நாவலர் பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் 1 ஆராய்ச்சி நூல்கள் திருவள்ளுவர் தசரதன் குறையும் கைகேயி நிறையும் சேரர் தாயமுறை சேரர் பேரூர் தொகுப்பாசிரியன்மார் முனைவர் ச.சாம்பசிவனார் முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி ஆதி பதிப்பகம் சென்னை - 600 004. நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் -1 தொகுப்பாசிரியர் : ச. சாம்பசிவனார், ம.சா. அறிவுடைநம்பி பதிப்பாளர் : ஆ. ஆதவன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 304 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உரூபா. 190/- படிகள் : 1000 அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : ஆதி பதிப்பகம் 4/2, 2 வது மாடி சீனிவாசா தெரு, மயிலாப்பூர், சென்னை - 600 004. பதிப்புரை 20ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழி, இன மேம்பாட்டிற்கு அரும்பாடுபட்ட தலைவர்களில் முன்னவர். இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்காக இவர்தம் குடும்பம் சிறைசென்று பெரும் பங்களிப்பைச் செய்த குடும்பம்; வணங்குவோம். பெருமை பெற்ற பிறப்பினர் முதல் , முத்தமிழ்ப் பட்டம் பெற்ற முது முனைவர் வரை 15 பெருந் தலைப்புகளில் உள்ளடக்கி நாவலர் சோமசுந்தர பாரதியார் எனும் தலைப்பில் அவர்தம் அருமை பெருமைகளை, ஆய்வு நெறிமுறைகளை தமிழின் பாலும், தமிழினத்தின்பாலும், இந்தியப் பெரு நிலத்தின் விடுதலை யின்பாலும் அவர் கொண்டிருந்த பற்றினை ஆசிரியர் ச. சாம்ப சிவனார் எழுதி சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள நூலில் காண்க. எனது அன்புள்ள பெரியார் பாரதியார் அவர்களுக்கு, ஈ.வெ.ராமசாமி வணக்கம். என்று தொடங்கி தயவு செய்து தங்களது அபிப்பிராயத்தையும், யோசனையையும் தெரிவிக்க வேண்டுகிறேன்- . இது தந்தை பெரியார் நாவலர் பாரதியாருக்கு எழுதிய கடித வரிகள். குகை விட்டுக் கிளம்பிய புலியெனப் போர்க்கோலம் கொண்டு, ஊரை நாடி, மக்களைக் கூட்டி உரத்த குரலில், உறங்கிடுவோருக்கும் உணர்ச்சிவரும் வகையில் தமிழின் தன்மையை, அதன் சிறப்பை, அதனை அழிக்க வரும் பகையை, அந்தப் பகையை வெல்லவேண்டிய இன்றியமையாமையை எடுத்துச் சொன்னார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றினார். தமிழ் கற்றதன் கடனைத் தீர்த்தார்! - இது பேரறிஞர் அண்ணா கூறியது. அவர் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த தலைவர்கள், சான்றோர்கள், பாவலர்கள் கூறிய அரும்பெரும் செய்திகள் ஐந்தாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. தலைவர்களாலும். நண்பர்களாலும், ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் மதித்துப் போற்றிய பெருமைக்குரியவர். தாய்மொழி வழிக் கல்வி கற்கும் நிலை வரவில்லையே? என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நாவலர் பாரதியார் கூறியது இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளது. தாய்மொழி வழிக் கல்வி வளரும் இளம் தமிழ்த் தலைமுறைக்குக் கட்டாயம் கற்பிக்கப்படவேண்டும் என்று அன்று அவர் கூறியது இன்றும் நிறைவேறவில்லையே என்பது தமிழ் உணர்வாளர்களின் ஏக்கமும் கவலையும் ஆகும். இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசு தாய்மொழி வழிக் கல்விக்கு முதன்மைதரும் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி நடைமுறைக்கு வருமானால் தமிழ் உணர்வாளர்களின் கவலைக்கு மருந்தாக அமையும். தமிழ் மரபு இது; அயல் மரபு இது! என்று கண்டு காட்டியவரும், இந்தி ஆதிக்கத்தைத் தமிழகத்தில் முதன் முதலில் எதிர்த்தவருமான செந்தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் படைப்புகளையும், கட்டுரைகளையும் தொகுத்து ஆறு தொகுதிகளாக நாவலர் பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் எனும் தலைப்பில் வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம். இத்தொகுப்புகள் செப்பமுடன் வெளிவருவதற்கு வழிகாட்டியதுடன், உதவியும் செய்த தொகுப்பாசிரியன்மார் ச.சாம்பசிவனார், ம.சா. அறிவுடைநம்பி ஆகிய பெருமக்களுக்கு எம் நன்றி. இந்நூலாக்கத்திற்குக் கணினியில் தட்டச்சுச் செய்த திருமதி. விசயலெட்சுமி, திரு.ஆனந், செல்வி. அனுராதா, திரு. சிவமூர்த்தி ஆகியோருக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய திரு.இராசவேலு, திரு. கருப்பையா, திரு.சொக்கலிங்கம் ஆகியோருக்கும், அட்டைப் படம் செய்த செல்வி வ.மலர் மற்றும் குமரேசன், நூல் கட்டமைப்பாளர் (Binder) வே.தனசேகரன், மு.ந.இராமசுப்ரமணிய ராசா ஆகியோருக்கும் எமது நன்றி. இந்நூல்களை வாங்கிப் பயனடைவீர். - பதிப்பாளர் பொருளடக்கம் பதிப்புரை 3 1. நுழைவாயில் 7 2. திருவள்ளுவர் 20 3. தசரதன் குறையும் கைகேயி நிறையும் 62 4. சேரர் தாயமுறை 165 5. சேரர் பேரூர் 223 6. பெயர் அகராதி 299 நுழைவாயில் முன்னுரை: பெருமக்களின் வாழ்க்கைகளே வையகத்தின் சிறந்த ஆசிரியர்கள்”1 என்பர் அறிஞர். பாரதிர்ந் தெழுந்து யார்யாரெனக் கேட்குமா(று) ஊரெழுந் தோடி, எம் உயிரெனக் கூறுமா(று) ஏரெழுந் தன்ன, எம் பாரதி எழுந்துசொல் மாரி பெய்வான், புனல்மாரி பெய்வான்என, மாத மும்மாரி இம்மண்ணிடைப் பொய்ப்பினும் நாத மும்மாரி நடாத்துவான் பாரதி!2 என்பது கவிஞர் கண்ணதாசன் கூற்று. 1879ஆம் ஆண்டில் பிறந்து, 1959 ஆம் ஆண்டில் மறைந்த நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், மேற்காட்டிய அறிஞர்களின் கூற்றுக்கிணங்க, இவ் வையகத்தின் சிறந்த ஓர் அறிஞராகப் பிறங்கியவர். அன்னைத் தமிழுக்குத் தம் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவிட்ட இவ் வித்தகச் செல்வர் எழுதிய நூல்களில் “திருவள்ளுவர், தசரதன் குறையும் கைகேயி நிறையும், சேரர் தாய முறை, சேரர் பேரூர் எனும் இந்நான்கும் அறிஞர் பெருமக்களால் பெரிதும் போற்றப்படுபவை. இவ் ஆராய்ச்சி நூல்களைப் பற்றிய ஒருசிறு அறிமுகம் இவண் தரப்படுகின்றது. நாவலர் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் நாவலர் ச.சோ. பாரதியாரின் வாழ்க்கை வரலாறு சுவை யுடையது; பிறரால் பின்பற்றத்தக்கது. இவரது வரலாற்றையும், இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளையும் முன்னர்யான் எழுதிய நூல்களில்1 பரக்கக் காணலாம். எனினும் சுருக்கமாக ஒருசில சுட்டுதல் சாலும்: 1. இவர் , எட்டையபுரத்தில் பிறந்து, அரண்மனையில் வளர்ந்து, கல்வி கற்று, வழக்கர் தொழில் மேற்கொண்டு, பல்கலைக் கழகப் பேராசிரியர் பணிபூண்டு, இரு பெண்களை மணம் புரிந்து, மக்கட்செல்வம் பெற்று, எண்பதாண்டுகள் வாழ்ந்த பெரியர்; 2. எட்டையபுர அரண்மனைச் சூழல், சி.சு. பாரதியாரின் நட்பு, நெல்லைத் தமிழ்ப் புலவர் தொடர்பு, சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர்கள் புகட்டிய அறிவு, வ.உ. சிதம்பரனாரின் தொடர்பு முதலாயின இவரின் தமிழ்த் தொண்டிற்கு அடிப்படையாய் அமைந்தன. 3. செம்மல் சிதம்பரனார் தொடங்கிய கப்பல் கம்பெனியின் செயலராக இருந்து, இந்திய நாட்டின் விடுதலைக்காக வீரமுழக்கமிட்ட சிறப்பும் இவருக்கு உண்டு; 4. இவரது தமிழ்த் தொண்டிற்குச் செல்வம், தொழில், ஆங்கிலப் புலமை பெரிதும் துணைபுரிந்தன; 5. இவர், ஆடவரிற் சிறந்த அண்ணல் எனும்படி தோற்றப் பொலிவும், அஞ்சாமைப் பண்பும் உடையவராய்த் திகழ்ந்தார்; 6. புதிய ஆராய்ச்சி நூல்களைப் படைத்தல் முதலாய பல்வேறு தமிழ்ப்பணிகளையும் ஒருங்கே ஆற்றிய பெருந்தகையாளர். தலையாய தமிழ்த்தொண்டு! நாவலர் பாரதியார் ஆற்றிய தமிழ்த் தொண்டுகள் பலப்பல; அவற்றுள் சிலமட்டும் இவண் குறிப்பிடல் பொருந்தும் : 1. தொல்காப்பியம் போன்ற பழந்தமிழ் இலக்கணத்திற்கும், பிற இலக்கியத்திற்கும் புத்துரை காண்டல்; 2. அரிய ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக இதுகாறும் எவரும் கூறாதவாறு புதுமைக் கருத்துக்களை எடுத்துக்காட்டல்; 3. மாநாடுகள், ஆண்டு விழாக்கள், பாராட்டு விழாக்கள், இலக்கிய மன்றக் கூட்டங்கள் முதலானவற்றிற் கலந்து கொண்டு, சொற்பொழிவுகள் வாயிலாகத் தமிழுணர்ச்சி ஊட்டுதல்: 4. அரசியல் மேடைகளையும் தமிழ் மேடையாக்குதல்; 5. இந்தி கட்டாய மொழி என ஆக்கப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்துத் தமிழ் காக்கும் போரில் முன்னிற்றல்; 6. வழக்கறிஞர் தொழிலில் கிடைத்த பெரு வருவாயினையும் வெறுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் பொறுப்பேற்றல்; 7. முனைவர் அ. சிதம்பரநாதச் செட்டியார் போன்ற தமிழ் காக்கும் பேரறிஞர்களை உருவாக்கல்; 8. தமிழ்ப் புலவர்களைப் போற்றுதல்; 9. வறுமையால் வாடிய தமிழ்ப் புலவர்கட்குப் பொருளுதவி செய்தல்; 10. பேச்சாலும், எழுத்தாலுமன்றிச் செயலாலும் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடல்; 11. பதவியைப் பெரிதெனக் கருதாது, தமிழுக்கு ஊறு நேர்ந்த போதெல்லாம் அஞ்சாது தடுத்து நிறுத்தல்; 12. தமிழில் மட்டுமின்றி ஆங்கிலக்கட்டுரைகள் வாயிலாகவும் தமிழ்ப் பெருமையை உலகோரும் அறியச் செய்தல்; 13. தமிழில் நல்ல நடையை (ளுவலடந)க் கையாண்டு, பிறர்க்கும் வழி காட்டுதல்; 14. ஆய்வு நெறிமுறைகள் இவை எனக் காட்டி, மாணவரிடையே ஆய்வுமனப்பான்மையை உண்டாக்கித் திறனாய்வுத் துறையை வளர்த்தல்; 15. யார் எது கூறினும், மெய்ப் பொருள் காண்பதே நோக்கமாகக் கொண்டு அதனை வெளிக் கொணர்தல்; 16. தமிழ் மரபு - ஆரிய மரபு இவ்விரண்டிற்குமிடையே காணலாகும் வேறுபாடுகளை அஞ்சாது எடுத்துரைத்துப் பண்டைத் தமிழ் மரபினைக் காக்க வற்புறுத்தல். இவ்வாறு பல்வகையானும் தமிழ்ப் பணிசெய்த பான்மையினால், நாவலர் பாரதியார், தாம் வாழ்ந்த காலத்திலேயே, ‘நாவலர்’, ‘கணக்காயர்’, டாக்டர் எனும் பட்டங்கள் பெற்றுப் பெரும் புகழுக்குரியரானார். திருவள்ளுவர் தமிழகத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவரைப்பற்றி எழுந்த கட்டுக்கதைகள் பல! அவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்த பெருமைக்கு உரியவருள் நாவலர் பாரதியாரும் ஒருவர். திருவள்ளுவரைப்பற்றிய மெய்யான வரலாற்றைப் பல்வேறு சான்றுகள் காட்டித் திருவள்ளுவர் எனும் அரிய ஆராய்ச்சிநூல் (தமிழ், ஆங்கிலம்) வாயிலாக உலகுக்கு உணர்த்தியவர் இவர். இந்நூல் வாயிலாக இவர் - கூறும் முடிவு களாவன : 1. திருவள்ளுவர், புலைமகளின் பழிமகவல்லர்; 2. மயிலையில் வாழ்ந்தவரல்லர்; 3. ஏலேலசிங்கரின் உதவி பெற்றவரல்லர்; 4. மூன்றாம் சங்கத்தின் முற்காலத்தே வாழ்ந்தவர்; 5. மதுரையில் வாழ்ந்தவர்; 6. மாதானுபங்கியை மணந்தவர்; 7. குறளடியால் அறம்பாடி உலகுக்களித்தவர்; 8. பண்டைப் பாண்டியரின் உள்படுகருமத் தலைவராயிருந்தவர்; 9. அருந்தமிழ் வேளிர்குடியில் தோன்றிய பெரியர். நீதி நூல்களின் தோற்றத்திற்கு அடிப்படை வட மொழி நூல்களே என்றும்; வள்ளுவரும் பிரமதேவர் எழுதிய திரிவர்க்கம் என்ற நூலைச் சுருக்கியே முப்பாலாக மொழிந்தார் என்றும்; அதனாற்றான் அவரை நான்முகன் அவதாரம் என்றும் கூறுவதுண்டு. 1 இதனை நாவலர் பாரதியார் பின்வருமாறு இந்நூலில் வன்மையாக மறுத்துரைக்கின்றார்: ஆரிய தரும சாத்திர முறை வேறு; தமிழற நூன் மரபு வேறாகும்; இரு முறைகளையும் ஒத்துணர்ந்த வள்ளுவர் திருக்குறள் தமிழ் மரபு வழுவாது பொருளின் பகுதி களான அகப்புறத் துறையறங்களை மக்கள் வாழ்க்கை முறைக்கா மாறு? ஆராய்ந்து அறுதியிட்டு வடித் தெடுத்து விளக்கும் தமிழ்நூல். தமிழிற் பெருமையுடைய அனைத்தும், ஆரிய நூல் களினின்று திரட்டப்பட்டிருப்பதாகக் காட்டி மகிழ்வார் சிலர்க்கன்றி, நடுநிலையாளருக்கு வள்ளுவர் குறள் தமிழில் தனி முதலற நூலேயாகு மென்பது வெள்ளிடை மலையாம்!2 இவ்வாறே நூலின் பல்வேறிடங்களிலும், அறிவுக்குப் பொருந்தாக் கருத்துக்களை மறுத்துரைக்கும் நாவலர் பாரதியாரது நுண்மாண் நுழைபுலம் கண்டு மகிழமுடிகின்றது. இத் திருவள்ளுவர் ஆராய்ச்சியை அறிஞர் பலரும் ஒருமுகமாகப் பாராட்டியுள்ளனர். அவர்களுள் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் கூறுவது இவண் எண்ணத்தகும்: வள்ளுவர் வரலாற்று மலர்வனத்தில், அவர் வாழ்க்கைச் செய்தி களாகிய வனப்புமிக்க நறுமணங் கமழும் மெல்லிய அரும்பு மலர்கள் நிறைந்த பயன்றரு சிறுபூஞ் செடிகளை, அகப்புறச் சான்றுகள் யாதுமின்றிச் செவித் தொடர் வழக்காய் நீண்ட பலகாலமாக வழங்கிவந்த புலைக்குடிப் பிறப்பு-மயிலை வாழ்வு-ஏலேலசிங்கர் தொடர்பு-கூடற்சங்க வென்றி - கால அணிமை - ஆரிய முதனூல் பற்றி அறம் பாடியது - என்னும் இன்னோரன்ன பொய்படு செய்திகளாம் பயனில் பெருமரங்கள் பண்டையுருத் தெரியவொட்டாது வேரூன்றியடர்ந் திருத்தலைக் கண்ட நம் பாரதியார், செப்பமுற ஆய்ந்து, தெளிவுரை கூறும் நாக்கோடரியால் அவ்வடர் பெரு மரங்களை வெட்டி வேரறக் களைந்து காண்போர் கண்ணும் மனமும் களிப்புறும் வண்ணம் அப்பண்டைப் பயன்றருமலர் வனத்தைப் புதுக்கிப் பழமுது நூற்குறிப்புக்களாக்கிய தெண்ணீர் பாய்ச்சிச் செழிப்புற வளர்க்க முற்பட்டனர்.1 இதனால் நாவலர் பாரதியாரின் திருவள்ளுவர் ஆராய்ச்சி மேன்மை ஒருவாறு புலனாகும்! தசரதன் குறையும் கைகேயி நிறையும் தசரதன் நேர்மையாளன் என்றும் அவனது உயிருக்கே உலைவைத்த மாபாதகி கைகேயி என்றும் பொதுவாகக் கூறுவதுண்டு. இதன் உண்மையை ஆராய்வான்வேண்டி, நாவலர் பாரதியார், தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னும் நூலினை வெளியிட்டார். நிறை என்பது, ஈண்டுக், குறை என்பதற்கு மாறான ஒரு சொல்லாகவும் கற்பு என்று பொருள்படும் சொல்லாகவும் அமைந்துள்ள நயம் உன்னத் தக்கது. தசரதனின் குறைகளாக நாவலர் பாரதியார் கூறுவன வருமாறு : 1. தசரதன், கைகேயியை மணமுடித்தகாலத்து, அவளுக்குக் கன்யாசுல்கமாக அயோத்தி நாட்டினை அளித்தவன்; அதனால் நாடு, பரதனுக்கே உரியது. ஆனால், தசரதனோ, அவனை வஞ்சித்து, இராமனுக்கு முடிசூட்ட முயன்றான்; 2. சம்பராசுரப் போரின்போது, தான் கொடுத்த வாக்குறுதியை மீறிக் கைகேயியை வஞ்சிக்கத் துணிந்தான்; 3. மிதிலை மணவிழா முடிந்தபின், காரணம் காட்டாமலேயே பரதனைக் கேகயநாட்டிற்கு அனுப்பிவிட்டான்; 4. பரதன் சென்றதும், ஆட்சித் துறையில் இராமனை ஈடுபடுத்தினான்; 5. பரதன் இல்லாத சமயம் பார்த்து, இராமனுக்குப் பட்டாபிடேகம் நடத்த முடிவு செய்தான்; 6. பட்டாபிடேக அழைப்பினை அனைவருக்கும் அனுப்பியவன், கேகயனுக்கும் அவனிடத்திருக்கும் பரதனுக்கும் அனுப்பாமல் விட்டுவிட்டான்; 7. பட்டாபிடேக ஏற்பாடுகளைக் கைகேயினிடத்துமட்டும் கூறாமல் மறைத்துவிட்டான்; 8. ஏதுமறியாப் பரதனைத் தன்மகன் அல்லன் என்றான். இவ்வாறு தசரதன்பாலமைந்துள்ள குற்றங்களை வரிசையாக அடுக்கிச் செல்லும் நாவலர் பாரதியார், கைகேயினிடத்து அமைந்துள்ள நிறைகள் இவையிவை எனப் பட்டியலிட்டும் காட்டுகின்றார். 1. கைகேயி, மக்கள் நால்வரிடத்தும் வேறுபாடு காணாதவள்; 2. தன் மகன் பரதனைவிட இராமனிடத்து அளவற்ற அன்புடையள்; 3. கொண்டானையன்றிப் பிற தெய்வம் அறியாதவள்; 4. போர்க்களத்தும் தன் கணவனைப் பிரிய எண்ணாமல், அவன் தேர்ச்சாரதியாய் இருந்து, தன் இன்னுயிரையும் அவனுக்காகப் பலியிடத் துணிந்தவள்; 5. தசரதனிடத்து அன்பு பூண்டவள். ஆனால் அவனுக்குப் பழி வந்திடல காது என்பதற்காக வரம் கேட்டவள்; 6. தன் கணவனுக்காகத் தானே பழி சுமந்தவள்; 7. தெய்வக் கற்பினள் எனக் கம்பரால் பாராட்டப் பெற்றவள். இவ்வாறு கூறுதற்கு அடித்தளமாய் இவர் எடுத்துக் கொண்ட கம்பன் பாட்டொன்று : கெடுத்தொ ழிந்தனை யுனக்கரும் புதல்வனை; கிளர்நீ ருடுத்த பாரக முடையவ னொருமகற் கெனவே கொடுத்த பேரர(சு) அவன்குலக் கோமைந்தர் தமக்கும் அடுத்த தம்பிக்கு மாம்;பிறர்க் காகுமோ என்றாள்! (கம்ப : அயோத்தி; மந்தரை : 76) இப்பாடலில் வரும் ஒருமகற்கு என்பதற்கு இராமனுக்கு என்பதே இதுகாறும் பலரும் கூறிவரும் உரையாகும். ஆனால் நாவலர் பாரதியாரோ, ஒப்பற்ற மகனாகிய பரதனுக்கு முன்பே கொடுக்கப்பட்ட பேரரசு எனும் புதுப் பொருள் காண்கின்றார். ஆங்ஙனமெனில், பரதனுக்கு இவ்வரசு எப்போது, எதற்காகக் கொடுக்கப்பட்டது? என்ற வினா எழுதல் இயல்பு. தசரதன் கைகேயியைத் திருமணம் செய்தபோழ்து, தான் அயோத்தி அரசாட்சியைக் கன்யா சுல்கமாகக் கொடுத்திருந்தான். இதன் முழுவிவரம், வான்மீகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. “கம்பரும், இக்கருத்தைப் பின்னால், இராமனது கூற்றில் வைத்து வெளிப் படுத்துகின்றார் என்று கூறும் நாவலர் பாரதியார், பின்வரும் பாடலைச் சான்றாகக் காட்டுவர்: கம்பரும் உந்தைசொல் மரபி னால்உடைத் தரணி நின்னதென் றியைந்த தன்மையால் உரனில் நீபிறந் துரிமை யாதலால் அரசு நின்னதே ஆள்க என்றனன் (கம்ப. : திருவடி : 112) இங்ஙனம் இது, தசரதன் குறைகள் கைகேயி நிறைகள் பற்றிய அரியதோர் ஆராய்ச்சிநூலாக மிளிர்கின்றது. தமிழ் இலக்கிய ஆராய்ச்சி உலகில் இதுகாறும் எவருமே எண்ணிப் பார்க்காத வகையில் தசரதனையும் கைகேயியையும் ஆய்வுக்கண் கொண்டு நோக்கிய பெருமை நாவலர் பாரதியாருக்கு உண்டு! அவரது வாதத் திறமைக்கு (தசரதன் குறையும் கைகேயி நிறையும்) சிறந்த எடுத்துக்காட்டாகும்”1 என முனைவர் மா. இராசமாணிக்கனார் கூறுவது சாலப் பொருந்தும்! அன்றியும், நாவலர் பாரதியார், பெண்ணினத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும். மாசு கற்பித்தலாகாது என்ற கொள்கையும் கொண்டவர்; தம் கெழுதகை நண்பர் சி.சு. பாரதியார், பாஞ்சாலிக்காகப் பாஞ்சாலி சபதம் பாடியது போல, இவரும் கைகேயிக்காகத் தசரதன் குறையும் கைகேயி நிறையும் கூறினார் என்று கூறுவதும் பொருந்தும்! இவ்வகையில் தமிழ் இலக்கிய உலகுக்கு இந்நூல் ஒரு முன்னோடி எனலாம். சேரர் தாயமுறை “மக்கட்டாயமுறை, மருமக்கட்டாயமுறை, இவ் விரண்டும் கலந்த தாயமுறை எனத் தாயமுறையில் முப்பிரிவுகள் உண்டு. இவற்றுள் மருமக்கட்டாயமுறை, கேரளத்தில் கடந்த ஐந்து நூற்றாண்டுகட்கு மேலாக இருந்து வருவது . ஆனால் சோழ பாண்டிய நாடுகளில் இருப்பது மக்கட்டாயமே! எனவே, பண்டைச் சேரநாட்டிலும் மக்கட்டாயமே இருந்தது; பின்னர் தான் மருமக்கட்டாயமாக மாறியது என்பர் அறிஞர். இதுபற்றி ஆராய எழுந்ததே சேரர் தாயமுறை என்னும் நூல்! சேரர் தாயமுறை என்னும் இவ் ஆராய்ச்சி நூலை முதன்முதலில் நாவலர் பாரதியார், 1929ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் (ளுலளவநஅ டிக ளுரஉஉநளளiடிn in வாந ஊhநசய முiபேனடிஅ) எழுதி வெளியிட்டார்; பின்னர்த் தமிழிலும் அது வெளிவந்தது. கேரளத்தில் வழங்கும் மருமக்கட்டாயமுறைக்கு அடிப்படையாக நாவலர் பாரதியார் கூறுவன வருமாறு: 1. பெண் வழியிலேயே உறவு முறை - தாய்மாரே குடிபேணும் அடிமரம்; 2. ஆடவர்கள், தம் மாமன்மார்க்கு உரிய வழித்தோன்றல்கள்; 3. குலநிதியைப் பிரித்தாளும் பிறப்புரிமை ஆண்மக்கட்கு ஒன்று மில்லை; 4. குடியின் தலைமை, உரிமை - மருகர்களில் வயது முறைப்படி வரும்; 5. அரசர் குடும்பங்களிலும் நாடாளும் உரிமை, மருகர் வழியே வரிசை முறையில் வருவது; 6. தந்தைமார்க்கு அவர்களின் ஆண்மக்கள் வாரிசு ஆகார்; அத்தந்தையருடன் பிறந்த பெண்வயிற்று மருகரே வழித்தோன்றல்! இந்நூலின் ஆய்வுக்கு இவர் சான்றாகக் காட்டும் முதன்மை நூல் பதிற்றுப்பத்து ஆகும். நாவலர் பாரதியார் கூறும் பல்வேறு கருத்துக்களில் ஒன்றுமட்டும் இவண் குறிக்கத்தகும். சங்க நூல்களில் சேரரைக் குறிக்க வருமிடத்து, ஒரு சேரனையாவது அவன் தந்தைக்கு மகன் என்ற குறிப்புக் கிடையாது அம் முன்னோனின் மருமகன் என்ற குறிப்பே வந்துள்ளது; இளஞ்சேரலிரும்பொறை. பெருஞ்சேரலிரும் பொறையின் மருகன் என்ற பொருளில் விறல் மாந்தரன்றன் மருகன் (மருகன். வழித்தோன்றல்) என்று பெருங்குன்றூர் கிழார் பாடுகின்றார்! இந்நூல் வாயிலாக நாவலர் பாரதியார் காட்டும் ஆய்வு முடிவுகளிற் சில வருமாறு: 1. தமிழ்நாட்டில் குடகுமலைத் தொடருக்கு மேற்கே, குடபுலத்தில் மட்டுமே இம் மருமக்கட்டாயம் நெடுவழக்காய் நின்று வருகின்றது. நாயர் என்ற திராவிட சமுதாயத்தார். நம்பூரி என்ற ஆரியப் பிரிவினர், பிறநாட்டி லிருந்து குடியேறிய மாப்பிள்ளைமார் இவர்கள் மருமக்கட்டாயிகளாவர்; 2. இம் ‘மருமக்கட்டாயமுறை’, சங்ககாலப் பழஞ் சேரர் குடிகளிலும் அடிப்பட்ட தொன்மரபாய் ஆட்சி பெற்றுத் தொன்றுதொட்டே வழங்கி வருவதாகத் தெரிகிறது; 3. அம் மலைத் தொடருக்குக் கிழக்கே தமிழகம் முழுவதும் சங்க காலந்தொட்டே மக்கட்டாயமே நிலைத்து நிற்கின்றது. இவ்வாறு கூறுபவர், 1. மக்கட்டாய மரபும், மருமக்கட்டாய மரபும் ஆகிய இவ்விரண்டும் பண்டைத் தமிழ் மரபா? 2. அவ்வாறாயின், தமிழகத்தில், மருமக்கட்டாயமுறைவழக்கிழந்தது எதனால்? 3. தமிழ் மரபின்றேல், சேரர் எக்காலத்தில் யாண்டிருந்து எப்படி இதனை மேற்கொண்டனர்? 4. மிகப்பழங்காலத்தில் தாய்வழிமரபே இருந்து, பின்பு தந்தைவழித் தாயம் வந்ததாகக் கருதலாமா? 5. மாப்பிள்ளைமார்-அராபி நாட்டினர். மகமதியர், குடநாடு வந்த போது தங்கள் பூர்வீக அராபியப் பழக்கத்தைப் புகுத்தினரா? 6. இத் தாயவழி ஆதிக்கத்தால், நாஞ்சில்நாட்டுத் தமிழர்களும் இம்முறையைப் பின்பற்றினார்களா?எனும் வினாக்களை எழுப்பி, மேலும் ஆராய்ச்சி தேவை என்கின்றார்.ஆனால் இவரது ஆராய்ச்சியைப் பேரறிஞர்களான மு. இராகவையங்கார், இரா. இராகவையங்கார் ஆகியோர் மறுத்து நூல்களும் எழுதியுள்ளனர். எல். கிருட்டிணசாமி பாரதியார், நாவலர் பாரதியாரின் கருத்துக்கு அரண் செய்யும் வகையில் நூல் ஒன்றும் எழுதியுள்ளமை இவண் குறிக்கத்தகும். எனினும் இவ் ஆராய்ச்சி மிகவும் பயனுள்ளது;1 புலவருக்கு நல் விருந்து”2 என்றும் அறிஞர் போற்றுவர். சேரர் பேரூர் பண்டைச் சேரமன்னர்களின் தலைநகரம் வஞ்சி என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் ‘இக்காலத்தில் அஃது எங்கு உள்ளது? என்பதுகுறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. கடலோரம் பேராற்றின் மேலது வஞ்சி என்று சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் மற்றும் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் போன்றவர்களும் கூறுவர். தமிழறிஞர் வி. கனகசபைப்பிள்ளை. குடமலைத் தொடரின் அடிவாரத்தில் பேரியாற்றங் கரையில் ஒரு பாழூராகிய திருக்கரூரே வஞ்சி என்பர். அறிஞர் மு. இராகவையங்காரோ. திருச்சிக்கு மேற்கே ஆம்பிராவதிக் கரைமேலதாய கரூவூரானிலையே வஞ்சி என்பர். இம் மூன்று கருத்துக்களுள் பொருந்துவது யாது என ஆராய எழுந்ததே சேரர் பேரூர் எனும் ஆய்வு நூல்! இது. பெரும் பாலும் மு. இராகவையங்கார் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்ற நூற்கருத்தை அடியோடு மறுப்பதாக அமைந்துள்ளது. போகிறபோக்கில் வி. கனகசபைப்பிள்ளையின் கருத்தையும் மறத்துத் தங்கோள் நிறுவுகின்றார் நாவலர் பாரதியார். இவ் ஆய்வு நூல்வாயிலாக இவர் கூறும் முடிந்த முடிபு வருமாறு : 1. பட்டினப்பாக்கமும், அரசன் குடிப்பாக்கமும் கூடியது வஞ்சி மூதூர். பிற்காலத்தில் ‘பட்டினப்பாக்கம்’, மகோதை என்றும்; * அகநகராய கருவூர்ப்பாக்கம் வஞ்சி முற்றம் என்றும் அழைக்கப்பெற்றன. இவ் வஞ்சிமுற்றம் நாளடைவில் வஞ்சைக் களமாயிற்று. வஞ்சி - வஞ்சை முற்றம் - களம். பிற்காலத்து இது தலங்களுள் வைத்தெண்ணப் படுங்கால் திரு அடைபெற்றுத் திருவஞ்சைக் களமாக ஆகியிருக்க வேண்டும். 2. எனவே சேரர் சங்ககாலப் பேரூர், பேராற்றின் மலை வாரத்தே கடலினின்றும் ஏறத்தாழ 30 மைலுக்கு அப்பாலுள்ள திருக்கரூருமன்று; காவிரி ஆம்பிராவதி கூட்டத்திற்கு மேற்கே புனல்நாட்டில் உள்ள சோழர் பழவூரான திருவானிலையுமன்று; 3. சேரர் பேரூரான வஞ்சி மூதூர் மலைநாட்டில், மேலைக் கடற்கரையில் பேராற்றின் கழிமுகத்திலமைந்த பழம் பட்டினமேயன்றிப் பிறிது உள்நாட்டூர் எதுவுமாகாது! சேரர் தலைநகராம் இவ் வஞ்சிமாநகரம் குறித்து அறிஞர் களிடையே கருத்துவேறுபாடுகள் உள. எனினும் வரலாற்றறிஞர் கே.கே. பிள்ளை கூறுவதனை இங்குக் குறிப்பது பொருந்தும். ....ஆயினும் அது (வஞ்சி) மேலைக் கடற்கரையில் இருந்தது என்பதற்கே சிறந்த சான்றுகள் உள்ளனவாகக் கருதலாம். ஒருகால் சேர மன்னர் வஞ்சியையே யன்றிக்கரூவூரையும்மற்றொருதலைநகராகக்கொண்டிருப்பார்!”1 உண்மை எதுவாயினும், இந்நூல் ஆராய்ச்சிக்கு நாவலர் பாரதியார் மேற்கொண்ட கடுமையான உழைப்பை எவரும் மறந்துவிட இயலாது. இவரது ஆராய்ச்சித் திறனை விளக்க வல்ல ஓர் அரியநூல் இது எனலாம்! முடிவுரை நாவலர் பாரதியார் எழுதிய இந் நான்கு ஆராய்ச்சி நூல் களும் தமிழகத்திற்குக் கிடைத்த அரிய கருவூலங்கள் எனலாம். இந் நான்கினையும்குறித்தவிரிவhன ஆராய்ச்சியை, யான் எழுதியநவலர் சோமசுந்தரபாரதியாரின்தமிழ்இலக்கியப்பணிஎன்னும்முiனவர்பட்டஆய்வுநூலில்(பக்20முதல் 91 முடிய)கhணலாம்.வாழ்கநhவலர் பாரதியார்! அன்பன் முனைவர் ச. சாம்பசிவனார் திருவள்ளுவர் முதற் பதிப்பு - முன்னுரை தமிழகத்தில் தலைநின்ற தமிழ்ச்சான்றோர் பலரையும் பற்றி அவர் குடிப்பழிப்பான பல ஆபாசக் கதைகள் சமீப காலங்களில் எழலாயின. திருவள்ளுவர், நக்கீரர், கம்பர் முதலிய பெரியாரையெல்லாம் எளிதில் வேளாப் பார்ப்பன ஆண்டிகளுக்கு இழிகுலப் பெண்டிரீன்ற மக்களெனச் சிலர் கதைக்கின்றனர். எனினும் இக் கதைப்பவர் துணிவைவிட, அக்கதைகளைச் சிறிதும் தடையின்றியேற்கும் தமிழ்மக்களின் தற்காலநிலை வியப்பும் விசனமும் விளைக்கின்றது. வள்ளுவரைப் பற்றிய கதைகளை ஆன்ற நூற்சான்று கொண்டு ஒருவாறாக நான் சிறிது ஊன்றி விசாரிக்கலானேன். என் ஆராய்ச்சியிற்கிடைத்த சில கருத்துக்களை முதலிற் சில நண்பர் வேண்டுதலின்படி பண்டிதர் சிலர் முன்பு திருச்சிராப்பள்ளியில் 1952 ஆம் வருடக் கடைசியில் வெளியிட்டேன். அப்போது அவர்கள் என் கருத்துக்களை ஆதரித்து ஊக்கினார்கள். பிறகு, மதுரைத் தமிழ்ச்சங்கம், வாலிப கிறித்தவ சங்கம் என்பவற்றின் துணையாதரவில் மதுரை ஐக்கிய கிறித்தவ கலாசாலையில் சில உபந்நியாசங்கள் நிகழ்த்தப்பெற்றன. அவற்றுள் ஒன்று 1926ஆம் வருடம் சனவரி மாதம் 25ஆம் தேதி ரெவரண்டு எச்.எ. பாப்லி துரையவர்களின் தலைமைக் கீழ்க் கூடிய பெருங்கூட்டத்தில் திருவள்ளுவர் சரிதத்தைப் பற்றி நான் செய்ய நேர்ந்தது. அங்கு அப்போது விசயம் செய்திருந்த சேது சமத்தான மகா பண்டிதரான உயர்திரு உவே.ரா. இராகவையங்காரவர்கள், சோமேசர் முதுமொழி வெண்பா ஒன்றைச் சுட்டி, அதனால் வள்ளுவர் கீழ்க் குலத்தவர் என்னுங் கதை வலிபெற நிற்பதைக் குறிப்பிட்டார்கள். என்னிடமிருந்து தக்க சமாதானங்கொண்டு என்னை ஊக்கும் அவர்களின் நன்னொழுக்கத்துக்கு நான் பண்டிதவரவர்களுக்கு நன்றி கூறி, அக்கதை அப்பாட்டால் எவ்வித ஆதரவையும் பொறாமையையும், அப்பாட்டு அக்கதையின் உண்மையை ஆராய்ந்து அங்கீகரிக்கும் நோக்குடையதன் றென்பதையும் எடுத்துக் காட்டினேன். பிறகு பண்டிதவரவர்களும் பிறரும் வேறு ஆட்சேபம் ஒன்றுமின்றி என் கருத்துக்களை ஆமோதித்தார்கள். அன்று அங்கு அவ்வுபந்நியாசத்தைக் கேட்டிருந்த தமிழ்ச் சங்கத்துத் தலைமைக் கணக்காயர் உயர்திரு. நாராயணையங்காரவர்கள் விரும்பியபடி பின் அக்கருத்துக்களைச் செந்தமிழில் 24ஆம் தொகுதி 9,10 பகுதிகளில் எழுதி வெளியிட்டேன். சமீபத்தில் சென்னைச் சர்வகலாசாலையார் வேண்டிக் கொண்டபடி இவ்வாண்டில் சென்ற மார்ச்சு மாதம் 11,12ஆம் தேதிகளில் நான் பச்சையப்பன் கல்லூரியிற் செய்த இரண்டு உபந்நியாசங்களில் முதலது திருவள்ளுவரைப் பற்றியதாகும். அப்போது சர்வகலாசாலைப் பிரதிநிதிகள் யாருமே வராவிட்டாலும், மகாமகோபாத்தியாய உயர்திரு உ.வே. சாமி நாதையரவர்கள், பண்டிதர் திரு. மு. இராகவையங்காரவர்கள், சென்னைச் சர்வ காலாசாலைத் தமிழ் லெக்சிகன் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள், மதுரைத் தமிழ்ச்சங்கக் காரியதரிசி திருவாளர் டி.சி. சீனிவாசையங்காரவர்கள் போன்ற தகவுடைப் பெரியார் பலர் கேட்டு உடன்பாடு கூறி என்னை ஊக்கினார்கள். உபந்நியாச முடிவில் மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் என்னை ஆசீர்வதித்து அன்போடு ஆதரவு கூறினார்கள். நான் எதிர்பாராத வண்ணம் என்னை ஊக்கிய பெரியார் களுக்கும், என் கட்டுரைக்கு மதிப்புரை தந்துதவிய புலவர்கட்கும், இக்கட்டுரை வெளியீட்டை விரும்பி மேற்கொண்ட தமிழ்ச் சங்கக் காரியதரிசியவர்கட்கும் நான் என்றும் கடப் பாடுடையேன். என் கருத்துக்கள் துணிந்த முடிபுகளென்று கொள்ள வேண்டா. வழங்கும் பல கற்பனைக் கதைகளையும் நம்பி அவற்றை அப்படியே பரப்பிவரும் குணத்தைச் சிறிது மறந்து, எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு எனும் பொய்யில் புலவர் பொருளுரையைக் கையாளத் தமிழ் மாணாக்கரை என் கட்டுரை எனைத்தளவும் தூண்டுதற்கு உதவுமாயின், அனைத்தளவு என் சிறு முயற்சிக்குப் போதிய கைம்மாறு பெற்றவனாவேன். மதுரை, 25-5-1929. ச. சோமசுந்தர பாரதி மதிப்புரைகள் (1) (மகாமகோபாத்தியாய தாட்சிணாத்யகலாநிதி திரு. உ.வே. சாமிநாதையரவர்கள்) சென்னைச் சர்வகலாசாலையார் விரும்பியபடி மதுரை, சீமான் சோமசுந்தர பாரதியவர்கள் எம்.ஏ.பி.எல், 1929 ஆம் வருடம் மார்ச்சு மாதம் 11ஆம் தேதி பச்சையப்பன் கலாசாலையில் திருவள்ளுவர் என்னும் விசயத்தைப் பற்றிப் பேசியதைக் கேட்டு இன்புற்றவர்களுள் யானு மொருவன். குழறுபடையாகவும் முன்னுக்குப்பின் முரணாகவும் பண்டைக்கால வரலாற்றிற்கு மாறாகவும் இக்காலத்தில் வழங்கும் திருவள்ளுவருடைய சரித்திரப் பகுதிகளுள், கொள்ளத் தக்கவையிவை தள்ளத்தக்கவை யிவை யென்பதையும், அவருடைய கல்விப் பெருமையையும், பழைய புலவர்கள் அவர் திறத்தும் அவர் நூலினிடத்தும் கொண்டிருந்த மதிப்பையும், அவர் இன்ன நிலையில் இருந்தாரென்பதையும் தடை விடைகளை நிகழ்த்தித் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டிக் கேட்போருடைய மனத்தில் நன்றாகப் பதியும்படி பேசியது பாரதியாரவர்களுக்குள்ள தமிழார்வத்தையும், தமிழ் நூற்பயிற்சியையும், சொல்லாற்றலையும், ஞாபகசக்தியையும், புலப்படுத்திக் கேட்டோர் மனத்தைக் குளிர் வித்தது; வியப்பையும் விளைவித்தது. இவ்வரிய பிரசங்கம், கேளார்க்கும் பயன்படும்படி பதிப்பிக்கப் பெற்றுப் புத்தகவுருவமாக வெளிவந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். இப் புத்தகம் தமிழ்ப் பண்டிதர்களுக்கும் அவர்களில் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு புது விருந்தாக இருக்கு மென்றெண்ணுகிறேன். திருவேட்டீசுரன்பேட்டை, இங்ஙனம் சென்னை, 21-5-1929. வே. சாமிநாதையர் (2) (மதுரைத் தமிழ் சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திராதிபரும், கலாசாலைத் தலைமையாசிரியருமான திரு. உ.வே. திருநாராயணையங்காரவர்கள்) மதுரை ஐக்கோர்ட்டு வக்கீல் சீமத் : எஸ். சோமசுந்தர பாரதியார் எம். ஏ., பி. எல்., அவர்கள் திருவள்ளுவரது வரலாறு பற்றி மதுரையில் மதுரைத் தமிழ் சங்கம், வாலிப கிறித்தவ சங்கம், இவற்றின் ஆதரவில் ஓருபந்யாசம் செய்தார்கள். அப்பொழுது அவ்வரலாற்றுள் வழங்கப்பட்டுவரும் சில பிறழ்ச்சிகளைப் பல சான்றுகளாலும் யுக்திகளாலும் ஒருவாறு மாற்றிக் காட்டினார்கள். அதனைப் பலரும் அறியும்படி செந்தமிழில் வெளியிட வேண்டு மென்று நான் விரும்பியதற் கிசைந்து பழைய தமிழ் நூல்கள் பலவற்றினின்றும் பல சான்றுகள் காட்டி ஓராராய்ச்சியுரையா யெழுதி வெளியிட்டார்கள். பின்பு சென்னைச் சருவ கலாசாலையார் விருப்பத்திற் கிசைந்து இவ்வாராய்ச்சிக்கு வேண்டியன மேலும் சில கூட்டிப் பெருக்கிப் புதுக்கிச் சென்னையில் பாரதியாரவர்களே பிரசங்கித்தார்கள். அப்பொழுது பல சிறந்த பண்டிதர்களால் நன்கு மதிக்கப்பெற்றது பற்றியும் புத்தகமாகப் பதிப்பிக்க வேண்டுமென்று பலர் விரும்பியது பற்றியும் இது பதிக்கப் பெற்றிருக்கிறது. இதனுள், திருவள்ளுவர் கடைச் சங்க காலத்துக்கு மிகவும் முற்பட்டவர் என்பதும், அவர் புலைவகுப்பினரல்லரென்பதும், பிறவும் பழைய தமிழ் நூல்கள் பலவற்றினின்றும் போதுமான பல குறிப்புகள் காட்டி நிறுவப்பட்டுள்ளன. இதற்கு மாறாக வழங்குங் கதை, வள்ளுவர் என்ற பொய் ஒன்றே பற்றி அவர் தகைமையறியாதானொருவன் மயங்கிக் கட்டிய கட்டுக்கதை யென்பதும், அது யாதோராதரவுமில்லாத வெறும்பேச்சென்பதும், அதுவும் திருவள்ளுவமாலை பிறப்பதற்கு முன்னமே வழங்கத் தொடங்கி விட்ட தென்பதும் அத்திருவள்ளுவமாலையின்கணுள்ள மாமூலனார் பாடலின் சொற்குறிப்புகளால் உய்த்துணரக் கிடக்கின்றன. ஆயினும், அவற்றையெல்லாம் நன்கு புலப்படுமாறு வெளிப்படை யாக்கிக் காட்டியது இவ்வாராய்ச்சியே. இவ்வாராய்ச்சியால் பாரதியாரவர்களுடைய தமிழ் நூலு ணர்ச்சியும், மதிநுட்பமும், ஆராய்ச்சிவன்மையும், புலமை வாய்ந்த தமிழ்நடையமைப்பும் புலப்படுகின்றன. பாரதியாரவர்கள் இன்னும் பல ஆராய்ச்சிகளியற்றித் தமிழுலகுக்குப கரித்துத் தமிழாராய்ச்சிக்கு ஒரு தக்கோராய் விளங்குவ ரென்றெண்ணு கின்றேன். மதுரைத் தமிழ் சங்கம், மதுரை,28-5-1929. திரு. நாராயணையங்கார். (3) (மகிபாலன்பட்டி தமிழ் - ஆரியப் புலவரான திருவாளர் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியாரவர்கள்) அருங்கலை விநோதரும் உயர்தர நீதிமன்றத்து வழக்கறிஞரும் ஆகிய திருவாளர் ச. சோமசுந்தர பாரதியார் எம்.ஏ.பி.எல். அவர்கள் திருவள்ளு வரைப் பற்றி அரிதின் ஆராய்ந்து இயற்றிய சொற் பொழிவைப் படித்துப் பார்த்தேன். இவர்களுக்கு இயற்கையின் அமைந்துள்ள செந்தமிழ் உயர் சிறப்பு நடைநலன் இச்சொற் பொழிவினும் செல்வன் அமைந்துளதென்பது கூறவேண்டிய தின்று. இச் சொற்பொழிவின் ஒவ்வொரு பகுதியும் நுண் மாணுழைபுல முடையார் சுவைத்துணர்ந் தின்புறத்தக்க விருந்தாக மிளிர்கின்றது. இதன்கண் இவர்கள் வள்ளுவரைப் புலைக்குடிப் பிறப்பின ரல்லர் - அரசியல் வினையில் உள்படுகருமத் தலைவராய் முதுக்குடிப் பிறந்துயர்ந்தவர் எனக் கண்டதும், சகரமுதன்மொழி திருக்குறளி லரிதென ஆய்ந்து அதனாற் காலப்பழமை தேறியதும், கல்லாதார்க்குக் கல்விநலந் துய்த்த சங்கத்தாரை எடுத்துக்காட்டிய முனிவருரையைப்பற்றிய ஆராய்ச்சி யும், உப்பக்கநோக்கி என்னும் அரும்பொருட் செய்யுட்கு உவமனையும் பொருளையும் இயைத்துக் காட்டிய உரைநலனும் பிறவும் மனத்தை வியப்புறச் செய்து மகிழ்விக்கின்றன. இவர்கள் சங்கப்புலவர் பாடல்கொலோவென ஐயுற்ற வள்ளுவமாலைச் செய்யுளொன்றுகொண்டு இப்பொய்யில் புலவர் வாழ்க்கைப் பேற்றுக்குக் கூடலை யிடனாக்குதல் கூடுங்கொலோவெனின், அறவே பிரமாணமில்லாத கூற்றைநோக்க இஃது எத்துணை வலியுடைத்தென உற்றுநோக்கு வார்க்கு அமையுமென்க. சங்கம் வளர்ந்த தனிப்பெருங்கூடலில் மங்கல வாழ்க்கை வளம்பெறத்தோன்றிய வள்ளுவப் பெரியாரை அவர் மாண்பு நிலையோர்ந்து வலிந்து மயிலைக்கு ஈர்த்துச் சென்றார் வலிநிலையளந்து, இகல்பொருதழித்து, மீண்டும் நம் பாடல் சால்கூடலிற் பண்பறக்கூட்டிய பாரதியார் பேருதவி தமிழகத்தாருள்ளத் தொளிரும் ஒரு பெருமணியாகும். வள்ளுவர் வரலாற்று மலர் வனத்தில், அவர் வாழ்க்கைச் செய்திகளாகிய வனப்புமிக்க நறுமணங்கமழும் மெல்லிய அரும்பு மலர்கள் நிறைந்த பயன்றரு சிறுபூஞ்செடிகளை, அகப்புறச் சான்றுகள் யாதுமின்றிச் செவித்தொடர் வழக்காய் நீண்ட பலகாலமாக வழங்கிவந்த புலைக்குடிப் பிறப்பு - மயிலை வாழ்வு - ஏலேலசிங்கர் தொடர்பு - கூடற்சங்கவென்றி- கால அணிமை - ஆரியமுதனூல்பற்றி அறம்பாடியது - என்னும் இன்னோரன்ன பொய்படும் செய்திகளாம் பயனில் பெருமரங்கள் பண்டையுருத் தெரியவொட்டாது வேரூன்றி யடர்ந்திருத்தலைக் கண்ட நம் பாரதியார், செப்பமுற ஆராய்ந்து, தெளிவுரை கூறும் நாக்கோடரியால் அவ் வடர் பெருமரங்களை வெட்டி வேரறக் களைந்து, காண்போர் கண்ணும் மனமும் களிப்புறும் வண்ணம் அப் பண்டைப் பயன்றருமலர் வனத்தைப் புதுக்கிப் பழமுது நூற்குறிப்புக்களாகிய தண்ணீர் பாய்ச்சிச் செழிப்புற வளர்க்க முற்பட்டன ரென்பதே என் கருத்துரையாகும். இன்னும் இவர்கள் பொருளொடுபொருந்தும் உரைபல வுலகுக்கீந்து நிலைபெறும் உயர்புகழ்பெருகவென்பது என் உளத்தியல் வாழ்த்தாகும். மகிபாலன்பட்டி, 9-6-1929. மு. கதிரேசன் திருவள்ளுவர் பகுதி 1 : முன்னுரை சங்கப் புலவர் சரிதங்களுள் ஒன்றுமே சரியாகத் தெரிந்த பாடில்லை. நீண்ட இடைக்கால இருளால் விழுங்கப்பட்ட இலக்கியங் கள் பலவாக வேண்டும். சிதிலமான பழைய சுவடி களைத் தேடியெடுத்துச் சென்ற சில வருடங்களாக அச்சியற்றி வெளிப் படுத்திவரும் சில பேருபகாரிகளின் அரிய முயற்சியாற் கிடைத்துள்ள சில சங்க இலக்கியங்கள் தவிரப் பழம்பண்டைத் தமிழகச் செய்தி தெரிவிக்கும் தக்க சாதனங்கள் வேறு கிடையா. கிடைக்கும் சில சங்க நூல்களிலும் சங்கப் புலவர் சரிதம் பற்றிய குறிப்புக்கள் காண்பது அரிது. இந்த நிலையில் திருவள்ளுவரைப் பற்றிய சரிதக் குறிப்புகளைத் தெளிந்து துணிதல் எளிதன்று. எனினும், சங்க நூல்களிலும் பழைய பாட்டுக்களிலும் கிடைக்கும் சில குறிப்புக்கள் வள்ளுவர் சரித முழுதையும் திரட்டித் தரா வேனும்? தற்காலத் தமிழுலகில் வழங்கிவரும் அவர் கதையின் உண்மையை ஆராய்வதற்கு ஒருவாறு உதவுகின்றன. அவற்றை அவை யிற்றை? உற்றுநோக்குங்கால், பிரதாபக் கதைகளில் நம்பிக்கை நலி வடையக் காண்போம். வள்ளுவரின் காலம், ஊர், குடிப்பிறப்பு, சமயம் முதலிய வற்றைப் பலரும் பலபடியாகப் பேசிவருகின்றனர். இவை பற்றிய தற்காலப் பிரதாபங்களுக்கு உள்ள ஆதரவுகளைச் சிறிது விசாரிப்போம். கடைச் சங்கத்தின் கடைக்காலத்திற் சங்கப் புலவர் இறுமாப்பை யடக்கின அவதார புருடர் வள்ளுவர் என்பார் பலர். இறவாப் புகழுடைய தம் குறணூலைக் கடைச் சங்கத்தில் அரங்கேற்ற வந்த வள்ளுவரைப் புறக்கணித்து, அவர் தம் அரிய நூலையும் அவமதித்த சங்கத்தாரை வள்ளுவர், தம் தெய்வீகத் தன்மையாற் பொற்றாமரைக் குளத்தில் வீழ்த்தி அலமரச் செய்ததாயும் புலவர்கள் வள்ளுவரையும் அவர்தம் குறணூலையும் புனைந்துபாடித் தம்முயிரை இரந்து பெற்றதாயும், குறட் புகழின் பிறப்பே சங்கப் புகழின் இறப்பாக முடிந்ததென்றும் கதைப்பார் பலர் கதைக்கின்றனர். சில தலைமுறையாகப் புலைமை ரத்தக் கலப்புடைய பார்ப்பான் ஒருவனுக்கும் புலைப் பிறப்பும் பார்ப்பன வளர்ப்புமுள்ள கீழ்மகள் ஒருத்திக்கும் பிறந்த சிறார் எழுவருள் கடைமகவே வள்ளுவரென்றும், குறிசொல்லு பவரும் பறையருக்குப் புரோகிதருமான வள்ளுவ வகுப்பினரால் வளர்க்கப் பெற்றமையின் வள்ளுவரென்பது இவருக்குக் காரணப் பெயராயிற்றென்றும், இவர் மயிலாப்பூர் வணிகனான ஏலேலசிங்கனால் வறுமை வருத்தங்கள் நீக்கப்பெற்று வாசுகி யென்னும் வேளாண் மகளை மணந்து வாழ்ந்து மதுரைச் சங்க வீறழித்துப் பேறுபெற்றாரென்றும் தற்காலக் கதைகள் கேட்கின்றோம். இவற்றுள் ஒன்றுக்கேனும் பலநூலாதரவு இருப்பதாகத் தெரியவில்லை. கிடைக்குஞ் சில பண்டைக் குறிப்புக் களும் இக்கதைகளின் பொய்ம்மை குறிக்கக் காண்கின்றோம். முதலில், வள்ளுவர் மூன்றாஞ் சங்கத்தை முற்றுவித்த வரலாற்றின் உண்மையைச் சிறிது துருவியாராய்வோம். குறட் சுவடிகளிற் காணப்படும் திருவள்ளுவமாலை எனும் புனைந் துரைப் பாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இக்கதை நடக்கின்றது. வள்ளுவமாலை உள்ளபடி கடைச்சங்கப் புலவராற் பாடப் பட்டதுதானா என்ற வினா நிற்க; அப்புலவர் பாக்களே வள்ளுவ மாலையெனக் கொள்ளினும், சங்கப் புலவர் வள்ளுவரை அவமதித்து அவரால் வீறடக்கப்பட்டதற்கேனும், அவர்தம் இறவாக் குறணூல் அப் புலவர்முன் அரங்கேற்றப் பட்டதற்கேனும் ஆன்ற சான்று ஏதும் அவ் வள்ளுவமாலைப் பாக்கள் சுட்டிக் காண்கின்றிலம். கடைச்சங்கப் புலவராற் பாராட்டிச் சேமித்து வைக்கப்பட்ட நூற்றிரட்டுக்களுள் அப்புலவர் சிலர் புனைந்துரைத்த பாக்கள் காணப்படுகின்றன. கடைச் சங்கத்தார் நூற்றிரட்டுக்களில் திருக்குறளும் ஒன்றென்பது தமிழர் யாவருக்கும் ஒப்பமுடிவதாகும். அத்திரட்டு நூல் களுள்ளும் வள்ளுவர்நூல் தலைசிறந்த தென்பதற்கு இடை நெடுங்காலம் பிற பல நூலும் வழக்கிழந்தொழியவும், என்றும் பிரபல நூலாகக் குறள் நின்று நிலவியதே போதிய சான்றாம். நாம் அறிந்த சங்கத்திரட்டு நூல்களாவன; பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலியன ஆம். இவையனைத்தும் கடைச்சங்கப் புலவரியற்றியனவும் அவர்க்கு முற்பட்ட புலவர் இயற்றியவற்றுள், சேமித்து வைக்கத் தக்க சிறப்புடையனவாகக் கடைச்சங்கத்தாரும் பிறரும் கண்டு திரட்டியனவுமாக முடியும். இத்திரட்டு நூல்களுள், தகவுமிகவுடைய திருக்குறளின் பெருமை நோக்கிச் சங்கப் புலவரனைவரும் இதனைப் புனைந்து பாடியிருக்கலாம். அன்றி, வேறு சில நூல்களுக்கும் இவ்வாறே அவரனைவரும் சிறப்புக் கவிகள் தந்திருப்பின் அந்நூல்கள் வழக்கிழந்த காலத்தே சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் இறப்பின் வாய்ப்பட்டும் இருக்கலாம். குன்றா வழக்குடைக் குறளொடு அதன் புகழ்மாலைப் பாக்களும் நின்று நிலவிவந்திருக்கலாம். இதனுண்மை எப்படியாயினும், திருவள்ளுவ மாலையில் வள்ளுவர் கடைச் சங்கத்தின் கடைக்காலத்திற் சங்கத்தை வீறழித்த கதை சுட்டுங் குறிப்பு ஒன்றேனும் இல்லை. கடைச்சங்கக் கடைநாளிற் றோன்றித் தம் குறணூல் அரங்கேற்று தலினிடையே வள்ளுவர் மதுரைச் சங்கத்தை அழித்த கதை மெய்யாமேல், புலவர் சங்கமிருந்து இயற்றிய பழம் பனுவல்களிற் குறளடிகள் குறிக்கப்படக் காரணமில்லை. மூன்றாஞ் சங்கப்புலவர்நூல்களிலேயே சுட்டப்பட முடியாத பின்வந்த திருக்குற ளருந்தொடர்கள், அச்சங்கத்தாருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்து அவராற் பாராட்டிச் சேமித்துப் பாதுகாக்கப் பட்ட பழந்தொகைப் பனுவல்களிற் சுட்டப் படுமாறில்லை யென்பது ஒருதலை. ஆனால் மதுரைச் சங்கச் சதுரர் நூல்கள் பலவற்றுள்ளும். அவர் போற்றுதற்கான அவருக்கு முற்பட்ட மிகப் பழைய தமிழ்த் திரட்டு நூல் களுள்ளும் வள்ளுவரும் அவரற நூலும் பலவேறிடங்களிலும் பாராட்டப்பட நாம் காணுங்கால், வள்ளுவரை அப்படிப் பாராட்டி யெடுத்தாளும் பாவலருக்கு அவர் சம காலத்தவராதல் வேண்டுவதொன்று. அன்றேல் முன்னோராதல் வேண்டுவதொன்று இஃதன்றிக் காலத்தாற் பிந்தியவராகக் கருதற் கிடமில்லையன்றோ! தமக்கு முற்பட்ட இடைச்சங்கச் செய்யுளும் பிறவுஞ் சேர்த்துக் கடைச்சங்கத்தார் திரட்டிய கலித்தொகை, புறநானூறு முதலிய பழைய நூல்களிலும் குறளை மதிப்புடன் எடுத்தாளக் காண்கின்றோம். குறளடிகள் இவ்வாறு கடைச்சங்கப் புலவராலும் அவர்க்கு முற்பட்ட புலவராலும் எடுத்தாளப்பட்டதுமட்டுமில்லை; குறள் வாக்கியங்கள் அறத்தெய்வக் கூற்றாயும் வள்ளுவர் மெய்த்தெய்வப் புலவராயும் அவர் பலராலும் வாயார வாழ்த்தப்படவும் காணும் நாம், வள்ளுவர் அவர்க்குச் சமகாலத்தவரென்று கொள்ளுதலினால் அவர்க்கு முற்பட்டவராகக் கருதலே சால்புடைத்தாம். புலவரெவரும் தம் காலத்தவரால் தலைநின்ற தேவநாவலராய் மதிக்கப்படும் வழக்கம் யாண்டும் இல்லை. பெரும்பாலும் சமகாலத்தவரால் அவமதிப்பும் தாமியற்றிய நூலின் மெய்ப் பெருமைவலியாற் பிற்காலத்தவரால் மேம்பாடும் அடைவதே புலவருக்கியல்பு. தெய்வப் பாவலராக வள்ளுவரைச் சங்கப் பழம்புலவர்கள் கூறுவதால், அவர் தமக்கு வள்ளுவர் நீண்ட காலத்துக்கு முற்பட்டவராகவும், அவரற நூலின் இறவாச் சிறப்பு அங்கீகரிக்கப்படுதற்குப் போதிய அவகாசம் அக்குறளுக்கும் அதனடிகளைப் பாராட்டி எடுத்தாளும் சங்கப் பனுவல்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கவும் வேண்டும். இது சம்பந்தமாய்த் திருக்குறளடிகளைச் சிந்திக்கச் செய்யும் சில சங்கச் செய்யுட்டொடர்களை ஈண்டுக் குறிப்போம்: 1. இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்றும் நல்லா ளிதாத குடி. (1030) தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன ஓங்குகுல நையவத னுட்பிறந்த வீரர் தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொல் நீங்கல்மட வார்கட னென்றெழுந்து போந்தான். (சிந்தா - காந்தருவ-6) 2. வேட்ட பொழுதி னவையவை போலுமே தோட்டார் கதுப்பினா டோள். (1105) வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்மென்றோட பூட்டார் சிலைநுதலாட் புல்லாதொழியேனே.(சிந்தா - கண - 192) 3. கடலன்ன காம முழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் (1137) எண்ணில் காம மெரிப்பினு மேற்செலாப் பெண்ணின் மிக்கது பெண்ணல. தில்லையே (சிந்தா - குண - 148) 4. கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க் காற்றாதா ரின்னா செயல். (894) யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர் (895) வேந்தொடு மாறுகோடல் விளிகுற்றார் தொழிலதாகும். (சிந்தா - குண - 239) 5. ஆக்கங் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கா ரறிவுடை யார். (463) வாணிக மொன்றுந் தேற்றாய் முதலொடுங் கேடு வந்தால் ஊணிகந் தூட்டப் பட்ட வூதிய வொழுக்கி னெஞ்சத் தேணிகந் திலேசு நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார் சேணிகந் துய்யப் போநின் செறிதொடி யொழிய வென்றார். (சிந்தா - காந்தரு - 278) 6. இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று நல்லார்க்கு நல்ல செயல் (905) இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்றநெஞ்சிற் புல்லாள னாக. (சிந்தா - மண்மகளிலம்பகம், செய் - 217) 7. உலகந் தழீஇய தொட்ப மலர்தலும் கூம்பலு மில்ல தறிவு. (425) கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதா நட்பாட்சி - தோட்ட கயப்பூப்போன் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாரு நட்பாரு மில். (நாலடி - நட்பாராய்தல் - 5) 8. ஒருநா ளெழுநாள்போற் செல்லும்சேட் சென்றார் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு (1269) பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னாம் உள்ள முடைந்துக்கல் கால். (1270) ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து கூடற்கட் சென்றதென் னெஞ்சு (1284) ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... புலப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணிற் கலப்பேன் என்னுமிக் கையறு நெஞ்சே. ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவற்காணில் கூடுவேன் என்னமிக் கொள்கையி னெஞ்சே. ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... துனிப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணில் தனித்தே தாழும் இத்தனி நெஞ்சே, எனவாங்கு பிறைபுரை யேர்நுதால் தாமெண்ணி யவையெல்லாம் துறைபோத லொல்லுமோ தூவாகா தாங்கே அறைபோகு நெஞ்சுடை யார்க்கு. (கலி - 67) 9. துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால் நெஞ்சத்த ராவர் விரைந்து (1218) ஓஓ கடலே, தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமையெடுத்துப் பற்றுவென் என்றியான் விழிக்குங்கால் மற்றுமென் நெஞ்சத்துள் ளோடி யொளித்தாங்கே துஞ்சாநோய் செய்யு மறனி லவன். (கலி - 144) 10. காமமும் நாணு முயிர்காவாத் தூங்குமென் நோனா உடம்பி னகத்து. (1163) 11. காம முழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி. (1131) நலிதருங் காமமுங் கெளவையு மென்றிவ் வலிதின் உயிர்காவாத் தூங்கியாங் கென்னை நலியும் விழுமம் இரண்டு. (கலி - 142) காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம மெழினுத லீத்தவிம் மா. (கலி - 139) 12. அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய் தந்நோய்போற் போற்றாக் கடை. (315) சான்றவர் வாழியோ சான்றவிர் என்னும் பிறர்நோயும் தந்நோய்போற் போற்றி அறனறிதல் சான்றவர்க் கெல்லாம் கடனா லிவ்விருந்த சான்றீர் உமக்கொன் றறிவுறுப்பென் (கலி - 139) 13. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் றொழில். (549) குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் வியன்றானை விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே. (கலி - 130) 14. தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். (263) நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் மறையாவா நெஞ்சத்திற் குறுகிய கரியில்லை யாகலின். (கலி. நெய்தல் -8) 15. களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் தெளித்ததூஉ மாங்கே மிகும் (928) ... ... ... ... ... ... ... ... காமம் மறையிறந்து மன்று படும் (1138) தோழிநாங், காணாமை யுண்ட கருங்கள்ளை மெய்கூர நாணாது சென்று நடுங்க வுரைத்தாங்குக் கரந்ததூஉங் கையொடு கோட்பட்டாங் கண்டாய் (கலி. முல்லை செய்-15) 16. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. (791) நாடி நட்பி னல்லது நட்டு நாடார்தம் மொட்டியோர் திறத்தே. (நற்றிணை - 32) 17. பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். (580) முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சு முண்பர் நனிநா கரிகர் (நற்றிணை) 18. நீறின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. (20) நீரின் றமையா உலகம் போலத் தம்மின் றமையா நந்நயந் தருளி. (நற்றிணை - 1) 19. சிறப்பீனும் செல்வமு மீனு மறத்தினூஉங் காக்க மெவனோ உயிர்க்கு. (31) அறத்தான் வருவதே யின்பம்மற் றெல்லாம் புறத்த புகழு மில. (39) சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல. (புறம் - 31) 20. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். (528) வரிசை யறிதலோ வரிதே பெரிதும் ஈத லெளிதே மாவண் டோன்றல் அதுநற் கறிந்தனை யாயிற் பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே. (புறம் - 121) 21. நாட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். (679) நாட்டார்க்கு நல்ல செயலினிது எத்துணையும் ஒட்டாரை யொட்டிக் கொளலதனின் முன்னினிதே. (இனியவைநாற்பது - 18) 22. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று நிலையாமை காணப் படும். (349) அற்றது பற்றெனி லுற்றது வீடு (திருவாய்மொழி - 1, 2, 5) 23. ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே பேரா வியற்கை தரும். (370) சென்றாங் கின்பத் துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால் அன்றே அப்போ தேவீ டதுவே வீடு வீடாமே. ( திருவாய்மொழி - 8 -8 -6) 24. அங்கணத்து ளுக்க வமிழ்தற்று. (720) ஊத்தைக் குழியி லமுதம் பாய்வதுபோல். (பெரியாழ்வார் திருமொழி - 4-6-9) 25. ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின். (126) ஒருமையு ளாமையோ லுள்ளைந் தடக்கி. (திருமந்திரம் - முதற்றந்திரம் - 21) 26. நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறு நாடு கெடும். (553) நாடொறு மன்னவ னாட்டிற் றவநெறி நாடொறு நாடி யவனெறி நாடானேல் நாடொறு நாடு கெடுமுட னண்ணுமால் நாடொறுஞ் செல்வ நரபதி குன்றுமே. (திருமந்திரம் - இராசதோடம் - 2) 27. சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய். (359) சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் என்றமையால் சார்புணர்வு தானே தியானமுமாம் - சார்பு கெடஒழுகி னல்ல சமாதியுமாங் கேதப் படவருவ தில்லைவினைப் பற்று. (திருக்களிற்றுப்படியார்) 28. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். (348) தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றவையவ ரென்று - நிலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த மெய்வைத்த சொல்லை விரும்பாமல். (உமாபதிசிவாசாரியார் நெஞ்சுவிடு தூது) 29. ... ... ... ... ... ... ... ... ... அவர் சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் (1261) நெடும ணிஞ்சி நீணகர் வரைப்பி னோவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல வெழுதிச் செவ்விரல சிவந்த வவ்வரிக் குடைச்சூ லணங்கெழி லரிவையர். (பதிற்றுப்பத்து - 68) 30. பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா பிற்பகற் றாமே வரும். (319) முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றிகாண். (சிலப். வஞ்சினமாலை. வரி - 3.4) 31. தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. (55) தெய்வம் தொழா அள் கொழுநற் றொழுவாளைத் தெய்வம் தொழுந்தகைமை திண்ணாமல் - தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணகமா தர்க்கு விருந்து. (சிலப். கட்டுரைகாதை) தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேராய். (மணிமேகலை : 22 வரி 59-61) 32. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (110) நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டிற்றே யாயிழை கணவ. (புறம் - 34) இன்னும் இத்தகைய மேற்கோள் வாக்கியங்கள் பல எடுத்துக் காட்டலாமாயினும் ஈங்கு இவை போதியவாம். இவ்வாறு உரையொடு பொருளும் உறழும் பலவிடங்களையும் காட்டு மிடத்துக் குறளாசிரியரே அவற்றைப் பிறநூல்களி னின்றும் இரவல் கொண்டிருக்கலாகாதோ எனின், இவ்வாக்கியங்களின் பொருணோக்கும் நடைப்போக்கும் உற்று நோக்குவார்க்குக் குறளே பிறநூலுடையாருக்கு மேற்கோளாதல் வெள்ளிடை மலையாம். அன்றியும் சாத்தனார் மணிமேகலையிலும், ஆலத்தூர் கிழார் புறப்பாட்டிலும் குறளைப் பாராட்டிப்பாடக் கண்டு வைத்தும், குறளாசிரியர் பிறநூலினின்று இரவல் கொண்டாரெனக் கூறுதல் சிறிதும் பொருந்தாக் கூற்றாம். எனவே சங்கப் புலவர் பலராலும் எடுத்தாளப்படும் குறள் அவர் தமக்குக் காலத்தான் முந்தியதாதல் ஒருதலை. அன்றியும், கடைச் சங்கப் புலவரான சாத்தனார் பொய்யில் புலவன் பொருளுரை யெனவும் ஆலத்தூர்கிழார் அறம் பாடிற்றே எனவும் குறளையும் அதனாசிரியரையும் போற்றிப் பேணக்காணும் நாம், இப்பழம் புலவராற் குறள் மெய்ம்மறை யெனவும், அதனாசிரியர் பொய்யா அறக்கடவுளெனவும் பாராட்டப் படுவதற்கு வள்ளுவரின் மெய்ப்பெருமை அப்புலவருக்கு வெகுநீண்ட காலத்துக்கு முன்னே நிலைபேறடைந்திருக்க வேண்டு மென்பதை எளிதிற் றெளியலாகும். நமக்குக் கிடைக்கும் சங்க நூல்களெல்லாம் கடைச்சங்கப் புலவராலேயே இயற்றப்பட்டன எனக் கொள்ளற்கும் இல்லை. சில புறப்பாட்டுக்களும் கவிகளும் இடைச்சங்கப் புலவராலேனும் எனைத்தானும் கடைச் சங்கத்துக்கு முற்பட்ட புலவரா லேனும் ஆக்கப்பட்டிருக்க வேண்டுமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அவர் நூல்களிலும் குறள் எடுத்தாளப்படுதலால் வள்ளுவர் கடைச் சங்கக் கடைக்காலத்தவருமில்லை; முதலிடைக் காலத்தவரு மில்லை; அச்சங்கத் துக்கு நெடும் பல்லாண்டுகட்கு முன்பிருந்தவ ராவரென்பது இனிது போதரும். இனித் தொல்காப்பியம் முதற்சங்க காலத்து ஆக்கப் பெற்று இடைச்சங்கத்தாருக்கு இலக்கணமாயிற்றென்பது தமிழ ரெல்லார்க்கும் ஒப்ப முடிந்ததொன்று. கடைச் சங்க காலத்தினும் தொல்காப்பியம் ஆட்சியிலிருந்ததாயினும் அதன் விதிகளுக்கு மாறுபட்ட வழக்குகள் அச்சங்க நூல்களிற் பயிலக் காண்கின்றோம். உதாரணமாக, மொழிக்கு முதலாகாதென்று தொல்காப்பியம் விதந்து விலக்கிய சகரத்தை முதலாகக் கொண்ட தமிழ்மொழிகள் பல கடைச்சங்க இலக்கியங்களிற் பயிலக் காண்கின்றோம். வள்ளுவர் நூலில் வடசொல்லாய் வந்து வழங்கும் சமன், சலம் என்ற இரண்டொன்று தவிரத் தனித்தமிழ் சகர முதன்மொழிகள் காணல் அரிது. இதனால், தொல்காப்பிய விதிகள் சில வழக்கிழந்த கடைச் சங்கக் காலத்துக்கு முன்னரே அவ்விதிகள் பிறழாமற் பேணப்பெற்ற இடைச் சங்கப் பழங்காலத்தையடுத்தே வள்ளுவரின் குறள் எழுந்திருக்க வேண்டு மென்று ஊகிப்பதும் இழுக்காது. சாணக்கியம் முதலிய ஆரியநீதி நூல்களினின்று அறங்களைத் திரட்டி வள்ளுவர் நூல் செய்திருக்க வேண்டுமென்றும், ஆதலால் சாணக்கியர் முதலியோருக்கு வள்ளுவர் பிற்காலத்த வராயிருக்க வேண்டுமென்றும் சிலர் கூறுகின்றனர். இதற்குப் பரிமேலழகர் 662ஆம் குறளின் விசேடக் குறிப்பில் வியாழ வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின் என்று எழுதியுள்ள வாக்கியத்தை ஆதாரமாக்கி அவ்வாக்கியத்திற் கண்ட பின் நீதி நூலுடையார் என்ற சொற்றொடர் சாணக்கியர் முதலாயினாரைச் சுட்டுவதாகக் கொள்கின்றனர். இதுவே பரிமேலழகர் கருத்தாயின் அவர் விசதமாக்கியிருப்பர். அன்றியும், பின் னீதிநூலுடையார் யாரேயாயினும் அவர்தம் வழி நூல்களுக்குக் குறள் சார்பு நூலாகும் என்னுங் கருத்தைப் பரிமேலழகர் இவ்வாக்கியத்தாற் குறித்ததாக ஏற்படுமாறில்லை. ஆழச்சிந்தித்தால் வியாழ வெள்ளிகளின் நீதி நூல்களுங்கூடக் குறளுக்கு முதனூலெனப் பரிமேலகழர் இவ்வாக்கியத்திற் சுட்டிலரென்பது தெற்றென விளங்கும். வியாழ வெள்ளிகளின் துணிபுகளைத் தொகுத்த ஆரியநீதி வழி நூலுடையார் முறைக்கும் குறளாசிரியர் அறம் வகுத்த முறைக்கும் எடுத்துக்கொண்ட குறட் பொருள் பற்றியுள்ள ஒப்புமையை இவ்வாக்கியத்தாற் கூறியதன்றி, ஈண்டுப் பரிமேலழகர் காலமுறையால் முதல் வழி சார்பு நூல்களாமாறு வகுத்துக்கூற வந்தாரில்லை. இவ்வாறே பிற இடங்களிலும் குறட்கருத்துக்களோடு வடநூலுடையார் கொள்கைகளின் ஒப்பும் மாறுபாடும் பரிமேலழகர் எடுத்துக் காட்டிச் செல்லுதலும் கவனிக்கத்தக்கது. சங்கத்தார் பாடியதாகக் கொள்ளப்படும் திருவள்ளுவ மாலைச் செய்யுட்கள் பல குறளை ஆரியமறைகளுக்கு ஒப்பதும் மிக்கதுமாமென்று விசதமாகப் பாராட்டுகின்றன. வேதங்களுக்கு மிகப் பிந்திய மனுவாதி வடமொழி நூலொன்றுமே குறளுக்கு முதனூலாகா தென்னுங் குறிப்பும் திருவள்ளுவமாலைச் செய்யுட்களிற் காணலாம். இவ்வாறு மனுவாதி வடமொழி அறநூலுடையாரே வள்ளுவருக்கு முதனூலு டையராகாத போது, அவரைப் பின்பற்றிய மிகப் பிற்பட்ட கேவலம் நீதி நூலுடைய சாணக்கியராதியர் வள்ளுவருக்கு வழிகாட்டிகளாவது எப்படியோ? மேலும், நீதி அறத்தில் அரசனால் வற்புறுத்தப்படும் ஒருகூறேயா மாகலின், அறநூல்களினின்று நீதிநூல்களைப் பிரித்துத் தொகுக்கலாவ தன்றிக் கேவலம் நீதி நூல்களினின்று அறநூல்களியற்றப்படுமாறில்லை. பரிமேலழகரே பலவிடத்தும் நீதி நூலின் வேறாய அறநூல்களுண்மையைச் சுட்டியுள்ளார். திருக்குறளர் அறநூலாகவே, அறத்தின் ஒரு பகுதியான நீதிகளை மட்டுங்கூறும் வடமொழி நூல்களின் வழிநூலாக வள்ளுவர் குறளை இயற்றினர் என்பது பொருந்தாக்கூற்றாம். இன்னும், ஆரிய தருமசாத்திரமுறை வேறு, தமிழற நூன்மரபு வேறாகும். இருமுறைகளையும் ஒத்துணர்ந்த வள்ளுவர் திருக்குறள், தமிழ் மரபுவழுவாது பொருளின் பகுதிகளான அகப்புறத்துறையறங்களை மக்கள் வாழ்க்கை முறைக்காமாறு ஆராய்ந்து அறுதியிட்டு வடித்தெடுத்து விளக்கும் தமிழ்நூல். தமிழ்மரபும் ஆரியர் சம்பிரதாயமும் அறிந்த பரிமேலழகர் தம் குறளுரையில் ஆங்காங்கே இவ்விருபெரு வழக்குக்களின் இயைபும் முரணும் எடுத்துக்காட்டிச் செல்லுமழகு பாராட்டத்தக்கது. இதை விட்டுத் திருக்குறள், சாணக்கியராதி வடமொழி நீதி வழி நூல்களுக்குப்பின் அவற்றின் சார்பு நூலாக எழுந்ததென்பார் தமது ஆரியமதிப்பும் காதலும் வெளிப் படுத்துவ தன்றிச் சரிதவுண்மை துலக்குபவராகார். தமிழிற் பெருமையுடைய அனைத்தும் ஆரிய நூல்களினின்று திரட்டப்பட்டிருப்பதாகக் காட்டி மகிழ்வார் சிலர்க்கன்றி, நடுநிலையாளருக்கு வள்ளுவர் குறள் தமிழில் தனி முதலற நூலேயாகுமென்பது வெள்ளிடைமலையாம். பகுதி 2 : வள்ளுவர் குடிப்பிறப்பு திருவள்ளுவர் ஆதி என்னும் புலைமகளுக்கும் பகவன் என்னும் பார்ப்பனனுக்கும் பிறந்த எழுவரில் இளையவர் என்று சில்லோர் சொல்லும் கதையினை நல்லோர் பலரும் நம்புகின்றார். இக்கதையுரைப்போர். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வ மாகையால், வள்ளுவர் தம் முதற் குறளில் ‘. . . . . . . ஆதி பகவன் முதற்றே யுலகு எனுந் தொடராற் றம் தந்தை தாய்ப் பேணியுள்ளார் என்று கூறித் தம்கோள் நிறுவி விட்டதாக எண்ணி மகிழ்கின்றனர். இக்கதைக் கிவர் விருப்பும், இவர் விருப்புக் கிக்கதையுமே ஆதாரமாவதன்றிப் பிறிது பிரமாணம் காட்டக் காணேம். முதலில் நாயனார் கடவுள் வழிபாட்டு முதற்குறளிற் றம் பெற்றோரை உலகோற்பத்திக்கு முதற் காரணராகச் சுட்டத் துணிவரா என்பது சிந்திக்கத்தக்கது. இனி இப்பெயருடையார் நாயனாரின் முதற் குரவரென்பதைப் பிறிது சான்றுகொண்டு நிறுவியபின்னன்றே இக் குறளி லக்குரவர் பெயரைக் குறிக்க ஆசிரியர் கருதினரா எனுமாராய்ச்சி எழவேண்டும். ஐய மகற்ற ஆராயுங்கால் ஐயப்படுவதனையே ஆதரவாக்கொண்டு ஒரு சித்தாந்தம் செய்வது தருக்க முறையாமா? முதற்குறளிற் கண்ட ஆதி - பகவன் எனுஞ் சொற்கள் குறளாசிரியரின் பெற்றோரைக் குறிக்குமாவென்று விசாரிக்குமுன், அப்பெயருடைய பெற்றோ ருண்டெனக் கண்டறியவேண்டியது முதற்கடனன்றோ? குறட்சொற்களையே கொண்டு அப்பெயரிய பெற்றோருண் டெனவும், அப்பெற்றோருண்மையைச் சங்கையற்ற பிரமாணமாகக் கொண்டு குறள் மொழிகளவரையே குறிக்குமெனவும் அநுமானிப்பது பிடிவாதிகளின் அபிமான வாதமாகலாம்; ஆனால் உண்மை காணும் வாதமுறையாகா தென்பது வெளிப்படை. இனிப் பகவன்என்பது இவர் தந்தையின் பெயரென்பதற்கு யாதொரு நூலாதரவுமில்லாததோடு, அதற்கு மாறாக “யாளி, கூவற் றூண்டு மாதப் புலைச்சி, காதற் காசனி யாகி மேதினி, யின்னிசை யெழுவர்ப் பயந்தன ளீண்டே எனும் ஞானாமிர்த நூலடிகளால் வள்ளுவரின் தந்தை யாளிதத்தன் எனும் வேதியன் என்றொரு கதையும் கேட்கின்றோம். இவ்விரு கதைகளில் விலக்குவதெதனை? வேண்டுவதெது? இன்னும், பகவன் எனும் சொல் தமிழிலும் இருக்கு வேதத்திலும் அவ்வுருவிற் பயில்வதன்றிப் பாணினியாதி வையாகரணிகளின் விதிப் படிக்கும் வேதத்துக்குப் பிந்திய வடமொழி நூல்களிலும் பகவன் எனும் பிரயோகம் காணலரிது. பகவான் என்பதே சரியான ஆரியச் சொல்லாகும். இதனாற் குறளாசிரியர் பாணினிக்கு முற்பட்டவரெனத் துணிதற்கிடமாவதன்றிக் கடைச்சங்கக் கடைக்கால வேதியனொருவனுக்குப் பகவன் எனும் பெயருண்மை அசம்பாவிதமாகும். எனைத்தானும் இக்கதைக்குக் கதைப்பவர் காதலன்றிப் பிறிது பிரமாண மில்லை. பேரூரில்லாத பலர் பிற்காலத்திற் பாடிவைத்த தனிப் பாடல்களை யொரு பொருட்படுத்திப் பண்டைச் சரிதங்கள் துணிவது, ஏதவிளைவுக் காதார மாகுமன்றி, உண்மை தெளிதற்குதவுமாறில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன் பின்னிருந்திறந்த நச்சினார்க்கினியர், பரிமேலழகர்களைக் கூட்டி வைத்துப் போட்டிசெய்வித்தும், காளிதாசன் போசராசன் பவபூதிகளைச் சேர்த்து, அவர் தம்முட் சல்லாபச் சண்டை யுண்டு பண்ணியும் வழங்கிவரும் பல கதைகளையும் தனிச் செய்யுட்களையும் கேட்கும் நாம், அனையதொரு பொறுப்பற்ற நாடோடிகளின் கதையை நம்பி அறத்தேவரைப் பறைப் புலையராக்கத் துணிவதெவ்வாறு கூடும்? இன்னும், இக்கதைக்குப் பண்டைச் சங்கப் பாட்டுக்களிலேனும் பழைய பிற பனுவல்களிலேனும் ஓராதாரமும் பெறாமையோடு, குறட் பழஞ் சுவடிகளெதனிலு மிக்கதையின் சார்பான தனிச் செய்யுட்க ளெழுதப் படாமையையும் கவனிக்க வேண்டும். திருவள்ளுவமாலை முழுதையும் தொன்றுதொட்டு வரன் முறையேவந்த குறட்சுவடிகளிலெழுதி வரு வானேன்? வள்ளுவரும் அவருடன் பிறந்த பிள்ளைகளும், தாதை வாதையால் வேதனைப்படும் ஆதியன்னையைத் தெருட்ட அவர் பிறந்தவுடன் சேனைப்பால் தானுமறியாச் சிறுகுதலை வாய் திறந்துபதேசித்த தெய்வக் கவிகளை அச்சுவடி பெயர்த்தெழுதிவந்தோர் புறக்கணித்துக் களைந்து கழிக்கக் காரணந்தா னென்னோ? குறளுக்கு உரைகண்ட பண்டிதர் பதின்மரும் இவ் வரலாற்றுக் கவிகளைச் சுட்டாதொழிவானேன்? பிற்காலத்திற் பத்தி வினயத்துடன் குறணூலை ஆராய்ந்து பதிப்பித்து வெளிப்படுத்திய நல்லூர் ஆறுமுகநாவலர், திருத்தணிகைச் சரவணப் பெருமாளையரனைய அரிய தமிழ்ப் பெரியாரும் திருவள்ளுவமாலைச் செய்யுட்களை மட்டுந் தழுவிப் பிறவற்றை நழுவவிட்டிருப்பதும் சிந்திக்கத் தக்கதன்றோ? நக்கீரரையும் கம்பரையும் தமிழகத்திற் றலைநின்ற அறி ஞரனைவரையுமே வேதியர்குருதி பாதி விரவப் பெற்றதாற் பெருமையுற்றன ரெனப் பல கதைகட்டி, அக்கலப்பற்ற தனித் தமிழருள்ளே தகவுடைய ரில்லை யென்றொன்றைப் பொருளெச்சமாகச் சுட்டித் தம்முட்டாம் மகிழும் சில நவீன விற்பனரின் கற்பனைத் திறத்தை யன்றே ஆதிபால் எழுவரை வேளாவேதியன் காதலற்றுக் கடமையிற்றந்த கதை நின்று நிதர்சனமாக்குகின்றது. கதைப்பவர் காட்டுங் கவிதைகளிரண்டு இனித் தேவை வள்ளுவ னென்பானோர் பேதையெனும் திருவள்ளுவ மாலைச் செய்யுளடியையும், மெய்த்த திருவள்ளுவனார் வென்றுயர்ந்தார், கல்விநலந் - துய்த்த சங்கத் தார்தாழ்ந்தார், சோமேசா என்ற மாதவச் சிவஞான முனிவரின் சோமேசர் முதுமொழி வெண்பாவையும் எடுத்துக்காட்டி, இவற்றால் திருக்குறளாசிரியரின் புலைக்குலப் பிறப்பு நாட்டப்படுவதாய்க் காட்டுவாரும் சிலருளர். முதலில் திருக்குறளின் சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் சங்கப் புலவராற் பாடப்பெற்ற செய்தியே சங்கையறத் தெளியப்பட்ட தொன்றில்லை. வள்ளுவரால் வெல்லப்பட்ட சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மர் மட்டும் தம் பிழைக்கிரங்கிக் குறளையும் அதனாசிரியரையும் புகழ்ந்து பாடியிருந்தால், ஒருவாறு அது நாம் கேட்கும் கதை வரலாற்றோடு சிறிது பொருத்தங்கொள்ளும். ஆனால், சங்கப் புலவரொடு அசரீரி, சிவபிரான், கலைமகள், மூங்கையரான உருத்திரசன்மர் முதலியோரும், அச்சேறி வெளிவராத சில குறட்சுவடிகளில் இன்னும் பலரும் பாடினதாய்க் காணப்படும் பல பாக்களையும் திரட்டிக் குறட் சிறப்புப் பாயிரமாக்கி வைத்திருப்பதைச் சிந்திப்போர்க்குத் திருவள்ளுவமாலைச் செய்யுட்களை வள்ளுவராற் பொற்றா மரையிற் றள்ளப்பட்ட சங்கப் புலவர் தம் பிழை பொறுக்கப் பாடின கதையின் உண்மை சங்கைக்கிடமாகும். அதனுடன் அச்செய்யுட்களை நிதானித்துக் கவனிக்குங்கால், தோற்ற சங்கப்புலவர் மனங்கசிந்து அத்தருணம் தத்தமுளத்துதித்த கருத்தை யப்படியே வெளியிட்டதான கதைக்கு முரணாக, ஒருவர் அல்லது ஒரு சிலரே முன் சாவதான யோசனையுடன் பாடித் தொகுத்தபான்மையினை அப்பாக்களே நிரூபிக்கின்றன. வென்றுயர்ந்த வள்ளுவரைப் புகழவந்த சங்கப் புலவரின் பாக்கள் திருக்குறளியல்பும் பெருமையும் மட்டுங் குறிக்க வேண்டுவதியல் பாகவும், திருவள்ளுவமாலைச் செய்யுட்களை யுற்றுநோக்குவார்க்கு அவை திருத்தமாகப் பொருத்தங்காட்டுங் குறிப்புடன் எண்ணித்துணிந்து பாடி வைத்த பாட்டுக்களென விளக்கமாகும். மேலும், கதையின்படி பங்கமுற்ற சங்கப் புலவர் குறையிரந்தியற்றின தனிப்பாக்கள் குறளுக்குச் சிறப்புப் பாயிரமாமாறில்லை; சிறப்புப்பாயிரம் செய்தற்குரியர் தன்னா சிரியன் தன்னொடு கற்றோன், தன் மாணாக்கன் தகுமுரை காரன் என்றின்னோருள் ஒருவரேயாகலானும். சங்கத்தார் இன்னோர் வகையில் யாருமாகாமையானு மென்க. திருவள்ளுவ மாலை குறணூலின் சிறப்புப் பாயிரமென வழங்கப் பெறுதலால் அதனைச் சங்கப்புலவர் செய்தனரெனுங் கொள்கை உறுதிபெறு மாறில்லை. இவ்வுண்மை யெதுவாயினு மாகுக. தற்காலம் அதனைச் சங்கையற்றதெனக் கொள்ளினும், அதனால் வள்ளுவர் புலையராமாறு தெளிதற்கில்லை. அவரைப் புலையராக்குவார் அதற் கெடுத்துரைக்கும் மேற்கோட்செய்யுள் இது: அறம்பொரு ளின்பம்வீ டென்னுமிந் நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும் வள்ளுவ னென்பானோர் பேதை; அவன்வாய்ச்சொற் கொள்ளா ரறிவுடை யார் (திருவள்ளுவமாலை -அ) எனும் மாமூலர் பெயர்கொண்ட இந்தச் செய்யுளுக்கு அமானுசிய மான அரிய விழுமிய குறளற நூலையாக்கிய கடவுட்டன்மை வாய்ந்த தேவரை வள்ளுவனெனும் பெயர்கொண்டதொரு கேவலம் மனிதனாக வுட்கொண்டு பேசுவா னுளனாயின், அவன் நாயனாரின் தெய்வீகத் தன்மையறிய மாட்டாத அறிவீனன் என்று குறிப்பதே பொருளாகும். திருவள்ளுவமாலைக்கு உரை கண்ட திருத்தணிகைச் சரவணப் பெருமாளையரவர்களும், பிறர் மதமாக ஒலிக்குறிப்பினாலே சாதியிழிவு தோன்ற வள்ளுவனென்பான் எனினு மமையும் எனப் பிற்குறிப்பிற் சுட்டினரேனும், தம் முன்னுரையில் அறமுதலாக ... வேதப் பொருளாகிய நான்கனது கூறுபாட்டைத் தெரிந்து ... சொல்லிய தேவனை மறந்தாயினும் ஒரு மனிதனாக உட்கொண்டு வள்ளுவ னென்று சொல்லுதற்கு ஒருவனுளனாயின், அவன் அறிவில்லாதவனாவன் ... அச்சொல்லை அறிவுடையார் கொள்ளார்என இப்பாட்டுக்குப் பொருள் கூறிப்போதலும் சிந்திக்கத் தக்கது. வள்ளுவச் சொல் அவர் காலத்திற் புலைக்குல வகுப்பின் பெயரெனத் தக்க பிறசான்றால் நாட்டினாலன்றி, இக்கவியில் வள்ளுவனென்பதற்கு இழிகுலத்தோனெனப் பொருள் கொள்ளற் கவசியமே கிடையாது. அத்தகைய சான்று காட்டப்படாத நிலையில் இப்பொருளுரைப்போர் பிற்காலக் கதையை வைத்தே இக்கவிக்கு இப்பொருள் கூற முயல்வதல்லால், இக்கவி அக்கதைக்கு மேற்கோளா மாறில்லை யென்பது மலையிலக்காம். இனி மாதவச் சிவஞானயோகிகளின் சோமேசர் முதுமொழி வெண்பா சற்றேறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன் எழுந்ததாகும்; அதனுள் : மெய்த்ததிரு வள்ளுவனார் வென்றுயர்ந்தார், கல்விநலம் துய்த்தசங்கத் தார்தாழ்ந்தார், சோமேசா - உய்த்தறியின் மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றா ரனைத்திலர் பாடு. என்னும் வெண்பா வள்ளுவரைப் புலைக்குலத்தவராக்குவாரால் மேற்கோளாக எடுத்துக்காட்டப்படுகிறது. இக்கவியால், அதனைச் செய்தவர் காலத்தில் வள்ளுவர் ஆதிபாற் பகவனுக்குப் பிறந்த கதை வழங்கிய தென்பதும், அக் கதையை அம்முனிவர் தம் முதுமொழி வெண்பாவிற் சுட்டி யுள்ளார் என்பதும் மட்டும் கிடைப்ப தாகும். மற்றப்படி அக் கதைக்கு முதிய முன்னாதரவுண்டென்பதேனும், அதன் சரித வுண்மையை அம்முனிவர் ஆராய்ந்து துணிந்த தம் முடிபாகக் காட்டவந்தாரென்பதேனும் அவர் வெண்பாவால் தெளிதற் கில்லை. எடுத்த குறளுக்கு ஒரு கதை காட்டும் வசியத்தின் பொருட்டு அவர் காலத்திற் கேட்கப்பட்ட இக்கதையை அவர் தம் வெண்பாவில் முடைந்தாரென்பதே முறையாமன்றி, மற்றிதன் உண்மையை ஆய்ந்து தெளிந்து நிலைநிறுத்து வதே முனிவர் கருத்தெனக்கொள்ளின் அதற்குப் பல முரண்பாடு காண் கின்றோம். சங்கத்தை வள்ளுவர் வென்றடக்கியதற்கு வேறு சான்றின் மையை முன்னரே சுட்டியுள்ளோம். அன்றியும், இம் முதுமொழி வெண்பா விற் பின்னெடுத்துக் காட்டுங் குறளொடு இக்கதை பொதிந்த முன்னடிகள் முரணுவது வெளிப்படை. கீழ்ப்பிறந்தும் கல்வியுடைய சான்றோரின் பெருமை, மேற்பிறந்தும் கல்லாத கயவர்க்கில்லை என்பதை வலியுறுத்த வந்த குறளை யுதகரிக்கும் கதையில், தேவரைத் தவிர யாவராலு மெதிர்க் கொணாக் கல்வி நலம் பெருகப் பெற்றுயர்ந்த சங்கத்தாரைக் கல்லாதாரெனக் குறிப்பது பொருத்தமாமா? அக்குறிப்பு முனிவர்க்கில்லை யென்பதைக் கல்வி நலந்துய்த்த சங்கத்தார் எனும் அவர் சொற்றொடர் விசேடமே விசதமாக்கும். இதுவுமன்றிப் பலவேறு குலமும் தொழிலுமுடைய சங்கப் புலவரனைவரும் ஒக்க மேற்குலவுயர்குடிப் பிறப்புடையரன்றாகவே, கதை கூறுமாறு வள்ளுவரால் வெல்லப்பட்ட சங்கத்தாரெல்லாரும் மேற் பிறந்தார் எனவும் கல்லாதார் எனவும் முனிவர் கருதற் கிடனில்லை; முறையுமில்லை. அதனால் இவ்வொரு கவிகொண்டு கற்றுப்பாடுடைய குற்றமுடைமைக்காக வள்ளுவரைப் புலைக்குடிப் புகுத்துவது அவசியமும் அழகுமில்லை. சிவஞான யோகிகளே