் செல்லு மழை. 20 (ப-ரை) வீறுசால் - சிறப்பமைந்த, வேந்தன் - அரசனுடைய, வினையும் - போர்த்தொழில்களும், முடிந்தன - முற்றுப்பெற்றன; ஆறும் - வழிகளும், பதம் இனிய ஆயின - செவ்வி யினியவாயின; மழை - மேகங்கள், அருமணி - அரிய மணியை யுடைய, நாகம் - பாம்புகள், அனுங்க - வருந்தும் வகை, ஏறொடு - உருமேற்றுடனே, செருமன்னர் சேனை போல் - போர்புரியும் வேந்தரின் சேனை போல, செல்லும் - செல்லாநிற்கும்; (ஆதலால் நாம் செல்லக் கடவேம்) எ - று. இடியோசையால் நாகம் வருந்துதலை ‘விரிநிற நாகம் விடருளதேனும்; உருமின்கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்’ என்னும் நாலடியானறிக. ‘முதிர்மணி நாக மனுங்க முழங்கி’ என்னும் திணைமொழியைம்பதும் ஈண்டு நோக்கற்பாலது. அணியணியாய் விரைந்து சேறலும் முழங்கலும் அம்பு சொரிதலும் பற்றிச் சேனை உவமமாயிற்று. (20) இதுவுமது பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே சிறுமுல்லைப் போதெல்லாஞ் செவ்வி - நறுநுதற் செல்வ மழைத்தடங்கட் சின்மொழிப் பேதைவாய் முள்ளெயி றேய்ப்ப வடிந்து 21 (ப-ரை) பொறிமாண் - எந்திரச் செய்கைகளான் மாட்சி மைப்பட்ட, புனை திண் தேர் - அலங்கரிக்கப்பட்ட திண்ணிய தேர், போந்த வழியே - வந்த வழியிதே, சிறு முல்லைப் போது எல்லாம் - சிறிய முல்லையின் அரும்புகளெல்லாம், வடிந்து - கூர்மையுற்று, செவ்வி நறுநுதல் - செவ்விய அழகிய நெற்றியையும், செல்வ மழைத் தடங்கண் - வளப்பமான மழைபோற் குளிர்ந்த அகன்ற கண்களையும், சில்மொழி - சிலவாகிய மொழியினையு முடைய, பேதைவாய் - மடவாளது வாயின்கண் உள்ள, முள் எயிறு- கூரிய பற்களை, ஏய்ப்ப - ஒவ்வாநிற்கும் எ - று. சின்மொழி - மெல்லிய மொழியுமாம், ‘முள்ளெயி றொக்க வடிவு பட்டு’ என்று பொருளுரைத்து, ‘நின்றது’ என்னும் பயனிலை தொக்கது என்றுரைப்பர் பழைய வுரைகாரர். இப்பொருளில் ‘ஏய்ப்ப’ என்பது வினையெச்சம். (21) இதுவுமது இளையரு மீர்ங்கட் டயர வுளையணிந்து புல்லுண் கலிமாவும் பூட்டிய - நல்லார் இளநலம் போலக் கவினி வளமுடையார் ஆக்கம்போற் பூத்தன காடு. 22 (ப-ரை) இளையரும் - சேவகரும், ஈர்ங்கட்டு அயர - குளிர் காலத்திற்குரிய உடையினை உடுக்க, உளை அணிந்து – தலை யாட்டம் அணிந்து, புல்உண் - புல்லினையுண்ட, கலிமாவும் - மனஞ் செருக்கிய குதிரையையும், பூட்டிய - தேருடன் பூட்டு தலைச் செய்ய, காடு - காடுகள், நல்லார் - நற்குணமுடைய மகளிரின், இள நலம் போல - இளமைச் செவ்விபோல, கவினி - அழகுற்று, வளம் உடையார் - வருவாயுடையாரது, ஆக்கம் போல் - செல்வம்போல, பூத்தன - பொலிவுற்றன எ - று. இளையர் - சேவகர்; ஏவலாளர் ஈர்ங்கட்டயர என்பதற்கு அழகிதாகக் கட்டியுடுத்தலைச் செய்ய என்றனர் பழையவுரை காரர். உளை - தலையாட்டம்; சாமரை யெனவும்படும்; இது கவரிமான் மயிராற் செய்து குதிரையின் தலையிலணியப்படுவது. பூட்டிய - செய்யிய என்னும் வினையெச்சம். இளநலம் என்புழி நலம் வடிவுமாம். வளம் வருவாயாதலை ‘வளத்தக்காள் வாழ்க்கைத் துணை’ என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையானறிக. பூத்தல் - பொலிதல்; மலர்தலுமாம். (22) தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது. கண்டிரண் முத்தங் கடுப்பப் புறவெல்லாந் தண்டுளி யாலி புரளப் புயல்கான்று கொண்டெழில் வானமுங் கொண்டன் றெவன் கொலோ ஒண்டொடி யூடு நிலை 23 (ப-ரை) ஒண்டொடி - ஒள்ளிய வளைகளை யணிந்தவளே, புறவு எல்லாம் - காடெங்கும், கண்திரள் முத்தம் கடுப்ப - இடந் திரண்ட முத்தையொப்ப, தண்துளி - குளிர்ந்த நீர்த்துளிகளும், ஆலி- ஆலங்கட்டிகளும், புரள - புரளும் வகை, புயல் - மேகம், கான்று கொண்டு - மழை பொழிந்து கொண்டு, எழில் - அழகினையுடைய, வானமும் கொண்டன்று - வானத் திடத்தையெல்லாம் கொண்டது; (ஆதலால்) ஊடு நிலை - பிணங்குந்தன்மை, எவன்கொல் - எற்றுக்கு எ-று. கண்டிரள் முத்தம் என்றது மேனி திரண்ட முத்தம் என்றபடி - அகத்திலும், பிறாண்டும் ‘கண்டிரண் முத்தம்’ என வருதலுங் காண்க. கொல் ஓ - அசைநிலை. தலைவர் வருவர்; இனிப் பிணங்குதல் வேண்டா என்பது குறிப்பு. (23) வினைமுற்றிய தலைமகன் நெஞ்சோடு சொல்லியது எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே கல்லோங்கு கானங் களிற்றின் மதநாறும் பல்லிருங் கூந்தல் பணிநோனாள் கார்வானம் 1மெல்லவுந் தோன்றும் 2பெயல் 24 (ப-ரை) கல் ஓங்குகானம் - முலைகள் உயர்ந்த காடுகள், களிற்றின் மதம் நாறும் - யானையின்மதம் நாறாநிற்கும்; கார் வானம் - கரிய வானத்தின்கண், பெயல் - மழை, மெல்லவும் தோன்றும் - மென்மை யாகத் தோன்றாநிற்கும்; (ஆதலால்) பல் இருங் கூந்தர் - பலவாகிய கரிய கூந்தலையுடையவள், பணிநோனாள் - ஆற்றியிருத்தற்கு நான் கூறிய சொல்லை இனிப்பொறுக்கமாட்டாள்; நெஞ்சே - மனமே, எல்லா வினையும் கிடப்ப - எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க; எழு - நீ போதற்கு ஒருப்படு எ - று. கிடப்ப - வியங்கோள்; வினையெச்சமாகக் கொண்டு கிடக்கும் வகை எனப் பொருளுரைத் தலுமாம். களிற்றின் மதம் நாறும் என்றது கார் காலத்தில் பிடியுடன் இயைந்தாடுதலான் என்க. பணி - பணித்த சொல். எல்லியும் என்று பாடமாயின் இரவிலும் எனப் பொருள் கொள்க. (24) பருவங்கண்டழிந்த தலைமகன் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது. கருங்கால் வரகின் பொரிப்போ லரும்பவிழ்ந் தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று கூர்ந்த பசலை யவட்கு 25 (ப-ரை) ஈர்ந்தண் புறவில் - குளிர்ச்சி மிக்க காட்டில், கருங்கால் வரகின் பொரிபோல - கரிய தாளினை யுடைய வரகினது பொரியைப்போல, தெறுழ்வீ - தெறுழினது மலர்கள், அரும்பு அவிழ்ந்து மலர்ந்தன - அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தன; செய்குறி சேர்ந்தன - (தலைவர்) செய்த குறிகள் வந்துவிட்டன; (ஆதலால்) அவர் வாரார் என்று - தலைவர் இனி வரமாட்டாரென்று, அவட்கு - தலைவிக்கு, கூர்ந்த - பசலை மிக்கது எ - று. ஈர்ந்தண் - ஒரு பொருளிருசொல். தெறுழ்: காட்ட கத்த தொரு கொடி. கூர்ந்தது என்பதில் ஈறு கெட்டது. (25) தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது. 26. நலமிகு கார்த்திகை நாட்ட வரிட்ட தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப் புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி 1 தூதொடு வந்த மழை. 26 (ப-ரை) சிலமொழி - சிலவாகிய மொழியினை யுடையாய், தோன்றி - தோன்றிப்பூக்கள், நலம்மிகு கார்த்திகை - நன்மை மிக்க கார்த்திகைத் திருவிழாவில், நாட்டவர் இட்ட - நாட்டிலுள்ளோர் கொளுத்தி வைத்த, தலைநாள் விளக்கின் - முதல் நாள் விளக்கைப் போல், தகை உடையவாகி - அழகுடையனவாகி, புலம் எலாம் - இடமெல்லாம், பூத்தன - மலர்ந்தன; மழை தூதொடு வந்த - மழையும் தூதுடனே வந்தது எ - று. கார்த்திகை நாளில் நீரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டை நாள் தொட்டுள்ளது; ‘குறு முயன் மறுநிறங் கிளர மதிநிறைந், தறுமீன் சேரு மகலிருணடு நாண், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப், பழவிறன் மூதூர்ப் பலருடன் றுவன்றிய, விழவுடனயர வருகதிலம்ம’ அகநானூற்றிலும், ‘கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கு’ எனக் களவழிநாற்பதிலும், துளக்கில் கபாலீச் சுரத்தான்றொல் கார்த்திகைநாள் . . . . . . விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்’ எனத் தேவாரத் திலும், ‘குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன’ எனச் சிந்தாமணியிலும் இத்திருவிழாக் கூறப்பெற்றமை காண்க. தலைநாள் - திருவிழாவின் முதல் நாளாகிய கார்த்திகை; நலமிகு கார்த்திகை என்பதனைக் கார்த்திகைத் திங்கள் எனக் கொண்டு, தலைநாள் என்பதனை அத்திங்களிற் சிறந்த நாளாகிய கார்த்திகை எனக் கொள்ளலும் ஆம்; முன்பு நாட்கள் கார்த்திகை முதலாக எண்ணப் பட்டவாகலின் தலைநாள் என்றார் எனலுமாம். வந்த - ‘கூர்ந்த’ என்புழிப்போல் ஈறு கெட்டது. (26) ஊடுதலாற் பசலைமிகும் எனத் தோழி தலைமகட்குக் கூறி வற்புறுத்தது. முருகியம்போல் வான முழங்கி யிரங்கக் குருகிலை பூத்தன கானம் - பிரிவெண்ணி உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்டப் 2 பள்ளியுட் பாயும் பசப்பு. 27 (ப-ரை) வானம் - மேகம் முருகியம்போல் - குறிஞ்சிப் பறைபோல், முழங்கி இரங்க - முழங்குதலைச் செய்ய, கானம் - காட்டின்கண், குறுகுஇலை பூத்தன - குருக்கத்தியிலை விரிந்தன; பிரிவு எண்ணி - (நம் காதலர்) பிரிதலை நன்றென்று நினைத்து, உள்ளாது அகன்றார் என்று - நம் வருத்தத்தைக் கருதாது சென்றார் என்று, ஊடுயாம் பாராட்ட - நாம் ஊடுதலைப் பாராட்டுவதால், பசப்பு - பசலைநோய், பள்ளியுள் பாயும் - படுக்கை யிடத்தில் பரவும் எ - று. முருகு இயம் - குறிஞ்சிப் பறை விசேடம்; முருகனுக்கு இயக்கப்படுவது; தொண்டகம், துடி என்பனவும் குறிஞ்சிப் பறைகள். முழங்கி இரங்க - ஒரு பொருளிருசொல். குருகு குருக்கத்தி; முருக்கென் பாரும் உளர். இலையென்றமையால் பூத்தலாவது தழைத்தல் எனக் கொள்க. ஊடு - முதனிலைத் தொழிற் பெயர் இகரம் சந்தியால் வந்தது. பள்ளியுட்பாயும் என்றது படுக்கையிற் கிடக்கச் செய்யும் என்னும் குறிப்பிற்று. (27) வினைமுற்றிய தலைமகன் நெஞ்சொடு சொல்லியது இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப் 1 பொன்செய் குழையிற் றுணர்தூங்கத் தண்பதஞ் செவ்வி யுடைய சுரநெஞ்சே காதலியூர் கவ்வை யழுங்கச் செலற்கு 28 (ப-ரை) இமிழ் இசை - ஒலிக்கும் இசையினை யுடைய, வானம் - முகில், முழங்க - முழங்குதலைச் செய்ய, குமிழின் பூ - குமிழின் பூக்கள், பொன் செய் குழையின் - பொன்னாற் செய்யப்பட்ட குழைபோல், துணர் தூங்க - கொத்துக்களாய்த் தொங்க, நெஞ்சே - மனமே, காதலி ஊர் - நம் காதலியது ஊருக்கு, கவ்வை அழுங்க - அலர் கெடும் வகை, செலற்கு - நாம் செல்வதற்கு,சுரம் - காடுகள், தண்பதம் செவ்வி உடைய - குளிர்ந்த பதமும் செவ்வியும் உடைய வாயின எ - று. இமிழ் இசை - இனிய இசையுமாம். சுரம் - காடு; அரு நெறியுமாம். கவ்வை அலர்; ஊரார் கூறும் பழி மொழி. அழுங்கல்- வருந்துதல்; ஈண்டு இலவாதல். (28) இதுவுமது பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத் தகைவண்டு பாண்முரலுங் கானம் - பகை கொண்ட லெவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாஞ் செவ்வி யுடைய சுரம். 29 (ப-ரை) பொங்கரும் - சோலைகளெல்லாம், ஞாங்கர் - பக்கங்களில், மலர்ந்தன - பூத்தன; கானம் - காட்டின் கண்ணே, தங்கா - தங்குதலின்றித் திரியும், தகை வண்டு - அழகையுடைய வண்டுகள், பாண்முரலும் - இசைப்பாட்டைப் பாடா நின்றன; பகை கொண்டல் - பகைத் தெழுந்த மேகம், எவ்வெத்திசைகளும் - எல்லாத் திசைக்கண்ணும், வந்தன்று - வந்தது; சுரம் - காடுகளும், செவ்வி உடைய - தட்பமுடையவாயின; (ஆதலால்) நாம் சேறும் - நாம் செல்லக்கடவேம் எ - று. பொங்கர் - இலவுமாம். பகைகொண்டல் - வினைத் தொகை. சேறும் என்றது நெஞ்சை உளப்படுத்தி; தேர்ப்பாகற்குக் கூறியதுமாம். (29) இதுவுமது வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந் திருநிலந் தீம்பெய றாழ - விரைநாற 1 ஊதை யுளரு நறுந்தண்கா பேதை பெருமட நம்மாட் டுரைத்து 30 (ப-ரை) வரைமல்க - மலைகள் வளம் நிறைய, வானம் சிறப்ப- வானகம் சிறப்பெய்த, இருநிலம் - பெரியபூமியை, உறை போழ்ந்து - துளிகளால் ஊடறுத்து, தீம்பெயல் தாழ - இனிய மழை வீழாநிற்க, விரை நாற - நறுமணம் கமழா நிற்க, ஊதை - காற்றானது, பேதை பெருமடம் - காதலியது பெரிய மடப்பத்தை, நம்மாட்டு உரைத்து - நமக்குத் தெரிவித்து, நறுந்தண் கா - நறிய குளிர்ந்த சோலையில், உளரும் - அசையாநிற்கும் (ஆதலால் நீ விரையத் தேரைச் செலுத்துவாய்) எ - று. உறை - நீர்த்துளி; மூன்றன்தொகை. ஊதை - குளிர் காற்று. உளர்தல் - அசைதல்; பேதை பெருமடம் - தலைவர்வாராரென்று கருதி வருந்தியிருக்கும் தலைவியது அறியாமை. (30) வினைமுற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது. கார்க்சே ணிகந்த கரை மருங்கி னீர்ச்சேர்ந் தெருமை யெழிலே றெறிபவர் சூடிச் செருமிகு மள்ளரிற் செம்மாக்குஞ் செவ்வி திருநுதற் கியாஞ்செய் குறி 31 (ப-ரை) எருமை எழில் ஏறு - எருமையினது எழுச்சியையுடைய ஆண், கார்ச்சேண் இகந்த - மேகத்தையுடைய வானின் எல்லையைக் கடந்து உயர்ந்த, கரை மருங்கின் - கரையின் பக்கத்திலுள்ள, நீர்ச்சேர்ந்து – நீரை யடைத்து, எறி - எறியப்பட்ட, பவர் - பூங்கொடிகளை, சூடி - சூடிக்கொண்டு, செருமிகு மள்ளரில் - போரின்கண் மறமிக்க வீரரைப் போல, செம்மாக்கும் செவ்வி - இறுமாந்திருக்கும் காலமே, திருநுதற்கு - அழகிய நெற்றியை யுடையாளுக்கு, யாம் செய்குறி - நாம் மீள்வதற்குச் செய்த குறியாகும்; (ஆதலால் விரைந்து தேர் செலுத்துவாய்) எ - று. சேண் - ஆகாயம்; தூரமும் ஆம். எழில் - அழகுமாம். எறி - துணித்த எனினும் பொருந்தும். பவர் - கொடி, ‘அரிப்பவர்ப் பிரம்பின்’ எனக் குறுந்தொகையும், ‘நெடுங்கொடியுழிஞைப் பவரொடு மிடைந்து, எனப் புறநானூறும் கூறுதல் காண்க. மள்ளர்- வீரர்; போர்வீரர் வெட்சி, வஞ்சி முதலிய மாலைகளைச் சூடித் தருக்கி யிருக்குமாறு போலக் கடாக்கள் பூங்கொடிகளைச் சூடிக் கொண்டு தருக்கியிருக்கும் என்க. ‘மள்ளரன்ன தடங் கோட்டெருமை, மகளிரன்ன துணையொடு வதியும்’ (ஐங்குறுநூறு) என்றார் பிறரும். குற்றியலிகரம் அலகு பெறாதாயிற்று. (31) இதுவுமது கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற் படாஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம் பிடாஅப் பெருந்தகை நற்கு 32 (ப-ரை) கெடாப் புகழ்வேட்கை - அழியாத புகழை விரும்பு கின்ற, செல்வர் மனம்போல் - செல்வரது மனத்தைப் போல, படா மகிழ் வண்டு - கெடுதலில்லாத மகிழ்ச்சியையுடைய வண்டுகள், கானம் - காட்டின்கண், பிடா - பிடவமாகிய, பெருந்தகை - பெருந்தகையாளிடத்து, நன்கு - நன்றாக, பாண்முரலும் – இசைப் பாட்டினைப் பாடாநிற்கும்; பாக - பாகனே, கார் ஓடக் கண்டு - மேகம் ஓடுதலைக் கண்டு, தேர் கடாவுக - தேரை விரையச் செலுத்துவாயாக எ - று. இப்பாட்டு நான்கடியிலும் முதற்கண் அளபெடை வந்தன; கடாவுக என்று பாட மோதுவாருமுளர். கார் ஓட என்றமையால் மேகத்தின் விரைந்த செலவு குறிப்பித்தவாறு; ‘கொடுஞ் செலவெழிலி’ என்றார் பிறரும். புகழை விரும்பும் செல்வர் மனம் மகிழ்ச்சி நிறைந்திருக்கு மென்க. பிடவம் - ஒரு செடி; வள்ளன்மை யுடையாரிடத்துப் பாண் மக்கள் பரிசில் கருதிப்பாடுமாறு போலப் பிடவத்தினிடத்துத் தேன் கொளக் கருதிய வண்டுகள் பாடினவென் றுரைக்கப் பட்டது. பெருந்தகை என்புழி ஏழனுருபு தொக்கு நின்றது. நற்கு - வலித்தல் விகாரம். (32) இதுவுமது கடனீர் முகந்த கமஞ்சூ லெழிலி குடமலை யாகத்துக் கொள்ளப் பிறைக்கும் 1 இடமென வாங்கே குறிசெய்தேம் பேதை மடமொழி யெவ்வங் கெட 33 (ப-ரை) கடல்நீர் முகந்த - கடலினது நீரை முகந்த, கமம் சூல் எழிலி - நிறைந்த சூலினையுடைய மேகம், குடமலை ஆகத்து - மேற்குமலையிடத்து, கொள் அப்பு இறைக்கும் - தான் கொண்ட நீரினைச் சொரியும், இடம் என - சமய மென்று, ஆங்கே - அப்பொழுதே, பேதை - பேதையாகிய, மடமொழி - மடப்பத்தினையுடைய மொழியையுடையாளது, எவ்வம் கெட - வருத்தம் நீங்க, குறி செய்தேம் - (மீளுங் காலத்திற்குக்) குறி செய்தேம்; (ஆதலால் தேரினை விரையச் செலுத்துக) எ - று. சூல் போறலின் நீர் சூலெனப்பட்டது; ‘கார் கோண் முகந்த கமஞ்சூன் மாமழை’ என்பது திருமுருகாற்றுப்படை. ஆகம் - அகம் என்பதன் நீட்டல்; மார்பு எனினும் ஆம். கொள்ளப் பிறக்கும் என்பது பாடமாயின் தாரை கொள்ளத் தோன்றும் எனப் பொருளுரைக்கப்படும்; பிறவாறுரைத்தல் பொருந்து மேற் கொள்க. இடம், ஆங்கு என்பன காலத்தை உணர்த்தின. (33) பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப் பெருவிறல் வானம் பெருவரை சேருங் கருவணி காலங் குறித்தார் திருவணிந்த ஒண்ணுதல் மாதர் திறத்து. 34 (ப-ரை) பெருவிறல் வானம் - மிக்க பெருமையை யுடைய மேகம், விரிதிரை வெள்ளம் - விரிந்த அலையை யுடைய கடலினது நீரை, வெறுப்பப் பருகி - நிறைய உண்டு, பெருவரை சேரும் - பெரிய மலையை அடையா நிற்கும், கரு அணி காலம் - கருக்கொள்ளுங் காலத்தை, திரு அணி - தெய்வவுத்தியென்னும் தலைக் கோலத்தை யணிந்த, ஒள்நுதல் - ஒள்ளிய நெற்றியை யுடைய, மாதர் திறத்து - காதலியிடத்து, குறித்தார் - (தலைவர் தாம் மீண்டுவருங் காலமாகக்) குறிப்பிட்டார் எ -று. வெறுத்தல் - செறிதல், நிறைதல்; உரிச்சொல். கெடுப்பதும் எடுப்பதும் ஆகிய எல்லாம் வல்லது மழை யாகலின் ‘பெருவிறல் வானம்’ என்றார். கருஅணி காலம் - மழை சூற்கொள்ளும் கார்காலம். திரு - சீதேவி என்னுந் தலையணி; இது தெய்வ வுத்தியென்றுங் கூறப்படும்; ‘தெய்வவுத்தியொடு வலம்புரி வயின் வைத்து’ என்பது திருமுருகாற்றுப்படை. (34) இதுவுமது 1சென்றநங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர வென்றி முரசி னிரங்கி யெழில்வானம் நின்று மிரங்கு மிவட்கு. 35 (ப-ரை) சென்ற நம் காதலர் - வினைவயிற் பிரிந்து சென்ற நம் தலைவர், சேண் இகந்தார் என்று எண்ணி - நெடுந்தூரத்தைக் கடந்து சென்றதால் வருந்திய பசப்பு நோயுடனே, இடும்பை பல கூர - பல துன்பங்களும் மிகப்பெறுதலால், இவட்கு - இவள் பொருட்டு, எழில்வானம் - எழுச்சியையுடைய முகில்,வென்றி முரசின் இரங்கி- வெற்றியை யறிவிக்கும் முரசின் ஒலியைப்போல இடித்து, நின்றும் - வானின்கண் இருந்தும், இரங்கும் - பரிவுறாநிற்கும் எ -று. முரசின் என்பதில் இன் உவமப்பொருவு. நின்றும் என்பதற்குச் சலியாது நின்று என்று பொருள் கூறுவாருமுளர். வானின்கண் உள்ள மேகமும் இரங்கு மியல்பினாள் திறத்துத் தலைவர் இரங்கி வாராதது என்னை யென்றபடி. (35) வினைமுற்றி மீளுந் தலைமகன் பாகற்குச் சொல்லியது. சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப ஈர்ந்தண் டளவந் தகைந்தன - சீர்த்தக்க செல்வ மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர் நல்விருந் தாக நமக்கு. 36 (ப-ரை) ஈர் தண் - குளிர்ச்சி மிக்க, தளவம் - செம்முல்லைப் பூக்கள், சிரல் - சிச்சிலிக் குருவியின், வாய் - வாய் போலும், வனப்பின ஆகி - அழகுடை யனவாகி, நிரல் ஒப்ப - வரிசை பொருந்த, தகைந்தன - அரும்பின; (ஆதலால் இப்பொழுது) சீர்த்தக்க - சிறந்த, செல்வம் - செல்வத்தையுடைய, மழை மதர்க்கண் - மழைபோற் குளிர்ந்த மதர்த்த கண்களையும், சில் மொழி - சிலவாகிய மொழியினையு முடைய, பேதை - காதலியது, ஊர் - ஊரானது, நமக்கு நல்விருந்து ஆக - நமக்கு நல்ல விருந்தயரும் இடமாகக் கடவது எ-று. சிரல் - மீன்குத்திக் குருவி. தளவம் - செம்முல்லை; அதன் அரும்பு சிரலின் வாய்போலும் என்பதனை ‘பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை’ என்னும் ஐங்குறுநூற்றானும் அறிக. ஈர்ந்தண் - ஒருபொருளிரு சொல். சீர்த்தக்க - ஒரு சொன்னீர் மைத்து. செல்வத்தை யுடைய பேதை என்க; செல்வமழை எனினும் ஆம். விருந்து - ஆகுபெயர். தலைவன் வினைமுற்றி மீண்ட பின் காதலியுடன் விருந்தயரும் வழக்க முண்டென்பதைனை ‘வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து, மாலை யயர்கம் விருந்து’ என்னும் முப்பாலானும் அறிக. (36) தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி இருங்க லிறுவரை யேறி யுயிர்க்கும் பெரும்பதக் காலையும் வாரார்கொல் வேந்தன் அருந்தொழில் வாய்த்த நமர். 37 (ப-ரை) கருங்கடல் மேய்ந்த - கரிய கடலின் நீரைக் குடித்த, கமம்சூல் - நிறைந்த சூலினையுடைய, எழிலி - மேகம், இரு - பெரிய, கல் – கற்களை யுடைய, இறுவரை - பக்கமலையின்மேல், ஏறி உயிர்க்கும் - ஏறியிருந்து நீரைச் சொரியும், பெரும்பதக் காலையும்- மிக்க செவ்வியையுடைய காலத்தும், வேந்தன் - அரசனது, அருந்தொழில் - போர்த் தொழில், வாய்த்த - வாய்க்கப்பெற்ற, நமர் - நம் தலைவர், வாரார் கொல் - வாராதிருப்பாரோ எ-று. கடல் - ஆகு பெயர், சூல் என்றதற்கேற்ப உயிர்க்கும் என்றார். உயிர்த்தல் - நீரைக் காலுதல்; ஒலித்தல் எனினும் ஆம். வாய்த்த என்ற தனால் தப்பாது வென்றிருப்பரென்பது குறிப்பித்தவாறாம். போர்த் தொழிலும் முற்றுப்பெற்றுக் காலமும் செவ்வியைஉடைத்தாயவழித் தலைவர் வராhதிரார் என்று கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தாளென்க. (37) தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தது புகர்முகம் பூழிப் 1புரள வுயர்நிலைய 2 வெஞ்சின வேழம் பிடியோ டியைந்தாடுந் 3 தண்பதக் காலையும் வாரா ரெவன்கொலோ ஒண்டொடி யூடு நிலை. 38 (ப-ரை) உயர்நிலைய - உயர்ந்த நிலையினை யுடைய, வெம் சினம் வேழம் - கடிய கோபத்தினை யுடைய ஆண் யானைகள், புகர்முகம் - புள்ளியினை யுடைய முகம், பூழி புரள - புழுதியிற் புரளும் வகை, பிடியோடு - பெண்யானைகளுடன், இயைந்து ஆடும் - கூடி விளையாடும், தண்பதக் காலையும் - குளிர்ந்த செவ்வியையுடைய காலத்தும், வாரார் - நம் தலைவர் வாராராயினார்; (ஆதலால்) ஒள்தொடி - ஒள்ளிய தொடியினை யுடையாளே, ஊடுநிலை - அவருக்காக நீ பிணங்குந் தன்மை, எவன்கொல் - என்னை எ-று. வேழம் பிடியோடியைந்தாடும் என்றது தலைவர் வருதற்கு ஏதுக் கூறியவாறு. குறித்த பருவம் வந்தும் வாராமையாற் பொய்ம்மையும் வேழம் பிடியோடியைந் தாடுதல் கண்டும் வாராமையால் அன்பின்மையும் உடையரா யினார்பால் ஊடுதலாற் பயனென்னை என்று தோழி கூறினா ளென்க. வாரார்கொல்லோ என இயைத்து வருவர் என்று கூறி ஆற்றுவித்தாள் எனப் பொருள் கொள்ளலும் ஆம். (38) இதுவுமது அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த 1கருங்குர னொச்சிப் பசுந்தழை சூடி இரும்புன மேர்க்கடி கொண்டார் பெருங்கௌவை ஆகின்று நம்மூ ரவர்க்கு. 39 (ப-ரை) அலவன் கண் ஏய்ப்ப - ஞெண்டினது கண்ணினை யொப்ப, அரும்பு ஈன்று - அரும்பினை யீன்று, அவிழ்ந்த - பின் மலர்ந்த, கருங்குரல் - கரிய பூங்கொத்தினையுடைய, நொச்சி - நொச்சியினது, பசுந்தழை சூடி - பசிய தழையைச் சூடிக்கொண்டு, இரும்புனம் - பெரிய புனங்களை, ஏர்க்கடி கொண்டார் - உழவர் புதிதாக ஏருழுவிக்கத் தொடங்கினார்கள்; (ஆதலால்) நம் ஊர் - நம் ஊரின்கண், அவர்க்கு - நம் தலைவர்க்கு, பெருங் கௌவை ஆகின்று - பெரிய அலராயிற்று. எ - று. நொச்சியின் அரும்பு ஞெண்டின் கண்ணுக்கு உவமையாதலை ‘நொச்சி மாவரும் பன்ன கண்ண, எக்கர் ஞெண்டினிருங்கிளைத் தொகுதி’ என்னும் நற்றிணை யானும் அறிக. ஏர்க்கடி கொள்ளுதல் - புதிதாய் ஏருழத் தொடங்குதல்; இதனை ‘நல்லேர்’ என்றும், ‘பொன்னேர்’ என்றும் வழங்குவர். ஆகின்று - உடம்பாட்டு முற்று. (39) பருவம் வந்தமையால் தலைவர் வருதல் ஒருதலையெனக் கூறித் தோழி தலைமகளை ஆற்றுவித்தது வந்தன செய்குறி வாரா ரவரென்று நொந்த வொருத்திக்கு நோய்தீர் மருந்தாகி இந்தின் 2கருவண்ணங் கொண்டன் றெழில்வானம் நந்துமென் பேதை நுதல். 40 (ப-ரை.) மென்பேதை - மெல்லிய பேதையே, செய்குறி - தலைவர் செய்த குறிகள், வந்தன - வந்துவிட்டன; அவர் வாரார் என்று - தலைவர் வருகின்றிலர் என்று, நொந்த ஒருத்திக்கு - நோதலுற்ற ஒருத்தியாகிய நினக்கு, நோய்தீர் மருந்து ஆகி - நோயைத் தீர்க்கும் மருந்தாகி, எழில்வானம் - அழகிய முகில், இந்தின் கருவண்ணம் - ஈந்தின் கனியினிறம் போலும் கருநிறத்தை, கொண்டன்று - கொண்டது; நுதல் நந்தும் - நினது நுதல் இனி ஒளிவளரப் பெறும் எ-று. இச்செய்யுளைத் தலைவர் மீண்டனரென்று தோழி மகிழ்ந்து தன் நெஞ்சிற்குக் கூறியதாகக் கொண்டு, என் பேதை எனப் பிரித்துப் படர்க்கையாக உரைப்பாரும் உளர், ஈந்து இந்தெனக் குறுகியது; ‘முந்நீரை யிந்துருவின் மாந்தியிருங் கொண்மூ’ என்பது திணைமாலை நூற்றைம்பது. ஈந்து - ஈச்சமரம். (40) கார் நாற்பது மூலமும் உரையும் முற்றிற்று. செய்யுள் முதற்குறிப்பு அகராதி (எண் - பக்கவெண்) அலவன்க 183 அறைக்கலிறு 169 ஆடுமகளிரின் 161 இகழுநர் 161 இமிழிசை 176 இளையரு 172 எல்லாவினை 173 ஏந்தெழி 167 கடனீர் முகந்த 179 கடாஅவுக 178 கடுங்கதிர் 160 கண்டிரண் 173 கருங்கடல் 181 கருங்கால் 174 கருங்குயில் 169 கருவிளை 164 கல்பயில் 170 கார்ச்சேணிகந்த 178 சிரல்வாய் 181 செல்வந் தரல் 167 சென்றநங் 180 திருந்திழாய் 168 தொடியிட 162 நச்சியார் 163 நலமிகு 174 நாஞ்சில் 170 புகர்முகம் 182 புணர்தரு 165 பொங்கரு 177 பொருகடல் 159 பொறிமாண் 172 மண்ணியன் 163 முருகியம் போல் 175 மையெழி 166 வந்தன 183 வரிநிறப் 160 வரைமல்க 177 வானேறு 163 விரிதிரை 180 வீறுசால் 171 களவழி நாற்பது ஆசிரியர் : பொய்கையார் உரையாசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார் முகவுரை களவழி நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களால் இயற்றப்பட்ட கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இறையனாரகப் பொருளுரையிற் கடைச் சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறிவருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப் படவில்லையேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடியன வென்றே துணிந்து எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்க்கீழ் கணக்கு என எண்ணிவருகின்றனர். கீழ்க்கணக்கியற்றியோருட் கபிலர், கண்ணஞ் சேந்தனார், கூடலூர் கிழார், பொய்கையார் முதலாயினார் சங்கத்துச் சான்றோ ரென்பது ஒருதலையாகலின், அவற்றுட் பலவும் அக்காலத்தின வெண்பதில் இழுக்கொன்று மின்று. கீழ்க்கணக்கு நூல் பதினெட் டென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில், ‘ வனப்பியல் தானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே’ என்னுஞ் சூத்திரவுரைக்கட் பேராசிரியரும், நச்சினார்க் கினியரும் உரைக்குமாற்றான் அறியப் படுவது. அவை அம்மை யென்னும் வனப்புடைய வாதலும் அவ்வுரையாற் றெளியப்படும். பழைய பனுவல்களை அளவு முதலியன பற்றி மேற்கணக்கெனவும் கீழ்க்கணக்கெனவும் பின்னுளோர் வகைப்படுத்தினராவர். ‘அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்’ என்பது பன்னிருபாட்டியல். கீழ்க்கணக்கு நூல் பதினெட்டாவன: நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமொழி யைம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்பன. இதனை, ‘ நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு’ என்னும் வெண்பாவானறிக. இதில் ‘நால்’ என்பதனை ‘ஐந்திணை’ என்பதன் முன்னுங் கூட்டி நாலைந்திணை யெனக் கொள்ள வேண்டும். சிலர் இன்னிலையை விடுத்துக் கைந்நிலையை ஒன்றாக்குவர். வெண்பாவின் சொற்கிடக்கை முறை அதற்கேற்ற தன்றென்க. சிலர் ஐந்திணை ஐந்து நூலெனக்கொண்டு இன்னிலை, கைந்நிலை இரண்டனையும் ஒழித்தல் செய்வர். அவர், ‘திணைமாலை’ என்பதொரு நூல் பழைய வுரைகளாற் கருதப்படுவதுண்டாகலின் அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாகு மென்பர். ‘ஐந்தொகை’ ‘இன்னிலைய’ ‘மெய்ந்நிலைய’ ‘கைந்நிலையோடாம்’ ‘நன்னிலையவாம். என்றிங்ஙனம் பாட வேற்றுமையும் காட்டுவர். இனி, களவழி நாற்பது என்னும் இந்நூலை யியற்றினார் நல்லிசைப் புலவராகிய பொய்கையா ரென்பார். இவர் இது பாடியதன் காரணம் இந்நூலிறுதியில் இதன் பழைய உரையாளரால் எழுதப் பட்டிருக்கும் தொடரால் விளங்கும். அது, ‘சோழன் செங்கணானும் சேரமான் கணைக்காலிரும் பொறையும் (திருப்?) போர்ப் புறத்துப் பொரு துடைந்துழிச் சேரமான் கணைக்கா லிரும்பொறையைப் பற்றிக்கொண்டு சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடுகொண்ட களவழி நாற்பது முற்றிற்று’ என்பது. இச்செய்தி, கலிங்கத்துப்பரணி இராச பாரம்பரியத்தில் “களவழிக் கவிதை பொய்கையுரை செய்யவுதியன் கால்வழித் தளையை வெட்டியர சிட்டவவனும்” என்றும், விக்ரம சோழனுலாவில் ‘மேதக்க பொய்கை கலிகொண்டு வில்லவனைப் பாதத் தளைவிட்ட பார்த்திவனும்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. சோழனொருவன் ஒரு சேரமன்னனை வென்ற வெற்றிச் சிறப்பைப் பாடியதே களவழி நாற்பது என்பதற்கு இதன் கண்ணேயே சான்றுகள் உள்ளன. செய்யுள்தோறும் சோழனது வென்றி கூறப்படுதல் வெளிப்படை. அவன் ‘செங்கண்மால்’ ‘செங்கட்சினமால்’ என்று பல பாடல்களிற் குறிக்கப் படுதலின் அவனது பெயரும் பெறப்படுவதாயிற்று. ‘கொங்கரையட்ட களத்து’ என்றும், ‘வஞ்சிக்கோ வட்ட களத்து’ என்றும் வருதலின், வெல்லப் பட்டோன் சேரனென்பது போதருவதாயிற்று. ‘காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்’ என்கையால் வென்று கொண்ட இடம் கழுமலம் என்பதாயிற்று. புறநானூற்றிலே, ‘குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளில் தப்பார் தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணு மளவை ஈன்ம ரோவிவ் வுலகத் தானே’ என்னுஞ் செய்யுளின்கீழ் வரையப்பட்டுள்ள குறிப்பால், செங்கணானொடு பொருதான் சேரமான் கணைக்காலிரும்பொறை யென்பது தெரிகின்றது. அது, ‘சேரமான்கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணானோடு போர்ப் புறத்துப் பொருது பற்றுக்கோட் பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு என்பது’ ‘குழவியிறப்பினும்’ என்னும் இச் செய்யுள், தமிழ்நாவலர் சரிதையில், ‘சேரன் கணைக்கா லிரும்பொறை செங்கணானாற் குணவாயிற் கோட்டத்துத் தளைப்பட்டபோது பொய்கையாருக் கெழுதி விடுத்த பாட்டு’ என்னும் தலைப்பின்கீழ்க் காணப்படுகிறது. செய்யுளின் பின்னே, ‘இது கேட்டுப் பொய்கையாற் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறை விட்டரசளித்தான்’ என்று குறிக்கப்பெற்றுள்ளது. இங்ஙனம் இரு குறிப்பும் வேறுபடுவதன் காரணம் புலப்படவில்லை. இவ் விரண்டினுள்ளே புறநானூற்றுக் குறிப்பே வலியுடைய தென்று கொள்ளின், அது பரணி, உலா முதலியவற்றுடன் முரணாமைப் பொருட்டு, துஞ்சினான் கணைக்காலிரும் பொறையாகச் சிறைவீடுசெய் தரசளிக்கப்பட்டான் பிறனொரு சேரனாவன் என்று கொள்ள வேண்டும். சேரமான் கொக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடிய இரண்டு பாட்டுக்கள் புறநானூற்றில் உள்ளன. நற்றிணையில் அவர் பாடிய பாட்டு ஒன்றும் அவனைக் குறிப்பிடுகின்றது. அவ்வேந்தன் கணைக்கா லிரும்பொறையின் வேறாகிச் சோழனாற் சிறைப்பட்டவனாயின், அவனை விடுவித் தற்குக் களவழி நாற்பது பாடப் பட்டதென்று கோடல் அமையும். இனி, சிலர் நல்லிசைப் புலவராகிய பொய்கையாரையும், திருமாலடியாருள் ஒருவராகிய பொய்கை யாழ்வாரையும் ஒருவராகக் கொண் டுரைத்துப் போந்தனர். அது திரிபுணர்ச்சியின் பாற் பட்ட தென்பதும், சங்கத்துச் சான்றோரை ஆழ்வாராக்குதற்கு ஒரு சிறிதும் இயைபின்றென்பதும் செந்தமிழ்ச் செல்வி இரண்டாஞ் சிலம்பினுள் ‘பொய்கையார்’ என்னும் தலைப்பின்கீழ் யானெழுதிய கட்டுரையா னறிக. கடைச்சங்கப் புலவருள் ஒருவராகும் பொய்கையாராற் பாடப்பட்ட இந்நூல், கி. பி. 250 -ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டதாகா தென்பது ஒருதலை. களவழி கொண்ட சோழன் செங்கணானைக் கரிகாலனுக்கு முன்வைத்துக் கூறுகின்றது பரணி. உலாவானது கரிகாலனை யடுத்துப் பின்வைத் தோதுகிறது. இவற்றுள் எது உண்மையாயினும் செங்கணான் கடைச்சங்க நாளில் விளங்கிய மன்னன் என்பதில் இழுக்கொன்றுமில்லை. அவன் கழுமலங் கொண்டமை களவழியானும், வெண்ணியினும், அழுந்தையினும் ஏற்ற மன்னரை வெற்றிகொண்ட செய்தி திருமங்கையாழ்வா ரியற்றிய பெரிய திருமொழியிலுள்ள திருநறையூர்ப் பதிகத்தானும் அறியப்படுகின்றன. இவ் வேந்தர் பெருமானே திருத்தொண்டர் புராணத்திற் கூறப்பட்ட சிவனடியார் களில் ஒருவராகிய கோச்செங்கட் சோழர் என்பர். திருவானைக்காவில் திருவெண்ணாவற்கீழ் எழுந்தருளி யுள்ள இறைவனை வழிபட்ட சிலந்தி கோச்செங்கட் சோழராகப் பிறந்த வரலாற்றினைப் பெரியபுராணம் இனிது விளக்குகின்றது. திருநெறிந்தமிழ் வேதமாகிய தேவாரம் முதலிய வற்றிலும் இவ்வுண்மை விதத்தோதப்படுகிறது. இவ்வரசர் பெருந்தகை சிவனார் மேவுந் திருக் கோயில்கள் பற்பல சமைத்த பரிசும் திருமுறைகளிற் பேசப்படுகின்றது. திருமங்கை யாழ்வாரும் ‘இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற் கெழின்மாட மெழுபதுசெய் துலகமாண்ட - திருக்குலத்து வளச்சோழன்’ என்று இதனைப் பாராட்டுவாராயினர். இவ்வாற்றால் இம்மன்னரது பெருமை அளப்பரிய தொன்றாதல் காண்க. இனி, இந்நூலாசிரியர் பொய்கை யென்னும் நாட்டிற் பிறந்தமையால் இப்பெய ரெய்தினரென ஒரு சாராரும், பொய்கை யென்னும் ஊரிற் பிறந்தமையாலெனப் பிறிதொரு சாராரும் கூறுப. இவ்வாசிரியர் ‘கானலந்தொண்டி அஃதெம்மூர்’ என்று புறத்திலே கூறியிருப்பதனால் மேற்கடற் கரையிலுள்ள தொண்டி நகரம் இவரது பிறப்பிடம் என்று உணரலாகும். அன்றித் தம்பாற் பேரன்புடையவனான சேரமானது பதியாதல் குறித்து அங்ஙனம் கூறினாரென்னினும் அமையும். களவழி நாற்பது என்னும் இந்நூல் செங்கட் சோழரது போர்க்கள வென்றியைத் தனித்தெடுத்துக் கூறுதற் கெழுந்தது. ‘கூதிர் வேனில்’ என்னும் புறத்திணை யிற் சூத்திரத்து ‘ஏரோர் களவழியன்றிக் களவழித் - தேரோர் தோற்றிய வென்றியும்’ என்பதனால் களவழி இருவகைப்படும் என்க. இவற்றுள் முன்னது, உழுதொழிலாளர் விளையுட் காலத்துக் களத்தின்கட் செய்யுஞ் செய்கை; என்றது, நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து அதரிதிரித்துச் சுற்றத்தோடு நுகர்வதற்கு முன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலர் முகந்து கொள்ள வரிசையின் அளிப்பது; பின்னது, அரசர் போர்க்களத்துச் செய்யுஞ் செய்கை; என்றது நாற்படையுங் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக வாண்மடலோச்சி அதரிதிரித்து . . அட்ட கூழ்ப்பலியைப் பலிகொடுத்து எஞ்சிநின்ற யானை குதிரைகளையும், ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகர்ந்து கொள்ளக் கொடுத்தல். களவழி - களத்தினிடம், களத்திடத்து நிகழ்ச்சியைப் பாடும் செய்யுளைக் களவழி யென்றது ஆகுபெயர். பிற்கூறிய களவழிச் செய்யுளைப் புலவர் தேரேறி வந்து பாடுவரென்ப. இவ்வாற்றால் இதன் இலக்கணம் ஓர்ந்துகொள்க. இந்நூலின்கண்ணே யானைப்போர் மிகுத்துக் கூறப்படுகின்றது. திருக்கார்த்திகைத் திருவிழா குறிக்கப்பட்டுள்ளது. இந்நூலானது சொற் செறிவும், பொருட் செறிவும் வாய்ந்த பாக்களாலாயது. பழைய உரையாசிரியர் களால் தொல்காப்பியவுரை முதலியவற்றில் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பட்டப்பெற்ற பெருமையினையுடையது. இதிலுள்ள ஒவ்வொரு வெண்பா விலும் பொருட்கேற்ற பெற்றி இவ்வாசிரியர் அமைத்திருக்கும் உவமைகள் கற்போர்க்குக் கழிபேரின்பம் விளைப்பன. இந்நூற்குப் பழையவுரை யொன்றுண்டு. அது செய்யுட் பொருளைப் பொழிப்பாக வெடுத்துரைப்பது; விசேடக்குறிப்பு யாதும் கொண்டிராதது. மற்ற இதற்குச் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியாரவர்களால் பதப்பொருளும், இலக்கணக் குறிப்புக்களுமாக எழுதப்பெற்ற உரையொன்றுண்டு. அதிலுள்ள இலக்கணக் குறிப்புக்கள் பெரும்பாலும் இக்காலத்துக்கு வேண்டப் பெறாதன வாயும், வழுவுள்ளனவாயும் தோன்றின; பதப்பொருளும் பலவிடத்துத் தவறான பாடத்தின் மேலெழுந்தும், மூலத்தொடு மாறுபட்டும் வழுவி யிருந்தமை புலனாயிற்று. இவ்வேதுக்களாற்றான் நல்லிசைப் புலவர் செய்யுட்கு உரைகாணுந்திறன் ஒரு சிறிதும் வாய்க்கப்பெறாத யானும் இதற்கோர் உரை யெழுதுமாறு நேர்ந்தது. என் சிற்றறிவிற் கெட்டியவாறு பழைய பொழிப்புரையை முற்றிலும் தழுவிப் பதப் பொருள் கூறியும், இன்றியமையாத மேற்கோள்களும், இலக்கணங்களும் காட்டியும் இவ்வுரையினை வகுத்தமைக்கலானேன். பல சுவடிகள் பார்த்துப் பாடவேற்றுமையுங் காட்டப்பெற்றுள்ளது. இதில் காணப்படும் பிழைகளைப் பொறுத்தருளுமாறு அறிஞர்களை வேண்டிக் கொள்கின்றேன். இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். களவழி நாற்பது நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாண்மாய் குருதி களிறுழக்கத் - தாண்மாய்ந்து 1முன்பக லெல்லாங் குழம்பாகிப் 2பின்பகல் துப்பத் துகளிற் கெழூஉம் புனனாடன் தப்பியா ரட்ட களத்து. 1 (பதவுரை.) புனல் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட் சோழன், தப்பியார் - பிழைசெய்தவரை, அட்ட - கொன்ற, களத்து- போர்க்களத்தில், நாள் ஞாயிறு - ஞாயிறு தோன்றிய காலைப்பொழுதில், உற்ற - வந்தடைந்த, செரு விற்கு - போரில், வீழ்ந்தவர் - பட்டவருடைய, வாள்மாய் - வாளழுந்துதலா லொழுகும், குருதி - உதிரத்தை, களிறு உழக்க - யானைகள் கலக்க, தாள் - (அவற்றின்) காலாலே, மாய்ந்து - சுருங்கி, முன்பகல் எல்லாம் - முற்பகற் பொழுதெல்லாம், குழம்பு ஆகி - சேறாகி, பின்பகல் - பிற்பகற்பொழுதில், துப்பு துகளில் - பவளத் துகள்போல, கெழூஉம் - (விசும்பெங்கும்) பரந்து செறியாநிற்கும் எ - று. நாள் என்பது பகலின் முற்கூறாகிய காலைப் பொழுதைக் குறிக்கும். இதனை, நாணிழல், நாளங்காடி என்பவற்றால் அறிக. குருதிமாய்ந்து குழம்பாகியக் கெழூஉம் என முடிக்க. செருவிற்கு - வேற்றுமை மயக்கம். வாண்மாய் - மறைதல் என்னும் பொருட்டாய மாய்தல் என்பதன் முதனிலை அழுந்தும் என்னும் பொருளில் வந்தது. கெழூஉம் - செய்யுளிசை கெட்டவழி வந்த அளபெடை, தப்பியார் - வினையாலணையும் பெயர்; தப்பு - பகுதி, இன் இடைநிலை ஈறு கொண்டது. (1) ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ்ப் போர்ப்பி லிடிமுரசி னூடுபோ மொண்குருதி கார்ப்பெயல் பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ் நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற புனனாடன் ஆர்த்தம ரட்ட களத்து. 2 (ப -ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், ஆர்த்து - குணலையிட்டு, அமர் - போரில், அட்ட - கொன்ற, களத்து - போர்க்களத்தில், ஞாட்பின்உள் - படையின்கண், எஞ்சிய - ஒழிந்த, ஞாலஞ்சேர் – நிலத்திற் சேர்ந்த, யானை கீழ் - யானைகளின்கீழ் (கிடந்த), போர்ப்பு இல் - மேற் போர்வை இல்லாத, இடி - இடிபோன் றொலிக்கும், முரசின் ஊடுபோம் - முரசத்தினூடு செல்லும், ஒள் குருதி - ஒள்ளிய உதிரம், கார்பெயல் பெய்தபின் - கார்காலத்து மழைபெய்த பின்பு, செங்குளம் - செங்குளத்தினது, கோடுகீழ் -கரையின் கீழுள்ள, நீர்தூம்பு - மதகுகள், நீர் உமிழ்வ - நீருமிழ்தலை, போன்ற - ஒத்தன எ- று. செங்குளம் - செம்மண்ணாற் சிவந்த நீரையுடைய குளம். பொருளின்கண் உள்ள குருதி யென்னும் பெயருக்கேற்ப உவமைக் கண் உமிழ்தலையுடைய நீர் என மாற்றுக. கார் - பருவத்திற்கு இருமடியாகுபெயர். போன்ற - போல் என்னும் இடைச்சொல்லடியாகப் பிறந்த வினைமுற்று. (2) ஒழுக்குங் குருதி யுழக்கித் தளர்வார் இழுக்குங் களிற்றுக் கோடூன்றி யெழுவர் 1 மழைக்குரன் மாமுரசின் மல்குநீர் நாடான் பிழைத்தாரை யட்ட களத்து. 3 (ப -ரை) மழைக் குரல் - மேகத்தின் முழக்கம் போலும் முழக்கத்தை யுடைய, மா முரசின் - பெரிய முரசினையுடைய , மல்குநீர் நாடன் - நிறைந்த நீரினையுடையனாகிய செங்கட் சோழன், பிழைத்தாரை -தப்பின வரை, அட்ட - கொன்ற, களத்து- போர்க் களத்தில், ஒழுக்கும் குருதி - புக்காரை ஒழுகச்செய்யுங் குருதியை, உழக்கி - கலக்கி, தளர்வார் - (*அதனைக் கடக்கலாற்றாது) தளர்ச்சி யுறுவார், இழுக்கம் - மறிந்துகிடக்கின்ற, களிற்றுக்கோடு - யானையின் கொம்புகளை, ஊன்றி எழுவர் – ஊன்று கோலாகக் கொண்டு எழாநிற்பர் எ-று. ஒழுக்கும்- ஒழுகும் என்பதன் பிறவினை; ஒழுகல் - கால் தளர்ந்து செல்லுதல்; இதனை, ‘பரங்குன்றினிற் பாய்புனல் யாமொழுக’ என்னும் கோவையாரால் உணர்க. இழுக்குதல் - தவறுதல்; ஆவது வெட்டுண்டு கிடத்தல். முரசினையுடைய நாடன் என்றும், தளர்வார் ஊன்றி யெழுவர் என்றுங் கூட்டுக. (3) உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்ப் பரிதி சுமந்தெழுந்த யானை - யிருவிசும்பிற் செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால் புல்லாரை யட்ட களத்து. 4 (ப-ரை) செங்கண்மால் - செங்கட்சோழன், புல்லாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், உருவக் கடுந்தேர் - அஞ்சத்தக்க கடிய தேரை, முருக்கி - சிதைத்து, அ தேர் பரிதி - அந்தத் தேரினுருளினை, சுமந்து எழுந்த யானை - சுமந்தெழுந்த யானைகள், இருவிசும்பு இல் - பெரிய வானத்தில், செல்சுடர் - செல்லுகின்ற ஞாயிறு, சேர்ந்த மலை போன்ற - அடைந்த மலையை யொத்தன எ-று. உரு என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. இஃது அச்சம் என்னும் பொருட்டாதலை ‘ உருவுட்காகும்’ என்பதனால் அறிக. மற்று - அசைநிலை, பரிதி - இது பருதியெனவும் வழங்கும். பருதி - வட்டம்; தேருருளை வட்ட முடைமையின் பருதியெனப்பட்டது; ‘சுரம்பல கடவும் சுரைவாய்ப் பருதி’ என்னும் பதிற்றுப்பத்தும் அதன் உரையும் நோக்குக. சுடர் - ஆகுபெயர். போன்ற - அன்பெறாத அகரவீற்றுப் பலவறிசொல். திருமாலின் வழியில் வந்தமையால் சோழனுக்கு ‘மால்’ என்பது ஒரு பெயர்; பெரும்பாணாற்றில் ‘முந்நீர்வண்ணன் புறங்கடை’ என வருவது காண்க. (4) தெரிகணை யெஃகந் திறந்தவா யெல்லாங் குருதி படிந்துண்ட காகம் - உருவிழந்து குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால் தப்பியா ரட்ட களத்து. 