ஆராய்ச்சியின் பயனாகத் தாம் கண்ட முடிபென இக்கதையின் உண்மையை நிலைநாட்ட நினைத்தாலும் அவராய்ந்த ஆதரவுகளையும் கொண்ட முடிவுக்கு அவர்கண்ட நியாயங் களையும் நாம் விசாரிப்பது முறையாமேல், ஈண்டவர் தந்துணிவு துலக்கு நோக்கின்றிக் கேட்ட கதையைப் பாட்டில் முடைந்ததுகொண்டு அக்கதைக்கு அவரை ஆசிரியராக்கவும் அவர் கவிகொண்டதனை நிலைநாட்டவும் முயல்வது முறையன்றாகும். பறைக்குல மறுக்குங் குறிப்புக்களாவன இனி, வள்ளுவரின் குலமும் குடிப்பிறப்பும் நெட்டிடை யிருளில் மறைபட்டுத் தெளிதற்கரிதாகும். பண்டைப் பெரியார் பிறப்பனைத்தும் இவ்வாறே தேடறிய முயற்கொம்பாகத் தெரிகின்றோம். நக்கீரர் முதலிய சங்கப் புலவரும் அவர்தமக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்ட கம்பரனைய கவிவாணரும் தத்தம் நூலளவில் தமிழகத்தே வாழ்வு பெற்றிருத்தலன்றி, மற்றப்படி அவர்களின் குலம் குடிகளை விளக்கும் குறிப்புக்களொன்றும் கிடைக்கக் காணோம். காளிதாசன் முதலிய வடமொழி மகாகவிகளும் இப்படியே அவர்தம் நூலளவிலன்றிப் பிறாண்டு நமக்கு ஏதிலராகின்றனர். சரிதவுணர்ச்சியும் பயிற்சியும் தொன்றுதொட்டு நிலவிவரும் மேனாட்டிலுங்கூட அண்ணிய நானூறாண்டுகளுக்குள்ளிருந்த நாடக மகாகவியான செகப்பிரியரின் (ளுhயமநளயீநயசந) சீவிதக் குறிப்புக் களைப் பற்றியும் அவர் பெயரான் வழங்கிவரும் நாடகங்களின் ஆசிரியத் துவத்தைப் பற்றியும் இன்னும் தீராத வாதப்போர் நிகழக் காணும் நாம், சரித்திரக் குறிப்புக்களில் ஆர்வமும் ஆதரவும் இல்லாத நமது நாட்டில் ஞாபகத்திற் கெட்டாத நீண்ட பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்துலவி மறைந்த பெரும் புலமை யருஞ்சுடரார், பிறங்குமவர் நூற்கிரணவொளியால் நிலைப்ப தல்லால், அவரைப் பற்றிய பிற சிறு குறிப்புக்கள் தமிழகத்திற் பேணப் படாமை கண்டு வியத்தற் கில்லை. உலகையும் அதன் நிலையற்ற வாழ்வையும் வெறுக்கும் நம்மவர், மக்களின் குலம் குடி நிலைகளை மதிப்பதில்லை. இறவா அறிவற நூல்களை மட்டும் பேணிப் போற்றுவாரன்றி, அந்நூல் செய்தார் வாழ்க்கைக் குறிப்புகளை நம்மவர் பாராட்டும் வழக்கம் இல்லை. இதனால் குறளாசிரியரின் குடிப் பிறப்பும் மற்றும் அவர் சீவிதக் குறிப்புக்களும் இன்று இனைத்தெனத் துணிந்து தெளிதற்குச் சான்று போதா. எனினும், வள்ளுவர் புலைக்குலப் பிறப்பும் சால்புமுடைய ரெனக் கதைப்பவர் கதையொடு பொருந்தாக் குறிப்புக்கள் ஈண்டுச் சில நினைக்கத்தகும். பெற்றோர்ப் பேணலும் பெருங்குடிப் பெருமையும் குறணூலிற் பெரிதும் பாராட்டப் படுகின்றன. நற்குடிப் பிறப்பும் பிறந்த குடியைப் பேணிப் பெருக்கலும் மக்கட்கு அழகும் கடனுமாமென்று புலைக்குல வள்ளுவர் வற்புறுத்துவாரா? அன்றியும், அறம் பொருளின்பங்களையும் அவற்றின் நுட்பங்களையும் திறம்பட விரிக்கும் வள்ளுவர் ஆன்றகுடிப் பிறப்பும் அரசவைப் பழக்கமும் உடையரென்பதை அவர் குறள் பறையறைகின்றதே. இன்னும், அவரறநூல் வேதமனைய ஆரியர் பழம்பெரு நூல்களின் வடித்த சாரமென முழங்குபவர், பறைக்குல வள்ளுவர், வாலப்பருவத்தே கல்வி கேள்விகளால் நிறைந்து, இறவாக்குறள் பாடுமுன் தென்சொற் கடந்து வடசொற் கடலுக்கும் எல்லை கண்டது எப்படிக் கூடுமென்பரோ? அவர்காலப் புலையர் தமிழொடு ஆரியமும் பயின்று வருணபேதமழித்து அறவோர் அறிஞருடன் பயின்று வந்தனர் என்று கொண்டாலன்றிப் பறைக்குல வள்ளுவர் தம் திருக்குறள் காட்டும் அறிவும் கல்வியும் அடையுமாறில்லை. கல்லாமலும் கற்க வேண்டாமலும் அறம்பாடவந்த மனிதவுரு வெடுத்த கடவுள் வள்ளுவர் என்பார்க்கு இவ்வாராய்ச்சி அவசியமில்லை. சால்பும் தூய்மையுமான தெய்வத்தன்மை எனைத்துடையாராயினும் நாயனார் மனித வருக்கத்தினர் எனக் கொள்வோருக்கு மட்டும் இனைய ஆராய்ச்சிகள் பொருளொடு பயனுடைத்தாம். ஆனால், தேவரைப் பிரமனவதாரமென் பார்மாட்டு நாம் கேட்டறிய வேண்டுவதொன்றுண்டு. அறம் பாட அவதரிக்குங் கடவுள், ஓதுவிக்கும் அந்தணராகாமலும், முறை செய்யும் அரசனாகாமலும், பறையறையும் வள்ளுவனாய்ப் பிறக்கவந்த நோக்கமென்னோ? அநாதிதர்மமெனும் சநாதன முறைகளையும் வருண வகுப்பு வரையறைகளையும் நிலை தடுமாற அழித் தொழித்து. எல்லாவுயிர்க்கும் பிறப்பொக்கும், எனும் உண்மையை நிலைநிறுத்தற்கென்றே மறையவர் பிரமன் பறையனாயினனா? அன்றிப் பயன்தான் பிறிது யாதோ? நாள் வழக்கில் நம்மவருட் புலைக்குடி மக்கள் கல்விப் பயிற்சி, கேள்வியறிவு, அறவோர் கூட்டுறவுகளுக்கு இடம்பெற நாம் காண்பதில்லை. திருக்குறளியற்றற்கின்றியமையாத மதிநுட்பமும் நூலறிவும் அந்நூலாசிரியர் பறையர் குலத்திடையே பெற்றிருக்க வொண்ணாதென்பதொருதலை. பழங்காலத்தே பறைச் சிறுவனைப் பார்ப்பனரெவரும் பாராட்டி வளர்த்துத் தமிழொ டாரியமும் பயிற்றுவித்து அறமுதனூலாசிரிய னாக்குவதும் அசம்பாவிதம். ஆகவே வள்ளுவர் இப்பெற்றியெல்லாம் பெறற்கின்றிய மையாத நற்குடிப் பிறப்பும் அறவோர் கூட்டுறவும் உடையராதல் வேண்டுவது அவசியமன்றோ? மேலும், புலைமைக்கறிகுறி இழிதகவுடைய புலா லுண்ணலும் களிமயக்குமேயாம். அக்குடிப்பிறந்த வள்ளுவர், தம்மவர்க்குக் குலதர்மமும் பார்ப்பாரனைய பிறர்க்கு ஆபத் விர்த்தியும், வேள்வி ஆராதனைகளுக்கு கவசியமுமான புலாலை யும், கள்ளையும், விலக்கின்றி, யாவர்க்கும் விதி முகத்தாற் கடிந்தொதுக்குவது, அவர் புலைக்குடிப் பிறப்பொடு பொருந்து வதாமா? இன்னும், கேவலம் கல்விகேள்விகளால் மட்டும் அறியொணா தனவும், நீண்ட நெருங்கிய பழக்கத்தால் மட்டும் தெரிய வேண்டுவனவுமான அரசர் அமைச்சர் அறவோர் அறிஞர் வணிகர் வேளாளரின் குடிக்குல வழக்கங்களையும் கூட்டுறவு நலங்களையும் நுணுகியாய்ந்து எடுத்துத் திரட்டித் தெருட்டும் திருக்குறள் அதனை ஆக்கியவர் நற்குடிப் பிறப்பும் மேன்மக்களின் நெருக்கமும் உடையராதலைச் சுட்டாதொழியாது. இதுவேயுமன்றி, வள்ளுவரைப் புலையராக்கும் கதையே அவருக்கு வேளாள மரபில் வாசுகியென்னும் ஒரு மறுவில் கற்புடை மங்கையை மணஞ்செய்வித்து வழுத்துகின்றது. உயர்குடிப் பிறந்த வாசுகியென்பாள் வள்ளுவரின் வாழ்க்கைத் துணையா வதற்கு, அவர் புலைக் குடிப்பிறப்பு ஆசாரச் சீர்த்திருத்தம் அறியாத பண்டைக் காலத்தி லிடந்தருமா? வள்ளுவரும் வாசுகியும் காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுபடினும்’, அவள் பெற்றோரும் உற்றோரும் சைவ வேளாள மரபொழுக்கங்களை மறந்து வள்ளுவரை மணமகனாகக் கொள்ளற் கிசைவரா? திணை மயக்கும் குலக் கலப்புமான இம்மணம் அசம்பாவிதமா மேல், அதைக் கூறுங் கதையில் வள்ளுவரின் புலைக்குலப் பிறப்பு மட்டும் அங்கீகரிக்கப்படுமாறுண்டா? இனைய பலவற்றாலும் வள்ளுவரின் புலைப்பிறப்பு அங்கீகரிக்கத்தக்கதில்லை என்று ஒருவாறு துணியலாகும். பகுதி 3 : வள்ளுவச் சொல்லின் வழக்கும் பொருளும் இனி வள்ளுவப் பெயர் பறைக் குலத்தையே சுட்டுகின்றதா என்பதும் சிறிது ஆராயத்தக்கது. பறையரின் புரோகித வகுப்பினரே வள்ளுவராவர் என்பதற்குச் சூடாமணி நிகண்டும் பிற்காலப் பிறநூல்களும் மேற் கோள்களாகக் காட்டப்படுகின்றன. பண்டை நூலொன்றிலேனும் வள்ளுவப் பெயர் தீண்டாம லொதுக்கப்படும் புலையர்க்கா மெனும் குறிப்பும் இல்லை. மணிமேகலையில், வள்ளுவனென்ற பெயரும் இல்லை. பெருங்கதை சிந்தாமணி முதலிய கடைச்சங்கத்துக்கு மிகப் பிற்பட்ட சில காப்பிய நூல்களுள் பெருவிழாக்களையும் மன்னர் மணமனைய நற்செய்திகளையும் பட்டத்துயானைப் பிடர்த் தலையிருந்து அகநகரில் அரசவீதிகளிற் றெரிவிப்போர் வள்ளுவரெனச் சுட்டப்படுவதுண்டு. ஆண்டும் ஆனைமேல் அணைமிசையமர்ந்து பெரு விழாக்களை அரசமுரசொலிக்க அறிவிக்கும் தொழிலுடையோரைச் சுட்டுதற் கன்றிப் புலையர் குலவகுப்பினர் யார்க்கும் வள்ளுவப்பெயர் வழங்கவில்லை. அணைமிசை யமர்தந் தஞ்சுவரு வேழத்துப், பணையெருத்தேற்றிப் பகலவர் சூழ”1 ஊரையும் தம்மையும் உலகையும் வாழ்த்தித் தம் மணம் முதலிய மங்கலவிழாக்களை அறிவிப்பதற்கு வேந்தர் புலையரைத் தேடிக் கொள்ளாரன்றே? மேலும் புறநானூற்றில் துடி பாண் இடும்பனொடு குடியாப் பேசும் பறையரொடு வைத்துப் பிற்காலப் பெருங்கதையும் வள்ளுவ முதியரைச் சொல்லுமாறில்லை. நன்குடிமக்களின் பின்னடிக் குடியான பறையர் சாற்றும் பறையும், அதை அவரறையும் முறையும் வேறு. அரசு கொற்றத் தருங்கடம் பூண்ட வள்ளுவரோ, கோற்றொழில் வேந்தர் கொற்ற முரசம் பெரும்பணைக் கோட்டிலுள் அரும்பலி யோச்சி, முற்றவை காட்டிக் கொற்றவை பழிச்சித், திருநாள் படைநாள் கடிநாளென்றிப், பெருநாட் கல்லது பிறநாட் கறையார் எனப் பெருங்கதை2 பேசுகின்றது. பெருங்கதையுட் போலவே சாத்தனார் தம் மணிமேகலையிலும், வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசங் கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... முரசுகடிப் பிடூஉ முதுக்குடிப் பிறந்தோன் திருவிழை மூதூர் வாழ்கென் றேத்தி ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ஒளிறுவாண் மறவரும் தேரும் மாவும் களிறும் சூழ்தரக் கண்முர சியம்பிப் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென (விழாவறைகாதை - வரி - 27, 28, 31, 32; 68-72) என்று கூறியுள்ளார். இதில், தமிழ்முடியரச ரிமிழ் கடிமுரசை அரணுடையவர் கோயில்களில் வச்சிரக்கோட்டத்தினின் றெடுத்துயானைப் பிடர்த் தலையேற்றி அரசனையும் அனைவரையும் வாழ்த்திப் புகார் அகநகரிற் கரிகாற்சோழன் கட்டளையாற் கால்கோள் விழவின் கடைநிலை சாற்றினவனை முதுக்குடிப் பிறந்த வனாகவே சுட்டியுள்ளார். கொங்கு வேளிரும் சாத்தனாரும், அரசன்கோட்டத்துக் கொட்டிலுள் முரசுத் தேவைப் பலியோச்சிப் பழிச்சி விழவுணர்த்த யானையெருத்தத் தேற்றுவதைக் கூறுவது போலவே, பாலைக் கௌதமனாரும், பல்யானைச் செல்கெழுகுட்டு வன் வண்மைவள முழங்கும் தம் பாட்டில், முரசுறைகடவுளை இரும்பலியூட்டிப் பரசியேந்துபவனை உயர்ந்தோன் என விதந்து கூறுவதும்1 கவனிக்கத் தக்கது. இவ்வாறு வேந்தன் பெரும்பணைக்கொட்டி ... லுள்ளும் வச்சிரக் கோட்டத்துள்ளும் புலைப்பறையர் சென்று அரும்பலி ஓச்சுவரா? அன்றியும், கழுத்திலிட்டறைந்து காலானடந்து கரையும் பறையரின் பறை வேறு; வள்ளுவ முதுமகன் அரச வேழத்தணை மிசையமர்தந்து மன்னர் மங்கலப் பெருநாள் வழுத்தும் கோதை முத்தொடு தாமம் ததைஇய வேந்தர் கொற்றமுரசமும் வேறன்றோ? மேலும், ஆத்தான மண்டபத்தில் கொலுவிருந்த படியே, அரசு கொற்றத் தருங்கடம் பூண்ட - முரசெறி வள்ளுவ முதியனைத் தரீஇ”1 அரசரே நேரில் அவனுக்கு ஊருக் குரைப்பன கூறுகின்றதனாலும், வேந்தர் வெற்றி முரசைப் பலிதந்து பரசி அரசுவரு வேழத்துப் பணையெருத் தேற்றி மறவருந் தேரும் மாவுங் களிறுஞ் சூழ்தர உலகை அரசொடு வாழ்த்தி அணிவிழவறையும் வள்ளுவனை அரசு கொற்றத் தருங்கடம் பூண்டவனாயும் முதுக்குடிப் பிறந் தோனாயும் உயர்ந்தோனாயும் பண்டைப் பனுவல்கள் பாராட்டுவதாலும், அரசருக் கருங்கடம் பூண்ட தோருத்தியோகம் உடையனே அவ் வள்ளுவனாக வேண்டுமென ஊகித்துணரக் கிடக்கின்றது. இனி, இதன் தொடர்பாகச் சேந்தனார் திவாகரத்தில் வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் மன்னர்க், குள்படு கருமத் தலைவர்க் கொன்றும் என்று விசதமாக விளக்கியுள்ளமையும் ஈண்டுக் கவனிக்கற்பாற்று. இதனாலும் மன்னர்தம் உள்படு கருமத்தலைவர்க்கு வள்ளுவரென்பது உத்தியோகப் பெயராதல் தெள்ளிதிற் றெளியக்கிடக்கின்றது. தற்காலத்திலும் அரசனனைய பெருமக்களுக்கு அன்பும் நம்பிக்கையுமுடைய ஆப்தர் உட்கருமத் தலைவர் (ஞசiஎயவந ளுநஉசநவயசநைள) ஆக அமரக் காண்கின்றோம். எனவே, பண்டைக்காலத்திலும் தமிழரசர் தம்மகத்தே, புறக் கருமத் தலைவரான ஏனாதியரொத்த வரிசையும் பதவியுமுடைய அகக்கருமத் தலைவரான உத்தி யோகத்தர் இருந்தனரெனவும், அவர் வள்ளுவரென வழங்கப் பெற்றாரெனவும் தெளிகின்றோம். கடைச்சங்கத்துக்கு முற்பட்ட குறளாசிரியர் பழங்காலத்தில் வள்ளுவப்பெயர் சாதி குறியாமல் மன்னருள் படுகருமத் தலைமைப் பதவியையே குறித்ததாக ஏற்படுகின்றது. எனவே, வள்ளுவப்பெயர் சங்க காலத்திற் றமிழரசர் உள்படுகருமத் தலைமை யுத்தியோகப் பெயராயும் (ஊhயஅநெசடயiளே), பெருங்கதையும் சிந்தாமணி யும் எழுந்த இடைக்காலத்தே அவ்வுத்தியோகத்தரின் தொழிலிலொன்றான அரசவிழாக்களை அறிவிப்போர் (ழநசயடனள) பெயராயும் நின்று, பிற்காலத்திற் பறையருக்குப் புரோகிதரும் நிமித்தகருமான ஒரு புலை வகுப்பினரின் சாதிப் பெயராய் வழங்கலாயிற்றெனத் தெரிகின்றோம். இப்படியே முன் சாதி குறியாத குறிஞ்சித் திணைமக்கள் பொதுப்பெயராய் நின்ற குறவர் எனுஞ்சொல் தற்காலத்திற் குறிசொல்லும் ஒரு பஞ்சம வகுப்பினரின் சாதிப் பெயராய் வழங்குவது அறிவோம். இவ்வுண்மையறியும் நாம், இக்காலத் தொருவனை வள்ளுவனெனில் வள்ளுவச் சாதியிற் பிறந்தவனைக் குறிப்பதெனக் கொள்ளுமுறை கொண்டு, பிறப்பாற் சாதிகுறியாத முன்சங்கத் தமிழுலகில் வள்ளுவரெனுஞ்சொல் பதவி-தொழில் குறியாது சாதிகுறிப்பதெனத் துணிதல் முறையாமா? வள்ளுவரென்று ஒரு சாதிவகுப்பே தொல்லைத் தமிழகத்தி லிருந்ததாய் அறிந்தபாடில்லை. பழம் பனுவல்களில் வள்ளுவப்பெயர் அரசரகம்படுகருமத் ததிபரையே சுட்டக் காண்கின்றோம். அதனால், அப்பெரும் பழங்காலத்துக் குறளாசிரியர் வள்ளுவரென்று வழங்கப்பெறுவது கொண்டு - அவரைத் தற்கால வள்ளுவச் சாதிவகுப்பில் தள்ளிவிட யார்க்கும் உரிமையில்லை. அப்பெயரால் நாம் கொள்ளற் குரியது, அவ்வாசிரியர் அவர்காலத் தமிழரசன் ஒருவன்பால் உள்படுகருமத்தலைவராக அமர்ந்தவராதல் வேண்டுமென்பதே. பிரித்தானியா (க்ஷசவையin) வில் பேரமைச்சனாயிருந்த பேகன் (க்ஷயஉடிn) பெருநூலெழுதிய பின்னர் அவனமைச்சனாயிருந்த வரலாறு முழுதும் மறந்து அவனை அறிஞர் கூட்டத்தில் வைத்தெண்ணப் படுவதனையே பெரும்பாலோர் அறிவர். சாணக்கியரை அவர் பெயரால் நின்றுநிலவும் நூலாசிரியரென அனைவரும், சந்திரகுப்தன் மந்திரி என்று அவரை வெகு சிலருமே கூறக்காண்போம். இம்முறையில் நம் முதற்பாவலரும் அரசன் அகக்கருமத் தலைமைவகித்து வள்ளுவப்பதவியும் பட்டமும் பெற்ற அவ்வுபசாரப் பெயரான் அழைக்கப்பட்டிருந்து, பின் அவர் தம் இறவாக் குறணூலை இயற்றிப் புகழ்சிறந்ததனால், கேவலம் உத்தியோகப் பதவியைப் பாராட்டி அவருக்குப் பெருமை கூறக்காரணமில்லாது, அப்பெயர்ப் பொருளை மறந்த மக்களின் நெடுவழக்கால் வள்ளுவப் பெயர் அவர்க்கு இயற்பெயராக நின்று நிலவிவர வாய்த்தது போலும்! மேலும், வள்ளுவப் பெயர் சங்ககாலத் தமிழகத்திற் பறையரினொரு வகுப்புக்கும் சாதிப் பெயராகாமல், தகவுடைய முடிமன்னர்மகட் கொடைக்குரிய வேளிர் - குறுநில வேந்தரிடை வழங்கிவந்த செய்தியும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. கடைச்சங்க காலத்துக்கு முந்திய புலவர் சிலரின் முதுசுவைப்பாக்களையுங் கொண்டுளதாகக் கருதப்பெறும் புறப்பாட்டில், ஒருசிறைப் பெரியனார், மருதனிளநாகனார்; கருவூர்க் கதப்பிள்ளை எனும் பண்டைப் பாவாணர் பாடிய வேளிர் குலதிலகனாம் நாஞ்சிற் குரிசிலின் பெயர் வள்ளுவன் எனச் சுட்டப்படுகிறது. இஃதவனியற் பெயராதலொன்று; அன்றேல், அவன் சேரன்மாட்டன்புடையனாய் அவனுக்குப் படைத்துணை நின்றதாயறி கின்றோமாகையால், அக் குடச்சேர அரசன்கொற்றத் தருங்கடம் பூண்ட உள்படு கருமத் தலைவனாயிருந்த பதவியாலெய்திய பட்டப் பெயராத லொன்றாம். எதுவேயாயினும், வேளாண்மரபிற் குறுநில வேந்தனுக்கு வள்ளுவன் எனும் பெயர் புறப்பாட்டில் வழங்குவதாலும், சங்க நூல்களில் அது புலைக்குலச் சாதிப் பெயராக யாண்டும் பயிலாமையானும் வள்ளுவப் பெயர் மன்னருள்படு கருமத் தலைவர்க்கொன்றுமென்றே சேந்தனார் திவாகரத்திற் செப்புவதாலும், அப்பெயருடைமைகொண்டு அறப்பழங்காலக் குறளற நூலுடையாரைப் பறைக்குலத்தவராகக் கருதல் முறையன்றாம். இன்ன பலகாரணங்களாற் பொய்யில் புலவருக்கு வள்ளுவர் எனும் பெயர் இயற்பெயராகாமல், பதவியும் தொழிலும் உதவவந் தொன்றி நின்றதொரு சிறப்புப் பெயராகுமென்று நினைப்பது இழுக்கன்றாம். அன்றி, இயற்பெயரெனவே இயம்பினும் இசையும், சிறப்பினாகிய பெயர்நிலைக் கிளவிக்கும், இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் எனுந் தொல்காப்பியச் சூத்திரவுரையில் - யாருக்கும் காரணச் சிறப்புப் பெயரை முற்கூறி அவர் இயற்பெயரைப் பிற்படவழங்குவதே தமிழ் மரபென்பதை வலியுறுத்து வதற்குச் சேனாவரையர் நச்சினார்க்கினியர் இருவரும் முனிவன் அகத்தியன் - சோழன் வன்கிள்ளி என்பவரோடு தெய்வப் புலவன் திருவள்ளுவன் என்றதனையும் உதாரணமாக உடனெடுத்துக் காட்டிய செய்தியைச் சிந்திப்பின், முனியன் சோழன் தெய்வப்புலவன் எனச் சிறப்பினாகிய பெயர்நிலைக் கிளவிகளுக்குப் பிற்படக் கிளக்கப்படும் அகத்தியன் வன்கிள்ளி என்பன போலவே - திருவள்ளுவனென்பதும் நாயனாருக்கு இயற்பெயராமென்பது அவ்விரு பேராசிரியருக்கும் ஒப்பமுடிந்த கருத்தெனத் தெளியலாகும். இவ்வாறு இவர்க்கு இஃது இயற் பெயரென்பாரோடு எமக்கு வாதமில்லை; ஏனெனில், இயற்பெயரென்போர் அப்பெயர் கொண்டு வள்ளுவரைப் புலைக்குலம் புகுத்திப் பிழையார். வள்ளுவப்பெயர் காரணமாகத் தெய்வப்புலவரைப் புலைக்குலத்தவராக்க விரும்புபவருடன் மட்டுமே ஈண்டு வாதமாதலானும், இயற்பெயராக் கொள்ளல் அவ்விருப்புடையோர் வழக்குக்கு உதவாமையானும், காரணச் சிறப்புப்பெயராய் எழுந்து பின் இயற்பெயராய் நிலைத்ததெனக் கொள் வார்க்கு மட்டும் அப்பெயர் நிலைக்கிளவி சாதிகுறியாது வேத்தக வினைமையே குறிப்பதெனக் காட்டியமைவேம். இனி வள்ளுவப்பெயர் தொழிலையே குறிக்குமாயின், குறளாசிரியரும் குறளுமே அப்பெயரான் வழங்கப் பெறுவது வழக்காறாமா? என்பார்க்குக் கூறுவம். சால்பும் தகவுமுடைய பெரியாரை அவரியற்பெயராலழைத்தல் தமிழகத்தில் மரபன்று - என்பது யாவரும் அறிந்த தொன்றாம். தற்காலத் திலும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையைப் பிள்ளையவர் களென்றும், நல்லூர் ஆறுமுகநாவலரை நாவலரவர்களென்றும், இன்னும் இப்படியே ஆங்காங்கு அவ்விடத்துப் பெரியோர் சிலரைக் கலைக்டரவர்கள் திவானவர்க ளென்றுமே நம்மவர் சொல்லுவதை யாவரும் அறிவோம். பண்டைக்காலத்திலும் உவாத்திமைத் தொழிலுடைய கணக்காயர் பல ரெனினும் அவருட் சிறந்த நக்கீரர் தந்தையை மதுரைக் கணக்காயரெனவும், சிந்தாமணி ஆசிரியரைத் தேவரெனவும், இளங்கோவை அடிகளெனவும், தொல்காப்பித்திற்கு முதலுரை கண்ட பெரியாரைப் பேராசிரியர், உரையாசிரியர் எனவுமே அவரவர் தொழில் பதவிகளானும், தொல்காப்பியர் முதலிய பழம்புலவர் பலரைக் கேவலம் அவரவர் குடிப் பெயரானும் மட்டும் அழைக்கும் வழக்குண்மை அறியாதாரில்லை. கம்பர் என்பதும் அப்புலவர் பெருமானின் நாட்டினடிப் பிறந்ததொரு சிறப்புரிப் பெயராவதன்றி அவரியற் பெயராகாமை கம்பநாடர், கம்பநாட்டாழ்வார் என்ற பெருவழக்குகளால் விசதமாகும். இப்பெரியோர் எல்லோர்க்கும் இயற்பெயரொன்றில்லை யெனச் சொல்லலாமா? இப்போது அவ்வியற் பெயர் களொன்றேனும் அறியகில்லேம். பெரியார் பெயர் வழக்கின்மை மரபன்றே. இவ்வாறு இன்னவர்தம் இயற்பெயரை மறப்பித்துப் புதுப் பெயர்கள் புனைந்து இவர்க்குச் சூட்டிற்றாகும். எனவே பெரியோர்களியற் பெயர்கள் வழங்காமையும், அவரை அவர்தம் சிறப்புரிமைப் பெயரானே அழைப்பதுமே தமிழகத்தில் தொன்று தொட்டு நின்றுவரும் மரபென்றே அறியலாகும். ஆகவே, தாமே தம் தகுதியாலாவது தம் முன்னோர் வரன்முறையுரிமையாலாவது தமிழ்முடி மன்னரிடம் அவருள்படுகருமத் தலைமைவகித்து, வள்ளுவப் பதவிப்பெயர் வழங்கப்பெற்று, அக்கால வள்ளுவ உத்தியோகம் வகித்த மற்றையோரினும் அறிவு திரு ஆற்றல்களிற் சிறப்பெய்திய காரணத்தால், நமது நாயனார் வள்ளுவரெனும் உத்தியோக உபசாரத் தனிப் பெயராலழைக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், பிறகு அவர் திருக்குறளியற்றிப் பெரும்புகழெய்தப் பெற்று நாளடைவில் ஆட்சியின்மையான் அவரியற் பெயர் அறவே மறக்கப்பட்டு அவருக்குத் திருவள்ளுவப் பெயர் மட்டும் நிலைநின்று வழக்காற்றில் வந்திருக்க வேண்டுமெனவும் ஈண்டு நாமறியலாகும். பகுதி 4 : வள்ளுவர் வாழ்ந்த இடம் இனித் திருவள்ளுவர் மயிலாப்பூர் வாசி யென்பதும், அவரைப் புலையராகப் பாவிக்கும் அடியற்ற கதையையே ஆதாரமாகவுடைத்து, சங்க நூல்களில் மயிலாப்பூர் எனும் பெயரே எங்கும் வழங்கக் காணோம். சங்ககாலத்தில் அவ் வூரிருந்ததற்கு வேறு தக்க சான்று காணப்படவுமில்லை. பிற்காலச் சைவசமயகுரவர் தம் தேவாரத் திருமயிலைப் பதிகப்பாக்களில் மயிலாப்பூருக்கு வள்ளுவர் சார்புடைமை சுட்டவுமில்லை. இக்கதை அவர்காலத்து வழங்கியிருப்பின், சைவப்பெரியார் திருமயிலாப்பூரைத் திருவள்ளுவர் தொடர்பாற் சிறப்பியாது வெறுக்கவும் மறக்கவும் நியாயமில்லை. சங்கத்தாராற் பாடப்பெறாவிடினும் நீண்டகாலமாய் அப் பெரியார் பெயரால் வழங்கி வரும் நீட்சியான ஆட்சியுடைய திருவள்ளுவ மாலையுட் செய்யுளொன்று, பொய்யில்புலவரை மயிலாப்பூருக்குரியராக் காமல் மதுரைக்குரியராகப் பேசுகின்றதும் ஈண்டுக் கவனிக்கத்தக்கது. அக்கவி வருமாறு: உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தான் உத்தர மாமதுரைக் கச்சென்ப - இப்பக்கம் மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப் போதார் புனற்கூடற் கச்சு (21) நாம் கேட்கும் கதை - அவர் மயிலாப்பூரிலே பிறந்து அவ்வூரிலேயே வளர்ந்து மணந்து வாழ்ந்து முத்தியடைந்தவர் - எனக் கூறுகின்றது. கடைச் சங்கத்தாரை வென்றடக்குவதற்காக மட்டும் மதுரைக்கு ஒருமுறை வந்ததாயும், வந்து தம் இறவாக்குறணூலை அரங்கேற்றியகாலை அவமதித்த தருக்குடைய சங்கத்தார் செருக்குடையத் தாமும். சத்தியலோகத்தில் மனைவியும் தரணியில் தம் தமக்கையுமாய்த் தம்மொடு புலைச்சி ஆதியின் வயிற்றில் அவதரித்திருந்த கலைமகள் ஒளவையும், தம் வைகுண்டத் தந்தை வையத்திற் புலைத்தமையனாயிருந்த இடைக்காடருமாகத் தந்தெய்விகத் தன்மையாற் றமிழ்ப் புலம் புணர் கூட்டுண்ட புலவரைக் கோயிற்குளத்திற் குப்புறவீழ்த்தி வென்ற பின்னர் மதுரைவிட்டு மயிலாப்பூருக்கு இவர் மீளச் சென்று விட்டதாயும், இக்கதை பேசுகின்து. இஃதுண்மை யாயின் வள்ளுவர் மயிலாப்பூருக்கே உரிய புலவரும், மதுரைக்கு ஒருமுறை வந்து மீண்டதன்றி மற்றைய தொடர்புச்சிறப்பற்ற வருமாவர். இக்கதையே இவரால் வெல்லப்பட்ட சங்கத்தார் தாமரைக் குளத்திற்றள்ளப்பட்டுத் தத்தளித்த தறுவாயிற் பாடியது திருவள்ளுவமாலை யெனவும் வற்புறுத்துகிறது. எனவே, சங்கத்தாருக்கு நாயனார் மதுரைக்குத் தம்மொடு வாதிடவந்த ஏதிலரென்பது தெரிந்திருக்க வேண்டும். அஃதறிந்த சங்கத்தார், தம் வள்ளுவமாலைச் செய்யுளிலேயே, இவரைப் புனற்கூடற்கச்சு என மதுரைக்கே இவர் சிறப்புரிமை கூறுவது கதைப்பவர் கற்பனைத் திறத்தை விளக்குதற் குதவும். கதை கிடக்க; இவ்வள்ளுவமாலைச் செய்யுள் நம் முதற் பாவலரை வளம்படு கூடலான தென்மதுரைக்கு அச்சாணி போன்றவரென விதந்து கூறுவதால், மதுரைக்கு ஒருமுறை வாதிடவந்து மீண்டாரெனுங் கதைக்கு மாறாக, நாயனார் மதுரைக்கு விசேட நெருக்கமும் தொடர்புமுடையராக வேண்டுமெனத் தோன்றுகிறது. சங்கத்தைத் தாழ்த்தவந்து, வென்றதும் மீண்டுசென்ற வள்ளுவரை - நல்கூர்வேள்வியார் மதுரைக்கச்சு என வழுத்துவதன் நயனும் பயனும் என்னோ? இச்செய்யுளால் அஃதியற்றப்பெற்ற பழங்காலத்தில் வள்ளுவர் கூடலிற் பீடுபெற வாழ்ந்த பெரியாரெனும் வழக்குண்மை வலிபெறுகின்றது. இதனாலும் இக்கதையின் கற்பின்மை தெளியப்படும். இதனால் தமிழெழுந்த நாளெழுந்த பழம் பழையர் பாண்டியரின் மூதூரில் தமிழிசைத்துப் புகழ் சிறந்த கடைச்சங்கத்தாரும் பரசும் நெடும்பழைய முதற்பாவலராய் அறம்பாடி அளிசெய்த தெள்ளியரே வள்ளுவ ரென்றறியலாகும். எனவே, தென்மதுரைப் பெரியாரை வட மயிலைக் குரியரென வழுத்து கதைப் பொய்ம்மை யினி விரிக்கவேண்டா. பகுதி 5 : வள்ளுவப் பெரியரின் இல்லறக்கிழவியார் இன்னும் இவ்வெண்பாவை உற்றுநோக்கின் இவர் மனைமாண்ட வாழ்க்கைத் துணைவியின் பெயரும் ஒருகால் ஊகித்தறிதற் கிடம் பெறலாமென்று எண்ணக் கிடக்கின்றது. முன்னிரண்டடிகளில் தமிழில் வடமதுரை என வழங்கப்பெறும் மதுராபுரிக்குக் கண்ணன் அச்சாகி நின்ற விவரம் விளக்கப்படுகிறது. சரவணப் பெருமாளையரவர்கள் இவ் வடிகளுக்குப் பார்வதியைமணந்த சிவபிரான் வடமதுரையிலிருந்து சிறந்தபடி என்றுரைத்து இடர்ப்படுவதறிவேம். இடைக்காடர் பிணக்குத் தீர்க்கப் பெருமான் தமதாலயம் தவிர்த்து அதன் வடக்கே வைகையின் தென்கரையில் மதுரையின் வடபாகத்திலேயே கோயில் கொண்டிருந்ததாக மட்டும் திருவிளையாடற் புராணம் உரைக்கின்றது. மதுரைக்கும் வையைக்கும் வடக்கே வடமதுரை என்றதோர் பிறிதூரிற் கடவுள் சென்றிருந்த கதை யாண்டுங் கேட்டிலேம். மேலும் திருமாலுக்குக் கேசியெனும் பெயரின்மையால், உபகேசி யென்பது உமையவள் பெயராமாறில்லை. நீலகேசி, பிங்கலகேசி என்பனபோல் உபகேசி எனும் பெயர் நம்பின்னையையே குறிப்பதாம். இதனை விசதமாக, சேதுசமத்தான முதற் பாவலரான திரு. இரா. இராகவையங்காரவர்களும், காலஞ்சென்ற ஈழத்துப்பண்டிதர் திரு. அ. குமாரசுவாமிப் புலவரவர்களும், செந்தமிழ் முதற்பகுதியில் இனிது விளக்கி யுள்ளார்களாகையால் ஈண்டு விரித்தல் வேண்டா. இனி, மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை (திருப்பாவை - 5) மதுரையார் மன்னன்அடிநிலை தொட்டெங்கு மதிரப் புகுதக் கனாக்கண்டேன் (நாச்சியார் திருமொழி 6-5) வாச மலர்ப்பொழில்சூழ் வடமாம துரைப்பிறந்தான் (பெரியதிருமொழி 9-9-6) வடமதுரைப் பிறந்தாற்கு (திருவாய்மொழி 9-1-3) மதுவார் சோலை யுத்தர மதுரைப் பிறந்த மாயனே (மேற்படி 8-5-9) என்னும் பல பழம்பிரயோகங்களாற் கண்ணன் மதுராபுரியைத் தமிழில் மதுரை எனவும், கூடற்றென் மதுரையினின்று பிரித்து வடமதுரை எனவும் வழங்குவ தறிவோம். இதனாலும், வள்ளுவ மாலைச் செய்யுள் பிறவும் இப்படியே தேவரைத் திருமாலுக்கு உவமித்துச் செல்லுவதாலும், ஏர்ப்பின்னை தோண்முன் மணந்தான் எனக் கண்ணனைத் திருக்கோவையிற் குறிப்பதாலும், உத்தரமாமதுரைக்கு அச்சாகி உபகேசி தோண் மணந்தவன் - கண்ணனேயாமெனத் துணியப்படும். அன்றியும், இவ்வெண்பாவைச் சொல்லி இதனுள் உபகேசியார் நப்பின்னைப் பிராட்டியார் என நேமிநாத விருத்திகாரர் கூறிவைத்துள்ளமையானும், இவ்வடிகட்கு இப்பொருளின் இயைபுடைமை வலிபெறுவதாகும். இன்னும், மேற்செய்யுளிற் பின்னையை மணந்த கண்ணன் வடமதுரைக்கு அச்சாணியானாற்போல், வையைவளந்தரு தென்மதுரைக்குத் தமிழ்ப் பெருநாவலர் அச்சாகிநிற்பர் என நல்கூர் வேள்வியார் பாராட்டிப் பாடியுள்ளார். இதிற் கீதைபாடிய கண்ணனால் வடமதுரை சிறந்தவாறு, குறளால் அறம்பாடிய வள்ளுவரால் தென்மதுரை சிறந்ததென, உவமான உவமேயப் பொருத்தமும் விசதமாகிறது. இவ்வளவு பொருத்தமுடனியங்கும் இப்பாவிற் குறளும் கீதையும் உறழும் நயந்தெரித்த புலவர், வாளா உபகேசிதோண் மணந்தான் என உவமானத்தில் அடைகொடுத்து உவமேயத்தில் அதற்கு ஒப்புமை குறியாமல் - உவமையடை பொருளில் சொற்றொடராக நிற்க வைத்திருப்ப ரென்பதினும், அவ்வடைக் கேற்ப உவமேயத்திற் குறளாசிரியர்க்கும் விசேடணஞ் சொல்லியிருப்ப ரெனக் கொள்ளுதல் இழுக்காதன்றே? மூன்றாமடியில் மறுவில் என்பது மருவு என்பதன் திரிபாடமாகக் கொள்ளிற் செய்யுளிற் சொல்லிசையும் பொருணயமும் சிறப்பதுடன், முற்றுவமை முழு நலமும் பெறுவதாகும். இனி மறுவில் என்பதன் இரண்டாம் வல்லெழுத்தை மாற்றி மருவில் என இடையெழுத்தாக்கி நிறுத்தினும் இழுக்காது. உண்மையான பாடம் இதுவெனத் துணிதற்கில்லை. எதுவாயினும், பின்னையைமணந்து கீதை பாடிய கண்ணன் வடமதுரைக்கு அச்சாவது போலவே மாதானுபங்கியை மருவிக்குறணூல் பாடி உலகுய்ய உதவிய பெருநாவலர் தென்மதுரைக்கு அச்சாவர் எனக் கொள்வது பொருத்தம் மிகவுடைத் தென்பதில் ஐயமில்லை. மாதானுபங்கியென்பதைத் தேவர் பெயராக்கு வதினும் - மனைமாண்ட அவர் அறமனையாளின் பெயராக்குவது மிகப் பொருந்தும். அன்னை போலொழுகு பவர் என வலிந்து பொருள் கொண்டு நாயனாருக்காக்கவேண்டு மிப் பெயரில், அப்பொருள் கொள்ளு மாறில்லையெனத் திரு. அ. குமாரசுவாமிப் புலவரவர்கள் முன்னமே செந்தமிழில் விளக்கியுள்ளார்கள். மாதம் =மதம்+பங்கி=கெடுத்தவன் எனப் பிரித்துச் சுயகர்வத்தைப் பங்கஞ் செய்தடங்கியவர் என்னும் பொருளுடைய தாக்கி, வள்ளுவருக்கு இப்பெயர் கொள்ளுவதும் சிறப்பும் செவ்வியும் உடையதில்லை. வேதங்களுக்குப் பின் பாவலர் யாவருக்கும் முன் முதற்கவியாவாரான வான்மீகியாரை ஆதிகவி என வடமொழியாளர் காரணச் சிறப்பியற் பெயரால் வழங்குவது போலவே, தமிழகத்திற் பழம்பண்டைப் பெருநாவலரான வள்ளுவரை முதற்பாவலரென வழங்கி வருதல் பொருத்தமும் சிறப்பும் உடைத்தாம். அத்தொல்லை நல்லாசிரியருக்கு இடர்ப்பட்டமைவதாகும். வடமொழிப் பெயர்களைச் சூட்டுவதில் நயனும் பயனும் இல்லை. அன்றியும் பொருளொடு சிறந்த பயனுடை மொழிகளால் யாப்புறவுற்ற மேற்கவியில் திருவள்ளுவர்க்கு மட்டும் இருவெறும் பெயர் பெய்துவைத்து, உவமான உவமேய விசேடணங்களுக்கு இயைபுகுன்றும்படி நல்கூர் வேள்வியார் செய்யுள் செய்திருக்கமாட்டாரன்றே. மாதானுபங்கி என்பது தேவர் திருத்தேவியாருக்கு இயற்பெயராயினும் - அன்றிச் சிறப்புப் பெயராயினும் ஆகுக. அத்திரி முனிவரின் மனைவி அனசூயை போல அறவோரும் அறிவருமான குறளாசிரியர் மனையறத் துணைவியாரும் அவர் காலத்தே அறந்தலைநின்று சிறந்த பெருந்தேவியாராகையால், அவ்வம்மையாரை மணந்துயர்ந்த தேவரின் பெருமை இவ்வினிய பழைய வெண்பாவிற் பாராட்டிப் பாடப் பெற்றுள்ளது. வாசுகி யென்பது அவரியற் பெயரென்பதற்கு நாம் கேட்டு வரும் அடியற்ற கதையொழியப் பிறிது பிரமாணமில்லை. ஒருகால் அதுவே அவ்வம்மையாரின் பெயராமேனும், தேவரை வள்ளுவரெனும் இயற் பெயராற் சுட்டாது செந்நாப் போதார் எனும் அவர் சிறப்புப் பெயரால் இக்கவியிற் புகழும் புலவர், இவர் தேவியாரையும் அவருக்கேற்ற சிறப்பியற்பெயர்கொண்டு மாதானுபங்கி எனப்புனைந்து பாராட்டுவதும் பொருத்தமேயாம். பகுதி 6 : வள்ளுவர் வணிகன் வளத்துணையால் வாழ்ந்த வரலாற்றுண்மை இனி மயிலாப்பூரில் தனவணிகர் ஏலேலசிங்கரின் வண்மைக்கு வள்ளுவர் மிகவும் கடப்பட்டவரெனவும், இளமைதொட்டு எஞ்ஞான்றும் ஏலேலசிங்கரின் நட்பு நலமும் ஈகைவளமும் துணைக்கொண்டு வள்ளுவர் தம் மனையறம் வளர்த்து வாழ்ந்தனரெனவும் நாமறியும் நாடோடிக்கதை நவில் கின்றது. இது மேற்குறித்த வள்ளுவப் பெயர் வரலாற்றுண்மை விளக்கத்தாற் பொய்படும். அன்றியும் இவ்வரலாறு வள்ளுவரை வணிகர் பாற்பெறுவிக்கும் பெருநலத்தில் ஒருசிறிது சடையப்பரிடம் பெற்ற கம்பர் அவரையும், அவ்வாறே கூத்தர் காங்கேய முதலியாரையும், புகழேந்திப் புலவர் சந்திரன் சுவர்க்கியையும் அழிவிலா அமரராக்கித் தமது என்றுமுள தென்றமிழ் நூல் நின்றுவளர்புகழுரிமை அவருக்கு உவந்து உதவியுள்ளார். பவ பூதியனைய பல பாவாணரும் வடமொழியில் இவ்வாறே வள்ளியரை வழுத்தியுள்ளார். உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு எனும் அறிந்தெரித்த வள்ளுவரோ அந்நன்றி கொன்று, அனவரதம் அளிசெய்த தனவணிக முதலோனை மறவியெனும்மறலிக்கும் - தொல்லரும் பாவலர் நல்லறமரபிறந்து தம்மைப் பெரும்பழிக்கும் - பலியாக்கும் பான்மையுடையார்? திருமயிலைப் பெருவணிகன்றரும் உதவி ஒரு சிறிதும் பெற்றிருப்பின், வள்ளுவர் அதனைப் பாராட்டி நன்றிக்கடனாற்ற மறக்க மாட்டுவரோ? யாண்டும் எனைத்தளவும் நம்முதற் பாவலராற் சுட்டப்பெறாத ஏலேலசிங்கற்கு அவர் நெடுந் தொடர்பு சொல்லும் இக்கதையே அதன் ஒல்லாமை காட்டற்கு நல்ல சான்றாம். இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால், நாயனார் புலை மகளின் பழிம கவல்லரெனவும், கடைச்சங்கக் கடைக் காலத்தவரால் வறியராய் ஏலேல சிங்கரின் வண்மையால் வாழ்ந்தவரல்ல ரெனவும், மயிலாப்பூரில் வாழ்ந்து மதுரை வந்து சங்கபங்கஞ் செய்து மீண்ட தறுகண்ணரல்லரெனவும், மூன்றாஞ்சங்கத்தின் முற்காலத்தே மதுரைவாசியாய் மாதானு பங்கியாரின் மணவாளராய்க் - குறளடிகளால் அறம்பாடி யுலகுய்யவுதவிய வள்ளன்மை யுடையராய்ப் - பண்டைப் பாண்டியருக்கு அருங்கடம் பூண்டு அவருள்படுகருமத் தலைமை வகித்துயர்ந்த பெருந்தகையாய் - அருந்தமிழ் வேளிர் பெருங்குடிப்பிறந்து சிறந்து பெரியருமாவரெனவும் ஒருவாறு தெளியலாகும். தேரா ஊரார் ஓராதுரைக்குங் கதையளவிற் கூறப்படும் புலைக்குலப்பிறப்பும், மயிலாப்பூர் வணிகன் கீழ்த் தொழுதுண்டு பின் செல்லும் வாழ்வும், சங்கபங்கத்தருக்கும் தக்கசான்றெதுவு மின்றித் தேவர்க்கீவது உண்மையுணரும் ஒண்மையுடையோர்க்குச் சால்பன்றென்பது நடுநிலையாளருக்கு ஒப்ப முடிவதொன்றாம். தசரதன் குறையும் கைகேயி நிறையும் முதற்பதிப்பு : முன்னுரை கைகேயியின் கலியாணகாலத்தில் அவளுக்கு மணப் பரிசமாக அயோத்திநாடு தசரத மன்னனால் பிரதிக்ஞையுடன் கொடுக்கப்பட்டது. அதனால் அவள் வயிற்றிற் பிறந்த பரதனுக்கே அவ்வரசு உரியதாகும். அவளை வஞ்சித்து அவனுடைமையைக் காதல் மிகையால் இராமனதாக்க விழைந்து வேந்தன் விரகொடு விரைந்தான். தசரதன்றவறுணர்ந்து அவன் தெய்வக்கற்புடைத் தேவி தன்கணவன்பாற் கற்பு மேம்படுகாதலால் அவன்புகழையும் சுற்கச்சூளறத்தையும் காக்கும் நோக்குடன் தன் புகழைப் பலிகொடுத்துத் தான் பெரும்பழி வெள்ளம் விரும்பிவீழ்ந்து நீந்தாநிற்க, வள்ளலி ராமன் அவளுக்கு உண்மை வள்ளம் உதவி அனைவருக்கும் அறத்தொடு நின்று முன்சுல்கவரலாறுகூறித் தாயினும் பேணித் தனைவளர்த்த சிற்றன்னையைக் கைதூக்கிக் கரையேற்றி அவளது நிறைகமழ்புகழினை நிறுவியுள்ளான். இதுவே இக்கட்டுரையின் சுருக்கமாகும். பொய்ந்நலம் பேசி மெய்த்தவறுகாணாப் பராமுக மூட பக்திகளை விடுத்து, நடுநிலையொருவாக் காதலொடு மதிப்புங் கடைப்பிடித்துப் பழந்தமிழ் நூல்களைப் படிக்கும் என்னியலறிந்த தமிழ்வாணர் சிலர் என்பால் அன்புபூண்டு அளவளாவுவதுண்டு. தூத்துக்குடியில் இன்னோர் சல்லா பத்திடை ஒருநாள் இக்கட்டுரைக் கருத்துக்களை நான் வெளியிட நேர்ந்தது. கேட்டபுலவர் உண்மைகாணும் ஒரு நோக்குடையராய் வழக்கம் போற் பின்னும் சின்னாள் என்னொடு நேசவாதப் போர் தொடங்கி, என் கருத்துக்களைத் தம் நூலொடுபிறங்கும் நுண்ணிய மதித்துலையில் நிறுக்கலா யினர். அன்பர் தடை வினாக்களுக்கு விடைதரு முயற்சி என் ஆராய்ச்சிக்கு விளக்கமும் அன்னவரெழுப்பிய ஆசங்கைகளுக்குச் சமாதானமும் தருவதா யிற்று. இவ்வாறு தெளிவுற்ற பின்னர் அந்நண்பர் என் ஆராய்ச்சிப் பொருளைப் பொதுவுடைமை யாக்கும் நோக்கத்துடன், கி.பி. 1915ஆம் ஆண்டில் நடந்த தூத்துக்குடி சைவசித்தாந்த சபைக்கூட்ட மொன்றில் என்னை வற்புறுத்தி உபந்யாசிக்கச் செய்தனர். பின்னர் அச்சபையங்கத்தினர் சிலர் திருநெல்வேலிப் பேட்டைச் சித்தாந்த சபையின் ஆண்டு விழாவில் என்னை அழைப்பித்து இதுபற்றியே பேசச் செய்த தோடமையாமல், தஞ்சாவூர்க் கரந்தைச் தமிழ்ச்சங்கத்தாருக்கும் நானறியாமல் எழுதினர்போலும். முன் நானறியாத அச்சங்கத்தாரிடமிருந்து கி.பி. 1916ஆம் வருடத்தில் தங்கள் சங்க வருடக் கொண்டாட்டத்துக்கு அவசியம் வரும்படிக்கும் வந்து இப்பொருள்பற்றிப் பேசும்படிக்கும் நேசநிருப மொன்று கிடைக்கப் பெற்றேன். கிடைத்த முதற்கடிதத்திலேயே தூத்துக் குடியில் நான் பேசிய பொருளும் அதன் தலைப்பெயரும் அப்படியே குறிக்கப் பட்டமை கொண்டு, அவ்வழைப்பும் தூத்துக்குடிச் சபையோர் தூண்டுதற் பயன் எனக்கண்டேன். சோழர் தலைநகரிற் சொற் பெருக்காற்றத் துணியாமல் அழைப்பருமைக்கு நன்றிகூறி மறுதலை விடையனுப்ப நினைத்தேன். அதுகண்டு என்பால் அன்புடைப் புலவர்சிலர் என் தடைநீக்கி ஆங்கு எனைப்போம் படி ஊக்கி நின்றனர். அதுவுமன்றிக் கரந்தைச் சங்கத்தாரும் எனக்கு அன்பர் பலர் கடிதமலர் பல தொடுத்துய்க்கலானார். அப்பெருந்தகையார் பேரன்பின் தளைகளைய ஆற்றேனாகி, அறிவுநூலாற்றலுடைப் புலவர் பலர் புதுநேசச்சல்லாபப் பெரும்பேறு அவாவலுற்று விழாவுக்கு வருவதாக விடை யிறுத்தேன். குறித்த நாளணுக நான் வழியுங்கொண்டேன். நான் போந்த நீராவித் தொடர்ப்பண்டி நள்ளிருளில் நான்மாடக் கூடலினை நணுகிற்று. ஆண்டு நான் இறங்கி மறு தொடரில் இடமின்றி மறுகுகையில், மதுரைத் தமிழ்ச் சங்கப் பெருநாவலரும் செந்தமிழ் முதற் பத்திராசிரியரும் சேது சமத்தானத் தலைமைப் புலவருமான உயர்திரு இரா. இராகவையங்கா ரவர்கள் கண்டு அருமையுடன் அழைத்துச் சென்று தம் அரசர் பக்கல் உய்த்து உதவினார்கள். இறைமையைப் போல் நிறைபுலமை நிருபரெனத் தமிழகத்தே தலைநின்ற திரு மன்னர் முகமலர்ந்து பெருந்தகை யால் முகமனுடன் வரவேற்றுத் தங்குழுவிலெனைச் சேர்த்துத் தலையளியுஞ் செய்த செவ்வி என்றும் மறக்ககில்லேன். அவலம்நீங்கி அன்றிரவுவழி கழியப்புலர்பொழுதிற்றஞ்சையுற்றேன். வழியிடையே நாவலரால் எனையழைத்த சங்கக்கூட்டம் சேதுகாவலர் பாதுகாவலில் நடைபெறும் நற்செய்தியும், தமிழரசர் தம் சபைத்தலைமை முன்னுரையில் என்பால் அன்புரைகள் ஏதோசில கூறப்போகும் குறிப்பும் உணர்த்தப்பெற்றேன். கூடல் நான்காஞ்சங்க விழாக்கூட்டமொன்றில் நம்முள் வேற்றுமையுணர்ச்சி வித்தவந்த சில வித்தகருக்கு மாறுகூறி ஒற்றுமை நலத்தை வற்புறுத்த முயன்ற என் ஒரு சிற்றுரை கேட்டதன்றிப் பிறிதெனை நன்கறியாப் பெருந்தமிழ் வேந்தர் பேரன்பால் என்னை ஒரு பொருட்படுத்தித் தன் முன்னுரையிற் சுட்ட நினைத்த பெருங்கருணை என் தகவின்மையை நினைப் பூட்டி என்னைப் பெரிதும் வருத்தியதுடன் அவ்வரசர்பிரான் குணப் பெருமையை விளக்கி என்னை ஆட்கொண்டது. இவ்வுளக்கிடையுடைய நான் தஞ்சையுற்றதும், கரந்தைத் தமிழ்ச்சங்க நிரந்தரத் தலைவராய் அப்போதிருந்தவரும் தமிழுக்கு நற்றொண்டியற்றி வருபவருமான திருவாளர் சீனிவாச பிள்ளையவர்கள் நட்புநிதி கதுவப் பெற்றேன். தேசநேசமும் தமிழ்த்தொண்டும் சமயச்சமரசப் பெருவாழ்வும் உடைய அப்பெரியாரு டனுறையின்பமும் தொடர்ந்துவளரும் அவரன் பூதியமும் எனக்கு உதவிய கரந்தைச்சங்கத்தாருக்கு என்றுங் கடப்படுவதல்லாற் பிறிது கைம்மாறு கருதகில்லேன். பிள்ளையவர்கள் மனையில் எனைக் காணவந்த அச் சங்கத்தார் சிலர்க்கு, என்னைக் கேளாமலே எனக்கு அவர்கள் குறித்துவைத்த உபந்யாசப்பொருள் அவையிற் சிலர் பலரை வெறுக்கச் செய்யலாமாகை யால் அதை மாற்றிக் கம்பர் கவிக் கருவூலத்தில் யாவரும் நயப்புறும் வேறொரு நிதிக்குவையைப் பொருளாகக்கொண்டு பேச எனக்கு இடம்தரும் அவசியத்தை யும் நலத்தையும் எடுத்துச்சொன்னேன். சத்தியத்திற்கு உயிர் கொடுத்த உத்தமன் தசரதனெனவும், கொடுமையால் இறைமை பறித்து இராமனை இரக்கமின்றி வனஞ்செறித்த வன்கணாள் கைகேயி எனவும் கருதுபவர் லரிருக்கும் அவைக் களத்தில் அன்னவர்தம் அடிப்பட்ட அபிப்பிராயத்தை அலமரச்செய்யும் உபந்யாசம் நிகழ்வது அநுசிதமெனக் கூறி மன்றாடினேன். பிள்ளையவர் களும் என் வேண்டுகோளை ஆதரித்துப் பரிந்து பல பேசினார்கள்; எனினும் சங்கத்தார் சிறிதும் செவிகொடாது குறித்த பொருளே பேசப்பட வேண்டுமென்று ஒருதலையாகப் பணிந்து நின்றனர். அவராணைப்படி 991 ஆம் ஆண்டு நள வருடம் ஆவணி மாதம் 4 ஆம் தேதி (19-8-1916) மாலை கருந் திட்டைக் குடியிற் சேதுமன்னர் தலைமை யின்கீழ் உபயவேதாந்த வைணவ வித்தகரும் மகாபண்டிதருமான உயர்திரு. இரா. இராகவையங்கா ரவர்கள் பாகவத சிரோமணி திரு. கோபாலசாமி ரகுநாத ராசாளியாரவர்கள் முதலியோ ருள்ளிட்ட பண்டிதர் பலரும், திருவாளர்களான சீனிவாச பிள்ளையவர்கள், வாண்டையார் முதலிய பிரமுகரும் அழகுசெய்த மகாசபையில் தசரதன் வாய்மையும் கைகேயி கொடுமையும் என்ற தலைப் பெயருடன் இப்பொருள்பற்றி ஒருமணி நேரத்தளவில் ஒருவாறு பேசிமுடித்தேன். இடை யெழுந்த இரண்டொரு வினாக்களுக்கு விடையிறுக்க நேர்ந்ததன்றி முடிவில் என் உபந்யாசம் சபையில் யாருக்கும் எவ்வித வெறுப்பும் விளைத்திலாமை யொடு பலரால் பாராட்டிப்பேசவும் பெற்றது. அந்தப்பிரசங்கத்தைக் கேட்ட பண்டிதர்மூலம் என் உபந்யாச விசயத்தை அறிந்த கும்பகோணம் குருபரம்பரை காமகோடி பீடாதிபதி யவர்கள் அதை ஆமோதித்ததாகச் சில அந்தண நண்பர்கள் அப்போது என்னிடம் சொன்னதுண்டு. ஆனால் புதிய இந்தியா (சூநற ஐனேயை) என்னும் பெரிய ஆங்கிலப் பத்திரிக்கையில் என் பிரசங்கத்தை நேரிற் கேளாத வரும் ஆங்கிலத்தோடு ஆரியமும் வல்லவருமான பெரியார் ஒருவரால் 1916இல் வெளியிடப்பட்ட மறுப்புக்கு நான் அனுப்பிய சமாதான வியாசத்தை அப்பத்திரிக்கையதிபர் பிரசுரிக்க மறுத்தமையால் என் சமாதானத்தைச் சென்னைக்கொடி (கூhந ஆயனசயள ளுவயனேயசன) என்னும் ஆங்கிலப்பத்திரிக்கையில் அதே வருடத்தில் வெளிப்படுத்த நேர்ந்தது. பிறகு அதனை யாரும் யாண்டும் எவ்விதமும் மறுக்கக் காணேன். சமீபத்தில் என்மருகர் கிருட்டிணசாமிப்பிள்ளை (பி.ஏ., ஆனர்ஸ்), என் இளையமகன் இலக்குமிரதன் (பி.ஏ., ஆனர்) ஆகிய இருவரும் இவ் விடயத்தை விரித்தெழுதி வெளியிடுமாறு என்னை வற்புறுத்துவாராயினர். அவர் நேசப்பணி மறுக் கொணாது இவ்வியாசத்தினை எழுதினேன். அரு கிருந்து என்னைத்தூண்டி எழுதச்செய்ததோடமையாது அரியபல குறிப்புக் களும் எடுத்துக்கொடுத்து மிகவூக்கி நான் எழுதிய அனைத்தையும் தாமே படித்துச் சுத்தப்பிரதி எழுதியனுப்பிய என் மருகருக்கும், இராமனை அவன்சிற்றன்னை வனமகற்ற விரும்ப அரச நீதிமுறையோடு அறத்துறையும் தூண்டும் அவசியத்தை வலியுறுத்தும்படி என்னை வற்புறுத்திய என் இளையமகனுக்கும் கடப்பாடுடையேன். இக்கட்டுரையைப் படித்து மதிப்புரை யுதவிய பெரியார்க்கும் என் நன்றி யுரித்தாகும். சங்க மருவித் தழையத் தமிழ்தழுவி எங்கும் புலவர் இனிதிசைக்கத் - தங்கும் இரவி மருமான் இராசரா சேசற் குரிமையிது செய்தேன் உவந்து. - ச.சோ.பாரதி மதிப்புரைகள் (1) (மதுரைத் தமிழ்ச் சங்கக் கலாசாலைத் தலைமையாசிரியரும், செந்தமிழ் ஆசிரியருமான வித்துவான் திரு. நாராயணையங்காரவர்கள்) தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னும் இப் பொருளுரை யானது தமிழியலுணருந்தகைமையும் மதிநுட்ப முடைமையும் வாய்ந்த நியாயவாதசீலரான சீமான் ச. சோமசுந்தர பாரதியார் எம்.ஏ.,பி.எல்., அவர்களால் மிகவும் நுணுகி யாராய்ந்தெழுதப்பட்டு அறிஞர் பலரும் நுகரு மாறு அருமந்த விருந்தாக அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் புலப்படுக்கும் பொருளோ இதன் பெயரானே விளங்கும். அறநெறி யொழுக்கத்தைக் கடைப்பிடித்துச் செல்லுங் காவியங்கள் பலவற்றுள்ளும் ஆதிகாவியமான வான்மீகமே மிகச் சிறந்ததென்பது யாவரும் உடம்பட்டதே. அதனைப் பெரிதும் பின்பற்றி இடையிடையே ஒருசில வேறுபாடு முடையவாய் வடமொழி தென்மொழிகளிரண்டிலும் மகாகவிகளாற் பல காவியங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் பொதுவுணர்ச்சிகொண்டு தயரதனை அறநெறி தவறா தொழுகும் வாய்மையுடையனென்றும், கைகேயியைக் கற்புக்கடனழிந்து கணவனுயிர்கவர்ந்த வன்கட்கயத்தியென்றும் பலரும் கருதுகின்றனர். அங்ஙனம் கருதுதற்கேற்றவாறே அக்காவியங்களில் வெளிப்படையும் குறிப்புமாயுள்ள சான்றுகளும் பல விளங்குகின்றன. அவை ஒருபுறமிருக்கவும், இராமனுடன் பிறந்தாருள் பரதனுக்கமைந்த வரிசை வேறுபாட்டை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து சென்று, வான்மீகத்திலுள்ள இராம வாக்கியத்தால் வெளிப்படையான பொருளின் மெய்ம்மையைக் கண்டு கைகேயி நீதிமுறை திறம்பாத நெறியுடைய ளென்றும் இராமன்மாட்டு என்றும் மாறாத அன்புடையளென்றும் அறுதி யிடுவதற்குரிய பலகாரணங்களை ஆங்காங்கு நுணுகியாராய்ந் தறிந்து காட்டிய ஆக்கியோரது வல்லமை அறிவுடையோராற் பாராட்டத்தக்கது. இக்கருத்தொடு கம்பராமாயணத்தைப் படிப்பார்க்கு இன்னும் பலகுறிப்புக்கள் புலப்படத்தகும். அவை பிறந்தார் பெயருந்தன்மை பிறரா லறிதற் கெளிதோ”, வெவ்வினை யவள்தர விளைந்த தேயுமன்று; செவ்விதென் றொருமுறை தெரியும் பின்”, இடரிலா முகத்தாள் என்றன முதலியனவாம். இவற்றாற் கைகேயியின் மனத்தூய்மை புலப்படுமாயினும் அவளை மாகயத்தி என்றும் கள்ளுறு செவ்வாய்க் கணிகை என்றும் பழித்துரைக்கு மிடங்களும் உண்டு. அவையெல்லாம், அவளது உட்கருத்தறியாத நிலையில் இராமாபிமான மேலீட்டால் வையும் வயவுரையின் அநுகாரக் குறிப்பாற் காவியச் சுவை சிதையாமை கருதிக் கவி கூறியனவாதலால் இவ் வாராய்ச்சியை விரோதிக்கும் வன்மையுடையனவாகா. அன்றியும், இற்றைக்குப் பன்னூற்றாண்டுகளுக்கு முன்னமே வட மொழிப் புலமையிற் றலைமைவாய்ந்த பாசகவி யென்பவர் தாமியற்றிய பிரதிமாநாடகத்தில் கைகேயி செய்கை குற்றமற்ற தென்றும், அவள் பரதனிற் காட்டிலும் இராமனிடத்துப் பரிவுமிக்குடையாளென்றும், விதிமுடிவு தெரிந்தே பழி பூண்டாளென்றும் விளக்கமாக விரித்துணர்த்தி யிருத்தலும் இதனை வலியுறுத்தும். சத்காவியங்களின் பிரதான பாத்திரவர்க்கங்கள் நல்லினமா யமைகையே நியாயமாதலால் கைகேயியின் ஒழுகலாறு பழிப்பிற்கிலக்கா யிருக்கலாகாதென்பது பட்டாங்கே, அம்முறையால், தசரதனது ஒழுகலாறும் பழிப்பிற்கிலக் காகாதவாறு காட்டுதற்கேற்ற கருவிகளைத் துருவியாராய்ந்து தெளிதற்கிடமுண்டா? இல்லையா? என்பதுபற்றி இன்னும் சிறிதாலோசித்து முடிவுகொள்ள வேண்டுமென்றெண்ணுகிறேன். இவ்வாராய்ச்சி, உணர்த்தற்குரிய கருத்தைப் புலப்படுத்தற் கேற்ற பல குறிப்புக்களை எடுத்துக்காட்டி விரித்துச் சொல்லுந் திறத்திற் சிறந்து விளங்குகின்றது. இதைப் படிப்பவர்களுக்கு உண்டாம் சந்தேகங்களுக்கேற்ற சமாதானங் களெல்லாம் 10, 11 ஆம் பகுதிகளில் நன்றாய் எழுதப்பட்டுள்ளன. கைகேயி குற்றமற்றவளென்று காட்டியிருக்கும் இம் முடிவை அவரவர் கருத்து வகையால் யார்யார் எவ்வாறு கருதினும் இராமாபிப்ராயத்தை யொட்டியுண ருவார் எல்லோரும் நன்குமதிக்கக் கடவர் என்ப தொருதலை. மதுரை, 9-5-1926. திரு. நாராயணையங்கார். (2) (பண்டிதமணி திருவாளர் மு. கதிரேசச் செட்டியாரவர்கள்) மதுரை உயர்தர நீதிமன்றத்து வழக்கறிஞரும் செந்தமிழ் முதுநூற்பயிற்சியிற் சிறந்து விளங்குகின்றவர்களும் ஆகிய திருவாளர் ச. சோமசுந்தர பாரதியார் எம்.ஏ.,பி.எல்., அவர்கள் தம்மதிவலியாலாராய்ந் தெழுதிய தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னுங்கட்டுரையை முற்றும் படித்துப் பார்த்தேன். தமிழும் ஆங்கிலமுமாகிய இரண்டு கண்களாலும் உண்மைப் பொருள்களினியலுருவத்தைக் கண்டு குணங்குற்றங்களைத் தம் நுண்மாணுழைபுலத்தா லாராய்ந்து தெளியும் மதுகை மிக்க பாரதியாரின் செவ்விய இனிய உரைநடையைப் படிக்குங் காலுண்டாய இன்பம் வரம்பிகந்தது. இக்கட்டுரை கம்பர் இன்கவிப்பகுதிகளையும் திருக்குறட் செய்யுட் பகுதிகளையும் பெரும்பாலும் இடைமடுத்து உரைத் தொடராக்கொண்டு செல்கின்றது. பரந்த ஞாபகச் சக்தியின்றேல் இங்ஙனம் எழுதலரிது. சிறந்த உரையாசிரியர்களின் உரைநடைச்செலவும் இத்தன்மைத்தே. எடுத்துக்கொண்ட பொருட்குமறுதலைப் பொருள்களைத் தெரிந் தெடுத்துத் தக்க ஏதுக்களான் மறுத்துத் தங்கோணிறுவுந்திறன் அறிவுடையார் உள்ளத்தை வியப்புறச் செய்வதாகும். உலகப் பொதுவியலாரகத்து அடிப்பட்டு நிகழும் மாறுபட்ட கொள்கைகளை அஞ்சாது நின்று தக்க காரணங்களால் மறுத்துப் புதிய உண்மைப்பொருள்களை நிலைநிறுத்துவதே மதிவலிமிக்கார் செயலாகும். விரைந்தோடும் யாற்று வெள்ளத்தையெதிர்த்து அதன் விரைவாற்றலை யறியகில்லாது அதுசென்றவாறே செல்லுதல்போல நூற்பொருள்களைப் புடைபடவைத்து நுண்ணிதின் ஆராயாது புறப்பார்வையாற் பருப்பொருள் வயப்பட உள்ளம் போக்கல் உள்ளீடற்றார் செயலாகும். இவ்விருதிறச் செயல்களுள் நம் பாரதியார் முன்னதை முற்றுங் கடைப்பிடித்தும் பின்னதை யறவே விலக்கியும் ஒழுகு நீர்மையர். இதற்குச் சான்று இக்கட்டுரையன்றி வேறு வேண்டா. தனித்தமி ழொன்றனையே தம்வாணாண் முழுதுங் கற்றாருரை நடையினும், வேற்று மொழிப்பயிற்சியாற் காலத்தின் பெரும் பகுதி செலவாக எஞ்சிய சிறு பகுதியைத் தமிழ்ப் பயிற்சிக்குப் பயன்படுத்திய பாரதியார் உரைநடை திட்பநுட்பமிக்குத் திகழுஞ்செவ்வி நம்மனோருள்ளத்தை வியப்போடுவகை மேவரச்செய்கின்றது. இனி, இக்கட்டுரையிற்கண்ட பொருண்முடிவுகளாவன: தவத்தாதை யென்று பாராட்டப்படுந் தசரதன் இராமன் பாலுள்ள அளவின் மிக்க அன்பினாற் பரதனை வஞ்சித்துப் பிறப் பினாலவற்குரிய நாட்டை இராமற்கு அளிக்க முயன்று தவறுபட்டா னென்பதும், மக்கள்பால் வேற்றுமையில்லா நற்குணத் தளாயினும் கௌசல்யை தசரதன் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணை நின்று இராமாபிடேகத்தில் உவகையுற்றிருந்தா ளென்பதும், மிகக் கொடிய வளென்று உலகத்தாரால் இன்றும் பழிக்கப்படும் கைகேயி, நியாயம் திறம்பாமற் பரதற்கு நாடு வேண்டியமையாலும் நாட்டின் உரிமைப் பழஞ்சொல்லை வெளிப்படுத்தாமல், வேறொரு காரணத்தைக் குறிப்பிட்டுத் தலைவன் பெருமையைப் பேணினமையாலும் கற்புக் காதல் குணங்களால் ஒரு சிறிதும் தவறுபடாதவள் என்பதும், இராமனும் பரதனும் கவிகளாற் குறிப்பிட்டபடி குண ஒழுக்கங்களாற் சிறந்தவர்களே என்பதுவும் பிறவுமாம். இம்முடிவுகளுக்கு ஆதாரமாகக் காட்டப்பட்டன கம்பர் கவிகளிற்கண்ட புதிய செம்பொருள்களும், வான்மீகியார் மதுரவாக்குக்களுமாம். தசரதன் பரதற்குப் பிறப்புரிமையாக உள்ள நாட்டை இராமற்கு அளிக்க நாளடைவிற் செய்துவந்த செயல்களை அறந்திறம்பின வென்பதற் குத் தன்தேயத்து மக்களியல்பை அறியாவண்ணம் பன்னெடுங்காலம் கேகயநாட்டிற் பரதனை இருக்கப் பணித்ததும், மணவிழா நிறைவேறியதும் அப்புது மணவின்பம் நுகர்தற்குச் சிறிதும் அவகாசந்தராமல் அவனைக் கேகயத்திற்கு அனுப்பியதும், அவனில்லாதபோழ்து இராமா பிடேகத்தில் விரைவு மேற்கொண்டதும், அபிடேக விழாப்பத்திரத்தைச் சேய்மைத் தென்னுங்காரணமாகக் கேகய நாட்டிற் கனுப்பாமையும், பிறவும் ஏதுக்களாகக் காட்டப்பட்டன. இவ் வேதுக்கள் திறம்பட வாராய்ந்து காட்டப்பட்டனவே. வரலாற்று முறையும் கவிகளின் குறிப்புக்களும் இவற்றை வலியுறுத்துவனவாம். திருமாலின் அவதாரமாகிய இராமன்பாற் கரையிகந்த பத்திமேலீட்டால் தசரதற்கு இத்தவறு நிகழ்ந்ததாகலான் சமயப் பார்வையுடையார் கடவுட்டன்மை வாய்ந்த இராமனை முன்னிட்டு நிகழ்ந்த இது தவறாகாதென்ப. தெய்வ பத்திமேலீட்டால் அறம் மறமாகவும் மறம் அறமாகவும் மாறுதலெய்து மென்பதனால் இஃது அமையுமாயினும், மக்கள் உலகியனீதியளவில் நோக்க அறப்பிறழ்ச்சி தசரதனைப் பற்றாமலில்லையென்பது உடன்படற்பாலதொன்றாம். கௌசல்யை தசரதன் சூழ்ச்சிக்கு அறிந்து உடன்பட்டிருந்தா ளென்பது சிறந்த நுண்ணிய குறிப்புக்களாற் கட்டப்பட்டுள்ளது. அக்குறிப்பிற்கண்ட சிறுபிழை, மும்மையின் நிறை குணத்தவ னின்னினுநல்லனால் என்று இராமன் முன்னிலையிற் பரதனை மனமாரப் பாராட்டுதன் முதலிய அவளுயர் குணங்களிடைப் பெருநெருப்பிற்பட்ட பஞ்சுத்துய்போல உருவிழந் தொழியு மாலையதாகலின், அஃது ஒரு குறையாகக் கருதற்பாலதன்று. இனிக்கைகேயியின் நிறையளவராய்ச்சியைக் காண்பேன். அறநிலை யின் மாறுபடாக் கற்பொழுக்க நிறையும், கணவன் பாலுண்மைக் காதனிலையும் பிறவுயர் குணங்களும் கைகேயி பாலுள்ளனவென்று செவ்விதின் ஆராய்ந்து விளக்கப்பட்டன. பரதற்கு நாடுபெறுதலிற் கைகேயியின் உட்கோள் கன்னியா சுற்கமாக முன் தசரதன் சூளுற்றதெனவும், அதனைக் குறிப் பிடாமல் வரமிரண்டு பெறுமுகமாக வெளிப்படுத்திக் கேட்ட தற்குக் காரணம், பெண்ணுரிமையை இத்துணை நாளாட்சி புரிந்தானென்னும் உலகப்பழி கணவனைச்சாராமற் காத்தற் பொருட்டெனவுங் கூறப்பட்டன. பரதற்கு முடிசூட்ட வேண்டுங் கால் கன்னியா சுற்கவுண்மையைக் கைகேயி கூறாமைக்குக் காரணங் காட்டியது பாரதியாரின் மதிவன்மையைப் புலப்படுத்து வதாகும். ஈண்டுச் சமாதானம் இதனையன்றி வேறு காண்டலரிது. திறனுடையார்க்கன்றி இதனையாராய்ந்து குறிப்பிடலுமரிது. கன்னியாசுற்கச் செய்தியை விளக்கமாக வான்மீகியாரும் குறிப்பாகக் கம்பநாடரும் புலப்படுத்தினர். கவிசிகாமணியாகிய காளிதாசற்கு முற்பட்ட பாசன் என்னும் நாடகமகாகவி இராம சரிதத்தி னொருபகுதியைப் பற்றியியற்றிய வடமொழிப் பிரதிமா நாடகத்தில், கைகேயி பரதற்கு நாடு வேண்டியதற்கு ஆதாரமாகக் கன்னியாசுற்கமொன்றையே காட்டியுள்ளார். கைகேயியின் வேண்டுகோள் பேராசையின்பால்தாம் என்று வெறுத்துக் கூறிய காஞ்சுகீயற்கு இராமன் கூறியதாகப் பாசகவி சொல்லிய சுலோக மொன்று ஈண்டுக்காட்ட லியைபுடைத்தென் றெண்ணு கின்றேன். அதன் மொழி பெயர்ப்பு வருமாறு : விவாக காலத்திற் கன்னியாசுற்கமாகக் கொடுக்கப்பட்ட இராச்சியம் உரிமையுள்ள மகன் பொருட்டு வேண்டப்படுமாயின், அதுபற்றிக் கைகேயி பேராசையுடையா ளென்பது எங்ஙனம் பெறப்படும்? உடன் பிறந்தானுக்குரிய இராச்சியத்தைக் கவர எண்ணும் நாமே பேராசையுடையேமாவேம் என்பதாம். இதனாலும் கோசலநாடு கைகேயியின் சுற்கப்பொருளென்பது நன்கு வெளியாம். இதற்கு இணங்கக் கம்பநாடர்கவிகளுக்கு நம் பாரதியார் உண்மைப் பொருள்கண்டது மிகவும் இன்புறற் பாலது. கைகேயி மாசற்ற சீல குணங்களுடையளாயினும், மண்ணேகொண்ணீ மற்றைய தொன்றும் மற வென்று கணவன் உயிர்போநிலைக்கண் இரந்ததற்குச் சற்று இரக்கங் காட்டியிருக்கலாம். இராமன் அயோத்தியிலிருந்தாற் கலக நேருமென்று கூறுதல் அத்துணைப் பொருத்தமாகத் தோன்றவில்லை. இராமனுடைய சிறந்த குணங்களைக் கைகேயி பலமுறை பாராட்டுகின்றாள். “என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ” என்றுவக்கு மிராமனாற் கலகம் நேர்த லெங்ஙனம்?1 பரதற்கு நாடுவேண்டியது முறையே. இராமனைக் காடு செலப் போக்கியதற்குக் கைகேயியின் இரக்கமின்மையே காரணமாகும். கன்னியா சுற்கத்தை வெளிப்படுத்தாமைக்கு இராம வனவாச முங்காரணமாகலாம். சுற்கச் செய்தியைக்குறிப்பிடின் நாடு பெறன் மாத்திரமமையும். காடு போக்கற்கு வேறொன்று வேண்டும். இரண்டையும் ஒருங்கு வேண்டுதற்கு முன்னைய வரங்களிரண்டும் பொருத்தமாதலறிந்து மேற்கொண்டிருக்கலாம். வரங்களிரண்டும் கற்கமொன்றும் ஆகிய மூன்று பயன்பெற விருக்க இரண்டோடு விட்டதுபற்றிக் கைகேயியைப் பாராட்ட வேண்டுமாயினும் காதற்கணவன் உயிர்க்கு இறுதி பயக்குந் துடிப்பையும், இளம்பருவத்து வளம்பொருந்திய இராமன் மெல்லியவுடலைக் கல்லினு முள்ளினுங் கிடத்தற்குத் தகாமையையும் அறிந்தும் மனங்கசியாமை இரங்கத் தக்கதே. இதுபற்றியேபோலு மிருபெருங்கவிகளும் தங்கூற்றாகப் பல விடத்துங் கைகேயியைத் தீயவை யாவையினுஞ் சிறந்த தீயாள் என்றின் னோரன்ன கடுஞ்சொற்களாற் குறிப்பிடு வாராயினர். கைகேயியின் உயர்குணங்களாகிய இரத்தினங்களிற் படிந்த இவ்விரக்க மின்மையாகிய சிறுமாசுதுடைத்தற்குத் தக்ககருவிகாண்டலரிது. அவ்விரக்கமின்மை இன்றும் இவ்வுலகங்களிராமன் பரக்குந்தொல்புக ழமுதினைப்பருகுதற்கு ஏதுவாயது பற்றிய அளவிற் பாராட்டப்படுவதாகும்.1 இக்கட்டுரைக்கணிடையே தமிழ்ப்புலமுற்றிய நம் பாரதியார் கெடுத் தொழிந்தனை என்னுஞ் செய்யுளிற் போந்த, கொடுத்த பேரரசு ஒருமகற்கு என்னுஞ் சொற்களுக்குத் தடைவிடைகளில் வைத்தாராய்ந்து கூறிய தெளி பொருள்களும், மங்கையுள்ளமுங் கோசலையறிவுமொத்தவால் என்புழி விளக்கிய கருத்துக்களும், இன்னுந் தங்கோணிறுவுதற் பொருட்டுக் கம்பநாடர்கவிகளிற் கண்ட அரியகவித் தொடர்களுக்கு ஏதுவோடு ஆராய்ந்து குறிப்பிடும் நுண் பொருள்களும் நம் உள்ளத்தைப் பெரிதும் இன்புறுத்துகின்றன. நூலாசிரியர்களின் கருத்துக்களை நுனித் துணர்ந் தெழுதும் புலத்துறை முற்றிய நலத்துறைவோராகிய பண்டைத்தண்ட மிழுரையாசிரியர்களின் இயனெறி நம் பாரதியார் கட்டுரைக்கட் பலவிடத்துந் தழுவப்படுகின்றது. ஆங்காங்குப் பொருண் முடிவுகளினும் இடைப் பகுதிகளிலும் காணப்படுஞ் சிலதொடர் மொழிகள் திட்பநுட்பஞ் செறிந்தனவாகவும் என்றும் நினைந்து சுவைக்கத்தக்கனவாகவுமுள்ளன. இவையெல்லாம் எம்மனோருள்ளத்தை உவகைப் பெருங்கடலுண் மூழ்கச் செய்கின்றன. இன்னோரன்ன சுவைநலமிக்க ஆராய்ச்சியுரைகளேஅறிஞருள்ளத்தைக் கவரவல்லுநவாம். பண்டை நூற்கருத்துக்களை யெதிர்த்துநோக்குந் திட்ப அறிவுடையார் மிகச்சில ரேயாவர். அவருள், நம் பாரதியார் மார்க்கதரிசியாக விளங்கு தலைக் கண்டும், நம்செந்தமிழன்னையின் ஆக்கத்திற்குரிய நற்காலமிது வெனக்கொண்டும் உவகைபூக்கின்றேன். மகிபாலன்பட்டி, இங்ஙனம் 3-7-1926 . மு. கதிரேசன் (3) (வெள்ளகால், திருவாளர், இராவ்சாகிப் ப. சுப்பிரமணியமுதலியாரவர்கள்) சீமான் ஐக்கோர்ட் வக்கீல், எஸ். சோமசுந்தர பாரதி எம்.ஏ.பி.எல்., அவர்களுக்கு, தங்கள் தசரதன்குறையும் கைகேயிநிறையும் என்ற வியாசத்தைப்பற்றி யான் கொண்டுள்ள அபிப்பிராயத்தைத் தெரிவிக்கும்படி விரும்பித் தாங்கள் 5.5.1926இல் அன்புடன் எழுதிவிடுத்த தபாற்சீட்டு மறுநாள்வந்தது. அதுவந்த தபாலுடன் தங்கள் வியாசத்தின் இறுதிப் பகுதியடங்கிய செந்தமிழ்ச் சஞ்சிகையும் வந்தது. அதனைப் படித்துவிட்டுத் தங்கள் வியாசப் பகுதிகள் நான்கினையும் ஒன்று சேர்த்து இரண்டாம்முறை கவனமாகப் படித்தேன். நான் தங்களைத் தூத்துக்குடியிற் பலமுறை சந்தித்துப் பழகிச் சல்லாபித்து மகிழ்வுற்றசமயங்கள் ஒன்றில், நான் ஆச்சரியமும் ஆனந்தமும் அடையும்படி மேற்படி வியாசத்தின் விடயத்தைத் தாங்கள் எனக்கு எடுத்துக்கூறினதும், அப்போது நான் அதனை அச்சிடுவித்து வெளிப்படுத்தல் வேண்டுமென்று சொன்னதும், இப்போது தங்களுக்கு ஞாபகத்திலிருக்கு மென்றெண்ணுகிறேன். ஆதலால், தங்கள் வியாசவிடயத்தை நான் ஒரு முறையுமன்று மும்முறை பயின்றுள்ளேனென்று தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலியில், சிலவாரங்களுக்குமுன், (28.3.26) இலக்கிய சங்கத்தார் நிகழ்த்திய கம்பர்திருவிழா முதனாள், நான் தங்களைச் சந்தித்த சமயத்தில், மேற்படி வியாசம் செந்தமிழில் வெளியாவதை நான் பார்த்தேனா என்றும், என் அபிப்பிராயம் என்னவென்றும், தாங்கள் என்னைக் கேட்ட போது, அது மிகவும் நன்றாயிருக்கிறது; ஆட்சேபிக்கக் கூடியவைகளெல்லா வற்றையும் எதிர்பார்த்து அவைகளெல்லாவற்றுக்கும் தக்க சமாதானங்கள் கூறியிருக்கின்றீர்கள்; ஆயினும், என் மனத்தெழுந்த சில சந்தேகங்கள் நிவர்த்திசெய்யப்படவில்லையென்று நான் சொன்னதும், முழுதும்படித்த பின்பு நீங்காத சந்தேகமிருந்து தெரிவித்தால், விடையளிப்பதாகத் தாங்கள் கூறினதும், தங்களுக்கு ஞாபகத்திலிருக்கும். தங்கள் வியாசத்தை முதன்முறை படித்துக்கொண்டு போனபோது தோன்றிய ஆட்சேபங்களைக் குறித்துக் கொண்டே போனேன். அவற்றுட் பொருட்படுத்தற்குரியன வல்லாத சில ஆட்சேபங்கள் கிடக்க, கீழே கூறுவதொன் றொழிய, முக்கியமானவை முழுதும் அவற்றுக்குப் பின்வரும் பகுதிகளில் திருப்தியாக நிவாரணஞ் செய்யப்பட்டிருக்கக் கண்டு களிப்புற்றேன். அவ் வியாசம், எடுத்துக்கொண்ட விசயம் அரியதாயும் சிக்கலாயும் சாதாரணக் கொள்கைக் கெதிரிடை யாயுமிருந்தாலும் அதைச் சிக்கெடுத்து முறைப்படுத்தி எல்லாரும் ஏற்றுக்கொள்ளுமாறு எளிதாகவும் தெளிவாகவும் இனிதாகவும் தருக்கமுறை பிறழாமற் பலவகை ஆதாரங் களுடன் வனப்புக்கள் மலியக் கவுரவமான நடையில் எழுதப்பட்டிருக் கின்றது. அதன்முடிபை ஒப்புக் கொள்ளாதாரும் அதன் முறையை ஒப்புக் கொள்வாரென்பதிற் சந்தேகமில்லை. எதிரிகளின் ஆட்சேபங்கள் யாதொன்றும் இடை நுழைய இடங் கொடாத அந்த முறை, பாரதக் கதையில் அருச்சுனன் அக்கினி தேவனுக்குக் காண்டவ வனத்தை உண்ணுதற்கு உதவியபோது, அவ் அக்கினியை அழிக்க இந்திரனேவிய மேகங்கள் பொழிந்த மழைத்தாரையொன்றும் உள்ளே நுழையாதபடி அவன் சரக்கூடம் அமைத்ததை ஞாபகமுறுத்துகின்றது. அதுவேயு மின்றி, அம்முறை, உலகப் பேரறிஞருள்ளே சிறந்தோருட் சிறந்த ஒருவராய் உயிர் நூற்புலவர் தலைவரான டார்வின் செய்த அரிய பெரிய அனைத்தும் வியாபித்து விளக்கும் முடிவுகள் தவறாய் முடிந்தொழிந்தாலும், அம் முடிவுகளைப் பெறுதற்கு அவர் செய்த வேலைத் திறம் அவருடைய உயர்வை என்றும் நிலைநிறுத்தப் போதியதென்று ஓரறிஞர் உரைத்த உண்மையை நினைவு கூரச் செய்கின்றது. இனி, மேலே குறித்த ஏக ஆட்சேபம் யாதெனில், கைகேயி தசரதனைப் பரதனுக்கு நாடும் இராமனுக்குக் காடும் கொடுக்கும் படிகேட்குமுன், அவளைத் தெய்வக்கற்பினாளென்று சிறப்பித்த கம்பர், பின்பு எங்கும் அவளை நல்லளென்றுகூறாது விட்டமட்டோடமையாமல் சுடுமயானத்திடைதன் துணை ஏகத்தோன்றல் துயர்க் கடலின் ஏகக் கடுமையார் கானகத்துக் கருணை ஆர்கலியேகக் கழற்கால் மாயன் நெடுமையால் அன்றளந்த உலகெல்லாம் தன்மனத்தே நினைந்து செய்யும் கொடுமையால் அளந்தாளை யார் இவரென்றுரையென்னக் குரிசில் கூறும் என்று கவிக்கூற்றாகக் கூறிய பாட்டில் அவளைத் திண்ணமாகத் தீயவ ளென்று கருதும்படி செப்புகின்றா ரென்பது. கைகேயி தோற்றத்தில் இரக்கமற்ற கொடியாளாகவும் உண்மையில் தன்னலத்தியாகஞ்செய்து தன் நாயகனைச் சத்தியந் தவறும் பாவங்களுக் குள்ளாகாமற் பாதுகாத்த பரமபதிவிரதையாகவும் கொள்ளும்படி சில காரணநிமித்தம் கம்பர் கவிகளமைத்திருக்கின்றாரென்று தங்கள் வியாசத்தில் விவகரித்து விவரித்திருப்பதற் கியைய, மேலே எடுத்துக்காட்டிய பாட்டில், கைகேயி நிலையில்லாத பூதஉடம்பழிந்து அது காரணமாக நிலையான புகழுடம்பைத் தசரதன் அடையச் செய்தாளெனவும், தன்மகன் தன்னால் உற்ற துன்பத்தினால், அவனுடைய உத்தம குணங்கள் வெளிப்பட்டு விளங்கச் செய்தாளெனவும், இராமனை வனத்துக்கனுப்பியதனால் அவன் பிரதாபம் பெருகச்செய்தாளெனவும், மாவலியின் ஆட்சியிலிருந்த மண்ணை யும் விண்ணையும் ஈரடியாற் கொண்டு மூன்றாம் அடிக்கிடமாக அம்மா வலியையாக்கிக்கொண்ட திருமாலின் நெடுமை, தோற்றத்தில் கொடுமை யாயும் உண்மையில் தன்திருவடியை அடைந்த எல்லா முக்தர்களையும் போல அம்மாவலி அவனுக்குரியன யாவற்றையும் தியாகஞ் செய்தாலன்றி யடைவொணாத அத்திருவடிக்கீழ் அவனை அவ்வாறு தியாகஞ் செய்யச் செய்து இருத்தின அருளாயும் இருப்பது போலத் திருமாலின் நெடுமை யுடனுவமிக்கப்பெற்ற கைகேயியின் கொடுமையும தோற்றத்திற்கொடுமை யாயும் உண்மையில் அருளாயு மிருப்பதாமெனவும் கம்பர் உய்த்துணர வைத்திருக்கின்றாரென்று கொண்டால், மேற்கூறிய ஒற்றை ஆட்சேபமும் இற்ற ஆட்சேபமாய் ஒழிந்துவிடும். 12.5.1926. இங்ஙனம், தங்கள் அன்புள்ள, வெ.