5 (ப-ரை) செங்கண்மால் - செங்கட்சோழன், தப்பியார் - பிழைத்தாரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், தெரி கணை - ஆராய்ந்த அம்புகளாலும், எஃகம் - வேல்களாலும், திறந்த- திறக்கப்பட்ட, எல்லாவாய் (உம்) - எல்லாப் புண்களின் வாய்களினின்றும் , குருதி படிந்து - (ஒழுகும்) உதிரத்திற் படிந்து, உண்ட காகம் - (அவ்வுதிரத்தை) உண்ட காகங்கள், உரு இழந்து - (தம்முடைய) நிறத்தை இழந்து, குக்கில் புறத்த - செம்போத்தின் புறத்தையுடையவாகி, சிரல்வாய் - சிச்சிலிக் குருவிபோன்ற வாயையுடைய வாயின எ-று. வாயெல்லாம் என்பதனை எல்லாவாயும் என மாற்றுக. உண்ட என்பது பொதுவினையாதலை ‘உண்ணு நீ ரூட்டிவா’ என்னும் குறிஞ்சிக்கலியானும் அறிக. குக்கில் - செம்போத்தாதலை ‘குக்கில் செம்போத்துச் சகோரமு மதற்கே’ என்னும் பிங்கலந்தையான் அறிக. சிரல் - சிச்சிலி, மீன்கொத்துக் குருவி; ‘புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல்’ என்பது சிறுபாண்.(5) நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை யடுக்குபு வேற்றிக் கிடந்த - இடித்துரறி யங்கண் விசும்பி னுருமெறிந் தெங்கும் பெருமலைத் 1தூறெறிந் தற்றே யருமணிப் பூணேந் தெழின்மார் பியறிண்டேர்ச் செம்பியன்தெவ் வேந்தரை யட்ட களத்து. 6 (ப-ரை) அரு மணி - (பெறுதற்கு) அரிய மணிகள் (அழுத்திய), பூண் ஏந்து - அணிகலத்தை ஏந்திய, எழில் - எழுச்சியையுடைய, மார்பு - மார்பையும், இயல் - நடத்தலையுடைய, திண் தேர் - வலிய தேரையுமுடைய, செம்பியன் - செங்கட்சோழன், தெவ்வேந்தரை - பகையரசரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், நால் நால் திசையும் - பல திசைகளிலும், பிணம் பிறங்க - பிணங்கள் மிக, யானை அடுக்குபு - யானைகளடுக்கப்பட்டு, ஏற்றிக்கிடந்த - உயர்ந்து கிடந்தன, இடித்து உரறி - இடித்து முழங்கி, அம் கண் - அழகிய இடத்தையுடைய, விசும்பின் -வானத்தினின்று, உரும் எறிந்து - இடிவீழ்ந்து, எங்கும் - எவ்விடத்துமுள்ள, பெரு மலை - பெரிய மலைகளை, தூறு - தொடக்கு (அற), எறிந்தால் அற்று - எறிந்தாற்போலும் எ-று. நானால் - பன்மை குறித்தது; எட்டு எனினும் அமையும். அடுக்குபு வேற்றி - உயிர்வர உகரம் கெடாது நின்றது; ‘அடித்தடித்து வக்காரம்’ என்புழிப்போல. இயல்திண்டேர் என்புழி இயல் இப் பொருட்டாதலை ‘இயறேர்க்குட்டுவன்’ என்னும் சிறுபாண் உரையாலறிக. (6) அஞ்சனக் குன்றேய்க்கும் யானை யமருழக்கி இங்கு லிகக்குன்றே போற்றோன்றுஞ் -செங்கண் வரிவரான் முன்பிறழுங் காவிரி நாடன் பொருநரை யட்ட களத்து. 7 (ப-ரை) செம் கண் - சிவந்த கண்களையும், வரி - வரிகளையுமுடைய, வரால்மீன் பிறழும் - வரால் மீன்கள் பிறழா நிற்கும், காவிரிநாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், பொருநரை - (தன்னோடு) போர் செய்வாரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், அஞ்சனம்குன்று - நீலமலையை, எய்க்கும் - ஒத்துத்தோன்றும், யானை - யானைகள், அமர் உழக்கி- போரின்கட் கலக்கி, இங்குலிகம் குன்றுபோல் - சாதிலிங்க மலையைப் போல, தோன்றும் - சிவந்து தோன்றாநிற்கும் எ-று. ஏய்க்கும் - உவமச்சொல். மீன் - இத் தமிழ்ச் சொல்லை வட நூலார் மீனம் எனத் திரித்து வழங்குவர். (7) யானைமேல் யானை நெரிதர வானாது கண்ணேர் கடுங்கணை மெய்ம்மாய்ப்ப 1 - எவ்வாயும் எண்ணருங் குன்றிற் குரீஇயினம் போன்றவே பண்ணா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து. 8 (ப-ரை) பண்ஆர் - ஒப்பனையமைந்த, இடிமுரசு இன் - இடிக்கும் முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்துசெல்லும் நீரினையுடைய, நீர்நாடன் - காவிரிநாட்டை யுடையோன், நண்ணாரை- பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், யானை மேல் யானை நெரிதர- யானைகள் மேல் யானைகள் சாய, ஆனாது - நீங்காமல், கண் நேர் - (மகளிரின்) கண்களை யொக்கும், கடுங்கணை - கடிய அம்புகள், எ வாய் உம் - எவ்விடத்தும் (பாய்ந்து), மெய் மாய்ப்ப - (அவற்றின்) உடலை மறைத்தலால்(அவை), எண் அரு -அளவில்லாத, குன்றில் - மலைகளில், குரீஇ இனம் - குருவியின் கூட்டங்கள் மொய்த்திருப்பவற்றை, போன்ற - ஒத்தன எ-று. மாய்ப்ப - மறைக்க; இஃது இப்பொருட்டாதலை ‘களிறு மாய்க்குங் கதிர்க்கழனி’ என்னும் மதுரைக் காஞ்சியடி உரையானறிக. குரீஇ - இயற்கை யளபெடை, முரசினை யொக்கும் பாய்புனல் என உவமையாக்கலும் ஒன்று. (8) மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட காலார்சோ டற்ற கழற்கா லிருங்கடல் ஊணில் சுறபிறழ்வ 1 போன்ற புனனாடன் நேராரை யட்ட களத்து. 9 (ப-ரை) புனல் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், நேராரை - பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், மேலோரை - (குதிரை முதலாயினவற்றின்) மேலிருந்த வரை, கீழோர்- கீழ்நின்ற காலாட்கள், குறுகி - சென்று சார்ந்து, குறைத்திட்ட - துணித்த, கால் ஆர் சோடு - காற்கிட்ட அரணத்தோடு, அற்ற - அறுபட்ட, கழல் கால் - வீரக்கழலணிந்த கால்கள், இருங்கடல் - பெரிய கடலுள், ஊண் இல் - இரையில்லாத, சுறபிறழ்வ போன்ற - சுறாமீன்கள் பிறழ்வனவற்றை யொத்தன எ-று. சோடு - சுவடு என்பதன் மருஉ : அரணம் என்பது பொருள். அரணம் - செருப்பு. சுற - இது ‘குறியதனிறுதிச் சினைகெட’ என்னுஞ் சூத்திரத்து இலேசானே ஆகாரங் குறுகி உகரம் பெறாது நின்றது. நீலச்சுறா என்னும் பாடத்திற்குக் கரிய சுறாமீன்கள் என்று பொருள் கொள்க. (9) பல்கணை யெவ்வாயும் பாய்தலிற் செல்கலா தொல்கி யுயங்குங் களிறெல்லாந் - தொல்சிறப்பிற் செவ்வலங் குன்றம்போற் றோன்றும் புனனாடன் தெவ்வரை யட்ட களத்து. 10 (ப-ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், பல் கணை - பல அம்புகளும், எவாய் உம் - எவ்வுறுப்பிலும், பாய்தல் இன் - பாய்தலால், செல்கலாது - செல்ல மாட்டாது, ஒல்கி - தளர்ந்து, உயங்கும் - வருந்தும், களிறு எல்லாம் - யானைகளெல்லாம், தொல் சிறப்பு இன் - தொன்றுதொட்டு வருஞ் சிறப்பினை யுடைய, செவ்வல் குன்றம்போல் - தாதுமலை போல ,தோன்றும் - தோன்றா நிற்கும் எ-று. செல்கலாது - வினையெச்சம்; குவ்வும் அல்லும் சாரியைகள். செவ்வல் - பண்புப்பெயர். அம் - சாரியை. தாதுமலை - சிந்தூர மலை. ‘இங்குலிகக் குன்றேபோற் றோன்றும்’ என முன் வந்தமையும் காண்க. (10) கழுமிய ஞாட்பினுண் மைந்திகாந்தா ரிட்ட1 ஒழிமுரச மொண்குருதி யாடித் - தொழின்மடிந்து கண்காணா யானை யுதைப்ப விழுமென மங்குன் மழையி னதிரு மதிராப்போர்ச் செங்கண்மா லட்ட களத்து. 11 (ப-ரை) அதிரா போர் - கலங்குதலில்லாத போரையுடைய, செங்கண் மால் - செங்கட்சோழன், அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், கழுமிய - நெருங்கிய, ஞாட்பின்உள் - போரில், மைந்து இகந்தார் - வலியிழந்தவர்கள், இட்ட - போகவிட்ட, ஒழி முரசம் - ஒழிந்த முரசம், ஒள் குருதி - ஒள்ளிய உதிரத்தில், ஆடி - படிந்து, தொழில் மடிந்து - (தம்) தொழிலைத் தவிர்த்து, கண்காணா- (படைகளாலூறுபட்டு) கட்புலனிழந்த, யானை உதைப்ப - யானைகளுதைத்தலால், மங்குல் மழையின் – மேகம் போல, இழும் என அதிரும்- இழுமென முழங்காநிற்கும் எ-று. முரசம் ஆடிமடிந்து முழங்கும் என வினiமுடிவு செய்க. மங்குல் மழை - ‘ஒரு பொரு ளிருசொற்பிரிவில் வரையார்’ என்பதனால் ஒரு பொருண்மேல் வந்தன. அதிரா - கலங்காத, நடுங்காத; ‘அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்’ என்பது காண்க. (11) ஓவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந் தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப் பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவே காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக் கூடாரை யட்ட களத்து. 12 (ப-ரை) காவிரி நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், கடாய் - படையைச் செலுத்தி, கடிதுஆக - விரைந்து, கூடாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓவா - இடை விடாமல், கணைபாய - அம்புகள் தைக்க, எழில்வேழம்- எழுச்சியுடைய யானைகள், ஒல்கி - தளர்ந்து, தீவாய் - தீயின் நிறம்பொருந்திய, குருதி இழிதலால் - உதிரத்தை யொழுக்குதலால், செம் தலை - சிவந்த இடத்தை யுடைய, பூவல் குன்றம் - செம்மண் மலைகள், புயற்கு ஏற்ற போன்ற - மழைக்கு எதிர்ந்தன ஒத்தன எ -று. செம்மண்மலையிற் பெய்த மழை செந்நீரா யொழுகுமாதலின், உடல்முழுதும் குருதியை யொழுகவிடும் யானைகள் அம்மலைகளை யொக்கும் என்றார். தீவாய் என்பதனைக் கணையோடு இயைப்பினும் அமையும். இழிதல் பிறவினையாயிற்று. பூவல் - செம்மண்; “பூவலூட்டிய புனை மாண்பந்தர்க் - காவற்சிற்றிற் கடிமனைப் படுத்து” எனச் சிலப்பதிகாரத்து வருவது காண்க. அம் - சாரியை. (12) நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர் வரைபுரை யானைக்கை நூற - வரைமேல் உருமெறி பாம்பிற் புரளுஞ் செருமொய்ம்பிற் சேஎய்பொரு தட்ட களத்து. 13 (ப-ரை) செரு மொய்ம்புஇன் - போர்வலிமை யுடைய, சேய் - செங்கோட்சோழன், பொருது அட்ட - போர்செய்து கொன்ற, களத்து - போர்க்களத்தில், நிரைகதிர் – நிரைத்தவொளி யினையுடைய, நீள் எஃகம் - நீண்ட வாளை, நீட்டி - பின்னே வாங்கி, வயவர் - வீரர்கள், வரை புரை - மலையையொத்த, யானை கை - யானைகளின் கைகளை, நூற - துணிக்க, வரைமேல் - மலையின்மேல், உரும் எறி - இடிவிழுந்த, பாம்புஇன் - பாம்பைப்போல, புரளும் - புரளாநிற்கும் - எ-று. பாம்பு உருமெறியப்பட்டு மலைமேனின்றும் விழுந்து புரளுமாறுபோலக் கையும் வாளெறியப்பட்டு யானையினின்றும் விழுந்து புரளாநிற்கும் என்க. எஃகம் வாளினையும், நீட்டல் பின் வாங்கலையுங் குறித்து நின்றன. எறி - என்னும் பெயரெச்ச முதனிலை பாம்பென்னும் செயப்படுபொருட்பெயர் கொண்டது. (13) கவளங்கொள் யானையின் கைதுணிக்கப் 1 பட்டுப் பவளஞ் சொரிதரு பைபோற் - றிவளொளிய 2 வொண்செங் குருதி யுமிழும் புனனாடன் கொங்கரை யட்ட களத்து. 14 (ப-ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், கொங்கரை - கொங்குநாட்டவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், கவளம் கொள் -கவளத்தைக் கொள்ளும், யானை கை - யானைகள் (தம்) துதிக்கைகள், துணிக்கப்பட்டு - துண்டு படுத்தப்பட்டு, பவளம் சொரிதரு - பவளத்தைச் சொரியாநின்ற, பைபோல் - பையைப்போல, திவள் ஒளிய - விளங்கும் ஒளியையுடைய, ஒள் - ஒள்ளிய, செம் குருதி - சிவந்த உதிரத்தை, உமிழும் - உமிழாநிற்கும் எ-று. கவளம் - யானையுணவு; ‘கல்லாவிளைஞர் கவளங்கைப்ப’ ‘வாங்குங்கவளத்து’ என்பன காண்க. இன் - சாரியை. (14) கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும் புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன் வினைபடு பள்ளியிற் றோன்றுமே செங்கட் சினமால் பொருத களத்து. 15 (ப-ரை) சினம் - கோபத்தையுடைய, செங்கண்மால் - செங்கட்சோழன், பொருத களத்து -போர்செய்த களத்தில், எ வாய் உம் - எவ்விடத்தும், குடை முருக்கி - குடைகளையழித்து, கொல்யானை- கொல்லும் யானைகள், பாய - பாய்தலால், புக்க வாய் எல்லாம் - அவ் யானைகள் புகுந்த இடமெல்லாம், பிணம் பிறங்க - பிணங்கள் விளங்க, தச்சன் - தச்சனால், வினைபடு – வினை செய்யப்படும், பள்ளியில் - இடங்கள்போல, தோன்றும் - தோன்றாநிற்கும். எ-று. பள்ளி - இடமென்னும் பொருளாதலைத் தொல்காப்பியத்தே ‘சொல்லிய பள்ளி’ என வருதலானறிக. தச்சன் - மரவினைஞன்; ‘மரங்கொல் தச்சர்’, ‘தச்சச்சிறார்’ என்பன காண்க. (15) பரும வினமாக் கடவித் தெரிமறவர் ஊக்கி யெடுத்த வரவத்தி னார்ப்பஞ்சாக் குஞ்சரக் கும்பத்துப் பாய்வன குன்றிவரும் வேங்கை யிரும்புலி போன்ற புனனாடன் வேந்தரை யட்ட களத்து. 16 (ப-ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், வேந்தரை - பகை மன்னரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், பருமம் - கல்லணையையுடைய, இனம் மா - திரண்ட குதிரைகள், தெரி மறவர் - விளங்கிய வீரத்தினையுடையரால், கடவி- நடத்தப்பட்டு, ஊக்கி - மனவெழுச்சி மிக்கு, எடுத்த - எழுப்பப் பட்ட, அரவத்தின் ஆர்ப்பு - மிக்க ஆரவாரத்தை, அஞ்சா - அஞ்சாத, குஞ்சரம் - யானைகளின், கும்பத்து - மத்தகத்தில், பாய்வன - பாய்கின்றவை, குன்று - மலையின்கண், இவரும் - பாய்கின்ற, இரு - பெரிய, வேங்கை புலி - வேங்கை யாகிய புலியை, போன்ற - ஒத்தன எ-று. பருமம், பண், கல்லணை என்பன ஒரு பொருட் சொற்கள். கடவி - செயப்பாட்டு வினையெச்சம். மறவர் கடவி என மாற்றுக. கடவப்பட்டு ஊக்கிப் பாய்வன என்க; யானைக்கு அடையாக்கி அஞ்சா என்பதனோடு முடிப்பினும் அமையும். (16) ஆர்ப்பெழுந்த ஞாட்பினு ளாளா ளெதிர்த்தோடித் தாக்கி யெறிதர வீழ்தரு மொண்குருதி கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கைப் 1 போன்றனவே போர்க்கொடித் தானைப் பொருபுன னீர்நாடன் ஆர்த்தம ரட்ட களத்து. 17 (ப -ரை) போர் - போர்க்குரிய, கொடி - கொடி யினையுடைய, தானை - படையினை உடையனான, பொரு - மோதுகின்ற, புனல்- நீரினையுடைய, நீர் நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், ஆர்த்து - ஆரவாரித்து, அமர் - போரில், அட்ட - (பகைவரைக்)கொன்ற, களத்து - களத்தில், ஆர்ப்பு எழுந்த - ஆரவாரமிகுந்த, ஞாட்பின் உள் - போரின்கண், ஆள்ஆள் - ஆளும் ஆளும், எதிர்த்து ஓடி - எதிர்சென்றோடி, தாக்கி - பொருது, எறிதர- (படைகளை) வீசுதலால், வீழ்தரும் - சொரியாநின்ற, ஒள் குருதி - ஒள்ளிய உதிரம், கார்த்திகை சாறுஇல் - கார்த்திகை விழாவில் , கழிவிளக்கை - மிக்க விளக்கினை, போன்றன - ஒத்தன எ-று. சாறு -விழா: இதனைச் ‘சாறுதலைக் கொண்டென’ என்னும் புறப்பாட்டானும், ‘சாறயர்களத்து’ என்னும் முருகாற்றுப்படையானும் அறிக. கார்த்திகை நாளில் நிரைநிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் மிக்கிருந்தது. இதனை ‘குறுமுயன் மறுநிறங் கிளர மதிநிறைந், தறுமீன் சேரும் அகலிருள் நடுநாள், மறுகுவிளக்குறுத்து மாலை தூக்கிப், பழவிறன் மூதூர்ப் பலருடன் துவன்றிய, விழவுட னயர வருகதி லம்ம’ என்னும் அகப்பாட்டா னறிக. ‘துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள் . . . விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்’ என்பது திருநெறித் தமிழ்மறை. கார்த்திகைக்கு மலையில் விளக்கிடுவது ‘குன்றிற் கார்த்திகை விளக்கிட் டன்ன’ என்று சிந்தாமணியிற் கூறப்பெற்றுளது. (17) நளிந்த கடலுட் டிமிறிரை போலெங்கும் விளிந்தார் பிணங்குருதி யீர்க்குந் - தெளிந்து தடற்றிடங் கொள்வாட் 1 டளையவிழுந் தார்ச்சே(ய்) உடற்றியா ரட்ட களத்து. 18 (ப-ரை) தெளிந்து -விளக்கி, தடறு - உறையினது, இடம் கொள் - இடத்தினைக்கொண்ட, வாள் - வாளையும், தளை அவிழும் - கட்டவிழ்ந்த, தார்- மாலையையுமுடைய, சேய் -செங்கட்சோழன், உடற்றியார் -சினமூட்டிய பகைவரை, அட்ட - கொன்ற, களத்து -போர்க்களத்தில், நளிந்த - நீர்செறிந்த, கடல்உள் - கடலில், திமில்- தோணியையும், திரை - அலையையும், போல் - போல, எங்கும் - எவ்விடத்தும், விளிந்தார் - பட்டாருடைய, பிணம் - பிணக்குப்பையை, குருதி ஈர்க்கும் - உதிரவெள்ளம் இழாநிற்கும் எ-று. ‘தடற்றிலங்கொள்வாள்’ என்னும் பாடத்திற்கு உறையில் விளங்குகின்ற ‘ஒள்ளியவாள்’ என்று பொருளுரைக்க. நளிந்து - நளியென்னும் உரிச் சொல்லடியாக வந்த பெயரெச்சம்; நீர்மிக்க எனினுமாம்; நளியென்பது பெருமையும், செறிவுமாதல் தொல்காப்பியத்தா னறிக. (18) இடைமருப்பின் விட்டெறிந்த வெஃகங்கான்1 மூழ்கிக் கடைமணி கான்வரத் தோற்றி 2 - நடைமெலிந்து முக்கோட்ட போன்ற களிறெல்லா நீர்நாடன் புக்கம ரட்ட களத்து. 19 (ப-ரை) நீர் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், அமர் புக்கு - போரிற்புகுந்து; அட்ட களத்து - (பகைவரைக்) கொன்ற போர்க்களத்தில், மருப்பின் இடை - (யானைகளின்) கொம்பினடுவே, விட்டு எறிந்த எஃகம் - விட்டெறிந்த வேல், கால்மூழ்கி - காம்பு குளித்தலால், கடைமணி - (அவ்வேலின்) கடைமணி, காண்வர - விளங்க, களிறு எல்லாம் – யானை களெல்லாம், தோற்றி -தோன்றி, நடைமெலிந்து - நடைதளர்ந்து, முக்கோட்ட போன்ற - மூன்று கொம்புகளையுடைய யானைகளை யொத்தன (எ-று.) காழ் என்பதே சிறந்த பாடம். காழ் - காம்பு, மூழ்கலான் என்பது மூழ்கியெனத் திரிந்து நின்றது. முக்கோட்ட இது குறிப்பு வினைப்பெயர். (19) இருசிறக ரீர்க்குப் பரப்பி யெருவை குருதி பிணங்கவருந் தோற்றம் - அதிர்விலாச்3 சீர்முழாப் பண்ணமைப்பான் போன்ற புனனாடன் நேராரை யட்ட களத்து. 20 (ப-ரை) புனல் நாடன்- நீர்நாட்டையுடைய செங்கட் சோழன், நேராரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், எருவை - கழுகுகள், இரு சிறகர் - இரண்டு சிறகின் கண்ணுமுள்ள, ஈர்க்கு பரப்பி - ஈர்க்குகளைப் பரப்பி, குருதி - உதிரத்தோடு, பிணம் கவரும் -பிணங்களைக் கொள்ளை கொள்ளும், தோற்றம் - காட்சி, அதிர்வு இலா - கலக்க மில்லாத, சீர் - ஓசையையுடைய, முழா - முழவினை, பண் அமைப்பான் - பண்ணமைப்பவனை, போன்ற - ஒத்தன எ-று. சிறகர் - ஈற்றுப்போலி. (20) இணைவே லெழின்மருமத் திங்கப்புண் கூர்ந்து கணையலைக் கொல்கிய யானை - துணையிலவாய்த் தொல்வலி யாற்றித்1 துளங்கினவாய் மெல்ல நிலங்கால் கவரு மலைபோன்ற செங்கட் சினமால் பொருத களத்து. 21 (ப-ரை) சினம் - கோபத்தையுடைய, செங்கண்மால் -செங்கட்சோழன், பொருத களத்து - போர் செய்த களத்தில், இணை வேல் - இணைத்த வேல்கள், எழில் மருமத்து -அழகிய மார்பில், இங்க - அழுந்துதலால், புண்கூர்ந்து - புண்மிகுத்து, கணை அலைக்கு - அம்பின் அலைப்புகளால், ஒல்கிய யானை - தளர்ந்த யானைகள், துணை இலவாய் - (தம்மேற்கொண்ட) துணைவரை யிலவாய், தொல் வலி - பண்டை வலியினின்று, ஆற்றி - நீங்கி, துளங்கின ஆய் - நடுங்கி, மெல்ல - மெல்ல, நிலம் - நிலத்தை, கால் கவரும் - காலாலே அகப்படுக்கும், மலைபோன்ற - மலையை யொத்தன எ-று. இங்கல் -அழுந்தல், அலை - முதனிலைத் தொழிற் பெயர். அலைக்கு - வேற்றுமை மயக்கம். (21) இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல் ஆடியல் யானைத் தடக்கை யொளிறுவாள் ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை கோடுகொ ளொண்மதியை நக்கும்பாம் பொக்குமே பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் கூடாரை யட்ட களத்து. 22 (ப-ரை.) பாடுஆர் - ஒலிநிறைந்த, இடி - இடிபோன்ற, முரசின் - முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்து செல்லும் நீரினையுடைய, நீர் நாடன் - காவிரிநாட்டை யுடையவனாகிய செங்கட் சோழன், கூடாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஒளிறு வாள் - விளங்கும் வாளையேந்திய, ஓடா மறவர் - புறங்கொடாத வீரர்கள், வரி நுதல் - வரிபொருந்திய நெற்றியையுடைய, ஆடு இயல் - வெற்றி சேர்ந்த, யானை தட கை - யானையின் நீண்ட கைகளை, துணிப்ப - துண்டுபடுத்த, துணிந்தவை - துண்டிக்கப்பட்ட அவைகள், இருநிலம் சேர்ந்த - பெரிய நிலத்தில் விழுந்துகிடக்கும், குடைகீழ் - குடைகளின் அருகே. (கிடப்பன), கோடுகோள் - கலை நிறைந்த, ஒள் மதியை - ஒள்ளிய சந்திரனை, நக்கும் பாம்பு - தீண்டுகின்ற பாம்பினை, ஒக்கும் - ஒத்திருக்கும் எ-று. குடைக்கீழ்க் கிடப்பன என ஒரு சொல் வருவிக்க. ஆடு - வென்றி; அசைதலும் ஆம். கோடு - பக்கம்; ஈண்டுக் கலையை யுணர்த்திற்று. ‘கோடுதிரள் கொண்மூ’ என்பது காண்க. நீர்நாடு - பெயர்; நீர் - ஆகுபெயரும் ஆம். (22) எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து நெய்த்தோர்ப் புனலு ணிவந்தகளிற் றுடம்பு செக்கர்கொள் வானிற் கருங்கொண்மூப் போன்றவே கொற்றவேற் றானைக் கொடித்திண்டேர்ச் செம்பியன் செற்றாரை யட்ட களத்து. 23 (ப-ரை) கொற்றம் - வெற்றியையுடைய, வேல் – வேலையேந்திய, தானை - சேனையையும், கொடி திண் தேர் - கொடி கட்டிய வலிய தேரையுமுடைய, செம்பியன் - செங்கட்சோழன், செற்றாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், வயவர் எற்றி எறிய - வீரர்கள் (படைக்கலங்களை) எடுத்து எறிய, நுதல் பிளந்து - நெற்றி பிளத்தலால், நெய்த்தோர் புனல்உள் - உதிர நீருள், நிவந்த - மூழ்கியெழுந்த, களிறு உடம்பு -யானைகளின் உடம்புகள், செக்கர் கொள் வான் இல் - செக்கர் வானத்தில், கரும் கொண்மூ - கரிய மேகத்தை, போன்ற - ஒத்தன எ-று. பிளத்தலால் என்பது பிளந்தெனத் திரிந்து நின்றது. நெய்த்தோர் -குருதி. செக்கர் - செந்நிறம். (23) திண்டோண் மறவ ரெறியத் திசைதோறும் பைந்தலை பாரிற் புரள்பவை நன்கெனைத்தும் பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கற்றே கண்ணார் கமழ்தெரியற் காவிரி நீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து. 24 (ப-ரை) கண்ஆர் - கண்ணுக்கு நிறைந்த (காட்சியையுடைய), கமழ் தெரியல் - மணக்கின்ற மாலையை (அணிந்த), காவிரி நீர் நாடன் - காவிரிநீர் நாட்டையுடைய செங்கட்சோழன், நண்ணாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், திண்தோள் - வலிய தோளையுடைய, மறவர் - வீரர்கள், எறிய - (வாளால்) எறிதலால், திசைதோறும் - திசைகள் தோறும், பார் இல் - பூமியில், பைந்தலை - கரிய தலைகள், புரள்பவை - புரளுவன, நன்கு எனைத்து உம் - மிகவும், பெண்ணை தோட்டம் - பனங்காட்டில், பெருவளி - பெருங்காற்று, புக்கது அற்று - புக்க செயலை யொத்தன எ-று. பசுமை - கருமைமேல் நின்றது. அம் - சாரியை. புக்கதற்று என்பது புக்கற்று என்றாயது. பனந் தோட்டத்திற் பெருவளி புக்கால் காய்கள் உதிர்ந்து புரளுமாறு போலத் தலைகள் புரண்டன என்க. (24) மலைகலங்கப் பாயு மலைபோ னிலைகொள்ளாக் குஞ்சரம் பாயக் கொடியெழுந்து - பொங்குபு வானந் துடைப்பன போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து. 25 (ப-ரை) புனல் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், மேவாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், மலை கலங்க - மலைகள் கலங்க, பாயும் - பாயாநின்ற, மலைபோல் - மலைகள்போல், கொடி - (அவற்றின் மிசை கட்டப் பெற்ற) கொடிகள், எழுந்து - மேல் எழுந்து ,பொங்குபு - விளங்கா நின்று, வானம் - வானத்தை, துடைப்பன போன்ற - துடைப்பனவற்றை யொத்திருந்தன எ-று. மலைகலங்கப் பாயுமலைபோல் என்றது இல் பொருளுவமம். கொடி துடைப்பனபோன்ற என்க. (25) எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல் ஐவாய் வயநாகங் கவ்வி விசும்பிவருஞ் செல்வா யுவணத்திற் றோன்றும் புனனாடன் தெவ்வரை யட்ட களத்து. 26 (பி-ரை) புனல் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், எ வாய் உம் ஓடி -எவ்விடத்தும் சென்று, வயவர் - வீரர்கள், துணித்திட்ட - துணித்த, கை - கைகளை, வாய்இல் - (தமது) வாயில், கொண்டு எழுந்த - கவ்விக் கொண்டு மேலெழுந்த, செம்செவி - சிவந்த செவிகளையுடைய, புல் சேவல் - புல்லிய பருந்தின் சேவல்கள், ஐ வாய் - ஐந்து வாயையுடைய, வயம் நாகம் - வலியையுடைய பாம்பை, கவ்வி - கவ்விக்கொண்டு, விசும்பு இவரும் - வானிலே பறந்து செல்லும், செம் வாய் - சிவந்த வாயையுடைய, உவணத்தில் - கருடனைப்போல, தோன்றும் - தோன்றாநிற்கும் எ-று. புன்மை - புற்கென்ற நிறம். உவணத்தில் என்புழி இல் ஒப்புப் பொருட்டு. (26) செஞ்சேற்றுட் செல்யானை சீறி மிதித்தலால் ஒண்செங் குருதிகள் தொக்கீண்டி நின்றவை பூநீர் வியன்றமிடாப்1 போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து. 27 (ப-ரை.) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், மேவாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், செம் சேறு உள் - (உதிரத்தாற் சேறுபட்ட) செஞ்சேற்றில், செல் யானை - செல்லுகின்ற யானைகள், சீறி மிதித்தலால் - வெகுண்டு மிதித்தலால் (குழிந்த இடங்களில்), தொக்கு ஈண்டி நின்றவை - ஒருங்கு தொக்குநின்ற, ஒள் - ஒள்ளிய, செம் குருதிகள் - சிவந்த உதிரங்கள், பூ வியன்ற - செம் பூக்களை யாக்கிய, நீர்மிடா - நீர்மிடாவை, போன்ற - ஒத்தன எ-று. குழிந்த இடங்களில் என்னுஞ் சொற்கள் அவாய்நிலையான் வந்தன. பூநீர் வியன்ற மிடா - செம்பூக்களையுடைய நீரினையுடைய அகன்றமிடா எனினும் ஒக்கும். தொக்கு ஈண்டி- ஒரு பொருளன. (27) ஓடா மறவ ருருத்து மதஞ்செருக்கிப் பீடுடை வாளார்2 பிறங்கிய ஞாட்பினுட் கேடகத்தோ டற்ற தடக்கைகொண்3 டோடி இகலன்வாய்த் துற்றிய4 தோற்ற மயலார்க்குக் கண்ணாடி காண்பாரிற் றோன்றும் புனனாடன் நண்ணாரை யட்ட களத்து. 28 (ப-ரை) புனல் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், நண்ணாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓடா மறவர் - புறங்கொடாத வீரர்கள், உருத்து - கோபித்து, மதம் செருக்கி - களிப்பால் மிகுந்து, பீடு உடை - பெருமையையுடைய, வாளார் - வாளேந்தினவராய், பிறங்கிய - போர் செய்த, ஞாட்பின்உள் - போரின்கண், கேடகத்தோடு அற்ற- கேடகத்தோடறுபட்ட, தட கை - நீண்ட கைகளை ,கொண்டு ஓடி - கொண்டு சென்று, இகலன் - ஓரிகள், வாய் துற்றிய - (தமது) வாயிற் கவ்விய, தோற்றம் - காட்சி, அயலார்க்கு - அயலில் நின்றவர்க்கு, கண்ணாடி காண்பார் இல் - கண்ணாடி காண்பாரைப் போல, தோன்றும் - தோன்றாநிற்கும் எ-று. பிறங்குதல் போர்செய்தலை யுணர்த்திற்று. அயலார்க்குத் தோன்றும் என்க. (28) கடிகாவிற் காற்றுற் றெறிய வெடிபட்டு வீற்றுவீற் றோடு மயிலினம்போல் - நாற்றிசையும் கேளி ரிழந்தா ரலறுபவே செங்கட் சினமால் பொருத களத்து. 29 (ப-ரை) செம் கண் - சிவந்த கண்களையும், சினம்- வெகுளியையுமுடைய, மால் - செங்கோட்சோழன், பொருத களத்து - போர் செய்த களத்தில் , கடிகா இல் -மரங்கள் செறிந்த சோலையில், காற்று உற்று எறிய - காற்று மிக்கு எறிதலால், வெடிபட்டு - அஞ்சி, வீற்று வீற்று ஓடும் - வேறு வேறாக ஓடும், மயில் இனம்போல் - மயிலின் கூட்டம் போல், நால் திசைஉம் - நான்கு திசையிலும், கேளிர் இழந்தார் - கொழுநரை யிழந்த மகளிர், அலறுப - அலறாநிற்பர் எ-று. வீறு - வேறு; ‘சோறுடைக் கையர் வீற்று வீற் றியங்கும்’ எனப் புறத்தில் வருவது காண்க. செங்கண் மால் என இயைத்துப் பெயராக்குதலும் ஆம். நாற்றிசையும் அலறுப என்க. அலறுப - பலர்பால் முற்று (29). மடங்கா வெறிந்து மலையுருட்டு நீர்போல் தடங்கொண்ட வொண்குருதி கொல்களி றீர்க்கு மடங்கா மறமொய்ம்பிற்1 செங்கட் சினமால் அடங்காரை யட்ட களத்து. 30 (ப-ரை.) மடங்கா - மங்குதலில்லாத, மறம் - மறத்தினையுடைய, மொய்ம்பு இன் - மார்பினையும், செம் கண் -சிவந்த கண்ணினையும், சினம் - கோபத்தையும் உடைய, மால் - செங்கட்சோழன், அடங்காரை - பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், மலை மடங்கா எறிந்து - மலைகள் மறிய எறிந்து, உருட்டும் நீர்போல் - (அம்மலைகள்) உருட்டுகின்ற வெள்ளத்தைப்போல, தடம்கொண்ட - பரந்த, ஒள் குருதி - ஒள்ளிய உதிர வெள்ளம், கொல் களிறு - கொல்லப்பட்ட யானைகளை, ஈர்க்கும் - இழுத்துச் செல்லாநிற்கும் எ-று. மறம் மொய்ம்பு - முறையே வீரமும் வலியும் எனினும் பொருந்தும். மடங்கல் என்னும் பாடத்திற்குச் சிங்கம்போல என்றும், மடங்குதல் அல்லாத என்றும் பொருள் கொள்ளலாகும். கொல் களிறு - கொலைத் தொழிலை யுடைய யானை எனினும் அமையும். செங்கண் என்பதற்கு மேலுரைத்தமை காண்க. (30) ஓடா மறவ ரெறிய நுதல் பிளந்த கோடேந்து கொல்களிற்றுக் கும்பத் தெழிலோடை மின்னுக் கொடியின் மிளிரும் புனனாடன் ஒன்னாரை யட்ட களத்து. 31 (ப-ரை) புனல் நாடன் -நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், ஒன்னாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓடா மறவர் - புறங்கொடாத வீரர்கள், எறிய - வேலினை யெறிதலால், நுதல் பிளந்த - நெற்றி பிளந்த, கோடு ஏந்து - கொம்பினை யேந்திய, கொல் களிறு - கொல்லும் யானையின், கும்பத்து - மத்தகத்தில்(கட்டிய), எழில் ஓடை - அழகிய பட்டம், மின்னுகொடி இல் - (முகிலின்கண்) மின்னற் கொடிபோல, மிளிரும் - விளங்கா நிற்கும் எ-று. பிளந்தகளிறு, ஏந்துகளிறு எனத் தனித்தனி முடிக்க. பிளந்த - பிளக்கப்பட்ட. மின்னுக்கொடி - ‘தொழிற் பெயரில்’ என்பதனான் உகரம் பெற்றது. (31) மையின்மா மேனி நிலமென்னும் நல்லவள் செய்யது போர்த்தாள்போற் செவ்வந்தாள்1 - பொய் பூந்தார் முரசிற் பொருபுன னீர்நாடன் காய்ந்தாரை யட்ட களத்து. 32 (ப-ரை) பூ தார் - பூமாலையினையும், முரசு இன் - வெற்றி முரசினையுமுடைய, பொய்தீர்ந்த - வறத்த லில்லாத, பொரு - (கரையொடு) மோதும், புனல் - நீரினையுடைய, நீர்நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், காய்ந்தாரை - வெகுண்ட பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், மை இல் - குற்றமில்லாத, மாமேனி -அழகிய மேனியையுடைய, நிலம் என்னும் நல்லவள்- பூமி என்னு மாது, செய்யது - சிவந்த போர்வையை, போர்த்தாள்போல் - போர்த்தவள் போல, செவ்வந்தாள் - செந்நிற மெய்தினாள் எ-று. நிலத்தை மகடூஉவாகக் கூறுதல் மரபு. “செல்லான் கிழவனிருப்பி னிலம்புலந், தில்லாளி னூடி விடும்” என்பதும் சிந்திக்கற்பாலது. செய்யது - குறிப்பு வினைப்பெயர். செவ்வந்தாள் - செவ்வரல் பகுதி. செவ்வென்றாள் எனின் செவ்வென் பகுதி. முரசினையுடைய நாடன் என்க. பொய் தீர்ந்த என்பதனை ‘வானம் பொய்யாது’ என்புழிப்போலக் கொள்க. காவிரியின் பொய்யாமையை ‘கரியவன் புகையினும்..................ஓவிறந் தொலிக்கும்’ என்னும் நாடுகாண்காதை யடிகளா னறிக. (32) 33. பொய்கை யடைந்து புனல்பாய்ந்த வாயெல்லா நெய்த லிடையிடை வாளை பிறழ்வனபோல் ஐதிலங் கெஃகி னவிரொளிவா டாயினவே கொய்சுவன் மாவிற் கொடித்திண்டேர்ச் செம்பியன் தெவ்வரை யட்ட களத்து. (ப-ரை) கொய் - கத்திரித்த, சுவல் - புறமயிரையுடைய, மாஇன் - குதிரையினையும், கொடி - கொடிகட்டிய, திண்தேர் - வலிய தேரினையுமுடைய, செம்பியன் - செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், பொய்கை உடைந்து - பொய்கைக் கரையுடைதலால், புனல் பாய்ந்த - (அதன்கண்ணுள்ள) நீர்பரந்த, வாய் எல்லாம் - இடமெல்லாம், நெய்தல் - (மலர்ந்த) நெய்தற் பூக்களின், இடை இடை - நடுவே நடுவே, வாளை பிறழ்வனபோல் - வாளை மீன்கள் பிறழ்தல்போல, ஐது இலங்கு - அழகியதாய் விளங்காநின்ற, எஃகுஇன் - வேலொடு, அவிர் ஒளி - விளங்கும் ஒளியையுடைய, வாள் தாயின - வாள் பறந்தன எ-று. ஐது அஃறிணை யொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினை முற்று எச்சமாய் இலங்கு என்னும் காலங்கரந்த பெயரெச்சங் கொண்டது. ஐ பகுதி, து ஒன்றன்பால் விகுதி. தாயின அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை இறந்தகால வினைமுற்று; தாவு பகுதி, இன் இடைநிலை, வகரம் யகரமாய்த் திரிந்தது. (33) இணரிய ஞாட்பினு ளேற்றெழுந்த மைந்தர் சுடரிலங் கெஃக மெறியச்சோர்ந் துக்க குடர்கொண்டு 1 வாங்குங் குறுநரி கந்தில் தொடரொடு கோணாய் புரையு மடர்பைம்பூட் சேய்பொரு தட்ட களத்து. 34 (ப-ரை) அடர் - தகட்டுவடிவமாகிய, பைம் பூண் - பசிய அணி கலத்தினையுடைய, சேய் - செங்கட்சோழன், பொருது அட்ட - போர்செய்து கொன்ற, களத்து- களத்தின்கண், இணரிய ஞாட்பின் உள்- தொடர்ந்து நெருங்கிய போரில், ஏற்று எழுந்த - எதிர்த்தெழுந்த, மைந்தர் - வீரர்கள், சுடர் இலங்கு - ஒளிவிளங்காநின்ற, எஃகம் - வேல்களை, எறிய - எறிதலால், சோர்ந்து உக்க - சரிந்து சிந்திய, குடர்கொண்டு - (வீரர்களின்) குடர்களைக் கவ்விக்கொண்டு, வாங்கும் - இழுக்கும், குறுநரி -குறுநரிகள், கந்துஇல் - தூணிலே (கட்டப்பட்ட), தொடர் ஒடு - சங்கிலியோடு (நின்ற), கோணாய் புரையும் - கோணாய்களை யொக்கும் எ-று. இணரிய - இணர் பகுதி, இன் இடைநிலை கடைகுறைந்து நின்றது. கோணாய் வேட்டமாடும் நாய். குறு நரி - நரியின் ஓர் வகை; ‘குறுநரி பட்டற்றால்’ என்பது கலி. அடர் - தகடு. (34) செவ்வரைச் சென்னி யரிமானோ டவ்வரை ஒல்கி யுருமிற் குடைந்தற்றான் - மல்கிக் கரைகொன் றிழிதரூஉங் காவிரி நாடன் உரைசா னுடம்பிடி மூழ்க வரசோ(டு) அரசுவா வீழ்ந்த களத்து. 35 (ப-ரை) மல்கி - மிகுந்து, கரை கொன்று - கரைகளை யழித்து, இழிதரும் - செல்லும், காவிரிநாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழனது, உரைசால் - புகழமைந்த, உடம்பிடி மூழ்க - வேல்கள் குளிப்ப, அரசுஓடு - அரசரோடு, அரசுஉவா - (பட்டம்பெற்ற) யானைகள், வீழ்ந்த களத்து - மறிந்துவீழ்ந்த களத்தின்கண் (அங்ஙனம் விழுந்தமை), செம் வரை - செவ்விய மலையின், சென்னி - உச்சியிலுள்ள, அரிமான் ஓடு - சிங்கத்துடன், அவரை - அந்த மலை, ஒல்கி - தளர்ந்து, உருமிற்கு - இடி யேற்றிற்கு, உடைந்தற்று - அழிந்தாற்போலும் எ-று. அரசர்க்கு அரிமானும், யானைக்கு மலையும் உவமம். உடைந்தால் என்பது உடைந்து என நின்றது. (35) ஓஒ உவம னுறழ்வின்றி யொத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலா ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து. 36 (ப-ரை) காவிரி நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், கழுமலம் - கழுமலமென்னும் ஊரினை, கொண்ட நாள் - கைக்கொண்ட நாளில், புனல் நாடன் - அவன், மேவாரை - பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், மா உதைப்ப- குதிரைக ளுதைத்தலால், மாற்றார் - பகைவரின், குடையெல்லாம் - குடைகளெல்லாம், கீழ்மேல் ஆய் - கீழ்மேலாகி, ஆ, உதை - ஆனிரைகளா லுதைக்கப்பட்ட, காளாம்பி போன்ற - காளாம்பியை யொத்தன, உவமன் - அவ்வுவமை, உறழ்வு இன்றி - மாறுபா டில்லாமல், ஒத்தது - பொருந்தியது எ-று. முதலடி முற்றுமோனை, ஓ வென்பது சிறப்புணர்த்திற்று. புனனாடன் என்பது சுட்டு. உவமன் என்புழிச் சுட்டு வருவிக்க, கழுமலம் ‘சேர நாட்டகத்ததோர் ஊராதல் வேண்டும். ‘நற்றேர்க் குட்டுவன் கழுமலம்’ என்பதும் காண்க. (36) அரசர் பிணங்கான்ற நெய்த்தோர் முரசொடு முத்துடைக் கோட்ட களிறீர்ப்ப - எத்திசையும் பௌவம் புணரம்பி போன்ற புனனாடன் தெவ்வரை யட்ட களத்து. 37 (ப-ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், அரசர் பிணம் - அரசர் பிணங்கள், கான்ற - சிந்திய, நெய்த்தோர் - உதிரவெள்ளங்கள், எத்திசை உம் - எல்லாத் திசைகளிலும், முரசு ஒடு - முரசினோடு, முத்து உடை - முத்தினையுடைய, கோட்ட - கொம்புகளையுடைய, களிறு - யானைகளை, ஈர்ப்ப - இழுப்ப (அவைகள்), பௌவம் - கடலையும், புணர் - (அக்கடலைச்) சேர்ந்த, அம்பி - மரக்கலன்களையும், போன்ற - ஒத்தன எ-று. அரசரின் உடல் மறிந்து கிடப்பதனை அரசர் பிணம் என்றார். முரசினையும் களிற்றினையும் ஈர்ப்ப என்க. அவையெனச் சுட்டு வருவிக்க. கோட்ட - குறிப்புப் பெயரெச்சம். (37) பருமப் பணையெருத்திற் பல்யானை புண்கூர்ந்(து) உருமெறி பாம்பிற் புரளுஞ் - செருமொய்ம்பிற் பொன்னார மார்பிற் புனைகழற்காற் செம்பியன் துன்னாரை யட்ட களத்து. 38 (ப-ரை) செரு மொய்ம்பு இன் - போர் வலியினையும், பொன் ஆரம் -பொன்னாற் செய்த ஆரத்தை யணிந்த, மார்பு இன் - மார்பினையும், புனைகழல்கால் - கட்டிய வீரக்கழலினையுடைய காலினையுமுடைய, செம்பியன் -செங்கட்சோழன், துன்னாரை - பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், பருமம் - பண்ணினையும், பணை - பருத்த, எருத்து ,ன் - பிடரினையு முடைய, பல் யானை - பல யானைகள், புண்கூர்ந்து -(படைகளால்) புண் மிகுதலால், உரும் எறி - இடியேற்றா லெறியப் பட்ட; பாம்பு இன் - பாம்பு போல, புரளும் - புரளாநிற்கும் எ-று. பருமம் - ஒப்பனை. பாம்பின் - ஐந்தனுருபு ஒப்புப் பொருட்டு. எருத்தின் முதலியவற்றில் சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையாது வருதலை ‘மெல் லெழுத்து மிகுவழி’ என்னுஞ் சூத்திரத்து ‘மெய்பெற’ என்பதனாற் கொள்ப. (38) மைந்துகால் யாத்து மயங்கிய ஞாட்பினுட் புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன் வஞ்சிக்கோ வட்ட களத்து. 39 (ப-ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், வஞ்சி கோ - வஞ்சி யரசனாகிய சேரனை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், மைந்து - (வீரர்கள் தங்கள்) மறவலிகள், கால் யாத்து - காலைத் தளை செய்தலால், மயங்கிய - போகாது மிடைந்த, ஞாட்பின் உள் - போரின்கண், கால் புய்ந்து போகி - காம்பு பறிந்து போகப்பட்டு, புலால் முகந்த - செந்தசையை முகந்த, வெண்குடை - வெள்ளைக் குடைகள், பஞ்சிபெய் -செம் பஞ்சுக் குழம்பு பெய்த, தாலம் ஏ போன்ற - தாலத்தையே யொத்தன எ-று. தாலம் - வட்டில், புய்ந்து - புய் பகுதி, ‘புய்த்தெறி நெடுங்கழை’ என்பது புறம். (39) வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால முழுவனபோல் எல்லாக் களிறு நிலஞ்சேர்ந்த - பல்வேற் பணைமுழங்கு போர்த்தானைச் செங்கட் சினமால் கணைமாரி பெய்த களத்து. 40 (ப-ரை) பல்வேல் - பல வேலினையும், பணை முழங்கு - முரசு முழங்காநின்ற, போர் தானை - போர்ச்சேனையையும், சினம் - கோபத்தையு முடைய, செங்கண்மால் - செங்கட்சோழன், கணை மாரி - அம்பு மழை, பெய்த களத்து - பெய்த போர்க்களத்தில், வெள்ளி - வெள்ளியாற் செய்த, வெள்நாஞ்சிலால் - வெள்ளிய கலப்பையால், ஞாலம் உழுவனபோல் - நிலத்தை யுழுதல்போல, களிறு எல்லாம் - யானை களெல்லாம், நிலம் சேர்ந்த - (முகங்கவிழ்ந்து) நிலத்தைச் சேர்ந்தன எ-று. யானையின் வெண்கோடுகள் வெள்ளிநாஞ்சில் போன்றன. மாரி பெய்தவழி நிலம் உழுதலாகிய செயல் நினைப்பிக்கப்பட்டது. (40) வேனிறத் திங்க வயவரா லேறுண்டு கானிலங் கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து மாநிலங் கூறு மறைகேட்ப போன்றவே பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் கூடாரை யட்ட களத்து. 41 (ப-ரை) பாடு ஆர் - ஒலி நிறைந்த, இடி - இடிபோன்ற, முரசு இன் - முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்து செல்லும் நீரினையுடைய, நீர்நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், கூடாரை - பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், வேல் - வேலானது, நிறத்து இங்க - மார்பிலழுந்த, வயவரால் - வீரரால், ஏறுண்டு - குத்துப்பட்டு, கால் நிலம் கொள்ளாது - கால்கள் தளர்ந்து, கலங்கி - வீழ்ந்து, செவிசாய்த்து - செவிகளைச் சாய்த்து, (யானைகள் கிடத்தல்), மா நிலம் -பெரிய நிலமகள், கூறும் - உபதேசிக்கும், மறை - உபதேச மொழியை, கேட்ப போன்ற - கேட்டலை யொத்தன எ-று. மறை - மந்திரம், மறைந்த பொருளுடையது. செவி சாய்த்து என்பதனால் அது கேட்கு முறைமை யுணர்த்தப்பட்டது, அவாய் நிலையாற் சில சொற்கள் வருவிக்கப்பட்டன. (41) களவழி நாற்பது மூலமும் உரையும் முற்றிற்று. செய்யுள் முதற்குறிப்பு அகராதி (எண் - பக்கவெண்) அஞ்சனக் 199 அரசர் 215 ஆர்ப்பெழுந்த 204 இடைமருப்பின் 206 இணரிய 214 இருசிறக 206 இருநிலஞ் 214 இணைவே 206 உருவக்கடுந் 197 எவ்வாயு 209 எற்றிவயய 208 ஒழுக்குங் 196 ஓஒஉவம 215 ஓடாமறவரு 210 ஓடாமறவரெறி 212 ஓவாக்கணை 211 கடகாவிற் 203 கவளங்கொள் 203 கழுமிய 201 கொல்யானை 203 செஞ்சேற்றுட் 210 செவ்வரைச் 214 ஞாட்பினு 196 திண்டோண் 208 தெரிகணை 197 நளிந்த 205 நானாற்றிசை 199 நாண்ஞாயி 195 நிரைகதிர் 202 பருமவின 204 பருமப்பணை 216 பல்கணை 200 பொய்கை 213 மடங்க 211 மலைகலங்க 209 மேலோரை 200 மையின்மா 212 மைந்து 216 யானைமேல் 199 வெள்ளி 217 வேனிறத் 217 இன்னா நாற்பது ஆசிரியர் : கபிலர் உரையாசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார் முகவுரை இன்னா நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களியற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இறையனார் களவியலுரையிற் கடைச் சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறிவருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்பட்டிலவேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடிய வென்றே துணிந்து எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என எண்ணி வருகின்றனர். கீழ்க் கணக்கியற்றிய ஆசிரியர்களுள் கபிலர், கூடலூர் கிழார் முதலிய சிலர் சங்கத்துச் சான்றோ ரென்பது ஒருதலை, கீழ்க்கணக்குப் பதினெட்டென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில், “ வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே” என்னும் சூத்திர வுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் உரைக்குமாற்றானறியலாவது. அவை அம்மையென்னும் வனப் புடைய வாதலும் அவ்வுரையாற்றெளியப்படும்; பழைய பனுவல்களை அளவு முதலியன பற்றி மேற்கணக்கெனவும் கீழ்க் கணக் கெனவும் பின்னுள்ளோர் வகைப்படுத்தின ராவர். “ அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட உரைப்பது கீழ்க்கணக் காகும்” என்பது பன்னிரு பாட்டியல். கீழ்க்கணக்குகள் பதினெட்டாவன: நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, திணைமொழி யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பன, இதனை, “ நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு” என்னும் வெண்பாவானறிக. இதில் ‘நால்’ என்பதனை ‘ஐந்திணை என்பதன் முன்னுங் கூட்டி நாலைந்திணையெனக் கொள்ள வேண்டும். சிலர் இன்னிலையை விடுத்துக் கைந்நிலையை ஒன்றாக்குவர். மற்றுஞ் சிலர் ஐந்திணையை ஐந்து நூலெனக்கொண்டு இன்னிலை, கைந்நிலை இரண்டனையும் ஒழித்திடுவர். அவர் ‘திணைமாலை’ என்பதொரு நூல் பழைய வுரைகளாற் கருதப்படுவதுண்டாகலின் அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாகல் வேண்டுமென்பர். முற்குறித்த வெண்பாவில் ‘ஐந்தொகை’ ‘இன்னிலைய, ‘மெய்ந்நிலைய’ கைந்நிலையோடாம்’ ‘நன்னிலையவாம்’ என்றிவ்வாறெல்லாம் பாடவேற்றுமையும் காட்டுவர். கீழ்க்கணக்குகள் பதினெட்டேயாதல் வேண்டு மென்னுங் கொள்கையால் இவ்விடர்ப்பாடுகள் விளைகின்றன. இனி, இன்னா நாற்பது என்னும் இந்நூலை யியற்றினார் நல்லிசைப் புலவராகிய கபிலரென்பார். இவரது காலம் கி. பி. 50 முதல் 125வரை ஆதல் வேண்டும். இவர் தமிழ்நாட்டு அந்தணருள் ஒருவர். இவர் அந்தணரென்பது ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’ (புறம். 126) என மாறோக்கத்து நப்பசலையார் இவரைப் புகழ்ந்து கூறியிருத்தலானும், இவரே பாரிமகளிரை விச்சிக்கோன், இருங்கோவேள் என்பவர்களிடம் கொண்டு சென்று, அவர்களை மணந்து கொள்ளுமாறு வேண்டியபொழுது, ‘யானே பரிசிலன் மன்னு மந்தணன்’ (புறம் 200) என்றும், ‘அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே’ (புறம். 201) என்றும் தம்மைக் கூறிக்கொண்டிருத்தலானும் பெறப்படுவதாகும். இவரது சமயம் சைவமே. இவர் இந்நூற்கடவுள் வாழ்த்தில் சிவபெருமானையடுத்து வேறு கடவுளரையுங் கூறியிருப்பது இவர்க்கு ஏனைக் கடவுளர்பால் வெறுப்பின்றென்பது மாத்திரையேயன்றி விருப்புண் டென்பதையும் புலப்படுத்தாநிற்கும். சமயங்களின் கொள்கைகளும், சமயநெறி நிற்போர் நோக்கங்களும் அவ்வக்கால இயல்புக்கும் ஏனைச் சார்புகளுக்கும் ஏற்பப் பிழையின்றியோ பிழையாகவோ வேறுபாடெய்தி வருதல் உண்மை காணும் விருப்புடன் நுணுகி ஆராய்ச்சி செய்வார்க்குப் புலனாகும். இனி, இவரியற்றிய பாட்டுகள் சங்கத்தார் தொகுத்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் மூன்று வகுப்பிலும் உள்ளன. பல நூறு புலவர்கள் பாடிய செய்யுட்களில் இவர் பாடியன ஏறக்குறைய பதினொன்றிலொருபங்காக இருத்தலும், அவை ஒவ்வொரு தொகையிலும் சேர்ந் திருத்தலும் இவரது பாட்டியற்றும் பெருமையையும் நன்மதிப்பையும் புலப்படுத்துகின்றன. இவரியற்றிய குறிஞ்சிப் பாட்டும், குறிஞ்சிக்கலியும் இயற்கை வளங்களை யெழில் பெற எடுத்துரைப்பதில் இணையற்ற பெருமை வாய்ந்தன. தமிழ்ச்சுவை யறியாதிருந்த ஆரியவரசன் பிரகத்தனுக்கு இவர் குறிஞ்சிப்பாட்டியற்றித் தமிழ் அறிவுறுத்தினார் என்பதிலிருந்து, தமிழின் பால் இவருக்கிருந்த பெரும் பற்றும், ஏனோரும் தமிழினை யறிந்தின்புற வேண்டுமென்னும் இவரது பெரு விருப்பமும், தமிழின் சுவையறியாதோரும் அறிந்து புலவராகும்படி தெருட்டவல்ல இவரது பேராற்றலும் புலனாகின்றன. நச்சினார்க்கினியர், சேனாவரையர், பரிமேலழகர் முதலிய உரையாசிரியன் மாரெல்லாரும் ஆறாம் வேற்றுமைச் செய்யுட் கிழமைக்குக் ‘கபிலரது பாட்டு, என்று உதாரணங் காட்டியுள்ளார் களென்றால் இங்ஙனம் சான்றோர் பலர்க்கும் எடுத்துக்காட்டாக முன்னிற்றற் குரிய இவர் பாட்டுக்களின் அருமை பெருமைகளை எங்ஙனம் அளவிட்டுரைக்கலாகும்.? இவ்வாறு புலமையிற் சிறந்து விளங்கிய இவ்வாசிரியர் அன்பு, அருள், வாய்மை முதலிய உயர்குணனெல்லாம் ஒருங்கமையப் பெற்றவராயும் இருந்தார். இவரது பாட்டியற்றும் வன்மையையும், வாய்மையையும், மனத் தூய்மையையும், புகழ் மேம்பாட்டையும் சங்கத்துச் சான்றோர்களே ஒருங்கொப்பப் புகழ்ந்து கூறியுள்ளார்கள். “உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்” (அகம். 78) என நக்கீரனாரும், “அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின் உவலை கூராக் கவலையி னெஞ்சின் நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன்” (பதிற்றுப்பத்து. 85) எனப் பெருங்குன்றூர் கிழாரும், “தாழாது செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” (புறம். 53) எனப் பொருத்திலிளங்கீரனாரும், “ நிலமிசைப் பிறந்த மக்கட் கெல்லாம் புலனழுக் கற்ற வந்த னாளன் இரந்துசெல் மாக்கட் கினியிட னின்றிப் பரந்திசை நிற்கப் பாடினன்” (புறம். 127) எனவும், “பொய்யா நாவிற் கபிலன்” (புறம். 174) எனவும் மாறோக்கத்து நப்பசலையாரும் பாடியிருத்தல் காண்க. இங்ஙனம் புலவரெல்லாரும் போற்றும் புலமையும் சான்றாண்மையும் உடையராய இவர்பால், அக்காலத்து வேந்தர்களும் வள்ளல்களும் எவ்வளவு மதிப்பு வைத்திருத்தல் வேண்டும்! வரையா வள்ளன்மையால் நிலமுழுதும் புகழ் பரப்பிய பறம்பிற்கோமானாகிய வேள்பாரி இவரை ஆருயிர்த் துணையாகக் கொண்டொழுகினமையே, இவர்பால் அவ்வள்ளல் வைத்த பெருமதிப்புக்குச் சான்றாகும். சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் வேந்தர் பெருமான், இவர் பாடிய ஒரு பத்துப் பாடல்களுக்குப் பரிசிலாக நூறாயிரம் காணம் கொடுத்ததன்றி, ஒரு மலைமீதேறிக் கண்ட நாடெல்லாம் கொடுத்தான் என்றால், அவ்வரசன் இவர்பால் வைத்த மதிப்பினை அளவிடலாகுமோ? மாந்தரஞ்சேர லிரும்பொறையென்ற சேரர்பெருமான் இப்புலவர் பெருந்தகை தமது காலத்தில் இல்லாது போனமைக்கு மனங்கவன்று ‘தாழாது, செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன், இன்றுள னாயின் நன்றுமன்’ என்று இரங்கிக் கூறினன். இது கேட்ட பொருந்தி லிளங்கீரனார் என்ற புலவர் அவ்வரசனைப் பாடுங்கால் இதனைக் கொண்டு மொழிந்தனர். இன்னணம் புலவரும், மன்னரும் போற்றும் புகழமைந்த இவர் தொல்லாணை நல்லாசிரியரும் ஆவர். இது, தமிழினை மதியாது கூறிய குயக் கொண்டான் பெரும் பிறிதுறுமாறு நக்கீரர் தாம் பாடிய அங்கதப் பாட்டினுள், “ முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி” என்று, அருந்தவக் கொள்கை அகத்தியனாரொடு ஒப்பவைத்து வாழ்த்தி, இவரது ஆணை பிழையாமை காட்டினமையாற் றெளியப்படும். இவ்வாசிரியரது வரலாற்றின் விரிவையும், குறிஞ்சிப் பாட்டு முதலியவற்றின் ஆராய்ச்சியையும் யானெழுதிய கபிலர் என்னும் உரை நூலால் நன்கு அறியலாகும். இனி, இந்நூல் கடவுள்வாழ்த்து உட்பட நாற்பத்தொரு வெண்பாக்களையுடையது. இதிலுள்ள ஒவ்வொரு பாட்டும் இன்னது இன்னது ‘இன்னா’ எனக் கூறுதலின், இஃது இன்னா நாற்பது எனப் பெயரெய்திற்று. இதற்கெதிராக இன்னது இன்னது இனிது எனக் கூறும் பாக்களையுடைய நூல் இனியவை நாற்பது என வழங்குகிறது. இவற்றுள் ஒன்று மற்றொன்றைப் பார்த்துப் பாடியதாகும் எனக் கருதற்கு இடனுண்டு. இவ்வாசிரியர் துன்பின் மூலங்கள் இன்னின்ன வெனக் கண்டு, அவற்றையே தொகுத்தெடுத்துக் கூறியிருப்பது பாராட்டற் பாலதொன்றாம். மக்கள் யாவரும், தாம் விரும்புவது இன்பமேயாயினும் இன்ப துன்பங்களின் காரணங்களை யறிந்து ஏற்ற பெற்றி நடவாமையால், துன்பமே பெரிதும் எய்துகின்றனர். இஃது எக்காலத்திற்கும் பொதுவாக ஒக்கும். இன்பத்தின் காரணத்தை யறிந்து மேற்கொள்ளுதலினும், முதற்கட் செய்யற்பாலது, துன்பத்தின் காரணத்தை யறிந்து அதனின் நீங்குதலாகும். ஆதலாற்றான் அந்தண்மை பூண்ட கபிலர் துன்பின் மூலங்களைத் தொகுத்துரைப்பாராயின ரென்க. இந்நூல், திருக்குறள் முதலியன போன்று, கூறவேண்டும் பொருள்களையெல்லாம் அடைவுபட வகுத்துக் கூறவந்ததன்று; ஆகலின் இதனை, அவற்றோடு ஒப்பித்துப் பார்த்தல் பொருந்தாது. ஒரு பேரறிஞர் ஒருவாறாக உலகியலை விரைந்து நோக்குங்கால், அவருள்ளத்தில் இன்னா வெனத் தோன்றியவை, இதில், அவ்வப்படி வைக்கப் பட்டுள்ளன வென்றே கொள்ளல் வேண்டும்.இதில் நீதிகளல்லாமல், சிற்சில மக்களியற்கை முதலியவும் கூறப்பட்டுள. ஒரே கருத்துப் பலவிடத்தில் வெவ்வேறு தொடர் களாற் கூறப்பட்டுமிருக்கிறது. இதிலுள்ள ‘இன்னா’ என்னுஞ் சொற்கு யாண்டும் துன்பம் என்றே பொருள் கூறிவந்திருப்பினும், சிலவிடத்து ‘இனிமை யன்று’ எனவும், சிலவிடத்து ‘தகுதியன்று’ எனவும் இங்ஙனமாக ஏற்றபெற்றி கருத்துக் கொள்ளவேண்டும். கள்ளுண்டல், கவறாடல், ஊனுண்டல் என்பன இதிற் கடியப்பட்டுள்ளன. இந்நூலில் வந்துள்ள, ‘ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா’, ‘குழவிகளுற்ற பிணி யின்னா’, ‘கல்லா ருரைக்குங்’ கருமப் பொருளின்னா என்னுந் தொடர்களோடு, இனியவை நாற்பதில் வந்துள்ள ‘ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே,’ குழவி பிணியின்றி வாழ்தலினிதே,’ ‘கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருளினிதே’ என்னுந் தொடர்கள் ஒற்றுமை யுறுதல் காண்க. இந்நூற்குப் பழைய பொழிப்புரை யொன்றுளது. சின்னாளின் முன்புஞ் சிலர் உரை யெழுதி வெளிப்படுத்தியிருக்கின்றனர். நம் தமிழன்னைக்கு அரிய தொண்டுகள் பல ஆற்றிப் போற்றிவரும் திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் விரும்பியவாறு இப்புதியவுரை பல மேற்கோளுடன் என்னால் எழுதப் பெறுவதாயிற்று. பல சுவடிகள் பார்த்துப் பாட வேற்றுமையும் காட்டப்பெற்றுளது. இதிற் காணப்படும் குற்றங் குறைகளைப் பொறுத்தருளி எனக்கு ஊக்க மளிக்குமாறு அறிஞர்களை வேண்டிக்கொள்கிறேன். “ ஞால நின்புக ழேமிக வேண்டும்தென் னால வாயி லுறையுமெம் மாதியே” இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். இன்னா நாற்பது முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா பொற்பனை வெள்ளையை 1 யுள்ளா தொழுகின்னா சக்கரத் தானை மறப்பின்னா 2 வாங்கின்னா சத்தியான் றாடொழா தார்க்கு. 1 (பதவுரை) முக்கண் பகவன் - மூன்று கண்களையுடைய இறைவனாகிய சிவபிரானுடைய, அடி - திருவடிகளை, தொழாதார்க்கு – வணங்காதவர் களுக்கு, இன்னா - துன்ப முண்டாம்; பொன் பனை வெள்ளையை -அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை, உள்ளாது - நினையாமல், ஒழுகு - நடத்தல், இன்னா - துன்பமாம்; சக்கரத்தானை - திகிரிப்படையை யுடையவனாகிய மாயோனை, மறப்பு- மறத்தல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, சத்தியான் - வேற்படையை யுடையவனாகிய முருகக் கடவுளின், தாள் - திருவடிகளை, தொழாதார்க்கு - வணங்காதவர்களுக்கு, இன்னா - துன்ப முண்டாகும் என்றவாறு. முக்கண் - பகலவன் திங்கள் எரி யென்னும் முச்சுடராகிய மூன்று நாட்டங்கள். பகவன் - பகம் எனப்படும் ஆறு குணங்களையும் உடையவன். அறு கு™மாவன; முற்றறிவு, வரம்பிலின்பம், இயற்கைஉணர்வு, தன்வயம், குறைவிலாற்றல், வரம்பிலாற்றல் என்பன. பகவன் என்பது பொதுப் பெயராயினும் ‘முக்கண்’ என்னுங் குறிப்பால் இறைவனை யுணர்த்திற்று; இறைவனுக்கு உண்மையும் ஏனையர்க்கு முகமனும் எனக் கொள்ளலுமாம். “ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங் கடல்வளர் புரிவளை புரையு மேனி யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனு மண்ணுறு திருமணி புரையு மேனி விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனு மணிமயி லுயரிய மாறா வென்றிப் பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென ஞாலங் காக்குங் கால முன்பிற் றோலா நல்லிசை நால்வ ருள்ளும்” என்னும் புறப்பாட்டால் பலராமனைக் கூறுதல் தமிழ் வழக்காதலுணர்க. பலராமன் வெண்ணிற முடையனாகலின் வெள்ளை எனப்பட்டான். பொற்பன வூர்தி என்னும் பாடத்திற்கு அழகிய அன்ன வாகனத்தை யுடைய பிரமன் என்று பொருள் கூறிக்கொள்க. இனியவை நாற்பதில் அயனையும் வாழ்த் தினமை காண்க. ஒழுகும் முதனிலைத் தொழிற்பெயர். (1) பந்தமில் லாத மனையின் வனப்பின்னா தந்தையில் லாத புதல்வ னழகின்னா அந்தண ரில்லிருந் தூணின்னா 1 வாங்கின்னா மந்திரம் வாயா விடின். 2 (ப - ரை) பந்தம் இல்லாத - சுற்றமில்லாத, மனையின் - இல்வாழ்க்கையின், வனப்பு - அழகானது, இன்னா - துன்பமாம்; தந்தையில்லாத - பிதா இல்லாத, புதல்வன் - பிள்ளையினது, அழகு - அழகானது, இன்னா - துன்பமாம்; அந்தணர் - துறவோர், இல் இருந்து - வீட்டிலிருந்து, ஊண் - உண்ணுதல், இன்னா துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, மந்திரம் - மறைமொழியாய மந்திரங்கள், வாயா விடின் - பயனளிக்காவிடின், இன்னா துன்பமாம் எ - று. பந்தம் - கட்டு; சுற்றத்திற்காயிற்று. மனை - மனைவாழ்க்கை அதன் வனப்பாவது செல்வம். “சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்” என்பவாகலின் சுற்றமில்லாத மனையின் வனப்பு இன்னாவாயிற்று. இனி, அன்பில்லாத இல்லாளின் அழகு, இன்னாவாம் எனினும் அமையும். ‘தந்தையொடு கல்வி போம்’. ஆதலின் தந்தை யில்லாத என்றதனால் கல்விப் பேற்றையிழந்த, என்னும் பொருள் கொள்ளப்படும். அந்தணர் - துறவோர். இதனை, ‘அந்தண ரென்போ ரறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ், செந்தண்மை பூண்டொழுகலான்’ என்னும் பொய்யா மொழியா னறிக. துறவறத்தினர் காட்டில் கனி கிழங்கு முதலிய உண்டலேனும், நாட்டில் ஒரு வழித் தங்காது திரிந்து இரந்துண்டலேனும், செயற்பாலரன்றி, ஒரு மனையின் கட்டங்கியுண்ணற்பாலரல்ல ரென்க. மந்திரம் இன்னதென்பதனை “நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரமென்ப” என்னும் தொல்காப்பியத்தா னறிக. மந்திரம் அமைச்சரது சூழ்ச்சி எனப் பொருள் கோடலும் ஆம்; சூழாது செய்யும் வினை துன்பம் பயக்குமென்பது கருத்து. (2) பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா பாத்தில் புடைவை யுடையின்னா 1 வாங்கின்னா காப்பாற்றா வேந்த னுலகு. 3 (ப - ரை) பார்ப்பார் - பார்ப்பாருடைய, இல் - மனையில், கோழியும் நாயும் -, புகல் - நுழைதல், இன்னா - துன்பமாம்; ஆர்த்த - கலியாணஞ் செய்துகொண்ட, மனைவி - மனையாள். அடங்காமை - (கொழுநனுக்கு) அடங்கி நடவாமை, நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; பாத்துஇல் - பகுப்பு இல்லாத, புடைவை - புடைவையை, உடை - உடுத்தல், இன்னா - துன்பமாம், ஆங்கு அவ்வாறே, உலகு - நாடு, இன்னா - துன்பமாம் எ - று. பார்ப்பாரில்லிற் கோழியும் நாயும் புகலாகா தென்பதனை மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது’ என்னும் பெரும் பாணாற்றுப்படை யடியானு மறிக. ஆர்த்தல் - கட்டுதல்; அது தொடர்புண்டாமாறு கலியாணஞ் செய்து கொள்ளுதலை யுணர்த்திற்று. அடங்காமை - எறியென் றெதிர் நிற்றல் முதலியன. பாத்து பகுத்து என்பதன் மரூஉ: ஈண்டுத் தொழிற் பெயர். சிலப்பதிகாரத்தில் ‘பாத்தில் பழம்பொருள்’ என வருதலுங் காண்க.புடைவை - ஆடவருடையையும் குறிக்கும். ‘பாத்தில் புடைவையுடையின்னா’ என்றதனாற் சொல்லியது ஒன்றுடுத்தலாகா தென்பதாம். ‘ஒன்ற மருடுக்கை’ என்னும் பெரும்பாணாற்றடி ஒன்றுடாமையே தகுதியென்பது காட்டி நிற்கின்றது. காப்பு ஆற்றா - காத்தலைச் செய்யாத: ஒரு சொல்லுமாம். (3) கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா நெடுநீர்ப் புணையின்றி நீந்துத லின்னா கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா தடுமாறி வாழ்த லுயிர்க்கு. 4 (ப - ரை) கொடுங்கோல் - கொடுங்கோல் செலுத்தும், மறம் - கொலைத் தொழிலையுடைய, மன்னர்கீழ் - அரசரது ஆட்சியின் கீழ்,வாழ்தல் - வாழ்வது, இன்னா - துன்பமாம்; நெடுநீர் - மிக்கநீரை, புணை இன்றி – தெப்ப மில்லாமல், நீந்துதல் - கடந்து செல்லுதல், இன்னா - துன்பமாம்; கடுமொழி யாளர் - வன்சொல் கூறுவோரது, தொடர்பு - நட்பு, இன்னா - துன்பமாம்; உயிர்க்கு - உயிர்களுக்கு, தடுமாறி - மனத்தடுமாற்ற மடைந்து, வாழ்தல் - வாழ்வது, இன்னா - துன்பமாம் எ - று. கொடுங்கோல் - வளைந்த கோல்; அரச நீதியாகிய முறையினைச் செங்கோல் என்றும், முறையின்மையைக் கொடுங்கோல் என்றும் கூறுதல் வழக்கு: இவை ஒப்பினாகிய பெயர். மன்னர் என்பது அவரது ஆட்சிக்காயிற்று. கடுமொழியாளர் - மிகுதிக் கண் கழறிக் கூறுமுறையன்றி, எப்பொழுதும் வன் சொல்லே கூறுமியல்பினர் என்றபடி, தடுமாற்றம் - வறுமை முதலிய வற்றாலுண்டாகும் மனவமைதி யின்மையாகிய துன்பம். உயிரென்றது ஈண்டு மக்களுயிரை. (4) எருதி லுழவர்க்குப் போகீர மின்னா கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா திருவுடை யாரைச் செறலின்னா வின்னா பெருவலியார்க் கின்னா செயல். 5 (ப - ரை) எருது இல் - (உழவுக்குரிய) எருது இல்லாத - உழவர்க்கு - உழுதொழிலாளர்க்கு, போகு ஈரம் - அருகிய ஈரம், இன்னா - துன்பமாம்; கருவி - படையின் தொகுதி, கண்மாறி, நிலையழிந்து, புறங்கொடுத்தல் - முதுகு காட்டுதல், இன்னா - துன்பந் தருவதாகும்; திரு உடையாரை - (மிக்க) செல்வமுடையவர் பால், செறல் - செற்றங் கொள்ளல், இன்னா - துன்பந் தருவதாகும்; பெருவலியார்க்கு - மிக்க திறலுடையார்க்கு, இன்னா செயல் - தீமை செய்தல், இன்னா துன்பந் தருவதாகும் எ - று. போகுதல் - அருகுதல், ஒழித்தல்; ‘மன்னர் மலைத்தல் போகிய, என்புழி இப் பொருட்டாதல் காண்க. கருவி - தொகுதி; ஈண்டுப் படையது தொகுதி யென்க. கண்மாறி : ஒருசொல்; ‘ஆங்கவனீங் கெனை யகன்று கண்மாறி’ என்புழிப்போல. இனி, கண்மாறியென்பதற்கு அரசனிடத் தன்பின்றி எனப் பொருள் கொள்ளலுமாம். கருவிகள் மாறி எனப் பிரித்தல் பொருந்து மேற்கொள்க. பெருவலியார் - பொருள் படை முதலியவற்றாற் பெருவலி யுடையராய அரசரும், தவத்தால் ஒன்னார்த் தெறலும் உவந்தாரையாக்கலுமாம். பெருவலி பெற்றுடையராய முனிவரும் ஆம்; பெருவலியார்க்கின்னா செயல் துன்பந் தரும் என்பதனைக், ‘கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க், காற்றாதாரின்னா செயல்’ என்னுந் திருவள்ளுவப்பயனாலுமறிக. (5) சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா உறைசேர் 1 பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா முறையின்றி யாளு மரசின்னா வின்னா மறையின்றிச் செய்யும் வினை. 6 (ப - ரை) சிறை இல் -வேலியில்லாத, கரும்பினை - கரும்புப் பயிரை, காத்து ஓம்பல் -பாதுகாத்தல், இன்னா - துன்பமாம்; உறைசேர் - மழைத்துளி ஒழுகுதலையுடைய, பழங்கூரை - பழைய கூரையை யுடைய மனையில், சேர்ந்து ஒழுகல் - பொருந்தி வாழ்தல், இன்னா - துன்பமாம்; முறை இன்றி - நீதியில்லாமல், ஆளும் - ஆளுகின்ற, அரசு - அரசரது ஆட்சி, இன்னா - துன்பமாம்; மறை இன்றி - சூழ்தலில்லாமல், செய்யும், வினை - செய்யுங் கருமம், இன்னா - துன்பந் தருவதாகும், எ - று. காத்தோம்பல் : ஒரு பொருளிருசொல். உறைசேர் பழங்கூரை என்றது செய்கையழிந்து சிதைவுற்று மழைநீர் உள்ளிழியுஞ் சிறு கூரையினை. அரசு - அரசனுமாம். அரசன் முறையிலானாயின் முறையிழத்தலானே யன்றி மழையின்மை யாலும் நாடு துன்புறும்; ‘முறைகோடி மன்னவன் செய்யினுறை கோடி, யொல்லாது வானம் பெயல்’ என்பது காண்க. அமைச்சருடன் மறைவிற் செய்யப்படுவதாகலின் சூழ்ச்சி மறையெனப்பட்டது. (6) அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா1 மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா கொடும்பா டுடையார்வாய்ச் சொல். 7 (ப - ரை) அறம் மனத்தார் - அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர், கூறும் - சொல்லுகின்ற, கடுமொழியும் - கடுஞ் சொல்லும், இன்னா - துன்பமாம்; மறம் மனத்தார் - வீரத் தன்மையுடைய நெஞ்சத்தினர், ஞாட்பில் - போரின்கண், மடிந்து ஒழுகல் - சோம்பி இருத்தல், இன்னா - துன்பமாம்; இடும்பை உடையார் - வறுமை உடையாரது, கொடை - ஈகைத் தன்மை, இன்னா - துன்பமாம், கொடும்பாடு உடையார் - கொடுமையுடையாரது, வாய்ச்சொல் - வாயிற் சொல்லும், இன்னா - துன்பமாம் எ - று. ‘அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொ னான்கும், இழுக்காவியன்ற தறம்’ என்பவாகலின் அறமனத்தார் கூறுங் கடுமொழியும் இன்னாவாயிற்று. உம்மை; எச்சப்பொருளது. இடும்பை - துன்பம் ஈண்டுக் காரணமாய வறுமைமேல் நின்றது. ‘வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்’ என்று பிற சான்றோருங் கூறினர். கொடும்பாடு - கொடுமை: ஒரு சொல். ‘அருங்கொடும்பாடுகன் செய்து’ என்பது திருச்சிற்றம்பலக் கோவையார்; நடுவு நிலை யின்மையும் ஆம். வாய்ச் சொல் என வேண்டாது கூறியது தீமையே பயின்ற தெனவேண்டியது முடித்தற்கு வாய்ச் சொல்லும் என்னும் உம்மை தொக்கது. (7) ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா நாற்ற மிலாத மலரி னழகின்னா தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா மாற்ற மறியா னுரை. 8 (ப - ரை) ஆற்றல் இலாதான் - வலியில்லாதவன், பிடித்த படை - கையிற்பிடித்த படைக்கலம், இன்னா - துன்பமாம்; நாற்றம் இலாத - மணமில்லாத, மலரின் அழகு - பூவின் அழகானது, இன்னா - துன்பமாம்; தேற்றம் இலாதான் - தெளிவு இல்லாதவன், துணிவு - ஒருவினை செய்யத்துணிதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, மாற்றம் - சொல்லின் கூறு பாட்டினை, அறியான் - அறியாதவனது, உரை - சொல், இன்னா - துன்பமாம் எ - று. ஆற்றல் - ஈண்டு ஆண்மை யெனினும் ஆம்; ‘வானொடென். . . வன்கண்ண ரல்லார்க்கு’ என்பது காண்க. தேற்றம் - ஆராய்ந்து தெளிதல்; ‘தெளிவி லதனைத் தொடங்கார்’ என்பது வாயுறை வாழ்த்து. மாற்றம் - பேசு முறைமையென்றும், எதிருரைக்கும் மொழியென்றும் கூறலுமாம். (8) பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா நகையாய நண்பினார் நாரின்மை யின்னா இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா நயமின் மனத்தவர் நட்பு. 9 (ப - ரை) பகல்போலும் - ஞாயிறுபோலும், நெஞ்சத்தார் - மனமுடையார், பண்பு இன்மை - பண்பில்லாதிருத்தல், இன்னா - துன்பமாம்; நகை ஆய - நகுதலையுடைய, நண்பினார் - நட்பாளர்; நார் இன்மை - அன்பில்லா திருத்தல், இன்னா - துன்பமாம்; இகலின் எழுந்தவர் - போரின்கண் ஏற்றெழுந்தவர், ஓட்டு - புறங்காட்டியோடுதல், இன்னா - துன்பமாம்; நயம்இல் - நீதியில்லாத, மனத்தவர் - நெஞ்சினையுடையாரது, நட்பு - கேண்மை, இன்னா - துன்பமாம் எ - று. பகல்போலும் நெஞ்சம் - ஞாயிறு திரிபின்றி ஒரு பெற்றித்தாதல் போலத் திரிபில்லாத வாய்மையையுடைய நெஞ்சம்; ‘ஞாயிறன்ன வாய்மையும்’ என்பது புறம். இனி நுகத்தின் பகலாணி போல் நடுவுநிலையுடைய நெஞ்சம் எனினும் பொருந்தும். “நெடுநுகத்துப் பகல்போல, நடுவு நின்ற நன்னெஞ்சீனோர்” என்பது பட்டினப்பாலை. பண்பாவது உலகவியற்கை யறிந்து யாவரொடும் பொருந்தி நடக்கும் முறைமை. “பண்பெனப் படுவது பாடறிந்தொழுகல்” என்பது கலித்தொகை. தூய மனமுடையரேனும் உலகத்தோடு பொருந்தி நடவாமை தீதென்பதாம் நகையாய நண்பினார் நாரின்மையாவது - முகத்தால் நகுதல் செய்து அகத்தே அன்பு கருங்குதல். நயம் - நீதி யென்னும் பொருளதாதலைத் திருக்குறள் பரிமேலழகருரை நோக்கித் தெளிக; இனிமை யெனவும் விருப்பம் எனவும் பொருள் கூறலும் ஆம். (9) கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா பண்ணில் புரவி பரிப்பு. 10 (ப - ரை) கள் இல்லா - கள் இல்லாத, மூதூர் - பழைமையாகிய ஊர், களிகட்கு - கள்ளுண்டு களிப்பார்க்கு, நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; வள்ளல்கள் - வள்ளியோர், இன்மை - இல்லா திருத்தல், பரிசிலர்க்கு - (பரிசில் பெறும்) இரவலர்க்கு, முன் இன்னா - மிகவுந் துன்பமாம்; வண்மை இலாளர் - ஈகைக்குண மில்லதாவர்களுடைய, வனப்பு - அழகு, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, பண் இல்- கலனையில்லாத, புரவி - குதிரை, பரிப்பு - தாங்குதல், இன்னா - துன்பமாம் எ - று. களிகட்கு இன்னா என்றது எடுத்துக்காட்டு மாத்திரையே, களித்த லென்னுஞ் சொல் கள்ளுண்டு மகிழ்தல் என்னும் பொருளில் முன் வழங்கியது; இக்காலத்தே பொதுப்பட மகிழ்தல் என்னும் பொருளதாயிற்று. களி - கள்ளுண்போன். முன் : மிகுதி யென்னும் பொருளது. பண் கலனை; இது கல்லனையெனவும் வழங்கும். (10) பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா பொருளில்லார் வண்மை புரிவு. 11 (ப - ரை) பொருள் உணர்வார் - (பாட்டின்) பொருளை அறியும் அறிவுடையார், இல்வழி - இல்லாத இடத்தில், பாட்டு உரைத்தல் - செய்யுளியற்றிக் கூறுதல், இன்னா - துன்பமாம்; இருள் கூர் - இருள் மிகுந்த, சிறுநெறி - சிறிய வழியிலே, தனிப் போக்கு - தனியாகப் போகுதல், இன்னா - துன்பமாம்; அருள் இல்லார் தம்கண் - தண்ணளியில்லாதவரிடத்தில், செலவு - (இரப்போர்) செல்லுதல்; இன்னா - துன்பமாம்; பொருள் இல்லார் - பொருளில்லாதவர், வண்மை புரிவு - ஈதலை விரும்புதல், இன்னா- துன்பமாம் எ - று. புலவராயினார் பாட்டின் பொருளுணரும் அறிவில்லார் பால் தாம் அரிதிற் பாடிய பாட்டுக்களைக் கூறின், அவர் அவற்றில் பொருளை அறியாராகலின், தம்மை நன்கு மதித்தல் செய்யார். அதுவேயன்றி இகழ்தலுஞ் செய்வர்; அவற்றின் மிக்க துன்பம் பிறிதில்லை யாகலின் ‘பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத் தலின்னா’ எனப்பட்டது. “புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம்” ‘கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை யொருவற்கு’ என்னும் பழமொழிச் செய்யுட்கள் இங்கே கருதற்பாலன. (11) உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா1 இடனில் சிறியாரோ டியர்த்தநண் பின்னா இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா கடனுடையார் காணப் புகல். 12 (ப - ரை) உடம்பாடு இலாத - உளம் பொருந்துதலில்லா, மனைவி தோள் - மனைவியின் தோளைச்சேர்தல், இன்னா - துன்பமாம்; இடன் இல் - விரிந்த வுள்ளமில்லாத, சிறியாரோடு - சிறுமையுடையாருடன், யாத்த நண்பு - பிணித்த நட்பு, இன்னா - துன்பமாம்; இடங்கழியாளர் - மிக்க காமத்தினை யுடையாரது, தொடர் - சேர்க்கை, இன்னா - துன்பமாம்; கடன் உடையார் - கடன் கொடுத்தவர், காண - பார்க்குமாறு, புகல் - அவர்க்கெதிரே செல்லுதல், இன்னா - துன்பமாம் எ - று. மனைவிதோள் : இடக்கரடக்கல். ‘உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட், பாம்போ டுடனுறைந் தற்று’ என்னுங் குறள் இங்கு நினைக்கற் பாலது. இட னென்றது ஈண்டு உள்ள விரிவையுணர்த்திற்று. குற்றியலிகரம் அலகு பெறாதாயிற்று. இடங்கழி - உள்ளம் நெறிப்படாதோடுதல்; கழி காமம் என்பது கருத்து; ‘இடங்கழி காமமொடடங்கானாகி’ என்பது மணிமேகலை. சிலர் ‘விடங்களியாளர்’ எனப் பாடங் கொண்டு, விடம்போலும் கள்ளுண்டு களிப்போர் எனப் பொருள் கூறினர்; அது பொருந்தாமை யோர்க். ‘கடன் கொண்டான் றோன்றப் பொருள் தோன்றும்’ ஆகலின், ‘காணப் புகல் இன்னா’ என்றார்; கடன் படுதல் துன்பம் என்பது கருத்தாகக் கொள்க. (12) 13.தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா வலைசுமந் துண்பான் பெருமித மின்னா புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா முலையில்லாள் பெண்மை விழைவு. (ப - ரை) தலை தண்டம் ஆக - தலை அறுபடும்படி, சுரம் போதல் - காட்டின்கட் செல்லுதல், இன்னா - துன்பமாம்; வலை சுமந்து - வலையைச் சுமந்து, உண்பான் - அதனால் உண்டு வாழ்வானது. பெருமிதம் - செருக்கு, இன்னா - துன்பமாம்; புலை - புலால் உண்ணுதலை. உள்ளி - விரும்பி, வாழ்தல் - வாழ்வது, உயிர்க்கு - (மக்கள்) உயிர்க்கு, இன்னா - துன்பமாம் - முலை இல்லாள் - முலையில்லாதவள், பெண்மை - பெண்தன்மையை, விழைவு - விரும்புதல், இன்னா - துன்பமாம் எ - று வலைசுமந்து என்னுங் காரணம் காரியத்தின் மேற்று. புலை - புன்மை : தன்னுயிரோம்பப் பிறவுயிர் கொன்றுணல் சிறுமையாகலின் அது புலை யெனப்படும். பெண்மை விழைவு இன்னா என் என்றது கடைபோகாதாகலின், ‘கல்லாதான் சொற்கா முறுதல்முலையிரண்டு, மில்லாதான் பெண்காமுற் றற்று’ என்பதுங் காண்க. (13) மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா பிணியன்னார் வாழு மனை. 14 (ப - ரை) மணி இலா - (ஓசையினால் தன் வருகையைப் பிறர்க்கு அறிவிக்கும்) மணியை அணியப் பெறாத, குஞ்சரம் - யானையை, வேந்து - அரசன், ஊர்தல் - ஏறிச் செல்லுதல், இன்னா துன்பமாம்; துணிவு இல்லார் - பகையை வெல்லுந் துணி வில்லாதார், சொல்லும் - கூறும், தறுகண்மை - வீரமொழிகள், இன்னா துன்பமாம்; பணியாத - வணங்கத்தகாத, மன்னர் - அரசரை, பணிவு - வணங்குதல், இன்னா - துன்பமாம்; பிணி அன்னார் (கணவருக்குப்) பிணிபோலும் மனைவியர், வாழும் மனை - வாழ்கின்ற இல், இன்னா - துன்பமாம் எ - று. சொல்லும் என்றதனால் தறு கண்மை மொழிக்காயிற்று; வஞ்சினமும் ஆம். பணியாத மன்ன ராவார் தம்மிற் றாழ்ந்தோர் பணிதல் - இன்சொல்லும் கொடையும். ‘எள்ளாத வெண்ணிச் செயல் வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு’ என்றபடி, தாம் வலியராய் வைத்து மெலிய பகைவரை வணங்குதல் எள்ளற் கேதுவாகலின் ‘பணிவின்னா’ என்றார். ‘மன்னர் பணிவு’ என்று பாடமாயின், அகத்தே பணிதலில்லாத பகை மன்னரது புற வணக்கம் இன்னாவாம் என்று பொருள் கூறிக்கொள்க. ‘சொல் வணக்கம் மொன்னார்கட் கொள்ளற்க’ ‘தொழுத கையுள்ளும் படையொடுங்கும்’ என்பன இங்கே கருதற்பாலன. பிணிபோறல் - சிறு காலை அட்டில் புகாமை முதலியன. (14) வணரொலி 1 யைம்பாலார் வஞ்சித்த லின்னா துணர்தூங்கு மாவின் படுபழ மின்னா புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா உணர்வா ருணராக் கடை. 15 (ப - ரை) வணர் - குழற்சியையுடைய, ஒலி - தழைத்த, ஐம்பாலார் - கூந்தலையுடைய மகளிர், வஞ்சித்தல் - (தம் கணவரை) வஞ்சித் தொழுகுதல், இன்னா - துன்பமாம்; துணர் -கொத்தாக, தூங்கும் - தொங்குகின்ற, மாவின் - மாவினது, படு பழம் - நைந்து விழுந்த கனி, இன்னா - துன்பமாம்; புணர் - வேற்றுமையின்றிப். . . பொருந்திய, பாவை அன்னார் - பாவைபோலும் மகளிரது, பிரிவு - பிரிதல், இன்னா - துன்பமாம்; உணர்வார் - அறியுந் தன்மைய.hர்-உணராக் கடை - அறியாவிடத்து, இன்னா - துன்பமாம் எ - று. வணர் - வளைவு; ஈண்டுக் குழற்சி. ஒலி - தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை ‘ஒலிநெடும் பீலி’ என்னும் நெடுநல்வாடை யடி உரையானறிக. ஐம்பால் - ஐந்து பகுப்பினையுடையது. கூந்தல் ஐந்து பகுப்பாவன: குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடி யென்ப. இங்ஙனம் ஒரோவொருகால் ஒவ்வொரு வகையாக வன்றி ஒரொப்பனை யிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப்படுவது என்று கோடலும் ஆம். படு பழம் - செவ்வியிழந்து விழுந்த பழம். புணர்தல் - அன்பால் நெஞ்சு கலத்தல்: மணம் பொருந்துதலும் ஆம். உணர்வார் - உணர்ந்து குறை தீர்க்கவல்லார்; பாட்டின் பொருளறிவாரும் ஆம். (15) புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா இல்லாதார் நல்ல விருப்பின்னா 1 வாங்கின்னா பல்லாரு ணாணப் படல். 16 (ப - ரை.) புல் - புல்லை, ஆர் - உண்கின்ற; புரவி - குதிரையை, மணி இன்றி - மணி யில்லாமல், ஊர்வு - ஏறிச் செலுத்துதல், இன்னா - துன்பமாம்; கல்லார் உரைக்கும் - கல்வியில்லாதார் கூறும், கருமப் பொருள் - காரியத்தின் பயன், இன்னா - துன்பமாம்; இல்லாதார் - பொருளில்லாதவரது, நல்ல விருப்பு - நல்லவற்றை விரும்பும் விருப்பம், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, பல்லாருள் - பலர் நடுவே, நாணப்படல் - நாணப்படுதல், இன்னா - துன்பமாம் எ - று. ஊர்வு: தொழிற்பெயர். பொருள் - பயன், நல்ல - அறம் நுகரப்படுவனவும் ஆம். நாணப்படல் - மானக்கேடெய்துதல். (16) உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா எண்ணிலான் செய்யுங் கணக்கு. 17 (ப - ரை.) உண்ணாது வைக்கும் - நுகராது வைக்கும். பெரும் பொருள் வைப்பு - பெரிய பொருளின் வைப்பானது, இன்னா துன்பமாம்; நண்ணா - உளம் பொருந்தாத, பகைவர் -பகைவரது, புணர்ச்சி - சேர்க்கை, நனி இன்னா - மிகவுந் துன்மாம்; கண் இல் ஒருவன் - விழியில்லாத ஒருவனது, வனப்பு - அழகு, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, எண் இலான் - எண்ணூல் பயிலாதவன், செய்யும் கணக்கு - இயற்றும் கணக்கு, இன்னா - துன்பமாம் எ - று. வைப்பு - புதைத்து வைப்பது, கண் - கண்ணோட்டமும் ஆம், எண் - கணிதம்; நூலுக் காயிற்று. எண்ணிலான் என்பதற்குச் சூழ்ச்சித் திறனில்லான் என்றும், செய்யுங் கணக்கு என்பதற்குச் செய்யுங் காரியம் என்றும் பொருள் கூறலும் ஆம். (17) ஆன்றவிந்த சன்றோருட் பேதை புகலின்னா மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா ஈன்றாளை யோம்பா விடல். 18 (ப - ரை.) ஆன்று - கல்வியால் நிறைந்து, அவிந்த - அடங்கிய, சான்றோர் உள - பெரியோர் நடுவே, பேதை - அறிவில்லாதவன், புகல் - செல்லுதல், இன்னா - துன்பமாம்; மான்று - மயங்கி, இருண்ட போழ்தின் - இருண்டுள்ள காலத்தில், வழங்கல் - வழிச் செல்லுதல், பெரிது இன்னா - மிகவுந் துன்பமாம்; நோன்று - (துன்பங்களைப்) பொறுத்து, அவிந்து - (மனம்) அடங்கி, வாழாதார் - வாழமாட்டாதவர், நோன்பு - நோற்றல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, ஈன்றாளை - பெற்ற தாயை, ஓம்பாவிடல் - காப்பாற்றாமல் விடுதல், இன்னா - துன்பமாம், எ- று. ஆன்று: ஆகல் என்பதன் மரூஉவாகிய ஆல் என்னும் பகுதியடியாகப் பிறந்தது. குணங்களால் நிறைந்து என்று கூறலும் ஆம். அவிந்த - ஐம்புலனும் அடங்கிய; பெரியோர்பாற் பணிந்த என்றுமாம். ‘ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்’ என்னும் புறப்பாட்டும், அதனுரையும் நோக்குக. மான்று - மால் என்பது திரிந்து நின்ற தெனினும் ஆம். பொழுது என்பதன் மரூஉ. ஓம்பா: ஈறுகெட்டது. (18) உரனுடையா னுள்ள மடிந்திருத்த லின்னா மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா மனவறி யாளர் 1 தொடர்பு. 19 (ப - ரை.) உரன் உடையான் - திண்ணிய அறிவுடையவன், உள்ளம் மடிந்து இருத்தல் - மனமடிந்திருத்தல், இன்னா - துன்பமாம்; மறன் உடை - வீரமுடைய, ஆள் உடையான் - ஆட்களை யுடையான், மார்பு ஆர்த்தல் - மார்பு தட்டுதல், இன்னா - துன்பமாம்; சுரம் - அருநெறியாகிய, அரிய - இயங்குதற்கரிய, கானம் - காட்டின் கண், செலவு - செல்லுதல், இன்னா - துன்பமாம்; மனம் வறியாளர் - மனவறுமை யுடையாரது, தொடர்பு - சேர்க்கை, இன்னா - துன்பமாம். உரன் - திண்ணிய அறிவாதலை ‘உரனென்னுந் தோட்டியான்’ என்னுங் குறட்குப் பரிமேலழகர் உரைத்த உரையா னறிக. மார்பு ஆர்த்தல் - மார்பு தட்டிப் போர்க்கெழுதல்; காரணம் காரியத்திற் காயிற்று. வீரரை யுடையான் தானே போர்க்குச் செல்லுதல் வேண்டா என்றபடி; வலிதிற் செல்லுதல் எனினும் ஆம். மனவறியாளர் - மனநிறைவில்லாதவர்; புல்லிய எண்ண முடையார் எனினும் ஆம். (19) குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா கலத்தல் குலமில் வழி. 20 (ப - ரை.) குலத்துப் பிறந்தவன் - நற்குடியிற் பிறந்தவன், கல்லாமை - கல்லாதிருத்தல், இன்னா- துன்பமாம்; நிலத்து இட்ட- பூமியில் விதைத்த, நல்வித்து - நல்ல விதைகள், நாறாமை - முளையாமற் போதல், இன்னா - துன்பமாம்; நலம் தகையார் -தன்மையாகிய அழகினையுடைய மகளிர், நாணாமை - நாணின்றி யொழுகுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, குலம் இல்வழி - ஒவ்வாத குலத்திலே, கலத்தல் - மணஞ் செய்து கலத்தல், இன்னா - துன்பமாம் எ - று. மகளிர்க்கு நாணம் சிறந்ததென்பது ‘உயிரினுஞ் சிறந்தன்று நாணே’ என்னும் தொல்காப்பியத்தானு மறியப்படும். நலத்தகையார் நாணாமை என்பதற்கு நற்குணமுடைய ஆடவர் பழிபாவங்கட்கு அஞ்சாமை எனப் பொருள் கூறுவாருமுளர். மணஞ்செய்வார் ஆராய வேண்டியவற்றுள் குடியொப்புக் காண்டலும் ஒன்று: “கொடுப்பினன் குடைமையும் குடிநிரலுடைமையும், வண்ண முந் துணையும் பொரீஇ யெண்ணா, தெமியேத் துணிந்த வேமஞ்சா லருவினை” என்னுங் குறிஞ்சிப் பாட்டடிகள் ஈண்டு நோக்கற் பாலன. (20) மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா மூரி யெருத்தா லுழவு. 21 (ப - ரை.) மாரி நாள் - மழைக்காலத்தில், கூவும் - கூவுகின்ற, குயிலின் குரல் - குயிலினது குரலோசை, இன்னா - துன்பமாம்; ஈரம் இலாளர் - அன்பில்லாதவரது, கடுமொழிக் கூற்று - கடியதாகிய சொல், இன்னா - துன்பமாம்; மாரி வளம் பொய்ப்பின் - மழை வளம் பொய்க்குமாயின், ஊர்க்கு - உலகிற்கு, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, மூரி எருத்தால் - மூரியாகிய எருதால், உழவு - உழுதல், இன்னா - துன்பமாம் எ - று. வீரமிலாளர் என்று கொள்ளலும் ஆம். மொழிக் கூற்று; ஒருபொருளிருசொல்; மொழியின் பகுதியுமாம். மழையாகிய வளம் என்க; மழையினது வளம் எனலுமாம். பொய்த்தல் - இல்லையாதல்; ‘விண்ணின்று பொய்ப்பின்’ என்பது திருக்குறள். ‘மாரி பொய்ப்பினும்’ என்பது புறம். மூரி யெருத்து: இருபெயரொட்டு. வலிமை மிக்க எருதுமாம். ‘எருமையு மெருதும் பெருமையுஞ் சோம்பும் வலியு முரணு நெரிவு மூரி’ என்பது பிங்கலம். கட்டுக் கடங்காத காளையால் உழுதல் துன்பம் என்பதாம். முதிர்ந்த எருதால் என்று பொருள் கூறுவாரு முளர். (21) ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா ஓத்திலாப் பார்ப்பா னுரை. 22 (ப - ரை.) ஈத்த வகையால் - கொடுத்த அளவினால், உவவாதார்க்கு - மகிழாதவர்க்கு, ஈப்பு - கொடுத்தல், இன்னா - துன்பமாம்; பாத்து உணல் - பகுத்து உண்ணுதல், இல்லார் உழை- இல்லாதவரிடத்தில், சென்று - போய், உணல் - உண்ணுதல், இன்னா - துன்பமாம்; மூத்த இடத்து - முதுமையுற்ற பொழுதில், பிணி - நோய் உண்டாதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு அவ்வாறே, ஓத்து இலா - வேதத்தை ஓதுதல் இல்லாத, பார்ப்பான் - பார்ப்பானுடைய, உரை - சொல், இன்னா - துன்பமாம் எ- று. ஈந்த வென்பது வலித்தலாயிற்று. உவவாதார்க்கீப்பின்னா என்பதனை, ‘இன்னா திரக்கப்படுத லிரந்தவ ரின்முகங் காணுமளவு’என்னுங் குறளுடன் பொருத்திக் காண்க. பாத்துணல் - தென்புலத்தார் முதலாயினார்க்கும், துறந்தார் முதலாயினார்க்கும் பகுத்துண்ணுதல். பாத்து - பகுத்து என்பதன் மரூஉ. ஓத்து - ஓதப்படுவது; வேதம். (22) யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா கான்யா 1 றிடையிட்ட வூர். 23 (ப - ரை.) யானைஇல் - யானைப்படையில்லாத, மன்னரை - அரசரை, காண்டல் - பார்த்தல், நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; ஊனைத் தின்று (பிறிதோன் உயிரின்) ஊனை உண்டு, ஊனை - (தன்) ஊனை, பெருக்குதல் - வளர்த்தல், முன் இன்னா -மிகவுந் துன்பமாம்; தேன் நெய் - தேனும் நெய்யும், புளிப்பின் - புளித்துவிட்டால், சுவை - (அவற்றின்) சுவை, இன்னா - துன்பமாம், ஆங்கு - அவ்வாறே, கான்யாறு - காட்டாறு, இடை இட்ட இடையிலே உளதாகிய, ஊர் - ஊரானது, இன்னா - துன்பமாம் எ- று. ‘யானையில் மன்னரைக் காண்டல்’ என்றாரேனும் அரசர் படையில் யானையில்லாதிருத்தல் இன்னா என்பது கருத்தாகக் கொள்க. ‘படைதனக்கு யானை வனப்பாகும்’என்பது சிறுபஞ்சமூலம். இனியவை நாற்பதிலுள்ள ‘யானையுடைய படை காண்டன் மிகவினிதே ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே, கான்யாற்றடைகரை யூரினி தாங்கினிதே, மானமுடையார் மதிப்பு’ என்னுஞ் செய்யுளுடன் இதனை ஒப்பு நோக்குக. (23) சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா துறையிருந் தாடை கழுவுத லின்னா அறைபறை யன்னவர் 2 சொல்லின்னா வின்னா நிறையில்லான் கொண்ட தவம். 24 (ப - ரை.) சிறை இல்லா - மதில் இல்லாத, மூதூரின் - பழைமையாகிய ஊரினது, வாயில் காப்பு - வாயிலைக் காத்தல், இன்னா - துன்பமாம்; துறை இருந்து - நீர்த்துறையிலிருந்து, ஆடை கழுவுதல் - ஆடைதோய்த்து மாசுபோக்குதல், இன்னா - துன்பமாம்; அறை - ஒலிக்கின்ற, பறை அன்னவர் - பறைபோன்றாரது, சொல் - சொல்லானது, இன்னா - துன்பமாம்; நிறை இல்லான் - (பொறிகளைத் தடுத்து) நிறுத்துந் தன்மையில்லாதவன், கொண்ட - மேற்கொண்ட, தவம் - தவமானது, இன்னா - துன்பமாம்; எ - று. நீர்த்துறையில் ஆடை யொலித்தல் புரியின், நீர் வழி நோயணுக்கள் பரவி இன்னல் விளைக்குமாகலின், “துறையிலிருந்தாடை கழுவுதலின்னா” என்றார். இனம் பற்றிப் பிற தூயதன்மை புரிதலுங் கொள்க. அறைபறை யன்னவர் - தாம் கேட்ட மறைக்கப்படும் பொருளினை யாண்டும் வெளிப்படுத்து மியல்பினர். ‘அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட, மறைபிறர்க் குய்த்துரைக் கலான்’ என்றார் பொய்யில் புலவரும். (24) ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா தீமை யுடையா ரயலிருத்த னன்கின்னா காம முதிரி னுயிர்க்கின்னா 1 வாங்கின்னா யாமென் பவரொடு நட்பு. 