ப. சுப்பிரமணியன். தசரதன் குறையும் கைகேயி நிறையும் பகுதி 1 : முன்னுரை ஒழிவுநேரத்தைப் பழந்தமிழ் நூல்கள் படிப்பதிலும், அவைபற்றிச் சிந்திப்பதிலும் செலவிடுவதில் மிக விருப்பமுடையேன். சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் இராமாயணக் கதைப்பாத்திரங்களின் இயல்பு நெறி ஒழுக்கங்களைச் சிந்திக்கையிற் சிறிது சந்தேகம் எழலாயிற்று. அது இராமனுக்கும் பரதனுக்குஞ் சிறுபருவ முதலே யேற்றக் குறைவற்று ஒத்த மரியாதைகள் காட்டப்பட்டதான இடங்களைக் குறித்தெழுந்தது. மன்னர் மக்களுள், பட்டத்திற்குரிய மூத்த புத்திரனுக்கு விசேச மரியாதையும், மற்றச் சோதரருக்குச் சமநலங்களு மேற்படுவதே முறையு மியல்புமாகும். இவ்வாறன்றி, இருவருக்குமேற்பட்ட பிராதாக்களுள், இருவருக்குச் சம மதிப்பும், மற்றையரனைவருக்கும் அவ்விருவருக்குக் குறையச் சமமரியாதை களும் அமைவதற்கு வேறு தக்க காரணம் வேண்டும். கௌரவர் நூற்றுவருள், சுயோதனனுக்கே தனிமுதற் பதவியும் தம்பியர் பணிவு மேற்படுவதும், பாண்டவருள் தருமனையே தம்பியர் நால்வருமொக்கத் தாழ்தலுந் தகவுடைத்தாம். தசரதன் மக்களுள் மட்டும், இராமனுக்குப் போலவே பரதனுக்குமிராச மரியாதைகளேற்பட்ட தோடமையாது, மாற்றன்னை மக்களுள்ளும்இராமனுக்கும் பரதனுக்குந் தனித்தனியே ஒவ்வொருவர் பணித்துணைவராகி யேவலேற்றி ருக்க நியாயமென்ன? தக்க நியாயமின்றி நிகழொணா விக்காரியத்துக்குக் காரணமாராய வேண்டுமென்றெண்ணினேன். உடனே கம்ப ராமாய ணத்தைச் சிறிதாழத் துருவிப் படிக்கலானேன். என் ஆராய்ச்சியிற் கிடைத்த வற்றைச் சொல்லத் துணிகின்றேன். நான் கண்டதே துணிந்த முடிபென்னுங் கொள்கையுடையனில்லை. எனக்குத் தோன்றியதை வெளிப்படுத்துவதன் மூலம், என்னிற் றகவு மிகவுடைப் புலவர் தம்பேராராய்ச்சியின் நன்முடிபு களை வெளிப்படுத்தித் தமிழுலகுக் குபகரிப்பதோடு, கற்றார் பலரையுமாழச் சிந்திக்கத் தூண்டுவதே என் முக்கிய நோக்கம். இந்நோக்கமே இத்தகைய ஆராய்ச்சிகளிலென்னை யூக்குவதோடு, எனக்குத் தோற்றியதை வெளிப் படுத்தவும் தூண்டுவதாகும். கம்பராமாயணத்தை நான் படித்து வருங்கால், மந்தரை சூழ்ச்சி’, கிளைகண்டுநீங்குபடலங்களிற் சில கவிகள் என் மனத்தை வலித்திழுத்து நிறுத்தி, நிறுத்தநிதானவாராய்ச்சியிற் புகுத்தின. அக்கவிகளுக்கு நான் முன் கொண்டதும் கேட்டதுமான, பொருள் பொருந்தாமையால், துருவிச் சிந்திக்கச் சில புதை பொருளுண்மை தோன்றுவதாயிற்று. ஐயமகற்ற விரும்பி முதனூலாம் வான்மீகம், பண்டிதர் பிரம்மசீ அநந்தாசாரியர் தமிழ்மொழி பெயர்ப்புடன் வெளிவந்ததை வாங்கி ஒத்து நோக்கினேன். அதன் பயனாய்க் கம்பர் கவிக்கருத்து, தெளிவும் வலிமையுமடைவதாயிற்று. சாதாரணமாகக் கைகேயியறக்கொடியாளென்றும், தன் கணவனிடங் காதற் கிழமையும் இராமனிடத் திரக்கமுமில்லாத வன்னெஞ்சுடையா ளென்றும், நாமெண்ணுகிறோம். இவ் வெண்ணமேறி, நம்மபிப்பிராயங்களை நாமுணராமலே பேதிப்பதால், கைகேயியைப் பற்றிய கதையனைத்து மியல்நிறமாறித் தோன்றுவதாகும். வான்மீகரும், கம்பரும் ஒப்புயவர்வற்ற கற்பரசியாக் காட்டவும், அப்பெரும் புலவர் கதையமைப்பும், கவிக் கருத்து மோராது நாம் அவளைப் பழித்து நிந்திக்கின்றோம். இராகவனுக்குரிய அயோத்தியரசைப் பறித்துத் தன் மகன் பரதன்பாற் சேர்த்து, இராமனைத் தனிக்கொடுமை நசையால் வனம் புகுத்தித் தன் காதலன் மரணத்துக்குமே காரணமாய், அருளேயுமன்றிக் கற்புங் குன்றிய காதகியா நாங் கருதுங் கைகேயியைத் தெய்வக் கற்பினாள் எனக் கம்பர் பன்முறை வாயார வாழ்த்தக் காண்பாம். உண்மையிலரசு பரதனதாயின்; அவனை யூரகற்றிய வனில்லாதபோ தவனன்புடைச் சுற்ற மறியாமலவன் முடியை, உரிமை யற்றவிராமனுக்குத் தசரதன் சூட்டச் சூழ்ச்சி செய்ததை யறிந்த கைகேயி, காதனிறை கற்பு முறையாற் கணவன் சொல்லறமிறவா தோம்பி யவன்பழியைத் தனதாக்கிக் கொண்டிருப்பின்; நிந்திக்கும் நாம் அவளைத் தூயகற்பின் துறைபோய நங்கையா வந்திப்பதே யமைவுடையறமாமன்றோ? நாம் சொல்வழக்கிற் கேட்டுவைத்த கதை, பரதனுக்காகக் கைகேயி இராமனுக் குரிய அரசை வஞ்சச் சூழ்ச்சியால் வலிந்து வாங்கினதாக் கொள்ளவும், வடமொழிப் பொய்யில் புலவனும், என்றுமுள தென்தமிழ்க் கம்பனும் பரதனரசைத் தசரத னிராமன் சார்பாக வஞ்சித்துப் பறிக்க முயன்றதாகக் கூறுவரேல் நம்மதிசய மெனைத்தாகுமெனச் சிந்தியுங்கள். நாமதிசயிக்கத் தக்க விதுவே உண்மையென்பதைக் கம்பர் வான்மீகர் கவிகளா லிங்குக் காட்ட முயல்வேன். பகுதி 2 : கம்பர் கவிக்கருத்து இராமன் கோமுடி சூடுவன் நாளை என்று மந்தரை வாய்க் கேட்டதும், தூயவள் கைகேயி, இராமன்பாலுள்ள தன் பேரன்பெனு மளக்கர் ஆர்த்தெழ”, உள்ள நிகழ்ச்சி யொளியாது காட்டுந்தன் தேய்விலாமுகமதி விளங்கித் தேசுற, மிக உவகைபோய்ச் சுடர்க்கெலா நாயகமனையதோர் மாலையை மந்தரைக் கவளுரைத்த நன்மாற்றத்திற்கு வெகுமதியா “நல்கினள்”. இராமன் பாற் காழ்த்த பகையாலிதை வெறுத்து, அரசி தந்த பொன்மாலையை நிலங் குழிய வெறிந்து, வெகுண்ட கூனி இராமனையு மவன்பா லன்புடைமைக் காகக் கைகேயியையும் பலவாறு சுடும் பழி சொல்லிப் பரிவாற் பரதனுக்குப் பட்டங் கேட்கும்படி வாய்கயப்புற வழங்கிய வெஞ்சொற் கேட்ட கைகேயி பொறாதாளாய், எனக்கு நல்லையுமல்லை, நீ என்மகன் பரதன் தனக்கு நல்லையுமல்லை, தருமமே நோக்கில் உனக்கு நல்லையுமல்லை ... ... . ... ... ... மதியிலா மனத்தோய் உன்புலைச் சிந்தையா லென்சொனாய்? தீயோய்?, நீதியல்லவு நெறிமுறையல்லவு நினைந்தாய்; நின்புன் பொறிநாவைச் சேதியா (துன் முதுமையாலி)து பொறுத்தனன் ‘... ... ... அறிவிலி அடங்குதி; ... ... ... என் எதிர் நின்று போதி எனத் தன் மனத்தே மூண்டெழுங் கதங்கனற்றத் தண்ணளி பொழியுந் தன் கண்கள் சிப்புற நோக்கிக் கடிந்து கூறினள். இதற்கு மஞ்சியகன்றிலா மந்தரை, அரசி யடிமிசை வீழ்ந்து, பரதன்பாற் பரிவும் இராமன் மேல் வெறுப்புமூட்டி, அரசியலாக்கத்தைப் பரதனெய்தச் செய்ய முயலுமாறு தன்னரசிக்குப் பல்வேறு நியாயங்களைப் பலபடப் பன்னி மன்றாடவு மறுத்த வுறுதிமன மங்கையர்க்கரசி, தசரதன் ‘தேவி, தூயசிந்தையும் ... ... தீய மந்தரை ஓருரை செப்பலும் திரிந்தது’, என்பர் கம்பர். அறநெறி பிறழா துண்மையி லுறுதியா நிலைத்த தெய்வக் கற்பினாள் தூயசிந்தையைத் திரித்த ஊழுரை பொதிந்த கவிக் கருத்தை யீண்டுச் சிறிது துருவியாராய்வோம்: கெடுத் தொழிந்தனை யுனக்கரும் புதல்வனை; கிளர்நீ ருடுத்த பாரக முடையவ னொருமகற் கெனவே கொடுத்த பேரர சவன்குலக் கோமைந்தர் தமக்கும், அடுத்த தம்பிக்கு மாம்;பிறர்க் காகுமோ? வென்றாள் என்பதிக்கவியாகும், ஒப்பற்ற மகனாய இராமனுக் கென்றே அயோத்தி நாடுடைய தசரதமன்னன் கொடுக்கவிருக்கும் இறைமையாக்கம், அதைப் பெறு மிராமனுக்கும், அவன் வழிப் பிறக்குமிறை மக்களுக்கும், இராமனை யடுத்து நிற்குந் தம்பி இலக்குவனுக்கு முதவுமல்லால், பரதன் முதலாய பிறர்க்குதவுவதில்லை. இராமன் முடிசூடப் போவதாகக் கேட்டுமதைத் தடுக்க முயலாது மகிழ்ந்திருக்கும் நீ, உன் கையறவால் உன்னருமைப் புதல்வனாய பரதனைக் கெடுத்துவிடுவை என்ற நேர் பொருளும், அதன் சுட்டெச்சமாகப் பரதனுக்குக் கேடுறாமற் காத்து வாழ்வளிக்க விரும்புவையேல், நான் சொல்லியவண்ண மவனுக்கே முடிசூட்டுவிக்க முயலுவை”, என்ற தோற்றுவாய்த் தேற்றப் பொருளுமே இச்செய்யுளுக்குச் சாதாரணமாகக் கொள்ளக் கேட்கின்றோம். இப்பொருள் தூய்மொழி மடமான் அறங்காழ்த்த நல்லியல்புக்கும், கூனி-கைகேயி சம்வாத வமைப்பு முறைக்கும், கம்பர் செம்பொருட்டுறைக்கும், முன்பின் கவிகட்கும் முரணுவதோடு, கைகேயியின் தெய்வக் கற்புக்கும் பொருந்தாதாகும். இராமன் முடிசூடில், பரதன் அவந்தனாய், இறவாப்பிணம் போற் றிருநீக்கப்பெற் றலக்கணுறுவான்; இராமனர செய்த இளையவனும் கோசலையுந் திருவெய்துவர்; பரதனு மவன் தாயும் தஞ்சமற்ற பஞ்சையராய்த் தயங்குதல் சரதம். இராமன் வாழ்வு பரதன் தாழ்வேயாமாதலின் அது தடுக்கற்பாற்று என முன் பன்முறையுங் கூனி பன்னியதைச் செவிகொடாது வெறுத்த பெருந்தேவியின் சலியாத தூயசிந்தை, அதையே மீட்டுங் கேட்டுத் திரிந்ததென்பது பொருந்துவதாமா? அன்றியும் கைகேயியினியல்பும், மனப்பண்பும், அறிந்து அவற்றிற்குப் பொருந்தக் கவிப்பொருள் காண்பதே முறையாம். அன்பளவிற்றசரதன் மக்கள் நால்வர்க்கும் வேற்றுமை காணாதாளிவள்; இராமனிடத்திணையற்ற அன்பும், கணவன் பாற் கரைகடந்த கற்புடைக்காதலுமுடைய சுசீலை: ஆகவே, இவள் இராமனுடைமையைப் பறித்துப் பரதனுக்குரிமை யாக்கித்தர விரும்புந் தரத்தளாவளோ! தசரதன் இராமனுக்குத் தரவிரும்புமிளவரசைத் தடுக்க எண்ணி வந்த கூனி, கடைக்கண்ணளி பொழியப் பொங்கணைமேற்(றூங்கிக்) கிடந்தாளைச் செம்பொற்சீரடி தீண்டித் துயிலெழுப்பி, உன்னைப் பேரிடர் பிணிக்க நண்ணவும், (அதற்கு) உணங்குவாயல்லை (வரும் பெருங்கேடு ணராது) உறங்குவாய்”, என்றுரைக்கத் தன்னரசிக்குரைத்தபோது, கைகேயி சொல்லும் பதிலால் அவளுண்மைக் குணமும் மனப்பான்மையும் துளக்கமற விளக்கமாகும். கொடுமனக்கூனி வந்து முதலிற்கண்ட கைகேயியின் உறக்க நிலை யொன்றே அவள் மாசுறாமனத்துறக்கஞ் சொல்லும். சிசுக்களெல்லாம் தூக்கத்தில் அழுக்கற்ற தம் அகமலர்ச்சி விளக்கி விகசிக்கு முகமுடைய: பாவம் பழகு பருவமுற்ற பின்னரே, மனிதர் அவசத்துயினிலையில், தத்தம் முகத்தியல்பால், தாம் நனவு நிலையில் மறைத்துள தம் மனப்பாங் குணர்த்துவராவர். உள்ளத் தோயா தூறு மருளுடைய கைகேயி நனவுநிலையிற் பல்லார்மாட்டும் ஒல்லும் வாயெல்லாம் இறைத்தூட்டுந் தண்ணளி, அவள் துயிலுங்காற் செலவின்றி நெஞ்சநிறைந்து, ததும்பி இரு விழிப் புறமடைக்கடை வழியுஞ் செல்வியைக் கம்பர், பாற்கடற் படுதிரைப் பவளவல்லியே - போற்கடைக் கண்ணளி பொழியப் பொங்கணை மேற் கிடந்தாள் தனை, விரைவினெய்தினள் கூனி, என் றினிது விளக்கியுள்ளார். இவ்வாறு தொடர்புபற்றி முளைத்தெழு மன்பு, நல்லியல்பால் நாளும் விளைந்து முதிர்ந்து, தொடர்பின்றி யாண்டுங் கனிந்து சுரக்கு மருளாகி யூற்றெடுத் தொழுகுமுள்ளமுடைய கைகேயி தன்னிற் றொடர்பற்ற யார் மாட்டுமே ஆர்வமுடையளாவள்: எனில், தன் காதற் கிழவனிடமும், அவனுக்குக் ‘கண்ணினும், உண்ணேராவியினு மினிய புதல்வனிடமுமா அவளுக்கு, அன்பு குன்றி, வன்கண்மை வளர்வதாகும்? இராமன் முடிசூடுதலைச் சுட்டிய வெவ்விடமனைய மந்தரை தேவியைப் பேரிடர் பிணிக்க நண்ணுவ தாய்ப் பேசியபோது தெவ்வடு சிலைக்கை என் சிறுவர் செவ்வியர்; அவ்வவர் துறைதொறு மறந்திறம்பலர், (ஆதலின்) எவ்விடர் எனக்கு வந்தடுப்பது? என்று கைகேயி உறுமுகின்றாள். தன்னொருமகவைத் தனித்து நினைக்கிலள்; மாற்றார் மக்களென்பதை யறவே மறந்தவள்; அன்பால் நால்வருந் தன் திருமக்களாத் தழுலியுவக்கு மிவள் மனப்பெருமை யிதனாற் கூறியமையாமற் கம்ப ரின்னுங் கூறுவ தறிவாம். பராவரும் புதல்வரைப் பயக்க, (அப் பெற்றியால்) யாவரும் உராவருந் துயரை விட்டுறுதி காண்பரால் என்ப துண்மையா மேல், விரா வரும் புவிக்கெலாம் வேதமேயென இராமனைப் பயந்த எற்கு இடருண்டோ? என்று கைகேயி முழங்குகின்றாள். “துறைதொறும் அறந்திறம்பா என் சிறுவர் (நால்வருஞ்) செவ்வியர்” எனச் சொல்லிக் கூனியின் உற்பாதமொழி கடிந்ததோடமையாமல், பின்னும் ‘அறமனைத் துக்கு மச்சாணிபோல்வான், இராமன் நால்வரினுஞ் சிறப்புடையான்; அவனைப் பெற்ற எனக் கேது குறை?’, என் றிறுமாந்துபேசி மகிழ்வாள். இதனா லிவட்கிராமன்பாலுள்ள இணையற்ற பேரன்பு விசதமாகின்றது. ஈன்ற பரதனிலுஞ் சான்றோனாகவும், தானே பெற்றுடைய பெரு மகனாகவுமே யிராமனைப் பரிந்து பாராட்டுகின்ற கைகேயி, அம்மகன் கோமுடிசூடுவன் நாளை எனக் கூனிவாயிற் கேட்டதும், எல்லையற்ற வின்ப மெய்துவதியல்பாகும். இம் மகிழ்ச்சியினியல்பு கூறியமைவதிராமனிடத் திவளன்பின் பெருக்குணர்த்தப் போதாதெனக் கண்ட கம்பர் இவள் கற்புங் காதலுங் கழிசிறந்ததென்பதை வெளிப்படுத்த விரும்பிச் சொல்லிய கவிநய மீண்டுக் கருதத்தக்கது. மாற்றமஃ துரைசெய மங்கை யுள்ளமும், ஆற்றல்சால் கோசலை யறிவு மொத்ததால்; வேற்றுமை யுற்றிலள், வீரன் தாதைபுக் கேற்றவ ளிருதயத் திருக்க வேகொலாம் என்ப தீண்டைக் கவிக்கூற்று. எனவே இதன்பொருள் கம்பருக்கு கந்தகருத்தால் பெறுவாம். கம்பர் மனக்கடற் பிறந்தொளிருங் கவிமுத்துப் பொதியிற் காழ்த்து நீர்சிறந்த தலைவரிசையான சிலவற்றுளொன்றா மிக்கவியழகைக் கவனிப்போம். துதி நிந்தைச் சொற்களாலிராமனைத்தூறி, அவன் நாளை முடிசூடப் போகிறான் என்று கூனி சொல்லவந்தாள். பாறையிற் சிதறுறுந் திவலையெனக் கூனி பழிமொழி புகாத செவியால் இராமன் முடிசூடுநலங் குறிக்குஞ் செய்தியை ஆர்வமொடு மடுத்து உளம் பூரிக்குங் கைகேயியின் நிறைமனநிலைக் கேற்ற உவமை பிறிது காணாக் கம்பர், அப்பெருமகனடையப் போகுந்திருவினை அவனை யீன்ற கோசலை யுணர்ந் தெய்திய அறிவின்பத்தை ஒருபுடை யுவமையாகக் காட்ட விடையேற்பாராவர். கைகேயியனுபவித்த இன்பத்தியல்பு ஒன்று, அளவு ஒன்று; இவையிரண்டையுமுணர்த்தவல்ல அமைவுடைய தோருவமை யில்லையெனத் தெளிந்த கம்பர், ஒப்புயர்வற்ற அவளின்ப வியல்பை உவமியாதுவிட்டு, அளவுக்குமட்டும் ஏகதேச ஒப்பாக, இராமனபிசேகத்தில் கோசலையறிவாற்றுய்த்த இன்பத் தொல்லையைக் காட்டுவதானார். பொதுவாக, உணர்வுக்கிடம் உள்ளமும், ஓர்ப்பு சிந்தனைகளுக்கிடம் அறிவுமாம் என்பது யாவரு மறிவதேயாம். இன்பம் உணர்ச்சி வகையாகலான், அதை யனுபவிக்குமிடம் உள்ளமேயாகும். அன்பு இன்ப நுகர்ச்சிகளை நெஞ்சாலும், அரிய ஆராய்ச்சி ஆழ்ந்த சூழ்ச்சி நலங்களை யறிவாலும், அனுபவிப்பதியல்பாகவே, ஈண்டிராமன் பெருவாழ்வு கேட்டதில் உளத்தின்பம் கைகேயிக்கு மட்டுமே நிறைந்து வழிய, கோசலை தன்னறிவளவில் மகிழ்ந்ததாகக் குறிப்பாலுணர்த்தி, அவளறிவின்பமுங் கைகேயி உளத்தின்பமும் இயல்பா லொவ்வாவேனும், அளவு மட்டிலொருவாறு ஒத்ததென்றார் கம்பர். தன் மகனலங்கேட்டு ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தாயின்பத்துக்கு, அம்மகனலம் பேணும் பிறிதெவரின்பமும் இணையாவதில்லை; அப்படியிருக்க, மகன் வாழ்வில், பெற்றவள் உற்ற அளவே, மாற்றன்னையும் பெரிதுவப்பள் என்பதே இயற்கையாகாது. அதற்குமேல், அளவாலொருபடி ஒத்தாலும் பெருநலப் பேரியல்பில், கோசலை யறிவாலனுபவித்ததினுமியல் சிறந்த வின்பம் கைகேயி உள்ளத்தா லனுபவித்தாளெனவுஞ் சுட்டிவைத்தது, முழுதும் அசம்பாவிதமன்றோ? என்றெவருங் கேட்பதியல்பாகும். இவ்வியல் வினாவுக்குத் தக்க நியாயத்துடன் விடையிறுக்கும் கடனறிந்த கம்பர், மேற்கவியின் முதலிரண்டடியில் இராமன் முடிசூடுமாற்றம் கேட்டதும், கோசலை அறிவாலனுபவித்து இன்பத்தளவே கைகேயி உளத்தாற் களித்துத் திளைத்தாள் என்று கூறி அதற்குப் பின்னிரண்டடியாற் போதிய நியாயமும் கூறிப்போந்தார். இராமனைப் பயந்தவள் கைகேயியாமேல் இராமன் பெருவாழ் வடைவதில் அவளே உளமுவப்ப தியல்பாமன்றோ. தான் வயிறுளைந்தீன்ற பரதனைப் போலவே, இராமனையும் தானே பயந்தமகனாக் கொள்ளு முளமாண்புடையவள் கைகேயி என்பதை, முன் இராமனைப் பயந்த எற்கிடருண்டோ? என் றவளிறுமாந்துவந்த விம்மிதங் கூறுமுகத்தாற் கம்பர் நிறுவியுள்ளார். பரதனுக்கு மிராமனுக்கும் அன்னை அன்பில் இவள் ‘வேற்றுமையுற்றிலள்’, இருவருமொருங்கே தன் சிறுவராகவே கருது மனக்கோளுடைய ளாகலின், பரதனுக்குப் பட்டம் வருவதி வளெய்து முவகை, ஈன்ற தாயின் இயலுளத்தின்பமாவது போலவே, தான் பயந்த மைந்தனாக் கருது மிராமனலத்தினும் இவள் உள்ளமள்ளு மின்ப வெள்ளத் திற்றிளைப்பதாயினள். பெறாத இராமனைத் தான் பெற்ற வளாகவே கருதுவதற்கும், பெற்ற தநயனுக்கும், தான் பெறா மகனுக்குங் கைகேயி வேற்றுமை காணாமைக்கும், காரணமென்னையெனின், அவளன்பு தன் தொடர்புடைய தில்லாமையேயாம். சாதாரணமாய் மனிதரன்பு தன்னிற் பிறந்து, தன் தொடர்புடையார்பாற் படர்வதியல்பு. கைகேயியன்பு மவ்வகைத்தாயின், அவள் தன் தொடர் பதிகமுடைய பரதனை, அத்தொடர்பு குறைந்த இராமனினுமதிகங் காதலிப்பதே முறையாக வேண்டும். இவ்வாறன்றி அவள் இவ்விருவர்மேற் செலுத்துங் காதல், அவள் தொடர்பு பற்றாது, பிறிதொரு சார்புடைத்தாமேல், அச்சார்பின் பொதுமையா லவளன்பிவ் விருவரிடை யுஞ் சமநிலையடைதல் கூடும். தமிழ் வழக்கில், தெய்வம் தொழாது, கொழுநற்றொழு தெழுதலே கற்பிலக்கணம். கணவனிருக்கப் பிறிது கடவுட் பேணல் கடனாக் கருதுங் காரிகையார், பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றிய தாய தலைநின்ற நிறையுடைப் பெண்டிர் ஆகார்: என்பதே பொய்யில் பொருளுரையாகக் கொள்வர், பண்டைத் தமிழ்வாணர். இக்கொள்கைக்குச் சிறிதேனும் வழுவும் வான்மீக வரலாறுகளை ஆங்காங்கே திருத்தித் தமிழ்த் துறையி னிறை குறையாது நிறுத்துங் குறிப்புடையராய், வாலிக்குப்பின் தாரை வாழ்க்கையை மாற்றிச் செப்பனிட்டமைத்த கம்பர், ஈண்டுக் கைகேயி கற்பழகு காட்டத் தரும் இக்கவிக் கருத்தூன்றிச் சிந்திக்கத்தக்கது. பின் பரதனுக்குப் பட்டமெனக் கேட்ட கோசலை மனநிலை கூறுங் கம்பர், அவள் நால்வர்க்கும் மறுவிலன்பினில் வேற்றுமை மாற்றினாள் என்பார்; ஈண்டு இராமன் முடி சூடுமெனு மாற்றங் கேட்ட கைகேயி தன்தநயனினிராமன்பால் வேற்றுமையுற்றிலள்;அதனாலவன் வாழ்வில் உளமுவந்தாள்; என்று கூறிவைத்தார். ஆற்றல்சால் கோசலை யறிவால் மக்கள்பாலன்பில் வேற்றுமை மாற்றி மாண்படைவாள்; கைகேயி வேற்றுமை யறவே யுற்றிலாமையாற் றெய்வக் கற்பினளாவள்; என்று கம்பர் விதந்து கூறியுள்ளார். மக்கள் நால்வர்க்கும், தன் பெண்ணியல்பிற் பிறந்து மாசுபடுத்தும் அன்பு வேற்றுமையை, அறிவால் அறமோர்ந்து மாசிலாவாறு மாற்றவல்ல ஆற்றல்சால் கோசலை போலாது, கைகேயி யுள்ளத்தன்பில் வேற்றுமை யுணர்வே யுற்றிலாதாள். ஏனெனில், மக்கள்மேற் காதல் கைகேயிக்குத் தன் தொடர் பாலன்றித் தன் காதற்கிழவனாய தசரதன் காரணமாய்ப் பிறக்கு மாதலின், அன்பிற்கிடனாய உள்ளமுழுதையு முன்னரே கைகேயி தன் காதலனுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டவளாகையால், அவன்வழித்தன்றிப் பிறிதெத் தொடர்பு பற்றி யெழுமன்புக்கு மவள் நெஞ்சிடமில்லையாகும். பிள்ளையாசையால் அணையாடையை மோந்து மகிழ்வது, முதுமொழி கொண்ட உண்மையன்றோ? உள்ள முழுதையுந் தலைவனொருவனுக்கே தந்துவக்கும் தேவி நெஞ்சில் அவன் தொடர்பு பற்றி வருவார்க்கன்றிப் பிறிதெவர்க்கும் நுழைபுலனில்லை. தலைவன் விருப்பாலன்றித் தன்னையே பேணாப் பெற்றியளுள்ளத்தில், தன்சே யென்றொரு தொடர்பெழாது. பரதனைக் கைகேயி காதலிப்பதுண்மை. அதன் காரணம், தன்னைப் பற்றிய தொடர்புடைமையன்று. தசரதனுக்குத் தநயனாதல் பற்றியேயாம். அனைய தொடர்பேகொண்டு, அத் தசரதன் மகனேயான இராமன்பாலு மவளன்பால் வேற்றுமை யுறுமாறில்லையன்றோ? பரதனிடத் தன்பு தன் மகனென்ப தாலாயின், இராமனிடத்து அவளன்பு குறைவது முறையாம். அன்றி யவளன்புக்குத் தசரதனே தனிமுதற் காரணமாகில், இருவரும் அத்தசரதன் மக்களே யாதலின், அவரிடையன்பில் அவள் வேற்றுமையுறினன்றோ வியப்பாக வேண்டும்; உறாமையியல்பேயாமன்றோ? இவள், கற்பின்வழித்தாய காதற்செவ்வியை யினிது காட்ட வந்த கம்பர், கைகேயி இராமனிடத்தே தான் பெறாமகனாக வேற்றுமையுறாமைக்குக் காரணங் கூறுமுகத்தாற் சொல்லுவதிதுவே: வேற்றுமை யுற்றிலள் வீரன் தாதைபுக்கு, ஏற்றவள் இருதயத் திருக்கவே கொலாம் வீரனாய இராமன் தாதை, முன் அவளிதயத்தில் விரும்பிப் புகுந்தார். அவளும் விரும்பி ஏற்றாள். இவ்வாறிருவரும் பரசுபர விருப்பமுடையவராய், மனங்கலந்தாலும், பின் ஒரோவழிக் காதல் குறைபவரைப் போலாது, தசரதன் கைகேயி உள்ளத்துள் உவந்திருந்து இகவாது நிலைத்தான்; அவளும் நெகிழவிடா திறுகப்பற்றி யிருத்தி மகிழ்வாள். இவ்வா றவளுளமுழுதுங் கணவனுடைமையேயாகியதால், அவன் சார்பாக அவள் நெஞ்சிடம் பெறுவார்க்கன்றிப் பிறர் புகுமாறில்லை. இராமனும் பரதனும் தசரதன் காதற்றநயராகவே, இருவரு மவள் உள்ளத்தே ஒரு தன்மையராய் ஒத்திடம் பெறுவதானார். அதனா லவர்பாலன் பிற் கைகேயி வேற்றுமை யுற்றிளள் : என் றேதமறவாத முறை வகுத்திவள் கற்புடைக் காதலின் பெட்பும் திட்பமும் விளக்கினர் கம்பர். இத்தகைய மாசற்றகாத லிராமனிடத்தும், இடம் பிறிதெவர்க்குமிலா துளமுழுதுங் காதற் கிழவனாய கணவனிடத்துந் தந்துவைத்த பெற்றியளாய பீடுடைப் பெருநிறை யும் பேரருளுமே பேணுங் கைகேயி, இராமனுடைமை பறித்துப் பரதனுக்குப் புது வாழ்வளிக்க விரும்புவளென்பது பொருந்துவதெங்ஙனம்? மேலும், தன் சூழ்ச்சிக் கிணங்கொணாத் தேவியைத் தன் கருத்துக் கிணங்க வேண்டி, அரசி மனமுங் குணமும் நன்கறிந்த மந்தரை படிப்படியே அவளுக்குச் சொல்லிப் போந்த நியாயங்களினியல்பு முறையுஞ் சிந்திப் பார்க்குக் கற்பரசி கைகேயியின் அறங்காழ்த்த மனத்திட்பமும், அருணிறைந்த நெஞ்சத்தழகும் விசதமாகும். இராமன்பாற் பகையாற் புகையும் வெகுளி கவர்ந்த மனக்கூனி, சிந்தியாமல் முதலில், மனை மாற்றார் வீறுகூறச் சீறும் பெண்ணியல்பு கருதித்தான் பேசிய தரசி செவியேறாதது கண்டு, பின் அவள் சுபாவங்களை நினைந்து, முறையே பெண்டிர் தந்நல விருப்பையும், மாற்றார்பால் வெறுப்பையும், சுதன்பாலன்பையும், சுற்றத்தார் மீதன்பையுமளந் தவ்வவற்றிற் கேற்பன சொல்லி யவையும் பயனிலவாகவே, ஒல்லும் வாயெல்லா மோவா தறவினை செல்லும் வாயெல்லாஞ் செயக் காமுறும் கைகேயி அறத்தாசையைச் சுட்டி, அதற்கிராமன் முடிசூட லிடை யூறாமெனக் கூறினள்; அப்பருப்பும் வேகாது போகவே, மேற்கவியின்படி பரதன் அரசெய்தத் தேவியை ஒருப்படுத்துகிறாள். எனவே, முன் கூனி சொல்லிழந்த பலவற்றினு மதிக மவள்மனத்திற் பதிவதும், அவையிற்றின் வேறானது மாவதோர் புது நியாய மிக்கவியாற் சுட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், பொதுவாய் ஒருவரை யிணக்க விரும்பிப் பேசுங்கால், சொன்னதொன்றவர் மனங்கொளாவிடில், அதிலதிகம் பதிவுபெறு முறுதிகளெடுத்துரைப்பதே முறையோடு பயன் பயப்பதன்றி, முன்னதினும் நயங்குறைந்த நியாயம் பேசல் பயனில் கூற்றாமன்றோ? தன்னலங் கருதா அறவியலுடைய கைகேயிக்கு, அவள் குணமறிந்த கூனி முறையே மேன்மேல் அறத்துறை யதிகரிக்கு நியாயங்களை யொன்றிழந்தொன்றாய்ச் சொல்லியும் அவையெலா மேற்காதவளை, இறுதியிலேற்றிணங்கச் செய்தது அறத்தாறழுங்காத நெறிமுறை நியாயமாயிருத்தல் வேண்டு மென்ப தொருதலையன்றோ? முதலிற் றான்கேட்க மறுத்து வெறுத்த கேவலம் தன் மகனலம் ஒன்றையே கருதி இறுதியிற்றன் சிந்தையின் தூய்மையைக் கைகேயி துறந்தனளாகக் கொள்ளுதல், வேறு வழியற்றவிடத்தன்றி முறையாமா? அவளறச்சிந்தைக்கும் அருங்கற்புக்கும் பொருந்துவதான பொருள் வேறிக்கவி வருத்தமின்றித் தருமாயின், அதைக்கொண்டு பொருந் தாப் புன்பொருள் போகவிடல் கடனாம்; முறையும் அஃதேயாமன்றோ? இன்னு மிப்பொரு ளிச்செய்யுணடை, தொடரமைப்பு, சொல்லிணக்கம், மொழியியல்புகளுக்கும் பொருந்தாமை காண்போம். ஒரு மகற்கெனவே கொடுத்த பேரரசு என்ற தொடரை எடுப்போம். இராமனுக்கு மறுநாள் இளவரசபிடேகத் திருநாளாய்த் தசரத மன்னன் சங்கல்பித்திருக்க, அதைச் சுட்டுங் கூனி பொருட்கமையக் கொடுக்கும் என்னாது கொடுத்த எனப் பொருந்தா விறந்தகாலச் சொற்பிரயோகிக்கவிடமில்லை. கோமுடி சூடுவனாளை’, என முன்னுங் கவனித்துப் பேசியவள், ஈண்டிலக்கணத்தோ டியல்வழக்குங் கடிசொற்பெயு மடியாகக் காரணமில்லை. இங்கிதனைக் காலவழுவமைதியாக் கொள்வாமெனின், சொல்லின் செம்பொருளமையாது வழுக்காணு மிடத்தன்றே வழுநீக்க வழுவமைதி யிலக்கணத்தில் வழிதேட வேண்டும்? நேர்பொருளே ஏற்புடைத்தாமிடத்துக், கவி யினியழகைப் பழுதாக்கி, வழுவமைத் தழுதலைவதேன்? இனி இளவர சபிசேகமே மன்னவன் செய்விக்க முயன்றதாக வான்மீகத்தில் வலியுறுத்தப்பட்டிருக்க, தேவபாடையினிக் கதை செய்தவர், மூவர் தம்முளு முந்திய நாவினார் உரை யறிந்ததன் படியே தமிழ்ப் பாவினாலுணர்த்த வந்த கம்பர் ஈண்டு இராமனுக் குத் தரப்போவதைக் குறிப்பரேல், தகவு மறந்து பேரரசென்றதனைச் சுட்டியிராரன்றே! அன்றியும், கூனி இராமன்பால் வெறுப்புமவதிப்பு முடையவள். இராமனையும் சீதை கோசலையையும் மதியாமற் பேசும் வழக்கமுடையவள்; தன் தலைவியை அரசரிற் பிறந்து, அரசரில் வளர்ந்து, அரசரிற் புகுந்து, பேரரசி யானவளென்றும், அதற்கு மாறாகக் கோசலை அத்தகைய குலநலப் பெருமை குன்றியவளெனவுங் கருதுபவள். ஆடவர் நகையுற, ஆண்மை மாசுறத் தாடகை யெனும்பெயர்த் தைய லாள்படக் கோடிய வரிசிலை யிராமன்...... என்றும், சிவந்தவாய்ச் சீதையும் கரிய செம்மலும் நிவந்த வாசனைத் தினிதிருப்ப. என்றும், துதி நிந்தைச் சொற்களா லிராமனைச் சுட்டுஞ் சுபாவமுடைய மந்தரை, மனமார அவனை ஒருமகன் எனவும், அவனெய்தப்போகும் இளவரசைப் பேரரசு என்றும், அவன் மக்களைக் கோமைந்த ரெனவுங் கூறுவாளா? ஈண்டிக் கவிமுழுதுங் கூனிவாய்க் கூற்றாகவே, அவள் குணத் தோடமைந்த சொற்பிரயோகமன்றோ கம்பரிட மெதிர்பார்க்க வேண்டும். தனை யெதிர்த்த மானவரிட மிராவணனுக்குள்ள அலட்சிய புத்திக் கேற்ப, அவ னவரைக் குறிக்குந்தொறும் மனிதர் என்னாது மனிசர் என் றவன்வாயிற்சொற் பெய்யுங் கம்பர், மறந்தும் தகவு தவிரார். ஆதலால், கூனிவாயிலிச் சொற்க ளிராமனைக் குறித் தெழா என்பதைக் கம்பர் மறந்து இக்கவி செயக் காரணமில்லை. மேலும், இராமனெய்து மரசினாக்கம், அவன் குலமைந்தர்க் கவன் வழித்தாவ தியல்பாகலாம்; மக்களில்வழி, இளையரில் மூத்த பரதனுக்குதவாமல்,இலக்குவனுக்குமட்டாவ தெப்படி? கவியிற் கூனி பேரரசு மைந்தர் தமக்கும்”, அடுத்த தம்பிக்கு மாம் என்று விதந்து கூறுவதால், இராமனையடுத்திருக்கு மிலக்குவனை யீண்டவள் குறிப்பதா யெண்ணில், பரதனுள்ளிட்ட பிறரனைவர்க்கும் அரசுரிமையாக்க மில்லை யென்பாளாகும். வழிமுறை வரிசையில் அரசுரிமையைக் குறியாது. இராமனரசியலில் இலக்குவனெய்தும் இராசபோகானுபவங்களையே குறிப்பதாக்கொண்டு, அவ்வாக்கம் பரதன் முதலிய பிறருக்கு இல்லை என்றதாக் கொள்வோ மெனில், அதுவு மமைவுடைத் தன்றாம். ஏனெனில், அப்போ தனுபவித்தற் கிடமின்றிப் பின்பிறக்க விருக்கும் இராமன் கோமைந்தர் தமையுமிங்குச் சுட்டி, அவர்க்கும் அப் பேரரசு ஆம் என்பதாலும், அம்மைந்தர் இலக்கு வனைப் போலக் கேவலம் போகனுபவங்களை மட்டுமன்றி அரசுரிமையை யுமே அடைபவராதலானும், ஈண்டுப்பேரரசு இராமனும் அவனுக்குப் பின்னடையு முரிமையுடையாருமெய்தும் அரசுடைமையையே நுதலியதாக வேண்டும். இனிப் பரதனையே அடுத்த தம்பி எனக் கூனியிங்குச் சுட்டுவதாக் கொள்ளற்கு மிடமில்லை. ஏனெனில், முன் பலமுறையும், இராமனரசெய்தில், இதனாற் கோசலையு மிலக்குவனுமே வீறுபெறுவ ரென்றும், பரத னவந்தனாய் வறுமையு மானக்குறைவு மெய்துவன் என்றும் வலியுறுத்துங் கூனி, இங்கு இராமனடையு மரசினாக்கம் பரதனுக்கும் பின் ஆகுமெனப் பேசாள். அப்படிப் பேசுவதாகக் கொள்ளுவது, முன்கொண்ட பொருளொடு முரணுவதோடு, ஈண்டவள் வலியுறுத்தவந்த கருத்துக்கும் பொருந்தாதாகும். இராமன் வாழ்வு பரதன் தாழ்வேயாமெனக் காட்டிக், கைகேயியை யிணக்கப் பேசுமிடையே, இராமனிறைமையாற் பரதனுங் குறைவின்றி நன்மை பெறுவதுண்டாகக் கூனி சொல்லுவ தமைவுடைத்தன்றாம். எனைத் தானுமிச்செய்யுள் வாக்கியம் நாமுதலிற் கொண்ட பொருளொடு சிறந்து பொருந்தாமை தெளிவாகின்றது. இதுவேயுமன்றி, இராமன் சேச்டனிலையிலுரிய தன்னரசைத் தானெய்துவ தியல்பென நாங் கருதுகின்றோம். உரிமையற்ற பரதன் தசரதன் கொடுத்தாலன்றி யரசு பெறு மாறில்லை. இராமனுக்கோ அரசு பிறப்புரிமையாகும். கவியில் ஒருமகன் என்ப திராமனைக் குறிக்குமாயின், உடையவன் ஒரு மகற்கெனவே கொடுத்த பேரரசு என்று விசேடித் திருப்பதற்கு நியாயமில்லை. பிறப்புரிமை யற்றவர் அரசு பெறுவதற்குத் தான், கொடையும் கொடுப்பாற்குடைமையும் இன்றியமையாதனவாம். மூத்தவனான இராமன் வரன் முறையிற் பிறப்புரிமை யுடையனாகவே, ஈண்டுக் கூனி அவனுக் கிளவரசபிடேகம் பண்ணுவதைச் சுட்டுவதாக் கொள்ளுங்கால், தசரதனை ‘உடையவனா’கவும், அவன் கொடையாலிராமன் பேரரசு பெறுவதாயுஞ் சிறப்பித்தல் பொருளும் பயனுமின்றாம். இன்னும், இராமன் தன் உரிமையை உள்ளபடி தானெய்தப் போவதிலும், உரிமையற்ற பரதனுக்கு வர வேண்டாததை அவனடையாமையிலும், பரதன் கெடு மாறில்லையன்றே! இப்படியிருக்க, கெடுத்தொழிந்தனை யுனக்கரும் புதல்வனை என்று கடுமொழிகூறிக் கூனி பழிப்பதற்குப் பொருளுண்டோ? புதையல் பெற்றான்போலத் தனக் குரித்தில்லா ஒன்றை ஒருவனடையின், அதனால் அவனுக்கிலாப முண்டாகலாம். உரியதொன்றைக் கையறவாலோ, கவனக் குறைவாலோ, யிழக்க நேரினதனாலவன் கேடெய்தலாம். கிடைக்க வேண்டாதது கிட்டாததாற் புத்தூதியம் பெறுவதற் கில்லையாமேயன்றிக் கேடுறுவ தெப்படியாகும்? கிரமமற்ற பேரரசை வஞ்சவலியால் வாங்கித் தர விசையாமைக்காகப் பரதன் நற்றாய் தீயளா வதெப்படி? வரன் முறையி லிராமனுக்குரியதையவனுக் களிப்பதால், தந்தையுங் கொடியனா வதுண்டோ? இதனாற்றசரதன் அந்தரம் தீர்ந்துலகளிக்குநீர் மையனாவதுதா னெப்படி? கோசலை மதியினால் வாழ்ந்தனளாவதெவ்வாறு? அவள் மகன் தன்னுரிமையைத் தானடைவதில் அவளுக்குச் சிந்தனை விரிவானேன்? பாட்டனைப் பார்க்கக் கேகயத்துக்குப் பரதனை. . . அரசன் ஆணையால்... சேணிடைப் போக்கிய தில், கூனி இன்று கண்ட புதுப்பொருள்தானென்ன? மந்தரைவாயிற் கம்பரித்தனையும் பொருளின்றி வீணே புகுத்திவைப்பரா? இனைய பலவாற்றானும் நாமறியக்கிடப்பது, இக்கவியிற் கூனிகூற்றிற்கு இத்துணை முரணுடைப்பொருள் கொள்வது பொருந்தாது. வேறு தகவு மிகவுடையதோர் செம்பொருள் காண்பதறிவா மென்பதேயாம். அத்தகைய பொருந்தும் பொருள் வேறுளதாவென விசாரிக்கப் புகுவாம். இது சம்பந்தமா யூன்றி நாஞ் சிந்திக்க வேண்டிய கவிகளினின்னு மிரண்டொன்று கிளைகண்டு நீங்குபடலத் திலுண்டு. கூனிகூற்றாய மேற்கவியோடியைபும், அதன் பொருளா ராய்ச்சிக்குத் துணையுமாமச் செய்யுள் களையுஞ் சிறி திங்குக் கவனிப்போம், பசைந்த சிந்தைப் பரதன் இராமனை மீண்டழைத்து வந்து அரசனாக்கும் நோக்கத்தால் வனம் போந்தனன். அவன்வாய்த் தன் தந்தையார் மரண மறிந்து இராமன் வருந்தித் தேறியபின், அவர்க் கீமக்கடன் முறை யாற்றினான். மற்றைநா ளிராமன், வற்கலையுடுத்தி, மெய்ம்மாசுடன், நகை யிழந்த முகத்திற் கற்கனியக் கனிகின்ற துயர்ததும்ப அவலமீதென எழுதிய படிவமொத்த விரதவேடப் பரதனைப் பார்த்து, வரதன் (தசரதன்) துஞ்சினான்; வையம் அவன் ஆணையால் சரத நின்னதே மகுடந்தாங்கலாய், என்கொல்? கூறெனாப் பரிந்து கூறினான்”. இது கேட்டதும், ‘பதைத் தெழுந்து, தொழுது நின்று இராமனை நெடிது நோக்கி, வரன் முறையுமறனும் பிறழ்ந்து வசைகொள்வனோ? முதற் பிறப்பாலுனக் குரியதரசு; தந்தைபால் என்தாய் வரங்கொண்டு தரணி வௌவித் தரி னதைவாங்கத் தரியேன். மீண்டுவந் துன்னரசைநீ யாண்டு வசை நீக்கிக் காத்தல் (நின்) கடன்”, என்று கரவில் சிந்தையன் கதறலாகினன். ஈண்டுக் கம்பர் பரதன்வாய்ப் பெய்து வைத்த சொற்கள் கவனிக்கற்பாலன. பிறந்து நீயுடைப்பிரிவில் தொல்பதம்... நீதியிற்றிறம்பி, வாளினாற் கொன்று அறந்தின்றாலென, அரசதாள்வனோ? எந்தை ... மீண்டரசு செய்கெனா (தன்) சிந்தையாவதுந் தெரியக் கூறினான் என்பது கவிவாக்கு. தசரதன் ஆணையால், சரதம், அயோத்திநாடு பரதனது, என் றிராமன் முதற்கூறியதை யொவ்வாத தம்பி, தமையன் பிறப்பின் சிறப்புரிமையை வற்புறுத்திக்காட்டி, மீண்டரசு செய்து”, தன்னைப் பழியாழிக் கரையேற்றி யுதவும் படி குறையிரக்கின்றான்; அதன்மேல், அறத்துறையாற்றி முறை யிறவாத தம்பியின் தூய்மனத்துணிவும், தந்தை மரணத்தாலும் தமையன் பிரிவாலும் இருமுதுகுரவரால் வந்த வசையாலுமிற்ற அவன் மனப் பான்மையும் நன்கறிந்த இராமன், பரதன்பாற் பழியின்மையும், அவனுக்கு அரசுரிமை யறத்தாறுண்மையு மெடுத்துக் காட்டி யவனைத் தெருட்டுமாறு பின்னுஞ் செப்புவான்: வரனி லுந்தைசொல் மரபினா லுடைத் தரணி நின்னதென் றியைந்த தன்மையால், உரனில் நீபிறந் துரிமை யாதலால், அரசு நின்னதே, ஆள்க; என்னவே இராம னிதுசொல்லவும் பரதன் பருவரல் நீங்கித் தன் னெண்ண மீடேறியது; இராம னினித் தனக் கிணங்காதரசை மறுக்குமாறில்லை யெனக் கண்டுவகை கொண்டு தாழா துடனே, பார் என்னதாகில், யானின்று தந்தனன்; மன்ன! போந்து நீ மகுடஞ் சூடெனாவிரைந்து பணித்து இராமனை யற்புத்தளையாற் பிணிக்கின்றான். அதினின்று நெகிழ்ந்து நழுவ வழிகாணா திராமன், எந்தை யேவ, ஆண்டு ஏழொடேழெனா வந்த காலம்நான் வனத்துள் வைக,நீ தந்த பாரகந் தன்னை மெய்ம் மையால் அந்த நாளெலா மாள்,என் ஆணையால் என்று கூறி, அதனையே வானவரும் அசரீரியா வற்புறுத்தல் காட்டி, இனி நீ மறுக்கற்பாலதன்று; யான் உனையிரந்தனன்: (வரதன் ஆணை யாலன்றி இனி என் ஆணையால், ஆனதோர் அமைதியின் அளித்திபார் எனாத் தன் துணைவன் துணை மலர்த் தடக்கைபற்றி வேண்டலாயினான், தன் பெருவிருப்பிற் கிணங்கி இவ்வாறு தகவுரைத்த தமையன் சொற்கிசைந்து பசைந்த சிந்தையான், ஆம் (அப்படியாகட்டும்) எனில், ஏழிரண்டாண்டில், ஐய, நீ... நகர் நண்ணி, நானிலங் கோமுறை புரிகிலையென்னில், (நானி) கூர், எரி (புகுந்து) சாம்; இது சரதம்: நின்னாணை என்பது சொல்லி”ப்பின், (இதுவரை) துன்பம் ஒரு முடிவிலாதான் யாதுமோர் துன்பிலனாய்”, இராமனது முடிவுரையை எதிர்பார்த்து நோக்கினன், அன்பினனி ராமன் ‘உருகினனாய், அன்ன தாகெனப் பரதனுக்குப் பதிலளித்தான். சம்மதித்த பரதன் இராமன் பாதுகையை யிரந்து பெற்று மீண்டான். ஈண் டிச்சோதரர் சம்வாதத்திற் றெளியக் கிடப்பன சில குறிப்பாம். வரமிரந்த கைகேயிக்கு வாக்குத் தந்த தசரதன் ஆணையால் (அயோத்தி) அரசுக்குரிய வையம் நின்னதே சரதம் என்றிராமனாரம்பத்திற் கூறவு மதனைத் தகவிலதாய்த் தவிர்த்து மறுத்து, முதல்வனாய்ப் பிறந்ததனால் தமையனுக் குடைமையாம் அரசு தனதாமாறில்லையெனவிலக்கிய பரதனே பின்னிறுதியி லிராமன் உந்தை சொல் மரபினால் தரணி நின்னது, உரனில் நீ பிறந்துரிமை யாதலால் அரசு நின்னதே, ஆள்க என்று கூறக் கேட்டதும், நாடு தனதாகக் கொண்டு, மீண்டதனைத் தமையனுக்குத் தானே தருவதாய்ச் சொல்ல லுற்றான். மூத்தவனாய்ப் பிறந்த தன்மையால், நீயுடைத் தொல்லரசை நீயே மீண்டு பெற்றாளுக,” என்று மன்றாடிய பரதன் சொல்லை நிராகரித்த இராமனே, பார் என்னதாகில், யானின்று தந்தனென், போந்துநீ மகுடஞ்சூடு, எனப் பரதன் சொன்னது மிசைந் தரசையேற்றுத், தான் பதினாலாண்டு வனமிருந்து திரும்பிவரும் வரை தன் ஆணையால் நாட்டைப் பரதன் பரிபாலித்து வரும்படி பணிக்கலாயினன். கைகேயி வர மிரக்கத் தசரதன் தந்த ஆணையால் அயோத்தியரசு தனதாகக் கொள்ள விசையாத பரதன், என் ஆணையால் ஆள்க என்றிராமனேவவு மிசைகின்றான். இவ்வா றிராமனும் பரதனும் ஒருவருக்கொருவர் முறையே முதலிற்கூறிய விவகாரங்களேற் கொணாதனவாய் மறுத்து விலக்கியவர்கள், இறுதியிலெடுத் துரைத்த நியாயத்தாலிணங்கியிசைவதற்கு, இவர் பின்னைய கூற்று முன்னதின் வேறுபட்டதும் வலியுந் தகவும் வாய்ந்ததுமா யிருத்த லின்றியமையாத தென்பது விசதமன்றோ? தசரதன் தன் தாய்க்கு வரமாத் தந்ததால் தான் தரணி பெறுமாறில்லை யென்பதும், இராமன் பின் உந்தை சொல் மரபினால், உரனில் நீ பிறந்துரிமையாதலால், அரச நின்னதென்னச் சுட்டிய நியாயத்தால் தந்தை நாடு தனக்கா மென்பதும், பரதன், கருத்தாகக் காட்டினர் கம்பர். எனவே, முதற்பிறந்ததால் இராமனெய்த வேண்டுமரசு தாய்க்கு வரமாத் தந்தைதந்த ஆணையால் தனதாகாதென்று துணிந்து நின்ற பரதன் தான் பிறந்ததாலுரிமை யெய்தும்படி தந்தை சொன்னதொரு சொன்மரபுண்மையை இராமன் சொல்லக் கேட்டதும், நாடு தனதாமாறு கண்டு, உடையனான தானே தமையனுக்கு அதைத் தருவதற்கு முன் வரலாயினான். தமையனுக்குத் தான் தருமுன், தனதுடைமை அறத் தாறழுங்கா நல்லுரிமை யானாலன்றித் தருமத்தின்தேவும், செம்மையின் ஆணியுமான பரத னிராமனுக்குத் தான் அரசு தருவதாகப்பேசத் துணியா னென்ப தொருதலையன்றோ? முன் பிறந்ததால், தமையனதா மரசைத் தாய் வௌவியதாக்கருதி வெறுத்த பரதனெண்ணம் தவறென்றும்... பிறந்த தன்மையாற் பரதனுக்கே அரசுரிமையைத் தசரதன் சொல்லிய பழைய சொன்மர புண்டென்றும் எடுத்துரைத்து அதுவரையிணங்காப் பரதன் தூயமனத்தை யறத்துறைக்காட்டி இராமனிணக் கியதாகக் காண்போம். இதனாற் றசரதன் கைகேயிக்குக் கேட்கத் தந்த வரச்சொல் வேறு; பரதனுக்குப் பிறப்பாலரசுரிமையாம் படி சொன்ன மரபுச்சொல் வேறு; என்று தெளிகின்றோம். முன்னதை அறங்கொல்லும் பழிதருவதாய் வெறுத்து மறுத்த தருமத்தினதேவான பரதனே, பின்னதை நெறிமுறை திறம்பா அறத்துறை நிற்பதா யங்கீகரிக்கின்றான். அவ்வாறவன் பிறந்ததனாலுரிமையெய்தும்படி தசரதன் சொன்ன மரபுடைச் சொல் யாதாயினுமாகுக; அச்சொல் பரதன் பிறக்குமுன் சொன்ன சொல்லாதல் வேண்டுமென்பதுமட்டும் வெள்ளிடை மலையாம். அன்றேல், இராமன் பிறப்பாலுரிமை பெறாது, அறத் துறையாற் பரதனுக்கரசு பிறப்புரிமையாமாறில்லை; ஏனெனில், இராமன் பிறந்துரிமை யெய்தியபின் தந்தை சொன்ன எந்தச் சொல்லாலும் அரசுரிமையை இராமனுக்கு விலக்கித் தான் கொள்வது நீதியிற் றிறம்பி அறங்கொன்று தின்பதாகு மென்னுந் துணிவுடைய பரதன், தாதை தன் தாய்க்கு வரமாயளித்த சொற்கேட்டு மதனைக் கடக்கொணாப் பழியாக்கருதி அறவே வெறுக்கின்றான்: பின் னிராமன்வாயி லும் மரபுடைச் சொல் லுண்மை கேட்டுப் பிறப்பாற் றனக்கரசுரிமையாவது கண்டு, அறத்துறையிலது தனதாகலாற்றா னேற்கின்றான்: ஏற்ற தன்னுடைமையை அற்புக் கையுறையாகத் தமையனுக்குத் தான் சமர்ப்பிக்கத் துணிகின்றான். பிறந்து நீயுடைப்பிரிவில் தொல்பதம் அயோத்தி அரசு - என்ற பரதன் கூற்றை அறமாக்கொள்ளாத இராமனும், முன் தன் தந்தை தந்ததோர் அறம் வழாமரபாக்கச் சொல்லுண்மையும், அதனால் அரசு பரதனுக்கே பிறப்புரிமை யாவதும் தம்பிக்குத் தெரிவித்து, அதன்மேல் அறமுறையா லரசுக்குரியனாய பரதன் தன்பால் உழுவலன்பால் உவகையோடுதவ மறுக்கொணாது தான் அதைப் பெறுவதற்கிசை யலுற்றான். பிறப்பால், இராமனுக்கின்றிப் பரதனுக்கே அறத்தா றரசமையும் மரபு வழுவாததோர் பண்டைச்சொல்லுண்மை ஈண்டுப் பசுமரத் தாணியாக வலியுறுத்தப்படுகின்றது. தயாமுதலறமான இராமன், நியாயமத்தனைக்கு மோர் நிலையமான பரதன் புனிதமனமிசைய, இறுதி யிலெடுத் துரைத் திணக்கிய மரபு வழா அறமமைந்து பொருள்பொதிந்த தசரதன் சோரொணாச் சொல்லுண்மையைத் தாசரதிவாய்க் கேட்டு அவன் தெருட்டத் தெளிந்த பரதனுடன் நாமுஞ் சிறிது தெளிவு காண்போம். வரதன் வரத்தால் அரசு நினதென்ற தமையன்சொல் தகவிலதாக விலக்கி மனமுளைந்த பரதன், பின் தந்தை முன் சொல்மரபினால் அவனுடைத்தரணி தன்னதென் றியைந்த தன்மையை இராமன் காட்டக்கண்டு, நாடு தனதாக் கொண்டான். அதுவேபோல், தெய்வக்கற்பினளாய கைகேயியின் வரன்முறை அறத்திற் பதிந்து சலியாது நின்ற தூயசிந்தையும் மந்தரையிறுதிக் கூற்றாம் மேற்கவிக்கருத்துணர்ந்த பிறகே திரிவதாயிற்று. அதனால், அரசு பரதனுக்கே பிறப்புரிமையென்பதையும், இராமனுள்ளிட்டார் பிறர்க் காமாறில்லை யென்பதையும் தெரிவிக்குமோர் சொன்மரபையே இக்கவியும் சுட்டினதாக வேண்டும். இல்லையாமேல், அவள் தூயசிந்தை இராமனரசைப் பரதன் தாக்கும் பழி வழியிற்றிரியுமாறில்லை. இதுவரை கம்பர் கவிகளையே கொண்டு இம்முடிபுகண்ட நாம் இனி இது சம்பந்தமாய் வடமொழியில் வான்மீகர் சொல்லுமிடங்களையுஞ் சிறிது கவனிக்கப் புகுவாம். பகுதி 3 : வால்மீகர் சுல்க வரலாறு முதலில் மேற்குறித்த, வரனில் உந்தைசொன் மரபி னால்உடைத் தரணி நின்னதென் றியைந்த தன்மையால் உரனில் நீபிறந் துரிமை யாதலால் அரசு நின்னதே; ஆள்க என்றனன் என்ற கிளைகண்டு நீங்குபடலக் கவிக்கு நேரான வான்மீகி, அயோத்தியா காண்டம் 107ஆவது சர்க்கம், 3ஆவது சுலோகத்தைச் சிந்திப்போம். உடன் பிறந்தவனே! முற்காலத்தில் உனது தாயாரை நமது பிதா விவாகம் செய்து கொள்ளும் பொழுது உனது பாட்டனார் (கேகயர்) இடம் (அவர் பெண் வயிற்றுப் பேரனுக் காமாறு) தனது ராச்சியத்தைக் கன்யா சுல்கமாகப் பிரதிக்ஞை செய்து கொடுத்தார்”, என்று இந்தச் சுலோகத்தை மொழிபெயர்த்துரைப்பவர் தமிழில் தருகின்றனர். சொற்கள் சிலவற்றை எவ்வாறு மாற்றிக் கூட்டிக் குறைப்பினும் பொருளளவில் இச் சுலோகக்கருத் திதுவாகவே அனைவர்க்கும் ஒப்பமுடியுமென்பது இதுவரை வெளிவந்த எல்லா வான்மீக மொழிபெயர்ப்புக்களாலும் விசதமாகும். கம்பரின் மேற்கவியும் இச்சுலோகமும் சந்தர்ப்பத்தாலும், இடம் துறை இயைபுகளாலும் ஒரே பொருணுதலியவென்பது தெளியக்கிடக்கின்றது. தன்னைத் தேடிக் காடுபோந்த பரதன் பரிதாப மாற்றி, நாடவன தாமென்றவனைத் தேற்றுமிடத் திராமன் வாயெழுந்த திவ் விருகவிக் கூற்றும், முறையே முன் இராமன் கூறிப்போந்த பல நியாயங்களையும் ஒவ்வாத பரதன், இது கேட்டதும், நாடு அறத்துறையிற்றன்னதென்பதை மறுக்ககில்லனா யேற்பவ னாகிறான். கம்பரைப் போலவே வான்மீகியும் இவ்விடத்திற் பிறப்பாற் பரதனுக்கே அரசரிமையாக்கந் தருவதோர் தசரதன் மரபுடை முன்சொல் உண்மையை இராமன்வாய்ப் பெய் தமைத்து வைத்துள்ளார். ஆனால் புதைபொருளாக விசாரித் தாய்பவரறியும்படி கம்பர் விட்டு வைத்த அத்தொல்லறச் சொல்லின் இடம் பொருள் காலம் இயை பொடு பயன்களை யாவருமுணரும் வண்ணம் வான்மீகி விளக்கியுள்ளார். இச் சுலோகக்கருத்தை ஊன்றி விசாரிக்குமுன் நாம், தெளிந்து கொள்ள வேண்டிய தொன்றுண்டு; கன்யா சுல்கம் என்ற சொற்றொடரும் அதன் பொருளும் கவனிக்க வேண்டும். மனுவாதி வழக்கற நூற் பழக்கமுடைய வாதம் வல்லுநர் பலரும் இவ் 1வறத் தொடர்புடைய சொற்றொட ராக்கமும் பயனும் நன்கறிவர். 2வழக்கிடை வழுக்கியுமிழுக்கப்படாத் தமிழர் இச்சொற்பொருள் கேட்டிருக்கக் காரணமில்லை. கன்னி யொருத்தியை மணக்குங் காதலன், மணமகள் தன்னகம் விழைந்து வருமாறு, விரும்பித்தரும் பொருளே சுல்க மெனப்படுவது. சீதனம் எனும் பொதுப் பெயர்கொண்ட பெண்டிர் நிதி வகுப்பி லொன்றே ‘சுல்க’மாகும். யாடக அயாடக சீதனம், சௌடயீக சீதனம், சுல்க சீதனம் எனச் சீதனம் பல திறப்படும். பெண்டிர்க்குப் பெற்றோர், அவர் சுற்றத்தார், வேட்போர் அவரொக்கல், நட்பாளர் பலரும் மணங்கருதித் தரும் கொடைப்பொருளும், மணவினை கருதாமலே தரப் பெறும் திருவும், தந்தொடர்புடைச் சுற்றத்தார் இறந்தவரிடமிருந்திறங்கப் பெண்டிர் பெறுநிதியும், தம் தாளாண்மை முதலியவற்றாற் றையலார் தாமே யீட்டுந் தேட்டும், இன்னு மெனைத்து வகையானும் அவரடையுமெப் பொருளும், வகைமுறையால் வெவ்வேறு பெயர் பெறினும், தொகை நிலையிற் சீதனம் எனும் பொதுப் பெயர்க்குரியதாகும்; எனினும் சீதன சிரீதன மெல்லாம், ஒருபடித்தாம் ஆட்சி அனுபவம் வாரிசுக் கிரம வீழ்ச்சியுரிமைகளை யுடைத்தில்லை. யாடக சௌடயீக சீதனங்கள் அவையுடைய பெண்டிர்தமைக் கொண்டவர் கவர்ச்சிக்குட்படுவன. கொண்டவர் தேவைக்குட் பட்டுப் பெண்டிர்க் கவற்றிற் பராதீனபாத்தியம் வரையறுக்கப் பட்டுள்ளது. உடைய பெண்டிர் காலத்துக்குப்பின் அவற்றை யடைதற்குரியார் வரிசைமுறையும் வேறுபடுவதாகும். நம தாராய்ச்சிக்கியைபுடைய சுல்கமோ மகளிர்க்கு மணவாளர் மணக்குங்கால் விரும்பித் தரும் நிதியாம். இதிற் பெண்டிர் எல்லையிகந்த முற்றுரிமை யுடையராவர். வரம்பிறந்த நிறையாட்சி, கொடையுரிமை எல்லாம் இதிற் பெண்டிர்க்கு உண்டு. உடையமடவார்க்குப் பின் அவர் மக்கள் அடைதற்கு உரியர். மக்க ளில்வழி அவர் கணவர் பெற்றோர்க்கின்றி, அவருடன் பிறந்த சோதரரே அவர் சுல்க நிதியடைய முதலுரிமை யுடையர். இனைய ஆட்சி வீழ்ச்சி உரிமை விசேடங்களுடைய சீதனமே ‘சுல்க’மாகும். தசரதசக்கரவர்த்தி கைகேயியைத் தான் விரும்பி வேட்குங்கால், தன் அயோத்தியரசாக்கத்தை அவளுக்குக் சுல்க மாகத் தந்தனன் என்று வான்மீகியின் மேற்கவிதை தெரிவிக் கின்றது. பண்டைத் தமிழர் போலாது ஆரியருள் ஆடவர் மடந்தையரை மணமாடத்தன்றி முன்காண்கில்லாராகவே, மணமகளான கைகேயிக்காக அவள் தந்தையான கேகய மகாராசனிடம் தசரதன் சல்கப் பிரதிக்ஞை பண்ணித் தந்ததாக வான்மீகி விசதமாகக் கூறியுள்ளார். ஆகவே, ஆரிய தர்ம சாத்திரக்கிரமப்படி, அயோத்தியரசு அன்றுமுதல் கைகேயியின் சுல்க சீதனச் சொத்தாகி அவளுக்காக அவள் கணவனார் ஆளப்பட்டதாக வேண்டுவதன்றி, தன்னிலையிற் றசரதனுக்கு அவ்வரசில் எவ்வித சுவாதீனமும் ஏற்படுமாறில்லை. கொடுக்கு முன் அவனுடைமையான அயோத்தியரசு, முற்றுடைமை யாட்சி முறைக்கதி பனான தசரதனாற் கைகேயிக்கு அவளை அவன் மணக்குங்கால் சுல்கதிரவியமாகப் பிரதிக்ஞையுடன் பாத்தியப் படுத்திக் கொடுக்கப் பட்டுளது. அப்படிக் கொடுபட்ட பின், அதிற் றசரதனுக்கு யாதொரு கொடையுரிமை யுங் கிடையாது. கைகேயி வயிற்றுதிக்குந் தநயனுக்கும், அவன் மைந்தருக்குமே, அவள் சுல்க நிதியாம் அவ்வரசு வரன்முறை1 வழக்கால்2 உரிமையாகும். அவட்குச் சந்ததியற்றவழி, அயோத்தி யரசு அவளுடன் பிறந்த யுதாசித்து ராசகுமாரனுக் குரித்தா மல்லால், கைகேயியின் தொடர்பற்ற தசரதகுலத்தாரெவருக்கும் ஆமாறில்லை. தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும் பள்ளமெனுந் தகையானைப் பரதனெனும் பெயரானைக் கேகயர் கோன்மகள் பயந்தபிறகு பரதனும் அடுத்தகிரம வாரிசான யுதாசித்தும் உயிருடனிருக்க, அயோத்தியரசுக்குத் தசரதன் உடையவனு மில்லை; அதை யவன் கோசலை மகனான இராகவனுக்குக் கொடுக்கும் பெற்றியுமில்லை. வான்மீகி விதந்தோதிய சுல்கக் கொடைச்சூளையே மேற்கவி துலக்குவதாகும். அன்றி, முந்திய சுல்கப் பிரதிக்ஞையைக் குறியாது, தசரதன் பால் வரமாகப் பிந்திக் கைகேயி கேட்டுப் பெற்ற சொல்லையே இக்கவி சுட்டுவதாகக் கொண்டால், “வரதன், ஆணையால் வையம் சரதம் நின்னதே என்ற இராமன் சொல்லை யேற்கொணாதாய் வெறுத்த பரதன் தூயமனத்தை இணக்கும் நியாயம் பொதிந்திலதாகும். வான்மீகி விளங்கவைத்த இவ்வுண்மையையே கம்பர் தம் கவிகளிலும் அமைத்துள்ளார் என்பது இனி அக்கவிகளை ஊன்றிநோக்க விசதமாகும். கிளைகண்டு நீங்குபடலத் திராமன் வாய்க்கூற்றாம் மேற்கவி வான்மீகியின் இக்கருத்தையே காட்டுவதாகக் காண்போம். வரனில் உந்தை உடைத்தரணி, (அவன் சுல்கப்பிரதிக்ஞைச்) சொல்மரபினால், நின்னதென் றியைந்த தன்மை யால், (அதன்பிறகு) உரனில் நீ பிறந்து (உனக்கு) உரிமை யாதலால் (அவ்வயோத்தி) அரசு நின்னதே; ஆள்க என்று பரதனுக்கு இராமன், முன் வரலாறும் அதன்வழி அரசு அவனதாதலும், விளங்கச் சொல்லிப், பசைந்தசிந்தைப் பரதனைத் தேற்றினான். பரதனும் உண்மைதெளிந்து, அரசு அறத்துறை யாற் றனதாவதறிந்து, அதனை அங்கீகரிக்கலானான். முன் நாம் நேர்பொருள் காணாது இடர்ப்பட்ட மந்தரை வாயெழுந்த கவிகளும் இனிச் செம்பாகமான தெளிபொருள் தரக் காண்போம். அறத்துறையிறந்து பரதனுக்குரிய நாட்டைத் தசரதன் அந்நியமாக இராமனுக்குத்தர விரும்புந் தன்மையால், தந்தையும் பரதன்பாற் கொடுமையுடையன். இவ்வாறு பரதனுடைமையை அவனில்லாதபோது அவன் அறியாமலே பிறர்க் காக்க முயலுந் தயரதனைத் தடுக்காமற் கணவன் விருப்பே தன் கடனாகக் கருதி இராமன் நன்மையையே எப்போதும் விரும்பின கைகேயி, பரதனுரிமை மறந்து, இராமன் அரசு பெறுவதையே விரும்புவதால், பரதனுக்குத் தாயும் தீங்கிழைப்பவளாவள். காத்தற்குரிய தன்னையீன்ற இரு முதுகுரவராலுமே தன்னுரிமை பாதுகாக்கப்படாமற் பறிக்கப்படும் பரதன் பரிதாபத்தை என் சொல்வேன்’, என்று அவன்பாற் பரிவுடைய மந்தரை பரிந்து கரைந்து கூறுங் கவி இது: அந்தரந் தீர்ந்துல களிக்கும் நீரினால் தந்தையுங் கொடியன்; நற் றாயுந் தீயளால்; எந்தையே! பரதனே!! என்செய்வாய்? என்றாள்1 இனி, தசரதன் சுல்கச் சூளால் விவாக காலமுதற் கைகேயிக்கும், அவள் தநயனாய்ப் பிறந்தது முதற் பரதனுக்கும் அறமுறையால் அரசு உரியதாயிருக்கவும் அவ்வுண்மை யறிந்த கோசலை அரசாக்கம் தன் மகனை அடையப்பெரிதும் அவாவுகின்றாள். முதுமையில் முதற் பிறந்த இராமன், பரதனைப் போற் பலகாலும் பிரியாமலிடையறா துடனுறையத் தசரதனுக் கவன்பாற் காத லளவிறந்து வளர்வதாயிற்று. அறிவும் ஆற்றலுமுடைய கோசலை தன் விருப்பத்திற்கு அரசன் பெருங்காதல் அருந்துணையாவது கண்டு, அதனைப்பேணிப் பெருக்கிப் பரதனுக்குரிய பூதலமெல்லாம் தன் மகனுக்கும் தனக்கும் உடைமையாமாறு தன் விரியுஞ் சிந்தையால் விழைந்து சூழ்கின்றாள். அவள் சூழ்ச்சியும் அரசன் மகவாசையும் சேர்ந்ததன் பலனாய்ப் பரதனில்லாதபோது இராமனுக்கு முடி சூட்டுவிழாக் குறிக்கப்படுகின்றது. இவ்வாறு பரதனுரிமையான அயோத்தியரசை அவனறியாத இராமனுடை மையாக்கித் தன் சூழ்ச்சியால் வாழ்க்கைபெற்று மகிழும் கோசலை யின்றிறத்தை வியந்து, வாழ்ந்தனள் கோசலை மதியினால் என மந்தரை வாயாற் கூறியதனோடமையாது, இராமன் கோமுடிசூடும் நன்மாற்றத்தைக் கேட்ட கோசலை மகனாக்கங் கேட்ட ஈன்றாளே போல உளமுவப்ப தல்லாமல், அவ்வாக்கத்தைத் தன் மதியினாற் கூட்டுவித்த தன் ஆற்றலையும் நினைந்து அறிவால் இன்புற்றனள் என்பதைக் குறித்தே, கம்பர், - கூனி, மாற்றமஃ துரைசெய மங்கை யுள்ளமும் ஆற்றல்சால் கோசலை யறிவு மொத்ததால் எனத் தன்கூற்றாயும், விரியுஞ் சிந்தனைக் கோசலை எனக் கூனி கூற்றாயும், கூறிவைத்துள்ளார். உன் வயிற்றுதிக்கும் ஒரு மகற்கெனவே கொடுத்த பேரரசு இராமனன்ன உன் தொடர்பற்ற பிறர்க்காவதில்லை எனும் மந்தரை மாற்றங் குறித்த கம்பர் கவிக்கருத்தை, இதே சந்தர்ப்பத்தில் வான்மீகர் கூனி வாய்க் கொடுத்துள்ள வாக்கியமும் வலியுறுத்துகின்றது. இராச்சியத்தில் உரிமையுள்ள பரதரைக் கண்டு, நமக்கு அது கிடைக்குமோ மாட்டாதோ என்று அஞ்சும் இராமருடைய அச்சத்துக்கு நான் அஞ்சுகின்றேன்; ஏனெனிற் பயந்தவரிடத்தினின்றே பய முண்டாவது இயல்பன்றோ? என்று இவ்விடத்தில் வான்மீகர் மந்தரைவாய்ப் பெய்து வைத்துள்ளார். வான்மீகர் விளங்கவைத்த உண்மையை இதனினும் விசத மாக்குவது, கூனியின் இறுதிக் கூற்றாய்த் தேவி தூயசிந்தையைத் திருப்பியதான கம்பர்கவி. தசரதன் பரதனுடைமையைப் பறிக்க முயலவும் தடுத்தற்குரிய நீ தடாமற் பார்த்திருப்பதால், கெடுத் தொழிந்தனை யுனக்கரும் புதல்வனை, கிளர்நீர் உடுத்தபாரகம் உடையவனாயிருந்த தசரதன் உன் வயிற்றிற் பிறக்கும் ஒருமகற் கெனவே, முன் சுல்க மாகப் பிரதிக்ஞையுடன் கொடுத்த அயோத்திப் பேரரசு, உன் வயிற்றுதித்த பரதனா மொரு மகனுக்கும், இருவழியும் பேரரசர் மரபின்வந்த உபய குலோத்துங்கனான அப்பரதன் குலக் கோமைந்தர் தமக்கும், அவனும் அவன் வழித்தோன்றினாரும் இல்வழி அடுத்த சுல்கக்கிரம வாரிசான உன் தம்பி யுதாசித்துக்கும் ஆவது அறமுறை யாகும்; இவரல்லாப் பிறர்க்காவது அறமில்லை என்று முன் சுல்கப் பிரதிக்ஞை வரலாற்றுண்மை யெடுத்துரைத்து, அதனை மறந்து வரன்முறைக் கிரமத்தில் இராமனுக்காம் அரசை அன்று அவனுக்குத் தசரதன் தரப்போவதா யெண்ணி அன்னானாக்கத்தில் மகிழ்ந்த மங்கையை மந்தரை தெருட்டி, பரதனுரிமையைப் பாதுகாத்து, அரசன் பிரதிக்ஞை யையும் அறத்துறையை யும் நிலைநிறுத்துங் கடன் நின்னதேயாகும் என்று அவட்கு அறிவுறுத்துவாள் கூற்று இது: கெடுத்தொ ழிந்தனை உனக்கரும் புதல்வனைக் கிளர்நீர் உடுத்த பாரகம் உடையவன் ஒருமகற் கெனவே கொடுத்த பேரரசு, அவன்குலக் கோமைந்தர் தமக்கும் அடுத்த தம்பிக்கும் ஆம் : பிறர்க் காகுமோ? என்றாள். இப்பொருள் தெளியுங்கால், இக்கவியிற் சொற்களினமைவும், கூனி கைகேயி சம்வாதமுறை முன்பின் கதையொழுக்குக் கவிகளோடித னியைபும் விசதமாவதோடு, வரலாற்று முறையும் கைகேயி கற்புடைக் காதற்கடனாற்று மியல்பும் இச்செம்பாகப் பொருளோடு இனிதியைவதாகும். இராமனுக்குத் தரும் அரசாக்கம் பரதனுக் காமாறில்லை; அதனால் அவன் முடி சூடுதலைத் தடுக்க விரைதி என்று கூனி கூறியதால் முன்கொண்ட பொருளுக்கு நாம் கண்ட இடர்ப்பாடொன்றும் ஈண்டிலதாவ தோடு, பரதன் பாற் பரிவேனும் இராமன்பாற் பட்சக் குறைவேனுமின்றி நிறைகற்பினிலைத்த காதல் காரணமாக மட்டும் மந்தரை மாற்றம் மனங்கொளற்கிசைந்த தேவியின் தூயதன்மைக்கும் அவள் தெய்வக் கற்புக்கும் இதுவே பொருந்துவதாகும். சுல்கமாகக் கொடுத்த தசரதன் சொல்லால் மட்டும், சுல்கமாகப்பெற்ற தேவியின் வயிற்றுதித்த பரதனுக்கு அரசு அமைவதாகும். இராமனுக்கோ, தசரதன் கொடாமலே மூத்தவன் நிலைமையில் உரிமை சிந்திக்கத் தக்கது. ஆகவே அவனுக்குக் கொடுத்த பேரரசு என்பதிற் பொருத்தம் ஒன்று மில்லை. பரதனுக்கு முன் சுல்கக் கொடையால் மட்டுமே அரசு உரியதாகும். அஃதில்வழி இளையனான பரதனுக்கு அரசு ஆமாறில்லை. மேலும், கொடுப்பவன் உடையனாயிருந்தா லன்றிக் கொடையால் உரிமையடைய முடியாது. கைகேயிக்கு விவாக காலத்தில் அயோத்தியைத் தசரதன் சுல்கமாகத் தத்தஞ் செய்தபோது அவனுக்கு அரசு தனிமுற்றுரிமை பிந்தித் தன் முதல் மைந்தனுக்கு அதைக்கொடுக்க விரும்பினபோது தசரதனுக்கு நாட்டிற் சொந்த மெதுவுமில்லை; அதனால் அதை அவன் கொடுக்க அருகனுமல்லன். வான்மீகி விளக்கிய சுல்கப் பிரதிக்ஞைச் சொல்லையும் அதன் அறப்பயனீடுகளையுமே யீண்டுக் குறிப்பதானால் மட்டும், இக்கவியிற் கெடுத் தொழிந்தனை உடையவன் ஒருமகற்கெனவே கொடுத்த பேரரசு அவன் குலக் கோமைந்தர் தமக்கும் - அடுத்த தம்பிக்குமாம் பிறர்க் காகுமோ என்ற பல தொடர்களுக்கும் அவ்வவற்றிற் கியல்பும் இயைபுமான பொருள் கிடைக்கும்; அல்லாக்கால் இவையனைத்தும் பொருந்தா வெற்றுரை களாய் முடியும். அதுவே போல் இவ்வுண்மை வரலாற்றின் குறியீடாக் கொண்டாலன்றி, வாழ்ந்தனள் கோசலை மதியினால் விரியுஞ் சிந்தனைக் கோசலை ஆற்றல்சால் கோசலை யறிவு மொத்ததால், பரதனைக் கடிது போக்கிய பொருளெனக்கின்று போந்தது தந்தையும் கொடியன், தாயும் தீயள் என்ற பல கவித் தொடர்களும் பொருளின்றி நின்றுவற்றும். பகுதி 4 : கைகேயி கற்புக் கடனாற்றல் தன்னலவிருப்பாலேனும் தன்னொருமகன் ஆக்கத் தாசையாலேனு மன்று, கைகேயி இராமன் முடிசூடுதலைத் தடுக்கத்துணிந்தது. இந் நலங்களைச் சுட்டிக் கூனி முன்கூறியவனைத்தையும் உளங்கொளாது சீரிய உத்தமி, தான் நினையாத தசரதன் சுல்கப் பிரதிக்ஞையைக் கூனிவாய்க் கேட்டதும், பிறிதுபேசாது மனமிழந்து மாழ்கலாயினள். கொண்டவனன்றிக் கும்பிடத் தெய்வங்குறியாக் கோப்பெருந்தேவி தசரதனைத் தலைநின்ற தனியறக் கடவுளாகக் கொண் டொழுகுபவள். கழிபெருங்காதற்குரிய தன் கணவன் அழிவறம் பேணிப் பழிவினை சூழ்வனெனக் கனவிலுங் கருதுகிற்றிலள். உயிரோவியமனைய இராமன்பா லளவிறந்த அன்பால் நாயகன் தீவினைநயந்து செய்வ துணர்ந்ததும், தெய்வகற்பினள் தூயசிந்தை தெருமரலுற்றது. அறனிழுக்கா தல்லவை நீக்கி, மறனிழுக்கா மானமுடைய பேரரசன், காதன்மை கந்தாக் கொண்டு, மகவாசையால் வஞ்சிக்கப்பட் டஞ்சுவதாம் அறம் துறந்து, செய்தக்க வல்ல செயத் துணிந்து நின்ற நிலையுணர்ந்ததும், நெஞ்சுடைந்து நினைவழிந் தயர்ந்தாள். பிறர்பழியுந் தன்பழியாப் பேணி விலக்கும் நாணுக்குறைபதி யான நங்கை, தன்னுயிர்க்குயிரான தசரதன் தன் தொல்லைச் சொல்லறம் துறந்து பாவமும் பழியுந்தருஞ் செயலை ஆவலுறுவதாக அறிந்ததும், அவலமெய்தினள். தாய்கையில் வளர்ந்திலன் தவத்தால் தான் வளர்த்து வந்த இராமனபிடேகத் திலழுக்காறற்று வந்த கைகேயி, தன் தலைவன் மகன்பாற் காதலே தங் கைக்கொண்டு, அறவூதியம் போகவிட்டு, அறத்தோடு அன்புக்கிடனாய தன்னையும் வஞ்சிக்கத் துணிந்து நின்ற செயல்கேட்டுளமுளைந்து எளியளானாள். அரியகற் றாசற்ற தன் கணவன்பாலும் வெளிறின்மை அரிதெனக்கருதா மன மாண்புடைய கைகேயி அறம் பிறர்பாலுமோம்பு மரசன் தீமையைத் தானே செய்யுமாறு அவன் அறிவைச் சிதைத்துப் பேதைப்படுக்கு மிழவூழின் திறமறிந்து தியங்குவதியல் பன்றோ? தெய்வமெனத் தான் கொண்டு நின்ற கணவன் தீவினை நயப்பன் எனக்கேட்டு அவ் வின்னல் (தன்) உள்ளத்தின் ஊன்ற, உணர்வுற்றிலள் ஒன்றும்”, தசரதனின் இப்புதுநிலை அவள் செவ்விய மனத்தைக் கவ்விப் புண்படுத்தியது. இதுவரை கருதிலாப் புதுநிலை தன் கணவன்பாற் காண மாழ்கி மனமுடைந்திடைந்தாள். தன்னுள் முறைந்த தலைவ னறவுருவப் படம் அவன் மருட்கைச் செயலெழுப்பிய இருட்புகையுண்டு மாசுபடவும், மங்கை உயிரற்ற ஓவியம்போ லுணங்கிக் கோடிழந்த கொடியென்ன மறுகலானாள். தலைவன் தவற்றாற் றறியுண்டு தளர்ந்த உணர்வினள், பின் தன் அறவுளத்தறிவு தெருட்டத் தேர்வாள். மன்னறத்தையும் தன்னையும் வஞ்சித்து வேந்தன் மேற்கொண்டு நின்ற செயல் கண்கூடாக் கண்டபிறகு, மந்தரையை வைது பயனில்லை யென்றுணர்ந்தாள். தன் நெஞ்சிலற நிலை தலைநின்ற காதற்கணவனின் வீழ்ச்சி காணப்பொறாது நைந்துள மயர்ந்த தேவி, உற்றது முறுவது மெண்ணித் தெளியலுற்றாள். தசரதன் தனதெண்ண முடித்து அறக்கொல்லும் பாவமும் தரணியிற்பழியு மெய்தாமற் றடுத்தோம்பும் தன் காதற்கடனாற்று மறனும், அதுமுடிக்கும் வினையும், வினையாடல் நெறியு முறையே தன் மனத்தூன்றி வகையறச் சூழ்ந்து தெளிந்து, செயத்தக்க தேர்ந்தெண்ணித் துணியலானாள். கற்புறழ்காதல் கவினுமுளக் கைகேயி, தன் கணவன் காதல்நிலையும், அதன் விளைவும், தன் கற்பறமும் சிந்தித்து, செய்வினை தேர்ந்து, தன்னறம் தழையு மறிவாற்றளர்ச்சி நீக்கி, வாளாவருந்தும் கையறவு களைந்து, அறதுறையிற் றாளாண்மை மேற்கொள்வாளாயினள். தன் சோர்வும், தான் வளர்த்த காதற்றிருமகன் இராமன்பாற் பரிவும், தன் கற்பறக்கடனாற்றுதற் கிடையுறச் சகியாள்; தன் காதற்கிழவன் பழியொடு பாவமெய்தி அறங்கொன்றழிவதைத் தடுப்பதே தன்னொரு கடனாக் கருதி நிற்பாள். தசரதன்பா லன்பும், அவன் பழியில் நாணும் யார்மாட்டும் ஒப்புரவும், அறத்துறையிற் கண்ணோட்டமும், எஞ்ஞான்றும் வாய்மையும் குன்றாக் குணக்குன்றான கைகேயி, அன்பு நாணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடைந்துசால் பூன்றிய தூண் ஆவளன்றோ? அதனால், தான் தேர்ந்து தெளிந்த அறக்கடனாற்றத் துணிகின்றாள். தான் வாளாவிருப்பின், தசரதன் இராமனுக்கு முடிசூட்டி அரசு தருவன். தரின், தன் கணவன் பாவமும் பழியும் எய்துவது உறுதி. அதனாற் றாழாது பிரிதிக்ஞாபங்க தோசத்தினின்றும் கொழுநனைக்காத்து, அவன் முன் மரபுடைச் சொல்லையும் அறநெறியையும் ஓம்பல் அவன்பால் நிறைவளர் காதலுடைய தன் கற்பறக் கடனாக் கண்ட கைகேயி, அக்கடனாற்ற இராமா பிடேகம் நடவாது இடைநின்று தடுப்பதன்றி வேறு வழி காணாமையால், தானதனைத் தடுக்கத் துணிகின்றாள். துணிந்ததும், செயன்முறை தெளிந்து, தன் காதற் றனிக் கிழவனான தசரதன்பாற் பழிவிலக்க அவனிடம் தான் முன்பெற்று வைத்த வரங்களை முன்னிட்டு, அரசை அவன் முன் மரபுடையறச் சொல்லால் அதற்குப் பிறந்துரிய பரதனதாக்கவும், எனைத் தானும் அதற்குப் பங்கமேற்படாது காக்கவும், ஆவன தேர்ந்து, மிகவும் ஓர்ந்து, செயல் சீர்தூக்கி, வினைமேற் கொள்கின்றாள். அரசன் இராகவனுக்கு முடிசூட்டுவதாக அனைவருக்கும் அறிவித்துவிட்டான். உழைஞரும் குடிகளும் விழவு காணக் குழுமியதோடு, தூய முனிவரும் நேயநிருபருமாய பலப்பலர் ஆண்டு வந்துற்றுளார். குறித்தபடி இராமன் கோமுடி சூடாமற் றடுப்பதை யறனாக்கண்ட கைகேயி இந்நிலையிற் செயத்தகுவது என்னை? உண்மையை வெளிப்படுத்திக் கணவன் சொல்லறம் பேணுவதொன்று; அன்றிக் கையறவுபூண்டு தான் வாளா விருப்பதொன்று; இரண்டும் தேவி தூயசிந்தைக்கு உகந்தவன்றே. குறித்த திருநாளை வெறுநாளாக்காவிடின் தசரதன் பழியொடு பாவமேற்பது சரதமெனத் தெளிந்தபின், யாது செய்தும் அறந்திறம்பாதவனை நெறிநிறுத்தல் நிவர்த்தியற்ற முதற் கடனாகக் கொண்டாள். எனினும், உண்மை வெளிப்பாட்டுக்குத் தானுடம்படுவது, காக்கக்கருதிய பழியைக் கணவனுக்குச் சேர்ப்பிக்கும் உறுதி வழியாமெனக் கண்டாள்; என் செய்வாள்? இராமன் முடிசூடில், தசரதன் சூளறங் கொன்ற பாவத்திற்கு ஆளாவன். அதைத் தடுக்கக் கருதி அவன் மரபுடை முன் சுல்கப் பிரதிக்ஞை அறச் சொல்லுண்மையை வெளிப்படுத்தின், இராமன் அபிடேக மட்டும் நடவாது நிற்கும். ஆனால், தன் சொல்லற மறந்து நெறிதுறந்து முறையிறந்தான் என்னும் பழியினின்றும் தசரதன் தப்புமாறில்லை. தன் மகனாக்கமே இராமாபிடேகத்தை நிறுத்தத் தேவியைத் தூண்டியிருப்பின், ஒருகால் தான் முன்னைய சுல்கச்சூளும் அதனாற் பரதன் பிறப்புரிமை வரலாறும் கூறி அவனுக்கு அரசு பெற முயலக்கூடும். பரதன்பாற் பரிவு பற்றிக் கைகேயி அரசிரக்க நினைத்தாளல்லள்; நினைக்கவு மொல்லள்; என்பதை மேல் அவள் குணநலங் குறித்த பல கவிகளால் ஆராய்ந்து தெளிந்துள்ளோம். காதற்கிழவனைப் பாவமும் பழியும் அணுகாவாறு காத்த லொன்றே, அவள் கற்புறுசிந்தைக் காதற் கருத்து. உண்மை வெளிப்படின், முன்னாளின்மன்னவன் கேகயனிடம் அறச்சூழ் செய்த தறியா மாந்தர் பலரும், அம்மரபுடைச் சொல்லறந் துறந்து கழிபெருங்காதன் மிகையால் தன் முதன் மகனான இராமனுக்குத் தசரதன், தனக்குரிமையில்லாது, பிறந்துரிய பரதனுக்குடைமையான தனியரசை, அவனை நாடகற்றி, அவனில்லாத போது அளிக்க முயன்றனன் என்று அரசனைப் பழிப்பதற்கு இடனாம், தாசரதி முடிசூடுவிழவைத் தான் தடாதவரை பாவமும், உண்மை சொல்லித் தடுப்பின் பழியும், தசரதனைச் சாருவதாகும். தன் கணவனுக்கு எவ்வகை யூறும் எவ்வமுமின்றிக் காப்பதையே காதனிறைக் கடனாக் கருதியுள்ள கைகேயி, இவ்விரண்டுக்கும் உடம்பட இசைகிலள். மன்னரும் மற்றைமக்களும் வந்து கூடியபின், என்ன சொல்லி இராமாபிடேகத்தை நிறுத்தித் தன் காதலன் புகழோடு சொல்லறமும் நிறுவலாகுமென்பதே அவள் மனங்கவர்ந்த கவற்சியாகும். தக்க நியாயங்கூறினன்றிக் குறித்து வைத்த முடிசூட்டு விழாவைத் தடுக்குமாறில்லை. தசரதன் தவறு தக்கதோர் கழுவாய்1 அல்லது பரித்தியாகம் பெறினன்றித் தீருவதன்று. பாவமெனைத்தேனும் அதற்குரிய வொறுப்பின்றிக் கழிவதில்லை. முதுமையில் முதற்பெற்ற மகவாசை மயக்கத் தன் சொல்லறத் துறந்த தசரதன் பாவத்துக்குப் பழியவனையடைய வேண்டும்; அன்றேல், அவற்கினியார் பலிபெற்று அவரையேனும் சாரவேண்டும். கணவனறத்தைப் பேணுவதிற் பழி அவனைச் சாராமல் தான் தாங்கக் கூடுமாயின், அதனினுங் கைகேயி காமுறுவதுலகிலில்லை. பொருகளத்தும் புரவலனைப் பிரிந்திருக்கச் சகியாது அவன் தேரிற் சாரதியாயமைந்து தன்னுயிருமவன் வெற்றிக்குச் சமயநேரிற் பலி கொடுக்க, மணந்த சிறுபருவத்தே துணிந்து நின்ற நிறைகாதல் நிறையுடையாள்; முன் வேட்டவன் வெற்றிக்குயிர் கொடுப்பாள், இன்றவனறப்பெற்றிக் குயிரினு மோம்பத் தகுந் தன் புகழை அவனலங் கருதித் தியாகிக்கத் துணிவது அவளறங்காழ்த்த நல்லியல் நீர்மையதன்றோ? தம்மிற் றமக்கினியார் தாம் வீழ்வார்’”, எனவே தம் உண்மைக் காதலர்க் கூறுநீக்கி, அவர் நன்மை கருதி உயிரையும் உற்றவிடத் துயிரினினிய மானத்தையும் உதவுவதே நல்லறமாகக் கொள்வா ருயர்வுள்வார். அறமும் காதற்கிழவன்பால் அன்புமன்றிப் பிறிதறியா உள்ளமுடைய கைகேயி, தன் கணவனுக் கூறுதவிர்ப்பாள், தன்புகழைப் பரித்தியாகிக்கத் துணிவதில் விந்தையில்லையே? வேந்தன் விழவு காணவழைக்க வந்தாரனைவருக்கும், இராகவன் நட்பினர்க்கும், அவ்விழாத் தடையுறத் தக்கதோர் சமாதானம் காட்டவேண்டும். மன்னவன் முன்னற மரபுடைச் சொல்லுண்மை வரலாறு கூறுவது போதிய சமாதானமாமேனும், அஃது அவன் பழிவளர்க்குஞ் செவிலியாகும். அவன் பழியஞ்சி யவ்வுண்மையை மறைப்பின், ஒன்று இராமன் முடிசூடித் தசரதன் தவறுடையனாக வேண்டும்; அன்றேல், அவ்விழாவை நிறுத்திய பழியொருவர் சுமக்க வேண்டும். பழிபரிப்பாரில் வழி மன்னவன் பாவந் தவிர்க்கும்வழி வேறில்லை. அதனால், தனக்கினிய தசரதன் புகழ்பரிக்க, அவன் படிறோம்பித் தானே பழிசுமக்கத் துணிந்தாள், அவன் கற்புறு காதன்மனையாள். சம்பரன் போரிற் புண்பட்டுக் களைத்த மயங்கிய தன் கணவனுயிரோம்பித் தன்னுயிரைப் பேணாது இரவனைத்தும் ஊக்கத்துடன் தேரில் அவன் இறவாமற் காத்த காலைத் தசரதன் விரும்பித் தந்த வரமிரண்டையும், அவன் வழித் தன்றித் தனக்கென ஓர் நலம் அறிகிலாமையால், இதுவரை யுபயோகப் படுத்திலாதாள், இன்று அவனறம் பேணுவதற்குரிய கருவிதுருவுவாள், அவ்வரங்களையே முன்னிட்டு, தன் புகழைப் பலியாக்கி, மன்னற்கறத்தொடு புகழ் நிறுத்தக் கைகேயி துணிவதானாள். தன்னெண்ணத்திற் கிடைநின்று தடை செய்வதற்குக் கைகேயியை வைது வெறுத்துறத்த தசரதன், தன் பெருவெகுளிக்கிடையும், அவளை நோக்கி நீ எப்பொழுதும் எனக்கு நன்மையையே விரும்பும் சுபாவமுடையவள்,” 1நீ இதற்கு முன் எனக்குக் கொஞ்சமாயினும் அயுக்தமாகவாவது அப்பிரியமாக வாவது செய்ததில்லை... அப்படிச் செய்வாயென்று நான் இப் பொழுதும் நம்பவில்லை... ... நீ தர்மத்தை உல்லங்கனம் செய்யப் பயப்படுந்தன்மையள்,” என்று பல முறையவளறவியல் சுட்டிப் புகழ்வதாக வான்மீகி கூறுகின்றார். அறஞ்சூழாது தன் மகவாசையால் தன்னை யொன்று பாவம் அன்றேற் பழிக்கிலக்காக்கி நின்ற மன்னனைப் பாவம் நீக்கிப் பழியும் விலக்கிப் பாதுகாக்க விரும்பிய பெருந்தேவி, அவனாற் பிழைக்கப்பட்ட அறத்துக்குத் தன் புகழையே இரையாக்கத் துணிகின்றாள். புறவினுயி ரோம்பத் தன்னுடலரிந்துதவிய மானவன் வழிப்பிறந்த மன்னன் அறமனை யாள், தன் புருடன் புகழோம்பத் தான்பழி சுமக்க அஞ்சுவளோ? இவ்வாறு மந்தமதிவிருப்பால் தசரதனெய் தவிருக்கும் பாவமும் பழியும் நீக்கி, அதனாற் றன் கற்பும் கணவனறத்தொடு புகழுங் காத்து, அவனறஞ் சான்ற மரபுடைச் சொல்லும் ஓம்பத் துணிந்தவழி, பழிக்கும் அஞ்சித் தளராது நிறைக்கடனை நெஞ்சறி கரியாய் நெறியாற்றித் தன் பெண்மையறம் பேணுங் கைகேயி, தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்னும் பொய்யில் புலவன் பொருளுரைக்கு முற்று முதலிலக்காக நிற்றற்குரியள். இவ்வாறு மன்னவன் முன்சொல்லறம் திறம்பாமற் காத்தலை மேற்கொண்ட மங்கையர்க்கரசி, பாவமொடு பழியும் அவனையணுகா வண்ணம் வினைசூழ்ந்து துணியலானாள். தொல்லைச் சுல்கப் பிரதிக்ஞை வரலாற்றை யறவே தான் மறைக்க நினைத்தாள். தனக்கவன் முன்கொடுத்து வைத்த வரமிரந் திராமனபிடேகத்தை நிறுத்துவதாற் கொடும்பழி தனக்கும், பெரும்புகழ் மன்னனுக்கும் வளர்வதோர்ந்தாள். “மகவாசையால், பேதை, பெற்றிருந்த வரங்கோலிப் பரதனுக் கரசிரந்தாள்;தந்த தன் சொல் மாற்றவாற்றாத் தகையாளன் தசரதனாகையால் அவள் கேட்டதை மறுக்க அஞ்சி, வண்மை எஞ்சாது வளர்த்து, வள்ளல் துஞ்சுவதானான்,” என்று எவரும் அன்று முதற் பேசலானார். பெண்டிர் பேரரசி, பெண்ணற மோம்பித் தானே விரும்பிப் பெரும்பழி தேடிக் கொண்டாள்”. மன்னவன் புகழை மாசுபடுத்தும் இம் முன்வரலாற்றுண்மையை அவன் நலம்விரும்பி மறைக்கத் துணிந்த தேவி, தானே அவனிடம் வரமிரந்து, மகவாசையால் மதிமயங்கித் தசரதன் வரந்தரத் தாழ்த்தபோது அறங்கூறி வற்புறுத்தி வாங்கலாயினள்.1 அவனுக்கு உண்மையை அறிவுறுத்தித் தன் விருப்பத்தை எளிதில் முடித்திருக்கலாமே? அதை விடுத்து, அவனிடமும் வரத்தை வியாச்யமாக்கி, வாதித்து வாதைப்படுவானேன்? என்று ஈண்டுச் சிலர் வினைவுவது இயல்பு. அவளியல்புங் கொள்கையும் அவ்வாறு அவளைச் செய்யவிடா. அனைவருக்கும் உண்மையை மறைத்து, தன் ஒரு மகன் பரதனுக்கு அரசுதர விரும்பித்தானே வரமிரந்து மன்றாடி வாங்கினதாய் அறிவிக்கத் துணிந்தாள். வேந்தன் புகழோம்ப வேறு வழி காணாக் கற்பரசி. இப்படித் துணிந்த பிறகு தசரதனுக்கு மட்டும் அவன் உண்மையைச் சொல்லுவானேன்? சொன்னாலவன் செயலும் பின்விளைவும் என்னாமோ? தசரதன் அறப்புகழ் நலத்தையே விரும்புமவட்கு, அவ்விருப்பம் அரிது முடிவதாயின், அதற்கு அஞ்சிச் சோர்ந்து எளிது வழி தேடிப் பெண்ணறம் பிழைப்பளோ பெருந்தேவி. பரிந்தோம்பிக் காக்கத் தகும் மனையற ஒழுக்கத்தின் ஒல்குவளோ உரவுடைய கைகேயி, இழுக்கத்தி னேதம்படுபாக் கறிந்து வைத்தும், மேலும் பரதனது ஆக்கமேனும் இராமன் கேடேனும் அவள் விரும்புவதாயினன்றோ, அவள் அதை எளிதில் முடிக்க வழி தேடவேண்டும்? அதற்கு மாறாகக் கணவனைப் பிறரெவரும் சொல்லறம் பிறழ்ந்தானென வசைகூறப் பொறாது. அவன்பாற் காதலாற் பசைந்தசிந்தையள், தானே அவன் முன் அப்பழி தூறத் தருக்குவளோ? பிறர்தீமை சொல்லா நலத்ததே சால்பன்றோ? அச்சால்புடையாள், பிறர் அனைவருக்கும் தான் வரத்தை வற்புறுத்தி இரமாபிடேகத்திற் கிடை யூறிழைப்பதாய்த் தெரிவிக்கத் துணிந்தபின்னர், தன் கணவனிடம் அதனை யொழித்து, அவனுள் முளைந்து நாணொடு வெகுளியால் நலிந்து மாழ்க, வேறு கூறுவளோ? கூறுவதில், யார்க்கேனும் யாதேனும் புரை தீர்ந்த நன்மை பயக்கும் ஆக்கமும் அறமும் உண்டா? தூயசிந்தையள், தன் கற்பறக் காதலாற் கருதியதை முட்டின்றி முடிக்க நிறைகுறையா நேசமுறையால் தக்கவினை தேர்ந்த மெல்லியலாள், அறநெறியிற் சிந்தை காழ்த்துச் சோர்விலளாய்க் காதற்கற்பறமாற்றிய செவ்வி கருதியன்றோ, கம்பர், அவள் தெரிந்து செயல்வகைச் செய்தி கூறும் பகுதிக்கு, அவள் சூழ்வினைப்படலம் என்று பொருந்தப் பெயர்புனைந்துள்ளார்? செம்மாந்து செருக்கிய திமிருடைப் பெண்டிரின் தேராச் சிறுசெயலன்று, தெய்வக் கற்பினள் ஆழ்ந்து சூழ்ந்து தெளிந்து துணிந்த அறவினை கூறும் பகுதி, என்பதைத் தலைப்பெயராலேயே நம் கவியரசர் நன்கு அறிவித்துப் போந்தார். இனிக் கருணைக்கடலும் கற்பினுக் குறைபதியுமான கைகேயிக்குக் கணவன் புகழுறமோம்புதலே கருத்தும், பரதனிடம் போலவே இராமனிடம் காதலும் உண்மையாயின், வரமென வாங்குமரசை இராமனுக்குத் தானே தந்துவக்கத் தசரதன் வேண்டியபோது விரைந்துதவ விரும்பாதிருந்ததேன்? எனில் கூறுவன். சிறந்த குணப் பரதன் பிறந்துரியனாகலான், அவனுடைமையா மயோத்தியரசில் அவனறியா தவள் கொடை யுரிமை மேற்கொள்வ தறமெனக் கருதகில்லள். கைகேயி தன்னிடம் நிலைத்த அன்புடையளாகவும், தனக் கரசுதரு மாசையால் வேந்தனைத் தூண்டி அவளே தன் அபிசேகத்தை விரைவுபண்ணுவ தாகவும் இராமன் சீதைக் குரைத்துள்ளதை1 வான்மீகர் கூற அறிந்த நாம், அவளை இராமனாக் கத்திலழுக்காறுடையலளாக் கருதற் கிடனில்லை. அறத்தி லூன்றிய அவளுளத்திறத்தையும் நன்கறிவோம். சுல்கக் கொடைக்கு முன் தானுடைய தனியரசைத் தசரதன் விவாக காலத்தில் விரும்பி மரபுடைச் சொல்லுடன் தந்ததாலும், சுல்கச் சூளற முறை யாலும், பரதன் பிறந்ததும் அரசு அவனதாகிவிட்ட தென்பதை, வரனில் உந்தைசொன் மரபினாலுடைத் தரணி நின்ன தென்றியைந்த தன்மையால், உரனில் நீபிறந் துரிமையாதலால் அரசு நின்னதேயாள்க எனக் கம்பரும் நமது பிதா உன் மாதா மகரிடம் அவர் மகள் வயிற்றுப் பேரனுக்காமாறு அயோத்தியரசைப் பிரதிக்ஞையுடன் சுல்கமாகக் கொடுத்தார்: ஆனபடியால் நாடு உனதேயாகும் என வான்மீகரும், பரதனுக்கு இராமன் வாயால் விளக்கியுள்ள விவரமு மறிவோம். கணவன்பாற் கழிபெறுங் காதல் காரணமாய் அவன் விருப்பமே தன் அறமாக் கொண்டொழுகிய கைகேயி, தன்னலம் வேறுணரா மையால், மணந்தபின் தனக்கு அவன்தந்த வரங்களை மறந்தது போலவே அதற்குமுன் நிகழ்ந்த சுல்க சம்பவத்தையும் மறந்திருந்தாள். மந்தரை சொல்லக் கேட்ட பிறகே இவைகளினுண்மை யுணரலானாள். உரிய மகனை யூரகற்றிப் பிரிய மகனுக் குடைமையற்ற நாடளிக்கப் பரபரக்கும் தசரதன், றவறறிந்ததனைத் தடுக்க விரும்புந் தகையணங்கு, தானு மத்தவறிழைக்க விழைவ தெங்ஙனமாகும்? அறம்புரத்தலன்றிப் பரதனே பட்டமெய்தி யிராமனுக் கரசில்லா திருப்ப தொன்றே அவள் விருப்பமன்று என்பதற்கு, பரதனில்லாதபோது தான் தரத் துணியாதவள் பிற, கிராமனுக்குப் பரதன் தருவதைத் தடுக்காமையே தக்க சான்றாம். பரதனுக்குப் பிறப்பாற் பாத்தியமின்றித் தரணி தன் தனியுடைமை யாகில் இராமனரசு பெறுவதை எனைத்தானும் தடுப்பதே அவள் திருவுளமாகில், கைகேயி பின் பரதன் இராமனுக்கு அரசு தருவதையும் தடுக்க முயன்றிருப்பாளன்றோ? இராமனை யழைத்துவந்து முடிசூட்ட விரும்பிய பரதனுளக்கோள் அறிந்த தேவி, அதைத் தடுக்காம லவனுடன் இராமனை யழைக்கச் சென்ற தொன்றே அவள் மாசற்ற மனத்தூய்மையை யும், இராமனாக்கத்தில் அவளுண்மையார்வத்தையும் இனிது விளக்குவ தாகும். பகுதி 5 : தசரதன் தவறு இனித் தசரதனியலு மிதுபற்றிய அவன் செயலும் சிறிது ஆராய்வாம். முன் தான் கேகயனிடம் செய்த அறச்சூளை அவன் அறவே மறந்தவனாய்ப் பின் இராமனுக்கு முடிசூட முயன்றிருக்கலாம். எனினும், அவன் தவறுகண்ட போது அவன் அறமனையாள் அவனை நெறி நிறுவுவது அவளுக்கு அறமும் அழகுமாமன்றித் தவறாமா றில்லை. ஆனால், அவன் முழுதுங் குற்றமற்ற சிந்தையனாக் கருதற் கிடந்தரா திடர்ப்படுத்துஞ் சில சான்றுகளு மீண்டுக் கருதற்பாற்றாம். முதற்கண், மக்கள் நால்வர்க்கும் வேற்றுமையுணர்வே யுற்றிலாக் கைகேயி போலாது. பெண்ணியல்பால் உளத்தரும்பும் வேற்றுமை யுணர்வை அறிவாற்றலால் அறவேமாற்றிய கோசலைபோலாது, தசரதன் தன்மக்களுள் இராமனிடம் அதிகப்பற்றுடையன். இதை வான்மீகர் அயோத்தியா காண்டம் 1,2 சருக்கங்களிற் கவிக்கூற்றாயும், 8ஆவது சருக்கத் திற் கூனிகூற்றாயும், 11ஆவது சருக்கத்திற் றசரதன் றன்வாய்க் கூற்றாயும் கூறி வற்புறுத்தியுள்ளார். மகவின்றி நெடுங்காலம் வருந்திய மன்னவன், முதுமையில் முதற்கிடைக்கப் பெற்ற மகனிடத்து விசேடப்பிரியம் பாராட்ட வேறுகாரணம் வேண்டாவே. அப்படியிருக்கப் பரதனினும் இராமனிடம் இவன் தந்தையன்பதிகரிக்கப் பிறிதொரு நியாயமும் மந்தரை வாயால் வான்மீகர் தந்துள்ளார். இளமையிலேயே பரதனை யவன் பாட்டன் கேகயனிடம் நெட்டிடைநிற்க விரும்பி விட்டுவைத்த கைகேயி செயலும், விரும்பா அதன் விளைவுஞ் சுட்டிக் கூனி கூறும் இயலழகு சிந்திக்கத்தக்கது. தாவரங்களிற்கூட அண்மை நெருக்கத்தால் ஒன்றையொன்று தழுவிப் பற்றுடையதாகும். அப்படியிருக்க, அவ்வித நெருக்கத்தாற் சேதனங்களுக் குண்டாம் நேசத்தைச் சொல்லவும் வேண்டுமா? மன்னவன் பக்கத் திடையறாதிருக்கு மிராமன்பால் அவனுக்கு ஊறுமன்பளவு பரதனிடத் தெழாவாறு, சிறுபருவத்தே தந்தைக்கவனைச் சேட்படுத்திவைத்ததொன்றே செய்து முடித்தது”1 என்ற மந்தரை விநய வாக்கு மக்கள் மனப்பற்றின் பண்பும் மூலமும் பகுத்தெடுத் துரைக்குமோ ருண்மையின் நுண்மை காட்டும். இவ்வாறு இயல்பில் முளைத்து, அண்மை நெருக்கப்பற்றால் தழையும் அரசன் பெருங்காதல், பரதன் பிரியப் பக்கமகலா இராகவனின் இளமை எழில் குணவியல்புகளால் நாளும் காழ்த்து, வயிரமேறி முதிர்வதாயிற்று. காரண மெதுவாயினும், மன்னனுக்கு மற்றை மக்களினும், இராமனிடம் அதிகநேசமும் ஆசாபாசமும் இருந்தது உண்மை. இரண்டாவதாக, மிதிலையில் மக்கள் மணவிழாக் கண்டு மகிழ்ந்து திரும்பியவுடன், தசரதன் பரதனை வேறுவிசேட காரணமின்றிக் கேகயத்துக் கேகென ஏவி, விரைந்தனுப்புகின்றான். நாகநீ ரயோத்திமாநகர்... நண்ணின (புதுமணப் புதல்வர் நால்வ) ரின்பத்துவைகு நாளிடை, ... அண்ணல் அப்பரதனை நோக்கி’... நின் முதுதாதை நிற்காணிய விழைவ தோர் கருத்தனாதலின்... கேகயம்புக... நீபோதியென்றனன் என்ற பரசுராமப் படலக்கவிகள், தசரதன் பரதனை நாடகற்றும் பரபரப்பைக் குறிக்கும். வம்ப மணவாழ்க்கை நலம்திளைக்கும் இளம்பருவத்தே, சல்லாப மணப்பாயல் குளிராமுன் அதனைச் சுருட்டி மடக்கிச் சொருகச்செய்து பரதனைமட்டும் நெட்டிடை போக்கிப் பாட்டன் பக்கலுய்க்க மன்னன் நினைத்ததற்குக் காரணம், பண்டு பலகாலும் பழகிய கிழப்பாட்ட னவனைப் பார்க்க விரும்பியதாக முன் மிதிலையிற் கேட்டு வைத்ததன்றி வேறில்லை. மற்றை மக்களுக்கு மாதா மகரில்லையோ? அன்றி, அவர்தம் பேரரைக்காணிய விழைவாரில்லைகொல்லோ? இராமனும், இளையவனும் அருகிருக்கப் பரதனுங் கடையனும் புறம்பெயரச் சக்கரவர்த்தி திருவுளங் கொண்ட தன்மை யென்னோ? அன்றியும், சத்துருக்கனுக்குக் கேகயம் மாதுலர் மனையன்றாகவே, அவனுந் தன் புதுமணப்பாயல் நலத்தை அவ்வளவு விரைவில் வெறுத் தொதுக்கப் பரபரக்கப் போதிய நியாயமில்லை. இவ்விரு மக்களையும் மணப்புதுமகிழ்ச்சிக்கிடையே தூரமான கேகயத்துக்கு விரைந்தனுப்ப மன்னவன் கொண்ட விபரீத விருப்பத்தை வான்மீகரும், பாலகாண்டம் 77ஆவது சருக்கத்திற் குறித்திருக்கின்றார். பரதர் இருந்தால் இராம பட்டாபிடேகத்துக்கு இடையூறுண்டாகுமென்று அஞ்சி, அவரை மெதுவாக மாமன்வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்தப் பயத்தை விலக்கிக் கொண்டு இராமனுக்குப் பட்டாபிடேகத்தைப் பண்ணி வைக்கப் போகின்றார்1 என்று கைகேயிக்குக் கூனிவாயால் இதனையே மிண்டும் வான்மீகர் வற்புறுத்தி வைத்துள்ளார். அன்னாரை ஆங்கு அன்று கடிது போக்கிய பொரு ளெனக் கின்று போந்தது என்ற கம்பர் கூனிவாய்க் கூற்றும் இதுவே குறிக்கும். இனி மூன்றாவதாக, இதனோடியைந்துளதான மற்றொரு செய்தியும் மறக்கற்பாற்றில்லை. பரதன் நகர்விட்டகன்றதும், தசரதன் தன்னாட்சியில் இராமனைப் புகுத்தி இறைமைத்துறையிற் பிணைக்கின்றான்; இஃது, அவனை இளவரசாக்குந் தன்விருப்பத்தை வெளிப்படுத்துமுன் தசரதன் செய்த காரியம்.2 சிறிதுகாலம் அபிடேகமாவது வெளிப்படையான ஆட்சித் தொடர்பாவது இன்றி அரசியலதிகாரங்களைத் தந்தை சார்பிற் செலுத்தி, உழைஞரையும் குடிகளையும் தான் அறிந்தும் அவருக்குத் தன்னையறி வித்தும் நெருக்கம்பற்றியெழும் நேசத் தொடர்பு செய்து கொண்ட பின்னரே, மன்னவன் அவனை முடிசூட்ட வேட்குந் தன்னுளத்துண்மையை உற்ற சுற்றத்தவருக்கும் உழைஞருக்கும் தெரிவிக்கலானான். ஆட்சிக்குரிய இராமன் ஆளுநாளெய்துமுன் ஆளப்பழகும்படி பண்ணுவதில் என்ன புதுமை யென்பார்க்குப், பரதனில்லாத காலமே அதற்குரியதாகத் தசரதன் கருதக் காரணந்தா னென்னோவென்று அவரைச் சிறிது சிந்திக்கக்கேட்போம். இப்படித் தான் கருதியபடி இராமன் குடிகள் அரசியலதிகாரிகளின் அபிமானத்தையடையும்வரை, அவனுக்கு அரசு தருவதற் குள்ள தன் ஆசையைத் தசரதன் மறைத்து வைத்தான். பின் நாளடைவில் அந்நிலை அவனடைந்தானென்று கண்டதும், வேந்தன் தன் விருப்பை வெளிப்படுத்தி நிறைவேற்ற விரைகின்றான். இது நான்காவதாக நாம் கருதத்தக்கது. முதலில் இராமன் அரசியற்றுறை பழகுவதற்குத் தான் பரதன் ஊர்ப்பக்கத்தும் இருக்கப்படாதாயிற்று. பிறகு இராகவனுக்கு முடிசூட்டி அரசை அவன்பாற் படுத்தவிரும்புவதாக வெளிப்படுத்திய புரவலன், பட்டாபிடேகத்துக்கும் பரதனில்லாத சமயமே பொருத்தமுடையதாகக் கருது வானேன்? அதுவே தன் திருவுளமென்பதை அவனே இராமனிடம் ஏகாந்த சல்லாபத்தில் வெளிப்படுத்துவதாக வான்மீகத்தால் அறிகின்றோம். பரதன் தேசாந்தரம் போயிருக்கின்றான். என்றைக்குப் பரதன் மாமன்வீட்டுக்குப் போனானோ அன்று முதல் உன் அபிடேகத்துக்குத் தக்ககாலம் என்பது என் கருத்து. அவன் இப்பட்டணத்துக்குத் திரும்ப வராதிருக்கும் வரைதான் உன் பட்டா பிடேகத்துக்குத் தகுந்த காலம் என்று எனக்குத் தோற்றுகிறது, ... ஆகையால்தான் நாளையே உனக்கு இளவரசபிடேகம் செய்ய நிச்சயித் திருக்கிறேன் என்று இதனை வான்மீகர் அவன்வாயிற் பெய்து வைத் துள்ளார்.1 முதலிற்றாகவும் பதவியுமுடைய பலரையும் அழைத்து இராமனர செய்துவதிலவர் சம்மதமும் சார்பும் அறிந்து கொண்டு, பிறகு இராமனை யழைத்து அத்துணைவலார் கூட்டத்தே அவனைப் பாராட்டி அவர்க்கினி யனாக்கி, பொதுமுறையிற்சில நீதிகூறி, அவனுக்கு அபிடேகம் மறுநாள் நடக்கப்போவதால் அதற்கு வேண்டிய விரதாதிகளையனுட்டிக்கத் தூண்டிவிடுத்த தசரதன், யாவரும் போயபின் மறுபடி இராமனையழைத்து வரச்செய்து தனியிருந்து கலக்கலானான். மன்றத் திடைப் பலரறியப் பேசியனுப்பியபிறகு, திரும்பவும் இராமனை வருவிப்பானேன்? வருவித்தாலும் தனியிருந்து பேசவிரும்புங் குறிப்புத்தான் எதுவோ? இவ்விரண்டாவதான தனித்த சல்லாபத்திற்றான், பரதனில்லாமையே பட்டத்துக்குப் பக்குவகாலமெனத் தசரதன் தன் அகங்கரந்த கருத்தை வெளிப்படுத்தினதும். இதுவுமன்றி, இராமன் முடிசூடும் விழாவைத் தன் குடிகளோடு பிறநாட்டு மன்னவருக்கும் அறிவித்து அவரனைவரையும் வருவித்து அள வளாவி ஆலோசித்த மன்னன், கேகயனுக்கும் அவன்பாலுள்ள சிறியன் பரதனுக்கும் அறிவியாததும் சிறிது காரணங்கேட்குங் காரியமாகும். சேய்மையன் கேகயன் என்றால், இராமபிடேக விடயமாக முதன்முதல் தன் விருப்பத்தை வெளியிடு முன்னரே பலவூர்களுக்கும் நாடுகளுக்கும் பத்திரிகைகள் விடுத்து வேற்று வேந்தரையும பிறரையும் வேறுவேறாக அழைத்துச் சபைகூட்டிப் பேசநினைத்த மன்னவன், கேகயனுக்கு மட்டும் தெரிவிக்க வேண்டாமை புறக்கணித்தொதுக்கத்தக்கதில்லை. இதை முதற்சருக்கத்திலேயே குறிக்கும் வான்மீகர், “கேகயனையும், சனகனையும் தூரதேசத்தரானது பற்றி வர வழைக்க அவகாசம் நேராமையால், அரசன் இக்காரியம் நடந்தபின் அவர்கள் பிரியமான இக்காரியத்தைக் கேட்கலாகும், என்று நினைத்து, அவசரப் பட்டாயினும் அவர்களை வரவழைக்க முயலவில்லை என்று சமாதானங்கருதி யமைதிகண்டதாகக் கூறிப்போவார். இச்சமாதான நிறையுரைகளைப் பின் விசாரிப்போம் இதனை ஐந்தாவதாகக் கருதவேண்டிய தொன்றெனக் குறித்துக் கொள்வோம். இனி ஆறாவதாக, நாம் ஈண்டெண்ணத்தகுவது இதுவாம். இராமர் பட்டாபிடேகத்தைப் புறநாட்டு நட்பு வேந்தருக்கும் பிறர் பலருக்கும் அழைப் பனுப்பி வருத்தி அறிவித்து விழவயர விரும்பும் சக்கரவர்த்தி, தன் அரண் மனையில் தனைப்பிரியாப் பிரியை கைகேயிக்கு மட்டும் அறிவியாத தேனோ? இராமா பிடேகத்துக்குத் தானெண்ணியாங்கு எல்லாம் முற்றுப் பெற்று முடியும்வரை மன்னவன் கைகேயிக்கு அதனை மறைத்தானென்பதை வான்மீகர் விதந்து கூறியுள்ளார். அபிடேகத்துக்குச் செய்ய வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்து, அமைச்சராதி யோரனைவருக்கும் விடை கொடுத்தனுப்பி, (இராமனை இரண்டாமுறை யழைத்து ஏகாந்தத்தில் எச்சரித் தனுப்பி விட்டுத்) தன் மாடமெய்தியிருந்த தசரதன், இனித்தான் நமது நட்பிற்குப் பாத்திரமாய கைகேயி அறிவாள் என்று எண்ணியவனாய், அவள் மாளிகைக்குள் முதலிற் புகுந்தான்”. என வான்மீகர் விசதப்படுத்தியுள்ள இந்தவாக்கியம் அவள் அதை அறியாதபடி வெகு சாக்கிரதையுடன் தசரதனால் வேண்டும் ஏற்பாடு செய்யப்பட்டதை வெளியாக்குகிறது. இனித்தான் இராமாபிடேகத்தைப் பற்றிக் கைகேயி கேட்கக்கடவள் (கேட்கலாகும்) என்று ஈண்டுத் தசரதன் வெளியிட்ட