25 (ப - ரை.) ஏமம் இல் - காவல் இல்லாத, மூதூர் - பழைய ஊரிலே, இருத்தல் - வாழ்தல், மிக இன்னா - மிகவுந் துன்பமாம்; தீமை உடையார் - தீச்செய்கை யுடையவரது, அயல் இருத்தல் - பக்கத்திலே யிருத்தல், நன்கு இன்னா - மிகவும் துன்பமாம்; காமம் முதிரின் - காமநோய் முற்றினால், உயிர்க்கு இன்னா - உயிர்க்குத் துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, யாம் என்பவரொடு - யாமென்று தருக்கியிருப்பவரோடு செய்யும், நட்பு - நட்பானது, இன்னா - துன்பமாம் எ -று. ஏமம் - மதிற்காவலும், அரசின் காவலும் ஆம். அயலிருத்தல் என்றமையால் அவரைச் சேர்ந்தொழுகுதல் கூறவேண்டாதாயிற்று. காமம் உயிரைப் பற்றி வருத்து மென்பதனைக் ‘காமமு நாணு முயிர் காவாத் தூங்குமென், னோனா வுடம்பி னகத்து’ என்னும் முப்பாலானு மறிக. (25) நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா 2 ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா 3 கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா நட்ட கவற்றினாற் சூது. (ப - ரை.) நட்டார் - நட்புக் கொண்டவருடைய, இடுக்கண்கள்- துன்பங்களை, காண்டல் - பார்த்தல், நனி இன்னா- மிகவுந் துன்பமாம்; ஒட்டார் - பகைவரது, பெருமிதம் - செருக்கை, காண்டல் - பார்த்தல், பெரிது இன்னா - மிகவுந் துன்பமாம்; கட்டு இல்லா - சுற்றமாகிய கட்டு இல்லாத, மூதூர் - பழையவூரிலே, உறை - வாழ்தல், இன்னா - துன்பமாம்; ஆங்கு அவ்வாறே, நட்ட- நட்பாகக் கொள்ளப்பட்ட, கவற்றினால் - கவற்றைக் கொண்டு ஆடுகின்ற, சூது - சூதாட்டம், இன்னா - துன்பமாம் எ - று. கட்டு - கட்டுப்பாடும் ஆம். உறை: முதனிலைத் தொழிற் பெயர். நட்ட என்பது விருப்புடன் அடிப்பட்டுப் பழகிய என்றபடி. கவறு - பாய்ச்சி; ஆவது தாயக்கட்டை, ஒரு சொல் வருவிக்கப்பட்டது. (26) பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா அரியவை செய்து மெனவுரைத்த லின்னா பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா பெரியோர்க்குத் தீய செயல். 27 (ப - ரை.) பெரியாரோடு - பெரியவருடன், யாத்த - கொண்ட, தொடர் - தொடர்ச்சியை, விடுதல் - விடுவது, இன்னா- துன்பமாம்; அரியவை - செய்தற்கரிய காரியங்களை, செய்தும் - செய்து முடிப்போம், என உரைத்தல் - என்று சொல்லுதல், இன்னா - துன்பமாம்; பரியார்க்கு - (தம்மிடத்தில்) அன்பு கொள்ளாதவர்க்கு, தாம் உற்ற - தாம் அடைந்த துன்பங்களைக் கூறும்; கூற்று - சொல், இன்னா - துன்பமாம்; பெரியார்க்கு - பெருமை உடையார்க்கு, தீய செயல் - தீயனவற்றைச் செய்தல், இன்னா - துன்பமாம் எ - று. பெரியார் தொடர் விடுதல் இன்னா என்பதனைப் ‘பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்’ என்னுந் திருக்குறளானு மறிக. பெரியார் - ஈண்டுக் கல்வியறிவு நற்குண நல்லொழுக்கங்களிற் சிறந்த நல்லோர். குற்றியலிகரம்அலகுபெறாதாயிற்று. ‘அரியவை செய்துமென உரைத்தல் இன்னா’ என்றது தாம் செய்யக் கருதிய அரிய செயல்களைச் செயலால் வெளிப்படுத்தலன்றி உரையாற் கூறுதல் தக்கதன்று என்றபடி; தம்மாற் செய்ய வியலாதவற்றைச் செய்து தருவே மெனப் பிறர்க்கு வாக்களிப்பது இன்னாவாம் எனப் பொருள் கூறினும் அமையும். செய்தும்: தன்மைப் பன்மை யெதிர்கால வினைமுற்று; இறந்த கால முற்றும் ஆம். பரிதல் - அன்பு செய்தல்: இரங்குதலுமாம். பெரியார்க்குத் தீங்கு செயல் இன்னா என்பதனை ‘எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார், பெரியார்ப் பிழைத்தொழுகு வார்’ என்னும் வாயுறை வாழ்த்தானு மறிக. உற்ற, தீய என்பன முறையே தெரிநிலையும் குறிப்புமாய வினைப்பெயர்கள். (27) பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா கிழமை யுடையார்க் 1 களைந்திடுத லின்னா வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா இளமையுண் மூப்புப் புகல். 28 (ப-ரை) பெருமை உடையாரை - பெருமை யுடையவரை, பீடு அழித்தல் - பெருமை யழியக் கூறல், இன்னா - துன்பமாம்; கிழமை உடையார் - உரிமை உடையவரை, களைந்திடுதல் - நீக்கி விடுதல்; இன்னா - துன்பமாம்; வளமை இலாளர் - செல்வமில்லாத வருடைய, வனப்பு - அழகு, இன்னா - துன்பமாம்; இளமையுள் - இளமைப் பருவத்தில், மூப்பு - முதுமைக்குரிய தன்மைகள், புகல் - உண்டாதல், இன்னா - துன்பந் தருவதாகும் எ - று. பீடு அழித்தல் என்னும் இருசொல்லும் ஒரு சொன்னீர்மை யெய்தி இரண்டாவதற்கு முடிபாயின. பீடழித்தலாவது பெருமைஉளதாகவும் அதனையிலதாக்கிக் கூறுதல் கிழமையுடையார் - பழையராக வரும் அமைச்சர் முதலாயினார்; நண்பரும் ஆம். கிழமையுடையாரைக் கீழ்ந்திடுத லின்னா என்று பாடங் கொள்ளுதல் சிறப்பு; ‘பழமையெனப் படுவதியா தெனின் யாதுங் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு’ என்னும் திருக்குறளுங் காண்க. வளமை வண்மையுமாம். (28) கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா கல்லாதான் கோட்டி கொளல். 29 (ப-ரை) கல்லாதான் - (நடத்த வேண்டிய முறையைக்) கல்லாதவன், ஊரும் - ஏறிச் செலுத்தும், கலிமா - மனஞ்செருக்கிய குதிரை, பரிப்பு - (அவனைச்) சுமந்து செல்லுதல், இன்னா-துன்பமாம்; வல்லாதான் – கல்வி யில்லாதவன், சொல்லும் - சொல்லுகின்ற, உரையின் பயன் - சொல்லின் பொருள், இன்னா - துன்பமாம்; இல்லார் - செல்வ மில்லாதவருடைய, வாய்ச் சொல்லின் - வாயிலிருந்து வரும் சொல்லினது, நயம் - நயமானது, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, கல்லாதான் - கல்வியில்லாதவன், கோட்டி கொளல் - கற்றவரவையில் ஒன்றைக் கூறுதல், இன்னா - துன்பமாம் எ- று. கலி - ஆரவாரமும் ஆம். வல்லாதான் ஒன்றனைச் செய்ய மாட்டாதான் எனினும் அமையும். இல்லார் வாய்ச்சொல்லின் நயமின்னா என்பதனை ‘நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்’ என்னுந் தமிழ்மறை யானுமறிக. கோட்டிகொளல்: ஒரு சொல்; அவை யின்கண் பேசுதல் என்னும் பொருளது; ‘அங்கணத் துளுக்க. . . . கோட்டி கொளல்’ என்பதுங் காண்க. (29) குறியறியான் மாநாக 1 மாட்டுவித்த லின்னா தறியறியா 2 னீரின்கட் பாய்ந்தாட3 லின்னா அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா செறிவிலான் கேட்ட மறை. 31 (ப - ரை) குறியறியான் - (பாம்பாட்டுதற்குரிய மந்திர முதலியவற்றின்) முறைகளை அறியாதவன், மாநாகம் - பெரிய பாம்பினை, ஆட்டுவித்தல் - ஆடச் செய்தல், இன்னா - துன்பமாம்; தறி அறியான் - உள்ளிருக்கும் குற்றியை யறியாமல், நீரின்கண் - நீரில் பாய்ந்து, ஆடல் - குதித்து விளையாடுதல், இன்னா - துன்பமாம் ; அறிவு அறியா – அறியவேண்டு வனவற்றை அறியமாட்டாத, மக்கள்- பிள்ளைகளை, பெறல் - பெறுதல், இன்னா - துன்பமாம்; செறிவு இலான் - அடக்கம் இல்லாதவன், கேட்ட மறை - கேட்ட இரகசியம், இன்னா - துன்பமாம் எ - று. தறி - குற்றி; கட்டை. அறிவறியான் என்னின் அறிவு வறியனாயினான்; ஆவது கல்லா இளமையன் என்க. ‘அறி கொன்று என்புழிப்போல’ ஈண்டு அறி யென்பது முதனிலைத் தொழிற்பெயர். அறிவறியா மக்கள் - அறியவேண்டுவன அறியமாட்டாத மக்கள்: ‘அறிவறிந்த மக்கள்’ என்பதற்குப் பரிமேலழகர் கூறிய பொருளை நோக்குக. செறிவு - அடக்கம் : ‘செறிவறிந்து சீர்மை பயக்கும்’ என்னுங் குறளில் செறிவு இப் பொருட் டாதல் காண்க: அடக்கமில்லாதவன் மறையினை வெளிப்படுத்தலின் ‘கேட்ட மறையின்னா’ என்றார். (30) நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா 1 கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா கடும்புலி வாழு மதர் 31 (ப - ரை) நெடுமரம் - நெடிய மரத்தினது, நீள் கோட்டு - நீண்ட கிளையின், உயர் - உயரத்திலிருந்து, பாய்தல் - கீழே குதித்தல், இன்னா - துன்பமாம்; கடும் சினம் - மிக்க கோபத்தினையுடைய, வேழத்து எதிர் - யானையின் எதிரே, சேறல் - செல்லுதல், இன்னா- துன்பமாம்; அரவு - பாம்பு, ஒடுங்கி உறையும் - மறைந்து வசிக்கின்ற, இல் - வீடானது, இன்னா - துன்பமாம்; கடும் புலி - கொடிய புலிகள், வாழும் அதர் - வாழ்கின்ற வழியானது, இன்னா- துன்பமாம் எ- று. கோட்டுயர் பாய்தல் என்பதற்குக் கோட்டின் நுனியிலேறிய தோடமை யாது மேலும் பாய்ந்து சேறல் என்று பொருள் கூறலுமாம்; ‘நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி, னுயிர்க்கிறுதி யாகிவிடும்’ என்பது ஈண்டு நோக்கற்பாலது. நெடுமர நீற் கோட்டுயர் பாய்தல் முதலிய நான்கற்கும், ஓட்டென்னும் அணி பற்றி, முறையே தம் வலியளவறியாது பெரிய வினைமேற் சேறலும், வலியார்க்கு மாறேற்றலும், உடம்பாடிலாத உட்பகை யுடன் வாழ்தலும், பகைக் கெளியராம் படி நெறியலா நெறியிற்சேறலும் இன்னா வாமெனப் பொருள்கோடலும் பொருந்துமாறு காண்க. (31) 32. பண்ணமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிதின்னா எண்ணறியா மாந்தர்1 ஒழுக்குநாட் கூற்றின்னா மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா தண்மை யிலாளர் 2 பகை. (ப - ரை) பண் அமையா - இசை கூடாத, யாழின் கீழ் - யாழின் கீழிருந்து, பாடல் - பாடுதல், பெரிது இன்னா - மிகவுந்துன்பமாம்; எண் அறியா மாந்தர் - குறி நூல் (சோதிடம்) அறியாத மாக்கள், ஒழுக்கு நாள் கூற்று - ஒழுகுதற்குரிய நாள் கூறுதல், இன்னா - துன்பமாம்; மண் - இல் - மார்ச்சனையில்லாத, முழவின் - மத்தளத்தினது, ஒலி - ஓசை, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, தண்மை இலார் - தண்ணிய குணம் இல்லாதவரது, பகை - பகையானது, இன்னா - துன்பமாம் எ - று. பண் என்பதனை முதனிலைத் தொழிற்பெயராகக் கொண்டு, இசைக்கரணம் எட்டனு ளொன்று என்னலுமாம். ஒழுகுதற்குரிய நாளாவது கருமங்கட்கு விதிக்கப்பட்ட நாள். நற்குணமுடையார் பகையிடத்தும் இனியன செய்தலும், நற்குணமில்லார் நட்பிடத்தும் இன்னா செய்தலும் உடையா ராகலின் தண்மையிலாளர் பகை இன்னா வெனப்பட்டது; தீயோர்பால் பகையும் நண்புமின்றி நொதுமலாக விருத்தல் வேண்டு மென அறிக. (32) தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா தொன்மை யுடையார் கெடல் 33 (ப - ரை) தன்னைத்தான் - (ஒருவன்) தன்னைத் தானே, போற்றாது - காத்துக்கொள்ளாது, ஒழுகுதல் - நடத்தல், நன்கு இன்னா- மிகவுந் துன்பமாம்; முன்னை உரையார் - முன்னே சொல்லாமல், புறமொழிக் கூற்று - புறத்தே பழித் துரைக்கும் புறங்கூற்று, இன்னா - துன்பமாம்; நன்மை இலாளர் - நற்குணமில்லாதவரது, தொடர்பு - நட்பு, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, தொன்மை உடையார் - பழைமையுடையவர், கெடல் - கெடுதல், இன்னா - துன்பமாம் எ - று. தன்னைத்தான் போற்றுதலாவது மனமொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது அடக்குதல். முன்னை - ஐ : பகுதிப் பொருள் விகுதி. உரையார்: முற்றெச்சம். மொழிக்கூற்று : ஒரு பொருளிருசொல். தொன்மை யுடையார் கெடல் என்றது தொன்று தொட்டு மேம்பட்டு வரும் பழங்குடியினர் செல்வங் கெடுதல் என்றபடி. (33) கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா முள்ளுடை காட்டி னடத்த னனியின்னா 1 வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா கள்ள மனத்தார் தொடர்பு 34 (ப - ரை) கள் உண்பான் - கட்குடிப்பவன், கூறும் - சொல்லுகின்ற, கருமப் பொருள் - காரியத்தின் பயன், இன்னா - துன்பமாம்; முள் உடை காட்டில் - முட்களையுடைய காட்டில், நடத்தல் - நடத்தலானது, நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; வெள்ளம் படு - வெள்ளத்திலகப்பட்ட, மா - விலங்கு, கொலை - கொலையுண்டல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, கள்ளம் மனத்தார் - வஞ்ச மனத்தினை யுடையாரது, தொடர்பு - நட்பு, இன்னா - துன்பமாம் எ- று. மாக்கொலை - விலங்கைக் கொல்லுதல் எனினும், நீர்ப் பெருக்கிலகப்பட்டு வருந்தும் விலங்கைக் கரையேற வொட்டாது தடுத்துக் கொல்லுதல் இன்னாவாம் என்பது கருத்து. (34) ஒழுக்க மிலாளர்க் குறவுரைத்த 2 லின்னா விழுத்தகு நூலும் 3 விழையாதார்க் கின்னா இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா கழிப்புவாய் மண்டிலங் கொட்பு. 35 (ப - ரை) ஒழுக்கம் இலாளர்க்கு - நல்லொழுக்கம் இல்லாதவரிடத்தே, உறவு உரைத்தல் - தமக்கு உறவுளதாகக் கூறுதல், இன்னா - துன்பமாம்; விழுத்தகு நூலும் - சீரிய நூலும், விழையாதார்க்கு - விரும்பிக் கல்லாதார்க்கு, இன்னா - துன்பமாம்; இழித்த தொழிலவர் - இழிக்கப்பட்ட தொழிலையுடையாரது, நட்பு - கேண்மை, இன்னா - துன்பமாம்; கழிப்பு வாய் - நல்லாரால் கழிக்கப்பட்ட இடமாகிய, மண்டிலம் - நாட்டிலே, கொட்பு - திரிதல், இன்னா - துன்பமாம் எ - று. ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல் என்னும் பாடத்திற்கு ஒழுக்கமில்லாதவரை இழித்துரைத்தல் என்று பொருள் கொள்க. இழித்த தொழில் - அறிவுடையோராற் பழிக்கப்பட்ட தொழில். ஈற்றடிக்கு, ஒழுகக் குறைந்த மதியினது செலவு காண்டல் என்று பொருள் கூறலுமாம். (35) எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா குழலி னினிய 1 மரத் தோசைநன் கின்னா குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா அழகுடையான் பேதை யெனல் 36 (ப - ரை) எழிலி - மேகமானது, உறை நீங்கின் - நீரைச் சொரியாதாயின், ஈண்டையார்க்கு - இவ்வுலகத்திலுள்ளவர்களுக்கு, இன்னா - துன்பமாம்; குழலின் இனிய - புல்லாங் குழலைப் போலும் இனிய, மரத்து ஓசை - மரத்தினது ஓசை, நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; குழவிகள் உற்ற - குழந்தைகள் அடைந்த, பிணி - நோயானது, இன்னா - துன்பமாம்; அழகு உடையான் - அழகினையுடையவன், பேதை எனல் - அறிவில்லாதவன் என்று சொல்லப்படுதல், இன்னா - துன்பமாம் எ - று. உறை - நீர்த்துளி, ‘குழலினினியமரத் தோசை நன்கின்னா’ என்பதன் கருத்து (காற்று ஊடறுத்துச் செல்லுதலால் மரங்களினின்றெழும் ஓசை குழலிசைபோ லினியதாயினும் பாராட்டப்படுவ தின்று என்பது போலும்) குழலில் என்னும் பாடத்திற்குக் குழல் இல்லாத என்று பொருள் கூறிக் கொள்க. (36) பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா நெடுமாட நீணகர்க் கைத்தின்மை யின்னா வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா கெடுமிடங் கைவிடுவார் நட்பு. (ப - ரை) பொருள் இலான் - செல்வ மில்லாதவன், வேளாண்மை- (பிறர்க்கு) உதவி புரிதலை, காமுறுதல் - விரும்புதல், இன்னா - துன்பமாம்; நெடுமாடம் - நெடிய மாடங்களையுடைய, நீள் நகர்- பெரிய நகரத்திலே, கைத்து இன்மை - பொருளின்றி யிருத்தல், இன்னா - துன்பமாம்; வருமனை - வரப்பட்ட மனையிலுள்ளாரை, பார்த்திருந்து - எதிர்நோக்கியிருந்து, ஊண் - உண்ணுதல், இன்னா - துன்பமாம்; கெடும் இடம் - வறுமையுள்ள இடத்தில், கைவிடுவார் - கைவிட்டு நீங்குவாரது, நட்பு - கேண்மை, இன்னா - துன்பமாம் எ-று. வேளாண்மை - உபகாரம் வருமனை பார்த் திருந்தூண் என்றது பிறர் மனையை அடைந்து அம் மனைக்குரியாரது செவ்வி நோக்கியிருந்துண்டல் என்றபடி. கெடுமிடங் கைவிடுவார் நட்பு இன்னா வென்பதனைக் ‘கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினு முள்ளஞ் சுடும்’ என்னுந் திருக்குறளானு மறிக. (37) நறிய மலர்பெரிது நாறாமை யின்னா துறையறியா னீரிழிந்து 1 போகுத லின்னா அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா சிறியார்மேற் செற்றங் கொளல். 38 (ப - ரை) நறிய மலர் - நல்ல மலரானது, பெரிய நாறாமை - மிகவும் மணம் வீசாதிருத்தல், இன்னா - துன்பமாம்; துறை அறியான் - துறையை அறியாதவன், நீர் இழிந்து போகுதல் - நீரில் இறங்கிச் செல்லுதல், இன்னா - துன்பமாம்; அறியான் (நூற்பொருள்) அறியாதவன், வினாப்படுதல் - (அறிவுடையோரால்) வினாப்படுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, சிறியார் மேல் - சிறியவர்மீது, செற்றங் கொளல் - சினங் கொள்ளுதல், இன்னா - துன்பமாம் எ - று. நறிய - நல்ல அழகுடைய, துறை - நீரில் இறங்குதற்கும் ஏறுதற்கு முரிய வழி அறியா நீர் என்பது பாடமாயின் அறியப்படாத நீர் என்க. சிறியார் - வெகுளி செல்லுதற்குரிய எளிமையுடையார்; குழவிப் பருவத்தினருமாம். (38) பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா திறனிலான் செய்யும் வினை. 39 (ப - ரை) பிறன் மனையாள் பின் நோக்கும் - பிறன் மனைவியைக் காமுற்றுப் பின் றொடரக் கருதும், பேதைமை - அறிவின்மை, இன்னா- துன்பமாம்; மறம் இலா மன்னர் - வீரமில்லாத அரசர், செரு புகுதல் - போர்க்களத்திற் செல்லுதல், இன்னா - துன்பமாம்; வெம் புரவி - விரைந்த செலவினையுடைய குதிரையினது, வெறும் புறம் - கல்லணையில்லாத முதுகில், ஏற்று - ஏறுதல், இன்னா - துன்பமாம்; திறன் இலான் - செய்யுங் கூறுபாடறியாதவன், செய்யும் வினை - செய்யுங் காரியம், இன்னா - துன்பமாம் எ - று. புரவியின் புறமென்று மாற்றுக. திறன் - அறிந்தாற்றிச் செய்யும் வகை. (39) கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா கொடுத்து விடாமை கவிக்கின்னா வின்னா மடுத்துழிப் பாடா விடல். 40 (ப - ரை) கொடுக்கும் - கொடுத்தற்குரிய, பொருள் இல்லான்- பொருளில்லாதவனுடைய, வள்ளன்மை - ஈகைத் தன்மை, இன்னா - துன்பமாம் : கடித்து அமைந்த - கடித்தற்கு அமைந்த, பாக்கினுள் - பாக்கில், கல்படுதல் - கல் இருத்தல், இன்னா - துன்பமாம்; கவிக்கு - புலவனுக்கு, கொடுத்து விடாமை - பரிசில் கொடுத் தனுப்பாமை, இன்னா - துன்பமாம்; மடுத்துழி - தடைப்பட்ட விடத்து, பாடாவிடல் - பாடாது விடுதல், இன்னா - (பாடும் புலவனுக்குத்) துன்பமாம் எ - று. கடித்து; கடிக்க என்பதன் திரிபு; பிளந்து எனினுமாம். கல் என்றது பாக்கிற் படுவதொரு குற்றம், மடுத்துழி - பொருள் பெற்ற விடத்தில் எனினுமாம். பாடா: ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம். (40) 41. அடக்க முடையவன் மீளிமை யின்னா துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா அடக்க வடங்காதார் சொல். (ப - ரை) : அடக்கம் உடையவன் - (ஐம் பொறிகளை) அடக்குதலுடையவனது, மீளிமை - தறுகண்மை, இன்னா - துன்பமாம், துடக்கம் இல்லாதவன் - முயற்சியில்லாதவன், தற்செருக்கு - தன்னையே மதிக்கும் மதிப்பு, இன்னா - துன்பமாம்; அடைக்கலம்- பிறர் அடைக்கலமாக வைத்த பொருளை, வவ்வுதல் - கவர்ந்து கொள்ளுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, அடக்க- (அறிவுடையோர்) அடக்கவும், அடங்காதார் - அடங்குதலில்லாதவர்க்குக் கூறும், சொல் - சொல்லானது, இன்னா - துன்பமாம் எ -று. மீளிமை - பெருமிதமுமாம். துடக்கம் - வளைவு; உடல் வளைந்து வினைசெய்தற் கேற்ற முயற்சியை உணர்த்திற்று; தொடக்கம் என்று கொண்டு யாதானும் நற்கருமஞ் செய்யத் தொடங்குதல் என்றுரைப் பினுமாம். அடங்காதார் சொல் - அடங்காதார் அவையிற் கூறுஞ் சொல் எனினும் ஆம். (41) இன்னா நாற்பது மூலமும் உரையும் முற்றும் செய்யுள் முதற்குறிப்பு அகராதி (எண் - பக்கவெண்) அடக்க 255 அறமனத்தார் 234 ஆற்றலிலா 234 ஆன்றவிந்த 241 ஈத்தவகை 243 உடம்பாடி 237 உண்ணாது 240 உரனுடையா 241 எருதிலுழ 232 எழிலி 252 ஏமமில் 245 ஒழுக்க 251 கல்லாதா 247 கள்ளில்லா 236 கள்ளுண்பான் 251 குலத்துப் 242 குறியறியான் 248 கொடுக்கும் 254 கொடுங்கோல் 232 சிறையில் கரு 233 சிறையில்லா 244 தலைதண்ட 238 தன்iத்தான் 250 நட்டாரிடுக் 245 நறியமலர் 253 நெடுமர 249 பகல்பேலு 235 பண்ணமையா 250 பந்தமில் 230 பார்ப்பாரிற் 231 பிறன்மனையான் 254 புல்லார் 240 பெரியாரோ 246 பெருமை 247 பொருளிலான் 252 பொருளுணர்வா 236 மணியிலாக் 238 மாரிநாட் 242 முக்கட் 229 யானையின் 244 வணரொலி 239 இனியவை நாற்பது ஆசிரியர் : பூதஞ்சேந்தனார் உரையாசிரியர் : இரா. இளங்குமரன் இனியவை நாற்பது (பூதஞ் சேந்தனார்) கடவுள் வாழ்த்து கண்மூன் றுடையான்றாள் சேர்தல் கடிதினிதே தொன்மாண் டுழாய்மாலை யானைத் தொழலினிதே முந்துறப் பேணி முகநான் குடையானைச் சென்றமர்ந் தேத்த லினிது. முக்கண்ணனாம் சிவபெருமானைத் தொழல் இனிது; துளசி மாலை அணிந்த திருமாலைத் தொழல் இனிது; நான்முகனை அடைந்து வாழ்த்துதல் இனிது. நூல் பிச்சைபுக் காயினுங் கற்றன் மிகவினிதே நற்சவையிற் கைக்கொடுத்தல் சாலவு முன்னினிதே முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே தெற்றவு மேலாயார்ச் சேர்வு. 1 பிச்சை எடுத்துண்ணும் வறுமையிலும் கற்றல் இனிது; கல்வி வல்லார் அவையம் சென்று அவர்களோடு அளவளாவி வாழ்தல் இனிது; நன்முத்துப் போன்ற மனைவியின் சொற் கேட்டு வாழ்வது இனிது; தெளிந்த சான்றோரைச் சேர்ந்து வாழ்தல் இனிது. உடையான் வழக்கினி தொப்ப முடிந்தான் மனைவாழ்க்கை முன்னினிது மாணாதா மாயி னிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் தலையாகத் தானினிது நன்கு. 2 வளமுடையான் கொடை இனிது; ஒப்பமைந்த மனைவி யோடு இல்லறம் நடத்துதல் இனிது; மாண்பில்லா வாழ்வமையின் நிலையாமையை நினைந்து துறவு மேற் கொள்ளல் இனிது. ஏவது மாறா விளங்கிளைமை முன்னினிதே நாளு நவைபோ கான் கற்றன் மிகவினிதே யேருடையான் வேளாண்மை தானினி தாங்கினிதே தேரிற்கோ ணட்புத் திசைக்கு. 3 இட்ட கட்டளையை மறுக்காமல் செய்து முடிக்கும் மக்களைக் கொள்ளல் இனிது; என்றும் குற்றம் வாராமல் இருக்குமாறு கற்கும் கல்வி இனிது; உழவு ஏரும் மாடும் உடையவனாய் வேளாண்மை செய்தல் இனிது; செல்லும் இடத்துத் தெளிந்த நண்பரை உடையராக இருத்தல் செல்லுதற்கு இனிதாம். யானை யுடைய படைகாண்டன் முன்னினிதே யூனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே கான்யாற் றடைகரை யூரினி தாங்கினிதே மான முடையார் மதிப்பு. 4 யானைப் படையுடையவனாக வேந்தன் இருப்பது இனிது; ஒன்றன் ஊனுண்டு தன் ஊனைப் பெருக்காமை இனிது; வளமான காடமைந்த ஆற்றங்கரையில் அமைந்த குடியிருப்பு இனிது; பெருமை மிக்கவர்களால் பெருமையுடையவனாக மதிக்கப் படுதல் இனிது. கொல்லாமை முன்னினிது கோல்கோடி மாராயஞ் செய்யாமை முன்னினிது செங்கோல னாகுத லெய்துந் திறத்தா லினிதென்ப யார்மாட்டும் பொல்லாங் குரையாமை நன்கு. 5 ஓர் உயிரைக் கொல்லாமை இனிது; முறைதவறித் தகுதி இல்லாரைப் பெருமைப்படுத்தும் விருது வழங்காமை இனிது; செங்கோல் வேந்தனாக விளங்குதல் இனிது; எவரிடத்தும் நல்லது அல்லாததைச் சொல்லாதிருத்தல் இனிது. ஆற்றுந் துணையா லறஞ்செய்கை முன்னினிதே பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே வாய்ப்புடைய ராகி வலவைக ளல்லாரைக் காப்படையக் கோட லினிது. 6 இயலும் வகையாலும் அளவாலும் அறம் செய்தல் இனிது; நல்லெண்ணம் உடையவர் சொல்லும் பயன்மொழி இனிது; கல்விச் செல்வம் பண்பு உடையவராய்-கீழ்மைத்தனம் இல்லா ராய் இருப்பார் துணையைக் கொள்ளல் இனிது. அந்தண ரோத்துடைமை யாற்ற மிகவினிதே பந்த முடையான் படையாண்மை முன்னினிதே தந்தையே யாயினுந் தானடங்கா னாகுமேற் கொண்டடையா னாக லினிது. 7 அகம் தண்ணியராம் அருளாளர் ஓதுநூலை மறவாமை இனிது; நாட்டின் மேலும் அரசின் மேலும் பற்றுடையவன் படைத்திறம் இனிது; தன் தந்தையே எனினும் பண்பிலானாக இருந்தால் அவனைச் சார்ந்து நின்று அவன் உதவியால் வாழாமை இனிது. ஊரும் கலிமா வுரனுடைமை முன்னினிதே தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக் கார்வரை யானைக் கதங்காண்டன் முன்னினிதே ஆர்வ முடையவ ராற்றவு நல்லவை பேதுறார் கேட்ட லினிது. 8 ஊர்தியாகச் செலுத்தும் குதிரை வலிமையாக இருத்தல் இனிது; நாடாளும் மன்னர்க்கு உண்டாய போர்க்களத்தில் எதிரிட்டு மோதவரும் யானையைக் கண்டு மோதுதல் இனிது; ஆர்வமிக்கவராய் மிகச் சிறந்த செய்திகளை மயக்கமில்லாமல் கேட்டுப் பயன் கொள்வது இனிது. தங்க ணமர்புடையார் தாம்வாழ்தன் முன்னினிதே அங்கண் விசும்பி னகனிலாக் காண்பினிதே பங்கமில் செய்கைய ராகிப் பரிந்தியார்க்கு மன்புடைய ராத லினிது. 9 தம்மோடு மனம் பொருந்தி வாழ்பவர் சுற்றமாக வாழ்வது இனிது; அகன்ற வானில் முழுமதியைக் கண்டு மகிழ்தல் இனிது; களங்கமில்லாத செயலுடையவராய் எவர்க்கும் உருகி உதவும் அன்புடையராக இருத்தல் இனிது. கடமுண்டு வாழாமை காண்ட லினிதே நிறைமாண்பில் பெண்டிரை நீக்க லினிதே மனமாண்பி லாதவரை யஞ்சி யகற லெனைமாண்புந் தானினிது நன்கு. 10 கடன்பட்டு வாழாத முயற்சியராய் வாழ்தல் இனிது; உயர்ந்த பண்புகள் அமையாப் பெண்டிரொடு வாழாமை இனிது; மன மாண்பு அமையாக் கயவர் நட்பினை அகற்றுதல் பலவகை மாண்பும் தரும். அதர்சென்று வாழாமை யாற்ற வினிதே குதர்சென்று கொள்ளாத கூர்மை யினிதே உயிர்சென்று தான்படினு முண்ணார்கைத் துண்ணாப் பெருமைபோற் பீடுடைய தில். 11 கீழானவழிகளில் பொருள் தேடி வாழாமை இனிது; வேண்டாவகையில் வாதிட்டு அறிவுக் கூர்மை பெறாமை இனிது; உயிர் போவதாக இருந்தாலும் உண்ணத் தகாரிடத்து உண்ணாத பெருமைக்கு ஒப்பான பெருமை இல்லை. குழவி பிணியின்றி வாழ்த லினிதே கழறு மவையஞ்கான் கல்வி யினிதே மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும் திருவுந்தீர் வின்றே லினிது. 12 அரிய பேறாக வாய்த்த குழந்தைகள் நோயில்லாமல் வாழ்தல் இனிது; அறிஞர் அவையத்தில் அஞ்சாத கல்வியை உடைமை இனிது; மயக்க மில்லாத பெருமையரைச் சேரும் செல்வம் நீங்காமல் நிலைத்திருத்தல் இனிது. மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே ஊனமொன் றின்றி யுயர்ந்த பொருளுடைமை மானிடவர்க் கெல்லா மினிது. 13 மாந்தர்க்கு உயிரினும் சிறந்த மானம் போனபின் வாழாமை இனிது; தன் நிலையில் தாழாமல் அடக்கமுடையவராய் வாழ்தல் இனிது; எக்குறையும் இல்லாத உயர்ந்த செல்வராய் வாழ்தல் எவர்க்கும் இனிது. குழவி தளர் நடை காண்ட லினிதே அவர்மழலை கேட்ட லமிழ்தி னினிதே வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து மனனஞ்சா னாக லினிது. 14 இளங்குழந்தையர் குறுகுறு நடை காண்பது இனிது; அவர் மொழியும் மழலையைக் கேட்டல் அமிழ்தினும் இனிது; தீவினை செய்தான் அதன் பயன் வந்து வாட்டும் போது மனந் தளராது தாங்கி நல்வினை செய்தல் இனிது. பிறன் மனைப் பின்னோக்காப் பீடினி தாற்ற வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே மறமன்னர் தங்கடையுண் மாமலைபோல் யானை மதமுழக்கங் கேட்ட லினிது. 15 பிறன் மனையைத் தொடர எண்ணாப் பெருமை இனிது; வறண்டு வாடிய பயிர்க்கு வான் மழை பொழிதல் இனிது; வீறு மிக்க மன்னர் தங்கள் தலைவாயிலில் மலை போலும் யானை நின்று பிளிறக் கேட்டல் இனிது. கற்றார்முற் கல்வி யுரைத்தன் மிகவினிதே மிக்காரைச் சேர்தன் மிகமாண முன்னினிதே எட்டுணை யானு மிரவாது தானீத லெத்துணையு மாற்ற வினிது. 16 கல்வி வல்லார் முன்னர்க் கற்றது உரைத்தல் இனிது; பண்பாலும் அறிவாலும் மிகுந்தவரைச் சார்ந்திருத்தல் இனிது; எள்ளளவேனும் எவரிடமும் எதிர்பாராது, எதிர்பார்ப்பார்க்கு இல்லை என்னாது ஈவது எல்லா வகைகளிலும் இனிது. நட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையு மொட்டாரை யொட்டிக் கொளலதனின் முன்னினிதே பற்பல தானியத்த தாகிப் பலருடையு மெய்த்துணையுஞ் சேர லினிது. 17 நண்பர்க்கு வேண்டும் நலங்களையெல்லாம் செய்வது இனிது; பகையாக இருப்பார்க்கும் அவர்க்குத்தக்கன செய்து நட்பாக்கிக் கொள்ளல் இனிது; பலப்பல ஊண்வளம் உடையவ ராய்ப் பகைவர் பலரையும் வெல்லும் மெய்யான துணை ஆவா ரைச் சேர்தல் இனிது. மன்றின் முதுமக்கள் வாழும் பதியினிதே தந்திரத்தின் வாழுந் தவசிகண் மாண்பினிதே எஞ்சா விழுச்சீ ரிருமுது மக்களைக் கண்டெழுதல் காலை யினிது. 18 அறநெறி காட்டும் மூதறிவர் வாழும் ஊர் இனிது; நிறை மொழி மாந்தராய்த் தூய துறவராய் வாழ்வார் பெருமை இனிது; முறையாச் சிறப்புடைய பெற்றோரைக் கண்டு வழிபடும் காலைப் பொழுது இனிது. நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனியினிதே பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகன் முன்னினிதே முட்டில் பெரும்பொரு ளாக்கியக்கான் மற்றது தக்குழி யீ த லினிது. 19 நட்புடையாரைப் புறஞ்சொல்லாமை இனிது; நன்னெறி நூல்களைக் கற்று அடக்கமுடையவராய் வாழ்தல் இனிது; முட்டுப்பாடற்ற மிகு பொருள் தேடிய போது அதனைத் தக்க வர்க்கு ஈந்து இசைபட வாழ்வது இனிது. சலவரைச் சாரா விடுத லினிதே புலவர்தம் வாய்மொழி போற்ற லினிதே மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாந் தகுதியால் வாழ்த லினிது. 20 வஞ்சகரைச் சாராது வாழ்தல் இனிது; நல்லறிஞர் அறவு ரையைப் போற்றி வாழ்தல் இனிது; அகன்ற உலகத்து உயிர்களுக் கெல்லாம் உதவும் அருளாளனாக வாழ்தல் இனிது. பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்த லினிதே; அறம்புரிந் தல்லவை நீக்க லினிதே மறந்தேயு மாணா மயரிகட் சேராத் திறந்தெரிந்து வாழ்த லினிது. 21 பிறர் பொருளைக் கவராமல் வாழ்வது இனிது; அறச் செயல்களைச் செய்து அறமல்லாச் செயல்களை அகற்றல் இனிது; மறந்தும் கூடப் பெருமையில்லா அறிவிலிகளைச் சேராமல், சான்றோரைச் சார்ந்து வாழ்தல் இனிது. வருவா யறிந்து வழங்க லினிதே ஒருவர்பங் காகாத வூக்க மினிதே பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார் திரிபின்றி வாழ்த லினிது. 22 தமக்கு வரும் வருவாயை அறிந்து கொடுத்தலும் செலவழித் தலும் இனிது; ஒருவரைச் சார்ந்து நின்று வாழுதல் இல்லா உறுதிப்பாடு இனிது; பெருமைக்குரியது என்றாலும் தாம் விரும்பியது என்பதற்காகச் செய்யாமல் வேறுபாடு இல்லாமல் வாழ்வது இனிது. காவோ டறக்குளந் தொட்டன் மிகவினிதே ஆவோடு பொன்னீத லந்தணர்க்கு முன்னினிதே பாவமு மஞ்சாராய்ப் பற்றுந் தொழின்மொழிச் சூதரைச் சோர்த லினிது. 23 பூங்கா அமைத்தலும் ஊரவர்க்குப் பெரும் பயனாம் குளம் தோண்டலும் இனிது; அருளாளர்க்கு ஆவும் பொன்னும் ஈதல் இனிது; பாவத்திற்கு அஞ்சாதவராய் அப்பாவத்திற்கு மூலமாம் சூதும் சூழ்ச்சிச் சொல்லும் உடையாரை நெருங்க விடாதிருத் தல் இனிது. வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே ஒல்லுந் துணையுமொன் றுய்ப்பான் பொறையினிதே இல்லது காமுற் றிரங்கி யிடர்ப்படார் செய்வது செய்த லினிது. 24 எடுத்த செயலின் வெற்றியை எண்ணிச் சினம் கொள்ளா உறுதி இனிது; தன்னால் கூடுமளவும் பொறுத்து அதனை முற்ற முடிப்பான் பொறுமை இனிது; தம்மிடம் இல்லாததை விரும்பி இடர்ப்பாடு கொள்ளாது செய்யக் கூடியவற்றைச் செய்து வாழ்தல் இனிது. ஐவாய வேட்கை யவாவடக்கன் முன்னினிதே கைவாய்ப் பொருள் பெறினுங் கல்லார்கட் டீர்வினிதே நில்லாத காட்சி நிறையின் மனிதரைப் புல்லா விடுத லினிது. 25 மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐவகையால் வரும் ஆசையை அடக்கல் இனிது; கையிடத்தே பொருளை வழங்கிப் பெறினும் கல்லாதவரைச் சேராமை இனிது; நிலைபெறாத அறிவும் நிறைவிலாக் குணமும் உடையவரை ஒட்டவிடாமை இனிது. நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே உட்கில் வழிவாழா வூக்க மிகவினிதே எத்திறத் தானு மியைவ கரவாத பற்றினிற் பாங்கினிய தில். 26 தன்னிடம் ஒன்றை விரும்பிவந்தார் ஆவலை அழியாமை இனிது; பெருமை இல்லாத வழியில் வாழாத உறுதி இனிது; எவ்வகையானும் முடிந்ததை மறையாது கொடுக்கும் நல்லறத்தின் இனியது இல்லை. தானங் கொடுப்பான் றகையாண்மை முன்னினிதே மானம் படவரின் வாழாமை முன்னினிதே ஊனங்கொண் டாடா ருறுதி யுடையவை கோண்முறையாற் கோட லினிது. 27 வாழ வகையில்லா வறியர்க்கு ஈபவன் கொடை நலம் இனிது; மானக்கேடு வருமானால் மேலும் உயிர் வாழாமை இனிது; குறைகளைப் பாராட்டாதவராய், நல்லவற்றைக் கொள்ளும் முறையால் கொள்ளல் இனிது. ஆற்றானை யாற்றென் றலையாமை முன்னினிதே கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே ஆக்க மழியினு மல்லவை கூறாத தேர்ச்சியிற் றேர் வினிய தில். 28 உதவி எதுவும் செய்யானைச் செய்யென்று சொல்லாமை இனிது; சிறப்பு உறுதியாக வந்தே தீரும் என்பதைச் சிந்தித்து வாழ்வது இனிது; உள்ள நலம் அழிவது ஆயினும் அறம் அல்லாதவற்றைச் சொல்லாத தெளிவு போல் இனியது இல்லை. கயவரைக் கைகழிந்து வாழ்த லினிதே உயர்வுள்ளி யூக்கம் பிறத்த லினிதே எளிய ரிவரென் றிகழ்ந்துரையா ராகி ஒளிபட வாழ்த லினிது. 29 இழிதன்மையரை விலக்கி வாழ்தல் இனிது; உயர்ந்தவற்றை எண்ணி எழுச்சியுறல் இனிது; எளியவர் இவர் என்று பழியாத வராய்ப் பெருமையுற வாழ்வது இனிது. நன்றிப் பயன் றூக்கி வாழ்த னனியினிதே மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே அன்றறிவா ரியாரென் றடைக்கலம் வெளவாத நன்றியி னன்கினிய தில் 30 நல்லது செய்தாரைப் பாராட்டி வாழ்தல் இனிது; அறமன் றத்தில் ஒருவரைச் சார்ந்து பேசாத சால்பு இனிது; அன்று தந்ததை எவரும் அறியார் என்று அடைக்கலப் பொருளைக் கவராத நல்ல தன்மையின் நல்ல தன்மை இல்லை. அடைந்தார் துயர்கூரா வாற்ற லினிதே கடன்கொண்டுஞ் செய்வன செய்த லினிதே சிறந்தமைந்த கேள்விய ராயினு மாராய்ந் மறிந்துரைத்த லாற்ற வினிது. 31 தம்மை அடைந்தவர் துயரடையா வகையில் காத்தல் இனிது; கடன் பெற்றாயினும் செய்யும் கடமையைச் செய்தல் இனிது; சிறப்பு மிக்க கேள்விச் செல்வரெனினும் அவற்றில் தக்கதை எண்ணி எடுத்துரைத்தலே இனிது. கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருளினிதே பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்னினிதே தெற்றென வின்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப் பத்திமையிற் பாங்கினிய தில். 32 கற்று அறிந்தவர் சொல்லும் செயல் சீர்மையாம் பொருள் இனிது; குடிமக்களைக் காக்கும் பற்றுமை இல்லாத அரசின் கீழ் வாழாமை இனிது; தெளிவாக ஆராய்தல் இன்றித் தெளிந்தாரின் தீமையைப் பெரிதுபடுத்தாத பற்றுமையில் சிறந்தது இல்லை. ஊர்முனியா செய்தொழுகு மூக்க மிகவினிதே தானே மடிந்திராத் தாளாண்மை முன்னினிதே வாண்மயங்கு மண்டமருண் மாறாத மாமன்னர் தானை தடுத்த லினிது. 33 ஊர் வெறுக்கும் செயல் செய்யாத உறுதிப்பாடு இனிது; தானே சோர்வு இல்லாமல் செயலாற்றும் திறம் இனிது; வாட் போர் புரியும் பகைமாறாத மன்னர் போரைத் தடுத்து நிறுத்துதல் இனிது. எல்லிப் பொழுது வழங்காமை முன்னினிதே சொல்லுங்காற் சோர்வின்றிச் சொல்லுதன் மாண்பினிதே புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை கொள்ளா விடுத லினிது. 34 இருட் பொழுதில் ஓரிடம் செல்லாமை இனிது; சொல்லும் சொல்லைச் சோர்வு இல்லாமல் சொல்லுதல் இனிது; கட்டித் தழுவிக் கொள்ளவரினும் தகுதி இல்லார் உறவைத் தவிர்த்து விடுதல் இனிது. ஒற்றினா னொற்றிப் பொருடெரியும் மாண்பினினிதே முற்றான் றெரிந்து முறைசெய்தன் முன்னினிதே பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றப் பாங்கறிதல் வெற்றிவேல் வேந்தர்க் கினிது. 35 ஓர் ஒற்றர் கூறியதை மற்றோர் ஒற்றரால் அறிந்து கொள்ளல் இனிது; தீர்ப்பு வழங்குமுன் முழுத்தெளிவாக அறிந்து கொண்டு வழங்குதல் இனிது; எச்சார்பும் இல்லானாய் எல்லா உயிர்க்கும் ஒப்பன எண்ணிச் செய்வன செய்தல் வெல்லும் அரசுக்கு இனிது. அவ்வித் தழுக்கா றுரையாமை முன்னினிதே செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று வவ்வார் விடுத லினிது. 36 மனத்தைச் சுருக்கிப் பொறாமை கொண்டு உரையா திருத்தல் இனிது; செம்மையானவனாய்த் தீமையை அழித்துச் சினத்தை நீக்கி வாழ்தல் இனிது; கவரும் பற்றே கொண்டு தாம் கண்ட வற்றை எல்லாம் விரும்பிப் பறியாராய் இருப்பது இனிது. இளமையை மூப்பென் றுணர்த லினிதே கிளைஞர்மாட் டச்சின்மை கேட்ட லினிதே தடமென் பணைத்தோட் டளிரிய லாரை விடமென் றுணர்த லினிது. 37 இளமையிலேயே மூப்புப் பருவச் சிறப்பினராய் வாழ்தல் இனிது; உறவினர் தம்மிடத்தே அஞ்சாமைச் செய்திகளைக் கேட் டல் இனிது; கட்டமைந்த உடலராய் மெல்லியராய் இருக்கும் வரைவிலா மகளிரைத் தீண்டத் தகாதென விடுதல் இனிது. சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே நட்டா ருடையான் பகையாண்மை முன்னினிதே எத்துணையு மாற்ற வினிதென்ப பால்படுங் கற்றா வுடையான் விருந்து. 38 இளமையும் வலிமையும் உடையான் படைக்கலம் ஏந்தல் இனிது; நட்புடையாரை உடையவனுக்குப் பகைவர் உண்டா யினும் இனிது; நல்ல பாற்பசுவை உடையவனுக்கு விருந்தோம்பல் மிக இனிது. பிச்சைபுக் குண்பான் பிளிற்றாமை முன்னினிதே துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே உற்றபே ராசை கருதி யறனொரூஉ மொற்க மிலாமை இனிது. 39 பிச்சை எடுத்து உண்பவன், ‘இல்லை’ என்றும் இகழாமை இனிது; ஒட்டுக் குடித்தனத்தில் இருப்பினும் அதைத் துயரென எண்ணாமல் தாங்கல் இனிது; மிகப் பெரிய ஆசை கொண்டு அறத்தை அகற்றும் சிறுமை இல்லாமை இனிது. பத்துக் கொடுத்தும், பதியிருந்து வாழ்வினிதே வித்துக்குற் றுண்ணா விழுப்ப மிகவினிதே பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலிற் காழினிய தில். 40 கொடுப்பனவெல்லாம் கொடுத்துத் தன் இடத்திலே இருந்து வாழ்வது இனிது; விதைப் பொருளை ஆக்கி, உண்ணாத சிறப்பு இனிது; நாள் தவறாமல் குறையில்லாமல் கற்பன கற்றலைப் போலும் உறுதிச் செல்வம் இல்லை. பூதஞ்சேந்தனார் இயற்றிய இனியவை நாற்பது மூலமும் புலவர் இளங்குமரன் இயற்றிய தெளிவுரையும் முற்றும். ஐந்திணையைம்பது ஆசிரியர் : பொறையனார் உரை : பழைய பொழிப்புரை ஐந்திணையைம்பது விளக்கவுரை பழைய பொழிப்புரையுடன் ------ பாயிரம் பண்புள்ளி நின்ற பெரியார் பயன்றெரிய வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த வைந்திணை யைம்பது மார்வத்தி னோதாதார் செந்தமிழ் சேரா தவர். 1. முல்லை (தலைமகளைத் தோழி பருவங்காட்டி வற்புறுத்தியது) மல்லர்க் கடந்தா னிறம்போன் றிருண்டெழுந்து செல்வக் கடம்பமர்ந்தான் வேன்மின்னி--நல்லாய்! இயங்கெயி லெய்தவன் றார்பூப்ப வீதோ மயங்கி வலனேருங் கார். (பழையவுரை.) மல்லரை வென்றவன் நிறம்போல இருளைச் செய்தெழுந்து, செல்வக் கடப்பந்தாரினை விரும்பினான் வேல் போல மின்னி, விசும்பின் இயங்குகின்ற முப்புரங்களை யெய்தவன் கொன்றைத்தார் பூப்ப மிடைந்து எழாநின்றது நல்லாய்! இக்கார். (1) (பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது) அணிநிற மஞ்ஞை யகவ விரங்கி மணிநிற மாமலைமேற் றாழ்ந்து--பணிமொழி கார்நீர்மை கொண்ட கலிவானங் காண்டொறும் பீர்நீர்மை கொண்டன தோள். (ப.ரை.) அழகிய நிறத்தையுடைய மயில்களழைக்க முழங்கி, நீலமணி நிறத்தையுடைய மாமலைகளின்கட் படிந்து, மெல்லிய மொழியை யுடையாய்! கார்காலத்துத் தன்மையைக் கொண்ட மிக்க முகில்களைக் காணுந்தோறும் என் றோள்கள் பீரின் தன்மையைக் கொண்டன. (2) (பருவங்கண்டழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது) மின்னு முழக்கு மிடியுமற் றின்ன கொலைப்படை சாலப் பரப்பிய முல்லை முகைவென்ற பல்லினாய்! இல்லையோ? மற்று நமர்சென்ற நாட்டுளிக் கார். (ப.ரை.) நமர் சென்ற நாட்டின்கண் மின்னும் முழக்கும் இடியும் என்று சொல்லப்பட்ட இக்கொலைப் படைகளை நிரம்பப் பரப்புதற்கு இக்கா ரில்லையோ; முல்லைமுகை வென்ற பல்லினாய்! (3) (இதுவுமது) உள்ளார்கொல் காதல ரொண்டொடி நந்திறம் வள்வார் முரசின் குரல்போ லிடித்துரறி நல்லார் மனங்கவரத் தோன்றிப் பணிமொழியைக் கொல்வாங்குக் கூர்ந்ததிக் கார். (ப.ரை.) நந்திறத்தைக் காதலர் உள்ளார்கொல்லோ ஒண் டொடி! தோலார்ந்த முரசின் குரலினோசை போல இடித்து முழங்கித் தன் கொழுநரைப் பிரிந்த நல்லார் மனங்கவரும்படி தோன்றி நங் காதலர் சொன்ன இன் சொல்லைச் சிதைப்பது போல மிக்கது இக்கார். (4) (இதுவுமது) கோடுயர் தோற்ற மலைமே லிருங்கொண்மூக் கூடி நிரந்து தலைபிணங்கி--ஓடி வளிகலந்து வந்துறைக்கும் வானங்காண் டோறுந் துளிகலந்து வீழ்தருங் கண். (ப.ரை.) குவடுகளுயர்ந்த தோற்றத்தையுடைய மலைகள் மேற் பெருமுகில்கள் திரண்டு மிடைந்து, ஒன்றோடொன்று பிணங்கி யோடிக் காற்றோடு கலந்து பெய்கின்ற விசும்பு காணுந் தோறும் துளி கலந்து பெய்யாநின்றன நின் கண்கள். (5) (இதுவுமது) முல்லை நறுமல ரூதி யிருந்தும்பி செல்சார் வுடையார்க் கினியவாய்--நல்லாய்! மற் றியாருமின் னெஞ்சினே மாகி யுறைவேமை யீரு மிருண்மாலை வந்து. (ப.ரை.) நல்லாய்! இருந்தும்பி முல்லை நறுமலரை ஊதுதலாற் றமக்குச் செல்சார்வாகிய கொழுநரை யுடையார்க்கு இன்பத்தைச் செய்வனவாய், யாரும் துணையில்லாத நெஞ்சினே மாகி உறைவேமை இருண்மாலை வந்து ஈராநின்றது. (6) (இதுவுமது) தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை யாரான்பி னாய னுவந்தூதுஞ்--சீர்சால் சிறுகுழ லோசை செறிதொடி! வேல்கொண் டெறிவது போலு மெனக்கு. (ப.ரை.) தேரினையுடைய பகலவன் மலையின் கண் மறைந்த செக்கர்கொண்ட புன்மாலையின்கண், அரிய ஆனிரையின் பின்னே ஆயன் விரும்பி ஊதுஞ் சீரமைந்த சிறுகுழல் இன் னோசை, வேல் கொண்டு எறிவது போல நின்றது செறிதொடி! எனக்கு. (7) (இதுவுமது) பிரிந்தவர் மேனிபோற் புல்லென்ற வள்ளி பொருந்தினர் மேனிபோற் பொற்பத்--திருந்திழாய்! வானம் பொழியவும் வாரார்கொ லின்னாத கானங் கடந்து சென்றார். (ப.ரை.) துணைவரைப் பிரிந்தார் மேனிபோலப் புற்கென்ற வள்ளிகள், துணைவரோடு பொருந்தி யிருந்தார் மேனி போலப் பொலிவு தோன்றும் வகை வானம் பொழியவும் வாரார் கொல்லோ? திருந்திழாய்! இன்னாத கானங்களைக் கடந்து சென்றார். (8) (பருவமென் றழிந்த கிழத்தையைத் தோழி பருவமன் றென்று வற்புறுத்தியது.) வருவர் வயங்கிழாய் வாளொண்க ணீர்கொண் டுருகி யுடன்றழிய வேண்டா--தெரிதியேற் பைங்கொடி முல்லை யவிழரும் பீன்றன வம்ப மழையுறக் கேட்டு. (ப.ரை.) விளங்கிய இழைகளையுடையாய்! நங் காதலர் பருவம் வந்தால் வருவர்; வாளினையொக்கும் நின் கண்கள் நீர் கொள்ள நீ யுருகி மாறுபட்டு அழியவேண்டா; ஆராய்வாயாயிற்றன்பருவ மல்லாமையின் நிலையில்லாத முழக்கங் கேட்டுப் பைங்கொடி முல்லைகள் அவிழரும்பு ஈன்றன காண். (9) (வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது.) நூனவின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக தேனவின்ற கானத் தெழினோக்கித்--தானவின்ற கற்புத்தாள் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி நிற்பா ணிலையுணர்கம் யாம். (ப.ரை.) நூல் பயின்ற பாகனே! நின் றேர் கடிதாகச் செல்வதாக; தேன் பயின்ற காட்டினது அழகை நோக்கித் தான் பயின்ற கற்பென்னா நின்ற தாளினைச் செறித்து உயிர் காத்துக் கவுளின் மிசைக் கையூன்றி நிற்பாளது நிலைமையை நாம் சென்று அறிவோம்.(10) 2. குறிஞ்சி (பகற்குறிக்கட் டலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் செறிப்பறிவுறீ இயது) பொன்னிணர் வேங்கை கவினிய பூம்பொழிலு ணன்மலை நாட னலம்புனைய--மென்முலையாய் போயின சின்னாள் புனத்து மறையினா லேயினா ரின்றி யினிது. (ப.ரை.) பொன் போன்ற பூங்கொத்தையுடைய வேங்கைகள் அழகு பெற்ற பூம்பொழிலின்கண் வந்து நன் மலைநாடன் நினது நலத்தினைப் புனையக் கழிந்தன சிலநாள்; புனத்தின்கட் களவி னான் எதிர்ப்பட்டோரின்றி இடையூறின்றியே யினிதாக. (11) (பகற்குறி வந்து பெயர்கின்ற தலைமகனைக் கண்ணுற்றுத் தோழி செறிப்பறிவுறீஇயது.) மால்வரை வெற்ப! வணங்கு குரலேனல் காவ லியற்கை யொழிந்தேம்யாந்--தூவருவி பூக்கண் கழூஉம் புறவிற்றாய்ப் பொன்விளையும் பாக்க மிதுவெம் மிடம். (ப.ரை.) பெரிய குவடுகளையுடைய வெற்பனே! வளைந்த கதிர்களையுடைய பசுந்தினையைக் காத்தல் யாம் ஒழிந்தேம்; தூவ ருவிகள் பூவின் கண்களைக் கழுவுகின்ற காட்டினை யுடைத் தாய்ப் பொன் விளையும் இப்பாக்கம் எம்முடைய இடமாதலான் நீ இங்கே வரக்கூடின், வருவாயாக. (12) (சிறைப்புறத்தானாகத் தலைமகனை யியற்பழித்த தோழிக்குத் தலைமகன் இயற்பட மொழிந்தது.) கானக நாடன் கலவானென் றோளென்று மானமர் கண்ணாய்! மயங்கனீ:--நாணங் கலந்திழியு நன்மலைமேல் வாலருவி யாடப் புலம்பு மகன்றுநில் லா. (ப.ரை.) கானகநாடன் என்றோளைப் புணரானென்று சொல்லி, மான் போன்ற மதர்த்த கண்ணினை யுடையாய்! அறிவு கெடா தொழிவாயாக; பல நறு விரைகளையுங் கலந்து இழியா நின்ற நன் மலையின் கண் உள்ள வாலிய அருவியை யாட என்றோள் களின் கட் புலம்பும் நீங்கி நில்லாது. (13) (தோழி தலைமகட்கு மெலிதாகச் சொல்லிக் குறை நயப்புக் கூறியது.) புனைபூந் தழையல் குற் பொன்னன்னாய்! சாரற் றினைகாத் திருந்தேம்யா மாக--வினைவாய்த்து மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத் தாம்வினவ லுற்றதொன் றுண்டு. (ப.ரை.) செய்யப்பட்ட பூந்தழைகளான் அணியப்பட்ட அல்குலினை யுடைய பொன்னன்னாய்! மலைச்சாரலின் கட்டினையைக் காத்து நாம் இருந்தேமாக, வினையை வாய்க்கச் செய்து ஒருமா வினவுவார் போல வந்தாரொருவர் நம் மாட்டுத் தாம் வினவலுற்ற பிறிதொன்று உண்டு. (14) (பகற்குறிக்கட் டலைமகள் சிறைப்புறத்தானாகத் தோழி தாய் கேட்டதற்கு மறுமாற்றஞ் சொல்லுவாள் போலப் படைத்துமொழி கிளவியான் வரைவு கடாயது.) வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து மாந்தளிர் மேனி வியர்ப்பமற்--றாங்கெனைத்தும் பாய்ந்தருவி யாடினே மாகப் பணிமொழிக்குச் சேந்தனவாஞ் சேயரிக்கண் டாம். (ப.ரை.) வெற்பின்கண் வேங்கை மலரையும் கொய்து நின் மகள் மாந்தளிர் மேனி வியர்த்தலான் அவ்விடத்து எல்லா வருவியும் பாய்ந்தாடினேமாகப், பணிமொழியை யுடையாட்குச் சேயரிக்கண்டாம் சிவந்தன காண். (15) (இரவுக்குறி வந்து பெயரும் தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது) கொடுவரி வேங்கை பிழைத்துக் கோட்பட்டு மடிசெவி வேழ மிரீஇ--அடியோசை அஞ்சி யொதுங்கு மதருள்ளி யாரிருட் டுஞ்சா சடர்த்தொடி கண். (ப.ரை.) கொடுவரி வேங்கையாற் கோட்பட்டுப் பிழைத்து மடிந்த செவியையுடைய வேழம் பிரிந்து தன்னடியோசையைப் புலி கேட்குமென்று அஞ்சி, மெல்ல நடக்கும் வழியை நினைந்து கங்கு லின்கட் சுடர்த்தொடியை யுடையாள் கண் துயிலா. (16) (இதுவுமது) மஞ்சிவர் சோலை வளமலை நன்னாட! எஞ்சாது நீவருதி யென்றெண்ணி--அஞ்சித் திருவொடுங்கு மென்சாயற் றேங்கோதை மாத ருருவொடுங்கு முள்ளுருகி நின்று. (ப.ரை.) முகில் படராநின்ற சோலையையுடைய வளமலை நாடனே! ஒருநாள் ஒழியாது இரவின்கண் நீ வாராநின்றாய் என்று எண்ணித் திருவொடுங்கு மென்சாயற் றேங்கோதை மாதர் அஞ்சி யுள்ளுருகி தன்மேனி மெலியா நின்றாள். (17) (தோழி செறிப்பறிவுறீஇத் தலைமகனை வரைவு கடாயது.) எறின்தெமர் தாமுழுத வீர்ங்குர லேனன் மறந்துங் கிளியினமும் வாரா--கறங்கருவி மாமலை நாட! மடமொழி தன்கேண்மை நீமறவ னெஞ்சத்துக் கொண்டு. (ப.ரை.) காடெறிந்து எமர்தா முழுத ஈர்ங்குரல் ஏனலின் கண் மறந்தாயினுங் கிளியினமும் நாங்களும் வாரோம்; கறங் கருவி யினை யுடைய மாமலை நாடனே! மடமொழியோடு நீ கொண்ட கேண்மையை நின்னெஞ்-சத்துக் கொண்டு மறவாயாக. (18) (தோழி இரவுக்குறியின் கண் நெறிவிலக்கிவரைவு கடாயது.) நெடுமலை நன்னாட! நீள்வே றுணையாக் கடுவிசை வாலருவி நீந்தி--நடுவிரு ளின்னா வதர்வர வீர்ங்கோதை மாதரா ளென்னாவா ளென்னுமென் னெஞ்சு. (ப.ரை.) நெடுமலை நன்னாடனே! நீள்வேலே துணையாகக் கடிய விசையையுடைய, வாலருவியை நீந்தி, நடுவிருளின்கண் இன்னாத வழியின்கண் நீ வர, ஈர்ங்கோதை மாதராள் எப்பெற் றியா வாளோ என்று தடுமாறா நிற்கும் என்னெஞ்சு. (19) (தலைமகள் தோழிக்கு அறத்தோடு நின்று வெறி விலக்க வேண்டும் உள்ளத்தளாய்ச் சொல்லியது.) வெறிகமழ் வெற்பனென் மெய்ந்நீர்மை கொண்ட தறியாண்மற் றன்னோ! அணங்கணங்கிற் றென்று மறியீர்த் துதிரந்தாய், வேலற் றரீஇ வெறியோ டலம்வரும் யாய். (ப.ரை.) விரைகமழாநின்ற வெற்பன் எனது மெய்யின் கண் உள்ள நீர்மையைக் கொண்டது அறியாளாய், அந்தோ! தெய்வம் என்னை வருத்திற்று என்று வேலனைத் தந்து மறியை யறுத்து உதிரத்தைத் தூவி வெறியோடே வருந்தாநின்றாள் அன்னை.(20) 3. மருதம் (பாணந்குத் தலைமகள் வாயின் மறுத்தது.) கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொற்சேரி நுண்டுளைத் துன்னூசி விற்பாரி--னொன்றானும் வேறல்லை பாண! வியலூரன் வாய்மொழியைத் தேற வெமக்குரைப்பாய் நீ. (ப.ரை.) பண்டங் கொண்ட விலையை வேறுபடுத்துக் கொற்சேரியின் கண் நுண்ணிய துளையையுடைய ஊசியை விற்றுத் திரிவாரின் யாதானும் வேறல்லை; பாண! வியலூரன் வாய் மொழி யைத் தெளிய எமக்கு உரைக்கின்ற நீ. (21) (இதுவுமது) போதார்வண் டூதும் புனல்வய லூரற்குத் தூதாய்த் திரிதரும் பாண்மகனே!--நீதா னறிவயர்ந் தெம்மில்லு ளென்செய்ய வந்தாய் நெறியதுகா ணெங்கைய ரிற்கு. (ப.ரை.) மலர்களை நுகராநின்ற வண்டுகள் ஊதும் புனல் வயலூரற்குத் தூதாய் உழல்கின்ற பாண்மகனே! நீ தான் அறிவு கலங்கி எங்கள் மனையுள் என் செய்ய வந்தாய்? எங்கையர் மனைக்கு வழி அது காண். (22) (இதுவுமது) யாண ரகல்வ லூர னருளுதல் பாண! பரிந்துரைக்க வேண்டுமோ--மாண வறிவ தறியு மறிவினார் கேண்மை நெறியே யுரையாதோ மற்று. (ப.ரை.) வளமையுடைய அகல்வய லூரன் எமக்கு அருளுடையன் என்பதனைப் பாணனே! நீ காதலித்து உரைக்க வேண்டுமோ? மாட்சிப்பட அறியக் கடவதனை அறியும் அறிவினையுடை யார் செய்யும் நட்புநெறியை அவர் அருளுடைமையே உரையாதோ? (23) (இதுவுமது) கோலச் சிறுகுருகின் குத்தஞ்சி யீர்வாளை நீலத்துப் புக்கொளிக்கு மூரற்கு--மேலெலாஞ் சார்தற்குச் சந்தனச்சாந் தாயினே மிப்பருவங் காரத்தின் வெய்யவென் றோள். (ப.ரை.) அழகிய சிறுகுருகின் குத்தினையஞ்சிக் குளிர்ந்த வாளை நீல மலரின்கட் புக்கு ஒளிக்கும் ஊரினை யுடையாற்குப் பண்டெல்லாம் புணர்தற்குச் சந்தனக் குழம்பாயினேம்; இக்காலம் புண்ணிற்கு இடும் காரம்போல வெய்யவாம் எம்முடைய தோள். (24) (வாயில் வேண்டிச் சொன்றார்க்குத் தலைமகள் வாயின் மறுத்தது.) அழலவிழ் தாமரை யாய்வய லூரன் விழைதகு மார்ப முறுநோய்--விழையிற் குழலுங் குடுமியென் பாலகன் கூறு மழலைவாய்க் கட்டுரை யால். (ப.ரை.) அழல் போல அவிழுந் தாமரைகளையுடைய ஆய்வயலூரனுடைய, கண்டார் விழையப்பட்ட மார்பம் துன்புறா நிற்கும்; குழலும் குடுமி யென் பாலகன் கூறும் மழலைவாய்க் கட்டுரையான் எம்மை விரும்பிப் புணருமாயின். (25) (புதல்வனை முனிந்து தலைமகன் மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தது.) பெய்வளைக் கையாய்! பெருநகை யாகின்றே செய்வய லூரன் வதுவை விழவியம்பக் கைபுனை தேரேறிச் செல்வானைச் சென்றிவ னெய்தி யிடருற்ற வாறு. (ப.ரை.) பெய்வளையினையுடைய கையாய்! எனக்குப் பெரிய நகையாகாநின்றது; செய்த வயல்களையுடைய ஊரன், பரத்தையர் புதுமணங் களின் உள்ள முழவு ஒலித்தலாற் கைபுனை தேரேறிச் செல்வானை இப் புதல்வன் கண்டு சென்று எய்த, அவ்வூரன் புதுமணம் புணரப் பெறாது இடருற்றவாறு.(26) (வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயின் மறுத்தது.) தண்வய லூரற் புலக்குந் தகையமோ நுண்ணறல் போல நுணங்கிய வைங்கூந்தல் வெண்மாற் போல நிறந்திரிந்து வேறாய வண்ண முடையேமற் றியாம். (ப.ரை.) தண்வயலூரனை ஊடுந் தகையமோ? நுண்ணிய அறல்மணற்போலும் நுணுகிய ஐவகைப்பட்ட கூந்தல் வெள்ளை மரற்போலத் தன்னிறந் திரிந்து வேறுபட்ட நிறத்தை யுடையேம் ஆதலான். (27) (தலைமகள் தோழிக்கு வாயின் மறுத்தது.) ஒல்லென் றொலிக்கு மொலிபுன லூரற்கு வல்லென்ற தென்னெஞ்சம் வாட்கண்ணாய்!--நில்லென்னா தேக்கற்றாங் கென்மகன் றானிற்ப வென்னானு நோக்கான்றே ரூர்ந்தது கண்டு. (ப.ரை.) ஒலி புனலையுடைத்தாய்ப் பிறவோசை யானும் ஒல் லென் றொலிக்கும் ஊரற்கு என்னெஞ்சம் நெகிழாது வலிதாயிற்று; வாட் கண்ணாய்! புதல்வன் தன்னை விரும்பி நிற்கக் கண்டு வைத்துப் பாகனை நில்லென்று சொல்லாதே என் புதல்வனையும் பின்பாராதே தேரூர்ந்து பரத்தையர் மனைக்குச் சென்றது கண்டு. (28) (ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகன் புணர்ந்து நீங்கிய பின்பு சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) ஒல்லென் னொலிபுன லூரன் வியன்மார்பம் புல்லென்யா னென்பேன் புனையிழையாய்!--புல்லே னெனக்கோர் குறிப்பு முடையனோ வூரன் றனக்கேவல் செய்தொழுகு வேன். (ப.ரை.) ஒலி புனலை யுடைத்தாய்ப் பிறவோசையான் ஒல் லென்னும் ஊரனுடைய அகன்ற மார்பத்தினை யான் முயங்கேன் என்று சொல்லி அவனைக் காணாதமுன் நினைத்திருப்பேன்; புனை யிழையாய்! அவனைக் கண்டபின் முயங்கேனாதற்கு எனக்கெனப் பெற்ற கருமம் உடையேனோ? ஊரன்றனக்கு ஏவல் செய்து ஒழுகு வேன் ஆதலான். (29) (இதுவுமது) குளிரும் பருவத்தே யாயினும் தென்றல் வளியெறியின் மெய்யிற் கினிதாம்--ஒளியிழாய்! ஊடி யிருப்பினு மூர னறுமேனி கூட லினிதா மெனக்கு. (ப.ரை.) குளிருங் காலத்தேயாயினும் தென்றற்காற்று எறியின் உடம்பிற்கு இனிதாம்; அதுபோல, ஒளியிழாய்! யான் அவனைப் புலந்திருந்தேன் ஆயினும், அவ்வூரன் அழகிய நாற்றத்தையுடைய மேனியைக் கூடுதல் இனிதாம் எனக்கு. (30) 4. பாலை (பருவங் கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) உதிரந் துவரிய வேங்கை யுகிர்போ லெதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார்நீங்க--எதிருநர்க் கின்பம் பயந்த விளவேனில் காண்டொறுந் துன்பங் கலந்தழியு நெஞ்சு. (ப.ரை.) உதிரத்தை யளைந்து துவரிய புலியினது உகிர் போலப் பருவத்தை யெதிர்த்து முருக்குகள் அரும்ப, ஈர்ந்தண் முகில் நீங்க, காதலர் தம்முட் டலைப்பட்டார்க்கு இன்பத்தைக் கொடுத்த இளவேனிலைக் காணுந்தோறும் துன்பத்தோடு புணர்ந்து அழியா நின் றது என்னெஞ்சு. (31) (தலைமகனது பிரிவுக்குறிப்பறிந் தாற்றாளாய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.) விலங்கல் விளங்கிழாய்! செல்வாரோ வல்ல ரழற்பட் டசைந்த பிடியை--யெழிற்களிறு கற்சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையாற்கொண் டுச்சி யொழுக்குஞ் சுரம். (ப.ரை.) அவர் செலவினை விலங்கா தொழிக; விளங்கிய இழை யினையுடையாய்! செல்ல மாட்டார்; காட்டழற்பட்டு வருந்திய பிடியினை அதனது எழிற்களிறு கற்சுனைச் சேற்றிடையுள்ள சின்னீரைத் தன் கையாலே கொண்டு அப் பிடியின் உச்சியின் கண் ஒழுக்குஞ் சுரத்தை. (32) (மகட் போக்கிய நற்றாய் கவன்று சொல்லியது.) பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியு மாயமு மொன்று மிவைநினையாள்--பால்போலு மாய்ந்த மொழியினாள் செல்லுங்கொல் காதலன்பின் காய்ந்து கதிர்தெறூஉங் காடு. (ப.ரை.) பாவையையும், பந்தையும், பவளம் போன்ற வாயை யுடைய பசுங்கிளியையும், ஆயத்தையும் இவற்றை ஒன்றும் நினையா ளாய், பால்போலும் சின்மொழியை யுடையாள், தன் காதலன்பின் செல்லுங் கொல்லோ! கனன்று பகலோன் சுடுகின்ற காட்டினை. (33) (தோழி தலைமகனைச் செலவழுங்கியது.) கோட்டமை வல்விற் கொலைபிரியா வன்கண்ண ராட்டிவிட் டாறலைக்கு மத்தம் பலநீந்தி வேட்ட முனைவயிற் சேறிரோ வைய! நீர் வாட்டடங்கண் மாதரை நீத்து. (ப.ரை.) கோட்டுகின்ற மூங்கில்விற்கொலையை இடையறாத வண் கண்மையை யுடையார் ஆறலைத்து ஒட்டி வழியின்கண் நின்று அலைக்குங் கடறுகள் பலவற்றையு நீந்தி, வேட்டினை யுடைய வெம் முனையின்கட் செல்வீரோ? ஐய! நீர் வாட்டங்கண் மாதரைத் துறந்து. (34) (தலைமகன் பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றுவலென்பதுபட மொழிந்தது) கொடுவி லெயினர்தங் கொல்படையால் வீழ்ந்த தடிநிண மாந்திய பேஎய்--நடுகல் விரிநிழற் கண்படுக்கும் வெங்கான மென்பர் பொருள்புரிந்தார் போய சுரம். (ப.ரை.) கோட்டிய வில்லினையுடைய வேட்டுவர் தங் கொல் படையானே வீழ்ந்த தசையையும் நிணத்தையுந் தின்ற பேய் கள், போரின்கட் பட்டார் பெயர் பொறித்து நட்ட கல்லின் விரிநிழற் றுயிலும் வெய்ய காடென்று சொல்லுவர்; தோழி! பொருள் விரும்பி னார் போகிய கடறு. (35) (பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன் படாது சொல்லியது) கடிதோடும் வெண்டேரை நீராமென் றெண்ணிப் பிடியோ டொருங்கோடித் தாள்பிணங்கி வீழும் வெடியோடும் வெங்கானஞ் சேர்வார்கொ னல்லாய்! தொடியோடி வீழத் துறந்து. (ப.ரை.) விரைந்தோடும் பேய்த்தேரை நீரா மென்று கருதிக் களிறுகள் பிடியோடே கூட ஓடித் தாள் ஓய்ந்து பிணங்கி வீழும் பிளவோடிய வெங்கானத்தைச் சென்று நங்காதலர் சேர்வார் கொல்லோ? நல்லாய்! நங் கையிற் றொடி யோடிவீழத் துறந்து. (36) (உடன்போய தலைமகட்கு நற்றாய் கவன்றுரைத்தது.) தோழியர் சூழத் துறைமுன்றி லாடுங்கால் வீழ்பவள் போலத் தளருங்காற்--றாழாது கல்லத ரத்தத்தைக் காதலன் பின் போதல வல்லவோ மாதர் நடை. (ப.ரை.) தோழியர் சுற்றமுற்றத்திற் றுறையின் விளையாடும் பொழுதும் வீழ்பவளேபோலத் தளர்ந்து கால்கள் ஓய்ந்து தாழாதே கல்வழியையுடைய அத்தத்துத் தன் கொழுநன் பின் போதலை வல்ல வோ? காதலை யுடையாள் நடை. (37) (பிரிவின்கண் ஆற்றாளாயின தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.) சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப் பிணைமா னீனிதுண்ண வேண்டிக்--கலைமாத்தன் கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல ருள்ளம் படர்ந்த நெறி. (ப.ரை.) சுனையின்கண் உள்ள சிறிய நீரைப் பிணைக்கு உண்ண நிரம்பாது என்று எண்ணிப் பிணைமான் இனிதாக உண்ண வேண்டி, கலையாகிய மாத் தனது கள்ளத்தினானே பொய் யே உறிஞ்சும் சுரமென்று சொல்வர்; நங்காதலர் தம் அகத்தினாற் போயின நெறி. (38) (தலைமகன் பொருள்வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.) மடவைகா ணன்னெஞ்சே மாண்பொருண்மாட் டோடப் புடைபெயர் போழ்தத்து மாற்றாள்--படர்கூர்ந்து விம்மி யுயிர்க்கும் விளங்கிழையா ளாற்றுமோ நம்மிற் பிரிந்த விடத்து. (ப.ரை.) அறியாய்காண், மிக்க நெஞ்சே! மாட்சிமைப் பட்ட பொருளின் மாட்டுச் சேறலான், முயங்கி நாம் புடை பெயருங் காலத்தும் ஆற்றமாட்டாளாய்த் துன்ப மிக்கு விம்மி உயிரா நின்ற விளங்கி ழையாள் ஆற்ற வல்லளோ? நம்மை நீங்கிய விபத்து. (39) (இதுவுமது) இன்றல்க லீர்ம்படையு ளீர்ங்கோதை தோடுணையா நன்கு வதிந்தனை நன்னெஞ்சே!--நாளைநாங் குன்றத ரத்த மிறந்து தமியமா யென்கொலோ சேக்கு மிடம். (ப.ரை.) இன்று இரவின்கட் குளிர்ந்த சேக்கையுள் ஈர்ங் கோதையை யுடையாள் தோள் நமக்குத் துணையாக மிகவுந் தங்கினை; நன்னெஞ்சே! இவ்வின்பத்தை விட்டு நாளை யிரவின்கண் யாம் மலைவழியே யிறந்து தமியேமாய் எவ்விடந் தங்குமிடம்? (40) 5. நெய்தல் (அல்ல குறிப்பிட்ட தலைமகற்குச் சொல்லுவாளாய்த் தோழி தலைமக்கட்குச் சொல்லியது) தெண்கடற் சேர்ப்பன் பிரியப் புலம்படைந் தொண்டடங்கண் டுஞ்சற்க வொள்ளிழாய்--நண்படைந்த சேவலுந் தன்னருகிற் சேக்குமா லென்கொலோ பூந்தலை யன்றில் புலம்பு. (ப.ரை.) தெண்கடற் சேர்ப்பன் பிரிதலாற் றனிமையையடைந்து நின்னுடைய ஒள்ளிய கண் துயிலா தொழிக; ஒள்ளிய இழைகளை யுடையாய்! நண்பினை அடைந்த சேவலும் தன்னருகே உறையாநின்ற தாதலான் என்னை கொல்லோ? செம்பூப் போலுஞ் சூட்டினையுடைய பெடையன்றில் புலம்புதல். (41) காமமிக்க கழிபடர் கிளவி.) பொடுந்தா ளலவ! குறையா மிரப்பே மொடுங்கா வொலிகடற் சேர்ப்ப--னெடுந்தேர் கடந்த வழியையெங் கண்ணாரக் காண நடந்து சிதையாகி நீ. (ப.ரை.) கோடியிருந்த தாளினையுடைய அலவனே! ஒரு காரியம் நின்னையிரப்பேம்: ஒலியாநின்ற அடங்காத கடற்சேர்ப் பன் நெடுந்தேர் போயின வழியை எம்முடைய கண் நிரம்பக் காணும் வகை அதன்மேல் நடந்து அழியா தொழிவாயாக. (42) (இதுவுமது) பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை வரிப்புற வார்மணன்மே லேறித்--தெரிப்புறத் தாழ்கடற் றண்சேர்ப்பன் றாரகல நல்குமே வாழியாற் காணோமோ யாம். (ப.ரை.) பொரிந்த புறத்தையுடைய பல்லி முட்டைபோல அரும்பினை யீன்ற புன்னைப் பூக்களையுடைய வரிப்பட்ட புறத்தி னையுடைய உயர்ந்த மணற் குன்றின்மேல் ஏறியிருந்து, தெளிவுறத் தாழ்கடற் றண்சேர்ப்பனுடைய தார் அகலத்தை நமக்கு நல்குமாயிற் கூடல் இழைப்பாற் காண்பேம் யாம். (43) (பகற்குறிக்கட் டலைமகன் சிறைப்புறத்தானாகப் படைத்து மொழி கிளவியாற் றோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது.) கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழினோக்கி யுண்கண் சிவப்ப வழுதே னொளிமுகங் கண்டன்னை யெவ்வம்யா தென்னக் கடல்வந்தென் வண்டல் சிதைத்ததென் றேன். (ப.ரை.) நம்மை இற்செறிக்கையாற் கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழிலை நோக்கி உண் கண் சிவப்ப, அழுத என்னுடைய ஒளி முகத்தைக் கண்டு அன்னை நினக்கு வந்த இடும்பை யாது என்னக், கடல் வந்து என்னுடைய விளையாட்டுச் சிற்றிலைச் சிதைத் தது என்று சொன்னேன்; எம்பெருமாட்டி! (44) (தலைமகனைத் தோழி வரைவுகடாதற் பொருட்டுத் தலைமகள் வரைவுவேட்டுச் சொல்லியது.) ஈர்ந்தண் பொழிலு ளிருங்கழித் தண்சேர்ப்பன் சேர்ந்தென் செறிவளைத்தோள் பற்றித் தெளித்தமை மாந்தளிர் மேனியாய்! மன்ற விடுவனவோ பூந்தண் பொழிலுட் குருகு. (ப.ரை.) குளிர்ந்த தண் பொழிலின்கண் இருந்து பெரிய கழியையுடைய தண் சேர்ப்பன் புணர்ந்து என் செறி வளைத்தோள் பற்றி என்னைத் தெளிவித்த வஞ்சினத்தை, மாந்தளிர் மேனியாய்! மெய்யாக மறந்துவிட வல்லவோ? அப்பூந்தண் பொழிலுள் வாழுங் குருகுகள். (45) (பகற்குறி வந்து புணர்ந்து நீங்குந் தலைமகனைக் கண்ணுற்று நின்று தோழி வரைவுகடாயது) ஓதந் தொகுத்த வொலிகடற் றண்முத்தம் பேதை மடவார்தம் வண்டல் விளக்கயருங் கானலஞ் சேர்ப்ப! தகுவதோ வென்றோழி தோணலந் தோற்பித்த னீ. (ப.ரை.) ஓதம் ஏறித்திரட்டிய ஒலிகடற் றண்முத்தங்களைப் பேதைமை யுடைய மடவார் தம் வண்டற் சிறுமனைக்கு விளக்காக விருப்புச் செய்யும் கானலஞ் சேர்ப்பனே! நினக்குத் தகுவதொன்றோ? என்னுடைய தோழியுடைய தோள்களின் நலத்தை நீ தொலை வித்தல். (46) (தோழிக்குத் தலைமகன் சொல்லியது; அல்லது தோழற்குச் சொல்லியதூஉமாம்.) பெருங்கட லுள்கலங்க நுண்வலை வீசி யொருங்குடன் றன்னைமார் தந்த கொழுமீ னுணங்கல்புள் ளோப்பு மொளியிழை மாத ரணங்காகு மாற்ற வெமக்கு. (ப.ரை.) பெரிய கடல் உள்ளெல்லாங் கலங்க நுண்ணிய வலைகளாலே வீசி ஒருங்குடனே தமையன்மார் கொண்டுவந்த கொழுத்த மீன் உணங்கல்களைக் கவரும் புட்களை ஓப்புகின்ற ஒளியிழை மாதர் மிகவும் எமக்கு வருத்துந் தெய்வமாம். (47) (தலைமகனைத் தோழி வரைவுகடாயது.) எக்க ரிடுமணன்மே லோதந் தரவந்த நித்தில நின்றிமைக்கு நீள்சுழித் தண்சேர்ப்ப! மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தா ரொற்கங் கடைப்பிடியா தார். (ப.ரை.) திரை வந்து இட்ட இளமணன்மேல் ஓதம் தர வந்த முத்தங்கள் நின்று விளங்காநின்ற நீண்ட சுழியினையுடைய தண் சேர்ப்பனே! உலகத்தின்கண் விளங்கிய மிகு புகழைத் தாங்க வல்லரோ? தம்மைச் சேர்ந்தாருடைய தளர்ச்சியைக் கடைப் பிடித்துத் தீராதார். (48) (அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்தமை அறியத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.) கொடுமுண் மடற்றாழைக் கூம்பவிழ்ந்த வொண்பூ விடையு ளிழுதொப்பத் தோன்றிப்--புடையெலாந் தெய்வங் கமழுங் தெளிகடற் றண்சேர்ப்பன் செய்தான் றெளியாக் குறி. (ப.ரை.) கொடிய முள்ளையுடைய மடற்றாழையினது மொட்டவிழ்ந்த ஒள்ளிய பூக்கள் நடுவுள்ள சோற்றான் வெண்ணெய்போலத் தோன்றி மருங்கெல்லாம் தெய்வமணம் போலக் கமழாநின்ற தெளிந்த கடற்றண் சேர்ப்பன், நம்மாற் றெளிக்கப் படாத குறியைச் செய்தான்; ஆதலால் அல்லகுறிப் பட்டேம். (49) (இதுவுமது) அணிகடற் றண்சேர்ப்பன் றேர்ப்பரிமாப் பூண்ட மணியாவ மென்றெழுந்து போந்தேன்--கனிவிரும்பும் புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தே னொளியிழாய் உள்ளுருகு நெஞ்சினே னாய். (ப.ரை.) நிலத்தைச் சூழ்ந்த கடற்றண்சேர்ப்பன் தேர் பூண்ட பரிமா அணிந்த மணியரவம் என்று கருதிச் சென்றேன்; கனிகளை விரும்புகின்ற புள்ளரவங்களைக் கேட்டு மணியரவம் அன்று போந்தேன்: ஒளியிழாய்! உள்ளுருகும் நெஞ்கினேனாகி. (50) ஐந்திணை எழுபது விளக்கவுரை பழைய பொழிப்புரையுடன் ஐந்திணை எழுபது விளக்கவுரை பழைய பொழிப்புரையுடன் கடவுள் வாழ்த்து எண்ணும் பொருளினிதே யெல்லா முடித்தெமக்கு நண்ணுங் கலையனைத்து நல்குமால்--கண்ணுதலின் முண்டத்தா னண்டத்தான் மூலத்தா னாலஞ்சேர் கண்டத்தா னீன்ற களிறு. 1. குறிஞ்சி (தோழி தலைமகனை வரைவு கடாயது) அவரை பொருந்திய பைங்குர லேனல் கவரி மடமா கதூஉம் படர்சாரற் கானக நாட! மறவல் வயங்கிழைக் கியானிடை நின்ற புணை. 1 (பழையவுரை.) அவரை பொருந்திய கதிரையுடைய பசுந்தி னையைக் கவரிமடமா கதுவாநின்ற படர்ந்த சாரலினையுடைய கானகநாடனே! மறவாது நினைப்பாயாக; வயங்காநின்ற அணியி னையுடையாட்கு யான் நடுவுநின்ற புணையினை. (வரைவு தலைவந்தமை கண்டு மகிழ்ந்த தலைமகள் தோழிக்குக் கூறியது) கொல்லைப் புனத்த வகில்சுமந்து கல்பாய்ந்து வானி னருவி ததும்பக் கவினிய நாட னயமுடைய னென்பதனா னீப்பினும் வாடன் மறந்தன தோள். 2 (ப.ரை.) கொல்லைப்புனத்த அகிலைச் சுமந்து கற்களைப் பாய்ந்து மழையானுளதாய அருவி முழங்குதலான் அழகு பெற்ற நாடன் தன்னை யடைந்தார்க்கு ஈரமுடையன் என்பதனான் அவன் பிரிந்தானாயினும் வாடுதலை மறந்தன உன்றோள்கள். (தோழி தலைமகன் வரைவு மலிந்தமை தலைமகட்குச் சொல்லியது) இலையடர் தண்குளவி யேய்ந்த பொதும்பிற் குலையுடைக் காந்த ளினவண் டிமிரும் வரையக நாடனும் வந்தான்மற் றன்னை அலையு மலைபோயிற் றின்று. 3 (ப.ரை.) இலை பயின்ற தண்குளவிக் கொடிகள் படர்ந்து மூடிய பொதும்பின்கட் பூங்கொத்தையுடைய காந்தளில் இன வண்டுகள் ஒலிக்கும் வரையகநாடனும் வரைவொடு வந்தான்; ஆதலான், இன்று நமக்கு அன்னை யலைக்கும் அலையும் போயிற்று. (தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது) மன்றப் பலவின் சுளைவிளை தீம்பழ முண்டுவந்து மந்தி முலைவருடக்--கன்றமர்ந் தாமா சுரக்கு மணிமாலை நாடனை யாமாப் பிரிவ திலம். 4 (ப.ரை.) மன்றின்கண் நின்ற பலவின் சுளைமுதிர்ந்த இனிய பழத்தைத் தின்றின்புற்று வந்து ஆமாவின் முலையை மந்தி வருட, அவ் வாமாத் தன் கன்றிற்குப்போல அன்பு பட்டுப் பாலைச் சுரக்கும் அணிமலைநாடனை யாமுளேமாகப் பிரிவதிலம். (இதுவுமது) சான்றவர் கேண்மை சிதைவின்றா யூன்றி வலியாகிப் பின்னும் பயக்கு மெலிவில் கயந்திகழ் சோலை மலைநாடன் கேண்மை நயந்திகழு மென்னுமென் னெஞ்சு. 5 (ப.ரை.) அமைந்தாருடைய நட்புச் சிதைதலின்றி நிலை பெற்று அடைந்தார்க்கு வலியாகி மறுமையின் கண்ணும் பயனைச் செய்யும்; அதுபோல, நீராற் றிகழா நின்ற சோலையையுடைய மலைநாடனுடைய நட்பு மெலிவின்றி இன்பத்தைத் திகழ்விக்கும் என்னா நின்றது என்னெஞ்சு. (புணர்ந்து நீங்குங் தலைமகனைக் கண்டு தோழி வரைவுகடாயது) பொன்னிணர் வேங்கை கமழு நளிசோலை நன்மலை நாட! மறவல் வயங்கிழைக்கு நின்னல தில்லையா லீயாயோ கண்ணோட்டத் தின்னுயிர் தாங்கு மருந்து. 6 (ப.ரை.) பொன்போன்ற பூங்கொத்தையுடைய வேங்கை கமழாநின்ற குளிர்ந்த சோலையையுடைய நன்மலை நாடனே! மறவாதொழிவாயாக; வயங்கிழைக்கு நின்னல்லது ஓரரணில்லையா தலால்? நின் கண்ணோட்டத்தான் இன்னுயிரைத் தாங்கும் மருந்து நல்காயோ! (பகற்குறிக்கட் டலைமகன் சிறைப்புறத்தானாகப் படைத்து மொழி கிளவியாற் றோழி வரைவுகடாயது) காய்ந்தீய லன்னை! இவளோ தவறில ளோங்கிய செந்நீ ரிழிதருங் கான்யாற்றுட் டேங்கலந்து வந்த வருவி குடைந்தாடத் தாஞ்சிவப் புற்றன கண். 7 (ப.ரை.) வெகுள வேண்டா அன்னாய்! குற்றமிலள் இவள்; மிகச் சிவந்த நீர் தாழ்ந்தோடுங்கான்யாற்றுள் தேனொடுங் கலந்து வந்த அருவிநீரைக் குடைந் தாடுதலான் இவள் கண்கள் தாஞ் சிவப்புற்றன; ஆதலான். (புணர்ந்து நீங்குந் தலைமகனைக் கண்டு தோழி வரைவுகடாயது) வெறிகமழ் தண்சுனைத் தெண்ணீர் துளும்பக் கறிவளர் தேமா நளுங்கனி வீழும் வெறிகமழ் தண்சோலை நாட! ஒன் றுண்டோ வறிவின்க ணின்ற மடம். 8 (ப.ரை.) விரை கமழாநின்ற குளிர்ந்த சுனையின்கண் தெளிந்த நீர் துளும்ப மிளகு படர்ந்து வளரா நின்ற இனிய மாவினது நறுவிய கனி வீழும் வெறிகமழ் தண்சோலை நாடனே! நின் அறிவின் கண் நின்றதொரு பேதமை யுண்டோ? (தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது) மன்றத் துறுகற் கருங்கண் முசுவுகளுங் குன்றக நாடன் றெளித்த தெளிவினை நன்றென்று தேறித் தெளிந்தேன் றலையளி யொன்றுமற் றொன்று மனைத்து. 9 (ப.ரை.) மன்றங்களிலே நெருங்கிய கல்லின்கண் கருங்கண் முசுக்கள் குதிபாயுங் குன்றநாடன் என் மனத்தைத் தெளிவித்த தெளிவினைப் பிழையா தென்று தேறினேற்கு, அவன் செய்த தலையளியொன்று; அவ்வொன்றும் அப்பெற்றித்தாய் பழுதாகாது. (தோழி தலைமகனைக் கண்டு வரைவுகடாயது) பிரைசங் கொளவீழ்ந்த தீந்தே னிறாஅன் மரையான் குழவி குளம்பிற் றுகைக்கும் வரையக நாட! வரையாய் வரினெந் நிரைதொடி வாழ்த லிலள். 10 (ப.ரை.) தேறலைப் பிறர் கொள்ள வீழ்ந்த தீந்தேன் இறால்களை மரையான் கன்று குளம்பால் உழக்கும் வரையக நாடனே! நீ வரையாது வருவாயாயின், எங்கள் நிரைதொடி உயிர் வாழாள். (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் கேட்பத் தோழி தலைமகனை இயற்பழித்தது) கேழ லுழுத கரிபுனக் கொல்லையுள் வாழை முதுகாய் கடுவன் புதைத்தயருந் தாழருவி நாடன் றெளிகொடுத்தா னென்றோழி நேர்வளை நெஞ்சூன்று கோல். 11 (ப.ரை.) பன்றிகள் கொம்பினால் உழுத சுட்டுக்கரிந்த புனக் கொல்லையுள் வாழையின் முதிர்ந்த காயைக் குரங்கினுட் கடுவன்கள் அப்புழுதியிற் புதைத்தயருந் தாழ்ந்த அருவிகளையுடைய நாடன் என் றோழியாகிய நேர்வளைக்கு அக்காலத்து நெஞ் சூன்றுகோலாகத் தெள்ளிய வஞ்சினங் கூறினான். (தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது) பெருங்கை யிருங்களி றைவன மாந்திக் கருங்கான் மராம்பொழிற் பாசடைத் துஞ்சுஞ் சுரும்பிமிர் சோலை மலைநாடன் கேண்மை பொருந்தினார்க் கேமாப் புடைத்து. 12 (ப.ரை.) பெருங்கையையுடைய இருங்களிறு ஐவன நெல்லைத் தின்று, கருங்காலையுடைய மராம்பொழிலிற் பச்சிலை நிழலிற் றுயிலும் வண்டுகள் ஒலிக்கும் சோலைமலை நாடன் கேண்மை பொருந்தினார்க்கு ஏமாப்புடைத்து. (வெறியாட் டெடுத்துக் கொண்டவிடத்துத் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது) வார்குல லேனல் வளைவாய்க் கிளைகவரு நீராற் றெளிதிகழ் காநாடன் கேண்மையே யார்வத்தி னார முயங்கினேன் வேலனு மீர வலித்தான் மறி. 13 (ப.ரை.) நீண்ட கதிரினையுடைய பசுந்தினையை வளைவாய்க் கிளியினம் கவரும் நீரானே தெளிந்து திகழாநின்ற சோலைகளை யுடைய மலைநாடன் கேண்மையைக் காதலினாலே நிரம்ப மேவினேன்; பிரிதலாற்றே னாயினேன்; அவ்வாற்றாமை தெய்வத்தி னாயது என்று முருகற்கு மறியை யறுக்கத் துணிந்தான் வேலோன்; தோழி, இதனை விலக்குவாயாக. (தலைமகன் வரும்வழியின் ஏதத்திற்குக் கவன்ற தலைமகள் வரைவு வேட்டுத் தோழிக்குச் சொல்லியது) குறையொன் றுடையேன்மற் றோழி! நிறையில்லா மன்னுயிர்க் கேமஞ் செயல்வேண்டு மின்னே யராவழங்கு நீள்சோலை நாடனை நம்மி லிராவார லென்ப துரை. 14 (ப.ரை.) நின்னான் ஒரு காரிய முடையேன், தோழி! நிலையில் லாத என் மன்னுயிர்க்கு அரணஞ் செய்ய வேண்டும்; இப்பொழுதே பாம்புகளான் வழங்கப்படுகின்ற நீண்ட சோலையையுடைய நாடனை நம்மனையின்கண் இரா வர வேண்டா என்பதனைச் சொல். 2. முல்லை (பருவங் கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது) செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினாற் பைங்கொடி முல்லை மணங்கமழ--வண்டிமிரக் காரோ டலமருங் கார்வானங் காண்டொறும் நீரோ டலமருங் கண். 15 (ப.ரை.) செய்ய கதிரினையுடைய செல்வன் சீற்றமடங்கிய காலத்தின் கண் பசுங்கொடியையுடைய முல்லைகள் பூத்து மணங் கமழ்தலான் வண்டுகள் ஒலிக்கக் கார்ப்பருவத்தோடு தடுமாறுகின்ற முகில்களையுடைய, வானங் காணுந்தோறும் நீரோடுங்கூடத் தடுமாறா நின்றன கண்கள். (இதுவுமது) தடமென் பணைத்தோளி! நீத்தாரோ வாரார் மடநடை மஞ்ஞை யகவக்--கடன் முகந்து மின்னோடு வந்த தெழில்வானம் வந்தென்னை யென்னாதி யென்பாரு மில். 16 (ப.ரை.) பெரியவாய் மெல்லியவாகிய மூங்கில் போன்றிருந்த தோளினையுடையாய்! நம்மைத் துறந்தார் இக்காலத்து வருகின்றிலர்; மெல்லிய நடையினையுடைய மயில்கள் அழைக்கக் கடன் முகந்து மின்னுடனே வந்தது, எழிலினையுடைய வானம்; ஆதலால், பின்னையும் என்னை வந்து, “நீ என் செய்யக் கடவாய்!” என்றிரங்கி ஒன்றைச் சொல்லுவாருமில்லை. (இதுவுமது) தண்ணறுங் கோட றுடுப்பெடுப்பக் காரெதிரி விண்ணுயர் வானத் துருமுரற்றத்--திண்ணிதிற் புல்லுந ரில்லார் நடுங்கச் சிறுமாலை கொல்லுநர் போல வரும். 17 (ப.ரை.) குளிர்ந்த நறுங்கோடல் துடுப்புப்போலப் பூங்குலைகளை யேந்தக், கார்காலத்தை ஏன்றுகொண்டு முகில்கள் மிக்க வானத்தின் கண் உருமேறு ஒலிப்பத் திண்ணிதாக முயங்குவாரை யில்லாதார் நடுங்கும் வகை துன்பத்தைச் செய்யு மாலை கொல்வாரைப் போல வாராநின்றது. (இதுவுமது) கதழுறை வானஞ் சிதற விதழகத்துத் தாதிணர்க் கொன்றை யெரிவளர்ப்பப் பாஅய் இடிப்பது போலு மெழில்வான நோக்கித் துடிப்பது போலு முயிர். 18 (ப.ரை.) விரைந்து துளிகளை முகில்கள் இதழகத்தே சிதற, தாதினையுடைய பூங்கொத்துக்களையுடைய கொன்றைகள் எரி நிறத்தை மிகுப்ப, பரந்து கழறுவது போலும் எழில் விசும்பைக் காணுந்தோறும் வருந்தித் துடிப்பது போலாநின்றது என் உடலம். (இதுவுமது) ஆலி விருப்புற் றகவிப் புறவெல்லாம் பீலி பரப்பி மயிலாலச்--சூலி விரிகுவது போலுமிக் காரதிர வாவி யுருகுவது போலு மெனக்கு. 19 (ப.ரை.) மழைத்துளிகளைக் காதலித்தழைத்துக் காடெலாந் தோகைகளைப் பரப்பி மயிலினங்கள் ஆடக், கருக்கொண்டு விரிகுவதுபோலும் இக் கார் முழங்க எனக்கு என் உயிர் உருகுவது போலா நின்றது. (இதுவுமது) இனத்த வருங்கலை பொங்கப் புனத்த கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப விடிமயங்கி யானு மவரும் வருந்தச் சிறுமாலை தானும் புயலும் வரும். 20 (ப.ரை.) இனங்களையுடைய கலைகள் களித்து மிக, புனங்களிலுள்ள கொடிமிடைந்த முல்லை தளிர்ப்ப, இடியோடே கூடமிடைந்து, யானும் என் காதலரும் வருந்த, துன்பத்தைச் செய்யும் மாலை தானும் மழைப்பெயலும் எம்மேல் வாராநின்றன. (இதுவுமது) காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன் கார்கொடி முல்லை யெயிறீனக்--காரோ டுடன்பட்டு வந்தலைக்கு மாலைக்கோ வெம்மின் மடம்பட்டு வாழ்கிற்பா ரில். 21 (ப.ரை.) எம்மழகு சுருங்க எம்மை நீங்கினாரும் வருவதற்கு முன்னே கருங்கொடியுடைய முல்லைகள் நல்லார் எயிறு போல அரும்பக் காரோடு உடனே யுளதாய் வந்து எம்மை நலிகின்ற மாலைக்கு எம்மைப் போல வலியிழந்து மெலிவாற்றியிருந்து உயிர் வாழ்வார் இல்லை. (இதுவுமது) கொன்றைக் குழலூதிக் கோவலர் பின்னிரைத்துக் கன்றம ராயம் புகுதர--வின்று வழங்கிய வந்தன்று மாலையாங் காண முழங்கிவிற் கோலிற்று வான். 22 (ப.ரை.) கொன்றை யென்னாநின்ற குழலூதிக் கோவலர் பின்னே நிரைத்து நிற்க, கன்றை விரும்பிய நிரையாயங்கள் ஊர் தோறும் புக, இவ்விடத்தின்கண் வழங்க வேண்டி வந்தது மாலை; யாம் இறந்துபடாதிருந்து காணும்படி முழங்கி வில்லைக் கோலிற்று மழை. (இதுவுமது) தேரைத் தழங்குகுரற் றார்மணி வாயதிர்ப்ப வார்கலி வானம் பெயறொடங்கிக்--கார்கொள வின்றாற்ற வாரா விடுவார்கொல் காதல ரொன்றாலு நில்லா வளை. 23 (ப.ரை.) ஓசையையுடைய முகில்கள் பெயலைத் தொடங்கிக் கார்ப் பருவத்தைக் கொள்ள, நம் காதலர் தேரை போன்ற தழங்கு குரலையுடைய குதிரைத் தார்மணிகள் வாயதிர்ப்ப, இன்று நாம் ஆற்றியுளமாம் வகை வாராது விடுவார்கொல்லோ? தோழி! நம் வளை யாதும் நிற்கின்றது இல்லையால். (இதுவுமது) கல்லேர் புறவிற் கவினிப் புதன்மிசை முல்லை தளவொடு போதவிழ--வெல்லி யலைவற்று விட்டன்று வானமு முண்கண் முலைவற்று விட்டன்று நீர். 24 (ப.ரை.) கல்லெழுந்து கிடந்த கானத்தின்கண் அழகு பெற்று புதல்கண் மிசை முல்லைகளும் செம்முல்லைகளும் பூக்கண் மலர, இரவின்கண் முகிலும் அலைவற்று விட்டன நீரினை; மையுண் கண்களும் முலைகண் மிசை வடித்தன நீரினை. (இதுவுமது) கார்ப்புடைப் பாண்டில் கமழப் புறவெல்லா மார்ப்போ டினவண் டிமிர்ந்தாட--நீர்த்தின்றி யொன்றா தலைக்குஞ் சிறுமாலை மாறுழந்து நின்றாக நின்றது நீர். 25 (இதுவுமது) குருந்தலை வான்படலை சூடிச் சுரும்பார்ப்ப வாயன் புகுதரும் போழ்தினா னாயிழாய்! பின்னொடு நின்று பெயரும் படுமழைகொ லென்னொடு பட்ட வகை. 26 (குறிப்பு : மேல்வரும் பாலை, மருதம். நெய்தல் ஆகிய முத்திணை களுக்கும் பழைய உரை கிடைத்திலது. புத்துரை, புலவர் இளங்குமரனால் எழுதப்பட்டது.) 3. பாலை (தலைமகன் செலவினைத் தலைமகட்குத் தோழி உணர்த்தியது) எழுத்துடைக் கன்னிரைக்க வாயில் விழுத்தொடை யம்மா றலைக்குஞ் சுரநிரைத் தம்மா பெருந்தகு தாளாண்மைக் கேற்க வரும்பொரு ளாகுமவர் காத லவா. 27 தலைவியே, மிக்க முயற்சிக்குரிய பெரும் பொருள் தேட விரும்பும் தலைவர் ஆவல் மிகுதியால், வீரப் போரிட்டு இறந்தோர் பீடும் பெயரும் எழுதிய கல்லொழுங்கமைந்த பாலைச் செலவு மேற் கொண்டுள்ளது என்றாள் தோழி. (தலைமகனின் செலவுடன்படாத தலைமகள் தோழிக்குச் சொல்லியது) வில்லுழு துண்பார் கடுகி யதரலைக்குங் கல்சூழ் பதுக்கையா ரத்தத்திற் பாரார்கொன் மெல்லியல் கண்ணோட்ட மின்றிப் பொருட்கிவர்ந்து நில்லாத வுள்ளத் தவர். 28 மென்மையான அருளிரக்கம் கொள்ளாது பொருள் வேட்கையால் நிலைபெறாத நெஞ்சத்தராம் தலைவர், வில்லையே ஏராகக் கொண்டு வாழுபவர் வழிப்பறி செய்யும் கல்லாம் சரளைக் காட்டு வழியை எண்ணிப் பார்க்க மாட்டாரோ? (பொருள்வயிற் போய தலைமகனைக் காய்ந்து தலைமகள் தானே கூறிக்கொண்டது) பேழ்வா யிரும்புலி குஞ்சரங் கோட்பிழைத்துப் பாழூர்ப் பொதியிற் புகாப்பார்க்கு மாயுடைச் சூழாப் பொருணசைக்கட் சென்றோ ரருணினைந்து வாழ்தியோ மற்றோ வுயிர்! 29 என் இனிய உயிரே! பிளந்த பெரிய வாயையுடைய புலி, யானையை வீழ்த்தல் தவறிக் கொள்ளையடிப்பார் குடியிருப்பில் உணவு தேடி நிற்கும் கொடிய பாலை வழியில் பொருள் தேடச் சென்ற தலைவர் இரக்கத்தை எண்ணி இன்னும் உயிர்வாழக் கருதுகின்றனையோ? (பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன் படாது சொல்லியது) நீரி லருஞ்சுரத் தாமா னினம்வழங்கு மாரிடை யத்த மிறப்பர்கொ லாயிழாய் நாணினை நீக்கி யுயிரோ டுடன்சென்று காணப் புணர்ப்பதுகொ னெஞ்சு. 30 அரிய அணிகளை அணிந்தவளே, நமக்கு இயல்பான நாணத்தை நீக்கி அதன் மேலும் வாழ்ந்து அவரைக் கண்டு மகிழக் கூட்டுமோ நெஞ்சு? வறண்ட பாலை நிலத்தில் ஆமான் திரியும் வழியில் அவரும் கடந்து போவாரோ? (வரைவிடைப் பிரிவில் ஏதிலார் கூறும் அலர்கண்டு தலைமகள் ஆற்றாது தோழி கேட்பக் கூறியது) பொறிகிளர் சேவல் வரிமரற் குத்த நெறிதூ ரருஞ்சுரநா முன்னி--யறிவிட் டலர்மொழி சென்ற கொடியக நாட்ட வலனுயர்ந்து தோன்று மலை. 31 அழகிய புள்ளிகளையுடைய சேவல் நீர்ப்பசைக்காக மரல் செடிகளைக் குத்திக் கிளறி வழியறச் செய்த காட்டை நாம் நினைத்து வருந்துதலால் இயல்பாகப் பரவிய பழமொழி கொடி கட்டிப் பறப்பது போல் பெருகி மலைமேல் தோன்றும். (பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன் படாது சொல்லியது.) பீரிவர் கூரை மறுமனைச் சேர்ந்தல்கிக் கூருகி ரெண்கி னிருங்கிளை கண்படுக்கு நீரி லருஞ்சுர முன்னி யறியார்கொ லீரமில் நெஞ்சி னவர். 32 இரக்கமில்லாத தலைவர் சுரைக்கொடி படர்ந்த ஆளிலா வீடுகளில் கரடியின் கூட்டம் சோர்ந்து படுத்துக் கிடக்கும் கொடிய காட்டில் பிரிந்து செல்லுதலை எண்ணிப் பார்க்கவும் மாட்டாரோ? (இதுவுமது) சூரற் புறவி னணில்பிளிற்றுஞ் சூழ்படப்பை யூர்கெழு சேவ லிதலோடு--போர்திளைக்குந் தேரொடு கானந் தெருளிலார் செல்வார்கோ லூரிடு கவ்வை யொழித்து. 33 அருள் நெறியிலும் பொருள் நெறியே மேலானது என எண்ணும் தெளிவற்ற தலைவர், புதர்க்காட்டில் அணில் ஒலிக்கும் தோட்டத்தில் வீட்டுச் சேவல் காடைப் பறவையோடு போரிடும் பேய்த்தேர் ஓடும் காட்டில், நமக்குள்ள ஊரார் பழிச்சொல்லை நீக்குமாறு போவாரோ? (தலைமகன் பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றா ளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றுவலென்பது பட மொழிந்தது.) முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ்படப்பை புள்ளி வெருகுதன் குட்டிக் கிரைபார்க்குங் கள்ளர் வழங்குஞ் சுரமென்பர் காதல ருள்ளம் படர்ந்த நெறி. 34 நம் தலைவர் விரும்பியவழி, முள்ளுடைய மூங்கில் பின்னிக் கிடக்கும் வழி என்றும், புள்ளிகளையுடைய காட்டுப்பூனை தன் குட்டிக்கு இரைதேடும் இடம் என்றும், வழிப்பறிக் கொள்ளையர் திரியும் வழி என்றும் பலரும் கூறுவர். (பிரிவுணர்த்திய தலைமகற்குத் தோழி உடன்படாது தலைமகட்குப் பின்னர் நேரும் இன்னலினை எடுத்தியம்பியது) பொரிபுற வோமைப் புகர்படு நீழல் வரிநுதல் யானை பிடியோ டுறங்கு மெரிமயங்கு கானஞ் செலவுரைப்ப நில்லா வரிமயங் குண்கண்ணு ணீர். 35 தலைவரே, பொரிந்த பட்டையையுடைய ஓமையின் புள்ளி களையுடைய நிழலில் வரிகள் அமைந்த களிறு தன் பிடியோடு உறங்கும் வெப்பமிக்க காட்டில் செல்ல இருத்தலைக் கேட்ட அளவில் செவ்வரி படர்ந்த கண்ணுள் நீர் நிற்கலாற்றாது வழியும். (பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன் படாது சொல்லியது.) கோள்வல் கொடுவரி நல்வய மாக்குழுமுந் தாள்வீ பதுக்கைய கான மிறந்தார்கொ லாள்வினையி னாற்ற வகன்றவா நன்றுணரா மீளிகொண் மொய்ம்பி னவர். 36 வாழ்வு நலம் அறியாத வலிய தலைவர், தம் பொருள் தேடலே கடமையாய் எண்ணினரோ? தப்பிச் செல்லவிடாமல் தாக்கிக் கொல்ல வல்ல புலி தன் கூட்டத்தோடு கூடித்திரிவதும் கால்படுமிடமெல்லாம் புதை குழிகள் நிரம்பிய காட்டைக் கடந்து செல்வரோ? (இதுவுமது) கொடுவரி பாயத் துணையிழந் தஞ்சிக் கடுவுணங்கு பாறைக் கடவு தெவுட்டு நெடுவரை யத்த மிறப்பர்கொல் கோண்மாப் படுபகை பார்க்குஞ் சுரம். 37 வரிப்புலி பாய்ந்து கொல்லத் தன் துணையை இழந்து அச்சமிக்கதாய், மிக வாட்டமுடையதாய், பாறைகளைக் கடக்கும் ஊடு வழியில் அப்புலியைக் கொல்லக் காத்திருக்கும் யானையுள்ள காட்டு வழியைக் கடந்து செல்வாரோ? (தலைமகனின் வருகையினை எதிர்நோக்கிக் கலங்கிய தலைமகட்குத் தோழி நிமித்தங் காட்டிக் கூறியது.) மன்ற முதுமரத் தாந்தை குரலியம்பக் குன்றக நண்ணிக் குறும்பிறந்து--சென்றவர் கள்ளிய தன்மையர் போலு மடுத்தடுத் தொள்ளிய தும்மல் வரும். 38 மலையிடத்தை அடைந்து ஆங்குள்ள சிற்றூர்களைக் கடந்து சென்ற தலைவர் பழைய காதலர் போல் மீள்வர் போலும்! ஊன்மன்றத்து ஆலமரத்து ஆந்தை குரல் எழுப்புகின்றது. அடுத்தடுத்துத் தும்மலும் உண்டாகின்றது, ஆதலால். (இதுவுமது) பூங்கணிட மாடுங் கனவுந் திருந்தின வோங்கிய குன்ற மிறந்தாரை யாநினைப்ப வீங்கிய மென்றோள் கவினிப் பிணிதீரப் பாங்கத்துப் பல்லி படும். 