திருவுளப் பெரு விருப்பின் குறிப்பினை விரிக்கவேண்டா. த்ரீகளில் உன்னிலும் அன்பிற்கிட மானவள் எனக்கு மற்றொருத்தியும் கிடையாது1, நீ எப்போதும் எனக்கு நன்மையையே விரும்பும் சுபாவமுடையவள்”2 உனக்கு இராமன் மகானு பாவனாகிய பரதனோடு சமானமாயிருப்பவன்... நீ தர்மத்தை உல்லங்கனஞ் செய்யப் பயப்படுந்தன்மையள்”3, தேவீ! நீ நல்ல சுபாவ முடையவள்”4 என்று பலமுறை பலவாறு அவள் உண்மை யன்பையும் உளத்தூய்மை புனிதவியல்பு களையும் மனமாரப் பாராட்டி வியக்கும் மன்னவன்; வள்ளலிராமன் உன் மைந்தன், என்று அவள் முன் வழங்குபவன்; அவ்விராமனுக்குத் தான் முடிசூட விரும்புவதை மட்டும் அவளுக்கு உணர்த்தினானில்லை. அது மட்டோ? கைகேயி யினரண்மனையில் அவளோடிருந் திராமனைப் பார்ப்பதையும் அளவளாவுவதையுமே காதலிக்கும் முன் வழக்கமுடைய மன்னவன், சபையில் இராமனுக்குத் தன்னினைப்புணர்த்தி நீதிகளும் போதித்தனுப்பிய பிறகு மீண்டும் அவனைப் பார்க்க அழைத்தபோது, தாய்கையில் வளர்ந்திலாதவனைத் தான் வளர்த்த அன்னையாம் கைகேயி அறியாமல் தான் தனியிருந்து பேச ஆசைப்படுவானேன்? கைகேயி தன் காதலுக்குரிய பிரியை; தன்னலமே காமுறுங் காதலி கற்பினாற் றொழுதற்கொத்த தேவி; தன் முழுக்காதற்குரிய இராமனை மாற்றவள் மகனென்றுணராமல், தானே பயந்த தவப்பயனாக் கருதி மகிழும் மங்கை. இவையனைத்தும் தானே நேரில் நன்கறிந்து வைத்தும், தசரதன் இராமாபிடேகத்தைச் சபையிற் சொல்லுமுன்னும், சொல்லி மறுநாள் முகூர்த்தமென்று அனைவருக்கும் வெளியிட்ட பின்னும் கைகேயிக்கு மட்டும் மறைத்து வைக்கக் காரணமிருக்க வேண்டும். இன்னும் ஏழாவதாக நாம் அறிவதாவது: கோசலைக்கும் சுமித் திரைக்கும் சீதைக்கும் முறையே இராமன் முடிசூட முகூர்த்தம் வைக்கப் பட்டது உணர்த்தப்படுகிறது. கோசலை கேட்டுத் தானங்கள் வழங்கி, மகனலம் விரும்பி அவனபிடேகம் இடையூறுபெறாது நிறைவேறுவதற்காக மௌனத்துடன் தன்னிட்டதேவதையைத் தியானிக்கலாயினள். அவள் அரண் மனையில் அவளைச்சூழ இராமனாக்கத்தை யறிவித்தழைக்கப்பட்ட சுமித்திரை இளையவன் சீதை முதலிய பலரும் வந்து கூடிக்குலாவிக் களித்திருந்தார்கள். இவர்களிடை இராமன், தந்தை தனக்குத் தனித்துச் சொன்ன இதமொழிகளைப் பருகின பின் வந்து, தனக்கினியராய் அங்குக் குழுமியுள்ளார் யாவரொடும் சல்லாபித்து மகிழ்கின்றான்.1 இவ்வாறிச் சுற்றத்தார் பலரும் ஊரில் மற்ற ஏதிலார் அனைவரும் இராமாபிடேகத்தை யறிவிக்கக் கேட்டுரையாடியிருக்க, கற்பரசி கைகேயியை மட்டும் உண்மையொன்று முணராதே பொங்கணை மேற்றனியே தூங்கவைத்ததேனோ? இராமன் பேராக்கப் பெருமகிழ்ச்சி மிகுதியில் யாருமே இத்தேவியை மறந்தார் போலும்! தெருவிற் கலகலப்பை யும் திருவிழாக்கோல முழக்கையுங்கண்ட கூனி, தன்னருகுற்ற கோசலை நேசமுடைய ஓர் செவிலியைக் கேட்டுணர்ந்தாள். பிறகு அவள் சொல்லவே கைகேயி முதன்முதல் அறிவதானாள். இராமாபிடேகத்தை மந்தரைக்குச் சொல்லக்கூடாத ஒன்றாயுணர்ந்த அச்செவிலி, தன் சந்தோடமிகையால் அவசமுற்றுத் தான் அதை மறைக்குங்கடனை மறந்து மந்தரைக் குரைத்ததாக வடமொழியில் நூலார் விசதமாக்கியுள்ளார்.2 இறுதியாய் இதுபற்றி நாம் கவனிக்கத் தகுவது இன்னுமொன்றுளது. இராமாபிடேகத்துக்குத் தடையேற்படக் கூடுமென்று அதை விரும்புங் கொற்றவனும் கோசலையும் எதிர்பார்த்து அஞ்ச ஏதோ நியாய மிருப்பதாக வான்மீக வரலாறுகள் விசதமாக்கும். இராகவனோடு தன் இரண்டாவது ஏகாந்த சல்லாபத்திடைச் சக்கரவர்த்தி கூறுவது இது: உனக்கு நாளை இளவரசபிடேகம் செய்யப் போகிறேன். இதுமுதல் அதற்காக நீ உபவாச விரதாதிகளை அனுட்டிக்கவேண்டும். இத்தகைய காரியங்களுக்கு விக்கினங்கள் பல உண்டாம். ஆகையால் உனது நட்பிற்குரியார் ஏமாந்து விடாமற் சோர்வின்றி ஊக்கத்துடன் உன்னைச் சூழ்ந்துநின்று இன்று எல்லா விதத்தாலும் பாதுகாத்திருக்கட்டும்.”1 இவ்வளவு முன்னெச்சரிப்புக்கும் பாது காவலுக்கும் அவசியமிருந் தாலன்றி, மன்னவன் இவ்விதம் பயப்பட நியாயமில்லை. மறுநாள் பட்டங்கட்டப்போவதாயும் அதற்கு அன்று உபவாச மிருக்கும்படியும் சொல்லுவதற்குத் தனியிடத் திரகசியம் வேண்டாம். இடையூறெதிர் பார்ப்பதாயும், அதுபற்றி உண்மை நட்பாளர் காவலிற் றநயனைச் சர்வ சாக்கிரதையாயிருந்து தற்காக்கும்படிக்கும் சொல்லும் போதுதான் ஏதோ அந்தரங் கத்துக்கு இடமிருப்பதாக வெளியாகிறது. அயோத்திப்பதியில் அரசன தரண்மனையில் அபிடேகம் நடக்கப்போகிறது. அதுவரை அரண்மனை யிற்றான் இராமன் இருந்து விரதாதிகளை மேகொள்ளப் போகிறான். இராமனுக்குற்ற சுற்றத்தாரே அவனைச் சுற்றியிருப்பர். இதற்கிடையே அவன் சரீரப்பாது காப்புக்கு அவனுக்கு உற்ற நண்பர்களுள்ளும் ஏமாறவொண்ணாத் திட்பவினையாளரைத் தெரிந்து பொறுக்கி அவனுக்கணுகப் புடைசூழ நிறுத்தி, எச்சரிக்கையோடிருக்கு மாறேவ ஏது வென்னை? இராமனுக்கு இளவரசு தர விரும்புபவனோ தரணிக்கு அதிபதி; பெறுபவனோ அது பெறற்குரிய அவன் திருமகன்; அதனையே அமைச்சரும் உழைஞரும் ஆமோதித்துளார். குடிகளோ அதனை அரசனும் எதிர்பாராவண்ணம் உவந்து கொண்டாடுகின்றார். அதற்கென அழைத்துவந்தோர், வேந்தரும் பிறரும் வேறுகூறிலர். கோசலையும் மருகியும் சுமித்திரையன்ன சுற்றத்தாரெவரும் மகிழ்ந்து வாழ்த்தலாயினர். இலக்குவன் உவகையால் இறுமாந்திருப்பன். இவ்வாறு ஒருங்கே இவரெல்லோரும் உவகைக் கடலிலிருக்க இராமன் முடிசூடலுக்கு யாரால் இடையூறு நேரலாமென்று இறைவன் எதிர்பார்க் கலானான். அமானுச்யவிக்கினங்களை ஈண்டுத் தசரதன் கருதினதாயில்லை. அது கருத்தாயின், மகன் சரீரப் பாதுகாப்புக்கு இத்தனை எச்சரிக்க நியாயமில்லை. கோமைந்தன் முடிசூடலைத் தடைசெய்ய முயலுவார் சிலருளரென்று எதிர்பார்த்தாலன்றி, இத்துணை அச்ச எச்சரிப்பும் விரிவான ஏற்பாடுகளும் ஏகாந்தத்தில் அரசன் இராமனுக்குச் சொல்லுவானேன்? இப்படியே இராமனபிடேக நற்செய்தி கேட்ட கோசலை, அதற்குத் தடையேற்படாதிருக்கத் தெய்வங்களைத் தொழுகின்றாள்; வானுறையுந் தெய்வங்கட்குச் சிறப்பொடு பூசனை செய்து, இராமாபிடேகம் எவ்விதப் பகைவராலும் இடையினிற்றடை பெறாமல் ஈடேறட்டுமென்று வாழ்த்தெடுக் கின்றாள். இவ்வாறு தந்தையொடு தாயும் எதிர்பார்க்கும் தடையச்சம் எதன்காரணம் எழுந்ததாகும்? தசரதன் இப்படி நட்பாளரால் இராமன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்படி சொல்லும்போதே அதையடுத்துத் தொடர்பாகக் கூறுவதனாலும், அவன் தன் விருப்பத்திற்கு ஊறு எதிர்பார்ப்பது பரதன் சார்பாயிருக்க வேண்டுமென்பது தொனிக்கின்றது. உன்னைச் சிநேகிதர் ஜாகரூகராய்ச் சூழ்ந்து சோராமல் நின்று பாதுகாக் கட்டும் என்று கூறியதனோடமையாமல், அதன் தொடர்பாகவே பரதன் தேசாந்தரம் போயிருக்கிறான், அவன் அயோத்திக்குத் திரும்பி வராதிருக்கு மளவுதான் உனதபிடேகத் துக்குத் தகுந்த காலமென்று எனக்குத் தோன்றுகிறது”1 எனத் தசரதன் இங்குக் கூட்டி முடித்திருப்பதைச் சிறிது ஆழச் சிந்திக்கின், பரதன் காரணமாக இராமாபிடேகத்துக்குப் பங்க மேற்படலாமெனப் பார்த்திவன் பயப்படுவதும், அதனால் அவ்வபிடேகம் முடியும் வரை பரதன் றொடர்புடையார் யாருமே அதை அறியாமலிருக்கத் தான் விரும்புவதும் விளக்கமாகிறது. இனைய பலவானும், வான்மீகர் விதந்தோறும் பிற வசனங்களாலும் விசதமானவற்றை யீண்டுத் தொகுத்து நோக்குவோம். இராமாபிடேகத்தைப் பரதனுக்கும் அவன் பற்றுடையாருக்குமே தெரிவியாது மறைக்க மன்னவன் விரும்புகிறான். கோசலையாதியோர் அதனைக் கைகேயிக்கும், அவள் சீதனச்சேடியான மந்தரைக்கும் மறையாகப் பொதிந்து போற்றுகின்றார். தனதெண்ணம் ஈடேறி முடிந்த பின்னரே இராமன் முடிசூடலைக் கேகயன் கேட்பது உசிதமெனக்கருதி அவனுக்குத் தெரியாமலும், நல்லனாயினும் பரதனைத் தருவியாமலும், வேந்தன் அதை முடிக்க விரைகின்றான். இது கேகயன் கேட்டு மகிழ்வதொன்றாயின் அவனுக்கு அறிவிக்கப்பொறா அவசரமும், அபிடேகவிடயமாகத் தன் எண்ணத்தைத் தான் முதலில் வெளியிட்ட மறுநாளே விரைந்து அதை முடிக்கும் அரசன் வேகமும், விளங்கவில்லை. பரதனோ ஊரில் இல்லை; கேகயனும் இதைக்கேட்டு மகிழ்வன்; என்றாற்பின் யாரால் எவ்விதத் தடை இதற்கு உண்டாகக்கூடும்? அரசனும் பிறரும் இடையூறெழுமென்று அஞ்சுவானேன்? ஏதிலர் ஏனையர் யாவரும் அறிந்தபின்னும் கேகயன் மகளுக்கும் அவள் சார்பினருக்கும் மட்டும் இதை முடியும் வரை மறைத்துவைக்க இவரனைவரும் ஆவலுறுவானேன்? இராமனிடத்து இதுபற்றி மன்னவன் மீட்டும் தனித்திருந்து பேசுவானேன்? பரதனைப் போக்கிய பின்னரே இது கருதப்படுவானேன்? அவன் இது முடியும் முன் வரலாகாதென்று அஞ்சி வேந்தன் விரைவானேன்? பரதன் அரசுவிரும்பித் துராசையால் வலிந்து அதை வெளவவருவான், அன்றி அவனையீன்றாள் மகனுக்கு அரசாக்கம் அடைவிக்கு மாசையால் இராமனபிடேகத்துக்கு ஊறிழைப்பள் என்று தசரதன் எண்ணக்கூடுமாயின், ஒருகால் அரசனாதியோரச்சத்துக்கும் அவசரத்துக்கும் சிறிது நியாயம் எழலாம். ஆனால், கைகேயிக்கு இராமனிடத்துள்ள உண்மைப்பற்றும், நிகரற்ற நிலைத்த தூயகாதலும் கம்பர் கவிகளால் மேலே நிறுவப்பெற்றது.1 தசரதனுமே அதைப் பாராட்டிப் பேசுவதை வான்மீகர் வற்புறுத்த மேலே கண்டோம்.2 பின்னும் தசரதனே கைகேயியைப் பார்த்து, உனக்கு உயிர் வாழ்வினும் சிறந்தவனாயிருக்கும் இராமன்”,1 இராமன்தான் எனக்கு மூத்த குமாரன் என்று பல தடவைகளில் நீயே சொல்லுபவள்2 எனப்பேசுகின்றான். இன்னும், இவள் தன்பால் வைத்துள்ள மெய்யன்பின் நெருக்கையும் பெருக்கத்தையும் இராமனே சீதையிடம் பாராட்டி வற்புறுத்துகிறான். கைகேயி எனக்கு இதத்தையே விரும்புந் தன்மையள்; என்னிடத்தில் மிகுந்த விருப்பமுடையவள் ... .... .... உலகத்தில் மேன்மையை விரும்பி உயர்வுள்ளுவள்”3 எனக்கு நன்மை செய்ய விரும்புபவளும், சமர்த்தையும், நான் ஆக்கம் பெறுவதில் அபிலாசையுடையவளும், எனக்கு அன்னையுமா யிருக்கும் கைகேயி, தன் கணவன் கருத்தறிந்து உவகையுடன் எனக்கு அபிடேகத்தை நடத்திவைக்க அரசனைத் தூண்டிக் கொண்டிருப்பாள் என்று இராமன், மாற்றன்னை மனையிலிருந்து, சுமந்திரனழைக்க வந்தது கண்டு சந்தேகித்த சீதை குறிப்புணர்ந்து கைகேயி பண்பையும் தன்பால் அவளுக் குள்ள பட்சத்தையும் கணவனிடமுள்ள கற்பு மேம்படுகாதலையும் இவ்வாறு விசதமாக்கினாள். இன்னும், இராமாபிடேகத்திற் கைகேயிக்குள்ள உண்மை யுவகையைப் புகழ்ந்து தாய்கையில் வளர்ந்திலன், தவத்தா லிவனை வளர்த்தவள் கேகயன்மாது என்று பேசிய ஊரவர்மாற்றமும், தனிச்சல்லா பத்திற் காதலன் தன் பெயர் தருமெனுங் குறிப்பால் என்னின்னுயிர்மென் கிளிக்கியார் பெயரீகேன்மன்ன? என்ற சீதைக்கு, மாசறு கேகயன்மாது என் அன்னைதன் பெயராகென இராமன் அன்பினோடு அந்நாட் சொன்ன மெய்ம்மொழியும், இராமன் கைகேயி இவர் ஒருவர்மேல் ஒருவர் வைத்துள உண்மைக் காதலின் வன்மையைக் காட்டும். தசரதனைப் போலவே இராகவனும் இவளுக்குள்ள இராமாபிமானத்தைப் பலவாறு பாராட்டி யிருப்பதோடு, கைகேயி தர்மத்தை உல்லங்கனஞ் செய்யப்பயப் படுந்தன்மையள் என்ற தன் தந்தை கருத்தையே உலகத்திலுயர் நெறி யிலேயே விருப்பமுடையவளிவ ளெனத் தன் மனைவியிடம் கூறி, இவள் அறவியலை வலியுறுத்துகின்றான். இவள் மாசற்ற மனத்துண்மையை யும், நேரற்ற இராமாபிமானத்தையும் நினைத்தே, இராமனைப் பயந்த எற்கு இடருண்டோ என்றவள்வாய்ப் பெய்துவைத்ததோடமையாது கம்பர், “வேற்றுமையுற்றிலள்...” என்ற தன்னழகிய பாட்டிற் கவிக்கூற்றாயிவ ளீடிலாப்பீடுபேணி விளக்கி வைத்துள்ளார். இனிப் பங்கமில்குணத்துப் பரதன் பெருங்குணத்தைச் சங்கிப்பாரு முண்டோ? அரசனா லேவப்பட்டு, மாதுலன் மனைமேவிக் கேகய மன்னனாற் சகலசத்காரமும் உபசரிப்பும் விரும்பிய விரும்பியாங்கெய்தி யனுபவிக்கும் பெற்றியு முற்றதோடு, அவன் பெருங்காதலும் பெட்பொடு பேணும் பிரியமும் பெற்று வாழும் பரதன், அப்பெருவாழ்விடை யதை மகிழாமல், தந்தை வயோதிகர், அரசியற் பாரத்தைச் சுமக்க முடியாமற் றளர்ந் திருப்பவர், அவர்பக்கம் விட்டகலா தவருக்குப் பணிவிடை செய்யவேண்டு மிக்காலமிங்கு வீண்கழிகின்றதே என்றனவரதம் தன் பரிவுடைச் சிந்தையி னினைந்து பரிதாபப்படுவதாக வான்மீகர் கூறுகின்றார்.1 இதனாலிவன் பிதுர்பக்தி விகசிக்கிறது. இவனிறை குணத்தவன் என்பதை யிருபெரும் புலவரும் தசரதன் வாயால் விளக்கியுள்ளனர். உன்தம்பி பரதன், சான்றோர் நெறியிற் சால நிலைத்த வுள்ளத்தன்; உன்னை யநுசரித்தே நடக்கும் தன்மையன்; தருமத்திற்றானே தன்மனஞ் செலும் பெற்றியன் அடியோடு ஐந்தவித்து விளங்கும் சிதேந்திரியன் என்று மன்னவ னிராமனிட மவனை வாயார வாழ்த்துகின்றான்.2 பின்னுங் கைகேயிக்கவனைக் குறித்து வேந்தன் கூறுவதிது: நீ நினைக்கிறபடி பரதன் அரசை அங்கீகரிப்பனா? அவன் தருமத்தி லிராமனைக்காட்டிலும் மேலானவனென்று நானுணர்வேன். அறப்பெருந்தகையான பரதன், நீ யாது செய்தபோதிலும், இராமனை விலக்கி நாட்டைத் தானங்கீகரிக்கமாட்டான்”, என்று பரதனைப் பற்றிய தன்னுள்ளத் தூன்றிய வுணர்வை வேந்தன் வெளிப்படுத்துகின்றான்.3 கொள்ளான் நின்சேய் இவ்வரசு,”4 என்று, கம்பருமவன் வாயாலிதே சந்தர்ப்பத்திற் பரதனுயர்குண மனத்தூய்மைகளை வலியுறுத்தியுள்ளார். இவற்றாற் றசரதன் பரதனுள்ளக் கிடை நன்கறி வானென்று புலப்படுகிறது. அப்படியிருக்க, அவனில்லாத காலமே இராமாபிடேகத்துக்கு நல்ல சமயமென்றும், அவன் வந்தா லதற்குத் தடைநேருமென் றஞ்சி வருமுன் முடித்துவிட வேண்டுமெனவும் தசரதன் அந்தரங்கத்தி லிராமனிடம் பேசுவதற்கு, அறமற்றதோர் சார்பு தன்னெண்ணமாகலான் அறவள்ளலான பரதன் காரணமாக அது தடைப்படலா மென்று தன் குற்ற நெஞ்சிற்றானே யஞ்சலாயினா னென்ப தன்றிப் பிறிதுகாரணம் காண்பதரிது. அன்றியும், பரதன் பாவமேறொணாப் புனிதமனப் பாங்கை மிகப்பாராட்டி, பரதன் தருமசுபாவனல்லவா? அதனாலவன் நெறிநின்று அறஞ்சொல்லித் தந்தைதாயரை யாற்றுவான் என இராம னேகாந்த நிலையிற் றனக்குத்தானே அமைதி காண்பதாக வான்மீகர் கூறுகின்றார்.1 இன்னும் காட்டிற்கு வரும் பரதனைக் கருத்தறியாது சந்தேகப்பட்டு வெகுண்ட இளையவனுக்கு, இராமன் பரதனியல்புகூறி யமைதிபுகட்டு நயத்தை யுணர்வோம். எனக்குப் பிராணனிலும் பிரியத்திற்குரிய பரதன், பிராதாக்களிடத்தில் மிகுந்த பிரியமுடையவன்; அவன் நாம் வனம் பெயர்ந்து கேட்டுத் தந்தைக்குப் பணியாற்றும் தருமத்தை விரும்பி மாதுலனகர் நீங்கி அயோத்தி வந்திருப்பான் ..... என் பிரிவாற்றாமையாற் புலன் கலங்கி நம்மைப் பார்க்க வருவதல்லால் வேறில்லை; எனக் கரசு கொடுப்பதற்காகவே இங்கு அவன்வருகின்றான்; பரதன் மனத்தாலுங்கூட நமக்கு அபகாரத்தை நினைக்ககில்லன்; .... உனக்கரசைக் கொடுக்கும் படி நான் மனமின்றி வாய்மாத்திரமாகச் சொன்னாலு முடனே கொடுக்க இசைவானன்றி வேறுரையான்”;2 என்றவன் நல்லியல்பும் அறம் படிந்த மனப்பான்மையும் நன்கறிந்த இராமன் எடுத்துரைத்துப் பாராட்டு கின்றான். எனைத்துள மறையவை யியம்பற் பாலன பனைத்திரள் கடக்கரிப் பரதன் செய்கையே அனைத்திறம்; அல்லன அல்ல; அன்னது நினைத்திலை; என்வயின் நேய நெஞ்சினால் (கிளைகண்டு நீங்குபடலம் : கவி - 44) பெருமக னென்வயிற் பிறந்த காதலின் வரும்; ....... மண்ணை என்வயிற் றரும்; என நினைகை...... தவிரத் தானையால் பொரும்என நினைகையும் புலமைப் பாலதே (மேற்படி 45) சேணுயர் தருமத்தின் தேவைச் செம்மையின் ஆணியை (நீ) அன்னது நினைக்க லாகுமே? (மேற்படி 47) பரதன் போந்தது ஈண்டு எனைக்காணிய, நீ யிது பின்னுங் காண்டி என் றிவ்விடத்திற் கம்பரு மிராமன்வாய் மொழிந்து வைத்துளர். இன்னும், எத்தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்களெல்லாம் ஒத்தாற் பரதன் பெரிதுந் தமனாவதுண்டோ?1 என்றிலக்குவனுக் கறிவுறுத் தடக்குமிடத் திராமன் பரதனைப் பாராட்டியுள்ள பாட்டு மறிவோம். மேலும், எனக்கபிடேகமில்லை; நின்காதற் றிருமகன் பரதனுக்கே பட்டமென்று வந்து சொன்ன தன் மகன் மொழிகேட்ட கோசலை, அவன் நிறைகுணத்தவன்; நின்னினுநல்லன்”2 என்றிராமனிடம் பரதனறவியல்புகூறிப் புகழ்ந்ததையும், பின் இராமன் குறித்த எல்லையிகந்து வராமைகண்டு தீப்பாயமுயலும் பரதனைத் தடுப்பவள். எண்ணில் கோடி இராமர்கள் என்னினும், அண்ணல்! நின்னருளுக் கருகா வரோ? புண்ணி யம் எனும் நின்னுயிர் போயினால், மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? (மீட்சிப்படலம், செய் - 232) என்று தன்னுளங்கசிந் துருகி யாற்றியதையு மறியாதா ரில்லையே! இன்னும் பரதன் பின்னொழுக்கமுழுதும் அவனைச் சந்தேகிக்க நியாயமே கிடையாதென்பதைப் பறையறைகின்றதே. இவ்வாறு வேந்தனும் கோசலையும் இராமனும் பரதனைக் கோதில் அறக்குணக்குரிசிலாப் பன்முறையுங் கொண்டாடக்காணும் நாம், பரதன் காரணமாக இராமாபிடேகத்துக்கு ஊறுநேருமென்று தசரதனஞ்சவும், அவனில்லாதபோததை முடிக்க வெகுவேகப்படவும், இராமனை அபிடேகப்பேச்சு வெளியிடப் பட்டபின் அது முடியும் வரை சோர்வின்றித் தற்காத்துக் கொள்ளும்படி யவனிடம் தனித்துக்கூறவுங் காரணம் காண்ப தரிதன்று. மகவின்றி நெடுங்காலம் வருந்திய மன்னவன், முதுமையிற் றனக்கு முதற்கிடைத்த மகனான இராமனிடத்திலன்பு மிகுதி வைப்பதியல்பு. அடிக்கடியகலப் போகும் பரதனைப் போலாது அனவரதம் அருகிருந்து வளருமவனிடத் தன்பு தந்தைக்கு வளர்ந்து பெருகுவது மியல்பே. இவ்வாறு பரதனிலுமிராமனிடம் தனக்குக் காதலதிகமென்பதைத் தசரதனே கூறியுள்ளதையும் மேற் கவிகளாலறிந்தோம். இப்படி நாளடைவி லிராமன்மீ தன்புகாழ்த்த சிந்தையில், தசரதன் அவனுக் கரசியலாக்கத்தையடைவிக்க விரும்பலாவது மியல்பேயாகும். ஆனால், கைகேயி திருமணத்திலரசுரிமையை அவளுக்குக் கல்கச் சீதனமாய்த் தான் முன் கேகயனிடம் அறச்சூளுடன் வழங்கியதன் உண்மையும், அதன் விளைவியல்புகளும், தசரதன் முற்றும் மறக்கற் பாற்றில்லை. தன் முன்மரபுடை அறச்சொல்லு மதன் பயன் முறையு மவன் மனத்திருந்தவனைச் சுடுவதால், தன்னுள்ள முறுத்துஞ் சஞ்சலத்தைப் பிறருக் குரைக்கவும் அறத்துறையாற் குறைக்கவு மொல்லாமல், அவன் தத்தளிக்கு நிலையை நாமெளிதிலுணரலாகும். தூரிய கேகயநாட்டில் நெடும் பல்லாண்டு களுக்கு முன் தான்செய்த சுல்கப் பிரதிக்ஞை பின் தன்னாட்சியைப் பாதிக்காமல், கற்புறு சிந்தைக் கைகேயி கணவனாகவே தானே சுவாதீனன் போல் அரசுபுரிந்து, ஆக்கத்தோடாதிக்கமு மனுபவித்துள்ளான். அது கொண்டு தன் முன் அறச்சொல்லின் விளைவாற் பின் தன் பிற விருப்பங்கள் பீடிக்கப்படாமல் முடிக்கலாகுமென் றெண்ணலானான். தன் சூளறச் சுல்கக் கொடையாற் பரதனுக்குப் பிறப்புரிமையாய் விட்ட அரசாக்கத்தை, இராமன்பாற் காதல் மிகையா லவனுக் கெய்துவிக்க விரும்பினான். மிகச் சிலரன்றித் தன் முன் சொல்லறச் சூளை யறிந்தவரில்லை யென்றுணர்வான். தன் பெருமகளுக்காகச் சுல்க சூள் பெற்று வைத்தவனும், அதைப் போற்றவல்லவனுமான கேகயனோ தூரதேசத்தான். அவ்வறச் சொல்லைத் தான் துறப்பதாயறியி னொருகால் அவன் பரதனுரிமைபேண வருவனாகையா லவனுக்குத் தன்னெண்ணம் முடியும்வரை தகவலெட்டா திருக்கத் தசரதனாத்திரப் படுகிறான். கேகயனுக்கு மட்டும் அழைப்பனுப்பாதிருந்தாற் கைகேயி சந்தேகத்திற் கிடனாகும்; கேகயனும் குறைகூறுவான். அவனுக் காளனுப் பாமைக் கோர் வியாசம் வேண்டும். அஃதவனாடு சேய்மையதாவதிற் சமைக்கப்பட்டது. மிதிலைக்கு அறிவித்துக் கேகயனுக்கு அறிவியாமை விபரீதவுணர்ச்சியையுடனே விளைக்கும். மேலும், கைகேயிக்குச் சேய்மை பற்றிய வியாசத்தைப் பொருந்தப் புனைவதற்கு, மிதிலையார்க் கறிவியாமை பொருந்துமோர் கருவியாகும். மிதிலையர்கோன் பின் உண்மையறியுங்கால், தாமதம் தன் மருகனபிடேகத்திற் கிடையூறாமென்ப துணர்ந்து, தனக்குரை யாமையை வெறுக்காமல், தன் மருகனாக்கத்தை முடித்து வைத்த சூழ்ச்சித் திறம் வியந்து அதன்பயன்பற்றி நயப்பதுங் கூடும் எனத் தசரதன் கருதினான். சனகனையு மழைத்திலாமைகூறிப் பின் கேகயனுக்குச் சமாதானங்காட்டவு மியையும். விளைவும் பயனுஞ் சீர்தூக்கி, சனகனுக்கும் கேகயனுக்கு மறியாமல் இளவரசபிடேகத்தை இராமனுக்கு விரைந்து செய்வதே தனதெண்ணத்தை முட்டின்றி முடிக்கு முறுதிவழி யெனக்கருதி, தசரதன் அவ்விரு சம்பந்தியர சருக்கும் இராமாபிடேகத்தை யறிவியாமலிருக்கத் துணிந்தான். பகுதி 6 : கோசலை மனக்கோள் இனிப் பண்டறிகிழவி கைகேயி சீதனச் சேடியான கூனி கேகயத்தில் அரசன் அறச்சூளறிவளாகவே, அதை மறைக்க விரும்பும் கோசலையாதி யோர் வேந்தன் தன் சுல்கச்சூளறங் கொன்று இராமனுக்கு அரசுதர முயலுவதை அவளறியாது மறைக்க அவாவுகின்றனர். கைகேயி முன் நேரில் இதையறியாள் என்பது உய்த்துணரலாகும். மணவறையில் மணச்சடங்குக்கு முன் வரனைக்காணல் ஆரியவழக்கன்மையானும், சுல்கச்சூள் கைகேயிக்காகக் கேகயனிடம் தசரதனாற் செய்யப்பட்டதாக வான்மீகர் விசதமாக்குவதானும், கூனிவாயால் அதைக் கேட்டறியும் வரை பரதனுக்கு அரசாமாறில்லையென்று மறுத்து இராமன் அபிடேகத்தை ஆமோதித்த கோமகள் மந்தரைவாயால் முன் வரலாறு கேட்டபிறகே அபிடேகத்தைத் தடுக்க இசைந்துதள்ளதானும், ஒன்று அவள் முன் அவ்விவரம் அறிகிலள். அன்றேல் அதனை மறந்தனள், என்பது வெள்ளிடை மலையா விளங்குவதாகும். ஒருகாற் பரதன்பாற் பரிவுடைய பிறர்யாரும் அதையறிந்தவர், இராமனபிடேக முயற்சிகண்டு, பரதன் சார்பாக வரக்கூடும்; அவ்வாறு எதிர்பாராவண்ணம் யாராவது வருவரேல் அவர் முயற்சியை விலக்கி இராமனுக்கு அபிடேக பூர்த்தியாக்க விரும்பியே அவனைச் சோர்வில் தோழராற் றற்காத்துக் கொள்ளும்படி அரசன் எச்சரிக்க லாயினன். கோசலையும் இப்பழஞ்சரிதம் அறிந்திருக்க வேண்டு மெனவே தோன்றுகிறது. அல்லளேல், வேந்தனைப் போலவே இவளும் இராமன் அரசெய்துவதற்கு ஊறு நேருமென்று அஞ்சக் காரணமில்லை. இவள் சேடிமார், இராமாபி டேகத்தைச் சுமித்திரையாதியோர்க் கறிவித் தழைத்தவர், கைகேயிக்கும் மந்தரை முதலிய அவள் சார்பினருக்கும் மட்டும் அதை மறைக்க விரும்பார். இராமனுக்கு இளவரசபிடேகம் பிறப்புரிமை; அதனால் அவனுக்கு அது திட்டமாகச் சித்திக்கு மெனத் தெரிந்த கோப் பெருந்தேவி நிலைமைக்கு மாறாகக் கோசலை தன் மகனுக்கு அதைக் கூட்டுவிக்கப் பெரிதும் தான் ஆசையும் தாளாண்மையும் உடையவளாகவும், முடிவிற்றன் முயற்சி முற்றுப்பெறுங்காலம் அணுகியதுணர்ந்தபோது தன் அறிவாற்றலால் ஆக்கிய ஆக்கத்துக்கு அவள் தன் அறிவளவில் திளைத்துக் களித்ததாகவும், வான்மீகர் விசதமாகவும் கம்பர் சிறிது விநயமாகவும் சுட்டியுள்ளனர்.1 இராமனுக்கு அரசில்லை யெனக் கேட்டு அவள் அலக்கணுற்றரற்றியதா வடமொழிப்புலவர் அவளியல் விளங்க வழங்கிவைத்த படிற்றுரை பலவற்றைக் கம்பர் குறைத்து மறைத்தனர். பரதனுக்கு அரசு தர இசைந்த தன்தாதையைக் கொன்றேனும் சிறைசெறித்தேனும் தமயனுக்கு முடிபுனையப் போவதாய்க் கோபவெறி கொண்டு பிதற்றிய இளையவன் பீழைபடுமாற்றத்தைக் கடியாது கோசலை அதனைச் சிறிது செவியேற்குமாறு இராமனையும் தூண்டினதாயும், அதைமறுத்து இராகவன் அறமொழி யெடுத்தோதி அறிவுறுத்திய பிறகே அவள் கணவனுக்குத் தான் கற்பறமாற்றுங் கடமையை நினைந்து அதற்கு இசைந்ததாயும், பின் பரதனைச் சந்தித்து நிந்தித்ததாயும் மெய்ம்மறையா வான்மீகர் கூறுகின்றார்.1 பரதனைப் பாராட்டிப் பேசி, அவனுக்கு ஆசிகூறி, அவன் பட்டாபிடேகத்தை வெறுக்காமல் இராகவன் வனம் போகாது தன்னோடிருக்கமட்டும் வேண்டினளாகக் கம்பர் கோசலை குணத்தைச் சிறிது மாற்றிச் செப்பனிட்டு மாற்றேற்றி வைத்துள்ளார். கோசலை மன்னவன் சுல்க அறச்சூள் அறிந்திருக்க வேண்டுமெனச் சுட்டற்குரிய துணைச் சான்று இன்னு மொன்றுளது. இவ்வரலாற் றுண்மையை இராமனே பரதனுக்கு முதலில் வெளியிடுவதாக இருமொழிப் பெருங்கவிகளும் முறையே வலியுறுத்தக் காண்கின்றோம். தனக்குத் தந்தையார் முடிசூட முயன்ற போது இராமன் இஃதுணரானென்பதே பொருத்தமாகும். முன்னரே பரதன் பிறப்புரிமையைத் தான் அறிந்திருப்பின், செப்பருங்குணத் திராமன் தந்தை விருப்பத்திற் கிணங்கி இத்துணை விபரீதவிளைவுக்கு இடந்தரானன்றோ? அறிந்துவைத்தும் அறத்துறை திறம்பிப் பரதனுக்குரிய அரசைத் தான் அடையவிரும்பினன், என்பது தாய்மையுமன்றித் தருமமும் தழுவிநின்றா னியல்புக்கும் பெருங்குணத்துக்கும் பொருந்தா தன்றே? பின் பரதனுக்கு இதை அவனே பகர்வதால், யார்மாட்டிதனை அவன் கேட்டறிந்தான்? தந்தையொடு தன் பட்டாபிடேக விடயமாய்ப் பேசிவந்தபின் நகர் நீங்கும்வரை தசரதனுடன் இராமன் மீண்டும் சல்லாபித்திலன் என்பர் கம்பர். இருவரையும் மூன்று முறை சந்திக்கச் செய்த வான்மீகரும், தசரதன் தநயனுக்கு இவ்விவரமறிவிக்க இடம்தரக் காணேம். அதனால் வேந்தன் மூலம் இதனை இராமன் அறிந்தபாடில்லை. கோவிந்தராசராதி உரைகாரர், சுமந்திரராதியரால் இராமன் இதைக் கேட்டிருக்கலாமென்று ஊகிக்கின்றனர். ஆனால், தென் மொழி வடமொழிகளில் மன்னிய இருபெருங்காவியக் கதையும் சுமந்திரராதி யோர் இதனைச் சொல்லகில்லாமையைத் தெளித்து வைத்திருக்கின்றது.2 ஆகவே, பழமையுணர்ந்த தன் அன்னையாலாதல் அன்றேல் அவள் சார்பினராலாதல் இவ்வுண்மையை இராகவன் கேட்டிருக்கவேண்டுமென்று அறியக்கிடக்கின்றது. கோசலைக்குச் சுல்கப்பழஞ்சரிதம் தெரிந்திருக்க வேண்டு மென்பது இன்னுமொரு காரணத்தாலும் ஊகிக்கலாகும். கைகேயி வரம் கேட்டு இராமாபிடேகம் தடைப்பட்டபிறகு முன்னவனரசைப் பின்னவனுக்கு ஆக்கு வது முறையன்று என வசிட்டமுனியும் இலக்குவனும் சித்தார்த்தராதி மந்திரிமாரெல்லவரும் முழங்கவும், குணமணப் படுத்தப்பட்ட கம்பரின் கோசலைகூட (முதல்மகனிருக்க) அரசைப் பின்னவனுக்குக் கொடுப்பது முறைமையன்றென்பதொன்றுண்டு என்று இலேசாகச் சுட்டிப் போந்த தல்லாமல், அஃது அறமற்ற தென்றேனும் பரதனுக்கு அது செல்லாதென்றேனும் சொன்ன தில்லை. யாண்டும் தன்னியலிழவாத வான்மீகரின் கோசலையோ, கோபத்தாலும் தாபத்தாலும் அறிவுமயங்கினவிடத்தும், இறைவனைச் சீறிய இலக்குவன் இன்னாச்சொல்லைத் தனக்கு இதமெனிற் செவிக்கொளும்படி தன் தநயனைத் தூண்டினளல்லால், இராமன் அரசை இளைய பரதனுக்குத் தருவது அறமன்றென்று ஒருவார்த்தையேனும் அவள் பிதற்றற் பிரலாபப் பிரத்தாப முழுவதிலும் பேசாமை சிறிது சிந்திக்கத்தக்கதாம். பர்த்தாவையும் பரதனையும் பிற பல தூறிநொந்து கூறுமவள் பிறர்போல இதனைத் தவறெனச் சுட்டாமையால், பரதன் அரசு பெறுவது அறமற்றதென்றவள் கருதவில்லையென்று கொள்ள லாகும். இவ்வுண்மையறியாத இலக்குவனுக் கும் ஏனையருக்கும் பரதன்அரசு பெறுவது தவறாகவே படுவது இயல்பாகலான் அவர்தம் உள்ளக்கிடையை அவ்வாறே வெளிப்படுத்திய வான்மீகர், உண்மையுணரவல்ல அறிவுடனாற்றல்சால் கோசலைவாயில் அனையசொல் லொன்றுங் கொடுத்திலர். பழைய சுல்க வரலாறறிந்த வளுளத்திற் பரதன் அரசெய்வது அறத் துறையன் றெனத் தோன்றாதா கலானும், முறையெனவே தெரியு மாகலானும் வான்மீக ருண்மைக் கோசலை தன் கோப தாபப் பிரலாபத்திலும் அதனை முறையன்றென மொழிந் தாளில்லை போலும். இவை பலவாற்றானும் பண்டையறத் துறையிற் கைகேயிக்குச் சுல்கசீதமான அயோத்தியரசு பரதனுக்கே பிறப்புரிமை; அதனை இராமன் பாலுய்க்க விரும்பிய மன்னவனும் அவன் கோப்பெருந் தேவியுமே தவறிழைக்க விரும்பினவர்; தந்தவ றுறுத்துஞ் சிந்தையராகையால், அவ்விரு வருக்கும் இடையூறு எழுமென்ற அச்சமும், பரதன்சார்பின ரறியாமல் இராமாபிடேகத்தை விரைவில் முடித்துவிட வேண்டுமென்ற வேட்கை வேகமும் கரைகடந்து கைம்மிகுந்தது; என காண்போம். பகுதி 7 : முடிந்ததுகடியா முதுமுறைவிரகாத் தன்னவா முடிக்கும் மன்னவன்முயற்சி சொல்லறந்தொலைந்து மகவாசையால் ஒருகால் மன்னவன் இராமனுக்கு அரசுதர மனங்கொண்டாலும், பரதனில்லாதபோது இராமனுக்கு அபிடேகம்பண்ணிவிட நினைத்தாலும், உரிமையற்ற இராகவனுக்கு அது நிலைப்பதில்லையாகவே அவ்வீண்முயற்சியிற் பிரவேசித்துத்தன்னைப் பாவம் அல்லது பழிக்கு இடமாக்கிக் கொள்வனோ வேந்தன்? என்ற வினா எழலாம். இவ்வினாவையெழுப்பி, இவ்வளவறியா தானல்லாத பார்த்திவன் செயத் துணிந்த இராமாபிடேகம் செம்மையற வுரிமை இராமன் பாலுண்மையை வலியுறுத்துமென எளிதிற்கூறி, அறத்துறைக்கு அளவாகும் பரதனும் இராமனும் விதந்து கூறி விளக்கிய வரலாற்றைப் புறக்கணிக்க விரைவாரும் சிலர் உளர். ஆற்றலும் அறிவும் ஏற்றம்பயக்கத் தங் காதற்றிரு மகனுக்கு ஆக்கமும் புகழும் ஆக்கமுயலும் கோசலையும் கோமானும் குறுகிய நோக்குடையரல்லர். ஆற்றல்சால் கோசலையோ விரியுஞ் சிந்தனையுடையள் ஏந்தலும் ஏற்பனவோர்ந்த தெண்ணிய முடிக்கும் விரகுடையான். இருவரும் நன்கு ஆழ்ந்து சூழ்ந்து எட்டநோக்கி ஆவன தேர்ந்து ஆற்றவல்லார். தசரதன் சுல்க அறச்சூளால் இராமன் அயோத்தி யரசுக்குரியனல்லன், என்பதை நன்கறிவார். தம் கான்முளையான இராகவன்பால் அனுராகம் மிகவுடையார். அவனுக்கு அரசுரிமையாக்கி வைக்க ஆவல் அளவிறந்து வளரும் உளமுடையார்; நடந்து முடிந்ததை நன்றெனக் கொள்ளும் ஆரியர் தொல்லறத் துறையிவரறிவார்.” முடிந்தபின்னதனைக் கடிந்திகப்பதில்லை அறமுறை சிறிது திறம்புவதேனும் முற்றுப் பெற்றதை முடிந்ததாக்கொள்வதே முறை, என்பது ஆரியர் அறநூல் விதியொன்றாகும். இன்றுவரை இவ்விதி இந்து சமுதாயத்தவர் வழக்குத்துறையில்1 வழக்காற்றில்2 இருந்து வருகிறது. இதையே ஆங்கில வழக்கறிஞர் (குயஉவரஅ ஏயடநவ) முடிந்தது முறை எனும் பெயரால் வாதத்துறையில் வழங்கி வருகின்றனர். இவ்விதியுணர்ந்த இறையவனும் இராமாபிடேகத்தை அரசுக் குரிமையுடைய பரதன் பக்கத்தவரால் இடையூ றெழுந்து தடைப்படுமுன் முடித்துவிட முயலுகின்றான். முடிந்தபின் அதனைக் கடிந்திட லருமையென்றறிவானாகலின், முடியுமுன்னர் அப்பரதன் பண்டையறவுரிமை யறிந்தார் வந்து ஆட்சேபித்திடில் இராமனுக்கு அரசு உதவாமலே போகும்; ஆட்சேபிக்க அவசியமும் அவாவும் உடையவர் அறிந்து வந்து தடுக்குமுன் இராமனுக்கு முடிசூடி முடிந்துவிட்டாற் பின் அதனைப் பேதிக்க யாரும் முயலார்; முடிந்த முடிசூட்டை முறையென நாட்டி நிறுத்துவது சுலபமாகும் என்று தெரிந்துள தசரதன் அவ்விதியை ஆதர வாக்கித் தன் விருப்பத்தை நிறைவேற்ற முயலுகின்றானென்பதை அவன் வாய்வந்த மாற்றத்தாலேயே வான்மீகர் விளக்கியுள்ளார்.3 பரதனையும் கேகயன் முதலிய பரதன்பாற் பரிவுடை யாரையும் பற்றி மட்டுமில்லை தயரதனுக்குண்டான பயம்; இராமனைப் பற்றியும் உளதாகும். இவன் பெருங்குணப் பெருமிதமுடையவன். அறத்தை மறத்தலும் துறத்தலும் அறியாச் சிந்தையன். அறக்கடவுளனைய பரதனியல்பைப் பாராட்டி அவன்பால் மதிப்பும் காதலும் மிகவுடையவன். தன்பால் அன்பாலேனும் தவறு நினைத்துழித் தம்பி இலக்குவனையும் தன்தாயையுமே தடுத்து, இடித்து, அறம் அறிவுறுத்தி நெறி நிறுத்த விரும்பும் நேர்மையும் திட்பமும் நிலைத்த சிந்தையன். பரதனோ தமயனைத் தந்தையினும் அதிகம் பாராட்டி அன்பு செய்பவன். இராமனுக்குரியதன்றென்று அவனால் அறமுறையிற் றெளிவிக்கப்பட்ட பிறகும், தமயனுக்குத் தருவதற்காவது பற்றியே தரணி தன்னுடைமை யானதற்கு மகிழ்ந்து அதை அவனுக்கு விரும்பிச் சமர்ப்பித்துவப்பவன். அதனால், பரதனைப்பற்றி மன்னவன் பெரிதும் அஞ்சக்காரணமில்லை. கைகேயியும் இராமனிடத்து அன்பும் தன்பாற் கற்பு நிறைகாதலும் உடையாளாகவே, அவளைப் பற்றியும் அரசனுக்கு அச்சம் அதிகம் வேண்டா. அரசு பரதனுரிமை யென்பதைச்சிறிதேனும் இராமன் அறிவனேல், பின் அதனை அவன் ஏற்கவொல்லான்; அவனையிணக்க யாராலும் ஆகாது. வைராக்கியமிகுந்த இராமன் குணமறிந்த தந்தை, அவனுக்குத் தன் தவறு வெளிப்பட்டுத் தனதெண்ணந் தடைப்படுமுன் அபிடேகத்தை முடித்துவிட அவாவுகின்றான். முடிந்தபின் இராமன் அதை அழிக்க முடியாமை கண்டு அடங்கியமைவன்; பரதன் அதைப்பெரிது முவப்பன். இறைமைக்கு உரிமைமேற்கொண்டிகலற்குரிய இவ்விருவரும் அமையவே, முடிந்தது முறை யெனும் அறமறியும் பரதன் பாங்கினரும் இராமன் முடிசூட்டை வெறுப்பினும் மறுக்க முயலார். தன்விருப்பம் இவ்வாறு நிறைவேறி, நிலையும் பெறுவ தாகும். பூர்த்தி யாகுமுன் பரதன்சார்பினர் அறிந்து தடுக்கநேரின், தன் முயற்சியனைத்தும் பாழாகும். உண்மை வெளிப்பட்டபின், பரதன் இசைவனேனும் இராமன் அரசேற்கச் சம்மதியான், பகிரங்கமாகத் தானும் சொல்லறந் துறக்கத் துணியுமாறில்லை. இவ்வுண்மையை ஊன்றியாராய்ந்து, விளைவும் பயனும் விரும்பிக் காலமும் இடமும் கருதி இராமாபிடேகத்தைத் தடுக்க வல்லாரறியாமல் வேகத்துடன் விரைவு பண்ணவும், சாமானியரால் ஒருகால் எனைத்தும் இடையே சிறுதடை நேரின் அதனை வலி கொண்டடக்கித் தன் விருப்பத்தைப் பூர்த்தி பண்ணவும், வேந்தன் கருதிய காரியமும் அதற்குரிய கருவி கருமங் களும் எண்ணித் துணிகின்றான். தடுக்குந் தகையாளரைச் சேய்மைய தாகிய கேகயத்தில் விலக்கி வைத்தும், பிறர் பரிவுடையார் இருப்பினும் அவருக்குத் துணையும் சார்பும் இல்லாதிருக்கத் தன் குடிகளொடு பழகிய இராமனுக்கு வலியும் சூழ்ச்சியும் வழங்கியும் தன்விருப்ப முட்டின்றி முடிய வழி யமைத்துக் கொள்கின்றான். தன்சபைக்குத் தனக்கு வேண்டிய வரை யழைப்பதிற் பலநாட்கழியப் பொறுத்தவன், சபையிற்றான் தன் விருப்பத்தை வெளியிட்டு அவர் சார்பும் துணையும் அறிந்தபிறகு சிறிதும் தாழத்தரியானாய், மறுநாளே யபிடேகத்தை முடிக்கத் துணியலானான். இவை பலவாற்றானும், மன்னவ னுளத்தில் தான் முற்றும் முறைசெய்யவில்லை யென்றுள துணுக்கமும், எனைத்தானும் தன்விருப்பத்தை முடிக்கக்கொண்ட துணிவும் வேகமும் ஒருங்குடைமை விசதமாமன்றோ. பகுதி 8 : கொற்றவன் உளக்கிடையும் கேகயர்கோமகள் அறத்துறையும் இவையுமன்றி இராமனுக்கு அரசு தருமுயற்சியில் மன்னன் மாசற்ற மனத்தனல்லன், என்பதை இன்னும் பலசெயலும் அவன் வாய்ச்சொல்லுமே விசதமாக்கும். பரதன்வருமுன் மூத்தமகனுக்கு விரைந்து முடிசூட்டி முடிக்கும் தன் பெருமுயற்சியைத் தடுக்க முன்வந்த மனைவியை வாய்கொண்டமட்டும் வசைதூறி வைகின்றான். வெகுளியும் விசனமும் கரைகடந்தலைக்க உளமுளையும் வேந்தன், தன் அறப்பெருந்தேவியை வாய்கயப்புற வைவ தோடமையாமல், புழுங்குமனப்புகைவாயாற் பழித்து வெறுத்துச் சபிக்கின்றான். இதுமட்டோ? எவ்வறங் கொன்றும் இறைமையாக்கம் இராமனை யெய்துவிக்கும் தன் துணி வொன்றே துறக்கொணாத் தன் உளக்கிடை, என்பதை வெகுளியால் வசமிழந்த வேந்தன் வாய்வெஞ் சொற்கள் வெளிப்படுத்தி நிற்கும். துணைவனது தொல்லைச் சூளறச் சொற்சோர்வு சுட்டலாவ தன்றென்று அதனை முற்றும் மறைத்து, கைகேயி தனக்கு அரசன் முன் தந்துளவரத்தை அன்று வழங்குமாறு வற்புறுத்துவ தாயினள். தன் பெருவிருப்பத்தைப் பாழாக்கும் அவள் குறிப்புணர்ந்த மன்னவன் தன்பால் அவள் கொண்டுள கற்பு மேம்படு காதல் மிகையை நன்கறிவனாதலான், முதலில் அவளைத் தன் அறமிறந்த ஆசைக்கிடை நில்லாது இணங்கி யொருப்படுமாறு பல நய வஞ்சநலம் பேசி அவளுறுதியழிக்க முயலுகின்றான். உண்மையிலூன்றிக் கற்பறங்காழ்த்த காதனிறையாற் கணவனை அறம்பிழையாது பேணத் துணிந்த பெருந்தகை யாள் உரந்தளராவுளத்தளாவது கண்டு, கையறவால் மனமாழ்கி யுரப்புகின்றான். வாய்மை பேணி வரம்தரல் தவிரொணாக் கடனென வற்புறுத்தும் மனையாளுக்கு, நீ நினைவுறுத்திய என் சொல்லறத்துறவைப் பொருட்படுத்தேன். எது பற்றியும் என் விருப்பத்தைக் கைவிடேன்,” என மன்னவன் வரம் மறுக்கின்றான். என் உயிரையேனும் விடுவேன். இராமனை விடுவேனா? விடேன்.” நீ கிளப்பின்றிச் சோர்ந்திருப்பாயையாயினும், கோபத்தால் அவிந்து போவையாயினும் விசனத்தால் நாசமுறுவை யாயினும், மற்று உனக்கு எதுநேரினும், எனக்கு அப்பிரியமாக இராமாபிடேகத்தை நிறுத்த நீ சொல்லுவதை நான் நடத்தவே மாட்டேன் என்று அவன் வாயால் அவன் மனக்கிடையை வான்மீகர் பகர்ந்து வைத்தார்.1 கைகேயி கோலிய வரக்கொடையை மறுக்க விரும்பியும் வழிகாணாது உளமறுகும் மன்னவன், வசிட்டமுனி வந்தபோது தன் விருப்பமும் விசனமும் கூறி, இராமனைப் புனைமாமகுடம் புனைவித்து, ஒன்றும் வனமென் றுன்னாவண்ணம் செய்து, என் உரையும் குன்றும் பழி பூணாமற் காவாய்”2 என்று அவனைத் தன் வேணவா முடித்து வைக்க வேண்டுகின்றான். இன்னும் கைகேயிக்குச் சம்வாத முடிவில் தான் சம்மதித்து வரமிரண்டும் தந்த பின்னரும், இராமனைத் தான் அழைத்துவரச் செய்து அவன் வந்து விடை கேட்டவனிடம் தசரதன் கூறுவது இது: இராகவா! நான் கைகேயிக்கு வரம்கொடுத்து வஞ்சிக்கப்பட்டேன். அதனால் நீ என்சொல்லை மறுத்து அயோத்திக்கு அரசனாகி என்னை மகிழ்விப்பாய்”3 என்று தன் உளக்கிடையை விளக்குகின்றான். இவைகளினால் முன் இவன், கண்ணே வேண்டுமென்னினு மீயக் கடவேன், என் உண்ணேராவி வேண்டினும் இன்றே உன தன்றோ?4 என்று தேவிக்கு உரைத்ததெல்லாம் உளத்துறை யாப் பசப்புரை யென்பது தெளிவாகும். சொற்சோராது அறம்பேணும் தூய்மனத் துணிவுடையனேல், முன் சொன்ன சுல்கச்சூளைச் சூறையிடத் துணிந்து சூழான்; தன்னுயிர் காத்த தலைவிக்குத் தானே வழங்கியது வரம்தர மறுத்திடான். பின்னும் மனைவியிடம் தானே வழங்கிய வரம் தர மறுத்திடான். பின்னும் மனைவியிடம் மண்ணே கொள்நீ”, ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் எனப் பரதனுக்கு அரசுதருவதாய் உறுதி சொன்னதையும் வெற்றுரையாக்கி, வேந்தன் இறுதியில் இராமனை முடிசூடிக் கொள்ளத் தூண்டவும், வசிட்டனிடம் இராமனுக்கு எப்படியும் முடிசூட்டுவிக்க வேண்டவும் விரும்பானன்றோ? இராமன்பாற் கழிபெருங் காதலால் எண்ணிச்சூழ்ந்த விருப்ப வினைதான் எதிர்பாராத வண்ணம் தடைப்படவே கையறவுற்றுச் சிந்தையொடு செய்கையும் திகைத்த தசரதன் மனநிலையை, பரிவுடைய கம்பர் வான்மீகரைப் போல் வெச்சென வெளிப்படுத்தாமற் சிறிது திருத்தித் திரித்துக் கூறியுள்ளார். பரதனுக்காக மண்ணே கொள் நீ, மற்றைய தொன்றும் மறவென்று அவளைத் தன்பால் ஒருவரத்தை மட்டும் கொண்டு, இராமனை வனம்போக்குவிக்கும் மற்றொரு வரத்தை வற்புறுத்தி வாங்காதிருக்கும்படி வரமிருந்த மன்னவன் முடிவில் இராமனுக்கே முடிசூட்டு விக்க முனிவனிடம் வேண்டுவதால், அவன் வரந்துறவா வாய்மை யின்மையையும் அறந்திறம்பு மனத்தவாவின் வன்மையையும் ஒருவாறறிய லாகும். இன்னும், இவன் விதுப்பும் வெட்கமும் மாறுகொண்டலைக்கத் தடுமாறுளத்தால் ஒன்றையொன் றொவ்வாது முன்பின் முரண்பட மொழி கின்ற மாற்றங்களை வான்மீகர் மறையாமற் றருகின்றார். தன் பெரு விருப்பத்தைத் தடுக்க வந்து வரம் கேட்ட கைகேயிக்கு முதலில் வெகுளியும் துணிவும்காட்டி வெஞ்சொல்லால் மறுப்பதானான். என்னுயிர் விடினும், இராமனை நான் விடேன்... உன்வேண்டுகோளை நடத்த மாட்டேன்”. என்று முதலில் அறவே வரம் மறுத்தான். அவன் மறுதலை ஒருதலையன்றென மன்றாடிய மனைவியை வெகுண்டும் பயனில்லையென்று கண்ட மன்னன், பின் அவளைப் புகழ்ந்து நயந்து நலம் பாராட்டி மனங்குழைவித்து, உன் காதலனாகிய எனக்கும் உலகத்திற்கும் பரதனுக்குமே பிரியமாக நடக்க விரும்புவையாகிற் பரதனுக்குப் பட்டம் வேண்டுவதை விடுவையாக; வரம் இரண்டுமே கேளாதொழிவையாக. அன்றி, வரமே வேண்டினும் உன் வரத்தின்படி நாட்டை நீ வாங்கிக்கொண்டு, அதை நீயே இராமனுக்குக் கொடுத்துக் கீர்த்தியடைவை ... நீ இதைச் செய்தால் எனக்கும் இராமனுக்கும் மற்றெல்லோருக்கும் பரதனுக்குமே பிரியமாயிருக்கும். ஆதலால் அப்படியே செய்வாயாக,” 1 என்று அவளைத் தன்விருப்பத்துக்கு இணக்க முயலு கின்றான்., அதுவும் பலிக்காதது கண்டபின் அறக்கொடு மொழிகளால் அவளையிழித்துப் பழிக்கின்றான். மறுக்கொணாமையால் இறுதியில் வரத்தை வெறுப்போடு தருபவன், வாங்குபவளை வாய் நாற வைகின்றான். அப்போதும் தன் வாய்தரும் வரத்தைத் தன் கருத்தில் மறுத்திடுங் குறிப்பு, அவனை யறியாதெழும் அவன் வாய்ச்சொற்களால் வெளிப்படுகின்றது. காடேக நான் சொன்னதாகக் கேட்ட மாத்திரத்தில் இராமன் மறாது உடன்படுவன். என் சொல்லை உல்லங்கனம் பண்ணி வனம் போகா திருப்பானாகில் எனக்கு அது மிகவும் பிரியமாகும். ஆனால் அவன் அப்படிச் செய்யானே? தான் கபடமறியாதவனாகவே, என்னையும் தன்னைப்போற் களங்கமற்றவனென்றே கருதுவான். அதனால் நான் சொன்ன வார்த்தையே என் கருத்தைக் குறிப்பதாய் எண்ணுவான். வாய்ச்சொல்லுக்கு மாறாக என் மனக்கருத்து வேறென்று தெரியமாட்டான். அவன் வனம் போகாமையே எனக்கு உட்கருத்து. அதுவே என்விருப்பம் என்பது அறிகிலான். அதனால் மனதின்றி மனைவிக்கு வரமெனத் தரும் எனது சொல்லை நிசமென்று நம்பி அவன் வனமேகுவான்,”1 என்று தசரதன் அன்று தன் பொய்ம்மையுள்ளம் புலப்படப் புலம்புகின்றான். மறுகு சிந்தையன் மறுபடியும் மனைவியிடம் மன்றாடி மறம் விரும்பித் திண்டாடுகின்றான். தன் உறுமலும் பசப்பும் உதவாமை கண்ட வேந்தன், தன் சொல்லறம் பேண வற்புறுத்துவாளை வாதத்தால் மடக்கி வசப்படுத்தியடக்க எண்ணிச் சூழ்கின்றான். உனக்குச் சொன்ன வரத்தை முன்னிட்டுப் பரதனுக்கு அரசு தருவதாயின், இராமாபிடேகத்துக்கு நான் அழைத்து வந்திருக்கும் மன்னரும் மற்றோரும் என்ன எண்ணுவர் என்று உன்னிப்பார். ‘இராமனுக்கு நாளைப் பட்டாபிடேகம் நடத்தப்போகிறேன்’ என்று நான் சபையிற் சொன்ன வார்த்தை பொய்யாகி விடுமல்லவா?2 என்று கைகேயிக்கு நியாயம் எடுத்துத் தொடுக்கின்றான். என் சொற்சோராமலிருக்க விரும்புவையேல். இராமாபிடேகத்தைப் பூர்த்தி பண்ணிவைப்பதே நல்லவழி என்று தன் முன்னறச்சூளை அழிப்பதற்கு, தான் ஆழ்ந்து சூழ்ந்து கூட்டுவித்த அவைக்களத்தே வெளிப்படுத்திய தன் மறவிருப்பச் சொல்லை மாறு காட்டலாயினான். வஞ்சநெஞ்சன் ஏதுவாதத்துக் கிடையாமற் பின்னைய வெறுஞ் சொல்லினும் முன்னைய அறச்சூளே பேணல் கடனும் நெறியுமாம் என்று தெளித்த தேவியை வெறுத்துப் பழித்து வெம்பிச் சபிக்கின்றான். உன் கருத்து ஈடேறப்பெறுவாயாக; இராமன் காடேக நான் இறப்பேன்; பிறகு நீ விதவையாகி உன்மகனொடு நாடாள்வாயாக;... கோசலை சுமித்திரை களோடு என்னையும் என்புதல்வரான இராமன் இலக்குவன் சத்துருக்கனாய மூவரையும் அவலத்திற் றள்ளி நீ சுகமாயிருப்பாயாக; பரதன் எங்களை விட்டு உன்னுடன் கூடித் தேசத்தையும் சுற்றத் தாரையும் மற்றெல்லோரை யும் கொன்று சந்தோசமாக அரசியற் றட்டும்”1 மந்திரபூர்வமாக மணவறை யிற் பிடித்த உன்கரத்தை நிராகரிக்கிறேன்; இனி எனக்கு நீ மனைவி யில்லை; நான் உன்கணவனுமல்லன்; எனக்குப் பிறந்த உன் மகனையும் நிராகரிக்கிறேன்; நீயும் உன் புதல்வனும் எனக்கு ஈமக் கடனெதுவும் இறையளவும் இயற்றொணாது,2 வசை வெள்ளம் நீந்தாய் நீந்தாய் நின்மகனோடு நெடிதென்றான்;3 சொன்னேன் இன்றே இவள் என் தாரமல்லள், துறந்தேன் மன்னேயாவான் வரும் அப் பரதன்றனையும் மகனென் றுன்னேன்; முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு”4 என்றான். யாது செய்தும் என்ன சொல்லியும் தன்விருப்பம் ஈடேறாமற் றடைப்பட்டதறிந்த தசரதன், வெம்பிக் கனன்று அழலும் மனத்தான், இக்கடும் பழிச் சுடுசொற்களால் தன் வெறுப்பையும் வெகுளியையும் வெளிப்படுத்தலானான். இராமாபிடேகம் தடைப்படுமாயின் நான் பிழையேன்”.5 என்று அவன் வாய்விட்ட சொற்கள், இராமனிடத்து மன்னவன் வைத்துள்ள பெருங் காதலையும் அவனுக்கு முடி சூட்டுவதிலுள்ள பேராதரத்தையும் தெளிவாக்கும். தன் ஆசைக்கு இடையிட்ட மனைவியை வெறுப்பது இயல்பாமேனும், குறையா நிறையுடைக் கோப்பெருந்தேவியை மனைவியன்றென மணவறம் மறுப்பதேன்? தருமத்தில் இராமனைவிட மேலானவன் பரதன், தரினும் அரசைத் தான்கொள்ள இசையான் என்று தானே நன்கறிந்து புகழ்ந்த பாவமற்ற பரதனையும் மாயாப் பழிக்கு ஆட்படுத்தித் தன் மகனன்று எனும் புன்மொழி புகல்வதேன்? குற்றமில் மனத்துக் கோதில் குணத்தவர் கோபம், என்றும் மாயா வடுத்தரும் வசை மொழிவழிப்புகாது. தவறுடைய தன் பெரு விருப்பம் தடுக்கப் படவே, தன் தவறு நினைந்து வெட்கமும் வேட்கையும் வெதுப்ப உளையும் தசரதனுள்ளக்கனல் அவனறிவைக் கருக்கிப் புன்புரைச் சொற்பொறி பொதுளிய புகை தருவதாயிற்று. தன் நெஞ்சறியச் சுல்கச் சூளறம் பொய்த்தான். பொய்த்த பின் தன்னெஞ்சே தன்னைச் சுடுவதாயிற்று. பொய்யுளம் புழுங்கத் தம் புரைபுகை வாயால் மெய் நிறுவ முயல்வாரை வைது, தங்குறை மறைக்கப் புகல் தேடுவது அறனஞ்சா வஞ்ச நெஞ்சரியல்பாம். தன் காதற்கிழவனை அறவழி நிறுத்துங் கற்புக் கடனாற்றுவதையே கருதி, எனைத்தானும் அவன் சொற் சோர்வைச் சுட்டாமற் கணவன் வாய்மையையும் காக்க விரும்பித் தனக்கு அவன் தந்துள வரத்தை வியாச்யமாக்கி அவன் நெஞ்சறி புரைவிருப்பை நிறைவேற்ற விடாது தடுக்கும் தெய்வக் கற்பினளான கைகேயி தூயசிந்தையின் திறத்தை மேலே விரித்துரைத்துள்ளேன். இதையே வான்மீகரும். இராமன்வாயா லினிது விளக்கி யிருக்கின்றார். கைகேயியின் விவாக காலத்திற் றசரதன் செய்த சுல்கப்ரதிக்ஞையைப் பரதனுக்குச் சொல்லிய பின், இந்தக் காரணத்தால் நமது தகப்பனாரை மெய்யனாக்கக் கருதிய கீர்த்தி வாய்ந்த உன் தாயார் இரண்டு வரங்களைக் கேட்டுக் கொண்டார்,”1 எனத் தன் சிற்றன்னையின் தோமில் தூமனப் பாங்கை இராமனே எடுத்துரைத்துத் தம்பியைத் தெருட்டு கின்றான். இவ் வுண்மையைத் தமயன்வாய் கேட்டறியுமுன் தன் தாயைத் தன்பாற்காதல் காரணமாகத் தவறு நயந்து செய்தவளாக் கருதி, அவளைப் பழி வளர்த்த செவிலி எனப் பலபட நொந்து, அவள் பழியும் போக்கியருளுமாறு இரந்த பரதன் உண்மையுணர்ந்த பிறகு அவளை யாண்டும் பழித்திலாமையும் உய்த்துணரற் பாற்றாம். இதுகாறும் சொல்லிப்போந்தவற்றால், தீவினை நயப்புறுதல் செய்தவன் தசரதனேயாமென்பதும், அவன் சொற்சோர்ந்து அறம் துறவாது அவன் வாய்மையைப் பேணி நிறுத்தும் கற்பறக் காதலாற் கைகேயி மாயாப் பெரும்பழி விரும்பியேற்றுக் கணவன் புகழ் நிறுவ முன்வந்தாளென்பதும் ஐயமற விளக்கமாகுமன்றோ? பகுதி:9 கைகேயி இராமனைக் காடுகடத்தக் கருதக் காரணம் இனித் தசரதன் சுல்கச்சூள் நிறுவ முன் வருபவள், பரதனுக்குப் பட்டத்தை மட்டும் கேட்டு வாங்கினாற் போதுமே? கணவன் கழிபெருங் காதலுக்குரிய எழிலுறும் இராமன் பூழிவெங்கானம் புகுமாறு விரும்புவது அவள் வெறுங்கொடுமையையன்றிப் பிறிது குறிப்பதுண்டோ? என்பார் சிந்திக்கத் தகுவனவும் சிலவுள. கைகேயி இராகவனிடத்து உண்மைக் காதல் மிகவுடையாள் என்பதைத் தசரதன் இராமன் இவர்கள் வாய்ச் சொற் களாலும், கைகேயி துளக்கமற விளக்கும் தன் உள்ளக்கிடையாலும், இரு பெரும் புலவரும் தரும் கவித்துறையாலும் முன்னரே கண்டுளோம். பட்டம் இராமனுக்கு ஆவதில் எல்லையும் ஒப்பும் அற ஒல்லை மகிழ்ச்சியுற்ற தேவி, தன் மகனலவிருப்பாலேனும் இராகவன்பால் வெறுப்பாலேனு மன்று கணவன் சொல்லறம் நிறுவும்தன் காதனிறை கற்புமுறை கருதியே இராமன் அரியாசனம் ஏறுவதை நிறுத்தத் துணிந்தது என்பதையும் செவ்வனே தெரிந்துளோம். ஆகவே தூமொழிமடமானான மன்னன் மனைவி, இறைமையாக்கம் ஏற்கொணாத, இராமனை நாடகற்ற எண்ணி, நல்லருள் துறக்க ஏய்ந்த தகவுடைப் பிறிது காரணம் இருக்க வேண்டும். அதனைப் பற்றற்ற நடுநிலைநின்று சிறிது ஆராயமுயல்வோம். அளியறாத தூயசிந்தையள் அன்று இராமனைச் சேய்த்தாயவனஞ் செறிக்க எண்ணிய காரணம் இருதிறப்படு மென்று உணரலாகும்: அறத்துறை நியதியும் அரசநீதியுமே தேவியை அத்துணிவுகொள்ளத் தூண்டியிருக்க வேண்டும். இராமன்பால் வைத்த பேராதரப்பிணிப்புண்டு அறமிறந்த வேந்தன், மீண்டும் தன் கழிபெருங் காதல் காரணமாக அல்லவையாற்றா வாறு காத்து, அவன் மனத்தைப் புனித நிலையில் நிறுவக் கற்புயர் கைகேயி கருதுவது இயல்பாம். துணைவன் தன் சொல்லறம் வழுவித் தன்நிலை நழுவக் காரணம், அவன் இராமனிடம் வைத்த அளவிகந்த அன்பு மிகையென அறிந்தாள். அமிழ்தும் அளவிறந்தால் நஞ்சாமாதலின், அரசனை அற நெகிழ்வித்தலைக்கும் அளப்பரும் மகவாசையைக் குறைத்து, மனத்தூய்மை யேற்றி, அவா அகற்றி, அறம் ஆற்றச் செய்விப்பதற்குச் சில காலமேனும் இராமனினின்றும் அவனைப் பிரித்து வைத்தல் இன்றியமை யாததெனக் கண்டாள். அத்தநயன் தன்னருகிலுள்ள வரை தசரதனுள்ள முழுதும் அவனுடைமையாகி நிற்கும். அதனால் அறநேமத் துறையமர்ந்து, அவன் மனம் தவாத்தருமத்தில்நிலைத் திறுகத் தடைப்படும். ஆகவே இராம நேசபாசத்தை நெகிழ்வித்தாலன்றி இறைவனை அறநெறியில் நிறுவ இயலாதாகும். தன் உளம் விழுங்கி, தவாநிறைக் காதல் வழிப்பாட்டுக்குத் தனியுரிய தசரதன் கடவுட்படிவம் தருமநிலை தவிர்ந்து மாசூரக்கண்ட மெல்லியலாள், அல்லாந்து, நெஞ்சழிந்து அவலத்தால் மாழ்கி, மனமறுகி, நைந்து நொந்ததை முன்குறித்துள்ளேன். தன்னகமகலா மன்னனை எனைத்தானும் மாசகற்றிப் புனிதனாக்குவதையே தெய்வக் கற்புடைய தேவியின் ஆவி அவாவுமென்பதில் விந்தையும் சந்தேகமும் இல்லையன்றே. அதனாற் றன் கணவன் கருத்து அறத்துறையில் நிலைப்பதற்கு இடையூறாய் நிற்கும் இராமனைத் தசரதனைப் போலவே தானும் அன்பு செய்பவளாயினும், தலைவன் நலம் விரும்பித் தணக்கத் துணிவாள். அவன் பிரிவால் அரசன் பெரிதும் பரிதாபப்படுவனென்று அறிவாள். தநயன்காதல் காரணமாகத் தவறு வந்த தலைவன் அலப்படுவனென்று அஞ்சி வாளா விருப்பின் வேந்தன் மிகைவிழைவின் விபரீத விளைவு முளையிற் கிள்ளா முதிர்முள் மரம் போற்களைகையு மயலும் காழ்த்தபின் அடர்க்கு மாகலின், அவன் பிழைவிழைவிற் கைகேயி கண்ணோட்டம் கடியலானாள். மகன் பிரிவாற்றா மன்னவன் வருத்தம், தவறுடையவனிடைத் தகவுறுதவ மாய், முன் துனிவிளைப்பினும் பின் பயன் பெரிதுதவும் பெற்றியை நினைந்து அதிற்றுணிவு கொண்டாள். மகனிடைக்காதல் மிகுவதன் பயனாத் தகுதி மறந்து தன் அறமிறந்த தன் தலைவன் மனத்தைச் சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பாலுய்ப்ப தறிவு எனக்கண்ட கைகேயி, அவனை அறவழிப்படுத்தத் தான் செயற் பாலதோர்ந்து தேர்ந்தாள். தான் அறமாக்கண்டதனை முட்டின்றி முடிப்பதில், “நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும் கடிநீரளாகையால், கைகேயி காண்டொறும் காதலன் கருத்தழியக் காரணமாய் நின்ற இராமனைத் தன்கணவன் காணாதகற்றத் துணிந்து நின்றாள். ஊழிபெயரினும் தான்பெயராள்”, சான்றாண்மைக்கு ஆழியெனப்படுவாள் ஆய பெருமகள், வேந்தன்பாற்றான்கொளற்குரிய வரமிரண்டில், ஒன்றாற் பிறந்துரிய பரதனுக்கு அரசும், மற்றதனான் மன்னனுக்கு அவன் கழிபெருங்காதற் றிருமகனின் பிரிவும் அறங்கருதி வேண்டுந்திறந்துரவு கொண்டாள். இராமனைப் பிரிக்கவேண்டினும், கானகமுய்க்கக் கைகேயி கருது வானேன்? என்பார்க்கும் விடைகாண்போம். தசரதனாணை செல்லுமிடத்து எங்கு அவன் இருப்பினும், தசரதன் தானறியாமல் தநயனைத் தருவிக்கவும் தருமங்கருதாமல் அவனை அயோத்திக்கு அரசனாக்கவும் வினைபல விழைந்து சூழ்வான், தசரதன் சொல்லறச் சோர்வும் கள்ளங்கபட உள்ளக்கரவும் கண்கூடாக்கண்ட பின்னர், தலைவி அவனை நம்பாமை தவறாமா? கைகேயி தான் பயந்தமகனாக்கொண்டு தன்கையிற் றானே வளர்த்த இராமனின் குணம் நன்கறிவாள். கோதுடைய குரிசில் மனமும் வினையும் மாசுநீங்கித் தூய்மைபெற்று அறத்துறையில் நிலைத்திறுக வேண்டுவதோரவதி இராமனை விரதமேற்கொண்டு வனம் வசிக்க வகையறிந்து வழிப்படுத்திற் பின் அவனைப் பேதித்து விரதம் விடச் செய்ய வல்லார் உலகில் இல்லையென்றும். இராமனைப் பிரிந்து நாளடைவிற் சபலம் நீங்கித் திருந்திய தசரதன் மனம் அறத்துறையில் நிலைப்பதாகு மென்றும் தெரிவாள். கொற்றவனை அதுபற்றி மற்றவரம் இதுவாக வழங்கக் கேட்டாள். அவ்வாறு சம்மதித்து வரங்கொடுத்த பின்னும், தசரதனும் கோசலையும் இராமனை வனம்போக வேண்டா மற்றடுத்தல் இருத்த முயல்வதும், அறம் துறவாப் பெருந்திறலான இராமன் அவர்விருப்பத்தை மறுத்து அறத் துறையறிவுறுத்தித் தான்குறித்தபடி வனம் வசிக்கும் விரதமேற் கொண்டொழுகுவதும், கைகேயியின் உரவுணர்ச்சியை உறுதிப் படுத்திநிற்கும். இவ் விமரிசைகளைக் கீழே விரித்துள்ளபடியால் ஈண்டும் விரியாது விடுக்கின்றேன். இனி, இவ்வறத்துறைமுறையேயுமன்றி, அரசியலவசியமும் இராமனை வனம்போக்கக் கைகேயிக்குக் காரணம் காட்டும், இதனை முதலிற் கூனியே அவளுக்குக் குறிக்கலாயினள். இராமன் பதினான்கு வருடம் ஆரண்யம் போய்விடுவனாகில், பிரசைகளனைவரும் பரதனிடம் பற்றுள்ளவர்களாகி விடுவார்கள். அதன்பின் பரதனை இந்த இராச்யத்திலிருந்து ஒருவராலும் அசைக்க முடியாது”1 என்று கோப்பெருந்தேவிக்குக் கூனி இவ்விறைமையியல வசியத்தை ஞாபகப் படுத்திக் கூறிவைத்ததாக வான்மீகர் விதந்தோதியுள்ளார். இவ்வரசியலறத் துறையும். ஈண்டு அதன் பயன்முறையும் சிறிது ஆராய்வாம். குறிக்கப்பட்ட இராமாபிடேகம் நிறுத்தப்படப்போ கின்றது. அவ்வபிடேகம் பரதனுக்குச் செய்யத் துணியப்படு கின்றது. இவ்வாக்கமாறு பாட்டுக்கு முழுமுதற்காரணமாகும் சுல்கச்சூள் வரலாறு முற்றும் மறையினும் ஓம்பி மறைக்கப்பட வேண்டுமெனத் தன் கணவன் நலங்கருதும் தெய்வக் கற்பினாள் தீர்மானித்துவிடுகின்றாள். இவ்வுண்மை யுணராத கிளைஞரும் குடிகளும் என்ன கருதுவர்? கேகயர்க்கிறை திருமகள் வரன் முறை திறம்பித் தன்மகனலம்விரும்பி இறைமையாக்கம் பரதனுக்காக்க வலிந்து அதையபகரித்து அவனுக்கு உபகரிப்பதாகவே அனைவரும் எண்ணநேருமன்றோ? அவ்வா றெண்ணின் விளைவு என்னாம்? தங்கள் விசேடமதிப்பிற்கும் அன்பிற்கும் பாத்திரமாகாத ஒருகோமகனுரிமையை அவனுக்கில்லாது பறித்துஉரிமையற்ற மற்றோர்மகன் வலிதிற் கொண்டாலே குடிகள் அதை வெறுப்பது இயல்பாகும். நொதுமல் நிலையுடைய குடிகளே வெறுப்பராயின், இராமனுக்கு உற்ற சுற்றத்தினரும் நண்பினரும் அவனபிடேகத்தை நிறுத்தி அதைப் பரதனுக்குப் பண்ணத்துணிந்ததை எண்ணி மனம் புண்ணாகிக் கவலாதொழிவரோ? இது நிற்க; இராமனோ இளமையும் எழிலும் இன்புறுத்தும் பிறநலம் பலவும் படைத்த பருவத்திருமகன். தசரதன் தன் காதற்சூழ்ச்சிக்குத் துணைகருதி இவனைத் தன்படைகளும் குடிகளும் பழகி நயக்கும்படி பரதனில்லாதபோது அரசியற்றுறைபுகுத்தி அணிமையாலும் நெருக்கத்தாலும் யாவரும் நேசிக்கச்செய்துள்ளான். பரதனோ பாட்டனூரிற் பலகாலும் உறைவதால் அயோத்தியாரின் அன்பு வளர்க்க அவகாசமில்லாத வனானான். அதனோடு மூத்தவனுக் குரிய அரசாங்கத்தை முறைமையிகந்து பறிப்பவனாகக் கருதவும் படுவான். இயலுரிமையும் அயற்றுணையுமுடையனாகக் கருதப்படும் இராமன் கைகேயி கொடுமையால் உரிமை பறிக்கப்படுவதாயும், வரன்முறை மரபழித்து உரிமையும் சார்பும் இல்லாத பரதன் அரசைவலிதிற் கொள்வதாயும் ஒக்கலும் பக்கலும் உறவினரும் ஊராரும் கருதுங்கால், இராமன் நட்பினர் மனம்புழுங்கிப் பரதனழிவு சூழாதொழியார். போதிய நியாயம் சொல்லாமல், புகையும் பகையவித்தல் ஒல்லாதாம். தந்தையைக் கொன்று பரதனுக்குப் பரிந்து வரும் பலரையும் பொருதழித்துத் தமயனுக்குத் தானே முடிசூட்டப் போவதாய்க் கூசாது பேசிய இலக்குவன் போர்முழக்கம் அறிந்த பின்னும், பரதன் முடிசூட்டு இடையூறின்றி நிறைவேறுமென்று எண்ண நியாயமுண்டோ? நட்பினர் வெகுண்டெழுந்தால் உண்மை யுணராத ஊரவர் பெரும்பாலும் இராமன் சார்பினரைச்சேர்ந்து படைகோலுவது இயல்பாமன்றோ? பரதனாட்சிக்கு மாறாக அவ்வாறு ஊறும் பகைமைப் படைக்கு விதேகநாட்டுச் சேனையும் துணையாகும். ஏனெனில் சனகனும் கேகயனும் சன்மசத்துருக்கள். காதலுன் பெருங் கணவனையஞ்சி, அக்கனிவாய்ச் சீதைதாதை உன்றாதையைத்தெறுகிலன், இராமன் மாதுலன் அவன்”1 என்றார் கம்பரும். முன்னரே குலப்பகை பூண்டுள்ள மிதிலை மன்னன் தன் மருகனுக்கில்லாது அரசைக் கேகயன்பேரன் அடைவதாயும், அதுபற்றி இராமன்சார்பினர் மாறுகொண்டு மலையப் போவதாயும் அறிவானாயின், அவர்க்கு அவன் அவசியம் படைத் துணையனுப்பத் தாழானன்றோ? இன்னும் தொல்லைச் சுல்கச்சூளைச் சொல்லாமல் பிறப்பால் இராமனே இறைமைக்குரியனென யாவரும் எண்ணும்படி செய்வித்த தோடும் அமையாமல் அவனுக்குத் துணையும் பெருக்கச் சூழ்ந்து வினைமுடித்தமன்னனே ஊரிலில்லாத பரதன் பக்கத்தவர் யாரேனும் பண்டை வரலாறறிந்து தடுப்பிற் கலாம்விளையுமென்று அஞ்சி, இராமனைப் படையுடை நட்பினர் புடைசூழ்ந்து காத்தல் கடன் என விரும்பிப் பணித்ததுணரும் நாம், கைகேயி அரசன்பால் வரம்கேட்டு வஞ்சித்து உடைமை பறிக்கப்பரிபவப் படுபவனாகப் பலராலுங் கருதப்படும் இராமன்பாற் பரிவுடையார் பகையஞ்சி அது தகையும் வழிதேடுவது இயலன் றென்பேமோ? கொள்ளான் நின்சேய் இவ்வரசு; அன்னான் கொண்டாலும் நள்ளாது இந்த நானிலம்”2 என்று நாட்டவர் பரதனாட்சியை ஏற்க மாட்டாமையை மன்னவனே மனைவிக்கு வற்புறுத்துகின்றான். பரதனாட்சி யைக் கொள்ளாது உலகம் என வசிட்டனும் அதனையே வலியுறுத்தி நின்றான். நின் மெய்ம்முறை நீத்தநெஞ்சம் மையிற்கரியாளெதிர் நின்னை நன்மௌலி சூட்டல் . . . . கருதித் தடைசெய்குநர் தேவரேனும் . . சுடுவான் துணிந்தேன்”3 என்று இலக்குவன் வாயால் இராமன் நட்பினர் சீற்றமும் துணிவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னையும் இராமனையும் இலக்குவனையும் விட்டுப் பரதன் உன்னுடன் கூடி, நகரையும் நாட்டையும் பந்துக்களையும் மற்ற அனைவரையும் கொன்றுவிட்டுச் சந்தோசமாக அரசு செய்யட்டும்”1 என்று தசரதன்வாயிலும், வையமையல் தோன்றாநெறிவாழ் துணைத் தம்பியை (பரதனை)ப் போர் தொலைத்தோ”2 என்று இராமன் வாயிலும், இராமன் வனத்தகலப் பகையற்றதான நாட்டை நீ அடையலுற்றாய்”3 எனப் பரதனிடம் பேசும் கோசலைவாயிலும் எழும் வாக்கியங்களின் குறிப்பறிய வேண்டும். பரதன் முடிசூட இராமன் அண்மையிலிருப்பின் போர் விளையும் என்பது இவற்றாற் போதருமன்றோ? ஒக்கலும் பக்கலும் பரதன் முடி சூடலைப் பொறாது மலையும். அனைவரையும் பொரு தழித்தாலன்றிப் பரதனுக்கு ஆட்சி அமைவதன்றாமென விதந்து கூறப்பட் டுள்ள உண்மையை மறக்கொணாது. இவ்வாறு தான் தடுத்து இராமா பிடேகம் நிறுத்தப்படுவதால் விளையும் கலகமும் கேடும் கைகேயி விரும்புவதன்றே. அத்தீமை விளையாது காத்துப் பரதன் பிறப்புரிமையான அரசாட்சியை நிலை பெறநிறுத்தநினைக்கும் தேவி, இவ்விபரீத விளைவனைத்தும் இராமனை நாடகற்றினன்றித் தடுப்பரி தென நினைப்பது இயல்பாமன்றோ? இராமனை முன்னிட்டுப் பகையாவார் பலரும் இராமன் இல்வழித் தண்டெடார். அவன் அணித்திருப்பின் அவன் சார்பினர் ஊக்கத்தோடு உறுபகைக்கு இறுதிகாண்பர். முளைக்கும் பகை துணைகொண்டு தழையுங் கால், கடும்போரும் கொடுங்கேடும் நாட்டுக்கும் நாட்டவருக்கும் உண்டாம். அதைத் தடுப்பதற்கு ஒன்று இராமனே முடிசூட வேண்டும்; அன்றேல் உண்மையை வெளிப்படுத்தித் தீரவேண்டிவரும். இவ்விரு முடிபும் கைகேயிக்கு உகந்ததில்லை, இராமாபிடேகத்தால் இறைவன் அறம் பொய்த்து அழியநேரும்; உண்மை வெளிப்பாட்டால் அவன் புகழ் பொன்றிப் பழி தழைவதாகும். அவனறமும் புகழும் பேணிப் பாவமும் பழியும் விலக்க விரும்பியே உண்மையை அறவே மறைத்து வரத்தை வற்புறுத்தி அறம் நிறுவத்துணிந்த தூயகற்பினாளுக்கு, இவ்விருமுடிவும் பொறுமையுடன் கருதத்தகுவதாமோ? கணவன் பழியஞ்சி உண்மையை ஒளிக்கவும் தீவிளைவை வெறுத்து அஞ்சி வெம்போர் விலக்கவும் துணிந்த தேவி, இராமனைச் சிலகாலம் சேட்படுத்துவதன்றி நாதனறத் தொடு நாட்டின் நலம் ஓம்பப் பிறிதுவழி காணாமல் அதைத் துணிகின்றாள். துணிந்தபின் தன் கருமம் முடிக்க விரை கின்றாள். இராமன் ஊரகலத் தாழுமாயின் ஒருவேளை பரதனே மீளநேரும், பரதன் தமயனிடத்தில் பக்தியுடையவன், அவன் வரும்வரையில் இராமன் இங்கிருப்பானாயின் இவனை அவன் நாடகலவொட்டான். அப்பொழுது எண்ணித் துணிந்த கருமம் சபலமாகாது வீண்போவதுடன் விலக்கவிரும்பிய தீமைகளும் விளையலாகும் என்று எண்ணினவளாய், இராமனை நீ வனமேகத்தாழ்ப்பது உசிதமன்றெனத் தோன்றுவதால் உடனே போக வேண்டும்”1 எனத் தூண்டுவாளாயினள். இராமனிலும் நிறைகுணத்தவனாய பரதன் அற மனைத்தும் நிரம் பினானாகையால் இடையூறின்றி முடிசூடப் பெறுவனாகில், அவன் தண்ணளியாலும் செங்கோன் முறை யாலும் அவனாட்சி நிலையினைப் பெறுவதாகும். நிலைத்தபின் தீவிளைவு யாண்டும் யாருக்கும் இலதாகும். பரதன் அரசுக்கு இராமன் பகையாகான். பிறர் தூண்டுதலும் வேண்டுதலுமின்றி என் தம்பியாகிய பரதனுக்கு நாட்டை யேனும் சகல சம்பத்தையு மேனும் என் பிராணனையேனும் சீதையையேனும் சம்பூர்ண தோஷத்துடன் கொடுப்பேன். அப்படியிருக்கத் தந்தையும் தாயுமே சொல்லும் போது கொடுக்கத் தாழ்ப்பேனா?2 என்று வான்மீகர் இராமன் வாயால் அவன் சகோதரவாத் சல்யத்தையும் பெற்றோர்பால் அன்பையும் வற்புறுத்தி யுள்ளார். மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ என்று கம்பரும் இதனையே வலியுறுத்துகின்றார். ஆகவே, பரதனாட்சிக்கு இராமனால் எவ்வித இடையூறும் ஏற்படாது. இராமன் அறிந்து தடுக்குமுன் அவன் பற்றுடைச்சார்பினர் பகைத்து மலைவதையும் பரதன் பெருமை தெரியாத நாட்டினர் அப்பகை தழுவக் கேடு விளைவதையுமே கைகேயி அஞ்சு கின்றாள். அதனால் பரதனாட்சியால் ஆக்கமும் வளமும் பெருகி அனைவரும் அவனாட்சியின் நலத்தையும் அறத்தையும் கண்டு அமையும்வரை இராமன் நாடகன்றிருத்தல் அரசியன் முறையில் அவசியமாக் கொண்ட கைகேயி, இராமனை, நீபோய்த் ... தாங்கருந்தவ மேற்கொண்டு ... கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி ஏழிரண்டாண்டில் வா என்று இயம்பினள்”. இராமனை என்றும் அயோத்தியை அணுகாது அகன்றிருக்கத் தூண்டிலள். நாடு அமைதிபெற்றுப் பரதனாட்சியின் ஆக்கத்தை அறிந்து, அனுபவிக் குங்குடிகள் அவனைவாழ்த்தியடங்கப் போதிய காலம் இராமனை நாடு கடந்திருக்கவே வேண்டுகின்றாள். மிதிலையன்ன பிறமன்னர் பதியிற்போயிருப்பின், அவன் பற்றுடையார் அவனை மீட்க விரும்பிக் கலாம்விளைப்பர். அதுபற்றி அவனைச் சிலகாலம் தவமேற்கொண்டு நீர்த் துறைகளாடிக் காடுறையவும் பிறகு திரும்பவும் உரைக்கின்றாள். இனி, வனவாசத்துக்கு ஆண்டு பதினான்கென வரை யறுப்பானேன்? எனின், இராகவன் நட்பினர் வளர்க்கும் பகை தளர்ந்துமாயப் புகைமனத்தவர் புழுக்கமாறி நாடும் பங்கமில் குணத்தோன்’, செங்கோலாட்சியும் அமைதிபெறப் போதிய தோர் காலம் வேண்டும். குறைபடின் விலக்க விரும்பும் தீவிளைவுகள் முளைக்கலாகும். அவசியத்துக்குமேல் இராமன் நாடு தணத்தலை வீணே நெடிதுநீட்டுவதும் வேண்டிலள். எண் எதுவும் எது பற்றியும் தனிப்புனிதமும் பொருளும் உடையதில்லை. போதியகாலத்துக்குத் தக்க ஏதாவதோரெண் குறிப்பிடப்படவேண்டும். பதினான்கன்றிப் பிரிதெண் குறிப்பினும் இவ்வினா எழக்கூடுமன்றோ? எதற்கும் உண்மை விடையாவது’. எண்ணித் துணிந்தபடி அரசன் சொல்லறம் ஓம்பற்குரியவினையும் அதன்விளைவும் ஆய்ந்து முடிப்பதே தேவி கருத்தாகலின், அதற்கு அவள் அவசியமெனக் கருதியகாலம் பதினான்காண்டாமென்பதேயாம். அரசியலவ சியத்திற்கு வேண்டுமளவு இராமனைச் சேணிடையகற்றி வைக்க விரும்பின தல்லால், இராமனுக்குவேறு ஏதமெதுவுங் கருதினவளில்லை. அன்றிக் கொடுமையொன்றே கருத்தாயின் கைகேயி என்றும் இராமன் அயோத்திநாடணுகா வண்ணம் வரம் கேட்டிருக்கலாமே? அப்படிக்கேளாமல் நீ போய் ஏழிரண்டாண்டில் வா எனத் தேவி விதந்து கூறுவதால் கேவலம் கொடுமைநயப்பாலேனும் இராமன்பால் வன்கண்மை யாலேனும் அவனுக்கு வனவாசம் தர விரும்பினாளல்லள் என்பதும், சுல்க அறத்தாற் பரதனுக்குரிய அரசு அவன்பால் ஊறின்றிநிலைத்து அது சம்பந்தமான வேந்தன் சொல்லறம் சோர்ந்தழியாது பாதுகாக்கப்பட அரசியன்முறையில் அவசியத் துறையாக மட்டுமே மன்னன் மனையாள் அவன் வனம்போவதை மனங்கொண்டா ளென்பதும் பொதுநோக்குவார்க்கெல்லாம் இனிது போதரும். இன்னும், இராமனே இவ்வரசியற்றுறையவசிய முறை யுணர்ந் தொழுகியவனாகவும் அறியலாகும். கரவற்ற கைகேயிக்கு அரசன் வரமளித்தபடி வனமேக விடைவேண்டிய இராமனைத் தசரதன் முதலில் தன் வரத்தைப் பொய்யாக்கிவிட்டு அயோத்திக்கு அரசனாகி ஆளும்படி தூண்டினான். அதற்கு இராமன் உடன் படாமையால், அவனைப்பின் ஏகாந்தத்தில் அழைத்து அன்று ஒருநாள் அரண்மனையில் நின்று பிற்றை நாட் போகலாம் எனக் கொற்றவன் கூறலாயினன். அதனையும உள்ளங் கொள்ளாது அறமறிந்த பெருமகன் பேசியது இது : இன்றே நான் இவ்விடம் விட்டுப் போவதாலாகும் நன்மையைவிட நலம் எனக்கு நல்க யாராலாகும்? ஆகையால் இங்கு இனி இறையளவும் நில்லாது ஒல்லையே நான்வனத்துக்கு வழிக் கொள்வேன் எனச்சொல்லி வேந்தன் விருப்பத்தை மறுப்பதானான். பின்னும் தந்தை சலனப்படுவது கண்ட பெருந்தகை, வனவாசத்தில் நிலைத்த என் துணிவை இனிமாற்றமுடியாது. ஆகையால் தாங்கள் தந்துள்ள வரத்தைச் சலனப்படாமல் சந்தோசமாக முடித்து வைக்கத் திருவுளங் கொள்க”1 என எடுத்துரைத்துப் பின்னும் தன்னை எனைத்தானும் இருக்க வேண்டற் கிடமன்றி வரையறுத்து வற்புறுத்தினான். தந்தையுள்ளமும் தம்பி இலக்கு வனாதியரான தன் துணையுறுவோர்தம் கருத்தும் இயல்பும் நன்குணர்ந்த இராகவன், அயோத்தியில் தான் இனித்தங்குவது தரும கரும விரோத விளைவுகளுக்குக் காரணமாவதற்கு அஞ்சித் தன்பொருட்டு ஏதம்யாதும் யாராலும் எழாவாறு தடுக்கவும், தான் இனித் தாழாது விரைந்து அகன்று விலகிக்கலாமெதுவும் உண்டாகாமற் காக்கும் நலமறிந்து அதனை நாட்டுக்குக் கொடுக்கவும் நயந்து எண்ணி இது துணிந்தான் என்பதன்றி, அவனது இச் சொற்களுக்கும் துணிவுக்கும் பிறிது பொருள் காணற்கில்லை. ஒருதினம் தங்கி மறுநாட்போகும்படி தன்னைத் தனி யழைத்து வேண்டிய தசரதன் பெருவிருப்பையும் தந்தை சொற்கடவாத மைந்தன் அன்று மறுத்த தறுகண்மைக்குத் தக்க காரணம், தன் பொருட்டு எழுவதாகும். கலக விபரீத விளைவுகளை முன்னுணர்ந்து அவன் அவற்றைத் தடுக்க விரும்பியதன்றி வேறு எதுவாகக்கூடும்? தாழாது உடனே தான் போவதாலாம் நன்மையாக அவன்கருதியது தன்பொருட்டாம் கலகம் தவிர்ப்பதன்றிப் பிறிதென்ன? காவலன் கரவற்ற கருத்தனாகில், கைகேயியை விலக்கி இராமனைத் தனியழைத்து இது கூறுவது ஏனோ? இனி இவ்வாறு தன் அறத்துணிவுகூறி இராமன் விடைகொண்ட பிறகும் மன்னவன் மறுபடியும் மனம்பற்றிச் சொல்லிய மாற்ற மொன்றும் ஈண்டுக் கவனிக்கத் தக்கதாகும். இராமனுடன் செல்லச் சதுரங்கங்கள் நிறைந்த சைனியங்களைத் தயாரித்தனுப்பும்படி தசரதன் சுமந்திரனுக்குச் சொன்னான். அரசு அகற்றப்பெற்று ஆரணியம்புகும் இராமனிலைக்கு அழுங்கிப்புழுங்கும் அவன் பற்றுடையாரைப் படைத் துணையும் உடையராக்கும் வேந்தன் விருப்பத்தைக் கேட்ட கைகேயி, விளைவஞ்சி நடுங்கி மறுத்துப் பேசினாள். அதற்கு மன்னவன், நீ வரம் கேட்டபோது வனத்துக்கு இராமனுடன் பிறர் போகப்படாது என்று கேளாததால் அவனுடன் படையனுப்புவதற்கு இடைநில்லாது அடங்குதி என்று கோபித்துப் பேசித் தன் மனக்கோள்நிறுவச் சொல்லளவில் வாதம் தொடுத்து அவளை வெல்லமுயன்றான். தான் எண்ணித் தடுக்க முயன்ற விபரீதத்தை வேந்தன் விளைக்க விழைவதுகண்டு, கைகேயி உளமுளைந்து குரல்குன்றிக் குலைவதானாள். இவரிருவர் தங்குறிப்பும் அறிந்து இராமன், வனத்தில் வசிக்கும் தனக்குப் படை பரிவாரங்கள் பயன்படாமை கூறிய தோடாமையாது, அரசியலைப் பரதனுக்கு அளித்த பிறகு அதன் ஓர் அங்கமான சேனையையும் அவனுக்கு உதவாமற் பிரித்துத் தன்னுடன் அனுப்பவிரும்பிய தந்தையின் தகவிலெண்ணத்தைச் சுட்டி, யானையைக் கொடுத்து அதன் கழுத்துக்கச்சையை மறுப்பது முறையும் பயனும் அற்றது”1 என வினயத்துடன் எடுத்து விளக்கி விலக்கினான். இவை பலவற்றானும் இராமன் அகலச்செல்லாது அருகிருப்பின், பரதன் முடிசூடலுக்கு ஏற்படும் பகைப்பயமும் அதனை அறவே அகற்றுவதற்கு இராமனைச் சேட்படுத்தி வனஞ்செறிப்பதன் அவசியமும் கைகேயி கருதியது பிழையெனக்கொள்ளுதற்கு இடமில்லாமை தெளிவாகும். பகுதி : 10 குரிசிலர் நாட்டிற் கொடையுரிமை கோடல் வரன்முறைவந்த வழக்கறமாகும் இனி, கொடுத்துமுடிந்த அரசுரிமையைக் கொடையறங் கொன்று வாய்மையும் பொய்த்து மீண்டும் எடுத்துக் கொள்ளமுயன்ற குற்றம் வேந்தன் மேலது எனும் உண்மை வரலாறுணர்ந்த பின்னும், சுல்கசீதனம் எனும் பெண்பரிசமாக நாட்டைத் தரத் தசரதனுக்கு உரிமை கிடையாது; அதனால் முதற்பிறந்த இராமனே அரசுக்கு உரியன்; கைகயன்மாது பரதனுக்கு அதைக்கேட்டு வாங்கியதே தவறாகும் என வாதிப்பரும் சிலர் உளர். பண்டிதர் பெரும்பாலும் இவ் வழி வழக்கிட அஞ்சுவர். தொல்லைமிருதி களும் தற்கால வழக்கறமும் எல்லைக்கண்டே மென்று இறுமாப்பார் சில நீதிமன்ற ஏதவாதிகளே இவ்வழக்கு உரைக்கவல்லார். இவ்வழக்கிடுவார் கைகேயியைக் கொடியளாக்கும் முயற்சியின் பயனளக்க ஈண்டு இடம் வேண்டேன். தசரதன் புகழோம்பத் தக்கவழக்கு இதுவெனத் தருக்கும் இவர் தம்வழக்கால் தசரதனைத் தலைநின்ற தவறுடையனாக்கும் தம்தவறு தெரியாமை தெரிவிப்பதே என்கடமையாகும். நாடளிக்கும் உரிமை நிருபர்க் குண்மை சிறிது நிற்க. அயோத்திநாடாண்ட தசரதசக்கரவர்த்தி வேத்தியலறவித்தகனும் தலைநின்ற வாய்மையாளனுமாம் என்பது இவர்கொள்கையாகும். தசரதன் மணப்பரிச மாகத் தன்நாட்டைக் கைகேயிக்குத் தந்ததாக வடமொழிப் பொய்யில் புலவரே கூறியிருக்கிறார். இனி அதை மறுக்க வழியில்லை. மனைவிக்கு மன்னவன் வளநாடு வழங்கும் போது தனக்கு அதிற் கொடையுரிமை கிடையாமை தெரிந்தே தந்தனனா? அறியாது அளித் தனனா? பராதீன பாத்தியமின்மையோராது கொடுத் திருப்பின் அரசியலற மறியா மடமைக்கு ஆளாவன். கொடையுரிமையின்மை தெளிந்து வைத்தே கொடுத்தனனேல், தெரிந்து அறந்திறம்புந் தீயனாவதோடு, பேதைப் பெண்பரிசத்தைக் குடிலத்தால் வஞ்சித்த கள்வனும் ஆவன். வேந்தர்க்கு நாட்டில் ஆட்சியியலன்றி அளிக்கும் உரிமையின்றேல், தசரதன் முதலில் மணப் பரிசமாகத் தந்ததோடமையாது மீட்டும் வரமாகக் கேட்ட மனைவிக்கு மண்ணேகொள்நீ என்றும், ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் என்றும் தருதற்கு இசைவது அறமும் அழகும் ஆமோ? கொடையுரிமை கிடையாதபொருளை வரையாது வழங்குங் குரிசிலின் வள்ளன்மையைக் கொண்டாடுவது என்னோ? கொற்றவர்க்குத் தம் நாட்டிற் கொடை வரைவின்மை தொன்றுதொட்டு உலகறியுமுண்மையாகும். நாடறியும் இப்பழவழக்கை இராமனுக்கு உரிமை யுண்டு பண்ணக் கைகேயியை வைதுவக்கும் சில நவீன நாகரிக நீதி வாதிகள் ஆசங்கிப்பதால், அறம் அறிவு ஆட்சியாதி அடிப்பட்ட அளவை களால் அவ்வுண்மையையும் சிறிது ஆராயப்புகுவாம். வேதமும் நீதியும் வேத்தியலுரிமையை வேலிகோலி அளவிட்டறுக்க யாண்டும் கண்டிலம். முற்றுரிய முடிமன்னராட்சிக்குத் தேவகோபமும் பகைமன்னர் பயமுமின்றி எல்லையில்லை. வரைவுரிமை அரசாட்சி நீர்மைக்கே பொருந்தாததாம். அரசனாணையால் மட்டுமே வழக்கறமனைத்தும் ஆக்கவும் அளிக்கவும் அழிக்கவும் படுவதாகும். அறங்களெல்லாம் வேந்தராட்சியின் கீழ் வரையறுக்கப்பட்டு வழங்கும். அனைத்தறமும் ஆக்கவும் அழிக்கவும்வல்ல கொற்றவர் முற்றுரிமைக்கு அளவு கட்டவல்லார் யார்? கோவேந்தர் ஆட்சியுரிமை, அதனியல்பாலும் வரைவின்மையாலும் அவர் குடியறத்திற்கு அதீதமாகும். குடிவழக்கெல்லாம் கோமகன் கோலால் நிறுவப்படும். குரிசிலர் கொடையுரிமையை வரையறுத்து வற்புறுத்த வல்லார்யார்? நிறுவுமதிகாரியற்றவிடத்து வழக்கற மில்லையாகும். குடி வழக்குரிமையறமெல்லாம் கோமன்னராணை தரும் எல்லைக்குட்படும். கொற்றவர் ஆட்சியறமோ எல்லையற்ற முற்றுரிமைப்பாற்றாம். மன்னறம் வகுக்கும் மனுநூல் ஏழாமதிகாரம் முழுவதிலும் வேந்தர்க்குக் கொடையுரிமை வரையறுக்கப்படும் குறிப்பும் இல்லை; இதுமட்டுமோ? எல்லையற்ற கொடையுரிமை சுட்டவும்படுகின்றது. முற்றுரிமையற்ற ஆட்சியும் ஆதிக்கமும் கொற்றர் கொள்வதில்லை. கொடையுரிமையே ஆட்சிக்கு அறிகுறியாகும். குறையுரிமை ஒருகாற் சிற்றரசர்க்காவ தன்றி மற்றக் கொற்றவர்க் காவதுமில்லை; அவர் கொள்வது மில்லை. கேவலம் குடிவழக்கிலுங்கூட நமது நாட்டின் தென்பகுதியில் மீதாட்சர நூல்விதியே முதலறமாக் கொள்வார்க்கு, தாவரங்களிற் கொடையுரிமை பொதுக் குடும்பத்தாருக்கு மட்டும் சிறிது எல்லையறுக்கப்பட்டுள்ளது. இதிலும் கொடையுரிமை முழுதும் கடியப்படவில்லை. அறவே பராதீன பாத்தியமற்றவிடத்து ஆதிக்கமும் ஆட்சியும் இலதாகும். உடைமை யாட்சிக்குக் கொடையுரிமை, அடிப்படையாகும். வரம்பிகந்த கொடையுரிமை குடிகளிற் சிலசமயம் சிலருக்குச் சில இடங்களில் மறுக்கப் படுகின்றதன்றி, மற்றையிடங் காலங்களில் வரைவின்றி வழங்கப்படும். இத்தென்னாட்டில் இடையெழுந்த மீதாட்சரநூல் கூறும் கொடைவரம்பும் கொடைப்பொருளிற் சமவுரிமையுடைய பிறர்நலம் பேணும் அளவிற்றேயாகும். பிறந்த உரிமையடையப் பிறர் இல்லாதபோது தனியுடையார் தம்பொருளைத் தாம் விரும்பியாங்குத் தரும் உரிமை முழுதுடையார் என்பதை மீதாட்சரமும் மறுக்கவில்லை. வழக்கறம் வகுக்கவந்த மனுவாதியற நூல்களுள், யாக்ஞ வல்கியர் தருமசூத்திரநூல் ஒன்றாம். முதலில் அதன் வழக்கறப் பகுதி வேத்தியலறம் விளக்கிற்றில்லையென்பதும், அதனால் அதன் ஆணை குடிகளுக்கன்றி வேந்தர்க்கு விதியா மாறில்லை யென்பதும் மறக்கற்பாற்றன்றாம். இனி, இத்தரும வழக்கு விதிநூலுக்கு உரைகண்டார் பலராவர். அவருள், விக்ஞா னேசுவர் சுமார் 800 ஆண்டுகளுக்குமுன் செய்த விருத்தியே மீதாட்சரமாகும். இவ்வுரைவழிநூலில், குடிகளிற் பொதுக் குடும்பத்தாரின் கொடையுரிமை யொன்றுக்கே எல்லை குறிக்கப் பட்டுள்ளது. இதன் முதனூலுக்கு உரைவகுத்த சீமுதவாகனர் முதலான பிற அறநூலுடையார், உடையவருக்கு உடைமைப் பொருள் எதிலும் எவ்வித எல்லையுமற்ற முழுக் கொடையுரிமை யுண்மையை வற்புறுத்திவைத்துள்ளார். பாரதநாட்டின் வடபகுதிகளில் மீதாட்சரம்மதிக்கப்படாமல், சீமூதவாகனரின் தாயபாகம் அன்ன பிற அறநூல்களே பேணப்படுகின்றன. அவைபேணுவோர் இன்றளவும் தம் பொருளில் வரம்பெற்ற முழுக்கொடைமுற்றுரிமை கொண்டாடி வரு கின்றனர். ஆகவே முதனூலாம் யாக்ஞவல்கியர் அறநூலில் ஒருதலையாக் கொடையுரிமை குடிகளுக்குமே மறுக்கப்படவில்லையென்பது தெளியக் கிடக்கின்றது. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் எழுந்து இன்றளவும் நாடுமுழுதும் அங்கீகரிக்கப்படாமலிருக்கும் மீதாட்சரவிதி கொண்டு எப்படி இரண்டாமூழியில் ஆண்ட கொற்றவன் தசரதன் கொடையறத்தை மதிக்க லாகும். ஏறக்குறைய எண்ணூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வழியுரை நூலான மீதாட்சரமொன்றொழிய முந்திய அற நூலனைத்தும் கேவலம் குடிகளுக்குமே கொடையுரிமை குறைக்காதபோது, பலவூழிகளுக்கு முன் கொற்ற இறைமை முற்றிச் சிறந்த குரிசிலான தசரதனுக்கு அவன் தனியுடைமைத் தன் நாட்டில் பராதீன பாத்தியம் இல்லாமை சொல்ல ஒத்தேதேனும் உண்டோ? இனி, இடையெழுந்த மீதாட்சரக் குடிவழக்கற நூல் விதியுங்கூடத் தசரதன் சுல்கக் கொடையைக் கடியும் வழியில்லை. ஒரு பொருளிற் சரியுரிமையுடையார் பலருளரேல் மட்டும் மீதாட்சரவிதி ஒத்தவுரிமை யுடையார் பலருள் ஒருவருக்குத் தனிக்கொடை முற்றுரிமையை மறுக் கின்றது. கசயுரிமையுடைய தாயத்தார் பிறவாமுன்னும், பிறந்து இறந்த பின்னும் தனியுடை யார் தம்பொருளெதனையும் யாருக்கும் தடையின்றித் தரற்குரியா ரென்பதை விக்ஞானேசுவரருங்கூட மறுத்திலர். மீதாட்சர விதிப்படிக்குங் கூட, பிதிரார்சிதத்தாவரத்தானம் பெற்றவர்க்கெதிராகக் கொடைப் பொருளிற் கொடுத்த காலத்திற் கருப்பத்தும் உருப்பட்டிராத பின் பிறந்த சந்ததிக்கும் தாயத்தார்க்கும் எவ்வித உரிமையும் சிந்திப்பதில்லை. விவாக காலத்தில் வேந்தனான தசரதன் மணமகளான கைகேயிக்குத் தனியாட்சிக் குரிய தன் அயோத்தியரசைச் சுல்கச் சீதனமாக அறமுறையிற் கொடுத்திருக்க அதற்கு நெடும்பல்லாண்டு நிறைந்து கழிந்தபிறகு பிறந்த இராமனுக்கு அவ்வரசியலிற் பிறப்புரிமையேற்பட நியாயம் உண்டோ? மேலும், நடுநின்று ஆராய்வார்க்குக் குடிக்குலவழக்கறம் குரிசிலர்க்காகாமை சிறிது சிந்திப்பின் இனிது விளங்கும். சாதாரண வழக்கில், தந்தை பொருளை மக்களும் சந்ததியற்றவிடத்துத் தாயத்தாரும் பகுந்தெடுப்பர். சோதரருக்குச் சொத்திற் சமபாகச் சரியுரிமை உண்டே? அரசியலில் அவ்வாறு பிரித்தாளக்கேட்க அறமேனும் ஆட்சியேனும் உண்டோ? பங்கு இல்லாது ஒருவன் ஆளும் கோவியற்றருமங்கொண்டு குடிக்குலத்து எவனும் சொத்தைத் தனிக்கொளக் கருதலாமோ? இன்னும் குடிவழக்கில் வற்புறுத்தப்பட்ட வேத்தியலுக் கொவ்வாத விதி பல காணுங் கால், மாந்தர் தாயமுறையும் குலவழக்கறமும் மன்னவர்க்கேற்றி விபரீத வாதமெழுப்பி இடப்படலாமோ? கொற்றவர்க்குத் தம்நாடு முற்றுரிமையாகிக் கொடையுரிமையுட்பட நிறையாட்சிக்குரிய உடைமைப் பொருளாவது அறமன்றாயின், தசரதன் மனைவிக்குச் சுல்கமாகக் கொடுக்கத் துணிந்திரான்; கேகய மன்னனும் அதையேற்றுப் பெறற்கு இசைந் திரானன்றோ? பின்னும், தசரதனிருக்கை யில் இராமனுக்கு அதை அவன் கொடுக்க நினைத்தது என்னாம்? அரசனாவான் நாட்டை ஆண்டனு பவிப்பதன்றிக் கொடுக்க உரிமை யில்லானாயின் இராமனுக்கு அதை அவன்தான் கொடுக்கத்துணிவனோ? துணிந்த தன் விருப்பத்தை மன்னரும் மாசறக்கற்றோரும் கூடிய மகாசபையில் எடுத்துக் கூறுவனோ? கூறில் அதை யாரும் தராமல் அனைவரும் ஒருங்கே ஆமோதிப்பரா? மீட்டும் அவனே வரம் மறுக்க வழிகாணாது, பரதனுக்கு ஈந்தேன் ஈந்தேன் எனக் கொடுப்பனா? கொடுக்கும்படி கைகேயிதான் கேட்பாளா? செல்லா வீண் வரம் தேவி கேட்டு ஒல்லாக்கொடையா வேந்தனே வழங்கினும், சதுர்வேதமும் பிறவும் ஓதி நன்குணர்ந்த வசிட்ட முனிவன், கொடுத்தற்கு இரங்கி யேங்கும் மன்னனைக் கொடுக்கொணா அறஞ்சொல்லித் தேற்றாமல், வரமாக நாடுபெற்ற மாணாவுரையாள் தானேதரும் உன் புதல்வனான இராமனுக்கு அரசு என்ற மறுகு மன்னனுக்கு அமைதி சொல்லி, இராமனுக்கு நாடளித்து நின் கணவற்கு உயிரும் உதவி வசைதீர் என்று கோப்பெருந்தேவியிடம் குறையிரக்கக் காரணமென்னோ? மன்னன் மனதாரக் கொடுப்பினும் அது செல்லாதென்பதே அறத்துறையாமேல், வேந்தனும் முனிவனும் அதை விளக்கி இராமாபிடேகத்தை நடத்தாமல், வீணே கைகேயியைப் புகழ்ந்தும் இகழ்ந்தும் கெஞ்சியும் மிஞ்சியும் போற்றியும் தூற்றியும் பயன் காணாது அயர்ந்து மறுகி அலமருவரோ? எதுகொண்டும் இராமனுக்கு மகுடம் புனைவித்து ஒன்றும் வனமென் றுன்னா வண்ணம் செய்வதே தன் சிந்தை கவர்ந்த கவற்சியாக் கொண்டிருந்த தசரதனுக்கு எளிதில் அறமெடுத்தோதித் தெளிக்காமல், கையற வுற்று வசிட்டனும் வீணே வருந்துவானேன்? இன்னும் வசிட்டனே 1“வாள்வேந்தர், எந்தை (இராமன்) புகுதற் கிடையூ றுண்டாயதோ?. . . தெரிவி எமக்கென்றுரைத்த”போது, வேந்தன் (தசரதன்) பணியினால், கைகேயி மெய்ப்புதல்வன் பாந்தள் மிசைக்கிடந்த பார் (அயோத்தியரசு) அளிப்பானாயினான் என்று மட்டும் பரதனுரிமை யொல்லி, செல்லாக் கொடையால் நாடு பரதனுக் கெய்தாமை கூறாதுவிடுவானேன்? கேட்ட வேந்தரும் வேதமறிந்த விப்பிரரும் வேறு பிறரும் இராமாபிமானி களாயிருந்தும். கொற்றவனுக்கு நாட்டிற் கொடையுரிமையின்மை நினையாதது ஏனோ? மன்னனையும் மாற்றான்னையையும் மற்றும் பரதன்பாற் பரிவுடைய பிறரனைவரையும் கொன்று, விற்றிறமும் வீரமும் காட்டி, இராமனுக்கு நன்மௌலி சூட்டல்செய்யக் கருதிப் புகைந்து கனன்றுபொங்கும் ஆறாக்கனல் அழலுமனத்திலக்குவனும், தசரதனுக்குக் கொடையுரிமையின்மை தெரிந்திலனே போலும். தெரிவனேல் அவன் பெருவிருப்பத்தைத் தாதை காதகனாக விரும்பாமலே எளிதில் முடித்திருப்பனன்றோ? கோசலையும் இராமனும் கொடைமறாமல், தசரதன் கொடையாற் பரதனுக்கு அரசெய்தியதென்றே பேசுவானேன்? இரா மனிருக்க வரமாக நாட்டைத் தனக்கு மன்னனிடம் தன் தாய் கேட்டு வாங்கியதைத்தான் ஒவ்வாத தருமத்தின்தேவும் செம்மையின் ஆணியும் ஆன பரதனும், இராமன் கருத்தரிக்குமுன்னமே தந்தையின் பரிசக் கொடையால் தரணி தனதாயினதைத் தமயன்வாய்க் கேட்டபோது தந்தைக்குக் கொடை யுரிமையின்மை கருதி அதை மாறாதிருப்பனோ? இன்னும் நாட்டில் நிருபருக்குக் கொடையுரிமையின்றாயின், இராகவன் பரதனிடம் அறத் துறையில் அரசு நின்னதே என்னலும், பன்னரும் பெரும் புகழ்ப் பரதன் அரசு என்னதாயின் யான் இன்று (நினக்குத்) தந்தனன் என விரைந்து தந்ததும், தந்ததைப்பெற்றுக் கோசலை மைந்தன் கோசலநாடுடைவள்ளலானதும் எப்படியோ? இவ்வாறு தசரதனும் கேகயனும் இராமன் பட்டாபிடேகத்துக்கு அழைக்கப்பட்டுவந்த வேற்று வேந்தரும் பிறமாந்தரும் கோசலையும் கைகேயியும் இலக்குவனும் இராமனும் பரதனும் வசிட்ட முனியும் பரிசுத்தர் சித்தார்த்தரும் மற்ற மாந்தரும் வடமொழி வான்மீகரும் தென்தமிழ்க் கம்பரும் மனுவாதி அறநூலுடையவருமே அறியாத இவ்வழக்கைத் தற்கால நாவலர் சிலர் கண்டெடுத்துக் கொண்டாடுவது புதுமையே. இவ்வாறு அறநூலும் அறிவும் மன்னர்க்குத் தம் நாட்டில் முழுக்கொடை முற்றுரிமையுண்மையை விளக்குவதோடு, தசரதனுக்கு முன்னும்பின்னும் பாரதநாட்டில் ஆரியமன்னர் கையாண்ட ஆட்சிமுறை வரலாறு பலவும் அதனையே வலியுறுத்தக் காண்பாம். யயாதி மகாராசனுக்குப் பட்டமகி சியால் இருபெருங்குமரர் பிறந்திருக்கவும், அவர் பிறந்த பிறகு கோத்தேவியின் சேடிபாற் கந்தருவமணத்தால் தனக்குப் பிறந்த பூருவுக்கு வேத்தியற்சின்னமான1 முடியும் மாலையும் முத்த வெண் கவிகையும் முரசம் தந்து, படியும் (=நாடும்) வழங்கி னதான பாரதக் கதையும் அறிவோம். நளனும் தருமனும் வளநாட்டையே பணயம்வைத்துச் சூதாடித் தோற்றிட, வென்றோர் அதனைப் பெற்று முறைசெய்த வரலாறும் உணர்வோம். தேசத்தைச் சூதிற் பணயம் வைக்கச் சுதந்திரம் உள்ளபோது, மணவறையிற் சுல்க அறமுறையில் நாடளிக்கமட்டுமா மன்னருக்கு உரிமையில்லாதுபோகும்? சிறையில்வைத்தவளை விட்டு இராவணன் அபயம்புகின் அவனுக்கு அளிப்பதற்குக் கோசலநாடுடைய வள்ளல், இன்று போய் நாளைவா என நல்கினன் என்று சுட்டிய குறிப்பாலும், உலகளிக்கும் நீரினால் தந்தையும் கொடியன், பாரகமுடையவன் ஒரு மகற் கெனவே கொடுத்த பேரரசு, அரசு நின்னதே ஆள்க, அரசுயான் இன்று (இராமனாகிய உனக்குத்) தந்தனன்”, ஈந்தேன் ஈந்தேன்”, (பரதனுக்காக) மண்ணே கொள்நீ என்ற பல வெளிப்படைகளாலும் நாடுடைய நிருபர்க்கு அதனைநல்கும் உரிமையுண்மையைக் கம்பரும் விளக்குகின்றார். அரசர்கள் தங்கள் நாட்டை மூத்தகுமாரனிடம் கொடுப்பதும் அல்லது அவனைவிட நல்லவனாயிருக்கும் இளைய புத்திரனுக்குக் கொடுப்பதும். . . நியாயம் கெடாது அரசியல் நிலைபெறுவதற்கே”2 என்ற வான்மீகர்வாக்கியமும், பிள்ளைகளுக்கு மீதாட்சரக்குடி வழக்கிற்கண்ட பிறப்புரிமை, அரசியலில் யாதும் இன்மையையும், கொற்றவர்க்குத் தம் நாட்டில் முழுக்கொடை முற்றுரிமை யுண்மையையும் விசதமாக்கும். எனக்கு அரசு கொடுப்பதற்காகவே இங்கு அவன் வருகின்றான். உனக்கு அரசைக் கொடுக்கும்படி சொன்னாலும் உடனே கொடுக்க இசைவானன்றி வேறுரையான் என்று இராமன் காடுபோந்த பரதனைச் சந்தேகித்த இளைய வனுக்குப் பரதனியல்பு கூறும் இவான்மீகர் வாக்கியங்களும் குரிசிலர்க்குத் தம்நாட்டிற் கொடை முற்றுரிமை யுடைமையைக் காட்டுமெனக் கூறவும் வேண்டுமோ? மாவலிச்சக்கரவர்த்தியிடம் வாமனர் அவனுலகை வஞ்சித்துப் பெற்றுப் பின்பு அவனைப் புறம்போக்கிய கதை அறியாதார் இருப்பது அருமை. வாமனர்க்கு மாவலி மண்வழங்கும்போது, அவனுக்கு நமுசி யென்ற வயதுவந்த மகனொருவன் இருந்தனன் என்றும், அவன் இருந்தும் அவன் பிறப்புரிமையால் மாவலிக்கு நாட்டிற் கொடையுரிமை குறைய வில்லையென்றும் பெரியாழ்வார் திருமொழியால்1 விளக்கமாகிறது. அன்றியும், நீதிசாத்திர பாரங்கதரும் மாவலியின் குலகுருவுமான சுக்கிராசாரியர், வஞ்சவேடமுடைய வாமனனுக்கு மண்வழங்காமல் மறுக்கும் படி தூண்டியதன்றி, மகனிருக்கத் தந்தைக்கு நாட்டிற் கொடையுரிமை யின்றென்று எடுத்துரையாமையும் ஈண்டுக் கவனிக்கத் தக்கது. மனமுவந்து தரப்பெற்றவருக்கே நாட்டிலுரிமை கிடையாதாயின், வஞ்சித்து வாங்கிய மாவலிதேசம் வாமனர்க்கு ஆவதுண்டோ? இறைவன் அறமறந்தேற்றான் போலும். மனுகுலத்தில் தசரதனுக்குமுன் ஆண்ட அரிச்சந்திரன் விசுவாமித்திர முனி விரும்பியபடி தனது அயோத்திநாடு முழுதையுமே தத்தம் செய்தான். கொடுக்கும்போது அவனுக்கு லோகிதாசன் என்னும் கோமகனும் இருந்தான். கொடுத்தவன் குலகுருவும் முனிபுங்கவனுமான வசிட்டன் உடனிருந்தும் அக்கொடை அறத்தாறன்றெனத் தடுத்தானில்லை. கொடைவிரும்பிப் பெற்றவனும் அறமறியாக் கயவனில்லை. வேதவிரதங்களில் தூயதுறை போய தவமுனியான விசுவாமித்திரன் மகன் இருக்கவும் மன்னனிடம் கொடையுரிமையின்றேல் நாட்டைக் கேட்டு வாங்குவனா? வாங்கியபின் கொடுத்த வேந்தனோடு குற்றமற்ற அவன் மகனையும் நாடகற்ற நினைப்பனா? இவை பலவாற்றானும் வேந்தருக்குத் தம்தேயத்தில். முற்றுரிமை யுண்டென்பதும், அவர்மக்களுக்குப் பிறப்பால் தந்தையர்நாட்டில் அவர் காலத்தில் யாதோருரிமையும் ஏற்படுவதில்லையென்பதும், தம் மக்களில் முதற் பிறந்தா ரெனும் முறைகருதாமல் தாம் விரும்பும் யார்க்கேனும் புதல்வரனைவரையும் விலக்கி ஏதிலர்க்கேனும் தந்தையரசர் தம்நாட்டைத் தருவது ஆரியபூமியில் அறமும் ஆன்ற வழக்கும் உடைத்தென்பதும் விளக்கமாகும். இப்படியிருக்க, இராமன் பிறக்க நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்னரே மணப்பரிசமாகத் தசரதன் கைகேயிக்குக் கொடுத்தது செல்லாதென்றும், இராமனுக்குப் பிறப்பால் அரசுரிமை எய்திற்றென்றும் வாதிக்கவருபவர் மாற்றம் அவர் வாய்வன்மை குறிப்பதன்றி வழக்கற மாகாமை இனி விரிக்கவேண்டுவதன்றே. பகுதி 11 : சில வினா - விடைகள் இவ்வாராய்ச்சி இராமனின் தெய்வப்புனிதக் குணத்துக்குப் பழுதும் அவதாரமகிமைக்குக் குறைவும் உண்டு பண்ணலா மென்றஞ்சி அகற்றுவார், இதன் உண்மைப் பயன்அறியாராவர். இராமன் மனிதவுருவெடுத்த கடவுளா? கடவுட்பண்பமைந்த மனிதனா? என்ற ஆராய்ச்சி ஈண்டு எழுதல் இல்லை. கடவுளவதாரமாக இராமனைக் காண்பார் யாவரும் இவ்வாராய்ச்சி அவன் தெய்வத்தன்மைக்கு எவ் விதபங்கமும் பண்ணகிலாததோடு அவன் குணப்பெருமையை அளக்கப் பெருந்துணையுமாகும் என்று அறியக்கடவர். பெற்றோர் சொற்போற்றல், உடன்பிறந்தோரைப் பேணல், மணந்த ஒரு மனைவியையன்றி வேறு மகளிரை மனங் கொள்ளாமை, தஞ்சம் புகுந்தவரை அஞ்சலென்றளித்தல், இன்னோரன்ன தகைசான்ற நற்குணங்களைக் கண்ணனைப்போலச் சொல்லளவிற் காட்டாமல் வாழ்க்கை யால் வலியுறுத்தும் பெருமைத்தாம் இராமகதை. இவற்றுள் மாற்றன்னையென்னும் வேற்றுமை யுணராமல், தந்தையொடு தாய் சொற்பேணிப்பரதனைப் பாராட்டித் தழுவி மகிழ்ந்த இராமனின் செப்பருங்குணச் செவ்வியையும், பங்கமில் குணத்துப் பரதன் பண்பையும் இவ்வாராய்ச்சியிற் கண்ட வுண்மையே இனிது விளக்குவதாகும். அரசன் பரிசக் கொடையால் அயோத்தி பரதனதாயவுண்மை வெளிப்படாதவரை, பரதனும் இராமனுமாகிய இருவரின் பரபரக் காதலின் நெருக்கமும் பெருக்கமும் பாதிக்குமேல் விளக்கமற்று மங்கி மாசுபடும். பிறப்பால் முற்பிறந்தவனுக்கேயமைவது அரசெனவும், தனக்கு உரிமை யில்லாததைத் தாய் தவறாகக் கவர்ந்து தருவதாகவுமே கருதும் பரதன், கொள்ளா உலகப்பழிக்கு அஞ்சி, தான் ஏற்கவொல்லாமல் தமயனுக்குத் தருவதில் அவனுக்குப் பெருமையுண்டோ? சுல்கச் சீதனக்கொடையால் ஆன்ற அரசற முறையிற் றனதேயாம் அயோத்தி யெனப் பரதன் அறிந்தபிறகு, தாதை தந்த வரத்தை மறுத்துத் தான் அரசேற்கத் தாழ்ந்த தமையன் தடையைத் தன் காதல்வெள்ளத்தால் உடைத்துவென்று தன்னுடைமை தான்தரும் தகவுரைத்து, முதலில் வாங்கவெறுத்த தமையனை விரும்பிக் கொள்ளுமாறு இணக்கி, உரிமையற்ற இராமனை அரசனாக்கத் தன் அறத்தரசுரிமையை வலியத்தந்து, அவனுக்குப் பணி செய்திருக்கும் வாழ்வுகந்ததன்றோ பரதன் ஆசற்ற பாசத்தை ஒளிரச்செய்யும். முன்னைய சுல்க வரலாறு அறியாமல், முதற் பிறந்த தனக்கே யுரியதென்று இருந்தபோதும், என்பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ என அக மகிழ்ச்சியால் அப்பொழுதலர்ந்த செந்தாமரையினை வென்ற தென முகமலர்ந்து தன் உடைமையைத் தம்பிக்கு விரும்பித் தந்த இராமனுக்குத் தனதளிக்கும் தகைமையற்றுத் தமையனதைத் தான் கொள வளரும் பழியஞ்சி அவன்பாற் சேர்ப்பிக்க விரும்பும் ஒரு பரதனையே தம்பியாக்கில் அப்பரதன் நின்னினும் நல்லன், நிறை குணத்தவன் என்றும்,” புண்ணியம் என்பதே அவனுயிர் என்றும், அன்னான் அருளுக்குக் கோடி இராமர் அருகாவரோ என்றும் கோசலை பரிசும் பரிசுடையனாவனோ? அன்னவன், எத்தாயர் வயிற்றினும் பின்பிறந்தார்களெல்லாம் ஒத்தாற் பரதன் பெரிதுத்தமனாவதுண்டோ? எனத் தம்முனைக் கொல்லிய வந்து நின்ற சுக்ரீவன் குணத்தை நினைந்து உளம் உளையும் இளையவனுக்கு இராமன் எடுத்துக்காட்டிப் புகழும் பெருமிதம் பெறுவதெங்கே? மேலும், சகோதர வாத்சல்யப் பெருமையை விளக்குவதும் இராமாவதார நோக்கத்தொன்றெனக் கொள்வோர், இராமன் ஒருவனே தனதளிக்குந் தகையன், பரதன் தனதல்லாத் தமையனதைத் தான் பறிக்க விரும்பாதவனேயாம்”, என்பரேல், அவதார நோக்கம் நன்கு நிறைவேறாமை காணக்கடவர். தமயன் தம்பிக்குக் காட்டத்தகும் தண்ணளியை, இராமன் சுல்க வுண்மை யறியாமலே பரதனுக்கு அரசுதர விரும்பியதால் நிறுவலானான். இதனால், சகோதரவாத்சல்யத்தில் தமயன்பாரம் ஒரு பாதியே விளக்கப்படும். தம்பி தமயனிடம் காட்டவல்ல பேராதரப் பெருமை விளங்குமாறில்லை. தன்னுடைமையான பேரரசைத் தமயனுக்குத் தான் உவந்தளித்த பரதன் மெய்க்காதற்கதையால் மட்டுமே அப்பாதியும் விசதமாகும். தனக்குரியதென நினைத்த தமயனும், பின் தன்னுடைமை யென்று அறிந்த தம்பியும், முறையே ஒருவன் மற்றவனுக்கு ஏத்தப்படும் வேத்தியல் வழங்க விரும்பிய மெய்தவ முழுவரலாறுங் கண்டபோதுதான், பிராதாக்கள் பரபரம் கொள்ளத்தகும் உண்மைக்காதலும், தனைமறந்து காதற் கடனாற்றும் அவர்பெருந்தகைமையும் ஒருங்கே விளங்குவதாகும். அப் பொழுதே அவதார நோக்கமும் பூர்த்தியாகும். தொல்லைச் சுல்க வரலாறு தானறிந்ததைப் பிறர்கூறா இடத்திற்றன்னலம் துறந்து மாற்றன்னை மகன் அறவுடைமையின் உண்மையை வெளிப்படுத்திப் பரதனையும் கைகேயியை யும் வீணே வசைவெள்ளம் நெடிது நீந்தியுழலாமற் கைகொடுத்துதவி மெய்ம்மைக்கரையேற்றுவித்த இராமன் பெருமை இவ்வரலாற்றால் வீறுபெறுமல்லாமல் வேறுவகை யுண்டோ? இனி, வான்மீகர் விளக்கிய இவ்வுண்மையைக் கம்பர் விசதமாக்காமல் உய்த்துணரவைப்பானேன் என்பார். காலதேச வர்த்தமானங்களைக் கருதி வான்மீக வரலாறு பலவற்றையும் ஆங்காங்கே மறைத்தும் குறைத்தும் விரித்தும் திரித்தும் கதைத்துச் செல்லும் கம்பர் வழக்கு அறியாராவர். புழைநுழைந்த வாலி திரும்பவருமுன்னும், அவன் படுகொலையுண்டிறந்த பின்னும், கொழுநனைக் கொல்விக்குங் கொழுந்தனோடு புதுமணப் புன்தேறல் ஒக்கவுண்டு மதையினளாக வான்மீகி சொல்லும் தாரையைக் கம்பர் ஒப்பற்ற வாலியின் தப்பற்ற தாரமாகச் சித்திரித்துள்ளார். விருப்பு வெறுப்போராமல் வில்லிறுத்த ஏதிலனை வேட்ட வான்மீகர் சீதையைக், காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு படாமன்றல் உகவாத் தமிழ் வழக்கறிந்த கம்பர், மிதிலைவரும் இராமனோடு கண்ணாற் கலந்து பருகிய நோக்கின் ஒருவரையொருவர் ஈர்த்து இருவரும் மாறிப்புக்கு இதயமெய்தி உளத்தால் மணந்து மகிழச்செய்து வைத்தார். இன்னும், உடன் வனமழைத்துச்செல்ல உவந்திடாக் கணவன்றன்னைப் புடவைபோக்கி வேட்டியுடுத்திய பெண் என்று அறியாமல் சனகன் தன்னை அவனுக்குத் தானம் பண்ணியதாகக் காதலாற் பரிகசித்த வான்மீகர் சீதைவாய் மாற்றத்தை அறவே மறைத்து ஒதுக்கினர். மயிர்பிடித்திழுத்து இராவணன் மடியில் வைத்து எடுத்துச்சென்ற ஆரிய வேடக்கவியின் சீதைபடத்தை அழித்துத், தீண்டுவானெனில் சீதை மாண்டுதீர்வளென்றே அவள் இருந்த மண்ணொடும் கீழ்மையான் வன்மையால் கீண்டு கொண்டெழுந்தேகினா னாகப் புதுக்கியுள்ளார். பரதனுக்கு அரசு தந்த தாதையை வாதைகொண்டு பரதனைப் போர் தொலைத்து அவன் பற்றுடையாரனைவரையும் கொன்று இராமனுக்குத் தன் வலியால் முடிசூட்டப் போவதாக நெடுமொழி கூறிய இலக்குவனைக் கடியாமல் அவன் கருத்தைப் பேணிச் செவி கொடுக்கும்படி தன்மகனை வேண்டிய மறத்தாயான கோசலையின் படத்தையும்மாற்றி, அவனிகாவல் பரதனதாகுக, இவன் (இராமன்) ... ... இருங்கானிடைத் தவனிலாவகை காப்பென், தகைவிலாப் புவனிநாத (தசரத)ற் றொழுது எனப்போய் அலக்கணிடைக் கலக்கமுறா மதியுடையளாகப் பொறித்தவர், வான்மீகர் மறையாதுரைத்த தசரதன் தகவற்றபுரையுரை பலவற்றையும் போக்கினர். இப்படித் தமிழ்நாட்டிற் றங்காலத்தவர் ஒழுக்க வழக்கங்களையும் விருப்பு வெறுப்புக் களையும் ஓர்ந்து ஒப்புரவுவழுவாது உளக்கிடை யுணர்ந்து தம் கவியிற் கதைகளைத் தகவுநோக்கித் துணிந்து திரிக்கும் கம்பர், தம் காவியத்தை அரங்கநாதராலயத்தில் அரங்கேற்றலாயினர். தஞ்சையிற் கரந்தைத் தமிழ்ச்சங்கத்திற் சேதுமன்னர் தலைமையின் கீழ் இவ்வாராய்ச்சிபற்றி யான் பேசுங்கால், விஷமமாகச் சில வினாக்கள் எழுப்பி விடைபெற்று வம்புக்கு வழிகாணாத சிலர் யான் பின் தனியிருக்கையிற் செய்த வேண்டு கோளொன்றை ஈண்டுச் சுட்ட வேண்டுவது அவசியமாகும். இராமன்பாற் றவறுகாட்டினும் வைணவர் அதற்கு வருந்தார். தசரதனை அவர் தம் சமய சம்பிரதாயத்தில் தலைநின்ற பரமபாகவதர் பெருந்தகையாப் பேணுவர். அதனால், தசரதன் தவறுடையனாக ஆராய்ச்சியின் பயன் முடியலாகாது. ஆதலால் யாதானுமொரு யுக்திவாதத்தால் தசரதனைத் தவறற்றவன் எனத் தாங்களே காட்ட வல்லுநராகலான் அவ்விதம் செய்ய வேண்டும் என்று அவர் என்னைத் தூண்டமுயன்றனர். அறிவாற்றலை வெளிப்படுத்த வேண்டி உண்மைக்கு விலை மறுத்து எதுவும் யாண்டும் உரைத்து மகிழும் ஏதவாதிகளில் ஒருவனாக என்னைச் சேர்த்தெண்ணியவர் வஞ்சப் புகழ்ச்சி நயவாமல் உள்ளதை உள்ளபடியுரைக்கும் என்னியல்பு சொல்லி நான் விடைபெற்று விலகநேர்ந்தது. சமயசம்பந்த மாகவும் நிசம்பேச மிகக் கூசவேண்டாத இக்காலத்தியல்பு இதுவாயின், திருவரங்கப் பெருமாள் திருக்கோயிலில் ஆயிர மாண்டுகளுக்கு முன் தம்நூல் அரங்கேற்றவந்த கம்பர் வான்மீகர் வாக்கியமனைத்தையும் மாற்றாதுரைத்துத் தசரதன் தவறு கூறித் தம் தலையிழக்கத் துணிவது கவி மரபுக்கு அத்துணை அவசியமன்றென்பது சிறிது சிந்திக்கற்பாற்று. பிற இடங்களிற்போல ஈண்டுக் கம்பர் கதை வரலாற்றை அறவே மாற்றக் கருதிலர்; மாற்றின், தூயசிந்தைக் கைகேயி தெய்வக் கற்புப் பழுது படுமாதலால், கற்பிறந்த தாரையையே புனிதையாக்கும் புலவர் குறையா நிறையுடைய கோப்பெருந்தேவியின் புகழ்க் கொலைக்கு இசையாரன்றே. அதனால் உண்மையை ஒளியாது உரைத்துள்ளார். உரைக்குமிடத்து இடக்கரடக்கி, கேட்கும் வீரவைணவ தசரத பக்தர் உளம் உளையாவாறு வெச்சென்றுரையாமற் கார்ப்புச் சொல் ஓம்பி, அறியுநர் உண்மையறியுமாறு தசரதன் காதற்றவறும் கைகேயி கற்புமேம்படு காதலும் காட்டி, வான்மீகர் வாய்மையையும் போற்றிப்போந்தார். வான்மீகர் விசதமாக்கினும் கம்பர் விளக்காது விடுத்த வரலாற் றுண்மையை இப்போது வெளிப்படுத்துவானேன்? என்ற வினாவுக்கு விடையிறுக்குங்கடனை மறவேன். முதலில் நான் இதை வெளிப் படுத்தினவனில்லை. இராமனே தன் வாயால் இவ்வுண்மையைக் கூறி வைத்தான். தனியிருந்து பிறர் அறியாமற் பரதனுக்கு மட்டும் இதைச் சொன்னானில்லை. தருமத்தின்தேவான பரதனையும் தூயசிந்தைத் தெய்வக் கற்பினளான சிற்றன்னையையும் தகவின்றி உலகுதூறும் பழி வெள்ளக் குழிநின்றேற்றுவான் கருதிய நியாயமத் தனைக்கும் ஓர் நிலையமான இராமன், தானறிந்த உண்மையைத் தன்னைக் காணவந்த அரச வேலையும் துன்றுசெஞ்சடைத் தவரும் சுற்றமும் தன்றுணைத் தம்பிமார்களும் சென்று சூழ ஆண்டிருந்து”1 அறையலானான். தன் தந்தை புகழும் தன்னலமும் மறவாது பரதனை மட்டும் தெருட்டும் விருப்புடையனேல், இராமன் இதை அவனுக்குத் தனியிடத்திற் கூறியிருக்கலாமே? அறமும் தகவும் அறியாதவனா இராமன்? அற்றங் காணும்வரை தன் கருத்தைப் பிறர் அறியாமல் அடக்கவல்ல பெருந்திறலிவன் என்று வான்மீகர் இவன் குணம் கூறியுள்ளார்.1 தகவின்றித் தந்தை கோபத்தாற்றள்ளிய வசைவெள்ளத் தினின்று இவரைக் கரையேற்றுங் கருத்தாலன்றோ செம்மல் சதசிருந்து யாவரும் அறிய இவ்வரலாறு கூறி உண்மையை உலகறிய வெளிப்படுத்தியது. அதை மறைத்துக் கைகேயி பழிவளர்க்க விரும்புபவரே மங்கையர்க்கரசியின் மாசிலா நிறையறக்கொலைஞராவதோடு இராமன் பெருவிருப்பழித்து அவனபசாரத்துக்கும் ஆளாவர். இராமன் உளக்கிடை யறிந்தே கம்பரும் வான்மீகரைப்போல வெச்சென்றுரையாவிடினும், இவ் வுண்மையைக் கரவாது உரைத்துள்ளார். ஆடவர் பழிசுமந்தும் மடந்தையர் புகழ் பேணுவது ஆண்மையறமாம், அப்படி யிருக்கக் கைகேயி மெய்ப் புகழும் கற்பும் கொன்று தவறுடைய தசரதன் பொய்ப்புகழ் வளர்ப்பது ஏதங்கொண்டு ஊதியம்போகவிடும் பேதைமைப் பாலதேயாமன்றோ? கம்பர் அறவே மறைப்பினும் இவ்வுண்மை வெளிப்படுத்துங் கடமை காண்பதன்றோ தமிழ்மரபு? கம்பரும் கரவாது உரைத்துள்ள மெய்வரலாற்றைக் காலக் கொடுமையால் மறந்ததுமன்றி, உண்மையுணர் வூட்டுவாரை வெறுத்து வைது, ஆசில் கற்பறக் கைகேயி புகழையும் மாசுபடுத்தி மகிழ்வார்க்குக் கூறவரும் மாற்றம் இல்லை. உண்மையுணர விரும்புவோர்க்கே இவ் வாராய்ச்சி உதவுமல்லால், கொண்டதுவிடாக் கொள்கையர் நீதி கருதிலரா கலான் அவர்முன் வாதமெதுவும் பயன்தராது. புலவரும் இராமனும் புகன்றிலராயினும், பயன் பலர் நயவா ரெனினும், உண்மை யாவதை உரைப்பதே கடனெனக் கண்ணுதலார் முனும் கட்டுரைத்த தமிழ்மரபோம்பும் விருப்புடையேன், மெய் வெளிப்படுத்த வேறு துணை வேண்டேன். ஈண்டு, பொய்யாமொழி ஆரியப்புலவனோடு மெய்வழாத் தமிழ்ப் பாவலனும் உரைத்துப்போந்ததும் கற்பரசியின் மெய்ப்புகழோம்பும் நற்பயன் தருவது மான உண்மையை வலியுறுத்த ஆற்றலும் தகவும் போதாமைக்கே கவல்வ தல்லால், இயன்றவரை கண்டது உரைக்கப் பிறிதுபுகல் தேடுவேனல்லேன். சேரர் தாயமுறை முதற்பதிப்புப் பாயிரம் பல ஆண்டுகளுக்குமுன் சேரர் தலைநகரான வஞ்சிப்பற்றிய ஆராய்ச்சிக்காக முன் இடைவிட்டுப் படித்துவைத்த பதிற்றுப்பத்தை மீண்டும் முற்றும் ஒருமுகமாகத் தொடர்ந்து உற்றுநோக்கநேர்ந்தது. அப்போது அந்நூலுட் செய்யுட்களுக்கும் பதிகப்பாட்டுகளுக்கும் பாட்டுடைச் சேரரைப் பற்றிய தொடரமைப்பிற் சில மாறுபாடுண்மை புலப்பட்டது. பதிகங்களிலெல்லாம் ஒருபடியும், நூலின் பாட்டிலெல்லாம் வேறுவிதமும் குடிமரபுக்குறிப்புக்களைச் சுட்டுந்தொடர்கள் அமைந்து நிற்பது என் கவனத்தைக் கவர்ந்தது. எனினும் அப்போது செய்த சேரரின் ஊராராய்ச்சியை முடித்துப் பின் இச்செய்தியை ஆய்தல் நலமெனநினைத்து அதனைக்குறித்து வைத்தேன். பிறகு வஞ்சிப்பற்றியஎன் ஆராய்ச்சியை முடித்துச் சேரர்பேரூர் என்ற கட்டுரையை எழுதி, என்னை அது செய்யத்தூண்டிய பெருந்தகையார் கற்பவை கசடறக்கற்றுக் கற்றதனா லாய பயன் காட்டுமாபோலக் கற்றபடி நிற்றலை மேற்கொண்டொழுகிய தமிழ்வாணரான தஞ்சை வக்கீல் இராவ்பகதூர் ஸ்ரீநிவாசப் பிள்ளையவர்களுக்கு அனுப்பினேன். அதன் பிறகு தனியே ஆராயக் குறித்துவைத்த சிலசொற்றொடரின் கருத்தறியவிரும்பி மறுபடியும் பதிற்றுப் பத்தையும் சிலப்பதிகாரம் புறப்பாட்டுக்களில் சேரரைப் பற்றிய பகுதி களையும் ஊன்றிப்படித்தேன். அப்போது, தமிழிலக்கியமுழுதும் தந்தைக்கு மகன்முறை சுட்டுமிடந்தோறும் இன்னான்சேய் இன்னான் என்ற வாய்பாடே எங்கும் வரும் பொதுவியல்புக்கு மாறாகப் பதிற்றுப்பத்துப் பதிகங்கள் மட்டும் வேறோர் தனிமுறையாளக் காரணம்வேண்டுமெனக் கண்டேன். இப்பதிகங் களில் யாண்டும் முன்னையே சேரர் பெயர்க்கெல்லாம் தவிராமல் குவ்வுருபு கொடுத்துப் பிரித்து முதலில் நிறுத்தி, அதன்பின் அவனுக்கு இன்னான்தேவி யீன்றமகன், பாட்டுடைச்சேரன் எனத் தெரித்துப்போகும் தனிப் புதுமுறை என்னை ஊன்றிச் சிந்திக்கச் செய்தது. அச்சிந்தனையும் அதுபற்றித் தொடர்ந்த ஆராய்ச்சியும் பண்டைச்சேரர் தாய்வழித்தாயத்தார் என்பதை எனக்குத் தெளிவிக்க அதன் உண்மையுணரலானேன். பிறகு வழக்கம்போல் நான் கண்ட உண்மையைப் புலத்துறை போகிய என் நண்பர் சிலருக்குச் சல்லாபப்பொருளாகச் சொல்ல நேர்ந்தது. அவர்கள் அக்கருத்தை வெளியிடுமாறு என்னைத் தூண்டி வந்தனர். மதுரைத் தமிழ்ச்சங்க நிருவாகம் திறமையுடன் நடத்துபவரும் தமிழறிவாளரைத் தலைக்கூட்டி அவருக்கு இயைந்த முறை வேளாண்மை செய்து மகிழும் தலைநின்ற நீதிவாதியுமான திரு. டி.சி ஸ்ரீநிவாஸையங்காரவர்களிடம் இதை ஒருநாள் நான் பேசநேர்ந்தது. தமிழாராய்ச்சிகளினும் தன் நண்பரிடத்தும் அவர்களுக்குள்ள பேராதரத்தால், உடனே இதை விளக்கி ஒருகட்டுரையாக வெளியிட வேண்டுமென என்னை வற்புறுத்தி ஊக்கினார்கள். அப்பணி மறுக்க அஞ்சி ஊர்தோறும் உழன்று உழைக்கும் என் வக்கீல் உத்தியோக நெருக்கடியினிடைக் கிடைத்த சிறுநேரத்தை மீண்டும் இவ்வாராய்ச்சிக்கு உபயோகித்து ஆழ்ந்து ஆராய்ந்து கண்ட என் முடிவுகளை ஆங்கிலத்திற் சிறு சஞ்சிகையாக 1929 ஆம் வருடம் வெளியிட்டேன். அப்போது அதைத் தமிழ்ப்படுத்தித்தரும்படி நண்பர்சிலர் வேண்டித் தூண்ட நானும் என் அவகாசக்குறைவில் இயன்றவரை ஒரு கட்டுரை தமிழில் எழுதிக் கொடுத்தேன். அது தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழில் (27 ஆம் தொகுதி யின் 4ஆம் பகுதியில்) பிரசுரிக்கப்பெற்றது. பிறகு அதைப்படித்த பண்டிதர் திரு. மு. இராகவையங்கா ரவர்கள் என் முடிவையும், நான்கொண்ட பதிற்றுப்பத்துப் பதிகத்தொடர்ப் பொருளையும் மறுத்துச் செந்தமிழில் (27ஆம் தொகுதியின் 10ஆம் பகுதியில்) ஒரு கண்டனமெழுதி வெளியிட்டார்கள். அதைப்படித்த பல நண்பர் அதற்கு மறுப்பெழுத என்னைத் தூண்டினர். உண்மை காண முயல்வதே என் கருத்தாகையால், பண்டிதர்களோடு சொற்போர் தொடர விருப்பமின்மையை விளக்கி, எங்களின் இரு கட்டுரைகளையும் முறையே படிப்பவருக்கு உண்மை தானே எளிதில் வெளிப் படுமென வாளாவிருந்தேன். எனினும் என் மருகர் மதுரை அட்வோகேட் எல். கிருஷ்ணசாமிப்பிள்ளையவர்கள் என் விருப்பமறிந்தும் அமையாது பண்டிதரவர்களின் கண்டன வுரைக்குத் தாம் ஓர் விளக்க மறுப்பெழுதிச் செந்தமிழிலேயே (28ஆம் தொகுதியின் 7ஆம் பகுதியில்) வெளியிட்டார்கள். அத்துடன் அவ்வாதம் நின்றது. பதிற்றுப்பத்துப் பதிகத்தொடர்கள் தாய்வழிகுறிப்பதென முதலிற் கண்டவன் நானல்லன்; முன்னமே இக்குறிப்புணர்ந்து ஆங்கிலத்தில் தாமெழுதிய தமிழ்வரலாற்றில் இதைக் காலஞ் சென்ற திரு. எம். ஸ்ரீநிவாசையங்காரவர்கள் சுட்டியுள்ளார் களென பண்டிதர் திரு. மு. இராகவையங்காரவர்கள் என் கட்டுரைக் கெழுதிய கண்டன உரையால் அறிந்து மகிழ்ந்தேன். பிறகு அக்குறிப்பையும் அவர்கள் ஆங்கிலப்புத்தகத்திற் படித்துப் பார்த்தேன். பதிகத் தொடர்களின் முதலிற் குறிக்கும் சேர மன்னருக்கு, பாட்டுடைச்சேரர் புதல்வரல்லர்; இடைத்தொடர் சுட்டும் இருமுதுகுரவருக்கும் புதல்வராய்ச் சேரருக்கு வழித் தோன்றலாம் மருகரேயாவரென முதலிற்கண்ட பெருமை ஸ்ரீநிவாசை யங்காரவர்களதே எனத் தெளிந்தேன். தேவி வேண்மாள் என்ற சொற்கள் மனைவியரையே குறிக்கு மெனத் தெளிந்த அவர்கள் மகள் என்ற சொல் சங்கநூலில் மனைவிப் பொருளில் வருமென அறியாமையால் சிறிது மறுகி, சேரலாதற்குச் சோழன்மகள் ஈன்றமைந்தன் என்ற சிலப்பதிகாரத்தொடரில் வரும் மகள் என்பது மகன் என்றிருக்க வேண்டு மெனவும், அது சுவடிபெயர்த் தெழுதுவோரால் மகள் எனப் பிழைபட எழுதப்பட்ட தவறான பாட பேதமெனவும் கருதினார்கள். மகள் என்பதற்குச் சிலப்பதிகாரம் மணி மேகலை முதலிய சங்க நூல்களிலேயே மனைவிப் பொருட்பிரயோகம் உண்மையை அவர்கள் அறிந்திருந்தால் அவர்கள் கண்ட பதிகப் பொருள் துணிவை இன்னும் வலியுறுத்தி விளக்கியிருப்பார்கள். அப்போது என் கட்டுரையே வேண்டப்படாது. அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்டதை முன் அறிந்திருந்தால் பிறிது பொருளாராய்ச்சி யிடையே இப்பதிகத்தொடர்கள் சுட்டிய குறிப்பைக்கொண்டு நான் செய்த ஆராய்ச்சிக்கு அவசியமே இருந்திராது. இனி, சமீபத்தில் மதுரைத்தமிழ்ச்சங்கத்தார் தங்கள் சங்கப் பண்டித பரீக்ஷைக்கு இக் கட்டுரையைப் பாடமாக்கியதால், சில மாணவர் இக் கட்டுரைப் பிரதி வேண்டிக் கேட்கலாயினர். முன் செந்தமிழில் விரைந்தெழுதி வெளிவந்த என்கட்டுரையை இன்றியமையாச் சில சிறு திருத்தங்களுடன் இப்போது சஞ்சிகையுருவில் தருதற்குரிய காரணம், மாணவரும் தமிழன்பர் சிலரும் இதைப் படிக்கவிரும்பிப் பிரதிகள் வேண்டிய தொன்றே யாகும். இதைப் படிப்பவர் இன்னும் விரிந்த ஆராய்ச்சிகளி லிறங்கி மெய்ப்பொருள்காண முயலுதற்கு இஃது உதவுமாயின், அதுவே நான் விரும்பும் கைம்மாறாகும். என் கட்டுரையைப் படித்து மதிப்புரைகள் உதவிய புலமைப் பெருந்தகையினர்க்கு என் நன்றி என்றும் உரியதாகும். இவ்வாராய்ச்சி யுரையை மதித்துப் பரீக்ஷா பாடமாக்கிய மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் அன்பைப் பாராட்டுதலன்றிப் பிறிது நான் செய்தற்கில்லை. இதனை அச்சிட்டு வெளிவரச்செய்வதில் அனைத்துதவியும் விரும்பிச் செய்த என் நண்பர் மதுரைச்சங்க நூற்பரிசோதகரும் செந்தமிழ்த் துணைப்பதிப்பாசிரியரு மான திரு இராமாநுஐயங்காரவர்களின் உதவி மறக்கொணாது. என்னைப் பல ஆராய்ச்சிகளிலும் ஊக்கி என் கட்டுரைகளைப் பாராட்ட வெளியிடப்பண்ணிவரும் கெழுதகைமைத் தமிழ்வாணரெல்லார்க்கும் இக் கட்டுரையை உரிமைசெய்து உவக்கின்றேன். அண்ணாமலை நகரம், ச. சோமசுந்தரபாரதி பவ வருடம் அட்வோகேட், மாசி மாதம் 14ஆம் தேதி தற்போது தமிழ்ப்பேராசிரியர், 25.2.1935 சர்வகலாசாலைத் தமிழ்ப்பகுதித்தலைவர் பதிப்புரைகள் (1) (சென்னைச் சட்டசபைச் செக்ரட்டரி திருவாளர் திவான்பகதூர் ஆர்.வி. கிருஷ்ண ஐயரவர்கள் பி.ஏ.எம்.எல்.,) (ஆங்கிலக் கடித மொழிபெயர்ப்பு) அன்புமிக்க பாரதியாரே! சேர அரசர் தாயமுறையைப்பற்றிய தங்கள் மிக இனிய கட்டுரையை முழுவதும் படித்துப்பார்த்தேன். சேர அரசருள் மருமக்கட்டாயமுறை யுண்மையைச் சங்கநூல்கள் ஆதரிப்பன என்றே யான் எஞ்ஞான்றும் எண்ணினேன். தங்கள் கட்டுரையில் 5ஆம் பக்கத்து 4ஆவது பிரிவில் தங்களாலும் காட்டப்படும் சொற்றொடரைத் திரு. எம். ஸ்ரீநிவாஸ ஐயங்கார் தம் தமிழ் ஆராய்ச்சிகள் என்ற நூலுள் 273 ஆம் பக்கத்தில் மணக் கிள்ளியை நெடுஞ்சேரலின் உடன்பிறந்தாட்குக் கணவனாகவே கொண்டு விளக்கியுள்ளார். திரு. பி.டி. பி.டி. ஸ்ரீநிவாஸ ஐயங்கார் தம் தமிழ்ச் சரிதம் என்ற நூலுள் 512ஆம் பக்கத்தில் இக்கருத்தொடு மாறுபடக் கூறினா ரெனினும், அவர்கூற்று வலியற்றதென நான் கருதலானேன். சேரவரசர் வழியில் மருமக்கட்டாயத்தை ஆதரிக்கச் சங்கநூல்களில் இவ்வளவு பொதி நிதிபோன்ற செய்திகளிருப்பதை நான் முன்அறியேன். இவ்வெல்லாச் சான்றுகளையும் திரட்டித் தாங்கள் ஒரு கட்டுரையாக வெளியிட்டது தமிழகத்திற்கு ஒரு பெரும்பணி இயற்றினதாகும். மருமக்கட்டாய முறை யானது மக்கட்டாயக்குடிகளின்மேல் புதிதாகச் சுமத்தப்பட்டதென்னும் கொள்கை அதனளவில் முதன் முகத்தே நிலையுறுவதென்றாம். தாய் வழித்தாயநிலை ஏற்படுவது எஞ்ஞான்றும் இல்லையாகும். தென்னாட்டில் வந்தேறிய ஆரியர் (தந்தைவழி) நாகரிகம் இப்பழைய தாய்வழித் திராவிட நாகரிக முறையை மேலைக்கடற் புறத்தே ஒதுக்கியதென்பதும், அக் குடகடலடைகரைக்கேரள நாட்டினினின்றும் இப்பழைய தாயமுறையை ஒழித்துவிட ஆரிய நாகரிகத்திற்கு மாகாது போயிற்றென்பதும் இயல்பாகக் கூடியதாம். ஆரியர் நாகரிகம் தந்தைவழித் தாயத்தின் மேல் நிலைபெற்றது. இன்னும் சின்னாளில் இம் மருமக்கட்டாயமுறை எவ்வளவில் தமிழர் பழ இயலொழுக்கம் என்பதையும் தாங்கள் ஆராய்வீர்கள் என்றும் அதனையும் ஆராய்ந்து நாகரிக உற்பத்திவளர்ச்சி விசாரத்திற்கு விரும்பத்தகும் நல்லுதவி யாற்றுவீர்கள் என்றும் நான் நம்புகின்றேன். செயின்ட் ஜார்ஜ்கோட்டை மிக்க அன்புபாராட்டுடன், 16-1-1935. உண்மையில் தங்களவன் ஆர். வி. கிருஷ்ணன் (ஆங்கிலத்தில் ஒப்பம்) (2) (மதரா கார்ப்பொரேஷன் வித்யாஇலாகா பரிசோதகர் திருவாளர் எஸ். சச்சிதாநந்தம்பிள்ளையவர்கள் பி.ஏ. எல்.டி.,) (ஆங்கிலக்கடித மொழிபெயர்ப்பு) தமிழ்ப்பேராசிரியர் திரு. எஸ்.எஸ். பாரதியாரவர்களின் சேரநாட்டுத் தாயமுறை என்ற தனிக்கட்டுரையை மிக்க ஆர்வத்துடன் படித்தேன். தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்ற ஆராய்ச்சியுரையை திறம்பெற ஆக்கியோராகிய அப்பேராசிரியர், இக் கட்டுரையில் பண்டைத் தமிழக வரலாறுகளை விசாரிப்பார் பலருள்ளத்தே தோன்றிய சங்ககாலப் பெருஞ்சேரர் வழிமுறைபற்றிய மயக்கங்கள் தவறான சில கருத்துக்களையும் தெளியவைத்து விளக்கியுள்ளார்கள். பண்டைச் சேரகுல அரசர்கள் இன்று மலையாள நாட்டில் வழக்கிலுள்ள மருமக்கட்டாய முறையையே மேற் கொண்டிருந்தனரென்று மறுக்கவொண்ணாவாறு இவர்கள் நிறுவியமுடிபு தமிழக வரலாற்றுத் துறையிலுழைப்போர் பலர்க்குப் புதிதாக வெளிப்படுத்தப் பட்ட உண்மையாகும். பேராசிரியர் பாரதியாரவர்கள் இப் பத்தகத்தே தமது ஆழ்ந்த தமிழிலக்கிய ஆராய்ச்சியையும் சட்ட ஞானத்தை யும், தம் வளமிக்க நுண்மாண் நுழைபுலப் பேற்றினையும் இவ்வாராய்ச்சியிற் புகுத்திப் பயன் படுத்தியமையால், இது புகழ்சான்ற பழஞ்சேரர் வரலாற்றில் நமக்குள்ள குறையறிவை நிரப்பப் பேருபகாரமாயிற்று. நூற் சான்றுகளை வடித்தெடுத்துச் சீர்தூக்கி ஆளும் அவர்கள் திறம் மிக வியக்கத்தக்கதாம். புலமைமிக்க இந்நூலாசிரியர் தாம் வழக்கறிஞராயிருந்த ஞான்று தமது இன்பக்காலப் போக்காய்த் தமிழ்ச்சுவை துய்க்கும் இடையே இத் தனி யாராய்ச்சிக்கட்டுரை எழுதினரென்பது குறித்து வியக்கத்தக்கது. அண்ணா மலை நகர்க் கண் நிறுவப் பெற்ற தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்ப்பகுதித் தலைவராக இவர்களை நியமித்து இவர்களை முழுநேர விழுப்பணியைத் தனதாகப்பெற்றது தமிழகத்துக்குப் பெரும்பேறாகும். இதுபோன்ற திறஞ்சான்ற நுண் பொருணூல் இன்னும் பல உபகாரநிதியாக இவர்கள் தருவார்களென எதிர்பார்ப்பவன் யானொருவனல்லன். என்போல்வார் பலருள்ளார். சென்னை எஸ். சச்சிதாநந்தம்பிள்ளை, 12-2-35 (ஆங்கிலத்தில் ஒப்பம்) சபாபதிநிலையம். லாயிடுரோடு இராயப்பேட்டை (3) (மதுரைத் தமிழ்ச்சங்கக்கலாசாலைத் தலைமையாசிரியர் பிரும்மஸ்ரீ திரு. நாராயணையங்காரவர்கள்) சேரர் தாயமுறை என்னும் இவ்வாராய்ச்சியுரையானது நுண்மாண் நுழைபுலச் செல்வரான திருவாளர் எஸ். சோமசுந்தர பாரதியார் எம்.ஏ.,பி.எல்., அவர்களால் எழுதப்பெற்றது. இதன்கட் சேரர் குலத்தினர்க்கு அவர்நாட்டில் இக்காலத்தில் வழக்கத்தி லிருக்கும் மருமக்கட்டாயமுறையே முற் காலத்திலும் வழங்கிவந்த தென்று பலசான்றுகளால் ஆராய்ந்து காட்டப்பட்டிருக்கிறது. அது இக்காலத்துள்ள புலவர் பலர்க்கும் புதுவிருந்தாயமைந்து மகிழ்வூட்டி வருகிறது. பாரதியார் எழுதும் ஆராய்ச்சியுரை ஒவ்வொன்றும் அப்படிப்பட்டதே. அவற்றுள்ளும் இவ்வாராய்ச்சி மறந்தொழிந்திழந்த (பண்டைச்)சேரர் மருமக்கட்டாயத்தை நாட்டற் கெழுந்ததொரு போராட்டமாயும் உள்ளது. இத்தகைய போராட்டத்தில் எதிர்ப்போரைப் பழித் துரைத்தலின்றி விடயத்தை விரித்துரைத்து மேற்சொல்லும் மேலான வாதமுறைக்கு இது வழிகாட்டியாயிருக்கிறது. தம் துணிபுரைத்தற்குச் சாதனமான சான்றுகள் ஒருசில பிறர் துணி புரைத்தற்கும் சாதனமாவனபோன்று தோன்றுமவை யொவ்வொன்றும் அவ்வாறன்றென்றுகாட்டி நாட்டுதற்கேற்ற தடைவிடைகளை யுட்கொண்ட தொடைநடையினால் விடயங்கள் விளங்கச் சொல்லிச் செல்லும் திறமானது வழக்கியன் முறையால் மன்றாடற்றிறமையின் மாண்பமைந்து விளங்கு கின்றது. ஆராய்ச்சியுரை வரைவார்க் கீதோர் அருமைவாய்ந்த உரையாணியாய் அமைந்துள்ளது. இன்பம்பயக்கப் படிப்பார்க்கு இஃதோர் விநோதமாகத் தோன்றத் தக்கது. பாரதியாரவர்கட்குள்ள தமிழ்மொழிப்புலமைக்கும் சங்க நூற்பயிற்சிக் கும் இவ்வாராய்ச்சியுரையொன்றே வாய்சான்ற சான்றாய் அமையவல்லது. “இன்னோனுக்கு, இன்னோன்தேவி இன்னோள் ஈன்ற மகன் இன்னோன் என்ற வாய்பாடுடைய பதிற்றுப்பத்துப் பதிகச் சொற்றொடர்களெல்லாம் மருமக்கட்டாய முறையை நாட்டு தற்கே ஏற்றசாதனமென்று காட்டியிருக்கும் பாரதியாரது கல்வித்திறமையும் சொல்வித்தகமும் பாராட்டத் தக்கன. இவ்வாராய்ச்சிக்கு அடிப்படையான சாதனம் மலை நாட்டுள் இக்காலத்தும் மருமக்கட்டாய முறை இருந்துவருதலேயாம். அதனை முதலில் நன்கு விளக்கிக்கொண்டு முறையே பழைய சங்க நூற்சான்றுகளை அதற்கு இணங்கக் காட்டிச் செல்வது நிரந்தினிது சொல்லுதல் என்னும் சொல் வன்மையைப் புலப்படுத்துகிறது. சொல்வன்மையும் நுண்ணுணர்வும் கொண்டு தாம் பிடித்ததனையே சாதிக்கவிரும்பும் ஒருசிலர் போலன்றிச் செப்பத் தினின்றும் திறம்பாதுநின்றே சங்ககால நிகழ்ச்சியினை உள்ளவாறுணர்ந்து, உணர்ந்தவாறு பிறர்க்குணர்த்தும் பாரதியார்தம் உழைப்பும் ஊக்கமும் ஒப்புரவாண்மையும் நன்குமதிக்கத்தக்கன. சுருங்கச்சொல்லின் இவ்வாராய்ச்சியுரையானது அளவினாற் சிறியதேயாயினும் புலமையாற் பெரியதென்று போற்றத்தகும் என்பதே எனதுதுணிபு. (ஒப்பம்) திரு. நாராயணயங்கார் தமிழ்ச்சங்கம், மதுரை. (4) (அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப்பேராசிரியர் திருவாளர் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியாரவர்கள்) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப்பகுதித் தலைவர் திரு. சோமசுந்தரபாரதியாரவர்கள் எம்.ஏ.பி.எல்., அரிதின் ஆராய்ந்தெழுதிய சேரர் தாயமுறை என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்துப் பார்த்தேன். இஃது இக்காலத்துக் கேரள நாட்டினரிடைக் காணப்படும் மருமக்கட்டாயமுறைக்குச் சங்க நூல்களில் ஒன்றாகிய சேரவேந்தர்களின் சிறப்புக்கூறிய பதிற்றுப் பத்து என்னும் பழந்தமிழ் நூலின் பதிகப்பாட்டுக்களிற் கண்ட குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்டு வரையப் பட்டுள்ளது. இவ்வாராய்ச்சி தமிழில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத தொன்று அப்பதிகப்பாடல்களில் தாம் மேற்கொண்ட பொருட்கு இயைந்த பகுதிகளுக்குத் திரு. பாரதியாரவர்கள் கண்ட பொருள், முட்டுப்பாடின்றியும் கலக்கமின்றியும் தெளிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பொருள் வலியுறுத்தற்குரிய பற்பல சான்றுகள் திறனுற எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பழமையே நினைவு கூர்ந்தொழியாது உண்மை யாராய்ச்சியிற் றலைப்படலும், முன்னூல்களிற் கண்டவொன்றை யெதிர்த்தாராய்தலும், உண்மையெனக் கண்டவற்றை எக்காரணங்களையுமுன்னிட்டு மறையாது வெளிப்படுத்தலும் நம் பாரதியார வர்கள்பாற் காணப்படும் அருஞ்செயல்களாம் இவற்றிற்கு இக்கட்டுரை யொன்றே போதிய சான்றாக நின்று திகழ்கின்றது. பதிற்றுப் பத்துப்பதிகப்பாடல்களிற் கண்ட பகுதிகள் இன்னசேரற்கு இன்னான் தேவி யீன்ற மகன் இன்னான் என்று பின் ஒருசேரன் சுட்டப்படுதலான், அவற்குத் தாயும் தந்தையும் வேறாக அவன் முன்னைச் சேரற்கு ஏதோ ஒருவகைத் தொடர்புடையானாவன் என்பது போதரும். அத்தொடர்பு அரசியலுரிமை யெனவும் அவ்வுரிமைக்கு அவன் உரியனாதல் மருமக்கட்டாய முறையானாமெனவும், அதனால் அவற்கு முன்னைச்சேரன் மாமனாவ னெனவும், அச்சேரன் சோதரிய பின்னவன் தாயாவளெனவுங் கொண்டு மருமக்கட்டாய முறையை நிறுவிய திரு. பாரதியா ரவர்களின் நுண் மாணுழைபுலமும் நூலறிவும் ஆராய்ச்சித் திறனும் அறிஞருள்ளத்தை வியப்புறச் செய்து இன்புறுத்து வனவாம். இவர்கள் ஆராய்ச்சித் துறையெல்லாம் இங்ஙனமே புதிய நெறியிற் சென்று பழமையின் உண்மை யைப் புலப்படுத்தும் இயல்பினவாமென்பது முன்னர் இவர்கள் வெளிப் படுத்திய சில ஆராய்ச்சிக் கட்டுரைகளானும் உணரலாம். தொன்மைய வாமெனும் எவையும் நன்றாகா, இன்று தோன்றிய நூலெனும் எவையும் தீதாகா என்னுங் கொள்கையைக் கடைப்பிடித்து ஒழுகும் திரு. பாரதியாரவர் களின் ஆய்வுரை புலவருலகத்துக்கு நல்ல விருந்தாதலையறிந்து மகிழ்ச்சி யடைகின்றேன். நீடுவாழ்க! அண்ணாமலைநகர், (ஒப்பம்) மு. கதிரேசன் 26-2-35 (5) (கால்நடை மருத்துவ இலாகாவிற் பென்ஷன்பெற்ற மேலதிகாரி திருவாளர் இராவ்சாகிப் வி.பி. சுப்பிரமணியமுதலியாரவர்கள் ஜி.பி.வி.சி.,) (ஆங்கிலக்கடித மொழிபெயர்ப்பு) என் அன்பிற்குரிய ஐயா! ... ... தங்கள் சேரர் தாயமுறை ஆராய்ச்சிக்கட்டுரையைப் பற்றிய விவரமான என்கருத்தை எழுதி இப்போது அனுப்புகிறேன். இது வரையறையும் தெளிவுமற்ற பொதுவுரையாகக் கருதப் பெறாதென நம்புகிறேன். தங்கள் சேரர்தாயமுறையையும் அதற்கு மறுப்பாகப் பண்டிதர் திரு. மு. இராகவையங்காரவர்கள் எழுதி வெளியிட்ட சேரர்தாய வழக்கினையும், அம்மறுப்பை மறுத்த நீதிவாதி திரு. எல். கிருஷ்ணசாமிப் பிள்ளையவர் களின் சேரர்தாயமுறைக் கட்டுரையையும் நான் படித்துமுடித்த பிறகே இத்துடன் அனுப்பும் என் கருத்துரை எழுதப்பட்டது. இதுவரை உலகறியாப் புதிய செய்திகள் இனி வெளிவந்தா லன்றித் தங்கள் கட்டுரைமுடிபுகள் அசையமாட்டா. ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு முன் (1929 ஆம் ஆண்டு பெப்ருவரி மார்ச்சு மாத வெளியீட்டில்) செந்தமிழ்ப் பத்திரிகையில் தங்கள் சேரர்தாயமுறையைப் படித்துள்ளேன். அக்கட்டுரை மெய்ம்மையா ராய்ச்சிக்குச் சிறந்த எடுத்துக் காட்டாம் என்பதே அப்போது அக்கட்டுரை என்னுள்ளத்தே தோற்று வித்த கருத்தாம். தங்கள் வாதங்கள் திட்டமானவையாய் நேரக்கூடிய தடைகளுக்கும் தக்கவிடைகளாய்நின்று பதிற்றுப் பத்துப் பதிகங்களுக்குத் தாங்கள் கூறும் செம்பொருட்பொருத்தத்தை எனக்கு வலியுறுத்திக்காட்டின. அன்றியும், இதில் தாங்கள் கண்ட முடிபுகள், ஒருநாட்டில் நடைபெறும் வழக்கானது புதிதிடைவந்ததெனக் காட்டும் தக்க பிறவேறு சான்றில் வழி ஆண்டு அப்படியே முற்காலத்தும் வழக்குப் பெற்றிருந்ததென்றே கொள்ளவேண்டும் என்னும் சரித அளவை அறிவு நூற்றுணிபுக்குச் சாலப் பொருத்தமுடைத்து. தங்கள் விருப்பப்படி தங்கள் கட்டுரையை யான் மறு முறையும் படித்துமுடித்ததால் யான் முன்கொண்ட கருத்தே மிகவும் வலியுறுவதாயிற்று. இளங்கோவடிகளும் அவருரையாளராகிய அடியார்க்கு நல்லாரும் எடுத்தாளும் மகள் என்னும் மொழி புதல்விப் பொருளன்றிப் பிறிதுபொருள் தராதாயின், பதிகங்களுக்குப் பொருள்விளக்கத் தாங்கள் மேற்கொண்ட பெருமுயற்சி பயனற்றதாமென்று மேற்குறித்த செந்தமிழ் 134ஆம் பக்கத்தில் தாங்கள் கூறுகின்றீர்கள். தனக் குண்மையினுரிய மனைவி என்ற பொருள் மகள் என்ற மொழிக்கு இலதாமியனுங்கூட, பதிகமியற்றியோர் சேரர்க்கு மருமக்கட்டாயமுறையைத் தவறாகச் சார்த்தி வைத்தாரென்ற செய்தியைத்தாங்களே முதன்முதலில் மறுக்க வொண்ணாவாறு நிறுவிய நற்பணிசெய்தீராவீர்கள். ஆனால் மகள் என்ற சொல்லுக்கு மனைவிப் பொருள் உண்டென்பது தங்களாலேயே பின்னால் சான்றுகாட்டி நிறுவப்படுகின்றது. பதிகங்கள் மருமக்கட்டாயமுறையைக் குறியாது மக்கட்டாயவழியினையே குறிக்குமெனக் காட்டக்கருதி வருந்தி முயன்றோரெல்லாராலும், தங்களின் உரைமுகத்தே பதிக ஆசிரியரது தவற்றினை அகற்றிக்காத்தல் ஆகாது. உண்மையில் மகட் பொருள் விளக்கம் என்ற தலைப்பின்கீழ்த் தாங்கள் விளக்கிய நியாயவாதங்களால் மேற்கூறிய முயற்சியாளர் அப்பதிக ஆசிரியர்க்கு வழங்கிய வழுநிலையினின்றும் அவரைத் தாங்களே மீட்டுத் தந்துள்ளீர்கள். பிறசான்றுகள் என்ற தலைப்பின்கீழ்த் தாங்கள் விளக்கும் நியாயங்கள் முதலிலே அசைக்க இயலாதவாறு தங்களால் நிறுவப் பெற்றுள்ள சேரர்தாயமுறையைப் பற்றிய தங்கள் முடிபுகளை மீண்டும் நன்கு வலியுறுத்துகின்றன. பதிகங்களில் மகன் என்றசொல் வந்தமையானே பதிகங்களில் பொருள்பற்றிய இடர்ப்பாடுண்டாயதென்று எனக்குத் தோற்றுகின்றது. தாங்கள் தெளிய விளக்கியுள்ளவாறு பதிகங்களின் ஆசிரியரால் மகன் என்னும் மொழி செழும் பொருணயத்துடன் வழங்கப்பட்டுள்ளது. யானறிந்தவரையில் மகன் என்னுஞ் சொல்லைவிட, அன்றி அதனை ஒப்பாவாகிலும், பதிக ஆசிரியரது கருத்தை விளக்குதற்குரிய சிறந்த சொல் வேறொன்று தமிழ்மொழியில் இல்லை. அரசுரிமைத் தந்தையான அம்மான்பால் தன் தாய்வழியரசினை உரிமையிற் பெறும் அரசுரிமைப் புத்திரனாகிய மருமானைக் குறிக்க மகன் என்ற சொல்லை வழங்கிய பதிக ஆசிரியர் ஞானபிதா ஞானபுத்திரன் என்னும் வழக்கினை உளத்துக் கொண்டார் போலும்! கைவல்யநவநீதம் தத்துவம் விளக்கப்படலம் `19ஆம் செய்யுளில் ஞானகுரு தன் மாணவனை வாராய் என் மகனே என்று விளித்தல் ஈண்டு நோக்கற்பாற்று! வெ.ப. சுப்பிரமணியமுதலியார் (ஆங்கிலத்தில் ஒப்பம்) வெள்ளகால், திருநெல்வேலி ஜில்லா, 26-1-35 (6) (சென்னைச் சருவகலாசாலைத் தமிழ்ப்பேரகராதித் தலைமைப் பதிப்பாசிரியர் திரு. எஸ். வையாபுரிப்பிள்ளையவர்கள் பி.ஏ.பி.எல்.,) சிறந்த தமிழறிஞரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் பேராசிரியருமாகிய திரு. சோமசுந்தர பாரதியாரவர் கள் எழுதிவெளியிடும் இந்நூலுக்குப் பிறரொருவரது, முன்னுரையொன்று வேண்டுமென யான் கருதமாட்டேன். 1929 ஆம் வருஷத்திலே பாரதியாரவர் களின் வாசதான மாகிய பசுமலைக்கு யானும் எனது நண்பரொரு வரும் சென்றிருந்தோம். அப்பொழுது சேரர் தாயமுறையைக் குறித்து அவர்கள் ஆங்கிலத்தில எழுதியிருந்த கட்டுரையிற் சிலபாகங்களை எங்களுக்கு வாசித்துக்காட்டினார்கள். அவர் களுடைய ஆராய்ச்சித்திறத் தினைப் பெரிதும்வியந்த அக் கட்டுரையினைச் சரித்திரசம்பந்தமான மாதாந்தரப் பத்திரிகை களில் வெளியிட்டுப் பலர்க்கும் உபகாரமாம்படி செய்ய வேண்டு மென வற்புறுத்தினேன். பின்னர் அதனைத் தமிழ்ப் படுத்திச் செந்தமிழ்ப்பத்திரிகையில் வெளியிட்டார்கள். இங்கேகூறிய படி எனக்கும் இந்நூலுக்கும் ஒருசிறு தொடர்பு இருத்தல் பற்றியே பாரதியாரவர்களின் வேண்டுகோளின்படி ஓர் முன்னுரை எழுதுதற்கு யான் மனமுவந்து இணங்கினேன். பழந்தமிழ்க் குடிகளுள் ஒருசாராராகிய சேரமரபினருள் எவ்வகையான தாக்கிரமம் அமைந்திருந்ததென்று ஆராய்ந்து தெளிவதே இந்நூலின் நோக்கம். இந்நூற்பொருளாகிய தாயவழக்கு பண்டைக்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு அதி வாரம் போன்றது. தமிழ் மக்களது பூர்வசரித்திர விளக்கத்திற்கு மிக இன்றியமையாதது. ஆதலால் இந்நூலின்கண் ஆராய்ச்சிக் கெடுத்துக் கொண்ட பொருள் மிகமிக முக்கியமானதாகும். இதுவரை தமிழ் அறிஞர் களும் தமிழ் நாட்டுச் சரித்திர அறிஞர்களும் ஆராய்ந்துவந்த பொருள்களில் இந்நூற் பொருளைக்காட்டினும் சிறந்ததொன்றைக் காணுதல் அரிதாம். இதனை வாசகர்கள் நன்குணர்தல் வேண்டும். இந்நூல் தோன்றுவதற்கு முன்புதான் இப்பொருளைக் குறித்துத் தமிழாராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தியிருந்தார்கள். ஸ்ரீமான் மு. இராகவையங்காரவர்கள் சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில் பாரதியாரவர்கள் கொள்கையொடு மாறுபட்ட மக்கட்டாயக்கொள்கையை வற்புறுத்தி எழுதியிருந்தார்கள். காலஞ்சென்ற ஸ்ரீமான் எம். ஸ்ரீநிவாஸ ஐயங்காரவர்கள் தமது தமிழாராய்ச்சியுரைகளில் (கூயஅடை ளுவரனநைள) பாரதியாரவர்களது கொள்கையை ஒருவாறாக முற்பட வுணர்ந்து எழுதியிருக்கிறார்கள். ஆனால் பாரதியாரவர்கள் எழுதியதன்பின்னரே இப்பொருள் தமிழ் மக்களது பூர்வ சரித்திரவுணர்ச்சிக்கு எத்தனை யின்றியமையாததென்பது அறிஞர்களால் நன்குணரப்பட்டது. இவ்வுணர்ச்சி தோன்றுதற்கும் பல அறிஞர்களும் பலபடியாக இப்பொருளை ஆராய்தற்கும் பாரதியாரவர்களே முக்கியக் காரணராயுள்ளார்கள். பாரதியாரவர்களே இப்பொருளின் சரித்திர கௌரவத்தை நாமனைவரும் நன்குணரும்படி செய்தவர்கள்.மேற்கூறியவற்றால் இந்நூல் மறுப்புரையாகவும் துணிந்துரையாகவும் இயன்றுள்ளதென அறியலாகும். ஆனால், ஆராய்ச்சியால் உண்மைகாணவேண்டுமாயின், அது தருக்க நெறிபிறழாத வாதத்தினால் ஆகுமேயன்றிப் பிறவாறு ஆகாது. வாதம் இன்றியமையாததாக இருப்பதினால், அதனைக் கௌரவபுத்தியோடு நிகழ்த்துதல் வேண்டும். எவ்வகையான குற்றமுமின்றிச் செவ்வையாகவும் கௌரவமாகவும் எழுதிய மறுப்புரைகளுள்ளே பாரதியாரவர்களியற்றிய இந்நூல் மிகச் சிறந்ததாகும். இச் சிறந்த ஆராய்ச்சிநூலினைக் கற்றுத் தமிழறிஞர் களனைவரும் பெரிதும் பயனடைவார்க ளென்பது திண்ணம். (ஒப்பம்) எஸ். வையாபுரிப்பிள்ளை சேரர் தாய முறை பகுதி 1 : முன்னுரை கழிந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாகக் கேரளத்திற் பல வகுப்பார் பெண்வழியில் மருமக்கட்டாயமுறை பேணுவதைக் காணுகின்றோம். நாம் அறிய இவ்வழக்கம் நாயர் பெரு மக்களிடை மட்டுமில்லை; தென்திருவாங் கூரில் நாஞ்சில் நாட்டு வேளாளர் முதல் வடமலையாளத்தில் மகம்மதிய மாப்பிள்ளை மாரும், பொய்யானூர்க் கூற்றத்துப் பார்ப்பன நம்பூதிரிகளும், தென்கன்னடத் தொன்மக்கள் பலரும், துளுவர் கொங்கணர் சிலரும் இத்தாய் வழித்தாய முறையையே நெடுநாளாகக் கையாண்டு வருகின்றனர். இவ் வழக்க முடையாரெல்லாரும் குடமலைக்கு மேற்கே பண்டைச் சேரநாட்டின் பகுதிகளான மேலைக்கடற்கரை நாடுகளிலே இருப்பதாகவும் அறிகின்றோம். பார்போசா, சோனரத்து முதலிய ஐரோப்பிய யாத்திரிகர் மேலமலைத் தொடருக்கு மேற்குநில மக்கள் பலர் தம்முள் பிறிதிடத்திற் காணரிய இப் பெண்வழித் தாயம் பெரிதும் வழங்கப்பெறுவதைக் கவனித்துத் தம் யாத்திரைக் குறிப்புகளில் இவ்வதிசயச் செய்தியை எழுதியிருக்கின்றனர். இக் கேரளவழக்கத்தை நாம் அறிவோம். எனினும், இது புதிதாகக் குடபுலத்தில் எப்படியோ வந்தேறி நடக்கும் ஒரு இடைக்கால வழக்க மெனக்கொண்டு வாளா அமைகின்றோம். சேரநாடு தமிழகத்தின் பகுதி யென்றும், சேரர்பரம்பரையிலும் மற்றைத் தமிழ்வேந்தர் குடிமரபாம் மக்கட்டாயமே பண்டை நாளில் அடிப்பட்ட பழவழக்காய் ஆட்சிபெற்றிருந்த தென்றும் நாம் நம்புகின்றோம். எப்படியானாலும் சங்காலத்துக்கு நெடிய பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே சேரநாட்டில் மரு மக்கட்டாய முறை புதுவழக்காய்ப் புகுந்திருக்க வேண்டுமெனக் கொள்கின்றோம். அப்படி நாம்கொள்வதால் அதன் உண்மையினை எனைத்தளவும் ஆராய்தற்கு அவசியம் நாம் காணகில்லோம். நம்மிடத்து இம்மனநிலைக்குத் துணையாகுங் காரணங்கள் பலவுள. எதனையுமே ஆராயாமல் கண்டபடி கொண்டமையும் இயல் நமது பெரியமாட்சி. ஊழொன்றிற்கிறைமைகொடுத்து, ஊக்கத்தை அறத்தொலைத்துப் பாழொன்றைப் பொறுமையுடன் பல துறைகளிலும் நாம் பயின்று வருகின்றோம். இப்பழக்கத்தால் நாம் பெற்ற பயன் பலவற்றுள், உண்மைகளைத் தேடுவதிற் பெருவெறுப்பும், கையறவிற் கழிவிருப்பும் என இரண்டுமாம். இவ்விரண்டும் நம் மனத்தில் நாளடைவில் மிகத்தடித்து வேரூன்றிவளர்கின்றன. மேனாட்டார் கண்டளந்து சொல்லுமுன்னே நமது பழஞ்சரிதங் களை நாம் உணரோம். நம்மிடையே கிடையாத நமது அரிய பழைய தமிழ் நூல்களெல்லாம் இன்றளவில் இலண்டனிலும் பாரிசிலும் இருக்கப் பார்ப்போம். நமது தற்கால நிலைக்கு இவ்வாறு உண்மைநலம் பேணாத நம்மவரின் பெருநொதுமல் மனப்பாங்கைச் சிறிதல்ல, செம்பாதி காரணமாக் கூறல் கூடும். “பார்ப்பனருக்கும், பணமுடைய மேல்வகுப்பார் பலருக்கும். பெண்டி ரெல்லாம் மணமற்ற இன்பத்திற்குத் துணையாகி வாழவேண்டும் என்ற இழிவழக்கைக் கேரளத்தில் வடவாரியமுனிப் பொருநர் பரசுராமர் அந் நாட்டார் நலம் பேணிப் புகுத்தியதாய் நம்பூதிரிமார் சிலர் நவில்வதனைப் பழமறைபோற் கொள்ளுகின்றோம். சங்கநூல்களில் யாதொன்றும் நம் மக்கட்டாய மரபிற்கு மாறாய தாயமுறை சேரருக்குச் சுட்டில தென்று ஒருதலையாத் துணிகின்றோம். இவை கொண்டு மருமக்கட்டாயமுறை சங்க காலத் தமிழ்ச் சேரர்க்கில்லாத பின்பெழுந்த புதுவழக்கமென்று அதனிற் சங்கையற்றுத் தெளிந்து நிற்போம். நாம் அறிய நெடுங்கால ஆட்சியுடைய வழக்கொன்றைப் புதியதெனத் தெளிவிக்கும் தக்கசான்று காணு மட்டும், வழங்குமிடத்து அது நிலைத்த பழவழக்காய்க் கொள்ளுவதே ஆராய்ச்சித்துறையில் அறிவுடைய நெறியாகும். தொல்லைச்சேரர் கையாண்ட தாயமுறைக்குத் தமிழகத்திற் பழப்பனுவல் ஏதேனும் கரிபகரக் காணுவமேல், அதன் உண்மை ஆராயத்தக்கதாகும். சேரர்குடிப்புகழ் விரிக்கும் தொன்னூல்கள் சிலவற்றுள் இது பற்றிய சான்று சிறிதுள்ளதென ஊகித்தற்கு இடமுண்டு. ஊன்றி நோக்கில், இந்நூல்கள் சிலவற்றுள், பழஞ்சேரர் பரம்பரையில் மக்கள்வழி பேணப்படாமல் தற்காலக் கேரளத்தார் கையாளும் மரு மக்கட்டாய முறையே வழங்கியதாய்க் கரிகூறும் சான்றுண்மை காணு கின்றோம். உண்மையினை உணர்தற்குக் காய்தல் உவத்தல் இல்லாத நடுநிலையில் நின்று நாம் ஆய்தல் வேண்டும். பகுதி 2 : தாயமுறை நியமங்கள் ஆயுமுன்னர் நாம் அவசியம் அறிந்துவைக்க வேண்டியவாய் இவ்வாராய்ச்சிக்கு உதவுவனவாய தாயமுறை வழக்கங்கள் சிலவற்றை வரையறுத்துத் தெளிய வேண்டும். கேரளத்தில் வழங்கிவரும் மருமக்கட்டாய முறைக்கு அடிப்படையாயுள்ள சில வருமாறு : (1) ஆண் வழியிலன்றிப் பெண்வழியிலேயே உறவு முறையும் கிளைமரபும் ஆட்சிபெறும்; தாய்மாரே குடிபேணும் அடி மரமாய்க் கருதப்படுவர். கிளைவளமும் குடிநிதியும் பெண் வழியே தழையும் வகை முறைவகுத்துக் குடியறங்கள் நிற்பனவாகும். (2) மக்களெல்லாம் தாய்க்குடியின்கிளைஞராவர்; அக்குடியில் ஆடவர்கள் தம் மாமன்மார்க்குரிய வழித்தோன்றல்களாய் வரன்முறையே உரிமைபெறுவர். மருகரெல்லாரும் வயது வரிசையிலே வரன்முறையாய்த் தனித்தனியே குடியாளும் தலைமைகொள்வர். (3) தற்கால நாகரிகப் புதுமாற்றம் சில புகுந்து பழவழக்கைப் பிறழ்வித்துத் தடுமாறச் செய்யுமுன்னே, கேரளத்திற் குலநிதியைப் பிரித்தாளும் பிறப்புரிமை ஆண்மக்கட்கு ஒன்றும் இல்லை. தாய்வழிகள் பிரிந்து சில புதுக்குடிகள் தழையலாகும். குடிதோறும் பொதுநிதியம் பிரியாமல் வளர்வதாகும். பெண்களுக்கு நிதியாட்சியுரிமை இல்லை. குடிநிதி யின் பயனுகர்ந்து பொதுவாழும் உரிமை அக்குடியிற் பிறந்தவர்கள் – ஒரு தாயின் வழியினர்கள்- இருபாலார் எல்லார்க்கும் பொதுவுடைமையாக நிற்கும். பொதுக் குடியைத் தருவாடு என்று அந்நாட்டார் தற்கால மொழி வழக்கிற் சொல்லுகின்றார். (4) தருவாட்டின் (குடியின்) தலைமை, அதன் நிதியாட்சி மேற்கொள்ளும் உரிமையெல்லாம் மருகருள்ளே படிப் படியாய் வயது முறை வரிசையினில் வழிமுறையே வந்திறங்கும். ஒரு தலைமுறையாரின் தநயரெல்லாம் இம்முறையில் ஒப்புரிமை யுடையவராய், அவர் பெற்ற புதல்வரெல்லாம் சோதரராய் வயதுமுறைவரிசையினில் ஒவ்வொருவராக இதை ஏற்கலாவர். அவர்கட்குப் பின் அவர் தாய்மாரின் பெண்மக்களீன்றுடைய ஆண்மக்கட்கு அவ்வுரிமை அம்முறையே வந் திறங்கும். குடித்தலைமை பெற்று அதனை ஆள்வோரைக் காரணவர் என்றும், அவருக்குப்பின் அக்குடியில் அவ்வுரிமையடைதற் குரியவரை அநந்தரவர் என்றும் இன்று கேரளத்தில் இத்தாயமுறை வழங்குங் குடிகளிலே கூறிவருவர். மருகரெல்லாம் வயது முறை வரிசையினில் வழிமுறையே இவ்வுரிமை வரப் பெற்றுத் தத்தம் முறையில் ஒவ்வொருவரும் அத்தலைமை மேற்கொண்டு காரணவராகித் தம்கடனாற்றிக் கிளை தாங்கிக் குடியோம்பி (தருவாட்டைப் பேணி) ஆள்வர். (5) கேரளத்திற் கோக்குடிகள் தம்முள்ளும் நாடாளுங் கோலுரிமை, குடியாவார்தங்கள் சிறு குடித்தலைமை யுரிமையைப் போலவே, மருகர்வழியே வரிசை முறையில் வருவதாகும். கோக்குடியிற் பெண்கள் சிலர் தகவுடைய குறுமன்னர் குடியினரை மணந்து வாழ்வார். எனின், மனைவியர்க்குக் கணவர்குடிகளில் உறவுக்கடன் உரிமைபதவிகள் ஒன்றும் இல்லை. பெண்களெல்லாம் பிறந்தகுடியின் மட்டுமே கிளை உரிமை கடமைகளும் உரியநிலை மேதகவும் உடையராவர். (6) ஆண்மக்கள் தம் தந்தையர்க்குப் புதல்வரெனினும், அன்னார் குடிசிறக்க வழிநிற்கும் உரிமைபெறும் பிறங்கடையர் (வாரிசு) ஆகமாட்டார். அத்தந்தையர்க்கு வழித்தோன்றலாவார் அவருடன் பிறந்த பெண்வயிற்று மருகரோயாவர். ஆகவே, ஆண்மக்கள் தத்தம் மாமன்மார்க்கு மட்டுமே வழித் தோன்றல்களாகி நிற்பர். இவைபலவும் மருமக்கட்டாயமுறைக்கு நிலைக்களமாய், அதனோடு ஆட்சிபெறும் அறவழக்காம். இதை மறவாமல் மனத்திருத்தித் தொன்னூல்களின் உதவி கொண்டு, பழஞ்சேரர் பரம்பரையில் வழங்கியது இத்தகைய மருமக் கட்டாயமா நாம் ஆளும் மக்கட்டாயமா என்றதொரு சிற்றாராய்ச்சியில் இறங்குவோமாக. பகுதி 3 : சங்கநூற் சான்றுகள் இவ்வாராய்ச்சிக்குத் துணையாகும் சான்றுகள் பல. அவற்றுள், சங்கநூல்கள் சிறந்தன. அவற்றுள்ளும் பதிற்றுப் பத்தே தலைசிறந்தது. சேரரைச் சோழபாண்டியருடன் சேர்த்துப் பாடும் பிறநூல்கள் போலாது. இது முழுதும் தனியே சேரரையே பாராட்டுவதாகும். பத்துப் பழம்பெரும் புலவர் ஒவ்வொரு சேரனையும் பப்பத்துப் பாட்டிற் பாராட்டிப் பாடிய பாக்களைத் தொகுத்துப் பதிற்றுப்பத்து எனும் பெயரால் நின்றுநிலவ வைக்கப்பெற்றதொரு தொகைநூல் இது. இதில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடையாமல் இடை யெட்டுப் பத்துப் பாட்டுக்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. இவற்றின் ஒவ்வொரு பத்துப்பாட்டின் தொகையிறுதியில் அப்பாட்டுடைக் கோச்சேரனின் குடிவழியும் அவன் வெற்றி முதலிய சில பிற சிறப்புக்களும் அடங்கிய பதிகமொன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆகவே சேரர் குலமுறை தெளிவதற்கு இப்பதிகங்கள் மிகவும் உபகாரப்படும். இப்பதிகப் பாட்டுக் களில் சேரர் குடிவழிகூறும் அடிகளையும் தொடர்களையும் ஆதரவாகக்கொண்டே பண்டிதர் பலரும் இதுகாறும் இச்சேரர் குலமுறை கிளத்தியுள்ளனர். அதனால் ஈண்டு அவ்வடிகளையும் தொடர்களையுமே முதலில் நாம் ஊன்றி நோக்கி அவற்றின் பொருளும் குறிப்பும் ஆழச் சூழ்ந்து தெளியக்கடவோம். அவை வருமாறு : 1. முதற்பத்து : முற்றுமே அகப்பட்டிலது 2. இரண்டாம் பத்து : இமையவரம்பன் நெடுஞ் சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியது. மன்னிய பெரும்புகழ் மருவில் வாய்மொழி இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு, வெளியன் வேண்மாள் நல்லினி யீன்றமகன் 3. மூன்றாம் பத்து : பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கௌதமனார் பாடியது. இமையவரம்பன்தம்பி...... பல்யானைச் செல்கெழுகுட்டுவனை 4. நான்காம் பத்து : களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது. ஆராத் திருவிற்சேர லாதற்கு வேள் ஆவிக் கோமான் பதுமன் றேவி யீன்ற மகன் 5.ஐந்தாம் பத்து: கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணம மைந்த காசறுசெய்யுட் பரணர்பாடியது. வடவ ருட்கும் வான்றோய் வெல்கொடிக் குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்கு, சோழன் மணக்கிள்ளி யீன்றமகன் 6. ஆறாம்பத்து:ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடியது. குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு, வேஎள் ஆவிக் கோமான் றேவி யீன்றமகன் 7. ஏழாம்பத்து: செல்வக் கடுங்கோவாழியாதனைக் கபிலர் பாடியது. மடியா வுள்ளமொடு மாற்றார்ப் பிணித்த நெடுநுண் கேள்வி யந்துவற்கு, ஒருதந்தை யீன்றமகள் - பொறையன் பெருந்தேவியீன்றமகன் 8.எட்டாம்பத்து : bபருஞ்சேரலிரும்bபாறையைஅரிசில்கிழார்பாடியது. பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு, வேளாவிக் கோமான் பதுமன்றேவி யீன்றமகன் 9.ஒன்பதாம்பத்து: இளஞ்சேரலிரும் பொறையைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது. குட்டுவ னிரும்பொறைக்கு, மையூர் கிழாஅன் வேண்மாள் - அந்துவஞ்செள்ளை யீன்றமகன் 10. இறுதிப்பத்தும் இறந்ததே போலும். இவையிற்றை உற்றுநோக்குங்கால், பதிகம் எட்டனுள் இரண்டு நான்கு ஆறுமுதல் ஒன்பதான ஆறுபதிகத் தொடர் களால் அவ்வப் பதிகப்பாட்டுடைத் தலைவனான கோச்சேரன் ஒவ்வொருவனும், ஓரோர் கோமாள் (கோக்குடிப்பெண்) தன் கணவனுக்கு மகனும் மற்றொரு கோச்சேரனுக்கு வழித் தோன்றலுமாய்ப் பெற்றெடுத்து தவிய பெருமகனாகவே தோன்றுகிறான். மூன்றாம்பதிகமான மற்றொன்றும் அதனையே வலியுறுத்தும். ஏனெனில் அதிற்பாடப்பெற்றவன் இரண்டா வதன் தலைவனான இமையவரம்பனுக்குத் தம்பியெனப்படுவதால், இப்பதிகமும் இரண்டாம்பதிகச் செய்யுள் கூறும் குல முறையையே கூறுவதாகும். எஞ்சிய ஐந்தாம்பதிக அடிகள் சிறிது சங்கைக் கிடனாக நிற்கின்றன. இதில் ஏதோ ஒரு சொற் குறைவு காணப்படுகின்றது.1 அக்குறைவால் இப்பதிகத் தொடர் இது வரை சிறிது பிறழ்ச்சியுணர்ச்சிக்கு ஒருவாறு இடந்தந்து வருகிறது. இப்பதிகத்தொடர்களெல்லாம் பொருள் நேர்மையால் ஒருதிறப் படுமாயினும். சொன்னீர்மையாற் பல துறைப்பட்டு நிற்கின்றன. 4,6,8 பதிகங்கள் ஒருவகை; 2,9 ஒருவகை; 3ஆவது தனிவகை; 7ஆவது ஒருவகை; 5வது ஒருவகை; ஆக இவைகள் இப்படிப் பலபட அமைந்து கிடப்பதால் இப்பதிகத் தொகுதியை இம்முறையிலேயே பகுத்துத் தனித் தனியே அவ்வத் தொடர் வகைகளின் சொல்லாற்றலையும் பொருளாக்கத்தையும் ஈண்டுச் சிறிது ஆழத் துருவி ஆராயப்புகுவோம். (i) பதிற்றுப்பத்து 4,6,8 ஆம் பதிகத் தொடர்களின் பொருட்குறிப்பு (1) முதலிலே, நான்கு ஆறு எட்டுப் பதிகப்பாக்களில் அப்பாட்டுடைத் தலைவரின்தாய் அங்குப் பெயர் குறித்த சேரரல்லாத பெருந்தகையார் பிறர் ஒருவரின் தேவியெனச் சுட்டப்பட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. இதுவரை இப்பதி கங்களைக் கொண்ட சேரர்குலமுறை கண்ட பண்டிதர்கள், ஈண்டுத் தேவி என்ற சொல்லினாற்றலை விசாரியாமல் அது தநயை என்னும் பொருளுடையது போலவே கருதிச் சென்றிருப்பதாகத் தெரிகிறது. இச்சொல், தெய்வங்களில் பார்வதி காளி துர்க்கை என்பாரையும், மக்கள் வருக்கத்துள் முறைப்பொருளில் மனைவியையு மட்டுமே குறிப்பதாகும். தேவி என்ற சொல்லுக்கு. மனைவிப் பொருளல்லது, மகள் அல்லது தநயை என்ற பொருள் இல்லை. இலக்கியம் திவாகராதி நிகண்டுகள் முதலிய நூல்களில் மகட்பொருளில் இச்சொல்லுக்கு ஆட்சி இல்லை. எனவே, இச்சொல் இயல்புவழக்கில் மனைவியையே சுட்டவேண்டும். ஆகவே 4, 6, 8 பதிகங்களிற் சுட்டப்படும் கோச்சேரர்தாய், வேள் ஆவிக் கோமானின் மனைவியாகவேண்டும். அதனாலே இவள் வேறு சேரருக்கு மனைவியாயிருந்திருக்க முடியாததாகும். (2) நார்முடிச்சேரல்: ஆடுகோட்பாட்டுச்சேரலாதன், பெருஞ்சேரலிரும் பொறை என்ற மூன்று கோச்சேரர்களை யீன்ற தாயை வேள் ஆவிக்கோமான் பதுமனின் தேவி என்றே இம் மூன்றுபதிகங்களும் விசதமாக விளக்கு கின்றன. எனவே, பதுமன்மனைவியான இக்கோப்பெரும் பெண்டு இப்பதி கங்களிற் பாட்டுடைத் தலைவருக்கு முன்தோன்றல்களாகக் குறிக்கப் படும் சேரலாதன், செல்வக்கடுங்கோ என்ற இரு பெருஞ் சேர மன்னருக்கும் அறக்கிழத்தியாமாறில்லை. அன்றியும், தேவிச்சொல்லுக்கு இல்லாத தநயைப் பொருள் கொடுத்துவைத்து, வேள் - ஆவிக்கோமான் பதுமனுக்கு இவளை அவன் பெற்ற மகளெனவே கொண்டாலும், இவள் இப்பதிகங்கள் சுட்டும் இருவேறுசேரருக்கு இற்கிழத்தியாகுமுறை கொள்ளற்கில்லை. (3) இம்மூன்று பதிகத்தும் குறிக்கப்பெற்ற வேள்பதுமன் ஒருவனேயாக வேண்டும். வெவ்வேறு வேண்மானைச் சுட்டுவதான குறிப்பு ஒன்றும் இவற்றுள் இல்லாத நிலைமையில் இவை ஒருவனையே சுட்டும் எனக் கொள்ளுவதே முறையாகும். அன்றியும், பண்டிதர் திரு. மு. இராகவையங்காரவர்களும் பிறரும் இம்மூன்று பதிகமுமே ஆவிக்கோமான் பதுமனெனும் ஒரு வேளிர் தலைவனையே குறிக்குமென விளக்கி யுள்ளார்கள். இயற்பொருளில் இப்பதிகத் தொடர்கள் சுட்டுகிறபடி இப் பதிகச்சேரரின்தாய் பதுமன்தேவி ஆவளேல், சேரலாதன், கடுங்கோ என்ற இருவர் தமக்கும் இவள் மக்களீன்றாள் என்று உரைப்பதற்கு தன் பதியாகும் பதுமனொடு மற்றிருவர் சேர்க்கையும் இவட்கு ஏற்றவேண்டும். பதுமனுக்கு இவளைத் தநயை எனக் கொள்ளினுமே இருபெருங்கோச்சேரருக்கு அறத்துறையில் இவள் மக்கள் பெறுமாறில்லை. ஒருவேளை பெற்றாலும், அப்பெற்றி உலகறிய வசைநிற்கப் பாடாண்பாட்டில் அதைப் புலவர் பாடமாட்டார். (4) இவளை வேள்பதுமனுக்கு மகளாக்கிச் சேரர் பலர் சேர்க்கை இவட்கு எய்தாமல் அகற்ற விரும்புவோர்கள், பதுமற்கு ஈங்கு இரு மகளிர் பெறுவித்து, ஒருத்தியைச் சேரலாதற்கும் மற்றவளைக் கடுங்கோவுக்குமாகப் பிரித்து மணம்புரிவித்து விழவுகொள்வர். மூலத்தில் இரு மகளிர் எனும் குறிப்பே எங்கும் இல்லை. மூவேறு பதிகத்திற் குறித்த வேள் ஆவிக்கோ மானை, மூன்றில் ஒன்றிற் பதுமன் என்ற பெயர் குன்றவந்திருந்தும், ஒருவனே எனத்துணியும் பண்டிதர்கள், மூன்றிடத்தும் ஒரு படியே ஆவிக்கோமான் தேவி எனக் குறித்த கோமாட்டியார் ஒருத்தியல்லள், மூவரல்லர், இருவரேயாவரெனக் கொள்ளு வானேன்? ஆவிக்கோமான் மனைவியை இங்கு அவனுக்கு மகளாக்கி, பதுமனை முன் மணந்தவளை மறுபடியும் கன்னியாக்கிப் புதுமன்றல் புரிவிக்க முயலும்போது, அதன் குறுக்கே வந்துபுகும் ஆபாசத் தொல்லை களை விலக்குதற்கு ஒருத்திவிழாப் போதாமல் அவள் தந்தைக்கு இரு மகளிருண்டாக்கி, இருவரையும் இரு சேரர்க்கு உரியராக்கி, அவர் தம்மால் மும்மக்கட் பெறுவித்து ஒருவகையாய் முறைப்படுத்த அவசியங்கள் எழுகின்றன. இவள் பதுமனுக்கு மனையாளாய் அவனுக்கே தநயர்களைப் பெற்றெடுத்துத் தன்கிளையிற் சேரருக்குப் 1பிறங்கடைய (யள hநசைள) மருகர்களாய் உதவுவதிற் கோமகட்குக் குறையில்லை; குடிப்பழியும் கூறற்கில்லை. மேலும், ஏழாம் பத்துப் பதிகத்தில் இத் தேவிச் சொல் தெளிவாக மனைவிப்பொருட் குறிப்பிலேயே வந்திருப்பதும் இங்குச் சிந்திக்க வேண்டும். ஆண்டு எனைத்தானும் இச் சொல்லுக்கு மனைவியல்லாத எப்பொருளும் பொருந்தாது. அந்துவற்கு ஒரு தந்தை யீன்ற மகள்பொறையன் பெருந் தேவி என்று கடுங்கோவை ஈன்ற தாயை அப்பதிக ஆசிரியர் விசதமாக விளக்கியுள்ளார். அந்துவன் தந்தைக்கு மகளும் பொறையனுக்குத் தேவியும் ஆவளென, அவளை ஈன்ற தந்தை யோடும் கொண்ட கணவனோடும் தனித்தனியே அக்கோமாட்டிக்கு உள்ள தொடர்பை விளக்கும் முறைப் பெயர்களைப் புலவர் விதந்து பிரித்துக் கூறியிருப்பதால், தேவிச்சொல் ஆண்டு எவ்வகையிலும் மகளைக் குறிக்கவே முடியாது. மனைவியையே குறித்துத் தீரவேண்டும். பதிகங்களெல்லாம் ஒரு புலவராற் செய்யப் பெற்றன. என்றே கொள்ளப்படுகின்றன. எப்படியும் எல்லாப் பதிகங்களிலும் ஒரே பொருளைக் குறிப்பதாய் ஒரு படியான சந்தர்ப்பத்திலே வரும் இத்தேவிச் சொல்லுக்கு யாண்டும் பொருந்துவதான மனைவிப் பொருள் ஒன்றையே இவ்வெல்லாப் பதிகங்களிலும் கொள்ள வேண்டுமென்பதே நியதமாகிறது. (5) இன்னும், இம்மூன்று பதிகத்துக் கோச்சேரர் தாயாரைப் பதுமனுக்கு மகளாயும், சேரருக்குத் தநயர் தரும் மனைவியாயும் குறிப்பதுவே ஆசிரியர் கருத்தாமேல், சேரரொடு இவளை மனையறக்கிழமை தரும் சொற்கொண்டு சேர்த்திருப்பர். பதுமனுக்குத் தநயை எனத் தெளிவிக்கும் சொற்பெய்யத் தவறி, மிகத் தடுமாறி மனைவியதன் மறுபெயரால் அவனொடு சேர்த்து ஈங்கு இவளைச் சுட்டமாட்டார். இப்பதிகப் பாவலர் மூவருள் ஒருவர் குறையா நிறையும் கணவன்பால் தூய காதலும் உடையராய்க் கற்பரசியராய்ப் புகழ் சிறந்த நச்செள்ளையார் என்ப. அத்தகைய பெருந்தகையார், நிறையிறந்து, மணந்தவனைத் தணந்து, தன் பெண்ணியலை மறந்து பிற மன்னர் பலரைக் கூடி மக்களைப் பெறுபவளை வாயார வழுத்துவரோ? அல்லது அவள் இழிதகவைச் சுட்டித்தான் பாடுவாரோ? (6) பாட்டுக்களிற் பதுமனுக்குத் தேவி எனப் பகர்ந்த பின்னர், அவன் தேவி சேரருடன் சேர்க்கையினால் அவர் தமக்கு மைந்தர்களைப் பெற்றாள் என்று உரைத்து அவளைப் பழிப்பதுடன், அவள் ஈன்ற கோச்சேரர் மூவர் புகழும் மாசுபட மூன்று புலவரும் பாடமாட்டார். பாடினரேல், ஒறுப்பதை விட்டு அவர் பழிக்குப் பரிசில் தர அக்கோச்சேரர் மூவரும் கழிபித்தர்களாய் இருக்கவொல்லார். பாடினவர் பலவேறு புலவரென்றும், பாடிப்பெற்ற பரிசில் அளவிறந்ததென்றும் இப்பதிகங்களே விளக்குவதைக் கருதுங்கால், பாடப்பட்ட கோச்சேரரின் குற்றமற்ற குடிப்பிறப்பினையும், அவர்தம் கற்பு நிறை தாய் வயிற்றில் - தந்தை வேண்மான் - ஆவிக்கோமாற்கு மைந்தராய்ப் பிறந்து, தாய்வழியில் தலைசிறந்த சேரருக்கு மருகரென வழித்தோன்றி நின்றுயர்ந்த குறிப்பினையும், இப்பதிகத் தொடர்நிலைகள் சுட்டுவதைத் தெளியலாகும். இனைய பல நினையுங்கால் நான்கு ஆறு எட்டுப் பதிகங்களிற் புகழ்பெற்ற கோச்சேரர் மூவரும், ஆவிக்கோமான் பதுமனுக்கே மைந்தரும், சேரலாதன் செல்வக் கடுங்கோ இருவருக்கும் வழித் தோன்றல்களாய்ச் சிறந்த பெருமருகரும், தம் கோத்தாயின் வயிற்றுதித்து வளர்ந்த கோப்பெரு மக்களும் ஆவர் எனத் துணிவதே கருமமெனத் தோன்றக் காண்போம். (ii) 2, 9ஆம் பதிகத் தொடர்ப் பொருட்குறிப்பு (1) இனி இரண்டாவதாக 2, 9 ஆம் பதிகத்தொடர்களையும் அவை சுட்டும் பொருட் குறிப்பையும் நிதானித்தறிய முயல்வோம். இவை முறையே இமையவரம்பன் நெடுஞ் சேரலாதனை உதியஞ்சேரலாதற்கு வெளியன் வேண்மாள். நல்லினியீன்ற மகன் என்றும், இளஞ்சேரலிரும்பொறையைக் குட்டுவன் இரும்பொறைக்கு மையூர்கிழான்வேண்மாள் அந்துவஞ் செள்ளையீன்ற மகன் என்றும் கூறுகின்றன. 2, 9 பதிகங்கள் அப்பாட்டுடைத் தலைவரின் தாய்மாரை வேண்மாள் நல்லினி’, வேண்மாள்-அந்துவஞ்செள்ளை என்று சுட்டுகின்றன. இவ்விடங்களில் வேண்மாள் என்னுஞ் சொல் அத்தாய்மாரின் இயற்பெயரில்லையென்பது வெளிப்படை. நல்லினி அந்துவஞ் செள்ளை என்பன அவர்தம் இயற்பெயரும் வேண்மாள் என்பது அவ்விருவருக்கும் பொதுவாயதொரு சிறப்புப் பெயரு மாயிருக்க வேண்டும். சிறப்பினாகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க்கிளவி முற்படக்கிளவார் என்னும் தொல்காப்பியச் சூத்திர விதிப்படி, இவ்விருவர் இயற்பெயர்களுக்கும் முன்னிற்கும் வேண்மாள் எனும் பொதுச்சொல், கோமனைவி என்னும் பொருளுடையதொரு சிறப்புப் பெயரேயாதல் வேண்டும். (2) இன்னும், வேண்மாள் என்னும் சொல், கோவேந்தர் கோப்பெருந் தேவியாரையும், கோவியலார் முடிபுனையாக் குறுமன்னர் தேவியரையும் குறிக்கும் ஒரு பொதுப்பெயராய்ப் பழந்தமிழிலக்கியங்களிற் பலவிடத்தும் வழங்கக் காண்பாம். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தம்கோத்தமையன் செங்குட்டுவன் கோமனைவியை வேண்மாள் என்று சுட்டியுள்ளார். ஆண்டு அச்சொல் அத்தேவிக்கு இயற்பெயர் என்று நினைப்பவரும் சிலருளர். உண்மையிலே இது அவளுக்கு இயற்பெயரன்றென்று எளிதில் தெளியலாகும். வானவர் தோன்றல் வாய்வாட் கோதை விளங்கில வந்தி வெள்ளி மாடத்து 1இளங்கோ வேண்மா ளுடனிருந் தருளி என்பன சிலப்பதிகாரக் காட்சிக் காதையடிகளாகும். சேரர் பெருமான் இயந்திரவாவி எழின்மாடத்தில் தம்பி இளங்கோ வோடும் தனது தேவியோடும் ஓலக்கத்து எழுந்தருளியிருந்தவன், மலைவளம் காணுவமென அவரிருவருடனும் பரிவாரங் களோடும் புறப்பட்டான் என்று சுட்டும் குறிப்பின இவ்வடிகள். இன்னும் செங்குட்டுவன் மனைவி இக்காட்சிக்காதையிற் பின்னோரிடத்தில் மாபெருந்தேவி எனவும், நடுகற் காதையில் மீண்டும் வாளா வேண்மாள் எனவுமே குறிக்கப்படக் காண்கின்றோம். இதனால் வேண்மாளும் மாபெருந்தேவியும் கோமனைவி என்ற ஒருபொருள் குறிக்கும் இரு விசேடணங்களென வெளியாகிறது. இவை இரண்டும் செங்குட்டு வனின் ஒரே கோமனைவியைக் குறிக்கும் இரு சிறப்புப்பெயர்களேயாகும். (3) மேலும், இளங்கோவுக்குச் செங்குட்டுவன் தமையன்; அதனால் குட்டுவன்கோத்தேவி அவருக்கு அண்ணியார் (மதிநியார்) ஆகவேண்டும். தமிழகத்தில் தமையன்மார் மனைவியர்பெயரைத் தம்பியர் கூறுவது மரபில்லை; வழக்கு மில்லை. கோவேந்தன் பெருந்தேவிக்குரிய மதிப்பும் தமிழ்மரபும் ஒருங்கேநின்று இளங்கோவடிகளை அவளியற் பெயரைச் சுட்டவொட்டாமல் தடுப்பது முறைமை. தமையன்பெயர் தன்பெயர்களைச் சொல்லுவதில் அத்தகைய தடைகிடையாது. அப்படியிருந்தும் இவ்விடத்தில் இவர்களியற் பெயரைக் கூடக் கூறாமல், மன்னனை வாளா வானவர் தோன்றல்’, கோதை எனவும், தன்னை இளங்கோ எனவும் கூறிப்போகும் அடிகள் மன்னவன் கோமனைவியை மட்டும் அவள் இயற் பெயர் கொண்டுசுட்டுவர் எனக் கொள்வதிற் பொருத்த மாகும் பொருளும் இல்லை. (4) இதுவுமன்றி, இச்சொல் மன்னர்மனைவியரின் பொதுப் பெயராகுமென்பதை வலியுறுத்தும் சான்றுசில இன்னும் உள. தொன்னூல்களில் நன்னன்வேண்மாள், உதியன் வேண்மாள் என்ற பிரயோகங்களைக் காணுகின்றோம். ஈண்டு ‘நன்னன்’, உதியன் என்ற சொற்கள் ஆண்பாற்பெயர்கள் என்பது ஒரு தலை. அவற்றோடு வேண்மாள் எனும் பெண்பாற்பெயர் தொடருங்கால் நன்னன்தேவி, உதியன்தேவி என்றே பொருள்படும். அல்லாக்கால் இப்பெயர்த்தொடர்கள் பொருளற்ற சொல்லின் வெறுங் கூட்டமாகும். இத்தெளிவு கண்டே மகா மகோபாத்தியாய சாமிநாதையரவர்களும் தம் அரும்பத அகராதியில் வேண்மான் என்பதற்குச் சிற்றரசன் எனவும், வேண்மாள் என்பதற்குச் சிற்றரசன் மனைவி - முடியுடை யரசன் மனைவி எனவுமே பொருள் குறித்துள்ளார்கள். இவ்வாறு வேண்மாள் எனும்சொல் கோவேந்தர் குறுமன்னர் மனைவியர்க்குப் பொதுப்பெயராக வழங்குவதால், அது ஒருவருக்கும் இயற்பெயராகாமல் சிறப்பு முறை குறிக்கவரும் பொதுப்பெயரேயாதல் வேண்டும் என்பது ஐயமற்ற துணிபாய்க் கொள்ளக்கிடக்கின்றது. (5) வேண்மாள் என்பது இயற்பெயராமேல் பிறிது சொற் சார்பு வேண்டாமல் தன்னிலையில்நின்று அந்தப் பெயருடைய பெண்மகளைச் சுட்டல்கூடும். இவ்வாறு தனி வழக்கு இக்கிளவிக்கு எங்குமில்லை. வருமிடங்கள் தோறும் இது ஆண்பாற் சொற்கள் பிறவற்றைத் தழுவியேவரக் காணுகின்றோம். ஆண்பாற் பெயரொடுவாளா தொடருங்கால் அவ்வாண் மகனுக்குத் தொடர்புடைய பெண்ணொருத்தியைச் சுட்டும் ஒரு சிறப்புமுறைப்பெயராவதன்றி, தொடர்புசுட்ட வேண்டாத இயற்பெயராய்க் கொள்ளுவது பொருந்தாது; பொருள்தராது. (6) ஆண்பெயரொடு பெண்ணொருத்தியினியற் பெயரைப் புணர்க்குங்கால், அவ்விருவருக்கும் உள்ளதொரு முறை குறிக்கும் சொற்பெய்து விளக்குவதே மரபாகும். இராமன் தேவி சீதை, இராமன்தாய் கோசலை, இராமன் மைத்துனி ஊர்மிளை என்று ஒரு முறைப் பெயர்த்தொடர்பு கொண்டே இருபாலார் இயற்பெயர்த் தொடர்கள் வழங்கப்பெறும். முறை சுட்டாமல் வாளா இராமன் ஊர்மிளை என்று இரண்டு இயற் பெயர் களைத் தொடுத்தால் ஒரு பொருளுமறியாமல் மருளுதற்கே ஏதுவாகும். அத்தகைய பிரயோகம் வழக்காறில்லை; மரபிறந்த தவறுமாகும். (7) ஈண்டு இரண்டு ஒன்பது பதிகப்பாட்டுக்களில் வெளியன் - வேண்மாள் கிழாஅன் - வேண்மாள் என்று ஆண் பெயர்களோடு தொடர்ந்து பிறசொற்சார்பின்றி நிற்றலால், வெளியன் கிழாஅன் இவ்விருவருக்கும் தனித்தனியே ஒரு தொடர்புடைய பெண்களுக்கு வேண்மாட் சொல் முறைப் பெயராயமைவது. அங்கையில் நெல்லிபோல் தெளியப்படும். மற்றைய 4, 6, 8 பதிகங்களில் பதுமன்தேவி, ஆவிக்கோமான் தேவி என்றிருப்பதே போல், ஈண்டும் வெளியன் வேண்மாள், கிழாஅன் வேண்மாள் எனவே வருவதால், தேவிப் பொருளிலேயே வேண்மாட்சொல்லும் நிற்கிறதென்று ஒருதலையாகத் துணியப்படும். (8) இனி, முறைப்பெயராய்க் கொண்டாலும் இதற்கு மனைவிப் பொருளைக் கொடுப்பானேன். மகட் பொருளிலேயே இதைக்கொள்ளுவோ மென்பார்க்குச் சொல்லுவேம். மகள் என்னும் பொருளில் இச்சொல்லைக் கொள்ளற்கில்லை. தம் தமையன் செங்குட்டுவன் தேவியை இளங் கோவடிகள் வேண்மாள் என்று உரைப்பதாலும். மகட்பொருளில் யாண்டும் இதற்கு ஆட்சியில்லாததாலும் மனைவியையே வேண்மாட்சொல் குறிப்ப தாகும். (9) பதிற்றுப்பத்தின் பதிகங்களைச் செய்தவர் ஒருவரே என்பது அப்பதிக இயல்பாற் புலப்படுவதாகும். திரு மு. இராகவையங்காரவர்கள் போன்ற பண்டிதரும் அப்படியே கொள்ளுகின்றார்கள். இஃது எப்படியிருப்பினும் இந்நூலில் ஐந்தொழியப் பிறபதிகங்களிலெல்லாம் ஆசிரியர் ஆண்பாற் சொற்களோடு தேவி வேண்மாள் என்ற சொற்களை நிறுத்தி, அவைகொண்டே அங்குக் குறித்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள முறையை விளக்கிப்போவதனால் இச்சொற்களிரண்டுமே மனைவி என்னும் ஒருபொருளில் முறைப் பெயராய் வருமாறு தெளியக்கிடக்கின்றது. இவ்வமைப்பால் தேவி வேண்மாள் என்ற இருசொல்லும், ஒருநிலையில் ஒன்றையொன்று விளக்கி, இரண்டிற்கும் மனைவி எனும் ஒரே முறைப்பொருளுண்மையை வலியுறுத்தும். சுருங்கச் சொல்லின், வேண்மாள் என்பது வேண்மாளின் பெண்பாலாம். வேண்மான் என்னுஞ் சொல் சிற்றரசரான வேளிர் அல்லது குறுமன்னருக்குப் பொதுப்பெயர் என்று அறிவோம். ஆகவே வேண்மாள் என்பது குறுமன்னர் தேவியர்க்குப் பொதுப்பெயராய், கோவேந்தர் மனைவியர்க்கும் சில இடத்தே முறைப்பெயராய் வழங்குமென அறியலாகும். (10) 4, 6, 8 பதிகங்களில் தேவி என்னும் முறைப்பொதுப் பெயர்மட்டும்நின்று, அம்முறையுடையாளான பதுமன் தேவியின் இயற்பெயர் சுட்டப்பெறாமலிருக்கிறது. 2, 9 பதிகங் களிலோ வேண்மாள் என்ற முறைப்பெயரோடு நல்லினி அந்துவஞ் செள்ளை எனும் இயற்பெயர்கள் தொடர்ந்து வெளியன்மனைவி நல்லினி’, மையூர்கிழான் மனைவி அந்துவஞ்செள்ளை எனத்தெளிக்கப்படுகின்றது. இங்கு இவர்கள் இயற்பெயரைத் தனித்தனியே விளக்குவதால், இருவருக்கும் பொதுவான வேண்மாட்சொல் முறைப் பெயரேயாவதனை முன்னரே விளக்கியுள்ளேம். (11) இன்னும், வேண்மான் என்பதற்குச் சிற்றரசன் என்றும், வேண்மாள் என்பதற்குச் சிற்றரசன் மனைவி முடியுடையரசன் மனைவி என்றுமே பதிற்றுப்பத்து அரும்பத அகராதியில் மகா மகோபாத்தியாய சாமிநாதையரவர்கள் பொருள்குறித்துள்ளார்கள். அதனாலும் இச்சொல் இப்பதிகங்களில் சிற்றரசரான வெளியன் மையூர்கிழான் என்ற வேளிர்களின் மனைவிமாரையே சுட்டுகின்றதென்று துணியலாகும். (12) இவை பலவற்றாலும், இப்பதிகங்களில் வரும் வேண்மாட்சொல் மனைவிப்பொருளையே குறிக்குமென்பது விசதமாகும். ஆகவே இரண்டாம் பதிகத்தால் வேள் வெளியனுக்கு நல்லினி மனைவியென்பது விளங்குகிறது. இனி இப்பதிகத்திலேயே இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் வேள் - வெளியனுக்கும், அவன் வேண்மாள் - நல்லினிக்கும் மகனென்று சொல்லப்படுவதலால், அவன் உதியஞ் சேரலாதற்கு மகனாமாறில்லை. மருகனே யாவனெனத் தெளிகின்றோம். அதுவேபோல், 9ஆம் பதிகத்தாலும் இளஞ்சேரலிரும் பொறைவேள் - மையூர்கிழானுக்கும் அவன் தேவி அந்துவஞ் செள்ளைக்கும் மைந்தனாய், குட்டுவன் இரும்பொறைக்கு மருகனேயாவனென அறிகிறோம். குட்டுவன் இரும்பொறை - குடக்கோ இளஞ்சேரலிரும் பொறையின் மாமன் என்று மகா மகோபாத்தியாய பிரும்மஸ்ரீ உ.வே. சாமிநாதையரவர்கள் பதிற்றுப்பத்தின் அரும்பத முதலியவற்றின் அகராதியிற் காட்டியிருப்பதும் இதனை வலியுறுத்தும். (iii) 3ஆம் பதிகத்தொடர்ப் பொருட்குறிப்பு இனி மூன்றாம் பதிகத்தைப்பற்றிய தொல்லையில்லை. அப்பதிகத் தலைவனான பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பதிக ஆசிரியர் வாளா இமையவரம்பன்தம்பி என்றே சுட்டியமைவதனால், அவன், தன் தமையன் 2ஆம் பதிகத் தலைவனான நெடுஞ்சேரலாதனைப் போலவே, வேள் வெளியனுக்குத் தநயனும் உதியஞ்சேரலாதற்கு மருகனும் ஆவனென்பது எளிதறியக் கிடைப்பதாகும். (iஎ) 7 ஆம் பதிகத்தொடர்ப் பொருட்குறிப்பு ஏழாம்பதிகத்தொடரோ, நெடுங்கால இருளகற்றிச் சேரர் குடித் தாயவழி யுண்மைமுறையைத் துலக்கும் ஒளி விளக்கா யிருக்கிறது. இவ்வுண்மையறி தற்கு இது மிகவும் துணையா வதாய்த் தோன்றுவதால், இதனைச் சிறிது ஊன்றி ஆராய வேண்டுவது மிகவும் அவசியம். இக்கிளைமுறை கிளத்தும் தொடராவது : அந்துவற்கு ஒரு தந்தை யீன்றமகள் - பொறையன் பெருந்தேவி யீன்ற மகன் என்பதே. இதிற் பாட்டுடைத் தலைவனான செல்வக்கடுங்கோவை ஈன்ற தாயைப் பொறையன் பெருந்தேவியெனவும், அந்துவற்கு ஒருதந்தையீன்றமகள் எனவும் இப்பதிக ஆசிரியர் தெளிவித்துள்ளார். இவர் கபிலர் எனவே கொண்டால், கபிலர் பொய்யாநாவிற் புலவராதலால் அவர் கூறுவது மெய்யென்பது ஒருதலை. யாவர் கூற்றாயினும் இத்தொடர்கூறும் பொருளைத்தெளிய முயல்வோம். முதலில், இத்தொடரில் அந்துவனும் கடுங்கோவின் அன்னையும் ஒரு தந்தையீன்ற மகளென்பது துளக்கமற விளக்கப்படுகிறது. அதனால் அந்துவஞ்சேரற்கு அவள் சோதரியாவளென்று அறிகின்றோம். அதுவுமன்றி, அவள் அடுத்து உடனே பொறையன்தேவி எனவும் விதந்து விசேடிக்கப் படுகிறாள். அதனாலும் முற்கூறிய அந்துவற்கு அவள் மனைவியா மாறில்லை. இத்தொடரிறுதியில் இவளீன்ற கடுங்கோ அந்துவற்கு மகனெனவும் சுட்டப்படுகிறான். இந்நிலையில் இவள் அந்துவற்கு மைந்தனீன்று தருவது எப்படி? பொறையனுக்கு மனைவியாதலாலும், அந்துவனின் தந்தைக்கு மகளாகவே - அந்துவனுக்கு இவள் சோதரியாவதாலும், இவள் அவனை மணந்து மகப்பெற முடியது. மணவாக் காதலனாக அவனைக்கூடிக் கடுங்கோவை யீன்றாளென்றால், அது அவளையும் அவள் குடியையும் சுடும் பழியாவதல்லால், சேரர்குலம் தழைய அவள் மகனீன்று தந்தாளென நன்மக்களாற் புகழத்தகுதியன்றாம். அவள் பெற்ற கடுங்கோவை அந்துவற்குத் தநயனாக்குவதால் அவளுக்குச் சகோதரனுடன் விபசார தோசம் சம்பவிக்கும். இத்துணை விபரீதம் விளைக்கும் இக்கருத்தைவிட்டு வேறு செம்பொருள் உண்டாயின் அதைக் கொள்ளுவதே நமது கடமையாகும். இவ்வாக்கியத்தில் வந்துள்ள விசேடணச் சொற்களின் நிலையும் அமைப்பும் விபரீதப்பொருளுக்குச் சிறிதும் இடமின்றி உண்மையை எளிதில் தெளிவிக்கின்றன. முதலிற் கடுங்கோவின் தாயை அந்துவனின் தந்தை மகளென்று கூறியதோடமையாமல், மீண்டும் அவளைப் பொறையன்தேவி என இடைத்தொடர் கொடுத்தும் விசேடித்திருப்பதாற் புலவர்கருத்துச் சந்தேக விபரீதங்களுக்குச் சிறிதும் இடந்தராமல் விளங்குகிறது. அந்துவனின் சோதரியும் பொறையனின் மனைவியுமான கோமாட்டி கடுங்கோவைப் பெறுகின்றாள். அவள் பெற்ற கடுங்கோவே, பொறையனுக்குத் தநயனும், அந்துவற்குப் பிறங்கடையாம் மருமானுமாகின்றான். தெளிவான இத்தொடர் மொழிப்பொருளை மாற்றிக் கடுங்கோவை அந்துவனுக்கு மகனெனவே கொள்ளப்புகின், ஒருவனே மற்றொருவனுக்கு ஒருங்கே மகனும் மருகனும் ஆவன் என ஒரு அபூக அசாம்பாவித விபரீதத்தைக் கூறுவதாக முடியும். எப்படியும் இத்தொடரில் தேவி என்பதற்கு மகளெனப் பொருள் கொண்டு இவளைப் பொறையனுக்கு மகளாக்க இடமில்லை. தமிழ்வழக்கில் தேவிச் சொல் முறைப்பெயராக, புதல்விப் பொருளில் ஆட்சிபெறாது என்பதை மேலே (3ஆம் பகுதி, 1ஆவது உட்பிரிவில்) காட்டியுள்ளேன். இவள் தந்தை பொறையனல்லன்; பொறையன்தேவியான இவளுக்குப் பொறையனல்லாத வேறு ஒரு தந்தை உண்டு என்றே பதிற்றுப் பத்து பழையஉரைகாரரும் பதிப்பாசிரியர் மகாமகோ பாத்தியாய சாமிநாதையரவர்களும் கருதுகிறார்கள். இதனை ஒருதந்தை - பொறையன் தேவியின்பிதா என்ற அவர்கள் உரைக்குறிப்பு விளக்குகின்றது. பொறையன் பெருந்தேவி எனும் தொடர்கொண்டு பொறையனை இவளுக்குத் தந்தை எனக் கொள்ளக்கூடுமாயின், ஒரு தந்தை என்றதற்குப் பொறையனாகிய ஒரு தந்தை என்று இவர்கள் பொருள்கூறியிருக்க வேண்டும். அதைவிட்டுப் பொறையன் தேவியின்பிதா என்று பொருளுரைக்க மாட்டார்கள். அவ்வாறு இவர்கள் பொருள் கொண்டிருப்பதால், தேவி என்ற சொல்லுக்கு மகள் என்னும் பொருள் இவர்களுக்கு உடன் பாடும் ஆவதனை அறிகின்றோம். ஆகவே, கடுங்கோவின் தாய், வேண்மான் பொறையனுக்கு மனைவியும், அந்துவன் தந்தைக்கு மகளுமே ஆவளென இப்பதிகத் தொடரால் தெளிகிறோம். அன்றியும் இத்தகைய ஐயம் எதுவுமே நிகழாவண்ணம் நிறுத்த சொற்பெய்து புலவர் இதன்மெய்ப்பொருளை விளக்கி வைத்திருக்கிறார். அந்துவன்தந்தைக்குக் கடுங்கோவின் தாய் மகள் என முதலிற்கூறினார். மகள் எனும் சொல்லுக்கு மனைவி, பெண், தநயை எனப் பல பொருள் உண்மையால், பிற பொருந்தாப்பொருள்களை விலக்கி இவள் அவனுக்குத் தநயை என்பதைத் தெளிவிப்பதற்கு மகளுக்குமுன் ஒருதந்தையீன்ற என்ற அடைகொடுத்தார். எனவே இவள் அந்துவன்தந்தைக்கு மனைவியல்லள். அந்துவன் தந்தை பெற்ற தநயையேயாவள் என்பது மலையிலக்காகிறது. இனி, மகட்சொற்போலவே, தமிழில் மகன் எனு மொழியும் ஆண்மகன், கணவன், வழித்தோன்றலாம் மருமான், புதல்வன் எனப் பலபொருள்களில் வரும். ஆதலால் இத் தொடரிறுதியில் பொறையன் பெருந்தேவி யீன்ற மகன் என்றவிடத்தில் மகன் என்ற சொல்லுக்குப் பொருளென்னை? இவ்விடத் திச்சொல்லின் பொருத்தமென்ன? என்பன சிந்திக்கத் தக்கனவாம். அந்துவன் பெற்ற புதல்வியாய்ப் பொறையனை மணந்த தேவி யீன்ற கடுங்கோ, தன்தாயை மணந்த பொறையனுக்குப் புதல்வனும், தன் மாதுலனான அந்துவனுக்கு வழித்தோன்றலான மருமானுமாவன். இவ்வீரியைபையும் விளக்க மகன் என்னுமொருசொல்லே அமைவுடைய தாதலின், இப்பதிகப்புலவர் ஈண்டு அச்சொல்லைப் பெய்துவைத்தார். இதனை இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் விசதமாக ஆராய்வதால் ஈண்டு விரயாதிம் மட்டில் நிறுத்துகின்றேன். அப்படியே இவள்பெற்ற மகன் அந்துவற்குத் தநயனல்லன், மருகனேயாவ னென்று தெளிவிப்பதற்காகப் புலவர் மீண்டும் இவளைப் பொறையன்தேவி என்று விசேடித்து, ஒருதந்தை யீன்ற மகள் என்பதற்கும். (இவள்) ஈன்றமகன் என்பதற்கும் இடையே விசேடணம் (அடை) கொடுத்துப் பிரித்து நிறுத்துகின்றார். இவ்வாறு அந்துவன், பொறையன், கடுங்கோ ஆகிய மூவருக்கும் இவளுக்கும் உள்ள முறை நிரல்நிறையே தெளிக்கப் படுகின்றது. இவள், முதல்வனுக்குச் சோதரி, நடுவனுக்கு மனைவி கடையனுக்குத் தாய் என்பது வெள்ளிடைமலையாம். எப்படியும் இத் தொடரால் அந்துவனுக்குக் கடுங்கோவின்தாய் மனைவி யாதல் இயலா தென்பது ஒருதலை; எனவே, அவனுக்கு இவன் தநயனாகான், வழித் தோன்றலான மருமானேயாக வேண்டு மென்பது தெளியக் கிடக்கின்றது. மருமக் கட்டாயத்தைச் சுட்டுஞ் சான்று இதைவிட வேறு எப்படிக் காணமுடியும். இத்தொடர் மக்கட்டாயத் தோடமைவு பெற மறுக்கின்றது. கடுங்கோவை அந்துவனுக்கு மகன் என்றுகொள்ள இத்தொடர் மக்கட்டாயத் தோடமைவு பெற மறுக்கின்றது. கடுங்கோவை அந்துவனுக்கு மகன் என்று கொள்ள இத்தொடர் எவ்வாற்றானும் இடந்தரவில்லை; மருகனெனும் ஒருபொருளே இத்தொடருக்கு ஒருதலையாய் அமைந்த பொருளென்பதை இத்தொடர் மொழிகள் நின்று பறையடிக்கின்றன. இப்பொருளிற் பிறபதிகத் தொடர்களெல்லாம் இதனோடு பொருந்தக் காண்பாம். பிறிது பொருட்கு இப்பதிகம் இடந்தராது. இந்நிலையில் இவையெல்லாம் ஒருங்கு நின்று தெளிவிப்பது மருமக்கட்டாயமன்றி மக்கட்டாயமன்றென்று விளக்கமாகும். (எ) 5ஆம் பதிகத்தொடர்ப் பொருட்குறிப்பு (1) இனி, எஞ்சிநிற்கும் 5ஆம் பதிகமொன்று ஆராயக் கிடக்கின்றது. அதன்பொருளையும் ஒருவாறு அளந்தறிய முயலுவோம். இதில் கிளைகிளைத்தும் தொடர் நெடுஞ் சேரலாதற்கு, சோழன்மணக்கிள்ளியீன்ற மகன் என்று நிற்கிறது. இதில் நிரப்பவேண்டிய சொற்குறையுண்மை புலப்படுகிறது. நிற்கிறபடி இச்சொற்றொடரில் பொருத்தமும் பொருளும் இல்லை. (2) இதுவரையில், இப்பதிகத் தலைவனான செங்குட்டு வனை நெடுஞ்சேரலாதற்கும் சோழன்மகள் மணக்கிள்ளிக்கும் பிறந்த மகனென்று இத்தொடர் குறிப்பதாகப் பலரும் கொண்ட மைந்தனர். அதாவது : செங்குட்டுவனுக்குச் சேரல் ஆதனைத் தந்தையும் சோழன் மணக்கிள்ளியைத் தாயுமாகக் கருதிவந்தனர் இம்முறைக்கு வேறு ஆதாரமிருந்தால் அதைக்கண்டபோது விசாரிப்போம். இதுவரையும் பலரும் இத்தொடரொன்றையே இதற்கு ஆதரவாக எடுத்தாளப் பார்க்கின்றோம். இத்தொடர் இப்பொருள் தருமாறில்லை யென்பதுமட்டும் இதைச் சிந்திக்கப் புகுந்தவுடன் தெளிவாகிறது. (3) இப்போது நிற்குநிலையில் இத்தொடரில் செங்குட்டுவன் தாய் (பெயர்) குறிக்கப்படவில்லை. சோழன் மணக்கிள்ளி ஆண்பாற் பெயர்; அதனால் செங்குட்டுவனின் தாய் பெயராக மாட்டாது. மணக்கிள்ளி என்பது அவன் தாயின் இயற்பெயராகவும். அவளை ஒரு சோழன் மகளாகவும் சிலர் கருதுவர். மணக்கிள்ளி என்னும் சொல் ஒரு பெண்பாற் பெயராய் யாண்டும் வழங்கக் காணற்கில்லை. அதற்கு மாறாகப் பலவிடத்தும் கிள்ளி என்பது ஆண்பாற் பெயராய்ச் சோழ மன்னர் பலருக்குரிய சிறப்புப் பெயராய் வழங்கிவருவது பிரசித்தம், ‘வென்வேற்கிள்ளி’, ‘நெடுங்கிள்ளி’, ‘கழற்கிள்ளி’, ‘நெடுமுடிக்கிள்ளி’, ‘வடிவேற்கிள்ளி’, இளங்கிள்ளி மாவண்கிள்ளி எனப் பல பெயருடைய சோழ வேந்தரைச்சுட்டும் பாட்டுக்கள் சங்க நூல்களிற் பல காணலாம். இப்படிச் சில மன்னரின் சிறப்புடைப் பெயராவதுமன்றி, சோழர் குடியர சுக்கே இது நிலைத்த ஒரு பொதுப் பெயராகவும் துலங்குகிறது. திவாகரத்தில், கோச்சோழன் பெயர் “சென்னி, வளவன், கிள்ளி, செம்பியன் என்று சேந்தனார் கூறிப்போவதனால், இச்சொல் சோழ மன்னர் பொதுப்பெயராதல் தெளியப்படும். ஆகவே இப்பதிகத்தொடரில் மணக்கிள்ளி யென்பது யாதொரு பெண்ணையும் குறியாமல் சோழன் பெயராகவே நிற்ப தெனக் கொள்ளுதலே முறைமையாகும். (4) பின்னும் மற்றைப் பதிகங்களிலெல்லாம் பாட்டுடைத் தலைவரின் தாய்மார் பெயர் சுட்டினும் சுட்டாவிடினும், அவ்வவரின் தந்தையர் பெயர் தவறாமற் சுட்டப்படுவது கவனிக்கத்தக்கது. அதன் சிறப்புக் காரணத்தைப் பின்னர் விசாரிப்போம்.1 இவ்விடத்தில் மற்றப் பதிகப் போக்குக்கு மாறாக 5ஆம் பதிகத்தில் மட்டும் தந்தை பெயரைச் சுட்டாமல் விடவும், தாயை மட்டும் மணக்கிள்ளியென விதந்தது கூறவும் தனிக் காரணம் ஒன்றுமில்லை. பதிகங்களெல்லாம் ஒரே ஆசிரியர் செய்தனவென்றே ஆராய்ச்சியாளரனை வரும் ஊகிக்கின்றனர். இப்பதிகப் புலவர் பிற இடங்களிலெல்லாம் தாம் கொண்ட முறையை இங்கு மட்டும் கைவிடக் கருதுவானேன்? அவர் நன்றென யாண்டும் கையாண்ட ஒரு துறையை நெகிழாமல் இப்பதிகத்திலும் பின்பற்றியதாகக் கொள்வதே முறையாகும். மற்றெல்லாப் பதிகங்களிலும் பாட்டுடைத் தலைவரின் தந்தைக்குரிய இயற்பெயரும் சிறப்புப் பெயரும் ஒருங்கே கூறப்படுகின்றன. அதுபோல் இதிலும் கூறப்பட்டிருக்க வேண்டுமெனக் கொள்ளுவது நியாயமாகும். அம்முறையிற் சோழன் என்ற சிறப்புப் பெயரின் பின் மணக்கிள்ளி என்று அவன் இயற்பெயர் சொல்லப்படுவது அவசியமும் பொருத்தமுமாகும். (5) இன்னும் அடியார்க்குநல்லாரும் பிறரும் செங்குட்டுவன் தாய் பெயர் நற்சோணை என விதந்து கூறுகின்றனர். யாண்டும் அவர் மணக்கிள்ளி என்பது அவள் பெயரெனச் சுட்டவில்லை. இவை பலவற்றாலும் ஈண்டு மணகிள்ளி யென்பது செங்குட்டுவன் தந்தை பெயராக வேண்டுமென்பதே நிலைபெறுகிறது. (6) ஆனால் சோழன்மணக்கிள்ளி சேரலாதற்குத் தானே மகப்பெற மாட்டான். ஐயனாரைப் பெறுவிக்கும் அரிகரக் கூட்டம் மக்கட் கில்லை. பெண்ணின்றி இருபுருடர் தம்மளவில் புத்திரப்பேறெய்தற்கில்லை. அதனால், செங்குட்டுவனை ஈன்ற தாயைச் சுட்டுஞ் சொல்லொன்று இத்தொடரில் இருக்க வேண்டுவது அவசியம். (7) இனி, மணக்கிள்ளியைப் பெண் பெயராகவே கொள்வதானாலும் கூட அப்பெயருடைப் பெண்ணுக்கும் சோழனுக்கும் உள்ள முறை குறிக்குஞ் சொல்லெதுவும், இல்லாததால் இத்தொடருக்குப் பொருளில்லாதாகிவிடும். இருவேறு பாலாரிருவ ரியற்பெயர்களின் வெறும்தொடையால் அவர்களின் முறையியைபு தெளியுமாறில்லை. ஆகையால் எப்போதும் அப்பெயர்த் தொடர்கள் தம்மிடை இயைபுடைய முறைப் பெயரைப் பெறினல்லாற் பொருள் தராவாம். அதனாலும் இங்கு ஒரு சொற்குறைவு தெளியப்படும்1. (8) மேலும் 4, 6, 7, 8 பதிகங்களில் தேவி என்றும் 2 , 9 பதிகங்களில் வேண்மாள் என்றும் முறைப் பெயர்கள் நின்றே அத்தொடர்கள் பொருள்பயத்தலால், அங்ஙனமே இவ்விடத்தும் அவை போன்றதொரு முறைப்பெயர்ச்சொல் இன்றியமை யாததாகும். அதுவும் மற்றைப் பதிகங் களில் வந்தமைந்த முறைப் பெயர்ச்சொற்பொருளுடையதாக இருத்தலே பொருத்தமாகும். எனவே அது வேண்மாள் தேவி என்பவற்றுள் ஒன்றாகக் கொள்ளுவது தவறாகாது. தேவி என்ற சொல் மணக்கிள்ளிக்கு முன் அல்லது பின் நிற்க வேண்டும். முன்வைப்பின் மணக்கிள்ளிச்சொல் பொருளின்றி நின்றுவற்றும். அது பெண் பெயராகாமையையும் சோழன் பெயராக வேண்டுமென்பதையும் மேலே தெளிந்தோம். ஆதலால் தேவி போல்வதொரு முறைப் பெயர் மணக்கிள்ளி என்பதன் பின்னும் ஈன்றமகன் என்பதற்கு முன்னும் நிற்பதுவே அமைவுடைத்தாம். அத்தகைய குறைநிரப்புஞ் சொற்பெய்து பாடங்கொள்ளின் இப்பதிகத் தொடர் தெளிவுபெற்றுச் சிறப்பதாகும். ஆகையினாலே இவ்விடத்தில் சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளிதேவி ஈன்ற மகன் என்பது போன்றதொரு பாடம் கொள்வது அவசியமும் அழகுமாகும். இனையதொருசொல் நிரப்பப்பெறாதவரை இத்தொடருக்கு எப்பொருளும் தெளிதற்கில்லை. பெய்தமைத்தால் அது பொருந்தும் பொருள்தந்து சிறந்துநிற்கும். எனவே இப்பதிகத் தொடரால், செங்குட்டுவன் சோழனுக்குத் தநயனும் சேரலாதற்கு மருகனும் ஆவனெனத் தெளியலாகும். (எi) மகட்சொல்லின் பொருள் விளக்கம் (1) இந்தப் பகுதியை முடிக்குமுன்னே இங்கு நாம் கருத வேண்டிய பிறிதொரு செய்தியுண்டு. செங்குட்டுவனுக்குச் சேரத் தந்தையும் சோழத்தாயும் தருபவர் தமது கொள்கைக்கு ஆதாரமாக எடுத்துக்காட்டும் மேற்கோள் வாக்கியம் ஒன்றுண்டு. சிலப்பதிகாரப் பாயிரவுரையில், சேரலாதற்குச் ... சோழன்றன் மகள் நற்சோணை யீன்ற மக்களிருவருள் முன்னோன் எனச் செங்குட்டுவனை அடியார்க்குநல்லார் குறிக்கின்றார். இதிற் குறிக்கும் செய்திக்கு அவ்வுரையாசிரியர் கண்ட ஆதரவை அவர் விளக்கினாரில்லை; என்றாலும் அவருரையின் இத்தொடரை ஆதாரமாக்கி, சேரலாதற்குச் செங்குட்டுவன் தநயனெனவும், அவன்தாய் சோழன் மகளெனவும் சிலர் கருதுகின்றனர். இவர் கொள்கைக்கு ஆதாரமாய்க் காட்டக்கூடிய இதனினும் சிறந்த ஒரு சொற்றொடரும் நான் காணுகின்றேன். இளங்கோவடிகளே தம் நாடகக்காப்பியத்தில் திகழொளிஞாயிற்றுச் சோழன் மகளீன்றமைந்தன் ... ... செங்குட்டுவன்”1 என்று கூறுகின்றார். அடிகளைவிட அவர்குலமுறையைத் தெளிவிக்கப் பிறர்யாரும் அருகரில்லை. அவர்வாக்கியத்தை எடுத்தெறிய அதிகாரம் எவர்க்குமில்லை. ஆகவே இவ்வாக்கியத்தால் அவருக்கும் அவர்தமையன் செங்குட்டுவனுக்கும் தாயாவாள் சோழன் தநயை என்றே ஏற்படுமானால், இதை ஒப்புக்கொண்டு பதிற்றுப் பத்துப் பதிகப்பாக்களின் ஆதரவைக் கூடப் புறக்கணிக்க வேண்டிவரும். ஏனெனில், அப்பதிகப் பாவலர் சேரர்குலத்துக்கு அந்நியர்; அடிகளோ, அக்குடியிற் பிறந்த சிறந்த பெருந்தகை யாராவதோடு, செங்குட்டுவனுக்கு உடன்பிறந்த தம்பியுமாவர். அதனால் இது சம்பந்தமாக அவர்கூற்றே ஏற்ற பெற்றியதாகும். இவருடைய இவ்வாக்கியமே அடியார்க்கு நல்லாருரைத் தொடருக்கும் ஆதரவாயிருக்கலா மெனவும் தோன்றுகிறது. ஆதலால் இத்தொடர்களின் பொருளை ஊன்றி ஆராய வேண்டுவது மிகவும் அவசியமேயாம். (2) அடிகளின் மூலவாக்கியத்திலும் அடியார்க்கு நல்லாரின் உரைத்தொடரிலும் வருகின்ற மகள் எனும் சொல் தநயைப் பொருளிலேயே நிற்குமாயின், இதுவரை நாம்செய்த ஆராய்ச்சி யெல்லாம் விழல்நீராகும். அதற்கஞ்சி, அச்சொல்லுக்கு அப்பொருளே அமையுமாயின் அதைக்கொள்ளப் பின்னடையும் பெற்றியில்லை. பதிற்றுப்பத்துப் பதிகத் தொடர்கள் ஈண்டு மகட்சொல்லைத் தநயை எனக் கொள்ளற்கு இடந்தருமாயின், சங்கையின்றிச் சேரருக்கு மக்கட்டாயமே யுள்ளதெனக் கொள்ளல் கூடும். பதிகங்களோ மருமக்கட்டாயத்தையே சுட்டு கின்றன. 7ஆம் பதிகத்தொடர் அறவே மக்கட்டாயத்தை மறுத்து மற்றதனையே வலியுறுத்துகின்றது. இவற்றையெல்லாம் மேலே விசாரித்தோம். பதிகம்பாடிய பழம் புலவர் பிழைத்தனரென்று அவர் பாக்களை எளிதிற் கழித்தற்கில்லை என்றாலும் இளங்கோவடிகளின் சொற்றொடர், மக்கட்டாயத்தை மட்டுமே சுட்டுமாயின், அவரையே தழுவிப் பதிகப்பாவலரை நழுவவிட வேண்டிவரும். ஆனால், அப்படி நழுவவிடுமுன், அவர் பதிகத் தொடரும் இளங்கோவடிகள் சொற்றொடரும் தம்முள் மாறுபடாமல் நின்றமையும் பொருளமைதி பெறக்கூடுமா என்று விசாரிப்பது நமது முதற்கடமை. பெரும்புலவர் சொல்லாற்றல் மெய்ம்மைபிறழா மற்காக்கும் என்னும் மரபுண்மையை மறவாமல், முதலில் இவற்றை அமைத்துக் கொள்ளும் முயற்சியை நாம் மேற்கொள்வதே முறையாகும். எவ்வாற்றானும் அமைதிபெற வழி காணாதவரை, இவற்றுட் சிறந்தது கொண்டு பிறவற்றைக் கழிப்பது இழுக்காகாது. இம்முறையை இங்கு நாம்மேற்கொண்டு அடிகளுடையவும், அவரைப்பற்றியெழும் அடியார்க்கு நல்லாருடையவுமான சொற்றொடர்களைச் சிறிது ஊன்றி ஆராயப்புகு வோம். (3) இந்நெருக்கடியில், இவ்வாராய்ச்சிக்கு உதவியாக, எதிர்பாராத இடத்திலிருந்து நமது ஐய இருளகற்றவரும் விளக்கத்தைப் பெறுகின்றோம். சங்கப்புலவரான சாத்தனார், செங்குட்டுவன்-இளங்கோவடிகள் இருவருக்கும் சமகாலத்தவர்; அதுமட்டுமன்று. அவ்விருவர் பழக்கமும் நட்பும் பெற்றவராவர். மாபத்தினியின் மறக்கற்பால் மதுரை அழலுண்டழிந்தபிறகு இவர் சேரநாடு சென்று வஞ்சியிற் கோச்சேரன்வண்மையையும் இளங்கோவின் மதிப்பும் பெற்று வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் இவர் மணிமேகலை நூலை இளங்கோவுக்குப் பாடிக்காட்டியும், அடிகளின் சிலப்பதிகாரத்தை அவர் பாடக்கேட்டும், ஒருவர் நூலையொருவர் பாராட்டியதாகத் தெரிகின்றோம். அடிகளின் அங்கீகாரச் சிறப்புடைய மணிமேகலையுள் மகள் எனும் சொல் மனைவி எனும் பொருளில் வழங்கப் பார்க்கின்றோம். நினக்கிவன் மகனாத் தோன்றிய தூஉம் மனக்கினி யாற்குநீ மகளாய தூஉம் பண்டும் பண்டும் பலபிறப் புளவால் (மணிமேகலை, காதை 21, வரி 29 -31) எனும் அடிகளிற் சாத்தனார் மணிமேகலையும் உதயகுமரனும் பல முற்பிறப்பு களிற் சதிபதிகளாக வாழ்ந்த விவரத்தை விளக்குகின்றார். இவ்வடிகளில் மகள் என்பது மனைவியையே சுட்டிநிற்பது வெளிப்படை. மகா மகோபாத்தி யாய சாமி நாதையரவர்களும் இவ்வடிகளுக்குத் தாமெழுதிய குறிப்புரையில் மகள் என்பதற்கு மனைவியென்றே பொருள் வரைந்துள்ளார்கள். இதனால் மகட் சொல்லுக்கு மனைவிப் பொருள் வழக்குண்டென்பது தெளியப்படுகிறது. இன்னும் கணவன் மனைவியெனும் பொருளில் மகன் மகள் என்ற சொற்கள் வருமென்பதை நோதக வுண்டோ நும்மக னார்க்கினி’1 என இளங்கோவும் கூறுதலாலும், செய்யுளிலும் வழக்கிலும் மணமகன் - மணமகள் என்ற பிரயோகங்கள் அடிப்பட்ட ஆட்சிபெறுதலாலும், நன்கறியலாம். ஆகவே, மகள் எனுஞ் சொல் மனைவியெனும் பொருளில் வருவது அருமையில்லை. ஆன்ற சான்றோராட்சியும் தமிழ் நன்மக்களிடை நெடுவழக்கு முடையதென்றே தெரிகின்றது. (4) இப்பொருளில் அடிகள் வாக்கும் அடியார்க்கு நல்லார் உரைத் தொடரும் பதிற்றுப்பத்துப் பாக்களோடு எவ்விதப் பிணக்குமின்றிப் பொருந்தியமைகின்றன. சோழன்மகள் என்பதற்குச் சோழன் மனைவி யென்று பொருள்கொண்டால், சோழனுக்கு அவன் தேவியீன்ற மக்கள் சேரனுக்குத் தநயராகார், மருகரேயாவாரென்ப்து விசதமாகும். எனவே சேரலாதற்குச் சோழன்மகள் ஈன்ற மகன் செங்குட்டுவன் என்ற பிரயோகத்தை மட்டும் வைத்துச் சேரலாதற்குச் செங்குட்டுவனை நேரே தநயனாகவும், சோழனுக்கு அவனை மகள்பிள்ளை பேரனாகவும் கொண்டு தீரவேண்டிய அவசியமேற்படவில்லை. எனவே, சிலப்பதிகாரத்தில் வரும் இம்மகட் சொற் பிரயோகம் பதிற்றுப்பத்துப் பதிகக் குறிப்புக்களோடு முரணுவதாகக் கொள்ளவேண்டா. இப்பதிகத் தொடர்கள் சேரர் குடியில் ஒருதலையாக மருகர் அல்லது வழித்தோன்றல்களையே சுட்டுவனவாகவும், அப்பதிகத் தலைவர் சேரமன்னருக்குத் தநயராகார் மருகரேயாவாரென விளக்குவனவாகவும் தாமே தெளியத் தெரிகின்றன. சிலப்பதிகாரப் பிரயோகங்களும் இத்தகைய முறையைத் தழுவி அமைவனவாகக் காண்கின்றோம். (எii) மற்றுமோரையமகற்றல் இனி, நுந்தை தாணிழ லிருந்தோய் நின்னை என்று வரந்தரு காதையில் இளங்கோவும், ‘நிமித்திகன்... சேர்தி நீயெனச் சேரலற் குரைத்தவன் மைந்தரைநோக்கி நந்தாச் செங்கோ லந்தமிலின்பத் தரசாளுரிமை யிளை யோற்குண்டென என்று பதிகவுரையில் அடியார்க்கு நல்லாரும், இமையவரம் பனையும் செங்குட்டுவன் இளங்கோ என்பாரையும் முறையே நுந்தை, மைந்தர் எனச் சுட்டிக் கூறியதைக் கொண்டு, இவர்கள் அவனுக்குப் புதல்வரேயாக வேண்டும் எனச் சிலர் வாதிக்க வரலாம். ஆனால் இவ்வாராய்ச்சியில் எவ்வித முடிபையும் இச்சொற்களைக் கொண்டு துணிதற்கில்லை. தந்தை நுந்தை எந்தை என்பன முன்னோன் உன் தலைவன் என்னிறைவன் என்ற பொதுப்பொருளில் மேம்பாட்டுச் சொற்களாயும், மைந்தர் என்பது ஆண்மக்கள் ஆண்சிறார் என்று குறிக்கும் ஒரு பாராட்டுப் பொதுச்சொல்லாயும், சான்றோர் பாட்டுக்களிற் பெருவழக்காய் வருகின்றன. இவை பிதா புதல்வர் என்ற முறையைமட்டும் யாண்டும் சுட்டிநிற்கும் நியதியுடையனவல்ல. எந்தை வாழி ஆதனுங்க என்று வேங்கடத்து வேள் ஒருவனைப் புலவர் ஆத்திரையனாரும், அஃதை தந்தை அண்ணல்யானை அடுபோர்ச் சோழர் எனப் பிறரும் பாடியதும், இனைய பல பிறவும் கொண்டு. நுந்தைச் சொல், - உன் இறைவன் உன் முன்னவன் என்ற பொருளில் அமையுமெனத் தெளிகின்றோம். மாந்தர் மைந்தர் மக்களாண் பொதுப்பெயர் எனும் திவாகரச் சூத்திரத்தால், மைந்தர் - ஆண்மக்களின் பொதுப்பெயரென்று அறிகின்றோம். ஆகவே, நுந்தை, மைந்தா என்ற சொற்களை வைத்துச் செங்குட்டுவனும் அவன் தம்பி இளங்கோவும் நெடுங்சேரலாதற்கு நேரே பெற்ற புதல்வராவரென வரையறுத்து முறைகொள்ள இயலாது. மருமான்மாராய மைந்தருக்கு அவர்தம் குல முதல்வனான அம்மான்கோவை நுந்தை என்று சுட்டுவது தவறாகாது, தகவுடையதேயாகும். பிதா-புதல்வர் என்று தெளிவாக விதந்துசுட்டும் வேறு பிரயோகம் ஒன்றும் சேரரைப் பற்றிய பழம்பாட்டுக்களில் யாண்டும் இன்மை யால், ஈண்டும் அம்முறையை இச்சொற்களால் மட்டும் அமைத்துக்கோடற்கு அவசியமில்லை. ஆகவே, இதுவரை செய்த இவ்வாராய்ச்சியாற் மக்கட்டாய முடையராகத் தெளிவிக்கும் சான்றுகளெதுவுங் கிடையாமையோடு, அவர் மரபினர் மருமக்கட்டாயத்தினரேயாவரென்று ஒருவாறு துணியப் போதிய ஆதாரமும் கண்டோமாவோம். பகுதி 4 : பிற சான்றுகள் இதுவரையில் பதிகத் தொடர்களின் சொல்லமைப்பையும் ஆற்றலை யும் கொண்டு அவற்றைத் தனித்தனியே ஆய்ந்துவந்தோம். இனி இவ்வாராய்ச்சிக்குப் பொதுநின்று தவும் சிலசெய்திகளையும் துணைக்கொள்கைகள் சிலவற்றை யும் இங்கு விசாரிப்போம். துணைச்சான்றாய்ச் சேரர் தாய்வழித் தாயமுறை துலக்குஞ் செய்திகளாவன : ( 1 ) பதிகங்குறிக்கும் சேரர்தாய்மார் பாட்டுக்களில் சுட்டப்பெறாமை (1) பதிற்றுப்பத்துப்பாட்டுக்களில், சேரலாதன், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், செங்குட்டுவன், செல்வக் கடுங்கோ வாழியாதன், இரும்பொறை இளஞ்சேரலிரும் பொறை என்ற பாட்டுடைச் சேரவேந்தர்பலர் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. நன்னுதல் கணவ, நல்லோள்கணவ, புரையோள்கணவ, ஒண்டொடிகணவ, நின்பேரியலரிவை, நின்கற்பின் மாணிழையரிவை’, வாணுதலரிவையொடு காண்வர என்று அவர் பலரை அவரவர் மனைவிமார் கற்புறுகாதற் சிறப்பாற் சுட்டியும் அவரைப்பாடிய புலவர் பாராட்டிச் செல்கின்றனர். எனினும் பதிகத்திற்குறிக்கப்பெற்ற வெளியன் வேண்மாள் - நல்லினி, பதுமன் தேவி, சோழன் மகள் நற்சோணை, வேண்மாள் -அந்துவஞ்செள்ளை முதலிய பெண்டிர்யாரும் யாண்டும் எச்சேரருக்கும் மனைவியராகச் சுட்டப்பெறாமை ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. இப்பெண்மணிகள் கோச்சேரருக்குரிய பெருந் தேவிமாராயின், அச்சேரரைப் பாடும்புலவர் அவர் பெண்டிரைச் சுட்டிப் பாராட்டும் பல இடங்களில் யாண்டேனும் இப்பெரு மாட்டிகளுள் யார் பேரையாவது ஒரு புலவரேனும் சுட்டாமல், எல்லோரையுமே எல்லாப்புல வருமே மறந்துவிட்டு, பிற் குறிப்பாகப் பதிகப் பாட்டுக்களில் மட்டும் இவரை விதந்து கூறுவானேன்? உண்மையில் இப்பெண்மைப் பெருந்தகையார் கோமன்னர் மனைவிமாராயின், பாட்டுடைத் தலைவரின் பெண்டிரைச் சுட்டி இன்னவள் கணவ என்று விதந்து பாராட்டு மிடங்களிலேனும் பாடும் புலவர் இவர்களை விசதமாகச் சுட்டாமல் விட்டிராரன்றோ? இப்பெண்டிர்யாரும் மூலப் பாட்டுக்களில் யாண்டும் கோச்சேரர்யாருக்கும் மனைவியராகக் குறிக்கப்படாமையாலேயே இவரைச் சேரமன்னவருக்கு மனைவியராய்க் கருதுவது தவறு என்று தெளியலாகும். இக் கோப்பெண்டிர் சேரருக்குத் தாயரும் சோதரிமாரும் ஆவதன்றி மனைவிமாராகார் என்பதை முன்பதிகப் பாக்களின் ஆராய்ச்சி யால் ஒருவாறு துணிந்து கொண்டோம். அத் துணிவை, மூலப் பாட்டுக்களில் இவர் பெயர் துலங்காமல் பாட்டுடைக்கோச் சேரரின் கற்புடை மனைவிமார்பிறரை அப்புலவர் பாராட்டிப் போவது இன்னும் அதிகம் வலியுறுத்துவதாகும். (2) மருமகட்டாயமுடைய சேரர்குடியில் மனைவி மார்க்குப் பெரும்பதவி யொன்றுமில்லை. அம்மனைவியரின் வயிற்று மக்களும் சேரர் குடிதாங்கும்பெற்றி பெறார். வேந்தர்க்குத் தேவியாரவதல்லால் மனைவியர்க்குக் கோக்குடியில் வேறுவித உரிமை இல்லை. அரசியராம் பதவியொடு குடிதழைய மகப்பெற்றுதவும் பெருமை கோச்சேரர் சோதரிமார், அவர் வயிற்று மருகியர்கள் இவர்கட்கே உரியதாகும். அதனாற்றான் சேரரைப்பாடும் புலவர், தம் மூலப்பாட்டுக்களில் அவர் மனைவியர் பெயர் விளக்கமுறத் துலக்காமற் பாடிப்போவார். கோவேந்தர் தாய்மாரைச் சுட்டுங்கால், அத்தாயர் கோக்குடியிற் பெண்வழியில் அரசியராய்ப் பதவியுள்ளாராதலாலே பதிகப் பாட்டுக்களில் அவர் பெயர்கள் உறவுமுறை பதவியொடு பெருமை யெல்லாம் விளக்கமுறப் பேசப்பெறுகின்றன. (3) மருமக்கட்டாயமுடைய பெருங்குடிப் பெண்டிர் ஒத்த தகவுடைய பிறிதுகுடிப் பெரியாரை மணந்து வாழ்வர். அப்பெண்டிர் பெறும் மக்கள் தாய்க்குடியில் மாமன்மார்க்குப் 1பிறங்கடைகளாகிநிற்பர். தம் தந்தையர் குடியில் அவர்க்குத் தொடர்புரிமை யாதும் இல்லை. கோச்சேரர்குடிப் பெண்டிர், பெரும்பாலும் அக்கோக்குடியில் மகள் கொள்ளற்குரிய தகவுடைய குறுமன்னரான வேண்மாரை மணப்பர்; சிறு பான்மை பிறகுலத்து முடிமன்னர்தமையும் அவர் வேட்டல் கூடும். இவர் யாரைமணந்தாலும், இப்பெண்கள் பெறும் ஆண்மக்கள் எல்லாரும் சேரருக்கு மருகராய்ச் சேரநாட்டில் வழிமுறையே அரசுரிமைக்கு அருகராவர். (4) மாதுலச்சேரரொடு மருகச்சேரரைமட்டும் சுட்டி, அவர் தந்தையரைத் துலக்காவிட்டால், அவர் தாயரை மணந்த கணவரில்லாத மகளிராகக் கருதநேருமாகையால் அவ்விழி தகவை அற விலக்கி, மக்கட்டாயமுடைய தமிழகம் மதிக்க மணந்து சிறந்த கற்புடைத்தாய்க்குடிப் பெருமையுடையர் பாட்டுடைத் தலைவரென விளக்கும் பெற்றி வேண்டப்படுகிறது. அதனாலே அக்கோச்சேரர்குலம் விளக்கும் பதிகங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோச்சேரன் தாயையும் அவன் தந்தையொடு விளக்கி, அவ்விருவர் பெற்றமகன் இனையன் எனத் துலக்கி, இன்ன பெருங்கோச்சேரற்கு இவன் மருமான் எனக் குறித்து விவரமெல்லாம் விளக்கமுற விரிக்கின்றது. ஒவ்வொரு பதிகமும் பாட்டுடைத் தலைவனின் இருமுது குரவரையும் விதந்துகூறி, அதன்பின் அவனை அவரீன்ற மகனென ஒருபடியே தெரிநிலை முறையிற் குறித்துப் போகின்றது. அன்றியும், அவன்முன் தோன்றலான கோச்சேரனை முதலிற்கூறி, பின் பெற்றோர்பெயர் கூறி, அச்சேரனுக்கு அப்பெற்றோர் ஈன்று தவியமகன் எனப் பதிகந்தோறும் தவறாமற் கூறிப் போவதால், அப்பாட்டுடைத் தலைவன் கோச்சேரனுக்கு வழித்தோன்றலான மருகன் என்பதும் குறிப்பு வகையால் துலக்கப்படுகிறது. (ii) பதிற்றுப்பத்துச்சேரரின் ஆட்சிமுறை இனி இப்பதிகங்கள் கூறுமரசர்வரிசையைச் சிறிதாராய் வோம். சேரசிம்மாதனத்தில் உதியஞ் சேரலுக்குப்பின் இமைய வரம்பனும், அவனுக்குப்பிறகு அவன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் முறையே ஏறினரெனவும், இவருள் இளையோனாகிய குட்டுவனும், ஆண்டு முடிந்தபின்னரே இவரிருவருக்கும் தொடர்புடைய பதுமன் தேவிமக்களிருவரான நார்முடிச் சேரலும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும், அவர்களுக்கிடையே சோழன் மணக்கிள்ளி தேவி மகன் செங்குட்டுவனும் முறையே அரசுகட்டிலேறி நாடாண்டன ரெனவும் தெரிகிறது. மற்றொரு கிளைச்சேரர் வழிமுறையில் அந்துவன்சேரல் முதல் இளஞ்சேரலிரும்பொறை யீறாக நான்கரசர் வரன்முறையாய் ஆட்சி புரிந்தனரெனவும் விளங்குகிறது. இவற்றைக் கொண்டு இமையவரம் பனுக்குப்பதுமன் மகளும் சோழன் மகளும் மனைவியராய் மக்கள் மூவரைப் பெற்றுக் கொடுத்தனரெனவும், அம்மக்கள் தம் தந்தை சிறிய தந்தை இருவரும் ஆண்டபிறகு முறையே நாம் முடிபுனைந்து தனித் தனியே எல்லாரும் சேரநாட்டை ஆண்டனரெனவும், அதுவேபோல அந்துவஞ் சேரலுக்குக் கடுங்கோவும், அவனுக்குப் பெருஞ்சேரலிரும்பொறையும் அவனுக்கு இளஞ்சேரலிரும் பொறையும் வழிமுறையே மகன்மகனாய்க் கிளைச்சேரர் சிறுநாட்டை ஆண்டுவந்தன ரெனவும் ஒருசிலர் கருதுகின்றனர். ஆனால், ஆழ்ந்து சூழ்ந்து நோக்குங்கால் உண்மை வேறாகத் தோன்றுகிறது. இமையவரம்பனும் அவன் தம்பியும் வேள்வெளியனுக்கு மக்கள். இவர் தம் மாமன் உதியஞ் சேரலுக்கு மருகராய், அவனுக்குப்பின் சேரநாட்டுரிமை பெற்று, ஒருவர்பின் ஒருவராய் ஆண்டனர். அவருக்குச் சோதரி முறையினரான அவர்கோக்குடிப் பிறந்த பெண்டிருள் ஒருத்தி வேள்பதுமனையும் மற்றொருத்தி சோழனையுமாக மணந்து மக்களைப்பெற்றனர். அம்மக்கள் தம் தாயர்குடிச் சேர மன்னருக்கு வழிமுறையில் மருகராகையால், மாமன்மாரிருவரும் தத்தம் முறையில் ஆண்டு முடிந்தபின்னர் மருகருரிமையில் வரிசை முறையாய்த் தாமும் சேரசிங்காதனம் ஏறுகின்றனர். பதுமன் தேவி ஒருத்தியே சேரர்பெருங்குடியில் இமைய வரம்பனுக்குச் சகோதரியாயும் - கிளைச்சேரர்குடியிற் கடுங்கோ வுக்குச் சோதரிமுறையுடையளாயும் நின்று, தான் பெற்ற மக்களுள் ஒருவனைத் தன்குடியில் மருகனில்லாத கடுங்கோவுக்கு மருகனாய் அவன் கிளைக்குடிதழையக் கொடுத்துதவி யிருக்கலாம். அல்லது வேள்பதுமனுக்குக் கோக்குடி நெடுஞ்சேரலாதன் சோதரி ஒரு மனைவியும் கிளைச் சேரர்குடிக் கடுங்கோவின் சோதரி ஒரு மனைவியுமாயிருந்து அவரவர் தாய்க்குடியைத் தாங்க இவ்விருமனைவி மாரும் பதுமனுக்கு மக்களைப் பெற்றுமிருக்கலாம். எப்படியாயினும், இம்மக்கள் இருவரையும் பதுமன்தேவி மக்கள் எனச் சுட்டுவது தவறாகாது. இவ்விரு குடியிலும் இவ்வாறு மாமன்மார்க்கு மருகர் வழித் தோன்றல்களாய் நின்று, வரன்முறையே நாடாண்டனர். இதுவே இப்பதிகத்தொடர்கள் தெரிவிக்கும் செய்தியெனத் துணியக் கிடக்கிறது. இப்பதிற்றுப்பத்துச் சேரரின் ஆட்சி முறையால் இத்துணிவை வலியுறுத்தி, இதற்கு மாறான மக்கட்டாயக்கொள்கையை நலிவிக்கும் நியாயங்கள் சிலவற்றை இங்கு நிதானிப்போம். அவை வருமாறு : (1) மக்கட்டாயமுடைய கோக்குடியில், மயின் முறையாய் முதல் மகனின் முதல்மகனே வழிமுறையே அரசு பெறற்குரிமை பூண்பான். கோலோச்சுங் கோவேந்தற்கு ஆண்மக்கள் பிறந் திருக்க, அவரை விலக்கி வேந்தனுடன் பிறந்தவர்கள் நாடாளு முரிமை கொள்ளார். மருமக்கட்டாக்குடியாமேல் உடன் பிறந்தாரனைவருமே வரிசை முறையில் ஆண்டுமுடிந்த பிறகு தான், அடுத்த கீழ்ப்படியிற் சோதரிமார் மக்கள் அநந்தர வராகிய மருகர்கள் - ஆட்சிபெறுவர். இம்முறையிற் பதிற்றுப்பத்திற் பாடப்பெற்றுள்ள சேர பரம்பரையைப் பரிசோதித்துப் பார்ப்போம். சேரரை மக்கட்டாய முடையராய்க் கருதுபவர் எண்ணுகிறபடி 2ஆம்பதிகத் தலைவனான இமையவரம்பன் நெடுஞ் சேரலாதனுக்கு, பதுமன் மகள், மணக்கிள்ளிமகள் எனும் இருமனைவியரால், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என மூவர் மக்கள் உளர். இருந்தும், இவர்களை விலக்கி இவர்தம் சிறியதந்தையான பல்யானைச் செல்கெழுகுட்டுவன் முடிசூடி 25 ஆண்டு அரசுவீற்றிருக்கின்றான். அவனுக்குப் பிறகுதான் அவன் தமையன்மக்களான இம்மூவரும் நாடாட்சி பெறுகின்றனர். இது மக்கட்டாய அறமுறையில் நிகழொணாதது. ஆனால், சேரர் மருமக்கட்டாயமுடையராகில், பதிற்றுப்பத்தில் நாம் காணும் முறைதான் அறமுறையாகும். இமைய வரம்பனுக்குப் பின் அவன்தம்பியே தாய்வழித் தாயக்கிரம உரிமையில் அரசனாகவேண்டும். அவ்விருவர்களுக்கும் பிறகே. அவர்களின் மருகர்கள் தங்கள் வயதுக்கிரம வரிசைப்படி ஒவ்வொருவராய் முடிபுனைந்து நாடாள்வர். மேலே நாம் கண்டபடி களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இவர்களின் தாய் சேரர்கோக்குடிப் பிறப்புடையவள், பதுமனுக்கு மனைவி. ஆவிக்கோமான் பதுமன் எனும்வேளுக்கு வாழ்க்கைப்பட்டு, அவனால் இவர் சேரர் கோக்குடிக்கு இருமக்களை ஈன்றுதவினள். அதுவே போல் நற்சோணை என்பாளும் சேரர் குடிப்பிறந்து சோழனை மணந்து வாழ்ந்தவளாவள். அவளீன்ற மக்கள் செங்குட்டுவனும் இளங்கோவும் ஆவர். இளங்கோ துறவு பூண்டு அடிகளாகவே, அத் தாய்வழியிற் கோலுரிமைக் குடையவன் குட்டுவன் மட்டுமேயாகி நிற்பன். இவர்கள் தாய் நற்சோணையும் வேள்பதுமனின் மனைவியும் சேரர்குடியில் மணந்து புகுந்த பிறகுடிப் பெண்டிரலர்; அக்குடியிற் பிறந்து சிறந்த பேரரசிமாராவர். அவர்கள் வயிற்றுதித்த மக்களான மூவரும் இமைய வரம்பனுக்கும் அவன் தம்பி குட்டுவனுக்கும் பிறங்கடையரான மருகராவர். ஆகவே தங்கள் மாமன்மாரான அவ்விருவரும் ஆண்டுமுடிந்தபிறகு இம்மருகர் மூவரும் வழிமுறையில் தம் மரபு நியதிப்படி ஆட்சிபெறுகின்றனர். இது அறமும் அடிப்பட்ட குடிவழக்குமாய்ப் பொருத்தமும் சிறப்பும் பெற்று அமைகின்றது, இவர்களுக்குமுன் இமையவரம்பனுக்குப்பின் இவர்தம் இளையமாமனான செல்கெழுகுட்டுவன் நாடாளுவதில் வரிசைமுறைப் பிறழ்ச்சியில்லை. இவர்தம் ஆட்சிமுறையில் தாய்க்குடித் தாயமுறையறமே பேணி ஓம்பப்படுகின்றது, (2) மேலும், இம்மூவருக்கும் தாம் பெற்ற தநயர் இல்லை யென்று யாண்டும் துலக்கப்படவில்லை. இவருட் செங்குட்டுவனுக்கு அவன்பெற்ற மகன் இருந்ததாக 5ஆம் பதிகம் விதந்தும் கூறுகிறது. அவ்வாறு தநயர் உளராயின், மக்கட்டாயமுறைப்படி தந்தைக்குப் பிறகு உடனே உரிய தநயரே முடிசூடவேண்டுவதன்றி, இவ்வாறு சோதரர் மூவரும் தம்முள் வரிசைமுறையில் ஒவ்வொருவராய் ஆட்சி பெறுவது அவசியமும் அறமும் இல்லை. தம் தநயரை விலக்கி இம்மூவரும் முறையே ஆண்டதும், இவர்களை விலக்கி இவர்களுக்கு முன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆண்டதும் இவர் குடியில் மருமக்கட்டாயம் உண்மையையும் அம்முறையில் இவர்களுக்கு உள்ள தாய்வழித்தாய உரிமையையும் நன்கு வலியுறுத்தும். (3) இன்னும், மக்கட்டாய முறையிற் கடைசியில் ஆண்ட அரசனின் அடுத்த பிறங்கடை (வாரிசு)க்குத்தான் அடுத்த பட்டம். ஒருதாய்வயிற்று மக்கள் மாற்றாந்தாய் வயிற்றுமக்களை விட நெருங்கிய தொடர்புடையர்; அதனால் சிறந்த உரிமையும் அடைகின்றனர். அற நூல்விதியும் ஆட்சியும் நமது நாட்டில் ஒருதந்தை மக்கள் பலருள், ஒருவருக்குச் சகஉதரரல்லாரை விலக்கி, அவருடன் ஒரு வயிற்றுதித்தாரையே அவருக்குச் சிறந்த பிறங்கடைகளாக்கி நிற்கும். எனவே, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலுக்கு ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சகோதரன்; செங்குட்டுவன் மாற்றாந்தாய் மகன். இவர்களெல்லார்க்கும் தந்தை இமையவரம்பனாயின், அவனுக்குப்பின் அவன் மக்கள் மூவருள் மூத்தவனே சிறந்த பிறப்புரிமையுடன் பட்டமெய்துவன். அவனுக்குப்பின் அம் மூத்த மகனுடைய வாரிசுக்குப் பட்ட மிறங்குவதல்லது, அவ் வாரிசுகளை விலக்கி, முந்திய தந்தையின் வாரிசுகளுக்குப் போவது முறையில்லை. செங்குட்டுவன் மூத்தவனாயிருந்தால், முதலில் அவனே முடிபுனைந்திருப்பான். அவனுக்குப்பின் அவன் தநயரும் அவனுக்கு ஒருவயிற்றுத் தம்பியருமே ஆட்சிபெறுவர். இவர்க்கு முன்னே அவன் மாற்றந்தாய் மக்களுக்கு உரிமையில்லை. ஆனால், செங்குட்டுவனுக்கு முன் நார்முடிச்சேரல் ஆண்டிருப்பதாய் அறிகின்றோம். அதனால் அவனே வயதில் மூத்தவனாகப் பட்டமெய்தினான் என்று தெரிகிறது. அவனுக்குப் பின் அவன் தநயரும். தநயரில்லையானால் அவனுக்கு ஒருவயிற்றுத் தம்பியான ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமே அவன் அரசு பெறுதற்குச் சிறப்புரிமையுடையராவர். இவர்களை விட்டு இடையே செங்குட்டுவன் ஆட்சிபெறுதற்கு அவசியமும் நியாயமும் இல்லை. ஆனால் மருமக்கட்டாயக்குடியில் இவர்கள் கோச் சேரருக்கு மருகராவர். ஆகவே வயதுக்கிரமப்படி இம்மூவரும் ஆட்சிபெற்றுத் தீர வேண்டும். மருகருள் ஒருவயிற்றுதித்ததால் மட்டும் யாருக்கும் எவ்விதச் சிறப்புரிமையும் ஏற்படாது. வயது முறைவரிசையில் மட்டுமே அவரவர் ஆட்சியுரிமை வரையறுக்கப்படும். ஆளும் அரசருக்கு மக்கள் இருந்தாலும் அம்மக்களுக்கு உரிமையில்லையாகவே, ஒருவர் பின்னொருவராய்ச் சோதரரும் சோதரருக்குப்பின் அவர்தம் மருகருமே ஆட்சி பெறுவர். பதிற்றுப்பத்துப் பதிகங்களால் இவர்மூவரும் முறையே சேரநாட்டை ஆண்டதாயும், இவருள் ஒரு வயிற்றுடன் பிறந்தார் இருவர்க்கிடையே ஒருவயிற்றுதியாத செங்குட்டுவன் ஆட்சி பெற்றதாயும் அறிகின்றோம். இவையெல்லாம் மரு மக்கட்டாயத்தொடு பொருந்துவனவன்றி, மக்கட்டாய முறைக்கு ஒவ்வா. இவற்றாலும் சேரர்குடியில் மக்கட்டாயம் வழங்கவில்லை என்பது உறுதிபெறுகிறது. (iii) சேரமன்னரை யாண்டும் தந்தைக்குத் தநயரென்னாது, முன்னவற்கு மருகரெனவே கூறுமரபின் குறிக்கோள் இதை வலியுறுத்தும் செய்தி இன்னுமொன்றுஉளது. பதிற்றுப்பத்திலும் மற்றும் பண்டைச் சங்கநூல்கள் பலவற்றிலும் சேரரைக் குறிக்கும் பாட்டுக்கள் பல. அவற்றுள் ஒன்றிலேனும் ஒரு சேரனையாவது அவன் தந்தைக்கு மகன் என்று சுட்டுங்குறிப்பே கிடையாது. அதற்குமாறாக முன்னரசரின் தொடர்பு குறிக்கு மிடத்திலெல்லாம் பாட்டுடைச்சேரனை அம்முன்னோனின் மருகன் எனவே எல்லாப் பழம்புலவரும் யாண்டும் ஒருபடியே சுட்டிப் போகப் பார்க்கின்றோம். இது மிகவும் சிந்திக்கத்தக்கது. மருகன் என்பது வழித்தோன்றல் என்ற பொருளுடைய சொல்லாகை யாலும், அடுத்ததந்தையைச் சுட்டாமற் புகழ் சிறந்த மூதாதையரையே சுட்டித் தொடர்பு காட்டுவது புலவர் முறையாகை யாலும், அம்முறையிற் பாட்டுடைத் தலைவரை அம்முன்னோருக்கு மருகரெனவே சுட்டிப் பாடுகின்றனரெனச் சிலர் சமாதானம் காட்டவரலாம். எனில், சேரகுலத்தில் புகழ்படைத்த ஒரு சேரலற்குப் புகழ்படைத்த பெருமக்கள் ஒருவருமே எஞ்ஞான்றும் பிறக்கவில்லையென்றாவது. அடுத்துப் பெரும்புகழ்கொண்ட இருதலைமுறைச் சேர வேந்தரைப் பாடப் புலவரில்லை யென்றாவது கொள்ளுவது அசம்பாவிதம். பதிற்றுப்பத்துப் பதிகப் பாட்டுக்களை மக்கட்டாயமுறையிற் பொருள் கொள்ளுவோரே இமையவரம்பனுக்குப் பின் அவனை யொத்துப் பாடல்பெறும் புகழ் படைத்த மூவர்மக்கள் இருந்தன ரென்றும் அந்துவன் சேரல் முதல் இளஞ்சேரலிரும் பொறைவரை நாலு தலைமுறையாக ஒவ்வொரு சேரனுக்கும் பாடப்பெறுஞ் சிறப்புடைய பெருமகனே பிறந்து புகழ்சிறந்துளனென்றும் கூறுகின்றனரே. இப்பெருமக்கள் பலருள் யாரேனும் ஒருவனைப்பாடிய புலவர்கூட அவனை அவன் பெருந்தந்தைக்கு மகனெனச் சுட்டப் பாடாததற்குக் காரணம் என்ன? ஒவ்வொரு பதிகத்தலைவனுடைய மனைவியின் தந்தையைக் கூடப் புலவர் தவறாமற்சுட்டிச் சிறப்பிப்பதாக இப் பதிகத்தொடர்களுக்குப் பொருள் கொள்ளுகிறவர்கள், அச்சேரருக்கு முன் பெரும்புகழ் படைத்துப் பல புலவராற் பாடப்பெற்ற அவர் தம் தந்தையரின் தொடர்பைமட்டும் எல்லாப்புலவரும் ஒருபடியாக மறைத்தொதுக்குவானேன்? மக்களைப்பாடும் புலவரெல்லாரும் அம்மக்களினும் புகழ்சிறந்த அவர்தம் தந்தையரை அறமறந்து ஒதுக்கிவிட்டுப் பெயர்சுட்டும் பெற்றிபெறாப் பெண்டிரையும், அப்பெண்டிர் பிதாக்களையும் தம் பாட்டுக்களில் மறவாமற் பாராட்டு வானேன்? போகட்டும். ஒருதலையாகப் பாடும் சேரரின் முன்னோரை மதியாமல் விட்டொழித்து, அச்சேரர்காதற் பெண்டிரோடு அப்பெண்டிர் தந்தையரை மட்டுமே பழம் புலவரெல்லாம் பாராட்டினர் என்றாவது கொள்ளக்கிடந்தாலும் ஒருவாறு அமைதி பெறலாம். உண்மையிற் புலவர் பலரும் தம் பாட்டுடைத் தலைவரின் முன்னோரை விட்டபாடில்லை. அன்ன பெருமுன்னோரைச் சுட்டி, அவர் மருகரெனப்பாட்டுடைத் தலைவர் தமை விதந்து பாராட்டிப் போக நாம் பார்க்கின்றோம். பதிற்றுப்பத்திலே அத்தகைய குறிப்புக்கள் பல வருகின்றன. இதனை ஊன்றிச் சிந்திக்கும்போது மக்கட்டாயமுறை இக்கோச்சேரர் குடியில் இல்லாமையே இவ்வாறு சேர ரெல்லாம் மருகரெனவே பாடப்பெறுதற்குக் காரணமென்று தெரிகிறது. இளஞ்சேரலிரும் பொறையைப் பெருஞ்சேரலிரும் பொறையின் மகனென்னாது, விறல் மாந்தரன் விறன்மருகன் என்று பெருங்குன்றூர்கிழார் பாடத் தக்ககாரணம, இம்மருமக்கட்டாயமன்றிப் பிறிது காணல் அரிது. பகுதி : 5 மருகன் என்ற சொல்லின் பொருளாட்சிகள் ஊன்றிச்சிந்தித்தால், மருகன் என்னும் சொல்லுக்கு வழித்தோன்றல் என்னும் பொருளே இம் மருமக்கட்டாய வழக்கால் வந்திருக்க வேண்டு மெனத் தோன்றுகிறது. மருகன் எனும் சொல், நேரே சோதரிமகனையும், மகள் மணவாளனையுமே குறிப்பது மரபு. அந்நேர்பொருளில் வழங்குவதோடமையாமல் அச்சொல் சிலபுலவர் செய்யுள்களில் மக்கட்டாயக் குடிகளில் வழித்தோன்றலாவாரைச் சுட்டவும் வருகின்றது. மக்கட்டாய நாடுகளில் மருகர் மாமன்மார்க்கு என்றும் வழித்தோன்றலாக மாட்டார். மருமான்மார்க்குரிய பெயர்ச்சொல் அவ்வுறவுமுறைக் குரிமையின்றித் தம் தந்தைக்குத் தநயராய் வழித் தோன்றலாவாரைக் குறிக்கப் பெறுவானேன்? மக்கட்டாய முறையில் அச்சொல் அப்பொருளி லாட்சி பெறும் ஆற்றலும் இல்லை. மருமக்கட்டாய வழக்கம் தமிழகத்தில் உளதாயின் அம்முறையில் வழித்தோன்றலாவார் மருகரே யாகையால், நாளடைவில் மருகன் எனும் சொல். மருமான் - எனும் முறைசுட்டும் தன்நேர்பொருளை மட்டுமன்றி, வழித்தோன்றல் எனும் சார்புப்பொருளையும் வழக்காற்றாற் பெறுவது இயல்பாகும். பிறகு இரு தாயக் குடிகளிலும் தாயமுறையைக் குறியாமலே பிறங்கடை (வாரிசு) ஆவார் எவரையும் வழித்தோன்றல் எனச்சுட்டும் பொதுச்சொல்லாகி வழங்கப்பெறும். இதுவே இச்சொல்லுக்கு இப்பொருள் கிடைத்த வரலாறாக வேண்டும். என்றும் யாண்டும் மருமக் கட்டாயமறியாத மக்கட்டாயம் மட்டுமே வழங்கும் ஒரு நாட்டில் மருகர் என்றுமே வழித்தோன்றலாகாராகையால் அவர் பெயர் அப்பொருளெய்தநியதியில்லை; வழியுமில்லை. ஆகவே தமிழில் இப்பொருளில் இச்சொல் வழங்கி வருவதாலும் தமிழகத்திற் சேரநாடல்லாத பிறிதுபுலமெல்லாம் மக்கட்டாயமே தொன்று தொட்டு நினைவெட்டும் நூல்குறிக்கும் காலமெல்லாம் கையாளப் பெறுவதாலும், இச்சொல்லுக்கு இப்பொருளாட்சி குடபுலச்சேரர் குடித்தாயமுறை கொண்டே கிடைத்திருக்க வேண்டுமென்பது தெளிவு பெறுகிறது. எனவே, பழம்பாட்டுக்களிற் சேரரையெல்லாம் மருகர் எனவே குறித்துப்போகும் வழக்காற்றால் அச்சொல்லின் பிந்திய பொருள் கொண்டு அவரை மக்கட்டாயமுறையில் வழித்தோன்றல்கள் எனக் கொள்ளுவதைவிட, அவர்களின் மருமக்கட்டாய முறையையே அது சுட்டுமெனவும், அவர்தம் தாயமுறை வழக்குப் பற்றியே நாளடைவில் அச்சொல் வழித்தோன்றல் எனும் பொதுப்பொருள் பெற்று மக்கட்டாய முறையில் வழித் தோன்றலாவாரையும் குறிக்கலாயிற்றெனவும் கொள்ளுவதே பொருத்தமாகும். பகுதி6: பதிற்றுப்பத்துப் பாட்டுக்களிலெல்லாம் மருகரென்றே சுட்டவும் பதிகங்களில்மட்டும் மகன் என்றுவந்த பிரயோகத்தின் பொருட்பொருத்தம் இனி, இங்கு நாம் பொதுவாக விசாரித்தறியவேண்டிய செய்தி பிறிதொன்று உண்டு. பதிற்றுப்பத்துப் பதிக ஆசிரியர் பாட்டுடைத் தலைவனைப் பதிகத்திற்குறித்த வேறு சேர வேந்தனுக்கு மேலேகூறியபடி மருகன் என்னாமல் வாளா மகனென்றே கூறிவைத்திருக்கின்றார். ஆகவே இங்கு மகன் எனும் சொற்பொருளை நாம் சிறிது விசாரிப்பது பொருத்தமாகும். பதிற்றுப்பத்து நூலிலும் மற்றச் சங்கச் செய்யுட்களிலும் நிரந்தரமாகப் புலவரெல்லாம் தாம் பாடும் சேரரை அவர்தம் முன்னோருக்கு மருகர் என்றே குறித்துப்போவதற்கு மாறாக, இப்பதிகப் பாட்டுக்களிலெல்லாம் ஒருபடியாக ஒவ்வொரு பாட்டுடைச் சேரனையும் மற்றொரு பெயர் குறித்த சேர மன்னனுக்கு மருகன் என்னாது வாளா மகன் எனவே கூறி வைத்திருப்பது சிந்திக்கத்தக்கது. ஒருசேரனுக்கு மற்றொருவன் மகன் என்று மட்டும் கூறப்பட்டாலுங்கூட, அதுகொண்டு பின்னவன் முன்னவனுக்கு அவன் பெற்ற புதல்வன் என்று ஒருதலையாகத் துணிய இயலாது. அப்படியிருக்க, இங்குப் பதிகங்களெல்லாம் வாளா இரு சேரரைமட்டும் சுட்டி, அவருள் ஒருவனை மற்றவனுக்கு மகன் எனப் பேசவும் இல்லை. ஒவ்வொரு பதிகத்திலும் மகன் எனும் சொல், தனியே இருசேரர் பெயர்க்கிடையில் முறைப் பெயராய் நில்லாமல், இடையே பிறசொற்றொடராக்கம் பெற்றே வருகின்றது. ஆகவே இங்கு இதன்பொருளைச் சிறிது ஊன்றி விசாரிப்பது அவசியமாகிறது. மகன்என்ற சொல் தமிழில் (1) ஆடவன், (2) மணவாளன், (3) பெற்றபுதல்வன், (4) பெறாத வழித்தோன்றல் அல்லது வாரிசு எனப் பல்பொருளிலும் வருவதாகும். ஆகவே இச்சொல்லுக்கு ஆங்காங்கே இடம்நோக்கிப் பொருள் இன்னதென்று வகுத்துக் கொள்ள வேண்டுவது இன்றியமையாத கடமையாகும். பதிகங்களிலெல்லாம் இச்சொல் எங்கும் நிரக்க ஈன்ற என்னும் அடையடுத்தே நிற்பதால் இதற்குக் கேவலம் ஆடவன் அல்லது மணமகன் என்ற பொருள்கள் விலக்கப்படும். பெற்றோர் பெயர்குறித்து, இன்னார் மனைவியீன்ற மகன் என்று விதந்து கூறப்படுவதால், அப்பெற்றோருக்குப் பாட்டுடைத் தலைவன் அவர் பெற்றபுதல்வனே என்று தெளியப்படும். அதனாலேயே பதிக முதலிற் பெயர் குறிக்கப்பெற்ற சேரனுக்கு அவன் புதல்வன் ஆகான் என்பதும் தெளியப்படும். எனினும், அச்சேரனுக்கும் பாட்டுடைத் தலைவனுக்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும் வேறு முறைச் சொற்கள் எதுவும் அங்கு இல்லாததால், அத்தொடர்பையும் இம் மகற்சொல்லே குறிப்பாகக் கொள்ளவேண்டும். கொண்டால், அக்குறிப்பில் இச்சொல்லுக்குப் பெற்ற புதல்வனல்லாத வழித்தோன்றல் என்ற பொருளே அமைவதாகும். ஏனெனில், இங்கு ஒவ்வொரு பதிகத்தலைவனையும் புலவர் பதிகப்பாட்டில் அவனைப் பெற்றோரிருவரொடும் விதந்து சுட்டி, அவன் அவருள் இன்னோன்தேவி யீன்ற மகன் என விளக்குவதோடு, பதிக முதலிற் பெயர்குறித்த மற்றொரு சேரனுக்கும் அவன் வழிமுறைமகனாவான் என்றும் தெளிவிக்கின்றார் என்பது விசதமாகிறது. ஆகவே இங்குப் பதிகங்களில் வரும் மகன் எனும்சொல் பதிகத் தலைவனைப் பெற்றோரின் தொடர்பு குறிக்கும் போது அவருக்கு அவன் புதல்வன் முறைப் பொருளிலும், மற்றொரு சேரமன்னனின் தொடர்பு குறிக்கும் போது வழித்தோன்றல் என்ற தகவுப் பொருளிலும் ஆட்சி பெறுகின்றதென்று தெளிவாகிறது. இதைத் தெளிவிப்பதற்காகவே ஆசிரியர்-பாட்டுச் சேரனைப் பெற்ற இருமுதுகுரவரைக்குறிக்குஞ் சொற்றொடரை அவனைச்சுட்டும் மகன் என்ற சொல்லுக்கு அண்மையில் வைத்த தோடமை யாமல், அடுத்து அச்சொல்லுடன் ஈன்ற என்ற அடை தொடுத்துநிறுத்தியும் - அவனைத் தனக்குப் புதல்வனாகாமல் வழித்தோன்றலாக மட்டும் பெறும் மற்றொரு சேர மன்னன் பெயரைக் குவ்வுருபுகொடுத்துப் பிரித்துச் சேய்மையில் நிறுத்தியும் வைத்திருக்கும் அழகு கவனித்துப் பாராட்டத்தக்கது. இங்கு நான்கனுருபு கொடை, பொருட்டு, முறைப் பொருள்களில் வந்துள்ளது. பதிகமுதலிற் குறித்த ஒருசேரனுக்கு, அவன்மரபு தழையும்பொருட்டு அவன் குடி சிறக்க மகப்பெற்று ஈயும் உரிமையுடைய கோமாள் ஒருத்தி விதந்து கூறப்பட்ட வேறொரு தக்கமணவனை மணந்து அவன் மனைவியாவாள், தனக்கு மகனாய்த் தான் பிறந்த சேரர் குடிதழைய அச்சேரனுக்கு முறைக்கு மகனாய் (வாரிசாய்) ஈன்று கொடுத்தவனே பாட்டுடைச்சேரன் என்பது பதிகத் தொடரமைப்பால் இனிது போதருகின்றது. பதிகமுதலிற் குறிக்கும் சேரன் பெயர்க்கு நான்காம் வேற்றுமையுருபு புணர்த்திப் பிரித்து அதைச் சேய்மையில் நிறுத்தியதனால் அப்பெயருடையானுக்குப் பின் ஈன்ற மகன் என்றுவரும் தொடர்குறிக்கும் பாட்டுடைத் தலைவன் நேரே பெற்ற மகனாகாவிட்டாலும் அச்சேரன்குடி சிறக்கும் பொருட்டு அவனுக்கு மகன் (வாரிசு) முறையாக அவன் குடிப்பிறந்தாளொரு கோமாட்டி பெற்றுக் கொடுத்த (மகன்) வழித்தோன்றலாவான் என்று இப்பதிகத்தொடர் பொருள் பயத்தலால், இங்குப் பொருட்டு முறைப் பொருள்களையும் கொடைப் பொருளையும் முறையே குவ்வுருபு கொடுப்பதாகும். பெற்றோர் பெயர்களை அண்மையிற் குறிப்பதால் அவர்களுக்குப் பாட்டுடைத் தலைவன் நேரே யீன்றமகனாவதைப் பொருந்தக் கூற வேண்டுவதன் பொருட்டும், சேய்மையிற் சுட்டிய சேரனுக்கு அவன் வழித் தோன்றலாவதைக் குறிக்கும் பொருட்டும், இரண்டுக்கும் உதவவொண்ணாத மருகன் என்பதைவிலக்கி ஒருங்கே இருபொருளிலும் செவ்வனே நின்றமைவதான மகன் என்ற சொல்லையே இங்கு இப்பதிகங்களிற் புலவர் ஓர்ந்து உபயோகித்துள்ளார் என்பது பதிகத்தொடரமைப்பால் இனிது தெளியக்கிடக்கின்றது. பகுதி : 7 முடிவுரை தமிழ்நாட்டில் குடகுமலைத்தொடருக்கு மேற்கே குடபுலத்தில் மட்டுமே இம்மருமக்கட்டாயம் நெடுவழக்காய் நின்று வருகின்றதென்று இவ் வாராய்ச்சியால் தெளியக்கிடைக்கிறது. எனினும், அம்மலைத்தொடருக்குக் கிழக்கே தமிழகம் முழுவதும் சங்ககாலந்தொட்டு மக்கட்டாயமே நிலைத்து நிற்கின்றது. இக் கீழ்புலத்தில் என்றும் யாண்டும் யாராலும், மருமக்கட்டாயம் ஆட்சிபெற்றதான குறிப்பே நூல்களிற் கிடையாது. இந்நிலையில் இருமக்கட்டாயம் தொல்லைத் தமிழ்மரபா? பழமரபாமேல், தமிழகத்திற் கேரள மொழிந்த பிற பகுதிகளிலெல்லாம் இது வழக்கிழந்தது மட்டுமன்றி, பழஞ்சேரருக்குக் கட்டாயமே மரபாமெனத் தமிழர் மயங்கும்படி இது மறக்கப்படவும் காரணமென்ன? தமிழ் மரபன்றேல், சேரர் எக்காலத்தில் யாண்டிருப்பது எப்படி இதனை மேற்கொள்ள லாயினர்? சேரரே தமிழர்தாம் அன்றி வடவாரியரை வணக்கியது போலவே, தமிழப்படையையெல்லாம் இடையறப்படுத்தித், தருக்கினர் என்று இவர் கீர்த்திகொள்வதால், இச்சேரர் தமிழரல்லாத அந்நியரா? இவ்விடத்தில் நாம் கருதவேண்டியன இன்னும் சிலவுள. தமிழகத்தில் மேல்புலத்துமட்டுமே இத்தாய் வழித்தாயமுறை நடக்கின்றது. அங்கே நாயர் முதலிய திராவிடசமுதாயத்தார் மட்டுமல்லர்; தம்மை நல்ல அசல் ஆரியப் பிராமணராகப் பாராட்டித் தருக்கும் நம்பூதிரிமாரும், புறமதத்தராய்ப் பிற நாட்டிலிருந்து வந்து குடியேறிய மாப்பிள்ளைமாருமே மருமக்கட்டாயி களாயிருக்கின்றனர். சமீபகாலத்தில் கீழத் தமிழ்நாடுகளிலிருந்து வந்தேறிய சிலரொழிய. நெடுங்காலமாகக் குடமலைக்கு மேற்கிலுள்ள சேரநாட்டார் எல்லாரும் தொன்று தொட்டு மருமக்கட்டாயத்தையே கையாண்டு வருகின்றனர். இவ்வாறு மேல்புலத்தில் மட்டும் தாய்வழியும் பிறிதெங்கும் தந்தைவழியுமாயிருப்பதன் சரித மூலச் செய்திகளைத் தேர்ந்து தெளிதல் தமிழர்கடனாகுமன்றோ? மிகப் பழங்காலத்தில் தமிழகமுழுவதும் தாய்வழி மரபே பரவியிருந்து, பிறகு மக்கட்டாய ஆரியர் வந்தேறியபின் கீழத்தமிழ்நாடுகளில் தாய் வழி நெகிழ்ந்தொழிந்து தந்தை வழித்தாயம் மேற்கொள்ளப் பட்டிருக் கலாம். எனினும் இத்தாய மாற்றம் குடமலைத்தொடர் கடந்து மேலைப்புலச் சேரரையிணக்க மாட்டாமல் கேரளத்தில் மட்டும் பழைய தாய்வழி தங்கிய தெனலாம். கேரளத்திலவ்மாப்பிள்ளைமார் என்பார் ஆதியில் அராபி நாட்டின ரென்பது எல்லாருக்கும் ஒப்பமுடிவதொன்றே சமயத் தாலுமிவர் மகம்மதியர். மகம்மதியர் சமுதாய வழக்க வனுட்டானங்களை எளிதில் மாற்ற இணங்காத பிடிவாதி களென்பதும் தங்கள் அனுட்டானங்களுக்காகத் தமதுயிரைப் பொருட்படுத்தாது கொடுத் தேனும் தம்மொழுக்க வழக்கங்களைப் பேணுபவரென்பதும் உலகறிந்த செய்தி. இப்படியிருக்க, இவ்வரபிய மாப்பிள்ளைமார் குடநாடு புகுந்தபின், அங்கே பரசுராமர் சாபத்துக்குப் பயந்து தம் பழைய குலவொழுக்கங்குன்றப் பல புதிய அநாரிய ஆசார அனுட்டானங்களோடு மருமக்கட்டாயத்தையும் மேற்கொண்டுள்ள இந்துக்களின் தூண்டுதலால், தாங்களும் மருமக்கட்டாயி களாகி விட்டார்களா? அல்லது இவர்கள் பூர்வீக அராபியாவில் கையாளப்பட்ட பண்டை மருமக்கட்டாயத்தைப் புதிய மகம்மதியர் அந்நாட்டில் மாற்றினபோது அதனைத் தாம் கைவிடச் சம்மதியாமல் அரபியாவை விட்டுக் குடநாடு புகுந்து, தம் பழந்தாயமுறையை விடாது பேணிவருகின்றனரா? அராபி தேசத்தில் ஆதிகாலத்தில் மருமக்கட்டாயமே இருந்ததென்பது நல்ல ஆராய்ச்சியாளர் ஆய்ந்து துணிந்த செய்தி. 1அராபி நாட்டுக்கும் குடபுலத்துக்கும் தொன்றுதொட்டு நெருங்கிய தொடர் புண்மையும் சரிதமறிந்த செய்தியேயாகும். இந்நிலையில், அராபியர் மகம்மதியராகிப் பல புதிய ஆசாரத் திருத்தங்களை ஏற்படுத்தியமைவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே, சில மருமக்கட்டாய அராபியர் குடபுலத்திற்குடியேறினவர் நாளடைவில் இந்துக்களாயினர்; அவரோடு பின்னர் மகம்மதிய மருமக்கட்டாயிகளான அரபி மாப்பிள்ளைமாரும் சமயமாறினும் தங்கள் பழவழக்கங்களைக் கைவிட மனமில்லாதவராய், அப்பழவழக்குக்கட்கிடமற்ற தமது நாட்டைவிட்டுச் சேர நாட்டில்வந்தேறி தங்குலத்தவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆண்டுப் போந்து தமது நாட்டுத் தாய்வழித்தாயமுறையை விடாது பேணிவரும் குடபுலக் குடிகளோடு ஒருங்கு வாழலாயினரென்று கொள்ளலாமா? இத்தாய்வழித்தாயத்தார் ஆதிக்கம் வளர்ந்தவிடத்தில், தெற்கே நாஞ்சில்நாட்டுத் தமிழரைப் போலப் பிற மக்கட்டாயிகள் சிலரும் நாளடைவில் கால இட மாறுதலால் தாய்வழி முறையைத் தாமும் கையாளத் தொடங்கியிருக்கலாம். அதற்குச் சமாதானங் கூறுமுகத்தால், வடநாட்டில் தாம் தாயைக் கொன்ற உள்ளுளைக்கு முணர்வு தூண்டப்பரசுராமர் தென்மேற்கே கேரளத்தில் தாய் வழிவகுத்துத் தாய்மார்க்குச் சிறப்புநிலை மிகுத்துதவும் புது முறைகள் படைத்துத் தம் பழைய பழி துடைத்தது போலோர் அற்புதக் கதையினைக் கற்பித்துமிருக்கலாம். இன்னும், வடகங்கை வளநாட்டில் மூன்றூழிகட்கு முன்னிருந்த அசல் ஆரியப்பார்ப்பனப் பரசுராமரைப் பல காடும் நெடுமலையும் கடத்தியிழுத்துக் குடநாடடிற் புகுத்தியதோடு, அவரை ஆரிய ஆசாரங்களை அறவொழிக்குங் குலக் கோடரியாகவும் பழிசுமத்தும் பொருந்தாப் பொய்க் கதைகளைப் புறக்கணித்து, அராபி நாட்டுத் தொடர்பு குறிக்கும் பல சரித சூசனைகளை ஆராய்வது பலன் தராதா? வெள்ளை யானையின் பின் குதிரைமீது கைலாயஞ் சென்றதாக நம்மவர் பாராட்டிப் புகழும் சேரமான், வெண்ணுரையெழுவி யலைமலை தழுவும் தண்கடல் மார்பு தவழுங் கப்பலேறி அராபிநாடு புகுந்தவராக அந்நாட்டில் வழங்கும் வரலாற்றின் உண்மையை விசாரிப்பது மெய்ச் சரிதப் பழஞ்செய்தி யறிய விரும்புவோர்க்குக் கடமை யன்றோ? இனைய பல கேள்விகளும் எழுபவெல்லாம் நடுநிலை யிலுண்மை காணும் நோக்கமொடு ஆராயத் தக்கனவேயாம். ஆனால் இவையெல்லாம் எடுத்துக்கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு அவசியமல்லாதன வாகையால், அவற்றைப் பிந்தித் தக்க சமயம் கிடைத் துழிச் சாவகாசமாக விசாரிக்க விடையேற்பேம். தற்போது தமிழகத்தே மேல்புலத்தில் வழங்கிவரும் மருமக்கட்டாய முறை புதிதொன்றில்லை யென்பதும் தொல்லைச் சங்ககாலப் பழஞ் சேரர் குடிகளிலும் அடிப்பட்ட தொன்மரபாய் ஆட்சிபெற்றுத் தொன்றுதொட்டே வழங்கி வருவதாய்த் தெரிகிறது என்பதுமே, இவ்வாராய்ச்சியால் நாம் காணக்கிடைக்கும் பொருளாகும். சேரர் பேரூர் குடீசுநுறுடீசுனு ஹbடிரவ வாளை வiஅந டயளவ லநயச, ஐ றயள in கூயதேடிசந inஎவைநன வடி ளயீநயம யவ யn ஹnniஎநசளயசல அநநவiபே டிக வாந “முயசயவோயi கூயஅடை ளுயபேயஅ” உநடநசெயவநன ரனேநச வாந னளைவiபேரiளாநன யீசநளனைநnஉல டிக வாந ழடிn. கூhந சுயதயா ளுநவாரயீயவால டிக சுயஅயேன. ஐ றயள வாநn iவேசடினரஉநன வடி சுயடி க்ஷயாயனரச மு. ளுசiniஎயளயஅ ஞடைடயi ஹஎநசபயட றாடிளந யஉளூரயiவேயnஉந ஐ hயஎந டநயசநேன ளinஉந வடி எயடரந எநசல அரஉh. ஹனே ஐ ளாடிரடன நெ பசநயவடல iனேநவெநன வடி வாந ளுயபேயஅ நஎநn றநசந வை டிடேல கடிச வாந யீசiஎடைநபந யனே யீடநயளரசந டிக வாந யஉளூரயiவேயnஉந றாiஉh ஐ டிறந நவேசைநடல வடி வைள மiனேநேளள. னுரசiபே அல ளாடிசவ ளவயல யவ கூயதேடிசந, ஐ றயள ய பரநளவ ரனேநச hளை hடிளயீவையடெந சடிடிக; யனே றந றநசந யேவரசயடடல வாசடிறn அரஉh வடிபநவாநச : யனே டிnஉந in வாந உடிரசளந டிக ய சயஅடெiபே வநவந - ய - வநவந, ஆச. ளுசiniஎயளயஅ ஞடைடயi உயளரயடடல சநகநசசநன வடி ஞயனேவை ஆச. ஆ. சுயபாயஎயலலயபேயச’ள செடிஉhரசந - “ஊhநசயn ஊhநபேரவவரஎயn” - யனே வடி வாந வாநடிசல டிக வைள யரவாடிச றாiஉh னைநவேகைநைன வாந கயசகயஅநன ஊhநசய உயயீவையட டிக லடிசந றiவா “ஹnடையமையசரஎடிடிச” நேயச அடினநசn கூசiஉhinடியீடிடல. ஐ hயயீயீநநேன வடி நஒயீசநளளடல iயேbடைவைல வடி யஉஉநயீவ வாயவ எநைற யள ஐ கடிரனே உடியீiடிரள சநகநசநnஉநள in கூயஅடை உடயளளiஉள றாiஉh, வடி அல அiனே, டநகவ nடி னடிரவெ வாயவ வாந யnஉநைவே ஊhநசய அநவசடியீடிடளை றயள ய ளநய-யீடிசவ. ஆச. ஞடைடயi உhiஅநன in hளை யயீயீசடிஎயட யனே றயள பசநயவடல யீடநயளநன வடி கiனே அந hடிடனiபே யn டியீiniடிn யbடிரவ வாந உவைல டிக “ஏயnஉhi” றாiஉh றயள நஒயஉவடல றாயவ hந றயவேநன வடி நஅயீhயளணைந வடி வாந கூயஅடை ஞரடெiஉ. ழந வாநn யளமநன அந வடி றசவைந வடி வாந “ளுநனேயஅடை” வடி உடிவேசடிஎநசவ ஆச. ஐலநபேயச’ள நேற-கயபேடநன வாநடிசல. ஹனே றாநn ஐ நஒயீசநளளநன அல சநடரஉவயnஉந வடி நெ னசயறn iவேடி வாந எடிசவநஒ டிக யீடிடநஅiஉயட னளையீரவநள றiவா பசநயவ கூயஅடை ஞயனேவைள டமைந வாந யரவாடிச டிக “ஊhநசயn ஊhநபரவவரஎயn” ஆச. ஞடைடயi றயஒநன எநாநஅநவே றiவா யடட வாந கநசஎடிரச டிக hளை பசநயவ யனே hiபா - ளடிரடநன ளinஉநசவைல றiஉh பசநயவடல வடிரஉhநன அந யனே ரடவiஅயவநடல எயnளூரiளாநன யடட அல hநளவையவiடிn; கடிச ஐ கடிரனே ஐ உடிரடன nடிவ செiபே அலளநடக வடி சநகரளந சநளயீடிளேந வடி hநள கநசஎனை யனே சைசநளைளைவiடெந யயீயீநயட. ஐ யீசடிஅளைநன வடி hiஅ வாநசநகடிசந வடி றசவைந ய சநகரவயவiடிn யள னநளசைநன. ஹகவநச ஐ சநவரசநேன வடி கூரவiஉடிசin, hடிறநஎநச ஐ யீரவ டிகக றசவைiபே அல யசவiஉடந வiஅந யகவநச வiஅந யடவாடிரபா ஆச. ஞடைடயi ளாடிறநசநன டிn அந ய ரேஅநெச டிக சநஅiனேநசள - றயவைiபே கடிச ளடிஅந hடிடனையல யவ கசைளவ யனே வாநn றாநn வை உயஅந கசவைவநசiபே வை யறயல றiவா ளடிஅந டிவாநச வiஅந - னநஎடிரசiபே எடிஉயவiடிளே வாயவ கடிச வாந வiஅந நெiபே டடிடிமநன அடிசந யீநசநஅயீவடிசல, - யடறயலள டயலiபே ரnஉவiடிn வடி அல ளடிரட வாயவ ஐ அயல ளடிடிn கiனே அடிசந ளரவையடெந வiஅந லநவ வடி ளவை வடி றசவைந றாயவ ஐ யீசடிஅளைநன வடி அல நளவநநஅநன கசநைனே. ஆச. ஞடைடயi யீசடியெடெல னநளயீயசைநன டிக அல யீசடிஅளைநன யசவiஉடந, யனே யேவரசயடடல ளநவ வடி யீசநயீயசந ய சநயீடல டிக hளை டிறn. ஹனே லெ வாந வiஅந ஐ hயன உடிஅயீடநவநன வாளை னளைளநசவயவiடிn. ஐ hநயசன வாயவ hளை சநயீடல றயள யவ வாந “ளுநனேயஅடை” டிககiஉந கடிச யீரடெiஉயவiடிn. ஐ றயள படயன ஐ றடிரடன நெ சநடiஎநன யனே றசடிவந வடி ஆச. ஞடைடயi யஉஉடிசனiபேடல வடி நெ நஒஉரளநன கசடிஅ யீரடெiளாiபே அiநே, யள hளை டிறn சநயீடல றயள டிn வாந நஎந டிக யீரடெiஉயவiடிn. ழந ளநவே கடிச அல அயரேளஉசiயீவ யனே சநவரசநேன வை றiவா ய அயனேயவந வாயவ வை ளாடிரடன நெ பiஎநn வடி வாந யீரடெiஉ. ஐn hளை டநவவநச னயவநன 25-4-17, hந றசடிவந வடி அந “லுடிரச யீயயீநச டிn” வஞ்சி ளை ளiஅயீடல ளரயீநசb. லுடிர hயஎந வயமநn ய டடிவ டிக வசடிரடெந டிஎநச வை. ஐ iளேளைவ டிn லடிரச யீரடெiளாiபே வை. கூயஅடை உடிரவேசல உயnnடிவ யககடிசன வடி டடிளந ளரஉh ய hiபாடல எயடரயடெந யீயயீநச, ஒ ஒ ஒ ஒ றiவாடிரவ லடிரசள, அiநே உயnnடிவ நெ எநைறநன யள கரடட”. ஐ hயன வாரள nடி யடவநசயேவiஎந வாநசநகடிசந நெகடிசந அந ரெவ வடி ளநனே வை வடி வாந யீசநளள. ளுடிஅநவiஅந நெகடிசந அல நளளயல றயள சநயனல கடிச வாந யீசநளள, வாந நசரனவைந ளஉhடிடயச யனே டயரசநயவந டிக வாந ளுநவார ளுயஅயளவாயயேஅ, ஞயனேவை ஆச. சு. சுயபாயஎயலலயபேயச றயள hநசந டிn ய டநஉவரசiபே வடிரச. ஹனே in வாந உடிரசளந டிக ய கயஅடையைச உhயவ யஅடிபே கசநைனேள, hந செடியஉhநன வாளை ளூரநளவiடிn, யனே சநஅயசமநன வாயவ hந வாடிரபாவ hந ளாடிரடன உhயபேந hளை எநைறள ளinஉந hந கடிரனே ஏயnஉhi வடி நெ ய ளநய-யீடிசவ வடிறn கசடிஅ ளடிஅந நேற நஎனைநnஉந hந சநஉநவேடல உயஅந யஉசடிளள றiவா றாடைந சயளேயஉமiபே ய சயசந அயரேளஉசiயீவ டிக ளடிஅந ரnயீரடெiளாநன உடிஅஅநவேயசல ரயீடிn கூhடிடமயயீயீயைஅ in வாந ளுயசயளஎயவi ஏடையளய டுiசெயசல in கூயதேடிசந. கூhளை நnஉடிரசயபநன அந in nடி ளஅயடட னநபசநந வடி சநநேற அல நககடிசவ in கரடகடைடiபே அல யீசடிஅளைந வடி ஆச. ஞடைடயi டிக கூயதேடிசந. ஐ ளாடிரடவ nடிவ டிஅவை வடி வாயமே வாந ளுயபேயஅ யரவாடிசவைநைள கடிச வாநசை உடிரசவநளல in யடடடிறiபே அந வடி யீடயஉந வாளை நளளயல - கசைளவ யீரடெiளாநன in வாந “ளுநனேயஅடை” யடளடி in வாளை கடிசஅ நெகடிசந வாந கூயஅடை ஞரடெiஉ. கூரவiஉடிசin, ளு.ளு. க்ஷழஹசுஹகூஐ 30-5-17. சேரர் பேரூர் பகுதி 1 : முன்னுரை குடதிசைச்சேரர் கோநகர்வஞ்சி யாண்டையது என்பது வினா. இதற்கு முத்திறக்கொள்கையோர் மூவேறு விடை தருவாராயினார். சிலப்பதிகாரத்திற்குரைவகுத்த ஆசிரியர் அடியார்க்கு நல்லாரும், பெரியபுராண நூலுடையாரும் மகாமகோ பாத்தியாயர் ஸ்ரீசாமிநாதையரவர்களும், அடிப்பட்ட தமிழ் வழக்குடை யாரும் மலைநாட்டுத் தலைநகராம் வஞ்சியைக் கடலோரம் பேராற்றின் மேலதெனக்கொள்ப.1 காலஞ்சென்ற ஸ்ரீ கனகசபைப்பிள்ளையவர்கள், பின் வழக்கில் வஞ்சிக் கருவூரெனவு மொருபெயருண்மை கொண்டும், குடமலைத் தொடரினடி வாரத்திற்கு பேரியாற்றங் கரையில் ஒரு பாழூருக்குத் திருக்கரூர் என்னும் பெயருண்மை கொண்டும், அப்பாழூரையே சேரர் பேரூராக் கருதினர். சமீபத்தில் வெளிவந்த சேரன் செங்குட்டுவன் என்னுஞ் சரித நூலாரோ, இவையிருகூற்றும் கொள்வதற்குப் பொருத்தமும் பிரமாணமும் இல்லை”. எனவும். வஞ்சி யென்பது திருச்சிராப் பள்ளிக்கு மேற்கே ஆம்பிராவதிக் கரைமேலதாய கருவூரா னிலையாமெனவும், வற்புறுத்துவர்.2 இம் முத்திறக் கொள்கையுள்ளு மொன்றே முந்துநூன் முடிபுக் கொத்த தாகும் என்பதொருதலை. எனவே அஃதாமாறென்னை? வஞ்சி நக ரொன்றோ? பலவோ? ஒன்றெனின், அது மலைநாட்டதோ? அன்றிப் புனனாட்டூரேயோ? என்ற வாராய்ச்சி நிகழ்வதியல்பாம். முதற்கண், இவ்வூர்சுட்டிய சில பெரும்பழநூலருந் தொடர்களை யுய்த்து நோக்கலேற்புடைத்து. (1) தண்பொருநைப் புனற்பாயும் விண்பொருபுகழ் விறல்வஞ்சி (புறம். 11) (2) . . . . . . நெடிதே வஞ்சிப் புறமதி லலைக்கும் கல்லென் பொருநை மணலினும் (புறம். 387) (3) தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் (சிலம்பு. காதை 29) (4) கலிகெழு வஞ்சியு மொலிபுனற் புகாரும் (சிலம்பு. காதை 8) (5) குட்டுவன், வருபுனல்வாயில் வஞ்சியும் (பத்து) (6) புரிந்த யானிப் பூங்கொடிப் பெயர்ப்படூஉந் திருந்திய நன்னகர் சேர்ந்தது கேளாய் (மணிமேகலை காதை 28 வரி 101, 102) (7) செங்குட் டுவனெனுஞ் செங்கோல் வேந்தன் பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் போர்த்தொழிற் றானை குஞ்சியிற் புனைய (மேற்படி காதை 26 வரி 77, 78, 79) (8)... ... சேரன் விற்றிறல் வெய்யோன் றன்புகழ் விளங்கப் பொற்கொடைப் பெயர்ப்படூஉம் பொன்னகர் பொலிந்தனள் (மேற்படி காதை 26 வரி 29) (9) இன்னும், வானவன் வஞ்சி பொற்கொடி வஞ்சியில் பூவா வஞ்சி வஞ்சியிலிருந்து வஞ்சிசூடி வாடா வஞ்சி பூங்கொடி வஞ்சிமாநகர் எனவும் வருவன பண்டை நூல்களிற் பலவிடத்தும் பரக்கக் காணலாம். பின்னும், வஞ்சி யகநகர்வாய் மதிதங்கிய மஞ்சணி யிஞ்சிவஞ்சி எனப் பெரியபுராணத்தும் வந்துள. இவையன்ன அச்சிட்டு வெளியான பழநூல்கள் பல வற்றுள்ளும், சேரர் பேரூருக்கு வஞ்சியென்பதன்றி, கருவூர் என்னும் பெயர்வர யாண்டுங்கண்டிலம். ஸ்ரீ இராகவையங் காரவர்கள் தங்களாராய்ச்சியி லெடுத்தாண்டுள ... ... கோதை திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத் தெண்ணீ ருயர்கரை குவையிய தண்ணான் பொருநை மணலினும் பலவே (அகம். 93) என்னுஞ் செய்யுளையறிவேம். அதுபற்றிக் கீழே விரித்து ரைப்பேம். தற்போது, வெளியிட்ட பழநூலொன்றேனும் வஞ்சியுங் கருவூருமொன்றென விதந்துகூறக் காண்கின்றிலம். இதுவரை, அடிப்பட்ட பழைய நூல்களிற் கண்ட மேற்கோள்களாற் கிடைக்கப் பெறுவன: (1) சேரர் கோநகர்வஞ்சி (2) அது பொருநைக்கரைமேலது. என்னுமிரண்டே. இவை நிற்க, இனி : வஞ்சுளாரணியம், வஞ்சி கருவூரெனவும் பொற்புமலி யாம்பிரவதி யான்பொருனையெனவும் புகலு வரால் எனவும், செய்தவன் பெயர்முதலிய வரலா றொன்றுமே யறியப்படாத தற்காலக் கருவூர்த் தலபுராணப் பிரமாணத் தையும், சோணாட்டுக் கருவூர்ப் பெருமாள் கோயிற் கற்சாசனத் தொன்றில் வஞ்சி ... ஸ்ரீவைஷ்ணவரோம்”. என்னுந் தொடர் கண்டதையுங் கொண்டிக்கருவூரே வஞ்சியெனவும், அதனரு கோடு மாம்பிராவதியே பொருநையெனவும் துணிந்த ஸ்ரீ இராகவையங்காரவர்கள், பின் தங்கருத்தை வலியுறுத்தச் சில பல தடை விடைகளு மெடுத்தாண்டுளார்கள். அவையிற்றின் வலியும், தகவுடைமையு மொருதலையாத் துணியக் கிடப்பின், அவர்கள் கொள்கையே முடிந்த துணிபாகக்கொள்ளுவதிற் சிறிது மாட்சேபமில்லை. எனில் முறையே அவற்றையுற்றுநோக்க அடிப்பட்டபழ வழக்கே வலிபெற்று ஐயங்காரவர்கள் கருத்து நலிவதாக் காணப்படுகின்றது. அரிய ஆராய்ச்சித்திறம் பல விடத்தும் காட்டிச்செல்லும் ‘சேரன்செங்குட்டுவன்’, என்னு மினிய புத்தகத்தில், வஞ்சிமாநகரம் என்னுந் தலைப்பெயர் கொண்ட பகுதியில், கருவூரானிலையே வஞ்சியெனத் துணிவதற்குக் காட்டிய காரணங்கள் முறையே சிறிதாராய்வாம். பகுதி : 2 வஞ்சி வஞ்சுளாரணியமா? முதலில், வஞ்சுளாரணியம் வஞ்சி கருவூர் என்னு மிக்காலக் கருவூர்ப் புராணச் செய்யுளும், கருவூரானிலையருகே வஞ்சி யம்மன்’, ‘வஞ்சுளேச்சுர லிங்கம்’, என்னுந் தெய்வப் பெயர்கள் வழங்குவதுங்காட்டி, இதனால் இக்கருவூரே வஞ்சியெனத் தமிழிலும், வஞ்சுளாரணியமென வடமொழி யிலும் வழங்கப்படுவதாம்”,1 என்றார்கள். சேரர் பேரூராம் வஞ்சிக்குக் கருவூர் எனுமறுபெயர் பண்டை வழக்கிலுண்டோவென்னு மாராய்ச்சி நிற்க, எனைத்து வகையானும் வடமொழி வஞ்சுளாரணியம் தமிழ்வஞ்சியாகா தென்பது வெளிப்படை வஞ்சுளம் என்னும் வடசொல்லுக்கு, அசோகமரம் (ருஎயசயை) என்று பொருள். செங்குட்டுவன் சரித நூலார், வஞ்சுளாரணியம் வஞ்சுளாடவி என்னுங் கருவூரானிலை வஞ்சி (அசோக)மரம் நிறைந்த காடாதலின் இப்பெயர் பெற்றதென்பர்”.1 வஞ்சி என்னுந் தமிழ்மொழியோ கொடிப்பெயரேயன்றி யாண்டும் மரப் பெயராகாமை உய்த்துணரத்தக்கது. அன்றியும், சேரர் கோநகரை, பூங்கொடிப் பெயர்ப்படூஉந் திருந்தியநன்னகர் என்றும் பொற் கொடிவஞ்சி என்றும், பூங்கொடி வஞ்சி மாநகர், பொற் கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர் என்றும் பொற்கொடி மூதூர் என்றும் கடைச்சங்கப் புலவரும், செங்குட்டுவன் காலத்தவருமான சாத்தனார் தம் மணிமேகலையில் விதந்து கூறியுள்ளார். இவ்வாறு குட்டுவர்கோநகர் வஞ்சியெனும் வல்லியின் தனித் தமிழ்ப்பெயர் கொண்டதெனப் பண்டைநூல் கூறுவதுணர்ந்துவைத்தும், அதற்கெட்டுணையும் பொருத்த மின்றி, தமிழறிந்த ஐயங்காரவர்கள் நேற்றெழுந்தவோரநாம தேயியின் பாட்டை யாதாரமாக் கொண்டு, வஞ்சுளாரணியமே தமிழில் வஞ்சியென மருவிற்றெனக் கூறியது மிக வியப்பைத் தருமன்றோ? ஆரியர்வந்து கருவூரானிலையை வஞ்சுளாரணியச் சேத்திரமாகப் பிரதிட்டித்துக்கொள்ளுமுன்னர்ச் சேரருக்குத் தலைநகரில்லைபோலும். உண்டேல், அக்காலத் தமிழ்ப் பேர்தான் யாதோ? மிகப்பழந்தமிழ் நூலெல்லாம் மலை நாட்டுக்கோநகரை வஞ்சியென்றேகூறக் காண்கின்றோம். ஆனால், பாண்டவருக்குப் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னரே வான்மீகரறிந்த கபாடபுரத்திருந்து செங்கோலோச்சி, பாணினிக்குமுன் தொல்காப்பியமியற்று வித்துப் பழையன் என்னுங் காரணவியற் பெயருமுடைய பாண்டியன் கோமுது குடியையே, ஓசை ஒற்றுமை ஒன்று கண்டு, பின்னூழியிறுதியிற் பொருத பாண்டவரிலொருவன் மணலியூர்க்கிளைப்பாண்டியன் மகளை மணந்த கதைகொண்டு பாண்டவர் வமிசத்துப் பிறந்ததால் பாண்டியர் குலமாயிற்றென வாய்கூசாது கூறியவர்களுக்கு, கொடிப் பெயரை மரப் பெயராக்கி வடமொழிக்கு வாகை சூடுவதருமையாமா? பாண்டவரென்பதே தந்திதாந்த நாமம்: பாண்டு புத்திரர் என்பது பொருள். இனி யிதினின்று பிறிதொரு தத்திதாந்த நாமம் பிறக்குமென்பது வடமொழி வழக்காமோ வில்லையோ தெரிகிலேம். மனுவழிப் பிறந்தாரெல்லாம் மானவராவ தன்றி, ஒரு மானவன் பின்னோருக்கு அப்புனைவுப் பெயரைத் திரித்து அதனடியாக வொரு புதுப்பெயர் தரும் வழக்கறியேம். மானவரெல்லாம், மனுவமிசத்தாராவது போல, பாண்டியரென்பது வடமொழித்தத்திதாந்தப் பெயராமாகில், பாண்டியரெல்லாம் பாண்டுபுத்திரரேயாக வேண்டும். பாண்டவன் என்று பற்குனனுக்கு இயற்பெயருமில்லை. அன்றியும், பாண்டவரிலிருந்து பாண்டியர் என்பது பிறக்கும் வடமொழி விதிதானென்னையோ? இஃதிடைப்பிறவரல்: எனினும், ஐயங்காரவர்கள் ஆராய்ச்சி முறையிவ்வாறோசை யாசையானிடை யிடையே யிழுக்கப்பட்டிடர்ப்படுவதை யினிதுணர்த்துதல் பற்றி ஈண்டுக்குறிக்கப்பட்டதன்றி வேறில்லை. இவ்வாறே வஞ்சுளேச்சுரலிங்கம் என்று கருவூரருகே விளங்கும் தெய்வப் பெயரும் அசோகடி முளைத்த இலிங்க மெனக் காரணப் பெயராய் வடமொழியடியாகப் பிறந்ததாதலா லதற்கும் வஞ்சிக்குமெனைத்தேனுந் தொடர்பில்லையென்பதும் தெளிவாகும். இப்பெயர் ஆண்டு வழங்குதல்பற்றி வஞ்சிமூதூரிக் கருவூரானிலை யென்று கொள்ளுவது ஆராய்ச்சி முறையாகாது. இனி இக்கருவூருக்குத் தெற்கே நதிக்கரைத்துர்க்காதேவி வஞ்சியம்மன் என்றழைக்கப்படுவதால், கருவூர் வஞ்சியாகு மென்பர். வஞ்சியென்னுந் தமிழ்ச்சொல், ஒரு பூங்கொடிக்கு மதன்சார்பாகச் சேரரூருக்கும் பெயராவதன்றி, தமிழகத்தே பெண்ணுக்கும், தரும தேவதைக்கும் பெயராய் வழங்குவது முண்டு. எனவே, கருவூர்க்கருகுளார் தம்மூர்த் துர்க்கையை அறத் தெய்வமாக வழிபட விசேடக் குறிப்பொன்றும் வேண்டார். அன்றி ஒருகால் இப்பெயர் செங்குட்டுவனால் முதலில் வஞ்சியிற் கோயிலமைத்து விழவெடுக்கப்பட்ட பத்தினிக் கடவுளுக்கே வுரியதெனினும் இதனாற் கருவூரானிலை வஞ்சி நகராகக் கருதப்படவேண்டிய அவசியம் புலப்படவில்லை. இவ்வஞ்சித் தெய்வத்திற்கு இலங்கை முதலிய பிறநாட்டரசரும், சோழ பாண்டியரும் தத்தம் நாட்டிற்கோயினாட்டி விழவெடுத்து வழிபட்டா ரெனச் சிலப்பதிகார வாயிலாகத் தெரிவதோடு தற்காலத்தும் கண்ணகி வழிபாடு பலவிடத்திருப்பதையுங் காண்கின்றோம். ஆகையால் மலை நாட்டுத் தலைநகருக் கணித்தில்லாக் கருவூரருகூராரும் வரதையான வஞ்சித் தெய்வத்தை வணங்குவதியல்பாகலாமே? இது கொண்டொரு பெருஞ்சரிதவாராய்ச்சி நிகழ்த்தி கோவலன் மனைவி கோயிலுள்ளாங்கெல்லாம் மூதூர் முழுமணமோந்திடலாமோ? பகுதி 3 : கோதைதிருமாவியனகர்க்கருவூர் பேரியாற்றின் மேல் வஞ்சியகநகர் ஆவதன்றி, ஆனிலைக்கருவூரன்றாம் இன்னுமிதுவேபோல், தண்பொருநைப்புனற்பாயும் விண்பொருபுகழ்விறல்வஞ்சி என்ற பேய்மகள் இளவெயினி பாட்டொடும், தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார்கோமான் என்னுமடிகள் தொடரொடும், பொற்புமலியாம்பிரவதி யான் பொருனையெனவும் புகலுவரால் என்னுங் கருவூர்ப்புராணச் செய்யுள் வரியையிணைத்து, ஆம்பிராவதியே தண்பொருநை யெனவும், கருவூரேவஞ்சியெனவும் சாதிக்கலாயினர். முதலில் மூதூர்வஞ்சிக்குக் கருவூர் எனவுமோரியற்பெயர் பண்டை வழக்கி லுண்டென்ப தொருதலையாத் துணியப்படாததாகும். ஐயங்காரவர்கள் காட்டிய வெளிப்படா அகப்பாட்டொன் றொழிய விதுகாறு மச்சேறிவெளிப்போந்த முன்னூல் மூலங்களில், சேரர்பேரூரை வஞ்சியெனக் காண்பதல்லால் யாண்டுங் கருவூரென்றழைக்கக் காணோம். புறநானூறு, பத்துப்பாட்டு, மணிமேகலை, சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு முதலிய பழநூல்களில் இவ்வஞ்சிகுறித்த பலவிடங்களையு மேலே காட்டியுள்ளேம். அகப்பாட்டு அடிகளையுஞ் சிறிதாழ நோக்கில், கருவூரென்பதியற்பெயராகாமல், புலவன் புனைந்துரை யாகலாமெனவுந்தோற்றுகிறது. அற்றேல், அது பெரியவூர் (கருமை - பெருமை) எனப் பொருள்பட நிற்கும். அன்றியுமிக்கவியல் கருவூர் முன்றுறை மணலே விசேடிக்கப் படுவதால், வஞ்சியகநகரொழித் தாற்று வாய்த்துறையையே நுதலிற்றெனல் பொருத்தமாகும். கடற்கரைப் பேரூரெல்லாம், அலைவாய்ப் பாக்கம், அகவூர்ப்பாக்கமெனப் பிரிபடுவதியல்பு. சிலப்பதிகாரத்தும் புகாரை மருவூர்ப்பாக்கமும், பட்டினப் பாக்கமுமெனப் பிரித்துக் கூறப்பட்டிருத்தல் நோக்கற்பாற்று.1 இதுவேபோல், வஞ்சியும் பேராறு கடலொடு கலக்குமிடத்த தாகவே, அவ்வாற்றின் வாய்த்துறைவேறு, உண்ணகர் வேறாக வேண்டும். ஆகவே, வஞ்சியகநகர், கருவூரும், முன்றுறைப் பட்டினம் முசுறி அல்லது மகோதையுமாம்போலும். இது கொண்டே மணிமேகலை சிலப்பதிகார நூலுடையாரும், இவ் வானவன்வஞ்சியைக் குணவாயிற் புறக்குடியும் அரசன் புரிசை யமைந்த அகவூர்ப் பாக்கமாம் வஞ்சிமுற்ற மென்னும் இடை நிலவரைப்பும் இப்பேரிசைவஞ்சிப்புறத்துக் கொடி மதின் மூதூர்க்குடக்கண் கடற்கரைத் துறைமுகமாம் முழங்கு நீர்வேலி மூதூரும், என்றித்திறத்தவாய்ப் பிரித்தே வருணித்துள்ளார்.1 இன்னும் பெரியபுராண முடையாருமிவ்வூரை வஞ்சியகநகர் வேறு, வேலைமிசை மகோதைத்துறை வேறாகப் பிரித்துக் காட்டியுமுள்ளார்.2 பேரியாற்றின் முகம் மிகவிரிந்து அலையொடு சமனிலையாகத் தணிந்து, ஆற்றுவாயெனத் தோற்றாது கலந்து கடலேயாதல் கொண்டதற்கலிமுகமென்றே பெயருண்டு. இதை அக்காலத்து யவன வணிகர் குறித்திதற்கு (ஞளயனடிளவடிஅடிள)ப் பொய்முகமென்றே தங்கள் கிரேக்க மொழியிலும் பெயர்வைத்திருத்தல் கவனிக்கத்தக்கது. இத்தகைய வாணிபத் துறைமுகமே முன்றுறையாகும். அத்துறை மணலைக் குறிக்கும் புலவன், மேடான அகநகர்க்கு முன்றுறையில் அலிமுகமாகப் பெருகும் பொருநைக்கரை மணலெனத் தோற்றுவாய்செய்து, கோதைத் திருமாவிய நகர்க்கருவூர் முன்றுறைத் தெண்ணீருயர் கரைக்குவையிய தண்ணான் பொருநைமணல் என்று பாடினர்போலும். ஈண்டுக், கருவூர் என்பது மேட்டூர் அல்லது நடுவூர் என்று பொருள்படுவதாகும். ஆகவே அலைவாய்ப் பாக்கத்தினும், மேடான நடுவூராம் அரசன்கொடிமதி மூதூராகிய இவ்வஞ்சிமுற்றம் அல்லது வஞ்சைக்களத்திற்கே கருவூரெனவு மொருகாரணப் பெயரமைந்திருக்க வேண்டு மென்பது மிகப்பொருத்த முடையதாகும். மணிமேகலையிலிப் பொற்கொடி மூதூர்ப்புரிசையை 3 இடைநிலைவரைப் பெனச் சுட்டியிருப்பதும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றது.4 இவ்வகப்பாட்டுக் கருவூர் முன்றுறைமணல், வஞ்சியகவூராம் கருவூர் என்னும் வஞ்சைக் களத்தின் முன்றுறைமகோதைப் பட்டினக் குண்டு நீரடைகரைவேலை வாலுகமே”5 யென்பதைச் சுட்டும் சில மணிமேகலை சிலப்பதிகாரச் சான்றுகளுமீண்டுக் கவனிக்கத்தக்கன. சோணாட்டுக்கீழ் கடலில், காவிரிப்பட்டினத்திற்குத் தெற்குள்ள மணிபல்லவத்திலிருந்து வடமேற்கே வஞ்சிக்குச் சென்ற மணிமேகலை, கண்ணகி கோயில் கொண்டிருந்த செங்குன்று மலையை வழியிற்கண்டு, அக்கோயிற் பத்தினிக் கடவுளை வந்திப்பான் சிந்தித்திறங்கி, அன்னையை வலம்வந்து வழிபட்டு அவள் பால்வரம்பெற்று, மீண்டம்மலையினின்று மேற்கே வஞ்சிக்கு வழிக்கொண்டவள், முதலில் வஞ்சிப் பேரூரின் குணவாயிற்புறத்துள்ள சிறு புறஞ்சேரியிற்புகுந்து ஆங்கற வொழுக்கத் தமைந்துநின்ற பல சமயவாதிகளின் வேறுபட்ட கொள்கைகளையுமவர்கள் கூறக்கேட்டுப் பின் தன் தாயரொடு அறவணவடிகளைக்காண விரும்பி அப்புறஞ் சிறையைக் கடந்து, இடைநிலைவரைப்பாம் கருவூரென்னுங் கொடிமதின், வஞ்சி முற்றத்துள் நுழைந்தவ்வரசர் குடிப்பாக்கத்தழகு பலவுங்கண்டு மகிழ்ந்து, கடைசியாகப் பௌத்த தருமங்களைச் சொல்லு முனிவர்களின் தவச்சாலை கணிறைந்த அவ்வஞ்சியின் குடவாயில் முன்று றைப் பட்டினத்திற்சென்று, அங்கே தவஞ்செய்திருந்த மாசாத்துவானைப் பணிய, அவன் மாதவி அறவணவடிகள் முதலாயினோர் காஞ்சி நகரத்திருப்பதாகவும், அவ்வூர் சென்றறஞ் செய்யெனவும் சொல்ல, மணிமேகலை யவனைவணங்கி, தானின்ற அவ் வஞ்சிநகரத்தின் மேற்றிசை யினின்று மேலேயெழுந்து வடதிசைக்கட்சென்று, காஞ்சிநகரினடுவே யிறங்கினள் என்பது மணிமேகலையிற் கூறிய1 சரித்திரம். மணிபல்லவத்திருந்து, கண்ணகி கோயில் காணப் போவதாகப் புறப்பட்டு, மணிபல்லவத்திற்கு வடமேற்கே அவள் கோயில் கொண்டுள்ள செங்குன்றத்திற்குச் சென்று, மீண்டுங் கிழக்கே வஞ்சிநோக்கி வந்ததாகக்கூறாமல் புறப்படும் பொழுதே வஞ்சியுட் செல்குவனென்றந்தரத் தெழுந்த”2 மணிமேகலை, வஞ்சிக்குப் போகும் வழியிற் செங்குன்றிலிறங்கித் தாய்கோயிலிற் பணிந்து பிறது வஞ்சிப்புறஞ்சேரி புகுந்ததாகத் தெரிவதாலும், இவ்வாறு செங்குன்றத்திற்கு மேற்கே இவ்வஞ்சிப் புறவூரும், கருவூராமக வூரும், மகோதைப்பட்டினமும், ஒன்றற்கு மேற்கொன்றாயடுத்து நின்ற வரிசைப்படி மணிமேகலை யவ்வோரூர் மூன்று பாக்கங்களையு1 முறையே சென்று கண்டதாகக் கூறப்படு தலானும், சேரர்வஞ்சி யிக்கடலருகே மகோதை வஞ்சைக்களமே யன்றிப் புனனாட்டிற் செங்குன்ற மலைக்கு 300 மைலுக்குக் கிழக்கிலுள்ள சோழர் தொல்குடிக் கருவூரானிலையாகாதென்பது வலிபெறுகின்றது. இதனாலரசர் புரிசையமைந்த நடுவூர்ப்பாக்கமாம் வஞ்சிமுற்றத்திற்குக் கிழக்கே புறஞ்சேரி நோக்கி யொருவாயிலமைந்திருந்தாலு மது புறக்கடைவாயிலே யென்பதும் அம்மூதூரின் முக்கியவாயில் முன்றுறை நோக்கிய குடவாயிலே யென்பதும் போதருகின்றது. போதரவே சுபதினத்தில் வடதிசைநோக்கிப்புறப்பட்ட செங்குட்டுவன் தானை வஞ்சி முற்றத்தின் முன்றுறைக்கடல் நோக்கிய பிரதான மேற்குவாயில் வழியே தான் சென்றிருக்க வேண்டு மென்பதுந் தெளிவாகின்றது. இதனாற்றான் அடிகள், தம் தமையன் வடயாத்திரையிலவனுடனடந்த சேனையின் தலைத்தார் சேரநாட்டின் கீழெல்லையான மலைமுதுகு நெளியவேற, கூழைப்படை வஞ்சிமுற்றத்தின் முன்றுறைக் கடலினலை விளிம்பு சூழ்போத, நடுவணிகள் இக்கடல் மலைகளுக்கிடை நிலமதர்பட நடந்தன வென்றெழில்பட வருணித்துள்ளார். இப்பெரும்புலவர் தருஞ்சான்றிரண்டானும், மலைநாட்டுத் தலைநகரான வஞ்சிமூதூர், குணவாயிற் புறஞ்சிறை, இடைநிலை வரைப் பென்ற கருவூர் அல்லது ‘வஞ்சிமுற்றம்’, குடவாயில் முன்றுறை வெண்மணலடை கரைப் பட்டினமாம் மகோதை எனுமிம் முக்குடிப் பாக்கங்களாற் கூடிய பேரூரேயா மென்பதும் வற்புறுத்தப்படுகின்றது. இஃதெவ்வாறாயினும், இவ்வகப் பாட்டுச்செய்யுளொன்றே கொண்டு வஞ்சியே கருவூரானிலையெனச் சாதித்தல் கூடாதாம். பிற்பட்ட சேரராசதானியாகத் தெரிகின்ற இவ்வூரை (கொடுங்கோளுரை)ப் பழைய வஞ்சி யல்லது கருவூரென்று கொள்வதற்குச் சங்கநூற் பிரமாண மொன்றுமே கிடையாது ... கொடுங்கோளூர் என்றபெயரே பழைய நூல்களுக்குச் சிறிதுந் தெரியாத தொன்றாகும்... சேரராசதானி யாகிய வஞ்சியென்பது ஆம்பிராவதிக் கரையிலுள்ள கருவூரேயன்றிக் கொடுங்கோளூரேனும் திருவஞ்சைக்களமேனு மாகாவென்பதும் ... பேரியாற்றங்கரைத் திருக்கருவூரைப் பழைய வஞ்சியாகக் ... கொள்வதற்குப் பொருத்தமும் பிரமாணமு மில்லையென்பதும் நன்கு விளங்கத் தக்கன என்று வரையறுத்து வாதிக்கும் ஐயங்காரவர்கள், கருவூரானிலையே வஞ்சியெனவும், ஆம்பிராவதியே பொருநைப் பேராறெனவுங் கொண்டதற்குக் கண்ட சங்க நூற்பிரமாணங்கள் தாம் யாவோ? கொடுங் கோளூரே வஞ்சியென வற்புறுத்திய பலநூற்றாண்டுகளுக்கு முன்னுள்ள சேக்கிழார்வாக்கையும் அடியார்க்கு நல்லாருரையையு மடிப்பட்ட வதிகாரமாகாவென நிராகரித் தவர்கள், நேற்றெழுந்த வோரநாம தேயியின் கருவூர்க்கதைப் பாட்டை மேற்கோளாகக் கொள்வ தென்ன வியப்போ? இப்புராணம் எச்சங்கநூலோ? இப்பாட்டு எவ்வளவு பழையநூற் பிரமாணமாகுமோ? இனி, திரு வஞ்சைக் களமே வஞ்சியென் பாரிருவரும் தமிழகம் போற்றும் நல்லாசிரியரும் பெரும்புலவருமாகவும், ஐயங்காரவர்கள் இவரை ஒலி ஒற்றுமை யொன்றே கொண்டிவ்வாறு தடுமாறினரன்றி வேறு பிரமாணங்காட்டாமையா லிவருரை மறுக்கற் பாற்றென் பார்களேல், இவர்கள்கூற் றிருவகையானு மிடர்ப்பட்டழியும், இக்கருவூரின் தானத்தில் மலைநாட்டுக் கொடுங்கோளூர் சேரராச தானியாகப் பின்னூல்கள் கூறப்படுதல் காணலா மெனவும், கருவூர் சோணாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான செய்தி சாசனங்களாலும் நூல்களாலுந் தெரிகின்றதெனவு மிவர்களே தம் புத்தகத்திலொத்துக் கொள்கின்றார்கள்.1 எனவே, ஆசிரியர் அடியார்க்கு நல்லார் மகாமகோ பாத்தியாய ரிவர்கள் கொள்கைக்குப் பிரமாணமுண்மை கண்டவராகின் றார்கள்; தம் துணிபுக்கோ கருவூர்ப் புராணப்பாட்டொன்றன்றி, திருவானி லைக்கோயிலைப் பற்றிய தேவாரப்பதிகங்களிலேனும், அக்கோயிலிற்கண்ட சாசனங்களிலேனும் வஞ்சியின் பழஞ் செய்தி சிறிதும் குறிக்கப் பட்டிருக்கவில்லை என்று பரிபவப் படுத்துவதல்லால், யாண்டும் யாதும் பிரமாணங்கண்டிலர்கள். ஸ்ரீ கனக சபைப்பிள்ளை அவர்களின் கொள்கைக்கு ஆதாரமா யிருப்பதெல்லாம், கருவூரென்ற பெயரொற்றுமை யொன்றைத் தவிர வேறு சாதனமில்லை. இங்ஙனம் பெயரொப்பொன்றையே கொண்டு நாம் ஒரு முடிவுபடுத்தல் எங்ஙனங் கூடும்? என்றதனை யதக்கியொதுக்கு மையங்காரவர்கள் தம் துணிவுக்குக் கண்டதெல்லாம், பொருநை சூழ் வஞ்சி ஆம்பிராவதிமேல் வஞ்சுளாடவி, அகப்பாட்டுக் கருவூர், தேவாரக்கருவூரானிலை, புறப்பாட்டு ஆந்பொருநை கருவூர்ப்புராண ஆன்பொருந்தம் என்னும் பெயர்களுக்குள்ள வேக தேசவோசை யொப்பேயாகக் காண்கின்றோம். ஏகதேசவோசையொற்றுமை யென்றேம் : கனக சபைப்பிள்ளை யவர்கள் கண்ட கருவூர் பேராறு என்னு முழுப்பெய ரொற்றுமையும் ஐயங்காரவர் களுக்குக் கிடைத்தி லாமையானும், இவர்கள் கொண்ட வஞ்சுளாரணியம், கருவூரானிலை, ஆம்பிராவதி என்பன முறையே பழைய வஞ்சி, கருவூர், ஆந்பொருந்தம் என்பவற்றிற்குச் சிறிது பிறிதிசைக்கும் வேற்றுமை யுடைமையானும்! ஐயங்காரவர்கள் புத்தகத்தில், தம்முடிபுக்காதரவாக வஞ்சியிற் செங்குட்டுவன் வழிபட்ட சிவபெருமானாலயம் கருவூரில் இப்போதுள்ள பசுபதீசுவரர் கோயிலே யாதல் வேண்டும் எனுந் தம்மனுமானத்தையும், காமதேனுவாகிய பசுவினாற் செய்யப்பட்ட ஆலயமாதலின் இதற்கு ஆனிலை எனப்பெயர் வழங்கிய தென்பர். இதுபற்றியே, இக்கோயிற் சிவபிரான் பசுபதீசுவரர் எனப்பட்டார் என்னும் பிற்காலப் புராணக்கதையையுங் காட்டி, அமையாது பின்னும் இவ்வாலயம் கருவூர்த்திருவானிலை எனத் தேவாரப்பாடல் பெற்றிருத்தலோடு சோழர் சாசனங்கள் பல கொண்டதாகவுமுளதென்றும் இங்ஙனம் கருவூர்க்கு ஆனிலை யெனப் பெயரிருத்தல்போலவே, அவ்வூரையடுத்துச்செல்லு மாம்பிராவதிக்கு ஆன்பொருந்தம் எனப்பெயர் வழங்குதல் ஈண்டுச் சிந்திக்கத் தக்கதெனவும் வற்புறுத்துவாரானார்கள். வஞ்சியிற் சேரன் வழிபட்ட சிவாலயம் கருவூரானிலையென்பதை ஐயங்காரவர்களனுமானமே யென்றேம். மூவேந்தர் மூதூர்களிலுமுள்ள பல கோட்டங்களையுமவையிற்றின் வரலாறு களையும் விரித்துரைக்கு மிளங்கோவடிகள் காமதேனுக்கதை கூறி னாரில்லை. சிலப்பதிகாரமுழுவதிலும் ஆனிலை, கருவூர், ஆம்பிராவதிப் பெயர்களேனும் வரக்காணேம். கதைபல விளக்கிக் காதைகள் பெருக்கி, சிவபிரானை ஆனேறு யர்த்தோன்”. தெண்ணீர்க்கரந்த செஞ்சடைக் கடவுள், நிலவுக் கதிர் முடித்த நீளிருஞ்சென்னியுலகு பொதியுருவத் துயர்ந்தோன், பிறவாயாக்கைப் பெரியோன்கோயிலும், நுதல் விழிநாட்டத் திறையோன் கோயிலும் எனப் பலபடப் புனைந்து பாடிய அடிகள், பசுபதீசுரப் பான்மையை யறவே மறந்தனர் போலும். ஆனிலை சுட்டிய தேவாரப் பாசுரங்களும், சோழர் சாசனங்களும் மூதூர் வஞ்சியை முழுவது மறந்தன. இதற்கு மாறாகச் சேக்கிழாரோ, ‘சேவிற்றிருந்தார்’1 திருவஞ்சைக்களமே சேரர் குலக்கோமூதூ”ரென்பர்,2 சுந்தரருமிவ்வஞ்சைக்களத்தையு மதன் துறையான மகோதையையுமே பாடியுள்ளார்.3 இவ்வாறிளங்கோவும், பிள்ளையாரும், சுந்தரரும், அடியார்க்கு நல்லாரும், சேக்கிழாரும், சாசனச்சோழருமறந்த விவ்வருங் கதையெலா மொருங்குவந்து செங்குட்டுவன் சரிதநூலாரை நினைப்பூட்டி யவர்வாயுருவெடுக்கநேர்ந்த விந்தைதா னென்னே? ஐயங்காரவர்கள் கொண்டபடி ஆனிலையே குட்டுவர் குலமுதற்கோயிலா மாயின், அக்கோயிற் சாசனமெலாஞ் சோழரேதரவு மென்றேனுஞ் சேரரைச் சேராததென்னோ? இவை பல விரிப்பிற் பெருகுமென விடுப்பேம். பண்டை நூலறியாப்பட்டியெலாந்தலமாகி, தத்தமக்குப் புராணங்களமைத்துக் கொண்ட இடைக்கால முதல், பாவலர் பலர் ஆரியப் பழங்கதைகளை வாரியிறைத்து, விரித்தும் திரித்தும், குறைத்தும் கூட்டியும் தத்தமாற்றலுக் கேற்றபடி கற்பனைக் காவியமலிவித்த தன்மைதெரிவாரெவரே யித்தல புராணக் கதைகொண்டொரு பழஞ்சரித முடிவு செய்வார்? பகுதி : 4 ஆனிலையருகாம்பிராவதி வஞ்சிசூழ்பொருநைதானா? இவ்வஞ்சிசூழ்பொருநை, சிலப்பதிகாரமும், பதிற்றுப்பத்தும் புகழும் பேராறோ? அன்றி ஐயங்காரவர்கள் கூறியாங் காம்பிராவதியேயாமோ? ஆலத்தூர் கிழார் புறப்பாட்டும்4 நக்கீரர் அகப்பாட்டு5 மன்றி, சங்க நூல்களிற் பலவிடங்களிலுமிவ் யாறு தண்பொருநை, ‘தண்ணம்பொருநை’, தண்ணென் பொருநை, தண்ணார் பொருநை’1 யெனவே வருவதன்றி, ஆன்பொருநை யென வரக்காணாமை யீண்டுச் சிறிது கவனிக்கற்பாலது. ஐயங்கா ரவர்கள் கூறியாங்கு, இவ்வாம்பிராவதிக்குத் தெய்வப்பசு சம்பந்தமாக ஆன்பொருநை யென்றே காரணப் பெயரேற் படவும், இதனையக்காலப்புலவர் பலரும் இவ் விசேடணக் குறிப்பொழித்துப் பாண்டியனாறோ வென்றையுற வாளா பொருநை யென்றேகூறக் காரணமுண்டோ? ஆன்பொருநை எனவந்த மேற்குறித்த விரண்டிடங் களிலுங்கூட, தண்ணாந் பொருநை’2 யென்றிருக்கக் காண்கின்றோம். இவை தண்ணார் பொருநை ... ... தண்ணென் பொருநை ... ... தண்ணம் பொருநை என்பவற்றொன்றின்பாடபேதமாகலாமோ வெனு மையம் நிற்க. ஆந்பொருநை என்றபாடமே கொள்ளினும், அஃதாம்பிராவதி நதியாகா தென்பதெந்துணிபு. மேற்குறித்த காமதேனுக்கதை குறித்து, பதி கருவூரானிலையானதேபோல், நதியும் ஆன் பொருந்தமாயிற்றென ஐயங்காரவர்களே விளக்கியதை மேற்காட்டியுள்ளேம். ஆகவே, ஆம்பிராவதியின் மறு பெயரான ஆன்பொருந்தமென்பது, காமதேனு காரணமான புராணப் புனை பெயரேயாகுமென்பதொருதலை. இனி முன்னூல் கூறுஞ் சேரர் பேராறோ ஆந் பொருநை எனத் தந்நகர மெய்கொண்ட பெயரேயாகும். இதன் காரணமும் வெளிப்படை. செழியனை வையைத்துறைவனென்றும், சென்னியைப் பொன்னித் துறை வனென்று மழைப்பதேபோற் சேரனைப் பொருநைத்துறைவ னென்பது பண்டைவழக்காம். எனவே, பொருநை, பொறையருக் கேற்புடைப்பேராறாகும். ஆகவே, கொற்கையிற் சங்கமிக்கும் பாண்டியன் பொருநையினின்று மிம்மலை நாட்டுப் பொருநையைப் பிரித்துக்காட்ட லவசியமேயன்றோ? இச்சேரர் பொருநை மலைநாட்டாறாகையால் மலைநாட்டில் “இடவப்பாதி”3 சாரல் மழை கொண்டு ஆநிமாதத்திற்பெருக் கெடுக்குங் காரணம்பற்றி, ஐயங்காரவர்களே காட்டியுள்ளபடி, ஆநி என்னுமொரு மறுபெயருங் கொண்டுளது.1 ஆகவே, ஆன்றசான்றோரிதனை. ஆநியாகிய பொருநை என்பது குறித்து, ஆந்பொருநை என்றார் போலும். எனைத்தேயாயினும், பசு சம்பந்தமாகப் பிற்காலத் தெழுந்த ஆன் பொருந்தப் பெயரும், தந்நகர மெய்கொண்ட ஆந் பொருநை என்னும் பழையநூற் பெயரும் ஒன்றெனலாமோ? சமீபத்தில், தமிழ் வளர்க்க முளைத்த சென்னைச் சர்வகலாசாலைச் சிறுகழத் தொருவர், ஒலிநுணுக்க விலக் கணங்களோராதே, தமிழில் வீணே வழங்கும் ற-ர ழ-ள ந-ன எனு மோரொலியிரட்டையெழுத்துக்கள், தம்போற் றமிழபிமானப்புலவரை யிடர்ப் படுத்துவதாயும், அவற்றினொவ்வொன்றே கொண்டு மற்றையதை, அடர்தளிரரிந்து செடிவளர்ப்பார்போல், காதலாற் களைந்தெறிவதே சௌகரியமுமொற்றுமை நயமு முதவுமெனவும் கூறிய அருமை யுபதேசத்தை மேற்கொண்டுய்ய முன்வருமபிமானிகளைத் தவிரப் பிறிதெவரே, பொருளானு முருவானும் வரலாற்றானு மாறுபட்ட விவ்விருவேறுபெயர் கொண்ட நதிகளிரண்டு மொன்றேயென்பார்? இன்னுமிவ்வாம்பிராவதி, வஞ்சிப்புறமதிலலைக்கும் பொருநை யாகாதென்றறிவிக்குஞ்சான்றுபல பிறவுங் காண்பாம். புனல்படுதுறைகளின் வளங்கமழ்கவிதருஞ் சம்பந்தர், கருவூரானிலைப்பதிக முழுதிலுமே, இவ்வூரை நதிமேற்பதியாகச் சுட்டினாரில்லை; ஆறிலாவூரேபோற் பாடியுள்ளார். காவிரியும் ஆம்பிராவதியுங் கருவூரை யொட்டாதெட்டியோடுமியல் பின்னாளதன்று. ஆளுடைப்பிள்ளையார் தந்நாள்தொட்டேயுள்ள தென்பதுமிதனாற் போதரும், புறப்பாட்டில், புறமதிலலைக்குந் தண்பொருநைப் புனற்பாயும் வஞ்சி”1 யென இளவெயினி, குண்டுகட் பாலியாதன், எனுமிரு பெரும்புலவர் தகவுரை காண்பேமாதலால், பொருநையாறு (கருவூர்க்காம்பிராவதி போற் சேய்மைத்தன்றி) வஞ்சியூர் தழுவியூட்டும் வேறு நதியேயாக வேண்டும். அன்றியும் ஐயங்காரவர்கள், வராகமலை யிலுற்பத்தியாகி மாமரச்சோலை வழியே செல்லுதலால், ஆம்பிராவதிக்குச் சூதநதி எனு மறுபெயருண்டெனவும், இவையிரு பெயருங் காரணக்குறியெனவுங் காட்டினார்கள்.2 இந்நதியே பொருநையாமாகில், இயற்கைநல நயந்து பன்மரச் சோலைவளமினிதுவிரிக்கு மிளங்கோவடிக ளிவ் விசேடணங்குறியாமை வியப்பாமன்றோ? புனனாட்டாம்பிராவதியாறு வஞ்சிசூழ் பொருநை யன்றெனக் காட்டுங் குறிப்பின்னுமொன்றுளது. ஆநி ஆந் பொருந்தம்’, தண்பொருநை எனப் பலவாறழைக்கப்படும் வஞ்சிப்புற மதிலலைக்கும் கல்லென் பொருநை”3 க்கே வானி எனவுமொரு பெயருண்டென ஐயங்காரவர்களே எழுதியிருக்கின்றார்கள்.4 இந்நதியையே, இளஞ்சேரலிரும்பொறையைப் பாடிய பெருங்குன்றூர்கிழார், சாந்துவரு வானிநீர்”5 எனவும், தெண்கடன்முன்னியவெண்டலைச் செம்புன லொய்யுநீர்”6 எனவும், மாற்றருந் தெய்வத்துக் கூட்டமுன்னிய புனன்மலி பேரியாறு 7 எனவுஞ் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவ்விளஞ் சேர லிரும்பொறையை, மேற்குக் கடற்கரைத் தொண்டிப்பட்டினத்தி லிருந்து மலைநாட்டையாண்ட சேரனெனவும், ஆனிலைக் கருவூருடையானன் றெனவும், ஐயங்காரவர்கள் விதந்து கூறியுள்ளார்கள்.8 இவ்வாறிம் மலைநாட்டு மேற்கடற்பட்டினத்தாண்ட சேரனைப் புகழுங்கால், அவனாட்டாறாகப் புகழ்ந்து பாடும் புலவர் புனனாட்டாறைப் பாடவியலா தன்றோ? இவரிச்சேரலிரும்பொறையைப் புகழுங்கவிமூன்றினு மிவ்வாறு சுட்டியபகுதிகளை மேலே காட்டினேம். இவைகளால், இப்புலவர் இவ்விளஞ்சேரலிரும்பொறையின் மலைநாட்டாறொன்றையே, பேராறு எனவும், வானிநீர் எனவும், வெண்டலைச் செம்புனலொய்யுநீர் எனவும், பலபடப் புகழ்ந்தனரென்பது தெளியப்படுகின்றது. இப்பேராறு ஆம்பிராவதி யல்லாத வொருமலைநாட்டாறென்பதோ குட்டுவன் சரித நூலிலு மங்கீகரிக்கப்பட்டதொன்றாம்.1 இவ்வாறு, அயிரைமலைத் தொடரினின் றெழுந்து, மேற்குமுகமாயோடி, கொடுங்கோளுர்த் துறையில் மேலைக் கடலொடு சங்கமிக்குமிப்பேராறே வானி யென்று செங்குன்றூர்கிழார் பாடியிருப்பதாலும், இப்பேராறே இளங்கோவடிகளால் தந்தமையன் செங்குட்டுவனாறாகப் புகழப்பட்டிருப்ப தாலும், இப்பேராறாம் வானியே வஞ்சிசூழ் பொருநையாக ஸ்ரீஐயங்காரவர் களுமொப்புக் கொள்வதாலும், இப்பொருநை ‘ஆனிலை’க்கருகோடுவதும், தெண்கடன் முன்னாதுகாவிரியொடு கலக்குஞ்சிறு துணையாறாவதுமான ஆம்பிராவதி நதியாகாதென்பதை யிதனினும் விசதமாக்கவல்லதொரு பிறசான்றெவுமினிவேண்டப்படா தாகுமன்றோ? ஆகவே, வானி எனவும், பேராறெனவுமழைக்கப்படும் பொருநைநீர் புறமதிலலைக்கும் வஞ்சி மூதூரும், இவ்வானியாம் பேராற்றின் மேலதாகிய திருவஞ்சைக்களமாவ தல்லால் - புனனாட்டில் ஆம்பிராவதிக்கருகே, யாறெதுவுமே தீண்டாத வுண்ணாட்டூராகிய ஆனிலைக் கருவூராகாது என்பதையுமிஃ தொன்றே ஐயமறவலியுறுத்துவதாகும். மேலும், ஆம்பிராவதி, காவிரியின் துணைநதியாய், புனனாட்டதா கின்றது. பொருநைத் துறைவரெனும் புனைவு பெயர்ப் பெருமிதங்கொள்ளு முடியுடைச்சேரருக்குத் தம் மலைநாட்டிற் பெரிதும், கடல்வாய் யவனர் கப்பலேறும் பெருமைத்தும், பேராறென வோரியற் பெயரே பூண்டதுமான ஆநிப்பொருநையும் தன்மலைப்பிறந்து தன்கடன் மண்டு மலிபுனல் நிகிழ்தருந்தீநீர்”2 நதம்3 பலவுமுளவாகவும், அவை யிழித்து, மாற்றரசருக் குரிய காவிரியினொரு சிறுதுணையாறு பாடுவது வீறுதருமோ? பத்தினிக் கடவுளைப் பரசல்வேண்டுமென... மன்னவன் விரும்பி நூலறி புலவரை நோக்க, ஆங்கவர், ஒற்காமரபிற் பொதியிலன்றியும் விற்றலைக் கொண்ட வியன்பேரிமயத்துக் கற்கால்கொள்ளினுங் கடவுளாகும். கங்கைப் பேரியாற்றினுங் காவிரிப் புனலினுந்தங்கிய நீர்ப்படை தகவோவுடைத்தென்”றாரை, பொதியிற்குன்றத்துக் கற்கால் கொண்டு முதுநீர்க் காவிரிமுன்றுறைப்படுத்தல், மறத்தகை நெடுவா ளெங்குடிப்பிறந்தோர்க்குச் சிறப்பொடுவரூஉஞ் செய்கையோ? அன்று”1 என்றுவெகுண்ட செங்குட்டுவன் குலச் செருக்கின் பெருமிதத்தை யடிகளினிது விளக்கியிருக்கக் கண்டு வைத்தும், தன்குடிப்பிறந்தார்க்கு மொவ்வாதெனவெறுக்குங் காவிரி யின் துணைச் சிற்றாற்றின் றுறைவனென்றழைப்பதவன் தருக்கும் புகழும் பெருக்கும் பெற்றித்தெனல் தகவுடைத்தோ? கருவூரானிலையே வஞ்சியாகில் அடுத்ததனருகோடுங்காவிரியிலெனைத்துப் பகுதியும் சேரர்க்குரியதோ? உரிய சோழரை வென்றதகவன்றி, இயலுரிமை தனக்குண்டேற் செங்குட்டுவன், மேல்அடிகள் குறித்தபடி, காவிரியை வெறுப்பதியல்பாமா? உரிமையின்றேல், காவிரிக்கு இரண்டரைமைல் தூரத்தே கடல் மலை பேறாறென்னு மிவையொன்றேனுஞ் சாராப் புனனாட்டொரூரைத் தந்தலைநகராச் சேரர் கொண்டமை தலியல்போ? பேரரசரூரெல்லாம், கடன் மேலாதல், மலைமிசை யாதல், அலைதவழ்விரிபுனலாற்றின் வாயாதலமையக் காண்பாம். இம் முத்திறவியற்கை யரணமுமிவைதருஞ் செவ்வியும் வளனும் பெறாவொரு கோநகர் காண்பதருமை. பகுதி 5 : கொங்குநாடு மலைநாடாமா? ஐயங்காரவர்களிக்கருவூரைக் கொங்குநாட்டுத் தலங்களொன்றெனக் கூறியதறிவோம்.2 ஆயினும் கருவூரைக் கொங்குநாட்டூராகக் கொண்டதற்கிவர்கள் கண்டபிரமாண மினைத்தெனக் காட்டிலர்கள். யாமறிந்தவரை, தேவாரப் பாசுரங்களை, பண்முறைப் பாகுபாட்டினுஞ் சிறிது பயனுறப் பண்ணநினைத்து, தலமுறையாத் தொகுத்துப் பதித்தோரதற்கென வகுத்துக் கொண்ட முன்னட்டவணையில், கொங்கு நாட்டுத்தலங்கள் எனும் தலைப்பின்கீழ் இக்கருவூரானிலைப் பதிகத்தைப் பெய்து வைத்த தொன்றேயிக் கொள்கைக் கடித்தளமாய் நிற்பது. அட்டவணை தொகுத்த அநாமதேயியி னதிகாரமொன்றே வைத்து, கருவூரைப்புனனாட்டதாக ஆன்ற புலவரு மடிப்பட்ட பழவழக்குங்கொண்ட கொள்கையை மாற்றலாமோ? சேக்கிழார் பெரியபுராணத்தே ஆனிலைக் கருவூரை அநபாய சோழன் சீர்மரபின் மாநகரமாகுந் தொன்னெடுங் கருவூரெனும் ... ... மூதூர் எனவும், சோழர் தங்கள் குல மரபின் முதற்றனி நகராங்கருவூரின் ... ... மருங்கணைவார் ... ...2மகிழ் திருவானிலைக் கோயில் எனவும், விதந்துகூறியுள்ளார். இவ்வாறு பெரிய புராணம் தந்துணிபொடு முரணுவதுகண்ட ஐயங்காரவர்கள் சரித நூற் சார்புடைய விம்மேற் கோள்களைப்bபாய்யெனbவாதுக்கnவலாமைகண்டு,இக்கருவூரிடைக்காலத்தேnசாழராதிக்கத்திற்குவந்து,nசரர்பழஞ்சார்புடைமைமறக்கப்பட்டிருக்கலாbமனவொருஅற்புதக்கற்பனைசெய்தமைந்தார்கள். இக்கரு வூரானிலை முன் சேரனிடமிருந்ததற்கும், பிறகு அதனைச்nசாழர்வென்றுதந்தலைநகராக்கிக்bகாண்டதற்கும்ஐயங்காரவர்களுக்குக்கிடைத்தஆதாரமறியேம். சங்க நூல்களோ? சாசனங்களோ? தெரிகிலேம். அரும்பழநூல் பல இடையிருட் காலத்திழந்துழலும் நம்மினு மிக்கருவூர்ச் சரித்திரவுண்மையை யிற்றைக்குச் சற்றேறக்குறைய எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்காலத்தவர் நன்கறியலாமென்பதிழுக்கா தன்றோ? அக் காலத்தெழுந்த பெரியபுராணமுடையா ரிக் கருவூரைச் சோழரூரென்ற தோடுமமையாமல், மேற்காட்டியபடியிரு வேறு சோழர் வரலாற்றிடங் களிலவர்மரபின் வந்தார்க் கடிப்பட்ட தொன்னெடுந் தலைநகராகுமென்றிதிற் சோழராதிக்கப் பழமையை வலியுறுத்தியு முள்ளார். முறையே, இச்சோழர் சேக்கிழாருக்குச் சில பல நூற்றாண்டுகளுக்கு முன் இக்கரு வூரிலாண்டவராவர். இப்புகழ்ச்சோழருக்கேயிக்கருவூர் தங்கள் தொன்னெடுங்குலமரபின் வந்த முதற்றனிநகராமேல், இதிற் சோழராதிக்கந் தொடங்கியகாலம் செங்குட்டுவன் காலத்தொடு மிக நெருங்கினதும், சம்பந்தர்காலத்திற்கு முன்னதுமாயிருத்தல் வேண்டும். இச் சோழராதிக்கப் பழமையொன்றே, சேக்கிழாரிதனைத் தன்பாட்டுடைத் தலைவருக்கவர் குலமரபின் வந்ததொன்னெடுந் தனியூர் என்ற துடனேற்புடைத்தாகும். இவ்வாறன்றி, இக்கருவூர் சேரர் பேரூராயிருந்ததனைச் சோழரிடைக்காலத்து வென்று கொண்டிருப்பரேல். அவ் வெற்றிதோன்றப் பாடுமுறைவிடுத்து, அதை மறைத்து, தொன்று தொட்டிதனை வளவர்குலப் பரம்பரையில் நின்றவூரென்றவர் புகழ்குறைத் துண்மையுந் திறம்பியிடர்ப்பட்டுச் சேக்கிழாரிழுக்கிவழுக்குவரோ? புறப்பாட்டிற் கிள்ளிவளவன் கருவூர் முற்றியிருந் தானை ஆலத்தூர் கிழார்பாடிய பாட்டறிவேம். 1அது கொண்டிக் கருவூரானிலையைச் சோழர் முற்றியெடுத்து வெற்றி கொண்ட கதை நிறுவலாகாதாம். என்னை? முதலில் கருவூர் என்னும் பெயரிவ்வாலத்தூர் கிழார் பாட்டிலில்லை. தொகுத்த பிற்காலத்தவர் பெய்துவைத்த குறிப்பேயாகும். இரண்டாவது, பொருநை மிசைக்கருவூர் (வஞ்சி) இக் கருவூரானிலைதானென்பது பிறசான்றானுறுதி பெறு முனிதனைத் தீர்ந்த முடிபாக்கொள்ளல் ஐயமறுக்கும் விடையிறந்து வினாவிரக்கும் வெற்றுரையே யாமன்றோ? இவ்வாறிக்கருவூரைப் புனனாட்டுச்சோழர் மூதூராக் கண்ட சேக்கிழாரே, தொன்மை மலைநாட்டு”2 மஞ்சணியிஞ்சி வஞ்சி”ப்3 பழம்பதியில் “சேவீற்றிருந்தார்4 திருவஞ்சைக்களமு நிலவிச்5 சேரர்கலக் கோவான சேரமான்பெருமாள் வீற்றிருந்து முறைபுரியுங் குலக்கோமூதுர் கொடுங்கோளூரே யாமெனவும் விளக்கியுள்ளார். இத் திருவஞ்சைக் களத்தையு மதன் அலை வாய்த்துறையான மகோதையையுமே சமயகுரவரி லொருவரான சுந்தரமூர்த்திகளும் பாடியிருப்பதை மேலே காட்டினேம். இவ்வூர் பழைய வஞ்சியன்றாமாகில் தமிழகவரைப்பிற் சிவத்தலங்கடோறுந்தேடிச் சென்று வழிபட்டு மனங்கசிந்து பாடுவதையே மேற்கொண்டொழுகிய சுந்தரர், செங்குட்டுவன் வழிபட்ட பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலைமறந்து, சேரர்வள நாட்டிற் பிற்காலத்தூரிவ் வொன்றனையே பாடி யமைவரோ என்பதுஞ் சிறிது சிந்திக்கத்தக்கதே. சுந்தரர் பாடிய விம்மலைநாட்டுக் கடலங்கரை மேன் மகோதை”6 யைச் சுட்டுங்கால், சேக்கிழார் மலைநாட்டுப் பழம்பதி யாந் திருவஞ்சைக் களத்துறையே கோதையரசர் மகோதை யெனக்குலவு பெயருமுடைத்துலகில் என விசதப்படுத்தியுமிருக்கின்றார். அன்றியும், பெரியபுராணத்தில் கருவூர்சோழர் புனனாட்டுக்கும், வஞ்சிச்சேரர் வளநாட்டுக்குமிடையே பிற மன்னர் முறை செய்யுங் கொங்குநாடொன்றுளதாகப் பன்முறை வற்புறுத்தப்பட்டுமுளது. இவ்விடைக் கொங்கு நாடுண்மையுமது பிற நாடாவதும் மலைநாட்டிளவரசர்பாடிய சிலப்பதிகாரத் தானுஞ் சேரர் வரலாறே கூறும் பதிற்றுப்பத்தானு மினிது விளங்கு1 இக் கொங்கரிடை யிடையே சேரவீரர் சிலர்க்கிடைந்தாரை யவர்வென்று திறை கொண்டிருப்பினும், இக்கொங்கு நாடு மலைநாட்டோடொன்றித் தன்னிலை யிழந்திறவாத் தனிநாடாய் என்றும் நின்றதென்பதற்கு, தமிழகமும் வடநாடு மொருங்கு வென்ற தனிவீரன் குடக்கோச் செங்குட்டுவன் கோல்வளர்ந்த நாளும், வேற்செழியன் கண்ணகிக்கு விழாவெடுத்து நாடுமலிய நோயுந் துன்பமும் நீங்கியபோது, அதுகேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழாவொடு சாந்திசெய்ய மழைத் தொழிலென்று மாறாதாயிற்று என்னுமிளங்கோவடிகள் வாக்கும்2 மாகெழு கொங்கர் நாடகப் படுத்தவேல் கெழுதானை”3ப் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கௌதமனார் பாடிய பாட்டும், சோணாடுவிட்டு, கொங்குபுறம் படமலை நாட்டிற் சென்று குடபுலத்துள்ள சேரர் கருவூரெறிந்து, வெற்றிபெற்ற கொற்றவேந்தான கிள்ளிவளவனைக் கோவூர்கிழார் பாடிய புறப்பாட்டுமே4 போதிய சான்றாமன்றோ? இவ்வாறே சேக்கிழாரும், வஞ்சிக்குக்சென்ற சுந்தரர்வழியும், வஞ்சிவிட்டுச் சோணாட்டிற்கு வந்த சேரமான்வழியும், குறிக்குங்கால், இடையே இக் கொங்கர் பிறநாடுண்மையை மிக விசதப் படுத்தியுள்ளார்.5 இன்னும் முன்னூல்களில் யாதோராதாரமுமின்றி, இக் கருவூர் சோணாடு பாண்டிநாடுகளினெல்லையிலமைந்த தென்று கூறப்போந்த ஐயங்காரவர்களே, தன்னூலிற் கீழ்க்குறிப்பாகக் “கருவூர்க்குக்கீழ்பால், 8 மைலில் காவிரிக் கரை யிலுள்ள மதுக்கரையைச் சேர சோழ பாண்டிய நாடுகளின் எல்லையாக இக்காலத்தாருங்கூறுவர் எனவோர் பொறுப் பில்லார் பிரத்தாபவுரை குறித்தமைந்ததன்றி, தன் மதமாக நூலுடலி லிவ்வூரைச் சேரநாட்டகத்தேனு மருகேனுமுளதாகயாங்கணும் கூறத் துணியாமையும் பொருளுடைத் தன்றோ? இதுவேயுமன்றி இவர்களே, சோணாட்டின் மேற்கெல்லை கருவூ ரென்பர், யாப்பருங்கலக் காரிகை உரைகாரர் எனவொரு மேற்கொளுந்தந்து வைத்துள்ளார்கள். இவ்வாறிக் கரூவூரானிலை, சோழர் பழவூரும் சோணாட்டு மேற்கெல்லையுமாக அதன் மேற்கே கொங்கர்நாடுளதாக, மலையரசர் தலைநகரைத் தன்னாடு முழுதும் விட்டு, நெடும்பிற நாடகன்று வந்து சோணாட்டே சமைத்தமைதலியல் பாமோ? சால்புடைத்தோ? மேலும் பாண்டியனைக் 1கூடற்கோமான் தென்னவனெனவும்,2 சோழனைக் கோழி வேந்தன் புனனாடனெனவும், புனைந்துரைப்பதேபோல், சேரனை வஞ்சி வேந்தன் குடக்கோ வென்றே கூறுவது வழக்காறாகும்.3 எனவே கொங்கரன்ன குறுநில மன்னர் பலரிருப்பினும், பொதுவாகக் குமரிவேங்கடங்குணகுடகடலா மண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்”4 பெலாம், குடமலைநாடு, குணபுன்னாடு, தென்றமிழ் நாடென மும்முடியரசர் குடைக் கீழடங்கும். இவ்வுண்மை வேனிற் றெய்வமாகிய வசந்தனுலவி யின்பஞ்செய்யும், வடவேங்கடந் தென்குமரிக்கிடையே கிடக்கும், தமிழ்நாடு முழுவதையும் வரம்பறுக்க வந்த இளங்கோவடிகள், நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம் பறுத்த தண்புனனாட்டு, மாட மதுரையும் பீடாருறந்தையும் கலிகெழு வஞ்சியு”5 மென முடிவேந்தர் மூவரூரை மட்டுஞ் சொல்லி, அதனால் தமிழகவரைப்பு முற்றுமமைத்துக்கொண்டதனாலும் விசதமாகும். இத்தகைப் பெருமை முத்தமிழ்நாட்டு முடிவேந்தருள், குடதிசையாளுங் கொற்றங்குன்றா ஆரமார்பிற் சேரர் குலத்துதித்தோர்.6 புனனாட்டொரு சிற்றூர்பேணி, மயங்கி, விடுதலறியாவிருப்பினராகி, வடுநீங்கு சிறப்பிற்றம்’1 வரைப்பெலா மறப்பரோ? இக் குடக்கோப் பெயரால் சேரன்மேற்றிசைக் காவல் வீற்றிருப்பவ னென்றறிவதேபோல் பின்னுமிவனுக்குள்ள பொறையன், மலையமான், ‘பொருப்பன்’, வெற்பன், ‘குடகன்’,2 குறிஞ்சிக்கோமான் எனும் பலபிற பிரபலகாரணவியற்பெயர் களானுமிவன் மேற்கடலடுத்த வளமலைநாடுடையானென்பது வெள்ளிடை மலையாமன்றோ? சேரர்இத்தண் கடற்படப்பை நாடெலாந் துறந்து, செம்பியன்காவிரிச் சிறுதுணையாற்றினருகு ஆனிலையூரிருந்து வந்திடுவரோ? என்பதுஞ் சிந்திக்கத்தக்கதே யாகும். இவை பலவானும், கருவூரானிலை புன்னாட்டூ ரென்பதும், வஞ்சி மலைநாட்டுப்பட்டின3 மென்பதும், இவையிருநாடுகளுக்கு மிடையே மலைநாட்டுப் பட்டின மென்பதும் இவையிரு நாடுகளுக்கு மிடையே கொங்கர் பிறநாடு கிடக்கின்ற தென்பதும் தெளிவாம். இது பற்றியன்றோ, இக் குடதிசையாளுஞ் சேரர் குலத்துதித்தர்க்குரிய வஞ்சிமூதூரில் அரசன் புரிசையமைந்த அகவூர்ப்பாக்கமாங் கருவூரை முற்றியெடுத்த சோழன் கிள்ளி வளவன் வெற்றிபாடிய கோவூர்கிழார் புறப்பாட்டிலும் இக் கருவூர் குடபுலத்துவஞ்சி முற்றம்”4 என்றே சுட்டப்பட்டுள்ளது. பகுதி 6 : பூவிரிபுனலொருமூன்றுடன் கூடிய கூடல் கருவூர்ப் புராணத் திருமுக்கூடலன்று : முக்கடன்மணந்த குமரிக்கூடலேயாம்! இனி, செங்குட்டுவன் சரித நூலில், செங்குணக் கொழுகுங் கழுலிமலிர் நிறைக்காவிரியன்றியும், பூவிரிபுனலொரு மூன்றுடன் கூடிய கூடலனையை”5 என்னும் பரணர் பாட்டைக் கொண்டு, வஞ்சியூர் மூன்றுயாறுகள் கூடுமிடத்திருக்க வேண்டு மெனவும் கருவூரானிலைக்கு வடகிழக்கே முக்கூடலுளதாக் கூறும் வஞ்சுளாடவிக் குத்தர குணக்காக வாம்பிராவதி நதி மதிபோல், விஞ்சு மாமணிமுத் தாறுகாவேரி மேவுழி மேவுழி மேவுதலா லெஞ்சலிறிருமுக் கூடலென்றிசைப்ப”6 என்னுங் கருவூர்ப் புராணச் செய்யுளைக் காட்டிக் காவிரியுடன் தனித்தனி கலக்கும் ஆம்பிராவதி, மணிமுத்தாறு என்னு மூன்று நதிகளுக் கருகே கருவூரானிலை யிருப்பதுகொண்டு வஞ்சியிக்கருவூரே யாகு மெனவும் துணியப்படுகின்றது.1 வெளிவந்த பதிற்றுப் பத்துரையுடையார், இப்பரணர் பாட்டின்கீழ், மூன்றுடன் கூடிய கூடலென்றது, அக்காவிரி தானும், ஆன்பொருநையும், குடவனாறுமென இம்மூன்றும் சேரக்கூடிய கூட்டம் என்றுரை கண்டார். கருவூரனிலைக்கு வடகிழக்கே, சற்றேறக்குறைய 2 ஙூ மைல் தூரத்தில் ஆம்பிராவதி காவிரியோடு கலக்கின்றது. குடவனாறோ கருவூருக்கு 12 மைலுக்குத் தென்கிழக்கே ஆம்பிராவதியிலேயே சங்கமமாகி விடுகிறது. இவ்விடர்ப்பாடு கண்ட ஐயங்காரவர்களிவ்வுரை. பரணர் பாட்டை வஞ்சிக்குப் பொருத்தமுடையதாகக் காட்டாதெனவிடுத்துப் பொருந்து மாறு தாமோர் புத்துரை கொண்டார்கள். குடவனாற்றிடத்தில் மணிமுத்தாநதியை நிறுத்திப் பழையவுரையைச் சிறிதுதிருத்தி, ஆம்பிராவதி, மணிமுத்தாநதி, காவேரி மூன்றுங்கூடுந் திருமுக்கூடலையே பரணர்பாட்டுக் குறித்ததாகவைத்து அதனால் வஞ்சியிக் கருவூரானிலையாகு மென்றார்கள். எனில், மணிமுத்தாநதி காவிரியொடுகலக்குமிடம் மேற்கே வெகுதூரத் துள்ளதாக”2 ஆம்பிராவதியொன்றே கருவூரானிலைக்கருகே (சுமார் 2 ஙூ மைல்தூரத்தில், காவிரியுடன் கலப்பதாகும். எனவே, ஈண்டும் முக்கூடலென்பது கற்பனையேயாயிற்று. இவ்வாறு தம்முரையுமி யற்கையொடு முரணுவதைக்கண்ட ஐயங்காரவர்கள், கொண்டதை விடாமல் முற்காலத்தில் இந்நதி (மணிமுத்தாநதி) ஆன்பொருனையுடன் சேர்ந்து காவிரியிற் சங்கமித்தது போலும்”3 என்று ஏற்புழிக் கோடலோர் துணி புதந்துரைத் தமைதி கண்டார்கள். முற்காலமென்பது எனைத்தளவோ? வெகு தொல்லை வேண்டாம். ஐயங்காரவர்களே கூறுகிறபடி 290 வருடங்கட்கு முன்னியற்றப் பட்ட கருவூர்ப்புராணச்”4 செய்யுளிம் மூன்றாறுகளுமொருங்கே கலப்பதை யுள்ளவாறு கூறிற்றெனில், அப்படிக் கலந்தகாலம் சற்றேறக்குறைய 200 ஆண்டுகளுக்கு மேற்படாது. இத்துணைச் சிறுகாலத்தளவில் மணிமுத்தாறு மற்றிரு நதிகளை நெடுந்தூரங்கடந்தேறி வந்து கலந்தவழியிழந்து, தன்னளவு குறுகி, முக்கூடலெட்டாது. கிட்டியாங்கொட்டி, மேற்கே முடிந்தநாள் விடிந்ததென்றோ? அவ்வாறு, இவ்வாறு, தன்னாறு மாற்றியதாகக் கொள்ளச் சரிதசாசன வியற்கைச் சான்றெதுவுமுண்டோ? கிடைத்த சான்றுகொண்டு அவை காட்டு முடிபு துணிவதே யாராய்ச்சி முறையாகும். அஃதன்றி, துணிந்த முடிவுக்கேற்ற சான்று தேடுவது சரிதநூன்மரபாகாது. இனி, இப்பரணர் பாட்டி னியைபுதானென்னை? புனலொரு மூன்றுடன் கூடியகடல் என்னுந்தொடர், கருவூர்ப்புராணத் திருமுக்கூடலையே குறித்ததென்று கொள்வ தின்றியமையாததன்றே. காவிரி சோழனதாகவும், அதைச் செங்குட்டுவனுக்கு வமித்தகாரணம்யாதோ? காவிரியாறு சேரனுடைமையாக் கூறும் பழநூலேனும் செய்யுளேனுமிது காறுங் கிடைத்திலது. எனினும், ஈண்டுப் பரணர் செங்குட்டுவன்பால் சோணாட்டுக் காவிரியை எடுத்தாளப் போதியகாரணமும் தகவுமுண்டு. செங்குட்டுவன் சோழரை வென்ற சரிதவுண்மைக் கேற்கத் தோற்றவர்க்கேற்ற நதியைச் சொல்லிப் பரணர், வெந்திறலாராச் செருவிற்சோழர் குடிக்குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற் புறத்திறுத்த”1 குடக்கோச்சேரன் சேவகம் புகழ்வ தானார். இஃது அக்காலப்புலவர் மரபு. இதுகொண்டே, என்றும், யாண்டும் எனைத்தேனும் சேரருக்குக் காவிரியாறுடைமையேனும், காவிரி மேனாடு நகருண்மையேனும் துணிவதிழுக்காம். தெவ்வடு வெற்றியன்றி, மற்றெவ் வகையானு முரிமையில்லாப் பிறநாட்டு நதி நகர்களைக் கொண்டு அவை யுடையாரைப் போர் வென்றோரைப் புகழ்தல் பழமரபென்பது, என்றும் சேரர் ஆண்டறியாப் புகார் குறித்து இருபெருவேந்தரையு முடனிலை வென்ற ... ... அருந்திற லொள்ளிசைப் பெருஞ்சேரலிரும்பொறையை மறுவில்வாய் மொழியரிசில் கிழார்”2 பாடிக், காவிரிமண்டிய சேர்விரி வனப்பிற் புகாஅர்ச்செல்வ”3 என்றழைத்தலாலும், சேர பாண்டியர் களுக்கேயுரிய வஞ்சி மதுரைகளைக் குறித்து, அவ்விருமுடிவேந்தரைச் சோழன் நலங்கிள்ளி போர்வென்ற பெருமைதோன்ற அவன் தன்னரசுக் குரிமையில்லாப் பூவா வஞ்சியுந்தருகுவனன்றோ? ... ... மாடமதுரையுந் தருகுவ னெல்லாம்”1 என்றவனைக் கோவூர் கிழார் பாடிய புறப்பாட்டானும், பெருஞ் சோழனையும் வென்று வஞ்சி மூதூர் தந்து பிறர்க்குதவிய ... ... மன்னுயிர் காத்த மறுவில் செங்கோ லின்னிசை முரசினிளஞ் சேரலிரும் பொறையைப் பெருங்குன்றூர் கிழார்2 செழும்பல விருந்த கொழும்பஃறண் பணைக் காவிரிப்படப்பை நன்னா டன்ன, வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை, யாறிய கற்பிற்றேறிய நல்லிசை வண்டார்கூந்த லொண்டொடிகணவ”3 னென்று புனைந்து பாடிய வருமைப்பாட்டானும் இன்ன மிவை யன்ன பிற பல ஆன்ற சான்றானுமினிது விளங்கும். இன்னும் பதிற்றுப்பத்தில், சோழரைப் போர்வென்ற சேரர் மாட்டே யிவ்வாறு காவிரி புனைந்துரைக்கப் படுவதும், அவ்வெற்றியில்லார்க் கிப்பெற்றி சொல் லாமையும், உற்றுநோக்கிலிப்பழ வழக்கு மிகவுறுதி பெறுவதாகும். இதனால், மேற்குறித்த பரணர் பாடலுக்கு மிம்மரபுதோன்றப் பொருள் கோடலே ஏற்புடைத்தாம். காவிரியன்றியும் பூவிரி புனலொரு மூன்றுடன்கூடிய கூடலனையை என்பது மூலம் இது, சேரன் செங்குட்டுவன் மேலது. செங்குட்டுவனோ சோழர் ஒன்பதின்மரைப் புறங் கண்டவன் என்று பதிற்றுப்பத்தின் பரணர் ஐந்தாம் பத்துப் பதிகத்தாலறிவாம். இவ்வென்றி தோன்றச் செய்யுளிற் காவிரியை அவனுக்குவமித்த பரணர், அதுவேயுமன்றித் தம் பாட்டுடைத் தலைவன் பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின் முரசை முழுமுத றுமியப்பண்ணிய4 வெற்றியையும் நினைந்து அதுபுனைந் துரைக்கக் கருதிச் சோழர்மேல் வெற்றி தோன்றக் காவிரி என்றெடுத்த புலவர், அன்றியும் புனலொரு மூன்றுடன் கூடிய கூடலனையை... ... என்று முடித்தார்போலும். குடகடல் முன்னரே தன்னதாக, முறையே சோழ பாண்டியருக்குரிய குணதென்கடல்களையும் தன் வெற்றியாலுற்ற தாக்கிக்கொண்ட செங்குட்டுவன் திறம்பாடும் புலவர் தெற்கே, அம்முக்கூடல் கலக்கும் பெற்றியையும், ஆங்கம் முந்நீர்க் கூட்டத்தால் வலிமிகுந்தலைக்குங் குமரிப் பௌவத்தினேற்றத்தையுஞ் சுட்டிப் புனலொரு மூன்றுடன் கூடிய கூட்டமனையை என்று கூட்டி முடித்தார் என்பது மிகப் பொருத்தமன்றோ. இவ்வழக்கு நோக்கியே, பதிற்றுப்பத் துரைகாரரும், 3ஆம் பத்துப்பதிகத்தின் கீழ், இருகடனீரும் ஒருபகலாடி என்றதற்கு, இருகடலும் என்றது தன்னதாய மேல்கடலும், பிறநாட்டதாய்ப் பின்பு தான் பொருதுகொண்டு தன்னாடாக்கிய (சோழ) நாட்டிற் கீழ் கடலும் என்றவாறு, என்றெழுதி யுள்ளார். இதுவேபோல், 51ஆம் செய்யுளில் சேரலாதனைப்பாடும் நச்செள்ளையாரும், பெருந்தெய்வத்து வளைஞரலும் பனிப்பௌவத்துக் குணகட கடலோடாயிடை மணந்த என்று முக்கடலுங்காட்டிக் கூறி வைத்தார். இதை விடுத்துக் காவிரியுடன் வெவ்வேறிடத்துக் கலக்குந் தனிப் பெருமையேலாச் சிறுநதி யிரண்டின்கூட்டத்தைக் குறிப்பதாகக் கொண்டு இயல்பொடுமுரணிக் கவிச்சுவையுங் குறைப்பதல்லால், பெறுநயம்பிறி தொன்றுண்டோ? இனி, இக்கவியின் முக்கூடல் காவிரிமேலதாய திருமுக்கூடலையே குறிக்குமெனக்கொள்ளினும், அஃதொன்று பற்றி வஞ்சி, யதனருகுளதாகக் கருதற்கவசியமுண்டோ? மேற்கண்டாங்குக் காவிரிப்பூம்பட்டினத்தையும், மதுரையையும் சேரர் வீரம்பாடுவார் உபசாரம் ஒன்றேபற்றி யவர்மேல் வைத்துப் பாடுவது மரபா மாகில், தன்னாடுபுகாமலும், நகரணுகாமலு மோடுஞ் சோணாட்டாறுகளைச் சோழரொன்பதின்மரைவென்ற வீரரேறாகிய செங்குட்டுவனுக் குவமிப்பதிழுக்காமோ? இழுக்காதேல், இப்பரணர்பாட்டுவமையொன்று கொண்டு சேரர் தலைநகரந் நதிகளுக்கணித்தெனச் சாதித்தலெப்படிக் கூடும்? வஞ்சியொடு கடல்சேர்த்துப்பரணரும் இளங்கோவும் விதந்து பாடாமையால் வஞ்சியுண்ணாட்டதென்று வாதிக்கும் செங்குட்டுவன் சரிதநூலார் இம்மூன்றாறுகளினணித்து வஞ்சியென விதந்தோது மேற்கோளொன்றுமின்றி யிவ்வுவமை கொண்டு தம் முடிபுநாட்டுவது சிறிது வியப்பைத் தருவதன்றோ? இவர் தம் முடிபுக்கு வேறு தக்கமேற்கோளுஞ் சான்றுகளு முளவிடத் திவ்வுவமையை ஒருபுடைத் துணையாகக் காட்டிய தன்றியிதனைப் பிரமாணமாகக் கொள்ளவில்லையெனலாமெனின், தம் புத்தகத்தில், கொடுங்கோளூர் வஞ்சியென்பார் கூற்றைப் பலவாறு மறுப்பதல்லால், தாம் கருவூரானிலையே வஞ்சி யென்று கொண்ட முடிபுக்கு ஏகதேசப் பெயரொற்று மைகளைத் தவிர வேறுயாதொரு நேர்சான்றும் காட்டின தாயுமில்லை. பகுதி : 7 வஞ்சிமூதூர் பட்டினமா? உண்ணாட்டூரா? இனி, வஞ்சிமாநகரம் கடற்கரைக்கண்ணதாயின், சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய முன்னூல்கள் அதன் கடல்வளச் சிறப்பால் வருணித்துக் கூறாமற் போகுமா? ஒருகாலுமில்லை. அங்ஙனம் கடற்கரைச் சம்பந்தம் வஞ்சிக்குக் கொஞ்சமும் காணப்படாமையே, அஃதுண்ணாட்டு நகர மென்பதை விசதமாக்கவல்லது”, எனவும் விதந்தோதிக் குட்டுவன் சரிதநூலார் தந்துணிபு வலியுறுத்துகின்றார்கள். முதலில் ஒரு நூலிலொன்று சொல்லப்படாமைகொண்டு அதனையில்லை யெனத் துணியத் தருக்கமிடந்தராது. இரண்டாவதிப்பழநூல்கள் முறையே கண்ணகி, மணிமேகலை யிவர்களின் வரலாறு கூறவந்தனவன்றி, வஞ்சி வருணனை கருதியவுமன்றாம். எனவே இவைகளிற் பாட்டுடைத் தலைவரின்சரித நிகழ்ச்சி கூறிச் செல்லுமிடத் தவர் வரலாற்று முறைக் கேற்புடைய வருணனை களைப் பெய்தமைப்பதன்றி, எல்லா விடங்களிலு மெல்லாவற்றையு முலப்புற வருணிப்பதழகுமில்லை. அவசியமு மாகாதன்றோ? மூன்றாவது, சிலப்பதிகாரத்திற்போல், மணிமேகலை நூலிற் காவிரிப் பட்டினத்தையும் கொற்கையையுமே கடல்வளச் சிறப்பால் வருணித்துக் கூறப்பட்டதாயில்லை.1 இதனாலிவை யிரண்டு முண்ணாட்டூ ரென்பார்களோ? சிலப்பதிகாரத்தில் விசதமாகக் கொற்கைக்குக் கடனலங்கூறப்படவுமில்லை. அது கொண்டிப் பழம்பதி பட்டின2 மன்றாமா? இனிக்கடைசியாகத் தொன்னூல்களிற் சிறிதாழத்துருவு வார்க்குக் கடற்கரைச் சம்பந்தம் வஞ்சிக்குக் கொஞ்சங்காணவே படுகின்றது. சிறுபாணாற்றுப்படையில், சோழபாண்டியரின் உண்ணாட்டூர்களான உறையூர், மதுரைகளைச் செம்பிய னோடாப் பூட்கையுறந்தையும் எனவும், செழியன் தமிழ்நிலை பெற்ற தாங்கருமரபின், மகிழ்நனை மறுகின் மதுரையும் எனவும், பாடிய நல்லூர்நத்தத்தனார், கொற்கை, வஞ்சி நகரங்களைக் குறிக்குங்கால், அவை கடற்கரைக் கழிமுகத்தூர்1களெனச் சுட்டுபு, “உமட்டியரீ2 ன்ற கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலியாடுந் தத்துநீர் வரைப்பிற் கொற்கை என்றும் அஃதேபோல் மலைநாட்டிற்குட கடலடைகரை வயல்வள நயந்து, கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க் கழுநீர் மேய்ந்த கயவா யெருமை பைங்கறி நிவந்த பலவி னீழன் மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர, விளையா விளங்கணாற மெல்குபு பெயரா, குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங் குடபுலங் காவலர் மருமா னொன்னார் வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த எழுவுற திணிதோழ் ளியற்றேர்க் குட்டுவன் வருபுனல் வாயில் வஞ்சியும்3 என்றும் விதந்து கூறியுள்ளார். இஃதேபோல் நாடகக் காப்பியத்துள் இளங்கோவடிகளும் மூவேந்தர் மூதூர்களையுந் தொகுத்துரைப்பார், மாடமதுரையும் பீடாருறந்தையும், கலிகெழு வஞ்சியு மொலி புனற் புகாரு”4மென்று அவற்றினியல்பும் வளனுஞ் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார். ஈண்டு உண்ணாட்டூர்களாகிய மதுரை, உறையூர்களை யொருங்குவைத்து அவற்றை மாடமலி, மதுரையெனவும், பீடுபெறுமுறந்தை யெனவு மொருபுடை யொப்ப வருணித்ததுமன்றி, அவற்றினின்றும் புகாரையும் வஞ்சியையும் பிரித்து, அவை தமக்கு முறையே யுடனொத்த அடைவேறு புணர்த்திய குறிப்பின் செவ்வி மறக்கற் பாற்றோ? காவிரிப் பட்டினக் கடல் வளம் விரித்தோர், வஞ்சித் துறை நலம் வஞ்சிப்பானேன்? என்பார், அடிகள் நாடகக் காப்பியத்தின் போக்கு மதனோக்கும், அவர் கதை நடத்து முறையுஞ் சிறிது கவனிப்பாராக. கண்ணகி பிறந்தவள் பெண்ணல முதிர்ந்த மணவினை முடித்தவண் மனையற நடத்திய கோவலன் பெருங்குடிக் கோநகர் வளனெலா மிவர்தம் வரலாறு பலபட விரித்துழி விரிவதியல்பாம். மற்றிவர் சேரர் பேரூர்ச் சென்றும் புகுந்திலர். வஞ்சியி லிவர் சரிதநிகழ்ச்சி யொன்றுமே கிடையா தன்றோ? மேலும், அடிகள் தம் ஊர் தாம் வியக்கும் விருப்பின ராகாரென்பது புகார் மதுரை நகர நலங்களை வஞ்சியினின்றும் பலபடவிரித் திவர்பெட்புறப் பேணிப் பாடிய திறத்தானு மினிது விளங்கும், இவ்வாறு வஞ்சிவளம் விரியாத சிலப்பதிகாரத்திலு மிதன் கடற்கரை யணிமை யெஞ்சிய சொல்லி னெய்தக்கூறப் பட்டுள்ளதற் கையமில்லை. பத்தினிக் கடவுட்படிவமெழுதவோ ரிமையக்கால் கொள வமையா தெழுந்து வஞ்சிசூடி வடபுல மேகுஞ் செங்குட்டுவன் வழிச்செலவை அடிகள், . . . . . . . . . . . வஞ்சிநீங்கித் தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும் வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ்போத, மலைமுதுகு நெளிய, நிலைநா டதர்பட, உலக மன்னவன் ஒருங்குட் சென்றாங் காலும் புரவி யணித்தேர்த் தானையொடு நீல கிரியி நெடும்புறத் திறுத்தாங்கு என்றெழில்பட வருணித்துள்ளார். எனவே, தூசிப்படை (ஏயn - பரயசன) குடமலை மிதிக்கவும், பின்னணி கடற்கரை நடக்கவும், இடை நெடுநிலமெலாம் படைசெறிந்தொழுக நீண்டு வஞ்சி நின்றெழுந்த வானவன் தானைப்பெருக்கம் இமயம்நோக்கி வடக்கே சென்று நீடிய நீலகிரியடிவாரத்தே பாடியமைத்து முதலிற்றங்கியதென்பது தெளிவாகின்றது. இதனால் மேலைக் கடலிற்சங்கமிக்கும் பேராற்றினலி முகப்பெருந்துறையே வஞ்சி மூதூராக வேண்டுமென்பது மலையிலக்காமன்றோ? வஞ்சிநகர், நீலகிரிக்குத் தென்மேற்கே கடற்கரைப் பேரூராயிருந்தாலன்றி, அதிலிருந்து வடக்கே புறப்படுஞ்சேனை, கடல்தொட்டு, இடை நாடதர் படநடந்து மலைமுதுகு நெளிய ஏறிக்கடப்பதெங்ஙன மாகும்? அன்றியும் ஆனிலைக்கருவூர் கடந்து வழி நடந்து வடக்கேகுஞ் சேனை நீலகிரியருகே தங்கக் காரணமு மில்லையன்றோ? ஐயங்காரவர்கள், அடிகளினிவ் வருமை யுரையைத் தம் புத்தகத்தின் கீழ்க்குறிப்பொன்றிலெடுத்துக்காட்டி இது, காவிரியருகாங் கருவூரானிலையிலிருந்து வடக்கே சென்ற செங்குட்டுவன் வடயாத்திரையிலுடன் சென்ற அவன் சேனையின் பரப்பு மிகுதியை வருணித்த படியேயன்றிப் பிறிதன்று, வஞ்சி கடற்கரைக் கண்ணதாயின், தானைகளின் பெருக்கைக் கூறவந்த அவ்விடத்தே, அவை கடற்கரை விளிம்புவரை சென்றன வென்று அடிகள் கூறுவதில் பெருமையும், வியப்புமில்லையென்க”, என்றிதனைத் தந்துணிபுக்கியைவதாகப் பொருத்திக் காட்ட முயன்றுள்ளார்கள். பிற்காலப்புலவர்போல, அடிகள் அபூத கற்பனாலங்காரப் பிரியரன்றென்பதும், சங்கக் காப்பிய மைந்தினுஞ் சிறந்த சிலப்பதிகாரம் இயற்கை நவிற்சி நலமே நயக் குமியற் புலவர் பெருநூலென்பதும், சங்க நூலறிவார் சங்கை யற்றறிவாரன்றோ? அடிகள், தானைப்பெருக்கைத் தானப்பெருக்கத் தளவாற் பெருக்கித்தருக்கு மிடைக்காலப் புராணப் புலமையறியாததோடு, இயற்கை யோடு முரணுமியல்புமறியார்; மறந்துந்திறம்பா வுண்மையுரைச் செவ்வியுடையார். இமயமலை நோக்கிச் செல்லுஞ் செங்குட்டுவன் சேனை, வடக்கே செல்ல வேண்டும். கருவூரானிலை மேற்குமலைத் தொடருக்கும் கீழ்க் கடலுக்குமிடை நிலப்பரப்பினடுவ ணொரூராங்க், காவிரிக் கருகே நிற்கும் இக்கருவூரினின்று வடக்கே புறப்பட்டதானையின் நிலைத் தார். (தூசிப்படை) வடக்கும், பின்னணி தெற்குமாகக் கையிரண்டே1 கி மேலாகச் செல்லுவதியல்பாம். அப்போழ்து, அச்சேனையின் தலைகடையணிகள் மலைகடலணுகா. இவ்வாறு, கருவூரானிலைக் கடைவாயிலே கூழைப்படைக்கும் பிறவடதிசையே தூசிப்படைக்குமிடமாகவும், அடிகள் கூடியபடி தண்ட, தலைவராதல் தலைத்தார்ச் சேனையாதல் புணரியின் விளிம்பு சூழ்போதலேனும், மலைமுதுகு நெளியச் செல்வதேனு மெப்படியமையும்? அடிகள் பக்கப் படைகளையேகுறித்துப் படையின் புடையகலத்தை விரித்து அது மலை கடலளவாய்ப் படர்ந்து நின்றதெனச் சேனைப் பெருக்கை விளக்கினரென்னில், ஈண்டுக் குறித்த கடலெது? மலையெது வாகும்? கருவூருக்கு மேல்புறமே மலையாகலாற் கீழ்கடலையே குறித்ததெனல் வேண்டும். சோணாட்டின் மேற்கெல்லையான கருவூரினின்றும் வடக்கெழுந்த சேனை, இவ்வாறு புறச்சோழர் புனனனாட்டின் கிழக் கெல்லைக் கடல்சாரக் காரணமுண்டோ? இனி, இது இயல்புரையாகாமல், படைப் பரப்பைக் காட்டவந்த கவிக் கற்பனையேயாமாகில், சேரனது குடகடலை மேற்கெல்லை யாக்காமல், அணுகிய மலைத் தொடரோடமைந்ததென்னாம்? மானத பூசையிற் கொழியலரிசியேனோ? இம்முறையில், குண குட கடலாவெல்லை கட்டிச் சேனைப் பெருக்கைக் காட்டி லிதனினுங் கவிப்பெருமை யினிதாகுமன்றோ? இனி, ஈண்டடிகள் மேலைக்கடலுக்கும் மேற்கு மலைத்தொடருக்குமிடையே படை நின்றதனையே குறிப்பதாகக் கொண்டாலோவெனில், கருவூரா னிலையருகாகாமை வெளிப்படையாகும். இன்னும் வடவரை நோக்கிச் செல்வார், கருவூரிலிருந்து வடக்கே போவதன்றி, நேர்மேற்கா வழிக்கொள்வானேன்? வஞ்சிநீங்கி வழிக்கொண்ட சேனை இளைப்பாற முதலில் நின்றவிடமாக அடிகள் கூறும் நீலகிரி, இக்கருவூருக்கு நேர்மேற்காகும். கருவூரி லிருந்து வடதிசை யேகுஞ் செங்குட்டுவன், மயங்கி, வழியிழந்து, மேற்கேகி, நீலகிரி யடிவாரத்தேவந்து தங்கினனாக வேண்டும். அல்லாக்கால் அடிகளினிவ் வருமையடிகள் பொருளிழந்த புரையுரையேயாக வேண்டும். இவ்வாறு அரசனும் தண்டத் தலைவரும் சேனையும் மயங்கி வழியிழந்து தயங்கினதாகக் கொண்டு முறையிறந்திடர்ப் பட்டேனும் குட கடல் வஞ்சியை யிடம்பெயர்ந்தெடுத்தக நகராக்குமாற்றலை வியத்தலினும், உண்மைக்கும் புலவர் பிறர் கொள்கைக்கு முரணாத அடிகள் வாக்கின் செம்பொருளே கொண்டு அது சுட்டும் நேர்வழியும் அவ்வழி காட்டுமூரும் கடைப் பிடிப்பதழகாமன்றோ? ஈண்டடிகள் கூறியாங்கே, பெரியபுராணத்திலும், ஆரூரிற் சுந்தரராம் தன் னேரில்லா வன்றொண்டர்தமையுங் காண்பே னெனவிரும்பி, நன்னீர் நாட்டுச் செலநயந்த சேரர் கோமானார் நான்னாட்கொண்டு, பெரும் பயணமெழுகவென்று நலஞ்சாற்ற, அம்மலை நாட்டுள்ளார், அயில் வேற்குல மறவர் அடைய1 வஞ்சியக நகர் வாயணைந்து கடற்றரங்கமடுத்து நின்று மேன்மேல் விரவிப்பரந் திடை நிலமதிரச் சென்று, நெடுஞ்சேனை, நேமி (குடமலை) நாட்டெல்லை கடந்து, மறவர்பயில் கொங்கநாடு கடந்து பொன்னி நீர் (சோழ) நாட்டிடைப்போவார் என்று, சேக்கிழாரு மிவ்வழியை யிம்முறையே கூறியுள்ளதுஞ் சிறிது சிந்திக்கத் தக்கதாம். இதனால் மலைநாட்டுத் தலைநகராம் வஞ்சிநின்றெழுந்துவழிக்கொண்டோர். இவ்வாறு கடல்விட்டு, இடைநிலங் கடந்து மலையேறிச் சென்று, குடமலைத் தொடரின் குணபுறத்தடிவாரத்திறங்கிய பின்னரே சமநிலப்பரப்பினொரு நெடுவழி கூடுவது முறையென்பது தெளிவாகின்றது. இன்னு மிவ்வாறே, சேரர் பேரூரிலிருந்து வடதிசையேகும் பெரும்பாதை முன்னாளில் அடிகள் கூறியபடியே, வஞ்சிநின்று முதலிற் செங்குணக்காகச் சென்று, அந்நாட்டுக் கீழெல்லை மலைகடந்த பிறகு வடக்கே திரும்பி நீலகிரியோரமாகப் போயிற்றென்பது, கிட்கிந்தைவிட்டுச் சீதையைத் தேடித் தெற்கே சென்ற வானர வொற்றர் வழிகூறு மிராமாயணக் குறிப்பாலும் வலியுறு கின்றதாகும். இவை பலவானு மேற்குறித்த சிலப்பதிகார வரி களால் அடிகள், வஞ்சி மேலைக் கடலோரம் பேராற்றின் மேலூராமென்பதை விசதப்படுத்திய செவ்வி தெளிவாகின்றது. இதுமட்டேயோ? வஞ்சி கடலடுத்த வூரென்பதற்குத் தொன்னூற் குறிப்புக்கள் இன்னுமுள. வடவாரியரை யடக்கிக் கண்ணகிக்குப் படிமக் கல்லுங்கொண்டு, செங்குட்டுவன் திரும்பித் தன்னூர் புகுந்தபின், வேள்விச்சாந்தியின் விழாக்கொளவேவி, அருளான் ஒருநாள் ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கி அவ்வரசரைப் பிறமன்னர் தங்குவதற்கென்றே ஊர்ப் புறத்தமைக்கப் பெற்ற மாளிகையிலிருக்கச் செய்து அவரையு பசரிக்கத் தன் படைத் தலைவனான வில்லவன் கோதையையும், தான் மகிழுமவ்வேள்விப் பெருவிழாக்காலத்திற் றன்கருணைக் கறிகுறியாகத் தன்னூர்ச் சிறைதிறந்து குறையாளரை விடுத்துத் தனக்குரிய குடிகளின் கடமை (அரசிறை) களை நீக்கு (வஜா செய்யு) மாறு அமைச்சன் அழும்பில் வேளொடு கணக்கரையும், ஏவினானென்று கூறுமிடத்திலும் அடிகள் தருங்குறிப்புக்கள் மறக்கற்பாலனவல்ல. அவை வருமாறு :- வேள்விச் சாந்தியின் விழாக்கொள வேவி யாரிய வரசரை யருஞ்சிறை நீக்கிப் பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளா விக்கோ மாளிகை காட்டி, ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... அம் மன்னவர்க் கேற்பன செய்கநீ யென வில்லவன் கோதையை விருப்புட னேவிச்; சிறையோர் கோட்டஞ் சீமின்யாங்கணுங் கறைகெழுநல்லூர்க்கறைவீடுசெய்ம்மெனவழும்பில்வேளோடாயக்கணக்கரை முழங்குநீர்வேவிமூதூரேவி... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... வடதிசை வணக்கிய மன்னவ ரேறென1 ஈண்டு, நகர்ப்புறத்துப் பிறமன்னர் தங்கவமைந்த மாளிகையைத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளாவிக் கோ மாளிகை; யென்றதை, இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து, நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க், கமழுந்தாழை கானலம் பெருந்துறைத தன் கடற்படப்பை நன்னாட்டுப்பொருந2 என்னும் காக்கை பாடினியார் நச்செள்ளையார் வாக்கொடுமொத்து நோக்க, வஞ்சி கடற்கரையூர் என்பதினிது விளங்குவதாகும். வஞ்சி மூதூர் அகநகரும் புறத்துறைப் பட்டினமுமாகப் பிரிந்து நின்றதை முன்னமே குறித்துள்ளோம். இவ் வேளாவிக் கோமாளிகை வஞ்சி மூதூர்ப் புறத்தமைந் தெனவே, இதனைப்பட்டினப் பக்கத்திற்கடற்கரையோரமமைந்துளதாகக்bகாள்வதியல்பாகும். சேரநாடடு மேலைக்கடற்கரையோ, பிறநிலம்nபாலன்றி,இன்றுவரைbதங்கொடுபலவும்தீங்கனிபலவும்தங்கியவயலும்நின்றுbசழிக்கும்படப்பை...3 வளநிலைமாவதறிவோம். ஆகவே வஞ்சிப்புறத்துறையில் ஆழ்ந்த கடனீரே வேலியாக்கொண்டு, வளமலிசோலை நடுவே நிற்கும் வேளாவிக்கோ மாளிகை என்றடிகள் குறித்ததன்றி, இவ்விடத்து ஐயங்காரவர்கள் சொல்லுமாறு,1 தாழ்நீரைப் பொய்கை என்று வலிந்து பொருள் கொண் டெப்படியுமிவ்வூர்க் கடற்கரைச் சம்பந்தத்தை மறைப்போ மென்று முயலுதல் ஈண்டு எவ்வளவு பொருந்துமென்று நடுவுநிலை வாதிகளே தீர்மானிப்பார்களாக. அன்றியும்மாந்தரால் இயற்றப் பெறாப் பெரு நீர்நிலையே பொய்கையெனப்படும். கடலணு காவுண்ணாட்டுக் கருவூரானிலையே வஞ்சியாமாகில், கடலை மறைக்க ஐயங்காரவர்கள் கொண்ட வேளாவிக் கோமாளிகை சூழ்ந்து நின்ற பொய்கைதான் யாண்டுளது? இனி யிவ்விடர் கடக்க, இடைக்காலத் திப்பொய்கையு மழிந்து நிலமாயிற்றென லின்றியமையாததாகும். ஆனால் சரிதபரம்பரையிலிவ்வாறு கருவூரருகே பெருநீர்நிலையொன்று நின்று மறைந்ததான கதையுமே காணேம். இதுவுமன்றி, அடிகள் யாண்டும் தந்நூலில் ஏரி அல்லது ஆறு கூறுமிடத்ததனை யாழ்ந்த நீரென்றழைக்கக் காணாமையோடு, கடல் குறிக்குந்தோறும், ஆழ்ந்த நீரெனும் பொருள் தருமடையேபெய்தமைக்கும் வழக்குடைய ராகவும் தெரிகின்றது. இதனை மூவேறிடங்களில் அடிகள் கடல்கூறும் வாக்கின் போக்காலுதகரிப்போம். சந்தின் குப்பையுந் தாழ்நீர் முத்துந் தென்ன ரிட்ட திறையொடு கொணர்ந்து2 வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக் குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம்3 பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ்நீழ் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளா விக்கோ மாளிகை . . . . . . .4 இவை தம்மில், முதலிரண்டு காதைகளிலும் முறையே ‘தாழ்நீர்’, குண்டுநீர் என்பவை கடலையே விசேடித்திருக்க, இந் நடுகற்காதையில் மட்டும் தாழ்நீர்வேலி என்பது கடல்குறியா தெனல் உரைமரபாமா? இஃதெவ்வாறாயினும், இவ்விடத்திற் சிறிதுகீழே, கைகெழு நல்லூர்க்கறைவீடு செய்ம்மென, அழும்பில்வேளோ டாயக் கணக்கரை முழங்குநீர் வேலி மூதூரேவி எனக் குறித்த மூதூர் யாதாம்? அரசன் அத்தாணி மண்டபத்தே கொலுவிருப்பான் தன் குடிகளின் வரிச்சுமையை நீக்குமின் என்று தன்னமைச் சனையுங் கணக்கரையும்பணித்து அது முடிப்பானவரை யங்கிருந்து ஊருக்குள்ளனுப்பினானாதலான், அவ்வூர் வஞ்சி மூதூரேயாகல் வேண்டுமென்ப தொருதலை யன்றோ? ஈண்டு, இம்மூதூர், முழங்கு நீர்வேலியுடைத்தென வடிகள் கூறவு மிதனை யுண்ணாட்டூ ரெனக் கொண்டு மமையாதே, சிலப்பதிகாரத்தி லிவ்வூரின் கடற்கரைச் சம்பந்தமே கூறப்படவில்லையெனவுந் துணிந்து கூறவருவார்கள் மனவலி சிறி தன்றாகும். இஃதுணர்ந்து வைத்தும், செங்குட்டுவன் சரித நூலார். இம் முழங்கு நீர்வேலிமூதூர் என்பதற்கு, நீர்வளமிக்க நகரங்களில் என்ற மட்டே பொருள் கூறிச்செல்வார். அடிகள் ஈண்டுக் கடல்குறியாது நீர்வளமொன்றே கருதினராயின், அக்குறிப்பைச் செவ்வையாய்ப் புலப்படுத்தமறந்ததுமன்றி, அதற்குமாறாக, முழங்குநீர்வேலி என்று பயனில் பலசொற் பெய்து வைப்பானேன்? ஆம்பிராவதி நதியையுமணு காதுநிற்குங் கருவூரானிலை, முழங்குநீர்வேலி மூதூராமோ? ஆகா தென்றறிந்து, இவ்வாறு நீர்வளமிக்க வூர்ப்பொதுவாகப் பொருள்காணல் ஈண்டு அடிகள் வாக்கின் போக்கோடமை தாமா? அரசன் குடிகளின் வரிகளை நீக்கப்பணித்தகாலை, நீர்வளமிக்க நகரங்களை மட்டுஞ்சுட்டிப் பிறவூர்களை மறப்பதேனோ? இதற்காகவே, குட்டுவன் சரிதநூலார் நீர்வளமிக்க நகரங்களிலும் மற்றையூர்களிலும் என்று கூட்டியுரைத்து வைத்தார்போலும். ஊரூராக வமைச்சனையுங் கணக்கரையு மேவினதாக்கொள்ளப் பாட்டிடந்தரவில்லையே? வடயாத்திரைக்குப் பறைசாற்றுவித்தது வஞ்சிமட்டிலாமாகில், வரிவஜாவுத்தரவை யூருராச் சென்று சொல்ல அமைச்சனை யனுப்புவ தின்றியமையாததெப்படியோ? கறை கெழு நல்லூர்க் கறைவீடு செய்ம்மென... ... முழங்கு நீர் வேலி மூதூரேவி என்பதே மூலம். இதற்குச் சுங்க முதலிய வரி மிகுந்தவூரில், வரி நீக்கப் பணித்த தன்னாணையை மேற்கொண்டு, அதை நிறைவேற்றுமாறு அவசியமான கணக்கெடுத்தும், கீழ்த்தொழிலாளரை வேண்டியாங் கனுப்பியும் வேண்டுமேற்பாடு செய்யுமாறு அரசன் தன்னமைச் சனையுமாயக்கணக்கரையுந் தன் கொலுமண்டபமிருந்து மூதூரென்றழைப்ப தன்றி, ஒரு நாட்டில் வரிவஜாப் பண்ண நினைக்கும் பட்டி முற் பட்டின மீறாப் பல தரவூர்களையும் பொதுப்பட மூதூருக்குள்ளேவினான், என்ற மட்டே நேர் பொருளாகு மன்றோ? அன்றியுமடிகள், தந்நூலில், மணி மேகலையிற் போலவே புகார், மதுரை, வஞ்சியெனு முடிவேந்தர் மூவர் பேரூர்களையே மூதூரென்றழைக்கும் வழக்கறியேம். மேலும், ஓர் ஊரின் நீர்வளத்தை மட்டுங் குறிக்குங்கால், முழங்குநீர்வேலிமூதூர் என்று சிலப்பதிகாரத் தேனு மடிப் பட்ட பழநூல்களிலேனும் வேறு பிரயோக முண்டோ? முழங்கு நீர் என்னுமடை கடலையே குறிப்பது வெள்ளிடை மலை யன்றோ? தங் கொள்கைக்கு முரணுமிடத் தெல்லாம் வலிந்து புத்துரை கொள்ள முயல்வது பிடிவாதிகளின் வழக்கமெனினும் ஆன்றதமிழ்ப் புலமைவாய்ந்த ஐயங்காரவர்களிவ்வாறு கூறலாமா? இவ்வஞ்சி கடற்கரையிற் பொருநைக் கழிமுகத்தூ ரென்பதைப் பிறிதோரிடத்தில் அடிகளிதனினுந் தெளிவாக விளக்கியுள்ளார். வடதிசைச் சென்று, தண்டமிழிகழ்த் தவாரிய வரச ரமர்க்களத் தழியவென்று, பத்தினிப் படிமத் திற்கிமயக்கற் கொண்டு, கங்கையில் நீர்ப்படைசெய்து, வெற்றி முரசுடன் மீளத்தன் வஞ்சி நகருக்குவந்த செங்குட்டுவன் நல்வரவையும், அப்போதவன் கோநகர்க்குடிகள் பலரு மவனை வாழ்த்தியெதிர்கொண்ட சிறப்பையும் பின்வருமாறு வருணிக்கின்றார்: குடதிசை யாளுங் கொற்ற வேந்தன், வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத் தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு நிதிதுஞ்சு வியனகர் நீடுநிலை நிவந்து ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டுவழ்த்த, ...... ... ... ... ... ... ... ... ... ... ... ... தண்ணம் பொருநை யாடுந ரிட்ட வண்ணமுஞ் சுண்ணமு மலரும் பரந்து விண்ணுறை விற்போல் விளங்கிய பெருந்துறை ... ... ... ... ... ... ... ... ... ... ... ... குருகலர் தாழைக் கோட்டுமிசை யிருந்து, வில்லவன் வந்தான் வியன்பே ரிமயத்துப் பல்லா னிரையொடு படர்குவிர் நீர்எனக் காவல னானிரை நீர்த்துறை படீஇக் கோவல ரூதுங் குழலின் பாணியும், வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக் குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை(யில்), வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம் கழங்காடு மகளி ரோதை யாயத்து வழங்குதொடி முன்கை மலர வேந்தி வானவன் வந்தான் வளரிளமுலை தோணல முணீஇய தும்பை போந்தையொடு வஞ்சி பாடுது மடவீர் யாம்எனு மஞ்சொற் கிளவிய ரந்தீம் பாணியும் ஓர்த்துட னிருந்த கோப்பெருந் தேவி வால்வளை செறிய, வலம்புரி வலனெழ, மாலை வெண்குடைக்கீழ் வாகைச் செவ்வியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து குஞ்சர வொழுகையிற் கோநக ரெதிர்கொள வஞ்சியுட் புகுந்தனன் செங்குட் டுவனென1 ஈண்டுத் தடித்த வெழுத்துவரிகளைச் சிறி தாழச் சிந்திப்பார் வஞ்சி, பட்டினமென்பதற்குப் பிறசான்றெதுவுந் தேடார். கோநகரானிரையைப் பொருநை நீர்த்துறைப்படுத்தி நிற்குங்கோவலர், தங் காவலன் வரவுகேட்டு மகிழ்வார், அவன் வடநாட்டு விஜயத்திற் கவர்ந்துடன் கொடுவரும்பசுத்திரள் தங்கள் செல்வத்தைப் பெருக்குமெனத் தருக்கி மிகக்களித்துப், பொருநையாற்றின் 2கழிமுகத்தே கடற்கரைத் தாழைக் கோட்டு மிசையேறியிரந்தூதுங் குழலிசையுங் நடுவூர்க் கொடி மதிலலைக்கும் ஆற்று மணலை வெறுத்தலைவாய்க்கடல் மணலிற், புன்னையடி நிழலில் அக்கடல் கொழித்த முத்தே கழங்கா வைத்து விளை யாடும் பெண்டிர்கூட்டத்தே வானவன் வருஞ்செய்தி கேட்டோர் அவனை வாழ்த்திப் பாடுமிசையும் ஓர்த்துடனிருந்த கோப்பெருந்தேவி வால்வளை செறிய வலம்புரிச் சங்கார்ப்ப யானைமிசைப்பொலிந்து செங்குட்டுவன் வஞ்சியுட் புகுந்தனன் என்பதே மேற்குறித்த சிலப்பதிகாரச் சீரிய அடிகளின் நேரிய பொருளாகும். இதில், கோநகர்க் கோவலர் தாழைக்கோட்டு மிசையிருந் தூதின ரெனவும், வேலைவாலுகத்துக் குண்டு நீரடை கரைக் குவையிரும் புன்னையடியில் வலம்புரியீன்ற நலம்புரி முத்தைக் கழங்காடு மகளிரெனவும், அடிகள் நெய்தற் கருப்பொருள்கள் சுட்டி அதனாற் கடற்கரையணிமை விளங்க வைத்ததுவுமன்றி, நீராடுவோரிடு சுண்ணமு மலரும் பரந்து விளங்கிய பொருநைநதி சங்கமிக்கும் பெருந்துறையென்றும், “வேலை1 வாலுக2த்துக் 3குண்டுநீரடைகரைக் குவையிரும்புன்னை (யடியிற்) கழங்காடு மகளிரோதையா யத்தந்தீம்பாணி அந்தப் புறத்திருந்த கோப்பெருந் தேவியைக் களிமகிழ்வூட்டிய தென்று கூறி, அதனா லிவ்வாறு செங்குட்டுவனை வரவேற்ற வஞ்சி -இப்பொருநை யாற்றின் கழிமுகத்தே, கடலங்கரைமேற் கோநகரேயா மென்பதையு மையமறவிசதப் படுத்தியிருக் கின்றனர். பின் நடுகற் காதையி லிவ்வூரைத் தாழ்நீர்வேலி, மூதூரெனச் சுட்டுவதே போலீண்டுமிதைக் குண்டுநீரடைகரை என்றிதன் கடற் சம்பந்தத்தை விதந்து கூறியுள்ளார். இனி யெடுத்த கொள்கைக் கேற்றபடி பழைய பாட்டுக்களுக்குப் பொருள் காணவல்லார் சிலரிவ்வரிகளுக்கு, இவ்வாறு செம்பாகமாகப் பொருள் கொள்ளாது கடற்கரை மணலிற் புன்னைமரத்தடியில் வலம்புரி யீன்றமுத்தை, உண்ணாட்டூரான கருவூரானிலை மகளிர் கொண்டு கழங்காடுவார், செங்குட்டுவனை வாழ்த்தி யேத்தினர் என்று கூறக்கூடும்; அது பொருளன்மை தெளித லெளிது. எதிரேற்றுப்பாடும் வஞ்சிமார் வஞ்சியூருடையார் என்பதும், அவர் பாடியதும், பாடுமுன் கழங்காடியதுமவ்வூர்ப் பாக்கத் தென்பது மிவ்வரிகளில் மறுக்கொணா வெளிப்படை. திருவானிலையருகாம்பிராவதியே பொருநையாமாகில், அவ்வூர் மடவார் அவ்வாற்றிற் பிறக்கு மணிமுத்தைக் கழங்காடினரெனப் பாடாமல், கடன்மணலிற் பிறந்த முத்தெனக் கூறக்காரணம் வேண்டும். சேரருக்குத் தங்கோநகரணுகா முத்துப் பிறக்குங் கடலுரிமை யீண்டுவிதந்திப் பெண்டிர் வாயிலாக் கூறிவைக்க அடிகள் கண்ட சிறப்புடைமை யாதோ? அன்றியும், முத்தீனுஞ் சங்கு, புன்னைமரத்தடிதேடி ஈனுவதற்கவசியமு மதிற்பெருஞ் சிறப்பு மென்னோ? இதுவுமன்றி, இக் கவியில், பெண்டிர் தத்தமனைகளிற்றனியே கழங்காடி நின்றார். செங்குட்டுவனைப் பாடினதாகக் காணவுமில்லை. கழங்காடு மகளிரோதை யாயத்துப் பாடும் பாணி யென்றதனால் அவர் பலரும் காவலன் நல்வரவு கேட்டுப் பாடு முன் அவர்கூடி விளையாடி நின்ற தோரிடமுண்மை குறிக்கப் படுகின்றது. அவ்வாறம்மகளிராயத்தார் குழுமி விளையாடிய விடத்தை யீண்டடிகள் வருணித்தாரென்ப தல்லால், கெடவரலில்1 மடவரலார்2 கழங்காகக்கொண்டு விளையாடிய முத்தை, அது பிறந்தவிடத்தழகை விரிப்பதனால் வருணித் தாரென்ப தடிகளின் செவ்விய கவிப்போக்குக் கெட்டுணையும் பொருந்தாவொன்றாம். மேலும், முத்துப் பிறக்குமிடம் பலவற்றுட் கடலொன்றேயாகவும், புனனாட்டுக் காவிரிப் படப்பைக் கருவூர் மகளிர் விளையாட்டைப் புகழவருவார். திடீரென முன்பின் யாதொரு சம்பந்தமின்றி வறிதேகிடந்த கடலை வலியவிழுத்து வருணிப்பாரோ? ஆகவே, கோதையை3 வரவேற்ற மாதரார், கோநகர்ப்புறத்தே, பெருங் கடலடைகரை யொருங் கிருந்தாடிய பெற்றியே யிவ்வடிகள் சுட்டியதாக வேண்டுமென்பது தெளியக் கிடப்பதன்றோ? தெளியவே, அக்கோநகர்ப் பெண்டிர் கூடி விளையாடுதற்கான வெண் மணலடை கரைத்துறையே வஞ்சி முன்றுறைப் பட்டின மென்பதும் வெள்ளிடை மலையே யன்றோ? ஈண்டிவ் வஞ்சிப் பட்டினம் பொருநைக் கழிமுகப் பெருந்துறையென் றடிகளினிது விளக்கியதால், சேரர்கோநகர்ப் புறமதிலலைக்கு மாந் பொருநை யீண்டடிகள் சுட்டிய அலிமுகப் பேராறேயன்றிக் கடல்தொடாக் காவிரிச்சிறுதுணையாம் பிராவதியாகாதென்பது மலையிலக்காம். இவ்வாறு கடற்கரை வஞ்சி காவிரியரு கானிலை யாகாதென விளக்குமிவ்வடிகள் வாக்கொன்றே, பேராறு நிலமிழியுமிடத்தே நிற்கும் அலைதழுவாமலை மடிமேற்றிருக்கரூரே வஞ்சியென்னும் ஸ்ரீகனகசபைப் பிள்ளையவர்கள் கருத்தையு மறுத்து நிற்கும்... இன்னும், சேரர் சிறப்பே கூறும் பதிற்றுப்பத்தில் நெடு மலை நாட்டின் குடகடனலமும், அக்கடலின் அடைகரைப் படப்பைச் செழுநிலச்செவ்வியும், அந்நிலத்தில் வஞ்சிப் பட்டின வளமும், விரிக்கும் பாக்களும் பலவாம். அவையிற்றிற் சிலவற்றை மட்டு மீண்டு காட்டுவாம்: இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற் பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளு மல்குறு கான லோங்குமண லடைகரை தாழடும்பு மலைந்த புணரவளை ஞால விலங்குநீர் முத்தமொடு வார்துகி ரெடுக்குந் தண்கடற்படப்பை மென்பா லனவும்1 உறுகா லெடுத்த வோங்குவரற் புணரி நுண்மண லடைகரை யுடைதருந் தண்கடற் படப்பை நாடுகிழ வோயே,2 கடலொலி கொண்டு செழுநகர் நடுவ3 கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு விழவறு பறியா முழுவிமிழ் மூதூர்4 துளங்குநீர் வியலகங் கலங்கக்கால்பொர விளங்கிரும் புணரி யுருமென முழங்குங் கடல்சேர் கானற் காணற் குடபுல முன்னிக் கூவற் றுழந்த தடந்தா ணாரை குவியிணர் ஞாழன் மாச்சினைச் சேக்கும் வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பி னடும்பம் லடைகரை யலவ னாடிய வடுவடு நுண்ணயி ரூதை யுஞற்றுந் தூவிரும் போந்தைப் பொழிலணிப் பொலிதந்து,1 இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க் கமழுந் தாழைக் கானலம் பெருந்துறைத் தண்கடற் படப்பை நன்னாட்டுப் பொருந2 ஈண்டிறுதியிற்காட்டிய நச்செள்ளையார் அடிகளையும், பின்வரு மடிகளின் சிலப்பதிகாரவடிகளையு மொத்துநோக்க, கடல்சேர் கானற் குடபுலத்தே, வஞ்சியாம் முழங்குநீர் வேலி மூதூரில், இரங்கும் பௌவத்து நன்கல வெறுக்கைதுஞ்சு மழகின் செவ்வியினிது விளங்கும். குடதிசை யாளுங் கொற்ற வேந்தன் நிதி துஞ்சு வியனகர் அளந்துகடை யறியா வருங்கலஞ் சுமந்து வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து3 என்பன விவ்வஞ்சிப்பட்டின வளங்குறிக்கு மிளங்கோவடிகள் வாக்காம். இனி, வஞ்சிமாநகரம் கடற்கரைக்கண்ணதாயின் “... ... மணிமேகலை முதலிய முன்னூல்கள், உடனொத்த புகார் கொற்கை முதலிய பட்டினங்களைப்போலவே வஞ்சியையும்தன் கடல் வளச்சிறப்பால் வருணித்துக் கூறாமற் போகுமா? ஒருகாலு மில்லை”4 என்ற செங்குட்டுவனூலுடையாருக்கு, வஞ்சி வருணனை யடங்கிய மணிமேகலை 28ஆவது காதைவரிகளைச் சிறிது நினைவுறுத்த விடையேற்பாம், உண்ணாட்டூராய மதுரை நலங்கூறு மூர்காண்காதை போலல்லாது, நெய்தனலம்பேணி, அந்நிலக்கருப்பொருள் பலவுஞ் சுட்டிக் காவிரிப்பூம்பட்டின வளம்பலவிரித்த நாடகக் காப்பியத்தின் இந்திரவிழவூரெடுத்த காதை வரிகளையும், வஞ்சிவளங்கூறுஞ் சாத்தனார் நூலிற் கச்சி மாநகர் புக்ககாதை வரிகளையு முடனொத்து நோக்குவார்க்கு, வஞ்சியும் புகாரேபோற் பட்டினமாம் என்பது வெள்ளிடை மலையேயாம். மணிமேகலைநூலை வெளிப்படுத்தியுபகரித்த மகாமகோ பாத்தியாயரவர்கள், இப்புத்தக முதற்பதிப்பில் 272ஆம் பக்கத்தில் இக்காதையின் 29ஆம் பக்கத்தில், முதல் 68 வரையுள்ள வரிகளுக்கும், சிலப்பதிகார இந்திரவிழாவூர்க்காதை 7 முதல் 58 வரையுள்ள வரிகளுக்குமுள்ள ஒற்றுமை நலத்தை விதந்தெடுத்துச் சீர்தூக்கிப் பாராட்டியு முள்ளார்கள்.1 பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநகர் கண்ணொடை யாட்டியர் காழியர் கூவியர் பைந்நிண விலைஞர் பாசவர் வாசவர் செம்புசெய் குநருங் கஞ்ச காரரும் பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லரும் மரங்கொ றச்சரும் தோலின் றுன்னருந் துன்ன வினைஞரும் பால்வே றாக வெண்வகைப் பட்ட கூலங் குவைஇய கூல மறுகும் இலங்கு மணிவினைஞர் இரீஇய மறுகும் விலங்கரம் பொரூஉம் வெள்வளை போழ்நர்2 மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர் காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர் பாசவர் வாசவர் பன்னிண விளைஞர் கஞ்ச காரருஞ் செம்புசெய் குநரும் பொன்செய் கொல்லரு நன்கலந் தருநரும் மரங்கொ றச்சரும் துன்ன காரருந் தோலின் றுன்னரும் பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலங் குவித்த கூல வீதியும் திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு அணிவளை போழுந ரகன்பெரு வீதியும்3 நெய்தற்கருப்பொருள் சுட்டிய நாற்கவிராசநம்பி அகப் பொருள் விளக்கம் 24ஆம் செய்யுளையும், தொல்காப்பியம் பொருளதிகாரம், அகத்திணையியல் 18ஆம் சூத்திரத்தின்கீழ் நச்சினார்க்கினியர் குறிப்பும் ஒப்புநோக்கின், மேற்கண்ட வஞ்சி வருணனை அவ்வூரைப் பட்டினமாக்கி நிற்ப தினிது விளங்கும். அலை தாலாட்ட மலைமடிவளரும் வானவர் நாட்டில், கடலுங்கானமும் பலபய முதவ1 மலையவுங் கடலவும் பண்ணியம்2 மலிந்தவை வஞ்சியினிறைந்த வளஞ்சொலும் புலவர் மணிபல்லவத்திலிருந்து விசும்பாறாக வந்திறங்கிய மணிமேகலை, “... ... வானவன் வஞ்சியின் ... ... பன்மீன் விலைஞர், வெள்ளுப்புப் பகருநர், ... ... விலங்கரம் பொரூஉம் வெள்வளைபோழ்நரோ டிலங்குமணி வினைஞரிரீஇயமறுகும். புதுக்கோள்யானையும், பொற்றார் புரவியும், கதிக் குறவடிப் போர் கவின்பெறு வீதியும், சேணோங்கருவி தாழ்ந்த செய்குன்றமும், வேணவாமிகுக்கும் விரைமரக்காவும் விண்ணவர்தங்கள் விசும்பிடமறந்து நண்ணுதற் கொத்த நன்னீரிடங்களும் கண்டு மகிழ்வுற்றதாகக் கூறியுள்ளார். இவ்வருணனை வஞ்சி கடற்கரை யூரென்பதைத் தெளிவாக்க வில்லையெனில், இவ்வரிகள் பயனில் கூற்றாக வேண்டும். சிலப்பதிகாரத்தில், மதுரை வளம் விரித்துள பகுதியிலிவ்வாறு எனைத்தும் கூறப்படாததோடு, பட்டினமாய பூம்புகார்ப் பகுதியிலிஃதேபோற் கருப் பொருணல மெடுத்தாளப்பட்டு முளதென்று மேலே கூறினாம். அடிகளோ மற்றிருமுடிவேந்தர் மூதூர்களைப்போல வஞ்சியூர் நலம் வருணித்திலர்; வருணிக்கக் காரணமுமில்லையென்பது மேலே காட்டியுள்ளேம். ஆகவே அடிகள் கூறிய புகார்ச் சிறப்பும், சாத்தனார் வஞ்சி வருணனையுமே ஒத்துநோக்கக் கிடைப்பன வாயிற்று. இவையிரண்டிடத்தும், இருநகரும் பட்டினங்களே யென்ப திவ்விருபெரும் புலவரானுந் தெளிவாக்கப் பட்டுள்ளது. இவை தம்மிலொன்று பட்டினமன்றேல், மற்றது முண்ணாட்டூரே யாகல் வேண்டும். புதுக்கோள்யானை கதிக்குறவடித்தல்3 இன்று வரை மலையாள நாட்டில் நடைபெறுந் தொழிலா மன்றோ உமணரமைக்கும் கடலுப்பும், ஆண்டறுக்குஞ் சங்கு வளையும், இலங்குநீர் முத்தமொடுவார்துகிர்1 எடுக்குந்தண் கடற் படப்பை மென்பாலனவும்2 புதிது புதிதாப் பிடித்து நடைபயிற்று மானை நிரைகளும், வேழத்துவேண்கோடு கொண்டு, பிழி நொடை கொடுக்கும்”3 பெற்றியும், குன்றுதலை மணந்ததண் கடற் படப்பை வளங்குறிப்பதல்லாற் பிறிதுண்டோ? வேணவா மிகுக்கும் விரை மரக்காவும், விண்ணவர் தங்கள் விசும்பிட மறந்து நண்ணுதற்கொத்த நன்னீரிடங்களும், தென்னாட்டில் தெங்கொடு பலவுந் தங்கிய படப்பை மாறாவிளையுட் பேராறூட்டுங் குடகடலடை கரையையே சுட்டுமன்றோ? இன்னும் ஐயங்காரவர்களே வஞ்சிச் சேரனாகத் தஞ்சரித நூலிற் குறித்திருக்கும் செங்குட்டுவன் றந்தை நெடுஞ்சேரலாதனை, கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு விழவறு பறியா முழவிமிழ் மூதூர்க் கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமித்துச் சீர்பெறு கலிமகி ழியம்பு முரசின் வயவர் வேந்தே. ... ... 4 என்று குமட்டூர்க் கண்ணனார் பாடியுள்ளார். ஈண்டவன் மூதூர் வஞ்சிக்கடையான முதன் மூன்றுவரிகளும், மலை, கடல், மலை - நாட்டாறுகள் தரும் வளம் பலவு மவ்வூரகத்தே நிறைவதாக் குறித்திருப்பது மிக்கருத்துக் கொண்ட பொருத்த மானவுண்மை நவிற்சியன்றோ? அன்றியும், பதிற்றுப்பத்துரைகாரர் அறா அ விளையுள் அறாஅ யாணர்’5 என்ற வடியின் கீழ், அறா அயாணரென்பதற்கு, இடையறாத கடல் வருவாய் முதலிய செல்வங்கள் என்றெழுதியிருப்பதும் கவனிக்கத்தக்கதாம். இன்னுமிவைவிரிப்பிற் பெருகுமென்றஞ்சி நிறுத்துவாம். இவை பலவும் சிந்திப்பார் யாரே கடற்கரைச் சம்பந்தம் வஞ்சிக்குக் கொஞ்சமும் காணப்படாமையே, அஃதுண்ணாட்டு நகரா மென்பதை விசதமாக்க வல்லது, என்னும் ஐயங்காரவர்கள் கட்டுரையை ஆமோதிப்பார்? பகுதி 8 : சேரரைப்புகழும் பழங்கவிகளில் மலைநாட்டாறுமலைகள் பாடப் பெற்றுளவா? இன்னுமிவர்கள், தம்நூலின் 129ஆம் பக்கத்தில் வஞ்சி திருவஞ்சைக்களமாயின், அம்மலை நாட்டு நதியொன்றையும் பரணர் செங்குட்டுவனுக்குவமிக்காமல், மேற்காட்டிய (கரிவிரி - காஞ்சி) ஆறுகளையே கூறிச்செல்வதற்குத் தக்ககாரணம் வேண்டு மன்றோ என்றெழுப்பிய வினாவையுஞ் சிறிது விசாரிப்பாம். சேரர் பெருந்தகைக்குப் பரணருவமித்திருப்பதாக இவர்கள் கண்ட புனனாட்டாறி ரண்டு: காவிரிக்கூடலும், காஞ்சி நதியுமே, முக்கூடலனையை என்பதையு மதன் குறிப்பையு மேலே விவரித்துள்ளேம். ஆங்குக்காட்டியபடி முக்கூடலென்பது காவிரி யாம்பிராவதிக் கூட்டமாகாதென்பதும், காவிரியைச் சொன்னது அஃதுடைய சோழரைச் செங்குட்டுவன் வென்ற பெருமை தோன்றப்பாடும் பண்டைமுறையென்பது மறிந்தோம். இனிக் காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே என்னுமடி கொண்டு, அது கருவூர்ப் பிரதேசத்துள்ள நொய்யல் அல்லது காஞ்சிமாநதியைக் குறித்ததாகக் கொள்வது துணிந்த முடிபென்றும் தோற்றவில்லை. கருவூரே வஞ்சியெனவும் செங்குட்டுவனுக்கு மேல்கடல் தொட்டுக் கருவூர்வரை கிடந்த நிலமே நாடாயிற்றெனவுங் கட்டுரைத்த ஐயங்காரவர்களும், காவிரி சங்கமிக்குங் கீழ்க் கடலும், காவிரியும் வளவருக்கேயுரிய வென்பார்கள். சோணாட்டின் மேற்கெல்லை கரூவூர் என்னும் யாப்பருங்கலக்காரிகை உரைகாரர் மேற்கோளுங்காட்டி, அதன் வாயிலாக அக்கருவூருக்கு மேற்குச் சேரநாடேயெனத் தங்கோ ணாட்டினார்கள்.1 எனவே, கீழ்கடல் சேரன் கடலாகா தென்பதும், குடகடலொன்றே யவனுக்குரியதென்பது மொருதலை. மேலும் நொய்யலாறு ஆம்பிராவதிபோல் காவிரியிற் கலக்குமொரு துணைச் சிற்றாறாவதன்றிக், கடலிற் சங்கமிக்குந் தனியாறன் றென்றும், இந்நதி (நொய்யல்) ஈரோடு கருவூர்த்தாலுகாக்கள் கூடுமிடத்து நெய்க்குப்பத்தருகில் காவிரியுடன் சங்கமமாகிறது2 என்றும் தம் புத்தகத்தில் வரைந்து முள்ளார்கள். ஈண்டுக் காஞ்சிசுட்டும் பரணர் அடிகளைக் கவனிப்பாம். நின்மலைப் பிறந்து நின்கடன் மண்டு மலிபுன னிகழ்தருந் தீநீர் விழவீற் . . . . . . .. . . . .. . . . . . . . தீம்புன லாய மாடுங் காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே,1 இவ்வடிகளாற் பரணர்பாடிய காஞ்சி, சேரன் மலையி லெழுந்து சேரன் கடலிற் சங்கமிக்குமொரு நதம்2 என்பது தெளிவாகின்றது. ஐயங்காரவர்களின் காஞ்சியென்ற நொய்யலாறோ கிழக்கோடும் நதியாதலான் மேலைக்கட லெட்டியும் பாராதே? உபசாரார்த்தமாகச் சோழனை வென்ற செங்குட்டுவற்குக் கீழக்கடலு முரித்தெனக் கொள்ளினுங்கூட நொய்யலாறக்கடலையுமணுகாதே, கருவூருக்கு நெடுந்தூரம் மேற்கேயே காவிரியிற் கலந்து தன்னிலையிழப்பதாகும். ஆகவே பரணர் அதை நின் ( செங்குட்டுவனின்) மலைப்பிறந்து, நின் கடன் மண்டு மலிபுனற் காஞ்சி என்பரோ? இதனாற் பரணர் பாட்டுடைக் காஞ்சி, மலைநாட்டாறேயாக வேண்டுமென்பது விசதமன்றோ? இதுவேயுமன்றிச் சேரவீரர் சில கவர்வென்றி தோன்றத் தோற்றமாற்றலர் நதிமலைகளைச் சிற்சிலவிடங்களி லுவமித் திருப்பதல்லாற், பெரும்பாலும் பதிற்றுப்பத்து, சிலப்பதிகார முதலிய முன்னூல்களிலெல்லாம், சேரருக்குரிய கடலையும், மலையையும், மலைநாட்டாறுகளையுமே பலபட விசேடண மாக்கிப் பழம்புலவர் பாடியுள்ளார். பதிற்றுப்பத்தில், சேரரை யவர் புணரிபுணர்த்திப் புகழ்ந்துளபாக்களை மேலே காட்டினேம். அவர் மலை நாட்டாறுகளில், காஞ்சிபற்றிப் பரணர் பாட்டையும் பார்த்தாம். இனி மேற்குமலைத் தொடரி னின்றிழிந்து, மலைநாடு சுரக்கவூட்டி வஞ்சியிற் சங்கமிக்கும் பேராறு பற்றிய சில வரும்பழந் தொடர்களை மட்டுங்காட்டி மேற் செல்வேம். இப்பேராறு, மேற்குமலைத் தொடரினடி வாரத்துள்ள திருக்கருவூரருகே மலைவிட்டு நிலந்தொட்டு, மேற்கோடி, கடல்சேரு மலைநாட்டு நதியென்பதை ஐயங்காரவர்கள் தன் சரித நூலில் ஒப்புக் கொண்டுள்ளார் களாதலான்,1 இவ்வாறு கூறும்பாக்களிலேனும் மலை நாட்டாறுவமை யுண்மை சூட்டுவன் சரித நூலாரும் மறுக்கற் பாற்றன்றாவ தொன்றாம். இனையினிது தந்து விளைவு முட்டுறாவது புலம்பா வுறையுணி தொழிலாற் றலின் வீடுநிலக் கரம்பை விடரளை நிரையக் கோடை நீடக் குன்றம் புல்லென வருவி யற்ற பெருவறற் காலையு நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச் சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇய ருவலை குடீயுருத்து வருமலிர் நிறைச் செந்நீர்ப் பூகலல்லது வெம்மையரிது நின்ன கன்றலை நாடே2 இரும்பணை திரங்கப் பெரும்பெய லொளிப்பக் குன்றுவறங் கூரச் சுடர்சினந் திகழ வருவியற்ற பெருவறற் காலையு மருஞ்செலற் பேராற் றிருங்கரை யுடைத்துக் கடியேர்பூட்டு நர்கடுக்கை மலைய3 மாற்றருந் தெய்வத்துக் கூட்ட முன்னிய புனன்மலி பேரியா றிழிதந் தாங்கு வுருநர் வரையாச் செழும்பஃ றாரங் கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப4 விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன் நெடியோன் மார்பி லாரம் போன்ற பெருமலை விலங்கிய பேரியாற்றடைகரை விடுமண லெக்க ரியைந்தொருங் கிருப்ப5 இனி சேரருக்கேவுரிய, ‘அயிரை’, ‘நேரி’, ‘கொல்லி’, முதலிய பல மலைகளையும், ‘வானி’, அயிரை யாறுகளையு மருக்குவமித்துள்ள பாக்களும் பலவாம்.1 இம்மலைநாட்டு அயிரையாறும் மலையும் சேரருக் குவமிக்கப்பட்டிருத்தல் கண்ட ஐயங்காரவர்கள் வழக்கம் போற் றம்புத்தகம் 139 ஆம்பக்கத்தடிக் குறிப்பொன்றில் இவை சோணாட்டுள்ளன போற்கூறி, மலை நாட்டா றுவமிக்கப்படவில்லை யென்னுந் தங்கூற்று நெகிழாது காக்கு முயற்சியின் பயனைச் சிறிதாராய்வாம். குழித்தலையருகேவுள்ள இரத்தினகிரியை யப்பக்கத்தவர் சிலர் தற்காலத்து ஐயர்மலை யென்றழைப்பதான நூலாதார மொன்றுமில்லாதவொரு நவீனப் பிரதாப மொன்றே கொண்டிதுவே சங்க நூல்களிற் கூறப்படும் சேரரின் அயிரை மலையென்று சாதிக்கத் துணிகின்றார்கள். அதுவேபோல், தந்துணிபை யிடர்ப்படுத்தாவாறு, மலை நாட்டாறெனப் பழ நூல்கள் விதந்துகூறு மயிரையாற்றையும் காவிரியுடன் சங்க மிக்கும் ஐயாறாகத் துணிகின்றார்கள். இதற்காதாரமாவதெல்லாம் அயிரையாறு ... ... காவிரியுடன் மேலணையிற் சங்கமிக்கும் ஐயாறு என்ற நதியாகக் கருதப்படுகிறது என்னுமொரு அடியற்ற அநுமான மொன்றொழியப் பிறிதொன்றுங் கூறிற்றிலர். யாரால், எதுபற்றி, என்றுதொட்டு, இவ்வாறு கருதப்படுகிறது? என்ற இடர்ப்படுத்தும் வினாக்களை யறவே புறக்கணித்தொதுக்கி மகிழ்வார்கள். கரூர் பேராறு என்னுமிரு முழுப்பெயரொற்றுமை கொண்டு, வஞ்சி மேற்குமலைத் தொடரடிவாரத்தூரென்ற ஸ்ரீ கனகசபைப் பிள்ளையவர்களை, ஓசை யொற்றுமையொன்றே கொண்டு வாத முறை பிறழ்ந்தவராகப் பரிகசிக்கும் ஐயங்காரவர்கள், தங்கொள்கைக் கேற்றபடி பெயரொற்றுமையு மில்லாவிடங் களிலும் ஐயர்மலையென்றழைக்கப்படும் இரத்தினகிரியை அயிரை மலையெனவும் ஐயாறு என்பதே அயிரையா றெனவும் பேசுமியல்பும் துணிவும் வியப்பதன்றி மறத்தல்வேண்டா? ஐயங்காரவர்களும் மலைநாட்டு நதமெனப்பேசும் பேராறு, அயிரைமலையைத் தலையாக்கொண்டு ஒழுகப்பட்ட யாறென்று”2 பதிற்றுப்பத்தின் பண்டையுரைகாரர் வற்புறுத்தியுள்ளதைக் குட்டுவன் சரிதநூலார் பண்டிதராகலின் மறந்தனரென்று நினைக்கவுந் துணியேம்; மறைத்ததாக் கூறுங்குறையையும் வெறுப்பேம். ஒருகால் இத்தொல்லாசிரியரையும் தம் கொள்கை யொடு முரணிய அடியார்க்கு நல்லாரை யொதுக்கியதுபோற் சரிதமுறையறியாதா ரென்றுகண்டு அவர் கருத்தைக் கொண்டிலர்போலும். துணிந்த மேற்கோள் பிறிதுகாணும்வரை, எம்மனோர்க்கு இப்பழையவுரை யாசிரியர் கூற்றுபோற்றற்பாற்றாம். அயிரைமலையிவ்வாறு பேராறுற் பத்தியாகு மலையாயின், அது மலைநாட்டு மலையேயாமன்றி, குழித்தலைக் கருகாங்குன்ற மாகாதன்றோ? தொல்லைநல்லாசிரியரெல்லாரும் சேரருக் குவமை கூற எடுத்தாளு மாறுகளனைத்தும் சோழன் காவிரியின் துணைச் சிற்றாறுகளாகவே காட்டும் ஐயங்காரவர்கள் திறமிகப் பெரிதோயாம். இவர்கள் தம் நூலிலெடுத்துக்காட்டிய மேற்கோள்களொன்றேனும் மலையிற் பிறந்து கடலிற் சங்கமிக்குந் தனிப் பேராறொன்றையுங் குறித்ததாயில்லை. பழம்புலவர் சேரருக்குப் பாடிய பொருநை, அயிரை, காஞ்சியென்றனைத்துங் காவிரியிற் கலப்பதாகவே காட்டியுள்ளார்கள். சேரர் பெரு நாட்டில் மேலே காட்டியபடி செங்குட்டுவன் மிக வெறுக்குங் காவிரியிற் கலவாமல், கடலிற்புகும் யாறொன்றுமேயில்லை தானோ? அன்றேல் அக்காலப் புலவரனைவரும், சேரரவமதிக்குங் காவிரிச் சிறுதுணையாறுகளை யவருக்குவமிப்பதேயம் மலையரசர் பெருமைக்கேற்புடையதும் அவரை மகிழ்விப்பது மென்று கண்டுவைத்த மாறாக் கொள்கைதானோ? மேலும் குட்டுவருக்குப் புனனாட்டோர் பகுதி நாடாகவும் அந்நாட்டுக் கருவூரே தலைமை நகராகவும் விளங்கியதாகக் கூறும் ஐயங்காரவர்களே, தம் நூல் 2ஆம் அதிகாரத்தில் மாந்தையென்பது நார்முடிச்சேரலுக்கும், தொண்டி இரும் பொறை மரபினர்க்கும் இராஜதானிகளாக இருந்தன வென்றும், இவ்விரண்டு தலைநகரங்களும் கடற்கரையி லமைந்தவை யென்றுங் கூறியுள்ளார்கள்.1 எனவே கருவூர்ச் சேரருக்குப் புனனனாட்டுக் காவிரித் துணையாறுகளையே பாடுவதொருவா றமைவதாகக் கொள்ளினுங்கூட, இத்தொண்டி மாந்தையூர்களி லாண்ட சேரருக்குரிய பாக்களிலேனும் அவர் நாட்டாறுகளையும் மலைகளையுமே சிறப்பித்துக்கூற எதிர்பார்ப்பது முறையாகு மன்றோ? ஐயங்காரவர்களும், அரசரை அவரவர் தேசத்திலும் நகரத்தோடும் நதிகளோடும் உவமித்துச் சிறப்பித்தல் முற்காலவழக்கு என்றெழுதியுள்ளார்கள்.1 இம்முறை வைத்து நோக்க, அயிரையாறு, அயிரை நேரிமலைகள், வஞ்சிமூதூர் இவைகளனைத்தும் இத்தொண்டிமாந்தைப் பட்டினச் சேரரையே பாடிய கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் பாக்களில்2 சிறப்பிக்கப்பட்டிருக்கக் காண்கிறோம். இஃதொன்றே இவை, தண்கடற் படப்பை நாடுகிழவோரான சேரர்மலை நாட்டே யுள்ளவை யென்பதை விசதமாக்கவல்ல தன்றோ? இவ்வாறன்றி, இவை மேற்குமலைத் தொடருக்குக் கிழக்கே புனனாட்டுளவா மாயின், இந்நாட்டுக்குரியரல்லாத கடற்கரைத் துறைமுகச் சேரரை இவை கொண்டு பாடுவதும், வேறிவர் சொந்தமலை நாட்டாறு மலையொன்றையு முவமியாமையும் விளங்காப் புதிர்களாமன்றோ! கருவூர்ச்சேரர், தொண்டிச்சேரர் எனச் சேரநாட்டில் வேறுவேறு தலைநகரங்களில் இருகுல மன்னர் ஒரு காலத்தே மலை நாட்டைப் பங்கிட்டு ஆட்சிபுரிந்தது போலக் குறிப்பிடும் ஐயங்காரவர்கள் கூற்றையாராயுமிட மிஃதன்றென விடுப்பேம். அஃதெவ்வாறாயினு மிதுவரை கூறியவாற்றால் சேரருக்குரிய மலைநாட்டாறுகள் நதிகள் நகரங்களையே பெரும்பாலும் பழம்புலவர் அவருக்குவ மித்துள்ளார்க ளென்பதும், உவமியாத தாகக் கொண்டு அதனாலவர் மலை நாட்டுரிமை மறுத்துப் புனனாட்டோர் பகுதியுடையராகவும் அவர் தலைநகராம் வஞ்சி மலைநாட்டு வஞ்சைக்களமாகாமற் புனனாட்டுக் கருவூரானிலையேயாகவுங் கருதுவதா ராய்ச்சி முறைக்கு மாறுபட்ட தென்பதும், தெளிவாகின்றன. பகுதி : 9 ஒரு நூற்றுநாற்பது யோசனை விரிந்த தெது? இனி, செங்குட்டுவன், மலைவளங்காண்டல்வேண்டி, பேரியாற்றங் கரை சென்றானென்று சிலப்பதிகாரம் குறிப்பது காட்டி, மேற்குமலைத் தொடரினடிவாரத்துப் பேரியாற்றங் கரையிலுள்ள திருக்கரூரே வஞ்சியாதல் வேண்டும் என்ற ஸ்ரீ கனகசபைப் பிள்ளையவர்கள் கொள்கையை ஐயங்காரவர்கள் மறுப்பது மிகப்பொருத்தமும், யாவருக்கு முடன்பாடுமாம். பிள்ளையவர்கள் கருதியபடி மலைச்சாரற்றிருக்கரூரே வஞ்சியா மாயின், மலைச்சோலை விளையாட்டு விரும்பிய செங்குட்டுவன் வஞ்சி நீங்கி வழிநடந்து வந்துமலை கண்டு பேராற்றங்கரை யிற்றங்கினனென்று இளங்கோவடிகள் கூறுவரோ? மஞ்சு சூழ்சோலை மலைகாண் குவமெனப் ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... வஞ்சி முற்றங்கிச் செல்வோன் ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன், ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ஒருநூற்று நாற்பதி யோசனை விரிந்த பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை நாகந் திலக நறுங்கா ழார முதிர்பூம் பரப்பி னொழுகுபுன லொழித்து மதுகர ஞிமிறொடு வண்டினம் பாட நெடியோன் மார்பி லாரம் போன்று, பெருமலை விலங்கிய பேரியாற் றங்கரை யிடுமண லெக்க ரியைந்தொருங் கிருப்ப1 என்பது மூலம், இதனாற் கிடைப்பன, வஞ்சி, மலையருகில்லா வூரென்பதும், மலைவள மலர்ப்பொழில் விளையாட்டு விரும்பிய செங்குட்டு வன் அதுதேடி மலைவாரப் பேராற்றங்கரை வந்துற்றன னென்பதுமே. இதுவே உண்மைக்கும், பேராற்றின் கழிமுக வஞ்சியமைப்புக்கும், மலைநிலக்கிடப்புக்கும் பொருத்தமுடையதாகும். இதனால், ஐயங்கரவர்கள், வஞ்சி யென்பது ஆம்பிராவதி யல்லது ஆன்பொருநைப் பக்கத்தும் மலை வளமில்லாததுமான கருவூரேயாதல் திண்ண மென்றெவ்வாறு பெற்றனர் களோ வறியேம். கருவூரானிலை மலைவளமில்லாதது செங்குட்டுவன் வஞ்சியு மலைவாரத்தில்லாததே; இவ்வொரு புடையொற்றுமை யாலிரண்டூரு மொன்றெனல் போதருமா றென்னே? மலைவள மில்லாவூ ரெல்லாம் வஞ்சியாமோ? அன்றியும், வஞ்சி மலைச்சாரலில்லாததாயினும், அடிகள் குறித்தபடியே பேராறு மலை யினின்று விலங்குமிடத்திற்கு மிகத் தூரமில்லாத கடற்படுமலி முகத்தூரேயா மென்பர் அடியார்க்கு நல்லார். கருவூரானிலையோ, அவ்விடத்திற்கு வெகுதூரத்திற் புனனாட்டிலிருப்பதாகும். இம்முரண்பாடு கண்ட செங்குட்டுவன் சரித நூலார், சிறிதுந் தளர்கிலர்; கருவூருக்கும் பேரியாற்றங் கரைக்கும் பெருந்தூரமுண்டென்பதை இளங்கோவடிகள் குறிப்பதாகக் கூறியமைவார். முதலில், இக்குறிப்பிருப்பினு மதனாற் கருவூரானிலை வஞ்சியெனப் பெறுமாறில்லை. மலைவாரத் தில்லாத வஞ்சிப்பட்டினம், பேராற்றினுற்பத்தி மலைக்குச் சேய்மைத்தாகலாம். இனி இச்சேய்மைக்குறிப்புத் தானென்னே? மேற்காட்டிய சிலப்பதிகாரக்காட்சிக் காதையடிகளில், ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று என்னுந் தொடர்கொண்டு இந்திரனுக்கே யத்தொடர் விசேடிக்கப்பட்ட தாயினும், அத்தொகையினளவு தூரத்தை அடிகள் சேரன் பிரயாணத்துக்குவ மித்திருப்பது, அவன் சென்று வந்த பேரியாற்றங்கரை வஞ்சிமாநகர்க்குச் சமீபித்ததன்று என்பதை வெளியாக்குமென்பதில் ஐயமில்லை என்று தெளிந்து, இத்தொடர் இந்திரனது யானைப் பரப்பின் தூரத்தைக் குறிப்பதென்பதினும், செங்குட்டுவனது பிரயாண தூரத்தைக் குறிப்பதென்பதே பொருத்தமாகும் என்று தீர்மானிக் கின்றார்கள். இந்திரனுக்கே யத்தொடர் விசேடிக்கப்பட்டதென்று இவர்களே கண்ட பிறகு, இதினின் றெவ்வித விவகாரமு மெழாதெனக் காணாமை யேனோ? இது நிற்க, இந்திரனுக்கித் தொடர் விசேடணமாகா தென்பதேயெங்கருத்து. மேற்காட்டிய அடிகளையுற்று நோக்கின், ஒரு நூற்றுநாற்பது யோசனை விரிந்த என்னுந்தொடர், பேரியாறு விலங்கிய பெருமலைத் தொடரை யேனும், பேரியாற்றி னொழுக்கை யேனுமே விசேடிப்ப தென்றெளிதிற்றோன்றும், பெயர்வோன்போன்று ஆரம் போன்று, ஒரு நூற்றுநாற்பதி யோசனை விரிந்த - பெருமலை விலங்கிய பேரியாறு என்றேனும், பெயர்வோன்போன்று ஆரம் போன்று, பெருமலை விலங்கிய ஒருநூற்று நாற்பதியோசனை விரிந்தபேரியாறு என்றேனுங் கூட்டி முடிக்கப்பொருள் சிறப்பதோடு, கோங்கம் வேங்கை தூங்கிணர்க்கொன்றை யாதி இடைநிற்குந் தொடர்களின் முடிபுக்குமேற்ப முடியும். எவ்வாறாயினும், செங்குட்டுவன் பிரயாண தூரத்தைக் குறிப்பதாகாது. செங்குட்டுவனுக் கித்தொடரை விசேடண மாக்குவதானாலுங்கூட பரந்தொருங்கீண்டி (யஅவன்) பைந்தொடியாயத்தின் பரப்பே குறிப்பதல்லால், அவ்வாயமு மவனுஞ் சென்ற பிரயாண மொத்த தூரத்தைக் குறிப்பதாக் கொள்வதெப்படிக்கூடும்? இத்தொடரின் தொகையளவு மொத்தப் பிரயாண தூரத்தையே குறிக்குமெனக் கொள்ளின், போன வழியளவொன்றை மட்டுமோ, அன்றிப் போய்மீண்ட வழியினிரட்டிப்புத் தூரத்தளவையோ குறிப்பதாகும்? இத்தொடர் செங்குட்டுவன் மேலதாங்கால், அவனுடன் சென்ற ஆயத்தின் பெருக்குநின்ற பரப்பைச் சிறப்பித்த புனைந்துரையெனலா மல்லால், தொகை திட்டமான ஒரு பிரயாண தூர அளவையே குறிப்பதென லெனைத்தானும் பொருத்தமின்றாம். விளையாட்டு விரும்பிச் சென்ற சேரன் தானையொடு பெயர்ந்ததாகக் கவி கூறிற்றில்லை; பைந்தொடியாயமொடு சென்றதாகவே கூறக்காண்கின்றோம். இளங்கோவடிகளிவ் வாயப்பரப்பிற் கித்தனைய பூத கற்பனை சொல்லுமியல்புடையவருமில்லை. இதை நினைத்துப்போலும் ஐயங்காரவர்கள், இளங்கோவடிகள் தம் தமையனது வடயாத்திரையை வருணிக்குமிடத்து”1 இத்தொடர் கூறினதாக அமைத்துக் கொண்டுள்ளார்கள். வடயாத்திரையிற் செங்குட்டுவன் பெருந்தானையொடு பெயர்ந்தானாகவே, தானைப்பெருக்கைத் தானப்பெருக்காற் புனைந்துரைத் தாகவேனுங் கொள்ளக் கருதினர்கள்போலும். எனில் இத்தொடர் வட யாத்திரைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத காட்சிக் காதையிற் பெண்டிரொடு பொழில் விளையாட்டு வேட்டுச்சென்ற சேரன் போய்ப் பேராற்றங்கரையிற் றங்கியதைக் குறிக்குமிடத்துள்ளதேயாம். இன்னுமிவர்கள் தங்கருத்துப்படி இத்தொடரிலுள்ள தொகை சேரன் பிரயாண தூரத்தையே குறிப்பதாக் கொள்வதற்குப் பின்னுமோரிடை யூறுண்மையுங் காண்கின்றார்கள். கருவூரானிலைக்கும் மலைவாரப் பேராற்றங் கரைக்கும் உத்தேசம் 300 மைலாகக்கண்டுவைத்தும், கிடைத்த வொருவரியை யுபயோகியாமல் விட மனந்தாழாது, அடிகளின் ஒரு நூற்றுநாற்பதி யோசனைக்கும் இம் முந்நூறுமைற்றூரத் திற்கு மொற்றுமை சிருட்டிக்கப்பகீரத முயற்சி மேற்கொள் வாரானார்கள். சான்று சுட்டியவழி யுண்மை காணாது, கொண்டதோர் கொள்கைக்குச் சான்று தேடுந்தாளாண்மை யிடரே வளர்ப்பதன்றோ? யோசனையளவு முன்யோசியாவாறிடர்ப்படுத்தக் கண்டுவைத்துஞ் சிறிது மனஞ்சலியாமல், இளங்கோவடிகள் காலத்து ஒரு யோசனையளவு 2ஙூ மைலுக்குட்பட்டதாகவிருந்தது போலும்”1 என்றோர் சமயோசிதவூக மொன்று கொண்டமைதி கண்டவர்களின் தளராமனவலி யெம்மால் வியக்குந்தரமன்று. முதலில், கருவூரானிலையே வஞ்சியெனச் சாதிப்பதற்குச் சிலப்பதிகார வரியை யுபயோகிக்க முயன்றார்கள். பிறகு இத்தொடரிடர் தரக்கண்டு, இத் தொடரளவு கருவூருக்குப் பொருந்துமாறு, கருவூர்த் தூரத்தைவைத்து, யோசனையளவறுத்து, இதற்குரை காண முன்வந்தார்கள். இவ்வனுமான யோசனையளவுக்காதாரம் இவர்கள் சாதிக்க முயலுங் கொள்கைபடுமிடரன்றிப் பிறிதுகாணேம். புதிதொரு துணிபு நாட்டப் பல புதுத் துணிபுகாட்டுங் கற்பிதத்திறனு மதனாலாயவிடர்ப்பாடும் பிறிதெவரையுஞ் சலிப்பிக்கு மென்பதிலையமில்லை. ஐயங்காரவர்களோ, இவையனைத்துங் கண்டுவைத்தும், கருவூரையடுத்து ஆம்பிராவதியுங் காவிரியுங் கலக்கும் கூடலையும், நொய்யல் அல்லது காஞ்சிமா நதியையும் பரணர் செங்குட்டுவனுக்குவமையாகக் கூறியிருத்தலும், ஆந்பொருநைக் கரையில் வஞ்சியுள்ளதாகச் சொல்லப்படுதலும், கருவூருக்கும் பேரியாற்றுக் கும் பெருந்தூர முண்டென்பதை யிளங்கோவடிகள் குறிப்பிப்பதும், சேரரது பழைய தலைநகரம் அந்நதிகள் பாயுமிடங்களுக்குப் பக்கத்தது என்பதற்குத் தக்க சான்றாதல் காணலாம் என்று தெளிகின்றார்கள்.2 முக்கூடல் காஞ்சி, ஆந்பொருநை இவைகளைப் பற்றியுமிவை கருவூரானிலை வஞ்சியென்று நாட்டற் பாலனவன்றென்பதும் மேலே காட்டி யுள்ளேம்”. கருவூர்க்கும் பேரியாற்றங்கரைக்கும் பெந்தூர முண்டென்பதை இளங்கோவடிகள் சிறப்பிப்பதாகச் சொன்னதை யாராய்ந்தறிந்து அதுவும் இவர்கள் புதுக் கொள்கைக் குதவாமை ஈண்டுக்கண்டோம். மேலும், திருவானிலையே வஞ்சி நகரும், அக்கருவூர்ப் பிரதேசமு மதன் மேற்கும் சேரர் தேசமுமேயாமாகில், மஞ்சுசூழ் சோலைமலை காண்குவமெனவஞ்சி முற்றநீங்கிச் செல்லுஞ் செங்குட்டுவன், பெண்ணை பாலாறு, காவிரி (ஐயங்காரவர்கள் கொள்கைப்படி யவனுக்கேயுரிய) ஆம்பிராவதி, மணமுத்தாறு, குடவனாறு, நொய்யலாறு முதலிய பல அற்புத நதிகளுற்பத்தி யாவதும், வளனுங் கவினும் வளர்ந்து திகழ்வதுமான மேற்குமலைத் தொடரின் கிழக்கடிவார நெடும்பரப்பின் சாரலனைத்தையு மகற்றி, மலையேறி, மேற்கிறங்கிப் பேரியாற்றங்கரைவந்து தங்கக் காரணந்தா னென்னையோ? விளையாட்டு விரும்பியுடன் போந்த பைந்தொடியாயத்தார் சமநிலப்பரப்பினிடைந்த மாமரச் சோலையிடையே யொழுகு மாம்பிராவதியினழகு நிழலுமரும் பழமுங்கண்டு மகிழாரென நினைத்தோ, அவரைப் பெருமலைத் தொடரேறிக் கடந்து மலைநாட்டிறங்கிக் கோங்கும் வேங்கையுஞ் செறிந்த பேராற்றின் மணற்கரையி லிறங்கச் செய்தது? ஆற்றல் போலறிவுடைய தமிழ்க்கோமான், இவ்வாறு, தன்னூர் விட்டு, வெறும் விளையாட்டொன்றிற்காக 300 மைல் தூரம் பெண்டிரொடு வழிநடந்து, மலைகடந்து, களைத்துமீளக் கருதுவதியல்பா? அன்றி, பேராற்றின் கழிமுகத்தூருடையான், மலைவளம் வேட்டபோது, நெடுந்தூரஞ் செல்லவேண்டாத அவ்வாற்றினுற்பத்தி மலைச்சாரலுக்குச் சென்று களித்து மீண்டனன் எனக்கொள்வது முறையா? என்று சிந்திப்பார்க்கு வஞ்சி கருவூரானிலையாகாதென்பது தெற்றென விளங்கும். பகுதி10 : ‘ஆடகமாடம் - அரசவனமா? இனி, ஆடகமாடத் தறிதுயிலமர்ந்தோன், சேடங் கொண்டு சிலர்நின்றேத்த1 என்னுங் கால்கோட்காதை வரிகளையும் அவற்றிற்கு அரும்பதவுரையில் ஆடகமாடம் திருவனந்தபுரம்”2 என்றுள்ள குறிப்பையுங்காட்டி, அக்கோயில் வஞ்சியாகிய கருவூருக்குப் பக்த்திருந்த தாகுமேயல்லது 300 மைலுக்கப் பாலுள்ள திருவநந்தபுரமாகாதென்பது திண்ணம்; ஆதலால், கருவூர்க்குக் கிழக்கே அரசவனம் என்னும் பிரதேசத்தில் திருமால் ஆலய மொன்றுண்டு என்று கருவூர்ப்புராணங் கூறுகின்ற அரங்கநாதப் பெருமாள் சந்நிதியே பழைய ஆடக மாடமாகக் கொள்ளுதல் பொருந்துமெனலாம்”1 என்று கூறித் தங்கொள்கைக் கிதுவுமொரு பற்றுக்கோடாகக் கொள் கின்றார்கள். இதில் எத்தனை தருக்கப் பேய்த்தேர்களமைந்து கிடக்கின்றனவென்று நிதானிப்பார்களில்லை. முதலில், கருவூரானிலைதான் வஞ்சியென்பது இனி அவர்கள் தக்கசான்று கொண்டு நிறுவக்கிடக்கு மொரு புதுக்கொள்கை யென்பதை மறந்து, அது யாவரும் துணிந்த சித்தாந்தம் போலக்கொண்ட மைந்தார்கள். அதன்மேல், தன் புதுக்கொள்கை யென்பதற் காதரவாகக்கொண்ட இச் சிலப்பதிகாரக் குறிப்புத் தனக்குதவாமை கண்டு, ஆடகமாட மொருநாள் வழிப்பயணத்திற் குட்பட்டதாக வேண்டுமாகை யாலும், கருவூரானிலையருகோர் பெருமாள் கோயிலிருப்பதாலும் இக் கருவூரே சிலப்பதிகாரத்திற் கண்ட வஞ்சியாக வேண்டுமென்று துணி வாரானார்கள். செங்குட்டுவன் வடக்கே புறப்படுவதற்கு ஒரேநாளைக்கு முன்புதான் பயணம் பிரத்தாபிக்கப்பட்டதென்று ஆதாரம் யாண்டுக்கண்டார் களோ? இவன் மலைக்குறவரிடம் கண்ணகி விண்ணாடுசென்ற விபரங்கேட்டதும், வஞ்சிக்குத் திரும்புமுன்னரே வடதிசைக்குப் படிமக்கல் கொணர்வான் புறப்படுமுறுதி செய்துவிட்டதாக வன்றோ சிலப்பதிகாரக் காட்சிக்காதை கூறுகின்றது; அத் தகவ லொட்டி யனந்தபுரக்கோயி லர்ச்சகர் தம்மரசருக்கு விஜயங் கூறிப் பிரசாதங் கொணர்ந்திருக்கலாதாகா? பதிற்றுப்பத்தினும் புகழும் மலைநாட்டநந்த புரமே2 யாடகமாட மாகாமல், ஆனிலைக்கருகோர் சிறுகோயிலே யாமாறென்னோ? பெருமாளுக்குக் கோயில் கருவூரானிலைக் கருகுமட்டுந் தானுளதோ? அரும்பதவுரைகாரரே ஆடகமாடத்தை மலைநாட்டூ ராய இரவிபுரமென்பாரு முளரென்று காட்டிய குறிப்பை யிவர்கள் கவனியாததேனோ? கடற்கரைவஞ்சிக்கருகே அரவணை கிடந்தானுக்குக் கோயிலே கிடையாதென்பது இவர்களாற் சித்தாந்தஞ் செய்யப்படவில்லை. ஆராயப்பட்ட தாயுமில்லை; இதனாற் கருவூராநிலையே; வஞ்சியென்றாய வகை இனி யிவர்கள் காட்ட வெதிர்பார்த்து, அதுவரை பொறுமை கொள்வோம். பகுதி 11 : சேரர்நாடு மலைநாடே! இறுதியாக, கொடுங்கோளூர் என்றபெயரேபழைய நூல்களுக்குச் சிறிதுந் தெரியாததொன்றாகும். இதனையடுத்துள்ள திருவஞ்சைக் களத்துக் கும் வஞ்சிக்கும் எவ்விதப் பொருத்தமும் இல்லாமையால் சரித்திரவறிஞர் அவ்விரண்டனையும் பொருத்தி யெழுதுவனவெல்லாம் முன்னைவழக்கோடு முரணுவதேயென்க.1 என்று கட்டுரைத்தார்கள் வஞ்சிக்கும் வஞ்சைக் களத்திற்கும் எவ்விதப் பொருத்தமுமில்லாமைக்கிவர்கள் கண்ட முன்னைய வழக்குத்தான் யாதோ? கூறினார்களில்லை. கூறுங் காலதனை யாராய்வாம். இவை தமக்குள்ள பொருத்தத்தைப் பற்றிக் கீழே விசாரிப்போம். ஈண்டு, பழைய நூல்களில் கொடுங்கோளூர் என்ற பெயர் காணாமையாலவர்கள் கொள்ளு மனுமானப் பலனைமட்டுமாராய்வோம். அத்தினபுரம் மிதிலை, பாடலிபுரமிவற்றின் பிற்காலப் பெயர்கள் வியாசர் வான் மீகரிதிகாச முதலிய பழைய நூல்களிற் காணப் படுகின்றனவா? கொடுங்கோளூரைச் சொல்லும் பெரிய புராணத்திலு மிவ்வூர்க் கிக்காலத்து வழங்கப் பெறுங் கொடுங்கலூர் என்ற பெயரேனும் ஆங்கிலப் பயிற்சியுடையார் பரவச் செய்யும் கிராங்கனூர் (ஊசயபேயnடிசந) என்ற பெயரேனும் கூறப்பட்டுள்ளதா? ஒரு நூலுக்குப் பின்னெழும்பெயரை யந்நூலாசிரியர் முன்னுணர்ந்து கூறுந்தீர்க்க தரிசனம் பெறாமை கொண்டு, அவ்வூர் அந்நூற்காலத்தில்லையென வாதிப்பது தருக்கமுறையாமா? கொடுங்கோளூர் என்ற பெயர் எக்காலத் தெப்படி யெழுந்ததென்றவாராய்ச்சி ஈண்டு நிகழாது; நிகழ்வ தின்றியமையாததுமன்றாம். ஆனால் சேக்கிழார், அடியார்க்கு நல்லார் முதலிய தொல்லாசிரியரிவ்வூரே சங்ககாலத்து வஞ்சியூர் என்று விதந்து கூறினதே போதிய சான்றும் முன்னைய வழக்கு மாமன்றோ? ஐயங்காரவர்கள்கூடத் தந்நூலில், இக் கருவூரின்தானத்தில் மலைநாட்டுக் கொடுங்கோளூர் சேரராசதானியாகப் பின்னூல்களிற் கூறப்படுதல் காணலாம்”1 என்றிதற் காதாரமுண்மையை அங்கீகரிக் கின்றார்கள். ஆனாலிது தன்னபிமானக் கொள்கையொடு முரணுவதுகண்டு, சங்க காலத்துக்குப் பின்னர்ச் சோழராற்றற் கஞ்சிய சேரர், வஞ்சியைவிட்டு நீங்கித் தங்கட்குரிய மலைநாட்டிற் கடற்கரையிலுள்ள கொடுங்கோளூரைத் தலைமை நகரமாக் கொள்ளலாயினர்”2 என்று கூறித் தாங்கண்ட நல்லாசிரியர் மேற்கோள்களினின்றுந்தப்ப வழிதேடுகின்றார்கள். இது சரித நூற்றுணை பெற்றுளதே லிவர்கள் யோசனை பலிப்பதொரு வேளை சாத்தியமாகும். சோழராதிக்கம் பெருகியதெல்லாம் கி.பி. 9 அல்லது 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரேயென்ப திதுவரை சரித நூல்கண்ட துணிபு. ஆனால் சேரவீரர் சிலர் இடையிடையே சோழர் முதலியகீணாட்டு மன்னர் மேற்பெற்ற வெற்றிப் பெற்றியல்லால், சாசுவதமாகக் கொங்கு நாட்டிற்குக் கிழக்கே யாதொரு பாகத்தையுமவர் களாண்டதாக யாதொரு நூலிலும் சாசனங்களிலுங் கூறக்காணோம். கருவூரானிலைச் சாசனங்களெல்லாம் சோழரே தந்துளவாகவும், சேரராதிக்கக் குறிப்பொன்று மவை கூறிலவாகவும் ஐயங்காரவர்களே எழுதி யிருப்பதை3 மேலே காட்டியுள்ளேம். இனிச் சோழர், சேரரைத் தந்நாடும் நகரமும் விட்டோடச்செய்து, அவர் பழவிறன் மூதூருங்கொண்ட மறக்கொணாப் பெரு வெற்றியை நூல்யாவும், சாசனங்களும் சரிதவுபகரண மனைத்தும் மறந்த நிந்தைக்கு, அதை இவர்கள் மீளக்கண்டுலக்குதவிய விந்தையன்றி வேறுவமையுண்டோ? சோழராதிக்கம் பெருகியபோது கருவூர், சோணாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான செய்தி சாசனங் களாலும் நூல்களாலுந் தெரிகின்றது என்றும் 10ஆம் நூற்றாண்டின் தொடக்கத் தில் கருவூர் சோணாட்டைச் சார்ந்ததென்பர் சாசனப்பரி சோதகர்”4 என்றும் எழுதிய குட்டுவன் சரிதநூலார், இக்கருவூரானிலை என்றைக்காவது சேரரூராயிருந்ததற்கு யாதோராதாரமுங் கூறாதகன்றது, அவர்கட் கிது சான்று வேண்டாச் சரிதவுண்மையாகத் தோற்றிய துணிபேபோலும், இவர்களத்துணை நுணுகிய சரிதமதியில்லார்க்கி தனைச் சிறிது விளக்கியிருப்பின் மிகவுமுப காரமாகியிருக்கும். இவ்வூர்த் திருவானிலை கோயிலைப்பற்றிய தேவராப்பதிகங்களிலேனும் வஞ்சியின் பழஞ்செய்தி சிறிதுங் குறிக்கப்பட்டிருக்கவில்லை”1 யென்றிவர் களே பரிதபிப்பதை மேலுங்காட்டியுள்ளேம். சோழருக்குக் கருவூரானிலை சொந்தமென்றவரையே பழநூலாதரவு கிடைக்கின்ற தென்பதிவர்கட்கும் எமக்கு முடன்பாடாம்: ஆனால் முன்னொரு காலத்திலிவ்வூர் சேரருக்குரியதா யிருந்திருக்க வேண்டு மென்றிவர்களனுமிக்கு மிடத்தே தான் வேறுபடுவாம். கிடைத்த பழநூன்மேற்கோள் களெல்லா மோரூரை யொருகுலத்தரசருக் குரியதாக்கவும், அதற்கு மாறான பழங்கொள்கை யாண்டுமில தாகவுங்காணுமிடத்தே, அவ்வூர் அவ்வரசருக்கிடையிட்டுக் கிடைத்ததான மேற்கோள் கண்டாலன்றி யவருக் கஃதாதி தொட்டிருந்த தெனக் கொள்ளுவதே சரிதநூலாராயுமுறை. ஆனிலைக் கரூவூருக்குச் சோழர் சம்பந்தம் சாசனக்காரர்கண்ட 10ஆம் நூற்றாண்டிற்கும் வெகு காலத்திற்கு முன்னதென்பதை மேலே பெரியபுராணப் பாக்களாற் றெளிவாக்கியிருக்கின்றேம்.2 சாசனங்களும், நூல்களும் ஆனிலைக் கருவூரைச் சோழராதிக்கம் பெருகியபோதவர் முக்கிய நகரங்களுளொன்றாகக் கூறுவதற்கும், அதற்குமுன் அவ்வூரை யத்துணை பாராட்டாமைக்கும் தக்க காரணமுண்டு. சோழரைப்பாடும் புலவர் சோணாட்டூரெதுவுங் கொண்டு பாடுவரென்று நினைப்பதுமுறையாகாது. சோழரைப் புகழ்ந்த புலவராற் பாடப்பெறாமைகொண் டோரூர் சோணாட்ட தன்றென மறுப்பதும் மரபன்றாகும். பாடுவார் - பாடுமரசர் பீடுபெறு மூதூர்களைமட்டுஞ் சுட்டிப்பாடுதலே பெரு வழக்காம். சோழருக் காதியிற் புகாருமுறைந்தையுமே தலைநகரங் களாயிருந்தபோ தவைகளே பாடப்பெற்றுள. பிற்காலத்தேயவர் தமக் கமைத்துக்கொண்ட இராசதானி களாகிய காஞ்சி, கருவூர்களை யக்கால நூல்கள் பாராட்டுகின்றன. புகார் தலைநகராயிருந்த போதெழுந்த சங்கநூல்களிற் கருவூரானிலை பாடப்பெறாமை யென்னவிந்தை? பாடப்பெற்றிருப்பினன்றோ வியப்பைத் தரும். பழைய நூல்களெல்லாம், பாண்டியருக்கு மதுரை கொற்கைகளையும், சோழருக்கு உறந்தை புகார்களையும், சேரருக்கு வஞ்சி தொண்டி மாந்தைகளையுமே சுட்டிப் பாராட்டுகின்றன. இதனாலிம் மூவேந்தர் நாடுகளிலுமிவை தவிர்த்தூர்களேயில்லையெனச் சாதிக்கத் துணி வாருண்டோ? புலவர் பாடுங்கால், பாட்டுடைத் தலைவர் பரம்பரை மூதூராதல், அன்னவர் ஒன்னலர்வாய்க்கவர்ந்த வெற்றிப் பெற்றிய நல்லூராதல் பற்றிப் பாடுவதே அடிப்பட்ட தொல்லைமுறை. இக் கருவூரானிலை, வடதிசை யெல்லையி மயமாகத், தென்னங் குமரி யொடாயிடை யரசர், சொல்பல நாட்டைத் தொல்கவினழித்த, போரடு தானைப் பொலந்தார்க்குட்டுவ”ர்1க் குரிய தலைநகராயிருந்து, அவரைப் போர் வென்ற சோழராற் கோட்பட்டபிறகே யவர்க்குரியதா யிருப்பின், இப்பெரு வெற்றி பாராட்டிப் பாடுவதை விட்டு மேற்காட்டியுள்ளபடி அச்சோழகுலப் பரம்பரையில் என்றும் நின்ற வூராகவே சேக்கிழார்பாடிச் சரித வுண்மையுஞ் சோழர் வன்மையு மொருங்கழிக்க வொருப்படாரன்றோ? இவை பலவும் புறக்கணித்த குட்டுவன் சரிதநூலார், அரசராவார் தத்தம் நாட்டகத்தே தலைநகரமைப்பதல்லால், மலையரசர் புனல்நாட்டிற் றலைநகரமைத்து வாழ்வதெனல் நம்பிக்கையைச் சிறிது தப்பிக்கச் செய்யு மென்றுணர்ந்து இக் கருவூரைச்சூழ்ந்த வெங்காலநாடு ... ... சோழராதிக்கத்துக்கு முன்பு ... ... கொங்குதேசராசாக்களாட்சிக் குட்பட்டிருந்த தென்றும், அவர்க்கு முற்பட்ட சங்ககாலத்தே ... சேரரது சிறந்த தேசமாகி, வஞ்சியெனப்பட்ட இக்கருவூரைத் தலைமை நகரமாக்கிக் கொண்டு விளங்கியதென்று மறியத்தக்கன”2 என்றோர் சமாதான மமைத்துவைத்தார். இதில், வஞ்சியெனப்பட்ட இக் கருவூரைத் தலைமை நகரமாக்கி என்றிவர் களொருதலையாத் துணிந்துகொண்ட குறிப்பே, இவ்வாறு பலவிடத்தும் பாந்திப்பாந்தி இன்னபல அடிப்படையற்றிடர்ப் பட்டலமருவதாம் புதுத் துணிபுகளை யிவர்கள் வாரியிரைத் திருப்பதை நன்குவிளக்குகின்றது. கருவூரே வஞ்சியென்ற காட்டருங்கொள்கையை நிரூபிக்க நேர்சான்றின்மை யால், அங்கு மிங்கு மதற்கு மேற்கோள் தேடிக் கண்டதாக்காட்டும் நிகாச்சரித நிகழ்ச்சிகளால் நிரூபிக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட தங் கொள்கையைச் சித்தாந்த முடிபாக்கொள்வார்கள். கருவூரை வஞ்சியெனக் கொள்வதற்கு, அதைச் சூழ்ந்தநாடு சேரர் நாடாகக் காட்டவேண்டிய தவசியமென்று நினைத்தார்கள். நினைக்கவே, கருவூரே வஞ்சியென நிரூபிக்குங் கருவியாக, அதைச் சூழ்ந்த வெங்கால நாட்டைச் சேரருக்குரியதாக் காட்டவந்தார்கள்: வந்தவர்கள், இது சேரநாடென்பதற்கு நிராக்ஷேப மேற்கோளின்மை கண்டு, அதனிடைக் கருவூரே வஞ்சியென்று காட்டினால் வஞ்சி வேந்தருக் கந்நாடு முரித்தாகுமென்ற - நியாயந்தோற்றியதை யாண்டிறுகப்பற்றி, நாட்டாராய்ச் சிக்குத் தக்க துணையாக்கி, அதனிடைப் புகுத்துவைத்தார்கள். ஈண்டுக் கருவூரை வஞ்சியென, வைப்பதால், கருவூர்ப் பிரதேசம் சேரர் நாடாயிற்றா? அன்றியந்நாட்டைச் சேரர்நாடாக வைத்துக் கொண்டதாற் கருவூர் வஞ்சியாயிற்றா? இவையிரண்டுமேனும், அன்றேலிரண்டி லொன்றேனும், தக்க பிறசான்று கொண்டுறுதி யடைய வேண்டும், உறுதிபெற்றவொன்றாற் பிறிதொன்றைப் பேணல் கூடும். அல்லாமல், இவை தம்மிலொன்றை யொன்றாற் சாதிக்க முயல்வதானால் பரபரமெலிவித் திரண்டுநலிவதன்றி வலியுறும் வகை வேறுண்டோ? இவ்வாறு, நின்றொன்றும் நிரூபியாமல், சௌகரியப்படி ஒன்றை விட்டொன்றிற் சுழன்று கழன்று வட்டத்தில் வாதிப்பதாற் கிட்டுவது வாதநட்டமேயாம். இதனை மேனாட்டுத் தருக்க நூலோர் திட்டமில்லா வட்ட வாதிப்பென்றன்றோ வெறுப்பர். இனி, இக்கருவூர்ப்பிரதேசம் சங்ககாலத்தே சேர நாடாயிருந்ததற் காவது, இடைக்காலத்தே கொங்கரரசாட்சிக் குட்பட்டிருந்ததற்காவது இவர்கள்கண்ட மேற்கோளொன்றையும் விளக்கிக் கூறினார்களில்லை. இக் கருவூர்ப் பிரதேசம் சிலகாலம் கொங்கரரசாட்சிக் குட்பட்டிருந்ததாகக் கொண்டதற்கதரவாக, தந்நூலினடிக் குறிப்பொன்றில், கருவூர், கொங்கு நாட்டுத்தலங்களுள் ஒன்றாகக் கூறப்படுதல்காண்க”1 என்று பொதுப் படக் கூறிவைத்தார்கள். யாரால்? எப்பழநூலில்? யாண்டுக் கூறப்பட்டது? என விரித்திலர்கள். நேற்று வெளிவந்த தேவாரத் தலமுறைப் பதிப்பில், தல அட்டவணை தொகுத்த பொறுப் பில்லா ரொருவர், அவ்வட்டணையில், கொங்கு நாட்டூர் களென்ற தலைப்பின் கீழ்த் தவறி இக்கருவூரானிலையைப் பெய்துவைத்த பேராதார மொன்றன்றிப் பிறிது காணாக்குட்டுவன் சரித நூலாரிதை மேற்கோளாகவிதந்து கூறத் துணியாமற் போலும், இவ்வாறு பெயர் ஊர் ஒன்றுமின்றியொரு மேற்கோணிலையாக் காட்டித் தங் கோணிறுவ முயல்கின்றார்கள். மறுபடியும், சங்க நாளிலே கொங்குதேசம் குடகு நாடாயிருந்தமை, குடகக்கொங்கரு1 மென்னும் அடிகள் வாக்கா லறியலாம்”2 என்கின்றார்கள். குடகன் என்பது சேரன்மறு பெயராகவே, குடகக்கொங்கர் அக்காலச் சேரருக்கட்பட்ட கொங்கு நாட்டுக் குறுநில மன்னர் பலராகலாம். கொங்குவேறு, குடகு வேறாதலால், இளங்கோவடிகள் தம் தமையன்செய்த பத்தினிக் கடவுளாராதனைக்குக் குடகரும், கொங்கரும், மாளுவ வேந்தரும் வந்தனரெனக் குறித்து மிருக்கலாம். உரைபெறு கட்டுரையில், குடகரையில்லாமலே கொங்கிளங் கோச’3 ரெனவே கூறப்படுதலும் கவனிக்கற்பாற்று. இது கொண்டு கொங்கு தேசம் சங்க நாளிற் குடகு நாடாயிருந்ததெனத் துணியக்கூடாமை வெளிப்படை. வஞ்சிச் சேரனான குட்டுவன் பிறநாட்டாரான கொங்கரைச் செல்கெழு போர்வென்றதாகக் கூறும் பாலைக்கௌதமனார் பாட்டும், செங்குட்டுவன் கொங்கர் செங்களம்வேட்ட தாய்க்கூறும் அடிகள் வாக்கும் இதை நன்கு விளக்குகின்றன.4 எனைத்தாயினும், இதனாற் கருவூர்ப் பிரதேசம் கொங்கு நாடாதல் பெறப்படாமையொருதலை. இதையும், கருவூர்ப்பிரதேசம் கொங்கு நாடாகாமல் புனல் நாடாதலையும், நாம் மேல் ஓரிடத்து விசதப்படுத்தி யிருப்பதைக்கொண்டு தெளிக. ஈண்டு, இக்கொங்கு நாட்டிற்கு மேற்குள்ள மலைநாட்டரசர், இக்கருவூரைச் சூழ்ந்த வெங்காலநாட்டை நாடாகவும், அதனகத்துக் கருவூரானிலையைத் தமக்குரிய தலைநகராகவுங் கொண்டிருந்தனரா வென்பதைச் சிறிதுவிசாரிப்பாம். மேலே நாம் பலமுறை வற்புறுத்தியபடி இடையிடையே, சில சேரர்மேற் சோழர் வெற்றிகொண்டிருப்பதுபோல், சோழர் சிலரைச் சேர வீரரும் போர்வென்றதான செய்தி கிடைப் பதல்லால், புனல் நாட்டெந்தப் பகுதியையுந் தமதாக்கிச் சேரராண்டி ருப்பதாக யாண்டுங் கண்டிலேம். இதற்கு நூலாதாரங்காணாத குட்டுவன்சரித நூலாரும், கருவூர்ப் பசுபதீவரர் கோயிலிலுள்ள சாஸனங்களால், இக் கருவூரைச் சூழ்ந்த வெங்கால நாட்டிற்குக் கேரளாந்தகவளநாடு என்றும், சோழகேரள மண்டலமென்றும் பெயர்கள் வழங்கி வந்தன வென்பது வெளியாகின்ற”1 தென்று காட்டி, இப்பெயர்களால், சோழராத்திக்கத்திற்கு முன்பு, கருவூர்ப்பிரதேசம் சேரருக்குச் சிறந்த பூமியாகக் கருதப்பட்டிருந்தமை பெறப்படும் என்பார்கள். இச்சாஸனப்பெயர்களின் வரலாறொன்றும் அச்சாஸனங்களில் விளக்கப்பட்டதாயில்லை. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, தமிழரசர் ஆரியவாதிக்கத்திலீடு பட்டுத் தம் வயமிழந்து, தமிழ் மணமறந்து, யாண்டுந் தமிழ்ப்பெயரறவேகளைந்து களித்த காலத் தெழுந்த விச்சாஸனங்களில் யாதொரு தொடர்பும் வரலாறுங் குறியாதெழுதப் பட்டுள பெயர்களைக் கொண்டு சங்ககாலச் சரித நிகழ்ச்சிகளை யூகித்தறிய வொண்ணா தென்பது யாவருமறிவதொன்றாம். இனி, கேரளாந்தகவளநாடு எனும் பெயராற் பெறக்கூடியது தானென்னை? கேரளனாகிய சேரனுக்கு அந்தகனாய சோழனது வள நாடென்பதே இப் பெயருக்குச் செம்பாகமான பொருள். இச்சாஸனப் பெயர் கொண்ட சோழன் தன் காலச்சேரனை வென்ற வீரந்தோன்ற இப்பெயர் பூண்டிருக்கலாமென்பதும், அவ்வளவன் புனல் நாட்டின் ஒருபகுதியாய இக்கருவூர்ப் பிரதேசத்தை அவன் வள நாடெனக்குறிக்கப்பட்ட தென்பதுமே இ தனாற்கிடைப்பதாகும். இதுவே போல் சோழ கேரள மண்டலமென்னு மிம்மணிப் பிரவாளப் பெயர், அக் காலச் சோழன் சேரனொருவனைவென்ற புகழ்பேண, நினைந்தோ, அல்லாதொருவேளை. யவ்விரு குலத்துரிமையுந் தனக்கெய்தியதாக் கொண்ட தொரு பெருமை கருதிப் புனைந்தோ, இவ்வாறிச்சாஸனத் தெழுது வித்திருக்கலா மென்று நினைக்க விடந்தருகின்றதன்றி, இதனாற் சங்ககாலச் சேரருக் கிப்பிரதேசம் சொந்தமாயிற்றெனக் கொள்ளுமுறை புலப்பட வில்லை. இவை தமக்கு எப்பொருள் கொள்ளினும், இப்பெயர்க்கிது காரண மெனச் சாஸனக் குறிப் பில்லாதவரை எல்லாம் சமயோசிதவனுமான மாவதல்லால் இதுவேயிதன் பொருளாமென வரையறுத்துத் துணிவதற் கிடனுமில்லை: இதினின்று பெறுவதாஞ்சரிதமோ மலடிபிள்ளை. இக்கருவூர் சோணாட்டின் மேற்கெல்லை யென்றையங்காரவர்கள் மேற்கோளுடன் கூறியிருப்பதையும், அதன் மேற்கே கொங்கு நாடுண்மை யையும், அக்கொங்குநாடு செங்குட்டு வனாட்சிக்குட் படாப் பிற நாடா யிருந்தமையையும் மேலே விரித்துக்காட்டினேம். இக்கொங்கு நாட்டிற்கும் மேற்கே, மேற்குமலைத்தொடருக்கும் மேலக்கடலுக்குமிடையே நின்ற மலைநாடே சேரருக்குரிய நாடென்பதை, சேரரைப் பற்றிய ஆராய்ச்சிக்குச் சிறந்த சாதனமாவதாக ஐயங்காரவர்களாற் பாராட்டப்படும்1 சிலப்பதிகாரம் மணிமேகலை பதிற்றுப்பத்து முதலிய பழைய நூல்களே விசதப் படுத்துகின்றன. இத்தொன் நூல்களில் யாண்டும் காவிரி நாட்டெப்பகுதியுஞ் சேரராட்சிக் குட்பட்டதாகக் கூறப்படாததும், ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. சேரர் புகழே கூறும் பதிற்றுப்பத்திற் பலவிடத்தும், சேரருக்கு மலை நாட்டையவர்க்குரிய மனைவியாக வுருவகப்படுத்திச் சிறப்பித்துப் பாடப் பட்டிருப்பதுமன்றி, வேறு நாடு கூறப்பட்ட தாயுமில்லை. இதுவுமின்றி, புனல்நாடு போற்றும் புலவரொருவர், இளஞ்சேரலிரும் பொறையைப் பாடிய பாட்டொன்றில், தான்காதலிக்கும் காவிரிப்படப்பை நன்னாடன்ன, வளங்கெழு குடைச் சூலடங்கிய கொள்கை, யாறியகற் பிற்றேறிய நல்லிசை வண்டார் கூந்தலொண்டோடி கணவ என்று அச்சேரன் மலை நாட்டைப் புகழ்ந்து கூறியுமுள்ளார்.2 காவிரி நாடு சேரருக்குரிய நாடாமாகி லதையே பாடாமலதை யொத்த நாட்டிற்குரிய தலைவனே! என்று புகழ்ந்திருக்கக் காரணமுண்டோ? குடக்கோ வென்றும், கடவர்கோமான் என்றும், சேரன் -பொறையன் - மலையன்”3 வெற்பன், பறம்பன் என்றுமே பழையநூல்களிலிச் சேரர் பலவிடத்து மறைக்கப்படுகின்றன ரன்றிப் புனல் நாடுடையராகப் பேசப்படவே யில்லை. பதிற்றுப்பத்திற் பலபாக்களில், சேரர் மலையுங் கடலுந் தருந்திருவுடையரென்று விதந்தோதப் படுகின்றனர். இந்நூலில், மேலக்கடலுக்கும், மலைத்தொடருக்கும் மிடைக்கிடக்கும் வளமலை நாட்டையும், அதன் தண் கடற்படப்பை நிலத்தையுமே யிவர்க்குரியவாச் சுட்டியவும், பிறிதெந்த நாட்டிற்கும் பொருந்தாதனவுமான பல செய்யுட் பகுதிகளை முன்னே காட்டியுமிருக்கின்றேம். பதிற்றுப் பத்துப்பாக்களிலும், சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்திலும், சேரரை மலை நாட்டரசராகவும், குடதிசையாளுங் கொற்றங்குன்றா ஆரமார்பிற் சேரர்குலத்தவ”ராகவுமே1 பேசக் காண்பதன்றி, யாண்டும்காவிரியூட்டு நாட்டவராகக் குறிக்கக் காணோம். இதற்கு மாறாக தனக்குரிய மலை நாடொழிய, குமரிமுத லிமயம்வரை வேற்றரசர் நாடுகளே யிருந்தவென்பதும், வெற்றி வெறியாற்றிக்குவிசயஞ்செய்து புகழுற்ற செங்குட்டுவன் அப்பிற நாட்டரசர் மேற்படையெடுத்துப் பொருது வென்றதும், அவனைப் பாடிய பரணர் சாத்தனாராகிய விருபெருஞ் சங்கப்புலவர் வாக்குகளால் வெளிப்படுகின்றன. வடதிசையெல்லை யிமயமாகத் தென்னங்குமரியொ டாயிடையரசர் முரசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழச் சொல்பல நாட்டைத் தொல்கவி னழித்த போராடு தானைப் பொலந்தார்க் குட்டுவ2 செங்குட் டுவனெனுஞ் செங்கோல் வேந்தன் பூத் தவஞ்சி பூவா வஞ்சியிற் போர்த்தொழிற் றானை குஞ்சியிற் புனைய நிலநா டெல்லை தன்மலை நாடென்ன ... ... ... ... ... ... ... ... ... ... தேரு மாவுஞ் செறிகழன் மறவரும் ... ... ... ... கடைஇக் ... ... ... ... பலவேந்த ரனைவரை வென்ற வரம்பொன் முடிமிசை ... ... ... ... ... ... ... ... ... ... ... ... செம்பொன் வாகையுஞ் சேர்த்திய சேரன்1 ஐயங்காரவர்கள் தந்துணிபுக்கியையச் சேரதேசமென்பது கருவூர்ப் பிரதேசமுட்பட, கோயம்புத்தூர், சேலம், நீலகிரி ஜில்லாக்களும், மைசூர் நாட்டின் தென்பகுதியும், மேற்குத் தொடர்ச்சிமலை நெடுகவுள்ள கடற்கரைப்பக்கங்களுமாம்”2 என்றெழுதியிருக்கின்றார்கள். இத்தனை விரிந்த நிலப்பரப்பைப், பலமுறை பிறமன்னரைவென்ற செங்குட்டுவன் தானவரிட மிருந்து வென்றுகொண்ட பெருநாடாகக்கூடப் பேசுகின்றார் களில்லை. இது முழுமையுமே அடிப்பட்ட சங்ககாலச் சேர நாட்டளவாகக் கூறுகின்றார்கள். இது முழுதும் செங்குட்டுவன் சொந்த நாடாமாகில், தனிமலைநா டிதிலொரு சிறுபகுதியே யாக வேண்டும்; பெரும் பகுதி காவிரி நாடாகவே, இவன், வெற்றி புகழும் சாத்தனார் நிலநாடெல்லை தன்மலை நாடாக வென்று பாடுவாரா? இத்தொடரா லிவனுக்குரிய நாடு மலை நாடேயென்பதும், அஃதொழித்துப் பிறிதிடமெல்லாம் இவன் வெற்றிப்புகழ் மண்டிக் கிடந்த பிற அரசர் நாடாமென்பதும், தெளிவாமன்றோ? இவ்வுண்மை மறக்க மாட்டாத குட்டுவன் சரித நூலுடையார்களும், தங்கள் நூலில், சேரர் வஞ்சியை விட்டு நீங்கி, தங்கட்குரிய மலைநாட்டிற் கடற்கரையிலுள்ள கொடுங்கோளூரைத் தலைமை நகரமாக் கொள்ளலாயினர்’.3 என்பார்கள். இதனால், மலைநாடே யிவர்க்குரிய தென்பதொரு தலை, அஃதிவர்களுக்கு முடன்பாடெனத் தெரிகின்றோம். இஃதொழியப் பிறதேச மிவர்க்குச் சொந்தமென்பது நிரூபிக்கப் படும் வரை கருவூர்ப் பிரதேத்தைச் சேர நாடாகக் கொள்வதா வது, அதனகத் தானிலையை வஞ்சியெனச் கொள்வதாவது பொருத்தமாகாது. இவை பல வற்றாலும், இக் கருவூர்ப் பிரதேசம் சேரநாடெனக் கிடையாமை மட்டுமில்லை; அது புனல் நாடாவதும் பெற்றாம், இதுவுமன்றிப் பழைய வஞ்சி, மலைநாட்டுப் பேராறாம் பொருநைக் கழிமுகத்தூர் என்பது மேலே குறித்த பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை மேற்கோள்களானு மினிது விளங்குகின்றது. இதுவே போல், தந்தமையன் செங்குட்டுவன் அரசிருந்த மூதூர் வஞ்சியினகவூர்ப்பாக்கமாம் கருவூர் மேலமலைத் தொடரின் மேற்கே மலைநாட்டூராவதன்றி, சோணாட்டோர் பகுதியா மிவ்வெங்கால நாட்டுக் கருவூரானிலையன்று என்பதை இளங்கோவடிகளே தம்மரிய நூலிலைய மறக்காட்டியு முள்ளார். செழித்த காவிரி நாட்டுப் பார்ப்பான் பராசரனென் போன் சேரர்கொடைத்திறங் கேட்டுச் செங்குட்டு வனைக் காண விரும்பி, இடையூறுங் காடுநாடுங் கடந்துவந்து, நீண்ட மேற்குமலைத் தொடருந்தன் பிறக்கொழிய மேற்கே நடந்துமேற்சென்று, வஞ்சியெய்திச் செங்குட்டுவன்பாற்பரிசு பெற்று மீண்டதை அடிகள் பின்வருமாறு கூறுகிறார்: பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன் தாங்கா விளையு ணன்னா டதனுள் வலவைப் பார்ப்பான் பராசுர னென்போன் குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு ... ... ... ... ... ... ... ... ... ... காடு நாடு மூரும் போகி, நீடுநிலைமலயம்பிற்படச்bசன்றாங்கு, ...... ... ... ... ... ... ... ... பார்ப்பன வாகை சூடி யேற்புற நன்கலங் கொண்டுதன் பதிப்பெயர்வோன்1 இதில், நீடுநிலைமலயம் பிற்படச் சென்று என்னுந் தொடர், சோணாட்டுப் பார்ப்பான் மேற்குமலைத்தொடர் கடந்து, மேற்கே வந்து, மலைநாட்டுக் கருவூராம் வஞ்சி முற்றங்கண்டான்; என்பதைத் தெளிவாக்கவில்லையா? ஆனிலைக்கருவூரே வஞ்சியும், அதைச்சூழ்ந்த புனல்நாடே செங்குட்டுவனிருந்த நாடு மாயின், அவ்வள நாட்டுப் பராசரன், அந்நாட்டவ்வூர் அகல விட்டு மேற்கே நின்ற நெடுமலைத் தொடரும் பிற்படச் சென்று காணுமாறெங்ஙன்? ஈண்டு அடிகள் குறித்தபடியே, வஞ்சி மேற்கே மலைநாட்டிலுள்ள தென்பதை - சேரர்கருவூரெதிர்ந்த கிள்ளிவளவனைப் பாடிய கோவூர்கிழாரும், வஞ்சி முற்றம் வயக்களனாக ... ... ... ... ... ... ... ... ... கொண்டனைபெரும, குடபுலத்ததரி1 என வலியுறுத்தியுமுள்ளார். இவ் வளவன் வென்றெடுத்த சேரரது பேரூராம் வஞ்சிமுற்றம், நடுநாட்டுக்கருவூரானிலையே யாமாகில், அதனையெறிந்த2புகழ்பாடும் புலவர், குடபுலத்ததரி என்று குறிக்கக் காரணமுண்டோ? இவ்வாறு சேரர் குடபுலத்தரசு வீற்றிருப்பவரே யன்றி, கிழக்கே காவிரிபாயும் வெங்கால நாட்டிற்றங்காதவ ரென்பதைக், குடதிசையாளுங் கொற்றவேந்தர்”3 என்னும் அடிகள் வாக்கும் விசதப்படுத்துகின்றது. பகுதி 12 : வஞ்சி, மகோதை வஞ்சைக்களமே! மேலும் கருவூர் என்ற பெயர் கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக் களத்துக்கு உள்ளதாகப் பிரமாண மொன்றுங் காணப்படாமையறிக”4 என்று கட்டுகின்றார்கள். இல்லாமையாற் பெறுவதென்னை? இதனாலிக்கடற் கரையூர் பழைய வஞ்சியாகா தென்பது எப்படிக் கிடைக்கின்றது? ‘கருவூர்’, என்னும் பெயரே, இவர்கள் தம் புத்தக முதலதிகார முன்னுரையில், சேரவரசர் பெருமைகள் பற்றிய தமதாராய்ச்சிக்குச் சிறந்த சாதனங்களாகக் கொண்டுள “சிலப்பதி காரம், மணிமேகலை, பதிற்றுப்பத்து ஆகிய மூன்று நூல்களுமறியாத தாகின்றது. திருவானிலையில் வஞ்சி பற்றிய குறிப்பொன்றுமில்லை யென்றிவர்களே கூறியுமிருக் கின்றார்கள். கருவூரானிலைக்கு வஞ்சியென்ற பெயரே தற்காலம் வழங்கவில்லையன்றோ? பலபிற சான்றுகளா லிம்மகோதை வஞ்சைக்களமே வஞ்சியிட மென்பது பெறுவேமேல், கருவூர் என்னும் பெயர் வழங்காமை கொண்டிதனை மறுக்கலாமோ? கருவூரானிலைக்கு வஞ்சிப் பெயர் வழங்காதிருக்கவும், வஞ்சி நகரின் பிறபெயராகிய கருவூர் என்பதும் ஆனிலைக் கருவூரும் ஓரோசை பெற்றிருப்பது கொண்டதை வஞ்சியென வாதிக்க முன்வந்தவர்கள், வஞ்சைக் களத்தை வஞ்சியோடும் சம்பந்த முடையதாகக் கருதற்குச் சிறிது மாதாரமின்மைகாண்க”1 என்றறை கூவலென்னோ? திருவஞ்சைக் களத்தின் அலைவாய்த் துறையான மகோதையே கொடுங்கோளூரென்பதை யிவர்கள் அங்கீககரிக்கின்றார்கள்.2 ஆனால் மகோதையோடு வஞ்சித்துறை முகத்தையும், திருவஞ்சைக் களத்தோடு வஞ்சிமுற்றத்தையு மொன்றாக்கிப் பாடிய சேக்கிழார் குறிப்பை வெறுக்கின் றார்கள். கடலங்கரை மேல் மகோதையணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே என்ற சுந்தரர் தேவாரவடி கொண்டு, இவ்வூர் அஞ்சைக் களமென்றும், வஞ்சிப் பெயருக்கிது சம்பந்த முடையதாகாதென்றும் துணிகின்றார்கள். எல்லையற்ற தொல்லைப் புறநானூற்றுப் பாக்களிலும் சிலப்பதிகாரத்திலும் பழைய வஞ்சியிற் சேரவரசர் குடியிருந்த பகுதியை வஞ்சிமுற்ற மென்றே குறிக்கப் பட்டிருப்பது கவனிக்கத் தக்கது. இந் நகரத்தைப் பொதுவாகப் பேசுமிடத்தெல்லாம் வஞ்சி மூதூரென்றும், அரணுடைய அரசரக நகரை வஞ்சி முற்ற மென்றும் விதந்து கூறிய குறிப்பு மிகப்பொருளுடைத்தாம். பேராற்றின் கழிமுகம் கடற்பரப் போடொக்க மிகத்தாழ்ந்து அலி முகமாயதால், அதையடுத்த மேட்டுநிலத்தே யரணிட்ட அரசன் குடிப்பாக்கமேற்பட்டும், அதுவே பிந்திக் கருவூரென வழங்கப் பட்டும் வந்திருப்பதை மேலே காட்டினே மன்றோ? இப்பகுதி பழைய நூல்களில் வஞ்சிமுற்றமென்றே சுட்டப்பட்டுள்ளது. மலை காண்குவமென, வஞ்சிமுற்ற நீங்கிச்செல்வோன்”3 என்ற இளங்கோவடிகள் வாக்கும், வஞ்சியிலரசனரண்மனையிருந்த கருவூர்ப்பாக்கத்தை முற்றிய வளவனை வஞ்சிமுற்றம் வயக்களனாக, அஞ்சா மறவராட்போர் பழித்துக், கொண்டனை பெரும் குடபுலத்ததரி”4 என்று பாடிய கோவூர் கிழார்வாக்கு மேயிதற்குச் சிறந்த சான்றாம். பட்டினப்பாக்கமும் அரசன் குடிப்பாக்கமுங் கூடியது வஞ்சிமூதூர். பிற்காலத்தே பட்டினப் பாக்கம் மகோதையென்றும், அகநகராய கருவூர்ப்பாக்கம் வஞ்சிமுற்றமென்றும் அழைக்கப்பெற்றன. இவ்வஞ்சி முற்றம் நாளடைவில் வஞ்சைக் களமாயிற்று. துவரை, மாந்தை, தஞ்சை, முகவை, நெல்லை, துறைசை, உறந்தை, கரந்தை என்றூர்ப் பெயர்கள் தமிழகத்தே குறுகி ஐகாரமேற்று நடைபெறுமியல் பறியாதாரில்லை. வஞ்சியு மிம்முறையில் வஞ்சையாகவே அதற்கேற்ப வஞ்சி முற்றம் வஞ்சைக் களமானது வெகு சுலபமன்றோ? பிற்காலத்திது தலங்களுள் வைத்தெண்ணப் படுங்கால் திரு அடைபெற்றுத், திருவஞ்சைக் களமாயிருக்க வேண்டும். இதற்குப் பிற்காலத்தார், திரு என்பது பசாரவடை யாகவே, அதற்கடுத்த வகரம் உடன்படு மெய்யெனக்கருதி, அடையகற்றி அஞ்சைக்களமாக்கினர் போலும் சரகத்தைச் சாகமெனக் கொண்டு மயங்கினவர்களும் பெரும் புலவர்களே யாதலால், திருவஞ்சைக்களம் திரு அஞ்சைக் களமானதில் வியப்புத் தானென்னே? அன்றியும், திருவஞ்சைக்களப் பதிகத்தில், சந்தரமூர்த்தி சுவாமிகள் தாம்பாடும் மகோதைத்தல மூர்த்தியின் பெயரே சுட்டிப் பாடியிருப்பதல்லால், அவ்வூர்ப் பெயரைச் சுட்டவில்லை என்பதும் வெளிப்படை; யாண்டு மிவ்வூர்க்கு அஞ்சைக் களமென்னும் பெயர் எடுத் தாளப்பட்டதாயுமில்லை. இஃதெவ்வாறாயினுமாக, மேற்கூறிவந்த பலவற்றானும் வஞ்சி மலைநாட்டுத் தலைநகராய், ஆந்பொருநையாகிய பேராற்றின் கழிமுகத்தமைந்த பேரூர் என்பது ஒருதலையாகப் பெறப்பட்ட தாகலானும், அப்பேராற்றினலை வாய்ப்பட்டினமாகிய மகோதையென்ற கொடுங்கோளூரு மதையடுத்த ஐயங்காரவர்கள் அஞ்சைக்கள மென்ற திருவஞ்சைக் களமும் யவனர்கல நில நிறைக்க வளமிகமலிந்த கடற்கரை வஞ்சி நின்ற விடத்தே நிற்பவாகலானும், இவையொன்றென லியல்பேயாகும். ஆகவே சேரர் சங்க காலப் பேரூர் பேராற்றின் மலை வாரத்தே கடலினின்றும் சுமார் 30 மைலுக்கப்பாலுள்ள திருக்கரூருமன்று; காவிரியாம் பிராவதிக் கூட்டத்திற்கு மேற்கே புனல் நாட்டிலுள்ள சோழர் பழவூரான திருவானிலையுமாகாது; பண்டைத் தமிழ் வாணர் பலரும் பாராட்டிய மலைநாட்டுப் பேராற்றின் கழிமுகப்பட்டினமேயாம்; என்பது விசதமாகும். இறுதியில், ஆபுத்திர நாட்டிலிருந்து வஞ்சிக்கு வந்த மணிமேகலை செங்குன்றில் கண்ணகி கோயிலிலிறங்கித் தரிசித்துப் பிறகு வஞ்சி யுட்புக்கனள் என்னுங் கதைகாட்டி, அதனால் வஞ்சி அம்மலையிலிருந்து நெடுந்தூரமிருக்க வேண்டுமெனத்தனக்கு வேண்டியபடியனுமித்துக் கொண்டு, அதனால் கருவூரானிலையே வஞ்சியாகுமென்று வாதிக் கின்றார்கள். மேலே கருவூர், மகோதை என்றிருபாக்கள் சேர்ந்த பேரூரே வஞ்சியென்றும், அதை ஐயங்காரவர்கள் எடுத்தாளும் நக்கீரர் பாட்டே வலியுறுத்துமென்றுங் கூறி, அதன் சார்பாக அவ்வகப் பாட்டின் கருவூர் முன்றுறை மணல் என்னுந் தொடரை விளக்குங்காலிச் செங்குன்று சம்பந்தமாகப் பழைய நூல்களிற் காணப்படுங் குறிப்புக்களே வஞ்சி கருவூரானிலையாகாதெனச் சுட்டுவதைக் காட்டியுள்ளேம். சாத்தனார், மணிமேகலை மணிப்பல்லவத்தி லிருந்து புறப்படும் போதே வஞ்சியுட்செல்வனென்றந் தரத்தெழுந்தனள் அணியிழைதா”1 னென விதந்து கூறுகின்றார். ஆகவே, புறப்படுங்கால், மணிமேகலைக்குக் கண்ணகி கோயிலைக் காணுங்கருத்து முன்னின்றதாயில்லை. வஞ்சி நோக்கி வழிக் கொண்டணியிழையந் தரமாறாவெழுந்தவள்”.2 இடையே வழியில் கொடுங்கோளூருக்கயலதாய செங்குன்றின்3 மேல்நின்ற தாய்கண்ணகி தாதைகோவல னிவர்கள் கைவினை முற்றிய தெய்வப் படிமம்”4 அமைந்த கோட்டம் புகுந்து வணங்கி யேத்தி, பிறகு தான் நினைத்துவந்தபடி வஞ்சிக்குப் போக விடையேற்குங்கால், ஆங்குப்பத்தினிக் கடவுள் இளையள் வளையோளென்றுனக்கியாவரும், விளைபொரு ளுரையார் வேற்றுருக் கொள்கெனப் பணித்திட, அதன்படி மாதவன் வடிவாய்ப் பொற்கொடிப் பெயர்படூஉம் பொன்னகர் பொலிந்தனள்என்பதே சாத்தனார் கூறியுள்ள வஞ்சிக்கு மணிமேகலைவந்த வரலாறாம். கண்ணகிவிண்ணாடு சென்றதும், பத்தினித் தேவிக்குக் கோயிலெடுத்துச் சிறப்பித்த இடமுமான இச் செங்குன்று, மலைகாண்குவமெனச் செங்குட்டுவன் சென்றிருந்த பேரியாற்றங்கரைக்குக் சமீபத்தது5 என்றையங்காரவர்களுமிம் மலை சம்பந்தமாக அடியார்க்கு நல்லார்கருத்தை மறுக்காது தழுவுகின்றார்கள். இவ்வாறு இம்மலை சேரர் பேராற்றங் கரையருகே மேற்குமலைத் தொடரையொட்டிக் கொடுங் கோளூருக்கயலதாகலானும், மணிபல்லவம் காவிரிக் கழிமுகத்துப் புகார்ப் பட்டினத்திற்குத் தெற்கேயமைந் திருந்ததாகலானும்,1 அக்கீழ் கடல் மணி பல்லவத்திலிருந்து வஞ்சிக்குவரும் மணிமேகலை, வஞ்சிகருவூ ரானிலையாமாகில் நேரே கருவூருக்குச் செல்வதல்லால், வழிபிறழ்ந்து கருவூருக்கு 300 மைலுக்கு மேற்குள்ள செங்குன்றமலை வந்திறங்கக் காரணமில்லை, மணிமேகலை மணிபல்லவத்திலிருந்து முதலில் மேற்கு வந்திம்மலை கண்டு மீட்டும் கிழக்கே வஞ்சிக்குவழி கொண்டதான கதையுமில்லை. முதலிலேயே கண்ணகியைக் கண்டு, பிறகு வஞ்சிக்குப் போவதான நினைப்பவளுக்கில்லை யென்பதும், விசும்பாறாக வஞ்சி நோக்கிச் செல்பவள் கண்ணகி கோட்டமைந்த இச்செங்குன்ற மலை இடைவழியில் படலா லங்குத் தங்கிவழிப்பட்டுப் பின்றன் வழிபட்டு வஞ்சியூர் வந்து புகுந்தனள் என்பதும் மேலேகாட்டிய படி சாத்தனார் பழைய நூலாற் பெறப்படுகின்றன. இதனால் செங்குன்றமலை மணி பல்லவத்திற்கும் வஞ்சிக்கு மிடையேயிருக்க வேண்டுமென்பது தெளிவாகின்றது. அச்செங்குன்றமலைக்கு அயலதாகச் சிறிது மேற்கே நிற்கும் கொடுங்கோளூரே யிவ்வஞ் சியாமாகில், மணிமேகலைக்குச் சாத்தனார் தந்து வைத்த வழிமுறை தெளிவாவதோடு, இக் கொடுங்கோளூரே பழைய வஞ்சியென்னும் அடிப்பட்ட பழவழக்கும் வலிபெறுகின்றது. இவை பலவும், இன்னவும் பிறவும், சேரர் பேரூரான வஞ்சிமூதூர் மலைநாட்டில், மேலக் கடற்கரையில், பேராற்றின் கழி முகத்திலமைந்த பழம் பட்டினமேயன்றிப் பிறிதுண்ணாட்டூ ரெதுவுமாகாதென்பதைப் பசுமரத்தாணி போல் வலிபெறநாட்டி நிற்கும். முற்றும் நாவலர் பாரதியாரின் வரலாற்றுக் குறிப்பேடு 1879 சூலை 27 - நாவலர் பாரதியார் தோற்றம்: இயற்பெயர்: சத்தியானந்த சோமசுந்தரன். (தந்தை: எட்டப்ப பிள்ளை. தாய் : முத்தம்மாள்). 1894 (ஏறத்தாழ) மீனாட்சியம்மையாரை மணமுடித்தல். 1898 மார்ச் 30 - முதல் மகன் இராசாராம் பாரதி பிறப்பு. 1903 பிப்ரவரி 16- இரண்டாம் மகன் இலக்குமிரதன் பாரதி பிறப்பு. 1905 அக்டோபர் 13 - மகள் இலக்குமி பாரதி பிறப்பு. 1905 சட்டப்படிப்புத் தேர்வு. 1905-1920தூத்துக்குடியில் வழக்கறிஞர் தொழில். 1905-1919நாட்டு உரிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக அரசினர் ஐயப்பட்டியலில் நாவலர் பெயர். 1913 எம்.ஏ. தேர்வு எழுதி வெற்றி பெறல். 1916 ஆக. 19 - கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் தசரதன் குறையும் கைகேயி நிறையும் ஆராய்ச்சிச் சொற்பொழிவு. 1920 தூத்துக்குடியை விட்டு மதுரை வந்து வழக்கறிஞர் பணிபுரிதல். 1920 மதுரையில் மாநிலக் காங்கிரசு மாநாட்டை நடத்துதல். 1926 மதுரையில் சி.ஆர். தாசைப் பேசச் செய்தல். 1926 சனவரி 25 மதுரைத்தமிழ்ச்சங்கம், வாலிபக்கிறித்தவர் சங்கம் சார்பில் திருவள்ளுவர் ஆராய்ச்சிச் சொற்பொழிவு. 1927 திசம்பர் 1- வசுமதி அம்மையாரைத் திருவெட்டாற்றில் மணம் புரிதல். 1929 பிப்ரவரி 28 - மகள் மீனாட்சி பிறப்பு. 1929 மார்ச் 11 - சென்னைப் பல்கலைக்கழகச் சார்பில் திருவள்ளுவர் சொற்பொழிவு. 1930 சூலை 27 - மகள் லலிதா பிறப்பு. 1930 ஈழ நாட்டுச் சுற்றுப்பயணம். 1932-1933 மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறுப்பு. 1933 மே13 - உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கெனத் தொடக்கப் பள்ளி உண்டாக்குதல். (வீரர் வ.உ.சி.யின் தொடக்க விழா உரை). 1933-1938அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலை மைப் பணி. 1935 செப்டம்பர் 15 - எட்டயபுரத்தில் தமிழகம் புதுமனை புகுவிழா. 1936 ஈழ நாட்டுச் சுற்றுப் பயணம் (2ஆவது முறை). 1937 செப்டம்பர் 5- சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவர். 1937 அக்டோபர் 25- இந்தி மொழி பற்றிச் சென்னை மாநில முதலமைச்சர் திரு ச. இராசகோபாலாச்சாரியாருக்கு வெளிப்படை மடல் எழுதல். 1942 ஆக. 1-3 - மதுரை முத்தமிழ் மாநாட்டின் வரவேற்புக் குழுத் துணைத் தலைவர். 1944 திசம்பர் 30-31 - ஈழ நாட்டுச் சுற்றுப்பயணம் (3வது முறை) ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றத்தாரின் நாவலர் பட்டம். 1948 பிப்ரவரி 14 - சென்னையில் அகில தமிழர் மாநாட்டின் தலைவர். 1948 சூன் 27 - இந்திமொழிபற்றிச் சென்னை மாநிலக்கல்வியமைச்சர் திரு தி.சு. அவினாசிலிங்கஞ் செட்டியாருக்கு மடல் எழுதுதல். 1954 சனவரி 17 - மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் கணக்காயர் பட்டமும் பொன்னாடை போர்த்தலும். 1954 சூலை 11 - அண்ணாமலை நகரில், சென்னை மாநிலத் தமிழாசிரியர் மாநாட்டின் தலைவர். 1955 பிப்ரவரி 9 - அண்ணாமலைப் பல்கலைக் கழக வெள்ளி விழாவில் முனைவர் (டாக்டர்) பட்டம். 1955 பிப்ரவரி 28 - அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொன்னாடை போர்த்தல். 1956 சூன் 3 - மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழா 5ஆம் நாள் விழாவின் இயலரங்குத் தலைவர். 1957 சூன் 22 - சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கல். 1958 திசம்பர் 14 - பசுமலையில் தமிழகப் புலவர் குழு அமைப்புக் கூட்டம்: குழுவின் தலைவர். 1959 சூலை 27 - மதுரையில் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா - பாராட்டு. 1959 அக்டோபர் 4- மதுரையில் தமிழகப் புலவர் குழுவும், மதுரை நகரவையும் பாராட்டுதல். 1959 நவம்பர் 8 - மதுரை எழுத்தாளர் மன்ற ஆண்டு விழாவில் தொடக்க உரை நாவலர் கலந்து கொண்ட இறுதிக் கூட்டம். 1959 திசம்பர் 2 - பசுமலையில் தமது இல்லத்தில் மயக்கமுற்று விழுதல். 1959 திசம்பர் 4 - மதுரை அரசினர் பெரு மருத்துவமனை செல்லல். 1959 திசம்பர் 7- நினைவிழத்தல். 1959 திசம்பர் 14- இறைவனடி சேரல் ஸஇரவு 8.40 மணி]. 1959 திசம்பர் 15 - பசுமலையில் உடலுக்கு எரியூட்டல் ஸமாலை 6மணி]. 1959 டிசம்பர் 15 - இறுதிக் கடனிகழ்ச்சி - முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட பல அறிஞர்களின் சொற்பொழிவு, ஏழைகளுக்கு உணவளித்தல். 1963 நாவலர் சோமசுந்தர பாரதியார் கல்வி அறப்பணிக்குழு தோற்றுவித்தல்.