39 உயர்ந்த மலையிடத்தைக் கடந்த தலைவரை நாம் நினைத்த அளவில் கண் இடம் துடிக்கும்; துன்பியல் கனவு இன்றி இன்பியல் கனவும் தோன்றும்; தோள்களும் வனப்புறும்; பிரிவுத்துயர் தீரப் பக்கத்தே பல்லியும் நல்லொலி செய்யும். (உடன்போய தலைமகட்கு நற்றாய் கவன் றுரைத்தது) ஒல்லோமென் றேங்கி யுயங்கி யிருப்பளோ கல்லிவ ரத்த மரிபெய் சிலம்பொலிப்பக் கொல்களி றன்னான்பின் செல்லுங்கொ லென்பேதை மெல்விரல் சேப்ப நடந்து. 40 கற்கள்பரவிய காட்டு வழியில் பரலிட்ட சிலம்பு ஒலிப்பக் கொல்லும் களிறுபோன்ற காதலன் பின் என் மெல்லிய செல்வி நடப்பளோ? தன் மெல்லிய விரல்கள் சிவக்க நடந்து போதலரிது என ஏங்கி வாடியிருப்பளோ அறியேன். 4. மருதம் (மகற்பெற்ற தலைமகளினைச் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண் தலைமகன் மகற்கண்டு மகிழ்ந்த வகையினைத் தோழி கண்டு மகிழ்ந்து கூறியது.) ஆற்ற லுடைய னரும்பொறி நல்லூரன் மேற்றுச் சிறுதாய காய்வஞ்சி--போற்றுருவிக் கட்டக முத்திற் புதல்வனை மார்பின்மேற் பட்டஞ் சிதைப்ப வரும். 41 வலிமையனும் வளமையனும் ஆகிய நல்ல ஊரினன் மேலே சிறியகாலினைக் கொண்ட வஞ்சிக் கொடியே போல் விரும்பித் தழுவி முத்தன்ன மகப்பேற்றால் மகிழத்தன் ஆடை அணிகள் சிதைய விரும்பி வருவன் (தம் மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் என்பது மெய்யாம் வகையில்). (பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தலைமகள் காய்ந்து கூறியது.) அகன்பணை யூரனைத் தாமம் பிணித்த திகன்மை கருதி யிருப்பன்--முகனமரா வேதின் மகளிரை நோவ தெவன்கொலோ பேதைமை கண்டொழுகு வார். அகன்ற வயல் சூழ்ந்த ஊரனைத் தம்மாலையால் பிணைத்துக் கொண்ட பகை கருதி அவர்களை முகம் கடுத்து நோக்கி வருந்துவது என்ன முறையோ? அவர்கள் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்பவர் தாமே! (பாணற்குத் தலைமகள் வாயின் மறுத்தது.) போத்தில் கழுத்திற் புதல்வ னுணச்சான்றான் மூத்தே மினியாம் வருமுலையார் சேரியு ணீத்துநீ ரூனவாய்ப் பாண! நீ போய்மொழி கூத்தாடி யுண்ணினு முண். பானனே, பொழுதெல்லாம் கழுத்து மாலை போல் புதல்வன் தவழ்கிறான். ஓயாது பாலுண்கிறான்; யாமும் மூத்து விட்டோம்; எடுப்பான மார்புடையவர் நீரும் ஊனும் விரும்பியுண்டு கூத்தாடித் தலைவனோடு இரு. இங்கிருந்து செல். (இதுவுமது) உழலை முருக்கிய செந்நோக் கெருமை பழனம் படிந்துசெய் மாந்தி--நிழல்வதியுங் தண்டுறை யூரன் மலரன்ன மார்புறப் பெண்டிர்க் குரைபாண! உய்த்து. 44 பாணனே, தறியினைச் சிதைத்த சிவந்த கண்ணுடைய எருமை பொய்கையில் படிந்து கழனியில் மேய்ந்து நிழலில் தங்குதல் உடைய ஊரனின் மார்பினை அணையுமாறு பரத்தை மகளிர்க்கு உரைப்பாயாக; (இங்கிருந்து செல்). (தலைமகளின் இல்லற வியல்பினைக் கண்டு மகிழ்ந்த செவிலி நற்றாய்க் குரைத்தது) தேங்கமழ் பொய்கை யகவய லூரனைப் பூங்கட் புதல்வன் மிதித்துழக்க--வீங்குத் தளர்முலை பாராட்டி யென்னுடைய பாவை வளர்முலைக் கண்ணமுக்கு வார். 45 இனிய நறிய மலர்ப்பொய்கை மிக்க மருத நிலத் தலைவனைப் பூப்போலும் கண்களையுடைய மகன் மிதித்துச் சவட்டுகிறான். இவ்வேளையில் பாலூட்டித் தளர்ந்த அவள் மார்பின்கண் தலைவன் அமுக்கி இன்புறுகிறான். இப்படி இனிமை சான்றது மகள் வாழ்வு. (தலைமகள் பாணற்கு வாயின் மறுத்தது) பேதை புகலை புதல்வன் றுணைச்சான்றோ னோதை மலிமகிழ்நற் கியாஅ மெவன்செய்தும் பூவார் குழற்கூந்தற் பொன்னன்னார் சேரியு ளோவாது செல்பாண! நீ. 46 பாணனே, பேதையேன் யான்: மகனையே துணையாம் பெரியனாக உடையவள்; ஆரவாரமும் மகிழ்வும் மிக்க தலைவனுக்கு யாம் என்ன செய்ய வல்லேம்; பூமலிந்த கூந்தலும் பொன்வார்ப்பினரும் போன்றவர் உள்ள சேரிக்கு நீ, நீங்காது செல்வாயாக. (இதுவுமது) யாணர்நல் லூரன் றிறங்கிளப்ப லென்னுடைய பாண! இருக்க வதுகளை--நாணுடையான் றன்னுற்ற வெல்லா மிருக்க விரும்பாண! நின்னுற்ற துண்டே லுரை. 47 என் பாணனே, பெரும் பாணனே, பெருவருவாயினை உடைய ஊரினனாகிய தலைவன் திறத்தைக் கூறுவேன். இருந்து அவற்றைக் கேள். நாணமில்லானாம் அவன் அடைந்ததெல்லாம் இருக்கட்டும். உனக்கு ஏதேனும் உண்டென்றால் உரை: வேறு பேசாதே! (தலைமகன் பரத்தையிற் பிரியத் தலைமகள் புலந்து சொல்லியது) ஒள்ளிதழ்த் தாமரைப் போதுறழு மூரனை யுள்ளங்கொண் டுள்ளானென் றியார்க்குரைக்கோ--வொள்ளிழாய் அச்சுப் பணிமொழி யுண்டேனோ மேனாளோர் பொய்ச்சூ ளெனவறியா தேன். 48 ஓளியமைந்த அணியை உடையவளே, அழகிய தாமரை மலர் பின்னிக் கிடக்கும் ஊரனை, என்னைத்தன் உள்ளத்தே கொண்டுளான் என்று எவர்க்குச் சொல்வேன்? உண்மையான சான்றேதும் கொண்டேனோ, முன்னே அவன் சொன்ன வெல்லாம் பொய்யே என்பதை அறியாத யான்? (இதுவுமது) பேதைய ரென்று தமரைச் செறுபவோர் போதுறழ் தாமரைக்கண் ணூரனை நேர்நோக்கி வாய்மூடி யிட்டு மிருப்பவேர் மாணிழாய்! நோவதென் மார்பறியு மின்று. 49 சிறந்த அணிகளை அணிந்த தோழியே, தாமரை மலர் மலர்ந்து கிடக்கும் நீர்ப் பெருக்குடைய ஊரனை, அறிவிலார் என்று இகலிப் பேசவும் பேசுவர்: நேரில் காணின் வாய் மூடி இருக்கவும் செய்வர்: அதனை எண்ணி யான் துயருறுவதை என் நெஞ்சமே அறியும். (பரத்தையரும் ஏனைத் தலைவியரும் தம்முறுவிழுமம் கூறிய பொழுது தலைமகள் அவர்கள்மாட்டுப் பரிந்து கூறியது.) காதலிற் றீரக் கழிய முயங்கன்மி னோதந் துவன்று மொலிபுன லூரனைப் பேதைபட் டேங்கன்மி னீயிரு மெண்ணிலா வாசை யொழிய வுரைத்து. 50 வெள்ளமாய்ப் பெருகி ஒலிக்கும் நீர்வளமிக்க ஊரனைப் பரத்தையீர் மிக விரும்பித் தழுவாதீர்: அதன்பின் அறிவு அற்று ஏங்காதீர்: யானும் அவ்வாறேபட்டதால் சொன்னேன்: இனி நாம் நம் மிகுந்த விருப்பை ஒழித்து நலம் பெறுவோம். (தோழி, தலைமகளின் ஊடல் தீர்த்தலை விரும்பிய தலைவன் வயத்தளாய் நின்று தலைவியைக் கழறியது.) உண்ணாட்டஞ் சான்றவர் தந்த நசையிற்றென் றெண்ணார்க்குக் கண்ணோட்டந் தீர்க்குதுமென்--றெண்ணி வழிபாடு கொள்ளும் வளவய லூரன் பழிபாடு நின்மே லது. 51 ஆழ்ந்த ஆராய்ச்சி வல்லார் கண்டறிந்து தந்த அன்புநெறி விரும்பத் தக்கது என்று எண்ணாதவர்க்கு அருள் செய்த லாகாது என்பது உன் பழியேயாம். வளமான வயலமைந்த ஊரனாம் தலைவன் என்னை வழிபாடு செய்யும் நிலையில் நீ சினந்தணிந்து ஏற்றுக் கொள். (பரத்தையர்பாற் சென்று வந்த தலைமகனைத் தோழி வணங்கிய மொழியான் இணங்குவித்தது.) உண்டுறைப் பொய்கை வராஅ லினமிரியுந் தண்டுறை யூர! தகுவதோ--வொண்டொடியைப் பாராய் மனைதுறந் தச்சேரிச் செல்வதனை யூராண்மை யாக்கிக் கொளல். 52 வேண்டுவ உண்டு உறையும் பொய்கையில் இருந்து வரால் கூட்டம் வெளியேறித் திரியும் வளமான வயலூரனே, உன் இனிய மனைவியை விலகி அச் சேரிக்குச் சென்று உறவாக்கிக் கொள்ளும் வாழ்வு உனக்குத் தக்கதுவோ! வரால் போன்று வாழ்வனேதான் நீயும் போலும்! (பாணற்கு வாயின் மறுத்தது) பொய்கைநல் லூரன் றிறங்கிளத்த லென்னுடைய வெவ்வ மெனினு மெழுந்தீக--வைகன் மறுவில் பொலந்தொடி வீசு மலற்றுஞ் சிறுவ னுடையேன் றுணை. 53 பாணனே, நாள்தொறும் பொழுதுதொறும் களங்கமிலா உள்ளமும் ஆடியும் பாடியும் மகிழ்வுறுத்தும் இயல்புமுடைய நன்மகவை யான் இனிய துணையாக உடையேன். வளநீர்க்குரிய தலைவன் திறங்களை நீ உரைத்தல் வேண்டா. அவன் பிரிதற்கு என் குற்றமே உண்டு எனினும் இருக்கட்டும் நீ இங்கிருந்து புறப்படு. (பரத்தையிற் பிரிந்த தலைமகனின் வரவினை வேட்டுத் தோழி தலைமகட்குக் கூறியது.) வளவய லூரன் மருளுரைக்கு மாதர் வளைஇய சக்கரத் தாழி--கொளைபிழையா வென்றிடை யிட்டு வருமெனின் வாழ்நாட்க ளொன்றி யனைத்து முளேன். 54 வளமிக்க வயலையுடைய தலைவன், மாயமகளிர் உரைக்கு மயங்கி அவர்களால் வட்டமிட்டு வளைக்கப்பட்டு வாழ்ந்தது தவறு என்று திருந்தி வருவானேயானால் நீ அவனோடு பொருந்தி வாழ்வதை நோக்கியே யானுள்ளேன். 5. நெய்தல் (தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது.) ஒழுகு திரைக்கரை வான்குருகின் றூவி யுழிதரு மூதை யெடுக்குந் துறைவனைப் பேதையா னென்றுணரு நெஞ்சு மினிதுண்மை யூதிய மன்றோ வுயிர்க்கு. 55 தோழியே, ஏறி இறங்கும் அலையுடைய கடலிடத்தே வாழும் நாரையின் இறகைச் சுழற்றி அலைக்கும் காற்றமைந்த கடற்றுறைத் தலைவன் வஞ்சன் என எண்ணாமல் அறிவில் என எண்ணும் மனத்தையுடைமை நம் உயிர்க்குப் பெரிய ஊதியமாம். (வரையா தொழுகுந் தலைமகன் ஒருஞான்று தோழியைக் கதுமென எதிர்ப்படத் தலைமகள் தன்னிலை யினைத் தலைமகற்குக் கூறெனத் தோழிக்குச் சொல்லியது.) என்னைகொ றோழி! அவர்கண்ணு நன்கில்லை யன்னை முகனு மதுவாகும்--பொன்னலர் புன்னையம் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ நின்னல்ல தில்லென் றுரை. 56 தோழியே, என்ன நிலை இது? அவர் மனம் கருதாது வந்து செல்லும் செலவும் நல்லதில்லை. அன்னை முகமும் மாறுமுக மாயிற்று. பொன்போலும் மலர்ப்புன்னைக் கானல் தலைவனிடம் உன்னை அல்லாது எங்களுக்கு எதுவும் இல்லை என்று கூறு. (இரவுக்குறி வேண்டி வந்த தலைமகன் தலைமகளைக் காணாது சிறைப்புறத்தானாக, தோழி தலைமகள் அல்லகுறிப்பட்டமையினைத் தலைமகற்குக் கூறியது.) இடுமண லெக்க ரகன்கானற் சேர்ப்பன் கடுமான் மணியரவ மென்று--கொடுங்குழை புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடிய ருள்ளரவ நாணுவ ரென்று. 57 தலைவி, கடல் வாழ் பறவைகளின் ஒலிகேட்டு, சிறுகுடி வாழ் பரதவர் காற்றால் திரட்டப்பட்ட மணற் பரப்பில் தலைவன் தேரேறி வரும் மணி ஒலி என எண்ணுவர் ஏதோ இயம்புவர் என்று வந்தாள் அல்லள். இவ்விடையூறு இல்லா வகையில் மணந்து கொள் என்பதாம். (தலைமகள் இரவுக்குறிக்கண் தலைமகன் தன்னைச் சார்ந்து பிரிந்தவழி உறக்கம் வாராமைகண்டு புலம்பித் தோழி கேட்ப வுரைத்தது.) மணிநிற நெய்த லிருங்கழிச் சேர்ப்ப னணிநல முண்டகன்றா னென்றுகொ லெம்போற் றிணிமண லெக்கர்மே லோதம் பெயரத் துணிமுந்நீர் துஞ்சா தது. 58 தோழியே, நீலமணிநிறக் கடற் கழியுடைய தலைவன் இவண் எய்தி அழகிய நலத்தை உண்டு அகன்று சென்றான் என்பதற்காகவோ எம்மைப் போலவே திரண்ட மணல் மேல் அலை ஏறி இறங்கி இரவும் பகலும் ஓயாமல் ஒலித்துக் கொண்டுள்ளது. (தலைமகள், பெரிதாகிய இடையீட்டினுள் அரிதாகத் தலைமகன் வந்த ஞான்றும், பெறாத ஞான்றைத் துன்ப மிகுதியாற் பெற்றதனையுங் களவு போன்று கொண்டு இகழ்ந்து கூறியது.) கண்டிரண் முத்தம் பயக்கு மிருமுந்நீர்ப் பண்டங்கொ ணாவாய் வழங்குந் துறைவனை முண்டகக் கானனுட் கண்டே னெனத்தெளிந்தே னின்ற வுணர்விலா தேன். 59 உருண்டு திரண்ட முத்துக்களைத்தரும் பெரிய கடலில் பண்டங்களை அள்ளிச் செல்லும் நாவாய் திரியும் துறைவனை, யான் தாழை சூழ் கழிமுகத்துக் கண்டேன்; கண்டபோது பழைய தாய் அமைந்த உணர்வு ஏதும் இலாதவளாகப் புதியளாகவே அமைந்தேன். நெட்டிடை விட்ட கேடே ஈதாம். (அறத்தோடு நின்றபின் வரைவு நீட மற்றொரு குல மகளைத் தலைமகன் வரையுங்கொலென் றையுற்ற செவிலியின் குறிப்பறிந்து தோழி அவட்குக் கூறியது.) அடும்பிவ ரெக்க ரலவன் வழங்குங் கொடுங்கழிச் சேர்ப்ப னருளா னெனத்தெளிந்து கள்ள மனத்தா னயனெறிச் செல்லுங்கொ னல்வளை சோர நடந்து. 60 அடுப்பங் கொடி படர்ந்த மணல் மேட்டில் நண்டுகள் ஓடித் திரியும் ஆழமான கழிமுகங்களையுடைய தலைவன் அருள் செய்ய மாட்டான் என்பது தெளிந்து நல்ல வளையலையணிந்த தலைவி வருந்த வஞ்ச உள்ளத்தனாம் தலைவன் வழி மறந்து போய் விடுவானோ அயல் வழியில்! (சிறைப்புறமாக நின்ற தலைமகன் கேட்பத் தோழி தலைமகட்குக் கூறி வரைவுகடாயது) கண்ணுறு நெய்தல் கமழுங் கொடுங்கழித் தண்ணந்துறைவனோ தன்னில னாயிழாய்! வண்ணகைப் பட்டதனை யாண்மை யெனக்கருதிப் பண்ணமைத் தேர்மேல் வரும். 61 ஆய்ந்தெடுத்த அணிகளை உடையாய், கண் போன்ற நெய்தல் பூ மணம் பரப்பும் கடற்கால்களையுடைய தலைவன் தன் தகுதி இல்லாத வனாய்த் தம் கைப்பட்டாரை நுகர்தலே ஆண்மை எனக் கருதித் தேரெறி வருவானோ? மணங் கொள்ள நினை யானோ? (வரைவிடைப் பொருட்பிரிவில் தலைமகன் நீட்டித்தவழித் தோழி அன்றிலோடு கூறியது.) தெண்ணீர் ரிருங்கழி வேண்டு மிரைமாந்திப் பெண்ணைமேற் சேக்கும் வணர்வாய்ப் புணரன்றில்! தண்ணந் துறைவற் குரையாய் மடமொழி வண்ணம்தா வென்று தொடுத்து. 62 தெளிந்த நீரையுடைய கழிமுகத்தில் விரும்பும் உணவை அருந்திப் பனைமடல்மேல் தங்கியிருக்கும் வளைந்த வாயை யுடைய பிரிவறியா அன்றிலே, மெல்லியளாம் இத்தலைவியிடமி ருந்து கவர்ந்து கொண்ட வனப்பை மீளத்தா என்று குளிர்ந்த நீர்த்துறையையுடைய தலைவனிடம் தொடுத்துக் கூறுவாயாக. (தலைமகன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த காலத்துப் பிரிவு நீட்டித்துழித் தலைமகள் வருந்திக் கூறியது) எறிசுறாக் குப்பை யினங்கலக்கத் தாக்கு மெறிதிரைச் சேர்ப்பன் கொடுமை--யறியாகொல் கானக நண்ணி யருளற் றிடக்கண்டும் கானலுள் வாழுங் குருகு. 63 துள்ளிக் குதிக்கும் சுறாமீன் கூட்டம் கலையுமாறு தாக்கும் அலை களையுடைய கடற்கரைத் தலைவன், கானற்கண் அன்பு செலுத்திப் பொருள் தேடுதற்குக் காடு கடந்து சென்று இரக்க மற்றிருக்கும் நிலையைக் கானலுள் வாழும்நீ அறிய மாட்டாயா? அறிந்த நீ அடுத்துச் சென்று இடித்துரைக்க வேண்டும் அல்லவா? (வரைவிடைப் பொருட் பிரிவில் தலைமகன் நீட்டித்த வழித் தோழி தலைமகளோடு கூறியது.) நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த பன்மீ னுணங்கல் கவருந் துறைவனைக் கண்ணினாற் காண வமையுங்கொ லென்றோழி! வண்ணந்தா வென்கந் தொடுத்து. 64 என் இனிய தோழியே, நுண்ணிய கயிற்றால் அமைந்த வலையில் வலைஞர் பற்றிக் கொண்டு வந்த மீன் உலர்ந்து காயுங்கால் பறவை கவர்ந்து செல்லும் துறைவனைக் கண்ணால் காண வாய்க்குமா? வாய்த்தால் கவர்ந்து கொண்ட எம் அழகை மீளத் தாஎன்று தொடர்ந்து கேட்போம். (தலைமகன் தன்னை யருமைசெய்து தலைமகளை மறந்த காலை, தோழி அவனை எதிர்ப்பட்டுக் கூறியது.) இவர்திரை நீக்கியிட் டெக்கர் மணன்மேல் கவர்கா லலவன் றன்பெடை யோடு நிகரி லிருங்கழிச் சேர்ப்ப! என்றோழி படர்பசலை யாயின்று தோள். 65 மேலெழுந்து வரும் அலை அதனின் மாறி இறங்கி வடியும் மணல் மேல் பிளந்த காலையுடைய நண்டு தன் பெட்டையுடன் விளையாடும் உயர்ந்த நெய்தல் நிலத்தலைவனே, என் தோழியாம் தலைவி உன்னைப் பிரிதலால் அவள் உடல் பசலை பூத்து அழகிழந்ததாயிற்று. அதனை விரைந்து அகலச்செய். (தலைமகன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த காலத்துப் பிரிவு நீட்டித்துழித் தலைமகள் வருந்திக் கூறியது.) சிறுமீன் கவுட்கொண்ட செந்தூவி நாராய் இறுமென் முரலநின் பிள்ளைகட்கே யாகி நெறுநீ ரிருங்கழிச் சேர்ப்ப னகன்ற நெறியறிதி மீன்றபு நீ. 66 சிறிய மீனை அலகில் கொண்ட சிவந்த சிறகுடைய நாரையே, பசி அழிக்கும் என்று வருந்தும் உன் குஞ்சுகட்கே உதவியாய் மீனைப் பற்றிக் கொண்டு வரும் நீ, சேர்ப்பனாம் தலைவன். என்னைப் பிரிந்ததை அறிவாய் அல்லவா! அறிந்தும் ஏன் அறிவுறுத்திக் கூறாமல் உள்ளாய்! 67,68,69,70 ஆம் பாடல்கள் கிடைத்தில. ஐந்திணையெழுபது மூலமும், முதலிரு திணைகளுக்குப் பழைய உரையும் பின் மூன்று திணைகளுக்குப் புலவர். இளங்குமரன் வரைந்த புத்துரையும் முடிந்தன. திணைமாலை நூற்றைம்பது விளக்கவுரை பழைய பொழிப்புரையுடன் திணைமாலை நூற்றைம்பது விளக்கவுரை பழைய பொழிப்புரையுடன் 1. குறிஞ்சி (தலைமகளுந் தோழியும் ஒருங்கிருந்தவழிச் சென்று தலைமகன் தோழியை மதியுடம்படுத்தது.) நறைபடர் சாந்த மறவெறிந்து நாளா லுறையெதிர்ந்து வித்தியவூ ழேனற்--பிறையெதிர்ந்த தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர்! காணீரோ வேமரை போந்தன வீண்டு. (பழையவுரை) நறைக் கொடி படர்ந்துயர்ந்த சந்தனங்களை அறவெட்டி நல்ல நாளால் மழை பெய்யுங் காலத்தையேற்றுக் கொண்டு வித்தி முதிர்ந்த ஏனலின்கண், பிறையை யேற்றுக் கொண்டதொரு தாமரை மலரைப் போலும் வாண்முகத்தையும், தாழ்ந்த குழலையு முடையீர்! கண்டிலீரோ ஏவுண்ட மரை போந்தன வற்றை இவ்விடத்து? (1) (தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது) சுள்ளி சுனைநீலஞ் சோபா லிகைசெயலை யள்ளி யளகத்தின் மேலாய்ந்து--தெள்ளி யிதணாற் கடியொடுங்கா வீர்ங்கடா யானை யுதணாற் கடிந்தா னுளன். (ப-ரை.) நறவ மலரையுஞ் சுனை நீல மலரையும் அசோக மலரையும் கொய்து முடித்து நின் மகள் குழலின் மேலே ஆராய்ந்து புனைவதுஞ் செய்து பின்னொரு நாட்டுணிந்து பரணாற் காவல மையாத ஈர்ங்கடா யானையை மொட் டம்பாற் கடிந்து காத்தும் இப்பெற்றி யுதவி செய்தான் ஒருவனுளன். (2) (பகற்குறிக்கண் வந்த தலைமகனைக் கண்டு தோழி செறிப்பறிவுறீஇயது) சாந்த மெறிந்துழுத சாரற் சிறுதினைச் சாந்த மெறிந்த விதண்மிசைச்--சாந்தங் கமழக் கிளிகடியுங் கார்மயி லன்னா ளிமிழக் கிளியெழா வார்த்து. (ப-ரை.) சந்தனங்களை வெட்டியுழுத சாரலின்கண், வித்திய ஏனலின்கட் படிந்த கிளிகளை, சந்தனங்களைக் காலாக எறிந்து செய்த, பரண்மிசை யிருந்து, பூசிய சாந்தம் எங்கும் பரந்து கமழ உலாவி, கடிகின்ற கார்மயி லன்னாள் தான் வாய்திறந்து ‘ஆயோ’ என்றியம்புதலாற் றம்மின மென்று கிளிகள் ஆர்த்துப் போகா. (3) (தலைமகள் இற்செறிந்த காலத்துப் புனத்தின்கண் வந்த தலைமகன் தலைமகளைக் காணாது ஆற்றாது பெயர்கின்றான் சொல்லியது) கோடாப் புகழ்மாறன் கூட லனையாளை யாடா வடகினுங் காணேன்போர்--வாடாக் கருங்கொல்வேன் மன்னர் கலம்புக்க கொல்லோ மருங்குல்கொம் பன்னாண் மயிர். (ப-ரை.) கோடாத புகழையுடைய மாறன் மதுரையனை யாளை அடாத பண்ணையுளுங் காண்கின்றிலேன்; போரின்கண் வாடாத கருங்கொற் றொழிலையுடைய வேல் மன்னர் அணிகல மாகிய முடி கூடினகொல்லோ! இடையாற் கொம்பையனையாள் மயிர்கள். (4) (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பறிவுறீஇயது) வினைவிளையச் செல்வம் விளைவதுபோ னீடாப் பனைவிளைவு நாமெண்ணப் பாத்தித்--தினைவிளைய மையார் தடங்கண் மயிலன்னாய்! தீத்தீண்டு கையார் பிரிவித்தல் காண். (ப-ரை.) கெடாத பனை யென்னு மளவு போன்ற அளவினை யுடைய இன்ப விளைவினை நாமெண்ணி யிருப்ப அதற்கிடையூ றாக, நல்வினை விளையச் செல்வம் விளைவது போலப் பாத்தியின்கட் டினைவிளைதலான், மையார் தடங்கண் மயிலன்னாய்! தினை கொய்ய நாட்சொல்லி வேங்கையார் நம்மை இங்கு நின்றும் பிரிவித்தலைப் பாராய். (5) (இரவுக்குறி வேண்டிய தலைமகற்குத் தோழி மறுத்துச் சொல்லியது) மானீல மாண்ட துகிலுமிழ்வ தொத்தருவி மானீல மால்வரை நாட! கேண்--மாநீலங் காயும்வேற் கண்ணாள் கனையிருளி னீவர வாயுமோ மன்றநீ யாய். (ப-ரை.) மிக்க நீலமணி வரை மாட்சிமைப்பட்ட வெண்டு கிலை யுமிழ்வதுபோல, அருவிகள் மயங்காநின்ற நீலமால்வரை நாடனே! கேளாய்; கரிய நீல மலர்களை வெகுளா நின்ற வேல் போன்ற கண்ணாள், செறிந்த இருளின்கண் நீ வர, நினக்கிடை யூறில்லாமை ஆராயவல்லளோ? உண்மையாகப் பாராய். (6) (இதுவுமது) கறிவளர்பூஞ் சாரற் கைந்நாகம் பார்த்து நெறிவளர் நீள்வேங்கை கொட்கு--முறிவளர் நன்மலை நாடா! இரவரின் வாழாளா னன்மலை நாடன் மகள். (ப-ரை.) மிளகு படர்கின்ற பூஞ்சாரலின்கட் கையை யுடைய நாகங்களைப் பார்த்து வழியின்கண் வளர்கின்ற பெரும் புலிகள் திரிதரும் இரவின்கண் நீ வரின், தளிர் வளர்கின்ற நன் மலை நாட! நன்மலை நாடன் மகள் வாழாள். (7) (பின்னிலை முனியாது நின்ற தலைமகன் தோழியை மதியுடம்படுத்தது) அவட்காயி னைவனங் காவ லமைந்த திவட்காயிற் செந்தினைகா ரேன--விவட்காயி னென்ணுளவா லைந்திரண் டீத்தான்கொ லென்னாங்கொல் கண்ணுளவாற் காமன் கணை. (ப-ரை.) அவ்விடத்து வருவேனாயின் நினக்கு ஐவனங் காவ லமைந்தது; இவ்விடத்தின் கண் வருவேனாயிற் செந்தினையுஞ் செறிந்த பசுந்தினையும் காத்தலே அமைந்தது; ஆதலான் எனக்கொரு மறுமாற்றந் தருகின்றிலை; நின்றோழியாகிய இவட் காயில், காமன் அம்பு ஐந்தெண்ணுளவால்; அவற்றுள் இரண்டம் பினைக் கண்ணாகக் கொடுத்தான் கொல்லோ! நின் றோழிக்குக் கண்கள் காமன் கணை யுளவால்; என்னுயிர்க்கு என்னாங் கொல் லோ? (8) (பாங்கற்குத் தலைமகன் தலைமகளைக் கண்டவகை கூறித் தன் ஆற்றாமை மிகுதி சொல்லியது) வஞ்சமே யென்னும் வகைத்தாலோர் மாவினாய்த் தஞ்சந் தமியனாய்ச் செறேனென்--நெஞ்சை நலங்கொண்டார் பூங்குழலா ணன்றாயத் தன்றென் வலங்கொண்டாள் கொண்டா ளிடம். (ப-ரை.) மாயமே யென்று சொல்லப்படுந் தன்மைத் தால்! ஒரு மாவினை வினாவி யான் நினைவினை நீங்கித் தனியே எளியேனாய்ச் சென்றேன்: சென்றவிடத்து நலங் கொண்டு நிறைந்த பூங்குழலை யுடையாள் மிகவுந் தன்னாயத்தின்கண் அன்று; என் வென்றியை யெல்லாங் கொண்டு என்னெஞ்சத்தைத் தனக்கிட மாய்க் கொண்டாள். (9) (தோழி நெறி விலக்கியது) கருவிரற் செம்முக வெண்பற்சூன் மந்தி பருவிரலாற் பைஞ்சுனைநீர்தூஉய்ப்--பெருவரைமேற் றேன்றேவர்க் கோக்கு மலைநாட! வாரலோ வான்றேவர் கொட்கும் வழி. (ப-ரை.) கருவிரலினையுஞ் செம்முகத்தினையும் வெண்பல்லி னையுமுடைய சூன் மந்தி தன் பெரிய விரலானே பைஞ்சுனையினீ ரைத் தூவி, பெருவரையின் மேலே வைத்த தேன் பொதிகளைத் தேவர்கட்குக் கொடுக்கும் மலைநாடனே! வாரா தொழிவாயாக; தேவர்கள் திரிதரும் வழியாம். (10) (இதுவுமது) கரவில் வளமலைக் கல்லருவி நாட! உரவில் வலியா யொருநீ--யிரவின் வழிகடாஞ் சால வரவரிய வார லிழிகடா யானை யெதிர். (ப-ரை.) பழுதில்லாத வளங்களையுடைய கல்லருவி நாடனே! வலிய வில்லே நினக்கு வலியாய் ஒரு நீ இரவின் கண்ணாகத் துணையின்றி வழிகள் தாம் மிகவும் வரவரிய; இழியாநின்ற கடாத்தையுடைய யானைகளின் எதிர் வாரல். (11) (வெறிவிலக்கித் தோழிசெவிலிக்கு அறத்தொடு நின்றது) வேலனார் போக மறிவிடுக்க வேரியும் பாலனார்க் கீக பழியிலாள்--பாலாற் கடும்புனலி னீந்திக் கரைவைத்தாற் கல்லா னெடும்பணைபோ றோணேரா ணின்று. (ப-ரை.) வெறியை விட்டு வேலனார் போக: மறியையும் விடுக்க; கள்ளையும் அக்கள்ளினை நுகர்வார்க் கீக; இப்பழியிலா தாள் ஊழ்வலியாற் கடும்புனலுட் பாய்ந்து நீந்தித் தன்னை யெடுத்துக் கரையின்கண் வைத்தாற் கல்லது நெடிய வேய் போன்ற தோளை நல்காள் இறந்து நின்று. (12) (நெறியினதருமை கூறித் தோழி இரவுக்குறி மறுத்தது) ஒருவரைபோ லெங்கும் பல்வரையுஞ் சூழ்ந்த வருவரை யுள்ளதாஞ் சீறூர்--வருவரையு ளைவாய நாகம் புறமெல்லா மாயுங்காற் கைவாய நாகஞ்சேர் காடு. (ப-ரை.) ஒரு மலைபோல எல்லா மலையும் தம்முள் அளவொக்க உயர்ந்து சூழ்ந்த அரிய எல்லையுள் உள்ளதாம் எங்கள் சீறூர், நீ வரும் அவ்வெல்லையுள் உள்ளகத்தின்கண் உள்ளன ஐந்து வாயையுடைய நாகங்கள்; புறத்துள்ளன ஆராயுங்காற் கையொடு சோர்ந்த வாயையுடைய யானைகள் சேர்ந்த காடுகள். (13) (செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது) வருக்கை வளமலையுண் மாதரும் யானு மிருக்கை யிதண்மேலே மாகப்--பருக்கைக் கடாஅமால் யானை கடிந்தானை யல்லாற் றொடாஅவா லென்றோழி தோள். (ப-ரை.) வருக்கைப் பலாவினையுடைய வளமலையின் கண் மாதரும் யானும் எமக்கிருக்கையாகிய பரண்மேலே யிருந்தேமாக, பெரிய கையினையுங் கடாத்தையும் பெருமையையும் உடைய யானையைத் துரத்தி கடிந்தானை யன்றித் தீண்டாவால், என்றோழி யுடைய தோள்கள். (14) (தலைமகன் சான்றோரை வரைவு வேண்டி விடுத்த விடத்துத் தலைமகளின் தந்தைக்குந் தன்னையன்மார்க்கும் நற்றாய் அறத்தொடு நின்றது) வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க் கோடாது நீர்கொடுப்பி னல்லது--கோடா வெழிலு முலையு மிரண்டிற்கு முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து. (ப-ரை.) தள்ளாத சான்றாண்மையையுடையார் வரவை எதிர் கொண்டிராய்க் கோடாது உடம்பட்டு நீர் கொடுப்பினன்றித் தளராத அழகும் முலையும் என்னும் இரண்டிற்கும் முந்நீராற் சூழப்பட்ட வுலகும் விலையாமோ நிரம்பி. (15) (தோழி சேட்படுத்த விடத்துத் தலைமகன் தனதாற்றாமையாற் சொல்லியது) நாணாக நாறு நனைகுழலா ணல்கித்தன் பூணாக நேர்வளவும் போகாது--பூணாக மென்றே னிரண்டாவ துண்டோ மடன்மாமே னின்றேன் மறுகி டையே நேர்ந்து. (ப-ரை.) நாக நாண்மலர் நாறும் தேனால் நனையப்பட்ட குழலாள் எனக்கு நல்கித் தன்னுடைய பூண்மார்பினை நேரு மளவும் என் மார்பினின்றும் அவ்வெலும்பாற் செய்த பூண் போகா தென்று நினக்குச் சொல்லினேன்; இனி இரண்டா வது வேறொரு சொல் லுண்டோ? பனை மடலாற் செய்யப்பட்ட மாவினை யூரத் துணிந்து நின்றேன், தெருவினடுவே யுடன்பட்டு. (16) (நின்னாற் சொல்லப்பட்டவளை அறியேனாலோ என்ற தோழிக்குத் தலைமகன் அறிய வுரைத்தது) அறிகவளை யைய விடைமடவாய்! ஆயச் சிறிதவள்செல் லாளிறுமென் றஞ்சித்--சிறிதவ ணல்கும்வாய் காணாது நைந்துருகி யென்னெஞ்ச மொல்கும்வா யொல்க லுறும். (ப-ரை.) அறிவேன் யான் அவளை; தன்னுடைய மெல்லிய இடை வருந்த மடவாய்! சிறிதுமவள் நடவாளாக இறும் இறும் என்றஞ்சி அவள் எனக்குச் சிறிதும் அருளுநெறி காணாது தளர்ந்துருகி என்னெஞ்சம் அவளொல்கி நடக்குந்தோறும் பின்சென்று தளர்தலுறும். (17) (பகற்குறிக்கட் டலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது) என்னாங்கொ லீடி லிளவேங்கை நாளுரைப்பப் பொன்னாம்போர் வேலவர் தாம்புரிந்த--தென்னே மருவியா மாலை மலைநாடன் கேண்மை யிருவியா மேன லினி. (ப-ரை.) தகுதியில்லாத இளவேங்கை நாட்சொல்ல, இனிக் குரலொழிந்து இருவியாய்க் கழியுந் தினையெல்லாம், எந்தையும் என்னையன்மாருமாகிய போர் வேலவர் இவட்குப் பரிசமாக மிக விரும்புகின்றது பொன்னாம்; ஆதலாற் பயிலப் பழகிவருந் தன்மையையுடைய மலைநாடன் கேண்மை யினியென்னாய் விளையுங் கொல்லோ! என்னே! (18) (பின்னின்ற தலைமகன் தோழி குறைமறாமற் றனதாற்றாமை மிகுதி சொல்லியது) பாலொத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய் தாலொத்த வைவனங் காப்பாள்கண்--வேலொத்தென் னெஞ்சம்வாய்ப் புக்கொழிவு காண்பானோ காண்கொடா வஞ்சாயற் கேநோவல் யான். (ப-ரை.) பால் போன்ற வெள்ளருவியைப் பாய்ந்தாடிப் பல பூக்களையும் பெய்து பரப்பினாற்போலப் பூங்கொடிகள் பரந்த ஐவனப்புனத்தைக் காப்பாள் கண்கள், வேல் போன்று எனது நெஞ்சத்தின்கண் வாவிப்புக்கு என்னுயிரை ஒழிவு காண வேண்டி யோ புறம் போகாது உள்ளே அடங்கின; இத்துணை வேண்டுமோ? அவளுடைய அழகிய மேனிக்கே நோவாநின்றேன் யான். (19) (கையுறை மறை) நாள்வேங்கை பொன்விளையு நன்மலை நன்னாட! கோள்வேங்கை போற்கொடியா ரென்னையன்மார்--கோள்வேங்கை யன்னையா னீயு மருந்தழையா மேலாமைக் கென்னையோ நாளை யெளிது. (ப-ரை.) வேங்கை நாண்மலர் பொன் விளைக்கும் நன்மலை நாடனே! கோள் வேங்கைபோற் கொடியார் என் ஐயன் மார்; நீயுங் கோள் வேங்கை யனையை யாதலான் இன்று நீயும் இங்கே நிற்கின் மிகப் போர் விளையும்; நீ கொணர்ந்த தழையை யாங் கொள்ளா மைக்கு வேறு காரணமென்ன? நாளை நீ கொண்டு வந்தால் எளிது. (20) (ஆற்றானாய தலைமகனைத் தோழி ஏன்று கொண்டு கையுறை யெதிர்ந்தது) பொன்மெலியு மேனியாள் பூஞ்சுணங்கு மென்முலைக ளென்மெலிய வீங்கினவே பாவமென்--றென்மெலிவிற் கண்கண்ணி வாடாமை யானல்ல வென்றாற்றா னுண்கண்ணி வாடா ளுடன்று. (ப-ரை.) பொன் போலும் மேனியாள் வேங்கைப் பூப் போன்ற சுணங்கினையுடைய மென்முலைகள் எற்றுக்கு யான் மெலியப் புடைத்து வீங்கின. என்னே பாவமென்று சொல்லி நீ மெலிதற்குக் காரணமென்ன? நீ கொணர்ந்த குறுங் கண்ணிகள் வாடாத வகை யான்கொண்டு சென்று இவை நல்லவென்று காட்டினால், அவ் வுண்கண்ணிதான் மாறுபட்டுத் துன்புறாள் வாங்கும். (21) (பகற்குறிக்கட் தலைமகள் குறிப்பன்றிச் சார்கிலாத தலைமகன் றனதாற்றாமை சொல்லியது) கொல்யானை வெண்மருப்பிங் கொல்வல் புலியதளு நல்யானை நின்னையர் கூட்டுண்டு--செல்வார்தா மோரம்பி னானெய்து போக்குவர்யான் போகாம லீரம்பி னாலெய்தா யின்று. (ப-ரை.) கொல் யானைகளினுடைய வெண்மருப்பையுங் கொலைவல்ல புலித் தோல்களையும் நல்யானை போன்ற நின் ஐயர் திறைகொண் டொழுகுவார்: இப்புனத்தின்கட் பிறர் வருவாரை ஓரம்பினாலெய்து போக்குவர்: யான் பிழைத்துப் போகாத வகை நின் கண்ணென்று மிரண்டம் பினால் எய்தாய் இன்று. (22) (நின்னாற் குறிக்கப்பட்டாளை யானறியேன் என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது; அல்லது, பாங்கற்குக் கூறியதூஉமாம்) பெருமலை தாநாடித் தேன்றுய்த்துப் பேணா தருமலை மாய்க்குமவர் தங்கை--திருமுலைக்கு நாணழிந்து நல்ல நலனழிந்து நைந்துருகி யேணழிதற் கியாமே யினம். (ப-ரை.) பெருமலை யெங்குங் தாம் புக்கு நாடித் தேன் வாங்கி நுகர்ந்து மனத்தின்கண் நுடங்கிப் பாதுகாவாது அருமலை போன் றிருந்த யானை களைப் பிணித்துக் கொள்வாருடைய தங்கையுடைய திருமுலைக்குத் தோற்று நாணழிந்து மிக்க அறிவு முதலான குணங்கள் நன்கு மழிந்து தளர்ந்துருகி வலியழிதற்கு யாமமைந் தோம். (23) (தோழி குறைமறாமற் றலைமகன் றனதாற்றாமை மிகுதி சொல்லியது) நறுந்தண் டகரம் வகுள மிவற்றை வெறும்புதல்போல் வேண்டாது வேண்டி--யெறிந்துழுது செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு நொந்தினைய வல்லளோ நோக்கு. (ப-ரை.) நறுவிய குளிர்ந்த தகரம்,வகுளம் என்னு மிவற்றைப்பயன்படாத வெறும் புதல் போன்றவற்றை விரும்பாது வெட்டியுழுது, விரும்பிச் செந்தினையை வித்துவார் தங்கை பிறர் கொண்ட நோய்க்கு நொந்திரங்க வல்லளோ? ஆராய்ந்து பாராய் தோழி! (24) (தோழி தலைமகனை நெறிவிலக்கி வரைவு கடாயது) கொல்லியல் வேழங் குயவரி கோட்பிழைத்து நல்லியற்றம்மின நாடுவடோ--னல்லிய னாமவேற் கண்ணா ணடுநடுப்ப வாரலொ வேமவே லேந்தி யிரா (ப-ரை.) கொல்லும் இயல்பினையுடைய யானைகள் புலியி னாற் கொல்லப்படுதலைத் தப்பி மிக்க இயல்பினையுடைய தங் கூட்டத்தைத் தேடுவது போலும். ஆதலான் மிக்க வியல்பினையு டைய அச்சத்தைச் செய்யாநின்ற வேல் போன்ற கண்ணாள் நடுநடுங் கும்வகை வராதொழி வாயாக, அரணாகிய நின் வேலையேந்தி இரவின்கண். (25) (இதுவுமது) கருங்கா லினவேங்கை கான்றபூக் கன்மே லிருங்கால் வயவேங்கை யேய்க்கு--மருங்கான் மழைவளருஞ் சார லிரவரின் வாழா ளிழைவளருஞ் சாய லினி. (ப-ரை.) கருங்காலினையுடைய இனவேங்கை கன்மேலுகுத்த பூக்கள் பெரிய தாளினையுடைய வயப்புலியை யொக்கு கின்ற மருங்கான் மழைவளருஞ் சாரலானே இரவின்கண் நீ வரின், உயிர் வாழ மாட்டாள்; இழைவளருஞ் சாயலாள். (26) (தோழி படைத்துமொழி கிளவியான் வரைவு கடாயது) பனிவரைநீள் வேங்கைப் பயமலை நன் னாட! இனிவரையா யென்றெண்ணிச் சொல்வேன்--முனிவரையு ணின்றாள் வலியாக நீவர யாய்கண்டா ளொன்றாள்காப் பீயு முடன்று. (ப-ரை.) குளிர்ந்த குவடுகளையும் நீண்ட வேங்கை மரங் களையும் உடைய பயமலை நாடனே! இதற்கு முன்பு வரைந் திலை யாயினும் இனி வரைந்து புகுதாய் என்று நினக்கு ஆராய்ந்து சொல்வேன்; வெறுக்கத்தக்க மலையின்கண் நின்தாளாண்மையே வலியாக இரவின்கண் நீ வர எம் அன்னை கண்டாள்; இனி எங்களோடு பகைத்து வெகுண்டு மிக்க காவலை எமக்குத் தரும். (27) (தலைமகன் சொன்ன குறிவழியே சென்று தலை மகளைக் கண்டு பாங்கன் சொல்லியது) மேகந்தோய் சாந்தம் விசைதிமிசு காழகி னாகந்தோய் நாக மெனவிவற்றைப்--போக வெறிந்துழுவார் தங்கை யிருந்தடங்கண் கண்டு மறிந்துழல்வா னோவிம் மலை. (ப-ரை.) முகிலைத் தோயாநின்ற சந்தனமும், விசை மரமும், திமிசும், காழகிலும், துறக்கத்தைச் சென்று தோயா நின்ற நாகமரமும் என்று சொல்லப்பட்ட இவையெல்லாம் போக வெட்டிப் புனமுழுவார் தங்கையாகிய இவளுடைய இருந்தடங் கண் கண்டு வைத்தும், இங்கு நின்றும் மீண்டு அங்குவரவல்ல எம்பெருமான் இத் தோன்றுகின்ற மலைபோல் நிலை யுடையன். (28) (பகற்குறிக்கண் இடங் காட்டியது) பலாவெழுந்த பால்வருக்கைப் பாத்தி யதனேர் நிலாவெழுந்த வார்மண னீடிச்--சுலாவெழுந்து கான்யாறு கால்சீத்த காந்தளம்பூந் தண்பொதும்பர் தானாறத் தாழ்ந்த விடம். (ப-ரை.) பலாவெழுந்த மருங்கின்கண் வருக்கைப் பலாக்களாற் பிரிக்கப்பட்டத னடுவே நிலாவொளி மிக்க ஒழுகிய மணலுயர்ந்து வளைந்து தோன்றி, கான்யாறுகள் இடங்களெல் லாஞ் சீத்த காந்தளம்பூந் தண்பொதும்பர் தான் விரை கமழ்ந்து தழைத்தவிடம், யாங்கள் பகலின் கண் விளையாடு மிடம். (29) (பாங்கற்குத் தலைமகன் கூறியது) திங்களுள் வில்லெழுதித் தேராது வேல்விலக்கித் தங்களு ளாளென்னுந் தாழ்வினா--லிங்கட் புனங்காக்க வைத்தார்போற் பூங்குழலைப் போந்தென் மனங்காக்க வைத்தார் மருண்டு. (ப-ரை.) ஒரு நிறைமதியின் கண்ணே இரண்டு வில்லை எழுதிப் பிறருயிரை யுண்ணுமென்று ஆராயாது இரண்டு வேலினையழுத் தித் தங்கள் குலத்துள்ளா ளொருத்தி யென்று தாங்கள் கருதப்படுந் தாழ்வு காரணத்தால் இவ்விடத்தின்கட் டினைப்புனத்தைக் காக்க வைத்தார் போலப் பூங்குழலை என் மனத்தைப் போந்து காக்க வைத்தார், அறிவின்றி. (30) (தோழி தலைமகளை மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பக் கூறியது) தன்குறையி தென்னான் றழைகொணருந் தண்சிலம்ப னின்குறை யென்னு நினைப்பினனாய்ப்--பொன் குறையு நாள்வேங்கை நீழலு ணண்ணா னெவன்கொலோ கோள்வேங்கை யன்னான் குறிப்பு. (ப-ரை.) தன் காரியம் இது என்று எனக்கு விளங்கச் சொல்லான். தழையைக் கொண்டு தந்தான். தன் சிலம்பையுடை யான் நின்னான் முடியுங் கருமம் இது என்னுங் கருத்தினனாய்ப் பொன்னிறந் தளரும் நாண்மலர் களையுடைய வேங்கை நிழலின் கண்ணுஞ் சிறிது பொழுதுஞ் சார்ந்திரான், என்னை கொல்லோ! கோள் வேங்கை யன்னானது கருத்து. (31) 2. நெய்தல் (பாங்கற்குச் சொல்லியது) பானலந் தண்கழிப் பாடறிந்து தன்னைமார் நூனல நுண்வலையா னொண்டெடுத்த--கானற் படுபுலால் காப்பாள் படைநெடுங்கண் ணோக்கங் கடிபொல்லா வென்னையே காப்பு. (ப-ரை.) நெய்தற் பூக்களையுடைய தன்கழியின்கண் மீன் பாட்டை யறிந்து தன்னைமார் நூலாற் செய்யப்பட்ட நல்ல நுண்ணிய வலையான் முகந்து எடுத்த படு புலாலைக் கானலின் கண்ணிருந்து காப்பாள் படை நெடுங்கண்ணோக்கம் படு புலா லைக் காக்க மாட்டா, என்னையே காக்கும் அத்துணை. (32) (இதுவுமது) பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணா திருங்கடன் மூழ்குவார் தங்கை--யிருங்கடலுண் முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே யொத்தனம் யாமே யுளம். (ப-ரை.) பெருங் கடலுள் வெண் சங்கு பெறுதலே காரணமாகத் தங்களுயிரைப் பாதுகாவாது பெருங் கடலினுள்ளே குளிப்பார் தங்கையுடைய இருங் கடலின் முத்தன்ன வெண் முறுவல் கண்டு உருகி நைவார்க்கே பொருந்தி யாம் மேவி யுளம். (33) (புணர்ந்து நீங்குந் தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது) தாமரை தான் முகமாத் தண்ணடையீர் மாநீலங் காமர்கண் ணாகக் கழிதுயிற்றுங்--காமருசீர்த் தண்பரப்ப! பாயிரு ணீவரிற்றாழ் கோதையாள் கண்பரப்பக் காணீர் கசிந்து. (ப-ரை.) தாமரை மலர்கள் தாமே முகமாகக் குளிர்ந்த இலையையுடைய ஈரத்தையுடைய மாலமலர்கள் காதலிக்கப் படுங் கண்ணாக, அக்கண்களைக் கழிக்கட்டு யில்வியாநின்ற காமரு சீர்த்தண் பரப்பையுடையானே! பெரிய இருளின்கண் நீவரிற் றாழ்ந்த கோதையை யுடையாள் இரங்கி அவள் கண்கள் நீர் பரப்பக் காணாய். (34) (இரவும் பகலும் வாரலென்று தலைமகனைத் தோழி வரைவு கடாயது) புலாலகற்றும் பூம்புன்னைப் பொங்குநீர்ச் சேர்ப்ப நிலாவகற்றும் வெண்மணற்றண் கானற்--சுலாவகற்றிக் கங்குனீ வாரல் பகல்வரின்மாக் கவ்வையா மங்குனீர் வெண்டிரையின் மாட்டு. (ப-ரை.) புலானாற்றத்தை நீக்கும் பூக்களையுடைய புன்னைப் பொங்குநீர்ச் சேர்ப்பனே! நிலாவினதொளியை வென்று நீக்கும் வெண்மணற் றண் கானலின்கட் கங்குலின்கண்ணே வருதலின், இவளாவி வருந்தல் பெருகும் நீ வாராதொழிக. (35) (தோழி வரைவு கடாயது) முருகுவாய் முட்டாழை நீண்முகைபார்ப் பென்றே குருகுவாய்ப் பெய்திரை கொள்ளா--துருகிமிக வின்னா வெயில்சிற கான்மறைக்குஞ் சேர்ப்ப! நீ மன்னா வரவு மற. (ப-ரை.) விரை வாய்த்த முட்டாழையினது நீண் முகையைக் குஞ்சு என்று கருதிக் குருகுகள் அம்முகை வாயிலே இரையைப் பெய்து தாம் அவ்விரையைக் கொள்ளாது உருகி மிக வின்னாத வெயிலைத் தஞ் சிறகால் மறைக்குஞ் சேர்ப்பை யுடையானே! நீ இங்கு வரும் நிலையாத வரவினை மறந்து நிலைக்கும் வரவினைச் செய்வாயாக. (36) (இதுவுமது) ஓதநீர் வேலி யுரைகடியாப் பாக்கத்தார் காதனீர் வாராமை கண்ணோக்கி--யோதநீர் அன்றறியு மாதலால் வாரா தலரொழிய மன்றறியக் கொள்ளீர் வரைந்து. (ப-ரை.) ஓத நீர் வேலியையுடைய பாக்கத்தார் உரையாற் கடியாது உம்மேலுள்ள காதலாற் றுன்புற்று இவள் கண்கள் நீர் வாராத வகை இவண்மாட்டு வேறுபாட்டைப் பார்த்து முன்பு நீரிவட்குச் சொல்லிய வஞ்சினத்தை ஓத நீர் அறியுமாதலான், இவ்வாறு வாராது அலரொழியும் வகை மன்றத்தாரறிய வரைந்து கொள்ளீர். (37) (காமமிக்க கழிபடர் கிளவி) மாக்கடல்சேர் வெண்மணற் றண்கானற் பாய்திரைசேர் மாக்கடல்சேர் தண்பரப்பன் மார்பணங்கா--பாக்கடலே என்போலத் துஞ்சா யிதுசெய்தார் யாருரையா யென்போலுந் துன்ப நினக்கு. (ப-ரை.) பெருங்கடலினானே வந்து சேர்ந்த வெண்மணற் றண் கானலின்கண் வந்து பரவா நின்ற திரை சேர்ந்த மாக்கடலைச் சேர்ந்த தண் பரப்பினையுடையான் மார்பினான் வருத்தப்படாத பெருங்கடலே! என்னைப் போலக் கண்டுஞ்சு கின்றிலை; இக் கண்டுஞ்சாமையைச் செய்கின்ற என்போலுந் துன்பத்தை நினக்குச் செய்தார் யாவர் சொல்லாய்? (38) (நொதுமலர் வரைந்து புகுந்த பருவத்துத் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது) தந்தார்க்கே யாமாற் றடமென்றோ ளின்னநாள் வந்தார்க்கே யாமென்பார் வாய்காண்பாம்--வந்தார்க்கே காவா விளமணற் றண்கழிக் கானல்வாய்ப் பூவா விளஞாழற் போது. (ப-ரை.) வந்து சேர்ந்தார்க்கு ஏமமாம் இளமணற்றண் கழிக் கானலிடத்து வந்து. முன்பு பூவாதே பூத்த இள ஞாழற் பூவினை இவட்குத் தந்தவர்க்கே யாமால், இவள் தடமென்றோள்; இந்நாள் வதுவை, வரையப் புகுந்தார்க்கா மென்பாருடைய மெய்யுரையைக் காண்பாம். (39) (வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது) தன்றுணையோ டாடு மலவனையுந் தானோக்கா வின்றுணையோ டாட வியையுமோ--வின்றுணையோ டாடினாய் நீயாயி னந்நோய்க்கென் னொந்தென்று போயினான் சென்றான் புரிந்து. (ப-ரை.) தன் பெடை ஞெண்டொடு இன்புற்று விளையாடும் அலவனையும் என்னையும் பார்த்து, என்னுடைய இனிய துணை யோடு இப்பெற்றி போல ஆட எனக்குக் கூடுமோ? நின்னுடைய இன்றுணையாகிய பெடை ஞெண்டுடனே விளையாடினாய் நீயாயிற் பிரிவுத்துன்பம் அறியா யாதலான், அப்பெற்றிப் பட்ட நினக்கு என் பிரிவுத்துன்பத்தைச் சொல்லி நொந்து என்னை என்று சொல்லிப் போயினவன் பின்னை வந்து மேவித் தோன்று கின்றிலன். என் செய்தானோ! (40) (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியாற் சொல்லெடுக்கப் பட்டுத் தலைமகள் தனதாற்றாமையாற் சொல்லியது) உருகுமா லுள்ள மொருநாளு மன்றாற் பெருகுமா னம்மலர் பேணப்--பெருகா வொருங்குவான் மின்னோ டுருமுடைத்தாய்ப் பெய்வா னெருங்குவான் போல நெகிழ்ந்து. (ப-ரை.) ஒருங்கு பெருகி வாலிய மின்னொடு உருமுடைத்தாகிப் பெய்ய வேண்டி நெருங்குகின்ற மழைபோலப் பெருகா நின்றது, ஏதிலார் விரும்பும்படி நம் அலரானது; ஆதலான் நம்முள்ளம் ஒருநாளுமன்றியே பலநாளும் நெகிழ்ந்து உருகா நின்றது. (41) (நயப்பு; கையுறையுமாம்) கவளக் களிப்பியன்மால் யானைசிற் றாளி தவழத்தா னில்லா ததுபோற்--பவளக் கடிகை யிடைமுத்தங் காண்டொறு நில்லா தொடிகை யிடைமுத்தந் தொக்கு. (ப-ரை.) கவளத்தையுடைய களிப்பியன்ற மால் யானை, அரிமாவின் குருளைதான் நடைகற்கும் பருவத்தும் அஞ்சியெதிர் நில்லாததுபோல, இவளுடைய அதரமாகிய பவழத் துண்டத் தினி டையரும்பும் முறுவலாகிய முத்தங்களைக் காணுந்தொறுந் தோற்று நில்லா, இவள் கையிடைத் தொடியின்கண் அழுத்திய முத்தங்கள் திரண்டு. (42) (தலைமகனைத் தோழி வரைவு கடாயது) கடற்கோ டிருமருப்புக் கால்பாக னாக அடற்கோட் டியானை திரையா--வுடற்றிக் கரைபாய்நீள் சேர்ப்ப! கனையிருள் வாரல் வரைவாய்நீ யாகவே வா. (ப-ரை.) கடலின்கட் சங்குகளே பெரிய மருப்பாக காற்றே பாகனாக, திரையே அடற்கோட்டியானையாக வருத்திக் கரையைக் குத்துகின்ற நீண்ட சேர்ப்பை யுடையானே! செறிந்த இருளின்கண் வாராதொழிக; வருதலை வேண்டின், நீ வரை வாயாகவே வா. (43) (பகற்குறியிடங் காட்டியது) கடும்புலால் புன்னை கடியுந் துறைவ! படும்புலாற் புட்கடிவான் புக்க--தடம்புலாந் தாழைமா ஞாழற் றதைந்துயர்ந்த தாய்பொழில் ஏழைமா னோக்கி யிடம். (ப-ரை.) மிக்க புலானாற்றத்தைப் புன்னைப் பூக்கள் நீக்குந் துறைவனே! புலாலிற் பட்ட புள்ளைக் கடியவேண்டிப் புக்க ஏழை மானோக்கி விளையாடுமிடம், பெரிய புல்லாகிய தாழையும் ஞாழலும் நெருங்கி யுயர்ந்த தாழ்பொழில். (44) (தலைமகன் சொல்லிய குறிவழி யறிந்து தலைமகளைக் கண்ட பாங்கன் தலைமகனை வியந்து சொல்லியது) தாழை தவந்துலாம் வெண்மணற் றண்கானன் மாழை நுளையர் மடமக--ளேழை யிணைநாடி லில்லா விருந்தடங்கண் கண்டுந் துணைநாடி னன்றோ மிலன். (ப-ரை.) தாழைகள் படர்ந்து பரக்கும் வெண்மணலையுடைய தண்கானலின்கண் வாழும் மாழைமையையுடைய நுளையர் மடமகளாகிய இவ்வேழையுடைய ஒப்புமை நாடி லில்லாத இருந்தடங்கண் கண்டுந் துணையை நாடிய எம்பெருமான் ஒரு குற்றமுமிலன். (45) (தோழி நெறி விலக்கி வரைவு கடாயது) தந்தாயல் வேண்டாவோர் நாட்கேட்டுத் தாழாது வந்தானீ யெய்துதல் வாயான்மற்--றெந்தாய் மறிமகர வார்குழையாள் வாழாணீ வார லெறிமகரங் கொட்கு மிரா. (ப-ரை.) சிலரைக் கொணர்ந்து ஆராயவேண்டுவதில்லை; நல்லதொரு நாட்கேட்டு நீட்டியாதே நீ வரைதற்கு வந்தால் இவளை எய்துதல் மெய்ம்மையால் : எம்மிறைவனே! எறி சுறாக்கள் கழியெங்குஞ் சுழலு மிராவின்கண் வாரல்; வரின், மறி மகர வார் குழையாள் உயிர் வாழாள். (46) (பாங்கன் தலைமகனைக் கண்டு தலைமகளை வியந்து சொல்லியது) பண்ணாது பண்மேற்றே பாடுங் கழிக்கானல் எண்ணாது கண்டார்க்கே யேரணங்கா--லெண்ணாது சாவார்சான் றாண்மை சலித்திலா மற்றிவளைக் காவார் கயிறுரீஇ விட்டார். (ப-ரை.) யாழினைப் பண்ணாது பண்மேற் சேரத் தேன்கள் பாடுங் கழிக் கானலின்கண் ஆராயாதே வந்து கண்டார்க்கே அழகிய தெய்வங்களாம்; ஆதலான், அறிவினான் ஆராயாது இறந்துபடுவார் சான்றாண்மை யின்கண் வேறுபட்டிலா மற்றிவளைக் காவாது கயிறுரீஇ விட்டார் சான்றாண்மையின் வேறுபட்டார். (47) (தலைமகற்கு இரவுக்குறி மறுத்தது) திரைமேற்போந் தெஞ்சிய தெண்கழிக் கானல் விரைமேவும் பாக்கம் விளக்காக்--கரைமேல் விடுவாய்ப் பசும்புற விப்பிகான் முத்தம் படுவா யிருளகற்றும் பாத்து. (ப-ரை.) திரைமேற் போந்து கரைமே லொழிந்த விடுவாயையும் பசும்புறத்தையுமுடைய இப்பி கான்ற முத்தம், தெண் கழிக்கானலின் விரைமேவும் பாக்கம் ஒளியுண்டாம் வகை இருள்படு மிடமெல் லாம் அவ்விருளைப் பகுத்தகற்றும். (48) (இதுவுமது) எங்கு வருதி யிருங்கழி தண்சேர்ப்ப! பொங்கு திரையுதைப்பப் போந்தொழிந்த--சங்கு நரன்றுயிர்த்த நித்தில நள்ளிருள்கால் சீக்கும் வரன்றுயிர்த்த பாக்கத்து வந்து. (ப-ரை.) எவ்விடத்தானே வருவாய் இருங்கழித் தண் சேர்ப்பனே! பொங்கு திரைகளானே யுதைக்கப்பட்டுப் போந்து கரையின்கட் டங்கிய சங்குகள் கதறிப் பொறையுயிர்த்த முத்தங்கள் செறிந்த இருளை இடங்களினின்றுஞ் சீயாநிற்கும்; திரை கொணர்ந்து போத விட்டனவற்றைக் கண்டார் வரன்றா நின்ற பாக்கத்தின்கண். (49) (தோழி வரைவு கடாயது) திமில்களி றாகத் திரைபறையாப் பல்புட் டுயில்கெடத் தோன்றும் படையாத்--துயில்போற் குறியா வரவொழிந்து கோலநீர்ச் சேர்ப்ப! நெறியானீ கொள்வது நேர். (ப-ரை.) திமிலே களிறாகத் திரையே பறையாகத் துயில் கெடத் தோன்றும் படை புட்களாக, கனாக் கண்டாற் போலத் தேற முடியாத களவின்கட் டனியே வரும் வரவினை யொழிந்து, கோல நீர்ச் சேர்ப்பனே! நெறியானே வரைந்து இவளைக் கொள்வது நினக்குத் தகுதி. (50) (தலைமகற்குத் தோழி குறைநேர்ந்து பகற்குறியிட மறியச் சொல்லியது) கடும்புலால் வெண்மணற் கானலுறு மீன்கட் படும்புலால் பார்த்தும் பகர்து--மடும்பெலாஞ் சாலிகை போல்வலை சாலப் பலவுணங்கும் பாலிகை பூக்கும் பயின்று. (ப-ரை.) கடும் புலாலையுடைய வெண்மணற் றண்கழிக் கானலின்கண் இருந்து, யாங்கள் ஆங்கடுத்த மீனாகிய படு புலாலின்கட் புட்டிரியாமற் பார்ப்பேம்; அவற்றை விற்பதுஞ் செய்வேம்; அக் கானலின் கண் அடும்பெல்லாம் பாலிகை போலப் பூக்கும்; சாலிகை விரிந்தாற்போல வலைகளும் உணங்கும். (51) (தலைமகனைத் தோழி வரைவு கடாயது) திரைபாக னாகத் திமில்களி றாகக் கரைசேர்ந்த கானல் படையா--விரையாது வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்ப! நா ளாய்ந்து வரைத லறம். (ப-ரை.) திரையே பாகனாகத் திமிலே களிறாகக் கரை சேர்ந்த கானலின் கண்ணுள்ள பல புட்களே படையாக வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்பனே! விரையாதே நல்ல நாளாராய்ந்து அறிந்து வரைந் திவளைக் கோடல் நினக்கு அறமாவது. (52) (இதுவுமது) பாறு புரவியாப் பல்களிறு நீள்திமிலாத் தேறு திரைபறையாப் புட்படையாத்--தேறாத மன்கிளர்ந்த போலுங் கடற்சேர்ப்ப! மற்றெமர் முன்கிளர்ந் தெய்தன் முடி. (ப-ரை.) பாறே குதிரையாக நீண்டதிமிலே பல களிறு களாகத் தெளிந்த திரையே பறையாகப் புட்களே படையாகத் தேறாத வேந்துகள் படை யெழுந்து கிளர்ந்தன போலுங் கடற் சேர்ப்பனே! எமருடைய முன்னே சென்று இவளை நீயே புணர்தலை முடிப் பாயாக. (53) (இதுவுமது) வாராய் வரினீர்க் கனீழிக்கான னுண்மணன்மேற் றேரின்மா காலாழுந் தீமைத்தே--யோரிலோர் கோணாடல் வேண்டா குறியறிவார்க் கூஉய்க் கொண்டோர் நாணாடி நல்குத னன்று. (ப-ரை.) வாராதொழிவாயாக; வருவையாயின், நீர்க்கழிக் கானல் தான் நுண்மணன்மேல் நின்றேர் பூண்ட குதிரை காலாழுந் தீமையுடைத்து; ஆதலான், ஒத்த குலத்தார்க்குத் தொடர்ச்சி கோட லை ஐயுற்றாராய்தல் வேண்டா; நிமித்த மறிவாரை யழைத்து நல்ல தொரு நாளை நாடி இவட்கு நல்குதல் நன்று. (54) (இதுவுமது) கண்பரப்பக் காணாய் கடும்பனி கால்வறேர் மண்பரக்கு மாயிருண் மேற்கொண்டு--மண்பரக்கு மறுநீர் வேலைநீ வாரல் வரினாற்றாள் ஏறுநீர் வேலை யெதிர். (ப-ரை.) இவளுடைய கண்களும் மிக்க நீர் பரப்பக் காணாய்; கால் வலியு தேரில் மண்ணெல்லாம் பரக்கும் பெரிய இருண் மேற்கொண்டு உலகமெலாம் நிவந்த அலர் பரக்குமாறு, நீருண்ட வேலையையுடையாய்! வாரால்; வருவையாயின் இவளுயிர் வாழாள்; ஓதமேறாநின்ற நீர் வேலையினெதிரே. (55) (தலைமகற்கு இரவுக்குறி நேர்ந்த தோழி இடங்காட்டியது) கடற்கானற் சேர்ப்ப! கழியுலாஅய் நீண்ட வடற்கானற் புன்னைதாழ்ந் தாற்ற--மடற்கான லன்றி லகவு மணிநெடும் பெண்ணைத்தெம் முன்றி லிளமணன்மேன் மொய்த்து. (ப-ரை.) கடற்கானற் சேர்ப்பனே! கழிகள் சூழ்ந்து நீண்ட மீன் கொலைகளையுடைய கானலின்கண் மிகவும் புன்னை தழைக்கப் பட்டு, பூவிதழையுடைய இக்கானலின்கண் உள்ள அன்றில்கள் அழையாநின்ற அழகிய நெடும் பெண்ணையையுடைத்து; எம் மில்லத்தின்முன் இளமணல்களும் மொய்த்து.(56) (தோழி வரைவு கடாயது) வருதிரை தானுலாம் வார்மணற் கான லொருதிரை யோடா வளமை--யிருதிரை முன்வீழுங் கானன் முழங்கு கடற்சேர்ப்ப! என்வீழல் வேண்டா வினி. (ப-ரை.) வருதிரைதான் வந்து உலவாநின்று ஒழுகிய மணற் கானலின்கண் ஒரு திரை வந்து வீழாநின்ற கானலின்கண் வந்து, முழங்கு கடற்சேர்ப்பனே! என்னால் வந்து இப்புணர்ச்சியை விரும்பல் வேண்டா; இனி வரைந்து கொள்வாய். (57) (தலைமகற்குத் தோழி பகற்குறி நேர்ந்து இடங்காட்டியது) மாயவனுந் தம்முனும் போலெ மறிகடலுங் கானலுஞ்சேர் வெண்மணலுங் காணாயோ--கானல் இடையெலா ஞாழலுந் தாழையு மார்ந்த புடையெலாம் புன்னை புகன்று. (ப-ரை.) மாயவனும் அவன் முன்னோனும் போல, மறிகடலும் கடற்சோலையும் அச்சோலையைச் சேர்ந்த வெண்மணலும் பாராயோ! அக்கடற் சோலையின் நடுவெல்லாம் ஞாழலுந் தாழை யுமாய் இருக்கும்; நிறைந்த மருங்கெல்லாம் புன்னையாயிருக்கும், இவற்றையும் விரும்பிப் பாராய். (58) (இரு பொழுதும் வாரலென்று வரைவு கடாயது) பகல்வரிற் கவ்வை பலவாம் பரியா திரவரி னேதமு மன்ன--புகவரிய தாழை துவளுந் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே யேழை நுளைய ரிடம். (ப-ரை.) பகல் வருவாயாயின், அலர் பலவு முளவாம்; அவ்வலர்க்கு இரங்காதே இரவு வருவையாயின், ஊறு வரும் ஏதமும் பலவுளவாம்; உள் புகுதற்கரிய தாழை படர்ந்த திரை நீர்ச் சேர்ப்புடையது, உங்கள் ஏழை நுளையர் வாழுமிடம். (59) (பாங்கற்குத் தலைமகன் கூறியது) திரையலறிப் பேராத் தெழியாத் திரியாக் கரையலவன் காலினாற் காணாக்--கரையருகே நெய்தன் மலர்கொய்யு நீணெடுங் கண்ணினான் மைய னுளையர் மகள். (ப-ரை.) திரைகள் அலறிப் பெயரும் வகை தெழித்துத் திரிந்து கரையின்கண் அலவன்களைத் தன் காலினாலா ராய்ந்து, கரை யருகே நின்ற நெய்தன் மலர்களைக் கொய்யாநிற்கும் நீளிய நெடுங் கண்ணினாள் நுளையருடைய மகள். (60) (தலைமகற்குத் தோழி இரவுக்குறி மறுத்தது) அறிகரிதி யார்க்கு மரவநீர்ச் சேர்ப்ப! நெறிதிரிவா ரின்மையா லில்லை--முறிதிரிந்த கண்டலந்தண் டில்லை கலந்து கழிசூழ்ந்த மிண்டலந்தண் டாழை யிணைந்து. (ப-ரை.) யார்க்கும் அறிதலரிது; ஓசையையுடைய நீர்ச் சேர்ப்பனே! எங்குந் திரிவா ரில்லாமல் வழியில்லை: தளிர் சுருண்டிருந்த கண்டலும் அழகிய தண் டில்லைகளும் தம் முண்மி டைந்து கழியைச் சூழ்ந்த மிண்டன் மரங்களும், தாழைகளும் இடைப்பட்டு. (61) (தலைமகளை ஒருநாட் கோலஞ் செய்து அடியிற்கொண்டு முடிகாறும் நோக்கி, இவட்குத் தக்கான்யாவனாவன் கொல்லோ? என்றாராய்ந்த செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது) வில்லார் விழவினும் வேலாழி சூழுலகி னல்லார் விழவகத்து நாங்காணே--நல்லாய் உவர்க்கத் தொரோவுதவிச் சேர்ப்பனொப் பாரைச் சுவர்க்கத் துளராயிற் சூழ். (ப-ரை.) வில்லுழவர் காரணமாகத் தொடங்கிய விழவகத்தும், நல்லாராகிய வனிதையர் காரணமாகத் தொடங்கிய விழவகத்தும் எல்லா மாதருந் திரள்வராதலால், நாங்கள் அங்குக் கண்டறியேம்; எமக்கு ஓருதவி பண்டொருநாட் செய்த சேர்ப் பனோ டொப்பாரை: மற்றவனே இவட்குத் தக்கான்; அவனைப் போலும் ஆடவர் சுவர்க்கத் துளராயின் ஆராய்வாய். (62) 3. பாலை (தமைகளைத் தோழி பருவங்காட்டி வற்புறீஇயது) எரிநிறநீள் பிண்டி யிணரின மெல்லாம் வரிநிற நீள்வண்டர் பாடப் - புரிநிறநீள் பொன்னணிந்த கோங்கம் புணர்முலையாய்! பூந்தொடித்தோ ளென்னணிந்த வீடில் பசப்பு. (ப-ரை.) எரிநிறத்தை யுடையன அசோகின் பூங்கொத்தின மெல்லாம், வரி நிறத்தையுடைய வண்டுகள் இளியென்னும் பண் ணைப் பாட விரும்பப்படுகின்ற நீண்ட மிக்க பொன்போன்ற மலர்களை யணிந்தன கோங்க மெல்லாம்; ஆதலாற் பொருந்திய முலை யினையுடையாய்! நின்னுடைய பூந்தொடித் தோள்கள் யாதின் பொருட்டு அணிந்தன தமக்குத் தகுதியில்லாத பசப்பினை? (63) (இதுவுமது) பேணா யிதன்றிறத் தென்றாலும் பேணாதே நாணாய நல்வளையாய்! நாணின்மை - காணா யெரிசிதறி விட்டன்ன வீர்முருக் கீடில் பொரிசிதறி விட்டன்ன புன்கு. (ப-ரை.) “நீ உறுகின்ற துன்பத்தைப் பாதுகாவாய்” என்று யான் சொன்னாலும் பாதுகாவாதே நாணத்தகும் ஆற்றாமை செய்த நல் வளையாய்! நீயும் முன்பு நாணின்மை செய்தா யென்பதனை இனியறிந்து கொள்ளாய்; ஏரியைச் சிதறி விட்டாற் போலவிருந்த ஈர் முருக்குக்கள்; கனமில்லாத பொரி சிதறிவிட்டாற் போலப்பூத்தன, புன்குகள்; ஆதலான் அவர் சொல்லிய பருவம் இதுகாண். (64) (சுரத்திடைச் சென்ற செவிலித்தாய் குரவொடு புலம்பியது) தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப வீன்றாய்நீ பாவை யிருங்குரவே! ஈன்றாண் மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்டா யீதென்று வந்து. (ப-ரை.) கோங்கந்தான் தாயாகத் தாழ்ந்து முலை கொடுத்து வளர்ப்ப நீ பாவையினை யீன்ற இத்துணையே யாதலான், இருங் குரவே! யானீன்றாள் நினக்குச் சொல்லிய சொல்லை யெனக்குச் சொல்லாயாயினும் முள்ளெ யிற்றாள் போயின வழியை யாயினும் சொல்லிக்காட்டாய் வந்து இது என்று. (65) (தோழி பருவங் காட்டி வற்புறுத்தியது) வலவருங் காணாய் வயங்கி முருக்கெல்லாஞ் செல்வர் சிறார்க்குப்பொற் கொல்லர்போ - னல்ல பவளக் கொழுந்தின்மேற் பொற்றாலி பாஅய்த் திகழக்கான் றிட்டன’ தேர்ந்து. (ப-ரை.) நங் காதலர் விரைந்து வருவர்: விளங்கி முருக்குக் களெல்லாம், செல்வமுடையார் புதல்வர்க்குப் பொற் கொல்லர் ஐம்படைத் தாலி செய்தாற்போல, மிக்க பவளக் கொழுந்தின் அடி யிலே பொற்றாலியைப் பதித்து வைத்தாற் போல் விளங்கக் கான்றன; ஆதலாற் றேர்ந்து பாராய். (66) (பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது) வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய்! தோன்றார் பொறுக்கவென் றாற்பொறுக்க லாமோ - வொறுப்பபோற் பொன்னு ளுறுபவளம் போன்ற புணர்முருக்க மென்னு ளுறுநோய் பெரிது. (ப-ரை.) மிக்க பொருட் பொருட்டுச் சென்றார், விளங் கிழையாய்! வந்து தோன்றுகின்றிலர்: இப் பருவத்தின்கண் நீ என்னை ஆற்று என்றால் எனக்கு ஆற்றலாமோ? என்னை ஒறுப்பன போலப் பொன்னின் உள்ளுறவைத்த பவளம் போன்ற பொருந்திய முருக்கம் பூக்கள்: ஆதலால் என்னுள்ளத்துற்ற நோய் பெரியது. (67) (பொருள் வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது) சென்றக்காற் செல்லும்வா யென்னோ விருஞ்சுரத்து நின்றக்கா னீடி யொளிவிடா - நின்ற விழைக்கமர்ந்த வேயே ரிளமுலையா ளீடில் குழைக்கமர்ந்த நோக்கின் குறிப்பு. (ப-ரை.) பொருளின் பொருட்டு நாமிவளை நீங்கிப் போயக் காற் போம் வகை யெங்ஙனமோ? நெஞ்சே! மன்னிய அணிகட்குத் தக்க அழகையுடைய இளமுலையாளுடைய ஒப்பில்லாத குழைக்க மர்ந்த நோக்கின் குறிப்புக்கள் நம் முன்னே வந்து நீடி யொளிவிட்டு இருஞ்சுரத்திடையே தோன்றி நின்றக்கால். (68) (இடைச்சுரத்துக் கண்டார் செலவு விலக்கியது) அத்த நெடிய வழற்கதிரோன் செம்பாக மத்தமறைந் தானிவ்வணியிழையோ - டொத்த தகையினா லெஞ்சீறூர்த் தங்கினிராய் நாளை வகையினிராய்ச் சேறல் வனப்பு. (ப-ரை.) வழிகளும் நெடிய; அத்த மலையின் கண்ணே அழற் கதிரோனுஞ் செம்பாகம் மறைந்தான்: இவ்வணி யிழையோடு நீரும் எம்மோ டொத்த தகையினால் எஞ்சீறூரிலே இன்று தங்கினீராய் நாளை எங்களினீங்கிப் போதலழகு. (69) (புணர்ந்து உடன்போய தலைமகன் தலைமகளை ஆற்றுவித்துக் கொண்டு போவான் சொல்லியது) நின்னோக்கங் கொண்டமான் றண்குரவ நீழல்காண் பொன்னோக்கங் கொண்டபூங் கோங்கங்காண் - பொன்னோக்கங் கொண்ட சுணங்கணி மென்முலைக் கொம்பன்னாய்! வண்ட லயர்மணன்மேல் வந்து. (ப-ரை.) நின்னுடைய நோக்கின் றன்மையைக் கொண்ட மான்களைப் பாராய்: குளிர்ந்த குரவ நிழலைப் பாராய்: பொன்னினது காட்சியைக் கொண்ட பூங் கோங்குகளைப் பாராய்: பொன்னி னது காட்சியைக் கொண்ட சுணங் கணிந்த மென் முலையை யுடைய கொம்பன்னாய்! மணன்மேல் வந்து விளையாட்டை விரும்பாய். (70) (சுரத்திடைச் சென்ற செவிலிக்குத் தலைமகளையுந் தலைமகளையுங் கண்டார் சொல்லிய வார்த்தையைக் கேட்டாராகச் சிலர் சொல்லியது) அஞ்சுடர்நீள் வாண்முகத் தாயிழையு மாறிலா வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக்கண் - டஞ்சி யொருசுடரு மின்றி யுலகுபா ழாக இருசுடரும் போந்தனவென் றார். (ப-ரை.) அழகிய மதிபோன்ற நீண்ட ஒளியையுடைய முகத்தாயிழையும் எதிரில்லாத வெஞ்சுடர்நீள் வேலானும் அச்சுரத்தின்கண்ணே போதரக் கண்டு அஞ்சி, இருசுடருள் ஒரு சுடரு மின்றியே உலகம் பாழாம் வகை இருசுடரும் இச்சுரத்தே போந்தன என்று கண்டார் சிலர் சொன்னார். (71) (சுரத்திடைச் சென்ற செவிலியைத் தலைமகனைக் கண்டார் சொல்லி ஆற்றுவித்தது) முகந்தா மரைமுறுவ லாம்பல்கண் ணீல மிகந்தர் விரல்காந்த ளென்றென் - றுகந்தியைந்த மாழைமா வண்டிற்கா நீழல் வருந்தாதே யேழைதான் செல்லுமினிது. (ப-ரை.) இவள் முகம் தாமரை மலர். இவள் முறுவலை யுடைய வாய் ஆம்பல் மலர் இவள்கண் நீலமலர், ஒன்றை யொன்றொவ்வாது கடந்தார்ந்த விரல்கள் காந்தளரும்பு என்று கருதிக் காதலித்துப் பொருந்திய மாழைமா வண்டிற்குத் தக்க நீழலிலே வருத்தமின்றி நின்னுடைய ஏழை செல்லாநின்றாள் இனிதாக. (72) (முன்னைஞான்று உடன்போக்கு வலித்துத் தலை மகனையுந் தலைமகளையும் உடன்படுத்துப் பின்னை அறத்தொடு நிலை மாட்சிமைப்பட்டமையாற் றலைமகனைக் கண்டு தோழி உடன்போக்கு அழுங்குவித்தது) செவ்வாய்க் கரியகட் சீரினாற் கேளாதுங் கவ்வையாற் காணாது மாற்றாது - மவ்வாயந் தார்த்தத்தை வாய்மொழியுந் தண்கயத்து நீலமு மோர்த்தொழிந்தா ளென்பேதை யூர்ந்து. (ப-ரை.)செவ்வாயின்கட் டார்த்தத்தை வாய் மொழியைக் கேளாதும், கரிய கண்ணின்கட் டண்கயத்து நீலங்களின் றன்மை களைக் காணாதும், அவ்வாயம் ஆற்றா தொழிவதனையோர்த் துப் பின்பு உடன்போக்கை யொழிந்தாள்; என் பேதை அலர் காரணத் தான் முன்பு உடன்போக்கை மேற் கொண்டு. (73) (காமம் மிக்க கழிபடர் கிளவி: நிலத்தாற் பாலை: ஒழுக்கத்தான் நெய்தல்) புன்புறவெ சேவலோ டூடல் பொருளன்றா லன்புற வேயுடையா ராயினும் - வன்புற் றதுகா ணகன்ற வழிநோக்கிப் பொன்போர்த் திதுகாணென் வண்ண மினி. (ப-ரை.) புல்லிய நிறத்தையுடைய பேடைப்புறாவை! நின் சேவலோ டூடல் நினக்குக் காரிய மன்றால்; எங்காதலர் எமக்கன்பு மிகவுடையா ராயினும், அவர் மனநெகிழாது வலியரான தன்மையைப் பாராய்; அவர் தேரோடும் வந்து நீங்கிய வழிச் சுவடு நோக்கிப் பொன்னிறம் போர்க்க வந்த வண்ண மிதனைப் பாராய், இப்பொழுது. (74) (மகட்போக்கிய தாய் சொல்லியது) எரிந்து சுடுமிரவி யீடில் கதிரான் விரிந்து விடுகூந்தல் வெஃகாப் - புரிந்து விடுகயிற்றின் மாசுணம் வீயுநீ ளத்த மடுதிறலான் பின்சென்ற வாறு. (ப-ரை.) அழன்று சுடாநின்ற பகலோனது ஒப்பில்லாக் கதிரான் மாசுணங்கள் முறுக்கிவிட்ட கயிறுபோலப் புரண்டழியும் அத்தம், விரிந்து விட்ட கூந்தலையுடையாள் அடுதிறலான் பின் விரும்பிச் சென்ற வழி. (75) (பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லித் தலைமகன் செலவழுங்கியது) நெஞ்ச நினைப்பினு நெற்பொரியு நீளத்த மஞ்ச லெனவாற்றி னஞ்சிற்றா - லஞ்சிப் புடைநெடுங் காதுறப் போழ்ந்தகன்று நீண்ட படைநெடுங்கண் கொண்ட பனி. (ப-ரை.) என்னெஞ்சமே! இவளை ஆற்றுவிக்குஞ் சில சொற்களைச் சொல்ல நினைக்கின்றாயாயின், இவளோ தான் நெற் பொரியும் நீளத்தைச் சொல்ல நினைப்பதற்கு முன்பே பிரிவினை யஞ்சிற்றால்; புடைநெடுங் காதுறப் போழ்ந்தகன்று நீண்ட படை நெடுங்கண்களும் பிரிவினையஞ்சிப் பனி கொண்டன: ஆதலான் நமக் கிவளைப் பிரிய முடியாது. (76) (வினைமுற்றிய தலைமகன் தலைமகளை நினைந்த விடத்துத் தலைமகள் வடிவு தன்முன் நின்றாற்போல வந்து தோன்ற அவ்வடிவை நோக்கிச் சொல்லி ஆற்றுவிக் கின்றது) வந்தாற்றான் சொல்லாமோ வாரிடையாய்! வார்கதிரால் வெந்தாற்பொற் றோன்றுநீள் வேயத்தந் - தந்தார் தகரக் குழல்புரளத் தாழ்துகில்கை யேந்தி மகரக் குழைமறித்த நோக்கு. (ப-ரை.) கொண்டணிந்து நிறையப்பட்ட தகரத்தையுடைய குழல்கள் அசையத் தாழ்ந்து துகிலைக் கையானே ஏந்தி மகரக்குழை மறித்த நோக்குடனே நீ வந்தால் யாம் போகோமோ? அரிய இடையினை யுடையாய்! நீ இரங்க வேண்டா. (77) (ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது) ஒருகை யிருமருப்பின் மும்மதமால் யானை பருகுநீர் பைஞ்சுனையிற் காணா - தருகல் வழிவிலங்கி வீழும் வரையத்தஞ் சென்றா ரழிவில ராக வவர். (ப-ரை.) ஒரு கையினையும் இரு கோட்டினையும் மூன்று மதத்தினையும் உடைய மால் யானைகள் பருகு நீரைப் பைஞ்சுனை யின்கட் காணாவாய் மருங்கே வழி விலங்கித் தளர்ந்து வீழும் வரை களையுடைய அத்தத்தைச் சென்ற அவர் அவ்வழி இடையூறின்றி அழிவிலராக. (78) (பருவங் காட்டித் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது) சென்றார் வருதல் செறிதொடி! சேய்த்தன்றா னின்றார்சொற் றேறாதாய்! நீடின்றி - வென்றா ரெடுத்த கொடியி னிலங்கருவி தோன்றுங் கடுத்த மலைநாடு காண். (ப-ரை.) நம்மைப் பிரிந்து போயினார் வருதல் செறிதொடி; சேய்த் தன்றால்; நின்மாட்டு நின்றொழுகுகின் றாருடைய சொற் களைத் தெரியா தாய்! போரின் கண் வென்றாரெடுத்த கொடிகள் போலத் தெளிந்திலங்கருவி தோன்றாநின்றது மிக்க மலை நாடு; ஆதலால், நீடின்றி இன்றே இரவின்கட் காண்பாயாக. (79) (இதுவுமது) உருவமேற் கண்ணாய்! ஒருகாற்றேர்ச் செல்வன் வெருவிவீந் துக்கநீ ளத்தம் - வருவர் சிறந்து பொருடருவான் சேட்சென்றா ரின்றே யிறந்துகண் ணாடு மிடம். (ப-ரை.) அஞ்சத்தக்க வேல்போன்ற கண்களை யுடையாய்! ஒரு காலையுடைய தேர்ச் செல்வனாற் பிறர் கண்டார் வெருவும் வகை வீந்தவிந்த கானத்தானே முயற்சியாற் சிறந்து பொருடரு வான் வேண்டிச் சென்றவர் இன்றே வருவர்; மிக்குக் கண் இடமாடா நின்றது. (80) (தலைமகள் இற்செறிப்புக் கண்டபின்னை அவள் நீங்கிய புனங்கண்டு ஆற்றானாய் மீள்கின்ற தலைமகன் சொல்லியது; அன்றி, சுரத்திடைச் சென்ற செவிலித்தாய் சொல்லிய தூஉமாம்) கொன்றாய்! குருந்தே! கொடிமுல்லாய்! வாடினீர் நின்றே னறிந்தே னெடுங்கண்ணாள் - சென்றாளுக் கென்னுரைத்தீர்க் கென்னுடைத்தாட் கென்னுரைத்தீர்க் கென்னுரைத்தாண் மின்னிரைத்த பூண்மிளிர விட்டு. (ப-ரை.) கொன்றாய்! குருந்தே! கொடி முல்லாய்! நீர் வாடி நின்றீர்? இதற்குக் காரணம் யானறிந்தேன்; நெடுங் கண்ணாள் இங்கு நின்று போகின்றாட்கு நீர் என்னுரைத்தீர்! நுமக்கு அவள் என்னு ரைத்தாள்? அவட்கு நீர் பின்னை என்னுரைத்தீர்? அவள் உமக்குப் பின்னை என்னுரைத்தாள், மின்னிரைத்த பூண் விட்டு மிளிரா நின்று? (81) (தலைமகனது செலவுக்குறிப்பறிந்து ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகினதியற்கை கூறி ஆற்றி யுடன்படுவித்தது) ஆண்கட னாமாற்றை யாயுங்கா லாடவர்க்குப் பூண்கடனாப் போற்றிப் புரிந்தமையாற் - பூண்கடனாச் செய்பொருட்குச் செல்வராற் சின்மொழி! நீசிறிது கைபொருட்கட் செல்லாமை நன்று. (ப-ரை.) ஆள்வினைக் கடனாகிய நெறியை ஆராயுங்கால், ஆடவர்க்குப் பூணுங் கடனாகப் பாதுகாத்து நல்லார் சொல்லி மேவினமையாற் றமக்கு அவ் வாள்வினை பூணுங்கடனாகத் தேடும் பொருட்டுச் செல்வர் நங்காதலர்! ஆதலாற் சின்மொழியை யுடையாய்! நீ யதற்கு மனனழியுந் திறத்தின்கட் செல்லாமை நன்று. (82) (தலைமகன் செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது) செல்பவோ சிந்தனையு மாகாதா னெஞ்செரியும் வெல்பவோ சென்றார் வினைமுடிய-நல்லாய்! இதடி கரையுங்கன் மாபோலத் தோன்றிச் சிதடி கரையுந் திரிந்து. (ப-ரை.) இப்பெற்றித்தாகிய சுரத்தின்கட் செல்வாருள் ளாரே? நினைத்தலுமாகாதால்; நினைத்த நெஞ்சும் எரியும்; மாறிச் சுரத் தின்கட் சென்றார் சுரத்தை வெல்ல வல்லவரோ? தாமெடுத்துக் கொண்ட வினை முடியும்படி; நல்லாய்! காட்டெருமைப் போத்துக்களைப் பிரிந்த பெண் எருமைகள் கதறாநிற்கும்; அங்குப் பலவாய்க் கிடந்த கற்களும் மா பரந்தாற் போலத் தோன்றும்; சிள் வீடுகளும் திரிந்து கதறா நிற்கும் ஆதலான். (83) (இதுவுமது) கள்ளியங் காட்ட கடமா விரிந்தோடத் தள்ளியுஞ் செல்பவோ தம்முடையார் - கொள்ளும் பொருளில ராயினும் பொங்கெனப்போந் தெய்யு மருளின் மறவ ரதர். (ப-ரை.) கள்ளியங் காட்டின்கட் கடமாக்கள் இரிந்தோடும் வகை மறந்துஞ் செல்வரோ தம் மறிவை யுடையார்? வழிபோம் வம்பலாற் கொள்ளும் பொருளிலராயினும் கதுமெனப் போந்தெய் கின்ற அருளில்லாத மறவர் வாழும் வழியை. (84) (தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது) பொருள்பொரு ளென்றார்சொற் பொன்போலப் போற்றி யருள்பொரு ளாகாமை யாக - வருளான் வளமை கொணரும் வகையினான் மற்றோ ரிளமை கொணர விசை. (ப-ரை.) பொருள் பொருளாவதென்று சொன்னார் சொல்லைப் பொன் போல விரும்பித் தெளிதலான், அருளுடைமை பொருளாகாமை ஆவதா யினும் ஆக, பொருளைக் கொணரும் வகைமைபோல நின்னருளினாலே வேறோரிளமை கொணர்தற்கு எமக் குடன்படுவாயாக. (85) (தலைமகள் தோழிக்குச் செலவுடன்படாது சொல்லியது) ஒவ்வா ருளரே லுரையா யொளியாது செல்வாரென் றாய்நீ சிறந்தாயே - செல்லா தசைந்தொழிந்த யானை பசியாலாட் பார்த்து மிசைச்தொழியு மத்தம் விரைந்து. (ப-ரை.) ஆற்றுவா ருளராயின்., அவர் பிரிவினை அவர்கட்கு உரையாய்; தவிராதே நங்காதலர் செல்வா ரென்றாய்; ஆதலால், நீ எனக்கு மெய்யாகச் சிறந்தாயே யன்றோ? போக மாட்டாதே வருந்தி யிறந்து வீழ்ந்த யானைகளை அங்குள்ளவர்கள் தம் பசியானே எங்கும் பார்த்துத் தின்று போம் அத்தத்தினை விரைந்து. (86) (புணர்ந்து உடன்போக்கு நயப்பித்த தோழிக்குத் தலைமகள் உடன்பட்டுச் சொல்லியது) ஒன்றானு நாமொழிய லாமோ செலவுதான் பின்றாது பேணும் புகழான்பின் - பின்றா வெலற்கரிதாம் வில்வலான் வேல்விடலை பாங்காச் செலற்கரிதாச் சேய சுரம். (ப-ரை.) பிறழாத வெலற்கரிதாகிய வில்லினை வல்லானாகிய வேல் விடலை தான் துணையாகச் சுரத்தைச் செலற்கரிதாக யாதானுஞ் சொல்லலாமோ? அப் பேணும் புகழான் பின் சேறல் ஒழுக்கத்திற் பிறழாது காண். (87) (புணர்ந்து உடன்போவான் ஒருப்பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது) அல்லாத வென்னையுந் தீரமற் றையன்மார் பொல்லா தென்பது நீபொருந்தா - யெல்லார்க்கும் வல்லி யொழியின் வகைமைநீள் வாட்கண்ணாய்! புல்லி யொழிவான் புலந்து. (ப-ரை.) எம்பெருமானோடு பொருந்தி இங்கு நின்றும் ஒழிந்து போவதற்கு முன்பு வேறுபட்டு மற்றதன்கண் அல்லாத வென்னை நீ இங்கே யிருந்து நம்மையன்மார் பொல்லாததென்று கொள்ளும் மனத்தின்கண்ணுள்ள கோளினையுந் திருத்தி நீ பொருந்தாய்; எல்லார்க்குந் தந்த மனத்தின்கணுள்ள வேறுபா டொழியுமாயின், வல்லி போன்றிரு வாட்கண்ணாய்! (88) (சுரத்திடைச் சென்ற செவிலிக்குத் தலைமகனையுந் தலைமகளையுங் கண்டமை எதிர்ப்பட்டார் சொல்லி ஆற்றுவித்தது) நண்ணிநீர் சென்மி னமரவ ராபவே வெண்ணிய வெண்ண மெளிதரோ - வெண்ணிய வெஞ்சுட ரன்னானை யான்கண்டேன் கண்டாளாந் தண்சுட ரன்னாளைத் தான். (ப-ரை.)பொருந்தி நீர் சென்மின்; அவரும் நமக்குச் சுற்றத் தாராயின், நீர் அவரைச் சென்றெய்த வேண்டுமென்று எண்ணிய எண்ணம் எளிது; நீர் கருதிய வெய்ய பகலோனன் னானை யான் கண்டேன், கண்டாளாம் தண்மதியனையாளை இவள் தான். (89) (“தன்னு மவனும்,” என்பதனுள், நன்மை தீமை,” என்பதனால் நற்றாய் படிமத்தாளை வினாயது) வேறாக நின்னை வினவுவேன் றெய்வத்தாற் கூறாயோ கூறுங் குணத்தினனாய் - வேறாக வென்மனைக் கேறக் கொணருமோ வெள்வளையைத் தன்மனைக்கே யுய்க்குமோ தான். (ப-ரை.) நிமித்தஞ் சொல்வார் பலருள்ளும் நின்னை வேறாகக்கொண்டு வினவாநின்றேன்: உன்னுடைய தெய்வத் தன்மையுடைய கழங்காற் பார்த்துக் கூறாய்: உலகத்தார் கூறும் நற்குணத்தினை யுடையனாய் எல்வளையை உடன் கொண்டு போனவன் என் மனைக்கே மணஞ் செய்வதாகக் கொண்டு வருமோ? அஃதன்றி யாம் வேறாகத் தன் மனைக்கே மணஞ் செய்யக் கொண்டு போமோதான்? (90) (தலைமகன் செலவுடன்படாத தலைமகள் தோழிக்குச் சொல்லியது) கள்ளிசார் காரோமை காரில்பூ நீண்முருங்கை நள்ளியவேய் வாழ்பவர் நண்ணுபவோ - புள்ளிப் பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்தாண் டிருந்துறங்கி வீயு மிடம். (ப-ரை.) புள்ளிப் பருந்துகள் கழுகுடனே வழிப் போவாரைப் பார்த்து அங்கிருந்து உறங்கப்பட்டுக் கள்ளியுஞ் சாருங்காரோ மையும் நாரின்பூ நீண்முருங்கையும் வேயும் பொருந்தியமர்ந்து வீயுமிடத்தை உயிர் வாழ்பவர் நண்ணுவரோ? (91) (இதுவுமது) செல்பவோ தம்மடைந்தார் சீரழியச் சிஃடுவன்றிக் கொல்பபோற் கூப்பிடும் வெங்கதிரோன் - மல்கிப் பொடிவெந்து பொங்கிமேல் வான்சுடுங் கீழா வடிவெந்து கண்சுடு மாறு. (ப-ரை.) தம்மை யடைந்தார் சீர்மையழிய நல்லார் செல்வா ரோ? சிள்வீடுகள் நெருங்கிக் கூடிய வோசையாற் பிறரைக் கொல் வனபோலக் கூப்பிடாநிற்கும் வெய்ய வெயிலோன் மிக்குப் பொடிகள் வெந்து பொங்கி மேலே விசும்பினைச் சுடாநிற்கும், கீழின்கண் வழிப்போவார் அடி வேவ அவர் கண்களைச் சுடாநிற்கும் அப்பெற் றிப்பட்ட அவ்வழியினை. (92) 4. முல்லை (பருவங் கண்டழிந்த தலைமகள் தோழிக்குரைத்தது) கருங்கடன் மாந்திய வெண்டலைக் கொண்மூ விருங்கடன்மா கொன்றான்வேன் மின்னிப் - பொருங்கட றன்போன் முழங்கித் தளவங் குருந்தனைய வென்கொல்யா னாற்றும் வகை. (ப-ரை.) கருங்கடலைப் பருகிய வெண்டலை முகில்கள் இருங்கடலின் கண்ணே புக்கு மாவினைக் கொன்ற முருகன் வேல்போல மின்னிப் பெருங்கட றன்னைப்போல முழங்குதலால் முல்லைக் கொடிகளெல்லாம் குருந்த மரத்தின்மேற் சென்ற ணையக் கண்டு யான் ஆற்றுந் திறம் என்னை கொல்லோ? (93) (இதுவுமது) பகல்பருகிப் பல்கதிர் ஞாயிறுகல் சேர விகல்கருதித் திங்க ளிருளைப் - பகல்வர வெண்ணிலாக் காலு மருண்மாலை வேய்த்தோளாய்! உண்ணிலா தென்னாவி யூர்ந்து. (ப-ரை.) பகற்பொழுதைப் பருகிப் பல்கதிர் ஞாயிறு மலையின்கட் சேர, திங்களானது இருளைப் பகையென்று கருதிப் பகலின்றன்மை வர வெண்ணிலாவை யுகாநின்ற மருண் மாலை யின் கண், வேய்த்தோளாய்! என்னிடத்தில் நிலைக்கின்றதில்லை; என்னுயிர் சென்று. (94) (தோழி தலைமகளைப் பருவங்காட்டி வற்புறுத்தியது) மேனோக்கி வெங்கதிரோன் மாந்தியநீர் கீழ்நோக்கிக் கானோக்கங் கொண்டழகாக் காண்மடவாய் - மானோக்கி! போதாரி வண்டெலா நெட்டெழுத்தின் மேற்புரியச் சாதாரி நின்றறையுஞ் சார்ந்து. (ப-ரை.) வெங்கதிரோன் மேனோக்கிப் பருகிய நீர் கீழ் நோக்குதலால் காடெல்லாம் ஓக்கங்கொண்டு அழகாகப் போது தோறும் அரிவண்டுகள் நெட்டெழுத்தோசை மேல் மேவிச் சாதாரி என்னும் பண்ணினைச் சார்ந் தொலியாநின்றன; மானோக்கி! இதனைக் காணாய். (95) (மாலைப்பொழுது கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது) இருள்பரந் தாழியான் றன்னிறம்போற் றம்மு னருள்பரந்த வாய்நிறம் போன்று - மருள்பரந்த பால்போலும் வெண்ணிலவும் பையர வல்குலாய்! வேல்போலும் வீழ்துணையி லார்க்கு. (ப-ரை.) சக்கரத்தையுடைய மாயவனிறம்போல எங்கும் இருள் பரந்து, அம்மாயவன் முன்னோனுடைய நிறம் போன்று வியப்பு மிக்க பானிறமும்போன்ற வெண்ணிலாவும்! பையர வல்குவாய்! இவை விரும்பப் படுந் துணையில்லாதார்க்கு வேல் போலும். (96) (இதுவுமது) பாழிபோன் மாயவன்றன் பற்றார் களிற்றெறிந்த வாழிபோல் ஞாயிறு கல்சேரத் - தோழியோ! மான்மலை தம்மு னிறம்போன் மதிமுளைப்ப யான்மாலை யாற்றே னினைந்து. (ப-ரை.) தனக்கு வலிபோலக் கருதி மாயோன் பற்றார் களிற்றின் முகத்தெறிந்த சக்கரம்போல ஞாயிறு குடமலையைச் சேரத் தோழி! மருண்மாலையின்கண் அம் மாயவன் முன்னோன் நிறம்போல மதி தோன்றுதலான் யான் கொண்ட மயலை ஆற்ற மாட்டுகில்லேன் வருந்தி. (97) (பருவமன்றென்று வற்புறுத்திய தோழிக்குத் தலைமகள் வன்புறை யெதிரழிந்து சொல்லியது) வீயும் வியப்புறவின் வீழ்துளியான் மாக்கடுக்கை நீயும் பிறரொடுங்கா ணீடாதே - யாயுங் கழலாகிப் பொன்வட்டாய்த் தாராய் மடலாய்க் குழலாகிக் கோல்சுரியாய்க் கூர்ந்து. (ப-ரை.) ஆயப்படுங் சுழல்போல அரும்பி, பொன்வட்டுப் போல முதிர்ந்து, பின்னைப் பூமாலையாய், இதழாய் விரிந்து, மடவார் குழல்போலக் காய்த்துப் பின்னைத் துளையையுடைய கோலாய் மிக்கு அழியாநின்றன; வியன்புறவின்கண்ணே வீழ் துளியானே பெருங் கொன்றைகள்; இதனைப் பிறரோடே நீ போய் நீயும் காணாய் நீடியாதே. (98) (இதுவுமது) பொன்வாளற் காடில் கருவரை போர்த்தாலு மென்வாளா வென்றி யிலங்கெயிற்றாய்! - என்வாள் போல் வாளிழந்த கண்டோள் வனப்பிழந்த மெல்விரலு நாளிழந்த வெண்மிக்கு நைந்து. (ப-ரை.) பொன்போன்ற வெயிலொளியால் வெந்து காடின்றியிருந்த கருவரைகள் கார்ப்பருவஞ் செய்து மலரிதழ் களான் மூடப்பட்டாலும், அதனாற் பயனென்? பருவமன்று என்று சொல்லி வாளாநின்று; இலங்கெயிற்றை யுடையாய்! என் மேனியின் கண்ணுள்ள ஒளிபோல ஒளியிழந்தன என் கண்களும்: போயிழந்த நாள்களின் எண் மிகுதலான் எண்ணி என் விரல்களுந் தேய என் தோள்களும் வனப்பிழந்தன. (99) (பருவங் கண்டழிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது) பண்டியைச் சொல்லிய சொற்பழுதான் மாக்கடல் கண்டியைய மாந்திக்கால் வீழ்த்திருண் - டெண்டிசையுங் கார்தோன்றக் காதலர் தேர் தோன்றா தாகவே பீர்தோன்றி நீர்தோன்றுங் கண். (ப-ரை.) தா முன்பு நம்மைப் பிரிகின்ற நாட் குறிப்படச் சொல்லிய சொற்பழுதாயிற்றால்; பெருங்கடற் சென்று கண்டு நிரம்பப் பருகிக் கால்வீழ்த்தே யிருண்டு திசையெட்டு மழை தோன்றக் காதலர் தேர் தோன்று கின்றதில்லை; ஆதலால் என் கண்கள் பீர் தோன்ற நீர் தோன்றாநின்றன. (100) (இதுவுமது) வண்டினம் வெளவாத வாம்பலும் வாரிதழான் வண்டினம் வாய்வீழா மாலையும் - வண்டின மாராத பூந்தா ரணிதேரான் றான்போத வாராத நாளே வரும். (ப-ரை.) வண்டினங்கள் விரும்பாத ஆம்பலென்னும் பெயரையுடைய குழலும், ஒழுகிய மலர்களிற் புக்கு வண்டினங்கள் வாய்வீழாத அந்தியாகிய மாலையும், வண்டினங்கள் புக்கொலி யாத பூச் செயல்களையுமுடைய புரவிபூண்டதார் மணிகளை யுடைய புரவிகளாலே ஒப்பிக்கப்பட்ட தேரினையுமுடையான் வாராத நாளே வந்து என்னை நலியும். (101) (இதுவுமது) மானெங்குந் தம்பிணையோ டாட மறியுகள வானெங்கும் மாய்த்து வளங்கொடுப்பக் - கானெங்குந் தேனிறுத்த வண்டோடு தீதா வெனத்தேரா தியானிறுத்தே னாவி யிதற்கு. (ப-ரை.) மான்கள் தம் பிணைகளைக் கூடி எங்கும் விளையாட, அவற்றின் மறிகளு முகள, மழை யெங்கும் பெய்து வாய்த்து வளங் கொடுப்ப, காடெங்கும் தேன்களும் தம்மொடு சார்ந்த வண்டுகளோடு தீதாவென்றொலித்தலான், ஆராயாதே மயங்கிப் பருவத்துக் கென்னாவியைக் கடனாகக் கொடுத்தேன். (102) (பருவமன்றென்று வற்புறுத்தின தோழிக்குத் தலைமகள் பருவமே யென்றழிந்து சொல்லியது) ஒருவந்த மன்றா லுறைமுதிரா நீராற் கருமந்தான் கண்டழிவு கொல்லோ - பருவந்தான் பட்டின்றே யென்றி பணைத்தோளாய்! கண்ணீரா லட்டினே னாவி யதற்கு. (ப-ரை.) ஒருவந்த மன்றால் என்பது, இது பருவ மென்பது, மெய்ம்மை யன்றா லென்றவாறு. உறை முதிரா நீரால் என்பது மழைபெயல் நிரம்பாத நீராலென்றவாறு, வம்ப மழை யென்ற வாறாம். கருமந்தான் கண்டழிவு கொல்லோ என்பது கருமமாவது பருவமல்லாத பருவத்தைக் கண்டழிவதோ என்றவாறு. பருவந்தான் பட்டின்றே யென்பது பருவம் வந்து பட்ட நிலை என்றவாறு. என்றி என்பது இவையெல்லாஞ் சொல்லி என்னைத் தேற்றாநின்றாய் யென்றவாறு. பணைத்தோளாய் கண்ணீரா வட்டினே னாவி யதற்கு என்பது கண்ணீரே நீராக வார்த்து என்னுயிரைப் பருவத்துக்குக் கொடுத்தேன், பணைத் தோளாய் என்றவாறு. (103) (பருவங் கண்டழிந்த கிழத்தி கொன்றைக்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது) ஐந்துருவின் வில்லெழுதி நாற்றிசைக்கு முந்நீரை யிந்துருவின் மாந்தி யிருங்கொண்மூ - முந்துருவி னொன்றாய் உருமுடைத்தாய்ப் பெய்வான்போற் பூக்கென்று கொன்றாய்கொன் றாயெற் குழைத்து. (ப-ரை.) ஐந்து நிறத்தினையுமுடைய வில்லை யெழுதினாற் போலக் கோலி, முந்நீரைப் பருகி, ஈந்தின் கனிபோன்றருந்து கின்ற வுருவோடு இருங்கொண்மூ நாற்றிசைச்கண்ணும் ஒன்றாயுரு முடைத் தாய்ப் பெய்யப்படுகின்ற வானம் என்னைக் கொல்கின்றாற் போலத் தழைத்துப் பூப்பேனென்று என்னைக் கொன்றாய்; கொன்றை மரமே! (104) (பருவங் கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது) எல்லை தருவான் கதிர்பருகி யீன்றகார் கொல்லைதரு வான்கொடிக ளேறுவகாண் - முல்லை பெருந்தண் டளவொடுதங் கேளிரைப்போற் காணாய் குருந்தங் கொடுங்கழுத்தங் கொண்டு. (ப-ரை.) பகலினைத் தருங் கதிரோனுடைய கதிர்கள் நீரை நிலத்தின்கட் பருகி யீன்ற காரானே கொல்லைகள் தருகின்ற வாலிய கொடிகள் மரந்தோறுஞ் சென்றேறுவன வற்றைக் காணாய்! அன்றியேயும், முல்லைகள் பெருந் தண்டளவுடனே குருந்து அங்கு ஒடுங்கு அழுத்தங்கொண்டு தங்கேளிரைப் போலேறுவன காணாய்! (105) (வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் வன்புறை யெதிரழிந்து சொல்லியது) என்னரே யேற்ற துணைப்பிரிந்தா ராற்றென்பா ரன்னரே யாவ ரவர்க்கு - முன்னரே வந்தாராந் தேங்கா வருமுல்லை சேர்தீந்தேன் கந்தாரம் பாடுங் களித்து. (ப-ரை.) என்னரே யேற்ற துணைப்பிரிந்தார் என்பது எப்பெற்றியர் அவர் தமக் கன்புபட்ட காதலரைப் பிரிந்தார் என்றவாறு. ஆற்றென்பா ரன்னரே யாவ ரவரர்க்கு என்பது அக்காதலித் தாரைப் பிரிந்தாரோடொப்பர், பிரியப்பட்டார்க் காற்றி இறந்து படாதிருக்கச் சொல்லுவார் என்றவாறு. முன்னரே வந்து ஆரந்தேங்கா வருமுல்லை சேர்தீந்தேன் கந்தாரம் பாடுங் களித்து என்பது எனக்கு முன்னே வந்து சந்தனப் பொழிலையும், தேங்காவின்கண் வளர் முல்லையுஞ் சேர்ந்த தீந்தேன்கள் கந்தார மென்னும் பண்ணி னைக் களித்துப் பாடா நின்றன என்றவாறு. (106) (பருவங் கண்டழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது) கருவுற்ற காயாக் கணமயிலென் றஞ்சி யுருமுற்ற பூங்கோட லோடி - யுருமுற்ற வைந்தலை நாகம் புரையு மணிக்கார்தா னெந்தலையே வந்த தினி. (ப-ரை.) கருதிக்கொண்டு பூத்த காயாம் பூவினைத் தொகுதியையுடைய மயிலென்றஞ்சி உருமுற்ற ஐந்தலை நாகங்கள் உருமுற்ற பூங்கோடல்களை யொவ்வாநின்ற அழகிய இக் கார்ப் பருவந்தான், எம்முடைய மாட்டே நலிய வந்தது இப்பொழுது. (107) (பருவம் அன்றென்று வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் ஆற்றாது சொல்லியது) கண்ணுள வாயின் முலையல்லை காணலா மெண்ணுள வாயி னிறவாவா - லெண்ணுளவா வன்றொழிய நோய்மொழிச்சார் வாகா துருமுடைவா னொன்றொழிய நோய்செய்த வாறு. (ப-ரை.) உருமுடை வான் ஒன்றொழிய நோய் செய்தவாறு கண்ணுளவாயின் முல்லையல்லை காணலாம் என்பது உருமுடைய வான் இறந்து பாடொன்றையும் ஒழிய மற்றைக் குறிப்புக்கள் ஒன்பதும் எனக்குளவாம்படி என்னை நோய் செய்த வாற்றை நினக்குங் கண்ணுள வாயின் முல்லையல்லை யாதலின் நக்குக் காண் என்றவாறு. எண்ணுள வாயின் இறவாவால் என்பது அவர் குறித்த இத்துணை நாளுள் வருகின்றேன் என்ற எண் பழுது படாவாயின், அவர் சொன்ன நாளைக் கடவா அன்றோ என்றவாறு. எண்ணுளவா வன்றொழிய நோய் மொழிச் சார்வாகாது என்பது, என்னை ஆற்றுவிக்க வேண்டி நின் மனத்தின்கண் எண்ணின எண்ணின் கண்ணுள்ளவா வன்றி என்னோ யொழிதற்கு நீ யாற்றுவிக்கின்ற நின்மொழி எனக்குச் சார்வாகாது என்றவாறு. (108) (பருவங் கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது) என்போ லிகுளை! இருங்கடன் மாந்தியகார் பொன்போறார் கொன்றை புரிந்தன - பொன்போற் றுணைபிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர் தோன்றா ரிணைபிரிந்து வாழ்வ ரினி. (ப-ரை.) என்னைப் போன்ற தோழி! பொன் போன்ற தார் களைக் கொன்றைகள் ஈனும் வகை இருங்கடலைப் பருகின முகில்களாதலால், பொன் போலப் பெறுதற்கரிய தந்துணை களைப் பிரிந்துபோய் வாழ்கின்றார் அத்துணைக்கண் அவர் மாட்டுத் தோன்றுவர்; நம்மோடிணைதலைப் பிரிந்து வாழ்கின் றார் இப்பருவத்தின் கண்ணுந் தோன்றுகின்றிலர். (109) (இதுவுமது) பெரியார் பெருமை பெரிதே யிடர்க்கா ணரியா ரெளியரென் றாற்றாப் - பரிவாய்த் தலையழுங்கத் தண்டளவந் தாநகக்கண் டாற்றா மலையழுத சால மருண்டு. (ப-ரை.) பெரியாராயிருப்பார் பெருமைக்குணம் மெய்ம்மை யாகப் பெரிதே: காணமுன் னரியரா யுள்ளார் இடர் வந்த இப்பொ ழுது எளியராயினா ரென்றிரங்கி யழுங்க ஆற்றாவாய் மலைகள் மிகவும் அழுதன; தலைசாய்க்கும் வகை பரிவாய்த் தண்டளவங்கள் தஞ்சிறுமையால் நகக் கண்டு. (110) (இதுவுமது) கானங் கடியரங்காக் கைம்மறிப்பக் கோடலார் வானம் விளிப்பவண் டியாழாக - வேனல் வளரா மயிலாட வாட்கண்ணாய்! சொல்லா யுளராகி யுய்யும் வகை. (ப-ரை.) கானங் கடியரங்காக் கோடலார் வியந்து கைம் மறிப்ப, முகில் பாட, வண்டுகள் யாழாக, வேனற் காலத்துக் களியாத மயில் களித்தாடா நிற்க, வாட்கண்ணாய்! சொல்லாய், காதலரைப் பிரிந்தார் இறந்துபடாது உளராகி யுய்யுந் திறத்தை. (111) (பருவங்காட்டித் தோழி தலைமகளை வற்புறுத்தியது) தேரோன் மலைமறையத் தீங்குழல் வெய்தாக வாரான் விடுவானோ வாட்கண்ணாய்! - காரார் குருந்தோடு முல்லை குலைத்தனகாணாமும் விருந்தோடு நிற்றல் விதி. (ப-ரை.) பகலோன் மலையின்கண் மறைய இனிய குழல் இன்னாதாய் வெய்தாக இக்காலத்தின்கண் வாராதே விடுவா னோ? வாட்கண்ணாய்! பசுமையார்ந்த குருந்துடனே முல்லைகள் பூங்கொத்தை ஈன்றன காண்; இனி நாமும் அவர்க்கு விருந்து செய்து ஒழுகிநிற்றல் நெறி. (112) (பருவங் கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது) பறியோலை மேலொடு கீழா விடையர் பிறியோலை போத்து விளியாக் கதிப்ப நரியுளையும் யாமத்துந் தோன்றாரா லன்னாய்! விரியுளைமான் றேர்மேற்கொண் டார். (ப-ரை.) படுத்துத் துயிலும் பறி கீழாக ஓலைப்படன் மழைத்துளியைக் காத்தற்கு மேலாக இடையர்கள் கிடந்து யாடுகளைப் பிரித்தற்குக் கருவி யாகிய பிறியோலையைப் புடை பெயர்வித்து அழைத்துரப்ப, நரிகள் அஞ்சிக் கதறும் யாமத்தின் கண்ணுங் தோன்றாராற் றோழி! விரிந்த உளையை யுடைய மாவாற் பூட்டப்பட்ட தேரை மேற்கொண்டு போயினார். (113) (பருவங் கண்டழிந்த தலைமகள் கேட்பத் தோழி குருந்த மரத்திற்குச் சொல்லுவாளாய்ப் பருவமன்றென்று வற்புறுத்தியது) பாத்துப் படுகடன் மாந்திய பல்கொண்மூக் காத்துக் கனைதுளி சிந்தாமைப் - பூத்துக் குருந்தே! பருவங் குறித்திவளை நைந்து வருந்தேயென் றாய்நீ வரைந்து. (ப-ரை.) ஒலிக்கின்ற கடலைப் பருகி அந்நீரைக் காத்துக் கருமுற்றிப் பகுத்துச் செறிந்த துளிகளைச் சிதறுவதற்கு முன்பே பூத்துக் குருந்தே! பருவத்தைக் குறித்துக் காட்டி இவளையே வரைந்து வருந்துவாய் என்றாய் நீ. (114) (வினைமுற்றி மீண்ட தலைமகன் தலைமகட்குத் தூது விடுகின்றானாய்த் தூதிற்குச் சொல்லியது) படுந்தடங்கட் பல்பணைபோல் வான்முழங்க மேலுங் கொடுந்தடங்கட் கூற்றுமின் னாக - நெடுந்தடங்கண் ணீர்நின்ற நோக்கி! நெடும்பணைமென் றோளாட்குத் தேர்நின்ற தென்னாய் திரிந்து. (ப-ரை.) ஒலியாநின்ற தடங்கண்ணையுடைய பல முரசு போல் முகில்கள் முழங்குவதன் மேலும், மின்னே கொடிய தடங் கண்ணினை யுடைய கூற்றமாக, அழுகின்ற நீர் விடாது நின்ற நெடுந்தடங் கண்ணோக் கினையுடைய நெடும்பணை மென்றோ ளாட்கு நீ, மறித்துவந்து நின் மனைவாயிலின் கண்ணே அவன் றேர் நின்றதென்று சொல்லுவாய்; எமக்கு முன்னே சென்று தூதாக. (115) (பருவங்கண்டு ஆற்றாளாய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி தான் ஆற்றாளாய்ச் சொல்லியது) குருந்தே! கொடிமுல்லாய்! கொன்றாய்! தளவே! முருந்தே யெயிறொடுதார் பூப்பித் -திருந்தே யரும்பீர் முலையா ளணிகுழறாழ் வேய்த்தோள் பெரும்பீர் பசப்பித்தீர் பேர்ந்து. (ப-ரை.) குருந்தே! கொடி முல்லாய்! கொன்றாய்! தளவே! பீலி முருந்தினை யொக்கும் இவளெயிற்றுடனே பூமாலையையும் பூப்பித்திருந்து கோங்கரும்பு முதலாயினவற்றை வென்று சிதைக்கும் முலையினை யுடையாளுடைய குழறாழ்ந்து நிறைந்த வேய்த்தோள் களைப் பெரும் பீர் நிறம் போலப் பசப்பித்தீர் மீட்டும். (116) (தலைமகளைத் தோழி பருவங்காட்டி வற்புறுத்தியது) கதநாகம் புற்றடையக் காரேறு சீற மதநாக மாறு முழங்கப் - புதனாகம் பொன்பயந்த வெள்ளி புறமாகப் பூங்கோதாய்! என்பசந்த மென்றோ ளினி. (ப-ரை.) சினத்தினையுடைய பாம்புகளும் புற்றினையடையும் வகை உருமேறு வெகுண்டிடிப்ப, மதத்தையுடைய யானைகள் அவ்வுரு மேற்றுக்கு எதிரே முழங்க, புதலால் சூழப்பட்ட நாக மரங்கள் வெள்ளி போலும் இதழ்கள் புறஞ்சுற்றப் பொன் போலுந் தாதுக்களை உள்ளே பயந்தனவாதலாற் பூங்கோதாய்! நின்மென் றோள்கள் யாது காரணத்தாற் பசந்தன இப்பருவத்து? (117) (பருவம் அன்றென்று வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் வன்புறை யெதிரழிந்து சொல்லியது) கார்தோன்றிப் பூவுற்ற காந்தண் முகைவிளக்குப் பீர்தோன்றித் தூண்டுவாண் மெல்விரல்போ- னீர்தோன்றித் தன்பருவஞ் செய்தது கானந் தடங்கண்ணாய்! என்பருவ மன்றென்றி யின்று. (ப-ரை.) விளக்கு மழுங்கிப் பீர் நிறம் கோடலான் அவ்விளக்கினைத் தூண்டுவாள் மெல்விரலினைத் தோன்றிப் பூவின் மேற்சென்றன; காந்தண் முகைகள் போலும் வகை கார் நீர் தோன்றுதலாற் காரின் பருவத்தைச் செய்தன கானங்கள்; இத்தைக் கண்டும்; தடங்கண்ணாய்! எனக்குக் காதலர் சொல்லிய பருவம் அன்றென்னா நின்றி. (118) (இதுவுமது) உகவுங்கா ரன்றென்பா ரூரா ரதனைத் தகவு தகவன்றென் றோரேன் - றகவேகொல் வண்டுடுப்பாய்ப் பாம்பாய் விரலாய் வளைமுறியாய் வெண்குடையாந் தண்கோடல் வீந்து. (ப-ரை.) மழைத்துளிகள் உலவுங் கார்ப்பருவம் அன்றென்று சொல்லா நின்றார் இவ்வூரார்; அச்சொலவுதான் அவர்க்குக் குணமோ குற்றமோ என்பதறியேன்; அதுதான் அவர்க்குக் குணமே கொல்லோ! வளவிய துடுப்பாய்ப் பாம்பாய் விரலாய்-வளை முறியாய் வெண்குடையாகா நின்றது தண்கோடலழிந்து. (119) (இதுவுமது) பீடிலா ரென்பார்கள் காணார்கொல் வெங்கதிராற் கோடெலாம் பொன்னாய்க் கொழுங்கடுக்கைக் - காடெலா மத்தங் கதிரோன் மறைவதன்முன் வண்டொடுதேன் துத்த மறையுந் தொடர்ந்து. (ப-ரை.) நம்மைப் பெருமையிலரென்று சொல்லுவார் காணாதாராகாரே! வளவிய கொன்றைகள் கொம்பெல்லாம் பொன்னாகப் பூக்க, வண்டோடு தேன்கள் துத்தம் என்னும் பண்ணினைத் தம்முட் பொருந்தி ஒலியாநின்றன காடெல்லாம்; வெய்ய கதிரோடு கூடி வெங்கதிரோன் அத்தமலையை அடைதற்கு முன்னே. (120) (இதுவுமது) ஒருத்தியா னொன்றல பல்பகை யென்னை விருத்தியாக் கொண்டன வேறாப் - பொருந்தின் மடலன்றின் மாலை படுவசி யாம்பல் கடலன்றிக் காரூர் கறுத்து. (ப-ரை.) யானொருத்தி; எனக்கு ஒன்றல்ல பல பகைகள் என்னை மலைத்தலே தமக்கு ஒழுக்கமாகக் கொண்டன, வேறாகத் துணையைப் பிரிந்து பொருத்தில் மடற்பனை மேலிருந்த அன்றில், மாலைப்பொழுது, மழைபெயல், ஆம்பற் குழல், கடல் அன்றியே முகில்கள் என்று சொல்லப்பட்ட இவையெல்லாம் மேல் வெகுண்டு. (121) (இதுவுமது) கானந் தலைசெயக் காப்பார் குழற்றோன்ற வேன மிடந்த மணியெதிரே - வான நகுவதுபோன் மின்னாட நாணிலென் னாவி யுகுவது போலு முடைந்து. (ப-ரை.) காடுகள் தழைத்துத் தலையெடுக்க, ஆயர் ஊதுங் குழலோசை தோன்ற, ஏனங்கள் இடந்த மணிகளினெதிரே முகில்கள் சிரிப்பது போல மின்கள் ஒளிவிட இக்காலத்தும் இறந்துபடாமையான் நாணில்லாத என்னுயிர் ஒழுகுவது போல வுளது. (122) (குறித்த பருவத்தின்கண் வந்த தலைமகனைப் புணர்ந்திருந்த தலைமகள் முன்பு தன்னை நலிந்த குழலோசை அந்திமாலைப் பொழுதின்கட் கேட்டதனாற் றுயருறாதாளாய்த் தோழிக்குச் சொல்லியது) இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலு மும்மையே யாமென்பா ரோரார்கா - ணம்மை யெளிய ரெனநலிந்த வீர்ங்குழலா ரேடி தெளியச் சுடப்பட்ட வாறு. (ப-ரை.) இப்பிறப்பின்கட் செய்த தீவினை இப்பிறப்பின் கண்ணே விளையும்போலும்! மறுபிறப்பின் கண் ஆம் என்பார் அறியாதார் காண்; முன்பு நம்மை எளியரெனக் கொண்டு துயர் செய்த ஈர்ங்குழலார், தோழி! எல்லாரும் அறியச் சுடப்பட்ட வாற்றைப் பாராய். குழல் நலிவது நெருப்பாற் சுடப்பட்டுத் துளை பட்டபின்; கண்ணே விளையும்போலும்! மறுபிறப்பின்கண் ஆம் என்பார் அறியாதார் காண்; முன்பு நம்மை எளியரெனக்கொண்டு துயர் செய்த ஈர்ங்குழலார், தோழி! எல்லாரும் அறியச் சுடப்பட்ட வாற்றைப் பாராய். (123) 5. மருதம் (பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது) செவ்வழியாய்ப் பாண்மகனே! சீரார்தேர் கையினா லிவ்வகை யீர்த்துய்ப்பான் னோன்றாமு--னிவ்வழியே யாடினா னாய்வய லூரன்மற் றெங்கையர்தோள் கூடினான் பின் பெரிது கூர்ந்து. (ப-ரை.) செவ்வழி யாழையுடைய பாண் மகனே! சீரார்ந்த விளையாட்டுத் தேரினைத் தன் கையால் இம்மனையின்கண் ஈர்த்து நடத்துகின்ற என் மகன் பிறப்பதற்குமுன் இம்மனையின்கட் பிரியாது ஆய்வயலூரன் ஒழுகினான்; பின்னையெல்லாம் எங்கையர் தோளே மிக விரும்பி முயங்கினான். ஆதலான் இப்பருவம் யாம் அவர்க்குத் தக்கேம் அல்லேம். (124) (இதுவுமது) மாக்கோல்யாழ்ப் பாண்மகனே! மண்யானைப் பாகனார் தூக்கோற் றுடியோடு தோன்றாமுன்--றூக்கோற் றொடியுடையார் சேரிக்குத் தோன்றுமோ சொல்லாய் கடியுடையேன் வாயில் கடந்து. (ப-ரை.) அழகிய காம்பையுடைய யாழ்ப்பாணனே! மண்ணாற் செய்யப் பட்ட யானைப் பாகராகிய என் மகனார் தாங் கொட்டுகின்ற தூக்கோற்றுடி யோடு இங்குத் தோன்றி யொழுகு வதற்கு முன்பு தூய புரிப்புச் செயல் களையுடைய தொடியுடையார் மனையின்கட் சென்று தோன்றி யொழுகுமோ சொல்லாய் இப்பொழுது; அவனால் வரையப்பட்ட வாழ்வினையுடையேன் வாயில் கடந்து. (125) (இதுவுமது) விளரியாழ்ப் பாண்மகனே! வேண்டா வழையேன் முளரி மொழியா துளரிக்--கிளரிநீ பூங்கண் வயலூரன் புத்தில் புகுவதன்மு னாங்க ணறிய வுரை. (ப-ரை.) விளரியென்னும் பண்ணைச் செய்கின்ற யாழை யுடைய பாண் மகனே! யாங்கள் விரும்பாதன அழையாதொழிக; எங்ஙண்மாட்டு நினக்கு ஈரமில்லாத முளரி போன்ற மொழிகளைச் சொல்லாது இங்கு நின்றும் புடை பெயர்ந்து கிளர்ந்து நீ போய்த் தாமரைப் பூப்போன்ற கண்களையுடைய வயலூரன் இன்று புது மனையின் கண்ணே புகுவதன்முன் அப்புது மனைக்கண் நீ சென்று, வாராநின்றான் என்று அவனாற் காதலிக்கப்பட்ட பரத்தையர்க்கு உரை. (126) (இதுவுமது) மென்கட கலிவய லூரன்றன் மெய்ம்மையை யெங்கட் குரையா யெழுந்துபோ--யிங்கட் குலங்கார மென்றணுகாண் கூடுங்கூர்த் தென்றே யலங்கார நல்லார்க் கறை. (ப-ரை.) மெல்லிய இடத்தையுடைய மிக்க வயலூரனுடைய மெய்யுரைகளை எங்கட்குச் சொல்லாலே இங்கு நின்று மெழுந்து போய் இவ்வுலகத்தின்கட் குலமுடைய மனையாளைப் புணர்தல் புண்ணிற்கு இடுங் காரம் போன்று வெய்யதென்று தலைவன் கருதிய வர்களை நெருங்கானாய்ப், பரத்தையரைப் புணர்தல் பால்போன் றினிக்கும் பண்புடையதெனக் கருதி அவர்களை விரும்பக் கூடு மென்று, தம்மை யழகு படுத்திக் கொள்வதாம் நன்மை யொன்றி னையே கொண்ட பரத்தையர்க்குப் பகர் வாயாக. (127) குறிப்பு : பின்வரும் 26 செய்யுள்கட்கும் பழைய பொழிப் புரை கிடைக்கவில்லை. (தலைமகன் பரத்தையிற் பிரியத் தலைமகள் புலந்து சொல்லியது) செந்தா மரைப்பூ வுறநிமிர்ந்த செந்நெல்லின் பைந்தார்ப் புனல்வாயப்பாய்ந் தாடுவா--ளந்தார் வயந்தகம்போற் றோன்றும் வயலூரன் கேண்மை நயந்தகன் றாற்றாமை நன்று. (128) (இதுவுமது) வாடாத தாமரைமேற் செந்நெற் கதிர்வணக்க மாடா வரங்கினு ளாடுவா--ளீடாய புல்லக மேய்க்கும் புகழ்வய லூரன்ற னல்லகஞ் சேராமை நன்று. (129) (வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயின் மறுத்தது) இசையுரைக்கு மென்செய் திரநின் றவரை வசையுரைப்பச் சால வழுத்தீர்--பசைபொறை மெய்ம்மருட் டொல்லா மிகுபுன லூரன்றன் பொய்ம்மருட்டுப் பெற்ற பொழுது. (130) (பாணற்கு வாயின் மறுத்தது) மடங்கிறவு போலும்யாழ்ப் பண்பில்லாப் பாண! தொடங்குறவு சொற்றுணிக்க வேண்டா--முடங்கிறவு பூட்டுற்ற வில்லேய்க்கும் பூம்பொய்கை யூரன்பொய் கேட்டுற்ற கீழ்நாட் கிளர்ந்து. (131) (இதுவுமது) எங்கை யரிலுள்ள னேபாண! நீபிறர் மங்கையரி லென்று மயங்கினாய்--மங்கையரி லென்னா திறவா திவணின் னிகந்தேகல் பின்னாரி லந்தி முடிவு. (132) (இதுவுமது) பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் னாயகற்கு மாலையா ழோதி வருடாயோ--காலையாழ் செய்யு மிடமறியாய் சேந்தாநின் பொய்ம்மொழிக்கு நையு மிடமறிந்து நாடு. (133) (பல வாயில்களை மறுத்த தலைவி தனக்கு வாயில் நேர்ந்தமையினைத் தோழிக்கு விறலி கூறியது) கிழமை பெரியோர்க்குக் கேடின்மை கொல்லோ பழமை பயனோக்கிக் கொல்லோ--கிழமை குடிநாய்கர் தாம்பல பெற்றாரிற் கேளா வடிநாயேன் பெற்ற வருள். (134) (காமக்கிழத்தி தலைமகளின் இல்லற வியல்பினை அறிந்து தலைமகனைத் தன் தோழியிட மிகழ்ந்து கூறியது) என்கேட்டி யேழாய்! இருநிலத்தும் வானத்து முன்கேட்டுங் கண்டு முடிவறியேன்--பின்கேட் டணியிகவா நிற்க வவனணங்கு மாதர் பணியிகவான் சாலப் பணிந்து. (135) (பாணற்கு வாயின் மறுத்தது) எங்கை யியல்பி னெழுவல்யாழ்ப் பாண்மகனே! தங்கையும் வாயு மறியாம--லிங்க ணுளர வுளர வுவனோடிச் சால வளர வளர்ந்த வகை. (136) (தலைமகன் புறத்தொழுக்கினைத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது) கருங்கோட்டுச் செங்க ணெருமை கழனி யிருங்கோட்டு மென்கரும்பு சாடி--யருங்கோட்டா லாம்பன் மயக்கி யணிவளை யார்ந்தழகாத் தாம்ப லசையினவாய் தாழ்ந்து. (137) (மணந்தவன் போயபின் வந்த பாங்கியோடு இணங்கிய மைந்தனை இனிதிற் புகழ்ந்து சொல்லியது) கன்றுள்ளிச் சோர்ந்தபால் காலொற்றித் தாமரைப்பூ வன்றுள்ளி யன்னத்தை யார்த்துவான்--சென்றுள்ளி வந்தையா வென்னும் வகையிற்றே மற்றிவன் தந்தையர் தம்மூர்த் தகை. (138) (இதுவுமது) மருதோடு காஞ்சி யமர்ந்துயர்ந்த நீழ லெருதோ டுழல்கின்றா ரோதை--குருகொடு தாராத்தோ றாய்ந்தெடுப்புந் தண்ணங் கழனித்தே யூராத்தே ரான்றந்தை யூயர். (139) (மன்றன் மனைவரு செவிலிக்குத் தோழி அன்புற வுணர்த்தல்) மண்ணார் குலைவாழை யுட்டொடுத்த தேனமதென் றுண்ணாப்பூந் தாமரைப் பூவுள்ளுந்--கண்ணார் வயலூரன் வண்ண மறிந்து தொடுப்பாள் மயலூ ரரவர் மகள். (140) (ஊடிநின்ற தலைமகளின் நிலையினைத் தலைமகன், சிறந்த மொழியை ஒழிந்து நின்ற வாயிலாகிய பாணற்கு உரைத்தது) அணிக்குரன்மே னல்லாரோ டாடினே னென்ன மணிக்குரன்மேன் மாதரா ளூடி--மணிச்சிரல் பாட்டை யிருந்தயரும் பாய்நீர்க் கழனித்தே யாட்டை யிருந்துறையு மூர். (141) (தலைவனைப் பாங்கி புகழ்தல்) தண்கயத்துத் தாமரைநீள் சேவலைத் தாழ்பெடை புண்கயத் துள்ளும் வயலூர!--வண்கயம் போலுநின் மார்பு புளிவேட்கைத் தோன்றிவண் மாலுமா றாநோய் மருந்து. (142) (மன்றன் மனைவரு செவிலிக்கு இகுளை அன்புற வுணர்த்தல்) நல்வய லூர னறுஞ்சாந் தனியகலம் புல்லிப் புடைபெயரா மாத்திரைக்கட்--புல்லியார் கூட்டு முதலுறையுங் கோழி துயிலெடுப்பப் பாட்டு முரலுமாம் பண். (143) (தோழி, தலைமகளின் சேடிகளிலொருத்திக்குச் செவ்வணி யணிந்துவிட்டமையினைத் தலைவற்குப் பாங்காயினார் கூறியது) அரத்த முடீஇ யணிபழுப்பப் பூசிச் சிரத்தையாற் செங்கழுநீர் சூடிப்--பரத்தை நினைநோக்கிக் கூறினு நீமொழிய லென்று மனைநோக்கி மாண விடும். (144) (மகற்பெற்ற தலைமகளினைச் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண் தலைமகன் மகற்கண்டு மகிழ்ந்த வகையினைத் தோழி கண்டு மகிழ்ந்து கூறியது) பாட்டர வம்பண் ணரவம் பணியாத கோட்டரவ மின்னிவை தாங்குழுமக்--கோட்டரவ மந்திரங் கொண்டோங்க லென்ன மகச்சுமந் திந்திரன்போல் வந்தா னிடத்து. (145) (அகன் புகன் மரபின் வாயில் தலைமகளன்பின் சிறப்பினைத் தலைமகற்கு முகம்புகன் முறைமையிற் கூறியது) மண்கிடந்த வையகத்தோர் மற்றுப் பெரியரா யெண்கிடந்த நாளா னிக;ழ்ந்தொழுகப்--பெண்கிடந்த தன்மை யொழியத் தரள முலையினாண் மென்மைசெய் திட்டாண் மிக. (146) (தலைமகன் புறத்தொழுக்கினைத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது) செங்கட் கருங்கோட் டெருமை சிறுகனையா லங்கட் கழனிப் பழனம்பாய்ந்--தங்கட் குவளையம் பூவொடு செங்கயன்மீன் சூடித் தவளையுமேற் கொண்டு வரும். (147) (இதுவுமது) இருணடந்த தன்ன விருங்கோட் டெருமை மருணடந்த மாப்பழன மாந்திப்--பொருணடந்த கற்பெருக் கோட்டாற் கனைத்துத்தங் கன்றுள்ளி நெற்போர்வு சூடி வரும். (148) (உணர்ப்புவயின் வாராது ஊடிய தலைவிமாட்டு ஊடிய தலைமகனை அறிவர் கழறியது) புண்கிடந்த புண்மனுநின் னீத்தொழுகி வாழினும் பெண்கிடந்த தன்மை பிறிதரோ--பண்கிடந்து செய்யாத மாத்திரையே செங்கயற்போற் கண்ணினா ணையாது தானாணு மாறு. (149) (தலைமகன் தலைமகளைப் புணர்ந்து மகிழ்ந்து பாணனிடங் கூறியது) கண்ணுங்கா லென்கோல் கலவையாழ்ப் பாண்மகனே! எண்ணுங்கான் மற்றின் றிவளொடுநே--ரெண்ணிற் கடல்வட்டத் தில்லையாற் கற்பெயர் சேரா ளடல்வட்டத் தாருளரே லாம். (150) (பாணற்கு வாயின் மறுத்தது) சேறாடுங் கிண்கிணிக்காற் செம்பொன்செய் பட்டத்து நீராடு மாயதிவ னின்முனா--வேறாய மங்கையரி னாடுமோ மாக்கோல்யாழ்ப் பாண்மகனே! எங்கையரி னாடலா மின்று. (151) (நெய்யணி நயந்த கிழவனைக் கிழத்தி நெஞ்சு புண்ணுறீஇக் கூறியது) முலையாலும் பூணாலு முன்கட்டாஞ் சேர்ந்த விலையாலு மிட்ட குறியை--யுலையாது நீர்சிதைக்கும் வாய்ப்புதல்வ னிற்கு முனைமுலைப்பா றார்சிதைக்கும் வேண்டா தழு. (152) (தலைமகள் தோழியிடத்துத் தலைமகனைக் காய்ந்து கூறியது) துனிபுலவி யூடலி னோக்கென் றொடர்ந்த கனிகலவி காதலினும் காணேன்--முனிவகலி னாணா நடுக்கு நளிவய லூரனைக் காணாவெப் போதுமே கண். (153) திணைமொழி யைம்பது விளக்கவுரை பழைய பொழிப்புரையுடன் 1. குறிஞ்சி அஞ்சி யச்சு றுத்துவது புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப் புகைகொடுக்கப் பெற்ற புலவோர் - துகள்பொழியும் வானுயர் வெற்ப! இரவின் வரல்வேண்டா யானை யுடைய கரம். (பழையவுரை) புகழ்மிகுந்த சந்தனங்களை வெட்டிப் புல்லும்படி எரியூட்டியமையானே புகையினைக் கொடுக்கப் பெற்ற அண்டர் துகள் பொழிகின்ற வானளவு முயர்ந்த வெற்பனே! இரவின்கண் வரல்வேண்டா; நீ வருகின்ற வழி யானை வருகின்ற சுரங்களாதலான். (1) செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது கணமுகை கையெனக் காந்தள் கவின மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும் விறன்மலை நாட! வரவரிதாங் கொல்லோ புனமு மடங்கின காப்பு. (ப-ரை.) திரட்சியையுடைய மொட்டுக்களைக் கையென்று கருதும்படி காந்தள் அழகுபெற அரும்ப, அதனை மணத்தையுடைய முகைகளென்று கருதி மந்திகள் கொண்டாடுகின்ற மிகுதியை யுடைய மலை நாடனே! நீ இங்கு வருதலரி தாங்கொல்லோ; புனங்களுந் தினையரிப் பட்டுக் காவலொழிந்தன. (2) தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது ஓங்க லிறுவரைமேற் காந்தள் கடிகவினப் பாம்பென வோடி யுருமிடிப்பக் கண்டிரங்கும் பூங்குன்ற நாடன் புணர்ந்தவந் நாட்போலா வீங்கு நெகிழ்ந்த வளை. (ப-ரை.) மலையினது பக்கமலைமேற் காந்தள் புதிதாக அழகு பெறுதலால், அவற்றின் முகைகளைப் பாம்பென்று கருதிச் சென்று உருமு இடித்தலான், அவற்றைப் பிறர் கண்டிரங்குகின்ற பூங்குன்ற நாடன் புணர்ந்த அந்நாள் போலாவாய், இக்காலத்து நெகிழ்ந்து கழன்ற வெள் வளைகள். (3) தலைமகனைத் தோழி இரவுக்குறி நயப்பித்தது. என லிடத்திட்ட வீர்மணிகொண் டெல்லிடைக் கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும் வானுயர் வெற்பன் வருவான்கொ லென்றோழி மேனி பசப்புக் கெட. (ப-ரை.) ஏனலிடத்திட்ட குளிர்ந்த மணிகளைக் கொண்டு இரவின்கட் குறவர்மக்கள் தங்குளிர் நீங்கக் காயும் வானின் கண்ணே யுயர்ந்த வெற்பன் ஈங்கு வருவான் கொல்லோ? என்னு டைய தோழி மேனியிற் பசப்புக்கெட. (4) பின்னின்ற தலைமகனைக் காவன்மிகுதி சொல்லிச் சேட்படுத்தது விரைகமழ் சாரல் விளைபுனங் காப்பார் வரையிடை வாரன்மின் ஐய! - உடைகடியர் வில்லினர் வேலர் விரைந்துசெல் லம்பினர் கல்லிடை வாழ்வ ரெமர். (ப-ரை.) விரை கமழாநின்ற சாரலின்கண் விளைபுனங் காப்பார்கள், இம்மலையின்கண் வரவேண்டா ஐயனே! கடுஞ் சொல்லினர், வில்லினர், வேலர், விரைந்து செல்லுமம்பினர் மலையின்கண் வாழ்வாராகிய வெமர். (5) இதுவு மது யானை யுழலு மணிகிளர் நீள்வரைக் கானக வாழ்க்கைக் குறவர் மகளிரே மேன லுளைய! வரவுமற் றென்னைகொல் காணினுங் காய்வ ரெமர். (ப-ரை.) யானைகள் உழன்று திரியும் அழகுமிக்க நீள்வரைக் கானகத்து வாழும் வாழ்க்கையினையுடைய குறவர் மகளிரேம் யாங்கள்; ஏனலின்கண் நீரே வருதல் என்ன பயனுளது? ஐய! நும்மைக் காணினும் நீர் வந்தீரென்று கேட்பினும் நும்மை வெகுள்வர் எமர். (6) இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது யாழுங் குழலு முழவு மியைந்தென வீழு மருவி விறன்மலை நன்னாட! மாழைமா னோக்கியு மாற்றா ளிரவரி னூரறி கௌவை தரும். (ப-ரை.) யாழுங் குழலு முழவுந் தம்முள் பொருந்தி யொலித்தாற்போல வீழாநின்ற அருவியையுடைய மிக்க மலை நாடனே! மதர்ப்பினையுடைய மான் போன்ற நோக்கினையுடை யாளும் ஆற்றமாட்டாள்: நீ இரவின்கண் வருதியாயின், ஊரும் பிறரும் அறியும் அலரைத்தரும். (7) இரந்து பின்னின்ற தலைமகளைத் தோழி சேட்படை வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின் வாங்கமை மென்றோட் குறவர் மகளிரேஞ் சோர்ந்து குருதி யொழுகமற் றிப்புறம் போந்ததி லைய! களிறு. (ப-ரை.) வேங்கை மலர்தலான் வெறி கமழா நின்ற தண் சிலம்பின் கண்ணே வளைந்த மூங்கில் போன்ற மெல்லிய தோளையு டைய குறவர் மகளிரேம் யாங்கள்; குருதி பாய்ந்தொழுக. இவ்விடத் தின்கண் போந்த தில்லை, ஐயனே! களிறு. (8) தோழி தலைமகனை இரவுக்குறி நயப்பித்தது பிணிநிறந் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க மணிமலை நாடன் வருவான்கொல் தோழி! கணிநிறை வேங்கை மலர்ந்துவண் டார்க்கும் அணிநிற மாலைப் பொழுது. (ப-ரை.) நோயான் வந்த நிறந்தீர்த்து, பெரும் பணைத்தோள் பெருப்ப அழகிய மலைநாடன் வருவான் கொல்லோ? தோழி! கணியைப் போல நாட்சொல்லும் நிறை வேங்கை மலர்ந்து வண்டுகள் ஒலியாநின்ற நீலமணி போன்ற நிறத்தினையுடைய மாலைப் பொழுதின்கண். (9) தலைமகன் சிறைப்புறத்தானாகப் படைத்து மொழி கிளவியால் தோழி வரைவு கடாயது பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன் எலவென் றிணைபயிரு மேகல்சூழ் வெற்பன் புலவுங்கொ றோழி! புணர்வறிந் தன்னை செலவுங் கடிந்தாள் புனத்து. (ப-ரை.) பலாப்பழத்தினைப் பெற்ற பசுங்கண்ணினையுடைய குரங்கினுட் கடுவன், ‘ஏடி!’ என்று தனக்கிணையாகிய மந்தியை யழைக்கும் பெற்றிய கற்கள் சூழ்ந்த வெற்பன் நம்மை யூடுங்கொல்லோ? தோழி! நங்காதலரோடு புணர்ந்த புணர்ச்சியை யறிந்து புனத்துச் செல்லும் செலவினையுந் தவிர்த்தாள் அன்னை யாதலால். (10) 2. பாலை தலைமகளது செலவுணர்ந்து வேண்டாத மனத்தாளாய்த் தலைமகள் தோழிக்குச் சொல்லியது கழுநீர் மலர்க்கண்ணாய்! கௌவையோ நிற்கப் பொருணீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார் அமிநீர வாகி யரித்தெழுந்து தோன்றி வழிநீ ரறுத்த சுரம். (ப-ரை.) செங்கழுநீர் மலர்போன்ற கண்ணினையுடையாய்! அவர் பிரிந்ததால் நிகழும் அலர் நிற்க, பொருண்மேல் நீர்மையை யுடையராய் நங்காதலர் முன் சொல்லிய சொல்லைப் பொய்த்து நம்மை நீங்குவார் போனார்; அங்குள்ளார் அழியும் நீர்மைய வாகிப் பசையறு தனக்குத் தோன்றிப் போம்வழியின்கண் நீரறுத்த சுரங்க ளின்கண்ணே. (11) யான்பிரியத் தலைமகளாற்றுமோ நீ அறிவாயா கென்ற தலைமகற்குத் தோழி சொல்லியது முரிபால வாகி முரணழிந்து தோன்றி யெரிபரந்த கான மியைபொருட்குப் போவீர்! அரிபரந்த வுண்கண்ணாள் ஆற்றாமை நும்மின் தெரிவார்யார் தேரு மிடத்து. (ப-ரை.) முரிபரந்த பருக்கையி னையுடையவாய் வலியழிந்து தோன்றி, எரிபரந்த கானகத்தின்கண் இயற்றும் பொருட் பொருட்டுச் செல்வீர்! அரிபரந்த உண் கண்ணாள் ஆற்றா ளென்னுத் திறத்தை நும்மைப்போல, பிறரறிகிற்பார் யார் ஆராயு மிடத்து? (12) பருவங் கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது ஓங்கு குருந்தோ டரும்பீன்று பாங்கர் மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்க் கலந்தனர் சென்றார் வலந்தசொ லெல்லாம் பொலந்தொடீஇ பொய்த்த குயில். (ப-ரை.) ஓங்கிய குருந்தோடே கூட அரும்புகளையீன்று பாங்கராகிய மராஅமரமும் விளங்கி மலர்ந்தன; புணர்ந்து விரவிக் கலந்து சென்ற நங்காதலர் வலந்த சொல்லெல்லாம் பழுதாக்கின, குயில்கள்: பொலந்தொடீ! (13) இதுவு மது புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாஞ் செங்கட் குயிலக வும்போழ்து கண்டும் பொருணசை யுள்ளந் துரப்பத் துறந்தார் வருநசை பார்க்குமென் னெஞ்சு. (ப-ரை.) புன்குகள் பொரிபோல மலரப் பூந்தண் பொழில்களெல்லாஞ் செங்கட் குயில்கள் கூவுகின்ற போழ்து கண்டும், முன்பு பொருணசையை யுடைய ஊக்கந்துரப்ப நம்மை நீங்கினர் வருநசையைப் பாராநின்றது என் நெஞ்சு. (14) ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலென்பது படச் சொல்லியது சிறுபுன் புறவொடு சிற்றெழால் சீறு நெறியரு நீள்சுரத் தல்குவர்கொ றோழீ! முறியெழின் மேனி பசப்ப வருளொழிந் தார்பொருள் வேட்கை யவர். (ப-ரை.) சிறிய புல்லிய புறவினொடு சிறிய புல்லூறு வெகுளும் வழியரிய நீள்சுரத்தின்கட்டங்குவர் கொல்லோ! தோழி! தளிரினது அழகு போன்றிருந்த என்மேனி பசப்ப, நம்மேலுள்ள அருளினை ஒழிந்து நிறைந்த பொருளினை வேட்ட வேட்கையை யுடையவர். (15) புணர்ந்துடன் போகிய தலைமகன் தலைமகளை ஆற்றுவித்துக் கொண்டு சொல்லியது கருங்கான் மராஅ நுணாவோ டலர இருஞ்சிறை வண்டினம் பாலை முரல அரும்பிய முள்ளெயிற் றஞ்சொல் மடவாய்! விரும்புநாம் செல்லு மிடம். (ப-ரை.) கருங்காலினையுடைய மராமரங்கள் நுணாவொடு மலர, இருஞ்சிறை வண்டினங்கள் பாலையென்னும் பண்ணினை முரல, அரும்பிய முள்ளெயிற்றினையும், அழகிய சொல்லினையு முடைய மடவாய்! நாம் செல்லும் வழியை விரும்புவாய். (16) ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலென்பது படச் சொல்லியது கல்லதர் வாயிற் கடுந்துடி கள்பம்பும் வில்லுழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொ லெல்வளை மென்றோ ணெகிழப் பொருணசைஇ நல்கா துறந்த நமர். (ப-ரை.) கல்லையுடைய வழிமருங்கினுள்ள குறும்புகளின் வாயிறோறும் அச்சத்தைச் செய்யுந் துடிகள் நின்று இயம்பும் வில்லுழுது வாழ்வார் குறும்பின்கண்ணுஞ் செல்வர் கொல்லோ? இலங்கும் வளை மென்றோள் மெலியும்படி பொருட்காதலால் நம்மை நல்காது நீங்கிய நமர். (17) செலவுக் குறிப்பறிந்த தலைமகள் உடன்படாது சொல்லியது கதிர்சுடக் கண்ணுடைந்து முத்தஞ் சொரியும் வெதிர்பிணங்குஞ் சோலை வியன்கானஞ் செல்வார்க் கெதிர்வன போலிலவே யெல்வளையோ கொன்னே யுதிர்வன போல வுள. (ப-ரை.) வெயில் சுடுதலாற் கண்பிளந்து முத்தங்களைச் சொரியாநின்ற வேய்பிணங்குஞ் சோலையையுடைய அகன்ற கானகத்துஞ் செல்லக் கருதினார்க் குடன்படுவன போன்றிருந்தன வில்லை; என்னிலங்கு வளையோ கொன்னே நிலத்தின்கட் சிந்து வன போன்றன. (18) ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது கலையொடு மானிரங்கு கல்லத ரத்த நிலையஞ்சி நீள்சுரத் தல்குவர்கொ றோழி! முலையொடு சோர்கின்ற பொன்வண்ண மன்னோ வளையொடு சோருமென் றோள். (ப-ரை.) கலையொடு மான்கள் துன்புற் றிரங்கா நிற்கும் மலைவழி களையுடைய கடறுகளின் இப்பெற்றிப் பட்டுள்ள நிலையஞ்சிச் சுரத்தின் கட்டங்குவர் கொல்லோ? தோழி! முலையோடு சோர்கின்றன பொன்போன்ற வண்ணங்கள்; அந்தோ! வளையுடனே தளர்ந்து சோர்கின்ற என்றோள்கள். (19) மகட் போக்கிய நற்றாய் சொல்லியது ஏற்றிய வில்லி னெயினர் கடுஞ்சுரம் பாற்றினஞ் சேரப் படுநிழற் கண்டஞ்சிக் கூற்றன வல்வில் விடலையோ டென்மக ளாற்றுங்கொ லைய நடந்து. (ப-ரை.) நாணேற்றிய வில்லினையுடைய வேடர் வாழும் கடுஞ்சுரத்தின் கட் பாற்றினஞ் சேரப்படுகின்ற நிழலைக் கண்டஞ்சி என்மகள் கூற்றன்ன வல்வில்லையுடைய விடலையுடனே சென்றாற்ற வல்லள் கொல்லோ மெல்லிதாக நடந்து. (20) 3. முல்லை தலைமகன் வரைவுமலிந்தது தோழி தலைமகட்குச் சொல்லியது அஞ்சனக் காயா மலரக் குருகிலை யொண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத் தண்கமழ் கோட றுடுப்பீனக் காதலர் வந்தார் திகழ்கநின் றோள். (ப-ரை.) அஞ்சனம் போலக் காயாக்கள் மலர, குருகிலைகள் ஒண்டொடியுடைய நல்லார் முறுவல்போல அழகு கொள்ள, குளிர்ந்த கோடல்கள் துடுப்புப்போலப் பூங்குலையை யீனாநிற்ப, நங்காதலர் வந்தார்: நின்னுடைய தோள்கள் விளங்கு வனவாக. (21) தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தியது மென்முலைமே லூர்ந்த பசலைமற் றென்னாங்கொ னன்னுதன் மாதராய்! ஈதோ நமர்வருவர் பன்னிற முல்லை யரும்பப் பருவஞ்செய் தின்னிறங் கொண்டதிக் கார். (ப-ரை.) நின்னுடைய மெல்லிய முலைமேலேறிய பசலை நிறம் என்னாங் கொல்லோ? நன்னுதலையுடைய மாதராய்! நமர் ஈதோ வருவர்: பற்போன்றிருந்த நிறத்தையுடைய முல்லைகள் தாம் முகையரும்பப் பருவத்தைச் செய்து கண்டார்க்கினிய நிறத்தைக் கொண்டது இக்கார். (22) இதுவுமது சென்றார் வருவர் செறிதொடீஇ! காரிஃதோ வெஞ்சின வேந்தர் முரசி னிடித்துரறித் தண்கட் னீத்தம் பருகித் தலைசிறந் தின்றையி னாளை மிகும். (ப-ரை.) நம்மைப் பிரிந்து போயினார் வருவர்; செறி தொடீஇ! இக்காலம் கார் காலமாயிருந்தது: வெஞ்சின வேந்தர் முரசுபோ லிடித்து முழங்கித் தண்கடல் வெள்ளத்தைப் பருகி மேன்மேற் சிறந்து இன்றையின் நாளை மிகுங்காண். (23) இதுவுமது செஞ்சுணங்கின் மென்முலையாய்! சேர்பசலை தீரிஃதோ வஞ்சினஞ் சொல்லி வலித்தார் வருகுறியால் வெஞ்சினம் பொங்கி யிடித்துரறிக் கார்வானந் தண்பெயல் கான்ற புறவு. (ப-ரை.) செஞ்சுணங்கினையுடைய மெல்லிய முலையாய்! நின்னைச் சேர்ந்த பசலை நீங்குவதாக; சூளுறவாகிய சொற்களைச் சொல்லி நம்மை வற்புறுத்தினார் தாம் வருதற்குச் சொல்லிய குறியால், வெஞ்சினத்தாற் பொங்கியது போல இடித்து முழங்கிக் கறுத்த முகில்கள் தண்பெயலைப் புறவின்கண்ணே யுகுத்தனவாத லால், காரிது. (24) இதுவுமது கருவியல் கார்மழை கால்கலந் தேந்த உருகு மடமான் பிணையோ டுகளும் உருவ முலையாய்! நங் காதல ரின்னே வருவர் வலிக்கும் பொழுது. (ப-ரை.) கருவியன்ற கரியமழை காற்றோடு கலந்துயர்தலால், முன் வெம்மையால் உருகும் மடமான்கள் தம் பிணையோடு உகளாநின்றன; நிறத்தையுடைய முலையாய்! நங்காதவர் இப்பொழுதே வருவார்; இக்காலம் நம்மைத் தோற்று வியாநின்றது. (25) இதுவுமது இருங்கடன் மாந்திய வேர்கொ ளெழிலி கருங்கொடி முல்லை கவின முழங்கிப் பெரும்பெய றாழப் பெயர்குறி செய்தார் பொருந்த நமக்குரைத்த போழ்து. (ப-ரை.) பெருங்கடலைப் பருகிய அழகுகொண்ட முகில், கருங்கொடி முல்லைகள் அழகுபெறும்படி முழங்கிப் பெரும் பெயல் தாழாநிற்க, பெயர்ந்து வருவேமென்று காதலர் குறிசெய்தா ராகலால், நமக்குப் பொருந்த அவருரைத்த கால மிது. (26) இதுவுமது ஆய ரினம்பெயர்த் தாம்ப லடைதரப் பாய முழங்கிப் படுகடலு ணீர்முகந்து மாயிரு ஞால மிருள்கூர் மருண்மாலை சேயவர் செய்த குறி. (ப-ரை.) ஆயர்கள் இனத்தை ஊரின்கண்ணே பெயர் வித்து ஆம்பற் குழலை மருவ, ஒலிக்குங் கடலுள் நீரை முகந்து பரக்க முழங்குதலான், மாயிரு ஞாலமெல்லாம் இருள்மிக்கு மயங்கும் மாலைப்பொழுது நம்மைப் பிரிந்து சேயராயினார் வருவதற்குச் சொல்லிய குறி. (27) பருவங்காட்டிய தோழி வற்புறுத்தியது அதிர்குர லேறோ டலைகடன் மாந்தி முதிர்மணி நாக மனுங்க முழங்கிக் கதிர்மறை மாலை கனைபெய றாழப் பிதிரு முலைமேற் சுணங்கு. (ப-ரை.) அலைகடலைப் பருகி அதிராநின்ற குரலினை யுடைய உருமேற்றோடு முதிர்ந்த மணிநாகங்கள் வருந்தும் வகை முழங்கி, வெயில்மறைந்த மாலைப் பொழுது மிக்க பெயல் தாழ்தலான், இவன் முலைமேற் சுணங்குகள் பிதிர்ந்தாற்போல இனிப் பரக்கும். (28) இதுவுமது கோடலங் கூர்முகை கோளாரா நேர்கருதக் காடெலாங் கார்செய்து முல்லை யரும்பீன வாறெலா நுண்ணறல் வார வணியிழாய்! போதராய் காண்பாம் புறவு. (ப-ரை.) காந்தளின் மிக்க அரும்புகள் கோளராவிற்கு மாறாகக் கருதிக் காடெல்லாங் கார்ப்பருவத்தைச் செய்து முல்லையரும்புகளை யீன, வழிகளெல்லாம் நுண்ணிய அறல் மணல் மேலொழுகுதலால், அணி யிழையை யுடையாய்! புறவினைக் காண்பாம் போதராய். (29) இதுவுமது அருவி யதிரக் குருகிலை பூப்பத் தெரியா வினநிரை தீம்பால் பிலிற்ற வரிவளைத் தோளி! வருவார் நமர்கொல் பெரிய மலர்ந்ததிக் கார். (ப-ரை.) மலையருவிகள் வந்து முழங்க, குருகிலைகள் பூப்ப, ஆனினங்கள் இனிய பாலைப்பொழிய, வரிவளைத் தோளினையுடையாய்! நமர் வருவார் கொல்லோ? பெரிய வாயுள்ள அழகுகளை மலர்ந்தது இக்கார் ஆதலான். (30) 4. மருதம் தலைமகள் வாயின் மறுத்தது பழனம் படிந்த படுகோட் டெருமை கழனி வினைஞர்க் கெறிந்த பறைகேட் டுரனழிந் தோடு மொலிபுன லூரன் கிழமை யுடையனென் றோட்கு. (ப-ரை.) பழனத்தின்கட் படிந்த படுகோட்டினையுடைய எருமை கழனியின்கட் டொழில் செய்வார்க்கு எறிந்த பறையொலி யைக் கேட்டு வெருவி, அறிவழிந்தோடும் ஒலிபுனலையுடைய வூரன் என்றோட் குரிமை யுடையவன் என்னும் இத்துணையே யமையும்: அவன் எனக்கு நல்குதல் வேண்டுவதில்லை. (31) இதுவுமது கணைக்கா னெடுமருது கான்ற நறுந்தா திணைக்கால நீலத் திதழ்மேற் சொரியும் பணைத்தாட் கதிர்ச்செந்நெற் பாய்வய லூர னிணைத்தா னெமக்குமோர் நோய். (ப-ரை.) திரண்ட காலையுடைய மருதுகள் உகுத்த நறுந் தாதுகள் ஒத்த தாளினையுடைய நீலங்களின் இதழ் மேலே சொரியும் பெருந்தாட் கதிரையுடைய செந்நெற் பரந்த வயலூரன் பரத்தையர்க் கின்பத்தை இணைத்தலே யன்றி, எமக்குமோர் பசலை நோயினை யிணைத்தான். (32) தோழி வாயின் மறுத்தது கடையாயார் நட்பேபோற் காஞ்சிநல் லூர! உடைய விளநல முண்டாய் - கடைய கதிர்முலை யாகத்துக் கண்ணன்னார் சேரி யெதிர்நல மேற்றுநின் றாய். (ப-ரை.) கீழாயினார் நட்பே போலக் காஞ்சிமரங்களை யுடைய நல்லூரனே! என்றோழியுடைய இளநலமெல்லாம் முன்பு நுகர்ந் தாய்; பின்னை அக் கதிர்முலை யாகத்துக் கண்ணனையார் சேரிக் கட்சென்று மற்றவர் இளமை எதிர் நலத்தை எதிரேற்று நின்றாய். (33) தலைமகள் பாணற்கு வாயின் மறுத்தது செந்நெல் விளைவய லூரன் சிலபகற் றன்னல மென்னலார்க் கீயா னெழுபாண! பாரித்த வல்குற் பணைத்தோளார் சேரியுள் வாரிக்குப் புக்குநின் றாய். (ப-ரை.) செந்நெல் விளைகின்ற வயலினையுடைய ஊரன் முன்பு சில நாள் தன்னலத்தை யானல்லாதார்க் கீயான்; இப்பொ ழுது பாரித்த அல்குற் பணைத்தோளையுடைய பரத்தையர் சேரியின் கண் மற்றவர் தலைமகற்கே நல்கும் வாரிக்குப் புக்கு நின்று ஆராய்வாயாக: ஆகையால், பாண! இங்குநின்றும் எழுவாயாக. (34) இதுவுமது வேனிற் பருவத் தெதிர்மல ரேற்றூதுங் கூனிவண் டன்ன குளிர்வய னல்லூரன் மாணிழை நல்லா ரிளநல முண்டவர் மேனி யொழிய விடும். (ப-ரை.) வேனிற்காலத் தெதிர்ந்த மலர்களை ஏற்றுக் கொண்டூதும் கூனிவண்டு போலுங் குளிர்வயல் நல்லூரன்; ஆக லான், மாட்சிமைப்பட்ட இழையையுடைய நல்லாரின் நலத்தை நுகர்ந்து மற்றவர் உடம்பினை ஒழிய விடும். (35) தோழி வாயில் நேர்வாள் கூறியது செந்தா மரைமலருஞ் செய்வய னல்லூர! நொந்தான்மற் றுன்னைச் செயப்படுவ தென்னுண்டாந் தந்தாயு நீயே தரவந்த நன்னலங் கொண்டாயு நீயாயக் கால். (ப-ரை.) செந்தாமரைகள் மலராநின்ற செய்யப்பட்ட வயல்களையுடைய நல்லூர! நீ செய்த பிழைகட்கு நொந்தால் மின்னைச் செய்யப்படுவ தென்னுள்ள தாம்? என்றோழி நலத்தைத் தந்தாயு நீயே; தரவந்த நன்னலத்தைக் கொண்டாயும் நீயேயாயினால். (36) பாணற்குத் தலைமகள் வாயின் மறுத்தது பல்காலும் வந்து பயின்றுரையல் பாண! கே ணெல்சேர் வளவய லூரன் புணர்ந்தநா ளெல்வளைய மென்றோளே மெங்கையர் தம்போல நல்லவரு ணாட்டமி லேம். (ப-ரை.) பல பொழுதும் வந்து பயின்று சொல்லற்க; பாணனே! கேட்பாயாக; நெற் செறிந்த வளவயலூரன் எம்மைப் புணர்ந்த முன்னாளின் கண்ணும் எல்வளையம் மென்றோளேம்: எங்கையர் தம்மைப்போல நல்ல மடந்தையருள் வைத்து அவனாலெண்ணப் பட்டிலேம். (37) இதுவுமது நல்வய லூர நலமுரைத்து நீ பாண! சொல்லிற் பயின்றுரைக்க வேண்டா வொழிதிநீ யெல்லுநன் முல்லைத்தார் சேர்ந்த விருங்கூந்தல் சொல்லுமவர் வண்ணஞ் சோர்வு. (ப-ரை.) நல்ல வயலூரனுடைய நன்மையெல்லாம் நாங்களே அறிந்து உரைக்க வல்லேம்; பாணனே! நீ சொல்லாற் பயின்றுரைக்க வேண்டா; இனி ஒழிவாயாக; நிறமிக்க நன் முல்லைமாலை சேர்ந்த இருங்கூந்தலையுடைய பரத்தையே சொல்லா நின்றாள்; தன் மாட்டவர் காதலித்த வண்ணத்தையும், எம்மாட்டுள்ள அவரது இகழ்ச்சியையும். (38) வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயின் மறுத்தது கருங்கயத் தாங்கட் கழுமிய நீலம் பெரும்புற வாளைப் பெடைகதூஉ மூரன் விரும்புநாட் போலான் வியனல முண்டான் கரும்பின்கோ தாயினேம் யாம். (ப-ரை.) பெருங்கயத்த இடத்தின்கட் செறிந்த நீலங்களைப் பெரும் புறத்தினையுடைய வாளைப் பெடைகள் கதுவுகின்ற ஊரன் எம்மை விரும்பின நாட்போலான்; எம்முடைய வியனலத்தை முன்னே யுண்டான்; ஆதலான் இப்பொழுது கரும்பின் கோது போலவாயினேம். (39) இந்நிலத்தின்கண் இன்ன பெற்றியால் வருவாயாக வெனச் சொல்லியது ஆம்ப லணித்தழை யாரந் துயல்வருந் தீம்புன லூரன் மகளிவ ளாய்ந்தநறுந் தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த் தாமரை தன்னையர் பூ. (ப-ரை.) ஆம்பலாற் செய்யப்பட்ட அணித் தழையும் ஆரமும் அல்குலின் கண்ணும், முலையின் கண்ணும் அசைந்து வருகின்ற தீம்புனலூரன் மகள் இவள் இவ்வூரின் கண் ஆய்ந்த நறுமலர் நீலம் பெண்பால் கட்டிச் சூடும் பூமாலை செறிந்த மலர்த் தாமரை மாலை அவள் ஐயன்மார்க்குச் சூடும் பூவாதலால், நீயும் தாமரை மாலையைச் சூடி வருவாயாக. (401) 5. நெய்தல் அல்ல குறிப்பட்டுப் பெயர்ந்த தோழி தலைமகன் சிறைப்புறத் தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது நெய்தற் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன் கைதைசூழ் கானலுட் கண்டநாட் போலானான் செய்த குறியும்பொய் யாயின வாயிழையாய்! ஐயகொ லான்றார் தொடர்பு. (ப-ரை.) நெய்தற்படப்பை நிறைகழித் தண் சேர்ப்பன் தாழை சூழ்ந்த கானலின்கண் நம்மைக்கண்ட முதனாள் போலானான்; அவனாற் செய்யப் பட்ட குறிகளும் பிழைத்தன; ஆயிழையாய்! அமைந்த நட்புச் செறிந்தன்றாகாதே யிருப்பது. (41) தோழி வரைவு கடாயது முத்த மரும்பு முடத்தாண் முதுபுன்னை தத்துந் திரைதயங்குந் தண்ணங் கடற்சேர்ப்ப! சித்திரப் பூங்கொடி யன்னாட் கருளீயாய் வித்தகப் பைம்பூணின் மார்பு. (ப-ரை.) முத்தம்போல வரும்பாநின்ற முடத்தாண் முது புன்னையின்கண் வந்து தந்தானின்ற திரைகள் துளங்காநின்ற தண்ணங் கடற் சேர்ப்பனே! எழுதிய சித்திரப்பூங்கொடி யன் னாட்கு நின்னருளினாலே நல்காய்; வித்தகப் பைம்பூணையுடைய நின் மார்பினை. (42) அல்ல குறிப்பட்டுப் பெயர்ந்த தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது எறிசுறா நீள்கட லோத முலாவ நெறியிறாக் கொட்கு நிமிர்கழிச் சேர்ப்ப னறிவறா வின்சொ லணியிழையாய்! நின்னிற் செறிவறா செய்த குறி. (ப-ரை.) எறிசுறாவையுடைய நீள்கடலின் கண்ணுள்ள வோதம் வந்துலாவ வரிவரியாயிருந்துள்ள மேனியையுடைய இறாக் கள் சுழன்று திரிதருஞ் சேர்ப்பன் நின்னறிவின்கண் நீங்கா திருந்த இன்சொல் அணியிழையை யுடையாய்! நின் மனையின் புறத்து அச்சேர்ப்பன் செய்த குறிகள் பலகாலு முள வாகா நின்றன. (43) தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது இனமீ னிருங்கழி யோத முலாவ மணிநீர் பரக்குந் துறைவ! தகுமோ குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்க நினைநீர்மை யில்லா வொழிவு. (ப-ரை.) இனமீன்களையுடைய இருங்கழியின் கண்ணே வந்து ஓதங்க ளுலாவ நீலமணிபோன்ற நீர்பரக்குந் துறைவனே! தகுவதொன்றா குணத் தன்மை குன்றாக் கொடியன்னாள் திறத்து நினையு நீர்மையின்றி யொழிதல் நினக்கு? (44) இதுவுமது கடல்கொழித் திட்ட கதிர்மணி முத்தம் படமணி யல்குற் பரதர் மகளிர் தொடலைசேர்த் தாடுந் துறைவ! என்றோழீ யுடலும் உறுநோய் உரைத்து. (ப-ரை.) கடல் கொழித்துச் சிந்திய கதிர்மணி முத்தத்தைப் படம்போன்ற அழகிய அல்குற் பரதர் மகளிர் மாலையாகச் சேர்த்து விளையாடும் துறைவனே! என் தோழி மறுகாநிற்கும் தன்னுறு நோயை எனக் குரைத்து. (45) இதுவுமது முருகியல் கான லகன்கரை யாங்கண் குருகின் மார்க்குங் கொடுங்கழிச் சேர்ப்ப மருவி வரலுற வேண்டுமென் றோழி உருவழி வுண்ணோய் கெட. (ப-ரை.) ஈறுவிரை யுளதாகிய கானலையுடைய அகன்ற கரையின் கட்குருகினம் ஆராநின்ற கொடுங்கழிச் சேர்ப்பனே! பயின்று வருதலைச் செய்யவேண்டும்: என்றோழி மாமை நிறம் அழியாநின்ற உள்ளத்தின்கண் நோயொழிய. (46) தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியாற் சொல்லெடுப்பப்பட்டுத் தலைமகள் சொல்லியது அணிபூங் கழிக்கானல் அற்றைநாட் போலான் மணியெழின் மேனி மலர்பசப் பூரத் துணிகடற் சேர்ப்பன் றுறந்தான்கோ றோழி! தணியுமென் மென்றோள் வளை. (ப-ரை.) அணிந்த பூக்களையுடய கழிக்கானலின்கண் கண்ட அற்றைநாட் போலான்; மணியெழின் மேனியின்கண் மிக்க பசப்பேறும் வகை துணிகடற் சேர்ப்பன் எம்மை மிகவே துறந்தான் கொல்லோ! என் மென்தோள் வளைகள் நீங்கா நின்றன. (47) தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது கறங்கு மணிநெடுந்தேர் கண்வா ளறுப்பப் பிறங்கு மணன்மே லலவன் பரப்ப வறங்கூர் கடுங்கதிர் வல்லிரைந்து நீங்க நிறங்கூரு மாலை வரும். (ப-ரை.) ஒலிக்கும் மணியையுடைய நெடுந்தேர் கண்டார் கண்ணினொளியை யறுப்ப, உயர்ந்த மணன் மேல் அலவன் பரப்ப, வெம்மை மிக்க கடிய வெயில் கடிதாக நீங்க, செக்கர் நிறமாக நிறமிக்க மாலைப் பொழுதின்கண் நங் காதலன் வரும். (48) தலைமகன் பாங்கற்குச் சொல்லியது மயில்கொன் மடவாள்கொல் மாநீர்த் திரையுட் பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர்! குயில்பயிரும் கன்னி யிளஞாழற் பூம்பொழி னோக்கிய கண்ணின் வருந்துமென் னெஞ்சு. (ப-ரை.) மயிலோ? மடவாளோ? மாநீர்த் திரையின் கண் பயின்றுறைவ தோர் தெய்வங் கொல்லோ? கேளீரே! குயில்கள் கூவாநின்ற கன்னியிள ஞாழற் பூம்பொழிலின் கண் அவரை நோக்கிய என் கண்ணினு மிக வருந்தாநின்ற தென் னெஞ்சு. (49) பகற்குறிக்கட் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி வரைவுகடாயது. பவளமு முத்தும் பளிங்கும் விரைஇப் புகழக் கொணர்ந்து புறவடுக்கு முன்றில் தவழ்திரைச் சேர்ப்பன் வருவான்கொ றோழி! திகழுந் திருவமர் மார்பு. (ப-ரை.) பவளத்தினையும் முத்தினையும் பளிங்கினையும் கலந்து, பிறர் புகழக் கொண்டுவந்து, மனைசூழ்ந்த படப்பையை யணைந்த முற்றத்தின்கண் வந்து வழங்குகின்ற திரையையுடைய சேர்ப்பன் விரைந்து வருவான் கொல்லோ? தோழி! முன்பு போலப் பொலிவழிந்திரா நின்ற அழகமைந்த மார்பும் பொலியுடைத்தாய் இருந்ததாதலான், எம்பெருமான் விரைந்து வருமென்று முற் கொண்டு நமக்கு அறிவிக்கின்றதுபோலும். (50) குறிப்புகள் 1. தீம்பெயல் வீழ என்றும் பாடம் 2. பொழுது என்றும் பாடம் 1. கொடுங்குழை என்றும் பாடம். 2. இழிந்தெழுந் தோங்கும் என்றும் பாடம். 1. கவின்கொள என்றும் பாடம். 1. நெறியிடை என்றும் பாடம். 1. திண்ணிதால் என்றும் பாடம். 1. ஏமார்ந்த என்றும் பாடம். 1. அசோகினிளந்தளிர் என்றும் பாடம். 1. எல்லியும் என்றும் பாடம். 2. செயல் என்றும் பாடம். 1. தோன்றிசின் மென்மொழி என்றும் பாடம். 2. பாராட்டில் என்றும் பாடம். 1. குமிழிணைப்பூ என்றும், குமிழிணர்ப்பூ என்றும் பாடம். 1. திரை நாற என்றும் பாடம் 1. கொள்ளப் பிறக்கும் என்றும் பாடம். 1. சென்று என்றும் பாடம். 1. பூமி புரள என்றும் பாடம். 2. உயர்நிலை என்றும் பாடம். 3. இணைதாழ என்றும் பாடம். 1. கருங்கதிர் என்றும் பாடம். 2. கணிவண்ணம் என்றும், கொண்டது என்றும் பாடம். 1. ‘முற்பகல்’ என்றும் பாடம். 2. ‘பிறபகல்’ என்றும் பாடம். 1. ‘எழூஉம்’ என்றும் பாடம். 1. ‘தூவெறிந்து’ என்றும் பாடம். 1. ‘மெய்ம்மறைப்ப’ என்றும் பாடம். 1. ‘இருங்கடலுணீலச்சுறாப்பிறழ்வ’ என்றும் பாடம் 1. ‘மைந்திழந்தாரிட்ட’ என்றும் பாடம் 1. ‘கைகடுணிக்க’ என்றும், 2. ‘திகழொளிய’ என்றும் பாடம். 1. ‘விளக்குப்போன்றனவே’ என்றும் பாடம். 1. ‘தடற்றிலங்கொள்வாள்’ என்றும் பாடம். 1. ‘எஃகங்காழ்’ என்றும் பாடம் 2. ‘தோன்றி’ என்றும் பாடம் 3. ‘தோற்றந்திரலிலா’ என்றும் பாடம். 2. தொல்வலியிற்றீர என்பதுவே சிறந்த பாடம். 1. ‘பூவியன்ற நீர்மிடா’ என்று பாடங் கொள்ளுதல் வேண்டும். 2. ‘வாளர்’ என்றும், 3. ‘ஓரி இகலனவாய்’ என்றும், 4. ‘வாய்துற்றிய ’ என்றும் பாடம். 1. ‘மடங்கன் மறமொய்ம்பின்’ என்றும் பாடம். 1. ‘செவ்வென்றாள்’ என்றும் பாடம். 1. ‘குடர் கொடு’ என்றும் பாடம். 1. பொற்பன வெள்ளியை என்றும் பொற்பன வூர்தியை என்றும் பாடம். 2. மறப்பின்னாது என்றும் பாடம். 1. ஊணின்னாது என்றும் பாடம். 1. உடையின்னாது என்றும் பாடம். 1. புரைசேர் என்றும் பாடம். 1. கடு மொழி யின்னா என்றும் பாடம். 1. மனைவி தொழி லின்னா என்றும் பாடம். 1. வணரொளி என்றும் பாடம். 1. விழைவின்னா என்றும் பாடம். 1. அகம்வறியாளர் என்றும் பாடம். 1. கானாது என்றும் பாடம். 2. அறைபறை யாயவர் என்றும் பாடம். 1. உயிர்க்கின்னாது என்றும் பாடம். 2. இடுக்க ணனிகண்டா னன்கின்னா என்றும் பாடம். 3. கண்டாற் பெரிதின்னா என்றும் பாடம். 1. கிழமை யுடையாரை என்றும் பாடம். 1. மானாகம் என்றும் பாடம். 2. இன்னா தறிவறியான் என்றும் பாடம். 3. கீழ்நீர்ப்பாய்ந் தாடுதல் என்றும் பாடம். 1. நெ டுமாநீள் கோட்டுயர் பாஅய்த லின்னா என்றும் பாடம். 1. எண்ணறிய மாந்தர் என்றும் பாடம். 2. தன்மையிலாளர் என்றும் பாடம். 1. நடக்கி னனியின்னா என்றும் பாடம். 2. ஒழுக்கமிலாளர்க் குறைவுரைத்தல் என்றும் பாடம். 3. விழித்தகுநூலும் என்றும் பாடம். 1. குழலிலினிய என்றும் பாடம். 1. துறையறியா நீரிழிந்து என்றும் பாடம்.